நிழலும் ஒளியும்
கவிதைகள்
Back
நிழலும் ஒளியும்
கா. அப்பாத்துரையார்
மூலநூற்குறிப்பு
நுற்பெயர் : நிழலும் ஒளியும் (அப்பாத்துரையம் - 41)
ஆசிரியர் : கா.அப்பாதுரையார்
தொகுப்பாசிரியர் : முனைவர் கல்பனா சேக்கிழார்
பதிப்பாளர் : கோ. இளவழகன்
முதல்பதிப்பு : 2017
பக்கம் : 22+290 = 312
விலை : 390/-
பதிப்பு : தமிழ்மண் பதிப்பகம், எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை 600 017, தொ.பே.: 24339030, செல்: 9444410654
மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in
தாள் : 16.0 கி. மேப்லித்தோ, அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 11.5 புள்ளி, பக்கம் : 312
கட்டமைப்பு : இயல்பு படிகள் : 500
நூலாக்கம் : கோ. சித்திரா
அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)
அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.
நுழைவுரை
தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர்.
பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம்.
தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும்.
தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம்.
தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார்.
அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன.
இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும்.
தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள்
கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலை
யிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர்
திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன்,
திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர்.
இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய ‘கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும்’சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி.
நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
“ஆக்கத்தை எனக்கிந் நாட்டார்
அளித்திட்ட அறிவை யெல்லாம்
தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே
செலவிடக் கடமைப் பட்டேன்.”
- பாவேந்தர்
கோ. இளவழகன்
தொகுப்புரை
மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்!
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின.
“அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார்.
பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார்.
சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன.
- தனித்தமிழ் இயக்கத் தோற்றம்
- நீதிக் கட்சி தொடக்கம்
- நாட்டு விடுதலை உணர்ச்சி
- தமிழின உரிமை எழுச்சி
- பகுத்தறிவு விழிப்புணர்ச்சி
- இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர்
- புதிய கல்வி முறைப் பயிற்சி
- புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம்
இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன.
“தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது!
அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்!
பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக,
- உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல்.
- தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல்.
- தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல்.
- தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல்.
- திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல்.
- நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல்.
இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது.
பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது.
உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன.
1. தமிழ் - தமிழர் - தமிழ்நாடு
2. வரலாறு
3. ஆய்வுகள்
4. மொழிபெயர்ப்பு
5. இளையோர் கதைகள்
6. பொது நிலை
பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும்.
இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின்
உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன.
கல்பனா சேக்கிழார்
நூலாசிரியர் விவரம்
பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார்
இயற்பெயர் : நல்ல சிவம்
பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989
பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி
பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி)
உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர்
மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு
வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா
தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி
பள்ளிக் கல்வி : நாகர்கோவில்
கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம், இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி ‘விசாரத்’, எல்.டி.
கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி)
நூல்கள் : 120 (ஆங்கிலம், 5)
இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை.
பணி :
- 1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர்.
- 1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர்.
- பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு.
- 1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி
- 1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர்.
- 1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர்
அறிஞர் தொடர்பு:
- தொடக்கத்தில் காந்திய சிந்தனை.
- 1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு
விருதுகள்:
- மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது,
- 1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் ’சான்றோர் பட்டம்’, ‘தமிழன்பர்’ பட்டம்.
- 1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் ’கலைமாமணி’.
- 1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய ’திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம்.
- மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய ’பேரவைச் செம்மல்’ விருது.
- 1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர்.
- 1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார்.
- இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது.
பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்:
- அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005.
- பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007.
பதிப்பாளர் விவரம்
கோ. இளவழகன்
பிறந்த நாள் : 3.7.1948
பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625,தஞ்சாவூர் மாவட்டம்.
கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு
இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல்
ஆற்றியுள்ள பொதுப்பணிகள்
1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர்.
பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் ’ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர்.
உரத்தநாட்டில் ’தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர்.
பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ’உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர்.
தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும்,
19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர்.
பொதுநிலை
தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர்.
தொகுப்பாசிரியர் விவரம்
முனைவர் கல்பனா சேக்கிழார்
பிறந்த நாள் : 5.6.1972
பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம்.
கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர்
இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
ஆற்றியுள்ள கல்விப்பணிகள்
- அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி.
- திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு.
- புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர்.
- பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார்.
- பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார்.
- 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
- மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார்.
- இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார்.
- செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார்.
நூலாக்கத்திற்கு உதவியோர்
தொகுப்பாசிரியர்:
- முனைவர் கல்பனா சேக்கிழார்
கணினி செய்தோர்:
- திருமதி கோ. சித்திரா
- திரு ஆனந்தன்
- திருமதி செல்வி
- திருமதி வ. மலர்
- திருமதி சு. கீதா
- திருமிகு ஜா. செயசீலி
நூல் வடிவமைப்பு:
- திருமதி கோ. சித்திரா
மேலட்டை வடிவமைப்பு:
- செல்வன் பா. அரி (ஹரிஷ்)
திருத்தத்திற்கு உதவியோர்:
- பெரும்புலவர் பனசை அருணா,
- திரு. க. கருப்பையா,
- புலவர் மு. இராசவேலு
- திரு. நாக. சொக்கலிங்கம்
- செல்வி பு. கலைச்செல்வி
- முனைவர் அரு. அபிராமி
- முனைவர் அ. கோகிலா
- முனைவர் மா. வசந்தகுமாரி
- முனைவர் ஜா. கிரிசா
- திருமதி சுபா இராணி
- திரு. இளங்கோவன்
நூலாக்கத்திற்கு உதவியோர்:
- திரு இரா. பரமேசுவரன்,
- திரு தனசேகரன்,
- திரு கு. மருது, திரு வி. மதிமாறன்
அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு:
- வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14.
