அறியப்படாதவர்கள் நினைவாக...!
கவிதைகள்
Backஅறியப்படாதவர்கள் நினைவாக...!
அ. யேசுராசா
++++++++++++++++++++++++++++++++++
கடவுளுக்கு...!
மூடிக் கிடக்கின்ற
சொர்க்கத்தின் கதவுகளைத்
திறந்து விட்டால்...,
மண்ணின் குரலுமக்குத்
கேட்கக் கூடும்!
கீழிறங்கி,
புழுதி மண்ணின்மேல்
நடந்து வந்தால்,
மானிடத்தின்--
எழுச்சிகளை வீழ்ச்சிகளை
முற்று முழுதாக
நீரறிதல் கூடும். --கூட,
நீர்...வருவீரா?
26.7.68
வா
எரிகின்ற--
குறுமெழுகு வாிசை
ஒளி நிழலில்,
ஒப்பாரிக் குரல் கேட்டு
இந்தப் *பெட்டிக்குள்
நீயேன் கிடக்கின்றாய்?
முகம் மூடும்,
துப்பட்டி நீக்கி--
எழுந்துவிடு!;
என்கூட வந்துவிடு!
*பெட்டி--சவப்பெட்டி
2.8.68
உறக்கம்
சிலுவை எழுந்துநிற்கும்
வெள்ளைக் கல்லறைகள்
சூழ்ந்திருக்க,
கால்மாட்டில்
பட்டிப் பூமலர்ந்த
*சிப்பிச் சிலுவை
மேட்டின் கீழ்--
மண் குழியில்,
இருளில் துயில்வோளே...!
நீ யெடுக்கச்
சென்றுவிட்ட என்னுறக்கம்,
தந்துவிடு!
*சிப்பிச் சிலுவை--சிப்பிகளினால் அமைக்கப்பட்ட சிலுவை வடிவம்.
14.8.68
சில பொழுதுகள்...!
துயர்வந்து
என்கதவைத் தட்டும் போது,
என்னருகில் நீயிருந்து
கதைசொல்லச் சென்ற
பொழுதுகளின், நினை வவிழக்
கதவுதிறக்காதால்--
துயர் விலகும்!
29.8.68
ஏக்கம்
நான்வறண்டு கிடக்கின்றேன்,
மழை பொழியப் பயிர் சிலிர்க்கும்
வளம்நிறைந்த வயலென்றால்
பொங்கும்-.
மகிழ்ச்சிதான்..!
9.11.68
முகம்
மென்முகத்துச் சிறு சோகம்
காண்பதற்கு எனக்கா வல்:
உன்னுடைய கடை வாசல்,
தரிப்பிடத்து *வசுவந் தால்
என்னுடைய தலை நீண்டு
உன்னிடத்தைத் தான்தேடி,
கன்னந்தனைக் கை தாங்கும்
கோலத் தினைக் கண்டுவிட்டால்
என்னுடைய வெறு நெஞ்சும்
முகத்தால் நிரம் பிவிடும்!
*வசு--பஸ்
16.3.69
ஓட்டம்
*மாவலியாள், ஓடுகிறாள்!
தொங்குகிற நீள்பால
காலடிக்குக் கீழாக
மண்கலங்கத் தான்கலங்கி
மஞ்சள் நிறத்தோடு
மௌனம் உறைகின்ற
நெடுமூங்கிற் கரைதொட்டு
'முழங்கைத் திரும்பலிலே'
ஓடுகிறாள், மாவலியாள்...!
*மாவலி--இலங்கையின் மிகப்பெரிய நதி
3.5.69
வாராதவர்கள்...
(1964 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 21 ஆம் திகதி எங்கள் ஊர்க்கடற்றொழிலாளர் வழமை
போல் மீன் பிடிக்கப் போனார்கள். அன்றிரவு கடும் சூறாவளி ஏற்பட்டது.)
என்னுடைய தோழர்கள்,
கடலுக்குப் போனார்கள்;
மார்கழியின் நண் பகலில்
*நைலோன் வலையோடு,
"போயிற்று வாற" மெனச்
சொல்லிவிட்டுப் போனார்கள்.
போனவர்கள்--,
அப்படியே போனார்கள்...!
*நைலோன் வலைத்தொழில்--ஆழ்கடல் மீன்பிடியைக் குறிப்பது.
8.5.69
குண்டூசி!
கார் ஓடும் *கோல்றோட்டில்
தாருருகி ஓடுகிற--
மதியத்தில்,
குறக்கு மறுக்கான
கூட்டத்தில போகையிலே
செருப்பறுந்து, போச்சுது...!
'ச்சீ..சனியன்
அறுந்து போச்சுதே;
என்னண்டு போறதெண்டு'
குழம்பி நிற்கையிலே,
நீதந்த குண்டூசி...!
குத்தி ஒருபடியாய்
மேல்நடந்து போனோம், நாம்
தோழா! என்நன்றி
உந்தனுக்கும்;
உன்னுடைய ஊசிக்கும்!
*Galle Road
21.7.69
பெருமிதம்
என்னுடைய வாழ்வுத்
காலத்து ஒருநாளில்,
சந்திரனில் முதல் மனிதன்
காலடியை எடுத்துவைத்தான்!
நீண்டு...மிக நீண்ட
அண்டவெளிச் சூனியத்துச்
சுற்றுகிற கிரகத்தில்
மனிதத் தடம் பதிய,
தொடங்கியதோர்
யுகத்தின் முதல் நாளில்,
நானும் வாழ்ந்திருந்தேன்!
23.7.69
நல்லம்மாவின் நெருப்புச் சட்டி
இன்றுமிந்தப் பின்னிரவில்,
அலாம் அலறி ஓய்கையிலே
திகைச்செழுந்த நல்லம்மாள்
பாயிருந்து,
சோம்பல் முறிக்கையிலே,
எங்கிருந்தோ நாயொன்று
ஊளையிட்டுக் கேட்கிறது...!
"எழும்பு பிள்ள...!
மணி அடிச்சுப் போட்டு...து;
நேரம் போகு...து"
தட்டிவிட
எழுந்த மகள்,
பின் தொடரத்
தான் நடந்து
குசினிக்குப் போகின்றாள்.
"சிரட்டை உடை
அடுப்பு மூட்டு;
தேங்காயுடை
பாலைப் பிழி
மணி,
இரண்டடிச்சுப் போட்டு...து.
