சுதந்திர முழக்கம்
வரலாறு
Back
சுதந்திர முழக்கம்
வெ. சாமிநாத சர்மா
சுதந்திர முழக்கம்
1. சுதந்திர முழக்கம்
1. மின்னூல் உரிமம்
2. மூலநூற்குறிப்பு
3. அணிந்துரை
4. வெ. சாமிநாத சர்மாவின் சாதனைகள்
5. பதிப்புரை
6. நுழையுமுன்…
7. சுதந்திர முழக்கம்
8. பதிப்புரை
9. எது சுதந்திரம்?
10. பிரார்த்தனை
11. சுதந்திரத்தின் சந்நிதானத்தில்
12. மனித வாழ்க்கையின் முன்னிலையில்
13. சுதந்திர புருஷன் யார்?
14. சுதந்திரத்திற்கு யார் அருகரல்லர்?
15. சுதந்திர சிந்தனை
16. சுதந்திரமே! அழைத்துப்போ!
17. சுதந்திரத்தின் நான்கு அம்சங்கள்
18. அடிமைகள் யார்?
19. போர் அல்லது மரணம்
20. ஆறுதல் உண்டு
21. நான் சாதிக்க முடியும்
22. எல்லோரும் சம உரிமையுடையவர்கள்
23. சகோதரா! தைரியங்கொள்!
24. தாய்நாடு
25. எங்களது உரிமை
26. சிறைவாசியின் கூற்று
27. எஞ்சியிருப்பது என்ன?
28. பிரதிக்ஞை
29. சந்தோஷ புருஷன் யார்?
30. ஏதோ ஒன்றுக்காக வாழ்
31. நேர்மையே எனது சுவாசம்
32. நியாயமா?
33. மதத்தைப்பற்றித் தவறான கருத்து
34. பூமா தேவியே! கேள்!
35. நமது சம்பத்து
36. நன்னாள் வருக!
சுதந்திர முழக்கம்
வெ. சாமிநாத சர்மா
மூலநூற்குறிப்பு
நூற்பெயர் : சுதந்திர முழக்கம்
தொகுப்பு : வெ. சாமிநாத சர்மா நூல்திரட்டு - 12
ஆசிரியர் : வெ. சாமிநாத சர்மா
பதிப்பாளர் : கோ. இளவழகன்
முதல் பதிப்பு : 2005
தாள் : 16 கி வெள்ளைத் தாள்
அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 10.5 புள்ளி
பக்கம் : 16 + 320 = 336
நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்)
விலை : உருபா. 315/-
படிகள் : 500
நூலாக்கம் : பாவாணர் கணினி, தி.நகர், சென்னை - 17.
அட்டை வடிவமைப்பு : இ. இனியன்
அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ், ஆயிரம் விளக்கு, சென்னை - 6.
வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017., தொ.பே. 2433 9030
அணிந்துரை
எழுத்திடைச் செழித்தச் செம்மல் வெ. சாமிநாத சர்மா (1895-1978) அவர்கள் தன்னுடைய எழுத்துப் பணியை, எதிர்காலம் மறக்காது எனும் நம்பிக்கையைத் தமது நாள் குறிப்பு ஒன்றில் (17.9.1960) பின் வருமாறு பதிவு செய்துள்ளார்.
“ஆங்கிலக் கணக்குப்படி இன்று என்னுடைய 66வது பிறந்த நாள். வாழ்க்கைப் பாதையில் அறுபத்தைந்தாவது மைல் கல்லைக் கடந்து விட்டேன். என்ன சாதித்துவிட்டேன்? அதைச் சொல்ல எனக்கு சந்ததிகள் இல்லை. ஆனால் வருங்காலத் தமிழுலகம் ஏதாவது சொல்லுமென்று நினைக்கிறேன்.”
அவருடைய எழுத்துப் பணியோகத்திற்கு உறுதுணையாக வாழ்க்கைத் துணைவியாக, விளங்கிய மங்களம் அம்மையார், மகப் பேறு - சந்ததி - இல்லாததை ஒரு குறையாகக் கருதாமல் சாமிநாத சர்மாவின் நூல்களே குழந்தைகள் எனும் கருத்தை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
“இந்தக் குழந்தைகள்தாம் - நூல்கள்தாம் - எங்களுக்குப் பிற்காலத்தில் எங்கள் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும்”
இறுதிக் காலத்தில் தம்முடைய நூல்கள், கையெழுத்துப் படிகள் அனைத்தையும் வெளியிடும் உரிமையை எனக்கு வழங்கிய சமயத்தில் அவருடைய நூல்கள் அனைத்தையும் பொருள்வாரி யாகப் பிரித்துப் பல தொகுதிகளாக வெளிவரும் காலம் கைகூடும் என்று உணர்ச்சிப் பெருக்கில் கூறினேன். அதைக் கேட்டு அவர் புன்னகை பூத்தார்.
ஆமாம், வெ. சாமிநாத சர்மாவின் நூல்கள் தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி ஆட்சி காலத்தில் கி.பி. 2000த்தில் நாட்டுடைமை யாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பல பதிப்பகங்கள் போட்டி போட்டுக் கொண்டு அவருடைய நூல்கள் பலவற்றை மறுவெளியீடுகளாகக் கொண்டு வந்துக் கொண்டிருக்கின்றன.
இவற்றிற்கெல்லாம் மணிமகுடம் வைப்பது போன்று, வளவன் பதிப்பகம் சாமிசாத சர்மா அவர்களுடைய நூல்கள் அனைத்தையும் பல தொகுதிகளாக வெளியிடுகின்றது.
83 ஆண்டுகால வாழ்க்கையில் சாமிநாத சர்மாவின் இலக்கிய வாழ்க்கை 64 ஆண்டுகாலமாகும். அவருடைய 78 நூல்கள் அவருடைய இலக்கிய வாழ்க்கையின் சுடர் மணிகளாக ஒளிவீசிக் கொண்டிருக்கின்றன.
அண்மைக் காலமாகத் தமிழ்ப் பேரறிஞர்கள் தம் நூல்கள் அனைத்தையும் பல தொகுதிகளாக வெளியிட்டு தன்னேரில்லாத சாதனைகள் படைத்து வருகின்றது தமிழ்மண் பதிப்பகம்.
காலத்தேவைக்கேற்றத் தமிழ்த்தொண்டாற்றி வரும் வளவன் பதிப்பகம் சாமிநாதசர்மாவின் நூல்களனைத்தையும் தொகுத்து வெளியிடும் அரிய முயற்சியைத் தமிழர்கள் வரவேற்று வெற்றி யடையச் செய்ய வேண்டும், செய்வார்கள் என்று உறுதியாக நம்புகின்றேன்.
இராமகிருஷ்ணபுரம், 2வது தெரு, மேற்குமாம்பலம், சென்னை - 600 033.
பெ.சு. மணி
வெ. சாமிநாத சர்மாவின் சாதனைகள்
தமிழ் மொழியின் உரைநடை நூல்களின் வளம் பெருகத் தொடங்கியக் காலக்கட்டத்தில், தரமான உயர்ந்த நூல்களை எழுதியும், மொழிபெயர்த்தும் வெளியிட்டதன் மூலம், தமிழ்ப் பணியாற்றிய பெருமக்கள் பலர். இன்றும், என்றும் நாம் நன்றியுடன் நினைவு கூறவேண்டியவர்களில் பெரும் பங்காற்றியச் சிறப்புக்கு உரியவர், திரு. வெ. சாமிநாத சர்மா அவர்கள். சர்மாஜி என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என போற்றப்பட்டவர். அவருடன் குரு-சீடர் உறவுப் பிணைப் போடு பணியாற்றியவர்! சுதந்திரமான எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்டதால் அரசுப் பணியை உதறிவிட்டு, இதழியல் துறையைத் தேர்ந்தெடுத்தவர். 1895ஆம் ஆண்டில் பிறந்த சர்மாஜி தனது பதினேழாவது அகவையில் எழுதத் தொடங்கி, பத்தொன்பதாவது அகவையிலேயே தனது முதல் நூலை (கௌரீமணி) வெளியிட்டார். மூன்று ஆண்டுகள் திரு. வி. க. நடத்திய ‘தேச பக்தன்’ நாளேட்டிலும், பன்னிரண்டு ஆண்டுகள் ‘நவசக்தி’ கிழமை இதழிலும், இரண் டாண்டுகள் ‘சுயராஜ்யா’ நாளேட்டிலும் உதவியாசிரியராகப் பணி யாற்றினார். சென்னை தமிழ் எழுத்தாளர் சங்க வெளியீடான ‘பாரதி’யில் ஓராண்டு ஆசிரியராக இருந்தார். திரு. ஏ.கே. செட்டியார் அயல் நாடு சென்றிருந்தபோது அவரது ‘குமரி மலர்’ மாத இதழுக்கு ஆசிரியராய்ப் பொறுப்பேற்றிருந்த பெருமையும் இவருக்கு உண்டு.
தமிழ்த் தென்றல் திரு. வி. க., மகாகவி பாரதியார், பரலி சு. நெல்லையப்பர், வீர விளக்கு வ. வே. சு. ஐயர், தியாகச் செம்மல் சுப்பிரமணிய சிவா, அக்ரஹாரத்து அதிசய மனிதர் வ. ரா. பேராசிரியர் கல்கி, உலகம் சுற்றிய தமிழர் திரு. ஏ.கே. செட்டியார் முதலான தமிழ் கூறும் நல்லுலக மேதைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் சர்மாஜி. இவரது இல்லற வாழ்க்கை இலட்சியப் பிடிப்பாலும், தமிழ்ப்பணியாலும் சிறப்பு பெற்றது. தம்பதியர் இருவருமே அண்ணல் காந்தியின் பக்தர்கள். தனது அனைத்து எழுத்துலகப் பணிகளிலும் உறுதுணையாக நின்று, ஊக்கமளித்து, தோழமைக் காத்து, அன்பு செலுத்திய மனையாள் மங்களம் அம்மையாருடன் 1914ஆம் ஆண்டு முதல் 42 ஆண்டுகள் இல்லறத்தை நல்லறமாக்கி நிறைவு கண்டவர் சர்மாஜி. இத்தகைய பாக்கியம் பெற்ற எழுத்தாளர்கள் ஒரு சிலரே! தம்மிருவரின் ஒத்துழைப்பால் தோன்றிய நூல்களையே தங்கள் குழந்தைகளாக எண்ணி மகிழ்ந்தனர் அந்த ஆதர்ச தம்பதியர். ஆங்கிலம், தமிழ், வட மொழி, தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஆறு மொழிகளை அறிந்திருந்தவர் அம்மையார். தனக்கு உற்றத் துணையாயிருந்த மனையாள் உயிர் நீத்தது சர்மாஜியைத் துயரக் கடலில் ஆழ்த்தியது. தனது ஆற்றாமையைத் தன் நண்பருக்கு எழுதிய கடிதங்கள் வாயிலாக வெளிப்படுத்தினார். இவைதான் பின்னர் ‘அவள் பிரிவு’ என்று நூலாக்கம் பெற்றது.
இரங்கூனுக்குச் சென்ற சர்மாஜி 1937 இல் “ஜோதி” மாத இதழை தொடங்கினார். பத்திரிகை உலகிற்கு ஒரு புதிய வெளிச்சமாக அமைந்தது ‘ஜோதி’. பிற்காலத்தில் பிரபலமான எழுத்தாளர்களில் பலரும் ‘ஜோதி’யில் தங்கள் எழுத்தாற்றலை வெளிப்படுத்தியவர்கள்தாம். புதுமைப் பித்தனின் ‘விபரீத ஆசை’ முதலான கதைகள் ‘ஜோதி’யில் வெளிவந்தவையே! இலட்சியப் பிடிப்போடு ஒரு முன் மாதிரி பத்திரிகையாக விளங்கிய ‘ஜோதி’யில் ‘வருணன்’, ‘சரித்திரக்காரன்’, ‘மௌத்கல்யன்’, ‘தேவதேவன்’, ‘வ.பார்த்த சாரதி’ முதலான பல புனைப் பெயர்களில் பல துறைகளைத் தொட்டு எழுதியவர் சர்மாஜி. இரண்டாம் உலகப் போரில் இரங்கூனில் பெய்த குண்டு மழைக்கு நடுவிலும் ‘ஜோதி’ அணையாமல் தொடர்ந்து சுடர்விட்டது குறிப்பிடத்தக்கது.
போர்க் காலத்தில் குடும்பத்தோடு அவர் மேற்கொண்ட பர்மா நடைப் பயணம் துன்பங்கள் நிறைந்தது. தனது உடமைகளில் எழுது பொருட்களையே முதன்மையாகக் கருதினார். குண்டு மழையால் திகிலும், பரபரப்பும் சூழ்ந்திருந்த போது பாதுகாப்புக் குழிகளில் முடங்கவேண்டிய தருணத்திலும் தன் தமிழ்ப் பணியை மறந்தார் இல்லை. உயிருக்கு உத்திரவாதமற்ற சூழலில், உயிர் போவதற்குள் தான் மேற்கொண்டிருந்த மொழிபெயர்ப்புப் பணியை முடித்தே ஆகவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பாதுகாப்புக் குழியில் இருந்தபடி மொழிபெயர்த்து எழுதி முடிக்கப்பட்டதுதான் ‘பிளாட்டோவின் அரசியல்’ என்ற உலகம் போற்றும் நூல்.
சர்மாவின் நூல்களை வெளியிடுவதற்காகவே இரங்கூனில் தோற்றுவிக்கப்பட்ட பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம், பின்னர் புதுக்கோட்டைக்கு மாற்றப்பட்டது. வரலாறு என்பது உண்மை களை மட்டுமே தாங்கி நிற்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தவர் சர்மாஜி. உலகத் தலைவர்கள், இராஜதந்திரிகள், புரட்சி வீரர்கள், தீர்க்கதரிசிகள்; அறிவியல் அறிஞர்கள் முதலானோரின் வாழ்க்கை வரலாற்றையும், அவர்தம் சாதனைகளையும் உள்ளது உள்ளபடி, மிகச் சரியானபடி தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர். இன்றளவும் இச்சிறப்பில் இவருக்கு இணை இவரே என்பது மிகையல்ல! ஆங்கில மொழி அறியாத அல்லது ஆங்கிலத்தில் போதிய பரிச்சயம் இல்லாத தமிழர்களுக்கு உலக நாடுகளின் அரசியல், தத்துவங்கள், வரலாறு தொடர்பான ஆங்கில நூல்களை எளிய, அழகுத் தமிழில் மொழிபெயர்த்து அளித்தார். மொழி பெயர்ப்புகள் நீங்கலாக மற்ற நூல்களை எழுதும் போதும் தனது விமர்சனங்களையும், அபிப்பிராயங்களையும், கற்பனைகளையும் ஒருபோதும் கலந்து எழுதியவரல்ல! இப்பண்பே அவரது நூல்களின் மிகச் சிறந்த அம்சமாகும்.
சர்மாவின் மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழ் மக்களிடையே மிகவும் புகழ்ப் பெற்றவை. சாதாரண வாசகனுக்கும் புரியக் கூடியவை. மூல நூலின் வளத்தைக் குறைக்காதவை. ஆக்கியோன் உணர்த்த நினைத்ததை சற்றும் பிசகாமல் உள்ளடக்கி, மொழியின் லாவகத்தோடு சுவைக் குன்றாமல் பெயர்த்துத் தரப்பட்டவை. ‘பிளாட்டோவின் அரசியல்’, ‘ராஜதந்திர யுத்தகளப் பிரசங்கங்கள்’, ரூஸ்ஸோவின் ‘சமுதாய ஒப்பந்தம்’, மாஜினியின் ‘மனிதன் கடமை’, இங்கர்சாலின் ‘மானிட சாதியின் சுதந்திரம்’, சன்யாட்சென்னின் ‘சுதந்திரத்தின் தேவைகள் யாவை?’ முதலான நூல்களைப் படித்தவர்களுக்கு இது நன்கு விளங்கும்.
‘காரல் மார்க்ஸ்’ வாழ்க்கை வரலாறு பற்றி அநேக நூல்கள் இதுவரை வெளிவந்திருந்தாலும், முதன் முதலாக மிக விரிவாக எழுதப்பட்டதும், மிகச் சிறப்பானதென்று எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டதும் சர்மாஜியினுடையதே!
எழுபதுக்கும் மேற்பட்ட மணி மணியான நூல்களை சர்மாஜி எழுதினார். ‘The Essentials of Gandhism’ என்ற ஆங்கில நூலும் அவற்றில் அடங்கும். நாடகங்கள் எழுதுவதில் அவருக்கிருந்த ஆர்வத்தையும், ஆற்றலையும் அவர் எழுதிய ‘லெட்சுமிகாந்தன்’, ‘உத்தியோகம்’, ‘பாணபுரத்து வீரன்’, ‘அபிமன்யு’ ஆகிய நாடக நூல்கள் வெளிப்படுத்துகின்றன.
எண்பத்தி மூன்று வயது வரை வாழ்ந்து, தமிழ்ப் பணியாற்றி மறைந்த சர்மாஜியின் நூல்களை இன்றைய தலைமுறையினர் படித்தறிந்து கொள்வது அவசியம். ஏற்கனவே படித்து அனுபவித்த வர்கள் தங்கள் அனுபவத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இவற்றிற்கு ஏதுவாக ‘வளவன் பதிப்பகம்’ மீண்டும் அவற்றை பதிப்பித்துத் தனக்குப் பெருமை சேர்த்துக் கொள்ளும் வகையில் தமிழ்ப் பணியாற்றியுள்ளது போற்றுதலுக்கு உரியது. இதன் பொருட்டு திரு. கோ. இளவழகன் அவர்களுக்கும், அவர்தம் மகன் இனியனுக்கும் நாம், தமிழர் என்ற வகையில் நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளோம். பதிப்புத் துறையில் வரலாறு படைத்து வரும் திரு கோ. இளவழகன் வரலாற்றறிஞர் சர்மாவின் நூல்களை வெளியிடுவது பொருத்தமே!
6, பழனியப்பா நகர், திருகோகர்ணம் அஞ்சல், ‘ஞானாலயா’ பி. கிருஷ்ணமூர்த்தி, புதுக்கோட்டை - 622 002.