நிழலும் ஒளியும்
முதற் பதிப்பு – 1949
இந்நூல் 2004இல் வெற்றியரசி பதிப்பகம், சென்னை - 88. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது.
சிறப்புரை
தமிழ்நாடு அறிவுக்குப் பேர் பெற்றது. இதற்குச் சான்றுகள் பல படக் கிடக்கின்றன. தமிழ்நாடு அளித்த அறிவுக் களஞ்சியங்கள் பல உண்டு. அறிஞர் தமிழ்நாட்டில் அன்றுந் தோன்றினர்; இன்றுந்தோன்றுகின்றனர். அக்கால அறிஞருள் குறிக்கத் தக்கவர் நக்கீரர், திருவள்ளுவர், இளங்கோவடிகள் முதலியோர்; இக்கால அறிஞருள் குறிக்கத் தக்கவர் பூண்டி அரங்கநாத முதலியார், திருவிதாங்கூர் சுந்தரம் பிள்ளை, குடந்தை இராமாநுஜம், ஸர். சி.வி. இராமன் முதலியோர்.
இந் நாளில் ஆராய்ச்சி உலகம் பெருகி வருகிறது. அவ்வுலகில் ஒளிர்வோருள் இந் நூலாசிரியர் கா. அப்பாத்துரை அவர்களும் ஒருவர். இவர் பன்மொழிப் புலவர். இவர் தம் நூல்கள் தமிழ்நாட்டைப் படிப்படியே ஓம்பி வருதல் கண்
கூடு, இத்தகைய ஒருவரால் யாக்கப்பெற்றது இப்பாட்டு நூல்.
இந்நூற்கண் மில்ட்டனிசம் உயிர்ப்பாய் நிலவுகிறது. அவ்வுயிர்ப்புக்கு ஏற்ற அரண்கள் எடுக்கப்பட்டுள்ளன. நூலுள் பல செம்பொருள்கள் மிளிர்கின்றன. அவற்றுள் ஒளியும் இருளும் உள்ளத்தைக் கவர்வன.
ஒளியைப் பற்றியும், இருளைப் பற்றியும் உலகில் எழுந்த ஆராய்ச்சிகள் இன்னும் முற்றுப்பெறவில்லை. இருளில் ஒளி காண்டல் அறிவு. “நள்ளிரவில் நட்டம் பயில்வானை” என்பது மணிவாசகம். இருளில் ஒளி காண மக்களை இந்நூல் உந்தும் என்று நம்புகிறேன்.
அறிஞர் அப்பாத்துரையார் வாயிலாக இது போன்ற நூல்கள் பல வெளி வரல் வேண்டும் என்பது எனது வேட்கை. இந் நூலை நன்முறையில் தந்த அவருக்கு எனது வாழ்த்து உரியதாக.
திரு. வி.க
25. 11. 49
நூன்முகம்
இலக்கியம், மக்கள் வாழ்க்கையைப் படம் பிடித்து ஆசிரியன் மனக்கோள், உளக்கோள் மிளிரப் புனைந்துரைக்கப் படுவது, சமயமும் சமயக் கருத்தும் வாழ்க்கையின் ஒரு சிறு கூறு மட்டுமே. ஆகவேதான் முழு நிறை இலக்கியமாகிய தமிழ்ச் சங்க இலக்கியத்தில் அது அருமையுடனும் அருகியும் வழங்கப் பெறுகிறது. காதலைப் போல் சமயமும் மிகைபடக் கையாளப் படின் அதன் நல்லியல்பு கெட்டு விடும். காதல், காமுகர், சிற்றின்பமாகிவிடும்; சமயம், புரோகிதர் பசப்புரையாகி விடும்.
நூலின் இறுதிப் பாட்டுக்கள் சில நீங்கலாக இந் நூற் பாட்டுக்கள் பத்தாண்டுகட்கு முன்பு எழுதப்பட்டன. அவற்றின் வருணனைகளும் சமயஞ்சார்ந்த அறிவுக் கருத்துக்களும் மாணவர்க்கும், கவிதையின்பம் நுகர்பவர்க்கும் பயன்படும் எனக் கருதியே இது தமிழுலகுக்கு அளிக்கப் பெறுகின்றது.
நூலின் பின்னணியான புனைவியல் கருத்து இது. இம் மண்ணுலகு இருள், ஒளி, இன்பம்,துன்பம், பகல், இரவு ஆகிய மாறுபாடுகளை உடையது. இவ்விரு தன்மைகளை வேறு பிரித்து ஒளி, இன்பம் முதலிய நற்பகுதிகளே நிரம்பிய வானுலகு அல்லது நாகருலகு ஒன்றும், இருள், துன்பம் முதலிய தீய பகுதிகளே நிரம்பிய நரகுலகு ஒன்றும் புனைந்து கொள்ளப்பட்டுள்ளன. நாகருலகோரின் தலைவர் கடவுள் அல்லது வானுலகத்து எந்தை. இவை கவிதைக் கற்பனை களாக மட்டிலுமே கொள்ளப் பட்டுள்ளன.
ஒளியே கண்டு கைத்துப் போன கலை யுணர்வுடைய நாகன் ஒருவன், “வானத்து எந்தை” யின் தண்டனைக் கடுமை கலந்த அருளன்பினால் நாகர் உலகுக்கு நேர்மாறான நரகுலகைக் கண்டபின் நம் மண்ணுலகை அடைந்து புதிய காட்சிகளைப் புத்தார்வத்துடன் அதை வருணித்துக் கூறுவதாக நூல் அமைந்துள்ளது. விண்மீன்காட்சி, காலைக் காட்சி, மாலைக் காட்சி, நிலாக் காட்சி ஆகியவை இப் புத்தார்வப் பின்னணி யிடையே புதுமை நயம் பெறுவதுடன் புதுக் கருத்துக்களுக்குத் திரையாகவும் அமைகின்றன.