சந்திக்கடை ராசதுரை
கடைதிறக்க நாலுமணி
ஆகும்; அதுக்கு முன்னம்
அப்பஞ் சுட்டுப் போடோணும்."
பால் பிழிஞ்சு
மாக்கரைச்சு,
அடுப்பூட்டி முடிச்ச மகள்
தூங்கிவிழ, போய்ப்படுக்கச்
சொல்லியவள் --தனியிருந்து
அப்பம்,
சுடுகின்றாள்.
பற்றியொி சிரட்டைத்தணல்
காிபற்றத் தணல் நிறைந்த
நெருப்புச் சட்டிகள்;
வீசுகிற பெரு வெக்கை
நெஞ்சினிலும் முகத்தினிலும்
முன்னெழுந்து தாக்கித்
தன்னுடலைத் தின்கையிலும்,
குந்தியிருந்தபடி
அவன், அப்பம் சுடுகின்றாள்.
ஓம்...!
பின்னிரவின் இரண்டுமணிப்
போதிருந்து முற்பகலின்
எட்டுமணிப் பொழுதுவரை,
அவள் அப்பம் சுடவேண்டும்.
மூத்தமகன் பள்ளியில்
பத்துப் படிக்கிறாள்;
சின்னவனும் இன்னும் இரண்டு
பிள்ளைகளும் கூட,
பள்ளிக்குப் போகின்றார்.
கடலுக்குப் போற அவள்
புருஷன் பின்னேரம்,
கொண்டுவரும் நாலைந்து
ரூபாய்கள்...?
பற்றியொி,
ஆறு வயிறுகளின்
நெரு பபணைக்கக் காணாது;
பள்ளிச் செலவுக்கும்
வழிகாண ஏலாது...
ஆதலினால்,
வாழ்வு திணித்த அந்த
சுமைச்சட்டி நெருப்பேந்தி...
பற்றியொி சிரட்டைத்தணல்
காிபற்றத் தணல் நிறைந்த
நெருப்புச் சட்டிகள்;
வீசுகிற பெருவெக்கை
நெஞ்சினிலும் முகத்தினிலும்;
முன்னெழுந்து தாக்கித்
தன்னுடலைத் தின்கையிலும்,
குந்தியிருந்தபடி
அவள், அப்பம் சுடுகின்றாள்.
நாளைக்கும்
மீண்டு மந்தப் பின்னிரவில்,
அலாம் அலறி ஓய்கையிலே
திகைச்செழுந்து நல்லம்மாள்
பாயிருந்து,
சோம்பல் முறிக்கையிலே,
எங்கிருந்தோ நாயொன்று
ஊளையிடுங்
குரல் கேட்கும்...!
7.8.69
புதைவுகள்
'முன்னாளி னந்தத்
தொடுவானக் கனவுகள்'
மண்ணிறங்கி நமைநோக்கி
நெருங்கி வருகையிலே
இறந்து, போனாய் நீ...!
கோயிலில் *துக்கமணி
ஒலித்த காலைபோய்
வந்த அந்தப்பின்னேரம்,
ஊராரும் உறவினரும்
ஊர்வலமாய் உனைக்கொண்டு
போன முடிவினிலே...
புதைவுகளின் நினைவுகளாய்ச்
சூழ்ந்திருந்த சிலுவைகளின்
நடுவினிலே
வெட்டிவைத்த வெறுங்குழியில்
இறக்கி உனைப்புதைக்க
மண்ணின்கீழ்ப் பெட்டிக்குள்
புதை பட்டுப் போனாய், நீ...!
நீ புதைய--
'பள்ளி வகுப்பறையில்;
சூழிலுப்பை மரத்தின்கீழ்;
கோயிலிலும் மூண்டெழுந்த
முன்னாளி னந்தத்
தொடுவானக் கனவுகள்'
சிதைந்த குவியலிடை,
புதைந்துவிட
இதயம் அழுகிறது...!
*ஒரு கத்தோலிக்கர் இறந்து போனதும், அவர் சேர்ந்திருந்த பங்குக்கோயிலின்
மணி, அவருடைய இறப்பைத் தெரியப்படுத்துவதற்காக அடிக்கப்படும்.
10.8.69
நீரும் ஒரு...
குடிமகனாய் வாருமையா!
(களம்: வெளிநாட்டுப் பொதிகள் சுங்க மதிப்பீட்டாளர்களினால் பரிசோதிக்கப்பட்டு
விடுவிக்கப்படும் பொதி அலுவலகக் கருமபீடம்: பெரும்பாலும் சனக்கூட்டத்தினால் நிறைந்திருக்கும்.)
I
ஓம் ஐயா!
நீர் பெரிய வீரர்தான்.
உம்மை இதில் விட்டால்
சட்டுப் புட்டென்று
வெட்டி விழுத்துவதாய்க்
கனக்கக் கதைக்கிறீர்;
"எண்ணை காணாத
சரி யானசிலோ வண்டி"
என்றும் சொண்டுக்குள்
மெல்லச் சிரிக் கின்றீர்.
நீண்ட வால் போல
கூட்டம் தொடருவதால்,
இருந்த இருப்பினிலே
இடைத் தேனீரும் காணாது,
கடமை ஆற்றுகிற
நாமும் மனிதர்களே!-ஆதலினால்,
மனிதச் சோர்...வுகள்
எமை அண்டக் கூடுவதை
நீரும் அறியாது...,
'பிள்ளையினைக் கொள்ளி
நெருப்பின் அருகினிலே
விட்டுவிட்டு வந்தவர் போல'
போகத் துடிதுடித்து,
வார்த்தைகளைச் சும்மா
அள்ளி வீசுகிறீர்
ஐயா...!
நீரும், ஒரு கனவானோ...?
II
முன்னுக்கு வந்துநின்ற
உம்முடைய முறை சொல்லி,
"இதை முதலில் எடும்" என்றும்
நெற்றிக் கண் காட்டுகிறீர்:
*ஏட்டிற் கண்பதித்து
எழுதி நான் நிமிர்ந்தால்,
கோட்டையினைச் சுற்றி
முற்றுகை யிட்டவர்போல்
பதின்மர்
நிற்கின்றீர்.
நீர்தானோ...? இருநீண்ட கண்ணோடு
துடிக்கும் செவ்விதமும்
கொண்ட அம் மங்கை
தானோ; கறுத்தப் பட்டைக்
கனவான் தானோ
முன்னுக்கு வந்தவர்கள்...?
