மூவரை வென்றான்
சிறுகதைகள்
Back
மூவரை வென்றான்
நா. பார்த்தசாரதி
முவரை வென்றான்
நா. பார்த்தசாரதி
தமிழ்ப் புத்தகாலயம்
11, சிவப்பிரகாசம் தெரு
(பாண்டி பஜார் மார்க்கெட் அருகே)
பாண்டி பஜார் : : தி. நகர், சென்னை-600 017
மூவரை வென்றான் (சிறுகதைத் தொகுப்பு) முதற் பதிப்பு : ஜனவரி, 1959 இரண்டாம் பதிப்பு : ஜூலை, 1977 மூன்றாம் பதிப்பு : ஏப்ரல், 1994 விலை : ரு. 18-00
MOOVARAI VENRAN novelletes by NAA. PARTHASARATHY (c) Sundaravai!i Parthasarathi 128 pages 10 pt. letters 10.5 kg. white printing box board binding 18x 12.5 cms TAMIl. PUTHAKALAYAM 11, Sivaprakasam Street Pondy Bazaar : T. Nagar Madras–600 017 Price Rs : 13-00
அச்சிட்டோர் : சின்ன நிலா அச்சகம் - மயிலாப்பூர். சென்னை-600 004
முன்னுரை
பழைய சோறும் ஊறுகாயும் சாப்பிட்டு வாழ்ந்த அந்தக் காலத்தில் தமிழ் நாட்டுச் சிற்றுார்களில் வீரம் விளைத்த திர ஆடவர்கள் பலர் வாழ்ந்தனர். உடல் வன்மையும், அறிவு வன்மையும் மிக்க அத்தகைய தீரர்களைப் பாத்திரங்களாகக் கொண்டு விறு விறுப்பான சம்பவங்களோடு பின்னப்பட்ட ஐந்து நெடுங்கதைகளைக் கொண்ட தாகும் இந் நூல்.
இதிலுள்ள கதைகள் ஏற்கனவே தமிழ் நாட்டின் சிறந்த இதழ்களில் வெளியானவை. இவற்றினை வெளியிட்டுக்கொள்ள இசைந்த ஆசிரியர்களுக்கு என் நன்றி.
நா. பார்த்தசாரதி
உள்ளே...
1. மூவரை வென்றான்
2. பெரிய மாயன் பொட்டல்
3. வெள்ளைத்தேவன் பாறை
4. தலைவெட்டிக்காடு
5. ஊசிக்கொண்டை மாயாண்டித்தேவன்
மூவரை வென்றான்
மதுரையிலிருந்து தென்காகி செல்லுகிற மங்கம்மாள் சாலையில் கல்லுப்பட்டி என்ற ஊருக்கும் ஸ்ரீவில்லிபுத்துாருக்கும் இடையில் ஒரு கிராமம் இருக்கிறது. சாலை தெற்கு வடக்காகச் செல்கிறது. சாலையின்மேல் மேற்கு நோக்கி நிறுத்தப்பட்டிருக்கும் ஒரு கைகாட்டி மரத்தில் ‘மூவரை வென்றான்-1 மைல் 4 பர்லாங்கு-’ என்று கறுப்புத் தார் பூசிய மரச்சட்டத்தில் வெள்ளை வார்னிஷால் பளிச்சென்று எழுதப்பட்டிருக்கும்.
நான் அடிக்கடி இந்தச் சாலை வழியே பஸ்ஸில் பிரயாணம் செய்கிறவன். ஏதோ ஒரு கிராமம் மேற்கே ஒன்றரை மைலில் இருப்பதாகவும், அந்தக் கிராமத்தின் பெயர்தான் அது என்றும் முதல் முதலாக நான் விசாரித்தபோது அந்த ஊரைப்பற்றி ஒரு அன்பரிடம் அறிந்து கொண்டேன்.
பெயரைப் படித்தால் அந்தப் பெயர் அப்படிப்பட்ட ஒரு குக்கிராமத்திற்கு ஏற்பட்டிருப்பதில் ஏதாவதொரு காரணமோ, கதையோ அடங்கியிருக்க வேண்டுமென்று நம்பினேன். நான். ‘மூவரை வென்றான்-’ என்ற அந்தப் பெயர் அமைந்திருக்கிற விதத்திலிருந்து, பூர்வ சரித்திர நிகழ்ச்சியால் ஏற்பட்டதாகவும் இருக்கலாம் என்றுகூடத் தோன்றியது. மேற்படி சாலையில் பிரயாணம் செய்யும் ஒவ்வொரு முறையும் என் மனதைக் கவர்ந்து கற்பனையை யும் சிந்தனையையும் கிளறச் செய்கிற அளவுக்கு ‘மூவரை வென்றான்’ முக்கியத்துவம் பெற்றுவிட்டான்.
‘அதிர்ஷ்டம்’ எப்படி வந்து வாய்க்கிறது. பாருங்கள்! ஒருநாள், நான் பிரயாணம் செய்து கொண்டிருந்த பஸ் என் மனோபீஷ்டத்தை நிறைவேற்ற விரும்பியோ என்னவோ தெரியவில்லை, இந்தக் கைகாட்டி மரத்தருகிலேயே நிரந் தரமாக நின்றுவிட்டது.
பஸ் கிளம்பாது என்பது உறுதியாகிவிட்டது. அப்போது மாலை நான்கு மணி. அதே கம்பெனியைச் சேர்ந்த மற்றொரு பஸ் மதுரையிலிருந்து புறப்பட்டு அந்த ‘ரூட்’டில் அந்த இடத்திற்கு வருவதற்கு இரவு எட்டரை மணி ஆகுமென்றும், அது வரை நாங்கள் காத்திருந்துதான் ஆகவேண்டும் என்றும் கண்டக்டர் கூறினார்.
“அந்த ஊரில் ஹோட்டல் இருக்கிறதா?” என்று விசாரித்துக்கொண்டு நாங்கள் ஏழெட்டுப் பேர் காப்பி சாப்பிடுவதற்காக ஒன்றரை மைல் தூரம் நடக்கத் தீர்மானித்துவிட்டோம். காப்பியையும் சாப்பிட்டுவிட்டு அந்த ஊரின் பெயர் விசேஷத்தையும் அறிந்துகொள்ளாமல் பஸ்சுக்குத் திரும்புவதில்லை என்று நான் மட்டும் எனக்குள் தனிப்படத் தீர்மானம் ஒன்றும் செய்துகொண்டேன்.
வாய்க்கால், வரப்புகளின் மேல் குறுக்கிட்டுச் சென்ற, மேடுபள்ளம் மிகுந்த வண்டிப் பாதையில் நடந்தோம்.
அந்தச் சின்னஞ்சிறு கிராமத்தில் ‘ஹோட்டல்’ என்ற பெயருக்குரிய போர்டு மாட்டாத கூரைக் குடிசையைக் கண்டுபிடிப்பதுதான் கஷ்டமாக இருந்தது. அது மட்டுமா? அங்கே காப்பி என்ற பெயரில் கிடைத்த திரவத்தைச் சாப்பிடுவதும் கஷ்டமாகத்தான் இருந்தது.
காப்பி என்ற பெயரில் எதையோ குடித்துவிட்ட திருப்தியில் மற்றவர்கள் எல்லோரும் கார் நின்ற இடத்திற்குக் கிளம்பிவிட்டார்கள். நீங்கள் போங்கள். நான் கொஞ்சம் இருந்து வருகிறேன்’ என்று அவர்களிடம் கூறிப் பின்தங்கி விட்டேன் நான்.
ஹோட்டல் வாசலில் இருந்த வெற்றிலைப் பாக்குக் கடையில் உட்கார்ந்து கொண்டிருந்த வயதான பெரியவர் ஒருவரை அணுகினேன். மெல்லப் பேச்சைக் கிளப்பினேன். என்னுடைய வெளுத்த உடைக்கும் கைக்கடியாரத்திற்கும் நகரத்துப் பாணியில் வெளிவந்த பேச்சுக்கும் மரியாதை - கொடுக்க எண்ணினார் போலும் அந்தப் பெரியவர். எனக்கு வேண்டிய விஷயமோ அவருடைய பதிலில் இருந்தது.
“சாமி அது ஒரு பழைய கதைங்க... பொழுதிருந்தா இங்கனே குந்திக் கேளுங்க, சொல்றேன்.”
சந்தோஷம் பெரியவரே. அதைத் தெரிந்துகொள்ள் வேண்டும் என்றுதானே நான் இங்கே வந்தேன். சொல்லுங்கள் கேட்கிறேன்.”
ஆவலோடு கடை வாசலில் போட்டிருந்த நீளமான பெஞ்சை மேல் துண்டால் தட்டிவிட்டு உட்கார்ந்தேன் நான்.
“அதுக்கென்னங்க? தாராளமாய்ச் சொல்றேன்... வெத்திலை, பாக்கு, பொவையிலை, சோடா ஏதாச்சும் வேணுமுங்களா?”
பெரியவர் கதையை இனாமாகச் சொல்ல விரும்பவில்லை என்று குறிப்பாகத் தெரிந்துகொண்டேன். எனக்கிருந்த ஆத்திரத்தில் எப்படியாவது கதை வந்தால் போதுமென்றிருந்தது.
“எல்லாம் கொடுங்கள்! பெரியவரே!” என்று ஒரு முழு எட்டனாவை எடுத்து நீட்டினேன். பெரியவர் என்னை ஒரு தினுசாக வியப்புத் தோன்றப் பார்த்தார். வெற்றின்ல், பாக்கு, புகையிலை, ஸோடா எல்லாம் பெஞ்சியில் எடுத்து வைத்தார். நான் ஸோடாவை மட்டும் குடித்தேன்.
கதை கேட்கத் தயாராகிற பாவனையாகப் பெஞ்சியில் சப்பணங்கூட்டி நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டேன். “சகோதர சகோதரிகளே!” என்று கூறிப் பேச்சு ஆரம்பிப்பதற்கு முன்னால் மேடைப் பேச்சாளர் கனைத்துக் கொள்ளுவார் பாருங்கள், அந்த மாதிரி ஒரு கனைப்புக் கனைத்துவிட்டுப் பெரியவர் கூறத் தொடங்கினார்.
அவருடைய தமிழ் மிகவும் கிராமியமாக இருப்பதால் இலக்கண சுத்தமான நடையில் மாற்றி உங்களுக்கு அதை நான் சொல்லிவிடுகிறேன். அந்தக் கிழவர் கூறியது எட்டனா விலைக்குத் தயார் செய்த கற்பனைச் சரக்கோ, அல்லது உண்மையேதானோ, எனக்குத் தெரியாது. அதற்கு நான் உத்திரவாதமும் அளிக்க முடியாது. இவ்வளவு கற்பனைத் திறன் இருக்குமானால் அவர் ஏன் வெற்றிலைக்கடை வைக்க வேண்டும், பாவம்!
***
இராணி மங்கம்மாள் காலத்தில் வீரமானியமாகக் கிடைத்த கிராமம் இது.‘வீரமல்லுத் தேவன்’ என்ற மறவர் குல வீரனே இதை முதன் முதலில் வீரமானியமாகப் பெற்றவன். இப்போது இந்த ஊரில் குடியிருப்பவர்களில் பெரும்பாலோர் அவனுடைய வம்சாவளியைச் சேர்ந்த, மறவர்கள்தாம்.
மதுரைச் சீமையிலே மங்கம்மாள் ஆட்சி சீரும் சிறப்புமாக நடந்தவரை தனத்குக் கிடைத்த இனாம் கிராமத்தை, வீரமல்லனும் சுதந்திரமாக அனுபவிக்க முடிந்தது. மங்கம்மாள் ஆட்சி ஒடுங்கிப் போனபோதுதான், இனாம் சொத்தாகப் பெற்ற வீரமானியத்தைச் சுதந்திரமாக அனுபவ பாத்தியதை கொண்டாடுவதற்குத் தடைகளும் விரோதங்களும் ஏற்பட்டன. தடைகளையும் விரோதங்களையும் ஏற்படுத்தியவர்களோ ஆள் பலம் உள்ள ஜமீன்தார்கள். வீர மல்லனோ, கேவலம் ஒரு சிறு கிராமத்தின் தலைக்கட்டு நாட்டாண்மைதான்.
இங்கே மேற்குத் திசையிலுள்ள மலைத்தெர்டரில் உற்பத்தியாகி வரும் கன்னிமாலை ஆறு என்று ஓர் நதி பாய்கிறது. மூவரை வென்றான் கிராமத்தையும் இதன் தெற்கே இரண்டரை மைல் தொலைவில் இருக்கும் நத்தம்பட்டி என்ற ஜமீனையும் நடுவே பிரித்துக் காட்டும் எல்லையாக ஓடியது. இந்தக் கன்னிமாலையாறு. ஆற்றின் வடகரையிலிருந்து. வீரமல்லனுக்குரிய இனாம் நிலம் தொடங்குகிறது; தென் எல்லையிலிருந்து நத்தம்பட்டி ஜமீன் நிலம். மூவரை வென்றான் கிராமம் வீரமல்லனுக்கு மானியமாகக் கிடைத்த நாளிலிருந்தே, நத்தம்பட்டி ஜமீனுக்கும் அவனுக்கும் எத்தனையோ சில்லறைத் தகராறுகள் ஆற்றுத் தண்ணிர் விஷயமாக ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் மதுரைச் சீமையிலிருக்கும் மங்கம்மாள் ஆட்சியின் அத்துக்குப் பயந்து நத்தம்பட்டி ஜமீன் அவனிடம் அதிகமாக வம்பு வைத்துக் கொள்ள அஞ்சியது. வீரமல்லனுடைய இனாம் நிலங்களுக்காக ஊரின் மேற்கே ஒரு பெரிய கண்மாய் அமைந்திருந்தது. அதேமாதிரி நத்தம்பட்டி ஜமீன் நிலங்களுக்காக அந்த ஊருக்கு மேற்கே மூன்று பெரிய கண்மாய்கள் அமைந்திருந்தன. அது பெரிய ஜமீன். அதனால் மூன்று கண்மாய்கள் தண்ணீர் வசதிக்குப் போதாது. மழைகாலத்தில் கன்னிமாலை ஆற்றில் வருகின்ற அளவற்ற தண்ணீர்ப் பிரவாகத்தைக் கொண்டுதான் வீரமல்லனின் ஒரு கண்மாயும், நத்தம்பட்டி ஜமீனின் மூன்று கண்மாய்களும் நிரம்பியாக வேண்டும்.
இனாம் கிராமமாக விடப்படுவதற்குமுன் ‘மூவரை வென்றான்’ பகுதி தரிசு நிலமாகக் கிடந்ததனால், ஆற்று நீர் முழுவதையும் நத்தம்பட்டி ஜமீன் பூரணமாக உரிமை கொண்டாடி வளமுற்றுக் கொழுத்துக் கொண்டிருந்தது. ஜமீன் நிலங்களில் இரண்டு போகம் மூன்று போகம் விளைவுக்குத் தண்ணிர் கண்டது. இந்த ஏகபோக உரிமை நிலைக்க வில்லை.
துரதிர்ஷ்டவசமாகவோ அல்லது அதிர்ஷ்டவசமாகவோ தெரியவில்லை - விரமல்லன் கண்மாய் வெட்டியபோது ஆற்று மட்டத்தைவிடப் பள்ளமாக அமைந்து விட்டது, அவன் கண்மாய்.
இதன் விளைவு? ஆற்றுத் தண்ணீரில் பெரும் பகுதி ‘மூவரை வென்றான்’ கண்மாயில் பாய்ந்து அதை நிரப்பி விட்டு வடிகால் வழியே கலிங்கல் மட்டத்தைக் கடந்து கிழக்கேயுள்ள வேறு ஊர்களைச் சேர்ந்த கண்மாய்களுக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டது. காட்டாறுதானே? மேற்கே மலையில் மழை பெய்தால் தண்ணீர் கரை கொள்ளாமல் பொங்கி வரும். இல்லையென்றால் வறண்டு போகும். வீரமல்லனின் இனாம் கிராமத்தில் சாகுபடி நிலங்கள் மிகவும் குறைவுதான், ஒரு முறை கண்மாய் பூரணமாக நிரம்பினாலே இரண்டு மகசூலுக்குக் குறையாமல் வரும்.
நத்தம்பட்டி ஜமீன் நிலப் பரப்போ மிகப் பெரியது. கன்னிமாலையாற்றின் தண்ணிரால் ஜமீனின் மூன்று கண்மாய்களும் இரண்டு முறை நிரம்பினாலும் ஜமீன் நிலங்களுக்குப் போதாது. இப்போதோ, வீரமல்லன் கண்மாய் வெட்டியதன் விளைவாக ஜமீன் கண்மாய்கள் ஒருமுறை நிரம்புவதே கஷ்டமாயிற்று.
அப்போது அந்தத் தலைமுறையில் நத்த்ம்படடி ஜமீன்தாராக இருந்தவர் வீரமருதுத் தேவர் என்பவர். முன்கோபமும், ஆத்திரமும், எதையும் யோசிக்காமல் பேசுவதும் செய்வதுமாக அமைந்த சுபாவமுடையவர். வீரமல்லனை நேரில் கூப்பிட்டனுப்பி அவர் தம் தேவையைக் கூறியிருந்தால் அவனே ஒப்புக்கொண்டிருப்பான். அப்படிச் செய்யாமல் வீம்பு பிடித்த ஜமீன்தார் நேரடி நடவடிக்கைகளில் இறங்கினார்.
ஆற்றில் மேற்கே வெகுதூரத்தில் அணைகட்டி, வீரமல்லனின் கண்மாய்க்குத் தண்ணிரே போகாதபடி செய்தார். கூலிக்குக் கொள்ளைக்காரர்களைப் பிடித்து ‘மூவரை வென்றான்’ கிராமத்து இனாம் நிலங்களில் விளைந்து கிடந்த பயிர்களை இரவோடிரவாக அறுத்துவரச் செய்தார். ‘மூவரை வென்றான்’ கண்மாயில் மடைவாய்களையும்; வடிகால்களையும், வாய்க்கால்களையும் சிதைத்து அழித்தார். வீரமல்லன் சில நாளைக்குப் பொறுத்திருந்தான்.
***
இவைகள் எல்லாம் நடக்கும்போது மதுரைச் சீமையில் மங்கம்மாள் ஆட்சி ஒய இருந்த சமயம். சாது முரண்டினால் காடு கொள்ளாது என்பார்கள். பொறுமையாக இருந்த வீரமல்ல்னுக்கும் ஒரு நாள் ஆத்திரம் வந்தது. மதுரைச் சீமையில் வேறு வகையான தொல்லைகளுக்கு இலக்காகியிருந்த மங்கம்மாள் ஆட்சியின் துணையை அப்போது எதிர்பார்க்க விரும்பவில்லை அவன்.
வீரமல்லன் ஒரு நாள் துணிந்து தனி ஆளாக நத்தம்பட்டி ஜமீன் மாளிகைக்குச் சென்றான்; ஜமீன்தாரைச் சந்திக்க வந்திருப்பதாகச் சொல்லி அனுப்பினான். ‘வீரமல்லன் தன்னைப் பார்க்க வந்திருக்கிறான்’ என்பதைக் கேள்விப் பட்ட உடனே குடல் நடுங்கியது மருதுத் தேவருக்கு. “ஜமீன்தார் கையாலாகாத வெறும் பயல்களை எல்லாம் பார்க்கிற வழக்கம் இல்லை” என்று பயத்தை மறைத்துக் கொண்டு பதில் சொல்லி அனுப்பினார்.-
இந்தப் பதில் வீரமல்லனிடம் கூறப்பட்டது.
“ஓஹோ பட்டப்பகலில் வாசல் வழியே அனுமதி கோரி வந்தால் உங்கள் ஜமீன்தார் சந்திக்கிற வழக்கம் கிடையாதா? சரி..வரவேண்டிய நேரத்தில், வரவேண்டிய வழியாக, அவர் விரும்பாவிட்டாலும் விரு அவரை வந்து சந்திக்கிறேன் என்று சொல்.”
வாயிற்காவலனிடம் வீரமல்லன் ஆத்திரமாகக் கூறி விட்டுச் சென்ற இந்த வார்த்தைகளை அவனே புரிந்து கொள்ளவில்லை. ‘ஏதோ ஆத்திரத்தில் உளறிவிட்டுப் போகிறான், இதைப் போய் ஜமீன்தாரிடம் சொல்லுவானேன்?’ என்று பேசாமல் இருந்துவிட்டான். வீரமல்லனை அவமானப்படுத்தி அனுப்பிவிட்டோம் என்று இறுமாந்திருந் தார் ஜமீன்தார்.
***
அதே நாள் இரவு, ஒன்பது நாழிகை, ஒன்பதரை நாழிகை சுமாருக்கு, ஜமீன்தார் மருதுத் தேவர் நிம்மதி யான உறக்கத்தை நாடி மாளிகையின் மேல் மாடியில் இருந்த சயன அறைக்குச் சென்றார்.
கட்டிவில் போய்ப் படுத்துப் போர்வையை இழுத்து விட்டுக் கொண்டிருந்தவர் யாரோ அறைக் கதவை மூடித் தாழிடுகின்ற ஓசை கேட்டுத் துள்ளி எழுந்தார். அவர் கண்கள் அவரை ஏமாற்றுகின்றனவா? இல்லையானால் வெறும் பிரமையா? கனவா?
கதவுத் தாழ்ப்பாளைப் போட்டுப் பூட்டிவிட்டு வீரமல்லன் அவர் எதிரே நின்று கொண்டிருந்தான். அவன் இதழ்களில் குறும்புத்தனமும் அலட்சிய பாவமும் நிறைந்த புன்னகை தவழ்ந்துகொண்டிருந்தது. ஜமீன்தாருக்குக் கை கால்கள் வெடவெடத்தன. புலியைக் கண்ட பூனையானார் அவர்.
“ஜமீன்தார்வாள்! நான்தான் வீரமல்லன்! உங்களைச் சந்திப்பதற்கு இந்த நேரம்தான் எனக்கு வாய்த்தது. உங்களுடைய உறக்க நேரத்தில் குறுக்கிட்டதற்கு அடியேனை மன்னிப்பீர்களோ?” என்று வீரமல்லன் அலட்சியமாகச் சிரித்தான். கம்பீரமான தோற்றத்தோடு பின்னால் கையைக் கட்டிக்கொண்டு அவன் நின்ற விதமே ஜமீன்தாரை மலைத்துப் போகும்படிச் செய்தது.
“நீ வீரமுள்ள மறவனாக இருந்தால் மாற்றான் மாளிகையில் திருடனைப்போல் நுழைந்திருப்பதற்காக வெட்கப்பட வேண்டும்” என்று தைரியத்தைக் கஷ்டப்பட்டு வரவழைத்துக் கொண்டு கூறினார் ஜமீன்தார்.
“வீரனைப்போல் நுழைய முயன்றேன். ‘ஜமீன்தார் வாள்’ மறுத்துவிட்டார். என்னால் பொறுக்க முடியவில்லை. இனியும், கொள்ளை கொடுப்பதற்கும் விளைந்த பயிரைப் பறிகொடுப்பதற்கும் என்னுடைய இனாம் கிராமமும் நானும் தயாராக இல்லை. இரண்டிலொன்று தீர்த்துக் கட்டிக் கொண்டு போவதற்குத்தான் இப்போது இப்படித் திருடனைப் போல வந்திருக்கிறேன்.”
“உன்னுடைய இனாம் கிராமத்தில் திருடர்கள் பயிரை. அறுத்துக்கொண்டு போவதற்கும் கொள்ளையடிப்பதற்கும் நானா பொறுப்பு? என்னைத் தேடிவர வேண்டிய காரணம்?”
“ஒகோ! அப்படியா? ஜமீன்தார் வீரமருதுத் தேவரே! நின்று நிதானித்துப் பேசும். வீரமல்லனை நீர் அவ்வளவு சுலபமாக ஏமாற்றிவிட முடியாது. கன்னிமாலையாற்றில் அணை போட்டுத் தண்ணீரை அடைத்து வைத்திருப்பதும் கொள்ளைத் தொழிலுக்குக் கூலிப்படை தயார் செய்து என் கிராமத்தின் மேல் ஏவி விடுவதும் உம்முடைய திருவிளையாடல்தான் என்பதை நான் அறிவேன்.”
“நீ மட்டும் பெரிய யோக்கியனோ? புதிதாகக் கிடைத்த இனாம் கிராமத்துக்குக் கண்மாய் வெட்டுகிறேன் பேர் வழியே என்று ஒரே பள்ளமாக வெட்டி ஏற்கெனவே இருக்கும் என் கண்மாய்களுக்குத் தண்ணீர் வரவிடாமல் பாழ் செய்வது உன் திருவிளையாடல்தானே?”
“வீரமருதுத் தேவரே! நீர் கூறுகிற குற்றத்தை வேண்டுமென்றே நான் செய்யவில்லை என்பதை நீர் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். ஏதோ கண்மாய் வெட்டினேன். அது ஆற்று மட்டத்தைவிடப் பள்ளமாக அமைந்து விட்டது. நீங்கள் ஒரு வார்த்தை கண்ணியமான முறையில் என்னிடம் கூறியிருந்தால் நானாகவே பள்ளத்தைத் துார்ப்புதற்கு ஏற்பாடு செய்திருப்பேன். அதை விட்டுவிட்டு நீங்கள் என்னிடமே ஆழம் பார்க்கத் தொடங்கிவிட்டீர்கள். நீரும் மறவர்; நானும் மறவன்தான்.”
“இந்தப் பயமுறுத்தல் எல்லாம் என்னிடம் பலிக்காது தம்பீ! என் ஜமீனுக்கு முன்னால் உன்னுடைய கிராம்ம் கடுகுக்குச் சமம். நீ என்னிடம் வாலாட்டினால் உனக்குத் தான் ஆபத்து”.
வீர்மல்லன் இதைக் கேட்டுக் கலகலவென்று வாய் விட்டுச் சிரித்தான்.
“உம்முடைய நத்தம்பட்டி ஜமீன் என்னுடைய இனாம் கிராமத்தைவிடப் பெரியதாக வேண்டுமானால் இருக்கலாம்; ஆனால் ஒன்று மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். வீரமல்லனும் அவனுடைய இனாம் கிராமும் மனம் வைத்தால் உம்மை இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிட முடியும். ஜாக்கிரதை ஞாபகமிருக்கட்டும்!”
“யாரிடம் காட்டுகிறாய் இந்தப் பூச்சாண்டி? தேவ தானம் ஜமீன் மேற்கேயும், சாப்டூர் ஜமீன் வடக்கேயும் எனக்கு உதவி செய்ய எந்த நேரமும் தயாராக இருக் கின்றன. நீ மட்டும் எங்கள் மூன்று பேரையும் வென்று காட்டு, உன்னால் முடிந்தால் இந்த நத்தம்பட்டி ஜமீனையே உனக்கு ஜாரி செய்துவிட்டுச் சந்நியாகி விடுகிறேன் நான்.”
“நீங்கள் வணங்கும் குலதெய்வத்தின்மேல் ஆணையாக, உங்களைப் பெற்ற தாயின் பத்தினித்தன்மைமேல் ஆணையாக நீங்கள் இதைச் செய்வீர்களா?”
“எங்கள் மூன்று பேரையும் நீ வென்றுவிட்டால் கண்டிப்பாக இதை நான் செய்கிறேன். நாங்கள் வென்று விட்டாலோ நீ உன்னுடைய இனாம் கிராமத்தை எனக்கு. ஜாரி செய்துவிட்டுச் சந்நியாசியாகப் போகவேண்டும்: சம்மதந்தானா?”
“ஆகா! கண்டிப்பாக.”
“வீரமல்லா! யோசித்துப் பேசு. நாங்கள் மூன்று. பெரிய ஜமீன்தார்கள். நீயோ ஒரு சிறு கிராமத்தின் இனாம்தார். எறும்பு. யானையோடு பந்தயம் போடலாமா?”
‘வீண் பேச்சு எதற்கு மருதுத் தேவரே! நாளை மறு நாள் இராத்திரி ஏழரை நாழிகையிலிருந்து பத்தரை நாழிகை வரை உங்களுக்கு நேரம் தருகிறேன். அந்த மூன்று நாழிகை நேரத்தில் தெற்கேயிருந்து நீங்களும், வடக்கேயிருந்து சாப்டூர் ஜமீன்தாரும், மேற்கேயிருந்து தேவதானம் ஜமீன் தாரும், அவரவர் ஆட்களோடு என் இனாம் கிராமத்து. எல்லைக்குள் நுழைய முயற்சி செய்யவேண்டியது. முடிந்தால் உங்களுக்கு வெற்றி; முடியாவிட்டால் எனக்கு வெற்றி.”
“அது சரிதான்! ஆனால் மூன்று நாழிகைக்குள் என்று நீ நிபந்தனை போடுவதன் சூக்ஷமம் என்ன?”
“சூசுமம் ஒன்றுமில்லை! நீங்கள் மூன்று பெரிய ஜமீன் தார்கள் மூன்று திசையிலிருந்து தாக்க முயலுகிறீர்கள் நான் ஒருத்தனாகச் சமாளிக்க வேண்டுமே! அதனால்தான் இந்த நிபந்தனை.”
“சரி, அப்படியே வைத்துக்கொள்ளேன். மூன்று விநாடியில் உன் எல்லைக்குள் நுழைந்துவிட முடியுமே! மூன்று நாழிகைக்குள் முந்நூறு தடவை நுழையலாமே? எப்படி நிபந்தனை போட்டால் என்ன? தோற்றுச் சந்தியாசியாகப் போவதென்னவோ நீதான்...”
“முடிவு எப்படியோ? சந்நியாசியாக யார் போகிறோமோ அதை இப்பொழுதே பேசுவானேன்? நிபந்தனைகளைப் பரஸ்பரம் நாம் எழுத்து மூலம் எழுதிக் கொள்ள வேண்டும்.”
“அதற்கென்ன? என் பந்தயத்தையும் நிபந்தனையையும் நாளைக்கே நான் செப்புப் பட்டயத்தில் எழுதிக் கொடுக்கிறேன். நீ?...”
“நானும் நாளைக்கே செப்புப் பட்டயத்திலே எழுதிக் கொடுக்கிறேன்.”
“இது சத்தியம்தானா, வீரமல்லா!”
“நாளைக் காலையில் செப்புப் பட்டயத்தோடு வருகிறேன்.”
கூறிவிட்டு இருளில் கதவைத் திறந்துகொண்டு, தான் திருட்டுத்தனமாக எந்த வழியே வந்தானோ அதே வழியாக இறங்கிச் சென்றான் வீர்மல்லன்.
***
மறுநாள் நத்தம்பட்டி ஜமீந்தார் ஜமீன் முத்திரையும். கையொப்பமும் அமைந்த செப்புப் பட்டயமொன்றைத் தயார் செய்தார். அது வீரமல்லனிடம் கொடுக்கப்பட்டது. அதேபோல் வீரமல்லனின் கையொப்பமிட்ட செப்புப் பட்டயம் ஒன்று ஜமீந்தார் வீரமருதுத் தேவரின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பட்டயங்களும் முறையே: பின்வருமாறு அமைந்திருந்தன.
ஜமீந்தார் வீரமல்லனுக்கு
அளித்த பட்டயம்
இந்த ஜமீனுக்கு அருகிலுள்ள வீரமல்லனின் இனாம் கிராமத்தின் எல்லைக்குள் நாளை இரவு ஏழரை நாழிகையி விருந்து பத்தரை நாழிகைக்குள் நானும் என்னுடைய சக ஜமீன்தார்களும் திசைக்கொருவராக நுழைந்து விட் டால், வீரமல்லன் தன் கிராமத்தை எனக்கு ஜாரி செய்து விட்டுச் சந்நியாசியாகப் போகவேண்டியது. மேலே குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட மூன்று நாழிகை நேரத்திற்குள், நாங்கள் மூவரும் வீரமல்லனின் கிராம எல்லைக்குள் நுழையாமற்போனால், நான் என்னுடைய நத்தம்பட்டி ஜமீனை வீரமல்லனுக்குக் கொடுத்துவிட்டுச் சந்நியாசியாகப் போவேனாகுக.
இப்படிக்கு, வீரமருதுத் தேவர்,
நத்தம்பட்டி, ஜமீன்தார்.
ஜமீந்தாருக்கு வீரமல்லன்
அளித்த பட்டயம்
என்னுடைய இனாம் கிராமத்துக்கு அருகிலுள்ள நத்தம்பட்டி ஜமீந்தாரும் அவருக்கு வேண்டிய சக ஜமீன்தார்களும் நாளை இரவு ஏழரை நாழிகையிலிருந்து பத்தரை நாழிகைக்குள் எனது கிராம எல்லைக்குள் நுழைந்து விட்டால், என் கிராமத்தை நத்தம்பட்டி ஜமீந்தார் வீரமுத்துத் தேவருக்கு ஜாரி செய்துவிட்டு நான் சந்நியாசியாகப் போவேனாகுக. ஜமீன்தார்கள் என் கிராம எல்லைக்குள் குறிப்பிட்ட மூன்று நாழிகைக்குள் நுழையாவிட்டால், நத்தம்பட்டி ஜமீனை எனக்கு ஜாரி செய்துவிட்டு வீரமருதுத்தேவர் சந்நியாசியாகப் போக வேண்டும்.
இப்படிக்கு, வீரமல்லன்.
ஃஃஃ
பட்டயம் தன் கைக்கு வந்த உடனேயே தேவதானம், சாப்டுர், ஆகிய இரு ஜமீன்தார்களுக்கும் தன் பக்கம் உதவினால் வீரமல்லனுடைய இனாம் கிராமத்தைக் கைப்பற்றிப் பங்கு தருவதாகச் செய்தி அனுப்பினார் நத்தம்பட்டி ஜமீன் தார் வீரமருதுத்தேவர். ஜமீன்தார்கள் இருவருமே உதவச் சம்மதித்தனர்.
குறிப்பிட்ட மூன்று நாழிகை நேரத்தில் தான் வடபுறமிருந்து எல்லைக்குள் நுழைய முயலுவதாகச் சாப்டூர் ஜமீன் தாரும், மேற்குப் புறமிருந்து நுழைவதாக தேவதானம் ஜமீன்தாரும், நத்தம்பட்டி ஜமீன்தாருக்கு உடன்பட்டிருந்தனர்.
‘எப்படியும் வீரமல்லன் இனாம் கிராமத்தைப் பறி கொடுத்துவிட்டுத் தோற்றுச் சந்நியாசியாகப் போவதைத் தவிர வேறு வழியில்லை’ என்றெண்ணி இறுமாந்து கிடந்தார் ஜமீன்தார் வீரமருதுத் தேவர். ‘மூன்று பேரில் யாராவது ஒருவர் எல்லைக்குள் நுழைந்தாலும் வெற்றி நமக்குத் தானே? என்பதே அவருடைய இறுமாப்புக்குக் காரணமாக இருந்தது. ஆனால் வீரமல்லன் தம்மைவிடச் சாமர்த்தியமாக நினைத்துச் சாமர்த்தியமாகச் செயலாற்றத் தெரிந்தவன் என்பதை அவர் மறந்துவிட்டார்.
அப்போது மழைக்காலமாகையினால் வீரமல்லனின் கண்மாய் நிறைந்திருந்தது.
முழுமையாக இல்லாவிட்டாலும், மேற்கே அடுக்கடுக்காக இருந்த நத்தம்பட்டி ஜமீன் கண்மாய்களும் முக்கால் பகுதி நிறைந்திருந்தன. கன்னிமாலை ஆற்றிலும் சுமாராகத் தண்ணிர் ஒடிக்கொண்டிருந்தது.
கன்னிமாலையாற்றைக் கடந்து வீரமல்லனின் இனாம். கிராமத்தை அடைய ஒரு பாலம் இருந்தது. ஆற்றில் பிரவாகம் அதிகமாகிவிட்டால் மேற்கேயிருந்தும் தெற்கேயிருந்தும் போக்குவரத்துத் தூண்டிக்கப்பட்டுவிடும். வீர மல்லனின் கண்மாய்க்கு வடிகால் வடபக்கம் இருந்தது. வடிகாலை உடைத்து விட்டுவிட்டால் வடக்கேயும் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டுவிடும். மூன்று திசையையும் விட்டால், கிழக்கே கூடி ஒரே ஒரு வழியாகத்தான் வரமுடியும்.
என்ன நோக்கத்தோடு செய்தானோ தெரியவில்லை? கிழக்கே கிராமத்து எல்லையை வளைத்து இரண்டடி உயரத்திற்குக் காய்ந்த விறகுகள், சுள்ளிகள், இலை தழைகள், வைக்கோல் இவைகளைக் குவித்து வைத்திருந்தான் வீர மல்லன். அது ஒரு குட்டிச் சுவர்போலக் கிழக்கே கிராமத்தைச் சுற்றி அமைந்திருந்தது.
பந்தய நாளில் போட்டிக்குரிய இரவு நேரம் வந்தது. விரமல்லனின் ஏற்பாடுகள் எல்லாம் கமுக்கமாகவும் இரகசியமாகவும் தந்திரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. அங்கங்கே காரியங்கள் நடக்கவேண்டிய இடங்களிலெல்லாம் அவனுடைய ஆட்கள் மறைந்து பதுங்கியிருந்தனர். இரவு ஏழு நாழிகையாயிற்று.
தெற்கே ஆற்றின் அக்கரையில் வீரமருதுத்தேவர் ஜமீன் ஆட்களை ஆயுத பாணிகளாக வைத்துக்கொண்டு காத்திருந்தார். மேற்கே, தேவதானம் ஜமீன்தாரும், வடக்கே சாட்டுர் ஆன்தரும் சரியாக ஆதே நேரத்திற்குத் தயாராக இருந்தார்கள். வீரமல்லனின் இனாம் கிராமத்தின் எல்லைக்குள் பாய மூன்று திசைகளிலும் ஜமீன் புலிகள் தயாராக நின்றுகொண்டிருந்தன! ஏழரை நாழிகை ஆகவேண்டியதுதான்! அதற்காகவே அவர்கள் காத்திருந்தனர்.
சரியாக ஏழேகால் நாழிகை ஆயிற்று. மூன்று திசைகளிலும் யாரும் எதிர்பாராத திடீர் மாறுதல் நிகழ்ந்தன. ஜமீன் புலிகளைத் திடுக்கிடச் செய்த மாறுல்கள் அவை.
இதற்கே நந்தம்பட்டியையும் விரமல்லனின் கிராமத்தையும் இணைத்த பாலம் நடுவே உடைக்கப்பட்டது. அதே சமயம் மேற்கே ஜமீனுக்குச் சொந்தமான மூன்று கண்மாய்களையும் யாரோ உடைத்துவிட்டார்கள். ஆற்றில் ஆள் இறங்க முடியாதபடி பிரவாகம் சுழித்தோடத் தலைப்பட்டது. வடக்கே வீரமல்லனின் கண்மாய் வடிகால் உடைத்துக் கொண்டு வெள்ளக்காடாயிற்று மூன்று திசையிலும் நின்ற மூன்று ஜமீன்தார்களும் அண்டமுடியாதபடி, கிராமத்தைத் தீவாக ஆக்கிவிட்டுச் சுற்றி ஒரே பிரவாகமாகப் பெருகி ஓடியது உடைப்பு வெள்ளம். மேற்கே நின்ற தேவதானம் ஜமீன் ஆட்கள் ஒரு வகையிலும் மீள வழியின்றி வெள்ளக் காட்டின் இடையே திகைத்து நின்றனர்.
வடக்கே இருந்த சாப்டுர் ஜமீன் ஆட்களும், தெற்கே இருந்த நத்தம்பட்டி ஜமீன் ஆட்களும் கிழக்குத் திசையில் கிராம எல்லைக்குள் நுழைவதற்காக் ஓடினார்கள்.
‘என்ன ஆச்சரியம்! கிழக்கே கிராம எல்லையைச் சுற்றி வளைத்துக்கொண்டு, நெருப்பு எரிந்துகொண்டிருந்தது, உள்ளே நுழைய இம்மியளவும் இடம் கிடையாது.
மூன்று திசையிலும் வெள்ளப் பிரவாகம் மறுநாள் காலைவரை ஒயவே இல்லை, நெருப்பு, முதல் நாள் இரவு பன்னிரண்டு நாழிகைக்குத்தான் அணைந்தது. தலைகீழாக நின்று பார்த்தும் ஜமீன்தார்களால் குறித்த மூன்று நாழி கைக்குள் வீரமல்லனின் கிராம எல்லையில் நுழைய முடிய வில்லை. உதவிக்கு வந்த ஜமீன்தார்கள் வருத்தத்தோடு திரும்பிப் போனார்கள். வீரமருதுத்தேவர் சந்நியாசியாகிப் போனார்.
செப்புப் பட்டய நிபந்தனைப்படி நத்தம்பட்டி ஜமீன் விரமல்லனுக்குக் சொந்தமாய்விட்டது. வீரமல்லன் அன்று சாமர்த்தியமாக தனியாக இருந்து மூன்று ஜமீன்தார் கை சூடியதால், அவன் பரம்பரையினர் வாழும் இந்தக் கிராமமும் பிற்காலத்தில் ‘மூவரை வென்றான்’ என்றே வழங்கப்படலாயிற்று. இன்றுகூட இவ்வூரின் மேற்கு எல்லையில் வீரமல்லனுக்கு ஒரு கோவில் இருக்கிறது. இவ்வூராருக்கு அவன் தான் குலதெய்வம். அவன் கோவிலில் அந்தப் பழைய செப்புப் பட்டயங்களும் வைக்கப்பட்டுள்ளன. இதுதான் ஐயா இந்த ஊருக்குப் பேர்வந்த கதை!