டோரதி கிருஷ்ணமூர்த்தி
பதிப்புரை
‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும்; கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்!’ என்ற தமிழ்ப்பெரும் பாவலர் பாரதியின் கட்டளைக்கேற்ப உலகெங்கும் கொட்டிக் கிடந்த அறிவுச் செல்வங்களைத் தாய்மொழியாம் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்த பெருமையர் சாமிநாத சர்மா. பல்துறை அறிஞர்; பன்முகப் பார்வையர்; தமிழக மறுமலர்ச்சி சிந்தனையாளர்களில் ஒருவர்; தமிழ் கூறும் நல்லுலகம் புதியதோர் கருத்துக்களம் காண உழைத்தவர்; தமிழுக்கு உலக சாளரங்களைத் திறந்து காட்டிய வரலாற்று அறிஞர்; இவர் ஆற்றிய பணி வரலாற்று ஏடுகளில் பொன்னெழுத்துகளால் பதியத்தக்கது.
தம்மை உயர் தகுதி உடையவர்களாக்கிக் கொண்ட மாந்தர்களைத் தான் வரலாற்று ஆசிரியர்கள் உலகுக்கு வரலாறாக வடித்துத் தந்துள்ளனர். மக்களின் மகிழ்ச்சிக்காக உழைத்த உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை, நூல் தொகுப்பாகத் தமிழ் இளம் தலைமுறைக்கும், எதிர்வரும் தலைமுறைக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காகத் தந்துள்ளோம். தமிழ்க் குமுகாயம் வலிமையும், கட்டமைப்பும் மிக்கப் பேரினமாக வளர வேண்டும்; வாழவேண்டும் என்ற உணர்வோடு இந்நூல் தொகுப்புகளை உங்கள் கைகளில் தந்துள்ளோம்.
சாதிப்பித்தும், சமயப்பித்தும், கட்சிப்பித்தும் தலைக்கேறி தமிழ்க் குமுகாயத்தைத் தலைநிமிரா வண்ணம் சீரழித்து வருகிறது. மொழி இன நாட்டுணர்வு குன்றிக் குலைந்து வருகிறது. இச்சீரழிவில் இருந்து தமிழர்களை மீட்டெடுக்க வேண்டும். இழிவான செயல் களில் இளம் தலைமுறையினர் நாட்டம் கொள்ளாத நிலையை உருவாக்குவதற்கும், மேன்மை தரும் பண்புகளை வளர்த்தெடுப்ப தற்கும், அதிகாரப் பற்றற்ற - செல்வம் சேர்க்க வேண்டுமென்ற அவாவற்ற - செயல்திறமையைக் குறிக் கோளாகக் கொண்ட - பகுத் தறிவுச் சிந்தனையை அறிவியல் கண்கொண்டு வளர்த்தெடுக்கும் உணர்வோடு இந்நூல்களைத் தமிழர்களின் கைகளில் போர்க் கருவிகளாகக் கொடுத்துள்ளோம்.
தன் மதிப்பும், கடமையும், ஒழுங்கும், ஒழுக்கமும், தன்னல மின்றி தமிழர் நலன் காக்கும் தன்மையும் வளரும் இளந்தலை முறைக்கு வேண்டும். இளமைப் பழக்கம் வாழ்நாள் முழுவதும் உதவும். விடாமுயற்சி வெற்றி தரும்; உழைத்துக் கொண்டே இருப்ப வர்கள் எந்தச் செயலிலும் வெற்றி பெறமுடியும் எனும் நல்லுரை களை இளம் தலைமுறை தம் நெஞ்சில் கொள்ள வேண்டும் என்ற மனஉணர்வோடு இந்நூல் தொகுதிகள் வெளியிடப்படுகின்றன.
சர்மா தாம் எழுதிய நூல்களின் வழியாக மக்களிடம் பேசியவர். மக்கள் இவரின் நூல்களைப் படிக்கும் போது அந்த நூல்களின் கதைத் தலைவனோடு நெருங்கி இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியவர். இவரின் உரைநடை நீரோட்டம் போன்றது. தமிழ் உரைநடைக்குப் புத்துயிர் ஊட்டிப் புதுவாழ்வு அளித்தவர். வேம்பாகக் கசக்கும் வரலாற்று உண்மைகளை இனிப்புப் பொங்கலாகத் தமிழ் குமுகாயத்திற்குத் தந்தவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என்று போற்றப்பட்ட இவரின் நூல்கள் தமிழ்க் குமுகாயத்திற்கு வலிவும், பொலிவும் சேர்க்கும் என்ற தளராத உணர்வோடு தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம்.
முன்னோர்கள் சேர்த்து வைத்த அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து நூல் திரட்டுகளாக ஒரு சேர வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தொகுப்பு நூல் பதிப்பகம் என்பதை நிலை நிறுத்தி வருகிறோம். சாமிநாத சர்மா 78 நூல்களை எழுதியுள்ளார். இதில் தலைவர்கள், அறிவியல் அறிஞர்களின் வரலாற்று இலக்கியங்கள் 26 ஆகும். இதனை 9 நூல் திரட்டுகளாக வெளியிடுகிறோம். ஏனைய நூல்களையும் மிக விரைவில் தமிழ் கூறும் உலகுக்கு வழங்க உள்ளோம்.
தமிழர்கள் பொதுவாழ்வில் நாட்டம் கொள்ள வேண்டும்; உலக அரசியல் அறிவைப் பெறவேண்டும் என்னும் பெருவிருப்பால் இந்நூல் களைக் கண்டெடுத்து நூல்திரட்டுகளாக உங்கள் முன் தந்துள்ளோம். வடமொழியின் ஆளுமை மேலோங்கி இருந்த காலத்தில் இவரின் தமிழ் உரைநடை வெளிவந்ததாகும். அந்தக் காலப் பேச்சு வழக்கையே மொழி நடையின் போக்காக அமைத்துக் கொண்டு நூலினை உருவாக்கி யுள்ளார். மரபு கருதி உரை நடை யிலும், மொழிநடையிலும், மேலட்டைத் தலைப்பிலும் மாற்றம் செய்யாது நூலை அப்படியே வெளியிட்டுள்ளோம்.
அடிமை உணர்வையும், அக்கறையற்றப் போக்கையும் தூக்கி யெறிந்து உலக அரங்கில் தமிழினம் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இவ்வரலாற்று இலக்கியங்கள் கலங்கரை விளக்காக அமையும் என்று நம்புகிறோம். தலைவர்களின் வரலாற்று இலக்கியங்களைப் படியுங்கள். அவர்களின் வாழ்வை நெஞ்சில் நிறுத்துங்கள். தமிழின மேன்மைக்கும், வளமைக்கும் தம் பங்களிப்பைச் செய்ய முன் வாருங்கள். நூலாக்கத்திற்கு உதவிய அனைவருக்கும் எம் நன்றி உணர்வை தனிப்பக்கத்தில் குறித்துள்ளோம்.
பதிப்பாளர்
நுழையுமுன்…
மானிட ஜாதியின் சுதந்திரம்
இங்கர்சால் பகுத்தறிவுச் செம்மல், அமெரிக்கா ஈன்றெடுத்த அறிஞன் நூலின் மொழிபெயர்ப்பே மானிட ஜாதியின் சுதந்திரம். இவன் ஒரு சிந்தனையாளன். எதனையும் அஞ்சாமல் வெளியிலே சொல்லும் ஆற்றல் உடைய அறிஞன். தான் உழைத்துச் சேர்த்த செல்வத்தைத் துன்பப்பட்ட மக்களுக்குக் கொடுத்து மகிழ்ந்தவன்.
அறிவுப் பெருக்கத்தின் விளைவால் உள்ளத்தில் பட்டதை உலகிற்கு உரைத்த அறிஞர்கள் வரிசையில் வைத்து எண்ணப் படத்தக்கவன். உயிரைத் துரும்பென மதித்தவன். எதிர்ப்பு, இரண்டகம், மரணம் இவற்றைப் பொருட்படுத்தாமல் வாழ்ந்து மறைந்தவன். எதை உண்மை என்று நம்பினார்களோ அதற்காகத் தலைநிமிர்ந்து நின்ற பெறுமை உடையவர்களே மாமனிதர்கள். (பக். 19)
எந்த ஒரு வீட்டில் பயனதரும் நூல்கள் அடங்கிய நூலகம் உள்ளதோ அங்கு அறிவுச் செல்வம் குடி கொண்டிருக்கிறது. பழங்காலத் தெப்பத்திற்கும், இக்காலப் போர்க் கப்பலுக்கும், பழங்காலத் தடிக்கும், இன்றைய தகரி(பீரங்கி)களுக்கும் உள்ள அறிவின் முன்னேற்றத்தை இந்நூலில் அறியலாம்.
அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன் அடிமை முறையை அடியோடு ஒழித்தார். இவர் உலக வரலாற்றில் தனக்குக் கிடைத்த ஆளுமையை வேறு எதற்கும் பயன்படுத்தாது மக்களின் வாழ்வுயர பயன்படுத்தியவர் எனும் குறிப்பும் காணப்படுகிறது.
உலகமெலாம் கட்டியாளும் அரசனாக இருப்பதைக் காட்டி லும் ஓர் ஆண்மகனாக, ஒரு பெண்ணின் அன்பிற்குரியவனாக ஒருவன் இருந்தால் அவனே மிக உயர்ந்த மாந்தன். பெண்மை யின்அன்பைப் பெற்ற பேராளன். பெண்மையின் பெருமை பேசப்படும் நூல்.
குழந்தைகளின் அருமை பேசப்படும் நூல். (பக். 68)
அறிஞர்கள் உருவாக வேண்டுமானல் குளிர்காலமும் தேவை, கோடைக்காலமும் தேவை. எந்த நாட்டில் மாந்தனுக்குப் போர்வை தேவையில்லாமல் இருக்கிறதோ, எங்கு முகில்கள் கதிரவனை மறைத்துக் கொண்டிருக்கிறதோ அங்கே தொழில் புரட்சி தோன்றும். பண்படுத்தப்பட்ட மண்ணில்தான் சிறந்த விளைச்சலைக் காண முடியும். அப்படிப் பட்ட நாட்டில்தான் மிகச்சிறந்த அறிஞர்களை உருவாக்க முடியும்.
சுதந்திரத்தின் தேவைகள் யாவை?
சீனப் பெருநிலத்தில் குடும்பப் பற்றும், மரபுப் பற்றும் மிகுந் திருந்ததே தவிர நாட்டுப்பற்று குறைந்திருந்தது. சீனர்கள் மணற் மூட்டை போன்றவர்கள். நமது மக்கள் குடும்பத்திற்கும் மரபிற்கும் பற்று செலுத்தினார்களே தவிர ஏன் தேசத்திற்கு பற்று காட்டவில்லை? என்று வருந்தியவன் சீன குடியரசுத் தந்தை சன்யாட்சென்.
உலக மக்களோடு சீனாவை ஒப்பிட்டுப் பார்க்கையில் மிகுந்த மக்கள் தொகையோடு இருக்கிறோம். பழம்பெருமை வாய்ந்த கலையறிவோடு இருக்கிறோம். பலகோடி மக்கள் வாழ்கிறோம். தேசிய உணர்ச்சி இல்லையே ஏன்? அந்த தேசிய உணர்ச்சியை வலுப்பெறச் செய்ய வேண்டாமா?” என்ற வினாவை எழுப்பி சீனத்தில் தேசிய உணர்ச்சியைக் கட்டி அமைத்தவன்.
ஒரு நாடு தலைநிமிர்ந்து வாழவேண்டுமானால் அதற்குப் பல துன்பங்கள் வரவேண்டும். எந்த ஒரு நாடு தனக்கு வெளிநாட்டுத் தீங்குகள் இல்லை என்று கருதிக்கொண்டிருக்கிறதோ அது சிதறிப் போவது திண்ணம். ஒரு நாட்டிற்குத் துன்பங்கள் ஏற்பட்டால் அந்தத் துன்பங்களைக் கண்டறிந்து மக்களை ஒன்றுதிரட்டி வீரப்போர் புரிவதே தம் வாழ்விற்கு வழியாகும்.
சீன மக்களாகிய நாம் சீன மக்களின் இன உணர்ச்சியை தேசிய உணர்ச்சியாக வளர்த்தெடுத்துக் கொண்டோமானால், உலக அரங்கில் நிமிர்ந்து நடைபோடுவோம். பிற நாட்டு அறிஞர்கள் மக்களாட்சியைப் பற்றி பேசுகிறார்கள்; நூல்களும் எழுது கிறார்கள். மக்களாட்சி அங்கே மலர்ந்துவிட்டது. இங்கே அந்த மலர்ச்சிக்கு வழியில்லையே ஏன்?
சுதந்திர முழக்கம்
ஒருவனுக்குத் தலைவணங்கி முழந்தாளிட்டு உயிரோடு இருப்பதைக் காட்டிலும் நின்று கொண்டே இறப்பது மேல் என்ற உறுதியுடையவனே மானம் உடையவன். எந்த இனம் அடிமைத் தனத்தில் அமைதியைக் காண்கிறதோ அந்த இனம் சிந்தித்தே தீரவேண்டும். இல்லையெனில் அதற்கு வாழ்வே யில்லை.
என் சொந்த நாடாகயிருந்தாலும் அந்த நாடு அடிமைநாடாக இருந்தால் அங்கே வாழ்வதைவிட ‘நரக’த்தில் வாழ்வதே மேலானது. வாழ்க்கையின் உயர்ந்த சட்டம் எது? தாய் நாட்டைப் பாதுகாப்பது. ஒரு கொள்கையை நாம் பின்பற்று கிறோம் என்றால் அதன் பொருட்டு சாவதற்கும் அணியமாக இருக்கிறோம் என்பது பொருள்.
கெட்ட நாற்றம் நிறைந்த சிறையில் என்னை அடைத்துப் போட்டு துன்புறுத்தினாலும் எனது இறுதி மூச்சு இருக்கிறவரை என் தாய் நாட்டை வழிபட்டுக்கொண்டு இருப்பதுதான் என் கடமை. அதுவே என் உயிர் மூச்சு.
ஈகம் செய்து பெறாத விடுதலை விடுதலையாகுமா? அந்த விடுதலைதான் நீண்டநாள் உயிர்வாழுமா? தன்மதிப்பு இல்லாத மாந்தர்களோ, இனமோ விடுதலையின் மீது பற்றுக்கொள்ள முடியாது. விடுதலையின் எல்லையை விரித்துக்கொண்டு செல்ப வர்கள் துறவிகள் அல்லர்; யோகிகள் அல்லர்; உழைத்துப் பிழைக்கும் மக்களே. இவர்களால்தான் விடுதலையை வென்றெடுக்க முடியும்.
நமது எண்ணத்தைச் செயலாக உருவாக்குகிற பட்டறைதான் நாடு. நமக்கென்று நாடு இல்லாவிட்டால் நமக்கென்று கலையேது? இலக்கியமேது? வாழ்வேது? விடுதலை என்பது போர்த்தன்மை வாய்ந்தது. வீரமும், மனச்சான்றும் உள்ளவர்கள் விடுதலைக்காகப் போராடுவார்கள். விடுதலையைப் பெற்ற வர்கள் கோழைகள் அல்ல. அரசியல் மாற்றத்திற்கு அவர்கள் அஞ்சாதவர்கள்.
விடுதலைக்குப் போரிடுவது என்பது புகழுக்காகவோ, பொருளுக் காகவோ, மதிப்பிற்காகவோ அல்ல. விடுதலை என்பது மக்களை நோக்கி வராது. விடுதலைக்காக நாம்தான் போராடவேண்டும். நாகரிகத்தின் உயர்ந்த பண்பு எது? பிறருக்குத் தன்னை ஈகம் செய்வது. வாழ்க்கையின் ஊற்று எளிய மக்களிடமிருந்துதான் கிளம்புகிறது. மாந்தனாகப் பிறந்து விட்டால் போதுமா? மனிதனாக வாழவேண்டாமா?
மற்றவர்களுடைய நன்மையை தன்னுடைய நன்மையாகக் கருதுகிறவன் எவனோ, அவனே! மாந்தர்களுள் சிறந்தவன். பகட்டாக வாழ்பவன் ஒழுக்கமாக வாழ முடியாது. ஒரு நாட்டிற்குப் பெருமை தரக்கூடியவர்கள் வேளாண்பெருங் குடிமக்களே.
உயர்ந்த கொள்கை இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கை அல்ல. செடிகொடிகள் வளர்வது போலத்தான் அந்த வாழ்க்கை. நீ செடி கொடியாக - காய்கறியாக இருக்க விரும்புகிறாயா?
சோம்பறித்தனத்தினாலோ, பொறுப்பின்மையாலோ, கோழைத் தனத்தினாலோ, பொதுநல உணர்ச்சியின்மை யினாலோ பெற்ற விடுதலையை பேணிகாக்கத் தவறிய நாடுகளின் அவல நிலையைப் படியுங்கள்.
உனது தாய்நாட்டின் மீது பற்று கொள் உனது முன்னோர்கள் வாழ்ந்து உறைந்தது இந்த மண்ணில்தான். உனது பெயர், புகழ், நீ யார் என்பதற்கு அடையாளம் உனது நாட்டில்தான் அடங்கி உள்ளது. உனது எண்ணங்களை அறிவுரைகளை உனது குருதியை தாய் நாட்டுக்குக்காக
நூலாக்கத்திற்குத் துணை நின்றோர்
_நூல் கொடுத்து உதவியோர்_ _ஞானாலயா_ கிருட்டிணமூர்த்தி வாழ்விணையர், பெ.சு. மணி,
_புலவர்_ கோ. தேவராசன், முனைவர் இராகுலதாசன், முனைவர் இராம குருநாதன், முத்தமிழ்ச் செல்வன் க.மு., ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
_நூல் உருவாக்கம்_ _நூல் வடிவமைப்பு_ செ. சரவணன்
_மேலட்டை வடிவமைப்பு_ இ. இனியன்
_அச்சுக்கோப்பு_ _முனைவர்_ செயக்குமார், மு. கலையரசன், சு. மோகன், குட்வில் செல்வி, கீர்த்தி கிராபிக் பட்டு, விட்டோபாய்
_மெய்ப்பு_ _முனைவர்_ செயக்குமார், வே.மு. பொதியவெற்பன், கி. குணத்தொகையன், உலோ. கலையரசி, அ. கோகிலா, கு. பத்மப்பிரியா, நா. இந்திராதேவி, இரா. நாகவேணி, சே. சீனிவாசன்
_உதவி_ அரங்க. குமரேசன், வே. தனசேகரன், நா. வெங்கடேசன், மு.ந. இராமசுப்ரமணிய இராசா
_எதிர்மம் (Negative)_ பிராசசு இந்தியா (Process India)
_அச்சு மற்றும் கட்டமைப்பு_ வெங்கடேசுவரா மறுதோன்றி அச்சகம் (Venkateswara Offset Printers)
இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . .
சுதந்திர முழக்கம்
பதிப்புரை
இச்சைபோல் இருந்து வாழ ஈ, புழு, எறும்பும் கோரும், உச்சமாம் மனித ஜென்மம், சுதந்திர உணர்ச்சியின்றி நச்செனும் அடிமை வாழ்வை நயந்திட ஞாயமுண்டோ? நிச்சய சபதம் பூண்டு சுதந்திரம் நிலைக்கச் செய்வோம். அதற்கு இந்நூல் ஒரு தூண்டுகோல்.
செப்டம்பர் 1943
சென்னை
தமிழ்ப் பண்ணையார்
எது சுதந்திரம்?
சுதந்திரமென்பது ஸ்தூலமான ஒரு பொருளன்று; சூட்சமமான ஒரு சக்தி. அது கண்ணுக்குப் புலனாவதில்லை. ஆனால் அஃதில்லாமல் வாழ்க்கை யில்லை. காற்றை அனுபவிக்க முடிகிறதே தவிர, பார்க்க முடிவதில்லை. அதைப் போன்றதுதான் சுதந்திரமும்.
சுதந்திர மென்பது, ஒருவர் கைநீட்டிக் கொடுக்க மற்றொருவர் கையேந்தி வாங்கிக் கொள்ளும் நன்கொடைப் பொருளன்று; அவரவரும், தமது முயற்சியாலும் உழைப்பாலும் சம்பாதித்துச் சேர்த்துக்கொள்ள வேண்டிய சேமநிதி. சதா விழிப்புடனிருந்து அதனைக் காப்பாற்றி வரவேண்டும். சிறிது அயர்ச்சி ஏற்பட்டால் கூட அது கை நழுவிப் போய்விடும்.
சுதந்திரமென்பது, சீக்கிரம் அழிந்து போகக்கூடிய உடலல்ல; நித்தியமாயுள்ள ஆத்மா; அந்த ஆத்மாவின் பிரகாசம். அது பகற் கனவல்ல; நனவின் ஊற்று; செயலின் மையம். அஃது, அறிவுக்குத் தாய்; அன்புக்கு ஊன்று கோல்; தியாகத்திற்குப் பரிசு.
மனிதன் சுதந்திரத்தோடு பிறக்கிறான் என்று சொன்னால் சுதந்திர உணர்ச்சியோடு பிறக்கிறான் என்பது தான் அர்த்தம். இந்த உணர்ச்சி, மனிதனுக்கு மட்டுமல்ல, எல்லா ஜீவராசிகளுக்கும் உண்டு. பொற் கூட்டிலே பாலுஞ் சோறுமாக உண்டு வளர்கின்ற கிளி, எந்த நிமிஷத்திலே கூடு திறக்கப்படும் என்றுதான் காத்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சுதந்திர உணர்ச்சியை வளர்த்து இதனின்று அதிகமான பயனை நுகர்வதும், பிறர்க்கு நுகர்விப்பதும், பகுத்தறிவு படைத்த மனிதனுடைய இன்றியமை யாத கடமை. இந்தக் கடமையைச் செய்யாதவன் மனிதனல்ல; மாமிசப் பிண்டம்; உயிரில்லாமல் உலவுன்ற நிழல். ரூஸ்ஸோ என்ற பிரெஞ்சு அறிஞன் கூறுகிறான்: ``ஒரு மனிதன், தன்னுடைய சுதந்திரத்தைத் துறந்த விட்டானென்று சொன்னால், அவன் தன்னுடைய மனிதத் தன்மையையும் துறந்து விட்டா னென்பது அர்த்தம். அது மட்டுமல்ல; மானிட ஜாதியின் ஓர் அம்சத்தினன் என்ற முறையில் அவனுக்கு ஏற்பட்டிருக்கிற உரிமை களையும் கடமைகளையுங் கூடத் துறந்துவிட்டான் என்று கொள்ள வேண்டும். அவன் எல்லாவற்றையும் துறந்து விட்டவனாகிறான். அவனிடத்தில் எந்த விதமான நற்குணங்களையும் கொண்டு புகுத்தி அவனுடைய மனிதத் தன்மையை நிரப்ப முடியாது. சுருக்கமாகச் சொல்லப் போனால் அவன் மனிதனேயல்ல.’’ இதனின்று நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தென்ன வென்றால், ஒரு மனிதன் ஒழுக்க முடைய வனாக இருக்க வேண்டுமானால், சீல புருஷனாக வாழ வேண்டுமானால், அவன் சுதந்திரமாக இருக்க வேண்டுமென்ப தாகும்.
இந்தச் சுதந்திரத்திற்காக, உலகத்திலே அநேக போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன; அநேக மகான்கள், தங்களுடைய சர்வத்தையும் பலிகொடுத்திருக்கிறார்கள். காட்டிலும் மேட்டிலு மாக அலைந்து திரிந்தான் மகாராணா பிரதாப சிம்மன். ஏன்? மற்றொருவனுக்குத் தலை வணங்கக்கூடா தென்பதற்காகவே. ‘முழந்தாளிட்டுக் கொண்டு உயிரோடிருப்பதைக் காட்டிலும், நின்று கொண்டு இறப்பதே மேல்’ என்ற ஒரே உறுதியுடன் தான், சிவாஜி மகாராஜன், டெல்லியில், தன்னைக் காவற் படுத்தியிருந்த இடத்தி லிருந்து வெளியேறி விட்டான். இப்படி இவர் களுடைய வாழ்க்கை முழுவதும் ஒரே போராட்டமாக இருந்தபோதிலும், அந்தப் போராட்டத்தில்தான் இவர்கள் இன்பம் கண்டார்கள். ஏனென்றால்,’ சந்தோஷமாயிருப்பதன் ரகசியம் சுதந்திரமாயிருப்பது’ என்ற நுட்பத்தை இவர்கள் நன்கு தெரிந்து கொண்டிருந்தார்கள்.
உலக சரித்திரத்தை ஒரு தொகுப்பாக எடுத்துக் கொள்வோ மானால், அதில் அநேகவிதமான கறைகள் படிந்திருப்பதைக் காண்கிறோம். ஆனால் இந்தக் கறைகளை, சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட வீரர்களின் புனிதமான வாழ்க்கை மறைத்து விடுகின்றது. பிரதியொரு நாட்டுச் சரித்திரமும் இவர்களால்தான் பிரகாசித்தது; அமரத்துவம் அடைகிறது.
இவர்கள் - இந்தச் சுதந்திர வீரர்கள் - தங்கள் சொல்லாலும் செயலாலும், மற்றவர்களை ஊக்கப்படுத்தியும் நல்வழிப்படுத்தியும் வந்திருக்கிறார்கள். இவர்களுடைய பொருள் சொறிந்த சொல்லும், லட்சியம் வாய்ந்த செயலும் எக்காலத்திற்கும் எந்நாட்டிற்கும் பொது வானவை.
இந்த நூலில், உலகத்துப் பல அறிஞர்கள், சுதந்திரத்தைப் பற்றியும் மனித வாழ்க்கையைப் பற்றியும் அவ்வப்பொழுது சொன்ன வாசகங் களைத் திரட்டிக் கொடுத்திருக்கிறேன். இவர்கள் யார், எந்நாட்டார், எக்காலத்தார் என்பன போன்ற விவரங்களைப் பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை. எந்நாட்டவரா யிருந்தாலென்ன, எக்காலத்தவரா யிருந்தாலென்ன, இவர்களுடைய கருத்துக்கள் தான் முக்கியம். அவைகளே நமக்குத் தேவை.
எமர்ஸன் என்னும் அறிஞன் கூறுகிற மாதிரி, சிந்தனை செய்வது கடினந்தான். என்றாலும் சிந்தித்தேயாக வேண்டும். சிறப்பாக, எந்த ஜாதி அடிமைத்தனத்திலே அமைதியைக் காண்கிறதோ அந்த ஜாதி சிந்தித்தே தீரவேண்டும். இல்லாவிட்டால் அதற்கு விமோசனமே கிடையாது. ஏனென்றால் செயலுக்குத் தூண்டுவது சிந்தனை யல்லவா? ஆதலின், எனது தமிழ்நாடே! இச் சிறிய நூலிலுள்ள சிந்தனை மலர்களை ஏற்றுக்கொள். வந்தே மாதரம்.
சென்னை
22-6-43
வெ. சாமிநாதன்
பிரார்த்தனை
பொருளை நான் பொருட்படுத்துவதில்லை. காதலா? அதனை நான் கேவலமாகக் கருதுகிறேன். புகழ் என்பது ஒரு பொய்க் கனவு. என்னுடைய பிரார்த்தனை யெல்லாம் ஒன்றுதான். அந்த ஒரு பிரார்த்தனைக்காகவே என் உதடுகள் அசைகின்றன. அந்தப் பிரார்த்தனை என்ன? “கடவுளே! என் இருதயத்தினின்று நீ விலகிப் போனாலும் போ. எனக்குச் சுதந்திரத்தை மட்டும் கொடு. வாழ்விலும் சாவிலும் நான் கோருவது பந்தமற்ற ஆத்மா ஒன்றுதான். எந்தத் துன்பம் வந்தாலும் சகித்துக் கொள்ள கூடிய தைரியத்தை எனக்குக் கொடு”
சுதந்திரத்தின் சந்நிதானத்தில்
சுதந்திரமுள்ள இடந்தான் எனது நாடு.
சுதந்திரமில்லாத நாடு காற்றில்லாத வீடு.
வார்த்தைகளிலே புனிதமான வார்த்தை எது?
சுதந்திரம்
சுதந்திரம் என்றால் என்ன? அது தேவையின் எல்லை.
உடலைச் சிறையில் இடலாம்; ஆனால் உள்ளத்தை இட முடியுமா?
எவனொருவன் சுதந்திரமாக வாழ்கிறானோ அவன் தான் சுகமாக வாழ்கிறான்.
அதிகார சக்தியோடு நீதி போராடினால் விளைவது சுதந்திர வெற்றி.
இறந்து போன சிங்கத்தைக் காட்டிலும் உயிருள்ள நாய் மேலானது.
நான் ஓர் ஈயினுடைய தலையாக இருக்க விரும்புவேனே தவிர சிங்கத்தின் வாலாக இருக்க விரும்ப மாட்டேன்.
எவன் தனக்குத்தானே எஜமானனாக இல்லையோ அவன் சுதந்திர புருஷனல்ல.
தூக்கு மேடையில் ஏற்றுகிறவனைக் காட்டிலும் ஏறுகிறவனே மேலானவன்.
சுதந்திரமில்லாத நாடு சிறைக் கூடம். செல்வங்கொழிக்கும் அடிமை நாடாயிருப்பதைக் காட்டிலும், வறுமை நிறைந்த சுதந்திர நாடாயிருப்பது மேல்.
இந்த உலகத்தில் மனிதர்கள் ஏன் போராடுகிறார்கள்? ஏன் உழைக்கிறார்கள்? ஏன் துன்பம் அனுபவிக்கிறார்கள்? எல்லாம் சுதந்திரத்திற்காகத்தான்.
என் சொந்த நாடாயிருந்தாலும், அஃது அடிமை நாடாயிருந் தால், அதில் வசிப்பதைவிட நரகத்தில் வசிப்பதே மேலானது.
தாய் நாடென்கிற சப்தம் கேட்கிறபோதே, நம்மிடத்திலேயுள்ள வீர உணர்ச்சி, கிரியா சக்தி எல்லாம் கொழுந்துவிட் டெரியத் தொடங்கு கின்றன.
கற்சிலைகளில் கடவுள் இருக்கிறார் என்று நீ நினைத்திருக் கிறாய்; ஆனால் எனக்கோ, தாய்நாட்டு மண்ணின் ஒவ்வோர் அணுவும் கடவுள்.
வாழ்க்கையின் உயர்ந்த சட்டம் எது? தாய் நாட்டைப் பாதுகாப்பது.
உலக மனைத்தும் சுதந்திரக்கோயில். ஆகாயமே அந்தக் கோயிலின் கோபுரம்.
தாய் நாட்டை நேசிப்பது, பிரதியொரு மனிதனும் அவசியம் செய்யவேண்டிய கடமையாகும்.
சுதந்தரம் குன்றிப்போய் விட்டதனால்தான் உலகத்தில் நாகரிகம் சீர் கெட்டு விட்டது.
சுதந்திரம், நீதி இரண்டினையும் பிறருக்கு நாங்கள் விற்கமாட் டோம்; அவைகளைப் பிறருக்கு மறுக்கவும் மாட்டோம்.
சுதந்திர மில்லாமல் எந்த விதமான கலைகளும் நீடித்து நிற்க முடியாது.
மற்றவர்களுடைய அநுதாபத்திற்கும் பரிகாசத்திற்கும் மத்தியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
தேசத்திற்காகத் துயரப்படுவது, துன்பமனுபவிப்பது, மரண மடையவது, எல்லாம் புனிதமாகின்றன.
சுதந்திரத்தின் நண்பர்கள், நமது நண்பர்கள்; சுதந்திரத்தின் விரோதிகள், நமது விரோதிகள்.
நல்ல ஆட்சியைவிட சுய ஆட்சியே மேலானது.
சுதந்திரத்தைக் காகிதத்தில் அச்சிட்டு ஜனங்களுக்கு வழங்குவது அவர்களைப் பரிகசிப்பதாகும்.
நமது மனச்சாட்சியைச் சட்டங்கள் ஸ்தம்பிக்கச் செய்துவிடு கின்றன. சுதந்திரம், அதனை வளர்க்கிறது.
எந்த அரசாங்கம், குறைவாக ஆட்சி புரிகிறதோ அந்த அரசாங்கமே சிறந்த அரசாங்கம்.
சுதந்திரத்திற்காகவும் சத்தியத்திற்காகவும் போராடப் புறப்படு கிறவன், நல்ல உடைகளை அணிந்து கொண்டு புறப்பட்டால் வெற்றி யடைவானா?
பொதுவாக ஒரு ஜாதியார் ஒழுக்க ஹீனர்களாகி விட்டால் அவர்களிடத்தில் சுதந்திரம் நிலைத்து நிற்காது.
பருமனான அடிமைத் தனத்தைக் காட்டிலும், ஒல்லியான சுதந்திரமே மேலானது.
சுதந்திரத்தின் விலை என்ன? சதா விழிப்புடன் இருப்பது தான்.
சுதந்திரம் என்பது ஆபத்தானதுதான். ஆனால் அதுதான் நம்மிடத்திலேயுள்ள பத்திரமான பொருள்.
சுதந்திரம் என்றால் பொறுப்பு. இதனால்தான், அநேகர் அதைக் கண்டு, அதாவது சுதந்திரத்தைக் கண்டு அஞ்சுகின்றனர்.
சுதந்திர தேசி இறந்துபோய்க் கொண்டிருக்கிறபோழ்து, நீங்கள் உயிர்வாழ்ந்து கொண்டிருப்பதிலே ஏதேனும் அர்த்த மிருக்கிறதா?
இப்பொழுது நம்மைச் சுற்றி என்ன காண்கிறோம்? சிறிய மனிதர்களிடத்தில் நிறைய பணம், அதிகப் பாவம், குறைந்த பக்தி. கீழான மக்களுக்கு மேலான பதவி. நல்ல ஊழியத்திற்குக் குறைந்தஊதியம்.
மகான்கள் சிறையிலே உழன்று கொண்டிருக்கிறார்கள்; அவர் களுடைய தியாகத்தினால் தேசம் சுதந்திரம் அடைகிறது.
மனிதனுக்கு அநேக கடைமைகள் உண்டு. அவற்றில் முக்கிய மானது, தன் கையினால் உழைத்துப் பிழைப்பது. நெற்றி வியர்வையிலே உன் ரொட்டியைச் சாப்பிடு என்பதன் அர்த்தம் இதுதான்.
தேசபக்தி என்பது, யாரோ ஒரு மனிதனுக்கு ஏக தேசமாக அமைகிற பண்பு என்று யாரும் நினைக்க வேண்டாம். அது பிரதியொரு மனிதனிடத்தும் இயற்கையாகவே அமைந்துள்ள பிறவித்தன்மை.
போர் வீரர்கள் கோழைகளாயிருந்தால் அவர்களுக்குப் பின்பல மாக ஆயுத பல மிருந்து என்ன பயன்?
உனக்கு அதிகார மிருக்கலாம். அந்த அதிகாரத்தைப் பிரயோகம் செய்வதைக் காட்டிலும், உனது கடமையை நிறைவேற்றுவதில் நீ கருத்துள்ளவனாயிரு.
அன்பில்லாத அதிகாரம், பயங்கரமான விளைவுகளுடையது. அந்த அன்பில்லாத அதிகாரத்திற்கு யாரேனும் பக்தி செலுத்துவார்களானால், அது பேய் பிசாசுகளுக்கு பயத்தினால் செலுத்துகிற பக்தி மாதிரிதான்.
ஒரு ஜாதியார், சுதந்திர ஸ்தாபனங்களுக்குத் தயாராயில்லாத வர்களாயிருக்கலாம். ஆனால் அவர் அவர்களிடத்தில் சுதந்திர ஆவலைத் தூண்டி விடுதல் அவசியமாகும்.
சுதந்திரத்தினால் உண்டாகிற அனுகூலங்களை அனுபவிக்க விரும்புகிறவர்கள், அதனைக் காப்பாற்றி வைத்துக் கொள்ளும் சிரமத்தை அனுபவிக்கத் தயாராயிருக்க வேண்டும்.
ஒரு ஜாதியை அடிமைப் படுத்துவதற்காக நாம் போராட வில்லை. ஒரு நாட்டை விடுதலை செய்வதற்காகவே போராடு கிறோம். கண்ணியமான புருஷர்கள் அந்த நாட்டிலே வசிக்க வேண்டு மென்ப தற்காகவே போராடுகிறோம்.
பந்தமில்லாத மனதின் நிரந்தரமான சக்தியே! குகைகளில் நீ பிரகாசிக்கிறாய்! சுதந்திரம் என்பது உனது பெயர். யார் உன்னை அதிகமாக நேசிக்கிறார்களோ அவர்கள், மேற்படி குகைகளில் வசிக்கிறார்கள். அவர்களுடைய இருதயத்தில் நீ வசிக்கிறாய்.