நானறியேன்--ஐயா!
நிச்சயமாய் நானறியேன்,
எனைநீரும் விட்டுவிடும்.
"எம்முடைய காசிற்
சம்பளமும் வாங்குகிற
நீரெமது ஊழியரே"
என்றெல்லாம்,
ஏதேதோ சொல்லுகிறீர்
ஓம் ஐயா!
அது பெரிய உண்மைதான்.
உம்முடைய சேவைக்கே
நாம் காத்துக் கிடப்பதனால்
நாமும் உமது, தொண்டர்களே!;
எம்மை எதிர் பார்க்க
நீரும் உரியவரே
ஆனாலும்...,
உரிமை மற வாத
நீருமது கடமையினை,
ஏன் மறந்து போனீரோ...?
சீரான சேவை
நாமாற்ற வேண்டுமெனில்,
உம்முடைய ஒத்துழைப்பும்
அவசியமே ஆனதினால்,
கும்பலாய்க் கூடிநின்று
நளினக் கதை பேசும்
முணுமுணுப்பை விட்டவராய்,
'நீரும் ஒரு...,
குடிமகனாய் வாருமையா!'
* ஏடு--பதிவேடு
+ பட்டை--கழுத்துப் பட்டை
6.12.69
கீனாகலையில்...
(1.9.70 இல் கீனாகலைத் தோட்டத்தில் நடைபெற்ற பொலிசாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில்
இராமையா, அழகிரிசாமி ஆகிய தொழிலாளர்கள் இறந்தனர்.)
'உரிமை கோரி--
வேலை
நிறுத்தமும் செய்யலாகும்;
கூட்டமாய்க் கூடி நின்று
கோஷமும் போடலாகும்.'
இவை யெல்லாம்,
"உம்முடைய மாபெரிய
சன நாயகச் சுதந்திரங்கள்!"
என்னுமிந் நாட்டில் தான்
என்னுடையதோழர்கள்
கூடிக் கொடிபிடித்துக்
கோஷமும் போட்டார்கள்;
சுதந்திரக் காவல்நாய்கள்
குண்டுகளால் அதைமறுத்தார்.
இறந்து வீழ்ந்தோரைத்
தரவும் மறுத்தவர்கள்,
நாய்களைப் போல்--
குப்பை வண்டிகளில்
மனிதர்களைக், கொண்டு போனார்!
ஓ...! அங்கு
'மாபெரிய சுதந்திரத்துச்
சனநாய கம்'
மேலும், நிர்வாணமடைகிறது...!
18.9.70
தெரிந்து கொண்டமை...
அன்பே!
உன்னுடைய தாயார் ஒரு 'மாதிரி' யாம்;
தந்தையும் ஏதோ 'அப்படித்தானாம்'.
எனவாகப்...
பற்பல கதைகள் வந்து சொல்லுகிறார்
இவையெல்லாம், நானும் அறிவேன்தான்
அதனாலென்ன...?
உன்னுடைய மெல்லிதய உணர்வுகளைப் பூரணமாய்
நானறிந்து கொண்டதுபோல்...
நீயும் எனை அறிவாய்தானே?
அது, போதும்!
24.2.71
நம்பிக்கை...!
வாழ்வு ஒருபெரிய
துயரந் தானேயென,
உறுத்திக் கிடந்ததுதான்.
என்மன வானில்,
துயர்நிறை மேகம்
சூழ்ந்து கவிந்தனதான்.
துயாினில் ஆழச்
சுமையென வாழ்வைச்
சலித்திடத்தானா, வந்து பிறந்தோம்...?
இல்லை இல்லை!;
இன்னம் அதனால்,
வாழ்வும் ஒருபெரிய
வஸீகரமாயே,
நீண்டு தொலைவில் தெரிகிறது...
25.2.72
மேடையிலே சில, பிரமுகர்கள்...!
ஊரில் ஒருமன்றம்
எடுத்த விழவிடையில்
பேருரைக ளாற்றப்
பெரிய மனிதர்சிலர்
மேடை அமர்ந்திருந்தார்...!
1
வெயில் அனலிடையில்
கூதற் பனி நடுவில்,
கண்ணில் கரைதட்டா
நீண்ட பெருந்தொலைவு
போன தொழிலாளர் புதுமீன் பொண்டுவர,
'வாடி'யிலே நின்றபடி
பணம் வாரி மடிகட்டிச்
சுரண்டிக் கொழுத்திருந்த
'பெரிய *சம்மாட்டி...'
2
நாளெல்லாம் பொழு தெல்லாம்
நொந்துழைத்தும் தொழிலாளர்,
சுகம்காணார்; துயர்ப்படுவார்
அவர் முன்னால்...,
'ஏழைமையே சிறந்ததென'
எங்குமேயில்லா 'மோட்சம் நரகமென'
பைபிள் கதை சொல்லி,
அன்னவரைத் திசை திரும்பும்
'எங்களூர்க் கோயிற்
பங்குச் சுவாமியார்...'
3
'உப்பும் புளியுமல்ல எம்முதற் பிரச்சினைகள்
தமிழைப் பண்பாட்டைக்
காத்தல் தா னென்று,'
ஊர்வெளியில் மேடைகளில்
குதலைத் தமி ழினில்
பெரிய முழக்கமிட்டு,
நாளெல்லாம் பொழுதெல்லாம்
வெள்ளையனார் தம்மொழியை,
பண்பாட்டைப் பரவிநிதம்
+கறுவாக் காடுகளில்,
உண்டு சுகித்திருக்கும்
எங்கடை எம்.பி.!
ஊரில் ஒருமன்றம்
எடுத்த விழவிடையில்
பேருரைக ளாற்றப்
பெரிய மனிதர்சிலர்
மேடை அமர்ந்திருந்தார்...!
*சம்மாட்டி--வள்ளச் சொந்தக்காரன்.
+கறுவாக்காடு--கொழும்பு நகாில் பெரும் பணக்காரர் வாழுமிடம்.
29.4.72
சுவடுகளைத் தொடருதல்...
தோழா வா!
இந்த வழியால்தான்
நம்முடைய தோழர் முன்நடந்து, போனார்கள்.
ஓங்கி இரைகின்ற
காற்றில் அலையில்,
அவருடைய மூச்சும்
கலந்து உளதே!;
கீழ், மேல் வானில் தெரிந்திடு சிவப்பில்
அவருடைக் குருதியும் படிந்தே உளது.
