வங்கச் சிறுகதைகள்
சிறுகதைகள்
Back
வங்கச் சிறுகதைகள்
தொகுப்பு : அருண்குமார் மகோபாத்யாய்
வங்கத்திலிருந்து தமிழாக்கம்: சு.கிருஷ்ணமூர்த்தி
Source:
அனைத்திந்திய நூல் வரிசை

நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா
ISBN 81-237-2140-4
முதற்பதிப்பு 1997 (சக 1919)
©: அந்தந்த ஆசிரியருக்கு
தமிழாக்கம் © நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா 21
Bengali Short Stories (Tamil)
ரூ.46.00
வெளியீடு: இயக்குநர்,நேஷனல் புக் டிரஸ்ட்,
இந்தியா ஏ-5, கிரீன் பார்க், புதுதில்லி 110016
பொருளடக்கம்
11. சிறியசொல்
அது என் முதுகுக்குப் பின்னால் குனிந்து கொண்டு நின்றது. அதன் மூச்சுக் காற்று என் காதுகளைத் தொட்டது. என் கை விரல்லள் செயலிழந்து விட்டன.
அது சொல்லியது - "ஏன் அனாவசியமாகப் பழைய காகிதக் குப்பையைக் கிளறித் தூசியைக் கிளப்பறே? சரசிஜ், ஒனக்கு அந்தக் கதை கிடைக்காது!"
அதன் வாய் என் காதருகில். இயற்கைக்கு மாறான, கரகரப்புக்குரல்- பிசாசின் குரல்போல. தொண்டைக் குழாயில்ஓட்டையிருந்தால் குரல் இப்படித்தான் ஒலிக்கும்.
"எனக்கு அந்தக் கதை வேணுமே!" நான் சொன்னேன்
"வேணுமா?" கேலியாகக் கேட்டது அது, "எதுக்கு?"
"ஒப்பிட்டுப் பார்க்கத்தான். அந்தக் கதை அசலா, அல்லது இப்போ ஒனக்குச் சொன்னேனே, பிஜு மாமியோட கதை, அது அசலான்னு - பார்ப்பேன்.."
"அந்தக் கதையில என்ன இருக்கு..?"
"எல்லாம் தெளிவா ஞாபகமில்ல.. மழை கொட்டற ராத்திரி, சோன்னு காத்தடிக்குது, எங்க வீட்டுத் திண்ணையிலே அந்தப் பிச்சைக்காரி குப்புறக் கவுந்துக்கிட்டுத் தன் குழந்தையைக் காத்து மழையிலேருந்து காப்பாத்தப் பார்த்தா. அப்படியும் குழந்தை குளிர்லே நடுங்குது, அதோட ஒடம்பு நீலம் பாரிச்சுப் போய்க்கிட்டிருக்கு. கடைசியிலே அவ இங்கேயும் அங்கேயும் திரும்பிப் பார்த்துட்டுத் தன் ஆடையை அவுத்து நாலா மடிச்சு அதிலே குழந்தையைச் சுத்தி வைக்கறா.. இந்தக் காட்சி நல்லா ஞாபகமிருக்கு எனக்கு.."
இதைக் கேட்டுப் பெரிதாகச் சிரித்தது அது. அதன் கறுப்பு நிறத் தொள தொள அங்கியின் மடிப்புகள் இரவின் இருட்டோடு சேர்ந்து கரைந்தன.
அதன் பார்வையை நேரில் சந்திக்கத் தேவையில்லை எனக்கு. எரிச்சலுடன் கேட்டேன், " இந்த கதையில் சிரிக்கும் படி என்ன இருக்கு?"
"இது ஹாஸ்யம்தான்னு ஒனக்கும் தெரியும்.. இதை எழுதி எவ்வளவு காலமாச்சு?"
"எவ்வளவு வருசமாச்சுன்னு சொல்லத் தெரியாது எனக்கு. இதை எழுதின காலத்திலே காலணாவுக்குக் கடலை வாங்கினா அதை ஒரு மணி நேரம் கொறிச்சுத் தின்னுக்கிட்டிருக்கலாம். அரையணாவுக்கு டீ வாங்கிக்கிட்டு டீக்கடையிலே ரெண்டு மணி நேரம் ஒக்காந்திருக்கலாம். ரெண்டணா கொடுத்த டிக்கெட் வாங்கித் தரமதல்லாவிலேருந்து அலிப்பூர் வழியா பாலிகஞ்ஞ் போகலாம்.. அப்போ.."
அது கையை உயர்த்திச் சொல்லியது, "போதும், போதும்! மேலே சொல்ல வேண்டாம்! சரசிஜ், அந்தக் கதையை இனி மேல் பேசாதே!"
"அது ஏன் தேடினாக் கிடைக்காது?"
"ஏன்னா, அது இல்லே.."
அது கனைத்தது. ஒரு மாதிரியாக, பிறகு புன்சிரிப்புடன் சொல்லிற்று, "அது என்கிட்டே இருக்கு.. இதோ பாரு!" மடிப்புகள் அலையலையாக எழுந்து இரவின் இருளில் கரைந்தன. அது ஏதோ ஒன்றை வெளியே எடுத்து என் கண் முன்னே ஆட்டியது. மங்கலான வெளிச்சத்தில் அது என்ன என்று சரியாகத் தெரியவில்லை. அதைப் பார்த்தால் ஒரு வற்றிப்போன பூனைக்குட்டி போல் தோன்றியது. மங்கலான பிதுங்கி வந்திருக்கும் கண்கள், ஒளியிழந்த கண்மணிகள்.
அதைப் பிடிக்கப் போனவன் சட்டென்று கையை இழுத்துக் கொண்டேன்.
அந்த உருவம் சிரித்தது. "பார்த்தியா, நீயே அதை எடுத்துக்க விரும்பலே. அதைத் தொடவே பயப்படற நீ அதை எப்படிக் காப்பாத்துவே?" அது அந்த பொருளை மறுபடி தன் அங்கிக்குள் நுழைத்துக் கொண்டுவிட்டது. "அது என்கிட்டயே இருக்கட்டும்."
நான் பயத்துடன், "நீ யாரு?" என்று கேட்டேன்.
அது பதில் சொல்லாமல் கொஞ்சங் கொஞ்சமாகப்பின் வாங்கியது. அதன் மேலங்கி அசைந்தது. ஆடியசைந்தவாறே அது பின்னால் போய்.. போய்.. இருளில் மறைந்து போய்விட்டது.
அப்போதுதான் நான் அது என்ன என்று புரிந்து கொண்டேன். அது காலம்..! அதாவது, எந்தக் காலத்திலேகாலணாவுக்குக் கடலை வாங்கினா இத்தியாதி, இத்தியாதி.. அந்தக் காலம் அது! அந்தக் காலத்திலே 'வேலை காலி', 'வாடகைக்கு வீடு கிடைக்கும்', 'டியூஷன் ஆசிரியர் தேவை' விளம்பரங்கள் காஸ் விளக்குக் கம்பங்களில் ஒட்டப்பட்டிருக்கும்.
காலம் அந்தக் காலத்து நிகழ்ச்சியை இந்தக் காலத்தின் வெளிச்சத்தில் காட்டியதால்தான் அந்த நிகழ்ச்சி ஒரு செத்தபூனைபோல் எனக்குத் தோன்றியிருக்கிறது. அதன் மேலங்கிக் குள்ளே தலையை நுழைத்துப் பார்க்க அது என்னை விட்டிருந்த தால், என்னுடைய அந்தக் காலத்துப் பார்வை, அந்த வயது, அந்தக்காலத்து மனம், வெளிச்சம், வாசனை, மோகம் எல்லாவற்றையும் திரும்பிக் கொடுத்திருந்தால் அந்த அழகான வெட்கத்தைத் துறந்த பிச்சைக்காரப் பெண் மறுபடி உயிரோடிருப்பதைக் கண்டிருப்பேன்.. மேலங்கிக்குள்ளே இருக்கும்வரை உயிர் துடிப்புடன் இருப்பதெல்லாம் அங்கிக்கு வெளியே வந்ததும் பிணமாகி விடுகின்றன..
***
அப்புறம் என்ன ஆச்சு, சரசிஜ்?
அப்புறம் பிஜு மாமி மிகவும் சாந்தமான குரலில் என்னை 'வா' என்று அழைத்தார். நான் டாக்சி சார்ஜைக் கொடுத்துவிட்டு இறங்கி வந்தேன். ஓரத்தில் சாக்கடை. ஒரு தாவுத் தாவி அதைத் தாண்டி வர வேண்டியிருந்தது. அப்படியும் என் ஷார்க்ஸ்கின் பாண்டில் கொஞ்சம் சேறு பட்டுவிட்டது.
டாக்சியின் அகலத்தை அளவெடுத்து அமைந்த மாதிரி இருந்தது அந்தச் சந்து. அதற்குள் நுழைந்ததும் அங்கே நான்முன்னமே வந்திருப்பதாகத் தோன்றியது. எப்படியும் அந்த நாற்றம் எனக்குப் பழக்கமானதுதான். பழைய காதலியின் வீட்டுக்குள் நுழையும் உணர்வு ஏற்பட்டது எனக்கு. நுழையக் கொஞ்சம் தயக்கம்.. ஆனால் பழகிய உணர்வு .. உடம்பு மடிப்புகள், சோம்பல் முறிக்கும்போது முடியின் மணம். முன்பு நடந்து கொண்ட மாதிரி இப்போது நடந்துகொள்ள முடியாது, சங்கடமாக இருக்கும். நேரில் போய் நிற்பேன், ஆனால் என் முகத்தை அவளுடைய முகத்துக்கு அருகில் கொண்டுபோகமாட்டேன்..
தடை என்ன இப்போது? என் வயதா, என் சட்டைப் பைக்குள் கத்தையாக மடித்து வைத்திருக்கும் கரன்சிநோட்டுகளா..? என் புதுச் செருப்பு கிரீச் கிரீச்சுனு சத்தம் போடாமலாவது இருந்திருக்கலாம்.
பிஜு மாமி ஒரு விளக்கு எடுத்துக்கொண்டு வந்தார் "விளக்கு என்னத்துக்கு? எனக்கு வர்றதிலே ஒண்ணும் சிரமமில்லே"ன்னு சொன்னேன். "பரிமல் எப்படியிருக்கான், மாமி?"
மாமியின் இறுகிய முகத்தைப் பார்த்ததுமே என் கேள்வியைக் கேட்டிருக்க வேண்டாம் என்று புரிந்தது.
மாமி விரலால் உள்பக்கம் சுட்டிக் காட்டினார்.
அறைக்குள் நுழைந்து அங்கிருந்த ஒரு ஸ்டூலின்மேல் உட்கார்ந்தேன்; என் வயிறு மடிப்பு அழுந்தியது. என் சட்டைப் பொத்தான்களை அவிழ்த்துவிட்டுக் கொள்ளலாமா என்று பார்த்தேன். நான் செருப்புடன் உள்ளெ நுழைந்தது சரிதானா என்று தெரிந்து கொள்வதற்காக அந்த அறையில் வேறு செருப்புகள் இருக்கின்றனவா என்று தேடினேன்.
"டீ கொண்டு வரவா?"
தன்னினைவுக்கு வந்தேன், பிஜு மாமிதான் கேட்கிறார்.
"கொண்டு வாங்க" என்று சொன்னேன்.
அறையின் ஒரு மூலையில் ஈக்கள் ஒரு கோப்பையில் ஒட்டிக் கொண்டிருந்த டீயை நக்கிக் கொண்டிருந்தன. இரண்டுகரப்புகள் கோப்பைக்குள் இருந்து தும்பிக்கைகளை நீட்டி வெளியே எட்டிப் பார்த்தன. பிஜு மாமி அந்தக் கோப்பையை எடுத்துக் கொண்டு வெளியே போனார்.
("அப்புறம்? சரசிஜ், ஒண்ணையும் மறைக்காதே!")
"இல்லை, ஒன்றையும் மறைக்கவில்லை."
நீயார் என்று எனக்குத் தெரியாது. நீ ஒருவேளை என் மனச்சாட்சியாக இருக்கலாம். எல்லாவற்றையும் சொல்வதற்காகத் தான் உன்னைக் கூப்பிட்டிருக்கிறேன். அந்த டீயை என்னால் குடிக்க முடியவில்லை என்பதை உன்னிடம் ஒப்புக் கொள்கிறேன். என்ன நடந்தது தெரியுமா? நான் கோப்பையை வாங்கிக் கொள்ளக் கையை நீட்டியபோது அது கையிலிருந்து வழுகிக் கீழே விழுந்து விட்டது. என் வெள்ளை வெளேர் ஷார்ஸ்கின் உடையில் சில டீத்துளிகள் பட்டவிட்டன.
"அடடே!" என்று சங்கடத்தோடு சொல்லிவிட்டு ஒரு கந்தையை எடுத்து வர ஓடினார் பிஜு மாமி. "த்சொத்சோ"என்றேன் நான்.
நீ சிரிக்கறயா? நீ என்ன நினைக்கிறாய் என்று எனக்குத் தெரியும். நான் வேண்டுமென்றோ, என் உள்மன உந்துதலால் நானறியாமலேயோ கோப்பையைத் தவறவிட்டதாக நீ நினைக்கிறாய். சற்று முன்தான் அந்தக் கோப்பையில் கரப்பு நடமாடுவதைப் பார்த்திருந்தேன் நான். அதைத்தவிர இந்த அழுக்குத் தரை-ஊசிப்போன பொருள்களின் நாற்றம்--இந்தச் சூழ்நிலையில் எதுவும் என் தொண்டையில் இறங்காது.
பின்னர் இது குறித்து எனக்குப் பச்சாதாபம் ஏற்படாமலில்லை. நான் பண்பற்ற முறையில் நடந்து கொண்டு விட்டேன் அற்பன் மாதிரி. என் செய்கை பிஜு மாமிக்குப் புரிந்துவிட்டதோ இல்லையோ எனக்குத் தெரியாது. என்ன செய்வது.
நாமெல்லாருமே நம் சுபாவத்துக்கு அடிமைகள். எனக்கு அந்த நிலையில் வாந்தி வரும் போலிருந்தால் அதற்கு நானா பொறுப்பு? ஏப்பமோ தும்மலோ வராமல் தடுத்து கொள்ள முடியுமா நம்மால்?
"பத்துப் பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்னால் கூட நீ இதை விட மோசமான நிலையில் இருந்தாய் என்பதை மறந்து விட்டாயா? அப்போது இந்த மாதிரி சந்தில், இந்த மாதிரி அறையில் வெகு சாதாரணமாக வசித்திருக்கிறாயே!"
"ஆமாம். ஆனால் அது வேறு காலம், இது வேறு காலம். இதோ பார், நாம் ஒரு பழக்கத்திலிருந்து இன்னொரு பழக்கத்துக்கு மாறுகிறோம்--ஒரு பிறப்பிலிருந்து இன்னொரு பிறப்புக்கு மாறுவது போல. நான் ஒரு காலத்தில் அந்தப் பாழடைந்த கிணற்று வாழ்க்கையில் ஒன்றியிருந்தேன் என்பது உண்மைதான். அதுபோல் நான் அந்த வாழ்க்கையை விட்டு வெளியேறி விட்டேன் என்பதும் உண்மையே. உண்மையை ஒப்புக் கொள்வதில் குற்றமில்லை. ஒருவன் தன் பத்தாம் வயதில் அணிந்து கொண்ட சட்டை அவனுடைய இருபதாம் வயதில் அவனுக்குப் பொருந்தா விட்டால் அது அவன் குற்றமா? அது காலத்தின் குற்றம்..!"
பக்கத்து அறையிலிருந்து மூச்சிரைக்கும் அரவம் கேட்டது. நான் கேள்விக்குறியுடன் பிஜு மாமியைப் பார்த்தேன்.
"பரிமல்.. அவன் நெஞ்சிலே சளி சேர்ந்திருக்கு. அதனால மூச்சுவிடக் கஷ்டப்படறான். இப்ப தூங்கிக்கிட்டிருக்கான். இப்பக் கூட மூச்சுத் திணறுது.."
ஈரித்த தரை - நெடுங்காலத்துப் பாசி படர்ந்தாற்போல். தரை தெரு மட்டத்தை விடத் தாழ்வானது. ஆகையால் ஒருகாய்ந்த தண்ணீர்த் தொட்டி போலிருந்தது அது.
("சரஜிஜ், மேலே பேசாதே! இதுக்கப்பறம் என்ன சொல்லுவேன்னு எனக்குத் தெரியும் உத்தரத்திலே கறையான்,கிழிஞ்ச தலையணை, கதவோரத்திலே ஒட்டடை.. இதெல்லாந் தானே? ஒன் வர்ணனை உண்மையாயிருக்கலாம், ஆனால் அதிலே உயிரிருக்காது. நீ விலகி வந்து விட்ட வாழ்க்கையை வர்ணிக்க முயலாதே!")
விளக்கு அணைந்து விடும்போல் பக்பககென்று எரிந்தது. அதில் பார்வையைப் பதித்தவாறே மாமியைக் கேட்டேன்,"பரிமலுக்கு எவ்வளவு நாளா ஒடம்பு சரியில்லே?"
"இன்னியோடே இருபத்திரண்டு நாள்."
"டாக்டர் என்ன சொல்றார்?"
"டாக்டர்கிட்டே போனாத்தானே! அந்த அதிருஷ்டங் கெட்டவகிட்டே ஒண்ணுமில்லே. வெறுங்கை, வெறுங் கழுத்து-அவளைக் கண்ணால பார்க்க முடியலே, சரசிஜ்! அவ கல்யாணத்திலே நாலஞ்சு பவுன் நகை போட்டிருந்தேன். எல்லாத்தையும் வித்துச் சாப்பிட்டாச்சு".
"நீங்க எப்போ வந்தீங்க மாமி?"
"புதனோட புதன் எட்டு நாளாச்சு.. என் வயித்தில் பொறந்தவ இல்லியா! செய்தி கேட்டப்பறம் வராமே இருக்கமுடியல்லே. குக்கு என்னோட உசிருன்னு ஒனக்குத்தான் தெரியுமே!"
"தெரியும், மாமி."
"கையிலே இருந்ததை எடுத்துக்கிட்டு ஓடி வந்தேன். அங்கே என்ன நிலைமைன்னு ஒனக்குத் தெரியுமே! இந்த வருஷம் குக்கு பெரிய பரீட்சை எழுதணும். பரீட்சைக்கு இன்னும் பணம் கட்டியாகலே."
"புரியுது, மாமி."
மாமி முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொள்ளும் போது அதிலிருந்த கிழிசல் என் கண்ணில் பட்டது.
"கொழந்தைகளோட சட்டை எல்லாம் கிழிஞ்சு போச்சு. ரெண்டு மாச வாடகை - அம்பத்திரண்டு வா - பாக்கி. ஒருவேளை சாதம், ஒரு வேளை சப்பாத்தி சாப்பிடறோம். அப்படியும் மாசத் தேவை பூராவையும் ரேஷன்லே வாங்க முடியலே. இருந்தாலும் விஷயத்தைக் கேட்டு உடனே வரவேண்டியதாப் போச்சு. பரிமலோட உசிரு மொதல்லே, மத்தெல்லாம் அப்பறம்."
தன் முந்தானை முடிச்சை அவிழ்த்து அதிலிருந்து பல மடிப்புகளாக மடித்து வைக்கப்பட்டிருந்த ஒரு பழைய நோட்டைக் கையிலெடுத்துக் கொண்டு என்னை நெருங்கினார் மாமி. ஏனென்று புரிந்தது எனக்கு.. நான் சற்றுப் பின் வாங்கினேன். மாமி என் கையில் ரூபாய் நோட்டைத் திணிக்கப் போகிறார்- அதையேதான் செய்தார் அவர். அவருடைய கை நடுங்கியது; குரலுந்தான்.
"சரசிஜ், என் கையிலே வேறே ஒண்ணுமில்லே, இதிலே பரிமலுக்கு இஞ்செக்ஷன் வாங்க முடியுமா பாரு.. நான் திரும்பிப் போறதுக்காக டிக்கெட் பணத்தை கஷ்டப்பட்டுச் சேர்த்து வைச்சிருந்தேன்.."
நான் பணத்தை வாங்கிக் கொள்ளவில்லை. வாங்கிக்கொள்ள முடியவில்லை என்னால். இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. என்னுடைய அந்தக் கதை ஞாபகம் வந்தது எனக்கு --பிச்சைக்காரப் பெண் தன் துணியை அவிழ்த்துக் குழந்தைக்குப் போர்த்தி விட்டாள்..
("குக்கு- அதாவது உஷாவை-அன்னிக்குப் பார்த்தியா, சரசிஜ்?")
பார்த்தேன், அவள்தான் விளக்கை எடுத்துக் கொண்டு சந்து முனை வரை என் பின்னால் வந்தாள்.
சந்து முனைக்கு வந்ததும் நான் திரும்பிப் பார்த்தேன் விளக்கிலிருந்து வந்த வெளிச்சமும் புகையும் அவளது உடலைத் துண்டு துண்டாக்கிக் காட்டின. "என்ன இப்படி ஆயிட்டே, உஷா?" என்று கேட்டேன். அவள் சிரித்தாள், பிறகு முகத்தைத் திருப்பிக் கொண்டு, "நாந்தான் ஒடம்பு முடியாமே இருந்தேனே...! அதோடே இவரோட வியாதி வேறே... அநேகமாக எல்லா ராத்திரியும் தூங்காம முழிக்க வேண்டியிருக்கு..." என்று சொன்னாள்.
அவளுடைய தலையில் முக்காடு இல்லை. அவளுடைய முடி காற்றில் பறந்தது. விளக்குத் திரியின் வெளிச்சம் சீராகஇல்லாததால் ஒளியும் நிழலும் அவளுடைய உடலில், முகத்தில், கன்னத்தில், கண்களில் மாறி மாறிப் படர்ந்தன.
உஷா மறுபடி சிரித்தாள். "என்ன பார்க்கறே, என்னைப் பார்த்தா பிசாசு போல இருக்கா...? இந்தச் சில வருஷங்களிலே நான் ஒரேடியாப் பிசாசா ஆயிட்டேன். இல்லியா?"
"இல்லேயில்லே, நீ முன்னே மாதிரியேதான் இருக்கே" என்று நான் சொல்லியிருக்க வேண்டும், ஆனால் நான் மௌனமாயிருந்தேன்.
உஷா திடீரென்று மெல்லச் சிரித்தாள். "ஒனக்கு நல்ல களை வந்திருக்கு."
"நீ இன்னும் குண்டாயிட்டே" என்பதைத்தான் அவள் சுற்றி வளைத்துச் சொல்கிறாளோ என்று புரியாமல் நான்கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டேன். என் ஷார்க்ஸ்கின் பேண்டும் சட்டையும் எனக்கு உறுத்தின.
"எங்க சந்திலே ராத்திரி பூரா காத்துக்கிட்டு நின்னாலும் டாக்சி கிடைக்காது" என்றாள் அவள்.
அவளது பேச்சின் குறிப்பைப் புரிந்து கொண்ட நான் சங்கட உணர்வுடன் தெருவில் நடக்கத் தொடங்கினேன்.அப்போது 'நான் மறுபடி வருவேன்' அல்லது 'மறுநாள் வருவேன்' என்று முணுமுணுத்திருக்கலாம்... ***
அது சொல்லியது, "சாப்பாடு மூடி வச்சிருக்கு சரசிஜ்! நீ அதைத் தொட்டுக்கூடப் பார்க்கல்லியே!"
"எனக்கு வேணாம்! என்னை இந்த வராந்தவிலே உக்காந்து சிகரெட்டை முழுசாக் குடிக்க விடு!" நான் சொன்னேன்.
அது சிரித்து, பின்னாலிருந்து அசிங்கமான முறையில் என்னைக் கட்டிக் கொண்டது. அதன் இருட்டு நிறக் கை என்கழுத்தில்.
"என் குரல்வளையை அமுக்கிக் கொல்லப் போறியா?"
அதன் முகத்தை நான் பார்க்கவில்லை அப்போது. ஆனால் அது இருந்தது, என் கழுத்தைக் கட்டிக் கொண்டு இருந்தது. அது சொல்லியது, "கொன்னு என்ன பிரயோசனம்... கொஞ்சம் புகையாகி மேலே பறக்கும், கொஞ்சம் சாம்பலாகிக் கிடக்கும்... இந்த ரெண்டு மணி நேரத்தில் நீ எவ்வளவு சிகரெட் குடிச்சுட்டே! சாப்பாட்டைத் திற, வயித்துக்குக் கொஞ்சம் சாப்பிடு!"
"எனக்கு பசியில்லேன்னு சொன்னேன்னே!"
"ஏன் இல்லே?"
"ஏன்னு ஒனக்குத் தெரியும். என் மனசு சரியில்லே. இன்னிக்கு உஷாவைப் பார்த்துட்டு வந்திருக்கேன். அங்கே போய்ப் பார்த்தா அழுகை வருது... உஷாவோட புருஷன் பரிமல் படுத்த படுக்கையாகக் கிடக்கான். அவன் பொழைப்பாங்கற நம்பிக்கை இல்லை. உஷாகிட்டப் பணமில்லே. அவ கையிலே ஒரு வளையல்கூடஇல்லே..."
"தெரிஞ்சுகிட்டேன். அதனாலேதான் ஒன் மனசு சரியா இல்லையா, சரசிஜ்?"
அது பேசிய முறையே சரியாக இல்லை.
மிகவும் வேதனையுடன் நான் சொன்னேன், "உஷா எனக்கு எவ்வளவு வேண்டியவள்னு ஒனக்குத் தெரிஞ்சிருந்தாஇப்படியெல்லாம் பேசமாட்டே... என்னோட அவளுக்கு எப்படிப் பட்ட உறவு ஏற்பட்டிருக்க முடியும்! ஒரு சின்னப் பிசகு பண்ணிட்டு இப்ப அதுக்கான விலையைக் கொடுதுக்கிட்டிருக்கா."
அது ஹாஹாவென்று சிரித்தது. அந்தச் சிரிப்பு உடைந்த கண்ணாடியின் எண்ணற்ற சில்லுகள் போல் என்னைக் குத்திக் கீறியது.
அது சிரிப்பதை நிறுத்திவிட்டுச் சொல்லியது, "நெஞ்சிலே கை வைத்துச் சொல்லு, சரசிஜ்! நிசமாவே ஒனக்கு வருத்தந்தானா? உஷா ஒன்னை உதறிட்டுப் பரிமலைக் கலியாணம் பண்ணிக்கிட்டா, அதனாலே அவளுக்கு சுகமில்லே, இன்னிக்கு அவ ஒரு இருட்டறையிலே உக்காந்துகிட்டுத் தவிக்கறா - இதையெல்லாம்பார்த்த ஒனக்குக் கொஞ்சங்கூட சந்தோஷம் ஏற்படல்லியா?"
நான் பதிலெதுவுதும் சொல்லவில்லை. சொல்லிப்போன பிரயோசனமில்லை. அது மகாமட்டமான பிராணி. நம்பிக்கை இல்லாதது. அதுக்கு உஷாவைப் புரியலே. நான் அதுகிட்டே பிஜு மாமியைப் பத்திச் சொன்னால் மட்டும் புரிஞ்சுக்குமா?
பிஜு மாமிக்குத் தன்னோட பெண்மேலே பாசம். அவர் தன்கிட்டேருந்த கடைசிப் பத்து ரூபாய் நோட்டைமுந்தானையிலேருந்து எடுத்துக் கொடுத்ததைக் கேட்டும் அது ஹாஹாவென்று சிரிக்கும்.
("சரசிஜ், மறுநாள் காலையிலே நீ மறுபடி அங்கே போனியா?")
ஆமாம் போனேன். அன்று டாக்சியைச் சந்துக்குள்ளே கொண்டு போகவில்லை. கையில் மருந்து, பையில் பழங்களுடன் வேஷ்டி நுனியைத் தூக்கிகொண்டு உஷா வீட்டு வாசலில் போய் நின்றேன். அப்போது நாற்புறமும் வீடுகளில் கரியடுப்பு மூட்டிக் கொண்டிருந்தார்கள்.
இன்றும் பிஜு மாமிதான் கதவைத் திறந்தார்.
"பரிமல் எப்படியிருக்கான், மாமி?"
"அதே மாதிரிதான்... வா."
பகலில் அந்த அறைக்குள் நுழைய முடிந்த சொற்ப வெளிச்சதிலேயே அதன் உண்மை நிலை தெளிவாகத் தெரிந்தது -அதை நான் வர்ணிக்க விரும்பவில்லை. பழைய துண்டு, கிழிந்த லுங்கி, சுவரில் கறைகள், அழுக்குத் தலையணை, ஈ எல்லாமும் இருந்தன, அவை எப்போதும் இருக்கும். முதல் நாளிருந்த மோடாவைத் தேடிக் கண்டுபிடித்து அதன்மேல் உட்கார்ந்தேன். இன்று நான் வேஷ்டி அணிந்திருந்ததால் உட்காருவதில் அசௌகரியம் ஏற்படவில்லை.
மருந்தையும் பழப்பையையும் பிஜு மாமியிடம் கொடுத்தேன். அவருடைய முகம் மலர்ந்தது, அந்த மலர்ச்சியை மறைத்துக் கொள்ள அவர் முயற்சி செய்யவில்லை.
பக்கத்து அறையிலிருந்து மூச்சிரைக்கும் அரவம் கேட்டது. நான் அதை உற்றுக் கேட்பதைக் கவனித்து மாமி சொன்னார். "நேத்து ராத்திரி பூரா இப்படித்தான் மூச்சு விட முடியாம சிரமப்பட்டான். நானும் குக்குவும் முறை வச்சுக் கண் முழிச்சோம். பொண்ணைப் போய்த் தூங்கச் சொல்லிட்டு நான் உக்காந்திருக்கிற போதெல்லாம், "எப்படியாவது இந்த ராத்திரிப்போது ஆபத்தில்லாமே கழியும்படி செஞ்சுடு"ன்னு பகவானை வேண்டிக்கிட்டேயிருந்தேன். இந்த ரூமிலே குக்கு தலையிலே அடிச்சுக்கிட்டு அடிச்சுக்கிட்டு ரணமாக்கிக்கறா, அந்த ரூமிலே நோயாளியோட முனகல்- அந்த பயங்கரத்தை ஒனக்கு விளக்கிச் சொல்ல முடியாதுப்பா..." சிறிது நேரங்கழித்து மாமி மறுபடி தொடர்ந்தார், "நடு நடுவிலே குக்கு அந்த ரூமுக்கு வந்தா. அவ மூஞ்சியைப் பார்க்கசகிக்கலே. அவளோட கண் ரெண்டும் நெருப்பா எரியுது.. நேத்திக்குத்தான் பார்த்தியே! நெத்தியிலே எல்லாம் ஒரே ரத்தம். நான் பரிமலோட நெஞ்சைத் தடவிக் கொடுத்தேன், அவனுக்க 'பெட்பான்' வச்சேன். குக்குவை ரொம்ப நேரம் அவன்கிட்டே ஒக்காந்திருக்க விடலே. அவளோட ஒடம்பிலே எலும்பைத் தவிர வேறே ஒண்ணுமில்லே, தலையிலே எழுதினதை யார் மாத்த முடியும்? இருந்தாலும் என் கண்முன்னே இருக்கிற வரையிலேஅவளுக்காக என்னாலே முடிஞ்சதைச் செய்யறேன்.. என்ன இருந்தாலும் நான் அவளோட அம்மா, சரசிஜ்!"
என் உடம்பு சிலிர்த்தது. மாமியின் கண்களுக்கடியில் கருமை படர்ந்திருந்தது. சுண்ணாம்பு நீரில் ஊறியது போலிருந்தது அவருடைய தலைமுடி.
"ஒங்க ஒடம்புந்தான் நல்லாயில்லே, மாமி. நீங்க இந்த மாதிரி ராத்திரி கண்முழிச்சா நீங்களும் ஒடம்பு முடியாமபடுத்துடுவீங்க!"
மாமி சிரித்தார். வேதனை கலந்த சிரிப்பு, "என் விஷயத்தை விட்டுத் தள்ளு. நான் ஒரு கணக்கு இல்லே, சாவு என்னை இன்னிக்கு அழைக்கலாம், அல்லது நாளைக் அழைக்கலாம். அழைப்பு இன்னிக்கே வந்துட்டுப் போகட்டமே! அதக்கு முன்னாலே குக்குவை ஆபத்திலேருந்து காப்பாத்திட்டேன் என்கிற திருப்தி கிடைச்சாப் போதும் எனக்கு."
("சரசிஜ், அந்த ஒரு வாக்கியத்தைக் கேட்டு நீ பிஜு மாமியை ஒரு புது மனுஷியா உணர்ந்தியா?")
"ஆமா, அந்த நிமிஷத்திலே பிஜு மாமி ஒரு ஏழையாத் தோணல்லே எனக்கு. விதியோட விளையாட்டாலே, வறுமைகாரணமா எவ்வளவோ இழந்துட்டார் பிஜு மாமி. ஆனா இவ்வளவு கஷ்டத்திலேயும் அவர் பாதுகாத்து வச்சிருந்தாரே, அதோட மதிப்பும் கொஞ்சமில்லே, ஒரு உசிரைக் காப்பாத்த எல்லாத் தியாகமும் செய்யறது. ஒரு மனுஷர் இன்னொரு மனுஷரை சார்ந்த நிக்கறது-ரெண்டு சீட்டு ஒண்ணு மேலே ஒண்ணு சாஞ்சுக்கிட்டு நிக்கற மாதிரி- நோயாளிக்குப் பணிவிடை செய்யச் சம்பளங் கொடுத்து நர்ஸ் வச்சுக்க மாட்டாங்க. இந்தமாதிரி வாழ்க்கை எனக்கு ஒரு காலத்திலே ரொம்பப் பரிச்சயமா யிருந்தது.. இப்போ மறுபடியும் அதை அடையாளங் கண்டுக் கிட்டேன்.."
"உஷா எங்கே மாமி?" என்று தணிந்த குரலில் கேட்டேன்.
"தூங்கறா. ராத்திரி பூரா இந்த ரூமுக்கும் அந்த ரூமுக்குமா அலைஞ்சுட்டு இப்பத்தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாலே கண்ணசந்திருக்கா. நான் அதனால்தான் அவளை எழுப்பல்லே. தூங்கட்டும். வாழ்க்கையிலே தூக்கத்தையே இழந்துடற நிலை மைக்கு வந்துட்டாளே!"
வெளியில் - சந்து முனையில் - ஒரு நாய் ராகத்துடன் ஓலமிட்டுக்கொண்டிருந்தது. மாமி அந்தத் திசையில் விரலால்சுட்டிக் காட்டிவிட்டுக் கிசுகிசுத்தாள், "கேளு! தினம் இந்த மாதிரி ஓலமிடுது. காலையிலே, மத்தியானம், சாயங்காலம், நடுராத்திரியிலே கூட. ராத்திரி வீட்டு வாசல்லே ஏறி வருது. இந்த ஓலம் ரொம்ப அச்சானியம். பரிமல் இனிமேல் பிழைக்க மாட்டான் போலிருக்குப்பா.."
அந்த ஒரு வாக்கியம் என்னை அற்பனாக, நாதியற்றவனாகச் செய்து விட்டது. நான் சிரமப்பட்டு எழுந்திருந்து என் குரலில் உறுதியை வரவழைத்துக்கொண்டு சொன்னேன், "நிச்சயம் பிழைச்சுடுவான், மாமி! நாம அவனைக் காப்பாத்திடுவோம்!"
என் பேச்சின் பொருள் புரியாமல் மாமி என்னைக் கண் இமைக்காமல் பார்த்தார்.
"நிச்சயம்காப்பாத்திடுவோம், மாமி! நம்மால முடிஞ்சதை யெல்லாம் செய்வோம்!" ஒரு தடவை தொண்டையைக் கனைத்துக் கொண்டு தயக்கத்தைத் துடைத்தெறிந்துவிட்டுத் தொடர்ந்தேன். "ஒண்ணும் தப்பா நினைச்சுக்காதீங்க மாமி! என்கிட்டேயும் நிறையப் பணம் இல்லே. நான் இப்போ லக்னோவிலே இருக்கேன்னு ஒங்களுக்குத் தெரியும். இங்கே ஓட்டல்லே தங்கறதாலே ரொம்பச் செலவு. இருந்தாலும் மருந்து, பழம், சிகிச்சை இதுக்காகக் கொஞ்சம் பணம் கொடுத்துட்டுப்போக ஆசைப்படறேன்.."
என் சட்டைப் பையில் கையை விடப் போனேன். மாமி கையை உயர்த்தி என்னைத் தடுத்தார். அவர் உணர்ச்சிவசப்பட்டுவிட்டார் என்பத தெளிவாகத் தெரிந்தது. அவருடைய கண்களில் நீர் பளபளத்தது. அவர் கையை உயர்த்திச் சொன்னார், "கொஞ்சம் இருப்பா.. என்கிட்டே கொடுக்க வேணாம். குக்குவைக் கூட்டிக்கிட்டு வாரேன். நீ கொடக்கறதை அவ கையிலேயே கொடு. அப்போ அவ புரிஞ்சுக்குவா.. அவ தனியா இல்லே, அவளுக்கு உதவ ஒரு நண்பன் இருக்கான்னு.."
பிஜு மாமி உள்ளே வேகமாகப் போகத் தொடங்கியவர் திடீரென்று திரும்பி நின்றார். அவரது கண்களை உற்றுப் பார்த்தார். அந்தக் காட்சி இப்போதும் என் மனக் கண்ணில் தெளிவாகத் தெரிகிறது.
அவர் ஏதோ சொல்ல விரும்புகிறார். அவர் சொல்ல வந்தது உதடோரத்துக்கு வந்து காய்ந்துபோய் விடுகிறது.அவர் என்னருகில் வந்தார்; தணிந்த குரலில் கேட்டார், "சரசிஜ், எவ்வளவு?"
முதலில் என்னால் அவருடைய கேள்வியின் பொருளைப் புரிந்துகொள்ள முடியவில்லை. மாமி மறுபடியும் அதே குரலில் "எவ்வளவு?" என்று கேட்டதும் புரிந்துவிட்டது எனக்கு.. நாய் இன்னும் ஓலமிட்டுக் கொண்டிருந்தது.. மஸ்லின் ஜிப்பாய் பையிலிருந்து ஒரு நோட்டை எடுத்தேன் - நூறு ரூபாய் நோட்டு.
"மாமி, இப்போதைக்கு இந்தப் பணத்தை.."
நான் சொல்லி முடிக்கவில்லை.
"நூ..று.. ரூவாயா!" ஒரு வினாடியில் மாறிப் போய்விட்டார் மாமி. அவரது குரல்கூட மாறியிருந்தது.
"நூ..று.. ரூவா..!" கரகரத்த குரலில் மறுபடி பேசினார் மாமி. "அவ்வளவு பணத்தையும் அவகிட்டே கொடுத்துடப் போறியா..? அதுக்குப் பதிலா.. சில்லறையா மாத்தி எனக்கும் கொஞ்சம் கொடேன்..!"
நெருப்பிலிட்ட காகிதத் துண்டுபோல் என் கண் முன்னே கொஞ்சங் கொஞ்சமாகச் சுருங்கிப் போய்க் கொண்டிருந்தார் பிஜு மாமி. 'நூ..று.. ரூபா' இந்த ஒரு சொற்றொடர் ஆற்றுத் தண்ணீரைக் கிழித்துக் கொண்டு செல்லும் நீராவிப் படகுபோல் தனக்கொரு வழியை உண்டாக்கிக் கொண்டு விரைந்தது. ஒரு பக்கம் உஷா, அவளுடைய அசுத்தமான சிறு அறை, உயிருக்கு மன்றாடிக் கொண்டிருக்கும் கைம்மை; இன்னொரு புறம் பிஜு மாமியின் குடும்பம்--வாடகை பாக்கி, குழந்தைகளுக்கு ஃபிராக் சட்டை வாங்கப் பணம், பையனுக்குப் பரீட்சைக்காகக் கட்ட வேண்டிய பணம், ரேஷன் வாங்கப் பணம்.. உஷாவைப் பற்றிய கவலையில் இந்தக் குடும்பத்தைச் சிறிது நாட்கள் மறந்திருந்தார் பிஜு மாமி. இப்போது உஷாவின் குடும்பமும் மாமியின் குடும்பமும்வெவ்வேறாகி விட்டன.
("அந்தப் பிச்சைக்காரப் பெண்ணோட கதையைத் தேடிக் கண்டு பிடிச்சிருந்தா நீ என்ன செஞ்சிருப்பே?")
"கிழிச்செறிஞ்சிருப்பேன்."
"உம்" என்று சொல்லிவிட்டு அது சற்று நேரம் மௌனமாக இருந்தது. கடைசியில் அது மெல்லச் சொல்லியது.. "சரசிஜ், நீ பிஜு மாமியை மட்டுந்தான் பார்த்தே, அந்த அறைப் பக்கம் திரும்பிப் பார்க்கலிலியே! மாமியோட நடத்தைக்கான ரகசியம் அந்த அறையிலேதான் இருக்கு. ஒரு கட்டில் போடத்தான் இடமிருக்கு அந்த அறையிலே, அப்படிப்பட்ட அறையிலே எவ்வளவு பெரிய மனசு இருக்க முடியும்..? சரசிஜ், இந்தக் கணக்குத் தெரியல்லேன்னா இந்த கதையை எழுத முயலாதே!"
('சாயாஹரின்', 1961)
12. மரம்
ஒரு மரம். வெகுகாலத்து மரம். அது அழகாயிருக்கிறதா இல்லையா என்று யாருமே கேள்வி கேக்கவில்லை.
மனிதன் தலைக்கு மேலே வானத்தையும் மேகத்தையும் பார்ப்பதுபோல் அவர்கள் தங்கள் கண்ணெதிரில் அந்த மரம் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார்கள் -- மாலை நேரத்தில், நண்பகலில், காலையில் பார்த்தார்கள், வெறுங் கண்களால் பார்த்தார்கள். இதயத்தால், உணர்வு பூர்வமாகப் பார்க்கவில்லை, புரிந்து கொள்ளவில்லை.
அப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்று யாருக்கும் ஒரு நாளும் தோன்றவுமில்லை.
நாட்கள் கழிந்தன, பருவங்கள் கடந்தன, ஆண்டுகள் சென்றன. மரம் தன் இடத்தில் நின்று கொண்டிருந்தது.
மழைக்காலத்தில் அந்த மரத்தின் இலைகள் பெரிதாக, தளதளவென்று ஆகும்; சரத் காலத்தில் அவை தடிமனாகும்,அவற்றின் பச்சை நிறம் இன்னும் அழுத்தம் பெற்று ஏறக்குறையக் கறுப்பாகிவிடும்; பின்பனிக் காலத்தின் நடுப்பகுதியில் இந்தப் பசுமை - கருமை மங்கிப் போய்விடும். பிறகு குளிர்காலத்தில் அந்த இலைகள் சோகை பிடித்த கர்ப்பிணியின் வெளிறிய முகம் போல் பழுத்துப்போய் உதிர்ந்துவிடும். மரத்துக்கு எரிச்சலாயிருக்கும்.
அப்போதும் மரம் மரந்தான். ஆனால் அது பார்ப்பதற்கு வெறும் கட்டை போலிருக்கும் -- சிறிய கட்டை, பெரிய கட்டை, மெல்லிய கட்டை, மனித விரல்போல் சின்னஞ் சிறிய, எண்ணற்ற கள்ளிகள், கட்டைகளாலான ஒரு சிக்கலான கட்டுமானம்..
ஆனால் அதற்காக யாரும் அதன்மேல் கோபித்துக் கொள்வார்களா? இல்லை. காரணம், அந்த மரம் மேகங்கள்கவிந்த ஆகாயத்துக்குக் கீழே தானே ஒரு காடு போல் அடர்த்தியாக நின்றிருக்கும்போது மனிதர்கள் அதை எப்படிப் பார்த்தார்களோ, அதே மாதிரிதான் அது குளிர்கால வானத்துக்குக் கீழே கட்டைகளையும் சுள்ளிகளையும் சுமந்துகொண்டு நிற்கும் போதும் பார்த்தார்கள். அதனால்தான் இது மேலெழுந்தவாரியான பார்வை, மனதால் புரிந்து கொள்வது அல்ல என்று சொன்னேன். ஜனங்கள் அதைப் புரிந்துகொண்டிருந்தால் மாசி மாதத்தில்அதன் சிவப்பும் இளம் பச்சையும் கலந்த கொழுந்துகளின் செழுமையைப் பார்த்து ஆடிக் குதித்திருப்பார்கள். சித்திரை பிறந்ததும் அது கொத்துக் கொத்தாய்ப் பூக்களைச் சுமந்து கொண்டு ரோஜா நிற ஒளியை வானமெங்கும் பரப்பும்போது அவர்கள் மகிழ்ச்சி மேலிடக் கத்துவார்கள்.
அவ்வாறு யாரும் செய்வதில்லை, இதுவரை செய்ததில்லை.
இரண்டு மூன்று வீடுகளுக்கு முன்னால் உள்ள நிலத்தில் ஒரு மரம் கப்புங் கிளையுமாக நின்று கொண்டிருப்பதால் ஒரு வசதி ஏற்பட்டிருக்கிறது என்று மட்டும் அவர்களுக்குத் தெரியும். அந்த வீடுகளில் இருப்பவர்களும் அவ்வப்போது இந்த வசதியை அனுபவிக்க வருவார்கள். காலை வேளைகளில் வயது முதிர்ந்தசிலர் செய்திப் பத்திரிகைகளை எடுத்துக் கொண்டுவந்து மரத் தடியில் அமர்ந்து அரசியல், சமூகம், பொருளாதாரம் பற்றி விவாதிப்பார்கள். பிற்பகலில் அந்தப் பக்கத்துக் கிழவிகளும் நடுத்தர வயதுப் பெண்களும் மரத்துக் கீழே மெல்லிய பச்சைக் கம்பளமாய் விரிந்திருக்கும் புல்லின்மேல் கால்களைப் பரப்பிக் கொண்டு சமையல், தையல், யார் வீட்டிலோ குழந்தை பிறந்தது, யாருக்கோ குழந்தை பிறக்காதது இவற்றைப் பற்றியெல்லாம் பேசிப் பொழுதைக் கழிப்பார்கள். மாலை நேரம் வந்ததும் சிறுவர் சிறுமியர் அங்கே விளையாட ஓடி வருவார்கள். மரத்தைச்சுற்றி ஓட்டம், மரத்தின் மேலேறி இலை பறிப்பது, கிளைகளை ஒடிப்பது, சில நாட்கள் மரக்கிளையில் கயிற்றைக் கட்டி ஊஞ்சலாடுவது.. இவ்வாறு ஒரே கூச்சலும் கும்மாளமுமாயிருக்கும்.
சிலர் குளிர்காலப் பகல் நேரத்தித கொண்டில் மர நிழலில் தலை வைத்துக்கொண்டு உடம்பு வெயிலில் படும்படி நீட்டிக்கொண்டு கதைப் புத்தகம் படிப்பார்கள், கோடைகால இரவுகளில் ஐந்தாறு பேர் மரத்தடியில் ஜமுக்காளத்தை விரித்துக் கொண்டு அதன் மேலமர்ந்து சீட்டாடுவார்கள்.
மனிதர்கள் நடமாட்டமில்லாத நேரத்தில் ஆடுமாடுகள் மரத்தடியில் ஆனந்தமாகப் புல் மேய்ந்து கொண்டிருப்பதைக் காணலாம்.
மேலே பறவைகளின் கீச்சு மூச்சு ஒலி, சிறகுகள் படபடக்கும் அரவம், அலகோடு அலகு உரசிக்கொள்ளும் ஒலி. இடையிடையே காற்றில் கிளைகள் ஆடும், இலைகள் அசையும்.
சில சமயம் பறவைகளே இருக்காது. காற்றில் சலனமும் இருக்காது. மரம் அசைவற்று நிற்கும் - நிலத்தின்மேல் அடர்ந்த நிழலைப் பரப்பிக் கொண்டு - யுகயுகமாய் -- எல்லையற்ற காலத்தின் சாட்சியாகத் தன்னந்தனியே நின்று கொண்டிருக்கும். அப்போது ஒரு தத்துவ ஞானி மௌனமாக, சலனமின்றி உலகத்தைப் பார்ப்பது போலிருக்கும். வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகள், பாவத்தின் வெற்றி, புண்ணியத்தின் தோல்வி, இவற்றை யெல்லாம் பார்த்துத் திகைத்து வியக்கும் தத்துவ ஞானியாகக் காட்சியளிக்கும் அது.
சிந்தனை வயப்பட்ட மனிதன்போல் அந்த மரமும் இருந்தது. சிந்தனை வயப்பட்ட மனிதன் மௌனமாயிருக்கிறான். சில சமயம் மரத்தையும் அப்படிப்பட்ட மனிதனாகக் கற்பனை செய்யத் தோன்றும். அப்போது அதன் நாற்புறமும் மனிதர்கள், விலங்குகள், பறவைகள், காற்று இவற்றின் நடமாட்டத்தைப் பார்த்தால் மனதுக்குக் கஷ்டமாக இருக்கும்.
யாரோ ஒருத்தி மரத்தை இந்த மாதிரி கற்பனை செய்திருக்கிறாள் போலும். அது இதுவரை யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. மரத்துக்கு ஞானப்பார்வை இருந்திருக்க வேண்டும். கிழக்குப் பக்கத்தில் ஒரு வீட்டின் பச்சை நிறச் சாளரத்தினருகில் உட்கார்ந்து கொண்டு ஒரு பெண் தன்னை உற்றுப் பார்ப்பது மரத்துக்குத் தெரிந்து விட்டது. முன்பெல்லாம் அவள் மரத்தில் தளிர்கள் அரும்புவதையும் பழுத்த இலைகள் உதிர்ந்து விழுவதையும் மற்றமனிதர்கள் போலவே சாதாரணமாகப் பார்த்து வந்திருக்கலாம். இப்போது அவளுடைய கண்கள் வெளுப்பாக இல்லை, மை தீட்டப்பட்டு நல்ல கறுப்பாயிருந்தன. குட்டைப் பின்னலை ஆட்டிக்கொண்டு, சட்டை காற்றில் அசைந்தாட அவள் ஓடித் திரிந்த காலத்தில் அங்கு நின்று கொண்டிருப்பது மரந்தானா அல்லது மூங்கில் கம்பா என்றுகூடக் கவனித்திருக்க மாட்டாள் அவள். இப்போது அவளது அமைதியான, கம்பீரமான தலையில்இறுக்கமாகக் கட்டப்பட்டிருக்கும் கொண்டைபோல் அவளது மனமும் நிதானம் பெற்று எப்போதும் அந்த மரத்தைஜாக்கிரதையாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது,. அவள் மரத்தைப் பற்றிச் சிந்திக்கிறாள். சிந்திக்கச் சிந்திக்க ஒருநாள் அவள் பார்வையில் பயம் தோன்றியது. இப்போது அவளுடைய கண்ணிமைகள் அசையவில்லை, கண்மணிகள் அப்படியே உறைந்து போய் விட்டன. ஏதோ ஒரு பயங்கரக் கவலை அவளைப் பீடித்திருக்கிறது. அந்தக் கரிய, இமைகள் சூழ்ந்த கண்களின் பார்வையில் பயத்தோடு வெறுப்பும் கலந்திருக்கிறது என்றுமரத்துக்குப் புரிந்து விட்டது. பகல் வெளிச்சத்தில் மட்டுமல்ல. இரவின் இருளிலும் அந்தச் சாளரத்தருகில் இரு விழிகள் தன்னை உறுத்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றன என்பதை யுணர்ந்ததும் மரத்துக்குப் பயம் ஏற்பட்டது. அது ஒரு தெளிவற்ற நிழலுருவமாகத் தன்னை இரவின் ஆழ்ந்த இருளில் மறைத்துக் கொண்டாலும் அந்தப் பார்வையிலிருந்து தப்ப இயலவில்லை. அந்தப் பெண் பயத்தை மட்டுமல்ல. பிடிபிடியாக வெறுப்பையும் அதன் மேல் வீசியெறிந்து கொண்டிருந்தாள்.
பிறகு இந்த விஷயம் எல்லாருக்கும் தெரிந்து போய் விட்டது.அந்தப் பெண்தான் இதை மற்றவர்களிடம் சொல்லியிருக்க வேண்டும்.
'இந்த மரம் கெட்டது, இது ஒரு பிசாசு. இதை இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும்!'
அக்கம் பக்கத்து மனிதர்கள் உஷாரானார்கள். மனிதர்கள் போல் மரமும் பிசாசாகி மக்களிடையே உலவமுடியும் என்று அவர்கள் முதல் முறையாகக் கேள்விப்பட்டார்கள், தெரிந்து கொண்டார்கள்.
கிழவர்கள் மரத்தடியிலமர்ந்து அரசியல் பேசுகிறார்கள்; இளம் பெண்களூம் கிழவிகளும் அங்கே உட்கார்ந்து கொண்டு குழந்தை பிறப்பது, பிறக்காதது பற்றியெல்லாம் விவாதிக்கிறார்கள்; மரம் பிசாசாக இருந்தால், அதற்குக் கெட்ட எண்ணமிருந்தால் மக்களுக்கு எவ்வளவு ஆபத்து!
"இதை வெட்டிவிடணும்! எரிச்சுடணும்! வேரோடு பிடுங்கினால் நல்லது! இல்லேன்னா இந்த மரத்தாலே என்ன ஆபத்து வருமோ தெரியாது!" என்றாள் இறுக்கமான கொண்டையில் வெள்ளைப் பூக்களாலான மாலையை வைத்துக் கொண்டு சாளரத்தருகே அமர்ந்திருந்த பெண்.
எல்லோரும் அவள் சொன்னதைக் கேட்டார்கள். சிறுவர்கள் அந்த மரத்தடியில் விளையாடுகிறார்கள். மரக்கிளையொன்று முறிந்து அவர்கள் மேல் விழலாம்.மரத்தின்மேல் இடி விழுந்தால் மரத்தடியில் அந்த நேரத்திலிருப்பவர்களெல்லாரும் உயிரிழப்பது திண்ணம். மரமே இடியை வரவழைக்கும் பிசாசு என்னதான் செய்யாது?
இதைக்கேட்டு மக்களின் கண்கள் பயத்தால் விரிந்தன.
அந்தப் பச்சைச் சாளரத்துப் பெண் சும்மா இருக்கவில்லை மரத்தைப் பற்றி இதுவரை கவலைப்படாதிருந்தவர்களிடம் அவள் மரத்தைப் பற்றிச் சொல்லிப் பயமுறுத்தினாள்.
மரப் பிசாசு இடியை மட்டுமல்ல, மனிதனைக்கூட நள்ளிரவில் தன்னருகே இழுத்துக் கொண்டு வரலாம். மறுநாள் காலையில் அந்த மனிதன் ஒரு கிளையில் தூக்குப் போட்டுக் கொண்டு தொங்குவதை எல்லோரும் காண்பார்கள் தூக்குப் போட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொள்ள மரக்கிளை மிகவும் வசதியானது என்பது எல்லாருக்கும் இப்போது நினைவு வந்தது.
இந்த மரத்தை வேரோடு பிடுங்கியெறிய வேண்டும், சுட்டுப் பொசுக்க வேண்டும்!
மரத்துக்கு மேற்குப்புறத்தில் இன்னொரு வீட்டின் சிவப்பு நிறச் சாளரத்தருகே அமர்ந்துகொண்டு ஒருவன் தன்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதை அது வெகுகாலம் கவனிக்கவில்லை. அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்த மரம் திகைத்தது, பிறகு மகிழ்ந்தது. அந்த மனிதனின் கண்கள் அழகாயிருந்தன. அவற்றில் பயமோ வெறுப்போ பகைமையோ சிறிதுமில்லை; அன்பும் பாசமும் அனுதாபமுமே இருந்தன.
இது மரத்துக்கு வியப்பளித்தது. ஏனென்றால் சில நாட்களுக்கு முன்னால் கூட அந்த மனிதனின் பார்வையில் சஞ்சலம் நிறைந்திருந்தது. அவனது நடையுடை பாவனையில் அமைதியின்மை வெளிப்பட்டது. அரை நிஜார் அணிந்த சிறுவனாக இருந்த காலத்தில் அவன் நினைத்த போதெல்லாம் மரத்தடிக்கு ஓடி வருவான், மரத்தின் மேல் கல்லெறிவான், மரத்திலேறி இலைகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் பறவைக் கூடுகளைத் தேடிப் பிடித்துச் சிதைப்பான், கிளைகளில் கயிறு கட்டி ஊஞ்சலாடுவான். இப்போது அவன் ஒரு கண்ணியமான மனிதன். இப்போதெல்லாம் அவன் தன் மஸ்லின் ஜிப்பாவின் கைகளை முழங்கைகளுக்கு மேல் மடித்து விட்டுக் கொண்டு,சாளரத்தையடுத்த மேஜைக்கு முன்னால் அமர்ந்து, மோவாயை உள்ளங்கைகளால் தாங்கியவாறு மரத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவன் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவாறு மேஜையிலுள்ள மலர்க் கிண்ணத்திலிருந்த ஒரு ரோஜாவை யெடுத்து முகர்கிறான். மரத்தைப் பார்க்கப் பார்க்க, எதையோ சிந்திக்கச் சிந்திக்க அவன் மகிழ்ச்சியடைகிறான், திருப்தியடைகிறான். மரத்தைப் பற்றிய அவனது சிந்தனைக்கும் ரோஜாவுக்குமிடையே ஏதோ ஓர் ஆச்சரியமான தொடர்பு இருக்கும் போலும்! அவனது பார்வையில் மரமும் ரோஜாவைப்போல்அழகாகத் தோன்றியிருக்கலாம்.
மரத்துக்கு நிம்மதி ஏற்பட்டது, அதன் பயம் தெளிந்தது.
இந்த மனிதன் மரத்தைப் பற்றி முற்றிலும் வேறு விதமாகப் பேசினான்.
"இந்த மரம் கடவுளின் ஆசியால் நம்மிடையே நிற்கிறது. இதைக் காப்பாற்றி வைத்துக்கொள்ள வேண்டும், நாள் முழுதும் இந்த மரத்தடியில் மனிதர்கள் கூடுகிறார்கள். ஒரு மனிதனை வேறொரு மனிதனிடம் இணைக்கிறது இந்த மரம்--அதாவது மனிதனுக்கு சமூக உறவைக் கற்பிக்கிறது. இது இருப்பதால்தான் இதனடியில் சிறுவர்கள் கூடி விளையாடுகிறார்கள். இந்த மரம் ஒரு தாய்போல் குழந்தைகளுக்குப் பாசத்தையும் மகிழ்ச்சியையும்பகிர்ந்தளிக்கிறது.
உண்மையில் இந்த மரம் அழகானது. இதன் நிழலழகு மிக அழகு. ஆகையால்தான் கள்ளங் கபடற்ற அழகிய பறவைகள் இதில் அடைக்கலம் பெற்று கீச்சுக் கீச்சு ஒலி எழுப்புகின்றன, வண்ணத்துப் பூச்சிகள் நடனமாடுகின்றன.."
அக்கம் பக்கத்து மனிதர்கள் புதிய விதமாகச் சிந்திக்கத் தொடங்கினார்கள்.
மேற்குப் பக்கத்து சிவப்புச் சாளரத்து அழகிய மனிதன் அத்துடன் நிற்கவில்லை. அவன் சொன்னான்...
"இரும்பு, செங்கல், சிமெண்ட்டாலான கட்டிடங்களில் வசித்து வசித்து நமக்கு அலுப்பு ஏற்பட்டுவிட்டது. நம் கண்களுக்கு முன்னால் ஒரு பச்சைமரம் இருப்பதால்தான் நம்மால் இயற்கையை நினைவுறுத்திக்கொள்ள முடிகிறது. இந்த மரத்தின் தயவால்தான் நாம் இன்னும் முற்றிலும் செயற்கையாக ஆகாமல் இருக்கிறோம். இந்த மரம் இருக்கத்தான் வேண்டும். சோர்வும் அலுப்பும் மிக்க நமது வாழ்க்கையில் இந்த மரம் ஒரு கவிதை.."
சிவப்புச் சாளரத்து மனிதன் ஒரு கவியோ?--சிந்தித்துப் பார்த்தது மரம். அவன் இரவில் மேஜை முன் அமர்ந்து ஏதோஎழுதுகிறான், எழுதாத நேரத்தில் மௌனமாகச் சாளரத்துக்கு வெளியே மரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
மனிதன் கெடுதலான சொற்களைக் கேட்டுச் சஞ்சலமடைகிறான்; அதுபோல் நல்ல வார்த்தைகளைக் கேட்டு அமைதியடை கிறான், மகிழ்ச்சியுறுகிறான்.
ஆகவே ஒருத்தி மரத்தைத் தூற்றியபோது கேட்டுக் கொண்டிருந்தவர்கள் நிதானமிழந்தனர்; இப்போது அவர்கள் மரம் பாராட்டப் பெற்றது கேட்டு அமைதி பெற்றனர். மரத்தைப் பற்றிய அவர்களது கவலை தீர்ந்தது. மரம் நிலைத்து நின்றது.
ஆனால் கிழக்குச் சாளரத்துப் பெண் சும்மா இருக்கவில்லை. யாரும் தனக்கு உதவாவிட்டால் தானே கோடாரியெடுத்து அந்த மரத்தை வெட்டிவிடுவதாக அவள் பற்களைக் கடித்துக் கொண்டு சபதம் செய்தாள். தன் கண் முன் அந்த மரம் நிற்பதை அவளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை, எப்படியாவது அந்தப்பிசாசை அகற்றிவிடப் போகிறாள் அவள்.
அவளுடைய சபதத்தைக் கேட்டு மரம் வருத்தப்பட்டது; அதே சமயம் அது தனக்குள் சிரித்துக் கொண்டது. அது கிழக்குச் சாளரத்துப் பெண்ணைக் கூப்பிட்ட அவளிடம் சொல்ல விரும்பியது -- உன் கொண்டையிலணிந்த பூச்சரம் அழகாயிருக்கிறது. கண்களில் மையும், நெற்றியில் குங்குமமும் அழகு செய்கின்றன; உன் கை விரல்கள் சம்பக மொட்டுப்போல் அழகாயிருக்கின்றன. இந்த அழகான மிருதுவான கைகளில் கோடாரி எடுத்துக்கொள்வாயா?"
இந்த பேச்சு மேற்குச் சாளரத்து மனிதனின் காதுக்கெட்டியது. அவனுடைய அழகிய விரல்கள் இறுகிக் கொண்டன. தேவைப் பட்டால் அந்த விரல்களுக்கு எஃகு போல் இறுகத் தெரியும் என்பது மரத்துக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. இப்போது அவன் எந்தக் கையால் கவிதை எழுதுகிறானோ, ரோஜாப்பூவைத்தடவிக் கொடுக்கிறானோ அதே கையால் அவன் ஒரு காலத்தில் கல் விட்டெறிந்து பறவைக் கூடுகளைச் சிதைத்திருக்கிறான். கிளைகளை முறித்திருக்கிறான், இலைகளைக் கிழித்திருக்கிறான். ருத்திரன் போல் கயிற்றை அழுத்திப் பிடித்துக் கொண்டு ராட்சசத்தனமாக ஊஞ்சல் ஆடியிருக்கிறான். ஆகவே அவன் தன் முஷ்டியை மேலே உயர்த்தி எப்படியாவது மரத்தைக் காப்பாற்றுவதாக சபதம் செய்தான். மரத்தை அழிக்க முயல்பவர்யாராக இருந்தாலும் அவரை மன்னிக்க மாட்டான் அவன். வாழ்க்கையிலிருந்து கவிதையை விரட்டிவிடக் கூடாது. மரத்தை அழிக்க வருபவரை அவன் தன் கடைசி இரத்தத் துளி இருக்கும் வரை எதிர்ப்பான். மரத்துக்கு எவ்விதத் தீங்கும் ஏற்பட விட மாட்டான்.
மரத்துக்கு இப்போது ஒரு புதிய பயம் பிடித்துவிட்டது.. தன்னை முன்னிட்டுக் கிழக்குச் சாளரக்காரிக்கும் மேற்குச்சாளரக்காரனுக்குமிடையே சண்டை வந்துவிடுமோ?
அன்று பிற்பகல் கழிந்துவிட்டது. ஒரு வெள்ளாடு தன்னிரு குட்டிகளுடன் மரநிழலில் புல் மேய்ந்தது. மாலை நேரமானதும் குழந்தைகள் விளையாடத் தொடங்கின. எண்ணற்ற பறவைகளின் கீச் மூச் ஒலி தீவிரமாகி, சிறிது நேரத்துக்குப் பிறகு குறைந்து நின்றுபோய் விட்டது. இரவு வந்தது. மேகமற்ற கருத்த வானத்தில்எண்ணற்ற தாரகைகள் தோன்றின. மெல்லிய காற்றில் இலைகள் சலசலத்தன. அன்றாட நிகழ்ச்சிதான் இது. நாற்புரமும் இருந்த வீடுகளில் விளக்குகள் எரிந்தன, பலவகை ஒலிகள் எழுந்தன. பிறகு இரவு வளர வளர ஒவ்வொரு வீடாக அரவம் குறைந்தது, விளக்குகள் அணைந்தன. பிறகு நாற்புறமும் அடர்ந்த இருள் சூழ்ந்து கொண்டது. அடர்ந்த இருள், அளவிட முடியாத நிசப்தம். தலைக்குமேல் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள்ஒளிர மௌனமாக நின்று கொண்டிருந்தது மரம். பிறகு காற்றும் நின்றுவிட்டது. மரத்தின் ஓரிலைகூட அசையவில்லை.
அந்த நேரத்தில்..
அந்த அடர்ந்த இருளிலும் பட்டப் பகல்போல் தெளிவாகப் பார்க்க முடிந்தது மரத்தால். கிழக்கிலிருந்து வந்து கொண்டிருக்கிறாள் அந்தப் பெண். அவள் தன் முந்தானையை இடுப்பில் இறுகச் செருகிக் கொண்டிருக்கிறாள். பூச்சரத்தைக் கொண்டை யிலிருந்து எடுத்தெறிந்து விட்டாள். போரிட வந்திருக்கிறாள் அவள். இப்போது அவளுக்குப் பூமாலை தேவையில்லை. அவள் கையில் கோடரி. மரம் நடுங்கியது.
அதே சமயம் மறுபுறத்திலும் மனிதனின் காலடியோசை கேட்டது. மரம் அந்தப் பக்கம் பார்த்தது. அதற் நிம்மதிஏற்பட்டது. மேற்குச் சாளரத்து மனிதன் வந்விட்டான். இப்போது அவன் கையில் பேனா இல்லை, தடி உடம்பில் ஜிப்பா இல்லை, முண்டா பனியன். அவனது தாடை இறுகியிருந்தது. பார்வையில் கடுமை. இந்தக் கணமே கர்ஜனை செய்யப்போகிறானென்று தோன்றியது.
மரம் காது கொடுத்துக் கேட்டது.
சோகம் கலந்த நிசப்தம், முடிவு தெரியாத வேளை.
மரத்தின் உச்சியில் ஒரு பறவை கீச்சொலி எழுப்பியது பெயர் தெரியாத மலரொன்றின் மணம் எங்கிருந்தோ மிதந்துவந்து வானத்து மூலையிலிருந்த ஒரு தாரகையை நோக்கி விரைந்தது. காற்று மெல்ல வீச, மெல்லிய சிறு கிளைகள்அசையத் தொடங்கின.
மரம் இதை எதிர்பார்த்திருந்தது போலும். அது அதிகம் ஆச்சரியமடையவில்லை. புடைவையணிந்த இளம் பெண்ணின் இதழ்களில் சிரிப்பு மலர்ந்தது.
மேற்குச் சாளர மனிதனின் இறுகிய தாடை மிருதுவாகியது. இடிக்குரல் எழுப்பவில்லை.
இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு நின்றார்கள். அந்த ஆழ்ந்த இருளிலும் அவர்கள் ஒருவர் முகத்தைமற்றவர் தெளிவாகப் பார்க்குமளவுக்கு அவ்வளவு அருகருகே நின்று கொண்டிருந்தார்கள். ஒருவர் விடும் மூச்சுக் காற்றை மற்றவர் கேட்கும்படி அவ்வளவு நெருக்கம்.
"கையில் கோடரி எதுக்கு?"
"மரத்தை வெட்டப் போறேன்."
"அதிலே என்ன லாபம்?"
"இந்த மரம் ஒ பிசாசு!"
"இல்லே, இந்த மரம் ஒரு தேவதை!"
"பிசாசைத் தேவதைங்கறவன் ஒரு முட்டாள்!"
"தேவதையைப் பிசாசா நினைக்கறவன் ஒரு பாவி! அவன் மனசில் குத்தம் இருக்கு, இதயத்திலே பொறாமை இருக்கு. அதனாலதான் அவன் வெள்ளையைக் கறுப்பாகப் பார்க்கிறான். வெளிச்சத்திலேகூட அவன் கண்ணுக்கு இருட்டுதான் தெரியுது."
"அப்படியானால் உலகத்திலே இருட்டே இல்லையா? கறுப்பே இல்லையா?"
"இல்லை"
"அதெப்படி?" பெண்ணின் கையிலிருந்த கோடரி நழுவி விழுந்தது. அவள் சிந்திக்கத் தொடங்கினாள். மரத்துக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. ஒருவர் கோடரியைக் கீழே எழிந்து விட்டதையும் மற்றவர் தடியை எறிந்து விட்டதையும் அது கவனித்தது.
"அதெப்படி சாத்தியம்?" என்று சிந்தித்தவாறே அந்தக் கிழக்குச் சாளரப் பெண் தலை நிமிர்ந்து மரத்தின் இலைகளுக்கிடையே ஒளி வீசும் நட்சத்திரங்களைப் பார்க்கத் தொடங்கினாள். பிறகு அவள் முணுமுணுத்தாள், "எல்லாம் வெளிச்சம், எல்லாம் அழகு; கறுப்பு இல்லை, இருட்டு இல்லை--இதெப்படி சாத்தியம்?"
"தனக்குள்ளேயே வெளிச்சம் பிறந்தால் இது சாத்தியந்தான்."
"அந்த வெளிச்சம் என்ன?"
"அன்பு."
பெண்ணின் கண்ணிமைகள் துடித்தன. அவள் நீண்ட பெருமூச்சு விட்டாள். அவளது குரலில் ஏக்கம் தொனித்த.
"என்னுள்ளே அன்பு பிறக்காதா?"
"அதற்கு அன்பைப் பயில வேண்டும். அன்பு செய்யக் கற்க வேண்டும்" அழகாகச் சிரித்துக் கொண்டு சொன்னான்இளைஞன்.
"நீ எனக்கு அன்பைக் கற்றுக் கொடு."
மரம் கண்களை மூடிக்கொண்டது. அதற்குத் தூக்கம் வந்து விட்டது. மரங்களும் தூங்கும். அ பல நாட்களாகக் கவலையால் தூங்காமலிருந்தது.. அல்லது வேண்டுமென்றே பார்க்காமலிருந்திருக்கலாம். மனிதன் சில சமயம் மரத்தைப் பொருட்படுத்தாமலிருப்பதுபோல், சில சமயம் மரமும் மனிதனைக் கவனிக்காமலிருக்க வேண்டும் என்ற உண்மையை அனுபவம்மிக்க அந்த மரத்துக்கு யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை..
('அம்ருத' புத்தாண்டு இதழ், மே 1970)
13. உயிர்த்தாகம்
மழை பெய்து கொண்டிருந்த ஒரு தேய்பிறை இரவு.
மழை என்றால் திடீரென்று வானத்தில் மேகங்கள் குவிந்து, இடி இடித்து, மின்னல் மின்னிக் கொட்டோ கொட்டென்றுஒன்றிரண்டு பாட்டம் கொட்டித் தீர்க்கும் பெருமழை அல்ல. கட்டிப்போன தொண்டையிலிருந்து அலுப்புத் தரும் வகையில்தொடர்ந்தாற்போல் ஒலிக்கும் அழுகைக் குரல் போல் சில நாட்களாகப் பெய்து கொண்டேயிருக்கிறது மழை. கூடவேகிழக்கிலிருந்து இடைவிடாமல் புயற்காற்று-- புறநகர்ப்பகுதியின் பெரிய ரஸ்தாவைத் தவிர மற்ற தெருக்களும் சந்துகளும் சேறும்சகதியும் நிறைந்த நீண்ட சாக்கடைகளாகி விட்டன. எங்கும் குப்பை, நாற்றம். எண்ணற்ற வீடுகள் ஒன்றையொன்றுநெருங்கியவாறு நின்று கொண்டிருந்தன.
நான் இருப்புப் பாதையையொட்டிய ரஸ்தாவில் போய்க் கொண்டிருந்தேன். நனைந்து கொண்டேயிருந்ததால் என்உடம்பின் கதகதப்பைக் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை. திறந்தவெளி வழியே அடித்துக் கொண்டிருந்த காற்று ஒரேயடியாகத் தாக்கி உடம்பை நடக்கியது. பற்கள் உரசிக் கொண்டன. வேறு வழியின்றி நான் இடதுபக்கம் திரும்பி ஊருக்குள்நுழைந்தேன். அங்கு புயலின் தாக்குதலாவது குறைவாக இருக்குமே.
சணல் தொழிற்சாலைகள் மிகுந் அந்த ஊர் அயர்ந்து மயங்கினாற் போலிருந்தது. அதன் இயற்கையான வேலைச்சுறுசுறுப்பும் நடமாட்டமும் அடைமழையில் நமுத்துப்போய் விட்டன போலும். வேறு நாளாகயிருந்தால் தெருநாய்கள்குரைத்துக்கொண்டே வந்து துரத்தும். இன்று அவை பெயருக்கு ஓரிரு முறை உறுமிவிட்டுத் தங்கள் உடலில் விழுந்திருந்ததண்ணீரை அகற்ற உடம்பைச் சிலிர்த்துக் கொண்டன. குடும்பஸ்தர்கள் இருக்குமிடம் தெரியவில்லை. வீட்டு வாசல்களிலோஜன்னல்கள்லோ ஒரு பொட்டு வெளிச்சங்கூடக் கண்ணில் படவில்லை. தெருவிளக்குகள் ஒரு கண் பொட்டையான மிருகங்கள் போல் பார்த்தன. அவற்றின் மங்கிய வெளிச்சம் இருளைச் சற்றும் குறைக்கவில்லை.
நான் செல்லும் வழி எனக்குச் சரியாகத் தெரியவில்லை. என்றாலும் வடக்குத் திசையிலேயே போய்க் கொண்டிருக்கிறேன்என்று தெரிகிறது. பாதையோரமாகப் போய்க் கொண்டிருக்கிறேன். தாழ்வான பாதை, தண்ணீர் தேங்கியிருக்கிறது. ஏதாவதொருவீட்டுத் திண்ணையில் ஏறிக்கொண்டு இரவைக் கழிக்கலா மென்றால் அதற்கும் வழியில்லை. காரணம், சேரிபோல் காணப்பட்ட இந்தக் குடியிருப்பில் வீடுகளுக்குத் திண்ணை இல்லை. வீடுகளின் நிலையைப் பார்த்தால் அவற்றுக்குள்ளேயும் தரைகாய்ந்திருக்காது என்று தோன்றியது. இங்கு எங்கேயாவது படுத்துக் கொண்டால் ஜனங்கள் பலவிதமாகப் பேசுவார்கள். அதோடுபோலீசின் தொந்தரவு வேறு.
நான் நைஹாத்தி ரயில் குடியிருப்பில் ஒரு நண்பனின் வீட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். அங்கு போய்ச் சேர்ந்துவிட்டால் இந்தச் சங்கடமான இரவின் மழை, குளிரிலிருந்து பாதுகாப்புக் கிடைக்கும். உலர்ந்த உடையும் சில நாட்களுக்காவதுஉணவும் கிடைக்கும்..
எங்கள் குழுவைவிட்டு நான் வெளியே புறப்பட்டிருக்கக் கூடாது என்று இப்போது தோன்றுகிறது. சோற்றுக்குப் பறக்கும்நண்பர்களடங்கிய எங்கள் குழுவில் ஒருவன் சில நாட்களுக்குமுன் இறந்துபோய் விட்டான். அதிலிருந்தே நான் அங்கிருந்துவெளியேறிச் சற்று இளைப்பாற வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நண்பன் இழந்தது நல்லதுதான். சாவைத்தவிரவேறென்ன முடிவு ஏற்பட்டிருக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. பிழைத்திருக்க என்னென்ன தேவையோ அவையெதுவும் அவனிடமில்லை. இருந்தாலும் நெஞ்சுக்குள்.. அது கிடக்கட்டும்.. அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஆனால்அவன் சாவதற்கு முன் என்னிடம் ஒரு பொருளைக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறான். சிறிய பொருள்தான், ஆனால் அதன்சுமை மலைபோல் கனமாக, வருத்துவதாக இருக்கிறது. சுமை என்னவென்றால்..
அடேயப்பா, காற்று முதுகெலும்பின் வேரைப் பிடித்துக் குலுக்குகிறது. மழையும் வலுத்துவிட்டது திடீரென்று. இவ்வளவுநேரங்கழித்து இப்போது இடிக் குமுறலும் கேட்கிறது. இப்போது பற்கள் மட்டுமல்ல, எலும்புகளும் ஒன்றோடொன்று உரசிக்கொள்கின்றன. மரத்தின் முதிர்ந்த கிளைபோல் ஒரேயடியாக நனைந்து ஊறிப் போய்விட்டேன்...
இப்போது நான் ஒரு நாற்சந்திக்கு வந்திருந்தேன். பக்கத்தில் சணல் தொழிற்சாலையின் சரக்குகளை ஏற்றியிரக்கப் பயன்படும்கிளை இருப்புப் பாதை. அந்த இடம் சற்றுத் திறந்தவெளி. அங்கே ஒரு எருமை மாட்டுக் கொட்டிலைப் பார்த்து அங்குநுழைந்து விடலாமா என்று நினைத்து அந்தத் திசையில் நான் அடியெடுத்து வைத்தபோது யாரோ என்னைக் கூப்பிடுவதுகேட்டது - "ஏய், இங்கே வா!"
எனக்கு அசரீரியில் நம்பிக்கையில்லாவிட்டாலும் நான் திடுக்கிட்டுத்தான் போய்விட்டேன். அழைக்கப்படுவது நான்தானா? மழைத்தாரையை ஊடுருவிப் பார்த்து அந்தக் குரலுக்குரியவரைத் தேடினேன். வலது புறத்தில் ஒரு மங்கலான ஒளிக்கீற்றுகண்ணுக்குத் தென்பட்டது. அங்கே அரைகுறையாகத் திறந்திருந்த கதவின் மேல் சாய்ந்து கொண்டு ஓர் உருவம், ஒரு பெண்..அப்படியானால் என்னைக் கூப்பிட்டிருக்க மாட்டாள். முன்னோக்கி அடியெடுத்து வைத்தேன்.
"வாய்யா இங்க!"
நின்றேன். "என்னய்யா கூப்பிட்டீங்க?" என்று கேட்டேன்.
"வேறே யாரு இருக்காங்க இங்கே?" என்று பதில் வந்தது.
அவள் பேசிய விதத்தைக் கேட்டுத் திடுக்கிட்டேன். மோசமான இடத்துக்கு வந்துவிட்டேன் போலும்! அது வேசித்தெரு இல்லாவிட்டாலும் மட்டமான ஜனங்கள் வசிக்கும் சேரிப் பகுதியாயிருக்கலாம்.
நான் உள்ளூரச் சிரித்துக் கொண்டேன். சரியான ஆளாப் பார்த்துத்தான் கூப்பிடுகிறாள் அந்தப் பெண்!
அந்தக் கதவருகில் சற்று நேரம் நின்றால் கூடத் தேவலைதான்.
நான் அசையாமலிருப்பதைக் கண்டு அந்தப் பெண் "இந்த ஆள் செவிடா என்ன?" என்று உரக்கச் சொல்லிக் கொண்டாள்.
"போய்த்தான் பார்க்கலாமே!" என்று நினைத்தேன். உண்மை தெரிந்ததும் அவளே என்னை விரட்டி விடுவாள். மழையின்தீவிரம் குறையும் வரையில் தலைக்குமேல் ஒரு கூரை கிடைத்தால் நல்லதுதானே! இப்போதிருக்கும் நிலையில் எருமைக்கொட்டிலைத் தாண்டிக்கூடப் போக முடியாது. நைஹாத்தி போய்ச் சேர்வது பற்றிப் பேச்சே இல்லை!
அந்தப் பெண்ணுக்கருகில் வந்தேன். இயற்கையாக எழுந்த தயக்கத்தை மீறிக்கொண்டு "ஏன் கூப்பிட்டே?" என்று கேட்டேன்.
சிரிப்பும் எரிச்சலும் கலந்த குரலில் அவள் சொன்னாள், "எந்த ஊர் ஆளுடா இது..! சரி சரி, உள்ளே வா!"
நான் உள்ளே நுழைந்ததும் அவள் கதவை மூடிவிட்டாள். மழையின் அரவம் சற்றுக் குறைந்தது. வெளியேயிருந்து சாரலடிக்க வழியில்லை. இருந்தாலும் ஓட்டுக் கூரையின் ஓட்டைகள் வழியே தண்ணீர் ஒழுகித் தரை ஈரமாயிருந்தது. கட்டிலிலிருந்த படுக்கைமட்டும் நனையவில்லை. அறைக்குள் ஒரு சில பாத்திரங்கள் - பானை, தட்டு, டம்ளர்...
"இந்த அடைமழையிலே எங்கே சாகறதுக்குப் போறே?" எனக்கு வெகு நாள் பழக்கமானவள்போல் அவள் பேசினாள்.
"ரொம்ப தூரம்.. ஆனா.."
"புரிஞ்சுது.." குறும்பாகச் சிரித்தாள் அவள். "ரூம் பூராச் சேறாக்கிட்டே நீ .. சரி, மொதல்லே இந்த ஈரத்துணியை அவுத்துப்போடு!"
குளிர் ஒரு புறம், திகைப்பு ஒரு புறம்; உறைந்து பொய்விடும் நிலை எனக்கு.. "ஆனா.."
"ஒனக்கு உடுத்திக்க என்ன தருவேன்? நனைஞ்ச சட்டையைக் கழட்டு மொதல்லே..!"
சட்டையைக் கழற்ற முடிந்தால் நிம்மதிதான் எனக்கு. ஆனால்..குரலில் சற்று வலுவை வரவழைத்துக்கொண்டு, "நீகூப்பிட்டது வீண்தான், என் சட்டைப் பை காலி!" என்றேன்.
பெண் திகைத்து நின்றாள். நான் நினைத்தது சரிதான். அவள் வாயைத் திறந்தவாறு என்னைப் பார்த்துக்கொண்டுசிறிது நேரம் நின்றாள். அவளுக்கு என் பேச்சில் நம்பிக்கை ஏற்படவில்லை போலும்!
"ஒண்ணுமே இல்லியா?" நிராசையால் அவளது முகம் இருண்டுபோய் விட்டது.
"காசு இருந்தா இந்த மாதிரி மழையிலே அலைஞ்சுக் கிட்டிருப்பேனா?" அவள் சோர்ந்து போய் மௌனமாக நின்றாள்.இப்படி நடக்குமென்று எனக்கு முன்பே தெரியும்.
ஆனால் அவள் தொழில் செய்பவள், பிச்சைக்காரி அல்ல.
நான் கதவைத் திறக்கப் போனேன்.
"இப்போ எங்கே போகப் போறே?" அவள் பின்னாலிருந்து கேட்டாள்.
"அந்த எருமைக் கொட்டிலுக்கு" என்று சொல்லிக் கொண்டே கதவைத் திறந்தேன். ஐயோ! குளிர்காற்று என்னைவிழுங்க வருவது போல் தாக்கியது. நான் வெளியில் கால் வைத்தேன்.
அவள் திடீரென்று பின்னாலிருந்து கூப்பிட்டாள், "ஏய், இதைக் கேளு! எப்போ கூப்பிட்டேனோ, இங்கேயே ராத்திரிஇருந்துட்டுப் போ..உம், என் அதிருஷ்டமே இப்படித்தான்!" ஒரு பெருமூச்சு விட்டாள் அவள்.
"ஒன் அதிருஷ்டம் நல்லாவேயிருக்கட்டுமே! நான் கொட்டிலுக்கே போயிடறேன்."
"ஒன்னிஷ்டம்" என்று சொல்லிவிட்டு அவள் கட்டிலில் உட்கார்ந்தாள். "இன்னிக்கு இனிமே நம்பிக்கை இல்லே."
'இந்த அடைமழையிலே தங்க ஒரு இடம் கிடைச்சிருக்கற போது அதை விடுவானேன்?' என்று தோன்றியது எனக்கு. ஒருபெண் பிள்ளையோடு இரவைக் கழிப்பது மிகவும் அசிங்கம் என்றும் தோன்றியது. ஏனென்றால் எனக்கு இது ஒரு புதுமாதிரிஅனுபவம். எனக்குப் பெண்களிடம் ஆர்வமும் ஈர்ப்பும் மற்றவர்களைவிட அதிகமாகவே உண்டு என்பது உண்மைதான்.ஆனால் இந்த மாதிரியா! சீச்சீ. இது என்னால் முடியாது..! ஆனால் அவளோடு படுத்துக் கொள்ளாமலும் இரவைக்கழிக்கலாமே..! நான் அறைக்குள் மறுபடி நுழைந்து கதவை மூடினேன்.
அவள் நல்ல உயரம். மாநிறம். வற்றிய கன்னங்கள். எப்போதும் பசும்புல்லைத் தேடிக் கொண்டிருக்கும் மாட்டின்கண்கள் போன்ற பெரிய பெரிய கண்களில் மை, முகத்தில் சாயம். தடிமனான உதடுகளுக்கு மேல் மூக்கு நுனி மேலேதிரும்பியிருக்கிறது.
அவள் சிரமப்பட்டுத் தேடி ஒரு பழைய உள் பாவாடையை எடுத்துக்கொண் வந் கொடுத்தாள் -- "இதையே கட்டிக்க.வேறே ஒண்ணுமில்லே."
எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. பரவாயில்லை, யாரும் பார்க்கவில்லையே! ஆனால்..
திடுக்கென்றது எனக்கு. சட்டைப் பையைத் தொட்டுப் பார்த்தேன். என் நண்பன் என்னிடம் கொடுத்துவிட்டுப்போன,மலைபோல் கனக்கும் சிறிய பொருள் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டேன். பொருள் அல்ல அது; அது ஒரு இரத்தக்கட்டி, ஆம் இரத்தக் கட்டிதான்.. எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அந்தப் பெண் இருந்த பக்கம் திரும்பி உற்றுப்பார்த்தேன். அவள் பின்பக்கம் திரும்பிக்கொண்டு தன் உள் பாடியை அவிழ்த்துக் கொண்டிருந்தாள்.
"என்கிட்டே ஒண்ணும் இல்லே, சொல்லிட்டேன்!" என்று சொன்னேன்.
"எவ்வளவு தடவைதான் இதைத் திருப்பித் திருப்பிச் சொல்லுவே?" என்று அலுப்போடு கேட்டாள் அவள்.
"இருந்தாலும் முன்னாலேயே சொல்லிடறது நல்லது.. எனக்கு ஒரு ஆசையுமில்லே.. நான் ஒரு வழிப்போக்கன் மாதிரி ராவைக்கழிச்சிட்டுப் போயிடறேன்."
அவள் தன் மாட்டுக் கண்களையுயர்த்தி என்னை ஒரு பார்வை பார்த்தாள். பிறகு "யார் ஒன்னைக் கட்டாயப் படுத்தறாங்க?" என்று கேட்டாள்.
அவள் சொன்னது சரிதான். நான் அந்த உள் பாவாடையை அணிந்து கொண்டேன். இருந்தாலும் திறந்த மேலுடம்பு குளிரில்வெட வெடத்தது. வெளியே மழையும் காற்றும் பட்டுக் கதவு அதிர்ந்தது.
அவள் என்னைப் பார்த்துவிட்டுச் சிரிப்புத் தாங்காமல் புடவையை வாயில் திணித்துக்கொண்டாள். பிறகு ஒரு பழையபுடைவையை எடுத்து என் பக்கம் எறிந்துவிட்டு, "இதை ஒடம்பிலே சுத்திக்கிட்டுப் படு" என்றாள்.
பிறகு அவள் என் ஈரத் துணிகளை ஒரு கொடியில் உலர்த்திவிட்டு, "இதெல்லாம் சீக்கிரம் காஞ்சுடும்" என்றுசொன்னாள்.
சுக உணர்வு இருக்கிறதே, அது மிகவும் பயங்கரமானது. இந்த மாதிரி சங்கடமான நிலையில், நான் ஒரு வேசிப்பெண்ணின்வீட்டில் இருக்கிறேன் என்பதையே மறந்து போய்விட்டேன். "என் வயிறு அடியோடு காலி. அதனால்தான் இந்த மழையிலேயும்காத்திலேயும் ரொம்ப அசந்து போயிட்டேன்" என்று சொன்னேன்.
அவள் பதில் சொல்லாமல் முகத்தை முழங்கால்களுக்கு நடுவே புதைத்துக் கொண்டிருந்தாள்.
"சரி, படுத்துக்கறேன்" என்றேன்.
அவள் தலையைத் தூக்கினாள். அவளது முகத்தில் வேதனை. தெளிவாகத் தெரிந்த அவளது நெஞ்சின் எலும்புகள் அவள்மூச்சுவிடும்போது ஏறி இறங்குகின்றன.
"சாப்பிடறியா.. சோறும் கூட்டும் இருக்கு."
சோறும் கூட்டுமா? நிஜமாகவா? எதிர்பாராத அதிருஷ்டந்தான்! சோற்று மணத்திலேயே அரைவயிறு நிரம்பி விடும்.சோறே கிடைத்துவிட்டால் சொல்ல வேண்டுமா?
என் நாக்கில் நீர் ஊறியது. என் வயிறோ என்னிலிருந்து வேறுபட்ட ஒரு தனிப் பிராணிபோல் 'சோறு' என்ற பெயரைக்கேட்டதுமே உற்சாகத்துடன் அசைந்து கொடுத்தது. ஆனால்..
இதற்குள் அவள் பீங்கான் தட்டில் சோற்றை வைத்து விட்டாள். அதைப் பார்த்ததும் என் மனதில் மறுபடி சந்தேகம்எழுந்த. நான் அவசரம் அவசரமாகக் கொடியிலிருந்த என் சட்டையை எடுத்துக்கொண்டேன். நிலைமை மோசமாகத்தோன்றியது. நான் பயந்துகொண்டே சொன்னேன், "சோத்துக்க் கொடுக்க என்கிட்டக் காசு இல்லே."
அவளுடைய மாட்டுக் கண்களில் எரிச்சல் தோன்றியது. "இதை எவ்வளவு தடவைதான் சொல்லுவே! எருமைக்கொட்டகைதான் ஒனக்குச் சரியான இடம்!"
சுகமாக இருப்பதைவிட நிம்மதியாக இருப்பது மேல். என் அதிருஷ்டங்கெட்ட நண்பன் சாவதற்கு முன்னால் ஒரு பெரியசுமையை என்மேல் வைத்துவிட்டுப் போய்விட்டான். இப்போது அதைச் சுமந்துகொண்டு நடமாடுவதே கஷ்டமாயிருக்கிறதுஎனக்கு. அதை வைத்துக்கொள்வதும் கஷ்டம், உதறித் தள்ளுவதும் கஷ்டம். நான் வெளியே மழையிலும் புயலிலும் நின்று கொண்டிருந்ததால் இந்தச் சுமை பற்றிய நினைவே இருந்திருக்காது எனக்கு...
"நீ மனுசங்களோட ஒரு நாளும் இருந்ததில்லியா?" அவள் கேட்டாள்.
நல்ல கேள்வி! கேள்வியைக் கேட்பவள் யார்? ஒரு வேசிப்பெண்.
"இருந்திருக்கேன், ஆனா ஒன் மாதிரி மனுசங்களோடே இல்லே" என்று சொன்னேன்.
அவள் சற்றுநேரம் மௌனமாக என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு "சோறு இருக்கே. சாப்பிட்டிடு!இல்லாட்டி வீணாத்தானே போகும்!"
யோசித்துப் பார்த்தேன். சாப்பிட்டால் என்ன! இலவசச் சாப்பாடு! தவிர, வேறு யாரும் பார்க்கவில்லையே!
சட்டையைக் கையில் சுருட்டி வைத்துக்கொண்டு சோற்றை அள்ளியள்ளிப் போட்டுக் கொண்டேன். பிறகு, ஒரு செம்புத்தண்ணீர் குடித்தேன். இந்த மாதிரி பரிமாறப்பட்ட சாதத்தைச் சாப்பிடுவது என்னைப் பொருத்தவரையில் ஒரு சுகபோக நிகழ்ச்சி.அது காரணமாகவே என் மனதிலும் சந்தேகம் சூழ்ந்திருந்தது.
பிறகு படுக்கை. அது ஒரு சங்கடம். நான் கட்டிலில் படுத்துக் கொண்டு "நீ எங்கே படுத்துக்குவே?" என்று கேட்டேன்.
அவள் மௌனமாக என்னைப் பார்த்துவிட்டுத் தன் நழுவியிருந்த முக்காட்டை இழுத்துப் போர்த்திக் கொண்டாள்.
நான் எழுந்து உட்கார்ந்தேன்.
அவள் கட்டிலுக்கருகில் கீழே உட்கார்ந்து கொண்டு சொன்னாள், "நீயே தூங்கு, நான்தான் தினம் தூங்கறேனே! ஒருராத்திரிதானே! நான் ஒன்னைக் கூப்பிட்டதாலே.." பேசிக் கொண்டிருக்கும் போது அவள் நான் என் சட்டையைக் கையில்சுருட்டி வைத்துக் கொண்டிருப்பதைக் கவனித்தாள். பிறகு கொடியைப் பார்த்துவிட்டு என் பக்கம் திரும்பினாள். நானும்அவளைப் பார்த்தேன்.
"சட்டை ஈரமாயிருக்கே" என்றாள்.
"அதனாலே ஒனக்கென்ன?"
அவள் மௌனமாகி விட்டாள். சோர்ந்து போயிருந்த என் நரம்புகள் சற்று சுகங் கண்டதும் வெதுவெதுப்பாகி வழக்கமான வலுவைப் பெற்றுவிட்டன என்று தோன்றியது. இவ்வளவு நேரம் என்னைத் திண்டாடச் செய்த மழை, புயல் இவற்றின் ஒலி கதவுவழியே மங்கலாக வந்து தாலாட்டுப்போ்ல் இனிமையாக ஒலித்தது, தூக்கம் கண்ணிமைகளை அழுத்தியது.
அவள் பக்கம் திரும்பிப் பார்த்தேன். அப்படியே உட்கார்ந்திருந்தாள் அவள். அவள் எந்தப் பக்கம் பார்த்துக் கொண்டிருக்கிறாளென்று சரியாகத் தெரியவில்லை. அவளுடைய தோற்றத்தில் சோர்வு, அமுக்கிவைக்கப்பட்ட வேதனை தெரிந்தது, யார்கண்டார்கள்! இவர்களிடம் பாசாங்குக்குப் பஞ்சமில்லை, நான் உறங்கியபின்.. நான் நாளைக்கே இந்தத் துரதிருஷ்டம் பிடித்தபொருளுக்கு ஒரு ஏற்பாடு செய்துவிடப் போகிறேன்! சாகும் தருவாயில் அவன் ஏன் என்னிடம் இந்தப் பொருளைக் கொடுத்துவிட்டுப் போகவேண்டும்? ஒரு இரத்தக் கட்டி! ஆம், இரத்தக் கட்டிதான்! வியர்வை நாற்றமடிக்கம் கந்தைத் துணிப்பொட்டலம். பெரும்பசியின் நாற்றமும் அதற்குள் அடங்கியிருந்தது. செத்துக் கொண்டிருந்த நண்பன் வாயிலிருந்து வழிந்துகொண்டிருந்த இரத்தத்தை நக்கியவாறு என்னிடம் சொல்லியிருந்தான், "இதை நீ வச்சுக்க!"
அவன் சொல்லிய விதத்தை இப்போது நினைத்துக் கொண்டாலும் நெஞ்சுக்குள்ளே.. அந்தப் பேச்சு இப்போதுவேண்டாம்!
அப்போதும் அவள் அதே நிலையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து நான் திடீரென்று சொல்லிவிட்டேன், "நீயும் கட்டில்லயேகொஞ்சம் தள்ளிப் படுத்துக்க."
அவள் என்னைச் சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, "சீ, என்ன தரங்கெட்ட மனுஷன்!" என்றாள். பிறகுபடுத்துக் கொண்டாள்.
என் உடல் இளைப்பாறிய சுகத்தில் தாராளமாகக் கிடந்தது. அந்தப் பெண்ணின் உடம்பு என்னிடமிருந்து சற்றுத் தள்ளியிருந்தாலும் அதன் கதகதப்பை என்னால் உணர முடிந்தது.
என்ன விசித்திர இரவு! எவ்வளவு விசித்திரமான சூழ்நிலை! மற்றவர்கள் பார்த்தால் என்ன சொல்வார்கள்! சீச்சீ..! ஆனால்என் சோர்ந்து தளர்ந்த உடம்புக்கு இவ்வளவு சுகம் இதற்குமுன் எப்போதாவது கிடைத்திருக்கிறதா என்று எனக்கு ஞாபகமில்லை.தூக்கக் கலக்கத்தில் கண்கள் மூடுகின்றன..
ஆனால்..
அது கூடாது.. என் நண்பனைப் பற்றித்தான் சொல்கிறேன்..
அதிருஷ்டங் கெட்டவன் சாகும் சமயத்தில் "என் இரத்தம்!" என்று சொல்லித் துணிப் பொட்டலத்தைக் கொடுத்தான்.
"என்ன இரத்தம்?" என்று கேட்டேன்.
அவன் கண்ணீரையும் வாயிலிருந்த ஒழுகிக் கொண்டிருந்த இரத்தத்தையும் துடைத்துக் கொண்டே, "என் நெஞ்சோடரத்தம்.. நான் தினம் சாப்பிடாமே.." என்று சொல்லித் தன் சோகைபிடித்த, நடுங்கும் விரல்களால் பொட்டலத்தைத்தடவினான்.
என்னால கோபத்தையடக்க முடியவில்லை. "எதுக்கடா?" என்று கேட்டேன்.
"குடும்பம் நடத்தறதுக்கா" அவனைத் திட்ட முற்பட்ட என்னை அவன் பேசிய விதம் தடுத்துவிட்டது. என் தொண்டைக்குள் ஏதோ அடைத்துக் கொண்டது.
அது போகட்டும்..
அந்தப் பெண் வேதனையோடு முனங்கினாள்.
"என்ன ஆச்சு?" என்று கேட்டேன்.
அவள் என்னைப் பார்த்துவிட்டு, "ஒண்ணுமில்லே" என்று சொன்னாள். ஆனால் அவள் கண்களிரண்டும் வேதனையால்சிவந்திருந்தன. அவற்றில் அழுகையின் நிழல்.
அவளுடைய வெப்பமான மூச்சுக் காற்றும் என் உடம்புக்கு இதமாயிருந்தது. குளிரால் உறைந்து என் உடலுக்குச் சூடாகஒத்தடம் கொடுப்பதுபோல. அவள் அப்படியொன்றும் அவலட்சணமில்லை என்று தோன்றியது. உதடுகளும் மூக்குந்தான்கொஞ்சம் மோசம். அவளுடைய மூடிய கண்ணிமைகள், நெஞ்சின் மேல் கோத்திருந்த கைகள், படிந்திருந்த மார்பு இவையெல்லாம்சேர்ந்து ஒரு விசித்திர பிரமையை உண்டாக்கின.
"ஒனக்குத் தூக்கம் வரலியா?" அவள் கேட்டாள்.
"நான் தூங்கப் போறதில்லே" என்று சொன்னேன். மனதுக்குள் நினைத்துக் கொண்டேன், 'நான் தூங்கிட்டா ஒனக்குரொம்ப வசதியாயிடும் இல்லியா? அது மட்டும் நடக்காது! நீ பேசினால் எனக்கு சந்தேகம் வலுக்கிறது. பேசாம இரேன்!'
வெளியே இன்னும் புயல், மழையின் ஆர்ப்பாட்டம் குறையவில்லை. ஓட்டிலிருந்து ஒழுகும் மழைத்துளிகள் தரையில் விழும்ஒலி கேட்கிறது. கூடவே மூஞ்சூறின் கீச்சு மூச்சு சத்தம்.$
அவளிடமிருந்து மறுபடியும் விம்மல்.
"என்ன ஆச்சு?"
சிறிது மௌனத்துக்குப் பிறகு அவள் பதில் சொன்னாள், "சீக்கு"
என்ன சீக்கு?"
பதிலில்லை.
"சொல்லேன்!"
இப்போதும் மௌனம்.
"என்ன சீக்குன்னு சொல்லித் தொலையேன்!"
நான் எரிந்து விழுந்தேன். "காசம், காலரா கீலராவாயிருந்தா நான் இப்பவே வெளியே போயிடறேன். வியாதியோட ஒருசேர்க்கையும் வேண்டாம் எனக்கு!"
"யாரோட சேர்க்கை பிடிக்கும் ஒனக்கு?" அவள் திருப்பித் தாக்கினாள்.
உண்மைதான், சேர்க்கை பற்றிப் பேச்சு எதற்கு இங்கே "என்ன சீக்குன்னு சொல்லேன்!" என்றேன்.
"இந்த மாதிரி வாழ்க்கையிலே ஏற்படற சீக்குதான்.." இந்த மாதிரி வாழ்க்கையிலே? ஐயோ..! நான் பயத்திலும்வெறுப்பிலும் சுருங்கிப் போனேன். "இந்த வியாதியோடே.."
என் கேள்வியைப் புரிந்து கொண்டாள் அவள். "அஞ்சு பேர் ஒரு ராத்திரியிலே.."
"என்ன அக்கிரமம்! ஏன் வைத்தியம் பண்ணிக்கலே?"
"காசுக்கு எங்கே போவேன்?"
"பணந்தான் சம்பாதிக்கறயே!"
"அதுமொதலாளியோட பணம்னா!"
"மொதலாளியா? இதுவும் ஒரு வேலையா!"
"இல்லாமே என்ன? மொதலாளிக்கு இது ஒரு தொழில். இந்த ரூம், கட்டில், மத்த சாமான்கள் எல்லாம் மொதலாளிக்குசொந்தம். நாங்க இங்கே கூலிக்கு ஒழைக்கறோம்."
இதைக் கேட்டு சோர்ந்து போய்விட்டேன் நான். அப்படியானால் இவர்கள் மகிழ்ச்சியாக இல்லையா? இவர்களும்கூலிக்கு வேலை செய்பவர்கள்தானா?
"அந்த ராஸ்கல் மொதலாளி ஏன் சிகிச்சைக்கு ஏற்பாடு பண்ணலே?"
அது அவன் இஷ்டம். தொழிற்சாலையிலே எவ்வளவு தொழிலாளிகள் செத்துப் போறாங்க! தொழிற்சாலை முதலாளிஅவங்களுக்கெல்லாம் வைத்தியம் பண்றானா?"
உண்மைதான். அவளுடைய வேதனை நிறைந்த, அமைதியான பார்வை என்னை நிலை குலையச் செய்தது. போர்க்களத்தில்சிப்பாய் உயிரிழக்கிறான்தான். ஆனால் அன்றாட வாழ்க்கையில் இந்த மாதிரி யுத்தம்!
"அப்படீன்னா.." என்று பேச ஆரம்பித்தேன்.
"அப்படீன்னா வேறே என்ன? மொதலாளி கண்ணிலே மண்ணைத் தூவி நாங்க எடுத்து வச்சுக்கற காசிலே வைத்தியம்செஞ்சுக்குவோம்.."
"உசிரோடிருக்கவா?" சிரிக்க முயன்ற என் முகம் கோணிக் கொண்டது.
"ஆமா, எல்லாருக்கும் உசிர்லே ஆசைதானே!" வேதனை மிகுதியால் உதடுகளைக் கடித்துக்கொண்டு சொன்னாள் அவள்.
உண்மைதானே! நிலத்தில் புலி வாழ்கிறது என்று தெரிந்திருந்தும் மனிதன் அங்கு வீடு கட்டுகிறான், ஊரை அமைத்துக்கொள்கிறான். வெள்ளம், புயல், பசி என்னதான் இல்லை உலகத்தில்? அப்படியும் வாழ ஏங்குகிறான் மனிதன். என்அதிருஷ்டங்கெட்ட நண்பனும் வாழத்தான் ஆசைப்பட்டான். அந்தப் பொட்டலத்திலுள்ள ஒவ்வொரு காசும் இரத்தத்தின்ஒவ்வொரு துளி. அந்தப் பொட்டலமே ஒரு இரத்தக் கட்டி..!
"நீ தூங்கப் போறதில்லையா?" அவள் கேட்டாள். இல்லை, என் கண்களில் தூக்கமில்லை. என்மேல் அவளது மூச்சுக்காற்றுபடுகிறது-வேதனையால் சூடான மூச்சுக்காற்று. கணப்பு நெருப்பு போல் இதமாயிருந்தது அது. பொட்டலம் வைத்திருந்த சட்டையைஇறுகப் பற்றிக்கொண்டு எழுந்து நின்றன்.
வெளியே முன் போலவே மழை-புயலின் சீற்றம். இரவே அநேகமாகக் கழிந்துவிட்டது.
என் உடைகளை அணிந்து கொண்டேன்.
அவள் எழுந்தாள், "கிளம்பிட்டியா?் என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்.
சட்டைப் பையிலிருந்த பொட்டலத்தை இறுகப் பிடித்துக் கொண்டு "ஆமா" என்றேன்..
அந்த அதிருஷ்டங் கெட்டவன் வாயிலிருந்து ஒழுகிய இரத்தத்தை நக்கியவாறு, செத்துக்கொண்டே "இதை நீ வச்சுக்க"என்றான்.
ஏன்? ஏன்?
அவள் தன் வேதனையை அடக்கிக்கொண்டு தணிந்த குரலில் "மறுபடி வா" என்று சொன்னாள்.
அந்தப் பெண்ணுக்குத்தான் எப்படிப்பட்ட கண்கள்! ஈன வாழ்க்கையின் சுவடுகள் பதிந்த முகம், மேலே வளைந்த மூக்குநுனி, தடித்த உதடுகள்.. இருந்தாலும் இத்தகைய முகத்தைப் பார்த்ததேயில்லை நான்!
வேகமாகத் திரும்பிப் பொட்டலத்தை அவள் கையில் திணித்தேன். அவள் மூச்சு என்மேல் பட்டது. உடனேபார்வையைத் தாழ்த்திக்கொண்டு, பின்பக்கம் திரும்பி, குமுறும் கோபத்தில் பற்களைக் கடித்துக் கொண்டேன். என் வாயிலிருந்துகிளம்பிய வார்த்தையைக் காற்று அடித்துக் கொண்டு போய்விட்டது.
"என்னைப் பின்னாலிருந்து கூப்பிடாதே!" என்று சொல்லி விட்டுச் சுமை தீர்ந்தவனாக வடக்கு நோக்கி நடக்கத் தொடங்கினேன்.
வானப்பிரஸ்த ஆசிரமத்துக்கு அல்ல, நண்பனின் வீட்டை நோக்கி.
கிழக்குக் காற்று என்னை மேற்கே கங்கைக் கரைப் பக்கம் தள்ளிவிட முயன்றது. அதனால் இயலவில்லை..
('திருஷ்ணா', 1957)
14. நண்பனுக்காக முன்னுரை
என் நண்பன் காலஞ்சென்ற வசுதா முகோபாத்தியாய் ஒரு பிரபலமாகாத எழுத்தாளன். வசுதா உயிரோடிருந்தபோது சுமார்இருபது இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்னால். நாங்கள் மூன்று நண்பர்கள் ஒன்று சேர்ந்து அவனுடைய புத்தகமொன்றைவெளியிட்டோம். அந்தப் புத்தகப் பிரதிகள் வெகுகாலம் கோயாபகானில் ஒரு அச்சகத்தில் முடங்கிக் கிடந்து வீணாகிவிட்டன. நாங்கள் அதன் சில பிரதிகளை நடைபாதைப் புத்தகக் கடைகளுக்கு இரண்டணா நாலணா விலைக்கு விற்றோம்.அந்தப் பிரதிகளை யாராவது வாங்கிப் படித்திருப்பார்கள் என்று எங்களுக்குத் தோன்றவில்லை.
வெகுகாலத்துக்குப் பிறகு அதே புத்தகம் இப்போது மறுபடி அச்சிடப்படுகிறது. அதை அச்சிடுபவன் எனக்கும் வசுதாவுக்கும்நண்பனான புவன். முதல்தடவை புத்தகத்தை வெளியிட்டவர்களில் புவனும் ஒருவன்.
புத்தகத்தின் பெயர் 'நரகத்திலிருந்து பிரயாணம்'. இந்தத் தடவையும் அதே பெயர்தான் வைக்கப்பட்டிருக்கிறது. முதல்பதிப்பில் புத்தகத்தில் மூன்று கதைகள் இருந்தன. இந்தப் பதிப்பில் இன்னும் இரண்டு கதைகள் சேர்க்கப்பட்டுள்ளன.வசுதா ஒரு மருத்துவமனையில் இறந்து போனான். அங்கு போகவோ, அவன் கடைசிக் காலத்தில் ஏதாவது எழுதியிருந்தால்அதை சேகரிக்கவோ சாத்தியப்படவில்லை. எங்களுக்குக் கிடைத்துள்ள படைப்புகளையே இந்தப் புத்தகத்தில் சேர்த்திருக்கிறோம்.
நான் முதலிலேயே வாசகர்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும். நான் எழுத்தாளனில்லை; முன்னுரை எப்படிஎழுதுவதென்று எனக்குத் தெரியாது, என் மொழிநடையும் ஒரு முன்னுரைக்கேற்றதல்ல. புவன்தான் எனக்கு இந்தப் பொறுப்பைக்கொடுத்திருக்கிறான். இளமைக் காலத்தில் நானும் வசுதாவோடு எழுத்து முயற்சிகளில் ஈடுபட்டிருந்ததால் நான்தான் முன்னுரைஎழுதத் தகுந்தவன் என்று புவன் நினைக்கிறான். தவிர, அவனைவிட எனக்கு வசுதாவைப்பற்றி அதிகம் தெரியும் என்பதுஅவன் கருத்து. இந்தக் கருத்து சரியில்லை.. புவன் எழுத முயலாவிட்டாலும் வசுதாவிடம் அவனது நேசம் என்னுடையதைவிடக்குறைந்ததல்ல; வசுதாவுடன் அவனது நெருக்கமும் அப்படித்தான் இருந்தாலும் வசுதாவின் புத்தகத்துக்கு முன்னுரை எழுதும்பொறுப்பு என்மேல் விழுந்திருக்கிறது.
வசுதா போன்ற ஒரு பிரபலமாகாத எழுத்தாளனின், யாரும் படிக்காத, எல்லாராலும் மறக்கப்பட்ட ஒரு புத்தகத்தை இருபதுஇருபத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் மறுபடி பிரசுரிக்க முன் வந்ததற்கு ஒரு விளக்கம் தேவை. நட்புணர்வு ஒன்றைத்தவிரவேறு முக்கியமான காரணம் எதுவுமில்லை. இறந்துபோன நண்பனுக்காக இந்த முறையில் எங்கள் அன்பைத் தெரிவிப்பதில்எங்களுக்கு தனிப்பட்ட முறையின் சிறிது ஆறுதல் கிடைக்கிறது..
நான்கைந்து மாதங்கள் முன்னால் புவன் காசிக்குப் போயிருந்தான். அங்கு ராமாபுராவில் ஒருவரைச் சந்தித்தான்.அவர் வயது முதிர்ந்தவர். ஒரு நாள் புவன் அவருடைய வீட்டில் உரையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பையன் அங்கு வந்து ஒருபோட்டோவைக் கொடுத்துவிட்டப் போனான். சில நாட்களுக்கு மன் அந்த அறையில் ஒட்டடையடிக்கும்போது அந்த போட்டோகீழே விழுந்து அதன் கண்ணாடி உடைந்து விட்டதாம். இப்போது மறுபடி கண்ணாடி போட்டு வந்திருக்கிறது அது. தற்செயலாகஅதைப் பார்த்த புவன் அதில் வசுதா இருப்பதைக் கவனித்தான். நிறம் மங்கிய அந்த போட்டோவில் இடம் பெற்றிருந்த மூவரில்ஒருவன் வசுதா. மற்ற இருவர் அந்த முதியவரும் அவருடைய பெண்ணும்.
"இவன் என்னோட நண்பன் வசுதா" என்று புவன் சொன்னான். "இவன் ஒரு எழுத்தாளன்."
"என் பெண்ணும் அப்படித்தான் சொன்னா. ஆனா நான் ஒரு நாளும் அவன் எழுதிப் பார்க்கல்லே" கிழவர் சொன்னார்."ஒரு தடவை நான் ஹரித்வாருக்குப் பணிவிடை செய்யறதைப் பார்த்தேன். இது ஹரித்வாரிலே எடத்த போட்டோ. இந்தப்பையன் ஒரு துறவி மாதிரி இருந்தான்.. இப்பபோ இவன் எங்கேயிருக்கான், தெரியுமா?"
புவன் ஏனோ அவரிடம் வசுதா இறந்த செய்தியைச் சொல்லவில்லை. "எனக்குத் தெரியாது என்று சொல்லிவிட்டான்.
காசியிலிருந்து திரும்பி வந்தபிறகு வசுதாவின் புத்தகத்தை மறுபடி வெளியிட வேண்டுமென்று தோன்றிவிட்டது புவனுக்கு.இதற்கு என்ன காரணமென்று பல தடவைகள் அவனைக் கேட்டுவிட்டேன். அவன் பதில் சொல்வான், "பிரசுரிக்கறது நம்கடமை. வசுதா உயிரோடிருந்தபோது நான் எவ்வளவோ தடவை 'என்கிட்டே காசு இருந்தா ஒன் புத்தகத்தை முன்னாலேயேபிரசுரித்திருப்பேன்'னு அவன்கிட்டே சொல்லியிருக்கேன். இப்போ என்கிட்டே பணம் இருக்கு. நான் அதை அவனோட புத்தகத்தைவெளியிடச் செலவு செய்ய விரும்பறேன்."
இந்த நாற்பத்தாறு நாற்பத்தேழு வயதிலும் புவன் முன்போலவே உணர்ச்சிவசப்படுபவனாயிருக்கிறான். என்னால்அப்படி இருக்க முடியவில்லை. எனக்குள்ள ஒரே ஆறுதல் வசுதாவுக்காக இந்த முன்னுரையை எழுத முடிகிறது என்பதுதான்.வாசகர்கள் பெருந்தன்மையோடு என் குறையை மன்னித்து விடுங்கள்.
முதல் உலகப் போர் முடிந்த ஆண்டில் --அதாவது 1918-ல் மேற்கு வங்காளத்தில் வசுதா பிறந்தான். அது கார்த்திகைமாதமாயிருக்கலாம். அவனுடைய தந்தை ஒரு போஸ்ட் மாஸ்டர். அவர்கள் குடும்பம் அடிக்கடி வெவ்வேறு ஊர்களுக்கு மாற்றலாகிக் கொண்டிருந்தது. இந்த மாற்றல்கள் வங்காளத்திலும் பீகாரிலுந்தான். வசுதாவின் தாயார் அடக்கமும் அமைதியும்கடவுள் பக்தியும் மிக்கவர். வசுதா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது அவனுடைய அக்கா புக்ககத்தில் இறந்துபோய் விட்டாள். அவனுக்கு வேறு உறவினர் இருந்தார்களா என்பது எங்களுக்குத் தெரியாது.
வசுதா கல்லூரிப் படிப்புக்காகக் கல்கத்தா வந்தபோது எங்களுக்கு அவனுடன் அறிமுகம் ஏற்பட்டது. அவன் கெட்டிக்கார மாணவனல்ல, பார்ப்பதற்கும் அழகாயிருக்க மாட்டான். கரகரப்புத் தொண்டை அவனக்கு. ஆனால் நண்பன் என்றமுறையில் அவன் விலைமதிப்பற்றவன். அவன் தான் படித்ததை விடப் பத்து மடங்கு சிந்தித்தான். அவன் எங்களுக்கு ஏதாவதுசொல்லவோ தெளிவாக்கவோ முயலும்போது அவனது கரகரத்த குரல் உணர்ச்சி மிகுதியால் மிகவும் கவர்ச்சிகரமாகிவிடும்.அவன் மிகவும் உணர்ச்சிவசப்படுபவன் என்பதை அவனுடைய கண்களே சொல்லும். அவனுக்கு நீள முகம், கூர்மையானமேவாய், நீளமான மெல்லிய மூக்கு. ஆனால் கண்கள் சற்றுச் சிறிதாக, பிரகாசமாயிருக்கும். அடர்த்தியான புருவங்கள், மாநிறம்,சுருட்டை முடி, ஒரு சாதாரண வங்காளி இளைஞனிடமிருந்து அவனை வேறுபடுத்திக் காட்டும் தனித்தன்மை எதுவும் அவனிடமில்லை. ஆனால் அவனோடு நெருங்கிப் பழகிய எங்களுக்கு, அவன் எங்கள் மாதிரி அல்ல, அவனிடம் ஏதோ ஒரு தனிக்கவர்ச்சி இருக்கிறது என்று தெரிந்திருந்தது.
பி.ஏ. படித்துக் கொண்டிருந்தபோது வசுதா எதத் தொடங்கினான். அதற்கு முன்னாலேயே அவன் எழுதத் தொடங்கிவிட்டானா என்று எங்களுக்குத் தெரியாது. அவனுடைய முதல் கதை எங்கள் நண்பர்கள் நடத்திவந்த ஒரு பத்திரிகையில் வெளிவந்தது. அந்தக் கதை இப்போது கிடைக்கவில்லை. கல்கத்தாவில் குண்டு விழுந்த காலம் அது. எங்கும் குழப்பம். மக்கள் பயத்தில்தப்பியோடிக் கொண்டிருந்தார்கள். இந்தக் குழப்பச் சூழ்நிலையில் மற்றவர்கள் கதை எழுதியது போல் வசுதாவும் எழுதினான். மிகசாதாரணக் கதை அது. அப்போது நாங்கள் அவனைப் புகழ்ந்தாலும் அந்தக் கதை மிகவும் சாதாரணந்தான். அந்த கதைசம்பந்தமாக எதுவும் எங்களுக்க நினைவில்லை.
தன் உண்மையான எழுத்துப் படைப்பு 1943ஆம் ஆண்டில்தான் தொடங்கியதென்று வசுதாவே நினைத்ததாக எங்களுக்குத்தோன்றுகிறது. அப்போது நாங்களெல்லாரும் வேலையிலமர்ந்து விட்டோம். வசுதா சிவில் சப்ளை அலுவலகத்தில் வேலைபார்த்து வந்தான். நானும் புவனும் வேறு அலுவலகங்களில் பணி புரிந்தோம். வசுதா பௌபஜாரில் ஓர் உணவுவிடுதியில்தங்கியிருந்தான். தினம் மாலையில் நானும் புவனும் அவனைப் பார்க்கப் போவோம். முன்னிரவு வரை அவனோடிருப்போம்.வசுதா தன் எழுத்தைப் பற்றிச் சொல்லுவான், தான் எழுதியது ஏதாவது இருந்தால் அதைப் படித்துக் காட்டுவான். அவனதுமனம் அமைதியற்றிருந்தது. எந்தப் படைப்பையும் இறுதிவரை எழுதப் பொறுமையில்லை அவனுக்கு. ஏதோ எழுதப் போவதாகச்சொல்லுவான், ஆனால் எழுத மாட்டான். எதையாவது எழுதத் தொடங்குவான், அரைகுறையாக விட்டுவிடுவான். மாதக்கணக்கில் இதே மாதிரி நடக்கும். இது எழுதப் போகிறேன், அது எழுதப் போகிறேன் என்று சொல்வான், ஒன்றும் எழுதமாட்டான்.
இந்தத் தொகுப்பின் முதல் கதை 'விநோதினியின் துக்கம்.' அந்தக் காலத்து மாதப் பத்திரிகையொன்றில் பிரசுரமாயிற்று.வசுதா சொல்ல விரும்பிய ஏதோ ஒரு விஷயம் முதல் தடவையாக இந்தக் கதையில் வெளிப்பட்டது.
பதின்மூன்றாம் வயதில் விநோதினிக்குக் கல்யாணம். அப்போது அவளுடைய கணவனின் வயது பதினெட்டு. கனமானசிவப்புக் கரைப் புடவை அவளுடைய சிறிய உடம்பில் நிற்க வில்லை. ஆகையால் அவள் பாதிப் புடைவையைப் பொட்டலம்போல் சுருட்டி முதுகில் வைத்துக்கொண்டு அலைவாள். அவளுடைய கணவன் கங்காபதா அவளுக்காகத் திருட்டுத்தனமாகப் படகுத் துறையிலிருந்து மண்பொம்மை, கண்ணாடி வளையல், ஜிகினாப் பொட்டு, குங்குமம், கொய்யாக்காய், நாவல் பழம் எல்லாம் வாங்கி வருவான். விநோதினி இவற்றைக் கட்டிலுக்கடியில் ஒளித்து வைப்பாள், இரவில் அவற்றையெடுத்துவிளையாடுவாள், கொய்யாக்காயைக் கடித்துத் தின்பாள். கங்கா பதாவுக்குப் படகுத்துறையில் வேலை கிடைத்ததும் அவன்அவளுக்குக் கண்ணாடியாலான சைதன்யரின் பொம்மை ஒன்று வாங்கித் தந்தான். அதிலிருந்து அவள் சைதன்ய பக்தைஆகிவிட்டாள்.
இவ்வாறு விநோதினி யுவதியானாள், குழந்தைகளுக்குத் தாயனாள், வீட்டை நிர்வாகம் செய்தாள். பிறகு அவளதுஇளமை கழிந்தது, முதுமையில் காலெடுத்து வைத்தாள். இந்த சமயத்தில் கங்காபதா இறந்துவிட்டான். இதன்பிறகு விநோதினிக்குவாழ்க்கையில் பிடிப்பு விட்டுப்போய் விட்டது. அவள் தன் கணவனுடன் நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேல் குடித்தனம்நடத்தியிருந்தாள். இந்த நீண்ட குடும்ப வாழ்க்கையின் கட்டமைப்பு அவளுக்குப் பழகிப் போயிருந்தது. கணவனின்மரணம் இந்தக் கட்டமைப்பைக் குலைத்துவிட்டது. அவளுக்கு இப்போது வாழ்க்கை சூன்யமாக, பொருளற்றதாகத் தோன்றியது.ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றுத் தண்ணீர் வழியில் எங்கோ மணல் மண்ணில் மறைந்துவிட்டாற்போல்... கடவுள் சில கோடுகளையும் நிறங்களையும் வைத்துக்கொண்டு அவளது வாழ்க்கையாகிய ஒரு சிறு சித்திரத்தை தீட்டியிருந்தார். அந்தச் சித்திரத்தின்பாதிக் கோடுகள் அழிந்து போய்விட்டன, நிறங்கள் வெளிறிப் போய் விட்டன. அவளது வாழ்க்கைச் சித்திரமும் அழிந்துபோய்விட்டது. இனி மறுபடியும் சித்திரம் உருப்பெற வாய்ப்பில்லை.
விநோதினி தன் வாழ்க்கையின் வெறுமையைத் தன் பிள்ளையின் மூலம் தீர்த்துக் கொள்ளப் பார்த்தாள். ஆனால்அவள் மனம் இதற்கு இடங்கொடுக்கவில்லை. சாமி, பூஜை இவற்றிலும் மனதைச் செலுத்த முடியவில்லை அவளால்.கண்ணாடி சைதன்யர் அவளுடைய பக்திக்குரியவர். அவள் நாற்பத்தைந்து ஆண்டுகளாக அவருக்கு வழிபாடு செய்துவருகிறாள். ஆனால் கங்காபதாவின் மறைவுக்குப்பின் சைதன்யரும் வெறும் கண்ணாடியாகி விட்டார். ஒவ்வொரு பூஜைக்குப்பிறகும்அந்தக் கடவுளின் மண் பதுமை ஆற்றில் போடப்படுகிறது. அந்த மண்ணும் மற்ற அலங்காரங்களும் தண்ணீரில் கரைந்து போகின்றன அல்லது தண்ணீரால் அடித்துக்கொண்டு போகப்படுகின்றன, எதுவும் மிஞ்சுவதில்லை என்பது திடீரென்று பிறந்ததுஅவளுக்கு. மனித வாழ்விலும் இத்தகைய முடிவு ஒரு தவிர்க்க முடியாத உண்மை. கங்காபதாவையும் விநோதினியையும் ஆற்றில்போடுவதற்காக மேளதாளத்தோடு அவர்களை ஆற்றங் கரைக்குக் கொண்டு வந்தாகிவிட்டது. கங்காபதாவை ஆற்றில் போட்டுவிட்டார்கள். விநோதினிதான் பாக்கி. அவளைப் போட்டதும் அவள் தன் கணவனோடு சேர்ந்து விடுவாள். இவ்வாறு நினைத்துவியோதினி கடவுளை வணங்கினாள் இன்று.
வசுதா தன் தாயின் நினைவில் இந்தக் கதையை எழுதினான். வசுதாவின் தாய் கடவுள் பக்தியுடையவரானாலும் தன் கணவரின்மரணத்துக்குப் பிறகு அவருக்கு வசுதாவிடமோ கடவுளிடமோ உண்மையான ஆறுதல் கிடைக்கவில்லை.
"அம்மாவுக்கு மேலுலகத்திலும் நம்பிக்கையில்லை. சாவைத் தான் நம்புகிறாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை" என்றுசொல்லுவான் வசுதா.
தாயின் மறைவுக்குப் பல நாட்களுக்குப் பிறகு வசுதா இன்னொரு கதை எழுதினான். அதன் தலைப்பு 'துக்கத்திலிருந்துவிடுதலை' அந்தக் கதை இந்தத் தொகுப்பின் இரண்டாவது கதை. அதிகம் பிரபலமில்லாத பத்திரிகையொன்றில் அந்தக்கதை வெளியாகியது.
'விநோதினியின் துக்கம்' இலக்கண மொழிநடையில் எழுதப் பட்டிருந்தது. தொடக்கத்தில் வசுதா இலக்கண மொழியில்தான்எழுதினான். 'துக்கத்திலிருந்து விடுதலை' பேச்சு மொழியில் எழுதப்பட்டது.
'விநோதினியின் துக்கம்' கதையில் விநோதினியின் ஒரே ஆறுதல் சாவுதான். அவள் சாவையே தன் துக்கத்தின் முடிவுக்குவழியாகக் கருதினாள். இப்படிச் சொல்வது அவ்வளவு சரியாகப் படவில்லை. அவள் சாவின் மூலம்தான் கணவனுடன் ஓர்ஆத்மீகமான மறுசந்திப்பை எதிர்பார்த்தாள். வசுதா 'துக்கத்திலிருந்து விடுதலை' கதையில் இந்தச் சாவையெ இன்னும் நன்றாகஆராய முயன்றான்.
அவன் இந்தக் கதையைத் தன் தாயின் மரணத்துக்கு வெகு நாட்களுக்கப் பிறக எழுதினான் என்பதே முன்பே சொல்லியிருக்கிறேன். வசுதாவின் தாய் நோய்வாயப்பட் டிருந்தபோது அவனுக்கு ஒரு பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டது. நான் அவளுடையபெயரை இங்கு சொல்லவில்லை. வசதிக்காக அவள் பெயர் நிருபமா அல்லது நிரு என்று வைத்துக் கொள்வோம்.
வசுதா தன் தாய் நோய்வாய்ப்பட்டிருக்கும் செய்தி கேட்டுத் தன் கிராமத்துக்குப் போனான். தாய் இறந்தபின் அவருடையஈமச் சடங்குகள் நிறைவேறும் வரை அங்கேயே தங்கினான். நானும் புவனும் பத்தாம் நாள் சடங்குக்கு வசுதாவின் கிராமத் துக்குப் போனோம். அப்போது வசுதா எங்களிடம் ஒரு விசித்திரமான செய்தியைச் சொன்னான். ஆற்றங்கரையில்மயானத்தில் அவனுடைய தாயின் சடலம் திகுதிகுவென்று எரிந்து கொண்டிருந்தபோது அவன் ஒரு நாவல் மரத்தடியில்உட்கார்ந்து கொண்டு நிருவைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தானாம்! அதன் பிறகும் இந்தப் பத்து நாட்களும்தன் தாயைவிட அதிகமாக நிருவைப் பற்றியே நினைக்கிறானாம்.
இது ஏன்? இந்த மாதிரி எந்த விஷயத்தையும் 'ஏன்?' என்று ஆராய்வது வசுதாவின் சுபாவம். அவன் தன் தாயைப் பற்றிஎவ்வளவு சிந்திக்கக் கடமைப்பட்டவனோ அவ்வளவு சிந்திக்க வில்லை. தாயின் மரணத்தால் ஏற்பட்டிருக்க வேண்டிய துக்கமும்வேதனையும் அவனக்கு ஏற்படவில்லை. இதற்குப் பதிலாக அவன் நிருபமாவைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறான்.இது அவனை ஒரு குற்ற உணர்வுக் உள்ளாக்கியது. தான் ஒரு பெருங்குற்றம் செய்துவிட்டோம் என்ற உணர்வு ஏற்பட்டது அவனுக்கு. அவன் தன்னை அனாவசியமாக வருத்திக் கொள்கிறான் என்று நாங்கள் அவனை எவ்வளவோ தேற்றியும்பயனில்லை.
அவன் சில நாட்கள் இவ்வாறு வருத்தமாகப் பொழுதைக் கழித்தான், நிருபமாவையும் வருத்தப்படச் செய்தான். பிறகு தன்கேள்விக்கு ஏதோ ஒரு விடை கண்டுபிடித்த இந்தத் 'துக்கத்திலிருந்து விடுதலை' கதையை எழுதினான்.
'விநோதினியின் துக்கம்' கதையில் விநோதினி சாவில் தன் துக்கத்தின் தீர்வைக் காண்கிறாள். 'துக்கத்திலிருந்து விடுதலை'கதையில் சுகேந்து உணர்கிறான் 'சாவு என்பது வெறும் ஜடந்தான். வாழ்க்கதான் எதிர்வினையைப் படைக்கிறது, சாவோ எதையும்படைப்பதில்லை.'
சுருக்கமாகச் சொல்வதென்றால், விநோதினி சாவின் மூலம் பெற விரும்பிய அமைதியை சுகேந்து வாழ்வின் மூலம், உயிர்த்துடிப்பின் மூலம் பெற முயல்கிறான்.
சுகேந்துதான் 'துக்கத்திலிருந்து விடுதலை' கதையின் நாயகன். அவனுடைய வயது கதையில் சற்று அதிகமாகக் காட்டப்பட்டிருக்கிறது. மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் இது ஒரு காதல் கதை போலத் தோன்றும். ஆனால் வாழ்வுக்கும் சாவுக்குமிடையேஏற்படும் முரண்பாடுதான் இந்தக் கதையின் கரு என்பது என் கருத்து. சுகேந்து ஒரு விசித்திரமான மனக்குழப்பத்தோடு சோகமாகவாழ்க்கை நடத்துவதை நாம் கதையின் தொடக்கத்தில் காணுகிறோம். அவன் ரேணு என்ற பெண்ணைக் காதலிக்கிறான்.ஆனால் அவனுடைய தாயைப் பற்றிய நினைவின் தீவிரம் அவன் ரேணுவுடன் இயற்கையான உறவு கொள்வதைத் தடுக்கிறது.உறுத்தல். தான் தன் தாயின் சாபத்தைச் சுமந்து கொண்டு வாழ்ந்து வருவதாகத் தோன்றுகிறது அவனுக்கு. இது எப்படிஎன்று அவனுக்குப் புரியவில்லைதான் தன் தாய்க்குச் செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்றவில்லை என்று மட்டும்அவனுக்குப் புரிகிறது.
சுகேந்து இந்தக் குழப்பத்திலிருந்து வெளியேறுவான் என்று நாம் எதிர்பாராத நிலையில் இந்தக் குழப்பத்துக்குத் தீர்வாக ஒருநிகழ்ச்சி நிகழ்கிறது. கதையின் இறுதியில் நேரும் ஆச்சரிய நிகழ்ச்சியைத்தான் குறிப்பிடுகிறேன். அப்போது குளிர்காலத்தின்தொடக்கம். அந்த நேரத்தில் சுகேந்துவும் ரேணுவும் ரேணுவின் வீட்டு மொட்டைமாடியிலமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.கல்கத்தாச் சந்துகளிலிருந்து எழும் அடுப்புக் கரிப்புகை, காஸ் விளக்கின் மங்கிய ஒளி, சிறிது நிலவு இவையெல்லாம் சேர்ந்துஒரு மங்கலான வெளிச்சம் பரவியிருக்கிறது எங்கும். ரேணு பேசிக்கொண்டிருந்துவிட்டு எழுந்து போயிருந்தாள். சுகேந்துமட்டும் தனியாக உட்கார்ந்திருந்தான். அப்போது யாரோ தன்னருகில் வந்து உட்கார்ந்திருப்பதாக அவனுக்குத் தோன்றியது.வெள்ளை நிழல் போன்ற ஓர் உருவம். முதலில் அந்த மங்கலான வெளிச்சத்தில் அதை அடையாளங்கண்டு கொள்ள முடியவில்லை அவனால். சற்றுக் கவனித்துப் பார்த்ததில் புரிந்தது அது அவனுடைய அம்மா!
முதலில் அவனுக்கு வியப்பு ஏற்பட்டது. பின்னர் அவனுக்குப் புரிந்தது. அம்மா ஏன் அங் வந்திருக்கிறாரென்று.தாயிடம் பாசமும் தாய்க்காகத் துக்கமும் பொங்கி வந்தன அவனுக்குள். ஏதோ ஒரு வகை இனம்புரியாத மனநிலைஅவனை ஆட்கொண்டது. அவன் தன் தாயிடம் ஏதோ சொல்ல முற்பட்டான். திடீரென்று இதென்ன மணம்? யாருடைய மணம்?ஏதோ நினைவில் அவன் தலை குனிந்தான். சட்டைப்பைக் குள்ளிருந்து ஒரு பூவின் மணம் வருவதை உணர்ந்தான். சிறிதுநேரம்முன்பு ரேணு தன் கொண்டையிலிருந்த ஒரு ரோஜா மலரை எடுத்து அவன் பைக்குள் வைத்தது அவனுக்கு நினைவு வந்தது.அந்த மலரின் மணம்தான் எவ்வளவு இனிமையாக, இதமாக, உயிர்த் துடிப்போடு இருக்கிறது. ரேணுவின் உடல், உள்ளம்,அவளது காதல் இவையெல்லாம் அந்தக் கணத்தில் ஒரு பேரலையாகக் கிளம்பி அவனை அடித்துச் செல்லத் தொடங்கியது.அந்த நிலையில் சுகேந்து தன் தாயிடம், "இனிமேல் நீ வராதே!" என்று சொன்னான்.
வசுதா தன்னுள்ளத்தில் அனுபவித்த பச்சாதாப உணர்வை சுகேந்து கடந்து செல்வதாகக் கதையில் சித்திரிக்கிறான். தான்நிருவைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருந்தபடியால் தன் தாயின் மரணத்துக்காகப் போதிய அளவு வருந்தவில்லை என்ற குற்றஉணர்வால் அவனுக்கு ஏற்பட்டிருந்தது. சோகத்திலிருந்து இப்போது விடுதலை கிடைத்து விட்டது அவனுக்கு. நிருவிடம்அவனுக்கிருந்த ஈடுபாடு இயற்கையானதுதான் என்பதை அவன் உணர்ந்து கொண்டான். ஏனென்றால் நிரு உயிரோடிருக்கிறாள்.வாழ்வும் அன்பும் ஒன்றோடொன்று இணைந்தவை.
'துக்கத்திலிருந்து விடுதலை' காதல் கதையல்ல, அது காதலைப் பற்றிச் சொல்லவில்லை. மனிதன் வாழ்க்கையில் ஈடுபாடு கொண்டவன், இந்த ஈடுபாடில்லாமல் யாரும் வாழ முடியாது என்ற கருத்தையே வசுதா இந்தக் கதையில் சொல்ல முயல்கிறான்.
இந்தக் கதை வசுதாவின் வாழ்க்கையில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது என்று நான் நினைக்கிறேன். சுகேந்து இந்தவிளைவுக்கு ஒரு சாதனமாக அமைந்தான்..
இத்தொகுப்பின் மூன்றாவது கதை 'நரகத்திலிருந்து பிரயாணம்'. தொகுப்பின் முதல் பதிப்புக்கு இந்தப் பெயர்தான்வைக்கப்பட்டிருந்தது. இந்தத் தொகுப்புக்கும் இதே தலைப்புதான் கொடுக்கப்பட்டுள்ளது.
'துக்கத்திலிருந்து விடுதலை' கதையெழுதிச் சுமார் ஓராண்டுக்குப் பிறகு வசுதா இந்தக் கதையை எழுதினான்.இதைக் காதல் கதையென்று சொல்லலாம். ஒரு காதல் கதைக்கு 'நரகத்திலிருந்து பிரயாணம்' என்ற தலைப்பு விசித்திமாகத்தோன்றலாம். இந்தக் கதையில் ஓர் இளைஞனின் காதல் வேட்கையும் காதல் தோல்வியும் சித்திரிக்கப்பட்டுள்ளன. வசுதாதன்னையே இந்தக் கதையில் கதாநாயகன் பரிமலாகச் சித்திரித்திருக்கிறான். கதாநாயகியின் பெயர் நிருபமாதான். கல்கத்தாவில்சதானந்த சௌத்திரி சந்தில் ஒரு வீட்டின் மாடியில் நிருபமா வசித்து வந்தாள். அந்த வீட்டின் கீழ்த்தளத்தில் பரிமலின் நண்பனொருவன் தங்கியிருந்தான். பரிமல் அவ்வப்போது நண்பனைப் பார்க்க வருவான். இவ்வாறுதான் அவனுக்கு நிருபமாவுடன்பரிச்சயம் ஏற்பட்டது.. இந்தப் பரிச்சயம் நெருக்கமாக வளரச் சிறிது காலம் பிடித்தது என்றாகும் பரிமல் முதல் சந்திப்பிலேயேநிருபமாவால் ஈர்க்கப்பட்டான் என்பதை ஊகிக்க முடிகிறது. சிலர் காதல் ஒரு தெய்வீக உணர்வு என்று நினைக்கிறார்கள்.காதல் மனித இதயத்துக்கு உயிரூட்டுவதாகக் கருதுகிறார்கள். இத்தகையவர்களில் பரிமலும் ஒருவன். மிகவும் சாதாரணப்பெண்ணான நிருபமாவுக்கு சங்கோச சுபாவமுள்ள பரிமலைப் பிடிக்காமற்போனது இயற்கையே.
எனினும் கதையின் முதற்பகுதியில் பரிமலும் நிருபமாவும் நெருங்கிப் பழகுகிறார்கள். இரண்டாம் பகுதியில் இருவரிடையேகாதல் ஏற்படுகிறது. பரிமலின் காதல் ஆழமானது, உண்மையானது. இந்த காதல் தன் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக விலையுயர்ந்ததாக ஆக்குவதாகப் பரிமல் நினைத்தான். நிருபமா அப்படி நினைக்கவில்லை. அப்படி நினைக்கக் காரணமும் இல்லை.அவளுக்குச் சிந்திக்கத் தெரியவில்லை. இருந்தாலும் இந்தக் காதலில் அவளுக்குக் கிளுகிளுப்பு ஏற்பட்டது.
இந்தக் காதல் இறுதியில் முறிந்து விட்டது. இதன் காரணத்தை ஊகிக்க முடியும். நிருபமா வீட்டுக் கீழ்த்தளத்தில் குடியிருந்த பரிமலின் நண்பன் மன்மதனின் சூழ்ச்சியாலும் நீசத்தன்மையாலும் இந்தக் காதல் முறிந்தது. இந்த முறிவுக்குக்காரணம் பரிமல்தான் என்று ஒவ்வொரு சமயம் தோன்றுகிறது. சில சமயங்களில் நிருபமாதான் இதற்குப் பொறுப்பு என்றுதோன்றுகிறது. மன்மதன் நிருபமாவை அடைவதற்குப் பரிமலுடன் போட்டியிட்டான். ஆனால் அவன் மிகவும் தந்திரசாலியாக திருட்டுத்தனமாக, போக்கிரித்தனமாகச் செயல்பட்டான். அவன் நிருபமாவின் தாயையும் பிறகு நிருபமாவையும் வசப்படுத்திக்கொண்டான். நிருபமாவின் தாய்க்குக் காதலைப் பற்றி அக்கறையில்லை. அவளுக்குத் தெரிந்ததெல்லாம் குடும்ப வாழ்க்கையும்பெண்ணின் சுகமுந்தான். அவள் பரிமலைத் தகுந்த வரனாகக் கருதவில்லை. நிருபமாவும் தவறு செய்துவிட்டாள்--மன்மதனின்புத்திசாலித்தனமும் திறமையும் அவளைக் கவர்ந்து விட்டன. தவிர அவள் பரிமலை ஏற்றுக் கொள்வதை அவளுடைய தாய்விரும்பவில்லை. சிறு வயதிலிருந்தே நிருபமாவுக்கு நோய் என்றால் பயம், அருவருப்பு. பரிமலை நோயாளியாகக் கருதினாள் அவள்.வெகுநாட்களாகவே அவள் பரிமலைத் தன் காதலனாகக் கருத முயற்சி செய்து வந்தாள். ஆனால் கல்யாணத்துக்குப் பிறகுஇந்தக் காதல் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டால் நிருபமாவுக்கு வாழ்க்கையில் இன்பம், அமைதி கிடைக்குமா?கிடைக்கும் என்று தோன்ற வில்லை அவளுக்கு.
ஒருவகையில் பரிமலையும் குற்றவாளியாகக் கருதலாம். அவன் காதல் பாதையில் வெகுதூரம் அனாயாசமாகப் பயணித்துவந்த பிறகு திடீரென்று ஓரிடத்தில் நின்று விட்டான். இதற்கான காரணத்தை ஊகிக்க முடியும். இந்தக் காதல் மூலம் அவனுக்குக்கிடைக்கக்கூடியதெல்லாம் இதற்குள்ளேயே அவனுக்குக் கிடைத்திருக்கலாம். இப்போது அவன் காதலால் நேரும் துக்கம்,அதன் நிறைவின்மை இவற்றைப் பற்றி யோசிக்கத் தொடங்கியிருக்கலாம். காதலின் லாப நஷ்டங்களைச் சிந்தித்துப் பார்த்த அவன் காதல் நிலையானதல்ல, அது எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை என்று புரிந்து கொண்டான். உயிர்த்துடிப்புள்ளஅழகுக்குத் தேய்வு உண்டு, மாறுதல் உண்டு. அதுபோல் காதலிலும் நிறைவின்மை உண்டு, துக்கம் உண்டு, பரிமல் எதிர்பார்த்தநிலையான, தேய்வில்லாத அன்பு உண்மை வாழ்க்கையில் அடைய முடியாத ஒன்றாகும்.
நிருபமாவின் குற்றம் அவள் ஒரு சாதாரணப் பெண் என்பதுதான். அவள் வேண்டியது வாழ்க்கையில் சுகம், வசதி.பரிமலை ஏற்றுக்கொள்ள அவள் தயங்கினாள். அவளது தயக்கத்தின் ஒரு பகுதி மன்மதனின் சூழ்ச்சியின் விளைவு,இன்னொரு பகுதி வாழ்க்கையில் அவளது எதிர்பார்ப்பின் விளைவு.
'நரகத்திலிருந்து பிரயாணம்' வசுதாவின் சொந்த வரலாறு தான்--இறுதியில் நிருவின் காதல் அவனுக்கு அமைதியளிக்கவில்லை. நிரு இறுதியில் வேறொருவனை மணந்துகொண்டு விட்டாள். காதலின் இந்தத் தோல்வி பற்றி நாங்கள் நினைத்ததுபோல் வசுதா நினைக்கவில்லை. அவன் சொல்வான், "காதல் பற்றி நமது கருத்து மிகவும் குறுகியது. காதல் என்பது ஒரு பெண்அல்லது ஓர் ஆணைச் சார்ந்திருப்பதாக நாம் நினைக்கிறோம். அந்தப் பெண் அல்லது ஆண் விலகிப்போய்விட்டால் நாம்துன்பத்தால் துடித்துச் சாகிறோம். இது ஏன்?"
இந்த 'ஏன்?' என்ற கேள்வியிலிருந்து வசுதா ஒரு போதும் விடதலை பெறவில்லை. நாம் வாழ்க்கையில் சாதாரணமாகச்சந்திக்கும் அற்ப எல்லைகளுக்குட்பட்ட அன்பு அவனுக்குப் பிடிக்கவில்லை. இந்த அன்பை அவன் இறுதியில் மறுத்துவிட்டான். பொறாமை, பேராசை, நீசத்தனம் முதலிய உணர்வுகள் வலுப்பதன் காரணமாக நம் வாழ்க்கை உள்ளூர மாசுபட்டுப்போவதை அவன் கண்டான். நம் குறைகளே நம்மை நரகவாசிகளாக ஆக்கி விட்டன என்பது அவன் கருத்து. இந்த நரகத்திலிருந்து மீட்சிபெறுவதைச் சித்திரிக்கும் முயற்சிய அவனது 'நரகத்திலிருந்து பிரயாணம்' கதை. தனிப்பட்ட காதலின்பமாகியஎல்லையைக் கடந்து செல்ல அவன் முயற்சி செய்தான் போலும்.
வசுதா கல்கத்தாவை விட்டுச் சென்ற அதே ஆண்டில் நான் திருமணம் செய்துகொண்டேன். என் மனைவிக்கு வசுதாவைத்தெரியும். அவள் வசுதாவின் எழுத்தை ரசித்தாளா என்று எனக்குத் தெரியாது. நான் வசுதாவை என் திருமணம்வரைகல்கத்தாவில் தங்கும்படி கேட்டுக் கொண்டேன். அவன் தங்கவில்லை. இதற்குச் சில மாதங்கள் முன்புதான் நாங்கள் அவனதுசிறுகதைத் தொகுப்பை வெளியிட்டிருந்தோம்.
அதன் பிறகு நான் வசுதாவைச் சந்திக்கவில்லை. வருடத்தில் ஓரிரண்டு கடிதங்கள் அவனிடமிருந்து வரும். புவனுக்கும்அதேமாதிரி எப்போதாவது கடிதம் வரும். அவன் ஒரு நாடோடியாகி விட்டான் என்ற அவனுடைய கடிதங்களிலிருந்துஎங்களுக்குப் புரிந்தது. பிறகு ஒரு சமயம் அவன் தீவிர கடவுள் பக்தனானான். இறுதியில் அவன் கடவுளை விட்டுவிட்டுப்பொது நல சேவையில் ஈடுபட்டு விட்டான்.
வசுதாவின் கடைசி இரண்டு கதைகளைப் பற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. நான் நகரத்தில் வசிக்கும் பிராணி.வசுதா நரகத்தைவிட்டு வெளியே பயணிக்கச் செய்த முயற்சிகள் பற்றி எனக்குத் தெரியாது. 'ஈசுவர்' என்ற அவனது நான்காவதுகதையும், 'அடைக்கலம்' என்ற ஐந்தாவது கதையும் அவனது வாழ்க்கையின் இறுதிப் பகுதியின் வரலாற்றைத் தெரிவிக்கலாம்.புவன் காசியிலிருந்து திரும்பி வரும்போது அந்தக் கிழவரின் பெண்ணிடமிருந்து இந்த இரண்டு கதைகளின் கையெழுத்துப்பிரதிகளையும் வாங்கி வந்திருந்தான். இரண்டுமே முற்றுப் பெறாத கதைகள். இவற்றைப் படிக்கும் வாசகர்களும் இதை உணர்வார்கள்.
'ஈசுவர்' சாதாரண நடையில் எழுதப்பட்டதல்ல. இதை ஒரு குறியீட்டுக் கதை எனலாம். படிக்கும்போது அது மிகவும்எளிமையாகத் தோன்றும். ஆனால் இறுதியில் ஏதோ ஒர வெறுமை, குறை தென்படும். கதையின் இயற்கைக்கு மாறானதன்மை அதன் தொடக்கத்திலேயே தெரியவரும். ஒரு வழிப் போக்கன் மழையும் புயலுமான ஓர் இரவின் இருளில் ஒருகோவிலில் அடைக்கலம் பெறுகிறான். அங்கே இருட்டிலேயே ஒர துறவியைச் சந்திக்கிறான். அவனுடன் உரையாடும்போதுதுறவி சொல்கிறார், "என்னிடமிருக்கும் பையில் ஒரு விளக்கு இருக்கிறது. அதை ஏற்றிக்கொண்டால் எந்த மழையிலும்இருட்டிலும் வழி தெரியும்."
வழிப்போக்கன் கேட்கிறான், "அப்டியானால் நீங்கள் ஏன் இருட்டில் உட்கார்ந்திருக்கிறீர்கள்? விளக்கை ஏற்றிக்கொண்டுவழி நடக்கலாமே!"
"என் பையில் ஒரே மாதிரி மூன்று விளக்குகள் இருக்கின்றன--ஒன்று அசல், மற்ற இரண்டும் போலி. இந்த இருட்டில்என்னால் அசல் எது, போலி எது என்று கண்டுபிடிக்க முடியவில்லை" என்கிறார் துறவி!
இதைக்கேட்டு, 'ஆகா, இந்த விளக்கு நம்மிடமிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!' என்று வழிப்போக்கனுக்குத் தோன்றுகிறது. அவனுடைய ஆசையைப் புரிந்துகொண்டு விடுகிறார் துறவி. "உன்னால் முடிந்தால் நீ அசல் விளக்கைக் கண்டு பிடித்துக்கொள்" என்று அவர் சொல்லி அவனிடம் விளக்குகளைக் கொடுக்கிறார். மூன்று விளக்குகளும் ஒரே மாதிரியாக இருக் கின்றன. இருட்டில் அவற்றில் அசல் எது நகல் எது என்று வழிப் போக்கனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
"முடியவில்லையா?" துறவி கேட்கிறார்.
"முடியவில்லை."
துறவி விளக்குகளைத் திரும்ப வாங்கிக் கொள்கிறார். "இவற்றில் ஒன்று அசல் விளக்கு. ஏற்றத் தெரிந்தவன் கையில்அது நிச்சயம் எரியும். அவன் தன் சொந்த சக்தியால் அதை ஏற்றுவான்" என்கிறார் அவர்.
கதை இத்துடன் நின்று விடுகிறது. ஆனால் வசுதா தொடந்ந்து ஏதோ எழுதப் பலமுறை முயன்றிருக்கிறான், அம்முயற்சிகளில்தோல்வியுற்றிருக்கிறான் என்று கையெழுத்துப் பிரதியிலிருந்து தெரிகிறது. அவன் துறவியின் புதிர் போன்ற பேச்சுக்குப் பொருள்காண முயன்று தோல்வியடைந்திருக்கலாம்.
"அடைக்கலம்" கதை காசியில் எழுதப்பட்டது. அதன் தொடக்கம் இருக்கிறது, முடிவு இல்லை. ஒவ்வோராண்டும்குளிர்காலத்தில் காசியையடுத்த கிராமப் பகுதியில் தொற்றுநோய் பரவுவதுண்டு. ஒரு தடவை அங்கு கடுமையான தொற்றுநோய்பரவியது. அரசாங்க ஊழியர்கள் கூட அங்கே போகத் துணிய வில்லை. கங்கைக் கரையில் சிதைகள் இடைவிடாது எரிந்தன.காசியில் வசித்துவந்த கதாநாயகன் ஒருநாள் காலையில் கங்கையில் நீராடிவிட்டு திரும்பும்போது யாரோ தன்னைப் பின்னாலிருந்துகூப்பிடுவதாக உணர்ந்தான். பக்கத்து கிராமத்திலிருந்து ஒரு நண்பன் வந்து அவனுக்குக் கபீரின் பாடல்களை ராகத்தோடுபாடிக் காட்டுவானே, அவன்தானோ?
அதே ராகத்தில் அதே குரல் கேட்டது - "நாங்கள் துன்புறுகிறோம், நாங்கள் அமைதியிழந்து விட்டோம், மரத்துக்கு வேர்உண்டு, எங்களுக்கு வேர் இல்லை. ஒரே இடத்தில் நிலைத்திருக்க முடியவில்லை எங்களால்.."
அன்று வசுதா வீடு திரும்பவில்லை. தொற்றுநோய் பரவியிருந்த கிராமப்புறத்துக்குப் போய்ச் சேர்ந்து விட்டான் அவன்.
இவ்வளவுதான் எழுதியிருந்தது கதையில். இந்தக் கதையை எழுதிய மறுநாள் வசுதா அங்கிருந்து போய்விட்டதாகக் கிழவரும்அவருடைய மகளும் அவனிடம் சொன்னார்கள். அவன் எங்கே போனான் என்று அவர்களுக்குத் தெரியாது..
சோட்டா நாக்பூர்ப் பகுதியில் ஓரிடத்தில் ஒரு மிஷன் மருத்துவமனையில் வசுதா இறந்து போனான். அவன் இறந்துபல நாட்களுக்குப் பிறகுதான் எங்களுக்கு அவனுடைய மரணச்செய்தி கிடைத்தது.
அவன் மருத்துவமனெயில் எதுவும் எழுதியதாகத் தெரியவில்லை. எழுத வேண்டிய தேவை அவனுக்குத் தீர்ந்து போயிருக்க வேண்டும்.
வசுதாவின் படைப்புகளைப் பற்றி நான் அவனுடைய நண்பன் என்ற முறையில் எழுதியிருக்கிறேன். இதுதான் இயற்கை.என் கருத்துகளில் தவறு இருக்கலாம். தவற இருந்தால் வாசகர்கள் என்னை மன்னிக்கட்டும்.
இந்தத் தொகுப்பின் முகப்பில் ஒரு 'சமர்ப்பணம்' இருக்கிறது. அது முதல் பதிப்பிலும் இருந்தது. அந்த சமர்ப்பணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிருபமாராய் வசுதாவின் அந்த நிருபமாதான்..
('ஆம்ரா தீன் பிரேமிக் ஓ புவன்,' ஜூலை 1968)
15. பாரதநாடு
ராணுவக் குறியீட்டுப்படி அந்த இடத்தின் பெயர் BF332. அது ஒரு ரயில்வே ஸ்டேஷன் அல்ல. அங்கே பிளாட்பாரமும்இல்லை, டிக்கெட் கௌண்டரும் இல்லை. திடீரென்று ஒருநாள் அங்கே ரயில் தண்டவாளத்தையொட்டிப் பளபளக்கும் முள்வேலிபோடப்பட்டது. அவ்வளவுதான். இரு திசைகளிலும் போகும் ரயில்களில் எதுவுமே நிற்பதில்லை. ஒரேயொரு ஸ்பெஷல் ரயில்மட்டும் என்றாவது ஒரு நாள் காலையில் அங்கு வந்து நிற்கும். என்றைக்கு நிற்கும் என்பது எங்களுக்கு மட்டுமதான் முன்னதாகத் தெரியும். நாங்கள் என்றால் பிகாரி சமையல்காரனைச் சேர்த்து நாங்கள் ஐந்து பேர்.
ரயில் நிற்பதில்லை, ஸ்டேஷன் இல்லை. அப்படியும் அந்த இடத்துக்கு ஒரு பெயர் கிடைத்து விட்டது -- 'அண்டா ஹால்ட்'.அண்டா என்றால் முட்டை. நாங்களும் அந்தப் பெயரைப் பயன்படுத்தத் துவங்கி விட்டோம்.
அருகிலிருந்த இரண்டு குன்றுகளுக்கு நடுவில் மகதோ இனத்தவர் வாழ்ந்து வந்த கிராமம் ஒன்று இருந்தது. அந்தக்கிராமத்தில்நிறையக் கோழிகள் வளர்க்கப்பட்டன. மகதோக்கள் அங்கிருந்து வெகு தொலைவிலிருந்த புர்க்குண்டாவில் சனிக்கிழமை தோறும் கூடும் சந்தையில் கோழிகளையும் முட்டைகளையும் விற்கப் போவார்கள். சில சமயம் சந்தையில் கோழிச்சண்டையும் நடக்கும்.
ஆனால் BF332க்கு 'அண்டா ஹால்ட்' என்று பெயர் வர இது காரணமல்ல. எங்களுக்க அந்தக் கிராமத்து முட்டைகள்மேல் எவ்வித ஆசையும் இல்லை.
ரயில்வே இலாகா ஒரு காண்டிராக்டருடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தது. அவனிடம் ஒரு டிராலி வண்டிஇருந்தது. அவன் சிவப்புக் கொடி கட்டப்பட்ட அந்த டிராலியைத் தண்டவாளங்களின்மேல் தள்ளிக் கொண்டு வந்து அங்கேகூடை கூடையாக முட்டைகளை இறக்குவான். பிகாரி சமையல் காரன் பகோதிலால் அவற்றை இரவில் வேக வைப்பான். பிறகுவெந்த முட்டைகள் தோலுரிக்கப்படும். உரிக்கப்பட்ட முட்டைத் தோல் நாளடைவில் மலைபோல் குவிந்து விட்டது. இதனால்தான்அந்த இடத்துக்கு 'அண்டா ஹால்ட்' என்று பெயர் வந்தது.
ராணுவ மொழியில் வழங்கப்பட்ட BF332-ல் உள்ள BF என்ற எழுத்துக்கள் Breakfast (காலையுணவு) என்ற ஆங்கிலச்சொல்லின் சுருக்கம் என்று நினைக்கிறேன்.
அப்போது ராம்கட் என்ற ஊரில் போர்க் கைதிகளின் முகாம் ஒன்றிருந்தது. அங்கு இத்தாலியப் போர்க் கைதிகள்துப்பாக்கிகளாலும் முள்வேலியாலும் சிறைப்படுத்தப்பட்டிருந்தார்கள். சில சமயம் அவர்கள் ஒரு ரயிலில் ஏற்றப்பட்டுவேறோரிடத்துக் கொண்டு செல்லப் படுவார்கள். அவர்கள் ஏன், எங்கே கொண்டு போகப் படுகிறார்களென்று எங்களுக்குத்தெரியாது.
மறுநாள் காலையில் ரயில் வந்து நிற்கும் என்று எனக்குச் செய்தி வரும். முட்டைகளும் கூடவே வரும். நான் பகோதிலாலிடம் முட்டைகளைக் காட்டி "முன்னூத்தி முப்பது காலைச் சாப்பாடு" என்று சொல்வேன்.
பகோதிலால் எண்ணி அறுநூற்று அறுபது முட்டைகளுடன் உபரியாக இருபத்தைந்து முட்டைகள் எடுத்துக்கொள்வான்.முட்டைகளில் சில அழுகிப் போயிருக்கலாம் என்பதற்காக உபரி முட்டைகள். பிறகு அவற்றை நன்றாக வேக வைப்பான். வெந்தமுட்டைகளை மூன்று கூலிகளின் உதவியோடு தோலுரிப்பான்.
இந்த முட்டைத் தோல்கள்தான் முள்வேலிக்கு வெளியே மலையாகக் குவியும்.
காலையில் ரயில் வந்து நிற்கும். அதன் இரு திசைகளிலிருந்தும் ராணுவச் சிப்பாய்கள் கீழே குதிப்பார்கள் காவலுக்காக.
பிறகு கோடுபோட்ட சிறையுடையனிந்த போர்க் கைதிகள் ரயிலிலிருந்து இறங்குவார்கள். ஒவ்வொருவர் கையிலும் ஒருபெரிய குவளை, ஒரு பீங்கான் தட்டு.
மூன்று கூலிகளும் இரண்டு பெரிய பெரிய டிரம்களைக் கவிழ்த்து அவற்றை மேஜை போலப் பயன்படுத்துவார்கள்.போர்க்கைதிகள் வரிசையாக அந்த டிரம்களைக் கடந்து போவார்கள். ஒரு கூலி ஒவ்வொரு கைதியின் குவளையிலும்சுடச் சுடக் காப்பியை ஊற்றுவான், இன்னொரு கூலி ஒவ்வொரு கைதிக்கும் இரண்டு துண்டு ரொட்டி கொடுப்பான், மூன்றாவதுகூலி இரண்டிரண்டு முட்டைகள் கொடுப்பான். பிறகு கைதிகள் ரயிலில் ஏறிக்கொள்வார்கள். தோளில் அடையாளப் பட்டையும்காக்கிச் சீருடையும் அணிந்த கார்டு விசில் ஊதுவான், கொடி அசையும், ரயில் புறப்பட்டுவிடும். மகதோக்கள் யாரும் அங்கு நெருங்குவதில்லை. அவர்கள் தூரத்திலுள்ள வயல்களில் மக்காச் சோளம் விதைத்தவாறே நிமிர்ந்து நின்று இந்தக் காட்சியைப் பார்ப்பார்கள்.
சில சமயம் ரயில் சென்ற பிறகு நாங்கள் முகாமைப் பகோதிலாலின் பொறுப்பில் விட்டுவிட்டு மகத்தோக்களின் கிராமத்துக்குப் காய்கறிகள் வாங்கப் போவோம். மகதோக்கள் குன்றுச் சரிவில் கடுகு, கத்திரிக்காய், பீர்க்கங்காய் பயிரிடுவார்கள்.
திடீரென்று ஒரு நாள் அண்டா ஹால்ட் எல்லா ரயில்களும் நிற்குமிடமாகி விட்டது. முள்வேலிக்கும் தண்டவாளத்துக்கும்இடையிலுள்ள நிலம் செப்பனிடப்பட்டு பிளாட்பாரம்போல் மேடாக்கப்பட்டது.
போர்க்கைதிகளை ஏற்றிவந்த ரயில்கள் மட்டுமின்றி ராணுவத்தை ஏற்றி வந்த விசேஷ ரயில்களும் அங்கே நிற்கத்தொடங்கின. அவற்றில் காபர்டின் பேண்ட் அணிந்து கொண்டு அதன் பின்பக்கப் பையில் பணப்பை வைத்திருந்த அமெரிக்கசிப்பாய்கள் வந்தார்கள். ராணுவப் போலீசார் கீழே இறங்கி இங்குமங்கும் நடப்பார்கள், வேடிக்கையாகப் பேசுவார்கள்.போர்க்கைதிகளைப் போலவே ராணுவ சிப்பாய்களும் வரிசையாக நின்று ரொட்டி, காப்பி, முட்டை வாங்கிக்கொண்டு ரயில் ஏறிக்கொள்வார்கள். காக்கியுடையணிந்த ரயில்கார்டு கோடியை அசைத்தவாறு விசில் ஊதுவான். நான் ராணுவ மேஜரிடம்ஓடிப்போய் சப்ளை பாரத்தில் கையெழுத்து வாங்குவேன்.
ரயில் போய்விடும். எங்கு என்று எங்களுக்குத் தெரியாது.
அன்றும் அமெரிக்க சிப்பாய்களை ஏற்றிக்கொண்டு ரயில் வந்து நின்றது. மூன்று கூலிகளும் சிப்பாய்களுக்கு உணவுகொடுக்கத் தொடங்கினார்கள். சிப்பாய்கள் "முட்டை அழுகல், ரொட்டித் துண்டு காய்ஞ்சு போச்சு" என்று சொல்லி அவற்றைஎறிந்து விடாமலிருக்கிறார்களா என்று கவனித்துக் கொண்டிருந்தான் பகோதிலால்.
அப்போது தற்செயலாக முள்வேலிப் பக்கம் திரும்பிப் பார்த்தேன்.
முள்வேலிக்குச் சற்று தூரத்தில் ஒரு மகதோச் சிறுவன் கண்களை அகல விரித்துக்கொண்டு இந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கோவணம் மட்டுமே அணிந்திருந்தான். அவனுடைய அரைஞாணில் ஒரு உலோகத்துண்டு கட்டப்பட்டிருந்தது. ஒரு நாள் அவன் எருமைக்கன்று ஒன்றின்மேல் சவாரி செய்வதை நான் பார்த்திருக்கிறேன்.
அந்தப் பையன் ஆச்சரியத்தோடு ரயிலையும் சிவந்த முகமுடைய அமெரிக்க சிப்பாய்களையும் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஒரு சிப்பாய் அவனைப் பார்த்து 'ஏய்!' என்று பயமுறுத்தவும் அந்தப் பையன் அலறியடித்துக்கொண்டு கிராமத்தை நோக்கிஓடினான், சில சிப்பாய்கள் இதைப் பார்த்து 'ஹோ ஹோ'வென்று சிரித்தார்கள்.
பையன் மறுபடி ஒருநாளும் வரமாட்டான் என்று நான் நினைத்தேன்.
ஆனால் மறுதடவை ரயில் வந்து நின்றபோது அந்தப் பையன் முள்வேலிக்கு வெளியே வந்து நின்று கொண்டிருப்பதைக்கவனித்தேன். அவனோடு கூட அவனைவிடச் சறு்று பெரிய இன்னொரு பையன். பெரிய பையனின் கழுத்தில் நூலில்கட்டப்பட்ட துத்தநாகத் தாயத்து ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. புர்க்குண்டாச் சந்தையில் இத்தகைய தாயத்துகள்குவியல் குவியலாக விற்கப்படுவதைப் பார்த்திருக்கிறேன். இவை தவிர குங்குமம், மூங்கில் கழியில் தொங்கவிடப்பட்ட பல நிறநூல்கள், கண்ணாடி மணி, பாசி மணி மாலைகள் இன்னும் பல பொருள்களும் விற்கப்படும். சில சமயம் ஒரு நாடோடிவியாபாரி கழுத்தில் நிறையப் பாசிமணி மாலைகளைப் போட்டுக் கொண்டு, முழங்கால்வரை தூசியுடன் மகதோக்களின் கிராமத்துக்குப் போவதைப் பார்த்திருக்கிறேன்.
இரு சிறுவர்களும் முள்வேலிக்கு மறுபுறம் நின்று கொண்டு வியப்போடு அமெரிக்க சிப்பாய்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். முன்பு வந்திருந்த பையனின் கண்களில் பயம். சிப்பாய் யாராவது பயமுறுத்தினால் ஓடிப் போகத் தயாராயிருந்தான்.அவன்.
நான் சப்ளை பாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு அலைந்து கொண்டிருந்தேன். வாய்ப்புக் கிடைக்கும்போதுமேஜரைப் புகழ்ந்து காக்காய் பிடித்தேன். ஒரு சிப்பாய் ரயில் பெட்டியின் கதவருகில் நின்று கொண்டு காப்பியைக் குடித்தவாறேஅந்தச் சிறுவர்களைத் தன் பக்கத்திலிருந்து இன்னொரு சிப்பாய்க்குச் சுட்டிக்காட்டி "அசிங்கம்!" என்று சொன்னான்.
மகதோக்கள் அசிங்கம் என்று எனக்கு அதுவரை தோன்றியதில்லை. அவர்கள் விவசாயம் செய்கிறார்கள். கவண் அல்லதுஅம்பெறிந்து புனுகு பூனை வேட்டையாடுகிறார்கள். பாட்டுப் பாடுகிறார்கள், மது தயாரித்துக் குடிக்கிறார்கள், சில சமயம்வில்லின் நாண் போல நிமிர்ந்து கொண்டு எதிர்த்து நிற்கிறார்கள். கோவணமணிந்த, குச்சி போன்ற உடல்வாகு, கறுப்பு, சொரசொரப்பு..
அந்தச் சிப்பாய் 'அசிங்கம்' என்று சொல்லியது என்னை உறுத்தியது. அந்தப் பையன்கள் மேல் எனக்குக் கோபம் வந்தது.சிப்பாய்களில் ஒருவன் ஒரு பாட்டின் வரியொன்றை உரக்கப் பாடினான். சிலர் 'ஹா ஹா'வென்று சிரித்தார்கள்.ஒருவன் குவளையிலிருந்த காப்பியை ஒரே மடக்கில் குடித்து விட்டுக் கூலியைப் பார்த்துக் கண்ணடித்தான், குவளையைமறுபடி நிரப்பச் சொல்லி. இன்னம் எவ்வளவு நேரம் ரயில் நிற்க வேண்டுமென்று பார்க்க வந்த பஞ்சாபி ரயில் கார்டு மேஜருடன்மூக்கால் பேசினான்.
பிறகு விசில் ஊதியது, கொடியசைந்தது, எல்லாரும்-- சிவப்புப் பட்டையணிந்த ராணுவப் போலீஸ் உட்பட-- அவசரஅவசரமாக ரயிலில் ஏறினார்கள்.
ரயில் சென்ற பிறகு மறுபடியும் பழையபடி வெறுமை, மணல் வெளியில் கள்ளிச்செடி வரிசைபோல் முள்வேலி.
சிலநாட்களுக்குப் பிறகு இன்னொரு ரயில் வந்தது. இந்தத் தடவை அதில் வந்தவர்கள் போர்க்கைதிகள். அவர்கள்ராம்கட்டிலிருந்து வேறெங்கோ போய்க் கொண்டிருந்தார்கள். எங்கே என்று எங்களுக்குத் தெரியாது, தெரிந்து கொள்ளவிருப்பமுமில்லை.
அவர்கள் கோடுபோட்ட சிறையுடையை அணிந்திருந்தார்கள். அவர்கள் முகத்தில் சிரிப்பு இல்லை, அவர்களைச்சுற்றிலும் ரைஃபிள் ஏந்திய சிப்பாய்கள். எங்களுக்கும் கொஞ்சம் பயமாயிருக்கும். ஒரு போர்க்கைதி வேஷ்டி ஜிப்பா அணிந்துகொண்டு தப்ப முயன்றதாக நாங்கள் புர்க்குண்டாவில் கேள்விப் பட்டோம். நாங்கள் வங்காளிகளாதலால் மிகவும் பயப்பட்டோம்.
ரயில் சென்ற பிறகு நான் கவனித்தேன். முள்வேலிக்கு வெளியே அந்த இரண்டு பையன்களோடு, குட்டையான துணியணிந்து ஒரு பதினைந்து வயதுப்பெண்ணும் இரண்டு ஆண்களும் வயல் வேலையை விட்டுவிட்டு வந்து நின்று கொண்டிருந்தார்கள்.அவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டு சிரித்திர்கள்; பிறகு அருவி நீரோடுவது போல் கலகலவென்று பேசிக்கொண்டேகிராமத்தை நோக்கி நடந்தார்கள்.
ஒருநாள் அமெரிக்க சிப்பாய்கள் பிரயாணம் செய்த ரயில் ஒன்று வருவதைப் பார்த்தும் வயலில் வேலை செய்துகொண்டிருந்த மகதோக்கள் சுமார் பத்துப் பேர் ஓடிவந்தார்கள். ரயில் ஜன்னல் வழியே காக்கியுடையைப் பார்த்ததுமே அவர்கள்ரயில் அங்கே நிற்கும் என்று புரிந்து கொண்டிருக்க வேண்டும். அந்த வழியே தினம் ஓரிரு பிரயாணி ரயில்களும் சரக்கு ரயில்களும் போவது வழக்கம். அவை அந்த இடத்தில் நிற்பதுமில்லை, அவற்றைப் பார்த்து மகதோக்கள் ஓடி வருவதுமில்லை. எங்கள்முகாமில் காய்கறிகளும் மீனும் கொண்டு வந்து விற்க ஆளனுப்பும்படி மகேதோ கிராமத்துத் தலைவனிடம் ஒரு நாள்சொன்னேன்.
"வயல் வேலையை விட்டு வரமுடியாது" என்று சிரித்துக் கொண்டே சொன்னான் அவன்.
ஆனால் இப்போது மகதோக்கள் ஓடி வந்து நிற்பதைப் பார்த்து ஆச்சரியமாயிருந்தது எனக்கு.
கருப்பு உடலில் கோவணம் மட்டும் அணிந்த ஆண்கள், அகலக் கட்டையான துணியுடுத்திய பெண்கள்; கிராமத்துச்சக்கிலியன் தைத்த முரட்டுச் செருப்புகள் காலில், அவர்கள் முள்வேலிக்கு வெளியே வரிசையாக நின்றார்கள்.
ரயில் வந்து நின்றது. அமெரிக்க சிப்பாய்கள் கைகளில் குவளைகளை எடுத்துக்கொண்டு திடுதிடுவென்று இறங்கினார்கள்.
அன்று அங்கே இருநூற்றுப் பதினெட்டுப் பேருக்குக் காலையுணவு தயாராயிருந்தது.
அப்போது குளிர ஆரம்பித்து விட்டது. தொலைவில் குன்றின்மேல் பனிப்போர்வை. மரங்களும் செடிகொடிகளும்பனியால் கழுவப்பட்டுப் பச்சைப் பசேலென்று இருந்தன.
ஒரு சிப்பாய் தன் அமெரிக்கக் குரலில் இந்த இயற்கையழகை ரசித்தான்.
இன்னொருவன் ரயிலுக்கு வெளியே நின்றுகொண்டு முள் வேலிக்கு அப்பாலிருந்த வெட்டவெளியைச் சற்றுநேரம் பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு திடீரென்று அவன் குவளையை ரயில் பெட்டியின் படியின்மேல் வைத்துவிட்டுத் தன் பேன்ட் பைக்குள்கையை விட்டான். பையிலிருந்து ஒரு பளபளப்பான எட்டணா நாணயத்தை எடுத்து அதை மகதோக்கள் இருந்த திசையில்எறிந்தான்.
அந்தக் காசு முள்வேலிக்கு உட்புறத்தில் தார் போடப் பட்டிருந்த தரையில் விழுந்தது. மகதோக்கள் வியப்போடு அந்தச்சிப்பாயைப் பார்த்தார்கள், கீழே கிடக்கும் நாணயத்தைப் பார்த்தார்கள், பிறகு ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு நின்றார்கள்.
ரயில் சென்ற பிறகு அவர்களும் போகத் தொடங்கினார்கள். நான் அவர்களிடம், "தொரை ஒங்களுக்கு பக்ஷீஸ் கொடுத்திருக்கார். எடுத்துக்கிட்டுப் போங்க" என்றேன். அவர்கள் என் முகத்தைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள். யாரும் வந்துகாசைப் பொறுக்கிக்கொள்ள முன்வரவில்லை.
நானே காசை எடுத்து மகதோக் கிழவனிடம் கொடுத்தேன். அவன் ஒன்றும் புரியாமல் என் முகத்தைப் பார்த்தான். பிறகுஎல்லாரும் மௌனமாக அங்கிருந்து போய்விட்டார்கள்.
முட்டைகள் சப்ளை செய்த காண்டிராக்டரிடம் வேலை பார்ப்பவன் நான். எனக்கு இந்த வேலை சற்றும் பிடிக்கவில்லை.ஜனநடமாட்டமில்லாத இடம். பிரயாணி ரயில் எதுவும் நிற்பதில்லை. முகாமில் நானும் பகோதிலாலும் மூன்று கூலிகளுந்தான்.வெறும் பொட்டல் வெளி, பகலில் சூனியமான வானம், என் மனதிலும் சலிப்பு. மகதோக்களும் எங்களை நெருங்குவதில்லை.நானே போய் அவர்களிடமிருந்து காய்கறிகள், மீன் வாங்கி வருவேன். அவர்கள் விற்க வருவதில்லை. ஆறு மைல் தூரம்நடந்து புர்க்குண்டாச் சந்தையில் விற்கச் செல்கிறார்கள்.
பிறகு சில நாட்கள் சிப்பாய் ரயிலோ கைதி ரயிலோ வரவில்லை.
திடீரென்று ஒருநாள் அரைஞாணில் இரும்புத்துண்டு கட்டிக் கொண்டிருந்த அந்தச் சிறுவன் என்னிடம் வந்து கேட்டான்,"ரயில் வராதா, பாபு?"
"வரும், வரும்" என்று சிரித்துக்கொண்டே சொன்னேன்.
பையனைச் சொல்லிக் குற்றமில்லை. எங்கும் குட்டையான குன்றுகள், வறண்ட நிலம். கிராமவாசிகள் நெருக்கியடித்துக்கொண்டு பிரயாணம் செய்யும் பஸ் ஒன்றைப் பார்ப்பதற்குக்கூட வேலமரக் காட்டைக் கடந்து நான்கு மைல் போக வேண்டும்.காலைவேளையில் ஒரு பக்கமும் மாலையில் எதிர்ப்பக்கமும் போகும். பிரயாணிகள் ரயில் தன் வேகத்தைக்கூடச் சற்றும்குறைத்துக் கொள்ளாமல் அந்த இடத்தைக் கடந்துவிடும். அப்படியும் நாங்கள் ரயில் பெட்டிகளின் ஜன்னல்கள் வழியேமங்கலாகத் தெரியும் மனித முகங்களைப் பார்க்கக் கூடாரத்திலிருந்து வெளியே ஓடி வருவோம். மனிதர்களைப் பார்க்காமல்எங்களுக்குச் சலிப்பாயிருக்கும்.
ஆகவே அமெரிக்க சிப்பாய்கள் வருகிறார்களென்ற செய்தி கேட்டால் கொஞ்சம் எரிச்சல் ஏற்பட்டாலும் கூடவே ஓர்ஆறுதலும் தோன்றும் எங்களுக்கு.
சில நாட்களுக்குப் பிறகு சிப்பாய் ரயில் வருவதாகச் செய்தி வந்தது. மறுநாள் ரயில் வந்தது. வழக்கம்போல் சிப்பாய்கள்ரயிலிலிருந்து இறங்கி முட்டை, ரொட்டி, காப்பி எடுத்துக் கொண்டார்கள்.
திடீரென்று முள்வேலிக்கு வெளியே மகதோக்களின் கூட்டம். அவர்கள் இருபது பேர் இருக்கலாம், முப்பது பேர் இருக்கலாம்.முழங்கால் உயரமுள்ள குழந்தைகளைச் சேர்த்தால் மொத்தம் எவ்வளவு பேர் என்று சொல்ல மடியாது. குட்டைத் துணியுடுத்திய பெண்களும் மலங்க மலங்க விழித்துக்கொண்டு நின்றார்கள் அங்கே.
அவர்களைப் பார்த்து எனக்கு ஓர் இனம்புரியாத பயம் ஏற்பட்டது. பகோதிலாலோ கூலிகளோ மகதோ கிராமத்துக்குப்போக விரும்பினால் எனக்குப் பயமாயிருக்கும்.
அங்கே பிளாட்பாரம் இல்லை. ரயிலில் ஏறி இறங்க வசதிக்காகப் பாதையோரம் தார் போட்டுச் சற்று மேடாக்கப்பட்டிருந்தது.அமெரிக்கச் சிப்பாய்கள் காப்பியை உறிஞ்சிக் குடித்தவாறு இங்குமங்கும் நடந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர்மகதோக்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
திடீரென்று ஒரு சிப்பாய் பகோதிலாலை நெருங்கித் தன் பேண்ட் பையிலிருந்து பணப் பையை எடுத்தான். பிறகுஅதிலிருந்து ஓர் இரண்டு ரூபாய் நோட்டை எடுத்துப் பகோதிலாலிடம் "சில்லறை இருக்கா?" என்று கேட்டான்.
சிப்பாய்கள் பொதுவாகச் சில்லறை வைத்துக் கொள்வதில்லை. கடைக்காரனிடம் ஏதாவது சாமான் வாங்கினால்அல்லது டாக்சியோட்டிக்குப் பணம் கொடுப்பதானால் கரன்சி நோட்டைக் கொடுத்து விடுவார்கள், "பாக்கியை நீயே வச்சுக்க"என்று சொல்லி விடுவார்கள். நான் இதை ராஞ்சியில் பலமுறை பார்த்திருக்கிறேன்.
பகோதிலால் சிப்பாய்க்கு, ஓரணா, இரண்டணா, நாலணா சில்லறை கொடுத்துக் கொண்டிருந்தான். அப்போது மகதோக்களின் கூட்டத்தில் இரும்புத் துண்டை அரைஞாணில் அணிந்திருந்த சிறுவன் சிரித்துக்கொண்டே கையை நீட்டி ஏதோகேட்டான்.
பகோதிலாலிடமிருந்து சில்லறைகளை வாங்கிக்கொண்ட சிப்பாய் அவற்றை மகதோக்களிருந்த பக்கம் எறிந்தான். இதற்குள்நான் சப்ளை பாரத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு வந்து விட்டேன். கார்டு விசில் ஊதிவிட்டான். ரயில் ஓடத் தொடங்கியது.
நான் மகதோக்கள் பக்கம் திரும்பிப் பார்த்தேன்.
அவர்கள் சற்று நேரம் மௌனமாகக் கீழே கிடந்த சில்லறைகளைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள். பிறகு திடீரென்றுஅரைஞாணில் இரும்புத்துண்டு கட்டியிருந்த சிறுவனும் துத்த நாகத் தாயத்து அணிந்த சிறுவனும் முள்வேலிக்குள் நுழைந்துவந்தார்கள்.
அப்போது முரட்டுச் செருப்பு அணிந்த மகதோக் கிழவன், "ஜாக்கிரதை!" என்று கத்தினான். அந்தச் சத்தத்தில் நான்கூடத்திடுக்கிட்டுப் போய்விட்டேன்.
ஆனால் இரு சிறுவர்களும் அவனுடைய எச்சரிக்கையைப் பொருட்படுத்தவில்லை. அவர்கள் எல்லாச் சில்லறைகளையும் பொறுக்கிக்கொண்டு தோலுரித்த பிஞ்சுச் சோளக் கொண்டை போல் சிரித்தார்கள். மகதோ ஆண்களும் பெண்களும் கூடவேசிரித்தார்கள்.
மகதோக் கிழவன் கோபத்துடன் ஏதேதோ முணுமுணுத்துக் கொண்டே கிராமத்துக்குப் போனான். மற்ற மகதோக்களும்தங்களுக்குள் கலகலவென்று பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் கிராமத்துக்குத் திரும்பினார்கள்.
அவர்கள் சென்றபின் அந்த இடத்தில் மறுபடி வெறுமை, நிசப்தம். சில சமயங்களில் எனக்கு மிகவும் அலுப்பு ஏற்படும்.தூரத்தில் குன்றுகள், இலுப்பைக் காடு, வேல மரங்களுக்கப்பால் கொஞ்சமாகத் தண்ணீரோடும் அருவி, பசுமையான வயல்கள்.அவற்றில் ஆங்காங்கே கோவணமணிந்த கருப்பு மனிதர்கள், கண்களுக்குக் குளிர்ச்சியான காட்சி.
அவ்வப்போது சிப்பாய ரயில் வந்து நிற்கும். சிப்பாய்கள் காலையுணவு உண்டுவிட்டுப் போவார்கள். மகதோக்கள்முள்வேலிக்கு வெளியே கூட்டமாக வந்து நிற்பார்கள்.
"தொரை, பக் ஷீஸ்! தொரை, பக் ஷீஸ்!"
ஒரே சமயத்தில் பல குரல்கள்.
மேஜரிடம் பாரத்தில் கையெழுத்து வாங்க வந்த நான் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன்.
அந்த இரு சிறுவர்கள் மட்டுமல்ல, சில இளைஞர்களும் கைகளை நீட்டி பக்ஷீஸ் கேட்கிறார்கள். குட்டைத் துணியணிந்தவளர்ந்த பெண்ணும் கேட்கிறாள்.
முன்பொருநாள் நான் காய்கறி வாங்கக் கிராமத்துக்குப் போயிருந்தபோது அவள்தான் "ரயில் எப்போ வரும்?" என்றுஎன்னைக் கேட்டவள்.
தோளில் பட்டையணிந்த மூன்று நான்கு சிப்பாய்கள் பேண்ட் பையிலிருந்து கை நிறையச் சில்லறையை எடுத்துஅவர்கள் பக்கம் எறிந்தார்கள். மகதோக்கள் ரயில் புறப்படும்வரை காத்திருக்காமல் ஒருவர் மேலொருவர் விழுந்து காசுகளைப்பொறுக்கத் தொடங்கினார்கள். அவர்கள் அவசர அவசரமாக முள்வேலிக்குள் நுழைந்து வரும்போது சிலருக்கு உடம்பில் கீறல், காயம் ஏற்பட்டது. சிலருடைய கோவணங்கள் வேலியில் சிக்கிக் கொண்டன. ரயில் சென்ற பிறகு அவர்களை நன்றாகக் கவனித்துப் பார்த்தேன். மகதோ கிராமத்தினரில் பாதிப் பேர் அங்கு வந்துவிட்டதாகத் தோன்றியது. எல்லாருக்கும் கொஞ்சம் காசு கிடைத்து விட்டது. ஆகையால் அவர்கள் முகத்தில் சிரிப்பு. ஆனால்எவ்வளவு தேடியும் முரட்டுச் செருப்பணிந்த அந்த மகதோக் கிழவனை மட்டும் பார்க்க முடிய வில்லை. அவன் வரவில்லை. முதல் தடவை அவன் அதட்டியும் சிறுவர்கள் பொறுக்கியெடுத்த காசுகளை எரியவில்லை என்று அவனுக்குக் கோபமாயிருக்கலாம்.
கிழவன் மட்டும் இப்போது தனியே வயலில் மண்ணை வெட்டிக் கொண்டிருக்கிறான் என்ற நினைப்பு எனக்கு இதமாயிருந்தது.
முகாமில் இருந்த எங்கள் ஐந்துபேருக்கு எப்படியோ பொழுது கழிந்தது. இடையிடையே சிப்பாய் ரயில் வரும், நிற்கும், போகும்.மகதோக்கள் முள்வேலிக்கு வெளியே கூட்டமாகக்கூடி 'தொரை, ப க் ஷீஸ்! தொரை பக் ஷீஸ்!" என்று கத்துவார்கள்.
அப்போது சில நாட்கள் மகதோக் கிழவன் வயல்வேலையை விட்டுவிட்டுக் கைகளிலிருந்து மண்ணைத் தட்டிவிட்டுக் கொண்டுஅங்கே வேகமாக வந்து எல்லாரையும் அதட்டுவான். ஆனால் யாரும் அவனை பொருட்படுத்துவதில்லை. அவன் பரிதாபமாகஅவர்களைப் பார்த்துக்கொண்டு நிற்பான். ஆனால் யாரும் அவன் பக்கம் திரும்பிப் பார்ப்பதில்லை.
சிப்பாய்கள் பேண்ட் பையிலிருந்து சில்லறையை எடுத்து எறிவார்கள். மகதோக்கள் ஒருவர் மோலொருவர் குப்புற விழுந்துகாசுகளைப் பொறுக்குவார்கள். காசு 'எனக்கு, ஒனக்கு' என்று சண்டை போட்டுக் கொள்வார்கள். இதைப் பார்த்துச் சிப்பாய்கள்'ஹா ஹா'வென்று சிரிப்பார்கள்.
இதன்பிறகு மகதோக் கிழவன் வருவதில்லை. மகதோக்களின் 'பிச்சைக்காரத்தனம் அவனுக்குப் பிடிக்கவில்லை, அதனால் அவன்அங்கு வருவதில்லை என்பதற்காக நான் கர்வப்பட்டேன். மகதோக்களின் நடத்தை எங்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்களதுஇந்த நடத்தைக்காக நான் வெட்கப்பட்டேன். அவர்களுடைய வறுமைமிக்க தோற்றத்தைப் பார்த்துச் சிப்பாய்கள் அவர்கள்பிச்சைகாரர்கள் என்று நினைப்பது எனக்கு மிகவும் வருத்தமளித்தது. ஒருநாள் அவர்கள் 'பக் ஷீஸ்! பக் ஷீஸ்!' என்று கத்திக் கொண்டிருந்தார்கள். நான் ரயில் கார்டு ஜானகிநாத்துடன்ஏதோ பேசிக் கொண்டிருந்தேன். 'கிறீச், கிறீச்' என்று ஒலியெழுப்பிய பூட்ஸ் அணிந்து என் பக்கமாகப் போய்க் கொண்டிருந்த ஒருராணுவ அதிகாரி தொண்டையைக் காரி கொண்டு 'பிச்சைக் காரப் பசங்க' என்று சொன்னான்.
நானும் ஜானகிநாத்தும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். என் முகம் அவமானத்தில் கறுத்தது. என்னால்தலை நிமிர முடியவில்லை. உள்ளூர எரிச்சல் பட்டேன்- கையாலாகாத எரிச்சல்.
"பிச்சைக்காரப் பசங்க! பிச்சைக்காரப் பசங்க!"
என் கோபமெல்லாம் மகதோக்கள் மேல் திரும்பியது. ரயில் போனதும் நான் பகோதிலாளைக் கூட்டிக்கொண்டு போய்அவர்களை விரட்டினேன். அவர்கள் பொறுக்கிக் கொண்ட காசுகளை மடியில் செருகிக்கொண்டு சிரித்தவாறே ஓடிப்போய்விட்டார்கள்.
எனினும் மகதோக்களால் எனக்கு ஏற்பட்ட அவமான உணர்வை ஓரளவு தனித்தது ஒரு கர்வம். மகதோக் கிழவனின்உருவத்தில் அந்த கர்வம் ஒரு குன்றுபோல் என் கண் முன்னாள் உயர்ந்து நின்றது.
ஒரு செய்திகேட்டு எனக்கு ஆறுதல் ஏற்பட்டது. காண்டிராக்டரைச் சந்திக்கப் புர்க்குண்டா போனபோது நான் கேட்டசெய்தி அது. அண்டாஹால்ட்டை மூடிவிடப் போகிறார்களாம்.
கூலிகளில் இருவர் இவ்வளவு காலம் மேஜையாகப் பயன்பட்ட இரண்டு டிரம்களையும் முள்வேலிக்கு வெளியே தள்ளிக்கொண்டிருந்தார்கள். மூன்றாவது கூலி எங்கள் கூடாரத்துக் கயிற்றை அவிழ்த்துக் கொண்டிருந்தான். பகோதிலால் "ஆட்டம்க்ளோஸ், ஆட்டம் க்ளோஸ்!" என்று சொல்லியவாறு டிரம்களைக் காலால் உதைத்துக்கொண்டிருந்தான்.
திடீரென்று இங்கு எழுந்த அரவத்தைக் கேட்டு மகதோக்கள் ஓடி வந்தார்கள்.
நாங்கள் அவர்களை ஆச்சரியத்தோடு பார்த்தோம். ஏனோ பகோதிலால் சிரித்தான்.
இதற்குள் முள்வேலிக்கு வெளியே கூட்டம் கூடிவிட்டது.
திடீரென்று விசில் ஒலி. ரயில் வரும் அரவம், ஜன்னல்களில் காக்கியுடை.
எங்களுக்கு ஒருபுறம் எரிச்சல், ஒருபுறம் வியப்பு. ரயில் வரப்போகும் செய்தியை எங்களுக்கு அனுப்பப் புர்க்குண்டாஆபீஸ் மறந்துவிட்டதா? இந்த முகாமையே எடுத்துவிடப் போவதாக நாங்கள் கேள்விப்பட்டது தவறா? ரயில் நெருங்கநெருங்க ஒரு விசித்திரமான சத்தம் பலமாகக் கேட்டது. சத்தம் அல்ல, பாட்டு. ரயில் மிக அருகில் வந்தபோது சிப்பாய்களெல்லாரும் ஒன்று சேர்ந்து உரக்கப் பாடுவது கேட்டது.
நான் ஒன்றும் புரியாமல் ஒரு புறம் ரயிலைப் பார்த்தேன், இன்னொரு புறம் திரும்பி முள்வேலிப் பக்கம் பார்த்தேன். அந்தநிமிஷம் மகதோக் கிழவன் மேல் என் பார்வை விழுந்தது. கூட்டத்தோடு கூட்டமாக நின்றுகொண்டு அவனும் "தொரை,பக் ஷீஸ்! தொரை, பக் ஷீஸ்" என்று கத்திக் கொண்டிருந்தான்.
மகதோக் கிழவனும் மற்றவர்களும் பிச்சைக்காரர்கள் போல், பைத்தியம் பிடித்தவர்கள் போல் கத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால் இன்று அந்த ரயில் இங்கே நிற்கவில்லை. மற்ற பிரயாணி ரயில்களைப்போல் அதுவும் அண்டாஹால்ட்டைப் புறக்கணித்துப் போய்விட்டது. ரயில் இனி நிற்காது என்று எங்களுக்குப் புரிந்தது.
ரயில் போய்விட்டது. ஆனால் இவ்வளவு காலமாக வயல்களில் விவசாயம் செய்து கொண்டிருந்த மகதோக்கள் எல்லாரும்பிச்சைக்காரர்களாகி விட்டார்கள்.
(பாரத்வர்ஷ ஏபங் அன்யான்ய கல்ப, 1969)
16. சீட்டுக்களாலான வீடுபோல
I
தீபக்மித்ரா
நான் இதுவரை ஓடிய தூரத்தில் ஒரு வீட்டுக் கதவுகூடத் திறந்திருக்கவில்லை. ஒரு ஜன்னல் கூடத் திறந்திருக்கவில்லை.மையிருட்டு-ஊரில் பிளாக் அவுட் அமலிலிருந்தாற்போல. தெரு நனைந்திருந்தது. இந்த அமைதியும் வழக்கத்துக்கு மாறுபட்டது. இரவு பத்து மணியாகிவிட்டது. பின்பக்கத்தில் இப்போதுதான் ஏதோ ஒரு விபத்து நேர்ந்திருக்கிறது. இருந்தாலும்நகரம் முழுவதையும் பயமுறுத்திவிட அல்லது பேச்சில்லாமல் செய்துவிட இவை போதுமான காரணங்கள்அல்ல. வரவரமனிதர்களின் இரத்தத்தின் சூடு தணிந்துகொண்டு வருகிறது. அவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படாமலிருக்கக் கற்றுக்கொண்டுவிட்டார்கள். ராம்பாபு, சியாம்பாபு, ஜது பாபு எல்லோரும் பேரம் பேசிக் காய்கறிகள் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.அவர்களுடைய செருப்புக்குக் கீழே தரையில் அப்போதுதான் சிந்திய இரத்தம்.... இரத்தத்துக்கு மொழியேதும் இல்லை....
பின்னால் சற்றுத் தொலைவில் காலடிச் சத்தம் கேட்டு இன்னும் வேகமாக ஓடினேன். நான் இப்போது உரக்கக் கத்தி மண்டையை உடைத்துக்கொண்டாலும் எந்த வீட்டுக் கதவும் திறக்காது, யாரும் ஜன்னலைத் திறந்துகூட வெளியே எட்டிப்பார்க்க மாட்டார்கள் என்று எனக்குத் தெரியும். எல்லாரும் இந்த அகாலத்தில் ஓட்டுக்குள் நுழைந்து கொள்ளும் ஆமைமாதிரி போர்வைகளுக்குள் சுருண்டு படுத்துக்கொண்டு விட்டார்கள். ஆமைக்குக் குரல் இல்லை என்று நான் உயிரியல்நூலில் படித்திருக்கிறேன்.
நகரத்தின் இந்தப் பகுதி எனக்கு முற்றிலும் பரிச்சயமில்லாதது. ஓடிக்கொண்டிருந்தபோது எனக்கு ஒரு வேடிக்கையான எண்ணம் தோன்றியது. உலகத்தின் எந்தப் பகுதியிலும் நீர்-நிலம்-வான வெளியில் மனிதன் போகாத இடமில்லைஎன்று பெருமையாகச் சொல்லப்படுகிறது. ஆனால் என்ன ஆச்சரியம்! உலகம் கிடக்கட்டும், இந்த நகரத்திலேயே இன்றுவரைஎன் கால் படாத இடங்கள், எனக்குத் தெரியாத இடங்கள் எவ்வளவோ இருக்கின்றன! சும்மா பீற்றிக் கொண்டு என்னலாபம்? இருபத்தேழு வயதான, துணிச்சல் மிக்க இளைஞனான தீபக் மித்ரா என்ற பெயருள்ள நான் எவ்வளவோ இடங்களுக்குப்போனதில்லை, எத்தனையோ இடங்களைப் பார்த்ததில்லை. எவ்வளவோ விஷயங்கள் எனக்குத் தெரியாமலே இருந்துவிடப்போகின்றன. எதற்கும் அடங்காத உணர்ச்சிமயமான, ஆபத்தான இந்த வாழ்க்கை எந்த நிமிடமும் நீர்க்குமிழிபோல் மறைந்துபோய்விடலாம். ஒரு சிறிய இரும்புத்துண்டு போதும் என் இருபத்தேழு வருடங்களை வீணாக்கிவிட. உலகம், வாழ்க்கைஇவற்றின் பெரும்பகுதி என் பார்வைக்குத் தெரிவதற்கு முன் நான் எரித்துவிடப்படுவேன் அல்லது தண்ணீரில் எறியப்படுவேன்அல்லது பருந்து, காக்கை, நாய்களின் உணவாகத் தேர்ந்தெடுக்கப் படுவேன். ஐயோ, அழகிய இனிய பழத்தின் சுளை போன்ற என்உடல், உள்ளம். இளமை..!
அதனால்தான் நான் ஓடிக்கொண்டிருந்தேன். என் உடலும் உள்ளமும் இளமையும் தங்கள் தங்கள் மொழியில் "தப்பியோடிப்பிழைத்துக் கொள்! தப்பியோடிப் பிழைத்துக் கொள்!" என்று அலறின.
என்னைப் பிடித்துவிட முடியும் என்ற நம்பிக்கையை அவர்கள் இன்னும் கைவிடவில்லை என்று எனக்குப் புரிந்தது.என்னைக் கொல்லும்வரை அவர்களுக்கு நிம்மதியில்லை. அவர்கள் என்னைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.இந்த ஆபத்தான இரவில் நகரமும் எதிர்பாராத முறையில் மாறிப்போய் விட்டது. அணிகள் நிறைந்த நாகரீகப் பூங்காவரலாற்றுக் காலத்துக்கு முந்தைய அடர்ந்த காட்கிவிட்டது. பல மாடிக் கட்டிடங்களெல்லாம் பயத்தில் தங்கள் நீண்டஅங்கியை களைந்து கொண்டு பெரிய பெரிய மரங்களாக நிற்கின்றன. இந்த ராம்பாபு, சியாம்பாபு, ஜதுபாபு எல்லாரும்இருட்டில் தவழ்ந்து கொண்டு போய், மனித குலத்தின் கஷ்டங்களுக்கெல்லாம் காரணமான பழம் பழுக்கும் அந்த பழையமரத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய கைகளில் மூன்று சின்னஞ்சிறு கோடரிகள் அடங்கிய பொட்டலம்.ஒவ்வோரு கோடரியின் விலை ஐந்து காசு.
மூன்று தெருக்கள் சந்திக்கும் இடம் வந்தது. வலது பக்கம் போவதா, இடது பக்கம் போவதா என்று யோசித்துத் தயங்குவதற்குள் - துப்பாக்கி சுடும் பயங்கர ஒலி! துப்பாக்கி சுடும்போது மின்மினி போல் சிதறும் நெருப்புப் பொறிகள் தெரிக்கின்றனவாஎன்று திரும்பிப் பார்த்தேன். வேடிக்கைதான், ஆபத்துக் காலத்தில்கூட நம்முள் இருக்கும் அசட்டுக் குழந்தைத்தன்மைசெயற்படுகிறது.
மறுகணமே ஒரே தாவில் இடதுபக்கம் திரும்பி ஓடினேன், உயரத்தில் ஒரு வெளிச்சம் தெரிந்தது. துணிச்சல் மிக்க கொரில்லாஒன்று ஜன்னலைத் திறந்து அதன் கம்பியில் மூக்கைத் தேய்த்துக் கொண்டு வெளியே பார்க்கிறது. அழகான வீடு. அதன் மேல்கொடிகள் அடர்த்தியாக வளர்ந்திருந்தன. ஏதோ ஒரு மலரின் மணம் என் விருப்பத்துக்கு மாறாக என் உணர்வில் புகுந்தது.நான் நெஞ்சுயரமிருந்த கேட்டின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்ததும் பத்திரமாக இருக்கும் உணர்வு ஏற்பட்டது. இந்தமாதிரி வீடுகளில் சாதாரணமாக ஒரு நாய் இருக்கும், வாசலில் 'நாய் ஜாக்கிரதை' என்று அறிவிப்பு இருக்கும் என்பது நினைவுவந்தது. ஆனால் நான் உள்ளே நுழைந்த பிறகும் நாயின் குரைப்பொலி கேட்கவில்லை. நல்ல வேளை, இந்த வீட்டில் நாய்இல்லை. அல்ல, இருந்தாலும் அதைக் கட்டி வைத்திருக்கிறார்கள் வீட்டுக்குள்.
சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டேன். வெளியே எந்த அரவமுமில்லை. அவர்கள் வேறு சந்துகளில் என்னைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்போலும். இன்னும் கொஞ்ச நேரத்துக்கு எனக்கு ஆபத்தில்லை. மேலே திறந்திருந்த ஜன்னலிலிருந்து வந்தமங்கிய வெளிச்சத்தில் நாற்புறமும் பார்த்துக்கொண்டேன். ஒரு சிறிய புல்வெளி. இருபுறமும் மலர்ச் செடிகள். இந்த இருட்டில்,இந்த ஆபத்தான இடத்தில் ஹாஸ்னுஹானாப் பூவுக்குத்தான் எவ்வளவு துணிச்சல்! கோபமும் எரிச்சலும் ஏற்பட்டது எனக்கு.இது உசிதமில்லை! பூச்செடிகளை ஒரு அறை அறைந்து "வாயை மூடு" என்று சொல்லிவிட வேண்டும். "இங்கு வராதீர்கள்!"என்று பறவைகளை அதட்ட வேண்டும். காதல் ஜோடிகளைக் கண்டிக்க வேண்டும்!. கணவனும் மனைவியும் அருகருகே படுத்துக்கொள்வதைத் தடை செய்ய வேண்டும். தொழிலாளர்கள் அழிந்து போகட்டும்! இஞ்சீனியர்கள் வேலை செய்ய வேண்டாம்!விஞ்ஞானிகள் ஓய்வெடுத்துக் கொள்ளட்டும்!
அந்த சமயத்தில் மறுபடியும் துப்பாக்கி சுடும் ஒலி கேட்டது. வீடுகள் அதிர்ந்தன. வண்டிகளின் கடகட ஓசை. பிரகாசமானவெளிச்சக் கற்றையொன்று கண நேரம் தோன்றிப் பிறகு இருளில் மறைந்துவிட்டது. போலீஸ் வந்துவிட்டது!
வீட்டுப்பக்கம் பின் வாங்கினேன். எதிரில் பெரிய கம்பிக்கதவு திறந்திருந்தது-வாரிசு இல்லாத சொத்துமாதிரி. அப்படியானால் இது பல ஃபிளாட்டுகள் கொண்ட வீடு. கதவை மூடுவார் என்று ராம்பாபு நினைத்துக் கொண்டிருப்பார்.ராம்பாபுஅல்லது ஜது பாபு மூடுவார் என்று நினைத்துக் கொண்டிருப்பார் சியாம்பாபு. வீட்டுக் காவல்காரன் ஒருவன் இருந்தாலும் அவன் கஞ்சா குடித்துவிட்டு எங்கேயோ மயங்கிக் கிடக்கிறான் போலும். ஆமாம், இருக்கிறான். மாடிப்படிக்குக் கீழேயுள்ள சின்னஞ்சிறு அங்கணத்தில் ஒரு கட்டிலில் அசைவின்றிக் கிடப்பவன்தான் காவல்காரன்.
அகலமான மாடிப்படிகளின்மேல் அரவம் செய்யாமல் ஏறினேன். படிகளுக்கு மெல் முதல் மாடியில் ஒரு மின்சார விளக்கு எரிந்துகொன்டிருந்தது. விளக்கைச் சுற்றிலும் ஒட்டடை, தூசி. கீழே புல் தரையையும் பூச்செடிகளையும் பார்த்து நான் அந்த வீடு அழகாக, தூய்மையாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அதன் கிழட்டுத் தனமும் பராமரிப்புக் குறைவும் இப்போது கண்ணில் படத் தொடங்கின. நான் மேலே ஏற ஏற அருவருப்பளிக்கும் பாழடைந்த இடமொன்றில் நுழையும் உணர்வு ஏற்பட்டது எனக்கு. மாடியில் நான்கு கதவுகளில் பூட்டுகள் தொங்கிக் கொன்டிருந்தன. இன்கு வசித்துக் கொண்டிருந்தவர் களெல்லாரும் ஒரே கூட்டமாக எங்கே போய் விட்டார்கள். இரண்டாம் மாடியில் மூன்று கதவுகள். இங்கும் ஒட்டடை படிந்த விளக்கு. மூன்று கதவுகளில் இரண்டில் பூட்டுக்கள் தொங்கின. மூன்றாவது கதவுக்குரிய ஃபிளாட்டின் ஜன்னலில்தான் நான் அந்தக் கொரில்லாவைப் பார்த்திருக்க வேண்டும். அந்த ஆள் தனியாக இருக்கிறானா, அல்லது குடும்பத்தோடு இருக்கிறானா...?
ஒரு ஃபிளாட்டில் கதவிலும் பெயர்ப்பலகை இல்லை, அழைப்பு மணி இல்லை. சுவர்களில் சிவப்பு, கறுப்பு எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த வாக்கியங்கள் எங்கும் எல்லாருக்கும் மனப்பாடமானவை. பயத்தில் என் உடல் சிலிர்த்தது. இந்த இடம் எனக்குப் பாதுகாப்பானதில்லை. நானே தற்செயலாக 'அவர்களுடைய' கோட்டைக்குள் வந்து அகப்பட்டுக்கொண்டு விட்டேனோ?
வேறு வழியில்லை. துணிவை வரவழைத்துகொண்டு பேண்ட் பைக்குள் கையைவிட்டு அதிலிருந்த .38 குறுக்களவுள்ள ரிவால்வரை இறுகப்பிடித்துக் கொண்டேன். அதில் ஒரு குண்டு தான் பாக்கி இருக்கிறது, அது போதும். பின்னால் பல மணிகள், நாட்கள், மாதங்கள், வருடங்கள் பிழைத்திருப்பதற்காக இப்போதைக்கு ஒரு சில மணிநேரம் பிழைத்திருக்க வேண்டும்.இது எனக்கு மிகவும் அவசியம். ஐயோ, என் இருபத்தேழு வீணான வருடங்களே! என் இளமை மந்திரத்தால் கட்டுண்டபூனைக்குட்டி போல்! என்னுள்ளே மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
கதவு வளையத்தை மெதுவாக ஆட்டினேன் - இரண்டு தடவை. பிறகு மெதுவாகக் கதவைத் தட்டினேன்.
II
ஹிரண்மய் தத்தராய்
..என்ன ஆச்சு? மறுபடியும் பவர்கட்டா? மழைக்காலம் முழுவதும் இந்தத் தொந்தரவு தொடரும். மெழுகுவர்த்தி வாங்கிவாங்கிப் போண்டியாகி விட்டேன்! கார்ப்பரேஷன் ..
இந்த சமயம் மருமகள் ஓடி வந்தாள்.
"..கேட்டீங்களா..? இந்த ராத்திரி மறுபடி ஆரம்பிச்சுட்டது."
குதித்தெழுந்தேன். "என்னம்மா ஆரம்பிச்சுட்டுது?"
ராணுவுக்கு என்மேல் எகரிச்சல் ஏற்பட்டிருக்குமோ? வயதாக ஆக என் கண்களைப்போல் காதுகளும் வலுவிழந்து கொண்டிருக்கின்றன என்பது அவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அப்படியும் அவள் எரிச்சல் படுகிறாள். அவளுக்கு நாளுக்குநாள் என்மேல்எரிச்சல் வளர்வது எனக்குத் தெரியும்;. நான் திடீரென்று "யாரோ கூப்பிடறாங்க போலிருக்கு" என்று சொல்லிக்கொண்டு வாசலுக்குஓடுவது.. இவையெல்லாம் எரிச்சலூட்டுகின்றன. நான் இதை உணர்கிறேன். குறிப்பாக, நான் முன்னறையில் சௌமேனின்போட்டோவை வைத்திருப்பது அவளுக்குப் பிடிக்கவில்லை. அவனது சமீப காலத்துப் போட்டோ, இது ஒன்றுதான் பெரியஅளவு போட்டோ. இதில் அவன் மட்டும் இருக்கிறான். அவனுடைய மற்ற போட்டோக்களெல்லாம் வெகு காலம்முன்பு எடுக்கப்பட்டவை. அவற்றுள் பலவற்றில் ராணுவும் கூட இருக்கிறாள். அவையெல்லாம் போட்டோ ஆல்பத்தில் இருக்கின்றன. நான் அந்த ஆல்பத்தைச் சில சமயம் என்னிடமே வைத்திருப்பேன், சில சமயம் ராணுவிடம் கொடுப்பேன், சிலசமயம் அவளே என்னிடம் கேட்டு வாங்கிக்கொண்டு போவாள். ஆனால் அவற்றில் இப்போதைய சௌமேனைப் பார்க்க முடியவில்லை. இப்போது அவனுடைய நெற்றியில் சுருக்கம் விழுந்திருக்கிறது, தாடையெலும்பு துருத்தி நிற்கிறது, அவனுடைய உடலின்மென்மை தேய்ந்துகொண்டு வருகிறது, கண்களில் ஓர் அசாதாரண ஒளி. அவனுடைய இந்த மாற்றங்களெல்லாம் இந்த போட்டோவில் இடம் பெற்றிருக்கின்றன.
சௌமேன், என் ஒரே பிள்ளை, என் செல்லப் பிள்ளை. "அவன் அனுபவிக்கும் துன்பங்களையெல்லாம், வேதனைகளையெல்லாம் எனக்குக் கொடுத்துவிடு!" என்று நான் கடவுளை வேண்டிக் கொண்டேன். ஏனென்றால் உலகத்தில் பல எதிரிகளுடன் போரிட்ட அனுபவம் இந்தக் கிழவனுக்கு உண்டு. பல பயங்கர நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறேன் நான். பயங்கரச் சூடு,எல்லாவற்றையும் சுட்டெரிக்கும் நெருப்பு, புயல், மழையின் தாக்குதல்கள், இன்னும் பல எதிர்பாராத எதிரிகளை எதிர்கொண்டிருக்கிறேன் நான். எவ்வளவு வகை ஆபத்துகள் நேர்ந்திருக்கின்றன! நான் அவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டோவெற்றிகொண்டோ இன்னும் நிலைத்திருக்கிறேன். ஆகையால் எந்தவித நோய், கஷ்டம், வேதனையைத் தாங்கிக் கொள்வதும்எனக்குச் சிரமமாயிருக்காது. ஆனால் சௌமேன்! அவனது ஆத்மா மென்மையானது. அவன் வாழ்க்கையிலிருந்து எவ்வளவோஎதிர்பார்க்கிறான். வாழ்க்கையின் மோகனக் கவர்ச்சியில் அவன் கனவுகள் பல கண் கொண்டிருக்கிறான். ஆகையால் நான்கடவுளை வேண்டிக்கொள்வேன், "சௌமேனின் கஷ்டங்களை என்னிடம் கொடு, அவனுடைய இன்பங்கள் அவனிடமேஇருக்கட்டும்" என்று ஆனால்..
போட்டோவைப் பற்றியல்லவா பேசிக்கொண்டிருந்தேன்! அவன் திடீரென்று ஏன் இந்த போட்டோ எடுத்துக் கொண்டான்என்று எனக்கு முன்னால் புரியவில்லை, பிறகு புரிந்தது. இந்த போட்டோ அவன் வெளியேறுவதற்றுமுன் எனக்கும் அவன்மனைவிக்கும் ஆறுதலளிப்பதற்காகக் கொடுத்த நினைவுச் சின்னம், "இதை வைத்துக்கொண்டு ஆறுதல் பெறுங்கள்!" என்றுசொல்லாமல் சொல்லிவிட்டுப் போய்விட்டான் அவன்!
ஆம், நான் எழுபத்திரண்டு வயதுக் கிழவன். வெறும் நினைவுகளுடன் காலந் தள்ள முடியும் என்னால். என் போன்றகிழவர்கள் அப்படித்தான் வாழ்கிறார்கள். ஆனால் என் மருமகள் ராணு? அவளால் முடியுமா? அவளுடைய இரத்தமும் தசையும்உள்ளமும் இன்னும் ஓய்ந்துவிடவில்லையே! அவளுக்கு சௌமேனின் உடம்பு வேண்டும். அவள் சௌமேனை நேரடியாகப்பெற வேண்டும், வெறும் நினைவாகவோ குறியீடுகளாகவோ அல்ல. ஆகையால் அவளுடைய கஷ்டத்தை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. அவள் கையாலாகாத கோபத்தில் துடிதுடிக்கிறாள். கணவனைச் சபிக்கிறாள், தலையைச் சுவரில் மோதிக்கொண்டு திட்டுகிறாள். அவள் தன் கணவன் ஒரு கோழை என்று நினைக்கிறாள். நான் அவளைக் குற்றஞ் சொல்லவில்லை. சௌமேன்இப்படிச் செய்யலாமா? அவனே தேர்ந்தெடுத்துக் காதலித்த பெண் ராணு. முதலில் எனக்கு அவர்களுடைய காதலைப்பற்றிஒன்றும் தெரியாது. பிற்பாடு தெரிந்துகொண்டபோது நான் மகிழ்ச்சியடைந்தேன். ராணுவை அன்போடு ஏற்றுக் கொண்டேன்..
ராணு சௌமேன் மேல் ஏற்பட்ட கோபத்தில் வேறு யாரோடாவது..
இல்லை, அப்படி நடந்துவிடாது!
இந்தக் காலத்தில் பெண்கள் உடல்பசிக்கு அடிமையாவதைக் கவனித்து வருகிறேன். அவர்கள் தெரிந்தோ தெரியாமலோஇந்தத் தசை வெறிக்கு ஆளாகிறார்கள். புதுமை என்றாலே கூட்டையுடைத்துக்கொண்டு வெளியே வருவதுதான் என்றுஅவர்கள் நினைக்கிறார்கள். சமூக நெறிமுறைகளை மீறிப் பாலுணர்வுக்குப் பூரண சுதந்திரம் கொடுத்தால்தான் மனிதனுக்குமுழுமையான விடுதலை கிடைக்கும் என்று நவ நாகரீகம் அவர்களுக்குக் கற்பிக்கிறது..
இந்த மனப்போக்கு ராணுவைத் தொற்றிக் கொள்ளவில்லை என்று நான் நினைக்கிறேன். அவளது குடும்பப் பாரம்பரியம்,கல்வி, ஆளுமை இவையெல்லாம் அவளிடம் நான் நம்பிக்கைக் கொள்ளப் போதுமானவை. இருந்தாலும் சௌமேனின் மறைவால்அவளிடம் ஓர் எதிர்விளைவு ஏற்படுவது இயற்கைதான். விதவைத் திருமணத்தை ஆதரித்ததற்காக ஈசுவரசந்தர வித்யாசாகரைத்தூற்றுமளவுக்கு நான் ஒரு மட்டமான பழமைவாதியல்ல. சௌமேன் உண்மையிலேயே இறந்து போயிருந்தால் நான்ராணுவின் அப்பா என்ன சொன்னாலும் அதைப் பொருட்பத்தாமல் அவளுக்கு மறுமணம் செய்துவைப்பேன்.. ராணஅதற்கு இசைந்தால்.
இதென்ன நினைப்பு? எனக்குத் திக்கென்றது. என் கால்கள் பாறையாய்க் கனத்தன. என் உடம்பு நடுங்கியது. சௌமேன் என்ஒரே பிள்ளை. அப்படியானால் நான் என்னையறியாமல் அவனுடைய சாவை விரும்புகிறேனா? இல்லையில்லை, அவன்எங்கிருந்தாலும் பிழைத்திருக்கட்டும்! அவன் என்ன செய்தாலும் சரி, எனக்கு ஆட்சேபமில்லை. நான் வேண்டுவது அவன் பிழைத்திருக்கட்டும் என்பதுதான். இதுவரை சௌமேனின் போட்டோவுடன் பத்திரிகைகளில் பல விளம்பரங்கள் கொடுத்தாகிவிட்டது.போலீஸ் ஸ்டேஷன்களுக்குத் தகவல் கொடுத்துவிட்டேன். ஊர் பேர் தெரியாத சவங்களின் படங்களைப் பார்ப்பதோடு நில்லாமல்நேரே சவக்கிடங்குகளுக்கும் போய் வந்திருக்கிறேன். சவங்களை சௌமேனின் சவந்தானோ என்று சந்தேகப்பட்டிருக்கிறேன்.இப்படித்தான் ஒருதடவை நான் ஒன்பது அநாமதேயச் சவங்களில் ஒன்றை சௌமேனின் சவந்தான் என்று நம்பியபோதுஇன்னொருவன் வந்து அந்தச் சவம் மிருகாங்கன் என்பவனுடையது என்றான். பல சோதனைகளுக்குப்பிறகு அது மிருகாங்கனின் சடலந்தான் என்று தெரிந்தது.
ஆகையால் அவன் போலீசுக்குப் பயந்தோ வேறு என்ன காரணமாகவோ ஒளிவு மறைவாயிருக்கிறான் என்று தோன்றுகிறது.அவன் விரைவில் ஒருநாள் தன்னுடைய தந்தைக்கும் மனைவிக்கும் முன்னால் நிச்சயம் தோன்றுவான். காரணம் அவன் நிச்சயம்தன் செய்கைக்கு ஒரு விளக்கம் தருவான். அவனுக்குக் கடிதமெழுத வாய்ப்பில்லாமலிருக்கலாம். மேலும் கடிதத்தில் எல்லா விஷயங்களையும் விளக்க முடியாது. கடிதமெழுதுவது ஆபத்தாகவுமிருக்கலாம். ஆகையால் அவன் நிச்சயம் நேரில் வந்து விளக்கம்தருவான். இந்த மாதிரி மின்சாரமில்லாத இரவு வேளையில், இருட்டில், நள்ளிரவில் தெருவில் ஜனநடமாட்டமில்லாதபோது,மழையும் புயலும் பலமாயிருக்கும்போது அவன் அரவமில்லாமல் நனைந்த உடையில் மேலேறி வந்து கதவைத் தட்டுவான். இந்தக்கட்டிடத்தில் மற்ற ஃபிளாட்டுகளிலெல்லாம் பூட்டு தொங்குவதைப் பார்த்து அங்கிருந்தவர்களெல்லாரும் ஓடிப்போய்விட்டார்கள், யாரும் நான் வந்திருப்பதைக் கவனிக்க மாட்டார்கள் என்று நிம்மதியடைவான்...
ஆகையால்தான் வாசல்கதவை எப்போதும் திறந்து வைத்திருக்கும்படி காவல்காரனிடம் சொல்லி வைத்திருக்கிறேன்.காவல்காரன் பயங்கொள்ளி, ஆனால் இரக்கமுள்ளவன். இரக்கம் காரணமாக அவன் மாடிப்படியின் கதவைத் திறந்து வைத்திருக்கிறான், கோழைத்தனம் காரணமாக வாசல் கேட்டைமூடி வைத்திருக்கிறான். நான் ஒரேயொரு ஜன்னலைத் திறந்து வைத்துக்கொண்டு இரவு முழுதும்-- ஆம், இரவு முழுதும் -- தெருவை எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு இரவில் தூக்கம்வருவதில்லை. நான் உறங்கிவிட்டால், அப்போது அவன் வந்தால், என் முன்னால் வந்து நிற்கக் கூச்சப்படுவான். சிறுவயதில்என்னிடம் அனாவசியமாகப் பயப்படுவான் அவன். ராணு வந்து கதவைத் திறப்பாள். அவன் அவளுடைய அறைக்குள்போய்விடுவான்..
ராணு எப்போது போனாள்? ஏதோ ரகளை, குழப்பம் என்று சொன்னாளே! இந்தப் பேட்டைக்கு மின்சாரம் சப்ளைசெய்யும் இயந்திரத்தை யாரோ சேதப்படுத்திவிட்டு இருட்டில் நாசக்காரி வேலைகள் செய்கிறார்களோ? வெடிச் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது. யாருக்கும் யாருக்கும் சண்டை நடக்கிறது? எனக்கு ஒன்றும் தெரியவில்லை. ஒன்றும் தெரியாமலிருந்ததுதான்எனக்கு எமனாகி விட்டது. என் பிள்ளையைப் பற்றித் தெரிந்து கொள்ளாமலிருந்ததால்தான் இந்த வேதனையை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்.
நான் மறுபடியும் ஜன்னலருகே போகவேண்டும். ராணு வந்ததால் நான் அங்கிருந்து நகர்ந்து வந்திருந்தேன். அடே,மின்சாரம் வந்துவிட்டதே! இந்த நேரத்தில் சௌமேன் தெருவில் வந்திருந்தால் நான் அவனைக் கவனித்திருக்க முடியாது. அவன்அரவமின்றி மாடிப்படிகளில் ஏறிக் கொண்டிருப்பான், இதோ கதவு வளையத்தை ஆட்டப் போகிறான், ராணுவைப் பெயர்சொல்லிக் கூப்பிடப் போகிறான். கூப்பிடட்டும். எனக்குத் தெரிந்து போய்விடும்...
III
ராணு தத்தராய்
ஒரு ராத்திரிகூட இவர்களிடமிருந்து தப்புவதில்லை, இதோ மறுபடி ஆரம்பித்துவிட்டார்கள். இரவு பூராவும் நடக்கும் இந்தஆர்ப்பாட்டம். நடு நடுவே தூக்கம் கலையும். அப்போது கோபம் வரும். கோபத்தால் களைப்பு, சோர்வு ஏற்படும். அழுகை வரும்.ஆனால் இன்று அழுகை என்பதே அவமானம், என்னையே சிறுமைப்படுத்திக் கொள்வதாகும். மனிதன் தன் நாதியற்றநிலையை முழுதும் உணர்ந்து விட்டால் சூடு தணிந்து போகிறான். நானும் ஆறிப்போயிருக்க வேண்டும். ஆனால் முடியவில்லைஎன்னால், அவர்கள் யாரென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது-அவர்களை ஏதோ ஒரு நெருப்புஉள்ளூர எரிக்கிறது. அந்த நெருப்பின் சூடு தீவிரமாகி யார் மேலாவது வெடித்து அவனை விழுங்கி விடுகிறது. என் கணவரும்இப்படித்தான் விழுங்கப்பட்டிருக்கிறார். இது பற்றி எனக்கு ஆறுதல் ஒரு புறம், கோபம் ஒரு புறம். என் போன்ற இன்னும்பல பெண்களின் கணவர்கள், தந்தையர், குழந்தைகளுக்கும் இந்த முடிவு நேர்ந்திருக்கிறது என்பது ஆறுதல். எங்களால்- என்போன்ற பெண்களால்- ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று கோபம்.
சில மாதங்களுக்கு முன்னால் என் கணவர் வேலைசெய்து வந்த பெரிய தொழிற்சாலை மூடப்பட்டு அவருக்கு வேலை போய்விட்டது. வீட்டு வாடகை பாக்கி. குடும்பத்தில் வறுமை. என் மாமனார் செலவாளி. அவரால் அதிகம் சேமித்து வைக்கமுடியவில்லை. அவருடைய பென்ஷன் தொகையில் காலந்தள்ளுகிறோம். ஆனால் இதுவும் ஒரு பிழைப்பா? எனக்குக்கஷ்டமாயிருக்கிறது. உள்ளம் துடிக்கிறது; வெளியே கிளம்பி ஏதாவது வேலை தேடிக் கொள்ளத் தோன்றுகிறது. ஆனால் என்மாமனார் பழங்கால மனப்போக்குள்ளவர், கோழையுங்கூட. அலைந்து திரிந்து என் கணவரைத் தேடிக் கண்டு பிடிக்கநினைத்தேன் நான். ஆனால் என் மாமனார் என்னைத் தனியாக எங்கும் பகவிடவில்லை. இது ஒரு அடிமை வாழ்வு என்றுஎனக்குச் சில சமயம் தோன்றுகிறது. நான் எனக்குத் தெரியாமலேயே ஒரு கூண்டில் அடைபட்டு விட்டேன். அந்தசுயநலம் பிடித்த கிழவனார் என்னைத் தம் காலியான பணப்பெட்டியைக் காவல் காக்கும் பூதமாக இங்கே வைத்துக்கொண்டிருக்கிறார்.
ஊஹூம், இனிமேல் தாங்க முடியாது என்னால். நான் ஓடிப்போய் விடப்போகிறேன். நான் ஏன் இங்கே இருக்கவேண்டும்? இந்த வெறுமை, வீணாகக் காத்திருத்தல், சலிப்பூட்டும் பகல்கள், இரவுகள் ... இந்தக் கட்டிடத்தில் குடியிருந்த குடும்பங்களெல்லாம் இங்கிருந்து ஓடிப்போய் விட்டன. இந்தப் பேட்டையே காலியாகிக் கொண்டிருக்கிறது. சில கிழடுகளும் குழந்தைகளுந்தான் எஞ்சியிருக்கிறார்கள். எப்போதாவது கேட்கும் வெடிகுண்டு அல்லது துப்பாக்கி வெடிக்கும் ஒலியைத் தவிர வேறெந்த அரவமுமின்றி ஒரு நிரந்தர அமைதி குடிகொண்டிருக்கிறது இங்கே. எப்போதாவது யாரோ தெருவில் நடக்கும் காலடியோசை கேட்கிறது. இந்தச் சூனியமான ஆவியுலகத்தில் சிறைபட்டுத் தேய்ந்து போகிறது என் இருபத்திரண்டு வயது இளமை. நான் இங்கே இருக்க மாட்டேன், நான் ஓடிப்போகப் போகிறேன்!
எங்கே ஓடிப்போவது? அம்மா அப்பாவுக்கு என்மேல் உள்ளூரக் கோபம் -- நான் அவர்கள் தேர்ந்தெடுத்திருந்த வரனைஉதறித் தள்ளிவிட்டேனென்று. நான் அவர்களுடைய விருப்பத்துக்கு மாறாக, அவர்களுக்குத் தெரியாமல் இவரை பதிவுதிருமணம் செய்துகொண்டேன். பிறகுதான் நாங்கள் இருதரப்பாருக்கும் செய்தி தெரிவித்தோம். இதற்குப் பின் வெகு நாட்கள்வரை என் பிறந்த வீட்டில் பூகம்பம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. எரிமலை வெடித்துக் கொண்டிருந்தது. புக்ககத்தில் அப்படியொன்றும் நேரவில்லை. என் மாமியார் உயிரோடிருந்தால் அங்கும் இவை நேர்ந்திருக்கும். காரணம், பெண்கள்தான் பெண்களின் எதிரிகள். என் தாய் என் எதிரி. ஆகையால் நான் தாய்வீடு திரும்ப வழியில்லை. திரும்பிச் சென்றால் எதிரி இளப்பம் செய்வாள்.
அப்படியானால் எங்கே போவேன்? இரவும் பகலும் சிந்தித்துப் பார்க்கிறேன். ஒரு வழியும் தெரியவில்லை. எப்படியும்நான் ஓடிப்போகத்தான் போகிறேன்! நாளுக்கு நாள் உள்ளூரக் காய்ந்து கொண்டிருக்கிறேன் நான்! இன்னும் சில நாட்கள்இப்படி இருந்தால் நான் செத்துப்போய் விடுவேன். வேண்டாம். நான் பிழைத்திருக்க ஆசைப்படுகிறேன்!
அவர் போவதற்கு முன் ஒன்றும் சொல்லவில்லை. மாலையில் டீ குடித்துவிட்டு வெளியே போனார். நாள் முழுதும்'உம்'மென்று பேசாமல் உட்கார்ந்திருந்தார். இப்போதெல்லாம் எடுத்ததற்கெல்லாம் எரிந்து விழுகிறாரென்று நானும் அவரைஎதுவும் கேட்பதில்லை. வரவர நிதானமிழந்துவிட்டார், முன் கோபியாகிவிட்டார். வேலை விஷயமாகக் கவலைப்படுகிறாரென்று நான் நினைத்தேன். அவர் அதிகம் பேசுவதில்லை. எதுவும் சொல்லாமல் வெளியே போய்விடுவார். எப்போது வீடுதிரும்புவார் என்று நிச்சயமில்லை. மாமனார் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார். என் கணவர் வீ திரும்பியதும் என் மாமனாருக்கு ஏதோ சமாதானம் சொல்வார். என்னிடம் ஒன்றும் சொல்வதில்லை. சொல்வது அவசியம் என்று அவர் நினைக்கவில்லை. இரவில் அவருடைய ஸ்பரிசத்துக்காகத் தவிப்பேன். பழக்கம் காரணமாக என் இரத்தமும் தசையும் பரபரக்கும்.அவரோ என்னை மெல்லத் தள்ளிவிட்டு "ரொம்ப சூடாயிருக்கு. கொஞ்சம் தள்ளிப் படுத்துக்கோ, ராணு" என்று சொல்லித் திரும்பிப் படுத்துக் கொள்வார்.
எனக்கு அழுகை வரும். அவருக்கு என்மேல் ஏதாவது கோபமா? என்மேல் சந்தேகப்படுகிறாரா? யாராவது அவரிடம் என்னைப்பற்றிக் கோள் மூட்டியிருக்கிறார்களா? கடவுளுக்குத் தெரியும்-- நான் மனத்தால் எப்படியிருந்தாலும் உடலால் குற்றமெதுவும் செய்யவில்லை. நான் மௌனமாக அழுவேன்.
ஆச்சரியமென்னவென்றால், நான் அழுவது அவருக்குத் தெரிந்துவிடும். அவர் என்னை இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு, "இல்லே ராணு, எனக்கு ஒம்மேலே கோவமில்லே, யார்மேலேயும் இல்லே. என் கோவமெல்லாம் என்மேலேதான்.என்னையே என்னாலே தாங்கிக்க முடியலே. என்னை நம்பு, ராணு! எனக்குப் பொறுக்க முடியாத துக்கம்.." என் சொல்வார்.
நான் பெண்ணாகையால் அவருக்கு ஆறுதலாகச் சொல்வேன், "ஒங்க துக்கத்தை என்கிட்டே கொடுங்க!"
"சீ, பைத்தியம்!" என்று சொல்லிவிட்டு அவர் மௌனமாகி விடுவார். என்னை அணைத்திருக்கும் கைகள் தளரும். பிறகு அவர் மல்லாந்து படுத்திருப்பார்.
அவர் ஏதோ சிந்தித்துக் கொண்டிருக்கிறார் என்று புரியும் எனக்கு, "என்ன ஆச்சு ஒங்களுக்கு? சொல்லுங்களேன்! ஒங்ககால்லே விழறேன்" என்று கெஞ்சுவேன்.
அவர் பதிலே சொல்லமாட்டார். அல்லது "ஒண்ணுமில்லே் என்று சொல்வார்.
அவருடைய கவலையெல்லாம் பணங்காசு பற்றித்தான் என்று நான் நினைப்பேன். வேலையில்லாமலிருப்பவர்களுக்குஇது இயற்கைதான். "கவலைப்படாதீங்க. ஏதாவதொரு வேலை நிச்சயம் கிடைச்சிடும்" என்று அவரைத் தேற்றுவேன்.
அவர் வெளியேறுவதற்கு முதல் நாளிரவு தூக்க மயக்கத்தில் ஒரு சொல்லைத் திரும்பத் திரும்பச் சொன்னார். அப்போதுநான் விழித்துக் கொண்டுதானிருந்தேன். அந்தச் சொல்லைக் கேட்டு நான் திடுக்கிட்டேன், என் நெஞ்சு படபடத்தது.
என்ன சொல்கிறார் இவர்?
"துரோகி..! நான் துரோகி..! நான் துரோகி..!"
ஏதோ புரிந்தது.. இல்லை.. புரியவில்லை. மர்மத்தின் கறுப்புத்திரை சற்று விலகியது. அல்லது நான் கேட்டது பிரமையாகஇருக்கலாம். என் ஊகம் தவறாயிருக்கலாம். ஆனால் என் இரத்தம் பனியாகக் குளிர்ந்துவிட்டது. தொடை கனத்தது,மண்டை பனியாய் உறைந்தது. ஜீவனில்லாமல் படுத்துக் கிடந்தேன்.
இந்த விஷயத்தை மாமனாரிடம் சொல்லவில்லை நான். சொல்வது அவசியமென்று நினைக்கவில்லை. என்ன நடந்ததென்றுஎனக்குத் தெரியும். என் சங்கு வளையலும் குங்குமமும் இந்த சுமங்கலித் தோற்றமும் வெறும் வேஷம். நான் ஒரு குடும்பத்தின்மருமகளாக நடமாடுவது வெறும் பாசாங்கு. எனக்குத் தெரியும் அவர் திரும்பி வரப் போவதில்லை!
அப்டியும் என் இரத்தத்தில் எதிர்பார்ப்பு முள்ளாய்க் குத்துகிறது. மாடிப்படிகளின் சுரங்க வெளியில் காற்று சுழல்கிறது.அதனால் ஏற்படும் ஓசை கதவு வளையத்தை ஆட்டும் ஒலி போலிருக்கும். நான் திடுக்கிட்டு எழுந்து உட்காருகிறேன்.கதவுப்பக்கம் ஓடுகிறேன். கதவைத் திறப்பதற்கு முன்பே அவரிடம் என்ன சொல்வது என்று யோசித்துப் பார்த்துக் கொள்கிறேன்.பிறகு கதவைத் திறக்கிறேன். மங்கிய ஒளியில் மஞ்சளாக ஏதோ கோடுகள் அசைந்து மறைகின்றன. வெறும் சூனியம்!பின்னாலேயே ஓடி வருகிறார் மாமனார். "வந்துவிட்டானா..? சமு வந்துட்டானா..? சமு இல்லையா..? ஏம்மா பதில் சொல்லாமேநிக்கறே?" என்று படபடக்கிறார்.
என்ன சொல்வேன் நான்? "ஒருத்தரும் இல்லே, வெறுங்காத்துதான்" என்று சொல்லிவிட்டுத் திரும்பி வருகிறேன், திரும்பியதும் அந்த போட்டோ பார்வையில் படுகிறது. கோபத்தில், எரிச்சலில், வேதனையில் அதைக் கீழே போட்டு உடைக்கத்தோன்றுகிறது. இல்லாத அந்த மனிதரின் நிழலைப் பார்த்து "துரோகி! நம்பிக்கைத் துரோகி!" என்று கத்தத் தோன்றுகிறது..
IV
கதவைத் திறந்தவளை எனக்குத் தெரியாது. ஆனால் அவளுக்குப் பின்னால் ஓர் உயரமான ஸ்டூலின் மேல்வைத்திருக்கும் போட்டோ யாருடையது என்று எனக்குத் தெரியும். மறுகணம் என் மண்டைக்குள் நெருப்பு பற்றியெறிந்தது. காதுகளிலிருந்து சூட்டுக் காற்று வெளிறியது. கண்களிரண்டும் வீங்கிக் கொண்டன. சௌமேன்! இது அவனுடைய வீடா? கடைசியில்இங்கேயா வந்து சேர்ந்துவிட்டேன்...?
என் திகைப்பை அந்தப் பெண் கவனித்தாளா இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால் என்னைப் பார்த்து அவளும்திடுக்கிட்டாள். ஓரடி பின்வாங்கி, நடுங்கும் குரலில், "யாரு.. யாரைப் பார்க்கணும்?" என்று கேட்டாள்.. நான் என்னைச் சமாளித்துக் கொண்டேன். நிதானமான குரலில் சொன்னேன், "இன்னி ராத்திரி மட்டும் இங்கே தங்கப்போறேன். சத்தம் போடாதீங்க! சத்தம் போட்டுப் பிரயோசனமில்லே. நான் ஒங்களுக்கு எந்தக் கெடுதலும் செய்யமாட்டேன்.இந்த ராத்திரி மட்டும்..." அவள் பின்வாங்கினாள். நான் உள்ளே நுழைந்து கதவைத் தாளிட்டேன்.உட்கார்ந்து கொண்டு "ஒருடம்ளர் தண்ணி கொடுங்க, தண்ணி மட்டுந்தான். இந்த அகாலத்திலே சாப்பாடு போடச் சொல்லித் தொந்தரவு செய்யமாட்டேன். ஒரு ஜமுக்காளம் கொடங்க இங்கேயே படுத்துக்கறேன்..." என்றேன்.
அவள் பதிலேதும் சொல்லவில்லை. அவள்தான் சௌமேனின் மனைவியோ? அப்படியானால் ஏனின்னும்சுமங்கலி வேஷம்? இவர்களுக்கு இன்னும் செய்தி தெரியாதோ? பைக்குள் கையைவிட்டேன். ஏதாவது தகராறு செய்தால் உள்ளேயிருக்கும் பொருளை எடுத்துக் காட்டிப் பயமுறுத்த வேண்டும். அதற்கு அவசியமேற்படாது என்று தோன்றியது. கையை வெளியே எடுத்தேன். வீட்டுக்குள்ளே கவனித்துப் பார்த்தேன். இரு பக்கங்களில் இரண்டு அறைகள். கதவுக்கருகில் கிழிந்த அழுக்குத் திரை. இந்த அறையில் சாமான்கள் அதிகமில்லை. ஒரு ஷெல்ஃபில் சில புத்தகங்கள். ஒரு மேஜை, இரண்டு நாற்காலிகள். ஒரு ஸ்டூலின்மேல் போட்டோ. அந்த போட்டோவைப் பார்க்கக் கூச்சமாக இருந்தது எனக்கு. "ஒன்னைப் பார்த்தாக் கொலைகாரன் மாதிரி இல்லே. ஒங்கிட்டே எனக்குப் பயமில்லே தீபு" என்று அவன் இப்போதும் சொல்வது போலிருந்தது.
உடனே தண்ணீர் வந்தது. போட்டோ பக்கம் திரும்பாமல் தண்ணீரை வாங்கி மடக்கு மடக்கென்று குடித்தேன். பிறகுடம்ளரைக் கீழே வைக்கப் போனேன். அதற்குள் அவள் அதைக் கையில் வாங்கிக்கொண்டு திரும்பிப் போக முற்பட்டாள்.
நான் அவளைக் கூப்பிட்டேன், "இதைக் கேளுங்க!"
அவள் மௌனமாக என் பக்கம் திரும்பினாள்.
"ஒங்க வீட்டிலே இன்னும் யார் யார் இருக்காங்க?"
"நானும் அப்பாவுந்தான்."
"இந்த போட்டோவிலே இருக்கிறவர் எங்கே?"
"தெரியாது."
"நீங்க யாரு?"
"இந்த வீட்டு மாற்றுப்பெண்"
"அப்படீன்னா அந்த போட்டோவிலே இருக்கற ஒங்க புருஷன்.."
"ஆமா"
நான் மௌனமானேன்.
"இன்னும் ஏதாவது தெரிஞ்சுககணுமா?" அவள் கேட்டாள்.
"ஆமா.. நீங்க அப்பான்னு சொன்னது ஒங்க மாமனாரைத் தானே?"
"ஆமா."
"ஒங்க புருஷன் ஏன் இங்கே இல்லே?"
"தெரியாது.. நான் ஒங்களுக்குப் படுக்கை கொண்டுவந்து போடறேன்."
அவள் உள்ளே போகத் திரும்பினாள். அந்த சமயத்தில் பக்கத்து அறையின் திரையை விலக்கிக்கொண்டு அந்தக் கிழட்டுக்கொரில்லா வந்துவிட்டது.. "யாரு வந்திருக்காங்க.. சமுவா.. யாரு.. யாரு..? நீங்க ஏன் பதில் சொல்ல மாட்டேங்கறீங்க..அம்மா இது யாரு?"
சௌமேனின் மனைவி சொன்னாள், "சும்மா இருங்கப்பா. இவர் ஒங்க பிள்ளையோட சிநேகிதர். அவரைப் பத்தி ஏதோசெய்தி கொண்டு வந்திருக்கார்."
நான் திடுக்கிட்டேன். என் நெஞ்சு படபடத்தது. அவள் எல்லாம் தெரிந்து கொண்டு சொல்கிறாளா, அல்லது மாமனாரைச்சமாதானப்படுத்துவதற்காகத் தனக்குத் தோன்றியதைச் சொல்கிறாளா? அவள் பக்கம் திரும்பிப் பார்த்தேன். வெறித்தபார்வை, அதில்தான் எவ்வளவு பளபளப்பு! அவளுடைய உதட்டோரத்தில் தென்படும் மௌனப் புன்னகைக் கீற்று ஏன்?
என் பைக்குள் ரிவால்வர் துருப்பிடித்துப் போயிருக்கக்கூடும். அதன் குதிரை பழுதாகியிருக்கும். அதிலுள்ள குண்டு நனைந்போயிருக்கும். கிழவர் சற்றுக் குனிந்துகொண்டு தணிந்த குரலில் என்னைக் கேட்டார், "சமு எப்படியிருக்கான்? எங்கேயிருக்கான்?என்ன பண்றான் இப்போ..? அவன் ரொம்பச் சிறுபிள்ளைத் தனமா இருக்கான். இவ்வளவு பயப்படும் படியா என்ன இருக்கு..நான் போலீஸ் சூப்பரிண்டெண்டெண்ட்கிட்டே போய்ச் சொல்லியிருக்கேன்.. நான் சர்க்கார் உத்தியோகத்திலே இருந்தவன்..
நான் அவரை இடைமறித்துச் சொன்னேன், "ஒங்க பையன் போலீசுக்குப் பயப்படலே.. அவன் ஒரு துரோகி. அதனாலே.."
"நிறுத்து!" கிழவர் கர்ஜித்தார்.
"ஒங்க மாற்றுப் பெண்ணையே கேளுங்க!" நான் சிரித்துக் கொண்டு சொன்னேன்.
அந்தப் பெண் சொல்லியது என்னைத் திகைக்க வைத்தது, "ஆமாம்பா. இவர் சொல்றது சரிதான்?"
"இருக்கவேயிருக்காது! இவன் பொய் சொல்கிறான்!" கிழவர் கத்தினார். "இவன் புளுகன், மோசக்காரன்! நான் யாரையும்நம்பல்ல! எல்லாரும் துரோகிகள்!"
அந்தப் பெண் சற்று முன்னால் வந்து ," சும்மா இருங்கப்பா!" என்றாள்.
கிழவர் விரலால் வாசலைச் சுட்டிக்காட்டி, "இப்பவே போயிடு இங்கேயிருந்து! என் சமு துரோகியா..? பொய்யும் புளுகும் சொல்ல வந்திருக்கியாக்கும்!"
நான் இப்போது பையிலிருந்த ரிவால்வரை எடுத்தேன். "ரொம்பக் கத்தாதீங்க..! உள்ள போயிடுங்க நீங்க! நான் இந்தராத்திரி இங்கேதான் இருக்கப்போறேன். தொந்தரவு பண்ணினீங் கன்னா செத்துப் போயிடுவீங்க.. இந்தாம்மா, இவரைக் கூட்டிக்கிட்டு அந்த ரூமுக்குப் போயிடுங்க..! என் மூளை குழம்பிக் கிடக்கு.. முட்டாள் கிழம்! வாயை மூடு!"
கிழவர் சற்றுநேரம் என் ரிவால்வரைப் பார்த்தவாறு நின்றார். பிறகு கீழே உட்கார்ந்து, தன் கைகளால் முகத்தை மூடிக்கொண்டுஅழத் தொடங்கினார். அழுகை நடுவே திக்கித் திக்கிச் சொன்னார், "என்னைக்கொன்னுடு! கொன்னுடு..! சமுவுக்கு என்ன ஆச்சுன்னு இப்போ புரியுது எனக்கு....! நான் பிழைச்சிருந்து என்ன லாபம்?"
மாமனாரைத் தெற்றிக் கொண்டிருந்த அந்தப்பெண் ஒரு விசித்திரப் புன்னகையுடன் என்னிடம் சொன்னாள், என்ன "ஆச்சுஒங்களுக்கு? ஒங்களாலே சுட முடியலையா? ரிவால்வரிலே குண்டு இல்லையா? அல்லது அது விளையாட்டுத் துப்பாக்கியா? ஒங்களை அடைச்சிருக்கிற கூண்டிலேருந்து வெளியே வர முடியலே ஒங்களாலே! தப்பியோடி வந்ததிலெ ரொம்பக் களைச்சுப் போயிட்டீங்க இல்லியா?" கோபத்தில் எனக்குத் தலைகால் புரியவில்லை. நான் சொன்னேன்," செளமேன் மாதிரி ஒரு பிள்ளையைப் பெத்தவனை நான் வெறுக்கிறேன்...! ஆனா இப்போ நான் களைச்சிருக்கேன்.கொஞ்சம் தங்கித் தூங்கறத்துக்கு எனக்குஒரு இடம் வேணும் இப்போ."
அவள் கிழவரை அவருடைய அறையில் கொண்டுபோய் விட்டுவிட்டுத் தன் அறையிலிருந்து படுக்கையை எடுத்து வந்து அதைத் தரையில் நன்றாக விரித்துவிட்டு,"சரி படுங்க. எனக்கும் ரொம்பத் தூக்கம் வருது இன்னிக்கு...அதைத் தவிர.."
நான் படுக்கையில் படுத்துக் கொண்டு, "அதைத் தவிர என்ன/" என்று கேட்டேன்.
"ஒங்களுக்கு நன்றி" என்று சொலிவிட்டுத் தன் அறைக்குப் போய்விட்டாள் அவள்.
எனக்குத் தூக்கம் வரவில்லை...அந்தப் போட்டோ...!நான் தான் வாய்க்கால் கரையில் செள்மேன் கழுத்து நரம்பை அறுத்து அவனுடைய சவத்தை எரித்தவன்.
அடுத்த அறையிலிருந்து வரும் ஒலிகளிலிருந்து அங்கே என்ன நடக்கிறது என்பதை ஊகிக்க முடிந்தது. நடக்கவேண்டிய காரியங்கள்அங்கே நடந்துகொண்டிருக்கின்றன. சௌமேனின் மனைவி தன் சங்கு வளையலை உடைக்கிறாள்; நெற்றிக் குங்குமத்தை அழித்துக்கொள்கிறாள்; பெட்டியிலிருந்து சௌமேனின் வேஷ்டியை எடுத்து உடுத்திக் கொள்கிறாள்; பிறகு தேம்பித் தேம்பியழுகிறாள். அவளது அழுகையொலி வலுக்கிறது. சாம்பிராணி புகை போல், மூடுபனிபோல் எங்கும் பரவுகிற, எல்லாவற்றையும் விழுங்குகிற அந்த அழுகை அவளுடைய அறைக்கதவின் இடுக்கு வழியே முன்னேறி வந்துகொண்டிருக்கிறது...
நான் காதுகளை இறுகப் பொத்திக்கொண்டு கிடந்தேன். அப்படியும் அழுகை சூழ்ந்த இந்த உலகத்திலிருந்து தப்பியோடிவிட முடியாது என்று தோன்றியது. பிரும்மாண்டமான மலைப் பாம்பு போன்ற அந்த அழுகை என்னை சுற்றி சுருண்டு வந்து என் மூச்சுக் குழாயை நசுக்குகிறது.. எனக்குக் காற்று வேண்டும்,மூச்சுவிடக் கொஞ்சம் காற்று வேண்டும்.
விடிவதற்கு முன்னால் எனக்குச் சிறிது உறக்கம் வந்தது. ஒரு கனவு கண்டேன்.. எனக்கு நாற்புறமும் வந்து விழுகின்றன.ஆயிரமாயிரம் சௌமேன்களின் படங்கள். அவை உலகத்தையே மூடி மறைந்து விடுகின்றன. தாறு மாறாகக் கலைந்து விழுந்துகிடக்கும் சீட்டுகள்போல் எண்ணற்ற சௌமேன்களுக்கிடையே நான் என் வழியைத் தேடிக் கண்டுபிடிக்க வாய்ப்பே இல்லை..
('தேஷ்', 1971)
17. அந்திமாலையின் இருமுகங்கள்
ஹௌரா ஸ்டேஷனின் பிரும்மாண்டமான தகரக் கொட்ட கையின் கீழே நின்றுகொண்டு இரு சகோதரிகளும் நாற்புறமும்திரும்பித் திரும்பிப் பார்த்தார்கள். அங்கே நடமாடும் ஒவ்வொரவரின் முகத்தையும் உற்றுப் பார்த்தார்கள். யாரும் அவர்களைப்பொருட்படுத்தவில்லை, எல்லாருக்கும் அவரவர் வேலையிருந்தது.
அவர்கள் விசாலமான கொட்டகைக்குக் கீழே மக்களின் நடமாட்டத்துக்கும் இரைச்சலுக்கும் நடுவே விக்கித்துப்போய்நின்றார்கள். ஸ்டேஷன் முழுவதுக்கும் கேட்கும்படியாக ஏதோ ஒரு குரல் கேட்டது. சகோதரிகள் ஒருவரையொருவர்பார்த்துக் கொண்டார்கள். பிறகு அந்தக் குரல் கேட்டது. சட்டென்று ஓய்ந்துவிட்டது. சிறியவள் விரலால் சுட்டிக்காட்டினாள். "அதோ பாரு!" அது ஓர் ஒலி பெருக்கிக் கருவி.
சிறியவள் தொண்டையைக் கனைத்துக்கொண்டு, "இப்போ என்ன செய்யறது?" என்று கேட்டாள்.
பெரியவள் ஒரு பக்கம் திரும்பிப் பார்த்துக் கொண்டாள். அங்கே அவர்களுடைய அண்ணன் சுவரின் மேல் சாய்ந்தகொண்டு விரல்களால் தலைமுடியைக் கோதிக் கொண்டிருக்கிறான். இப்போது கையை எடுத்து விரல்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் மயிரை ஊதித் தள்ளி விடுவான்.
"வா, அந்த பக்கம் போகலாம்" பெரியவள் சொன்னாள்.
இருவரும் கூட்டத்தைப் பிளந்துகொண்டு முன்னேறினார்கள். டிக்கெட் கௌண்டர்களுக்கு முன்னால் மனித வரிசைகளைக்கடந்துகொண்டு, அங்குமிங்கும் தரையில் படுத்துக்கிடந்த ஜனங்களைத் தாண்டிக்கொண்டு, அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருப்பவர்களுக்கு வழிவிட்டுக் கொண்டு அவர்கள் கடைசியில் மூன்றாம் வகுப்புப் பிரயாணிகள் தங்குமிடத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.இருவரும் ஒரு பெஞ்சின் ஓரத்தில் உட்கார்ந்தார்கள். ஜன்னல் வழியே சாலை தெரிந்தது. அங்கு வரிசை வரிசையாக பஸ்கள்நின்றுகொண்டிருந்தன.
பிரயாணிகள் தங்குமிடத்தில் மங்கலான வெளிச்சம், இறுக்கமான ஒருவகை நெடி, சற்றுத் தொலைவில் தண்ணீர்க் குழாய்,டிக்கெட்டுக்காக நின்று கொண்டிருக்கும் பெண்களின் வரிசை, வெளியூர்ப் பயணிகள்..
"அக்கா, தண்ணி குடிக்கணும்"
"குடிச்சுட்டு வா"
தங்கை தண்ணீர் குடிப்பதைப் பெரியவள் தூரத்திலிருந்தே பார்த்துக் கொண்டிருந்தாள். தங்கை தண்ணீர் குடிக்கும்போதுஅவளுடைய ரவிக்கை மார்புப்பக்கம் சற்றுத் தூக்கிக்கொண்டது. அவளுக்கருகில் தண்ணீரெடுக்கக் குடத்துடன் நின்ற ஒருவன்அந்த இடத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறான், சங்கடமாயிருந்தது பெரியவளுக்கு.
"தூபான் எக்ஸ்பிரஸ் இன்னிக்கு லேட்"
பெரியவள் திரும்பிப் பார்த்தாள். பேசியது அவளுக்கருகில் உட்கார்ந்திருந்த பெண்தான் - "இன்னும் எவ்வளவு நேரம் காத்துக்கிட்டு இருக்கணுமோ?
"யாராவது வராங்களா?" பெரியவள் கேட்டாள்.
அந்தப் பெண் சிரித்தாள். சிரித்தவாறே ஒரு தடவை அந்த அறை முழுவதையும் பார்த்துக் கொண்டாள். "நேத்திக்கே அவர்வர்றதாகக் கடுதாசி வந்தது. ஸ்டேஷனுக்கு வந்தேன், அவர் வரலே, இன்னிக்கு வரலாம்."
இப்போது இங்கிருந்து தங்கையைப் பார்க்க முடியவில்லை. பெரியவள் எழுந்து நின்றாள்.
"நீங்க எங்கேயாவது போகப் போறீங்களா, இல்லை யாரையாவது வரவேற்க வந்தீங்களா?"
"இல்லே, நாங்க போறதுக்காகத்தான் வந்திருக்கோம்" என்று சொல்லி நிறுத்திக் கொண்டாள் பெரியவள். அவள் கொட்டகைக்குக் கீழே கூட்டத்துக்கும் கூச்சலுக்கும் நடுவில் நின்று கொண்டு தங்கையைத் தேடினாள். அடிமேலடி வைத்து முன்னேறிஸ்டேஷனின் முக்கிய வாயில்களில் ஒன்றையடைந்தாள். அங்கிருந்து ஹௌரா பாலம் தெரிந்தது. பாலத்தைக் கடந்தால்கல்கத்தா. கல்கத்தாவில் சந்து ஒன்றில் அவர்கள் ஒரு வீட்டின் கீழ்த்தளத்தில் குடியிருக்கிறார்கள். -- அவள், அவளுடைய அம்மா,அண்ணன், தம்பி, தங்கை. அவர்கள் தங்கியிருந்த அறை குளிர் காலத்தில் நடுக்கும், கோடைகாலத்தில் பொசுக்கும். தென்றல்அவர்கள் வீட்டு மேல்மாடியில் வீசிவிட்டுப் போய்விடும். காற்று, மேகம், வெயில் எல்லாம் போகும், மாலை நேரம் வந்து போகும்.உடம்பைக் கழுவிக்கொண்டு மொட்டை மாடிக்குப் போவதற்குள் அந்தி கழிந்துவிடும்..
அவள் மூக்கையுறிஞ்சி முகர்ந்தாள். ஏதோ ஒரு மணம். அப்பாவை மயனத்துக் கொண்டு செல்லும்போது அண்ணன்ஒரு சின்ன பாட்டில் கொண்டு வந்தானெ, அதிலிருந்த திரவமும் இந்த மாதிரிதான் மணத்தது. காலி பாட்டிலைத் தங்கை எடுத்துவைத்துக் கொண்டாள்... இப்போது அவள் எங்கே.
***
"டில்லி பாரு! ஆக்ரா பாரு!" என்று சொல்லிக் கொண்டே கைப்பிடியைச் சுற்றுவான் அந்த ஆள். குதுப்மினாரின் படம்,தாஜ்மகாலின் படம் இவையெல்லாம் ஒவ்வொன்றாக வந்து விட்டுப் போகும். அந்த ஆள் ஒரே மாதிரிக் குரலில் கத்திக்கொண்டேயிருப்பான். கைப்பிடியைச் சற்று மெதுவாகச் சுற்றும்படி அவனிடம் சொன்னாள். அவன் சளியை உறிஞ்சுவது போல்முகத்தை வைத்துக்கொண்டு சிரிப்பான்.
ஸ்டேஷனில் அங்கங்கே தொங்கவிடப்பட்டிருந்த படங்களைப் பார்த்த தங்கைக்கு அந்த ஆளின் நினைவு வந்தது.அவன் டில்லி ஆக்ராவுக்கெல்லாம் போயிருக்கிறானா என்று அவள் அவனைக் கேட்டாள். அவன் அவளுடைய கேள்விக்குப்பதில் சொல்லாமல், பயாஸ்கோப் பெட்டியின் துவாரங்களில் கண்களைப் பொருத்திக்கொண்டு நின்றிருந்தவர்களை ஈவிரட்டுவதுபோல கையால் விரட்டத் தொடங்கினான். அந்த ஆளை இப்போது நினைவுக்கு வந்தது தங்கைக்கு.
வெகு நாட்களுக்குப்பிறகு அந்த பேட்டைக்கு ஒரு புதிய பயாஸ்கோப்காரன் வந்தான். பழைய ஆள் ஏன் வரவில்லையென்றுபல நாட்கள் யோசித்திருக்கிறாள் தங்கை. அவள் அவனைப்பற்றி நினைக்கும் போதெல்லாம் அவள் மனக்கண்முன்னால் குதுப்மினார், தாஜ்மகால், ஆகாயவிமானம், ஜடாயு சண்டை எல்லாம் வரிசையாக வந்து போகும்...
படங்களைப் பார்த்துக்கொண்டே வந்தவள் இன்னொரு பெண்ணுடன் உரசிக் கொண்டாள். திரும்பிப் பார்த்தாள்.அவள் இவளையே பார்த்துக் கொண்டிருந்தாள். படத்தின் கீழே ஏதோ ஆங்கிலத்தில் எழுதியிருந்தது, அவள் அதை எழுத்துக்கூட்டிப் படித்துவிட்டு அந்தப் பெண்ணை ஓரக்கண்ணால் பார்த்தாள். அந்தப் பெண்ணின் உடையிலிருந்து ஒரு நல்லவாசனை வந்தது. தங்கை மெதுவாக அந்த வாசனையை உறிஞ்சினாள். சாக்லேட் சுற்றியிருக்கும் ஜிகினாக் காகிதத்திலிருந்தும்இந்த மாதிரி வாசனைதான் வரும்.
"அது ஒண்ணும் இவ்வளவு அழகாயில்லே" அந்தப் பெண் சொன்னாள். தங்கை அவளைத் திரும்பிப் பார்த்தாள்.
"நாங்க போன பூஜை லீவிலே போயிருந்தோம். போகவர எவ்வளவு கஷ்டம்! ஓட்டல் வாடகையும் ரொம்ப ஜாஸ்தி!"இன்னும் நிறைய நேரம் அந்த பெண்ணின் அருகிலேயே நின்று அந்த வாசனையை முகர்ந்து நெஞ்சுக்குள் சேர்த்து வைத்துக்கொள்ள ஆசை தங்கைக்கு. "அழகாகயில்லையா அங்கே? ஏன்?" என்று கேட்டாள்.
"அப்படியொண்ணும் அழகாயில்லே, அதெல்லாம் ஒரே காடு, புதர். அங்கே யாரு போவாங்க...! இதோ இருக்குகொனார்க்கோட படம். இந்த கொனார்க்கிலே பார்க்கக் கூடியது நெறைய இருக்கு..."
"நீங்க போயிருக்கீங்களா?"
"என் நாத்தியோட புருசன் போயிருக்கார்."
"இப்போ எங்கே போறீங்க?"
"ராணி கஞ்ச்."
"யார்கிட்டேப் போறீங்க?"
அந்தப் பெண் சிரித்தாள். படங்களில் பெண்கள் சிரிப்பார்களே அந்த மாதிரி. பிறகு ஏதோ சொல்ல வந்தவள்,சொல்லாமல் மறுபடி சிரித்தாள். இதைப் பார்த்துத் தங்கையும் சிரித்தாள்.
"அடுத்த வருடம் அவருக்கு லீவு கிடைச்சா, நாங்க காஷ்மீர் போகப்போறோம்."
"அக்கா, ஏழாம் நம்பர் பிளாட்பாரத்திலேருந்து ரயில் கிளம்பப் போகுது. சீக்கிரம் வா!" என்று சொல்லிக்கொண்டுவந்த, அரை டிராயர் அணிந்த ஒரு பையன் சூட்கேசைக் கையிலெடுத்துக் கொண்டான். அந்தப்பெண் பிரம்புக் கூடையைக்கையில் தொங்கவிட்டுக்கொண்டு, "நான் வரேன்" என்றாள்.
அவர்கள் போனார்கள். தங்கையும் சற்று முன்னேறி இரும்புக் கிராதியில் கையை வைத்துக்கொண்டு ஏழாம் நம்பர்பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருக்கும் ரயிலைப் பார்த்தவாறு நின்றாள்.
***
இவ்வளவு சத்தம் இருந்தாலும் ஒன்றும் காதில் நுழையவில்லை அக்காவுக்கு. அவள் இரும்புத்தடி போல் தூணில் சாய்ந்து கொண்டு நின்றாள். காக்கியுடையும் தலையில் சிவப்புத் தொப்பியும் அணிந்த ஒருவன் அவள் பக்கம் வந்தான். தமக்கைக்குஒன்றும் காதில் விழவில்லை. அவன் அவளைக் கடந்து போனான், கடக்கும்போது ஒரு தடவை அவள் பக்கம் பார்த்தான்.
பிரயாணிகள் தங்குமிடத்துக்கே போய், அங்கே காத்திருப்பது நல்லது என்று அவளுக்குத் தோன்றியது. ஒருவேளை தங்கைஅங்கே போயிருக்கலாம்.
அங்கே பெஞ்சுகளில் காலியிடமில்லை. தமக்கை சுவரில் சாய்ந்து கொண்டு நின்றாள். முன்பு அங்கிருந்து போன பெண்மறுபடி அங்கே வந்தாள். உட்கார இடமில்லாதது கண்டு, தமக்கைக்கருகில் வந்து நின்றுகொண்டு, "இன்னும் வரலே"என்று சொன்னாள்.
"யாரு வராங்க?" என்று ஒப்புக்குக் கேட்டாள் தமக்கை. ஏதாவது பேசவேண்டுமே!
அந்தப் பெண்ணுக்குப் பெரிய பெரிய கண்கள். இரண்டு கண்கள் முகங்களுக்குப் பொருத்தமாயிருக்கும். அப்படிப்பட்டகண்கள் இப்போது அவளுக்குப் பொருத்தமாக மாறிவிட்டது. அவளுடைய மோவாய்க்குக் கீழே வயதால் ஏற்பட்ட மடிப்புசற்று அசைந்தது.
"யாரா? ஒருத்தருமில்லே..."
இதே வார்த்தைகளை வேறொரு குரலில் கேட்டிருக்கிறாள் தமக்கை... சின்னச் சித்தி அவள் கையில் இரண்டு ரூபாயைக்கொடுத்துவிட்டு, "நீ இப்படி அடிக்கடி வந்தா நான் என்ன பண்ணுவேன்?" என்றது ஞாபகம் வந்தது. அப்போது சித்தியின்அறையில் அவளுடைய அடுத்த வீட்டுக்காரி ஒருத்தி இருந்தாள். அவளுடைய கேள்விக்குச் சித்தி சொல்லிய பதில் வெளியேபோய்க் கொண்டிருந்த தமக்கையின் காதில் விழுந்தது "யாரா? ஒருத்தருமில்லே..."
"முப்பது ரூவாக் கூடச் சம்பளம்னு நூத்தம்பது மைல் தூரத்திலே வேலைக்குப் போயிட்டாரு. இதுக்கு என்ன தேவை?எனக்கு பள்ளியிலே கிடைக்கறதையும், இவர் இங்கேயே ஏதாவது சம்பாதிச்சா அதையும் வச்சிக்கிட்டு ஏழு பேருள்ள குடும்பத்தைநல்லா நடத்தலாமே!"
இதை ஆமோதிப்பது போல் தலையாட்டினாள் தமக்கை.
"நான் சொல்றதைக் கேக்கறதில்லே அவர். எட்டு வருசமாப் பார்த்துக்கிட்டு வரேன், ஆனா எங்க கலியாணதுக்கு முன்னாலேஎன் காசைத் தொடக்கூட மாட்டார்..."
"ஒங்க புருசன் எங்கே வேலை செய்யறார்?"
"டி.வி.சி.யிலே."
"எங்க அண்ணன் அங்கே வேலைக்கு முயற்சி பண்ணினார். கிடைக்கல்லே."
"அப்படியா? என் புருசனே ரொம்பப் பேருக்கு வேலை வாங்கிக் கொடுத்திருக்காரே ...! நான் அவரைக் கேட்டுப்பாக்கறேன்... நீங்க இங்கேதானே இருப்பீங்க...? இல்லே, ரயிலுக்கு நேரமாயிடுச்சா ?"
"இல்லே, நேரமாகலே... நான் இங்கேயே இருப்பேன்", தான் சொன்ன வார்த்தைகளே தமக்கையின் நெஞ்சிலிருந்து கிளம்பிஅவளுடைய காதுகளை நிறைந்தன "நான் இங்கேயே இருப்பேன்.:
"நான் இன்னொரு தடவை போய்ப் பார்த்துட்டு வரேன்."
அந்தப் பெண் போனாள். தமக்கையும் அவளுக்குப் பின்னால் சிறிது தூரம் போனாள். அந்தப் பெண் கூட்டத்தில்மறைந்ததும் தமக்கை திரும்பி வந்து ஸ்டேஷன் வாயிலில் நின்றாள். மாலை மங்கி வரும் நேரம். பஸ் ஸ்டாண்டில்பிரயானிகள் பஸ்களின் ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய முகங்கள் துருப்பிடித்த டப்பா மாதிரிதெரிகின்றன. மஞ்சள் வெயில் ஹௌரா பாலத்தின்மேல் விழுகிறது. ஹூக்ளியில் நின்று கொண்டிருக்கும் கப்பலிலிருந்துஊதல் ஒலி. தள்ளு வண்டியிழுக்கும் கூனன் தள்ளாடியவாறே வண்டியை பாலத்து மேட்டின் மேல் இழுத்துக்கொண்டுபோகிறான். பஸ் டிரைவர் பஸ்ஸிலிருந்து இறங்கிப் பீடிப்புகையை ஊதித் தள்ளுகிறான்...
லிலுவாவில் பெண்கள் விடுதி ஒன்று இருக்கிறது. வீட்டிலிருந்து ஓடிப்போக முயன்று பிடிப்பட்டவர்களைப் போலீஸ்முதலில் அங்கே வைத்திருக்கும்.
"நாங்க இங்கேயே இருப்போம்...! எங்களுக்கு வீடு வாசல் எதுவுமில்லே!... அப்படீன்னு பொலீஸ்கிட்டே சொல்லணும்,சொல்லுவீங்களா ?" அவர்களுடைய அண்ணன் அவர்களைக் கேட்டான். அவர்களுடைய அண்ணனிண் முகமும் இந்த அந்திமாலைபோலத்தானிருந்தது...
தமக்கை மறுபடி ஸ்டேஷனுக்குள் வந்தாள்...
* * *
இரும்புக் கிராதியைப் பிடித்துக் கொண்டு, ரயில் போவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் தங்கை. ரயிலின் ஜன்னல்களுக்குப்பின்னால் தெரிந்த முகங்கள் பிளாட்பாரத்தைப் பார்த்துச் சிரிக்கின்றன. இதே மாதிரி சிரித்துக்கொண்டே தானும் பிரயாணம்செய்ய ஆசையாயிருக்கிறது அவளுக்கு.
ரயில் லைன்களுக்குக் குறுக்காக ஒரு பெரிய பாலம். பிளாட்பாரத்திலிருந்து போகும் சாலை உயர்ந்துகொண்டேபோய்அந்தப் பாலதோடு இணைகிறது. மூன்று மனிதர்கள் கைகளில் பைகளுடன் அதில் நடந்து போகிறார்கள். அவர்கள் ஒரு மலைமேல் ஏறிக்கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது..
தமக்கை தனக்காகக் காத்துக் கொண்டிருப்பாள் என்பது அப்போதுதான் நினைவு வந்தது அவளுக்கு.
தங்கை பிரயாணிகள் தங்குமிடத்தில் தமக்கையைக் காணாமல் மறுபடி பெரிய கொட்டகைக்குக் கீழே வந்தாள்.அங்கே ஒரு கிழவன் எடை பார்க்கும் இயந்திரத்தில் தன் எடையைப் பார்த்துக் கொண்டான். தன் எடை அச்சிடப்பட்டசீட்டைப் பார்த்துவிட்டு அங்கிருந்து நடந்துபோய்விட்டான்.
"ரயில் புறப்பட இன்னும் மூணு நிமிஷந்தான் இருக்கு. இன்னும் வந்து சேரலே! கொஞ்சங்கூடப் பொறுப்பே இல்லே!"
தங்கை திரும்பிப் பார்த்தாள்.
ஆறேழு ஆண்களும் பெண்களுமடங்கிய ஒரு குழு.
"அவங்களுக்காகக் காத்துக்கிட்டிருந்தா ரயில் போயிடும்."
"பின்னே என்ன செய்யறது?"
அவர்கள் தங்களுக்குள் ஏதோ விவாதித்துவிட்டு அவசர அவசரமாக அங்கிருந்து போய்விட்டார்கள்.
சற்று நேரத்துக்குபின் மூக்குக் கண்ணாடியணிந்த பெண்ணொருத்தி அங்கே ஓட்டமும் நடையுமாக வந்தாள். ஒல்லியாகஇருந்தாள். ஏழாம் வகுப்பு மாணவிபோல் தோன்றினாள்.
அந்தக் குழுவிலிருந்தவர்கள் இவளைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தார்களென்று தங்கைக்குப் புரிந்தது.
"அவங்க இப்பத்தான் போனாங்க" என்று சொன்னாள்.
"போயிட்டாங்களா?" அந்தப் பெண் தன் கையிலிருந்த தோல் பையை இன்னும் இருகப் பிடித்துக் கொண்டாள். மூக்குக் கண்ணாடியை நன்றாக மூக்கின்மேல் பொருத்திக் கொண்டாள். பிறகு 'இப்போது என்ன செய்வேன்?' என்பதுபோல் பார்த்தாள்.
"நீங்க தனியாப் போக முடியாதா?"
"ஏன் போக முடியாது? ஆனா அவங்களோட போனா வீட்டைச் சுலபமாக கண்டுபிடிக்கலாம்.. அடே நீங்களா?"
கடைசிக் கேள்வி அப்போதுதான் அங்கு வந்த ஒரு இளைஞனிடம் கேட்கப்பட்டது.
அவன் பரபரப்போடு நெருங்கினான்.
"நீங்க இப்பத்தான் வரீங்களா?"
"ஆமா, நீங்க?"
"நானுந்தான்"
"பின்னே என்ன செய்யறது? ரயில் போயிடுச்சு.. ஒரு ஊர்வலத்திலே டிராம் ஆப்பிட்டுக்கிட்டது.."
"இந்த ஊர்வலமெல்லாம் எப்பத்தான் ஓயுமோ..? சரி, இப்ப என்ன பண்ணப் போறீங்க? ரயில் போயிடுச்சே!"
"கல்யாணத்துக்குப் போறோம். வீடு திரும்ப ராத்திரி பத்து, பதினொரு மணி ஆகும்னு வீட்டிலே சொல்லிட்டு வந்திருக்கேன்.இப்போ திரும்பிப் போனா எல்லாரும் கேலி பண்ணுவாங்க."
"சரி வாங்க, ரயில்லே பாண்டெல் வரைக்கும் போயிட்டு வரலாம்."
"அதுக்கு முன்ணனாலே ஏதாவது கொஞ்சம் சாப்பிடணும்."
அவர்களிருவரும் போய்விட்டார்கள்..
இப்போது ஸ்டேஷன் விளக்குகள் எல்லாம் எரிந்தன. ஒரு ரயில் வந்து நின்றது. ஜனங்கள் கூட்டங்கூட்டமாக ஸ்டேஷனுக்குள் நுழைந்தார்கள். இவ்வளவு கூட்டத்தைப் பார்க்கப் பிடிக்கவில்லை தங்கைக்கு. அவள் பிரயாணிகள் தங்குமிடத்துக்குமறுபடி திரும்பி வந்தாள்.
***
"நாசமாப் போறவனே! கொஞ்சம் முன்னாலே போயிருக்கக் கூடாது?" என்று சொல்லித் தம்பியின் கன்னத்தில் அறைந்துவிட்டாள் அம்மா. அவன் அழைப்பில்லாமல் ஒரு கல்யாண விருந்துக்குப்போய் அங்கே அடிவாங்கிக்கொண்டு வந்திருந்தான்.தமக்கைகளைப் பார்த்துவிட்டுக் குய்யோ முறையோ என்று அழுதான் அவன். அப்போது அவன் முகமும் இது மாதிரிதான்சப்பட்டையாயிருந்தது.
தான் பார்த்துக்கொண்டிருந்த படங்களுக்கு இன்னும் அருகில் வந்தாள் தமக்கை. ரயில் விபத்துக்குள்ளாகி இறந்தவர்களின் படங்கள் அவை. கண்ணாடி போட்ட ஒரு சட்டத்துக்குள் அவை ஒட்டப்படிடிருந்தன. அவளுடைய முகத்தின் நிழல்கண்ணாடியில் விந்தத. அதில் தன் முகத்தை நன்றாகப் பார்ப்பதற்காகச் சற்று ஓரமாக நகர்ந்தாள். அப்போது படங்களிலிருந்த முகங்கள், அவலட்சணமாக, பயங்கரமாகத் தெரிந்தன..
அண்ணன் ஒருநாள் கத்தினான், "நான் என்ன செய்யறது? முயற்சி பண்ணிக்கிட்டுத்தானே இருக்கேன்!"
தமக்கை அந்தக் கண்ணாடிக்குக் கீழே தன் அண்ணனின் முகத்தையே கண்டாள். அவளுக்குத் தன் அண்ணன்மேல்இரக்கம் ஏற்பட்டது. ரயிலில் அரைபட்டு இறந்தவர்களுக்காக வேதனைப்பட்டாள் அவள்.
புருஷனின் வரவுக்காகக் காத்திருந்த பெண் இப்போது தமக்கையின் பார்வையில் பட்டாள். அவள் தன் கணவனோடுபோய்க்கொண்டிருந்தாள். கணவனின் கைகளில் ஒரு சூட்கேஸ், ஒரு படுக்கை. தமக்கை ஓடிப்போய் அந்தப் பெண்ணின் கையைப் பிடித்துக் கொண்டு, "இவரோட விலாசத்தைக் கொடுங்க. என் அண்ணனை வந்து பார்க்கச் சொல்றேன்" என்று சொன்னாள். சொல்லிவிட்டு அந்தப் பெண்ணின் பெரிய பெரிய கண்களை, கீழே தொங்கும் மோவாயை, உடைந்துபோன, மண் அடுப்பு போன்ற உதடுகளைப் பார்த்தாள்.
"அங்கே வேலைக்குறைப்பு நோட்டீஸ் போட்டுட்டாங்களாம்."
அந்தப் பெண் போவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் தமக்கை. யாரோ அவளுடைய தோளில் சூட்கேசையும் படுக்கையையும் சுமத்தினாற் போலிருந்தது அவளுக்கு. மயக்கம் வந்தது. கண்ணிமைகள் கனத்தன. சிரமப்பட்டுக் கண்ணைத் திறந்துபார்த்தாள். தங்கை இதற்குள் திரும்பி வந்திருக்கலாம்.
பிரயாணிகள் தங்குமிடத்துக்கு வந்த தமக்கை அங்கு தங்கை வந்திருப்பதைக் கண்டாள்.
இருவரும் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தார்கள். பிறகு பெரியவள், "இங்கே உக்காந்திருந்து என்ன பிரயோசனம்? அந்தப்பக்கம் போகலாம், வா" என்று சொன்னாள்.
அவர்கள் எழுந்து ஸ்டேசனின் மறுகோடிக்கு வந்தார்கள்.
"இப்போ நாம என்ன செய்யறது?" சிறியவள் கேட்டாள்.
பெரியவள் சற்று யோசித்துவிட்டு, "இங்கே கொஞ்ச நேரம் நிக்கலாம்" என்றாள்.
அப்போது அந்த ஆண்-பெண் ஜோடி உணவு விடுதியிலிருந்து வெளியே வந்தது. "இப்போ இவங்க சுத்தப் போவாங்க"என்று தங்கை நினைத்தாள்.
தங்கை எச்சில் துப்பினாள், இருமினாள், முதுகைக் குனிந்து கொண்டு வாந்தியெடுக்க முயன்றாள். தமக்கை அவளுடையமுதுகைத் தடவிக் கொடுத்தாள், அவளைத் தன் மார்போடு கட்டிக் கொண்டாள், பிறகு கேட்டாள், "ஏதாவது சொன்னியா?"
"இல்லியே"
"ஒனக்குப் பசிக்குதா?"
"இல்லே."
மறுபடி உணவு விடுதியின் கதவு திறந்தது. கப்பலின் சங்கு ஒலித்தது.
"சங்குச் சத்தம் மாதிரி இருக்கு, இல்லே?" தங்கை சொன்னாள்.
"ஆமா."
"அக்கா, ஒனக்கு ஞாபகம் இருக்கா? ஒரு தடவை அப்பாவோடே ஆத்தங்கரைக்குப் போனபோது ஒரு ரயில் இஞ்சின்மேலே ஏறினமே!"
"ஆமா."
"டிரைவர் என்னைத் தூக்கி வச்சுக்கிட்டான். அவனுக்கு ஒரு தங்கப் பல் இருந்தது."
"இஞ்சின் விசில் ஊதினபோது நீ பயந்துபோய் அவன் நெஞ்சிலே ஒளிஞ்சுக்கிட்டே."
தங்கை சிரித்தாள்.
"இதோ பாரு!" தமக்கை சொன்னாள்.
மணமகன் மணமகளை வீட்டுக்குக் கூட்டி வருகிறான். புதிய பெட்டி, புதுப் படுக்கை, புது உடைகள், நகைகள்.மணமகள் இயந்திரம் மாதிரி நடக்கிறாள். மணமகன் சிகரெட் புகையை இழுக்கிறான்.
"பார்திதியா அக்கா, அவன் முன்மண்டை வழுக்கை!"
"ஆமா."
"ரொம்ப வயசாயிடுச்சு மாப்பிள்ளைக்கு."
"ஆமா."
"அண்ணனோட அந்த சிநேகிதன் ஏன் அப்பறம் வரல்லே?"
"எனக்கென்ன தெரியும்?"
"ரொம்ப நல்லாப் பேசுவான் அவன்"
தமக்கை ஒன்றும் பேசவில்லை.
"அவன் ஒருநாள் சாக்லேட் வாங்கிக்கிட்டு வந்தான், ஞாபகமிருக்கா?" தமக்கையிடமிருந்து பதில் இல்லாவிட்டாலும்தொடர்ந்து பேசினாள் தங்கை, "அவனுக்கு ஒன்னைப் பிடிச்சிருக்குன்னு அம்மா சொன்னா."
"பேசாமே இரு இப்போ!"
தங்கையின் கண்களில் நீர் நிறைந்தது. அவள் தனக்கு வந்த இருமலை அடக்குவதற்காகக் குனிந்து கொண்டாள். மெல்லியகுரலில் "தண்ணி வேணும்" என்றாள்.
"குடிச்சுட்டு வா."
தங்கை போகவில்லை. தமக்கைக்கு மயக்கம் வரும் போலிருந்தது. அவள் கண்கொட்டாமல் முன் பக்கம் பார்த்துக்கொண்டிருந்தாள்.
"இப்போ என்ன செய்யறது?" தங்கை கேட்டாள்.
"தெரியாது."
"அண்ணன் என்ன சொன்னான்?"
தமக்கை ஞாபகப்படுத்திக்கொள்ள முயன்றாள்.
"இப்போ அவங்க வருவாங்களா?"
"ஏன்?"
"இல்லேன்னா நாம எதுக்காக இங்கே வந்திருக்கோம்?" தமக்கை நாற்புறமும் திரும்பிப் பார்த்தாள். மனிதர்கள், வெளிச்சம்,ஒலிகள் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, கேட்டுவிட்டு மறுபடியும் வெறிச்சென்று நேரே பார்த்தாள். பிறகு சோர்ந்த குரலில்சொன்னாள், "அவங்க வருவாங்க. வந்து 'நீங்க யாரு, எங்கே போகணும், ஏன் போகணும்?' இப்படியெல்லாம் கேப்பாங்க.நாம என்ன சொல்லணும், தெரியுமா? 'நாங்க அக்கா-தங்கை. எங்களுக்கு சொந்தக்காரங்க ஒருத்தருமில்லே. நாங்க பம்பாய்போய் அங்கே சினிமாவிலே சேரப் போறோம்'னு சொல்லணும், அவங்க நம்ம விலாசத்தைக் கேப்பாங்க. நாம சொல்லக்கூடாது.அவங்க நம்மைப் பிடிச்சுக்கிட்டுப் போய்ப் பெண்கள் விடுதிக்கு அனுப்பிடுவாங்க.."
"அங்கே என்ன பண்ணுவாங்க?"
"எனக்குத் தெரியாது."
"அக்கா, வா. நாம ஓடிப் போயிடுவோம்.."
கொஞ்சங் கொஞ்சமாகப் பெரியவளின் சோர்வு கலைந்தது. அவள் நிதானமாகக் கேட்டாள், "எங்கே போறது?"
"எங்கே வேணும்னாலும் போகலாம்."
"அப்பறம்?"
தமக்கை கைகளை நீட்டித் தங்கையைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டாள். தலை குனிந்து "பயந்துட்டியா?"என்று கேட்டாள்.
தங்கை தமக்கையின் நெஞ்சில் முகத்தைப் பதித்துக்கொண்டு வெட வெட வென்று நடுங்கத் தொடங்கினாள். தமக்கைஅவளுடைய முதுகில் கையை வைத்துக்கொண்டு தானும் நிமிர்ந்து உட்கார்ந்தாள்.
ஒருத்தி நினைத்தாள் - மனிதனின் முகம் துருப்பிடித்த டப்பா மாதிரி.
இன்னொருத்தி பார்த்தாள் - ரயிலின் முகம் சிரித்தவாறு போய்க்கொண்டிருந்தது.
(தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள், 1971)
18. பஞ்சம்
சிப்தாவிலிருந்து டால்டன்கஞ்ச் செல்லும் வழியில் வண்டி நின்றுபோய் விட்டது. புத்தம் புதிய, பளபளப்பான ஸ்டேஷன்வாகன், அது திடீரென்று பழுதாகிவிடும் என்று யாரும் நினைக்க வில்லை. அது பாலத்தைக் கடந்து மேட்டின்மேல் ஏறும்போதும்,பலவீனமாக இரண்டு மூன்றுமுறை முனகிவிட்டு நின்றபோதும் ஒருவரும் அதைப் பெரிதாக நினைக்கவில்லை. 'ஏதோ நின்னிருக்கு,இதோ கிளம்பிவிடும்' என்ற நினைப்பில் பிரயாணிகள் வண்டியின ஜன்னல் வழியே இயற்கையை ரசிக்கத் தொடங்கினார்கள்.மிஸ்டர் கேம்கா தன் சிகரெட் பெட்டியைத் திறந்து எல்லாரிடமும் நீட்டி அவரவருக்கு ஏற்றவாறு ஆங்கிலம், இந்தி, வங்காளியில்பேசி அவர்களை சிகரெட் எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். பெட்டியில் எட்டு சிகரெட்டுகள் இருந்தன. ஒரேசுற்றில் பெட்டி காலி.
பத்து நிமிடங்களாகியும் வண்டி நகரவில்லை. பின்னால் வந்த லாரி ஒன்று வழிகேட்டு ஒலிப்பானை ஒலிக்கத் தொடங்கியது.இப்போது கேம்கா தாமே கீழே இறங்கி வந்தார்.
குறுகிய பாலத்தைக் கடந்ததும் சாலை ஆற்றங் கரையிலிருந்தே செங்குத்தாக மேலே போகிறது. ஆறு இல்லை,ஆற்றின் எலும்புக்கூடுதான், இரத்தம் தசை எதுவுமில்லை. அருணும் இறங்கி வந்தார். வண்டிக்குள் ஒரே வெக்கை. அவர்கைகளைப் பின்பக்கம் நீட்டி நெஞ்சை விரித்துச் சோம்பல் முறித்துக் கொண்டார். உடம்பு அசத்துகிறது; குளித்தால்தான்ஒரு நிலைக்கு வரும். ஆற்றில் தண்ணீர் இருந்தால் உடனே இறங்கிக் குளித்திருக்கலாம். இப்போது மணி பதினொன்றரைதான். ஆனால் இதற்குள் எரிச்சலூட்டும் வெயில்-அசட்டுப் பரிகாசம் போல. இந்த இடத்தில் வண்டிகள் அடிக்கடி பழுதாகும்போலும்; அல்லது இந்தப் பக்கம் வருபவர்கள் வேண்டுமென்றே இங்கு வண்டிகளை நிறுத்துவார்கள் என்று தோன்றகிறது.ஏனென்றால் சாலை ஓரத்தில் பாறையின்மேல் கரியாலும் சாக்குக் கட்டியாலும் நன்றாகப் படித்தவர்களின் கையெழுத்தில்எழுதப்பட்ட வாசகங்கள் காணப்பட்டன. இவர்களுக்குச் சாக்குக் கட்டி எப்படிக் கிடைத்தது? இவர்கள் வீட்டைவிட்டுக் கிளம்பும்போது சாக்குக் கட்டியையும் எடுத்துக்கொண்டு புறப்படுவார்களா ...?
எழுதப்பட்டிருந்த வாசகங்களில் மிகவும் அழுத்தமாகத் தெரிந்த வாசகம் 'மந்திரா + லால் கலம் = சுவர்க்கம்!'
அருண் முணுமுணுத்தார் "அடக் கடவுளே !"
ஓட்டுநர் வண்டியின் முன்பக்க மூடியைத் திறந்தார். கேம்கா அங்கு வந்து எட்டிப் பார்த்தார். வண்டிக்குள் இருந்த 'ஹெரால்டுட்ரிப்யூன்' பத்திரிக்கையின் நிருபர் லாகிரி எரிச்சலடைந்து "கேம்கா என்ன ஆச்சு ?" என்று கத்தினார்.
கேம்கா எந்த நிலையிலும் கலங்காதவர். அவர் சொன்னார், "வண்டி தகராறு செய்யுது... அப்ப ஒண்ணு பண்ணலாம்.பக்கத்திலேதான் ரூபா டுங்ரி விடுதி. நாம அங்க போய்ப் பகல் சாப்பாட்டை முடிச்சுக்கலாம்..."
இதற்குள் மூன்று நான்கு பேர் வண்டியிலிருந்து இறங்கி விட்டார்கள்.
எப்போதும் காலை வேளையில் நல்ல மூடில் இருக்க மாட்டார் லாகிரி. அவர் காலை வேலைகளில் 'ஹெல்' என்றவார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவதைக் கவனித்திருக்கிறார் அருண். லாகிரி முகத்தைச் சுளித்துச் கொண்டு கைக்கடிகாரத்தைப்பார்த்துக் கொண்டார் நேரத்தைத் தெரிந்துகொள்ள அல்ல, தேதி தெரிந்துகொள்ள. பிறகு சொன்னார், "ஐயோ ! இன்னிக்குஎட்டாந்தேதி, இன்னிக்கே எனக்குப் பாட்னா போய்ச் சேரணும். ஒங்க டாடா கம்பெனி இந்த ஒட்டை வண்டியைக் கொடுத்திருக்கு..."
ஹாஹாவென்று சிரித்தார் கேம்கா. "இது புத்தம் புது வண்டியாக்கும், அதனால்தான் கொஞ்சம் தொல்லை கொடுக்குது..வாங்க, வாங்க..! இது ரொம்ப நல்ல, சின்ன பங்களா. ஒங்களுக்குப் பிடிக்கும்.. மிஸ்டர் ரங்காச்சாரி, நீங்க என்ன சொல்றீங்க?"ரங்காச்சாரிக்கு ஆட்சேபமில்லை. மற்றவர்களும் இந்த யோசனையை எதிர்க்கவில்லை.
ஆனால் மற்ற பத்திரிக்கைகளை விடப் பெரிய ஆங்கிலப் பத்திரிக்கையின் நிருபர் என்ற முறையில் லாகிரிதான் அதிக ஆர்ப்பாட்டம் செய்தார். அவர் முணுமுணுக்க ஆரம்பித்தார், "இன்னிக்கு மூணு மணிக்கு நான் டால்டன் கஞ்ச் ஜில்லாமாஜிஸ்டிரேட்டைச் சந்திக்கணும்... நல்ல சங்கடம்..! பங்களா எவ்வளவு தூரம்? இந்த வெயில்லே எங்களை நடக்கவைக்கப்போறீங்களா ?"
"கொஞ்ச தூரந்தான் .. இதோ இங்கேயிருந்தே தெரியுதே!"
"அங்கே ஏதாவது சாப்பிடக் கிடைக்குமா? இந்தப் பகுதியிலே சாப்பாட்டு விடுதி எதையும் காணோமே!"
"அதையெல்லாம் நான் கவனிச்சுக்கறேன். என்கிட்டேயும் உணவுச்சாமான்கள் இருக்கு. ஒரு அசௌகரியமும் இருக்காது."
எதற்கும் கலங்குபவரல்ல கேம்கா. இப்போதுதான் லாகிரியோடு மலர்ந்த முகத்துடன் பேசிக்கொண்டிருந்த அவர்திடீரென்று முகத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டு ஓட்டுநரை ஏதோ திட்டினார். மறு நிமிடமே மறுபடியும் மலர்ந்த முகத்துடன்லாகிரியிடம் சொன்னார், "எதிர்பாராம இந்த மாதிரி ஏதாவது நேர்ந்துட்டா எனக்கு ரொம்ப குஷியா இருக்கும்.. வாங்க,போகலாம்."
வண்டியின் பணியாள் சாமான்களைத் தூக்கிக்கொண்டு அவர்களுக்குப் பின்னால் நடந்தான். இன்னும் ஒரு பெட்டி பீர்,மூன்று போத்தல் ஸ்காட்ச் பானம், கொஞ்சம் இறைச்சி இவை மிச்சமிருப்பதை ஓரக்கண்ணால் கவனித்த லாகிரியின் முகத்திலிருந்த கடுப்பு சற்றுக் குறைந்தது.
பயணிகள் விடுதியில் இரண்டு அறைகள், சுத்தமான பாத்ரூம், மூன்று பணியாட்கள். மத்திய அரசின் மந்திரியொருவர்அங்கு தங்கிவிட்டு அப்போதுதான் அங்கிருந்து புறப்பட்டுப் போயிருந்தார். ஆகையால் பணியாட்கள் இன்னும் சீருடையைக்கழற்றவில்லை. கேம்கா ஒரு தேர்ந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் போல் அனாயாசமாக எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டார்."கோழி மட்டும் மூணுக்கு மேல கிடைக்கல்ல!" என்று வருத்தப் பட்டுக் கொண்டே அவர் பீர்போத்தலைத் திறக்கத் தொடங்கினார். லாகிரியின் புருவச் சுருக்கங்கள் சற்றுக் குறைந்திருந்தன. அவர் மேஜையின் மேல் கால்களைப் போட்டுக்கொண்டுகேட்டார், "கேம்கா, இங்கே பக்கத்திலே ஒங்க டாட்டா கம்பெனி யோட உணவு முகாம் ஏதாவது இருக்கா?"
"இந்தப் பக்கம் இல்லே. நாங்க நாலு இடத்தில் உணவு விடுதி திறந்திருக்கோம். ஒண்ணுதான் நேத்திக்கு நீங்க பார்த்தது.."
"நல்லவேளை பிழைச்சேன்! இந்த மூணு நாளா நீங்க எங்களை இழுத்தடிச்சே..!"
"இழுத்தடிச்சேனா..? மிஸ்டர் லாகிரி, நீங்க வாழ்க்கைய எதிர் கொள்ளணும், நீங்க பத்திரிகைக்காரங்க.."
"காலை வேளையிலே என் வாயிலிருந்து திட்டை வர வழைக்காதே! வாழ்க்கையாம்! (எழுத முடியாத வசவு). சரி,ஊத்து"
"நாட்டு நிலைமை என்னன்னு நீங்க நேரடியாப் பார்க்க வேணாமா? வெளிநாட்டு நிருபர்கள்கூட.."
"நாட்டு நிலைமையைக் காண்பிக்க ஒங்களுக்கு ஏன் இவ்வளவ அக்கறை..? சும்மா வளவளன்னு பேசிக்கிட்டிருக்காதே!நாசூக்குத் தெரியாதவன்! அருண், ஒங்கிட்டே சார்மினார் இருந்தால் ஒண்ணு கொடு!"
கேம்கா இதற்குள் தன் சிகரெட் பெட்டியை நிரப்பிக் கொண்டு வந்து அதை லாகிரிக்கு முன்னால் நீட்டினார். லாகிரிசொன்னார், "ஒன்னோட அந்த கோல்டு ஃப்ளேக் குடிச்சுக் குடிச்சு வாய் சப்புனு போயிடுச்சு! சீ! அருண், ஒரு சார்மினார்கொடு!"
அருண் தூரத்திலிருந்தே தன் சிகரெட் பெட்டியை லாகிரியிடம் எறிந்துவிட்டு, "லாகிரி அண்ணா, இன்னிக்குஇங்கேயே தங்கிடலாமே! இந்த இடம் ரொம்ப அமைதியா இருக்கு" என்றார்.
"ஒனக்கென்ன! நினைச்சா ஒரு வாரம் ரெஸ்ட் எடுக்கலாம். எனக்கு நாளன்னிக்குக் கல்கத்தாவிலே பிளேனைப் பிடிக்கணும்.ஒருநாள் வேஸ்டா.. என் மூடு அவுட்டாயிடுச்சு, ஒண்ணும் பிடிக்கலே.."
"வாஸ்தவம், பொறுத்துக்க முடியாதுதான்! எவ்வளவு பரிதாபமான காட்சிகள்.."
" என்ன பரிதாபம்? என்ன?"
லாகிரி கால்களைத் தொங்கவிட்டுக்கொண்டு நேராக உட்கார்ந்து கொண்டார். அவருக்குப் பெரிய உடம்பு, அகலமானமுகம். சோடாபுட்டி மூக்குக் கண்ணாடி. இருந்தாலும் முகத்தில் ஒருவகைக் குழந்தைத்தனம் இருந்தது. கோபம், வியப்பு, எரிச்சல்,சோர்வு ஆகிய உணர்ச்சிகள் அதில் தெளிவாகப் பிரதிபலித்தன. அவர் கலப்படமில்லாத ஆச்சரியத்தோடு "எது பரிதாபம்?"என்று கேட்டார்.'பம்பாய் ட்ரிப்யூன்' பத்திரிகை நிருபர் தேஷ்பாண்டே சொன்னார், "மிஸ்டர் லாகிரி, நீங்க பார்த்தீங்களா? நான் அதைபோட்டோ எடுத்து வச்சிருக்கேன்.. பேத்லா உதவி முகாமிலே உணவுக்காக வரிசையா உக்காந்திருந்தவங்களிலே ஒரு கிழவன்ஒரு கிழவியோட மடியிலே தலையை வச்சக்கிட்டு அப்படியே செத்துப்போயிட்டான்..! இதையெல்லாம் மனுசன் கண்ணாலபார்க்க முடியுமா? ஜெயப்பிரகாஷ் இதைப் பார்த்துட்டு வேர்வையைத் தொடைச்சுக்கறார். நான் கவனிச்சேன். நானும்கண்ணை மூடிக்கிட்டேன்."
ரங்காச்சாரி சிரித்துக்கொண்டே சொன்னார், "ஆனா கண்ணை மூடிக்கறதுக்கு முன்னாலே போட்டோ எடுத்துட்டியோல்லியோ? இப்ப அந்தப் படத்தை டைம்ஸ் பத்திரிகைக்கோ, கார்டியன் பத்திரிகைக்கோ வித்து.."
"மாட்டேன், மாட்டவே மாட்டேன்! நம் நாடு பத்தின இந்த வெட்ககரமான விஷயத்தை வெளிநாட்டுக்காரங்களுக்குவிற்க மாட்டேன்!" அழுத்தமாகக் கூறினார் தேஷ்பாண்டே.
அவர்களுடைய உரையாடலைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த லாகிரி சொன்னார், "இதுதான் பரிதாபக்காட்சியா? நம்ம நிலைமை அதைவிடப் பரிதாபமில்லையா? இந்த ராஸ்கல் கேம்கா.."
கேம்கா உதட்டில் சிரிப்புடன் மிகவும் பயந்தவன்போல் நடித்தவாறு "ஐயா, நான் என்ன குத்தம் பண்ணினேன்?" என்றுகத்தினான்.
"நீதான் எல்லா அனர்த்தத்துக்கும் காரணம்!"
"ஏன்? நாட்டிலே என்ன நடக்குதுன்னு நீங்க.."
"நாட்டிலே என்ன நடக்குதுன்னு நாங்களாகவே பார்த்துக்குவோம், அல்லது எங்க பத்திரிகைகள் எங்களைப் பார்க்கஅனுப்பும். நீ ஏன் எங்களை அழைச்சக்கிட்டு வந்து இதை யெல்லாம் காமிக்கறே? நீங்க எவ்வளவு தான தருமம் பண்றீங்கன்னு தம்பட்டம் அடிச்சுக்கணும்! மனுசங்க செத்துப்போயிக்கிட்டு இருக்கறதைப் பார்க்க யாராவது ஜனங்களை அழைச்சக்கிட்டு வருவாங்களா? ராவும் பகலும் எங்களுக்கு ஸ்காட்ச் குடிக்கக் கொடுக்கிறே. எங்களை வசதியா வச்சுக்கறே, நடுநடுவிலேகூட்டிக்கிட்டுப்போய் மனுசங்க சாகறதைக் காமிக்றே.. அசிங்கம், பயங்கரம்..! ராஸ்கல், நீங்க கொடுக்கறதையெல்லாம் சாப்பிடறேங்கறதுக்காக நான் ஒங்களை நேசிக்கறேன்னு நினைச்சுக்காதே..! நான் குடியன், நல்ல சர்க்கைப் பார்த்தாக் குடிக்காமே இருக்கமுடியாது.. ஆனா அதுக்காக இந்த மாதிரியா..?"
கேம்காவின் பாவனை இப்போது முற்றிலும் மாறிவிட்டது. அவர் மெல்லக் கைகளைத் தட்டிக்கொண்டு சொன்னார், " நீங்கசொல்றது ரொம்பச் சரி! ஒங்க கருத்தை அப்படியே ஒப்புத்துக்கறேன் நான் ஆனா, இது என்னோட வேலை.."
லாகிரி நாற்காலியிலிருந்து எழுந்துபோய் வராந்தாவுக்கு வெளியே எச்சில் துப்பினார். பையிலிருந்து கைக்குட்டையைஎடுத்து மூக்கைத் துடைத்துக் கொண்டார். அவர் மூக்குக் கண்ணாடியை எடுத்ததும் அவருடைய முகம் ஒரு குழந்தையின்முகம்போல் ஆகிவிட்டது. பரிதாபகரமாகச் சொன்னார், "நிசமாவே ஒண்ணும் பிடிக்கலே எனக்கு.. சரி, சமையல்ஆயிருச்சான்னு பார்த்துட்டுவா. எனக்குப் பசிக்குது. இன்னுங் குடிச்சா அப்புறம் சாப்பாடே இறங்காது."
பயணிகள் விடுதியின் வாசலில் ஒரு பெரிய கிணறு. ஜனங்கள் கூட்டம் கூட்டமாக அங்கு தண்ணீரெடுக்க வந்தார்கள். விடுதியின் பணியாளன் ஒருவன் அங்கே காவலிருந்து கொண்டு அவர்களில் யாரும் ஒரு குடத்துக்கு மேல் தண்ணீர் எடுக்காதபடி பார்த்துக் கொண்டான். அருண் அந்தப்பக்கம் பார்த்துக் கொண்டிருந்தார்.
லாகிரி அருணுக்கு அருகில் வந்து சொன்னார். "என்ன பார்க்கறே? பொம்பிளைகளையா? ஏழு வருஷம் முன்னாலே இதே பாலாமாவுக்கு வந்திருந்தேன்.. அப்போ எனக்கு ஒன் வயசு இருக்கும். அப்போ கவனிச்சேன், இந்த ஓராவ் சாதிப் பெண்களுக்கெல்லாம் என்ன கட்டுமஸ்தான உடம்பு ஆகா! இப்போப் பாரு, ஒருத்திக்கும் புட்டமே இல்லே, மாரே இல்லே!"
அருண் பதில் சொல்லாமல் லாகிரியைப் பார்த்துச் சிரித்தார்.
லாகிரி தொடர்ந்து பேசினார், "எப்படி இந்தக் காட்சியை வர்ணிக்கறதுன்னு நிச்சயம் பண்ணிட்டியா? ஒங்க வங்காளிப் பத்திரிக்கையிலே எல்லாம் கவிதை மாதிரி ஆர்ப்பாட்டமா எழுதணுமே! சரி, நான் சொல்றேன், எழுதிக்க, 'எண்ணற்ற மக்களின் முகங்களில் சோகத்தின் சித்திரம்...?' இல்லே, 'சித்திரம்' என்ற வார்த்தை ரொம்பப் பழசாயிடுச்சு, 'வியர்வை' ஆமா, அதுதான் சரியான வார்த்தை 'வேதனையின் வியர்வை...' 'வெய்யில்', 'செவிட்டு வெய்யில்...' ஆகா, ஒனக்குச் செய்தியோடதலைப்புகூடச் சொல்லிக் குடுத்துடறேன் - ' வானத்தில் செவிட்டு வெய்யில், கீழே வேதனையின் வியர்வை!' ஆகா கவிதைதான் போ!"
அருண் பதில் சொல்லாமல் மறுபடி சிரித்தார். ஆனால் இந்தச் சிரிப்பு சற்று வேறுவிதமாயிருந்தது. லாகிரி இதைக் கவனித்துவிட்டுச் சொன்னார், "நான் கொஞ்சம் அதிகமாப் பேசறேன், இல்லியா? ஒளர்றேன்.. நினைச்சுப் பாரு, ஆயிரக் கணக்கான ஜனங்க சோத்துக்கில்லாம துடிக்கறாங்க, நாம என்ன செய்யறோம்? அவங்க நிலைய எந்த மொழியிலே வர்ணிக்கறதுன்னு யோசிச்சு கிட்டிருக்கோம்! சே, ஒண்ணும் பிடிக்கலே எனக்கு!"
"லாகிரி அண்ணா, இந்த பக்கத்துக்கு எங்கிருந்தோ ஒரு சன்னியாசி வந்திருக்காராம். மக்களுக்குச் சேவை செய்யறாராம்.
"அது யாரு சன்னியாசி?"
"பம்பாய் பக்கத்திலேருந்து வந்திருக்காராம். தினம் ஆயிரம் பேருக்குச் சாப்பாடு போடறாராம். அவரோட பக்தர்கள் அவருக்குப் பணமும் அரிசியும் அனுப்பறாங்களாம்... ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு இல்லே? வாங்களேன், எப்ப இங்க தங்கறோமோ, அப்ப அவரையும் போய்ப் பார்த்துட்டு வந்திடலாமே!"
"சன்னியாசி சாப்பாடு போடறார்னா அதிலே ஒனக்கென்ன வந்தது?"
"அது ஒரு பெரிய நிகழ்ச்சி இல்லயா? ஒங்க ஆங்கிலப் பத்திரிகைக்குச் சுவையான செய்தியாயிருக்குமே!"
"அட, சும்மாயிருப்பா..! இந்த பீர் ஒரே கசப்பு..! வயித்தப் போக்குக் கஷாயம் குடிக்கற மாதிரி இருக்கு.. கலப்படம்பண்ணியிருக்காங்க போலேயிருக்கு.."
"பீர் கொஞ்சம் கசக்கத்தான் செய்யும்.."
"சும்மா ஔறாதே! நீ பால் குடிக்கற குழந்தை..! பீர் கசக்கும்ன எனக்குச் சொல்லித் தர்றயாக்கும்!"
முகத்தைச் சுளித்துக் கொண்டார் லாகிரி -- மூக்குக் கண்ணாடி இல்லாமல் பரிதாபமாகத் தோற்றமளிக்கும் முகம்..
லாகிரி முதலில் ஒருவரிடமும், பிறக இன்னொருவரிடமும் போய் வளவளவென்று ஏதோ உளறிக் கொண்டேயிருக்கிறார்.மற்றவர்கள் கத்துகிறார்கள். அவர் திடீரென்று கேம்காவைப் பார்த்துக் கத்தினார், "கேம்கா ராஸ்கல்! இரு, இரு.. நான்ருஸ்தம்ஜீகிட்டே ஒன்னைப் பத்திப் புகார் பண்றேன்! ஒன்னை ராஞ்சிக்கு மாத்தச் சொல்றேன், பாரு!"
கேம்கா வராந்தாவின் ஓரத்தில் உட்கார்ந்திருந்தார். வெயில் அவர் முகத்தில் விழுந்து கொண்டிருந்ததால் முகம் பளபளத்தத.அவர் இனிய குரலில் சொன்னார். "அப்படி நீங்க செஞ்சீங்கன்னா என்னோட நல்லதுக்குத்தான் செய்வீங்க. நீங்க எப்போதும் என்நண்பர்தான்!"
"நண்பர்! வெங்காயம்?"
"எப்போதும் என் நண்பர்தான் ..! அது சரி, இப்போ நான் என்ன குத்தம் பண்ணினேன்?"
லாகிரி இடுப்பில் கையை வைத்துக் கொண்டு நின்றார். கேம்காவின் குற்றம் என்னவென்று யோசித்தார். இங்குமங்கும்பார்த்தார். தன் கையிலிருந்த காலி டம்ளர் அவரது பார்வையில் பட்டது. "இவ்வளவு நேரமா உள்ளூர் பீரையே குடுச்சுக் கிட்டிருக்கியே.. ஸ்காட்சை ஒன் வப்பாட்டிக்குக் குடுக்கப் போறியா?"
கேம்கா உடனே எழுந்து மேஜைக்கடியிலிருந்து ஸ்காட்சை எடுத்துக்கொண்டே சொன்னார், "ஒங்களுக்கு மனசு சரியில்லாதபோதெல்லாம் விஸ்கி சாப்பிடறதுக்குப் பதிலா பீர்தானே சாப்பிடுவீங்கன்னு.."
"எனக்கு மனசு சரியில்லேன்னு ஒனக்கு யாரு சொன்னாங்க, முட்டாள்! எனக்குப் பசிக்குது.. சாப்பாட்டுக்கு செய்யுன்னு நான் அப்பவே பிடிச்சுச் சொல்லிக்கிட்டிருக்கேன்.."
சாப்பாடு தயார். வெள்ளை வெளேரென்று சிறுமணி அரிசிச் சாதம், டப்பா வெண்ணெய், உருளைக்கிழங்கு பொரியல்,கோழிக் குழம்பு.
ரங்காச்சாரி அருணிடம் கிசுகிசுத்தார்,"இவ்வளவு நாளிலே இன்னிக்குத்தான் அரிசி ரொம்ப நல்லாயிருக்கு .. கடுமையானபஞ்சப் பகுதியிலேதான் நமக்கு ரொம்ப நல்ல அரிசி கிடைச்சிருக்கு.. இல்லியா?
"குழம்பும் பிரமாதம்! ரொம்ப நல்லா சமைச்சிருக்கான்."
"ஆனா, காரம் கொஞ்சம் சாஸ்தி."
அப்போது பிற்பகல் மணி ஒன்றுதான். ஆனால் இதற்குள் நல்ல போதை லாகிரிக்கு. அவர் விரல்களால் சோற்றைஅளைந்தாரேயொழியச் சாப்பிடுவதாகக் காணோம். அவருடைய கண்கள் குழம்பிக் கிடந்தன. இன்று முழுவதும் இப்படித்தானிருக்கும். ஆனால் இதே ஆள் தன் ரிப்போர்ட்டை டைப் செய்ய உட்காரும்போது முற்றிலும் மாறிப்போய் விடுவதைஅருண் கவனித்திருக்கிறார். அபார ஞாபக சக்தி அவருக்கு; ஆங்கிலம் எழுதுவதில் திறமையும் அவ்வாறே. அப்போதுகாரியத்தில் கண்ணாயிருப்பார் லாகிரி.
"லாகிரி அண்ணா, நீங்க ஒண்ணும் சாப்பிடலியே!" அருண் கேட்டார்.
"தூ! என்ன சாப்பாடு இது! ஒண்ணுமே பிடிக்கலே! கோழி இறைச்சி கெட்டுப்போயிடுச்சு!"
கேம்கா முகத்தை ஒரு மாதிரியாக வைத்துக்கொண்டு, "என்ன சொல்றீங்க நீங்க! கோழி உசிரோடே இருக்கு,அதைப் போய் இறைச்சி கெட்டுப் போச்சுங்கறீங்களே!"
இதைக் கேட்டு எல்லாரும் ஹோவென்று சிரித்தார்கள்.
"இதிலே சிரிக்கறதுக்கு என்ன இருக்கு?" லாகிரி கோபமாகக் கேட்டார். "நிச்சயம் இது கெட்டுப்போன இறைச்சிதான், தூ!"
லாகிரி சோற்றையும் இறைச்சியையும் மேஜையின் மேல் இறைக்கத் தொடங்கியதைக் கண்டு தேஷ்பாண்டே சொன்னார்,"அண்ணா, நீங்க சாப்பிடலேன்னா விடுங்க. சாப்பாட்டை வீணாக்காதீங்க!"
"நான் வீணாக்குவேன்! ஒனக்கென்ன?"
"இது அக்கிரமம்! ஜனங்க சோறில்லாம செத்துக் கிட்டிருக்காங்க. இப்போ நாம வயிறு நிறையச் சாப்பிடறதே அநியாயம்.அதுக்கும் மேலே அநியாயம் சோத்தை வீணாக்கறது..."
"வாயை மூடு! நான் வீணாக்கத்தான் செய்வேன்!"
"இதுக்கு அர்த்தமேயில்லே.. இந்த விடுதியோட வேலைக்காரங்க சாப்பிடலாம். இல்லாட்டிப் பிச்சைக்காரங்களுக்குக்கொடுக்கலாம்..."
"பேசாதே! நான் ஒண்ணும் கேக்கத் தயாரில்லே. பிச்சைக்காரங்களுக்குச் சோறு கிடைக்கலியாம்! ஒண்ணும் பிடிக்க்லேஎனக்கு... பொறுத்துக்க முடியலே என்னாலே! இது என்ன புதுசா? சோறில்லாமே சாகறாங்க... அவங்களைக் காட்டறதுக்குஆளுங்களைக் கூட்டிக்கிட்டு வர்றது... எனக்குப் புரியலே இது...! கேம்கா, இப்பவே உனக்கு எச்சரிக்கை குடுக்கிறேன்! இன்னிக்குப்பூரா ஒருத்தரும் சோத்துக்கில்லாமே சாகறதைப் பத்திப் பேசக் கூடாது. ஆமா! அது போதும்! இன்னிக்கு நாள்பூரா விடுமுறை,புரிஞ்சதா? இன்னிக்குப் பஞ்சத்திலேருந்து விடுதலை, புரிஞ்சுக் கிட்டீங்களா எல்லாரும்? இன்னிக்குப்பூரா நாம குடிக்கவேண்டியது, பொம்பளைகளைப் பத்திப் பேச வேண்டியது...! இந்தப் பஞ்சப்பாட்டை யாராவது ஆரம்பிச்சீங்களோ, தெரியும்சேதி..."
"அதுக்குத் தேவை இருக்காது, மிஸ்டர் லாகிரி! வண்டி சரியாயிடுச்சு. சாப்பாடு முடிஞ்சதும் நாம புறப்படலாம்."
"வேற வினை வேண்டாம்! சாப்பிட்டு எழுந்திருந்ததும் அந்த ஓட்டை வண்டியிலே ஏறணுமாக்கும்! அதெல்லாம்முடியாது! நாம இன்னிக்கு இங்கேதான் இருக்கப்போறோம்!"
"ஒங்களுக்கு நாளன்னிக்குக் கல்கத்தாவிலே பிளேனைப் பிடிக்கணும்னு சொன்னீங்களே?"
"எனக்குப் பிளேனைப் பிடிக்கணும்னா அதைப்பத்தி ஒனக்கென்ன கவலை? நான்தான் சொல்றேனே, இன்னிக்குவிடுமுறைன்னு!"
டில்லி நிருபர்களிருவரும் அப்போதே புறப்பட விரும்பினார்கள், தேஷ்பாண்டேக்கும் தங்க இஷ்டமில்லை. அவர்எடுத்த போட்டோக்களை உடனே விற்காவிட்டால் அவற்றுக்குக் கிராக்கி போய்விடும்.
கடைசியில் நான்கு பேர் போய்விட்டார்கள். பாக்கி நான்கு பேர் தங்கினார்கள். அவர்களைக் கூட்டிச்செல்ல வண்டி மறுபடிவரும்.
அவர்கள் வராந்தாவில் சாய்வு நாற்காலிகளில் உட்கார்ந்தார்கள். லாகிரி மறுபடியும் தன் டம்ளரில் விஸ்கி ஊற்றிக்கொண்டு மற்றவர்களின் டம்ளர்களிலும் ஊற்றினார். ஆல்கஹால் இப்போது அவருடைய இரத்தத்தில் கலந்துவிட்டது. அது இரத்தக்குழாய்களில் இரத்தத்தோடு கூடவே ஓடுகிறது. லாகிரி படபடக்கிறார். நாற்காலியிலிருந்து எழுந்திருக்கிறார். சிறிது நேரம்உலவுகிறார், பிறகு மறுபடி உட்காருகிறார். பதைபதைக்கும் வெயில். இந்த வெயில் காற்று வீசும்போது ஒரு விசித்திரமானஒலி உண்டாகிறது. அத்தகைய காற்று காட்டுப் பக்கத்திலிருந்து வீசுகிறது.
கிணற்றிலிருந்து தண்ணீரெடுத்துப்போக இன்னும் நிறையப் பேர் - ஆண்களும் பெண்களும் - வந்து கொண்டிருக்கிறார்கள்.ராட்டினத்தின் 'கடகட' ஒலி, கூடவே புரியாத மொழியில் அவர்களுடைய மொழியில் சண்டை...
லாகிரி தன் தோழர்களிடம் சொன்னார், "ஏன் பேசாம உக்காந்திருக்கீங்க? ஏதாவது பேசுங்களேன்! ஏ ரங்காச்சாரி!ரஷியாவுக்குப் போயிட்டு வந்தியே, அங்கே பொம்பளைங்க கிடைப்பாங்களா? எப்படி இருப்பாங்க?"
"எனக்குத் தேடிக் கண்டுபிடிக்க நேரம் கிடைக்கலே. ரொம்ப டைட் புரோகிராம்" என்று ரங்காச்சாரி சோம்பல் முறித்துக்கொண்டு சொன்னார்.
"நீ பொம்பளை தேடலைன்னு சொன்னா நான் நம்பிடுவேனா? நீ ஜெர்மனிக்குப் போயிருந்தபோது என்னநடந்தது? அந்தக் கதையைத்தான் சொல்லேன்!"
"நீங்களே சொல்லுங்க?"
"நான் என்ன சொல்றது..? கிருதாவெல்லாம் நரைச்சுப்போச்சு, இனிமேல்.. ஏ அருண்! நீதான் இளவட்டம். கலியாணமும்பண்ணிக்கல்லே. ஒன் காதல் கதை ஒண்ணு ரெண்டு சொல்லேன்!"
"லாகிரி அண்ணா, ஒங்க ஸ்பெயின் காதல் கதையைச் சொல்லுங்களேன்!"
ராம் யஷ்சிங் மிகவும் சீரியஸ் தன்மையுள்ளவர். யாரையாவது பேட்டி காணும்போது தவிர வேறு சமயங்களில் வாயைத் திறக்கமாட்டார். மது அருந்தும்போது கூடப் பேச மாட்டார். ரங்காச்சாரி அவரிடம் கிசுகிசுத்தார், "பீகார் ஜனத்தொகையிலேஎவ்வளவு சதவிகிதம் பஞ்சத்துக்கு உள்ளாயிருக்காங்க?"
"இதுவரையில் அம்பத்தி நாலு சதவிகிதம்" என்று சுருக்கமாகப் பதிலளித்தார் சிங்.
"பட்டினிச் சாவு எவ்வளவு?"
"அதிகார பூர்வமா செய்தியெதுவுமில்லே. அதிகாரப்பூர்வமில்லாத செய்திகள் படி.."
லாகிரி அதட்டினார், "மறுபடியும் அந்தப் பேச்சா! நீங்க என்னைப் பைத்தியமாக்கிடுவீங்க போலேருக்கே! இன்னிக்குவிடுமுறைன்னு நான் சொல்லலே..? ஒருநாள் கூட வேலைய மறந்துட்டு இருக்க முடியாதா ஒங்களாலே?"
"மிஸ்டர் லாகிரி! இது வேலை சம்பந்தப்பட்ட விஷயம்.."
"வாயை மூடு! ஒரு விளக்கமும் கேக்கத் தயாரில்லே நான்!"
"போதையிலே இருக்கறவறோடு வாதம் பண்ணிப் பிரயோசனமில்லே.."
"நான் ஒண்ணும் போதையிலே இல்லை..! பொறத்தியான் காசிலே கோழியை அடிச்சுத் தின்னுட்டு இப்போ மனிதன்மேலே அக்கறையாம்! ஹம்பக்! இப்போ பொம்பளைகளைப் பத்திப் பேசலாம். மது, இறைச்சிக்கப்பறம் பொம்பளைகளைப்பத்திப் பேசறதுதான் பொருத்தம்."
"நீங்க சொல்லுங்களேன்! நாங்கள் கேக்கத் தயார்."
"போன வருஷம் ஜனவரி மாசம். நான் அப்போ மாட்ரிட்லே இருந்தேன். ஓட்டல்லே ராத்திரி திரும்பிக் கதவைத் தட்டினேன்.உள்ளே ஒரு பொம்பளை தொட்டியிலே குளிச்சுக்கிட்டிருந்திருக்கா. நான் கதவைத் தட்டினதும் உடம்பிலே ஒரு டவலைச் சுத்திக்கிட்டு.. அப்போ எனக்கு நல்ல போதை.. பாரு, ரங்காச்சாரி தூங்கிக் கிட்டிருக்கான்..! ஏ ரங்காச்சாரி..!"
ரங்காச்சாரி குறட்டை விடும் ஒலி கேட்டது. லாகிரி உரக்கக் கூப்பிட்டு அவரை எழுப்பப் பார்த்தார். ரங்காச்சாரிஅசையவில்லை. லாகிரி எழுந்து தள்ளாடிக்கொண்டு ரங்காச்சாரியின் தலைமுடியைப் பிடித்து, "ஏ ரங்காச்சாரி!" என்றுசொல்லி எழுப்பினார்.
ரங்காச்சாரி திடுக்கிட்டு எழுந்து கொண்டு, "தூக்கம் வந்திடுச்சு.. பாருங்க, கேம்காவும் தூங்கறார்!" என்றார்.
"இந்த ராஸ்கல் கேம்காவைப்பத்தி ருஸ்தம்ஜீகிட்டே புகார் பண்ணப்போறேன்! (எழுதமுடியாத வசவு) கேம்கா!"
கேம்கா கண்களைத் திறந்து சொன்னார், "நான் தூங்கலே. கண்ணை மூடிக்கிட்டு கேட்டிட்டு இருக்கேன். நீங்க சொல்லுங்க..அப்பறம் அந்தப் பொம்பளை உடம்பிலே டவலைச் சுத்திகிட்டு.."
"நான் ஒரே இழுப்பிலே அந்த டவலைப் பிடிச்சு இழுத்துட்டேன், ஆகா, என்ன அழகு, சாட்சாத் தேவதைதான்போங்க..! நான் பந்தயம் வைக்கத் தயார்.. அந்த மாதிரி அழகி கோடிப் பேரிலே ஒருத்தி இருக்க மாட்டா! கத்தி மாதிரிபளபளக்குது உடம்பெல்லாம். மார்பு ரெண்டும் காரோட ஹெட்லைட் மாதிரி! அவ தொடை ஆகா..! முதல்ல அவஎன்ன சொன்னா தெரியுமா?"
யார் பதில் சொல்வது? மூவர் தூங்கிவிட்டார்கள் அவர்களிடமிருந்தது புஸ்புஸ் என்று மூச்சு வந்து கொண்டிருந்தது.அவர்களுடைய தலைகள் சாய்ந்திருந்தன.
விழித்திருந்தது அருண் மட்டுந்தான். அவர் மெல்லச்சிரித்தார்.
லாகிரியின் முகத்தில் வேதனை தெளிவாகத் தெரிந்தது. அவர் கண்களை அகல விரித்துக்கொண்டு சொன்னார், "தூங்கிப்போயிட்டாங்களா? சீ, இவங்களெல்லாம் ஆம்பளைங்களா? பொம்பளைக் கதை கேட்டுக்கிட்டே தூங்கிட்டாங்களே! மனிதன்மேலே அக்கறையாம், அக்கறை..! ராஸ்கல்கள்..!"
"என்கிட்டே சொல்லுங்க, லாகிரி அண்ணா! அந்தப் பொம்பளை என்ன சொன்னா?"
"நீ கேக்கறியா..? என் கையிலே டவல். அவ கடகடன்ன சிரிச்சுட்டுச் சொன்னா, 'என் முதுகு ஈரமாயிருக்கு. தொடைச்சுவிடு..!' அப்போ நான் .. தூ.. எனக்கு ஒண்ணும் பிடிக்கலே மூணு பேர் குறட்டை விட்டுக்கிட்டிருக்காங்க. இருக்கு நடுவிலே இந்தமாதிரிக் கதையெல்லாம் சொல்ல முடியாது! வா எழுந்திரு! கொஞ்சம் வெளியே சுத்திட்டு வரலாம்.."
"இந்த வெயில்லே எங்கே போறது? உக்காருங்க சும்மா! லாகிரி அண்ணா, நீங்க பொறந்தது எங்கே?"
"அலகாபாத்திலே, என்னோட அப்பா அங்கே பேராசிரியராய் இருந்தார்.. ஏன், ஒனக்கெதுக்குத் தெரியணும்?"
"சும்மாதான் கேட்டேன்.."
"அந்த விஸ்கி பாட்டிலை இங்கே கொண்டு வா! வேண்டாம். இப்போ குடிக்கப் பிடிக்கல்லே. இப்போ என்ன செய்யலாம்சொல்லு!"
"நீங்களும் ஒரு தூக்கம் போடுங்களேன்!"
"நடுப்பகல்லே தூங்கிகககிட்டு இருக்கறதா? தூ..! அதைவிடப் புறப்பட்டுப் போயிருக்கலாம். ஹூம், இந்தக் குறட்டைவிடறஎருமை மாடுகளோட இருக்கறதைவிட.. நீ இப்போ என்ன செய்யப்போறே?"
"ஒண்ணுமில்லே சும்மா உக்காந்திருக்கப் போறேன்.. இங்கே வந்ததிலே எனக்கு ரொம்ப விஷயம் ஞாபகம் வருது.."
"என்ன விஷயம் காதலா?"
"அதெல்லாமில்லே. நான் பிறந்தது கிழக்கு வங்காளத்திலே, 1943-லே அதாவது வங்காளப் பஞ்ச சமயத்திலே அங்கேதான்இருந்தேன். அந்தக் காலத்த ஞாபகமெல்லாம் வருது.."
"அப்போ நீ சின்னப்பையனா இருந்திருப்பே இல்ல!"
"ஆமா.. அப்போ எனக்கு எப்போதும் பசிக்கும். நாள் பூராப் பசிபசின்னு அழுதுக்கிட்டிருப்பேன். வீட்டிலே உள்ளவங்களுக்கு ரொம்பத் தொந்தரவு கொடுத்திருக்கேன்.."
"நாசமாப் போச்சு! இங்கே வந்து அதெல்லாம் ஏன் ஞாபகம் வருது ஒனக்கு?"
"நாங்க கிழக்கு வங்காளத்திலே இருந்தோம். அப்பா கல்கத்தாவிலே வாத்தியார் வேலை பார்த்துக்கிட்டிருந்தார். அந்தக்காலத்துச் சமாசாரந்தான் ஒங்களுக்குத் தெரியுமே! அப்பா மாசம் இருவது ரூவா அனுப்புவார். அப்போ எங்கள் ஊரிலேஒரு மணு அரிசி அம்பத்தாறு ரூவா! வீட்டிலே அஞ்சு பேர் கஞ்சியும் சோறுமாக் கலந்து ஒரு நிளைக்கு ஒரு வேளைதான்சாப்பாடு. தொட்டுக்க வேகவச்ச உருளைக்கிழங்கு, நான் பள்ளிக் கூடம் போகும்போது சட்டைப்பையிலே வேகவச்ச உருளைக்கிழங்கை எடுத்துக்கிட்டுப் போவேன். அங்கே போய் அதைச் சாப்பிடுவேன். அப்போ நான் நாலாங்கிளாசிலே படிச்சுக்கிட்டிருந்தேன். பசங்களும் வேகவச்ச உருளைக் கிழங்கு கொண்டு வருவாங்க. நாங்க பெஞ்சிமேல் உப்பை வச்சிக்கிட்டு அதிலேஉருளைக் கிழங்கைத் தொட்டுக்கிட்டுச் சாப்பிடுவோம். இது என் வயித்துக்கு ஒத்துக்காது, கஞ்சியும் சோறும் வயித்துக்கு ஒத்துக்காது,இருந்தாலும் பசி.. அம்மாவைத் தொந்தரவு பண்ணுவேன் அம்மா சாப்பிட உக்காந்தா அவளோட சோத்தையும் பிடுங்கித்தின்னுடுவேன்.."
லாகிரி காரணமில்லாமலேயே தலையை ஆட்டிக்கொண்டு, "புரியுது, புரியுது" என்று சொன்னார். பிறகு எழுந்து வராந்தாவின்மறுமூலைக்குப்போய் வேறுபக்கம் பார்த்தவாறே சொன்னார், "புரியுது.. ஒன்னோட அம்மா இறந்து போயிட்டாங்க, இல்லையா?"
"அம்மா அந்த வருஷமே டி.பி.யிலே இறந்து போயிட்டாங்க.. ராட்சசப் பசி எனக்கு. திங்கற சோறு வயித்துக்கு ஒத்துக்காட்டியும்அம்மா சோத்தையும் பிடுங்கிச் சாப்பிட்டுடுவேன். அம்மா யார் கிட்டேயும் ஒண்ணும் சொல்லாமே பட்டினி கிடப்பாங்க.அதிலருந்து அவங்களுக்கு டி.பி. வந்துடுச்சு. அப்போ எனக்கு ஒண்ணும் தெரியல்லே. இப்போ எல்லாம் ஞாபகத்துக்கு வருது.நேத்திக்கு அந்த உதவி முகாமிலே ஜனங்க சோத்துக்காக வரிசையா நிக்கறதைப் பார்த்து மனசுக்கு என்னவோ மாதிரிஆயிட்டது. ஒரு விதத்திலே வேடிக்கையாக்கூட இருந்தது எனக்கு. இந்த மாதிரியான ஒரு நிலைமையிலேருந்து நான் எப்படியோதப்பிப் பொழைச்சிட்டேன்னு ஆச்சரியப்பட்டேன்.. "
"வேடிக்கையா? என்ன வேடிக்கை? இதென்ன வேடிக்கையான விஷயமா?" லாகிரி அதட்டினார்.
அதே மர்மப் புன்சிரிப்போடு அருண் சொன்னார், " ஆமா, வேடிக்கைதான்! அந்தப் பஞ்சத்திலே நானும் செத்துப் போயிருக்கலாமே! ஆனால் நான் சாகலே. என் அம்மாவைச் சாகடிச்சுட்டு நான் பொழைச்சுக்கிட்டேன்.. உசிரோட இருக்கிறதே ஒருவேடிக்கையான விஷயமில்லையா?"
லாகிரி சிகரெட்டின் கடைசித் துண்டைத் தன் விரலில் வைத்து ஒரு சொடுக்கில் அதை விட்டெறிந்தார். பிறகு பையில்கையைவிட்டு அதிலிருந்த சில்லறைகளைக் குலுக்கினார். ஒரு கையைத் தன் தலைமுடியில் வைத்தார். பிறகு திடீரென்றுவராந்தாவிலிருந்து கீழே குதித்து ஒரு பூவைப் பறித்தார். உரத்த குரலில் சொன்னார், "அருண், நீ உள்ளே போய்க் கதவையெல்லாம்சாத்திக்கிட்டு இருட்டிலே கொஞ்சநேரம் படுத்துக்க. மனசுக்கு இதமாயிருக்கும்.."
அருண் லாகிரியின் செயல்களைப் பார்த்துக்கொண்டு, "இல்லையில்ல, இங்கேயே நல்லாத்தான் இருக்கு எனக்கு.."என்று சொன்னார்.
லாகிரி கிணற்றுப் பக்கம் போய், அங்கே குடத்தை நிரப்பிவிட்டுப் புறப்பட்டுக் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம்,"கொஞ்சம் தண்ணி கொடும்மா, மூஞ்சி கழுவிககறேன்" என்றார்.
அந்தப் பெண் லாகிரியின் போதையேறிய சிவந்த கண்களைப் பார்த்துச் சற்றுத் தயங்கி நின்றாள். பிறகு தன் இடுப்பிலிருந்துகுடத்தைச் சாய்த்துக் கொஞ்சம் தண்ணீர் ஊற்றினாள். லாகிரி தன் கைகளில் தண்ணீரை ஏந்தி முகத்தில் இறைத்து முகத்தைக்கழுவிக் கொண்டார். பிறகு இன்னுங் கொஞ்சம் தண்ணீர் கேட்டு வாங்கிக் குடித்தார். பிறகு அந்தப் பெண்ணிடம், " இரு,நான் குடத்தை ரொப்பிக் கொடுக்கறேன்" என்று சொன்னார்.
பிறகு அவர் விடுதியின் பணியாளிடம் சொன்னார், "நீ போ. நானே இவங்க எல்லாருக்கும் தண்ணி இறைச்சக் கொடுக்கறேன்."
கிணற்றுக்குள்ளே எட்டிப் பார்த்தார் லாகிரி. தண்ணீர் மிகவும் கீழேதானிருந்தது. அதனால் பரவாயில்லை. எவ்வளவுஇறைத்தாலும் தண்ணீர் தீர்ந்துபோய்விடாது..
(தேர்ந்தெடுக்கபபட்ட கதைகள், 1972)
19. பிழைத்திருப்பதற்காக
தை மாதம் முடியப் போகிறது. அப்படியும் குளிர் போகும் வழியாயில்லை. தவிர இன்று காலையிலிருந்தே வானத்தில்இங்குமங்கும் பாறைக்குவியல்கள் போல் கருமேகங்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. இடையிடையே கொஞ்சம் வெயில்வருகிறது, மேகங்கவிந்த வானத்தில் திடீரென்று வெளிச்சம் பளிச்சிடுகிறது. மறு நிமிடமே அந்த வெளிச்சம் அணைந்து போய் விடுகிறது.
விஷ்டுபதா வடக்குப்புறக் காட்டுக்கு வந்து சேர்ந்தபோது பொழுது சாயத் தொடங்கிவிட்டது, மரங்களின் நிழல்கள் நீளஆரம்பித்து விட்டன.
விஷ்டுபதாவுக்கு வயது சுமார் நாற்பது இருக்கும். மேடு போன்ற தடித்த மூக்குக்கு மேல் குழம்பிய கண்கள். புருவங்கள்இல்லையென்றே சொல்லவேண்டும். தடிப்பான கருத்த உதடு கீழ்ப்பக்கம் தொங்குகிறது. உடைந்த குரல். அளவுக்கு மீறியஉயரம். வறண்டுபோன கருப்புத்தோல். ஒட்மொத்தமாகப் பார்த்தால் இடி விழுந்து எரிந்துபோன பனைமரம் மாதிரிஇருப்பான். அவனுடைய உடம்பில் எஞ்சியிருப்பது அகலமான, தடித்த எலும்புதான். இந்த எலும்பில் போதிய தசை சேர்ந்திருந்ததால் விஷ்டுபதா ஒரு மலைபோல் பருத்த பயில்வானாக இருந்திருப்பான்.
ஒரு சிக்குப் பிடித்த அழுக்குக் கோவணமும் ஆயிரம் ஒட்டுப் போட்ட விசித்திரமான சட்டையுந்தான் அவனுடையஉடம்பை மறைத்திருந்தன. தலையில் ஒரு துண்டை முண்டாசு கட்டியிருந்தான். அவனுடைய தோளில் ஒரு சிறு கோடரி;இடுப்பில் ஒரு கூர்மையான கத்தியைச் செருகிக் கொண்டிருந்தான்.
மூன்று நாட்களாக அவனுக்கு வேலையில்லை, வேலையில்லாததால் வரும்படியும் இல்லை. அவனிடம் நிலமில்லை.அவன் அன்றாடக் கூலி வேலை செய்வான். ஆகையால் உட்கார்ந்து சாப்பிட அவன் வீட்டில் தங்கமும் நெல்லும் கொட்டிக்கிடக்கவில்லை. மிஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச அரிசியில் நேற்றுவரை கடத்தியாகிவிட்டது. இன்று அவன் ஏதாவதுசம்பாதித்தால்தான் அவனுடைய பெண்டாட்டியும் குழந்தைகளும் சாப்பிடமுடியும். இல்லாவிட்டால் பட்டினிதான்.
காலையில் தூங்கியெழுந்ததுமே வேலை தேடிக்கொண்டு புறப்பட்டான் விஷ்டுபதா. ஆனால் வேலை எங்கே கிடைக்கிறது?அவன் அலைந்து களைத்துப்போய் நம்பிக்கையிழந்தபோது அவனுக்கு இந்த வடக்குப்புறக் காட்டின் நினைவு வந்தது.
எத்தனையோ தடவை விஷ்டுபதாவைக் காப்பாற்றியிருக்கிறது இந்தக் காடு. அவன் எத்தனையோ நாட்கள் இந்தக் காட்டிலிருந்து பழங்கள், காய்கள், கீரை, பறவைகள், ஆமை, முயல் போன்றவற்றை எடுத்துக்கொண்டு போய்த் தன் குடும்பத்தின்உயிரைக் காப்பாற்றியிருக்கிறான். இன்றும் அதே ஆசையில்தான் வந்திருக்கிறான் அவன்.
விஷ்டுபதா காட்டில் நுழைந்து சற்றுநேரம் நின்றான். மனித நடமாட்டமில்லாத இடம். இடப்புறமும் வலப்புறமும் கண்ணுக்கெட்டிய தூரம் புல்வெளி, செடி கொடிகள். இது குளிர் காலமாதலால் புல்லில் பசுமையின் பளபளப்பு இல்லை, பழுப்புநிறந்தான். நடுநடுவே புதர்கள், மரங்கள் செடிகள். அங்கு ஒரு கால்வாயும் உண்டு.
நாற்புறமும் பார்த்துக்கொண்டே நடக்கத் தொடங்கினான் விஷ்டுபதா. இந்த அந்தி வேளையில் அவன் தலைக்கு மேல்பறவைகள் கூட்டங்கூட்டமாகப் பறந்து கொண்டிருக்கின்றன. அவன் கவண் எடுத்து வந்திருந்தால் ஓரிரண்டு பறவைகளைஅடித்துக் கொன்றிருக்கலாம். கவண் எடுத்து வராதது பெரிய பிசகு!
அவன் போய்க் கொண்டிருக்கும்போதே வழியில் தென் பட்ட புதர்களையும் மரங்களையும் கூர்ந்து பார்த்துக்கொண்டுபோனான். ஊஹும், ஒன்றும் கிடைக்கவில்லை. புல்தரையிலும் அவனுக்குத் தேவைப்பட்ட எதுவும் கண்ணில் படவில்லை.
வெகுநேரம் நடந்து காட்டுக்கு நடுவிலிருந்த கால்வாய் கரைக்கு வந்ததும் திடுக்கிட்டு நின்றான் விஷ்டுபதா.
கால்வாய்க் கரையில் ஒரு பெண்பிள்ளை நின்றுகொண்டு அவனையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.விஷ்டுபதாவுக்குப் பத்தடி தூரத்தில் அவள், இவ்வளவு அருகில் இருந்ததால் அவளை நன்றாகப் பார்க்க முடிந்தது. அவளுடையகண்களில் பயம், சந்தேகம்..
இந்த ஜன நடமாட்டமற்ற காட்டில் குளிர் நடுக்கும் காலத்தில் இந்தப் பெண்பிள்ளை எப்படி வந்து சேர்ந்தாள் என்று புரியவில்லை அவனுக்கு. அவனும் அவளைப் பார்த்துக் கொண்டே நின்றான். அவள் மாநிறம்; கட்டை குட்டையாகஇருந்தாள். சப்பை மூக்கு, கொழுத்த மார்பு, அவள் அணிந்திந்த அகலக் கட்டைச் சேலையால் அவளுடைய இளமையின்மதர்ப்பை மறைக்க முடியவில்லை. அவளுடைய கையில் ஒரு பெரிய கோடரி.
வெகுநேரங் கழித்து விஷ்டுபதா கேட்டான், "ஏ பொம்பளை, நீ யாரு?"
சூடாகப் பதில் வந்தது அவளிடமிருந்து "நான் யாராயிருந்தா ஒனக்கென்ன? நீ இங்கேயிருந்து போயிடு!"
"போயிடுன்னு சொல்லிட்டாப் போயிட முடியுமா? எனக்கு இங்கே வேலை இருக்."
"என்ன வேலை?"
"இருக்கு" என்று சொல்லிச் சற்று நிறுத்தினான் விஷ்டுபதா. பிறகு தொடர்ந்து சொன்னான், "ஜனமேயில்லாத இந்தக்காட்டுக்கு நீ ஏன் வந்தே?"
"எனக்கும் வேலையிருக்கு."
விஷ்டுபதா தானறியாமலேயே முன்புறம் காலடி எடுத்து வைக்க முற்பட்டான். உடனே அந்தப் பெண் உரக்கக் கத்தினாள்,"கபர்தார்! ஒரு அடிகூட முன்னாலே வராதே! வந்தால் கோடாலி யாலே வெட்டிடுவேன்!"
விஷ்டுபதா திடுக்கிட்டான். இப்போது அந்தப் பெண்ணிடம் கொஞ்சங்கூடப் பய உணர்வு இல்லை என்பதை அவன்கவனித்தான். அவளுடைய கண்களில் கோபம் தீயாக எரிந்தது.
அவன் பயந்துகொண்டே சொன்னான், "ஒனக்குப் பிடிக்க லேன்னா நான் முன்னாலே வரலே. ஆனா நீ எந்த ஊரு, ஏன்இங்கே வந்தேங்கறதைச் சொன்னா என்ன குத்தம்?"
ஏதோ நினைத்துச் சற்றுச் சமாதானமானாள் அவள். "நான் இருக்கறது தால்டாங்காவிலே.. அதோவடக்கிலே.."
"அது ரொம்ப தூரம் இல்லே! நாலு மைல் இருக்குமே!"
"ஆமா.."
"அவ்வளவு தூரத்திலிருநதோ வந்தே?"
"அவசியமானா வரத்தானே வேணும்?"
"அப்டி என்ன அவசியம்னு சொல்லேன்!"
"தெரிஞ்சுக்கணும்னா சொல்றேன் .. நான் கீரை, காய், பழம் பொறுக்கிக்கிட்டுப் போக வந்தேன்."
விஷ்டுபதாவுக்கு ஒரே ஆச்சரியம். "அப்படியா? நானும் அதுக்காகத்தான் வந்திருக்கேன்!"
பெண்ணின் கண்களில் மறுபடியும் கோபம் பளிச்சிட்டது. "இல்லே, நீ பொய் சொல்றே!"
"சாமி சத்தியமாச் சொல்றேன், பொய் இல்லே!" விஷ்டுபதா சொன்னான். "காலையிலேருந்து பிள்ளை குட்டிக பட்டினி.எனக்கு மூணு நாளா வேலை கிடைக்கல்லே. இங்கேயிருந்து ஏதாவது எடுத்துக்கிட்டுப் போகலேன்னா குழந்தைங்க செத்துப்போயிடும்."
அவனுடைய குரலிலிருந்த வேதனை அந்தப் பெண்ணுக்கு நம்பிக்கையூட்டியது. "கெட்ட எண்ணம் எதுவுமில்லையே ஒனக்கு?"என்று அவள் கேட்டாள்.
நான்தான் சாமி சத்தியம் பண்ணினேனே..! நீ கிட்டேவா, நான் ஒன்னைத் தொட்டு சத்தியம் பண்றேன்."
"என்னைத் தொட வேண்டாம்.. நீ எந்த ஊரு?"
"தெற்கே பயார்பூர்.." தென்பக்கம் சுட்டிக் காட்டினான் விஷ்டுபதா.
"ஒன் வீடும் ரொம்ப தூரந்தான்! அவ்வளவு தூரத்திலேருந்தா..?"
தன் தாறுமாறான மஞ்சள் பற்களைக் காட்டிக்கொண்டு சிரித்தான் விஷ்டுபதா. "நீதான் சொன்னியே... தேவைப்பட்டாதூரத்திலேருந்தும் வரத்தான் வேணுமின்னு..."
"நெசந்தான்"
"இவ்வளவு பேசினோம். ஆனா பேருகூடத் தெரிஞ்சுக்கல்லே.. என் பேரு விஷ்டுபதா. ஒன் பேரு?"
"நிசி.. நிசிபாலா."
இருவரும் சிறிதுநேரம் மௌனம். பிறகு விஷ்டுபதா சொன்னான், " நான் ஒண்ணு சொல்லட்டுமா?"
"என்ன?"
"நீயும் நானும் ஒரே காரியத்துக்குத்தான் வந்திருக்கோம், நாம ரெண்டுபேரும் சேர்ந்து கீரை, காய் எல்லாம் தேடினாஎன்ன? குளிர்காலம் .. சீக்கிரமே இருட்டிப் போயிடும்.. நீ வயசுப் பொண்ணு, தனியாக் காட்டிலே சுத்தறது சரியில்லே.."
நிசி சற்றுத் தயங்கிவிட்டு ஒப்புக்கொண்டாள். தானாகவே அவனருகில் வந்தாள்.
அங்கே அலைந்து திரியும்போது அவர்கள் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு என்ன கிடைத்தாலும்அதைச் சரிபாதியாக பிரித்துக் கொள்வது என்று.
அவர்களிருவரும் ஒரு புதரையும் ஒரு பள்ளத்தையும் விட்டு வைக்காமல் எல்லா இடங்களிலும் தேடினார்கள். ஆனால்நாலைந்து சிறு ஆமைகளைத் தவிர ஒன்றும் கிடைக்கவில்லை அவர்களுக்கு, ஆமைகளின் ஓடுகளை எடுத்தபிறகு என்ன மிஞ்சப்போகிறது?
உணவு வேட்டையாடும்போது அவர்கள் மௌனமாயிருக்கவில்லை. ஒருவரைப் பற்றி ஒருவர் விசாரித்துக் கொண்டார்கள். இதற்குள் நிசியின் பயமும் அவநம்பிக்கையும் மறைந்து விட்டன. விஷ்டுபதாவிடம் நம்பிக்கை ஏற்பட்டு விட்டதுஅவளுக்கு. "ஒன் வீட்டிலே யார் யார் இருக்காங்க?" அவள் கேட்டாள்.
"பொண்டாட்டியும் கொளந்தைகளும்."
"எத்தனை கொளந்தைங்க?"
"மூணு.. ரெண்டு புள்ளே, ஒரு பொண்ணு.."
"அப்போ ஒன் குடும்பத்திலே அஞ்சு பேரு!"
"ஆமா.."
"என்ன வேலை செய்யறே?"
"நான் கூலி"
"அதிலே காலங்கடத்த முடியுதா?"
"எங்கே முடியுது? சில நாள் அரைப்பட்டினி, சில நாள் முழுப்பட்டினி.."
"நெலம் ஏதாவது இருக்கா?"
"நெலத்துக்கு எங்கே போவேன்?"
"அப்போ ஔப்பை நம்பித்தான் பொளைப்பு.."
"ஆமா"
"ரொம்பக் கஸ்டம் இல்ல?"
"என்ன செய்யறது...? இந்த மாதிரி எவ்வளவு நாள் பிளைச்சிருக்க முடியுமோ இருக்க வெண்டியதுதான்.. அதுசரி,நீ என் கதையையே கேட்டுக்கிட்டிருக்கியே.. ஒன் கதையைச் சொல்லு.
"என் கதையும் இதேதான்.. நானும் ஒளைச்சுத்தான் பொளைக்கணும்.."
"அது எனக்குப் புரிஞ்சுடுச்சு.. நான் அதைக் கேக்கலே.."
"பின்னே என்ன .. எதைக் கேக்கறே?"
விஷ்டுபதா திரும்பி அவளை ஒரு நிமிடம் பார்த்து விட்டுச் சொன்னான், "சங்கு வளை, குங்குமம் ஒண்ணையும் காணமே..இன்னும் கலியாணம் ஆகலியா ஒனக்கு?்
ஏதோ நினைவில் ஆழ்ந்தவள்போல் பதில் சொன்னாள் நிசி, "கல்யாணம் ஆயிட்டது."
"அப்படீன்னா ?"
விஷ்டுபதா என்ன கேட்க விரும்புகிறானென்று அவளுக்குப் புரிந்தது. கலியாணமானவள் ஏன் சங்கு வளையல் போட்டுக்கொள்ளவில்லை, குங்குமம் இட்டுக் கொள்ளவில்லை என்று கேட்கிறான் அவன்.
அவள் வருத்தமாகச் சொன்னாள், "என் புருசன் இல்லே" விஷ்டுபதா அனுதாபமாக, "த்சொ, த்சொ.. இந்த வயசிலேயாபுருசன் போயிட்டான்?" என்றான்.
நிசி பதில் சொல்லவில்லை.
"என்ன ஆச்சு அவனுக்கு? சீக்கு வந்து செத்துப் போயிட்டானா?"
"இல்லை.. மிராசுதாரோடே சண்டை போட்டு உயிரை விட்டான். மிராசுதாரோட ஆளுங்க ஈட்டியாலே அவன்வயித்துல குத்திட்டாங்க, சதை நரம்பு எல்லாம் வெளியிலே வந்துடுச்சு. கண்ணாலே பார்க்க முடியலே அந்தக் காட்சியை.."என்று சொல்லிக்கொண்டே வந்தவள் திடீரென்று அந்தக் காடே எதிரொலிக்கும்படி உரக்க ஓலமிடத் தொடங்கினாள்,"ஐயோ, என் புருசனை -காளை மாதிரி இருந்தவனை கொன்னு போட்டுட்டாங்களே."
விஷ்டுபதா சற்றுத் தயங்கிவிட்டுப்பிறகு அவளுடைய தலையை மெதுவாகத் தடவிக் கொடுத்தவாறு அவளுக்கு ஆறுதல்சொன்னான், "அழாதேம்மா, அழாதே! நடந்தது நடந்துடுச்சு.."
அவள் சற்று அமைதியானதும் "ஒனக்கு எவ்வளவு கொளந்தைக?" என்று விஷ்டுபதா நவளைக் கேட்டான்.
"ஒண்ணுமில்லே."
"அது ஒரு விதத்தில் நல்லதுதான்;."
நிசி பேசாமலிருந்தாள்.
"குடும்பத்திலே வேறு யாரு இருக்காங்க?"
"கிழட்டு மாமியார் இருக்கா. ராவும் பகலும் 'ஆ,ஆ'ன்னு வாயைத் திறந்துக்கிட்டு இருக்கா. பெருந்தீனிக்காரி. மலை மாதிரிபெரிய புள்ளெய முழுங்கியும் பசி தீரலே அவளுக்கு. அவளுக்குத் தீனி போட்டே நான் நாசமாயிடுவேன்."
"நெலம் கிலம் இருக்கா?"
"அது இருந்தா இந்த மாதிரி காட்டிலேயும் மேட்டிலேயும் அலைஞ்சு திரிவேனா?"
இரண்டு பேரும் தங்கள் தேடலைத் தொடர்ந்தார்கள். ஆனால் தாய் போன்ற இந்தக் காடு இன்று ஏனோ கருமிபோல,ஈவிரக்கமில்லாமல் இருந்தது. நாலைந்து ஆமைகளுக்குப்பிறகு நாலைந்து வில்வப் பழங்கள் கிடைத்தன, அவ்வளவுதான்.ஆளுக்குப் பாதி எடுத்துக் கொண்டால் எவ்வளவு இருக்கும்? பொழுது சாய்ந்துவிட்டது. வெயில் இல்லை. சூரியன் மேற்குப்பக்கத்து மரஞ்செடிகளுக்குப் பின்னால் மறைந்து கொண்டதை இருவரும் கவனிக்கவில்லை. நாலுபுறமும் விரைவில் இருண்டுகொண்டு வந்தது.
காலையிலிருந்தே வானத்தில் இங்குமங்கும் மேகங்கள் பாறைக்குவியல்கள்போல் தொங்கிக் கொண்டிருந்தன. இப்போதுஅவை இன்னுங் கீழே இறங்கிவந்துவிட்டன. தூறலும் ஆரம்பித்து விட்டது. அதோடு குளிர்ந்த புல் தரையிலிருந்து பனி வெளிக்கிளம்பிக் கொண்டிருந்தது.
"இன்னிக்கு ரொம்பக் குளிர், இல்லே?" நிசி சொன்னாள்.
"ஆமா" என்றான் ஏதோ நினைவில் ஆழ்ந்திருந்த விஷ்டுபதா.
"மழையும் தொடங்கிடுச்சு"
"ஆமா.."
நிசியின் பேச்சுக்கு இயந்திரம் போல் பதில் சொல்லிக் கொண்டிருந்தாலும் விஷ்டுபதா வேறு ஏதோ சிந்தித்துக்கொண்டிருந்தான். ரெண்டு ஆமையும் ரெண்டரை வில்வப் பழமும் எடுத்துக் கொண்டுபோய் வீட்டில் யாருக்குக்கொடுப்பான்? அவன் சொன்னான், " இன்னும் ஏதாவது எடுத்துக் கிட்டுப் போகலேன்னா கட்டாது எனக்கு. என் குடும்பத்திலேஅஞ்சு பேரு!"
"நெசந்தான்.. ஆனா இருட்டிப் போயிட்டிருக்கு. மழையும் தொடங்கிடுச்சு. இப்போ என்ன கிடைக்கும்?"
அவள் குரலில் அவநம்பிக்கை.
"பார்க்கலாம்.." திடீரென்று விஷ்டுபதாவின் பார்வை தீவிரமாயிற்று. அவன் பரபரப்பாக முன்பக்கம் சுட்டிக்காட்டி,"அதென்ன?" என்று கேட்டான்.
நிசி அந்தப் பக்கம் பார்த்துவிட்டு "பன்னி போலயிருக்கு" என்றாள்.
"ஆமா, ஆமா"
"அது அங்கே என்ன செய்யுது?"
விஷ்டுபதா கூர்ந்து கவனித்தான். மண்ணைத் தோண்டுது.
"பன்னி மண்ணைத் தோண்டினா, மண்ணுக்கடியிலே என்னவோ இருக்குன்னு அர்த்தம். காரணமில்லாமே பன்னிமண்ணைத் தோண்டாது."
"வா, முன்னால போய்ப் பார்ப்போம்.." என்று சொன்னான் விஷ்டுபதா. மின்னல் போல் திடீரென்று ஒரு யோசனைதோன்றிவிட்டது அவனுக்கு.. வேறெதுவும் கிடைக்காத போது இந்தப் பன்றியையாவது அடித்துக் கொல்லலாமே! அதன் எடைஒரு மணுவுக்குக் குறையாது. நிசிக்குப் பாதிப்பங்ஙு கொடுத்தபின்பு அவனுக்குக் கிடைக்கும் பாதிப்பன்றியை வைத்துக் கொண்டுஅவனுடைய குடும்பத்தில் ஐந்துபேரும் நாலைந்து நாட்கள் தாராளமாகச் சாப்பிடலாம், நாலைந்து நாட்கள் பிழைத்திருந்துவிட்டால் அதற்கப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.
அவன் தன் யோசனையை நிசியிடம் சொன்னான். அவள் பயந்து கொண்டு சொன்னாள், "நல்ல யோசனை தான்.. ஆனா.."
"என்ன?"
"இவ்வளவு பெரிய பன்னியை அடிச்சுக் கொல்ல ஒன்னால முடியாதுப்பா. தவிர அது கோரப் பல்லுள்ள பண்ணியாயிருந்தாநீ தப்ப முடியாது."
"என் கிட்டே கோடாலி இருக்கு, கத்தி இருக்கு.."
"கோடாலியாலே அதைக் காயப்படுத்த முடியாது!"
விஷ்டுபதாவின் உறுதி குறையவில்லை, அவன் சொன்னான், "முடியுமோ, முடியாதோ முயற்சி செஞ்சு பாக்கறேனே! பட்டினிகெடந்தது சாகறதைவிடப் பன்னியோட சண்டைபோட்டு.."
நிசி அவனைத் தடுக்க இடங்கொடுக்காமல் அவன் முன்னேறினான்.
நிசி வேறு என்ன செய்வாள்? அவனைப் பின் தொடர்ந்தாள்.
அவர்கள் அருகே சென்று பார்த்ததில் அது கோரைப் பல்லுள்ள மிருகமல்ல, ஆனால் காட்டுப்பன்றி என்று தெரிந்தது.இதற்குள் அது பெரிய பள்ளம் தோண்டியிருந்தது. அதற்குள் எட்டிப் பார்த்த விஷ்டுபதாவின் கண்கள் பளபளத்தன. பெரியமரவள்ளிக் கிழங்கு ஒன்று மண்ணுக்கு வெளியே நீட்டிக் கொண்டிருந்த. அதன் ஒரு பகுதி மண்ணுக்குள் புதைந்திருந்தது.
கிழங்கின் எடை பத்து சேருக்குக் குறையாது. அவனால் பன்றியைக் கொல்ல முடியாவிட்டாலும் கிழங்கு கிடைத்தால்போதும். பன்றியோடு சண்டைபோட வேண்டாம்.
பின்னாலிருந்து எட்டிப் பார்த்த நிசி ஆவலுடன் "அடே, எவ்வளவு பெரிய மரவள்ளிக் கிழங்கு?" என்று சொன்னாள்.
"ஆமா" என்றான் விஷ்டுபதா.
மண்ணைத் தோண்டிக் கொண்டிருந்த பன்றி மனிதக் குரல் கேட்டுத் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தது. அதன் சின்னஞ்சிறுகண்கள் சிவப்பாகக் குழம்பிக் கிடந்தன. அதன் உடலிலும் முகத்திலும் மண்.
விஷ்டுபதா அதை விரட்டுவதற்காகத் தன் வாயால் ஒலியெழுப்பினான், "உர்ர்ர்..ஹட் ஹட்.."
பன்றி நகராமல் அவனையே பார்த்துக்கொண்டு நின்றது. அதன் கண்களில் சந்தேகம் வலுத்தது. விஷ்டுபதா மறுபடியும்ஒலியெழுப்பினான். நிசியும் அவனுடன் சேர்ந்து ஒலி யெழுப்பினாள். ஆனால் பன்றி அசையவில்லை.
"சரியான முண்டம்.. நகராது போலேயிருக்கு" விஷ்டுபதா சொன்னான்.
"நாம கௌங்கை எடுத்துக்கப் பார்க்கறோம்னு அதுக்குப் புரிஞ்சு போச்சு.." விஷ்டுபதா அதைத் தாக்குவதற்கு முன்னாலேயே அதுதிடீரென்று அவன்மேல் பாய்ந்தது, கண்ணிமைக்கும் நேரத்தில் இது நிகழ்ந்துவிட்டது. விஷ்டுபதாவுக்குத் தன்னைக் காத்துக்கொள்ள நேரம் கிடைக்கவில்லை, காலையிலிருந்து அவனுடைய வயிற்றில் ஒரு பருக்கைகூட விழவில்லை. அவன் உடம்புஏற்கெனவே வலுவிழந்திருந்தது, ஒரு மணு எடையுள்ள பன்றி அவன்மேல் பாய்ந்ததும் அவன் நிலை தவறிக் கீழே விழுந்தான்.கூடவே தன் தொடையைப் பன்றியின் பல் துளைப்பதை உணர்ந்தான்.
"ஐயோ, கொன்னுட்டுதே, கொன்னுட்டுதே! என்னைக் காப்பாத்து..!" என்று கத்திக்கொண்டே அவன் தன் இடுப்பில்கையை வைத்தான். இடுப்பிலிருந்த கூர்மையான கத்தியை எடுத்து முழு பலத்துடன் பன்றியின் மூக்குக்குப் பக்கத்தில்குத்தினான். குத்திய இடத்திலிருந்து இரத்தம் பீறிட்டு வந்தது.
இதற்குள் நிசி பின்னாலிருந்து அதைக் கோடாரியால் தாக்கத் தொடங்கி விட்டாள். அடிபட்ட பன்றி விஷ்டுபதாவைவிட்டுவிட்டுப் பின்பக்கம் திரும்பி நிசியின் மேல் பாய்ந்தது. அவளும் சமாளித்துக்கொள்ள முடியாமல் எகிறி விழுந்தாள்,அவளுடைய சேலையும் உடம்பும் பன்றியின் பற்களால் கிழி பட்டன. அப்படியும் அவள் விடாமல் குருட்டுத்தனமாகப்பன்றியைக் கோடரியால் குத்திக் கொண்டேயிருந்தாள்.
விஷ்டுபதாவின் தொடையில் சரியான காயம். அதிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. இருந்தாலும் சும்மா இருக்கவில்லை அவன். வெறி பிடித்தவன்போல் ஓடிவந்து பன்றியை மீண்டும் மீண்டும் கோடரியால் தாக்கினான். இப்போது பன்றிநிசியை விட்டுவிட்டு அவன் பக்கம் திரும்பியது. இப்போது நிசி எழுந்து வந்து அதைப் பின்னாலிருந்து குத்தினாள்.
பன்றி ஒரு முறை விஷ்டுபதாவையும் ஒருமுறை நிசியையும் மாறிமாறித் தாக்கியது. குளிர்காலத்து இருட்டு வேளையில் அந்தஜனநடமாட்டமற்ற இடம் உலகத்தின் தொடக்க காலத்துப் போர்க்களமாக மாறிவிட்டது. அதில் இரண்டு மனிதர்கள்உணவுக்காக ஒரு பயங்கர மிருகத்துடன் கடுமையாகப் போராடினார்கள்.
வெகுநேரத்துக்குப்பின் பன்றிக்கு முகத்தில் பலத்த காயம் பட்டது.. அது பயங்கரமாகக் கூச்சலிட்டது. தாங்க முடியாதவலியில் அது சற்றுநேரம் மண்ணில் புரண்டது. பிறகு மேற்குப் பக்கத்துக் காட்டுக்குள் ஓடி மறைந்தது.
பன்றி ஓடி மறைந்ததும் விஷ்டுபதாவும் நிசியும் வெகு நேரம் ஜீவனில்லாமல் தரையில் கிடந்தார்கள். பிறகு மூச்சிறைக்க எழுந்து கிழங்கின் புதைந்திருந்த பகுதியையும் தோண்டி எடுத்தார்கள்.
கிழங்கு, ஆமை, வில்வப்பழம் இவற்றையெல்லாம் ஓரிடத்தில் குவிந்து வைத்துக் கொண்டு அவர்கள் பங்கு பிரித்துக் கொள்ளமுற்பட்டபோது மழை பலமாகப் பிடித்துக் கொண்டது. சண்டை நடந்து கொண்டிருந்த வரையில் அவர்கள் அதைக்கவனிக்கவில்லை. அப்போது பரபரப்பும் மிகப்பழமையான கொடூரமும் தவிர வேறெந்த உணர்வும் அவர்களுடைய மனதில்இடம் பெற்றிருக்கவில்லை. இப்போது விஷ்டுபதா கடுமையாகக் குளிர்வதை உணர்ந்தான். குளிர் உடம்பைத் துளைத்துக்கொண்டுபோய் எலும்பை நடுக்குகிறது. பற்கள் கிடுகிடுக்கின்றன.
"சீ சனியன் பிடிச்ச மழை!" என்றான் விஷ்டுபதா.
நிசி குளிரில் நடுங்கிக்கொண்டே சொன்னாள், "இங்கயே நின்னுக்கிட்டிருந்தா சாக வேண்டியதுதான்.. ஏதாவது ஏற்பாடுபண்ணு!"
"எங்கே போகலாம் சொல்லு?"
நிசி சற்று யோசித்துவிட்டுச் சொன்னாள், "மேற்கே ஒரு சுடுகாடு இருக்கில்லே, அங்கே ஒரு சின்ன வீடு இருக்கு. அங்கேபோயிடலாம் வா!"
"சரி"
இருவரும் அந்தக் குடிசைக்கு ஓடினார்கள். மயானத்துக்கு வருபவர்களின் உபயோகத்துக்காக எப்போதோ கட்டப்பட்டகுடிசை அது.
தன் உடம்பில் வழிந்து கொண்டிருந்த இரத்தத்தை துடைத்துவிட்டுச் சற்று நேரம் மூச்சிறைக்க உட்கார்ந்திருந்தான்விஷ்டுபதா. பிறகு "ரொம்பப் பசிக்குதேம்மா" என்றான்.
"எனக்குந்தான்."
"சாப்பாட்டுக்கு ஏதாவது ஏற்பாடு பண்ணலாம்!"
நிசி கிழங்கின் ஒரு பகுதியை வெட்டி எடுத்தாள். விஷ்டுபதா ஆமையின் ஓட்டிலிருந்து இறைச்சியைப் பிய்த்து எடுத்தான்.சிறிது நேரத்துக்கு முன் யாரோ அங்கே ஒரு சவத்தை எரித்து விட்டுப் போயிருந்தார்கள். அங்கிருந்து நெருப்பு எடுத்து வந்துஇருவரும் கிழங்கையும் இறைச்சியையும் சுட்டுச் சாப்பிட்டு ஏப்பம் விட்டார்கள்.
"இன்னிக்கு இப்பத்தான் வயித்துக்கு ஏதோ கிடைச்சிருக்கு" விஷ்டுபதா சொன்னான்.
"எனக்குந்தான்"
"சாப்பாடு ஆயிடுச்சு. இப்போ ஒரு பீடி கிடைச்சா..!"
"எனக்கு வெத்தலை போட ரொம்பப் பிடிக்கும். இப்போ வெத்தலை கிடைச்சா..!"
மழை இன்னும் வலுத்துவிட்டது. அடிக்கடி வானத்தைக் கிழிக்கிறது மின்னல்.
"இந்த மழை இன்னிக்கு விடாது போலேருக்கு!" நிசி சொன்னாள்.
"அப்படித்தான் தோணுது."
"அப்படீன்னா ராவை இங்கேதான் களிக்கணும்.."
"ஆமா.."
சற்றுநேரத்துக்குப்பின் விஷ்டுபதா சொன்னான், "இன்னும் ஒக்காந்துகிட்டு என்ன லாபம்? நான் படுத்துக்கப் போறேன்.."
"நானும் படுக்கறேன்."
இருவரும் இரண்டு பக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டார்கள். அவர்களுக்கு இடையில் சிறிது இடைவெளி.
வெகுநேரங் கழித்து நிசி திடீரென்று, "இந்தாப்பா" என்றாள்.
"என்ன சொல்றே?" விஷ்டுபதா கேட்டான்.
"என்கிட்டே வா."
"ஏன்?"
"ரொம்பக் குளிருது.. என்னைக் கொஞ்சம் கட்டிக்க.."
அந்த குளிர்காலத்து மழையிரவில் உடம்புச் சூட்டுக்காக நிசியும் விஷ்டுபதாவும் ஒருவரையொருவர் இறுகக் கட்டிக்கொண்டு படுத்திருந்தார்கள்..
மறுநாள் காலையில் ஆமைகளையும் வில்வப் பழங்களையும் சண்டைபோட்டுக் கைப்பற்றிய கிழங்கையும் பங்குபோட்டுக்கொண்டு நிசி வடக்கு நோக்கிப் போனாள், விஷ்டுபதா தெற்குப் பக்கம் நடந்தான்..
(சாரதீய 'அம்ருத', 1970)
20. என்னைப் பாருங்கள்
தயவுசெய்து என்னை ஒரு தடவை பாருங்கள். இதோ இங்கே இருக்கிறேன்! சற்றுமுன்புதான் நான் இடித்துப் புடைத்துக்கொண்டு பஸ்ஸின் படியில் ஏறினேன். தாங்கமுடியாத கூட்டத்தில் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் முண்டி எலிபோல் துளைபோட்டுக்கொண்டு இவ்வளவு தூரம் உள்ளே நுழைந்து விட்டேன், நான் குட்டை, பஸ்ஸின் கைப்பிடிக் கழிகள் ரொம்ப உயரம்,எனக்கு எட்டாது. நான் சீட்டின் பின்புறக் கம்பியைப் பிடித்துக் கொண்டு நிற்பேன். பஸ் அதிர்ந்து குலுங்கும்போது நான்பக்கத்திலிருப்பவர்கள் மேல் சாய்ந்து என்னைச் சமாளித்துக் கொள்வேன். பக்கத்திலிருப்பவர்கள் என்னைக் கோபித்துக்கொள்வதில்லை. என் எடை மிகக்குறைவு. ஆகையால் நான் யார் மேலாவது சாய்ந்தாலும் அவர்களுக்கு நான் சாய்வதுதெரியாது.
இப்போது நான் பஸ்ஸின் பின்பக்கத்தின் ஒரு சீட்டின் கம்பியைப் பிடித்துக்கொண்டு நிற்கிறேன். என் இருபுறமும்மலைபோல் பெரிய பெரிய மனிதர்கள். அவர்கள் என்னை மறைத்துக் கொண்டிருக்கிறார்கள். வெளியிலிருந்து என்னைப்பார்க்கவே முடியாது. பார்க்க முடிந்தாலும் யாரும் கவனிக்க மாட்டார்கள். இதுதான் கஷ்டம்-- ரொம்பப்பேர் என்னைப்பார்த்தாலும் கவனிப்பதில்லை, என் பக்கத்திலிருப்பவர்கள், எதிரிலிருப்பவர்கள் என்னைப் பார்க்கலாம், ஆனால் அக்கறையெதுவுமின்றிப் பார்ப்பார்கள். நான் இருப்பதும் இல்லாததும் அவர்களுக்கு ஒன்றுதான். இதற்குக் காரணமென்னவென்றால்,என்னைத் தனிப்படுத்திக் காட்டக்கூடிய எந்தவிதச் சிறப்பும் என் தோற்றத்தில் இல்லை... என் உயரம் ஐந்தடி இரண்டங்குலந்தான்.நான் ஒல்லி, ஆனால் கவனத்தை ஈர்க்கும்படி அவ்வளவு ஒல்லியில்லை. நான் கறுப்பு, ஆனால் என்னை ஒருமுறை பார்த்தவர்கள்மறுபடி திரும்பிப் பார்க்குமளவுக்கு அவ்வளவு கறுப்பில்லை. நாற்பது வயதில் என் தலைமுடி நிறைய உதிர்ந்துவிட்டது.ஆனால் வழுக்கை விழவில்லை. வழுக்கை விழுந்திருந்தால் அது மற்றவல்களின் பார்வையில் படும். என் முகம் சராசரி-ரொம்பஅழகுமில்லை, ரொம்ப அவலட்சணமுமில்லை, மூக்கு சப்பையுமில்லை, சிறியதுமில்லை. கண்கள் ரொம்பப் பெரிதுமில்லை, ரொம்பச் சிறிதுமில்லை. ஆகையால் இந்தக் கூட்டத்தில் யாரும் என்னைப் பார்ப்பார்களா? பார்த்தாலும் கவனிக்கமாட்டார்கள் என்று எனக்குத் தெரியும்.
என் கல்யாணத்துக்குப்பிறகு மனத்தைத் தொடக்கூடிய, அதே சமயம் வேடிக்கையான நிகழ்ச்சியொன்று நடந்தது. புதுமனைவி என் வீட்டுக்கு வந்து ஓரிரண்டு நாட்களுக்குப் பின் அவளைக் கூட்டிக்கொண்டு வெளியே புறப்பட்டேன். இன்னும்சில நாட்களுக்குப்பின் மாமனார் வீட்டுக்கு இரண்டாம் முறையாகப் போகும் சடங்கு இருந்ததால் சில துணிமணிகள்வாங்க வேண்டியிருந்தது.
நான் வீட்டிலிருந்து கிளம்பியதும் என் மனைவியிடம் "நியூ மார்க்கெட் போவோமா?" என்று கேட்டேன்.
என் பொருளாதார நிலை நியூ மார்க்கெட்டில் பொருள் வாங்க இடம் கொடுக்கவில்லை. நாங்கள் எப்போதும் எங்கள்வீட்டுக்கு அருகிலுள்ள சிறிய துணிக்கடையில்தான் மலிவு விலையில் துணிமணிகள் வாங்குவோம். இருந்தாலும் நான் என்மனைவியை நியூ மார்க்கெட்டுக்குக் கூப்பிட்டதற்கு ஒரு காரணம், என் மனைவி வெளியூர்க்காரி, கல்கத்தாப் பெண்ணல்ல. அவள்நியூ மார்க்கெட் பார்த்ததில்லை. இன்னொரு காரணம், என் மாமனார் எங்களைக் காட்டிலும் சற்று அதிக வசதியுள்ளவர்.ஆகையால் நான் நியூ மார்க்கெட்டுக்குக் கூட்டிப்போனால் என் மனைவி சந்தோஷப்படுவாள். துணிமணிகள் நியூ மார்க்கெட்டில்வாங்கப்பட்டவை என்று தெரிந்தால் வேற்றகத்தாரும் சற்று ஆச்சரியப்படுவார்கள்.
ஆனால் நியூ மார்க்கெட்டுப் போகலாம் என்று நான் சொல்லியது பெருந்தவறாகி விட்டது. ஏனென்றால் நான் அங்குபோகாமலிருந்தால் அந்த நிகழ்ச்சி நடந்தேயிருக்காது.
நியூ மார்க்கெட்டுக்குள் நுழைந்ததும் அங்கிருந்த கடைகளின் அலங்கார ஆடம்பரங்களில் மயங்கிவிட்டாள் என் மனைவி.அவள் ஒவ்வொரு கடையின் முன்னாலும் நிற்பாள், அதன் ஷோகேசை ஆர்வத்தோடு பார்ப்பாள். அவள் என் பக்கம் திரும்பிப்பாக்கவும் மறந்துபோய் விட்டாள். அவள் என் புது மனைவி. ஆகையால் அவள் என்னைத் திரும்பிப் பார்க்காததில் எனக்குவருத்தம் ஏற்பட்டது இயற்கைதான். நான் அவளுக்கு எதாவது ஒரு குறிப்பிட்ட பொருளைச் சுட்டிக்காட்டிச் சட்டாம் பிள்ளைத்தனம் செய்து பார்த்தேன். ஆனால் அவள் குறிப்பிட்ட எந்தப் பொருளிலும் அக்கறையில்லாமல் எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். எனக்கு வந்த கோபத்தில் நான் வேண்டுமென்றே என் நடையின் வேகத்தைக்குறைத்துக் கொண்டு பின் தங்கினேன். அப்படியும் அவள் என்னைக் கவனிக்காமல் மேலே போய்க்கொண்டேயிருந்தாள்.இதைப்பார்த்து நான் நின்றே விட்டேன். அவள் நடந்து போய்க் கொண்டேயிருந்தாள். அவளுடைய கண்கள் ஆர்வத்துடன்கடைப்பண்டங்கள் மேலே பதிந்திருக்க அவள் நடந்து சென்ற முறை மரியாதை அணிவகுப்பில் சிப்பாய்கள் நடந்துபோவார்களே அதை நினைவுறுத்தியது. கடைகளின் பிரகாசமான வெளிச்சத்தில் அவள் கூட்டத்தில் புகுந்து நடந்ததை நான்தொலைவிலிருந்து கவனித்தேன். நானும் அவளுடன் வருகிறேன் என்று நினைத்து அவள் சில சமயம் பேசினாள், ஆனால் நான்பக்கத்திலிருக்கிறேனா என்று கவனிக்கவில்லை. இவ்விதம் கொஞ்ச தூரம் சென்றபிறகு அவள் ஏதோ ஒரு பொருளைப் பார்த்துமிகவும் பரபரப்போடு எனக்கு அதைக் காட்டுவதற்காகப் திரும்பிப் பார்த்தாள். நான் அருகில் இல்லை என்பதை அப்போதுதான்கவனித்து அப்படியே நின்றுவிட்டாள். அவள் பயந்துபோய் நாற்புறமும் என்னைத் தேடத் தொடங்கினாள். இப்போது ஒருவேடிக்கை செய்யும் ஆசையை என்னால் தவிர்க்க முடியவில்லை. நியூ மார்க்கெட்டில் குறுக்கும் நெடுக்குமாக ஏராளமான குறுகியசந்துகள், நான் சட்டென்று என் முன்னாலிருந்த சந்தொன்றில் நுழைந்து விட்டேன். இப்போது அந்த வெளியூர்க்காரி என்னைத்தேடிக் கண்டுபிடிக்கட்டும்! என்னைக் கவனிக்காமலிருந்ததன் பலனை அனுபவிக்கட்டும்!
நான் உள்ளூரச் சிரித்துக்கொண்டு சற்று வெளியே எட்டிப் பார்த்தேன். என் மனைவிக்கு அழுகை வந்துவிடும் போலிருக்கிறது.அவள் நாற்புறமும் பார்த்துக்கொண்டு வேகமாகத் திரும்பி வருகிறாள். நான் நின்று கொண்டிருந்த சந்துப்பக்கமும் அவள்வந்தாள். ஆனால் என்னைக் கவனிக்காமல் போய்விட்டாள். இந்த வெளியூர்க்காரப் பெண் ரொம்ப சாகசக்காரி, நான்வேண்டுமென்றே மறைந்து கொண்டிருப்பதால் என்னைப் பார்த்தும் பார்க்காததுபோல் போய்க்கொண்டிருக்கிறாள் என்றுநான் முதலில் நினைத்தேன். ஆனால் அவளுடைய பரிதாபமான முகத்தைப் பார்த்தால் என் எண்ணம் தவறென்று தோன்றியது.
நான் கடைசியில் ஒரு கடிகாரக்கடை முன்னால் அவளது வழியை மறித்து நின்று கொண்டு "ஏய் !" என்று கூப்பிட்டேன். அவள் மிகவும் திடுக்கிட்டு என்னைப் பார்த்தாள். சற்றுநேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டுப் பிறகு பெரிது பெரிதாக மூச்சுவிட்டவாறு, சிரித்துக் கொண்டு, "நீங்களா? எங்கே போயிருந்தீங்க இவ்வளவு நேரம்? நான் எவ்வளவு நேரமா ஒங்களைத் தேடிக்கிட்டிருக்கேன!" என்று சொன்னாள். அவள் சொல்லியது உண்மை தானென்று எனக்குத் தோன்றியது, நான் இவ்வளவு நேரம்அவளோடு கண்ணாமூச்சி விளையாடினேன், அவள் என்னைப் பார்க்கப் பலமுறை வாய்ப்புக் கொடுத்தும் அவள் என்னைப்பார்க்கவில்லை, அவளுக்கு முன்னால் நான் நிற்கும்போது கூட அவள் என்னைக் கவனிக்கவில்லையென்று வீடு திரும்பும்போதுஅவளிடம் சொன்னேன். முதலில் அவள் நான் சொன்னதை நம்பவில்லை, ஆனால் நான் வற்புறுத்திச் சொன்னதும் அவள்ஆச்சரியப்பட்டுச் சொன்னாள், "அப்படியா? இனிமே இப்படிச் செய்யாதீங்க.. இது ரொம்ப ஆபத்து..!"
"நிறுத்துப்பா, கண்டக்டர்! நான் இங்கே இறங்கணும்.. கொஞ்சம் நகருங்க.. என் மூக்குக் கண்ணாடி.."
நான் அவசர அவசரமாக இறங்க முற்பட்டேன். என் பேச்சை யாரும் கேட்கவில்லை. நான் இறங்குவதற்கு முன்னாலேயே கண்டக்டர் மணியடித்துவிட்டான். ஒரு பொதுக்கை ஆள் எனக்கு இறங்க வழிவிடாமல் படியில் நின்று கொண்டிருந்தான். புஷ்ஷர்ட் அணிந்த வாலிபன் முழங்கையால் இடித்து என் மூக்குக் கண்ணாடியை வளைத்து விட்டான்.
அதனால்தான் சொல்லுகிறேன் - பஸ் டிராமிலும் சரி, தெருவிலும் சரி, யாரும் என்னைப் பொருட்படுத்துவதில்லையென்று..
இன்று மிக நல்ல நாள். இதமாகக் காற்று வீசுகிறது. வெயில் இருக்கிறது. ஆனால் மழைக்காலமாதலால் அதுவும் கடுமையாகஇல்லாமல் சுகமாக இருக்கிறது. இப்போது இந்தத் தெருவில் நடந்துபோக எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. சற்று தூரம்போனால் ஒரு நாற்சந்தி, அதைத் தாண்டிப் போனால் என் ஆபீஸ். நான் நாற்சந்திக்கு வந்து தெருவைக் கடக்க முற்பட்டஅதே சமயத்தில் போலீஸ்காரர் கையை இறக்கிக் கொண்டு விட்டார். இப்போது நான் ரஸ்தாவைக் கடக்க முடியாபடிவண்டிகள், எண்ணற்ற வண்டிகள். "ஏனய்யா, போலீஸ்காரரே! நான் ரஸ்தாவைக் கடக்கப் போவது ஒனக்குத் தெரியாதா?இன்னும் கொஞ்ச நேரம் கையைத் தூக்கிக்கிட்டிருந்தா ஒன் கை ஒடைஞ்சு போயிடுமா?" நான் மாடிக்குப் போவதற்காக ஏறியிருக்கும் லிஃப்டுக்கு நூறு வயது. இதற்கு நாற்புறமும் கம்பிச் சுவர். பார்க்க இரும்புக்கூண்டு போலிருக்கும். ஏறி இறங்கும்போதுகொஞ்சம் ஆடும், மெதுவாக ஏறும். நான் கடந்த பதிமூன்று ஆண்டுகளாக இந்த லிஃப்டில் ஏறி மேலே போகிறேன். லிஃப்ட்ஊழியன் ராம் ஸ்வரூப் போகி. இந்தப் பதிமூன்று வருடங்களாக என்னை வாரத்தில் ஆறு நாட்கள் இந்த லிஃப்டில் ஏற்றிச்செல்கிறான். "ஏம்பா ராம்ஸ்வரூப், நீதான் என்னை ரொம்ப நாளாப் பார்த்துக்கிட்டே வரியே - அதாவது, என் இருபத்தாறுஇருபத்தேழு வயசிலேருந்து. அப்போ என் முகத்திலே முதுமையின் சாயல் விழலே. இப்போ சொல்லு, என் பேரென்ன?
நிசமாகவே அவனைக் கேட்டால் அவன் ஹாஹாவென்று சிரித்துக்கொண்டு பதில் சொல்வான், "அதென்னங்க, ஒங்க பேருதெரியாதா எனக்கு? நீங்க அரவிந்த பாபு!"
ஆனால் உண்மையில் நான் அரவிந்த பாபு அல்ல. நான் எப்போதுமே - என் சிறு வயது முதலே அரிந்தம் பாசுதான்! நான்ஒரு வங்கியில் வேலை செய்கிறேன். வங்கி அந்தக் கட்டிடடத்தின் முதல்மாடியில் இருக்கிறது. முதலில் நான் வெவ்வேறு பிரிவுகளில்வேலை பார்த்தேன். கடந்த பத்தாண்டுகளாகப் பணப்பிரிவில் வேலை. நோட்டுகளை வேகமாக எண்ணுவேன், கணக்கிலும்புலி. ஆகையால் என்னைப் பணப் பிரிவிலிருந்து வேறு பிரிவுகளுக்கு மாற்றுவதில்லை. எப்போதாவது மாற்றினாலும் விரைவில்மறுபடி மறுபடி பணத்துக்குத் திருப்பியனுப்பி விடுவார்கள். பத்தாண்டுகளாக மிகத் திறமையாக வேலை செய்து வருகிறேன்நான். சில சமயம் பட்டுவாடா செய்யும் பொறுப்பு. பெரும்பாலும் பட்டுவாடாப் பொறுப்புதான். காரணம் அதில்தான் ஜாக்கிரதைஅதிகம் தேவைப்படும். கம்பிச் சுவர்களாலான ஒரு கூண்டுக்குள் நான் உட்கார்ந்திருப்பேன். எனக்கு முன்னால் பல இழுப்பறைகள்.எந்த இழுப்பறையில் எவ்வளவு பணம் நோட்டாக இருக்கிறது, எவ்வளவு சில்லறை இருக்கிறது என்று நான் கண்ணைத்திறக்காமலே சரியாகச் சொல்லிவிடுவேன். நான் டோக்கனை வாங்கிக்கொண்டு இழுப்பறையைத் திறந்து பணத்தை எண்ணிமறுபடி பணத்தை எண்ணி வெளியே நிற்பவரிடம் கொடுத்துவிட்டு அடுத்த டோக்கனுக்காகக் கையை நீட்டுவேன். பிறகுமறுபடி இழுப்பறையைத் திறந்து, பணத்தை எண்ணி எடுத்துக் கொண்டு, இழுப்பறையை மூடி.. இப்படி மீண்டும் மீண்டும்செய்து கொண்டேயிருப்பேன். கௌண்டருக்கு வெளியிலிருந்து என்னைப் பார்ப்பவர்களுக்கு என் வேலை மிகவும் அலுப்பூட்டுவதாகத் தோன்றும். அவர்கள் என்னை வெளியிலிருந்து பார்ப்பார்கள், ஆனால் ஞாபகம் வைத்துக் கொள்வதில்லை..
எங்களுடைய பெரிய, நெடுங்கால வாடிக்கையாளர்களில் ஒருவர் ராம்பாபு. பெரிய தொழிற்சாலையொன்றின் உரிமையாளர்.வங்கியின் முகவரும் அவருக்கு மரியாதை கொடுப்பார். அவர் ஒரு சந்தேகப் பேர்வழி. பெரும்பாலும் பணம் வாங்கிவர யாரையும் அனுப்பாமல் தானே வருவார், செக்கைக் கொடுத்துப் பணம் வாங்கிப் போவார். நான் எவ்வளவோதடவைகள் அவருக்குப் பணம் பட்டுவாடா செய்திருக்கிறேன். அவர் புன்சிரிப்புடன் நன்றி சொல்லிவிட்டுப் பணம் வாங்கிப்போயிருக்கிறார்.
ஒரு சமயம் என் பெரிய மைத்துனன் கல்கத்தா வந்து சில நாட்கள் உல்லாசமாகப் பொழுது போக்கினான். அப்போது ஒருநாள் என்னைப் பார்க் தெருவிலுள்ள பெரிய ஓட்டல் ஒன்றுக்கு அழைத்துப் போனான். அங்கே ராம்பாபுவெப் பார்த்தேன். ஒருபோத்தல் தெளிவான ஜின்னை வைத்துக் கொண்டு தனியாக உட்கார்ந்திருந்தார். அவருடைய கண்கள் ஏதோ கனவிலாழ்ந்திருந்தன. உண்மையில், நான் என் நிலையை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று ஏங்குவதில்லை. அதற்காக ராம்பாபுவைப்பார்க்க வேண்டுமென்று எனக்குத் தோன்றியதேயில்லை. தெரிந்த மனிதராயிற்றே என்றுதான் அவர் முன்னால்போய் நின்றேன்.ராம்பாபு புருவத்தை உயர்த்திப் பார்த்துவிட்டு, "ஒங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே! எங்கே பார்த்திருப்பேன்,சொல்லுங்க!"
எனக்கு மிகவும் வெட்கமாயிருந்தது. நிஜமாகவே அவருக்கு என்னைத் தெரியாமலிருந்தால், அல்லது அகம்பாவத்தால்தெரியாதவராகப் பாசாங்கு செய்தால் எனக்கு மிகவும் அவமானமாகிவிடும்.
நான் வேறுவழியில்லாமல் என் வங்கியின் பெயரைச் சொல்லி, "நான் பணப் பட்டுவாடாப் பிரிவிலே.." என்றுசல்லத் தொடங்கியதும் அவருடைய ஜின்னின் தெளிவு அவருடைய முகத்துக்கும் வந்து விட்டது. அவர் புன்சிரிப்போடுசொன்னார், "தெரியுது, தெரியுது..! பாருங்க, அந்தக் கூண்டுக் குள்ளேயே ஒங்களைப் பார்த்துப் பார்த்துப் பழகிபோச்சு,இல்லையா? அதனாலே திடீர்னு ஒங்களை இங்கே .. புரிஞ்சுதுங்களா..? விஷயம் என்னன்னா எல்லாம் பார்க்கற கோணத்திலே இருக்கு.. சரியான கோணம் இல்லேன்னா மனுசனை எப்படி அடையாளம் காண முடியும் கூண்டுக்குள்ளேகௌன்டர் வழியாக ஒங்களைப் பார்க்கறோம். அதே மாதிரி இந்தக் கோட், பேண்ட், இந்த வழுக்கை எல்லாம் சேர்ந்துதான்நான். இதுகளிலேயிருந்து ஒங்களையும் என்னையும் பிரிச்சுட்டா, ஒங்களுக்கும் எனக்கும் உண்மையான அறிமுகமே கிடையாது.பாருங்க, இந்தப் பார்க்கும் கோணத்தைப் பத்தித்தான் இப்ப நினைச்சுக்கிட்டிருந்தேன். சின்னவயசிலே நாங்க ஒரு ரயில்காலனியிலே இருந்தோம். என்னோட அப்பா ரயில் இலாகாவிலே குமாஸ்தா. கட்டிஹார்லே, எங்க வீட்டுக்குக்கிட்டே இன்னொருவீட்டிலேருந்து ஒரபொண்ணு அடிக்கடி வந்து என் அம்மாவோட பேசிக்கிட்டிருப்பா. தாயில்லாப் பொண்ணு.சித்திக்கு அவகிட்டே பிரியமில்லே. அவ எங்க வீட்டுச் சமையலறைக்கு வந்து அம்மாவோட பேசிக்கிட்டு ஒக்காந்திருப்பா.கூனிக்குறுகி ஒக்காந்துக்கிட்டு, கிழிஞ்ச ஃபிராக்காலே சிரமப்பட்டு முழங்காலை மறைச்சுக்கிட்டு சப்பாத்தி தட்டிக் கொடுப்பா;அல்லது என் அழு மூஞ்சித் தங்கையை இடுப்பிலே வச்சுக்கிட்டு இங்கேயும் அங்கேயும் நடந்து அவளைத் தூங்கப் பண்ணுவா.அவளை எனக்குக் கலியாணம் பண்ணிக் கொடுக்கப் போறதா அம்மா சொல்லுவா. அதைக்கேட்டு நான் அவளை நல்லாப்பார்ப்பேன் - போதையேறும் எனக்கு. பார்க்கப் பரிதாபமா காஞ்ச முகமா இருப்பா அவ.. ஆனா ரொம்ப அழகு..!"
இதைச் சொல்லிவிட்டு ஒரு பெருமூச்சு விட்டார் ராம்பாபு. நான் பரபரப்போடு அவரைக் கேட்டேன், "அப்புறம் என்னஆச்சு? அந்தப் பொண்ணு செத்துப் போயிட்டாளா?"
"இல்லே, இல்லே, சாகலே. நான் பெரியவனான பிறகு அவளைத்தான் கலியாணம் பண்ணிக்கிட்டேன். இப்பவும்இருக்கா. ஒரே பொதுக்கையா ஆயிட்டா. எப்பவும் சிடுசிடுக்கறா. என்னை ஆட்டி வைக்கறா.. அவ ஃபிரிட்ஜைத் திறக்கறபோது,நகைகளைத் தேர்ந்தெடுக்கறபோது, வேலைக்காரங்களைத் திட்டறபோது அல்லது காரை எடுக்கச்சொல்லி டிரைவரைக்கூப்பிடறபோது அவளைப் பார்த்தா நம்பவே முடியலே - முந்தி ஒருநாள் ஒடம்பு சரியில்லாமே இருந்த அவளைப் பார்க்க வந்த என் அம்மா கொண்டு வந்து கொடுத்த ரெண்டு ஆரஞ்சுப் பழத்தை வாங்கிக்கிட்டு அழகாச் சிரிச்ச பொண்ணுதான் இவ..இன்னிக்குப் பாருங்க, அவளோடே சண்டை போட்டுக்கிட்டு வெளியே வந்துட்டேன். எரிச்சலாயிருந்தது எனக்கு. அந்தப்பழைய ஆசையெல்லாம் போயிடுச்சு. இங்கே வந்து தனிமையிலே ஒக்காந்தாப் பழைய நினைவெல்லாம் வருது- அவ வந்து அடுப்படியிலே கிழிஞ்ச ஃபிராக்காலே முழங்காலை மறைச்சிக்கிட்டு ஒக்காந்திருக்கறது, என் அம்மா அவளைப் பாசத்தோடு பார்க்கறது...உடனே அந்தப் பொண்கிட்டே அன்பு ஊற்றெடுத்தது என்னுள்ளே. இப்போது வீடு திரும்பி அவளைச் சமாதானப்படுத்துவேன். புரிஞ்சுதா...?" ராம் பாபு அந்த வெள்ளை ஜின்னை ஒரு மடக்குக் குடித்துவிட்டுச் சிரித்தார்.. "கௌன்டர்மூலமாத்தானே ஒங்களைப் பார்த்தேன். அந்தக் கௌன்டர் தான் முக்கியம்..."
இருபத்து மூன்று இருபத்துநான்கு வயதுள்ள ஒரு இளைஞன் கௌன்டருக்கு முன்னால் நின்று கொண்டிருக்கிறான். ஏதோநினைவில் தன் டோக்கனைக் கௌன்டரின் மேல் தட்டிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு என்னைத் தெரியும். அவனுடையஅப்பா பழைய கார்களை வாங்கி விற்பவர். முன்பு அவர்தான் பணமெடுக்க வருவார். இப்போது இவனை அனுப்புகிறார்.நடுநடுவில்நான் சிரித்துக்கொண்டே "அப்பா சௌக்கியமா?" என்று அவனைக் கேட்பேன். அவனும் புன்சிரிப்போடு தலையையசைத்து "ஆமா" என்பான். ஆனால் என்னைத் திடீரென்று இங்கிருந்து மாற்றிவிட்டு இன்னொரு சராசரித் தோற்றமுள்ளஅளைக் கௌன்டருக்குப் பின்னால் உட்கார்த்துி வைத்தால் இந்த இளைஞனுக்கு ஒரு வித்தியாசமும் தெரியாது. அப்போதும்அவன் ஏதோ நினைவில் டோக்கனைக் கௌன்டரில் தட்டிக் கொண்டிருப்பான், பணம் எண்ணிக் கொடுப்பவரைப் பார்த்துச்சிரிப்பான். தன் தவறை உணர்ந்து கொள்ளச் சற்றுநேரம் பிடிக்கும் அவனுக்கு. காரணம், அவன் ஒருபோதும் என்னைஉண்மையில் பார்க்கவில்லை. ஒரு சமயம் அவன் தன் புதுக் காதலியைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கலாம் அல்லது ஒருஸ்கூட்டர் வாங்கத் திட்டம் போட்டுக் கொண்டிருக்கலாம்...
அவன் திரும்பி ரிசப்ஷனிஸ்ட் பெண்ணைப் பார்த்தான், பிறகு கடிகாரத்தைப் பார்த்தான், டோக்கனின் நம்பரைப் பார்த்துக்கொண்டான், என் கைகள் ஒரு கட்டுநோட்டுக்களை எண்ணிக் கொண்டிருப்பதைக் கவனித்தான். பிறகு தன் முகத்தைத் திருப்பிக்கொண்டான். ஆனால் அவன் என்னைப் பார்க்கவேயில்லை என்று எனக்குத் தெரியும். இன்னும் பதினைந்து நிமிடங்களில்மணி இரண்டு அடிக்கும். நான் பணப் பட்டுவாடாவை நிறுத்தி விட்டு டிபன் சாப்பிடக் கீழே போவேன். அவன் என்னைத்தெருவிலோ, நடைபாதைக் கடையில் நான் பிஸ்கெட்டும் டீயும் சாப்பிடும்போதோ பார்த்தால் என்னை அடையாளம் கண்டுகொள்வானா?
"வாழைப்பழம் என்ன விலை? ஜோடி நாப்பது காசா? அடேயப்பா! ஆமா, ஆமா, மர்த்தமான் பழந்தான், மர்த்தமான்பழம் எனக்குத் தெரியாதா? இந்த அழகான மஞ்சள் நிறம், வழவழப்பான தோல், தடிமன் இதெல்லாம் மர்த்தமானுக்குஅடையாளம். இன்னிக்கு நான் வாழைப்பழம் சாப்பிடற நாள் இல்லைதான். நான் ஒருநாள் விட்டு ஒருநாள்தான் வாழைப்பழம்சாப்பிடுவேன். நேத்துத்தான் சாப்பிட்டேன்.. சரி, ஒண்ணு கொடு.. இல்லே, ஒண்ணுமட்டும்..! இந்தா இருபது காசு.."
வாழைப்பழம் பிரமாதம்! நான் பழத்தைச் சாப்பிட்ட பிறகும் அதன் தோலைச் சற்று நேரம் அதன் ஞாபகார்த்தமாகக்கையில் வைத்துக்கொண்டிருந்தேன். பிறகு பத்துப் பதினைந்து நிமிடங்கள் இங்குமங்கும் உலவினேன். வாழைப்பழத்தோல்இன்னும் என் கையில். எனக்கு நாற்புறமும் ஜனங்கள் அமைதியாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய முகங்களில்எவ்விதச் சலனமும் இல்லை, இவர்கள் ஒருபோதும் போரிட்ட தில்லை, நாட்டுக்காக உயிர் விட்டதில்லை, எல்லாரும் சேர்ந்துகடினமான வேலை எதையும் செய்ததுமில்லை. இந்த இனமே கொஞ்சங் கொஞ்சமாக செத்துக்கொண்டு வருகிறது, இது தன்சின்னஞ்சிறு கவலைகளில் மூழ்கியிருக்கிறது. யாருக்கும் மற்றவர்களைப் பற்றி அக்கறையில்லை. இவர்களுக்குக் காலத்தைப்பற்றிய உணர்வு இல்லை. ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளின் வரலாறு இவர்களுக்குப் புரியாது. இவர்களைப் பொறுத்தவரையில் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தொன்பது என்பது ஒரு எண்ணிக்கை மட்டுமே. "பாரத நாடு" என்ற வார்த்தைஇவர்களுக்கு ஒரு வெறும் சொல்தான் - "டெலிபதி", "க்ரீக் ரோ" முதலிய சொற்களைப்போல.
தயவு செய்து என்னைப் பாருங்கள்! நான் அரிந்தம் பாசு, அதிகம் உயரமில்லாத, அதிக ஒல்லியாக இல்லாத, அதிகச்சிவப்பில்லாத ஒரு மனிதன். நான் டெலிபதி அல்ல. க்ரீக் ரோ அல்ல, பாரத நாடும் அல்ல. அரிந்தம் பாசு என்பது வேறுவிதமானசொல். இந்த வேற்றுமையை உங்களால் புரிந்துகொள்ள முடியுமா?
அது போகட்டும்.. நான் உண்மையில் இருக்கிறேனா இல்லையா என்று எனக்கே சில சமயங்களில் சந்தேகம் வருகிறது.வங்கிக் கௌன்டருக்கு வெளியிலிருந்து கையை நீட்டிப் பணம் வாங்கிக்கொண்டு சிலர் போகிறார்கள். சிலர் புன்சிரிப்புடன்நன்றி சொல்லிவிட்ப் போகிறார்கள். ஆனால் எனக்குப் பதிலாக வேறு யாராவது அங்கே உட்கார்ந்திருந்தாலும் அவர்கள்முன்போலவே கையை நீட்டிப் பணத்தை வாங்கிக் கொள்வார்கள், அவர்களில் சிலர் நன்றியும் கூறிவிட்டுப் போவார்கள்.கௌன்டருக்குப் பின்னால் வேறு ஆள் உட்கார்ந்திருக்கிறான் என்பதைக்கூடக் கவனிக்க மாட்டார்கள்.
அந்த நியூ மார்க்கெட் நிகழ்ச்சியைத்தான் எடுத்துக் கொள்ளுங்களேன்! என் மனைவி என் முன்னால் நின்றுகொண்டே, என்னைப் பார்த்துக் கொண்டே, என்னைக் கவனிக்காமல் நான் எங்கே போய்விட்டேன் என்று தேடிக் கொண்டிருக்கிறாள்!
நான் மிகவம் கவனமாக அந்த வாழைப்பழத்தோலை நடைபாதையின் நடுவில் போட்டேன். கவனிக்காமல் நடந்துசெல்லும் மனிதர்களே! உங்களில் யாராவது அதன் மேல் கால் வைத்து வழுக்கி விழுந்தால் அந்த சமயத்தில் திடுக்கிட்டுத் தன்னினைவுக்கு வருவீர்கள். உங்களுக்கு அதிகம் அடிபடாவிட்டால், அல்லது நீங்கள் விழாமல் சமாளித்துக்கொண்டால் உங்களுக்குஒரு பெரிய லாபம் ஏற்பட்டிருக்கும். நீங்கள் நாற்புறமும் திரும்பிப் பார்ப்பீர்கள். எந்தத் தெருவில் நடந்து கொண்டிருகிறீர்கள்என்பது உங்கள் நினைவுக்கு வரும். பலமாக அடிபட்டிருந்தால் உங்கள் கை, கால், அல்லது மண்டை உடைந்திருக்கும் என்றஉணர்வில் உங்களைச் சுற்றியுள்ள ஆபத்தான சூழ்நிலையைப் புரிந்துகொண்டு எச்சரிக்கையோடிருப்பிர்கள். ஒருவேளை உங்களுக்குள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் “நீங்கள்” விழித்துக்கொண்டு “உயிரோடிருப்பது எவ்வளவு பெரிய அதிருஷ்டம்” என்பதைஉணர்ந்து கொள்வீர்கள், மற்ற சக மனிதர்களைப் பற்றி நினைக்கத் தொடங்குவீர்கள். இன்றி 1969 ஆம் ஆண்டின் ஜூலை 16 ஆம்நாள் அதாவது உங்கள் திருமண ஆண்டு விழா நாள் என்ற விஷயம் உங்களுக்கு நினைவு வரும். அல்லது இந்த ஆண்டுஉங்களுக்கு நாற்பது வயது நிரம்புகிறத் என்பதை ஞாபகப்படுத்திக் கொள்வீர்கள். போரோ புரட்சியோ இல்லாத இந்தப் பாரதநாட்டில் ஒரு சாதாரண நண்பகல் நேரத்தில் நடைபாதையில் வாழைப்பழத்தோலைப் போட்டதன் மூலம் நான் உங்களுக்குப்பெரிய கெடுதல் எதுவும் செய்துவிடவில்லை என்பதை அப்போது நீங்கள் உணர்வீர்கள்.
நீங்கள் சந்திரனைப் பற்றி, அதில் கால் வைக்க முயலும் மூன்று தைரியம் மிக்க மனிதர்களைப்பற்றி, நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? வேண்டாம், அவர்களைப்பற்றி நமக்கேன் கவலை? இந்த மாதிரி விஷயங்கள் அனாவசியமாக மனிதர்களைப்பரபரப்புக்குள்ளாக்குகின்றன; பிறகு அவர்கள் களைத்துப் போய் விடுகிறார்கள். அந்த மூன்று வீரர்களிடம் நல்ல இயந்திரங்கள்இருக்கின்றன. அவர்கள் நிச்சயம் சந்திரனுக்குபோய்ச் சேர்ந்து விடுவார்கள். பத்திரமாகக் திரும்பியும் வந்துவிடுவார்கள். நீங்கள்அவர்களுக்காக அனாவசியமாகக் கவலைப்பட வேண்டாம். தெருவைப் பார்த்து நடங்கள். ராஜபவனுக்கு முன்னால்எவ்வளவு பெரிய மைதானம், எவ்வளவு விசாலமான ஆகாயம்! உங்களுக்குப் பக்கத்தில் நடமாடிக் கொண்டிருக்கும் ஜனங்களைப்பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களை வேறு இடங்களில் பார்த்தால் அடையாளங் கண்டு கொள்ளுங்கள். இந்த இனியமாலை நேரத்தில் நான் உங்களுக்குப் பக்கத்தில் நடந்துகொண்டிருக்கிறேன். என்னைப் பாருங்கள்...! இப்போதுதான் நான்ஆபீசிலிருந்து புறப்பட்டேன், விளையாட்டு பார்க்கவேண்டுமென்று. இன்று சற்று முன்னாலேயே புறப்பட்டுவிட்டேன்,நீங்களும் அந்தப் பக்கந்தானே...?
அந்த ஆட்டக்காரன் முட்டாள் பாருங்கள்! ஆஃப் சைடிலே நின்று கொண்டு ஒரு நல்ல வாய்ப்பைக் கோட்டை விட்டுவிட்டான். விளையாட்டு முடிய இன்னும் பத்து நிமிஷந்தான் இருக்கிறது. ஒரு கோல்கூட விழவில்லை. அந்த ஆள்-ஐயோ,அவனுக்கு யார் சிவப்பு ஜெர்ஸி போட்டுக் கொள்ளக் கொடுத்தார்கள்? அவனை விரட்டுங்கள் வெளியே! இஷ்டத்துக்குத்திட்டுங்கள் அவனை! என் நாக்கில் கெட்ட வார்த்தைகள் வருவதில்லை. இருந்தாலும் பாருங்கள், கோபத்தில் என் கை கால்கள்நடுங்குகின்றன. இன்று காலைமுதல் சந்திரனையும் அதன் மேல் காலெடுத்து வைக்க முயலும் மூன்று வீரர்களைப் பற்றியும்நினைத்து என் நரம்புகள் தளர்ந்து போயிருக்கின்றன. அத்துடன் இப்போது இந்த மோசமான விளையாட்டுக் குழு! எதிர்க்கட்சிஎன் அபிமானக் கட்சியைவிட ஒரு பாயிண்ட் கூட ஜெயித்து விட்டது. என்ன கஷ்டம்! விளையாட்டு முடிய எட்டு, ஒன்பதுநிமிஷந்தான் இருக்கிறது. “என்ன சொல்றீங்க, அண்ணே? கோல் ஆகுமா? எப்படி ஆகும்? எதிர்க் கட்சிக்காரங்க. அவங்க கோலுக்குமுன்னாலே சுவர் மாதிரி நின்னுக்கிட்டிருக்காங்க. இவங்க விளையாடற அழகைப் பார்த்தா இவங்களுக்குக் கோல் போடறஎண்னம் இருக்கறதாவே தெரியலே...”
அந்த ஆட்டக்க்காரன் ஆஃப் சைடில் நின்று கொண்டு மிகவும் நல்ல வாய்ப்பைக் கோட்டை விட்டுட்டான். அவன்முன்னால் போய்ச் சொல்லத் தோன்றுகிறது எனக்கு, “ஏய், இந்தோ பாரு! நான் அரிந்தம் பாசு, சின்ன வயசிலேருந்து நான்ஒன் கட்சியை ஆதரிச்சு வந்திருக்கேன். இந்தக் கட்சி ஜெயிக்க நான் சாமிக்கு அர்ச்சனை பண்ணியிருக்கேன், தோத்தாத்தற்கொலை பண்ணிக்கலாமான்னு நினைச்சிருக்கேன். இதெல்லாம் தெரியுமா ஒனக்கு? இந்தக் கூட்டத்திலே நான் ஒரு முக்கியமானஆள். எவ்வளவு படபடப்போடே கடிகாரத்தைப் பார்த்துக் கிட்டிருக்கேன்...!” ஆனா நான் சிரிக்கிறேனா, அழறேனா, என்னசெய்யறேன்னு யார் கவலைப்படறாங்க...?
ஊஹூம், கோல் விழவில்லை! நடுவர் விசில் ஊதிவிட்டார். ஆட்டம் முடிந்து விட்டது. இப்போது பாருங்கள், நான் எவ்வளவுசோர்ந்துபோய் விட்டேன் என்று. என் தோள்கள் சரிகின்றன. நான் இந்தக் கட்சியை எவ்வளவு நேசிக்கிறேன், பாருங்கள்.ஆனால் அதனால் கட்சிக்கு என்ன வந்தது? இந்தக் கட்சி ஜெயித்த போதெல்லாம் நான் எப்படிக் குதித்திருக்கிறேன், அறிமுகமில்லாதவர்கள் முதுகில் தட்டியிருக்கிறேன், தோற்றபோது எப்படி அழுதிருக்கிறேன் என்றெல்லாம் இவர்களுக்குத் தெரியாது. எல்லாம் வீண். இதனாலெல்லாம் ஒரு பிரயோசனமுமில்லை. நான் இன்று காலை முதல் சந்திரனையும் அந்த மூன்று வீரர்களையும் பற்றிச் சிந்தித்துச் சிந்தித்து, அந்தக் கவலையில் சோறு கூட இறங்காமல்.. இதைப்பற்றியெல்லாம் யாருக்கு அக்கறை?
தயவு செய்து என்னைப் பாருங்கள். எனக்குத்தெரியும், ஏற்கெனவே நீங்கள் பந்தயப் பட்டியலில் உங்கள் அபிமானக்கட்சியின் நிலை குறித்துக் கவலையாயிருக்கிறீர்கள். அதற்கு மேல் சந்திரன், சந்திரப் பயணிகள் மூவரைப்பற்றிய கவலை வேறு.உலகத்தில் எவ்வளவு நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன! மனிதன் இருபத்தொன்பதரை நீளம் தாவுகிறான்; ஒரு ஜனாதிபதிசுட்டுக் கொல்லப்படுகிறார்; உங்கள் அரசியல் கட்சி தேர்தலில் தோற்றுவிடுகிறது; புரட்சி வரத் தாமதமாகிறது. ஆகையால்தான்நான் -- வங்கிக் குமாஸ்தா அரிந்தம் பாசு- உங்களுக்கு இவ்வளவு அருகிலிருந்தாலும் உங்களால் என்னைப் பார்க்க முடியவில்லை. என் நான்கு வயதுப் பிள்ளை ஹாபு மாடி வராந்தாவில் கையைப் பிடித்துக்கொண்டு குனிந்து பார்த்துக் கொண்டிருக்கிறான். யாருக்கும் அடங்கமாட்டான். காலையிலிருந்தே பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கிறான். நான் சீக்கிரம் ஆபீசிலிருந்துவந்து அவனைத் தேர்த் திருவிழாவுக்குக் கூட்டிப் போக வேண்டுமாம். எனக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறான்அவன். கூடைமாதிரி தலைமுடிக்குக் கீழே பளபளக்கின்றன அவனுடைய கண்கள், இவ்வளவு தூரத்திலிருந்தே அவற்றைப்பார்க்க முடிகிறது என்னால்.
நான் மாடிப்படியில் கால் வைத்திருக்கிறேன். அதற்குள் அவன் ஓட்டம் ஓட்டமாகக் கீழே ஓடி வருகிறான். அவனுடையஅம்மா மேலேயிருந்து, "ஹாபுபூ..! எங்கே போறே?" என்று கத்துகிறாள். ஹாபு என் மேல் தாவிக் கொண்டு சிரிக்கிறான்;"ஏன் இவ்வளவு லேட்டு? திருவிழா போக வேண்டாமா?" என்று கேட்கிறான்.
ஆமாம், நான் வெளியிலிருந்து திரும்பியதும் என் மக்களுக்கு மத்தியில் சற்று ஆறுதல் பெறுகிறேன். பையனை இடுப்பில்தூக்கி வைத்துக்கொண்டேன். அவனது உடலில் இனிமையான வேர்வை மணம்; குளிர் காலத்து வெயில் போல வெதுவெதுப்பாக,இதமாக இருக்கிறது அவனது ஸ்பரிசம். முகத்தை அவனது உடலில் புதைந்து கொண்டால் கண்ணுக்குத் தெரியாமல் ஸ்நானம்செய்யும் உணர்வு ஏற்படுகிறது எனக்கு.
"போகலாம்ப்பா. எனக்கு ரொம்பப் பசிக்குது. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு சாப்பிட்டுக் கிளம்பலாம்" என்று சொன்னேன்.
நான் ஓய்வு எடுத்துக் கொள்ளும்போது ஹாபு என் உடம்போடு ஒட்டிக் கொண்டிருந்தான், "சீக்கிரம், சீக்கிரம்!"அதட்டினாள், "திட்டாதே! சின்னப் பையன் தானே!" என்று நான் அவளைத் தடுத்தேன். அவன் இந்த மாதிரி என்னோடுஒட்டிக்கொண்டிருப்பது எனக்கு நிஜமாகவே பிடித்திருக்கிறது. ரொம்ப விஷமக்காரப் பையன் அவன். திருவிழாவுக்குப் போனதும்என் கையைவிட்டு ஓடத் தொடங்கிவிட்டான். "ஹாபு, ஓடக் கூடாது! என் கையைப் பிடிச்சுக்கிட்டாத் திருவிழாவை நல்லாப்பார்க்கலாம்" அவன் இங்குமங்கும் பார்த்துவிட்டு உரக்கக் கத்தினான், "அது என்னப்பா? அங்கே என்ன?"
"அது குடை ராட்டினம். அது சர்க்கஸ் கூடாரம்.. அது சாவுக்கிணறு..
ஒரு முழு அப்பளத்தைக் கையிலெடுத்துக்கொண்டு குடை ராட்டினத்தில் ஏறிவிட்டான் ஹாபு. அதோ போகிறான்.. வானத்துக்கு அருகில் சிரித்துக்கொண்டு கையை ஆட்டுகிறான், என்னைப் பார்த்துச் சிரிக்கிறான். அவனைப் பார்க்க மகிழ்ச்சியாயிருக்கிறதுஎனக்கு. சாவுக் கிணற்றைச் சுற்றியிருக்கும் மேடையில் நின்கொண்டு கிணற்றுக்குள் பயங்கர ஓசையுடன் மோட்டார்சைக்கிள் வேகமாக ஏறி இறங்குவதை ஹாபுவுக்குக் காட்டினேன். அவன் என்னை இறுகக் கட்டிக் கொண்டு அந்தக் காட்சியைப்பார்த்தான்.
அதன் பிறகு நாங்கள் அரைமணி நேரம் சர்க்கஸ் பார்த்தோம். இரண்டு தலை மனிதன், பாடும் பொம்மை, எட்டடிஉயரமுள்ள ஆள்.. ஹா பேச்சில்லாமல் இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய கண்களில் ஆச்சரியம்பளபளத்தது.
வெளியே வந்து அவனைக் கீழே இறக்கிவிட்டேன். அவன் எனக்கருகே நடக்கத் தொடங்கினான். அவன் கையைப் பிடித்திருந்த என் கை வியர்க்கத் தொடங்கியதால் நான் அவன் கையை விட்டுவிட்டேன்.
அவன் என் கையை விட்டுவிட்டு முன்னால் போகிறான். ஒரு கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஊதல்களைக்குனிந்து பார்க்கிறான். பிறகு மேலே போய் இன்னொரு கடையில் முடுக்கி விடப்படும் ஏரோப்பிளேன் பொம்மைகளைப் பார்க்கிறான். பிறகு மெதுவாக முன்னேறுகிறான்; விளையாட்டுத் துப்பாக்கிகள், கலர்ப் பந்துகளைப் பார்த்துக்கொண்டு போகிறான்..கூட்டத்துக்குள்ளே போகிறான்...
நான் என் அபிமானமான விளையாட்டுக் காட்சியைப் பற்றி நினைக்கிறேன். இன்று அனாவசியமாக ஒரு பாயிண்ட்டைஇழந்து விட்டதே கட்சி..! சந்திரனுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்களே மூன்று மனிதர்கள்... அவர்கள் சந்திரனுக்குப் போய்ச்சேர்ந்து விடுவார்களா..?
ஹாபு எங்கே..? அவனைக் காணோமே! கூட்டத்துக்கு நடுவில் அவனுடைய நீலக் கலர் சட்டையை ஒரு நிமிஷம்முன்னாலே கூடப் பார்த்தேனே! சட்டேன்று மறைந்துபோய் விட்டானே!
நான் "பாபூஊஊ!" என்று கத்திக் கொண்டே கூட்டத்துக்குள் ஓடினேன்..
நீங்க யாராவது நீலச்சட்டை போட்ட நாலு வயசுப் பையனப் பார்த்தீங்களா? அவன் பெயர் ஹாபு.மிகவும்விஷமக்காரப் பையன். பார்க்கலியா..? கூடைமாதிரி தலைமுடி, பளபளக்கும் கண்கள்.. இல்லே, பொம்மைக்கடை வாசலில் நின்னுக்கிட்டிருக்கறவன் ஹாபு இல்லே. ஆனால் ஹாபுவும் இவன் மாதிரிதானிருப்பான்...அவனை அடையாளங் கண்டுபிடிக்கற மாதிரி குறிப்பான அடையாளமெதுவுமில்லெ. பார்க்க சாதாரணமாத்தான் இருப்பான். என் மாதிரி. அவன் வயது நாலு, நீலக்கலர் சட்டை போட்டுக் கிட்டிருப்பான்..அவ்வளவு தான் சொல்ல முடியும்..நீலக்கலர் சட்டை போட்டுக்கிட்டிருக்கறநாலு வயசுப் பையன்கள் நிறையப்பேர் இந்தக் கூட்டத்திலே இருக்காங்க.. இந்த ஆயிரக்கணக்கான ஜனங்களுக்கு நடுவிலேஎன்னோட ஹாபு யாருன்னு அடையாளங்கண்டு பிடிக்கிறது எனக்குக் கஷ்டந்தான்.. அதே மாதிரி அவனாலும் இத்தனைபேருக்கு நடுவிலே என்னைக் கண்டுபிடிக்க முடியாது..அவனோட அம்மாவாலேயே ஒருமுறை கண்டுபிடிக்க முடியலே..நீங்கஹாபுவைக் கண்டு பிடிச்சீங்கன்னா, தயவுபண்ணி அவன்கிட்டே சொல்லுங்க..நான்தான்..நான்தான் அவனோட அப்பான்னு..!என்னை நல்லாப் பார்த்துக்கங்க தயவு செஞ்சு.. மறந்து போயிடாதீங்க..!
21. பின்புலம்
தாறுமாறாகக் காற்றடித்துக் கொண்டிருந்தது - பங்குனி மாதம் போல் தாறுமாறாகக் காற்றடித்துக் கொண்டிருந்தது. - நாள்முழுதும். வகுப்பை முடித்துக் கொண்டு ஆசிரியர்களின் அறைக்குத் திரும்பும்போது பிநய்யின் பார்வை பள்ளிக்கு வடக்குப் புறமிருந்தவீட்டின் மேல் விழுந்தது. ஆசிரியர் அறையிலிருந்து வகுப்புக்குப் போகும்போது யூகலிப்டஸ் மரத்தின் உச்சி அவன் கண்ணில்பட்டிருந்தது. இங்கிருந்து இடுகாடு கண்ணுக்குத் தெரியாது. இடுகாட்டின் தென்கிழக்கு மூலையில்தான் அந்த மரம்.
அந்தக் காற்று உடம்பின் திரவப் பகுதியை அளவுக்கதிகமாக உறிஞ்சிவிட்டதால் தோல் காய்ந்துபோய் சொரசொரப்பாகஆகிவிட்டது. முகத்தைக் கையால் தடவினால் காய்ச்சல் மாதிரி சுடுகிறது. சலவை செய்யப்பட்ட துணிகளை மடிப்புக் கலையாமல்இன்று எடுத்து உடுத்திக்கொண்டு, இன்றே முகத்தை ஷேவ் செய்து கொண்டிருந்தால் இந்தக் கதகதப்பு, வறட்சி இருந்திருக்காது..
பள்ளிக்கு வடக்குப்புறத்து வீட்டுக்கு மேலே வானத்தைத் தவிர வேறெதுவும் என்றுமே இருந்ததில்லை - யூகலிப்டஸ்மரத்தைத்தவிர. வானமும் யூகலிப்டஸ் மரமும் இந்த ஒன்றுமில்லாத வெறுமையை இன்னும் அழுத்தமாகக் காட்டின - தாய்அல்லது தந்தையை அண்மையில் இழந்தவன் பின்னால் உணரும் வெறுமைபோல. ஒரு கூத்து நடந்து முடிந்த உடனே 'ஏதோஒன்று சற்று முன் இருந்தது, இப்போது இல்லை' என்ற உணர்வு ஏற்படுவதுபோல... இந்த வெறுமைக்குத் தன்னை மிகவும் பழக்கப்படுத்திக்கொண்டு விட்டான் விநய். ஆகையால் அகாலத்தில் வீசிய இந்த வசந்த மாருதம் அவனை எவ்வளவு மகிழ்வித்திருக்கவேண்டுமோ அவ்வளவு மகிழ்விக்கவில்லை. மாறாக அவன் எப்போதோ தான் அனுபவித்து இப்போது கழிந்துபோய்விட்டஏதோ ஒரு உணர்விலே அமிழ்ந்திருந்தான்.
விளையாட்டு மைதானத்தில் அசோக் பள்ளி மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறான். அவன்அணிந்திருந்த பேண்டும் விக்கெட்டுக்குப் பின்னால் அவன் தயாராக நின்று கொண்டிருந்த தோரணையுமே பிநய்யின்கவனத்தை ஈர்த்தன.
பிநய் தன் வகுப்பில் கரும்பலகையில் ஒரு மரத்தையும் அதன் கிளையில் பறக்கத் தயாரான நிலையிலுள்ள பறவையொன்றையும் வரைந்துவிட்டு அறை வாயிலில் தன்மேல் காற்று வீசும்படி நின்றான். இன்று காலையில் அவன் ஷேவ் செய்துகொண்டிருந்தால் அல்லது சலவை மடிப்போடு உடையணிந்து கொண்டிருந்தால் இந்த வசந்த மாருதத்தை வரவேற்றிருப்பான்.ஆனால் தன்னிடமிருந்த திரவப்பொருள் வற்றிவிட்ட நிலையில் அவனுடைய உலர்ந்த முகத்தில் பட்ட காற்று அவன் கண்களைஇடுக்கிக் கொள்ளச் செய்தது. அவன் தன்னை வீணாக்கிக் கொண்டிருப்பதாக உணர்ந்தான்.
வசந்த மாருதம் என்பது தென்றல் காற்று. ஆனால் அவனிருப்பது வடக்கு வங்காளத்தில். தெற்கே வெகுதொலைவில்கடல். அதன் கரையில் கல்கத்தா. இந்தக் காற்று கல்கத்தாவிலிருந்து வருகிறது என்ற நினைவே தான் வீணாகிக் கொண்டிருக்கிறோம்என்ற உணர்வை வலுப்படுத்தியது. ஆகையால் அவன் அடுத்த வகுப்பில் கரும்பலகையில் வெறும் தட்டையும் அதன்மேல்கோப்பையையும் வரைந்தான்.
பொழுது சாய்ந்தபின் காற்று குறைந்து தேய்பிறையின் தொடக்க காலத்துச் சந்திரனோடு *தொடங்கியது. குளிர் அதிகரித்தது.தெருவில் தூசி.
செருப்பு அறுந்து போயிருந்தது. தெருவில் நடக்கும்போது இழுத்து இழுத்து நடக்க வேண்டியிருந்தது. அதனாலேற்படும்ஒரு மாதிரியான சத்தம் மக்களின் காலடியோசைக்கு நடுவில் தனியாகக் கேட்கவில்லை. ஆனால் இப்போது முன்னிரவின்ஜனநடமாட்டமற்ற அமைதியில் இந்த அரவம் பிநய்யின் காதில் தெளிவாக விழுந்தது. நள்ளிரவில் தூக்கம் கலைந்தால்கடிகாரத்தின் டிக்டிக் ஒலி இடைவிடாமல், பொருளில்லாமல் கேட்குமே அது போலத்தான் இந்த இழுத்து-இழுத்து நடக்கும்காலடியோசையும். ஒரே மாதிரியான, தடைபடாத, ஆனால் இதமான இந்த ஒலி நிற்கவே நிற்காது, தொடர்ந்து கொண்டேயிருக்கும் என் பிநய்க்குத் தோன்றியது.
அவன் சட்டென்று நின்றான். காலடியோசையும் ஓய்ந்து விட்டது. அப்படியானால் இது அவனுடைய காலடியோசைதான்.அவன் மறுபடி நடக்கத் தொடங்கினான். இழுத்து இழுத்து நடப்பதால் ஏற்படும் ஒலி, பழக்கப்பட்ட, இதமான ஒலி மாறாது,நிற்காது. இப்பொழுதே செருப்பைப் பழுது பார்த்துவிட வேண்டும். இப்போதே..! அவன் நாற்புறமும் பார்த்தான். ஊஹூம், அதற்குவழியில்லை... கல்கத்தாவாயிருந்தால் அவனுடைய காலடியோசை மற்ற காலடியோசைகளில் அமுங்கிப் போயிருக்கும். ஆனால்இங்கே வேறு எவருடைய காலடியோசையும் இல்லை.
சாகக்கிடக்கும் நோயாளி ஜன்னி வெறியில் உடம்பைக் குறுக்கிக் கொள்வான், விறைத்துக் கொள்வான். ஏதாவதுதேவைப்பட்டால் வாய் பேசமுடியாத நிலையில் கையைக் கண்டபடி ஆட்டுவான், கண்களை அகலமாகத் திறந்து விழிப்பான்,அடுத்த நிமிடமே சோர்வில் துவண்டு போய்விடுவான். அதுபோல் செருப்பைப் பழுது பார்த்துவிட வேண்டுமென்று பரபரப்படைந்தபிநய் மறுகணமே துவண்டுபோனான். சாக்...கர் சாக்! சாக்... கர் சாக்! ஒரே மாதிரி ஒலி, ஒரே மாதிரி, இருட்டாயிருக்கட்டும்,வெளிச்சமாயிருக்கட்டும், வளர்பிறையானாலும் சரி, தேய்பிறையானாலும் சரி முகச்சவரம் செய்து கொண்டிருந்தாலும் சரிஇல்லாவிட்டாலும் சரி - ஒரே மாதிரி ஒலி. ஜனநடமாட்டமிருந்தால் ... அதுதான் இல்லையே... ஆகையால் ஒரே மாதிரிஒலி... ஜட்கா வண்டி போனாலும் சரி, மாட்டு வண்டி போனாலும் சரி, சக்கரங்களின் உராய்வில் சரளைக் கற்கள் அழுதாலும் சரி...கேள்வி கேட்பாரில்லை. யாரும் அடிமையில்லை, யாரும் ஆண்டானில்லை, எல்லாரும் பொதுமக்கள்... சாக்... கர் சாக்...!
ஜன்னி கண்ட நோயாளி கத்துவதன் மூலம் சற்று ஆறுதல் பெற முயல்வது போல் பிநய்யும் சில முரட்டு ஒலிகளையெழுப்பித்தன் சங்கட உணர்விலிருந்து விடுதலை பெற முயன்றான். அப்போது அவனுடைய காலடியோசை அவனுக்கு உணர்த்தியது-இந்த ஓசையை நிறுத்தும் உபாயமெதுவும் அவனுக்குத் தெரியாது. இந்த ஊருக்கே தெரியாது; ஆகையால் இந்த 'சாக்... கர் சாக்'தொடரட்டும்!
தன் முழுநாளைய அனுபவத்தை இந்த முன்னிரவு வேளையில், நடந்து செல்லும்போது இந்த மொழியில் வெளிப்படுத்தியதும் பிநய்யின் அடிவயிற்றிலிருந்து தொண்டைவரை சிரிப்பலை ஒன்று வாந்திபோல் திரண்டு வந்தது.
பிநய் நாகரீகமாகச் சிரிப்பதற்குப் பதிலாக ஒரு குடிகாரன் போல் பலமாகச் சிரிக்க முயன்றான். தன் சிரிப்பின் நாற்றத்தைமுகர விரும்பியிருக்கலாம் அவன். ஏப்பம்விட அவன் செய்த முதல் முயற்சியை நிறுத்தவில்லை. அவனுடைய குழந்தைப்பருவத்தில் முதல் சோறு உண்ணும் சடங்குக்குப் பிறகு அவனுடைய வயிற்றுக்குள் எவ்வளவு உணவுப் பொருள்கள்போய்ச் சேர்ந்திருக்கின்றன என்று நினைத்துப் பார்த்தான் அவன். எவ்வளவு பொருள்கள் வயிற்றில் குவிந்து, அழுகி.. ஒரு போடுபோடு வெங்காயம், உருளைக்கிழங்கு, கபாப், ராவிலே விருந்து...
இவ்வாறு நினைத்துவிட்டு அவன் ஓரிரண்டு முறை ஏப்பம் விட முயற்சித்தான். தொண்டைக்குழாயில் சற்று அழுத்தம்கொடுத்துப் பிறகு ஓர் ஏப்பம் விட்டான். அப்போது வாயைத் திறக்க மறந்துவிட்டதால் அந்த ஏப்பத்தின் நாற்றத்தை முகரமுடியவில்லை. பிறகு வாயைத் திறந்துகொண்டு இரண்டு முறை முயற்சி செய்தான். "சீ, இதென்ன அசட்டுத்தனம்!" என்றுதன்னையே கடிந்துகொண்டு அவன் மேலே நடக்கத் தொடங்கினான். மறுபடியும் அதே ஒலி - சாக்...கர் சாக்! சாக்... கர் சாக்!அதைக் கேட்காதபோல் அவன் நினைக்கத் தொடங்கினான்- "நான் எங்கே போறதுன்னு தீர்மானம் பண்ணியிருக்கேனா,இல்லையா..? இல்லே, வீட்டைவிட்டுக் கிளம்பறபோது ஒண்ணும் நிச்சயம் பண்ணல. காலையில டீ குடிக்கிற மாதிரி பொழுதுசாஞ்சதும் சுதீர் அண்ணாவீட்டுக்குப் போகத்தான் வேணுமா? போய் என்ன செய்யப்போறேன்? நியூஸ் பேப்பரை இன்னொருதடவை படிப்பேன். வெளியிலே பெஞ்சிமேல படுத்துக்கிடப்பேன்.. இல்லாட்டி, அந்தப் பொண்ணு- அவ பேரு என்ன? கோலாபா,டகரா? இல்லே, ஜுயியா? பூனை கீனையா?"
அவனது சிந்தையின் இழை அறுந்துபோய்விட்டது. ஓரிழை அறுந்ததும் வேறோர் இழை கிடைத்துவிட்டது. சாக்... கர் சாக்,சாக்...கர் சாக் ஒலியைச் சற்று மறந்திருந்த அவனை மறுபடியும் ஆக்கிரமித்துக் கொண்டது. சாக்... கர் சாக், சாக்... கர் சாக்..
"இல்லே, இல்லே, சுதீர் அண்ணா வீட்டுக்குப் போகப் போறதில்லை. இதற்குள் அந்த வீடு இருந்த சந்து முனைக்குவந்துவிட்டான் அவன். அவன் மீண்டுமொரு முறை தனக்கே சொல்லிக்கொண்டான், 'இல்லே, போகப்போறதில்ல!' சந்துமுனையில் இடதுபறம் திரும்பாமல் ஓரிரண்டு காலடிகள் வைத்து விட்டுப் பிறகு அவன் தன்னையே கடிந்துகொண்டான்,"இதெல்லாம் என்ன! நல்ல வேளையா சுதீர் அண்ணா வீடு இருக்கு; இல்லாட்டி நாள்பூரா என் வீட்டிலேயே அடைஞ்சுகிடக்கணும்!"
பிநய் இடதுபக்கம் சந்துக்குள் திரும்பினான். சாக்... கர் சாக், சாக்... கர் சாக்... நல்ல அவஸ்தை இது! எல்லாத்தையும் குழப்பிவிட்டுடுது இந்தச் சத்தம்! இன்னிக்குப் போய்ப் பாபுயியோட பாட்டு நோட்டிலே படம் வரைஞ்சு தரணும். ஆமா, அந்தப்பொண்ணோட பேரு பாபுயி. சாக்... கர் சாக், சாக்... கர் சாக். ஒரே சத்தம். இருட்டானாலும் சரி, வெளிச்சமானாலும் சரி...
சுதீர் பாபுவின் வீட்டுக்கருகில் வந்ததும் அவனுக்கு முதலில் வருத்தமேற்பட்டது. கல்கத்தாவுக்காக ஏங்கினான் அவன். அம்மாஅப்பா தம்பி தங்கைகள் நிறைந்த இந்த ஊர் வீட்டிலிருந்து, நண்பர்கள் நிரம்பிய கல்கத்தா காபி ஹவுசிலிருந்து, பயணிகள்நிரம்பி வழியும் கல்கத்தா டிராமிலிருந்து சுதீர்பாபுவின் வீட்டில் வந்து இறங்கினான். வாசல் கம்பிக் கதவைத் திறப்பதற்காகக்காலடியோசையைச் சற்று நிறுத்திக் கொண்டான். கதவு திறக்கும் போது ஒரு நீண்ட பெருமூச்சு. பிறகு மீண்டும் அதே சாக்... கர்சாக், சாக்... கர் சாக்... அதே ஒலி.
பிநய் ஒரு மாலுமி. அவனுடைய கப்பல் கல்கத்தாத் துறை முகத்தில் நங்கூரமிட்டிருக்கிறது. வங்காளம், அஸ்ஸாம், மத்தியப்பிரதேசம் வரை விரிந்து பரந்துள்ள பின்புலத்தில் முன்னிரவுப் பொழுதைக் கழிக்க வந்திருக்கிறான் அவன்.
அதே, ஒரே மாதிரி ஒலி. அமாவாசையாயிருக்கட்டும், பௌர்ணமியாயிருக்கட்டும், குளிர் இரவானாலும் சரி, கோடையானாலும் சரி, காட்சி ஒன்றுதான். மாறாதகாட்சி இல்லை, நகரும் காட்சி. காலங்காலமாக இருந்து வரும் வானம், சந்திரன்,நட்சத்திரங்கள், மரங்களுடன் இந்தக் காட்சியை அமைப்பவர்களும் ஜீவனற்றவர்கள். ஆனால் இந்த நிரந்தரத் திரைக்குமுன்னால் அவர்கள் நடிப்பதாகத்தான் ஏற்பாடு. இந்த நடிக நடிகையரோட வாழ்க்கையைக் காப்பியடிப்பதால் கலை பிறக்காது.அவர்கள் மட்டும் கலையைப் படைத்தால் இந்தப் பழைய பின்புலத்தில் எவ்வளவு துன்பியல் இன்பியல் நாடகங்கள் நிகழும்!அதற்குப் பதிலாக இப்போது நிகழ்வது கேலிக்கூத்துதான்.
ஒரே மாதிரி, வெளிச்சமானாலும் சரி இருட்டானாலும் சரி. தேய்பிறையில் நள்ளிரவில் காட்சி சற்று- அந்தி நேரத்தோடுஒப்பிடுகையில் - மாறுபடும். வளர்பிறைக் காலத்து முன்னிரவும் தேய்பிறைப் பின்னிரவும் வரலாற்று முற்பட்ட காலத்துக்குரியவை.குளிர்காலத்தில் தென்கிழக்கு மூலையில் உள்ள மாமரத்தின் மேல் வெயில் தங்குகிறது, வெயிலைத் தேடிக் கண்டுபிடித்துஅங்கு உட்காரலாம். நிலாவைத் தேடி...?
சுதீர் பாபு வீட்டுச் சமையலறை நீளம் குறைவில்லை, ஆனால் அகலம் குறைவு. ரொம்ப அகலக் குறைவுமில்லை.மேலே தகரக்கூரை புதுப்பிக்கப்படவில்லை. சுதீர்பாபு பெரிய பெண்ணின் கலியாணத்தின்போது தரையைச் செப்பனிட்டிருந்தார். அப்போது ஏறக்குறையக் கூரையைத் தொடும்படி கிராதியும் போட்டிருந்தார். மூச்சைத் திணறச் செய்யும்படி...வராந்தாவின் ஓர் ஓரத்தில் சுதீர் பாபுவின் அம்மாவுக்காக மடிச் சமையலறை. வீட்டுமனையின் கிழக்குப் பக்கத்தில் மேற்குப் பார்த்த இரண்டு அறைகள். தெற்குப் பகுதியில் இன்னோர் அறை.
காட்சி ஒன்றுதான், ஒரே காட்சி, வெளிச்சமானாலும் சரி, இருட்டானாலும் சரி.. காலைக்காட்சிகள் மாறும். சரத்காலத்துக்காலை நேரத்துக்கு ஓரளவு நிலையான உருவம் உண்டு. மற்றபடி அது மாறும். நடந்து செல்லும் காலை நேரம், ஓடிக்கொண்டிருக்கும்காலைநேரம் மாறிக் கொண்டிருக்கும், எப்போதும் மாறிக் கொண்டேயிருக்கும். நண்பகல் நீரின் ஆழத்தில் அமிழ்ந்த நிலை.மாலை நேரம் இருக்கும்போதே இல்லாமல் போய்விடும்.. மலிவான தேங்காயெண்ணெயின் மணம் பொரிக் கிண்ணத்தில். மாலையில் மினுவுக்குத் தலை பின்னிக் கொள்ள வேண்டியிருக்கும். தலை பின்னிக் கொள்ளாமல் வெளியே எப்படிப் போவாள்?அவளுக்குப் பதினைந்து வயது. வெளியே போகாமல் எப்படியிருக்க முடியும் அவளால்? மினுவின் அண்ணன் நான்-பிநய்-பள்ளியிலிருந்து வந்த பிறகு எனக்குப் பொரியும் வெல்லமும் கொடுக்காமல் எப்படிப் போவாள் அவள்? ஆகையால் எனக்குஅவள் கொடுக்கும் பொரிக் கிண்ணத்தில் அவளது கைத்தேங்கா யெண்ணெயின் வாசம் இருக்கும்.
பாவம், மினுவுக்குத்தான் எவ்வளவு கஷ்டம்..!
முன்னிரவு நேரம். இப்போது நோயாளியின் அறைக்கு வெளியிலுள்ள அமைதி. வெளியுலகில்? துறைமுகத்தின் பின்புலம்எப்போதும் இப்படித்தான் மயானம் போலிருக்குமா? அல்லது இந்த வீடுதான் அப்படியா? என் வீடுதான் அந்த மாதிரியா?அல்லது என் மனந்தான்..? சாக்.. கர் சாக், சாக்.. கர் சாக்.. எல்லாம் நகர்கின்றன. இந்த வீடு... நாமெல்லாரும் இந்த வீடாகியவண்டியின் பயணிகள். ஸ்டேஷன் எப்போது வரும்?
வடக்குப் புறத்து அறைகளைக் கடந்து உள்ளே நுழைய ஒரு தகரக் கதவு. ஓர் அறையின் மூன்று பக்கங்களிலும் ஜன்னல்கள்.மேற்குப் பக்கத்துச் சுவரையொட்டி பாபுயியின் மேஜை. அதன் மேல் சரசுவதி தேவியின் படம், தலைவலி மருந்து டப்பா.பாபுயிக்கு அடிக்கடி தலைவலி வரும். மேஜையின் மேல் விளக்கு. விளக்கின் மேற்புறம் மூடப்பட்டிருக்கிறது. பதினைந்துஅல்லது பதினாறு வயதுள்ள பாபுயியின் நாற்புறத்திலிருந்தும் வெளிச்சம் பாய்கிறது. அறையின் மேற்குப் பக்கத்து ஜன்னல்மூடியிருக்கின்றன, கிழக்குப் புறத்து ஜன்னல்கள் திறந்திருக்கின்றன. பாபுயி கிழக்குப் பக்கம் முதுகைத் திருப்பிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாள். ஆகையால் அவளுடைய முகத்தைச் சுற்றிக்கொண்டு வெளிச்சம் கிழக்கு ஜன்னல்கள் வழியே வெளியே வருகிறது.பாபுயியின் மேஜை விளக்கின் வெளிச்சம் கிழக்கு ஜன்னல்கள் வழியே வெளியே வந்து தகரக் கதவின்மேல் மங்கிய ஒளியாகப்பனிபோல் படருகிறது. வெளியில் யாராவது பார்வையாளன் நின்று கொண்டிருந்தால் அவன் விளக்கொளியின் எதிரில்பாபுயியின் முகத்தின் எல்லைக் கொட்டைப் பார்ப்பான் (அது தான் தூய்மை வளையமா? அந்தக் கோடு வட்டமாகத் தெரிகிறது.சில உறுப்புகளை அடையாளங் காட்டும் வளைவுகள் அந்த வட்டத்தில்) அவளது சில முடிகள் தலையோடு படியாமல் அந்தவெளிச்சத்தில் தெரிகின்றன. தான் ஒரு சித்திரமாக இருப்பது பாபுயிக்குத் தெரியாது. தான் ஒரு சித்திரமென்று எந்தச் சித்திரத்துக்கும் தெரியாது. மனிதன் சித்திரமாவான் என்று பார்ப்பவனுக்குத் தெரியும், சித்திரம் மனிதனாகலாம் என்று கவிக்குத்தெரியும். பாபுயி பாடுகிறாள், "நீ வெறும் சித்திரந்தானா?"
தகரக்கதவு வழியே நுழைந்தால், கிணற்றடிக்கும் வடக்குப் புறச் சுவருக்குமிடையில் இருண்ட மூங்கில் வேலியில் ஒருஜன்னல், ஜன்னல் கம்பிகளின் நிழல். அறைக்குள்ளே ஜன்னலுக்கு நேரே மேஜை. மேஜைக்கு முன்னால் சந்தன். அவன் தன் விரல்நுனியைப் பல்லில் வைத்துக் கொண்டிருக்கிறான். அவன் மேற்குப் பக்கம் முதுகைத் திருப்பிக்கொண்டு கிழக்குப் புறம் பார்த்தவாறுஉட்கார்ந்திருக்கிறான். விளக்கு வெளிச்சம் அவனுடைய முகத்தில் பட்டு ஒரு பாத்திரத்தைப் படைத்திருக்கிறது. ஒளியும் இருட்டும்தற்செயலாகப் படுவதால் ஒரு பாத்திரம் உருவாகுமா? சந்தனுக்கு வலது பக்கத்தில் விளக்கு. அவனுடைய மூக்கு நல்ல எடுப்பாகஇருக்கும். ஆகையால் அவனுடைய இடது கண்ணோரத்தில் இருட்டு. அவன் முண்டா பனியன் அணிந்திருக்கிறான்; அகலமான மணிக்கட்டு. விளையாட்டுக்காரர்கள் போல் குட்டையாகக் கத்தரிக்கப்பட்ட தலைமுடி. உறுதியான தாடைகள். ஆனால்கண்களில் மட்டும் ஏன் உறுதியில்லை? சந்தன் ஏன் நகத்தைக் கடிக்கிறான்? முன்புற ஜன்னல் வழியே வெளியேவரும் வெளிச்சத்தில் நகர்ந்து செல்லும் மனிதனின் தலைமட்டும் - உடல் இல்லை. சந்தனுக்குப் பயமா?
அதற்குப்பின் ஒரு சிறிய கொல்லை. அதன் இடது புறத்தில் சமையலறை. வராந்தாவில் மடிச் சமையல் செய்யுமிடத்தில்சிம்னி விளக்கின் பரவலான சுடர் நிழலையும் ஒளியையும் மாற்றி மாற்றி உண்டாக்கிப்பிறகு அதைத் துடைத்து விடுகிறது.வானம் கீழே இறங்கிச் சமையலறைக் கூரைக்குச் சற்றுமேலே வருமானால், வேலியின் இரண்டு இடுக்கு வழியே நூலிழைபோல்ஊடுருவிவரும் வெளிச்சத்தால் ஏற்படும் கூரையின் நிழல் அந்த வானத்தில் விழும்.. வராந்தாவின் ஒரு மூலையில் வறட்டி,கரிக்குவியல், சுள்ளி மூட்டை. கதைகளில் வரும் பயணிகள் தங்கும் சத்திரத்தில் அவர்களுடைய சாமான்கள் போல் அவைஇருட்டில் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன, திடீர் வெளிச்சத்தில் திகைக்கின்றன. மடிச் சமையலங்கணத்தில் தணிந்து எரியும்நெருப்பில் சமையல் செய்து கொண்டிருக்கிறாள் சுதீர் பாபுவின் மனைவி. சிம்னி விளக்கின் பழக்கமான வெளிச்சம் பங்குனிக்காற்றுப் போல் அசையும் போது முப்பது வருடங்களாகக் குடித்தனம் செய்யும் சுதீர் பாபுவின் மனைவி அன்னியமாகத் தோற்றமளிப்பது ஏன்?
அந்த நேரத்தில் சடப்பொருள்களும் உயிருள்ளவையும் தெளிவாகத் தெரியும். முன்னிரவில் பார்வையிலிருந்து மறைந்துவிடும். முன்னிரவுக் காலம். சிந்தனைக்குரியது இந்த முன்னிரவுக் காலம், நான் சிந்திக்கப் போகிறேன், அண்ணியோடுசில வார்த்தைகள் பேசப் போகிறேன், பிறகு தெற்குப் பக்கத்து வராந்தாவில் படுத்துக் கொண்டு சிந்திப்பேன் -என்ன-என்னசிந்திக்க நினைத்திருந்தேன், இப்போது என்ன சிந்திக்கிறேன்?
"யாரு?"
அண்ணியின் குரலைக் கேட்டதுமே கண்களை மூடிக் கொண்டு மனக் கண்ணால் அவளைப் பார்க்கலாம் அவள்சிறிய மரப்பலகைமேல் கால்களைத் தூக்கி வைத்துக்கொண்டு, முழங்கால்களின் மேல் கைகளை வைத்திருக்கிறாள். வலதுகையில் ஏதாவது கரண்டி இருக்கும். இடது கையில் என்ன? என் காலடிச் சத்தம் கேட்டதுமே அவள் இடுப்புக்கு மேல் உடம்பை உயர்த்திக் கொண்டு கழுத்தையும் நீட்டிப் பார்க்கிறாள்.
"நான்தான் பிநய்" என்று சொல்லிக்கொண்டே சமையலறைப் படிக்கட்டில் காலெடுத்து வைக்கிறான் பிநய்.
"பிநய்யா? வா! வீட்டிலே எல்லாரும் சௌக்கியமா?" பிநய்யின் குரலைக் கேட்டதுமே அண்ணியின் மேலுடம்பு தளர்கிறது. அவள் இடதுகையால் சுள்ளிகளை அடுப்புக்குள் தள்ளுகிறாள். சில பொறிகள் பறக்கின்றன, அவள் கண்களை இடுக்கிக்கொண்டு முகத்தை நகர்த்திக் கொள்கிறாள். தான் கேட்ட கேள்வி முகத்தில் பிரதிபலிக்க அவள் பிநய்யின் பக்கம் திரும்பிப்பார்க்கிறாள். பிநய் எப்போதும் இந்தக் கேள்விக்கு 'உம்' என்று பதில் சொல்லிவிட்ட நிலைப்படியில் உட்காருவான்.
அண்ணி ஏன் தினம் இந்தக் கேள்வி கேட்கிறாள்? பழக்கம் காரணமாகவா? தினமும் ஒரே கேள்விதான். பேலாவுக்கு - அதுதான்அண்ணியின் பெயர் - தான் இப்படி ஒரே மாதிரி பேசுகிறோம் என்ற உணர்வு இல்லை, அவள் இதயபூர்வமாக நெருக்கமானவள்,ஆனால் அவளுடைய குரலில் தொலைவு தொனிக்கிறது.
"உக்காரு!" என்று அண்ணி சொல்வதற்குள் அவன் உட்கார்ந்து விட்டான். பிநய் ஒரு சுள்ளியை எடுக்கக் கைநீட்டுகிறான். பிறகு அந்தக் குச்சியால் தரையில் ஏதோ கிறுக்குகிறான். அண்ணி குச்சியைப் பார்க்கிறாள், அவனுடைய கிறுக்கலையும் பார்க்கிறாள். பிநய் குச்சியைத் தூக்கியெறிந்து விடுகிறான்.
"ஸ்கூலுக்குப் போனியா?" அண்ணியின் கேள்வி.
அடுத்தாற்போல் கேள்வி வரும். "இன்னிக்கு சாதத்துக்குத் தொட்டுக்க என்ன?" அந்தக் கேள்வி வருவதற்கு முன் எழுந்துவிடவேண்டும். வேறு யாராவது வந்தால் அண்ணியோடு நெடுநேரம் வம்பு பேசிக் கொண்டிருக்கலாம். ஆனால் அண்ணியிடம் பேச்சுஇல்லை. அவள் முப்பது ஆண்டுகக்குமுன் பிறந்தகத்திலிருந்து கற்றுக் கொண்டு வந்த வார்த்தைகள் ஐந்தாண்டுகளில் தீர்ந்துபோய்விட்டன. இந்த கிராமப்புறம் போன்ற நகரத்தில் வார்த்தைகளைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாது. அண்ணியைப் பொறுத்தவரையில் சொற்கள் பிறக்குமிடம் தயாராகவில்லை. அண்ணி ஏனிந்த மாதிரிப் பார்க்கிறாள்? அவளுடைய தோற்றத்தில் ஒருவகை விடலைத்தனம் இருக்கிறது, அதைப் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும். அண்ணி தன் குழந்தைகளுக்கு 'பாபுயி,சந்தன், சோனா, ரூபா-' என்றெல்லாம் எப்படிப் பெயர் வைத்தாள்? அந்த நளினம் இப்போது ஏனில்லை, ஏன்? அடுப்பங்கரைச்சூடா? கண்ணில் புகையா?
"சுதீர் வரலியா?" பிநய் எழுந்து நின்றுகொண்டு கேட்டான்.
"இல்லே.. நீ எங்கே கிளம்பிட்டே?" அடுப்பைப் பார்த்துக் கொண்டே அண்ணி கேட்டாள்.
"அந்த ரூமிலே இருக்கேன்.. சுதீர் அண்ணா இன்னும் வரலியா?"
"டியூசனுக்குப் போயிருக்கார்."
என்ன சிந்திக்க நினைத்திருந்தேன்? முன்னிரவு வேளையில் சிந்திக்க வேண்டிய விஷயங்கள்... ஒன்று - சோனா, ரூபமா, மீரா,இவர்களைப்பற்றி ஒன்றும் தெரியாது. இரண்டு - பாபுயி, மூன்று- நான். நான்கு- அண்ணி. ஐந்து -சுதீர் அண்ணா...
பாபுயி என்ன நினைக்கிறாள்?
சுசித்ரா மித்ராவின் படம் ஒன்று வரைந்து தரச் சொல்லியிருந்தாள் பாபுயி. நான் தரவில்லை, தரப் போவதில்லை,பாபுயி, நீ படிப்பை நிறுத்திவிடு, பாட்டை நிறுத்திவிடு! துணிமணிகளைத் தோய்த்து அலசிப் பிழி, சமையலறையைக் கழுவி விடு,உன் கையில் மஞ்சள் மணக்கட்டும், உடம்பில் மஞ்சள் பூசிக்கொண்டு, 'நல்வரவு' என்று எழுதப்பட்டிருக்கும் சிவப்பு நெட்டித்தோரணத்துக்குக் கீழே நடந்துபோய்விடு. இல்லாவிட்டால் நீ சாக வேண்டியதுதான். நீ செத்துப் போ!
பிநய்க்குச் சிரிப்பு வந்தது. உள்ளூர அல்ல, உதட்டில். பாபுயி பாசு சாகத்தான் வந்திருக்கிறாள், அவளை யார் காப்பாற்றமுடியும்? முன்னிரவு நேரத்தில் இந்த மாதிரி அமங்கலமாக நினைக்கக்கூடாது, தெற்குவாசலைத் திறந்தால் சாகவேண்டியதுதான். வெகுநாட்களாகப் படுத்த படுக்கையாயிருக்கும் நோயாளியின் சிரிப்புப்போல் பிநய் தன் சிரிப்பைத் தானேபார்த்துக் கொண்டான். அதனால்தான் அவனுடைய சிந்தனையும் நோயாளியின் சிந்தனையாயிருந்தது...
முன்னிரவு வேளையில் சரசுவதியின் படத்துக்கருகில் தலைவலி மருந்தைப் பார்த்துகொண்டே பாபுயி சுசித்ராமித்ராவைப் பற்றி நினைக்கிறாளா? நினைக்கிறாள். அது தவிர அவளுடைய வயதுக்கேற்ற மற்ற நினைவுகளும் நினைப்பாள்.எல்லா நினைவுகளும் ஒன்று சேர்ந்து அதனால் மனது பெரிதாகி, மனது பெரிதாகி...
பாபுயி சுசித்ரா மித்ராவின் படம் கேட்டிருக்கிறாள். அதை வரைய வேண்டும். அதற்குமுன் அவளை அந்தப் பாட்டைப்பாடச் சொல்லிக் கேட்கவேண்டும் "என்னை இருளில் வைத்திருக்காதே, என்னைப் பார்க்க விடு!"
பாபுயி, உன் 'நீ' எங்கே? எனக்குக் காட்டுவாயா? என்னுடைய 'நான்' வெறும் சூனியம். வாழ்நாள் முழுதும் சூனியத்தைத்தேடல். ஐயோ!
"பிநய், டீ போட்டுத் தரவா?"
"வேணாம்"
பேலா இவ்வளவு நேரம் எதாவது சிந்தித்துக் கொண்டிருந்தாளா? இல்லை. பேலா என்பது சிந்தனையல்ல, உடல். அதுஅறிவு அல்ல, இருப்பு. நானும் அப்படித்தான். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்துவம் உண்டு. மனிதன் நகரத்தில்வசிக்கிறான். என்னிடம் இருபத்தாறு ஆண்டுகளின் பாவம் இருக்கிறது. நான் பதினைந்து ஆண்டுகளின் எளிமையைவேண்டினேன்.
பாபுயி, அந்தப் பாட்டைப் பாடு 'நான் என்னைப் பார்க்க விடு!'
இங்கே உடலின் உந்துதல்தான். உள்ளத்தின் உந்துதல் எங்கே? மனம் ஒரு துண்டுப் புல், மிருதுவான, சிறிய புல்-மனமே,நீ எங்கே? மனமே, நீ எங்கே? மனமே நீ என் உடலுக்குள் வா! இறங்கி வா, வா!
உள்ளத்தின் தொடர்பாகப் புயலைப் பற்றி நினைத்ததுமே வானம், கடல், மலை எல்லாம் ஒன்றாகக் கலந்து அவன் மனதில்ஒரு விசித்திரமான சித்திரத்தைத் தோற்றுவித்து விட்டது. இந்தச் சின்னச் சின்னக் கூச்சல்களைக் கேட்டுக் கொண்டிருப்பதால்சில பெரிய விஷயங்கள் கவனத்துக்கு வருவதில்லை. பெரிய, விசாலமான-அதாவது ஆங்கிலத்தில் 'வொய்டு'-காட்டுத்தனமான-அதாவது ஆங்கிலத்தில் 'ஒயில்டு'-விஷயங்கள் (வொய்டு என்ற வார்த்தைக்கு எதுகையாகத்தான் 'ஒயில்டு' என்ற சொல்லும்மனதுக்கு வந்தது என்று தெரிந்தும் பிநய் அந்தச் சொல்லை ஒதுக்கவில்லை) வொய்டுக்குள் ஒயில்டும் இருக்கத்தான் செய்கிறது.இல்லாவிட்டால் சித்திரம் தீட்டும் விருப்பம் எப்படி உண்டாகும்?
இங்கு கண்ணுக்குத் தோன்றும் சித்திரம்- விளக்குக்கு நாற்புறமும் தெளிவற்ற முகங்கள்- குழந்தைகளின் முகங்கள்-அவர்களை அடையாளம் தெரியவில்லை. மனித உடலின் கோட்டுருவம், நிறம், பிரகாசமான வெளிச்சத்தில் நிழல் விழுகிறது.அண்ணியின் இடுப்புக்கு மேல் உடல் ஏதோ காலடியோசை கேட்டுச் சட்டென்று சுறுசுறுப்பாகிறது, கொடி போன்ற கோடு...இரண்டு கால்களுக்கிடையே முகத்தை வைத்துக்கொண்டு படுத்திருந்த நாய் சட்டென்று தலையைத் தூக்குகிறது... அழகானமிருகம்... அதன் கண்களில் மனிதத்தன்மை- அண்ணியின் தோற்றத்திலிருந்த அந்த இளமை எங்கு போய்விட்டது...?
பிநய் கண்களை மூடிக்கொண்டு தேடுகிறான்- செதுக்கப் பட்ட சிலையில் மறைந்திருக்கும் கோடுகளைத் தேடுவதுபோல.அண்ணியின் இளமை எந்தக்கோட்டில் மறைந்திருக்கிறது?
நல்ல அழுத்தமான நிறத்தில் பெரிதாக ஏதாவது, அகலமாக ஏதாவது, பெரிதாக, பெரிதாக- முன்னாலுள்ள எல்லா விஷயங்களின் கோடுகளும் குறுகியவை, நிறங்கள் ஜீவனற்றவை... சுசித்ரா மித்ராவின் சித்திரத்தில் என்ன பார்க்க விரும்புகிறாள் பாபுயி?நான் என்ன பார்க்க விரும்புகிறேன்? பார்க்க விடு! என்னுடைய 'என்னை'ப் பார்க்கவிடு...!
ககனேந்திர நாத் தாகூர் தீட்டிய யட்சபுரி-(தெளிவற்ற வெளிச்சம், ஒளியும் நிழலும் முக்கோண வடிவமாக விழுவதால்சில சமயம் ஒரு தங்கத் தூணின் தோற்றம், சில சமயம் மனித உடலின் சாடை. நந்தினியின் விரிந்த சில வில்கள், அரளி மலர்க்கொத்தின் சிவப்பு-மிகவும் சிக்கலானது- வேண்டாம்).
அபநீந்திர நாத் தீட்டிய ஷாஜஹான்-(மிகவும் சோகமானது, பரிதாபமான உருவங்கள் இருக்கின்றனவோ இல்லையோ எனும்படி; குளிர்காலத்தில் கண்ணாடியின் மேல் சூடான மூச்சுக் காற்று பட்டால் ஏற்படும் மங்கல் திரைபோல் அந்த உருவங்களின்வரைகோடுகளும் மறைந்து போய்விடலாம் - மிகவும் நுட்பமான உருவங்கள்-தாங்க முடியாது).
ரவீந்திரரின் நடனச் சித்திரம்-(கால் கைகளின் இயற்கையான அசைவுகளில் பண்டைய எகிப்தின் இயற்கைத்தன்மை-ஆங்கிலத்தில் 'எலிமென்ட்டாலிட்டி' எலிமென்ட்டாலிட்டிதான் வேண்டும், ஆகா! ஹீப்ரூ மந்திர உச்சரிப்புபோல்'எ-லி-மெ-ன்-ட்-ட-ல்'- அழுத்தமான கோடுகள், ஆனால் இவ்வளவு சிக்கலான வர்ணங்கள் ஏன்? நடனக்காரியின் முகபாவனை ஏன்சைத்தானுக்கு அஞ்சலி செய்வது போலிருக்கிறது? ஒரு பிணத்தை மாதிரியாகக் கொண்டு தீட்டப்பட்ட சித்திரம் போன்ற மனிதத்தன்மையின்மை ஏன் அவள் முகத்தில்? இந்த அழுத்தமான கோட்டிலும் வர்ணத்திலும் சாவதும் பிறகு உயிர்ப்பதும் எங்கே-?பாபுயி, இதனால்தான் எனக்கு உன் பாட்டு பிடித்திருக்கிறது. அழுத்தமான குரல், தீர்க்கமாக, தாராளமாக, சுசித்ராவின்குரல்போல-பாபுயி, நீ சுசித்ரா மித்ராபோல் ஆவாய் பாபுயி, நீ சுசித்ரா மித்ரா ஆவாயா?)
நந்தலால் போஸ் தீட்டியுள்ள சிவன்-(இல்லை, இல்லை- இல்லை! வீட்டில் அன்னபூரணியை வைத்துக் கொண்டிருப்பவர்அன்னமின்றி அழுவாரா? இது பிசகு, பெரிய பிசகு-வேண்டாம், இது வேண்டாம்!)
ஜாமினிராயின் ஜன்மாஷ்டமி ஓவியம்- (ஆகா, ஆகா! மூன்று முறை வளைந்த உடலுடன் புல்லாங்குழல் கிருஷ்ணன்... மூன்றுவளைவுகள் எங்கே? முழங்கால் மட்டுந்தான் சற்று வளைந்திருக்கிறது. உடல் முழுவதின் பாரமும் வெள்ளமாக வந்து அந்தமுழங்கால் மேல் இறங்கியிருக்கிறது. சால மரம் போல் நிமிர்ந்த உடல். மீன் போன்ற கண்கள்-ஒவ்வொரு கண்ணும் ஒரு முழுமீனைப்போல... இவ்வளவு தெளிவை, இவ்வளவு எளிமையை, இவ்வளவு வியப்பைத் தாங்கிக்கொள்ளும் திராணி எனக்கில்லை).
ஃபான் காக் தீட்டிய 'ஓர் ஆற்றின் மேல் காக்கைகள்' ஓவியம்- (ஐயோ, என்னைக் காப்பாற்றுங்கள்! என்னால் இந்தவேதனையைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை! கறுப்புக் காகங்கள், வானத்தில் அசைவு, தூக்கிய தலை விலங்கிடப்பட்டசிறகுகள், புயல், கீழே மகா காவியங்கள் வருணிக்கும் ஆறு- ஐயோ, என்னால் தாங்க முடிய வில்லையே! என்னைக்காப்பாற்றுங்கள்! யார் என்னைக் காப்பாற்றப் போகிறார்கள்? கறுப்புக் காகத்தின் சிறகுகளுக்குப் பின்னால் சூரியன் காணாமற்போய்விட்டான். இந்த இருளின் ஈர்ப்பில் கீழே நீர்பெருக்கு கரை புரண்டு ஓடுகிறது. என்னால் கரைகாணா வெள்ளத்தில் மிதக்கமுடியாது! என்னைக் கரையில் சேர்த்து விடுங்கள். எனக்குத் தங்க இடம் கொடுங்கள்! பாபுயி, நீ எங்கே--! காகங்கள் இரத்தம்உறிஞ்சுபவையாக ஆகிவிட்டன. இனி இரத்தமில்லை என நெஞ்சில். அந்தக் கருத்த கும்மிருட்டில் என் கொலைகாரக் காவிய நதி சிவந்து விட்டது-பாபுயி, நீ எங்கே? மனமே, நீ எங்கே? நான் எலும்புக்கூடாகி விட்டேன்!)
நந்தலால் போஸின் அர்ஜுனன்-ஆகா,படுத்திருக்கும் நிலையில் அர்ஜுனன் , மிகவும் அனாயசமாக இழுக்கப்பட்டகோடுகள், பெரிய முகம், விசாலமான மார்பு, தொடை உருண்டையாக முழங்காலில் வந்து இறங்கியிருக்கிறது. உடல் பாரம் ஒருமுழங்கையின் மேல் விழ, அந்தக் கையின் தசை நார்கள் நிலத்தாமரையின் இதழ்கள்போல், இன்னொரு கைஅடைக்கலம்போல, எதிர்ப்பது போல்- உடம்பின் தசை நரம்புகளிலெல்லாம் திகைப்பின் சாயல்-தன் முன்பாதங்களுக்கிடையேமுகத்தைப் புதைத்திருக்கும் சிங்கமொன்று ஏதோ சலசலப்பொலி கேட்டுத் திடுக்கிடுவது போல, முதுகு ஓர் அடைக்கலம்போல-அரச மரத்தின் அடிமரம் போல, (எனக்குக் கிடைத்துவிட்டது- இயற்கையுணர்வுகளோடு நளின உணர்வுகளின் கலவை- எனக்குக்கிடைத்துவிட்டது! நான் சித்திரம் வரையப் போகிறேன்- அது கடல்போல் கரடு முரடாயிருக்கும், அசையும் பொருளும்அசையாப் பொருளும் நிறைந்த உலகம்போல் அழகாயிருக்கும், காவியம்போல் மகத்தானதாக இருக்கும். இசைக்கவிதை போல்சோகமாயிருக்கும்-நான் ஓவியம் தீட்டப்போகிறேன்) பாபுயி, நான் அர்ஜுனன்...!
இந்தச் சபதம் செய்ததும் பிநய் கண்களைத் திறந்து பார்த்து விட்டு மறுபடி மூடிக்கொண்டான். அந்த ஒரு கணத்துக்குள்அவன் பார்வையில் பட்டவை-சமையலறையின் இடுக்குகள் வழியே ஒளித்துளிகள் மின்மினிப்பூச்சிகள் போல் கொல்லையில்பறக்கின்றன; இந்த அறையிலிருந்து வரும் வெளிச்சம் நனைந்த சேலைபோல் நிலைப்படியில் விழுந்து கிடக்கிறது; அந்தப் பக்கத்துஇரு அறைகளின் வெளிச்சம் பனிபோல் மங்கலாகத் தெரிகிறது. 'எனக்குக் கிடைத்து விட்டது, நான் ஓவியம் தீட்டப் போகிறேன்'-இந்த மந்திரத்தைச் சொல்லிக் கொண்டு அவன் கண்களைத் திறந்துகொண்டான், இந்த மந்திரத்தைச் சொல்லிக் கொண்டேஅவன் கண்களை மூடிக்கொண்டான். அப்போது நள்ளிரவின் ஆழத்திலிருந்து இன்னொரு மயானத்தின் அழுகை வெகுதொலைவிலிருந்து கேட்கும் ஓநாயின் ஊளையொலிபோல் ஒலிப்பதை உணர்ந்தான். விளக்கின் தெளிவற்ற வெளிச்சத்தில்உடைந்த கோடுகளாய்த் தெரிகிறது முகம்; விளக்கின் வெளிறிய ஒளியில் அழுத்தமான நிறங்களும் மங்கிக் காண்கின்றன. நனைந்தசேலை போன்ற ஒளி, மின்மினி போன்ற ஒளி, கொடி போன்ற உடலின் கோட்டுருவம், திடீரென்று தோன்றித் திடீரென்றுகாணாமற்போன இளமை, வேலியின் மேல் சாளரத்தின் நிழல், சுவரில் சாளரத்தின் நடுவில் இளமையின் கோபப் பார்வை,முதுகைத் திருப்பிக் கொண்டிருக்கும் இளம்பெண்ணுக்கு முன்னால் தலைவலி மருந்து-- இவையெல்லாம் பிநய்யைச்சூழ்ந்து கொள்கின்றன. பிநய் பரிதாபமாகச் சொல்லப் பார்த்தான். "நான், பிரசன்ன நாராயண் பள்ளியின் டிராயிங் மாஸ்டர்--நான்ஓவியம் தீட்ட மாட்டேன், மாட்டேன்!"
"யாரு? பிநய் சித்தப்பாவா? "
" ஆமா"
" பேசாம படுத்துக்கிட்டிருக்கீங்களே?"
" பின்னே என்ன செய்யறது...? படிச்சு முடிச்சுட்டியா ?"
"ஹும், படிக்கப் பிடிக்கலே- " " என்ன செய்யப் பிடிக்கும்?"
"பாட்டுப் பாட... "
"பாடு"
"ஊஹூம், அம்மா திட்டுவா... "
" திட்ட மாட்டா... நான் சொல்றேன்... "
"இன்னிக்கு நரேன் சித்தப்பா வீட்டுக்குப் போயிருந்தேன். அவங்க வீட்டிலே கீழகுடியிருக்கறவங்க என்னைப் பாட்டுப்பாடக்கூட்டிக்கிட்டுப் போனாங்க."
"என்னென்ன பாட்டுப்பாடினே?"
"ரொம்பப் பிடிச்சிருந்தது."
"ஏன்?"
பாபுயி பதில் சொல்லவில்லை.
கொல்லையில், மடிச் சமையல் பகுதியின் வேலியிலிருந்த இடுக்குகள் வழியே வந்த வெளிச்சம் மின்மினிப் பூச்சிகளாகத்தெரிந்தது. அவர்களிருவரும் ஒருவரையொருவர் பார்த்துப் கொள்வதைத் தவிர்ப்பதற்காக அந்த வெளிச்சம் விழுந்த இடத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்தச் சிக்கலான ஒளிச் சித்திரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கையில், இன்றுமுழுவதும் காற்று பங்குனி மாதக் காற்றுபோல் தாறுமாறாக வீசிக் கொண்டிருந்தது என்பதை பிநய் நினைவு கூர்ந்தான். இதன்விளைவாக இயற்கையிலும் சரி, அவனுடைய உடம்பிலும் சரி ஒரு வெறுமையுணர்வு தோன்றியிருந்தது. வெளிச்சம் விழுந்திருக்கும் இடத்தையே பார்த்துக் கொண்டிருப்பதால் பாபுயி தனக்கு நிச்சயம் ஏற்படவிருந்த வீழ்ச்சியிலிருந்து தப்பியிருக்கலாம்.அவள் முகத்தில், கண்களில் சோகத்தின் சாயை - அது தன்னைத் தொலைவில் இழந்துவிட விரும்புகிறது. இருவருக்குமிடையேஅந்தக் கொல்லையை மையமாகக்கொண்டு ஒரு மௌனம் நிலவத் தொடங்கியது. எந்த நிமிடமும் ஒலி ஒரு பெருமூச்சுடன் கருச்சிதைவை விளைவிக்கலாம். அந்தப் பேரழிவைத் தடுப்பதற்காகவே அவர்களிருவரும் தங்கள் முகபாவனையைஇயற்கையாக வைத்துக்கொண்டு தாங்கள் எதிலோ கவனமாயிருப்பது போல் காட்டிக் கொண்டார்கள். அப்போது அவர்களிருவரின் கண் முன்னால் ஏதோ ஒரு வகை ஏக்கம் பல உருவங்களெடுத்துச் சுக்குநூறாக உடைந்தது, பிறகு வேறு உருவங்களாகமாரி, மறுபடி உடைந்து, புதிய புதிய உருவங்கள் சமைக்கத் தொடங்கியது.
ஹீஸ்டீரியா நோய்க்காளான நோயாளி தெளிவும் திண்மையுமற்ற தோற்றங்களுடன் போராடிக் கொண்டு பருப்பொருள்களைப் பரிதாபமாகப் பார்ப்பது போல் அவர்களிருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். மார்பில் பால்வற்றிவிட்ட தாய் போலச் சிரித்தான் பிநய். தாய்க்குப் பால் வற்றிவிட்டது. ஆனால் குழந்தைகளுக்குப் பால் தேவை. ஒருபிள்ளை ஆரோக்கியமான, பால் சுரக்கும் தாயைக் கண்டுபிடித்து அவளிடம் போய்விட்டான்.
பிநய் சட்டென்று பாபுயியின் பக்கம் திரும்பிக் கேட்டான். "நரேன் பாபு வீட்டிலே என்ன நடந்ததுன்னு நீ சொல்லலியே!"
பாபுயி இவ்வளவு நேரம் முழங்கால்களுக்கிடையே முகத்தை மறைத்துகொண்டு உட்கார்ந்திருந்தாள். இப்போது அவள்சப்பணங் கட்டிக்கொண்டு உட்கார்ந்தாள். தலையைக் குலுக்கி முடியை ஒரு தடவை சரிசெய்து கொண்டாள். அவள் கதையைக்கேட்பதற்காக பிநய்யும் தன்னைத் தயார் செய்து கொண்டான்... அவன் கண்ணுக்கு பாபுயி ஒரு புறாவைப் போலத் தோன்றினாள்.
பிறகு திடீரென்று ஒரு சோகம் ஒலியாக உருப்பெற்று பாபுயியின் தொண்டையிலிருந்து வெளிப்பட்டது. அவள் மேல்ஸ்தாயியில் பாடத் தொடங்கினாள்--"இரவில் என் மனத்துக்கு என்ன சொல்லிச் சென்றாய் நீ?"
இந்தச் சில வார்த்தைகளுக்குள் தாளச் சந்தம் குதித்து வந்தது. முதலில் 'கீ ஜானி' (எனக்கென்ன தெரியும்?) என்றசொற்கள் கீழ் ஸ்தாயியில் நிதானமாக ஒலித்தன. பிறகு அதே இரண்டு சொற்கள் மேல் ஸ்தாயியில் இன்னும் இதமாக ஒலித்தன.ஒலிகளின் மோதலில் சோகத்தின் சாயை.
'ஷே கீ ஜாகரணே' (ஒவ்வொரு சொல்லுக்கும் பிறகு ஒரு சிறு அலை, மகிழ்ச்சி, தயக்கம், ஐயம், ஆர்வம்). மறுபடியும் கீழ்ஸ்தாயியில் 'கீ ஜானி'. (மூடிய கண்கள்). இந்தக் கொல்லையில் மாமரமிருப்பதால் நிலவு தரையிறங்கவில்லை; அங்கு வெளிச்சம்மங்கலாக, இருள் போலவே இருக்கிறது.
பாட்டு தொடர்கிறது-'நானா காஜே நானா மதே ஃபிரி கரே ஃபிரி பதே' (பல அலுவலாக, பல எண்ணங்களுடன்வீட்டில் சுற்றுகிறேன், வீதியில் அலைகிறேன்). இந்த அறையிலிருந்து அந்த அறை, அந்த அறையிலிருந்து இன்னோர் அறை... தெருவில் தனியாக... எப்போதும் இரவும் பகலும் காதில் ஏதோ சொல்லி விட்டுப் போகிறான்... மாலை நேரம் மினுவை அழைக்கிறது. என் பொரிக் கிண்ணத்தில் தேங்காயெண்ணெய் மணம். அம்மாவை இரவில்-அம்மா, உனக்குத் தூக்கம் வருகிறதா?
'ஷே கதா கீ அகோசரே பாஜே க்ஷணே க்ஷணே' (அந்த வார்த்தை எனக்குத் தெரியாமல் எதிரொலிக்கிறது ஒவ்வொருகணமும்). எனக்குத் தெரியவில்லை, புரியவில்லை. என் கண்ணுக்குத் தெரியும் என் உடலுக்குப் பின் எங்கேயோ, அல்லது இந்தஉடலுக்கு வெளியே எங்கோ இதயம் என்ற பொருள் இருக்கிறது. அது எனக்குத் தெரிந்துவிட்டால்! எனக்குத் தெரியவில்லை,புரியவில்லை. ஐயோ, ஐயோ!
'ஷே கதா கீ அகாரணே ப்யத்திச்சே ஹ்ருதய்' (அந்தப் பேச்சு காரணமின்றி என் இதயத்தை வருத்துகிறது). மாதாகோவிலின் பிரார்த்தனைப் பாடல்போல் ஒரே சமயத்தில் நான்கு ஒலிகள், கடைசி ஒலி இழுத்து ஒலிக்கப்படுககிறது. 'ஏகீ பய்' (இது என்ன பயம்) என்ற சொற்கள் ஒலிகளையெழுப்ப, கூடவே இன்னொரு அலை 'ஏ கீ ஜய்' (இது என்ன வெற்றி...)அலைக்குப் பின் அலை, அலைக்கு மேல் அலை, கரை நிலை குலைகிறது. ஒரு பெரும் பிரார்த்தனை கடலலை போல் எழுந்துமோதி உடைத்துத் தூளாக்கி அழிக்கிறது, அடித்துக்கொண்டு போகிறது, மூழ்கடிக்கிறது. அற்பமான தசையைக் கரைத்து,எலும்பின் ஊனை வெளிப்படுத்தி, இரத்தக் குழாய்களின் இரத்தத்தை வெளியே பெருகச் செய்து, இரத்தச் சிவப்பானபவளத் தீவைச் சமைக்கிறது. ஆகா, படைக்கிறது... இரத்தச் சிவப்பு... படைப்பு... படைப்பு. உலகம் முழுதும் காற்றின் அட்டகாசம்... படைப்பு... எ-லி-மெ-ன்-ட்-ட-ல், லி-ரி-க-ல்... நான் ஓவியம் தீட்டுவேன், பாட்டுப் பாடுவேன், சமுத்திரம் பார்ப்பேன். ஏபெண்ணே! கழுத்தை உயர்த்திக் கொண்டு, வறண்ட உதட்டோடு, என்ன ஆர்வத்தில், என்ன வேதனையில் சிலுவையிலறையப்பட்டகிருஸ்துவின் காலடியில் ஒரு பக்தைபோல் உட்கார்ந்திருக்கிறாய்?
ஐயோ, இந்த இருபத்தாறு வயதிலேயே அகாலத்தில் மூப்படைந்து விட்ட நான் முகத்தை முழங்கால்களுக்கிடையே வைத்துக் கொண்டு, அட்லஸ் தேவதைபோல் முதுகை அகலமாக விரித்துக் கொண்டு என்ன சோகத்தில், எந்த வேதனையில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்? ஆழ்ந்த இரவில், இந்த நள்ளிரவில் என்ன சொல்லிவிட்டுப் போகிறான் என் மனதில்? பொறுக்க முடியவில்லை, பொறுக்க முடியவில்லை... அந்த வார்த்தையை அவன் மீண்டும் மீண்டும் காதில் சொல்கிறானா? 'ஆர் நோய், ஆர் நோய்' (இனி வேண்டாம், இனி வேண்டாம்)-அமைதியான பார்வை, தியானப் பார்வை, பாதி மூடிய கண்கள்-சிவனின் தவம்போல்-இரண்டு புருவங்களுக்கருகில் இரண்டு நீளமுடிகள்... புல்லாங்குழல் ஒலிப்பது மனத்திலா அல்லது வனத்திலா? புல்லாங்குழலிசைத்து அழைப்பது யார், என்ன சொல்லி அழைக்கிறார், தெரியவில்லை, தெரியவில்லை... 'ஷே கதா கீ நானா சுரே போலே மோரே சலோ தூரே' (அந்தச் சொல்லைப் பல சுரங்களில் எனக்குச் சொல்லிவிட்டுப் போகிறாய் தொலைவில்) ஒவ்வொரு நான்கு சொற்களிலும் சிறிய அலை, தியானத்தின், உள்ளத்தின் குரல்... காதுகளை உயரத் தூக்கிக்கொண்டு கஸ்தூரி மான், பிரார்த்தனைகளால் சின்னாபின்னமான கரையின் லயிப்பு... தொலைவுக்கு, தொலைவுக்கு-தொலைவில் ஆறு கடலுடன் சங்கமிக்கும் இடத்துக்கு, தொலைவில் நடுக் கடலுக்கு, தொலைவில் கடல் மண்ணுக்கு, நீலக்கடலின் கொந்தளிக்கும் ஆழத்தில், தொலைவில் கடலின் அடித்தளத்தின் ஆகாயத்தில்! என் நாளங்களிலிருந்து இரத்தத்தை, எலும்பிலிருந்து ஊனை வெளியே எடுத்துக் கொள்... ஒரு பார்வையின் தீவு, பவளத் தீவு, இரத்த நிற உணர்ச்சிப் பெருக்கின் தீவை உண்டாக்கு. சிறு பெண் பாபுயி, நான் என் கைகளைக் குவித்துக்கொண்டு என் பாவங்களனைத்தையும் உன் காலடியில் கொட்டுகிறேன்.
ஆறு மலையிலிருந்து கடலுக்குப் போகிறது. கங்கையும் பிரும்மபுத்ராவும் கொண்டு வந்து சேர்த்துள்ள வண்டல் மண்ணில் ஒரு நாடு, புவியியலில் ஒரு பெயர், உலகத்தில் சில மனிதர்கள்... இயற்கையின் சில அழகுகளை உண்டாக்கு. ஆறு கடலுக்குப் போகிறது--'போ தொலைவுக்கு!' - முகத்துவாரம், கங்கையின் முகத்துவாரம், கல்கத்தா ஒரு துறைமுகம், கல்கத்தா ஒரு பெயர், கடற்கரையில் - அதற்குப்பிறகு கடல். பாகீரதி நதிக்கரையிலுள்ள ஒரு துறைமுகம் கல்கத்தா - அஸ்ஸாம், வங்காளம், பீகார், ஒரிஸ்ஸா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் இவையெல்லாம் கல்கத்தாவின் பின்புலம். அதற்குப்பின் நடுக்கடல்.
இந்த இருட்டில் அவர்களிருவரும் ரவீந்திரரின் ஒரு பாடலின் கையெழுத்துப் பிரதியாக ஆகிவிடுகிறார்கள். அடிக்கப்பட்ட சொற்கள், உடைந்த பாடல் வரிகள், இங்குமங்கும் சிதறிய கையெழுத்துக்கள்... இடைவெளிகளில் நிரம்புகிறது இசை...
(ஏப்ரல், 1960)
தாராசங்கர் பந்த்யோபாத்தியாய் (1889 - 1971)
சரத்சந்திரருக்குப் பிறகு வங்காளிக் கதையிலக்கியத்தின் தலைவர். சிறுகதை, நாவல், நாடகம், பாடல்கள் எழுதுவதில் தேர்ந்தவர். அவரைப்பற்றி ரவீந்திரரின் கூற்று நினைவு கூரத்தக்கது- "மண்ணையும் மனிதனையும் அறிந்தவர், அவற்றுடன் இணைந்தவர்." இந்த இணைப்பு வெளிப்புறத்தைச் சார்ந்ததல்ல, உள்ளார்ந்ததாகும். சரத் நினைவுப் பரிசு(1947), ரவீந்திரர் நினைவுப் பரிசு(1955), சாகித்திய அகாதமிப் பரிசு(1956), ஞானபீடப் பரிசு(1966) பெற்றவர். கல்கத்தா, வடக்கு வங்காளம், ஜாதவ்பூர், ரவீந்திர பாரதி பல்கலைக் கழங்களின் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றவர். மாநிலங்களவையின் நியமன உறுப்பினராகவும் சாகித்திய அகாதமியின் ஃபெலோவாகவும் இருந்திருக்கிறார். இவருடைய கதைகளும் நாவல்களும் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன, திரைப்படங்களாகவும் ஆக்கப் பட்டுள்ளன. பீர்பூம் மாவட்டத்தில் லாப்பூர் கிராமத்தில் பிறந்து கல்கத்தாவில் மரணமடைந்தார். பீர்பூமின் சிதைந்த ஜமீன்தார் குடும்பம் ஒன்றைச் சார்ந்தவர். தொழில்-எழுத்து. இந்திய அரசின் 'பத்ம பூஷண்' விருது பெற்றவர்.
பனஃபூல் (1899 - 1979)
உண்மைப் பெயர் பலாயி சாந்த் முகோபாத்தியாய். தொழில்- மருத்துவம். கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் பயின்று, பிறகு நீண்ட காலம் பாகல்பூரில் மருத்துவப் பணி புரிந்து விட்டுப் பின்னர் கல்கத்தாவில் வசிக்கத் தொட்ங்கினார். கவிதை, கதை, நாவல், நாடகம், கட்டுரை எழுதுவதில் நிபுணர். உள்ளடக்கத்தின் பிரகாசத்திலும், கட்டமைப்புத் திறனிலும் சிறந்த எண்ணற்ற சிறுகதைகள் எழுதியுள்ளார். கல்கத்தா பல்கலைக்கழகத்தின் சரத் நினைவுப் பரிசு(1952), ஆனந்தா பரிசு(1961), ரவீந்திரர் நினைவுப் பரிசு(1962) பெற்றவர். இவருடைய கதைகள்- நாவல்களின் பாத்திரங்களின் பல்வகைத் தன்மை வாசகரை ஈர்த்து வியப்பிலாழ்த்துகிறது. இவர் 1975 ஆம் ஆண்டில் 'பத்ம பூஷண்' விருது பெற்றார்.
அசிந்த்ய குமார்சென் குப்தா (1903 - 1976)
'கல்லோல்' குழுவின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர். கதை, நாவல், கவிதை, நாடகம், வாழ்க்கை வரலாறு, குழந்தை இலக்கியம் படைப்பதில் சிறந்தவர். கூரிய பார்வை, ஆழ்ந்த மனிதாபிமானம், அளவற்ற பரிவு இவை இவருடைய படைப்புகளில் நிறைந்துள்ளன. நீதித்துறையில் பணிபுரிந்து மாவட்ட நீதிபதியாக ஓய்வு பெற்றார். இவரது கூர்மையான ஆய்வுப் பார்வை கிழக்கு வங்காளத்து ஏழை முஸ்லிம் மக்கள், அரசாங்க அதிகாரிகள், தலைநகரத்தின் உயர் மட்டத்து மனிதர்கள் ஆகிய சமூகத்தின் பல்வேறு பிரிவுகளையும் ஊடுருவிப் பார்த்து இலக்கியம் படைத்தது. இவரது படைப்புகள் மொழியின் நளினத்தில் சிறந்தவை. இவர் ரவீந்திரர் நினைவுப் பரிசு(1975) பெற்றவர்.
பிரேமேந்திர மித்ரா (1904 - 1988)
*'கல்லோல்' குழு எழுத்தாளர்களில் ஒருவர். கவிதை, கதை, பாடல், கட்டுரை, குழந்தை இலக்கியம், திரைக்கதை, இவற்றைப் படைப்பதில் தேர்ந்தவர். இவர் படைத்த 'கனாதா', 'பராசர் வர்மா' போன்ற பாத்திரங்கள் சிறுவர், வயது முதிர்ந்தவர் இரு பிரிவினரையும் ஒருங்கே கவர்ந்தன. இவருடைய வாழ்க்கையின் ஒரு பகுதி காசியில் கழிந்தது. இவர் பலவகையான பணிகளில் ஈடுபட்டிருந்தார். சிறிது காலம் கல்கத்தா வானொலியின் இலக்கிய ஆலோசகராக இருந்தார். ஆனால் இறுதிவரை இவர் புகல்* பெற்றது இலக்கியத்தில்தான். இவரது எழுத்தில் மனித வாழ்க்கை யின்பால் பரிவு வெளிப்படுகிறது. வெளிப்புற வாழ்க்கையைவிட அகவயமான தேடலிலேயே இவருக்கு ஆர்வம் அதிகம். மனத்தின் ஆழத்தில் நுழைய விரும்புகிறார் இவர். சரத் நினைவுப் பரிசு (1955), ரவீந்திரர் நினைவுப் பரிசு(1958), சாகித்ய அகாதமிப் பரிசு (1967) பெற்றவர். 'பத்மஸ்ரீ' விருதும் பெற்றார்.
அன்னதா சங்கர் ராய் (1904)
பிறந்தது ஒரிஸ்ஸாவிலுள்ள டெங்கானலில். 1927ஆம் ஆண்டில் ஐ.சி.எஸ்.ஸில் சேர்ந்து 1951ஆம் ஆண்டில் அதிலிருந்து விலகினார். 1927 முதல் 1929 வரை இங்கிலாந்தில் வசித்தார். 1957-ல் ஜப்பான் பயணம், 1963-ல் மேற்கு ஜெர்மனி, இங்கிலாந்து பயணம். 1962-ல் சாகித்திய அகாதமிப் பரிசு பெற்றார். பயண நூல் 'பத்தேபிரவாஸே' (1931) இவருக்குப் புகழ் சேர்த்தது. இலக்கியத்தின் பலதுறைகளிலும் சிறந்த படைப்பாளி. முக்கிய நாவல்கள் 'சத்ய சத்ய' (1932 - 42) ஆறு பாகங்கள்; 'ரத்னா ஓ ஸ்ரீமதி' (1956 - 73) 3 பாகங்கள். 50 வருடங்களாகச் சிறுவர்களுக்காகக் கதை எழுதி வருகிறார். இவருடைய 'சடா' எனப்படும் எதுகைப் பாடல்கள் புகழ் பெற்றவை. இவருடைய சிறுகதைத் தொகுப்புகள் இரண்டு கல்ப (1960), கதா (1970) கதையின் உருவத்தின் பல்வேறு சாத்தியக் கூறுகள், உள்ளடக்கம் இரண்டிலும் அக்கறை கொண்டவர். நிகழ்ச்சிகளுக்கே முக்கியத்துவமளித்துக் கதை எழுதுவதில் விருப்பமில்லை. கதைகளில் அவர் காட்ட விரும்புவது உண்மையின் தேடல். இவருடைய படைப்புகளை இரண்டு கால கட்டங்களாகப் பிரிக்கலாம். முதல் கட்டம் 1930-1956. இரண்டாவது கட்டம் 1959லிருந்து தொடங்கியது. இந்த இரண்டாவது கட்டத்தின் முதல் கதை மீன் பியாசி. முதல் கட்டத்தில் வெளிப்புற வாழ்க்கையின் உண்மை நிலையை ஆராய்ந்தார். இரண்டாவது கட்டத்தில் உட்புற வாழ்க்கையை ஆராய்கிறார். தொடக்க காலத்தில் ஒரியா, வங்காளீ, ஆங்கிலம் இம்மூன்று மொழிகளிலும் எழுதினார். இப்போது ஆங்கிலத்தில் மட்டும் எழுதிகிறார். இவர் பல பரிசுகளும் விருதுகளும் பெற்றவர். சாகித்திய அகாதமியின் ஃபெலோ. வங்காளி அகாதமியின் தலைவர். கல்கத்தாவில் வசித்தபடியே முழு நேர இலக்கியப் பணி செய்பவர்.
சதிநாத் பாதுரி (1906-1965)
பீகாரின் பூர்ணியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். வெகுகாலம் அரசியலில் ஈடுபட்டிருந்தார். பீகார் காங்கிரஸ் வட்டாரத்தில் அறிமுகமானவர். ஆகஸ்ட் இயக்கத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். இந்தச் சிறை வாழ்க்கையை கருவாகக் கொண்டு முதல் நாவல் ஜாகரி 1943 எழுதினார். இந்த நாவல் இவருக்குப் புகழ் கொணர்ந்தது. மேற்கு வங்க அரசின் ரவீந்திரர் நினைவுப் பரிசு தொடங்கப்பட்டபோது முதல் பரிசு இந்த நாவலுக்கே கிடைத்தது. சிறுகதை, நாவல், கட்டுரை எழுதுவதில் தேர்ந்தவர். இவருடைய சக்தி பிரமண் காஹானி ஓர் அசாதாரணப் படைப்பு. உள்ளத்தில் ஆழத்தில் அனாயசமாகப் பயணிக்கிறார். மனித உள்ளத்தின் மிகநுண்ணிய பிரச்சினைகளை ஈவிரக்கமின்றி ஆய்வதில் திறன்மிக்க சதிநாத் எழுத்தாளர்களின் எழுத்தாளர். இவருடைய டோடாயி சரித் மானஸ் (இரண்டு பாகங்கள்) இந்திய நாவல் வரலாற்றில் இணையற்றது. இவர் புகழ் பெற்ற இந்தி எழுத்தாளர் ஃபணிசுவர் நாத் ரேணுவின் இலக்கிய ஆசான்.
ஆஷா பூர்ணா தேவி (1904)
மனித உள்ளத்தின் இரகசியங்களை வெளிக் கொணர்வதில் அரிய திறனுள்ளவர். மனித வாழ்க்கையிடம் எல்லையற்ற பரிவு கொண்டவர். எளிய, சாதாரண வாழ்க்கையில் திரைமறைவில் உறைந்துள்ள நுண்ணிய விசித்திரங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் அசாதாரணத் திறமை இவருக்கு உண்டு. வங்க சமூகத்தையும் குடும்ப வாழ்க்கையையும் திறம்படச் சித்தரித்துள்ளார். லீலா பரிசு, ரவீந்திரர் நினைவுப் பரிசு (1966) சரத் நினைவுப் பரிசு (1985) பெற்றவர். இவருடைய பல நூல்கள் திரைப்படமாக்கப் பட்டுள்ளன.
சுபோத் கோஷ் (1910 - 1980)
அசாதாரணத் திறன் வாய்ந்த எழுத்தாளர். கதை, நாவல், கட்டுரை படைப்பதில் தேர்ந்தவர். பலதுறைகளிலும் ஈடுபாடு கொண்டவர். இவர்து வாழ்க்கையின் முதற்பகுதி சோட்டா நாக்பூர்ப் பகுதியில் கழிந்தது. இந்தப் பிரதேசமே இவருடைய பலபடைப்புகளின் பின்புலமாகும். இதற்குச் சிறந்த உதாரணம் இவருடைய நாவல் சகதியா. இவருடைய படைப்புகளில் பல்வகை அனுபவச் செறிவோடு கலைத் தேர்ச்சியும் அறிவுத் தேர்ச்சியும் இணைந்துள்ளன். பிறந்தது ஹஜாரபாகில். பழங்குடிகளின் வாழ்க்கையிலிருந்து ராணுவ வாழ்க்கை, மானிட இயலிலிருந்து மென்கலைகள் - எல்லாவற்றிலும் அனாய்சமாக உலவுகிறார். மனிதமனதின் புதைமணலின் இரகசியத்தைக் கண்டுபிடிப்பதில் தேர்ந்தவர்.
ஜோதிரிந்திர நந்தி (1912 - 1982)
இரண்டாவது உலகப்போருக்குப் பிற்பட்ட நடுத்தர, கீழ் மட்டத்து மக்களின் வாழ்க்கையைச் சித்திரிப்பதில் தேர்ந்தவர். சிந்தனைச் செல்வரான இந்த எழுத்தாளர் உள்ளத்தின் உணர்ச்சிகளை ஆராய்வதில் தனித்தன்மையைக் கையாள்கின்றார். இவருடைய மொழி நடையும் தனித்தன்மை வாய்ந்தது. உணர்ச்சிப் போராட்டங்களைச் சித்திரிப்பதில் திறன் வாய்ந்தவர். இவருடைய கதைகள், நாவல்களில் சமகால சமூகத்தின் தவறுகள் மட்டுமின்றி, மனித வாழ்க்கையில் இயற்கையின் அழுத்தமான தாக்கமும் இடம் பெறுகிறது. இந்த விஷயத்திலும் தனித்தன்மை வாய்ந்தவர் இவர்.
நரேந்திரநாத் மித் ரா (1916 - 1975)
குறைவாகப் பேசுபவர், இனிமையாகப் பேசுபவர். இவருடைய கதைகள், நாவல்களும் ஒரு வகையில் உரையாடல்களே. நடுத்தர வாழ்க்கையின் தேர்ந்த ஓவியர். அறியவொண்ணாத மனித மனதின் இரகசியங்களையும் இதயத்தின் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவதில் இவரது கூர்மையான நோக்கு தெரிகிறது. நம்மிடையே மிகச்சிறந்த சிறுகதைகளை அதிக எண்ணிக்கையில் நரேந்திரநாத் எழுதியிருக்கிறார் என்று பல எழுத்தாளர்கள் சொல்லுவார்கள். கதையைவிட வடிவமைப்பிலும் பாத்திரப் படைப்பிலும் இவரது அனாயாசத் திறமி கண்கூடு. கல்கத்தாவில் செய்திப் பத்திரிகையொன்றில் பணியாற்றினார். ஃப்ரீத்பூரில் பிறந்தவர்.
நாராயண் கங்கோபாத்தியாய் (1918 - 1970)
நரேந்திர நாத்தின் சக மாணவர். இருவரும் ஒரே சமயத்தில் இலக்கியப் பணியைத் தொடங்கினர். நாராயண் கங்கோபாத்தியாயின் உண்மைப் பெயர் தாரக்நாத் கங்கோபாத்தியாய், பிறந்தது தினாஜ்பூரில். கல்கத்தா பல்கலைக் கழகத்தில் வங்காளிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், திரைக்கதை, கட்டுரை, சிறுவர் இலக்கியம், பாடல், செய்திப் பத்திரிகைக்கான கட்டுரை ஆகிய பலதுறைப் படைப்பிலும் தேர்ந்தவர். முதல் நாவல் உபநிவேஷ் (1944) மூலம் புகழ் பெற்றார். வெளியுலகம், மன உலகம் இரண்டுமே இவருடைய படைப்புகளில் இணைந்துள்ளன. இவர் ரொமாண்டிக் எழுத்தாளர். கூடவே நடப்பியல் எழுத்தாளருங்கூட கவிதைத்தன்மையும் வெளிப்பாட்டுச் செறிவும் நிறைந்த மொழியில் இவர் தம் கற்பனையுலகைப் படைக்கிறார். மனிதனோடு இயற்கையும் இவருடைய படைப்புகளில் இடம் பெறுகிறது. ஈவிரக்கமின்றி சமூகத்தைப் பகுத்து ஆராய்வதோடு ரொமாண்டிக் மனப்போக்கும் இயற்கையில் காதலும் கொண்டவர்.
சந்தோஷ் குமார் கோஷ் (1920 - 1985)
இவர் நரேந்திரனாத் மித் ரா, நாராயண் கங்கோபாத்தியாய் ஆகியோருடன் இலக்கிய உலகில் நுழைந்தார். பிறந்தது ஃப்ரீத்பூரில். வாலிபத்தின் பின்பகுதி முதல் கல்கத்தாவாசி. எப்போதும் நகர வாழ்க்கையையே சித்திரிக்கிறார். கிராம வாழ்க்கை பற்றி எழுதுவதில்லை. கதை, நாவல், நாடகம், கவிதை, கட்டுரை படைப்பதில் சிறந்தவர். தேர்ந்த மொழிச் சிற்பி. இவருடைய கதையில் வடிவத்துக்கு முக்கிய இடமுண்டு. கதை சொல்லும் முறை முக்கியமென்று கருதுகிறார். கூர்மையான, பண்பட்ட, சற்றுக் கேலி கலந்த மொழியில் இதயத்தின் மிக நுண்ணிய உணர்வுகளையும் வெளிப்படுத்தும் அசாதரணத் திறமை படைத்தவர். இவர் வாழ்க்கையை நேசிப்பவர். இந்த நேசத்தில் ஓரளவு வேதனையும் நம்பிக்கையின்மையும் கலந்துள்ளன. தாம் வாழும் காலம், கையாளும் கலை இவையிரண்டிலும் அக்கறை கொண்டவர். சிறிது காலம் டில்லியில் வசித்தார். கல்கத்தாவின் புகழ்பெற்ற பத்திரிகையொன்றில் பணிபுரிந்தார்.
சமரேஷ் பாசு ( 1921 - 1983)
நரேந்திரநாத், நாராயண், சந்தோஷ் குமார் - ஆகியோருடன் இணைத்துக் குறிப்பிடத்தக்க பெயர் சமரேஷ் பாசு. இவர் நகரத்தின் எழுத்தாளர் அல்லர். வங்க மண்ணுடன் நெருங்கிய கலைஞர். வாழ்க்கையில் நம்பிக்கை கொண்டவர். பிறந்தது டாக்காவில். தம் வாழ்க்கையில் பல்வேறு வேலைகள் பார்த்தவர். இறுதியில் இலக்கியத்தையே முழுநேரப் பணியாகக் கொண்டார். மனித வாழ்க்கை பற்றி அறிய இவரது ஆவலும், அவ்வாழ்க்கையிடம் பரிவும் எல்லையற்றவை. இது அவரது படைப்புகளில் தெரிகிறது. மனிதனைப்பற்றி மட்டுமின்றி இயற்கையைப் பற்றியும் எழுதுகிறார். கால்கூட் என்ற பெயரில் பயண அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட நாவல்கள் எழுதுகிறார். பாடல் இயற்றுகிறார், தாமும் பாடுவார். இவரிடம் மாணிக் பந்தோபாத்தியாய், தாராசங்கர் பந்தோபாத்தியாய் ஆகியோரின் தாக்கமுண்டு. எனினும் இவர் தமக்கென ஒரு பாணியை அமைத்துக் கொண்டுள்ளார். இவர்தம் சொந்த அனுபவங்கள் மூலம் வாழ்க்கையை உணர்ந்திருக்கிறார். இந்த அனுபவத்தோடு இணைந்திருக்கிறது அழுத்தமான ஈடுபாடு.
பிமல் கர் (1921- )
சிந்தனைச் செறிவுள்ள எழுத்தாளர். தமக்குரிய தனிப்பார்வையில் வாழ்க்கையைப் பார்க்கிறார். இளம்வயதில் மருத்துவம் படித்தார். ஆனால் இக்கல்வி முற்றுப் பெறவில்லை. பிற்காலத்தில் கதை, நாவல்களில் மருத்துவரின் பற்றற்ற பார்வையைக் கையாண்டார். வங்காளிக் கதையிலக்கியத்தில் புதிய நடையை அறிமுகப்படுத்தினார். அறிவும் சிந்தனையும் இவருடைய ஆயுதங்கள். உணர்ச்சியை இவர் ஒதிக்கிடவில்லை. ஆனால் ஒரு போதும் உணர்ச்சி வசப்படவில்லை. சிறு வயது ஹஜாரி பாகில் கழிந்தது. பிறந்தது கல்கத்தாவுக்கருகில் 24 பர்கானா மாவட்டத்தில் வாழ்க்கைக்கு அடுத்தாற்போலவே சாவையும் பார்த்தார். இவருடைய படைப்புகளின் வாழ்க்கையுணர்வும் சாவின் உணர்வும் இணைந்து இடம் பெற்றுள்ளன. இவருடைய பல கதைகள் திரைப்படமாக்கப் பட்டுள்ளன.
ரமாப்த சௌதுரி (1922)
தற்கால வங்காளி இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர். இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் எழுதத் தொடங்கினார். பிறந்தது கரக்பூரில். சிறுதுகாலம் சோட்டா நாக்பூர் பகுதியில் பணிபுரிந்தார். பல்வேறு பயணங்கள் செய்தபின் இப்போது கல்கத்தாவின் தினசரிப் பத்திரிகை ஒன்றின் ஒரு துறைக்கு ஆசிரியர். ஒரு சமயம் காட்டைப் பின்புலமாகக் கொண்டு பல சிறு கதைகள் எழுதியுள்ளார். இப்போது நகர வாழ்க்கையே இவரது படைப்புகளில் இடம் பெறுகிறது. இவரது கதைகள் பல திரைப்படமாக்கப் பட்டுள்ளன. இவரது மொழி பண்பட்டது. நளினம் நிறைந்தது. இவர்து கதைகளின் உள்ளடக்கத்தில் பல்வேறு தன்மைகள் உண்டு. எழுதும் முறையிலும் இவர் தனித்தன்மையை வெளிப்படுத்துகிறார். வாழ்க்கையின் பல துறைகளில் ஆழ்ந்தவர். ரவீந்திரா நினைவுப் பரிசும் (1971) சாகித்திய அகாதமிப் பரிசும் (1988) பெற்றவர்.
சையது முஸ்தபா சிராஜ் (1930 -)
நாட்டு விடுதலைக்குப் பிற்காலத்து இளம் எழுத்தாளர்களில் ஒருவர். மூர்ஸிதாபாத் மாவட்டக் கிராமமொன்றில் பிறந்தவர். வாழ்க்கையில் பல்வேறு அனுபவங்களைப் பெற்றவர். மூர்ஷிதாபாதில் நாடோடி நாடகக் குழுவில் பாடல்கள் எழுதினார் (1950-1958), அதற்குமுன் பத்திரிகைகளில் பணிபுரிந்தார் (1949-1950). இப்போது கல்கத்தா தினசரியொன்றில் பணியாற்றுகிறார். தாராசங்கரைப் பின்பற்றி எழுதத் தொடங்கிப் பிறகு தனக்கென ஒரு பாணியை அமைத்துக் கொண்டார். முதல் கதை தேஷ் பத்திரிகையில் வெளிவந்த காதலும் திரும்பிவரும் ரயிலும். முக்கியமாக எழுத்தின் மூலமே வாழ்க்கை நடத்துகிறார். இவருடைய படைப்புகளில் கிராம மக்களும் நகர மக்களும் இடம் பெறுகின்றனர். சமூகப் பிரச்சினைகளில் தீவிர அக்கறையுள்ளவர். நிறைய எழுதிகிறார்.
மதி நந்தி (1921 -)
வடக்குக் கல்கத்தாவில் ஒரு மேற்குடியில் பிறந்தார். தானியங்கிப் பொறியிலில் டிப்ளமோ பெற்றவர். அரசுப் போக்குவரத்துத் துறையில் இரண்டாண்டுப் பயிற்சிக்குப்பின் பி.ஏ பாஸ் செய்து பத்திரிகைத் துறையில் பணி செய்யத் தொடங்கினார். இப்போது கல்கத்தாவின் தினசரியொன்றில் விளையாட்டுப் பகுதியின் ஆசிரியர். கிரிக்கெட் பிரியர். கிர்க்கெட் விளையாட்டைக் கருவாகக் கொண்டு மூன்று நூல்கள் எழுதியுள்ளார். தேஷ் பத்திரிகையில் வெளியான சாத் (1956) கதை மூலம் வாசகர் கவனத்தை ஈர்த்தார். அனாவசிய விவரங்களற்ற, நேரடியான முறையில் கதை சொல்கிறார். யதார்த்த மண்ணில் உறுதியாக நின்றுகொண்டு மனிதன்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார். நடுத்தர, கீழ் மட்டத்து மக்களின் வாழ்க்கையைத் திறம்படச் சித்திரிப்பவர்.
சுநீல் கங்கோபாத்தியாய் (1934 -)
பிறப்பு ஃப்ரீத்பூரில். கவி கதாசிரியர், தேஷ் பத்திரிகையில் வெளியான ஏக்டி கவிதா என்ற கவிதை மூலம் அறிமுகமானவர். ஜனங்களால் அதிகம் நேசிக்கப்படுபவர். கவி சுநீலா, கதாசிரியர் சுநீலா என்று சொல்வது கடினம். பலவகைப் பணிகளுக்குப்பின் தற்போது கல்கத்தாப் பத்திரிகையொன்றில் பணி புரிகிறார். 1960-ம் ஆண்டு அமெரிக்கப் பயணம் செய்தார். நிறைய எழுதிகிறார். சிலகதைகள் திரைப்படமாக்கப் பட்டுள்ளன். பரிச்சயமான நடுத்தர மக்களின் வாழ்க்கையின் பலதிறப்பட்ட உணர்ச்சிகளையும் அனுபவங்களையும் திறமையாகவும் மனதைக் கவரும் முறையில் சித்திரிக்கிறார். மொழியில் நளினம், சொல்லும் முறையில் அழகு, கதையின் ஈர்ப்புத்திறன் - இவையெல்லாம் இவரை மக்களின் அபிமான எழுத்தாளராச் செய்துள்ளன.
பிரபுல்ல ராய் (1934 -)
பிறந்தது டாக்காவில். வட்டார வாழ்க்கையைச் சித்திரிக்கும் நாவல் எழுதி இலக்கியப் பணியைத் தொடங்கினார். தேஷ்-இல் வெளியான நாவல் பூர்வ பார்வத்ய மூலம் அறிமுகம் பெற்றார். இவரது பெரும் படைப்பான கேயா பாத்கிரார் நௌகா (இரண்டு பாகங்கள்) தற்கால வங்காளி வாழ்க்கையில்ன் வரலாறாகும். தற்போது ஒரு கல்கத்தாப் பத்திரிகையின் ஒரு பகுதிக்கு ஆசிரியர். இவர்து சில கதைகள் திரைப்படமாக்கப் பட்டுள்ளன. மனப்பூர்வமான ஈடுபாட்டோடு கவர்ச்சியான முறையில் கதைகள் எழுதுகிறார். கதையின் அமைப்பு, பாத்திரப் படைப்பு இரண்டிலும் திறமை பெற்றவர்.
சீர்ஷேந்து முகோபாத்தியாய் (1935 -)
கிழக்கு வங்காளத்தில் மைமன்சிங்கில் பிறந்தவர். ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1959-ஆம் ஆண்டு தேஷ் பத்திரிகையில் ஜலதரங்க என்ற சிறுகதை மூலம் புகழ் பெற்றார். இவருடைய கதைகளிலும் நாவல்களிலும் உண்மை வாழ்வுக்கும் ஆழ் மனத்து உணர்ச்சிகளூக்குமிடையே இழுபரிப் போராட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. இவருடைய கதைகளில் நிலையற்ற தன்மையில்லை. நிலையான நம்பிக்கை இருக்கிறது. சுயசரிதைப் பாணியில் எழுதும் கதைகளில் இவர் உள் மன உலகின் ஆழத்தில் சத்தியத்தைத் தேடுகிறார்.
தேபேஷ் ராய் (1936 - )
வங்காளி மொழியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். அறுபதுகளில் வங்காளிச் சிறுகதை இயக்கத்தின் தலைமை வகித்த எழுத்தாளர்களில் ஒருவர். கதை சொல்லும் முறையிலும் பயன்படுத்தும் மொழியிலும் மிகவும் அக்கறை காட்டுபவர். இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு தேபேஷ் ராயில் சிறுகதைகள் 1969-ஆம் ஆண்டில் வெளியாயிற்று. 1972-ஆம் ஆண்டில் இவரது முதல் நாவல் யயாதி வெளிவந்தது. தேஷ் பத்திரிகையில் வெளியான ஹாட்காட்டா கதைமூலம் வாசகரின் கவனத்தை ஈர்த்தார். நூறுக்கு மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார்.

முன்னுரை | vii |
1. இறுதி வார்த்தை : தாராசங்கர் பந்த்யோபாத்தியாய் | 1 |
2. ஓட்டர் சாவித்திரி பாலா: பனஃபூல் | 12 |
3. சாரங்க் : அசிந்த்ய குமார் சென் குப்தா | 16 |
4. ராணி பசந்த்: அன்னதா சங்கர் ராய் | 31 |
5. காணாமற்போனவன்: பிரமேந்திர மித்ரா | 62 |
6. சரிவு : சதிநாத் பாதுரி | 84 |
7. எல்லைக்கோட்டின் எல்லை: ஆஷாபூர்ணாதேவி | 79 |
8. மோசக்காரி: சுபாத்கோஷ் | 90 |
9. ஒரு காதல் கதை: நரேந்திர நாத் மித்ரா | 104 |
10. மதிப்புக்குரிய விடைத்தாள் திருத்துபவர் அவர்களுக்கு; நாராயண் கங்கோபாத்தியாய் | 117 |
11. சிறிய சொல்: சந்தோஷ் குமார் கோஷ் | 130 |
12. மரம்: ஜோதிரிந்திர நந்தி | 143 |
13. உயிர்த் தாகம்: சமரேஷ் பாசு | 152 |
14. நண்பனுக்காக முன்னுரை: பிமல்கர் | 164 |
15. பாரதநாடு: ரமாபத சௌதுரி | 178 |
16. சீட்டுக்களாலான வீடுபோல : சையது முஸ்தபா சிராஜ் | 190 |
17. அந்தி மாலையின் இருமுகங்கள் : மதிநந்தி | 207 |
18. பஞ்சம்: சுநீல் கங்கோபாத்தியாய் | 218 |
19. பிழைத்திருப்பதற்காக: பிரபுல்ல ராய் | 232 |
20. என்னைப்பாருங்கள்: சீர்ஷேந்து முகோபாத்தியாய் | 244 |
21. பின்புலம்: தேபேஷ் ராய் | 258 |
கதாசிரியர் அறிமுகம் | 275 |
11. சிறியசொல்
சந்தோஷ்குமார் கோஷ்

ஜோதிரிந்திர நந்தி

சமரேஷ் பாசு

பிமல் கர்

ராமபத சௌதுரி

சையது முஸ்தபா சிராஜ்

மதி நந்தி

சுநீல் கங்கோபாத்தியாய்

பிரபுல்ல ராய்

சீர்ஷேந்து முகோபாத்தியாய்

தேபேஷ் ராய்

கதாசிரியர் அறிமுகம்

கருத்துகள்
கருத்துரையிடுக