வெற்றிலை பாக்குக் கடைக் கிழவர் கதையை முடித்தார். பஸ்ஸுக்கு நேரமாகிவிட்டது. இன்னும் ஒன்றரை மைல் நடந்தாகவேண்டுமே? நான் அவரிடம் பாக்கிச் சில்லறை யைக்கூட வாங்கிக்கொள்ளாமல் விடைபெற்றுக் கொண்டு நடந்தேன். கற்பனையோ, நிஜமோ, அல்லது பொய்யோ, எனக்குப் பிடித்தமான அந்த ஊரின் பெயருக்கு அந்தக் கிழவர் காரணம் சொல்லி விட்டார். அவ்வளவு போதும். எனக்கு!
★
பெரிய மாயன் பொட்டல்
மங்கலக்குறிஞ்சி ஊரைச் சுற்றி அழகிய மலைத்தொடர்களும் பச்சைப்பசேரெனத் தோன்றிய வயல் வெளிகளும் சோலைகளும் பழத் தோட்டங்களும் நிறைய இருந்தன. ஆனால், இவற்றையெல்லாம்விட ஊருக்குக் கிழக்கேமலையடி வாரத்தில் வெட்ட வெளியாய்த் தோன்றிய அந்தச் சின்னஞ் சிறு பொட்டல்தான் என் மனத்தை அதிகமாகக் கவர்ந்தது.
இதனால் என்னுடைய ரஸிகத்தன்மையைப் பற்றி நேயர்கள் சந்தேகிக்க வேண்டாம். இயற்கை அழகின் நடுவே திருஷ்டி கழித்தது போலச் சூனியமாய் நின்ற அந்தப் பொட்டலின் பெயரும் அதைப்பற்றிக் கேள்விப்பட்ட கதையும்தான் என் மனத்தைக் கவர்வதற்குக் காரணமாக இருந்தன.
வெள்ளை நிறத்தில் உவர்மண் பரப்பாகப் பரந்து கிடந்த அந்தப் பொட்டலில் புல், பூண்டு கூட முளைப்பதில்லை. முதன் முதலாக நான் மங்கலக்குறிஞ்சிக்குப் போனபோது அந்தப் பொட்டலைப்பற்றி அவ்வூர்வாசி ஒருவரிடம் விசாரித்துத் தெரிந்து கொண்டேன்.
அவர், அதற்குப் பெயர் ‘பெரிய மாயன் பொட்டல்’ என்று எனக்குக் கூறினார். அந்தப் பெயர் என் மனத்தில் ஒரு கிளர்ச்சியை உண்டாக்கிற்று.
“இவ்வளவு அழகான ஊரில் மலைச் சிகரங்களுக்கும், மரகதப் பசும் பாய்களை விரித்தாற் போன்ற வயல் வெளிகளுக்கும் இடையே இந்தப் பொட்டல் விகாரமாக இருக்கின்றதே? இதில் ஏதாவது மரம், செடி, கொடிகளை, நட்டு வளர்த்தால் என்ன? ஒரு பார்க் அமைத்தாலும் நன்றாக இருக்குமே? உங்கள் ஊர்ப் பஞ்சாயத்துப் போர்டார் இதைக் கவனித்துச் செய்யக் கூடாதா?’ என்று அவ்வூர் வாசியிடம் கேட்டேன் நான்.
அவர் சிரித்துக்கொண்டே எனக்குப் பதில் கூறினார். அது பெரியமாயன் செத்த இடம். தப்பித் தவறிக் கள்ளிச் செடிகூட அங்கே முளைக்காதே! இன்றைக்கு நேற்றா அது இப்படி இருக்கிறது? நினைவு தெரிந்த நாளிலிருந்து எங்கள் தலைமுறையிலே அது இப்படிக் கிடக்கிறது. பாவம்; பஞ்சாயத்துப் போர்டார் என்ன செய்ய முடியும்? அந்தப் பொட்டலைப் பற்றிய கதையும் இந்த ஊர் ஐதீகமும் உங்களுக்குத் தெரிந்திருந்தால் நீங்கள் என்னைக் கேட்டிருக்கவே மாட்டீர்கள்.
“வாஸ்தவம்தான் எனக்கு அந்த விவரம் தெரியாதாகை யால் உங்களிடம் கேட்டேன். தெரிவிக்க வேண்டியது உங்கள் கடமை!” - நான் அந்த மனிதரின் வாயைக் கிளறினேன். அப்போது அந்த மங்கலக் குறிஞ்சி வாசியிடம் நான் கேள்விப் பட்டதைத்தான் இப்போது இங்கே விவரித்து எழுதுகிறேன். இது ஒரு ரஸமான கதை.
ஃஃஃ
மங்கலக்குறிஞ்சி ஒரு பள்ளத்தாக்குப் பிரதேசம். ஊரின் கீழ்ப்புறம் பிரம்மாண்டமான கோட்டைச் சுவர்போல இருந்த மலைத்தொடர் நீர்ப்பாசன வசதிக்கும் இயற்கை வளத்துக்கும் இருப்பிடமாக இருந்ததுபோல் கொள்ளைக் காரர்கள் பதுங்கி வாழ்வதற்கும் இடமாக இருந்தது.
மங்கலக் குறிஞ்சியைப்போலவே அந்தப் பள்ளத்தாக்கில் இன்னும் நான்கைந்து வளமான சிற்றுரர்கள் இருந்தன. மலை மேல் எங்கோ மறைந்து வசித்து வந்த ஒரு கொள்ளைக் கூட்டம் இந்த ஊர்களில் அடிக்கடி தன் கை வரிசையைக் காட்டி வந்தது. அப்போது-அதாவது இந்தக் கதை நடந்த தலைமுறையில் மங்கலக்குறிஞ்சியும் அதைச் சேர்ந்த ஊர்களும் ஜமீன் ஆட்சியில் இருந்தன.
இருண்ட அமாவாசை இரவுகளில் மலைமேலிருந்து தீவட்டிக் கொள்ளைக்காரர்கள் இறங்குவதும் நினைத்தபடி உயிர்களையும் பொருள்களையும் சூரையாடிவிட்டுப் போவதும் வழக்கமாக இருந்தது. கிங்கரர்களாயிருந்த ஈவிரக்கமில்லாக் கொள்ளைக்காரர்களிடம் மக்கள் பட்டபாடு கொஞ்ச நஞ்சமில்லை.
அப்போது ஜமீன்தாராக இருந்த விஜயாலய மருதப்பத் தேவர் குடியும் கூத்துமாக ஜமீன் மாளிகையை விட்டு வெளியேறாமல் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்ததனால் கொள்ளைக்காரர்களை எதிர்க்கவோ, அடக்கவோ, வலுவான எதிர்ப்பு இல்லாமல் போயிற்று.
சூரியன் மறைந்து இருள் சூழத் தொடங்கிவிட்டால் உயிரும், பொருளும், நிச்சயமில்லை என்று சொல்லும்படியாக இருந்தது. யார் யாருக்கு,உயிர் போகுமோ? யார் யாருடைய வீடு நெருப்புக்கு இரையாகுமோ? - ஒன்றும் உறுதியாக எண்ணுவதற்கும் இல்லை; சொல்லுவதற்கும் இல்லை. கொள்ளைக்காரர்கள் எங்கிருந்து எந்தத் திசை நோக்கி வருவார்கள்? எப்போது வருவார்கள்? எத்தனைபேர் வருவார்கள்? என்னென்ன கொடுமைகளைச் செய்துவிட்டுப் போவார்கள்?-இவைகளில் எதுவுமே அனுமானத்துக்கோ, சிந்தனைக்கோ, எட்டாத விஷயமாகத்தான் இருந்தது.
திடீரென்று ஊருக்கு மேற்கிலோ, கிழக்கிலோ, இருளின் நடுவே புத்து இருபது தீவட்டிகள் தெரியும். அதைத் தொடர்ந்து குதிரைகள் தடதடவென்று ஓடி வருகிற ஓசை கேட்கும். உடனே ஊரில் அத்தனை வீடுகளிலும் கதவடைக்கும் ஒசையும் அதையடுத்துச் சுடுகாட்டு அமைதியும் நிலவும். பின் அந்த இருள் செறிந்த இரவில் யார் யாருக்குப் பறிபோக வேண்டுமென்றிருக்கிறதோ, அவர்களுக்கெல்லாம் பறிபோகும்.
உயிர், உடைமை, கற்பு, எது கிடைத்தாலும் பறித்துக் கொள்ளத் தவறுவதில்லை, அந்தக் கொள்ளைக்காரர்கள் கூட்டத்துக்கும் அதன் அக்கிரமங்களுக்கும் தலைமை வகித்து நடத்தும் அயோக்கியன் ஒருவன் இருக்கிறான் என்பது எல்லோருக்கும் தெரியும். அவன் யாரென்றுதான் தெரியாது!
ஆனால் அயோக்கியன் தன் கூட்டத்தோடு வருவதும் கொள்ளையடித்துக் கொண்டு போவதும் ஒரு பெரிய மாயப் புதிராக இருந்ததே ஒழிய இனம் விளங்கவில்லை. அவனைப் பார்க்காமலேயே, அவன் இன்னாரென்று தெரிந்துகொள்ளாமலே ‘அவன் பெரிய மாயன்’, ‘அவன் பெரிய மாயன்’ என்று ஊரில் அவனைச் சொல்லிப் பழகி விட்டார்கள். இதன் விளைவாக முகம் தெரியாத அந்தத் திவட்டிக் கொள்ளைத் தலைவனுக்கும் பெரிய மாயன் என்ற பெயரே ஊரில் நிலைத்துவிட்டது. அவனுடைய பெயர் பொருத்தமாகத் தான் இருந்தது.
ஜமீன்தார் கவனிக்கவில்லை என்றால் மக்களுமா சும்மா இருந்து விடுவார்கள்? சிலரைப் பல நாள் ஏமாற்றலாம்: பலரைச் சில நாள் ஏமாற்றலாம் எல்லோரையுமே எப்போதுமே, ஏமாற்றி விட முடியுமா? வீடு வாசல், மாடு, மனை, சொத்து, சுகம் இவைகளெல்லாம் தொடர்ந்து பறிபோய்க் கொண்டே இருந்தால் யாருக்குத்தான் ஆவேசம் வராது?
ஜமீன்தாரிடம் முறையிட்டுப் பார்த்தார்கள். அவர் அந்த முறையீட்டை அக்கறையுடன் கேட்டதாகவே தெரிய வில்லை. மேலுக்கு ஏதேதோ சாக்குப் போக்குகளைக் கூறினார். பாராமுகமாக நடந்து கொண்டார்.
“அந்தக் கொள்ளைக் கூட்டம் கொலைக்கு அஞ்சாதது. நாம் வீணாக அவர்களை எதிர்த்து முரண்டினோமானால் நமக்குத்தான் கஷ்டங்கள் அதிகமாகும். பேசாமல் இந்த, அசட்டு எண்ணத்தை இப்போதே விட்டு விடுங்கள். எல்லாம். தானாகவே கொஞ்ச நாளில் ஒய்ந்துவிடும்” என்று பதில் கூறினார் ஜமீன்தார் விஜயாலய மருதப்பத் தேவர்.
அவருடைய பதில் எல்லோருக்கும் அதிருப்தியை உண்டாக்கியதோடல்லாமல் ஆத்திரத்தையும் உண்டாகிற்று. ஜமீன்தாருக்கென்ன! இதுவரை அவருடைய ஜமீன் சொத்துக்களிலோ, ஜமீன் மாளிகைக்குள்ளிருந்தோ, ஒரு சிறு துரும்பு கூடத் தீவட்டிக் கொள்ளைக்காரர்களால் களவாடப் பட்டதில்லை. செளக்கியமாக ஊரைப் பற்றிய கவலையே இல்லாமல் வாழ்கிறார்! ‘ஊரார் எக்கேடு கெட்டால் அதைப் பற்றி அவருக்கென்ன கவலை?’ என்று அங்கங்கே ஜனங்களிடம் ‘கசமுசல்’ கிளம்பி விட்டது. தீவட்டிக் கொள்ளைக்காரர்களிடம் இருந்த ஆத்திரத்தை விட ஜமீன்தார் மேல் தான் இப்போது ஊாரரின் ஆத்திரம் பெருகியிருந்தது.
ஊரில் வாய்ப் பேச்சிலும் காரியத் திறமையிலும் புத்திக் கூர்மையிலும் சிறந்த தலைக்கட்டு ஒருவர் இருந்தார். மங்கலக் குறிஞ்சியில் அவருக்கு நல்ல செல்வாக்கு இருந்தது. பலருக்கு அவரிடம் மதிப்பும் விசுவாசமும் இருந்ததனால் அவர் சொன்னபடி செய்யத் தயாராயிருந்தார்கள். அவர் தான் தெய்வச் சிலைத் தேவர். ஊரில் தீவட்டிக் கொள்ளைக்காரர்களின் நடமாட்டமும், தொல்லையும் பெருகப் பெருக அதை உடனடியாக ஒழித்துக்கட்ட வேண்டுமென்று முயன்ற பெருமை அவருக்கு உண்டு.
தெய்வச் சிலைத் தேவருக்கு வயது ஏறக்குறைய ஐம்பதுக்கு மேலேதான் இருக்கும். ஆள் என்னவோ இருபத்தைந்து வயதுக் கட்டிளங் காளை மாதிரிதான் ஒடியாடித் திரிவார். கட்டுமஸ்தான தேகமும், வைரம் பாய்ந்த நெஞ்சும் உடையவர் அவர். தீமையை அஞ்சாமல் தனித்து நின்று எதிர்க்கும் துணிவு அவருக்கு உண்டு. தெய்வச் சிலையார் ஒரு காரியத்தில் தலையிடுகிறார் என்றால் அந்தக் காரியத்தைப் பற்றி நினைக்க ஜமீன்தாருக்கே குலை நடுக்கம்தான். கையில் பிச்சுவாக் கத்தியுடன் அவர் நிமிர்ந்து நின்றால் மதுரை வீரசாமியின் பிரம்மாண்டமான சிலையைக் கண்ணெதிரில் நேரே உயிரோடு பார்ப்பது போலிருக்கும். நல்ல உயரமான ஆகிருதி, ஆண் சிங்கம் ஒன்று பிடரியைச் சிலிர்த்துக் கொண்டு நிமிர்ந்து முழக்கி நிற்பது போன்ற உடல் அமைப்பு. நீண்ட வள்ர்ந்த தலை முடியைக் கொப்பரைத் தேங்காய்ப் பருமனுக்குக் கோணல் கொண்டையாக வாரி முடிந்திருப்பார். அடர்ந்து வளர்ந்த நீண்ட புருவங்களின் கீழே கூரிய விழிகள் ஊடுருவிப் பார்க்கும் சக்தி வாய்ந்தவை. நீண்டு அகன்று பரந்த நெற்றியில் புருவங்கள் சந்திக்கும் கூடுவாய்க்கு மேலும் முன் நெற்றிக்குக் கீழும் வட்ட வடிவமாக ஒரு சந்தனப் பொட்டு விளங்கும். வெட்டரிவாள் நுனிகளைப்போன்ற மீசை அவருடைய முகத்தின் கம்பீரத்திற்கும் ஆண்மைக்கும். தனிச்சோபை அளித்தது.
மனிதரைப் பார்த்துவிட்டால் இவருக்கா ஐம்பது வயதுக்கு மேல் இருக்கும்? என்று வியப்ப்டைய நேரிடுமே ஒழிய நம்ப முடியாது விஜயாலய மருதப்பத் தேவரின் தகப்பனார் காலத்தில் ஜமீன் காரியஸ்தராக இருந்தார். தெய்வச்சிலையார். விஜயாலய மருதப்பத் தேவர் பட்டத்துக்கு வந்த பின்பும் சில காலம் அவரே காரியஸ்தராக இருந்தார். நாளடைவில் இளைய ஜமீன்தாரின் போக்கு விடலைத்தனமாக ஒழுங்கற்றிருப்பதையறிந்து கண்டிக்க முயன்றார். ஆனால், இளைய ஜமீன்தார் தெய்வச்சிலையாருடைய கண்டிப்பையோ, அறிவுரைகளையோ, சிறிதும் பொருட்படுத்தவில்லை. பொருட்படுத்தாமல் இருந்திருந்தால் கூடப் பரவாயில்லை. அவமானமும் அலட்சியமும் செய்யத் தலைப்பட்டார்.
தெய்வச்சிலையார் உயிரைவிட மானத்தையும் நேர்மை ஒழுக்கங்களையும் பெரிதாக மதிப்பவர். இளைய ஜமீன்தாரின் போக்குக்கும் தமக்கும் ஒத்துக்கொள்ளாது என்று உணர்ந்து காரியஸ்தர் பதவியிலிருந்து தாமாகவே விலகிக்கொண்டு விட்டார்.
அத்தகைய பழம்பெரும் வீரபுருஷர் இப்போது ஜனங்களின் பரிபூரணமான ஆதரவோடு தம்மால் முடியாதததைச் செய்யப் போகிறார் என்று கேள்விப்பட்டபோது ஜமீன்தாருக்கு அசூயை குமுறியது. நல்லது செய்யப் பொறுக்காத மனம் அவருக்கு. பிறர் செய்தாலும் அதைப் பொறுக்க மாட்டார். மங்கலக்குறிஞ்சியில் மட்டுமன்றிச் சுற்றுப்புறங்களில் இருந்த பிற ஜமீன் கிராமங்களிலும் இளைய ஜமீன்தாரைப்பற்றி இருந்த நம்பிக்கை முற்றிலும் அழிந்து விட்டது.
“தீவட்டிக் கொள்ளைக்காரர்கள் எங்கள் விடுவாசல், மனைவி மக்களைச் சூரையாடுகிறார்கள். இருட்டிவிட்டால் ஜமீன் கிராமங்களில் கொள்ளைத்தொல்லை சகிக்க முடிய வில்லை. இதற்கு ஏதாவது ஒரு வழி செய்யுங்கள்!” என்று புரிதாபத்தோடு முறையிடுபவர்களிடம், “சரிதான் உங்களுக்கு வேறு வேலை இல்லை. இதெல்லாம் சகஜம். இதற்குத் தான் இவ்வளவு பிரமாதமாக முறையிட ஓடிவந்துவிட்டீர்களோ? கொள்ளைக்காரர்கள் வந்தால் அதற்கு மீஜனும் ஜமீன்தாரும் என்ன செய்ய முடியுமாம்? எல்லாக் கஷ்டங்களையும் பொறுத்துக் கொண்டுதான் காலத்ன்தக் கடத்த வேண்டும்?” என்று நிராதரவான கல்மனத்தோடு பதில் சொல்லுகிற ஜமீன்தாரிடம் யார்தான் நம்பிக்கை வைக்க முடியும்?
நம்பிக்கை இழந்த ஜனங்களுக்கு நம்பிக்கையை வைப்பதற்கு ஒருபுகலிடம் தேவையாக இருந்தது. தெய்வச்சிலையார் அந்தப் புகலிடத்தை அளித்தார். தெய்வச்சிலையார் ஜனங்களின் ஆதரவோடு கொள்ளைக்காரர்களை ஒழிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் என்ற செய்தி இளைய ஜமீன்தாருக்கு எட்டியது.
ஜமீன்தார் விஜயாலய மருதப்பத் தேவரிடமிருந்து தாம் உடனே தெய்வச்சிலையாரைச் சந்தித்துப் பேச விரும்புவதாக அதிகாரத் தோரணையில் உத்தரவு வந்தது. அந்த உத்தரவைக் கேட்டதும் தெய்வச்சிலையாருக்கு ஏற்பட்ட கோபத்தில் ‘வரமுடியாது’ என்று மறுத்திருப்பார். கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்த்ததில் போய் என்ன விஷயம் என்றுதான் கேட்டுவிட்டு வருவோமே என்று தோன்றியது. தெய்வச்சிலையார் ஜமீன் மாளிகைக்குப் போனார், இளைய ஜமீன்தாரைச் சந்திப்பதற்காக.
ஜமீன்தாரிடமிருந்து அழைப்பு வந்ததும் தெய்வச் சிலையார் அதனை ஏற்றுக்கொண்டு சந்திக்கச் சென்றதும் பரமரகசியமாய் நடந்தன. சந்திக்க உத்தர விட்டவரையும் சந்திக்கச் சென்றவரையும் தவிர வேறு எவருக்கும் தெரியாது.
“சமூகத்தில் கூப்பிட்டு அனுப்பினீர்களாமே? இதோ வந்திருக்கிறேன்”-தெய்வச் சிலையார் ஜமீன்தாருக்கு முன் சென்று அவரை வணங்கிவிட்டு அடக்க ஒடுக்கமாக இப்படிக் கேட்டார். ஜமீன்தார் பதில் வணக்கம் செய்யவில்லை. தமக்கு முன் அடக்க ஒடுக்கமாக வணங்கி நின்ற அந்த முது பெரும் வீரரை அலட்சியமும் கடுகடுப்பும் தோன்ற ஏறிட்டுப் பார்த்தார்.
“நீங்கள்தான் தீவட்டிக் கொள்ளைக்காரர்களை அடக்கக் கிளம்பியிருக்கும் சூரப் புலியோ! ஜனங்களைக் கூடத் தயார் செய்கிறீர்களாமே?”
“தாங்களும் தங்கள் ஜமீன் அதிகாரமும் செய்ய முடியாத அல்லது செய்ய விரும்பாத காரியத்தை என் போன்ற தொண்டனும் ஜனங்களுமாவது செய்ய முயல்கிறோம். இதற்காக எங்களை வாழ்த்திப் பாராட்டவேண்டிய திருக்கத் தாங்கள் ஆத்திரப்படுவதின் அர்த்தம் விளங்கவில்லை” -தெய்வச் சிலையர் சற்று அமுத்தலாகவே பதில் கூறினார்.
“என் தகப்பனார் காலத்திலிருந்து இந்த அரண்மனை உப்பைத் தின்று வளர்ந்திருக்கிறீர்கள். இதற்குச் செலுத்த வேண்டிய நன்றியைக் கேட்கிறேன். இந்தக் கொள்ளைக் காரர்களைப் பிடிக்கும் முயற்சியில் நீங்கள் தலையிடுவதை இப்பேர்தே நிறுத்திவிட வேண்டும்...”
“அரண்மனைக்கு நான் செலுத்த வேண்டிய நன்றிக்கும். கொள்ளைக்காரர்களைப் பிடிப்பதற்கும் என்ன சம்பந்தம்? பார்க்கப்போனால் நீங்கள் பட்டத்துக்கு வந்ததிலிருந்து “ஜமீன் கிராமங்களுக்கு இடைவிடாமல் தொல்லை கொடுக் கும் இந்தக் கொள்ளைக்காரர்களை நான் பிடிக்க முயல்கிறேனே! அதுவே உங்களுக்கு நான் செலுத்தும் பெரிய நன்றி, அல்லவா?”
“தெய்வச்சிலைத் தேவரே! எனக்கு உம்மோடு அதிகம் பேசிக்கொண்டிருக்க நேரம் இல்லை. நான் பட்டத்துக்கு வந்ததிலிருந்து நீங்கள் பலவிதத்தில் என்ன்ோடு ஒத்துழைக்க மறுக்கிறீர்கள். உங்களுக்கு வயது ஐம்பதுக்கு மேல் ஆகி விட்டது. வயதுக்கு மீறிய காரியத்தில் ஈடுபட்டு உயிருக்கு ஆபத்தைத் தேடிக்கொள்ள வேண்டாம். அவ்வளவு தான் இப்போது என்னால் எச்சரிக்க முடியும்.”
“என் உயிரைவிட மங்கலக்குறிஞ்சி. மக்களின் வாழ்வு பெரிது. காளான் முளைத்தது போல் முளைத்து ஜமீன் கிராமங்களைச் சூறையாடிக்கொண்டிருக்கும் பெரிய மாயன் கொள்ளைக் கூட்டத்தைப் பிடிக்காமல் போனால் என். பெயர் தெய்வச்சிலைத் தேவர் இல்லை. எனக்குத்தான் வயசாகி விட்டது என் தைரியத்துக்கு இன்னும் வயசாகவில்லை.”
“நான் சொல்கிறேன்: நீர் இதைச் செய்யக்கூடாது. நான் ஜமீன்தார்; நீர் எனது பிரஜை; என் கட்டளையை மீறி விடுகிற அளவுக்கு உமக்குத் துணிவு வந்துவிட்டதா?”
“நேற்று வரை அவ்வளவு துணிவு இல்லை! இன்று இங்கே, இப்போது இளைய ஜமீன்தாரின் பேச்சைக் கேட்டதும்தான் அந்தத் துணிவும் வந்துவிட்டது...”
“என்ன? உமக்கு அவ்வளவு திமிரா?” “அது என்னிடமில்லை ஜமீன்தார்வாளிடம்தான் இப்போது உற்பத்தி ஆகிக்கொண்டிருக்கிறாற் போலத் தோன்றுகிறது -”
தெய்வச் சிலையார் பயத்தையும் பக்தியையும் அறவே விட்டு விட்டார். கால்மேல் கால்போட்டு உட்கார்ந்து கொண்டிருந்த ஜமீன்தாரைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தார்.
“சரி! இளைய ஜமீன்தாருக்கு என் வணக்கம் வருகிறேன்”-தெய்வச் சிலையார் திரும்பினார். திரும்பினவர் அப்படியே திகைத்துப் போய் நின்றார். அவர் திரும்பிச் செல்லவேண்டிய வழியை மறித்துக் கொண்டு கழியும் கையுமாக ஐந்தாறுபேர் நின்று கொண்டிருந்தனர்.
அவருடைய திகைப்பைப் பார்த்து ஜமீன்தார் கலகல. வென்று சிரித்தார். “பார்த்தீர்களா தெய்வச் சிலைத் தேவரே! என்னோடு பகைத்துக் கொண்டு நிற்பவர்களை நான் எப்போதுமே வெளியில் தப்பிச் செல்லவிடுவதில்லை.”
கழியும் கையுமாக நின்ற ஐந்தாறு முரடர்களும் தெய்வச்சிலைத் தேவரைச் சுற்றிச் சக்கரவியூகமாக வளைத்து வெளியேற முடியாமல் தடுக்கும் பாவனையில் நின்றனர். ஜமீன்தார் தன்னை இரகசியமாகக் கூப்பிட்டனுப்பியது எதற்காக என்று இப்போதுதான் தேவருக்கு மெல்ல விளங்கியது. ஆனாலும் அவர் இவ்வளவு பெரிய ஆபத்தை, எதிர்பார்க்கவில்லை. தனியே வந்தவனை ஆள்விட்டு மறித்துக்கொள்ளும் அளவுக்கு வஞ்சகராகவோ, கிராதகராகவோ, இருப்பாரென்று ஜமீன்தாரைப் பற்றி அவர் எண்ணவில்லை.
தெய்வச்சிலைத் தேவரின் கண்கள் சிவந்தன். மீசை கிளர்ந்து துடித்தது. “நீங்கள் எல்லோரும் ஆண் பிள்ளைகள் தானா? மறக்குடியில் பிறந்தவர்கள்தானா? சேலைகட்டிய பெண்கள் கூடச்செய்ய வெட்கப்படும் காரியத்தைச் செய்கிறீர்களே!”
“நிறுத்தும் தேவரே! நிறுத்தும்.இப்போது உம்முடைய கோபமோ, ஆத்திரமோ, எதுவும் இங்கே பலிக்காது! நான் எதைச் செய்யக்கூடாது என்கிறேனோ அதைச் ‘செய்தே தீருவேன்’ என்கிறீர் நீர்! இன்னொரு முறை கேட்கிறேன். நீர் இந்த முயற்சியை இந்த நிமிஷத்தோடு விட்டுவிட்டால் உம்முடைய வழி உமக்காகத் திறந்திருக்கிறது. இல்லையானால்..?”
“இல்லையானால். என்ன செய்துவிடுகிறீர்கள்?” - ஜமீன் கட்டிடமே கிடுகிடுத்துப் போகும்படியான இரைந்த குரலில் கேட்டார் தேவர்.
“செய்வதென்ன? இந்தத் தடியர்கள் இருக்கிறார்கள். இவர்கள் கையில் தடிகளும் இருக்கின்றன. இவர்களுக்கு நடுவில் நீங்களும் இருக்கிறீர்கள். உங்களை என்ன செய்ய வேண்டுமென்று இவர்களுக்குக் கட்டளையிட நானும் இருக் கிறேன். இத்தனைக்கும் மேலாக வாசற்கதவு அடைத்திருக்கிறது...” ஜமீன்தார் விஷமத்தனமாகப் பேசினார். விஷமத்தனமாகச் சிரித்தார்.
“என் கையில் தெம்பும் இருக்கிறது. அதையும் மறந்துவிட வேண்டாம்!” - தேவர் சீறினார்.
“தேவரே! வீணாகத் துள்ள வேண்டாம். இப்பொழுது நீர் ஒரு செத்த பாம்பு; முடியுமானால் உம்முடைய தெம்பைக் காட்டிப் பார்க்கலாமே?”
“என் தெம்பைக் காட்டுவதற்கு ஜமீன்தார்வாளின் உத்தரவு எனக்குத் தேவை இல்லை” - இப்படிச் சொல்லிக் கொண்டே ஜமீன்தார்மேல் பாய்ந்தார் தெய்வச்சிலையார்.
அந்தப் பாய்ச்சல் மின்னல் வெட்டும் வேகத்தில் நடந்து விட்டது. மறுகணம் தேவர் கைப் பிச்சுவாவின் நுனி ஜமீன் தாரின் கழுத்துக்கருகே வருடிக்கொண்டிருந்தது. தடியும் கையுமாக நின்று கொண்டிருந்த முரடர்கள். “ஆ! என்ன துணிச்சல்” என்று. அலறிக்கொண்டே தேவர்மேல் பாய்ந்தனர். தேவர் கூச்சல் கேட்டார் :
“அப்படியே நில்லுங்கள்! உங்களில் யாராவது கொஞ்சம் அசைந்தாலும் போதும். இந்தக் கத்தியை இப்படியே ஜமீன்தாரின் நெஞ்சுக் குழியில் சொருகிவிடுவேன். ஜமீன்தார். பிழைக்கவேண்டுமானால் நீங்கள் அசையாதீர்கள்...”
ஜமீன்தாரின் முகம் வெளிறியது. கண் விழிகள் மிரண்டு பிதுங்கின. உடல் வெடவெடவென்று நடுங்கிற்று. தடியுடன் நின்றவர்கள் ஆடாமல் அசையாமல் அடித்து வைத்த சிலை களாய் நின்ற இடத்திலேயே நின்றனர். திகைப்பினாலும் பயத்தினாலும் எதிர்பாராத நிகழ்ச்சியாலும் என்ன செய்வ தென்றே அவர்களுக்குப் புரியவில்லை.
“இதுதான் என்னுடைய தெம்பு! - அதாவது ஐம்பது. வயதுக்கிழவனின் தெம்பு! இளைய ஜமீன்தாரவர்கள் விருப்பப் படி இதை இங்கே காட்டிவிட்டேன்...”
“தெம்பில்லை! இது வஞ்சகம்.” - பயத்தினால் அடித் தொண்டையிலிருந்து வெளிவந்து ஜமீன்தாரின் குரல்.
“அப்படித்தான் வைத்துக்கொண்டாலும் உங்கள் வஞ்சகத்தை விடவா பெரிது இது?” - தெய்வச்சிலையாரின் கத்தி ஜமீன்தாரின் கழுத்தை துணியால் தடவிக்கொடுத்தது, பளபளவென்று தீட்டப்பட்டிருந்த அந்தக் கத்தியின் ஒளி ஜமீன்தாரின் சிவந்த சருமத்தில் வெள்ளை நிழலாக ‘டால’ டித்துக் கொண்டிருந்தது.
“ம்ம்ம்! ஜமீன்தாரே! உம்முடைய ஆட்களைக் கம்பு களைக் கீழே போடச் சொல்லும். கீழே போட்டுவிட்டுத் திரும்பிப் பாராமல் போய் வாசற் கதவைத் திறக்கச் சொல்லும்...”
“சொல்லாவிட்டால்...”
“இந்தப்பிச்சுவா உமது கழுத்தை ஆழம் பார்க்கும்!” சொல்லிக்கொண்டே கத்தியைக் கழுத்தில் இலேசாக அழுத்திக் காட்டினார் தேவர். ஜமீன்தாருக்கு மூச்சுத் திணறியது. உண்மையிலேயே அவர் பயந்து போய்விட்டார். தேவர் சொன்னபடியே கழிகளைக் கீழே போட்டுவிட்டு வாசற் கதவுகளைத் திறந்துவிடுமாறு தம் ஆட்களுக்குச் சைகை செய்தார். அவர்கள் கழிகளைக் கீழே போட்டுவிட்டுப் போய்க் கதவைத் திறந்தனர். வெளியேறிச் செல்வதற்குள் மீண்டும் தம்மை அந்த ஆட்கள் மறிக்கக் கூடாது என்பதற்காகத் தெய்வச் சிலையார் கழுத்தருகில் வைத்த கத்தியை எடுக்காமலே ஜமீன்தாரையும் வாயில்வரை நடத்தி இழுத்துக்கொண்டு போனார். ஜமீன் மாளிகையிலிருந்து வீதியில் இறங்கும் பிரதானவாயில் வந்ததோ, இல்லையோ, “ஜமீன்தார்வாள்!” நான் நல்லது செய்கின்றவன். இனி இம்மாதிரி அபாயகரமான முறையில் என்னோடு விளையாடினர்களோ, உங்கள் உயிர் உங்களுக்குச் சொந்தமில்லை” - என்று கூறி அவரைத் தன் பிடியிலிருந்து உதறிவிட்டுத் தெருவில் பாய்ந்தார்.
ஜன நடமாட்டமுள்ள வீதியில் இறங்கிய பின் வெளிப்படையாக ஜமீன்தாரால் என்ன செய்ய முடியும்? அவர் மனத்திற்குள், கிழட்டுப் பினமே! இன்றைக்கு எங்களை ஏமாற்றி விட்டுத் தப்பிவிட்டாய்! என்றாவது ஒருநாள் உன்னைத். தீர்த்துக் கட்டாமல் விடப் போவதில்லை என்று கறுவிக் கொண்டார். அதைத் தவிர அவர் அப்போது வேறு என்ன தான் செய்யமுடியும்?
அரண்மனையிலிருந்து தப்பி வந்த தெய்வச் சிலைபார். பல விஷயங்களைச் சிந்தித்து ஒன்றும் தெளிவாகப் புரியாமல் ஒரே குழப்பத்தில் ஆழ்ந்திருந்தார்.
தீவட்டிக் கொள்ளைக்காரரைப் பிடிக்கத் தாமே முயற்சி. செய்ய வேண்டிய ஜமீன்தார் வேண்டுமென்றே சும்மா இருக்கிறார். ஜனங்களின் உதவியால் என்னைப் போன்ற ஒருவன் அந்த முயற்சியில் ஈடுபட்டால் இரகசியமாகக் கூப்பிட்டு அது கூடாதென்று மிரட்டுகிறார். இந்த விஷயம் ஒரு புதிராக அல்லவா இருக்கிறது? இந்த முயற்சியில் எனக்கு வெற்றி கிடைத்துவிட்டால், ஜமீன்தாரால் கூட முடியவில்லை. அதைத் தெய்வச்சிலைத் தேவர் செய்துவிட்டார் என்று. ஜனங்கள் பேசுவார்களே என்பதற்காகப் பயப்படுகிறாரோ? அப்படியானால் அவரும் அவருடைய ஆட்களும் என்னோடு உதவியாக இருந்து வெற்றியில் தங்களுக்கும் பங்கு தேடிக் கொள்ளட்டுமே! நான் அதை வேண்டாமென்றா சொல்லி விடப் போகிறேன்? எதற்காக இந்த வஞ்சகம்? இரகசியமாகக் கூப்பிடுவது, கருத்துக்கு இசையாவிட்டால் ஆட்களைவிட்டு அடிக்க முயல்வது! நாணயமான ஜமீன் பரம்பரையில் பிறந்த ஜமீன்தார் செய்யக்கூடிய காரியங்களா இவை? இந்த விஜயாலய மருதப்பனுடைய வாழ்வே ஒரு சூழ்ச்சிப் புதிராகத் தான் இருக்கிறது. எப்படியும் இதை உடைக்காமல் விடக்கூடாது கொலையும் கொள்ளையுமாக மங்கலக்குறிஞ்சியை அமங்கலக்குறிஞ்சியாக்கிக் கொண்டிருக்கும் தீவட்டிக் கொள்ளைக்காரன் பெரிய மாயனைக் கண்டுபிடித்துவிட்டால் இந்த ஜமீன்தாரின் புதிர் தெரிந்துவிடும். ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்கப் போனால் ஜமீன்தாருக்கும் பெரிய மாயனுக்கும் ஏதோ அந்தரங்கத் தொடர்புகூட இருந்தாலும் இருக்கும். இவ்வாறு சந்தேகப்படுவதற்கு முகாந்திரங்கள் நிறைய இருக்கின்றன.
இளைய ஜமீன்தார் பட்டத்துக்கு வந்த ஓரிரண்டு மாதங்களுக்குப் பின்தான் இந்தத் தீவட்டிக் கொள்ளைக் கூட்டம் மங்கலக்குறிஞ்சியில் அட்டகாசம் புரியத் தொடங்கிற்று. அன்றிலிருந்து ஜமீன்தார் அதை ஒடுக்க முடியவில்லை. என்னைப்போல யாராவது முயன்றாலும் தடுக்கிறார்; பய முறுத்துகிறார். தீவட்டிக் கொள்ளைக்காரர்களும் இதுவரையில் ஜமீன் மாளிகையிலிருந்தோ, ஜமீன் சொத்துக்களிலிருந்தோ, ஒரு சிறு களவுகூடச் செய்ததாகத் தெரியவில்லை. அவர்கள் கொள்ளையடிப்பதெல்லாம் ஊரிலிருந்தும் ஊர் மக்களிடமிருந்தும்தான். தீவ்ட்டிக்கொள்ளை மங்கலக் குறிஞ்சி ஜமீன் எல்லையைச் சேர்ந்த ஊர்களில் மட்டும் நடந்ததே ஒழிய வேறெங்கும் இல்லை. இதை எல்லாம் ஒரு சேர வைத்து மொத்தமாகச் சிந்தித்துப் பார்க்கும்போது கண்ணுக்குத் தெரியாத சூழ்ச்சியின் பயங்கர உருவம் ஒன்று மறைந்திருப்பதுபோல் தோன்றுகிறது.
தெய்வச்சிலைத் தேவர் சிந்தித்தார். இப்போது அவருக்கு இரட்டை எதிர்ப்பு. கொள்ளைக்காரப் பெரிய மாயனைக் கண்டுபிடிக்க முயல்வதனால் அவன் எதிர்ப்பு: ஜமீன்தாரிடம் ஏற்பட்ட மனஸ்தாபத்தினால் அவருடைய மறைமுகமான பயங்கர எதிர்ப்பு. இந்த இரு எதிர்ப்புக்கு இடையேயும் அவரும் அவரது ஆட்களும் தங்கள் முயற்சியை நிறுத்தி விடவில்லை.
அன்று அமாவாசைக்கு முதல் நாள். அம்மாவாசையன்றும், அதற்கு முன் இரண்டு நாட்களும், பின் இரண்டு நாட்களும், ஊரில் தீவட்டிக் கொள்ளைக்காரர்களின் வரவு நிச்சயம். இந்த முறை அமாவாசை வந்தபோது தெய்வச் சிலைத்தேவரும் அவருடைய ஆட்களும் விழிப்பாக இருந்தனர். இந்த ஐந்து நாட்களில் பெரிய மாயன் கூட்டத்தைப் பற்றி முக்கியமான தடையம் ஏதாவது கிடைக்கும்படி செய்துவிடவேண்டும் என்பது, தேவரின் உறுதியான ஆசை! மலையடிவாரத்துப் புதர்களிலிருந்துதான் பெரியமாயன் கூட்டத்தார் கிளம்பி வருவதாக ஊரில் ஒரு வதந்தி வெகு நாட்களாக நிலவி வந்தது. இந்த வதந்தி மெய்யா, பொய்யா என்பதற்கு நேரில் பார்த்து ஆதாரம் கண்டவர்கள் எவருமில்லை.
ஊரில் வீதிக்கு வீதி தேவையான காவலுக்கு ஏற்பாடு செய்துவிட்டுத் தெய்வச் சிலைத் தேவரும் வேறு சில முக்கிய மான ஆட்களும் மலையடிவாரத்திற்குச் சென்றனர். மலை மேலிருந்தோ அடிவாரத்திலிருந்தோ, ஊருக்குள் இறங்கி வருவதற்குப் பலவழிகள் இருந்தன. தெய்வச் சிலையாரும் அவரோடு போனவர்களும் தனித் தனியே பிரிந்து வழிக்கு ஒருவர் வீதம் இருளில் மறைந்து பதுங்கி வேவு பார்த்தனர். எப்படியும் அன்றிரவிற்குள் கொள்ளைக்காரர்கள் வருகிற வழி, போகிற வழி, முதலிய விவரங்களைத் தெரிந்து கொண்டுவிட்டால், மறுநாள் வழியை மறித்துத் தாக்கி அவர்களைப் பிடிக்க வசதியாக ஏற்பாடு செய்துவிடலாம் என்பது தேவரின் திட்டம்.
அமாவாசை இருள் எங்கும் மைக் குழம்பாகக் கப்பிக் கிடந்தது. மலையடிவாரத்துப் புதர்களின் அடர்த்தியில் இருட்டு இன்னும் பயங்கரமாக இருந்தது. சிள் வண்டுகளின் ‘கீஇஇ, கீஇஇ’ என்ற ரீங்காரம் இருளின் பயங்கரத்துக்குச் சுருதி கூட்டிக்கொண்டிருந்தது. இடையிடையே கோட்டான்களின் அலறல், நரிகளின் ஊளை, பறவைகள் சிறகடிக்கும் ஒலி, எல்லாமாகச் சேர்ந்து இருள் என்ற சாம்ராஜ்யத்தில் பயங்கரம் என்ற ஆட்சியை ஸ்தாபிதம் செய்தன.