'ஏகாதி பத்தியம், முதலா ளித்துவம்
நிரலப்பிர புத்துவம்'
மக்களைப் பிணித்த இம்
முப்பெரும் விலங்குகள்,
பொடிபடுமாறு பொடிபடுமாறு...
லாவோசில், வியத் நாமில்:
அங்கோ லாவில் மத்திய கிழக்கில்
இன்னும் இன்னும்...,
ஐந்து கண்டமும்
பரந்துள தோழர் புரிந்திடு போர்கள்
இன்னும் இன்னும், தொடர்ந்தே வந்துள.
சுரண்டல்க ளில்லாப் புதிய பூமியில்
சுதந்தி ரத்தின் கதகதப்பான,
மூச்சுக் காற்றினை முகரும் மனைப்பில்
தங்கள் குருதியைச்
சதையின் உயிரினை,
எம்முடைத் தோழர் இழந்து போயினர்.
'ஜுலியஸ் பூசிக், நகூயென் வான்டிராய்
சாரு மஜும்தார், யன்சிகா' எனவும்
இன்னும்...இன்னும்...
பேரறியாத எம்முடைத் தோழர்,
தங்கள் குருதியைச்
சதையினை எலும்பினை,
உயிரினை யெல்லாம் இழந்தே போயினர்.
அவருடைக் குருதி படிந்துள சிவப்புக்
கொடியும் நாலடித் தடங்கள் பதிந்த,
பாதையும் முன்னால்
விரிந்தே உள்ளன.
இன்னும் முடியா அவருடைப் பணியினை
இன்னும் இன்னும், தொடருதல் செய்வோம்...!
தோழா வா!
இந்த வழியில்தான்
அவருடைக் குருதி படிந்துள கொயொடும்
நாம்,
நடந்து செல்வோம்!
14.12.72
இன்று...
இன்னும் இன்னும் ஒளி மிகுவதும்
இன்னும் இன்னும் உயிர் நிறைவதும்
ஆனபுதிய வாழ்வினை ஆக்கும்
ஒருபுது முனைப்பு எழுந்து பரவுக!
11.1.73
சிறு கதை
காத்திருந்தாள்; காதல், கனியும் உளத்தோடு.
முன்கிடந்த சாதி
மதச்சுவர்கள் தாண்டி
போகும் நெடுவழியின்
இன்ன லெதிரேற்றும்
முன்
செல்லும் முனைப்போடுங் காத்திருந்தான்.
'வெளி' யெல்லாம் ஒளிபரவிப் படிந்த தொருகாலை
எம்முடைய உறவு 'அண்ணன்--தங்கை' யென
சொல்லியவள் சொல்கேட்டு முகமிருள நின்றான்;
நெஞ்செல்லாம் இருளோடி,
விரைந்து பரவியது.
ஒளிகாணான்,
கனவு சிதையக் கனத்தநெஞ்சோடும்
நின்று துயாில், உழலுகிறான்.
1.12.73
நாள், தொடங்கு கிறது...!
காலை விடிகிறது...!
எழுந்து வருகிறான்.
இருள் இன்னும் குலையவில்லை
சிறுதொலைவுக் கப்பால் ஒன்றுந்தெரியவில்லை;
பனிமூட்டம்:
ஒளி, சிறுவட்டம் போட்டுளது.
காலடியில் நின்றும்முன்
போகிறது றெயில்பாதை:
'பாலத்' தடியில் 'ரோர்ச்சின்' ஒளி பட்டு
பாம்பொன்று மெல்ல அசைகிறது...
விலத்தி வருகிறான்!
இருளில் தனிமைகொண்டு
ஸ்ரேஷன் நின்றுளது.
முன்கிடந்த வாங்குகளில்
ஆரோ சிலபேர்கள்
படுத்தும் கிடக்கிறார்
சிறுதொலைவில்;
கண்ணில் பட்டபடி 'போஸ்ற்ஓவ்வீஸ்'
'டேற்ஸ்ராம்பை' யாரோ ஓங்கிக் குத்துகிறார்,
விட்டுவிட்டுச் சத்தம் வருகிறது...!
"குட் மோணிங் மாஸ்ரர்"
"மோணிங்,"
'மோணிங் ரேண்' காரரெல்லாம் வந்து குழுமியுளார்.
'மெயில்வான்' வருகிறது...!
சென்று 'மெயில் பாக்சை' விரைந்து இறக்குகிறார்:
'மெயில்கார்ட்டின்' புத்தகத்தில்
கையொப்பம் இடுகின்றான்.
உறுமி மெயில்வானும், ஓடிச் செல்கிறது...!
"வெட்டுவமா மாஸ்ரர்?" குணவங்ஸ கேட்கத்
தலையாட்ட,
வெட்டத் தொடங்குகிறார்.
'எக்ஸ்பிரஸ் லெற்றர், சேமிப்புப் புத்தகங்கள்;
றெஜிஸ்ரர் பாக்ஸ்.'
புத்தகத்தில் விரைந்து எழுதத் தொடங்குகிறான்
கடிதக்கட்டுகளைச் 'சோர்ட்டர்' பிரித்தபடி...
வெற்றுப் பைகளினை *றணர் அடுக்குகிறான்.
இயந்திரமாய் மனிதர் இயங்கத் தொடங்கியதும்,
உயிர்ப்புக் கெர்ணடநாள்
நீளத் தொடங்கியது...!
*றணர். தபாலோடி.
16.12.73
அறியப் படாதவர்கள் நினைவாக
*மாித்தோரின்நாள்:
கல்லறைத் திருநாள்!
விரிந்துகிடக்கின்ற சவக் காலைக்கதவுகள்
வந்து போனபடி, பெரிய சனக்கூட்டம்.
கல்லறைகள் எழுந்துளன;
வாழ்ந்து சொகுசாக
மறைந்துபோனவாின்,
நினைவைக் கல்லுகளில்
வரைந்த அடையாளம்.
பூவெழுத்தில் விபரங்கள்,
'சிலுவை' 'சம்மனசு'
'கன்னிமாியாளாய்ச்'
சுரூபங்கள்;
கூலிக் குழைத்த
மேசன் தொழிலாளர் கைவண்ணம்.
தென்கிழக்கு மூலை,
வாிசையாய்க் கல்லறைகள்:
'சங்கைக் குரிய கன்னியர்கள் தந்தையர்கள்'
படுத்துக் கிடக்கிறாராம்;
பளிங்கில் அவர்நினைவு
பொறிக்கப் பட்டுளன.