தமிழுலகம் இம் முயற்சியை, அதன் சிற்றெல்லைக்குள் வைத்து நுகர்ந்து ஆதரவு காட்டி ஊக்கும் என நம்புகிறேன். தமிழ்ப் பெரியார் திரு. வி.க. அவர்கள் இச்சிறு பணிக்கு ஊக்கந் தந்து சிறப்புரை அருளியமைக்கு ஆசிரியர் நன்றி அன்னாருக்கு உரித்தாகுக.
கா. அப்பாத்துரை, எம். ஏ., எல்.டி
ஆசிரியர் (விசாரத்)
தமிழ்மனை சேப்பாக்கம்
திருவள்ளுவர் ஆண்டு 1981 சித்திரை 1
நிழலும் ஒளியும்
ஓய்வற்ற ஒளி உலகை
வெறுத்தேன், அந்தோ!
உறை இருளில் உடல் அழுந்தி
உழன்றேன், அந்தோ!
மாய்வற்றேன்; மாய்விலா
மாய்வு பெற்றேன்
மாளும் நாள் என்று என்றே
மாழ்கி னேனே! (1)
நாற் புறமும் இருள் திரண்ட
உருக்கள் கண்டு
நலிவனோ? நளு நளென
நெளி புழுக்கள்
மேற் புரள மயிர்க் கூச்சிட்டு
அழுங்கு வேனோ?
மெய் இறையே, என் பிழைகள்
பொறுக்கொ ணாதோ? (2)
என்றி றைஞ்ச, இது காறும்
எண்ணில் ஊழி
இமையாது விழித் தென்னை
வதைக்கும் கண்கள்
நின்றழுந்தி நிறை துயிலில்
ஆழத் துன்ப
நிலை நீத்து நீடமைதி
பெற்றே னன்றே! (3)
எத்தனை நாள், எத்தனையாண்டு,
ஊழிக் காலம்
என்றறியேன்; துயில் நிலையில்
நின்று நீங்கிச்
சித்த உணர்வு அடைந்ததுவும்
அறியேன்; சுற்றும்
தெரு ளுறுதண் கால் வீசல்
உணர்ந்தே னன்றே! (4)
உறங்கு கின்ற மதலையினை
வருடும் தாயின்
ஒள் விரல்கள் எனத்தண் கால்
வருடலோடும்,
மறங் கிடந்த வல்வினை நோய்
தோய்ந்த உள்ளம்
‘வலி’ அகன்று மெல்ல மெல்ல
எழுந்த தன்றே! (5)
கண் விழித்து நோக்குதலும்
“கனவோ, அன்றிக்
கடவுளே! இது நனவோ,
கருதி நின்ற
விண்ணுலகும் இது வன்று,
வீழ்ந் தழுந்தும்
வினையினேன் நரகு மன்று இஃது
என்னோ” என்றேன். (6)
வானிடை நின் றெந்தை குரல்
கனிந்து எழுந்து என்
மைந்தனே, மனங்கவலல்!
நன்மை அன்றி
யான் இடர்கள் தருவதி(ல்)
லை;
இன்பமெல்லாம்
எய்துபவர் மன நிலையே;
வேறொன்று அன்றால்! (7)
துன்ப நிலை காணாதார்
இன்பங் காணார்;
தொன்மை நெறி இயல்பிது, நின்
பிழையன்று ஐய,
இன்ப நெறி காட்டுதும் யாம்"
என்றது என்றன்
ஏழை உளம் அவ்வழியே
நின்ற தன்றே! (8)
வெள்ளியின் காட்சி
கீழ்த் திசையில்! அகோ, அகோ!
கடையே னுக்கும்
கிட்டி விட்ட காட்சியதே
காட்சி, காட்சி!
பாழ்த் திரையைக் கிழித் தெறிந்து
பளிங்கு போலும்
பசும்பொன் ஒளிக் கதிரெழுந்த
பண்பு தானே! (9)
கருவானை நீல்நிற வான்
ஆக்கும் செய்ய
கதிர்களையும் செம்மையுடன்
கலந்த நீலக்
கருஞ்சிவப்புச் சாயல்கள் அங்கு
அவற்றையும் கண்டு
அடியனேன் உடல் புளகம்
உற்ற தன்றே! (10)
இருளூடு செங்கதிரின்
கால்கள் வீசி
இயங்குதலும் என்னுடலும்
உளனும் பூரித்து,
அருள்நாடி ஒளி திகழ்ந்து
நிறைந்து பொங்கி,
ஆக முற்றும் செங்குருதி
பரந்த தன்றே! (11)
மயிர்க் கால்கள் நுனி நிற்ப
மறையின் நாதம்
செவிக் கொண்ட மெய்யடியார்
என்ன நின்று
செயிர் தீர்த்த செஞ்சொல் மொழிப்
புலவர் உள்ளம்
தீங்கனவில் கண்ட எலாம்
தெளியக் கண்டேன். (12)
அன்புருவாம் இறைவடிவம்
ஒளியே; ஆம், ஆம்!
அறிவொளி என் றுரைத்தார்கள்;
அதுவும் ஆம், ஆம்!
இன்புருவம் என்றார்கள்;
அதுவும் ஆம். மற்று
ஏனோ யான் இதுவரை அவ்
எழில் காண்கில்லேன்? (13)
ஒளிக் கொளியாம் இருள் கண்டேன்,
இன்று கண்டேன்!
ஒளிக் (கு)
உருவும் உயிரும் உணர்
வதுவும் ஈந்து
வெளிக்கு வெளியாய், அறிவும்
உணர்வும் காணா
மெய் கடந்த மெய்ம்மையினை
இன்று கண்டேன்! (14)
முற்றொளியைக் காணு மியல்பு
அற்ற கண்கள்,
முற்றி ருளில் எல்லையறு
துன்ப மல்லால்
மற்றொன்றும் காணுமியல்பு
அற்ற கண்கள்
மருள் திரையில் அருள் கண்ட
மாட்சி என்னே! (15)
எழிலோ டெழில்! எழிலோ டெழில்
இறைவ, என்னே!
இயங்கு மெழில்! புதிது, புதி-
தாக மென் மேல்
எழில் கடந்த பேரெழிலாய்,
அதுவும் தாண்டி
இமைக்கு முனம் வெவ்வேறாம்
எழிற்பே ராழி! (16)
எந்தை அருள் முந்தி வரப்
பிந்தி எந்தை
இன்னடியார் கருதுறும் இன்
னுருவம் கொண்டு
வந்திடல் போல் கதி ரொளியைப்
பற்றி வந்த
மணிக் கதிர்ச் செவ் வெள்ளியினைக்
காண்மின், காண்மின்! (17)
நீலமுகி லுடன் கலந்த
செக்கர் வானம்
என நின்ற இறைவன் முடிச்
சடைக ளென்ன
மாலுறச் சென் றோடு கதிர்க்
குலங்க ளோடும்
வான் விளங்க நின்றெ ழுந்த
வெள்ளி கண்டே; (18)
ஒளி என்றால் இது ஒளி, என்
உணர்வும் இஃதே!
உயிரிருந்து பெற்ற பயன்
பெற்றேன் இன்றே;
அளிவேறில், ஆருயிரில்,
அரனே! என்றும்
அடைவு இதுவே என்ற ருளாய்"
என்றிரந்தேன். (19)
“ஆயின் இதோ என் செய்கேன்,
அந்தோ, அந்தோ!
அடியன் உயிர் உணர்வதுவும்
கொள்ளை கொண்ட
மாய வெள்ளி ஒளி மழுங்கி
வாடல் என்னோ?
வாழ்வதனை ஈங் கிதற்கோ
வழங்கினாயே!” (20)
என்றழுதேன்; இமைக்கு முனம்
சொன்ன எல்லாம்
இறையு மனங் கொள்ளாது
துயர முற்றுக்
கன்றி ழந்த ஆ என்னக்
கதறி வீழ்ந்தேன்,
கடவுளருள் துயில் வந்தே
அணைந்த தன்றே! (21)
காலைக் காட்சி
அருளாளன் மடிதவழும்
துயிலின் நீங்கி
அறிவோடு செறி துன்ப
நெறியிற் பட்டே
இருளார்ந்த குருடன் ஒளி
பெற்றி ழந்தான்
எனத் துயரப் படகுழிப்பட்டு
அலமந் தேனே! (22)
“கொடுமை அரன் கொடுமை இது!
கொடுப்ப தென்றால்
கொடையிதுவோ? கொடுத் தழிக்கும்
கொள்கை உண்டோ?
அடிமை இவண் அடிப் பொடிக்கும்
அருகன் அல்லேன்,
அழி சினங் கொள் குறி வேண்டின்
அதற்கு ஈது ஒன்றோ?” (23)
"என்றென்றே அவலித்தேன்;
அழுத கண்ணீர்
இடையாடும் கீழ் வான
ஒளி ஈது என்னோ?
ஒன்றன்றோ என்றன் உயிர்க்கு
உரிய சோதி?
உளங் கொள்ளற்கிது எல்லாம்
உரியஆமோ? (24)
"ஆயினுமிங்கு இது அதுவே
ஆகுங் கொல்லோ?
அழகு இது, செவ் வண்ணம் இது,
செயலும் ஈதே
நேயமிகு வெள்ளியதுவே
வளர்ந்து என்
நீள் கனவில் விளைந்திட்ட
விளைவி தாமோ! (25)
"உருக்கி விட்ட தங்கமலை
ஓங்கல் பார், பார்!
ஓடுகின்ற செங்குருதி
ஓடை பார், பார்!
திருக் கிளரும் தெய்வ மணம்
இது என், எந்தாய்!
தேவர் குலம் கேளாப் பண்
இது என் எந்தாய்! (26)
"அரன் உமை போல் அழல் ஒருபால்
நிழலும் ஓர் பால்
ஆக நின்று பலசாயற்
கணங்கள் தோற்றி,
வர வர அச் சாயல்களும்
குருதி யாறும்
வாரி மடுத்து இவண் எழுந்த
ஒளிப் பிழம்பே! (27)
"எம் பெருமான்! நின்னுலகில்
காணக் கிட்டா
நிறையழகு ஈது என்? வான
விளிம்பு கீண்டு
செம்பவளத் தகடென்னச்
செம்பொன் என்னத்
திகை அமிர்த கலச மெனத்
திகழும் ஈது என்? (28)
"விண் வளரும் ஞாயிறுதுவே
இதாமோ?
வேளை ஒரு நிறம் பூண்டு
வடிவம் பூண்டு
மண் வளரும் ஞாயிறு இதன்
புதுமை என்னே?
மணி வணன் கை விட்டெறி மின்
ஆழி ஈதோ? (29)
"விழை வெனும் ஓர் வெண் மாலை
அகத்தில் தொக்க
வேந்துயர ஓர் ஏழுவகை
மலர்கள் என்னக்
குழைவுறு செம் பொன் முதலாம்
எழு நிறங்கள்
கோத் தொரு வெண் பிழம்ப மைந்த
அமைப்பி தென்னே? (30)
ஏழ் நிறத்த கதிர்களும் ஏழ்
பரிய தாக
எழில் வானந் திரிகின்ற
ஏக மூர்த்தி
ஏழ் நிறமும் ஓர் நிறமாய்
இயங்கச் செய்த
இயல்பதனை ஈங்கு எமக்கே
இயம்பி டாயே! (31)
"இருட் படைகள் இரிந் தோடத்
தொடரும் வெற்றி
இறை என்கோ? இருள் மடந்தை
காந்தன் என்கோ?
