எத்தனை நாள் துயின்றிருப்பாய் என்னருமைத் தாய்நாடே!
கவிதைகள்
Backஎத்தனை நாள் துயின்றிருப்பாய் என்னருமைத் தாய்நாடே! தமிழில்:- கே. கணேஷ் ----------------------------------------------------- எத்தனை நாள் துயின்றிருப்பாய் என்னருமைத் தாய்நாடே! சாந்தோர் பெட்டோவ்ஃபி தமிழில்:- கே. கணேஷ் தேசிய கலை இலக்கியப் பேரவைக்காக சென்னை புக்ஸ் ------------------------------------------------------ பதிப்புரை இக்காலகட்டத்திலே ஹங்கேரிய தேசிய கவிஞரான பெட்டோஃபியின் கவிதைகளை தமிழில் வெளியிடுவதில் தேசிய கலை இலக்கிப் பேரவை பெருமை அடைகின்றது. அந்த பெருமைக்கு மூலகர்த்தா பிரபல எழுத்தாளரும் கவிஞருமான கே.கணேஷ் ஆவார். தற்கால இலங்கையின் வரலாற்றில் ஏறக்குறைய எல்லாக் காலகட்டங்களிலும் அனுபவம் கொண்ட கே.கணேஷ் அவர்கள் இலங்கையின் மலையக நகரான கண்டிக்கு அருகிலுள்ள தலத்து ஓயாவில் இருக்கிறார். இலங்கையின் சுதந்திர போராட்ட காலத்திலும் அதற்கு பிற்பட்ட காலத்திலும் மட்டுமன்றி சமகாலத்திலும் யதார்த்த பூர்வமாக இலக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவர் ஆவார். ஆக்க இலக்கிய கர்த்தாவாகவும் கவிஞராகவும் மட்டுமன்றி உயிரோட்டம் நிறைந்த மொழிபெயர்ப்பையும் தந்த இவர் முற்போக்கு தமிழ் இலக்கியத்திற்கு குறிப்பிடத்தக்களவு பங்களிப்பு செய்துள்ளார். ஹோசிமின் சிறைக்குறிப்புக்கள் உள்ளிட்ட சோவியத், சீன, வியட்னாமிய கதைளையும், முல்க்ராஜ் அனந், கே.ஏ. அப்பாஸ் போன்றோரின் படைப்புக்களையும் மொழிபெயர்த்த இவரின் இந்த மொழிபெயர்ப்பு கவிதைத் தொகுப்பு, காலத்தின் தேவையால் சிகரம் வைத்தாற் போல் திகழ்கிறது. இவர் இலங்கை இந்திய எழுத்தாளர்களுடன் இலக்கிய அமைப்புக்களுடனும் மட்டுமன்றி சோசலிஷ நாட்டு எழுத்தாளர்களின் அமைப்புக்களுடனும் தொடர்பு கொண்டுள்ளவராவர். அத்துடன் வெளிநாடுகளில் நடைபெற்ற எழுத்தாளர் மாநாடுகளில் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்ட எழுத்தாளரின் இந்த உயிரோட்டமான மொழி பெயர்ப்பு கவிதைத் தொகுதியை வெளியிடுவதில் நாம் பெருமை அடைகிறோம். அதனை வெளியிட அனுமதி தந்த அவருக்கு நன்றி தெரிவிக்கிறோம். அத்துடன் இத்தொகுப்பை எங்களோடு இணைந்து வெளியிடும் சென்னை புக்ஸ் நிறுவனத்திற்கும் என்றும் நன்றி கூறுகின்றோம். தேசிய கலை இலக்கியப் பேரவை 15/1 மின்சார நிலைய வீதி யாழ்ப்பாணம இலங்கை ------------------------------------------------------------------------- ஹங்கேரியக் கவிஞன் சாந்தோர் பெட்டோவ்ஃபி சியாங்கைஷேக்கின் கோமிண்தாங் ஆட்;சியை எதிர்த்து எழுத்தாளர்களும், அறிஞர்களும் ஒன்று திரள்வதைக் கண்டு அஞ்சிய அக்கால சீன அரசாங்கம் 1931 பிப்பரவரி 7ல் பல இளம் எழுத்தாளர்கள் மீது மரணதண்டனையை நிறைவேற்றியது. இது நடந்தது, ஷாங்கை நகரில். இதன் மூலம் எழுத்தாளர்களிடையே பீதியைத் தோற்றுவித்து, அரசாங்கத்திற்கு அவர்களை அடிபணிய வைத்து விடலாமென எண்ணியது. அங்ஙனம் கொலை செய்யப்பட்ட இளைஞர்களில் ஒருவன் இருபத்திரண்டு வயதுடைய இளைஞன். இன்ஃபீ என்னும் பெயருடைய அவ்விளைஞனைப் பற்றிச் சீன அறிஞர் லுசூன் தமது நினைவுக் குறிப்புரையில் வரைந்திருக்கிறார். அவ்விளைஞன் ஹங்கேரியப் புலவன் சாந்தோர் பெட்டோஃபின் கவிதைகளை சீன மொழியிலாக்கி நூலினை வெளியிட்டவன். சிறைப்பிடிக்கப்படுவதற்கு முன்னர் லுசூனுக்கு அன்பளித்திருந்த பெட்டோஃபியின் கவிதை நூலில் புறம்பாகத் தன் கைப்பட பெட்டோஃபியின் கவிதையொன்றின் நான்கு வரிகளை மொழி பெயர்த்துக் குறித்து வைத்திருந்தாக லுசூன் குறிப்பிட்டுள்ளார். "உயிரொரு பெருநிதி - காதல் உயர்வுடை யதனினும் ஆம் சுயம்பெரு விடுதலை - காண துறப்ப னவற்றினை நான்." நாட்டு விடுதலைக்காக அனைத்தையும் தியாகம் செய்ய உந்தும் இத்தகைய உத்வேகமான கவிதைகளை எழுதி சீனத்தில் மட்டும் இன்றி உலகனைத்திலும் விடுதலை வீரர்களின் உள்ளத்தில் கனலைத் தூண்டிய வீராவேசக் கவி சாந்தோர் பெட்டோவ்ஃபி, புரட்சிக் கவிஞர்களின் ஆதர்சகவி. சரியாக ஜனவரி முதல் தேதியன்று 1823 ஆம் ஆண்டு ஹங்கேரிய நாட்டில் ஒரு சிறு கைப்பணியாளனின் மகனாகத் தோன்றிய பெட்டோவ்ஃபியின் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களை உலககெங்கும் 1973ல் ஐ.