கிணற்றருகில்
தென்னை மரத்தடியில்,
பட்டிப்பூ மலர்ந்துள்ள
சிப்பிச் சிலுவை
மேடுகளின்கீழெல்லாம்
மனிதர் புதைபட்ட அடையாளம்.
பேரும் தெரியாது
ஊரும் தெரியாது,
யாரென்றும் அறியப்
படாத மனிதர்கள் இங்கு புதைந்துமுளார்.
யாரென் றறியப் படாதவரென்றாலும்,
அவரைக் குறிப்பாக
உணர முடியுந்தான்...!
* 'ஒரு கரையில்' நின்றபடி
கரைவலையை இழுத்தவர்கள்;
தாமிழுத்தமீனில் சம்மாட்டி கொழுத்திருக்க
மெலிந்து கருவாடாய்க், காய்ந்து மடிந்தவர்கள்...
+ 'அலுப் பாந்தி' அருகில்
மூட்டை சமந்தவர்கள்; பார விறகுவைச்சு
கைவண்டில் இழுத்தவர்கள்...
பொழுது புலராத விடி காலைதொடங்கியதும்
நகரை ஊடறுத்த வீதிகளின் வீடுகளில்,
நாளும் அழுக்குகளைக் களைந்து கிடப்பார்கள்...
என்ற உழைப்பாளர் தாம்புதைந்து கிடப்பார்கள்!
செத்துப் புதைபட்டுக்
கிடந்த மண்மீதும்
எல்லைகட்டி,
கல்லறையாய் மேடுகளாய்
வர்க்கத்தின் முத்திரைகள்
வர்க்கத்தின் முத்திரைகள்!
*மாித்தோரின் நாள்-ஒவ்வொரு வருடமும் கார்த்திகை 2 ஆம் திகதி.
*ஒரு கரை-யாழ்ப்பாணத்தில் மீண்பிடிக்கப்படும் ஓர் இடம்.
+அலுப்பாந்தி-துறைமுகம்.
27.12.73
பிறகு...
பிறகென்ன, எல்லாம்முடிந்ததுதான்,
'எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி'
சிலுவையி லெழுந்த ஏசுவின்குரலாய்
அவளின் முன்னால்,
அவனின் முன்னால்
நினைவினி லெழுந்த குரலொலியெல்லாம்
இற்று இற்றே மறைவதும்காணாய்.
நீண்டுவிரிகிற பாலை வெளியில்
எந்தப்பசுந்தரை தேடி யலைவாய்?;
ஒதுங்கிக்கிடக்கிற தனித்த தீவில்
எந்தப்படகைக் காத்தும் இருக்கிறாய்?
'எல்லாம் எப்போ முடிந்த காரியம்.'
14.1.75
சுட்ட குறி
அசைகிற பூவாய்;
மானிட இயற்கைப்
புனித மிளிர்வாய்;
கவலைகளின்றி விடுதலையாகத்
துள்ளிற ஆட்டுக்
குட்டிகளாகி
பாதையினோரம்...
தந்தையும் தாயொடும்
செல்கிற மூன்று சிறுமிகள்கண்டான்.
அரும்பியமலர்ச்சி பரவுதல் கொள்கையில்,
வேற்றுமையாக
ஒருத்தியில் மட்டும்
கோடுகளிடையில் புள்ளிகளோடு
நொய்ந்த இளக்கச் சட்டையைக்காணவும்,
'வேலைக்குவைத்த சிறுமி இவளென'
சட்டையினாற் 'குறி' சுட்டதுணரவும்
நெஞ்சு துணுக்கெனத்
துயாினில் ஆழ்ந்தான்.
26.1.75
ரூவான் வெலிசய*
வெளியை நிறைத்த
வெண்குவி வளைவு;
வானந் தடவுகிற
சுருள்முடி.
நீலத் திரைவானம்
இடையிடையே ஓடும், சிலமேகம்
அடிவயிற் றெழுமோர்
நீண்ட பரவசம்:
திடீரென,
மானிடத்தின் பிரமாண்டம்!
* அனுராதபுரத்திலுள்ள ஒரு பௌத்த தாது கோபம்
21.2.75
காத்திருப்பு
அலை எறியுங்கடல்
*'களங் கட்டி'க் கம்பில்
வெள்ளைத் தனிக் கொக்கு
யாருக்காகக் காத்துளது...?
எனக்குத்தெரியாது!;
அதற்கும்...?
* களங்கட்டி-நாட்டப்பட்ட கம்புகளில் வலைகளைப் பிணைத்து மீன்பிடிக்கும் முறை.
5.3.75
"இதோ!
மனிதர்களைப் பாருங்கள்"
கண்டிநகரின் வீதிக ளெங்கும்
அலைந்துதிரிகிற தமிழ்த்தொழி லாளர்;
தேயிலைத் தூரில் மாசி தேங்காய்
காய்த்துக் கிடக்குதென--
நம்பிஏமாந்து, வந்தவாின் பின்னோர்
நாதியற்று
சோற்றுப் பிடிக்காய்
இங்கும் அங்கும், அலைந்து திரிகிறார்!
அட்டைகள்ஒருபுறம் இரத்தங் குடிக்கவும்
கருப்புவெள்ளைத் துரைகள் சுரண்டவும்
எஞ்சிய உயிரொடும் இருள்படி லயங்களில்
புதிய அடிமைகளாய்ச்
செத்தபடி வாழ்ந்தார்;
'தேசியமயமாய்ப்' போலிச் சம்தர்மக்
காற்று வீசியது:
எற்றுண்ட சருகாய்
வீதியில் ஒதுங்கினர்.
சுரண்டலின் கொடிய நகங்கள்பதிய
அரைகுறை உயிரொடும் துடிக்கிறமனிதர்!
இவர் எல்லோர்முகங்களிலும் துயரைவிதைத்தவர்கள்
மலையுச்சி பங்களாவில்:
கடல்கடந்த நாடுகளில்
சுகித்துக் கொழுத்திருக்க
உழைத்துக் கொடுத்தவர்கள் நலிந்துமெலிகிறார்;
நாய்களைப்போல்,
வீதிகளோரம் செத்தும் கிடக்கிறார்!
கண்டிநகாின் வீதிகளெங்கும்
வீசிஎறியப் பட்டதேயிலைச்
சக்கையாக, மலைத்தொழி லாளர்!