ஒரு லட்சியத்தை நான் நேசிக்கிறேன் என்பதற்கு என்ன அடையாளம்? அதன் பொருட்டு இறக்கச் சித்தமாயிருப்பது தான்.
அரசாங்கம் நிலைபெறுவது, தர்க்க அறிவினாலுமல்ல, நாவன்மை யினாலுமல்ல, பலாத்காரத்தினாலேயே. அது நெருப்பைப்போல், ஆபத்தான வேலையாள்; பயங்கரமான எஜமானன்.
எந்த நாட்டில் அரசாங்கம், ஜனங்களை அநியாயமாகச் சிறையி லடைக்கிறதோ அந்த நாட்டில், நியாய புருஷன் இருக்க வேண்டிய இடம் சிறைதான்.
எனக்கு மற்றெல்லாச் சுதந்திரங்களைக் காட்டிலும், விஷயங் களைத் தெரிந்து கொள்ளவும், தெரிந்து கொண்டதைப் பற்றிப் பேசவும், மனச்சாட்சியின் படி அபிப்ராயம் கூறவும் சுதந்திரம் வேண்டும்.
எந்த ஓர் அரசாங்கமும் எல்லாச் சுதந்திரங்களையும் கட்டுப் படுத்தி விடலாம். ஆனால், மனிதர்களுடைய எண்ண சுதந்திரத்தை மட்டும் யாரும் கட்டுப்படுத்த முடியாது.
சுதந்திரமில்லாத நாட்டின் மக்கள், உணர்ச்சியில்லாத கற்சிலைகள்; அல்லது களிமண் பொம்மைகள். அவர்களை அடிமைப் படுத்திவிட்டு அந்த நாட்டில் எல்லோரும் உலவு கிறார்கள்.
இன்று மலர்ந்து நாளை வாடும் தன்மையது புஷ்பம். மனித வாழ்க்கையும் அதைப் போன்றதே. ஆனால், அந்த வாழ்க்கை, சுதந்திரத் தினால் மணம் பெறுகிறது; பிரகாசிக்கிறது. சுதந்திரம் இல்லாத வாழ்க்கை, கட்டாந்தரைப் புல்தான்.
எப்படி இனிப்பாயிருப்பது சர்க்கரையின் இயற்கையோ, புளிப்பாயிருப்பது புளியின் இயற்கையோ, அப்படியே சுதந்திரமாயிருப்பது மனிதனுடைய இயற்கை.
ஒரு மனிதனிடத்தில் எத்தனை குறைகள் இருந்தபோதிலும் அத்தனையையும், அவனுடைய தேச பக்தி, மூடிபோட்டு மறைத்து விடுகிறது.
மனிதனுடைய சுயமதிப்புக்குப் பங்கம் ஏற்படாமல், வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்து வைப்பது எதுவோ அதுதான் சுதந்திரம்.
எங்களுக்கு லஞ்சம் கொடுத்து, அல்லது எங்களிடம் அன்பு செலுத்தி, எங்களை, நீங்கள் வசப்படுத்தலாம்; ஆனால் எங்களை அச்சுறுத்தி வசப்படுத்த உங்களால் முடியவே முடியாது.
வேண்டுமானால் எனது பெயர்மீது ஆயிரக்கணக்கான சாபங் களை இடுங்கள்; எனது தாய் நாடு விடுதலை அடைந்தால் போதும்.
ஒவ்வொரு ஜாதிக்கும் ஆளும் உரிமை உண்டு. அந்த ஜாதியினர், தங்களுக்கு எந்தவிதமான அரசியல் அமைப்புப் பிடிக்கிறதோ அந்த விதமான அரசியல் அமைப்பை ஏற்படுத்திக்கொள்ளப் பரிபூரண உரிமை யுடையவர்கள். அந்த அரசியல் அமைப்பை அவ்வப்பொழுது மாற்றிக் கொள்ளவும் அவர்களுக்கு உரிமை யுண்டு.
ஒரு சமுதாயத்திற்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்கிறவர்கள் யாரோ அவர்களுக்குத் தான், அந்தச் சமுதாயத்திற்கு வேண்டிய சட்டங்களை இயற்றும் உரிமை இருக்க வேண்டும்.
துர்நாற்றம் நிறைந்த சிறையிலே என்னை அடைத்துப் போட்டுத் துன்புறுத்தலாம். ஆனால் என் கடைசி மூச்சு இருக்கிறவரை, எனது தாய்நாட்டை ஆசீர்வதித்துக் கொண்டிருக்குமாறு கடவுளைப் பிரார்த்திப்பேன்.
தியாகம் செய்து பெறாத சுதந்திரத்தை யாரேனும் மதிப்பார் களா? அது சுதந்திரமாகுமா? அந்தச் சுதந்திரம், நீண்ட காலந்தான் உயிர் வாழுமா? தன்மதிப்புணர்ச்சி யில்லாத மனிதர்களோ, ஜாதியரோ, சுதந்திரத்தின்மீது காதல் கொள்ளவே முடியாது.
எப்படி நமது சாதாரண உலகத்திற்கு, புயற்காற்று அவ்வப் பொழுது தேவையாயிருக்கிறதோ அதைப் போல், அரசியல் உலகத்திற்கும் சிறுசிறு புரட்சிகள் தேவையாயிருக்கின்றன. அரசாங்கங்கள் ஆரோக்கியத் துடனிருப்பதற்கு இவை ஒரு மருந்து மாதிரி.
சுதந்திரத்தின் எல்லையை விசாலித்துக் கொண்டு போகிற வர்கள், மடத்திலேயிருக்கும் துறவிகளல்லர்; குகையிலே தவஞ் செய்யும் யோகிகளல்லர்; உழைத்துப் பிழைக்கிறவர்கள். இவர்களால்தான் ஆபத்தை எதிர்த்து நிற்க முடியும்.
பத்து, இருபது கணக்கில் கிளர்ச்சிகள் செய்வதனால் உண்டாகிற பலனைக் காட்டிலும், உருப்படியான ஒரு காரியத்தினால் உண்டாகிய பலனே அதிகமாயிருக்கும்.
விஷயங்களைப் பகுத்து பார்ப்பதிலே நாம் வல்லவர்களா யிருக்கிறோம்; ஆனால் தொகுத்துப் பார்க்கத் தான் நமக்குத் தெரிய வில்லை.
நீங்கள் மனம் வைத்தால் ஒரு புதிய உலகத்தையே சமைத்து விடலாம். உங்களிடத்திலே சக்தி இருக்கிறது; ஆனால் அந்தச் சக்தியினிடத்திலே உங்களுக்கு நம்பிக்கையில்லை.
உங்களது நாட்டின் புராதனச் சின்னங்களென்ன, சரித்திர சம்பவங்கள் என்ன, இவையாவும், உங்களை வழிகாட்டி அழைத்துச் செல்ல முன் வந்திருக்கும் உங்களுடைய தலைவர் களுக்குக் கொஞ்சங்கூட உணர்ச்சி ஊட்டவில்லையா?
சாதாரணமாக, ஜனங்கள், தங்களுக்குச் சுதந்திரம் மறுக்கப் படுகிற போதுதான், அதன் உண்மையான மதிப்பு இன்ன தென்று அறிய ஆவல் கொள்கிறார்கள்.
மனிதனிடத்திலேயுள்ள சக்திகளெல்லாம் பரிபூரணமாக வெளிப்பட வேண்டுமானால் அவனுக்குச் சுதந்திரம் அவசிய மானது.
பொருளாதார சமத்துவமில்லாமல், உண்மையான சுதந்திர மவோ, ஜனநாயகமோ இருக்கமுடியாது.
சுதந்திரம் என்ற பெயரிட்டழைக்கப்படக் கூடியது எது? நமது நலனை, நமது இஷ்டப்படி நாடுவதுதான். அப்படி நாடுகிற போது, மற்றவர்கள், தங்களுடைய நலனை தங்கள் இஷ்டப்படி நாடுவதற்கு நாம் தடையாயிருக்ககூடாது.
ஒருவன், தன்னுடைய சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொண் டிருப்பதோடு, தனது சத்துருக்களின் சுதந்திரத்தையும் காப்பாற்றிக் கொடுக்கவேண்டும்.
நீ சொல்வதை நான் அங்கீகரிக்கவில்லை. ஆனால் உனக்குச் சொல்ல உரிமையுண்டு என்பதை நான் அங்கீகரிக்கிறேன். உன்னுடைய அந்த உரிமைக்காக நான் எனது உயிருள்ள வரையில் போராடுவேன்.
சுதந்திரமென்பது, வேறோர் உயர்ந்த அரசியல் லட்சியத்தை அடைவதற்குரிய சாதனமல்ல; அதுவே சிறந்த அரசியல் லட்சியம்.
அடக்குமுறை யென்பது சுதந்திர அரசாங்கத்தின் விரோதி மட்டுமல்ல; புரட்சிகளுக்கெல்லாம் தாயாகவும் இருக்கிறது. அஃது, அந்த அடக்கு முறை, மானிட ஜாதியின் முன்னேற்றத் திற்கும், சந்தோஷத்திற்கும் சத்துரு.
நமது எண்ணத்தைச் செயலாக உருவாக்குகிற பட்டரையே நமது தேசம். நமக்கென்று தேச மில்லாவிட்டால், நமக்கென்று சுலையேது? இலக்கியமேது? வாழ்வேது?
தேசத்தை மையமாகக் கொள்ளாத இலக்கியத் தொண்டோ, கலாசேவையோ, அர்த்த மில்லாத வார்த்தைகள்.
பாமர ஜனங்கள் என்று யாரை நாம் நினைத்துக் கொண் டிருக்கிறோமோ அவர்களிடத்தில் மகத்தான சக்திகள் இருக் கின்றன. ஆனால் அந்தச் சக்திகளை அறியாமை என்பது மூடிக்கொண்டிருக்கிறது. இதனால்தான் அவர்கள், யாரை முதலில் சந்திக்கிறார்களோ அவர்களை நம்பி விடுகிறார்கள்.
உங்களுடைய தேசபக்தி உங்களைப் பழைமையிலே பெருமை கொள்ளச் செய்யட்டும்; நிகழ்காலத்திலே உங்களுக்கு உபயோகமா யிருக்கட்டும்; எதிர்காலத்துக்கு வழிகாட்டியா யிருக்கட்டும்.
நாம் இப்பொழுது சுதந்திரமாயிருக்கிறோமென்று சொன்னால் அதற்கெல்லாம் காரண புருஷர்கள் யார்? தங்கள் மனச் சாட்சியின் கட்டளைக்கிணங்க தேசத்தின் சட்டங்களைமீறி நடந்த மகா புருஷர்கள்தான்.
ஓ! எனக்குச் சுதந்திரம் கொடு! நான் இருக்கும் சிறை, சொர்க்க லோகமாயிருந்த போதிலும், அதனுடைய பளிங்குச் சுவர் களைத் தாண்டிகொண்டு வெளியேறி விடவே நான் விரும்பு கிறேன்.
சுதந்திரமே! உன் சந்நிதானத்தில், நித்திய இன்பம் ஆட்சி புரிகிறது. செழுமை, உன்னைப் பின்பற்றி நடக்கிறது. உன் முன்னர், வறுமை கூட, சந்தோஷம் தருவதாய் இருக்கிறது.
சுதந்திரத்தை அங்குலம் அங்குலமாக முயன்று சம்பாதிக்க வேண்டும். பஞ்சணையில் படுத்துக் கொண்டே, சுயேச்சாதிகார சக்தியின் பிடிப்பிலிருந்துவிடுபட்டு, சுதந்திர சக்தியின் சந்நிதானத்தை அடைந்துவிட முடியாது.
சுதந்திரத்தை முயன்று சம்பாதிக்க வேண்டும்; ஜாக்கிரதை யுடனிருந்து காப்பாற்றி வரவேண்டும். இந்த இரண்டையும் செய்ய மனமில்லாமல்தான், அநேக ஜனங்கள், அடிமைத் தனத்திலே திருப்தி யடைந்து விடுகிறார்கள்.
எவனொருவனுக்குப் பேசும் சக்தி யிருக்கிறதோ அவன் பேசுதற்கு உரிமை அளிக்கப்படவேண்டும். ஒருவன், தன் அபிப்பிராயங்களைத் தாராளமாகச் சொல்ல வொட்டாதபடி எந்தச் சமுதாயம் தடை செய்கிறதோ அந்தச் சமுதாயம் சமுதாயமல்ல அடிமைக் கூட்டம்.
சுதந்திரத்தின் அருமையான பாகம் எது? சுயமாகச் சிந்திக்கும் உரிமை; சிந்திப்பதைத் தெரிந்து கொள்ளும் உரிமை; தெரிந்துகொண்டதைச் சொல்லும் உரிமை.
சுதந்திரமென்பது, பிறரிடமிருந்து பெறக்கூடிய ஓர் உரிமை யல்ல; மானிட முன்னேற்றத்திற்கு இன்றியமையாத ஒரு நிலைமை. அதுமட்டுமல்ல; அந்த முன்னேற்றம், சுதந்திரத்தின் மூலமாகத் தான் பூரணத்துவம் அடைகிறது.
சுதந்திரத்தை வைத்துக்கொண்டு வாழ யாருக்குத் தெரிந்திருக் கிறதோ, யார் அதைப் பத்திரமாகப் பாதுகாத்துக் கொண் டிருக்கத் தயாராயிருக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் கடவுள் சுதந்திரத்தை அருள்கிறார்.
பிரஜைகளின் உயிரையும் பொருளையும், சட்டங்களின் மூலமாகக் காப்பாற்றுகிற கடமையைச் செய்வதற்காகவே அரசன் நியமிக்கப் பட்டிருக்கிறான். இந்தக் கடமையைச் செய்வதற்கான அதிகாரத்தை அவன் ஜனங்களிடமிருந்து பெறுகிறான். இந்த அதிகாரத்தைத் தவிர அவனுக்கு வேறு அதிகாரம் கிடையாது.
சுதந்திரத்தை ஒரு வார்த்தையாக எல்லோரும் அடிக்கடி உச்சரிக்கிறார்கள். ஆனால் அதனை யாரும் அறிந்து கொள்ள வில்லை. உலக ஐக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமுதாயத்தில்தான் உண்மையான சுதந்திரம் நிலவும்.
அரசாங்க நிருவாகம் ஒழுங்கா நடைபெறுகிறதா என்னும் விஷயத்தில், ஜனங்கள் எந்த அளவுக்குக் கவனஞ் செலுத்து கிறார்களோ அந்த அளவுக்கே அந்த ஜனங்கள் சுதந்திர முடையவர்களாக இருக்கிறார்கள்.
தாங்கள் பிறந்த தாய் நாட்டைப்பற்றி யாரும் அவமானப் படவேண்டாம். பெற்ற தாய், எவ்வளவு குரூபியாக இருந்தாலும் அவளைக் கண்டு அவமானமடைகிற ஒரு மகன் இந்த உலகத்தில் இருக்கிறானா? அப்படியிருந்தால் அவன் மனிதப் பிறவியல்ல.
ஒருவன் தன் சகோதர மனிதர்களை நேசிக்கிறான் என்று சொன்னால் என்ன அர்த்தம்? நீதியை நேசிக்கிறான் என்பது தான். அப்படியே ஒருவன், தனது தாய்நாட்டை நேசிக்கிறான் என்று சொன்னால், சுதந்திரத்தை நேசிக்கிறான், சமுதாய நன்மையை நாடுகிறான் என்பதுதான் அர்த்தம்.
சுதந்திரமென்பது போர்த்தன்மை வாய்ந்தது வீரமும் மனச்சாட்சியு முள்ளவர்கள் சுதந்திரத்திற்காகவே போராடு வார்கள். சுதந்திரமென்பது வருங்காலத்து மதம். சுதந்திரமா யிருப்பதுதான் வீர புருஷர்களின் லட்சணம்.
நமது பெருமையெல்லாம் சுதந்திரத்தினின்று பிறந்ததுதான். ஜனநாயகத் தொட்டிலில்தான் நமது வியாபாரம் வளர்ந்தது. அப்படியிருக்க, தாயாகிய சுதந்திரத்திற்குப் பங்கம் உண்டு பண்ணினால், அதன் குழந்தையாகிய நமது பெருமைக்கும் பங்கம் உண்டாகுமல்லவா?
ஒருநாடு, மற்றொரு நாட்டை ஆக்கிரமித்துக் கொள்கிறபோது, இரண்டு நாடுகளும் சந்தோஷமாயிருக்க முடிவதில்லை. ஆக்கிரமிப்புக் குட்பட்ட நாடு, இழந்துபோன தனது புராதனப் பெருமையை நினைத்து வருத்தப் பட்டுக்கொண்டிருக்கிறது. ஆக்கிரமித்துக் கொண்ட நாடோ, தனக்கு விரோதமாக எப்பொழுது கலகங்கள் முதலியன நடைபெறுமோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது.
நாங்கள் துன்பமனுபவிக்கத் தயாராயிருக்கிறோம்; சுதந்திரப் போராட்டத்தை விட்டுக் கொடுக்கத் தயாராயில்லை. இந்தப் போராட்டத்திலே நாங்கள் இறந்து போகலாம். அதனால் போராட்டம் நின்றுவிடும் என்று கருதவேண்டாம். எங்கள் சந்ததியார் அதனைத் தொடர்ந்து நடத்துவார்கள். நாங்கள் பட்ட கஷ்டங்கள் வீண் போகா.
விடுதலை, விடுதலை என்று முழக்கம் செய்கிறோம். சுதந்திரம், சுதந்திரம் என்று முழக்கம் செய்கிறோம். கடவுள், எங்களுக்கு வழிகட்டி யாயிருக்கிறார். நாங்கள், கத்தி யெடுக்க மாட்டோம்; யுத்த நெருப்பு மூட்ட மாட்டோம். நியாயம், ஒற்றுமை ஆகிய இவைகளைக் கொண்டுதான் எங்கள் பிறப்புரிமையைப் பெறுவோம்; சுதந்திரத்தைப் பெற்றே தீருவோம்.
