ரெ.கார்த்திகேசு சிறுகதைகள்
சிறுகதைகள்
Back
ஆசிரியரைப்பற்றி சில வரிகள்:
ரெ.கார்த்திகேசு Ph.D., மலேசியா, பினாங்கைச் சேர்ந்தவர். பொதுமக்கள் தகவல் சாதனத் துறையில் (mass communication) பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். மலேசிய வானொலி, தொலைக்காட்சியின் முன்னாள் அலுவலர். மலேசியாவில் நன்கறியப்பட்ட சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், திறனாய்வாளர். அவரது மின்னஞ்சல் : <"kgesu@pd.jaring.my">kgesu@pd.jaring.my.
"அதோ தெரியிது பாத்தியா, அதுதான் எங்க பினாங்கு!" என்றான் தியாகு.
அன்னம்மாள் விழித்து விழித்துப் பார்த்தாள். அந்த அதிகாலை நேரத்தில் தூரத்தில் அக்கரையில் இருந்து பார்க்கும் போது அது ஒரு மாய லோகமாகத் தெரிந்தது. தலை நிலத்தோடு தொப்புள் கொடியாக இருந்த அந்த நீண்ட பினாங்குப் பாலத்தை அடைந்த போதே அவளுடைய உற்சாகம் கரை புரள ஆரம்பித்து விட்டது. இத்தனை பெரிய பாலம், இத்தனை பெரிய கடல் அவள் பார்த்ததே இல்லை. கப்பல்களும் படகுகளும் பறவைகளுமாக கடல் உயிர்ப்பாக சிலுசிலுப்பாக இருந்தது. இத்தனை மலைகளோடு இத்தனை நீலம் நீலமாய் ஒரு தீவு இருக்குமா!
வேனில் கணவன் தியாகு அவள் தோளைத் தழுவியபடி பக்கத்தில் இருந்தான். இப்போதுதான் கல்யாணம் பண்ணிக்கொண்ட களை இருவர் முகத்திலும் இருந்தது. இரண்டு மூன்று இரவுகள் உபசரிப்பிலும் சரசத்திலும் சரியாகத் தூக்கமில்லாமல் கழிந்த களைப்பும் கூடவே இருந்தது.
"ரொம்ப அளகா இருக்கு உங்க ஊரு" என்றாள்.
"பாத்தியா, பாத்தவொண்ணயே புடிச்சிப் போச்சி தங்கச்சிக்கு?" என்று சிரித்தான் வேனை ஓட்டிக்கொண்டிருந்த குழந்தை. பேர்தான் குழந்தை. ஆள் தொந்தியும் தொப்பையுமாய் கடோ த்கஜன் மாதிரி இருப்பான். தியாகுவுக்கு ரொம்ப நெருக்கமான கூட்டாளி.
இந்தக் குழந்தையினால்தான் நேற்றே பினாங்குக்கு வந்து புதிய வீட்டில் குடிபுக வேண்டியவர்கள் ஒரு நாள் தாமதமாக வருகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை அவனும் அவன் நண்பர்களும் கொடுத்த கல்யாண விருந்தைச் சாப்பிட்டுவிட்டுத்தான் குவாலா லும்பூரை விட்டுப் போக வேண்டும் என அவன் அடம் பிடித்து விட்டான்.
"ஐயோ, திங்கக் கிளம காலையில நான் பினாங்கில லோரி எடுக்கணும் கொளந்த! ஞாயித்துக்கிளமைக்கு நான் காடி வேற ஏற்பாடு பண்ணிட்டேன். அன்னம்மாவ வீட்டில கொண்டி உட்டுட்டு எல்லாம் காட்டிட்டு இருக்க வச்சிட்டு நான் புறப்படணுமே! அதுக்கு ஊரும் புதிசு, ஊடும் புதிசு" என்றான் தியாகு.
"காடி கெடக்குது தியாகு. ஒங்க ரெண்டு பேரயும் என்னொட வேன்லயே கொண்டி கரக்டா உட்டர்ரேன். ஞாயத்துக்கிளம விருந்து முடிஞ்சவொண்ண பத்து மணி போல உட்டம்னா கால ஒரு மணிக்கெல்லாம் போயிடலாமே" என்றான் குழந்தை.
தியாகு நண்பர்களைத் தட்டிக்கழிக்க முடியாதவனாக இருந்தான். கண்ணால் அவளிடம் அனுமதி கேட்டான். அவள் சரியென்பதுபோலச் சிரித்து விட்டாள். அதுதான் தப்பாகப் போனது.
விருந்து கோலாகலமாகத்தான் நடந்தது. ஆனால் தண்ணீர் ஏராளமாகப் புரண்டது. ஒரு மணி வரைக்கும் கூத்தும் கேலியுமாகப் போனது. ஒன்றரை மணிக்குத்தான் விட்டார்கள். இப்போது பினாங்கு வந்து சேர மணி காலை 5. முதலில் தியாகுதான் வேனைப் பேய் போல ஓட்டி வந்தான். இரண்டு முறை தூங்கி விழுந்து வேன் வளைந்து வளைந்து போக அவள் வற்புறுத்த தைப்பிங் வந்தபோதுதான் குழந்தையிடம் கொடுத்தான்.
அன்னம்மாவுக்குக் கலவரமாக இருந்தது. தன்னைக் கொண்டு போய் தான் இந்தப் புதிய ஊரில் தான் இன்னமும் பார்த்திராத அந்த அடுக்கு மாடி வீட்டில் விட்டுவிட்டுத் தியாகு உடனே கிளம்பிவிடப் போகிறான். ஒரு போக்குவரத்து நிறுவனத்தில் அவனுக்கு டிரைவர் வேலை. அவனுக்கு ஒரு வாரம் கல்யாணத்திற்காக லீவு கொடுத்திருந்த அவன் சீன முதலாளி, திங்கள் கிழமை கண்டிப்பாக வந்துவிட வேண்டும் என்று சொல்லி வைத்திருந்தார். காலையிலேயே முக்கியமான டிரிப் இருக்கிறதென்று முதலிலேயே சொல்லி எச்சரித்து வைத்திருந்தான் தியாகு. "வெளியூர் டிரிப். ஈப்போ வரிக்கும் போய் திரும்புனும். ராத்திரிக்குத்தான் திரும்ப முடியும். மொதலாளி மொரடன் அன்னம்மா. கண்டிப்பா போயிடணும்."
ஆயர் ஈத்தாம் பகுதியில் நெருப்புப் பெட்டிகளை நிறுத்தி வைத்திருந்தது போல அடுக்கு மாடி வீடுகள் நிறைந்திருந்த பகுதியில் ஒரு கடைசிக் கட்டிடத்திற்கு வழி சொல்லிக்கொண்டு வேனைக் கொண்டு நிறுத்தச் செய்தான் தியாகு.
அந்த அதிகாலை நேரத்தில் அந்தக் கட்டிடத்தைச் சுற்றி சீனர் உணவுக்கடைகள் சுறுசுறுப்பாக வியாபாரம் தொடங்கியிருந்தன. மீயும் பீஹூனும் பன்றிக் கொழுப்பில் பொறியும் வாசனை மிதந்து வந்து கொண்டிருந்தது. இரும்புச் சட்டிகளில் சட்டுவங்கள் படார் படார் என்று தட்டப்படும் ஒசைகள் கேட்டன. கும்பல் கும்பலாகச் சீனர்கள் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.
கட்டிட வாசலுக்குப் போகும் வழியெல்லாம் நிறையக் கார்களும் மோட்டார் சைக்கிள்களும் இடத்தை அடைத்துக் கொண்டிருந்தன. ஒருவகையாக நெறிசலுக்கிடையில் நுழை வாயிலில் கொண்டு நிறுத்தினான் குழந்தை.
இறங்கியவுடன் தியாகு அண்ணாந்து அவளுக்குக் காட்டினான். "அதோ பாரு. பத்தாவது மாடி. அந்த செவப்புத் துணி தொங்குது, அதுக்கு அடுத்தாப்பில!" அன்னம்மா கழுத்தை வளைத்து முடிந்தவரை பார்த்தாள். எது பத்தாவது மாடி என்று தெரியவில்லை. "இவ்வளோ ஒயரமா?" என்றாள்.
"பயப்படாத. ரெண்டு லிஃப்டு இருக்குது. ஒரு நிமிஷத்தில ஏறிடலாம்!" என்றான்.
இறங்கி விறுவிறுவென்று சாமான்களை இறக்கினார்கள். இரண்டு சூட் கேஸ்கள், படுக்கைக்கான சட்டங்களும் பலகைகளும்., ஒரு மெத்தை, பிளாஸ்டிக் சாமான்கள் அடங்கிய இரு கைப்பைகள், அன்னம்மாவின் அம்மா கொடுத்தனுப்பிய மிளகாய்த்தூள் ஊறுகாய் போத்தல்கள். எல்லாவற்றையும் கொண்டு போய் லிஃப்டுக்கு அருகில் வைத்தார்கள்.
தியாகு லிஃப்டின் பொத்தானை அழுத்தினான். விளக்கு எரியவில்லை. இரண்டு மூன்று முறை அழுத்தினான். ஊஹூம். அப்படியே எதிர்ப்பக்கம் போய் அடுத்த லிஃப்டின் பொத்தானை அழுத்தினான். இல்லை.
"அட, லிஃப்டு வேல செய்யிலியே!" என்றான்.
அன்னம்மா இரண்டு பைகளைக் கையில் பிடித்தவாறே நின்றாள். இரவு முழுக்கத் தூங்காத அலுப்பும் பிரயாணக் களைப்பும் அவள் கண்களில் தெரிந்தன. பக்கத்தில் இருந்த படிகளில் ஆட்கள் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தார்கள். லிஃப்டின் முன்னால் பிளாஸ்டிக் பைகள் இரைந்து கிடந்தன. ஒரு ஓரத்திலிருந்து மூத்திர வாசம் வந்துகொண்டிருந்தது.
"சரி அப்ப ஏறிட வேண்டியதுதான்!" என்றான் தியாகு.
"சாமாங்க?" என்று கேட்டான் குழந்தை.
"ஆளுக்கொண்ணா தூக்க வேண்டியதுதான்" என்றான்.
"பத்து மாடிக்கா?"
"வேற வழி இல்ல கொளந்த. லிஃப்டு வர்ரதுக்குக் காத்துக்கிட்டு இருக்க முடியாது. சாமாங்கள இங்க வச்சிட்டுப் போகவும் முடியாது. இந்தப் பக்கம் திருட்டு அதிகம். எவனாவது தூக்கிட்டுப் போயிடுவான். நான் மெத்தயத் தூக்கிக்கிறேன். நீ ஒரு சூட்கெச எடுத்துக்க. ஒரு ரெண்டு மாடி போய் அங்க வச்சிட்டு எறங்கி வந்து அடுத்த ஜாமானத் தூக்குவோம். அங்க வச்சிட்டு இன்னும் ரெண்டு மாடி. இப்படியே மாத்தி மாத்திக் கொண்டி சேத்திருவோம்."
குழந்தை கொஞ்சம் யோசித்து விட்டு "சரி" என்று ஒரு சூட்கேசைத் தூக்கித் தோள்மீது வைத்துக் கொண்டான்.
அன்னம்மாவைக் கொஞ்சம் பரிதாபத்தோடு பார்த்தான் தியாகு. "அன்னம்மா, நீ உன்னால முடிஞ்சத தூக்கிக்கிட்டு நேரா பத்தாவது மாடிக்குப் போய் அங்க நில்லு. நாங்க வந்து சேந்தர்ரோம்" என்றான்.
அன்னம்மா இரண்டு பைகளுடனும் படிக்கட்டை நெருங்கி ஏறத் தொடங்கினாள். சேலையின் அடிப்பாகம் காலில் சிக்கியது. ஒரு கையால் லேசாகத் தூக்கிக் கொண்டு ஒவ்வொரு படியாக ஏறினாள்.
மூன்றாவது மாடி ஏறுவதற்குள் அன்னம்மாவுக்கு இளைத்தது. வராந்தாவில் நின்று கொஞ்சம் வேடிக்கை பார்த்தாள். கீழே சீனர் ஒட்டுக் கடைகளிலிருந்து மீ பிரட்டும் புகை மண்டலம் எழுந்து கொண்டிருந்தது. சலசலவென பேச்சுச் சத்தமும் மோட்டார் சைக்கிள்களின் சீற்றமும் கேட்டது. ஒட்டுக்கடைகளின் படுதாக் கூரைகளின் மேல் சில மரங்களின் கிளைகள் நிழல் கொடுத்து அணைத்தவாறு படர்ந்திருந்தன.
மெத்தையை முதுகில் சுமந்தவாறு மூசு மூசு என்று இளைத்துக் கொண்டு தியாகு அங்கு வந்து சேர்ந்தான். மெத்தையை இறக்கி வைத்தான். "நீ போய்ட்டே இரு. நான் போயி இன்னொரு சூட்கேசக் கொண்டாந்து இங்க வச்சிட்றேன்" என்று இறங்கி ஓடினான்.
அவனைக் கொஞ்ச நேரம் இரக்கமாகப் பார்த்து விட்டு மீண்டும் ஏறினாள் அன்னம்மா. எந்த மாடியிலும் எண்கள் போட்டிருக்கவில்லை. உத்தேசமாக வைத்துக்கொண்டு ஏறினாள். அந்த குறுகிய படிகளில் ஆட்கள் அவசரமாக இறங்குவதும் ஏறுவதுமாக இருந்தார்கள். அவர்களுக்குப் பயந்து ஒதுங்கி ஒதுங்கி நின்று ஏறினாள். ஒன்பது மாடி என்று கணக்கு வந்தவுடன் நின்று அவன் வந்து சேரக் காத்திருந்தாள்.
ஒரு ஐந்து நிமிடத்தில் அவன் மெத்தையோடு வந்தான். அவன் உடல் வேர்த்துக் கொட்டிக் கொண்டிருந்தது. அவனுக்கு நிற்க நேரமில்லை. நின்றால் காற்றுப் போய்விடும் என்பது போல நிற்காமல் ஏறினான். "இன்னும் ஒரு மாடி மேல அன்னம்மா. ஏறு ஏறு" என்று சொல்லிக்கொண்டே அவன் ஏறிப் போனான். ஒரு ரெண்டு நிமிடத்தில் குழந்தை ஒரு சூட்கேசுடன் இளைக்க இளைக்க வந்தான். அன்னம்மாவைப் பார்த்ததும் "பொண கனம் கனக்குது தங்கச்சி இந்தப் பொட்டி" என்றான்.
"மத்தப் பொட்டி எங்க?" என்று கேட்டாள் அன்னம்மா.
"இதோ ரெண்டு மாடிக்குக் கீள இருக்கு! போய் எடுத்தாரணும்" என்றான்.
இரண்டு பேருமாக பத்தாவது மாடிக்கு ஏறினார்கள். தியாகு மெத்தையை ஒரு பக்கத்தில் சாத்தி வைத்து விட்டுக் கம்பிக் கதவில் சாவி போட்டுத் துழாவிக் கொண்டிருந்தான். எல்லாம் கொஞ்சம் துருப்பிடித்துப் போயிருந்தன. பூட்டைக் கொஞ்சம் ஆட்டி அசைத்துத் திருகித்தான் திறக்க வேண்டி இருந்தது. அவன் திறக்கும் வரை அன்னம்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். தன் புது வாழ்கையை அவன் திறப்பதற்குக் காத்திருந்தாள்.
பக்கத்து வீட்டிலிருந்து ஒரு சீனத்தி சத்தம் கேட்டுக் கோபத்தோடு எட்டிப் பார்த்துவிட்டு பட்டென்று கதவைச் சாத்திக் கொண்டாள்.
ஒரு வழியாகக் கம்பிக் கதவு திறந்தது. அடுத்ததாகப் பலகைக் கதவின் பூட்டுடன் கொஞ்சம் போராடினான். அது திறந்ததும் "சீக்கிரமா உள்ள போ அன்னம்மா" என்றான்.
"சோத்துக்கால எடுத்து வச்சிப் போ தங்கச்சி" என்றான் குழந்தை.
"ஆமா இவன் ஒருத்தன் சாத்திரம் சொல்ல வந்திட்டான், இந்த அவசரத்தில! எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்ல" என்றான் தியாகு. ஆனால் அவள் கவனமாக வலது காலை எடுத்து வைத்துத்தான் உள்ளே போனாள். அடைத்துக் கிடந்த வீட்டினுள்ளிருந்து மக்கிய மணம் கப்பென்று அடித்தது.
தியாகு மெத்தையைக் கொஞ்சம் வளைத்துக் கதவில் திணித்து உள்ளே கொண்டு வந்து தம்மென்று தரையில் போட்டான். தரையிலிலிருந்து குப்பென்று தூசு எழுந்தது.
"சரி நாங்க போய் மத்த சாமானத் தூக்கிட்டு வந்திர்ரொம்" என்று தியாகு குழந்தையை இழுத்துக்கொண்டு ஓடினான்.
வீடு மிகச் சிறியதாக இருந்தது. இரண்டு அறைகள். குறுகிய வரவேற்பறை. பெட்டி போல ஒரு சமயலறை. குழாயைத் திறந்தாள். புஸ்ஸென்று கொஞ்ச நேரம் சத்தம் கேட்ட பின்னர் பழுப்புக் கலரில் தண்ணீர் வந்தது. கொஞ்சம் ஒடிய பிறகு தெளிவானது.
சூட் கேஸும் ஒரு மூட்டையும் வந்தன. "தோ போய் கட்டிலத் தூக்கிட்டு வந்திர்ரோம்" என்று ஒடினார்கள். குழந்தையால் முடியவில்லை. சோர்ந்து நடந்தான். "சீக்கிரம் வா கொளந்த, இல்லன்னா எவனாச்சம் தூக்கீட்டு போயிடுவான்" என்று அவனை அவசரப் படுத்தினான் தியாகு.
அவளுக்குப் பாவமாக இருந்தது. வீட்டைப் பார்க்க சோகமாகவும் இருந்தது. அவள் பெற்றோரின் வீடு குவால லும்பூரில் இருந்தாலும் ஸ்தாபாக் பக்கத்தில் ஒரு கம்பத்தில் இருந்தது. நாலு விசாலமான அறைகள். பின்னால் நிலம் இருந்தது. அப்பா காய்கறி போட்டிருந்தார். கொஞ்சம் வேலி அடைத்து சில கோழிகள் கூட வளர்த்தார். காலாற நடந்து சுற்ற ஏற்ற வீடு.
"அங்க பினாங்கில உங்க ஊடு மாரி இருக்காது. சின்ன பிளேட்தான்" என்று தியாகு கொஞ்சம் வருத்தமாகக் கூறியிருக்கிறான்.
"நம்ப ரெண்டு பேருக்கு அது போதும்!" என்று அவள் அவனை ஆறுதல் படுத்தியிருக்கிறாள்.
தியாகு நல்லவனாகத் தெரிந்தான். அவளுக்குக் கல்யாணம் பேச ஆரம்பித்த போதே தன் அக்காளுக்கு வாய்த்த கணவனைப் போல எல்லாரையும் அதிகாரம் பண்ணும் முரடனாக இல்லாதவனாக ஒருத்தன் வாய்த்தால் போதும் என்பதே அவள் லட்சியமாக இருந்தது. தியாகு எப்போதும் சிரித்த முகமாக இருந்தான். கனிவாகப் பேசினான். முக்கியமாக அக்காவின் கணவனைப் போல அவன் இடை விடாமல் சிகிரெட் ஊதித் தள்ளுவதில்லை.
கல்யாணப் பேச்சு நடந்து கொண்டிருந்த போது முதல் முதலில் தியாகுவைத் தனியாக அவள் சந்திக்க வாய்ப்புக் கிடைத்த போது அவள் முதலில் கேட்டது அந்தக் கேள்விதான். "சிகிரெட் பிடிப்பிங்களா?"
"சீச்சீ!" என்றான். "அந்தப் பளக்கம் ஜென்மத்துக்கும் கிடயாது"
சந்தோஷமாக இருந்தது.
"தண்ணி குடிப்பிங்கிளா?":
"எப்பவாச்சும். கூட்டாளிங்களோட சந்தோஷமா இருக்கும் போது மாத்ரம்!"
"அத விட்டுடுங்களேன்!"
"சரி அன்னம்மா. கொஞ்சம் கொஞ்சமா விட்டுட்றேன். கொஞ்சம் டைம் குடு" என்றான்.
மீண்டும் சந்தோஷமாக இருந்தது. இத்தனை இணக்கமாக ஒரு ஆண் பேசி அவள் கேட்டதில்லை. அவள் அப்பாவும் அக்காள் புருஷனும் ஒரு நாளும் இப்படிப் பேசியதில்லை. அன்னம்மா அவனை அன்றே காதலிக்கத் தொடங்கி விட்டாள்.
வீட்டுக்கு வெளியே தடாலென்று சத்தம் கேட்டது. ஏதோ பலகைகள் விழுவது போலவும் சத்தம் கேட்டது. அன்னம்மா படபடப்போடு வந்து எட்டிப் பார்த்தாள். கதவுக்குப் பக்கத்தில் தியாகு சருக்கி விழுந்து கிடந்தான். அவன் தூக்கி வந்த படுக்கைப் பலகைகள் சிதறி விழுந்து கிடந்தன.
"ஐயோ" என்றாள். அவன் சிரித்துக்கொண்டே எழுந்து நின்றான். "ஒண்ணுமில்ல அன்னம்மா. ஒடியாந்தனா, சருக்கி விட்டிருச்சி!"
"ஏன் இந்த அவசரம்?"
"வேலைக்கி நேரமாச்சில்ல!" பலகைகளைப் பொறுக்கி எடுத்து உள்ளே கொண்டு வந்து வைத்தான். அவன் வந்து இரண்டு நிமிடம் கழித்து குழந்தை நாலு சட்டங்களைத் தூக்கிக்கொண்டு மூச்சிறைக்க வந்து சேர்ந்தான்.
"சரி அன்னம்மா. நான் கெளம்பறேன். நீ வீட்ட பூட்டிக்கிட்டு இரு. சாயந்திரம் ஆறு ஏளு மணி போல வந்திருவேன். சரியா? வா வா கொளந்த! ரொம்ப லேட்டாய்ப் போச்சி" அவன் முன்னால் ஓட குழந்தை மூச்சு இன்னும் அடங்காமல் பின்னால் ஓடினான்.
அவன் போன பின் வீடு வெறிச்சென்றிருந்தது. இது வீடா?
மூலைக்கு மூலை ஒட்டடை. சுவரில் முன்பு பசை போட்டு ஒட்டப்பட்டுக் கிழிக்கப் பட்டிருந்த சீன மொழிப் போஸ்டர்கள், படங்களின் தொங்கும் எச்சங்கள். சமையலறை எண்ணெய்ச் சிக்குப் பிடித்துக் கிடந்தது. பின்பக்கம் கம்பித் தடுப்புப் போட்டிருந்தார்கள். எல்லாம் துருப்பிடித்திருந்தன. அதன் பின்னால் அந்த அடுக்கு மாடி சதுரக் கட்டிடத்தின் நடுப்பகுதியான திறந்த வெளி இருந்தது. அங்கிருந்து எட்டிப்பார்த்தால் குப்பைகள் மலையாய்க் குவிந்திருந்தன. தூக்கி எறியப்பட்ட உணவு அழுகும் வீச்சம் வந்து கொண்டிருந்தது.
"நான் இன்னும் வீட்ட சரியா கூடப் பாக்கில. எங்க நேரம்? ஒரு கூட்டாளிதான் சொன்னான் பாரேன். மிந்தி சீனங்கதான் சேவாவுக்கு இருந்தாங்களாம். இப்ப ஒரு ஆறு மாசமா ஆளு இல்ல. கோசமாதான் கெடந்திச்சாம். சேவா சீப்பா குடுத்தாங்க! இதுக்கு மேல நம்பளுக்குத் தாங்காது அன்னம்மா!" என்று கொஞ்சம் வெட்கத்தோடு சொல்லியிருந்தான்.
"அது போதும். சமாளிச்சிக்கலாம்!" என்று அப்போது சொன்னாள். இப்போது பார்க்கும்போது அழுகை பொங்கிக்கொண்டு வந்தது.
இவ்வளவு மோசமாகவா? ஆணி அடித்து அடித்துச் சுவர்களில் அம்மை வார்த்திருந்தது. சுவர்கள் இருண்டிருந்தன. வர்ணம் அடித்து இருபது வருடமாவது இருக்க வேண்டும். ஓர் அறைக்கு ஒரு 40 வாட் பல்பு தொங்கிக் கொண்டிருந்தது. அதன் ஒயர் முழுக்க ஒட்டடை. குளியலறையிலிருந்து மக்கிப்போன மூத்திர மணம் வந்து கொண்டிருந்தது. பிளஷ் வேலை செய்யவில்லை. இங்கு எப்படி வாழ்வது?
எப்படிப்பட்ட மனிதன் இந்தக் கணவன்? ஒரு லோரி டிரைவராக வருமளவுக்குதான் அவனுக்கு தெரவிசு. அவ்வளவுக்குத்தான் சம்பாத்தியம். ஒரு நல்ல வீடு பார்த்துத் தேர்ந்தெடுக்கத் தெரியவில்லை. கூட்டாளி சொன்னான் என்றும் மலிவாக இருக்கிறது என்றும் கண்ணை மூடிக்கொண்டு பிடித்து விட்டான். கூட்டாளிகள் நிறைய வைத்துக் கொண்டிருக்கிறான். அவர்கள் சொல்வதற்கெல்லாம் ஆடுகிறான்.
நிதானமாகக் காரியம் செய்யத் தெரியவில்லை. பேய் போல வண்டி ஓட்டுகிறான். படபடவென்று ஒடுகிறான். அந்த ஓட்டத்தில் சருக்கி விழுகிறான். வெகுளித் தனமாகச் சிரிக்கிறான். வேலைக்கு ஓடும் அவசரத்தில் புதிதாகக் கல்யாணம் பண்ணிக் கொண்டு வந்திருக்கும் மனைவியிடம் அன்பாகச் சொல்லிக் கொள்ளக்கூட நேரம் இல்லை. மனைவி ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. இவனா என்னை வாழ்நாளெல்லாம் கட்டிக் காக்கப் போகிறான்?
அவளுக்குப் பசி கடுமையாக இருந்தது. ஆனால் என்ன செய்வது? இந்தப் புது இடத்தில் போய் எங்கு எப்படி சாப்பாடு தேடுவது? அதுவும் கீழே பத்து மாடி இறங்கிப் போய்...? அங்கு உள்ள ஜனங்களை நினைத்தாலே பயமாக இருந்தது. இப்படி விட்டுப் போனானே!
நேற்றிரவெல்லாம் கண் விழித்து வந்த அலுப்பு அவளைத் தள்ளிற்று. இந்த வீட்டில் உட்காரக் கூட நாற்காலி இல்லை. பிரித்துத் தாறுமாறாக இறைந்து கிடந்த கட்டில் பலகைகளைப் பார்த்தாள். மெத்தை தனியாக அவன் எறிந்து விட்டுப் போன அதே இடத்தில் கோணலாக ஓவென்று கிடந்தது. புதிய மெத்தை. கல்யாணப் பரிசு. விரிப்பு சூட்கேசில் இருக்கிறது. அதைத் திறந்து எடுக்க உற்சாகம் இல்லை. தலையணை இன்னும் வாங்கவில்லை.
அங்கிருந்த நூற்றுக் கணக்கான புறாக்கூண்டு வீடுகளில் எந்தத் திசை என்று சொல்ல முடியாத ஒரு வீட்டில் சீன மொழியில் ஒரு பெண் கூக்குரலிட்டு ஏசி தப்தப்பென்று எதையோ போட்டு அடித்தாள். தொடர்ந்து குழந்தை ஒன்று வீறிட்டு அழுதது. இன்னும் எங்கோ ஒரு வீட்டிலிருந்து தண்ணீரை இறைத்து இறைத்து ஊற்றும் சத்தம் கேட்டது.
எல்லாச் சத்தங்களும் அந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தின் ஓங்கி உயர்ந்த காங்க்ரீட் சுவர்களுக்குள் மோதி எதிரொலித்துச் சுற்றி வந்தன. ஒலி அடங்கிய பின்னும் ஓவென்ற பின்னொலி சுருண்டு கொண்டிருந்தது.
தனிமையும் பயமும் கரிய மேகங்களாகி அவளை அழுத்தின. நேற்று கலகலப்பான கல்யாணப் பெண்ணாக இருந்து விட்டு இன்று இப்படி ஒண்டியாய்த் திசை தெரியாமல் வாழவா பெற்றோர்கள் இத்தனை தூரம் அனுப்பி வைத்தார்கள்? இப்படியா? பசியாறுவதற்கு என்ன செய்வதென்று தெரியாமல்..., அடுத்த வேளை சாப்பாட்டிற்கு என்ன செய்வதென்று தெரியாமல்... ஒரு மக்கிப் போன வீட்டில், வர்ணம் தேய்ந்து கருப்பாகி என்னைச் சிறைப்படுத்தியிருக்கும் இந்தச் சிமிந்திச் சுவர்களுக்கு மத்தியில்...!
சுவரில் சரிந்து உட்கார்ந்தாள். ரவிக்கையில் அழுக்கு அப்பிக் கொள்வதைப் பொருட்படுத்தத் தோன்றவில்லை. கண்களிலிருந்து மளமளவென்று கண்ணீர் வந்தது. தொண்டையிலிருந்து விக்கல் வந்தது. புடவைத் தலைப்பால் கண்களைப் பொத்திக் கொண்டு கேவி அழுதாள்.
யாரோ அவள் வீட்டுக் கம்பிக் கேட்டைப் பிடித்து உலுக்கினார்கள். முகத்தைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தாள். ஓர் இந்தியப் பையன் நின்று கொண்டிருந்தான்.
"என்ன வேணும்?" என்றாள்.
"ரொட்டிச் சானாய்" என்றான்.
எழுந்து நின்று "என்ன?" என்றாள் விளங்காமல்.
"கதவத் தொறங்க, அந்த அண்ணன் ரொட்டிச் சானாய் கொண்டி குடுக்கச் சொன்னாரு!" என்றான்.
"அண்ணனா? எந்த அண்ணன்?"
"உங்க புருஷன்னு சொன்னாரு!"
சாவியைத் தேடிக் கம்பிக் கதவைத் திறந்து விட்டாள். அவன் ரொட்டிச் சானாய்ப் பொட்டலம், பிளாஸ்டிக்கில் முடிக்கப்பட்டு ஸ்ட்ரா வைக்கப்பட்டிருந்த சூடான தேனீர், ஒரு பெரிய போத்தல் குடி தண்ணீர் ஆகியவற்றைக் கீழே வைத்தான்.
" நீ யாரு?" என்று கேட்டாள்.
"சுலைமான். எங்க அத்தா கீள சாப்பாட்டுக் கடை வச்சிருக்காரு"
"எப்படி வீடு தெரியும்?"
"உங்க புருஷன் சொன்னாரு!"
"பத்து மாடி ஏறி வந்தியா?"
"முடியாதுன்னுதான் சொன்னேன். அப்பறம் அதுக்குன்னு ரெண்டு வெள்ளி தந்தாரு. அப்புறம்தான் சரின்னேன்!" என்றான்.
அவள் மகிழ்ந்து சிரித்தாள்.
"அப்புறம் மத்தியானத்துக்கு நாசி புங்குஸ் அனுப்பச் சொன்னாரு. வேற எதாச்சும் வேணுமான்னு உங்ககிட்ட கேட்டு வாங்கித் தரச் சொன்னாரு!"
என்ன கேட்பதென்று தெரியவில்லை. "இது இப்ப போதும்!"
"சரி" என்று அவன் திரும்பினான். "இப்ப லிஃப்டு வேலை செய்யிது" என்று சொல்லியவாறு லிஃப்டை நோக்கி நடந்தான்.
அவள் போய் அவசரமாக வாய் கை அலம்பி வந்து ரொட்டிச் சானாய்ப் பொட்டலத்தை ஆசையுடன் அவிழ்த்தாள். அதை அப்படையே வைத்துவிட்டு தேனீரை எடுத்து உறிஞ்சினாள். வெது வெதுப்பான சூட்டுடன் அது தொண்டைக் குழாயில் தேனாய் இறங்கியது.
லிஃப்டு வேலை செய்வதால் முதல் வேலையாகக் கீழே போய் ஒரு கூட்டுமாறும் தூள் சவர்க்காரமும் ப்ரஷும் வாளியும் ரப்பர் குழாயும் வாங்கி வரவேண்டும் என்று நினைத்தாள். கழுவி விட்டால் வீடு பளிச்சென்று இருக்கும். புதிய இடமாய் இருந்தால் என்ன? இது என் வீடு. என்ன பயப்படுவது? எல்லாரும் மனிதர்கள்தான்.
ரொட்டி சானாயைப் பிய்த்து வாய்க்குள் போட்டாள். கணவன் நினைவு வந்தது. பரவாயில்லை என்று சொல்லிக் கொண்டாள்.
(முடிந்தது)
பயத்தோடும் மனப் படபடப்போடும்தான் தூக்கினேன். மெத்து மெத்தென்ற கம்பளித் துணி சுற்றித்தான் கையில் தந்தார்கள். "பாத்து பாத்து..." என்றார் அம்மா. மங்கலான மருத்துவ மனை விளக்கொளியில் ஒரு மயங்கிக் கிடக்கும் ராக்ஷசப் புழுப் போல அது நெளிந்தது. சரியாகப் பிடிக்காவிட்டால் கையிலிருந்து பாதரசம் போல நழுவித் தரையில் கொட்டிச் சிதறிவிடும் போல இருந்தது. எனது வலது உள்ளங் கையில் கம்பளிச் சுற்றையும் ஊடுருவி அதன் உடலின் வெப்பம் வெதுவெதுத்ததை உணர முடிந்தது.
இமையிலும் கன்னங்களிலும் ரத்தம் ஓடுவது இளஞ் சிவப்புச் சாயம் பூசினாற்போல் தெரிந்தது. உடலிலிருந்து பச்சை மண்ணின் மணம். பனிக்குட நீரின் எச்சங்கள் இன்னும் இருந்தன போலும். தலையின் ரோமங்களில் இன்னும் கூட பிசுபிசுப்பு. உதடுகள் விரிந்து கொட்டாவி விட்டது ஓர் உலக அதிசயம் போல் நிகழ்ந்தது. ஒரு சிம்ஃபொனி போல் எங்கள் அனைவரின் வாய்களும் கொஞ்சம் பிளந்து மூடின.
யார் உருவாக்கினார்கள்? நானா? என்னால் எப்படி முடிந்திருக்கும்? களிமண்ணைப் பிடித்து ஒழுங்காக உருண்டையாக்கத் தெரியாத நானா? பென்சிலால் நேராகக் கோடு போடத் தெரியாத நானா?
இவளா? இதோ தலை முடி கலைந்து சோர்ந்து போய் எதையோ பெரிதாகச் சாதித்து விட்ட ஆணவத்தில் மருத்துவ மனைக் கட்டிலில் சாய்ந்து கொண்டு விடாமல் புன்னகைத்துக் கொண்டிருக்கிறாளே, இவளா? எப்படி முடிந்திருக்கும்? இது என்ன சாம்பார் செய்வது போல ஒரு கலையா? தனது வேலைத் தளத்தில் கொம்ப்யூட்டரில் உட்கார்ந்து வண்ண வண்ணமாக கிராஃபிக்ஸ் வரைவாளே, அப்படி வயிற்றுக்குள் வரைந்தாளா?