தெய்வச் சிலைத் தேவர் பதுங்கியிருந்த இடம் மற்றெல்லாவற்றையும்விடக் கேந்திரமானது. மலையும் அடிவாரமும் சந்திக்கின்ற இடத்தில் இடிபாடுகளோடு சிதிலமடைந்த ஒரு ஐயனார் கோவில், பழைய காலத்தில் ‘வையந்தொழுவார் கோயில்’ என்று அதற்குப் பெயர். ஐயனார். கோவில்தான். சிதைந்திருந்தது. அரைப்பனை உயரத்துக்குப் பிரம்மாண்டமாக வெள்ளைப் பூச்சுடன் நின்ற ஐயனார் கோவில். குதிரை இன்னும்புத்தம் புதிதுபோல அழியாமல் சிதையாமல் இருந்தது. அடியிலுள்ள துவாரத்தின் வழியாக உள்ளே நுழையலாமானல் குதிரையின் உடலுக்குள் பத்துவேர் தாராளமாகக் கால் நீட்டி உட்காரலாம். அவ்வளவு பெரிது. இந்தக் குதிரையின் கீழ்ப்புறம் மலையிலிருந்து ஊருக்குள் செல்லும் பிரதானமான காட்டுச்சாலை அமைந்திருந்தது. ஐயனார்கோவில் குதிரைக்குக் குடைபிடிப்பது போல அடர்ந்து வளர்ந்த வாகை மரம் ஒன்று நெடிதுயர்ந்து நின்றது.
தெய்வக் சிலைத்தேவர் இந்த வாகை மரத்தின் மேலேறி அடர்ந்து வளர்ந்திருந்த இதன் கிளைகளுக்கு இடையே ஓரிடத்தில் வேல், கம்பு சகிதம் மறைந்து உட்கார்ந்து வேவு பார்த்துக்கொண்டிருந்தார். மரக்கிளையில் அவர் உட்கார்ந்து கொண்டிருந்த இடத்திலிருந்து காலைக் கீழே: தொங்கவிட்டால் காற்பாதங்கள் ஐயனார் குதிரையின் தலையில் இடிக்கும்.
இரவு முதல் ஜாமம் கழித்துவிட்டது. ஒரு துப்பும் துலங்க வில்லை. நேரம் ஆக மலைக்குளிர் ஊசி குத்துவது போல் ஜில்லென்று உடம்பில் உறைத்தது. கண் இமைகள் மெல்லச் சோர்ந்தன. இனிமேல் இங்குக் காத்திருப்பதில் பயனில்லை. என்று தேவர் எண்ணியபோது வாகை மரத்துப் பொந்தில் கோட்டான் இரண்டு மூன்று முறை தொடர்ந்து கத்தியது: சிறகுகளைப் படபடவென்று அடித்துக்கொண்டது.
கீழே காய்ந்த சரகுகளில் தடதடவென்று யாரோ சிலர் வேகமாக நடந்துவரும் ஒசை அடுத்துக் கேட்டது. ‘கசமுச’ வென்று பேச்சுக் குரல்களும் கேட்டன. தேவர் உஷாரானார். காதுகளையும் கண்களையும் தீட்டிக் கூர்மை யாக்கிக் கொண்டார். மரக்கிளைகளை மெல்ல விலக்கிக் கொண்டு கீழே பார்த்தார். கண்களில் பார்க்கும் சக்தியை எவ்வளவு தீட்சண்யமாக்கிக் கொண்டாலும் கீழே மொத்தமாக ஆட்கள் நிற்பதுமட்டும் தெரிந்ததே தவிர இன்னார், இன்னார் குதிரையின் பக்கத்தில் நிற்கிறார்கள் என்று இனம் புரியவில்லை. கும்பலாகப் பத்துப் பன்னிரண்டுபேர் நிற்பது தெரிந்தது. தோற்றத்திலிருந்து ஒவ்வொரு ஆளும் ஏறக் குறைய ஒரு பீமசேனனுக்குச் சமமாக இருப்பான் போல். தோன்றியது.
பொறுமையிழந்துவிடாமல் மேலும் கூர்ந்து கவனித்தார், தெய்வச்சிலைத் தேவர்.
குதிரையின் அடிப்பாகத்தில் இருந்த சிறு துவாரத்தின் வழியே ஒரு ஆள் உள்ளே நுழைந்தான். வெளியே யிருந்தவர்களிடம் எதையோ கொண்டுவந்து கொடுத்தான். ஒருமுறை இரண்டு முறை, மூன்று முறை, குதிரையிள் உடலுக்குள்ளிருந்து எவையோ சில பொருள்களை வெளியே எடுத்துவைத்தான் அவன். அவை என்னவென்று. இருட்டில் தெரிய வில்லை.
அடுத்து இரண்டு சிக்கி முக்கிக் கற்களுக்கு இடையே பஞ்சுத் துணுக்கை வைத்துத் தட்டுகிற ஓசை கேட்டது. நெருப்புப் பொறிகள் பஞ்சில் பற்றின. குதிரையின் கீழே இருந்த ஒரு அகல் விளக்தை ஏற்றினர்.
கும்மிருட்டில் சட்டென்று விளக்கு ஒளி படரவும் தெய்வச்சிலைத் தேவர் வாகை மரக் கிளைகளுக்கிடையே தம்மை நன்றாக மறைத்துக்கொண்டார். பின்பு மேலும் தொடர்ந்து கவனித்தார். அவர் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. அந்த நடுங்கும் குளிரிலும்கூட உடம்பு வேர்த்துவிடும் போலிருந்தது.
கீழே ஐயனார் குதிரையின் அருகில் விளக்கொளியில் மரக் கைப்பிடியோடு கூடிய தீவட்டிகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. களிம்பேறிய பித்தளைக் குடம் நிறைய எண்ணெய் பக்கத்தில் இருந்தது. துணிக்கந்தை பந்தமாகச் சுற்றப்பட்டிருந்த தீவட்டிகளின் துனியைக் குடத்தில் முழுக்கி எடுத்து விளக்கின் உதவியால் கொளுத்திக் கொண்டார்கள். எண்ணெயின் வாடை மூக்கைக் கமறச் செய்து குமட்டியது. அது இலுப்பெண்ணெயாக இருக்க வேண்டுமென்று தேவர் அனுமானித்துக்கொண்டார்.
நன்றாக உற்றுப் பார்த்த்போது தேவருக்குப் பகீரென்றது! காரணம்? கீழே நின்றுகொண்டிருந்த பத்துப் பன்னிரண்டு பேர்களில் ஐந்தாறுபேர் ஏற்கெனவே அவருக்கு அறிமுகமானவர்களாக இருந்ததுதான். ஆம்; அந்த ஐந்தாறு பேர் வேறெருவரும் இல்லை: ஜமீன் மாளிகையில் தடியும் கையுமாக அவரை வழி மறித்துக்கொண்ட அதே முரடர்கள் தாம். வியப்பைச் சமாளித்துத் தாங்கிக் கொண்டே தொடர்ந்து கவனித்தார் அவர்.
ஏறக்குறைய பதினெட்டுத் தீவட்டிகள் இருக்கலாம் அத்தனையையும் கொளுத்திக் கீழே தரையில் செங்குத்தாக நட்டிருந்தார்கள். துணியோடு இலுப்பெண்ணையும் சேர்ந்து மேலே வந்த கரிப் புகைக்குக் கேட்கவா வேண்டும். குழகுழவென்று மேலே வந்த கரிப்புகை மரக்கிள்ையிலிருந்த தேவரை மூச்சு முட்டிப்போய்த் திணற அடித்தது. எப்படியோ கஷ்டப்பட்டுச் சகித்துக்கொண்டார். கண் பார்வைக்கு மட்டும் இடைவெளி கத்திரித்து விடப்பட்ட ஒரு வகைக் கறுப்பு அங்கியை அவர்கள் அணிவதைத் தேவர் கவனித்தார்.
அந்த அமாவாசை இருளில் பாழடைந்த ஐயனார். கோவிலின் அருகே மங்கிய அகல் விளக்கின் ஒளியில் கரிப் புகைக்கும் தீவட்டிகளோடு அம்மாதிரி உடையுடன் அவர்களை வேறு யாராவது கண்டிருந்தால் “ஐயையோ பெரிய பெரிய கரும்பூதங்களும் கொள்ளிவாய்ப் பிசாசுகளும் அல்லவா அணிவகுத்து நிற்கின்றன?” என்று மிரண்டு ஓடிப் போயிருப்பார்கள். மனோதிடத்தில் குலையாதவராகிய தெய்வச்சிலைத் தேவராக இருந்ததனால்தான் அவரால் அதை மரக்கிளையின் இடுக்கு வழியாகப் பார்த்துக் கொண் டிருக்க முடிந்தது.
‘அந்தப் பன்னிரண்டு பேரில் ஒருவன்தான் பெரிய மாயனா? அல்லது அவன் வேறு எங்காவது இருக்கிறானா?’ என்று தேவர் மனத்தில் ஒரு சந்தகம் எழுந்தது. கீழே இருப்பவர்கள் சிரித்தும் கேலி செய்தும் கும்மாளமடித்ததைப் பார்த்தால் கொள்ளைக் கூட்டத்தின் தலைவனாகிய பெரிய மாயன் அப்போது அங்கே அந்தக் கூட்டத்தில் இருக்க முடியாது என்று ஒருவழியாகத் தமது சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொண்டார் தேவர்.
கீழே அகல் விளக்கை அணைத்துவிட்டுத் தீவட்டி சகித மிருந்தவர்கள் புறப்பட்டுவிட்டனர். தீவட்டிகள் சிறிது தொலைவு சென்றதும் ஐயனார் கோவிலும், குதிரையும். வாகை மரமும், பழையபடி அந்தகாரத்தில் மூழ்கின. தீவட்டிகளும், உருவங்களும், மலையடிவாரத்திலிருந்து மேற்குப் புறமாக ஊருக்குள் செல்லும் கொடி வழியின் குறுகலான பாதையில் நடந்துகொண்டிருப்பதை அவர் மரத்திலிருந்தே பார்த்தார்.
சுற்றி வளைத்து அடிமரத்தின் வழியே கீழே இறங்க அதிக நேரமாகுமென்று அப்படியே கிளையிலிருந்து குதிரையின் தலைமேல் பாதங்களை ஊன்றிக் கீழே இறங்கினார் தேவர். தலையிலிருந்து கீழே தரையில் குதித்தபோது வாகை மரத்து ஆந்தை மீண்டும் குரூரமாக அலறியது.
“சனியனே! உனக்கு வாய் அடைக்காதா?” என்று அதைச் சபித்துக் கொண்டே தீவட்டிகளின் ஒளிப்புள்ளிகளையே இருளில் குறியாக வைத்து அந்த வழியில் அதிக வேகமின்றியும் அதிக மெதுவின்றியும் பதுங்கிப் பதுங்கிப் பின் தொடர்ந்தார்.
தீவட்டிக் கொள்ளைக்காரர்கள் பத்து கெஜம் முன்னாலும் தேவர் பத்து கெஜம் பின்னாலுமாகச் சென்று கொண்டிருந்தனர். புதர்களிலும், செடி கொடிகளிலும், ஒளிந்து, ஒளிந்து, அவர்கள் திரும்பிப் பார்த்துவிடாமலும், அதி ஜாக்கிரதையாகப் பின் தொடர்ந்தார்.
தொடர்ந்து சென்றுகொண்டிருக்கும்போதே திடீரென்று குதிரைகள் கனைக்கும் ஒலி கேட்டுத் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தவர் அப்படியே திகைத்துப் போய் வழியோரத்துப் புதரில் பம்மிப் பதுங்கிக்கொண்டார். அந்தக் குறுகிய வழியில் வரிசையாகக் குதிரைகள் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த ஒரே ஒரு குதிரையில் மட்டும் இவர்களை எதிர் பார்த்துக் கொண்டு இவர்கள் மாதிரியே கரும்பூதம் போன்ற உடையணிந்து ஒருவன் காத்திருந்தான். தீவட்டியோடு போனவர்கள் அவனிடம் நடந்து கொண்ட விதத்திலிருந்து அவன்தான் அந்தக் கொள்ளைக்கூட்டத்தின் தலைவனான பெரிய மாயனாக இருக்க வேண்டுமென்று தேவருக்குத் தோன்றியது. எல்லோரும் தீவட்டிகளோடு குதிரைமேல் ஏறிக்கொண்டனர். உற்றுப் பார்த்தபோது எல்லாக்குதிரைகளும் ஜமீன் மாளிகையைச் சேர்ந்தவை போல் தோன்றின.
‘ஜமீனை சேர்ந்த ஆட்கள், ஜமீனைச் சேர்ந்த குதிரைகள், கொள்ளைக்காரர்களை ஜமீன்தார் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருப்பது, தம்மை இரகசியமாகக் கூப்பிட்டுக் கொள்ளைக்காரர்களைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபடத் கூடாதென்று தடுத்தது-இதற்கெல்லாம் என்ன தொடர்பு?, என்ன காரணம்? என்ன அர்த்தம்?’ - தேவருக்கு எல்லாம் ஒரே புதிராகத் தோன்றின. ஒன்றுமே தெளிவாக விளங்க. வில்லை.
அவர் இவ்வாறு மனம் குழம்பிக்கொண்டிருந்த போது குதிரைகள் தடதடவென்ற காலடிச் சத்தத்துடன் ஊரை நோக்கிச் சென்றன. ‘இதுவரை தெரிந்த தடையங்கள் போதும்; இனி இவர்களைப் பின்பற்றவும் முடியாது’ பின் பற்றுவதனால் பயனுமில்லை! நடக்க வேண்டியவற்றை நாளை இரவில் கவனித்துக் கொள்ளலாம்’ - என்று தமக்குள் தீர்மானித்துக்கொண்டு வந்த வழியே திரும்பி நடந்தார், தெய்வச் சிலைத் தேவர்.
மலையடிவாரத்துக்கு வேவு பார்க்க வந்திருந்த மற்ற ஆட்கள் தேவரை எதிர்பார்த்து ஒரு இடத்தில் காத்துக் கொண்டிருந்தார்கள். தேவர் ஐயனார் கோவில் வழியாக அந்த இடத்துக்குப் போய்ச் சேர்ந்தார். தாங்கள் போன இடங்களில் கொள்ளைக்காரர்களைப் பற்றி ஒரு உளவும் கிடைக்கவில்லை என்று அவர்கள் வருத்தத்தோடு கூறினார்கள்.
“பரவாயில்லை! அதனால் கவலைப்படாதீர்கள். கிடைக்க வேண்டிய எல்லா உளவுகளும் அநேகமாக நான் போன இடத்திலேயே கிடைத்துவிட்டன. நாளை இரவு இத்தனை நாழிகைக்கெல்லாம் பெரிய மாயன் கோஷ்டியைக் கூண்டோடு பிடித்து விடலாம்.”
“எப்படி? எப்படி? இவ்வளவு சீக்கிரத்தில் அகப்பட்டு விடுவார்களா?” என்று ஒவ்வொருவரும் தாங்க முடியாத ஆவலுடன் தேவரைக் கேட்டனர். அவ்ர்கள் எல்லோரும் மங்கலக் குறிஞ்சியின் நலனில் உண்மையாகவே அக்கரை உள்ளவர்கள்.
தெய்வச் சிலையார் அவர்கள் யாவரையும் அமைதியாக இருக்குமாறு கூறிவிட்டுத் தம்முடைய திட்டத்தை விவரிக்கலானார்:-
“நாளை நடுப் பகலிலிருந்து நம்முடைய வேலைத் திட்டங்கள் தொடங்குகின்றன. மலையடிவாரத்து ஐயனார் கோவிலில் இரகசியமாக நாளைக்கு உச்சிப்போதில் நாம் சந்திக்கவேண்டும். தீவட்டிக் கொள்ளைக் கூட்டத்தைப் பற்றிய சில மர்மங்கள் இன்னும் பெரிய புதிராகத்தான் இருக்கின்றன. அந்தப் புதிர்கள் வெளியாகும்போது நீங்களும், நானும், இந்த ஜமீனும் மட்டும் அல்லாமல் அக்கம் பக்கத் திலுள்ள சகல ஊர்களும் நாடு நகரங்களும்கூட மூக்கில் விரலை வைக்க நேரிடலாம்! எல்லாம் நாளை இரவு மூன்றாம் ஜாமம் முடிவதற்குள் அம்பலமாகி விடும். நம்முடைய திட்டத்தில் மிக முக்கியமான அம்சம் பெரிய மாயனையும் அவன் கோஷ்டியாரையும் மொத்தமாகப் பிடித்துவிட வேண்டுமென்பது- ஆனால் தீவட்டிக் கொள்ளைக்காரர்களோ வாயு வேகத்தில் செல்லவல்ல குதிரைகளில் வந்து போகிறார்கள். நம் கையில் அவர்கள் சிக்க வேண்டுமானால் அதற்கு மிக நுணுக்கமானதோர். தந்திர்த்தை நாம் கையாள வேண்டும்.
“என்ன தந்திரம்? அதை முதலில் சொல்லுங்கள். எப்படி யும் செய்தே தீருவோம்!” -கேட்டுக் கொண்டிருந்தவர்கள் குறுக்கிட்டனர்.
“பிரமாதமாக ஒன்றும் இல்லை! நாளை உச்சி. வேளைக்குள் முப்பது கலம் கேழ்வரகும், முந்நூறு ஒலைப் பாய்களும் தயார் செய்து வைக்க வேண்டும். கேழ்வரகும், நன்கு காய்ந்த தானியமாகவும் ஒலைப் பாய்கள் சன்னமாக மழ மழவென்று கரடுமுரடில்லாமல் பின்னப்பட்டனவாகவும் இருக்கவேண்டும்”-தேவர் இப்படிக் கூறியவுடன் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் எல்லோரும் சிரிப்பை அடக்கமுடியாமல் வாய்விட்டுச் சிரித்துவிட்டனர்.
“கேழ்வரகும் ஒலைப் பாயுமா? இதென்னி வேடிக்கையாக இருக்கிறது! தீவட்டிக் கொள்ளைக்காரர்களைப் பிடிக்கக் கேழ்வரகும் ஒலைப் பாயும் எதற்கு?”
“வேண்டும் என்றால் வேண்டும். நான் வயதானவன்; அனுபவஸ்தன். என்னை நம்புவதாக இருந்தால் நான் சொல்லுகிறபடி கேளுங்கள். காரணமில்லாமல், பயனில்லாமல் எனக்கு எதையும் சொல்லத் தெரியாது.”
“சரி! அதற்கென்ன? ஒலைப் பாய்க்கும் கேழ்வரகுக்குமா நம் ஊரில் பஞ்சம்? நீங்கள் சொல்கிறபடியே தயார் செய்து விடுகிறோம். மேலே சொல்லுங்கள்”- அவர்கள் அவர் வேண்டுகோளுக்கு இணங்கியபின் மேலும் அவர் தமது திட்டங்களைத் தொடர்ந்து கூறுவதற்குத் தொடங்கினார்.
“இந்தக் காரியங்களை எல்லாம நாம் பரம ரகசியமாகச் செய்யவேண்டும். சிலம்பம் வீச நன்றாகத் தெரிந்த வாலிபர்களாக ஒரு ஐம்பது வாலிபர்களையும் தயார் செய்யவேண்டும். மீண்டும் நான் வற்புறுத்திச் சொல்ல ஆசைப்படுகிறேன். எல்லாமே காதும் காதும் வைத்தாற்போலத்தான் நடக்க வேண்டும். நீங்கள் நினைப்பதுபோல கொள்ளைக்காரர்கள் எங்கிருந்தோ வந்து போகவில்லை. நமக்கு மிக அருகிலிருந்தே நம்மிடம் வந்து தொல்லை கொடுத்துவிட்டுப் போய்க்கொண்டிருக்கிறார்கள். ஆகையால் நம் ஏற்பாடுகள் கொஞ்சம் அவர்கள் செவிக்கு எட்டினாலும் ஆபத்து. எல்லாத் திட்டங்களும் பாழாய்ப்போய்விடும். நான் கூறியவைகளோடு நாளை நடுப்பகலில் நாம் ஐயனார் கோவில் வாசலில் இரகசியமாகச் சந்திப்போம். நடக்கவேண்டியவற்றைப் பின்பு அங்கே கவனிக்கலாம். இன்றிரவும் கொள்ளைக்காரர்கள் குதிரை மேலேறித் தீவட்டிகள் சகிதமாக ஊருக்குள்தான் போயிருக் கிறார்கள். இன்று நாம் பலமான கட்டுக் காவலுக்கு ஏற்பாடு செய்துவிட்டு வந்திருப்பதால் ஊரில் அதிகமாகச் சேதம் இருக்காது, எதற்கும் போய்ப் பார்க்கலாம்; வாருங்கள்!”
தெய்வச்சிலைத் தேவர் கிளம்பினார். மற்றவர்களும் கிளம்பினார்கள். அப்போது இரவு மூன்றாம் ஜாமத்துக்கும். மேல் ஆகியிருந்தது. அமாவாசை இருட்டில் காட்டுப் புதர் சுளின் வழியே ஊருக்கு நடந்து செல்வது கடினமாக இருந்தது. எப்படியோ தட்டுத் தடுமாறிப் போய்ச் சேர்ந்தார்கள். ஊரில் கொள்ளைச் சேதமும் நெருப்புச் சேதமும் அதிகம் இருக்காது என்று அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாகக் கட்டுக் காவலையும் மீறி அதிகச் சேதத்தையே விளைவித்துச் சென்றிருந்தனர்-தீவட்டிக் கொள்ளைக்காரர்கள். இந்த அதிர்ச்சியில் அவர்கள் ஆத்திரம் உறுதிப்பட்டது. மறுநாள் எப்படியும் அந்த அக்கிரமக்காரக் கும்பலை வேரறுக்காமல் விடுவதில்லை என்ற பிரதிக்ஞையோடுதான் ஒவ்வொரு வரும் உறங்கச் சென்றனர்.
ஃஃஃ
மறுநாள் பொழுது விடிந்தது. சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் அதே சமயத்தில் படு இரகசியமாகவும் கேழ்வரகும் ஒலைப்பாயும் தயாராயின. சிலம்பக் கழி வீசுவதில் வல்ல வாலிபர்கள் கூட்டமும் சேர்க்கப்பட்டுவிட்டது.
பகல் உச்சிப் போதுக்குத் தெய்வச் சிலைத் தேவரும் மற்ற முக்சியமான ஆட்களும் ஐயனார் கோவிலில் சந்தித்தார்கள் முதல் வேலையாகக் குதிரையின் உடலுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த தீவட்டிகள், இலுப்பெண்ணெய்க் குடம், கறுப்பு அங்கிகள் எல்லாவற்றையும் அங்கிருந்து அப்புறப் படுத்தி வேறு இடத்தில் கொண்டுபோய் ஒளித்து வைக்க ஏற்பாடு செய்தார். அப்போது அந்தக் கறுப்பு அங்கிகளில் ஒரே ஒரு அங்கியை மட்டும் அவர் யாருக்குந் தெரியாமல் தம் வசம் மறைத்து வைத்துக்கொண்டார்.
ஐயனார் கோவிலுக்கு மேற்கே தீவட்டிக் கொள்ளைக் காரர்கள் குதிரைமீதேறி ஊருக்குள் பிரவேசிக்கும் குறுகிய கொடி வழியில் முந்நூறு கெஜ தூரத்திற்கு, கெஜம் ஒன்றுக்கு ஒரு பாய் வீதம் எல்லாப் பாய்களையும் நெருக்கமாக விரித்து அவற்றின்மேல் பரவலாகக் கேழ்வரகைச் சிதறிவிடும்படி செய்தார். பின் சிலம்பு வீரர்கள் ஐம்பது பேரோடு சாதாரண ஆட்கள் ஐம்பது பேரையும் சேர்த்து நூறு ஆட்களையும் மூன்று கெஜத்துக்கு ஒரு ஆளாக வழியோரப் புதரில் பதுங்கி ஒளிந்திருக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டது. கொள்ளைக் காரர்களின் எண்ணிக்கை இருபது இருபத்தைந்திற்குள்தான் என்றாலும் குதிரைமேல் வரும் அந்த முரடர்களை மடக்கி வளைத்துப் பிடிப்பதற்கு அதிகமான ஆட்கள் வேண்டும் என்பதற்காகத் தோதாக நூறு ஆட்கள் மறைத்து வைக்கப் பட்டிருந்தனர். சந்தர்ப்பவசத்தால் கொள்ளைக்காரர்களில் யாரைக் கொல்ல நேர்ந்தாலும் சிவப்புக் குதிரைமேல தீவட்டிக் பிடிக்காமல் வெறுங்கையோடு உட்கார்ந்திருக்கும் ஆளை மட்டும் எப்படியாவது உயிரோடு பிடித்துவிட வேண்டும் என்பது தேவரின் கட்டளை. ஏனென்றால் அந்த ஆள்தான் கூட்டத்தின் தலைவனான பெரிய மாயன் என்று கருதப்பட்டான்.
குதிரைகள் ஒலைப்பாயில் சிதறிய கேழ்வரகின்மேல் செல்லும்போது சறுக்கிச் சறுக்கிக் கீழே விழும். அந்தச் சமயம் பார்த்து மறைந்திருந்த வீரர்கள் பாய்ந்து மடக்கிக்கொள்ள வேண்டும் என்பது ஏற்பாடு. இந்த ஏற்பாடு மறைந்திருந்த வீரர்களுக்கும் முன்பாகவே அறிவிக்கப்பட்டிருந்தது.
பெரிய மாயன் பிடிபட்டால் ‘என்ன காரணத்தைக் கொண்டும் தெய்வச் சிலையாருடைய அநுமதியின்றி அவனது முகமூடியைக் கிழித்து அவன் யாரென்று தெரிந்துகொள்ள எவரும் முயலக்கூடாது’-என்பது எல்லோருக்கும் எச்சரிக்கப் பட்டிருந்தது.
இருட்டியதும் மேற்படி ஏற்பாடுகளை எல்லாம்.தேவர் முறைப்படி செய்துவிட்டு முதல் நாள் போலவே வாகை மரக் கிளையில் ஏறிப் பதுங்கிக்கொண்டார். அவரைத் தவிர அங்கு வேறெவரும் இல்லை.
எல்லோரையும் அனுப்பிவிட்டுத் தம் திட்டத்தைச் சரி பார்ப்பதற்காகவே தேவர் வாகை மரத்தில் தங்கியிருந்தார்.
உரிய நேரத்தில் அன்றைக்கும் கொள்ளைக்காரர்கள் வந்தனர். வழக்கம்போல் ஒருவன் குதிரையின் உடலுக்குள் நுழைந்தான். அடுத்த கணம் “ஐயையோ மோசம் போய் விட்டது!” என்று அலறிக்கொண்டே வெளியில் வந்தான். தேவர் மரத்தின் மேலிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.
“என்ன? என்ன? ஏன்? உள்ளே இல்லையா?” மற்றவர் கள் ஆவலோடு கேட்டனர்.
“குதிரை மோசம் செய்துவிட்டது.”
“குதிரையாவது மோசம் செய்கிறதாவது? என்னடா உளறுகிறாய்?”
“உள்ளே தீவட்டி, எண்ணெய்க்குடம், அங்கிகள், ஒன்றுமே காணவில்லை!”
“காணவில்லையா? என்ன ஆச்சர்யம்: கொள்ளைக்காரர்களிடமே கொள்ளையடிப்பவர்கள் கிளம்பிவிட்டார்களா?”
“எல்லாம் அந்தத் தெய்வச்சிலைக்கிழவன் செய்த வேலை யாகத்தான் இருக்கும், அந்தக் கிழட்டுப்பயல் மட்டும் இப்போது என் கையில் அகப்பட்டால்.. ?” - இப்படிச் சொல்லியவாறே பல்லை நறநறவென்று கடித்துக்கொண்டு முஷ்டியை மடக்கிக் கட்டினான் ஒரு முரடன்.
மரத்தின்மேலிருந்து அதைப் பார்த்துக்கொண்டிருந்த தெயிவச்சிலையாருக்கு உடல் ஒரு குலுக்குக் குலுக்கி ஓய்ந்தது.
“அது என்னப்பா மரக்கிளை குலுங்குகிறது?”
தெய்வச்சிலையாருக்கு நாக்கு ஒட்டிக்கொண்டது. நெஞ்சு அசுர வேகத்தில் அடித்துக்கொண்டது!
“அட நீ ஒருத்தன்! காற்றுக்கு மரம் ஆடினால் அது ஒரு வேடிக்கையா? இப்பொழுது நாம் புறப்பட வேண்டுமே? அங்கே அவர் குதிரைகளோடு காத்துக்கொண்டிருப்பார். அதற்கு முதலில் வழி சொல்லுங்கள்.”
நல்லவேளை! மரம் ஆடியதைப்பற்றி அதற்குமேல் பேச்சுத் தொடரவில்லை. தேவர் பிழைத்தார்.
சீக்கிரமே வேறு தீவட்டிகள் தயார் செய்துகொண்டு புறப்பட அவர்கள் முடிவுசெய்தனர். ‘உடை இல்லாவிட்டாலும் பரவாயில்லை. தீவட்டிகளையாவது தயார் செய்து கொண்டு போவோம்’ -என்பது அவர்கள் எண்ணம்போலும், ஒருவன் எண்ணெய் கொண்டுவரப் போனான். இன்னொருவன் கந்தல் துணிகளும் தீ மூட்டுவதற்கு கல்லும் கொண்டுவரப் புறப்பட்டான்.
மூன்றாமவன் தீவட்டிக்கான மரக் கைப்பிடிகளைத் தயார் செய்வதற்காக வெட்டரிவாளும் கையுமாக வாகை மரத்தில் ஏறினான். தேவர் திடுக்கிட்டார். கைவசமிருந்த கறுப்பு அங்கிக்குள் மெல்ல உடலை நுழைத்துக்கொண்டு கிளைகளிடையே நன்றாக மறைந்துகொண்டார். தம் உடை வெள்ளையாக இருப்பதனால் மரத்தின்மேல் ஏறுபவனுக்குத் தெரிந்துவிடக்கூடாதே என்பத்ற்காகத்தான் அவர் முன் ஜாக்கிரதையாக எடுத்து வைத்துக்கொண்டிருந்த கறுப்பு அங்கியில் மறைந்து கொண்டார்.
அந்தப் பாழாய்ப்போன வாகை மரத்தில் எத்தனையோ கிளைகள் இருந்தன. ஆனால், ஏறியவன் தேவர் உட்கார்ந் திருந்த கிளையை நோக்கியே வந்தான். கிளைக்குத்தான் வந்தான்! தொலைந்துபோகிறது என்றால் அவன் வெட்டிய கொம்பும் தேவர் கை பிடித்துக் கொண்டிருந்தது.”
எந்தக் கொம்பின் கைப்பிடி பலத்தில் தேவர் மரக் கிளையில் பதுங்கியிருந்தாரோ அந்தக் கொம்பின் அடியில் அவனுடைய அரிவாள் சதக் சதக் என்று பாய்ந்துகொண் டிருந்தது. இன்னும் நாலைந்து வெட்டு விழுந்தால் கொம் பேர்டு தேவரும் கீழே விழ வேண்டியதுதான். நல்ல இருட்டு. வந்தது வரட்டுமென்று துணிந்து கிளைமேல் நின்று வெட்டிக்கொண்டிருப்பவனின் வலது காலைத் தமது வலது காலால் வேகமாக இடறிவிட்டார் தேவர்.
அவன் அடுத்த விநாடி, “ஐயையோ! அப்பா மரத்தில் பிசாசு காலை இடறிவிடுகிறதே” என்று அலறிக் கொண்டே நிலைகுலைந்து போய்ப் பொத்தென்று கீழே குதித்தான். அவன் கையிலிருந்த அரிவாள் நழுவி தேவருடைய வலது காவில் சிராய்த்துவிட்டுக் கீழே விழுந்தது.
“பிசாசாவது ஒன்றாவது? எங்கே பார்க்கலாம்! ஏறுங்கடா மரத்திலே” பத்துப் பன்னிரண்டு பேர் மொத்தமாக வாகை மரத்தில் ஏறவும் தேவர் நடுநடுங்கிப் போனார்.
‘உயிர் பிழைக்க வேண்டுமானால் இனிமேல் கீழே குதித்து ஓடுவதைத் தவிர வேறுவழியில்லை’ - என்று அவர் மனத்திலே பட்டுவிட்டது.
அடுத்த கணம் குதிரையின் தலை வழியாகக் கீழே குதித்து மேற்கு நோக்கித் தலை தெறிக்க ஓடத் தொடங். கினார். மரத்திலேறினவர்களும் கீழே குதித்து விரட்டினர். முதல் முதலில் மரத்திலிருந்து அரிவாளோடு குதித்தவன் மட்டும் எழுந்து நடக்க முடியர்மல் கால் பிசகிக் கீழே விழுந்து கிடந்தான். மற்றவர்கள் அத்தனை பேரும் தேவரைத் துரத்திக்கொண்டு ஓடி வந்தனர். அவர் ஓட: அவர்கள் துரத்த, நேரம் கழிந்துகொண்டிருந்தது.
கொள்ளைக்காரர்களின் தலைவன் ‘பெரிய மாயன்’ தன் ஆட்களுக்காகக் குதிரைகளோடு காத்திருக்கிற இடம் வரை அவர் ஓடி வந்துவிட்டார். குதிரைகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்ததனால் அவர் ஓடுவதற்கு வழி இல்லை. துரத்துபவர்கள் அருகில் நெருங்கிவிட்டனர். தாம் என்ன செய்யலாம் என்றே அவருக்கு விளங்கவில்லை. எதிர்ப்புறம் குதிரைமேல் பெரிய மாயன் உட்கார்ந்துகொண்டிருக்கிறான். பின்புறம் துரத்துபவர்கள் நெருங்கிவிட்டார்கள். தாம் கொள்ளைக்காரர்கள் வழக்கமாக அணிந்து கொள்ளும் உடையில் இருந்ததை எண்ணியதும் சட்டென்று அவருக்கு ஒரு யுக்தி தோன்றியது. முதலில் பெரிய மாயன் ஏறிக் கொண்டிருந்த குதிரை நின்றுகொண்டிருந்தது அடுத்திருந்த குதிரைகள் வரிசையாகச் சவாரிக்குத் தயாராக நின்று கொண்டிருந்தன. இரண்டாவதாக நின்ற குதிரையில் தாவி ஏறிக்கொண்டார் தேவர். அவருடைய உடையினால் பெரிய மாயன் சந்தேகம் கொள்ளவில்லை.
“என்ன? மற்றவர்கள் எங்கே? நீ மட்டும் ஏன் ஓடி வருகிறாய்?”-பெரிய மாயன் அதிகார தோரணையில். கேட்டான். அந்தக் குரலைக் கேட்டதும் தெய்வச்சிலையாருக்குச் சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது! ஆகா இது யாருடைய குரல்? எவ்வளவு பயங்கரமான உண்மை?-அவருக்கு மயிர்க் கூச்செறிந்தது.
பின்னால் ஆட்கள் கூச்ச்லும் கூப்பாடுமாகத் துரத்தி வருவதைக் கேட்டு அந்த அதிர்ச்சியில் முதல் இரண்டு குதிரைகளும் கிளம்பிவிட்டன. முன்னால் பெரிய மாயனின் சிவப்புக் குதிரை. அடுத்துத் தேவரின் குதிரை. துரத்தி வந்தவர்களும் மற்றக் குதிரைகளை மடக்கி ஏறிக்கொண்டு விட்டனர். முன்னால் பெரிய மாயனின் குதிரை.
பின்னால் வரிசையாகத் துரத்துகிறவர்களின் குதிரை நடுவில் தேவர் ஏறிய குதிரை அகப்பட்டுக் கொண்டது. நல்ல இருட்டு ஒருவரிடமும் தீவட்டி இல்லை. எல்லாக் குதிரைகளும் வேகமாக முன்னேறிக்கொண்டிருந்தன. பின்னால் துரத்தி வந்தவர்களின் கூச்சல் மட்டும் ஒயவில்லை.
ஆயிற்று! இதோ ஒலைப்பாயில் கேழ்வரகு தூவியிருக்கும். இடம் நெருங்கி விட்டது. தேவர் குதிரையிலிருந்து குதித்து விட நினைத்தார், முடியவில்லை. திடீரென்று என்ன நினைத்துக் கொண்டாரோ அந்தக் கறுப்பு அங்கியைத் தம் உடலிலிருந்து உருவி எறிந்துவிட்டார்.
தடதடவென்று ஒலைப்பாயில் குதிரைகள் நடந்தன. அடுத்த கணம் பொத்துப்பொத்தென்று சறுக்கி விழுந்தன. லாடங்களை வழுக்கச் செய்து எழுந்திருக்க முடியாமல் குதிரைகளைச் சறுக்கி வீழ்த்தியது கேழ்வரகு. தேவர் கீழே உருண்டார். குதிரைகள் சில அவருடைய நெஞ்சிலும் மார் பிலும் மாறி மாறி மிதித்துக்கொண்டு சென்றன. அவருக்குப் பிரக்ஞை தவறிவிட்டது. எத்தனை குதிரைகளின் மிதியைத் தான் ஒரு வயதானவர் பொறுக்க முடியும்?
மறுபடி அவருக்குப் பிரக்ஞை வந்தபோது தாம் ஊர்ச் சாவடியில் கிடத்தப்பட்டிருப்பதை உணர்ந்தார். சாவடித். தூண்களில் கொள்ளைக்காரர்கள் வரிசையாகக் கட்டி வைக்கப்பட்டிருந்தனர், முக்கியமான ஆளை மட்டும் காண, வில்லை.
“பெரிய மாயன் எங்கே?”- அவர் ஆவலோடு கேட்டார்.
“இருட்டிலே குதிரைக் காலிலே மிதிபட்டுக் கறுப்பு. முகமூடி அணிந்த ஒரு ஆள் அங்கேயே இறந்திட்டார். இந்தக் கொள்ளைக்காரர்களை விசாரித்ததில் அவர்தான் பெரிய மாயன் என்று சொல்லுகிறார்கள். உங்கள் முதல் விருப்பப்படி அவரை உயிரோடு பிடிக்க முடியவில்லை. இரண்டாவது விருப்பப்படி உங்கள் அனும்தியின்றி முக மூடியைக் கழற்றி ஆளைப்பார்க்கக் கூடாதென்று அங்கேயே போட்டுவிட்டு வந்துவிட்டோம்...”
“உங்கள் ஜமீன்தார் விஜயாலய மருதப்பத்தேவரைச் செத்த பின்பாவது நீங்கள் மன்னிப்பீர்களா? அவருடைய பாவம் பெரியது. மிகவும் பயங்கரமானது. வேலியே பயிரை மேய்ந்து அழித்த பாவம் அது. பொருளாசை யாரைத்தான் விட்டது? இல்லாதவன் ஆசைப்பட்டால் அது இயற்கை. ஆனால் அரசனே கொள்ளைக்காரன் வேஷம் போட்டால் அது எவ்வளவுநாள் பலிக்கும்? பலநாள் திருடன் ஒருநாள் அகப்பட்டுத்தானே. ஆகவுேண்டும்?”
“நீங்கள் சொல்வது ஒன்றும் புரியவில்லையே-?” -- போங்கள்! போய் முகமூடியைக் கழற்றிப் பாருங்கள். பெரிய மாயன் யார் என்று புரியும் புரிந்து கொண்டபின் ஆச்சரியப்பட்டால்தான் அது உங்கள் தவறு. அவனை அந்த இடத்திலேயே அடக்கம் செய்துவிடுங்கள். அவனுடைய பாவ சரீரம் மறுபடியும் இந்த ஊரெல்லையில் நுழைய வேண்டாம். அந்த இடத்தில் ஐயனார் கோவிலிலிருந்து ஊர்வரை காட்டை அழித்துப் பொட்டலாக்கி விட்டால் கூட நல்லது. இதுதான் தெய்வச்சிலையாருடைய இறுதி வேண்டுகோளாக அமைந்தது. இதன் பிறகு சில நாழிகைகளில் அந்த மகா வீரபுருஷரும் அமர பதவி அடைந்தார். அத்தனை குதிரைகள் மிதித்தும் அதுவரை அவர் உயிர் உடலில் தங்கியிருந்ததே புண்ணிய பலன்தான்.
விஜயாலய மருதப்பத் தேவர்தான் பெரிய மாயன்என்று அறிந்தபோது ஜனங்களுக்கு ஏற்பட்ட அருவருப்பு இவ்வளவென்று சொல்லி முடியாது. காறி உமிழ்ந்தும் கல்லால் எறிந்தும் அந்தப் பெரிய மாயனை அடக்கம் செய்தனர். தேவர் வேண்டுகோளின்படி ஐயனார் கோவிலிலிருந்து ஊர் எல்லைவரை காட்டை அழித்துப் பொட்டலாக்கினர்.
★
வெள்ளையத்தேவன் பாறை
மாலை ஆறுமணிக்கு மலையிலிருந்து இறங்கி இருட்டு வதற்குள், ஜீப்பில் ஊர் திரும்பிவிட வேண்டும் என்பது புறப்படும் போது நாங்கள் போட்டிருந்த திட்டம். ஆனால் மனிதயத்தனத்திற்கும் மேற்பட்ட சக்தி ஒன்று “உலகில் நான் இருக்கிறேன். என்னை மறந்துவிடாதீர்கள்” என்று அறிவுறுத்துவதுபோல, நம்முடைய திட்டம் சில சமயங்களில் மாறிவிடு கிறதே! அந்த மாதிரியேதான் அன்றைக்கும் நடந்துவிட்டது ஆம் மாலை ஐந்து மணிக்கே மழை பெரிதிாகப் பிடித்துக் கொண்டது.