கடவுளே! அறிவும், வலிமையும், ஆண்மையும் நீயேயென்று சொல்கிறார்கள். அப்படியானால், உனது மக்களின் அழு குரலைக்கேள்; அவர்கள் வறுமையிலே உழன்று கொண்டிருப் பதையும், அடிமைத் தனத்திலே திணறிக் கொண்டிருப்பதையும் பார். பிரதியொரு மனிதனும் சுதந்திரமாயிருக்க வேண்டு மென்று ஆசீர்வாதம் செய்.
சுதந்திரம் என்பது, ஓர் அரசாங்கத்தினிடமிருந்து எப் பொழுதுமே தோன்றியது கிடையாது. அந்த அரசாங்கத்தின் பிரஜைகளிடமிருந்தே அது தோன்றுகிறது. சுதந்திரத்தின் சரித்திரம் போராட்டத்தின் சரித்திரமாகவே இருக்கிறது. அரசாங்கத்தின் அதிகாரங்களை ஒரு வரம்புக்குட்படுத்துவது தான் சுதந்திரத்தின் நோக்கமாயிருக்கிறதே தவிர, அந்த அதிகாரிகளை அதிகப் படுத்திக் கொடுப்பது அல்ல.
என்ன, உயிர் அவ்வளவு அருமையானதா? அமைதி அவ்வளவு இனிமையானதோ? இரும்புச் சங்கிலிகளுக்காகவும், அடிமைத் தனத்திற்காகவும் இவைகளை விலைகொடுத்து வாங்குவதா? முடியாது. கடவுளே! முடியாது. மற்றவர்கள் எந்த வழிவேண்டு மானாலும் போகட்டும். என்னைப் பொறுத்த மட்டில், எனக்குச் சுதந்திரத்தையாவது கொடு; அல்லது மரணத்தை யாவது கொடு.
சுதந்திரத்தினுடைய சாரம் என்ன? சாதாரண ஜனங்கள் நினைக்கிற படி, நமது சுய உரிமைகளைப் பாதுகாத்துக் கொண்டிருப்பது மட்டுமா? இல்லை. மற்றவர்களுடைய உரிமைகளுக்கும் நாம் மரியாதை செலுத்த வேண்டும். உயர்ந்தவனோ, தாழ்ந்தவனோ, எவனாயிருந்தாலும் அவனுக்குத் தீங்கு உண்டாகும் படியோ அவனுடைய உரிமைகள் நசுங்கும் படியோ நாம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.
உங்களுடைய குழந்தைகளின் தொட்டில்மீது ஆணை! உங்க ளுடைய முன்னோர்களின் சவக்குழிமீது ஆணை! இன்றைய தினமே மனிதராகுங்கள்; இல்லாவிட்டால் சாசுவதமான அடிமைகளா யிருப்பீர்கள். ஒரு தனி மனிதனுக்கு எப்படித் தேகாரோக்கியம் முக்கியமானதோ அதைப்போல் ஒரு ஜன சமுதாயத்திற்குச் சுதந்திரம் இன்றியமையாதது. தேகாரோக்கிய மில்லாத மனிதன் எப்படிச் சுகத்தை அனுபவிக்க முடியாதோ அதைப்போல், சுதந்திரமில்லாத ஜன சமுதாயம் இன்பதைத் அனுபவிக்க முடியாது.
ஒரு தேசத்தில் அதிருப்தி ஏற்படாதிருக்கவேண்டுமானால், ஜனங் களுக்கு, தங்கள் கருத்துக்களை வெளியிடும் உரிமையை அளிக்க வேண்டும். அரசாங்கத்தைச் சீர்திருத்த வேண்டுமென்று சொல்லவோ, அரசாங்க ஸ்தாபனங்களையும் அரசாங்க உத்தியோகஸ்தர்களையும் கண்டித்துச் சீர்த்திருத்தவோ ஜனங்களுக்குச் சுதந்திரம் இருக்கவேண்டும்.
சுதந்திரத்தை சம்பாதித்தவர்கள் கோழைகளல்லர். அரசியல் மாற்றத்திற்கு அவர்கள் பயப்படவில்லை. சுதந்திரத்தை இழந்து விட்டு அமைதியாயிருப்பதை அவர்கள் போற்றவில்லை.
வேண்டுமானால், அவர்கள், சமுத்திர அலைகளுக்கு விலங் கிடட்டும்; காற்று, மேகம், மழை இவைகளின் வாயை அடக் கட்டும்; எங்களுடைய சுதந்திரத்தை யாரும் பறி முதல் செய்ய முடியாது. எங்களை யாரும் கட்டுகளுக்குட்படுத்த முடியாது. நாங்கள், சமுத்திரத்தை நோக்கிச் செல்லும் ஆறுகளைப் போல், எங்கள் மீது தவழ்ந்து செல்கிற மந்த மாருதத்தைப் போல், சுதந்திரமாகச் செல்வோம்.
இதுவரையில், உண்மையை முணு முணுத்துக் கொண்டு வந்தோம். இனி, அதனை உரத்துச் சொல்லுவோம்; உறுதியாகச் சொல்லுவோம். ஏன்? இப்பொழுது நாம் சுதந்திரத்தைப் பெற்றுவிட்டிருக்கிறோம்.
யாருக்கு, மத உணர்ச்சிகளைக் காட்டிலும் கீழான ஆசைகள் அதிகமா யிருக்கின்றனவோ அவர்களுக்குச் சுதந்திரம் இல்லை. யாரிடத்தில் அறிவைக் காட்டிலும் அறியாமை அதிகமாகக் குடிக்கொண்டிருக்கிறதோ அவர்களுக்குச் சுதந்திரம் இல்லை. தங்களை அடக்கி ஆண்டுகொள்ளத் தெரியாதவர்களுக்கும் சுதந்திரம் இல்லை.
யாரொருவர் தங்களுடைய நிகழ்காலப் பாதுகாப்பிற்காகச் சுதந்திரத்தைவிட்டுக் கொடுத்துவிடுகிறார்களோ அவர்கள், சுதந்திரத் திற்கும் உரியவர்களல்லர்; பாதுகாப்புக்கும் உரியவர் களல்லர்.
நல்ல பண்பட்ட நாடு என்று ஒரு தேசத்தைப் பார்த்து சொல்கிறார்கள். அந்த நாட்டின் செழுமையான மண்ணைப் பார்த்துச் சொல்கிறார்களா? இல்லை. இல்லை. அந்த நாட்டு ஜனங்கள், எவ்வளவு தூரம் சுதந்திரம் அடைந்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான் சொல்கிறார்கள்.
ஓர் அரசாங்கம், தனது அதிகார எல்லைக்குள், வாழும் ஏழை மக்களுக்கும் பிரஜா உரிமை உண்டு என்ற எண்ணத்தோடு சட்டங்களைச் செய்யவேண்டும். சொத்துரிமை சம்பந்தமாக அஃதியற்றும் சட்டங் களுக்குக் கொடுக்கிற சலுகைகளா யிருக்க வேண்டுமே தவிர, ஏழைகளிட மிருந்து பறித்து பணக் காரர்களுக்குக் கொடுக்கிற நிர்பந்தங்களா யிருக்கக்கூடாது.
ஒரு மனிதனை மேல் நிலைக்கு அழைத்துச் செல்ல வேண்டு மானால் முதலில் அவனை விடுதலை செய்; உனக்குச் சமதை யானவன் என்று கருது; அவனுடைய தனித்தன்மையை ஒப்புக் கொள் அடிமையா யிருக்கப்பட்ட ஒருவன் கீழானவனாகவே இருப்பான்.
நாம் புகழுக்காகப் போர் புரியவில்லை; பொருளுக்காகப் போர் புரியவில்லை; சுதந்திரத்திற்காகப்போர் புரிகிறோம். அந்தச் சுதந்திரத்தை எந்த ஒரு நல்ல மனிதனும் பிறரிடம் ஒப்புக் கொடுப்பதில்லை. அப்படி ஒப்புக்கொடுக்கிற நிலைமை ஏற்பட்டால் உயிரைக் கொடுத்த பிறகே ஒப்புக்கொடுக்கிறான்.
இனிய சுதந்திரமே! சவக்குழிகளிலே, வீரர்களின் சாம்பலிலே நீ பிறக்கிறாய்; எந்த இருதயத்திலே ரத்தம், தன்னிச்சையாக ஊற்றெடுத்து ஓடுகிறதோ, அங்கே நீ வசிக்கிறாய்; எந்த நாட்டிலே சண்டை சச்சரவுகள் இல்லையோ அந்த நாட்டிலே நீ nக்ஷமமாயிருக்கிறாய்; உலக சமாதானத்திலே நீ புகழுடன் பிரகாசிக்கிறாய்.
சுதந்திரமே! நீ கிட்டாத பொருளன்று சொல்லியார் வேண்டு மானாலும் உன்னைக் கைவிட்டு விடட்டும்; நானென்னவோ கைவிட மாட்டேன். உனது வீடு பூட்டப்பட்டிருக்கிறதா? நீ வெளியே போயிருக் கிறாயா? இருக்கட்டும்; நான் காத்துக் கொண்டிருக்கிறேன்; உன் வருகைக் காகத் தயாராயிருக்கிறேன். நீ சீக்கிரமாக வந்து விடுவாயல்லவா? ஏனென்றால் உன்னுடைய ஆட்கள் வந்து விட்டார்களே!
சுதந்திரமில்லாமல், மத பக்தியானது, மூட நம்பிக்கையாகி விடுகிறது. விஞ்ஞானமானது, வறட்டுத் தத்துவமாகி விடுகிறது; கலை யானது, ஒரு நமூனாவாகச் சுருங்கி விடுகிறது; செல்வம் உற்பத்தியாவது குறைந்துபோகிறது; மனித வாழ்வு, மிருக வாழ்வுக்கு இறங்கிவிடுகிறது.
சுதந்திரத்தை நாம் தினந்தோறும் துலக்கிப் பாதுகாக்க வேண்டும். இல்லாவிட்டால் அது கெட்டுப் போகும். செல்வச் செழிப்பானது, சுதந்திரத்தைக் கறைப் படுத்தாதிருக்கும் பொருட்டு, ஒரு ஜாதியார் சதா விழிப்புடன் இருக்க வேண்டும்.
எவனொருவன், வறுமைக்கு அஞ்சி, சுதந்திரத்தைப் பறி கொடுத்து விடுகிறானோ அவன், சாசுவதமான அடிமைத் தனத்திற்கே தகுதி யுடையவன். குவியல் குவியலாகப் பணத்தை வைத்துக் கொண்டு அடிமை யாயிருக்கிறானே அவனைக் காட்டிலும், தரித்திரத்திலே உழன்று கொண்டிருக்கிற சுதந்திர புருஷனே மேலானவன்.
மலிவாகக் கிடைக்கிற ஒரு பொருளை நாம் அதிகமாகப் பாராட்டுவதில்லை. அதைப்போல் சுதந்திரம் சுலபமாகக் கிடைத்து விடுமானால் அதனை நாம் அலட்சியமே செய்வோம். ஆனால் சுதந்திரம் என்பது தெய்வத்தன்மை நிரம்பியதல்லவா? அதனை நாம் சுலபமாக அடைந்துவிட முடியுமா?
ஒரு தேசத்திற்கு ஆபத்து ஏற்படுகிறபோதுதான் அதனுடைய பெருமையோ, சிறுமையோ வெளிப்படுகிறது. சமாதான காலத்தில் உண்டாகிற நன்மைகளைப்போல் யுத்த காலத்திலும் அநேக நன்மைகள் உண்டாகின்றன.
உலகமுழுவதையும் நான் சுற்றிப் பார்த்திருக்கிறேன். ஆனால், நமது நாட்டில் நம்பிக்கை இழந்திருப்போர்களைப்போல் நான் எங்கும் பார்த்தது கிடையாது.
இந்த அரசன், நமக்குச் சுதந்திர சாஸனம் அளித்திருக்கிறா னென்பது வாஸ்தவம். ஆனால் அது மெழுதுப் பொம்மை; ஜனசக்தி என்கிற அனலிற் பட்டவுடன் உருகி விடுந்தன்மையது.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஒருவன் கூறுகிறான்:
சகோதரப் பிரஜைகளே! நீண்டகாலம் நீங்கள் பந்தத்திற் குட்பட்டிருந்தீர்கள். இப்பொழுது உங்களுக்கு ஓரளவு சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது. எனக்கு விதிக்கப்பட்ட தண்டனையைக் கண்டு பயப்பட்டு விடாதீர்கள். ஏனென்றால் சுதந்திரத்திற்காகவே நான் இறக்கிறேன். இஃதெனக்கு அதிக மகிழ்ச்சியையே அளிக்கிறது.
நாம் இஷ்டப்பட்டதைச் செய்வது சுதந்திரமல்ல. எந்தச் சந்தர்ப்பத்தில் எதைச் செய்யவேண்டுமோ அதைச் செய்வது தான் சுதந்திரம். அதற்கு எத்தனை விதமான எதிர்ப்புகள் இருந்தாலும் அதை லட்சியம் செய்யக் கூடாது. அதில்தான் உண்மையான சுதந்திரம் இருக்கிறது.
சுதந்திரம், ஜனங்களை நோக்கி இறங்கி வராது. ஜனங்கள் தான் சுதந்திரத்திற்காகத் தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும். அதனை அனுபவிப்பதற்கு முன்னர், அதனை முயன்று சம்பாதிக்க வேண்டும்.
பேச்சுரிமை, பலவிதமாக துஷ்பிரயோகம் செய்யப் படலாம். அதற்காக அந்த உரிமையை யாருக்கும் மறுக்கவேண்டும். ஒரு நாளில்லா விட்டால் ஒரு நாள், துஷ்பிரயோகம் செய்வது நின்றுபோகக் கூடும். ஆனால் அந்த உரிமையை மறுத்து விடுவதனால், ஜனங்களுடைய வாழ்க்கையே சிதறுண்டு போகிறது; அந்த ஜாதியின் வருங்கால நல்வாழ்வு, மண்ணிலே புதைந்து போகிறது.
ஜனப் பிரதிநிதி சபைகளுக்கு அங்கத்தினர்களைத் தெரிந் தெடுத்தனுப்பும் உரிமை மட்டும் இருந்தால் போதாது. சட்டத் திற்கு முன் எல்லோரும் சமம் என்று சொன்னால் மட்டும் போதாது. நல்வாழ்க்கையை நடத்துவதற்கான சாதனங்களை யும் சந்தர்ப்பங்களையும் அனைவரும் பெறவேண்டும். இயற்கை அன்னையின் சிருஷ்டிப் பொருள்களை அனு பவிக்கிற விஷயத்தில் எல்லோருக்கும் சம அந்தஸ்து இருக்க வேண்டும். இவை இல்லாவிட்டால், சுதந்திரம், தானாகவே ஒதுங்கி விடுகிறது.
மனித வாழ்க்கையின் முன்னிலையில்
வெற்றியென்பது என்ன? முயற்சியின் வடிவம்.
ஒரு ஜாதியை ஐக்கியப் படுத்தக் கூடியது எது? அதனுடைய பரம்பரை.
ஆடம்பரமாக வாழ்கிறவன் ஒழுக்கமாக இருக்க முடியாது.
நாகரிகத்தின் உயர்ந்த பண்பு எது? பிறருக்காகத் தன்னைத் தியாகம் செய்வது.
வாழ்க்கையின் ஊற்று, பாமர மக்களிடமிருந்துதான் கிளம்பு கிறது.
நாம் மனிதர்களாகப் பிறந்துவிட்டால் மட்டும் போதுமா? மனிதர்களாக வாழவும் வேண்டும்.
ஒரு மனிதனுக்குச் சக்தியை அளிப்பவை மூன்று. தன் மதிப்பு, சுய அறிவு, புலனடக்கம் ஆகிய இவைதான்.
நல்ல மனிதர்கள், சட்டங்களுக்கு அதிகமாகக் கீழ்ப்படிந்து நடக்கக் கூடாது.
அதிகார ஆசையைக் காட்டிலும் அடிமைப்படும் ஆசைதான் உலகத்திலேயே மகா கேவலமானது.
தன்னலத்திலே சந்தோஷங் காண்பது வாழ்க்கையா? இல்லை. பிறர் நலத்திலே சந்தோஷங் காண்பதுதான் வாழ்க்கை.
மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது நமக்கு முக்கிய மல்ல; நமது மனச்சாட்சி என்ன சொல்கிறது என்பதுதான் முக்கியம்.
ஒரு தேசத்திற்கு ஆபத்தில்லாத காலத்தில்தான் அந்தத் தேசத்தி லுள்ளவர்கள் அதிகமாகப் பேசத் தொடங்குகிறார்கள்.
எல்லோரையும் சகோதரர்களாகக் கருதுவதே கடவுள் வணக்க மாகும்.
மற்றவர்களுடைய நன்மையைத் தன்னுடைய நன்மையாகக் கருதுகிறவன் எவனோ அவனே, மனிதர்களில் சிரேஷ்ட மானவன்.
உண்மையான வீரன் யார்? வாழ்க்கையிலே வெற்றி பெறு கிறவன் தான்.
மனிதர்களை அவர்களுடைய செயல்களிலிருந்து தான் மதிப்பிடுகிறோம்; வார்த்தைகளிலிருந்து அல்ல.
நமது வாழ்நாள் முழுவதும் மற்றவர்களை நேசித்துக் கொண் டிருப்போமாக. அந்த நேசத்துடனேயே நாம் மரிப்போமாக. ஏனென்றால் மறுபிறப்பில் நாம் சிநேகிதர்களையே சந்திப்போம்.
இந்த உலகத்திலே நீ தனி யொருவனாக நின்று விட்டபோதிலும், உனது மனச்சாட்சிக்கு மட்டும் பொய்யனாகி விடாதே.
மனச்சாட்சிப்படி நடக்கிறவனை உலக விவகாரம் தெரியாதவ னென்று கூறுகிறோம். என்ன அறியாமை! வாழ்க்கை யென்பது சந்தோஷத்தின் போக்கு அல்ல; கடமையின் பாதை.
உலகமே எனது வீடு. உலகத்திலுள்ள அத்தனை பேரும் எனது நண்பர்கள். பிறர்க்கு இதஞ் செய்து கொண்டிருப்பதே எனது மதம்.
நமது வார்த்தைகளிலிருந்து அல்ல, நமது வாழ்க்கையிலிருந்தே நமது மதம் இன்னதென்று மற்றவர்கள தெரிந்துகொள்ள வேண்டும்.