நாங்கள் இருவரும் சேர்ந்தா? ஒரு காம முயக்கத்தின் விளைவாகவா இப்படி ஓர் அற்புதம்? எந்த இரவில் எந்தக் கணத்தில் நிகழ்ந்திருக்கும்? ஏன் எங்களுக்கு அந்தக் கணத்தின் அருமையும் புனிதமும் புரியாமல் போனது?
"நன்றி வசந்தா!" என்றேன்.
"எதுக்கு?" தெரியாதவள் போல... 'இன்னொரு தடவை விளக்கமாகச் சொல்லேன்' என்ற பாசாங்கு.
"இந்த அதியசத்துக்குத்தான். எப்படி செஞ்ச?"
"போங்க!" என்று சிரித்துக்கொண்டே கோபித்துக்கொண்டாள். "என்ன பேர் வைக்கலாம், சொல்லுங்க...!" என்றாள் தொடர்ந்து, எனக்கும் இந்தச் சாதனையில் சிறு பங்கு கொடுப்பவள் போல.
"ஆதி!" என்றேன்.
"ஆதியா? அது என்ன பேர்?"
"நமக்கு முதல் குழந்தை இல்லையா, அதனாலதான். அதோட வள்ளுவர் முதல் குறள்ளியே சொன்னாரில்ல, 'ஆதி பகவன்' அப்படின்னு...."
"ஆமா, இப்பிடித்தான் பட்டிக்காடு மாதிரி பேர் வைங்க! எல்லாரும் சிரிப்பாங்க...!" என்றார் அம்மா.
"ஆமாங்க, அப்புறம் ஸ்கூலுக்குப் போம்போது எல்லாரும் கேலி பண்ணுவாங்க! நல்ல மோடர்னா பேர் வைக்கணும்!" என்றாள் வசந்தா.
"இங்க கொண்டா!" என்று குழந்தையை என் கையிலிருந்து பிடுங்கிக் கொண்டார் அம்மா. மேலும் என் கையில் இருந்தால் இன்னும் என்னென்ன கூத்துப் பண்ணிவிடுவேனோ என்று பயப்பட்டார் போலும்.
"நாளைக்கு நம்ப ஜோசியர் கிருஷ்ணனைப் போய் பார்க்கணும். அவரு நக்ஷத்திரம் கணிச்சி முதல் எழுத்து எடுத்துக் குடுப்பார். அப்புறம்தான் பேர்!" அம்மா கண்டிப்பாகச் சொன்னார். உண்மைதான். ஜோசியர் மிகவும் நவீனமான ஜோசியர். நக்ஷத்திரம் எல்லாம் இப்போது கணிப்பது கம்ப்யூட்டரில்தான். அப்பாயின்ட்மன்ட் வைத்துதான் போய்ப் பார்க்க முடியும். பேச்சு விளக்கமெல்லாம் இங்கிலீஷில்தான்.
அப்பாவின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தேன். அவர் தனக்குள் சிரித்துக் கொண்டது போலிருந்தது. முதல் தடவையாக தந்தையான எனக்கு இருந்த படபடப்பும் மகிழ்ச்சியும் அவருக்குச் சிரிப்பை உண்டாக்கின போலும். அவர் என்னோடு மூன்று மக்களைப் பார்த்தவர். பேரன் பேர்த்தி கூட இதற்கு முன் என் அண்ணன் மூலம் பார்த்தாகி விட்டது.
குழந்தையைக் கையில் ஏந்திய அனுபவம் மனசில் இன்னும் ஈரமாக இருந்தது. இது சந்ததியின் தொடர்ச்சி. புதிய அத்தியாயம். நான் எழுதியிருக்கிறேன். என் அப்பாவின் தொடர்ச்சியாக. என் பாட்டன் பூட்டனின் தொடர்ச்சியாக. ஆதி மனிதனின் தொடர்ச்சியாக. ஆதிக் குரங்கின் தொடர்ச்சியாக. ஆதிகாலத்தில் விண்வெளிக் கதிரியக்கத்தில் கொதித்துக் கிடந்த விஷக் கூழிலிருந்து உருவான முதல் மரபணுக்களின் இடையறாத் தொடரின் ஒரு சங்கிலிக் கண்ணாக இவள். 'ஆதி' என்பது எவ்வளவு பொருத்தமான பெயர்? இத்தனை சாதாரணமாக அடிபட்டுப் போனதே!
திடீரென்று நினைவு வந்து அப்பாவைப் பார்த்துக் கேட்டேன்: "ஏன் அப்பா, குழந்தயத் தாத்தாவுக்குக் கொண்டி காட்ட வேணாம்?"
"ஆமா கொண்டி காட்டத்தான் வேணும். பாக்க ஆசப் படுவாங்கதான். எதுக்கும் அம்மாவையும் உன் பெண்டாட்டியையும் கேட்டுக்க!" என்றார்.
அப்பா ரொம்ப மாறிவிட்டார். அவருக்குள் இருந்த வெப்பம் முற்றாக வெளியேறி விட்டது. எதைக் கேட்டாலும் "எதுக்கும் உங்க அம்மாவை ஒரு வார்த்தை கேட்டுக்க" என்பதே பாட்டாகப் போய்விட்டது.
அப்பா ஒரு காலத்தில் வீறுடன் இருந்தார். பெரியார் இயக்கத்தில் இருந்து ஜாதிய எதிர்ப்புப் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார். தமிழர் சங்கம் அமைத்து இந்தியர் என்ற மந்தைக்குள் தான் அடங்கியவனில்லை என்று காட்டி இருக்கிறார். எங்களுக்கெல்லாம் பெயர் வைக்க நாள் நட்சத்திரம் பார்க்கவில்லை.
அவருடைய அப்பா - என் தாத்தா- அவர் காலத்தில் சிங்கமாக இருந்தவர். ஐஎன்ஏயில் இருந்திருக்கிறார். நேதாஜியுடன் பிடித்த படம் இன்னமும் வைத்திருக்கிறார். கொஞ்சமாகச் செல்லரித்துப் போன கருப்பு வெள்ளைப் புகைப் படத்தில் மூன்றாவது வரிசையில் தொப்பியே பெரிதும் தெரியுமாறு நிற்பார். காந்தி இயக்கத்தில் இருந்து கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டுக் கைத்தடியினால் அடிவாங்கி இருக்கிறார்.
அவற்றாலெல்லாம் முறிக்க முடியாத என் முன்னோரின் தமிழ் ஆத்மாவை எங்கள் குடும்பம் ஏழைமை நிலையிலிருந்து மத்திய தரப் பொருளாதார வர்க்கத்துக்கு எறிய பின், புதிய சமூகச் சூழ்நிலை முறியடித்து விட்டது. போராட்டங்கள் இல்லாத சுகமான வாழ்கையில் நானும் என் சகோதரர்களும் தின்பதும் திரிவதுமாக ஆடு மாடுகள் போல ஆகிவிட்டோ ம் என எனக்கு அடிக்கடி தோன்றும். சம்பாதிப்பதும் சந்தோஷிப்பதுமே எங்கள் வாழ்கையில் முதன்மை ஆகிவிட்டது போலத் தோன்றியது.
நானும் என் அண்ணனும் தங்கையும் புதிய மலேசிய நாடு வழங்கிய வாய்ப்புக்களைப் பயன் படுத்திக் கொண்டு படிப்பில் உயர்ந்து விட்டோ ம். பட்டதாரிகளாக ஆகிப் பெரிய உத்தியோகங்கள் பெற்றோம். அண்ணன் தேசிய இடை நிலைப் பள்ளியில் அறிவியில் பிரிவில் சேர்ந்து புதிய புதிய மலாய் ஆங்கில அறிவியல் தொடர்களை வீட்டுக்குக் கொண்டு வர ஆரம்பித்த போதே அப்பாவின் ஆளுமை சரியத் தொடங்கிற்று. நானும் தங்கையும் தொடர்ந்து தேசியப் பள்ளிகளுக்குப் போக, வீட்டுக்குள் எங்களுக்குள் ஆங்கிலம் பேச ஆரம்பிக்க அம்மாவும் விரைந்து ஆங்கிலம் கற்றுக் கொண்டார். இலக்கணத்தை முற்றாகப் புறக்கணித்துக் கருத்தைப் புரிய வைப்பதையே முதன்மையாகக் கொண்ட வேடிக்கை மொழி அவருடைய ஆங்கிலம். நாங்கள் சிரித்துக் கேலி பண்ணினாலும் எங்களோடு சேர்ந்து சிரித்துக் கலந்து கொண்டார். அப்பாதான் அதில் கலந்துகொள்ள முடியாமலும் விருப்பமில்லாமலும் தன்னைக் கொஞ்சம் தனிப் படுத்திக் கொண்டார்.
எங்கள் குடும்பம் அன்பான குடும்பம்தான். யாருக்கும் எந்தக் குறையும் இல்லை. அண்ணன் ஒரு பொறியியலாளர். தங்கை ஒரு தேசிய ஆரம்பப் பள்ளியில் துணைத் தலைமை ஆசிரியை. வெவ்வேறு ஊர்களில் குடும்பதோடு இருக்கிறார்கள்.
நான் ஒரு பொருளகத்தில் நிதித் துறை இயக்குனர். பெற்றோருடன் தங்கி விட்டேன். அப்பா என்னை மட்டும் உடன் வைத்துக் கொண்டு தமிழும் பண்பாடும் சொல்லிக் கொடுத்தார். என்ன காரணத்தாலோ எனக்கும் அதில் பிடிப்பு வந்தது. என் மேற்கல்வியோடு இவற்றையும் விடாமல் பற்றிக் கொண்டேன்.
நன்கு படித்தவளும் கொம்ப்யூட்டர் கற்றவளுமான என் மனைவியும் குடும்பத்திற்கு அணிகலனாகத்தான் வந்து சேர்ந்தாள். மாமனார் மாமியாரோடு ஒத்துப் போய்க் குடும்பம் நடத்தக் கற்றுக் கொண்டாள்.
என்ன, ஒரு சராசரி மலேசிய இந்திய மத்திய தர வர்க்கக் குடும்ப மதிப்பீடுகளுக்கு குடும்பம் முற்றாக மாறி விட்டது. வீட்டில் ஆங்கிலம் அதிகம் புழங்கிற்று. பொங்கல் கொண்டாடுவது போய் தீபாவளியே முக்கிய பண்டிகை ஆயிற்று. அம்மா தீவிரமாகக் கோயிலுக்குப் போக ஆரம்பித்து விட்டார். சில சாமியார்களின் அதி தீவிரப் பக்தை ஆனார்.
அம்மாவைப் பார்த்து வசந்தாவும் பல ஆரியப் பண்டிகைகளுக்கு விரதம் இருக்க ஆரம்பித்து விட்டாள். இப்போது ஒரு வர்த்தக நிறுவனம் வானொலியில் தீவிரமாக விளம்பரம் செய்து விற்றுவரும் ஓர் அட்டைப் பெட்டியில் நவீனமாக அடைத்து விற்கும் சுலபத்தில் எந்த சிறிய அறையிலும் அடங்கி விடும் ஹோம குண்டத்தை வாங்கி ஹோமமும் செய்து வருகிறாள். மாமியாரும் மருமகளும் ரொம்ப ஒற்றுமை.
அப்பாவோ நானோ இதுபற்றி ஒன்றும் சொல்ல முடிவதில்லை. "ஆமா, இந்த வெடப்புதான் உங்களுக்குத் தெரியும். யூ டோ ன்ட் அன்டர்ஸ்டேன்ட். இந்த குடும்பம் நாலு பேரு மதிக்கிற மாதிரி இருக்குதுன்னா அது நாங்க கோயிலுக்கு போக வர இருக்கிறதினாலதான். குடும்பம் நல்லா இருக்கிறது சாமி கும்பிட்றதுனாலதான், தெரிஞ்சிக்கிங்க!" என்று அம்மா தூக்கி எறிந்து விடுவார்.
எதிர்த்துப் பேசி அலுத்து விட்டோ ம், அப்பாவும் நானும். பெண்கள் ஏதாகிலும் சில நம்பிக்கைகளை தீவிரமாகப் பற்றிக் கொண்டிருக்க ஆசைப் படுகிறார்கள். ஆரிய நம்பிக்கைகளையும் சடங்குகளையும் எதிர்த்துப் பிரச்சாரம் செய்யலாம். ஆனால் அதன் இடத்தில் வேறு என்ன நம்பிக்கைகளை சடங்குகளை வைப்பதென்று எங்களுக்கும் தெரியவில்லை. சுற்றியுள்ள மத்திய தர வர்க்கம் தமிழ், திராவிட அடிப்படையிலிருந்து விலகி ஹிந்துப் போர்வையில் உள்ள ஆரியச் சடங்குகளைப் பற்றிக் கொண்டிருக்கும் போது அம்மாவும் மனைவியும் அந்த நீரோட்டதில் உற்சாகமாகத் தவழ்ந்து நீந்த நானும் அப்பாவும் வேடிக்கை பார்ப்பவர்களாக ஆகிவிட்டோ ம். நாங்கள் இருவருமே ஆணாதிக்க வாதிகள் இல்லை. அவர்களைத் அடக்கித் தடுக்க முடியவில்லை.
தாத்தா, பாட்டியை இழந்த பின் எங்களோடுதான் இருந்தார். ஆனால் வயதாகும் காலத்தில் தன் நினைவுகள் தப்பித் தப்பிப் போய்த் தான் பிறருக்குத் தொல்லையாகி வருவதைத் தெரிந்து கொண்டவுடன் தான் தனியாக இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார். அவரே ஒரு நண்பர் மூலம் ஒரு முதியோர் ஆசிரமத்தைக் கண்டு பிடித்துப் போய்ச் சேர்ந்து விட்டார். அப்பா வேண்டாம் என்று தடுத்துப் பார்த்து அலுத்துப் போய் விட்டு விட்டார்.
இப்போது தாத்தா சுகமாகத்தான் இருகிறார். நினைவு மட்டும் போகும் வரும். அவர் இருக்குமிடத்தில் அவரை இதமாகவும் கனிவாகவும் கவனித்துக் கொண்டார்கள். அப்பாவும் அவருக்கான எல்லாச் செலவுகளையும் கட்டிக் கையிலும் பணம் கொடுத்து வந்தார். அடிக்கடி போய்ப் பார்ப்பதும் உண்டுதான். அம்மாவுக்கும் வசந்தாவுக்கும்தான் தாத்தாவைப் பிடிக்காது. கடந்த சில ஆண்டுகளாகவே அவர்களைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் முகங்களை மறந்து விட்டு "யாரு இந்தப் பொம்பிளைங்க?" என்று அவர் கேட்பது அவர்கள் இருவருக்கும் பெரும் அவமானமாக இருந்தது.
இப்போது இவள். இப்போதைக்கு என் மனதில் 'ஆதி' தான். இன்னும் ஒரிரு நாட்களில் பேர் தெரிந்து விடும். நல்ல குடும்பத்தில்தான் வந்து பிறந்திருக்கிறாள். அன்பாகவும் பண்பாகவும் வளர்க்கப் படுவாள். ஆனால் காலச் சுழல் இவளை எந்தக் கரைக்குக் கொண்டு சேர்க்கும் என்பது யாருக்குத் தெரியும்! ஆனால் அதெல்லாம் பின்னால். இப்போது அவளை அந்த முது கிழவருக்குக் காட்ட வேண்டும். "பார் தாத்தா! உன் பூட்டப் பிள்ளை. உன் வம்சத்தின் புதிய தளிர். பார். கைகளில் ஏந்திக் கொள்!"
***
புஷ்பலதாவுக்கு - அப்படித்தான் ஜோசியர் பெயர் வைத்துக் கொடுத்திருந்தார் - பூவைப் பனியினால் போர்த்தது போல மெல்லிய பட்டில் ஒரு சட்டை வாங்கிப் போட்டிருந்தோம். 'புஷ்' என்றும் 'புஷு' என்றும் அவளைக் கூப்பிட்டோ ம். பால் வாசனையும் மூத்திர மல வாசனைகளும் அதன் பின்னர் புஸ்ஸென்ற பவுடர் வாசனையுமாக எப்போதும் ஏதாவதொரு வாசனையுடனேயே இருந்தாள். மனைவியும் பெரும் பாலும் அதே வாசனைகளுடன்தான் இருந்தாள்.
அவளைத் தூக்கி வைத்துக் கொள்ள போட்டி போட்டுக் கொண்டோ ம். அப்பா அப்படியாக முந்திக் கொள்வதில்லை. மடியில் கொண்டு போட்டால் கொஞ்சுவார். எனக்கு வீட்டில் இருக்கும் போதெல்லாம் அவளைத் தூக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்றே தோன்றும். "சும்மா சும்மா தூக்காதிங்க! உடம்பு சூடு ரொம்ப ஆகாது" என்று வசந்தா என்னைக் கண்டிப்பாள்.
தாத்தாவுக்கு அவளைக் கொண்டு காட்ட வேண்டும் என்னும் ஆசை நிறை வேறாமல் இருந்தது. அம்மாதான் தள்ளி வைத்தார். "இப்ப என்ன அவசரம்? பிள்ளைக்கு கொஞ்சம் தெம்பு வரட்டும். அப்புறம் காட்டலாம்" என்றார். "கெழம் இருக்கிற எடத்தில என்னென்ன நோய் நொடிங்க இருக்கோ! பச்சை பிள்ளைக்குத் தொத்திக்கிச்சினா?" என்று மறைவில் அவர் பேசியதைக் கேட்டேன்.
எனக்கும் கூட கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. ஆனால் இத்தனை மில்லியன் ஆண்டுகளாக மனித இனம் பரிணாம வளர்ச்சி அடைந்து வந்திருப்பது இதை எல்லாம் வென்றுதானே என்ற நம்பிக்கையும் இருந்தது. ஏதோ இந்தப் பிள்ளைதான் மிக அதிசயமான பிள்ளை என்பதுபோல் அம்மா பேசுகிறார்.
ஆனால் தாத்தாவைப் பார்த்து புஷ்பலதா பிறந்திருக்கும் செய்தியைத் தெரிவித்தோம். தாத்தா வெறுமை நிறைந்த கண்களுடன் மிகவும் உன்னிப்பாகக் கேட்டுவிட்டு அப்பாவைப் பார்த்து "உனக்கு பிள்ளை பிறந்திருக்கா?" என்று கேட்டார்.
"இல்லப்பா, இவனுக்கு, கதிரேசனுக்கு. முதல் பிள்ளை!" என்றார் அப்பா.
என்னைப் பார்த்து "எங்க பிள்ளை?" என்று கேட்டார்.
"வீட்டில இருக்கா தாத்தா!" என்றேன்.
"என்ன பிள்ளை?"
"பெண் பிள்ளை!"
தாத்தா கொஞ்சம் யோசித்தார். அப்புறம் "எனக்குக் காட்ட மாட்டியா?" என்றார்.
"காட்டுறேன் தாத்தா, கொஞ்ச நாள் போகட்டும்!" என்றேன்.
ஒரு மாதம் கழிந்தவுடன் தாத்தாவைக் கொண்டு வந்து காட்ட முடிவாயிற்று. "சுத்தமா சவரம் செஞ்சிக்கிட்டு வரச்சொல்லுங்க!" என்று எச்சரிக்கை விடுத்துத்தான் அனுப்பினார் அம்மா.
தாத்தாவை அழைத்து வர நானும் அப்பாவும்தான் போனோம். எங்களைக் கண்டவுடன் "ஏன் பிள்ளையைக் கொண்டு வந்து காட்டல?" என்று கேட்டார். அவருக்கு அந்த அளவுக்கு ஞாபகம் இருந்தது மகிழ்ச்சியாக இருந்தது.
"இதோ உங்களைக் கொண்டு போகத்தான் வந்திருக்கோம் தாத்தா. வாங்க போய்ப் பார்க்கலாம்!" என்றேன்.
தாத்தாவுக்கு சுத்தமாகச் சவரம் செய்துவிட்டு சலவை ஆடைகள் அணிவித்துக் காரில் ஏற்றிக் கொண்டு வந்தோம். வீடு வந்து சேர்ந்ததும் அவரைக் கைப்பிடியாக இறக்கிக் கொண்டு வந்தோம். அம்மா வாசலில் நின்று "வாங்க மாமா" என்று வரவேற்றார்.
"இது யாரு?" என்று தாத்தா கேட்டார்.
"உங்க மருமகள். தெரியிலியா?" என்று அப்பா சிரித்துக் கொண்டே சொல்லி அப்பாவை உட்கார வைத்தார்.
அம்மாவுக்குக் கோபம் வந்திருக்கிறதா என்று பார்த்தேன். அப்படித் தெரியவில்லை. தாத்தா வந்ததில் அம்மா மகிழ்ந்தது போல்தான் காணப் பட்டார். முகத்தில் சிரிப்பு மாறாமல் இருந்ததில் அது தெரிந்தது. "வசந்தா, கொழந்தயக் கொண்டாந்து மாமா மடியில போடும்மா! பெரியவங்க ஆசிர்வதிக்கட்டும்" என்றார். எனக்கு ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
வசந்தா குழந்தையை ஏந்தி வந்து தாத்தாவின் மடியில் போட்டாள். தாத்தா கைகளைக் கூட்டிக் கொஞ்சம் அணைத்த படியே பிடித்துக் கொண்டார். நான் பக்கத்திலேயே உட்கார்ந்து குழந்தை தவறி விடாமல் இருக்கப் பார்த்துக் கொண்டேன்.
புஷ்பலதா முஷ்டிகளை மடக்கிக் கொண்டு தாத்தாவின் முகத்தை வைத்த கண் வாங்காமல் முறைத்துப் பார்த்தாள். தாத்தாவும் கொஞ்சமும் புன்னகை இல்லாத முகத்தோடு தன் தடித்த கண்ணாடிகள் ஊடே அவளைத் திருப்பி முறைத்தது போல் இருந்தது.
"குழந்தய ஆசிர்வதிங்க தாத்தா!" என்றாள் வசந்தா.
"நல்லா இருக்கட்டும்!" என்றார். தனது விரல்களால் குழந்தையின் கையைப் பிடித்துப் பார்த்தார். திரை விழுந்த தோல் சுருங்கிய ஜீவன் வற்றிய கருத்த விரல்கள் பச்சை ரத்தம் ஓடும் சிவந்த தளிர் விரல்களைப் பற்றியிருந்தன. அந்த முரண்பாட்டின் பொருள் என்ன என்று நான் எனக்குள் தேடிக் கொண்டிருந்தேன்.
புஷ்பலதா சட்டென்று முஷ்டியை விரித்துத் தாத்தாவின் ஒரு விரலைப் பற்றிக் கொண்டாள். தாத்தா முதன் முறையாகப் புன்னகை செய்தார். புஷ்பலதா பதிலுக்குச் சிரித்தாள். எங்கள் எல்லார் உதடுகளும் மீண்டும் ஒரு சிம்ஃபொனியின் வாத்தியங்கள் போல விரிந்தன.
"என் பாக்கியம், என் பாக்கியம்" என்றார் தாத்தா. என் குழந்தை தாத்தாவுக்குப் பெரிய பாக்கியமாகத் தெரிவது எனக்குப் பெருமையாக இருந்தது.
"பாக்கியம்ங்கிறது எங்க அம்மா பேரு!" என்றார் அப்பா. எனக்கும் ஞாபகம் வந்து "ஓ" என்றேன்.
தாத்தா கொஞ்ச நேரம் இருந்து நாங்கள் வற்புறுத்தக் காப்பியும் இனிப்புப் பலகாரங்களும் சாப்பிட்டார். ஒரு முறை வசந்தாவை உற்றுப் பார்த்தபோது அவளாக முந்திக் கொண்டு சொன்னாள்: "யாருன்னு பாக்கிறிங்களா தாத்தா! நாந்தான் பிள்ளயப் பெத்தவ!"
"எனக்குத் தெரியும். பிள்ளைக்கு பாக்கியம்னு பேர் வை!" என்றார்.
வசந்தா கொஞ்சம் விழிக்க அம்மா சொல்லிக் கொடுத்தார்: "சரின்னு சொல்லு!" சும்மாதான். தாத்தாவைத் தமாஷ் பண்ண. புஷ்பலதா பாக்கியம் ஆக முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.
"சரி தாத்தா!" என்றாள் வசந்தா.
***
தாத்தாவை மீண்டும் கொண்டு அவரது அறையில் சேர்த்தோம். அப்பாவைப் பார்த்து "பிள்ளைக்குக் கொடுக்கணும்னு ஒரு சாமான் எடுத்து வச்சேன். அப்ப கொண்டார மறந்து போச்சு. கொஞ்சம் இரு!" என்று அலமாரிக்குள் சென்று துழாவித் தேடி ஒரு தடித்த கவர்க்கூட்டை எடுத்துக் கொடுத்தார்.
"என்ன அப்பா இது?" பிரித்துப் பார்த்த போது 100 வெள்ளி நோட்டுக்களாக ஆயிரக் கணக்கில் பணம் இருந்தது.
"ஏது அப்பா இவ்வளவு பணம்? ஏன் குடுக்கிறீங்க?"
"நீ குடுத்த பணம்தான். சேத்து வச்சிருக்கேன். பிள்ளைக்குக் குடு! நல்லா வளத்து எடு!" என்றார்.
நான் சொன்னேன்: "வேணாம் தாத்தா! எங்கிட்ட பணம் இருக்கு! பிள்ளய வளத்து எடுக்க அது போதும்!" என்றேன்.
"போதுமா? எவ்வளவு பணம் போதும்?" என்று கேட்டார். எனக்குச் சொல்லத் தெரியவில்லை.
"பரவாயில்லா தாத்தா. உங்க செலவுக்கு வச்சிக்கிங்க!" என்றேன்.
"எனக்கு என்ன செலவு? எல்லாந்தான் உங்க அப்பா கொடுக்கிறாரே! எனக்கு இனி செலவு இல்ல. பாக்கியத்துக்குக் கொடு!" கடைசி வரை திரும்ப வாங்கிக் கொள்ளவில்லை.
வீடு வரும்போது அப்பா காரில் பேசாமல் வந்தார். நான் புஷ்பலதா அலையாஸ் பாக்கியத்தின் பெரும் பரிசை எண்ணி மகிழ்ந்தவாறு வந்து கொண்டிருந்தேன். அவளுக்கு இந்தப் பரிசின் மகிமை புரியுமா? கையில் கொடுத்தால் ஆசையோடு வாங்கிக் கொள்வாளா? அல்லது கசக்கி வாயில் போட்டு மெல்லுவாளா? குழந்தை 100 வெள்ளி நோட்டை வாயில் போட்டு மென்று எச்சில் படுத்துகிற காட்சியைக் கற்பனை செய்துகொண்டு எனக்குள் சிரித்துக் கொண்டேன்.
"இனி ரொம்ப நாளு இருக்க மாட்டாங்க!" என்றார் அப்பா.
"என்ன சொன்னிங்க அப்பா?"
"அப்பாவுக்கு அம்மாவோட நெனப்பு வந்திடிச்சி. இனி ரொம்ப நாளு இருக்க மாட்டாங்க!" என்றார்.
பதில் ஏதும் சொல்லத் தெரியாமல் அமைதியாகக் காரோட்டினேன்.
(முடிந்தது)
(இந்தச் சிறுகதை மலேசிய வார இதழான "மக்கள் ஓசை"-இல் 23 மார்ச் 2000-த்தில் பிரசுரமானது)
நெடுஞ்சாலையை விட்டு சுங்கைப் பட்டானிக்குள் நுழையும் சாலையில் டோ ல் சாவடியில் கட்டணம் செலுத்திவிட்டு அவர்களுடைய மெர்சிடிஸ் புறப்பட்டபோதே மூர்க்கமான முன்னேற்றத்தின் அடையாளங்கள் எங்கணும் தெரிந்தன. ஒரு பிரமாண்டமான அனைத்துலக சூப்பர்மார்கெட்டின் உள்ளூர் கிளை; பிஸ்ஸா ஹட்; மேக்டோ னல்ட்ஸ். அனைத்துக் கட்டிடங்கள் முன்னாலும் நெருக்கியடித்துக்கொண்டு நிறுத்திய கார்கள்.
நீலக்கலரில் பளபளப்பு ஓடுகள் இட்ட நவீன வரிசை வீடுகள். ஒவ்வொரு வீட்டின் முன்னும் ஒரு புரோட்டோ ன் வாஜா அல்லது டொயோட்டா; சில வீடுகள் முன்னால் வோல்வோக்களும் பிஎம்டபிள்யூக்களும் கூட. 2020-இல் முன்னேற்ற நாடு என்ற அந்தஸ்த்தை அடைய வேண்டும் என்று பந்தயம் ஓடுகின்ற வளரும் மலேசியாவின் காலணித் தடங்கள்.
தான் இந்த ஊருக்கு ஒரு சொகுசு மெர்சிடிஸில் வந்து நுழைவது ஒரு கால வழு, இட வழுப் போல சுடர் உணர்ந்தாள். கார் ஏறிப் பழகிப் பத்தாண்டுகள், மெர்சிடிஸுக்கு உயர்ந்து ஐந்தாண்டுகள் ஆனாலும் இந்த இடத்தில் அது அந்நியமாகத் தெரிகிறது. இது நான் க்ரீச் க்ரீச்சென்று சத்தமிடும் சைக்கிளோட்டிக்கொண்டும் லொட லொடவென்று ஆடும் பஸ்ஸிலும் பள்ளிக்கூடம் சென்று வந்த ஊர். அப்போது இங்கு சூப்பர் மார்க்கெட்டுகள் இல்லை. கிருஷ்ணன் ஜவுளிக் கடையில்தான் துணி வாங்குவதெல்லாம். அங்கேதான் இளம்பிள்ளை வாதத்தில் கால் ஊனமான சரஸ்வதி அக்கா இருந்தார். அவரிடமிருந்துதான் தமிழ்ப் புத்தகம் இரவல் வாங்கிப் படித்தது.
"என்ன பிறந்த ஊர் வந்தவொண்ணப் பேச்சு மூச்சைக் காணோம்?" என்று அருண் கிண்டலாகக் கேட்டான். அவன் பக்கமாகத் திரும்பிக் காலங்குலம் இதழோரம் பிரித்துச் சிரித்தாள். அவனுக்கு இதைச் சொல்லி விளங்க வைப்பது கடினம் என்று தோன்றியது. திரும்பிப் பின்னிருக்கையில் ஜெய் என்ன செய்கிறான் என்று பார்த்தாள். சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்தான். "பார் ஜெய், அம்மாவின் பிறந்த ஊர். உன் தாய் உருவாகிய மண். எந்தையும் தாயும் - தோட்டப்புறத் தொழிலாளர் பரம்பரை ஆனாலும் கூட -- மகிழ்ந்து குலாவி இருந்த மண்" எனச் சொல்லத் தோன்றிற்று. தூங்குபவனை எழுப்ப மனம் வராமல் மீண்டும் வெளியே பார்த்தாள்.
இவனாவது தன்னோடு தாத்தாவைப் பார்க்க வருகிறேன் ஒப்புக் கொண்டது அவளுக்கு ஆறுதலாக இருந்தது. மூத்தவன் சிங்கப்பூரில் அருணின் அண்ணன் குடும்பத்துடன் தங்கி விட்டான். அங்கே வீடியோ கேம்ஸின் கவர்ச்சி அவனை ஆட்கொண்டு விட்டது. அப்பாவுக்கு நேரடியாக வந்து சொல்லிக் கொள்ளாமல் ஒரு நாளாவது அவர் வீட்டில் தங்காமல் ஆப்பிரிக்காவுக்குப் புறப்பட அவளுக்கு மனசில்லை. ஜெய்க்குத் தாத்தாவின் வீட்டில் ஆடுகளும் மாடுகளும் இருப்பதைச் சொன்னவுடன் பிடித்துக் கொண்டான். ஒரு மிருகக் காட்சிசாலையை பார்க்கும் தீவிர விருப்புடன் அவன் தாத்தா வீட்டுக்கு வர இணங்கினான்.
இபுராஹிம் வீதி கடந்து மணிக்கூண்டை நெருங்கியபோது பள்ளிக்கூடமும் தோழிகளும் அவர்களோடு சேர்ந்து பார்த்த படங்களும் பாடல்களும் பசியோடு வீட்டை அடையும் போது மணக்கும் அம்மாவின் கோழிக்கறி வாசனையும் ஒரு கெலடைஸ்கோப்பாக மனசில் சுழன்றுகொண்டிருந்த போது "ஆர் வீ இன் தாத்தாஸ் ஹவுஸ் ஆல்ரெடி?" என்று தனது மழலை ஆங்கிலத்தில் கேட்டுக் கொண்டே எழுந்து உட்கார்ந்தான் ஜெய்.
அவன் அப்படிப் பேசியது கூட அந்தக் கால இட வழுவில்தான் சேர்த்தி எனச் சட்டென்று தோன்றியது. அவன் லண்டனில் பாலர் பள்ளிகளில் படித்தவன். தீவிர கோக்னி வாசத்துடன் ஆங்கிலம் பேசினான்.
"வந்தாச்சி ஜெய். இன்னும் கொஞ்ச தூரம்தான்" என்று சொன்னாள் சுடர்.
*** *** ***
"ஏன் உங்கப்பா இந்த இடத்த விட்டுக் கிளம்ப மாட்டெங்கிறார்?" என்று கேட்டான் அருண். வீடு வந்து சேர்ந்து விருந்துண்டு இன்னும் இரண்டு மணி நேரம்கூட ஆகவில்லை. அவனுக்கு அலுத்ததுபோல் இருந்தது.
சுடருக்கும்தான் புரியவில்லை. ஏன் இந்த முன்னேற்ற ஆரவாரங்கள் அப்பாவைப் பாதிக்கவில்லை? ஏன் பட்டணத்துக்குப் போய் நவீன ஓடுகள் வேய்ந்த கார் போர்ச்சுடன் கூடிய எலெக்ட்ரிக் கேட் உள்ள வீட்டைக் கட்டிக்கொள்ளவில்லை? எப்படி அண்ணனும் அண்ணியும் அவர்களின் இரண்டு குழந்தைகளும் இப்படிக் கிராமச் சூழ்நிலையில் அப்பாவோடு இருக்க ஒப்புக்கொண்டார்கள்? எப்படி அவர்களின் குழந்தைகள் சரளமாகத் தமிழும் தேவையானால் அளவோடு ஆங்கிலமும் பேசிக் குதூகலமாக இருக்கிறார்கள்?
நவீன பொருளாதாரத்தால் அளக்க முடியாத வாழ்க்கை ரகசியங்கள் பல இருக்கின்றன என சுடர் நினைத்துக் கொண்டாள்.
அப்பாவுக்கு முன்னேற்ற எண்ணம் இல்லை என்று சொல்ல முடியுமா? இந்த வீடும் அதன் சுற்றுப் புறமும் இவ்வளவு நேர்த்தியாக இருக்கும்போது...? இருக்கிறது; ஆனால் அந்த முன்னேற்றத்தின் அச்சு வேறு மாதிரியானது.
தன் மனசின் ஒரு மூலையில் இந்த வாழ்க்கை பற்றிய ஏக்கம் ஒன்று குமிழாக எழுந்து ஊதிப்பெருத்து பொக்கென்று உடைந்து மன அறைகளின் எல்லாச் சுவர்களிலும் வழிவதை அவள் உணர முடிந்தது.
அப்பாவின் அப்பா தோட்டப் பாட்டாளியாகத்தான் இந்த நாட்டுக்கு வந்தார். இதே சுங்கைப் பட்டானிக்குப் பக்கத்தில் ஒரு தோட்டத்தில் ஆங்கிலேய காலனித்துவவாதிகளுக்குக் கீழே காடழித்துக் கொட்டைபோட்டு ரப்பர் மரம் வளர்த்து, கொத்தடிமை வாழ்க்கையின் துன்பத்தைத் தணிக்கக் குடிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு ஒரு நாள் கள்ளச் சாரயத்துக்குப் பலியாகிப் போனார்.
அவரது எச்சங்கள் இரண்டும் தோட்டத் தமிழ்ப் பள்ளிக்குப் போயின. மூத்தது அப்பனின் அச்சில் இருந்தது. முரடாக இருந்தது. 8 வயதில் சுருட்டுப் பிடித்தது. 10 வயதில் சொக்கறா வேலைக்குப் போய் சம்பாரித்தது. சம்பாரிக்கும் திமிரில் குடித்தது. பின்னொரு நாள் குடிபோதையில் நடந்து வந்தபோது லோரியில் அடிபட்டுச் செத்தது.
இளையதுதான் அப்பா. அப்பாவின் கதையை இலேசில் அவரிடமிருந்து பறிக்க முடியாது. மிகக் கொஞ்சமாகத்தான் பேசுவார். தன் சாதனைகளை மட்டுப் படுத்திப் பேசித்தான் பழக்கம். தவணை முறையில் அவர் பிள்ளைகளுக்குச் சொல்லியது:
அப்பா காலையில் தமிழ்ப் பள்ளிக்கும் மத்தியானம் அப்பனுக்குத் துணையாக மரம் வெட்டவும் போனார். ஐந்தாம் வகுப்பு முடிக்கும்போதே அப்பனின் சாவு. ஆதரவு இழந்தவுடன் அப்பா படிப்பை விட்டார். ஆனால் தோட்டவேலைக்குப் போகவில்லை. தோட்டத்து மளிகைக் கடையில் பையனாகச் சேர்ந்தார். உழைப்பும் விசுவாசமும் காட்டினார். வியாபாரம் கற்றுகொண்டார். காசு சேர்த்தார். பக்கத்தில் சிறிதாகப் புதிய கடை போட்டார். பழைய கடைக்காரர் பொறாமையில் கடைக்குத் தீ வைத்ததில் அது பொசுங்கியது.
அப்பா கேஸ் எதுவும் போடவில்லை. சண்டை பிடிக்கவில்லை. கடன் வாங்கிக் கடையை மீண்டும் எழுப்பினார். வியாபாரம் வளர்த்தார். தோட்டப்புறப் பெண்ணையே கல்யாணம் பண்ணிக்கொண்டார்.
சுதந்திர மலாயாவின் முன்னேற்ற வேகத்தில் விவசாயம் முக்கியம் இழந்து தோட்டங்கள் துண்டுபோடப்பட்டு விலையான நாட்களில் மற்றவர்கள் பண்டத்தையும் பாத்திரத்தையும் தூக்கிக்கொண்டு ஒடிய நாட்களில் அப்பா மட்டும் துண்டு போடப்பட்ட நிலங்களில் ஒன்றை முன்பணம் கொடுத்து வாங்கினார். அப்புறம் முதுகின் வலிமையும் சிக்கனத்தின் சீர்மையும் அதை அவருக்கு முழுதாக்கிக் கொடுத்தன.
ரெண்டு ஏக்கர் இருக்கலாம். தென்னை மரங்கள் நட்டார். தேங்காய் வியாபாரம் நினைத்தால் அபாரமாக ஓடும். நினைத்தால் படுத்துவிடும். விவசாயத்தின் மவுசு குறைந்து விட்டாலும் அப்பாவுக்கு அதில் ஒரு பிடிப்பு ஏற்பட்டுவிட்டது. கலங்காமல் இருந்தார்.
அந்தத் தோட்டத்தில்தான் அண்ணனும் சுடரும் வளர்ந்தது. அவளுக்கு விவரம் தெரிந்ததிலிருந்து அதுதான் வீடு. ரப்பர் காட்டின் கொடுமைகள் ஒழிந்த சுதந்திர வாழ்க்கை. தென்னை மட்டையில் அண்ணன் அவளை உட்கார வைத்து இழுத்திருக்கிறார். வீட்டில் கொப்பரை காய வைத்துப் பக்கத்தில் ஒரு செக்கில் கொடுத்து மணக்க மணக்கத் தேங்காய் எண்ணெய் பிழிந்திருக்கும் நினைவுகள் இருந்தன. அவளுடைய செல்ல ஆடு ஒன்று இருந்தது. அதற்கு அவர்கள் "மாடன்" என்று பெயர் வைத்தார்கள். அவள் "மாடு" என்று கூப்பிட்டால் அது ஓடிவந்து அவள் கையில் பலா மரத் தழை வாங்கித் தின்னும். ஓ, பலாமரம் எங்கே? வெட்டிவிட்டார்கள் போல!
அப்பாவோ அம்மாவோ காலையில் படுக்கை விட்டு எழும் காட்சியை சுடர் பார்த்ததேயில்லை. அவள் எழும்போது அம்மா அடுப்பங்கரையில் ஏதாகிலும் ஆக்கிக்கொண்டிருப்பாள். பின்னாளில் அவள் தோக்கியோவிலும் பாங்காக்கிலும் லண்டனிலும் தன் அப்பார்ட்மன்டில் இருந்து காலையில் துயிலெழும் நாட்களில் அம்மாவின் தாளிப்பின் வாசம் வருவதாகக் கற்பனை செய்து கொண்டிருக்கிறாள்.
அப்பா பூஜையில் உட்கார்ந்திருப்பார். அவளும் அண்ணனும் பள்ளிக்கூடம் போகக் குளித்துவிட்டு வர அவர்களை உட்காரவைத்து ஏதாகிலும் ஒரு தேவாரம் சொல்லாமல் அவர்களை விட மாட்டார்.
"பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடை மேல்...."
தேவாரங்களின் அர்த்தங்கள் விளங்கிக் கொண்டது பின்னால் தமிழ்ப் பள்ளியில். அங்குதான் கல்வி தொடங்கியது. தமிழ் வாத்தியார் பெயர் சுப்பிரமணியம். "சுடர்க்கொடி" என்ற பெயரை "சுடர்" என்று முதன் முதலில் மாற்றி அழைத்தவர் அவர்தான். தட்டுத் தடுமாறிய கல்விதான். மாணவர்கள் வேறு போக்கில்லாததால் அங்கு வந்து சேர்ந்தவர்கள் போல்தான் இருந்தார்கள். ஆசிரியர்கள் அர்ப்பணிப்போடுதான் சொல்லிக் கொடுத்தார்கள். எத்தனை சொல்லியும் உரிக்க முடியாத பாறைகளாக இருந்த சிலரை ரோத்தானால் வெளுத்திருக்கிறார்கள். வாத்தியாரிடம் அடி வாங்கிய செய்தியை வீட்டில் போய்ச் சொல்ல முடியாது. சொன்னால் வாத்தியாரைக் கோபப் படுத்திய குற்றத்திற்கு மேலும் தோல் உரியும். இந்த மொக்கை மாணவர்களை அடித்துத் துவைப்பது ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உகந்த பொழுது பொக்காக இருந்தது.
ஆனால் சுடருக்குப் படிப்பு வந்தது. "சூட்டிகையாக இருக்கிறாள்" என வாத்தியார் மெச்சிக் கொள்வார்.
அண்ணன் தமிழ் ஆரம்பப் பள்ளியை முடித்து மலாய் இடைநிலைப் பள்ளிக்குப் போய் அந்தப் புதிய இடத்தில் ஒன்றிப்போக முடியாமல் திணறிக்கொண்டிருந்தார். மலாய் மாணவர்கள் சீன மாணவர்களின் பகடிகளைப் பொறுக்க முடியாமல் ஓரிரு ஆண்டுகளில் அப்பாவுக்குத் துணையாக வீட்டில் தங்கிவிட்டார்.
இந்த நிலையில் தன் முறை வந்ததும் அவளும் நடுக்கத்துடன்தான் மலாய் இடைநிலைப் பள்ளிக்குச் சென்றாள். ஆனால் பிடித்துவிட்டது. பிற இன மாணவர்களின் கொடுமை இருந்தது. முதலில் பயத்தில் குனிந்திருந்தாள். பின்னர் குனிந்தால் மேலும் குட்டுவார்கள் என்று தெரிந்தபோது திரும்பிச் சீறினாள். "அனாக் ஹிண்டு" (இந்துப் பிள்ளை) என்று அவளைக் கிண்டலடித்த மலாய் மாணவர்களையும் "கிலிங்ஙா கூய்" (கலிங்கப் பேய்) என்ற சீன மாணவர்களையும் அவள் சண்டை பிடித்து வென்றாள். ஆசிரியர்களிடம் கொண்டு நிறுத்தினாள். பிறகு மற்ற நல்ல மாணவர்கள் அவளை நெருங்கி வந்தார்கள். அவர்களில் ஒருத்தியாக ஏற்றுக்கொள்ளப்பட்டாள். அப்புறம் அவர்களில் சிலர் அவளுடைய நெருங்கிய தோழிகள் ஆனார்கள். இப்போதும் உலகத்தின் பல பாகங்களில் வாழ்ந்துகொண்டு அவளுடன் தொடர்பு வைத்துக்கொண்டு இருக்கிறார்கள், லத்தீஃபா, சியூ யின், ரொஹானா...
*** *** ***
ஜெய்க்கு அங்கிருந்த ஆடுகள் மிகவும் பிடித்துப் போய்விட்டன. முதலில் மிரண்டான். அம்மாவின் பஞ்சாபிச் சட்டையின் நுனியைப் பற்றிக்கொண்டு அவள் தொடையோடு ஒட்டிப் போயிருந்தான். ஆனால் அந்த ஆடுகள் அவன் கையில் இருந்த புல்லைச் சாப்பிட வந்து உரசியவுடன் அவற்றோடு ஒட்டிக் கொண்டான். அவன் முழுக்கவும் சொகுசு அடுக்குமாடி வீடுகளில் வாழ்ந்தவன். பாங்கோக்கில் பிறந்தவன். பாங்கோக்கிலும் லண்டனிலும் வாழ்ந்தவன். பிறந்ததிலிருந்து லிஃப்டும் காரும் சூப்பர் மார்க்கெட்டும் கணினியும் அவனுக்கு அத்துப்படி. ஆனால் அவன் பாதங்கள் பச்சை மண்ணை மிதித்ததில்லை. தொலைக்காட்சியில் எனிமல் பிளனெட்டிலும் எப்போதாவது சென்று வரும் விலங்குக் காட்ச் சாலைகளிலும் தவிர்த்து அவன் விலங்குகளைக் கண்டு பழகியதில்லை.
இப்போது இங்கு மாடுகள் இருந்தன. ஆடுகள் இருந்தன. அப்பாவும் அண்ணனும் சில மேல்நாட்டுக் கோழி வகைகளையும் வாங்கி வளர்த்து வந்தார்கள். மூன்று நாய்கள் அவற்றுக்கெல்லாம் காவலாக வளைய வளைய ஓடின. பலகையில் கூடுகள் அடித்து ஒரு ஐந்து ஜோடிப் புறாவும் வளர்த்தார்கள். ஜெய் மருட்சியும் சிரிப்பும் பூரிப்புமாக இருந்தான். டிஸ்கவரி சேனெலில் அவன் தொட முடியாதவைகளியெல்லாம் இங்கு தொடவும் தடவவும் முடிந்தது.
அவ்வப்போது மொய்த்த கொசுக்களை அதிசயத்துடன் கவனித்தான். லண்டனில் அவன் கொசுக்களைப் பார்த்ததில்லை. அவை கடிப்பதை வேடிக்கை பார்த்தான். கொசுவை எப்படி அடிப்பதென்று அண்ணனின் பிள்ளைகள் சொல்லிக் கொடுத்தார்கள். கொசு நசுங்கியதில் வந்த ரத்தத்தைப் பார்த்து அழுதான்.
ஆனால் மற்ற மிருகங்கள் எல்லாம் அவனைப் பூரிக்கச் செய்தன. தொட்டும் தட்டியும் விளையாண்டான். அப்பாவின் நாய்கள் அவனைக் கீழே தள்ளி முகம் நக்கின. கையால் தலநயை மூடிக் கொண்டு கால்களை உதைத்துக்கொண்டுக் குலுங்கக் குலுங்கச் சிரித்தான். அவனை இழுத்து வந்து குளிப்பாட்டப் பெரும் பாடாய்ப் போனது. அப்போதுதான் அப்படிக் கேட்டான்:
"அம்மா, கேன் ஐ ஸ்டே இன் தாத்தாஸ் ஹௌஸ்?"
*** *** ***
எப்படி வாழ்க்கை இந்த அளவுக்கு மாறியது என்பது நினைக்கும்போது சுடருக்கு வியப்பாகத்தான் இருந்தது. இடைநிலைப் பள்ளயில் படித்து முடிந்ததும் அவளுக்கு மலாயாப் பல்கலைக்கழகத்தில் படிக்க இடம் கிடைத்தது. ஆங்கிலம் சிறப்புப் பாடமாக எடுத்து கல்விப் போதனையில் டிப்ளோமாவும் வாங்கினாள். அவள் குடும்பத்தில் அவர்கள் பரம்பரையில் முதல் பட்டதாரி. அங்குதான் அருணைச் சந்தித்தாள். பொருளாதாரத் துறையில் இரண்டாம் ஆண்டு மாணவனாக இருந்தான் அருண் என்கிற அருணாச்சலம். அழகன். தன்னைப்போல எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவன் எனத் தெரிந்தது. தமிழ் எழுதப் படிக்கத் தெரியாதவனாக இருந்தான். ஆனால் நன்றாக நகைச்சுவையாகத் தமிழ் பேசினான். பேச்சு வளர்ந்து நேசமாகி ஏதோ ஒரு ரசாயனத்தில் அது காதலும் ஆனது. அப்பாவின் ஆசியில் கல்யாணத்தில் பூத்தது.
அவனுக்கு மலேசிய வெளிநாட்டுச் சேவையில் வேலை கிடைத்தது. ஓராண்டு விஸ்மா புத்ராவில் இருந்து பயிற்சி முடிந்தவுடன் அவனைத் தோக்கியோவில் மலேசியத் தூதரகத்தில் துணைச் செயலாளராகப் போட்டார்கள். தோக்கியோவின் நவீன தொழில் நுணுக்கச் சூழலில் சுத்தமான கிருமி நாசினி தெளித்த வாழ்வு அப்பாவின் வீட்டிலிருந்து முற்றிலும் வேறு பட்டிருந்தது. உலகில் வேறு விதமான வாழ்க்கைகளும் இருக்கின்றன என அவளுக்குப் புலனாயிற்று. தூதரகத்தில் மலாய்ச் சீனக் குடும்பங்களோடு அணுக்கமாகப் பழகக் கற்றுக் கொண்டாள். கொஞ்சம் ஜப்பானிய மொழியும் பேசப் பழகினாள்.
அப்புறம் பாங்கோக்கிற்கு மாற்றினார்கள். அங்குதான் முதல் பையன் கணேஷ் பிறந்தான். இரண்டாண்டுகள் கழித்து ஜெய் பிறந்தான். அங்கிருந்து லண்டனுக்கு அருணை முதல் நிலைச் செயலாளராக மாற்றினார்கள். மூன்றாண்டுகள் அங்கிருந்த பின் இப்போது ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு சிறிய நாட்டுக்கு அவனை முதல் முறையாகத் தூதராக நியமித்திருக்கிறார்கள். ஓர் இந்திய வமிசாவளி வந்த குடிமகனுக்கு ஒரு மலாய் இஸ்லாமிய நாடு கொடுத்துள்ள இந்த அங்கீகாரம் அவர்கள் இருவரையும் பூரிக்க வைத்தாலும்...
"ஆப்பிரிக்காவுக்கா?" என்று அயர்ந்தாள் சுடர்.
"அப்படித்தான் சுடர். முதலில் இந்த மாதிரி சின்ன தூரமான நாடுகள்ளதான் போடுவாங்க! அப்புறம்தான் ஐரோப்பிய நாடுகள்ள போடுவாங்க! எவ்வளவு பெரிய கௌரவம் இது! வேணான்னு சொல்ல முடியுமா?" என்றான்.
"அப்ப புள்ளைங்க படிப்பு?" மூத்தவன் அப்போதுதான் லண்டனில் படிக்க ஆரம்பித்திருந்தான். ஜெய் பாலர் பள்ளிக்குப் போய்க் கொண்டிருந்தான்.
"யோசிச்சுட்டேன். ரெண்டு பேரையும் சிங்கப்பூர்லெ என் அண்ணன் வீட்டில விட்டிடுவோம். அங்க அவங்க இண்டர்நேஷனல் ஸ்கூலுக்குப் போவாங்க. எல்லாச் செலவையும் அரசாங்கம் கொடுக்கும்."
அவளுக்கு இதயத்தைப் பிழிந்தது. ஒரே சமயத்தில் இரண்டு பிள்ளைகளையும் பிரிந்திருப்பதா? என்ன மாதிரி வாழ்க்கை இது? சொகுசுக்குக் குறைவில்லை. ஆனால் வேர்கள் பிடிக்காத வாழ்க்கை. இரண்டாண்டுகள் இங்கே, இரண்டாண்டுகள் அங்கே... ஒரு கலாச்சாரத்தின் முகம் பிடிபடுவதற்குள் இன்னொரு கலாச்சாரத்தின் மத்தியில்... ஒரு மொழியின் நெளிவு சுளிவுகள் நாவில் வரத் தொடங்கும்போது இன்னொரு மொழிக்கு...
ஆனால் அருண் அந்த வாழ்க்கையைப் பெரிதும் அநுபவித்தான். அவன் குடும்பத்தில் எந்தக் கலாச்சார பாரங்களும் இல்லை. தமிழறியாத குடும்பம். தூதரக வாழ்வின் அயராத, திரும்பத் திரும்ப வரும் விருந்துகளும் சடங்குகளும் அவளை அலுக்க வைத்தபோது அவன் அடுத்ததிற்கு ஆர்வத்தோடு காத்திருந்தான். டிசி எண்ணுள்ள காரும் சீருடை அணிந்த ஓட்டுநரும் சூட் போட்டுக் கொள்வதும் சில்க் டை கட்டுவதும் அவனைப் பெரிய மனிதனாக ஆக்குவதாக அவன் நினைத்துக் கொண்டிருந்தான். சுடர் தன் கலாச்சார வேர்களுக்கு ஏங்கினாலும் அவன் நலனே தன் நலன் என இருப்பதும் தன் கலாச்சார வேர்களின் ஒரு பகுதிதான் என அமைதி பெற்றாள்.
ஆனால் இதன் மொத்த விலையாக இரண்டு குழந்தைகளையும் விட்டுப் பிரிந்திருப்பதென்பது எளிதில் சமரசப் படுத்திக் கொள்ளும் விஷயமாக இருக்கவில்லை.
*** *** ***
"விளையாட்றியா சுடர்?" என்று கேட்டான் அருண். அவன் கேள்வியில் கோபம் கொப்புளித்திருந்தது.
அப்பாவின் வீட்டில் அவர்கள் கழித்த இரவு வேறு மாதிரி இருந்தது. அங்கே கார்களின் தொடர்ந்த இரைச்சல்கள் இல்லை. கவிழ்ந்திருக்கும் மோனத்தை மெல்ல வருடும் தென்னை ஓலைகளின் சலசலப்புக்களும் ஆட்டுக்குட்டிகளின் அரைத்தூக்கத்துக் கனைப்புகளுமே இருந்தன. அப்பா எல்லா அறைகளுக்கும் ஜன்னலில் கொசு வலைகள் அடித்து வைத்திருந்தார். ஆகவே உள்ளே கொசுத் தொல்லைகள் இல்லை. ஃபேன் போட்டிருந்தார். ஜன்னலில் கொஞ்சமாகக் காற்று வந்தது.
ஜெய் களைத்துத் தூங்கி விட்டிருந்தான். அவனுக்கு எப்போதும் பெரிய படுக்கையில் தனியாகப் படுத்துத்தான் பழக்கம். ஆனால் இந்த வீட்டில் அப்பாவுடனும் அம்மாவுடனும் ஒரு சிறிய படுக்கையில் உடம்புச் சூட்டைப் பகிர்ந்து கொண்டு படுப்பது அவனுக்குப் பிடித்தமாக இருந்தது. ஆடுகள் பற்றிப் பல கேள்விகள் கேட்டுவிட்டு அயர்ந்து போய் அருணின் மீது ஒரு காலைத் தூக்கிப் போட்டவாறு அவன் தூங்கிப் போனான்.
அப்போதுதான் சுடர் அந்த விஷயத்தை ஆரம்பித்தாள்.
"அருண், நான் ஒண்ணு கேக்கிறேன்!"
அவளை ஆச்சரியத்துடன் பார்த்தான். அவள் இத்தனை தயக்கத்துடன் எதனையும் கேட்டதில்லை. கேட்டது எதனையும் அவன் மறுத்ததில்லை. ஆகவே இந்தப் பீடிகை அவனை ஆச்சரியப் படுத்தி இருக்க வேண்டும்.
"ஜெய்க்கு இந்த இடம் பிடிச்சுப் போச்சி! இங்க இருக்க விருப்பப் பட்றான்"
"தெரியும் சுடர். ஆனா நாளைக்கே நாம் குவாலலும்பூர் போயாகணுமே! ரெண்டு நாள் விஸ்மா புத்ராவில பிரிஃபிங் இருக்கே! எப்படி இன்னொரு நாள் இருக்க முடியும்?"
"அருண், நான் சொல்றது இன்னொரு நாளைக்கு இல்ல; சில வருஷங்களுக்கு"
அப்போதுதான் அதிர்ந்து கேட்டான்: "விளையாட்றியா சுடர்?"
"இல்ல அருண். மூத்தவன் சிங்கப்பூர்ல இருந்து படிக்கட்டும். ஜெய் இங்க இருக்கட்டுமே!"
"இங்கயா? இந்தப் பட்டிக் காட்டிலயா? ஏன்?"
"இது பட்டிக் காடு இல்ல அருண். இது என் அப்பாவின் வீடு. தாய் மண். கலாச்சார மண். இதில இருந்துதான் நாம் உருவானோம். பாங்கோக்கிலும் சிங்கப்பூரிலும் உள்ள காங்க்ரீட்டில் இல்ல!"
"என்ன உளர்ர சுடர்? இங்கே அவன் என்ன படிப்பான்? என்ன கத்துக்குவான்?"
"இங்கே அவன் பக்கத்தில் சரஸ்வதி பள்ளிக்கூடத்தில தமிழ் படிப்பான். அப்பாக்கிட்ட இருந்து பண்பாடு கத்துக்குவான். அண்ணன் குழந்தைகள் கிட்ட இருந்து ஒட்டி உறவாப் பழகிற கலாச்சாரம் கத்துக்குவான். குடும்பம்னா என்னன்னு கத்துக்குவான். மண்ணை நேசிப்பான். மனுஷனா இருப்பான்."
"அவனுக்கு உயர்வான ஆங்கிலக் கல்வியக் கொடுக்க அரசாங்கம் செலவு பண்ணத் தயாரா இருக்கு. என்னை விடப் பெரிய மனுஷனா அவன ஆக்கணும்னு கனவு கண்டுகிட்டிருக்கேன் சுடர்!"
"உயர்வான மனுஷனா வர்ரதுக்குப் பல வழிகள் இருக்கு அருண். மொதல்ல அப்பா அவனுக்குக் கலாச்சார அடித்தளம் போடட்டும். அப்புறம் நீங்க அவனை உங்க அச்சில் வார்க்கக் காலம் இருக்கும்!" அவள் குரல் கொஞ்சம் உடைந்தது போல இருந்தது.
"என்ன ஆச்சு உனக்கு? ஏன் இப்படி உணர்ச்சி வசப்பட்ற?"
கொஞ்சமாக அழுதாள். "மன்னிச்சிக்குங்க அருண். நான் உங்களை அடைஞ்சி நீங்கள் கொடுத்த அன்பான வாழ்க்கையை அடைஞ்சி ரொம்ப சந்தோஷமாத்தான் இருக்கேன். ஆனா இங்க திரும்பி வந்து அப்பாவோட வாழ்க்கைய மறுபடி புதுசா பாக்கும்போதுதான் எதையெல்லாம் பறிகொடுத்து இதை அடைஞ்சிருக்கோம்னு தெரியிது. நாமாவது இந்த மண் வாசனைகள அனுபவிச்சிட்டு ஒரு சொகுசு வாழ்க்கைக்குப் போனோம். ஆனா நம்ப பிள்ளைகளுக்கு இந்த வாழ்க்கை கொஞ்சமும் கொடுத்து வைக்காமப் போயிடுமோன்னு நெனைக்கிறபோது எனக்குப் பொறுக்கலிங்க! அவனே இன்னைக்கு இங்கே இருக்கட்டுமான்னு கேட்டபோது என்னால முடியாதுன்னு சொல்ல மனம் வரல!"
"சின்னப் பிள்ளை சுடர்! அவனுக்கு என்ன தெரியும்?"
"அவனுக்குத் தெரியுதுங்க! நமக்குத்தான் தெரியாமப் போச்சி!"
விம்மல் பெரிதாக வந்துவிட்டது. அவன் பேசாமல் இருந்தான். அழ விட்டான். முதுகைத் தடவிக் கொடுத்தான். "சரி சரி! ஏதோ பைத்தியம் மாதிரி பேசற! படு! காலையில பேசிக்குவோம்!" என்றான்.
ஜெய்க்குப் போர்த்திவிட்டு அருணுக்கு முதுகைக் காட்டியவாறு ஒருக்களித்துப் படுத்தாள் சுடர். அழுகையின் தீவிரம் தணிந்தவுடன் ஏதோ பெரிய குற்றம் செய்துவிட்டோ ம் என்ற உணர்வு நெஞ்சை அடைத்தது. ஒரு கணம் பித்தம் தலைக்கேறி இருந்த போது யோசிக்காமல் அருணை ஆழமாகப் புண் படுத்திவிட்டோ ம் எனத் தோன்றியது.
இரவு கனமாக இருந்தது. அப்பாவின் ஆசைப் புறாக்கள் மட்டும் குர் குர்ரென இதமாக இரவுப் பேச்சுக்கள் பேசிக் கொண்டிருந்தன. அருணும் தூங்காமல் இருந்தான் எனத் தெரிந்தது. நீண்ட நேரம் புரண்டு புரண்டு படுத்து அப்புறம் அசைவுகள் இல்லாமல் இருந்தான். தூங்கிவிட்டான் போலும் என அவள் நினைத்திருந்த நேரத்தில் அவன் கை நீண்டு அவள் தோளை அழுத்தியது.
(முடிந்தது)
(இந்தக் கதை ரெ.கார்த்திகேசுவின் "இன்னொரு தடவை" (2001) என்னும் சிறுகதைத் தொகுதியிலிருந்து எடுக்கப் பட்டது)
(முடிந்தது)
சிலாங்கூர் மேன்சன் வந்து சேர்வதற்குள் சுந்தரராஜுக்கு இரைத்தது. அலுவலகத்தில் ஒன்பதரை மணிக்கு இருக்க வேண்டும் என்பது மானேஜரின் கட்டளை. மணி 10.00 ஆகி விட்டது. பழைய கிள்ளான் சாலையில் காலையிலேயே போக்குவரத்து நெருக்கடி ஆரம்பித்து விடும். இன்று மிக மோசம். சிரம்பான் நெடுஞ்சாலை ஓடும் மேம்பாலத்தின் கீழேயுள்ள சந்திப்பில் வந்து சேர்வதற்கே ஒன்பது ஆனது. ஒன்பதரை மணிக்கு ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவுக்கு வந்து சேர்ந்துவிட்டாலும் காருக்கு பார்க்கிங் இடம் தேட இத்தனை நேரமானது. சரக்குகள் இறக்கும் பெரிய லோரிகள் எல்லா வீதிகளையும் அடைத்துக் கொண்டு கிடந்தன. வளைந்து நெளிந்து மூன்று சுற்றுகள் சுற்றியும் இடம் கிடைக்காமல் ஒரு பார்க்கிங் செய்யக் கூடாத இடத்தில் பார்க் செய்தான். நோட்டீஸ் வந்தால் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போது மானேஜரைச் சமாளித்தாக வேண்டும்.
சிலாங்கூர் மேன்சன் கொஞ்சம் பழுப்பேறிக் கிடந்தது. நுழைவாயிலில் கலவையான மணங்கள் வந்தன. மக்கிய மணம். குவாலா லும்பூரின் பரபரப்பான நகர மத்தியில் இருந்தாலும் இது ஒரு நவீன குந்துகுடிசைப் பகுதிதான். கட்டிய காலத்தில் நவீனம். ஆனால் காலம் இந்தக் கட்டிடத்தைக் கண்டு கொள்ளாமல் ஓடிவிட்டது. நகர வாழ்வின் மினுமினுப்புக்கு ஒப்புக் கொடுக்க முடியாமல் ஆனால் விட்டுப் போகவும் முடியாமல் ஒண்டுக் குடித்தனம் நடத்தும் வியாபாரிகளும் மனிதர்களும் அடைந்து கொள்ளும் கட்டிடம்.
லிஃப்டுக்குக் காத்திருக்க முடியாது. உடனே வரும் என்று நம்ப முடியாது. நான்கு மாடிகள்தான் ஏறவேண்டும். சுந்தரராஜு கையில் வைத்திருந்த ஃபைல்கள் அடங்கிய பிரிஃப் கேஸ் கனக்க வேர்க்க வேர்க்க ஓடினான். ஒரு வேளை இன்று மானேஜரும் நெருக்கடியில் மாட்டிக்கொண்டு லேட்டாக வரக்கூடும் என்ற நப்பாசை ஒன்று எழுந்து விரைவில் புதைந்தது. "கேசாபிவிருத்தி மூலிகை அழகு சாதனங்கள்" என்று போர்டு போட்ட கதவைத் தள்ளி உள்ளே சென்றான்.
புதிய நியான் விளக்குகளின் ஒளியில் வரவேற்பறை பளிச்சென்றிருந்தது. மலர் கௌன்டரைத் துடைத்துப் பொருள்களை அடுக்கிக் கொண்டிருந்தாள். வண்ண வண்ணமான லேபெல்களில் ஷம்பூக்கள், மேனியை வெளுப்பாக்கும் கிரீம்கள், எண்ணெய்கள். மானேஜரின் கதவு மூடியிருந்தது. "வந்திட்டாரா மலர்?" என்று இரைக்க இரைக்கக் கேட்டான்.
"இருக்காரு. உங்களைக் கேட்டாரு. வந்தவுடனே வந்து பார்க்கச் சொன்னாரு" என்றாள். அவள் முகத்தில் இருந்த கடுகடுப்பு மானேஜரின் மனநிலையைச் சொல்லாமல் சொல்லியது.
பிரிஃப் கேஸைத் தனது மேஜையில் வைத்துவிட்டு டையைத் தளர்த்திக் கழுத்தைச் சுற்றிப் படர்ந்திருந்த வியர்வையைத் துடைத்தான். டை ஒரு சனியன். இந்த வியாபார டம்பத்துக்கு இதையும் கட்டிக் கொண்டு ஆடவேண்டி இருக்கிறது. கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டுதான் போக வேண்டும். தாமதமாக வந்ததற்குக் காரணம் தயாரிக்க வேண்டும்.
பினாங்குக் கிளை அலுவலகத்திலிருந்து இந்தத் தலை நகர் அலுவலகத்துக்கு மாற்றல் செய்யப்பட்டு வந்து ஒரு மாதம்தான் ஆகிறது. ஊரே இன்னும் சரிவரப் பிடிபடவில்லை. பினாங்கு சொந்த ஊர். பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாம் அங்கேதான். இதமான ஊர். ஓர் அன்னையைப் போல. கடல் உண்டு, காற்று உண்டு, மலை உண்டு, நல்ல மனிதர்கள் உண்டு. முக்கியமாக இதமான மனித உணர்வுகள் கொண்ட, விடாமல் இலக்கியம் பேசுகின்ற நண்பன் மணியம் உண்டு. சந்திக்கும் நேரத்திலெல்லாம் "வந்திட்டியா ராசு!" என்று வாய் நிறைய வரவேற்பான். எல்லாவற்றையும் விட்டு இந்த முரட்டு ஊருக்கு வரக் கொஞ்சமும் விருப்பம் இல்லை.
மாற்ற வேண்டாமென பினாங்கு அலுவலக மேலாளரிடம் கெஞ்சிப் பார்த்தாகி விட்டது. "மன்னிச்சிக்க சுந்தரராஜு! வியாபாரம் ரொம்ப மந்தமாப் போச்சி. போட்டி அதிகம் ஆயிடிச்சி. நீதான் பாக்கிறியே, ஆளுக்காளு இப்ப மூலிகை ஷாம்பூவும் எண்ணெயும் விக்க ஆரம்பிசிட்டாங்க! நம்பாளுங்க பளக்கமே அதுதானே! ஆப்பக் கட ஒருத்தர் போட்டா பக்கத்தில தோசக்கட போட்டிடுவாங்க! ரேடியோவில ஒரு அர மணி நேரத்த வெலக்கி வாங்கிட்டு இல்லாத பொய்யெல்லாம் அவுத்துவுட்டுட்டு வாங்க ஆள் பிடிக்கிறாங்க!"
எல்லாம் இவர்கள் ஆரம்பித்து வைத்ததுதான். இப்போது அந்த விளையாட்டை மற்றவர்கள் இன்னும் வெற்றிகரமாக ஆடுகிறார்கள்.
"குவால லும்பூர் வட்டாரத்திலதான் வியாபாரம் நல்லா இருக்காம். அங்கதான் இனி மார்க்கெட்டிங் அதிகரிக்கணும்னு கம்பெனியில முடிவு பண்ணிட்டாங்க. நீ போகலைன்னா இப்ப உள்ள நிலமையில ஆளே தேவையில்லைன்னு சொல்லிடுவாங்க. போ சுந்தர்ராஜு! சம்பளமும் கொஞ்சம் கூடப் போட்டுத் தருவாங்க. குவாலா லும்புர்ல செலவு அதிகம்தான், என்ன பண்றது? சிக்கனமா இருந்தா பொழைச்சு முன்னுக்கு வரலாம்!" என்று முதுகைத் தட்டி அனுப்பி வைத்தார்.
வயதான தாய் இருக்கிறார். தான்தான் காப்பாற்ற வேண்டும். கணவனை இழந்த அக்காள் குளுகோர் மார்க்கெட் பக்கத்தில் ஒட்டுக் கடை போட்டு வடை சுட்டு விற்கிறார். நிச்சயமில்லாத வருமானம். ஆகவே தன்னை நம்பித்தான் இருந்தார்கள்.