“நான், வீராசாமித் தேவர், கோடைக்கானலிலிருந்து வந்திருந்த வேட்டை நிபுணர் ஜான்ஸன் மூவரும் மாலை ஆறரை மணிக்குக் கொங்கு மலையின் அடிவாரத்திலுள்ள கபிலக்குறிச்சி கிராமத்திலிருந்து மலைக்குப் புறப்பட்டிருந்தோம். காட்டிலாகா ரஸ்தா, மலைமேல் குறிப்பிட்ட சில இடங்கள் வரை ஜீப்பிலேயே செல்ல வசதியாக இருக்கு மென்று முன்பே தெரிந்துகொண்டிருந்தோம்.
நானும் வேட்டை நிபுணர் ஜான்ஸனும்தான் அந்த மலைக்குப் புதியவர்கள். வீராசாமித் தேவரோ இருபது வருஷங்களுக்கு மேலாகத் தம் சொந்த ஊராகிய கபிலக் குறிச்சி கிராமத்திலிருந்து, அங்கே வாரந் தவறாமல் வேட்டைக்குப் போய்ப் பழகியவர். ஜான்ஸன் ஆங்கிலோஇந்திய இளைஞர். மதுரை அமெரிக்கன் காலேஜில் படிக்கும் போது தமிழ்ப் பாட சம்பந்தமாக அடிக்கடி என்னிடம் தமிழ்ச் சங்கத்திற்கு வந்து சந்தேகங்களைத் தெளிவு செய்து கொண்டு போவார். இதனால் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. ஆகவேதான் அவர் கோடைக்கானலிலிருந்து கொங்கு மலைக்கு வேட்டையாடப் போகும்போது மதுரையில் என்னைச் சந்தித்து, “சார் நீங்களும் வாருங்களேன். உங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வீவுதானே? கொங்குமலை இயற்கைவளம் மிக்க இடமாம், போய்விட்டு வரலாம்” என்றார். நானும் “சரி” என்று புறப்பட்டு விட்டேன். நாங்கள் இருவரும் சனிக்கிழமை இரவு கபிலக் குறிச்சியை அடைந்து அங்கே எங்களுக்கு வழி விவரங்களைத் தெரிவிப்ப தற்காகவும், துணைக்காகவும் தேடிக்கொண்ட ஆள்தான் இராச்ாமித் தேவர். ஜான்ஸனும் தேவரும் வேட்டைக் காரர்கள், அவர்களுக்கிடையே நான் போவது எனக்கென்னவோ போலிருந்தது. வேட்டையாட வந்திருப்பவர்களோடு நாம் இயற்கை வளத்தை ரசிக்கலாம் என்றெண்ணிக் கொண்டு வந்தது, நம்முடைய பிசகு’ - என்று மலைக்குப் போகும்போது நான் எண்ணினேன். ஏனென்றால், ஜிப்பில் போய்க்கொண்டிருக்கும்போதே எதேதோ வேட்டை சம்மந்தமான விஷயங்களைப் பற்றி நான் ஒருவன் நடுவில் அமர்ந்திருப்பதையே மறந்துவிட்டுத் தமக்குள் சம்பாவிக்கத் தொடங்கிவிட்டார்கள் வீராசாமித் தேவரும் ஜான்ஸனும்.
***
ஆறு மணிக்கு மலையிலிருந்து புறப்படுவோம் என்று. எதிர்பார்த்ததற்கு மாறாக, மழை சோனாமாரியாகப் பிடித்துக்கொண்டு விட்டது. மணி ஏழரை ஆகியும் வேகம், குறையவேள் நிற்கவோ இல்லை. “இந்த மழையில் ஜீப் நிச்சயமாகப் போகாது பாதை முழுவதும் ஒரே தன்னி, மயமாக இருக்கும்” - என்று வீராசாமித் தேவர் கூறி விடவே, மழை நின்று பாதையில் தண்ணீர் வடிந்தபிறகே போவது: என்று முடிவு செய்தோம். இருட்டு வேறு, பயங்கரமாகச் சூழ்ந்திருந்தது.
நாலைந்து பேர் தங்குவதற்கு வசதியாக இருந்த மலைக் குகை ஒன்றைக் கண்டுபிடித்தார் தேவர். அதிலே மழை நிற்கிறவரை நாங்கள் தங்கலாம் என்பது அவர் ஏற்பாடு.
“உள்ளே இருட்டாக இருக்கிறது தேவரே! எதுவும் துஷ்ட மிருகங்கள் பதுங்கியிருந்தாலும் தெரிந்து கொள்வ. தற்கில்லையே’’ என்று குகைக்குள் துழைவதற்குத் தயங்கினேன் நான்.
“சந்தேகம் எதற்கு? அதையும்தான் பார்த்துவிடுவோமே!” என்று கூறிக்கொண்டே, குகையை நோக்கித் துப்பாக்கியால் ஒரு முறை சுட்டார் ஜான்ஸ்ன். துப்பாக்கி ரவை பாறையில் மோதி எதிரொலித்ததே தவிர, வேறு எவ்விதச் சலனமும் குகைக்குள் இல்லை.
“இப்போது உங்களுக்குச் சந்தேகம் இல்லையே?” - தேவர் என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே கேட்டார். நான் சம்மதத்திற்கு அறிகுறியாகத் தலை அசைத்தேன். மூவரும், வேட்டையாடிய மிருகங்கள், உடன் கொணர்ந் திருந்த மற்றச் சாமான்கள் சிகிதம் குகைக்குள் நுழைந்தோம். சிகரெட் பொருத்திக் கொள்வதற்காக ஜான்ஸன் கொணர்ந் திருந்த தீப்பெட்டிைைய வாங்கிய தேவர், குகையில் அங்கங்கே கிடந்த சுள்ளிகளைத் துழாவி எடுத்து நெருப்பு மூட்டினார். குகைக்குள் வெளிச்சம் பரவியது.
தேவரும் ஜான்ஸனும் வேட்டையாடி வந்திருந்த மிருகங்களின் உடல்கள் அந்த வெளிச்சத்தில் பயங்கரமாகக் காட்சியளித்தன.
நான் அத்தக் குகைக்குள் உலாவிக் கொண்டே, அதைச் சுற்றி ஒரு கண்ணோட்டம் விட்டேன். தெற்கு வடக்காக அமைந்திருந்த அந்தக் குகைக்குத் தென்புறம் வாயில் இருந்தது. குகையின் வடகிழக்குப் பக்கத்துப் பாறை ஒன்றின் மேல் சென்ற என் பார்வை, அப்படியே அந்தப் பாறையில் நிலைத்தது. ஒருகணம் நான் அப்படியே திகைத்து நின்று விட்டேன். மெல்ல நின்று நிதானித்து, ஊன்றிப் பார்த்த போதுதான் அந்தப் பாறையின் மேல் நிற்பது சிலை என்று புரிந்துக் கொள்ள முடிந்தது. அருகிற் சென்று பார்த்தேன். ஒரு கையில் ஓங்கிய அரிவாள். மற்றோர் கையில் பாலாக்கம்பு. ஆறடி உயரம், வாட்டசாட்டமான உடல், மதயானை போன்ற தோற்றம், தொலைவிலிருந்து பார்க்கிற எவரும் அந்த உருவத்தைச் சிலை என்று சொன்னால் நம்பமாட்டார்கள். எண்ணெய் வழிந்து வழிந்து கருமை பளபளத்தது அந்தச் சிலையில். கம்பீரமும், பெருமிதமும் தோன்றும் மீசையோடு கூடிய அந்தச் சிலையின் முகத்தோற்றம் காண்பவர்களைச் சற்றே நடுங்கவைக்கா மலிருக்காது. கருப்பன்-என்ற பெயரில் கிராம தேவதை களில் ஒன்றாக விளங்கும் துஷ்டதேவதையின் சிலையைப் போலத்தான் ஏறக்குறைய இந்தச் சிலையும் இருந்தது. ஆனால், இதன் ஆகிருதி பெரிது! இந்தச் சிலையைப் பற்றி விராசாமித் தேவரிடம் விசாரிக்க வேண்டும் என்றெண்ணிக் கொண்டேன் நான். இதற்குள் அங்கேயே ஸ்டவ் மூட்டித் தேநீர் தயாரித்து முடித்துவிட்ட வீராசாமித் தேவர், கொஞ்சம் ரொட்டியும் தேநீரும் எடுத்துக் கொண்டு என் னிடம் வந்தார். நான் அதுதான் சமயம் என்று அவரிடம் என் கேள்வியைக் கேட்டுவைத்தேன்: “வீராசாமித் தேவரே! இது என்ன ஐயா, இங்கே ஒரு பெரிய சிலை இருக்கிறதே? இந்தக் குகை ஏதாவது கோவிலோ?"-
தேவர் தேநீரையும் ரொட்டியையும் எனக்கருகிலுள்ள ஒரு பாறையில் வைத்துக்கொண்டே, என் கேள்விக்குப் பதில் சொன்னார்.
“இதுங்களா? இது வெள்ளையத் தேவன் சிலை. இந்த இடம் ஒரு கோவில் மாதிரித்தான்னு வச்சுக்குங்களேன். இதுக்கு ‘வெள்ளையத் தேவன் பாறை’ என்று இந்தப் பக்கம் பேர் சொல்றதுங்க... இந்த வெள்ளையத் தேவனைப் பற்றிய சம்பவங்களையும், விரப் பிரதாயங்களையும் சொன்னாலே, வருஷக்கணக்காகச் சொல்லலாமுங்களே!” என்று பூர்வ பீடிகை போட்டார் தேவர்.
இதற்குள் ஜான்ஸனும் அங்கே எழுந்து வந்து சிலையை ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டே நின்றார். நான் ரொட்டியையும், தேநீரையும் தீர்த்துக் கட்டி விட்டு, வீராசாமித் தேவரின் வாயைக் கிண்டினேன்.
வீராசாமித் தேவர் வெள்ளையத் தேவனின் வாழ்க்கையைப் பற்றிய சம்பவங்களைப் பின்ன பின்னமாகக் கூறினார். நான் மொத்தமாகவே ஒரு கதையாகத் தொகுத்திருக்கிறேன்.
***
கபிலக்குறிச்சி மறவர்களின் இருப்த்தெட்டாவது தலை முறையில் தலைக்கட்டு நாட்டாண்மையாக விளங்கிய வீரபாண்டியத் தேவரின் மூத்த பிள்ளைதான் இந்த வெள்ளையத்தேவன். நாட்டாண்மைத் தேவருக்கு ஒரு பெண்ணும் இருந்தாள். அவள் வெள்ளையனுக்கு இளையவள். மீனாட்சி என்று அவளுக்குப் பெயர். வெள்ளையனுக்கு இருபத்தைந்து வயது ஆனபோது மீனாட்சிக்கு வயது பதினேழு. இருவருக்கும் எட்டு வருஷ வித்தியாசம். இந்த இரு மக்களையும் நாட்டாண்மைத் தேவருக்குக் கால் கட்டாக விட்டுவிட்டு, அவர் மனைவி சில வருஷங்களுக்கு முன் கால மாகிவிட்டாள். உறவு முறைக்குள்ளே பலர் வற்புறுத்தியும் நாட்டாண்மைத் தேவர் அதற்குப்பின் இரண்டாந்தர விருப்பம் எனக்குக் கிஞ்சித்தும் இல்லை, என்று மறுத்து விட்டார்.
இப்படியிருக்கும் நிலையில்தான் பரம சாதுவாயிருந்த வெள்ளையத் தேவன், மனங்கொதித்துத் தன் வாழ்க்கையின் போக்கையே மாற்றிக்கொள்ளத் தக்க அந்தச் சம்பவம் நிகழ்ந்தது! வெள்ளையத் தேவனை மட்டுமில்லை; எங்கள் ஊரையே பாதித்தது அந்தச் சம்பவம்.
இங்கே எங்கள் ஊருக்கு மேற்கே, மேலமலை அடிவாரத்தில் கரிசல் குளம் என்ற ஊர் இன்றும் இருக்கிறது. அங்கும் எங்கள் மறக்குடியைச் சேர்ந்தவர்கள்தாம் அதிகமாக வசிக்கிறார்கள். பெண் கொடுக்கல், வாங்கல், இனம், ஒன்றுக்குள், ஒன்று-என்றிவ்வாறாக நாங்கள் இரண்டுர்க்காரர்களும் நெருக்கமான தொடர்புடையவர்கள். வீரபாண்டியத். தேவர் மகள் மீனாட்சியைப் பரிசம்போட்டுத் தம் மகனுக்கு. மனம் முடிப்பதற்காகக் கரிசல்குளத்து நாட்டாண்மைக் காரர் முன்வந்தார். கல்யாணம், கார்த்திகை, எந்த விசேஷ’ மென்றாலும் ஊரிலுள்ள அத்தனை தலைக்கட்டுகளையும் கலந்து செய்யவேண்டும்-என்று இங்கே கபிலக் குறிச்சியில் ஒரு கட்டுப்பாடு இருந்தது. இதன்படி நாட்டாண்மைத் தேவரும் எங்களுர்த் தலைக்கட்டுகளை ஒன்றுகூட்டி, மீனாட்சியின் கல்யாண சமாசாரத்தைப் பிரஸ்தாபித்தார். தலைக் கட்டுகளும் சம்மதித்துக் கல்யாணத்திற்கு அனுமதி கொடுத்தனர்.
வீரப்பாண்டியத்தேவர் மகள் மீனாட்சி நல்ல அழகி. அரபிக் குதிரை மாதிரி வளர்ந்த தேகம் கருவண்டுகள் போல் சுழலும் கவர்ச்சிகரமான விழிகளோடுகூடிய அவள் முகத்தை. இன்று முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். எத்தனைக்கு எத்தனை அழகு இருந்ததோ, அத்தனை சாத்வீக மான சுபாவமுடைய பெண்.
‘இந்தப் பெண் தங்களுர் நாட்டாண்மைக்காரருக்கு மருமகளாக வரப்போகிறாள்’ என்ற செய்தி கரிசள்குளத் தாருக்கே தனி மகிழ்ச்சியைக் கொடுத்தது. கல்யாணத்தை அந்த வருஷம் சித்திரையில் விமர்சையாக நடத்திவிட்டார்கள். கல்யாணம் நடந்த மறுவாரமே. கரிசல்குளத்தார். - பெண்ணை அழைத்துச் சென்றுவிட்டார்கள். இது நடந்து மறுமாதத்திலேயே உள்ளுரிலிருந்த முறைப்பெண் ஒருத்தி வெள்ளையனை மாலையிட்டாள்.
ஆறு மாதம் கழிந்தது. இந்தக் கல்யாணத்தை நடத்துவதற்கென்றே காத்திருந்தவர்போல, வீரபாண்டியத்தேவர் ஒரு மாதம் குளிர் காய்ச்சலால் வருந்தி முடிவில் காலமானார். வெள்ளையத்தேவனையும், மீனாட்சியையும் மட்டுமில்லை; எங்கள் கபிலக்குறிச்சியையே மீளாத்துயரத்தில் ஆழ்த்தி விட்டது அவரது மரணம்.
நாட்டாண்மைத்தேவர் காலமாகி விட்டதனால் அடுத்தபடி யாரை நாட்டாண்மை ஆக்குவது என்று தலைக்கட்டுக்கள் கூடி யோசித்தார்கள். வாலிபப் பருவத்தினன் ஆனாலும் சாத்வீகமான குணமும், பொறுப்புணர்ச்சியும், தேவையான விஷய ஞானமும் இருந்ததனால் வெள்ளையத் தேவனையே அடுத்த நாட்டாண்மையாகத் தேர்ந்தெடுத்தார்கள். வெள்ளையத்தேவனும் தன்னுடைய வயதுக்கு மறிய அந்தப்பொறுப்பை ஏற்றுச் சாமர்த்தியமாக நிர்வகித்து வந்தான். வீரப்பாண்டியத்தேவர் இல்லாத குறையை அவனுடைய திறமையால் போக்கிவிட்டான். அவன் சாமர்த் தியத்துக்கு ஒரு சோதனையாக வந்தது அந்தச் சம்பவம்.
அது தை மாதம்! அன்று வெள்ளிக்கிழமை. உள்ளுர் மாரியம்மன் கோவிலின் வருஷாந்தரத் திருவிழாவிற்காக வெள்ளையத்தேவன் வீட்டில் தலைக்கட்டுக்கள் கூடியிருந்தார்கள். திருவிழாவுக்குத் தேதி குறிப்பிடுவது முதல், ‘எப்படி எப்படி நடத்தலாம்?’ என்பதுவரை அவர்கள் கூடி ஆலோசித்துக் கொண்டிருந்தார்கள். அந்தச் சமயத்தில் திடீரென்று. சல்சல்-என்ற சதங்கை ஒலியோடு வீட்டு வாசலில் ஒரு வில் வண்டி வந்து நின்றறு. யாவரும் காரணம் புரியாமல் திகைத்தனர், வெள்ளையன் எழுந்து வீட்டு வாசலுக்கு வந்து பார்த்தான்.
வண்டிக்காரன் மூட்டை முடிச்சுக்களை இரண்டு கைகளிலும் எடுத்துக்கொண்டு முன்னால் வர, மீனாட்சி அழு தழுது சிவந்த கண்களுடன் துயரமே உருவாய், அவன் பின்னால் நடந்து வந்தாள்.
வெள்ளையத்தேவன் மனம் ஏதேதோ எண்ணிப் பதறியது வண்டிக்காரன் மூட்டை முடிச்சுகளைத் திண்ணையிலேயே போட்டுவிட்டுத் திரும்பிப் பாராமல், வண்டியில் போய் ஏறிக்கொண்டு போய்விட்டான். வெள்ளையனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை!
மீனாட்சி வாசற்படியில் வந்து நீரொழுகும் கண்களுடன் தலைகுனிந்து நின்றாள். இதற்குள் வீட்டிற்குள்ளே உட் கார்ந்திருந்த தலைக்கட்டுக்களும் ஒவ்வொருவராக எழுந்திருந்து, வாசற்புறம் வந்துவிட்டார்கள்.
“இது என்ன மீனாட்சி?” - வெள்ளையத்தேவன் பரபரப்போடு கேட்டான்.
கிறிது நேரம் மீனாட்சி பதிலே சொல்லவில்லை. வெறுங் கண்ணீர், விக்கலும், விம்மலும், சேர்ந்த அழுகையாகப் பீறிட்டுக்கொண்டு வந்தது இப்போது.
“இப்படி ஒன்றும் சொல்லாமல் அழுதால், எனக்கென்ன புரியும் மீனாட்சி?” - அவன் மீண்டும் கேட்டான்.
“அண்ணா.நான். நான். வந்து மலடியாம் அண்ணா!.. அவங்க என்னை ஒதுக்கிட்டு வேறே இடத்துலே...கட்டிக்கப் போறாங்களாம்!”...விம்மலுக்கும் மீறிப் பொங்கிவரும் அழுகையை அடக்கமுடியாது திணறிக் கொண்டே கூறினாள் மீனாட்சி. அடுத்த கணம் அவள் வீட்டிற்குள்ளே புடவைத் தலைப்பால் முகத்தை மறைத்துக்கொண்டே, அழுதவாறு ஓடிவிட்டாள். வெள்ளையனின் மனைவி அவளைக் கைத் தாங்கலாக உள்ளே அழைத்துச் சென்றாள்.
“ஹாங்! அப்படியா? சொன்னான்? கரிசல்குளத்தா னுக்கு என்ன திமிர்?” - பசியோடு குகைக்குள் இருக்கும் சிங்கத்தின் முழக்கத்தைப்போலிருந்தது தேவனுடைய குரல். நாட்டாண்மையின் ஆத்திரத்தைவிடத் தலைக்கட்டுக்களின் ஆத்திரம் அதிகமாகவே இருந்தது. ஏனென்றால், அது வெள்ளையத்தேவனுடைய குடும்பத்துக்கு ஏற்பட்ட அவ மானம் மட்டுமில்லை; கபிலக்குறிச்சி ஊருக்கே ஏற்பட்ட அவமானம். அத்தனை பேரும் மனம் கொதித்துக் குமுறலானார்கள்.
ஐந்தே முககால், ஆறு அடி மதிக்கத் தக்க உயரமும், கட்டுமஸ்தான தேகமும், ராஜ கம்பீரமும், வாலிப அழகும். திகழும் தோற்றமும் கொண்ட வெள்ளையத்தேவன் தங்கைக்கு நேர்ந்த அவமானத்தால், எரிமலையாகவே மாறி விட்டிருந்தான்.
“இப்பொழுதே ஆயுதங்களை எடுத்துக்கொண்டு புறப் படுங்கள்! அந்தக் கரிசல்குளத்தானுக்குச் சரியானபடி புத்தி புகட்டுவோம்!” என்று இடியேறு போல முழங்கியது வெள்ளையனின் குரல்.
மறுவிநாடி அங்கே இருந்த அத்தனை பேருடைய கைகளிலும் பாலாக்கம்புகளும், வெட்டரிவாள்களும் மின்னின. கபிலக்குறிச்சியின் தன்மானத்தின் சக்தி எவ்வளவு பெரியது” என்பதைப் பிரத்தியட்சமாகக் காட்டினர் அங்குள்ளோர். அந்தி மயங்கி, இருள் சூழும் நேரத்தில் கரிசல்குளத்தையே சூறையாடிவிடுவது என்ற நோக்கத்தோடு புறப்பட்டனர் அவர்கள்.
அந்த நேரத்தில்தான் வெள்ளையனுக்கு முறைப்பெண் கொடுத்த மாமன், செய்தியைக் கேள்விப்பட்டு, அவசரமாக ஓடிவந்தார். புறப்பட்டவர்கள் அவரால் கையமர்த்தி நிறுத்தப்பட்டனர். வெள்ளையனும் தயங்கி நின்றான்.
அவ்ர்.கூறினார்:- “வெள்ளை, ஆத்திரப்பட்டு எதையும் செய்யாதே அவசியம் வ்ரும்போது வெட்டரிவாளும், பாலாக் கம்பும் கிடைக்காமலா போய்விடப்போகின்றன? கொஞ்சம் பொறு! நான் உள்ளே போய் மீனாட்சியிடம் பதமாக விஷயத் தைக் கேட்டுக்கொண்டு வருகிறேன். அவன் இவளை ஒதுக்கி: விட்டு, மறுதாரம் கட்டிக்கொள்வதில் ஏதோ ஒரு சூழ்ச்சி அட்ங்கியிருக்கிறது. அதை அறிந்த பின், நாம் ஆவன செய்யலாம்!... தயவுசெய்து நான் விசாரித்துக்கொண்டு வருகிறவரை நீயும், தலைக்கட்டுக்களும் இங்கேயே இருக்க வேண்டும்” என்று இப்படி வேண்டுதல் செய்து கொண்டு உள்ளே சென்றார் வெள்ளையத் தேவனின் மாமன். தேவனும் அவனைச் சேர்ந்தவர்களும் அவருக்காகத் தாமதித்து நின்றார்கள்.
கால் நாழிகையில் அவர் உள்ளிருந்து திரும்பி வந்தார். அவர் முகத்தில் தெளிவு தென்பட்டது. வெள்ளையத் தேவனின் அருகே வந்து நின்றுகொண்டு அவர் கூறினார்:
“விஷயம் இப்போதுதான் விளங்குகின்றது! உன் தங்கை யிடம் சரியாக விசாரித்துக் கொள்ளாமலேயே நீ புறப்பட்டு விட்டாயே? நான் உள்ளே போய் அவளுக்கு ஆறுதல் கூறி, ஆசுவாசப்படுத்தி விசாரித்ததில் உண்மை வெளிவந்து விட்டது. கரிசல்குளம் பண்ணைத்தேவரை உனக்குத் தெரிந்: திருக்கும். பெரிய செல்வந்தர். அவருக்கு இருக்கும் ஒரே ஒரு பெண்தான் வாரிசு. சொத்தெல்லாம் நாளை அந்தப் பெண்ணுக்குத்தான் சேரவேண்டும். தம் பெண்ணுக்குக் கல்யாண வயது வந்துவிட்டதனால் பண்ணைத்தேவர் எப்படியும் இந்தச் சித்திரைக்குள் கல்யாணத்தை நடத்தி விடவேண்டும் என்றிருக்கிறாராம். ‘மலடி’ என்று சொல்வி ஒதுக்கிவிட்டு, பண்ணை தேவரின் சோத்துக்கு ஆசைப்பட்டு அவர் பெண் னுக்குப் பரிசம் போடப் போகிறானாம் உன் மருமகப்பிள்ளை. இதுதான் விஷயம்!”
“பார்த்துவிடலாமே அவன் பரிசம் போடுவதை! மாமா! இந்த வெள்ளையத்தேவன் உடலில் உயிர் இருக்கிறவரை அதை நடக்கவிடமாட்டேன்’ என்று வெள்ளை குமுறினாள்.
“வெள்ளை! இந்த மாதிரி நாசூக்கான விஷயங்களிளெல் லாம் கத்தியைவிட யுக்திதான் பயன்படும். உன்னிடம் ஆத்திரம்தான் இருக்கிறதே தவிர அனுபவம் இல்லை. முதலில் தலைக்கட்டுக்களை எல்லாம் வீட்டுக்கனுப்பு. மாரியம்மன் திருவிழாவைப்பற்றி இந்த விவகாரம் ஒய்ந்தபின், சாவ தானமாகப் பேசிக்கொள்ளலாம், மீனாட்சி விவகாரத்தில் இப்போதைக்கு இவர்களுடைய ஒத்துழைப்பு தேவையில்லை. விவகாரம் யுக்தியால் தீர்வதற்கு எனது யோசனையை நீ கேள்’ என்று மாமன் கூறினான்.
வெள்ளைத்தேவனும் அப்படியே செய்தான். தலைக் கட்டுக்கள், மாமன் வந்து தங்கள் ஆத்திரத்துக்கு அணை போட்டுவிட்டானே” என்று அவனை நொந்துகொண்டே வீடு திரும்பினர்.
பாலாக்கம்பையும், அரிவாளையும் மூலையில் வீசி எறிந்து விட்டு, அனுபவஸ்தரான மாமனுக்கு முன்பு அமர்ந்தான் வெள்ளையத்தேவன். அப்போது மாலைப்போது கழிந்து, இருள் சூழ்ந்துகொண்டிருந்தது.
கிழவர் ஆரம்பித்தார்: “வெள்ளை! இந்த முயற்சியில் வெற்றி பெற வேண்டுமானால், நாம் கொள்ளைக்காரர்களாக மாற வேண்டும். முள்ளை முள்ளால்தான் எடுக்கவேணும். வேறு வழியில்லை...”
“மாமா! நீங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லையே!... தெளிவாகச் சொல்லுங்கள்...”
“சொல்கிறேன் கேள் வெள்ளை! நம்முடைய கொங்கு மலையின்மேல் ஒரு பாறைக் குகை இருக்கிறதே, உனக்குத் தெரியுமோ?”
“ஏன்? நான் வேட்டைக்குப் போகும்போதெல்லாம் அந்தக் குகைப்பக்கம் போவேனே!”
“நாளை விடிவதற்குள் பண்ணைத்தேவனின் மகளை அந்தக் குகையில் கொண்டுபோய் இரண்டாம் பேருக்குத் தெரியாமல் சிறைப்படுத்தி வைத்துவிட வேண்டும். உன்னை யும் என்னையும் தவிர வேறு எவருக்கும் இந்த இரகசியத்தை வெளியிட்டுவிடக் கூடாது.”
“என்ன! பண்ணைத்தேவரின் மகளையா?”
“ஆமாம்! மீனாட்சியை உன் மருமகன் காலில் விழுந்து ஏற்றுக்கொள்ளுமாறு செய்வதற்கு வேறு வழியே இல்லை. வெள்ளை பண்ணைத்தேவர் மகள் பொன்னியைச் சில்காலம் நாம் மறைத்து வைக்க வேண்டும். அதனால்தான் கரிசல் குளத்தான் உன் தங்கையை நாடச் செய்யலாம்.”
“சரி மாமா! அப்படியே வைத்துக் கொண்டாலும் இப்போது அதைச் செய்வதற்கு முடியுமா?”
ஏன் முடியாது வெள்ளை நாளைக்கு விடிந்தால், உன் மருமகன் பண்ணைத்தேவரிடம் பரிசம் போட்டுவிடுவான். இன்றைக்கு இரவு பின் நிலா. நம் காரிய்த்தைச் செய்ய வசதியாக இருக்கும்! நேரே கரிசல்குளம் போக்வேண்டியது, நிலாக் கிளம்புவதற்குள் பொன்னியைக் கிளப்பிக்கொண்டு. கொங்குமலைக் குகைக்குக் கொண்டு போய்விடவேண்டியது. இன்னும் சிறிது நேரத்தில் நாம் கிளம்ப வேண்டும்.”
வெள்ளையத் தேவன் சம்மதித்தான். சிறிது நேரத்தில் சாப்பாட்டை முடித்துக்கொண்டு, மாமனும் அவனும் புறப்பட்டார்கள்.
“அம்மா, மீனாட்சி! நானும் உன் அண்ணனும் மாரி’ யம்மன் கோவில் திருவிழா விஷயமாகக் கொஞ்சம் இப்படி வெளியே போய்விட்டு வருகிறோம். வர நேரமானாலும் ஆகலாம். நீயும் மதனியும் படுத்துக்கொள்ளுங்கள். வீணாக மனசை அலட்டிக்கொள்ள வேண்டாம். உன்னைப் புருஷன் வீட்டில் கொண்டு போய்ச் சேர்ப்பது என் பொறுப்பு.” போகும்போது கிழவர் மீனாட்சியிடம் கூறிவிட்டுப் புறப்பட்டார்.
இருளில் வேகமாக நடந்து, ஊர் எல்லையிலுள்ள ஓர் ஆலமரத்தடியில் வந்து நின்றனர், வெள்ளைத்தேவனும் அவன் மாமனும். அங்கே மரத்தின் விழுதுகளில் இரண்டு குதிரைகள் முன்னேற்பாடாகக் கட்டி வைக்கப்பட்டிருந்தன. ஆளுக்கு ஒரு குதிரையில் ஏறிக்கொண்டு கரிசல் குளத்தை. நோக்கிச் சென்றனர்.
கரிசல் குளம் ஊர் எல்லையை அடைந்ததும் கிழவர் குதிரையை நிறுத்தினார். வெள்ளைத்தேவன் கையில் ஒரு பச்சிலையைக் கொடுத்துவிட்டு, அவர் கூறினார்:
“வெள்ளை! இந்தப் பச்சிலையை மூக்கருகிலே காட்டினால், யாரும் பிரக்ஞை தவறிவிடுவார்கள் ஜாக்கிரதை! காரியத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, இங்கே பொன்னியோடு வந்து சேர். அதற்குள் நிலா, உதயமாகிவிடும்! நேரே மலைக் குகைக்குப் போய்விடலாம்...”
வெள்ளையத் தேவன் தன் குதிரையையும் ஊர் எல்லை யிலேயே நிறுத்திவிட்டு மாமன் கொடுத்த பச்சிலையோடு கால்நடையாக ஊருக்குள் நுழைந்தான்.
கரிசல்குளத்தில் பண்ணைத்தேவரின் வீடு ஊரின் மேலப் பக்கத்தில் ஒரு பெரிய தோட்டத்துக்கு நடுவே இருந்தது. ஏறக்குறைய ஒரு குட்டி அரண்மனையைப் போல விளங்கியது. அந்த வீடு. தன் தகப்பனார் வீர பாண்டியத்தேவர் உயிரோ டிருந்தபோது அவரோடு இரண்டு மூன்று முறை அந்த வீட்டிற்கு வந்து போயிருக்கிறான் வெள்ளையத் தேவன். மாமன் கூறியதிலிருந்து, ‘வீட்டின் கூடத்தில்தான் பொன்னி படுத்து உறங்குவது வழக்கம்’ - என்று எண்ணினான் அவன்.
பின்நிலாக் காலமாகையினால் இருட்டு பயங்கரமாகக் கப்பிக் கிடந்தது. பண்ணைத்தேவர் அரண்மனைத் தோட்டத் தைச் சுற்றி ஒன்றைரை ஆள் உயரத்திற்கு மதில் இந்த மதிற் சுவரில் எடுத்திருந்தது. எந்த இடம் உள்ளே ஏறிக் குதிப்பதற்கு வசதியாக இருக்கும் என்று பார்த்துக் கொண்டே இருளில் மதிலைச் சுற்றிவந்தான் வெள்ளையத். தேவன்.
மதிலின் தென் மேற்கு மூலைக்கு வந்தபோது அவனுக்கு மிக அருகில் இருளின் நடுவே தெரிந்த ஒரு காட்சி அவனைத் திடுக்கிட்டு நிற்கும்படிச் செய்தது. சரியாக அவன் வந்தி ருக்கும் அதே நாளில், அதே இரவில் பண்ணைத் தேவரின் வீட்டிலே கொள்ளையடிப்பதற்காக ஒரு கொள்ளைக்கூட்டத். தினரும் அங்கே வந்திருந்தார்கள்! அந்தப் பிராயத்தில் ‘தீவட்டிக் கொள்ளைக்காரர்கள் என்ற ஒரு வகைத் திருட கள் அப்போது, நல்ல இருட் காலத்தில் இப்படிக் கூட்டமாக வந்து சூறையாடிச் செல்லும் நிகழ்ச்சி, அடிக்கடி நடந்து வந்தது. இதுவரை அவர்கள் துணிந்து கொள்ளைக்கு வராத இடங்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று கபிலைக் குறிஞ்சி மற்றொன்று கரிசல்குளம். இரண்டு இடங்களிலும் மறவர்கள் அதிகமாய் வசித்து வந்ததுதான் அவர்கள் அச்சத்துக்குக் காரணம்.
இருளில் மறைந்து நின்ற வெள்ளையத் தேவன்னின் இதயம் வேகமாக அடித்துக்கொண்டது. அவனது இடுப் பிலே சுரிகை எனப்படும் பழைய காலத்துச் சுழல் கத்தி ஒன்று மட்டும்தான் இருந்தது. மாமன் கொடுத்தனுப்பி யிருந்த பச்சிலை, மார்புச் சட்டையின் பைக்குள்ளே இருந்தது!
கொள்ளைக்காரர்கள் பத்துப் பன்னிரண்டு பேர்களாவது இருப்பார்கள். ஒவ்வொருவருவர் கையிலும் ஒரு சிறு தீவட்டி யும் இருந்தது. வெள்ளையத் தேவன் எந்தக் காரியத்தைச் செய்வதற்காகத் தயங்கித் தயங்கிச் சுற்றிவந்து கொண்டிருந் தானோ, அதே காரியத்தை அவர்கள் சுலபமாகச் செய்து கொண்டிருந்தனர். மதிற்கூவரையொட்டி ஒரு ஆள் சற்றே குனிந்தாற்போல நின்றுகொண்டான். கொள்ளைக்காரர்கள் ஒவ்வொருவராக அவன் முதுகில் பச்சைக் குதிரை விளையாடு வதைப்போல ஏறி, மதிற்கூவரைத் தாண்டி உள்ள்ே குதித் தனர். இருளில் நின்றுகொண்டிருந்த வெள்ளையத் தேவன் கூர்ந்து கவனித்தான். அவன் மூளை மிகவும் சுறுசுறுப்போடு வேலை செய்தது.
இன்னும் நாலைந்து கொள்ளைக்காரர்களே தாவி ஏற வேண்டியிருந்தது. அவர்கள் கைகளிலிருந்த தீவட்டிகளைத் “தாவிக் குதிப்பதற்கு இடையூறாக இருக்கும் என்று கருதி, முன்பே ஏறியவர்கள் உள்ளே வாங்கிக் கொண்டுபோயிருந் தார்கள். குனிந்து கொண்டிருந்தவன், முதுகில் ஏறித் தாவு வதற்குக் காத்திருந்தவர்கள்-ஆகியோர் அங்கே நிற்பது: கண் பார்வையைத் தீட்சண்யப்படுத்திக்கொண்டு பார்த்தா லொழியத் தெரியாது. அவ்வளவு இருட்டு.
சட்டென்று அடிமேல் அடி வைத்து, மெல்ல அவர்கள் தாவிக்கொண்டிருந்த இடத்தை அடைந்தான். வெள்ளையத் தேவன். ஆயிற்று! கடைசி ஆளும் தாவிக் குதித்துவிட்டான். கடைசி ஆளின் தலை சுவருக்கு அப்பால் மறைவதைப் பார்த்து விட்டு குனிந்திருப்பவன் நிமிர்வதற்குள் தானும் அவனைச் சாதனமாகக்கொண்டே, தாவிவிடக் கருதிய வெள்ளைத் தேவன் விருட்டென்று பாய்ந்து, குனிந்திருந்தவன் முதுகில் கைகளை ஊன்றினான். குனிந்திருந்தவனும் அவனை வேற்றாள் என்று கருதியதாகத் தெரியவில்லை. ஆனால், அவசரத்தினாலும், ஆத்திரத்தினாலும் தாவிய வேகத்தில் முதுகில் கை வைப்பதற்குப் பதிலாகக் குனிந்திருந்தவனின் கழுத்தில் கையை வைத்துவிட்டான், தேவன். இதனால் குனிந்திருந்தவனும், வெள்ளைத் தேவனும் ஒருங்கே ஒருவர் மேல் ஒருவராகக் கீழே விழுந்து புரண்டார்கள்.
கீழே விழுந்து புரண்ட கலவரத்திலே குனிந்திருந்த ஆள் தேவனைச் சந்தேகிக்கும் படியாகக் குழப்பம் ஒன்று நடந்து விட்டது. கையைக் கழுத்தில் வைத்துக் கீழே விழுந்தவுடன், பார்த்து ஏறக்கூடாதுங்களா?” என்று கம்பளத்து நாயக்க்மார் பேசும் ஒரு வகைத் தெலுங்கிலே குனிந்திருந்தவன். கொச்சையாகக் கேட்கவே, அதற்கு எப்படிப் பதில் சொல்வது என்று விளங்காமல் திகைத்தான் தேவன்.
இதற்குள் உள்ளே சென்றிருந்த கொள்ளைக்காரர்களுடைய சங்கேதமான ஒலி ஒன்று, “நாங்கள் அத்தனை பேரும் சென்றுவிட்டோம்” என்பதற்கு அறிகுறியாகச் ‘சீழ்க்கை’ ரூபத்தில் ஒலித்துவிட்டது. அந்த ஒலியைக் கேட்ட மாத்திரத்தில் மறுபடியும் எழுந்திருந்து குனிவதற்குத் தயாராகிக்கொண்டிருந்த அந்தப் பருத்த மனிதன் குனிவதை நிறுத்திவிட்டு, “யாரடா நீ?” என்று வெள்ளையத் தேவன் மேல் குபிரென்று பயந்தான்!
எப்போது, தான் தாவவேண்டிய குறி தவறிவிட்டதோ, அப்போதே இம்மாதிரி ஆபத்து எதுவும் நேரலாம் என்று தயாராக எதிர்பார்த்துக்கொண்டிருந்த வெள்ளையத்தேவன், தன்னை நோக்கிப் பயந்தவனின் வாயை ஒரு கையால் இறுகப் பொத்திக்கொண்டு, அவனை இந்தப்புறம், அந்தப் புறம் திமிர முடியாமற் கட்டி, மூக்கில் பச்சிலையை எடுத்துக் காட்டினான். முழுசாக இரண்டு விநாடி கழிவதற்குள் அந்த மனிதன் கீழேவிழுந்துவிட்டான். முற்றிலும் பிரக்ஞை தவறிப் போய்விட்டது, அவனுக்கு. அவனை மெல்ல இழுத்துச் சென்று, தோட்டச்சுவரின் தென்புறத்திலுள்ள பாழுங்கிணறு ஒன்றின் ஒரமாக இருந்த புதரில் தள்ளிவிட்டு வெள்ளையத் தேவன் திரும்பவும், மிக அருகில், இரண்டு குதிரைகள் நடை போட்டு வரும் குளம்பொலி கேட்கவும் சரியாக இருந்தது. முதலில் பயமும், சந்தேகமும் அடைந்தாலும் பின் சிந்தித் தான். வேறு யார் வரக்கூடும்? மாமன்தான் நேரமாயிற்றே, இந்த வெள்ளையை இன்னும் காணோம் என்று குதிரை மீது வரக்கூடும் என்று அனுமானித்தான் தேவன்.
இப்படி எண்ணிக்கொண்டு மனத் தைரியத்தோடு குளம்பு ஒலி வந்த திசையில் வேகமாக எதிர்நோக்கி நடந்தான் வெள்ளையத் தேவன். இவன் எண்ணியது வீண்போக வில்லை! மாமன்தான் வந்துகொண்டிருந்தார். குதிரையின் அருகில் வெள்ளை நெருங்கியதும், “யாருடா அவன்?” என்று இடுப்பிலிருந்த கத்தியை உருவினார் மாமன்.
“ஏது? மிரட்டல் பலமாக இருக்கிறதே மாமா?” - இலேசாகச் சிரித்துக்கொண்டே கேட்டான், வெள்ளையத் தேவன்.
நடந்த விஷயத்தை ஆதியோடந்தமாகக் கூறிய பின், “இப்போது நாம் என்ன செய்யலாம் மாமா?” என்று கேட்டான் அவன்.
“வெள்ளை! பகைவர்களைவிட அயோக்கியர்கள் மோச மானவர்கள். அயோக்கியர்களின் காரியம் தனக்கு நன்மை யைத் தருமானாலும் அதைத் தடுப்பதுதான் மற்வனின் அறம்: இப்போது இங்கே தீவட்டிக் கொள்ளையடிக்க வந்திருக்கும் அத்தனை திருடனும் வேற்றவராகிய கம்பளத்து நாயக்கமார் கள். பண்ணைத் தேவருடைய சொத்தை இவர்கள். கொள்ளையடித்துக்கொண்டு விடுவார்களானால், நமக் கென்ன லாபம்? பண்ணைத் தேவரை இந்தப் பயங்கரத்தி லிருந்து நாம் காப்பாற்றுவோமானால், நாளை அவரிடமே, ‘மீனாட்சியின் கணவன் சொத்துக்கு ஆசைப்பட்டு அவளைப் ஒதுக்கிவிட்டு, உங்க மகளுக்குப் பரிசம் போடுகிறேனென்று வருகிறான். நீங்கள் அவனுக்குப் புத்திமதி சொல்லி, நல்லபடி யாக மீனாட்சியை ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும்!’ என்று வேண்டிக்கொள்ளலாம்.” மாமா கூறினார்.
“நீங்கள் சொல்வதும் ஒருவகைக்கு நல்லதாகத்தான் படு கிறது மாமா!”
“யோசனைக்கு இது நேரமில்லை வெள்ளை உடனே புறப்படு. குதிரையில் ஏறிக்கொள்.”
இருவரும் குதிரையில் ஏறிக்கொண்டனர். கடிவாளத் தைச் சுண்டி வேகமாக மீண்டும் பண்ணைத் தேவர் மாளிகையை நோக்கிச் செலுத்தினான் வெள்ளையத்தேவன் ‘மாமனும் பின்தொடர்ந்தார். மதிலோரமாகவே கொள்ளைக் காரர்கள் ஏறிக்குதித்த இடத்தருகே வந்து குதிரையை நிறுத்தினார்கள்.
“மாமா! உள்ளே போயிருக்கின்ற திருடர்களோ, பன்னிரண்டு பேருக்குமேல் இருப்பார்கள். நாமோ, இரண்டு பேர்! எப்படி நாம் அவர்களிடமிருந்து தேவரின் சொத்தை மீட்பது? ஏதாவது தந்திரமாகச் செய்தால்தான் இந்த முயற்சியில் நமக்கு வெற்றி கிடைக்கும்” என்று குதிரையை இழுத்து நிறுத்திக் கொண்டே கூறினான் வெள்ளையத் தேவன்.
“தந்திரமான வழி ஒன்று இருக்கிறது வெள்ளை! நாமிருவரும் இங்கேயே நின்றுகொள்ள வேண்டியது. உள்ளே நாம் போகவே வேண்டாம். அவர்கள் நிச்சயமாக் எவரையும் உயிர்ச் சேதப்படுத்தப் போவதில்லை. வேண்டுமானால் கட்டிப் போட்டுவிட்டுக் கொள்ளையடித்கப் போகிறார்கள். இந்தக் கம்பளத்தார் திவட்டிக் கொள்ளை யடித்து விட்டு மீண்டும் மதில் வழியாக ஏறிக்குதிப்பதற்கு இந்த இடத்திற்குத்தான் வரப்போகிறார்கள். கொள்ளை வெற்றிகரமாக முடிந்து திரும்பும்போது தீவட்டியை அணைத்துவிடுவதும் இவர்களுடைய வழக்கங்களிலே ஒன்று. இதனால் இருட்டு நம் காரியத்துக்குப் பெரிதும் உதவி செய்யும்.
“என்ன தந்திரம் மாமா அது?”
“போகும்போது அவர்கள் ஒரு ஆளை முதுகில் காலை வைத்து ஏறுவதற்காகப் பயன்படுத்தினார்கள் அல்லவா? அந்த ஆளைத்தான் நீ மயக்கமுறச் செய்து, புதருக்குள்ளே கொண்டுபோய்த் தள்ளிவிட்டாயே! அந்த ஆளாக நான் நடிக்கிறேன். ஒவ்வொரு ஆளாக இறங்க இறங்க நீ பக்கத்தில் சுருள் கத்தியோடு மறைந்திருந்து வேலையைத் தீர்த்து’ப் பாழும்கிணற்றில் போட்டுவிடு!”
“மாமா ஆபத்து நிறைந்த காரியமாயிற்றே இது? இதனால் நமக்கென்ன லாபம்? அகப்பட்டுக் கொண்டோ மானால் நாமும் இறங்க நேரிடுமே?”
“மதிலேறி இறங்குகின்ற அவர்களில் முதல் ஆளின் கையிலேதான் கொள்ளையடித்தப் பொருள்களெல்லாம் இருக்கப்போகின்றன. முதுகில் காலை வைத்து இறங்குவ தற்கு முன் அவன் கொள்ளைப் பொருளை நிச்சயம் என்னிடம்தான் கொடுப்பான்! இருளில் நான் வேற்றவன்’ -என்ற வித்தியாசத்தை அவன் கண்டுபிடிக்க முடியாது. பண்ணைத்தேவரின் பொருளைக் கட்டாயம் மீட்டு, அவரிடம் கொடுத்துவிடலாம். அப்படிக் கொடுத்தால், அவருடைய நன்மதிப்பு நிச்சயம் கிடைக்கும். இவைகளெல்லாம் நமக்கு லாபம் இல்லையானால் சொல்! இப்போதே திரும்பிவிடுவோம்” என்று மாமன் சிறிது கோபம் தொனிக்கும் குரலிலேயே கூறினார்.
“நல்லது! அப்படியே செய்யலாம் மாமா” என்று. வெள்ளை சம்மதித்தான்.
இதற்குள் உட்புறம் மதிற் சுவரோரத்தில் ஆட்கள் தடதடவென்று ஓடிவரும் ஒசையும், ‘நாங்கள் வந்துவிட்டோம்! வெளியிலிருக்கும் நீ, இறங்குவதற்கு வசதியாகக் குனிந்துகொள்’ என்பதை எச்சரிக்கும் சீழ்க்கை ஒலியும் கேட்டது.
மாமன், நான் குனிந்து நிற்கிறேன்! தயார்’ என்பதற்கு அறிகுறியாக ஒரு சீழ்க்கை அடித்துவிட்டுக் குனிந்து நின்று கொண்டார். வெள்ளையத்தேவன் சுருள் கத்தியை உருவிக்கொண்டு சுவர். ஒரமாக இருளில் மறைந்து நின்றுகொண்டான்.
முதல் ஆள் கையில் ஒரு பெரிய மூட்டையோடு மாம னின் முதுகில் காலை வைத்து இறங்கினான். தேவன் திடீ ரென்று பாய்ந்து அவன் கூச்சல் இடாமல் , வாயை மூடி, அவனிடமிருந்த மூட்டையைப் பறித்துக்கொண்டு, அவனைச் சுருள் கத்திக்கு இரையாக்கிப் பாழுங்கிணற்றுக்கு அனுப் பினான். இப்படியே மற்றும் பதினோரு திருடர்களையும் பர லோகத்துக்கு அனுப்பிவிட்டனர் தேவனும் மாமனும்!
பதின்மூன்றாவது ஆள் அந்தத் தீவட்டிக் கொள்ளைக் கூட்டத்தின் தலைவனாக இருக்கவேண்டும்! அவனுக்கு மட் டும் அவர்கள் தந்திரம் அம்பலமாகிவிட்டது. காரணம்: அவன் மட்டும் கையில் ஒரு சிறு தீவட்டி வைத்திருந்தான். சுவரில் தீவட்டியோடு நின்ற அவன், உடனே மாமனின் முதுகிலே காலை வைத்து இறங்க முற்படாமல், மேலே நின்றுகொண்டே, தீவட்டியை மாமனின் முகத்துக்கு நேரே கீழே வீசி எறிந்தான். தீவட்டி கீழே விழவும் சுற்றிலும் இருள் விலகி ஒளி தோன்றியது.
தன் ஆட்கள் எவரும் அங்கே இல்லாததையும் சுவரோரமாக இரத்தம் தோய்ந்த சுருள் கத்தியோடு இளங் காளை போன்ற ஒருவன் நின்றுகொண்டிருப்பதையும், அவன் காலடியில் கொள்ளைப் பொருளின் மூட்டை கிடப் பதையும், குனிந்து நிற்பவன் வேற்றாள் என்பதையும்’ அவன் தீவட்டி ஒளியில் அந்த ஒரு விநாடியில் நன்றாகப் புரிந்துகொண்டான். யுத்தியில் கைதேர்ந்த அந்தக் கொள் ளைக் கூட்டத் தலைவன், சிந்தனை தேங்கிய மனத்தோடு மீண்டும் விழிகளைச் சுற்றும் முற்றும் ஒட்டினான். பத்து இருபது அடி தூரம் மேற்கே தள்ளிச் சுவர் ஒரமாக இரண்டு குதிரைகள் சவாரிக்கு ஏற்ற நிலையில் தயாராக நிறுத்தப் பட்டிருப்பதையும் அவன் கண்கள் கண்டு கொண்டன.
சுவரின்மேல் நிற்பவன் தயங்குவதைக் கண்டதுமே தேவனும் மாமனும் ‘விழித்து’க் கொண்டனர். தங்களை அவன் சந்தேகித்துவிட்டான் என்பது அவர்களுக்கு ஐய மறத் தெரிந்துவிட்டது!
குனிந்துகொண்டிருந்த மாமன் சட்டென்று விலகி நின்று, கத்தியை உருவினார். தேவனும் அவரும் சுவரில் நிற்பவனுக்கு நேரே உருவிய கத்திகளோடு மறித்துக் கொண்டு நின்றனர். கொள்ளைப் பொருள்களின் மூட்டை அவர்கள் காலடியில் இருந்தது.
சுவரில் நின்றவன் ஒரு விநாடி திகைத்தான். அடுத்த விநாடி விருட்டென்று தன் இடையிலிருந்த சிறு பிச்சுவாக் கத்தி ஒன்றை உருவினான். உருவிய வேகத்தில் வெள்ளையத் தேவனின் வலது தோள்பட்டையை குறி வைத்து வீசினான்.
இதைச் சிறிதும் எதிர்பாராத வெள்ளைத்தேவன், சட் டென்று கத்தி வீச்சிலிருந்து தப்புவதற்காகக் குனிந்து கொடுத்தான். ஆனால் ..அந்தோ!...,விதியின் கொடுமையை என்னவென்று சொல்வது? தோள்பட்டையில் பாயவேண் டிய கொள்ளைக்காரனின் பிச்சுவா, வெள்ளைத்தேவனின் வலது செவியின் மேற்பாகத்தை ஆழமாகத் தர்க்கிவிட்டுக் கீழே விழுந்தது. தேவன் வலி பொறுக்க முடியாமல் அலறி னான். மாமன் திடுக்கிட்டு அவனருகிற் சென்றார். கத்தி பாய்ந்த வேகத்தில் காதில் சுட்டு விரலளவு துளைத்திருந்தது: சுவரின்மேலிருந்த கொள்ளைக்காரன் கைகளைப் பலமாக ஓங்கிக்கொண்டே, தெலுங்கில் ஏதோ இரைந்து கத்திவிட்டு, அப்படியே சுவரின் மேல்தளத்திலேயே நடந்து சென்று ஒரு குதிரையின் முதுகில் பாய்ந்துவிட்டான். தேவனும் ம்ாமனும் இதைக் கவனித்து ஓடி வருவதற்குள் குதிரை இருளில் ஒரு பர்லாங் தூரம் சென்றுவிட்டது!
“இவ்வளவு முயன்றும் இவன் தப்பி விட்டானே?” என்று மாமன் கூறினார்.
காதில் கத்தி துளைத்த இடத்தில் இசிவெடுத்து வலி துடிதுடிக்கச் செய்தது வெள்ளையத்தேவனை. அவன் அப்படியே அசந்துபோய்விட்டான். மாமன் தன் தலைப் பாகைத் துணியைக் கிழித்து மண்டையோடு சேர்த்து வெள்ளையனின் காதில் ஒரு கட்டுப் போட்டு இரத்தம் வரு வதைத் தடுத்தார்.
“மாமா!...வலி பிராணன் போகிறதே!” என்று வெள்ளை அலறினான்.
“வெள்ளை, பொறு. உள்ளே விட்டிற்குள் போய்விட்டால், காதுக்கு ஏதாவது மருந்து போடலாம். இந்தக் கொள்ளைப் பொருள்களின் மூட்டையோடும் குதிரை யோடும் இங்கேயே மதிலோரத்தில் நின்று கொண்டிருப்போ மானால், நாமே இந்தக் கொள்ளையை நடத்தினோம், என்று மற்றவர்கள் வந்து தீர்மானிக்கும்படி ஏற்பட்டாலும் ஏற்பட்டுவிடும்!” - மாமன் பதறினார். மீதமிருந்த மற்றொரு குதிரையை இழுத்துக்கொண்டு போய்க் கொள்ளைப் பொருள் களின் மூட்டை கிடந்த இடத்தில் சுவரருகே ஏறிக் குதிப் பதற்கு வசதியாக நிறுத்தினார். அப்போது தீவட்டி வெளிச் சத்தில் கீழேகிடந்த அந்தப் பிச்சுவாக் கத்தி அவர் கண்களில் பட்டது. வெள்ளையத் தேவனின் காதைத் துளைத்து விட்டுக் கீழே வீழ்ந்திருந்த அந்தக் கத்தியின் நுனியில் குருதிக் கறை படிந்திருந்தது. மாமன் அதைக் கீழே குனிந்து எடுத்தார்.
அருகில் தரையில் புழுதியோடு புழுதியாக விழுந்து, மங்கலான ஒளியைக் கொடுத்துக்கொண்டிருந்த தீவட்டியைக் குனிந்து எடுத்துக் கத்தியின் பிடிக்கு நேரே காண்பித்தான் வெள்ளையத்தேவன்.
மறுகணம், “பாப்பைய நாயக்கன்” என்று அந்தக் கத்தி யின் பிடியில் செதுக்கியிருந்த எழுத்துக்களை அதில் கண்டு. இரைந்து படித்தார் மாமன். அவை தெலுங்கு எழுத்துக்கள். மாமன் கத்தியை இடுப்பிலே செருகி, மறைவாகப் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டார்.
“வெள்ளை! உனக்குத் தெலுங்கு தெரியாது அல்லவா? உன்மேல் இந்தக் கத்தியை வீசிவிட்டு ஓடிய போது, அவன் உன்னை நோக்கித் தெலுங்கில் கத்தினானே, அதற்கு என்ன அர்த்தம் என்பதைத் தெரிந்துக்கொண்டாயா!”
“இல்லையே மாமா!”
“இன்று இந்தக் கொள்ளையில் நான் அடைந்திருக்க வேண்டிய பரிபூரணமான வெற்றியை நீ கெடுத்துவிட்டாய்! இனிமேல், என்றும், எந்த விநாடியிலும், நீ யாராக இருந்தாலும், உன் உயரை நான் கொள்ளையிட முயன்று கொண்டிருப்பேன் என்பதை மறந்துவிடாதே! ஜாக்கிரதை இந்தா! பெற்றுக்கொள், “நீ யார்?” என்பதை என்றும் நான் கண்டுகொள்ள ஓர் அடையாளச் சின்னம்’—இவ்வாறு கூறிவிட்டுச் சென்றான் அவன்.”
இதன் பின் அவர்கள் இருவரும் குதிரையை நிறுத்தி, அதன் மூலமாகக் கொள்ளைப் பொருள் அடங்கிய மூட்டையையும் எடுத்துக்கொண்டு, மதிற்கூவரைக் கடந்து தோட்டத்திற்குள் குதித்தனர். வெளியே தரையில் கிடந்த தீவட்டி அணைந்துவிட்டதால், குதிரை இருளோடு இருளாகச் சுவரருகில் நின்று கொண்டிருந்தது. அப்போதுதான் பின் நிலா மேலே கிளம்புகின்ற நேரம் ஆகியிருந்தது.
மாளிகை வாசலில் இரண்டு பெரிய நாய்கள் ரத்தம் கக்கிச் செத்துக் கிடந்தன. அவைகளின் கழுத்துக்கள் திருகி முறுக்கப்பட்டிருந்தன. அது திருடர்களின் கைவரிசை என்று தேவனும் மாமனும் அறிந்துகொண்டிருந்தனர். மாளிகைக்குள் எந்தப் பொருளும் அதிகமாகச் சூறையாடி இறைக்கப்படவில்லை. வீடு ‘ஒழுங்காகவே’ இருந்தது. கீழ் அறையிலிருந்த ஒரு பெரிய இரும்புப்பெட்டி மட்டிலும் உடைக்கப்பட்டுக் காலியாகக் கிடந்தது! தீவட்டிகளிலிருந்து வடிந்திருந்த, அங்கங்கே கீழே சிந்தித் தரையை அசங்கியப் படுத்தியிருந்தது. தூணில் இரண்டு காவற்காரர்கள் கட்டி வைக்கப்பட்டிருந்தனர். ஆனால், அவர்களுக்கு அப்போது தம் நினைவிருந்ததாகத் தெரியவில்லை. மாடிக்குச் செல்லும் கதவு வெளிப்பக்கம் தாழ்போடப் பட்டிருந்தது. உட்புறமிருந்து யாரோ பலங்கொண்ட மட்டும் கதவைத் தட்டிக் கூக்குரலிட்டுக் கொண்டிருந்தார்கள்.
கையில் கொண்டுவந்திருந்த கொள்ளைப் பொருள்கள் அடங்கிய மூட்டையை உடைக்கப்பட்டிருந்த இரும்புப் பெட்டிக்கருகில் போட்டுவிட்டு, ஒடிப்போய் மாடிக்குச் செல்லும் கதவின் வெளிப்புறத்துத் தாழ்ப்பாளை நீக்கித்திறந்தார் மாமன். வெள்ளையத் தேவன் தூணில் கட்டப் பட்டிருந்த காவலர்களை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டான்.
மாடிக் கதவை மாமன் திறந்ததும், பண்ணைத் தேவர், அவர் மனைவி, மகள் பொன்னி மூவரும் உடம்பெல்லாம் வேர்த்து விறுவிறுத்துப்போய்க் கீழே இறங்கினார்கள்.
அவர்களை ஆசுவாசப்படுத்தி அமர்த்தி, நடந்த கதையை எல்லாம் மாமனும் வெள்ளையத் தேவனும் கூறினார்கள். இதற்குள் பொன்னியும் அவள் தாயுமாகச் சேர்ந்து வெள்ளையனால் தூணிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்த காவற்காரர்கள் முகத்தில் தண்ணீர் தெளித்து, மயக்கத்தைப் போக் கினர்.
அப்போது மாமன் வெள்ளையத் தேவனுக்குக் காதில் ஏற்பட்ட காயத்தைப் பண்ணைத் தேவரிடம் கூறி ‘கொஞ்சம் தேங்காய் எண்ணெயும் கரித் தூளும் வேண்டும்'—என்று கேட்டார்.
பொன்னியின் கலங்கமற்ற முகத்தையும், தெய்வீக அழகையும் பார்த்துக்கொண்டிருந்த வெள்ளையத் தேவன், “ஆகா! ஒரு பாவமுமறியாத இந்தப் பேதைப் பெண்ணைக் கடத்திக்கொண்டு போகவேண்டுமென்று நினைத்தோமே? எவ்வளவு பெரிய பாவத்திலிருந்து கொள்ளைக்காரர்கள் மூலம் கடவுள் நம்மைக் காப்பாற்றியிருக்கிறார்!"—என்று தனக்குள் எண்ணிக்கொண்டான். காவற்காரர்கள் மூட்டையைப் பரிசோதித்துத் திருடு போனவை எல்லாம் மீண்டுவிட்ட தாகக் கூறினர். "ஆமாம்! பண்ணைத் தேவரே! நீங்கள் மாடியில் எப்படி அகப்பட்டுக்கொண்டீர்கள்?-” என்றார் மாமன், மருந்தைக் குழைத்துக்கொண்டே,
“கொள்ளைக்காரர்கள் உள்ளே நுழைந்ததும், இந்தக் காவற்காரர்களைக் கட்டிவைத்துவிட்டு, மாடிக் கதவை வெளிப்புறத்தில் தாழ்ப்போட்டுவிட்டார்கள். அவர்கள் இரும்புப் பெட்டியை உடைக்கிற சப்தம் கேட்டு, நாங்கள் விழித்துக்கொண்டு, பதறிப்போய் கீழே இறங்கினால், கதவு திறக்கவில்லை. வேறு வழியின்றி நீங்கள் இருவரும் வருகிறவரை தட்டிக்கொண்டே கூச்சலிட்டுக்கொண்டிருந்தோம்!... ஆமாம்! அது சரி; நீங்கள் இருவரும் இந்த அர்த்த ராத்திரியில் கரிசல் குளத்தில் இருந்து இங்கே என் வீட்டை நாடி வரவேண்டிய காரணம் என்னவோ?"—பண்ணைத் தேவர் கேட்டார்.
வெள்ளையத் தேவனுடைய காதில் மருந்தைக் குழைத்து: தடவி, அதைக் கட்டிக்கொண்டே, பண்ணைத் தேவரின் இந்தக் கேள்விக்கு விடை கூறினார் மாமன்.
“ஓ! அதைக் கேட்கிறீர்களா? சொல்கிறேன். பண்ணைத். தேவரே! ஓர் அவசர காரியமாக உங்களைப் பார்த்துவிட்டுப் போகலாம் வன்று வந்தோம். என் சம்பந்தி வீரபாண்டியத் தேவரின் மகள் மீனாட்சியின்—அதாவது இவன் தங்கையின் கணவன் உங்கள் கரிசல்குளம் நாட்டாண்மைக்காரரின் மூத்த மகன். அவன் இப்போது கொஞ்சம் சொத்துக்கு, ஆசைப்பட்டு, மீனாட்சியை மலடி என்று அபாண்டப் பழி சுமத்தி ஒதுக்கிவிட்டு, வேறோர் இடத்தில் மறுதாரத்திற்குப் பரிசம்போட முயன்று கொண்டிருக்கிறான். நீங்கள் இதில், தலையிட்டு நியாயம்தேடித் தருவீர்கள் என்று உங்களைக் கலந்துகொண்டு போக்த்தான் இவ்வளவு அவசரமாக வந்தோம்...அதோடு இன்னோர் விஷயம்! நீங்கள் வித்தியாசமாக நினைத்துக் கொள்ளாமலிருந்தால் வெளிப்படையாகவே சொல்லிவிடுகிறேன்...” என்று மாமன் மெல்லக் கேட்டார். "தாராளமாகச் சொல்லுங்கள்! என்னுடைய சொத்தை யெல்லாம் மீட்டுக் கொடுத்து இன்றிரவு. நீங்கள் எனக்குச் செய்திருக்கும் மகத்தான உதவிக்கு நான் பெரிதும் உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்.”
“வேறொன்றுமில்லை! நாளைக் காலையில் மீனாட்சியை ஒதுக்கி வைத்த அதே பயல்தான் உங்கள் பெண் பொன்னிக்குப் பரிசம் போட வரப்போவதாக நாங்கள் கேள்விப்பட்டோம்...அதுதான்..”...மாமன் மெதுவாகப் பணிந்த குரலில் இழுத்துப் பேசினார்.
“என்ன? எல்லாம் பெரிய சூழ்ச்சியாக அல்லவா இருக்கும் போலிருக்கிறது: கரிசல்குளத்து நாட்டாண்மையின் மாமன் என்னிடம் வந்து, தன் வகையில் யாரோ ஒரு பையனை அல்லவா பரிசம்போட நாளைக் காலை அழைத்து வருவதாகக் கூறினான்? ஓஹோ! நீங்கள் இப்போது கூறினபின்னல்லவா இதில் அடங்கியுள்ள சூது புலனாகிறது? தானே நேரில் வந்தால் மீனாட்சியை ஒதுக்கி வைத்த விவகாரம் எல்லாம் தெரிந்துவிடும் என்று பயந்து, தன் மகனுக்கு என் மகளை முடித்து, எனது சொத்துக்களை அபகரிக்கத் தனது மாமனை அல்லவா தூதனுப்பியிருக்கிறான்? அப்படியா விஷயம்?” — பண்ணைத் தேவர் ஆத்திரத்தோடு பேசினார். நாட்டாண்மையிடம் அவருக்கிருந்த சினத்தை இந்தக் கோபமே காட்டியது.
திடீரென்று ஏதோ நினைத்துக்கொண்டே வெள்ளையன், “மாமா! நான் பச்சிலையைக் காட்டி மூர்ச்சியுறச் செய்து ஒரு ஆளைப் புதரில் தள்ளினேன் அல்லவா? அவனுக்கு இந்நேரம் பிரக்ஞை வந்தாலும் வந்திருக்கும், பயல் வெளியே நிறுத்தியிருக்கும் மற்றோர் குதிரையைத் ‘தன் பங்குக்கு ஆயிற்று'—என்று ஏறிக்கொண்டு போய்விடப் போகிறான்! நான் போய். அவன் அகப்பட்டால், அந்தப் பயலை இங்கே இழுத்துக் கொண்டு வருகிறேன்"–என்று கூறிக்கொண்டே எழுந்தான்.
அதற்குள் பண்ணைத் தேவரே, “கொஞ்சம் பொறு தம்பி! பின் நிலர உச்சிக்கு வந்துவிட்டது. நாம் எல்லோ ருமே போய் மதிற்பக்கம் சுற்றிப் பார்த்துவிட்டு வருவோம்! அதோடு நீயும் உன் மாமனும் தீர்த்துக்கட்டிய ஆட்களை பாழுங்கிணற்றிலிருந்து எடுத்துக் கமுக்கமாக அடக்கம் செய்ய வேண்டியது முக்கியம். இந்தக் காவற்காரர்களையும் நம்மோடு அழைத்துப்போய் அந்தக் காரியத்தையெல்லாம் நிறைவேற்றிவிட்லாம்..” என்று இவ்வாறு கூறிவிட்டுச் சிறிது நேரம் அமைதியாக இருந்தவர், மீண்டும் தொடர்ந்து மாமனை நோக்கிக் கூறலானார்.
“பெரியவரே! என்னால் உங்கள் மருமகனுக்கு ஏற்பட்ட சிரமம் மிகத் துன்புறுத்துகின்றது என் மனத்தை! ஆனால், ஒன்று மட்டும் வைத்துக்கொள்ளுங்கள். இதற்கெல்லாம் சரியானபடி கைம்மாறும் நன்றியும் செய்யாமல் விட்டுவிட மாட்டேன். உங்கள் மருமகன் என் பழைய நண்பர் வீர பாண்டியத் தேவரின் புதல்வன் என்ற நினைவே என்னை இன்று பெருமகிழ்ச்சி அடையச் செய்கிறது.” பண்ணைத் தேவர் கூறிவிட்டுத் தன் காவற்காரர்களையும் கூப்பிட்டுக் கொண்டு, வெளியே செல்வதற்குத் தயாராக எழுந்து நின்றார்.
மாமனும் வெள்ளையத் தேவனும்கூட அவருடன் புறப்படுவதற்குத் தயாரானார்கள். உள்ளே அறையின் கதவோரத்தில் பொன்னியின் மருண்ட விழிகள், த்ன்னை நோக்கு வதை வெள்ளையத்தேவன் கண்டான். இதயத்தின் ஆழத்தைத் துழாவும் அந்த அழகான பார்வை காதில் கத்தி துளைத் திருந்த வலியையும் மறக்கச் செய்து, அவனைக் கவர்ந்தது.
பண்ணைத் தேவரின் வேலையாட்கள் கையில் தீப்பந்தம் ஏந்தி முன் செல்ல, மூவரும் மதிற் கதவைத் திறந்துகொண்டு சுவரோரமாகப் பாழுங்கிணறும் அடர்ந்த புதருமாக இருந்த இடத்தை அடைந்தனர்.
கிணற்றருகிலே புதருக்குள் தீப்பந்தத்தை இருள் அகலும் படியாகக் காட்டினார்கள் வேலையாட்கள். வெள்ளையத் தேவன் பச்சிலையை மூக்கிலடைத்துத் தள்ளியஆள் அங்கேயே அவன் தள்ளியபடி விறைத்துக் கிடந்தான். தீவட்டியைத் தன் கையில் வாங்கிக்கொண்டு வேலைக்காரர்கள் அந்த ஆளைப் புதரிலிருந்து இழுத்துப் போடுமாறு கட்டளையிட்டான் வெள்ளையத்தேவன். வேலைக்காரர்கள் புதரிலிருந்து அந்தப் பருத்த சரீரத்தை வெளியே தூக்கிக்கொண்டு வந்து போட்டார்கள்.
தீவட்டி வெளிச்சத்தில் அந்த ஆளின் முகத்தைப் பார்த்த பண்ணைத்தேவர், ஏக காலத்தில் வியப்பும் ஆத்திரமும் தொனிக்கும் குரலில், “அட நன்றிகெட்ட பயலே? நீதானா நல்லவனைப்போல நடித்து என் வீட்டில் ஒரு மாதம் வேலைக்கு இருந்து ஓடிப்போன இரகசியம் இப்போதல்லவா புரிகிறது? ‘வெங்கி நாயக்'கனின் சுயரூபம் இதுதானா? நீ கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்த உளவாளியா?” என்று இரைந்தார்.
மாமனும் வெள்ளையத்தேவனும் ஒருவாறு விஷயத்தைப் புரிந்துகொண்டனர். கொள்ளைக்காரர்கள் தங்கள் ஆளையே தேவர் வீட்டில் வேலை செய்யவிட்டு உளவறிந்திருக்கிறார்கள் என்பதை நினைக்க நினைக்க, அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
கீழே கிடந்த சரீரத்தில் நீலம் பாரித்து, நரம்புகள் புடைத்துத் தெரிந்தன. மார்பிலே கையை வைத்துப் பரிசோதித்த மாமன், உதட்டைப் பிதுக்கினார், உடல் ஜில் லிட்டுப் போயிருந்தது.
“புதருக்குள் இவன் பிரக்ஞையற்றுக் கிடந்தபோது, ஏதோ விஷ ஜந்து இவனைத் தீண்டியிருக்கவேண்டும். ஆள் நாக்கைப் பிளந்துவிட்டான்” என்று கையை விரித்துக் காட்டியபடி தலை நிமிர்ந்தார்.
இதன்பின், “பாழுங்கிணற்றிற்குள்ளே கிடக்கும் உடல்களோடு வெங்கி நாயக்கனின் உடலையும் சேர்த்து யாவற் றையும் பொழுது விடிவதற்குள் அப்புறப்படுத்தி அடக்கம் செய்துவிடவேண்டும்” என்று வேலைக்காரர்களுக்குக் கூறி விட்டு, அவர்கள் மூவரும் மாளிகைக்குள் சென்றனர். போகும்போது வெளியே நின்ற குதிரையையும் இழுத்துக் கொண்டுபோய்ப் பண்ணைத் தேவரின் குதிரை லாயத்திலுள்ள குதிரைகளோடு கட்டிப் புல்லை அள்ளிப்போட்டான் வெள்ளையத்தேவன்.
“நாளை நண்பகலுக்குள் மீனாட்சியின் கணவன் தானே வலுவில் கபிலக் குறிச்சிக்குப் போய் அவளைப் பணிந்து அழைத்துக்கொண்டு வரச்செய்யவில்லையானால், என்பெயர் பண்ணைத் தேவனில்லை! நீங்கள் இருவரும் கவலையின்றிக் குறை இரவையும் இங்கேயே ஒய்வெடுத்துக் கொண்டு அமைதியாகக் கழியுங்கள்” என்றார் பண்ணைத்தேவர். அவர் வேண்டுகோளைத் தட்ட முடியாமல், மாமனும் வெள்ளையனும் அங்கேயே மாளிகையில் தங்கினர்.
ஆனால், இரவின் எஞ்சிய பகுதியில் அந்த மாளிகையில் அன்று எவருமே உறங்கவில்லை. உறங்க முயன்றார்கள், ஆனால், உறக்கம் வந்தால்தானே!
முதல் நாளிரவில் பண்ணைத் தேவர் கூறிய வாக்குப்படி மீனாட்சியை அவள் கணவனே நண்பகலுக்குள் கபிலக்.குறிச்சி சென்று அழைத்து வருமாறு செய்துவிட்டார். சுரிசல்குளம் ஊரில் அவருக்கிருந்த செல்வாக்கு இந்தக் காரியத்தைத் துரிதமாக நிறைவேற்றியது.
மீனாட்சிக்கு நல்வாழ்வு திரும்பிவிட்டதில் பெரிதும் மகிழ்ந்த மாமனும் வெள்ளையத் தேவனும், அதற்கு மூல காரணமாக இருந்த பண்ணைத் தேவருக்கு நன்றி கூறிவிட்டு ஊருக்குக் கிளம்பச் சித்தமானார்கள்.
ஆனால், பெரியவரே! நீங்களும் தம்பியும், இப்போது போகவேண்டாம். உங்களிடம் நான் தனியே பேசவேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது” என்று கூறி, மாமனையும் தேவனையும் பண்ணைத் தேவர் தடுத்துவிட்டார்.
மாமனைமட்டும் தனியே அழைத்துச் சென்று, அவரிடம் ஒரு வியக்கத்தக்க செய்தியைப் பிரஸ்தாபித்தார் பண்ணைத் தேவர். "பெரியவரே! நான் இப்பொழுது உங்களை வேண்டிக் கொள்ளப் போகிற வேண்டுகோள் உங்களுக்குக் கோபத்தை, உண்டாக்குவதாகவே இருக்கலாம். ஆனால், எப்படியும் என்னை வித்தியாசமாக நினைத்துக்கொள்ளாமல், நீங்கள் இதற்குச் சம்மதித்துத்தான் ஆகவேண்டும்” என்று பண்ணைத் தேவர் பீடிகை போடும்போதே,
“நீங்கள் சொல்லி, நான் எதை மறுக்கப் போகிறேன்’ பண்ணைத் தேவரே? தாராளமாகச் சொல்லுங்கள்...” என்று குழைந்து கொடுத்தார் மாமன்.
“அப்படியில்லை பெரியவரே! வாஸ்தவத்திலேயே எவருக்கும் கோபத்தை உண்டாக்கக் கூடிய விஷயம் நான் பிரஸ்தாபிக்கப் போவது?”
“சும்மா சொல்லுங்கள்.”
“வெள்ளையத் தேவன் ஏற்கெனவே உங்கள் மருமகன்! உங்கள் அருமை மகள் அவன் மனைவியாயிருக்கிறாள். இப்போது என் மகள் பொன்னிக்கும் அவனிடம் அதேஸ்தானத் தைப் பெறுவதற்கு, நீங்கள் ஒத்துழைக்க வேண்டும் இதுதான் என்.வேண்டுகோள்"—
மாமன் முகத்தில் அடுக்கடுக்காகச் சுருக்கங்கள் விழுந்தன. அவர் சிந்தனையில் ஆழ்ந்தார். பண்ணைத் தேவர் மாமனின் முகத்தையே இமையாமல் பார்த்துக்கொண் டிருந்தார்.
“உங்கள் விருப்பத்தை நான் மறுக்க விரும்பவில்லை. ஆனால், தற்போது வெள்ளையத் தேவனின் மனைவியாக விளங்கும் என் மகள், இதற்குச் சம்மதிக்கின்றாளோ, என்னவோ? அதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.” சிந்தனை செய்த பிறகு மாமன் கூறினார்.
“உங்கள் மகளையும் வெள்ளையனையும் முழு மனத்தோடு இதற்குச் சம்மதிக்கச் செய்வது என் பொறுப்பு வயது முதிர்ந்த அனுபவஸ்தராகிய உங்கள் சம்மதந்தான். இப்போது எனக்குத் தேவை." “என் சம்மதம் இந்தக் கணமே கிடைத்ததாக வைத்துக் கொள்ளலாம்.”
அவர்கள் பேச்சு இவ்வளவிலே முடிந்தது. பொன்னியை அழைத்துக்கொண்டு, கபிலக்குறிஞ்சிக்குப் புறப்பட்டார் பண்ணைத்தேவர். இடையில், மீனாட்சிக்குப் பெருத்திங்கு இழைக்க எண்ணிய கரிசல்குளத்தான், தன் பிழைக்காக எல்லோரையும் வணங்கி மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்.
பண்ணைத் தேவர், மாலை மயங்கும் நேரத்திற்குக் கபிலக்குறிச்சியின் தலைக்கட்டுகளோடும், வெள்ளையனின் மூதல் மனைவியோடும், மீண்டும் பண்ணை மாளிகைக்குத் திரும்பி வந்தார்.
வெள்ளையனின் முதல் மனைவியும், தலைக்கட்டுக்களும் அவன் பொன்னியையும் மணந்துகொள்வதற்குத் தங்கள் சம்மதத்தை முழுமனத்தோடு தெரிவித்தனர். வெள்ளையத் தேவனுக்கு ஏற்கனவே பொன்னியிடமிருந்த மறைமுகமான சபலம், அவன் இதை மறுக்கத் தூண்டவில்லை.
“நல்லவற்றை உடனே செய்ய வேண்டும் என்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். நாளையே ஒரு நல்ல முகூர்த்தம் இருக்கிறது. பரிசம் போடாமலே நாளைக் காலை கோவிலில் திருப்பூட்டை நடத்திவிட வேண்டும்” என்றார் பண்ணைத்தேவர்.
எல்லோருமே அதற்கு உடன்பட்டனர். வெள்ளையத் தேவனைலிட அவன் முதல் மனைவிக்குத்தான் பொன்னியின் களங்கமற்ற சுபாவத்தில் பெரிதும் காதல் ஏற்பட்டிருந்தது! முதலில் தயங்கினாலும், பின்பு இந்தப் புதிய சம்பந்தம் தன் மகளுக்குக் கெடுதலைத் தராதென்றெண்ணி, மனம் அமைதியடைந்தார் மாமன். இந்த நிக்ழ்ச்சிகளெல்லாம் நடந்து ஆறு வருடங்களுக்குப் பிறகுதான் வெள்ளையத்தேவனுடைய வாழ்க்கையில் அந்தப் பயங்கரமான நிகழ்ச்சி குறுக்கிட்டது. இந்த ஆறு வருடங்களுக்குள் வெள்ளையத் தேவனின் வாழ்க்கையில்தான் எத்தனை மாறுதல்கள் நிகழ்ந்துவிட்டன! உயிருக்குயிராக வலதுகைபோல விளங்கிய மாமனும் பண்ணைத்தேவரும் இப்போது இந்த உலகில் இல்லை. அவர்கள் காலஞ்சென்று வருடங்கள் இரண்டு ஓடிவிட்டன. பண்ணைத் தேவருடைய சொத்துக்கும் அதிபதியாகி, இந்த வட்டாரத்திலேயே ஒரு சிற்றரசனைப் போல விளங்கி, வந்தான் வெள்ளையத் தேவன். முதல் மனைவியிடம் ஒரு பெண்ணும் பொன்னியிடம் இரண்டு ஆண் குழந்தைகளுமாக மக்கட் செல்வங்களைப் பெற்றிருந்தான் அவன்.
கரிசல்குளத்தில் மீனாட்சி, இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகிக் கணவனோடு அமைதியான வாழ்க்கை நடத்தி வந்தாள். பண்ணைத் தேவர் காலமான மறுவருடத்திலிருந்து, கபிலக்குறிச்சிக்குமட்டுமின்றிக் கரிசல்குளத்திற்கும் வெள்ளையத் தேவனே நாட்டாண்மையாகியிருந்தான். செல்வத்தாலும், செல்வாக்கினாலும், ஆள் புலத்தினாலும், இரண்டு ஊர்களின் ஆட்சியையும் திறமையாக, நடத்திவந்தான் அவன். இந்த வட்டாரத்து மக்கள் அவனைக் கண்கண்ட தெய்வமாகப் போற்றி மதித்து வந்தார்கள். ஆறாண்டுகளாக ஊர் நன்மை குறித்து அவன் செய்த வீர தீரச் செயல்கள் அனந்தம், ஊர் மக்களுக்கும், பொதுக்காரியங்களுக்கும், கோவில் குளங்களுக்கும் செய்த தானதர்மங்கள் அளவிட முடியாதவை.
மாசி, மாதத்தின் நடுப் பகுதியில் ஓர் புதன்கிழமை, என்றுமில்லாதபடி அன்று என்னவோ காலையில் எழுந்ததிலிருந்தே கொங்கு மலைக்கு வேட்டையாடப் போகவேண்டு. மென்ற அபூர்வ ஆசை வெள்ளையுத் தேவனுக்கு ஏற்பட்டது. நான்கு தலைக்கட்டுக்களும் அவனுடன் துணையாக வேட்டைக்குப் புறப்படத் தயாராக இருந்தனர்.
காலையில் சுமார் பத்துப் பதினொரு நாழிகைக்கு வெள்ளையத் தேவனும் அவன் சகாக்களும் கொங்குமலையை அடைந்து வேட்டையைத் தொடங்கினார்கள். உச்சிப் பொழுதுவரை, வேட்டை சுவாரஸ்யமாக நடந்தது. சகாக்கள் மூலைக்கொருவராக அடர்ந்த மலைப் பகுதியில் தனித்தனியே பிரிந்து சென்றுவிட்டனர்.
வெள்ளையத் தேவனுக்கு அந்த மலையில் சுற்றிக் கொண்டிருந்த பளிஞன் ஒருவன் மிகவும் உதவியாக இருந்தான்.
ஒருமுறை பராக்குப் பார்த்துக்கொண்டே, தொலைவில் மேய்ந்துகொண்டிருந்த மான் ஒன்றின்மேல் வில்லை நாணேற்றிய அவன், கீழே இருந்த பாறை தடுக்கி விழுந்து விட்டான். அப்படி அவன் விழுந்தபோதுதான், அந்தப் பளிஞன் ஒரு புதரிலிருந்து அவனைத் தூக்கிவிடுவதற்காக வந்தான். தூக்கிவிட வந்தபோது, அவன் வெள்ளையனின் வலது காதில் எதையோ தடவினான், “அடேடே! காதில் எறும்பு நுழைந்துவிட்டதே!” என்று கூறியவாறே, கையால் எதையோ எடுத்தெறிவதுபோல எடுத்தும் எறிந்தான். இதன்பின் வெள்ளையத் தேவன் அவனை, “நீ என்னோடு வர வேண்டிய அவசியம் இல்லை! உன் உதவிக்கு நன்றி. எனக்கு வேட்டையாடத் தெரியும்” என்று கூறித் தடுத்தும் கேட்காமல் பின்தொடர்ந்து வந்துகொண்டேயிருந்தான் அந்தப் பளிஞன். “சரி! வந்தால் வந்துவிட்டுப் போகிறான். நமக்கென்ன!” என்று பேசாமல் இருந்துவிட்டான் வெள்ளையத் தேவன்.
கதிரவன் தலைக்கு நேரே வந்து நண்பகல் ஆனபோது வேட்டையை நிறுத்திவிட்டுச் சிறிது நேரம் ஒய்வு எடுத்துக் கொள்ளக் கருதிய வெள்ளையத் தேவன், சகாக்களைத் தேடி நடந்தான். அப்போது அந்தப் பளிஞனும் அவனையே பின்பற்றி வந்தான்.
“ஏய்! நீ பேசாமல் இங்கிருந்து போகிறாயா! உன் முதுகுக்கு ஏதாவது கேட்கிறதா? எதற்காக என் பினனாலேயே வருகிறாய்?” என்று கூறிக்கொண்டே வில்தண்டை அந்தப் பளிஞனை நோக்கி ஓங்கினான் வெள்ளையன். அவன் உடனே பதறி, “ஐயோ சாமி! இந்த ஏழையை தப்பாக நினைக்கிறீர்களா! தங்குவதற்கு இடம் தெரியாமல் சுற்றி அலைகிறீர்களே, இங்கே ஒரு சுனைக் கரையில் நான் வசிக்கும் குகை இருக்கிறது. அங்கேயே உங்களைத் தங்கச் செய்யலாம் என்பதற்காக அல்லவா, நான் உங்களோடு வருகிறேன்” என்றி கூறினான்.
“நான் தங்குவதற்கு இடம் தேடவில்லை பளிளுரே! என்னோடு வந்த சகாக்களைத் தேடுகிறேன்.”
“நல்லதாகப் போயிற்று சாமி! நீங்கள் என் குகையிலே தங்கி இருங்கள். ஒரு நொடியில் நான் உங்கள் சகாக்களைத் தேடிக் கொண்டுவந்து சேர்த்துவிடுகிறேன். மலையிலுள்ள வழிகள் எனக்குத் கரதலப் பாடம். இந்த ஏழையின் வேண்டுகோளை நீங்கள் நிராகரிக்கக்கூடாது"—அந்தப் பளிஞன் வெள்ளையனின் கால்களைப் பிடித்துக் கொண்டு மன்றாடினான். வெள்ளைக்கு மனம் இரங்கியது.
“சரி! நீ என்னை உன் குகையில் கொண்டுபோய் விட்டு விட்டு அவர்களைத் தேடிவா.” அவன் இணங்கினான்.
இருவரும் நடந்தனர். மரங்களடர்ந்த பகுதியில் ஒர் படிக நிற நீர்ச் சுனையின் கரையிலிருந்த குகையினருகில் வந்ததும் அவன், “சாமி! இதுதான் என் குகை! நீங்கள் இதற்குள்ளே சென்று இருங்கள்!...நான் போய் அவர்களைத் தேடி வந்துவிடுகிறேன் என்று கூறிவிட்டு நடந்தான்... வெள்ளை குகைக்குள் நுழைந்தான். அதற்குள் பளிஞனின் குரல்,
“சாமி! ஒரு சிறு உதவி! என் வில்லும் ஆயுதங்களும் குகைக்குள்ளே இருக்கின்றன. இப்போது உள்ளே போய் எடுத்துக்கொண்டு வர நேரம் ஆகும். நான் தேடிப் போகிற வழியில் துஷ்ட மிருகங்கள் எதிர்ப்பட்டாலும் படலாம்... தயவு செய்து உங்கள் வில்லையும் கத்தியையும் தருகிறீர்களா?” என்று கேட்டது. வெள்ளை திரும்பிப் பார்த்தான். பளிஞன் சுனைக் கரையில் நின்று தயங்கித் தயங்கிக் கேட்டான். "குகைக்குள் ஒய்வெடுத்துக் கொண்டிருக்கும்போது, தனக்கு ஆயுதங்கள் எதற்கு? என்றெண்ணிய வெள்ளையன், “இந்தா எடுத்துக்கொண்டு போ!’ என்று தன் ஆயுதங்களை யெல்லாம் களைந்து பளிஞனுக்காகக் கீழே வைத்துவிட்டுக் குகையை நோக்கி நடந்தான். பளிஞன் ஓடிவந்து, வில்லையும் ஆம்பறாத் தூணியையும் கையில் எடுத்தான்.
மறு விநாடி குகைக்குள் நுழைந்து கொண்டிருந்த வெள்ளையன், ‘ஆ!’ என்று அலறிக்கொண்டே, சுருண்டு விழுந்து பாறைகளில் உருண்டான். யாரோ தடதடவென்று ஓடிவரும் சப்தம் அவனுடைய செவிகளில் விழுந்தது. ஒரு கூரிய அம்பு அவன் முதுகிலே பாய்ந்து மார்பு வழியாக ஊடுருவியிருந்தது. அதிலிருந்து குருதி பீறிட்டுப் பாறைகளில் வடிந்து, சுனை நீரில் சங்கமமாகி, அதன் படிக நிறத்தைச் இவப்பாக்கிக் கொண்டிருந்தது. மறுபடி வெள்ளையத் தேவனுக்குப் பிரக்ஞை வந்தபோது, தான் குகைக்குள்ளே படுக்க வைக்கப்பட்டிருப்பதையும், தன் மார்பை ஊடுருவியிருந்த அம்பு எடுக்கப்பட்டு, அதில் பச்சிலை மருந்து இட்டுக் கட்டப்பட்டிருப்பதையும் தன்னோடு வந்த அந்தப் பளிளுனைக் குகையில் ஒரு பாறைமேல் கொடிகளால் இறுக்கிக் கட்டியிருப்பதையும் கண்டான். அவனைச் சுற்றி அவன் சகாக்களான தலைக்கட்டுக்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் முகத்தில் துயரம் நிறைந்திருந்தது.
அவனுக்குப் பிரக்ஞை வந்து கண் விழித்ததைக் கண்டதும், தலைக்கட்டுக்கள் துயரம் தாங்க முடியாமல் ‘ஹோ’ வென்று வாய்விட்டு அலறிவிட்டார்கள். வெள்ளையத் தேவன் அழவில்லை. அம்பு ஊடுருவியிருந்த வலியை அவன் பொருட்படுத்தவில்லை. அவன் முகத்தில் மனித நயனங்கள் காணக்கிடைக்காத தெய்வீக தேஜஸ் படிந்திருந்தது. பாரிஜாத புஷ்பத்தைச் சரப்படுத்தி வைத்தாற்போன்ற ஓர். அற்புதமான சிரிப்பு அவன் இதழ்களை அணி செய்தது. ‘வெள்ளையத் தேவன்', தன் எதிரே பாறையில் கட்டிவைத் கப்படடிருந்த அந்தப் பளிஞனைச் சிறிது நேரம் அதே புன்னகையோடு உற்றுப் பார்த்தான். பின்பு தலைக்கட்டுக் களைப் பார்த்துக் கூறினான்.
“நண்பர்களே! முதலில் இவனைப் பாறையிலிருந்து அவிழ்த்து விடுங்கள்.”
“பிரபு! இந்த அயோக்கியன்தான் தங்கள் முதுகில் அம்பு செலுத்தியவ்ன்! இவனை விடுவதாவது? சித்திரவதை செய்யவேண்டும்."—தலைக்கட்டுக்கள் கொதிக்கும் குரலில் கூறினார்கள்.
“உங்கள் எல்லோரையும்விட, இவனைப் பற்றியும், இவன் செயல்களைப்பற்றியும் எனக்கு நன்றாகத் தெரியும். நண்பர்களே! இவன் மலைப்பளிஞன் இல்லை! தீவட்டிக் கொள்ளைக்காரர்களின் தலைவன். என்னைப் பழி வாங்குவதற்குக் காத்திருந்த பாப்பைய நாயக்கன்! சில நாழிகைகளுக்கு முன் இவன் என் காதிலிருந்த கத்தி வடுவை எறும்பு புகுந்துவிட்டதாகப் பொய் சொல்லித் தடவிப் பார்த்ததும், பிறகு என்னை இடைவிடாமல் பின்தொடர்ந்ததும், இவனுடைய நடிப்பையும் மீறி உண்மையை எனக்குக் கூறிவிட்டன. ஆனால், நல்ல கம்பளத்து நாயக்கர் குலத்தில் பிறந்த இந்த ஆண் மகன், என்னோடு நேருக்குநேர் போரிடாமல், என் முதுகிலே அம்பு போட்டு என்னைக் கொன்று தனக்கு இழுக்கைத் தேடிக்கொண்டு விட்டானே?"—என்றுதான். இந்த மரணாவஸ்தை நிலையில் நான் ஏங்குகிறேன். என் வாழ்வில் என்றாவது ஒரு நாள் இவன் எனக்கு எமனாக வருவான் என்பதை இன்றல்ல, ஆறு வருஷத்திற்கு முன்பே தான் அறிவேன்...அது இருக்கட்டும், நான் வேண்டிக் கொள்கிறேன் நண்பர்களே... முதல் வேலையாக இவனை அவிழ்த்துவிடுங்கள் நீங்கள் அவிழ்த்துவிட மறுத்தால், நான்தான் உயிர் வேதனையோடு எழுந்திருந்தாவது அவிழ்த்துவிட வேண்டும்.”...இப்படிக் கூறியவாறே, வெள்ளையன் கையூன்றி எழுந்திருக்க யத்தனித்தான். "வேண்டாம் பிரபு, வேண்டாம், நாங்களே செய்கிறோம்"–என்று கூறிக்கொண்டே, உடனிருந்தவர்கள் பாறையிலிருந்து அந்தப் பளிஞனை அவிழ்த்துவிட்டனர். கொடிகளால் இறுக்கப்பட்டுக் கிடந்ததனால் அவன் உடலில் பாளம் பாளமாகத் தடிப்பு விழுந்து கன்றிப் போயிருந்தது.
“பாப்பையா! கொஞ்சம் இப்படி என் அருகே வா"–அன்பு இழையும் கருணைக் குரலில் வெள்ளையத் தேவன் அழைத்தான்.
“என்னை மன்னித்துவிடுங்கள். நீங்கள் மனிதரில்லை; தெய்வம்".. தழுதழுக்கும் குரலில் இவ்வாறு கூறிக் கொண்டே, வெள்ளையத் தேவனின் கால்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தான் பாப்பைய நாயக்கன்.
“என்னை வணங்காதே பாப்பையா. தெய்வம் மனித சரீரத்தில் இல்லை. அந்தச் சரீரத்தின் அதியுன்னதமான குணங்களில் இருக்கிறது. அந்தக் குணங்களை உன் சரீரத்தில் குடியேற்றுகிற முயற்சியில் ஈடுபட்டால், நாளை முதல் உனக்கும் மற்றவர்களுக்கும் நீயேதான் தெய்வம்.”
“இல்லை, இல்லை, நான் பாவி. கொலைப் பாதகன். திருடன். தீவட்டிக் கொள்ளைக்கர்ரன். நான் தெய்வமாக முடியாது"–பாப்பையன் கதறினான்.
“ஏன் முடியாது? நன்றாக முடியும்! தெய்வத்தை இந்தத் தலைமுறையில் வணங்கும் அடியார்கள், அடுத்த தலைமுறைக்குத் தாங்களே தெய்வமாகிவிடுகிறார்களல்லவா? உன் ஒழுங்கான வாழ்வுக்கு வழி சொல்லுகிறேன் பாப்பையா! அதை நீ கேட்டாயா?”
“கேட்கிறேன் சுவாமி!”
“வெறுமனே சொன்னால் போதாது! இதோ! கீழே வடிந்திருக்கும் என் ரத்தத்தைத் தொட்டு, “நான் நீங்கள் சொல்கிறபடியே செய்கிறேன்’ என்று சத்தியம் செய்ய வேண்டும்." பாப்பையன் அப்படியே வெள்ளையத் தேவனின் ரத்தத்தைத் தொட்டு வணங்கிச் சத்தியம் செய்தான்.
“நான் சொல்வதை, இவனுக்குச் செய்து கொடுக்க நீங்கள் பொறுப்பு! எனவே, நீங்களும் இப்படியே ஒரு சத்தியம் செய்யுங்கள்"—என்று தன் சகாக்களையும் வேண்டிக்கொண்டான் வெள்ளையத் தேவன்.
அவர்களும் அப்படியே ரத்தத்தைத் தொட்டு சத்தியம் செய்தார்கள், இப்படி இரு சாரரும் சத்தியம் செய்து முடிந்தபின், “நண்பர்களே! எல்லோரும் இப்போது கவனமாக நான் கூறுவதைக் கேளுங்கள்” என்று தொடங்கி வெள்ளையத்தேவன் கூறலானான்:—
“தலைக்கட்டுக்களே! கவனித்துக் கேளுங்கள். இது என் வேண்டுகோளின் முக்கியமான அம்சம். பாப்பையா! நீயும் கேள். பண்ணைத்தேவருடைய செல்வ வளமே பாப்பையனுக்கும் எனக்கும் நேரடியாகப் பகையை உண்டாக்கிவிட்டது. இப்போதோ பொன்னியை மணம் செய்து கொண்டதன் மூலமாக அந்தச் செல்வத்துக்கு நான் உரிமையாளன் ஆகிவிட்டேன். ஆனால், இதோ இன்னும் சிறிது நேரத்தில் என்னுடைய உலக வாழ்க்கையே முடியப்போகிறது. நீங்கள் போட்டிருக்கும் பச்சிலை மருந்தெல்லாம் இதற்குப் பயன்படாது. ஏனென்றால், பாப்பைய நாயக்கன் விட்ட அம்பு என் இதயத்தின் முக்கியமான இரத்தக்குழாயைத் துளைத்துவிட்டது. இனி நான் பிழைப்பது நடக்க முடியாத காரியம். எனவே உங்களிடம் இதை வேண்டுகின்றேன்.
பொன்னி மூலம் என்னைச் சேர்ந்திருக்கும் பண்ணைத் தேவரின் சொத்துக்களையும், அவருடைய கரிசல்குளத்துத் தோட்ட மாளிகையையும் நாளையிலிருந்து பாப்பையனுக்கு உரிமையாக்க வேண்டும். அதைச் செய்வதாகத் தலைக்கட்டுக்களாகிய நீங்களும், ஏற்றுக்கொள்ளப்போவதாகப் பாப்பையனாகிய இவனும் என் ரத்தத்தைத் தொட்டுச் சத்தியம் செய்துவிட்டீர்கள். இனி நீங்கள் மறுக்க முடியாது!" "ஐயோ! சுவாமீ! என்னை மீண்டும் ‘செல்வம், ஆசை” என்ற படுகுழிகளில் தள்ளாதீர்கள். நான் இப்படியே. உங்களோடு சாகப் போகிறேன்” என்று பாப்பையன் அலறினான்.
“கூடாது! பாப்பையா, அன்றிரவு எந்த மாளிகையில் நீ சுவரேறிக்குதித்துத் திருடனாக நுழைந்தாயோ, அதே மாளிகைக்குச் சொந்தக்காரனாகப் போகிறாய். ஒரு காலத்தில் உன்னை ஏங்க வைத்த செல்வம், உனக்குக் கிடைக்கப் போகிறது. தானதர்மங்களை மனங்குளிரச் செய்து, கர்மயோகியாக வாழ்நாளைக் கழி. உன்னை அழ வைத்த செல்வத்தைப் பிறருக்குக் கொடுத்துக் கொடுத்துப் பழிவாங்கு! உன்னைத் திருடனாக்கிய செல்வம், வருங்காலத்தில் பிறரையும் திருடராக்காமல் அதன் கொட்டத்தை ஒடுக்கு!” என்று ஆவேசம் வந்தவன்போல மூச்சுவிடாமல் பேசிக்கொண்டே போனான் வெள்ளையத்தேவன்.
“பிரபு! தங்கள் மனைவி மக்களுக்கு நாங்கள் என்ன பதில் கூறுவது?” என்று தலைக்கட்டுக்கள் அழுகைக்கு இடையே விம்மிக்கொண்டே கேட்டனர்.
“வெள்ளையத்தேவர் வானுலகில் இருந்து, எப்போதும். உங்கள் நலனைக் கண்காணித்து வருவார் என்று கூறுங்கள். நீங்கள் செய்த சத்தியத்தின் மேல் ஆணையாகப் பாப்பைய நாயக்கன்தான் பழைய தீவட்டிக்கொள்ளைக்காரனென்றோ அவனால் நான் கொலை செய்யப்பட்டேன் என்றோ, என் மனைவி மக்களிடம் கூறக்கூடாது! முடிந்தவரை பிறரிடமும் கூறவேண்டாம்” என்று வெள்ளையத்தேவன் கூறினான், உள்ளத்தின் கருணையொளி அவன் சொற்களிலே பிரகாசித்தது. அடுத்த கணம்...அவன் ஜீவன் ஒளியோடு ஒளியாக ஐக்கியமாயிற்று. ஜீவனற்ற வெள்ளையத்தேவனின் சரீரத்தை தங்கள் கண்ணீரால் நீராட்டி, குகைக்குள்ளேயே அடக்கம் செய்தனர் தலைக்கட்டுகள்.
இதற்கப்பால், பாப்பைய நாயக்கன் பண்ணைத்தேவர் மாளிகையை அன்ன சத்திரமாக மாற்றி, ஏழை எளியவர் களுக்குச் சோறிடும் தர்மத்தில் ஈடுபட்டான். தன்னை மனிதனாக்கிய வெள்ளையத்தேவனுக்குச் சிலை செய்து, அவன் இறந்த கொங்குமலைக் குகையிலேயே அதைத் தெய்வமாகப் பிரதிஷ்டை செய்தான். கரிச்ல்குளத்திற்கும் கபிலக்குறிச்சிக்கும் குலதெய்வமானான் வெள்ளையத்தேவன். எந்தக் கரங்களால் வெள்ளையத்தேவனின் முதுகில் அம்பைத் தொடுத்தானோ, அதே கரங்களால் அவனுடைய சிலையின் திருவடிகளில் மலரைச் சொரிந்து, மனம் நெகிழப் பூசை செய்தான் பாப்பையன். வெள்ளையன் மனைவி மக்களும் ஊராரைப் போலவே அந்தச் சிலையைத் தெய்வமாக வழிபடலானார்கள். மாசி மாதம் அவன் இறந்த நாள் பெருவிழாவாக இரண்டு ஊராராலும் கொண்டாடப்பட்டது. வெள்ளையத்தேவன் தெய்வமானான். அவனது இரத்தம் சிந்திய பாறை, அவன் சிலை நிற்கும் கோயிலாயிற்று.
***
வீராசாமித்தேவர் எனக்கும் ஜான்ஸனுக்கும் இந்தக் கதையைக் கூறி முடித்தபோது, இரவு மணி பதினொன்றரைக்குமேல் ஆகியிருந்தது. மழையும் நின்று வெகு நேரமாகியிருந்ததினால், வானத்தில் மேகங்கள் வெளி வாங்கியிருந்தன. நட்சத்திரங்களும், நிலாவும் ஒளியைப் பரப்பியதால், பாவில் முழுகிய தெய்வபிம்பம்பேர்ல மலையில் நில இவாளி அங்கங்கே தவழ்ந்தது. நான் குகைக்குள்ளிருந்த வெள்ளையத்தேவனின் அந்தக் கம்பீரமான சிலையின் அருகில் சென்று பார்த்தேன். “மூன்று தலைமுறைக்கு முந்திச்செய்த சிலைங்க இது!” என்றார் வீராசாமித்தேவ்ர். பெருமிதம், விளங்கும் அந்தச் சிலை வாய் திறந்து,
“தெய்வம் மனித சரீரத்திலே இல்லை. அந்தச் சரீரத்தின் அதியுன்னதமான குண்ங்களில் இருக்கிறது” என்று என்னிடம் கூறுவதுபோல ஒரு பிரமை எனக்கு ஏற்பட்டது.
நாங்கள் ஜீப்பில் ஊர் திரும்பும்போது, “இவர் சொன்ன் கதையைப்போலவே, இந்த ஊரைப்பற்றி மதுரை ஜில்லாவின் பழைய கெஜட்டில் ஒரு வரலாறு படித்ததாக ஞாபகம் வருகிறது” என்றார் ஜான்ஸன்.
“இருக்கலாம்” என்றேன் நான்.
★
தலைவெட்டிக்காடு
நிம்முடைய தமிழ் நாட்டில் ராமநாதபுரம் ஜில்லாவுக்கு என்றே சில சிறப்பியல்புகள் உள்ளன.
வெயில் காலத்தில் வெயில் அதிகம். மழை காலத்தில் மழை குறைவு. ஒற்றையடிப் பாதைகளையும் வண்டிப் பாதைகளையும் தவிரக் கார் செல்ல் ஏற்ற சாலைகள் இல்லாத, கிராமங்கள். தப்பித்தவறி ஒரு ஊருக்கு ரயில்வே ஸ்டேஷன் இருந்தால், ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ஊர் நாலைந்து மைலுக்கு அப்பால் இருக்கும். சாலைதான் கிடையாது. ஒற்றையடிப் பாதைகளிலோ, வண்டிப் பாதைகளிலோ நிழல் மரங்களாவது இருக்குமோ என்றால், அந்த அம்சமும் பூஜ்யம் கிணறுகள் இருக்கும்; ஆனால், அவற்றில் தண்ணீர்தான் இருக்காது.
இவற்றையெல்லாம் சிறப்பியல்புகள் என்று சொல்லாமல் வேறெப்படிச் சொல்வது?
எங்கள் ஊருக்கு ரயில்வே ஸ்டேஷன் இருந்தது. எங்கள் ஊரில் ர்யில்வே ஸ்டேஷன் ஏற்பட்ட விஷயம். ஒரு ரசமான கதை. ரயில் பாதைக்கு வடக்கே ராமலிங்கபுரம் என்று மூன்றரைமைவில் ஒரு ஊர் இருந்தது. தெற்கே கிருஷ்ணாபுரம் என்று ஜந்து மைலில் ஒரு ஊர் இருந்தது. கிருஷ்ணாபுரத்தி லிருந்து நாலு பர்லாங் நட்ந்தால், நேரே தென்திசையில் எங்கள் ஊர், நதிக்குடி என்று பெயர். முதல்முதலாக ஸ்டேஷன் ஏற்பட்டபோது ராமலிங்கபுரத்தார் தங்கள் ஊரின் பெயரையே ஸ்டேஷனுக்கு வைக்கவேண்டுமென்று ரயில்வேக்கு மகஜர் போட்டார்கள். தெற்கே கிருஷ்ணா புரத்தார் சும்மா இருப்பார்களா? அவர்கள் தங்கள் ஊரின் பெயரையே ஸ்டேஷனுக்கு வைக்கவேண்டுமென்று பஞ்சாயத்து போர்டில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினார்கள். ரயில்வேக்காரர்கள் இரண்டு ஊராருக்கும் நல்ல பிள்ளையாக ஒரு காரியம் செய்தார்கள். இரண்டு ஊரின் பேர்களிலும் சரி பாதியாக எடுத்து இணைத்து, ஸ்டேஷனுக்கு ராமகிருஷ்ணாபுரம் என்று பையர் வைத்துவிட்டார்கள். மதுரையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் வழியில் - சிவகாசிக்கு அடுத்த ஸ்டேஷனாக அமைந்திருக்கிறது ராமகிருஷ்ணாபுரம். இந்த ஸ்டேஷனில் இறங்கித் தெற்கே, ஐந்தரை மைல் வண்டிப்பாதையிலும் ஒற்றையடிப் பாதை யிலுமாக நடந்தால், எங்கள் ஊர் நதிக்குடிக்குப் போய்ச் சேரலாம். கிருஷ்ணாபுரம் கொஞ்சம் மேற்கே ஒதுங்கிவிடுவ தால், எங்கள் ஊர் வழி தனியே பிரிந்துவிட்டது. ஐந்தரை, மைலும் ஒரே செம்மண் பார். காற்றடித்துவிட்டால் மிளகாய்ப் பொடியைத் தூவின மாதிரிச் செம்மண் புழுதி பறக்கும். ஒரே ஒரு பெரிய ஆஸ்ரமத்தைத் தவிர அந்த ஐந்தரை மைலில் வேறு மரமே கிடையாது. வெறும் பொட்டல். குடிக்கத் தண்ணீர் கிடையாது. அந்த ஆலமரத் தடியில் ஒரு ஊருணியும் இடிந்துபோன மடம் ஒன்றும் இருந்தன. அதற்கு அங்கணப் பரதேசி மடம் என்று பெயர்.
இந்த மடத்துக்கு அடுத்தபடி இருபது முப்பது அடி பள்ளத்தாக்கிலேயே இரண்டரை மைல் தொலைவு நாற். புறமும் வானமுகடுகளைத் தவிர வேறெதுவும் தெரியாது. அங்கங்கே இரண்டொரு பனை மரங்கள் நிற்கும். இந்த இரண்டரை மைல் பள்ளத்தாக்கிற்குத்தான் எங்கள் பக்கத்தில் தலைவெட்டிக்காடு-என்று ஒர் பயங்கரமான காரணப் பெயர் ஏற்பட்டிருந்தது. இந்தச் செம்மண் காட்டையும் இதில் முளைத்திருக்கும் பனைமரங்களையும் நினைக்கும்போது என் தாத்தாவின் நரை மயிர்ப் பொட்ட லான சிவப்பான வழுக்கைத் தலை என் நினைவிற்கு வரும், அதோடு மட்டும் நினைவு நின்றுவிட்ாது. இளம் பருவத்தில் இந்தத் தலைவெட்டிக்காடு என்ற பயங்கரப் பிரதேசத்தைப் பற்றி வழுக்கைத் தலை தாத்தாவிட்ம் கேட்ட கதைகளை நான் தாத்தாவானாலும் மறக்க முடியுமா? நல்ல வேளை யாக இப்போதெல்லாம் அந்தக் காலத்தில் நிகழ்ந்தவை போல எந்தவிதமான பயங்கர சம்பவங்களும் தலைவெட்டிக் காட்டுப் பாதையில் மருந்துக்குக்கூடக் கிடையாது. பேர ளவில்தான் தலைவெட்டிக்காடு என்ற பயங்கரம் நிலைத் திருக்கிறது. ஆனாலும் பழைமையை நினைத்துப் பார்த்து: அதை உங்களுக்குச் சொல்வதில் எனக்கு ஒரு திருப்தி. அந்தத் திருப்திக்காகத்தான் இதை இங்கே எழுதுகிறேன்.
இரண்டு தலைமுறைகளுக்கு முன்னால் எங்கள் ஊரில் வாழ்ந்த ஒரு மனித தீரரைப் பற்றிய கதை. வீரம், தீரம் என்றெல்லாம் சாமானியமான சொற்களைக்கொண்டு அந்த மனிதரின் சாமர்த்தியத்தைக் கூறிவிடமுடியாது, அவர் ஒரு கம்பீரமான அவதார புருஷர் என்றுதான் சொல்ல வேண்டும்.
மோதிரக் கடுக்கன் முத்துசாமி ஐயர் என்றால் அந்தத் தலைமுறையில் இந்தப் பிரதேசம் முழுவதும் தெரியும். இப் போதும் பழைய காலத்துக் கிழவர்கள் சிலர் அந்தப் பெயரை அறிவார்கள்.
ஆறு அடிக்கும் கொஞ்சம் அதிகமான உயரம். பிரா மணரானாலும் தேவமார், மறவர்கள் முதலியவர்களுக்கு அமைகிற மாதிரிக் கட்டு மஸ்தான தேகம் அவருக்கு வாய்த் திருந்தது, பாறை மாதிரி இறுகிப் பரந்த மார்பு. மிருதங் கத்தை குறுக்குப் பாட்டில் நிறுத்தி வைத்ததுபோல் பருத்த புஜங்கள். பயில்வான்கள் மாதிரி சதைப் பிடிப்புள்ள தொடைகள். சிறு வயதிலேயே சிலம்பம், குஸ்தி, மல்லுக் கட்டு, தண்டால், பஸ்கி எல்லாம் செய்து பழகியவர் அவர். பரந்த நெற்றியில் பெரிய சந்தனப் பொட்டுக்கு நடுவில் சிறிய குங்குமப் பொட்டு வைத்திருப்பார். இவை தவிர, அவருடைய பிரசித்திப் பெற்ற பேருக்குக் காரண மான பொருள்கள் காதுகளில் தொங்கின. அதுதான் மோதிரக் கடுக்கன்.
மோதிரக் கடுக்கன் என்றால் இந்தக் காலத்தில் பலருக் குப் புரியாது. அதை வேறொரு விதமாகப் புரிய வைத்து விடலாம். இப்போது சினிமாவிலும், நாடகத்திலும் ராஜ பார்ட்டுக்காரர்கள் சந்திரப் பிறை போன்ற ஒரு வளையத் தைக் காதுகளில் தொங்கவிட்டுக் கொள்ளுகிறார்கள் பாருங் கள். இதுபோல் மோதிரத்தை விடக் கொஞ்சம் பெரிதாகவும் தடிமனாகவும் தங்கத்தில் செய்து, அதில் விலையுயர்ந்த நீல நிற வைரக் கற்களைப் பதித்து உருவாக்கிய கடுக்கன்கள் இரண்டைத் தம் காதுகளில் அணிந்து கொண்டிருந்தார் முத்துசாமி ஐயர். பக்கத்துக்கு இரண்டு பவுன் வீதம் தங்கமும், விலையுயர்ந்த வைரக் கற்களும் சேர்ந்த அந்தக் கடுக்கன்கள் இரண்டும் இந்தக் கால விலை மதிப்புக் கிரயப் படி பார்த்தால், ஆயிர ரூபாய்க்குமேல் பெறும். அந்தக் காலத்தில் விலையை யார் பெரிதாக மதித்தார்கள்! கரு - கருவென்று சுருண்ட குடுமியைப் பின்புறமாகக்கொண்டு. தோன்றும் அந்த முகமும், காதுகளில் ஆடும் மோதிரக் கடுக்கண்களும் விளங்க அவர் எழுந்து நின்றால், வீமன் கதாயுத்மில்லாமல் எழுந்து நிற்பதுபோல இருக்கும்.
முத்துசாமி ஐயர் கலியாணமாகாதவர். ஆனால், சாமியாரில்லை. தகப்பனார் இறந்த பிறகு தம்பிக்குக் கலி. யாணம் செய்து வைத்துவிட்டு, நிலங்கரைகளைப் பாகம் பிரித்துக்கொள்ளாமல், அவன் விட்டோடு சாப்பிட்டுக் கொண்டு விவசாயத்தைக் கவனித்து வந்தார். தம்பிக்குக் குழந்தை குட்டிகளுக்குக் குறைவில்லை, அண்ணாவிடம் அபார் பக்தி. அவர் தன்னோடு தன் வீட்டில் இருப்பதையே பெருமையாகக் கருதினான் அவன். முத்துசாமி ஐயரைக் கலியாணம் செய்து கொள்ளேண்டா முத்துசாமி! இது. என்னடா தடிக்கட்டையா ஊரைச் சுத்திக்கொண்டு..? என்று வயதான கிழம்கட்டைகள் கூடக் கேட்பதில்லை.
நாற்பத்தெட்டு வயதுக்குமேல் கழித்து விட்ட அவர், இனிமேல் கலியாணம் செய்துகொள்ள முயல்வார் என்று ஊராருக்கோ, உற்றாருக்கோ, சிறிதும் நம்பிக்கை இல்லை. கலியாணம் செய்து கொள்ளாததனால், நடத்தையில் ஒழுக்கக் கேடோ, அங்கே, இங்கே, நின்று தெருப் பெண்களை உற்றுப் பார்த்தார் என்ற அவச்சொல்லோ, அவரைப் பொறுத்த மட்டில் கிடையவே கிடையாது. மனிதன் நடத்தையில் தங்கம் என்றால் தங்கம். அப்படிப் பட்டவருடைய வாழ்க்கை தலைவெட்டிக்காடு என்ற இடத்தில் ஒரு பெண் காரணமாக முடிய நேர்ந்தது. என்றால், அதுதான் இந்தக் கதையிலேயே மிகப் பெரிய ஆச்சரியம்.
அந்தக் காலத்தில் எங்கள் ஊருக்கு ரயில்வே ஸ்டேஷன் கிடையாது. கிழக்கே சிவகாசியையும், மேற்கே பூரீ வில்லிபுத்துரையும் விட்டால் வேறு ரயில்வே ஸ்டேஷன் நடுவில் இல்லை. கலியாணம், கார்த்திகை, விசேஷங்களுக்குச் சாமான்கள் வாங்க வேண்டுமானால், இந்த ஊர்களில் ஏதாவது ஒரு ஊரில் போய்த்தான் வாங்கிக்கொண்டு வரவேண்டும். பெரும்பாலும் தலைவெட்டிக்காடு வழியே குறுக்குப் பாதையில் சிவகாசிக்குப் போய்த்தான் சாமான் வாங்கி வருவார்கள். தலைவெட்டிக் காட்டைக் கடந்து வடகிழக்கே சென்றால், சிவகாசிக்குப்பத்து மைல். அந்தப் பத்து மைலுக்குள் இரண்டு கிராமங்கள் இடையில் இருந்தன. தாள்கொண்டான்புரம், மாறனேறி என்று இந்த இரண்டு ஊர்களில் தாள்கொண்டான்புரம் இப்போது பாழடைந்து விட்டது. ஊர்மட்டுமில்லை, அதன் பேரும் பாழடைந்து “தாட்னாபுரம் என்று சிதைந்து வழங்கி வருகிறது. இதற்கு நேர்மாறாக மாறனேரி இப்போது பெரிய ஊராகி விட்டது.
இந்த இரண்டு கிராமங்களிலுமாக அந்தக் காலத்தில் ஐம்பது, அறுபது அம்பலக்காரர் குடும்பங்கள் வசித்து வந்தன். இந்த அம்பலக்காரர்களுக்கும், எங்கள் ஊராருக்கும் பாசிக்குத்தகை உரிமைபற்றி ஒரு விரோதம் பரம்பரையாக இருந்தது. எங்கள் ஊருக்கு வடபுறம் சேவல் குளம் என்று ஒரு பெரிய பாசன ஏரி உண்டு. அதில் மீன் குத்தகை மட்டும் வருஷத்துக்கு ஆயிரம், இரண்டாயிரத்துக்குக் குறையாமல் போகும். இந்த ஏரி, மாறனேரிக்குப் பக்கத்தில் இருந்த தினால் மாறனேரி, தாள்கொண்டான் புரம் ஆகிய இரண்டு ஊர் அம்பலக்காரர்களும் ஒன்று கூடி, வருஷா வருஷம் எங்கள் ஊராரிடம் குத்தகை உரிமை பெறாமலே மீன் பிடிக்கத் தொடங்கினார்கள்.
‘ஏரியில் மீன் இருக்கிறது! அதைக் குத்தகைக்குவிட உங்களுக்கென்ன அதிகாரம்?’ - என்று அம்பலக்காரர்கள் விதண்டாவாதம் பேசினர். இதன் பின் இரு சாராருக்கு. மிடையில் இரவும், பகலும் அடிதடிகள் கலகங்கள் தொடர்ந்து சில வருடங்கள் நடந்தன. எங்கள் ஊரில் மோதிரக் கடுக்கண் முத்துசாமி ஐயர் மட்டும் இருந்திருக்க வில்லையானால், அம்பலக்காரர்கள் எப்போதோ ஊரைச் சூறையாடியிருப்பார்கள். அவருடைய ‘அத்து’ - எங்கள் ஊர்மேல் அம்பலக்காரருக்குக் கொஞ்சம் பயம் இருந்தது. பின்பு விஷயம் கோர்ட் வரை போயிற்று. தீர்ப்பு எங்கள் ஊராருக்குச் சாதகமாகவே ஆகிவிட்டது.
இந்தப் பாசிக் குத்தகை விவகாரம் முடிந்த பிறகு, அம்பலகாரர்களுக்கு எங்கள் ஊரார்மேல் அளவு கடந்த, ஆத்திரம் ஒண்டி சண்டியாக சிவகாசிக்குச் சாமான் வாங்கப் போகிற எங்கள் ஊர் ஆட்களை அந்தப் பிரசித்தி பெற்ற பள்ளத்தில் மன்றந்திருந்து அம்பலக்காரர்கள் கொலை, கொள்ளை, வழிப்பறி செய்ய ஆரம்பித்தார்கள். ஒன்றிரண்டு மாதங்களுக்குள் எங்கள் ஊரைச் சேர்ந்த, ஏழெட்டுப் பேர் அந்தப் பள்ளத்தில் தண்லவெட்டப்பட்டார்கள். கொள்ளை, வழிப்பறிகளுக்கோ, எண்ணிக்கை சொல்ல முடியாது. இதனால் நாளடைவில் அந்தப் பள்ளத்திற்குத் ‘தலைவெட்டிக்காடு’ என்று பெயர் ஏற்பட்டுவிட்டது. சிவகாசிக்குப் போய் சாமான் வாங்கப் பயந்து, எல்லோரும் மேற்கே பூரீவில்லிபுத்துருக்கே போகத் தொடங்கிவிட்டார்கள். அம்பலகாரரின் தொல்லையால் எங்களுராரின் போக்குவரவு தலைவெட்டிக்காடு பிரதேசத்தில் சுத்தமாக நின்று போய்விட்டது.
ஆனால், எங்கள் ஊரில் ஒரே ஆளை மட்டும் இந்தக் கொலை, கொள்ளை, பயமுறுத்தல்களெல்லாம் கொஞ்சங், கூட அரட்ட முடியவில்லை. மோதிரக் கடுக்கன் ஐயர் மட்டும் பழையபடி சிவகாசிக்கே போய் வந்து கொண்டிருந் தார். அநேகமாகப் பகல் நேரங்களில்தான் அவரும் போக்குவரவு வைத்துக் கொண்டார். மாறனேறி, தாள் கொண்டான்புரம் அம்பலக்காரர்கள் பலர் ஐயரிடம் சிலம்பம், குஸ்தி முதலியவற்றைக் கற்றுக் கொண்ட சீடர்கள், அவர் பலமும், துணிவும் அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
‘அடே! அந்த மோதிரக் கடுக்கன் முத்துவையன் எம - காதகப் பயல்...அவன் கிட்ட மட்டும் போய் வாலை ஆட்டி வைக்காதிங்க...நமக்கெல்லாம் குஸ்தியும், சிலம்பமும் தெரி புதுன்னா அது அந்த ஐயன் இட்டபிச்சை’ என்று வயதான அம்பலக்காரர்கள் இளம் பிள்ளைகளிடம் அடிக்கடி எச்சரிப்ப துண்டு.
தலைவெட்டிக்காடு பள்ளித்தில் கொலை, கொள்ளை களைச் செய்து நதிக்குடியூராரைப் பழி தீர்த்துக்கொண்ட அம்பலகார இளைஞர்கள், மேற்படி எச்சரிக்கைக்காக மட்டு மின்றி, சொந்த பயத்தினாலும் ஐயரை நெருங்க அஞ்சிப் பேசாமல் இருந்தனர்.
அவர் வழக்கம்போல் தனி ஆளாகத் தலைவெட்டிக் காட்டைக் கடந்து மாறனேரிப் பாதையாகச் சிவக்ாசிக்குப் போய் வந்துகொண்டுதான் இருந்தார். கருங்காலி மரத்தில் வெட்டி எடுத்த சிலம்பக் கழி ஒன்று மட்டும் அவர் கையிலிருக்கும்.
முதலில், தான் மட்டும் போய் வந்து கொண்டிருந்த ஐயர், நள்ளடைவில் அந்தப் பாதையில் போகப் பயப்பட்ட வேறு சிலரையும் தம்முடைய மேற்பார்வையில் கூட்டிச் சென்று வந்தார். அம்பல்காரர்கள் யாரைத் துன்புறுத்தினாலும், துன்புறுத்தினவ்ர்களுக்காகத் தாமே வலுவில் பரிந்து கொண்டு அம்பலகாரர்களை எதிர்த்தார்.
‘ஏலே நீங்க சாதி மறவர்களா இருந்தா வாங்கடா பார்ப்போம்.இந்த ஒத்தச் சிலம்பக் கழிக்குப் பதில் சொல்ல முடியுமாடா உங்களாலே?...இந்தப் பள்ளத்து வழியா வருகிற நதிக்குடிக்காரன் எவன் மேலேயாவது கை வச்சிங்களோ... உங்க குலத்தையே நாசம் பண்ணிப்பிடுவேன்! ஜாக்கிறதை என்று அடிக்கடி அவர்கள் ஊர் நடுவில் நின்றுகொண்டே அவர்களுக்கு அறைகூவல் விடுத்தார். அவர்களில் சிலரைச் சமயம் வாய்த்தபோது முதுகு தழும்பேற நொறுக்கித் தள்ளிக் கொண்டுமிருந்தார். எதற்கும் அஞ்சாத ராக்ஷஸ்த் தைரியம் ஐயருக்கு, ஐயரின் இந்த ராக்ஷஸத் தைரியம் வளர வளர் அம்பலகாரர்கள் அவர்மேல் வைத்திருந்த ‘கெத்து’ நலிந்து தேய்ந்து கொண்டிருந்தது. பழைய கெத்து இருந்த இடத்தில் குரோதம் தோன்றிவிட்டது.
ஒரு நாள் மாட்டுக்குப் பருத்தி விதை வாங்குவதற்காக மத்தியானம் ஒரு மணிக்குப் புறப்பட்டுச் சிவகாசிக்குப் போனார் மோதிரக் கடுக்கன் ஐயர். தம்பியின் வீட்டில் இரண்டு ஜதை காளை மாடுகள், நாலைந்து பசு மாடுகள் எல்லாம் இருந்தன. இவற்றுக்கு நாள் தவறாமல் காலையில் பருத்தி விதை அரைத்து வைப்பது வழக்கம். வாரத்துக்கு அரை மூட்டை பருத்தி விதை செலவாகும். மாதத்திற்கு, இரண்டு முறை சிவகாசிக்குப் போய் ஒரோர் மூட்டையாகப் பருத்தி விதை வாங்கி வந்துவிடுவார் ஐயர். அன்றைக்கு மத்தியானம்வரை பருத்தி விதை வாங்கப் போக வேண்டுமே. என்ற ஞாபுகமே இன்றிக் கழித்து விட்ட அவர், திடீரென்று. நினைத்துக் கொண்டு ஒரு மணிக்குப் புறப்பட்டிருந்தார்.
அவர் மாறனேரி ஊரைக் கடக்கும் போது பகல் இரண்டு மணிக்குமேல் இருக்கும். போகும்போது அவரிடம் ஏற்கெனவே குரோதம் கொண்டிருந்த அல்பலகாரர்கள் சிலர் அவரைக் கண்டு கொண்டனர்.
‘சரி! ஐயன் சிவகாசிக்குப் போகிறான். இன்றைக்கு ன்ன்னவோ வழக்கத்தை மீறி மதியத்துக்குமேலே புறப்பட்டிருக்கிறான். திரும்புவதற்குள் இருட்டிவிடும். திரும்பாமல் சிவகாசியில் தங்கவும் மாட்டான். நம்முடைய பழியை இன்றைக்குத் தலைவெட்டிப்பள்ளத்தில் வைத்துத் தீர்த்துக் கொண்டுவிட வேண்டியது. ஆளைத் தீர்க்க முடியாவிட்டாலும் இரண்டு காதுகளையாவது அறுக்கவேண்டும். மோதிரக் கடுக்கனைக் கொள்ளையடித்தால், ஐயன் பெருமை பாதிபோன மாதிரி"—
அல்பலக்காரர்கள் ஒன்றுகூடித் தீர்மானம் செய்து கொண்டனர். நேருக்கு நேர் நின்று முத்துசாமி ஐயரை மறிக்க முடியாவிட்டாலும் இருட்டில் பள்ளத்தில் மறைந்திருந்து ஆளை அமுக்கிவிடலாம் என்பது அவர்கள் திட்டம். 'போயும் போயும் ஒரு சிலம்பக் கழியைத் தவிர ஐயரிடம் வேறு ஆயுதம் இருக்காது'–என்பதால், அம்பலகாரர்களுக்கு அன்று தெம்பு பிறந்துவிட்டது. அவர் சிவகாசிக்குப் போவதைக் கண்டதிலிருந்தே இரவு அவரை மடக்குவதற்கான ஏற்பாடுகளை மும்முரமாகச் செய்ய ஆரம்பித்துவிட்டனர். இரண்டு ஊர் அம்பலகாரர்களும் அந்த ஒரு மனிதரை மடக்குவதற்காக அதற்குமுன் என்றுமே ஒத்துழைத்திராத வகையில் ஒத்துழைத்தார்கள்.
தலையில் பருத்தி விதை மூட்டை, வலது கையில் சிலம்பக் கழி. 'டக் டக்'—கழியை ஊன்றும் ஒசை. விருட் விருட்டென்று பாய்ந்து வந்துகொண்டிருந்தார் ஐயர். பாதை அவருக்கு மனப்பாடம். இருட்டால் பாதை தவறவோ, மயங்கவோ அவசியமில்லை. கண்ணைக் கட்டி அனுப்பினாலும் ஊர் போய்ச் சேர்ந்துவிடுவார். அத்தனை தடவை அந்த வழியில் நடந்து பழக்கம் அவருக்கு.
அவர் மாறனேரி ஊரைக் கடக்கும்போது இருட்டி இரண்டு நாழிகைக்கு மேலாகியிருந்தது. போகும் போது ஊர்ச் சாவடியில் நிறைய ஆண்பிள்ளைகளைக் கண்டிருந்த் அவர், திரும்பும்போது சாவடி சூனியமாக இருப்பதைக் கண்டார். அவர் முட்டையோடு ஊருக்குள் நுழைந்த போது, இருட்டில் வீட்டு வாசல்களில் கூடியிருந்த பெண்கள். தங்களுக்குள் ஏதோ கசமுச்வென்று பேசிக் கொள்வதையும் கவனித்தார்.
'பாவம்...இந்த ஐயருக்கு அடுத்த தடவை இந்தப் பாதையிலே வரதுக்கு பாக்கியம்...'— இப்படி ஏதோ இரண்டொரு சொற்கள் அவர் காதில் விழுந்தன. இருளில் அவர் காது மோதிரக் கடுக்கன்களின் வைரங்கள் மின் மினிப் பூச்சிகளை வளையமாகக் கட்டித் தொங்கவிட்ட மாதிரி ஜவலித்தன. தலையிலிருந்த பருத்தி விதை மூட்டை அந்த ஒளியை மறைத்து நிழலிட்டு மறைத்தது. சாடை மாடையாக விழுந்த 'கசமுசல்' களை அவர் கவனித்துக் கொண்ட பின்பே மாறனேரியை விட்டு நகர்ந்தார்.
'கடுக்கனை. அறுத்துப் போடறதாக இல்லே பேசிக்கிட்டாக'—ஓரிடத்தில் 'கசமுசல்'களுக்கிடையே இப்படி ஓர் குரல் கொஞ்சம் இரைந்தே அவர் காதில் விழுந்தது.
ஐயருக்கு விஷயம் புரிந்துவிட்டது. 'சரி! பயல்கள் இன்றைக்கு மோதிரக் கடுக்கனில் கண்வைத்துவிட்டார்கள்... ஆளுக்கே கண்ணி வைக்கத் தவறியிருக்க் மாட்டார்கள் என்று உறுதியாக அனுமானித்துக்கொண்டார் அவர். அன்று அந்த இருள் செறிந்த இரவில் தலைவெட்டிப்பள்ளத்தில் தம்முடைய தலைக்கு ஆபத்து காத்திருக்கிறது என்பதை நொடியில் புரிந்துகொண்டார் அவர் நினைத்திருந்தால், அப்படியே இரண்டாவது பேருக்குத் தெரியாமல் சிவகாசிக்கு மூட்டையோடு திரும்பிப் போயிருக்க முடியும் அவரால். ஆனால், அவர் ஒரு சுத்த வீரர். அப்படிச் செய்ய மணம் இசையவில்லை. தைரியமாக மாறனேரி ஊரைத் தாண்டித் தலைவெட்டிப் பள்ளத்தை நோக்கி நடந்தார். இருளிலும் ஆபத்து இருக்கிறது என்று அறிந்துகொண்ட பின்னும் மிடுக்கும் கம்பீரமும் இருந்தன அவர் நடையில்.
'இன்று இந்த ஆபத்தைக் கடந்து மூட்டையோடு நான் மட்டும் ஊர் போய்ச் சேரவில்லையானால், இதுவரை இந்த மோதிரக் கடுக்கன்களைப் போட்டுக்கொண்டு நானும் ஒரு தீரன் என்று அலைந்ததற்கு அர்த்தமே இல்லை. பார்த்துவிடுகிறேன் ஒரு கை --' என்று சூளுரைத்துக்கொண்டு, மனோதிடத்தைப் பொங்கச் செய்தார். தலைவெட்டிப் பள்ளம் நெருங்கியது.
ஐயர் வஞ்சகமில்லாமல் பொடி போடுவார். மடியில் சிவகாசியில் வாங்கிய புதுமட்டையாக இரண்டு மூன்று பொடி மட்டைகள் நிறைந்த பொடியோடு கிடந்தன. பள்ளத்தில் இறங்குவதற்கு முன்னால், அங்கணப் பரதேசி மடத்து ஆலமரத்தின்கீழ் கொஞ்சம் நின்று சில திட்டங்களைத் தந்திரமாக வகுத்துக்கொண்டார். மடியிலிருந்த பொடி மட்டைகளில் இரண்டை அவிழ்த்து இடது உள்ளங்கையில் கொட்டிக் கையை இறுக்கி மூடிக்கொண்டார். வலது கைதான் சிலம்பக் கழியைப் பிடித்துக்கொண்டிருந் ததே!
வலது கையில் சிலம்பக் கழி! இடது கையில் பொடி! தலைமேல் பருத்தி விதை மூட்டை.. ஐயர் ஓரக் கண்களைப் பாதையின் இருமருங்கிலும் சுழற்றி இருளை ஊடுருவும் கூரிய நோக்குடன் தலைவெட்டிப் பள்ளத்திற்குள் இறங்கினார்.
பள்ளத்திற்குள் இறங்கி நாலைந்து கெஜ தூரம்தான் நடந்திருப்பார். அவருடைய வலது புறமும் இடது புறமும் இரண்டு மின்னல், துணுக்குகள் அவரது காதுகளை நெருங்கின. கொஞ்சம் உற்றுப் பார்த்தால், அவை மின்னல் துணுக்குகளல்ல, நன்றாகத் தீட்டப்பட்ட இரண்டு கூரிய கத்திகள் என்பதும், அவற்றால் இரண்டு அம்பலக்காரர்கள் அவருடைய காதுகளை மோதிரக் கடுக்கன்களோடு அறுக்க முயல்கிறார்கள் என்பதும் புரியும். ஐயருடைய இடது கை மெல்ல உயர்ந்து இறுக்கிய உள்ளங்கையை விரித்து இடது பக்கம் கத்தியோடு நெருங்குகிறவனுடைய கண்களைக் குறிவைத்துக் காரம், மணம், குணம் எல்லாம் நிறைந்த பொடியைத் தூவியது. 'அச்....ஆச்...அச் ஆச்' இடது புறத்து ஆசாமி, தும்மல்மேல் தும்மலாகத் தும்மிக்கொண்டே கண்ணைக் கசக்கினான். கத்தி தரையில் நழுவியது. ஐயர் அதைக் காலால் தார எற்றிவிட்டார். வலது புறம் நின்றவனுடைய இரண்டு முழங்கால்களுக்கும் இடையே அவனுக்கே தெரியாதபடி அவருடைய சிலம்பக் கழி நுழைந்தது. நுழைந்த கழி மின்னல் வேகத்தில் இரண்டு முழங்கால்களையும் சேர்த்து ஒரு நெம்பு நெம்பியது. "ஐயோ...அம்மா... – அலறிக்கொண்டே பல்டியடித்துக் குப்புற விழுந்து செம்மண்ணில் புரண்டான் அவன். அவ்வளவுதான்! பொத்தென்று தலையிலிருந்த பருத்தி விதை மூட்டையைக் கீழே தள்ளிவிட்டுப் பாய்ந்து, பாய்ந்து சிலம்பக் கழியைச் சுழற்றினார் ஐயர். ஒளிந்துகொண்டிருந்த மற்ற அம்பலகாரர்களும் திமுதிமுவென்று ஒடி வந்து கூட்டமாக அவரை வளைத்துக்கொண்டார்கள். வளைத்துக் கொண்டு சும்மா நிற்க முடிந்ததே ஒழிய, அவரை நெருங்க முடியவில்லை. மின்சார விசிறி-பெரிதாக இந்தக் காலத்தில் ஆகாய விமானங்களின் முன்புறம் சுழலுமே, அதுமாதிரி நாற்புறமும் சுழன்றது அவருடைய சிலம்பக் கழி. நான்கு பக்கமும் கத்தி, பிச்சுவா, ஈட்டி, பாலாக்கம்பு சகிதம் அவரை வளைத்துக்கொண்டு நின்றவர்கள் பதினைந்து இருபதடி தூரம் தள்ளி நிற்க முடிந்ததே தவிர, அவரைக் கிட்ட நெருங்க்வே முடியாமலிருந்தது.
பொழுது விடிகிற வரையிலும் அவர் அப்படிச் சிலம்ப மாடித் தடுத்தாலும்கூட அவரைத் தீர்த்துக் கட்டாமல் போவதில்லை என்று அம்பலகாரர்களும் நின்றுகொண்டிருந்தார்கள். கொஞ்சம் கைகள் ஒய்ந்தோ, அசந்தோ, அவர் சிலம்பக் கழியைக் கீழே போட்டால் போதும். அவ்ர் மேற்பாய்ந்து கொல்லச் சுற்றிலும் நாற்பது ஐம்பது பேர் கத்தி கபடாக்களோடு காத்திருந்தனர். ஒன்று, இரண்டு, மூன்று என்று நாழிகைகள் கழிந்துகொண்டே இருந்தன. இரவு நடு ஜாமத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. ஐயர் ஆட்டத்தை நிறுத்தவே இல்லை. ஆட்டத்தை நிறுத்தினால், கழுத்தை அல்லவா நெரித்துவிடுவார்கள்.
நல்லவேளை இதற்குள் நதிக்குடியில் அவர் தம்பி ராஜுவையர் 'கண்டிப்பாக இரவு வந்துவிடுவேன்' என்று சொல்லிவிட்டுப் போன அண்ணாவை நள்ளிரவு வரை காணாததால், சந்தேகமுற்றுக் கத்திக் கம்புகளுடன் ஊர் ஆட்கள் ஐம்பது, அறுபது பேரைத் திரட்டிக்கொண்டு தலைவெட்டிப் பள்ளத்துக்கு வந்துவிட்டார்.
அதைக்கண்ட மாறனேறி அம்பலகாரர்கள், இனி இங் கிருப்பது வீண்-என்று தீர்மானித்தவர்களாய், இருளில் ஊரை நோக்கி மெல்ல நழுவினர். அவர்கள் போனபிறகும் கால் நாழிகை, அரை நாழிகை கழித்துத்தான் ஐயர் சிலம்பக் கழியைக் கீழே வைத்தார். அவருடைய வஜ்ரம் பாய்ந்த சரீரம் வேர்வையில் முழுகியிருந்தது. கடுக்கனுடைய ஆட்டத் தால் காது நுனிகள் கன்றிச் சிவந்திருந்தன. கண்கள் நெருப்புத் துண்டங்களாக மாறியிருந்தன.
‘ஏண்டாப்பா ராஜு எனக்காக இந்த அர்த்தராத்திரி யிலே இப்படி ஊரைத் திரட்டிக் கொண்டா ஒடி வரணும்? இந்த உடம்பைவிட உயிர் கெட்டியானதுடா? ஒரு பயல் அசைச்சுக்க முடியாது...இன்னும் எட்டு நாளானாலும் இப் படியே கழியைச் சுற்றி உயிரைக் காப்பாத்திப்பேனே ஒழிய, இந்த அம்பலகாரங்க கிட்டக் கொடுத்திட்டுப் போயிட மாட்டேன், வா! போகலாம்...' - ஒன்றும் நடக்காததைப் போலப் பேசிக்கொண்டே, மூட்டையைத் துரக்கித் தலையில் வைத்துக்கொண்டு அவர்களோடு நடந்தார் ஐயர்.
'மோதிரக் கடுக்கன் மோதிரக் கடுக்கன்தான். இவருக்கு எதிரி இன்னும் பிறக்கலை ஐயா. இவர் அஜாத சத்துருஎன்று தொடர்ந்து ஒரு வாரம் ஊரெல்லாம் புகழாயிருந்தது. இந்தச்சம்பவம் நடந்த பிறகும் ஐயர் வழக்கம் போலத் தலை வெட்டிக் காடுவழியே தாள்கொண்டான்புரம் மாறனேரி ஊர்களின் வழியே சிவகாசிக்குப் போய்க்கொண்டும் வந்து கொண்டும்தான் இருந்தார். தம்பி ராஜூவும் ஊராரும் எவ்வளவு தடுத்தாலும் அவர் கேட்கவில்லை. பிடிவாதம் முரட்டுத் தைரியத்திற்குத் தோழனைப் போன்றது.
ஊராரும் தம்பியும் தடுத்தபோது ஐயர், 'சரிதாண்டா! சும்மா இருங்க! உங்க சோலியைப் பார்த்துக்கொண்டு. போங்க. என் வழியிலே நான் போகிறேன். திராணியிருந்தா ஒருபயல் என் மேலே கைவச்சுப் பார்க்கட்டும் சொல்கிறேன்? அடேய் ஒன்று நான் ஏமாறனும் இல்லாட்டா இயற்கையாச் சாகணும். எதிரின்னு எவன் கையால்ேயும் எனக்குச் சாவு கிடையாதுடா என்று இரைச்சல் போட்டுவிட்டுப் போய்ச் சேர்ந்தார். இதற்குப் பின்னும் ஐந்தாறு முறை பலவிதங் களில் அவரைத் தீர்த்துக்கட்ட வேண்டும். முடியாத பட்சத் தில் அந்த மோதிரக் கடுக்கனையாவது காதோடு அறிந்துவிட வேண்டும்' - என்று அம்பலக்காரர்கள் முயன்றனர். எல்லா முயற்சிகளும் சதித் திட்டங்களைப்போல ரகசியமாக நடந்தன.
இந்தச் சம்பவம் நடந்து பத்துப் பதினைந்து நாட்களுக் குப் பின்பு ஏறக்குறைய இதேமாதிரி மற்றொரு சம்பவமும் நடந்தது. அன்றைக்குப்போலவே மோதிரக் கடுக்க்ன் ஐயர் சிவகாசிக்குப் புறப்பட்டார்.
'ஏ! ஐயரே! உன்னோட 'மல்லுக்கட்டுக் குஸ்தி' போட்டு ரொம்ப நாளாயிடிச்சு, இப்படி வாயேன். இந்த மணல்லே ஒரு 'கோதாப்' போட்டு ஆடுவோம். ஜெயிச்சிட்டா நீ வழியோட போயிடலாம் என்று கூறிச் சில அம்பலக்காரர்கள் அவரைத் தலைவெட்டிப் பள்ளத்திற்குள் வைத்து முன் போலவே வழி மறித்தனர். குஸ்தி நடந்து கொண்டிருக்கும் போதே குஸ்தி முறைக்கு மாறாக ஐயரின் கண்களில் மணலை அள்ளிப்போட்டுவிட்டுக் காதை அறுத்துக் கடுக்கன்களைக் கொள்ளையடித்துவிட வேண்டும் என்பது அவர்களுடைய அன்றையச் சதித் திட்டம். முன்பெல்லாம் ஐயரைத் தீர்த்துக் கட்டவேண்டும் என்று முனைந்து நின்ற அல்பலக்காரர்கள், இப்போது அது அசாத்திய்ம் என்று உணர்ந்து, அந்த எண்ணத்தை அறவே கைவிட்டு விட்டனர். அவருக்கு ஒரு தீராத அவமானச் சின்னமாக இருந்து, உயிரோடு வாழும் , போதே நினைவினால், அவர் மனம் ஏங்கும்படியாகக் காது களைக் கடுக்கனோடு அறுத்துவிட்டால் போதும் என்று முடிவு செய்திருந்தனர். இப்போது, காதறுத்து, கடுக்கன்களை இழந்துவிட்டால் பீமசேனன் மாதிரி இருக்கும். அந்த முகத்தின் காம்பீர்யம் பாழாகி, மூளித்தனமும் அமங்கலமும் குடிகொண்டுவிடும் கொல்வதைவிட உயிரோடு சித்திரவதை செய்வது போன்றது. இது என்பது அவர்கள் தீர்மானம்.
இப்படித் தீர்மானம் செய்த பின்புதான் அவரைத் தலை: வெட்டிப் பள்ளத்தில் வழி மறித்துக் குஸ்திக்கு அழைத்தார் கள், வம்புச்சண்டைக்குப் போனாலும் வெற்றி பெறுகிறவர் வலுவில் வந்த சண்டையை விட்டுவிடுவாரா என்ன? மல்லுக் கட்டுக் குஸ்திதானேடா? அதுக்கென்னடா? தாராளமாகப் போடுவோம்! எத்தனை பேர்டா எதிர் நிற்கிறீங்க... என்னோடே?”
“நாலு பேர் நிற்கிறோம் ஐயரே!”
“ஏண்டா? நாலு பேர் போதுமா? இங்கே இருக்கிற பத்துப்பேரும் எனக்கெதிராக நின்னாக்கூட எனக்குச் சம்மதந் தாண்டா? நாலு பேர் எனக்கு ஒரு பெரிய சம ஜோடியாடா? இத்தனை பேருமே நின்னு பாருங்களேண்டா!”
“இல்லை ஐயரே! நாலு பேர் போதும்...”
“சரி! வாங்கடா கோதாவுக்குள்ளே ... முதல்லே யார் பிடி’டா?”
“உங்க பிடியாவே இருக்கட்டும்!”
ஐயர் முஷ்டியை மடக்கிக்கொண்டு பாய்ந்தார். இடுப்பில் இந்தக் காலத்தில் போட்டுக்கொள்கிற ‘ஆஃப் டிராயர்’ மாதிரி ஒரு ‘லங்கோடு’ மட்டும் போட்டுக்கொண்டிருந்தார். வேஷ்டியை அவிழ்த்து வைத்துவிட்டார்.
மல்லுக்கட்டுக் குஸ்தி ஒரு நாழிகை நோம் நடந்தது: முடிவில்...? முடிவில் என்ன ஆயிற்று ஐயரை எதிர்த்த நாலு அம்ப்லக்காரர்களில் ஒருவனுக்குக் கணுக்கால் எலும்பு விட்டுப் போய் விழுந்து கிடந்தான். இன்னொருவனுக்கு இடுப்பில் பிடித்துக்கொண்டது! தரையைவிட்டு எழுந்திருக்கவே முடிய வில்லை. மூன்றாமவனுக்கு மர்ம ஸ்தானத்தில் சரியான அடி. அவன் மயங்கி விழுந்து கிடந்தான். நாலாவது பேர்வழி மூக்கிலும் முகத்திலும் குத்து வாங்கி இரத்தம் ஒழுகச் செயலற்று நின்றுகொண்டிருந்தான். ஐயர் வேஷ்டியை உதறிக் கட்டிக்கொண்டு, “வரேண்டா? ஊருக்கு நாழி யாச்சுடா இன்னும் சாப்பிடலே. சிவகாசி போய்த் திரும்ப ஆணும்” என்று யாரோ நெருங்கிய சிநேகிதர்களிடம் விடை பெற்றுக்கொள்கிற மாதிரிச் சொல்லிக் கொண்டு நடந்தார்.
அவரை ஒன்றும் செய்யத் தோன்றாமல் வாயைப் பிளந்து கொண்டு தலைவெட்டிப் பள்ளத்திற்குள் நின்று கொண்டி ருந்தார்கள் அவர்கள். அவர் மேட்டில் ஏறி மாறனேரி வழியாகச் சிவகாசிக்குப் போகும் பர்தையில், சிங்கம் நடக்கிற மாதிரி நேர் எதிரே பாதையைக் குறி வைத்து அம்புப் பாய்ச்சல் போல நடந்து போய்க்கொண்டிருந்தார்.
இந்த இரண்டு சம்பவங்களாலும் அம்பலக்காரர்கள் மனத்தில் மோதிரக் கடுக்கன் ஐயர்மேல் வைரம் தோன்றி முற்றிவிட்டது. இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது எனறு அடம் பிடிக்கும் நிலைக்குப் பகைமையை வளர்த்துக் கொண்டு விட்டார் ஐயர்.
‘அடேய் ரத்தத்துக்கு ரத்தம் வாங்கற சாதியிலே மீசை மொளைச்ச ஆம்பிள்ளைகளாப் பொறந்துட்டீங்களேடா? உங்களுக்கு வெட்கம் மானம் இல்லே சேலையைக் கட்டிக் கிட்டுச் சமையல் பொறைக்குள்ள போங்கடா’ என்று வயதான கிழவர்களும் கிழவிகளும் மாறனேரியிலும், தாள் கொண்டான்புரத்திலும் வாலிபர்களைக் குத்திக் காட்டத் தொடங்கிவிட்டார்கள். வாலிபர்கள் மனத்தில் சுருக்கென்று தைத்தது இந்த வார்த்தை. ‘என்ன மாயம் பண்ணினாலும் சரி! இன்னும் ஒரு மாசத்திலே ஐயன் காது ரத்தம் தலை வெட்டிப் பள்ளந்திலே ஒழுகனும். இதைச் செய்யாமவிடற். தில்லே என்று உள்ளூர்ப் பெரியவர்களுக்கு முன்னே கையடித்துச் சத்தியம் பண்ணிக் கொடுத்துவிட்டார்கள் அம்பலக்காரர்கள். ஐயருக்கும் இந்த விஷயம் தெரிந்து தானிருந்தது. ஆனால், போக்குவரவு விவகாரத்தை நிறுத்தாமல் அதே பாதையில் போய் வந்துகொண்டுதான் இருந்தார் அவர். நேருக்கு நேர் கம்பைக் காட்டிபோ, கத்தியைக் காட்டியோ, அவர் காதுக் கடுக்கனை நெருங்க முடியாது என்பது அம்பலக்காரர்களுக்குப் பழைய அனுபவங்களால் நன்கு தெரிந்திருந்தது.
முடிவில் எப்பேர்ப்பட்ட்வரும் மீற முடியாத்தும் எவரும் சுலபத்தில் அகப்பட்டுக்கொள்ளக் கூடியதுமான ஒரு ‘மெல்லிய’ வலையை விரித்தார்கள். சிவகாசிக்குக் கிழக்கே உள்ள ‘அனுப்பங்குளம்’ என்ற ஊரில் ‘ராஜாம்பாள்’ என்று ஒரு சதிர்க்காரி (நாட்டியமாடுபவள்) இருந்தாள். தேவதாஸி குலத்தைச்சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு இருபது இருபத்திரண்டு வயதுக்குமேல் இராது. கிளி என்றால் கிளி, ரதி என்றாள் ரதிதான் அவள். ராஜாம்பாள் சண்பகப்பூ நிறம். ஒரு சிரிப்புச் சிரித்துக் கிளுக்கென்று. கண்ணைக் சொடுக்கின்ாளானால், எப்பேர்ப்பட்ட பீஷ்மாச் சாரியும் கிறங்கிப் போவான். ரப்பரில் வார்த்தெடுத்து உருட்டித் திரட்டி வைத்தவைபோல வளைவும் நெளிவும் , கோடிட்டு விளங்குகிற வாளிப்பான சரீரம் அவளுக்கு: மயக்கும் விழிகளும் நயக்கும் சிரிப்புமாக மோகத்தின் ஸ்வரூப மென விளங்கினாள் அவள். மறனேரி, தாள் கொண்டான் புரம் அம்பலக்காரர்களின் கையிலிருந்து இருநூறு வராகன் பணம் (வராகன்-அந்தக் காலத்து நாணய மதிப்பீடு) ராஜாம்பாளிடம் போய்ச் சேர்ந்தது. அவள் எப்படி எப்படி நடித்து, என்னென்ன செய்யவேண்டும் என்ற விபரங்களும் கூறப்பட்டன. ராஜாம்பாள் தாளி, காசுக்கு ஆசைப்பட்டு இணங்கிவிட்டாள். அதோடு ஐநூறு வர்ாகனுக்குமேல் பெறும்ாணமுள்ள இரண்டு மோதிரக் கடுக்கண்கள் வேறு காரியம் சித்தியானால் அவளுக்கு அளிக்கப்படும் என்று ஆசை காட்டியிருந்தார்கள். ஐயர் காதுக்கு எந்த வகையிலும் எட்டாதபடி தேவ ரகசியமாக இந்த ஏற்பாடுகளைச் செய் திருந்தனர் அம்பலக்காரர்கள்.
அன்று பெளர்ணமி. மத்தியானத்துக்குமேல் ஊரிலிருந்து புறப்பட்டுச் சிவ்காசிக்கு வந்திருந்தார், மோதிரக்கடுக்கன் முத்துசாமி ஐயர். அங்கே வாங்கவேண்டிய சாமான்களை வாங்கிக்கொண்டு ஊர் திரும்பும்போது இரவு ஏழு நாழிகை யாகிவிட்டது. அமாவாசை இருட்டிற்கும் பயப்படாதவர் பெளர்ணமி நிலவின் குளுமையை அனுபவித்துக்கொண்டே நடந்தார். சிவகாசி நகரெல்லையைக் கடந்து ஆற்றங்கரைப் பாலத்தைக் கட்ந்துகொண்டிருந்தார். அப்போது பாலத்தின் கீழ்ப் பகுதியிலிருந்து ஒரு சின்ன வயசுக் குடியானவப் பெண், மேலே ஏறி வந்தாள்.
அந்த நேரத்தில் அந்த மாதிரித் தனியிடத்தில் ஒரு சிறு பெண் வருவதை வியந்துகொண்டாலும், யாரோ துணிச்சல் காரி ஆற்றுக்கு இந்த நேரத்தில் ஆண் துணையின்றி வந்திருக் கிறாள்’ என்றெண்ணி, மனதைத் தேற்றிக்கொண்டு மேலே நடந்தார்.
‘சாமீ! உங்களைத்தானே!’ என்று தேனில் குழைத்து எடுத்த மாதிரி ஒலித்தது . இனிய குரல். ஐயர் தலைமேல் இருந்த சுமையைப் பிடித்துக்கொண்டு திகைப்புடன் திரும்பிப் பார்த்தார். அந்த இளம் பெண் அவரை நோக்கி வந்துகொண் டிருந்தாள். அவள் தலையில் துணிப் புடவையில் கட்டிய சிறு மூட்டை ஒன்று இருந்ததை ஐயர் இப்போதுதான் பார்த்தார்.
‘என்னம்மா? உனக்கென்ன வேணும்?’ என்று ஐயர் சற்றுத் தயங்கி நின்று கேட்டார்.
‘ஒண்னும் வேணாம் சாமீ! ஆம்பிளைத் தொணை யில்லே... கிருஷ்ணாவரத்துக்குப் போகணும். அவசர காரியம்... நீங்ககூட அந்தப் பக்கம்தான் போங்களோ?’
‘ஏம்மா? என்னதான் அவசரமா இருந்தாலும் அதுக்காக இந்த நேரத்திலே உன் மாதிரிச் சின்னஞ்சிறுசுக இப்படிப் புறப்படலா?...அசட்டுத் துணிச்சல்... ஏதோ நான் நதிக் குடிக்குப்போறேன்... நீ என்னைப் பார்த்துக் கேட்டதினாலே நான் உன்னைக் கொண்டுபோயி விட்டிடறேன்னு வச்சுக்க! நான் வரலேன்னா என்ன செய்வே... இன்னிக்குச் சரி... இனிமே இப்பிடி வராதே! வா! போகலாம்’ என்று ஐயர் அவளுக்கு அறிவுரை கூறிவிட்டு, உடன் அழைத்துக் கொண்டு மேலே நடந்தார்.
அந்தப் பெண் அவர்மேல் இடிக்காத குறையாக அவரை நெருங்கி ஒட்டிக்கொண்ட மாதிரி அவரோடு நடந்தாள். மோதிரக் கடுக்கன் முத்துசாமி ஐயர் திடுக்கிட்டார். அவள் மேலிருந்து சந்தனம், புனுகு, அத்தர் வாசனை கமகமத்தது. புடவை கட்டியிருக்கிற விதத்தையும் கூந்தலை முடிந்திருக்கிற பாணியையும் கொண்டுதான் அவளை ஒரு குடியானவப் பெண்ணாக மதிக்க முடிந்ததே ஒழிய, அவள் உடம்பின் பொன்நிறம், அவள் பேசிய குரல், அவள் சிரித்த சிரிப்பு: எல்லாவற்றிற்கும் மேலாக அவளுடைய அந்த மோகனமான விழிகள், யாவும் சேர்ந்து இவள் குடியானவப் பெண் இல்லை, ஏதோ வானத்திலிருந்து வழி தவறி வந்த மோகினி அல்லது அப்ஸரஸ் என்று சத்தியம் செய்து நிரூபிப்பவைபோலத் தோன்றின.
“இந்தாம்மா! கொஞ்சம் ஒதுங்கியே வா...இதென்ன இப்படி இடிச்சுக்கிட்டா, வர்ரது?’ - ஐயர் கொஞ்சம் கறாரான குரலில் அந்தப் பெண்ணைக் கண்டித்தார்.
‘என்னங்க சாமி! நீங்க என்னைப் பெத்த அப்பன் மாதிரி எனக்கு...வி.கல்பமா நினைப்பேனுங்களா?...ஏதோ கொஞ்சம் பயம்.அதான் இப்படி நெருங்கி...நடக்கேன்-அவள் தலையை ஒய்யாரமாகச் சாய்த்து அவரைப் பார்த்து கிளுக் கென்று ஒரு முல்லைச் சிரிப்பைச் சிந்தினாள். அவள் தலையை ஆட்டியபோது, மார்புத் தாவணி தானே விலகியது. பச்சை நிற ரவிக்கைத் துணிமேல் அவ்விடத்து அழகு குத்திட்டுப் பொங்கி நின்றது, பூரித்த பாற் குடமும், பொலிந்த செவ்விள நீரும்போல! ஐயர் வேண்டுமென்றே கண்களின் போக்கை அடக்கி வேறுபுறம் திரும்பினார். கண் களும் மனமும் கொஞ்சம் அவரை மீறிச் சண்டித்தனம் பண்ணின. அவள் கால்களில் வெள்ளி மெட்டியும் சலங்கை யிட்ட வெள்ளிக் கொலுசுகளும் போட்டுக்கொண்டிருந்தாள். நடக்கும்போது அவரருகில் அவள் ஒவ்வோரடியும் பெயர்த்து. வைப்பது ஏதோ அழகான சதிராட்டம் மாதிரி. இருந்தது. பாதம் பெயர்க்கும்போது உண்டாகிற மெட்டி கொலுசுகளின் ஒசை ஐயருடைய செவியில் ஜலக் ஜலக் என்று வெண்கலக் கிண்ணத்தில் தண்ணீரை ஊற்றித் தட்டியதுபோலக் கேட்டது. அவருக்கு ‘மகளாக’ உறவு படுத்திக்கொண்டு பேசிய அந்தப் பெண்ணை அவர் கண்கள் பாதாதிகேச பரியந்தம் கட்டிய புடவையையும் ஊடுருவி ஊனுடலைக் காணத் துருதுருத்தன. அவள் போட்டிருந்த புனுகு வாடை” ஏதோ ஒரு தினுசான போதையை அவர் மனத்தில் குபு குபு வென்று பாய்ச்சியது. அரை நூற்றாண்டாக அடங்கிக் கிடந்த புலனுணர்வு படம் விரித்தது.
ஐயருடைய கால்கள் நடந்துகொண்டுதான் இருந்தன. தலையில் சுமையும் இருந்தது. மனத்தில் மட்டுமென்ன? அவருடைய வாழ்வில் பெண் விஷயமாகச் சுமந்தறியாத அனுராகச் சுமை ஒன்று புதிதாக ஏறிவிட்டிருந்தது.
“ஏஞ்சாமீ! உங்களை ஒண்ணு கேக்கலாமா?” - வார்த்தை களுக்கு நடுவே கிணுகினுத்தாள் அந்தக் குட்டி. ஐயர் திரும்பிப் பார்த்தார். தோளிலிருந்து துப்பரவாக நழுவியிருந்த புடவையை, நிதானமாக எடுத்துப் போட்டுக்கொண்டாள் அவள்.
“ஐயோ! பாவம்! கள்ளங்கபடு தெரியாதது” என்று தனக்குள் நினைத்துக்கொண்டு, “என்னம்மா கேக்கனும்? கேளேன்!” என்றார்.
“காதுலே போட்டிருக்கிங்களே இந்தக் கடுக்கன்?... எம்மாம், பெரிய கடுக்கனுங்க...” இது எந்தக் காலத்துலே செஞ்சது சாமீ?”
“இதுவா? எனக்குப் பன்னிரண்டு வயசாயிருக்கிறப்போ பூனூல் போட்டாங்க...அப்பச் செஞ்சு போட்ட கடுக்கங்க இன்னைக்கிவரை கழட்டலே.”
“கர்ணனுக்கு மகரகுண்டலம் மாதிரின்னு சொல்லு வாங்க!...” அவள் மீண்டும் பழைய ஒய்யாரத் தலையசைப் புடன் கலகலப்பாகச் சிரித்தாள்.
“ஏதேது? மகாபாரதமெல்லாம்கூடப் படிச்சிருப்பே போல இருக்கே.”
“என்னமோ, கொஞ்சம் கேள்விப்பட்டிருக்கேனுங்க...” சொல்லிக்கொண்டே வந்தவள் சட்டென்று வலது காலைத் தூக்கி நொண்டினாள். “என்னம்மா? ஏன் நொண்டுறே?”
“கால்லே முள்ளுத் தச்சுடிச்சுங்க. ஐயோ...உஸ்ஸ்...”
“இரும்மா! அப்படியே இரு...முள்ளு முறிஞ்சு கால்லே தங்கிடப் போறது...நான் முறியாமே எடுத்திடறேன்!”
ஐயர் மூட்டையைக் கீழே வைத்துவிட்டுக் குனிந்தார். அவளுடைய வலது பாதத்தைப் பிடித்து அடிப்புறமாகத். தடவினார். அங்கே முள்ளே இல்லை! முள் தைத்திருந்த அறிகுறியுமில்லை.
“முள்ளு ஒண்ணுங் காணலியே அம்மா”
“உளுந்திடுச்சுப் போலிருக்குங்க...”
அவர் அந்தப் பெண்ணின் பாதத்தை விட்டார். அவள் தடுமாறுகிறவளைப் போல் தடுமாறி அவர்மேல் சாய்ந்தாள். ஐயருக்கு உடல் முழுவதும் கிளு கிளு’வென்று புல்லரித்தது, முறுக்கேறுகிற கயிற்றைப்போல. மனத்தை அடக்கிச் சமாளித்துக்கொண்டு விலகி நின்றார். அவள் ஏதோ பெரிய விளையாட்டைக் கண்டவளைப்போலத் தொடர்ந்து. சிரித்துக் கொண்டிருந்தாள். அவர் மூட்டையை எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டு நடந்தார். அவளும் அவரு டைய வலது விலாவில் இடித்துக் கொண்டும் இடித்துக் கொள்ளாமலும் நடந்தாள்.
“சாமீ, நாம் தலைவெட்டிப் பள்ளத்தைக் கடந்து தானே போவனும்?”
“ஆமாம்! அதுக்கென்ன?”
“இல்லே அங்ஙனே ஒரே கொலையும் கொள்ளையுமாகக் கிடக்குங்காகளே...?”
“நீ பேசாமே வாம்மா! உன்னை ஒரு பயமுமில்லாமே கிருஷ்ணாவரத்துலே கொண்டுபோய் விட்டிட்டு அப்புறம்: நான் நதிக்குடிக்குப் போறேன்."
“நீங்க தங்கமான மணிசரு சாமீ! தெய்வத்துக்குச் சமானமா எங்கேருந்தோ தொணைக்கு வந்து வாய்ச்சிங்க...”
“என்னம்மா அப்படிப் பெரிசாச் செஞ்சிட்டேன்? எல்லாரும் செய்யிறதைச் செஞ்சேன்! என் தலையிலேயா நீ: நடந்துவரே? ஏதோ துணை வேணும்னே? சரின்னு கூடக் கூட்டிட்டு வந்தேன்.”
இருவரும் மாறனேரியைக் கடந்தாய்விட்டது. தலை வெட்டிப் பள்ளம் இன்னும் இரண்டு பர்லாங் தூரம். இருந்தது. திடீரென்று அந்தப் பெண் கேட்டாள்: -
“சாமீ நீங்க பொடி போடுவீங்களா சாமீ?”
“ஏம்மா...? போடுவேன் வச்சிருக்கியா?... இருந்தாக் கொடேன்!”
“நிறைய இருக்கு சாமீ! தர்ரேன். போடுங்க.” - அந்தப் பெண் தன்னிடமிருந்த் துணி மூட்டையை அவிழ்த்து ஒரு முழுப் பொடி மட்டையைப் புதிதாக அவரிடம். நீட்டினாள்.
ஐயர் மட்டையை அவிழ்த்துப் பொடியை எடுத்தார்.
“என்னம்மா.இது? முக்குப் பொடி மணமே இல்லியே? வேறே ஏதோ வாடையில்லே அடிக்குது?”
“மூட்டையிலே சந்தனம் வச்சிருக்கேன் சாமி! அதுனோட வாடை பட்டிருக்கும்...”
“என்னமோ? நீ சொன்னாச் சரி எங்கிட்டவும் வேறே மட்டை இல்லே!.. இதைத் தான் போட்டுக்கணும்” - ஐயர் இரண்டு மூன்று சிட்டிகை பொடியை இழுத்தார். அங்கணப் பரதேசி மடத்துக்குப் போவதற்குள் மட்டையையே காலி செய்துவிட்டார்.
அந்தப் பெண் சிரித்துக் கிளுகிளுத்துக் கொண்டே வாய். ஆரட்டைக்குக் குறைவின்றி அவரோடு நடந்து வந்து கொண்டிருந்தாள். இன்னும் இருபது இருபத்தைந்து கெஜம் நடந்தால், தலைவெட்டிப் பள்ளத்திற்குள் இறங்கிவிடலாம்.
இருவரும் நடந்து கொண்டிருந்தனர். ஐயருக்குத் தொண்டையை கமறிக்கொண்டு வந்தது. தலை கிறங்கிச் சுழல்வது போலிருந்தது.
“என்னம்மா இது என்னபொடி? மாயப் பொடியா? மூக்குப் பொடியா?...தொண்டை கமறுது தலை சுத்துது!” ஐயர் சிரித்துக் கொண்டே கேட்டார்.
“ஐயோ! சாமி! நல்ல முக்குப் பொடிதானுங்களே... கேட்டு வாங்கிட்டு வந்தேனே?-அவள் கூறினாள். இல்லை; நடுங்கி வெடவெடக்கும் இதயத்தை மறைத்துக்கொண்டு, அவள் வாய் இப்படிக் கூறியது.
இருவரும் பள்ளத்தில் இறங்கி விட்டார்கள். ஐயருக்குத் தலை அதிகமாகக் கிறங்கியது. மூட்டையைக் கீழே போட்டு விட்டு, அப்படியே துவண்டுபோய்க் கீழே உட்கார்ந்தார். சில விநாடிகளில் சுருண்டு படுத்துவிட்டார். அவருக்கு நினைவு மங்கி ஒடுங்கும்போது யாரோ தடதடவென்று ஒடி வரும் ஓசையும், “என்ன ராஜாம்பா? காயா பழமா’ என்ற சொற்களும், அந்தப் பெண் பழைய ஒய்யாரச் சிரிப்புடனே ஏதோ பதில் கூறுவதும் அவர் காதுகளில் விழுந்து மயங்கி மாய்ந்தன. நல்ல மயக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் போது காதுகளில் ஏதோ சுரீர் என்று வலித்தது. தூக்கத்தில் அலறுவதுபோல “ஐயய்யோ..? என்று. ஹீனஸ்வர்த்தில் அலறினார் அவர். அதன்பின் அவருக்குப் பிரக்ஞையே இல்லை.
விடிவெள்ளி முளைத்துப் பெளர்ணமி நிலாவின் ஒளி சோகை பிடித்தமாதிரி மங்கி வெளுத்தது. தலைவெட்டிப் பள்ளத்தில் விழுந்த கிடந்த ஐயர் மெல்லக் கண் விழித்தார். காதுகளில் இசிவெடுத்து விண் விண் என்று வலி தெறித் தது. கையால் காதுகளைத் தடவினவர் ‘ஐயோ!’ என்று மகா கோரமாக அலறினார். இரண்டு காதுகளிலும் கடுக்கன்கள் இல்லை. மூளியாகி அறுபட்டிருந்த் அறைகுறைக் காதுகளில் ரத்தம் வடிந்து போய் உறைந்திருந்தது. பக்கத்தில் அவருடைய சாமான் முட்டையும் கிடந்தது.
கால் நாழிகை அங்கேயே உட்கார்ந்து விக்கி விக்க அழுதார். பறிகொடுக்க முடியாததைப் பறி கொடுத்து விட்ட மாதிரி மனத்தில் ஒரு சோகக் குமுறல். பின்பு மேல் துண்டால் காதுமறையும்படி முண்டாசு கட்டிக்கொண்டு, மூட்டையுடன் ஊரை நோக்கிப் புறப்பட்டார். அவர் ஊருக்குள் வரும்போது பலபலவென்று விடிந்துவிட்டது, வீட்டுக்குள் நுழைந்ததும், மூட்டையை வைத்துவிட்டு: ரேழியில் தெற்கே தலை வைத்துப் படுத்துக் கொண்டார். ராஜுவைக் கூப்பிட்டார்.
“கொஞ்சம் என் தலைமாட்டிலே உட்கார்ந்து திரு வாசகம் வாசிடா ராஜு!”
“எதுக்கு அண்ணா? ஒரு நாளும் இப்படி இத்தரவாய்க்கு, அலுத்துப் படுக்க மாட்டியளே?”
“நீ திருவாசகம் வாசிடா சொல்றேன்.”
“காதை மறைச்சு முண்டாசு கட்டிண்டிருக்கியளே வாசிச்சர்ல் காதுலே கேக்குமா? அதை அவுத்துடட்டுமா?”
“அதை அவுக்கப்படாது! எனக்குக். கேட்குமா...நீ வாசி.”
ராஜூ திருவாசகம் வாசித்தார். அவரை நாழிகையாக வாசித்துக்கொண்டே இருந்தார்.
“அண்ணா! வாசிச்சது போருமா?” - பதில் இல்லை!. ‘அண்ணா! அண்ணா துரங்கியட்டியளா?’ தோளைத்தொட்டு உசுப்பினார். தலை தொங்கிவிட்டது! முண்டாசை அவிழ்த்தார்! காதுகள் அறுத்து மூளியாகத் தொங்கின. ராஜு. விசித்து விசித்து அழுதார். மோதிரக் கடுக்கண் முத்துசாமி ஐயர் காலமாகிவிட்டார். அவர் முன்பொருநாள் அறை கூவியபடியே பிறரால் ஏமாற்றப்பட்டு இறந்தாரே ஒழியத் தன் நினைவோடு பிறரால் எதிர்த்துக் கொல்லப்பட வில்லை!
எங்கள் தாத்தாவிடம் அந்தக் காலத்தில் தலைவெட்டிக் காட்டையும் மோதிரக் கடுக்கன் முத்துசாமி ஐயரையும் பற்றிக் கேள்விப்பட்ட இந்தக் கதை நினைவுக்கு வரும் போதெல்லாம் ஒரு திருக்குறளும் என் நினைவில் மலரும்.
கவரிமான் என்று ஒருவகை மான் தன் வாலிலுள்ள நீண்ட மயிர்க் கற்றைகளை யாராவது அறுத்துவிட்டால், உடனே ஏங்கி ஏங்கிச் செத்துப் போகுமாம். மோதிரக் கடுக்கன் முத்துசாமி ஐயரின் வாழ்வும் கவரிமானின் வாழ்வும் அதிகம் வித்தியாசப்பட்வில்லை என்று எண்ணிக் கொள்வேன்.
‘மயிர் நீப்பின் வாழாக் கவரிமாவன்னார்
உயிர் நீப்பர் மானம் வாரின்’
கிரேக்க மகாகவி ஹோமரின் ‘இலியாது’ என்ற காவியத்தில் ‘அச்சிலிஸ்’ என்ற வீர புருஷனுக்கு முழங்கால் மூட்டில் உயிர்நிலை இருந்தது என்றும், பைபிளில் வருகின்ற ‘ஸாம்ஸன்’ என்ற வீர புருஷனின் கதையில் அவனுக்குத் தலைமயிரில் உயிர்நிலை இருந்ததென்றும் படிக்கிறோமே! எங்களுர் மோதிரக் கடுக்கன் முத்துசாமி ஐயருக்கு உயிர்நிலை காதுகளிலும் அவற்றில் தொங்கிய கடுக்கன் களிலும் இருந்தனவோ என்னவோ? அச்சிலீலையும் ஸாம்ஸனையும் போல அவர் காவிய புருஷனில்லை. ஆனால் அதற்குத் தகுதி இல்லாதவரா?
★
ஊசிக்கொண்டை மாயாண்டித்தேவன்
முல்லையூற்று ஒரு அழகிய சிற்றுார். மேற்குத் தொடர் மலையை ஒட்டி அமைந்திருந்த மலையடிவாரத்துக் கிராமம். திருநெல்வேலி ஜில்லாவுக்கே உரிய இயற்கைப் பொலிவு பூரணமாக விளங்கும் இடம். மர்ந்தோப்பும் தென்னந் தோப்புமாக ஊரைக் சுற்றி ஒரே பசுமை மயம். அங்கங்கே பிரிந்து ஒடும் சிறு சிறு வாய்க்கால்கள். அவைகளுக்கு வேலி பிடித்தாற்போல அமைந்திருக்கும் தாழம் புதர்கள், வான மண்டலத்திற்குக் துரண் நாட்டியது போன்ற பெரிய மருத மரங்கள். வயல்வெளிகளில் இடையிடையே தாமரைப் பொய்கைகள். இன்னும் எவ்வளவோ!
இப்படி அழகிய கிராமமாக இருந்த முல்லையூற்றில் மக்கள் எதற்காவது துன்பமுற்றார்களேயானால், அது எப். போது நினையாமலிருக்கிறார்களோ அப்போது திடீரென்று சற்றும் எதிர்பாராமல் தோன்றும் மாயாண்டித் தேவனுக்காகப் படும் துன்பமே. அந்த வட்டாரத்தில் அழுத பிள்ளையை வாய்மூடி நடுங்கவைக்கும் ஆற்றல் அவன் பெயருக்குக்கூட இருந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். கொலை கொள்ளைகள் அவனுக்குக் குழந்தை விளையாட்டுப் போல. எப்போது, எங்கே, எப்படி வருவான் என்று யாரும் அறியமுடியாது. அவன் மறைந்து வசிக்கும் இடம் அவனுக்கும் அந்தப் பொதிகை மலைக்குமே தெரியும். மலைப்பகுதிகளில் பழகிய அவனிடம் வேறோர் திறமையும் இருந்தது. சில அபூர்வமான மூலிகைகளையும் சித்துக்களையும் அவன் தெரிந்துகொண்டிருந்தான். அதைக் கொண்டு சாதாரணமாகச் சாதிக்க முடியாத காரியங்களையும் அவன் சாதித்து வந்தான். வெகுநாட்களுக்குமுன் அவனுடைய ஒரேசகோதரி அவளுடைய பதினெட்டு வயதில் எங்கோ சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டாளாம். அதிலிருந்து விரக்தி புற்ற மாயாண்டி இப்படிப்பட்ட செயல்களில் இறங்கிவிட் டானாம். இப்படி நம்பவும் நம்பமுடியாமலும் அவனைப் பற்றிச் சிலர் கூறிக்கொள்வார்கள். அவன் பூர்வோத்திரம் எப்படியிருந்தாலென்ன? அந்தச் சுற்றுவட்டத்தில் வாழ்வோ ருடைய அமைதியைப் பொறுத்ததாக இருந்தது அது. அந்த சர்க்கிளுக்குப் போலீஸ் இன்ஸ்பெக்டராக வந்துசேரும் ஒவ்: வொருவரும் இரண்டு, மூன்று மாதங்கட்குமேல் நம்பிக்கை இழந்து வேறு இடங்கட்கு மாற்றிக்கொள்வதும் சகஜமாகி விட்டது. மாயாண்டியைப் பிடித்துவிட்டால் பதவி உயர்வு அடையலாம் என்றெண்ணி வருகின்ற ஒவ்வொரு இன்ஸ் பெக்டரும் ஏமாற்றமும் வேதனையும் கொண்டு தம்மை தொந்தவாறே மூட்டை கட்டிவிட நேரும். அவனைப் பற்றி அந்தப் பகுதிப் போலீஸுக்கு இதுவரை உருப்படியாக அறிய முடிந்த செய்தி ஒன்றுமே இல்லை. ஆனால் அவனுடைய திருவிளையாடல்கள் மட்டும் அடிக்கடி அவர்களைப் பாதிப் பதற்குத் தவறுவதில்லை. அவன் செயல்களின் பயங்கரமும் வியப்பும் அவர்களுடைய நம்பிக்கையைக் கொஞ்ச நஞ்சங் கூட இல்லாமற் செய்து கொண்டிருந்தது.
அதுவும் அந்தச் சப்பை மூக்கு சுதர்சனராவ் காலத்தில் போதும் போதும் என்று செய்துவிட்டான் மாயாண்டி. ஒருநாள் எப்படியோ எக்கச்சக்கமான நிலையில் மாயாண் டியை அவன் பின்புறத் தோற்றம் முழுவதும் தெரியுமாறு ஒரு புகைப்படம் எடுத்துவிட்டார் சுதர்சனராவ். அந்தப் பின்புறத் தோற்றமே கதிகலங்க வைப்பது போலிருந்தது. ஆறடி உயரம், அயனான சரீரம், இரும்பு வார்ப்புப்போல வாளிப்பான கை கால்கள், பரந்த முதுகு, கணத்தில் ஒட்டமெடுத்து மறைவதற்குரியபடி உதவும்-சிறு குதிகால்கள். ஒரு பெரிய யாழ்ப்பாணம் தேங்காய் பருமனுள்ள கொண் டையை முடிச்சிட்டுக் கட்டிக்கொண்டிருந்தான். கன்னங் கரேலென்று சுருண்டு சுருண்டு வளர்ந்திருந்த மயிர்க் கற்றை களைக் கோணற்கொண்டையாக அள்ளி முடிந்திருக்கும் தோற்றத்தில் கொஞ்சம் அழகும் இருந்தது. வல்லவட்டுச் சல்லடமும் பிச்சுவாச் சொருகிய இடையும் அதைச் சுற்றிச் கிடந்த தடிமனான பெல்ட்டும் அந்தச் சிறு புகைப்படத்தைக் காண்பவர் நடுங்கும்படி இருந்தன. காதில் வட்டவடிவமான ஒலைத் தோடு ஒன்று அணிந்திருந்தான். தோற்றம் முற்றிலும் கூடி ஒரு பயங்கரமான வீரனின் முன்புறத் தோற்றத்திற்கு அடையாளமிட்டன.
இந்தப்படத்தைக் கழுவி நெகடிவ் செய்வதற்குப் பக் கத்து ஊருக்கு அனுப்பிவைத்திருந்த சுதர்சனராவ் மறுநாள் தபாலில் அதைத் திரும்பப் பெற்றார். மாலை வீடு திரும்பும் போது விரைவில் அதை மேலதிகாரிகட்கு அனுப்பவேண்டு மென்று எண்ணிக்கொண்டு டிராயரில் வைத்து நன்றாகப் பூட்டிவிட்டுப் புறப்பட்டார். நன்றாக இன்னும் நினைவிருக் கிறது; டிராயரை மறக்காமல் பூட்டியதும், படத்தை உள்ளே வைத்ததும் நிச்சயந்தான்.
ஆனால், மறுநாள் காலை ஆபீசுக்கு வந்தவர் திடுக்கிடும் படியாக ஒன்று நடந்தது. டிராயர் பூட்டியது பூட்டியபடியே இருந்தது. சுதர்சனராவ் மேலே படத்தை அனுப்புவதற்காக அதைத் திறந்தார். திறந்ததுதான் தாமதம் புஸ்ஸ் என்று. சீறிக்கொண்டு வெளியே வந்தது ஒருபாக நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று!!! ஐயோ! என்று அலறிக்கொண்டே ஒடி விட்டார் சுதர்சனம். கடைசியி ல் ஸ்டேஷனிலிருந்த போலீஸார் ஒருவழியாக அதை அடித்துக்கொன்றுவிட்டனர். பாம்பை அடித்த பிறகும் டிராயரை நெருங்க அஞ்சினார் சுதர்சனம். கிட்ட நெருங்கும்போது அவருடைய உடல் வெல வெலத்து நடுங்கியது. உள்ளே டிராயரில் முதல் நாள் கழுவி வைத்த படம் இல்லை. ஒரு சிறு ஒலை நறுக்கு, படம் இருந்த அதே இடத்தில் இருந்தது.
‘நச்சுப் பாம்பை அது உன்னைப்பார்க்காத நிலையில் நீ பார்த்துப் படம் பிடித்துவிட்டாய். இப்போது அந்த நல்ல பாம்பு தன் படத்தை உனக்கு விரித்துக் காட்டும்! பயப்படாமற் பார்த்துக்கொள்.’
-மாயாண்டி
என்று கிறுக்கியிருந்தது ஒலை நறுக்கில். சுதர்சன்ராவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. புரியாத புதிரோடு போராடும் வேலை நமக்கு ஏன் என்று அவர் அப்போதே தீர் மானம் செய்துவிட்டார். இரண்டு மாதங்களில் சுதர்சனராவ் வேறு ஊருக்கு மாற்றிக்கொண்டார். ஆனால் மாற்றிக் கொண்டு போவதற்குள் மாயாண்டி அவரைப் படாதபாடு படுத்திவிட்டான். வீட்டில் படுக்கையறையில் காலையில் கண் விழிப்பார் எதிரே குடல் நடுங்கும் காட்சி தென்படும். ஒரு மனித மண்டையோடு கிர்ரெண்று சுற்றிக்கொண்டிருக்கும்! துரங்கிக்கொண்டே இருப்பார், படுக்கை திடீரென்று மேலும் இழுமாகப் போய்வருவதுபோலப் பிரமை ஏற்படும்! விழித்துப் பார்த்தால் தரையில் உருட்டப்பட்டிருப்பார். இன்னும் என்னென்ன்வோ கணக்கற்ற துன்பங்கள். சுதர்சனராவ் ஒரு வழியாகப் போய்ச் சேர்ந்தார்.
***
கடைசியில் ‘மாயாண்டித் தேவன் கைதாகவேண்டும், அல்லது என் உயிர் போகவேண்டும்’ என்ற வைராக்கிய மொழியுடன் வலுக்கட்டாயமாக முல்லையூற்றுக்கு மாற்றிக் கொண்டு வந்து சேர்ந்தார் இன்ஸ்பெக்டர் நல்லமுத்துத் தேவர். தம்முடைய வைராக்கியத்தை மெய்ப்பிப்பது போலவே விருவிருப்பாகச் செயலாற்றவும் தலைப்பட்ட்ார். ஊராருக்கும் நம்பிக்கை தட்டியது. தேவர் இராப்பகலாகப் பொதிகை மலைப் பகுதிகளில் குண்டுகள் நிறைந்த பிஸ்ட்லு’ - டன் சுற்றினார். எத்தனையோ சப்இன்ஸ்பெக்டர்களுடைய அனுபவங்களைச் சொல்லிப் பலர் அவரை எச்சரித்தனர். ஆனால் அந்த உருட்டல் மிரட்டல்களுக்கு அசைந்துகொடுக்க வில்லை நல்லமுத்துத் தேவர். இம்மாதிரி, பேசுபவர்களைக் கண்டே வெறுத்தார். எந்த இடங்கள் அவருக்குச் சந்தேகம் உண்டாக்கினவோ அவைகளின் பயங்கரச் சூழ்நிலையை மதித்து ஒரு பொருட்டாகக் கருதி அஞ்சாது சென்று சோதனை செய்தார். துணிவு துணிவுதான் என்றாலும் ஊர் எச்சரிக்கையும் பேச்சுக்களும் சேர்ந்து அவருக்கு ஒருண்மை யைப் புலப்படுத்தியிருந்தன. எந்த நேரமும் தமது உயிர் அபாயும் சூழ இருக்கிறது என்ற எண்ணம்தான் அந்த உண்மை.
அன்று பெளர்ணமி நல்ல நிலா. இரவைப் பகலாக்கிக் கொண்டிருந்தது. இரவு மணி ஒன்பது இருக்கும். தேவருக்குத் துரக்கம் பிடிக்கவில்லை. வீட்டுத் தாழ்வாரத்தில் குறுக்கும் நெடுக்குமாக உலாவிக் கொண்டிருந்தார். மாயாண்டித் தேவனைக் கண்டுபிடிக்கின்றவரையில் குடும்பத்தோடு அந்த ஆவரில் குடியேறுவதால் தனக்கு நேர்கின்ற துன்பங்களை மனைவி, குழந்தைகளும் படவேண்டி வரும் என்ற கருத்துடன் முல்லையூற்றில் தேவர் வாடகை வீட்டில் தனியாகவே வசித்து வந்தார். குடும்பத்தோடு வரவில்லை. ஹோட்டலில் சாப்பாடு வைத்துக் கொண்டிருந்தார். உறக்கம் வராமற். போகவே பிஸ்டலை எடுத்துக் கொண்டு.கிளம்பினார் தேவர். எதிரே ரோந்து சுற்றியவாறே வந்து கொண்டிருந்த இரண்டு கான்ஸ்டபிள்களையும் துணைக்கு அழைத்துக் கொண்டு மலையடிவாரத்திற்குப் பேர்கும் சிறு சாலை வழியே சென்றுகொண்டிருந்தார். ஆவடை நாயகர் தோப்பை ஒட்டிச் செல்லும் அந்தச் சாலையில் குறுக்கே அமைந்திருந்த வாராவதியின் பக்கம் வந்திருப்பார். வாராவதியின் கீழ்ப்பக்கத்திலிருந்து வாட்ட சாட்டமான மனிதன் ஒருவன் மேலே ஏறிக்கொண்டிருந்தான். ஒருகணம் அவனுடைய பெருமித நடை, உயரத்தை தாமாகவே அளவிட்டன. அவர் கண்கள். அந்த மனிதனுடைய போக்கில் அவருடைய கவனம் கவரப்பட்டதே ஒழிய சந்தேகம் அதிகம் எழவில்லை, நல்லமுத்துத் தேவருக்கு. எனவே அவர் மேலே நடந்தார். பின்னாலே வந்த் கான்ஸ்டேபிள்களில் ஒருவன் சும்மா இராமல் மேலே ஏறி வந்த அந்த மனிதனை, ‘ஏய் யாரங்கே? இந் நேரத்தில் உனக்கு இங்கே என்ன வேலை? இப்படிக் கிட்டவா பார்ப்போம்’ என்று அதட்டிவைத்தான்.
வாராவதியில் ஏறினவன் பதில் கூறினான்:-
‘யார்? கான்ஸ்டேபிள் தங்கராஜா? உனக்கு எப்பொழுது இவ்வளவு தைரியம் வந்த்து அண்ணே நீ இரவிலே வெளியிலேகூட நடமாடுவது உண்டா? அப்போ, உன் தைரியம் வளர்ச்சியடைந்துவிட்டதென்று சொல்லு’ ... ஒரு கணம் தங்கராஜுக்கு மண்டையில் ஆணி அடித்தாற் போல இருந்தது... அவனுக்கு அந்தக் குரலிற்குரியவனின் நினைவு வந்தது. இன்ஸ்பெக்டருக்கு ஜாடை காட்ட முன் புறம் திரும்பினான். கான்ஸ்டேபிள்கள் இரண்டுபேரும். வெறுங்கையர்களாய் வந்திருந்தனர். தற்செயலாய்ப் பேச்சு வளருவதைக் கண்ட நல்லமுத்துத் தேவர், கான்ஸ்டேபிள் யாரிடமோ வம்படிக்கிறான் என்று அவனை அதட்டப் பின் புறம் திரும்பினார். இதற்குள் வாராவதியில் ஏறிய மனிதன் இன்ஸ்பெக்டரின் பக்கமாக வந்தான். புதிதாக வந்து சேர்ந் தவனாகையால் மற்றொரு கான்ஸ்டேபிள் தங்கராஜின் திகைப்பைக் கண்டு காரணம் புரியாமல் நின்றான்.
‘என்ன இன்ஸ்பெக்டர் சார்! ஏது, இந்த நேரத்தில் எங்கோ கிளம்பிவிட்டாற்போல் இருக்கிறது: ரொம்பத் தொலைவா...இல்லை, பக்கத்தில்தானா? என்று கேட்டுக் கொண்டே அவரை நெருங்கின்ான். வந்தவன் இன்னாரென்று புரிந்துகொள்ளாமல் திகைத்தவாறே வந்துகொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர்.
இந்த நிலையில் வந்தவன் தங்கராஜு நின்ற இடத்தையும் கடந்து வந்துவிட்டான். பின்னாலிருந்து இன்ஸ்பெக்ட ருக்கு ஏதோ ஜாடை காட்டிவிட்டு, ஒரே தாவாகத் தாவி வந்தவனுடைய தலைக்கொண்டையை இறுக்கிப்பிடித்தான் கான்ஸ்டேபிள் தங்கராஜ்! ஆனால் அடுத்த நொடியில் ‘ஐயோ’ என்ற அலறலுடன் கையை அவன் கொண்டையிலிருந்து எடுக்க முயன்று கொண்டிருந்தான். கையை எடுத்து விட்டான். ஆனால் கைமட்டுமா வந்தது? விரல் நீளமுள்ள கூர்மையான ஊசிகள் சிலவும் கையின் மறுபுறம் வரை பாய்ந்திருந்தன. ரத்தம் வடியத் தொடங்கியது-தங்கராஜு வலி பொறுக்க முடியாமல் துடிதுடித்தவாறே நின்றுவிட் டான்-இதற்குள், நிலைமையைப் புரிந்துகொண்ட இன்ஸ் பெக்டர் பிஸ்டலை எடுத்தார். மற்றொரு கான்ஸ்டேபிள் தங்கராஜுவைத் தூரப் படுக்கவைத்துவிட்டு, வந்தவனை வளைத்தான்.
“ஏண்டா அப்பாவிப் பயலே! வீணாக ஏன் உயிரைக் கெடுத்துக்கொள்கிறாய், உன் கையில் ஏறியிருக்கும் ஊசிகள் விஷந் தோய்ந்தவை. ஒடிப் போடா. வைத்தியரைத் தேடி...இன்ஸ்பெக்டர் சார் வருகிறேன். மாயாண்டிக் காகத்தான் புறப்பட்டீர்களோ?” என்று கூறிக்கொண்டே நாலே எட்டில் வாராவதியைத் தாண்டி ஆவடையார் தோப்பில் நுழைந்துவிட்டான் மாயாண்டித்தேவன்.
இன்ஸ்பெக்டர் அனுப்பிய பிஸ்டல் குண்டுகள் வாராவதிச் சுவரில் மோதிச் சென்றன. மாயாண்டி தப்பிவிட்டான். அவனுடைய குதியங்கால்களின் அமைப்பு, ஓட்டத்திற்காகவே படைக்கப்பட்டவைபோல அமைந்திருந்தது. இன்ஸ்பெக்டருக்கு வியப்பளித்தது. கீழே கிடந்த தங்க ராஜுவை வலி கொன்று கொண்டிருந்தது. கூரிய ஊசிகள். நான்கைந்து உள்ளங்கையில் நுழைந்திருந்தன. வலி பொறுக்க முடியாமல் அலறிக்கொண்டிருந்த தங்க்ராஜ வின் பக்கம் வந்த இன்ஸ்பெக்டரும் மற்றொரு கான்ஸ் டேபிளும் கீழே விழுந்து கிடந்த ஒரு பிச்சுவாயைக் கண் டனர். அதன் பிடியில் எழுதியிருந்த ‘மாயாண்டித் தேவன்’ என்ற எழுத்துக்கள் நிலா ஒளியில் பளிச்சென்று தெரிந்தன. தங்கராஜூ கதறினான்... “சார், ஊசியில் விஷம் ஏறிக் கொண்டே போகிறதே, காப்பாற்றுங்கள் சார்”...என்று கதறினான். அந்தப் பிராந்தியம் முழுவதுமே எதிரொலித் தது அவன் கதறல். ரத்தம் வடிந்துகொண்டிருந்த அவன் கையிலிருந்த ஊசிகளின் அமைப்பு நல்லமுத்துத்தேவரைத் திடுக்கிடச் செய்தது, வேட்டுச் சத்தம் கேட்டுப் பக்கத்துத் தோப்புக்களில் காவலாக இருந்தவர்கள் இரண்டொருவர் வந்தனர். அவர்களின் துணைகொண்டு தங்கராஜுவை ஊருக்குள் தூக்கி வந்தனர். லோகல்பண்டு ஆஸ்பத்திரி டாக்டர் பாதி ராத்திரிக்கு அரைகுறை மனத்துடன் போலிஸ் ஸ்டேஷனுக்கு ஓடிவந்தார். முடிவில் தங்கராஜின் வலது முழங்கை வரை எடுக்க வேண்டி நேர்ந்தது. அழுத்த மாக விஷம் பாய்ச்சப்பட்டிருந்த ஊசிகள் முழங்கை வரை நஞ்சேற்றியிருந்தன... ஊசிகளைப் பரிசோதித்த டாக்டருக்கே அடிவயிறு கலங்கியது.
தங்கராஜூவின் வாக்குமூலத்திலிருந்து சில உண்மை. கள் நல்லமுத்துத் தேவருக்குத் தெரிந்தன. சுதர்சனராவ் காலத்தில் ஒரு நாள் இரவு, இன்று வாராவதிக்கு அருகில் கேட்ட இதே குரலுக்குரிய மனிதனாகிய மாயாண்டித்தேவனை முல்லையூற்று போலீஸ் ஸ்டேஷனில் சந்திக்க நேர்ந்தது. ஸ்டேஷனுக்குள் நுழைய முயன்று கொண்டிருந்த அவனை, அவனுடைய வளர்ந்து முடிந்திருந்த கோணற் கொண்டையைப்பற்றி இழுத்துத் தடுத்து விட்டான் தங்கராஜ். ஆனால் வந்தவன் கண்மூடித் திறப்பதற்குள் தங்கராஜின் மூக்கருகில் ஏதோ பச்சிலையை நீட்டினான். அவன் கையில் ஒரு பூக்குடலைபோன்ற பெட்டி இருந்தது. பிறகு நடந்தது ஒன்றும் தங்கராஜுக்குத் தெரியாதாம். விடிந்ததும் மயக்கந் தெளிந்த பிறகு கேஸ், சாட்சி, இந்த வம்புகளுக்குப் பயந்துகொண்டு, நடந்தது ஒன்றும் வெளியிலே தெரியாதவாறு மறைத்துவிட்டான் தங்கராஜ். பின்பு சுதர்சனராவ் அலறியதும் டிராயரில் பாம்பு இருந்ததைக் கண்டபோது மாயாண்டித்தேவன் வேலை என்பதும் இரவில் வந்தவன் அவனே என்பதும் குடலையில் அவன் கொண்டு வந்தது பாம்பு என்பதும் தங்கராஜுக்கு மட்டும் தெரிந்துவிட்டது. ஆனால் வெளியிடாமலே இருந்து விட்டான். போட்டோவை அன்று எடுத்துச் சென்றதும் மாயாண்டியின் வேலையே... அன்று தன் நீண்டு வளர்ந்திருந்த தலைக்கொண்டை தன்னைப் பிடிக்கக் காரணமானது கண்டே மாயாண்டித்தேவன் இந்த விஷ ஊசிகளை வரிசையாகக் குத்திக்கொண்டு வெளியில் ெதரியாதவாடு முடிந்துகொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்.
வாக்குமூலம் பெற்றுக்கொண்ட பின், கையிழந்தது காரணமாக லேலையிலிருந்து தங்கரா நீக்கப்பட்டு விட்டான். அப்போதுதான் புதிதாக மணவாழ்வில் நுழைந் திருந்த் தங்கராஜூவுக்கு இது ஒரு இடியாகியது. சர்க்கார் அளித்த நஷ்டஈட்டுத் தொகையுடன் தன் சொந்த கிராமத் திற்குச் சென்று காலங் கடத்தி வந்தான் தங்கராஜு. அவ்வளவு துன்பத்திலும் அன்பு மாறாத அவன் மனைவி வள்ளியின் உள்ளம் அவனுக்கு ஆறுதல் அளித்தது. வள்ளியை அவன் மணந்துகொண்டதே ஒரு வேடிக்கையான கதை. முல்லையூற்றில் புவனநாயகர் கோவிலில் விளக்குத் துடைக்கும் பணி பார்த்து வந்த அந்த இளம் பெண் அனாதை என்றறிந்தபோது அவ்ன் அளவு கடந்த பச்சாதாபமடைந் தான். பச்சாதாபத்தின் படிப்படியான வளர்ச்சி, காதலாக, முடிந்தது. இளமையில் அவள் ஒர்ே சகோதரன் படுதுஷ்டனாக ஊரார் கரித்துக் கொட்டும்படி வாழ்ந்து வந்தானாம். அண்ணன் பரிபூரண ஆதரவு தந்தாலும் அவன் நடத்தையில் ஊர் உலகம் பழிக்கும்படியாக இருந்த அக்கிரமங்களைக் கண்டு வள்ளி பொறுக்க முடியாமல் ஓடி வந்துவிட்டாள். அதற்குப் பிறகுதான் முல்லையூற்றில் புவனநாயகர் கோவிலில் வேலை பார்த்து வந்தாள். பல நாள் பழக்கம். ஒரு நாள் தங்கராஜ-வள்ளி இருவரையும் ஊரறியத் திருமணம் என்ற பெயரில் தம்பதிகளாக்கியது. அது நடந்த சில மாதங்களில் தான் தங்கராஜு கையிழந்துவிட்டான். இதற்குப் பிறகு, முல்லையூற்றில் ‘மாயாண்டித்தேவன்’ என்ற பெயர் மறைந்து ‘ஊசிக் கொண்டை மாயாண்டித்தேவன்’ என்று உருவெடுத்து வழங்கலாயிற்று. நல்லமுத்துத்தேவர் குடும்ப வாழ்வையும் துறந்து, வேண்டிவந்த உத்தியோக உயர்வுக்கும் வழியின்றித் திண்டாடிக்கொண்டிருந்தார். வருடம் ஒன்றாகியும் மாயாண்டித்தேவனைப் பிடிக்கமுடியவில்லை. என்ன வழி செய்யலாம் என்று மூளையைக் குழப்பிக்கொண்டு இருந்தார் தேவர்.
அவருடைய குழப்பம் எதிர்பாராதவிதமாக இவ்வளவு எளிதில் தீர்ந்து வெற்றி கிட்டும் என்று அவர் கனவிலுங் கூடக் கருதியிருக்கமாட்டார். அந்த வருடம் புவனநாயகர் கோவில் திருவிழாவுக்கு வள்ளியும் தங்கராஜூம் வந்திருந் தனர். வள்ளியின் வற்புறுத்தலினால்தான் தங்கராஜு வந்திருந்தான். தன் வலது கையைப் பலிவாங்கிய முல்லை யூற்று, நினைக்கத் துன்பமான எண்ணங்களையே மீண்டும் மீண்டும் அவன் கண்முன் நிறுத்தியது. கோவிலில் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு வெளியேறிய வள்ளியும் தங்கராஜூம் திருவிழாக் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் வந்திருந்த போலீஸாருக்கிடையே இன்ஸ் பெக்டர் நல்லமுத்துத் தேவரைக் காண நேர்ந்தது. பார்த்து விட்டோமே என்ற தோஷத்திற்சாக வலதுகையை சலாம் செய்வதுபோலப் பாவனை காட்டினான் தங்கராஜு. இன்ஸ் பெக்டர் புன்னகை பூத்தார். பக்கத்தில் நின்றுகொண்டிருத்த வள்ளியை யாரோ ஒரு முரடன் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டே பார்த்தவண்ணமிருந்தான். இன்ஸ்பெக்டருக்கு, வணக்கம்:செலுத்திவிட்டுத் திரும்பிய தங்கராஜ வள்ளியை வைத்த கண் வாங்காமல் பார்க்கும் அந்த முரடனை நோக்கி னான். அந்த முரடனின் கண்களிலும் ஏதோ கலக்கம், பாசத்துடன் கலந்து நிழலிடுவதுபோலத் தங்கராஜூவுக்குத் தெரிந்தது. இதெல்லாம் கூட்டங்களில் ஏமாற்றும் பேர்வழிகள் வேலை என்று மனத்தில் தீர்மானங்கொண்டவனாய் அவனை மீண்டும் ஒருமுறை கூர்ந்து பார்த்தான். பார்த்தவன்...வாயி லிருந்து வார்த்தை வரவில்லை..முண்டாசும் பனியனுமாக இருந்த தோற்றமே தங்கராஜுக்கு முதல் நோக்கில் அந்த மனிதனுடைய அறிமுகத்தை இவ்வளவு காலங்கடத்தியவை. ‘மாயாண்டித் தேவன்! மாயாண்டித் தேவன்! பிடியுங்கள்! அதோ... அதோ நிற்கிறான்’ - தங்கராஜு வாய்விட்டுக் கத்திவிட்டான்.
எதிரிலிருந்த இன்ஸ்பெக்டர் துள்ளிக்குதித்தார். போலீஸார் வளைத்தனர். பிஸ்டல் தன் குதிகாலுக்கு நேரே குறிபார்த்து நிற்பதை மாயாண்டி கண்டான். எதிரே இன்ஸ்பெக்டர் நல்லமுத்துத்தேவர் பிஸ்டலுடன் நின்று: கொண்டிருந்தார். வெருண்டு ஓடிய கூட்டத்தின் மக்களில் ஒருத்தியாக ஒடிக்கொண்டிருந்த வள்ளியை அவன் கண்கள் துழாவின. நான்கு புறமும் ஆவலோடு பார்க்கும் அவன் நோக்கை, தப்பிக்க எண்ணுவதாகத் தவறாகப் புரிந்து கொண்ட இன்ஸ்பெக்டர் ‘இந்தச் சந்தர்ப்பமும் தவறி விடுமோ?’ என்ற ஆத்திரத்தில் பிஸ்டலின் குதிரையை அழுத்திவிட்டார். மாயாண்டி சுருண்டு கீழே விழுந்தான். ஒரு கையால் முழங்காலைப் பிடித்துக்கொண்டே ‘வள்ளி! வள்ளி! எங்கே போனாய்?’ என்ற வினாவுடன் மீண்டும். அவன் கண்கள் விலகி நின்ற ஜனக்கூட்டத்தை ஊடுருவின. ‘இளமையில் மனமுருக அறிவுரை கூறிய இளந்தங்கையின் கணவன்தான் தன்னால் கையிழந்த தங்கராஜ வள்ளியைத் தான் தங்கை என்ற பாசத்துடன் ஆதரிக்கத் தவறிவிட்டோம். அவள் கணவன் கையை இழக்கவும் நாமல்லவா காரணமாயிருந்தோம்’ என்று அவன் நினைவு பேசியது. பலப்லவென்று. கண்ணிர்த் துளிகள் முழங்காலில் வடிந்துகொண்டிருந்த செந்நீர்க் குருதியில் ஐக்கியமாயின. அழஅழப் பிறரைத் துன்புறுத்திய மாயாண்டித்தேவன் முதன் முறையாகச் சிறு துளி கண்ணிர் சிந்தினான். கொண்டையில் அரிப்பு எடுப்பு துணர்ந்து தலை முண்டாசை அவிழ்த்துவிட்டுக் கையை வைத்த மாயாண்டி ‘ஆ’ என்ற அலறலுடன் கையை எடுத்துக் கொண்டான்! அதற்குள் இரண்டோர் ஊசிகள் கையில் ஏறி விட்டன. ஆனால் விஷ மூலிகைகளால் வயிரம் பாய்ந்த அவன் உடலில் அவைகள் ஒன்றும் செய்துவிட முடியவில்லை.
‘தான் வைத்துக்கொண்ட ஊசி தன்னையே ஏன்? வைத்த தன் கைகளையே குத்திவிட்டது. வள்ளிக்குத் தான் செய்த துரோகமும் அப்படிப்பட்டதுதானே? கூடப்பிறந்த தங்கையின் கணவன் கையிழ்க்கச் சகோதரன் சத்துருவா? சுதர்சனராவ் காலத்திலிருந்தே இந்தப் பயல் தங்கராஜாவை எனக்கு நன்றாகத் தெரியும். அவன் உயிரை நொடிக்குநொடி குறி வைத்திருக்கிறேன் நான். காரணம்?...இவன் சுதர்சன ராவின் வேட்டை நாய்போல என்னைப் பிடிக்க முயன்று சுற்றிக்கொண்டிருந்ததுதான். கடைசியில் கையாலாகாத வெறும் பயல் என்றறிருந்து கொல்லும் கருத்தை விட்டு விட்டேன். அப்பாவிப் பயல்’ என்ற இரகக்கத்தினால் தான் அன்று விஷ ஊசி ஏறியதைக்கூட எச்சரிக்கை செய்து விட்டுச் சென்றேன். ஆனால் இன்றல்லவா தெரிகிறது இவன் என் தங்கை வள்ளியின் கணவனென்பது? சொந்தத் தங்கையின் கணவன் கையிழக்கக் காரணமாக இருக்கும் அளவிற்குக் கொடிய பாதகனா நான்? மாயாண்டியின் மனத் தினுள் ஏதோ ஒன்று கேட்ட இந்தக் கேள்வி அவனைக் கொல்லுவதுபோலிருந்தது. உணர்ச்சிகளுக்கு இளகாத அவன் உருக்கு மனம் இப்போது இனம்புரியாது கரையைத் தொடங்கியது.
“டேய்! ஒன் தர்ட்டி ஃபோர்! டு நாட் த்ரீ! உம்ம்! ஏன் நிற்கிறீர்கள்? லாரியில் ஏற்றி ஸ்டேஷனுக்குக் கொண்டு போங்கள்... நான் மேலே ஆபீஸுக்குத் தந்தி கொடுத்துவிட்டு ஸ்டேஷனுக்கு வருகிறேன்”... இன்ஸ்பெக்டர் நல்லமுத்துத் தேவரின் குரல் மாயாண்டித்தேவனுக்குத் தன் சூழ்நிலையை உணர்த்தியது. கான்ஸ்டேபிள்கள் இருவர் தாங்கிக்கொடுத்த முழங்காலைப் பிடித்துக்கொண்டு லாரியில் ஏறினான் அவன். எந்த வள்ளியின் பேச்சுக்களை அலட்சியம் செய்தானோ, அதே வள்ளியினால் இன்று கண்ணிர் சிந்தினான், கைதானான். அவளுக்குத் தான் செய்த துரோகத்திற்குப் பரிகாரம் என்ற பேரிலாவது போலீஸார் அளிக்கும் ஆயுள் தண்டனையைத் தான் அடையவேண்டுமென்ற துக்கமயமான ஆவலொன்று அவன் உள்ளத்தில் தோன்றியது. திருவிழாக் கூட்டத்தில் தங்கராஜு கூச்சலிட்டுத் தன்னைக் காட்டிக் கொடுத்தபோது மாயாண்டி விரும்பியிருந்தால் நொடிப் பொழுதில் தப்பியிருக்க முடியும். தன்னைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கென்று போலீஸார் விளம்பரம் செய்திருந்த தொகையை தங்கராஜு-தன் தங்கையின் கணவன்-பெற வேண்டுமென்று கருதியோ என்னவோ மாயாண்டி அகப்பட்டுக்கொண்டான்.
ஃஃஃ
சிறையில் அடைப்பதற்கு முன் ஒரு பாக நீளம் வளர்ந் திருந்த மாயாண்டியின் கொண்டை மயிர் சிறை வழக்கப்படி நீக்கப்பட்டுவிட்டது. அதைக் கத்தரித்தபோது ஊசிகள் விஷமேறியவைகளாதலால் பத்திரமாக அப்புறப்படுத்தப் பட்டன. ஆனால், மொட்டைத் தலையோடு திகழ்ந்த அந்தப் பழம்பெரும் கைதியின் பெயராகப் போலீஸ் ரிகார்டில் இருக்கும் பெயர் என்னவோ இன்னும் ஊசிக்கொண்டை மாயாண்டித்தேவனென்பதுதான். தங்கராஜூ விளம்பரத் தொகை ஆயிரம் ரூபாயை அடைந்தான். தன் மனைவியின் கூடப்பிறந்தவன்தான் மாயாண்டி என்பதை அவனோ, தன் அண்ணன்தான் மாயாண்டி என்பதை வள்ளியோ, கடைசி வரை அறியவில்லை. “ஊசிக்கொண்டை மாயாண்டித்தேவன்” என்ற உலகறிந்த பெயர் அளவில்தான் அவர்களும் அவனை அறிந்திருந்தார்கள்.
★
கருத்துகள்
கருத்துரையிடுக