தமிழ் வாழ்க
நாடகங்கள்
Back
தமிழ் வாழ்க
புலவர் குழந்தை
தமிழ் வாழ்க
1. தமிழ் வாழ்க
1. மின்னூல் உரிமம்
2. மூலநூற்குறிப்பு
3. மறைந்தும் வென்றார் புலவர் குழந்தை
4. அணிந்துரை
5. கதைச் சுருக்கம்
6. நாடக உறுப்பினர்
7. தமிழ் வாழ்க!
8. கணியம் அறக்கட்டளை
1. Cover
2. Table of contents
தமிழ் வாழ்க
தமிழ் வாழ்க
புலவர் குழந்தை
பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/tamil_vazhga
This book was produced using https://pandoc.org/
மின்னூல் வெளியீட்டாளர்: FreeTamilEbooks.com
அட்டைப்படம்: லெனின் குருசாமி - guruleninn@gmail.com
மின்னூலாக்கம்: அ. சூரியா - suriya.alagar97@gmail.com
மின்னூலாக்க செயற்திட்டம்: கணியம் அறக்கட்டளை - kaniyam.com/foundation
Ebook Publisher: FreeTamilEbooks.com
Cover Image: Lenin Gurusamy - guruleninn@gmail.com
Ebook Creation: A. Suriya - suriya.alagar97@gmail.com
Ebook Project: Kaniyam Foundation - kaniyam.com/foundation
பதிவிறக்கம் செய்ய - http://freetamilebooks.com/ebooks/tamil_vazhga
This Book was produced using LaTeX + Pandoc
மின்னூல் உரிமம்
இந்த மின்னூலானது தமிழ்மண் பதிப்பகம், கணியம் அறக்கட்டளை, ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்கார்புரோ நூலகத்தின் எண்ணிமத் தமிழியல் திட்டம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டதாகும்.
மூல நூல்கள் தமிழ்நாடு அரசால் நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ் நூல்கள் பிரகடனத்தின் கீழ் பொதுவுடமையாக உள்ளன.1 இப்பதிப்பும் இதன் மூலங்களும் கிரியேட்டிவ் காமன்ஸ் - படைப்பாக்கப் பொதுமம் குறிப்பிடுதல் - அதே மாதிரிப் பகிர்தல் 4.02 உரிமத்தின் கீழ் பல்வேறு வடிவங்களில் தமிழ்மண் பதிப்பகத்தினாலும் கணியம் அறக்கட்டளையினாலும் வெளியிடப்பட்டுள்ளன.
இது பற்றிய கூடுதல் தகவல்களுக்கு http://archive.org/download/thamizhmann-cc-declaration/Thamizhmann-cc-declaration-tamil.pdf என்ற இணைப்பில் காணவும்.
This ebook is the product of collaboration between ThamizhMann Publisher, Kaniyam Foundation and UTSC Library’s Digital Tamil Studies project.
The original works are under public domain through the Tamil Nadu nationalized books public domain declaration.1 This edition and its sources and multiple formats have been released under Creative Commons Attribution Share Alike 4.0 Unported2 by ThamizhMann Publisher and the Kaniyam Foundation.
For further information, please see: http://archive.org/download/thamizhmann-cc-declaration/Thamizhmann-cc-declaration-tamil.pdf
மூலநூற்குறிப்பு
நூற்பெயர் : தமிழ் வாழ்க
தொகுப்பு : புலவர் குழந்தை படைப்புகள் - 8
ஆசிரியர் : புலவர் குழந்தை
பதிப்பாளர் : இ. இனியன்
முதல் பதிப்பு : 2008
தாள் : 16 கி வெள்ளைத் தாள்
அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 11 புள்ளி
பக்கம் : 16+ 264 = 280
நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்)
விலை : உருபா. 175/-
படிகள் : 1000
நூலாக்கம் : பாவாணர் கணினி, தி.நகர், சென்னை - 17.
அட்டை வடிவமைப்பு : வ. மலர்
அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா, ஆப்செட் பிரிண்டர்ஸ், இராயப்பேட்டை, சென்னை - 14.
வெளியீடு : வளவன் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017., தொ.பே. 2433 9030
மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in
இணையதளம் : www.tamilmann.in
மறைந்தும் வென்றார் புலவர் குழந்தை
பெரும் புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு நிறைவு நாளன்று தேனினும் இனிய ஆற்றினை நம் காதில் பொழியச் செய்தது மாண்புமிகு கலைஞர் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு.
புலவர் குழந்தை அவர்களால் எழுதப்பட்ட 29 நூல்களையும் அரசுடைமையாக்கிப் பரிவுத் தொகையாக ரூபாய் 10 இலட்சத்தையும் அளித்துள்ளது.
பணம் என்பது ஒரு பொருட்டன்று; அதே நேரத்தில் பெரும் புலவரின் நூல்களை அரசுடைமை ஆக்கியதன் மூலம் அவருக்குச் சிறப்பானதோர் அங்கீகாரத்தை அளித்துள்ளது - அதுதான் குறிப்பிடத்தக்கது.
தந்தை பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப் பட்டவர்; தன்மான இயக்கத்தில் தன்னை ஒப்படைத்தவர் - திராவிடர் கழகத்தில் கருஞ்சட்டை வீரராக வீர உலா வந்தவர்.
அவர் இயற்றிய “இராவண காவியம்” - இனவரலாற்றில் - இயக்க வரலாற்றில் ஈடு இணையில்லாதது.
4.9.1971 அன்று விழுப்புரத்தில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் புலவர் குழந்தை அவர்களுக்கு நடத்தப்பட்ட விழாவில் தந்தை பெரியார் பங்கு கொண்டு புலவர் குழந்தை அவர்களுக்குப் பொன்னாடை போர்த்திப் பாராட்டுரையும் புகன்றார்.
அவ்விழாவில் பகுத்தறிவாளர் கழக மாநிலப் புரவலர் என்கிற முறையில் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களும் பங்கேற்றுப் பாராட்டுரை புகன்றார்.
அவ்விழாவில் பங்கேற்றுப் புலவர் குழந்தை அவர்கள் ‘இராவண காவியம் எழுதியது ஏன்?” என்பது குறித்துத் தம் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
“இராமன் கடவுளல்ல என்கின்ற உணர்ச்சியினைத் தமிழக மக்களிடையே ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக இராவண காவியத்தை எழுதினேன். எனக்குத் துணிவினைத் தந்தவர் தந்தை பெரியாரவர்களே ஆவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார் (‘விடுதலை’ 29.9.1971 பக்கம் 3).
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆனாலும், புலவர் குழந்தையானாலும் தொடக்கத்தில் பக்திப் பாட்டெழுதிக் கிடந்தவர்கள்தாம். தந்தை பெரியாரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட பின்பே பகுத்தறிவுக் கருவை கவிதையின் மையமாக வைத்துப் பாட்டெழுதினார்கள் என்பது அடிக்கோடிட்டுக் காட்டத் தகுந்ததாகும்.
விழுப்புரம் பாராட்டு விழாவில் தந்தை பெரியார் கூறினார்.
“புலவர் குழந்தையவர்கள் இராவண காவியம் எழுதி இருக்கின்றார், அது ஒரு இராமாயணம் போன்றதே! எத்தனையோ இராமாயணங்கள் இருக்கின்றன என்றாலும் நம் நாட்டிலிருப்பது பார்ப்பன இராமாயணமாகும். இந்த இராமாயணத்தின் தத்துவம் நம்மை இழிவுபடுத்துவதேயாகும். நம்மை அடக்கி ஒடுக்க என்ன செய்ய வேண்டுமோ, அதை வாய்த்தவரை செய்ய வேண்டியது; பார்ப்பான் தர்மத்தை நிலை நிறுத்த தன் மனைவியை விட்டுக் கொடுத்து, அதன் மூலம் அவனை ஒழிக்கலாம் என்பதை உணர்த்துவதற்காக எழுதப்பட்டதேயாகும்.
நமது புலவர்கள் மகா மோசமானவர்கள்; பார்ப்பான் எழுதியதைக் கண்டிக்காது, காது, மூக்கு வைத்துப் பெருமைப்படுகிறார்களே தவிர, அதனைக் கண்டித்து எழுதப் புலவர் குழந்தைபோல் எவரும் முன்வரவில்லை. முதன்முதல் நண்பர் பாரதிதாசன் அவர்கள்தான் துணிந்து பார்ப்பானைக் கண்டித்தார்.
புலவர் குழந்தை அவர்கள் பார்ப்பனர்களின் அயோக்கியத்தனங்களையெல்லாம் காவிய நடையில் எழுதியுள்ளார். அதுவும் இலக்கணப்படி எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தை நீங்களெல்லாம் வாங்கிப் படித்துப் பயனடைய வேண்டும். பார்ப்பான் தன் இனத்திற்காக பிரச்சாரம் செய்கின்ற காலிகளையெல்லாம் சாமியாக்குகின்றான். அதுபோல நமக்காகப் பாடுபடுகின்றவர்களை, தொண்டு செய்கிறவர்களை, எழுதுகிறவர்களைப் பெருமைப் படுத்த வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் துணிந்து முன்வருவார்கள்” (விடுதலை 29.9.1971 பக்கம் 3) என்று தந்தை பெரியார் பாராட்டுதலுடன் ஆழமான கருத்தினை எடுத்துரைத்தார்கள்.
சேலம் பேரணியில் முன்வரிசையில் புலவர் குழந்தை
1971 (சனவரி 21) அன்று திராவிடர் கழகம் நடத்திய சேலம் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியில் கருப்புடை அணிந்து புலவர் குழந்தை அவர்கள் வீறுநடைபோட்ட காட்சி கண் கொள்ளாதது.
1938, 1948 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களிலும் முக்கிய பங்கெடுத்துக் கொண்டவரும் கூட!
எந்த இடத்திலும் தாம் ஏற்றுக் கொண்ட தன்மான இயக்க பகுத்தறிவுக் கருத்துக்களைக் கம்பீரமாகச் சொல்லத் தயங்காதவர்.
வெள்ளக்கோயில் தீத்தாம்பாளையத்தில் 1930இல், “ஞானசூரியன்” நூல் ஆசிரியரான சாமி சிவானந்த சரஸ்வதியுடன் ‘கடவுள் இல்லை’ என நான்கு நாள் நடத்திய சொற்போரில் புலவர் குழந்தை அவர்கள் வெற்றி பெற்றார் என்பதிலிருந்து, அவரின் விவாதத்திறன் பளிச்சிடுகிறது.
இரா. பி. சேதுப்பிள்ளையின் பாராட்டு!
கம்பன் கவிநயத்தை லயித்து, சப்புக் கொட்டிப் பேசும் சொல்லின் செல்வர் என்று போற்றப்பட்ட இரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள்கூட புலவர் குழந்தையின் இராவண காவியத்தில் சொக்கிப் போயிருக்கிறார்.
“தேனினும் இனிய செந்தமிழ்க் குழந்தை!”
நான் கம்பராமாயணக் கவிச் சுவையில் கட்டுண்டு கிடந்தனன். தங்கள் இராவண காவியம் அக்கட்டை அவிழ்த்து விட்டது. கருத்து மாறுபாடு வேறு” என்று குறிப்பிட்டதிலிருந்து புலவர் அவர்களின் புலமைத் திறன் குன்றின் மேல் ஒளிர்கிறது.
கம்ப இராமாயண அன்பரான புலவர் அய்யன் பெருமாள்கோனார் ஒருபடி மேலே தாவிப் பாடினார்.
“ இனியொரு கம்பனும் வருவானோ?
இப்படி யும்கவி தருவானோ?
கம்பனே வந்தான்;
அப்படிக் கவிதையும் தந்தான்
ஆனால்,
கருத்துதான் மாறுபட்டது”
என்று கவியால் ஒப்புதல் வாக்குமூலம் தந்தார்.
இத்தகைய தமிழ்ப் புலவர் பெருமகனாருக்குத்தான் தமிழக அரசு உரிய சிறப்பினைச் செய்திருக்கிறது.
கம்பனைப் போல் காட்டிக் கொடுத்து காவியம் புனைந்திருந்தால் இவருக்கு இமயப்புகழ் கிடைத்திருக்கும். என்றாலும் காலங் கடந்தாவது ஒரு அரசின் அங்கீகாரம் கிடைத்தது என்பது வரவேற்கத் தகுந்ததாகும்.
திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், அதன் துணை அமைப்பான பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் மூலம், மறைக்கப்படும் தமிழினப் பெரு மக்களைத் (இலக்கியவாதிகளை) தம் தோளில் தூக்கிக் கொண்டாடத் தவறவில்லை.
தமிழ்நாட்டிலேயே இராவண காவியத் தொடர் சொற்பொழிவை அரங்கேற்றிய பெருமை அதற்குண்டு. சிலம்பொலி செல்லப்பனார் அவர்களைக் கொண்டு 29.9.1978-ல் தொடங்கி 7.12.1979வரை 21 சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன. அதே போல் பேராசிரியர் அறிவரசன் அவர்கள் 29.9.1998 முதல் 13.11.1999வரை 15 சொற் பொழிவுகளை நிகழ்த்தினார்.
முனைவர் மறைமலை இலக்குவனார் 1.7.2004 முதல் 15.6.2006 வரை 23 தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.
இராவண காவிய மாநாடு
இரண்டு இராவண காவிய மாநாடுகள் நடத்தப்பட்டன; முதல் மாநாடு 5.7.1986 அன்று காலை முதல் இரவுவரை சென்னைப் பெரியார் திடலில் நடத்தப்பட்டது. இரண்டாவது இராவண காவிய மாநாடு 1.7.1989 அன்று (புலவர் குழந்தை அவர்களின் 83-ஆம் ஆண்டு பிறந்த நாள் அன்று) சென்னைப் பெரியார் திடலில் நடத்தப்பட்டது.
இவையன்றி, தனித்தனிச் சிறப்புக் கூட்டங்களும் நடத்தப்பட்டதுண்டு. இத்திசையில் மொத்தம் 77 நிகழ்ச்சிகள் நடத்திய சாதனை பெரியார் நூலக வாசகர் வட்டத்துக்கு உண்டு.
தீர்மானங்கள்
28.6.2005 அன்று சென்னை பெரியார் திடலில் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் விழாவில் நிறைவுரையாற்றினார். அவ்விழாவில் முக்கிய பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதல் தீர்மானம் தமிழக அரசு புலவர் குழந்தையின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட வேண்டும் என்பதாகும்.
இரண்டாவது தீர்மானம் புலவர் குழந்தை அவர்களின் நூல்களை நாட்டுடமை ஆக்க வேண்டும் என்பதாகும்.
மூன்றாவது தீர்மானம் புலவர் குழந்தை அவர்களைப் போற்றும் வண்ணம் அவர்தம் அஞ்சல்தலை வெளியிட வேண்டும் என்பதாகும்.
இந்தத் தீர்மானங்களை இணைத்து, அவற்றைச் செயல்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்து அன்றைய தமிழக முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் கடிதம் ஒன்றை எழுதினார். (15.7.2005)
அந்தக் கடிதம் இன்னும் கோப்பில் குறட்டை விட்டுக் கொண்டுதானிருக்கிறது. காரணம் அந்த அரசுக்குத் தமிழ் உணர்வு இல்லாததுதான்.
மத்திய அரசு தொலை தொடர்பு மற்றும் தொழிற் நுட்பத்துறை அமைச்சர் மாண்புமிகு தயாநிதிமாறனுக்குப் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் செயலாளர் கி. சத்தியநாராயணன் அவர்கள் கடிதம் ஒன்றை எழுதினார். புலவர் குழந்தை அவர்களை நினைவுகூரும் வகையில் அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டது. (12.8.2005).
தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ம. இராசேந்திரன் அவர்களுக்குப் பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் 24.8.2005 அன்று ஒரு கடிதம் எழுதினார். வாசகர் வட்டம் நிறைவேற்றிய தீர்மானங்களை இணைத்து அவற்றைச் செயலாக்கம் செய்ய அதில் வேண்டுகோள் விடப்பட்டு இருந்தது.
கலைஞரின் சாதனை!
இப்படி இடை விடாத தொடர் முயற்சிகளைக் கழகம் மேற்கொண்டதற்கு தி.மு.க. ஆட்சியில், மாண்புமிகு மானமிகு டாக்டர் கலைஞர் அவர்கள் அய்ந்தாம் முறையாக முதல் அமைச்சர் ஆகியுள்ள நிலையில் வெற்றி கிடைத்திருக்கிறது.
இந்த அரும்செயலைச் செய்த முதல் அமைச்சரைப் பாராட்டி, தமிழக அரசைப் பாராட்டி, சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற புலவர் குழந்தை நூற்றாண்டு நிறைவு விழாவில் (29.6.2006) நன்றியைத் தெரிவித்துப் பாராட்டியும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
அஞ்சல்தலை வெளியிடுவது மட்டும் நிலுவையில் உள்ளது. அதனையும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் நிறைவேற்றுவார் என்பதில் அய்யமில்லை. புலவர் குழந்தை அவர்கள் மறைந்தாலும் காலத்தை வென்று நம்மிடையே வாழ்கிறார்.
வாழ்க அப்பெருமகனார்!
(நன்றி : விடுதலை 2.7.2006)
புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு புகழ் பூத்த வரலாறு
இராவண காவியம் படைத்த புலவர் குழந்தை அவர்கள் கொங்கு நாட்டில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ‘ஓலவலசு’ என்னும் சிற்றூரில், பண்ணையக்காரர் என்னும் பழங்குடியில், முத்துசாமிக் கவுண்டர் - சின்னம்மையாருக்கு 1-7-1906இல் பிறந்தார். இவர்தம் பெற்றோருக்கு ஒரே மகனாக வளர்ந்தார்.
தாம் பிறந்த சிற்றூரில் திண்ணைப் பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார்; தொடர்ந்து படிக்காமல் இடையிடையே விட்டு விட்டுப் படித்தார். மொத்தத்தில் எட்டு மாதங்களே திண்ணைப் பள்ளியில் பயின்றார். கருவிலே திருவுடையவராகிய இவர் பத்தாம் ஆண்டில் இளம் பருவத்திலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்றிருந்தார். யாரேனும் ஒருவர் ஒரு பாட்டைப் பாடக் கேட்டால் உடனே இவர் அப்பாட்டின் ஓசையில் புதுப்பாட்டு ஒன்றினைப் பாடுவார். எப்போதும் ஏதேனும் ஒருபாட்டை எழுதிக் கொண்டே இருப்பார். பாட்டு எழுதுவது இவருக்குக் கைவந்த கலையாக அமைந்து விட்டது.
இவர் காலத்தில் இவர் வாழ்ந்த பகுதியில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் இல்லை. ஆகவே தானாகவே முயன்று படித்துக் கவிபாடும் திறம் பெற்றிருந்தார். இவர் முதன் முதலில் இசைப்பாடல்களைப் பாடினார். இவர்தம் கல்லாமல் பாடும் கவித்திறனையும், பாடல்களின் சிறப்பினையும் கண்டு வியந்த அறிஞர்கள் சிலர், தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் படிக்குமாறு தூண்டினர்; ஊக்குவித்தனர். தாம் பிறந்த ஓலவலசிலோ, அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலோ தமிழ்ப் புலவர்கள் எவரும் அக்காலத்தில் இல்லை. ஆகவே இவர் ஆசிரியர் துணையின்றித் தாமாகவே முயன்று இலக்கிய இலக்கணங்களைப் படித்துத் தமிழில் சிறந்த புலமை பெற்றார். மேலும் இவர் ஆசிரியர் உதவியின்றித் தாமாகவே படித்து 1934ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தனித் தேர்வராகத் தேர்வு எழுதிப் புலவர் பட்டயம் பெற்றார்.
இவர் பவானியில் மாவட்டக் கழகப் பள்ளியில் 1924ஆம் ஆண்டில் ஆசிரியர் பணியைத் தொடங்கினார். 1940வரை தமிழாசிரியராகத் தொண்டாற்றினார். 1941 முதல் 1962ஆம் ஆண்டுவரை தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றினார். மாணவர்கள் வியந்து பாராட்டும்வகையில் 39 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார். ஆசிரியர் பணியினின்று ஓய்வு பெற்ற பின்பும் எழுத்துப் பணியினின்று ஓய்வு பெறவில்லை. வாழ்நாள் முழுமையும் தமிழுக்காகத் தொண்டாற்றினார்; பல நூல்களைப் படைத்தார்; தமது கவிதைகள் வாயிலாகச் சமுதாய உணர்வை - பகுத்தறிவை மக்களிடையே பரப்பினார்.
இவருக்கு முன் ஓலவலசில் படித்தவர் எவருமில்லை. அவ்வூரில் உள்ளவர்களுக்குக் கையொப்பம் இடவும் தெரியாது. இளமைப் பருவத்திலேயே பொதுத் தொண்டில் - சமுகாயத் தொண்டில் ஆர்வமுடையவராக இருந்தார். தாமாகத் தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் படித்துக் கொண்டிருந்த காலத்தில், தம் ஊரிலிருந்த தம்மையொத்த அகவையுடைய இளைஞர்களுக்குக் கல்வி கற்பித்தார். அவர்கள் மூலமாகப் பெரியவர்களுக்குக் கையொப்பம் போடப் பயிற்சியளிக்கச் செய்தார்; கை நாட்டு போடுவதை அறவே ஒழித்தார். அக்காலத்தில் இவரைவிட மூத்தவர் பலர் இவரிடம் கல்வி கற்றனர். ஓலவலசில் கல்லாமை இருளைப் போக்கினார்.
வேளாளஇன மக்களிடையே இருந்த பலபிரிவினரையும் ஒன்று சேர்ப்பதற்காகவும், அவ்வின இளைஞர்களை முன்னேற்றப் பாதையில் செலுத்துவதற்காகவும் 1946 முதல் 1950வரை ‘வேளாளன்’ என்னும் திங்களிதழை நடத்தினார். அவ்விதழில் இவர் எழுதிய கட்டுரைகள் அவ்வின இளைஞர்களிடையே புத்துணர்ச்சியை வளர்த்தது. விதவை மணம், கலப்புத்திருமணம், சீர்த்திருத்த மணம் முதலியன செய்யவும் அம்மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டினார்.