12.3.75
'உயிர் வாழுதல்'
உயிர்தடவி வருங்காற்று:
துயர்விழுங்க விரிந்தகடல்:
கடலின்மேற் படர்ந்த வெளி.
ஒளிபரவக் காலைஎழ,
நிறைவின் பூரணம்.
இக்கணத்தில் இறப்பேது...?
5.3.75
இரு வேறு நண்பர்க்குக் கடிதங்கள்!
நண்ப!
உன்னுடைய கடிதம் இன்று கிடைத்தது:
உயிர் தடவும் வாிகளை
எவ்வாறு எழுதுகிறாய்!
உனது கரம்பட்டு
எனது கரம் தொடும்
இச் சிறுதுண்டு,
உனது உயிர்பேசும்.
எங்கோ தொலைதூர
நாட்டில் நீயுள்ளாய்
இருந்தாலென்?
இதோ! இச் சிறு
மந்திரத்துண்டில்
நீ, எனதருகில்!
24.3.75
திரு '..........' க்கு
முன்புநமக்கிடையில் நட்பு இருந்ததுதான்:
பாழ்வெளியில் சுற்றுகிற
கிரக இடைவெளிகள்
இன்று நமக்கிடையில்.
நட்பில்லை;
பின்னுமேன் போலி வரிகளைஎழுதுகிறாய்?
திரையைக் கிழி; சுயத்தில் வேர்கொள்வோம்.
நட்பில்லை யென்றாற் பகையா?
இல்லையில்லை
வெறும், தூரத்து மனிதர்நாம்.
உம்முடைய கடிதம் நேற்றுக் கிடைத்தது!
24.3.75
தொடரும் பிரிவு...!
எங்கோ, தவறுகள் நடந்தன
பிழையாய் விளங்குதல்கள்;
மௌனங்கள்
நீளும் கோடையாய்த் துயரம்
எவ்வளவோ நடந்த பிறகும்
மன்னிக்க அவன்தயார்:
அன்பில் அவனிதயம் ஊறிக் கிடந்தது.
மனந்திறந்து பேச எண்ணினான்
நின்றுபேசவும் தயாரில்லையென
அவசரமாய்,
மிக அவசரமாய்த் தலைகவிழ்ந்து போனாள்.
மறுபடியும்,
மௌனத்தில்...
பிரிவு தொடர்ந்தது.
2.4.75
மௌனமாய்ப் பிரிந்து செல்லல்...
விதி அதுவானால்,
கையைமீறியதென
நாம், பிரிந்துசெல்லலாம்.
ஆனால்
உனதுமௌனத்தில் புதைந்த உண்மைகள்
என்றைக்குமாய்க்
குழப்பத்தில் எனை ஆழ்த்தப்
பிரிந்துசென்றாய்;
இதுதான்,
சகிக்க முடியாதது!
28.5.75
பச்சோந்திகள் சில...
'இலக்கிய உலகில் பிரபலம் ஆகணும்'
என்ற சுயத்தின் எழுச்சிமுனைப்பு!
சிறிதுதலைதூக்கி கண்ணெறிந்து பார்ப்பு
இங்குமங்கென பெரியபெரிய சிவப்புத்தலைகள்
சூழலின் பிரக்ஞை வந்துஉறுத்த
உடலிற் தோன்றும் 'சோகைச் சிவப்பு'
'சிவப்புவசந்தப்' பொன் விடியல்;
புரட்சிவருக!, வெட்டு! குத்து!
அனுபவஉணர்வைத் துறந்த வார்த்தைகள்,
வறண்ட படைப்பைக்
'கட்டத்' தொடங்கும்!
19.6.75
பார் எட்டுத் திக்காய்ப், பரந்து கிடப்பது....
உண்மைதான்!
எம்மிடமென்ன பெரிதாய் இருந்தது
காதலும்நட்பும் நிறைந்த உளமும்:
உண்மைமனித இருப்பும் அல்லால்?
நம்முடையகாதலியர் நமைப்பிரிந்து செல்வார்;
ஏளனமாய்ச் சொல்வீசி,
தோழர்களும் போவார்.
இன்னும் மனம் அழிய நாமேன்நின்றபடி?
இவர்களுக்கு அப்பால் மனிதர்க ளிலையா
ஏனில்லை?
'பார் எட்டுத்திக்காய்ப்,
பரந்து கிடக்கிறதாய்க்' கவிஞன்* சொன்னான்.
* கவிஞன்-மஹாகவி
19.6.75
சங்கம் புழைக்கும்...
மாயா கோவ்ஸ்கிக்கும்...!
*சங்கம் புழை!
உன்நெஞ்சை முட்கள் கிழித்த கதையறிவேன்
"குளிர்ந்துபோன என் நிராசைநித்தமும்
மூடுபனியாக, உன் வீதியிற்படரும்"
என்றபடி துயாில் நீ செத்துப் போவாய்
உயிர்தின்றது உன் காதல்.
"...நொறுங்கியது காதற் படகு
வாழ்வும் நானும் பிரிந்தனம்..."
ஓ! +மாயாகோவ்ஸ்கி,
துயாினிலாழ்ந்தாய்;
குண்டுகளால் அதை வெல்லப்பார்த்தாய்.
காதலின் வஸீகரக்
கடுமைதாக்க
நானும் உம்போல மனமழிந்த கவிஞன்தான்
இந்தவண்ணமெல்லாம்
நமக்கேன் நிகழ்கிறது?
மெல்லிதயங்கொண்டிருந்தோம் என்ப தாலா?
முதிரா இளைஞர் செயலென்று
உம்மையெலாம்
எள்ளுவார் அணி சேரேன்;
என்றாலும்,
உமது வழி தொடரேன்
செய்வதற்கு இன்னும்
பணிகள் மிக உளதே!;
செயலற்று வாழ்வில் ஒதுங்கமுடியாது;
** 'பிறத்தியானெல்லாம்
உள், நுழையுங் காலம்!'
முள்முடி குத்தும்
சிலுவை உறுத்தும்தான், என்றாலும்
சாவு வரை வாழ்வேன்!
சாவுக்கு அப்பாலும்
என் செயலிற் கவியில்
உயிர்த்தெழுவேன்;
உயிர்த்தே எழுவேன்!
+ சங்கம் புழை-ஒரு மலையாளக் கவிஞர். காதலித்த பெண் வேறொருவனை மணந்த துயாில் தற்கொலை செய்தார்.