மற்றவர்களிடம் நீ அன்பு செலுத்த வேண்டுமானால், முதலில் உன்னிடம் நீ அன்பு செலுத்திக்கொள்வதை மறந்து விடு.
இப்பொழுது நாம் எங்கிருக்கிறோம்? பழமையாகிற சவக் குழிக்கும், புதுமையாகிற தொட்டிலுக்கும் மத்தியில்.
சத்தியம், நமது பக்கத்திலே இருக்கிறது. ஆதலின் நாம் வெற்றி யடைவோம் என்பது நிச்சயம். எப்பொழுது என்று கேளாதீர்கள். இறுதி வெற்றி நம்முடையதுதான்.
நமது பிரயத்தனங்கள் ஒவ்வொன்றிலும் எண்ணமும் செயலும் கலந்திருக்க வேண்டும்; வெற்றி யடைவோம் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும்.
ஒருவன், மற்றவர்களுக்கு உதவி செய்கிற விஷயத்தில் கோடை காலத்து நிழலாகவும், குளிர்காலத்து உஷ்ணமாகவும் இருக்க வேண்டும்.
மகத்தான வெற்றிகளை யடையவேண்டுமானால் மகத்தான ஆபத்துகளைக் கடக்க வேண்டும்.
ஆகாயத்தில் பட்சிகளைப்போல் பறக்கலாம்; இவையெல்லாம் சுலபம். ஆனால் பூமியில் மனிதனாக நடந்து கொள்வது மிகக் கடினம்.
நீர் கலங்கி இருக்கிறபோது அதில் உன் முகத்தைச் சரியாகக் காணமுடியாது. அதைப்போல் தேசத்தில் அமைதி குலைந் திருக்கிறபோது உண்மையைக் காணமுடியாது.
உலகத்தைநாம் எப்படிப் பார்க்கிறாமோ அப்படித்தான் உலகமும் நம்மைப் பார்க்கிறது.
ஒரே சத்துருவுடன் அடிக்கடி போராடும்படியாக வைத்துக் கொள்ளாதே. ஏனென்றால் அவன் உனது யுத்த தந்திரங்களை யெல்லாம் தெரிந்து கொண்டு விடுவான்.
மற்றவர்களிடத்தில் குற்றங் குறைகள் காண்கிற விஷயத்தில் நீ குருடனாகி விடு. அவர்களிடத்தில் காணப்படும் நற்குணங் களைப் பாராட்டு.
உனது தகப்பனார் உயர்ந்த ஸ்திதியில் இருந்தாரென்று சொன்னால் அதில் உனக்கென்ன கௌரவம்? அவரைவிட மேலான நிலையை யடைய வேண்டுமென்று பிரயத்தனப்பட வேண்டாமா?
நாம் எதைச் செய்யவேண்டுமோ அதைச் செய்யாததனால் உலகம் கெட்டுப்போய் விடவில்லை. எதைச் செய்ய வேண் டாமோ அதைச் செய்வதனால் தான் உலகம் கெட்டுப் போகிறது.
புதிய சந்தர்ப்பங்களை புதிய கடமைகளை நமக்குக் கற்பிக் கின்றன. ஒரு காலத்தில் நன்மையாயிருந்தது, பின்னொரு காலத்தில் தீமையாகக் கருதப்படுகிறது.
விஞ்ஞான சாஸ்திரங்கள் அனைத்திலும் அவன் பயிற்சி பெற்றிருக் கிறான்; பல பாஷைகள் அவனுக்குத் தெரியும்; அநேக நூல்களைப் படித்திருக்கிறான். ஆனால் அவன் இன்னும் சிந்திக்கத்தான் தொடங்கவில்லை.
ஒருவனை விட மற்றொருவன் மேலானவன் என்ற முத்திரை யிட்டு, கடவுள் யாரையும் பிறப்பிக்கவில்லை.. ஒருவன், சேணத்தை முதுகிலே மாட்டிக் கொண்டு பிறக்கவில்லை; மற்றொருவன், அந்தச் சேணத்தின் மீது ஏறி உட்காரப் பிறக்கவில்லை.
உணவுப் பொருள்களின் விலை ஒன்றுக்கு மூன்று மடங்காக உயர்ந்திருக்கிறது. ஆனால் ஏழைத் தொழிலாளர்களாகிய எங்களுடைய கூலி விகிதமோ ஒரு பைசாகூட உயரவில்லை.
ஒரு போர் வீரனுடைய உயர்வோ தாழ்வோ, அதன் எந்த லட்சியத்திற்காகப் போராடுகிறானோ அந்த லட்சியத்தின் உயர்வு தாழ்வுகளையே பொறுத்திருக்கிறது.
ஒரு காரியத்திலே பிரவேசிப்பதற்கு முன்னர் அதனுடைய சாதக பாதகங்களைப் பற்றி யோசித்து அந்தக் காரியத்திலே பிரவேசியாமலிருப்ப வனைக் காட்டிலும், இறங்கி அதில் தோல்வியடைகிறவனே மேலானவன்.
ஒருநாளில் ஏதோ ஒரு மணிநேரம் அல்லது இரண்டு மணி நேரம் சந்தோஷத்தினால் துள்ளிக் குதித்து விட்டுப் பிறகு சோர்ந்து போவதைக் காட்டிலும் நாள் முழுவதும் ஒரே நிதானமாகச் சந்தோஷத்துடன் இருப்பது நல்லதல்லவா? வாழ்க்கை முழுவதும் இந்தக் கோட்பாட்டை ஒருவன் கடைப்பிடித்தால் நல்லது.
இரக்கமில்லாமல் சதா சுழன்று கொண்டிருக்கும் ஒரு சக்கரத்தோடு பிணைக்கப்பட்டுக் கிடப்பதற்காக மனிதன் பிறக்கவில்லை. அவன், தன்னுடைய சரித்திரத்தைத் தானே நிர்மாணஞ் செய்துகொள்ளும் ஆற்றல் படைத்தவன்.
மனிதன், இயற்கையைத் தன் நோக்கத்திற்கிணங்க இயக்கு விக்கக் கூடும். அதுமட்டுமல்ல; அவன் தன்னையே ஒரு புதிய மனிதனாக ஆக்கிக்கொண்டு விடலாம்.
செல்வத்தின் குழந்தைகள் இரண்டு. ஒன்று பயம்; மற்றொன்று வியாதி. அப்படியே வறுமையின் குழந்தைகள் இரண்டு. ஒன்று தைரியம்; மற்றொன்று நம்பிக்கை. செல்வம், சீலமற்றவை எவையோ அவற்றையே நாடும் இயல்புடையது; வறுமை, சீலம் எதுவோ அதனையே கண்டு பிடிக்கும் ஆற்றல் வாய்ந்தது.
உயர்ந்ததொரு லட்சியமில்லாத வாழ்க்கை, அந்த லட்சியத்திற் காக உழைக்காத வாழ்க்கை, வாழ்க்கையல்ல; அது, செடி கொடிகள் வளர்கிறமாதிரிதான். மகனே! நீ செடி கொடியாக, காய் கறியாக இருக்க விரும்புகிறாயா?
அவ்வப்பொழுது உண்டாகிற ஓர் உற்சாகத்தினால் ஏதோ ஒரு காரியத்தைச் செய்துவிட்டப் பிறகு ஓய்ந்து போவதில் பிரயோஜன மில்லை. நமது உற்சாகத்தை ஒழுங்குபடுத்தி நிதானமாகச் செலுத்திக் கொண்டு போவோமானால், உருப்படியான காரியங்களைச் செய்ய முடியும்.
சரித்திரப் பிரசித்தி பெற்ற மகான்கள் அனைவரையும் பாருங்கள்! உலகத்திற்கு யார்யார் நன்மை செய்திருக்கிறார்களோ அவர்கள் அனைவரும், துன்பமயமான வாழ்க்கையே நடத்தி இருக்கி றார்கள். அவர் களுடைய வாழக்கை முழுதும் ஒரே போராட்ட மயமாக இருந்திருக்கிறது. அவர்கள் ஒன்று, மனிதர்களோ டாவது போராடி இருக்கிறார்கள்; அல்லது இயற்கைச் சக்தி களோடாவது போராடி இருக்கிறார்கள். தங்கள் கடமையைச் செய்வதில்தான் அவர்கள் திருப்தி அடைந்திருக்கின்றனர் பணமே! உன்னுடைய உருவம் சிறியது. ஆனால் உலகத்தை நீ ஆள்கிறாய் சிறியவர்களும் பெரியவர்களும் உனக்கு வணக்கஞ் செலுத்துகிறார்கள். அரசர்களும் புரோகிதர்களும் உனக்கு அடி பணிகிறார்கள். மோட்சத்தையும் நரகத்தையும் சேர்த்து வாங்கக் கூடிய சக்தி உனக்கு இருக்கிறது. என்ன விந்தை!
இப்பொழுது உயிர் வாழ்ந்து கொண்டிருப்பது மகா ஆபத்தா யிருக்கிறது. அப்படிப்பட்ட காலமாயிருக்கிறது இது. ஒரு குழந்தை, எவ்விதக் களங்கமுமில்லாமல் சிரித்துக்கொண்டிருப் பதைப் பார்த்தால், ``ஐயோ, இந்தக் குழந்தை, என்னென்ன அவஸ்தைகள் படப்போகிறதோ? இப்பொழுது இஃது, அமைதியாக இறந்து போய்விடக்கூடாதா?’’ என்று நான் சிந்திப்பதுண்டு.
என் ஒருவனுக்கு மட்டும் விமோசனமோ பரம சாந்தியோ கிடைக்கவேண்டுமென்று நான் பாடுபடமாட்டேன். உலகத்திலுள்ள எல்லா ஜீவராசிகளின் விமோசனத்திற்கும் பரம சாந்திக்கும் நான் பாடுபடுவேன்; அதற்காக உயிர்வாழ்வேன்.
முடியுடைய வேந்தனைக் காட்டிலும், மனோ நிம்மதி யுடையோன் தான் மேலோன். பூர்ணிமை நிலவிலே பணக்காரன், தன் படுக்கையில் புரண்டுக் கொண்டு தானிருக்கிறான். ஆனால் ஏழையோ, அமாவாசை இருட்டில்கூட அமைதியாகத் தூங்கு கிறான். காரணம் என்ன? பின்னவனுடைய மனோ நிம்மதிதான்.
கடவுள், பூமியைப் படைத்தார்; ஆகாயத்தைப் படைத்தார்; எல்லா வற்றையும் படைத்தார்; அடிமையை மட்டும படைக்க வில்லை. கடவுள், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்படிச் செய்திருக்கிறார். அவருடைய சந்நிதானத்தில் ஏற்றத் தாழ்வுகளே கிடையாது.
ஐயா! எங்களுடைய பூர்வீகத்தைக் கொண்டு, எங்களுடைய எதிர்காலத்தை நிர்ணயித்து விடாதீர்கள் இரண்டுக்கும் நடுவே பெரிய பள்ளம் இருக்கிறது.
மற்றவர்களுடைய செயல்களினால் நாம் விமோசனம் அடைய முடியுமா? ஒருநாளும் முடியாது. நமது விமோசனம், நமது கையிலே, நமது முயற்சியிலே இருக்கிறது.
இந்த உலகத்திலே நாம் செய்கிற காரியங்கள், உடனே பலனைக் கொடுக்கும் என்பதில்லை. அப்படி எதிர்பார்த்து நாம் செய்யக் கூடாது. அதுபோலவே, மற்றவர்கள் நம்மிடத்தில் அன்பு செலுத்துவார்கள், நன்றி காட்டுவார்கள் என்பதற்காகவும் ஒரு காரியத்தைச் செய்யக் கூடாது. நமது மனச்சாட்சி என்ன ஆணையிடுகிறதோ அதனையே செய்ய வேண்டும். அப்படிச் செய்வது நமது கடமை என்று கருத வேண்டும். அந்தக் காரியத்தின் பலாபலன்கள் என்னவென்பதைப் பற்றி நாம் கவலைப் படக்கூடாது.
எந்த நாட்டில் செல்வம் கொழிக்க, அது காரணமாக மனிதர்கள் சீரழிந்து போகிறார்களோ அந்த நாடு, அநேக தீங்குகளுக்கும் நோய் களுக்கும் இரையாவது நிச்சயம். சிற்றரசர்களும், பிரபுக்களும் அங்குத் தோன்றலாம்; மறையலாம். ஒரு மூச்சினால் அவர்கள் சிருஷ்டிக்கப் பட்டுவிடலாம். ஆனால் ஒரு நாட்டிற்குப் பெருமையைத் தரக்கூடிய விவசாயிகளை ஒரு முறை அழித்து விட்டோமானால், மீண்டும் அவர்களை உயிர்ப்பிக்க முடியாது.
சமுதாயம் வேறு; அரசாங்கம் வேறு. இரண்டினுடைய உற்பத்தி வரலாறுகளும் வேறு. நம்முடைய தேவைகள் காரணமாகச் சமுதாயம் தோன்றுகிறது. நம்முடைய கெட்ட சுபாவங்கள் காரணமாக அரசாங்கம் தோன்றுகிறது. சமுதாயம், எந்த நிலையில் இருந்தாலும் நமக்கு நன்மை தருவதுதான். ஆனால் அரசாங்கம் அப்படியில்லை. அஃது எவ்வளவு பண்பட்ட நிலையிலிருந்தும், இன்றியமையாத ஒரு தீங்காகவே இருக்கிறது.
சுதந்திர புருஷன் யார்?
சுதந்திர புருஷன் யார்? எவனொருவன், தன்னைத் தானே அடக்கியாளும் ஆற்றல் பெற்றிருக்கிறானோ, எவனை, வறுமை, மரணம், பந்தங்கள் முதலியன பயமுறுத்த வில்லையோ, எவன், தனது ஆசாபாசங்களை எதிர்த்து நிற்கிறானோ, எவனை, புறச்சக்திகள் எவையும் வந்து தாக்க முடியாமல் பலவீனப் பட்டுப்போய் விடுகின்றனவோ, எவன் முன்னிலையில் அதிருஷ்டம் என்பது தோல்வியடைந்து போகிறதோ அவன் சுதந்திர புருஷன்.
சுதந்திரத்திற்கு யார் அருகரல்லர்?
சுதந்திர அரசு வேண்டுமென்று ஒரு ஜாதியார் ஆசைப்படலாம். ஆனால் சோம்பேறித் தனத்தினாலோ, அஜாக்கிரதையினாலோ, கோழைத்தனத்தினலோ, பொதுநல உணர்ச்சியின்மையாலோ மேற்படி சுதந்திர அரசைக் காப்பாற்றிக் கொள்வதற்கான முயற்சிகளைச் செய்ய முடியாதவர்களாயிருந்தால், அந்தச் சுதந்திர அரசு தாக்கப்படுகிறபோது அதனைக் காப்பாற்றப் போராடமலிருந்தால், அந்தச் சுதந்திர அரசை அவர்களிட மிருந்து பறிப்பதற்கு யாரேனும் முயற்சி செய்கிறபோது அந்த ஏமாற்றத்திற்கு உட்பட்டு விடுகிறதா யிருந்தால், திடீரென்று ஏற்பட்ட ஒரு சோர்வினாலோ, பீதியினாலோ, அல்லது உற்சாகக் குறைவினாலோ ஒரு தனி மனிதன் எவ்வளவு பெரிய மனிதனாயிருந்தாலும் அவனிடம் தங்களுடைய சுதந்திரங் களைப் பராதீனப்படுத்தி விடுவார்களானால், அல்லது தங்களுடைய பரம்பரையான ஸ்தாபனங்களைக் கவிழ்த்து விடக்கூடிய மாதிரியான அதிகாரங்களை அவனிடம் ஒப்புவித்து விடுவார்களானால், அவர்கள் சுதந்திரத்திற்குத் தகுதியுடையவர்களல்லர். அப்படி அவர்களுக்குச் சுதந்திரம் கிடைத்தாலும் அதை அவர்கள் நீண்டகாலம் அனுபவித்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
சுதந்திர சிந்தனை
மேலதிகாரி யொருவனுடைய விருப்பப்படியும் இச்சைப் படியும் பெறுகிற சுதந்திரம் உண்மையான சுதந்திரமாகாது. பலவித பந்தங் களுக்குட் பட்டு எவன் வாழ்கிறானோ, எவன் அந்த வாழ்க்கையினால் சலிப் படையாமலிருக்கிறானோ, அவன் உண்மையான வாழ்க்கையை நடத்தியவனாக மாட்டான். அவன், மேற்படி பந்தங்களினால் கட்டுண்டு கிடப்பதற்கே தகுதியுடையவன். ஒரு நாடு, சுதந்திரத்திற்காக முயற்சி செய்து தோல்வியுற்றுப் போனாலும் பாதகமில்லை. அதன் முயற்சிக்காக அதனை நாம் பாராட்ட வேண்டும். அதன் முயற்சி வெற்றி பெற வில்லையோ யென்பதற்காக அதனிடத்தில் அநுதாபஞ் செலுத்த வேண்டும். அதிகார சக்தி, பிறரால் எதிர்க்கப் படுகிறபோது பலஹீனமடை கிறது. தன் குற்றத்தை அது நன்கு உணர முடிகிறதாதலால், ஒரு சிறிய எதிர்ப்பைக் கண்டும் அஃது ஓடப்பார்க்கிறது. அடிமைகளாயிருக்கப் பட்டவர்கள், எந்த க்ஷணத்தில் சுதந்திரத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கி விடுகிறார்களோ அந்தச் சிந்தனையிலேயே, சுதந்திரம் கிடைக்கப் போகிறது என்ற நம்பிக்கையிலேயே, ஊக்கம், உணர்ச்சி, ஆபத்தைத் துச்சமாகக் கருதுதல், ஒற்றுமை யான மனப்பான்மை முதலியன வெல்லாம் ஏற்படுகின்றன.
சுதந்திரமே! அழைத்துப்போ!
சுதந்திரமே! உனக்காக கொடி தூக்குகிறோம். நாங்கள் செய்த யுத்தங்களெல்லாம் உன் பொருட்டுத்தான். நாங்கள் நடத்திய பிரார்த்தனை யெல்லாம் உன்னை முன்னிலைப்படுத்தித்தான். எங்களுடைய ஒவ்வொரு காரியமும் உனக்காகத்தான். ஆதலின், ஓ சுதந்திரமே! எங்களை அழைத்துக்கொண்டுபோ! நீ எங்கே அழைத்துக்கொண்டு போகிறாயோ அங்கே நாங்கள் வர அஞ்சமாட்டோம். எங்களுடைய இருதயத்தை உன்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறோம். நீ, விளக்கின் ஒளியாயிருக்கிறாய், அந்த ஒளியின் மூலம் எங்களுக்கு என்ன காட்டுகிறாயோ அதைக் காண நாங்கள் தயார். எங்களைச் சுற்றி எவ்வளவு இருட்படலம் சூழ்ந்து கொண்டிருந்தாலும் அவற்றை விலக்கிக் கொண்டு உன்னைப் பின்பற்றிவர நாங்கள் தயார்.