வேளாள சமூகத் தலைவரான திரு. வி.சி. வெள்ளியங்கிரி கவுண்டர் தலைமையில், தகடூர் (தருமபுரி) மாவட்டத்திலுள்ள அரூரில் வேளாள மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் புலவர் குழந்தை அவர்கள் ‘விதவை மணம்’ தீர்மானங் கொண்டு வந்தார்; ஒருமனமாக நிறைவேறச் செய்தார். அதன்படி நூற்றுக்கணக்கான விதவை மணங்களைச் செய்து வைத்தார். இச்செயல்கள் இவர்தம் சமூகத் தொண்டிற்குச் சிறந்த சான்றுகளாகும்.
இவர், யாப்பிலக்கணம் படிப்பதற்கு முன்னே 1918இல் ‘கன்னியம்மன் சிந்து’ என்னும் கவிதை நூலை வெளியிட்டார். இவர் பாடிய அச்சாகாத பாடல்களும் நூல்களும் பல உள்ளன; சில நூல்கள் அச்சாகி வெளியிடப்பட்டன. யாப்பிலக்கணம் கற்பதற்கு முன்பு பாடிய பாடல்கள் யாப்பிலக்கணப்படி அமைந்துள்ளன.
இவர் இதுவரை எழுதியுள்ள நூல்கள் : இராவண காவியம் உள்படச் செய்யுள் நூல்கள்-7, உரைநூல்கள் - 3, இலக்கண நூல்கள் -3, உரைநடை நூல்கள் -16 ஆகமொத்தம் 29 நூல்கள் படைத்துள்ளார். தீரன் சின்னமலை நாடகம் இன்னும் அச்சாகவில்லை.
‘விருத்தம் என்னும் வெண்பாவிற்கு உயர்கம்பன்’ என இதுவரையில் போற்றப்பட்டு வரும் புகழுரைக்கு ஈடாகப் புலவர் குழந்தை அவர்கள் இராவண காவியம் பாடிப் புகழ்பெற்றார். ‘காமஞ்சரி’ என்னும் செய்யுள் நாடக நூல், பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்களின் மனோன்மணீயம் என்னும் நூலுக்குப் பிறகு எழுதப்பட்ட சிறந்த நாடக நூலாகும். ‘நெருஞ்சிப் பழம்’ என்னும் நூல் தமிழில் இதுவரை வெளிவராத கற்பனைக் கருவூலமான காதல் கதையாகும்.
புலவர் குழந்தை அவர்கள் பெருங்கவிஞர் மட்டுமல்லர். சிறந்த எழுத்தாளர்; கேட்போர் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் விரும்பும் வண்ணம் பேசும் பெரும் பேச்சாளர். இவருடைய எழுத்துகள் உறுதியும் அஞ்சாமையும் ஆய்வும் செறிந்த புரட்சிக் கனல் தெறிக்கும் இயல்புடையவை. இவருடைய செய்யுள் நடையும் உரைநடையும் எளிய இனிய தனித்தமிழில் அமைந்தவை. இவர் படைத்த நூல்களெல்லாம் தமிழுக்கும் தமிழர்க்கும் ஆக்கம் தரும் வகையில் அமைந்துள்ளன.
தந்தை பெரியார் 1925இல் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். இவர் அவ்வியக்கத்தில் சேர்ந்தார்; பெரியாரின் அணுக்கத் தொண்டரானார். அன்று முதல் சுயமரியாதை இயக்கம் அதன் மறு பதிப்பான திராவிடர் கழகம், அதன் மறுமலர்ச்சியான திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுள் இணைந்து தொண்டாற்றியவர். பகுத்தறிவுக்கு ஒவ்வாத எதனையும் செய்யாதவர். பள்ளித் தமிழாசிரியராக இருந்துகொண்டே, அத்தொழிலுக்குச் சிறிதும் இடையூறு இல்லாமல், ‘பெரியார் சீடர்’, ‘கருப்புச் சட்டைக்காரர்’ என்று பொது மக்கள் கூறும்படி கட்சித் தொண்டாற்றியவர். இவரது சுயமரியாதை உணர்ச்சிப் பிழம்பே இராவண காவியம் படைக்கத் தூண்டியது; இவருக்குப் புகழைச் சேர்த்தது.
1948இல் சென்னையில் திருக்குறள் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் திருக்குறளுக்குப் பகுத்தறிவிற்கு ஏற்ப உரை எழுதுவதற்குத் தந்தை பெரியார், நாவலர் சோமசுந்தரபாரதியார் தலைமையில் ஐவர் கொண்ட குழுவை அமைத்தார். அக்குழுவில் புலவர் குழந்தையும் ஒருவர். இவரே தனிஒருவராக இருந்து திருக்குறளுக்கு உரை எழுதி ‘திருக்குறள்-குழந்தையுரை’ என்று வெளியிட்டார். அவ்வுரையை 28 நாட்களில் எழுதி முடித்த பெருமைக்குரியர்.
அறிஞர் அண்ணா அவர்கள் ஈரோட்டில் ‘விடுதலை’ ஆசிரியராக இருந்தபோது அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றார். காங்கிரசு ஆட்சிக்காலத்தில் தடை செய்யப்பட்ட இவர்தம் இராவண காவியத்திந்கு, தமிழக அரசால், தமிழ் வாழத் தாம் வாழும் தமிழவேள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களால் 17-5-1971இல் தடை நீக்கப்பட்டது. அதைக்கண்டு தமிழகமே அகமிக மகிழ்ந்தது; தமிழவேள் கலைஞரை உளமார வாழ்த்தியது.
புலவர் குழந்தை ஒழுக்கத்தை உயிரினும் மேலாகக் கொண்டவர். இவர் ஒரு புரட்சிப் புலவரே எனினும் அமைதியும் அடக்கமும் உடையவர்; ஆடம்பரமின்றி எளிய வாழ்வு வாழ்ந்தவர்; பழகுவதற்கு இனிய பண்பாளர்; கடமை தவறாதவர்; எதிர்க் கட்சியானாலும், மாற்றுக் கருத்து உடையவராலும் நன்கு மதிக்கத் தக்கவர்.
புலவர் குழந்தை அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் முத்தம்மையார். கல்வியறிவு பெற வாய்ப்பில்லாதவராயினும் பொது அறிவு நிரம்பப் பெற்றவர்; தன்மானக் கொள்கையுடையவர்; தம் கணவரின் கொள்கைக்கேற்ப இல்லறத்தை இனிது நடத்தியவர். இவ்விணையருக்குச் சமத்துவம், சமரசம் என்னும் இரு பெண்மக்கள் உள்ளனர். தமிழுக்குத் தொண்டு செய்து வந்த புலவர் பெருந்தகை தமது 68ஆம் அகவையில் 24-9-1973இல் இயற்கை அடைந்தார். மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் புலவர் குழந்தையிடம் அன்பும் மதிப்பும் உடையவர். அவர் மறைந்த பிறகு, அவர் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய நூல்கள் 8-7-2006 அன்று அரசுடைமை ஆக்கப்பட்டதாக அறிவித்தார். குழந்தை அவர்களின் மகள்கள் இருவருக்கும் தலா ரூ.5 இலட்சம் பரிவுத் தொகை வழங்கினார்.
அணிந்துரை
‘தமிழ் வாழ்க!’
புலவர், முனைவர்
ஈரோடை இரா. வடிவேலன்
32, தியாகி குமரன் தெரு,
ஈரோடை - 638 004.
தென்னவன் என்பவன் தமிழரசன்; வடநாட்டை வடவன் என்பவன் ஆண்டு வருகிறான். சங்கப் புலவர்களுடன் வடவர் பழகி தமிழ் கற்று, உளவுவேலை செய்து வந்தனர். தென்னவன் இமயத்தில் புலிபொறித்து மீள்கிறார். தென்னவனை வழிப்படுத்த ஆரியப்பட்டர் என்பவன் தன் மகள் ஆர்யாவுடன் தமிழகம் வருகின்றான். இவர்களுக்கு வரியில்லாமல் நிலதானம் செய்கிறான் தென்னவன். ஊருக்கு ஒரு புரோகிதரை நியமிக்கிறான் ஆரியப் பட்டர். ஒவ்வொரு தொழில் செய்வோரும் அந்தந்தத் தொழிலைச் செய்ய வேண்டுமெனச் சட்டம் செய்யப்படுகிறது.
அமைச்சர் மதிவாணர் பேச்சைக் கேட்காமல், பழையன் பேச்சையும் கேட்காமல் தென்னவன் இருக்கிறான். ஆரியச் சாதி வேறுபாட்டால் நாட்டில் ஒற்றுமை குலைகிறது. தென்னவன், ஐயன் என்பவனைக் கொள்ளையரை விரட்டியதால் தலைவன் ஆக்குகிறான். பழையன் அரசியல் அதிகாரம் பெறுகிறான். தமிழ் அரசின் நிலை ஒருவாறு சீர்ப்படுகிறது.
தென்னவன், பட்டர் சூழ்ச்சியில் இந்திரா என்பவளை மணந்து கொள்ள ஏற்பாடு செய்கிறான். மதிவாணர் மறுத்தும் கேட்கவில்லை. இளவரசர் தென்னவனை எதிர்க்கிறார். பட்டர், ஆர்யா, இந்திரா முதலியோர் வடநாடு ஓடிவிடுகின்றனர்.
இளவரசர் பட்டம் ஏற்கிறான். மற்ற அரசர்களும் அதனை ஏற்றுக் கொள்கின்றனர்.
நாடகப்பாங்கில் ஆடரங்கு. இதில் எங்கள் தமிழ் வாழ்கவென்று பாடுவோமே - பாடி இனிய பொருள்விளங்க ஆடுவோமே தங்குபுகழ் ஏழிசையும் யாழில் அமைத்தே - இன்பந்ததும்ப இனிது பாடி யாடுவோமே!
என்ற பாடலுடன் ஆடுதல் முடிகிறது. கொங்கிளங்கோ என்னும் புலவர் ‘பனிமலைப் பரணி’ பாடி வருகிறார்.
அதனை மன்னவன் போற்றுகிறான்.
திரை : ஆ :
கிருஷ்ணய்யர்: நம்ம தந்திரம் ஒன்றும் தமிழர்களிடம் பலிக்கவில்லையோ?
சேஷய்யர்: அவர்கள்தான் தமிழ் தமிழ் என்று கட்டிண்டு அழறாளே! தமிழ் கெட்டால் அன்றி தமிழர்கள் ஒற்றுமை நாளும் கெடாது.
இவர்கள் பேச்சு இங்ஙனம் செல்கிறது.
வடவர் அவையில் ஆரியப்பட்டர், அமைச்சர் பிராமணர்கள் முதலியோர் இருந்து ஆலோசிக்கின்றனர். தமிழர்களை எளிதில் வெல்லமுடியாது எனப் பேசிக்கொள்கின்றனர்.
ஆரியா வருத்தத்துடன் இருக்க பட்டர் அருகில் வந்து, இந்திரா நீ தியாகம் செய்ய வேண்டும். இது நம் இனத்துக்கே பயன்படும்.
தென்னவன் அவையில் பட்டர், இந்திரா முதலியோர் வந்து சேருகின்றனர். அவர்களோடு தென்னவன் சேர்ந்து கொள்கிறான்.
பழையன், மாறன் முதலியோர் எச்சரிக்கின்றனர்
இடையில் இசைப்பாடல் :
மாரன் அவதாரம் - பஞ்ச
பாரோர் புகழ்தீரா!
அந்தப்புரத்தில் தமிழரசியும் தென்னவனும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
வடவர் இவர்களைப் பிரிக்கிறார்கள். பிறகு தென்னவன் திருந்துகிறான். இளவரசன் ஆட்சியை ஏற்கிறான். நாடு தமிழ் ஆட்சியாக மலர்கிறது!
கதைச் சுருக்கம்
தமிழ்நாட்டைத் தென்னவன் என்னும் தமிழரசன் ஆண்டு வருகிறான். வடநாட்டை வடவன் என்னும் ஆரியவரசன் ஆண்டு வருகிறான். வடவாரியர், தமிழ்நாட்டில் ஆரிய ஆதிக்கத்தை நிலைநாட்டவேண்டி, துறவிகளாகவந்து, ‘தமிழ் கற்றுத் தமிழ்ப் புலவர்களுடன் பழகியும் சங்கப் புலவர்களா யிருந்தும் உளவு வேலை செய்து வருகின்றனர். தமிழரசர்கள் அடிக்கடி வட நாட்டின்மேல் படையெடுத்துச் சென்று வெற்றிக்கொடி நாட்டி வருகின்றனர். அதனால், ஆரியப் பண்பாடு ஆட்டங்கண்டு வருகிறது. தென்னவனும் அவ்வாறே இமயத்தில் தமிழ்க்கொடி பொறித்து மீள்கிறான். தோல்வியால் மனமுடைந்த வடவன், தென்னவனை வெல்லும் வழியை அமைச்சருடன் ஆராய்கிறான். தென்னாட்டி லிருந்து சென்ற ஆரியர்கள் தமிழ்நாட்டின் நிலைமை கூறித் தமிழர் ஏமாறா மையைக் கூறுகின்றனர். தென்னவனை வழிப்படுத்த ஆரியப் பட்டர் தன் மகள் ஆரியாவுடன் தமிழ்நாடு வருகின்றனர்.
தமிழ்நாடு வந்த ஆரியாவின் ஆடல் பாடலால் மயங்கிய தென்னவன், அரசியை விடுத்து ஆரியா இடத்திலேயே இருந்து விடுகிறான். புலவர் தலைவர் மதிவாணர் தமிழரசிக்குத் தேறுதல் கூறி வருகிறார். தென்னவன் பட்டரை அரண்மனைப் புரோகி தராக்குகிறான். தமிழ்நாட்டில் வடவாரியர் ஏராளமாகக் குடி யேற்றப்பட்டு வரியில்லாமல் இனாமாக நிலமும் கொடுக்கப் படுகிறது. அரண்மனையில் கொலை வேள்வி செய்யப்படுகிறது. அரண்மனைப் புரோகிதர் குறித்த நாளில், குறித்த முறைப்படி தான் பெருநாள், திருநாள் முதலியன செய்ய வேண்டும் எனும் ஆணை பிறக்கிறது. ஊர்க்கொரு ஆரியர் ஊரார் செலவில் புரோகிதராக்கப்படுகின்றனர். இவற்றை யெல்லாம் அவ்வப் போது மதிவாணரும், மக்கள் தலைவன் பழையனும் மறுத்துக் கூறியும் அரசன் கேட்கவில்லை. மக்கள் தலைவர்களில் ஒருவனான மாறன் என்பவன் ஆரியர் கையாளாகி இவற்றையெல்லாம் ஆதரித்து வருகிறான்.
நாட்டில் பட்டர் வைத்ததே சட்டம்! முடிவில், ஒவ்வொரு தொழில் செய்வோரும் அந்தந்தத் தொழிலையே செய்வதும், அத்தொழிலாளர்களுக்குள்ளேயே மணந்து கொள்வதும் தொழில் வளர்ச்சிக்கேற்றதென ஆரியச்சாதி வேற்றுமை சூழ்ச்சியாகப் புகுத்தப்படுகிறது. தனித்திருந்து தமிழ்ப் பண்பாட்டைக் காத்தலே தகுதியெனப் பழையன் முதலியோர் முடிவு செய்கின்றனர். மதிவாணர் பேச்சையும் கேளாமல் அரசன் பழையன் முதலாயி னோரை ஒதுக்கி வைக்கிறான். அவர்கள் தனித்து வாழ்ந்து தமிழ்ப் பண் பாட்டைக் காத்து வருகின்றனர். ஆரியச் சூழ்ச்சியால் தெலுங்கம், கன்னடம், மலையாளம் ஆகிய நாடுகளை ஆண்டு வந்த தென்னவன் தம்பிகள் மூவரும் தென்னவனோடு பகைத்து வாழ்ந்து வருகின்றனர். ஆரியச் சாதி வேறுபாட்டால் நாட்டில் ஒற்றுமை குலைகிறது. ஓர் அயல் நாட்டான் நாட்டில் புகுந்து கொள்ளையிட்டுச் செல்கிறான். மேனாட்டு வணிகர் தலைவன் ஜான் கொள்ளைக் கூட்டத்தானைத் துரத்த உதவுகிறான். அதன் நன்றியறிதலாகத் தென்னவன் ஜானை அரசியல் தலைவனாக்குகிறான். பழையன் அரசியலதிகாரம் பெறுகிறான். பட்டர் வேலை காலியாகிறது. ஜானும், அவன் மனைவி கிளியோவும் நாட்டுக்கு நல்லன பல செய்கிறார்கள். தமிழரசியின் நிலை ஒருவாறு சீர்பெறுகிறது. பட்டர், மாறன் முதலியோரைச் சேர்த்துக் கொண்டு, ‘ஜான் நம்நாட்டுப் பொருளைச் சுரண்டுகிறான். அவன் இங்கு இருக்கக்கூடாது’ என நாட்டு மக்களிடம் பிரசாரம் செய்கிறான். தன்னாட்டிலிருந்து வந்த கடிதத்தின்படி ஜான் தன்னாடு செல்கிறான்.
தென்னவன் பட்டர் சூழ்ச்சியால் ஆரியாவின் அண்ணன் மகளான இந்திரா என்பவளை மணந்துகொள்ள ஏற்பாடு செய்கிறான். மதிவாணர் மறுத்துங் கேட்கவில்லை. இளவரசன் மறுத்துங் கேளாததால், இளவரசன் அவளைத் துரத்த முயல்கிறான். அரசன் தன் மகனைச் சிறையிடுகிறான். நாட்டு மக்கள் சிறையை உடைத்து இளவரசனை விடுதலை செய்கின்றனர். பட்டர், ஆரியா, இந்திரா மூவரும் வடநாட்டுக்கு ஓடிவிடுகின்றனர். தென்னவன் தம்பியர் மூவரும் உறவாகின்றனர். இளவரசனான செழியன் அரசனாகிறான். தமிழரசி நன்னிலை யடைகிறாள். இனி, நாடகத்தைப் படியுங்கள்.
நாடக உறுப்பினர்
1. தென்னவன் - தமிழ்நாட்டரசன்
2. தமிழரசி - தென்னவன் மனைவி
3. செழியன் - இளவரசன்
4. மதிவாணர் - புலவர் தலைவர்
5. சாத்தனார் - அமைச்சர் தலைவர்
6. பழையன் - மக்கள் தலைவன்
7. மாறன் - ஆரியச்சார்புடைய மக்கள் தலைவன்
8. வேலன் அரசனது உற்றவேலையாள்
9. அல்லி - தமிழரசியின் தோழி
10. வடவன் - வடநாட்டரசன்
11. விஜயப்பட்டர் - புரோகிதர்
12. ஆரியா - பட்டர் மகள்
13. வசந்தா - ஆரியாவின் தோழி
14. இந்திரா - ஆரியா அண்ணன் மகள்
15. ஜான் - மேனாட்டு வணிகர் தலைவன்
16. கிளியோ - ஜானின் மனைவி
17. கிருஷ்ணய்யர், சேஷய்யர் - பட்டர் கையாட்கள், பட்டர் வருமுன்னரே தமிழ் நாட்டிலிருந்தவர்கள்.
18. பிற நடிகர்கள் : முனிவர், குடிமக்கள், முதலியோர்.
குறிப்பு : நடிப்போர்-தென்னாட்டு, வடநாட்டு ஆடையணிகள், பழக்கவழக்கம், தமிழ் ஆரியப் பண்பாடமைந்த பேச்சு, காலத்துக்கேற்ற மாறுபாடு இவற்றை நன்கு கவனிக்கவேண்டும். நாடக நிகழ்விடம் - தென்னாட்டிலும், வடநாட்டிலும்.
திரை ‘அ’ என்பது, உள்திரை. அரண்மனை முதலிய முதன்மையான காட்சிகள்.
திரை ‘ஆ’ என்பது, இடைத்திரை. நடுத்தரமான காட்சி
திரை ‘இ’ திரைவெளி.
தமிழ் வாழ்க!
திரை. 1. அ. ஆடரங்கு
தென்னவன், தமிழரசி, சிறுவன், மதிவாணர், புலவர் முதலியோர். ஆடவர் குஞ்சியுடன், மதிவாணர் வெண்தாடி யுடன் தமிழரசி நல்ல ஆடையணியுடன்.
பாணன் யாழ்மீட்டிப்பாடுதல். விறலி மெய்ப்பாடு தோன்ற ஆடுதல்.
1. பாட்டு
எங்கள் தமிழ் வாழ்கவெனப் பாடுவோமே - பாடி
இனிய பொருள்விளங்க ஆடுவோமே.
தங்குபுகழ் ஏழிசையும் யாழிலமைத்தே - இன்பந்
ததும்ப இனிதுபாடி யாடுவோமே.
அச்சமின்றி யாழ்கடலில் கப்பல் செலுத்திச்-சீனர்க்
காடையணி யாவனவும் கொண்டு கொடுப்போம்;
நச்சிநமைப் பார்த்துவழி நாடியிருக்கும்-மேல்
நாட்டினர்க்கு வேண்டுவன கொண்டு நடப்போம்.
ஊக்கமுடன் நாட்டுவளம் ஓங்கவுழைப் போம்-உயர்
உழவுத் தொழில்புரிந்தே உண்டுகளிப்போம்.
ஆக்கமுடன் பல்தொழிலும் செய்துமுடிப்போம்-அய
லார்க்குறையுள் ஊணுடையன் போடுகொடுப்போம்.
வெற்றியுட னேபுலிவில் மீனக்கொடியை-வட
மேருமலை யிற்பொறித்து மீளுவோமே;
ஒற்றுமை யெனுநிறைகோல் கொண்டுநிறுத்தே-இவ்
வுலகை யொருமொழிவைத் தாளுவோமே.
தென்னவன் : நல்ல பாட்டு.
மதிவாணர் : ஆட்டமோ?
தென் : பாட்டுக்குத் தகுந்த ஆட்டம்!
மதி : யாழோ?
தமிழரசி : ஏழிசையின் பிறப்பிடம்!
மதி : செந்தமிழின் செவ்விய பாக்களை யாழிசையோடு ஏழிசை பொருந்தப் பாடியும், பாட்டின் பொருள் கேட்போர்க்கு எளிதில் விளங்கும்படி மெய்ப்பாடு தோன்ற ஆடியும்-இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழையும் போற்றி வளர்த்து வரும் பாணரும், விறலியருந்தான் நமது தமிழ்த் தாயின் தந்தை தாயர் ஆவர்.
தென் : தாங்களோ?
மதி : மரம் வைத்தவனைவிடத் தண்ணீரூற்றி வளர்ப்பவ னன்றோ சிறந்தவன்?
தமி : இருவருந்தான்!
தென் : ஆம்.
_(அரசன் பாணற்குப் பொன்னை அள்ளிக்கொடுத்தல். தமிழரசி விறலி தலையில் பொற்றாமரைப்பூச் சூடல். பாணனும், விறலியும் போதல்)_
தென் : புலத்துறை முற்றிய புலவர் பெருமானே! இவ்வாண்டு அரங்கேறிய அருந்தமிழ்ப் பாக்கள் எத்தனையோ?
மதி : செந்தமிழ் வளர்க்கும் தென்னவ! அகப் பொருட் பாடல்கள் ஆயிரமும், புறப்பொருட் பாடல்கள் ஐந்நூறும் அரங்கேறின. இதோ, நமது வடநாட்டு வெற்றியைப் “பனிமலைப் பரணி” எனப் பாடியுள்ளார். _(சுவடியைக் கொடுத்து, புலவரைச் சுட்டிக் காட்டி)_ ‘கொங்கிளங்கோ’ என்னும் இப்புலவர் பெருந்தகை. _(அரசனும் புலவரும் ஒருவரை ஒருவர் வணங்குதல்)_ என்ன சொற்
சுவை, பொருட்சுவை! நம் வீரர்கள் தீரத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது.
தென் : விரைவில் அரங்கேற்றலாம். _(சுவடியைத் தமிழரசி வாங்குதல். அரசன் புலவரிடம் கொடுத்தல்)_
திரை. 1. ஆ.
கிருஷ்ணய்யரும், சேஷய்யரும். கிருஷ்ணய்யர் இருத்தல் சேஷய்யர் வருதல்.
சேஷ : என்ன கிருஷ்ணய்யர்வாள்! ஏன் வெறுமனே உக்கார்ந்திருக்கேள்! தேக சௌக்ய மில்லியோ என்ன?
கிரு : இல்லை, சேஷய்யர்வாள்! தேகாத்மா நன்னாத்தா இருக்கு; நம்ம தந்த்ரம் ஒன்னும் தமிழர்களிடம் பலிக்கவில்லையே என்பதைத்தான் எண்ணிண்ட்ருக்கேன்.
சேஷ : அவாதான் ’தமிழ் தமிழ்’ன்னு கட்டிண்டழராளே! தமிழ் கெட்டாலன்றித் தமிழர்கள் ஒத்துமை ஒரு நாளும் கெடாது. இது நிச்சயம்.
கிரு : நேக்கும் அப்படித்தான் படறது. அதற்காகத் தானே நம்ம கௌதமர், வான்மீகர், மார்க்கண்டர் எல்லாம் சங்கப் புலவர்களாக இருந்திண்டு வர்ராள்?
சேஷ : அகஸ்தியர் இருந்து என்ன சாதிச்சிட்டார்? தமிழுக்கு இலக்கணம் செய்தார், இலக்கணம் செய்தாரின்னு நாம் சொல்லிக்கிறதுதான்?
கிரு : அவாளும் தம்மால் ஆனமட்டுந்தான் பாடு பட்டிண்டு வர்ராள். தமிழ்ப் புலவர்கள் ஏமாந்தாத்தானே?
சேஷ : என்னமோ நம்மாலானதையும் பார்க்கலாம்.
திரை. 2. அ. வடவன் அவை
வடவன், ஆரியபட்டர், அமைச்சர், பிராமணர்கள் முதலியோர்.
வடவன் : பிராமணோத்தமர்களே! மந்திரிமார்களே! மண்டலாதிபதிகளே! அத்தென்னவன் வெற்றி என் மனத்தை வாட்டுகிறது. நம்மைக் கொஞ்சங்கூட மதியாது வந்து, இமயத்தில் தமிழ்க்கொடியைப் பொறித்துச் சென்ற செயல் இன்னும் என் இதயத்தை விட்டு அகலவில்லை. தமிழ் மறவர்களின் வீர தீரத்தை நினைக்க நினைக்க என் நெஞ்சம் திடுக்கிடுகின்றது. ஆனாலும், நம்முடைய வீரர்கள் இவ்வளவு மோசமாக இருப்பார்களென்று நான் ஒருபோதும் எண்ண வில்லை. இது ஆரிய இனத்துக்கே அவமானம்! ஆரியர் தோற்றார், தமிழர் வென்றார்! எவ்வளவு கேவலம்! எப்படி யாவது அத்தென்னவனை வெல்ல வேண்டும். இல்லையேல், ஆரிய இனமே அடியோடு அழிந்தொழிய வேண்டும்.
மந்திரி : ஆம் அரசே! ஆனாலும், அபஜெயத்தை எண்ணி வருந்துவது அழகல்ல. வெல்லும் உபாயத்தைப் பார்ப்பதே வீரர்களுக்கு அழகு. தோல்வியே வெற்றிக்குக் காரணமாகும்.
வடவ : தோல்வி!
முனிவன் 1 : தமிழர்களை லேசில் வென்றுவிடலாம் என்பது முடியாத காரியம்.ஒற்றுமையென்பது தமிழர்களின் உயிர்நாடி. அவர்கள் ஒரே இனம். அவர்களுக்குள் ஏற்றத்தாழ் வான ஜாதிப் பிரிவுகள் கிடையா. ஒரு தமிழன் நாவசைந்தால் நாடசையும்; அவ்வளவு இனப்பற்று. இனவுணர்ச்சி யென்னும் கயிற்றால் ஒன்றாக இறுக்கிக் கட்டப்பட்டுள்ளனர் தமிழர்கள். தமிழினம் தனியினம்! வீரமென்பது அவர்களுடன் பிறந்தது. மானமென்பது அவர்கள் மரபுக்குணம். கொடை மடம் படுவாரன்றிப் படை மடம் படார். மன்னவன் தன்னையொரு மூத்த குடி மகனாகவே எண்ணி நடந்து கொள்கிறான்.
வடவ : ஆம், அடிக்க அடிக்க எதிர்த்து வரும் நல்ல பாம்பு போன்றவர்கள் என்பதை நேரில் கண்டேன்.
முனி 2 : நம்மவரை எவ்வளவு அன்புடன் வரவேற்று ஆதரித்து வருகிறார்கள் தெரியுமா? தாயினும் அன்புடையவர் தமிழர்கள். விருந்தினரை உபசரிப்பதற் கென்றே பிறந்தவர்கள். அடடா! நம்மவரைக் கண்டால் எவ்வளவு பிரியம்! எவ்வளவு உபசாரம்! ‘நீமுந்தி நாமுந்தி’ என்று போட்டி போட்டுக் கொண்டு உபசரிக்
கின்றனர்.
வடவ : போதும் பகைவரைப் புகழ்ந்தது.
முனி 2 : புகழவில்லை. உள்ளதைச் சொன்னேன்.
வடவ : தமிழர்கள் மீது நமக்குப் பகையில்லை. அவர்கள் ஒன்றாயொருகுலமாய் ஒருமித்து வாழும் அத்தமிழ்ப் பண்பாட்டின் மீதுதான் நமக்குப் பகை. ஏன்? அத்தமிழ்ப் பண்பாடு நம் ஆரியப் பண்பாட்டை நெருக்கு கிறது. தமிழர்களின் அடிக்கடி வெற்றியால் ஆரியப் பண்பாடு ஆட்டங்கண்டு விட்டது. ஆரியப் பண்பாடழிந் தால் நம் சூத்திரர்கள் நமக்கு அடங்கி நடப்பார்களா என்ன? ஒருபோதும் நடவார். நீங்கள் சும்மா இருக்க நாங்கள் மட்டும் ஓயாமல் உழைக்கப் பிறந்த வர்களா? என்றால், நம் கதியென்ன?
முனி 1 : நம் கதி அதோ கதிதான். ஆரியச் சாதி வேற்றுமை அழிந்தால், ஆரிய மேலோராகிய நமது வாழ்வே அழிந்துபடும்.
வடவ : பின் என் செய்வது? தமிழரை எப்படி வெல்வது?
முனி 2 : தமிழர்கள் தாய்மொழிப்பற்றில் மித மிஞ்சியவர். தமிழ் கற்றவரிடத்தில் தாயினும் அன்புடை யவர். அதனால், கௌதமர், வான்மீகி, மார்க்கண்டர் முதலிய நம்மவர் தமிழை நன்கு கற்றுச் சங்கப் புலவர்களாய் இருந்து வருகின்றனர். நாங்களெல்லாம் தமிழைக் கற்றுத் தமிழ்ப் புலவர்களிடம் பழகி வருகிறோம். சிலர் தமிழ் அந்தணர்களோடு பழகி, அவர்களைப் போலவே ஆகிவிட்டனர். இவ்வாறு பல வழியிலும் நமது கொள்கையைப் புகுத்தி வருகிறோம். ஆனால், அவர்கள் ஏற்றுக் கொள்வதுதான் இல்லை. அவ்வளவு பண்பட்ட பண்பாடுடையவர் தமிழர்கள்.
வடவ : அந்தணர் என்பவர் யார்?
முனி 2 : வயது முதிர்ந்த பெரியவர்கள் குடும்பத்தை மக்களிடம் ஒப்படைத்து விட்டுப் பொதுநலத்தொண்டு செய்து வருபவர். அன்பும் அருளும் அறமும் ஒழுக்கமும் நிறைந் தவர். அச்செந்தண்மை பூண்ட அந்தணர் சொற்படி தான் மக்கள் நடந்து வருகின்றனர்.
வடவ : ஓஹோ!
முனி 1 : நமது கொள்கையைப் பின்பற்றா விட்டாலும் நம்மவர் சொல்வதைப் பிரியமாய்க் கேட்கிறார்கள். அவர்களுக்குள் சொல்லியும் கொள்கின்றனர்.
வடவ : அப்படியா!
முனி 2 : நம் இளைஞர்கள் சிலர், சில தமிழ்ச் செல்வர்
களிடம் ஏவலாட்களாய் இருந்து, அவர்களைத் தம்வயப் படுத்தி வருகிறார்கள். எதற்கும் தமிழர்கள் சுலபத்தில் ஏமாறுவதாகக் காணோம்.
வடவ : போரிலோ அவர்களை வெல்ல முடியாது. நம் கொள்கைகளையும் ஏற்றுக் கொள்வதில்லை. பின் எப்படி வெல்வது?
ஆரியப்பட்டர் : அரசே! எனக்கொரு உபாயந் தோன்று கிறது. பெண்களுக்கு மயங்காத மானுடப் பிறவியே உலகில் இல்லை. வீராதி வீரரும் மெல்லியலார் வலையில் விழுந்தே தீருவர். ஆடல்பாடல்களில் சிறந்த ஒருத்தியைக் கொண்டு தென்னவனை வசப்படுத்தவேண்டும். அவள் மூலம் நம்மவர் ஒருவர் அரசாங்கத்தில் நல்ல ஆதிக்கம் பெற வேண்டும். அரசனுக்குச் சர்வாதிகார மனப்பான்மையை உண்டாக்க வேண்டும். அதன் பிறகு நமது கொள்கையைப் படிப்படியாய்ப் புகுத்தித் தமிழ்ப் பண்பாட்டைச் சீர்குலைப்பது மிக எளிதாகும்.
வடவ : ஆம், ஆம். சரியான யோசனை. அதற்கு நம் ஆரியாவே தகுந்தவள். பட்டர் கருத்து யாதோ?
பட்டர் : இனத்தொண்டு புரியாதவன் ஒரு ஆரியனா?
வடவ : பேஷ்! மெச்சினேன். ஆரியப்பட்டரே! வெற்றி நமதே. பல வருஷங்களாக மந்திரியாக இருந்தும், பல பகையரசர்களிடம் தூதுசென்றும் மிகுந்த அனுபவம் வாய்ந்த நீரே அதற்குத் தகுந்தவர். இன்று முதல் தங்கள் பெயர் “விஜயபட்டர்” என வழங்குவதாக. மந்திரி யாரே! விஜயப் பட்டரின் தென்னாட்டு விஜயத்திற்கு ஆவன செய்யும்.
திரை. 2. ஆ. ஆரியா வீடு
ஆரியா வருத்தத்துடன் உட்கார்ந்திருத்தல், பட்டர் அருகில் இருந்து கொண்டு,
பட்டர் : நான் சொல்வதைக் கேள். பிடிவாதம் பண்ணாதே. நீ விரும்புகிறவனைக் கல்யாணம் செய்து கொண்டு வாழ்வது உனக்கு மட்டும் பயன்படும். உன் அழகும், ஆட்டமும், பாட்டும் நம் இனத்துக்கே பயன் படப்போ கின்றன. அதற்காக நீ உன்னைத் தியாகம் பண்ணிக் கொள்ள வேண்டியதுதான். உன் தியாகம் உனக்கு மட்டு மன்றி உனது இனத்துக்கே பெரும் கீர்த்தியைத்தரும். சொன்னபடி கேள்.
ஆரியா : ஏப்பா! நம்ம தேசத்தைவிட்டு அவ்வளவு தூரம் அன்னிய தேசத்துக்கு எப்படியப்பா போவது? அதுவும்?……….
பட்டர் : அதுவுமென்ன? நான் உன்னோடுதானே இருக்கிறேன். எல்லாம் நான் பார்த்துக்கிறேன். புறப்படு. ‘ஆரியா என்னும் ஒரு பெண்ணால் ஆரிய இனம் முன்னுக்கு வந்தது.’ என்னும் கீர்த்திக்குப் பாத்திரமாகு. இம்… எழு.
ஆரியா : வசந்தா! _(வர)_ எல்லாம் எடு.
பட்டர் : சந்தோஷம். வசந்தா! சீக்கிரம்.
திரை. 3. அ. தென்னவன் அவை
எகிப்து, ரோம், அரேபியா, சீன நாட்டு வணிகர்கள், அமைச்சர் முதலியோர் இருத்தல், அரசன் வருதல். எழுந்து வணங்குதல்.
அமைச்சர் : அரசே! அயல் நாட்டு வணிகர்கள் வந்திருக் கின்றனர். இவர் எகிப்து நாட்டு வணிகர்.
எ.வ : செந்தமிழ் வேந்தே! தங்கள் நாட்டில் நெய்த பாலாவி போன்ற பட்டாடையும், பாம்புச்சட்டை போன்ற பஞ்சாடையும் தங்கள் தமிழ் நாட்டின் புகழை எங்கள் நாட்டில் நிலைநாட்டியுள்ளன. தங்கள் நாட்டு மட்கலங்களின் மாண்பை எங்கள் நாடு மனமாரப்புகழ்கிறது. இவ்வாண்டு மட்கலமும், ஆடையும் கொஞ்சம் சேர்த்து அனுப்பும்படி எங்கள் அரசர் கேட்டுக் கொண்டனர்.
தென் : அனுப்பலாம்.
அமைச் : இவர் ரோமாபுரி வணிகர்.
ரோ-வ : தண்டமிழரசே! உலகில் எந்நாட்டிலும் விளையாத தங்கள் நாட்டுச் சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், கிராம்பு முதலிய வாசனைப் பொருள்கள் எங்கள் நாட்டை வாழ்விக் கின்றன. இவை இல்லாவிட்டால் இறைச்சியை நீண்ட நாளைக்குக் கெடாமல் வைத்திருக்க முடியாது. எலிமயிர்க் கம்பளத்தின் வேலைப்பாட்டை மெச்சாதார் யார்? மேலும் யானைத்தந்தம், மயில்தோகை, சந்தனம் எல்லாம் கொஞ்சம் மிகுதியாக வேண்டும். அரிசியின் அளவு கொஞ்சம் கூடுதல் வேண்டும்.
தென் : சரி.
அமைச் : இவர் அரேபியா நாட்டு வணிகர்.
அ.வ : வண்டமிழ் மன்னவ! வணிகத்தின் பொருட்டு முதல் முதல் தமிழ்நாட்டுக்கு வந்த பெருமை எங்களுக்கேதான் உண்டு. வேண்டிய அளவு குதிரைகள் கொண்டு வந்திருக்கிறோம். அவற்றின் விலைக்குப் பண்டங்களே கொடுத்து விடுங்கள்.
தென் : மகிழ்ச்சி.
சீ-வ : எங்கள் சீனநாட்டுக்கு வேண்டிய ஆடை யளிக்கும் பெருமை தங்கள் தமிழ் நாட்டுக்கு உரியது. முத்தும் பவளமும் உதவும் முதன்மையும் தமிழ் நாட்டினுடையதே.
தென் : அமைச்சரே! இவர்களுக்கு வேண்டியன கொடும். உங்கள் அரசர்களுக்கு எமது நன்றியைச் சொல்லுங்கள்.
அமைச் : வடநாட்டுக்கு முத்தும், சங்குவளைகளும் சிறுவணிகர்கள் ஏராளமாகக் கொண்டுபோய் விற்று வருகின்றனர்.
தென் : நல்லது. உழவும், கைத்தொழிலும் எப்படி ஒரு நாட்டு வளத்துக்கு இன்றியமையாதனவோ அப்படியே வாணிகமும்.
திரை. 3. ஆ. ஊர்க்கூட்டம்
பழையன், மாறன், முத்துவணிகன், முதலியோர்.
பழையன் : வண்டமிழ் மக்களே! நாம் இன்று இங்கு எதற்காகக் கூடினோம் என்பதைச் சொன்னால், நீங்கள் வியப் படைவீர்கள். நம் நாட்டில் இருந்து வரும் வட நாட்டினர் வட நாட்டு ஆதிக்கத்தை நம் தமிழ் நாட்டில் ஏற்படுத்தும் உளவு வேலை செய்து வருகின்றனராம். அவர்கள் வருந்தித் தமிழைக் கற்பதும், தமிழ்ப் புலவர் களோடு அளவளாவுவதும் அதற்காகத் தானாம். வடவர் கொள்கையை நம்மிடம் புகுத்தித் தமிழ்ப் பண்பாட்டைக் கெடுப்பதுதான் அவர்கள் முதல் வேலையாம். தமிழ் நாட்டில் வடவராதிக்கத்தை நிலைநாட்ட, தமிழ் நாட்டை வட நாட்டுக்கு அடிமைப்படுத்த இங்கு வாழும் ஐந்தாம் படைதானாம் அவர்கள்.
மாறன் : யார் சொன்னது? பிழைக்கவந்தவர்கள் பாவம்?
பழையன் : பிழைக்க வந்தால் சீனர், அரேபியர், கிரேக்கர், ரோமர் முதலாயினோர்போல் ஏதாவது ஒரு தொழில் செய்து கொண்டு பிழைப்பார்களா? இரந்துண்டு கொண்டே இருப் பார்களா? நமது முத்து வணிகரைக் கேளும்.
முத்து-வ : ஆமாம், நான் வட நாட்டுக்கு முத்து விற்கச் சென்றிருந்தேன். நமது ஒற்றர் சொன்னார். வட நாட்டு அரசனுடைய ஏற்பாட்டின் படிதான் இவர்கள் இங்கு வந்தார்களாம். வட நாட்டைப்போல் நம் நாட்டிலும் சாதி வேற்றுமையை உண்டாக்கும் வேலையைத்தான் இவர்கள் செய்து வருகிறார்களாம்!
மாறன் : அப்படியிருக்குமா?
பழையன் : ஏன் இருக்காது? அரசரிடம் சொல்லி ஆரியக் கொள்கை புகாமல் தடுக்க வேண்டும்.
கூட்டம் : ஆமாம், தடுக்க வேண்டும்.
திரை. 3. இ. திரைவெளி
ஆரியா, பட்டர், வசந்தா, வழிச்செலவு.
ஆரியா : எவ்வளவு வளம் பொருந்திய நாடப்பா! தமிழர்கள் நம்மை எவ்வளவு அன்போடு உபசரிக்கிறார்கள்! தமிழ்ப் பெண்கள் அன்புருவமானவர்கள்!
பட்டர் : அவ்வன்புதான் நம்ம காரியத்துக்கு வெற்றி தருவது.
திரை 4. அ. அந்தப்புரம்
_தமிழரசி கிளியோடு கொஞ்சிப் பாடல். தென்னவன் பின்புறம் நின்று கேட்டல். பாட்டு முடியும்போது சேர்ந்து பாடுதல். தமிழரசி பாடுவதை நிறுத்தித் திரும்பிப் பார்த்தல்._
தென் : ஏன்? பாடு! _(தமிழரசிபாடல்)_
2. பாட்டு
தமிழ்வாழ்க எனப்பாடுவாய்-பைங்கிளியே செந்-
தமிழ்வாழ்க எனப்பாடுவாய்!
கமழ்சோலைக் கனிதாரேன்,
கனிதேனின் சுவைதாரேன்,
தமிழ்போல அவையின்பம்
தருமோபைங் கிளியேசெந்-தமிழ்
புலவோர்தம் உளமேயது-தமிழ்வாணர்
புகழ்போல உருவாயது;
நிலமீதில் இதுபோலோர்
மொழியுண்டோ? கிளியே செந்-தமிழ்
அருளன்புக் கிடமானது-அயல்நாடர்
அறியாத பொருள் நூலது;
முருகின்பத் தமிழ் போலோர்
மொழியுண்டோ? கிளியே செந்-தமிழ்
தோழி : மதிவாணர் எதிர்பார்க்கின்றார்.
தென் : வரச்சொல். (மதிவாணர் வருதல், இருவரும் வணங்கல்)
‘குணமென்னும் குன்றேறி நின்ற’ பெரியீர்! வருக! வருக!!
மதி : மன்னர் மன்னவ! வாழ்க நின் கொற்றம். கிளிக் கென்ன?
தென் : ஒன்றுமில்லை. தமிழரசி கிளியுடன் கொஞ்சிப் பாடிக் கொண்டிருந்தாள். நான் இசைத்தேனுண்டு இன்புற்றிருந்தேன்.
மதி : தமிழரசி இசைக்காகவே பிறந்தவள்; கேட்கவா வேண்டும்? அரசியின் குரலே இசைமயமானது.
தமி : தங்கள் மனம்போல எனது வாழ்வு.
தென் : தாங்களாகவே இங்கு வந்ததன் காரணம்?
மதி : காரணம் இல்லாமல் இல்லை. இங்கு துறவிகள் என வாழும் வடவாரியர்கள் வடவன் உளவர்களாம். நமது தமிழ்ப்பண்பாட்டைக் கெடுப்பதற்காகவே இங்கு இருந்து வருகிறார்களாம்.
தென் : யார் சொன்னது?
மதி : மக்கள் தலைவன் பழையன்.
தென் : அவனுக்கு எப்படித் தெரியும்?
மதி : வட நாட்டுக்கு முத்து விற்கச் சென்ற முத்து வணிகனிடம் நம் ஒற்றர் சொல்லியனுப்பினார்களாம். அவ் வணிகன் வந்து சொன்னதாகச் சொன்னான்.
தமி : இருந்தாலும் இருக்கலாம்.
தென் : வடவராவது, நமது பண்பாட்டைக் கெடுப்பதாவது!
மதி : அப்படி எண்ணக்கூடாது. முன்பு அவர்கள் இந் நாட்டுக்கு வந்தபோது, வடநாட்டில் வாழ்ந்து வந்த தமிழ் மக்களை எதிர்த்தா வென்றார்கள்? தங்கள் சூழ்ச்சித்திறத் தாலல்லவோ அடிமைகளாய் அடக்கியாண்டு வருகிறார் கள்? வாளால் வெல்ல முடியாதாரையும் வஞ்சனையால் வெல்லலாம். அவர்கள் நீறுபூத்த நெருப்பு!
தென் : கவனிக்கலாம்.
திரை. 4. இ. திரைவெளி
முத்துவணிகன் விரைந்து செல்லல்.
ஒருவன் : எங்கப்பா விழுந்தடித்துக் கொண்டு போகிறாய்?
மு.வ : அரண்மனைக்கு.
ஒரு : அங்கெதற்குப் போகிறாய் இப்படி?
மு.வ : நாட்டியம் பார்க்க.
ஒரு : அதென்னது?
மு.வ : ஒரு பெண் ஆடப்போகிறாள் அரண்மனையில்.
ஒரு : யாரவள், விறலியா?
மு.வ : இல்லை. ஒரு வடவாரியப்பெண். நான் முத்து விற்கப் போயிருந்தபோது பார்த்தேன். எப்படி ஆடறா தெரியுமா? நம்ம விறலி ஆடுகிற மாதிரியல்ல. நீ வேணு மென்றா வந்து பாரு.
ஒரு : சரி, வா போகலாம்.
திரை. 5. அ. ஆடரங்கு
அரசன், அரசி, மதிவாணர், அமைச்சர் முதலியோர். ஆரியா பாடியாடல்.
3. பாட்டு
மாரன் அவதாரம் - எ-மெ.
பாரோர் புகழ் தீரா-பஞ்ச
பாணன் நேரில்வர நாணும் ஆணழகா! - பாரேநர்
நீரார் உலகில் நேரார் மதனா!
நிலவுமி ழுங்கலை மதிவதனா!-இப்பாரோர்
கலைவாணர் புகழ்மேரு மலைநேர் புயா! - பண்
கனிதமி ழின்சொல் நயா!
நிலைக்கும் குணசீலா நெடுவேலா-உயிர்
நில்லா தினி யுந்தன்
நெஞ்ச முவந்தெனைக் கொஞ்சிட வந்தருள் - பாரோர்
_ஆரியா, அரசன் கன்னத்தைத் தொட்டு, தன் கையை முத்தமிடல். தமிழரசி வெறுப்புடன் எழுந்து போதல். எல்லோரும் வெறுப்புடன் பார்த்தல். அரசன் முத்து மாலையைப் பரிசாகக் கொடுத்தல். அரசன் மனமாறுதல்._
திரை. 5. ஆ.
மதிவாணரும், சாத்தனாரும்.
மதி : சாத்தனாரே! இந்த நாட்டியத்திற்கு யார் ஏற்பாடு செய்தனர்?
சாத்த : எனக்கொன்றும் தெரியாது. அரசன் கட்டளை.
மதி : அரசி எழுந்து சென்றதையும்கூட அரசன் கவனிக்க
வில்லை. என்ன அப்பெண்ணுக்கு மானவெட்கமென்பதே இல்லைபோலும்!
சாத்த : ஆரியர்களுக்கு மானத்தைவிட வாழ்வுதானே பெரிது.
மதி : என்ன இருந்தாலும் அரச பரம்பரைச் சொத்தான முத்து மாலையை அவளுக்குக் கொடுக்கலாமா? முத்து வணிகன் சொன்னது முழுதும் உண்மையாகிவிட்டது. என்னமோ பார்க்கலாம்.
திரை. 6. அ. அந்தப்புரம்
தமிழரசி தனியாக இருத்தல். தென்னவன் வந்து,
தென் : தேவி! (பேசவில்லை) ஏன் பேசவில்லை? (தோழியைப் பார்த்து) அல்லி! உங்கள் தலைவி ஏன் பேசமாட்டே னென்கிறாள்? (அரசியின் தலையைத் தடவிக் கொண்டே) நான் என்ன தவறு செய்தேன்? என்ன வேண்டும்? எங்கே? உன் செந்தமிழ் வாயைத் திற.
தமி : இன்னும் என்ன வேண்டும்? போதாது இவ்வளவு!
தென் : என்ன அது? எனக்கு ஒன்றுமே புரியவில்லையே?
தமி : ஏன் புரிகிறது! நானும் பக்கத்தில் உட்கார்ந் திருக்க, அவள் கன்னத்தைத் தொடவும், கையைப் பிடிக்கவும் எப்படிச் சும்மா இருந்தீர்கள்? மனைவியிருக்க மற்றொருத்தி யோடு கொஞ்சுவதுதான் தமிழ் மரபா? அவள் ஆடின ஆட்டத்தில் நான் அருகில் இருந்ததைக்கூட மறந்து விட்டீர்களே!
தென் : கலையுணர்ச்சியால் நான் மயங்கி இருந்தேன்.
தமி : நம்ம விறலியர் ஆடும் ஆட்டத்தை விடவா அவள் ஆட்டத்தில் கலையுணர்ச்சி!
தென் : நல்லாத்தானே ஆடினாள்?
தமி : ஆடினாள் களியாட்டம்! பாட்டுங்கூட நல்லாப் பாடினாளே! ‘மதனா மதி வதனா’ என்று. மான வெட்கமென்பதே அவளுக்கு இல்லை போலும்?
தென் : தப்பாக நினைக்காதே.
தமி : நான் நினைக்கவில்லை? நீங்கள்தான் நினைத்து விட்டீர்கள். அவள் ஆடிய ஆட்டத்தில் நான் எழுந்து வந்தது கூடத் தெரியவில்லை பாவம்!
தென் : நீ ஏன் எழுந்து வந்தாய்?
தமி : எனக்கு மானவெட்கமில்லை? நான் ஒரு தமிழ்ப் பெண் என்பதைக்கூட மறந்துவிட்டீர்களாக்கும்!
தென் : மறக்கவில்லை. கலைக்கு மனத்தைப் பறி கொடுத்து
விட்டேன். அதனால், நீ எழுந்து வந்தது தெரிய வில்லை.
தமி : நல்ல கலை; கையையுங் காலையும் ஆட்டுங் கலை! கழுத்து மாலை எங்கே?
தென் : அவள் ஆட்டத்துக்குப் பரிசாகக் கொடுத்து விட்டேன்.
தமி : என்ன இருக்க என்ன செய்தீர்கள்! வழிவழி வந்த அரச மாலையை அயலாளொருத்திக்குக் கொடுக்கலாமா? என்னை யன்றி வேறொருத்தி அம்மாலையைத் தொடுவதே தப்பல்லவா? ஏன் தங்களுக்கு இந்தமதி?
தென் : மதிமுக மங்கையே! தெரியாமல் கொடுத்து விட்டேன், வருந்தாதே.
தமி : எனக்கும் அவளுக்கும்கூட வேறுபாடு தெரிய வில்லை போலும்!
தென் : இல்லை கண்ணே! (தோளோடு சார்த்துத் தலையை நீவுதல்)
திரை.6.ஆ.
இரு ஆரியப் பெண்கள் தண்ணீர்க்குப் போதல்.
கமலா : ஏண்டி ராஜம்! நோக்குத் தெரீம்மோ?
ராஜம் : என்னது?
கமலா : நம்ம ஆரியா இல்லே! பலே கெட்டிக்காரீடி. எப்படியோ இந்த ராஜாவை மயக்கி அவா ஆத்திலேயே வச்சுனுட்டா.
ராஜம் : அப்படியா! நேக்குத் தெரியாதே. ஆரடி கமலா சொன்னா?
கமலா : எங்க ஆத்துக்காரர் சொன்னா. அவ போட்ட கோட்டை அவெந் தாண்டறதே இல்லையாம்டி.
ராஜம் : ஓகோ! உங்க ஆத்துக்காரரு அரமனீல்லே வேலையா இருக்கா. அதனாலே தெரிஞ்சிண்டு வந்திருக்கா. இனி என்னமோ நம்மவாளுக்கு யோகந்தாண்டீ.
திரை. 7. அ. அல்லி வீடு
வேலனும், அல்லியும், அல்லி திரும்பி உட்கார்ந்திருக்க.
வேலன் : பேசமாட்டாயா! என் கண்ணல்ல! உன்னத்தா.
அல்லி : போதும், போதும். நான் கண்ணல்ல, மூக்கு.
வே : ஏன் உனக்கு மூக்குக்கு மேலே வருது? நான் என்னாத்தா தப்புச் செஞ்சிட்டே?
அ : இன்னும் என்ன செய்யணும், செய் செய்யின்னு! கழுத்துச் சங்கிலி யெங்கே?
வே : இப்பக்கூட ஆசாரியூட்டுக்குப் போயிட்டுத்தாவாரேன். இன்னும் பத்தவெய்க்கிலே.
அ : அவ கழுத்திலே இருக்கையிலே பத்தெப்படி வெப்பான்? எட்டெவெய்க்காதே.
வே : யாரடி சொன்னா?
அ : ஏது அடிகிடி! சேர்க்கைவாசனையா?
வே : இல்லை, யார் சொன்னதின்னெ?
அ : சொல்லோணுமாக்கும் சொல்லு சொல்லுன்னு! கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேறா?
வே : வீண் பழி போடாதே. பொய், பொய்.
அ : பொய் பொய்தா. நம்ம அரசரு இப்படித் தாம் பொய் பொய்யின்னிட்டு இப்போ அந்த வடக்கித்தியா ஊட்டுலேயே படுத்துக்கிட்டாரு. இங்கே எட்டிக்கூடப் பாக்கற தில்லே. நீயும் வடக்கே தலைவெச்சுப் படுக்க ஆரம்பிச் சிட்டயா? நீ யொரு தமிழெ!
வே : அல்லீம்மா! மன்னிச்சுக்கோ. இனி வடக்கெ தலை வெய்க்கிலே. தெரியாமெ வெச்சிட்டே.
அ : வாயிலே பழத்தெ வெச்சாத் திங்கத் தெரியாது. ஆம்பளய சங்கதியே இப்படித்தா. இனி நம்ம நாட்டுக்குப் புடுச்சுது சனியெ.
வே : கொஞ்சம் பேசாதிரு கண்ணாட்டி! வாய்ங் காந்திரறே.
திரை. 7. ஆ. அந்தப்புரம்
தமிழரசியும், செழியனும்.
4. பாட்டு
விண்ணுயர் முடியும் அடியும் உடைய
வேங்கட முதலா ஓங்குபன் மலையும்,
தண்ணென வொளிறும் காவிரி முதலாத்
தகுவளஞ் செய்யும் பலவுயி ராறும்,
கண்ணென வுளமும் உணர்வும் கவரும்
காடும் மலையும் கடலும் வயலும்
உண்ணென உணவும் பிறவும் உதவும்
உலகோர் புகழும் உயர்தமிழ் நாடே.
அந்தணர் வகுத்த அறமுதல் மூன்றும்
ஆணொடு பெண்ணும் அடைதர நுகரச்,
செந்தமிழ் வாணர் தாய்மொழி வளர்க்கத்,
திசைதொறும் வணிகர் பெரும்பொரு ளீட்ட,
வெந்திறல் மறவர் மெய்வலி காக்க,
விருந்தினர் தெவிட்ட, வினைபல நிகழ,
முந்திய முறையைத் தாயெனப் போற்ற
முறையொடு பொலியும் முத்தமிழ் நாடே.
தமி : செழியா! நான் உனக்காகத்தான் உயிர் வாழ்கிறேன் உன் தந்தையோ இங்கு வருவதைக்கூட மறந்து விட்டார். எந்நேரமும் ஆரியா வீட்டிலேயே இருக்கிறார். அவள்தான் இப்போ தமிழ்நாட்டரசி!
செழி : அம்மா! வருந்தாதே. நான் பெரியவனானதும் அவளை நாட்டைவிட்டு ஓட்டிவிடுகிறேன்.
தமி : என் கண்ணே! _(முத்தமிடல்)_ இனி உங்கப்பா கூப்பிட்டாலும் அவள் வீட்டுக்குப் போகாதே. ஐயா சொல்வதைக் கவனமாகக் கேள். அவர் சொல்லுகிறபடி நடந்து கொள். அவர் தான் நமக்குத் துணை.
செழி : சரியம்மா. இனி நான் அங்கு போகவில்லை. ஐயா சொல்வதைக் கவனமாகக் கேட்டுப் படித்து வருகிறேன்.
தமி : என் அறிவுள்ள தங்கம். _(முத்தம்)_
திரை. 7. இ. திரைவெளி
பாணன் பாடல்
5. பாட்டு
மனமே மயங்காதே - மதி - தியங்காதே
மனமே மயங்காதே.
முனமே அறவோர் முதுநூல் தெரியார்
மொழிதே றுதல்முறையோ-தமிழ்-முதுநெறியோ
இல்லற மென்பதோர் இனிமையின் எல்லை,
இதைவிட மக்களுக் கின்பமும் இல்லை.
நல்லறம் பிறவென நவிலுவோர் சொல்லை,
நம்பிநீ தனிமையை நாடுதல் தொல்லை. (மன)
அன்னையுந் தந்தையும் அன்பினுக் கிடமே,
அதையொழித் திடுகவென் றறைகுதல் அடமே.
பின்னையும் பிறப்பினை வெறுப்பது மடமே,
பிறப்பிறப் பியல்பெனக் கொள்மனத் திடமே. (மன)
வேலன் : மனமாவது மண்ணாங்கட்டியாவது! இவ சங்கிலி கேக்கர அவ சங்கிலியெத் தர மாட்டேங்கரா. கடையிலே வாங்கித் தந்திடலாமின்னா கையிலே காசில்லே. மனமயங்காடு என்ன பண்ணறது? தெருவிலே பாடிக்கிட்டுப் போரவனுக் கென்ன? குடும்பத்திலே ஈடுபட்டுப் பாத்தால் தெரியும், மனமயங்கிறதும் மயங்காததும்.
திரை. 8. அ. ஆரியா வீடு
ஆரியா பாடிக்கொண்டே அரசனுக்குச் சோமபானங் கொடுத்தல். வசந்தா வேலனுக்குக் கொடுத்தல்.
6. பாட்டு
ஆரியா : சோம பானமே தோன்றுமெஞ் ஞானமே
சுவைபொருந்துங் கானமே! - அன்பானமே
சுவைபொருந்துங் கானமே.
காம பாணமே கலங்குதென் நாணமே
கலைமதியின் கோணமே!-கல்யாணமே
கலைமதியின் கோணமே.
தென் : மதிமுக மாதே மனங்கலங்காதே
மதன்ரதி யென வோதே-மண் மீதே
மதன்ரதி யென வோதே.
இருவரும் : புதுமது வெள்ளம் பொருந்திய பள்ளம்
புரிந்திடுதே கள்ளம்-அன்புள்ளம்
புரிந்திடுதே கள்ளம். சோம
பாட்டு முடிந்ததும்,
ஆரியா : பிரபோ! நான் கேட்பதை மறுக்க மாட்டேளே?
தென் : நானா! மறுக்கவா! நீ கேட்பதையா! என் கண்ணே! உயிரைக் கேட்டாலும் தருகிறேன். என்ன கேள்.
ஆரியா : என் உயிரே! வேறொன்றுமில்லை. எங்கப்பா வுக்கு நம்ம ராஜியத்தில் ஒரு வேலை.
தென் : வேலை என்ன? அவரேதான் இனி இந்நாட்டுக்கு அரசர்.
ஆரியா : நான் இங்கிருக்கிறவரையிலும் அப்படி இருக்கலாம். நான் போன பிறகு?
தென் : நீயாவது போரதாவது? போரதுக்கா இங்கு வந்தாய்? இனி நீதான் இந்நாட்டு அரசி. உன்னைப் பிரிந்து நான் ஒரு நொடியும் தனித்திருக்கமாட்டேன்.
ஆரியா : என் பாக்யம். எங்கப்பாவுக்கு?
தென் : நீ கேட்பதற்கு முன்னமே நம் அரண்மனைப் புரோகிதராக ஏற்படுத்திவிட்டேன். அவர் சொற்படிதான் அமைச்சர் முதல் யாவரும் நடக்க வேண்டும். போதுமா?
ஆரியா : தங்கள் சித்தம். _(கையைக் கண்ணில் ஒத்தல்)_ வசந்தா எங்கே? _(பின்னும் குடித்தல்)._
திரை. 8. ஆ.
கிருஷ்ணய்யரும் சேஷய்யரும்.
கிரு : என்ன சேஷய்யர்வாள்! நம்ம பட்டருக்கு அடித் துட்டுதே அதிர்ஷ்டம்!
சேஷ : என்ன கிருஷ்ணய்யர்வாள்! புரோகிதர் வேலை தானே?
கிரு : என்னங்காணும் அவ்வளவுலேசா நெனச்சிட்டேள் அந்த வேலையே? நம்ம நாட்டு ராஜாங்கப் புரோகிதனைவிட மேலே காணும் இது.
சேஷ : என்னங்காணும் அப்படி? விவரமாச் சொல்லும்.
கிரு : இப்போ இந்த ராஜாங்க சபையிலே மந்திரி, சேனாதிபதி, தூதுவர், ஒற்றர் என நாலு உத்யோகஸ்தா இருக்கிறாளோ இல்லியோ? இந்தச் சபைக்கு “நாற்பெருங் குழு”ன்னு பேரு. இனிப் புரோகிதரையுஞ் சேர்த்து அது “ஐம்பெருங்குழு” எனப் பெயர் பெறுமாம். புரோகிதர் குறித்த நாளில், அவர் சொன்னபடிதான் மற்ற நால்வரும் நடக்க வேண்டுமாம்.
சேஷ : இனி எங்காகிலும் சண்டைக்குப் போற தின்னாக் கூட நம்ம பட்டர் சொன்னாத்தாம் போகணும்?
கிரு : ஆமாங்காணும் ஆமாம்.
சேஷ : அப்ப, நம்ம பட்டருதா இந்தத் தேசத்துக்கு ராஜா!
கிரு : ஆமா ஆமாம். எல்லா நம்ம ஆரியா தயவால் நடக்கிறது.
சேஷ : அவ நன்னா இருக்கணும். நீரும் ஆசீர்வதியு மோய்!
திரை. 8. இ. திரைவெளி
பலர் கேட்டுக் கொண்டுபோதல்…
பறையறைதல்
இன்றையிலிருந்து நம் தமிழ் நாட்டில் நடைபெறும் பெருநாளும், திருநாளும், மற்ற அரசியல் காரியங்களும் அரண்மனைப் புரோகிதர் குறித்த நாட்களில், அவர் குறிப்பிடும் முறைப்படிதான் நடைபெற வேண்டும். அப்படிச் செய்யத் தவறினாலோ, செய்ய மறுத்தாலோ, இக்கட்டளையை மீறினாலோ கடுந்தண்டனைக்குள்ளாக நேரிடும். இது அரசர் கட்டளை.
திரை. 9. அ. ஊர்க்கூட்டம்
பழையன் : பெரியோர்களே! பறையறைந்ததைக் கேட்டீர்களா? அரசர் ஆரியா வலையில் சிக்கி அவள் சொன்ன படியாடுகிறார். “ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திலேகண்” என்பதை ஆரியா உண்மையாக்கி விட்டாள். புரோகிதம் என்னும் புதிய வேலை எந்த அளவில் வந்து நிற்கிறது பார்த்தீர்களா?
ஒருவன் : இதென்னடா இது புதுசா இருக்கிறது!
பழையன் : ஆமாம், புதுசுதான். நமது அரசவையில் புதிதாக முளைத்திருக்கிறது இப்புரோகித முள்ளுச்செடி. இதை முளையிலே கிள்ளியெறியவேண்டும். பெரிதாகும்படி விட்டோ மானால் நமது கையில்தைக்கும்.
கூட்டம் : ஆமாம், ஆமாம்.
பழையன் : இப்புதுப் புரோகிதன் சொல்லும் நாளுக்கும், கோளுக்கும், மக்கள் வாழ்க்கைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. இதெல்லாம் பித்தலாட்டம். இது முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையேயாகும். பகைவர் படை நாட்டுக்குள் புகுந்த போது நல்லநாள் பார்த்துக் கொண்டிருந்தால் என்னாகும்? முத்துவணிகர் சொன்னார், வடநாட்டில் புரோகித ஆட்சிதான் நடக்கிறதாம். அரசனை ஆட்டி வைப்பவன் புரோகிதன்தானாம். குடிமக்களுக்கும் அரசனுக்கும் யாதொரு தொடர்பு மில்லையாம். இப்புரோகித வேலையை விட்டு வைத்தால், இங்கும் அந்த நிலை ஏற்பட்டுவிடும் என்பது உறுதி.
மாறன் : அவர் நல்லவர்.
கூட்டம் : இல்லை; இல்லை. அவன் வேண்டாம்.
பழையன் : நாம் அரசனிடம் சொல்லி, அந்த வேலை யிலிருந்து பட்டரை நீக்கும்படி செய்வோம்.
ஒரு : அந்த வேலையே கூடாது.
மற்றொருவன் : பட்டரையும் ஆரியாவையும் தமிழ் நாட்டைவிட்டே ஓட்டவேண்டும்.
ஒரு : இங்குள்ள எல்லா வடவரையுமே ஓட்ட வேண்டும்.
கூட்டம் : ஆமாம், ஆமாம்.
பழை : பொறுங்கள், பொறுங்கள். ஐயாவைக் கலந்து ஆவன செய்வோம்.
திரை. 9. ஆ.
கிருஷ்ணய்யரும், சேஷய்யரும்.
கிரு : என்ன சேஷய்யர் வாள்! தமிழர்கள் வேலையைப் பார்த்தேளா? பட்டர், ஆரியா முதல் கொண்டு நாம் ஒருவருமே இங்கு இருக்கக்கூடாதாம்.
சேஷ : அவா அவ்வளவுக்கு வந்துட்டாளா?
கிரு : ஆமாம். அந்தப் பழையன் இல்லை? அவன் பண்ணறது தான் அத்தனையும்.
சேஷ : போங்காணும்; அந்தப் பயலால் என்னாகும்? மாறன் நம்ம பக்கம் இருக்கிறான். நாம் சொன்னா சொன்னபடி ஆடறான். அவன் பெரிய பிரபு. ஜனங்க அவஞ் சொல்றதைக் கேப்பாளா? இந்தப் பயலுக சொல்றதைக் கேப்பாளா?
கிரு : அப்படி நினைக்கக்கூடாது. அவனுக்குப் பணமிருக்கிறது. இருந்தென்ன செய்கிறது? இவனுக்குச் செல்வாக்கு அதிகம். இவஞ் ஜனங்களுக்காகப் பாடுபட்டு வர்ரான். இவனை இப்படியே விட்டுண்டு வந்தா நம்ம பொழப்புக்கு ஆபத்து வந்துடும்.
சேஷ : அதுவும் நிஜந்தான். சிறுதுரும்பும் தலைத் தண்ணி யெத்தடுக்கும். ஆனால், நம்ம பட்டர் லேசுப்பட்டவர் அல்ல. இவன்களை ஒடுக்கத் திட்டம் போட்டு வர்ரா நாமும் நம்மாலான ஒத்தாசையைச் செய்யணும்.
திரை. 10. ஆ.
மதிவாணரும், பழையனும், மதிவாணர் தனியாக
மதி : என்ன வரவர அரசன் நிலைமை இவ்வளவு மோசமாகப் போய்விட்டதே. தமிழரசியைத் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை. அரசியிடத்திற்கு வருவதையே நிறுத்தி விட்டான். தேவியின் நிலை இரங்கத்தக்க நிலையாகவன்றோ இருக்கிறது? அந்த ஆரியாவின் மாயவலையில் இப்படி மாட்டிக் கொள்வா னென்று நான் ஒருபோதும் நினைக்க வில்லை. இது இப்படி யென்றால், தமிழ் நாட்டில், தமிழர் பண்பறியாத அந்த ஆரியப் பட்டர் வைத்ததே சட்டமாகப் போய்விட்டது. குடிமக்கள் பேச்சை அரசன் காதில் போட்டுக் கொள்வதே இல்லை. குடிகளுக்காக அரசர்? அரசுக்காகக் குடிகளா? இதோடா? வட நாட்டினர் தமிழ் நாட்டுக்கு வந்தவண்ண மிருக்கின்றனர். பொருளற்ற புலைவேள்வி, புறநாட்டிலிருந்து அகநாட்டுக்குள் உலவத் தொடங்கி விட்டது. தமிழர்களைவிட ஆரியர் களுக்குத் தனிப்பட்ட சலுகைகள் வேறு!
(பழையன் வந்து)
பழை : ஐயா, வணக்கம்.
மதி : பழையா! வாரும், உட்கார்.
செழி : பெரியீர்! பட்டர் வேலையைப் பார்த்தீர்களா?
மதி : பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். என்ன அது?
செழி : தமிழ் நாட்டில் ஆயிரமாயிரம் வடநாட்டு ஆரியர் குடியேறி வருகின்றனர். வரியில்லாமல் இனாமாக அவர்களுக்கு நிலங்கொடுக்கப்படுகிறது. இதுவும் அரசன் கட்டளையாம். இதை விட்டுக் கொண்டே இருந்தால் முடிவு என்னாகும்?
மதி : முடிவு என்னாகும்! தமிழ்நாடு ஆரிய மயமாகும். இதை நான் எவ்வளவோ தடுத்துப் பார்த்தேன். ‘வாழ வழியற்று வருபவர்களைத் தடுப்பது முறையல்ல; தடுப்பது ’விருந்தோம்பல்’ என்னும் தமிழ்ப்பெருங் குணத்திற்கு முரண் பட்டது. சும்மா கிடக்கும் நிலங்களைத் தானே தருகிறோம்’ என அரசன் மழுப்பி விட்டான். பட்டர் ஆட்டிவைக்கும் பம்பரந் தானே அரசன்?
பழை : இதோடு நின்றதா? ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஆரியன் புரோகிதனாக இருப்பானாம். ‘நல்லது, பொல்லாதது’ அவன் குறித்த நாளில், அவனைக் கொண்டுதான் செய்ய வேண்டுமாம். அவன் பிழைப்புக்கு வேண்டியதை அவ்வூரினர் கொடுக்க வேண்டுமாம். இது என்ன கொடுமை! வந்தேறிகளுக்கு நம் நிலத்தைச் சும்மா கொடுத்ததோடு, சும்மா வைத்துக் கொண்டு சோறும்போடுவதா?
மதி : நான் இதையும் தடுத்தேன். நாட்டு மக்களிடம் நல்ல காரியங்கள் ஒழுங்காக நடக்க இந்த ஏற்பாடாம். பழையா! அரசன் வரவர என் சொல்லையும் கூடக் கேட்பதில்லை. மறுத்துப் பேசுவதில்லையேயல்லாமல் என் சொற்படி நடப்பதில்லை. பல அரசியல் காரியங்கள் இப்போது எனக்குத் தெரியாமலே நடந்து வருகின்றன. எல்லாம் அந்த ஆரியாவால் வந்த கேடு. ஆரியா என்னும் கயிற்றைக் கொண்டு அரசனாகிய பாவையை ஆட்டிவைக் கிறார் பட்டர். தமிழரசியின் நிலையைக் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. இதையெல்லாம் பற்றித்தான் எண்ணிக் கொண்டி ருந்தேன். நம் இளவரசனுக்கும் ஆண்டு 15 ஆகிவிட்டது. அவனைக் கொண்டு தான் ஆரிய இருளை அகற்றவேண்டும்.
பழை : இந்த அரச கட்டளையை?
மதி : மறுக்க வேண்டியதுதான். ஆனால், இப்போது மறுப்பதால் பயனில்லை. தமிழர்களுக்குள் சச்சரவுதான் உண்டாகும். அது கூடாது என்பதுதான் எனது ஆசை. மாறன் என்ன சொல்கிறான்?
பழை : அவன் என்ன சொல்வான்? அவன்தான் பட்டர் கையாளாகி விட்டானே!
மதி : அதனால்தான் சொல்கிறேன்; ஊர் இரண்டு பட்டால் அவர்கள் வேலை தட்டுத் தடையில்லாமல் நடக்கும். நமக்குள்ளே மாறுபட்ட கருத்து வளரவிடக் கூடாது. அதை மட்டுப்படுத்துவதில் நம் முழுக்கவனத்தையும் செலுத்தி வரவேண்டும். பிரித்தாள்வதில் ஆரியர்கள் மிகவும் கெட்டிக் காரர்கள். நம்மவர்களைக் கொண்டே நம்மை அடக்கியாள் வதுதான் ஆரியர் குலத்தொழில். வடநாட்டுப் பழங்குடிகளை இப்படித்தான் வென்று அடிமை கொண்டார்கள். இப்போது நாம் குளக்கரைக் கொக்குப் போல் இருக்க வேண்டும். ஞாலங் கருதுபவர் காலங்கருதியிருப்பர். காலங் கருதிச்செய்தால் ஞாலங் கருதினுங் கைகூடும். காலமறிந்து செய்தால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை, என்பன அறிவறிந்தமைந்த ஆன்றோர் மொழிகள்.
பழை : சரி ஐயா. தமிழர் வாழ்வு தங்கள் கையில்தான் இருக்கிறது.
தென் : உங்கள் ஒத்துழைப்பிருந்தால்?……
திரை. 10. அ. வேள்விச்சாலை
அரசனும் ஆரியாவும் மணமக்கள்போல் அலங்கரிக்கப்பட்டு வீற்றிருத்தல். புரோகிதர் மந்திரம் ஓதல். ஆடுவெட்டல், நெய் ஊற்றல். சடங்குகள். புலவு ஆன பிறகு புலவுண்டல். மதுவருந்தல். ஆரியர் நிறைய இருத்தல். ஆரியப் பெண்கள் “சோமபானமே” என்று பாடிக் கொண்டு மதுக்கொடுத்தல். சிலர் வெறுப்புடன் எழுந்து போதல். புரோகிதர்களுக்கு நிறையப் பொருள் கொடுத்தல்.
திரை. 10. இ. திரைவெளி
இருவர் பேசிக் கொள்ளுதல்
மற் : என்ன தவளை கத்துகிறமாதிரி கத்துகிறான்கள்? நமக்கொன்றும் விளங்கவில்லையே? தமிழில் சொன்னா லென்ன?
ஒரு : அதுதான் போகட்டும், ஆடுவெட்டுவதும், குடிப் பதும், இதுதான் வேள்வியா? நல்ல வேள்வி! கொலை வேள்வி! குடி வேள்வி!
ஒரு : இதனால்தான் நல்ல மழை பேஞ்சு, நாடு செழிக்குமாம்.
மற் : செழிக்கும், செழிக்கும்!
ஒரு : அந்த வடக்கித்தியானுக் கெல்லாம் எவ்வளவு பணம்! இதென்னமோ? நம்ம பொருளை நாசமாக்கி, நாட்டைக் கெடுக்கச் செய்யற சூழ்ச்சி!
மற் : அந்த வடக்கித்திப் பெண்களுக்கு மான வெட்க மிருக்குது?
ஒரு : இருக்குது, இருக்குது!
மற்ற : நம்ம அரசியை விட்டுட்டு அந்த வடக்கித்தி யாளை அரசன் பக்கத்திலே உட்கார வெச்சுக்கிட்டாரு பாத்தியா!
ஒரு : நம்ம அரசி இதிலே வந்து உட்காருவாங்களா என்ன? என்னமோ அப்பா! இந்த ஆரியரால் நம்ம பழக்க வழக்கமெல்லாங் கெட்டுக்கிட்டே வருது. நம்ம பழையஞ் சொல்றது நெசமாத்தான் இருக்கிறது. _(போக)_
கிருஷ்ணய்யரும், சேஷய்யரும்
கிரு : என்ன சேஷய்யர்வாள்! நாட்டுப்புறங்களிலே, நாம் கண்டுங்காணாதும் செய்து வந்த யாகத்தை அரசனே செய்யும்படி செய்துவிட்டோம். ஒரு காலத்தில் தமிழ் நாட்டில் இதற்கு எவ்வளவு எதிர்ப்பு! தந்திரத்தால் எது தான் ஆகாது? எப்படியாவது ஜாதிபேதத்தைப் புகுத்திவிட வேண்டும்.
சேஷ : அப்புறம் தமிழரும் நம்ம வேலையைச் செய்ய ஆரம்பிச்சிட்டாலோ!
கிரு : வேதசாஸ்திரத்தை நாம் சொன்னாத்தானே? நம்மவாதான் ஓதுவிக்க வேண்டும். தமிழர்கள் ஓதுவது பாவம் என்று கதை கட்டினாப் போகிறது.
சேஷ : ஆமாம்; எதைச் சொன்னாத்தான் தமிழர்கள் கேக்க மாட்டேனென்கிறா. பார்க்கலாம்.
திரை 11. அ. அந்தப்புரம்
_தமிழரசி கிளியை வைத்துக் கொண்டு பாடுதல். செழியன் இடையே வந்து நின்று கேட்டல்._
7. பாட்டு
கிளிக்கண்ணி
வாழ்ந்தநல் வாழ்வு மென்ன?
வழிவழி வந்த தென்ன?
தாழ்ந்தவித் தாழ்வு மென்ன - கிளியே!
தமிழ்பயின் றானதென்ன?
ஆரியா இங்கு வர
அரசர் முதன்மை தர
ஓரியாய் வாழலானேன்-கிளியே!
உரிமை யிழக்க லானேன்.
ஆடை யணியி ழந்தேன்
அரசி நிலைது றந்தேன்
பாடும் பரிசிழந்தேன் - கிளியே!
பணிப்பெண் நிலைய டைந்தேன்.
ஓயாக் கவலை யினால்
உடல் நலங் குன்றியதால்
தோயாத் தயிர்போலானேன் - கிளியே!
துயர்போம் வழியுங்காணேன்.
செழி : அம்மா! வருந்தாதே. நானிருக்க உனக்கேன் கவலை? அந்தச் சிறுக்கியை மயிரை அறுத்து வடக்கே துரத்து கிறேன். நான் ஒரு வீரத்தமிழ்த் தாய்க்குப் பிறந்த வீரத் தமிழ்மகன் என்பதை நீ மறந்துவிடாதே.
தமி : _(அணைத்துக்கொண்டு)_ இல்லை கண்ணே! நான் எனது நிலைக்காகக் கூட வருந்தவில்லை. நம் நாட்டுமக்கள் சொல்லையே அரசர் புறக்கணித்து வருவதும், அவர்களை வெறுப்பதுந்தான் என் மனத்தை வருத்துகிறது.
செழி : அம்மா! நம் உழவர்தலைவன் பழையன் இருக்கும் போது அவர்களை ஒன்றுஞ் செய்ய முடியாது. அவர்களைப் பற்றிய கவலையை விடு. அப்பழையனுந்தான் இல்லை, நம்ம ஐயா ஒருவர் போதாதா?
அல்லி : அம்மா! ஐயா வருகிறார். _(மதி வாணர் வருதல்)_
செழி : ஐயா! வணக்கம். அம்மாவைப் பாருங்கள். எப்போதும் அழுது கொண்டே இருக்கிறாள்.
மதி : தமிழரசி! ஏம்மா! செழியன் இருக்கும்போது உனக்கென்னம்மா குறை? மனக்கவலை நலக்குறைவம்மா!
தமி : என்னைப்பற்றி நான் கவலைப்படவில்லை. நமது நாட்டு மக்களைப்பற்றித்தான்; அவர்களின் நிலையை நினைந்து தான் அழுதேன்.
மதி : நடக்கிறது நடக்கட்டும். ஒன்றும் குடி முழுகிப் போகவில்லை. நாட்டு மக்கள் செழியனிடத்தில் அளவற்ற அன்புடையவர்களாய் இருக்கிறார்கள். இன்னும் நாலைந் தாண்டில் செழியன் பெரியவனாகி விடுவான். அப்போது அவள் கொட்டம் அடங்கும். நாடு பழைய நிலையை அடையும். உன் துன்பமும் தொலையும். மனத்தைத் திடப்படுத்திக் கொள்ளம்மா! பெண் மக்கள் பொறுமையைப் பூணாகப் பூண்டவர்கள். அதிலும் நீ முற்றக் கற்றுணர்ந்தவள். வளர்கிற சிறுவனுக்குமுன் உன் வருத்தத்தைக் காட்டிக் கொள்ளலாமா? கொஞ்சம் பொறுத்திரு.
தமி : எல்லாம் தங்கள் பெருந்தொண்டு.
மதி : பார்ப்போம்; வருகிறேன்.
திரை. 11. ஆ.
தென்னவன், பட்டர், கிருஷ்ணய்யர்.
பட்டர் : அரசே! இதைப்பற்றித்தாங்கள் யோசிக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு தொழில் செய்வோரும் அத்தொழிலையே செய்து வந்தால்தான் தொழில் வளர்ச்சி யடையும். அப்பன் தொழிலை மக்கள் லகுவில் செய்து பழகிக் கொள்வர். “குலவித்தை கல்லாமல் பாதிவரும்.” மேலும் ஒரே தொழில் செய்வோர்க்
குள்ளேயே கொண்டு கொடுத்தால் பெண்களும் தொழிலுக்குத் துணையாக இருப்பர்.
கிரு : ஆமாம் அரசே! வேறு தொழிலாளி பொண்ணெக் கல்யாணம் பண்ணினா அவளுக்குப் புருஷன் தொழில் தெரியா தல்லவா?
பட்டர் : ஆமாம்.
தென் : இப்போதே நாம் பிறப்பிக்கும் கட்டளை களை நாட்டு மக்கள் எதிர்த்து வருகின்றனர். இதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவா போகின்றனர்?
பட்டர் : நாட்டு மக்கள் எதிர்க்கிறார்கள் என்று பார்த்தால் அரச காரியம் ஒருபோதும் நடைபெறாது. எருத்தைக் கேட்டா பொதி வைப்பது, நாம் நாட்டுக்கு நல்லது தானே செய்கிறோம்? நாட்டு மக்களுக்கு என்ன தெரியும்? நாட்டு நலத்தைக் கவனிப்பது அரசர் வேலையா? குடிகள் வேலையா?
தென் : நமது வேலைதான்.
பட்டர் : ணஎதற்கும் முதலில் எதிர்ப்பு இருந்துதான் இருக்கும். முழுவதும் நன்மையென்று தெரிந்தாலுங்கூடச் சிலர் எதிர்க்கத் தான் செய்வார்கள். இது மக்கள் இயல்பு. அதை அடக்கினால், பின்னர் அவர்களே அது நன்மையென்று தெரிந்து வழிக்கு வந்து விடுவார்கள். இதுதான் நாட்டு நடப்பு. இது அரசியல் தந்திரமும் ஆகும்.
கிரு : ஆமாம், அரசே.
பட்டர் : எங்கள் நாட்டைப் பாருங்களேன். ஆட்சி முறையிலும், அறிவிலும் சிறந்தவனான ‘மனு’ என்னும் அரசன் இச்சாதி முறையை ஏற்படுத்தினான். அன்று முதல் இன்றும் வடநாட்டில் அம்முறைதான் நடந்து வருகிறது. எங்கள் நாட்டின் சிறப்புக்கே அதுதான் காரணம். இச்சாதி முறையை நிலைநாட்டி விட்டால் மக்கள் பல பிரிவாகப் பிரிந்து வாழ்வார்களாதலால், நாம் எதைச் சொன்னாலும் எதிர்க்காமல் நடந்து கொள்வார்கள். இக்குலத் தொழில் மூலம் தொழிலும் விருத்தியாகும்.
தென் : ஆமாம், உண்மைதான். எதற்கெடுத்தாலும் நாட்டு மக்களைக் கேட்டுச் செய்யும் தொல்லையும் அப்போது தொலையும்.
கிரு : எங்கள் நாட்டில் பாருங்களேன். அரசர் சொல்வதை யார் தட்டுகிறார்கள்? அவரவர் பாட்டில் அவரவர் வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
தென் : சரி.
திரை 11. இ. திரைவெளி. பறையறைதல்
இனிமேல் அந்தந்தத் தொழில் செய்வோர் அந்தந்தத் தொழிலையே தான் செய்யவேண்டும். அந்தந்தத் தொழிலாளர்களுக்குள்ளேயே தான் மணந்து கொள்ள வேண்டும். இத் தொழில் வளர்ச்சித் திட்டத்தை மீறுவோர் தண்டனைக் குள்ளாவர். இது அரசர் ஆணை.
வேலன் : அடேயப்பா! நம்மெப் புடுச்ச சனியனே தொலஞ்சுது. அந்த வடக்கித்தியானுக நம்ம வேலைக்கு ஒலெ வெச்சிடப் பார்த்தானுக. நம்ம அரசர் நல்ல அரசர். இனி எந்தப் பயங்கொ நமக்குப் போட்டியாக வரப்போறானுக. இனி நாம வெச்சதுதான் சட்டம்! நம்ம வேலையே நம்ம புள்ளைகளுக்குங் கிடைக்கும். எவ்வளவு நல்ல ஏற்பாடு! இதையுங்கூட அந்த வாழாவெட்டிப் பசங்கொ எதிர்த்தாலும் எதிர்ப்பானுக. அவுங்களுக்குப் பகுத்தறிவு இருந்தாத்தானே? இவ்வளவெல்லாம் நமக்கு நல்லது செய்யற பட்டரையே வேண்டாமென்கிறவனுக வேறு என்னதாஞ் சொல்ல மாட்டானுக. மடயனுக.
திரை 12. அ. ஊர்க்கூட்டம்
தமிழ் வாழ்க! தமிழ்ப் பண்பாடு வாழ்க! அடக்கு முறை ஒழிக! பழையன் முன் சொல்ல யாவரும் வாழ்க எனல்.
பழை : பழந்தமிழ் மக்களே! பார்த்தீர்களா அரசன் போக்கை? பட்டர் ஆட்டிவைக்கும் கைப்பாவையாகி விட்டார். நமது வாழ்க்கைக்குப் புறம்பான நாளும் கோளும் பார்க்கச் சொன்னார். தமிழ் மரபுக்கே ஒவ்வாத வேள்வியைச் செய்து பொருளைப் பாழாக்கி வருகிறார். வட நாட்டாரி யர்களை ஆயிரமாயிரமாகக் குடியேற்றி, அவர் களுக்குத் தமிழ் நிலத்தை வரியில்லாமல் இனாமாகக் கொடுத்து வருகிறார். ஊருக்கொரு ஆரியன் சும்மா இருந்து கொண்டு உண்டு கொழுக்கச் செய்துள்ளார். இவ்வளவும் போதாதென்று இப்போது நமது ஒற்றுமையைக் குலைக்கும் அந்தப் பட்டர் திட்டத்திற்கும் உடன்பட்டு விட்டார். அந்தந்தத் தொழிலையே செய்ய வேண்டுமாம். இதுதான் ஆரியச் சாதி முறை. இதற்கு ஒத்துக் கொண்டால் தமிழர் என்னும் ஒரு இனமே உலகில் இல்லாமல் அழிந்தொழிந்து விடும்.
ஒரு : இதற்கொருவரும் இணங்கக் கூடாது.
மற் : பட்டர் முதல் எல்லா வடவரையும் தமிழ் நாட்டைவிட்டு உடனே துரத்த வேண்டும்.
ஒரு : ஆரியாவையுந் துரத்த வேண்டும்.
கூட்டம் : ஆமாம், ஆமாம்.
மாறன் : அரசன் செய்வதற்கு அவர்கள் என்ன செய் வார்கள்? எய்தவனிருக்க அம்பை நோவதால்?
ஒரு : போதும், ஆரியர்க்கு மேற்போட்டுக் கொண்டு வந்தது.
மற் : வெளியேபோ.
கூட்டம் : போ, போ.
பழை : பொறுங்கள், பொறுங்கள். (மாறன் முதலிய சிலர் போதல்)
கூட்டம் : தொலையட்டும்.
பழை : பொறுங்கள், பதட்டம் கூடாது. அமைதியைக் கைக்கொள்ளுங்கள். இனி நாம் எதிர்ப்பதில் பயனில்லை. மாறன் போன்ற பலர் ஆரியர்க்கு அடிமையாகி விட்டனர். அவர்கள் பட்டர் செய்வதை ஆதரித்துத்தான் பேசுவார்கள். அடிமை மனப்பான்மையுடையோர்க்கு இனப்பண்பாட்டைப் பற்றிய கவலையே இருக்க முடியாதல்லவா? இளவரசர் பெரிதாகும் வரையிலும் அவர்களோடு சேராது நாம் தனித்திருந்து, தமிழ்ப் பண்பாட்டைக் காத்து வருவோம்.
ஒரு : ஆம், அவர்களைத் தலைமுழுகிவிட்டுத் தனியாகவே இருந்து விடலாம்.
மற் : நாம் தனித்து வாழ்ந்தால் அவர்கள் வைத்ததே சட்டமாகி விடாதா? தீமையை எடுத்துக் காட்டுவார் யார்?
பழை : கொள்கையில் மட்டுந்தானே தனித்திருக்கப் போகிறோம்!
ஒரு : ஆமாம், நல்ல முடிவுதான்.
கூட்டம் : அப்படியே செய்வோம்.
திரை 12. ஆ.
மாறனும் கிருஷ்ணய்யரும்
கிரு : என்ன பண்ணையாரே! அவாளெல்லாம் தனியாக இருந்து என்ன செய்யப் போகிறாள்? இருக்கட்டுமே அப்படியே தான், நமக்குத் தொல்லையில்லாமல்.
மாற : இல்லையுங்கய்யரே! உங்களுக்கென்ன நீங்கள் சொல்றீர்கள், எங்கள் இனத்தாரல்லவா?
கிரு : இல்லை, நாமாபோகச் சொன்னந் தனியாக? அவாளே தானே போனா? அதிருக்கட்டும், அந்தச் சாதியாசார மிருக்கிறதே அது கடவுள் கட்டளைப்படி ரிஷிகளால் ஏற்படுத்தப் பட்டது. ரிஷிகளால் சொல்லப்பட்ட சாஸ்திரங்களின் சாரத்தை மனு சாதியாசார அரசியல் சட்டமாக்கினார்.
மாற : ஓகோ, அப்படியா?
கிரு : ஆமாம், பின்னே மனுஷாளாகப் பார்த்துச் செய்ததல்ல. யாகங்கள் மாமிசம் புசிப்பதற்காகவும், மது உண்பதற்காகவும் செய்யப்படுகின்றன என்பது தப்பு. யாகம் தேவர்களுக்கு உகந்தது. அதனால், தேவர்கள் மகிழ்வார்கள். நாடு செழிக்கும். நன்மை பல ஆகும்.
மாறன் : இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?
கிரு : எங்கள் முன்னோர்கள் தேவலோகத்திலிருந்து வந்தவர்கள். அதனால்தான் எங்களுக்குப் ‘பூத்தேவர்’ என்னும் பெயர் வழங்கிவருகிறது. எங்கள் தாய்மொழி ‘தேவபாஷை’ என்று வழங்கி வருகிறது. எங்கள் முன்னோராகிய ரிஷிகளெல்லாம் முன்பு தேவர்களோடு பேசி வந்தார்கள்.
மாறன் : ஓகோ! அப்படியா? வருகிறேன். _(கிருஷ். இடதுகை எடுத்தல்)_
(மாறன்போக. ஒருவன் வந்து)
ஒரு : என்னடா எழவு, சகுனத்தடை! _(திரும்பிப் போதல்)_
திரை. 13. அ. அரண்மனை
தென்னவனும், மதிவாணரும்.
தென் : அவர்கள் இனி எக்காரணங் கொண்டும் மற்றவர்களோடு சேரக் கூடாது. அப்படியே தொலை யட்டும். எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு!
மதி : உழவர் பெருமக்களாகிய அவர்கள்தானே நாட்டின் உயிர் நாடி! அவர்களைப் புறக்கணிக்கக் கூடாது.
தென் : நாமா புறக்கணிக்கிறோம்? அவர்கள்தானே நம்மைப் புறக்கணித்தனர்? அரசன், குடிகள் என்னும் அத்தே இல்லையே? நாள் கோளெல்லாம் பொய்யா? நாட்டுக்கு நலந்தரும் வேள்வியைக் கூடவா மறுப்பது?
மதி : இவ்வளவு காலமாய் நாம் நாள் கோள் பார்த்தா காரியம் செய்து வந்தோம்? இவ்வுலகத்துக்கே நாகரிகப் பள்ளியாகிய தமிழகத்துக்கு அவையெல்லாம் புறம்பானவையே. ஏன்? மேனாட்டினரும், சீனரும் வேள்வி செய்கின்றனரா என்ன? சகுனம் நம் காரியத்துக்கே முட்டுக் கட்டையாய் இருந்து வருகிறது.
தென் : அது போகட்டும்; சாதிப்பாகுபாடு கூடவா கெட்டது?
மதி : பின்னென்ன நல்லதா? ஒற்றுமைக்கு உலை வைக்கச் செய்த சூழ்ச்சி யல்லவா அது? இப்போது நாடு இரண்டு பட்டுப்போக வில்லையா? இன்னும் சாதி வேற்றுமை வேரூன்றினால் நம் நாடு என்னாகும்?
தென் : பட்டர் கூடாது என்கிறார்களே, அவர் என்ன செய்தார் இவர்களுக்கு?
மதி : அவரால்தானே இவ்வளவும்!
தென் : பட்டரை நாம் இங்கு வைத்திருப்பது வட நாட்டுத் தொடர்புக்காகவே. ‘வடவர் இங்கு இருக்கக் கூடாது’ என்பதும், ‘வடநாடு, தென்னாடு’ எனப் பிரித்துக் கூறுவதும், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் தமிழ்ப் பண்பாட்டுக்கு மாறுபட்ட
தல்லவா?
மதி : ‘பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்’ என்ற தமிழ்ப் பண்பாட்டுக்கு நேர்மாறானது சாதி வேற்றுமை. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பது, ஒருவர் மற்றொருவர் மேல் ஆதிக்கம் செலுத்துவதற்கு ஒரு சிறிதும் பொருந்தாது. ஆதிக்க மனப்பான்மை யற்ற தமிழ்ப் பண்பாட்டுக்கே அது பொருந்தும். ‘ஒன்றே குலம்’ என்பதற்கும் இச்சாதி வேற்றுமை மாறு பட்டதாகும்.
தென் : வடவாரியரைப் போலவே நாமும் இருப்பது வடநாட்டுத் தொடர்புக்கு ஏற்றதல்லவா?
மதி : சிலர் வாழப் பலருழைக்கும் ஆரியச் சாதிமுறை ஒழிந்தால், ‘வட, தென்’ என்னும் எதிர்ச் சொற்களே ஒழிந்து விடுமல்லவா?
தென் : ஒரு சிலருக்காகப் போட்ட சட்டத்தை மாற்றுவதா?
மதி : அப்புறம் உமது விருப்பம்!
திரை. 13. ஆ.
தமிழ்ப் புலவரும், வடமொழிப் புலவரும். தமிழ்ப் புலவர் குடுமி, சைவக்கோலம். ஆரியப் புலவர் பூQல் முதலியன.
த.பு : எங்கள் தாய் மொழியாந் தமிழ் மொழி பழமை யானது; இனிமையானது; எண்ணிறந்த இலக்கிய இலக்கணங்களை உடையது.
வ.பு : எங்கள் சமஸ்கிருதத்திலிருந்து பிறந்ததுதானே உங்கள் தமிழ்?
த.பு : அதிலிருந்து பிறந்தாலும், அதற்குச் சமமானது.
வ.பு : எங்கள் ஆரியம் தேவ பாஷை. உங்கள் தமிழ் மனுஷ பாஷை. எப்படி அதற்குச் சமமாகும்? அதோடு, உங்கள் தமிழில் ஏதோ சில பாடல்களைத் தவிர வேறு என்ன இருக்கு? வடமொழியில் வேத வேதாங்க உபநிஷத ஆகம தர்ம சாஸ்திர புராண இதிகாசங்கள், அடேயப்பா! எத்தனை நூல்கள்?
த.பு : தொல்காப்பியம்?
வ.பு : வடமொழி ஐந்திரத்தின் மொழி பெயர்ப்புத் தானே?
த.பு : திருக்குறள்?
வ.பு : சாணக்கியர் அர்த்தசாஸ்திரத்தைப் பார்த்து எழுதினதுதானே? ஒன்றேயாகிலும் தனித்தமிழுண்டோ? சும்மா அளக்கிறீரே! சமஸ்கிருதத்திற்குச் சமமாம் தமிழ்! _(கைதட்டல்)_
திரை. 14. அ. அந்தப்புரம்
தமிழரசி, செழியன், தென்னவன்.
தமி : அப்பா செழியா! நாட்டு மக்களில் முதன்மை யானவர்கள் தனியாக ஒதுக்கப்பட்டுவிட்டார்கள். அவர்களைத் தொடுவதுகூடக் குற்றமென்பது உன் தந்தை கட்டளை. சாதி வேற்றுமையால் நாடு ஒற்றுமை இழந்துவிட்டது.
செழி : அம்மா! வருந்தாதே. விரைவில் நாட்டின் நலிவைப் போக்கி விடுகிறேன். இப்போதே நாட்டு மக்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள். ஆனால், ‘கொஞ்சம் பொறுங்கள்’ என்று தடைசெய்து கொண்டு வருகிறார் ஐயா.
தமி : குழந்தாய்! தடை அல்ல. காலத்தை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரால்தான் நாம் நன்னிலையுற முடியும். அவர் சொல்கிறபடி நட.
செழி : ஐயா சொல்லை யார் தட்டுபவர்?
தமி : கண்ணே! செழியா! நம் நாட்டு மக்கள் மட்டும் உன் தந்தைக்குப் பகைவர்களல்ல. தமிழ் நாட்டின் வடக்கிலும், மேற்கிலும் உள்ள தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்னும் நாடுகளை ஆண்டுவரும் உன் சிற்றப்பன்மார்கள் வடவர் பேச்சைக்கேட்டு நம்மோடு பகைகொண்டுள்ளனர். நம்மைப் பிறராகவே எண்ணி வருகின்றனர். ஓரினம் என்பதைக்கூட மறந்து விட்டார்கள். இதையெல்லாம் உன் தந்தை கவனிப்பதே இல்லை. எல்லாம் அவளால்!
செழி : அம்மா! எதற்கும் ஐயா இருக்கிறார். நீ எதைப் பற்றியும் கவலைப்படாதே. இவ்வளவு நாளாய்ப் பொறுத்தது பொறுத்தாய். இன்னும் கொஞ்ச நாளைக்குப் பொறுத்துக் கொண்டிரு.
தமி : மகிழ்ந்தேனடா கண்ணே! (முத்தம்)
செழி : ஐயா எதற்கோ வரச்சொன்னார். போய் வருகிறேன்.
தமி : இனி நம்ம கவலை ஒழிந்தது. (அரசன் வருதல்)
தென் : ஏன் தனியாக ஒருத்தியும்?
தமி : பின் யார் எனக்கு?
தென் : நான்?
தமி : ஏன் அவள்மேல் வெறுப்புத் தட்டிவிட்டதா?
தென் : ஏன்? உன்னை அவளுக்குச் சமமாக எண்ணி வந்ததற்காகவா? இதோ போகிறேன். _(போதல்)_
திரை. 15. அ. கோயில்
_வழிபாடு நடத்தல், மந்திரம் ஓதல்._
முன்னால் பிராமணர், அதன் பின் பூணூHலணிந்த வைசியர், அதன் பின் பிறர். ஒரு மொட்டைப் பார்ப்பினி ஒரு சிறுமியுடன் வருதல். சிறுமி 6,7 வயது.
சிறுமி : ஏம்பாட்டி! ஏ! அவாளெல்லா அங்கே நின்னி
ண்ட்ரிக்கா?
பாட் :அவாளெல்லா சூத்திராள். இங்கே வரக்கூடாது.
சிறு : ஓகோ! நம்ம வாசக்காரியோடெ சேர்ந்தவாளா?
பாட் : ஆமா. _(முன்னால் சென்று நிற்றல். தீபாராதனை. வரிசையாகக் கொடுத்தல். பிராமணர் திருநீறு எடுத்துக் கொள்ளல். மற்றவர்க்குக் கொடுத்தல். அவர்கள் காசு போடுதல்.)_
பாட்டு
சாமியார் : சங்கநிதி பதுமநிதி யிரண்டும் தந்து
தரணியொடு வானாளத் தருவரேனும்
மங்குவார் அவர் செல்வம் மதிப்பே மல்லேம்
மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்;
அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராயின்
அவர்கண்டீர் யாம்வணங்கும் கடவு ளாரே.
(கோயிலிருந்து சாதிவாரியாகப் போதல். காசு போடுதல்).
பாட்டி : அடி சூத்ராள் வர்ரா, விலகி வாயேண்டி.
(ஒரு பிராமணனை ஒரு செட்டியார் குனிந்து கும்பிடல். ஒரு செல்வர் பின் தேங்காய் பழத்தட்டத்துடன் ஒரு பிராமணன் போதல்.)
10. பாட்டு
பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்குமென் றேமுனம்
பேசிய வள்ளுவன் பேச்சதும் பொய்யோ?
சிறப்பிக்கும் தொழிலலால் வேற்றுமை யில்லாச்
செந்தமி ழினமின்று சிதைந்ததும் பொய்யோ?
சீரிய ஒருகுலைக் காயென இன்பச்
செந்தமிழ்ப் பண்பினால் இருந்தது முனமே;
ஆரியச் சூழ்ச்சியால் ஆயிரங் குலமாய்
ஆயின தந்தோ! அருந்தமி ழினமே!
தினைவிதைத் தவன்தினை யறுப்பதும் பொய்யே!
திறமுடை யவன்தினை யறுப்பதும் மெய்யே!
வினையெனப் புகல்வது வீணர்கள் பேச்சே!
வெற்றுரை களைநம்பி வெம்பிட லாச்சே!
_(சிலர் உற்றுக்கேட்டு வருத்தத்துடன் செல்லல்)_
திரை. 16. அ.
பழையனும், மதிவாணரும். மதிவாணர் எழுதிக் கொண்டிருத்தல். பழையன் வந்து,
பழை : ஐயா! வணக்கம்!
மதி : வாரும். உட்காரும். பழையா! தமிழ்ப் பண்பாடு உங்களைத் தமிழர்களிலிருந்து வேறாக ஒதுக்கி வைத்துவிட்டது பாவம்! விரைவில் உங்களுக்கு விடுதலை கிடைக்கும்.
பழை : ஐயா! நாங்கள் எங்களுக்காக வருந்தவில்லை. நம் தமிழரசியின் நிலைக்காகத்தான் வருந்துகிறோம். என்று அந்த ஆரியா தமிழ் நாட்டை விட்டுத் தொலைவாளோ? தமிழரசி அரசியாவாளோ! அன்று எங்கள் நிலையும் பழைய நிலை ஆகிவிடும்.
மதி : நானும் அதற்காகத்தான் பாடுபட்டு வருகிறேன். விரைவில் ஆகுக.
பழை : வெளிநாட்டானொருவன் அடிக்கடி வட நாட்டில் புகுந்து கொள்ளையிட்டு வருகிறானாம். நம் நாடு இருக்கும் சீர்கெட்ட நிலையில் ஒருவேளை இங்கும் அக்கொள்ளைக் கூட்டத்தான் வந்தால் என்னாகும்?
மதி : என்னாகும் என்பதைச் சொல்ல முடியாது. எதற்கும் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். உணவுப் பொருள்கள் நல்ல பாதுகாப்பில் இருக்கட்டும்.
ப . இ. திரைவெளி
உள்ளே கலகம். மக்கள் மூட்டை முடிச்சுடன், ‘ஐயோ படைவருது, ஐயோ படை வருது’ என ஓடுதல். ஒருவன் கிழட்டுத் தா யைத் தூக்கிக் கொண்டு ஓடுதல். படைஞர் மூட்டைகளைப் பிடுங்கிப் போடுதல். மலையைப் பார்த்துப் பணத்தைப் புதைத்துப் போதல். மரத்தடியில் புதைத்தல். இன்னும் பல நிகழ்ச்சிகள்.
திரை. 16. ஆ.
_பகைவன் கூடாரத்தில் இருத்தல். ஒரு பிராமணன் வழி பாட்டுத் தட்டத்துடன் வந்து, தட்டத்தை வைத்து,_
பிரா : பிரபு! கடவுள் தங்களைக் காப்பாற்றுவார். ஏழைப் பிராமணாளை ஒன்றும் செய்யாதேள்.
பகை : அடே இவனைப் பிடித்துக் கட்டுங்கள். கசடன்! (கட்டல்)
திரை. 16. இ. திரை விழுதல்
ஒரு : ஐயோ! என் பெண்டு பிள்ளைகளெல்லாம் என்னானார்களோ! _(ஓடல்)_
ஒரு : ஐயோ! இந்த இடத்தில்தானே வைத்தேன். காணோமே? நானென்ன செய்யட்டும். _(அடிவயிற்றில் அடித்துக் கொண்டு)_
ஒருத்தி: ஐயோ! என்
கணவனைக் கொன்று போட்டார் களாமே. _(மாரடித்துக் கொண்டு)_
திரை. 17. அ. அரண்மனை
அரசன், மதிவாணர், ஜான், அமைச்சர் முதலியோர்.
தென் : புலவர் பெருமான்! ‘ருசிகண்ட பூனை உறியுறியாத் தாண்டும்’ என்பது போல், ஊரைக் கொள்ளையிட்டுச் சென்றவன் மறுபடியும் வராமலா இருப்பான்?
மதி : வருவான். நாடு ஒற்றுமையிழந்து உருக் குலைந்து விட்டது. மக்கள் தன்னம்பிக்கையிழந்து விட்டனர். தமிழ் நாட்டை விட்டு வீரம் குடிபோய்விட்டது.
தென் : ஏமாந்துவிட்டேன். வடநாட்டைக் கொள்ளை யிட்டுத் தான் இங்கு வந்தானாம். நான் வடவனை நம்பி யிருந்தேன்.
மதி : வடவர்கள் வஞ்சனையாலன்றி, இதுவரை எதிர்த்து யாரையும் வென்றதாகக் கேள்வியில்லை.
தென் : ஆமாம்.
மதி : வடக்கிலிருந்து வராதிருந்தால் கடல் வழியாக வர முடியாது. உலகப் பாதுகாப்புக்கே உறைவிடமாக இருந்த தமிழ்நாடு இன்று கொள்ளைக்கு உறைவிடமாக உள்ளது. போனதைப்பற்றிப் பேசிப் பயனில்லை. ஆகவேண்டியதைப் பார்க்கலாம்.
தென் : தங்கள் யோசனைப்படி.
மதி : வடபுறம் பாதுகாப்புப் படையை வைத்து விட்டு, மேற்கொண்டு செய்யவேண்டியதைக் கவனிக்கலாம். நாட்டு மக்களை நீ வெறுத்தாலும் அவர்கள் உன்னை வெறுக்க வில்லை. நாட்டுக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக உள்ளனர். படை திரட்டக் கட்டளையிடும்.
காவலன் : மேனாட்டு வணிகர் வந்திருக்கிறார்.
தென் : வரச் சொல்.
ஜான் : நமஸ்காரம். (கைகுலுக்கல்)
தென் : வாரும், உட்காரும். வந்த காரியம்?
ஜான் : நம்பள் நாட்டிலே வந்து யாரோ கொள்ளை அடித்துப் போனதாகக் கேள்விப்பட்டன். அந்தக் கொள்ளைக் காரனைத் தோக்கடிக்க நம்பளால் ஆன உதவியைச் செய்யலாம்.
தென் : சந்தோஷம்.
ஜான் : நம்மகிட்டெ வேண்டிய பாதுகாப்புப் படை வச்சிருக்கிறம். பயப்படவேண்டியதில்லை.
மதி : காலத்தால் செய்த உதவி ஞாலத்தைவிடப் பெரியது. நல்ல வேளையில் வந்தீர்.
ஜான் : நம்பள் ஆளுக்கள் சொன்னது வந்தோம்.
தென் : நமது நட்பு என்றும் நீடிக்கும்.
ஜான் : சீக்கிரம் சண்டைக்குப் புறப்படலாம். நான் வரு கிறேன்.
தென் : சரி. _(போக)_
மதி : வலிய வந்த உதவியை விடக்கூடாது. இவர் களிடம் பெரும்படை இருப்பதாகக் கேள்வி. நாட்டில் குழப்ப மிருந்தால் அவர்கள் வணிகத்திற்குத் தடையுண்டாகும் என்பதுதான் நமக்கு உதவ முன்வந்ததன் முதல் நோக்கம்.
தென் : படைத் தலைவரே! போருக்குத் தயாராகட்டும்.
திரை. 17. ஆ.
தமிழ் வீரரும், வெள்ளைக்கார வீரரும் துப்பாக்கியுடன் அணி வகுத்துச் செல்லல். உள்ளே போர் முழக்கம்.
திரை. 17. இ. திரைவெளி
பறையறைதல்
_நாட்டில் புகுந்து கொள்ளையிட்டு வந்த கொள்ளைக் கூட்டத்தார் துரத்தப்பட்டனர். இதற்கு உதவி புரிந்த மேனாட்டு வாணிகர் தலைவன் ஜான் அவர்களுக்கு நாளை நமது அரண்மனையில் ஒரு விருந்து நடைபெறும்._
திரை. 18. அ. விருந்து
பலர் மேஜையைச் சுற்றிலும் இருத்தல். ஜானும் கிளியோவும் வருதல். தென்னவன் வரவேற்றல்.
தென் : வாருங்கள். _(கைகுலுக்கல்)_
ஜான் : வருகிறம்.
தென் : உட்காருங்கள்.
_(விருந்துண்ணல், பின், தென்னவன் இருவருக்கும் மாலை சூட்டல்.)_
தென் : நம் தமிழ்ப் பெரியார் பேசுவார்.
மதி : அன்பர்களே! இவர் நமக்குத் தக்க காலத்தே செய்த உதவி என்றும் மறக்கமுடியாத தாகும். அதுவும் தானாகவே முன்வந்து, ’சொல்லாமலே செய்வர் பெரியர்" என்னும் முதுமொழியை உண்மையாக்கினார். உங்கள் சார்பிலும், அரசன் சார்பிலும், நான் நண்பர் ஜான் அவர்களைப் பாராட்டுவதோடு, திருவாட்டி கிளியோவையும் பாராட்டுகிறேன்.
தென் : தமிழ் மக்களே! இவர் நமக்குக் காலத்தே செய்த உதவிக்காக உங்கள் சார்பில் இவரைப் பாராட்டுவதொடு, நமது அரசியல் தலைமை அதிகாரத்தை இவர்க்குக் கொடுக்கிறேன். நமது அழைப்புக் கிணங்கி வந்து, இவ்விழாவினைச் சிறப்பித்த தோழியர் கிளியோவையும் பாராட்டுகிறேன்.
ஜான் : தமிழ் மக்களே! உங்கள் எல்லவருக்கும் வணக்கம். எங்களுக்குச் செய்த சிறப்புக்காக உங்களைப் பாராட்டுகிறேன். உங்களுக்கும், உங்கள் நாட்டுக்கும் நானும், மிஸஸ் கிளியோவும் எங்களால் இயன்றதைச் செய்வோம்.
கிளி : பெரியோர்களே! நீங்கள் எங்களுக்குச் செய்த பாராட்டுதலுக்காக நன்றி. நானும் மிஸ்டர் ஜானும் எங்களால் இயன்றதை உங்களுக்குச் செய்வோம் என்று உறுதி கூறுகிறேன்.
தென் : உங்கள் கூட்டுறவுக்கு நன்றி.
திரை. 18. ஆ.
கிருஷ்ணய்யரும், சேஷய்யரும்.
கிரு : என்ன சேஷய்யர்வாள்! நாம் பட்ட பாடெல்லாம் வீணாப்போயிடும் போலிருக்கே.
சேஷ : ஏன்?
கிரு : நோக்குத் தெரியாதாங் காணும்? நம்ம பட்டருடைய புரோகித வேலை காலியாயிடுத்து. இனி, பட்டர் சாதாரணப் பட்டர்தான்.
சேஷ : ஓகோ! அப்படியா! இனி நம்ம பாடு கூப்பாடுதான்?
கிரு : என்னமோ பார்க்கலாம்.
திரை. 19. அ. அந்தப்புரம்
தமிழரசி, கிளியோ, அல்லி.
தமி : (கிளியோ வருதல்) வாம்மா! உட்காரு.
கிளி : தமிழரசி! உக்காரு. இந்தா உனக்காகக் கொண்டு வந்தேன், _(பிஸ்கட், ஆரஞ்சி முதலியன சாப்பிடல்)_
தமி : அல்லி! எடுத்துக்கொள்.
கிளி : தமிழரசி! இனி ஒன்றும் கவலைப்படாதே. அதிகம் கஷ்டப்பட்டாயாம் பாவம்! அரசன் இனி இங்குதான் இருப்பார். இந்தா உனக்காக வாங்கி வந்தேன் இந்தச் செய்ன். (கழுத்தில் போடுதல்)
தமி : நீ நல்லவள். உன் பேரென்னம்மா! மறந்து விட்டேன்.
கிளி : எம்பேரு கிளியோ.
தமி : கிளியோ, நல்ல பேரு. பேருக்குத் தகுந்த குணம். அடிக்கடி இங்கு வாம்மா.
கிளி : வர்ரேன். தமிழரசி! அரண்மனையைச் சுற்றிப் பார்க்கலாமா?
தமி : வாம்மா பார்க்கலாம்.
கிளி : (கிளியைப் பார்த்து) இதென்ன?
தமி : கிளி:
கிளி : எம்பேரு. (கிளியை எடுத்துக் கொஞ்சி கொண்டே போதல்)
திரை. 19. ஆ. ஆரியா வீடு.
ஆரியா, வசந்தா, இந்திரா, ஆரியா சோர்வுடன்.
ஆரியா : அடி வசந்தா! இங்கே வாடீ! அங்கென்னடி பண்ணறாய் கூப்பிடக் கூப்பிட?
வசந் : ஏம்மா?
ஆரி : கொஞ்சந் தூத்தங் கொண்டாடி குடிக்க. (கொண்டு வந்து கொடுக்கக் குடித்தல்)
வசந் : ஏம்மா! ஒரு விதமா இருக்கேள்?
ஆரி : என்னடி செய்யறது? எனக்கோ வயதுமா யுடுத்து. அந்தக் கிளியோ வந்ததிலிருந்து அரசன் நம்மாத்துப் பக்கம் எட்டிப் பார்ப்பதுகூடக் கிடையாது. அரசி இப்ப அரசியாயிட்டாள்!
வசந் : ஆனா ஆகரா, நமக்கென்னம்மா கொறச் சொ?
ஆரி : என்ன கொறச்சலா? எங்கப்பா வேலெ போயிடுத்து தெரீமேல்லோ? இனி என்னடி சோத்துக்குங் கேடா இங்கிருந்திண்டு? இந்திரா எங்கே? இங்கே கூப்பிடு. (போய்க்கூட்டிவர)
இந்திரா : அம்மாமி! ஏன் கூப்பிட்டேள்? ஏன் ஒரு மாதிரி இருக்கிறேள்? (முக்காட்டுடன்)
ஆரி : ஒன்னுமில்லே; ஏனோ தலையெ வலிக்கிறது. உங்கையாலே கொஞ்சங் காப்பி போட்டுண்டுவா. வசந்தா! காலெக் கொஞ்சம் பிடீண்டீ.
திரை. 20. அ. பழையன் வீடு
பழையன் ஜானையும், கிளியோவையும் வரவேற்றல், ஆண்களும், பெண்களும் கூடியிருத்தல். இருவரும் வருதல்.
பழை : வாருங்கள்! உட்காருங்கள். (ஜான் கை குலுக்கல் கிளியோ பெண்களைக் கைகுலுக்கல். உட்காருதல்)
_மாலை போடுதல். பள்ளுப்பாடியாடல்_
11.பாட்டு
ஆற்றுவெள்ளம் நாளைவரத் தோற்றுதே குறி-மலை
யாளமின்னல் ஈழமின்னல் சூழ மின்னுதே.
நேற்று மின்றும் கொம்புசுற்றிக் காற்றடிக்குதே-கேணி
நீர்ப்படு சொறித்தவளை கூப்பிடுகுதே.
சேற்றுநண்டு சேற்றைக்கிள்ளி ஏற்றடைக்குதே-மழை
தேடியொரு கோடிவானம் பாடியாடுதே.
போற்றுதமிழ் நாட்டினருக் கேற்றவையெல்லாம்-மனம்
போல்விளைக வென்றுழவுக் கால்கொளுவோமே.
(ஈற்றடி யிரண்டும் புதியவை)
எந்தமிழ்ப்பண் பாடுறநாட் காலையெழுவோம்-புலத்
தேரினால் பழந்தமிழ் வயலையுழுவோம்;
செந்தமிழ்ச்சம் பாவிதையைத் தெள்ளியெடுப்பொம்-நறுந்
தீந்தொடையாப் பாருமணிச் சேற்றில்விதைப் போம்;
முந்துறநன் னீர்பாய்ச்சிக் காவல்புரிவோம்-அயல்
மொழிச்சொற் களைகளைப் பிடுங்கியெறிவோம்;
வந்தவிருந் தாளிகட்குச் சிந்தைமகிழ-நால்
வகைமூ வினத்தமிழ்ச்சோ றாக்கிப்படைப்போம்.
ஜான் : பழந்தமிழ் மக்களே! உங்கள் ஆடல் பாடலால் மகிழ்ந்தேன். இனி நாங்கள் தனியாக இருக்க வேண்டியதில்லை. இவ்வளவு நாளாய்த் தாழ்த்தப்பட்டு, தள்ளிவைக்கப் பட்டிருந் தீர்கள் பாவம்! மக்களில் உயர்வு தாழ்வு கற்பிப்பது மடமை! அறிவாளிகள் உயர்ந்தவர்கள்; அறிவில்லாதவர்கள் தாழ்ந்தவர்கள். இனி நீங்களெல்லாம் நல்லாப் படியுங்கள். நண்பர் பழையன் உங்கள் சார்பில் அரசியல் தலைவனாக இருப்பார்.
பழை : பட்டரால் புகுத்தப்பட்ட சாதி வேற்றுமை யை எதிர்த்ததால் தள்ளிவைக்கப்பட்டோம். சமத்துவ குணமுடைய தாங்கள் எங்கள் தலைவரானது பற்றிப் பெருமகிழ்ச்சியடைகிறோம். உங்கள் இருவருக்கும் எங்கள் நன்றி உரித்தாகுக.
ஜான் : ஊர்க்குள் சென்று பார்க்கலாம். (போக)
கிளி : (பெண்களைப் பார்த்து) வாருங்கள் நாமளும் போகலாம்
திரை. 20. ஆ.
வேலனும், அல்லியும்
வேலன் : தெரியுமா?
அல்லி : தெரியும்.
வேலன் : என்ன?
அல்லி : அதுதான்.
வேலன் : எது?
அல்லி : எது! நீ சொல்லறதுதான்.
வேலன் : ஆமாம், தெரிஞ்சுக்கோ, நான் போற பக்க மெல்லாம் நீயும் வரணும்.
அல்லி : வாரெ. அவுங்கமாதிரி நீயு எல்லாம் வாங்கித்தரணும்.
வேலன் : அடடடே! அதல்லோ, அதல்லோ; அவுங்க மாதிரி நானும் நீயும்சமமாக இருக்கணும்.
அல்லி : நீ வளத்தி, நாங்கூளெ. நாமெப்படிச் சமமாக இருப்பது?
வேலன் : அதல்லோ. அந்தம்மா மாதிரி யாரோடும் பேசணும்; ஒன்னாஉக்காந்து சாப்பிடணும்; எங்கும் போகணும்; எல்லோரையும் சமமாக எண்ணணும்.
அல்லி : ஓகோ, அப்படியா? நீ அந்த அய்யா மாதிரி நடந்தீன்னா, நான் அந்த அம்மா மாதிரி நடக்கிறேன். தன்னெப் பாத்து பின்னெப்பாருன்னா!
12. பாட்டு
வேல : அப்படியே நடந்துக்கிறேன் பொம்பளே!
அல் : நான்-அதுக்குமேலே நடந்துக்கிறேன் ஆண் மையுள்ள ஆம்பளே!
வேல : எப்படியோ நடந்துக்கோநீ பொம்பளே!
அல் : உன்-எண்ணம்போல நடந்துக்கோநீ எனக்கு வந்த ஆம்பளே!
வேல : சாதிபேதங் கூடாதிந்த நாட்டிலே!
அல் : இனிச்-சரிநிகரா நடந்துக்கோணும் ஆணும் பெண்ணும் வீட்டிலே!
வேல : நீதிநெறி ஓங்கவேணும் நாட்டிலே!
அல் : ஆண்கள்-நினைக்கிறாப்போல் பெண்களும் நினைத்திடாரோ வீட்டிலே?
வேல : ஆணும் பெண்ணும் படிக்கவேணும் நாட்டிலே!
அல் : படித்-தவளைமதித்து நடத்தவேணும்
ஆம்பளயோ வீட்டிலே!
வேல : நானும்நீயுஞ் சரிசமமா இருப்பமே!
அல் : இதை-நானுங்கூடக் கடைப்பிடித்து நடக்க லாமினு விருப்பமே!
வேல : இப்பத் தெரிஞ்சுதா?
அல் : தெரிஞ்சுது.
திரை. 21. அ. கூட்டம்
பட்டர், மாறன் முதலியோர்.
பட்டர் : தமிழ் மக்களே! ஜான் வேலையைப் பார்த்தீர்களா? தேசத் துரோகியும், ராஜத்துரோகியுமான பழையனுக்குப் பெரிய உத்தியோகங் கொடுத்துவிட்டான். பழையன் அரசாங் கத்துக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த தெல்லாம் எதற்கென்பது இப்போது விளங்கிவிட்டதல்லவா? பதவி மோகம் யாரை விட்டது? உத்தியோக வேட்டைக்காகவே அவ்வளவு ஆர்ப்பாட்டமும். அதைப்பற்றிக் கூட நமக்குக் கவலையில்லை. ஜான் நமது பூர்வீக தர்மத்தையே கெடுத்து வருகிறானே? மேலும் நாம் செய்த நல்ல காரியங்களை யெல்லாம் கெடுத்து வருகிறான். இதெல்லாம் அந்தக் கிளியோ தூண்டுதலால் தான் நடக்கின்றன. மேலும் ஜான் இங்கு அதிகாரியாய் இருப்பது நம் நாட்டைச் சுரண்டுவதற்காகவே தான். அவனொரு வணிகன் தானே? நாம் பாடுபட்டுத்தேடும் பொருளைப்பகற் கொள்ளையடிப்பது தான் அவன் முதல் நோக்கம். அவனை எப்படியாவது நம் நாட்டைவிட்டு ஓட்ட வேண்டும். அவனை ஓட்டிவிட்டு நம்ம இளவரசனுக்கு முடி சூட்டவேண்டும். இது எனது தாழ்மையான அபிப்பிராயம்.
மாறன் : பெரியோர்களே! நமது பட்டர் சொன்னது முழுதும் உண்மை. நம் நாட்டை ஏன் அயலான் ஒருவன் ஆள வேண்டும்? நமக்கென்ன ஆளத் தெரியாதா? ஆள ஆள் இல்லையா? நாமெல்லோரும் ஒன்று சேர்ந்து அரசனிடம் சொன்னால் அவன் தானாகவே ஓடிவிடுவான். இப்போது பழையன் வைத்ததே சட்டமாக இருக்கிறதென்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறேன்!
கிருஷ் : மகாஜனங்களே! இதற்கு வடவனும் வேண்டிய உதவி செய்வதாக வாக்குக் கொடுத்திருக்கிறான். ஜானின் சர்வாதிகார ஆட்சியைப் போக்கி, ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்தணும். அப்போதுதான் நம் தேசம் சுபிட்சமாகும்.
பட்ட : ஊர் ஊருக்கு இதைப் பிரசாரம் பண்ணணும்.பாடுபட்டால்தான் பலன் கிடைக்கும் என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன்.
திரை. 21. ஆ.
மதிவாணரும், செழியனும்.
செழி : ஏய்யா! அவர்கள் சொல்வதிலும் ஒருவாறு உண்மை இருப்பதாகத்தானே தெரிகிறது? நமது நாட்டுக்கு அயலானொருவன் ஏன் தலைவனாக இருக்க வேண்டும்?
மதி : செழியா! நீ சிறுவன். அவர்கள் சூழ்ச்சி உனக்குத் தெரியாது. ஜான் போகட்டும்; நாம் வேண்டா மென்று சொல்ல வில்லை. நாட்டின் நிலைமையை எண்ணி அவனுக்குத் தலைமை யதிகாரங் கொடுக்கப்பட்ட தேயல்லாமல் நிலையாக அவனே இந் நாட்டைத் தனியரசு செலுத்தட்டும் என்பதற்கல்ல. நம் நாட்டில், நம்மவரால் புறக்கணிக்கப்பட்ட பழையன் கூட்டத்தை ஒன்றாக்கினான். மக்களுக்குப் பகுத்தறி வுண்டாவதற்கு வேண்டிய வழிகள் செய்தான். எல்லாரும், சரிநிகராக வாழ வேண்டும் என்பதல் லாமல் ஒரு சிலர் உரிமைகளைப் பறித்தாகொண்டான்? பட்டரால் நம் நாட்டுக்கு உண்டான கேட்டைவிடவா அவன் சுரண்டல்? ஆரியாவால் உன் அன்னை என்னானாள்? கிளியோ எவ்வளவு அன்பாக வைத்திருக்கிறாள்? இப்போது தானே உன் அன்னை, ஆரியாவால் அடைந்த துன்பத்தை மறந்து தானும் ஓர் அரசன் மனைவி என்னும் நிலையில் இருந்து வருகிறாள். முதலில் பட்டரும் ஆரியாவும் போகட்டும். அவர்கள் இங்கிருந்தால், ஜான் போனாலும் பழைய நிலைதான்வரும். அவர்கள் வஞ்சகச் சொல்லால் மயங்காதே. போதும் அவர்களால் பட்ட தொல்லை.
செழி : ஐயா! உண்மையுணர்ந்தேன். ஆம், உண்மை தான். ஜான் வராமலிருந்தால் இந்நேரம் என் அன்னை என்னா யிருப்பாள்? பழையன் பாடு படும்பாடாயிருக்குமே. அவ்வட வரை முதலில் ஒழிப்பது நல்லதுதான்!
மதி : பட்டர் ஆதிக்கம் ஒழிந்து, ஜான் ஆதிக்கத்திற் குள் நம் நாடு வந்ததால்தானே சாதி வேற்றுமை ஒருவாறு தளர்ந்து வருகிறது? எல்லோரும் ஒன்று என்னும் சமரச உணர்ச்சி மக்களுக்கு உண்டாகி வருகிறது. விரைவில் நீ இந்நாட்டரசனாவாய். அப்போது பழைய தமிழ்ப் பண்பாட்டை உண்டாக்க வேண்டும். எல்லோரும் இந்நாட்டு மன்னர்களாக வாழ்ந்துவந்த பழந் தமிழாட்சியை ஏற்படுத்தவேண்டும். அதற்கு, இப்பட்டர் கூட்டம் ஒருபோதும் விடாது. ஆகவே, அவர்களை இந் நாட்டைவிட்டு ஓட்ட நாம் ஒரு சிறிதும் தயங்கக்கூடாது.
செழி : ஏய்யா! மற்ற வடவர்களெல்லாம் தாங்களும் தமிழர்கள் என்று, இந்நாட்டுக் குடிகள்போல இங்கேயே நெடு நாளாக இருந்து வருகிறார்களே, அவர்களை என்ன செய்வது?
மதி : அவர்கள் இந்நாட்டில் இருந்தாலும் வட நாட்டைத்தான் தங்கள் தாய்நாடென எண்ணி வருகிறார்கள். தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொள்ளாமல், செத்த வடமொழியைத்தான் தாய்மொழி என எண்ணி வருகின்றனர். தமிழை, தமிழொலிக்கேற்பப் பேசாமல் கொச்சையாகவே பேசி வருகின்றனர். இவ்வளவு நாளாய்ப் பழகியும் தமிழ்ப் பண்பாட்டைக் கைக்கொண்டார்களில்லை. நீ அரசனான பின், அவர்கள் தமிழ்நாட்டைத் தாய்நாடெனவும், தமிழ் மொழியைத் தாய்மொழி எனவும் கொண்டு, வடநாடு, வடமொழிப்பற்றை அறவே விட்டு, தமிழ்ப் பண்பாடு டையவர்களானால் இந்நாட்டுக் குடிமக்களாக இங்கேயே இருக்கலாம். மேலும், அவர்கள் தனி இனமாக வாழாமல் நம்மோடு ஒன்றாகக் கலந்துவிடவேண்டும். இதற் கெல்லாம் இணங்கவில்லை யானால்?…………………
செழி:இணங்கவில்லையானால் வெளியேற்ற வேண்டியதுதான்.
மதி : ஆமாம். இணங்கிவிடுவார்கள். அவர்கள் ஆண் பெண் அத்தனை பேரும் படித்தவர்கள்; காலத்துக்கேற்றபடி நடந்துகொள்ளும் குணம் உள்ளவர்கள். அதனால்தான் இன்னும் ஒருவாறு ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.
செழி : உண்மையுணர்ந்தேன்.
திரை 22. அ. பள்ளிக்கூடம்.
_ஜான் தலைமையில், தமிழ்த் திருநாட் கொண்டாட்டம், ஜானைத் தலைமை வகிக்கும்படி பள்ளித் தலைமையாசிரியர் கேட்டுக் கொள்ளுதல். ஜானுக்கும், கிளியோவுக்கும் மாலை போடுதல்._
ஜான் : அன்புமிக்க ஆசிரியர்களே! மாணவர்களே! இக்கொண்டாட்டத்திற்குத் தலைமை தாங்கும் பேற்றை எனக் களித்தமைக்காக உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. முதலில் தமிழ்த்தாய் வணக்கம்.
சிறுவன் : _(கிராப்பு, சட்டை.)_
13. பாட்டு
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் னிருந்தபடியிருப்பதுபோல்,
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாள முந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்
ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையாநின்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே
சதுமறையா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின்
முதுமொழிநீ அனாதியென மொழிகுவதும் வியப்பாமே!
ஜான் : மாணவிகள் கும்மி.
14. பாட்டு
செந்தமிழ் நாட்டுச் சிறுமியரே!-ஒன்றாய்ச்
சேர்ந்து கும்மி யடித்திடுவோம்.
தந்தை தாய் போற்றி வளர்த்த-தமிழ்ப்பகை
தன்னைத் துரத்தி யடித்திடுவோம்.
சீரிய வாழ்வு சிறந்திடுக-கொடுந்
தீயவை யெல்லா மிறந்திடுக.
ஆரிய மாயை யகன்றொழிக-தமிழ்
அன்னையின் பண்பா டதுபொலிக.
பொல்லாத சாதிக் கொடுமையெனும்-புலி
போக்கிட மற்றுவாழ் வற்றிடுக.
கல்லாத மக்களிங் கில்லாமல்-யாவரும்
கற்றுப் பகுத்தறி வுற்றிடுக.
நல்ல தமிழ்த்திரு நாளினிலே - தமிழ்
நாள்மலர் மாலை தொடுத்திடுவோம்.
அல்லவை தேய அறம்வளர்க-என
ஆடிக் கும்மி யடித்திடுவோம்.
ஜான் : மாணவர்கள் பேச்சு. ‘தமிழ்’ என்பதுபற்றி இளஞ்செழியன் பேசுவார்.
இளஞ் : தமிழ் வாழ்க! அன்புமிக்க தலைவரவர்களே! ஆசிரியர்களே! மாணவத் தோழர்களே! தமிழ் என்பதற்கு இனிமை என்பது பொருள்! நமது தாய் மொழியாம் தமிழ் மொழி ’கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தின் முன்தோன்றிய மூத்த தமிழ். மொழி வளமிக்க முத்தமிழ். கன்னடம், தெலுங்கு, மலையாளம் முதலிய மொழிகளை ஈன்றும் இன்னும் இளமை நலங் குன்றாத கன்னித்தமிழ். தமிழ் மொழி போலப் பழமையும், இளமையும், இயல்பும், இனிமையும் உடைய மொழி உலகில் வேறொன்று மில்லை. நந்தமிழ் மொழிக்குப் பின்னால் தோன்றி மறைந்த மொழிகள் உலகில் பல. ஏன் நெடுந்தூரம் போக வேண்டும்? எழுத்தின்றி இங்குவந்த ஆரிய மொழி, எங்கள் தமிழ்த் தாயிடம் எழுத்துக் கடன் வாங்கி எழுத்து வழக்குடைய மொழியானது: ஆனால், நெடு நாளைக்கு முன்னரே பேச்சு வழக்கொழிந்து, ’செத்த மொழிப் பட்டியலில் சேர்ந்துவிட்டது. உலக மொழி களுக்கே எண்களைக் கொடுத்துதவிய மொழி எங்கள் தமிழ் மொழியே. இவ்வளவு சீரும் சிறப்புமுள்ள உயர்தனிச் செம்மொழி யாகிய எங்கள் தமிழ், ஆரிய என்புருக்கி நோயால் இந்நிலைமை யடைந்தது. தமிழ் மொழி கெட்டதால் தமிழர் பண்பாடுங் கெட்டது. ’தனித் தமிழுணர்ச்சி! என்னும் நன்மருந்தால் அந்நோயைப் போக்கித் தமிழ் மொழியை வளர்ப்பது தமிழ் மக்களின் நீங்காக் கடமையாகும். தமிழ் வாழ்க!
ஜான் : ‘தமிழர் நாகரிகம்’ என்பதுபற்றி ’இளங்கோ வேண்மாள், பேசுவார்.
இ.வே : தமிழ் வாழ்க! அன்புமிக்க தலைவரவர்களே! அருந்தமிழ் மக்களே! உலக நாகரிகத்துக்கே முதலாக அமைந்தது தமிழர் நாகரிகம். பகுத்தறிவை முதன்முதல் பயன் படுத்திய வர்கள் தமிழ் மக்கள்தான். மாக்கள் வாழ்க்கையி லிருந்து மக்கள் வாழ்க்கையைக் கண்டவர்கள் தமிழ் மக்களே! பிற இன மக்கள் “அற்றகுளத்தில் அறுநீர்ப் பறவை போல்” நீர் நிலைதேடி அங்கும் இங்கும் நாடோடிகளாய் அலைந்து திரிந்த அக்காலத்தே, ஏரி குளம் கிணறு கண்டு ஒரே இடத்தில் இருந்தவர் தமிழ் மக்கள். பிற இன மக்கள் வேட்டையாடி விலங்கு பறவைகளையுண்டு வந்த காலத்தில் காடு வெட்டி நாடாக்கி, நிலந்திருத்தி நெல் விளைத்து உண்டு வாழ்ந்து வந்தவர் தமிழ் மக்கள். பிற இன மக்கள் தோல், மரப்பட்டை, இலை தழைகளைப் பொத்திக் கொண்டிருந்த காலத்தே பஞ்சாலும், பட்டாலும் பல்வகை மயிர்களாலும் அழகிய ஆடைகள் நெய்து உடுத்த ஆறறிவின் கூறுமிக்கவர் தமிழ் மக்கள், உழவு, கைத்தொழில், வாணிகம் என்னும் முத்தொழிலிலும் முதன்மை பெற்றிருந்தவர் தமிழ் மக்கள். சாதி சமய வேற்றுமையின்றி, ‘ஒன்றே குலமும், ஒருவனே தேவனும்’ என்ற ஒருமை வாழ்வு வாழ்ந்து வந்தவர் தமிழ் மக்கள். ஆணும் பெண்ணும் அல்லவை கடிந்து நல்லவை கொண்டு ஒத்த உரிமை வாழ்க்கை நடத்திவந்தவர் தமிழர்கள். ஆனால், ஆரிய நாகரிகக் கலப்பால் அந்நிலைமை நீங்கி, இந்நிலைமையை அடைந்து விட்டனர். அவ்வாரியக் குடற் காய்ச்சலை, தமிழ் இனவுணர்ச்சி என்னும் மருந்தால் போக்கித் தனிப்பழந் தமிழ்ப் பண்பாட்டை உண்டாக்குவது ஒவ்வொரு தமிழ் மகன், மகளின் நீங்காக் கடமையிலொன்றாகும். தமிழ் வாழ்க!
ஜான் : (முடிவுரை) அன்புமிக்க தமிழ் மாணவர்களே! நீங்கள் நிகழ்த்திய உணர்ச்சி மிக்க பாட்டு, ஆட்டம், பேச்சு இவற்றால் நான் பெருமகிழ்வடைகிறேன். நீங்கள் கூறிய அனைத்தும் உண்மையே. தமிழ் தனிமையும், இனிமையும், இயல்பும், பழமையும் உடைய மொழி என்பது ஆராய்ச்சி மிக்க அறிஞர்கள் கண்ட முடிவு. தமிழர் நாகரிகம் உலக முதல் நாகரிகம் என்பதும் உண்மையே. அன்பு, அருள் மானம், வீரம், கொடை முதலிய உயர் குணங்களின் உறைவிடம் தமிழர்கள் என்பது நான் நேரில் கண்ட உண்மை. விருந்தோம்பல் என்பது தமிழர்களுக்கே உரிய தனிப்பெருங் குணம். இன்றுள்ள உங்கள் நிலை இரங்கத்தக்க நிலைதான். உங்கள் தமிழுணர்ச்சி, தமிழினவுணர்ச்சி வெற்றி யடையும் என நம்புகிறேன். மறுமுறையும் உங்களுக்கு எனது நன்றி.
கிளியோ மாணவர்களுக்குப் பரிசு வழங்கல்.
தலை. ஆ : இத் தமிழ்த்திருநாள் கொண்டாட்டத்தைச் சிறப்புடன் நடத்திக் கொடுத்த தலைவருக்கும், பரிசு வழங்கிய அம்மையாருக்கும், எங்கள் அழைப்பிற்கிணங்கி வந்து கொண்டாட்டத்தைச் சிறப்பித்த பொது மக்களுக்கும் பள்ளி ஆசிரியர், மாணவர்களுக்கும் எனது நன்றி.
திரை. 22. ஆ.
வேலனும், ஒருவனும். வேலன் ஹேட், பூட்ஸ், டை முதலியவுடன்.
வேலன் : மிஸ்டர் ஜான் போகப்போகிறார். இனிப் பழைய கருப்பனே கருப்பன் எனப் பட்டர் வைத்ததுதான் சட்டமாகப் போகிறது. யாரு வந்தாத்தா நமக்கென்ன போறது? ஆனா, நாட்டிலே பழையபடி கொள்ளையும் கொலையும் வந்துவிடுமே. நம்ம தமிழரசி பாடு பழைய பாடாகிவிடுமே என்பதுதான்.
ஒரு : என்னய்யா! தனியாக?
வேலன் : ஒன்னுமில்லே மிஸ்டர், நம்ம ஜான் அவுங்க நாட்டிலிருந்து இவரை வரச்சொல்லி லெட்டர் வந்திருக்குதாம். அவர் போகப் போராறாம். நாளைக்கு அரண்மனையிலே டீப்பார்ட்டி அவருக்கு. அதைப்பற்றித்தான்?………..
ஒரு : போனாத் திரும்பி வருவாரோ இல்லையோ?
வேலன் : வரமாட்டாராம்.
ஒரு : நல்லவராச்சே. அந்த இடத்துக்கு ஆரு.
வேலன் : ஆரு வருவா? அவாதா வருவா, மிஸ்டர் பட்டர்!
ஒரு : நம்ம இளவரசர் இருக்க அந்தப்பாவி என்னத்துக்கு வாரான் மறுபடியும், நாட்டைக் கெடுக்கவா?
வேலன் : என்னமோ தெரீலே. அது அரண்மனை விஷயம், நமக்கெதற்கு!
திரை. 23. அ. ஜானுக்குப் பிரிவுரை
எல்லோரும் சிற்றுண்டி யுண்ணல்.
தென் : பெரியோர்களே! நண்பர் ஜான் இவ்வளவு நாளாய் நம்மிடை இருந்து நமக்கு வேண்டிய உதவி புரிந்து வந்தார். அவரால் நம் நாட்டுக்கு எவ்வளவோ நன்மைகள் ஏற்பட்டுள்ளன. அவருடைய தொண்டு நம்மால் என்றும் மறக்க முடியாததொன்றாகும். அவருடைய தொடர்பு நமக்கு என்றும் இருக்குமாக. தோழியர் கிளியோ அம்மையார் செய்த தொண்டு அதைவிடப் பெரிது. அம்மையாரின் தொண்டு என்றும் நம் நாட்டுக்குத் தேவையே. உங்கள் சார்பில் அவர்களுக்கு என் நன்றி உரித்தாகுக.
ஜான் : தமிழ்ப் பெரியோர்களே! உங்கள் மன்னர் எங்களை அளவுக்கு மீறிப் புகழ்ந்து விட்டனர். அப்படி யொன்றும் நாங்கள் செய்துவிடவில்லை. எங்கள் கடமையைச் செய்தோம். நாங்கள் உங்களை என்றும் மறக்கமாட்டோம். நமது நட்பு நிலவட்டும். நமக்குள் இருந்த பழங்கால வணிகத் தொடர்பு மீண்டும் உண்டாக. நாங்கள் உங்களிடம் விடைபெற்றுக் கொள்கிறோம்.
கிளி : தமிழ் மக்களே! நாங்கள் எங்கள் கடமையைச் செய்தோம். “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்பது தமிழ்ப் பெரியார் வாக்கல்லவா? நாங்கள் உங்களை என்றும் மறவோம். தமிழ் நாட்டை எங்கள் தாய்நாடு போலவே எண்ணுகிறோம். நாங்கள் வருகிறோம். (தமிழரசி கையைப் பிடித்து) தமிழரசி! நான் போய் வரட்டுமா? உன்னை நான் ஒரு நாளும் மறக்க மாட்டேன்.
தமி : உன் அன்பை நான் என்றும் மறவேன். அடிக்கடி இங்குவா.
கிளி : வருகிறேன். இந்தா, என் நட்புக்கு அடையாள மாக. (மோதிரம் விரலில் அணிதல்)
திரை. 23. ஆ. ஆரியா வீடு
ஆரியா சோர்வுடன் படுத்திருத்தல். பட்டரும், தென்னவனும் வருதல்.
தென் : உடம்பு எப்படி இருக்கிறது?
ஆரியா : (எழுந்து இருந்து) சுமாராக இருக்கிறது. இந்திரா! காப்பி கொண்டு வந்து கொடு மாமாவுக்கு. (இந்திரா முக்காடுடன் கொண்டுவந்து கொடுக்க)
தென் : யாரிந்தப் பெண்?
பட்டர் : இவ நம்ம ஆரியா அண்ணம் பொண்ணு. நம்ம பேத்திதான். வடவன் வளர்ப்புப் பெண். சின்னதிலிருந்து அரண்மனையிலேதா வளர்ந்து வர்ரா. கொஞ்ச நாளா இங்குதான் இருக்கா.
தென் : ஓகோ! நான் பார்க்கவில்லை.
ஆரியா : இங்கு வந்தாத்தானே!
பட்டர் : வராதெங்க போராள். அவுங்க அம் மாமியை விட நன்னா ஆடுவா, பாடுவா.
தென் : இங்கவா! ஏன் முக்காடு! (முக்காட்டைப் பிடித்து இழுத்தல். இந்திரா கையால் பிடித்துக் கொள்ளல் கடைக்கண் பார்வை)
பட்டர் : எங்க நாட்டு வழக்கம். இந்திரா! வீணை யெடுத்துண்டு வந்து பாடடி மாமா கேக்கிட்டும்.
தென் : எங்கே பாடு.
(இந்திரா பாடுதல்)
15. பாட்டு
ஜெக தாம்பிகையே ஆதிபர மேஸ்வரிநீயே எ-மெ.
மன வாதனையா லுடல்மெலிந்து வாடுவதேனோ!
மலி வானமதி யேநிலவைக் கூடுவதேனோ!
காதலெனும் பொருளறியாக் கலைஞனுமுண்டோ?
கலைமதியா ரியல்பையறி யாதவள்பெண்டோ?
அலை யார்கடலில் போய்விழுமுன் அவனையடாயோ?
அனி யாயம்பிடி வாதமுனை யணுகவிடாயோ?
புதி யாரைமதி யாமையுந்தன் பேருக்கடாதே!
மதி யாதெனைப்போய் வாவெனநீ யோதப்படாதே.
தென் : அவுங்க அத்தையைவிட நல்லாப்பாடராள். அதே வீட்டுப் பெண்தானே!
பட்டர் : தாங்கள் புதுசு. இன்னு நல்லாப்பாடுவா.
தென் : பழையவ ஆய்விடராள். _(காமப்பார்வை)_
திரை. 23. இ. திரைவெளி
கிரு : சேஷய்யர்வாள். பார்த்தீளா நம்ம பட்டர் சாமர்த்தியத்தை.
சேஷ : என்னது?
கிரு : ஜான் போனானோ இல்லியோ, நம்ம இந்திராவை மன்னனுக்கு அறிமுகப்படுத்தி வெச்சுட்டா. இந்திரா என்ன ஆரியாவுக்கிளைத்தவளா?
சேஷ : மந்திரத்தாலா மாங்கா விழும்? பொழச்சம் போங்காணும்.
திரை. 24. அ.
தென்னவனும், செழியனும்.
செழி : இந்திரா இனி இங்கு இருக்கக் கூடாது.
தென் : இருந்துவிட்டுப் போகிறாள் நமக்கென்ன?
செழி : நமக்கென்ன, நமக்கென்ன என்றுதானே நாடு குட்டிச் சுவராச்சு. இவளென்ன? அவளுமே இனி இங்கு இருக்கக் கூடாது.
தென் : இந்திரா யார் தெரியுமா? வடவன் வளர்ப்புப் பெண். வடவன் உறவுக்கு அவள் இங்கு இருப்பது நல்லது.
செழி : போதும் வடவனுறவு! அவள் மட்டும் இங்கு இருக்கக்கூடாது.
தென் : இருந்தால்?
செழி : அடித்துத் துரத்துவேன்.
தென் : உன்னுடைய ஆட்சிக் காலத்தில் துரத்தலாம். வெளியோ போ.
செழி : சரி. (போதல்)
திரை. 24. ஆ. ஊர்க்கூட்டம்
மதி : தமிழ் வாழ்க! என்னருமைத் தமிழ் மக்களே! நாம் ஒரு நெருக்கடியான நேரத்தில் இங்கு கூடியிருக்கிறோம். ஆரியா வந்தாள்; தமிழரசி யாருமற்றவளானாள். மக்களுக்குள் ஏற்றத் தாழ்வு உண்டானது. ஒற்றுமை குலைந்தது. நாடு ஏழ்மை யானது. கொள்ளையும் கொலையும் தலைவிரித் தாடியது. ஜான் வந்தான். அமைதி நிலைவியது. மக்களுக்கு ஒருவாறு கண்விழிப் பேற்பட்டது. ஜான் மனைவி கிளியோ நல்லவள் தான். ஆனாலும், தமிழரசி பழைய நிலைமையை அடையவில்லை. அவர்கள் போனார்களோ இல்லையோ இந்திரா வந்திருக்கிறாள். ஒருத்தி போனால் ஒருத்தி வருகிறாள். இவள் ஆரியாவின் அண்ணன் மகள். வடவன் வளர்ப்புப் பெண்ணாம். இவளை இங்கு இருக்க விட்டால் ஆரியாவால் கெட்டதினும் ஆயிர மடங்கு கெட்டுவிடு வோம். இந்திரா இங்கிருந்தால் தமிழரசி இறந்தே விடுவாள். அரசனிடம் நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். வடவனுற வுக்காக அவள் இங்கு இருக்கவேண்டுமாம். வடவனுறவு நமக் கெதற்கு? அவருறவால் தானே இப்படி யானோம்? நன்கு எண்ணிப் பார்த்து முடிவு கூறுங்கள்.
செழி : நான் எவ்வளவு சொல்லியும் என் தந்தை கேட்க வில்லை. உன் ஆட்சிக் காலத்தில் பார்த்துக் கொள் என்று விட்டார். உங்கள் முடிவையும் உதவியையுந்தான் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
பழை : இந்திரா என்ன? ஆரியாவும் இனி இங்கு இருக்கக் கூடாது.
ஒருபெண் : இன்றே அவ்விருவரையும் நாட்டை விட்டோட்டுவோம். தமிழரசிக்காக நாங்கள் போரிடத் தயார்.
ஒரு : இப்போதே புறப்படுங்கள். அவளை வெளி யேற்றிவிட்டு மறுவேலை பார்க்கலாம்.
கூட்டம் : புறப்படுங்கள், புறப்படுங்கள்!
மதி : பொறுங்கள்! பொறுங்கள்!! இன்னொரு முறை செழியனுடன் சிலர் சென்று அரசனுக்குச் சொல்லிப் பார்க்க லாம். கேட்கவில்லையானால் மேற்கொண்டு பார்க்கலாம்.
திரை. 24. இ. திரைவெளி
_செழியன் தலைமையில் கொடிபிடித்துக் கொண்டு இந்திரா ஒழிக! அடக்குமுறை ஒழிக! என முழக்கிக் கொண்டு போதல்._
போலீஸ் : அங்கு போகக்கூடாது.
செழி : போவோம்.
போலீஸ் : உங்களைக் கைது செய்திருக்கிறோம். அரசன் கட்டளை.
செழி : சரி. _(போலீசார் கொண்டு போதல்)_
திரை. 25. அ. சிறைச்சாலை
செழியன் சிறைக்குள்ளிருந்து,
செழி : என் அன்னைக்குக் கேடு சூழும் அயலாள் இங்கு இருக்கக் கூடாது என்றதற்கா இந்நாட்டை ஆளப்பிறந்த எனக்குச் சிறைச்சாலை? இந்த அடக்குமுறை ஆட்சி எத்தனை நாளைக்கு நிற்க முடியும்? தந்தையின் ஆட்சியில் மைந்தனுக்குச் சிறை! செய்த குற்றமென்ன? தாய்த்தொண்டு! தாய்க்குத் தொண்டு செய்வோரைச் சிறையிடப்படும் நிலைக்கு வந்துவிட்டது தமிழ் நாடு! இந்நாட்டில் தமிழராட்சி நடக்கிறதா? அல்லது வடவராட்சி நடக்கிறதா? தாயின் குறை தீர்க்கக்கூட மகனுக்கு உரிமை யில்லையா இந்த நாட்டில்? அன்றுதான் நான் சிறுவனாக இருந்தேன். ஆளும் பருவமுற்றயான், என் அன்னைக்குப் போட்டியாக ஒருத்தி வருவதையும் பார்த்துக் கொண்டா இருக்க வேண்டும்? என்னருமைத் தமிழன்னையே! உன்னால், உனக்குத் தொண்டு செய்த குற்றத்திற்காக, மகன் தாய்க்குச் செய்த தொண்டுக்காகச் சிறையிடப்பட்டேன். ஆம், என் தாய்க்குத் தொண்டு செய்த குற்றத்திற்காக என் தந்தையால் சிறையிடப் பட்டேன். அதுவும், தமிழ் மகனாகிய நான், தமிழ்த் தாய்க்குத் தொண்டு செய்ததற்காக! இது குற்றந்தானா? தமிழ் மக்களே தீர்ப்புக் கூறட்டும்.
வெளித்திரை விழுதல்
பெருங்கூட்டம். அடக்குமுறை ஒழிக! இந்திரா ஒழிக! தமிழ் வாழ்க! என்ற முழக்கத்துடன் போதல்.
சிறைச்சாலை
சிறையை உடைத்துச் செழியனை விடுதலை செய்தல்.
திரை விழுதல்
கூட்டம் - அந்த மூவரையும் வாலறுத்து வடக்கே துரத்த வேண்டும் எனப் போதல்.
திரை. 25. ஆ. ஆரியா வீடு
ஆரியா சோர்ந்து படுத்திருத்தல். இந்திரா தலையைக் குனிந்தபடி உட்கார்ந்திருத்தல்.
பட்டர் : (பரபரப்புடன் வந்து) எழுங்கள், எழுங்கள். இனி நாம் இங்கிருக்கக் கூடாது. பெருங்கூட்டம் வருகிறது. (மூவரும் மூட்டை முடிச்சுடன் ஓடுதல்)
திரை. 25. இ. திரைவெளி.
பட்டர் : நாம் பல நாட்கள் அரும்பாடுபட்டுக் கட்டிய கோட்டை ஒரு நொடியில் தகர்ந்து விட்டது. இனித் தமிழர்களை ஏமாற்ற முடியாது. அவர்கள் இனவுணர்ச்சி பெற்றுவிட்டனர். உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தோம். இந்நாட்டைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கினோம். இனி வஞ்சக நெஞ்சோடு இங்கு வாழ முடியாது. தமிழர் பண்பாடே பண்பாடு! எல்லா ஆதிக்கமும் நம்மவர் கையிலிருந்தும் தமிழர்களை வெல்ல முடியவில்லை. எல்லாம் அந்த மதிவாணரின் வாய் வன்மை! தமிழ்நாடே! நாங்கள் விடை பெற்றுக் கொள்கிறோம்.
திரை. 26. அ. கொலு மண்டபம்
செழியன் அரியணையில் இருத்தல். தமிழரசி அலங்காரத்துடன் இருத்தல்.
தென் : பெரியீர்! அறியாமையைப் பொறுத்தருள வேண்டும்.
மதி : போனதைப் பற்றி வருந்தாதீர்.
தென் : தமிழ்மக்களே! நான் உங்களுக்குச் செய்த கொடுமை
களுக்காக வருந்துகிறேன்.
மதி : தென்னவ! வடவர் சார்பால், நம்முடன் சேராமலிருந்த உன் தம்பிமார் மூவரும் நம்முடன் சேர்ந்து கொண்டனர். _(மூவரும் எழுந்து ஆம் எனக் குறிப்பு)_ குடி மக்களின் உரிமை பெற்ற முடியாட்சியாகிய பழந் தமிழாட்சிக் கறிகுறியாக, மக்கள் தலைவனாகிய பழையன் முடிசூட்டட்டும். _(பழையன் முடிசூட்டல்)_ மொழியின் அடிப்படையில் நமது பண்பாடு அமைந்திருப்பதால் நம் தாய்மொழியாந் தமிழ் மொழியைப் போற்றி வளர்த்துப் பொலிவுடன் வாழ்வோமாக.
தமிழ் வாழ்க!
கருத்துகள்
கருத்துரையிடுக