விருப்புடன் இவ்வுலக மெலாம்
ஆளும் எந்தை
மேற் கவித்த வெண் கொற்றக்
குடையி தென்கோ? (32)
"மணி என்கோ, மரகதம் மா -
ணிக்கம் என்கோ?
மலர் வாவி நடு வளர்தா-
மரைய தென்கோ?
அணி என்கோ, அழல் என்கோ?
அழல்வி ழுங்கி,
அடல் வானில் ஒளி காலும்
அமரன் என்கோ? (33)
என மனத்தால், இன் மொழியால்,
எழிலார் மெய்யால்
இறைஞ்சினேன் இதய நெக்கு
உருகி நின்றேன்.
புனை நினைவாம் மலர் மாலை
சார்த்தி உள்ளே
பூசித்தேன், பொருளிதுவே
என்று போற்றி. (34)
“கண்ணிருந்தால் காண்டகு நற்-
காட்சி ஈதாம்!
கருத்துடையார் கருதல் தகும்
உண்மை ஈதாம்!
எண்ணுகின்ற எண்ணம் எலாம்
இதனை யன்றி
எண்ணுவனோ? எணா நிலை எந்-
தாய்”(ஈ)
கென்றேன். (35)
“வாழ் விருக்கும் நாள் உண்டேல்,
வாழ்வாம் இந்த
வளர் ஒளியே கண்டுய்யும்
வகை நீ செய்வாய்!
தாழ்வு வரினும், தந்தாய்!
இது தந்தாயேல்
தாழ்விலேன்; இது அன்றித்
தாளேன்” என்றே. (36)
உள்ளார்ந்த அன்புடன் என்
உளங்க னிந்து அங்கு
உடல் உருக, உடற் குருதி
கதிப்ப நின்று
கள் ளார்ந்த வண்டு மல
ருட்கி டந்த
காட்சி போல் எனை மறந்து
கிடந்த போதே (37)
கனவில் உயர் பொற் குன்று
கற்குன் றாதல்
கடுப்ப, அகல் வானரங்கின்
ஒளி மடந்தை
புனைதரு பொன் அழலாடைப்
போர்வை நீத்தாள்,
பொன் மேனி வெண் மேனி
யாகக் காய்ந்தாள்! (38)
இருளி லொளி யிற் காணாப்
பொற்பு கண்டேன்
இன்று ஒளியில் மையிருளில்
காணாத் துன்ப
மருள் கண்டேன், மயக்க நிலை
கொண்டேன்; பொற்பும்
மட்டறின் மீ ளாத் துயரம்
நல்கல் கண்டேன்.(39)
விண்ணெரிய, கண் ணெரிய
மேனி வேர்ப்ப,
வெங் கனலால் அடி பொடிப்ப
முடி வெடிப்ப,
எணண மெலாம் மண்ணாக
மண்ணிற் சோர்ந்தேன்
மிக்க துயர் தொக்க துயில்
வண்ணம் எய்தி. (40)
கரிய திரை எழுது கரும்
படம தென்னக்
காய் தருவெந் துயரிடையும்
மிக்குத் தோன்றும்
அரிய துயிர் நிலை உணர்ந்து
மாழ்கி நின்றேன்,
அக உணர்வால் அவ் வெப்பும்
குறைதல் கண்டேன். (41)
துன்ப நிலை குறைதலும் ஓர்
இன்பம், என்னே!
துன்ப மின்பம் தோற்றுகின்ற
தோற்றம்? எந்தாய்!
உம்பர் உல கத்தன்று
மாறாக் காட்சி
உண்மையறி யாததும் ஓர்
உண்மை யன்றே. (42)
ஞாயிறவன் வெம்மை எலாம்
தீர்ந்தான்; கண்கள்
நலிவற வெள் ளொளி மாறிப்
பொலிவு குன்றப்
போயிறும் அன்னான் நிலைமை
என்னாம் என்றே
புத்துணர்வோடு ஆர்வ முறப்
பார்த்தி ருந்தேன். (43)
பார்த்த கண்கள் மீட்டு மொளித்
தோற்றம் காண,
வேர்த்த உடல் வெப் பொழித்துத்
தேற்றம் கொள்ள,
ஆர்த் தெழுந்த உட் கிளர்ச்சி
நீங்க, வெப்போடு
ஒளியும் நலி வுற்றி ழியக்
கண்டே னன்றே! (44)
“ஞாயிறி தென் உயிர்; இதுபோ
யிறுமே யாகில்
போயிறு மென் உயிரும்” எனத் தாய்
கதறி நின்றேன் இறுமேல் கரு வுயிரும்
இறுமே அன்றோ?
தாயனையாய், இது உனக்குத்
தகுமோ?" எனறேன். (45)
ஆயினிதென் புதுமை, மிகப்
புதுமை! எங்கும்
ஆருயிர்கள் பிறக்கு மெனில்
இன்ப முண்டாம்;
மாயுமெனில் துன்பமென்பர்;
மாயும் இந்தத்
தாய் ஒளியில் தாய்மை எழில்
தோற்றம் என்னே! (46)
"ஏழெழில் சென் றோரொளியாம்
எழில் முன் கண்டேன்;
ஓரொளி மாய்ந் தேழுடனேழ்
ஏழாம் காட்சி,
ஏழிசையின் இன்ப மெலாம்
கடந்த இன்பம்,
எழி லிறிந்த எழில் எவ்வாறு
இயம்ப லாமே. (47)
இருளி லொளி எவ்வாறு
அவ்வாற தாக
ஒளியி லொளி யாம் புதுமை
கண்டேன், கண்டேன்!
இருளிரியப் போந்த ஒளி
ஒளியாம் என்னில்
ஒளியிரிய வரு மொளிக் கென்
இயம்பு கேனே? (48)
ஒளியில் உலகந் தோன்றி
மறைதல் கண்டேன்.
ஒளியில் உல கங்கள் அழிந்து
எழுதல் கண்டேன்.
களிகொள் புதுப் புதுப் படிவத்
தோடே தோன்றிக்
கவின் மாறாக் கன்னிமையின்
உலவக் கண்டேன். (49)
இரா நங்கை விராவ வரும்
எழிலார் தோற்றம்
எழில் ஞாயி றென்னின் நறுந்
தென்றல் மாலை
பராவுமவன் புலவி விடுத்
தணைக்கக் கைகள்
பரவுறுபோது எழு களியார்
எழிலே யாங் கொல்? (50)
வான்மடந்தை கேள்வன் வரு
போழ்தத் தன்னாள்
மனைவரு சுற் றஞ்சூழ
வந்த டைந்தே
மால்மருவும் ஊடல்நடங்
கொண்ட காட்சி
போலு மிந்த வானரங்கின்
தோற்றம் மன்னோ! (51)
கன வென்னும் நங்கை அரைத்
துயிலிற் கண்ட கனவெனலாம் கண்காணாக்
காட்சியோ? செம்
புனலென்ன வழிந் தோடும்
அனல் வெள்ளம் போய்ப்
புகைக் கொடியார் துகிலெடுப்பப்
போந்த தாலோ! (52)
செந் நிறத்தில் நூறுவகைச்
செந் நிறங்கள்,
செறி நீலத் தாயிரமும்
சிதறு பச்சை
பன்னூறாயிர மாகப்
பரந்து நின்ற
பதம் காண ஆயிரங்கண்
வேண்டு மம்மா! (53)
அழலாறும் புகை மலையும்
கடலும் ஆர்ந்தே
ஆரிருள் சேர் முழைஞ்சுகளும்
மினற் பரப்பும்
நிழற் காட்டில் ஒளிக்கோடு
கொண்டு கீண்டும்
நீள் முகில் மால் யானைகளும்
நிறையுமாலோ! (54)
புத்தார்வம் கொடு தோன்றும்
அறிவு தேர்ந்து
புலனறி மெய் அறி வாகி
மனத்துக் கெட்டாச்
சத்தாகி நின்றும் அன்பு
நெறியிற் பட்டே
இன்புரு வாய்க் கனியுமுண்மை
காட்டு மிஃதே! (55)
எழு மிரவி திருமகளார்
கேள்வ னென்னில்
என்னுயிர் கொள் இச்சோதி
கலையார் செல்வி
தழுவு கடை ஊழியது
கண்ட செம்மல்
தாண்டவம் செய் பெருமா னென்
றுரைக்க லாமே! (56)
ஆக்குவிப்பான் ஆக்கத்தின்
மிக்க தாமால்
அளிப்பவன் பேரளி; அதனிற்
பெரிது அளித்தே
தேக்குவிப்பான், தெருட்டுவிப்பான்,
பிறவி தீர்ப்பான்
சீரெனவே காட்டுறு பா-
சுரமி தாமோ? (57)
அழிவில் ஒளி எழில் காட்டும்
இதுவன் றோ மெய்
அமர்ந்த இறை யுரு! ஓயாது
அழிவிற்கு ஏங்கும்
எளியன் மனம் புண்ணாகா
வாறு வந்த
இறையருள் இங்கு இது இன்றேல்
என்னா வேனே. (58)
இவ்வண்ணம் எழில் வண்ணம்
கண்டிருந்த
என் கண் முன் நிழற் படலம்
எழுந்து வீசிச்
செவ் வண்ண மது விழுங்கி
ஏப்ப மிட்டுச்
செறி இருளாம் பாழ் சென்று
சேர்ந்த தன்றே. (59)
பிறந்து வளர்ந் தோங்கி நின்ற
ஒளி நீ போயின்
பேதை நான் பிழைப்பேனோ?
நலியுங் காறும்
சிறந்து நின்ற செவ் வொளியே!
சென்றாயோ என்
சிந்தையினி நின் செலவே
செல்லும்’ என்றேன். (60)
எழுந் தெழுந்து மனக் கிளர்ச்சி
தந்த எல்லாம்
எந்தை செயல் என்று ஏழை
காண கில்லேன்
விழுந் தெழுந்து வெந்துயரால்
மாழ்கி மீண்டும்
புது விழைவாம் உயிர் தூண்டப்
பெங்கினேனே. (61)
நிலாக் காட்சி
மேற் றிசையில் விழுந்த ஒளி
என்னாம், என்னாம்?
மீட்டு வருமோ? என்றே
ஏங்கி னேற்கு
நாற்றி சையும் களிபரப்பி
ஒளி இழந்த
ஞாயிற்றின் கீற்றென ஒன்று
ஒளிரக் கண்டேன். (62)
ஓவியர் ஓவியந்தீட்ட
வரைந்த கோட்டின்
உருப் போலும், உயர் மாடம்
அமைக்கும் தச்சர்
பாவிய சாரம்போலும்,
புதிய சோதிப்
பணிக் கெடுத்த பண்ணவன்நற்
சட்ட மீதோ? (63)
சூலுண்ட தாயிறப்பச்
சூலிற் சாய்ந்து
பாலின்றிப் பரிதவிக்கும்
பால னாங்கொல்?
ஆலிக்கும் தாயின்றி
அழுத கண்கள்
ஆழ்ந்தழகு குன்றிநின்ற
பால னாங்கொல்? (64)
’தீதோவப் பார்காத்த
செம்மல், சென்றான்
தீதோவச் செம்மலிட்ட
ஆணை யாழி
ஈதோ என் றுரைப்ப எழுந்து
ஓங்கும் இந்த
இணை ஒளியால் இணையி லொளி
மறப்ப னாங்கொல்? (65)
என் றேங்கி அழுத கண்கள்
வாட ஆடும்
இறையூடே அம் மதியின்
ஒளியால், சென்ற
மன் தோய்ந்த மங்கை மகன்
மகிழ்வு கண்டு
வளர்துயரி னிடை எய்தும்
எழுச்சி உற்றேன். (66)
படிப்படியாய் அம் மகவின்
வாழ்வில் ஈடு
பட்டழிந்து வாழும் அ(ன்)
னை
போல இங்கே
அடிக்கடி கண் ணுறலால், மெய்
யுறலால் இந்த
அருமகவும் ஒளி புதுக்கி
வளர்ந்த தன்றே! (67)
ஒளி நகையால் என் உடலம்
புளகம் பூப்ப,
ஓங்குநலத் தால் உள்ளம்
மகிழ் சிறப்பக்
களி நடையால் வெந்துயரம்
சென்றொளிப்பக்
கவின் மழலை யாடிடுவான்
போன்ற தன்றே. (68)
கண் பனிப்ப, மெய்சிலிர்ப்பக்
காத லுள்ளம்
கருதரிய மெய்யின்பக்
கடல் திளைப்ப,
விண் பனிப்ப, விரி முகிலாம்
ஆடை போர்த்து
விரிந்து நெகிழ்த்து என்னுள்ளம்
கவர்ந்த தன்றே. (69)
ஞாயிறதன் ஒளியதனில்
வெம்மை நீத்து
நற்கருப்பஞ் சாறட்டு
மதுவும் சேர்த்தே
ஆவிறுத்த தெளி தீம்பால்
அவனி யெங்கும்
அள்ளி யொழு கச்செய்த
அளியி தென்னே? (70)
ஒளி என்னும் பாற்கடலிற்
கடைந்தெடுத்த
ஒள்ளமிர்தக் குடந்தாங்கி
இரவின் வேந்தர்
களி கொள்ளக் கொண்டேகுங்
காலை, மாலை
மால் சென்று குடமுடைத்த
காட்சி யாலோ? (71)
காலொழுகு மிடமெங்கும்
பாலொ ழுக்கிக்
கலை யொழுகும் கவினெங்கும்
கலந்து பூசி
மாலொழுக மல்லல்மா
ஞாலம் எங்கும்
வண் கயிலை யிடமென்ன
வயங்கிற் றம்மா! (72)
என் மதியை முன் மூடும்
இருளால் வேறு
மின்மினிக ளவை நாடி
அலைந்து நொந்தேன்
மன் மறைத்த முகில் நீங்க
மதியால் இன்று
முதன் மதியாம் முழுப் பிழம்பு
கண்டே னன்றே! (73)
இருளி னொளி யதன் ஒண்மை
யதுக லந்தும்
இலங் கொளியில் இருளதனின்
தண்மை சேர்த்தும்
இருளொளிகள் வெள்குறவென்று
இயற்கைத் தச்சன்
இயற்றிய பூம்புனை பொறி யென்று
இயம்ப லாமோ. (74)
இம் மதியம் குடைகாப்ப
இன்ப மெல்லாம்
எய்தி இந்தஉலககலா
திருப்ப னன்றே!
மும்மையிலும் எந்தாய்! உன்
உலகு வேண்டேன்,
முதலுல கிங்கிது வென்றே
முனைந்திட்டேனே. (75)
முனைந்த முனைப் பினில் மூழ்கி
மெய் மறந்து
மூவாத முதலுலகு ஈது
என்றி ருந்தேன்!
கனைகடலின் அரவமெனக்
காலத் தேரின்
கால் கடுக விரைந்தோடிச்
சென்ற தன்றே. (76)
நிலையான உலகின்ப
நிலை வெறுத் தேன்;
நிலையாத உலகின் பத்-
தீடுபட்டு,
நிலையாத அதுபடுதல்
கண்டு வீழ்வேன்,
நிலைகாணா நிலையிதென
உணர்வே னல்லேன். (77)
தேயு மெனில், பொருள்கள் சென்று
மாயும் என்ற
சிந்தையலால் வேறொன்றும்
மனங் கொள் கில்லேன்;
மாயுமது தோற்று மெனும்
உண்மை தேரேன்,
மாய மிது தெளியாமல்
மயங்கி னேனே. (78)
ஒளிதோன்ற இருள்மாயும்
இருள்போ யேக
ஒளி தோன்றும்; உலகிதனின்
புதுமை யிஃதே,
களி கதிரோன் பின் நிலவு;
நிலவின் பின்னே
கதிர் தோன்றும் இயல்புணராது
அலைவுற் றேனே. (79)
குறைமதியாம் கீற்று வளர்ந்து
ஓங்குகின்ற
காலமெலாம் இன்பத்தில்
குளித்து வாழ்ந்தே,
நிறைமதியாய், அது தேய்ந்து
குறைதல் கண்டு
நெஞ்சுருகி வெந்துயரின்
பிடியுட் பட்டேன். (80)
நிலையான அவ்வுலக
இன்பத் தாலும்
நிறைவுறாது உளமுளைந்து
வருந்தி நின்றேன்;
உலை வுறும் இவ் வுலகின்ப
நிலைக்கு மென்று என்
உளத்து விழை வுற்றேன் என்
நிலையி தென்னே! (81)
என் றென்றே விழைவொருபால்,
சிந்தையோர் பால்
இரு தலைசென் றோடயான்
அல்லற் பட்டே
சென்றோய்ந்து தயங்கி நின்ற
வேளை, அந்தோ!
தெளிவருளும் எந்தை குரல்
எழுந்த தன்றே. (82)
முடிவுரை
"மைந்த, நீ கவலை தவிர்;
மயக்கம் வேண்டா;
வானுலகின் இன்ப மெலாம்
மெய்யாக் கண்டாய்.
நந்து பசி யாலன்றிச்
சுவை தோன்றாது;
நலந் தோன்றா, தீமையதன்
தழும்பு றாமல். (83)
"அப்பரிசே இருளின்றி
ஒளியின் தன்மை
தோன்றாது; மாற்ற மின்றி
எழில் தோன்றாது;
துய்ப்பரிதே யாமின்பம்,
துன்பந் தன்னின்
தொடர்பின்றி; துன்பம் இன்றேல்
இன்பம் இல்லை! (84)
“ஒளியதனின் துணியின்றி
இருளைக் கண்கள்
காண ரிதாம்; அவ்விருளின்
எல்லையற்ற
வெளிநிறைவை ஒளியின்றி
உணரொ ணாது;
மேவு மிவை தமுள் கலந்தே
அழகு தோன்றும்.” (85)
ஒளியுலகத் தெந்தையிவை
உரைப்பக் கேட்டே
ஒளி வளரும் இவ்வுலகின்
தன்மை யெல்லாம்
அளியார்ந்த அவ்வுலகின்
வண்ண மென்றே
அறிந்து கொண்டேன், அறிவுருவின்
வண்ணம் பெற்றேன். (86)
கண்ணிமையார் அவர் தாமும்
காண லாற்றாக்
கடவுண்மாக் கவினதனை
உணர்விற் காணத்
திண்ணிய ஆரிருட் படலம்
திரையாம்; அந்தத்
திரையூடே அதனியல்பு
தெளிய லாகும். (87)
இருள் வண்ணம் சூழ்தரு சிற்
றுயிர்கட் கெட்டா
இறைவடிவை இருட் சத்தி
கலந்து காட்டி
மருளாலே மருள் நீக்கும்
வகையும் கண்டேன்,
வளருமதன் ஒளியாலே
ஒளியா கின்றேன். (88)
பேரருளின் அகன்ற ஒளி
காண கில்லார்க்கு
என இறைவன் அதன் நிழலாய்க்
கதலாலே
சீருடனே சிற்றழ காய்ச்
சிறுகத் தந்து
சிறுமை தவிர்த் தெமையாண்ட
செம்மை ஈதே. (89)
பொருளற்ற சொல்லாலே
மதலைக் கிங்கே
பொருளுணர்த்தும் மெய்யன்பார்
அன்னை போல
மருளுற்ற சிறு பாச
வயப்படுத்தி
மாசறுவான் பொருளுணர்த்தும்
வானத் தெந்தை! (90)
மனையென்றும் சுற்ற மென்றும்
மாம னென்றும்
மக வென்றும் மாறுகின்ற
உருவி னூடே
வினைப்படுத்தி மாறாத
அருளே போல
விழி காட்டி அழைப்பிக்கும்
விமலன் அன்பே. (91)
சம நிலையில் சுழலுகின்ற
ஆழி நோக்கில்
சலியாது நிலை பெற்றாற்
போலத் தோன்றும்;
அமைவுறு நன் மரங்களெலாம்
ஓடும் ஊர்தி
அமர்வார்கட் குருண்டோடு
மவை போல் தோன்றும். (92)
இம்மெனு முன் எண்கடந்து
விரையும் காட்சி
இயலார்ந்த எழிலாக
மருட்சி யூட்டும்;
செம்மை யுறும் யாழ் நரம்பின்
நிறை யதிர்ச்சி
தெளிந்த சுவை இசையாக
இன்ப மூட்டும். (93)
செவ் வண்ண மதனிடையே
இருளின் நீழல்
தேங்கி நிற்கும்; இருளதனில்
செம்மை நீடும்;
இவ்வணமே வெற்றியிடை
தோல்வி; தோல்வி -
யதனிடையே வெற்றியது
தொக்கு நிற்கும். (94)
அறி வெல்லை யது கடந்த
அறிவு தானே
அறிவற்ற உணர்ச்சி யென
அடங்கித் தோன்றும்,
நிறைந் தமைந்த பளிக்கு நீர்
நிலையில் தெண்ணீர்
நேர் காண லாகாத
வாறு போன்றே (95)
அழிவதனிற் பொலிவுண்டாம்
பொலிவின் பின்னே
அழிவு வரும்; இவ் இயல்பை
அறியார் வாழ்வில்
கழிபெருந் துன்புறுவர்; அத்
துன்பத் தூடே
கருது மின்பம் ஊர்வதவர்
அறியார் அன்றே. (96)
தோற்று கின்ற பல காட்சி
மாற்றத் தூடே
மாற்ற மறத் தொடர்ந்து நின்ற
உண்மை காணாய்!
வேற்றியலாய் எதி ரெதிராய்த்
தோற்று மின்ப
துன்ப மெலாம் பொய்! மாறா
இன்ப மொன்றே! (97)
எள்ளுதலில் போரொளி யைக்
காண உள்ளும்
அதற் கிணையம் பேரொளி வந்
தெய்தல் வேண்டும்.
உள்ளத்தில் ஒளிக் கிணையாம்
ஒளியி னூடே
ஒளிவளரும்; அவ்வழியே
உணர்வு தோன்றும். (98)
இவ்வகையால் உலையு மனத்
திடை நின் றென்றும்
நிலையான எழில் கண்ட
பின்னர், எங்கும்
செவ்வி எழிலது கண்டு
கவிஞன் போலத்
திரிந்து அழகாம் உணரவதனில்
திளைத் துயிர்த்தே; (99)
மண்ணகமும் விண்ணகமும்
காடும் மேடும்
மறி நிலவும் எறி கதிரோன்
வெயிலும் நாடி
நண்ணரிய தலையாறும்
விரிந்த முந்நீர்
நற்கடலும் சென்று கவின்
பலவுந் தேடி; (100)
இருளில் ஒளி காட்டுகின்ற
இந்த ஞாலம்,
இருளதுவே காட்டுகின்ற
நரக ஞாலம்,
மருளற்ற ஒளி காலும்
நாகர் வாழும்
வான் ஞாலம் எங்கெங்கும்
சென்று வாழ்ந்தே; (101)
இறைவனையும் எதிர்த்த என்றன்
துடுக்குத் தானும்
இறையருளின் ஒரு துறையாம்
மருளே என்ற
நிறையுணர்வால் உலைவிலா
நிலை உணர்ந்தேன்
ஓங்குகவான் இறை யருள் என்று
உவந்திட்டேனே. (102)
கருத்துகள்
கருத்துரையிடுக