நா.வின் கிளையான ஐ.நா.கல்வி விஞ்ஞான கலாச்சார நிறுவனம் (ருநௌஉழ) கொண்டாடியது. உலக விஞ்ஞானக் கவிஞனாகிய அவன் தனது நாடு அன்னியர் ஆட்சிக்குட்பட்டு அவதியுற்ற காலத்தில் பேனா ஏந்திய தன் கையால் வாளேந்தவும் தயங்கவுமில்லை. தனது ஹங்கேரியாம் 'மக்யார்' நாடு, ஆஸ்திரிய ஹாப்ஸ்பர்க் மன்னர் ஆட்சியை அகற்றவும் நாட்டிலே முடியரசை ஒழித்துக் குடியரசை நிலை நாட்டவம் போர்வீரனானான். 1849 இல் நடைபெற்ற விடுதலைப்போரில் இருபத்தியாறே வயதில் பகைவனின் ஈட்டிக்கு இரையானான். பெற்றோரின் ஏழ்மை காரணமாக போர்வீரனாகவும், நடிகனாவும், தொழில் நடாத்த வேண்டியிருந்த அவன், சத்திரங்களிலும், சாவடிகளிலும் தங்கி ஊர்சுற்றிய காலத்தே மக்களினூடே பழகிய அனுபவத்தில் கவிதைகள் படைக்கத் தொடங்கினான். காதலையும் வீரத்தையும் பாடிய அவனது கவிதைகள் நாட்டின் விடுதலை நாடிப் பாடத் தொடங்கின. நமது மகாகவி பாரதியாரின் கவிதைகளில் காணும் ஆவேசத்தையும் துடிப்பையும் ஒத்தன அவனது கவிதைகள். மரபுவழி உவமை அணிமுறைகளில் விலகி, புது உத்தியில் தனது உள்ளக் குமுறல்களைக் கவிதையாக்கினான். அவை இன்று விடுதலை வேட்கை கொண்ட பலநாட்டினரதும் உள்ளக் கனலைத் தூண்டும் போர்க்கவிதைகளாய் விளங்குகின்றன. அவ்வுலகக் கவிஞனின் பாடல்கள் சிலவற்றின் தமிழாக்கமே இச்சிறிய நூல். தலாத்து ஓய கே.கணேஷ் கண்டி - இலங்கை -------------------------------------------------------------------- நீ மனிதனாயின் மனிதனாயிரு நீ - மனிதனாயின் மனிதனாயிரு ஆட்டுவிப்பார் தம்வழியில் ஆடுகின்ற பொம்மையென நாட்டு மக்கள் உனைக்கண்டு நகைத்திட நீ வாழ்வதுவோ? வல்லரக்கர் சினங்கண்டு வால்மடக்கும் நாயெனவே புல்லர்களுக்குக் கஞ்சுவதோ புரிபோர் நீ! நிமிர் தலையை ! நீ - மனிதனாயின் மனிதனாயிரு வாய்தேயப் பேசுகின்ற வார்த்தையினும் தனையீன்ற தாய்நாட்டிற் குறுபணியே தான்முந்திப் பேரொலிக்கும் ஆங்காரப் புயல்போல அழித்திடுவாய் ஆக்கிடுவாய் போங்காலம் வரும்போது பொறுப்புக்களை பிறர்க்கீவாய். நீ - மனிதனாயின் மனிதனாயிரு உயர்பண்பும் நாணயமும் உரமாகப் பேணிவளர் உயிர்போக நேரிடினும் உறுதியுடன் இவைகாக்க! தன்னுயிரே போயிடினும் தன்மானம் காத்திடுக 'என்னைப்போல் பெரியவன் யார்? ' இறுமாப்பு போக்கிடுக. நீ - மனிதனாயின் மனிதனாயிரு வானுலகம் ஈந்திடினும் வாணிகமோ விடுதலையும் தானுலகில் வாழுதற்காய் தனைவிற்கும் கீழ்மகனை சீயெனவே உமிழ்ந்திடுக திருவோடு தூக்கிடினும் நீயென்றும் உரிமைபெற நிலையாகப் போரிடுக! நீ - மனிதனாயின் மனிதனாயிரு நெஞ்சதனில்; உரங்கொண்டு நேர் நிற்கும் ஆண்மகனை கொஞ்சமுமே அசைக்காது கொடுமூழிப் பெருவலியும் ஓலமிட்டே பெருங்காற்றும் ஒன்றுபட்டு சாடிடினும் ஆலமரம் பெயருமல்லாது அதன் கிளை வளையாது. எத்தனை நாள் துயின்றிருப்பாய் என்னருமைத் தாய்நாடே? எத்தனை நாள் துயின்றிருப்பாய் என்னருமைத் தாய்நாடே? கப்பியதோர் இருள் களைந்து காலைவெளி மலர்ந்ததென எப்பொழுதோ சேவல்களும் எழுப்பியது இன்னொலியும் எத்தனை நாள் துயின்றிருப்பாய் என்னருமைத் தாய்நாடே? சின்னஞ்சிறு சிட்டுக்களும் சீர்துயிலும் கழித்தெழுந்து தன்வயிறு நிறைப்பதற்கு தாம் செல்லும் வயல் நோக்கி எத்தனை நாள் துயின்றிருப்பாய் என்னருமைத் தாய்நாடே? சீரான பயிர்பச்சை செடிசெத்தை யாவினையும் ஊராரின் குதிரைகளும் உன் நிலத்தில் மேய்கிறது எத்தனை நாள் துயின்றிருப்பாய் என்னருமைத் தாய்நாடே? உன்னண்டை வயற்காரன் உன் வயலில் உள்நுழைந்து தன்னெல்லை விரிப்பதனை தானறிந்தும் தூங்குவதோ? எத்தனை நாள் துயின்றிருப்பாய் என்னருமைத் தாய்நாடே? அழகுநிறை 'மக்யா' ராம் அருமை மணித் திருநாடே அடுத்தவொரு யுகமதில் தான் அறிதுயிலும் எழுவாயோ? எத்தனை நாள் துயின்றிருப்பாய் என்னருமைத் தாய்நாடே? கதிரவனும் புலாந்;திட்டான் கடுங்கதிர்கள் உன்னுறங்க மதியுள்ளே