*மாயாகோவ்ஸ்கி - ரஷ்யக் கவிஞர். நிறைவேறாக் காதற் துயாில், கைத்துப்பாக்கியினால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
** பிறத்தியான்-outsider
4.10.75
சுழல்
வாழ்க்கைக்கனவுகளை நீயே அழிக்கிறாய்;
மறுபடியும்புதிய கனவுகள் தருகிறாய்;
வாழ்க்கையொரு சுழல் வட்டமென் றுணர்த்தவா
பிரிதல் காட்டிப்
பின், நெருங்கி வருகிறாய்?
நடுக்குற்றநெஞ்சின் துயரச் சிதறல்திரட்ட
என் நெஞ்சினைத் தடவுகிறாய்;
ஏற்றிய கற்பூரம் 'அம்மன்' முன் எரிகையில்,
வணங்கித் திரும்பி
சிரிப்பவிழ்தல காட்டுகையில்
என்,
உயிர்ச் சுடாினை வளர்க்கிறாய்!
பார்! வான்நிலவின் ஒளிமழையில் பூமி நனைகையில்
காிய இருள்வறட்சி கலை கிறது...
21.12.76
பார்வை
கனவுகண்டு
நாட்கள் பலவாச்சு.
கால்கள் சேற்றில்
புதைந்து கிடப்பன;
கண்ணுக்குத் தெரியாத்
தொடர்விலங்குகள்
கையைக் காலைப்
பிணைத்தும் இருப்பன.
மண்ணைமறந்து, விண்ணில் பறக்க
ஆசை இல்லை;
மனோரதிய நினைவில் அலைதலில்
தவிப்பும் இல்லை.
கனவு கண்டு
நாட்கள்பலவாச்சு.
22.10.77
1974 தை 10*
கல்லுகளும், அலைகளும்
அன்றிரவிற் கொடுமைகள் நிகழ்ந்தன.
எங்களது பெண்கள் குழந்தைகள், முதியோர்
'வேட்டை நாய்களால்' விரட்டப்பட்டனர்
'கைப்பற்றப் பட்ட பூமியில்
அந்நியப் படைகளாய் அபிநயித்த சக்திகள்'
ஒன்பது உயிரின் அநியாய இழப்பு,
ஓ...! அன்றிரவிற் கொடுமைகள் நிகழ்ந்தன.
துயர்நிறை நெஞ்சோடும்
மரத்தில்
நாம், ஒரு சின்னமெழுப்பினோம்;
சிந்தப்பட்ட இரத்தத்
துளிகளாய்ச் சிவந்த 'செவ் விரத்தம்பூக்கள்'
நாள்தோறும் சின்னத்தி னடியில்,
எதையோ எமக்கு உணர்த்திக் கிடக்கும்.
மறுபடியும் இரவில் கொடுமைநிகழ்ந்தது,
செத்த உடலை
ஓநாய்கள் சிதைப்பதாய்,
மரச் சின்னத்தை
'அவர்கள்' அழித்தனர்.
மக்கள் வலியவர்கள்
மறுபடி வெளியிடை
எழுப்பினர் கற்றூண்;
தம் நெஞ்சின் வலிய
நினைவுகள் திரண்டதாய்!
மீண்டும் ஓர்முறை 'காக்கியின்நிழல்'
கவிந்து படிந்தது,
'அதிகாரசக்திகள்' கற்றூணை விழுத்தினர்.
அலைகள் ஓய்வதில்லை,
மறுபடியும் மக்கள் எழுப்பினர் சின்னம்;
கல்லுகளில் ஒன்பது, மெழுகு திரிகள்.
மெழுகு திரிகள் குறி யீடாய்நின்றன:
தியாகச் சுடரைத்
தம்முள் கொண்டதாய்...
கற்களின் புறத்தில்
மக்கள் தம் சுடுமூச்சு
நாளும் நாளும் பெருகி யேவரும்.
அடக்கு முறைகள் நிகழ நிகழ
உஷ்ணவட்டம் விரிவடை கிறது!
உஷ்ண வட்டம் நிதமும் தாக்கையில்
கல்லும் உயிருறும், நாட்கள் வரும்;
கல்லும் உயிருறும் நாட்களும் வரும்!
கற்கள் உயிர்த்துச் சுடரைவீசையில்
அடக்கிய சக்திகள் தப்பமுடியுமா?
அடக்கியசக்திகள் தப்பமுடியுமா?
சோதிச் சுடாில் தூசிகள் பொசுங்கல்,
நியதி.
கற்கள் உயிர்த்துச் சுடரை வீசையில்
மக்கள் சும்மா படுத்துக்கிடப்பாரா?
கற்கள் உயிர்க்கையில்...கற்கள் உயிர்க்கையில்...
மக்களும் அலையாய்த் திரண்டே எழுவர்!
மக்கள் அலையாய்த் திரண்டு எழுகையில்
பொசுங்கிய தூசிச் சாம்பல்கள் யாவும்
அந்த அலையிற் கரைந்துபோகும்!
அந்த அலையிற் கரைந்தே போகும்!
* 1974 தை 10 --யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி
மகாநாட்டின் இறுதி நாள் அன்று ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் மீது பொலிசார்
திடீரெனப் பெரும் தாக்குதலை நிகழ்த்தினர்.
18.4.77
சூழலின் யதார்த்தம்
எனது முகமும்
ஆன்மாவும்
அழி கின்றன.
ஒருமையென,
மூடுண்ட வட்டத்துள்
ஒடுங்கிஇருக்கக்
கேட்கப் பட்டேன்.
காலநகர்வில்
தாங்காமையில் வெளிவந்து
சிறுதூரம்,
நடக்கத் தொடங்கினேன்
தடிகளுடன் எனைச்சூழ்ந்தனர்;
'கலகக்காரன்' என்றுசொல்லி.
14.7.79
காதல் தொற்றிச் சில வாிகள்...
காதல்பற்றிய என் பிரமைகள் உடைந்தன
பேசப்பட்ட அதன்
புனிதத் திரை அகல,
தில்லைவெளியின் இம்மை
நிதர்சனமாயது.
நெஞ்சுதவிப்புற நிகழ்ந்த காத் திருப்புகள்;
உயிர்நெருடலில் அளித்தவாக் குறுதிகள்
அர்த்தமிழந்து இருளில்
புதைவு கொண்டன.