சுதந்திரத்தின் நான்கு அம்சங்கள்
சுதந்திரத்தைத் தனி நபரின் சுதந்திரமென்றும், தேசீய சுதந்திர மென்றும், அரசியல் சுதந்திரமென்றும், பொருளாதார சுதந்திர மென்றும் நான்கு அம்சங்களாகப் பிரித்துக் கூறுவதுண்டு. எந்த நாடு சுதந்திர நாடாயிருக்கிறதோ, எந்த நாட்டில் ஜன ஆட்சி நிலவுகிறதோ, எந்த நாட்டில் எல்லோருக்கும் ஒரே மாதிரியான சட்டங்கள் இருக்கின்றனவோ, எந்த நாட்டில் எல்லோருக்கும் ஜீவனோபாயத்திற்கும், ஓய்வு கொள்வதற்கும், அவரவருடைய திறமையினால் முன்னுக்கு வருவதற்கும் ஒரே மாதிரியான சந்தர்ப்பங்கள் இருக்கின்றனவோ அந்த நாட்டில் வசிக்கிறவன் தான், பூரண சுதந்திரம் பெற்ற பிரஜையாவான்.
அடிமைகள் யார்?
சகோதரர்களே! வீரம் நிறைந்த, சுதந்திரமுள்ள தந்தையருக்குப் பிறந்ததாக நீங்கள்பெருமை பேசிக்கொள்கிறீர்கள். ஆனால் பூலோகத்தில், ஓர் அடிமை மூச்சுவிட்டுக் கொண்டிருக்கிற வரையில் நீங்கள் சுதந்திர புருஷர்கள் என்றும் வீரபுருஷர் களென்றும் உங்களைச் சொல்லிக் கொள்ள முடியுமா? உங்களுடைய சகோதர்களில் ஒரு சிலரேனும் அடிமை பந்தத் தின் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்க, அதை நீங்கள் உணராமலிருக்கிற வரை, நீங்களும் கேவலமான அடிமைகள் தான்; விடுதலை பெறத் தகுதி யுடையவர்களில்லைதான்.
நம்முடைய நன்மைக்காக நமது கட்டுக்களை மட்டும் அறுத்துக் கொண்டு, மானிட ஜாதிக்கு நாம் செய்ய வேண்டிய கடமையை மறந்து விட்டிருப்பது உண்மையான சுதந்திரமாகுமா? இல்லை. நமது சகோதரர்கள் என்னென்ன பந்தங்களுக்குட்பட்டிருக் கிறார்களோ அவைகளில் நாமும் பங்கு போட்டுக்கொள்ள வேண்டும். மனப்பூர்வமாக, செயல் முறையில் மற்றவர் களுடைய விடுதலைக்காக நாம் உழைக்கவேண்டும்.
வீழ்ந்து பட்டவர்களுக்கும் பலஹீனர்களுக்கும் பரிந்துபேச அஞ்சுகிறவர்கள் அனைவரும் அடிமைகளே. தாங்கள் உண்மை என்று எதைக் கருதுகிறார்களோ அதைத் தைரியமாக வெளி யிட்டு, அது காரணமாக, துவவேஷம், திட்டு, பரிகாசம் முதலிய வற்றைச் சம்பாதித்துக் கொள்ளப் பயந்து, அந்த உண்மையை மனதில் அடக்கி வைத்துக் கொண்டிருக்கிறவர்கள் அத்தனை பேரும் அடிமைகளே. ஒரு கட்சியில் இரண்டு அல்லது மூன்று பேர்தான் இருந்த போதிலும், அந்தக் காட்சியில் நியாயம் இருக்கும் பட்சத்தில், அதனை ஆதரித்துப் பேச முன்வராத வர்கள் எல்லோரும் அடிமைகளே.
போர் அல்லது மரணம்
ஸ்காத்லாந்துப் படைகளுக்கும் இங்கிலாந்துப் படைகளுக்கும் 1314ஆம் வருஷம் பான்னக்பர்ன் என்ற இடத்தில் போர் நடைபெற்றது. அப் பொழுது ஸ்காத்லாந்து படைத் தலைவனாகிய ராபர்ட் ப்ரூஸ்1 தன் போர் வீரர்களைப் பார்த்துச் சொல்கிறான் :
எனது ஸ்காத்லாந்து வீரர்களே! நமது தலைவன் ஸர் வில்லியம் வாலஸ்,2 யாருக்காக ரத்தம் சொரிந்தான்! உங்களை எத்தனை முறை நான் போர்களத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறேன்! இந்தத் தடவை நீங்கள், ஒன்று மரணப்படுக்கையாவது கொள்ள வேண்டும்; அல்லது வெற்றியாவது அடையவேண்டும்.
இன்றுதான் நல்ல நாள்! இதுதான் நல்ல சமயம்! உங்களுக்கு முன்னே போர்க்களத்தைப் பாருங்கள்! அதோ, எட்வர்ட்டின்3 திமிர்பிடித்த அதிகார சக்தி நம்மை நெருங்குகிறது. அதன் அர்த்தமென்ன? விலங்கும் அடிமைத் தனமும்!
இங்கே எந்தக் கீழ்மகன் துரோகியா யிருக்கப் போகிறான்? யார் இங்கே கோழையினுடைய சவக்குழியை நிரப்பப்போகிறான்? இங்குள்ள வர்களில் யாரார் அடிமைத்தனத்தில் இச்சை கொண்டிருக்கிறார்கள்? அவர்களெல்லோரும் இப்பொழுதே, போர்க்களத்திற்குப்புறமுதுகு காட்டட்டும்; பறந்து ஓடட்டும்.
எவன் ஸ்காத்லாந்தினுடைய அரசனுக்காகவும், ஸ்காத்லாந்தி னுடைய தர்மத்திற்காகவும் சுதந்திர வாளைத் தனது உறையி லிருந்து வேகமாக உருவுகின்றானோ, எவன் சுதந்திர புருஷனாக வாழ்வது அல்லது சுதந்திர புருஷனாக வீழ்வது என்று பிரதிக்ஞை செய்து கொண்டிருக் கிறானோ அவன். என்னைப் பின்பற்றி வரட்டும்.
கொடுங்கோன்மையின் துன்பங்களென்ன, துயரங்களென்ன, இவைகளின்மீது ஆணை! அடிமை விலங்கினால் தளையிடப் பட்டிருக்கிற உங்களுடைய மக்கள் மீது ஆணை! முறுக்கேறி நிற்கும் எங்கள் ரத்தக் குழாய்களைக் காலிசெய்வோம். ஏன்? நமது எதிர்கால சந்ததியார் சுதந்திரமாயிருக்க வேண்டுமென்ப தற்காக.
பிறருடைய சுதந்திரத்தைப் பறிமுதல் செய்து அது காரணமாகக் கர்வம் படைத்திருக்கிறவர்கள் கீழே விழுந்து போவார்கள். நம் எதிரே நிற்கும் சத்துருப் படையில் ஒருவனை வீழ்த்துவது, ஒரு கொடுங்கோலனை வீழ்த்துவது போலாகும். நாம் கொடுக்கிற ஒவ்வோர் அடியும் சுதந்திர நாதமாகவே கிளம்புகிறது. ஆதலின் போர் புரிவோம்; அல்லது இறப்போம்.
ஆறுதல் உண்டு
இப்பொழுது நமக்கு ஆத்ம பரிசோதனை ஏற்பட்டிருக்கிறது. இந்த நெருக்கடியான காலத்தில் வீரர்களென்றும், தேச பக்தர் களென்றும் சொல்லிக் கொள்கிறவர்கள் தேச சேவையிலிருந்து ஒதுங்கி விடுதல் கூடும். ஆனால் எவனொருவன், இந்தச் சமயத் தில் தேசத்தோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டிருக்கி றானோ, அவனுக்கு ஆண் பெண் அனைவருடைய நன்றியும் விசுவாசமும் கிட்டும். நரகத்தை வெற்றி கொள்வது எப்படிக் கடினமோ அப்படியே கொடுங்கோன்மையை வெற்றி கொள்வது கடினம். ஆனால் நமக்கு ஓர் ஆறுதல் உண்டு. போராட்டம் எவ்வளவுக் கெவ்வளவு கடினமாயிருக்கிறதோ அவ்வளவுக் கவ்வளவு நமது வெற்றியும் சாசுவதமானதா யிருக்கும் என்பதுவே அந்த ஆறுதல்.
நான் சாதிக்க முடியும்
நான் ஏன் அடிமையாயிருக்க வேண்டும்? ஓர் எஜமானனுடைய சேவையில் நான் இருக்க வேண்டுமென்ற தேவையென்ன? இந்த இரண்டு கைகளைக் கொண்டேதான் நான் அநேக அற்புதங் களைச் செய்வேன். எஜமானன் வீற்றிருக்கிற ஆசனத்தைக் காட்டிலும் சிறந்ததோர் ஆசனத்தைச் சமைக்க எனக்கு ஆற்றலுண்டு. அப்படியிருக்க, அவனுடைய தயவு எனக்கு எதற்கு? அவனுக்கு நான் ஏன் வணங்கி நிற்கவேண்டும்? கடவுளைப்போல் ஆக என்னால் முடியும். ஆதலின் உறுதியான நெஞ்சுபடைத்த எனது தோழர்களே! என்னோடு சேர்ந்து நில்லுங்கள். தட்டுத் தடுமாறி நில்லாதீர்கள். புகழ்பெற்ற வீரர் களாகிய நீங்கள் என்னைத் தலைவனாகத் தெரிந்தெடுத்திருக் கிறீர்கள். என்னிடம் பூரண நம்பிக்கை வைத்திருக்கிற உங்களை வைத்துக்கொண்டு நான் அநேக காரியங்களைச் சாதிக்க முடியும்.
எல்லோரும் சம உரிமையுடையவர்கள்
ஏழையோ பணக்காரனோ, வெள்ளையனோ கறுப்பனோ, சிறியவனோ பெரியவனோ, அறிஞனோ முட்டாளோ, யாரா யிருந்தாலும் அவனுக்குத் தன் அபிப்பிராயத்தைச் சொல்ல உரிமையுண்டு. அவன் தப்பாகச் சொல்லட்டும், சரியாகச் சொல்லட்டும், எந்தக் காலத்தில் வேண்டுமானாலும் சொல்லட்டும், அவனுக்குத் தன் கருத்தை வெளியிட உரிமை யுண்டு. விருப்பமுள்ளவர்கள் அதைக் கேட்க உரிமையுடைய வர்கள். மற்றவர்களுடைய உரிமைகளைப் பற்றித் தீர்ப்புக் கூற, தங்களுக்கு அதிகாரம் இருக்கிறதென்று யாரும் கருத வேண்டாம். இந்த விஷயத்தில் எல்லோரும் சம உரிமை யுடையவர்களே.
சகோதரா! தைரியங்கொள்!
சகோதரா! தைரியங்கொள்; உற்சாகமாயிரு. என்ன நேரிட்ட போதிலும் நாம் சுதந்திரத்தைக் காப்பாற்றியே ஆகவேண்டும். நமக்கு ஒரு முறை, இரண்டு முறை, இன்னும் எத்தனை முறையானாலும் தோல்வி ஏற்படட்டுமே, என்ன பிரமாதம்? சுதந்திரத்திற்காகப் பாடுபடுகிற நம்மை, ஜனங்கள், அசட்டை செய்யலாம்; நம் விஷயத்தில் நன்றி கெட்டவர்களாக நடந்து கொள்ளலாம்; வேறு விதமான துரோகங்களையும் நமக்குச் செய்யலாம். அதிகார சக்தி என்ன, போர்ச் சேவகர்களென்ன, பீரங்கி களென்ன, குற்ற விவகாரச் சட்டங்களென்ன, எல்லாம் சேர்ந்து நம்மைப் பயமுறுத்தலாம். ஆயினும் சகோதரா! தைரியங் கொள்; உற்சாகமாயிரு. சுதந்திரத்தை நாம் காப்பற்றியேயாக வேண்டும்.
தாய்நாடு
உனது தாய் நாட்டை நேசி. உனது முன்னோர்கள் நித்திய நித்திரை செய்து கொண்டிருப்பது இங்குதான். உன் இருதயத் தில் நிரந்தர வாசம் செய்கிற உனது மனைவி, முதன் முதலாக உன்னிடம் வந்து காதல் மொழி பேசியது இங்குதான். உனது நாடு கடவுளால் உனக்கு அருளப்பட்ட வீடு. உனது பெயர், உனது புகழ், நீ யாரென்பதற்கு அடையாளம் ஆகிய இவை யாவும் உனது நாட்டில் அடங்கி இருக்கின்றன. உனது எண்ணங்களை, யோசனைகளை, உனது ரத்தத்தை, தாய் நாட்டுக்குக் கொடு. நமது முன்னோர்களுடைய நோக்கப்படி அதனை முன்னுக்குக் கொண்டுவா. அதனை அழகு படுத்து. பொய்மையினாலோ, அடிமைத்தனத்திலோ அதனைக் கறைப் படுத்தாதே.
எங்களது உரிமை
உலகத்தின் சட்ட திட்டங்களெல்லாம் ஒடிந்து விழுந்தாலும் சரி, நாங்கள் என்ன எண்ணுகிறோமோ அதைச் சொல்லியே தீருவோம். நாங்கள் கேட்கப் படல் வேண்டும். நாங்கள், ஒரு வார்த்தையைக் கூடச் சொல்லாமல் விடமாட்டோம்; ஓர் எழுத்தைக் கூடத் திரும்பப் பெற்றுக் கொள்ள மாட்டோம். பொய்யர்கள் பயப்படட்டும், கோழைகள் கூசிக் குலையட்டும், துரோகிகள் பின் செல்லட்டும், நாங்கள் எதை எண்ணு கிறோமோ அதைச் சொல்லியே தீருவோம். சுதந்திர உதயத்தின் ரேகைகள் எங்களுக்குப் புலப்படுகின்றன அப்படியிக்க, பிறருடைய ஏச்சுப் பேச்சுகளுக்கு நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்.
நாங்கள் உயிரோடிருக்கிறவரை, நாங்கள் தாராளமாக மனம் விட்டுப் பேசவேண்டும். ஐரோப்பாவின் எல்லாப் பாகங்களிலு மிருந்தும் புயற்காற்று வந்து அடித்தால் தானென்ன? நாங்கள் வாய்விட்டுப் பேசியே தீருவோம். இன்றோடு நாம் என்ன கூறினோமென்பதாவது பிற்காலத்தில் ஏடுகளில் பதிந்திருக்கு மல்லவா?
சிறைவாசியின் கூற்று
விசுவாசம், நம்பிக்கை, பொறுமை ஆகிய இவையே எனக்கு வழிகாட்டிகள். எனது மனச்சாட்சி மகா பரிசுத்தமாயிருக்கிறது. ஆண்டவன் என் பக்கத்திலிருக்கிறான். நான் எந்தச் சத்துருவுக்கு இனி அஞ்ச வேண்டும்?
எனது ரணங்களை, பொறுமையானது ஆற்றுகிறது. அன்போ, கட்டுக் குட்படாமல் சஞ்சாரம் செய்கிறது. எனது தேகத்தை அவர்கள் இந்த அறைக்குள் பூட்டி வைக்கிறார்கள். ஆனால் என் ஆத்மாவை அவர்கள் பூட்டிவைக்க முடியாதே!
சிறைக்காவலனுடைய கொடுமையோ சொல்ல முடியாது. எல்லோர் விஷயத்திலும் அவன் ஒரே மாதிரியாகத்தான் நடந்து கொள்கிறான். ``உங்கள் தேகத்துச் சதையைத் தின்னுங்கள்; அல்லது உங்களைச் சுற்றியிருக்கும் சுவர்களிலுள்ள கற்களைத் தின்னுங்கள்’’ என்று எங்களுக்குக் கூறுகிறான்.
அதிகமான பணம் வைத்துக் கொண்டிருப்போர் உலகப் பற்று நிரம்பியவர்களாய் இருக்கிறார்கள். அவர்களுக்குத் திருப்தியே உண்டாவதில்லை. மேலும் மேலும் சுரண்டப் பார்க்கிறார்கள்.
நானோ, எல்லோரைக் காட்டிலும் ஏழை. உலகக் கவலைகளி லிருந்து விடுதலை பெற்றிருக்கிறேன். எனவே, பணக்காரர்கள் பந்தத்திலே வாழ்கிறார்கள், நான் சுதந்திரமாயிருக்கிறேன் என்ற எண்ணம் எனக்கு வலுத்திருக்கிறது.
எஞ்சியிருப்பது என்ன?
பூமி, என்னுடையதென்று சொல்கிறான் நிலச் சுவான்தாரன். சமுத்திரம், என்னுடையதென்று கூறுகிறான் வியாபாரி, பூமியின் கீழ்க் கிடக்கும் சுரங்கப் பொருள்கள், லேவாதேவித் தொழில் செய்கிறவனுடைய பைகளில் சென்று நிரம்புகின்றன. எனக்கென்று எஞ்சி யிருப்பது என்ன?
எஜமானனுடைய வேலைக்காக, சக்கரம் சுழல்கிறது. தொழி லாளர்கள், எதை உற்பத்தி செய்தார்களோ அதைப் பாதுகாக்க, தொழிலாளர் களால் தயாரிக்கப்பட்ட எஃது ஆயுதம் மின்னு கின்றது. படை வீடென்ன, புரோகிதர்களின் பிரசங்க மேடைக ளென்ன, நீதி ஸ்தலங்களென்ன. இவை யாவும், பணக்காரர் களுடைய பிள்ளைகளுக்குத் தாராளமாகத் திறந்து விடப்படு கின்றன. கல்வி, கலை, ஆயுதம் முதலிய யாவும் அவர்களுடை யனவே; அவர்களுக்காகவே. எனக்கென்று எஞ்சியிருப்பது என்ன?