ஊடுருவி விலிவுணர்வு ஊட்டாதோ? எத்தனை நாள் துயின்றிருப்பாய் என்னருமைத் தாய்நாடே? பூனையதன் குட்டியுடன் பொழுதெழுந்து உந்தன்பாற் பானையதைச் சுற்றி வந்து படுத்தமர்ந்து கால்நக்கும் எத்தனை நாள் துயின்றிருப்பாய் என்னருமைத் தாய்நாடே? முந்திரியுன் தோட்டமதில் முயலாது ஊழியனும் தந்திரமாய் களஞ்சியத்தில் தான் நுழைந்து குடிக்கிறான் எத்தனை நாள் துயின்றிருப்பாய் என்னருமைத் தாய்நாடே? வீடுபற்றி எரியும்வரை வீண்துயில் நீ போக்குவையோ? பீடுமணி எச்சரித்தும் பெருந்துயிலில் மூழ்குவையோ? மக்யாரன் தன்னிலைக்கு மறுபடியும் மீண்டான் இருந்ததிலை தன்னிலையில் இதுவரையும் அவனே உருமடிமை நிலையினிலே உற்றிரு;தான் அவனே ஒரு அடிமை ஒருநாளும் மக்யாரன் ஆகான் மக்யாரன் தன்னிலைக்கு மறுபடியும் மீண்டான். தனைப்பிணைந்த விலங்கினையே தகர்த்தெறிய அதுவும் பனிபடிந்த காலத்து படுகாற்றில் சருகாய் கனைத்தலுடன் வீழ்ந்துபட தலையினிலே உருளும் மக்யாரன் தன்னிலைக்கு மறுபடியும் மீண்டான். வெளிவாங்கும் கதிரொளிகள் தகதகக்கும் அலகில் ஒளியுற்ற கைவாளைக் கரமேந்த அவனின் ஒளிபெற்ற உளத்தினையே ஒளிகாட்டும் கண்கள் மக்யாரன் தன்னிலைக்கு மறுபடியும் மீண்டான். கடுகடுத்த முகத்தினிலே கனல் பொறிகள் வீசும் அடுத்துவரும் போர்க்களத்தின் அடையாளம் அவைகள் எடுத்துயாந்த கொடிகளிவை என்பதனை அறிவீர் மக்யாரன் தன்னிலைக்கு மறுபடியும் மீண்டான். ஆயிரம்பல் லாயிரமுடல்கள் ஆயினுமோருள்ளம் ஆயினுமவ் வொலிகேட்டு அஞ்சுகின்றார் பகைவர் பேயிருளின் ஒலியாகப் பிடித்தனவே கிலியும் மக்யாரன் தன்னிலைக்கு மறுபடியும் மீண்டான். உயிர்ப்பணயம் வைத்தவொரு உயர்ப்போர்க்கு தையார் ஐயமிகு முடிவுதனை அடையினுமே என்ன வையமெலாம் இப்போரின் வகைகாண நிற்கும் மக்யாரன் தன்னிலைக்கு மறுபடியும் மீண்டான். என்றென்றும் வீடுபெற்று இருந்திடுவார் அதுவும் இன்றேலப் பெரும்பேரில் இறுதிவரைப் பொருது குன்றுமேல் ஒளிவிளக்காய் குதித்திடுவார் சொர்க்கம் மக்யாரன் தன்னிலைக்கு மறுபடியும் மீண்டான். அமைதியுற்றது ஐரோப்பா அமைதியுற்றது ஐரோப்பா அதுவே ஐயோ பெரு வெட்கம் குமைதல் ஒழிந்த நாளெல்லாம் குந்தும் நாளாம் விடுதலைக்கே! தனியாய் மக்யார் தானாக சவலை நாட்கள் ஒன்றாகி அணிவார் கரத்தில் விலங்குகளை அடுவார் மக்யார் கரங்களிலே தயக்கமென்பதற் கிடமில்லை சஞ்சல புத்தி வழியில்லை அயர்வை ஓட்டுக தாய்நாடே அடைக எழுச்சி இப்போதே அடைக எழுச்சி இப்போதே அயரா தறிவிளக் காவோமே குடைந்து கருவிருள் ஓட்டிடுமே கொடிய துயிலில் மற்றவரே! ஆகா இச்சுடர் இரவெல்லாம் அணையா தில்லா திருந்திட்டால் வாகாய் மேல்வாழ் பிதுரர்களும் மனிதன் இலையோ என்பாரே! விடுதலையேநீ நோக்கிடுக வீண்கதை அடிப்பவர் உணர்ந்திடுக அடுத்தவர் கண்ணீர் விடவில்லை ஆனால் ரத்தம் சொட்டுகிறோம் மேலும் தியாகம் வேண்டிடுமோ மேலாமாசி பெறுதற்கே ஏலும் வகையில் போரிடுவோம் என்றும் தயங்கார் எம்மவரே! எதிர்ப்புணர்ச்சி சவாரி செயும் எதி;ர்ப்புணர்ச்சி சவாரி செயும் உலகின் எழுகடலின் அலையதற்கு மேலே விதிர்த்தெழுந்து அலையலையாத் தாவி விண்மீதும் மண்மீதும் மேவி அதிர்ந்திடவே எழுந்ததுவாம் கடலாய் அமைதியற்ற மனுக்குலமும் ஆங்கே புரட்சிநடம் பிரான்சினது காணீர் புரிக்pன்றார் காலம் வந்த தாக உரம்பெறவே பாடல்களை ஒன்றாய் உளங்களிக்கப் பாடுகின்றார் உலகோர் கரந்தட்டி மக்கள்குலம் கூடி களிநடனம் புரிவார்பல் கோடி மாகடலின் குமுறுமுத் வேகம் மலைபோன்ற கப்பலையு மசைக்கும் ஆகாகா என்றுபுயல் தோன்றி ஆட்டிவைக்கும் நாவாயை அழி;க்கும் மீகாமன் கொடிமரமும் பணிய மேன்மேலும் கொடுமையறச் சாடும் ஆங்கார வெள்ளமேநீ ஓடி அகற்றிடுவா யுன்கோப தாபம் நீங்காது மேன்மேற் கருமேகம் நிரம்பிடுவாய் உலகில் ஓங்காரப் புயலெழுப்பி நுரைக்க உலுக்கிடுவாய் அண்டமெல்லாம் நடுங்க வானத்திலே பொறிந்து வைப்பாய் வழிவழியா யாவருமிங் கறிய 'ஆனதொரு கப்பல் மேல்செலினும் அதன்கீழே நீர்திரண்டு வரினும் யானென்று பலங்காட்டித் தனித்தே ஆட்சிசெய்வேன்' என்றெழுது கடலே! விதியே கொஞ்சம் வழிவிடு விதியே நானும் மூச்சுவிட விலகிக் கொஞ்சம் வழியைவிடு எதுவோ மனித இனத்தோர்க்கு என்னால் முடிந்த சேவை செய். என்னுள் எழுமிந் நற்சுடரும் இல்லா தாகச் செய்யாதே விண்ணின் வழிவரு மிச்சுடரும் வேக எரித்திடும் குருதியினை. ஒவ்வோர் இதயத் துடிப்பொலியும் உலகமின்ப மடைகவென இவ்வாறாக கடவுளரை வேண்டும் என்றே அறிந்திடுக. சொற்கள் வெற்று ஒலியாக சும்மா இருக்கும் நிலையினிலே முற்றாய் இவற்றைச் செயலாக்க முயல்வதற்கு முடிந்திட்டால் முடிவில் இதனால் எந்தனுக்கு முள்ளின் மகுடம் அதனோடு கடிய சிலுவை கிடைத்தாலம் கவலை யிலைகாண் இவையாலே. ஆரவார வெறும் வாழ்வில் ஆடித் தேய்வ திலும் பார்க்க சாரமுண்டு மக்களுக்காய்ச் சாதல் என்ப தறியாயோ. அத்தகைய சாவு தனைநானும் அடைவதாகச் சொல் விதியே இத்தரை தனில் சிலுவையினை என்கையால் நான் செய்திடுவேன் உறுத்தும் எண்ணம் சிதைத்த குடிலில் சிற்றிலதனில் வதங்கிய பூவாய் வாடும் நிலையும் இறகின் படுக்கை இதிலே ஒருநாள் இறக்கும் நேரம் இயைய நேரிடின் சிறுகச் சிறுகச் செத்து மடிந்து உறு புழுக்களின் உணவாயாகும் இத்தகைய இறப்பை எனக்கும் இறைவா எத்தகை நாளும் என்றும் தராதே. வீங்கி அடிக்கும் மின்னல் வீசம் ஓங்கிய மரமாய் உர விரும்புகிறேன் வேரைப் பிடுங்கி வீசும் புயலாய் ஊரும் பாறையாய் உருண்டு பாய்ந்து மலையடி வீழ்ந்து மலையதிர் இடியென அலைத்து ஆட்ட ஆசையுறுவேன் விலங்கு பூட்டி விதியென வாடுவார் அலங்கலுற்று ஆவென எழும்பி சீறிய முகத்தில் செந்தீ எழுந்திட வீரியமுற்று வெங்கரம் புடைத்து இறுக்கிய விலங்கை நொறுக்க உடைத்து உருக்கிய செம்மைப் பதாகை தாங்கி அன்னதில் 'அகில உலகும் விடதலை' என்பதைப் பொறித்து எக்காளமிடுவர். அன்னவர் அகிலம் கிழக்கும் மேற்கும் இன்ன பல திசையும் எழுந்தே விட்டார் இன்னல் புரிந்தே இவரை அழிக்க நன்றி யற்ற நயவஞ்சக மிலேச்சர் பொருதவரின் நான் போரில் இறங்குவேன் அத்தகைப் போரில் யானும் வீழ்ந்து செத்து மடிய சிந்தை கொள்வேன் இங்கே எனது இளமிதயத்தின் செங்குருதி தானம் சேர்ந்தடையட்டும் வெற்றியின் வீர முழுக்குறும் போது உற்றிடும் உருக்கின் ஓசையில் ஒன்றி வீங்கிடு காளம் வெடியின் ஓசை ஆங்கிவற் றோடு இணைக ஒன்றாய் உயிரற்ற எனது உடலின் மீது உயிருள குதிரை உதைத்து ஓடுக பெற்றிடு வெற்றியை உற்றிட விரைக சுற்றிலுஞ் சிதைந்தவென் என்புகள் சேர்த்து மற்றும் மாண்ட வெற்றி வீரர்கள் உற்ற உடலையும் ஒன்று சோர்த்தே சாப்பறை கொட்டி தாம்தரும் பதாகை நேர்படத் தாங்கி திரள்வாய்த் புதைக்கும் உயரிய விடுதலைப் பேரில் உயிர் போவதை உவந்தேற்பேனே எப்படி உன்னை அழைப்பது மாலைநேர மயக்கக் கனவில் மலர்ந்திடு உன்றன் மாயக் கண்களில் ஆழ அதனுள் ஆழ்ந்து பார்த்து அதனுள் அன்பு ஆயிர மாயிரம் கதிர்களாக்கிக் காட்சியளிக்கும் கடலாம் உளமதில் தடமாய்ப் புகுந்து புதிர்போல் நுழைந்து புதுமை உணர்வில் புளகம் அடையப் புரியும் அவையே எப்படி உன்னை அழைப்பது என்மீதுன்றன் இன்பப் பர்வை எதிர்படம் போதுதான் என்னே குளிர்மை சின்னப் புறாவின் சிறகால் மெய்யும் சிலர்க்க இதமாய்த் தூண்டி விடுமே பட்டினும் மெல்லிய பதமுடன் மேலும் பஞ்சின் தலையணை பண்பே போலும் இட்டிடு பார்வை இதயத் தூடே ஈன்றிடு மமைதி இதனால் கிட்டுமே எப்படி உன்னை அழைப்பது இனிய உனது இசையாம் குரலை இப்பனிக் காலம் இங்கு கேட்டிடின் இனிதே வசந்தம் இதோ உதித்தது எதிர்பார்த்திருந்த எழிலார் காலம் வந்தது என்றே வானம் பாடி மகிழப் பாடுதென மரங்கள் எண்ணி சிந்திய இலைகளைச் சீருறத் துளிர்க்கும் என்னே உன்றன் இசையாம் குரலே எப்படி உன்னை அழைப்பது உன்றன் செவ்விள உதட்டை எனது உதடு ஒன்றாய் உராயும் போது கன்றும் முத்தக் கனவில் உள்ளம் காலை இரவை உருக்கிய காட்சியாய் ஒன்றாய்க் காலமும் உலகும் கூடி ஒன்றும் நமது உளமிரண்டும் நன்றாய் வெறுமையில் நைந்த வேளை நாளும் இன்பம் நடந்த காலமே எப்படி உன்னை அழைப்பது மகிழ்வின் தாயே வளமார் கனவின் மகளே வான மதனை முரண்டும் முகிலே கனவில் மூழ்த்;தும் நனவாய் உறைக்கு மெனது உண்மை உணர்வே உள்ளத் துறையும் ஒன்றே செல்வம் உலகிற் சிறந்த உருபெரு நிதியே துள்ளும் இளமைச் சுவையே கண்ணே சொந்த மான எந்தன் மனைவியே எப்படி உன்னை அழைப்பது தேசீயப்பாடல் மலரும் காலம் வந்ததுகாண் மக்யார் நாடே எழுந்திடுக புலரும் விடுதலை வேண்டுவையோ பூணும் விலங்கினை ஏற்பதுவோ? வலியக் கூறும் ஆணையிது மக்யார் நாட்டுக் கடவுளரே வலிந்து விலங்கை இனிமேலே மாட்டோம் நாங்கள் அணிந்திடவே மூன்னர் வாழ்ந்த தாதையர்கள் முற்றும் விடுதலை பெற்றிருந்தார் இன்று வரை நாம் அடிமைகளே இகழ்ச்சி செய்வார் அன்னவரே வலியக் கூறும் ஆணையிது மக்யார் நாட்டுக் கடவுளரே வலிந்து விலங்கை இனிமேலே மாட்டோம் நாங்கள் அணிந்திடவே கோழையாக நீயிருந்து கோடி முறைகள் சாவதுமேன்? வேளை இங்கு வரும்போது விடுதலைக்காக மாண்டு விடேன்! வலியக் கூறும் ஆணையிது மக்யார் நாட்டுக் கடவுளரே வலிந்து விலங்கை இனிமேலே மாட்டோம் நாங்கள் அணிந்திடவே கையில் பூணும் விலங்கைவிட கரத்தில் ஏந்தும் வாள்மேலாம் கையில் விலங்கை ஏற்றிருந்தோம் கரத்தில் வாளை ஏந்திடுவோம் வலியக் கூறும் ஆணையிது மக்யார் நாட்டுக் கடவுளரே வலிந்து விலங்கை இனிமேலே மாட்டோம் நாங்கள் அணிந்திடவே காலங்காலமா யிங்கே காணுங் குறைகள் போக்கிடுவோம் கோல மக்யார் பழம் பெருமை குன்றின் மேலே ஏற்றிடுவோம். வலியக் கூறும் ஆணையிது மக்யார் நாட்டுக் கடவுளரே வலிந்து விலங்கை இனிமேலே மாட்டோம் நாங்கள் அணிந்திடவே வளரும் நம்சவக் குழியருகே வழிவழி புதல்வர் வழிபட்டே புளகம் அடைந்தே பெருமையுடன் புனிதப் பெயரைப் புகழ்வாரே வலியக் கூறும் ஆணையிது மக்யார் நாட்டுக் கடவுளரே வலிந்து விலங்கை இனிமேலே மாட்டோம் நாங்கள் அணிந்திடவே பனிக்காலத் தொடக்கம் வானில் மறைந்தது தாரகை வையம் ஒளிந்தது குருகினம் தீனப் பறவை எங்ஙனே சென்று மறைந் தடைந்ததோ? தூரம் இரவில் கலந்தது தொலைவு வானில் மறைந்தது ஓர மதிலே மேகங்கள் ஒன்றிரண்டு கண்டிடும் எனது கனவு தானதோ இல்லை கண்கள் ஏய்க்குமோ? இனமுட னிலையுதிர் கோடைகள் இணைசிற கெனப் பறந்ததோ? அதனைத் தொடர்ந்து வனங்களில் அணிசெயு மரத்தி னிலைகளும் மதனின் மலர்க ளனைத்துமே மறைந்த தெங்கோ விந்தையோ! தீதறு மேகம் வலகிடும் திரும்பி மறுபடி மூடிடும் பேதுறு பெண்ணின் நிலையினை பெற்று விட்டது வானமே புன்னகை சொட்டிடு பெண்மணி புருவமதிலே நீர்த்துளி பின்னும் உதட்டில் நல்நகை பிணையு மின்ப துன்பமே அணையுமின்ப நினைவுகள் அடுத்த உலகின் எண்ணங்கள் இணையுமிவற்றின் கனவுகள் இரட்டி வாட்டும் மனிதனை கண்டிடு கனவைக் கலைத்திடும் காலின் அருகெதோ விழுந்திட கண்டா மணியு மதிர்ந்திட கடிதே உலகி லிறங்வேன். செப்டெம்பர் முடிவு காவும் ஓய்ந்தது காண ஒன்றினை பூவும் ஓய்ந்தது புதரில் தானுமே கதவின் ஓரமே காண நின்றிடும் உதிரித் தோன்றிடும் உயரிய அரசுமே கூதல் காலத்து குளிரும் தோன்றுது சீதப் பனியதன் சிகரம் மலையினில் கோடையின் சுகம் குடையு தென்னுளம் சாடை மாடையாய் சாயும் வேனிலும் தங்கு வெண்பனி தன் சிதள்களை இங்கென் முடிமீது ஏற்றும் வெண்மையே மலர்கள் வீழ்ந்தன மறையும் காலமே முழந்தாள் மீதுநீ முனைய அமர்ந்திடு எனது நெஞ்சினில் இணைக்கும் தலைவேறு தினத்தில் குணிந்தெனை தேய நோக்கலாம் காலன் வந்தெதெனை கடத்திச் சென்றிடின் ஓலமிட்டு நீ முக்கா டிடுவையோ? கவலை மறைந்தபின் காலங் கடந்தும் கவினுள இளைஞனை கைபிடித் திடுவையோ? விதவை ஆடையை வீசு நாளினில் அதையென் கல்லறை அறிய மேலில்வை நள்ளிரா வேளையில் நானும் வந்ததை உள்ளக் குமுறலோ(டு) உதனை எடுத்ததனைத் துயரக் கண்ணீரதை துடைக்க எடுப்பனே அயர்ந்த நெஞ்சினில் ஆழ்ந்த புண்ணதைக் கட்ட ஆகிடும் கவலை மறைந்திடும் திட்ட மாக நான் திடமாய்க் கூறுவேன் அந்த வேளையும் அடைய நானுணை சிந்தை நிறைவுடன் சிறக்கப் போற்றுவேன். நானொரு மக்யார் நானொரு மக்யார்...... ஐம்பெருங் கண்டத்தில் அழகிய தெங்கள் மக்யார் ஆற்றிடு சிறிய உலகம் காணீர் இதிலே அம்ம ஆயிரம் ஆயிரம் கண்கவர் காட்சி அணியென அவளின் மார்பில் வதியும் மலைகள் தம்பெரும் உச்சி தனிலே காணும் காட்சி தவழும் அலைகள் திகழும் காஸ்பியன் கடலே பம்மிய புற்றரை பரந்து விரியக் காணீர் பார்க்கப் பாhக்க முடிவிலை அன்றோ அதற்கே. நானொரு மக்யார்...... மனதோ என்றும் வலிதாம் எனினும் காதில் மகிழ்வாய் இனிதாம் இசையும் விழுந்திடு நேரம் எனது உதடு சற்றே விரிந்து நகைக்கும் இருப்பினும் நகைப்பு எளிதில் தோற்றுவதில்லை தினமும் அழுதிடு வதனால் சிரிப்பு முளைக்கும். சிதறிய மகிழ்ச்சி ரேகை தந்திடத் தோன்றும் வனப்பை அங்கே காண்பீர் நாட்டீர் நாளும் மருந்திற்கு மிரங்கும் பழக்கம் எம்மிடமில்லை. நானொரு மக்யார்...... காலக் கடலின் கனாமீ திருந்து நோக்க ககனம் முட்டும் மலைபோல சீர்மை காணும் சாலச் சிறந்த காலம் வாழ்ந்தோம் முன்னர் சற்று மிளைப்பிலை எம்மவர் செய்த தியாகம் கோலக் கனவில் குழந்தைகள் மின்னல் கண்டே கொண்டிடு மச்சம் போலுலகு அன்று இந்த ஞாலத்தவரும் நடுங்கினார் ஐரோப் பாவில் நம்மவர் கையினில் வாளை எடுத்த நாளே நானொரு மக்யார்...... சிறப்புறு சென்ற நாட்களின் சின்னம் மக்யார் சிறிது சிறிதேறி சிறுவலை செல்லும் எலிபோல் திறமிழந் திங்ஙன் சீரழிந்து வாழ்வ ரின்றே சிற்றொலி இடினும் அண்டைநாடு நடு நடுங்கும் அறமிலா சோதரர் அன்னவர் நமக்குப் புரிவர் அளப்பரு மின்னல் அனைத்து நினைக்கிலும் நம்மால் மறப்ப தற்கில்லை மற்றவர் தருந் தொல்லை வலிதே அளிக்கும் கருமைச் சோக அணியே நானொரு மக்யார்...... நானொரு மக்யார் என்று கூறிடத் தயங்கி நாண முற்றே முகஞ் சிவக்கின்ற நிலையே ஆனதோர் கதிரவன் ஒளிர்வன் பிறரின் நாட்டில் ஆயினும் இங்கே அரையிருள் நமது தேசம் தீனமுற்ற றிடினும் கைவிடற் கில்லை அதனை சீர்பெறு செல்வம் பெறினும் எனக்கு வேண்டா ஈனநிலை பெற்ற தாயினும் எமது பூமி என்னுளம் போற்றிடு எழிலார் தேச மாகும். பைத்தியக்காரன் - என்னையேன் தொந்தரவு செய்கிறீர்கள்? என்பாட்டிற் கிருக்க விடுங்களேன் எனக்கு நிறைய அவசர வேலையருக்கு பகலவன் கதிர்களைப் பின்னி சுடர்வரும் சாட்டையாகச் செய்து இந்த உலகத்தை விளாசனும்! அவர்கள் ஓலமிட்டு அழுவதைக்காண நான் சிரிக்கனும் பார்த்து நகைக்க உலகமல்லவா அது ஹா ஹா ஹா! வாழ்க்கைதான் வேறு என்ன? அழுவதும் சிரிப்பதுந்தான் சாவுதான் - அமைதி முன்னொருமுறை நானும் மாண்டிருக்கிறேன் என் மதுவை உண்டவர்கள் எனக்குத் தண்ணீரில் நஞ்சைக் கலந்தனர் குற்றத்தை மறைக்க அவர்கள் செய்தது என்ன தெரியுமா? என்னைக் கிடத்தி வைத்து என்னுடல் மீது விழுந்து விழுந்து அழுதார்கள். நான் எழுந்திருந்து அவர்கள் மூக்கைப் பதம் பார்த்திருப்பேன் ஊஹ{ம் கூடாது அப்படிச் செய்யவே மாட்டேன் எனது பிணத்தின் முடைநாற்றத்தில் அவர்கள் அழுந்தட்டுமென விட்டுவிட்டேன ஹா ஹா ஹா! என்னைப் புதைத்தது எங்கே தெரியுமா? ஆப்பிரிக்காவில் அதைவிட அதிஷ்டம் கிட்டுமா? புதை குழியிலிருந்து தனது கூர்உகிரால் கழுதைப் புலி என்னை இழுத்தெடுத்தது. இதைவிட யார்தான் உதவி செய்வர்? அதையும் நான் ஏமாற்றிவிட்டேன். தன் கூரிய பற்களால் என் தொடையைப் பதம்பார்;க்கத் தயாரானதும் பதிலாக நான் எனது இதயத்தை அதன் கசப்பைத் தாங்காது மாண்டே போனது ஹா ஹா ஹா! அக்கம்பக்கத்தாருக்கு ஒத்தாசை செய்பவன் கதி அப்படித்தான் மனிதன் யாவன்? சொர்க்கத்தில் பூக்கும் மலரினதுவேர் என்பார் சிலர் அது சுத்தப் பொய். மனிதன் ஒரு மலரேயாயினும் - கீழே நரகத்தில் வேரூன்றியவன் அவன். அப்படித்தான் ஒரு அறிஞன் கூறினான் போலும் அறிவுள்ள முட்டாள்! ஏனா? அவன் பட்டினியால் மாண்டான் திருடத் தெரியவில்லையா அவனுக்கு யாரிடமிருந்தும் பறிக்கத் கூடத் தெரியாதா? ஹா ஹா ஹா! நகைக்கிறீர்களா? நானும் ஒரு மடையன் தானே. கேடுகெட்ட உலகத்திற்காக கண்ணீர் விடவேண்டாமா? கடவுளும் தன் மேகக் கண்களால் அடிக்கடி அவ்வாறு செய்கிறார் நம்மையும் அவர் படைத்தாரே! சொர்க்கத்தில் கண்ணீருக்கு இடமெங்கே? இந்த மோசமான பூமியில் மக்கள் காலால் மிதிபட பொழிகிறது விண்ணின் கண்ணுPரெல்லாம் வெறும் சகதியாகிறது! ஹா ஹா ஹா! கானப்பறவை கூவிக் கூறுமொழி என்ன புரிக்றதா? நீ பெண்களுக்காக வெளியே நோட்டம் விடுகிறாய் என்கிறது! நதிகளைக்; கடலும் ஈர்ப்பது போல் பெண்களும் ஆண்களைத் தங்களுக்கள் இழுத்துக் கொள்கிறார்கள். ஏன் அது? அவர்களை வளைத்தெடுக்க பெண் இனம் அழகிய உயிரினம் அழகும் ஆபத்தும் நிறைந்தது காதலே - நான் உன்னை உண்டிருக்கிறேன்- பொற்கிண்ணத்திலுள்ள நச்சுக் குடிவகை. உனது ஒரு பனித்துளி தேன்கடல் தனினும் இனிப்புடையது எனினும் உனது சிறுதுளி நச்சுக் கடலினும் ஆபத்து நிறைந்தது சாவினை விதைக்க புயலும் வரிவரியாக உழுது வைத்த கடலை நீ கண்டிருக்கிறாயா? இடியின் கதையை கட்கத்தில் இடுக்கிய கன்னங்கறுத்த உழவனைப் பார்த்திருக்கிறாயா? ஹா ஹா ஹா! கனி பழுத்தால் மரத்தினின்று விழும். பூமியே, நீயும் விழத்தயாராகவிருக்கும் பழுத்த கனிதான். நாளைவரை நீளட்டும் இறுதிநாள் தீர்;ப்பல்ல அது. இவ்வுலகின் நடுப்பகுதிவரை வெடி மருந்தால் குடைந்து அதனைத் தூள்தூளாக்குவேன் - ஹா ஹா ஹா! உன் புகழ்ச்சி நன்றே செய்பவன் என்றே நீ நாளும் என்னைப் புகழ்கிறாய் அன்பே என்றன் ஆருயிரே அதற்குக் காரணம் நீயே தான். உண்மையில் அப்படி இருந்திடுமேல் உதற்கு நானெனக் கூறாதே! நன்மை தருவது உன்னுள்ளத்தில் நானு மதற்கு எதிரொலியே எல்லா மலர்கள் காய்களையும் ஈன்றது மண்ணெனக் கூறிடுவார் வல்லான் கதிரவன் மேல் வலிய தன்னொளி பாயச்சிலனேல் இந்தத் தரையில் சிறுபூண்டும் எழும்ப வலதோ இயம்பிடுவாய்! பிறந்தமண் இவ்வூரில இப்பகுதி பள்ளத்தாக்கில் இச்சூழல் தன்னில்தான் பிறந்தேன் நானும் செவ்வாயால் அந்நாளில் செவிலிபாடும் சீராட்டித் தாலாட்டும் காதில் கேட்கும் அன்று போல் என்காதில் இன்றும் கேட்கும் "வண்டே வண்டே கண்ணுறங்கு! " தன்வீட்டை ஓர்சிறுவன் விட்டு வந்தான் தனைநாடி வருகிறான் மனிதனாகி என்னேயிங் கிருபதுவாண் டுகளும் ஓட இன்பதுன்ப மெலாமிங்கே நினைவில் தேய மறைந்தது காண் இருபத்தைந் தாண்டுகாலம் "வண்டே வண்டே கண்ணுறங்கு! " உடன்ஓடி விளையாண்ட தோழர் கூட்டம் இன்றொரு வரைNனும் பார்க்க வேண்டும் உடனமர்ந்து கதைபேசி உளங் களிப்போம் உயர்மனித னானதினை மறந்தே போவோம். வன்தோளில் மேலாண்டு இருபத் தைந்து "வண்டே வண்டே கண்ணுறங்கு! " கிளைதாவும் பறவைபோல் என்றும் இங்கே கிளையோடும் எண்ணங்கள் அங்கும் இங்கும் வளைந்தோடும் தேனீயும் தேனே போல மகிழ்வூட்டும் பழங்கால எண்ணக் கூட்டம் வழக்கமாய்த் திரிந்த இடம் தேடி நாடும் "வண்டே வண்டே கண்ணுறங்கு! " மீண்டுநான் சின்னஞ்சிறு குழந்தை யானேன் மென்கரத்தில் கழலெடுத்து ஊதிப்பார்த்தேன் தாண்டுமரக் குதிரையதைத் தட்டிப் பார்த்து தண்ணீரைக் காட்டுகிறேன் குடிப்பதற்கே வா நீர் நீ குடித்திடுவாய் விரைவாகச் செல்வோம் "வண்டே வண்டே கண்ணுறங்கு! " அப்போது இராக்கால மணிகள் கேட்கும் அயர்ந்தாலும் குதிரையுடன் வீரன் தானும் அப்பாநீ தூங்குவென செவிலித் தாயும் அமைதியுடன் பாடுகின்ற சிறு தாலாட்டு மகிழ்வுடனே அவள்பாடும் சிறியபாட்டு "வண்டே வண்டே கண்ணுறங்கு! " குன்றின்மேல் ரோஜா குன்றின் மேலுள ரோஜாவே குனிந்தே என்னை நோக்காயோ நன்றே காதல் மொழிவதுவும் நன்கே காதில் விழுகிறது. சூரியன் 'டான்யூப்' நதிமேலே சுழன்று ஓட மேல்தழுவும் வீரியமுடனே அலையலையாய் மேவி ஆட்டும் தொட்டில்போல் நாத்திகன் நானெனக் கூறுகிறார் நாத்தழும் பேறப் பிறர் என்னை ஏத்தித் தொழுவேன் இப்போதே இன்குரல் உனது கேட்கிறது. எண்ணத்தின் முடிவு வீடு செல்லும் நாளினை எண்ணி நீடு நினைத்து நெடுநாள் கழித்தேன் அன்னை தன்னை அறிந்தே பல நாள் தன்னை யானும் காணும் வேளை எப்படி முகமன் கூறுதல் எங்ஙன் இப்படி கவலை எனை வாட்டியது அன்னை முன்வந் தென்னைக் காணும் இன்ப நேரம் எதனைக் கூற தொட்டி லாட்டிய தூய கரங்கள் எட்டி என்னை உணர்வு கூற இட்டு நனைத்தேன் எண்ணமாயிரம் ஒன்றன் பின்னொன்று ஒன்றினிற் கூடி நன்றி தனினும் நன்று மற்றது என்றிவ்வாறு ஏதோ எண்ண குன்றுபோல் வேளை குந்தியிருக்க நன்று நகர்ந்தது காலத் தேரும் தேடி வந்தேன் வீடு நோக்கி ஓடி அன்னை ஒன்றாய் அணைத்தாள் தேடிய வார்த்தை யாவும் ஓடி எங்கோ ஒளிந்து கொண்டனவே! போர்க்கீதம் ஓங்கிக் கொட்டுது முரசம் ஓலிக்கக் கேட்குது காளம் ஆங்கு வருவார் வீரர் அடு பேர் மூண்டது கேளாய் முன்னேறு….. குண்டுகள் பாயும் வேகம் கூறும் ஓசை வளும் முண்டி வந்த தறிய முன்னே கேட்கும் கானம் முன்னேறு…… கோடிகள் மேலே ஏற்று குறிப்பாய் உலகம் அறிய விடிவு வந்த தறிய மேலே மேலே உயர்க ; முன்னேறு…… ஆரிய உயர்ந்த வார்த்தை ஆங்கே மேலே பார்க்க எரியத் தெரிவதொன்று இதுவே விடுதலை ஆகும் முன்னேறு…… மேலாம் மக்யார் வீரன் விரைவாய் எதிரி நோக்கி கீழாம் அவனை ஒழிக்கக் கிளர்ந்து எழுந்தான் பாhPர் முன்னேறு…… மறைந்த தில்லை இன்றும் மக்யார் என்றும் வீரன் இறைவன் அவனும் ஒன்றாய் எடுத்த உறுதி ஒன்றே முன்னேறு…… நானும் நிற்கும் இடமே நல்ல இரத்தக் காடே ஆன நண்பன் அவனை அழிக்கச் சுட்டார் பகைவர் முன்னேறு…… துயக்க மெனக்கு இல்லை துனியாய்ப் போரிற் சென்றே ஆயலார் தம்மைக் கொன்றே ஆதற்கு பழியை வாங்கும் முன்னேறு…… இருகரம் கீழே விழினும் இடுபோர் உற்ற அனைவர் உருண்டு சாவே வரினும் உற்ற கொள்கை ஒன்றே முன்னேறு…… சாவு என்ப தெமக்கு சட்டென வந்து அணைந்து மேவும்@ தாயின் நாட்டிற் கேதும் அதுவே இல்லை. முன்னேறு…… கந்தை வீரர்கள் யாப்பணி விதிப்படி கவிதை அமைந்திட நான்தான் கறிவேன் காப்பிடு சங்கப் பலகைக் காகும் கவிதை புனைவேன். ஏனினும் எனது கவிதை எதிலும் என்றன் நினைப்பு தனிலும் சோதாக் கருத்து சொல்லுக் குமங் கில்லை குடித்துக் கூத்தி யடித்து கூந்தல் தலையில், கையில் புpடித்த உறைகள் கொண்டு பேத்தித் திரிபவ னல்ல வாளும் உறைவில் உறங்கும் மௌன மடைந்தபீ ரங்கி ஆளும் துருவும் அதன்மேல் ஆடைந்து விட்ட தடடா எனினும் வாளும் குண்டுக் கிடையே போரும் மூளும் மனிதர்க் குள்ளும் இன்னும் வளரும் எண்ணப் போரே உங்கள் போரில் நானும் ஒருங்கே சகாக்கள் தாமும் அங்கு வருவோம் காணீர் அணிக ளுடனே நாமும் கவிதை யுடனே நானும் கருதிப் போர்கள் புரிவேன் கவிதை ஒன்றொன் றொன்றும் கடுமை இளைஞர் படையில் கந்தை வீரர் இவர்கள் காண ஆயின் தீரர் முந்தித் துணிந்தே தாக்கி மோதித் தீர்ப்பார் முடிவாய் வீரர்க கணியாம் வீரம் மேலணி அல்ல காணீர் தீரர் அவரின் செயலால் திகைக்க வைப்பர் பாhPர் நானும் வீழ்ந்து பட்டே நாளும் கவிதை வாழ்ந்தே தானும் பின்னர் அழுந்தால் சரிதான் அதனால் என்னாம்? நூற்கள் தன்னில் வாழும் நுவலும் கவிதை நாளும் போற்றும் விடுதலை வீரர் புகழ்ந்து பேணி வருவார். கிளைகள் நடுங்கும் சிறுகுருவி குந்திட கிளைகளும் நடுங்கிடும் சிறிதுணை நினைத்திட சிலிர்சிலிக் குமுளம் உனையே நினைக்கிறேன் உலகி னுனைவிட இனிய நல் சிறுமியே இணையமுத் திருக்குமோ? முழுதுமே வழிந்திடும் முடிவிலா 'டன்யூபே' எழுமன் பெனதுளம் இருகரை புரளுமே ஒருதனி உரோசா உளமெனக் களித்’தையோ ஒருவனெ னதுளம் உனையதே தொடருமே உனதன்னை தகப்பரும் எனதனபை விடவுமோ அனவர தமுமே அமுதன் பளிப்பரோ? இருவரும் ஒருங்குடன் இருக்கினற் தினமதில் அருமையன் பதனையே அதிதமாய்க் கொடுத்தனை சுடுசுடு தனமது கடுகுளிர் தினமது விடுயைவயே உளமதை இலையெனின் சரியதே எனதுமே லிலையெனின் எனினுநீ உயர்கவே உனதுள மெனதெனின் உனக்குரு வழுத்துகள். -------------------------------------------------------------------- பூவின் இதழ்கள் உதிர்ந்தன… பூவின் இதழ்கள் உதிர்ந்தனவே பொன்னாம் அன்பே உனைவிட்டு காவின் புறவாம் தனைவிட்டு கடிதில் விலகிச் செல்கிறேன் பேரன் பேஎன் கண்மணியே பிரியாவிடையும் தாராயோ? குங்குமச் சிகப்பைக் கொட்டுகிற கோல நிலவும் காய்கிறது இங்கென் முகமும் உன்முகமும் ஏழிலார் சோபை இழந்தனவே பேரன் பேஎன் கண்மணியே பிரியாவிடையும் தாராயோ? குhய்ந்த கிளையில் வீழ்ந்திடம் குhலை யெல்லாம் பனித்துளியும் தோய்ந்த கண்ணீர்; நனைந்திடுமாம் துயரில் நம்மிரு கன்னத்தில் பேரன் பேஎன் கண்மணியே பிரியாவிடையும் தாராயோ? ஒருநாள் ரோஜா புத்துயிராய் உருவாய் அழகாய் துளிர்த்துவிடும் ஒருக்கால் நாமிங் கிருபேரும் ஒன்றாய்ச் சேர மாட்டோமா? பேரன் பேஎன் கண்மணியே பிரியாவிடையும் தாராயோ? 1845 ----------------------------------------------------------------- |
கருத்துகள்
கருத்துரையிடுக