மணியத்திடம்தான் சொல்லி அழுதான். "பரவாயில்ல போ ராசு! மாற்றம்கிறது வாழ்கையில முக்கியமான ஒண்ணு. அதப்பாத்து பயப்படக் கூடாது. "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல"ன்னு சொல்லியிருக்காங்கள்ள!"
எதற்கும் ஒரு இலக்கிய எடுத்துக்காட்டு காண்பிப்பான். தமிழ்ப் பள்ளியில் படித்து தமிழ் இலக்கியத்தால் ஈர்க்கப்பட்டு அதில் முற்றாகத்த் தோய்ந்து போனவன். தனக்கும் அந்தப் பித்தை ஊட்டிவிட்டவன் அவன்தான். தன்னோடு ஒன்றாகத்தான் எஸ்டிபிஎம் தேர்வு எழுதினான். இருவருக்கும் சுமாரான தேர்வுதான். பல்கலைக் கழகம் போகும் அளவுக்கு அது இருக்கவில்லை. மணியம் தமிழாசிரியர் பயிற்சி பெற்று ஆசிரியர் ஆகிவிட்டான். பினாங்கிலேயே ஒரு பள்ளியில் அவனுக்கு போஸ்டிங் கிடைத்து அங்கேயே ஆனந்தமாகத் தங்கி விட்டான்.
தனக்குத்தான் ஆசிரியர் வேலையில் நம்பிக்கை இல்லை. மீண்டும் எஸ்டிபிஎம் எழுதிப் பல்கலைக் கழகத்துக்குப் போயே ஆவது என உறுதி கொண்டு படித்துக் கொண்டிருந்த வேளையில் வர்த்தகத் துறைக்குப் போனால் ஆயிரம் ஆயிரமாகச் சம்பாதிக்கலாம் எனப் பல தன்முனைப்புக் கருத்தரங்கங்களில் கேட்ட பிரச்சாரப் பேச்சுக்கள் திசை மாற்றிவிட்டன.
கொஞ்ச காலம் இன்சுரன்சு, கொஞ்சகாலம் பொருள்கள் நேரடி விற்பனை என மாற்றி மாற்றிச் செய்து ஒன்றும் சரியாக வராமல் "கேசாபிவிருத்தி மூலிகை அழகு சாதனங்கள்" பினாங்கில் ஏக தடபுடலாக ஆரம்பிக்கப் பட்ட போது அதில் சேர்ந்துவிட்டான். அப்போது தீவிரமாக விளம்பரம் செய்தார்கள். மார்க்கெட்டில் அவர்கள் கொடி பறந்தது. ஒரு வருடத்தில் போட்டி மிகுந்துவிட்டது. பினாங்கு வியாபாரம் எதிர்பார்த்த சூடு பிடிக்கவில்லை. அதனால்தான் குவாலா லும்பூர் மாற்றம்.
குவாலா லும்பூர் கொடூரமாக இருந்தது. ஒரு மாதம் கழித்தும் இன்னும் அப்படித்தான் இருக்கிறது. இங்கு சுந்தரராஜுவுக்கு எதைப்பார்த்தாலும் பயமாக இருந்தது. போக்குவரத்து நெறிசலில் அவனுடைய பழைய டாட்சன் கார் மூச்சுத் திணறுகிறது. எப்போது ரேடியேட்டர் வெடித்துச் சிதறப்போகிறதோ என்ற கவலையாக இருக்கிறது. சாலையில் மோட்டாரோட்டிகள் அவன் பக்கம் திரும்புவதே இல்லை. முன்னால் நோக்கியபடி விறைத்துப் போயிருக்கிறார்கள். திரும்பிப் பார்த்தாலும் முறைப்பது தவிர புன்னகைப்பதில்லை.
குவால லும்பூர் சிலாங்கூர் மேன்சன் அலுவலகத்துக்கு வந்த அன்றே மேலாளர் அவனைத் தன் அறைக்குக் கூப்பிட்டார். அறிமுகப் படுத்திக் கொள்ளும் ஆவலோடு உள்ளே போனவனை அவர் உட்காரக் கூடச் சொல்லவில்லை. "தோ பாருங்க சுந்தர்ராஜ். நான் சுத்தி வளைச்சிப் பேச விரும்பல. வியாபாரம் ரொம்ப தட்டையாய்ப் போச்சி. அதுக்கு காரணம் நாம் மார்கெட்டிங்கில காட்ர தீவிரம் போதாது. முதலாளி ஆள்களைக் குறைச்சி செலவைக் குறைக்கணும்னு சொல்லிட்டாரு. ஆனா நாந்தான் அவரைத் தடுத்து வச்சிருக்கேன். இன்னும் ஆறு மாசத்தில சரக்குகள் விற்பனைய 50% அதிகரிச்சிக் காட்றேன்னு அவருக்கு உறுதி குடுத்திருக்கேன். ஆகவே எனக்கு எந்த சமாதானமும் சொல்லாம சரக்குகள் விற்பனைய அதிகப் படுத்திற வழிய நீங்கள் பாக்கணும்.
"கிள்ளான்ல புதிய ரிடெய்ல் கடைகள் அதிகமா இருக்கு. எல்லாக் கடைக்கும் போங்க. நல்லாப் பேசுங்க. நம்ப சரக்கோட நன்மைய எடுத்துச் சொல்லுங்க. பத்துப் பெட்டி கொடுக்கிற எடத்தில 15 பெட்டி கொடுக்கிற மாதிரி பாருங்க. நீங்களே கொஞ்ச நேரம் கடையில நின்னு வர்ர வாடிக்கையாளர்கிட்ட பேசி விக்கப் பாருங்க. அப்பதான் வியாபாரம் வளரும். கடைப் பையங்ககிட்டயும் பேசி நம்ம சரக்க முன்னுக்குத் தள்ளச் சொல்லுங்க. எல்லாம் உங்க பொருப்பு. இங்க உள்ள எவனும் சரியா வேலை செய்றதில்ல. சொன்னாலும் மாடு மாதிரி நிக்கிறாங்க. அதுக்காகத்தான் புது ஆள் வேணுமின்னு உங்களைத் தருவிச்சிருக்கேன். உங்க வேலையோட தெரவிசப் பாக்கணும். பாத்தபிறகுதான் சம்பள உயர்வு. அதுவரைக்கும் உங்களுக்குப் பினாங்கில குடுத்த சம்பளம்தான். ஆனா விற்பனை உயர்வைக் காட்டினிங்கன்னா நீங்க வானத்து அளவுக்கு உயரலாம். எங்களோட சேர்ந்து நீங்கள் வளரலாம். ஆனா உங்கள் முயற்சியின்மையினால வியாபாரம் கொறைஞ்சா இது மூழ்கிற படகாயிடும். கனத்தைக் குறைக்கிறதுக்கு கடல்ல தூக்கியெறியப் படக்கூடிய முதல் ஆளும் நீங்கதான். சரியா? உங்கள நான் கவனிச்சிக்கிட்டே இருப்பேன்."
ஆசாமி பல ஊக்குவிப்பு கருத்தரங்கங்களுக்குப் போய்வந்த ஆளாக இருக்க வேண்டும். ஒரு மனிதனிடம் பேசுகிறோமே என்ற எண்ணம் சிறிதும் இன்றி வியாபார வெற்றியையே முதன்மைப்படுத்தும் பேச்சாக அது இருந்தது.
மணியத்திடம் தொலைபேசியில் பேசும்போது இதைச் சொன்னான். "உங்க மேலாளர் ரொம்பத் திறமையானவர் ராசு! வியாபாரத்துக்கு ஏற்ற குணங்கள் உள்ள மனிதர். அரம் போல கூர்மையான புத்தியுள்ள மனிதர்" என்றான் மணியம்.
"என்ன மணியம்! நான் என்னோட கவலைகளைச் சொன்னா நீ அவரைப் புகழ ஆரம்பிச்சிட்டியே!"
"நான் என்ன புகழ்றது? வள்ளுவரே புகழ்ந்திருக்காரு! தேடிப்பாரேன்!"
அன்று இரவு தேடிப் பார்த்தான். பினாங்கிலிருந்து சுமந்து வந்த புத்தகங்கள் கொஞ்சம்தான் என்றாலும் அதில் ஒரு திருக்குறள் இருந்தது. "மரம் போலும் மக்கட் பண்பில்லாதவர்" என்று பார்த்துத் தன் மன நிலையை அப்படியே வள்ளுவர் பிரதிபலித்திருப்பதைக் கண்டபோது மனசுக்கு ரொம்பவும் ஆறுதலாக இருந்தது.
இப்படித்தான் மணியம். எப்போதும் ஒரு இலக்கிய வாக்கு அவன் நுனிநாவில் நிற்கும். இப்போதே போய் மணியத்திடம் பேச வேண்டும் போல் ஒரு ஆசை எழுந்தது.
"என்ன அப்படியே உக்கார்ந்திட்டிங்க? போய் பாத்திருங்க! இல்லன்னா நாந்தான் சொல்லலன்னு என் மேல பாய்வாங்க!" என்று மலர் உசுப்பினாள். எழுந்து உள்ளே போனான்.
*** *** ***
"கிள்ளான்ல சரக்கு ஆறு டஜன் கேட்டிருந்தாங்களாமில்ல, ஏன் நேத்து கொண்டி குடுக்கல?"
முகத்தில் முட்டையை உடைத்து ஊத்தினால் பொரிந்துவிடும் சூடு இருந்தது.
"டெலிவரிக்குப் போன வேன் வரல! ரிப்பேர் ஆயிடிச்சின்னு சொல்லிட்டாங்க!"
"அத நேத்தே சொல்றதுக்கு என்ன?"
"வேன் வந்திரும் வந்திரும்னு காத்துக்கிட்டே இருந்தேன். அதுக்குள்ள நீங்களும் வீட்டுக்குக் கிளம்பிட்டிங்க. ராத்திரி எட்டு மணி வரைக்கும் எனக்குத் தகவல் தெரியில!"
"வேன் இல்லைன்னா நீ உன் கார்ல போய் கொடுத்திருக்கக் கூடாதா? அப்புறம் என்ன மசிருக்கு கார் வச்சிருக்கிறது? இப்படி இருந்தா வியாபாரம் எப்படி உருப்பிட்றது? நாமெல்லாம் எங்கிருந்து மசிரு சம்பளம் எடுத்துக்கிறது?"
"நீங்கள்" என்ற மரியாதை கொஞ்ச நாளைக்கு முன்னாலேயே போய்விட்டது. ஆனால் இன்றைக்குத்தான் மசிர் புதிதாக முளைத்திருக்கிறது. சென்ற சில வாரங்களாகவே சிலவற்றைப் பிடுங்குவதும் சிலவற்றை முளைய வைப்பதுமாகத்தான் இருக்கிறார். சொல்ல ஏதும் இல்லாததால் மௌனமாக இருந்தான்.
"இப்பவே ஒரு ஆறு டஜன் எடுத்துக் கார்ல போட்டு கிள்ளான்ல போய் டெலிவெரி குடுத்துட்டு வா. வேன் டிரைவர் வந்ததும் நான் பாத்துக்கிறேன்!"
தலை நிமிர்ந்து குழப்பத்துடன் பார்த்தான். "இன்னைக்கு ரெண்டு மூணு கிளையன்ட் வர்ரதாகச் சொல்லியிருக்காங்க ... காலையில!"
"எல்லாம் நான் பாத்துக்கிறேன் போ! இங்க வியாபாரம் போற போக்கில என்ன புது கிளையன்ட் வர்ரது கேட்டுப் போவுது! போய் இருக்கிற வாடிக்கக்காரனக் காப்பாத்திற வழியப் பாரு!"
தலை குனிந்து வெளியே வந்தான். தலை விண் விண் என வலிக்கத் தொடங்கியிருந்தது. "டெலிவெரி என் வேலையில்லை!" என்று சொல்லியிருக்கலாம். அதைவிட கிள்ளானுக்கு அவன் காரோட்டிப் போனதேயில்லை. வேனில் ஒருமுறை போய் வந்திருக்கிறான். சரியாக வழி தெரியாது. ஆனால் இதெல்லாம் சொன்னால் ஏற்கனவே உடைபடும் மரியாதை மேலும் தூளாகும் எனத் தெரிந்தது.
"என்ன சொன்னாரு?" என்று கேட்டாள் மலர். அறைக்குள் பேசுவது எல்லாம் வெளியே கேட்கும். இருந்தாலும் இன்னொரு முறை அவன் வாயால் கேட்டு மகிழ வேண்டும் என்று நினைத்திருப்பாள். அவள் கொடூரம் விரும்பி. அவள் ரகசியமாக வீடியோ டேப்பில் பார்த்த பெண்ணை நிர்வாணமாக்கி ரம்பம் போட்டு அறுக்கும் கதைகளை அவனிடம் சொல்லி மகிழ்ந்திருக்கிறாள்.
"ஆறு டஜன் சரக்கு எடுத்து வைங்க மலர்! கிள்ளானுக்குக் கொண்டு போகணும்!"
"யாரு நீங்களா? ஏன்? டெலிவரி வேன் என்ன ஆச்சு?"
மேலும் கதை பிடுங்கினாள். "எடுத்து வைங்க மலர்! உடனே போகணும்!"
*** *** ***
ஆறு டஜன் புட்டிகள் அடங்கிய பெரிய அட்டைப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு லிஃப்டைப் பிடித்து இறங்கி காரை நிறுத்தி வைத்திருந்த இடம் நோக்கி நடந்தான். குவாலா லும்பூரின் உஷ்ணம் தகிக்கத் தொடங்கியிருந்தது. பல்லாயிரம் கார்களும் மோட்டார் சைக்கிள்களும் பஸ்களும் லோரிகளும் இந்த பட்டணத்துக்குச் சூடேற்றிக்கொண்டிருந்தன. மனிதர்கள் வெந்துகொண்டிருந்தார்கள். கைக்குட்டையை எடுத்து முகம் துடைக்கலாம் என்றால் இரண்டு கைகளும் அட்டைப் பெட்டியைத் தாங்கிக்கொண்டிருந்தன. தொப்புளுக்கும் பெட்டிக்கும் இடையில் டை கசங்கியது.
விடாமல் ஊர்ந்து கொண்டிருக்கும் கார்கள் வரிசைக்குள் இடைவெளி கண்டுபிடித்து பெருநடைப் போட்டி வீரனைப் போல நடந்து அவனுடைய காரை அடைந்த போது பன்டார்ராயா போக்குவரத்துக் காவலர் ஒரு சம்மன் எழுதி வைத்துவிட்டு அப்போதுதான் அப்பால் நடந்து கொண்டிருந்தார். போச்சு! இது ஐம்பது வெள்ளியா எழுபது வெள்ளியா தெரியவில்லை. இங்கே கொடுக்கிற எழுநூறு வெள்ளிச் சம்பளத்தில் இருநூற்று ஐம்பது வெள்ளி வாடகைக்குக் கொடுத்துவிட்டுச் சாப்பிடவும் அம்மாவுக்குக் காசு அனுப்பவும்தான் சரியாக இருக்கிறது. சினிமா கூட பார்க்க மனம் வருவதில்லை. போன வாரம் புத்தகக் கடைக்குப் போய் சில புதுக்கவிதைப் புத்தகங்களைக் காசு கொடுத்து வாங்கியது ஒன்றுதான் அவனுடைய உல்லாசச் செலவு.
இங்கு வேலைக்கு இருக்கும் பலபேர் கடையிலேயே தங்கிக் கொள்கிறார்கள். தான் வேலை பார்க்கும் கடையில் தங்கிக் கொள்ள இடம் தந்தார்கள். ஆனால் அங்கு ஏற்கனவே டிரைவரும் இரண்டு டெலிவெரி பையன்களுமாக மூன்று பேர் தங்கியிருக்கிறார்கள். காலைச் சடங்குகளுக்கு பொதுக் குளியலறையை நாட வேண்டும். எங்கும் எப்போதும் தனிமை கிடைக்காது. சக வேலைக்காரர்களுக்கு என்னாளும் ஊர்க்கதை பேசிக்கொண்டே இருக்க வேண்டும். ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்க விடமாட்டார்கள்.
புத்தகம் படிக்காமல் ஒரு வாழ்வா? பாரதி, பாரதிதாசன், புதுமைப்பித்தன், வைரமுத்து, மேத்தா, அப்துல் ரகுமான், வண்ணதாசன், அண்மையில் வெளிவந்த மலாயாத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் புதுக்கவிதைத் தொகுப்புகள், மலாயாப் பல்கலைக்கழகப் பேரவைக்கதைகள், சிவாவின் "வீடும் விழுதுகளும்", பீர் முகம்மதுவின் "மண்ணும் மனிதர்களும்," மா. இராமையாவின் "அமாவாசை நிலவு" இளவழகுவின் "மீட்சி" ரெ.கா.வின் "மனசுக்குள்" எல்லாவற்றிலும் படித்து முடிக்காத பகுதிகளும் திரும்பப் படிக்க வேண்டிய பகுதிகளும் ஏராளமாக இருந்தன. இதற்காகத்தான் தூரமாக இருந்தாலும் பழைய கிள்ளான் சாலையில் இருநூற்று ஐம்பது வெள்ளியில் தனியறை தேடிக்கொண்டது. ஆனால் அங்கேயும் வீட்டுக்காரர் ஒரே ஒரு நாற்பது வாட் பல்புதான் போட்டிருந்தார். இருட்டில் கண்ணைச் சுருக்கிக் கொண்டு படிக்க வேண்டி இருக்கிறது.
சாவியைப் போட்டு கதவைத் திறந்து அட்டைப் பெட்டியை தனது சீட்டுக்குப் பக்கத்தில் போட்டான். வைப்பரில் செருகி வைக்கப்பட்டிருந்த அபராதக் கடிதத்தை ஆத்திரத்துடன் பிய்த்து எடுத்தான். பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டு காரை ஸ்டார்ட் செய்து ஓட்டப் போகும் நேரத்தில் ஒரு லோரி வந்து அடைத்துக் கொண்டு நின்றது. டிரைவர் இறங்கி ஏதோ சாமானை இறக்கினான்.
ஹோர்னை அடித்து அவனை கிளப்பச் சொல்லலாமா என நினைத்து வேண்டாம் என்ற முடிவு செய்தான். ஹோர்னை அடிப்பதை பலர் தங்களை அவமானப் படுத்துவதாக எடுத்துக் கொள்வார்கள். "நீ பெரிய இவனா?" என்பது போல முறைத்துப் பார்ப்பார்கள். "நிறுத்தக் கூடாத இடத்தில் நிறுத்தி விட்டுப் பெரிய கேள்வியா?" என்று வாதம் செய்வார்கள். வாதம் முற்றினால்... சில பேர் வண்டிக்குள் மண்வெட்டிக் கணைகளை வைத்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறான். அமைதியாகக் காத்திருந்து போவதே நல்லது என உட்கார்ந்து விட்டான்.
இயலாமையும் எரிச்சலும் ஏமாற்றங்களும் நிறைந்த அந்தக் காத்திருக்கும் கணத்தில்தான் பளீரென அந்த எண்ணம் வந்தது. இந்த வேலையையும் இந்த சனியன் பிடித்த நகரையும் விட்டுவிட்டு பினாங்குக்கே போய்விட்டால் என்ன? இந்த வருடம் ஆசிரியர் பயிற்சிக்கு மனுப்போட்டாலும் கிடைக்கும். பயிற்சிக்காலத்தை முடித்துக் கொண்டு எங்காவது அவர்கள் கொடுக்கும் போஸ்டிங்கை ஏற்றுக்கொண்டு - அது ஒரு பொட்டைக்காடாக இருந்தாலும் நல்லதுதான் - போய் அமைதியாக இருந்துவிடலாம். வேலையைப் பார்க்கலாம். இலக்கியம் படிப்பதற்கு யாரும் தடையாக இருக்க மாட்டார்கள். யார் கண்டார்கள்? மணியம் வேலை பார்க்கும் பள்ளிக்கூடத்திலேயே வேலை கிடைத்தாலும் கிடைக்கும். அந்த நினைவே ஆனந்தமாக இருந்தது.
ஆனால் அது ஒரு பெரிய அவமானம் என்றும் தோன்றியது. இங்கு நான் வர்த்தக உலகத்தில் வெல்ல வந்தேன். இந்த ஒரு முசுடு மேனஜருக்காக எல்லாவற்றையும் விட்டு ஓடுவது என்பது வெட்கக்கேடு. ஊர் சிரிக்கும். ஊர் என்றால் யார்? உறவினர்கள்தான். அம்மாவும் அக்காவும்தான். அவர்கள் சிரிப்பை நினைக்க பயமாகத்தான் இருக்கிறது. அவர்கள் சிரிப்பு ஊர் முழுதும் திரண்டு சிரிப்பது மாதிரிதான். மணியம் சிரிப்பானோ? அடுத்த முறை அவனைப் பார்க்கும்போது கேட்க வேண்டும் என நினைத்துக் கொண்டான்.
லோரிக்காரன் நகர்ந்தான். இவனை ஒரு ஏளனப் பார்வை பார்த்துவிட்டுப் போனான். இங்கும்தான் எல்லோரும் சிரிக்கிறார்கள். மானேஜர் வாய் நாறத் திட்டிவிட்டு அவன் திரும்பியதும் அவனுடைய பயங்கொள்ளி முகத்தைப் பார்த்துச் சிரிக்கிறார். அவன் அறைக்குள் திட்டு வாங்கும்போது மலர் வெளியிலிருந்தவாறு எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு சிரிக்கிறாள். நான் இந்த நகரில் நடக்கும்போதும் ஒட்டுக்கடைகளில் சாப்பிடும்போதும் வீட்டுக்குள் நுழையும்போதும் எல்லோரின் உதடுகளிலும் ஏளனச்சிரிப்பு இருக்கிறது. நான் இந்த பட்டினத்திற்குப் பொருத்தமானவனில்லை எனபது போல! இவன் ஏன் இங்கு வந்தான் என்பது போல!
மீண்டும் எப்படியாவது இந்த இடத்தை விட்டுத் தொலைந்து பினாங்குக்குப் போய்விடவேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக எழுந்து அடங்கியது.
காரைக் கிளப்பி வெளியேறியபோது எந்தப் பக்கமாகப் போனால் கிள்ளானுக்குப் போகும் சாலையில் போய்ச் சேரலாம் என்பது சரியாகத் தெரியவில்லை. ஜாலான் பூனுசைக் கடந்து சாட்டர்ட் பேங்கின் பக்கமாக கிள்ளான் ஆற்றின் மீது போகும் சிறிய பாலத்தில் ஏறி வந்தவுடன் அம்பாங் சாலையில் இருக்கக் கண்டான். அப்புறம்?
நின்று யோசிக்க முடியாது. பின்னால் கார்கள் ஓநாய்களாகத் துரத்திக் கொண்டிருந்தன. அவற்றை ஓட்டும் ஒவ்வொருவரின் முகத்திலும் உள்ள கண்கள் தீப்பிழம்புகளாகத் தெரிந்தன. காரை ஓட்டிக்கொண்டேதான் யோசிக்க வேண்டும்.
இந்த நகரில் சாலைகள் ஒரு ராட்சதக் கணவாயின் கால்களைப் போல எல்லாத் திசைகளிலும் ஓடுகின்றன. சுற்றுகின்றன. ஒன்றை ஒன்று பின்னிக் கொண்டிருக்கின்றன. மேடான் அது,லொரொங் இது, திங்காட், லெபோ. சுற்றிச் சுற்றி வந்தான். ஒரு லேனிலிருந்து இன்னொரு லேனுக்குப் போக முடியவில்லை. யாரும் இடம் தரவில்லை. முயன்றபோது ஒரு லோரியிலிருந்து ஒரு காட்டுப்பூனை சீறியது. முடியாமல் அதே லேனில் நேராகப் போனான்.
அரை மணி நேரத்துக்குப் பின் பெட்டாலிங் ஜயா என்ற அம்புக்குறி பார்த்து திரும்பினான். பி.ஜே. போய்விட்டால் அங்கிருந்து கிள்ளான் போய்விடலாம். எப்படியோ ஜாலான் கூச்சிங் வந்தது. போக்குவரத்து சமிக்ஞை விளக்கில் நின்றான். எந்த லேன் சரியான லேன் எனத் தெரியவில்லை. இரண்டு வேன்களுக்கு மத்தியில் தான் நின்றிருந்த லேனில் வேறு பக்கம் திரும்ப முடியாமல் தொடர்ந்த போது ஜாலான் பார்லிமென்டில் இருந்தான். ஜாலான் துன் பேராக் வந்த போது திரும்ப நகருக்குள் நுழைவதாகத் தெரிந்தது.
இது எப்படி? மீண்டும் ஜாலான் அம்பாங்கை நோக்கியா? புடுவை நோக்கியா? இப்படியே போய்..? தயங்கிய போது பின்னால் ஒரு சிங்கம் - சிங்கமாகத்தான் இருக்க வேண்டும் - "ப்ரோங்" என்று கர்ஜித்தது. ஒடுங்கிப் போனான்.
போ, போ, போய்க்கொண்டே இரு. நிற்காதே... எதாகிலும் ஒரு திக்கில்... திக்கு முக்கியம் அல்ல. ஊர்தல் நகருதல் முக்கியம். நகர்ந்து கொண்டே இரு.
வெய்யில் ஏறிக் கொண்டிருந்தது. காரில் பொருத்தியிருந்த குளிர் சாதனக் கருவி புராதனமானது. இந்த வெயிலில் அதற்கும் சூடேறிவிட்டிருந்தது. புடுவில் மாபெரும் சாலை வட்டம் வந்தது. இதைச் சுற்ற வேண்டும். இது தலை நகர அசுரனின் கோயில் கருவறை. இதை வலம் வர வேண்டும். ஆனால் இங்கு பல கோர தேவதைகளும் சுற்றுகின்றன. இவற்றினிடையே பயபக்தியாக இவற்றின் பிருஷ்டங்களுக்கிடையே முகம் நுழைத்து வணங்கி, பல்லிளித்து, சுற்றி தன் வழியைப் பிடிக்க வேண்டும்.
எல்லாக் கோர தேவதைகளும் சிரிக்கிறார்கள். அடேடே யாரிவன் கத்துக்குட்டி! யார் இவனை இந்தப் பெரு நகருக்குள் விட்டார்கள்? ஹா ஹா ஹா இவன் அசைவதைப் பார்! நடுங்குவதைப் பார்! ஹே ஹே ஹே! புடு ராயா பஸ் நிலையம் முழுவதும் அவர்கள் கோரச் சிரிப்பு எதிரொலித்தது.
கிள்ளான் பஸ் நிலையம். புகுந்தால் ஜாலான் துன் எச்.எஸ்.லீ. அங்கு பழைய ஹை ஸ்த்ரீட் மகா மாரியம்மன் சிரித்துக் கொண்டிருந்தாள்.
சுற்றிக் கொண்டே இருந்தான். எப்படியோ, எந்தத் தெய்வமோ, வழி விட்டது. மாரியம்மனாகத்தான் இருக்க வேண்டும். மெர்டேக்கா வட்டம். விஸ்மா துன் சம்பந்தன். ஜாலான் சையட் புத்ராவில் இருந்தான். இனி நேராகப் போனால் பி.ஜே. போகலாம். ஓரத்து லேனில் இருந்தான். பக்கத்தில் மிருகங்கள் சீறிப் போகின்றன. பின்னால் ஒரு கரிய யானை "ஏன் இவ்வளவு மெதுவாகப் போகிறாய்?" எனப் பிளிறித் துரத்தியது.
ஏன் இவைகளோடு தன் வாழ வேண்டும்? ஏன் இவைகளோடு நான் போராட வேண்டும்? பினாங்கு போய்விட வேண்டும் எப்படியும் பிழைக்கலாம். மணியத்தின் பக்கத்தில் நிம்மதியாக இருக்கலாம். போகத்தான் வேண்டும். இந்த கிள்ளான் வேலை முடிந்ததும். இந்தா உன் வேலையை நீயே வைத்துக்கொள். வானொலியிலும் பத்திரிக்கைகளிலும் பொய்யும் புரட்டும் சொல்லி உன் வியாபாரத்தை நடத்திக் கொள். உன்னிடம் வேலை செய்யும் ஏஜண்டுகளை பயனீட்டாளர்கள்போல் நடிக்க வைத்து ஏமாற்றிக் கொள். கூந்தலில் தைலம் தடவுவதால் சொரி, சிரங்கு, காசநோய், புற்றுநோய் அனைத்தும் நீங்கும் எனச் சொல்லிக் கொள். காசுக்காக எல்லாம் செய்யலாம். "பொருளில்லார்க்கிவ்வுலகம் இல்லை" அந்த அரைக்குறள் உங்களுக்கெல்லாம் போதும்.
"ஃப்ரீக் ஃப்ரீக்.. ஃப்ரீக் ஃப்ரீக்.." கைத்தொலை பேசி அலறியது.
கார் ஓட்டும்போது பேசலாமா? போலிஸ்காரன் இருந்தால் பிடித்துக் கொள்வானே. காலையில் வாங்கிய ஒரு சம்மன் போதாதா?
"ஃப்ரீக் ஃப்ரீக்.. ஃப்ரீக் ஃப்ரீக்.."விடாமல் அலறியது. மானேஜர் கூப்பிடுகிறானா? கூப்பிட்டு மீண்டும் மயிர் மட்டை என்று திட்டப்போகிறானா?
"ஃப்ரீக் ஃப்ரீக்.. ஃப்ரீக் ஃப்ரீக்.." அம்மா கூப்பிடுகிறாரோ? எதாகிலும் அவசரமாக இருக்குமா?
எடுத்துக் காதில் வைத்து "ஹலோ" என்றான்.
"ஹலோ, அங்க யாரு சுந்தரராசா பேசிறது?"
யாரோ புதிய குரல். "ஆமாங்க. யாரு பேசிறிங்க?"
ஸ்டியரிங் ஆடியது. வேகத்தைக் குறைத்தான். பின்னால் சில கழுதைகள் அலறின. ஓர் ஒரமாக நிறுத்தினான்.
"இங்க மணியம் வீட்டில இருந்து பேசிறோம்"
"மணியமா? எந்த மணியம்"
"அதான் வாத்தியாரு. ஒங்க நண்பர்"
"ஆமா, மணியம்!"
"அவரு நேத்து ஒரு ஆக்சிடன்டில தவறிட்டாருங்க!"
புரியவில்லை. "தவறிட்டாருன்னா...?"
"செத்திட்டாருங்க. தலை நசுங்கிடிச்சி!"
"எப்படி? என்ன சொல்றிங்க..."
"இன்னைக்கு மூணு மணிக்கு அடக்கம் பண்றாங்க!"
ஒன்றும் பேசத் தெரியவில்லை. தொலைபேசியைப் பிடித்திருந்த கை நடுங்கியது.
"ஹலோ... கேக்குதுங்குளா? ஹலோ! ஹலோ!... இந்தச் சனியன் ஹென்ட் ஃபோன் எப்பவும்
இப்பிடித்தான். ஹலோ!"
"கேக்குது. நேத்தே ஏன் சொல்லல?"
"அது எனக்குத் தெரியாதுங்க! சொந்தக்காரங்களுக்கெல்லாம் சொல்லியாச்சி. இப்பத்தான் அவுங்க அம்மா உங்க நம்பர் குடுத்து பேசச் சொன்னாங்க. சரியா மூணு மணிக்கு! "
"நீங்க யாரு? மணியம் அம்மா எங்க?"
"சொந்தக்காரங்க! அவங்க உடைஞ்சு போய்க் கிடக்கிறாங்க. மூணு மணிக்கு. வச்சிட்றன்!"
"மூணு மணி" மட்டும் காதில் திரும்பத் திரும்ப ஒலித்தது. இப்போ மணி என்ன? பதினொன்றரை. மூன்று மணிக்குப் பினாங்கு போய்ச் சேர முடியுமா?
போக வேண்டும். போகதான் வேண்டும். போகாமல் எப்படி? என்ன சொன்னார்கள்?
"செத்திட்டாருங்க. தலை நசுங்கிடிச்சி!"
நிறுத்தியிருந்த இடத்திலிருந்து காரை எடுக்க முடியவில்லை. கைகாலெல்லாம் நடுங்கிற்று. புலிகள், சிறுத்தைகள், சிங்கங்கள், யானைகள், ஒட்டகங்கள், காண்டாமிருகங்கள் அவனைப் பார்த்துச் சீறிவிட்டுத் தொடர்ந்து ஓடின. அவற்றுக்கு அவசரம். எங்கோ பெரிய வேட்டைகள் காத்துக் கொண்டிருக்கின்றன. இவன் சிறிய எலி. சீச்சீ குறுக்கே வராதே. உனக்கு இங்கென்ன வேலை?
ஆனால் நான் போகத்தான் வேண்டும். இங்கேயே நின்று கொண்டிருந்தால் கேசாபிவிருத்தி மூலிகைத் தைலத்தை யார் கிள்ளான் கொண்டு சேர்ப்பார்கள்? எத்தனை பேர் இதை எதிர் பார்த்துச் சொரி சிறங்குகளுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்!
நான் போகலாம். நான் நினைத்தால் என் வாகனம் பறக்கும். நான் நினைத்தால் இதே வியாபார உலகத்தில் புகுந்து நுழைந்து தில்லுமுல்லுகள் செய்து ஆயிரம் ஆயிரமாய்ச் சம்பாதிக்க முடியும்.
யார் என்னைத் தடுப்பவர்கள்? இந்தத் திமிர் பிடித்த மானேஜரும் இந்த மலர் என்ற அரைகுறையாகப் படித்த விற்பனைப் பெண்ணும் என்னைப் பார்த்து சிரிக்கிறார்களா? என்னை யார் என்று நினைத்தீர்கள்? என்னால் முடியும். என்னால் பறக்க முடியும்.
நான் யார்? நான்தான் பாரதியார் சொன்ன அக்கினிக் குஞ்சு. எரிபவனும் நான்தான். எரிப்பவனும் நான்தான். எரியும் குஞ்சில் எந்தக் குஞ்சு சின்னக் குஞ்சு?
காரை வேகமாகச் சாலையை நோக்கித் திருப்பினான். புலிகளும் சிங்கங்களும் மருண்டு சிதறி ஓடின. காலைத் தரையில் ஊன்ற முனைந்து சருக்கிக் கொண்டு ஓடிச் சாலைத் தடுப்பில் முட்டிச் சிதறின. முகங்களும் பிருஷ்டங்களும் ஒன்றோடு ஒன்று முட்டி நசுங்குவது வேடிக்கையாக இருந்தது. கேசாபிவிருத்தி மூலிகைத் தைலம் சாலையில் ஊற்றித் தீப்பிடித்து எரிந்தது.
இப்போது சிரித்தான். இப்போது தெரிகிறதா நான் யாரென்று?
"வந்திட்டியா ராசு! என்ன இப்படி பண்ணிட்ட?" என்றான் மணியம்.
(முடிந்தது)
(இந்தக் கதை மலேசிய வார இதழான "மக்கள் ஓசை"-இல் டிசம்பர் 2001-இல் பிரசுரமானது)
ரெ.கார்த்திகேசு Ph.D., மலேசியா, பினாங்கைச் சேர்ந்தவர். பொதுமக்கள் தகவல் சாதனத் துறையில் (mass communication) பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். மலேசிய வானொலி, தொலைக்காட்சியின் முன்னாள் அலுவலர். மலேசியாவில் நன்கறியப்பட்ட சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், திறனாய்வாளர். அவரது மின்னஞ்சல் : <"kgesu@pd.jaring.my">kgesu@pd.jaring.my.
ரெ.கார்த்திகேசு சிறுகதைகள் 4
1. ஒரு சுமாரான கணவன்
-ரெ.கார்த்திகேசு-
அன்னம்மாள் விழித்து விழித்துப் பார்த்தாள். அந்த அதிகாலை நேரத்தில் தூரத்தில் அக்கரையில் இருந்து பார்க்கும் போது அது ஒரு மாய லோகமாகத் தெரிந்தது. தலை நிலத்தோடு தொப்புள் கொடியாக இருந்த அந்த நீண்ட பினாங்குப் பாலத்தை அடைந்த போதே அவளுடைய உற்சாகம் கரை புரள ஆரம்பித்து விட்டது. இத்தனை பெரிய பாலம், இத்தனை பெரிய கடல் அவள் பார்த்ததே இல்லை. கப்பல்களும் படகுகளும் பறவைகளுமாக கடல் உயிர்ப்பாக சிலுசிலுப்பாக இருந்தது. இத்தனை மலைகளோடு இத்தனை நீலம் நீலமாய் ஒரு தீவு இருக்குமா!
வேனில் கணவன் தியாகு அவள் தோளைத் தழுவியபடி பக்கத்தில் இருந்தான். இப்போதுதான் கல்யாணம் பண்ணிக்கொண்ட களை இருவர் முகத்திலும் இருந்தது. இரண்டு மூன்று இரவுகள் உபசரிப்பிலும் சரசத்திலும் சரியாகத் தூக்கமில்லாமல் கழிந்த களைப்பும் கூடவே இருந்தது.
"ரொம்ப அளகா இருக்கு உங்க ஊரு" என்றாள்.
"பாத்தியா, பாத்தவொண்ணயே புடிச்சிப் போச்சி தங்கச்சிக்கு?" என்று சிரித்தான் வேனை ஓட்டிக்கொண்டிருந்த குழந்தை. பேர்தான் குழந்தை. ஆள் தொந்தியும் தொப்பையுமாய் கடோ த்கஜன் மாதிரி இருப்பான். தியாகுவுக்கு ரொம்ப நெருக்கமான கூட்டாளி.
இந்தக் குழந்தையினால்தான் நேற்றே பினாங்குக்கு வந்து புதிய வீட்டில் குடிபுக வேண்டியவர்கள் ஒரு நாள் தாமதமாக வருகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை அவனும் அவன் நண்பர்களும் கொடுத்த கல்யாண விருந்தைச் சாப்பிட்டுவிட்டுத்தான் குவாலா லும்பூரை விட்டுப் போக வேண்டும் என அவன் அடம் பிடித்து விட்டான்.
"ஐயோ, திங்கக் கிளம காலையில நான் பினாங்கில லோரி எடுக்கணும் கொளந்த! ஞாயித்துக்கிளமைக்கு நான் காடி வேற ஏற்பாடு பண்ணிட்டேன். அன்னம்மாவ வீட்டில கொண்டி உட்டுட்டு எல்லாம் காட்டிட்டு இருக்க வச்சிட்டு நான் புறப்படணுமே! அதுக்கு ஊரும் புதிசு, ஊடும் புதிசு" என்றான் தியாகு.
"காடி கெடக்குது தியாகு. ஒங்க ரெண்டு பேரயும் என்னொட வேன்லயே கொண்டி கரக்டா உட்டர்ரேன். ஞாயத்துக்கிளம விருந்து முடிஞ்சவொண்ண பத்து மணி போல உட்டம்னா கால ஒரு மணிக்கெல்லாம் போயிடலாமே" என்றான் குழந்தை.
தியாகு நண்பர்களைத் தட்டிக்கழிக்க முடியாதவனாக இருந்தான். கண்ணால் அவளிடம் அனுமதி கேட்டான். அவள் சரியென்பதுபோலச் சிரித்து விட்டாள். அதுதான் தப்பாகப் போனது.
விருந்து கோலாகலமாகத்தான் நடந்தது. ஆனால் தண்ணீர் ஏராளமாகப் புரண்டது. ஒரு மணி வரைக்கும் கூத்தும் கேலியுமாகப் போனது. ஒன்றரை மணிக்குத்தான் விட்டார்கள். இப்போது பினாங்கு வந்து சேர மணி காலை 5. முதலில் தியாகுதான் வேனைப் பேய் போல ஓட்டி வந்தான். இரண்டு முறை தூங்கி விழுந்து வேன் வளைந்து வளைந்து போக அவள் வற்புறுத்த தைப்பிங் வந்தபோதுதான் குழந்தையிடம் கொடுத்தான்.
அன்னம்மாவுக்குக் கலவரமாக இருந்தது. தன்னைக் கொண்டு போய் தான் இந்தப் புதிய ஊரில் தான் இன்னமும் பார்த்திராத அந்த அடுக்கு மாடி வீட்டில் விட்டுவிட்டுத் தியாகு உடனே கிளம்பிவிடப் போகிறான். ஒரு போக்குவரத்து நிறுவனத்தில் அவனுக்கு டிரைவர் வேலை. அவனுக்கு ஒரு வாரம் கல்யாணத்திற்காக லீவு கொடுத்திருந்த அவன் சீன முதலாளி, திங்கள் கிழமை கண்டிப்பாக வந்துவிட வேண்டும் என்று சொல்லி வைத்திருந்தார். காலையிலேயே முக்கியமான டிரிப் இருக்கிறதென்று முதலிலேயே சொல்லி எச்சரித்து வைத்திருந்தான் தியாகு. "வெளியூர் டிரிப். ஈப்போ வரிக்கும் போய் திரும்புனும். ராத்திரிக்குத்தான் திரும்ப முடியும். மொதலாளி மொரடன் அன்னம்மா. கண்டிப்பா போயிடணும்."
ஆயர் ஈத்தாம் பகுதியில் நெருப்புப் பெட்டிகளை நிறுத்தி வைத்திருந்தது போல அடுக்கு மாடி வீடுகள் நிறைந்திருந்த பகுதியில் ஒரு கடைசிக் கட்டிடத்திற்கு வழி சொல்லிக்கொண்டு வேனைக் கொண்டு நிறுத்தச் செய்தான் தியாகு.
அந்த அதிகாலை நேரத்தில் அந்தக் கட்டிடத்தைச் சுற்றி சீனர் உணவுக்கடைகள் சுறுசுறுப்பாக வியாபாரம் தொடங்கியிருந்தன. மீயும் பீஹூனும் பன்றிக் கொழுப்பில் பொறியும் வாசனை மிதந்து வந்து கொண்டிருந்தது. இரும்புச் சட்டிகளில் சட்டுவங்கள் படார் படார் என்று தட்டப்படும் ஒசைகள் கேட்டன. கும்பல் கும்பலாகச் சீனர்கள் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.
கட்டிட வாசலுக்குப் போகும் வழியெல்லாம் நிறையக் கார்களும் மோட்டார் சைக்கிள்களும் இடத்தை அடைத்துக் கொண்டிருந்தன. ஒருவகையாக நெறிசலுக்கிடையில் நுழை வாயிலில் கொண்டு நிறுத்தினான் குழந்தை.
இறங்கியவுடன் தியாகு அண்ணாந்து அவளுக்குக் காட்டினான். "அதோ பாரு. பத்தாவது மாடி. அந்த செவப்புத் துணி தொங்குது, அதுக்கு அடுத்தாப்பில!" அன்னம்மா கழுத்தை வளைத்து முடிந்தவரை பார்த்தாள். எது பத்தாவது மாடி என்று தெரியவில்லை. "இவ்வளோ ஒயரமா?" என்றாள்.
"பயப்படாத. ரெண்டு லிஃப்டு இருக்குது. ஒரு நிமிஷத்தில ஏறிடலாம்!" என்றான்.
இறங்கி விறுவிறுவென்று சாமான்களை இறக்கினார்கள். இரண்டு சூட் கேஸ்கள், படுக்கைக்கான சட்டங்களும் பலகைகளும்., ஒரு மெத்தை, பிளாஸ்டிக் சாமான்கள் அடங்கிய இரு கைப்பைகள், அன்னம்மாவின் அம்மா கொடுத்தனுப்பிய மிளகாய்த்தூள் ஊறுகாய் போத்தல்கள். எல்லாவற்றையும் கொண்டு போய் லிஃப்டுக்கு அருகில் வைத்தார்கள்.
தியாகு லிஃப்டின் பொத்தானை அழுத்தினான். விளக்கு எரியவில்லை. இரண்டு மூன்று முறை அழுத்தினான். ஊஹூம். அப்படியே எதிர்ப்பக்கம் போய் அடுத்த லிஃப்டின் பொத்தானை அழுத்தினான். இல்லை.
"அட, லிஃப்டு வேல செய்யிலியே!" என்றான்.
அன்னம்மா இரண்டு பைகளைக் கையில் பிடித்தவாறே நின்றாள். இரவு முழுக்கத் தூங்காத அலுப்பும் பிரயாணக் களைப்பும் அவள் கண்களில் தெரிந்தன. பக்கத்தில் இருந்த படிகளில் ஆட்கள் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தார்கள். லிஃப்டின் முன்னால் பிளாஸ்டிக் பைகள் இரைந்து கிடந்தன. ஒரு ஓரத்திலிருந்து மூத்திர வாசம் வந்துகொண்டிருந்தது.
"சரி அப்ப ஏறிட வேண்டியதுதான்!" என்றான் தியாகு.
"சாமாங்க?" என்று கேட்டான் குழந்தை.
"ஆளுக்கொண்ணா தூக்க வேண்டியதுதான்" என்றான்.
"பத்து மாடிக்கா?"
"வேற வழி இல்ல கொளந்த. லிஃப்டு வர்ரதுக்குக் காத்துக்கிட்டு இருக்க முடியாது. சாமாங்கள இங்க வச்சிட்டுப் போகவும் முடியாது. இந்தப் பக்கம் திருட்டு அதிகம். எவனாவது தூக்கிட்டுப் போயிடுவான். நான் மெத்தயத் தூக்கிக்கிறேன். நீ ஒரு சூட்கெச எடுத்துக்க. ஒரு ரெண்டு மாடி போய் அங்க வச்சிட்டு எறங்கி வந்து அடுத்த ஜாமானத் தூக்குவோம். அங்க வச்சிட்டு இன்னும் ரெண்டு மாடி. இப்படியே மாத்தி மாத்திக் கொண்டி சேத்திருவோம்."
குழந்தை கொஞ்சம் யோசித்து விட்டு "சரி" என்று ஒரு சூட்கேசைத் தூக்கித் தோள்மீது வைத்துக் கொண்டான்.
அன்னம்மாவைக் கொஞ்சம் பரிதாபத்தோடு பார்த்தான் தியாகு. "அன்னம்மா, நீ உன்னால முடிஞ்சத தூக்கிக்கிட்டு நேரா பத்தாவது மாடிக்குப் போய் அங்க நில்லு. நாங்க வந்து சேந்தர்ரோம்" என்றான்.
அன்னம்மா இரண்டு பைகளுடனும் படிக்கட்டை நெருங்கி ஏறத் தொடங்கினாள். சேலையின் அடிப்பாகம் காலில் சிக்கியது. ஒரு கையால் லேசாகத் தூக்கிக் கொண்டு ஒவ்வொரு படியாக ஏறினாள்.
மூன்றாவது மாடி ஏறுவதற்குள் அன்னம்மாவுக்கு இளைத்தது. வராந்தாவில் நின்று கொஞ்சம் வேடிக்கை பார்த்தாள். கீழே சீனர் ஒட்டுக் கடைகளிலிருந்து மீ பிரட்டும் புகை மண்டலம் எழுந்து கொண்டிருந்தது. சலசலவென பேச்சுச் சத்தமும் மோட்டார் சைக்கிள்களின் சீற்றமும் கேட்டது. ஒட்டுக்கடைகளின் படுதாக் கூரைகளின் மேல் சில மரங்களின் கிளைகள் நிழல் கொடுத்து அணைத்தவாறு படர்ந்திருந்தன.
மெத்தையை முதுகில் சுமந்தவாறு மூசு மூசு என்று இளைத்துக் கொண்டு தியாகு அங்கு வந்து சேர்ந்தான். மெத்தையை இறக்கி வைத்தான். "நீ போய்ட்டே இரு. நான் போயி இன்னொரு சூட்கேசக் கொண்டாந்து இங்க வச்சிட்றேன்" என்று இறங்கி ஓடினான்.
அவனைக் கொஞ்ச நேரம் இரக்கமாகப் பார்த்து விட்டு மீண்டும் ஏறினாள் அன்னம்மா. எந்த மாடியிலும் எண்கள் போட்டிருக்கவில்லை. உத்தேசமாக வைத்துக்கொண்டு ஏறினாள். அந்த குறுகிய படிகளில் ஆட்கள் அவசரமாக இறங்குவதும் ஏறுவதுமாக இருந்தார்கள். அவர்களுக்குப் பயந்து ஒதுங்கி ஒதுங்கி நின்று ஏறினாள். ஒன்பது மாடி என்று கணக்கு வந்தவுடன் நின்று அவன் வந்து சேரக் காத்திருந்தாள்.
ஒரு ஐந்து நிமிடத்தில் அவன் மெத்தையோடு வந்தான். அவன் உடல் வேர்த்துக் கொட்டிக் கொண்டிருந்தது. அவனுக்கு நிற்க நேரமில்லை. நின்றால் காற்றுப் போய்விடும் என்பது போல நிற்காமல் ஏறினான். "இன்னும் ஒரு மாடி மேல அன்னம்மா. ஏறு ஏறு" என்று சொல்லிக்கொண்டே அவன் ஏறிப் போனான். ஒரு ரெண்டு நிமிடத்தில் குழந்தை ஒரு சூட்கேசுடன் இளைக்க இளைக்க வந்தான். அன்னம்மாவைப் பார்த்ததும் "பொண கனம் கனக்குது தங்கச்சி இந்தப் பொட்டி" என்றான்.
"மத்தப் பொட்டி எங்க?" என்று கேட்டாள் அன்னம்மா.
"இதோ ரெண்டு மாடிக்குக் கீள இருக்கு! போய் எடுத்தாரணும்" என்றான்.
இரண்டு பேருமாக பத்தாவது மாடிக்கு ஏறினார்கள். தியாகு மெத்தையை ஒரு பக்கத்தில் சாத்தி வைத்து விட்டுக் கம்பிக் கதவில் சாவி போட்டுத் துழாவிக் கொண்டிருந்தான். எல்லாம் கொஞ்சம் துருப்பிடித்துப் போயிருந்தன. பூட்டைக் கொஞ்சம் ஆட்டி அசைத்துத் திருகித்தான் திறக்க வேண்டி இருந்தது. அவன் திறக்கும் வரை அன்னம்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். தன் புது வாழ்கையை அவன் திறப்பதற்குக் காத்திருந்தாள்.
பக்கத்து வீட்டிலிருந்து ஒரு சீனத்தி சத்தம் கேட்டுக் கோபத்தோடு எட்டிப் பார்த்துவிட்டு பட்டென்று கதவைச் சாத்திக் கொண்டாள்.
ஒரு வழியாகக் கம்பிக் கதவு திறந்தது. அடுத்ததாகப் பலகைக் கதவின் பூட்டுடன் கொஞ்சம் போராடினான். அது திறந்ததும் "சீக்கிரமா உள்ள போ அன்னம்மா" என்றான்.
"சோத்துக்கால எடுத்து வச்சிப் போ தங்கச்சி" என்றான் குழந்தை.
"ஆமா இவன் ஒருத்தன் சாத்திரம் சொல்ல வந்திட்டான், இந்த அவசரத்தில! எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்ல" என்றான் தியாகு. ஆனால் அவள் கவனமாக வலது காலை எடுத்து வைத்துத்தான் உள்ளே போனாள். அடைத்துக் கிடந்த வீட்டினுள்ளிருந்து மக்கிய மணம் கப்பென்று அடித்தது.
தியாகு மெத்தையைக் கொஞ்சம் வளைத்துக் கதவில் திணித்து உள்ளே கொண்டு வந்து தம்மென்று தரையில் போட்டான். தரையிலிலிருந்து குப்பென்று தூசு எழுந்தது.
"சரி நாங்க போய் மத்த சாமானத் தூக்கிட்டு வந்திர்ரொம்" என்று தியாகு குழந்தையை இழுத்துக்கொண்டு ஓடினான்.
வீடு மிகச் சிறியதாக இருந்தது. இரண்டு அறைகள். குறுகிய வரவேற்பறை. பெட்டி போல ஒரு சமயலறை. குழாயைத் திறந்தாள். புஸ்ஸென்று கொஞ்ச நேரம் சத்தம் கேட்ட பின்னர் பழுப்புக் கலரில் தண்ணீர் வந்தது. கொஞ்சம் ஒடிய பிறகு தெளிவானது.
சூட் கேஸும் ஒரு மூட்டையும் வந்தன. "தோ போய் கட்டிலத் தூக்கிட்டு வந்திர்ரோம்" என்று ஒடினார்கள். குழந்தையால் முடியவில்லை. சோர்ந்து நடந்தான். "சீக்கிரம் வா கொளந்த, இல்லன்னா எவனாச்சம் தூக்கீட்டு போயிடுவான்" என்று அவனை அவசரப் படுத்தினான் தியாகு.
அவளுக்குப் பாவமாக இருந்தது. வீட்டைப் பார்க்க சோகமாகவும் இருந்தது. அவள் பெற்றோரின் வீடு குவால லும்பூரில் இருந்தாலும் ஸ்தாபாக் பக்கத்தில் ஒரு கம்பத்தில் இருந்தது. நாலு விசாலமான அறைகள். பின்னால் நிலம் இருந்தது. அப்பா காய்கறி போட்டிருந்தார். கொஞ்சம் வேலி அடைத்து சில கோழிகள் கூட வளர்த்தார். காலாற நடந்து சுற்ற ஏற்ற வீடு.
"அங்க பினாங்கில உங்க ஊடு மாரி இருக்காது. சின்ன பிளேட்தான்" என்று தியாகு கொஞ்சம் வருத்தமாகக் கூறியிருக்கிறான்.
"நம்ப ரெண்டு பேருக்கு அது போதும்!" என்று அவள் அவனை ஆறுதல் படுத்தியிருக்கிறாள்.
தியாகு நல்லவனாகத் தெரிந்தான். அவளுக்குக் கல்யாணம் பேச ஆரம்பித்த போதே தன் அக்காளுக்கு வாய்த்த கணவனைப் போல எல்லாரையும் அதிகாரம் பண்ணும் முரடனாக இல்லாதவனாக ஒருத்தன் வாய்த்தால் போதும் என்பதே அவள் லட்சியமாக இருந்தது. தியாகு எப்போதும் சிரித்த முகமாக இருந்தான். கனிவாகப் பேசினான். முக்கியமாக அக்காவின் கணவனைப் போல அவன் இடை விடாமல் சிகிரெட் ஊதித் தள்ளுவதில்லை.
கல்யாணப் பேச்சு நடந்து கொண்டிருந்த போது முதல் முதலில் தியாகுவைத் தனியாக அவள் சந்திக்க வாய்ப்புக் கிடைத்த போது அவள் முதலில் கேட்டது அந்தக் கேள்விதான். "சிகிரெட் பிடிப்பிங்களா?"
"சீச்சீ!" என்றான். "அந்தப் பளக்கம் ஜென்மத்துக்கும் கிடயாது"
சந்தோஷமாக இருந்தது.
"தண்ணி குடிப்பிங்கிளா?":
"எப்பவாச்சும். கூட்டாளிங்களோட சந்தோஷமா இருக்கும் போது மாத்ரம்!"
"அத விட்டுடுங்களேன்!"
"சரி அன்னம்மா. கொஞ்சம் கொஞ்சமா விட்டுட்றேன். கொஞ்சம் டைம் குடு" என்றான்.
மீண்டும் சந்தோஷமாக இருந்தது. இத்தனை இணக்கமாக ஒரு ஆண் பேசி அவள் கேட்டதில்லை. அவள் அப்பாவும் அக்காள் புருஷனும் ஒரு நாளும் இப்படிப் பேசியதில்லை. அன்னம்மா அவனை அன்றே காதலிக்கத் தொடங்கி விட்டாள்.
வீட்டுக்கு வெளியே தடாலென்று சத்தம் கேட்டது. ஏதோ பலகைகள் விழுவது போலவும் சத்தம் கேட்டது. அன்னம்மா படபடப்போடு வந்து எட்டிப் பார்த்தாள். கதவுக்குப் பக்கத்தில் தியாகு சருக்கி விழுந்து கிடந்தான். அவன் தூக்கி வந்த படுக்கைப் பலகைகள் சிதறி விழுந்து கிடந்தன.
"ஐயோ" என்றாள். அவன் சிரித்துக்கொண்டே எழுந்து நின்றான். "ஒண்ணுமில்ல அன்னம்மா. ஒடியாந்தனா, சருக்கி விட்டிருச்சி!"
"ஏன் இந்த அவசரம்?"
"வேலைக்கி நேரமாச்சில்ல!" பலகைகளைப் பொறுக்கி எடுத்து உள்ளே கொண்டு வந்து வைத்தான். அவன் வந்து இரண்டு நிமிடம் கழித்து குழந்தை நாலு சட்டங்களைத் தூக்கிக்கொண்டு மூச்சிறைக்க வந்து சேர்ந்தான்.
"சரி அன்னம்மா. நான் கெளம்பறேன். நீ வீட்ட பூட்டிக்கிட்டு இரு. சாயந்திரம் ஆறு ஏளு மணி போல வந்திருவேன். சரியா? வா வா கொளந்த! ரொம்ப லேட்டாய்ப் போச்சி" அவன் முன்னால் ஓட குழந்தை மூச்சு இன்னும் அடங்காமல் பின்னால் ஓடினான்.
அவன் போன பின் வீடு வெறிச்சென்றிருந்தது. இது வீடா?
மூலைக்கு மூலை ஒட்டடை. சுவரில் முன்பு பசை போட்டு ஒட்டப்பட்டுக் கிழிக்கப் பட்டிருந்த சீன மொழிப் போஸ்டர்கள், படங்களின் தொங்கும் எச்சங்கள். சமையலறை எண்ணெய்ச் சிக்குப் பிடித்துக் கிடந்தது. பின்பக்கம் கம்பித் தடுப்புப் போட்டிருந்தார்கள். எல்லாம் துருப்பிடித்திருந்தன. அதன் பின்னால் அந்த அடுக்கு மாடி சதுரக் கட்டிடத்தின் நடுப்பகுதியான திறந்த வெளி இருந்தது. அங்கிருந்து எட்டிப்பார்த்தால் குப்பைகள் மலையாய்க் குவிந்திருந்தன. தூக்கி எறியப்பட்ட உணவு அழுகும் வீச்சம் வந்து கொண்டிருந்தது.
"நான் இன்னும் வீட்ட சரியா கூடப் பாக்கில. எங்க நேரம்? ஒரு கூட்டாளிதான் சொன்னான் பாரேன். மிந்தி சீனங்கதான் சேவாவுக்கு இருந்தாங்களாம். இப்ப ஒரு ஆறு மாசமா ஆளு இல்ல. கோசமாதான் கெடந்திச்சாம். சேவா சீப்பா குடுத்தாங்க! இதுக்கு மேல நம்பளுக்குத் தாங்காது அன்னம்மா!" என்று கொஞ்சம் வெட்கத்தோடு சொல்லியிருந்தான்.
"அது போதும். சமாளிச்சிக்கலாம்!" என்று அப்போது சொன்னாள். இப்போது பார்க்கும்போது அழுகை பொங்கிக்கொண்டு வந்தது.
இவ்வளவு மோசமாகவா? ஆணி அடித்து அடித்துச் சுவர்களில் அம்மை வார்த்திருந்தது. சுவர்கள் இருண்டிருந்தன. வர்ணம் அடித்து இருபது வருடமாவது இருக்க வேண்டும். ஓர் அறைக்கு ஒரு 40 வாட் பல்பு தொங்கிக் கொண்டிருந்தது. அதன் ஒயர் முழுக்க ஒட்டடை. குளியலறையிலிருந்து மக்கிப்போன மூத்திர மணம் வந்து கொண்டிருந்தது. பிளஷ் வேலை செய்யவில்லை. இங்கு எப்படி வாழ்வது?
எப்படிப்பட்ட மனிதன் இந்தக் கணவன்? ஒரு லோரி டிரைவராக வருமளவுக்குதான் அவனுக்கு தெரவிசு. அவ்வளவுக்குத்தான் சம்பாத்தியம். ஒரு நல்ல வீடு பார்த்துத் தேர்ந்தெடுக்கத் தெரியவில்லை. கூட்டாளி சொன்னான் என்றும் மலிவாக இருக்கிறது என்றும் கண்ணை மூடிக்கொண்டு பிடித்து விட்டான். கூட்டாளிகள் நிறைய வைத்துக் கொண்டிருக்கிறான். அவர்கள் சொல்வதற்கெல்லாம் ஆடுகிறான்.
நிதானமாகக் காரியம் செய்யத் தெரியவில்லை. பேய் போல வண்டி ஓட்டுகிறான். படபடவென்று ஒடுகிறான். அந்த ஓட்டத்தில் சருக்கி விழுகிறான். வெகுளித் தனமாகச் சிரிக்கிறான். வேலைக்கு ஓடும் அவசரத்தில் புதிதாகக் கல்யாணம் பண்ணிக் கொண்டு வந்திருக்கும் மனைவியிடம் அன்பாகச் சொல்லிக் கொள்ளக்கூட நேரம் இல்லை. மனைவி ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. இவனா என்னை வாழ்நாளெல்லாம் கட்டிக் காக்கப் போகிறான்?
அவளுக்குப் பசி கடுமையாக இருந்தது. ஆனால் என்ன செய்வது? இந்தப் புது இடத்தில் போய் எங்கு எப்படி சாப்பாடு தேடுவது? அதுவும் கீழே பத்து மாடி இறங்கிப் போய்...? அங்கு உள்ள ஜனங்களை நினைத்தாலே பயமாக இருந்தது. இப்படி விட்டுப் போனானே!
நேற்றிரவெல்லாம் கண் விழித்து வந்த அலுப்பு அவளைத் தள்ளிற்று. இந்த வீட்டில் உட்காரக் கூட நாற்காலி இல்லை. பிரித்துத் தாறுமாறாக இறைந்து கிடந்த கட்டில் பலகைகளைப் பார்த்தாள். மெத்தை தனியாக அவன் எறிந்து விட்டுப் போன அதே இடத்தில் கோணலாக ஓவென்று கிடந்தது. புதிய மெத்தை. கல்யாணப் பரிசு. விரிப்பு சூட்கேசில் இருக்கிறது. அதைத் திறந்து எடுக்க உற்சாகம் இல்லை. தலையணை இன்னும் வாங்கவில்லை.
அங்கிருந்த நூற்றுக் கணக்கான புறாக்கூண்டு வீடுகளில் எந்தத் திசை என்று சொல்ல முடியாத ஒரு வீட்டில் சீன மொழியில் ஒரு பெண் கூக்குரலிட்டு ஏசி தப்தப்பென்று எதையோ போட்டு அடித்தாள். தொடர்ந்து குழந்தை ஒன்று வீறிட்டு அழுதது. இன்னும் எங்கோ ஒரு வீட்டிலிருந்து தண்ணீரை இறைத்து இறைத்து ஊற்றும் சத்தம் கேட்டது.
எல்லாச் சத்தங்களும் அந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தின் ஓங்கி உயர்ந்த காங்க்ரீட் சுவர்களுக்குள் மோதி எதிரொலித்துச் சுற்றி வந்தன. ஒலி அடங்கிய பின்னும் ஓவென்ற பின்னொலி சுருண்டு கொண்டிருந்தது.
தனிமையும் பயமும் கரிய மேகங்களாகி அவளை அழுத்தின. நேற்று கலகலப்பான கல்யாணப் பெண்ணாக இருந்து விட்டு இன்று இப்படி ஒண்டியாய்த் திசை தெரியாமல் வாழவா பெற்றோர்கள் இத்தனை தூரம் அனுப்பி வைத்தார்கள்? இப்படியா? பசியாறுவதற்கு என்ன செய்வதென்று தெரியாமல்..., அடுத்த வேளை சாப்பாட்டிற்கு என்ன செய்வதென்று தெரியாமல்... ஒரு மக்கிப் போன வீட்டில், வர்ணம் தேய்ந்து கருப்பாகி என்னைச் சிறைப்படுத்தியிருக்கும் இந்தச் சிமிந்திச் சுவர்களுக்கு மத்தியில்...!
சுவரில் சரிந்து உட்கார்ந்தாள். ரவிக்கையில் அழுக்கு அப்பிக் கொள்வதைப் பொருட்படுத்தத் தோன்றவில்லை. கண்களிலிருந்து மளமளவென்று கண்ணீர் வந்தது. தொண்டையிலிருந்து விக்கல் வந்தது. புடவைத் தலைப்பால் கண்களைப் பொத்திக் கொண்டு கேவி அழுதாள்.
யாரோ அவள் வீட்டுக் கம்பிக் கேட்டைப் பிடித்து உலுக்கினார்கள். முகத்தைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தாள். ஓர் இந்தியப் பையன் நின்று கொண்டிருந்தான்.
"என்ன வேணும்?" என்றாள்.
"ரொட்டிச் சானாய்" என்றான்.
எழுந்து நின்று "என்ன?" என்றாள் விளங்காமல்.
"கதவத் தொறங்க, அந்த அண்ணன் ரொட்டிச் சானாய் கொண்டி குடுக்கச் சொன்னாரு!" என்றான்.
"அண்ணனா? எந்த அண்ணன்?"
"உங்க புருஷன்னு சொன்னாரு!"
சாவியைத் தேடிக் கம்பிக் கதவைத் திறந்து விட்டாள். அவன் ரொட்டிச் சானாய்ப் பொட்டலம், பிளாஸ்டிக்கில் முடிக்கப்பட்டு ஸ்ட்ரா வைக்கப்பட்டிருந்த சூடான தேனீர், ஒரு பெரிய போத்தல் குடி தண்ணீர் ஆகியவற்றைக் கீழே வைத்தான்.
" நீ யாரு?" என்று கேட்டாள்.
"சுலைமான். எங்க அத்தா கீள சாப்பாட்டுக் கடை வச்சிருக்காரு"
"எப்படி வீடு தெரியும்?"
"உங்க புருஷன் சொன்னாரு!"
"பத்து மாடி ஏறி வந்தியா?"
"முடியாதுன்னுதான் சொன்னேன். அப்பறம் அதுக்குன்னு ரெண்டு வெள்ளி தந்தாரு. அப்புறம்தான் சரின்னேன்!" என்றான்.
அவள் மகிழ்ந்து சிரித்தாள்.
"அப்புறம் மத்தியானத்துக்கு நாசி புங்குஸ் அனுப்பச் சொன்னாரு. வேற எதாச்சும் வேணுமான்னு உங்ககிட்ட கேட்டு வாங்கித் தரச் சொன்னாரு!"
என்ன கேட்பதென்று தெரியவில்லை. "இது இப்ப போதும்!"
"சரி" என்று அவன் திரும்பினான். "இப்ப லிஃப்டு வேலை செய்யிது" என்று சொல்லியவாறு லிஃப்டை நோக்கி நடந்தான்.
அவள் போய் அவசரமாக வாய் கை அலம்பி வந்து ரொட்டிச் சானாய்ப் பொட்டலத்தை ஆசையுடன் அவிழ்த்தாள். அதை அப்படையே வைத்துவிட்டு தேனீரை எடுத்து உறிஞ்சினாள். வெது வெதுப்பான சூட்டுடன் அது தொண்டைக் குழாயில் தேனாய் இறங்கியது.
லிஃப்டு வேலை செய்வதால் முதல் வேலையாகக் கீழே போய் ஒரு கூட்டுமாறும் தூள் சவர்க்காரமும் ப்ரஷும் வாளியும் ரப்பர் குழாயும் வாங்கி வரவேண்டும் என்று நினைத்தாள். கழுவி விட்டால் வீடு பளிச்சென்று இருக்கும். புதிய இடமாய் இருந்தால் என்ன? இது என் வீடு. என்ன பயப்படுவது? எல்லாரும் மனிதர்கள்தான்.
ரொட்டி சானாயைப் பிய்த்து வாய்க்குள் போட்டாள். கணவன் நினைவு வந்தது. பரவாயில்லை என்று சொல்லிக் கொண்டாள்.
(முடிந்தது)
2. பாக்கியம் பிறந்திருக்கிறாள்
-ரெ. கார்த்திகேசு
பயத்தோடும் மனப் படபடப்போடும்தான் தூக்கினேன். மெத்து மெத்தென்ற கம்பளித் துணி சுற்றித்தான் கையில் தந்தார்கள். "பாத்து பாத்து..." என்றார் அம்மா. மங்கலான மருத்துவ மனை விளக்கொளியில் ஒரு மயங்கிக் கிடக்கும் ராக்ஷசப் புழுப் போல அது நெளிந்தது. சரியாகப் பிடிக்காவிட்டால் கையிலிருந்து பாதரசம் போல நழுவித் தரையில் கொட்டிச் சிதறிவிடும் போல இருந்தது. எனது வலது உள்ளங் கையில் கம்பளிச் சுற்றையும் ஊடுருவி அதன் உடலின் வெப்பம் வெதுவெதுத்ததை உணர முடிந்தது. -ரெ. கார்த்திகேசு
இமையிலும் கன்னங்களிலும் ரத்தம் ஓடுவது இளஞ் சிவப்புச் சாயம் பூசினாற்போல் தெரிந்தது. உடலிலிருந்து பச்சை மண்ணின் மணம். பனிக்குட நீரின் எச்சங்கள் இன்னும் இருந்தன போலும். தலையின் ரோமங்களில் இன்னும் கூட பிசுபிசுப்பு. உதடுகள் விரிந்து கொட்டாவி விட்டது ஓர் உலக அதிசயம் போல் நிகழ்ந்தது. ஒரு சிம்ஃபொனி போல் எங்கள் அனைவரின் வாய்களும் கொஞ்சம் பிளந்து மூடின.
யார் உருவாக்கினார்கள்? நானா? என்னால் எப்படி முடிந்திருக்கும்? களிமண்ணைப் பிடித்து ஒழுங்காக உருண்டையாக்கத் தெரியாத நானா? பென்சிலால் நேராகக் கோடு போடத் தெரியாத நானா?
இவளா? இதோ தலை முடி கலைந்து சோர்ந்து போய் எதையோ பெரிதாகச் சாதித்து விட்ட ஆணவத்தில் மருத்துவ மனைக் கட்டிலில் சாய்ந்து கொண்டு விடாமல் புன்னகைத்துக் கொண்டிருக்கிறாளே, இவளா? எப்படி முடிந்திருக்கும்? இது என்ன சாம்பார் செய்வது போல ஒரு கலையா? தனது வேலைத் தளத்தில் கொம்ப்யூட்டரில் உட்கார்ந்து வண்ண வண்ணமாக கிராஃபிக்ஸ் வரைவாளே, அப்படி வயிற்றுக்குள் வரைந்தாளா?
நாங்கள் இருவரும் சேர்ந்தா? ஒரு காம முயக்கத்தின் விளைவாகவா இப்படி ஓர் அற்புதம்? எந்த இரவில் எந்தக் கணத்தில் நிகழ்ந்திருக்கும்? ஏன் எங்களுக்கு அந்தக் கணத்தின் அருமையும் புனிதமும் புரியாமல் போனது?
"நன்றி வசந்தா!" என்றேன்.
"எதுக்கு?" தெரியாதவள் போல... 'இன்னொரு தடவை விளக்கமாகச் சொல்லேன்' என்ற பாசாங்கு.
"இந்த அதியசத்துக்குத்தான். எப்படி செஞ்ச?"
"போங்க!" என்று சிரித்துக்கொண்டே கோபித்துக்கொண்டாள். "என்ன பேர் வைக்கலாம், சொல்லுங்க...!" என்றாள் தொடர்ந்து, எனக்கும் இந்தச் சாதனையில் சிறு பங்கு கொடுப்பவள் போல.
"ஆதி!" என்றேன்.
"ஆதியா? அது என்ன பேர்?"
"நமக்கு முதல் குழந்தை இல்லையா, அதனாலதான். அதோட வள்ளுவர் முதல் குறள்ளியே சொன்னாரில்ல, 'ஆதி பகவன்' அப்படின்னு...."
"ஆமா, இப்பிடித்தான் பட்டிக்காடு மாதிரி பேர் வைங்க! எல்லாரும் சிரிப்பாங்க...!" என்றார் அம்மா.
"ஆமாங்க, அப்புறம் ஸ்கூலுக்குப் போம்போது எல்லாரும் கேலி பண்ணுவாங்க! நல்ல மோடர்னா பேர் வைக்கணும்!" என்றாள் வசந்தா.
"இங்க கொண்டா!" என்று குழந்தையை என் கையிலிருந்து பிடுங்கிக் கொண்டார் அம்மா. மேலும் என் கையில் இருந்தால் இன்னும் என்னென்ன கூத்துப் பண்ணிவிடுவேனோ என்று பயப்பட்டார் போலும்.
"நாளைக்கு நம்ப ஜோசியர் கிருஷ்ணனைப் போய் பார்க்கணும். அவரு நக்ஷத்திரம் கணிச்சி முதல் எழுத்து எடுத்துக் குடுப்பார். அப்புறம்தான் பேர்!" அம்மா கண்டிப்பாகச் சொன்னார். உண்மைதான். ஜோசியர் மிகவும் நவீனமான ஜோசியர். நக்ஷத்திரம் எல்லாம் இப்போது கணிப்பது கம்ப்யூட்டரில்தான். அப்பாயின்ட்மன்ட் வைத்துதான் போய்ப் பார்க்க முடியும். பேச்சு விளக்கமெல்லாம் இங்கிலீஷில்தான்.
அப்பாவின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தேன். அவர் தனக்குள் சிரித்துக் கொண்டது போலிருந்தது. முதல் தடவையாக தந்தையான எனக்கு இருந்த படபடப்பும் மகிழ்ச்சியும் அவருக்குச் சிரிப்பை உண்டாக்கின போலும். அவர் என்னோடு மூன்று மக்களைப் பார்த்தவர். பேரன் பேர்த்தி கூட இதற்கு முன் என் அண்ணன் மூலம் பார்த்தாகி விட்டது.
குழந்தையைக் கையில் ஏந்திய அனுபவம் மனசில் இன்னும் ஈரமாக இருந்தது. இது சந்ததியின் தொடர்ச்சி. புதிய அத்தியாயம். நான் எழுதியிருக்கிறேன். என் அப்பாவின் தொடர்ச்சியாக. என் பாட்டன் பூட்டனின் தொடர்ச்சியாக. ஆதி மனிதனின் தொடர்ச்சியாக. ஆதிக் குரங்கின் தொடர்ச்சியாக. ஆதிகாலத்தில் விண்வெளிக் கதிரியக்கத்தில் கொதித்துக் கிடந்த விஷக் கூழிலிருந்து உருவான முதல் மரபணுக்களின் இடையறாத் தொடரின் ஒரு சங்கிலிக் கண்ணாக இவள். 'ஆதி' என்பது எவ்வளவு பொருத்தமான பெயர்? இத்தனை சாதாரணமாக அடிபட்டுப் போனதே!
திடீரென்று நினைவு வந்து அப்பாவைப் பார்த்துக் கேட்டேன்: "ஏன் அப்பா, குழந்தயத் தாத்தாவுக்குக் கொண்டி காட்ட வேணாம்?"
"ஆமா கொண்டி காட்டத்தான் வேணும். பாக்க ஆசப் படுவாங்கதான். எதுக்கும் அம்மாவையும் உன் பெண்டாட்டியையும் கேட்டுக்க!" என்றார்.
அப்பா ரொம்ப மாறிவிட்டார். அவருக்குள் இருந்த வெப்பம் முற்றாக வெளியேறி விட்டது. எதைக் கேட்டாலும் "எதுக்கும் உங்க அம்மாவை ஒரு வார்த்தை கேட்டுக்க" என்பதே பாட்டாகப் போய்விட்டது.
அப்பா ஒரு காலத்தில் வீறுடன் இருந்தார். பெரியார் இயக்கத்தில் இருந்து ஜாதிய எதிர்ப்புப் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார். தமிழர் சங்கம் அமைத்து இந்தியர் என்ற மந்தைக்குள் தான் அடங்கியவனில்லை என்று காட்டி இருக்கிறார். எங்களுக்கெல்லாம் பெயர் வைக்க நாள் நட்சத்திரம் பார்க்கவில்லை.
அவருடைய அப்பா - என் தாத்தா- அவர் காலத்தில் சிங்கமாக இருந்தவர். ஐஎன்ஏயில் இருந்திருக்கிறார். நேதாஜியுடன் பிடித்த படம் இன்னமும் வைத்திருக்கிறார். கொஞ்சமாகச் செல்லரித்துப் போன கருப்பு வெள்ளைப் புகைப் படத்தில் மூன்றாவது வரிசையில் தொப்பியே பெரிதும் தெரியுமாறு நிற்பார். காந்தி இயக்கத்தில் இருந்து கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டுக் கைத்தடியினால் அடிவாங்கி இருக்கிறார்.
அவற்றாலெல்லாம் முறிக்க முடியாத என் முன்னோரின் தமிழ் ஆத்மாவை எங்கள் குடும்பம் ஏழைமை நிலையிலிருந்து மத்திய தரப் பொருளாதார வர்க்கத்துக்கு எறிய பின், புதிய சமூகச் சூழ்நிலை முறியடித்து விட்டது. போராட்டங்கள் இல்லாத சுகமான வாழ்கையில் நானும் என் சகோதரர்களும் தின்பதும் திரிவதுமாக ஆடு மாடுகள் போல ஆகிவிட்டோ ம் என எனக்கு அடிக்கடி தோன்றும். சம்பாதிப்பதும் சந்தோஷிப்பதுமே எங்கள் வாழ்கையில் முதன்மை ஆகிவிட்டது போலத் தோன்றியது.
நானும் என் அண்ணனும் தங்கையும் புதிய மலேசிய நாடு வழங்கிய வாய்ப்புக்களைப் பயன் படுத்திக் கொண்டு படிப்பில் உயர்ந்து விட்டோ ம். பட்டதாரிகளாக ஆகிப் பெரிய உத்தியோகங்கள் பெற்றோம். அண்ணன் தேசிய இடை நிலைப் பள்ளியில் அறிவியில் பிரிவில் சேர்ந்து புதிய புதிய மலாய் ஆங்கில அறிவியல் தொடர்களை வீட்டுக்குக் கொண்டு வர ஆரம்பித்த போதே அப்பாவின் ஆளுமை சரியத் தொடங்கிற்று. நானும் தங்கையும் தொடர்ந்து தேசியப் பள்ளிகளுக்குப் போக, வீட்டுக்குள் எங்களுக்குள் ஆங்கிலம் பேச ஆரம்பிக்க அம்மாவும் விரைந்து ஆங்கிலம் கற்றுக் கொண்டார். இலக்கணத்தை முற்றாகப் புறக்கணித்துக் கருத்தைப் புரிய வைப்பதையே முதன்மையாகக் கொண்ட வேடிக்கை மொழி அவருடைய ஆங்கிலம். நாங்கள் சிரித்துக் கேலி பண்ணினாலும் எங்களோடு சேர்ந்து சிரித்துக் கலந்து கொண்டார். அப்பாதான் அதில் கலந்துகொள்ள முடியாமலும் விருப்பமில்லாமலும் தன்னைக் கொஞ்சம் தனிப் படுத்திக் கொண்டார்.
எங்கள் குடும்பம் அன்பான குடும்பம்தான். யாருக்கும் எந்தக் குறையும் இல்லை. அண்ணன் ஒரு பொறியியலாளர். தங்கை ஒரு தேசிய ஆரம்பப் பள்ளியில் துணைத் தலைமை ஆசிரியை. வெவ்வேறு ஊர்களில் குடும்பதோடு இருக்கிறார்கள்.
நான் ஒரு பொருளகத்தில் நிதித் துறை இயக்குனர். பெற்றோருடன் தங்கி விட்டேன். அப்பா என்னை மட்டும் உடன் வைத்துக் கொண்டு தமிழும் பண்பாடும் சொல்லிக் கொடுத்தார். என்ன காரணத்தாலோ எனக்கும் அதில் பிடிப்பு வந்தது. என் மேற்கல்வியோடு இவற்றையும் விடாமல் பற்றிக் கொண்டேன்.
நன்கு படித்தவளும் கொம்ப்யூட்டர் கற்றவளுமான என் மனைவியும் குடும்பத்திற்கு அணிகலனாகத்தான் வந்து சேர்ந்தாள். மாமனார் மாமியாரோடு ஒத்துப் போய்க் குடும்பம் நடத்தக் கற்றுக் கொண்டாள்.
என்ன, ஒரு சராசரி மலேசிய இந்திய மத்திய தர வர்க்கக் குடும்ப மதிப்பீடுகளுக்கு குடும்பம் முற்றாக மாறி விட்டது. வீட்டில் ஆங்கிலம் அதிகம் புழங்கிற்று. பொங்கல் கொண்டாடுவது போய் தீபாவளியே முக்கிய பண்டிகை ஆயிற்று. அம்மா தீவிரமாகக் கோயிலுக்குப் போக ஆரம்பித்து விட்டார். சில சாமியார்களின் அதி தீவிரப் பக்தை ஆனார்.
அம்மாவைப் பார்த்து வசந்தாவும் பல ஆரியப் பண்டிகைகளுக்கு விரதம் இருக்க ஆரம்பித்து விட்டாள். இப்போது ஒரு வர்த்தக நிறுவனம் வானொலியில் தீவிரமாக விளம்பரம் செய்து விற்றுவரும் ஓர் அட்டைப் பெட்டியில் நவீனமாக அடைத்து விற்கும் சுலபத்தில் எந்த சிறிய அறையிலும் அடங்கி விடும் ஹோம குண்டத்தை வாங்கி ஹோமமும் செய்து வருகிறாள். மாமியாரும் மருமகளும் ரொம்ப ஒற்றுமை.
அப்பாவோ நானோ இதுபற்றி ஒன்றும் சொல்ல முடிவதில்லை. "ஆமா, இந்த வெடப்புதான் உங்களுக்குத் தெரியும். யூ டோ ன்ட் அன்டர்ஸ்டேன்ட். இந்த குடும்பம் நாலு பேரு மதிக்கிற மாதிரி இருக்குதுன்னா அது நாங்க கோயிலுக்கு போக வர இருக்கிறதினாலதான். குடும்பம் நல்லா இருக்கிறது சாமி கும்பிட்றதுனாலதான், தெரிஞ்சிக்கிங்க!" என்று அம்மா தூக்கி எறிந்து விடுவார்.
எதிர்த்துப் பேசி அலுத்து விட்டோ ம், அப்பாவும் நானும். பெண்கள் ஏதாகிலும் சில நம்பிக்கைகளை தீவிரமாகப் பற்றிக் கொண்டிருக்க ஆசைப் படுகிறார்கள். ஆரிய நம்பிக்கைகளையும் சடங்குகளையும் எதிர்த்துப் பிரச்சாரம் செய்யலாம். ஆனால் அதன் இடத்தில் வேறு என்ன நம்பிக்கைகளை சடங்குகளை வைப்பதென்று எங்களுக்கும் தெரியவில்லை. சுற்றியுள்ள மத்திய தர வர்க்கம் தமிழ், திராவிட அடிப்படையிலிருந்து விலகி ஹிந்துப் போர்வையில் உள்ள ஆரியச் சடங்குகளைப் பற்றிக் கொண்டிருக்கும் போது அம்மாவும் மனைவியும் அந்த நீரோட்டதில் உற்சாகமாகத் தவழ்ந்து நீந்த நானும் அப்பாவும் வேடிக்கை பார்ப்பவர்களாக ஆகிவிட்டோ ம். நாங்கள் இருவருமே ஆணாதிக்க வாதிகள் இல்லை. அவர்களைத் அடக்கித் தடுக்க முடியவில்லை.
தாத்தா, பாட்டியை இழந்த பின் எங்களோடுதான் இருந்தார். ஆனால் வயதாகும் காலத்தில் தன் நினைவுகள் தப்பித் தப்பிப் போய்த் தான் பிறருக்குத் தொல்லையாகி வருவதைத் தெரிந்து கொண்டவுடன் தான் தனியாக இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார். அவரே ஒரு நண்பர் மூலம் ஒரு முதியோர் ஆசிரமத்தைக் கண்டு பிடித்துப் போய்ச் சேர்ந்து விட்டார். அப்பா வேண்டாம் என்று தடுத்துப் பார்த்து அலுத்துப் போய் விட்டு விட்டார்.
இப்போது தாத்தா சுகமாகத்தான் இருகிறார். நினைவு மட்டும் போகும் வரும். அவர் இருக்குமிடத்தில் அவரை இதமாகவும் கனிவாகவும் கவனித்துக் கொண்டார்கள். அப்பாவும் அவருக்கான எல்லாச் செலவுகளையும் கட்டிக் கையிலும் பணம் கொடுத்து வந்தார். அடிக்கடி போய்ப் பார்ப்பதும் உண்டுதான். அம்மாவுக்கும் வசந்தாவுக்கும்தான் தாத்தாவைப் பிடிக்காது. கடந்த சில ஆண்டுகளாகவே அவர்களைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் முகங்களை மறந்து விட்டு "யாரு இந்தப் பொம்பிளைங்க?" என்று அவர் கேட்பது அவர்கள் இருவருக்கும் பெரும் அவமானமாக இருந்தது.
இப்போது இவள். இப்போதைக்கு என் மனதில் 'ஆதி' தான். இன்னும் ஒரிரு நாட்களில் பேர் தெரிந்து விடும். நல்ல குடும்பத்தில்தான் வந்து பிறந்திருக்கிறாள். அன்பாகவும் பண்பாகவும் வளர்க்கப் படுவாள். ஆனால் காலச் சுழல் இவளை எந்தக் கரைக்குக் கொண்டு சேர்க்கும் என்பது யாருக்குத் தெரியும்! ஆனால் அதெல்லாம் பின்னால். இப்போது அவளை அந்த முது கிழவருக்குக் காட்ட வேண்டும். "பார் தாத்தா! உன் பூட்டப் பிள்ளை. உன் வம்சத்தின் புதிய தளிர். பார். கைகளில் ஏந்திக் கொள்!"
***
புஷ்பலதாவுக்கு - அப்படித்தான் ஜோசியர் பெயர் வைத்துக் கொடுத்திருந்தார் - பூவைப் பனியினால் போர்த்தது போல மெல்லிய பட்டில் ஒரு சட்டை வாங்கிப் போட்டிருந்தோம். 'புஷ்' என்றும் 'புஷு' என்றும் அவளைக் கூப்பிட்டோ ம். பால் வாசனையும் மூத்திர மல வாசனைகளும் அதன் பின்னர் புஸ்ஸென்ற பவுடர் வாசனையுமாக எப்போதும் ஏதாவதொரு வாசனையுடனேயே இருந்தாள். மனைவியும் பெரும் பாலும் அதே வாசனைகளுடன்தான் இருந்தாள்.
அவளைத் தூக்கி வைத்துக் கொள்ள போட்டி போட்டுக் கொண்டோ ம். அப்பா அப்படியாக முந்திக் கொள்வதில்லை. மடியில் கொண்டு போட்டால் கொஞ்சுவார். எனக்கு வீட்டில் இருக்கும் போதெல்லாம் அவளைத் தூக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்றே தோன்றும். "சும்மா சும்மா தூக்காதிங்க! உடம்பு சூடு ரொம்ப ஆகாது" என்று வசந்தா என்னைக் கண்டிப்பாள்.
தாத்தாவுக்கு அவளைக் கொண்டு காட்ட வேண்டும் என்னும் ஆசை நிறை வேறாமல் இருந்தது. அம்மாதான் தள்ளி வைத்தார். "இப்ப என்ன அவசரம்? பிள்ளைக்கு கொஞ்சம் தெம்பு வரட்டும். அப்புறம் காட்டலாம்" என்றார். "கெழம் இருக்கிற எடத்தில என்னென்ன நோய் நொடிங்க இருக்கோ! பச்சை பிள்ளைக்குத் தொத்திக்கிச்சினா?" என்று மறைவில் அவர் பேசியதைக் கேட்டேன்.
எனக்கும் கூட கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. ஆனால் இத்தனை மில்லியன் ஆண்டுகளாக மனித இனம் பரிணாம வளர்ச்சி அடைந்து வந்திருப்பது இதை எல்லாம் வென்றுதானே என்ற நம்பிக்கையும் இருந்தது. ஏதோ இந்தப் பிள்ளைதான் மிக அதிசயமான பிள்ளை என்பதுபோல் அம்மா பேசுகிறார்.
ஆனால் தாத்தாவைப் பார்த்து புஷ்பலதா பிறந்திருக்கும் செய்தியைத் தெரிவித்தோம். தாத்தா வெறுமை நிறைந்த கண்களுடன் மிகவும் உன்னிப்பாகக் கேட்டுவிட்டு அப்பாவைப் பார்த்து "உனக்கு பிள்ளை பிறந்திருக்கா?" என்று கேட்டார்.
"இல்லப்பா, இவனுக்கு, கதிரேசனுக்கு. முதல் பிள்ளை!" என்றார் அப்பா.
என்னைப் பார்த்து "எங்க பிள்ளை?" என்று கேட்டார்.
"வீட்டில இருக்கா தாத்தா!" என்றேன்.
"என்ன பிள்ளை?"
"பெண் பிள்ளை!"
தாத்தா கொஞ்சம் யோசித்தார். அப்புறம் "எனக்குக் காட்ட மாட்டியா?" என்றார்.
"காட்டுறேன் தாத்தா, கொஞ்ச நாள் போகட்டும்!" என்றேன்.
ஒரு மாதம் கழிந்தவுடன் தாத்தாவைக் கொண்டு வந்து காட்ட முடிவாயிற்று. "சுத்தமா சவரம் செஞ்சிக்கிட்டு வரச்சொல்லுங்க!" என்று எச்சரிக்கை விடுத்துத்தான் அனுப்பினார் அம்மா.
தாத்தாவை அழைத்து வர நானும் அப்பாவும்தான் போனோம். எங்களைக் கண்டவுடன் "ஏன் பிள்ளையைக் கொண்டு வந்து காட்டல?" என்று கேட்டார். அவருக்கு அந்த அளவுக்கு ஞாபகம் இருந்தது மகிழ்ச்சியாக இருந்தது.
"இதோ உங்களைக் கொண்டு போகத்தான் வந்திருக்கோம் தாத்தா. வாங்க போய்ப் பார்க்கலாம்!" என்றேன்.
தாத்தாவுக்கு சுத்தமாகச் சவரம் செய்துவிட்டு சலவை ஆடைகள் அணிவித்துக் காரில் ஏற்றிக் கொண்டு வந்தோம். வீடு வந்து சேர்ந்ததும் அவரைக் கைப்பிடியாக இறக்கிக் கொண்டு வந்தோம். அம்மா வாசலில் நின்று "வாங்க மாமா" என்று வரவேற்றார்.
"இது யாரு?" என்று தாத்தா கேட்டார்.
"உங்க மருமகள். தெரியிலியா?" என்று அப்பா சிரித்துக் கொண்டே சொல்லி அப்பாவை உட்கார வைத்தார்.
அம்மாவுக்குக் கோபம் வந்திருக்கிறதா என்று பார்த்தேன். அப்படித் தெரியவில்லை. தாத்தா வந்ததில் அம்மா மகிழ்ந்தது போல்தான் காணப் பட்டார். முகத்தில் சிரிப்பு மாறாமல் இருந்ததில் அது தெரிந்தது. "வசந்தா, கொழந்தயக் கொண்டாந்து மாமா மடியில போடும்மா! பெரியவங்க ஆசிர்வதிக்கட்டும்" என்றார். எனக்கு ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
வசந்தா குழந்தையை ஏந்தி வந்து தாத்தாவின் மடியில் போட்டாள். தாத்தா கைகளைக் கூட்டிக் கொஞ்சம் அணைத்த படியே பிடித்துக் கொண்டார். நான் பக்கத்திலேயே உட்கார்ந்து குழந்தை தவறி விடாமல் இருக்கப் பார்த்துக் கொண்டேன்.
புஷ்பலதா முஷ்டிகளை மடக்கிக் கொண்டு தாத்தாவின் முகத்தை வைத்த கண் வாங்காமல் முறைத்துப் பார்த்தாள். தாத்தாவும் கொஞ்சமும் புன்னகை இல்லாத முகத்தோடு தன் தடித்த கண்ணாடிகள் ஊடே அவளைத் திருப்பி முறைத்தது போல் இருந்தது.
"குழந்தய ஆசிர்வதிங்க தாத்தா!" என்றாள் வசந்தா.
"நல்லா இருக்கட்டும்!" என்றார். தனது விரல்களால் குழந்தையின் கையைப் பிடித்துப் பார்த்தார். திரை விழுந்த தோல் சுருங்கிய ஜீவன் வற்றிய கருத்த விரல்கள் பச்சை ரத்தம் ஓடும் சிவந்த தளிர் விரல்களைப் பற்றியிருந்தன. அந்த முரண்பாட்டின் பொருள் என்ன என்று நான் எனக்குள் தேடிக் கொண்டிருந்தேன்.
புஷ்பலதா சட்டென்று முஷ்டியை விரித்துத் தாத்தாவின் ஒரு விரலைப் பற்றிக் கொண்டாள். தாத்தா முதன் முறையாகப் புன்னகை செய்தார். புஷ்பலதா பதிலுக்குச் சிரித்தாள். எங்கள் எல்லார் உதடுகளும் மீண்டும் ஒரு சிம்ஃபொனியின் வாத்தியங்கள் போல விரிந்தன.
"என் பாக்கியம், என் பாக்கியம்" என்றார் தாத்தா. என் குழந்தை தாத்தாவுக்குப் பெரிய பாக்கியமாகத் தெரிவது எனக்குப் பெருமையாக இருந்தது.
"பாக்கியம்ங்கிறது எங்க அம்மா பேரு!" என்றார் அப்பா. எனக்கும் ஞாபகம் வந்து "ஓ" என்றேன்.
தாத்தா கொஞ்ச நேரம் இருந்து நாங்கள் வற்புறுத்தக் காப்பியும் இனிப்புப் பலகாரங்களும் சாப்பிட்டார். ஒரு முறை வசந்தாவை உற்றுப் பார்த்தபோது அவளாக முந்திக் கொண்டு சொன்னாள்: "யாருன்னு பாக்கிறிங்களா தாத்தா! நாந்தான் பிள்ளயப் பெத்தவ!"
"எனக்குத் தெரியும். பிள்ளைக்கு பாக்கியம்னு பேர் வை!" என்றார்.
வசந்தா கொஞ்சம் விழிக்க அம்மா சொல்லிக் கொடுத்தார்: "சரின்னு சொல்லு!" சும்மாதான். தாத்தாவைத் தமாஷ் பண்ண. புஷ்பலதா பாக்கியம் ஆக முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.
"சரி தாத்தா!" என்றாள் வசந்தா.
***
தாத்தாவை மீண்டும் கொண்டு அவரது அறையில் சேர்த்தோம். அப்பாவைப் பார்த்து "பிள்ளைக்குக் கொடுக்கணும்னு ஒரு சாமான் எடுத்து வச்சேன். அப்ப கொண்டார மறந்து போச்சு. கொஞ்சம் இரு!" என்று அலமாரிக்குள் சென்று துழாவித் தேடி ஒரு தடித்த கவர்க்கூட்டை எடுத்துக் கொடுத்தார்.
"என்ன அப்பா இது?" பிரித்துப் பார்த்த போது 100 வெள்ளி நோட்டுக்களாக ஆயிரக் கணக்கில் பணம் இருந்தது.
"ஏது அப்பா இவ்வளவு பணம்? ஏன் குடுக்கிறீங்க?"
"நீ குடுத்த பணம்தான். சேத்து வச்சிருக்கேன். பிள்ளைக்குக் குடு! நல்லா வளத்து எடு!" என்றார்.
நான் சொன்னேன்: "வேணாம் தாத்தா! எங்கிட்ட பணம் இருக்கு! பிள்ளய வளத்து எடுக்க அது போதும்!" என்றேன்.
"போதுமா? எவ்வளவு பணம் போதும்?" என்று கேட்டார். எனக்குச் சொல்லத் தெரியவில்லை.
"பரவாயில்லா தாத்தா. உங்க செலவுக்கு வச்சிக்கிங்க!" என்றேன்.
"எனக்கு என்ன செலவு? எல்லாந்தான் உங்க அப்பா கொடுக்கிறாரே! எனக்கு இனி செலவு இல்ல. பாக்கியத்துக்குக் கொடு!" கடைசி வரை திரும்ப வாங்கிக் கொள்ளவில்லை.
வீடு வரும்போது அப்பா காரில் பேசாமல் வந்தார். நான் புஷ்பலதா அலையாஸ் பாக்கியத்தின் பெரும் பரிசை எண்ணி மகிழ்ந்தவாறு வந்து கொண்டிருந்தேன். அவளுக்கு இந்தப் பரிசின் மகிமை புரியுமா? கையில் கொடுத்தால் ஆசையோடு வாங்கிக் கொள்வாளா? அல்லது கசக்கி வாயில் போட்டு மெல்லுவாளா? குழந்தை 100 வெள்ளி நோட்டை வாயில் போட்டு மென்று எச்சில் படுத்துகிற காட்சியைக் கற்பனை செய்துகொண்டு எனக்குள் சிரித்துக் கொண்டேன்.
"இனி ரொம்ப நாளு இருக்க மாட்டாங்க!" என்றார் அப்பா.
"என்ன சொன்னிங்க அப்பா?"
"அப்பாவுக்கு அம்மாவோட நெனப்பு வந்திடிச்சி. இனி ரொம்ப நாளு இருக்க மாட்டாங்க!" என்றார்.
பதில் ஏதும் சொல்லத் தெரியாமல் அமைதியாகக் காரோட்டினேன்.
(முடிந்தது)
(இந்தச் சிறுகதை மலேசிய வார இதழான "மக்கள் ஓசை"-இல் 23 மார்ச் 2000-த்தில் பிரசுரமானது)
3. திரும்புதல்
-ரெ. கார்த்திகேசு
நெடுஞ்சாலையை விட்டு சுங்கைப் பட்டானிக்குள் நுழையும் சாலையில் டோ ல் சாவடியில் கட்டணம் செலுத்திவிட்டு அவர்களுடைய மெர்சிடிஸ் புறப்பட்டபோதே மூர்க்கமான முன்னேற்றத்தின் அடையாளங்கள் எங்கணும் தெரிந்தன. ஒரு பிரமாண்டமான அனைத்துலக சூப்பர்மார்கெட்டின் உள்ளூர் கிளை; பிஸ்ஸா ஹட்; மேக்டோ னல்ட்ஸ். அனைத்துக் கட்டிடங்கள் முன்னாலும் நெருக்கியடித்துக்கொண்டு நிறுத்திய கார்கள். -ரெ. கார்த்திகேசு
நீலக்கலரில் பளபளப்பு ஓடுகள் இட்ட நவீன வரிசை வீடுகள். ஒவ்வொரு வீட்டின் முன்னும் ஒரு புரோட்டோ ன் வாஜா அல்லது டொயோட்டா; சில வீடுகள் முன்னால் வோல்வோக்களும் பிஎம்டபிள்யூக்களும் கூட. 2020-இல் முன்னேற்ற நாடு என்ற அந்தஸ்த்தை அடைய வேண்டும் என்று பந்தயம் ஓடுகின்ற வளரும் மலேசியாவின் காலணித் தடங்கள்.
தான் இந்த ஊருக்கு ஒரு சொகுசு மெர்சிடிஸில் வந்து நுழைவது ஒரு கால வழு, இட வழுப் போல சுடர் உணர்ந்தாள். கார் ஏறிப் பழகிப் பத்தாண்டுகள், மெர்சிடிஸுக்கு உயர்ந்து ஐந்தாண்டுகள் ஆனாலும் இந்த இடத்தில் அது அந்நியமாகத் தெரிகிறது. இது நான் க்ரீச் க்ரீச்சென்று சத்தமிடும் சைக்கிளோட்டிக்கொண்டும் லொட லொடவென்று ஆடும் பஸ்ஸிலும் பள்ளிக்கூடம் சென்று வந்த ஊர். அப்போது இங்கு சூப்பர் மார்க்கெட்டுகள் இல்லை. கிருஷ்ணன் ஜவுளிக் கடையில்தான் துணி வாங்குவதெல்லாம். அங்கேதான் இளம்பிள்ளை வாதத்தில் கால் ஊனமான சரஸ்வதி அக்கா இருந்தார். அவரிடமிருந்துதான் தமிழ்ப் புத்தகம் இரவல் வாங்கிப் படித்தது.
"என்ன பிறந்த ஊர் வந்தவொண்ணப் பேச்சு மூச்சைக் காணோம்?" என்று அருண் கிண்டலாகக் கேட்டான். அவன் பக்கமாகத் திரும்பிக் காலங்குலம் இதழோரம் பிரித்துச் சிரித்தாள். அவனுக்கு இதைச் சொல்லி விளங்க வைப்பது கடினம் என்று தோன்றியது. திரும்பிப் பின்னிருக்கையில் ஜெய் என்ன செய்கிறான் என்று பார்த்தாள். சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்தான். "பார் ஜெய், அம்மாவின் பிறந்த ஊர். உன் தாய் உருவாகிய மண். எந்தையும் தாயும் - தோட்டப்புறத் தொழிலாளர் பரம்பரை ஆனாலும் கூட -- மகிழ்ந்து குலாவி இருந்த மண்" எனச் சொல்லத் தோன்றிற்று. தூங்குபவனை எழுப்ப மனம் வராமல் மீண்டும் வெளியே பார்த்தாள்.
இவனாவது தன்னோடு தாத்தாவைப் பார்க்க வருகிறேன் ஒப்புக் கொண்டது அவளுக்கு ஆறுதலாக இருந்தது. மூத்தவன் சிங்கப்பூரில் அருணின் அண்ணன் குடும்பத்துடன் தங்கி விட்டான். அங்கே வீடியோ கேம்ஸின் கவர்ச்சி அவனை ஆட்கொண்டு விட்டது. அப்பாவுக்கு நேரடியாக வந்து சொல்லிக் கொள்ளாமல் ஒரு நாளாவது அவர் வீட்டில் தங்காமல் ஆப்பிரிக்காவுக்குப் புறப்பட அவளுக்கு மனசில்லை. ஜெய்க்குத் தாத்தாவின் வீட்டில் ஆடுகளும் மாடுகளும் இருப்பதைச் சொன்னவுடன் பிடித்துக் கொண்டான். ஒரு மிருகக் காட்சிசாலையை பார்க்கும் தீவிர விருப்புடன் அவன் தாத்தா வீட்டுக்கு வர இணங்கினான்.
இபுராஹிம் வீதி கடந்து மணிக்கூண்டை நெருங்கியபோது பள்ளிக்கூடமும் தோழிகளும் அவர்களோடு சேர்ந்து பார்த்த படங்களும் பாடல்களும் பசியோடு வீட்டை அடையும் போது மணக்கும் அம்மாவின் கோழிக்கறி வாசனையும் ஒரு கெலடைஸ்கோப்பாக மனசில் சுழன்றுகொண்டிருந்த போது "ஆர் வீ இன் தாத்தாஸ் ஹவுஸ் ஆல்ரெடி?" என்று தனது மழலை ஆங்கிலத்தில் கேட்டுக் கொண்டே எழுந்து உட்கார்ந்தான் ஜெய்.
அவன் அப்படிப் பேசியது கூட அந்தக் கால இட வழுவில்தான் சேர்த்தி எனச் சட்டென்று தோன்றியது. அவன் லண்டனில் பாலர் பள்ளிகளில் படித்தவன். தீவிர கோக்னி வாசத்துடன் ஆங்கிலம் பேசினான்.
"வந்தாச்சி ஜெய். இன்னும் கொஞ்ச தூரம்தான்" என்று சொன்னாள் சுடர்.
*** *** ***
"ஏன் உங்கப்பா இந்த இடத்த விட்டுக் கிளம்ப மாட்டெங்கிறார்?" என்று கேட்டான் அருண். வீடு வந்து சேர்ந்து விருந்துண்டு இன்னும் இரண்டு மணி நேரம்கூட ஆகவில்லை. அவனுக்கு அலுத்ததுபோல் இருந்தது.
சுடருக்கும்தான் புரியவில்லை. ஏன் இந்த முன்னேற்ற ஆரவாரங்கள் அப்பாவைப் பாதிக்கவில்லை? ஏன் பட்டணத்துக்குப் போய் நவீன ஓடுகள் வேய்ந்த கார் போர்ச்சுடன் கூடிய எலெக்ட்ரிக் கேட் உள்ள வீட்டைக் கட்டிக்கொள்ளவில்லை? எப்படி அண்ணனும் அண்ணியும் அவர்களின் இரண்டு குழந்தைகளும் இப்படிக் கிராமச் சூழ்நிலையில் அப்பாவோடு இருக்க ஒப்புக்கொண்டார்கள்? எப்படி அவர்களின் குழந்தைகள் சரளமாகத் தமிழும் தேவையானால் அளவோடு ஆங்கிலமும் பேசிக் குதூகலமாக இருக்கிறார்கள்?
நவீன பொருளாதாரத்தால் அளக்க முடியாத வாழ்க்கை ரகசியங்கள் பல இருக்கின்றன என சுடர் நினைத்துக் கொண்டாள்.
அப்பாவுக்கு முன்னேற்ற எண்ணம் இல்லை என்று சொல்ல முடியுமா? இந்த வீடும் அதன் சுற்றுப் புறமும் இவ்வளவு நேர்த்தியாக இருக்கும்போது...? இருக்கிறது; ஆனால் அந்த முன்னேற்றத்தின் அச்சு வேறு மாதிரியானது.
தன் மனசின் ஒரு மூலையில் இந்த வாழ்க்கை பற்றிய ஏக்கம் ஒன்று குமிழாக எழுந்து ஊதிப்பெருத்து பொக்கென்று உடைந்து மன அறைகளின் எல்லாச் சுவர்களிலும் வழிவதை அவள் உணர முடிந்தது.
அப்பாவின் அப்பா தோட்டப் பாட்டாளியாகத்தான் இந்த நாட்டுக்கு வந்தார். இதே சுங்கைப் பட்டானிக்குப் பக்கத்தில் ஒரு தோட்டத்தில் ஆங்கிலேய காலனித்துவவாதிகளுக்குக் கீழே காடழித்துக் கொட்டைபோட்டு ரப்பர் மரம் வளர்த்து, கொத்தடிமை வாழ்க்கையின் துன்பத்தைத் தணிக்கக் குடிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு ஒரு நாள் கள்ளச் சாரயத்துக்குப் பலியாகிப் போனார்.
அவரது எச்சங்கள் இரண்டும் தோட்டத் தமிழ்ப் பள்ளிக்குப் போயின. மூத்தது அப்பனின் அச்சில் இருந்தது. முரடாக இருந்தது. 8 வயதில் சுருட்டுப் பிடித்தது. 10 வயதில் சொக்கறா வேலைக்குப் போய் சம்பாரித்தது. சம்பாரிக்கும் திமிரில் குடித்தது. பின்னொரு நாள் குடிபோதையில் நடந்து வந்தபோது லோரியில் அடிபட்டுச் செத்தது.
இளையதுதான் அப்பா. அப்பாவின் கதையை இலேசில் அவரிடமிருந்து பறிக்க முடியாது. மிகக் கொஞ்சமாகத்தான் பேசுவார். தன் சாதனைகளை மட்டுப் படுத்திப் பேசித்தான் பழக்கம். தவணை முறையில் அவர் பிள்ளைகளுக்குச் சொல்லியது:
அப்பா காலையில் தமிழ்ப் பள்ளிக்கும் மத்தியானம் அப்பனுக்குத் துணையாக மரம் வெட்டவும் போனார். ஐந்தாம் வகுப்பு முடிக்கும்போதே அப்பனின் சாவு. ஆதரவு இழந்தவுடன் அப்பா படிப்பை விட்டார். ஆனால் தோட்டவேலைக்குப் போகவில்லை. தோட்டத்து மளிகைக் கடையில் பையனாகச் சேர்ந்தார். உழைப்பும் விசுவாசமும் காட்டினார். வியாபாரம் கற்றுகொண்டார். காசு சேர்த்தார். பக்கத்தில் சிறிதாகப் புதிய கடை போட்டார். பழைய கடைக்காரர் பொறாமையில் கடைக்குத் தீ வைத்ததில் அது பொசுங்கியது.
அப்பா கேஸ் எதுவும் போடவில்லை. சண்டை பிடிக்கவில்லை. கடன் வாங்கிக் கடையை மீண்டும் எழுப்பினார். வியாபாரம் வளர்த்தார். தோட்டப்புறப் பெண்ணையே கல்யாணம் பண்ணிக்கொண்டார்.
சுதந்திர மலாயாவின் முன்னேற்ற வேகத்தில் விவசாயம் முக்கியம் இழந்து தோட்டங்கள் துண்டுபோடப்பட்டு விலையான நாட்களில் மற்றவர்கள் பண்டத்தையும் பாத்திரத்தையும் தூக்கிக்கொண்டு ஒடிய நாட்களில் அப்பா மட்டும் துண்டு போடப்பட்ட நிலங்களில் ஒன்றை முன்பணம் கொடுத்து வாங்கினார். அப்புறம் முதுகின் வலிமையும் சிக்கனத்தின் சீர்மையும் அதை அவருக்கு முழுதாக்கிக் கொடுத்தன.
ரெண்டு ஏக்கர் இருக்கலாம். தென்னை மரங்கள் நட்டார். தேங்காய் வியாபாரம் நினைத்தால் அபாரமாக ஓடும். நினைத்தால் படுத்துவிடும். விவசாயத்தின் மவுசு குறைந்து விட்டாலும் அப்பாவுக்கு அதில் ஒரு பிடிப்பு ஏற்பட்டுவிட்டது. கலங்காமல் இருந்தார்.
அந்தத் தோட்டத்தில்தான் அண்ணனும் சுடரும் வளர்ந்தது. அவளுக்கு விவரம் தெரிந்ததிலிருந்து அதுதான் வீடு. ரப்பர் காட்டின் கொடுமைகள் ஒழிந்த சுதந்திர வாழ்க்கை. தென்னை மட்டையில் அண்ணன் அவளை உட்கார வைத்து இழுத்திருக்கிறார். வீட்டில் கொப்பரை காய வைத்துப் பக்கத்தில் ஒரு செக்கில் கொடுத்து மணக்க மணக்கத் தேங்காய் எண்ணெய் பிழிந்திருக்கும் நினைவுகள் இருந்தன. அவளுடைய செல்ல ஆடு ஒன்று இருந்தது. அதற்கு அவர்கள் "மாடன்" என்று பெயர் வைத்தார்கள். அவள் "மாடு" என்று கூப்பிட்டால் அது ஓடிவந்து அவள் கையில் பலா மரத் தழை வாங்கித் தின்னும். ஓ, பலாமரம் எங்கே? வெட்டிவிட்டார்கள் போல!
அப்பாவோ அம்மாவோ காலையில் படுக்கை விட்டு எழும் காட்சியை சுடர் பார்த்ததேயில்லை. அவள் எழும்போது அம்மா அடுப்பங்கரையில் ஏதாகிலும் ஆக்கிக்கொண்டிருப்பாள். பின்னாளில் அவள் தோக்கியோவிலும் பாங்காக்கிலும் லண்டனிலும் தன் அப்பார்ட்மன்டில் இருந்து காலையில் துயிலெழும் நாட்களில் அம்மாவின் தாளிப்பின் வாசம் வருவதாகக் கற்பனை செய்து கொண்டிருக்கிறாள்.
அப்பா பூஜையில் உட்கார்ந்திருப்பார். அவளும் அண்ணனும் பள்ளிக்கூடம் போகக் குளித்துவிட்டு வர அவர்களை உட்காரவைத்து ஏதாகிலும் ஒரு தேவாரம் சொல்லாமல் அவர்களை விட மாட்டார்.
"பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடை மேல்...."
தேவாரங்களின் அர்த்தங்கள் விளங்கிக் கொண்டது பின்னால் தமிழ்ப் பள்ளியில். அங்குதான் கல்வி தொடங்கியது. தமிழ் வாத்தியார் பெயர் சுப்பிரமணியம். "சுடர்க்கொடி" என்ற பெயரை "சுடர்" என்று முதன் முதலில் மாற்றி அழைத்தவர் அவர்தான். தட்டுத் தடுமாறிய கல்விதான். மாணவர்கள் வேறு போக்கில்லாததால் அங்கு வந்து சேர்ந்தவர்கள் போல்தான் இருந்தார்கள். ஆசிரியர்கள் அர்ப்பணிப்போடுதான் சொல்லிக் கொடுத்தார்கள். எத்தனை சொல்லியும் உரிக்க முடியாத பாறைகளாக இருந்த சிலரை ரோத்தானால் வெளுத்திருக்கிறார்கள். வாத்தியாரிடம் அடி வாங்கிய செய்தியை வீட்டில் போய்ச் சொல்ல முடியாது. சொன்னால் வாத்தியாரைக் கோபப் படுத்திய குற்றத்திற்கு மேலும் தோல் உரியும். இந்த மொக்கை மாணவர்களை அடித்துத் துவைப்பது ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உகந்த பொழுது பொக்காக இருந்தது.
ஆனால் சுடருக்குப் படிப்பு வந்தது. "சூட்டிகையாக இருக்கிறாள்" என வாத்தியார் மெச்சிக் கொள்வார்.
அண்ணன் தமிழ் ஆரம்பப் பள்ளியை முடித்து மலாய் இடைநிலைப் பள்ளிக்குப் போய் அந்தப் புதிய இடத்தில் ஒன்றிப்போக முடியாமல் திணறிக்கொண்டிருந்தார். மலாய் மாணவர்கள் சீன மாணவர்களின் பகடிகளைப் பொறுக்க முடியாமல் ஓரிரு ஆண்டுகளில் அப்பாவுக்குத் துணையாக வீட்டில் தங்கிவிட்டார்.
இந்த நிலையில் தன் முறை வந்ததும் அவளும் நடுக்கத்துடன்தான் மலாய் இடைநிலைப் பள்ளிக்குச் சென்றாள். ஆனால் பிடித்துவிட்டது. பிற இன மாணவர்களின் கொடுமை இருந்தது. முதலில் பயத்தில் குனிந்திருந்தாள். பின்னர் குனிந்தால் மேலும் குட்டுவார்கள் என்று தெரிந்தபோது திரும்பிச் சீறினாள். "அனாக் ஹிண்டு" (இந்துப் பிள்ளை) என்று அவளைக் கிண்டலடித்த மலாய் மாணவர்களையும் "கிலிங்ஙா கூய்" (கலிங்கப் பேய்) என்ற சீன மாணவர்களையும் அவள் சண்டை பிடித்து வென்றாள். ஆசிரியர்களிடம் கொண்டு நிறுத்தினாள். பிறகு மற்ற நல்ல மாணவர்கள் அவளை நெருங்கி வந்தார்கள். அவர்களில் ஒருத்தியாக ஏற்றுக்கொள்ளப்பட்டாள். அப்புறம் அவர்களில் சிலர் அவளுடைய நெருங்கிய தோழிகள் ஆனார்கள். இப்போதும் உலகத்தின் பல பாகங்களில் வாழ்ந்துகொண்டு அவளுடன் தொடர்பு வைத்துக்கொண்டு இருக்கிறார்கள், லத்தீஃபா, சியூ யின், ரொஹானா...
*** *** ***
ஜெய்க்கு அங்கிருந்த ஆடுகள் மிகவும் பிடித்துப் போய்விட்டன. முதலில் மிரண்டான். அம்மாவின் பஞ்சாபிச் சட்டையின் நுனியைப் பற்றிக்கொண்டு அவள் தொடையோடு ஒட்டிப் போயிருந்தான். ஆனால் அந்த ஆடுகள் அவன் கையில் இருந்த புல்லைச் சாப்பிட வந்து உரசியவுடன் அவற்றோடு ஒட்டிக் கொண்டான். அவன் முழுக்கவும் சொகுசு அடுக்குமாடி வீடுகளில் வாழ்ந்தவன். பாங்கோக்கில் பிறந்தவன். பாங்கோக்கிலும் லண்டனிலும் வாழ்ந்தவன். பிறந்ததிலிருந்து லிஃப்டும் காரும் சூப்பர் மார்க்கெட்டும் கணினியும் அவனுக்கு அத்துப்படி. ஆனால் அவன் பாதங்கள் பச்சை மண்ணை மிதித்ததில்லை. தொலைக்காட்சியில் எனிமல் பிளனெட்டிலும் எப்போதாவது சென்று வரும் விலங்குக் காட்ச் சாலைகளிலும் தவிர்த்து அவன் விலங்குகளைக் கண்டு பழகியதில்லை.
இப்போது இங்கு மாடுகள் இருந்தன. ஆடுகள் இருந்தன. அப்பாவும் அண்ணனும் சில மேல்நாட்டுக் கோழி வகைகளையும் வாங்கி வளர்த்து வந்தார்கள். மூன்று நாய்கள் அவற்றுக்கெல்லாம் காவலாக வளைய வளைய ஓடின. பலகையில் கூடுகள் அடித்து ஒரு ஐந்து ஜோடிப் புறாவும் வளர்த்தார்கள். ஜெய் மருட்சியும் சிரிப்பும் பூரிப்புமாக இருந்தான். டிஸ்கவரி சேனெலில் அவன் தொட முடியாதவைகளியெல்லாம் இங்கு தொடவும் தடவவும் முடிந்தது.
அவ்வப்போது மொய்த்த கொசுக்களை அதிசயத்துடன் கவனித்தான். லண்டனில் அவன் கொசுக்களைப் பார்த்ததில்லை. அவை கடிப்பதை வேடிக்கை பார்த்தான். கொசுவை எப்படி அடிப்பதென்று அண்ணனின் பிள்ளைகள் சொல்லிக் கொடுத்தார்கள். கொசு நசுங்கியதில் வந்த ரத்தத்தைப் பார்த்து அழுதான்.
ஆனால் மற்ற மிருகங்கள் எல்லாம் அவனைப் பூரிக்கச் செய்தன. தொட்டும் தட்டியும் விளையாண்டான். அப்பாவின் நாய்கள் அவனைக் கீழே தள்ளி முகம் நக்கின. கையால் தலநயை மூடிக் கொண்டு கால்களை உதைத்துக்கொண்டுக் குலுங்கக் குலுங்கச் சிரித்தான். அவனை இழுத்து வந்து குளிப்பாட்டப் பெரும் பாடாய்ப் போனது. அப்போதுதான் அப்படிக் கேட்டான்:
"அம்மா, கேன் ஐ ஸ்டே இன் தாத்தாஸ் ஹௌஸ்?"
*** *** ***
எப்படி வாழ்க்கை இந்த அளவுக்கு மாறியது என்பது நினைக்கும்போது சுடருக்கு வியப்பாகத்தான் இருந்தது. இடைநிலைப் பள்ளயில் படித்து முடிந்ததும் அவளுக்கு மலாயாப் பல்கலைக்கழகத்தில் படிக்க இடம் கிடைத்தது. ஆங்கிலம் சிறப்புப் பாடமாக எடுத்து கல்விப் போதனையில் டிப்ளோமாவும் வாங்கினாள். அவள் குடும்பத்தில் அவர்கள் பரம்பரையில் முதல் பட்டதாரி. அங்குதான் அருணைச் சந்தித்தாள். பொருளாதாரத் துறையில் இரண்டாம் ஆண்டு மாணவனாக இருந்தான் அருண் என்கிற அருணாச்சலம். அழகன். தன்னைப்போல எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவன் எனத் தெரிந்தது. தமிழ் எழுதப் படிக்கத் தெரியாதவனாக இருந்தான். ஆனால் நன்றாக நகைச்சுவையாகத் தமிழ் பேசினான். பேச்சு வளர்ந்து நேசமாகி ஏதோ ஒரு ரசாயனத்தில் அது காதலும் ஆனது. அப்பாவின் ஆசியில் கல்யாணத்தில் பூத்தது.
அவனுக்கு மலேசிய வெளிநாட்டுச் சேவையில் வேலை கிடைத்தது. ஓராண்டு விஸ்மா புத்ராவில் இருந்து பயிற்சி முடிந்தவுடன் அவனைத் தோக்கியோவில் மலேசியத் தூதரகத்தில் துணைச் செயலாளராகப் போட்டார்கள். தோக்கியோவின் நவீன தொழில் நுணுக்கச் சூழலில் சுத்தமான கிருமி நாசினி தெளித்த வாழ்வு அப்பாவின் வீட்டிலிருந்து முற்றிலும் வேறு பட்டிருந்தது. உலகில் வேறு விதமான வாழ்க்கைகளும் இருக்கின்றன என அவளுக்குப் புலனாயிற்று. தூதரகத்தில் மலாய்ச் சீனக் குடும்பங்களோடு அணுக்கமாகப் பழகக் கற்றுக் கொண்டாள். கொஞ்சம் ஜப்பானிய மொழியும் பேசப் பழகினாள்.
அப்புறம் பாங்கோக்கிற்கு மாற்றினார்கள். அங்குதான் முதல் பையன் கணேஷ் பிறந்தான். இரண்டாண்டுகள் கழித்து ஜெய் பிறந்தான். அங்கிருந்து லண்டனுக்கு அருணை முதல் நிலைச் செயலாளராக மாற்றினார்கள். மூன்றாண்டுகள் அங்கிருந்த பின் இப்போது ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு சிறிய நாட்டுக்கு அவனை முதல் முறையாகத் தூதராக நியமித்திருக்கிறார்கள். ஓர் இந்திய வமிசாவளி வந்த குடிமகனுக்கு ஒரு மலாய் இஸ்லாமிய நாடு கொடுத்துள்ள இந்த அங்கீகாரம் அவர்கள் இருவரையும் பூரிக்க வைத்தாலும்...
"ஆப்பிரிக்காவுக்கா?" என்று அயர்ந்தாள் சுடர்.
"அப்படித்தான் சுடர். முதலில் இந்த மாதிரி சின்ன தூரமான நாடுகள்ளதான் போடுவாங்க! அப்புறம்தான் ஐரோப்பிய நாடுகள்ள போடுவாங்க! எவ்வளவு பெரிய கௌரவம் இது! வேணான்னு சொல்ல முடியுமா?" என்றான்.
"அப்ப புள்ளைங்க படிப்பு?" மூத்தவன் அப்போதுதான் லண்டனில் படிக்க ஆரம்பித்திருந்தான். ஜெய் பாலர் பள்ளிக்குப் போய்க் கொண்டிருந்தான்.
"யோசிச்சுட்டேன். ரெண்டு பேரையும் சிங்கப்பூர்லெ என் அண்ணன் வீட்டில விட்டிடுவோம். அங்க அவங்க இண்டர்நேஷனல் ஸ்கூலுக்குப் போவாங்க. எல்லாச் செலவையும் அரசாங்கம் கொடுக்கும்."
அவளுக்கு இதயத்தைப் பிழிந்தது. ஒரே சமயத்தில் இரண்டு பிள்ளைகளையும் பிரிந்திருப்பதா? என்ன மாதிரி வாழ்க்கை இது? சொகுசுக்குக் குறைவில்லை. ஆனால் வேர்கள் பிடிக்காத வாழ்க்கை. இரண்டாண்டுகள் இங்கே, இரண்டாண்டுகள் அங்கே... ஒரு கலாச்சாரத்தின் முகம் பிடிபடுவதற்குள் இன்னொரு கலாச்சாரத்தின் மத்தியில்... ஒரு மொழியின் நெளிவு சுளிவுகள் நாவில் வரத் தொடங்கும்போது இன்னொரு மொழிக்கு...
ஆனால் அருண் அந்த வாழ்க்கையைப் பெரிதும் அநுபவித்தான். அவன் குடும்பத்தில் எந்தக் கலாச்சார பாரங்களும் இல்லை. தமிழறியாத குடும்பம். தூதரக வாழ்வின் அயராத, திரும்பத் திரும்ப வரும் விருந்துகளும் சடங்குகளும் அவளை அலுக்க வைத்தபோது அவன் அடுத்ததிற்கு ஆர்வத்தோடு காத்திருந்தான். டிசி எண்ணுள்ள காரும் சீருடை அணிந்த ஓட்டுநரும் சூட் போட்டுக் கொள்வதும் சில்க் டை கட்டுவதும் அவனைப் பெரிய மனிதனாக ஆக்குவதாக அவன் நினைத்துக் கொண்டிருந்தான். சுடர் தன் கலாச்சார வேர்களுக்கு ஏங்கினாலும் அவன் நலனே தன் நலன் என இருப்பதும் தன் கலாச்சார வேர்களின் ஒரு பகுதிதான் என அமைதி பெற்றாள்.
ஆனால் இதன் மொத்த விலையாக இரண்டு குழந்தைகளையும் விட்டுப் பிரிந்திருப்பதென்பது எளிதில் சமரசப் படுத்திக் கொள்ளும் விஷயமாக இருக்கவில்லை.
*** *** ***
"விளையாட்றியா சுடர்?" என்று கேட்டான் அருண். அவன் கேள்வியில் கோபம் கொப்புளித்திருந்தது.
அப்பாவின் வீட்டில் அவர்கள் கழித்த இரவு வேறு மாதிரி இருந்தது. அங்கே கார்களின் தொடர்ந்த இரைச்சல்கள் இல்லை. கவிழ்ந்திருக்கும் மோனத்தை மெல்ல வருடும் தென்னை ஓலைகளின் சலசலப்புக்களும் ஆட்டுக்குட்டிகளின் அரைத்தூக்கத்துக் கனைப்புகளுமே இருந்தன. அப்பா எல்லா அறைகளுக்கும் ஜன்னலில் கொசு வலைகள் அடித்து வைத்திருந்தார். ஆகவே உள்ளே கொசுத் தொல்லைகள் இல்லை. ஃபேன் போட்டிருந்தார். ஜன்னலில் கொஞ்சமாகக் காற்று வந்தது.
ஜெய் களைத்துத் தூங்கி விட்டிருந்தான். அவனுக்கு எப்போதும் பெரிய படுக்கையில் தனியாகப் படுத்துத்தான் பழக்கம். ஆனால் இந்த வீட்டில் அப்பாவுடனும் அம்மாவுடனும் ஒரு சிறிய படுக்கையில் உடம்புச் சூட்டைப் பகிர்ந்து கொண்டு படுப்பது அவனுக்குப் பிடித்தமாக இருந்தது. ஆடுகள் பற்றிப் பல கேள்விகள் கேட்டுவிட்டு அயர்ந்து போய் அருணின் மீது ஒரு காலைத் தூக்கிப் போட்டவாறு அவன் தூங்கிப் போனான்.
அப்போதுதான் சுடர் அந்த விஷயத்தை ஆரம்பித்தாள்.
"அருண், நான் ஒண்ணு கேக்கிறேன்!"
அவளை ஆச்சரியத்துடன் பார்த்தான். அவள் இத்தனை தயக்கத்துடன் எதனையும் கேட்டதில்லை. கேட்டது எதனையும் அவன் மறுத்ததில்லை. ஆகவே இந்தப் பீடிகை அவனை ஆச்சரியப் படுத்தி இருக்க வேண்டும்.
"ஜெய்க்கு இந்த இடம் பிடிச்சுப் போச்சி! இங்க இருக்க விருப்பப் பட்றான்"
"தெரியும் சுடர். ஆனா நாளைக்கே நாம் குவாலலும்பூர் போயாகணுமே! ரெண்டு நாள் விஸ்மா புத்ராவில பிரிஃபிங் இருக்கே! எப்படி இன்னொரு நாள் இருக்க முடியும்?"
"அருண், நான் சொல்றது இன்னொரு நாளைக்கு இல்ல; சில வருஷங்களுக்கு"
அப்போதுதான் அதிர்ந்து கேட்டான்: "விளையாட்றியா சுடர்?"
"இல்ல அருண். மூத்தவன் சிங்கப்பூர்ல இருந்து படிக்கட்டும். ஜெய் இங்க இருக்கட்டுமே!"
"இங்கயா? இந்தப் பட்டிக் காட்டிலயா? ஏன்?"
"இது பட்டிக் காடு இல்ல அருண். இது என் அப்பாவின் வீடு. தாய் மண். கலாச்சார மண். இதில இருந்துதான் நாம் உருவானோம். பாங்கோக்கிலும் சிங்கப்பூரிலும் உள்ள காங்க்ரீட்டில் இல்ல!"
"என்ன உளர்ர சுடர்? இங்கே அவன் என்ன படிப்பான்? என்ன கத்துக்குவான்?"
"இங்கே அவன் பக்கத்தில் சரஸ்வதி பள்ளிக்கூடத்தில தமிழ் படிப்பான். அப்பாக்கிட்ட இருந்து பண்பாடு கத்துக்குவான். அண்ணன் குழந்தைகள் கிட்ட இருந்து ஒட்டி உறவாப் பழகிற கலாச்சாரம் கத்துக்குவான். குடும்பம்னா என்னன்னு கத்துக்குவான். மண்ணை நேசிப்பான். மனுஷனா இருப்பான்."
"அவனுக்கு உயர்வான ஆங்கிலக் கல்வியக் கொடுக்க அரசாங்கம் செலவு பண்ணத் தயாரா இருக்கு. என்னை விடப் பெரிய மனுஷனா அவன ஆக்கணும்னு கனவு கண்டுகிட்டிருக்கேன் சுடர்!"
"உயர்வான மனுஷனா வர்ரதுக்குப் பல வழிகள் இருக்கு அருண். மொதல்ல அப்பா அவனுக்குக் கலாச்சார அடித்தளம் போடட்டும். அப்புறம் நீங்க அவனை உங்க அச்சில் வார்க்கக் காலம் இருக்கும்!" அவள் குரல் கொஞ்சம் உடைந்தது போல இருந்தது.
"என்ன ஆச்சு உனக்கு? ஏன் இப்படி உணர்ச்சி வசப்பட்ற?"
கொஞ்சமாக அழுதாள். "மன்னிச்சிக்குங்க அருண். நான் உங்களை அடைஞ்சி நீங்கள் கொடுத்த அன்பான வாழ்க்கையை அடைஞ்சி ரொம்ப சந்தோஷமாத்தான் இருக்கேன். ஆனா இங்க திரும்பி வந்து அப்பாவோட வாழ்க்கைய மறுபடி புதுசா பாக்கும்போதுதான் எதையெல்லாம் பறிகொடுத்து இதை அடைஞ்சிருக்கோம்னு தெரியிது. நாமாவது இந்த மண் வாசனைகள அனுபவிச்சிட்டு ஒரு சொகுசு வாழ்க்கைக்குப் போனோம். ஆனா நம்ப பிள்ளைகளுக்கு இந்த வாழ்க்கை கொஞ்சமும் கொடுத்து வைக்காமப் போயிடுமோன்னு நெனைக்கிறபோது எனக்குப் பொறுக்கலிங்க! அவனே இன்னைக்கு இங்கே இருக்கட்டுமான்னு கேட்டபோது என்னால முடியாதுன்னு சொல்ல மனம் வரல!"
"சின்னப் பிள்ளை சுடர்! அவனுக்கு என்ன தெரியும்?"
"அவனுக்குத் தெரியுதுங்க! நமக்குத்தான் தெரியாமப் போச்சி!"
விம்மல் பெரிதாக வந்துவிட்டது. அவன் பேசாமல் இருந்தான். அழ விட்டான். முதுகைத் தடவிக் கொடுத்தான். "சரி சரி! ஏதோ பைத்தியம் மாதிரி பேசற! படு! காலையில பேசிக்குவோம்!" என்றான்.
ஜெய்க்குப் போர்த்திவிட்டு அருணுக்கு முதுகைக் காட்டியவாறு ஒருக்களித்துப் படுத்தாள் சுடர். அழுகையின் தீவிரம் தணிந்தவுடன் ஏதோ பெரிய குற்றம் செய்துவிட்டோ ம் என்ற உணர்வு நெஞ்சை அடைத்தது. ஒரு கணம் பித்தம் தலைக்கேறி இருந்த போது யோசிக்காமல் அருணை ஆழமாகப் புண் படுத்திவிட்டோ ம் எனத் தோன்றியது.
இரவு கனமாக இருந்தது. அப்பாவின் ஆசைப் புறாக்கள் மட்டும் குர் குர்ரென இதமாக இரவுப் பேச்சுக்கள் பேசிக் கொண்டிருந்தன. அருணும் தூங்காமல் இருந்தான் எனத் தெரிந்தது. நீண்ட நேரம் புரண்டு புரண்டு படுத்து அப்புறம் அசைவுகள் இல்லாமல் இருந்தான். தூங்கிவிட்டான் போலும் என அவள் நினைத்திருந்த நேரத்தில் அவன் கை நீண்டு அவள் தோளை அழுத்தியது.
(முடிந்தது)
(இந்தக் கதை ரெ.கார்த்திகேசுவின் "இன்னொரு தடவை" (2001) என்னும் சிறுகதைத் தொகுதியிலிருந்து எடுக்கப் பட்டது)
(முடிந்தது)
4. "வந்திட்டியா ராசு!"
-ரெ. கார்த்திகேசு
சிலாங்கூர் மேன்சன் வந்து சேர்வதற்குள் சுந்தரராஜுக்கு இரைத்தது. அலுவலகத்தில் ஒன்பதரை மணிக்கு இருக்க வேண்டும் என்பது மானேஜரின் கட்டளை. மணி 10.00 ஆகி விட்டது. பழைய கிள்ளான் சாலையில் காலையிலேயே போக்குவரத்து நெருக்கடி ஆரம்பித்து விடும். இன்று மிக மோசம். சிரம்பான் நெடுஞ்சாலை ஓடும் மேம்பாலத்தின் கீழேயுள்ள சந்திப்பில் வந்து சேர்வதற்கே ஒன்பது ஆனது. ஒன்பதரை மணிக்கு ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவுக்கு வந்து சேர்ந்துவிட்டாலும் காருக்கு பார்க்கிங் இடம் தேட இத்தனை நேரமானது. சரக்குகள் இறக்கும் பெரிய லோரிகள் எல்லா வீதிகளையும் அடைத்துக் கொண்டு கிடந்தன. வளைந்து நெளிந்து மூன்று சுற்றுகள் சுற்றியும் இடம் கிடைக்காமல் ஒரு பார்க்கிங் செய்யக் கூடாத இடத்தில் பார்க் செய்தான். நோட்டீஸ் வந்தால் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போது மானேஜரைச் சமாளித்தாக வேண்டும். -ரெ. கார்த்திகேசு
சிலாங்கூர் மேன்சன் கொஞ்சம் பழுப்பேறிக் கிடந்தது. நுழைவாயிலில் கலவையான மணங்கள் வந்தன. மக்கிய மணம். குவாலா லும்பூரின் பரபரப்பான நகர மத்தியில் இருந்தாலும் இது ஒரு நவீன குந்துகுடிசைப் பகுதிதான். கட்டிய காலத்தில் நவீனம். ஆனால் காலம் இந்தக் கட்டிடத்தைக் கண்டு கொள்ளாமல் ஓடிவிட்டது. நகர வாழ்வின் மினுமினுப்புக்கு ஒப்புக் கொடுக்க முடியாமல் ஆனால் விட்டுப் போகவும் முடியாமல் ஒண்டுக் குடித்தனம் நடத்தும் வியாபாரிகளும் மனிதர்களும் அடைந்து கொள்ளும் கட்டிடம்.
லிஃப்டுக்குக் காத்திருக்க முடியாது. உடனே வரும் என்று நம்ப முடியாது. நான்கு மாடிகள்தான் ஏறவேண்டும். சுந்தரராஜு கையில் வைத்திருந்த ஃபைல்கள் அடங்கிய பிரிஃப் கேஸ் கனக்க வேர்க்க வேர்க்க ஓடினான். ஒரு வேளை இன்று மானேஜரும் நெருக்கடியில் மாட்டிக்கொண்டு லேட்டாக வரக்கூடும் என்ற நப்பாசை ஒன்று எழுந்து விரைவில் புதைந்தது. "கேசாபிவிருத்தி மூலிகை அழகு சாதனங்கள்" என்று போர்டு போட்ட கதவைத் தள்ளி உள்ளே சென்றான்.
புதிய நியான் விளக்குகளின் ஒளியில் வரவேற்பறை பளிச்சென்றிருந்தது. மலர் கௌன்டரைத் துடைத்துப் பொருள்களை அடுக்கிக் கொண்டிருந்தாள். வண்ண வண்ணமான லேபெல்களில் ஷம்பூக்கள், மேனியை வெளுப்பாக்கும் கிரீம்கள், எண்ணெய்கள். மானேஜரின் கதவு மூடியிருந்தது. "வந்திட்டாரா மலர்?" என்று இரைக்க இரைக்கக் கேட்டான்.
"இருக்காரு. உங்களைக் கேட்டாரு. வந்தவுடனே வந்து பார்க்கச் சொன்னாரு" என்றாள். அவள் முகத்தில் இருந்த கடுகடுப்பு மானேஜரின் மனநிலையைச் சொல்லாமல் சொல்லியது.
பிரிஃப் கேஸைத் தனது மேஜையில் வைத்துவிட்டு டையைத் தளர்த்திக் கழுத்தைச் சுற்றிப் படர்ந்திருந்த வியர்வையைத் துடைத்தான். டை ஒரு சனியன். இந்த வியாபார டம்பத்துக்கு இதையும் கட்டிக் கொண்டு ஆடவேண்டி இருக்கிறது. கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டுதான் போக வேண்டும். தாமதமாக வந்ததற்குக் காரணம் தயாரிக்க வேண்டும்.
பினாங்குக் கிளை அலுவலகத்திலிருந்து இந்தத் தலை நகர் அலுவலகத்துக்கு மாற்றல் செய்யப்பட்டு வந்து ஒரு மாதம்தான் ஆகிறது. ஊரே இன்னும் சரிவரப் பிடிபடவில்லை. பினாங்கு சொந்த ஊர். பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாம் அங்கேதான். இதமான ஊர். ஓர் அன்னையைப் போல. கடல் உண்டு, காற்று உண்டு, மலை உண்டு, நல்ல மனிதர்கள் உண்டு. முக்கியமாக இதமான மனித உணர்வுகள் கொண்ட, விடாமல் இலக்கியம் பேசுகின்ற நண்பன் மணியம் உண்டு. சந்திக்கும் நேரத்திலெல்லாம் "வந்திட்டியா ராசு!" என்று வாய் நிறைய வரவேற்பான். எல்லாவற்றையும் விட்டு இந்த முரட்டு ஊருக்கு வரக் கொஞ்சமும் விருப்பம் இல்லை.
மாற்ற வேண்டாமென பினாங்கு அலுவலக மேலாளரிடம் கெஞ்சிப் பார்த்தாகி விட்டது. "மன்னிச்சிக்க சுந்தரராஜு! வியாபாரம் ரொம்ப மந்தமாப் போச்சி. போட்டி அதிகம் ஆயிடிச்சி. நீதான் பாக்கிறியே, ஆளுக்காளு இப்ப மூலிகை ஷாம்பூவும் எண்ணெயும் விக்க ஆரம்பிசிட்டாங்க! நம்பாளுங்க பளக்கமே அதுதானே! ஆப்பக் கட ஒருத்தர் போட்டா பக்கத்தில தோசக்கட போட்டிடுவாங்க! ரேடியோவில ஒரு அர மணி நேரத்த வெலக்கி வாங்கிட்டு இல்லாத பொய்யெல்லாம் அவுத்துவுட்டுட்டு வாங்க ஆள் பிடிக்கிறாங்க!"
எல்லாம் இவர்கள் ஆரம்பித்து வைத்ததுதான். இப்போது அந்த விளையாட்டை மற்றவர்கள் இன்னும் வெற்றிகரமாக ஆடுகிறார்கள்.
"குவால லும்பூர் வட்டாரத்திலதான் வியாபாரம் நல்லா இருக்காம். அங்கதான் இனி மார்க்கெட்டிங் அதிகரிக்கணும்னு கம்பெனியில முடிவு பண்ணிட்டாங்க. நீ போகலைன்னா இப்ப உள்ள நிலமையில ஆளே தேவையில்லைன்னு சொல்லிடுவாங்க. போ சுந்தர்ராஜு! சம்பளமும் கொஞ்சம் கூடப் போட்டுத் தருவாங்க. குவாலா லும்புர்ல செலவு அதிகம்தான், என்ன பண்றது? சிக்கனமா இருந்தா பொழைச்சு முன்னுக்கு வரலாம்!" என்று முதுகைத் தட்டி அனுப்பி வைத்தார்.
வயதான தாய் இருக்கிறார். தான்தான் காப்பாற்ற வேண்டும். கணவனை இழந்த அக்காள் குளுகோர் மார்க்கெட் பக்கத்தில் ஒட்டுக் கடை போட்டு வடை சுட்டு விற்கிறார். நிச்சயமில்லாத வருமானம். ஆகவே தன்னை நம்பித்தான் இருந்தார்கள்.
மணியத்திடம்தான் சொல்லி அழுதான். "பரவாயில்ல போ ராசு! மாற்றம்கிறது வாழ்கையில முக்கியமான ஒண்ணு. அதப்பாத்து பயப்படக் கூடாது. "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல"ன்னு சொல்லியிருக்காங்கள்ள!"
எதற்கும் ஒரு இலக்கிய எடுத்துக்காட்டு காண்பிப்பான். தமிழ்ப் பள்ளியில் படித்து தமிழ் இலக்கியத்தால் ஈர்க்கப்பட்டு அதில் முற்றாகத்த் தோய்ந்து போனவன். தனக்கும் அந்தப் பித்தை ஊட்டிவிட்டவன் அவன்தான். தன்னோடு ஒன்றாகத்தான் எஸ்டிபிஎம் தேர்வு எழுதினான். இருவருக்கும் சுமாரான தேர்வுதான். பல்கலைக் கழகம் போகும் அளவுக்கு அது இருக்கவில்லை. மணியம் தமிழாசிரியர் பயிற்சி பெற்று ஆசிரியர் ஆகிவிட்டான். பினாங்கிலேயே ஒரு பள்ளியில் அவனுக்கு போஸ்டிங் கிடைத்து அங்கேயே ஆனந்தமாகத் தங்கி விட்டான்.
தனக்குத்தான் ஆசிரியர் வேலையில் நம்பிக்கை இல்லை. மீண்டும் எஸ்டிபிஎம் எழுதிப் பல்கலைக் கழகத்துக்குப் போயே ஆவது என உறுதி கொண்டு படித்துக் கொண்டிருந்த வேளையில் வர்த்தகத் துறைக்குப் போனால் ஆயிரம் ஆயிரமாகச் சம்பாதிக்கலாம் எனப் பல தன்முனைப்புக் கருத்தரங்கங்களில் கேட்ட பிரச்சாரப் பேச்சுக்கள் திசை மாற்றிவிட்டன.
கொஞ்ச காலம் இன்சுரன்சு, கொஞ்சகாலம் பொருள்கள் நேரடி விற்பனை என மாற்றி மாற்றிச் செய்து ஒன்றும் சரியாக வராமல் "கேசாபிவிருத்தி மூலிகை அழகு சாதனங்கள்" பினாங்கில் ஏக தடபுடலாக ஆரம்பிக்கப் பட்ட போது அதில் சேர்ந்துவிட்டான். அப்போது தீவிரமாக விளம்பரம் செய்தார்கள். மார்க்கெட்டில் அவர்கள் கொடி பறந்தது. ஒரு வருடத்தில் போட்டி மிகுந்துவிட்டது. பினாங்கு வியாபாரம் எதிர்பார்த்த சூடு பிடிக்கவில்லை. அதனால்தான் குவாலா லும்பூர் மாற்றம்.
குவாலா லும்பூர் கொடூரமாக இருந்தது. ஒரு மாதம் கழித்தும் இன்னும் அப்படித்தான் இருக்கிறது. இங்கு சுந்தரராஜுவுக்கு எதைப்பார்த்தாலும் பயமாக இருந்தது. போக்குவரத்து நெறிசலில் அவனுடைய பழைய டாட்சன் கார் மூச்சுத் திணறுகிறது. எப்போது ரேடியேட்டர் வெடித்துச் சிதறப்போகிறதோ என்ற கவலையாக இருக்கிறது. சாலையில் மோட்டாரோட்டிகள் அவன் பக்கம் திரும்புவதே இல்லை. முன்னால் நோக்கியபடி விறைத்துப் போயிருக்கிறார்கள். திரும்பிப் பார்த்தாலும் முறைப்பது தவிர புன்னகைப்பதில்லை.
குவால லும்பூர் சிலாங்கூர் மேன்சன் அலுவலகத்துக்கு வந்த அன்றே மேலாளர் அவனைத் தன் அறைக்குக் கூப்பிட்டார். அறிமுகப் படுத்திக் கொள்ளும் ஆவலோடு உள்ளே போனவனை அவர் உட்காரக் கூடச் சொல்லவில்லை. "தோ பாருங்க சுந்தர்ராஜ். நான் சுத்தி வளைச்சிப் பேச விரும்பல. வியாபாரம் ரொம்ப தட்டையாய்ப் போச்சி. அதுக்கு காரணம் நாம் மார்கெட்டிங்கில காட்ர தீவிரம் போதாது. முதலாளி ஆள்களைக் குறைச்சி செலவைக் குறைக்கணும்னு சொல்லிட்டாரு. ஆனா நாந்தான் அவரைத் தடுத்து வச்சிருக்கேன். இன்னும் ஆறு மாசத்தில சரக்குகள் விற்பனைய 50% அதிகரிச்சிக் காட்றேன்னு அவருக்கு உறுதி குடுத்திருக்கேன். ஆகவே எனக்கு எந்த சமாதானமும் சொல்லாம சரக்குகள் விற்பனைய அதிகப் படுத்திற வழிய நீங்கள் பாக்கணும்.
"கிள்ளான்ல புதிய ரிடெய்ல் கடைகள் அதிகமா இருக்கு. எல்லாக் கடைக்கும் போங்க. நல்லாப் பேசுங்க. நம்ப சரக்கோட நன்மைய எடுத்துச் சொல்லுங்க. பத்துப் பெட்டி கொடுக்கிற எடத்தில 15 பெட்டி கொடுக்கிற மாதிரி பாருங்க. நீங்களே கொஞ்ச நேரம் கடையில நின்னு வர்ர வாடிக்கையாளர்கிட்ட பேசி விக்கப் பாருங்க. அப்பதான் வியாபாரம் வளரும். கடைப் பையங்ககிட்டயும் பேசி நம்ம சரக்க முன்னுக்குத் தள்ளச் சொல்லுங்க. எல்லாம் உங்க பொருப்பு. இங்க உள்ள எவனும் சரியா வேலை செய்றதில்ல. சொன்னாலும் மாடு மாதிரி நிக்கிறாங்க. அதுக்காகத்தான் புது ஆள் வேணுமின்னு உங்களைத் தருவிச்சிருக்கேன். உங்க வேலையோட தெரவிசப் பாக்கணும். பாத்தபிறகுதான் சம்பள உயர்வு. அதுவரைக்கும் உங்களுக்குப் பினாங்கில குடுத்த சம்பளம்தான். ஆனா விற்பனை உயர்வைக் காட்டினிங்கன்னா நீங்க வானத்து அளவுக்கு உயரலாம். எங்களோட சேர்ந்து நீங்கள் வளரலாம். ஆனா உங்கள் முயற்சியின்மையினால வியாபாரம் கொறைஞ்சா இது மூழ்கிற படகாயிடும். கனத்தைக் குறைக்கிறதுக்கு கடல்ல தூக்கியெறியப் படக்கூடிய முதல் ஆளும் நீங்கதான். சரியா? உங்கள நான் கவனிச்சிக்கிட்டே இருப்பேன்."
ஆசாமி பல ஊக்குவிப்பு கருத்தரங்கங்களுக்குப் போய்வந்த ஆளாக இருக்க வேண்டும். ஒரு மனிதனிடம் பேசுகிறோமே என்ற எண்ணம் சிறிதும் இன்றி வியாபார வெற்றியையே முதன்மைப்படுத்தும் பேச்சாக அது இருந்தது.
மணியத்திடம் தொலைபேசியில் பேசும்போது இதைச் சொன்னான். "உங்க மேலாளர் ரொம்பத் திறமையானவர் ராசு! வியாபாரத்துக்கு ஏற்ற குணங்கள் உள்ள மனிதர். அரம் போல கூர்மையான புத்தியுள்ள மனிதர்" என்றான் மணியம்.
"என்ன மணியம்! நான் என்னோட கவலைகளைச் சொன்னா நீ அவரைப் புகழ ஆரம்பிச்சிட்டியே!"
"நான் என்ன புகழ்றது? வள்ளுவரே புகழ்ந்திருக்காரு! தேடிப்பாரேன்!"
அன்று இரவு தேடிப் பார்த்தான். பினாங்கிலிருந்து சுமந்து வந்த புத்தகங்கள் கொஞ்சம்தான் என்றாலும் அதில் ஒரு திருக்குறள் இருந்தது. "மரம் போலும் மக்கட் பண்பில்லாதவர்" என்று பார்த்துத் தன் மன நிலையை அப்படியே வள்ளுவர் பிரதிபலித்திருப்பதைக் கண்டபோது மனசுக்கு ரொம்பவும் ஆறுதலாக இருந்தது.
இப்படித்தான் மணியம். எப்போதும் ஒரு இலக்கிய வாக்கு அவன் நுனிநாவில் நிற்கும். இப்போதே போய் மணியத்திடம் பேச வேண்டும் போல் ஒரு ஆசை எழுந்தது.
"என்ன அப்படியே உக்கார்ந்திட்டிங்க? போய் பாத்திருங்க! இல்லன்னா நாந்தான் சொல்லலன்னு என் மேல பாய்வாங்க!" என்று மலர் உசுப்பினாள். எழுந்து உள்ளே போனான்.
*** *** ***
"கிள்ளான்ல சரக்கு ஆறு டஜன் கேட்டிருந்தாங்களாமில்ல, ஏன் நேத்து கொண்டி குடுக்கல?"
முகத்தில் முட்டையை உடைத்து ஊத்தினால் பொரிந்துவிடும் சூடு இருந்தது.
"டெலிவரிக்குப் போன வேன் வரல! ரிப்பேர் ஆயிடிச்சின்னு சொல்லிட்டாங்க!"
"அத நேத்தே சொல்றதுக்கு என்ன?"
"வேன் வந்திரும் வந்திரும்னு காத்துக்கிட்டே இருந்தேன். அதுக்குள்ள நீங்களும் வீட்டுக்குக் கிளம்பிட்டிங்க. ராத்திரி எட்டு மணி வரைக்கும் எனக்குத் தகவல் தெரியில!"
"வேன் இல்லைன்னா நீ உன் கார்ல போய் கொடுத்திருக்கக் கூடாதா? அப்புறம் என்ன மசிருக்கு கார் வச்சிருக்கிறது? இப்படி இருந்தா வியாபாரம் எப்படி உருப்பிட்றது? நாமெல்லாம் எங்கிருந்து மசிரு சம்பளம் எடுத்துக்கிறது?"
"நீங்கள்" என்ற மரியாதை கொஞ்ச நாளைக்கு முன்னாலேயே போய்விட்டது. ஆனால் இன்றைக்குத்தான் மசிர் புதிதாக முளைத்திருக்கிறது. சென்ற சில வாரங்களாகவே சிலவற்றைப் பிடுங்குவதும் சிலவற்றை முளைய வைப்பதுமாகத்தான் இருக்கிறார். சொல்ல ஏதும் இல்லாததால் மௌனமாக இருந்தான்.
"இப்பவே ஒரு ஆறு டஜன் எடுத்துக் கார்ல போட்டு கிள்ளான்ல போய் டெலிவெரி குடுத்துட்டு வா. வேன் டிரைவர் வந்ததும் நான் பாத்துக்கிறேன்!"
தலை நிமிர்ந்து குழப்பத்துடன் பார்த்தான். "இன்னைக்கு ரெண்டு மூணு கிளையன்ட் வர்ரதாகச் சொல்லியிருக்காங்க ... காலையில!"
"எல்லாம் நான் பாத்துக்கிறேன் போ! இங்க வியாபாரம் போற போக்கில என்ன புது கிளையன்ட் வர்ரது கேட்டுப் போவுது! போய் இருக்கிற வாடிக்கக்காரனக் காப்பாத்திற வழியப் பாரு!"
தலை குனிந்து வெளியே வந்தான். தலை விண் விண் என வலிக்கத் தொடங்கியிருந்தது. "டெலிவெரி என் வேலையில்லை!" என்று சொல்லியிருக்கலாம். அதைவிட கிள்ளானுக்கு அவன் காரோட்டிப் போனதேயில்லை. வேனில் ஒருமுறை போய் வந்திருக்கிறான். சரியாக வழி தெரியாது. ஆனால் இதெல்லாம் சொன்னால் ஏற்கனவே உடைபடும் மரியாதை மேலும் தூளாகும் எனத் தெரிந்தது.
"என்ன சொன்னாரு?" என்று கேட்டாள் மலர். அறைக்குள் பேசுவது எல்லாம் வெளியே கேட்கும். இருந்தாலும் இன்னொரு முறை அவன் வாயால் கேட்டு மகிழ வேண்டும் என்று நினைத்திருப்பாள். அவள் கொடூரம் விரும்பி. அவள் ரகசியமாக வீடியோ டேப்பில் பார்த்த பெண்ணை நிர்வாணமாக்கி ரம்பம் போட்டு அறுக்கும் கதைகளை அவனிடம் சொல்லி மகிழ்ந்திருக்கிறாள்.
"ஆறு டஜன் சரக்கு எடுத்து வைங்க மலர்! கிள்ளானுக்குக் கொண்டு போகணும்!"
"யாரு நீங்களா? ஏன்? டெலிவரி வேன் என்ன ஆச்சு?"
மேலும் கதை பிடுங்கினாள். "எடுத்து வைங்க மலர்! உடனே போகணும்!"
*** *** ***
ஆறு டஜன் புட்டிகள் அடங்கிய பெரிய அட்டைப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு லிஃப்டைப் பிடித்து இறங்கி காரை நிறுத்தி வைத்திருந்த இடம் நோக்கி நடந்தான். குவாலா லும்பூரின் உஷ்ணம் தகிக்கத் தொடங்கியிருந்தது. பல்லாயிரம் கார்களும் மோட்டார் சைக்கிள்களும் பஸ்களும் லோரிகளும் இந்த பட்டணத்துக்குச் சூடேற்றிக்கொண்டிருந்தன. மனிதர்கள் வெந்துகொண்டிருந்தார்கள். கைக்குட்டையை எடுத்து முகம் துடைக்கலாம் என்றால் இரண்டு கைகளும் அட்டைப் பெட்டியைத் தாங்கிக்கொண்டிருந்தன. தொப்புளுக்கும் பெட்டிக்கும் இடையில் டை கசங்கியது.
விடாமல் ஊர்ந்து கொண்டிருக்கும் கார்கள் வரிசைக்குள் இடைவெளி கண்டுபிடித்து பெருநடைப் போட்டி வீரனைப் போல நடந்து அவனுடைய காரை அடைந்த போது பன்டார்ராயா போக்குவரத்துக் காவலர் ஒரு சம்மன் எழுதி வைத்துவிட்டு அப்போதுதான் அப்பால் நடந்து கொண்டிருந்தார். போச்சு! இது ஐம்பது வெள்ளியா எழுபது வெள்ளியா தெரியவில்லை. இங்கே கொடுக்கிற எழுநூறு வெள்ளிச் சம்பளத்தில் இருநூற்று ஐம்பது வெள்ளி வாடகைக்குக் கொடுத்துவிட்டுச் சாப்பிடவும் அம்மாவுக்குக் காசு அனுப்பவும்தான் சரியாக இருக்கிறது. சினிமா கூட பார்க்க மனம் வருவதில்லை. போன வாரம் புத்தகக் கடைக்குப் போய் சில புதுக்கவிதைப் புத்தகங்களைக் காசு கொடுத்து வாங்கியது ஒன்றுதான் அவனுடைய உல்லாசச் செலவு.
இங்கு வேலைக்கு இருக்கும் பலபேர் கடையிலேயே தங்கிக் கொள்கிறார்கள். தான் வேலை பார்க்கும் கடையில் தங்கிக் கொள்ள இடம் தந்தார்கள். ஆனால் அங்கு ஏற்கனவே டிரைவரும் இரண்டு டெலிவெரி பையன்களுமாக மூன்று பேர் தங்கியிருக்கிறார்கள். காலைச் சடங்குகளுக்கு பொதுக் குளியலறையை நாட வேண்டும். எங்கும் எப்போதும் தனிமை கிடைக்காது. சக வேலைக்காரர்களுக்கு என்னாளும் ஊர்க்கதை பேசிக்கொண்டே இருக்க வேண்டும். ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்க விடமாட்டார்கள்.
புத்தகம் படிக்காமல் ஒரு வாழ்வா? பாரதி, பாரதிதாசன், புதுமைப்பித்தன், வைரமுத்து, மேத்தா, அப்துல் ரகுமான், வண்ணதாசன், அண்மையில் வெளிவந்த மலாயாத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் புதுக்கவிதைத் தொகுப்புகள், மலாயாப் பல்கலைக்கழகப் பேரவைக்கதைகள், சிவாவின் "வீடும் விழுதுகளும்", பீர் முகம்மதுவின் "மண்ணும் மனிதர்களும்," மா. இராமையாவின் "அமாவாசை நிலவு" இளவழகுவின் "மீட்சி" ரெ.கா.வின் "மனசுக்குள்" எல்லாவற்றிலும் படித்து முடிக்காத பகுதிகளும் திரும்பப் படிக்க வேண்டிய பகுதிகளும் ஏராளமாக இருந்தன. இதற்காகத்தான் தூரமாக இருந்தாலும் பழைய கிள்ளான் சாலையில் இருநூற்று ஐம்பது வெள்ளியில் தனியறை தேடிக்கொண்டது. ஆனால் அங்கேயும் வீட்டுக்காரர் ஒரே ஒரு நாற்பது வாட் பல்புதான் போட்டிருந்தார். இருட்டில் கண்ணைச் சுருக்கிக் கொண்டு படிக்க வேண்டி இருக்கிறது.
சாவியைப் போட்டு கதவைத் திறந்து அட்டைப் பெட்டியை தனது சீட்டுக்குப் பக்கத்தில் போட்டான். வைப்பரில் செருகி வைக்கப்பட்டிருந்த அபராதக் கடிதத்தை ஆத்திரத்துடன் பிய்த்து எடுத்தான். பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டு காரை ஸ்டார்ட் செய்து ஓட்டப் போகும் நேரத்தில் ஒரு லோரி வந்து அடைத்துக் கொண்டு நின்றது. டிரைவர் இறங்கி ஏதோ சாமானை இறக்கினான்.
ஹோர்னை அடித்து அவனை கிளப்பச் சொல்லலாமா என நினைத்து வேண்டாம் என்ற முடிவு செய்தான். ஹோர்னை அடிப்பதை பலர் தங்களை அவமானப் படுத்துவதாக எடுத்துக் கொள்வார்கள். "நீ பெரிய இவனா?" என்பது போல முறைத்துப் பார்ப்பார்கள். "நிறுத்தக் கூடாத இடத்தில் நிறுத்தி விட்டுப் பெரிய கேள்வியா?" என்று வாதம் செய்வார்கள். வாதம் முற்றினால்... சில பேர் வண்டிக்குள் மண்வெட்டிக் கணைகளை வைத்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறான். அமைதியாகக் காத்திருந்து போவதே நல்லது என உட்கார்ந்து விட்டான்.
இயலாமையும் எரிச்சலும் ஏமாற்றங்களும் நிறைந்த அந்தக் காத்திருக்கும் கணத்தில்தான் பளீரென அந்த எண்ணம் வந்தது. இந்த வேலையையும் இந்த சனியன் பிடித்த நகரையும் விட்டுவிட்டு பினாங்குக்கே போய்விட்டால் என்ன? இந்த வருடம் ஆசிரியர் பயிற்சிக்கு மனுப்போட்டாலும் கிடைக்கும். பயிற்சிக்காலத்தை முடித்துக் கொண்டு எங்காவது அவர்கள் கொடுக்கும் போஸ்டிங்கை ஏற்றுக்கொண்டு - அது ஒரு பொட்டைக்காடாக இருந்தாலும் நல்லதுதான் - போய் அமைதியாக இருந்துவிடலாம். வேலையைப் பார்க்கலாம். இலக்கியம் படிப்பதற்கு யாரும் தடையாக இருக்க மாட்டார்கள். யார் கண்டார்கள்? மணியம் வேலை பார்க்கும் பள்ளிக்கூடத்திலேயே வேலை கிடைத்தாலும் கிடைக்கும். அந்த நினைவே ஆனந்தமாக இருந்தது.
ஆனால் அது ஒரு பெரிய அவமானம் என்றும் தோன்றியது. இங்கு நான் வர்த்தக உலகத்தில் வெல்ல வந்தேன். இந்த ஒரு முசுடு மேனஜருக்காக எல்லாவற்றையும் விட்டு ஓடுவது என்பது வெட்கக்கேடு. ஊர் சிரிக்கும். ஊர் என்றால் யார்? உறவினர்கள்தான். அம்மாவும் அக்காவும்தான். அவர்கள் சிரிப்பை நினைக்க பயமாகத்தான் இருக்கிறது. அவர்கள் சிரிப்பு ஊர் முழுதும் திரண்டு சிரிப்பது மாதிரிதான். மணியம் சிரிப்பானோ? அடுத்த முறை அவனைப் பார்க்கும்போது கேட்க வேண்டும் என நினைத்துக் கொண்டான்.
லோரிக்காரன் நகர்ந்தான். இவனை ஒரு ஏளனப் பார்வை பார்த்துவிட்டுப் போனான். இங்கும்தான் எல்லோரும் சிரிக்கிறார்கள். மானேஜர் வாய் நாறத் திட்டிவிட்டு அவன் திரும்பியதும் அவனுடைய பயங்கொள்ளி முகத்தைப் பார்த்துச் சிரிக்கிறார். அவன் அறைக்குள் திட்டு வாங்கும்போது மலர் வெளியிலிருந்தவாறு எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு சிரிக்கிறாள். நான் இந்த நகரில் நடக்கும்போதும் ஒட்டுக்கடைகளில் சாப்பிடும்போதும் வீட்டுக்குள் நுழையும்போதும் எல்லோரின் உதடுகளிலும் ஏளனச்சிரிப்பு இருக்கிறது. நான் இந்த பட்டினத்திற்குப் பொருத்தமானவனில்லை எனபது போல! இவன் ஏன் இங்கு வந்தான் என்பது போல!
மீண்டும் எப்படியாவது இந்த இடத்தை விட்டுத் தொலைந்து பினாங்குக்குப் போய்விடவேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக எழுந்து அடங்கியது.
காரைக் கிளப்பி வெளியேறியபோது எந்தப் பக்கமாகப் போனால் கிள்ளானுக்குப் போகும் சாலையில் போய்ச் சேரலாம் என்பது சரியாகத் தெரியவில்லை. ஜாலான் பூனுசைக் கடந்து சாட்டர்ட் பேங்கின் பக்கமாக கிள்ளான் ஆற்றின் மீது போகும் சிறிய பாலத்தில் ஏறி வந்தவுடன் அம்பாங் சாலையில் இருக்கக் கண்டான். அப்புறம்?
நின்று யோசிக்க முடியாது. பின்னால் கார்கள் ஓநாய்களாகத் துரத்திக் கொண்டிருந்தன. அவற்றை ஓட்டும் ஒவ்வொருவரின் முகத்திலும் உள்ள கண்கள் தீப்பிழம்புகளாகத் தெரிந்தன. காரை ஓட்டிக்கொண்டேதான் யோசிக்க வேண்டும்.
இந்த நகரில் சாலைகள் ஒரு ராட்சதக் கணவாயின் கால்களைப் போல எல்லாத் திசைகளிலும் ஓடுகின்றன. சுற்றுகின்றன. ஒன்றை ஒன்று பின்னிக் கொண்டிருக்கின்றன. மேடான் அது,லொரொங் இது, திங்காட், லெபோ. சுற்றிச் சுற்றி வந்தான். ஒரு லேனிலிருந்து இன்னொரு லேனுக்குப் போக முடியவில்லை. யாரும் இடம் தரவில்லை. முயன்றபோது ஒரு லோரியிலிருந்து ஒரு காட்டுப்பூனை சீறியது. முடியாமல் அதே லேனில் நேராகப் போனான்.
அரை மணி நேரத்துக்குப் பின் பெட்டாலிங் ஜயா என்ற அம்புக்குறி பார்த்து திரும்பினான். பி.ஜே. போய்விட்டால் அங்கிருந்து கிள்ளான் போய்விடலாம். எப்படியோ ஜாலான் கூச்சிங் வந்தது. போக்குவரத்து சமிக்ஞை விளக்கில் நின்றான். எந்த லேன் சரியான லேன் எனத் தெரியவில்லை. இரண்டு வேன்களுக்கு மத்தியில் தான் நின்றிருந்த லேனில் வேறு பக்கம் திரும்ப முடியாமல் தொடர்ந்த போது ஜாலான் பார்லிமென்டில் இருந்தான். ஜாலான் துன் பேராக் வந்த போது திரும்ப நகருக்குள் நுழைவதாகத் தெரிந்தது.
இது எப்படி? மீண்டும் ஜாலான் அம்பாங்கை நோக்கியா? புடுவை நோக்கியா? இப்படியே போய்..? தயங்கிய போது பின்னால் ஒரு சிங்கம் - சிங்கமாகத்தான் இருக்க வேண்டும் - "ப்ரோங்" என்று கர்ஜித்தது. ஒடுங்கிப் போனான்.
போ, போ, போய்க்கொண்டே இரு. நிற்காதே... எதாகிலும் ஒரு திக்கில்... திக்கு முக்கியம் அல்ல. ஊர்தல் நகருதல் முக்கியம். நகர்ந்து கொண்டே இரு.
வெய்யில் ஏறிக் கொண்டிருந்தது. காரில் பொருத்தியிருந்த குளிர் சாதனக் கருவி புராதனமானது. இந்த வெயிலில் அதற்கும் சூடேறிவிட்டிருந்தது. புடுவில் மாபெரும் சாலை வட்டம் வந்தது. இதைச் சுற்ற வேண்டும். இது தலை நகர அசுரனின் கோயில் கருவறை. இதை வலம் வர வேண்டும். ஆனால் இங்கு பல கோர தேவதைகளும் சுற்றுகின்றன. இவற்றினிடையே பயபக்தியாக இவற்றின் பிருஷ்டங்களுக்கிடையே முகம் நுழைத்து வணங்கி, பல்லிளித்து, சுற்றி தன் வழியைப் பிடிக்க வேண்டும்.
எல்லாக் கோர தேவதைகளும் சிரிக்கிறார்கள். அடேடே யாரிவன் கத்துக்குட்டி! யார் இவனை இந்தப் பெரு நகருக்குள் விட்டார்கள்? ஹா ஹா ஹா இவன் அசைவதைப் பார்! நடுங்குவதைப் பார்! ஹே ஹே ஹே! புடு ராயா பஸ் நிலையம் முழுவதும் அவர்கள் கோரச் சிரிப்பு எதிரொலித்தது.
கிள்ளான் பஸ் நிலையம். புகுந்தால் ஜாலான் துன் எச்.எஸ்.லீ. அங்கு பழைய ஹை ஸ்த்ரீட் மகா மாரியம்மன் சிரித்துக் கொண்டிருந்தாள்.
சுற்றிக் கொண்டே இருந்தான். எப்படியோ, எந்தத் தெய்வமோ, வழி விட்டது. மாரியம்மனாகத்தான் இருக்க வேண்டும். மெர்டேக்கா வட்டம். விஸ்மா துன் சம்பந்தன். ஜாலான் சையட் புத்ராவில் இருந்தான். இனி நேராகப் போனால் பி.ஜே. போகலாம். ஓரத்து லேனில் இருந்தான். பக்கத்தில் மிருகங்கள் சீறிப் போகின்றன. பின்னால் ஒரு கரிய யானை "ஏன் இவ்வளவு மெதுவாகப் போகிறாய்?" எனப் பிளிறித் துரத்தியது.
ஏன் இவைகளோடு தன் வாழ வேண்டும்? ஏன் இவைகளோடு நான் போராட வேண்டும்? பினாங்கு போய்விட வேண்டும் எப்படியும் பிழைக்கலாம். மணியத்தின் பக்கத்தில் நிம்மதியாக இருக்கலாம். போகத்தான் வேண்டும். இந்த கிள்ளான் வேலை முடிந்ததும். இந்தா உன் வேலையை நீயே வைத்துக்கொள். வானொலியிலும் பத்திரிக்கைகளிலும் பொய்யும் புரட்டும் சொல்லி உன் வியாபாரத்தை நடத்திக் கொள். உன்னிடம் வேலை செய்யும் ஏஜண்டுகளை பயனீட்டாளர்கள்போல் நடிக்க வைத்து ஏமாற்றிக் கொள். கூந்தலில் தைலம் தடவுவதால் சொரி, சிரங்கு, காசநோய், புற்றுநோய் அனைத்தும் நீங்கும் எனச் சொல்லிக் கொள். காசுக்காக எல்லாம் செய்யலாம். "பொருளில்லார்க்கிவ்வுலகம் இல்லை" அந்த அரைக்குறள் உங்களுக்கெல்லாம் போதும்.
"ஃப்ரீக் ஃப்ரீக்.. ஃப்ரீக் ஃப்ரீக்.." கைத்தொலை பேசி அலறியது.
கார் ஓட்டும்போது பேசலாமா? போலிஸ்காரன் இருந்தால் பிடித்துக் கொள்வானே. காலையில் வாங்கிய ஒரு சம்மன் போதாதா?
"ஃப்ரீக் ஃப்ரீக்.. ஃப்ரீக் ஃப்ரீக்.."விடாமல் அலறியது. மானேஜர் கூப்பிடுகிறானா? கூப்பிட்டு மீண்டும் மயிர் மட்டை என்று திட்டப்போகிறானா?
"ஃப்ரீக் ஃப்ரீக்.. ஃப்ரீக் ஃப்ரீக்.." அம்மா கூப்பிடுகிறாரோ? எதாகிலும் அவசரமாக இருக்குமா?
எடுத்துக் காதில் வைத்து "ஹலோ" என்றான்.
"ஹலோ, அங்க யாரு சுந்தரராசா பேசிறது?"
யாரோ புதிய குரல். "ஆமாங்க. யாரு பேசிறிங்க?"
ஸ்டியரிங் ஆடியது. வேகத்தைக் குறைத்தான். பின்னால் சில கழுதைகள் அலறின. ஓர் ஒரமாக நிறுத்தினான்.
"இங்க மணியம் வீட்டில இருந்து பேசிறோம்"
"மணியமா? எந்த மணியம்"
"அதான் வாத்தியாரு. ஒங்க நண்பர்"
"ஆமா, மணியம்!"
"அவரு நேத்து ஒரு ஆக்சிடன்டில தவறிட்டாருங்க!"
புரியவில்லை. "தவறிட்டாருன்னா...?"
"செத்திட்டாருங்க. தலை நசுங்கிடிச்சி!"
"எப்படி? என்ன சொல்றிங்க..."
"இன்னைக்கு மூணு மணிக்கு அடக்கம் பண்றாங்க!"
ஒன்றும் பேசத் தெரியவில்லை. தொலைபேசியைப் பிடித்திருந்த கை நடுங்கியது.
"ஹலோ... கேக்குதுங்குளா? ஹலோ! ஹலோ!... இந்தச் சனியன் ஹென்ட் ஃபோன் எப்பவும்
இப்பிடித்தான். ஹலோ!"
"கேக்குது. நேத்தே ஏன் சொல்லல?"
"அது எனக்குத் தெரியாதுங்க! சொந்தக்காரங்களுக்கெல்லாம் சொல்லியாச்சி. இப்பத்தான் அவுங்க அம்மா உங்க நம்பர் குடுத்து பேசச் சொன்னாங்க. சரியா மூணு மணிக்கு! "
"நீங்க யாரு? மணியம் அம்மா எங்க?"
"சொந்தக்காரங்க! அவங்க உடைஞ்சு போய்க் கிடக்கிறாங்க. மூணு மணிக்கு. வச்சிட்றன்!"
"மூணு மணி" மட்டும் காதில் திரும்பத் திரும்ப ஒலித்தது. இப்போ மணி என்ன? பதினொன்றரை. மூன்று மணிக்குப் பினாங்கு போய்ச் சேர முடியுமா?
போக வேண்டும். போகதான் வேண்டும். போகாமல் எப்படி? என்ன சொன்னார்கள்?
"செத்திட்டாருங்க. தலை நசுங்கிடிச்சி!"
நிறுத்தியிருந்த இடத்திலிருந்து காரை எடுக்க முடியவில்லை. கைகாலெல்லாம் நடுங்கிற்று. புலிகள், சிறுத்தைகள், சிங்கங்கள், யானைகள், ஒட்டகங்கள், காண்டாமிருகங்கள் அவனைப் பார்த்துச் சீறிவிட்டுத் தொடர்ந்து ஓடின. அவற்றுக்கு அவசரம். எங்கோ பெரிய வேட்டைகள் காத்துக் கொண்டிருக்கின்றன. இவன் சிறிய எலி. சீச்சீ குறுக்கே வராதே. உனக்கு இங்கென்ன வேலை?
ஆனால் நான் போகத்தான் வேண்டும். இங்கேயே நின்று கொண்டிருந்தால் கேசாபிவிருத்தி மூலிகைத் தைலத்தை யார் கிள்ளான் கொண்டு சேர்ப்பார்கள்? எத்தனை பேர் இதை எதிர் பார்த்துச் சொரி சிறங்குகளுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்!
நான் போகலாம். நான் நினைத்தால் என் வாகனம் பறக்கும். நான் நினைத்தால் இதே வியாபார உலகத்தில் புகுந்து நுழைந்து தில்லுமுல்லுகள் செய்து ஆயிரம் ஆயிரமாய்ச் சம்பாதிக்க முடியும்.
யார் என்னைத் தடுப்பவர்கள்? இந்தத் திமிர் பிடித்த மானேஜரும் இந்த மலர் என்ற அரைகுறையாகப் படித்த விற்பனைப் பெண்ணும் என்னைப் பார்த்து சிரிக்கிறார்களா? என்னை யார் என்று நினைத்தீர்கள்? என்னால் முடியும். என்னால் பறக்க முடியும்.
நான் யார்? நான்தான் பாரதியார் சொன்ன அக்கினிக் குஞ்சு. எரிபவனும் நான்தான். எரிப்பவனும் நான்தான். எரியும் குஞ்சில் எந்தக் குஞ்சு சின்னக் குஞ்சு?
காரை வேகமாகச் சாலையை நோக்கித் திருப்பினான். புலிகளும் சிங்கங்களும் மருண்டு சிதறி ஓடின. காலைத் தரையில் ஊன்ற முனைந்து சருக்கிக் கொண்டு ஓடிச் சாலைத் தடுப்பில் முட்டிச் சிதறின. முகங்களும் பிருஷ்டங்களும் ஒன்றோடு ஒன்று முட்டி நசுங்குவது வேடிக்கையாக இருந்தது. கேசாபிவிருத்தி மூலிகைத் தைலம் சாலையில் ஊற்றித் தீப்பிடித்து எரிந்தது.
இப்போது சிரித்தான். இப்போது தெரிகிறதா நான் யாரென்று?
"வந்திட்டியா ராசு! என்ன இப்படி பண்ணிட்ட?" என்றான் மணியம்.
(முடிந்தது)
(இந்தக் கதை மலேசிய வார இதழான "மக்கள் ஓசை"-இல் டிசம்பர் 2001-இல் பிரசுரமானது)
கருத்துகள்
கருத்துரையிடுக