அண்ணன் அம்மாவாய்ப் பாசச்சுவர்கள்
முளைத்தெழுந்து வழி மறைத்தன:
சாதியாய்க் கரும் பூதமெழுந்தது:
சிலுவையும் லிங்கமும் மதமாய்மோதின.
அஞ்சிநடுக்குற்று
"என்னசெய்வேன் பேதை நான்,
அவர்கள் அழ அழுது
சிரித்தால், சிரிப்பதே எனதுவிதி.
நாம் பிரிவது நல்லதென'
ஒதுங்கிச் செல்லுவேன், கண்ணீர்பளபளக்க
இழுத்துமூடிய தியாகப் போர்வையுள்
இயலாமை பதுங்கும்:
'மெழுகுதிரியிலும்' 'கற்பூரச் சூட்டிலும்'
அறிவுமயங்க மேலும் குளிர்காய்வாள்.
நீளும் மௌன இருளில்
அன்பின் தடம் மறையும்,
மனிதன் மதிப்பிழந்து
காதல் பொருளற்றுப் போகும்,
நேசித்தவர் நெஞ்சு துயாில்வாட
புத்தகத்தில்மட்டும் காதல் வாழும்!
காலடியில் மென்மை மலர்கள்
நசிந்து சிதைவுறும்;
சமூக யந்திரத்தில்
மனிதம் நெருக்குறும்; உருவழியும்.
இன்று
வெறுப்புடன் புரிகிறேன்
இப்புற நிலைகளை.
17.10.70
நிச்சயமின்மை
நேற்று
அங்கும் இங்கும் பலர்
கொண்டுசெல்லப் பட்டனர்:
உனக்கும் எனக்குங்கூட
இது போல் நிகழலாம்.
திரும்பிவருவோமா?
மறுபடியும் நாளை
சூரியனைக்காண்போமா?
ஒன்றும் நிச்சயமில்லை,
எமதிருப்பு
'அவர்களின்' விருப்பில்
15.7.79
புதிய சப்பாத்தின் கீழ்
சமாந்திரமாய்ச் செல்லும்
காிய தார் றோட்டில்,
நடந்து செல்கிறேன்.
கண்களில்,
பிரமாண்டமாய் நிலைகொண்டு
கறுத் திருண்ட
டச்சுக் கற் கோட்டை;
மூலையில்,
முன்னோரைப் பய முறுத்திய
தூக்குமரமும் தௌிவாய்.
பரந்த புற்றரை வெளியில்
துவக்குகள் தாங்கிய
காக்கி வீரர்கள்:
அரசு யந்திரத்தின்
காவற் கருவி.
என்றும் தயாராய்
வினைத்திறன் பேண
அவர், அணிநடை பயின்றனர்:
சூழ்ந்த காற்றிலும்,
அச்சம் பரவும்.
முன்னூறு ஆண்டுகள் கழிந்தனவாயினும்
நிறந்தான் மாறியது:
மொழிதான் மாறியது:
நாங்கள் இன்றும்,
அடக்கு முறையின் கீழ்...
17.10.79
உன்னுடையவும் கதி...
கடற்கரை இருந்து நீ
வீடு திரும்புவாய்
அல்லது,
தியேட்டாில் நின்றும்
வீடு திரும்பலாம்.
திடீரெனத் துவக்குச் சத்தங் கேட்கும்,
சப்பாத்துகள் விரையும் ஓசையும் தொடரும்:
தெருவில் செத்து நீ
வீழ்ந்து கிடப்பாய்
உனது கரத்தில் கத்திமுளைக்கும்:
துவக்கும் முளைக்கலாம்!
'பயங்கர வாதியாய்ப்'
பட்டமும் பெறுவாய்,
யாரும் ஒன்றும் கேட்க ஏலாது.
மௌனம் உறையும்:
ஆனால்
மக்களின் மனங்களில்,
கொதிப்பு உயர்ந்து வரும்.
அறிந்து அறியாதது!
"கன்னடர்கள் தமிழர்களை
வெளியேறச் சொல்கிறாராம்:
சிங்களரும் சொன்னால்
என்ன செய்வதாம்"--
தர்மிஷ்டர் கேட்கிறார்!*
தமிழர்களை மட்டுமா
மலையாளி களையும்தான்
போகச் சொல்லுகிறார்
கன்னடர்கள்!
கன்னடத்துக்குத்
தமிழர்கள் போனவர்கள்:
மலையாளி களும்,
அப்படித்தான்.
ஆனால்,
எங்கிருந்து நாம் வந்தோம்?
விஜயனுக்கும் முன்னிருந்தே
இங்கே இருக்கிறோம்.
தர்மிஷ்டர்,
வரலாறு படிக்கணும்!
*ஆனைமடுவில் ஜனாதிபதியின் பேச்சு.
25.3.81
எனது வீடு
அவர்கள் சொல்லினர்
இந்தவீடு,
எனக்குச் சொந்தமில்லை யென.
வெறுப்பு வழியும் பார்வையால்,
வீசி யெறிந்த
சொல் நெருப்பினால்
பல முறை சொல்லினர்,
இந்த வீடு
எனக்குச் சொந்தமில்லை யென.
நானும் உணர்கிறேன்
இப்போது,
இது என்னுடைய தில்லையென;
நாளை எனக்கு ஒன்றுமில்லை,
இன்றும் நிச்சயமற்றது.
எனது வீட்டுக்குச் செல்ல வேண்டும்:
நான், போவேன்!
3.11.81
போராளிகளும் இலக்கியக் காரரும்...
கிாீடங்கள் சூடிய கோமாளிகள்
பேனைகளோடு
'போஸ்கள்' தருகிறார்.
பக்கலில் நிற்பவரைப் புணரும் வேசிகள்
புத்தகங்கள் பிரசவிப்பர்,
முன்புறம்
கை யெழுத்துகளோடு.
முதுகெலும்புகளைத் தொலைத்தவர்கள்
ஓங்கி முரசறைகிறார்
பிரகடனங் களை!
விலாங்குகள்,
மனிதர்களெனக் கூறி
நீச்சலடிக் கின்றன.
அர்ப்பணிப்பிலும் அலைப்புறுதலிலும்
உழன்று சோர்ந்து 'மனிதர்'
'ஒளியாய் இருக்க'
மீண்டும் முனைவர்
அங் கொன்றும்,
இங் கொன்றுமாய்!
5.11.81
---------------------------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக