போரின் முகங்கள்
கவிதைகள்
Backபோரின் முகங்கள்
சி. சிவசேகரம்
------------------------------------------------------
போரின் முகங்கள்
கவிதைகள்
சி. சிவசேகரம்
தேசிய கலை இலக்கியப் பேரவை
------------------------------------------------------
POERIN MUHANGAL
An anthology of poems
S. SIVASEGARAM
First Edition: July 1996
Printers: Tecno Print
6, Jayawardena Ave,
Dehiwela.
Cover Design: M.K.M. Shakeep
Publishers: National Assosiation for Art & Literature.
14, 57th lane,
Colombo - 06
Sri Alanka
Price: Rs. 40.00
Distributers: Tamil Publication & Distribution Network,
44, 3rd Floor, C...M. Complex
Colombo - 11
Tel:335844 Fax: 94-1-333279
------------------------------------------------------
பதிப்புரை
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான விடுதலைப் போராட்டம் தீர்க்கமான சில நடவடிக்கைகளை விடுதலை இயக்கங்களிடமும் போராளிகளிடமும் வேண்டி நிற்கிறது. ஜனநாயகப்படுத்தலுக்கான அவா, மனித உரிமைகளுக்கான வேட்கை என்பவற்றினூடாக மக்கள் மயப்படுத்தல் அவசியத் தேவையாகிறது.
விடுதலை மீதுள்ள பற்று மக்கள் மீதான மதிப்பாக பரிணமித்து முன்செல்ல வேண்டியுள்ளது. இன ஒடுக்கலுக்கெதிரான ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் விடுதலையுணர்வு இனவாதம், இனவெறிப் போக்கில் இழுபட்டுப் போவதைத் தவிர்த்து பரந்த சமூகத்தின் நல்லுறவுடன் இணைந்து கொள்கிறது.
பண்பாட்டுத் தளத்தில் கலை இலக்கிய ஆய்வுத்துறைகளில் சுயநிர்ணயம் பற்றி நமது சமூகம் எதிர்பார்த்திருப்பவை அநேகம்.
இச் சூழலில் கவிஞர் சிவசேகரம் அவர்களின் இக்கவிதைநூல் தமிழ்க்கவிதை மரபின் 'புறப்பாடல்' வகையில் வைத்து எண்ணப்படத் தக்கனவாய் அமையும் என்பது எமது நம்பிக்கையாகும்.
கவிஞர்கள், விமர்சகர்கள், இலக்கிய ஆர்வலர்கள், மானுடம் - விடுதலை மீது அக்கறையுடையோர் ஆகியோரிடமிருந்து கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்.
புத்தகப் பண்பாட்டுச் சூழலில் நாம் அனைவரும் முன்செல்வோம்.
நன்றி
தேசிய கலை இலக்கியப் பேரவை
------------------------------------------------------
போரும் கவிதைகளும்
இத்தொகுதியில் உள்ள கவிதைகள் கடந்த ஐந்தாறு வருடக் கால இடைவெளிக்குள்
எழுதப்பட்டவை. இவற்றுள், ஒரு தமிழாக்கமும் மெக்ஸிக்கோ கிளர்ச்சி பற்றிய ஒன்றும் போக, ஏனைய அனைத்துமே இலங்கையின் போர்ச் சூழல் தொடர்பானவை. கவிதைகள் யாவுமே இலங்கையின் தேசிய இனப்பிரச்சனை, அரச ஒடுக்குமுறை, விடுதலைப் போராட்டம் ஆகியவற்றுடன் தொடர்பு காணக்கூடியன.
இலங்கையின் பேரினவாத அரசியலின் விளைவாக உருவான விடுதலைப் போராட்டத்தை ஒரு தேசியவாதி எதிர்கொள்கின்ற முறைக்கும் ஒரு மாக்ஸியவாதி எதிர்கொள்கின்ற முறைக்கும் உள்ள வேறுபாட்டை நான் இங்கு விபரிக்க அவசியமில்லை. தேசிய விடுதலைப் போராட்டத்தை ஒரு மாக்ஸியவாதி மனித சமத்துவம், உழைக்கும் மக்களது நலன் என்பவற்றின் சார்பாகக் காண்கிறார். தேசிய இன ஒடுக்கலுக்கெதிரான எழுச்சி முற்போக்கானது என்பதில் அவருக்கு ஐயத்துக்கு நியாயமில்லை. அவர் வலியுறுத்தும் தீர்வும் தேசியவாதிகள் வலியுறுத்தும் வலியுறுத்தும் தீர்வும் மட்டுமன்றிப் போராட்ட அணுகுமுறைகளும் பல இடங்களில் வேறுபடுகின்றன. சரி பிழைகள் பற்றி ஒரு மாக்ஸியரது நிலைப்பாடு, அவர் ஒரு குறிப்பிட்ட தேசிய இனத்தவர் என்ற அடிப்படையில் அமைய முடியாது. இதுவே அவரது விடுதலைக் கோட்பாட்டைத் தேசிய வாதிகளினதினின்று அடிப்படையில் வேறுபடுத்துகிறது.
தேசிய இன ஒடுக்கல், சுயநிர்ணயம் என்பன பற்றிய எனது பார்வை விரிவடைவதற்கு ஈழத்து இடது கம்யூனிஸ்ட் கட்சியினருடன் எனக்கு ஏற்பட்ட தொடர்பு பெரும் பங்களித்தது. எனது விமர்சனப் பார்வையும் இதனாற் செழுமை பெற்றது. இலக்கியம் எல்லாமே, ஏதோ ஒரு வகையிற் சமுதாய விமர்சனமாகவே இயங்குகிறது. அதை உணர்வுபூர்வமாகச் செய்வோர் பலர், தமது நிலைப்பாட்டைத் தெளிவாகவே கூறிவிடுகிறார்கள். ஏனையோர் பக்கச் சார்பற்றுத் தாம் இயங்குவதாக எண்ணுகிறார்கள். வரலாற்று நெருக்கடிகள் நடுநிலை என்ற ஒன்றை அனுமதிப்பது அரிது. ஒடுக்கலுக்கு எதிரான போரில், நடுநிலை என்பது பலசமயம் ஒடுக்கலுக்கான அங்கீகாரமாகி விடுகிறது.
ஒரு விடுதலைப் போரின் போக்கில் நடக்கும் தவறுகள் விடுதலைப் போராட்டத்துக்குக் கேடானவை. போராட்டத்தின் போக்கில் நிகழும் தவறுகள் உடனுக்குடன் திருத்தப்படாவிடின் போராட்டம் பலவீனமடையும். போராட்டம் பற்றிய விமர்சனங்களிற் சினேகமானவற்றையும் பகைமையானவற்றையும் வேறுபடுத்திக் காணும் தேவையைப் பலரும் மறந்து விடுகின்றனர். பகைமையான விமர்சனங்களிற் கூடப் பயனுள்ள அம்சங்களை எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் ஒரு விடுதலை இயக்கத்துக்கு மிக அவசியம்.
என் சமூக விமர்சனங்களைக், கட்டுரைகளில் மட்டுமன்றிக் கவிதைகளிலும் முன் வைத்து வருகின்றேன். இத் தொகுதியிலுள்ள விமர்சனங்கள் பெருமளவு நேரடியானவையும் கடுமையானவையும் என்றே நினைக்கின்றேன். இக் கவிதைகள் எவரையும் மகிழ்விக்கும் நோக்குடையனவல்ல. இது மகிழ்ச்சிக்கான வேளையுமல்ல. எனது கருத்துக்களுடன் எவரும் உடன்பட வேண்டுமெனவும் நான் எதிர்பார்க்கவுமில்லை. பெரும்பாலும், நான் கேள்விகளையே எழுப்புகின்றேன். இக் கேள்விகட்குப் பதில்களையும் நான் எதிர்பார்க்கவில்லை. இக் கேள்விகள் இன்னுங் கேள்விகளை எழுப்புவதையே விரும்புகிறேன். ஏனெனிற் கேள்விகளே இந்த நேரத்தின் பெரிய தேவை என நினைக்கிறேன்.
ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் இருப்புத் தொடர்பான பிரச்சினைகட்கு நியாயமான ஒரு தீர்வு பற்றிய எதிர்பார்ப்புக்கள் இன்னொரு முறை எழுந்து துவண்டுள்ளன. பேரினவாத அரச அடக்குமுறை தோற்றுவித்த போர் எதையுமே தீர்க்கப் போவதில்லை. இப்போரின் விளைவாக இலங்கையின் சகல தேசிய இனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் சகல இன மக்களும் அமைதியையே வேண்டுகின்றனர். அந்த ஆவலை நிறைவு செய்ய நியாயமான, நிலைக்கக் கூடிய அரசியற் தீர்வு அவசியம். விடுதலைக்காகப் போராடுகிறவர்களது நியாயத்தை வலியுறுத்தும் அதேவேளை, அந்த நியாயமான போராட்டம் நெறிபிறழ்வது பற்றியும் நாம் கவனமாக இருப்பது அவசியம். எனது கவிதைகள் இவ்வாறான எண்ணங்களின் உந்துதலிலேயே எழுந்தன.
தொகுதியின் பேருக்குரிய முதலாவது நீண்ட கவிதை மிக அண்மையில் எழுதப்பட்டது. இதிற் பகுதிகள் ஈழத்தின் சரிநிகர் ஏட்டிலும் தமிழகத்தின் கனவு சஞ்சிகையிலும் பிரசுரமானவை. "உருமாற்றம்" கனடா தாயகம் ஏட்டில் வந்தது. "இஸ்லாமியனதும் இந்த மண்" அதே ஏட்டில் வந்து சரிநிகரில் மறுபிரசுரமானது. "உளவாளிகள்" லண்டன் பனிமலர் சஞ்சிகையிலும் "யாழ்ப்பாணத்துக்கு" பாரிஸ் ஓசையிலும் வந்தன. "களவாடப்பட்ட முத்துக்கள்", "சமாதானப் புறாக்கள்" இரண்டும் இலங்கை தாயகம் சஞ்சிகையில் வந்தவை. "பகலும் இரவும்" லண்டனில் உள்ள தமிழர் நலன்புரி சங்கம் (நியூஹாம்) அமைப்பின் 10ம் ஆண்டுச் சிறப்பிதழில் வந்தது. "போரும் தீர்வும்" டென்மார்க் சஞ்சீவியில் வந்தது. "ஸப்பாட்டிஸ்ற்றாக்கட்கு" இலங்கை புதியபூமியிற் பிரசுரமானது. ஏனையவை நோர்வே சுவடுகளில் வந்தவை அல்லது வரவுள்ளன.
என் கவிதைத் தொகுதிகளை வெளியிடுவதில் அக்கறையுள்ள இலங்கை தேசிய கலை இலக்கியப் பேரவையினருக்கும் குறிப்பாக நன்பர் தேவராஜாவுக்கும் இன்னொரு முறை என் நன்றி. ரெக்னோ பிறின்ற் நிறுவனத்தினருக்கும் குறிப்பாக தியாகராஜாவுக்கும் ஆன் நன்றிகள் உரியன.
சி. சிவசேகரம்
லண்டன்
24.5.96
------------------------------------------------------
உள்ளே.....
போரின் முகங்கள்
ஸப்பாட்டிஸ்ற்றாக்கட்கு
துப்பாக்கியின் தெரு
களவாடப்பட்ட முத்துக்கள்
சமாதானப் புறாக்கள்
போரும் தீர்வும்
புரட்சியும் புத்திமான்களும்
பகலும் இரவும்
ஸம்பவாமி யுகே யுகே
மனித உரிமை மீறல்கள் பற்றிய அறைக்கைகள் பற்றிய ஒரு அறிக்கை
உருமாற்றம்
யாழ்ப்பாணத்துக்கு
உளவாளிகள்
இஸ்லாமியனதும் இந்த மண்
சமாதானம் பற்றிய ஒரு அநீதிக் கதை
------------------------------------------------------
போரால் மரித்தோர்க்கு
------------------------------------------------------
போரின் முகங்கள்
1.
வாழ்வின் மீதான ஆசை
மண்ணைவிட்டு விரட்டியத
இரவின் முகத்தைச் சூடிக்
கொழும்புக்கு ஓடினர்
இரவின் முகத்தை அணிந்த சீருடைகள்
அவனை இழுத்துச் சென்றன.
2.
அடையாள அட்டையில் இருந்த முகம்
தனதென்றான் அவன்
இல்லையென்றார்கள் அவர்கள்
அட்டை பத்து வருடம் பழையது
ஆயினும்
முகம் தனதென்று வாதாடினான்
அவனது உடல் வாவியில் மிதந்த போது
முகம் அவனுடையதாக இருக்கவில்லை.
3.
போராளியின் முகத்தை அணிந்த சிறுவனும்
சிறுவனின் முகத்தை அணிந்த போராளியும்
சந்தித்த போது
முகங்களைப் பரிமாறிக்கண்ணாடியில் இயலவில்லை
நொறுங்கிய நிலைக்கண்ணாடியில் மரித்த சிறுவனுக்காகப்
போராளி சிறுவனைப்போற் கதறினான்
4.
அவன் வாளோ துவக்கோ ஏந்தியவனில்லை
ஆயினும்
புறமுதுகிடாமையின் மேன்மையும்
போர்க்களச் சாவின் உன்னதமும்
பாடும் புலவன் அவன்
அவனது சிறுவன் ஆயுதந் தரிந்தபோது
முறுவல் முகத்தை அணிந்து
வென்று வா என வாழ்த்தி வழியனுப்பினான்
வென்றான் என்றனர்
வரவில்லை
எல்லாரும் வீர அஞ்சலி செலுத்திய போது
முறுவல் அற்ற முகத்தைக் கழுவிய கண்ணீர்
அவனது வாயை அடைத்தது.
5.
எப்பொழுதோ
இரகசியமாகக் கழற்றிவைத்த முகத்தைக்
கண்டிருக்கக்கூடிய முகங்களை எல்லாம்
கவனமாகக் குழிதோண்டிப் புதைத்தான்
கழற்றிவைத்த முகம்
ஒவ்வொரு குழியின்றும்முளைத்தது.
6.
அவளுடைய முகம்
அம்மாவினது என்றார்கள்
இல்லை அம்மம்மாவினது என்றார்கள்
அம்மாவின் முகமும் அம்மம்மாவின் முகமும்
அணிந்திருந்த புகையின் நெருப்பை
அவள் முகம் அணிந்திருந்தது.
7.
சிறுவர்களின் தந்தையரைக் கொன்றார்கள்
தமையன்மாரை ஊரினின்று விரட்டினார்கள்
சிறுவர்கள் ஆயுதந்தரித்தபோது
மனிதாபிமானத்தின் முகத்தைச் சூடிச்
சிறுவர்கட்காக அழுதார்கள்.
8.
அவன் ஒரு வியாபாரி
ஆட்சேர்ப்பு அதிகாரியின் முகத்தை அணிந்திருக்கிறான்
ஆவன் பண்டங்களை வாங்கி விற்பதில்லை
மனிதர்களை வாங்கி மரணத்தை விற்கிறான்.
9.
அரசாங்கத்துக்கு இரண்டு முகங்கள்
போரின் முகம் சமாதானத்துக்கு முன் போரென்கிறது
சுமாதானத்தின் முகம் போருக்குப்பின் சமாதானமென்கிறது.
10.
கற்சுவர்களும் கம்பிக் கதவுகளுமாய் ஒரு சிறைச்சாலை
சட்டத்தின் பேரால் மனிதர்களை மறித்து வைக்கிறது.
வேளை தவறாமல் உணவளிக்கிறது
வெய்யிலைக் காணவும் அனுமதிக்கிது
கம்பி வேலிகளும் மரக் கதவுகளுமாய் ஒரு சிறைச்சாலை
மனிதாபிமானத்தின் பேரால் மனிதர்களை மறித்து வைக்சிறது
அகதிமுகாமெனத் தன்னை அழைத்துக்கொள்கிறது.
11.
பயிர் செய்பவர்கள் அகதிகளின் முகங்களைச் சூடியபின்
பற்றைகளின் முகங்களைச் சூழய வயல் வெளிகளில்
போர் விதைக்கப்படுகிறது அழிவு அறுவடையாகிறது.
12.
இந்த முகத்தின் கோடுகள்
தோலின் சுருக்கங்களல்ல
வறுமை உழுத கோடுகளைப்
போர் இன்னும் ஆழமாக்குகிறது.
13.
பசியாலும் நோயாலும் மரித்தோரின் புள்ளி விவரங்கள்
தரும நிறுவனங்களின் மனிதாபிமானமிக்க அலுவலர்களைக்
குளிரூட்டப்பட்ட வண்டிகளில் வைத்து
விருந்து வையங்கட்கு இழுத்துச் செல்கின்றன.
14.
விமானங்கள் வருகின்றன
மரண பயம் தொடர்கிறது
சாதித்தடிப்பு மனித நேயமுகத்தைச் சூடிக்கொள்கிறது
பதுங்க குழிகளிலும் பாதுகாப்பிடங்களிலும் பல் தெரிய முறுவலிக்கிறது.
வுpமானங்கள் போகின்றன
முரண பயம் தொடர்கிறது
ஒரு வாளி கிணற்று நீர்
மனித நேயத்தைக் கழுவிக்
கழற்றிய வேட்டியை நனைக்கிறது.
15.
பெட்டியைத் திறந்து
ஒவ்வொரு பொருளாகச் சோதிக்கிறான்
பட்டாளத்தானின் தோளில் உள்ள துவக்காற் பயனேது
உள்ளே
நானும் நடுங்குகிறேன் அவனும் நடுங்குகிறான்.
16
கடல்மீதும் முற்றுகை
கடலில் நீராட விரியும் வலைகள்
மணலிற் துவண்டு
மழையில் நனைகின்றன
வள்ளங்களைச் சுமக்கும் அலை முதுகைப்
போர்க் கப்பல்களும் பீரங்கிப் படகுகளும் முறிக்கின்றன
அமைதிக்காகக் காத்திருக்கும் நெஞ்சுக்குள்
கடல் குமுறுகிறது
காற்று
மணல்வாரித் தூற்றுகிறது.
17
புத்தரைக் காண விஹாரைக்குப் போனேன்
கண்களை ஏன் தாழ்த்தியிருக்கிறீர்கள் எனக் கேட்டேன்
என்பேரால் நடக்கும் எதையுமே காண மனமில்லை என்றார்
கைகளைக் கட்டியிருந்தால் ஆகுமோ என்றேன்
விரித்த கைகளில்
அரசாங்கம் துவக்கை வைத்துவிடுமே என்றார்.
18
அங்கே தொழுத பள்ளிவாசல் போலவே
இங்கே தொழுகிற பள்ளிவாசலும்
அங்கே தொழுதது போல
அவர்களால்
இங்கே தொழ இயலவில்லை.
19
சமாதானத் தீர்வை நிறைவேற்றும் பொறுப்பு
ஆயுதப் படைகளிடம் ஒப்படைக்கப்பட்டது
குண்டுகளின் சமாதான வார்த்தைகளை
விளங்காத மனிதர்களின் குருதி
மண்ணை ந்னைக்கிறது.
20
போரின் காரணமாக மீறப்படும்
மனித உரிமைகள் பற்றிப் பேசுவோரிடம்
போருக்குக் காரணமான
மனித உரிமை மீறல்கள் பற்றிப் பேசுவீர்களா
எனக் கேட்டேன்
அவர்கள் வாய் திறந்த போது
மனிதாபிமானத்தின் முகம் மறைந்தது
அரசியல்வாதிகளின் குரல் கேட்டது.
21
எவருடைய போரென்ற கேள்விக்கு
எவருடைய சமாதானமென்று பதில் வந்தது.
22
சிவப்பும் மஞ்சளும் கறுப்புமாக
இம்மண்ணின் முகத்தைத் தீட்டும் ஓவியனே
உன்னிடம் வேறு நிறங்களே இல்லையா எனக் கேட்டேன்
கவிதைகள் போரையும் சாவையுமே கூறுகின்றன
இசைக்கருவிகளிற் போர்முழக்கம் கேளாதபோது
சாவீட்டில் ஒப்பாரி கேட்கிறது
எரிந்ததற்கும் எரிவதற்கும் இடையிலுள்ள என்னிடம்
எந்த நிறங்களை வேண்டுகிறாயென்றான்
வண்ணங் குழைத்த தூரிகை தீண்டிய திரை
தீக்கொண்டு எரிந்தது.
23
போர் தனது விதிகளை இழந்து விட்டது
போர்க்களங்கள் தமது எல்லைகளை இழந்து விட்டன
போர்க்கலன்கள் தமது குறிகளை இழந்துவிட்டன
போர்த்தொழிலோர் தமது முகங்களை இழந்து விட்டனர்
ஆயுத வியாபாரிகள் காசை எண்ணுகின்றனர்
புள்ளிவிவரங்கள் மனிதரைப் புதைக்கின்றன
24
படையினர் அடிமைசெய்ய வந்தபோது
மக்கள் மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறினர்
படையினர் விடுதலை செய்ய வந்தபோதும்
மக்கள் மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறினர்.
25
விதிப் பயனால்
வழிவேறு இல்லாமலே
இந்தப் பிழைப்பு என்றாள் விபசாரி
வயிற்றுப் பசியால்
வழிவேறு இல்லாமலே
இந்தக் களவு என்றான் திருடன்
தேச நலனுக்காய்
வழிவேறு இல்லாமலே
இந்தப் போர் என்றது அரசு
விபசாரியின் மொழியிலும் திருடனின் மொழியிலும்
தொனித்த துயரம்
அரசின் மொழியில் ஏன் தொனிக்கவில்லை
26
போரிடச் சென்றவரது மீளலைக் காத்திருக்கும்
அதேயளவு நிச்சயத்துடன்
பாடசாலைக்குப் போனோரதும்
பணிமனைக்குப் போனோரதும்
சந்தைக்குப் போனோரதும்
கோயிலுக்குப் போனோரதும்
மீளலைக் காத்திருக்கிறார்கள்
போரென்ற பெருமதிலின் இம்மருங்கும் அம்மருங்கும்
அன்னையரது முகங்களில்
ஒரேயளவு உறுதி
ஒரேயளவு அச்சத்தை
மூடி நிற்கிறது.
27
அதே போர்
அதே மனிதர்கள்
நேற்று எதிர்த்தவர்கள்
இன்று ஆதரிக்கிறார்கள்
மந்திர நாற்காலியில் அமர்ந்ததும்
போரின் முகம் மாறித் தெரிகிறது
28
போரின் முகங்கள் அடிக்கடி இடம் மாறுகின்றன
வெற்றியும் தோல்வியும் முன்னேறலும்
பின்னடைவும் உறுதியும் தடுமாற்றமும்
நோக்குகிற திசைகள் மாறுகின்றன
அழிவு மட்டும்
எல்லாத் திசைகளிலும் நோக்குகிறது
29
கே. மரித்தோரின் முகங்கள்
எப்போதுமே
போராளிகளினதாயும்
பயங்கரவாதிகளினதாயும்
எதிரிகளினதாயும்
அடையாளங் காணப்படுவது
எவ்வாறு?
ப. குண்டுகளும் வெடியோடுகளும்
குறிதவறக் கூடாது
என்பதால்.
30
எங்கள் யுகத்தின் போர்க்களங்களிற்
குருதி அருந்தப் பேய்கள் வருவதில்லை
தசையை உண்ணப் பிசாசுகள் வருவதில்லை
எட்ட இருந்து எங்களைத் தின்னும்
பேய்கட்கும் பிசாசுகட்கும்
எங்களைப் போலவே முகங்களும் உடல்களும்
31
அமைதி பற்றிப் பேசலாம்
போர் பற்றிப் பேசலாம்
அமைதி பற்றிப் பேசிக்கொண்டே
போர் பற்றிப் பேசுவோரிடம்
அமைதியாக ஆயுதங்களை விற்கலாம்
32
அவர்களது வெடிகுண்டுகள் ஆகாயத்தினின்று இறங்குகின்றன
இவர்களது வெடிகுண்டுகள் தெருவழியே உலாவுகின்றன
போரின் அறநெறிகள் பற்றிப் போதிக்க
இதென்ன மற்போரா சதுரங்கமா
33
என்னால் இந்தப் போர்
எப்போது முடியுமென்று சொல்லமுடியாது
எப்போதேன் முடிந்தாலும்
அப்போது
இன்னொரு போர் தொடங்குமென்று மட்டும்
இப்போதே சொல்லமுடியும்
34
ஊரோடு இருக்கமாட்டாமற் போனவன்
ஊர் திரும்ப நினைத்தபோது
ஊரே இல்லாது போய் விட்டது
35
எப்போதும் மதில் மேல் அமரும் இப்பூனை
எல்லா மதில்களும் போரில் இடிந்தபின்
எங்கே அமருமெனப் பார்த்தேன்
போரின் மீது அமர்ந்திருந்தது பூனை
36
இரவோடு இரவாக வந்தார்கள்
வீடுவீடாகப் புகுந்தார்கள்
கண்ட அனைவரையுமே கொன்றார்கள்
தனது குடும்பத்தையே இழந்த அவனுக்குத்
தன்மீது பகைமை
ஏதென்றுந் தெரியவில்லை
ஏனென்றுந் தெரியவில்லை
37
கூரைகள் இருந்தாலும்
குண்டுகள் விழும்போது
குழிகட்குள் ஒதுங்கித்தான் வாழ்ந்தார்கள்
போர்
கூரைகளையும் குழிகளையும் பறித்துவிட்ட போதிலும்
குண்டுகள் விழுவது மட்டும் நிச்சயம்
38
போர்க்குதிரையை என்னிடம் தாருங்கள்
சமாதானத்தை நோக்கிச் செலுத்துகிறேன்
என்றவரைக்
குதிரை முதுகில் அமர்த்தினோம்
குதிரை போரை நோக்கிய்ந்ந் பயணமாகியது
குதிரை முதுகில அமர்ந்தபின்
குதிரை எங்கே போகிறது என்பதை விடக்
குதிரை முதுகிற் குந்தியிருப்பது முக்கியமானது
39
விடுதலைக்கானது இப்போர் எனின் நாம் மனம் திறந்து
பேசுவது எப்போது
40
என் முகத்தில் எதைக் காண்கிறாய் என்று வினவியது போர்
இடிபாடுகளை என்றான் ஒரு கிழவன்
இழவு வீடுகளை என்றாள் ஒரு கிழவி
குருதிக் கோலங்களை என்றான் ஒரு ஓவியன்
போர்ப் பறைகளை எனச் சொன்ன இளைஞனைத் தொடர்ந்து
ஒப்பாரியை என முனகினாள் ஒரு பாடகி
கண்ணி வெடிகளை எனக் கூவினான் ஒரு முடவன்
முடமான காவியங்களை என்றான் ஒரு கவிஞன்
உடல் ஊனமானோரை என்றாள் ஒருதாதி
மருந்துகளின் போதாமையை என்ற வைத்தியனை முந்தி
இறக்குமதி வாய்ப்புக்களை என்றான் ஒரு விநியோகஸ்தன்
விலைவாசி உயர்வை என்றான் ஒரு குடும்பஸ்தன்
மேலதிக வருமானத்தை என்றான் ஒரு வியாபாரி
பொருட்களின் தட்டுப்பாட்டை என்றாள் ஒரு குமரி
பெரும் வருமானத்தை என மகிழ்ந்தான் ஒரு கடத்தற்காரன்
தரவேண்டிய என் பங்கை என நினைவூட்டினான் ஒரு சோதனைச் சாவடி அதிகாரி
இன்னும் விற்றுமுடியாத ஆயுதங்களை என்றான் ஒரு விற்பனையாளன்
என்னுடய கமிஷனை என்றான் ஒரு தரகன்
குண்டெறியும் விமானங்களை என நடுங்கினான் ஒரு சிறுவன்
மேலெழும் ஏவுகணைகளை எனக் குழறினான் ஒரு விமானி
ரத்துச் செய்யப்படும் விடுமுறையை என வாடினான் ஒரு சிப்பாய்
போர்க்கால மிகை ஊதியத்தை என்றான் அவனது மேலதிகாரி
மரித்த படையினர்க்கான உபகார நிதியை எனப்
பொறாமைப்பட்டான் அவனது மேலதிகாரி
என் தலைவிதியை என நொந்தாள் அவனது மனைவி
என் நண்பனின் பிரிவை என வருந்தினான் அவனது தோழன்
வீர மரணங்களை என்றான் ஒரு பிரசாரகன்
விடுதலையை என அடித்துரைத்தாள் ஒரு பெண் போராளி
பயங்கரவாதத்தின் முடிவை எனக் கொக்கரித்தான் ஒரு அமைச்சன்
பைத்தியக்காரத்தனத்தை என்று சிரித்தான் ஒரு ஞானி
பசியில் வாடும் குழந்தைகளை எனப் பதறினாள் ஒரு தாய்
பாணுக்கான கியூ வரிசையை என்றாள் ஒரு சிறுமி
போக முடியாத சாலைகளை என முறையிட்டான்
ஒரு வாடகை வண்டியோட்டி
வெறிதான தேவாலயங்களை என ஏங்கினான் ஒரு பூசகன்
திறவாத பாடசாலைகளை எனக் குறுக்கிட்டாள் ஒரு ஆசிரியை
நிறைய விடுமுறை நாட்களை என்று கத்தினான் ஒரு மாணவன்
நடத்த முடியாத நடன நிகழ்ச்சிகளை என்றாள் ஒரு நர்த்தகி
மேடையில்லாத நாடகங்களை என்றான் ஒரு நடிகன்
மேலும் பல அறிக்கைகளை என்றான் ஒரு என். ஜி.ஓ. ஊழியன்
ஏராளமான போர்ச் செய்திகளை என்றான் ஒரு பத்திரிகையாளன்
என்னை என்ற குரல் வந்த திசையில்
கவனிப்பாரற்றுக் கிடந்தது
ஒரு அகதியின் பிணம்
------------------------------------------------------------
ஸப்பாட்டிஸ்ற்றாக்கட்கு
காய்ந்த ஒரு குச்சுப்போல
மரக்கிளையிற்
குத்திக் கிடந்த கூட்டுப் புழுவுக்குச்
சிறகாகத்
தீச்சுடர்கள் இரண்டு முளைத்தது எவ்வாறு?
இலையுதிர்ந்து
பட்டது போல் நின்ற நெடுமரத்தில்
வசந்தத்தின் செந்தழல்கள்
கிளைமூடப்
பரந்து விரிந்தது எவ்வாறு?
சாம்பல் மூடி
நூற்றாண்டுக்காலம்
அவிந்து அடங்கிக் கிடந்த எரிமலையும்
உயிர்த்தெழுந்து
வானுக்கு ஒளியூட்டியது எவ்வாறு?
மரித்தது போல்
ஐந்நூறு வருடங்கள்
அடங்கிக் கிடந்த ஒரு தேசம் விழித்தெழுந்து
ஒரு பொழுது
அமெரிக்கக் கண்டத்தை நடுக்கியது எவ்வாறு?
(1994 புத்தாண்டு தினத்தன்று மெக்ஸிக்கோவின் சியபாஸ் மாநிலத்தில் அமெரிக்கப் பூர்வகுடிகளின் புரட்சிப்படை ஒன்று சில நகரங்களைத் தன்வயமாக்கியது. இரு வருடங்கட்கும் மேலாக மெக்ஸிக்கோவின் ஆயுதப் படைகளால் அடக்க முடியாதவாறு ஸப்பாட்டிஸ்ற்றாக்கள் எனப்படும் இந்த ஆயுதமேந்திய புரட்சிகர இயக்கம் வலிவுடன் விளங்குகிறது. மெக்ஸிக்கோவின் புகழ்பெற்ற புரட்சியாளரான ஸப்பாட்டா அமெரிக்கப் பூர்வகுடி வம்சாவழியினர். உலகின் விடுதலைப் புரட்சியாளர்களதும் மெக்ஸிக்கோவின் தேசிய உணர்வுமிக்க மக்களதும் மதிப்பிற்குரிய ஸப்பாட்டாவின் பேரையே கிளர்ச்சியாளர்கள் தமக்குச் சூட்டிக் கொண்டனர்.)
----------------------------------------------------------
துப்பாக்கியின் தெரு
றபீக் ஸபி
துருக்கிய குர்திஸ்தான் கவிஞர்
ஆங்கில மொழி பெயர்ப்பின் தமிழாக்கம்
என்னிடம் சிறிய நீலவானமொன்று இருந்தது
ஆக்கிரமிப்பாளர்கள் அதை என்மீது விழுத்தினர்
சிறிய இருண்ட நிறக் குருதியாறு ஒன்றும்
தேன்கனவுப்பொதியொன்றும் என்னிடமிருந்தன
அவர்கள் அதையெல்லாம் கொள்ளையடித்தனர்
ஆயினும் அவர்கள் என் தோலை மாற்றி
என் முகத்தைச் சிதைக்க வந்தபோது
நான் வெண்பனியையும் இடியொலியையும் பூண்டு
என் தாயகத்தைத் தோளிற் சுமந்து
துப்பாக்கியின் தெருவில் இறங்கினேன்
------------------------------------------------------------------
களவாடப்பட்ட முத்துக்கள்
எங்களுடைய வானங்களில் அழகான வெண்முத்துக்கள் விளைந்தன
மேகங்கள் அவற்றைக் களவாடிச் சென்றன
களவாடிய மேகங்களைக் காற்று விரட்டியது
மேகங்களின் மடிகளினின்று முத்துக்கள் விழுந்தன
விழுந்த முத்துக்களைப் பூமி அள்ளியெடுத்தது
காட்டு மல்லிகைகள் அவற்றை இரவல் வாங்கின
மல்லிகைகளை அலங்கரித்த முத்துக்களைப்
பெண்கள் கொய்து கூடையில் இட்டனர்
காதலர்களது முறுவல் பெண்களைக் களவாடிச் சென்றது
காதலர்களைக் கரும் பூனைகள்* களவு கொண்டன
மீளாத காதலர்கட்காகக் காத்திருந்த பெண்களின்
விழிகளில் விளைந்த முத்துக்கள்
அவர்களது உஷ்ணமூச்சின் வெம்மையிற் பற்றி எரிந்தன
விழுந்த கூடைகள் பற்றி எரிந்தன
மல்லிகைச் செடிகள் பற்றி எரிந்தன
எங்கள் பூமி பற்றி எரிந்தது
காற்றிலுந் தீ பரவி மேகங்கள் பற்றி எரிந்தன
எங்கள் வானங்கள் எல்லாமே எரிந்தன.
( *கரும்பூனைகள் இலங்கையின் முன்னாள் சனாதிபதி பிரேமதாச ஆட்சிக்காலத்து அரச பயங்கரவாதப் படை)
--------------------------------------------------------
சமாதானப் புறாக்கள்
சமாதான தேவதையை அதிகாலையில் சந்தித்தேன்.
வாடிய முகத்துடன்
உழவர்களின் அரிவாள்களிற்
குருதி படிந்திருக்கக் கண்டதாய்ச் சொன்னாள்.
"உன் வெள்ளைப் புறாக்களை
அவர்களிடம் அனுப்புவாய்"
என ஆலோசனை சொன்னேன்.
அனுப்பினாள்.
உழவர்கள்
தங்களிடமிருந்த சொற்பத் தானியத்திற் பகுதியைப்
புறாக்களிடம் கொடுத்தார்கள்.
"உங்கள் அரிவாள்களில் ஏது இந்தக் குருதி?"
எனப் புறாக்கள் கேட்டன.
"எங்களது விளைச்சலைப் பறிக்க வந்த
ஏவலர்களது குருதிதான்" என்றார்கள்.
அது சரியா தவறா என விவாதித்தவாறு
புறாக்கள் மீண்டன.
சமாதான தேவதையை முற்பகலிற் சந்தித்தேன்.
முகவாட்டம் மாறாமல்
ஆதிவாசிகளின் கைக் கோடரிகளிற்
குருதி வழியக் கண்டதாய்ச் சொன்னாள்.
"உன் வெள்ளைப் புறாக்களை
அங்கேயும் அனுப்புவாய்"
என ஆலோசனை சொன்னேன்.
அனுப்பினாள்
ஆதிவாசிகள்
கிண்டியெடுத்த கிழங்குகளைப்
புறாக்களுடன் பகிர்ந்தார்கள்.
"உங்கள் கோடரிகளில் வழிவது எவரது குருதி?"
எனப் புறாக்கள் கேட்டன.
"எங்களது மண்ணைப் பறிக்க வந்த
மூர்க்கர்களது குருதிதான்" என்றார்கள்.
அது நியாயமா இல்லையா என்று தர்க்கித்தவாறு
புறாக்கள் மீண்டன.
சமாதான தேவதையை நண்பகலிற் சந்தித்தேன்.
சோக மிகுதியுடன்
தொழிலாளர்களின் கருவிகளிற்
குருதி உறைந்திருக்கக் கண்டதாய்ச் சொன்னாள்.
"உன் வெள்ளைப் புறாக்களை
அவரிடத்தும் அனுப்புவாய்"
என ஆலோசனை சொன்னேன்.
அனுப்பினாள்.
தொழிலாளர்கள்
தங்கள் மதிய உணவுக்காய் வைத்திருந்த ரொட்டிகளிற்
புறாக்கட்கும் ஈந்தார்கள்.
"தொழிற்கருவிகளிலுங் குருதி ஏது?" எனப்
புறாக்கள் கேட்டன.
"எங்கள் உரிமைக்கான போராட்டத்தை
உடைக்க வந்த உலுத்தர்களது குருதிதான்"
என்றார்கள்.
கருத்து வேறுபாட்டுடன் புறாக்கள் மீண்டன.
சமாதான தேவதையை அந்தியிற் சந்தித்தேன்.
துயர் வழியும் முகத்துடன்
உலகமெல்லாம் போர் மூண்டு
மண்ணெல்லாம் குருதி பாய்ந்திருக்கக்
கண்டதாய்ச் சொன்னாள்.
"உன் வெள்ளைப் புறாக்களைப்
படையினரிடம் அனுப்புவாய்"
என ஆலோசனி சொன்னேன்.
அனுப்பினாள்.
புறாக்கள் வாய்திறக்கு முன்னமே
படையினர்
தமது தானியங்கித் துப்பாக்கிகளை ஒருகணம் நிறுத்தி
"இது நமது தொழில்ல்
எங்கள் எசமானர்களிடம் கேளுங்கள்" என்றார்கள்.
துவக்குகள் மீண்டும் இயங்கின.
புறாக்கள் போரின் எசமானர்களிடம் விரைந்தன.
நிலவுடமையாளர்களுடனும் முதலாளிகளுடனும்
முதலீட்டாளர்களுடனும் ஆயுத வியாபாரிகளுடனும்
விருந்தோம்பிக் கொண்டிருந்த எசமானர்கள்
புறாக்கட்கும் மதுபானங்களை வழங்கினார்கள்.
சமாதான தேவதையை நள்ளிரவிச் சந்தித்தேன்.
அழுத முகத்துடன்
"என் புறாக்கள் இன்னும் வரவில்லை" என்றாள்.
"தேடிப் போவோம்" என்றேன்.
வெண்ணிலவை விளக்காக்கி
இரவு முழுவதும்
நாலு திசைகளிலும் நன்றாகத் தேடினோம்.
விடியுவரை
சமாதான தேவதைக்குத் துணையாக நானிருந்தேன்.
விடியலில்
ஒரு சிறுவனுஞ் சிறுமியும்
தாங்கள் கண்டெடுத்த வெண்சிறகுகளைச்
சமாதான தேவதையிடம் நீட்டினார்கள்.
சுவர்களின் பின்னால்
எசமானர்களின் நாய்கள்
புறாக்களின் எலும்புகளைச் சுவைத்தன.
அக்காலைப் பொழுதில்
சமாதான தேவதை
என்னிடம் ஒரு போர்வாளைத் தந்தாள்.
---------------------------------------------------------------------------
போரும் தீர்வும்
போர் முடிந்தபின் சொன்னார்கள்:
"போர்கள் எதையுமே தீர்ப்பதில்லை
எல்லாவற்றையும் பேசியே தீர்த்திருக்கலாம்"
ஒருகணம்
சரிபோல இருந்தது
மறுகணம்
பிழைபோல இருந்தது.
குண்டு விழுந்த மருத்துவமனையையும்
எரிந்துபோன நூலகத்தையும்
தரைமட்டமான கிராமங்களையும்
உழவு மறந்த வயல்களையும்
காணாமற் போன மனிதர்களையும்
கேட்டேன்.
பதில் இல்லை.
ஒரு பையனைச் சுமந்து சென்ற துப்பாக்கி சொன்னது:
"பேசி எதுவுமே தீராததால்
எல்லாவற்றையும் போர்களே தீர்க்கின்றன"
அது சரிபோலவும் பிழை போலவும் இருந்தது.
----------------------------------------------------------------------------
புரட்சியும் புத்திமான்களும்
அவர்கள் புத்திமான்கள்
உறுதியளிக்கப்பட்ட புரட்சி வருமென அறிவார்கள்
புரட்சி அழகானதெனவும் புனிதமானதெனவும்
புதிய உலகொன்றை அமைக்குமெனவும்
அவர்கள் அறிவார்கள்
புரட்சி கொடுமைகளை எவ்வாறு சாய்க்குமெனவும்
புரட்சியை எவர் செய்வரெனவும்
புரட்சி எப்போது நிகழுமெனவும்
அவர்கள் அறிவார்கள்
புரட்சி வந்த பின்பு
எவரெவர் என்ன செய்யலாமெனவும் அவர்களே அறிவார்கள்
புண்களிற் சீழ்வடியக்
குருதிபடிந்த மேனியுடன்
ஆடைகள் அழுக்கேறி நாறக்
கைகளிற் கொலைக் கருவிகளுடன்
புரட்சி வந்தது
புரட்சி இதுவல்ல என்று
புத்திமான்கள்
அழுத்தம் திருத்தமாக ஆதாரங்களுடன் வாதிட்டனர்
ஆயினும் உலகம் மாறியது
எப்போதாயினும் உமக்குத் தாகம் ஏற்பட்டால் நான் உமது தாக சாந்திக்கு வழி செய்வேன் என்று கண்ண்பிரான் அருளிய வரத்தைப் பெற்ற மகாஞானி உதங்கருக்குத் தாகம் ஏற்பட்ட போது ஒர்ய் புலையனது தோற்பையில் அவருக்குத் தரப்பட்ட நீர் தேவாமிர்தம் எனவோ தந்தவன் தேவேந்திரன் எனவோ தெரியாமல் இதுவோ வரம் என நொந்து அமிர்தத்தை மறுத்த உதங்கரிடம் இதுவோ உமது ஞானம் எனக் கேட்டாராம் கண்ணபிரான்.
(மகாபாரத உபகதை ஒன்றைச் சார்ந்தது)
----------------------------------------------------------------------------
பகலும் இரவும்
பகலின் வேளைகள் வெம்மை மிகுந்தவை
உடலை வாட்டி உழைப்பைப் பறிப்பவை
வேலை வாங்கி வியர்வை வழிப்பவை
வஞ்சமுஞ் சூதுங் களவுங் கொண்டவை
ஏச்சும் பொய்யும் எத்தும் நிறைந்தவை
போரிடும் மாந்தரின் வசையும் அடிதடிச்
சண்டையிற் சிந்துங் குருதியுங் கொண்டவை
பகலின் வேளைகள் விரக்தி மிக்கவை
ஓய்வும் அமைதியும் உறக்கமும் பகலின்
அலுப்பை மாற்றும் ஆறுதல் மருந்தும்
இரவின் குளிர்ந்த வேளைகள் தந்தன
காதலின் மிகுந்த உறவுகள் சேர்த்துக்
கனிமொழி கூறி அன்புசெய்தன
இரவின் இனிமை நுகர்தல் வேண்டி
இரவிற்காகவே பகல்களை வாழ்ந்தோம்.
எங்கள் வானும் எங்கள் மண்ணும்
இராக்கதப் படைகள் வயமாய்ப் போதலும்
எங்கள் பகல்களின் பொழுதுகள் எவையும்
எமதல என்று தீர்ந்து போயின
இரவின் வேளைகள் தீயாய்க் காய்ந்தன
இழந்த பகல்களின் வியர்வையும் குருதியும்
ஏச்சும் எம்மிடை நிகழும் போர்களும்
எல்லாம் இனியன அறிந்தோம்
எங்கள் இழந்த பகல்களை மீட்டோம்
----------------------------------------------------------------------------
ஸம்பவாமி யுகே யுகே
வியூகத்தை உடைத்தல் அரிது
ஆயினும் இயல்வது
வெளிவரல் இயலாதது
அறிவாய் நீ
ஆயினும்
ஆயுதம் பூண்ட நாற்படைகள் இழைத்த
அரண் பிளந்து உட்புகுந்தாய்
சாவு பெரும்பாலும் நிச்சயம்
ஆயினும்
அக்களத்தில் அக்கணத்தின் தேவையும்
அக்கணத்தின் மனிதன் நீ என்பதும்
அறிவாய் நீ
ஆயுதங்களும் அத்திரங்களும் கை நழுவ
மாரதர்களின் மேனியை நடுக்கியது
உன் மனவுறுதி
சூழநின்று தாக்கிய மாவீரர் பலபேரைத்
தனியொருவனாய்த் தாங்குதல்
இயலுமோ என எண்ணாது
விழுந்த தேர்ச்சில்லையும் ஆயுதமாகத் தூக்கிற்று
உன் மனவுறுதி
ஏ அபிமன்யு
போரின் விதைகளைத் தூவிய
துகிலுரிதற் படலத்தின் கொடுமையுங் கோழைமையும்
மீளவும் நிகழ்ந்தன உனைச் சூழ
உன் மரணம்
அறம் பெயர்ந்தோர்க்குக் கூற்றானது
பாரதப் போரின் திருப்புமுனையானது
"தருமம் நலிந்து அதருமம் தழைக்குங்கால்
வருவேன் யான் யுகந்தொறும் யுகந்தொறும்"
எனக் கூறிப் போனான்
உன் மாமன் வரவில்லை
அவதார வேடங்கள் காவிபூணும் யுகமொன்றில்
ஏ அபிமன்யு
ஆர்ப்பாட்டமின்றி
அவதரித்துப் போகிறாய்
பெண்ணாக
ஆணாக
விடுதலைப் படையாக
பணிய மறுக்கும் தேசமாக
ஈற்றில்
இந்த யுகம் உன்னுடையது
----------------------------------------------------------------------------
மனித உரிமை மீறல்கள் பற்றிய
அறிக்கைகள் பற்றிய
ஒரு அறிக்கை
மனிதர் பிரிக்கப்பட்டிருப்பினும்
மனித உரிமைகள் பிரிக்கப்பட முடியாதவை
எனினும்
மனித உரிமை மீறல்கள் அவ்வாறல்ல
மீறப்படுவன எவரது உரிமைகள் என்பதும்
மீறுவோர் எவர் என்பதுமே
மீறப்படுவன மனித உரிமைகளா எனத்
தீர்மானிக்கின்றன
பிரிக்கப்பட்ட மனிதரிடையே
மனித உரிமைகள் பிரிக்கப்படாதவாறு
மனித உரிமை மீறல்கள் பற்றிய அறிக்கைகள்
பிரிக்கப்பட்டிருக்கும்
----------------------------------------------------------------------------
உருமாற்றம்
அவனது உலகம்
அம்மா அப்பா அக்கா தம்பி
ஆச்சி அப்பு அயலார் உறவினர்
வீடு வளவு கிணற்றடி வீதி
பாடசாலை ட்யூட்டறி கோயில்
ஆசிரியர்கள் சினேகிதர் கூட்டம்
சந்தை கடற்கரை கடைத்தெரு புல்வெளி
அவனது வானில்
வெண்முகில் சூரியன் வானவில் நிலவு
அவனது உலகில்
வயல்கள் பச்சையும் பழுப்பும் விளைத்தன
நிறங்கள் யாவும் மலர்களாயின
அலைகளை எல்லாம் கரைகள் தின்றன
வெய்யில் இனித்தது வெறுங்கால் சுட்டது
காற்றும் மழையும் கதைபல கூறின
அவனது உலகில்
மெய்யும் பொய்யும் சரியும் பிழையும்
தீதும் நன்றும் வெற்றி தோல்வியும்
உயர்வும் இழிவும் நெறியும் பிறழ்வும்
களவும் இருந்தன கொடுமைகள் இருந்தன
காலச் சுழலில்
நீதி பொய்த்தது கொடுமைகள் ஓங்கின
இனமும் மொழியும் உணர்வுடன் பின்னிக்
கொடுமைக்கெதிராய்க் கோபங் கனன்று
விடுதலை வேட்கைத் தீயாய் எழுந்தது
பாசமும் பற்றும் பயமுந் தாண்டிக்
கடந்த கால்கள் நெடுந்தொலை போயின
அவனது உலகம் இன்னொன்றானது
அவனது உலகம்
இயக்கம் தலைவன் ஆணைகள் பயிற்சி
ஆயுதம் தண்டனை யுத்தம் எதிரி
ஒற்றன் துரோகி வீரன் கோழை
தியாகம் தற்கொலை பிணங்கள் புதைகுழி
பதுங்கல் தாக்கல் பதுங்குங் குழிகள்
கண்ணிவெடிகள் குண்டு மழைகள்
தனித்தமிழ் ஈழம் தந்திரோபாயம்
பின்வாங்குதல்கள் மீண்டுந் தாக்குதல்
பேச்சுவார்த்தை யுத்தநிறுத்தம்
மறைந்து தாக்குதல் அந்நிய உதவி
அந்நிய எதிரி அமைதி பேணல்
தூக்கு மரங்கள் தொங்கும் உடல்கள்
சிறைகள் வரிகள் கடத்தல் வதைத்தல்
நேரடித்தாக்குதல் தற்கொலைத் தாக்குதல்
அதிரடிப்படைகள் படை அணிவகுப்பு
மாவீரர்கள் மண்ணின் மைந்தர்
மண்ணுட் புதைந்தவர்
மண்ணுட் புதைத்தவர்
புறநூனூறு புதுவரலாறு
பரணிபாடல் காயம் ஊனம்
பரணம் வீரம் வீர மரணம்
உறவும் நட்பும் உலர்ந்துபோயின
வயலும் வெளியும் வானுங் கடலும்
வீடும் தெருவும் போர்க்களமாயின
மாறிய உலகில்
நேற்றைய ந்ண்பன் இன்றைய எதிரி
நேற்றைய பொய்கள் இன்றைய உண்மை
இன்றைய வீரன் நாளைய கோழை
இன்றைய தியாகி நாளைய துரோகி
அறிவு கடந்தன சரியும் பிழையும்
சரியே பிழையாய்ப் பிழையே சரியாய்த்
தமிழரின் மேலாய்த் தனித் தமிழீழம்
மனிதரின் மேலாய் இயக்கமும் போரும்
அதனினும் மேலாய் அரசியற் தலைமை
அனைத்தினும் மேலாய் ஆயுத வலிமை
விரியும் மலர்களும் வீழும் அலையும்
தழுவுங் காற்றும் கழுவும் மழையும்
அந்தி வானமும் அணிலுங் காகமும்
அவனது உலகில் இல்லாதொழிந்தன
இதயம் இறுகி இரும்பாய்ப் போயோர்
சிறுவன் பிள்ளைப் பருவம் இழந்தான்
----------------------------------------------------------------------------
யாழ்ப்பாணத்துக்கு
இந்த இராப்பொழுது ஒருபோதும் விடியாதோ
கூடை கவிழ்த்தாற்போல் கும்மிருட்டுக் குலையாதோ
வானந் தெரியாதோ கார்மேகம் விலகாதோ
வெள்ளி முளையாதோ சூரியனும் உதியாதோ
ஆந்தை அலறுறது ஒருபொழுதும் முடியாதோ
நரியள் இடும் ஊளை நாள் முழுதும் ஓயாதோ
சவங்கள் அழுகுகிற மணமெண்டுங் குறையாதோ
ஓலம் அழுகுரல்கள் ஒருநாளும் அடங்காதோ
இரவுக்கு அங்கால இன்னுமொரு நாளிருக்கு
இருட்டுக்கு அங்கால ஒளியிர்ய்க்குப் பகலிருக்கு
மேகத்துக்கங்கால நிலவொண்டு வரயிருக்கு
மின்னுகிற வெள்ளியளும் முடிஞ்சொழிஞ்ச பின்னால
தாமிரமுந் தங்கமுமாய்ச் சூரியனும் இடையிடைய
நிறநிறமா வானவில்லு வாறதுக்கும் வழியிருக்கு
ஆந்தை நரி வெருண்டோடக் குவுகிற சேவலுக்குக்
குரலிருக்குக் கேட்டெழும்புக் கதறுகிற பசுவிருக்கு
புயலுக்குப் பின்னால பூங்காத்து வரவிருக்கு
போருக்குங் கொடுமைக்குஞ் சுறுக்ககெணயே முடிவிருக்கு
சனங்கள் துணிஞ்செழும்பிச் சண்டியரை அடக்குவின
துவக்கெடுத்த துரைமாரைத் தூணோடை கட்டுவின
குண்டெறியுங் கொலைகாரக் கூட்டத்தை வெல்லுவின
ஓலத்துக்கங்கால ஓங்கியொரு குரலெழும்பும்
அழுகைக்கு அங்கால அஞ்சாத நெஞ்சுயரும்
கெட்டவொரு கனவொண்டு கொடுமையளும் போயொழியும்
சுட்டெரிச்சு இடிச்சழிச்ச யாழ்ப்பாணம் தலைநிமிரும்
----------------------------------------------------------------------------
உளவாளிகள்
வேலி முருக்கங்கொப்பை முறிச்சவன்
வெளிச் சிவர் மூலையில் ஒண்டுக்கிருந்தவன்
கொடியில தொங்கின சீலை எடுத்தவன்
வீடியோக் கசற்றைக் கொண்டு போனவன்
எல்லா விவரமும் நல்லாக் கேட்டு
விளம்பரமாக அறிஞ்சு சொல்ல
எங்கடை உளவுப் படையப் போல
எந்த இயக்கமும் செய்யமாட்டின
எங்களை நீங்கள் கவனிப்பியளெனில்
தண்டம் விதிச்சுக் களவு போனதைப்
பறிச்சுத் தருவம்
அவசரமெண்டால்
விளக்குக் கம்பில தொங்கவும் விடுவம்
சமூக விரோதியள் தலையளை வெட்டிச்
சந்தி நடுவில வரியா வைப்பம்
எதிரி இயக்க ஆக்கள் செய்யுற
தூள் யாவாரம் கள்ளக் கடத்தல்
ஆர் ஆரோடை படுத்து எழும்பினை
எல்லாக் கதையும் நல்லா அறிவம்
கொழும்பில பஸ் ஸ்ற்றான்ட் குண்டு வைச்சது
சமூகத் தொண்டரைச் சாகக் கொண்டது
விரிவுரையாளரைத் தெருவில சுட்டது
எங்களக் கேட்டா என்ன தெரியும்?
அண்ணை
கோளி கீளி களவு போனதேல்
சொல்லுங்கோவன் பிடிச்சுத்தாறம்
----------------------------------------------------------------------------
இஸ்லாமியனதும் இந்த மண்
இந்த மண் எங்களின் சொந்த மண் - இதன்
எல்லை யார் தாண்டெனச் சொன்னவன்
இந்த மண் எங்களை ஈன்ற மண் - எமக்
கிடமிலை என்றெவன் சொனவன்
தந்தையர் தோளெமைச் சுமந்த மண் - அருந்
தாயாரின் மடியிலே சாய்ந்த மண்
பந்தடித்தோடி நாம் ஓய்ந்த மண் - தமிழ்ப்
பாடியும் பேசியும் தோய்ந்த மண்
வான்புகழ் நபிகளின் பாதையில் - பள்ளி
வாசலிற் தொழுகையிற் சேர்ந்த மண்
நோன்பினில் நல்லறஞ் செய்த மண் - நாம்
நாள்தோறும் பன்முறை தொழுத மண்
காதலின் நினைவினில் மிதந்த மண் - பல
கனவிடை ஆழ்ந்துநாம் மகிழ்ந்த மண்
வேதனை வெந்துயர் உணர்ந்த மண் - மனம்
தேறவும் ஆறவும் செய்த மண்
நாமெலாம் ஓரினம் என்றுசொல் - தனை
மாற்றினோர் எங்களைத் தூற்றினோர்
போமென எங்களை ஓட்டினோர் - செயல்
பார்த்ததால் நெஞ்சமே வெந்த மண்
வீடுநற்தொழில் பொருள் போயினும் - வெறுங்
கையராய் அகதிகள் முகாங்களில்
வாடினும் பன்முறை சொல்கிறோம் - நாளை
வருகுவோம் எங்களின் சொந்த மண்
----------------------------------------------------------------------------
சமாதானம் பற்றிய ஒரு அநீதிக் கதை
(ஐக்கிய நாடுகள் சபையின் 50ம் ஆண்டு நிறைவையிட்டு)
முதல் முதலாக
ஓநாய்கள் ஆட்டுக்குட்டிகளைக் கவர்ந்தபோது
சமாதான விரும்பிகள் ஒன்றுகூடி
ஏகமனதாக
ஓநாய்களைக் கண்டித்துத்
தீர்மானம் நிறைவேற்றினார்கள்
ஓநாய்கள் மீண்டும் ஆட்டுக்குட்டிகளைக் கவர்ந்த
போது
சமாதான விரும்பிகள்
நீண்டநேரம் தம்முள் விவாதித்து
மீண்டும் ஏகமனதாக
ஓநாய்களைக் கண்டித்துத்
தீர்மானம் நிறைவேற்றினார்கள்
ஓநாய்களும்
விடாது ஆட்டுக்குட்டிகளைக் கவர்ந்து வந்தன
சமாதான விரும்பிகளும்
தளராது
தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்
ஆடுகள் ஒன்றுதிரண்டு ஓநாய்களை எதிர்த்தபோது
சமாதான விரும்பிகள்
மீண்டுங் கூடிப்
போரை எதிர்த்துத்
தீர்மானம் நிறைவேற்றினார்கள்
ஆடுகள் தமது கொம்புகளைப் பிரயோகித்ததில்
ஓநாய் ஒன்று கொல்லப்பட்ட போது
கொம்புகளாற் தாக்குவது
யுத்த விதிகட்கு முரணானது எனவும்
பற்களையும் நகங்களையும் விட வேறெதையும்
பாவிப்பது
அநாகரிகமானது எனவும்
சமாதான விரும்பிகள்
புதிய தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்
ஆடுகட்குப் பற்களாற் போர் புரியத் தெரியாததாலும்
தமது குளம்புகள் மொட்டையானவை என்பதாலும்
கொம்புகளாலேயே போரிட்டன
சமாதான விரும்பிகட்குப்
போரை நிறுத்த வழிதெரியாததாலும்
தீர்மானங்களை நிறைவேற்றுவதை விட
வேறேதும் இயலாததாலும்
ஆடுகளின் அநாகரிகமான போர்முறையைத்
தொடர்ந்துங் கண்டித்துத்
தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்
ஓநாய்கள்
சமாதானத்துக்கு உடன்படாவிட்டாலும்
ஆடுகள் அநாகரிகமானவை என்ற் கூறி
அவற்றை அண்டுவதை நிறுத்தின
சமாதான விரும்பிகள்
ஆடுகளின் அநாகரிகமான நடத்தையை
இன்னமும் மன்னிக்க மறுக்கிறார்கள்
ஆயினும்
ஆடுகள் பாதுகாப்பாக உள்ளன.
----------------------------------------------------------------------------
இவரின் ஏனைய கவிதை நூல்கள்.....
மா ஓ சேதுங் கவிதைகள் (மொழிபெயர்ப்பு)
நதிக்கரை மூங்கில்
செப்பனிட்ட படிமங்கள்
தேவி எழுந்தாள்
பணிதல் மறந்தவர் (மொழிபெயர்ப்பு)
ஏகலைவபூமி.
-------------
கருத்துகள்
கருத்துரையிடுக