அவர்களுடைய படிப்புக்கு நான் பணங்கொடுக்கிறேன். அவர்கள் சௌக்கியமாயிருக்கும் பொருட்டு நான் உழைக் கிறேன். இவைகளுக்குப் பதிலாக எனக்கு கிடைப்பது என்ன? எப்பொழுதும் பொருள் முட்டுப்பாடு, அறியாமை, வியாதி இவைதான். உழைப்பு! உழைப்பு! உழைப்புக்குப் பிறகு? சந்தோஷ மற்ற வீடு! அங்கே, அந்த வீட்டிலே, பசிக் கொடுமை யினால், கீழான உணர்ச்சிகள் பல தாண்டவம் செய்கின்றன. எனக்கு யார் சாசுவதமான நஷ்டத்தைக் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு நான் சாசுவதமான லாபத்தைக் கொடுக்கிறேன். சந்தோஷகரமான ஓய்வை, பணக்காரர்கள் மட்டுமே அனுபவிக்கலாம். விளையாடுகிற குழந்தை, சிரிக்கிற மனைவி, எல்லாம் அவர்களுக்குத் தான். எனக்கென்று எஞ்சி யிருப்பது என்ன?
அவர்கள், அந்தப் பணக்காரர்கள், என்க்கு என்ன கொடுக்கி றார்கள்? கஞ்சத்தனமான சில காசுகள்! அல்லத சிறைவாசம்! கடைசியில் சவக்குழி! அதனோடு, என்னுடைய சம்பந்தம் அற்றுப்போய் விட்டதாக அவர்கள் கருதுகிறார்கள். எனது காதலியின் உடைந்துபோன இருதயத்தை, அவர்கள் செப்பனிட்டுக் கொடுப்பதில்லை. இறந்து போகும். தறுவாயி லுள்ள குழந்தையை உயிரோடு கொடுப்பதில்லை. நாங்கள், அதாவது என் போன்றவர்கள், எங்களுடைய பள்ளமான கன்னங்களைக் கொண்டும், குழிவிழுந்த கண்களைக் கொண்டும் அவர்கள்மீது எப்படி வெற்றி காணமுடியும்? நாங்கள் ஒருவருக்கொருவர் சந்திக்கிறபோது, எங்கள் நிலைமையைப் பரிசீலனை செய்து பார்க்கிறபோது, ஒருவருக்கொருவர் என்ன கேட்டுக்கொள்கிறோம்? `பணக்காரர்களுக்கு நிலம் இருக்கிறது. எனக் கென்று எஞ்சி யிருப்பது என்ன?’’
எங்களுக் கிழைக்கப்படும் கொடுமைகளை நாங்கள் மௌன மாக பொறுத்துக் கொண்டிருக்கிறோம். அவற்றை எங்களுடைய மூளையில் பத்திரப் படுத்தி வைத்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள், அந்தப் பணக்காரர்கள், எங்களை மந்த புத்தி யுள்ளவர்களென்று கருதுகிறார்கள். நாங்கள் இறந்துபோனவர் களென்று நினைக்கிறார்கள். ஆனால் நாங்கள் மறுபடியும் புத்துயிர் பெற்றெழுவோம். அப்பொழுது ஒரு முழக்கம், நாட்டை ஊடுருவிச் செல்லும்; ஜன சக்தியினிடையே ஒரு பெருமூச்சு ஓடும்…………………………
பிரதிக்ஞை
ஒருவன் மனப் பூர்வமாக, உள்ளுணர்ச்சியுடன் ஒரே ஒருமுறை பின்வருமாறு பிரதிக்ஞை செய்து கொண்டால் போதுமானது:- ``சுதந்திரம், எனது தேசம், மானிட சமுதாயம் ஆகிய இம் மூன்றினிடத்திலும் நான் பரிபூரண நம்பிக்கை கொண்டிருக் கிறேன். அவைகளுக்காக நான் உயிருள்ள வரையில் போராடு வேன்; எந்த ஆயுதம் அகப்பட்டாலும் அதைக் கொண்டு போராடுவேன். மரணம் நேரிட்டாலும் சரி, துவேஷம், உல்லங்ஙனம் இவைகளுக்குட்படுத்தப் பட்டாலும் சரி, எதனையும் நான் பொருட்படுத்த மாட்டேன். ஏனென்றால் அப்படிப் போராடுவது எனதுகடமை.’’
சந்தோஷ புருஷன் யார்?
மற்றவர்களுடைய இஷ்டத்தை எதிர் பார்த்து எவனொருவன் காரியங்கள் செய்யாமலிருக்கிறானோ, எவனுக்கு, அவனுடைய தூய எண்ணமே கவசமாயிருக்கிறதோ, எவன், உண்மையாக நடந்து கொள்வதன் மூலம் தன் திறமையைக் காட்டுகிறானோ அவனே சந்தோஷ புருஷன்.
எவன், கீழான் இச்சைகளின் ஆட்சிக்கு உட்படாமலிருக் கிறானோ, எவனுடைய ஆத்மா மரணத்தை எதிர்பார்த்துத் தயாராயிருக்கிறதோ, எவன், உயர்ந்த காதலுக்கோ இழிவான பேச்சுக்கோ தன்னை பந்தப்படுத்திக் கொள்ளாமலிருக் கிறானோ? அவனே சந்தோஷ புருஷன்.
எவன், பொய் வதந்திகளினின்று தன்னை விடுதலை செய்து கொண்டிருக்கிறானோ, எவன், தான் சாந்தி பெறுவதற்குரிய இடமாகத் தன் மனச் சாட்சியை வைத்துக் கொண்டிருக் கிறானோ, எவனுடைய ராஜ்யத்தில் முகஸ்துதிக்காரர்கள் ஆதரிக்கப்படமாட்டார்களோ, அல்லது குற்றவாளிகள் பெரிய மனிதர்களாக்கப்பட மாட்டார்களோ அவனே சந்தோஷ புருஷன்.
அதிர்ஷ்ட வசத்தினால் முன்னுக்கு வருகிறவர்களைக் கண்டு எவன் பொறாமைப் படாமலிக்கிறானோ, தீயொழுக்கம் என்றால் என்ன வென்பது எவனுக்குத் தெரியாமலிருக்கிறதோ, அரசாங்கச் சட்டதிட்டங்களுக் கல்லாமல், நற்குண மென்பதற் காக எவன், மற்றவர்களுக்கு, அவர்களுடைய நன்மையை முன்னிட்டு, அதிகமான சகாயத்தை உண்டு பண்ணுகிறானோ அவனே சந்தோஷ புருஷன்.
எவன், கடவுளின் நன்கொடைகளை இரவல் கேளாமல், அவருடைய திருவருளுக்குமட்டும் பிரார்த்திக்கிறானோ, எவன், ஒரு நல்ல புஸ்தகத்துடனோ அல்லது சிநேகிதனுடனோ தன் பொழுதைப் போக்குகிறானோ அவனே சந்தோஷ புருஷன்.
இப்படிப்பட்டவன், கீழான சக்திகளினின்று விடுதலை யடைந்த வனாயிருக்கிறான். இவனுக்கு, மேலே ஏறுவோம் என்ற நம்பிக்கையு மில்லை; கீழே விழுந்துவிடுவோம் என்ற அச்சமுமில்லை. இவன், எந்த ராஜ்யத்திற்கும் அரசனாயில்லா விட்டாலும், தனக்குத் தானே அரசன். இவனுக்கென்று ஒன்று மில்லை; ஆனால் எல்லாம் உடையவனா யிருக்கிறான்.
ஏதோ ஒன்றுக்காக வாழ்
உலகத்திலே ஆயிரக்கணக்கான மனிதர்கள் மூச்சு விடுகிறார்கள்; அங்கும் இங்குமாக நடமாடுகிறார்கள்; ஆம், உயிர்வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள். கடைசியில் வாழ்க்கை மேடையி னின்று மறைந்து விடுகிறார்கள். பிறகு அவர்களைப் பற்றி யாரும் கேள்விப்படுவதில்லை. ஏனிப்படி? உலகத்திற்காக ஒரு சிறு நன்மையைக் கூட அவர்கள் செய்ய வில்லை. அவர்க ளுடைய நல்லாசியை ஒருவர்கூடப் பெறவில்லை. யாருடைய விமோசனத்திற்கும் அவர்கள் துணை செய்யவில்லை. அவர்கள், ஒரு வரி எழுதவில்லை; ஒரு வார்த்தை பேசவில்லை. இப்படி இருந்து அவர்கள் இறந்து விட்டார்கள். அவர்களுடைய வாழ்க்கை விளக்கு அணைந்துவிட்டது. அவர்களைப் பற்றி இப்பொழுது யாருக்கும் நினைவே கிடையாது.
அமரத்துவம் வாய்ந்த ஓ மனிதனே! நீயும் அப்படியே இருந்து இறந்துவிடப் போகிறாயா? அப்படிச் செய்யாதே. ஏதோ ஒன்றுக்காக வாழ் நன்மை செய். உனது சீலத்தின் ஞாபகச் சின்னமாக ஏதேனும் ஒன்றை ஸ்தாபித்து விட்டுப்போ. அந்த ஞாபகச் சின்னம் உனது பிற்காலத்தில் எவ்வித புயற்காற்றி னாலும் அலக்கழிக்கப் படாமல் இருக்கட்டும். உனது வாழ் நாளில் எத்தனையோ பேரை நீ சந்திக்கிறாய் அல்லவா? அத்தனை பேருடைய இருதயத்திலும் உனது பெயரை அன்பிலே தோய்த்து எழுதிவிடு. பிறகு உன்னை எப்பொழுதும் எப்படி நட்சத்திரங்கள் ஸ்திரமாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கின் றனவோ அப்படியே உனது பெயரும் அவர்களுடைய இருதயத் தில் சதா பிரகாசித்துக் கொண்டிருக்கும்.
நேர்மையே எனது சுவாசம்
தண்டனையை எதிர்பார்த்து நிற்கும் ஒருவன் கூறுவது!
நீதிபதிகளே! என்னுடைய முடிவு என்ன வென்பதைப்பற்றி எனக்குக் கவலையே இல்லை. நான் எந்தவிதமான ஆபத்தையும் எதிர்த்து நிற்பேன்; மரண தேவதையின் முகத்தை நேரிலே பார்ப்பேன். ஏனென்றால் நேர்மையை நான் கவசமாக அணிந்து கொண்டிருக்கிறேன். இருட்டுச் சிறையிலே நான் தவிக்குமாறு எனக்கு நீங்கள் தண்டனை விதிக்கலாம்; அல்லது தூக்கு மேடையின் மீது என்னை ஏற்றுவிக்கலாம். ஆனால் கடமையைச் செய்துவிட்டதாக எனக்கு ஒருவித மனச்சாந்தி உண்டா யிருக் கிறதே அதை யாரும் கலைக்க முடியாது; அழிக்க முடியாது.
நியாயமா?
குளிர்ந்த நிழலில் இருந்து கொண்டு, வாழ்க்கையின் எல்லாச் சௌகரியங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறவர்கள் ‘இப்பொழுதுள்ளதே சரி; இருக்கிறபடியே எல்லாம் இருக்கட்டும்; எவ்விதமான புதிய சீர்திருத்தமும் தேவையில்லை’ என்று சொல் கிறார்கள். இதைவிடப் பெரிய தவறு வேறொன்று மில்லை. இவர்கள், சீர்திருத்த வாதிகளைப் பார்த்து, `கற்பனை உலகத்திலே சஞ்சரிக் கிறவர்கள்’ என்று பரிகசிக்கிறார்கள். இது நியாயமா? சமுதாயத்திலுள்ள பெரும்பாலோர், வறுமையிலும் அறியாமையிலும் அழுந்திக் கிடப்பதைப் பார்த்துக் கொண் டிருப்பது நியாயமா? இப்பொழுதுள்ள நிலைமையை மாற்றியமைக்க வேண்டுமென்று சொல்வது குற்றமாகுமா? நாம் சௌக்கியமா யிருக்கிறோம் என்ற காரணத்தினால், உலகமெல் லாம் சௌக்கியமா யிருக்கிறதென்று கருதுவது சரியா?
மதத்தைப்பற்றித் தவறான கருத்து
பாரமார்த்திகத்தைப்பற்றி அவ்வளவாகப் பேசாமல் வெளகிகத்தைப்பற்றியே அதிகமாகப் பேசுவோர் பலர் இருக் கின்றனர். அவர்களனைவரையும் கெட்ட மனிதர்களென்று கருதி, துச்சமாகப் பேசிவிடுவதா? கூடவே கூடாது. அவர்கள் நல்ல காரியங்களைச் செய்யவேண்டு மென்பதற்காகவே பிறந்தார்கள். ஆனால், அவர்கள், தங்கள் வாழ்க்கையைத் தொடங்குகிறபோது, புரோகிதர்கள், அரசாங்கத்தோடும் பிரபுக்களோடும் சேர்ந்து கொண்டு, தங்களுக்கு விரோதமாகக் காரியங்கள் செய்வதையும், நியாயமாக நடக்கிறவர்களைப் பரிகசித்து வருவதையும் பார்த்தார்கள். பிறகுதான் அவர்கள், மதத்தைப் பற்றிக் கேவலமாகப் பேச ஆரம்பித்தார்கள்.
பூமா தேவியே! கேள்!
கொடுங்கோலர்களுடைய சூழ்ச்சிகளுக்கு இனிதயை தாட்சண்யமே கிடையாது. மேல் பதவியிலிருக்கும் கீழ் மக்களை இனி நாங்கள் சட்டை செய்யப் போவதே இல்லை. அடிமைகள் நிறைந்த நாட்டை இனிக் கண்ணெடுத்துப் பாராதபடி அதற்குத் தாளிட்டு விட்டோம். பூமா தேவியே! கேள். இந்தச் செய்தி வானுலகத்திலும் பரவட்டும். என்ன அந்தச் செய்தி? ``எங்கள் நாடு விழித்துக் கொண்டு விட்டது. அதன் சக்தி இதுகாறும் உறங்கிக் கொண்டிருந்ததே தவிர இறந்து போவதில்லை.
நமது சம்பத்து
இத்தாலிய வீரனாகிய மாஜினி (1805-1872) தன் தாய்க்கு எழுதுகிற கடிதத்தில் பின் வருமாறு குறிப்பிடுகிறான்;
தாயே! இந்த உலகத்தில் உன்னுடைய வாழ்க்கை மிகக் கடினமான வாழ்க்கையாகிவிட்டது. என்னுடைய வாழ்க்கை யும் அப்படித்தான். நாம் விரும்பினால், இப்பொழுதுள்ளதைக் காட்டிலும் இன்னும் அதிக சந்தோஷத்துடன் இருக்கலாம். ஆனால் இந்த நெருக்கடியான காலத்தில், நமது ஒழுக்க முறைகளில் ஒரு புரட்சி ஏற்பட்டிருக்கிற இந்தச் சமயத்தில், மற்றவர்களிடத்தில் இல்லாத ஒரு சம்பத்து நம்மிடத்தில் இருக்கிறது. அஃதென்ன? குன்றாத நம்பிக்கை. கடவுள், ஏதோ யதேச்சையாக அல்லது தமது ஆசையைப் பூர்த்தி செய்து கொள்ளும் பொருட்டு நம்மைப் படைக்கவில்லை. தமது எண்ணத்தைப் பூர்த்தி செய்து கொள்தவற்கான ஒரு கருவியாகவே நம்மைப் பிறப்பித்திருக்கிறார். கடவுள், பரம கருணாநிதி என்ற நம்பிக்கை யுடையவர்கள் நாம். ஏதோ காரணமில்லாமல், நாம் கஷ்டப்படும்படி பார்த்துக்கொண் டிருக்கமாட்டார் அவர்.
நன்னாள் வருக!
எந்த நாளில், அடிமைகள் தங்கள் விலங்குகளை அறுத் தெறிகிறார்களோ, எந்த நாளில், அடிமைகள் கொடுங் கோன்மைக்குப் பயந்து மண்டியிட்டுப் பணிய மறுக்கிறார் களோ, எந்த நாளில், அடிமைகள் மிருகங்களைப்போல் நடத்தப் படாமலிக்கிறார்களோ அந்த நன்னாள் விரைவிலே வருக! உலகனைத்தும் அந்நான்னாளைக் கொண்டாடுக! அந்த நாள் வரும்; நிச்சயமாக வரும். அப்பொழுது, மனிதனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட உரிமைகள் மீண்டும் அவனிடம் வந்து சேரும்.
மானிட ஜாதியின் ரத்தம் சிந்தாதிருக்கும் நாள் விரைவிலே வரும். மானிட சகோரத்துவம் என்பது எல்லோராலும் அங்கீ கரிக்கப் படுமாக! அடிக்கு அடியே பதில் என்று இல்லாமல், தீமைக்கு நன்மையே செய்கிற காலம் வருமாக! உலகத்தில் சண்டை சச்சரவுகள் ஒழியுமாக! பரம சத்துருவா யிருந்தவனும் சிறந்த நண்பனாக மாறும்படியான காலம் வருமாக!
உலகத்திலே யாரும் யார்மீதும் ஆதிக்கஞ் செலுத்தாதபடியும், கொடுங்கோன்மைக்கு முன்னர் தலை வணங்காதபடியும் இருக்கிற காலம் வருமாக! அப்பொழுது, பிறப்பினால் அனைவரும் ஒன்றுபட்டவரே, அவரவரும், தங்கள் தங்கள் மனிதத் தன்மையினால் உயரவேண்டும் என்ற உண்மை அங்கீகரிக்கப்படுமாக! அந்த நாள் வரப்போகிறது. அப் பொழுது சிறைகளிலிருந்து ஒரு பெரு முழக்கம் கிளம்பும்.
அந்த நாள், அந்த நேரம், அந்தச் சந்தர்ப்பம் வருகிற வரை என் உயிர் இருக்குமானால், என்னுடைய அறிவு இதயம், கைகள் இவைகளைக் கொண்டு, அடிமைச் சங்கிலிகளை உடைத் தெறிவேன். பிறர் பொருளைச் சுரண்டி வாழ்கிறானே அவனுக்கு அந்தச் சுரண்டும் சக்தி யில்லாமற் செய்து விடுவேன். ஆகாய வாணியே இதற்குச் சாட்சி. என்ன துன்பம் நேரிட்டாலும், என்ன ஆபத்து வந்தாலும், இந்த என் கடமையினின்று ஓடமாட்டேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக