பித்தளை அல்ல, பொன்னே தான்!
சிறுகதைகள்
Backபித்தளை அல்ல, பொன்னே தான்!
(சிறுகதைகள்)
கா. ந. அண்ணாதுரை
Source:
பித்தளை அல்ல, பொன்னே தான்!
பேரறிஞர் டாக்டர் சி. என். அண்ணாதுரை, எம். ஏ..
பூம்புகார் பிரசுரம் பிரஸ் 63, பிராட்வே , சென்னை - 600 001.
விலை ரூ. 5 - 90
பூம்புகார் வெளியீடு எண் : 163; முதற் பதிப்பு : அக்டோபர், 1980
உரிமை: திருமதி ராணி அண்ணாதுரை
அச்சிட்டவர்கள்: பூம்புகார் பப்ளிகேஷன்ஸ் பிரஸ், சென்னை - 600001.
---------------
பதிப்புரை
மனித மனத்தை நிறைவு படுத்தும் வேலையை, கொஞ்சம் அழகாக எழுதத் தெரிந்த யாராலும் செய்து காட்ட முடியும். அதுவல்ல, சிறுகதை.
ஒரு மனத்தின் சேஷ்டையை மற்றொரு மனத்துக்கு எடுத்துக் காட்டுவது மட்டுமல்ல; அந்த மனத்தின் கசிவைப் பிரதிபலிக்கும் கண் ணாடியாகவும் அது பொருந்தி இருக்க வேண்டும். அப்படிப்பட்ட கதையைத்தான் 'சிறுகதை யாகக் கொள்ள முடியும்.
காலத்துக்கேற்ற மாதிரி - சூழ்நிலைக்குத் தகுந்த விதத்தில் எந்த ஒரு பூவும் தன் நிறத்தை மாற்றிக் கொள்வதில்லை. ஆனால் மனிதருக்குப் புத்தி சொல்லக் கிளம்பும் சில புஸ்வாண எழுத்தாளர்கள் மட்டும் உடையை மாற்றிக்கொள் வது போல் மனத்தை மாற்றிக்கொண்டு, எழுது வதையெல்லாம் கதை என்றுகதைக்கின்ற இந்தக் காலகட்டத்தில், உங்கள் கரங்களில், உண்மையான - உயிருள்ள கதைகளைச் சிருஷ்டித்த பெருமைக் குரிய பேரறிஞர் அண்ணா அவர்களின் சிறுகதைத் தொகுப்பை, பித்தளை அல்ல, பொன்னேதான்!' என்னும் தலைப்பில் தவழவிட்டிருக்கிறோம்.
தமிழகத்தைப் பொறுத்த வரையில் 'சிறு கதை' என்பது சுவீகாரக் குழந்தைதான். அதுவும் எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட குழந்தை அது.
அந்தக் குழந்தையை அமரர் அண்ணா அவர்கள், தம் கரத்தில் ஏந்தித் தவழவிட்டி ருக்கும் பாங்கை இதில் நீங்கள் பரவலாகக் காண லாம். அந்தக் குழந்தையின் மூலமாக அவர் வெளிப்படுத்தியிருக்கும் ஒவ்வொரு விஷயமும் விழிப்பை மட்டுமா , நல்ல வெளிச்சத்தையும் தரக் கூடிய ஒன்றாகும்.
அத்தகு சிறப்புள்ள -உயிர்த் துடிப்புள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் கதைகளை நாங்கள் வெளியிட்டுக் கொள்ளும் உரிமையைப் பூரணமாக வழங்கி இருக்கும் திருமதி ராணி அண்ணாதுரை அவர்கட்கு எங்களின் இதய பூர்வமான நன்றி.
- பூம்புகார் பிரசுரத்தார்.
-----------------
1. பித்தளை அல்ல, பொன்னேதான்!
"அப்பா! ஏம்பா அழறீங்க, அப்பா"
"முத்து! நான் பாவிடா! நான் பாதகன்டா!!"
"அப்பா!- அழாதீங்கப்பா. நான் இனி இப்படிப்பட்ட தப்பு வழி போகமாட்டேம்பா ... சத்யமாச் சொல்றோம்பா"
" என்னைக் கொல்லாதடா, முத்து! என்னைக் கொல்லாதே..."
"என்ன கஷ்டம் வந்தாலும், அப்பா! திருடக்கூடா தப்பா... திருட்டுத் தொழில், ஈனத் தொழில் அப்பா. அப்பா! கூலி வேலை செய்யலாம்.... நாலு இடம் பிச்சைகூட எடுக்க லாம். திருட மட்டும் கூடாதப்பா.... அப்பா!"
"ஐயையோ! முத்து! நான் என்னடா சொல்லுவேன்.... எப்படிடா இதைத் தாங்கிக் கொள்வேன். முத்து! உன்னை இந்த நிலைக்கு ...."
"அப்பா! நான் திருந்திவிடுவேம்பா!.... கவலைப்படாதீங்க..... தங்கச்சிக்குச் சொல்லுங்க...!"
இவ்வளவு பேசுவதற்கு, போலீஸ்காரர் அனுமதி கொடுத்ததே ஆச்சரியம் - அவர்களுக்கும் குடும்பம், பிள்ளை , பாசம், இருக்கிறதல்லவா. அதனாலே, ஆறுமாதம் ஜெயில் தண்டனை பெற்று 'வண்டியிலே' ஏறப்போகும் மகனிடம், தகப்பன், சிறிது நேரம் கதற அனுமதி கொடுத்திருந்தனர்.
கோர்ட்டிலே கொஞ்சம் கூட அச்சம் அடக்கம் காட்டாதவன் அப்பனைக் கண்டதும் இப்படி அழுகிறானே, சத்தியம் கூடச் செய்கிறானே, இனி திருடமாட்டேன் என்று. இது அல்லவா ஆச்சரியம் என்று போலீஸ்காரர்கள் எண்ணிக் கொண்டனர்.
திருட்டுக் குற்றத்துக்காகத் தன் மகன் தண்டிக்கப்படுவதைக் காணும் தகப்பன் தத்தளிக்காமலிருக்க முடியுமா? பாபம், இந்தப் பெரியவர் அதனால் தான் கதறுகிறார் இப்படி என்று பேசிக் கொண்டனர், அருகே நெருங்கி வந்திருந்தவர்கள்.
"அம்மா சொல்லும்னு சொன்னயேப்பா, கவனமிருக்குதா, எனக்குத் தங்கக் காப்பு செய்து போடணம்னுஇதோ பார்த்தாயா, மாட்டி விட்டாங்க, இரும்புக் காப்பு..... இதைப் பாரப்பா, இதைப்பாரு! திருடினா இதுதான் ..... இது மட்டுந்தானா? ஊரே காரித்துப்பும்... ஜெயிலுக்குப் போன வன் என்கிற கேவலம் உள்ளத்தில் நாளைக்கும் இருக்கும்."
'முத்து!' என்று கதறியபடி அந்த முதியவர் தன் மகன் எதிரே விழுந்து அழுதார்! அவருடைய கரங்கள் அவன் காலருகே சென்றன. போலீஸ்காரர் தடுத்து நிறுத்தி முதியவரை அப்புறப்படுத்திவிட்டு அவனைப் போலீஸ் வேனில் ஏறச் செய்தனர். ஏறுவதற்கு முன்பு அவன் சுற்று முற்றும் பார்த்தான். ஒரு புளிய மரத்தடியில், ஒரு பெண் நின்று கொண்டு, முந்தானையால் தன் கண்களைத் துடைத்துக்கொண்டிருக்கக் கண்டான். புன்னகை செய்தபடி, அந்தப் பக்கம் பார்த்தான். 'முத்து! முத்து!' என்று முதியவர் கதறினார். போலீஸ் வண்டி கிளம்பி விட்டது.
"குடும்பத்துக்குக் கேவலத்தைத் தேடி வைக்கத்தானேடா, நீ பிறந்தே? உப்புப் போட்டுத்தானே சாப்பிடறே. உணர்ச்சி, மானாபிமானம் இருக்கவேண்டாமா ... இந்தக் குடும்பத்தைக் காப்பாத்த நான் மாடா உழைக்கிறேன். உனக்கு ஆகுது வயது இருவது. ஒரு வேலைக்கு இலாயக்கா. நீ உடம்பு வணங்கி ஒரு வேலை செய்தது உண்டா? உன் தங்கச்சி வயசுக்கு வந்து வருஷம் மூணு ஆகுது. அதுக்கு ஒரு கல்யாணத்தைச் செய்து வைக்கணுமே, எவன் கிடைப்பான் என்று நான் தவியாத் தவிக்கிறேன். உன்னுடைய யோக்யதை ஊர் சிரிக்கறதாலே ஒருபயலும் வரமாட்டேன் என்கிறானே, அவளைக் கட்டிக்க. ஏண்டா என் வயத்தெரிச்சலைக் கொட்டிக் கொள்றே."
மளமளவென்று வளர்ந்துவிட்டான். முத்துச்சாமி. ஆனால் ஒரு இடத்திலும் நிலைத்து வேலைக்கு இருப்பதில்லை. படிப்பு இல்லை; கூலி வேலை செய்வதுதான் என்று நிலை என்றாலும், யாராவது நாலு வார்த்தை ஏசிவிட்டால், அவனால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. கோபம் கோபமாக வரும். கண்மண் தெரியாமல் நடந்து கொள்வான்.
"வீட்டுக்கு அடங்காததை ஊர்தான் அடக்க வேண்டும்..." என்று பலர், அவன் காதில் விழுகிறபடி சொல்லுவார்கள். அவர்கள் இருந்த குப்பத்தில், மற்ற வீடுகளில், தங்கள் பிள்ளைகளை முத்துசாமியுடன் மட்டும் பேசக்கூடாது என்று கண்டிப்பான உத்திரவு போட்டு இருந்தார்கள் . அவனிடம் பேசவே, அவனை ஒத்த வாலிபர்கள் கூச்சப் படுவார்கள். அவனிடம் அந்த நிலையிலும், அன்பு காட்டி, சிரித்து விளையாடி பேசி வந்தது. அவனுடைய தங்கச்சிதான் - கூடப் பிறந்தது அல்ல - கூடப் பிறந்தது தனக்குக் கலியாணம் ஆகாமலிருப்பதற்குக் காரணமே, தன் அண்ணன்தான் என்று எண்ணிக் கொண்டு, முத்துவைக் கண்டவுடன் சீறும் சுபாவம் கொண்டுவிட்டிருந்தது. முத்துவிடம் பாசம் காட்டிப் பழகியது. எட்டு வயதுத் தங்கை - அப்பாவின் இரண்டாந் தாரத்துக்குப் பிறந்த பெண் .
"அவ புண்ணியவதி, இந்தக் கண்றாவியைப் பார்க்காமல் பூவோடும் மஞ்சளோடும் நல்ல கதிக்குப் போய் விட்டாள்," என்று சில நேரத்திலும், "அடிப் பாவி! என் தலையிலே இந்தச் சனியனைக் கட்டி விட்டு, பாடுபடுடாப் பாவின்னு சொல்லிவிட்டு நீ கண்ணை மூடிட்டே." என்று சில வேளைகளிலும் முத்துவின் தகப்பனார் அப்பாசாமி கதறுவார்.
அப்பாசாமி, முப்பது வருஷங்களாக ஒரே இடத்தில் ஒழுங்காக, நாணயமாக வேலை செய்து அடக்கமானவர் என்று பெயரெடுத்தவர். எட்டு ரூபாய் சம்பளத்தில் துவங்கி, அறுபது ரூபா வாங்கும் நிலைக்கு வந்திருக்கிறார், எளிதாக எவரையும் நம்பாத எம்பெருமாள் செட்டியாரிடத்தில்.
முதல் மனைவி, முத்து, மாணிக்கம் என்ற இரண்டு செல்வங்களை தந்துவிட்டு, மறைந்துவிடவே, அப்பர்சாமி வள்ளியை இரண்டாந்தாரமாகக் கொள்ள வேண்டி நேரிட் டது. எத்தனையோ நல்ல நல்ல இடமெல்லாம் வந்தது. எங்க அப்பன் வக்குவகை இல்லாம, என்னை இரண்டாந்தாரமாகக் கொடுத்து விட்டாரு என்று வள்ளி, கோபமாக இருக்கும்போதெல்லாம் குறைகூறிப் பேசுவதுண்டு. அப்பாசாமி, அவள் சொல்வதிலே உண்மை இருக்கிறது என்று மனதுக்குள் எண்ணிக் கொள்வார். வள்ளியின் பெண் தான் எட்டு வயது பட்டு. அந்தப் பட்டுவுக்குத்தான் முத்துவிடம் அவ்வளவு பாசம்.
"அண்ணாத்தை! வா! அப்பா, இல்லை; வா, சும்மா!" என்று வரவேற்கும் குரலே பட்டுவுடையதுதான்.
@அக்காவுக்குக் கூட உன் பேர்லே கோவம் அண்ணாத்தை. என்னைக்கூட, உன்கூடப் பேசக் கூடாதுன்னு சொல்லி இருக்குது" என்று 'சேதி’ சொல்லுவதும் பட்டு தான். பட்டுவை ஒரு நாள் பார்க்காவிட்டால் கூட, முத்துவுக்கு மனது சங்கடமாக இருக்கும். அவ்வளவு அன்பு வைத்து இருந்தான், அந்தச் சிறுமியிடம். வள்ளியால் ஆனமட்டும் மிரட்டிப் பார்த்தாகிவிட்டது; அடித்தும் பார்த்தாகிவிட்டது. பட்டு கட்டுப்படவே இல்லை. முத்துச்சாமியின் குரல் கேட்ட உடனே துள்ளிக் கொண்டு ஓடிப்போய், அவன் கழுத்தைப் பிடித்துக் கொண்டு வருவாள். முத்துவுக்கும், அந்தக் குடும் பத்திற்கும், தொடர்பு அடியோடு அறுபட்டுப் போகாம லிருந்ததே, பட்டு காட்டி வந்த பாசத்திலேதான்."
முத்துச்சாமி படிப்பிலே நாட்டம் காட்ட முடியாது போகவே, தச்சுத் தொழில், அச்சுத் தொழில், கட்டடத் தொழில் என்று பலவற்றிலே நுழைந்தான். எந்த இடத்திலும் தன்னிடம் அன்போ, அக்கரையோ எவரும் காட்ட முன் வராததையும், எதற்கெடுத்தாலும் ஏளனம் பேசவும் ஏசவும். அடிக்கவும் உதைக்கவுமே பலரும் துடித்தனர் என்பதையும் கண்டுகொண்ட பிறகு, முத்துவுக்கு ஒரு வெறுப்புணர்ச்சியே வளர்ந்துவிட்டது. இந்த உலகத்தில் தன்னை வாழவைக்க ஒரு வருக்கும் மனம் இல்லை என்று முடிவுக்கு வந்தான் . ஈ, எறும்பு இவைகளைக் கண்டவர்கள் அடிக்கவாவது செய்கிறார்கள்; இல்லை என்றால் எப்படியோ ஆகட்டும் என்று விட்டுவிடுகிறார்கள். அதுபோல, மனித உருவத்தில் தன்னைக் காண்கிறார்களே தவிர, ஈ எறும்புக்குச் சமம் என்றுதான் ஒதுக்கித் தள்ளுகிறார்கள் என்று எண்ணிக் கொண்டான். முதலில் கோபம், வருத்தம் ஏற்பட்டது. பிறகு அந்த உணர்ச்சிகள் மறைந்துவிட்டன. ஒரே வெறுப்பு, உலகத்திடம் ஒருவித மான துணிவு! எவரும் தன்னை எதுவும் செய்ய முடியாது! என்ற துணிவு.
மூங்கிலை, பயன்படும்படியாக வளைத்து வைக்க, அது இளசாக இருக்கும்போது முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பார்கள் அல்லவா! சிறுவனாக இருக்கும் போதே, முத்துச்சாமியைப் பக்குவப்படுத்தி இருக்க வேண்டும். அதற்காக அப்பாசாமிக்கு நேரம் இருந்தது. எலும்பு முறிய, விடியற் காலையிலிருந்து விளக்கு வைக்கும் வரையில் பாடுபட்டாலும், ’சோம்பேறி ! தடிக்கழுதை!’ என்று ஏசுகிறார். நேரம் ஏது, மகனுக்கு நல்வழி இது; தீது இது என்று எடுத்துக்காட்ட முறையாக எடுத்துச் சொல்ல, திறமை உண்டா அப்பாசாமிக்கு என்பதேகூடச் சந்தேகம். உருட்டி மிரட்டி, தட்டித் தடவி, மகனை வளர்க்கவே நேரம் கிடைப்பதில்லை .
'உன் மகன் செய்த அக்ரமத்தைக் கேட்டயா...’ என்று வள்ளி சொல்ல வருவாள்; 'உன் பிரசங்கத்தைக் கேட்க எனக்கு நேரமில்லை! எஜமானர் எலுமிச்சம் பழம் வாங்கி வரச் சொல்லிவிட்டார். இலுப்பூர் சந்தைக்குப் போயாகணும்!' என்று கூறிக்கொண்டே , அப்பாசாமி ஓடுவார்; இரண்டொரு தடவை 'நல்லபடி’ சொல்லியும் பார்த்தார்; அடித் தும் பார்த்தார்; முத்துச்சாமி திருந்துவதாகக் காணோம்.
அப்பாசாமியை எஜமானர் எம்பெருமாள், கேவலமாகப் பேசுவதும், கொடுமைப் படுத்துவதும், சிறுவன் முத்துச் சாமிக்கு அடக்கமுடியாத ஆத்திரத்தைக் கொடுத்து வந்தது.
பெரியவர்களிடம் மரியாதையாகப் பேசவேண்டும் என்று தனக்கு அப்பாசாமி புத்தி கூறிவருகிறார். எம்பெருமாளுக்கு முப்பது வயதுதான் இருக்கும்; அப்பாசாமிக்கு ஐம்பதுக்கு மேல் ஆகிறது. ஆனால் அப்பாசாமியை எம்பெருமாள், எவ்வளவு கேவலமாகப் பேசுகிறான்; பேசலாமா? -- மரியாதை காட்ட வேண்டாமா, வயதில் பெரியவர் என்பதற்காக காட்டக்காணோமே! அடிக்கக்கூடச் செய்கிறானே! இது அக்ரமம் அல்லவா! இதை யாரும் கேட்கமாட்டேன் என்கிறார்களே!' என்று முத்துச்சாமியின் பிஞ்சு உள்ளம் எண்ணிக் குமுறும். பணம் படைத்தவர்களானால், அவர்கள் பொது நீதிகளுக்குச் கட்டுப்பட்டு நடக்கவேண்டியதில்லை என்ற தெளிவு முத்துச்சாமிக்கு பதினெட்டு வயதுக்குத்தான் பிறந்தது.
"சோம்பேறி! தடிக்கழுதை!" என்று ஒருநாள் எம்பெருமாள் அப்பாசாமியைத் திட்டியதைக் கேட்டுக் கொண்டி ருந்த முத்துச்சாமியால் கோபத்தை அடக்கவே முடியவில்லை. 'நீதான் கழுதே! நீதான் சோம்பேறி!' என்று எம்பெருமாளைப் பார்த்துக் கூச்சலிட்டுவிட்டான். 'என்ன சொன்னே!' என்று எம்பெருமாள் கூச்சலிட்டார். பாய்ந்து சென்று முதுகு பிய்ந்து விடும்படி அடித்துவிட்டான், அப்பாசாமி. எட்டு வயது முத்துச்சாமியை ; 'போதும்! விட்டுத்தொலை! சிறுவன்!' என்று ஒப்புக்குக்கூடச் சொல்லவில்லை எம்பெருமாள், 'பிள்ளையை வளர்க்கற இலட்சணம் இதுதானா! இது உதை பட்டு, அடிபட்டு, ஊர்ப்பொறுக்கி, ஆகப்போகுதுப்பார்!’ என்று சாபமே கொடுத்தார் எம்பெருமாள்.
அடங்கி ஒடுங்கி அப்பாசாமி, எம்பெருமாள் எதிரே நிற்பதைப் பார்க்கும்போது எல்லாம், முத்துச்சாமிக்கு, அடக்க முடியாத கோபம் வரும். ஒருநாள் பக்கத்துச் சாவடியில் சில பேர் சீட்டாடிக் கொண்டிருந்தார்கள். அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தான் முத்து என்று கேள்விப்பட்டு அப்பாசாமி அன்று சிறுவனை அடி அடி என்று அடித்தார். முத்து பார்க்கிறான், எம்பெருமாள் சீட்டாடுகிறார் நண்பர்களுடன். அவருடைய மகன், எட்டு வயதுச் சிறுவன், 'இதைப் போடு! அதைப் போடாதே!' என்று சொல்கிறான். மகனுடைய அறிவை மெச்சி எம்பெருமாள் முத்தம் கொடுக்கிறார். என்ன உலகமடா இது! எனக்கு எதெது கூடாது என்று அப்பா சொல்லுகிறாரோ, அவைகளெல்லாம் எம்பெருமாளின் உலகத்திலே நடக்கின்றன. கண்டிப்பார் இல்லை. தண்டனை தருவார் இல்லை! நீதி நியாயம் என் றால் எல்லோருக்கும் பொதுவாக அல்லவா இருக்க வேண்டும் என்று முத்துச்சாமி நினைத்துக் கொண்டு கோபம் அடைவான். வெகுநாளைக்குப் பிறகுதான், நீதி நியாயம் இப்படி இருக்க வேண்டும் என்று எடுத்துச் சொல்ல எம்பெருமாளின் உலகமும், கேட்டு நடந்திட அப்பாசாமியின் உலகமும் இருக்கிறது என்ற உண்மையைத் தெரிந்து கொண்டான். இந்த இரண்டு உலகங்களிலும் தனக்கு இடம் இல்லை என்று கண்டு கொண்டான் முத்து! மூன்றாவது உலகத்திலே இடம் பெற்றான்; போக்கிரிகளின் உலகத்தில்.
"நான் எத்தனை அன்பு காட்டினாலும் இந்த உலகம் நம்பவாப் போகுது. மூத்தாளோட பிள்ளைகளை இளையா கொடுமை செய்கிறார் என்றுதான் சொல்லப்போகுது. தப்பு செய்யும் போது அடிக்க வேணும். தொட்டா போதும்; தெருக்கோடி கேட்கிறபடி கூச்சலிட்டுக் கொண்டு ஓடுவான். ஊர் என்னைச் சபிக்கும்; நமக்கு வேண்டாம் அந்தக் கெட்ட பேரு. அவங்க அப்பாரே பார்க்கட்டும், கேட்கட்டும், வெட்டிப் போடட்டும். நான் தொட்டு அடிக்கவே மாட்டேன். ஒரு நாள் அடிச்சதுக்கு, பக்கத்து வீட்டுப் பொக்கைக் கிழவி வந்து விட்டாளே, எனக்கு புத்தி சொல்ல. 'வள்ளி! முத்து தாயில் லாத பையன்! கொடுமை செய்யாதேம்மா' என்று. நமக்கு எதுக்கு வீண் வம்பு. அது என் வயத்திலே பொறந்ததா இருந்தா, உடம்புத் தோலை உறிச்சி உப்புத் தடவுவேன். அடங்காதது ; இருந்தா என்ன, செத்தா என்ன?"
சலிப்பு, கோபம், எரிச்சல், ஏழ்மை இத்தனை நோய் களுக்கு ஆளான வள்ளியால் இப்படித்தான் பேச முடிந்தது.
ஆகவே முத்துச்சாமி கெட்டுப் போவதைத் தடுக்க தக்க சூழ்நிலை ஏற்படவில்லை. பட்டுவுக்காக மட்டுமே முத்து வீட்டுக்கு வருவான். ஏதாகிலும் விளையாட்டுச் சாமான், தின்பண்டம் கொடுத்துவிட்டுப் போய்விடுவான். இதைத் தடுக்கப் பார்த்து, முடியாதுஎன்பதால், விட்டுவிட்டாள் வள்ளி. மேலும், - முத்து கொண்டு வந்து கொடுத்த விளை யாட்டுச் சாமான்கள் நன்றாகவும் இருந்தன ! போக்கிரி! ஊர் சுற்றி! வீட்டுக்கு அடங்காதது என்று பெயரெடுத்தானே தவிர முத்து திருடன் என்ற பெயர் மட்டும் எடுத்ததில்லை. வள்ளி மட்டும் கோபம் அதிகமாகும்போது கூச்சலிடுவாள். ’அது திருடிவிட்டு ஜெயிலுக்குப் போகாவிட்டா என் பேரை மாத்தி வைச்சிக்கறேன், பாரு, நீ வேணும்னா’ என்று.
வேலை வெட்டி ஒழுங்காகச் செய்யாமல், வீட்டுக்கு அடங் காமல் இருந்து வந்த முத்து, எம்பெருமாள் செட்டியார் வீட்டில் நாலு தங்க வளையல்கள் திருடிவிட்டு, பிடிபட்டு ஜெயிலுக்குப் போனது பற்றி, அந்த ஊரில் யாரும் ஆச்சரியப் படவில்லை. அப்படித்தான் நேரிடும் என்று ஊர் பேசிற்று. முத்துவும் குற்றத்தை மறுக்கவில்லை.
"திருடினதை ஒப்புக் கொள்கிறாயா?"
"ஆமாம்; திருடினேன்"
"ஏண்டா , திருடினே?"
”என்ன கேள்வியய்யா இது? எப்படித் திருடினேன்னு கேட்டாலும் அர்த்தம் இருக்கும். ஏன் திருடினேன்னு ஒரு கேள்வியா! இல்லை. திருடினேன். அங்கே, இருந்தது திருடி னேன் . வேணும்; திருடினேன். கேட்டா, கொடுக்கமாட்டாரு; திருடினேன்."
கோர்ட்டிலே பலர் சிரித்தே விட்டார்கள். முத்துச்சாமியே இதைக் கேலிக் குரலிலே சொன்னானே தவிர கோபக்குரலில் அல்ல. அப்பாசாமி தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு ஒரு மூலையில் நின்று கொண்டு இருந்தார்.
இது முதல் குற்றம் என்பதால் ஆறு மாதம் கடுங்காவல் என்று மாஜிஸ்ட்ரேட் தீர்ப்பளித்தார். முத்து கண்ணீர் சிந்தியபடி நின்று கொண்டிருந்த அப்பாசாமியைப் பார்த்து 'அழாதே! அழாதே!' என்று கூறுவது போலத் தலையை அசைத்தான்.
எம்பெருமாள் செட்டியார் வீட்டுத்தோட்டத்தில் மரம் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றியும் மாடு கன்றுகளை மேய்த் துக் கொண்டும் இருந்த மொட்டையன் பெண் குட்டி அம்மாள், முத்துச்சாமியிடம் மனதைப் பறி கொடுத்துவிட்டிருந்தாள். அவளைக் காண ஒருவரும் அறியாமல் முத்து, தோட்டத்துக் குப் போவான். அவள் போடும் பழைய சோற்றை, பால் பாயாசம் போலச் சுவைத்துச் சாப்பிடுவான்; அவள் சொல் லும் புத்திமதிகளைக் கோபப்படாமல் கேட்டுக் கொள்வான்.
"இத்தனை பெரிய உலகத்திலே, உனக்கு மட்டும்தானா கிடைக்கல்லே ஒரு வேலை. கட்டிக்க, கட்டிக்கன்னு சொல் றியே, உன் புருஷன் என்ன வேலை செய்யறாருன்னு யாராச் சும் கேட்டா என்ன சொல்ல?"
"எம்பெருமாளு போலத்தான், எம் புருஷனும் ஒரு இடத் திலே, கைகட்டி வேலை செய்யறதில்லைன்னு சொல்லு."
'நல்லா இருக்குது உன் பேச்சு. அவருக்கு இருக்குது இலட்ச இலட்சமாப் பணம்; உட்கார்ந்துகிட்டு ஒரு வேலை யும் செய்யாம சாப்பிடம் முடியும். நீ அப்படியா....?"
"அப்ப, இருக்கறவங்களுக்கு ஒரு நியாயம், இல்லாத வங்களுக்கு வேறே ஒரு நியாயம்னு சொல்லு."
"இதெல்லாம் பேச எனக்குத் தெரியாது - என்னை கட்டிக் கிட்டா, நல்லபடி வாழவைக்க உனக்கு வகை இருக்குதா - இல்லையா, அதைச் சொல்லு."
இவ்விதமான பேச்சு நடக்கும் முத்துச்சாமிக்கும் குட்டி யம்மாளுக்கும்; கோபம் துளியும் வராது முத்துவுக்கு - அந்தப் பெண்ணின் பேச்சிலே அவ்வளவு பாகு கலந்து இருக்கும்.
அன்று இரவு கூட, அவளிடம் பேசிக் கொண்டு இருக் கத்தான் முத்து சென்றான்; யாரோ தோட்டத்துப் பக்கம் வருவது தெரிந்ததும், வேறு பக்கம் ஓடாமல் வீட்டின் மொட்டை மாடி மீது தாவினான் அங்கு ஒளிந்து கொள்ள இடம் வசதி யாக இல்லாததால், அங்கு இருந்த அறைக்குள் நுழைந்தான். அது எம்பெருமாளுடைய படுக்கை அறை . பதறிப் போனான் முத்து. காலடிச் சத்தம் கேட்டதும், மேலும் பயந்து, அங்கு போடப்பட்டிருந்த கட்டிலடியில் படுத்துக்கொண்டு கட்டை போலாகி விட்டான். உள்ளே ஒருவர் நுழையக் கண்டு, தீர்ந்தது : பிடிபட்டுவிடுவோம் என்று எண்ணிக் கொண் டான். பயத்தால், வியர்த்துவிட்டது. உள்ளே நுழைந்த உருவமோ, கதவை மெதுவாகச் சாத்திக் கொண்டு, பதுங் கிப் பதுங்கி , நடந்து அங்கு இருந்த இரும்புப் பெட்டியைத் திறக்கக் கண்டான். முத்துவுக்கும் சிரிக்கலாம் போலத் தோன்றிற்று. அந்த உருவம் இரும்புப் பெட்டியில் இருந்த நகைப் பெட்டியை எடுத்து, அதில் இருந்த நாலு தங்க வளை யல்களை எடுத்து, மடியில் பத்திரப்படுத்திக் கொள்ளக் கண்டான். உற்றுப்பார்த்தான் முகத்தை . பதறிப்போனான். இரும்புப் பெட்டியைப் பழையபடி பூட்டி விட்டு, அந்த ஆள் வெளியே சென்றுவிட்டான். சில விநாடிகள் முத்து எழுந் திருக்கக்கூட இல்லை ; திகைத்துப் போயிருந்தான். பிறகு, மெள்ள எழுந்திருந்து, இரும்புப் பெட்டியிலிருந்து வளையல் களைக் களவாடியவன், அவசரத்தில் அங்கு போட்டுவிட்ட மேல் துண்டை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான். ஒருவரும் தன்னைப் பார்க்கவில்லை என்பது முத்துவுக்குத் தெரிந்தது. என்றாலும், உடனே அந்த இடத்தைவிட்டுச் சென்றுவிடாமல், ஏதோ யோசித்தபடி இருந்தான். சில விநாடிகளில், ஏதோ ஓர் முடிவுக்கு வந்து, அங்கு கிடந்த ஒரு நாற்காலியைத் தூக்கிக் கீழே போட்டான். சத்தம் பல மாகக் கிளம்பவே, 'யார்? யார் அங்கே' என்ற குரல் கிளம் பிற்று. எம்பெருமாளின் குரல் என்பது முத்துவுக்கு விளங்கி விட்டது. அவன் முகத்திலே ஒரு தனியான ஒளி பிறந்தது. மாடி மீது இங்கும் அங்கும் ஓடலானான். 'திருடன் திருடன்! என்று எம்பெருமாள் கூவினார் - வேலையாட்கள் எங்கே? எங்கே?' என்று கேட்டபடி, மாடிப் பக்கம் ஓடி வந்தனர். முத்து, தோட்டத்துப் பக்கம் குதித்தான் - 'அதோ! அதோ! என்று கூவினர் வேலையாட்கள்; முத்து ஓடலானான் - வேலையாட்கள் துரத்தினர் அவர்கள் தன் ைன த் தொடர்ந்து வருவதைப் பார்த்தபடி, முத்து வேகமாக ஓடியபடி இருந்தான். இதற்குள், தெருவில் ஒரே பரபரப்பு ஆகிவிட்டது. இதற்குள் போலீசும் வந்துவிட்டது; முத்துவை போலீஸ் துரத்திற்று. முத்து குறுக்குச் சந்துகளிலே நுழைந்து ஏரிக்கரைப் பக்கம் சென்றுவிட்டால் தப்பித்துக் கொள்ளாலாம். ஆனால் அவன் நேரே நெடுஞ்சாலை வழியே ஓடிக் கொண்டே இருந்தான்; போலீஸின் பார்வை அவன் மீது பட்டபடி இருந்தது. முத்து நேரே தன் வீட்டுக்குள் நுழைந்தான். கதவைத் தாளிட்டுக் கொண் டான். அப்பாசாமி அவனைக் கண்டதும் அலறிக் கொண்டு எழுந்தார். அவருடைய கரத்தைப் பிடித்து இழுத்துக் கொண்டு, கூடத்து அறைக்குள்ளே போனான். ஒரு மேல் துண்டை அவர் முன் வீசி எறிந்துவிட்டு உடனே ! உடனே! போலீஸ் வந்து கொண்டே இருக்கிறது எடு! எடு!" என்றான். அப்பாசாமி திகைத்திடக் கண்டு அப்பா! போலீஸ் வந்து விட்டது; அதோ கேள் சத்தம், தெருக்கதவைத் தட்டுகிறார் கள்' என்று கூறினான். அப்பாசாமியின் கண்களில் நீர் தளும் பிற்று. ஒரு பழைய துணி மூட்டையைக் காட்டிவிட்டு தலை யின் மீது கைவைத்துக் கொண்டு ஒரு மூலையில் உட்கார்ந்து விட்டார். மூட்டையிலிருந்து வளையல்களை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்ட முத்துசாமி, தெருக்கதவைத் திறந்தான்; போலீஸ்காரர்கள், அவன் மீது பாய்ந்தனர். பதற் வுமில்லை, பயப்படவுமில்லை முத்து. நிதானமாக, அவர் களைப் பார்த்து, "ஏன்! என்னைத்தானே தேடிக்கிட்டு வந் தீங்க? சரி வாங்க என்று கூறினான். போலீஸ் கொட்டடி சென்றதும், வளையல்களை அதிகாரியிடம் கொடுத்துவிட்டு, களவாடியது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டு வாக்கு
மூலம் கொடுத்தான்.
"ஏன்யா! அப்பாசாமி! நான் சொன்னனே கேட்டயா. அந்தப் பயலை, வீட்டிலே சேர்க்காதே! உனக்கு அவமானத்தைத் தேடிவைத்து விடுவான்னு சொன்னனே, கேட்டயா! இங்கேயே காட்டிவிட்டானே , அவனுடைய கைவரிசையை! பார்த்தாயா.... எவ்வளவு கேவலம் உனக்கு? எவ்வளவு தலை இறக்கம்... இப்படிப்பட்டதுகளை வெட்டிப்போடணுமய்யா, இந்த மாதிரியா ஒரு பிள்ளை இருக்கறதைவிட சாகட் டுமே...' என்று எம்பெருமாள் ஆத்திரத்துடன் பேசினார். அப்பாசாமி. அவர் காலில் விழுந்து,
"ஐயோ! வேண்டாமுங்க. உங்க வாயினாலே பையனை ஒண்ணும் சொல்லிவிடாதிங்க" என்று கெஞ்சி னார். எம்பெருமாள், பிள்ளைப் பாசம் இருக்க வேண்டியது தான். ஆனா இது போல இருக்கிற திருட்டுப் பயல்களை, பிள்ளைன்னு சொல்லிக் கொள்வது கூட உன்னைப்போல நாணயஸ்தனாக வாழ்ந்து வருகிறவனுக்குக் கேவலமய்யா" என்று கூறினார். அப்பாசாமி தலை தலை என்று அடித்துக் கொண்டு அழுதார்.
எவ்வளவு பேசினாலும் வள்ளியை ஒரு நாளும் கை நீட்டி, அப்பாசாமி அடித்ததில்லை; கோர்ட்டிலிருந்து வீட் டிற்கு வந்த அன்று குடும்பத்துக்குத் தீங்கு தேடி விட்டானே
முத்து என்று வள்ளி ஏசிப் பேசியபோது ஆத்திரம் கொண்டு அப்பாசாமி அவளை அடித்துவிட்டார்.
ஒரு வார்த்தை பேசாதே அவனைக் குறித்து .... அவனை ஏச உனக்கு என்னடி யோக்யதை இருக்குது.... அவன் திருடி ஜெயிலுக்குப் போனான்னு . கேவலமாப் பேசாதே... முத்துவைப் பற்றி ஒரு வார்த்தைகூடக் கேவல மாப் பேச , நான் இடம் கொடுக்கமாட்டேன் ." என்று அப்பா சாமி ஆவேசம் வந்தவர் போலப் பேசக் கேட்ட வள்ளி, மகன் திருடிவிட்டு ஜெயிலுக்குப் போனதாலே மனது குழம்பிப் போய்விட்டது என்று எண்ணிக் கொண்டாள்.
ஒருவரிடமும் ஒன்றும் பேசாமல், அப்பாசாமி, கண்ணீர் சிந்தியபடி மூலையில் உட்கார்ந்து கொண்டார். வள்ளிக்கோ அவரிடம் சொல்லியே தீர வேண்டிய முக்கியமான விஷயம் இருந்தது. சமாதானமாகப் பேசிப் பார்ப்போம் என்று .......
"அழாதிங்க .... என்னமோ நம்மோட போறாத வேளை தான், முத்துவுக்கு கெட்ட புத்தியைக் கொடுத்தது. கலங் காதிங்க. நம்மோட கஷ்டம் இத்தோட போயிடும் பாருங்க . அவனும் திருந்தி நல்லவனாயிடுவான்" என்று கூறி அப்பா சாமிக்கு காப்பி கொடுத்தாள். அப்பாசாமி அதைச் சாப் பிடக்கூட இல்லை .
"ஒரு விஷயம் தெரியும்ங்களா... நம்ம வீட்டிலேயே பழைய சாமான்களிலே, சின்ன தாம்பாளத்தட்டு இல்லிங்க , அக்கா பூஜைக்கு உபயோகப்படுத்தும்னு சொல்விங்களே, பித்தளைத்தட்டு - அது பித்தளை இல்லிங்க , பொன்னுங்க பொன்னு ..."
அப்பாசாமி, வள்ளியை உற்றுப் பார்த்தான். வள்ளி உள்ளே இருந்து பளபளப்பான தாம்பாளத் தட்டைக் கொண்டு வந்து அவனிடம் காட்டி,
"பித்தளைத் தட்டுன்னு எண்ணிக் கொண்டமே, அது தானுங்க இது. எங்க அண்ணன் வந்தது; அது நகை கடை யிலேதானே வேலை பார்க்குது! அது பார்த்துவிட்டு வள்ளி, வள்ளி! இது பித்தளைன்னு யாரு சொன்னது உனக்கு? இது அசல் தங்கமாச்சே! மெருகு போடாததாலே இப்படி பித்த ளை போல இருக்குன்னு சொல்லி, எடுத்துக்கிட்டுப் போயி, மெருகு போட்டுகிட்டு வந்து கொடுத்தது. தங்கம்ங்க, இந்தத் தாம்பாளம்! இதைப்போயி, நாம் பித்தளைன்னு எண்ணிக் கொண்டு ஏமாந்துகிடந்தமே இத்தனை காலமா' என்று விவரம் கூறினாள்.
தாம்பாளத்தைத் தன் கரத்தில் வாங்காமலேயே அப்பா சாமி மெல்லிய குரலில், ஆனால் மிக உருக்கமாகச் சொன்னார்.
"ஆமாம் வள்ளி! அசல் தங்கம் தான் - எதை நாம் பித்தளை என்று எண்ணிக் கொண்டு இருந்தமோ, அது பித்தளை இல்லை ; அசல் தங்கம்."
வள்ளிக்கு ஒன்றும் புரியவில்லை.
'காஞ்சி' பொங்கல் மலர் 1965
-----------------------
2. சொக்கி
பழக்கடை பரமசிவம் இது போலெல்லாம் எண்ணி எண்ணி ஏக்கப்பட்டுக் கொண்டு இருந்தார். ஆனால் அந்தக் கடையிலே கிடைத்த வருமானத்தைக் கொண்டுதான் நாலா யிரம் ரூபாயில் ஒரு மச்சுவீடும் ஆறாயிரத்தில் நிலமும் வாங் கினார். ஒரே மகன்! அவன் வேறு ஏதேதோ வேலைக்குப் போவான் என்று ஆசைப்பட்டார். முயற்சி செய்து பார்த். தார்; முடியவில்லை. பரமசிவத்துக்கு முடக்குவாதம் . பூங்கா வனம் பழக்கடை வேலையை ஏற்றுக் கொள்ள வேண்டியதா யிற்று. வியாபார நெளிவு சுளிவுகளை பரமசிவம் தன்னால் கூடுமான மட்டும் மகனுக்குக் கூறிவைத்தார். பயன்? பூங் காவனத்தால் முடியவில்லை, வாடிக்கைக்காரர்களை மகிழ வைத்திட .
அந்த வித்தைக்கென்றே பிறந்தவன் வெளிப்பன் என்று பலரும் கூறத்தக்க விதமாக நடந்து கொண்டான்! பரமசிவம் பழக்கடைக்கு எதிரப்புறத்தில் புதிதாகக் கடை வைத்தவன். எங்கிருந்து தான் கற்றுக் கொண்டானோ தெரியவில்லை. ஒரு ஒய்யாரச் சிரிப்பு ; குழைவான கும்பிடு ; வேளியப்பன் கடை வைத்த மூன்று மாதங்களுக்குள் பரமசிவத்திடம் பத்து வருஷங்களாக வாடிக்கைக்காரர்களாக இருந்தவர்களை யெல்லாம் இழுத்துக் கொண்டான் தம் வலையில்.
'கல்கண்டு சாமி! ஒரு சுளை சாப்பிட்டுப் பாரேன். நீ வாங்காமப் போனாக்கூடப் பரவாயில்லை; நம்ம கடை சரக்கை மட்டும் குறை சொல்லாதே.'
'நாக்பூர் ஆரன்ஜு வேணுமா உங்களுக்கு . கூடை கூடை யாகத் தர்ரேன். ஆனா இது நம்ம சேலத்து சரக்குதான் ; சும்மா வாயிலே போட்டுப் பாருங்க .... எப்படி? நாக்பூரு என்னா செய்யும், இந்தப் பழத்துக்கிட்ட.....
'அது வேறே கொய்யாப் பழமுங்க. வயத்துவலி உண் டாக்கற பழம். விதை அதிகம் இருக்கும். இது பாருங்க, விதையே கிடையாது. வெண்ணெ மாதிரி இருக்கும். '
'மலை வாழைப்பழம், நம்ம கடைக்குன்னு தனியா வருதுங்க, மதுரை கொடைக்கானலிலே இருந்து. வேறே இடத்திலே கிடைக்காது. மூணு டஜன் தான் மிச்சம் இருக் குது. மூணு லாந்தர் தெரு சேட்டு வாரிக்கிட்டுப் போயிட் டாரு எட்டு டஜனை .....'
என்னென்னமோ பேசுகிறான்; எப்படியோ, வருகிற வர்களை வாங்கும்படிச் செய்கிறான்; வியாபாரம் வளருகிறது.
அது அந்தப் பரமசிவத்தோட போச்சி! பையன் ஒன்றும் திறமைசாலி இல்லை .... கடை தூங்குது பாருங்க .... மாம் பழம் கேட்டா வாழைப்பழத்தைக் கொடுக்கறான் .... ஆரஞ்சு . கொடுடான்னா சாத்துக்குடி வேணுமான்னு கேட்கறான்; பூங்காவனம் பழக்கடை வேலைக்கு ஏத்தவனா தெரியல்லை என்று வாடிக்கைக்காரர்களே பேசிக் கொள்வது பூங்காவனத் தின் காதிலேயும் விழத்தான் செய்கிறது. கண்ணுக்குத் தெரி கிறது, எதிரே உள்ள கடையிலே நடைபெறும் சுறுசுறுப்பான வியாபாரம்! தெரிந்து என்ன செய்வான்?
சிறிய நகரம்! விவசாயத்தை நம்பி வாழுகிறவர்களும், உத்தியோகம் செய்து அலுத்துப்போய் ஓய்வு பெற்றுக் கொண்டு வந்த பென்ஷன்காரர்களும் உள்ள இடம். அந்தச் சிறிய ஊருக்கு, இரண்டு பழக்கடை அதிகம். ஒரே கடையாக இருந்தபோது பரமசிவத்தின் வியாபாரம் நல்லபடி இருந்தது. போட்டிக் கடை வந்ததும், வியாபாரம் கெட்டு விட்டது. வேளியப்பனிடம் போய்க் கேட்டுக் கொள்ளவா முடியும், அப்பா! இந்த ஊருக்கு இரண்டு கடை கட்டி வராது. போட்டி போட்டு என்னைப் பாழாக்கிவிடாதே" என்று.
'நேத்து வந்த பயலோடு போட்டி போட்டு வியாபா ரத்தை நடத்த முடியலியே நம்ம மகனாலே ! துப்புக் கெட் டப்பய! வேறே ஒண்ணும் சொல்ல வேண்டாம் இவன் : இது தானுங்க நம்ம பரமசிவத்தோட பழக்கடைன்னு சொன்னாப் போதுமே! வேறே ஒரு கடையைத் திரும்பிப் பார்ப்பார் களா!' என்று நோய் காரணமாக வீட்டோடு அடைபட்டுக் கிடந்த பரமசிவம் மனம் நொந்து பேசிக் கொண்டார்.
மகன் எந்தவிதமான தப்பு தண்டாவுக்கும் போகக் கூடியவனல்ல; கெட்ட நடவடிக்கை எதுவும் கிடையாது. ஆனால் வியாபாரத் திறமை இல்லையே என்று கவலைப் பட்டார்.
எப்போதும் போலத்தான் பூங்காவனம் பழத்தை நன் றாகத் துடைத்து வைக்கிறான்; 'பார்வை' யாக இருக்கும் விதமாக அடுக்கி வைக்கிறான். முனையிலே ஒரு மாதிரி ஆகி விட்டால், உடனே, அதைத் தனியாக, மறைவாக எடுத்து வைக்கிறான். எப்போதும் போல, வெங்கடாசலபதி படத் துக்குத் தூபதீபம் காட்டுகிறான்; சகுனம் பார்த்துக் கொண்டு தான் கடைக்கு வருகிறான். 'கல்லாப் பெட்டிக்குக் குங்குமப் பொட்டு இடத்தவறவில்லை. எல்லாம் முன்பு போலத்தான் நடந்து வருகிறது, வியாபாரம் தவிர!!
பூங்காவனத்தைக் காண்பவர்கள், அவனுடைய கண்க ளிலே ஒரு ஒளியும் இதழோரம் ஒரு புன்னகையும் இருந்திடக் காண்கின்றனர். வியாபாரம் சரியாக இல்லை என்பதால் பரமசிவம் கவலைப்படுகிறார், மகனோ இனிய குழலோசை கேட்டு சொக்கிவிடுபவன் போலிருக்கிறான்.
அப்படி இனித்தது சொக்கியின் பேச்சு. பேச்சு மட் டுமா? பார்வை ! நடை! சிரிப்பு!
சொக்கி , வேற்றூரும் அல்ல; வேற்று இடமுமல்ல. மாமன் மகள்!! மாந்தோப்பை குத்தகை எடுத்திருந்தான் மலைச்சாமி ; அவன் மகள், மாம்பழக் கூடையைக் கொண்டு போய்க் கொடுக்கச் செல்வாள், பழக்கடைக்கு . பழக்கடையில் லிருந்து வேறு வகைப் பழங்களையும் எடுத்துக் கொண்டு போய் ஊருக்குள் விற்றுவிட்டு வருவதுண்டு.
"அதோ நேத்து கொடுத்தது கிடக்குதே, அப்படியே கூடையிலே ......."
"அப்படி எண்ணிகிட்டு இன்னக்கி எங்கே நீ வராமல் போயிடுவயோன்னு நினைச்சு நினைச்சு மனசு பதறிப் போச்சி சொக்கி!"
. . "அய்யே... ஆம்பிள்ளையைப் பாரு! மனசு உருகலாம், கரையலாம், என்னாட்டம் பொம்பளைப் பிள்ளைக்கு! இம்மாம் பெரிய ஆம்பிள்ளைக்கு மனசு பதறலாமா..."
"என்னைக் கேட்கறயா அந்தக் கேள்வி... "
"ஏன்! போயி, உங்க அப்பாவைக் கேட்கவா ....."
'அய்யே..... போய் அனுமார் கோவிலு அய்யரைக் கேளு..."
"கோவிலிலே மட்டுந்தான் இருக்குதா அனுமாரு..."
"என்ன சொன்னே! என்ன சொன்னே , சொக்கிப் பொண்ணு! என்னை அனுமாருன்னு குத்திக் காட்டிப் பேசறியா ....."
"அய்யோவ்! நீ ஏன்யா அனுமாராகப் போறே. பெரிய மலையைத் தூக்கினவரு அனுமாரு. உனக்குத்தான் கூடை நிறைய மாம்பழம் இருந்தா, தூக்க துணைக்கு ஒரு ஆள் வேணுமே, உன்னைப் போய் சொல்லுவனா அனுமாருன்னு."
"வரவர வாய்த் துடுக்கு அதிகமாகுது சொக்கி , உனக்கு ....."
"ஆகட்டுமே! அதனாலே உனக்கு என்னவாம்! கட் டிக்கப் போறவனுக்கல்லவா அந்தக் கவலை ஏற்படவேணும். உனக்கு எதுக்கு..."
"அது எந்தப்பய என் பொருளைத் தட்டிக்கொள்ளத் துணியறவன்..."
"உன்னோட பொருளா! யாரு? நானா! ஆசையைப் பாரு , ஆசையை ... நீ இந்த மாதிரி வீண் ஆசையைப் புகுத்திக் கிட்டுத்தான் வியாபாரத்தைக் கெடுத்துக் கொள்றே... தெரிய யுது .... எனக்கு ..."
"வியாபாரம் கெட்டுப்போச்சா ! யாருக்கு? எனக்கா! அந்த வேளியப்பன் கடையிலே எப்பப் பார்த்தாலும் கூட்டம் இருக்குதேன்னு பார்க்கறியா.. பைத்யம், பைத்யம் ! விலையை வேணுமென்றே தள்ளிக் கொடுக்கறான் ..... பய, தலையிலே
ஏகப்பட்ட நஷ்டம் விழப்போவுது பாரேன்..."
"தலையிலே விழப்போறது கிடக்கட்டும்; கையிலே ஏறி இருக்கற மோதிரத்தைப் பார்த்தியா?"
"அவன் கையிலே என்ன மோதிரம் இருக்குதுன்னு பார்க்கறதுதான் என்னோட வேலையா ...?"
பூங்காவனம் அதையெல்லாம் பார்த்தானோ இல் லையோ! சொக்கி , வேளியப்பன் கைவிரல்களில் மோதிரமும், தங்கச் செயின் போட்ட கைக்கடியாரமும், மேனியிலே மினு. மினுப்பும் சேர்ந்து வருவதைக் கவனித்துக் கொண்டுவந். தாள். வேளியப்பன் கடைக்கு மூன்று கூடை மாம்பழம் கொடுத்துவிட்டு வரப் போகும் போதெல்லாம், சொக்கியின் கண்களிலே, வேளியப்பன் வளர்ச்சி தென்படாமலா இருக் கும். வேளியப்பனும் அன்னியன் அல்ல; தூரத்து உறவுதான்!
இங்கு சிறிது நேரம் ; அங்கு சிறிது நேரம் பொழுதுபோக்கு, வாள் சொக்கி . கள்ளங் கபடமற்ற பெண் ; மணமாக வேண் டிய பருவம்; எந்த வீட்டிலும் உலவினால் மகிழ்ச்சி ஒளி வீசிடச் செய்திடும் அழகு!
அழகிலே பலவகை உண்டு என்கிறார்கள். இருவகை அவற்றிலே முக்கியமானவை.
ஒன்று பால் போன்றது; மற்றொன்று கள் போன்றது. முன்னது இனிப்புடன் வலிவைக் கூட்டித் தருவது; மற்றது போதை தருவது. சொக்கி , பாற்குடம்! போதை ஏற்றிடும் மினுக்கு, குலுக்கு . தளுக்கு, அவள் அறியாதது. இளமை இருந்தும் அதற்கேற்ற கவர்ச்சி அமையப் பெறாததால், பூசுவனவும் பூண்பனவும் தாங்கிக் கொண்டு உலவிடும் நாகரிக நாரிமணி அல்ல சொக்கி; ஆற்றோரத்து தென்னை யிலே தொங்கிடும் செவ்விளநீர் -- கொல்லை மேட்டுச் செங்கரும்பு - மூங்கிலுக்கு வண்ணம் பூசி செங்கரும்பு போலாக் கிக் காட்டலாம் - செங்கரும்பு ஆகிவிடாது. கூடையை இடை யில் வைத்து சொக்கி நடந்து வரும் அழகு கண்டு, நாட்டிய மாடிடும் நங்கை அதுபோல நடந்து காட்டலாம். ஆனால் அதுபோலத்தான்! அது வேறு. முற்றிலும் வேறு! பழகிப் பெற்றதல்ல, பயிற்சியால் கிடைத்ததல்ல; உடற்கட்டும் உள்ளத்தில் கள்ளங் கபடமற்ற தன்மையும் கொடுத்திட்ட இயற்கை அசைவு அது.
பாவம்! பூங்காவனத்தால் இவ்விதமாகவெல்லாம் எண்ணிப் பார்த்திட முடியவில்லை; தெரியவில்லை. அவ ளைக் கண்டாலன்றி அன்று அவன் மனம் அமைதி பெறாது.
சற்றுத் தொலைவிலே சொக்கி வருகிறபோதே, யாருடனாவது ஏதாவது பேசி, குரல் கொடுப்பாள்; அந்தக் குரலோசை கேட்டதும் பூங்காவனம் தன்னை மறந்து விடுவான்.
சொக்கி பேசப் பேச அவன் பழச்சாறு பருகியவன் போலாகிவிடுவான்; முகத்திலே ஓர் புதிய பொலிவு மலர்ந்து விடும்; இயற்கையிலேயே கூட பூங்காவனம், கெம்பீரத் தோற்றம் உடையவன்.
அவனைக் கண்டதும் மறந்தும் இவன் எவருக்கும் ஒரு கெடுதலும் செய்யமாட்டான் என்று எவரும் கூறுவர். அப்படிப்பட்ட தோற்றம். இப்ப எதுக்கு எனக்குக் கல்யா ணம்? என்று குழைவாகக் கூறிடும் வயது. உன் வயதுதாண் டாப்பா சின்னப்பனுக்கு ; மூணு குழந்தை அவனுக்கு என்பார் தகப்பனார் . "போப்பா! சொக்கியைவிட நான் மூணு வருஷந் தான் மூத்தவனாமே!' என்பான் பூங்காவனம் ; தன் மனதி லுள்ள விருப்பத்தை மறைமுகமாகக் காட்ட, புரிந்து கொண்ட தகப்பனார், சொக்கியை வேளியப்பனுக்கு முடிக்கப் போவ தாகக் கேள்வி என்று சொல்லி வைப்பார். கோபம் கோப் மாக வரும் பூங்காவனத்துக்கு. சாப்பிடாமலே படுக்கச் செல்லுவான்; தூங்காமலே படுத்துக் கிடப்பான்; கண்ணீர் விடாமலே அழுது கொண்டிருப்பான். பட்டினத்தார் பாடலை முணுமுணுத்தபடி இருப்பான். எல்லாச்சனியனுக்கும் சேர்த்து ஒரே தலைமுழுக்காகப் போட்டுவிட்டு, சாமியார் ஆகிவிடப் போவதாகத் தாயாரிடம் கூறுவான். 'பிள்ளையாண்டா னுக்குச் சொக்கி சொக்குப்பொடி போட்டு விட்டாற்போல இருக்குதே" என்று பரமசிவத்திடம் அவர் மனைவி கூறு வாள். "கண்ணைச் சிமிட்டிக் கழுத்தை வெட்டி என்று பாடுவார் பரமசிவம், பழைய நினைவுடன். 'வாலிபம் திரும் புதோ' என்று கேட்டுவிட்டு, வாயை விட்டுச் சிரிப்பு வெளியே வராதபடி பார்த்துக் கொள்வாள் பரமசிவத்தின் மனையாட்டி .
சொக்கியை வேளியப்பனுக்கு முடிக்கப் போகிறார் களாமே!' என்று பரமசிவம் சொன்னதிலிருந்து சொக்கிm வேளியப்பன் கடைக்குச் செல்வதைக் கண்டால் கூட ஆத். திரம் கொள்ளத் தலைப்பட்டான் பூங்காவனம்.
"எந்தக் கோட்டையைப் பிடிக்க, இவ்வளவு நேரம். பேச்சு நடந்ததோ?"
"அந்தப் பேச்சை உன்னிடம் சொல்லித்தான் ஆக ணுமோ ...."
"மத்தவங்களிடம் சொல்லக்கூடிய விஷயமாகப் பேசி இருந்தாத்தானே, பளிச்சுன்னு சொல்ல..."
"ஏன் உனக்கு இத்தனை பொறாமை வெளியிடம்..."
"அண்ணன்னு சொல்லுவியே முன்னே..."
"இப்ப நான் அவரை அண்ணன்னு சொல்றதில்லே..."
"அவரு ஆயிட்டானா வேளியப்பன்..."
"அவரு நல்ல சுபாவக்காரரு; உனக்குத் தெரியாது. ரொம்ப 'சாலக்கா' பேசறாரு , தெரியுமா . அவரோட பேசிக் கிட்டே இருந்தா பொழுது போறதே தெரியாது..."
"கண்ணை மறைக்குதுன்னு சொல்லு..."
"என்ன, ஒரு மாதிரியாப் பேசறே? எதுக்காக அவரிடம் உனக்கு இத்தனை குரோதம்..."
"அவரு பெரிய சக்ரவர்த்தி! என்னோட பட்டத்து ராணியைத் தட்டிகிட்டுப் போயிட்டாருன்னு கோபம் - போயேன், உனக்குப் பிடித்தமானதைச் செய்துக்க... நான் தடுக்கவா முடியும்..."
"நான் சொல்றேன், உனக்கு அவரிடம் பொறாமை! ஆமாம்... வியாபாரத்திலே மளமளன்னு அவரு முன்னேற் றம் அடைந்து விட்டாரே, அதைப் பார்த்து உனக்குப் பொறாமை. அவரு செய்கிறது போலச் சாமர்த்தியமா, வியாபாரம் செய்து, அவரு சேர்த்திருக்கிறது போலப் பணத் தைச் சேர்த்துக் கொள்றதுதானே! யார் வேண்டாமென் கிறாங்க , அவரா குறுக்கே நிற்கறாரு..."
'எனக்கு ஒண்ணும் பணம் சேரவேண்டாம்..."
'ஏனாம்! ஓ! புரியுது. புரியுது! நீதான் சாமியாரு . ஆயிடப் போறயாமே, உனக்கு எதுக்குப் பணம்."
அம்மா சொன்னாங்களா சொக்கி?'
"சொன்னாங்களே! சொக்கி என் மகனைச் சாமான் யமா எண்ணிக் கொள்ளாதே. சாமியாராகிவிடப் போறாரு. அப்புறம் அவரு தொட்டா இரும்பு பொன்னாகும்; இலுப் பைப்பூ மல்லியாகும் ; சேலம் நாக்பூராகும் என்றெல்லாம்..."
எவ்வளவு கோபமாக இருந்தாலும் சொக்கியின் வேடிக் கைப் பேச்சு, அதனை ஓட்டியே விடுகிறது. ஆனால் சொக்கி வேளியப்பன் கடைக்குச் சென்று பேசுவதையும் சிரிப்பதை யும் பார்க்கும்போது, ஓடிப்போய் இரண்டு பேர்களையும் ஒரே வெட்டாக வெட்டிவிடலாமா என்ற அளவு ஆத்திரம் வருகிறது.
அந்த எரிச்சலால், ஒரே விலை . ஆமாம்! வேறே இடம் பார்த்துக்க" என்று பேசி, வாடிக்கைக்காரர்களைக்கூட விரட்டிவிடுகிறோமே என்று சில வேளைகளில் தோன்று கிறது. ஆனால் அந்த எரிச்சல் அடங்கினால் தானே ......
"தெரியுமா விஷயம்... ரொம்ப நல்லாப் பாடுறாரு வேளி"
"அப்படியா! நீ தாளம் போட்டே போல இருக்குது "
"உன்கிட்ட வந்து சொன்னேன் பாரு, நானு; உனக்கு அவரிடம் இருக்கற பொறாமை தெரிந்திருந்தும்..."
"எனக்கு என்ன பொறாமை அவன்கிட்டே! பெரிய மெடல் வாங்கிவிட்டானா அவன், சங்கீத வித்துவான்னு..."
"வாங்கறாரா இல்லையான்னு பாரேன் மெடலு: வரப்போற வைகாசி மாதம்..."
"நாள்கூடப் பார்த்தாச்சா, நல்ல முகூர்த்தம் தானா ...."
"எதுக்காக நீ ஒண்ணு கிடக்க வேறொன்னு பேசறே? நான் வைகாசியிலே நடக்கப்போகுதே அம்மன் திருவிழா, அதிலே 'டிராமா' நடக்குமேல்லே, அதிலே வேஷம் போடப் போறாரு வேளியப்பன், அதைச் சொன்னேன். நிச்சயமா அவருக்குத்தான் மெடல். அவ்வளவு நல்லாப் பாடறாரு..."
வேளியப்பன் மட்டுந்தானா, நாமும்தான் வேஷம் போடுவோமே என்று எண்ணினான் பூங்காவனம் ; வேளியப் பன் உட்பட அனைவரும் வரவேற்றார்கள். சொக்கி மட்டுந் தான் எதிர்ப்பு. 'உன்னாலே போட்டி போட முடியாது; பாரேன், நடைபெறப்போவதை' என்று மிரட்டினாள். பூங்காவனம் அதனால் சோர்வு அடையவில்லை.
கூத்து நடைபெற்றது. ஓரே ஆரவாரம், பாராட்டு, கை தட்டுதல் - வேளியப்பன், பாட்டுக்கு. 'போ உள்ளே! பழம் வில்லு டோய் பழம்! பாடாதே! பாட்டாடா இது. டஜன் எவ்வளவு விலை!' - இப்படிப்பட்ட கேலிக் குரல், பூங்காவனத்துக்கு.
சொக்கி சொன்னபடி, தங்க மெடல் வெளியப்ப னுக்கு.
அந்த வருஷம், திருவிழாவை முன்னின்று நடத்திவைத்த மூர்த்தி என்பவர், அந்த ஊர்க்காரர்; பல வருஷங்களுக்கு முன்பு நகரம் சென்று, சினிமாப் பட முதலாளியாகி விட்ட வர். அவர் கரத்தால், 'மெடல்' தரப்பட்டது வேளியப்பனுக்கு .
மெடல் கொடுத்ததைப் பூங்காவனம் பார்க்கவில்லை. கேலிக் குரல் வலுத்ததும் வேஷத்தை அவசர அவசரமாகக் கலைத்துவிட்டு, வீட்டுக்குப் போய்ப் படுத்தவன் மூன்று நாளா யிற்று வெளியே நடமாட - குளிரும் காய்ச்சலும் பிடித்தாட் டிற்று.
"எப்படி நம்ம ஜோசியம்? மெடல் நான் சொன்னபடி கிடைச்சுது, பார்த்தயா"
"பெரிய மெடல் ..! நீதான் மெச்சிக்கொள்ளணும்.... நான் என்ன , டிராமாவிலேயா சேரப் போறேன் ..... பாடத் தெரியாமப் போனா என்ன ....."
"அவரு சினிமாவிலே சேரப் போறாரு , தெரியுமா .... கடையை இழுத்து மூடிட்டாரே, தெரியல்லே..."
"கடை கிடையாதா இனி? நெஜமாத்தானா .... அடப் பாவிப் பய! பிழைப்பிலே மண்ணைப் போட்டுக் கொண் டானே ...."
"அவரோட பொழப்பு ஒண்ணும் கெட்டுப் போகல்லே. கூத்திலே அவருடைய பாட்டையும் பேச்சையும் கேட்டு, மெடல் கொடுத்தாரே மூர்த்தி, அவரு, சினிமாவிலே சேர்த்து விடுவதாகச் சொல்லிக் கூட்டிகிட்டே போயிட்டாரு."
"இவனும் போயிட்டானா அந்தப் பேச்சை நம்பி ...."
"இவருதான், எப்போ எப்போன்னு காத்துக்கிட்டு இருந்தாரே, சினிமாவிலே சேரவேணும்னு..."
"அவன் சினிமாவுக்காக ஏங்கிக்கிட்டு இருந்தது உனக்கு எப்படித் தெரியும்..."
"என் கிட்டத்தான் ஒவ்வொரு நாளும் சொல்லுவாரே, சொக்கி ! சொக்கி! நீதான் உதவி செய்யணும்னு..."
"நீ என்ன உதவி செய்யறதாம் அவனுக்கு? விளங்க வில்லையே..."
"உனக்கு எது விளங்கிச்சி, இது விளங்க! வேளியப்ப னுக்கு மெடல் கிடைச்சதும், சினிமாவிலே இடம் கிடைச்ச தும் என்னாலே என்கிற உண்மை உனக்கு எங்கே தெரியப் போகிறது. உனக்குத்தான் பழம் வதங்கிப்போச்சா, அழுகிப் போச்சா என்கிற விஷயமே தெரியறதில்லையே.....
"கேலி கிடக்கட்டும்; விவரத்தைச் சொல்லு சொக்கி"
"மூர்த்தியோட அக்கா தெரியுமேல்லோ , எங்க தோட் டத்துக்குப் பக்கத்திலே தான் அவங்க வீடு ... மீனாட்சியம்மா தெரியாது..."
"தெரியும், சொல்லு; அவங்களுக்கும் இதுக்கும் ...."
'என்ன சம்பந்தம்னு கேட்பே. இந்த வருஷம் திரு விழா நடத்தப் போறவரு மூர்த்தின்னு தெரிஞ்சதும், வேளி யப்பன் திட்டம் போட்டாரு, எப்படியாவது கூத்திலே சேர்ந்து தன்னோட திறமையை மூர்த்தி ஐயாவுக்குக் காட்டி, சினிமாவிலே சேர வழி செய்து கொள்ள வேணும்னு. அத னாலே என்னிடம் சொன்னாரு. எப்படியாவது மீனாட்சி அம்மாவிடம் சொல்லி', மூர்த்தியோட உதவியைப் பெற்றுத் தரவேணும்னு .... நான் அந்த அம்மாவிடம் வேளியப்பன் நல்லாப் பாடுவாரு , நடிப்பாரு, வேஷம் போட்டா பிரமா தமா இருக்கும் என்றெல்லாம் சொல்லிவைத்தேன். இந்த வருஷம் மெடலு வேளியப்பனுக்குக் கிடைக்க வேணும்னு வேண்டிக் கிட்டேன்.... ஆகட்டும் சொக்கின்னு சொன்னாங்க ... சொன்னபடியே செய்தாங்க .... மூர்த்தி ஐயா வேளியப் பனை சினிமாவுக்கே அழைத்துக் கொண்டு போயிட்டாரு. என் பூஜை பலிச்சது. பழம் நழுவிப் பாலிலே விழுந்துது..."
"பூஜை பலிச்சுதா, ரொம்ப சந்தோஷம். வேளியப் பன் சினிமாவிலே இலட்ச இலட்சமாச் சம்பாதிப்பான்..... வைரத்தாலேயும், தங்கத்தாலேயும் செய்த நகைகளைப் பூட்டுவான்; மோடாரிலே சவாரி செய்யலாம்; பங்களா விலே வாழலாம். சுகமா இரு; சந்தோஷமா இரு..."
"இரு, இரு ! இப்ப நீ என்ன எண்ணிக்கிட்டுப் பேசறே..."
"நல்லாப் புரிஞ்சிக்கிட்டுத்தான் பேசறேன் ..... மெடல் வாங்கிக் கொடுத்தது, சினிமாவிலே 'சான்சு' வாங்கிக் கொடுத்தது எதுக்காக? இதுகூடவாப் புரியாது. வேளியப் பனைக் கட்டிக் கொள்ளத்தானே! அதனாலேதானே அவனி
டம் அவ்வளவு அக்கரை ...."
"பேசு ! பேசு! உனக்கு என்னென்ன தோணுதோ அவ்வ ளவும் பேசு..."
"எனக்கு என்ன வேறே வேலையே இல்லையா? யாரை யாரு காட்டிகிட்டா எனக்கு என்ன? எல்லாம் இந்தக் காலத் திலே குணத்தையா கவனிக்கறாங்க, பணத்தைத்தானே!
நீ மட்டும் வேறே விதமாகவா இருக்கப் போறே..."
அதற்கு மேல் பேச மனமில்லை பூங்காவனத்துக்கு; வியாபாரத்தைக் கவனிக்கத் தொடங்கினான். சொக்கி சிரித்தபடி சென்றுவிட்டாள். வேளியப்பன் கடை மூடப் பட்டு விட்டதால், வாடிக்கையாக அங்கு போகிறவர்களும், பூங்காவனம் கடைக்கு வந்தனர். நல்ல வியாபாரம்.
சில நாட்களுக்குப் பிறகு, வீட்டிலே , பூங்காவனத்தின் தாயாரும் தகப்பனாரும் பேசிக் கொண்டிருந்தது. பூங்கா வனம் காதிலே விழுந்தது.
"உண்மைதானுங்களா நான் கேள்விப்பட்டது....."
"எதைக் கேள்விப்பட்டே?"
"சொக்கியை வேளியப்பனுக்குக் கொடுக்கச் சொல்லி, வேளியப்பனோட அப்பா போய்க் கேட்டாராமே..."
"ஆமாம்... நானுந்தான் கேள்விப்பட்டேன்..."
பூங்காவனத்தால் அதற்குமேல் அந்தப் பேச்சைக் கேட் டுக் கொண்டிருக்க விருப்பம் இல்லை. கோபமும் துக்கமும் மனதைப் பிய்த்துவிடும் போலிருந்தது. வெளியே உலாவச் சென்றுவிட்டான்.
பல நாட்களாகக் கடைப் பக்கம் வராமலிருந்தவர்கள் ளெல்லாம் வரலாயினர்; பூங்காவனத்தின் வியாபாரம் மளமள வென்று வளர்ந்தது. வேளியப்பன் காலி செய்து விட்ட கடையையும் வாடகைக்கு எடுத்துக் கொண்டு, சரக்கு இருப்பு வைக்க அதை உபயோகப்படுத்திக் கொண்டான். பரமசிவம் மிக்க மகிழ்ச்சியுடன் இருந்தார்.
"எப்ப கல்யாணம்? நாள் பார்த்தாச்சா ..."
"பெரியவங்கதானே நாள் பார்க்கவேணும். நானே வா பார்ப்பேன்."
"பெரியவங்க எதுக்கு. தனக்குத் தேவையான மாப் பிள்ளையை பெண்ணே தேடிக் கொள்கிற காலமாச்சே இது."
"எதுக்கும் பெண்ணைப் பெத்தவங்களை வந்து கேட்க வேண்டாமா , கொடுக்கச் சம்மதந்தானான்னு..."
"வந்து கேட்டாங்களாமே உங்க அப்பாரை ...."
"கேட்டது மட்டுந்தான் தெரியுமா? எங்க அப்பா என்ன சொன்னாருன்னு தெரியாதா?
"என்ன சொல்லுவாரு : சினிமாவிலே சேர்ந்திருக்க றாரு , சீமானாவப் போறாரு, அவருக்குப் பெண் கொடுக்க இஷ்டமில்லாமலா போகும்..."
"இஷ்டம் இல்லைன்னுதான் சொல்லிட்டாரு."
"என்னது. என்னது! இஷ்டம் இல்லைன்னா?...."
"சினிமாவிலே சேர்ந்துவிட்ட ஆசாமிக்கு என் பெண் ணைக் கொடுக்கமாட்டேன். அது கிராமத்துப் பொண்ணு ; ஏழைப் பொண்ணு ; சினிமாவிலே இருக்கற் பளபளப்பு மினுமினுப்பு இதைப்பார்த்து மயங்கிப்போனா, சொக்கியை விரட்டிவிடலாம்னு பின்னாலே ஒரு காலத்திலே எண்ணம் வந்துவிடக் கூடும். அதனாலே சொக்கியை தரமுடியாதுன்னு சொல்லிட்டாரு..."
"அடப் பாவமே! நீதானே கஷ்டப்பட்டு, மீனாட்சியம் மாவோட சிபாரிசு பிடிச்சி வேளியப்பனை சினிமாவிலே சேர்த்துவிட்டே..... உங்க அப்பா இப்படிச் சொல்லி உன் னோட மனக்கோட்டையை இடித்துப் போட்டுவிட்டாரே..."
"என்னோட மனக்கோட்டையை இடிக்க அவராலேயும் ஆகாது; வேறு எவராலேயும் ஆகாது."
"இதோ இப்ப இடித்துப் போட்டுட்டாரே.... சினிமா விலே சேர்ந்ததாலே சந்தோஷமா , பெருமையா உன்னைக் கொடுக்கச் சம்மதிப்பாரு உங்க அப்பாருன்னு நினைச்சே .... நடக்கல்லியே......"
"சினிமாவிலே சேர்ந்துவிட்டா, வேளியப்பனுக்கு என் னைக் கட்டிக் கொடுக்க எங்க அப்பா சம்மதிக்கமாட்டார் என்பது எனக்கு முன்னாலேயே தெரியும்..."
"உங்க அப்பாவுடைய சுபாவம் தெரிந்திருந்தும் வேளி யப்பன் சினிமாவிலே சேர்த்துவிட நீ எப்படிச் சம்மதித்தே ...."
"ஏன் சம்மதித்தேன்னு கேளு... வேளியப்பனுக்கு என் -னைக் கொடுக்க அப்பாரு திட்டம் போட்டாரு. வியாபாரம் நல்லபடி செய்துகிட்டு இருக்கறான், உள்ளூரோடு இருக்கி றான், நமக்கு ஏற்ற இடம், அடக்கமான இடம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தாரு. அப்பா தெரியுமேல்லோ.. பிடி வாதம், பார்த்தேன், ஒரு தந்திரம் செய்தேன். அண்ணேன்! உன் குரல் பிரமாதமா இருக்குது : சினிமாவிலே சேர்ந்தா பெரிய ஆள் ஆயிடுவேன்னு தூபம் போட்டேன். வேளியப்ப னுக்கும் அந்தப் பைத்தியம் போல இருக்குது ; சினிமாவிலே சேரவேணும் என்கிற பைத்யம். நமக்குயாரு சொக்கி சிபாரிசு செய்ய இருக்கறாங்கன்னு சொல்லி வருத்தப்பட்டாரு. மீனாட்சிம்மா கவனம் வந்தது. அந்த அம்மாவுக்குத் தூபம் போட்டேன்; பலித்துவிட்டது..."
"பாரேன் உன்னோட தந்திரத்தை ..."
"என்னோட காரியத்தை நானே தானே கவனித்தா கணும்; உனக்குத்தான் அந்தத் துப்பு கிடையாதே. சினிமா விலே சேர்த்து விட்டா, அப்பா என்னை வேளியப்பனுக்குக் கொடுக்க மறுத்துவிடுவாரு என்பது தெரியும். அது போலத் தான் மறுத்துவிட்டாரு. அதுமட்டுமா! வேளியப்பன் இங்கே பழக்கடை நடத்திக்கிட்டு இருக்கிறவரைக்கும், உன்னோட கடை தூங்கி வடியும் என்பதும் புரிந்து போச்சி. இப்ப, ஒரே கல்லிலே இரண்டு மாங்கா ! பார்த்தியா, சொக்கியோட வேலையை..."
"சொக்கி ! சொக்கி! அப்படின்னா , உனக்கு என்னைக் கட்டிக் கொள்ள வேணும் என்கிற விருப்பம்..."
"எழுதி ஒட்டிக் கொள்ளவா நெற்றியிலே. பைத்யம்! பைத்யம்! வியாபாரத்தைக் கவனி! பெத்தவங்க பெரியவங்க வந்து மத்ததைக் கவனிப்பாங்க..."
----------
'காஞ்சி' வார இதழ் - 13-6-1965
---------------------------------
3. சுமார் சுப்பையா
"சுமார் 11 மணி இருக்கும்ங்க ..... "
எவ்வளவு தூரம் ஐயா, நீ போன இடம்."
"இருக்குமுங்களே, மூணு மைல் சுமாருக்கு."
" இப்ப என்ன மணி?"
"சுமார் 1 மணின்னு நினைக்கிறேனுங்க."
முதலாளிக்குக் கோபத்தை அதற்குமேல் அடக்கிக்கொள்ள முடியவில்லை. யார்யா சுத்த மண்டூகமா இருக்கறே. எதுக்குக் கேட்டாலும், என்ன கேட்டாலும் சுமார்! சுமார்! சுமார்! இதுதானா பதில். ஒரு திட்டவட்டமான பதில், பட்டு வெட்டின்படி, கரக்டான பதில் வருதா உன் வாயிலே இருந்து. தலை நரைச் சுட்டுது. பார்த்தா பரிதாபமாவும் இருக்குது. ஆனா, உன்னோட போக்கு கொஞ்சம்கூட சரியா, திருப்தியா, தரமா இல்லையே!"
என்ன வயசாகுதய்யா உனக்கு?"
"சுமார் ஐம்பத்திரண்டுங்க."
"அதுக்கும் அந்தப் பாழாப்போன சுமார்தானா! பெரிய சனியனாப் போச்சு. எத்தனை கை எத்தனை காலுன்னு கேட்டாக்கூட, சுமார் இரண்டுன்னு சொல்லுவேபோல இருக்குது. உன்னோடே மாரடிக்க முடியல்லையா . நெஜமாத் தான் சொல்றேன், நீ என்னோட பொறுமையை ரொம்பத் தான் சோதிக்கறே. போய்யா , இந்தச் சுமாரு சுமாருன்னு அழுகறதை நிறுத்திக்க. ஆமா! கரெக்டா இருக்கோணும் பதில். தெரியுதா? போ! போ! இந்த மாதிரி கோணமாலு களை நான் கட்டி மேய்க்கறதுக்குள்ளே பாதிப் பிராணன் போயிடுது."
நிலபுலம், தோட்டம் துரவு, துணிக்கடை இவ்வளவுக் கும் மேலாக கோயில் தர்மகர்த்தா வேலை எல்லாம் உருண்டு திரண்டு ஒரு உருவமாகி, வேலாயுதம் பிள்ளை என்ற பெயரு டன் அந்த ஊரில் ஒரு பெரிய புள்ளியாக ஒருவர் இருந்து வருவது. விவரமறிந்தவர்களுக்குத் தெரியும். அவருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமாக வேண்டும் என்று நாய் படாத பாடு' படுவதாகச் சொல்லிக் கொண்டு, வேலை பார்க்கும் முதியவர்தான், சுமார் சுப்பையா; அப்படி ஒரு சிறப்புப் பட்டமே கட்டிவிட்டார்கள் ஊரார், சுப்பையா எதற் கெடுத்தாலும், சுமாராக - சுமாராக என்று பேசி வந்த கார ணத்தால் . அப்படி ஒரு பழக்கம் என்பது அல்ல, அப்படி ஒரு பயிற்சி சுப்பையாவுக்கு. வேலாயுதத்திடம் வேலைக்கு வரும் வதற்கு முன்பு, சுப்பையா வேலை பார்த்த இடத்திலே ஏற் பட்ட பழக்கம், பயிற்சி. அந்த முதலாளியின் பெயர் முத்துச் சாமி. அவர் ஒருமுறை பசு மாடு வாங்கும் வேலையாக, சுப் பையாவை அனுப்பி வைத்திருந்தார். வேளைக்கு 1 1/4 படி பால் கறக்கும் என்று மாட்டுத் தரகன் சொன்னதை நம்பி சுப்பையா, தன் முதலாளியிடம் கூறியபோது, முதலாளி, ஒரு தடவைக்கு நாலு தடவை கேட்டார். 'சரியாச் சொல்லு 1 1/4 படி! வேளைக்கு? அப்படித்தானே!' என்று. ஆமாங்க! வேளைக்கு 18 படி கறக்கும்ங்க. நான்தான் சொல்றனே; தெரிஞ்சிதானுங்க சொல்றேன்' என்று விளக்கம் கொடுத் தார், சுப்பையா. பசு வேளைக்கு 1 1/4 படி கறப்பதே 'உன் னைப்பிடி என்னைப்பிடி' என்று ஆகி விட்டது. முதலாளிக் குக் கோபம் தாங்கமுடியவில்லை. 'ஏய்! சுப்பா! இங்கே வா!' என்று மிரட்டும் குரலில் அழைத்து அருகே வந்ததும், காதைத் திருகியபடி, வேளைக்கு 1 1/4 படி, 1 1/4 படி! அளந்து பார்த் தவர் போலச் சொன்னாயே! போய்ப்பாரு, பசுவோட இலட் சணத்தையும் உன் பேச்சோட அர்த்தத்தையும். சுமார் 1 படி கறக்கும்னு கூடச் சொல்லலியே! 1 1/4 படி. அளந்து பார்த்த ஆசாமி போல அல்லவா சொல்லி என்னை ஏமாத் தினே...' என்று ஏசினார். அதிலிருந்து சுப்பையா, முத லாளியிடம் பேசும்போது பயந்து, எதற்கும் 'சுமாராக' என்று சேர்த்துப் பேச ஆரம்பித்து, பழக்கமும் பயிற்சியுமாகி விட்டது. அந்த வாடிக்கை, வேலாயுதத்திடம் வேலைக்கு வந்த பிறகு எப்படிப் போய்விடும்? எதற்கும், சுமார்! சுமார்!' என்ற இணைப்பு வைத்தே பேசி, முதலாளியின் கோபத்தை அதிகப்படுத்திவிடும் நிலை ஏற்பட்டு விட்டது.
"உனக்குத் திட்டவட்டமா, சரியாத் தெரிஞ்சா சொல்ல ணும்; இல்லே, சுமாரா இப்படி இருக்கும்னு சொல்லணும். தெரியுதா?" என்று முன்னாள் முதலாளி பாடம் சொல்லி வைத்தார்; அது பழக அதிலே தேர்ச்சி பெற நாளாயிற்று: ஆனால் அதிலே நல்ல தேர்ச்சி பெற்று அப்படிப் பேசுவது இயல்பிலேயே ஒரு பகுதி என்று ஆகிவிட்ட பிறகு, 'அதை. விட்டுத் தொலை. எதையும் திட்டவட்டமாக கரெக்டா சொல்லு?' என்கிறார் புதிய முதலாளி - பத்து ரூபாய் சம்பளம் அதிகம் கூடக் கொடுத்திருக்கிறார் - உறவினர்கூட. ஆனால் அந்த 'சுமார்' என்ற பதத்துடன் சுப்பையா ஏற்படுத்திக் கொண்ட தொடர்பு இலேசிலே போக மறுத்தது.
இவ்வளவு சொல்லியும் கூட, அன்று மாலை, முதலாளி சுப்பைய்யாவைக் கூப்பிட்டுத் தன்னோடு பேசிக்கொண்டு இருந்த ஒருவரிடம் காட்டி, நான் சொன்ன சுப்பைய்யா இவருதான். எனக்குப் பெரியப்பா முறை. சொந்தம்தான். எல்லாம் சோளிங்கபுரத்து வழிதான்." என்று அவரிடம் கூறிவிட்டு, 'ஏன்யா, பையன், உன் மகன், நல்ல அழகு இல்லையா?' என்று கேட்டார். சுப்பையா, 'சுமாரா இருப்பானுங்க' என்றுதானே பதில் சொல்ல முடிந்தது? வந்திருந்தவர் பத்து ஏக்கர் பூமிக்கு உடையவர் - அவர் பெண்ணைத்தர ஏற்ற இடம் தேடி வந்திருக்கும் நேரம்: அப்போதும் அந்தப் பாழாய்ப்போன 'சுமார்!' 'போய் வேலையைக் கவனி..." என்று முதலாளி, சிறிது பதட்டமா கவே கூறி அனுப்பிவிட்டார். அவர், பாவம் சுப்பைய்யா மகனுக்கு, நல்ல இடத்துச் சம்பந்தம் கிடைக்கட்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டுதான் பேசிக்கொண்டு இருந்தார். 'சுமார்' வந்ததே, அவர் திட்டத்தைக் கெடுக்க!!
சுப்பைய்யாவுக்கு, இந்த சுமார்' என்ற பதம் பழக்க மாகி விட்டதற்கு வேறோர் காரணமும் உண்டு. உண்மையே பேச வேண்டும். எதையும் சரியாகத் தெரிந்து கொண்டு பேச வேண்டும் என்பதிலே, மிகுந்த அக்கரை சுப்பைய்யாவுக்கு. நமக்கென்ன தெரியும் - நமக்கெங்கே தெரியப் போகுது - என்ற எண்ணம் வேறு. அந்தப் பாவி, மாட்டுத்தரகன் 14. படி என்று சொன்னான். சரியா என்று பார்க்காமல், அளந்து காட்டு என்று கேட்காமல், எல்லாம் தெரிந்த மேதாவி போல், எஜமானரிடம் உளறியதாலேதானே அவ ருக்கும் நஷ்டம், நமக்கும் கஷ்டம் என்று நினைத்து நினைத்து எதையும் திட்டவட்டமாகச் சொல்லக் கூடாது என்ற முடி வுக்கு வந்ததன் விளைவு இந்த 'சுமார் .
வந்தவர் போன பிறகு, வேலாயுதம், சுப்பைய்யா வைக் கூப்பிட்டு, அய்யோவ்! நீ உருப்பட மாட்டே. ஆமாம். உன் பிள்ளைக்குப் பெண் தர, பாதிச்சம்மதம் சொன் னான், சோளிங்கபுரத்தான் - கெட்டதே; உன்னோட சுமார் வந்து கெடுத்துதே,' என்று கூறினார். சுப்பைய்யாவுக்கு வருத்தமாக இருந்தது. ஆனால் மகன் அழகுதான் என்று எப்படிச் சொல்ல முடியும்? நம்முடைய கண்ணுக்கு அவன் அழகாகத்தான் இருக்கிறான்! முதலாளியோட எண்ணம் எப்படியோ? அதைத் தெரிந்து கொள்ளாமல், நாம் எப்படி திட்டவட்டமாகச் சொல்லமுடியும்? அதனாலேதான், சுமாரா இருப்பான் என்று சொல்லி வைத்தேன் ; கோபிக்கிறார். நான் என்ன செய்ய! என்று முணுமுணுத்தபடி வீடு சென்று சோகமாகப் படுத்துவிட்டார். தன்னைவிட வயதிலே குறைந்தவன் தான் குப்புசாமி, துணிக்கடையில் எவ்வளவு சாமர்த்தியமாக நடந்துகொள்கிறான். அதையுந்தான் அவர் பார்க்கிறார்; பார்த்து? என்ன முயற்சி செய்தாலும் அந்தப் புத்தி கூர்மை வர மறுக்கிறதே. என்ன செய்வார். நாணய மானவர். அடக்கமானவர். இருந்து? அதோ குப்புசாமியைப் பாருங்கள்.
"ஏம்பா ! சாயம் எப்படி?"
"நம்ம கூடையிலே வந்து நீங்க இந்தக் கேள்வி கேட்க லாமா?"
- அதிர்வேட்டுச் சிரிப்புடன் புடவையைக் காகித உறைக்குள்ளே போட்டு, வந்தவரிடம் கொடுத்துவிட்டு காதின் இடுக்கிலே உள்ள பென்சிலெடுத்து. 17-30 என்று பில் போட்டுக் கொடுத்துவிட்டு மற்றவர்களைக் கவனிக்கி றான்.
"ஏம்பா! சாயம் போகுதே உங்க கடை சேலை!"
"எங்க கடை சேலையிலே குத்தம் கிடையாதுங்க. நீங்க வெளுக்கப் போட்ட இடம் அப்படி இருக்குது. நாங் களா பொறுப்பு அதுக்கு?"
"வெளுக்க எங்கேயும் போலியே, நாங்களே வீட்டில் லேயேதான் தோய்த்துப் பார்த்தோம்."
"என்ன சோப்பு போட்டிங்க? "
"மல்லிமார்க் சோப்புதான்....."
"அப்படிச் சொல்லுங்க. நான் திகைச்சிப் போனேன். கெட்டிக் சாயமாச்சே அது எப்படிப் போகும்னு. அம்மா! புடவை விலை போட்டு வாங்குவது மட்டும் போதாது. சோப்பு தரமானதா இருக்கணும். இருங்க .... டேய், பையா! டேய், கிட்டு! அம்மாவுக்கு அல்லிமார்க் சோப் ஒரு பெட்டி வாங்கி வந்து கொடு . மூணு ரூபா கொடுங்கம்மா. இதைப் போட்டுப் பாருங்க, சாயம் கக்குதான்னு."
வந்தவர்கள் திருப்தியாகப் போகிறார்கள். அல்லி மார்க் சோப்புக்கு, குப்புசாமிதான் அந்த ஊர் முழுதுக்கும் ஏஜண்ட்! ஒரே கல் ; இரண்டு மாங்காய்!!
இதையெல்லாம் பார்க்கிறார் சுப்பைய்யா. ஆச்சரியத் தால் வாய் பிளந்து நிற்கிறாரே தவிர, எப்படி குப்புசாமி இத்தனை வித்தைகளைக் கற்றுக் கொண்டான் என்பதே புரியவில்லை. தனக்கு அந்த வித்தை வராது என்று எண்ணு கிறார். அதுமட்டுமல்ல, அந்த வித்தை தனக்கு வேண்டாம், அது பாபம், கேவலம் என்றும் எண்ணுகிறார்.
சுப்பைய்யாவின் சுபாவம், அவருக்கு வாழ்க்கையிலே பல கட்டங்களில் தொல்லை கொடுத்தது. ஆனால் ஒரு முறை அவருக்கு ஆபத்தையே உண்டாக்கி விட்டது. அந்தச் சுபாவம்.
ஊரிலே பெரிய வம்புக்காரன் சிகப்பான். அவன் ஒரு நாள், கடையில் கலகம் செய்து, முதலாளியைத் தாக்கி விட் டான் - அங்கு இருந்த கத்திரி கொண்டு குத்தவும் முயற்சித் தான். வழக்கு நடந்தது. சிகப்பனுக்கு வக்கீலாக வந்தவர், சாட்சிகளை மிரட்டித் திணற அடிப்பதில் வல்லவர்; எப்போதும் அடிதடி , கத்திக்குத்து, தீ வைத்தல் போன்ற வழக்கு களில் அவர்தான் முன்னால் நிற்பார், குற்றவாளிக்குவாதாட. வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ! வழக்கு மன்றத்திலே, அவருடைய 'வாண வேடிக்கையைப் பார்க்கப் பலர் கூடுவார்கள். சிகப்பன் தாக்கியதற்குச் சாட்சி கூற குப்புசாமி மட்டும் போதும். அவன் சமாளிப்பான்; ஆனால் கலகம் நடந்த தினத்தில், குப்புசாமி குல தெய்வத் துக்குக் கும்பாபிஷேகம் என்று கோடியூர் போய்விட்டிருந் தான். அன்று கடையில் இருந்தவர்களில் முக்கியமானவர் சுப்பைய்யா . முதலாளி தன் வக்கீலிடம், இந்த ஆளை மட்டும் சாட்சிக் கூண்டிலே போடாதிங்க. உளறிக்கொட்டி, வழக் கைக் கெடுத்துவிடுவான் என்று சொல்லி வைத்திருந்தார். சுப்பைய்யாவுக்குக்கூட நிம்மதியாகவே அந்த ஏற்பாடு தென் யட்டது. ஆனால் வழக்கைப் பதிவு செய்த போலீசார், சுப் பைய்யா கடையில் இருந்ததைக் குறிப்பிட்டு இருந்தார்கள். சிகப்பனுடைய வக்கீல் கழுகாசலம், இதை 'மோப்பம்' பிடித்து சுப்பைய்யாவைச் சாட்சிக் கூண்டுக்குக் கொண்டு வந்து விட்டார். நடுக்கம் சுப்பைய்யாவுக்கு .
"உம்மோட பேர், சுப்பைய்யாவா?"
"ஆமாம்!"
"எவ்வளவு வருஷமாக வேலை பார்க்கிறீர்?"
"சுமார் ஏழெட்டு ஆகுதுங்க..."
"எஜமானர் நல்லவர் - இல்லையா?"
"தங்கம் தங்கமானவரு..."
"உரக்கச் சொல்லாதய்யா. இது தங்கக் கட்டுப்பாடு காலம்! நல்லவர்."
"ஆமாங்க."
"சம்பளம் போதுமான அளவு கிடைக்குதா."
"சுமாரா..."
"உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வது பாவமில்லையா?"
"பாவந்தானுங்களே."
"உப்பிட்டவர்களை உள்ளளவும் நினைக்க வேணுமில் லையா?"
"அதுதானுங்களே நியாயம், தர்மம்."
"ஆகையினாலே நீ உன் எஜமானருக்குத் துரோகம் செய்யமாட்டே ..."
"மனசு வருங்களா..."
"எஜமானருடைய நன்மை எதுவோ அதுக்கு அக்கரை காட்டுவே!"
"உள்ளதுதானுங்க..."
"அதனாலேதான், இப்ப, உன்னோட எஜமானர் கொடுக்கிற சம்பளத்துக்காக, அவர் சார்பிலே, பொய் சாட்சி சொல்ல வந்திருக்கிறேன்னு நான் சொல்றேன்."
"அப்படிச் சொல்லாதிங்க .... நான் பொய் பேச மாட்டேனுங்க... தெரியாதுங்க.... பழக்கமே கிடையாதுங்க..."
"தெரியப்போகுது பார் உன்னோட சொரூபம். சரி, கடையிலே கலகம் நடந்ததாச் சொல்றிங்களே, அப்ப மணி என்ன ?"
"மணி வந்துங்க .... பனிரெண்டு இருக்கலாம்ங்க .... சுமாரா!"
"இதோ பாரய்யா இது கோர்ட். நிஜம் தான் பேச ணும். இழுத்துப் பேசறது, மழுப்பறது கூடாது. மணி என்ன?"
"சுமார் பன்னெண்டு."
"சுமார் பன்னெண்டுன்னு ஒரு கணக்கு இருக்குதா? சரியாச் சொல்லுமய்யா. மணி பன்னிரண்டு அடிச்சுதா, அடிக்க கால் மணி நேரம் இருந்ததா , அடிச்சி அரை மணி நேரமாச்சா ....."
"எப்படிங்க அப்படிச் சொல்ல முடியும். சுமாரா பன் னெண்டு இருக்கும்."
"கடிகாரத்தைப் பார்த்தீரா?"
"இல்லிங்க..."
"கடியாரத்தைக் கூடப் பார்க்காம மணி தெரியுதா உமக்கு ."
"இலேசா பசி எடுத்து துங்க; அதிலே இருந்துதாங்கச் சொல்றேன், சுமார் 12 இருக்கும்னு."
"ஓஹோ! உன் கடிகாரம் வயத்திலே இருக்குதா? இருக்கட்டும், இருக்கட்டும். கடியாரத்தைப் பார்த்து மணி சொல்லலே?"
"ஆமாங்க..."
"ஆகையாலே , கலகம் நடந்த நேரம், மணி, உனக்கு திட்டவட்டமாத் தெரியாது."
"ஆமாங்க."
"உனக்கு திட்டவட்டமாகத் தெரியாத ஒரு விஷயத் தைக் கோர்ட்டிலே சத்தியம் செய்து கொடுத்துவிட்டுப் போக றியே, பேசலாமா! போகட்டும். அடிதடி நடந்தது. அப்படித் தானே?"
"வந்துங்க , சிகப்பன், சிகப்பன்..."
"கதாகாலட்சேபம் கூடாது; கேள்விக்குப் பதில் அடிதடி நடந்துதா?"
"நடந்துதுங்க."
"யார், யாரை அடிச்சது?"
"சிகப்பன் எஜமானரைத் தாக்கினாரு!"
"இரண்டு கையாலேயா, ஓரே கையாலேயா?
"அதைக் கவனிக்கலிங்க . பளார் பளார்னு சத்தம் கேட்டுது."
"கேட்டதும், உமக்குப் பயம் ஏற்படலியா?"
"பயந்தாங்க .... உடலே நடுங்கிப் போச்சுங்க.... கைகால் ஓடலிங்க . கண்ணை கெட்டியா மூடிக்கொண்டேனுங்க!"
"கண்ணை மூடிக் கொண்ட நீ சிகப்பன்தான் எஜ மானரை அடிச்சான் என்று எப்படிச் சொல்லலாம்?
"சத்தம் கேட்டுது."
"நீ கண்ணாலே பார்த்தாயா? "
"இல்லிங்க."
"சிகப்பன் கத்திரியாலே குத்த வந்தான்னு சொல்றாங்களே !'
"ஆமாங்க... எஜமானரு பதறிக் கூவினாருங்க, கத்திரி! கத்திரி'ன்னு!"
"கத்திரி! கத்திரின்னு கூவினாரே தவிர சிகப்பன் என் னைக் கத்திரியாலே குத்த வர்ரான்னு சொன்னாரா?"
"அப்படிச் சொல்லலிங்க."
"அந்தக் கடையிலே மூட்டை தூக்கிப் போடற பையன் ஒருத்தன் உண்டா ?"
"மூணு பேருங்க." 'அதிலே ஒருத்தன் பேர், கத்திரி. இல்லையா.."
"ஆமாங்க."
"நான் சொல்றேன், உன் எஜமானரு சிகப்பனை அடிக்க கத்திரி என்ற வேலையாளை கூப்பிட்ட குரல்தான் உன் காதிலே கேட்டதுன்னு, என்ன சொல்றே!"
"நான் என்னங்க சொல்ல முடியும். என் காதிலே, எஜமானர் கூவினது கேட்டது."
"உன் கண் மூடி இருக்குது - மணி தெரியாது - காதிலே சத்தம் விழுது - இது போதும்னு நினைச்சு சாட்சி சொல்ல வந்துவிட்டயா."
"நான் மாட்டேன்! மாட்டேன்னு! தலைப்பாடா அடிச் சுக்கிட்டேனுங்க."
வழக்கு சிகப்பன் பக்கம் வெற்றியாகி விட்டது. சுப்பைய்யாவுக்கு வேலை போய் விட்டது. வீட்டிலே மனைவி மெத்த வருத்தத்துடன், 'எதையும் தெளிவாப் புரிந்துகொள் ளணும், திட்டவட்டமாச் சொல்லணும். இப்படி இருந்தா லொழிய, யாருங்க உங்களை வேலைக்கு வைத்துக்கொள்ளு வாங்க?' என்று கூறினாள்.
"உண்மைதான் கண்ணாத்தா! புரியுது; பழக்கமாக ணுமே. இனி எதையும் திட்டவட்டமாத் தெரிந்து கொண்டு தான் பேசணும். இனிமேல்பட அதே வேலைதான் எனக்கு. பாரேன்' என்று தைரியம் கூறினார். அன்று முதல் அதே நினைப்பு. அந்த முறையைப் பயில ஆரம்பித்தார். ஆறு மாதத்துக்குப் பிறகு, கார்மேகம் என்பவரிடம் வேலைக்கு அமர்ந்தார்.
'சுப்பையா! போயி பொன்னியம்மன் கோயில் தெரு விலே இருக்கிற கன்னியப்பன் தரவேண்டிய பாக்கியை வாங்கி கிட்டு, வா." - என்று கார்மேகம் கூறுவார். உடனே, ஒரு சிறு குறிப்புப் புத்தகத்தை எடுப்பார் சுப்பையா! கடிகாரத் தைப் பார்த்து 10.25 என்று குறித்துக் கொள்வார். கடையை விட்டு இறங்குவார்; திரும்பி வருவார். 'பாக்கி எவ்வளவுங்க!' என்று கேட்பார். கடைக் கணக்குப்பிள்ளை,
இங்கே, வாய்யா! நீ போன உடனே அவன் கொடுத்துவிடற வன் போல 'கரெக்டா கணக்கு கேட்கறியே! போய்யா! போய் பாக்கி பணம் கொடுன்னு கேள்!" என்பார். சுப்பையா விடமாட்டார். 'இல்லிங்களே! கரெக்டா கணக்கு தெரியணும். பாருங்க! ஏன்னா, என்ன பணம் சேரணும்னு கேட்டா, நான் சொல்லணும், இல்லே." என்பார். கணக்கப் பிள்ளை ஏட்டைப் பார்த்து 80 ரூபா 60 பைசா என்பார். அதைக் குறிப்புப் புத்தகத்தில் எழுதிக்கொண்டு கிளம்புவார். பாதி வழி போகும் போதே யோசனை வந்துவிடும். 'பொன்னி யம்மன் கோவில் என்று மட்டும் தானே சொன்னார்கள்! வீட்டு எண் கேட்க மறந்துவிட்டோமே' என்று. பலரை விசாரித்து வீடு கண்டு பிடிப்பார். முதல் வேலையாக குறிப்பு புத்தகத்தை எடுத்து, வீட்டு நம்பர் இன்னது என்று குறித்துக் கொள்வார். உள்ளே உடனே போய்விடமாட்டார். தான் அங்கு வந்ததையும் கன்னியப்பன் வீட்டுக்குள் போனதையும் நாளைக்குத் தேவைப்பட்டால் மெய்ப்பிக்கக் கூடிய முறையில் தனக்குத் தெரிந்தவர் யாராவது வருகிறாரா என்று காத் திருந்து, அப்படி ஒருவர் வந்ததும், அவருடைய பெயரை எழுதிக் கொள்வார். அது முடிந்ததும் யாரையாவது கேட்டு மணி என்ன என்று குறித்துக்கொண்டு பிறகுதான் உள்ளே போய், கன்னியப்பனைப் பார்த்துப் பேசுவார்.
"நீ கார்மேகத்தோட கடையா?"
"ஆமாம்."
"கணக்கப்பிள்ளையா?"
"ஆமாம்."
"பாக்கி வசூல் பார்க்க வந்தாயா?"
"ஆமாம்."
"நீ கார்மேகம் கடைஆள்தான் என்று எப்படி எனக்குத் தெரியும்? எழுதியிருக்கா உன் நெத்தியிலே' - இதற்குப் பதில் சொல்ல, குப்புசாமி அல்லவா வேண்டும். சரி, இனி, பாக்கி வசூல் செய்யப் புறப்பட்டால் எஜமானரிடம் இருந்து ஒரு அடையாளச் சீட்டு வாங்கிக் கொண்டுதான் வரவேண்டும் என்ற முடிவுடன் கடை திரும்புவார்.
இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் மிக முன்னேற்பாட் டுடன் நடக்க ஆரம்பித்து, அந்தப் பயிற்சி முற்றி அது - சுப்பை யாவின் சுபாவமாக வளர்ந்துவிட்டது. அதன் பலனாக எந்தக் காரியமும் கால் தாமதம் இன்றி நடப்பதில்லை.
மத்தவன் சிட்டா பறந்து போய் காரியத்தை முடிக்க றான். நீயும் இருக்கறயே ஒரு மனுஷன், ஆமை மாதிரி. எதுக்கெடுத்தாலும் விவரம் தெரியணும். ஒரு நோட்டுப் புத்த கத்திலே குறிக்கணும். செச்சேச்சே நீ உருப்பட மாட்டய்யா! ஆமாம்" என்று கூறி, கார்மேகமும் சுப்பையாவை வேலையை விட்டு நீக்கிவிட்டார்.
----
'காஞ்சி' பொங்கல் மலர் 1965
---------------------
4. பொங்கல் பரிசு
மதிப்புமிகு முதலாளி அவர்களுக்கு,
தங்களுக்குள்ள பலவிதமான வேலைத் தொந்தரவுகள், வியாபாரம் சம்பந்தமான வேலைகள், இவைகளுக்கிடையே இந்தக் கடிதம் எழுதி அனுப்புவதற்காக மன்னிக்கக் கேட்டுக் கொள்கிறேன். எனக்கு ஏற்பட்டுவிட்டிருக்கிற சிக்கலைப் போக்கிட வேறு வழியோ, துணையோ, இடமோ, இல்லாத தால் தான் தங்களிடம் முறையிட்டுக் கொள்கிறேன்.
சென்ற மாதம் அலுவலகத்தின் செலவினத்தில் சிக்கனம் ஏற்படுத்தவேண்டும் என்ற திட்டத்தின்படி, வெளியூர்க் கடிதங்களையும், கணக்குகளையும் கவனித்து வந்தவரை நிறுத்தி விட்டு, அந்த வேலையையும் நானே பார்த்துக் கொள்ள வேண்டும் எனப் பணித்தீர்கள், அப்போது என் வேலை தங்கள் மனதிற்குத் திருப்தி அளித்திடுமானால் பொங்கல் இனாம் கணிசமான அளவு தருவதாகக் கூறி என்னை மகிழ்வித்தீர்கள்! நான் தங்களுடைய பெருந்தன்மை பற்றியும், கொடுத்த வாக்கை எப்படியும் நிறைவேற்றும் உயர் குணம் படைத்தவர் என்பது பற்றியும் விரிவாகவும், பெருமையுடனும் என் மனைவிக்கு எழுதினேன். அவளுக்குக் கடிதம் எழுதவேண்டிய அவசியம் வந்ததற்குக் காரணம், எனக்கு அவளிடம் இருந்து வந்த கடிதமே ஆகும். அது இது:
அன்புள்ள அப்பாவுக்கு, கமலி வணக்கம் கூறுவதாகத் தெரிவிக்கச் சொன்னாள். சென்ற வருஷம் பொங்கலுக்கு எப்படியும் வருவீர்கள் என்று எதிர்பார்த்திருந்து ஏமாற்றம் அடைந்தது போல இந்த வருஷம் ஏற்படாது அல்லவா அம்மா என்று என்னைக் கேட்டாள். இந்த வருஷம் எப்படியும் அப்பா வருவார் என்று சமாதானம் செய்து வைத்தேன். நாலு வருஷத்துக்கு முன்பு வாங்கிய சந்தனக்கலர் பட்டுப் புடவையை எலி கடித்து நாசம் ஆக்கிவிட்டது. அந்தச் சேலையை நீ கட்டிக் கொண்டால் அழகாக இருக்கிறது என்று அப்பா சொன்னாரே அம்மா கவனம் இருக்கிறதா? என்று கமலி கேட்டாள்! எனக்கு கவனம் இருந்தால் என்ன பிரயோசனம்? அப்பாவுக்கல்லவா கவனம் இருக்க வேண்டும் என்று சொன்னேன். எலி செய்த வேலையை நீ அப்பாவுக்குத் தெரிவித்தால் கட்டாயம் சந்தனக் கலர் பட்டுப்புடவையை வாங்கி வருவார் என்று சொல்லி, அந்த புடவையைப் பற்றி வந்த விளம்பரத்தை இத்துடன் அனுப்பச் சொன்னாள். அந்த விளம்பரம் இதோ !
விலை மலிவு ! கண்கவர் வனப்பு !
பொன்னிற மேனிக்கு ஏற்ற
சந்தன நிற பட்டுச் சேலை.
அழுத்தம்! பளபளப்பு! அற்புத வேலைப்பாடு!
அஜந்தா - எல்லோரா ஸ்டோர், சென்னை.
கமலி எனக்கு எது பிடிக்கும் என்று அப்பாவுக்கே தெரியும். அவர் இஷ்டம் போல் வாங்கிக் கொண்டு வரட்டும். ஆனால் அத்தோடு பள்ளிக்கூடத்தில் நடைபெறும் பொங்கல் விழா நடனத்தின் போது நான் என்ன உடுத்திக்கொள்ள வேண்டுமென்று எட் மாஸ்டர் ஆர்டர் போட்டிருக்கிறார்கள் என்பதை எழுதி, வாங்கி வரச் சொல்ல வேண்டும் என்றாள். பள்ளிகூட எட்- மாஸ்டர் கமலிக்காக,
1. பச்சைப் பட்டுச் சட்டை, சரிகை, புட்டா போட்டது.
2. சிகப்புப் பட்டில் பாவாடை.
3. இடுப்பிலே கட்டுவதற்காக சரிகைப் பட்டைத் துணி.
4. காலில் போட்டுக் கொள்ள வெள்ளை நிறத்தில் 'லேஸ் ஷா' வேண்டும் என்று எழுதி அனுப்பி இருக்கிறார்கள். பெரிய கம்பெனியில் மானேஜர் வேலை பார்க்கிறவர்க்கு இது ஒரு பிரமாதமா என்று பத்துப்பிள்ளைகள் எதிரில் வேறு அந்த அம்மாள் பேசிவிட்டு இருக்கிறார்கள். அவர்கள் அவ்வளவு கண்டிப்பாக இருப்பதற்குக் காரணம் பள்ளிக்கூடத்துக்கு வரும் மேலதிகாரி ஒரு உத்தரவு அனுப்பியிருக்கிறார்.
அந்த உத்தரவில்,
பள்ளிக்கூட ஒழுங்கு : எட்- மாஸ்டர் பொறுப்பு.
கல்விக்கூடம் சரஸ்வதி தேவி கொலு வீற்றிருக்கும் இடம். அங்கு அருவருப்பான காட்சி இருக்கவே கூடாது. அதிலும் பொங்கல் விழாவின் போது தங்க விக்கிரகங்கள் போல் ஜொலிக்க வேண்டும். இதைக் கவனித்தாக வேண்டும். இலவசக் கல்வியும், இலவச மதிய உணவும் தருகிறோம். பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல துணியாவது தர வேண்டாமா? அதிலும் பொங்கல் திருவிழாவின்போது. இந்த வருஷம் பொங்கல் திருவிழாவைப் படம் (சினிமா) பிடிக்க ஏற்பாடாகி இருக்கிறது. ஆகையால் அழகான குழந் தைகளுக்கு நடனம், பாடல் கற்றுக் கொடுத்து அலங்காரமான தோற்றத்துடன் கலந்து கொள்ளச் செய்ய வேண்டும்.
இது முக்கியம், அவசியம், அவசரம்.
- மேலதிகாரி.
மேலதிகாரி இதுபற்றிய பின் குறிப்பும் அனுப்பி இருக்கிறார். அதிலே அவருக்குக் கல்வி அமைச்சர் இலாகா அனுப்பி உள்ள முக்கிய அறிவிப்பைத் தெரிவித்திருக்கிறார். அந்த அறிவிப்பு என்னவென்றால், கல்வி - சட்ட சபையில் கேள்வி?
கல்வி மான்ய விவாதத்தின்போது சட்டமன்ற உறுப்பினர் சவுரியப்பா, 'நமது நாட்டுக் குழந்தைகள் விழாவைப் படமாக்கி (சினிமா) வெளிநாடுகளுக்கு அனுப்ப உத்தேசம் உண்டா' எனக் கேட்டார்.
அமைச்சர் அரிமா நாதர் "ஆம்!" என்று பதிலளித்தார்.
சட்டசபையில் கூறப்பட்டதை மெய்ப்பித்தாக வேண்டிய பொறுப்பில் கல்விக் கூடங்கள் சர்க்காருடன் ஒத்துழைக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இது வேண்டுகோள் வடிவத்தில் வெளியிடப்படும் உத் திரவாகக் கொள்ளலாம்.
சர்க்காரை ஒரு பொறுப்பிலே சிக்க வைக்கும் கேள்வியைச் சவுரியப்பன் கிளப்பியதற்குக் காரணம், அவர் சென்ற வருஷம் தமது அமெரிக்கப் பயணத்தைப்பற்றி 'சினிமாவும், சிறுவர் சிறுமியரும்' என்ற தலைப்பில் வெளியிட்ட கட்டுரையை அமெரிக்க இதழ்கள் வெகுவாகப் பாராட்டியதே யாகும். அமெரிக்க இதழ்கள் பாராட்டியதற்குக் காரணம் சோவியத் அரசாங்கம் அமெரிக்காவுக்கு வெறும் வியாபார நோக்கத்தான் முக்கியம் என்று குற்றம் சாட்டியதாகத் தெரிகிறது. சோவியத் அரசாங்கம், அமெரிக்காவின் வியாபார நோக்கத்தைப் பற்றி எழுதுகையில்:-
ஒவ்வொரு துறையிலும் அமெரிக்கா நுழைந்து இலாப வேட்டை ஆட புதுப்புது (தொழில்) கம்பெனி நடத்துகிறது. அமெரிக்காவுக்கு இந்தியாவின் கலை - கலாச்சாரம் - - கல்வி குழந்தைகள் நிலைமை ஆகியவை பற்றிய அக்கரை துளியும் இல்லை. தங்கள் நாட்டுச் சரக்கை இந்தியாவில் விற்கும் நோக்கம்தான் அதிகமாகி விட்டிருக்கிறது. போன மாதத்திலேகூட, சென்னையில் உள்ள சென்ட்டினரி கம்பெனியாருடன் அமெரிக்காவிலுள்ள ஜான் அண்டு சன் அண்டு ஜான் கம்பெனியார் கூட்டாகச் சேர்ந்து எலக்ட்ரிக் குத்து விளக்குகள் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க ஏழு கோடி ரூபாய் மூலதனப் பங்கு போட முன் வந்திருக்கிறது. இந்த சென்ட்டினரி கம்பெனி அமெரிக்க எண்ணெய்க்கு ஏஜன்சி எடுத்துள்ள எம்பெருமான் அவர்களுடையது என்பது தெரிந்ததே.
இந்தச் 'சேதி' சோவியத்துக்கு எட்டியதற்கும், அதைத் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டதற்கும் காரணம், சென்ட்டினரி எம்பெருமான் கம்பெனியில் ஆள் குறைப்புச் செய்தது பற்றிய கண்டனக் கூட்டத்தில் 'பேத ஒழிப்பு ஆசிரியர் முழுமதி அவர்களின் முழக்கம் என்று கூறப்படுகிறது. முழுமதி தமது பேச்சில், இந்த வருஷம் கூட எம்பெருமான் பொங்கல் போனஸ் கொடுக்காவிட்டால், உள்ளிருப்பு வேலை நடை பெறும் என்று தெரிவித்திருப்பதால், எம்பெருமான் போனஸ் கொடுக்கத் தவறமாட்டார் என்று 'பொறி' என்ற தினசரி தலையங்கம் எழுதியிருக்கிறது. எனவே, கம்பெனியில் போனஸ் கிடைக்கும் என்று தெரிவதால்,
1. அம்மாவுக்கு (எங்க) நார்ப்பட்டு சேலை - மஞ்சள் நிறம்.
2. உங்க மச்சினன் (இங்கேதான் வந்திருக்கிறார்) பிரியமாகப் போட்டுக் கொள்ளும் ஸ்லாக்'
3. குழந்தைக்குக் கக்குவான் மருந்து.
4. எனக்கு டானிக் (முன்பு டாக்டர் முரளி எழுதிக் கொடுத்தது) இவைகளை வாங்கிக் கொண்டு வரச் சொல்லி எழுதம்மா என்று கமலி கிட்டிபோட்டாள். எழுதிவிட்டேன். உங்கள் இஷ்டம். நாங்கள் இங்கே இருக்கிறோம் என்ற நினைப்பாவது இருக்கிறதோ என்று எனக்குச் சந்தேகம். அப்பாவை அப்படி 'அல்ப சொல்பமாக, எண்ணாதே என்று கமலி அடித் துச் சொல்கிறாள். பார்ப்போம். யார் ஜோதிடம் பலிக்கிறது என்பதை.
இப்படிக்குத் தங்கள் பார்யாள்,
இ. சுந்தரி (இன்ட்ட ர்)
இந்தக் கடிதத்தைப் பெற்றுக் கொண்ட முதலாளியின் அந்தரங்கக் காரியதரிசி கீழ்க்கண்ட கடிதத்தை அனுப்பினார். மனு - போனஸ்:
கடிதத்தின் விரிவையும்
1. அதில் உள்ள பல விஷயங்களையும் பார்க்கும்போது மனுதாரர் ஆபீஸ் வேலையை ஒழுங்காகக் கவனிக்காமல், தமது சொந்த வேலைகளையே பெரிதும் கவனிப்பது தெரிகிறது.
2. மனுதாரர் தமது நீண்ட கடிதத்திற்கு ஆபீஸ் காகிதத்தை உபயோகப் படுத்தியிருக்கிறார். இது கம்பெனி சொத்தை துர்விநியோகம் செய்வதாக ஆகிறது. இந்தக் குற்றங்களுக்காக ஏன் அவர் மீது (கம்பெனி ஒழுங்குவிதி 76ன் படி) நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கான பதிலை மூன்று மணி நேரத்திற்குள் தெரிவிக்க உத்திரவிடப் பட்டிருக்கிறது.
முதலாளி எம்பெருமான் அவர்களுக்காக
மோதி (அந்தரங்கக் காரியதரிசி, டெம்பரரி)
இந்தக் கடிதம் கிடைத்த இரண்டு மணி நேரத்திற்கெல்லாம் கீழ்க்கண்ட தந்தி இ. சுந்தரி (இன்ட்டர்)க்கு சென்னை இலவச மருத்துவ மனையிலிருந்து அனுப்பப்பட்டது.
கணவர் பிளட் பிரஷர்! பெரிய டாக்டர் லீவ்! உடனே வேறு இடம் ஏற்பாடு செய்யவும்.
அசிஸ்ட்டெண்டு டாக்டர்.
---------
'காஞ்சி : பொங்கல் மலர் 14-1-1966
---------
5. வழுக்கி விழுந்தவர்கள்
"அடச்சே! நெஜத்தைச் சொன்னா நம்பாம, குத்திக் கிளறிக் கேக்கறியே. வழுக்கி விழுந்துட்டதாலே ஏற்பட்டது தாண்டா இது..."
"யாரடா நம்பச் சொல்றே....டேய்! சும்மா சொல்லுடா தம்பி ...."
"உன்னோடு மாரடிக்க நம்மாலே முடியாது டோய்.... சொன்னா நம்புவயா, பெரிய கிராஸ்' போடுறியே வக்கீல் மாதிரி. இரண்டு நாளா நல்ல சாப்பாடு கிடையாது ..... களைப்பு .... ஒரு இடம் குறிபார்த்து வைத்து இருந்தேன் .... நாலடிதான் உயரம். சுவரு... சும்மா ஒரு எட்டு எட்டி மேலே தாவிட்டேன் .... குத்துக்கால் போட்டு உட்கார்ந்து ஒரு நோட்டம் பார்த்தேன்.... சாப்பாடு இல்லாத களைப்பு. ஒரு மாதிரியா இருந்துது மயக்கம் போல! கால் தன்னாலே வழுக்கி விட்டது. கீழே பாரேன் கருங்கல்லு, சனியனாட் டம்... முட்டி முகம் எல்லாம் இரத்த காயம்..."
"அடப் புல் தடுக்கி! நாலடிக்கேவா இந்தக் கதி ! காது வரைக்கும் வாய் இருக்குது..."
"உன்னோட சொல்றதுக்கு என்னடா .... இப்ப பழைய மாதிரி வலிவு, தெம்பு, தைரியம் இருக்கறதில்லே ..."
"கிழமாயிட்டயா ! வயது என்னடா உனக்கு? ஒரு நாப்பது இருக்குமா?"
"அவ்வளவுதான் இருக்கும். வயது ஆயிடலேன்னா கூட இப்ப எனக்கு பழைய தெம்பு இல்லை. அவளுக்குப்போன மாசம் தான் மூணாவது பொறந்துது ராஜாக்குட்டி மாதிரி ... ஆம்பளைப் பையன் .... இவன் பொறக்கற வேளையாவது உனக்கு நல்ல புத்தி பொறக்கணும்னு வேறே சொன்னா என்னோட வூட்டுக்காரி... மனசு குழம்பிப் போச்சு. முன்னே ஒண்டிக் கட்டை ... என்ன ஆனாலும் பரவாயில்லேன்னு ஒரு தைரியம்... இப்ப நமக்கு ஏதாச்சும் ஆயிட்டா அவ கண் கலங்குவா - குடும்பம் அவதிப்படும், நாலுபேர் முகத்திலே எப்படி அவ முழிப்பா.. அதை எல்லாம் எண்ணிக் கொண்டா மனசு 'பகீல்'னு ஆயிடுது. அதனாலே இந்தத் தொழிலுக்கே முழுக்குப் போட்டுடவேணும்னு ஒரு முடிவுக்கே வந்துவிட்டேன்."
"அடச்சீ! பயந்தாங் கொள்ளி. போ , போ! எதாச்சும் குழைச்சிப்போடு காயம்பட்ட இடத்துக்கு. இந்தா எட்டணா இருக்கு, ஏதாச்சும் வாங்கித் தின்னு..... ஏய்! என்னடா மடியிலே பணத்தை முடிச்சுப் போட்டுக் கொள்றே..."
"கொழுந்தைகளுக்கு எதாச்சும் வாங்கிக் கிட்டுப் போய்க் கொடுக்கணும்பா.... அப்பா வரட்டும், அது வாங்கிகிட்டு வருவாரு, இது வாங்கிகிட்டு வருவாருன்னு அவ சொல்லி அதுகளைச் சமாதானப் படுத்திக்கிட்டு இருப்பா ..... 'நான் வரட்டுமா..."
"போ! போ! பார்த்து நடந்து போ! வழியிலே வேறெ வழுக்கி விழுந்துவிடப் போறே..."
# #
"போறாத வேளைங்க, போறாத வேளை ... இத்தனை காலமா ஏறலியா இறங்கலையா .... ஒரு நாளும் நேரிட்ட தில்லையே, இதுபோல ...."
கல்லு சேறு தூக்கிக்கிட்டு மேலே கொண்டு போற . சித்தாளுங்க சரியா வேலை செய்யணுமேன்னு, இப்படியா அன்னநடை ஆமை நடை போடறதுன்னு சொல்லிக் கிட்டே ஏணியிலே ஏறினேன். பாதி தூரம் போயிருப்பேன். காலு வழுக்கிட்டுது; கட்டை மாதிரி விழுந்துட்டேன்...... பதறிப் போச்சுங்க , வேலை செய்துகிட்டு இருந்ததுகளெல்லாம்..."
"என்ன பதறிவிட்டாங்களோ மத்தவங்க? இந்த மாதிரி எதுவும் ஆகக் கூடாதுன்னுதான் காலையிலே பொறப்படற போது சகுனம் பார்க்கச் சொல்றது... அந்தப் பேச்சை காதிலே வாங்கிக் கொள்ள மாட்டேங்கறிங்க.... இந்தக் கண்றாவியை எப்படி சகிச்சிக்கச் சொல்றிங்க .... கீழே விழுந்ததும் மொதலாளி வந்து பார்த்தாரா? என்ன சொன்னாரு?"
"நல்ல கேள்வி கேட்டயே... நல்ல வேளையா அவர் கண்ணிலே படலே ... பட்டிருந்தா... 'டேய் சின்னான், உனக்கு வயசாயிடுச்சுன்னு தலைப்பாடா சொன்னா கேட் டாத்தானே..... இனி நீ மேஸ்திரி வேலைக்கு இலாயக்கில்லை; வேறே மேஸ்திரியைப் பார்த்துக் கொள்கிறேன். நீ கீழே விழுந்து உயிரு போயிட்டா, என் தலைக்குத் தீம்பு வரும். இந்தா உன்னோட பணம் இருவது. போ! போ! நாளையிலே இருந்து, உன் வேலையை பொன்னன் பார்த்துக் கொள்ளட்டம்னு சொல்லி, நம்ம வயத்திலே மண்ணைப் போடுவானே மனுஷன்..."
"மாடா உழைக்கறிங்க .... வஞ்சகம் துளிக்கூட இல் லாம ....."
"ஆமா ... மாடு எலும்புந் தோலுமாயிட்டா அடிமாட்டு குத்தானே துரத்தறாங்க... அந்தக் கதிதான் நமக்கும்..."
"எதை எதையோ நினைச்சி மனதைக் கொழப்பிக் கொள்ளாதிங்க .... ஏங்க! கேட்கறனேன்னு கோபம் செய்து கொள்ளாதீங்க! நெஜத்தைச் சொல்லுங்க, கண்பார்வை கொஞ்சம் மட்டுதானே உங்களுக்கு..."
"பழைய ராமாயணத்தை எடுத்துக்கிட்டயா... உன்னை எனக்கு முடிக்கக் கூடாது என்கிற கெட்ட எண்ணத்தாலே அந்தப் பட்டாபி கட்டிவிட்டான் கதை, எனக்கு மாலைக் கண்ணுன்னு..... உங்க அப்பன்கூட முதலிலே நம்பிட்டாரு..... பிறகு நான், சிரிசிரின்னு சிரிச்சி விஷயத்தை விளக்கின பிறகுதான் உங்க அப்பாருக்குப் பயம் போச்சி .... கண்ணுக்கு ஒரு குறையும் கிடையாது எனக்கு..."
"என் வயத்திலே பால் வார்த்தீங்க.... காலையிலே நல்ல டாக்டரிடம் காட்டி கட்டுப் போடுங்க... நாலு நாளிலே குணமாயிடும்..."
"தலைக்குத் தீம்புதேட அதைவிட வேறே வேண்டாம் ..... பைத்தியக்காரப் பொம்பளே... எதையாவது ராத்திரிக்குத் தடவி, கட்டுப்போட்டு, காலையிலே பல்லைக் கடிச்சிகிட்டு வேலைக்குப் போயாகணும்... எழுந்திருக்க முடியல்லேன்னா தீர்ந்தது, மனுஷன் நம்ம சீட்டைக் கிழிச்சிடுவான்."
"இந்த வலியைப் பொறுத்துக்கிட்டு வேலைக்குப் போக ணும்னா மனசு பகீல்னு இருக்குதுங்க..."
"உன் மனசு இருக்குது அதுபோல ..... முதலாளி மனசு எதுக்காகப் பகீல்னு ஆகப்போகுது..."
"நம்ம எழுத்து அப்படி. வேலைக்குப் போனாக்கூட உடம்பை அலட்டிக் கொள்ளாம இருங்க..."
"ஆகட்டும் ! நீ எதுக்கும் போயி , நம்ம கோடி வீட்டிலே புதுசா ஒரு வைத்தியர் வந்து இருக்கிறாராமே , அவரை கூட்டிகிட்டு வாயேன், காட்டுவம்......"
"இதோ கூட்டிகிட்டு ஓடியாந்துடறேன், ஒரு விநாடியிலே ..."
# # #
"போடா, மடயா! இப்படியா ஓட்டை டின்களிலே எண்ணெயை ஊற்றி வைக்கறது.... எவ்வளவு எண்ணெ பாழாகிப் போச்சி! இருக்குமேடா, பத்து இருவது ரூபா நஷ்ட ம்..."
"டின்னு ஓட்டை இல்லிங்க... எண்ணெயும் தன்னாலே ஒழுகிப் போகலே. நீங்க அவசரமா வந்ததாலே எனக்கு விஷயத்தைச் சொல்ல முடியல்லை. அதுக்குள்ளே நீங்க வழுக்கி விழுந்து விட்டீங்க ஏனுங்க! ரொம்ப வலிக்குதுங்களா... இந்தக் கோடியிலே இருந்து அந்தக் கோடிக்குப் போயிட்டிங்களே, கண் மூடிக் கண் திறக்கறதுக்குள்ளே..."
"ஏண்டா, காலை வைச்சதும் வழுக்கிட்டுதே! இங்கே தான் எல்லா இடமும் எண்ணெயாக் கிடக்குதே, எப்படிச் சமாளிக்கறது ..... நல்ல வேளையா பீப்பாய்களை அந்தப் பக்கம் வைத்திருந்ததாலே அத்தோடு போச்சி. நீ ஒழுங்கா வேலை பார்க்கற இலட்சணமா இது? வலிக்குதான்னு கேட்டு விட்டா என் உச்சி குளிர்ந்து போய்விடுமா! கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லு. உன்னோட உருக்கம் உபசாரம் கிடக்கட்டும்; எதுக்காக இப்படி எண்ணெ இந்த அளவுக்குக் கீழே வழிந்து ஓடணும்."
"ஓட்டையாலே கசியலிங்க .... நானேதான் ஒரு அஞ்சாறு டின்களிலே ஓட்டை போட்டு எண்ணெயை வழிய விட் டேன்..."
'அடப்பாவி! என் சொத்தை நாசமாக்கறதுன்னு தீர்மானித்துவிட்டயா... டின்களிலே நீயே பொத்தல் போட்டயா ...."
"போட்டதாலே தாங்க, நம்ம சரக்கு பீப்பாய்களுக்குக் கீழே இருக்கற சரக்கு... இன்ஸ்பெக்டர் கண்களுக்கு படாது போச்சு. வர இருந்த ஆபத்திலே இருந்து தப்பிக்க
முடிந்தது."
"என்னடா, என்னென்னமோ உளறிக் கொட்றே"
"உரக்கக் கூவாதிங்க. சிலோன் சரக்கு கீழே இருக்குதுங்களே, பீப்பாய் இருக்கிற இடத்துக்குக் கீழே ...."
"ஆமா, இருக்குது. அது எனக்குத் தெரியாதா! அதனாலே .....?"
"எவனோ திருட்டுப்பய, இன்ஸ்பெக்டருக்கு 'வத்தி வைத்துவிட்டு இருக்கிறான். நாலைந்து போலீசோடு வந்து விட்டாரு... கிடங்கைச் சோதனை போடணும்னு ..... பார்த்தேன்..... உட்காருங்க .... எதுக்கும் முதலாளிக்குப் போன் செய்துட்டு வந்துவிடறேன்னு சொல்லிவிட்டு வந்தேன். திடீல்னு ஒரு யோசனை தோணிச்சி ... போலீசை இந்தப் பக்கம் வரவிடாமல் தடுத்தாகணும். மளமளன்னு குத்துக்கோலை எடுத்து அஞ்சாறு டின்களை ஓட்டை செய்து விட்டேன். எண்ணெ குபுகுபுன்னு வழிய ஆரம்பிச்சுது. வாய்க்கால் போல வந்துது... இடம் பூரா ஒரே எண்ணெய் ..... வெளிப்பக்கம் சோதனையை முடிச்சிகிட்டு இந்தப் பக்கம் வந்தாரு ... தரை முழுவதும் ஒரே எண்ணெய் மயம்... சேச்சேச் சேன்னு சொல்லிக் கொண்டே, இங்கே என்னய்யா இருக்குதுன்னு கேட்டாரு. இது அவ்வளவும் அனுமார் கோயில் அபிஷேகத்திற்காக எண்ணெய்னு சொன்னேன். ஒரே ஆத்திரம் அவருக்கு ... ஏன்யா! இப்படித்தான் கோயில் கைங்கரியத்துக்கான எண்ணெயைப் பாழாக்கறதான்னு கேட்டாரு, கோபமா . கேட்டுவிட்டு, இப்படியும் அப்படியுமா பார்த்து விட்டு, வெளியே போயிட்டாருங்க. இந்த எண்ணெதான் நம்மைக் காப்பாத்தி விட்டுதுன்னு சொல்லணும்..."
"அட அப்படியா! ஆபத்தான வேளையிலே உனக்கு . இந்த யோசனை உதிச்சுதே. அதைச் சொல்லு... எண்ணெயிலே நடந்தா வழுக்கி விழுந்துவிடப் போகிறோம் என்கிற பயம் இன்ஸ்பெக்டருக்கு ... அதனாலேதான் பிப்பாய்கள் இருக்கற பக்கம் சோதனை போடல்லே..."
"கோயில் அபிஷேகத்துக்கான எண்ணெய்ன்னு சொன்னதும் அவர் பயந்து விட்டாருங்க... ஏன்னா! கோயில் அபிஷேகத்துக்கான எண்ணெயைக் காலாலே மிதிக்கக் கூடாது பாருங்க .... பாவமில்லையா!"
"ஆமாமாம்! நம்ம இன்ஸ்பெக்டருக்கு பக்தி அதிகம்; தெரியும். உன் யுக்தி பரவாயில்லைய்யா... சரி, சரி; டின்களிலே உள்ள ஓட்டைகளை அடைத்துவிடு ... ஆகட்டும். கீழே கிடக்கற எண்ணெயை ஒரு சொட்டு விடாம வழிச்சி எடுத்து தனியா ஒரு டின்னிலே போட்டுவை. சனீஸ்வரன் கோயிலிலே இலட்ச தீபமாமே, அதுக்கு நம்ம விலாசத்தின் பேர்லே அனுப்பிவை..."
"ஆகட்டும்ங்க .... வீட்டிலே இருந்து வேறே துணி சட்டை வரவழைக்கட்டுங்களா..."
"ஏன்! இதுக்கு என்னவாம். பரவாயில்லே ...... ."
"வலி எப்படி இருக்குதுங்க? அடி பலமானதா இல்லிங் களே ....."
"காலிலே இரத்தம் கசியுது; நெற்றியிலே வீக்கம்..."
"உள் காயம் இருந்துவிடப் போகுதுங்க ...... உடனே கவனிக்க வேணும்..."
"டாக்டருக்கு ஒரு போன் போடு... பயந்துவிடப் போறாரு... சும்மா இலேசான காயம் தான்னு சொல்லு.... எதுக்கும் உடனே வரச் சொல்லு....... ஏன்யா! சிலோன் சரக்கு இராத்திரி போயிடுமேல்லோ ...."
"ஆமாங்க .... அந்த ஏற்பாட்டை நான் கவனித்துக் கொள்றேன்... நீங்க உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்க..... காலுக்கு ஒண்ணுமில்லீங்களே..."
"பரவாயில்லைய்யா!... எதுக்கும் ஒரு வாரம் நர்சிங் ஹோமிலே இருக்கலாம்ன்னு பார்க்கறேன் "
"தங்கமான யோசனைங்க. நானே சொல்லலாம்னு ; வாலிப வயதல்ல பாருங்க. ஒரு வாரம் என்னங்க, உடம்பு சரியாகற வரைக்கும் இருக்கறது. நம்ம உடம்புக்கு. மிஞ்சியா, மத்தது ...."
"ஒரு வாரம் போதும்யா.... இந்த வாரத்திலேதான் காலேஜ் நிதிக் கமிட்டிக்காரனுங்க, பணம் தண்டக் கிளம்ப றானுக... உசிரை வாங்கிடுவானுங்க, நம்மைக் கூடச் சுத்தச் சொல்லி ! இப்ப அந்தத் தொல்லை இருக்காது. நிம்மதி யாச்சி...."
"டாக்டருங்க! மோட்டார் சத்தம் கேட்குது..."
# # #
மூன்று பேர் வழுக்கி விழுந்துவிட்ட சம்பவங்களைத் தொடர்ந்து மூன்று நிகழ்ச்சிகள்.
முதலாவது நிகழ்ச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன் னுத்துரை, மூன்று போலீஸ்காரர்களைக் கூப்பிட்டு உத்திரவு பிறப்பித்தது.
கேடி கண்ணன் கொடுத்த உளவினாலே கன்னக்கோல் குப்பன் நேற்று இரவு கலியப் பெருமாள் வீட்டுச் சுவற்றின் மீது ஏறி கீழே வழுக்கி விழுந்துவிட்டிருக்கிறான் என்று தெரியகிறது. உடலிலே காயம் ஏற்பட்டிருக்கிறது. உடனே போய் அவனைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து கொட்டடியில் போட வேண்டும்.
கலியப் பெருமாள் வீட்டு தோட்டச் சுவற்றிலே குப்பனுடைய கை அடையாளம் விழுந்து இருக்கும். அதைப் போட்டோ படம் எடுத்துக் கொண்டு வரவேண்டியது. இரண்டாவது நிகழ்ச்சி கட்டடக் காண்ட்ராக்டர் திண்ணாயிரம், தம்முடைய காரியக்காரன் கொண்டய்யாவுக்கு எழுதி அனுப்பிய அவசரக் கடிதம்.
நாளையிலே இருந்து மேஸ்திரி சின்னான் வேலைக்கு வரவேண்டியது இல்லை. வேலையும் சுத்தமில்லை. ஆளுக்கு வலிவும் இல்லை; புத்தியும் இல்லை. நேற்று ஏணியில் ஏறும் போதே கால் நடுக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துவிட்டான் என்று தெரிகிறது. இப்படிப்பட்டதுகளை வேலைக்கு வைத் துக் கொண்டால் நம்முடைய திட்டப்படி கட்டடம் பூர்த்தி யாகாது. அவனுக்குத் தரவேண்டியதைக் கொடுத்துவிட்டு, பொன்னனை மேஸ்திரியாகப் போட்டுக் கொள்ளவும். உடனே அவசரம்.
திண்ணாயிரம்.
மூன்றாவது நிகழ்ச்சி, 'திருக்கோயில்' என்ற பத்திரிகையின் நிருபர், தமது பத்திரிகைக்குச் செய்தி அனுப்பியதுடன், 'தர்மதாதா' என்ற பத்திரிகைக்குத் தந்த (தனிக் கட்டணம் பெற்றுக் கொண்டு) விசேஷச் செய்தி .
சிறந்த பக்திமானும் தர்ம சிரேஷ்டரும், பிரபல குடும்பத்தைச் சேர்ந்தவருமான எண்ணெய் வியாபாரம் ஏகாம்பர பாரதியார். (ஜாதிப் பெயரை விட்டு விட்டு அனைவரும் இந்தியர் என்ற தேசபக்திக்காகத் தம்முடைய ஜாதி, பாரதியார் ஜாதி என்று கூறிக்கொண்டவர்) அனுமார் கோயில் அபிஷேக் சம்பந்தமான ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தபோது கால் வழுக்கிக் கீழே விழுந்துவிட் டார். ஆபத்து இல்லை என்றாலும் பாரதியார் ( செட்டியார்) ஒருவார காலமாகியும் படுக்கையில் இருந்தாக வேண்டும் என்று டாக்டர் சுந்தரம் கண்டிப்பாகக் கூறிவிடவே, சுந்தரா நர்சிங் ஹோமில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
எனக்குள்ள ஒரே கவலை காலேஜ் நிதி சேர்க்கும் சிலாக்கியமான காரியத்திலே பங்கு எடுக்க முடியாமல் போய் விட்டதே என்று செட்டியார் (பாரதியார்) அவர்கள் நம் நிருபரிடம் சொன்னது மனதை உருக்குவதாக இருந்தது.
எக்ஸ்ரே எடுக்கப்பட்டு இருக்கிறது. அது பற்றிய விவரம் நாளை இதழில் வெளிவரும்.
------
'காஞ்சி' பொங்கல் மலர் 1965
-------------
6. விழுப்புரம் சந்திப்பு
"அரை மணி நேரத்திலா... இல்லையே.... ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகுமே... வண்டி லேட்டாக அல்லவா போகிறது..."
"லேட்டோ , சுலோவோ, வண்டி ஓடுகிறதே, அதைச் சொல்லும்"
"எல்லா இடத்துக்கும் மின்சார வண்டி போடப் போகிறார்களாமே... அந்த வண்டி வேகமாகப் போகும்"
"ஆமா... இந்த இருமல் இவருக்கு எத்தனை நாட்களாக....."
" நாட்களா? ராமா! ராமா! மூணு வருஷமா உயிரை வாட்டுது இந்த இருமல் ..."
"கோழை நிறைய வர்ரதோ ...."
" ஒரு பொட்டுகூடக் கிடையாது ...."
"புகைஞ்சி புகைஞ்சி இருமறது..."
"என்ன வைத்தியம் செய்தும் ....."
"கொஞ்சம் சுமார்னு, சொல்லுவா ....... அவ கல்நெஞ்சக்காரி ..... கற்பகம் - எனக்கென்று வந்து வாய்த்த சனி..."
"நோய் உம்மை வாட்டினா, உம்மோட பார்யா' என்ன செய்ய முடியும். மனம் நொந்து பேசலாமோ... நீர் படுகிற கஷ்டத்தைப் பார்த்து, அந்த அம்மாவோட கண்களிலே நீர் தளும்பறது..."
"தலைப்பாடா அடிச்சிண்டேன்; வேண்டாம் பட்டணத்து வாசம். என் உடம்புக்கு ஒத்துக்கொள்ளாதுன்னு..... கேட்டாளோ... மகன் படிக்கக் கிளம்பினான் , இவ கிளம் பிட்டா , என்னையும் இழுத்துண்டு ...."
"சில பேருக்கு, பட்டணத்து வாசம் பிடிக்கறதில்லை. எனக்கேகூட, நாலு வருஷம், விட்டு விட்டு காய்ச்சல் ..... நானும், என் மகனோட படிப்புக்காகத்தான் பட்டணம் போனவன்..."
"ஏதோ கடவுளோட கடாட்சம், உமக்கு ஒண்ணும் இல்லை "
"எனக்கு எதாவது நோய் ஏற்பட்டா தேவலியே .... என் மகளுக்கு உடம்பு சரியில்லே ..."
"இதேபோல் இருமலா!"
"இருமலா இருந்தா பரவாயில்லையே.... நல்ல மருந்தெல்லாம் இருக்கே..... இன்ன வியாதின்னு கண்டு பிடிக்கவே, டாக்டர்கள் பாடு கஷ்டமாக இருக்கு. இந்த லட்சணத்திலே மகனே ஒரு டாக்டர்... கெட்டிக்காரன் என்றும் பேர். வரும் மானமும் நிறைய..."
"அவராலேயே சொல்ல முடியலியா, என்ன வியாதி இது என்ற விவரம்?"
"விவரம் சொல்றான், விளக்கம் சொல்றான்.... அதிலே ஒரு குறைச்சலும் இல்லே; வியாதி போகலியே."
"வயிற்று வலியோ."
"உடல் பூரா ... தேள் கொட்டின மாதிரி... துடியாய்த் துடிக்குது... ஒரு பத்து நிமிஷம்..... பிறகு ஒரு மணி நேரம் மயக்கம்."
"இப்படி எத்தனை நாளா?"
"வருஷம் நாலு ஆகுது."
"நாலு வருஷமாகவா, அவ்வளவு பெரிய பட்டணத்திலே ஒரு நல்ல டாக்டர் கிடைக்கல்லே, இந்த வியாதியைப் போக்க."
"இது வியாதியே அல்ல என்கிறாளே, அத்தனை டாக்டர்களும்..... என் மகனும், டாக்டர் பாஷை பேசறான் ..... எல்லாம் மனம்தான் காரணமாம்... மனதிலே வியாதியிருக்கே தவிர, உடலிலே இல்லை என்கிறான்."
"அதிசயமா இருக்கே."
"அநியாயமா இருக்கேன்னு சொல்லுங்கோ... நரம்புகளுக்கு வலிவு ஏற ஏற, மனதுக்குத்
தெம்பு வருமாம்; மனதுக்குத் தெம்பு வந்தால் மயக்கம் தன்னாலே போயிடுமாம் ..... இதைத்தான் சொல்றா."
"அதாவது, இது ஒருவகையான இஸ்ட்டீரியா .. ஒருவித வலிப்பு வியாதி."
"என் மகன் இதைத்தான் சொல்லிக்கொண்டு இருக்கான். எத்தனை நாளைக்கு இதைக் கேட்டுக்கொண்டு இருக்கமுடியும். அதனாலே தான் அவனோட விஷயத்தைச் சொல்லாமல் நான் கிளம்பினேன்..... என் சொந்தக் கிராமம். திருச்சி பக்கம். துறையூர் பாதையிலே ... அங்கே இரண்டு மூன்று தலைமுறையா மாந்திரீகத்திலே கியாதி பெற்ற குடும்பம் ஒன்று இருக்குது. கேள்விப்பட்டிருக்கலாம் - சில பேராவது, திரிசூலம் பிள்ளை என்பவரைப்பற்றி. அவர் நாற்பது நாள் விபூதி அடித்து மந்திரம் போட்டா, இந்த வலி, மயக்கம் எல்லாம் மாயமாய் போய்விடும். பலருக்கு குணம் ஆனது எனக்கே தெரியும். இப்ப நான் அவரைப் பார்த்துப் பேசி, கையோடு பட்டணத்துக்கு அழைத்துக் கொண்டு போகத்தான் வந்திண்டிருக்கேன்."
"மாயம், மந்திரம், முடிக்கயறு இதிலே எல்லாம் நம்பிக்கை யாருக்கு இருக்குது, இந்தக் காலத்திலே"
"இப்படிச் சொல்லுவான் என்றுதான் என் மகனிடம் விவரம் சொல்லாமல் புறப்பட்டேன். அவனோ டாக்டர்! அவன் ஒத்துக் கொள்வானா மாந்திரீகத்தை?"
"எப்படியோ ஒண்ணு; கொழந்தைக்குக் குணமானா போதும்."
"பெரியவாளோட ஆசீர்வாதமும் கிடைக்கறது. எனக்கென்னமோ திரிசூலம் பிள்ளையோட மாந்திரீக பலத்திலே, நிறைய நம்பிக்கை. என்னதான் காலம் மாறிவிட்டது என்று சொன்னாலும், ஒரே அடியா, எல்லாவற்றையும் மறந்துவிட முடியுமா."
"நான்கூடக் கேள்விப்பட்டிருக்கிறேன், அந்த மந்திரக்காரர் விஷயமா .... மூணு மாடி வீடு இருக்காமே அவருக்கு.'
"முப்பது நாற்பது ஏக்கர் அயன் நஞ்சை போன வருஷம் தான் வாங்கினார். பலருக்குக் குணம் ஆகி இருக்கு. டாக்டர் படிச்ச பையனோட இதைச் சொல்லலாமோ! சொல்லல்லே ! குணமான பிறகு அவனே தெரிந்துகொள்றான்."
"இந்தக் காலத்து வைத்தியப் படிப்பு என்னதான் அதிசயமானதாக இருந்தாலும், மூலிகை, மாந்திரீகம், இதிலே இன்னமும் பலன் இருக்கத்தான் செய்யுது."
"இல்லாமலா, திரிசூலம் பிள்ளையோட தேவதா விலா சத்தைத் தேடி , மாதம் முன்னுறு பேருக்குக் குறையாம வருகிறாங்க? நல்ல கைராசிக்காரர். வெள்ளிக்கிழமை மெளன விரதம். மகமாயி ஒவ்வொரு ராத்திரியும் பிரசன்னம் அவருக்கு. இந்தக் காலத்திலே நம்பமாட்டா. ஆனா அவரை நேரிலே பார்த்தா தெரியும். வயது கிட்டத்தட்ட அறுபது இருக்கும். ஒரு நோய்நொடி வரணுமே! கிட்டே வருமா! காலையிலே ஆற்றுத் தண்ணீர்லே குளிக்கிறார், ஆறுமணிக்கு முன்னே. ஒருநாள் காய்ச்சல்னு படுத்தாரா!"
"ஆமாம். குழந்தையை அழைத்துக் கொண்டு போய் காட்டாம , நீங்க மட்டும் போறிங்களே."
"கொழந்தையை அழைத்துக்கொண்டு கிளம்பினா, என் மகன் கேட்க மாட்டானோ, எங்கே? எதுக்கு? என்றெல்லாம். அதனாலே ஒரு நிலத்து விஷயமா, கிராமம் போயிட்டு வர்றேன்னு சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன். திரிசூலம் பிள்ளை எனக்கு ரொம்ப வேண்டியவர். நிலைமையைச் சொல்லி, அவரையே பட்டணத்துக்கு அழைத்துக் கொண்டு போகப் போகிறேன்..."
"அவர் கிராமத்திலே இல்லாது போனா, மத்த வங்க ..."
"அவருடைய மகனுக்கும் மாந்திரீகத்திலே பயிற்சி. அவன் பார்த்துக் கொள்வான் ......"
வண்டி, விழுப்புரம் சந்திப்பிற்கு வந்து சேர்ந்தது. பேச்சும் நின்றது.
இருமலால் அவதிப்படும் கணவனுக்குக் காப்பி கொண்டு வர மனைவி ஏற்பாடு செய்து கொண்டிருந்தாள்.
மகளுடைய 'மயக்கம் போக்க மாந்திரீகரைத் தேடிச் செல்பவர், வண்டியிலிருந்து கீழே இறங்கி நின்றார்.
திருச்சியிலிருந்து கிளம்பிய ரயில், எதிர் வரிசையில் வந்து நின்றது.
இரு இரயில்களிலுமிருந்து பலர், வேகமாக , காப்பி விடுதிக்கு விரைந்தனர். பலர் போவதைக் கண்டதும், இவருக்கும் காப்பி சாப்பிடலாம் போல தோன்றிற்று; சென்றார். காப்பி வாங்கி ஆற்றிக் கொண்டிருக்கும்போது, அங்கு ஓர் புறத்தில், இவர் போலவே காப்பி ஆற்றிக் குடித்துக் கொண்டிருந்த ஒரு இளைஞனைப் பார்த்தார். அடையாளம் கண்டு கொண்டு மெத்த ஆவலுடன் அவனை நோக்கிச் சென்றார். அவனும் இவரைக் கண்டு ஆச்சரியமும், மகிழ்ச்சியும் கொண்டான்.
"கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல நீங்க வந்தீங்களே... அடா! அடா! இதல்லவா தெய்வ சங்கல்பம்..."
"பத்து நிமிஷம் கூட ஆகல்லே, உன்னைப் பத்திப் பேசி ; நீயே வந்துவிட்டாயே . பலே! பலே! எங்கே இப்படி?"
"பட்டணத்துக்குத்தான்; உங்களைப் பார்க்கத்தான் ; உங்களுடைய உதவியைத் தேடித்தான்."
"உங்க குடும்பத்துக்கு உதவி செய்ய நான் எப்பவும் கடமைப்பட்டவன். என்ன அவ்வளவு அவசரமான காரியம்"
"அவசரம் மட்டுமில்லீங்க, ஆபத்துன்னு சொல்லணும். காலையிலே சென்னை போனதும், உடனே, பெரிய ஆஸ்பத் திரியிலே சேர்த்தாகணும். உங்க மகன் இருக்காரே டாக்டரு, அவரோட தயவாலேதான் இந்தக் காரியம் ஆகணும். இருதய வியாதிங்க அப்பாவுக்கு..."
"யாருக்கு? திரிசூலம் பிள்ளைக்கா! இருதய வியாதியா ?"
"ஆமாங்க, ஒரே மயக்கம்."
"மயக்கம் மந்திரிச்சா போயிடும்னு."
"மாந்திரீகம், பேய் பிசாசு விஷயத்துக்குப் பலன் கொடுக்கும்ங்க. அப்பாவுக்கு வந்திருப்பது இருதய வியாதிங்க ..."
'ஆயிரத்தெட்டு பேருக்கு, அவர் மயக்கம் போக்கி இருக்கறாரு..."
"உங்களிடம் சொல்றதிலே தவறு கிடையாதுங்க. அதெல்லாம், இந்தக் காலத்துக்கு ஒத்து வராதுங்க. மாந்திரீகத்திலே நம்பிக்கை இருந்தாதானுங்க பயன்..."
"நம்பிக்கை உங்களுக்குக் கிடையாதோ ...?"
"இருந்ததுங்க .... முன்னே ... போன வருஷம் சின்னவரு, உங்க மகன், டாக்டரு வந்திருந்தாரு பாருங்க, அப்ப , விவரமா இதுபற்றி பேசினாருங்க. மயக்கம் என்றா ஏதோ ஒரு கெட்ட தெய்வத்தோட வேலை என்று நாங்க சொல்றது. அவரு அது ஒரு விதமான வியாதின்னு சொன்னாரு. அப்பாவுக்கு, அப்ப, இலேசா மயக்கம். பரிசோதனை செய்து பார்த்து, இது இருதய சம்பந்தமானதுன்னு சொன்னாரு."
"என் மகன் சொன்னதாலே..."
"மாயம், மாந்திரீகம் இதெல்லாம் விவரம் தெரியாதிருக்கிற வரையிலே தான் பலிக்கும் என்ற முடிவுக்கு வந் தோம். அதுமட்டுமில்லீங்க. மற்றவங்களுக்கு மயக்கம் போக, அப்பா சொல்கிற அவ்வளவும் - பூஜை முடிக்கயிறு - விபூதி அடிக்கறது எல்லாம் செய்து பார்த்தாச்சி. ஒரு பலனும் இல்லே. கடைசியிலே, சின்னவரைப் பிடிச்சி பெரிய ஆஸ்பத்திரியிலே சேர்த்தாகணும். கிளம்பிவிட்டோம். அப்பா முதல் வகுப்பிலே இருக்கிறாரு. வாங்க! உங்களைப் பார்த்தா, அவ ருக்கு ஒரு தெம்பு பிறக்கும்."
முதல் வகுப்பில், முகத்தில் பயம் கப்பிக் கொண்ட நிலையில், திரிசூலம் பிள்ளை படுத்துக் கொண்டிருந்தார். அவருக்குத் தைரியம் கூறிவிட்டு, அவருக்குத் துணையாக இருந்து பெரிய மருத்துவ மனையில் சேர்த்து விடும்படி, மகனுக்கு, அவசர அவசரமாக ஒரு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு, திருச்சி செல்லும் இரயிலில் ஏறிக் கொண்டார், சோமசுந் தரம்.
--------------
7. கல்லும் கண்ணாடித் துண்டும்
நூற்றுக்கால் மண்டபம் கட்ட இந்த ஊரில் ஒரு முயற்சி நடந்தது. உளி கொண்டு சிற்பி தூண்களைச் செதுக்கும் போது எனக்கு கொள்ளை ஆனந்தம். நாம் கோவிலிலே கொலுவிருக்கப் போகிறோம்; ஆயிரக்கணக்கான மக்கள் நமது அழகைக் கண்டு மகிழப் போகிறார்கள், பத்திரிகைகளிலே படம் கூடப் போடுவார்கள்; வெளிநாட்டுக்காரர்கள் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். படங்களை எடுத்துக்கொண்டு போய் தங்கள் நண்பர்களுக்கெல்லாம் காட்டுவார்கள். நமது புகழ் பல நாடுகளிலே பேசப்படும் என்றெல்லாம் எண்ணி எண்ணிகளிப்பு அடைந்தேன். அந்தக் களிப்பின் காரணமாகத் தான், உளியால் ஏற்படுத்தப்பட்ட வேதனையைக்கூட பொறுத்துக் கொண்டேன். ஆனால் எனக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் நான் ஒரு தவறும் செய்யவில்லை. சிற்பியின் உளியின் கூர்மையைத் தாங்கிக் கொண்டேன். அவனுக்கு என்ன மனச்சங்கடமோ தெரிய வில்லை. வேலையில் பழுது ஏற்பட்டுவிட்டது. என்னைத் தூக்கிக் கீழே எறிந்துவிட்டு, தூண் அலங்காரத்துக்கு வேறு கல்லைத் தேடிக் கொண்டான். தேவாலயத்துக்குச் செல்ல வேண்டிய நான், தெருச் சுற்றி ஆக்கப்பட்டேன். பல காலம் கஷ்டப்பட்டேன்; இளைத்து, களைத்து, உருமாறிப் போய் விட்டேன்.
எண்ணிய எண்ணம் ஈடேறவில்லையே என்ற ஏக்கம். எதற்கும் பயனற்றுப் போனோமே என்ற வருத்தம். என்னோடு இருந்த மற்ற கற்கள் எத்தனையோ மேலான நிலையில் இருக்க, நான் இந்த நிலையை அடைந்து விட்டேன். நாம் என்ன தவறு செய்தோம். நமக்கு இந்தக் கதி ஏற்பட என்று எண்ணிக் கொள்வேன். யாரிடமாவது கூறலாம் என்று ஆவல் ஏற்படும்! ஒரு கல் சொல்வதைக் கேட்க யார் முன்வருவார்கள்? துக்கத்தை அடக்கிக் கொண்டு தேவாலயத்தில் கொலுவிருக்கும் நிலை கிடைக்கா விட்டாலும், வேறு ஏதாவது ஒரு தகுதியான நிலை, நாலு பேர் பார்த்து மெச்சக்கூடிய நிலை கிடைக்காதா என்று ஆவலுடன் ஏற்படும் சந்தர்ப்பத்துக்காகக் காத்துக் கிடந்தேன்.
வெகு காலத்திற்குப் பிறகு ஒரு வாய்ப்பு கிடைத்தது. நல்ல வாய்ப்புதான். நாட்டிலே ஏதோ ஐந்தாண்டுத் திட்டம் போடுகிறார்களாமே! அதனாலே எனக்கு ஒரு வாய்ப்பு கிட்டிற்று. ஊரிலே உள்ள பெரிய மனிதர்கள், படித்தவர்கள், ஆட்சியிலே உள்ளவர்கள் பாதை ஒன்று புதிதாகப் போட்டார்கள். சாதாரணமாக பாட்டாளிகள் பாதை போடுவர். எட்டணா, ஒரு ரூபாய் கூலி வாங்குபவர்கள். அப்படிப்பட்டவர்கள் அல்ல என்னைத் தொட்டு எடுத்தவர்கள்! அதிலும் என்னைத் தொட்டு எடுத்தவர், தம்முடைய கைவிரலில் இருந்த வைர மோதிரங்களை முன்னெச்சரிக்கையாக கழற்றி பத்திரப்படுத்தி கொண்டு என்னைத் தொட்டு எடுத்தார். போட்டோ கூட எடுத்தார்கள். புதிய பாதையில் நான் இடம் பெற்றேன். மந்தி வந்திருந்தார், பாதையைத் திறக்க புதிய புதிய மோடார்கள், ஊர்வலம்! மேளக்கச்சேரி, பூமாரி! பெரிய கொண்டாட்டம்! கோயிலிலே இடம் கிடைக்காவிட்டால், என்ன! அங்கு என்ன பக்தர்கள் மட்டுமா வருகிறார்கள்! பக்தர்களை விடப் பகல் வேடக்காரர் அல்லவா அதிகம்! அதைவிட அதிகம் அளவில் வெளவால்களல்லவா வட்டமிடுகின்றன. அப்படிப்பட்ட இடத்திலே இருப்பதைவிட மந்திரிகளும், ராஜதந்திரிகளும், மிராசுதாரர்களும், மிட்டாதாரர்களும், பட்டம் பெற்றோரும், பதவி வகிப்போரும் நடமாடி பாராட்டிடும் இடமல்லவா கிடைத்தது என்றெண்ணி மகிழ்ச்சி அடைந்தேன். கர்வம் என்றுகூடச் சொல்லலாம்.
இந்த மகிழ்ச்சி நீடித்ததா - அதற்கு நான் கொடுத்து வைத் திருக்க வேண்டாமா! பெரிய பெரிய தலைவர்களுடைய பாராட்டுதல் பெற்ற அந்தப் பாதை மூன்றே மாதத்தில் பழுதாகிவிட்டது. முதலில் பாதையை விட்டு வெளியே கிளம்பியது நான் தான்! என் மீது தவறு இல்லை! என்னைச் சரியானபடி அழுத்தி வைக்கவில்லை, பாதை போட்டவர்கள்; படம் எடுக்கிறார்களா , படம் எடுக்கிறார்களா, என்று பார்த்துக் கொண்டிருப்பதிலே காட்டிய அளவு அக்கரை, போதுமான அளவு பள்ளம் தோண்டினோமா, போட வேண்டிய அளவு மண்ணைப் போட்டோமா, அழுந்த வேண்டிய அளவு அழுத்திவிட்டோமா, கல் சரியாகப் பதிந்ததா, வெளியே வந்துவிடாதபடி பக்குவம் செய்திருக்கிறோமா என்பதிலே அக்கறை காட்டவில்லை.
பாவம், அவர்கள் பாதை போட்டுப் பழக்கப்பட்டவர்கள் அல்ல. அவர்களுக்கு மிட்டாமிராசு, கோர்ட்டு கோட்டை, கடை கண்ணி, இவைகளிலே பழக்கம்! ஐயாயிரம் செலவிட்டுப் போடவேண்டிய பாதையை இரண்டாயிரம் ரூபாய் செலவில் போட்ட பெருமையைப் பெற்றார்கள். இரண்டே மழைக்கெல்லாம் நான் வெளியே கொண்டு வந்து விடப்பட்டு விட்டேன். இருந்த இடமும் கிடைத்த நிலையும் போய்விட் டது; மறுபடியும் ஊர்சுற்றி ஆக்கப்பட்டுவிட்டேன். நீயே சொல்லு! இதிலே நான் செய்த குற்றம் ஏதாவது இருக்கிறதா? உதைபட்டேன்; வீசி எறியப்பட்டேன்; மழைத் தண்ணீரால் உருட்டப்பட்டேன்; யாரிடம் சொல்லி என் குறையைப் போக்கிக் கொள்ள முடியும்? படாத பாடுபட்டுக் கொண்டு பக்கிரியாகிக் கிடந்தேன்.
பல நாட்கள், கோயிலிலும் இடம் கிடைக்கவில்லை. ஆட்சிக் கொலு இருப்போர் அமைத்த பாதையிலும் இடம் இல்லை; நமக்கு இனி என்னதான் கதி என்று ஏங்கிக் கிடந்தபோது, என்னையும் என் போன்ற வேறு கற்களையும் குவித்து, சேறு போட்டுக் குழைத்து, ஒரு குடியானவன் தன் தோட்டத்துக் குடிசையின் மண் சுவற்றில் ஏற்பட்டுப் போயிருந்த வெடிப்புக்குப் போட்டு அடைத் தான். முதலிலே வருத்தமாகத்தான் இருந்தது. கோயிலில் கொலுவிருக்க எண்ணினோம்; கடைசியில் குடிசைக்கு வந்து சேர்ந்தோம்; இதுதானா நமக்கு வாய்த்த இடம் என்று பிறகு நானாக மனதைத் தேற்றிக் கொண்டேன். கோயிலா கட்டும், கோட்டையிலே கொலுவிருக்கும் மந்திரிகளாகட்டும், குடிசைகளில் உள்ள ஏழை மக்கள் கொடுக்கும் காணிக்கை, வரிப்பணம் இல்லாமல் வாழமுடியுமா, வளரமுடியுமா? ஆகவே எல்லாவற்றுக்கும் ஆதாரமாக விளங்கும் ஏழையின் குடிசையில் இடம் பெற்று இருப்பது, உண்மையான மேல் நிலையாகும் என்று நினைத்துக்கொண்டேன். மனதுக்கு ஒரு நிம்மதி கூட ஏற்பட்டது; ஆனால் அந்த மகிழ்ச்சியும் நிம்மதியுமாவது நிலைத்ததா என்றால் அதுதான் இல்லை.
அந்த உழவன் மாடாக உழைத்து ஓடாகிப் போனான். ஆனால் வாழ முடியவில்லை . வறுமை. உழவுச் செலவுக்குப் பட்ட கடனைக்கூடத்திருப்பித்தர முடியாத நிலை ஏற்பட்டு ஊரை விட்டே ஓடிவிட்டான், பட்டணத்திலே கூலி வேலை செய்து வயிற்றைக் கழுவ! நான் அனாதையானேன். குடிசையைக் கவனிப்பார் இல்லை; கலனாகிவிட்டது. மறுபடியும் வெடிப்பு ஏற்பட்டுவிட்டது! நான் வெளியே வந்துவிட்டேன் மறுபடி யும் பலருடைய காலுக்குப் பந்தானேன். உலகத்தின் மீதே கோபம் கோபமாக வந்தது. ஒரு குற்றமும் நாம் செய்ய வில்லை; சிற்பியின் கவனக்குறைவால் கோயிலில் இடம் பெற முடியாமல் போயிற்று; பாதை போடத் தெரியாதவர்களிடம் சிக்கியதால் பாதையில் நிலைத்து நிற்க முடியாமல் போய் விட்டது; உழவனை வாழவைக்க அரசாள்பவர் தவறி விட்டதால் குடிசையில் இருந்த இடமும் போய்விட்டது. இனி நாம் பயன்படுவதானால் கொடுமையை ஒழிக்க ஏதாவதொரு நல்ல காரியத்திற்குப் பயன்பட வேண்டும் என்று எண்ணி னேன்! ஆனால் நானோ ஒரு கல். நானாக ஒரு காரியமும் செய்ய முடியாது. என்னைத் தக்கவிதத்தில் பயன்படுத்த தக்கவர் வரவேண்டும். வருவார், வருவார் என்று தவம் கிடந்தேன் .
வந்தான் பனிரெண்டு வயது சிறுவன் ஒருவன். ஐயோ பாம்பு! பாம்பு' என்று அலறியபடி என்னை எடுத்துக் குறி பார்த்து பாம்பின் மீது வீசினான். துள்ளி விழுந்தது பாம்பு. அசையவில்லை! எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஒன்றுக்கும் உதவாத்து என்ற கெட்ட பெயர் இனி இல்லை. அக்ரமத்தை ஒழிக்கப் பயன்பட்டோம் பாம்பு செத்தது நம்மால் - நம்மாலான உதவியை உலகத்துக்குச் செய்தோம் என்ற மகிழ்ச்சி; பெருமை கூட! அந்தச் சிறுவனும் மகிழ்ச்சியால் துள்ளினான். "பெரியப்பா ! பெரியப்பா!' என்று கூவினான். ஒரு முதியவர் வந்தார். 'பாரு, பாம்பு! கல்லாலே அடித்தேன்! செத்துப் போச்சு! பெரிய பாம்பு! அதோ, அந்தாலே வேலி பக்கம்' என்று கூவினான். பெரியவர் கடகடவெனச் சிரித்தார். சிறுவன் முதுகைத் தட்டிக் கொடுத்து, 'அட என் சூரப்புலி ! அதோ அந்தக் கட்டுவிரியனைத்தானேடா சொல்றே! அட என் சிங்கக்குட்டி! அதை நான் ஒரு அரைமணி நேரத்துக்கு முந்தி என் கைத்தடியாலே ஒரு தட்டு தட்டிக் கொண்ணு போட்டு தூக்கி எறிஞ்சேன். செத்துப்போன பாம்பை நீ சாகடிச்சயா!' என்று சொல்லி மேலும் சிரித்தார்.
சிறுவன் வெட்கிப் போனான். அவன் மட்டுமா? எனக்கே வெட்கமாகிப் போய்விட்டது. ஒரு நல்ல காரியமாவது செய்து முடித்தோம் என்று திருப்திப்பட்டோம். கடைசியில் பார்த்தால் பாம்பு நம்மாலே சாகவில்லை; செத்த பாம்பின் மீது நாம் விழுந்தோம்; அவ்வளவுதான் என்பது தெரிந்தது. எனக்கு அந்தப் பாம்பை பார்க்கக்கூடப் பிடிக்க வில்லை. கேவலமான நிலை ஏற்பட்டுவிட்டதே என்று எண்ணி மெத்த வருத்தப்பட்டேன். பல நாள் கழித்து நான் இருந்த இடத்தில் ஒரே பரபரப்பு! போலீசாரின் நடமாட் டம்; அதிகாரிகளின் கண்ணோட்டம், உழவர்களின் கூட்டம். உழவர்களுக்கும், மிராசுதாரர்களுக்கும் பெரிய தகராறு. மிராசுதாரர் தம்முடைய மூன்றாவது மகளுடைய திருமணத் துக்காக வைர நகைகள் வாங்கி வரச் சென்றாராம். அந்தக் காரியத்தை முடித்துக்கொண்டு கிராமம் வந்திருக்கிறார். உழவர்கள் பட்டினி, விளைச்சல் சரியில்லாததால் . பணம் கேட்கப் போயிருக்கிறார்கள். முடியாது! கிடையாது! என்று சொல்லி இருக்கிறார். உழவர்களில் ஒருவன், இதற்கெல்லாம் கிடைக்குமா ! வைர நகை வாங்க பணம் கிடைக்கும், என்று பேசிவிட்டான். அவனைக் கட்டிவைத்து அடித்து விட்டார் மிராசுதாரர். உழவர்கள் திரண்டு விட்டார்கள், படை எடுப்பது போல. ஊருக்கே ஆபத்து என்று மிராசுதாரர் செய்தி அனுப்பவே போலீஸ் படை வந்துவிட்டது.
போலீசுடன் மோதிக் கொள்ளக் கூடாது என்று உழவர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள். அமைதி நிலவிற்று . மிராசுதாரருக்கு இது பிடிக்கவில்லை . அதற்காக அவருடைய எடுபிடி ஒருவன் போலீசார் தங்கியிருந்த இடத்தின் மீது கற்களை வீசினான். அந்தப் பாவியிடம் முதன் முதல் சிக்கியது நான்தான். இரும்புத் தொப்பி மீது விழுந்தேன். போலீஸ்காரர் தலை மீது கூட அல்ல; போலீஸ் பதறிற்று. ஊதுகுழல் சத்தம் கிளம்பிற்று. குடிசைகளுக்குள் நுழைந்தார்கள்! தடி அடி. துப்பாக்கி. எல்லாம் ஒரு மணி நேரத்தில்! ஊரே அமளி துமளி , போலீசார் மீது கற்களை வீசிக் கலகம் செய்ததாக பல உழவர்கள் கைது. வழக்கு நடந்தது. வீசப்பட்ட கற்கள் வழக்கு மன்றத் தலைவர் முன்பு வைக்கப்பட்டன. அதில் நானும் இருந்தேன். என்னை அவர் தொட்டுக்கூடப் பார்த் தார். உழவர்கள் தான் என்னை எடுத்துப் போலீஸ் மீது வீசினார்கள் என்று சொல்லுகிறார்கள். என்னை எடுத்து வீசியவனே மிராசுதாரனின் அடியாள். எனக்குத் தெரியும்; கேவலம், நான் சொல்வதையா கேட்டுக்கொண்டு இருப்பார்கள்! கல் உருவில் இருக்கும் கடவுளே பேசுவதில்லையே! நானோ வெறுங்கல்! கோயிலுக்குக்கூடப் பயன்படாத கல் !
மிராசுதாரர் பக்கம் பேச வந்த வக்கீல் பெரிய பெரிய படிப்பெல்லாம் படித்தவராம். ஆயிரம் ரூபாயாம் அவருக்கு. அவருடைய பேச்சு எடுபடுமா, ஒரு கல்லுடைய பேச்சு செல்லுமா! வாய் மூடிக் கிடந்தேன்; பலர் தண்டிக்கப்பட்டார்கள்! என்னைப் போலத்தான் அவர்களும்! செய்த குற்றத் துக்காகத் தண்டனை. அக்ரமம் கண் முன்னாலே நடக்கிறது. தடுக்கமுடியவில்லையே! நியாயத்துக்காக வாதாட முடிய வில்லையே என்று நான் எண்ணித் துக்கப்பட்டு என்ன பலன்? நானாவது கேவலம் கல். பெரிய பெரிய மனிதர்கள், படித்தவர்கள், இந்த அக்ரமம் நடப்பதைப் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறார்கள். அவர்களாலேயே இந்த அக்ரமத்தைத் தடுக்க முடியவில்லை என்றால், நான் என்ன செய்ய முடியும்? சிறு கல்.
இனி எக்கேடு கெட்டாலும் சரி என்று எண்ணிக் கொண்டேன். அவ்வளவு வெறுத்து விட்டது, வாழ்க்கை . மறுபடியும் தெருச்சுற்றியானேன். இனி ஒரு நல்ல நிலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டேன். இந்த உலகில் நல்லவர்களுக்கு இடம் இல்லை என்று கண்டுகொண்டேன். யார் எடுத்து எங்கே வீசினாலும் அங்கே விழுந்து கிடப்பது என்றாகிவிட்டது என் நிலை.
இந்தச் சமயத்தில் தான் ஏதோ காட்டுக்கூச்சல் போட்டுக் கொண்டு ஓடி வந்தான். பலர் அவனைத் துரத்திக்கொண்டு வந்தார்கள். 'பைத்தியம், பைத்தியம்' என்று கூவினார்கள்; பாவம், என்னென்ன தொல்லைகளைக் கண்டவனோ! எந்தத் தொல்லையால் அவன் மனம் குழம்பிவிட்டதோ! யார் கண்டார்கள். திடீரென்று அவன் தான் என்னை எடுத்தான். இந்த வீட்டின் மீது வீசினான். சன்னல் திறந்திருந்ததால் நான் நேராக உன் மீது வந்து விழுந்தேன்! நீ சுக்கு நூறாகி விட்டாய் நடந்தது இது. என் மீது கோபித்துக் கொள்ளாதே. என்னை இந்த உலகம் இந்தக் கதிக்கு கொண்டு வந்து சேர்த்து விட்டது. நான் ஒரு குற்றமும் செய்ததில்லை. என்னை மன்னித்துவிடு. உனக்கு ஆத்திரமாக இருந்தால் என்னை ஏசுவதாக இருந்தால் ஏசு. நான் பொறுத்துக் கொள்கிறேன். எத்தனையோ இழிவுகளை, தொல்லைகளைத் தாங்கிக் கொண்ட எனக்கு நீ மனம் நொந்து நாலு வார்த்தை பேசு. வதைத் தாங்கிக்கொள்வது கடினம் அல்ல. எதற்கும் என் கதையைச் சொல்லிவிட்டேன். இரக்கம் காட்ட முடியாவிட் டாலும் என்னைப் புரிந்து கொண்டாலே போதும். நான் கொடுமை செய்பவன் அல்ல - கொடுமைக்கு ஆளானவன்.
கல் தன் கதையைச் சொல்லி முடித்ததும், கண்ணாடித் துண்டு பரிதாபத்தோடு கல்லைப் பார்த்துப் பேசியது:
"உண்மையிலே எனக்கு உன் மீது கோபம் இல்லை. நான் உடைபட்டு துண்டு துண்டாகப் போனது பற்றி எனக்கு வருத்தம் கூட இல்லை. ஒருவிதத்தில் சொல்லப் போனால் நான் உடைபட்டு துண்டு துண்டாகிப் போவதுதான் முறை. எனக்கு என் வாழ்க்கையே வெறுத்துவிட்டது. இனி இருக்கக்கூடாது என்று நான் எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில் உடைத்தெறிந்துவிட்டாய். உனக்கு நன்றிகூடக் கூறவேண்டும்" என்று சொல்லிற்று.
கல் திகைத்தது! இவ்வளவு வெறுப்பு உனக்கு ஏற்படக் காரணம் என்ன? நான் காடு மேடு கிடந்தவன் ; கலக்க மடைந்தேன். நீயோ மாடி வீட்டில் இருக்கிறாய். மேனி மெருகுடன் வாழமுடிகிறது. உனக்கு இத்தனை வெறுப்புக்குக். காரணம்?" என்று கேட்டது. கண்ணாடித்துண்டு, ஒரு குறைவுமின்றித்தான் நான் வாழ்ந்து வந்தேன். பதினெட்டு வயதுப் பாவை பத்தரைமாற்றுத் தங்கம் உடல், உள்ளம் இரண்டும்; எப்போதும் கலகலப்பான சிரிப்பு. அப்படிப்பட்ட கட்டழகிக்குத் துணையாக இருந்துவந்தேன். ஒரு நாளைக்கு இருபது முறையாவது அந்தப் பூங்கொடியாள் என் எதிரே நிற்பாள். முகத்துக்குப் பவுடர் போதுமா? நெற்றிக்குப் பொட்டு சரியாக இருக்கிறதா? புருவத்துக்கு மை அளவாக இருக்கிறதா? என்று என்னிடம் வந்துதான் தெரிந்து கொள்வாள். புதுச் சேலை கட்டிக் கொண்டால் முதலில் என்னைத் தான் வந்து பார்ப்பாள். அவ்வளவு அன்பு என்னிடம்.
எனக்கும் அவளுக்கும் அவ்வளவு நேசம். அப்படிப்பட்ட பொற்கொடியாள் என்ன கதி ஆகிவிட்டாள் தெரியுமா! நான் கண்ணாடி ! நீயோ கல். நமக்கு நேரிட்டுவிட்ட கதியை எண்ணிக் கலக்கமடைகிறோம். நீ கதையே சொல்லி விட் டாய். அந்தக் காரிகையோ பூவிழந்தாள், பொட்டு இழந்தாள், புன்னகை இழந்தாள். எந்தக் கண்கள் மலர் போல் இருந்தனவோ, அவைகளிலிருந்து இரத்தக் கண்ணீர் குபுகுபுவென வழிகிறது. இளமையையும், அழகையும், அலங்காரத்தையும், அகமகிழ்ச்சியையும் கண்டு கண்டு களிப்புடைய நான் அவளுக்குத் துணையாக இருந்தேன். அப்படிப்பட்ட நான், அவளுக்கு அவளுடைய விதவைக் கோலத்தை, வேதனையை எடுத்துக் காட்டும் செயலை , எப்படிச் செய்ய மனம் ஒப்புவேன். துள்ளிக் கொண்டு வந்து நிற்பாளே நம் எதிரில் அந்த மான் விழியாள்! இனி அவள் வருவாளா! வந்து என் எதிரே நின்றால் மனம் என்ன பாடுபடும்.
அழகை எடுத்துக் காட்டி வந்த நான் அவதியைக் காட்டவா! இனி இங்கு இருக்க வேண்டுமா? கூடாது! கூடாது! என்று எண்ணி வேதனைப்பட்டுக் கொண்டிருந்தேன். நல்ல வேளை! என் வேதனையை நீக்கவே வந்தது போல நீ வந்தாய், நான் உடைபட! சிதறுண்டு போக! மணாளனைப் பெற்று மகிழ்ந்திருந்த அவளுக்கு நான் தேவையாக இருந்தேன். அவளோ விதவையானாள் - இனி அவளுக்கு நான் ஏன்? விதவை இருக்கும் இடத்தில் இருந்துகொண்டு - அவள் சிறுமியாக, கன்னியாக, மணப்பெண்ணாக, மணாளனை முதன் முதல் சந்தித்தபோது வெட்கித் தலை குனிந்த பாவையாக....... இப்படிப்பட்ட நிலைகளை எல்லாம் கண்டு வந்த நான், அவள் இளைத்து, கருத்து, ஏங்கி, பெருமூச்செறிந்து, கண்ணீர் வடித்துக் கலங்கும் நிலையைக் காணவும் வேண்டுமா? காட்டவும் வேண்டுமா! வேண்டாம்! வேண்டாம்! உடைந்து போனதுதான் முறை. என் வாழ்க்கை முடிந்து போய்விட்டது. அதுவே நான் விரும்பியது. எனக்கு நீ பெருத்த உதவிதான் செய்து இருக்கிறாய் என்று சொல்லிற்று.
கல், ஏதும் பதில் பேச முடியாத நிலையில் திகைத்துக் கிடந்தது.
வீட்டுப் பெரியவர், வேலைக்காரியை அழைத்து, 'என்ன செய்வது? அப்படிப்பட்ட மாப்பிள்ளையே போய்விட்டான்! இந்த நிலைக்கண்ணாடி போனதுதானா பிரமாதம். கூட்டி எடுத்துக் கொண்டு போய்ச் சாக்கடைக் குழியிலே போடு' என்றார்.
கல்லும் கண்ணாடித் துண்டும் சாக்கடைக் குழியிலே போடப்பட்டன.
--------
'காஞ்சி' பொங்கல் மலர் 1965
------
8. உடை போட்டதும்
அவன் என்னை என்ன கேவலமாகப் பேசறான் என்கிறது உமக்கு என்ன தெரியறது.... எத்தனை தவணைதான் நானும் சொல்றது... அவனுந்தான் எத்தனை தவணைகளைக் கேட்டுக் கொள்ளுவான்."
"அவனோட பணத்தைத் திருப்பிக் கொடுக்காமலா இருக்கப் போகிறோம். அவனுந்தான் வாங்காமல் விட்டு விடப் போகிறானா? இந்த நேரம் பணம் கைவசம் இல்லை; கொஞ்சம் பொறுத்துக் கொள்ளச் சொல்லிக் கேட்டுக் கொள்கிறோம். இதிலே தவறு என்ன இருக்குது..."
”உம்மைவிட அழகா, மரியாதையா, நான் அவனுக்குப் பதில் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளப்பா , பணத்துக்கு அவர் ஏற்பாடு செய்து கொண்டு இருக்கிறார். வந்ததும் உன்னோட பணத்தைப் பூமேல் வைத்துக் கொடுத்து விடுகிறோம்னு சொல்லாமலா இருக்கிறேன். எத்தனை நாளைக்கு அவனுக்கு இனிக்கும் - இந்த வெறும் பேச்சு; இல்லை, இல்லை என்கிற பல்லவி. கோபம் வராமல் இருக்குமோ ...."
"கோபம் வந்து என்ன செய்து விடுவான்? தலையை வாங்கி விடுவானோ?"
”தலையை வாங்குவானேன்! தெருவிலே நின்று கொண்டு நம்மோட யோக்யதையை உரக்கக் கூவி மானத்தை ங்கினாப் போதாதா?.... வாங்கி விடமாட்டானோ ...."
" செய்துதான் பார்க்கட்டுமே! துணிவு இருந்தா! மறு நாளே மானநஷ்ட வழக்கைத் தொடர மாட்டானா! கடனைத் திருப்பி வாங்க என்ன வழி உண்டோ அதைச் செய்வதா, கேவலமாகப் பேசுவதா! சட்டம் உனக்குத் தெரியாது. அவனுக்கு என்ன தெரியும்..."
"வாங்கின கடனைத் திருப்பித் தரச் சொல்லி ஒருவன் வற்புறுத்தினால், அவன் பேரிலேயே வழக்குப் போடுவதுதான் சட்டமா?”
"இப்போது இல்லை .... இன்னும் ஒரு வருஷம் ஆகும் .... மொத்தமாகத் தரமுடியாது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் தர முடியும்..." என்று இப்படி எல்லாம் வாதாட முடியும். உனக்கு என்ன தெரியும், சட்டத்தின் நுணுக்கம்? பைத்யம்! உனக்கு நான் கடனே தர வேண்டியதில்லை என்றுகூட வாதாட முடியும்.... தெரியுமா?"
”கை நீட்டி அவனிடம் பணம் வாங்கிவிட்டு .....”
"கை நீட்டிப் பணம் வாங்கினது யாரு? நானா?"
"உங்க அப்பா பேராலே வாங்கினது; தெரியும்..."
"எனக்கும் எங்க அப்பாவுக்கும், சொத்து சம்பந்தமாக ஒருவிதமான தொடர்பும் கிடையாது. நான் விடுதலை எழுதிக் கொடுத்து மூன்று வருஷம் ஆகிவிட்டது என்று ஒரு பாயிண்ட் கிளப்பினா, அசடு! வருஷம் ஆறு ஆகும் வழக்கு தீர! தெரியுமா?"
"அப்ப, கொடுத்தவன் கடனைத் திருப்பித் தரச் சொல்லிக் கேட்கக் கூடாது. அது உம்மோட நியாயம்..."
"கேட்கலாம் மரியாதையாக! தாராளமாகக் கேட்கலாம். ஆனால் தரக் குறைவாகப் பேசக் கூடாது. சட்டம் அதற்கு இடம் தராது."
"வாங்கின கடனை மறுக்கவில்லை. திருப்பித் தர முடியாது என்று சொல்லவுமில்லை..."
"வாங்கின கடனை எப்படி மறுக்க முடியும்? திருப்பி தர முடியாது என்று சொல்ல சட்டம் எப்படி இடம் கொடுக்கும்? தம்முடைய கட்சிக்காரருக்காக வாதாட வேண்டும் என்பதற்காக என் நண்பர் இத்தனை வருஷ அனுபவத்துக்குப் பிறகு இவ்வளவு சொத்தையான வாதம் செய்வதைக் கேட்டு நான் ஆச்சரியப்படுகிறேன் ... பரிதாபப்படுகிறேன்!"
"என் கட்சிக்காரர், தவணைதான் கேட்கிறார், கட னைத் திருப்பித் தர ..."
”தவணை! தவணை! எத்தனை தவணைகள்! ஜூலை என்றார் - என் கட்சிக்காரர் சரி என்றார் - செப்டம்பர் வரையில் காத்திருந்தார். பணம் வரவில்லை ; மறுபடியும் தவணை கேட்டார், கொடுக்கப்பட்டது. இதுவரையில் மொத்தம் 12 முறை தவணை கொடுத்தாகிவிட்டது. இனியும் என் கட்சிக்காரரை தவணை கொடுக்கச் சொல்லிக் கேட்பது தர்மமுமல்ல... சட்டமும் அல்ல..."
”இந்த முறை தவணை கொடுத்தே ஆகவேண்டும். போன மாதம் என் கட்சிக்காரர் தன் மகளுடைய கலியாணத்துக்காகப்பட்ட சிரமம் கூடத் தீரவில்லை. அவருக்கு உடல் நலமும் சரியாக இல்லை ...."
"உடல் நலத்தைக் கவனித்துக் கொள்ள நல்ல டாக்டரிடம் போகட்டும்...... இங்கு என்ன வேலை? தவணை தருவதற்கு இல்லை என்பதைத் திட்டவட்டமாகக் கூறிவிடுகிறேன். தவணைகள் கேட்டு வாங்கி வாங்கி, ஏமாற்றிவிட அந்தக் கட்சிக்காரர் திட்டமிடுகிறார். அவருக்கு உள்ளது ஒரே வீடு - அதை விற்றுப் பணமாக்கிக் கொண்டு வெளியூர் சென்று விட்டால் பிறகு அவரிடம் பணத்தைத் திருப்பி வசூலிப்பது முடியாது போய்விடும். வீட்டை விற்பதற்காகச் சதி செய்கிறார். இரகசியமாக ஏற்பாடு செய்து வருகிறார் என்று தகவல் கிடைத்திருக்கிறது. ஆகையால் கோர்ட்டாரவர்கள், வாங்கிய கடனைத் திருப்பித் தராமல், தவணைகள் சொல்லிக் காலத்தை ஓட்டிக் கொண்டு வரும் தாண்டவராயருடைய வீட்டை என் கட்சிக்காரர், கடனுக்காகக் கைப்பற்ற உத்திரவிடக் கேட்டுக் கொள்கிறேன்..."
கொடுத்த கடனைத் திருப்பித்தரச் சொல்லிக் கேட்பவன் தவணைகள் சொன்னால் கேட்டுக் கொள்ள வேண்டும், மரியாதையாகப் பேச வேண்டும், கடனைச் சிறு சிறு தொகைகளாகத் திரும்பப் பெற்றுக்கொள்ளச் சம்மதிக்க வேண்டும், இல்லையென்றால் 'கடனையே திருப்பித் தர முடியாது’ என்று வாதாட சட்டம் இருக்கிறது என்று தமது மனைவியிடம் பேசிய வழக்கறிஞரையும் பார்க்கிறீர்கள். தவணைகள் கேட்டு வாங்கிக் கொண்டே காலத்தைக் கடத்திக் கொண்டிருந்துவிட்டு, கடனைத் திருப்பித் தராமல் ஏமாற்ற நினைக்கும் பேர்வழியின் வீட்டைக் கைப்பற்ற உத்திரவு பிறப்பிக்கும்படி வாதாடும் வழக்கறிஞரையும் பார்க்கிறீர்கள்.
முன்னவருடைய பெயர் என்ன? மற்றவருடைய பெயர் என்ன? என்ற விவரம் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறதல்லவா! ஒரு ஏமாற்றத்துக்குத் தயாராகி விடுங்கள். இருவர் அல்ல; பேசினவர் ஒருவரேதான்!
வீட்டில் பேசிய விசுவநாதர்தான் கோர்ட்டிலும் பேசியவர்!
வீட்டில் மனைவியிடம் பேசியபோது அவர் வெறும் விசுவநாதம்; கோர்ட்டிலே பேசியபோது வழக்கறிஞர் விசுவநாதம்.
குளித்துவிட்டு, உடலை துவட்டிக் கொண்டே வீட்டில் பேசினார்.
கோர்ட்டில், வழக்கறிஞருக்கான உடையில் வந்திருந்து பேசினார்.
உடை போட்டதும் உரை மாறி விட்டது!
வீட்டிலே விசாரமிக்க கணவர்; கோர்ட்டிலே வெட்டு ஒன்று - துண்டு இரண்டு என்று பேசும் வழக்கறிஞர்.
ஒருவரைத்தான் காணுகின்றீர்கள்! ஆனால் இருவேறு நிலை! இருவேறு நிலைகளில் இருவேறு உரை! இருவேறு உடை !!
இதிலே எந்த நிலையில் அவர் பேசியது நியாயம் என்று கேட்பீர்கள். இரண்டிலும் நியாயம் இருக்கிறது. நியாயத்தை விட அந்த இரு வேறு விதமாகப் பேச வேண்டிய 'தேவை' நிரம்ப இருக்கிறது.
வழக்கறிஞர் விசுவநாதம் தமது கட்சிக்காரருக்கு, அவர் கொடுத்த கடனுக்குச் சேதம் ஏற்படாமல் திருப்பிப் பெற்றிட வழி செய்து கொடுத்தாக வேண்டிய கடமை இருக்கிறதே, அதனைத் திறமையாகச் செய்கிறார்.
வசந்தாவின் கணவன் விசுவநாதம் வருவாய்க்கு மேல் செலவு செய்து விட்டதால், கடன்பட்டு, திருப்பித்தர முடியாத நிலை காரணமாக வேதனைப்படுகிறார் - அந்த வேதனையைப் போக்க வழியும் கூறாமல், அவர் வேண்டுமென்றே கடனை திருப்பித் தராமல் இருப்பதாக பாவனை செய்து கொண்டு, எச்சரிக்கும் மனைவியிடம் பேச வேண்டியதை விசுவநாதம் வீட்டில் பேசினார்.
கடனைக் கண்டிப்பாகத் திருப்பித் தந்தாக வேண்டும். மேலும் தவணைகள் தர முடியாது என்று அடித்துப் பேசுகிறாரே வழக்கறிஞர் விசுவநாதம், அது பயன் கொடுத்து, கடன் பட்டவர் கடன் கொடுத்தவருக்கு கடனைத் திருப்பிக்கொடுத்தால், விசுவநாதம் தான் பட்ட கடனுக்கு மேலும் தவணைகள் சொல்லாமல், தவணைகள் சொன்னால் கேட்டுக் கொள்ளத்தான் வேண்டும் என்று மனைவியிடம் 'பிரதாபம்' பேசாமல், கடனில் ஒரு பகுதியைத் திருப்பிச் செலுத்தலாம்.
விசுவநாதம் வீட்டிலே பேசியது, 'இயலாமை’ காரணமாக!
விசுவநாதம் கோர்ட்டிலே பேசியது, வீட்டிலே உள்ள 'இல்லாமை’யைப் போக்கிக் கொள்ள!
ஒருவரேதான் இருவேறு நிலைமைகள் - இருவேறு பேச்சு! உடையிலே ஒருவித மாற்றம்! அவர் உரையிலே தலை கீழ் மாற்றம்!
# # #
”இப்படியா போட்டு அடிக்கிறது குழந்தையை. கிடா மாடு! முதுகிலே விரல் விரலாத் தெரியுதே, இப்படியா அடிக் கிறது..."
”தப்பு செய்தா அடிக்கமாட்டாங்களா? நீங்க பெத்த அருமையான பிள்ளை செய்துவிட்டு வந்த காரியத்துக்கு, அடிக்காம திருஷ்டி கழிப்பாங்களா?"
"என்னடி அப்படி தலை போகிற தப்பு செய்துவிட்டான், இப்படி அடிக்க - கண்மண் தெரியாம, குழந்தையாச் சேன்னு கொஞ்சம் கூடக் கவனிக்காம, இப்படிக் கொலை பாதகம் செய்திருக்கறியே..."
"எத்தனை நாளைக்குச் சொல்றது புத்திமதி ! கேட்டாத்தானே!"
'துளியாவது ஈவு இரக்கம், பரிவு பச்சாதாபம் இருந்தாத்தானே உனக்கு?"
”பிள்ளைகளை வளர்த்துப் பார்த்தாத்தான் தெரியும், அதிலே இருக்கிற கஷ்டம்."
”என்ன தப்பான காரியம் செய்தாலும், அன்பா, புத்திமதி சொல்லித் திருத்த வேணுமே தவிர, இப்படி முரட்டுத்தனமா , கொடுமைப்படுத்தக் கூடாது. உருட்டு மிரட்டல்லே திருத்தலாம். இப்படியா! பத்ரகாளி! குழந்தை துடியாத் துடிக்கிறபடியாவா அடிக்கிறது."
# # #
"முட்டிக்கு முட்டித் தட்டி எடுக்கல்லேன்னா, பய நெஜத்தைச் சொல்லமாட்டான். மயிலே! மயிலே! இறகு போடுன்னா போடுமா ...!"
84! வேணாம், ஆளு ரொம்ப நோஞ்சானா இருக்கி றான்! அடிதாளமாட்டான்; கண்றாவியா இருக்குது , அவன் கதறுவதைக் கேட்டா ...."
"சும்மா கிட 88! உனக்குத் தெரியாது, இந்த ஆசாமிகளோட சுபாவம். ஒரு தட்டு தட்டன் உடனே கத்து வானுங்க; உயிரே போயிட்ட மாதிரி, துடிப்பானுங்க...”
”இல்லை, 84! உருட்டல் மிரட்டல்லியே உண்மையை வரவழைத்து விடலாம். என்னமோ, பய, தெரியாமே, தப்பா நடந்துவிட்டான் ... திருந்தி விடுவான்னு தோணுது"
”இதுகளா? திருந்தும்னு எண்ணிக்கிட்டு உபதேசம் செய்யப் போறயா? பைத்யம்! இதுகளை ஈவு இரக்கம் பார்க் காமெ கொல்லணும். உனக்குத் தெரியாது இதுகளோட விஷயம். புத்திமதி, நல்ல பேச்சு. இதுவரையிலே எத்த னையோ பேர் சொல்லாமலா இருந்து இருப்பாங்க. அதெல் லாம் இதுகளிடம் செல்லாது. பழமொழி இருக்குதே, 88! அடி உதவுவது போல அண்ணன் தம்பி கூட உதவமாட்டாங் கன்னு... டேய்! உள்ளதைச் சொல்லு, மண்டையைப் பொளந்து போடுவேன் பொளந்து : சொல்லு உண்மையை ."
ஈவு இரக்கம் காட்டக் கூடாது என்று பேசி, பிடிபட்ட போக்கிரியை அடிக்கிறானே 84 - போலீஸ் கான்ஸ்டபிள் பொன்னுரங்கம் - பார்க்கிறீர்கள். இப்படியா முரட்டுத்தன் மாக இருப்பது. துளி கூட பச்சாதாப உணர்ச்சி இல்லாமல் என்று எண்ணுகிறீர்கள். இதே பொன்னுரங்கம் தான் முதலில் தன் மனைவி, குழந்தையை அடித்ததற்காகக் கண்டித்த கணவன்!
திருப்பூர் பனியனும் காஞ்சிபுரம் வேட்டியும், திருச் செந்தூர் விபூதியும், பழனி சந்தனப் பொட்டும் தெரிந்தது வீட்டில் பேச்சில். பச்சாதாப உணர்ச்சி, நியாய உணர்ச்சி தெரிந்தது.
காக்கி உடையும், சிகப்புத் தொப்பியும் அதிலே 84 என்ற எண்ணும், கையிலே பூண் போட்ட தடியும் தெரிகிறது. போலீஸ் கொட்டடியில், உடை மாறி இருக்கிறது. உரை? அடேயப்பா! தலைகீழான மாற்றம்!!
நல்ல புத்தி சொல்லிக் குழந்தையைத் திருத்த வேண்டும் என்று மனைவிக்கு அறிவுரை சொன்ன பொன்னு ரங்கம், பல ஆண்டுகள் குழந்தை இல்லாமலிருந்து தகப்பனானவன் - அந்தப் பாசம் பேச்சிலே வழிந்தது.
போக்கிரியை அடக்க பலமான அடி கொடுத்தாக வேண்டும் என்று பேசிய பொன்னுரங்கம் 'ஏட்டு' ஆகப் போகிறார் என்று பலரும் பேசும் நிலையைப் பெற்றிருந்த போலீஸ்காரர்!
வீட்டிலே இருந்த பொன்னுரங்கத்துக்கும் போலீஸ் கொட்டடியிலே இருந்த பொன்னுரங்கத்துக்கும் உடை வேறு வேறு; உரையும் வேறு வேறு!
# # #
குழந்தையை அடித்துவிட்டதற்கு அவ்வளவு கோபித்து கொண்டாயே, அவன் என்ன செய்தான், ஏன் அடித்தேன் என்று கேட்டயா, நீ ...?"
”சொல்லேன், கேட்போம்..... என்ன அப்படிப்பட்ட அநியாயத்தைச் செய்துவிட்டான் என் மகன்?"
"சொல்லவா, உன் செல்லப் பிள்ளை செய்ததை .... பக்கத்து வீட்டுப் பையன் இல்லே, பக்தன். அவனைப் போட்டு அடி அடின்னு அடிச்சுட்டான். முட்டிக்கு முட்டி தட்டணும்னு. உன்னாட்டமே கூச்சல் போட்டுகிட்டு, ஒரு மூங்கக்கழியை எடுத்து அடித்துவிட்டான் ..."
"அடப் போக்கிரிப் பயலே! ஏன்? ஏன் அப்படிச் செய்தான்?"
அந்தக் கூத்தையும் கேள்... விளையாடலாம் வாடான்னு அந்தப் பையனைக் கூப்பிட்டு, நீ திருடன்; நான் போலீஸ்காரன் என்று சொல்லி, அடிச்சி இருக்கறான்."
"அப்படியா செய்தான்? போலீஸ் வேஷம் போட்டு நாடக மாடினானா ..... அடப் போக்கிரிப் பய..."
" சிரிக்கிறிங்களா... அந்தப் பையனோட அப்பாருக்கு எவ்வளவு கோவம் வந்திருக்கும்."
"பயலைப் பார்த்தா , பூனை போல இருக்கறான்."
"அதுவா! ஒரு பழைய காக்கிச் சட்டையை மாட்டிக் கிட்டு, தலையிலே சிகப்புத் துணியைச் சுத்திகிட்டு , கழியைத் தூக்கிகிட்டு, அது நடக்கற நடையும், பார்க்க பார்வையும், போடற கூச்சலும், அசல் உங்களை மாதிரியேதான் இருக்குது..."
”உடுப்பே போட்டுகிட்டாரை பய, நம்மைப்போல!"
”ஆமா ....... அந்த உடுப்பை போட்டுகிட்டதாலேதான் அந்த அடி அடிச்சுது. நீங்க மட்டும் என்னவாம், அந்த உடுப்பை போட்டுகிட்டா, ஆளே மாறிப் போய்விடறிங்க .... உங்க பேச்சே மாறிடுது. போக்கே மாறிடுது ....”
”சே, போ! ஒரே அடியாக் கேலியும் கிண்டலும் செய் யறே.”
# # #
84, போலீஸ் உடையில் இல்லை! வீட்டு உடையில் ! வீட்டு உடை! வீட்டு உரை!
------------------------
9. உடையார் உள்ளம்
கலகத்தை மூட்டிவிடாதே; மனதைக் கெடுக்காதே என்று சொல்லவே தோன்றாது யாருக்கும், 'ஒண்டிக்கட்டை’ உலகப்பன் பேச்சைக் கேட்கும் போது. வாழைப் பழத்திலே ஊசி இறக்குவது என்பார்களே, அப்படிப் பேசுவான்.
அவன் மனதிலே திட்டமிட்டால், வரப்பு தகராறு. வாய்க்கால் தகராறு, வாய்ச்சண்டை, வெட்டு குத்து எல்லாம் கிளம்பிவிடும். எந்தச் சமயம் கிளம்பிவிடும், எந்தச் சமயத்தில் யாரை யார் மீது ஏவி விடுவான், என்ன காரணம் காட்டி என்பதைத் தெரிந்து கொள்ளவே முடியாது. மோதுதல், வழக்கு மன்றம் போகவைத்துவிடும். அப்போது வக்கீல் ஏற்பாடு செய்வது, வக்கீலுக்கு 'பாயின்டுகள்' காட்டுவது சாட்சிகள் தயாரிப்பது, நிலத்தை ஈடுவைக்க அல்லது விற்க ஏற்பாடு செய்வது - மொத்தமாகச் சொல்லுவதென்றால், ஊரிலே மற்றும் ஒரு உலகப்பனை உண்டாக்கிவிடுவது அவன் வேலை. வேலையா! கலை ஐயா! கலை!!
அந்தக் கலையில் உலகப்பன் காணிக்கை கொடுக்காமல் வல்லவன் ஆகிவிட வில்லை. ஆறு ஏக்கர் அயன் நஞ்சையும், எட்டு ஏக்கர் புஞ்சை யும் விற்று, விற்று, காணிக்கை செலுத்திய பிறகுதான் 'வல்லவன்' ஆக முடிந்தது. வம்பு வல்லடி வழக்கிலேயே அதிகமான சுவை தேடிக்கொண்டு காலத்தை ஓட்டிக்கொண்டிருந்து விட்டதால், கலியாணம் செய்து கொள்ளக்கூட அவனுக்கு எண்ணம் எழவில்லை. பெண்ணைப் பெற்றவர்களோ, ஒரு பாழுங்கிணற்றிலே தள்ளினால் கூடப் பரவாயில்லை; இந்த வம்புக்காரனுக்குப் பெண்ணைக் கொடுத்தால், வாழ்க்கை முழுவதும் பேரிடி விழுமே என்று பயந்தே ஒதுங்கிக் கொண் டார்கள். உலகப்பன் 'ஒண்டிக்கட்டை’யாகவே இருந்து வந்தது அதனால் தான். சில அனுபவமுள்ள பெரியவர்கள் மட்டும், உலகப்பன் இப்படி ஆகிவிட்டதற்குக் காரணமே அவன் 'ஒண்டிக்கட்டை’யாக இருப்பதுதான்; அவனுக்கும் ஒரு 'கால்கட்டு' காலாகாலத்திலே போட்டுவைத்திருந்தால், இப்படி ஆகியிருக்கமாட்டான்; ஊருக்கே அடங்காமல் திரிந்து வந்த பேர்வழிகளை, 'உங்களைத்தான் .... இது நல்லா இருக்கா ...... உங்களைக் கட்டிக்கொண்டு நான் என்ன சுகத்தைக் கண்டேன்.... ஊரிலே குளம் குட்டையா இல்லை ... என்ற விதமான பேச்சை அடி மூச்சுக் குரலாலே பேசி, அடக்கி விட்டிருக்கிறார்கள். இவன் மட்டும் என்ன அசகாயச்சூரனா! ஒண்டிக்கட்டையாக இருப்பதாலேதான் சண்டிமாடு போலச் சுத்தித் திரியறான் என்று பேசிக் கொண்டனர்.
ஒண்டிக்கட்டை உலகப்பன் தனக்கு இருந்த நிலபுலத்தை விற்றுத் தீர்த்தான பிறகு, கிராமத்திலே மிட்டா பாத்யதை பெற்றிருந்த மாணிக்கம் பிள்ளைக்கு ’ஆலோசகராக' தன்னை ஆக்கிக் கொண்டான்.
மாணிக்கம் பிள்ளை தனது பூர்வீகச் சொத்தாக இருந்த முப்பது ஏக்கரை 'வேழமுகன் அருளாலே' நூற்று ஐம்பது ஏக்கராக வளர்த்துக்கொண்டவர். நிலத்தை நீச்சைக் கவனித்துக்கொண்டு, கிராமத்தோடு இருந்துவா. நமது குடும்பத்துக்குத் தலைமுறை தலைமுறையாக இருந்துவரும் 'பெயரைக் காப்பாற்று' என்று மாணிக்கத்தின் தந்தை சதாசிவம் பிள்ளை 'தலைப்பாடாக' அடித்துக் கொண்டிருந்தார். என் பேச்சைத் தட்டி நடக்காத பய , இப்ப கிராமத்திலே இருக்க இஷ்டமில்லேன்னு சொல்லிவிட்டு டவுனுக்குப் போய்விட்டான்! அவனா என் பேச்சைத் தட்டி நடக்கறவன். அவனைப் பிடித்து ஆட்டுதே ஒரு 'மோகினி' - அவனோட வீட்டுக்காரி - - - அது செய்துவிட்ட வேலை என்று சதாசிவம் பிள்ளை பலவருஷங்கள் குறைபட்டுக் கொண்டார்.
டவுனுக்குப் போனதாலேதான் 'நாலு காசு பார்க்க முடிந்தது கண்ணாலே; கொஞ்ச நிலத்தையும் வாங்கிப்போட முடிந்தது. அப்பா சுத்தக் கருநாடகம்..... அவர் பேச்சைக் கேட்டிருந்தா, முப்பது பத்தா குறைந்திருக்குமே தவிர, வளர்ந்தா இருக்கும்’ என்று, வெற்றிகள் பெற்ற பிறகு, சதாசிவம் பிள்ளை காதில் விழுகிற மாதிரியாகவே பேசினார் மாணிக்கம். வயதான காலம். காதும் கேட்கல்லே, கண்ணும் தெரியவில்லை. 'என்னமோ பேசறான் என் மகன்; விளங்க வில்லை' என்று சதாசிவம் முணுமுணுத்தார். ஆனால், மகன் பேசுவது அப்பாவுக்குத் தெளிவாகத்தான் காதிலே விழுந்தது; மறுத்துப் பேச முடியவில்லை; அதனால் காது மந்தத்தைக் காரணமாக்கிக் கொண்டார்.
அந்தக் கிராமத்தை 'முப்போனூர்' என்று சொல்லுவார்கள்; முப்போனூர்' - மூன்று போகம் விளையும் ஊர் - என்ற பொருளுள்ள பெயர். அப்படிக் கொச்சையாக்கப் பட்டுவிட்டது. அந்த கிராமத்திலிருந்து நாற்பது கல் தொலைவிலிருந்த காடானூர், பருத்தி ஆலை அமைக்கப்பட்டு வேக மாக வளர்ந்து 'காடானூர் டவுன்' ஆகிவிட்டிருந்தது. அங்குதான் மிட்டா மாணிக்கம் பிள்ளைக்கு ஆலைக்குத் தேவைப்படும் சிறுசிறு யந்திரப் பகுதிகள் தயாரிக்கும் தொழிற்சாலை.
காடானூர் டவுனில், அவர் மிட்டா மாணிக்கம்!
முப்போனூர் வருகிறபோது, அவர் ஆலை முதலாளி மாணிக்கம்!
மிட்டா மாணிக்கம் பிள்ளை, கிராமத்திற்கு வருகிற போதெல்லாம், ஒண்டிக்கட்டை உலகப்பன்தான் பொழுது போக்குக்கு!
பொழுதுபோக்கு என்றால் அவ எப்படி? இவனுக்கு எது தொடர்பு? முடியுமா முடியாதா! மாந்தோப்பு பக்கம் வரச் சொல்லேன்! - என்ற இவ்விதமான விளையாட்டுப் பொழுதுபோக்கு அல்ல.
எந்த நிலம் தரமானது, யாருடைய கை நொடித்துக் கொண்டு வருகிறது, கடன் சுமை யாருக்கு அதிகமாகிக் கொண்டு வருகிறது. கரும்பு போட்டால் 'தரமாக' வருமா, காட்டாற்றுக் கால்வாய் வெட்டும் காண்ட்ராக்ட் யாருக்குக் கிடைக்கும், கூட்டுறவு பாங்க் டைரக்டர்களின் குணாதிசயம் என்ன, அதிலே ஒருவர் கொஞ்சம் 'போடுவா ராமே' உண்மையா? என்ற இந்த விதமான தகவல் கேட்டுக் கொள்ளும் பொழுதுபோக்கு.
ஓய்வாக ஒரு பத்து நாள் கிராமத்துக்குப் போய்விட்டு வரப்போகிறேன் என்று 'டவுனில்’ சொல்லிவிட்டு வருவார் மாணிக்கம்; அந்தப் பத்து நாளும் ஓய்வே இருக்காது; தோட்டமோ, வயலோ, மாடோ, வண்டியோ, ஏதாவது வாங்கு வதோ விற்பதோ நடைபெறும்.
சதாசிவம் பிள்ளை கண்ணை மூடும்போது, முப்போ னூரில் ஒரே சதுரம் அயன் நஞ்சை நம்முடையதுதான் என்ற மகிழ்ச்சியுடன்தான் இருந்தார்.
அந்த நிலையைக் கெடுத்திடத் துணிந்தான், ஒரு புதுப் பணக்காரன். மிட்டா மாணிக்கம் பிள்ளை வாங்க மறுத்த நிலத்தை எல்லாம் சிறிது சிறிதாக அதிக விலை கொடுத்து வாங்கி வாங்கி, ஒரு புள்ளியாகி, பெரிய புள்ளியாகவும் வளரலானான்.
”தெற்கே வெகுதூரத்திலிருந்து வந்தான். பூர்வீகச் சொத்து ஒரு பைசா கிடையாது. அவன் முப்போனூரில் முப்பாட்டனார் கால முதற்கொண்டு எங்களுக்கு மிராசு பாத்யதை உள்ள ஊர் - நூறு ஏக்கரை மடக்கிப் போட்டு விட்டானே! மடப்பயல்கள் நம்ம கிராமத்துக்காரனுங்க. பேராசை பெரு நஷ்டம் என்பதை மறந்து போய் அவன் 'நாலு காசு’ அதிகம் தருகிறானே என்று ஆசைப்பட்டு, ஒரு வெளியூரானுக்கு இடம் கொடுத்து விட்டானுங்களே..." என்று மிட்டா மாணிக்கம் பிள்ளை, தம்மிடம் மாரியம்மன் பண்டிகைக்குப் பணம் தண்ட வந்த பெரியவர்களிடம் சொல்லிக் குறைபட்டுக் கொண்டார்.
"ஏனுங்க தம்பி! எதிலே சம்பாதனை அந்த ஆளுக்கு? கண்ணை மூடிக்கொண்டு கேட்ட விலை தர்ரானே ....”
'சம்பாதனையா! எதிலேன்னு கேட்கறீங்களா..... அவனுக்கு சம்பாதனை கரண்டியிலே..."
"கரன்ட்டு கம்பெனியா ...."
"கரன்ட் கம்பெனியுமில்லே, சிமெண்ட்டு கம்பெனியும் மில்லே . கரண்டி, கரண்டி; சமயல் கரண்டி”
"ஓட்டல்காரரா?"
”ஓட்டல்காரரு! பேரைப்பாரு! பட்டைச்சோறு வித்துக் கிட்டு இருந்தான் .... மில்லிலே இல்லை ஆளுக. அவங்க கிட்டே ; பொட்டலம் எட்டெட்டணா! தட்டினான் அதிலே சரியான இலாபம்... இப்ப ஓட்டல்காரர் ......."
"வியாபாரம் வலுத்துப் போச்சுன்னு சொல்லுங்க..."
”இப்பத்தான் காப்பி குடிக்காவிட்டா ஒரு பயலுக்கும் எழுந்து நடமாடவே முடியறதில்லை . ஒரு கப் காப்பி நாலணா - ஸ்பெஷல்... எவ்வளவு நிற்கும் தெரியுமா இலாபம் ஒரு கப்புக்கு ; மூணணாவுக்குக் குறையாது..... காப்பித் தூள் கால், மரத்தூள் முக்கால் பாகம் ! சர்க்கரை எங்கே போடறான்! ஷாகரீன் தான்... ஆட்டுப்பால்தான் அசல் பசும்பால் ஆகுது. ஒரே மோசம்..."
'பாரேன் தம்பி! அவனோட ராசியை... ஆயிரமா யிரமாப் புரளுது..."
இப்படி உரையாடல்; மிட்டா மாணிக்கம், புதிய புள்ளியைக் கேவலப்படுத்த எடுத்த முயற்சி நேர்மாறான பலன் கொடுத்தது; பலரும் ஓட்டல் முதலாளி தாண்டவ மூர்த்தியைப் பாராட்டத் தலைப்பட்டனர்; தொடர்பு கொள்ளத் துடித்தனர்.
அந்தத் தாண்டவமூர்த்தி களஞ்சியத்திற்குத் தீ வைத்து விடச் சொல்லித்தான் ஒண்டிக்கட்டை உலகப்பன் தூண்டிக் கொண்டிருந்தான், 'அக்கரை' பக்கிரியப்பனை.
பக்கிரியப்பன், சில வருஷம் சிலோன் தேயிலைத் தோட் டத்தில் வேலை பார்த்துவிட்டுத் திரும்பியவன்; அதனால் 'அக்கரை' என்ற பட்டம். ஆறு குழந்தைகளுக்குத் தகப்பன் ; சொந்தத்தில் அரை ஏக்கர்! பிழைப்புக்கு வழி மிட்டாவிடம் கைகட்டி நிற்பது, தோப்பு குத்தகை எடுப்பது, சந்தைக்குச் சென்று மாடு பிடித்து வருவது, யாராவது மிட்டா மாணிக் கத்தை எதிர்க்கத் துணிந்தால், அவர்களுக்குப் 'பாடம்' புகட்டுவது.
'பட்டா’ தூக்கினா பய, பட்டாளமே வந்தாக்கூட பயப்படமாட்டான்; போலீசிலே சிக்கிக் கொண்டா என்னா? மாமியார் வீட்டுக்குப் போய் வந்தா போச்சி என்கிறான். அப்படிப்பட்ட நெஞ்சழுத்தக்காரன் அக்கரை பக்கிரி என்று கிராமம் பேசுகிறது; ஆனால் பம்பரம் ஆடிக் கீழே தலை சாய்த்து விட்டது என்று கேலி செய்கிறான் ஒண்டிக்கட்டை.
வெளியூரான்களை விட்டு வைக்கமாட்டானுங்க என்று தெரிந்தா, ஓட்டல்காரன். ஒண்ணுக்குப் பாதி விலைக்கு நிலத்தை விற்றுவிட்டுப்போய் விடுவான் என்பது மாணிக்கத்தின் எண்ணம். அதற்காகத்தான் ஒண்டிக்கட்டையிடம் சொல்லி வைத்தார்; அவர் பெயரை எக்காரணம் கொண்டும் இழுக்கவே கூடாது என்று கண்டிப்பான எச்சரிக்கையுடன்! கேஸ் வந்தால், நான் பார்த்துக் கொள்கிறேன் என்றும் வாக்களித்திருந்தார். இதைத் தனக்கே உரித்தான தனித் திறமையுடன், பக்குவத்துடன், 'ஒண்டிக்கட்டை’ பக்கிரியப் பனிடம் சொல்லிப் பார்த்தான்; பக்கிரி, 'இது ஆபத்தான வேலைங்க என்றும், பாவமுங்க' என்றும் சாக்குப் போக்குச் சொல்லிக் காலத்தை ஓட்டிக்கொண்டே இருந்தான். இதற்குள் ஐநூறு ரூபாய் அளவுக்கு மிட்டாவிடமிருந்து ஒண்டிக் கட்டைக்குச் சேர்ந்தது. அதிலே கால் பங்கு பக்கிரிக்குச் சேர்ந்தது. காரியம் மட்டும் முடியவில்லை. தாண்டவமூர்த்தியின் களஞ்சியம் நிறைய கிச்சிலிச் சம்பா! மிட்டா மாணிக் கத்தால் இந்த நிலைமையைத் தாங்கிக் கொள்ள முடிய வில்லை .
# # #
ஒண்டிக்கட்டைக்கு வெற்றி கிடைக்காமற் போகவில்லை. பக்கிரியின் கடைக்குட்டி மகனுக்கு விஷக் காய்ச்சல் வந்த போது, கை எடுத்துக் கும்பிட்டான். காலைப் பிடித்துக் கொண்டான். கடன் கொடுத்தான் உலகப்பன், 'அவ்வளவும் இனாம், சொன்னதை முடித்துவிட்டால்' என்றான்.
சொன்னதை முடிக்கச் சென்றான் பக்கிரி, நல்ல கருக்கல் இருக்கும் வேளையாகப் பார்த்து . களஞ்சியக் காவல் வேலை பார்த்து வந்த கன்னி விழித்துக் கொண்டான்; அடிதடி ; அரிவாள் வெட்டு; கன்னியின் மகன் பட்டாளத்தில் வேலை பார்ப்பவன். லீவுக்கு வந்திருந்தான்;பக்கிரியை அவன் 'புரட்டிப் புரட்டி’ எடுத்து விட்டான். தலை தப்பினால் போதும் என்று ஓடிவிட்டான் பக்கிரி, ஊரை விட்டே. களஞ் சியத்துக்கு ஒரு சேதமும் இல்லை. ஒண்டிக்கட்டையை வெட்கம் பிய்த்துத் தின்றது.
கிராமத்தைவிட்டு ஓடிய பக்கிரி எங்கெங்கோ அலைந்து கிடந்தான். குடும்பம் வறுமையாலே தாக்குண்டது.
'எப்பவாவது எனக்கு எதாச்சும் ஆபத்து ஏற்பட்டா, புள்ளே! மாணிக்கத்தய்யா காலிலே விழுந்து கேள்; அவரு கைவிடமாட்டாரு' என்று பக்கிரி சொன்னதை நினைவிலே வைத்துக்கொண்டு, அவன் மனைவி சொர்ணம், தனக்கு வந்த கஷ்டத்தைச் சொல்லி அழுதாள்.
மாணிக்கம், கடும் கோபத்துடன், ”உன் புருஷன் செய்த காரியத்துக்கு, உதவி வேறே செய்யணுமா . நம்ம ஊர் மிராசுதாரர்லே ஒருத்தர், நம்ம ஊரை நம்பிப் பணத் தைக் கொட்டி நிலம் வாங்கி, நம்ம ஊர் ஆளுங்களுக்குப் பிழைப்புக் கொடுத்துக் கொண்டு வருகிறார். அவருடைய களஞ்சியத்தைக் கொள்ளை அடிக்கத் துணிந்தானே பக்கிரி! அடுக்குமா! அவருக்கு நடப்பதுதான் நாளைக்கு எனக்கு! களஞ்சியத்தைக் கன்னி காப்பாத்திவிட்டான்; நம்ம கிராமத் தோட பெயர் மானம் காப்பாத்தப்பட்டது. எதாச்சும் நடந்து போயிருந்தா, டவுன்லே, 'மிட்டாதாரே! உங்க கிராமத்திலேயா இப்படிப்பட்ட அக்ரமம் நடக்கறது! இப் படியா கிராமத்தைப் பரிபாலித்துக்கொண்டு வர்றிங்கன்னு நாலுபேர் கேட்டா நான் என் முகத்தை எங்கே கொண்டு போய் ஒளிய வைத்துக் கொள்றது. போ! போ!! உனக்கு உதவி செய்தா, நாலுபேர் என்னைப் பத்தி தப்பா நினைத் துக் கொள்வாங்க" - என்று கண்டிப்பாகச் சொல்லி அனுப்பி விட்டார். ஒண்டிக்கட்டை ஏதோ குறுக்கிட்டுச் சொல்ல முயற்சித்தான்; ஒரே பார்வையில் அவனை அடக்கிவிட் டார்.
# # #
'ஒரே ஒரு முறைதான் பார்த்தானாம். அவனோட மனசிலே அவளைத்தான் கட்டிக் கொள்ளணும்னு தோனிப் போச்சி. பொண்ணு நல்ல அழகுன்னு சொல்றான்; அடக்க மானதாம்; படிச்சிருக்குதாம்; வேலை பார்க்குதாம் வாத்தியாரா' என்று கன்னியிடம் மகிழ்ச்சி பொங்கப் பொங்கக் கூறினாள். அவனுக்கு வாழ்க்கைப்பட்ட கோவிந்தம்மாள்.
"அவனுக்குச் சம்மதம்னா எனக்கு என்னடி தடை! இந்தக் காலத்திலே, கட்டிக் கொள்ளப் போறவனோட மனசுக்குப் பிடித்திருந்தாதான் நல்லபடி வாழ்க்கை நடக்கும். அது அந்தக்காலம்! பெரியவங்க பார்த்து பேயாட்டம் ஒருத்தியைக் கட்டிவைத்தாலும், சரின்னு சம்மதிக்கிற காலம்! நான் சம்மதிச்சன் பாரு அந்தக் காலத்திலே, உன்னை என் தலையிலே கட்டின் போது என்று கன்னி பழமையைக் குழைத்துக் கொஞ்சினான்.
"ஏன் என்னவாம் என்னைக் கட்டிக்கிட்டதிலே..” என்று கேட்கலானாள், செல்லக் கோபத்துடன், கோவிந்தம்மாள். ”இப்ப யோசனை செய்து என்னடி பலன்?" என்று கேலி பேசிக்கொண்டே சுருட்டு பற்றவைத்தான் கன்னி.
# # #
பட்டாளத்து வேலையை முடித்துக்கொண்டு, பஸ் டிரைவர் வேலை தேடிக்கொண்டு நல்லபடி இருந்த தங்கள் மகன், தன் மனதுக்குப் பிடித்தமான பெண், பட்டூரில் இருப்பதாகச் சேதி சொல்லி அனுப்பியதைத் தொடர்ந்து அந்தப் பேச்சு நடைபெற்றது.
பட்டூர் சென்றனர் கன்னியும் கோவிந்தம்மாளும் பெண் பார்க்க வாத்தியார் வேலை பார்க்கிற வள்ளி வீடு எது என்று விசாரித்துக் கண்டுபிடிப்பது எளிதாகவே இருந் தது. ஆனால் உள்ளே காலடி எடுத்து வைத்ததும், ”இந்த வீட்டுக்குள்ளே நுழைய உனக்கு எம்மாந் துணிவுடா கிழட்டுப்பயலே ... நீதானா, இங்கே சம்பந்தம் செய்து கொள்ள நினைக்கறே! நடக்காது. என் உடம்பிலே ஒரு துளி உயிர் இருக்கறவரையிலே, நடக்கவே நடக்காது. ஆமாம்..." என்று காட்டுக் கூச்சலிட்டபடி பாய்ந்து வந்தான் பக்கிரி.
தங்கள் மகன், தன் மனதுக்குப் பிடித்த பெண் என்று சொன்னது கடைசியிலே பாவி பக்கிரியோட மகளைத்தானா! புத்தி கெட்டப் பயலுக்கு, எப்படிப்பட்ட நடத்தைக்காரன் இந்தப் பக்கிரி, எப்படிப்பட்ட தீராத பகை நம்ம குடும்பத் தோட மூட்டிக் கொண்டான் என்பது கவனமில்லையா. மூக்கும் முழியும் அழகா இருந்து விட்டால் போதுமா? இந்த இடத்திலே சம்பந்தம் செய்து கொண்டா, கிராமமே காரித்துப்பாதா! எஜமானர் காதிலே கேட்டா எவ்வளவு ஆத்திரப்படுவார்? 'ஏண்டா கன்னி! என் களஞ்சியத்தைக் கொள்ளை அடிக்கவும் கொளுத்தவும் துணிஞ்சு வந்தவன் தானா கிடைத்தான் உனக்கு சம்பந்தியாக!!" என்று சீறு வாரே. நமக்கே அது நியாயம்னு படாதே. சே! தெரியாம வந்துவிட்டமே அவசரப்பட்டு என்று எண்ணிக் கொண்டான்.
அந்த நேரத்தில், பள்ளிக்கூடத்திலிருந்து வீடு வந்தாள் வள்ளி! முகத்திலேதான் எத்தனை சாந்தி! கண்களிலே என்ன கனிவு! புன்னகை! அடக்கம்! பார்த்த கோவிந்தம்மாள், 'இப்படிப்பட்ட தங்கச்சிலை நமக்கு மருமகளாக நாம் கொடுத்து வைக்கவேண்டுமே என்று மனதிலே எண்ணிக் கொண்டாள். கன்னி ஒரு நீண்ட பெருமூச்செறிந்தான்.
# # #
”அதை ஏன் கேக்கறிங்க சம்பந்தி! கிராமத்தானுங்க வரவர எந்த விதமான கட்டு திட்டத்துக்கும் அடங்க மறுக்க றாங்க. பொன்னைக் கொட்டி மண்ணை வாங்கி, இதுக ளோட மாரடிக்க வேண்டி வருது."
”நானும் அவசரப்பட்டுத்தான் கொஞ்சம் அதிக மாகவே வாங்கிப் போட்டுவிட்டேன் நிலத்தை .”
”ஆமாமாம்! பலபேரு சம்மந்தி ! அப்ப என்கிட்ட வந்து தூபம் போடுவாங்க; மிட்டாதாரர் நீங்க இருக்கறப்ப யாரோ வெளியூர்க்காரர் நம்ம ஊர் நிலத்தை வாங்கிவிட லாமா , அப்படி இப்படின்னு .......”
”நான் வந்துங்க, எந்த நிலம் விலைக்கு வந்தாலும், உங்களுக்கு ஏதாச்சும் அதன் பேர்லே கண்விழுந்திருக்கான்னு கேட்டுவிட்டு, 'இல்லே அவருக்கு விருப்பம் இல்லே’ன்னுதகுதி யானவங்க சொன்ன பிறகுதான் 'பிடி' கொடுக்கறது..."
”ஆண்டவனோட அற்புதத்தைப் பாருங்க, எப்படி நம்ம ரெண்டு பேரையும் ஒண்ணு சேர்த்து வைத்தார் பார்த்திங்களா! கிராமத்திலே பலபேர் நம்ம ரெண்டு பேருக்குள்ளே 'பகை மூண்டு கிடக்குதுன்னு கூடப் பேசிக்கொண்டாங்க..."
"களஞ்சியத்தைக் கொள்ளை அடிக்க வந்தானே, ஒரு காவாலிப்பய, அப்பத்தானே! அதை ஏன் சொல்றீங்க போங்க, சில பேர் என்னிடம் வந்து கலகமே செய்தாங்க; உங்களோட தூண்டுதலாலேதான் அந்தப் பய பக்கிரி அந்தக் காரியம் செய்யத் துணிஞ்சான் என்பதாக."
"நம்ம ரெண்டு பேரையும் பிரித்து வைத்தாத்தானே 'தலைகாஞ்சதுகளுக்கு ' இலாபம்; இரண்டு இடத்திலேயும் தின்கலாம்."
"பக்கிரியை ஊரைவிட்டு விரட்டியதே நீங்கதான்னு எனக்குத் தெரியாதா என்ன... பய, இந்தப் பக்கமே தலை காட்ட மாட்டான்! அவன் தலை தெரிந்தாப் போதும். நம்ம கன்னி இருக்கிறான் பாருங்க, சீவிடுவான் சீவி! தீராத பகை இரண்டு பேருக்கும். என்னை நம்பிக் களஞ்சியத்தை ஒப்படைச்சாரு எஜமானரு; என் பேரைக் கெடுக்கற மாதிரி, இங்கேயே கைவரிசையைக் காட்டினானே அந்தப் பக்கிரி! அவனைக் கண்டா, வெட்டி வெட்டிப் போட்டுவிடுவேன் என்று இப்பக்கூட ஆத்திரம் தணியாமத்தான் பேசறான் நம்ம கன்னி."
# # #
முப்போனூர் கிராமமே விழாக்கோலம் பூண்டது! மிட்டா மாணிக்கம் பிள்ளையின் திருமகள் கீதாவுக்கும் மாடர்ன் லாட்ஜ் உரிமையாளர் தாண்டவமூர்த்தியின் ஏக புத்திரன் ரவிக்கும் நடைபெற்ற திருமண வைபவத்தின் போது.
# # #
மணமக்கள் படம் நாளிதழில் வெளியிடப்பட்டிருந்தது. அதைப் பார்த்து சம்பந்தியிடம் காட்டினார் மாணிக்கம். பூரித்துப்போன தாண்டவமூர்த்தி, நாளிதழின் வேறோர் பக்கத்தில் ஒரு செய்தியைக் கண்டு பதறி இதைப் பார்த்தீர் களா சம்பந்தி' என்று கூவினார். மிட்டா மாணிக்கம் வாங் சிப் பார்த்தார்.
கொலை! கொலை! படுகொலை!
'பழைய விரோதம் காரணமாக பக்கிரி என்பவன் முப்போனூர் விவசாயத் தொழிலாளி கன்னி என்பவனைக் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டான். போலீஸ் புலன் விசாரிக்கிறது" என்று செய்தி இருந்தது.
----------
திராவிடநாடு - 19-2-1961
------------
10. வள்ளியின் தேவி
தேவியைப் பெற்ற பசு, தேனப்பன் குடிசையிலே, இருந்தது. பால் விற்றுப் பணம் சேர்த்து, பட்ட கடன் தீர்த்திடலாம் என்ற திட்டம் கொண்டு, பக்கத்து ஊரினிலே, வட்டிக்குக் கடன் கொடுக்கும் வரதப்பனிடமிருந்து வாங்கி வந்த இரு நூறு ரூபாயும், வாழையடிச் சந்தையிலே கொடுத்துக் கொண்டு வந்தான், தேனப்பன், பசு ஒன்று.
சிற்றூரில் இருப்போர்க்கு இது சேதி. எனவே அவர் தேனப்பன் முற்றம் வந்து பார்த்து, சுழிகண்டு, மடிகண்டு, 'நல்ல பசுதானப்பா! விலையும் அதிகம் இல்லை! மேய்ப்பிலும் தேய்ப்பிலும், தீனி நன்றாய் வைப்பதிலும் தான், பசுவுக்குப் பால்வளம் அதிகமாகும். ஆகவே அதனை நன்றாகக் கவனித்து, வளர்த்துவா' என்றுரைத்துப் போனார்கள். எனக் கென்ன, இதைக்கூடக் கற்றுக் கொடுத்திடவா வேண்டும் என்றெண்ணித் தேனப்பன் சிரித்துக் கொண்டான்.
ஆயிரம் கொடுத்தாலும், இதற்கு ஈடு காணாது என்று கூறி ஏழெட்டு ஆண்டுகளில், மொத்தப் பொருள் குவித்த, மேட்டுக்குடி வாசி, மெய்ஞானம் பிள்ளை, வாங்கி வந்த பசுவை, பக்குவமாய்ப் பராமரித்து வரும் பழக்கம் அவனுக்கு உண்டு.
மெய்ஞானம் வீட்டிலே, தேனப்பன் வேலைக்காரன். என்னென்ன வேலைகளை எஜமான் தருகின்றாரோ அதனை எல்லாம் செய்து முடித்துவிட்டு, வீடு திரும்புமுன்னே, 'பசுவுக்கு வேண்டியதைப் பார்த்துச் செய்தாயா?' என்று அவர் கேட்பார்; இவன் அதனையும் செய்திடுவான்.
அதனால், பசுவளர்க்கும் முறையிலேயும் அவன் பக்குவம் பெற்றிருந்தான். எனவேதான், எளிதாய், பசு வளர்த்துப் பால் விற்றுப் பணமும் சேர்க்கலாமென்று அவனுக்கு எண்ணம் வந்தது.
வாங்கி வந்த பசுவின் கன்றுதான் தேவி.
தாயுடன் கன்று சேர்ந்து தோட்டத்துக்கு அழகு தந் திட்டது கண்டு, தேனப்பனும் மகிழ்ந்தான். ஆனால், ஓர் நாள், மேய்ந்துவிட்டு வந்த பசு, வயிறு உப்பிப்போய் மேல்
மூச்சு விட்டபடி, மிரள மிரள் விழித்தது கண்டான்.
தாய் படும் கஷ்டத்தின் தன்மை அறியாக் கன்று, வழக்கம் போல், துள்ளுவதும், வாலாலடித்து மகிழுவதும், கயிற்றை அறுத்துக் கொண்டு பாலுண்ணப் பாய்வதுமாய் இருந்தது.
பசுவோ, வாய்விட்டு எதைச் சொல்லும்! வயிற்றிலே வேதனை. நிற்க முடியவில்லை, நிலைகொள்ளவில்லை. தாளமுடியாத வலியால், பசு, காலை உதைத்ததும் கண்ணில் நீர் வடித்தும், கம்மிய குரலாலே 'அம்மா' என்று கதறுவதுமாக இருந்தது.
தேனப்பனுக்கு அன்று அதிக வேலை. தெருவிலே போட் டிருந்த பந்தல், பழசாகிப் போனதாலே, பார்க்க நன்றாக இல்லை . பிரித்துவிடு' என்றார் எஜமான்.
பந்தல் அமைப்பதற்கு ஆட்கள் உண்டு தனியாக பிரிக் கக்கூடவா அவர்கள்? இதை நீ செய்யலாமென்றார். அவர் சொல்லியான பின்னர், ஆகாது என்று சொன்னால் சீட்டுக் கிழிந்துவிடும். தேனப்பனுக்குத் தெரியும். ஆகவே, பந்தலி னைப் பிரிக்கும் வேலையினை மெத்தக் கஷ்டத்தோடு தேனப் பன் செய்திட்டான்.
மேலே கழிகள் விழும்; இவனும் கீழே விழுவான்; ஏணி நழுவுவது இவனுக்குத் தெரியாது. தூசு கண்ணில் விழும்; துளைத்துக்கொண்டு கண்ணீர் வரும்; நின்று அதைத் துடைக்க நேரம் இல்லை. பந்தலிலே பாதி அளவும் பிரித்து ஆகவில்லை ; பகல் போது பயந்து ஓடுவது, இவனுக்குத்தான் தொல்லை.
இத்தனை தொல்லைக்கிடையில், மூங்கிற் கழியினிலே, பொந்தமைத்து இருந்து வந்த, கருந்தேள் வெகுண்டு வந்து. தேனப்பன் கைவிரலைக் கொட்டிற்று. துடித்து அவன் அழுதான் - தேளை அடித்தாயா, விட்டாயா, என்று கேட்டு எஜமானர் கோபத்தைக் கொட்டுகிறார்.
'பச்சிலை போடாவிட்டால், நெஞ்சுக்கு விஷம் ஏறும்’ என்று கூறினாள், கூட்டி மெழுகும் வேலை செய்துவரும் காமாட்சி.
’சுண்ணாம்பை எடுத்துத் தேள் கொட்டிய வாயில் வைத்து அப்பினால், விஷம் போகும் அரை நொடியில் வலியும் போகும். கைகண்ட மருந்து இது’ என்று கடன் வாங்க வந்திருந்த சின்னப்பன் சொன்னான். இதற்குள், தேனப்பன் உடல் வேர்த்து, மார்பு அடைப்பது போலாகிப் போக, ’இனி வீடு போடா! தேனப்பா! உன்னை நம்பி , எந்தக் காரியம் தான் ஒழுங்காக நடந்திருக்கு! ஏதேதோ கிடைக்கும் சாக்கு!’ என்று எஜமானர், எரிச்சலோடு ஏசினார். இவன் மார்பிலோ, எரிச்சல் மூண்டது.
ஓடினான் மருந்து போடும் உத்தண்டன் குடிசைப் பக்கம்! அங்கு அவனும் இருந்ததாலே, கிடைத்தது பச்சிலை மருந்து. நோயும் குறைந்தது; ஆனால் அலுப்பு மேலிட்டது.
அதனால் தேனப்பன் அன்று அயர்ந்து தூங்குகிறான். அவன் பட்ட கஷ்டமெல்லாம் அறிந்ததனால் அவன் மனைவி பசு கதறும் குரல் கேட்டுப் பதறிப் போனாள். எனினும், அவனை எழுப்பவில்லை; தானே எழுந்து போய்த் தடவிக் கொடுத்துப் பார்த்தாள்; தண்ணீர் வைத்துப் பார்த்தாள்; பசுவோ முன்பைவிட வலி கொண்டு துடிதுடித்துக் கிடந்தது. என்ன எண்ணமோ, கிட்டே வந்த கன்றை, நாவினால் தடவிற்று, கண்ணீரைப் பொழிந்தபடி.
அம்மா! என்றழைப்பேன். அலறி அருகே வருவதுதான் என் தாயின் வாடிக்கை. இன்று என்ன இது? என் தாயே, 'அம்மா! அம்மா!' வென்று அழுதழுது அழைக்கின்றாளே. நான் என்ன கண்டேன் , நானோ சிறு கன்று! என்று எப்படிச் சொல்லும் - ஆனால் பார்வை, இதைத்தான் சொல்லிற்று.
”தாயே மகமாயி! தயை செய்ய வேணுமம்மா. வாயில்லா ஜீவன் இது. வதைபடுவது அழகா! நீதான் காப்பாற்றவேணும்" என்று சாமியை வேண்டிக் கொண்டு, போய்ப் படுத்தாள், தேனப்பன் மனைவி.
கோழி கூவிற்று. படுக்கையில் இருந்தபடி கண்விழித்துப் பக்கம் படுத்திருந்த கணவனைப் பார்க்கலானாள். அங்கு அவன் இல்லை. அலறித் துடித்தெழுந்து, தோட்டப்புறம் சென்றாள்; அங்கு தேனப்பன், தலையில் கைவைத்து, பசு எதிரில் உட்கார்ந்திருந்தான். நொப்பு, நுரை தள்ளி, பசுவும் , இருக்கக் கண்டாள். குரலெடுத்துப் பார்த்துவிட்டுப் பசு குமுறிக் கிடக்கும் நிலை. தாயின் முகம் பார்த்துப் பார்த் தழுதபடி கன்று இருக்கக் கண்டான்.
”என்ன இது கண்றாவி! இப்படியே விட்டுவைத்தால், மோசம் போய்விடுவோம். கூட்டிவா , யாரையேனும்” என்று மனைவி கூறக் கேட்டுத் தேனப்பன் யோசித்தான் ; முடிவு செய்தான்.
”கன்றைக் கவனித்துக்கொள்; கஷ்டத்தோடு கஷ்டமாகப் பசுவைக் கொண்டு சென்று காட்டுகிறேன் கோவிந்த டாக்டரிடம். சிந்திப் பசுவுக்கு சளி ஜுரம் வந்தபோது, எஜமான் அழைத்தார். இந்தக் கோவிந்தன்தான் வந்தார். ஊசி போட்டார். உடனே நோய் ஓடிப்போய்விட்டது. நானும் நமது பசுவை, அவரிடமே காட்டுகிறேன். மனிதருக்கு வருகின்ற நோய்களெல்லாம் இப்போது, மாடுகளுக்கும் வந்து தொலைக்குதென்று, கோவிந்த டாக்டர் சொன்னார் என்று கூறி, கயிற்றை அவிழ்த்தான், தேனப்பன்.
பசுவோ, ஒப்பவில்லை; மிச்சம் உள்ள வலியைக் காட்டி, இழுத்தபடி இருக்கிறது. என் கன்று இங்கு இருக்க, ஏன் என்னை வாட்டுகின்றீர். மருந்துண்டு பயனும் ஏது? இரவு முழுவதும் வயிற்றினுள்ளே குடிகொண்ட நோயும் என்னைக் குற்றுயிராக்கிவிட்டது. கண் மூடும் வரையில், கன்றைக் காணலாம். இங்கிருந்தால். ஆவிபோகும் வரையில், நாவினால் நீவி நீவி, என் அன்பினை அளித்து மகிழ , நான் கன்றுடன் இருக்க வேண்டும் - மருத்துவமனை இழுத்துச் செல்ல வேண்டாம்' என்று அந்தப் பசு எண்ணிற்று போலும். அது தான், என்றைக்கும் இல்லாத முறையில் அன்று, முரட்டுத்தனமும் செய்து முட்டவும் செய்தது.
தாயுடன் இவர்கள் ஏதோ மல்லுக்கு நிற்கிறார்கள்; நாம் இந்த நேரம் நம்மாலானது செய்வோம் என்று எண்ணியோ என்னவோ, கன்றும், 'அம்மா, அம்மா' என்று அழுதபடி அருகே நின்ற தேனப்பனைக் காலால் உதைத்தது; பலமாகத்தான்.
கோபத்தால் தேனப்பன் கன்றை ஓங்கி அறையப் போனான். "வேண்டாமப்பா ! கன்று தாளாது, கனமாக அடித்தால்” என்று சொல்லி அதற்குத் துணையாய் நின் றாள் சிறுமி வள்ளி.
தன் பக்கம் வந்த வள்ளியை நாவினால் தடவி நின்ற, கன்றினைக் கண்டு பசு கதற, அங்கு இருந்த நிலை, நெஞ் சிலே இரக்கம் உள்ள எவரையும் உருக்கும்.
தேனப்பன், இழுத்துச் சென்றான்; தெருவிலே கண்டோரெல்லாம் , தேறுவது கடினம் என்றனர்; இவன் தேம்பிடும் நிலையும் பெற்றான்.
”கைராசி உள்ள டாக்டர், கோவிந்தன் என்பார். அத னால், எப்படியும் என் பசுவை அவர் காப்பாற்றிவிடுவார்”, என்று நம்பினான் நடுக்குற்றாலும்.
நாலைந்து வீடே மிச்சம் - பிறகு ஓர் சின்னத்தோட் டம் - தோட்டத்தை ஒட்டியேதான் முற்றமொன்றும் இருக்கிறது -- டாக்டர், அங்குதான், வழக்கமாக, மாட்டுக்கு வைத்தியம் பார்ப்பார்.
சென்றான் தேனப்பன் அங்கே -- டாக்டர் இல்லை.
'ஏனப்பா' என்று கேட்டான், டாக்டரின் வேலை யாளை.
”நேற்றே சென்றார் டாக்டர்! நெடும்பாளூர் மிட்டா தாரர் நேசமாய் வளர்க்கும் நாய்க்கு இவர் தந்த மருந்தினாலே, சுகமாகப் பிரசவமாச்சாம் - அதற்காக விருந்து அங்கே!' என்று அவன் சேதி சொன்னான். தேனப்பன் பசு வைப் பார்த்தான் ; பசுவோ, எங்கெங்கும் தன் கன்று கண்டு குரல் கொடுக்கலாயிற்று. ஆனால் ஒவ்வோர் முறையும் குரலில் ஒலி குறைந்து வருகிறது கண்டு, உடன் இருந்த வேலைக்காரன், 'நேர்த்தியான பசுதான்; நேற்றே வந்திருந் தால், பிழைத்திருக்கும்!' என்று சொல்லி, நீட்டுகிறான் சாவோலை வார்த்தையாலே.
”கெட்ட பேச்சுப் பேசாதே அப்பா!" என்று, மனம் நொந்து தேனப்பன் கூறுகின்றான். பசுவோ, நிற்க முடியா மல், தரையில் சாய்ந்தது. தேனப்பன் அழுதான்.
"ஆமாமாம்! மோட்டார் சத்தம் ; அவர்தான்; அவர் தான்!" என்று அலறினான், மகிழ்ச்சியோடு. டாக்டர் வந்தார். தேனப்பன் அவர் கால் தொட்டு, வார்த்தைகள் பேசாமலேயே வீழ்ந்திருக்கும் பசுவினைக் காட்டுகின்றான்.
'விழி ஆடுகின்றதா’ என்று பார்க்கின்றார், டாக்டர்.
சிறிதளவு அசைவு இருக்கிறது. என்றாலும் ஒளி போய்க் கொண்டே இருக்கிறது.
"நேற்றிரவு முழுவதும் கத்திக் கத்தி..." என்று சேதி சொல்ல வந்த தேனப்பனைத் தடுத்து, டாக்டர் சொன்னார். ”வயிறு உப்பிப் போனதுதான் தெரிகின்றதே! மாடு, கன்று வாங்கிடுதல் எளிது அப்பா! ஆனால் அதனை வளர்த்திடச் சக்தி வேண்டும்; புத்தியும் வேண்டும். சிந்திக்கு சளி என்று கண்டதுமே, சேதி சொல்லி அனுப்பினார் உன் எஜமான். நீயோ, குற்றுயிரான பின்னே , கொண்டு வந்தாய், உன் பசுவை. நான் என்ன செய்ய? கடுகளவேணும் கவனிப்பு இல்லை. காட்டிலே மேயவிட்டாய், தீனிபோட மனமில்லாமல். ஏதேதோ விஷச் செடியைத் தின்றதாலே இதற்கிந்தக் கதி வந்ததப்பா. இனி ஒன்றும் மருந்து இங்கு இல்லை.
”இதோ! இனி இதற்கு மருந்தும் தேவையில்லை!" என்று அவர் சொல்லும் போதே, இழுப்பு வந்தது போலாகிப் பசுவும் துடித்தது ஒரு விநாடி ; பின்னர் தொல்லை நீங்கி, நோயை வென்று, பிணமாயிற்று.
தேனப்பன் வீட்டுக்கு அன்று வரவேயில்லை.
தேம்பிக் கிடந்த வள்ளிக்கு ஆறுதல் கூற எவராலும் இயலவில்லை .
வீட்டிற்குள்ளே இருக்கவே வள்ளிக்கு மனமும் இல்லை. கன்றைக் கட்டி அழுதபடி இருந்தாள், தோட்டந் தன்னில்.
அன்று வள்ளி கொண்ட பாசம், தேவிக்கு தாயில்லாக் குறையைப் போக்கிற்று.
எவ்வளவு கடினமான வேலை வந்து குவிந்தாலும், தேவிக்கு வேலை செய்யத் தயங்கிட மாட்டாள், வள்ளி.
குளிப்பாட்ட, நல்ல குளம் அழைத்துச் சென்று, அதற்குத் துணை நின்று, கழுவி விட்டு அழகு பார்ப்பாள்.....
தாமரை கிடைக்கும் அங்கு ; அதை எடுத்து 'தேவி'க்கு மாலையாக்கி அழகு பார்ப்பாள்.
தொழுவத்தைச் சில நாட்கள் பார்த்துப் பார்த்து, அழுதிட்ட 'தேவியும், வள்ளி அன்பால், புதுத் தெம்பு கிடைக்கப்பெற்று, பொலிவு பெற்று வளர்ந்துவரக் கண்டார் ஊரார்.
"வள்ளிக்குக் கன்றின் மேல் உயிர் . கண்டீரா! வரப்போகும் கணவனுக்குக்கூட, இவள் இத்தனை பணிவிடைகள் செய்ய மாட்டாள் போலிருக்கிறதே, என்ன கூத்து!' என்று பொக்கை வாய்ப் பாட்டிகள் சொல்வர்; வள்ளி, 'போ, பாட்டி! எப்போதும் உனக்குக் கேலிதானா?' என்று கேட்பாள். கேட்கும் போதே, 'தேவி' மீது கண் இருக்கும்; கரத்தால் முது கைத் தடவிக் கொடுத்தபடிதானிருப்பாள்.
’தாய் போனபின் கன்று ஏன் தான், வீணாய். இதனை விற்றால், கடனிலே ஒருபகுதி கட்டலாமே' என்றெண்ணித் தேனப்பன் பேசும் போதே, எழுந்து போய், அவன் காலைக் கட்டிக் கொண்டு, என் கன்றை விற்காதீர். வேண்டாமப்பா! எப்பாடுபட்டேனும், நான் வளர்ப்பேன். பாரப்பா , தாயால் வந்த, கடனையும் தேவி தீர்ப்பாள். ஓர் நாள்! அதற்கெல் லாம் நான் உறுதி . நம்பு அப்பா! கன்று போனால் நான் தாளமாட்டேன்" என்று கெஞ்சுவாள் வள்ளி. அவன் சிரித் துக் கொண்டே, 'இவளுக்குத்தானென்ன பைத்யமோ? சரி! சரி! போ! கன்றும் நீயும் சுகமாக வாழுங்கள், அது போதும் என்பான். 'எங்கப்பா தங்கப்பா!' என்று சொல்லி, எகிறி
குதித்திடுவாள், வள்ளி.
பச்சைப் பசேலென்ற காட்சி காட்டும் பட்டிக்காடு தான் பாங்கான பூமி! பாவலர்க்கு மட்டுமல்ல; ஓவியர்க்கும்! அதனால் ஓர் நாள், வள்ளியுடன் தேவி விளையாடும் காட்சி, படமெடுத்தான் ஓர் இளைஞன், பின்னர் ஓவியம் தீட்ட.
'என் கன்றை போட்டோவும் எடுத்தாரப்பா,' என்று எக்காளமிட்டாள் வள்ளி.
ஓர் நாள், தேவிக்கு விளையாட்டு வேகம். வள்ளி கரமிருந்த கயிற்றினை அறுத்துக் கொண்டு, மான் தோற்க ஓடிற்று வயலை நோக்கி ; நான் அழைத்தும் போகின்றாய்; போ! போ! தேவி! நான் இனி உனக்கு அக்கா அல்ல!! என்று கூறுவாள் போல் வள்ளி, கோபம் காட்டித்தான் போனாள், விளையாட்டைவிட்டு, 'தேவி' பின்னோடு வருமென்று, வீட்டுப் பக்கம் நடக்கலானாள்.
சிறிது தூரம் நடந்து, வள்ளி திரும்பிப் பார்த்தாள்; தேவி காணோம். 'தேவி! தேவி!' என்று அழைத்தாள், குரலை உயர்த்தி. எங்கோ 'ளொள், ளொள்' என்று நாய் குரைக்கும் ஒலிதான் கேட்டாள்.
ஆள் உயரம் வளர்ந்துவிட்ட சோளக்கொல்லை ; காற்று மில்லை; ஆனால் ஆடுகிற நிலையில் கண்டாள். அங்கு தான் நாயின் சத்தம். தேவியும் அங்குதான் மேய்கின்றாளோ. காவலுக்கு உள்ள நாய் துரத்தித்தான் இந்தக் கடும் சத்தம் எழுப்புகிறது என்று எண்ணிக் கவலை கொண்டாள். சோளக் கொல்லை, களமாயிற்று. தேவியைத் துரத்தித் துரத்தி, நாயும் கடிக்கிறது, வெறி கொண்டது போல. ஓடிப்பழக்க முண்டு தேவிக்கு ; என்றாலும் அன்று பூசனைக் கொடி யொன்று காலில் சிக்கி, ஓட்டத்தைத் தடுக்கிறது; நாய்க்கு வேட்டை!
தேவிக்குத்தான் ஏதோ ஆபத்தென்று, தலைதெறிக்க ஓடுகிறாள் வள்ளி சோளக்கொல்லை நோக்கி . அங்கு அவள் கண்ட காட்சி, பயமூட்டிற்று; கன்று கடிப்பட்டுக் களைத்து வீழ்ந்து கிடக்கக் கண்டாள். புண் கண்டு வெற்றி கண்டோம் என்று எண்ணி, போக்கிர் நாயும், சுற்றிச் சுற்றி வந்து தன் வீரம் ஊரார்க்குக் கூறுவது போல், குரைத்தபடி இருந்தது; குலை நடுங்கிற்று.
தேவியை நெருங்கிப் போக முடியவில்லை; நாய் இவளை முறைக்கிறது; குரைக்கிறது; கடிக்க வருகிறது. போய்த் தேவி யைக் காக்காவிட்டால் பொல்லாத நாய் மேலும் கடித்தே போடும். என் செய்வாள் வள்ளி? எடுத்தாள் ஓர் கல் -- குறிபார்த்து தன் கோபமெல்லாம் கல்லோடு கூட்டி, வேகமாய் வீசினாள் நாயைப் பார்த்து . விர்ரென்று பறந்தது அந்தக் கருங்கல் துண்டு; வெறிபிடித்த அந்த நாயின் மண்டையில் வீழ, துடிதுடித்து நாய் கத்தி, சுருண்டு வீழ்ந்தது; அப்போதே செத்தது.
'செத்தொழிந்து போனாயா, நாயே!' என்று சொல்ல மனமில்லை, வள்ளிக்கு ; துரத்திவிடத்தான் கல்லை வீசினாள். அது அந்த நாயைச் சாகடிக்கும் என்று அவள் எண்ண வில்லை; திகைத்து நின்றாள்.
'டாமி! டாமி!' என்றோர் சத்தம்! வள்ளி, திகில் கொண்டாள். 'நாய்க்குச் சொந்தக்காரன் வருகின்றானோ, நான் செய்தது கண்டால், என்னைவிடவே மாட்டான். போய் ஒளிந்து கொள்ளவேண்டும்' என்று எண்ணி வேறோர் புறம் ஒதுங்கிப் புதர் நாடிப் பதுங்கிக் கொண்டாள்.
மீண்டும், 'டாமீ! 'டாமீ!’ எனும் சத்தம்.
எவரும் அறியாவண்ணம் , இனி இங்கு இருந்திடுதல் ஆபத்து என்று, வீடு சென்றாள், வள்ளி ; கன்று இல்லை.
'கன்று எங்கே, வள்ளி' என்று கேட்டான், தேனப்பன் - கண்ணீர் விட்டாள் - மென்று விழுங்குவது போலச் சேதியை மெல்ல மெல்லச் சொன்னாள் வள்ளி.
”ஐயையோ! அப்படியா செய்துவிட்டாய். மிட்டா மாணிக்கம் என்னும் முரடன் நாய்தான், அந்த டாமி. இந் நேரம் கண்டிருப்பான், நாய் செத்திருக்கும் கோரம். கோபம் மூண்டிடுமே, என்ன செய்வானோ? வள்ளி! நீயும் கல்லை வீசுகையில் கண்டார், உண்டோ ?" என்று திகில் கொண்ட தேனப்பன் கேட்கலானான்.
”இல்லை அப்பா!" என்று சொன்னாள், விக்கி, விம்மி.
”ஏலே! யார் அங்கே!' என்றோர் குரல் கேட்டுத் தெருவில் வந்தான்; கையில் துப்பாக்கியுடன் நின்றான் மிட்டா! அவன் காலடியில் கிடந்தது. கன்று; தேவி!
'உன்னுடையதா , கன்று?' என்று கேட்டான், மிட்டா!
ஆமாம் என்பதனைக் காட்டத் தலை அசைத்து நின் றான் தேனப்பன்.
'எங்கே வள்ளி?' என்று அந்த மிட்டா கேட்டான். தேனப்பன், ஏதேது எல்லாமே தெரிந்துதான் இங்கு இவன் வந்துள்ளான் என்று எண்ணி நடுங்கிப் போனான்.
மாணிக்கம் சிரித்தான். 'போ! போ! வள்ளியிடம் கூறு. கன்று சாகவில்லை; என் நாயைக் கல்லாலே அடித்துக் கொன்றாள். நான் அதனைக் கொல்வதற்கு முன்னதாக வெறி அதற்கு. அதனாலே சுட்டுக் கொல்ல காட்டுப் பக்கம் கூட்டி வந்தேன். சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடி நாயும், கன்றினைக் கடித்தது ; சண்ட வள்ளி, கல்லால் அடித்துக் கொன்றாள்' என்று கூறி நின்றான், மாணிக்கம். தேனப்பன், மகிழ்ந் தான் , கேட்டு.
உள்ளே ஒடுங்கி இருந்த வள்ளி, ஓடோடி வந்து கன்றை ஆவலோடு, தடவிக் கொடுத்தாள். உடனே தேவி தாவிற்று. அவள் மேலே வழக்கம்போல்.
”இப்போதே டாக்டரிடம் எடுத்துச் சென்று, ஏதேனும் மருந்து கொடு . கன்றை வெறிகொண்ட நாய் கடித்த காரணத்தால், விஷம் இருப்பினும் இருக்கும்," என்று கூறித் துப்பாக்கி துடைத்தபடி சென்றான் மிட்டா. துயரத்திலாழ்ந்து விட்டான், தேனப்பன்.
'டாக்டரிடம் தான், தாயும் அழைத்துச் சென்றேன்!’ என்று சோதித்து அவன் நின்றான்; வள்ளி , இப்போதுமா? டாக்டர் மருந்து இல்லை என்று கூறிடுவார்? வா அப்பா என்று கூறினாள்.
சென்றனர். கன்றுடன்.
டாக்டரைக் கண்டனர்; முன்பிருந்தவர் அல்ல; இளை ஞர் அவர். கன்றின் வனப்பைக் கண்டார்; அதைக் கண்ணீரால் நனைத்தபடி நின்ற பெண்ணைக் கண்டார். இத்தனை அன்பு உனக்கு இந்தக் கன்றினிடம் இருப்பது கண்டு மகிழ் கின்றேன் , பெண்ணே! பயப்படாதே! கன்றுக்கு ஆபத்து வராது, காப்பேன்' என்றார்! அதன் கழுத்திலே கரம் சேர்த்து வள்ளி முத்தமிட்டாள்.
காதசைத்து, கன்று அன்பைக் காட்டிற்று - வள்ளியிடம்! கண்டார் டாக்டர்.
'வாயில்லா ஜீவன் என்று கூறுகின்றோம். காதும் கண் ணுங்கூட, மொழி பேசும் வித்தை காணீர்' என்றான்; மருந் தளித்தான் தேவிக்கு, வள்ளி காண.
தேவி பிழைத்துக் கொண்ட சேதி, தெருவெல்லாம் பரவிற்று.
வள்ளியின் முகமோ , புதுப்பொலிவு பெற்றது ; மகிழ்ச்சி வெள்ளம்!
'என் கன்றுக்கு இணையாக இன்னொன்று உண்டோ, ஈரேழு பதினாலு லோகம் முற்றும்' என்றெல்லாம் கூவி ஆடுகின்றாள்; என்னாலும் முடியுமென்று கூறுவதுபோல, தேவியும் துள்ளித் துள்ளி ஆடிற்று.
'பத்தோ பதினைந் தோதானப்பா தரலாம் இந்தப் பசுங் கன்றுக்கு. என்றாலும், வட்டிக்கு ஆகிலும் இது கிடைக்கட் டும்' என்று கூறி இழுத்துச் சென்றான் தேனப்பனுக்குக் கடன் கொடுத்த வரதப்பன். வள்ளி வீழ்ந்தாள் கீழே! கயிறறுத்து ஓடிவந்த கன்று, பக்கம் நின்று, நாவால், வள்ளியின் நெற்றி யினைத் தடவிற்று; கண்டார்.
வரதப்பன், என்ன செய்வான்?
'இதை எல்லாம் பார்த்திருந்தால், என் பணத்துக்குத் தான் கேடு. ஏடா! போ! போ! பணம் கொடுத்துவிட்டுப் பசுங்கன்றை நீ, பரிவோடு வளர்த்திடலாம். இல்லை யென்றால், பத்தோடு பதினொன்று என்பதுபோல், பசுங்கன்றும் என் தோட்டம் சேரும்' என்றான்.
"இந்தா இருபது ரூபாய் நோட்டு. கன்றை விட்டுவிடு!” என்று கூறி நின்றான், எங்கிருந்தோ அங்கு வந்த இளைஞன்.
கன்று, வள்ளி கரம் சேர்ந்தது; கண், கேள்வியைக் கேட்டது.
'கன்றும் நீயும் ஆடிய காட்சியை, படமெடுத்தேன் ஓர் நாள். பின்னர் அதனை ஓவியமாய்த் தீட்டினேன்; அது கண்ட நல்லோர் எனக்குத் தந்தனர் பரிசு ! அதில் இது சிறு தொகை!" என்றான் இளைஞன்.
அவன் கூறும் சேதி, தன்னைப் பற்றி என்று அறிந்தோ, தேவி காதை, அவன் பேச்சுக்குரல் பக்கம் காட்டி நின்றது; அழகான தோற்றம்.
”பாரப்பா, என் தேவி! தன்னைத்தானே விடுவித்துக் கொள்ளும் நிலை பெற்றுவிட்டாள். இதுமட்டும் அல்ல அப்பா முன்பே சொன்னேன்! முன்னம், தாயாலே ஏற்பட்ட கட னெல்லாம், தேவியே தீர்த்துவைப்பாள்; பார் எந்தன் பேச்சை" என்று வள்ளி கூறிவிட்டு, வாரி அணைப்பதுபோல் தேவியைத் தழுவுகின்றாள்.
தேவியும் வள்ளியின் காதோடு, தன் வாயைக் கொண்டு சேர்த்து ஏதேதோ கதை பேசி மகிழ்கிறது.
------------
'திராவிட நாடு - 19-2-1961
--------------
11. தழும்புகள்
.
அவன் ஓர் ஏழை! ஆனால் அவன் மனதிலே கொந்தளித்துக் கொண்டிருந்த எண்ணம், எப்படித் தனது ஏழ்மையைப் போக்கிக் கொள்வது என்பது அல்ல; எப்படி நிம்மதியான வாழ்க்கையைப் பெறுவது என்பது அல்ல; அதைப்பற்றி எண்ணிப் பார்த்திட அவனுக்கு நேரமே இல்லை. எந்த நேரமும் அவன் மனதிலே கொந்தளித்துக் கொண்டிருந்த எண்ணம் அக்ரமம், அநீதி இவற்றைத் தொலைத்தாக வேண்டும் என்பதுதான்!
அவன் ஓர் ஏழை! ஆனால் நல்ல உடற்கட்டு, துணிவு; தனக் கென்று எதையும் தேடிப் பெற்றாக வேண்டும் என்ற நினைப்பற்ற நெஞ்சும் வாழ்க்கை நடந்த எதையாவது செய்தாக வேண்டுமே என்ற எண்ணம் கூட அல்ல; வாழ்க்கையிலே ஏன் இத்தனை வஞ்சகமும் அநீதியும் நெளிகின்றன என்ற கேள்வியே அவன் மனதைக் குடைந்து கொண்டிருந்தது.
அவன் ஏழை ! ஆனால் மற்ற ஏழைகள் மனதிலே மூண்டிடாத கேள்வி குடையும் மனத்தினன்; மற்ற ஏழைகளுக்கு இந்தக் கேள்வி தோன்றியிருந்திருக்கலாம் - பல சந்தர்ப்பங்களில். ஆனால் அவர்கள் அந்தக் கேள்விக்கான விடை கண்டிடத் தம்மால் ஆகாது என்று விட்டு விட்டனர்; தமது வாழ்வுக்கு வழி தேடிக்கொள்ள முனைந்தனர்; மும்முர மாயினர். பிறகு அவர்களுக்கு வேறு எண்ணம் எழவில்லை. இயல்பு அதற்கு இடம் கொடுக்கவில்லை.
அவன் ஓர் ஏழை - மற்ற பல ஏழைகளைப் போலவே உழைத்து உண்டு, உலவி உறங்கியும் வந்தான். ஆனால் அதுதான் வாழ்க்கை என்று திருப்தி பெறவில்லை. அவன் உலகிலேயே காணக்கிடக்கும் கேடுகளை ஒழித்தாக வேண்டுமே, என்னவழி அதற்கு, என்று எண்ணி எண்ணி மனதை எரிமலையாக்கிக் கொண்டான்.
அவன் ஓர் ஏழை -- ஆனால் மற்ற ஏழைகள் சிரித்துக் கொண்டிருப்பதைக் காணும்போது சீற்றம் பீறிட்டுக் கொண்டு வந்தது - இத்தனை கொடுமைகள் இழைக்கப் படுகின்றன; ஏன் என்று கேட்கக்கூடத் திராணியற்றுக் கிடக்கிறார்களே!
ஏன்? ஏன்? ஏன்? எப்படி முடிகிறது அவர்களால்? என்னால் முடியவில்லையே!-- என்று கேட்டபடியிருந்தான் - ஊராரைப் பார்த்து அல்ல - தன் உள்ளத்தை .
அண்ணன் மகா முரடு! அண்ணன் காலை யாராவது மிதித்தால், அவர்கள் தலையை மிதிக்கும் - அவ்வளவு ரோஷம்! எவனாக இருந்தாலும் கூழைக்கும்பிடு போடாது! எதைக் காட்டினாலும், ஆசைப்பட்டு பல்லை இளிக்காது என்று சொல்லுகிறார்கள் மற்ற ஏழைகள் - காதிலே விழுகிறது; ஆனால் காரணம் புரியவில்லை , அவர்களின் போக்குக்கு !
முருங்கையை எளிதாக ஒடித்துவிட முடிகிறது. தேக்கு? எளிதாக முடியாதல்லவா! அதுபோலவே தன் இயல்பும் மற்ற ஏழைகளின் இயல்பும் - இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசமும்!! புரியவில்லை ! புரியாததால், கோபம் அதிகமாக வளர்ந்தது; குறையவில்லை.
அவன் ஏழை! ஆனால் ஏழைக்கும் பெயர் உண்டே இவன் பெயர், குப்பம் முழுவதும் கூப்பிடுவது 'அண்ணே ' என்ற செல்லப் பெயர். பெற்றோர் இட்ட பெயர் மாகாளி!
அப்பவே தெரியும் போலிருக்கு டோய் அண்ணனோட குணம், எப்படி இருக்கும் என்று, பெத்தவங்களுக்கு. பேர் பார்த்தயேல்லோ! வெறும் காளிகூட இல்லா, மாகாளி! என்று அந்தக் குப்பத்திலே உள்ள மற்ற ஏழைகள் பேசிக் கொள்கின்றனர்.
'மாகாளி - அந்தக் குப்பத்திலே பிறந்தவனல்ல! ஏதோ ஒரு குப்பை மேடு! அது என்ன இடமா இருந்தாத்தான் என்னவாம்!! என்று பதில் வரும், குப்பத்தார் பக்குவமாக விவரம் கேட்கும்போது.
ஊர் பெயரே கூறாத போது பெற்றோர் பெயரையா மாகாளியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியும்? அப்பனா! எங்க அப்பனைத் தானே கேட்கறே? ஏன், போய் கூட்டிகிட்டு வரப்போறியா? அவன் செத்துச் சிவலோகம் போயி வேண வருஷமாகுதுன்னு சொல்லிச்சி எங்க அம்மா , அது சாக றப்ப ....... எனக்கு வயசு எட்டு, அப்போ .......'
”ஐயோ பாவம்!" என்பார்கள் சிலர்.
”உருகாதடா, உருகாதே! ஏன், இப்ப அவங்களும் இருந்து, நம்மைப் போல நாய் படாதபாடு படவேணுமா ..... போய்விட்டாங்களே, அதைச் சொல்லு, நிம்மதியா .......”
மாகாளிக்கு என்ன வேலை? எந்த வேலையாவது கிடைக்கும் - உடல் உழைப்பு வேலை! பாரமூட்டை சுமப்பதோ - - கட்டை வெட்டுவதோ - கிணறு தோண்டுவதோ - வண்டி ஓட்டுவதோ ஏதாவது ஒன்று. இன்னின்னாருக்கு இன்னின்ன வேலை என்று ஒரு திட்டமா இருக்கிறது? விருப்பம் அறிந்து வேலை கொடுக்கும் இடமா இந்த உலகம்! பசுவைக் கழுவி சுத்தமாக வைத்திருக்கிறார்கள். எருமையைச் சேற்றிலே புரள விடுகிறார்கள்; இரண்டும் பால் கொடுக்கிறது! இந்த உலகத்தில் ஏதாவது ஒரு ஒழுங்குமுறை இருக்கிறதா என்ன! மாகாளி கேட்பான் இதுபோல - ஏண்ணேன் , உனக்கு ஏத்ததா ஒரு ஒழுங்கான வேலையைத் தேடிக் கொள்ளமாட் டேன்கிறே' என்று சொந்தத்துடன் கேட்பவர்களும் உண்டு.
அவன் ஏழை- ஆனால் ஏழைக்காக இந்த உலகம் இல்லை என்ற எண்ணம் அவனுக்கு. ஏழையை இந்த உலகம் , ஏழ்மையில் இல்லாதவர்களின் முன்பு நடமாட விட்டு வேடிக்கை காட்டுகிறது என்ற எண்ணம்!!
ஐயோ பாவம்!' என்று உருக்கமாகப் பேச வேண்டுமே; ஏழை இல்லாவிட்டால் எப்படிப் பேச முடியும், அதுபோல? அதற்காகத்தான் இந்த உலகம் நம்மை வைத்துக் கொண்டிருக்கிறது; இல்லையென்றால் இவ்வளவு கொடுமை செய்யும் இந்த உலகம் ஒரே விழுங்காக நம்மை விழுங்கிவிட்டு, வேலை முடிந்துவிட்டது என்று கூறிவிடாதா என்ன!!" என்று கேட்பான் மாகாளி. மற்றவர்கள், ”அண்ணன் வேதாந்தம் பேசுது! ஒரு சமயம் அதனோட அப்பாரு பெரிய சாமியாரா இருப்பாரோ?" என்று பேசிக் கொள்வார்கள்.
"புத்தி உனக்கு உலைக்கைக் கொழுந்துடா டோய்! சாமியாரா இருந்தா பிள்ளை எப்படிடா பெத்துக்க முடியும்?" என்று கேட்பான் ஒருவன். ”பிள்ளை பொறந்த பிறகு சாமி யாராயிட்டிருக்கக் கூடாதா" என்பான் இன்னொருவன். ”ஏம்பா! சாமியாரா வேஷம் போட்டுகிட்டே நம்ம சடையன் மகளோட சினேகிதம் வைத்துக்கொள்ளலியா, அந்தப் புதூர் சாமி .... அது போல இருக்கப்படாதோ” என்பான் மற்றொருவன். எல்லாம் மாகாளி இல்லாதபோது.
மாகாளி! தன்னுடைய பிறப்பு வளர்ப்பு பற்றிய கேள்விகளுக்குத் தான் பதில் சொல்லுவதில்லை; ஆனால் அவன் உடலிலே காணப்பட்ட தழும்புகளைப் பற்றிக் கேட்டால் போதும், மளமளவென்று விவரம் கூறுவான். இந்தத் தழும்புகள்தாம் என் வாழ்க்கைக்கான குறிப்புகள்' என்பான், சிரித்தபடி ! என்ன சிரிப்பு அது! இந்த உலகத்தையே கேலி செய்யும் முறையிலே அமைந்த சிரிப்பு அது!
”அதைக்கேள் சொல்கிறேன்" என்று ஆர்வத்துடன் ஆரம்பிப்பான். அவனுடைய வாழ்க்கையிலே நடைபெற்ற ஏதாவதொரு நிகழ்ச்சியைக் கூறுவான் - கூறும்போது, போர்க்களத்திலே ஒரு வீரன் பெற்ற 'காயம் குறித்துப் பேசும்போது எவ்வளவு பெருமிதம் கொள்வானோ, அந்த விதமான பெருமிதம் அவனுக்கு ஏற்படும்.
”நான் எங்கே பிறந்தேன் - என் பெற்றோர் யார் - அவர்களின் நிலைமை என்ன - என்ற விவரம் கேட்டுத் தெரிந்து கொள்வதாலே எள்ளத்தனை பயனும் உனக்கோ, மற்றவர்களுக்கோ ஏற்படாது; இதோ இந்தத் தழும்பின் விவரம் கேட்கிறாயே, இது கேட்க வேண்டிய கேள்வி. இதுபற்றி விவரம் உனக்குத் தெரிவது நல்லது; அதாவது, நீ ஏழை என்பதை மறந்து, மனிதன், ஆகவே நீதி நியாயத் துக்காகப் பாடுபட வேண்டியவன், அக்ரமத்துக்கு அடி பணியாமலிருக்க வேண்டியவன் என்ற உணர்வு இருந்தால்," என்ற முன்னுரையுடன் மாகாளி பேச ஆரம்பிப்பான்.
மாகாளியின் உடலிலே இருந்த தழும்புகள் - முகத்திலே கூடத்தான் - அவனை அவலட்சணமாக்கி விடவில்லை; அவனுடைய வயதுக்கு மீறிய ஒரு முதுமைக் கோலத்தை மட்டுமே அந்த வடுக்கள் ஏற்படுத்திவிட்டிருந்தன.
அந்தத் தழும்புகளைத் தடவிக் கொடுத்துக்கொண்டு பேசுவதில் மாகாளிக்கு ஒரு தனி ஆர்வம்.
”இது விறகுக் கட்டையாலே பலமாக அடித்ததாலே ஏற்பட்டது. இரத்தம் எப்படிக் கொட்டிற்று தெரியுமா .... பனியன் முழுவதும் இரத்தக்கறை ... நாலு மாதம் பிடித்தது புண் உலர .... பிறகு பல மாதம் அந்த இடத்திலே ஒரு விதமான வலி மட்டும் இருக்கும், அடிக்கடி ...... ஒரு வருஷத்துக்குப் பிறகு வலியும் நின்றுவிட்டது. வடு மட்டும் பதிந்து விட்டது ...... ஏன்! ஏண்டா ! அப்படிப் பார்க்கிறாய்.... எப்படித்தான் தாங்கிக் கொண்டானோ என்ற யோச னையா...பைத்யக்காரா! அப்போது நான் போட்ட கூச்சல் இப்போதுகூடக் காதிலே விழுவது போலிருக்கிறது. எட்டு வயது எனக்கு அப்போது..."
”அண்ணேன்! எட்டு வயதிலேயா இந்தக் கொடுமை?”
"ஏன்! ஏண்டா அப்படி ஒரு கேள்வி கிளப்பறே......... எண்பது வயதான பிறகுதான் விழணும், இந்த மாதிரி அடி என்கிறயா ...."
"போண்ணேன்! தழும்பைப் பார்க்க போதே எனக்கு வயிறு பகீல்னு இருக்குது..... நீ சும்மா தமாஷ் பேச றியே ......”
"டே! தழும்பைப் பார்த்தாலே நீ பதறிப்போறே... இந்த இடத்திலே இருந்து இரத்தம் குபுகுபுன்னு வந்ததைப் பார்த்தே மனசு துளிகூடப் பதறலியே, என்னோட எஜமானுக்கு, தெரியுமா ...."
”யாரண்ணேன் இந்தக் கொடுமையைச் செய்த பாவி?"
"புண்ய கோட்டீஸ்வர அய்யர்னு பேர்டா அவருக்கு , முட்டாப் பயலே! அவரைப் போயி பாவின்னு பேசறியே... பாவி என்கிற பட்டம் இருக்குதே. அது நம்மாட்டம் பஞ்சை பராரிகளுக்குன்னே தனியா ஏற்பட்டதுடா ..... பெரிய இடத்துப் பக்கம் கூட அது தலைகாட்டாது. எட்டு வயது எனக்கு ...... குண்டுகட்டைன்னுதான் கூப்பிடுவாங்க ..... கோபமா இல்லே .... செல்லமா ....... அப்படி இருப்பேன். புண்ய கோட்டீஸ்வர அய்யர் ஓட்டலிலே வேலை... மேஜை துடைக்கறது, எச்சில் எடுக்கறது, பாத்திரம் துலக்கறது, இதெல்லாம்..."
"அண்ணேன்! கோபம் செய்து கொள்ளாதே.... அம்மா அப்பா உன்னை எட்டு வயதுக்கேவா உழைக்க விட்டுவிட்டாங்க..."
”அம்மா இருந்தா என்ன சொல்லியிருப்பாங்கன்னு தெரியாது; அப்பாதான் அம்மாவை விட்டுவிட்டுப் போயிட்டாரே, முன்னாலேயே, சிவலோகம் .... ஒரு விறகு பிளக்கற . ஆளை அப்பா அப்பான்னு கூப்பிட்டுக்கிட்டு இருந்தேன் .... என்னை வளர்த்தவரு... அவருக்கு என்ன கூலி கிடைக்கும்? சொல்லணுமா... அதனாலே ஓட்டல் வேலைக்குப் போனேன்…”
”வேலை செய்கிறபோது எங்காவது உயரமாக ஏறிக் கீழே விழுந்துட்டயா.....”
"உயரக்க ஏறி ! ஆளைப்பாரு! நாம் குப்பை மேட்டுக்காரரு... கோபுரமா ஏறிடுவோம்...... கீழே விழுந்ததாலே ஏற்பட்டது இல்லா ...... செம்மையான அடி விறகுக் கட்டையாலே..."
"ஓட்டல்காரனா அடிச்சான்?"
”அவனுக்கு அதுதான் வேலையா ...... ஒரு ஆளைக் கூப்பிட்டு அடிடான்னு உத்திரவு போட்டான். அவன் எடுத்தான் விறகுக் கட்டையை ; கொடுத்தான் பலமா , கொட்டு கொட்டுன்னு இரத்தம் கொட்டிச்சு.”
"ஏன், நீ என்ன தப்பு செய்தே ...?"
"பாரேன் உன்னோட புத்தியை. மாறமாட்டேன் குதே அந்தப் புத்தி. ஏழை தப்பு செய்துதான் இருப்பான். அதனாலேதான் அடி வாங்கி இருக்கிறான்னு தீர்மானமா எண்ணிக் கொள்றே ....... உன் பேர்லே குத்தம் இல்லே டோய்! குப்பத்திலே கிடக்கிறபோது வேறு என்ன நினைப்பு வரும்....... போன ஜென்மத்திலே ஏதோ பெரிசா பாவம் செய்து விட்டதாலேதான் இப்ப இப்படி இருக்கிறோம்னு சொல்ற கூட்டத்தானே நாம் ...... மடப்பயலே! தப்பு செய்ததாலே இந்த அடி கொடுக்கலே .....
அய்யருக்குப் பிடிக்காத காரியம் செய்தேன் .... அதனாலே அவருக்குக் கோபம்... ஏன் அந்தக் காரியம் அவருக்குப் பிடிக்கலேன்னு கேட்பே . ஏன் பிடிக்கல்லேன்னா நான் செய்த காரியத்தாலே அய்யருக்கு நஷ்டம். அதனாலே கோபம். புரியலையா இது? புரியாது. அதோ ...... மேலே ஆகாச த் தி லே ஆயிரமாயிரமா தேவர்கள் இருக்கறாங்கன்னா போதும், இருக்கும்னு சொல்லுவே புரிந்தவன் போல.... கேள் நடந்ததை..... வழக்கம்போல மேஜை துடைத்துவிட்டுப் பாத்திரத்தைக் கழுவ எடுத்துக்கிட்டுப் போனேன், உள் பக்கம்.. சமயற்கட்டு பக்கம். இட்லிக்கு மாவு ஆட்டிக்கிட்டு இருந்தான் வேலைக்காரன். எங்கோ பார்த்துகிட்டிருக்கிறான் என்ன கவலையோ அவனுக்கு! தடால்னு மேலே இருந்து ஒரு பல்லி விழுந்தது பாரேன் மாவிலே ... பார்த்ததும் பதறிப் போயிட்டேன். அவன் அதைப் பார்க்காமலே மாவை அரைக்கிறான். பல்லி கூழாயிட்டிருக்கும்; மாவோடு சேர்ந்து போச்சு. பல்லி, பல்லின்னு ஒரு கூச்சல் போட்டேன். அப்பத்தான் விஷயம் விளங்கிச்சி அவனுக்கு. கூழாயிப் போனது போக மிச்சம் இருந்த பல்லித் துண்டை, துழாவித் துழாவி எடுத்து வெளியே போடப்போனான். இதற்குள்ளே சமயற்கட்டு ஆளுங்க கூடிட்டாங்க. பல்லி விழுந்து செத்துத் தொலைந்திட்டுது. விஷமாச்சே! அந்த மாவை இட்லிக்கு உபயோகப்படுத்தினா சாப்பிடறவங்க என்ன கதி ஆவாங்க? எனக்கு அந்த எண்ணம் ..... பல்லி! பல்லின்னு கூவிக்கிட்டே ஓடியாந்தேன் அய்யரிடம் சொல்ல .
பின்னாலேயே துரத்திக்கிட்டு வந்தான் மாவு அரைக்கிறவன்; பெரிய ஆள். கோழிக் குஞ்சைப் பருந்து தூக்கும் பாரு, அப்படி தூக்கிக்கிட்டே போயிட்டான என்னை, ஓட்டல் பின்புறம். விடு என்னை விடு! நான் அய்யர்கிட்டே சொல்லப் போறேன். மாவிலே பல்லி, பல்லின்னா விஷம்! இட்லி சாப்பிட்டா செத்துப் போயிடுவாங்க... அப்படி இப் படின்னு ஒரே கூச்சல், ...... அய்யரே வந்துவிட்டார். நான் அவரிடம் விஷயத்தைச் சோல்லுகிறதுக்குள்ளே மாவு அரைக்கிறவனே அவரிடம் ரகசியமாக எதையோ சொன்னான். அய்யர் உடனே என் பக்கம் வந்து 'டேய் குண்டுக்கட்டை! வாயைப் பொத்திக்கிட்டு இருக்கமாட்டே.. ஓட்டல் பெயரையே நாசம் ஆக்கிவிடுவே போலிருக்கிறதே ! விழுந்த பல்லியைத்தான் வெளியே எடுத்துப் போட்டாச்சே! நீ எதுக்காக வருகிறவனெல்லாம் பயம் கொள்ற மாதிரி பல்லி, பல்லின்னு கத்திக்கிட்டு இருக்கேன்னு கேட்டார். பதறிப் போயிட்டேன்! பல்லி செத்துக் கூழாயிப் போய் விட்டது. விஷம்! நான் எல்லோருக்கும் சொல்லத்தான் போறேன்னு சொன்னேன். அப்பத்தான் அய்யரு போட்டாரு ..... போட்டாரா.... வேலையாள் ஒருத்தன் அங்கே கிடந்த கட்டையாலே பலமாகப் போட்டான்... குழகுழன்னு .... ரத்தம்.
"யாருமே கேட்கலியா என்ன இது? ஏன் அடிக்கறிங்கன்னு ."
”நீ ஒரு முட்டா பயதானே! ஏண்டா அவனுக்கு அதுதானா வேலை. சாம்பார் கொஞ்சம் போடு, அய்யர் சட்னி கொண்டா, வடை சூடா கொடு... காப்பிக்கு சக்கரை அப்படி இப்படின்னு அவனவன் நாக்கு ருசியை கவனிச்சிக் கிட்டு இருக்கிறான். அந்த நேரத்திலேயா எவனை எவன் அடித்தான்! ஏன் அடிச்சான்! என்று கேட்கத் தோணும். அடேயப்பா! அப்படிக் கேட்கிற சுபாவம் மட்டும் இருந்து துன்னா உலகம் இப்படியா இருக்கும். ஒரு பயலும் ஒண்ணும் கேட்கலே. இரத்தம் அதிகமாக கொட்டறதைப் பார்த்து அய்யரேதான் வேறே ஒரு ஆளைப் பார்த்து அடுப்புக்கரித்தூளை அரைச்சித் தடவுடான்னு சொன்னாரு. இந்தச் சின்ன வயசிலே திருட்டுக் கையிருந்தா, பெரிய பயலானா வழிப்பறி கொள்ளையல்ல நடத்துவான்." என்று கூறிக்கொண்டே வியாபாரத்தை கவனிக்கச் சென்று விட்டார்.
'அடப் பாவிப்பயலே! இப்படி ஈவு இரக்கம் இல்லாமலா?”
"டேய்! என்னைத்தாண்டா பலபேர் 'பாவிப்பயலே ! உனக்கேண்டா திருட்டுப் புத்தி! ஓட்டலிலே வயிறு நிறைய கொட்டறாங்களே போதாதா' என்று கேட்டு புத்தி சொன்னாங்க."
”அய்யர் சொன்னதையே நம்பிவிட்டாங்களா!"
“நம்பாம, நான் சொன்னதையா நம்புவாங்க..... நீயே, அய்யர் சொன்னதைத்தான் நம்பியிருப்பே..... கொஞ்சம் முணுமுணுத்து இருந்தா போடற இட்லியிலே கொஞ்சம் பெரிசாப் பார்த்துப் போட்டா போதுமே, பல்லை இளிச்சிக்கிட்டு அவர் பக்கம் சேர்ந்துவிடமாட்டயா!”
இப்படி நடந்தது பற்றிக் கூறுவான் மாகாளி. கேட்கும் குப்பத்து ஆட்கள் 'ஐயோ பாவம்! ஐயோ பாவம்' என்று கூறி பச்சாதாபம் காட்டுவார்கள். அதிலே மாகாளி என்றும் திருப்தி அடைந்துவிடுவதில்லை.
'அக்ரமத்தைக் கண்டால் எனக்கு, ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. இது இன்று நேற்று ஏற்பட்ட சுபாவம் அல்ல. கூடவே பிறந்த சுபாவம்னு நினைக்கிறேன். நமக்கு என்ன என்று இருந்துவிட மனம் ஒப்புவதில்லை. அக்ரமத்தைக் கண்டிக்க எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. கடமை இருக்கிறது என்று அழுத்தமான நம்பிக்கை எனக்கு. கடமை என்ற எண்ணம். அந்தக் கடமையைச் செய்யும்போது எந்தத் தொல்லை வந்தாலும் தாங்கிக் கொண்டாக வேண்டும் என்ற ஒரு உறுதி. இரத்தத் தழும்புகள் அந்த உறுதியின் சின்னங்கள்' என்று கூறுவான்.
மாகாளி குப்பத்து பாணியில் தான் பேசினான். அவனுடன் பழகியவர்களிலே பலரும் அதே பாணியிலேதான் பேசினார்கள். நான் அந்தப் பாணியிலேயே முழுவதும் எழுதிக் கொடுக்க எண்ணினேன். ஆசிரியர் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் சில பகுதிகளை அவர் விரும்பிய விதமாகவும் எழுதினேன். முக்கியமானதைக் கூற மறந்துவிட்டேனே! ’நான் மரபு' இதழில் துணையாசிரியன்.
எங்கள் மரபு இதழில் வியப்பு அளிக்கும் உண்மை நிகழ்ச்சிகள் ஒரு தனிச்சுவையுள்ள பகுதி. உங்களிடம் உண்மையை ஒப்புக்கொள்வதிலே என்ன தவறு? பெரிய புள்ளிகள் நடக்காதவற்றைக்கூட உண்மையில் நடந்ததாகச் சொல்லுவார்கள். எங்களுக்கு அவர்கள் சொல்வது பொய் என்று தெரியும். தெரிந்தும், வெளியிடுவோம் வியப்பளிக்கும் உண்மை நிகழ்ச்சி என்று. எமது மரபு இதழில் இந்தப் பகுதிக்குத் தலைப்பு, 'அதிசயம் ஆனால் உண்மை ' என்பதாகும்.
வேட்டையாடுவதில் திறமை மிக்கவர் என்று பெயர் பெற்ற வெட்டியூர் மிட்டாதாரர் குட்டப்ப பூபதியாரை பேட்டி கண்டு, 'அதிசயம் ஆனால் உண்மை’ பகுதிக் கான தகவலைப் பெற்றுவரச் சொல்லி ஆசிரியர் என்னை ஒருநாள் அனுப்பி வைத்தார். வழக்கமாகக் கிடைக்கும் தகவல்கள் கிடைத்தன. காட்டெருமை அவரைக் கீழே தள்ளி தொடையில் ஆழமாகக் குத்திவிட்டதாம், ஒரு தடவை; வடு இருந்தது. போட்டோகூட எடுத்துக் கொண்டேன். எனக்கென்னவோ அந்த வடு அறுவைச் சிகிச்சையின் விளைவு போலத் தெரிந்தது. ஆனால் மிட்டாதாரர் கூறுகிறாரே, காட்டெருமை குத்தியதால் ஏற்பட்ட வடு என்று. காட் டெருமைத் தலையைக்கூடக் காட்டினார். மாளிகைக் கூடத்திலே படம் போட்டு தொங்க விடப்பட்டிருந்தது. வெட்டியூரார் உடம்பில் காணப்பட்ட தழும்புகளை குறித்த விவரத்தை எழுதிக் கொடுத்தேன். எழுத எழுத எனக்கு ஒரு விதமான கசப்புணர்ச்சி, வெறுப்புணர்ச்சி. இவர் இந்த வடுக்களைப் பெற்றதனால் உலகுக்கு என்ன பலன்? உலகிலே ஏதாவது ஒரு நல்ல காரியம் செய்வதிலே ஈடுபட்டு, அதிலே காயம் ஏற்பட்டு, அது வடுவாகி இருந்தால் அதுபற்றிப் பெருமைப் படலாம். உல்லாச புருஷனின் பொழுது போக்கு வேட்டையாடுவது. இதிலே ஏற்பட்ட 'வடு' பற்றிப் பெருமைப்பட என்ன இருக்கிறது என்று எண்ணிக்கொண்டேன். வெளியே சொல்லத்தான் முடியுமா! அவருடைய தயவினால் மரபு இதழுக்கு ஆயுள் சந்தாக்காரர்கள் மட்டும் அறுபது பேர் கிடைத்தார்கள். ஒரு சந்தா ஆயிரம் ரூபாய்!
தமிழாசிரியர்கள், பழந்தமிழ் மன்னர்கள் களத்திலே கலங்காது நின்று போராடிப் பெற்ற விழுப்புண் பற்றிப் பெருமிதத்துடன் பேசக் கேட்டிருக்கிறேன். புகழின் சின்னம், வீரத்தின் முத்திரை, வெற்றிக் குறிகள் என்றெல்லாம் பாராட்டுவர். ஓரளவுக்கு இது பெருமைக்குரியது தான். ஆனால் இதிலேயும் மன்னர்களுக்கு மூண்டுவிட்ட போர் தான் அடிப்படைக் காரணமாக அமைந்திருக்கிறது. யாரோ ஒருவருக்கு ஏற்படும் அக்ரமம் கண்டு கொதித்து எழுந்து போராடிப் பெற்ற வடு அல்லவா முழுப் பெருமிதம் தரத் தக்கது என்று எண்ணிக் கொண்டேன்.
அந்த எண்ணம் வளர வளர, சாமான்யர்கள் என்ற வரிசையிலே இருந்தபோதிலும் பிறருக்காகப் பாடுபட்டு இன்னல் ஏற்றுக் கொண்டவர்கள் இருப்பார்களே. அவர்களைக் கண்டு பேசி, அவர்களின் வாழ்க்கையிலே நடை பெற்ற வியப்பளிக்கும் நிகழ்ச்சிகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது. ஆசிரியரிடம் கூறினால் பெற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கை ஏற்பட வில்லை. ஆகவே இதழுக்காகத் தகவல் சேகரித்திடும் நேரம் போக மிச்ச நேரத்தை என் இதயம் விரும்பிய காரியத்துக்காகச் செலவிட்டு வந்தேன். அப்போதுதான் மாகாளி எனக்குக் கிடைத்தான்.
ஒரு மருத்துவ மனையில் மாகாளி கிடத்தப்பட்டிருந்தான், உடலெங்கும் கட்டுகளுடன். ஆபத்து நீங்கிவிட்டது. ஆள் பிழைத்துக் கொள்வான், குறைந்தது மூன்று மாதம் மருத்துவமனையில் இருக்கவேண்டும் என்று கூறினார்கள். மறந்துவிட்டேனே, நான் மருத்துவமனையில் சென்றது மாகாளியைப் பார்க்க அல்ல; புதிய மோட்டாரில் ஏறும் போது கால் வழுக்கிக் கீழே விழுந்துவிட்ட அனாதை விடுதி தர்மகர்த்தா அய்யப்பனைக் கண்டு தகவல் சேகரிக்கச் சென்றிருந்தேன்.
நாளிதழ்கள், அய்யப்பன் மோட்டாரில் ஏறப்போகும் போது கால் வழுக்கிவிட்டது. காரணம் அவர் போட்டிருந்த கால் செருப்பின் அடிப்பாகம் ரப்பராலானது; வழவழப்பானது என்று எழுதி இருந்தன.
வழவழப்பான ரப்பர் அடிப்பாகம் கொண்ட புதுவிதச் செருப்புத் தயாரித்து விற்பனை செய்யும் கம்பெனியாருக்குக் கடுங்கோபம். அவர்கள் உடனே மரபு ஆசிரியரைக் கண்டு அய்யப்பன் வழுக்கி விழுவதற்கான உண்மைக் காரணத்தைக் கண்டு அறியும்படி கூறி இருந்தனர். நான் மருத்துவமனை செல்ல நேரிட்டது. இந்தக் காரணத்தால்.
அய்யப்பன், பலமாக மறுத்தார். கால் வழுக்கிக் கீழே விழவில்லை! கண் இருண்டது. மயக்கம் ஏற்பட்டது; திடீர் மயக்கம். காரணம் என்ன தெரியுமா என்று கேட்டு உருக்கமான செய்தி கூறினார். அவர் மோட்டாரில் ஏறப் போகும்போது ஒரு சிறுவனைக் கண்டாராம், பாதையின் மற்றொரு பக்கத்தில் அவன் கண்களிலே தெரிந்த துயரத்தைக் கண்டதும், 'ஆண்டவனே, இப்படிப்பட்ட அனாதைகளை ரட்சிக்கும் தொண்டினைப் பரிபூரணமாக என்னால் செய்ய முடியவில்லையே! போதுமான பணமில்லையே. முன்னூறு குழந்தைகளை மட்டுந்தானே ரட்சிக்க முடிகிறது. இதோ ஒரு மொட்டு கருகிக் கொண்டிருக்கிறதே' என்று எண்ணினாராம். உடனே ஒரு மயக்கம். கண் இருண்டது; கீழே சாய்ந்தார். அய்யப்பன் சொன்னது இது. அதிசயம் ஆனால் உண்மை.
தொழில் முடிந்ததும் நான் மருத்துவமனையில் கிடந்த மற்றவர்களைப் பார்த்தபடி நடந்தேன். மாகாளி உடலெங்கும் கட்டுகளுடன் கிடத் தப்பட்டிருந்தான். அவனருகே நின்று கொண்டு பரிவுடன் பழம் சாப்பிடச் சொல்லி, நின்று கொண்டிருந்த இளமங்கைகையைக் கண்டதும், எனக்கு வியப்பாகிவிட்டது. பெண் பெரிய இடத்தில் வாழ்க்கைப்பட்டு, ஏதோ சச்சரவு காரணமாகக் கணவனைப் பிரிந்து தனியாகிப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியை வேலை பார்த்து வருபவள்; மாஜி பெரிய இடம். பெயர் வள்ளி. திருமணத்தின்போது வள்ளியாச்சியார் என்பது பெயர்.
வள்ளியிடம் நான் பேசியதுகூட படுத்துக் கிடப்பவனைப் பற்றிய சேதி தெரிந்து கொள்ள அல்ல; பெரிய இடத்திலே வாழ்க்கைப்பட்ட வள்ளி ஏன் கணவனை விட்டுப் பிரிய நேரிட்டது என்பது பற்றிய தகவல் பெறத்தான். வழக்கம்போல வள்ளி அந்தத் தகவல் தர மறுத்துவிட்டாள். மாகாளி பற்றிய தகவலைக் கூறலானாள். மெள்ள மெள்ளத்தான் எனக்கு மாகாளி பற்றிய தகவலில் சுவை ஏற்பட்டது. வள்ளி தந்த தகவலைத் தொடர்ந்து, மாகாளியிடமும், அவன் இருந்து வந்த குப்பத்து ஆட்களிடமும், தொடர்புள்ள வேறு பலரிடமும் கேட்டுப் பல தகவல்களைத் தெரிந்து கொண்டு 'தழும்புகள்' என்ற தலைப்பிட்டு 'மரபு' இதழுக்கு அளித்தேன். அவர் என்னையும் வருத்தப்பட விடக்கூடாது, 'மரபு’ மேற்கொண்டுள்ள மரபும் பாழ்படக்கூடாது என்று, 'தழும்புகள்' தனி ஏடாக வெளிவர ஏற்பாடு செய்தார். அதன் துவக்கப் பகுதியைத்தான் இதுவரை நீங்கள் பார்த்தீர்கள். இனி மாகாளி பற்றி நான் தெரிந்து கொண்ட தகவல்களில் சிலவற்றைத் தருகிறேன். நிகழ்ச்சி நடை பெறுவது போன்ற வடிவத்தில்.
[ஒரு சிற்றூரில் சாலை வழியில் ஒரு இரட்டை மாட்டு வண்டி செல்கிறது. சலங்கை மணி பூட்டப்பட்ட பெரிய காளைகள் வண்டியில் பூட்டப்பட்டு உள்ளன.]
உடற்கட்டும், அழகான தோற்றமும் உள்ள வாலிபன், வண்டியை ஓட்டிச் செல்கிறான். வண்டிக்குள் திண்டு போட்டுச் சாய்ந்து கொண்டிருக்கிறார், நாற்பத்தைந்து வயதான ஒரு மிராசுதாரர். சில்க் சட்டையும் வேட்டியும் போட்டுக் கொண்டு இருக்கிறார். காதிலும் கைவிரல் களிலும் வைரம் மின்னுகிறது. நெற்றியில் சந்தனப் பொட்டு இருக்கிறது.
வெள்ளிப்பூண் போட்ட அலங்காரத்தடி அவருக்குப் பக்கத்திலே இருக்கிறது.
வெள்ளி வெற்றிலைப் பெட்டியும் வெட்டிவேர் விசிறி யும் வண்டியில் இருக்கின்றன. வழியில் வருவோர் போவோர் அவரைக் கண்டதும் மரியாதை செய்கிறார்கள்.
மிராசுதார் : டே, மாகாளி! தட்டி ஓட்டேண்டா மாட்டை ! தடவிக் கொடுக்கறியே ...... ஓட்டு, ஓட்டு சுருக்கா ….
மாகாளி : வாயில்லா ஜீவனாச்சிங்களே ..... வேகமாத் தான் போகுது....தா! தா!
[மெதுவாகத் தட்டுகிறான்; வேகமாக வண்டி செல்கிறது.
வயல் காட்சிகளைப் பார்த்து மாகாளி ரசித்துக் கொண்டிருக்கிறான்.
மிராசுதாரர் எதையோ எண்ணி, மகிழ்ந்து கொண்டு இருக்கிறார்.
ஒரு ரயில்வே கேட் தெரிகிறது. ரயில், தொலைவில் வருகிறது.
கேட், மூடிவிடுகிறார்கள். வண்டி நிற்கிறது. ரயில் செல்கிறது.
கேட் திறக்கப்பட்டு வண்டி செல்கிறது.]
மாகாளி : (ஆவலாக) ஏங்க .... ரயிலை யாருங்க , முதமுதல் கண்டு பிடிச்சது .........
மிராசு: (கோபமாக) ஆ ...... உங்க பாட்டன் ..... ஓட்டேண்டா , வண்டியை, பெரிய விசாரணை நடத்தறான்.
மாகாளி : (சலித்துக் கொண்டு) தெரியல்லேன்னா தெரியாதுன்னு சொல்லிட்டுப் போங்களேன். அதுக்கு ஏங்க இப்படி எறிஞ்சி விழறிங்க. நீங்களெல்லாம் படிச்ச வங்களாச்சே, தெரிஞ்சிருக்கும்னு கேட்டேன்.
மிராசு: வரவர உனக்கு வாய்த் துடுக்கு அதிகமா யிட்டுது; கிண்டல் பேச்சு, விதண்டாவாதம் வளருது .... அண்ணாக்கி ஒரு நாள் நீ என்ன கேட்டே, எமனுக்கு எருமைக்கடா வாகனம்; எப்படிப் பொருந்தும்னு கேட்கல்லே நீ ...... இரு, இரு, உன்னை ......
மாகாளி : (சிரித்தபடி) நீங்க ஏங்க அதுக்காக இவ்வளவு கோபப்படறிங்க ...... பூலோகம் வந்து, பாசக் கயறு வீசி, உயிர்களைப் பிடித்துக் கொண்டு போகிறவன்தான் எமன் : அவனுக்கு ஒரு வாகனம் எருமைக் கடான்னு சொல் லவே, அவசரமான வேலை யாச்சே, ஒரு குதிரையாவது வாகனமா இருக்கப்படாதா , எருமைதானா இருக்கணும், அது அசைஞ்சு அசைஞ்சு அல்லவா நடக்கும்னு கேட்டேன்.....
மிராசு : ஏன் கேட்கமாட்டே...... நம்ம வீட்டுச் சோறு அப்படிப்பட்ட து ..........
மாகாளி : நீங்க தின்ன மிச்சம் தானுங்களே, நமக்கு.
மிராசு: சரி, சரி... ஓட்டு.
(கிராமம் வந்து சேருகிறது. வண்டி ; ஒரு பெரிய ஆலமரத்தடியைக் காட்டி ...)
மிராசு : வண்டி இங்கேயே இருக்கட்டும். நான் ஊருக்குள்ளே போயி காரியத்தைப் பார்த்துவிட்டு வர்ரேன் ..... டேய்! மாட்டைப் பார்த்துக்கோ ................... ஜமக்காளம் இருக்கு, திண்டு கிடக்கு , நீ பாட்டுக்கு, எங்காவது சுத்தக் கிளம்பிடாதே.......
[வெள்ளி வெற்றிலைப் பெட்டியையும், தடியையும் எடுத்துக் கொண்டு மிராசுதாரர் கிராமத்துக்குள்ளே செல்கிறார்.
வண்டியை அவிழ்த்து விட்டுவிட்டு, மாடுகளுக்கு வைக்கோல் போட்டுவிட்டு, மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு, ஆட்டுக்குட்டிகள் துள்ளி விளையாடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறான் மாகாளி. மாலை நேரம் வருகிறது; பறவைகள் கூட்டம் கூட்ட மாகக் கூடுகளை நோக்கிப் பறந்து செல்கின்றன.
ஆடுகளை மடக்கி சிறுவன் ஊருக்குள்ளே ஓட்டிக் கொண்டு போகிறான்.
வாத்துகளை, வயலில் மேயவிடுகிறான் ஒருவன்.
இருள் மெள்ள மெள்ள வருகிறது.]
'டேய்! மாகாளி! மாகாளி! டேய்!' என்று பதறிக் கூவியபடி மிராசுதாரர் ஓடிவருகிறார் அலங்கோலமாக.
அருகே வந்து கொண்டே, 'கட்டுடா, வண்டியை பூட்டுடா சீக்கிரம்' என்று மேல் மூச்சு வாங்கும் நிலையில் கூறிக் கொண்டே மிரள மிரள , ஊர் பக்கம் பார்க்கிறார்.
வண்டியைப் பூட்டித் திருப்பி நிறுத்துகிறான் மாகாளி.
”விடாதே! விடாதே! பிடி! டேய் நில்லு” என்று கூவிக்கொண்டே தடிகளுடன் நாலைந்து பேர் மிராசுதாரை நோக்கி ஓடிவருகிறார்கள் தாக்க.
மிராசு: (நடுநடுங்கி) மாகாளி ! கொலைகாரப் பசங் களைப் பாருடா.
[ என்று கதறுகிறார்.
முதலில் தடியை ஓங்கினான் ஒருவன். மாகாளி, தடியைப் பிடித்து இழுக்க அவன் கீழே விழுந்துவிட்டான். தடி மாகாளியிடம் சிக்கியது.
மற்றவர்களைத் தடியால் தாக்க ஆரம்பித்தான். மாகாளி மிராசுதார் வண்டியின் மறைவில் நின்று கொள்கிறார் சுழன்று சுழன்று தாக்குகிறான் மாகாளி. தடிகள் முறிந்து போகின் றன. கீழே விழுகின்றன. தாக்க வந்தவர்கள் விரண்டோடு கிறார்கள். மாகாளி, மிராசுதாரரை வண்டியில் ஏறச் சொல்லி ஜாடை காட்டிவிட்டு வண்டியை ஓட்டுகிறான்.]
மிராசு: வேகமாக ஓட்டுடா மாகாளி! விஷக்கடி வேளைடா... ஊருக்கு இருட்டறதுக்குள்ளே போயிடலாம்.
மாகாளி : பொழுது இன்னும் சரியா சாயக்கூட இல்லே, அதுக்குள்ளே வழிமடக்கி அடிக்க வந்தானுங்களே!
மிராசு: வழிமடக்கி அடிக்கிறவனுங்க இல்லேடா அவனுங்க; கொலைகாரப்பசங்க. என்னைத் தீர்த்துக் கட்டிவிட வந்தானுங்க, தடியும் தாம்பும் தூக்கிக்கிட்டு.
மாகாளி : எதனாலே விரோதமுங்க .... ஏதாவது நிலத் தகராறு?
மிராசு : வண்டியை ஓட்டுடா வேகமா! விவரம் கேட்டுக்கிட்டு இருக்க இதுவா நேரம்.
மாகாளி : பயப்படாதிங்க! நான் இருக்கறேன்... என்னை அடிச்சிப் போட்டுட்டுதானே உங்ககிட்ட வரவேணும்; பயப்படாதிங்க.
மிராசு: படுபாவிப் பசங்க! இந்த மாதிரி திட்டம் - போடுவானுங்கன்னு தெரிஞ்சிருந்தா நான் அந்தச் சனியனுக்கு ஆசைப்பட்டே இருக்கமாட்டேன்.
மாகாளி! உன் மனசோட போட்டுவை. அந்தக் கிராமத்திலே நமக்கு வேண்டியவ ஒருத்தி இருக்கறா.
(மாகாளியின் முகம் இலேசாக மாறுகிறது.)
எப்படியோ கர்மம், அந்தச் சிநேகம் ஏற்பட்டுப் போச்சி
(மாகாளி கோபம் கொள்கிறான்.)
மிராசு: மூணு முடிச்சு போடுங்க, மூணு முடிச்சுப் போடுங்கன்னு சொல்லிகிட்டே இருப்பா. அவ என்னதைக் கண்டா. ஊருக்கு அவமானம், குலத்துக்கு அவமானம்னு யாரோ கலகம் செய்து விட்டாங்க... ஆகட்டும் பார்க்கலாம், ஆகட்டும் பார்க்கலாம்னு சொல்லிகிட்டே இருந்தேன்.
மாகாளி : அடுக்குமா இந்த அக்ரமம்? நம்பின் வளை மோசம் செய்யலாமா ......... அவ கதி என்ன ஆகும்?
மிராசு: அதாண்டா மாகாளி, அப்படி எல்லாம் தான் கூவி, கொக்கரிச்சி, கோயிலுக்கு வா, சாமி எதிரே அவளுக்குத் தாலி கட்டு என்று சொல்லி, இழுத்துக்கிட்டுப் போனானுங்க.......
மாகாளி : நீங்க அவங்களை ஏமாத்திவிட்டு தப்பித் துக் கொண்டு வந்துட்டிங்க.......
மிராசு: அது தெரிஞ்சிதான், தடி தூக்கிகிட்டு ஓடி வந்தாங்க, என்னைக் கொன்றுபோட
[ வண்டியின் வேகம் குறைகிறது. மாட்டுக் கயிற்றை இழுத்துப் பிடிக்கிறான் மாகாளி.]
மாகாளி : நான் இருந்தேன், மடையன் அவங்களைத் துரத்திவிட்டு, தர்மப் பிரபுவைக் காப்பாத்த ......
[ வண்டியை எதிர்ப்பக்கம் திருப்புகிறான்.]
மிராசு: டே! டே! என்னடா இது? என்னடா இது ...
மாகாளி : இதுவா ...... வண்டி கிராமத்துக்குப் போகுது. அநியாயக்காரப் பாவி! ஒரு பெண்ணைக் கெடுத்துவிட்டு தப்பித்துக் கொள்ளவா பார்க்கறே........
(மிராசுதாரர் வண்டியை விட்டுக் கீழே குதிக்க முயலுகிறார். ஒரு கரத்தால், அவரை இழுத்துப் பிடித் துக் கொண்டு)
மாகாளி : அவங்களை ஏமாத்தினது போல என்கிட்டே செய்தே, எலும்புக்கு ஒரு அடின்னு எண்ணி எண்ணி கொடுப்பேன் ...... நான் ஒரு மடப்பய ! என்ன விஷயம், ஏன் துரத்திகிட்டு வர்ராங்கன்னு கேட்டனா? பாவம், அவனுங்களை தாக்கினேன் பலமா ......
மிராசு: மாகாளி! மாகாளி! உன்னைக் கையெடுத்துக் கும்பிடுறேண்டா! காலிலேகூட விழறேண்டாப்பா வண்டியை நிறுத்து... கிராமம் போகாதே! வெட்டிப் போட்டு விடுவாங்கடா.
மாகாளி : நீ செய்திருக்கிற காரியத்துக்கு வெட்டிப் போடாமே, விருந்து வைத்து அனுப்புவாங்களா?
மிராசு: ஆயிரம், ஐநூறு வேணுமானாகூடக் கொடுத் துடறேண்டா மாகாளி!
மாகாளி : யாருக்கு, எனக்குத்தானே?
மிராசு. அவளுக்கும் வேணுமானா தர்றேண்டா அப்பா .
மாகாளி : எதை? பணத்தைத்தானே! பணம் தவிர வேறு என்ன இருக்கு உன்னிடம் கொடுக்க பணம் இருக்குது, என்ன பாவம் வேணுமானா செய்து தப்பித்துக் கொள்ளலாம் என்ற நெஞ்சழுத்தம். நல்லவேளை வழியிலேயாவது நான் என்ன விஷயம்னு கேட்டனே! இல்லையானா உன்னுடைய அக்ரமத்துக்கு நானும் தானே உடந்தையாகி இருப்பேன்.
மிராசு: மாகாளி! என்னை என்னதான் செய்யப் போறே! அந்தப் பயல்களிடம் விட்டுக் கொலை செய்யச் சொல்லப் போறியா?
மாகாளி : செய்வேனா அப்படி ! அப்புறம் அந்தப் பொம்பளையோட கதி என்ன ஆகிறது. கூட்டிக்கிட்டு வாங்கய்யா கோவிலுக்கு என்பேன். பெரியவங்களைப் பெத்தவங்களைக் கூப்பிடுன்னுவேன். உம்...... ஆகட்டும்னு சொல்லுவேன். மறுபேச்சு பேசாமே, அந்தப் பொம்பளை கழுத்திலே தாலியைக் கட்டணும். நான் தான் தோழி மாப்பிள்ளை. நடந்தா அந்தக் கலியாணம் நடக்கணும். இல்லே. நிச்சயமா கொலை நடக்கும்.
(கிராமத்துக்குள் வண்டி வருகிறது. கிராமத்து ஆட்கள்)
'டேய்! வந்துட்டான்டா ஊருக்குள்ளேயே' என்று கூவி கும்பலாகச் சேருகிறார்கள்.
தொலைவிலிருந்து சிலர் கற்களை வீசுகிறார்கள், மாகாளியைக் குறிவைத்து . மாடுகள் மிரளுகின்றன. மாகாளி ஏர்க்காலில் நின்று கொண்டு, மாடுகள் மிரண்டு ஓடாதபடி கயிற்றையும் இழுத்துப் பிடித்துக் கொண்டு கிராமத்து மக்கள் போடும் கூச்சலை அடக்கும் அளவுக்குக் குரலை உயர்த்தி .......
மாகாளி : பெரியோர்களே.! தாய்மார்களே! அமைதி அமைதி ! நான் சொல்வதைக் கேளுங்கள் .
'போடா, டோய்!' என்று கூச்சல் கிளம்புகிறது. சற்கள் மாகாளி மீது விழுகின்றன. (இரத்தம் கசிகிறது)
மாகாளி : ஆத்திரம் வேண்டாம், இதோ மிராசுதாரரை அழைத்து வந்திருக்கிறேன் ...... கலியாணம் செய்து கொள்ள வந்திருக்கிறார் ......
(பலர் கை தட்டுகிறார்கள். சிலர், மற்றவர்களைக் கூச்சல் போடாதீர்கள் என்று அடக்குகிறார்கள்; சத்தம் அடங்குகிறது.)
மாகாளி : முதலிலே எனக்கு உண்மை தெரியாததால், கிராமத்து மக்களை அடித்து விட்டேன். மன்னிக்க வேண்டும் என்னை . இப்போது, நான் உங்கள் பக்கம் ...... கிராமத்தார் பக்கம்.........
(கை தட்டுகிறார்கள்.)
நீதியின் பக்கம் நிற்கிறேன். அக்ரமத்துக்குத் துணை போக மாட்டேன். மிராசுதாரர் வந்திருக்கிறார். கோயிலுக்குப் போகலாம்...... பெண்ணைக் கூப்பிடுங்கள் .......
அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு, மாகாளியிடம் வருகிறார்கள். மிராசுதாரர் வண்டியிலிருந்து கீழே இறக்கப்படுகிறார்.
தலைவிரி கோலமாக இருக்கும் பெண் இழுத்து வரப்படுகிறாள். மாகாளியின் காலைத் தொட்டுக் கும்பிடுகிறாள்.
ஒரு ஆள் ஓடி வந்து, 'கோயிற் கதவைப் பூட்டிக் கொண்டு ஐயர் எங்கோ போய்விட்டார்' என்று கூறுகிறான்.
மாகாளி : பரவாயில்லை! மேலே நிலவும் நட்சத்திரங்களும்! சுற்றிலும் உற்றார் உறவினர்! ஊர்ப் பெரியவர் கள்! கோயிலாவது மனிதன் கட்டியது ; இந்த இடம் - நாம் நிற்கும் இடம் - கடவுளே படைத்த கோயிலை விடச் சிறந்தது. கொண்டு வாருங்கள், தாலிக்கயிறு. உட் காருங்கள் அனைவரும் .........
(தாலியை ஒருவர் கொண்டு வருகிறார்.
மாகாளி, மிராசுதாரர் கையில் அதைக் கொடுக்கிறான்.
மிராசுதாரர் தயக்கமடைகிறார். மாகாளி அவன் காலை அழுத்தி மிதிக்கிறான், யாருக்கும் தெரியாமல்.
மிராசுதாரர் தாலி கட்டுகிறார். அவள் அவன் காலைத் தொட்டுக் கும்பிடுகிறாள்.
மாடோட்டும் வாலிபன், குழலில் இசை எழுப்பு கிறான்.
காற்று பலமாக அடிக்கிறது. மலர்கள் காற்றால் வந்து விழுகின்றன.
மாகாளி மகிழ்ச்சி அடைகிறான்.)
நிலவு ஒரு மேகத்திலிருந்து மற்றோர் மேகத்துக்கு ஊர்ந்து செல்வதுபோல் தெரிகிறது.
மாகாளி சாவடித் திண்ணையில் உட்காருகிறான். எதிரே சிலர் உட்காருகிறார்கள்.
பால் வேணுமா? பழம் வேணுமா?" என்று கேட்கிறார்கள்.
மாகாளி : நமக்குக் கட்டிவருமா பாலும், பழமும்? சோறும் ஊறுகாயும். இல்லையானா கூழும் வெங்காயமும்.
(இரண்டு மூன்று பேர் ஓடுகிறார்கள்.)
(ஒரு மாது சோறும் ஊறுகாயும் கொண்டு வருகிறாள். தண்ணீர் ஊற்றி உப்பு போடுகிறாள் மாது. மாகாளி அதைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்)
ஒருவர் : ஏண்டாப்பா! எப்படி உனக்கு, இப்படிப் பட்ட தைரியம் வந்தது .......
மாகாளி : இது என்ன பெரியவரே, அதிசயம்.... கோழிக் குஞ்சை அடிச்சிகிட்டுப் போக பருந்து வருதே, அப்ப கோழி போடுதே சண்டை , வீராவேசமா .......
(சிறுவர் சிலர் கை தட்டுகிறார்கள்.)
ஒருவர்: தம்பிக்கு எந்த ஊரு .......
மாகாளி : கருவூரு...
ஒருவர் : எந்தப் பக்கம் ........
இன்னொருவர் : திருச்சிராப்பள்ளிப் பக்கம்னு சொல்லு வாங்க.
மாகாளி : நான் அந்தக் கருவூரை சொல்லலே.. கரூர்னு நான் சொன்னது, கரு ...... கரு....... தாயுடைய கரு தானே, நம்ப ஊரு , அதைச் சொன்னேன்.......
பெரியவர் : நிஜமான பேச்சு.........
மாகாளி : எல்லா ஊரும் எனக்குச் சொந்தமான ஊர் தான்.
பெரியவர் : அப்பா, அம்மா?
மாகாளி : (சோகமடைந்து) யாருமில்லை.
(தலையசைத்துக் கொண்டு கூறுகிறான்.)
(மேற்கொண்டு சாப்பிட முடியவில்லை, மாகாளியால். பேச்சும் ஓடவில்லை. படுத்துக் கொள்கிறான். சிலர், அங்கேயே படுத்துக் கொள்கிறார்கள்.)
(நகரில் மிராசுதாரர் வீடு. கோயில் ஐயர் ஓடி வருகிறார். மிராசுதாரர் மகனிடம் குசுகுசுவெனப் பேசு கிறார். அவன் வேலையாட்களைப் கூப்பிடுகிறான். அவர் கள் பல பக்கம் ஓடுகிறார்கள்.)
வேறிடத்தில் ..........
(மணமானவள் பாத்திரத்தில் பாலும், தட்டில் சோறும் வைத்துக் கொண்டு, மிராசுதாரரிடம் வந்து நிற்கிறாள். மிராசுதாரர் திகிலும், சோகமும் கொண்ட நிலையிலே இருக்கிறார்.)
மிராசு: என் உயிரை வாங்காதே...... என் மனம் சாந்தியாக இல்லை. பசி இல்லை. தொல்லை செய்யாதே.......
(அவள் பாயும் தலையணையும் மிராசுதாரருக்குப் போட்டுவிட்டுத் தரையில் ஒரு ஓரமாகக் கையைத் தலைக்கு வைத்துக் கொண்டு படுத்துக்கொள்கிறாள்.
சாவடியில் படுத்துக் கொண்டு இருக்கும் மாகாளிக்குத் தூக்கம் வராமல் புரண்டு கொண்டு இருக்கிறான்.
மோட்டார் சத்தம் காதில் விழுகிறது. ஒருவர் விழித்துக் கொண்டு, 'தம்பி! தூக்கம் வரலியா ....... கொசுக்கடியா? என்று கேட்கிறார்.
மாகாளி பதில் கூறாமல் உற்றுக் கேட்டவண்ணம் ’உஸ்! உஸ்!' என்று சத்தம் செய்யாதிருக்கும்படி ஜாடை காட்டுகிறான்.
சத்தம் வரவர, பலமாக இருக்கிறது. மாகாளி எழுந்து உட்காருகிறான்; கூட இருந்தவர்களும் உற்றுக் கேட்கிறார்கள், அச்சத்துடன்.
மோட்டார் வெளிச்சம் தொலைவில் தெரிகிறது. பல விளக்குகள் தெரிகின்றன. ஒரு பெரியவர் மெதுவாக, 'தம்பி! போலீசா!" என்று கேட்கிறார். பலத்த சத்தத்துடன் ஒரு ஜீப்பும், நாலு லாரிகளும் வருகின்றன.
ஊருக்குள் நுழையும்போதே, காட்டுக் கூச்சல் போடு கிறார்கள், லாரியில் வந்தவர்கள்.
மிராசுதாரர் வெளியே வருகிறார். ஜீப்பைப் பார்த்ததும் துள்ளிக் குதித்து 'சபாஷ்டா சபாஷ்!' என்று கூறிக் கொண்டே ஜீப்பை நோக்கி ஓடுகிறார்.
'அப்பா!' என்று அழைக்கிறான் ஜீப்பில் வந்த வாலிபன்.
மிராசு: பயல்களை விடாதீர்கள். வெட்டிப் போடுங்கள். வந்தது வரட்டும். மாகாளியை முதலில் ஒழித்துக் கட்டுங்கள் ............
(என்று மிராசுதாரர் கொக்கரிக்கிறார்.)
பெருங்கூச்சலுடன் அடிதடி நடக்கிறது. மாகாளி, எங்கும் சுற்றிச் சுழன்று சண்டை போடுகிறான். லாரி மீது ஏறிக் கொண்டு சண்டை போடுகிறான். லாரியை ஓட்டுகிறான் டிரைவர் வேண்டுமென்றே!
பக்கத்து லாரியில் தாவிக் குதித்து விடுகிறான் மாகாளி. கிராமத்து மக்கள் சுருண்டு, சுருண்டு விழுகிறார்கள்; தாய்மார்கள் மிரண்டு ஓடுகிறார்கள்.
'அப்பா! நாம் போகலாம்! ஊரைக் கொளுத்தி விட்டுத் தான் நம்ம ஆட்கள் திரும்புவார்கள் ..... எல்லா ஏற்பாட் டுடனும் வந்திருக்கிறார்கள். நாம் இருக்க வேண்டாம்.
(என்று கூறுகிறான். ஜீப் புறப்படுகிறது.)
மாகாளி பலமாகத் தாக்கப்படுகிறான். கிராமத் தார் பலருக்குப் படுகாயம்.
மூர்ச்சையாகிக் கீழே விழுந்த மாகாளியை லாரியில் தூக்கிப் போட்டுக் கொண்டு செல்கிறார்கள். வழியில் ஒரு ஆற்றிலே போட்டுவிட்டுப் போய்விடுகிறார்கள்.
மாகாளி கண் விழித்துப் பார்க்கிறான்.
ஒரு எருமையின் முதுகில் சாய்ந்து கொண்டிருப்பதையும், எருமை, அதிக ஆழம் இல்லாத ஆற்றில் நடந்து செல்வதையும் அறிகிறான். கீழே இறங்கி, எருமையைப் பார்த்து, என் உயிரை காப்பாத்தினாயே! உன்னைப்போய், எமனுக்கு வாகனம்னு சொல்லி வைச்சிருக்காங்களே' என்கிறான்.
(தள்ளாடி நடக்கிறான். ஒரு மூட்டை வண்டியில் செல்கிறான். பல ஊர்களில் நடக்கிறான்; கடுங்கோபம் கொண்ட நிலை பெறுகிறான்.)
மோட்டாரைப் பார்த்தால் கோபம். செல்வான்களைப் பார்த்தால் கோபம்....
ஒரு ஆள் : யாரப்பா நீ , ஊருக்குப் புதுசா?
மாகாளி : (கோபமாக) நான் யாராக இருந்தா உனக்கென்னய்யா?
அவர்: அட இதுக்கு ஏன் இவ்வளவு கோபம்?
மாகாளி: கோபித்துக் கொண்டா என்ன செய்து விடுவே!
அவர்: சுத்த வம்புக்காரனா இருக்கறியே!முரட்டுப்பய!
மாகாளி : தெரியுதேல்லோ பார்த்ததும்... ஒதுங்கிக்கோ என் பேச்சுக்கு வராதே........
வேகமாக நடக்கிறான். லாரிகளில் மூட்டைகளைத் தூக்கிப் போடுகிறான்.
லாரிக்காரர்: என்ன தரணும் கூலி!
மாகாளி: பெரிய பிரபு! இவரு கொடுக்கறதைக் கொடய்யா .
(ஒரு சிறிய ஓட்டலில்)
மாகாளி: நாலு இட்லி. ஓட்டல்காரன்: நெய் போடட்டுமா?
மாகாளி : வெண்ணெய் போடு, வெண்ணே! ஆளைப் பார்த்து வியாபாரம் செய்யேன்யா! நெய் கேட்குதா நெய் ; இட்லி போதும்! மிளகா சட்னிபோடு.'
(அதிகமான பாரமுள்ள வண்டியை இழுக்க முடியாமல் கஷ்டப்படுபவனைப் பார்த்துவிட்டு வண்டியை முட்டித் தள்ளிவிட்டு)
மாகாளி : ஏன் ஐயா! இப்படி உன் சக்திக்கு மீறின் வேலை செய்து சாகறே!.....
வண்டிக்காரன்: என்னப்பா பண்றது! வயிறு ஒண்ணு இருக்குதே!
மாகாளி : உனக்கு இருக்குது ஓட்டிப்போயி (கடையில் உட்கார்ந்திருக்கும் ஆளைக்காட்டி) அவனைப் பாரு வயிறுன்னா அது வயிறு!
(வண்டிக்காரன் சிரிக்கிறான்.)
(ஒரு குளத்தங்கரையில் நிற்கிறான்; ஒரு புரோகிதர் பார்த்துவிட்டு)
புரோகிதர் : புண்ணிய தீர்த்தம்டா! தர்ப்பணம் பண்ணணுமா?
மாகாளி : என்னா பணம்!
புரோகிதர் : இஷ்டப்பட்டதைக் கொடு.
மாகாளி : அட, நான் அதைச் சொல்லவில்லை. தர்ப்பணம்னு சொன்னயே!
புரோகிதர் : அதுவா உங்க குடும்பத்திலே யாராவது காலமாயிருப்பாங்களே, அவாளுக்காகத் தர்ப்பணம் செய்தா மோட்சத்திலே அவாளுக்கு செளக்கியம் கிடைக்கும்.
மாகாளி : அவாளுக்கு அங்கே! இங்கே நான் சாகறேன். அதுக்கு ஒரு வழியைக் காணும்.
புரோகிதர் : அதுக்கு வேண்டியது பணம்.
மாகாளி : (சிரித்தபடி) கெட்டிக்கார ஆசாமிதான் நீ . அங்கே இருக்கிறவங்களுக்குத் தர்ப்பணம்..... இங்கே இருக்கிறவங்களுக்குப் பணம்.
புரோகிதர் : ஆமாம்.........
மாகாளி : எனக்கு இப்ப எந்தப் பணமும் வேண்டாம். குணம் கெட்டவங்களை எல்லாம் கொன்று குவிச்சாப் போதும்.
புரோகிதர் : சட்டம் இடம் கொடுக்குமோ .
சட்டம் இடங்கொடுக்காதுதான் இல்லை , அக்ரமக் காரனை தண்டிக்கவிடாமல் பணமூட்டை பாதுகாப்பு தரும்பொழுது மாகாளி மீண்டும் அந்தச் சிற்றூர் சென்று மிராசுதாரர் கிராமத்துப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டது பற்றியும், கிராமத்தானுத் தாக்கி, கிராமத்தைக் கொளுத்தி நாசம் செய்தது பற்றியும், ஊராரிடம் சொல்லி நியாயம் பெற நினைத்தான். கிராமத்துக்குச் சென்றபோது, பெண் தற்கொலை செய்து கொண்ட சேதியும், மிராசுதாரருக்கு எதிராக சாட்சி சொல்லக் கிராமத்தார் அச்சப்பட்டுக் கொண்டிருப்பதையும் அறிந்து பதறினான். கிராமத்து மக்கள் அவனிடம் பரிவுகாட்டி னர். ஆனால் துணிவு பெற மறுத்துவிட்டனர். மாகாளி கோபித்துக் கொண்டான். கிராமத்து மக்களோ, 'அந்த மிராசுதாரருடைய பகையைத் தாங்கிக் கொள்ளும் சக்தி எங்களுக்குக் கிடையாதப்பா! எங்களை மன்னித்துவிடு. ஆனால் இங்கே நீ இருப்பது கூட ஆபத்து. மிராசுதாரன் மோப்பம் பிடித்தபடி இருக்கிறான்; போலீசில் சிக்க வைத்துவிடுவான். வீணாகத் தொல்லையைத் தேடிக் கொள் ளாதே' என்று கூறினர்.
'இப்படிப் பயந்து பயந்து செத்துப் பிழைப்பதைக் காட்டிலும் ஒரே அடியாக அக்ரமத்தை எதிர்த்து நின்று கொல்லப்பட்டுச் செத்துத் தொலைக்கலாமே! நீங்கள் இப்படி கோழையாக இருப்பதனால் தான் அக்ரமக்காரர்கள் கொட் டம் அடிக்கிறார்கள். கொடுமை கொடி கட்டிப் பறக்கிறது. தூ ...... தூ...' என்று கூறிவிட்டு அந்தக் கிராமத்தை விட்டு வேறு ஊருக்குச் சென்றுவிட்டான்.
'அக்ரமத்தைத் தடுத்திட முடியவில்லை. ஆனால் எதிர்த்து நின்றேன். என் கடமையைச் செய்தேன். அந்த மிராசுதாரன் இனி இவ்விதமான அக்ரமம் செய்ய எண்ணும் போதெல்லாம் என் நினைவல்லவா வரும். நான் தெரிவே னல்லவா அவன் மனக்கண் முன்பு அவ்வளவுதான் என்னால் சாதிக்க முடிந்தது. அந்தப் பெண் தற்கொலை செய்துகொள் ளாது இருந்திருப்பாளானால் கிராமத்தார் ஒத்துழைக்கா விட்டால் கூட நான் மிராசுதாரருடைய மாளிகையில் அவர் குடியேறுவதற்கான காரியத்திலே ஈடுபட்டு, அதிலேயே மாண்டுபோக நேரிட்டாலும் மகிழ்ச்சியோடு மரணத்தைத் தழுவிக் கொண்டிருப்பேன். இப்போது எனக்கு இருக்கும் திருப்தி நாம் நமது கடமையைச் செய்தோம் என்பதுதான். அதனை எனக்கு அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டிருப் பவை இந்தத் தழும்புகள், பலமான தாக்குதல்! பல மாதங் கள் எனக்கு வலி இருந்தது. என்னென்னமோ பச்சிலைகள் மெழுகுகள் தைலங்கள் புண்ணைக் குணப்படுத்த. மேலே தானே புண் ஆறுகிறது. நெஞ்சிலே ஏற்பட்ட புண்? அது எங்கே ஆறப்போகிறது. மற்ற எவ்வளவோ பேர் நமக் கென்ன என்று இருந்துவிட்டாலும் நாம் நமது கடமையைச் செய்தோம் என்ற மகிழ்ச்சி எனக்கு இந்தத் தழும்புகளைப் பார்த்துக் கொள்ளும்போது என்று மாகாளி கூறினான்.
மற்றும் சிறுசிறு நிகழ்ச்சிகள் பலப்பல கூறினான். ஒரு நிகழ்ச்சி, என் உள்ளத்தில் ஆழமான இடம் பெற்றது. அதனையும் நிகழ்ச்சி நடைபெறுவது போன்ற வடிவத்திலேயே தருகிறேன்.
(ஒரு ஊருக்குச் சற்றே வெளிப்பகுதியில் உள்ள ஒரு கலனான கட்டிடம்; மாகாளி ஒருபுறம் சுருண்டு படுத்துக் கொண்டிருக்கிறான். இரு வாலிபர்கள் சிகரெட் பிடித்தபடி வருகிறார்கள். அங்கு ஒரு பக்கமாக உட்காருகிறார்கள், மாகாளி படுத்துக் கொண்டிருப்பதைப் பார்க்காமலேயே)
தாமு : சோமு! நீ அதிர்ஷ்டக்காரண்டா .... எதுவாக இருந்தாலும் உன் வலையிலே வீழ்ந்துவிடுகிறது.
சோமு : போடா பூல் ... அதெல்லாம் நம்ம Face Cut Personality. தரித்திரப் பயலே அது தனி Art தனிக்கலை.
தாமு : நான் நம்பவே இல்லை, நளினா உன் வலையில் விழுவாளென்று .........
சோமு: சும்மா சொல்லக் கூடாது, தாமு. நளினா , நெருப்பு, நெருப்பு போலத்தான் இருந்தாள். ஆனால்.......
தாமு : எப்படிடா ...... சொல்வேன்.... நல்ல இடத்துப் பெண் ....
சோமு : படித்துக் கூடத்தான் இருக்கிறாள்....... பல்லைக் காட்டியதும் பரவசமாகிவிடக்கூடிய ஏமாளி அல்ல...... கண்டிப்பான சுபாவம் ...........
தாமு : அதுதானே, எனக்கும் ஆச்சரியம் எப்படி?
சோமு : (கேலியாக) எப்படி.......! சொல்லி வருமா அந்த வித்தை ....... என் பேச்சு, பார்வை , அப்படி ! பாகாக உருகினாளே , நான் கண்கலங்கியபோது.......
தாமு : கண் கலங்கினாயா...?
சோமு : ஆமாம்! அப்படி ஒரு போஸ். நளினா! என் னால் நீ இன்றி நான் உயிர் வாழ முடியாது....... என்னால் வேதனையை இனியும் தாங்கிக் கொள்ள முடியாது .......
நாளைக் காலையில் கோவில் திருக்குளத்திலே என் பிணம் மிதக்கும்....... என்று டைலாக் ......... அதற்குத் தகுந்த ஆக்ட்..... போஸ்....... நளினா என்ன, சிலைகூடச் சம்மதம்! சம்மதம்! என்று கூறும்டா, கூறும் ...... மண்டு! உனக்கெங்கே தெரியப் போகிறது, அந்த வித்தை! ஒரு புன்னகை தவழ்ந்தது .... கண்களிலே ஒரு மகிழ்ச்சி ....... உடனே
தாகு : உடனே?
சோமு : சத்தியம் செய்தேன்! தாயின் மேல் ஆணை; தந்தை மேல் ஆணை... தூய காதல் மேல் ஆணை! உன் னைத் தவிர வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை. நீயே என் உயிர் - என் இன்பம் என்றேன்.
தாமு: சொன்னதும்.....?
சோமு: (கேலியாக) சொன்னதும்... போடா போ! நடக்க வேண்டியதெல்லாம் நடந்தது. நடந்து கொண்டே இருக்கிறது ........
தாமு : (தழுதழுத்த குரலில்) நல்ல அழகு.....
சோமு : (கேலியாக) ஏண்டா உருகறே..... ஏய்!..... தந்தத்தால் செய்த பதுமையடா அவள்...... அடா, அடா! சிரிக்கும்போது அவள் கன்னத்திலே ஒரு குழி விழும். ஆஹா..
ஹா... ஹா.... அற்புதமா இருக்கும் பார்க்க... விழுங்க விழுங்க .... இது என்ன கன்னமா , பச்சரிசி மாங்காயா, என்று கொஞ்சுவாள். கன்னத்தைக் கிள்ளும்போது ... அடா அடா, அடா! இத்தோடு இருபத்தி இரண்டு போதும் என்பாள் .........
தாமு : இருபத்தி இரண்டாம் ...... என்னது........
சோமு : முத்தம்டா, முத்தம்...... பரிபூரணமாக நம்பு கிறாள்....... என்னை ...... திருமணத்துக்கு நாள் பார்த்தாகி விட்டதா ...... கண்ணா என்பாள் ...... ஓ... என் பேன் .... எப்போது.... என்று ஆவலாகக் கேட்பாள்.... அதோ அந்தச் சந்திரன் மேகத்திற்குள் மறைந்ததும்... இப்போதே... இங்கேயே என்பேன் ..... போங்கள் எப்போதும் விளையாட்டுத்தானா, என்பாள்....
தாமு : நீ ....?
சோமு : (கேலியாக) .... நீ? உடனே நாள் நட்சத்திரம் பார்த்துச் சொன்னேன் என்று எதிர்பார்க்கிறாயா... பைத்தியக்காரா... அப்படியே என் மார்மீது சாய்த்துக் கொண்டேன். அன்பே என்றாள்; இன்பமே என்றேன். என்னைக் கைவிட மாட்டீர்களே என்றாள். நானா என்னையா கேட்கிறாய், அந்தக் கேள்வி என்றேன். கேட்டபடி அவள் முகத்தை என் கரங்களில் தாங்கிக் கொண்டு என் முகத்தருகே கொண்டு சென்றேன். பார்! என் முகத்தைப் பார். இந்தக் கண்களைப் பார்! உன்னைக் கைவிடும் கயவனுடைய முகமா இது என்றேன்.
தாமு: அவள்?
சோமு : அவளா! அதற்கு மேல் முடியுமா அந்தப் பேதைப் பெண்ணால், ஆனந்தத்தை அணைபோட்டுத் தடுக்க! நான் நம்புகிறேன். முக்காலும் நம்புகிறேன் என்றாள் . இதழ் என்னிடம் - இன்ப இரவு - இணையில்லா ஆனந்தம்.
தாமு : (பெருமூச்சுடன்) கொடுத்து வைத்தவன்டா நீ .... அது சரி, நளினாவைத் திருமணம் செய்து கொள்வது என்ற முடிவுக்கே வந்துவிட்டாயா?
சோமு : முட்டாள் வருவான் அந்த முடிவுக்கு ..... நானா? நளினா ஒரு 'ஒன்வீக்'... ஒரு வார விருந்து. பிறகு....
(மாகாளியின் பலமான பிடி சோமுவின் கழுத்தில் விழுகிறது. பதறுகிறான்.
உடனிருந்தவன் ஓடிவிடுகிறான். கழுத்தைப் பிடித்துத் தூக்கி சோமுவை நிறுத்தியபடி மாகாளி கடுங்கோபத்துடன்)
மாகாளி : பெண்ணைக் கொடுத்த பேயனே! 'ஒன் வீக் ஒருவார விருந்தா அவள் உனக்கு ... (தாக்குகிறான்.) மயக்க மொழி பேசி, அவளை நம்ப வைத்தாய்! பரிபூரணமாக நம்புகிறாள். நீ அவளைக் கெடுத்துவிட்டு அதை ஒரு கலை என்று இங்கு பேசிக் கொட்டம் அடிக்கிறாய் ...... பைத்தியக் காரப் பெண்ணே! பசப்பு வார்த்தையைக் கேட்டுப் பாழாகிப் போனாயே அம்மா! (மீண்டும் தாக்கி) அடப்பாதகா! உன்னை நம்பிய அந்தப் பெண் உன்னை உத்தமன் என்று எண்ணிக் கொண்டு, என்ன என்ன ஆசைக்கனவுகள், இன்ப எண்ணங்கள் கொண்டிருக்கிறாளோ! உள்ளத்தில் இடமளித்தோம் இனி ஊர் அறிய - உலகமறியக் கூறி மகிழவேண்டும். மாலை சூட்டுவான், மக்கள் வாழ்த்துவார்கள், மணாளனுடனே மதிப்புடன் வாழ்வோம் என்றெல்லாம் எண்ணி அவள் மன திலே மகிழ்ச்சி பொங்கும் ... இங்கு நீ ஒரு வாரம் என்று துளி கூட, பழிபாவத்துக்கு அஞ்சாமல், யார் இருக்கிறார்கள் நம்மைக் கேட்க என்ற தைரியத்தில் உன் வீரப்பிரதா பங்களைப் பேசிக்கொண்டிருக்கிறாய்.
(தாக்குகிறான்; அவன் அடிதாளமாட்டாமல்)
சோமு : ஐயோ... ஐயையோ.... என்னைக் கொல்லாதே! நான் தாங்கமாட்டேன். சத்தியமா இனி அப்படிப்பட்ட தப்பு தண்டாவுக்குப் போகமாட்டேன்.
மாகாளி : இனி தப்பு தண்டாவுக்குப் போக மாட்டியா! அயோக்கியப்பயலே! இப்ப நடந்ததற்கு என்ன சொல்றே.... நடந்தது நடந்ததுதானா....... யார் அந்தப் பெண்? எங்கே இருக்கிறாள்?
சோமு : பெரிய இடத்துப் பெண்ணய்யா ...... விஷயம் தெரியக்கூடாது ...... இனி அவ்விதம் நான் நடந்தா, கேள் .... கொன்று போடு ......
மாகாளி : அடப் பாதகா! ஒரு பெண்ணைக் கெடுத்து விட்டு ...... அவள் கதி என்னவென்று கூறாமல்... உன்னிடம் என்ன பேச்சு (இழுத்தபடி) நட்! அந்தப் பெண்ணைக் காட்டு ...... அவள் காலில் விழுந்து கதறு ...... நான் மட்டும் இங்கே இல்லாதிருந்தால், அந்தப் பெண்ணின் கதி என்ன ஆகியிருக்கும்? புறப்படு... இப்போதே திருமணமாக வேண் டும்..... அவள் வாழ வேண்டும்.....
சோமு : ஆகட்டும்..... என்னை விட்டுவிடு ... நான் அவ ளையே கலியாணம் செய்து கொள்கிறேன்.
மாகாளி : (கேலியாக) அப்படிங்களா ...... அப்போ , போயிட்டு வாங்க.... கலியாணத்தன்று, நான் வருகிறேன். (கேவலமாக) ஏண்டா! உன் பேச்சை நம்பச் சொல்கிறாயா ... நீதான், 'போஸ்' கொடுப்பயே, 'போஸ்'; கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். உன் பேச்சை ...... நான் என்ன ஏமாளிப் பெண்ணா , உன் பசப்பிலே மயங்க... (தாக்கியபடி) நம்ம 'பாஷை' புரியுதா! புரியதேல்லோ .....
[சோமு திணறுகிறான்.)
மாகாளி : அதனாலே, என்னோடு பேசி, தப்பித்துக் கொள்ளலாம் என்று எண்ணாதே... புறப்படு... அந்தப் பெண் வீட்டுக்கு .......
[இழுத்துச் செல்கிறான்)
சோமு : (மெல்லிய குரலில்) நாலுபேர் பார்த்தா கேவல மாப் பேசுவாங்க! என் கையை விடுங்க... நான் ஓடிவிடமாட் டேன் .... சத்யமா...
மாகாளி : ஓஹோ! துரைக்கு இது கேவலமாத் தெரி யுதா! நாலுபேர் பார்த்தா கேலியாப் பேசுவாங்களேன்னு சுருக்குன்னு தைக்குது ...... ஏண்டப்பா (Face Cut) இதற்கே உனக்கு இப்படித் தோணுதே, அந்தப் பெண்ணைக் கெடுத்துக் கைவிட்டுவிட்டா, அவளுக்கு எவ்வளவு கேவலம்... இழிவு ! உம்! நீ ஏன் அதைப் பத்தி எண்ணி இருக்கப் போறே... நீதான் 'ஒன் வீக் - போதும். என்பவனாச்சே.
(தலையைக் கவிழ்த்துக் கொள்கிறான் சோமு)
[இருவரும் நடக்கிறார்கள்; எதிரே சில பெண்கள் வருகிறார்கள்.
'இவளா? அவளா?' என்று கேட்பது போல காளி ஜாடை செய்கிறாள்.
இல்லை இல்லை என்பதை சோமு ஜாடையால் தெரிவிக்கிறான்.
எதிர்ப்புறமிருந்து வள்ளிசைகளில் வருகிறாள் சோமுவின் கண்களிலே திருட்டுத்தனம் தெரிகிறது)
மாகாளி: வருஷம் பத்து ஆனாலும் விடமாட்டேன் .... தெரியுதா.... இப்படிப்பட்ட ஆசாமியைக் கண்டா , நமக்கு விருந்து...... புரியுதா ...
[சோமு வள்ளியைப் பார்க்கக் கண்டு]
மாகாளி : அதோ வருதே, ஒரு பொண்ணு சைகளில் ......
சோமு : (மெல்லிய குரலில்) அந்தப் பொண்ணுதான்....
[சைகிள் அருகே வருகிறது. தன்னை யாரோ இருவர் தடுத்து நிறுத்துவதாக எண்ணிக் கொண்டு வள்ளி திகிலடைகிறாள்.)
மாகாளி : சைகிள் சவாரியா ....... பட்டத்தரசனை நானே கூட்டிகிட்டு வந்திருக்கிறேன் ...... இறங்கு ...... கீழே. (திகைக்கிறாள்.)
மாகாளி : இறங்கு....... ஏமாளிப் பொண்ணே ! வா, இப்படி... ஏன் இப்படி விழிக்கறே....
வள்ளி: (திணறி) யாரு ....... என்ன ...... என்னய்யா இது ..... என்னை ஏன் மிரட்டறே...... யாரு நீங்க?
மாகாளி : (சோமுவைப் பிடித்திழுத்து வள்ளி எதிரே நிறுத்தி) புரியுதா, ஏன் உன்னைக் கூப்பிட்டேன் என்கிறது ... வந்திருக்காரே உன்னை வாழவைக்கும் மணாளர்... வாம்மா வா!.... என்னா , நம்ம காதலரை, யாரோ ஒரு முரட்டுப் பய இழுத்துக் கொண்டு வருகிறானேன்னு திகைக்கறியா.... வேறே வழி இல்லை . அதனாலே இப்படி......
வள்ளி : என்ன சொல்றிங்க .... ஒண்ணும் புரியலையே.....
மாகாளி : (கோபமாக) இரகசியம் தெரிந்து விட்டதே என்று திகைப்பா? இப்படி மூடி மூடி மறைத்துத்தானே, நாசமாகப் போறிங்க! இப்படிப்பட்ட பயல்களும் உங்களை நம்ப வைத்து நாசமாக்க முடிகிறது .......
வள்ளி : (சோமுவையும் மாகாளியையும் மாறி மாறிப் பார்த்த படி)
ஒன்றும் விளங்கவில்லையே....... என்னய்யா இது .....
மாகாளி: இப்போதும் இவனுக்கு எங்கே மனக்குறை வந்து விடுகிறதோ என்றுதானே பார்க்கிறாய்? புத்தி கெட்ட பெண்ணே! இவன் உன்னை ஏமாற்றவிடப் பார்த்தான். காதலித்தானே, அதே காதகன் 'கண்ணே ! என்றானே, 'மணியே' என்றானே, அதே கயவன் ! உன்னைத் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை ...... ஒருவாரம் போதுமாம்! என் காதால் கேட்டேன், இவன் பேசியதை. நல்ல வேளையாகக் கேட்டேன். கேட்டதால், கெட இருந்த உன் வாழ்வு, அழிய இருந்த உன் கற்பு, போக இருந்த உன் மானம் மீண்டும் கிடைக்க வழி ஏற்பட்டது. வா, உன் வீட்டுக்கு! உன் அப்பா யார் ..? பார்த்துப் பேச வேண்டும்..... இவனும் வருவான் ...... திருமண நாள் குறிப்போம் ...... நாளென்ன நாள்! நல்லது நடக்கும் நாளெல்லாம் நல்ல நாள்தான் .... புறப்படு... புறப்படு .....
வள்ளி: (சிறிது புன்னகையுடன்) திருமணம் எனக்கா ...
மாகாளி : ஆமாம், ஆமாம்...... ஒத்துக் கொண்டான்....
வள்ளி: (சிரிப்புடன்) யார், இவரா?
மாகாளி : (வெறுப்புடன்) ஆமாம்...... பரிபூரணமாகத் தான் நம்பினாயே இவரை ....
வள்ளி : (மேலும் சிரித்தபடி) பைத்யமே, பைத்யமே! அவர் யாரோ, நான் யாரோ? ஐயா! உம்மிடம் நல்லதுக்குப் போராடும் வீரம் இருக்கிறது. ஆனால் சுலபத்திலே ஏமாந்து விட்டீர்..... எனக்கும் இவருக்கும், முன்பின் பழக்கமே கிடையாது .......
மாகாளி : ஏய்! என்னது... இது... (என்று கூறி சோமுவைத் தாக்க)
[வள்ளி குறுக்கிட்டு]
வள்ளி : முரட்டுத்தனத்தாலே என்ன காரியத்தைச் சாதிக்க முடியும்..... இப்போதுதான் எனக்குக் கொஞ்சம் விஷயம் விளங்குகிறது ..... காதலித்தவளைக் கைவிட இருந்தார் இந்த ஆசாமி .... கண்டு பிடித்துவிட்டீர்... அந்தப் பெண் ணுக்காக, அவள் வாழ்வுக்காக, மானத்துக்காகப் போராடுகிறீர்.
மாகாளி : ஆமாம்...... வள்ளி: ஆனால் அந்தப் பெண், நான் அல்ல..... மாகாளி : இவன் காட்டினானே உன்னை ....
வள்ளி : அடிதாங்கமாட்டாமல், யாரையாவது காட்டித் தப்பித்துக் கொள்ளலாம் என்று, சுலபத்தில் - ஏமாற்றமுடி யும் உம்மை என்ற எண்ணத்தால் .......
மாகாளி : (கோபத்துடன்) அட பழிக்கஞ்சாத பாதகா! (தாக்கி) இப்படியுமா ஒரு சுபாவம்!.... நான் ஒரு முட்டாள் . ... உன்னை நம்பிவிட்டேன்.....
வள்ளி : பார்த்தீர்களா! நீங்களே இவன் பேச்சை நம்பி விட்டீர்களே! ஒரு பெண் ஏமாந்ததிலே என்ன ஆச்சரியம் .... அடிக்காதீர்கள் ... பக்குவமாகப் பேசி ....
மாகாளி : (கேலியாக) வாடா, என் ராஜா! (என்று கெஞ்சி) புண்யவானே, அந்தப் பெண்ணை ஏற்றுக் கொள் என்று சொல்லிக் காலிலே விழ வேண்டுமா......
வள்ளி: ஒரு பெண்ணுடைய வாழ்வுக்காக இவ்வளவு பரிந்து பேசும் உங்கள் குணம் தங்கம்... தங்கமய்யா தங்கம். ஆனால், முறை தெரியவில்லை .... தாக்கித் தாக்கியா திருத்த முடியும்... சாகடிக்கலாம்....
மாகாளி: இப்படிப்பட்ட ஈனர்கள் செத்தால் என்ன .... சாகடித்தால்தான் என்ன ....
வள்ளி : ஒன்றுமில்லை .... எந்தப் பெண்ணுடைய நல் வாழ்வுக்காகப் பாடுபடுகிறீரோ, அந்தப் பெண்ணின் கதி என்ன ஆகும் ...... நாசமாய்ப் போகும்....... அழிக்கத்தான் தெரிகிறது உமக்கு ... வாழ வைப்பது இந்த முறையால் அல்ல .....
மாகாளி : (வெறுப்புடன்) இந்த முறை அல்ல! வேறே என்னவாம்? ஒரு பள்ளிக்கூடம் நடத்தி இவனுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கச் சொல்கிறாயா ...... பெண்ணே! உனக்குப் பேசத் தெரிகிறது.... சும்மா இரு .......
[சோமுவின் கழுத்தைப் பிடித்திழுத்து)
யார் அந்தப் பெண்? உண்மையைச் சொல்லு! உதை பட்டுச் சாகாதே!
வள்ளி : சொல்லய்யா ...... யார் அந்தப் பெண்... இதோ பார், ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் பாழாக்குவது தர்மமா நியாயமா... உங்களை எவ்வளவு நம்பி தன்னை ஒப்படைத் தாள்! துரோகம் செய்யலாமா .......
மாகாளி : இந்தக் கல் நெஞ்சனிடம் உன் கனிவான பேச்சு, பலிக்குமா , அம்மா .... அவனுக்குப் புரிவது ஒரே ஒரு பாஷைதான்.
(தாக்குகிறான். வள்ளி குறுக்கிட்டுத் தடுக்கிறாள்.)
மாகாளி : (கோபமாக) தா, பெண்ணே ! இதிலே குறுக் கிடாதே! நீ அல்ல, இவனிடம் ஏமாந்தவள் ..... பிறகு உனக் கென்ன வேலை இங்கே? போ , பேசாமல் ...... நான் பார்த்துக் கொள்கிறேன் .......
வள்ளி : தெரிகிறதே நீங்கள் பார்த்துக் கொள்கிற இலட் சணம். பக்குவமாகப் பேசி, உண்மையைத் தெரிந்து கொள் ளத் திறமை இல்லை; புத்தி புகட்டி, மனதை மாற்றத் தெரியவில்லை .
மாகாளி : அம்மா, மகராஜி! அந்தத் திறமை எல்லாம் உங்களோடு இருக்கட்டும்... என் திறமை அவனுக்குத் தெரிய யும் (சோமு அடிபட்ட இடத்தைத் தடவிக் கொடுக்கிறான்.) உனக்கு எப்படித் தெரியும்... உனக்குச் சம்பந்தமில்லாத விஷயம்... தலையிடாதே..... போ, பேசாமல்.
வள்ளி : எனக்குச் சம்பந்தமில்லாத விஷயமா .... சரி, உமக்கு மட்டும் என்ன சம்பந்தம் ..... இவனால் கெடுக்கப் பட்டவள் யார்? உன் அக்காவா, தங்கையா?
மாகாளி : யாராக இருந்தால் என்ன? ஒரு ஏமாளிப் பெண் - அது போதும், நான் தலையிட .......
வள்ளி : நீதிக்காகப் போராடுபவர்கள் லட்சத்தில் ஒருவர் கூட இருப்பது கஷ்டம்... ஆடவர்களிலே இப்படிப் பட்ட ஒரு அபூர்வ மனிதர் இருப்பது கண்டு நான் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறேன் தெரியுமா ... பெண் குலத்தின் சார் பிலே வாதாட, போராடா இப்படிப்பட்ட வீரர்கள் தேவை... நிரம்பத்தேவை ... வீரம் இருக்கிறது. தங்களிடம் நிரம்ப..... விவேகம் இல்லை .......
மாகாளி : முட்டாள், முரடன் நான் .... அதைத்தானே அம்மா, நாசுக்காகச் சொல்கிறாய் ..... சரி, நான் இவனை இழுத்துக் கொண்டு போய், முச்சந்திக்கு முச்சந்தி நிறுத் திப் பேசப் போகிறேன். அந்தப் பெண்ணின் இருப்பிடத் தைக் கண்டுபிடிக்கும் வரையில் வேறு வேலை எனக்குக் கிடையாது .......
வள்ளி: நீ முச்சந்திகளிலே இவனை நிறுத்தி வைத்து முரட்டுத்தனமாக நடத்துவாய் - ஊரார் இவனுக்கு வேண்டி யவர்கள் - போலீஸ் - எல்லாம் கைகட்டி, வாய் புதைத்து, ஓஹோ ! ஒரு இலட்சியவீரன் போராடுகிறான். நாம் குறுக்கிடக்கூடாது என்று இருப்பார்கள் என்ற எதிர்பார்க்கிறாய்? உள்ளத்திலே நல்ல எண்ணம் இருக்கிறது. உலகம் தெரிய வில்லையே ...... யாரும் துணை இல்லாததால் இவன் சும்மா இருக்கிறான் .... நாலு பேர், தெரிந்தவர்களைக் கண்டால் போதுமே, காகா வென்று கூச்சலிட்டு திருடன், திருடன்! முரடன் ! கத்தியால் குத்தவந்தான்! பணத்தைப் பறித்துக் கொண்டான்' என்று கூவுவான் .... ஊர் பாயும் உன் மீது .... உன் வலிவு பயன்படாது. போலீஸ் வரும் ... கோர்ட்டிலே நிறுத்துவார்கள் ..... கையில் விலங்கு போட்டு .... நீ கூறுவாய், இவன் ஒரு பெண்ணைக் கொடுத்த பேயன், திருத்தப் பார்த்தேன் என்று கோர்ட்டிலே; கைகொட்டிச் சிரிப்பார்கள், ஆழ்வார்கள், நாயன்மார்களுக்குப் பிறகு அவதரித்திருக்கிறார் ஐயா இந்த மகான்! என்று கூறி, வழிப்பறி நடத்திய குற்றத் திற்காக ஆறு வருடம் தண்டனை தருவார்கள் ...... இவன் வெற்றிச் சிரிப்புடன் வேறு வேட்டைக்குக் கிளம்புவான் - இவனால் நாசமாக்கப்பட்ட பெண், குளத்தைத் தேடுகிறாளோ விஷத்தைத் தேடுகிறாளோ, யார் கண்டார்கள் .......
மாகாளி : நன்றாகத்தான் பேசுகிறாய் ...... நியாயமாகத் தான் பேசுகிறாய் .... உலகம் அப்படித்தான் இருக்கிறது .... ஆனால்..... அந்தப் பெண்ணின் வாழ்வு நாசமாகலாமா .... நீயும் ஒரு பெண்... சொல்லம்மா சொல்லு..... இந்தப் பேயனைச் சும்மா விடலாமா .....
வள்ளி : (சோமுவிடம் கனிவாக) ஐயா! பழிபாவத்துக்கு அஞ்ச வேண்டாமா ..... அடுக்குமா உமது போக்கு? அபலையை நாசமாக்கலாமா... உம்மிடம் கொஞ்சி இருப்பாள். கெஞ்சி இருப்பாள் .... சத்யம் சத்யம் என்று கூறி நம்ப வைத்திருப்பீர் .... அவளைக் கைவிட்டால் அவள் மானமழிந்து வாழ் வாளா... நமது சமூகத்துக்கே இழிவு அல்லவா... ஐயா!
தாயின் வயிற்றில் பிறந்தீர்! தாய்க்குலத்துக்கு இழிவு தேடலாமா! அக்கா தங்கை இல்லையா உமக்கு! உமது காதலை நம்பினாளே அந்தப் பெண், அவளிடம் சரசமாடிக் கொண்டிருக்கும்போதே, அவளைச் சாகடித்து விட்டிருக்கலாமே! அது எவ்வளவோ மேல், இதைவிட!
[சோமு கண்கலக்கமடைகிறான். மாகாளி அதைக் காண்கிறான்.]
வள்ளி : அவளுடைய அழகு கண்டீர் உமது மனம் அவளை நாடிற்று... அருகே அழைத்தீர் ... ஆயிரம் தடவை, அவள் தடுத்திருப்பாள், ஆகாது... அடுக்காது. முறையல்ல - நெறி அல்ல என்று. என்னென்ன கூறினீரோ... கவிதை பாடி இருப்பீர், கதை சொல்லி இருப்பீர், கை நீட்டடி , சத்யம் என்று சொல்லி இருப்பீர்... நம்பினாள். அவளை நாசமாக்காதீர். நான் அவளுடைய தமக்கை என்று வைத்துக் கொள்ளும்..... காலில் விழச் சொன்னால் கூட விழுகிறேன்.
சோமு : (விம்மும் நிலையில் ) அம்மா! என்னை மன் னித்து விடு... மன்னித்துவிடு... மன்னித்துவிடம்மா, மன் னித்துவிடு.
வள்ளி : அவளை உமது நிரந்தர விருந்தாக்கிக் கொள்ளு மய்யா ... அவளிடம் பெற்ற அன்புக்குக் கட்டுப்படுவதுதான் தர்மம். அந்த அன்பு ஒன்றுக்கு ஆயிரமாக ஓங்கி வளரும் .... குடும்பம் தழைக்கும்.
[வள்ளி கண்கசக்குகிறாள். அதைக் கண்ட மாகாளி]
மாகாளி : நீ ஏனம்மா அழுகிறாய் .... பாரடா பார்! பேயனே! அந்தப் பெண்ணின் கண்ணீருக்காவது பயப்படு.....
வள்ளி : அந்தப் பெண் வீட்டிலே திருமணத்துக்கு எதிர்ப்பு இருந்தால் கூட, நான் கெஞ்சிக் கூத்தாடிச் சம்மதம் பெற் றுத் தருகிறேன்!
[வேறோர் சைக்கிளில் வேறோர் பெண் வருகிறாள். வள்ளியைப் பார்த்துவிட்டு.]
வள்ளி! வள்ளி! எங்கே ... இப்படி......
[சோமுவைப் பார்த்தபடி தலைகுனிகிறாள். சோமு, கூச்சமடைந்து தலையைக் கவிழ்த்துக் கொள்கிறான்.
மாகாளியும் வள்ளியும் அதைக் கண்டு ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்கின்றனர்.
மாகாளி, பெண்கள் அறியாமல், சோமுவை இடித்து வந்தவளைக் காட்டி, 'இவளா?' என்று ஜாடையால் கேட் கிறான்.
வெட்கமும் புன்னகையும் கொண்ட நிலையில், சோமு, 'ஆமாம்' என்று தலையை அசைக்கிறான்.)
வள்ளி : நீதானா... நளினா ... என்னிடம் கூட இத்தனை நாள் மறைத்து வைத்தாயே...
நளினா : சொல்லி விட்டாரா .......
மாகாளி : உம்! உம்! சொல்லி நாள் பார்க்கச் சொல்லுகிறார்.
வள்ளி: வாருங்கள், நளினி வீட்டுக்குப் போவோம்..... ...... பெரியப்பாவிடம் பேசலாம் ........
மாகாளி : பெரியப்பாவா.......?
வள்ளி : ஆமாம்; நளினியின் அப்பாவை நான் செல்ல மாகப் பெரியப்பா என்றுதான் கூப்பிடுவது... நானும் நளினி யும் ஒன்றாகப் படித்தவர்கள் .......
மாகாளி : (குறும்புப் புன்னகையுடன்) நான் நம்பமாட் டேன் .... இதோ இவரும் நம்பமாட்டார். உனக்குத் தெரிந் ததில் ஆயிரத்தில் ஒரு பகுதிகூட ...அதுக்கு ... நளினிக்குத் தெரியாது......
வள்ளி: இந்த மாதிரி, சாந்தமாக வருஷத்திலே எத், தனை தடவை ... ஒரு மூன்று நாலு தடவையாவது இருப்பது உண்டா ......?
மாகாளி : மனதிலே குமுறல் இருக்கும்போது, சாந்தி எப்படி ஏற்படும்?.....
வள்ளி: ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
மாகாளி : அதற்கு ஒன்று, உணர்ச்சியற்ற மரக்கட்டை ஆகிவிட வேண்டும். அல்லது செத்துத் தொலைக்க வேண்டும்.
(இருவரும் பேசிக்கொண்டு இருக்கையில் சோமு, நளினா வின் கரங்களை எடுத்துக் கண்களில் ஒத்திக் கொள்கிறான்)
மாகாளி : என் கதை கிடக்கட்டும்... இனி இந்தப் பெண் விஷயம்.
வள்ளி : நான் பொறுப்பு ... திருமணம் நடக்கும் .......
மாகாளி : மனம் நிம்மதி அடைந்ததம்மா. நான் வருகிறேன் ..... அபலை அழியாது பார்த்துக் கொள்ள முடிந்தது..... என்றும் ஏற்படாத மகிழ்ச்சி எனக்கு .....
வள்ளி: கோபம் ஏன் வருகிறது தெரியுமா ....
மாகாளி : நமக்குப் பிடிக்காதது நடக்கும்போது கோபம் வரத்தானே செய்யும்?
வள்ளி : நமக்குப் பிடிக்காதது மட்டுமல்ல... நம்மால் தடுக்க முடியாதது நடந்தாலும், கோபம் வரும். நம்மால் தடுக்க முடியவில்லையே என்பதாலே கோபம், வெட்கம், இரண்டும் சேர்ந்து கொட்டுகிறது.
மாகாளி : உண்மைதான்... எனக்கு, அக்ரமத்தைக் கண் டால் கட்டோடு பிடிக்காது... கோபம் தான் வரும்....
வள்ளி : அக்ரமத்தைப் போக்க முடிவதில்லை.
மாகாளி : ஆமாம்....... முடிவதில்லை .
வள்ளி : ஏன்? முயலுவதில்லை ..... நம்மால் ஆகுமா என்ற பயம்.
மாகாளி : அதுவும் உண்மைதான்.
வள்ளி: ஆனால், கோபத்தால் என்ன பலன்? அக்ரமம் ஒழிகிறதா? உம்! அதுதான் இல்லை. கோபம் நம்மையே அக்ரமம் செய்ய வைக்கிறது.
மாகாளி : வலியோர் எளியோரை வாட்டும்போது..... எப்படிச் சகித்துக் கொண்டிருக்க முடியும்.
வள்ளி : முடியாது ....... கூடாது ....... ஆனால் அதற்காக நாமே துடுக்குத்தனம் செய்வதா....?
மாகாளி : அப்பொழுதுதான் அக்ரமக்காரன் அடங்குகிறான்.
வள்ளி : சரியாகச் சொன்னாய்... அக்ரமக்காரன் அடங்கு கிறான் .... அக்ரமம் அழிவதில்லை .... அக்ரமம் கூடாது என்பது தானே உன் நோக்கம்?
மாகாளி : ஆமாம். ஆனால் வழி தெரியக் காணோமே...
வள்ளி : அடேயப்பா! அவ்வளவு சுலபத்திலா, வழி கிடைத்துவிடும்.
அவ்வளவு சுலபத்திலா வழி கிடைத்துவிடும் என்று வள்ளி சொன்னது போலத்தான், நிகழ்ச்சிகள் தொடர்ந் தன . நளினாவைத் திருமணம் செய்து கொள்ள சோமு இணங் கினான். ஆனால் சோமுவின் தந்தை சீறினார். சோமுவின் தாய் மாமன் படை திரட்டினான். வள்ளியின் தூண்டுதலே இதற்குக் காரணம் என்று தூற்றினான். வள்ளிக்கும் மாகாளிக் கும் கள்ளக்காதல் என்று கதை கட்டிவிட்டான். இது வள்ளியை மணந்து கொண்டவன் காதிலே விழுந்தது; விவாக விடு தலைக்கான வழக்குத் தொடுத்துவிட்டான்; சோமுவின் மாமன் சாட்சி.
நளினாவின் திருமணத்தன்று ஒரே கலவரம் - மூட்டி விடப்பட்ட கலவரம். அதிலே மாகாளிக்குத்தான் பலமான தாக்குதல்.
அந்தத் தாக்குதலில் கிடைத்த காயங்களுக்காகத்தான், மாகாளிக்கு உடலெங்கும் கட்டுப் போட்டிருந்தார்கள்.
மாகாளியின் உடல்நிலை தேறுவதற்காக வள்ளி மிகுந்த முயற்சி எடுத்துக் கொண்டாள். அவள் அடிக்கடி மருத்துவ மனை சென்று வந்ததையேகூடக் காரணமாக்கிக் காட்டி னார், வழக்கறிஞர் --- விவாக விடுதலைக்காக.
மாகாளியின் மனம் எரிமலையாகக் கொதித்தது. வள் ளியோ அமைதியை இழக்கவில்லை; புன்னகையைக்கூட இழக்கவில்லை .
”தூற்றுகிறார்கள்! அதனால் என்ன? என் உள்ளத்தில் தூய்மை இருக்கிறது; எனக்கு ஒரு அண்ணன் கிடைத்ததாக எண்ணி நான் பெருமைப்படுகிறேன்" என்று வள்ளி சொன்ன போது, எதற்கும் அழுது பழக்கப்படாத மாகாளிகூடக் கசிந்து கண்ணீர் வடித்தான். 'நான் இத்தகைய பாச உணர்ச்சியை, நேச உணர்ச்சியைக் கண்டதே இல்லையம்மா , கண்டதே இல்லை' என்று கூறி, வள்ளியின் கரங்களை எடுத்துத் தன் கண்களில் ஒத்திக் கொண்டான்.
மருத்துவர், 'மாகாளி! உனக்கு இனி ஆபத்து இல்லை . ஆனால் உடலில் பல இடங்களிலே தழும்புகள் இருக்கும்; மறைய நெடுங்காலம் பிடிக்கும்' என்றார்.
”தழும்புகளா ! அவை மறையவே வேண்டாம் டாக் டர்! அவை அப்படியே இருக்க வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன். நான் பெற்ற பரிசுகள் அல்லவா அவை! அக்ரமத்தை எதிர்த்து நிற்கும் என் கடமையை என்னால் முடிந்த மட்டும் செய்தேன் என்பதற்கான அடையாளங்கள் என்றான்.
டாக்டருக்கு அவன் கூறியதன் முழுப் பொருள் விளங்க வில்லை .
"என் தங்கை மட்டும் எனக்கு அனுமதி கொடுத்தால், இன்னும் ஒரே ஒரு தழும்பு கடைசி தழும்பு பெறமுனைவேன்! இந்தக் குணவதியைத் தவிக்கச் செய்து, தூற்றித் திரிபவ னைத் தாக்கி தாக்கித்..." என்று கூறியபடியே, களைப் பால் மாகாளி மயக்கமுற்றான்.
அவன் விரும்பிய கடைசித் தழும்பை அவன் பெற முடியவில்லை. வள்ளி அதற்கு அனுமதி கொடுக்காததால் அல்ல, வள்ளியை மணந்தவன், சதி செய்து, மாகாளியின் உணவில் நஞ்சு கலந்து கொடுத்ததால், மாகாளி மாண்டு போனான்.
அவன் மறைந்தாலும், அவன் பெற்ற தழும்புகள் எவர் மனதையும் விட்டு மறையக்கூடாது. அவை உணர்த்தும் பாடங்களும் மங்கிவிடக் கூடாது என்பதற்காகவே 'தழும்பு கள் பற்றிய இந்தத் தகவலைத் தந்திருக்கிறேன்.
---------------------
12. காலிழந்தான்
அவனை நான் அதற்கு முன்பு கண்டதில்லை. ஊருக்குப் புதியவன் போலிருக்கிறது; உருக்குலைந்த நிலை ; அழுக்கான ஆடை; மிரட்சி காட்டும் பார்வை!
ரயிலடியில் அன்று நிரம்பக் கூட்டம். என் நண்பனை வரவேற்கக் கூடிற்று; நானும் அதற்காகவே சென்றேன். என் நண்பன் என்னை எதிர்பார்த்திருப்பானா என்பது எனக்குத் தெரியாது. வரவேற்பு வைபவமும், நகர மண்டபத்தில் அவன் சொற்பொழிவும் ஏற்பாடாகி இருந்தது. விளம்பரத்தைக் கண்டுதான் நான் சென்றேன் - அவன் என்னை அடையாளம் கண்டுகொண்டானா என்பது கூட எனக்குத் தெரியாது - பார்த்ததும் எனக்கு அவனை நன்றாக அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. போர்க்களத்திலே உழன்றவன் - ஆனால் முகத்திலே இருந்த அந்தப் பழைய பொலிவு குறையவில்லை.
பார்த்து மகிழ்ந்தேன் - பாராட்டு விழா நடத்த ஏற் பாடு செய்தவர்கள் என் நண்பனை அவன் மனைவியுடன் மோட்டாரில் அழைத்துச் சென்றனர். பெண் அடக்கமும்
அழகும் ஒருசேரக் காணப்பட்டாள்.
படம் எடுக்க வந்திருந்தோரும், பத்திரிகை நிருபர்களும் பேசிச் சிரித்தபடி நடந்தனர்.
"போர்க்களத்திலே மொத்தத் துணிச்சலோடு போரிட்டவன்."
"சுரங்க வெடி இருப்பது தெரிந்தது. அதனை அகற்றிட முனைந்தான்."
அவன் வீரத்தினால் தான் பலர் உயிர் பிழைத்தனர். என் நண்பனைப்பற்றி இவ்விதம் அவர்கள் பாராட்டிப் பேசியது கேட்கக் கேட்க எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
அவன் பள்ளிகூடத்தில் படிக்கும்போதே துணிச்சலுள்ளவன், நன்றாக நினைவி-லிருக்கிறது; ஒருநாள் முரட்டுக் காளையொன்று எங்கள் ஆசிரியரைத் துரத்திற்று அலறி ஓடினார். நாங்களும் ஓடினோம் - துணிந்து சென்று, அதன் வாலைப் பிடித்து இழுத்து, அதனைத் தன் பக்கம் பாயும்படிச் செய்தவன் என் நண்பன் கண்ணப்பன் தான் - அவனைக் காளை பலமாகத் தாக்கிவிட்டது.
"நான் பரவாயில்லை; வாலிபன் வலி எடுத்தால் கூடத் தாங்கிக் கொள்ளமுடியும். ஆனால் அவர் பாபம் ஐம்பது வயதுக்கு மேல் ஆனவர்; வலிவற்றவர்; அவரை அந்த முரட்டுக் காளை முட்டித் தள்ளிக் கீழே உருட்டிவிட்டால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுவிடும் - அவரால் தாள முடியாது." என்று சொன்னவன் கண்ணப்பன்.
பள்ளிக்கூடத்தில் 'போக்கிரி" என்று பெயரெடுத்த மாணவர்கள் சிலர் உண்டு; அவர்கள் யாருக்கும் இந்தத் துணிச்சல் வந்ததில்லை; குனிந்த தலை நிமிராதவன் என்று பெயரெடுத்திருந்த கண்ணப்பனுக்குத்தான் வந்தது அந்த வீரம்.
அதே வீர உணர்ச்சியைத்தான், போர்க்களத்திலே காட்டி இருக்கிறான், பாராட்டுக்கு உரியவன்; இதிலென்ன சந்தேகம்?
இதை எண்ணிக் கொண்டு வழி நடந்தேன் - பாதை ஓரமாகச் சென்று கொண்டிருந்தவன், கீழே விழப்போனான், ஏதோ இடறி - ஏதோ நினைவாக நடந்து சென்று கொண்டிருந்தான் போலிருக்கிறது. அவன் கீழே விழவிடாமல் நான்தான் காப்பாற்றினேன் இல்லையென்றால் பாதையை ஒட்டி இருந்த பத்தடி பள்ளத்திலே விழுந்து விட்டிருப்பான். அப்போதுதான் அவன், "நானோர் குருடன்; இடறி விழுந்தேன்," என்று முணுமுணுத்தான்; எனக்குச் சிரிப்பு வந்தது. அடக்க முடியாதபடி; ஏனெனில் நானோர் குருடன் என்று சொன்னானே, அவன் நொண்டி - ஒரு காலிலே ஒரு பகுதி முழங்கால் அளவுக்குத் துண்டிக்கப்பட்டுப்போய் விட்டிருந்தது - தடி ஊன்றிக் கொண்டு தத்தித் தத்தித்தான் நடக்க முடிந்தது.
கண்களிலே ஒரு பழுதும் இல்லை. கால் தான் நொண்டி . ஆனால் அவன் நானோர் குருடன் என்றல்லவா சொன்னான் - அதனால் எனக்குச் சிரிப்பு வந்தது, சிரித்து விட்டேன் - ஆனால் அடுத்த கணமே மனம் என்னமோ போலாகிவிட்டது, பாபம், என்ன எண்ணிக் கொள்கிறானோ அவன் என்று. எனவே அவனிடம், மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்.
"ஓஹோ! நொண்டி நான், அதனால் இடறி விழுந்தேன் என்று சொல்லியிருக்க வேண்டும்; குருடன் என்று சொல்லிக் கொண்டது வேடிக்கையாக இருந்தது என்பதற்காகச் சிரித்தீர்களா! பரவாயில்லை . காலிழந்தவன் நான்; அது ஊருக்கும் உலகுக்கும் தெரிகிறது. ஆனால் நான் கண்ணிழந்தவன் என்பது உங்களுக்குக் கூடத் தெரியாது. எனக்கே இப்போது ஒரு அரை மணி நேரத்துக்கு முன்புதான் தெரிந்தது, நான் ஒரு குருடன் என்பது."
நொண்டி இதுபோலப் பேசினான்; கண்களை உன்னிப் பாகக் கவனித்தேன் - பழுதுபட்டில்லை. ஒளி விட்டுக் கொண்டிருக்கிறது. குருடன் அல்ல. ஆனால் தன்னைக் குருடன் என்று திட்டவட்டமாகச் சொல்லிக் கொள்கிறானே, இது என்ன விந்தை? புரியவில்லை. தத்தித்தத்தி அவன் என்னுடன் நடந்து வந்து கொண்டிருந்தான்.
"கோபிக்கக் கூடாது; கண்கள் சரியாக இருப்பதாகத் தான் தெரிகிறது. ஏன் குருடு என்று உங்களை நீங்களே குறை கூறிக் கொள்கிறீர்கள்" என்று நான் கேட்டேன், மரியாதை கலந்த குரலில்.
ஒரு சமயம், எனக்குப் புத்திக்கோளாறு என்று எண்ணுகிறீர்களோ, என்னவோ! என் பேச்சும் போக்கும் அப்படித் தான் நினைக்கச் சொல்லும்," என்று அவன் கூறினான். ஏதோ பெரும்பாரம் நெஞ்சிலே சுமந்து கொண்டிருக்கிறான்; அதனாலேதான் தன்னை வெறுத்துப் பேசுகிறான் என்று புரிந்தது; அவனிடம் எனக்கு மேலும் இரக்கம் ஏற்பட்டது.
அரை மணிக்கு முன்புதான்......
நானோர் குருடன் என்பது எனக்கே புரிந்தது என்றேன், விளங்கி இருக்காது. என் கதையைக் கேட்டாலொழிய அது விளங்காது! ஆனால், ஏதோ வேலையாகச் சொல்லக்கூடும். உனக்குத் தொல்லை தரலாமா? என் நெஞ்சோடு இருந்து போகட்டும் அந்தக் கதை ......'
"எனக்கொன்றும் வேலை இல்லை. இன்று விடுமுறை எடுத்துக் கொண்டிருக்கிறேன். நேரே நகர மண்டபம்தான் போகிறேன். இப்போது வரவேற்பு கொடுத்தார்களல்லவா லெப்டினன்ட் கண்ணப்பாவுக்கு -- அவருடைய சொற்பொழிவு, அங்கே ..."
@அப்படியா, கண்ணப்பா! வரவேற்புக்காகத்தான் வந்தீர்களா... என்னைப்போலவே ! உங்களுக்கு கண்ணப்பாவை ..
”தெரியுமா என்கிறீர்களா! நாங்கள் இருவரும் ஒரே பள்ளிக்கூடத்திலே ஒன்றாகப் படித்தவர்கள், நண்பர்கள், பழைய நண்பர்கள்......."
"அப்படியா... அப்படியானால், என் கதையை உங்களிடம் கூறுவது அவ்வளவு சரியாக இருக்காது. ஏன் அப்படிப் பார்க்கிறீர்கள்! ஆசாமிக்கு நிச்சயமாக புத்தி கோளாறு தான் என்னுதானே! பயப்படாதீர்கள் - எனக்கொன்றும் பைத்தியமில்லை; புத்திச் கோளாறு இல்லை; புத்தி இல்லை; அவ்வளவுதான். அதிலும் பொதுவாக, பெண்களைப் புரிந்து கொள்கிற புத்தி இல்லை - நம் நாட்டுப் பெண்குலத்தின் குணத்தைத் தெரிந்து கொள்ளும் புத்தி இல்லை. அது இருக்கட் டும், லெப்டினன்ட் கண்ணப்பாவிடம் இப்போது பேசினீர்களா ....?"
”இல்லை, இல்லை. நான் தொலைவிலே இருந்துதான் பார்த்தேன். அவனுக்கு என்னை அடையாளம் தெரிகிறதோ, இல்லையோ!”
”அவ்வளவுதானா' ஒருவருக்கொருவர் நெருக்கம் இருக்கிறது என்று எண்ணிக் கொண்டேன்."
நானும் லெப்டினன்ட் கண்ணப்பா போலத்தான்; போர்க்களம் சென்று திரும்பியவன்தான். அங்குதான் கால் போனது கண்ணப்பாவுக்குப் போனது போலவே. ஆனால் அவன் வேறு ஒரு முனையிலே, நான் மற்றோர் முனையிலே. இருவரும் சந்தித்ததே இல்லை ."
தங்கம் - அவன் மனைவி - இனி என் தங்கை. ஆனால் போர்க்களம் போகுமுன்பு நான் அவளை மணம் செய்து கொள்ள விரும்பினேன். அவன் மறுக்கவில்லை, பெற்றோர்கள் ஒப்புக் கொண்ட போது ....
போர்க்களம் போகுமுன்பே திருமணம் செய்து கொள்ள திட்டமிருந்தது.
ஒருநாள் மாலை ! அந்த ஊர் குளத்துப் பக்கம் சென் றிருந்தேன் - பொழுது சாய்ந்து விட்ட நேரம் .... இரண்டு பெண்கள் தண்ணீர்க் குடத்துடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். நான் வருவதை அவர்கள் கவனித்ததாகத் தெரியவில்லை. பேச்சிலே அவ்வளவு ஈடுபட்டுப் போயிருந்தனர். சிறிதளவு உரத்த குரலிலேயே பேசிக் கொண்டனர், என் காதில் விழும் அளவுக்கு. அவர்கள் சென்ற பக்கமே நானும் செல்ல வேண்டி இருந்ததால் அந்தப் பேச்சைக் கேட்டுத் தொலைக்க வேண்டி நேரிட்டது. செவிடாக இருந்திருந்தால், நான் குருடனாகி இருந்திருக்கமாட்டேன்.”
"தங்கத்துக்குக் கலியாணமாமே, அடுத்த வாரம்....”
”ஆமாம். பட்டாளத்தானுக்குக் கொடுக்கப் போகிறார்களாம்"
”பாரேண்டி வேடிக்கையை. தங்கம் பெரிய பயந்தாங் கொள்ளி! அவளுக்கு வரப்போகிறவன் பட்டாளத்துக் காரன்! எப்படி பொருந்தப் போகுது?"
”தங்கத்தோட , சித்தாத்தா கொடுமைக்காரி யாச்சே. இவ மூத்தவ பொண்ணுதானே! அதனாலே எந்தப் பாழுங் கிணற்றிலேயாவது பிடித்துத் தள்ளிவிட்டாத்தான் நிம்மதின்னு தீர்மானிச்சு பட்டாளக்காரனை ஏற்பாடு செய்து விட்டா ."
”பட்டாளத்துக்காரனா! கேவலம் ஒண்ணுமில்லே; சொல்லப் போனால் பெருமைதான்."
”அதுக்குச் சொல்லலேடி . ஏன் இப்ப அவசர அவசரமா கலியாணம்? அவன் பட்டாள வேலையை முடிச்சிகிட்டு வரட் டுமே! ஒரு வருஷமோ இரண்டு வருஷமோ ஆகப்போகுது. அதக்குள்ளே என்ன குடிமுழுகிப் போகும்? ஏன் அவசரம்."
”நல்ல காரியத்தை ஏன் தள்ளிப் போடணும்."
”அதுக்காக சொல்லலே. இவன் தங்கத்துக்குத் தாலி கட்டிவிட்டு கிளம்பப் போறான், சண்டை நடக்கற இடத்துக்கு . அட அவனுடைய தலையெழுத்து எப்படி இருக்குதோ! காலே போகுதோ, கையே போகுதோ, உயிரேதான் போகுதோ. அப்படி ஏதாச்சும் ஒண்ணு அவனுக்கு நேரிட்டுவிட் டால், தங்கம் தானே தலையிலே கையை வைத்துக் கொண்டு காலமெல்லாம் கதறிக்கொண்டிருக்க வேண்டி இருக்கும்."
"அதுக்காகச் சொல்றியா! அது நிஜம்தான். கொஞ்சம் பொறுத்துச் செய்யலாம்."
"அட அது அந்த ஆம்பிளைக்குத் தெரிய வேண்டாமா? நாம போறதோ சண்டை நடக்கிற இடத்துக்கு, அங்கே என்ன ஆகுதோ , ஏது ஆகுதோ - நாம் எதுக்கு அவசரப்பட்டு ஒருத்தி கழுத்திலே இப்ப தாலி கட்றது. சண்டை முடிந்ததும் கை, கால், கண்ணுக்கு ஊனம் இல்லாம வந்து சேர்ந்தா, அப்ப பார்த்துக் கொள்ளலாம், கலியாணத்தைப் பத் தின்னு தோண வேணாமா?"
”புத்திக் கெட்ட ஆளு போல இருக்கு."
”அவசரம்! தங்கத்தை வேறே எவனாவது கட்டிக் கொள்ள வந்துவிட்டா என்ன செய்கிறது என்ற பயம்."
”இருக்கும், இருக்கும்! தங்கத்துக்கு என்னடி குறை! கண்டேன் கண்டேன்னு ஓடி வருவான் நூறு பேர் கட்டிக் கொள்ள ...."
”அழகா இருக்காளேன்னு சொல்றியா ! அழகைப் பார்த்தா எவனுக்கும் ஆசை வரும் கட்டிக் கொள்ளலாம்னு. ஆனா தரித்திரம் பிடிச்சவ என்கிற சங்கதி தெரிஞ்சா கிட்டே வரப் பயப்படுவாங்க, விவரம் தெரிந்தவங்க."
”எது எப்படி இருந்தாலும் சண்டைக்குக் கிளம்பற சிப்பாயி இப்படி ஒரு பெண்ணு கழுத்திலே தாலிக்கயிற்றை கட்டி விட்டுக் கிளம்பறது சரியில்லை. இதைவிட ஒரு தூக்குக் கயிற்றையே போட்டுவிடலாம்."
அதற்கு மேல் என்னால் அவர்கள் பேசிக் கொள்வதைக் கேட்க மனம் இடம் தரவில்லை. அதிலும் பேசிவிட்டு அந்த இரண்டு பெண்களும் சிரித்த சிரிப்பு இருக்கே, அப்பப்பா என் நெஞ்சைப் போட்டு அறுத்துவிட்டது. உண்மைதானே அவர்கள் சொல்வது என்று என் நெஞ்சம் உறுத்திற்று. என்னையும் அறியாமல் நான் பெரிய கேடு செய்து விடுகிறேன் என்ற பயம் ஏற்பட்டது. அந்தக் பெண்கள் பேசிக் கொண்ட படி எனக்குப் போர்க்களத்திலே ஏதேனும் ஏற்பட்டுவிட்டால் தங்கத்தின் கதி என்ன ஆகும். மனம் என்ன பாடுபடும்? சித்தி என்ன சொல்லுவாள். ”எவன் தலையிலாவது கட்டித் தொலைத்துவிட்டு நிம்மதி அடையலாம் என்று நினைத்தால் நடக்கிறதா! இவளுடைய ஜாதகம் அப்படி ! மறுபடியும் என் காலை வந்து சுற்றிக் கொண்டு விட்டது இந்தச் சனியன் - என்றெல்லாம் பேசுவாளே! எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசுபவள் என்பது எனக்கே தெரியும்."
தங்கம் என் மனதுக்கும் பிடித்தமானவள் - அவளை இழக்க நான் விரும்பவில்லை. ஆனால் என்னால் அவளுக்கு இழிவும், பழியும் தொல்லையும், துயரமும் ஏற்படக்கூடாது என்றும் விரும்பினேன். எதற்கும் போர்க்களம் சென்று திரும்பிய பிறகு திருமணம் செய்து கொள்வதுதான் நியாயம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். விவரமாக காரணங்களை விளக் கிக் கொண்டு இருக்க முடியுமா? அப்போது யார் யார், என்ன என்ன புதுப்பேச்சு பேசி என் மனதை மாற்றி விடுவார்களோ என்று வேறு பயம்.
நிச்சய தாம்பூலம் நடத்திவிட்டு, கலியாணம் பிறகு என்று கூறிவிடலாம். எடுத்த எடுப்பிலே இது எனக்கு நல்லதாகத்தான் தெரிந்தது. தங்கம் எனக்கே தான் என்ற உறுதியும் கிடைக்கிறது; அதேபோது சண்டைக்குக் கிளம்பும் போது ஒரு பெண்ணின் கழுத்திலே சுருக்கு மாட்டிவிட்டுப் போனான் என்ற பழியும் ஏற்பட வழியில்லை.
ஆனால் யோசித்த பிறகு இந்த ஏற்பாடு அவ்வளவு சரியில்லை என்று தெரிந்தது. எவ்வளவு காலமாகுமோ நான் திரும்பி வர! அதுவரையிலே தங்கம், சித்தியிடம் கொடுமைப் பட்டுக்கொண்டு வருவதா! எப்போது வருவனோ தெரியவில்லை, அந்த யோக்யன்! நிச்சயதாம்பூலம் வேறு நடத்தி விட்டுப் போய்விட்டான். வேறு எவன் கையிலும் பிடித்துக் கொடுப்பதற்கும் இல்லை. இவள் இங்கு குத்துக்கல் மாதிரி
இருந்து கொண்டு தொல்லை கொடுக்கிறாள் என்றெல்லாம் ஏவாள் தங்கத்தின் சித்தி. அதனாலே அந்த யோசனையையும் விட்டுவிட்டேன் சரியில்லை என்று.
நிச்சயதாம்பூலத்துக்கு நாள் வைக்கச் சொல்லி வற்புறுத்தினார்கள். நான் ஏதேதோ சாக்கு போக்குகளைச் சொல்லிக் கொண்டிருந்தேன். இதற்குள் நான் போர் முனைக்குப் புறப்பட வேண்டிய நாளும் வந்துவிட்டது.
தங்கத்திடம் எப்படியாவது தனியாகச் சந்தித்து, விவரம் சொல்லி, அவளுடைய மனதைச் சமாதானப் படுத்தி விட்டால் போதும்; என் மனம் நிம்மதியாகும் என்று எண்ணினேன். அதற்கு வழி ? சித்தி கோபக்காரி . ஒழுக்கம் கூட கெடக்கூடாது என்பதிலே மிகுந்த கண்டிப்பானவள். நான் என் யோசனையைச் சொன்னாலே சீறுவாள். நான் ஒருத்தி இருக்கிறேனே செத்துப்போகல்லியே! என் கிட்டச் சொல்லு; அவகிட்ட என்ன தனியாப் பேச்சு. அது இந்த இடம் இல்லை; நடையைக்கட்டு" என்று பேசுவது மட்டும் அல்ல; ஊரையே ஒரு கலக்கு கலக்குவாள். ஒருவருக்கும் தெரியாமல் தங்கத்தைப் பார்க்கலாம் என்றாலோ, பெண் குனிந்த தலை நிமிராதவள். குளத்துப் பக்கம் கூட வருவதில்லை . என்ன செய்வது?
ஜோதிடக்கார ஐயரைப் பிடித்தேன்.
"தெரியும்டா நோக்கு ஒரு ஆபத்து வாரபோது, என்னைத்தான் தேடுவேன்னு நன்னா எனக்கு தெரியும் என்று பேச்சை ஆரம்பித்து, உலக விவகாரம் அத்தனையையும் பேசி முடித்துவிட்டு ஒருவாறு எனக்கு உதவி செய்ய ஒப்புக் கொண்டார். இன்னும் ஒரு மூன்று மாதத்துக்கு நிச்சய தாம்பூலம் நடத்திடக் கூடாது. கிரகபலம் சரியாக இல்லை, இந்த ஜாதகக்காரனுக்கு என்று சித்தியிடம் கூறிவிட ஒப்புக்கொண்டார். எனக்கு உதவி செய்யத்தான் ஒப்புக் கொண்டாரே தவிர நான் சொன்ன காரணங்களை, காரணங்கள் என்றுகூட அவர் ஒப்புக் கொள்ளவில்லை. கிளறிக் கிளறிக் கேட்டார்.
“ஏண்டா சோமு! வேறு எவளாவது.... சேசே ! அதெல்லாம் ஒண்ணுமில்லிங்க."
”இருந்தா சொல்லுடா ; இது சகஜம் தானே. ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்ன்னு பெரியவா சொல்லியிருக்காடா. இந்தக் காலத்திலே இல்லா . சகல சாஸ்திர விற்பன்னாளாவும், சத்தியத்துக்குக் கட்டுப்பட் டவளாவும், இருந்த பெரியவா காலத்திலேயே ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்தான்! இப்ப மணிக்கணக்கிலே கூட இல்லை; நிமிஷக் கணக்கிலே மாறிவிடுது.”
"அப்படி எல்லாம் என்னைப் பற்றி எண்ண வேண்டாம்."
”அடே, அப்பா! சரி என்ன , அவ்வளவு உறுதி படைச் சவனா கண்களை இறுக்கி மூடிண்டா பத்து வருஷம் பதினாறு வருஷம் கூடத் திறந்து பார்க்க மாட்டார் விசுவா மித்திர மகரிஷி! என்ன ஆனார் பார்த்தயோ, மேனகை வந்து தா , தைன்னு ஆடின உடனே."
என்ன செய்வது? எனக்கு அவரை விட்டால் வேறே வழி இல்லை. அவருடைய உதவி வேண்டும். அதற்காக பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையாக இருந்தேன், அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டு.
அவர் எடுத்துச் சொன்னதை நம்பித்தான் நிச்சயதாம் பூல ஏற்பாட்டை நிறுத்திக் கொண்டார்கள். ஆனால் தங்கம் எனக்குத்தான் - நான் திரும்பி வருகிற வரையில் வேறு இடம் பார்ப்பதில்லை என்று வாக்களித்தார்கள். மகிழ்ச்சி எனக்கு . அந்த மகிழ்ச்சியோடுதான் போர்முனை சென்றேன்.
ஜோதிடர் சொன்னதைக் கேட்டுக் கொண்டார்களே தவிர தங்கம் வீட்டுக்கு மனம் முழு சமாதனமாகி விடவில்லை. இந்த இலட்சணத்தில் தன்னுடைய சாமர்த்தியத்தை ஊர் மெச்ச வேண்டும் என்ற அற்ப ஆசை, இந்த ஜோதிடருக்கு. அதன் காரணமாக அவர் சிலரிடம், நிச்சயதாம்பூலம் நடைபெற இருந்ததை நான் கேட்டுக் கொண்டதற்காக சமர்த்தியமாகப் பேசி நிறுத்தி விட்டதாக வேறு பேசினார்.
இது. தங்கம் வீட்டாரின் காதிலே விழுந்தது.
”நான் என்ன, அந்த ஐயன் சொன்னதை அப்படியே நம்பி விட்டேனா என்ன! எனக்குத் தெரியாதா அந்த நாக்கு எப்படியும் வளையும் என்கிற விஷயம். இவ தலை எழுத்து அப்படி” என்று சித்தி பேசியதாகக்கூடக் கேள்விப் பட்டேன்.
"போர் முனையிலே எதிரித் தாக்குதலால், நான் ஒரு டாங்கியில் சிக்கிக் கொண்டேன் - உயிரே போயிருக்க வேண் டியது. எப்படியோ காலோடு போயிற்று.
கால் துண்டிக்கப்பட்டது கூட எனக்குத் தெரியாது; மயக்க மருந்து கொடுத்து விட்டிருந்தார்கள். நினைவு வந்து கண்களைத் திறந்து பார்த்தேன். வலியும் எரிச்சலும் கால் உள்ள பக்கமாக இருந்தது; பார்த்தேன், வயிறு பகீர் என் றது; பாதி கால் இல்லை ஐயோ!' என்று அலறினேன். அந்தக் கூச்சலிட்டதால் மறுபடியும் களைப்பு, மயக்கம்.
தெளிவு பெற்ற பிறகு, என்னால் துக்கத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இனி நான் ஓர் நொண்டி ! ஆமாம்! தத்தித் தத்தி நடக்க வேண்டியவன்; ஊர்பேர் அறியாதவனாகத்தான் இருக்கிறேன். இனி ஊரே பேசும், 'சோமு நொண்டி!' என்று. சிறிது கோபம் ஏற்பட்டால் போதும்; 'சோமு எங்கே? என்று கேட்கமாட்டார்கள். எங்கே அந்த நொண்டிப்பயல்? என்றுதான் பேசுவார்கள். குழந் தைகள் பெரியவர்களுக்குக் காட்டக் கூறும், 'பாவம் தாத்தா! நொண்டி பாரு!' என்று. பெரியவர்கள் குழந்தைகளுக்குச் சொல்லுவார்கள், "ஜாக்ரதையா ரோடிலே, வண்டி ஏதாவது வருதான்னு பார்த்து நடக்கணும்; இல்லையானா, அதோ பார்த்தாயா நொண்டி, அது போல ஆகிவிடும்," என்பார்கள்.
பரிதாபம்! பரிகாசம்! எச்சரிக்கை! இவை கிளம்பும் நான் நடமாடும் இடத்தில்.
என் இளமை , கட்டுடல், அழகு எதுவும் உலகத்தின் கண்களுக்குத் தெரியாது. நான் ஒரு நொண்டி - அது மட்டும் தான் தெரியும்.
சோமு நல்லவன்,- பட்டாளத்திலே பணிபுரிந்தவன் கெட்ட நடவடிக்கை எதுவும் இல்லாதவன் - பழகுவதற்கு ஏற்றவன். - என்ற எதைப் பற்றியும் இனி இந்த உலகம் பேசாது.
சோமு ஒரு நொண்டி என்பது பற்றி மட்டுந்தான் பேசும். அப்படிக்கூடப் பேசாது - சோமு ஒரு நொண்டி என்று பேசாது! 'அதோ பார் ஒரு நொண்டி! அவன் பெயர் சோமு!' என்று பேசுவார்கள்! "சோமு அல்ல; இனி நான் நொண்டி!”
என் மனம் படாத பாடுபட்டது. துக்கம் பிய்த்தது. என் நெஞ்சை !
ஆனால் தங்கம்! அவளைப் பற்றிய நினைப்பு வந்ததும் என் துக்கம் ஆயிரம் மடங்கு அதிகமாகி விட்டது மட்டுமல்ல, என்னைப் பயம் பிடித்து உலுக்கி விட்டது.
குளத்தருகே அந்தப் பெண்கள் குறும்பாகப் பேசினது உண்மையாகப் போய்விட்டதே. தங்கத்தின் கணவன், ஒரு நொண்டி! ஐய்யய்யோ! தங்கம் ஒரு நொண்டியையா, நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும். உலகம் ஏளனம் செய்யுமே. எப்படித் தாங்கிக் கொள்வாய்."
"அவ தலையெழுத்து ஒரு நொண்டிக்கு வாழ்க்கைப்பட நேரிட்டுவிட்டது."
”நொண்டியைக் கட்டிக்கொண்டு, அவ பாவம், என்ன கஷ்டப்படுகிறாளோ!"
”ஏழையாய் இருக்கட்டும், மூட்டைச்சுமப்பவனா இருக்கட்டும், கைகாலுக்கு ஊனமில்லாமல் இருந்தாப்போதும்; ஓடி ஆடி பாடுபட்டு பிழைப்புக்கு வழிதேடிக் கொள்ள முடியும். குடும்பத்தைக் காப்பாத்த முடியும்."
”தங்கம், இவனைக் கட்டிக் கொண்டு எப்படி நிம்மதி யாய் இருக்க முடியும்? நொண்டியாலே, என்ன ஆகும்? எவன் வேலை கொடுப்பான். இனி குடும்பத்தைக் காப்பாத்தறதும் தங்கம் தலையிலே தான்."
* இந்த நொண்டியை அங்கே இங்கே அழைத்துக் கொண்டு போற வேலையும், இடறி விழாமப் பார்த்துக் கொள்ளும் வேலையும் எல்லாம் இந்தத் தங்கத்தோட தலையிலேதான் வந்து விடியும் ..... இப்படி எல்லாம் பேசிக் கொள்வார்களே! எப்படித் தாங்கிக் கொள்வாள் தங்கம்.
”ஏன் அவளுக்கு இந்த இழிவு! போடா, உங்க அப்பன் காலை ஒடிச்சுப் போட்டது போல உன் காலை ஒடிச்சிக் கழுத்திலே மாட்டிடுவேன் , தெரியுமா ......." என்று போக்கிரிச் சிறுவர்கள் பேசுவார்கள் . - என் மகனிடம்.....!
இவ்வளவு ஏன், நானே வேலை தேடும்போது உலகுக்குச் சொல்ல வேண்டும், ’நொண்டி என்று நினைக்காதீர்கள் ஐயா! ஓட நடமாட முடியாதே தவிர, உட்கார்ந்த இடத்திலிருந்து, சலிக்காமல் வேலை செய்ய முடியும். திறமையாகச் செய்வேன். நாணயமாக நடந்து கொள்வேன்' குறும்புக்காரனாகவும், பிறர் மனம் புண்படப் பேசக் கூடாது. என்பதிலே நாட்டமில்லாதவனாகவும் இருந்தால், என்ன சொல்லுவான்.
”நாணயமாக நடந்து கொள்ளுவேன் என்று சொல்றயே, அப்பா! நாணயம் இருக்கட்டும், உன்னாலே , சரியாக நடக்கவே முடியாதே!!”
என்று சொல்லுவான். உடன் இருப்பவர்கள் அந்த நகைச்சுவை கேட்டு சிரிக்க வேண்டும். அதை நான் கேட்டுச் சகித்துக் கொள்ள வேண்டும் ...... ஐயையோ! எப்படி முடியும் எப்ப டி ......
"என் புருஷன் நொண்டிங்க... ஏதோ , இருந்த இடத்திலே இருந்து கடைவைத்து பிழைப்புக்கு வழி தேடப் பார்த்தார் ...... முடியல்லே, அதனாலேதான் உங்க கடனைத் திருப்பித்தர முடியல்லே.... கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்க" என்று தங்கம் கெஞ்சவேண்டும்; நான் தத்தித்தத்தி நடந்தபடி அதைக் கேட்டுக் கொண்டு உயிர் வாழ வேண்டும்!! இதையெல்லாம் எண்ணும்போது, வந்த ஆபத்து ஏன் காலோடு நின்றுவிட்டது என்றுகூடத் தோன்றிற்று. புழுவாய்த் துடித்தேன், படுக்கையில். டாக்டர்கள், வலி தாளாமல் துடிக்கிறேன் என்று எண்ணிக்கொண்டு ஏதேதோ மருந்து போட்டார்கள்; வலி இருக்கும் இடம் தெரியாமல்.
இவ்வளவு தொல்லைகளையும் இழிவுகளையும் ஏளனங்களையும் என் பொருட்டுத் தங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஆமாம்... அவள் என் தங்கம்! ஆனால் தானே இதெல்லாம். கன்னிதானே அவள். எனக்காகக் காத்திருக்கிறாள். ஆனால், இப்போது? காலிழந்தவன் என்று தெரிந்தால்? அப்போதும் 'சரி' என்றா சொல்லுவாள் ..... திருமணத்துக்குச் சம்மதிப்பாளா...?
எப்படி மனம் வரும் ஒரு இளமங்கைக்கு, ஒரு நொண்டியைக் கலியாணம் செய்து கொள்ள... குளத்திலே குட்டையிலேயாவது விழுந்து உயிரைப் போக்கிக் கொள்ளலாமே தவிர, ஒரு நொண்டியைக் கொண்டு காலமெல்லாம் கஷ்டப் படுவதா ......
என்னென்ன எண்ணுவாளோ! தங்கம், எப்படியெப்படிக் கதறுவாளோ!
கண்ணில்லையா, உங்களுக்கு ---- கருணை கடுகளவும் இல்லையா ....... என்னை ஒரு நொண்டிக்குப் பலி கொடுக்கிறீர்களே! இது தர்மமா? உன் மகளாக இருந்தால் இப்படிச் செய்வாயா..... என்று புலம்புவாளே .....
அழ அழ , பிடித்திழுத்து வந்து மண அறையில் அவளை உட்காரச் செய்து, என்னிடம் தாலிக்கயிறு கொடுத்துக் கட்டச் சொன்னால், என் கரம் நடுங்குமே! அவள் உயிர் துடிக்குமே! பலருக்குக் கண்ணீர் துளிர்க்குமே! நமக்குத் தாலி கட்டப் போகிறவன், ஒரு நொண்டி ! என்று நினைக்கும் போதே, எதிரே மூட்டப்படும் ஓமத்தீ, அங்கா இருக்கும் : அவளுடைய இதயத்தில் அல்லவா புகுந்து, அவளைத் தீய்த்துக் கொண்டு இருக்கும். கெட்டி மேளம்! கெட்டி மேளம்! என்று கூறுவார்கள் - மேளம் காது செவிடுபட கொட்டப்படும் - அவள் செவியிலே என்ன விழும்? இசையா? இழவு ஒலிபோல அல்லவா இருக்கும் - ஐயையோ... ஆஹாஹாஹா......! இப்படியல்லவா செவியில் விழும்.
”மாப்பிள்ளை, மெதுவா மெதுவா எழுந்திருங்கோ."
”ஆசாமிக்கு என்னய்யா , சோல்ஜர் இல்லாவா.. வாட்ட சாட்டமாத்தான் இருக்கிறான் .... கால் நொண்டி ... இருந்தா என்ன . ஆசாமி கெட்டிக்காரன்... சமாளித்துக் கொள்வான்.
கலியாண ஜோர்லே மாப்பிள்ளைக்கு, காலு இல்லை என்கிற கவனம் கூடப் போய்விட்டது போலிருக்குதே … ஒரே தாவாத் தாவுவார் போல இருக்குதே.... இப்படி எல்லாம் கேலிப் பேச்சு நடக்கும்; அதைக் கேட்டுப் பலர் சிரிப்பார்கள். அவர்கள் மனதிலே ஒரு கெட்ட எண்ணமும் இல்லாமல் பேசுவதால், நான் கூடக் கோபித்துக் கொள்வதற் கில்லை. சந்தோஷம் ஏற்படாவிட்டாலும், பல்லைக் காட்ட வேண்டிவரும். ஆனால், தங்கம்? அவள் என்ன எண்ணுவாள்? அவள் மனம் என்ன பாடுபடும்?
ஆனால், தங்கம், ஒப்புக் கொண்டால்தானே இதெல்லாம். அவள் எப்படி ஒப்புக் கொள்வாள்? எவ்வளவு சாதுப் பெண்ணாக இருந்தாலும், எதிர்த்துப் பேசாமல் இருக்க முடியாதே. ஒப்புக் கொள்ளமாட்டாள். அவளுடைய சித்தி கூடத்தான் , எவ்வளவு கொடுமைக்காரியாக இருந்தாலும், இந்த விஷயத்தில் வற்புறுத்த மாட்டாள்...... வேறு எதற்காக இல்லாவிட்டாலும், ஒரு நொண்டியை வீட்டு மருமகனாகக் கொள்வது இலாபம் இல்லாதது... வீணான கஷ்டமும் நஷ்ட மும் ஏற்படும் என்ற காரணத்துக்காகவாவது, என்னைக் கலியாணம் செய்து கொள்ளச் சொல்லித் தங்கத்தை வற்புறுத்த மாட்டாள்.
எல்லாம் இருக்கட்டும்... எனக்குத்தான் எப்படி மனம் துணியும், திருமணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று கேட்க! முன்பு நான் இருந்ததற்கும் இப்போதைக்கும் ஒரு காலிலே அரை பாகம் குறைவு வேறு ஒன்றும் இல்லை என்று சொல்லுவதா? நான் என்ன மனித மிருகமா !
போர்க்கள வேலையெல்லாம் முடித்துக் கொண்டு, மாலை சூட வந்திருக்கிறேன், என்று தத்தித் தத்தி நடந்து போய், அவள் எதிரே நிற்கவா! இதயமே வா போய்விட்டது எனக்கு ? கால் மட்டுந்தானே!
நொண்டியாகி நான் போய் அவள் எதிரே நின்றால் அந்தக் கண்கள் நெருப்பல்லவா கக்கும்.
நொண்டிப் பயலுடைய குறும்பைப் பார்த்தீர்களா! கலியாணம் செய்து கொள்ள வேண்டுமாம். தங்கத்தை …
பாரேன், துணிச்சலை .. இவன் சம்மதிப்பானா, ஒரு குருட்டுப் பெண்ணைக் கட்டிக் கொள்ள .......
'முன்பே ஏற்பாடு நடந்ததுதானே' என்கிறானாம்.
'என்ன ஏற்பாடு நடந்ததாம்? நான் பட்டாளத்துக்குப் போய், ஒத்தைக்காலனாகி வருவேன். அதுவரையிலே பொறுத்துக் கொண்டிரு; வந்த உடனே கலியாணம்' என்றா ஏற்பாடு .....
புத்தி இருக்க வேண்டாமா? நமக்குத்தான் இந்தக் கதி ஏற்பட்டதென்றாலும் நம்மாலே மற்றவர்களுக்கு ஒரு பொல்லாங்கும் இழிவும் ஏற்பட நாம் தாராளமாக இருக்கக்
கூடாது என்ற புத்தி இருக்க வேணாமா"
அப்படிப்பட்டவன் குணசாலி மனுஷன்.
இவன் மிருகம், வெறிப்பய, நொண்டிப்பய... இன்னும் என்னென்ன நடக்குமோ அர்ச்சனை!
இவ்விதமாக வெல்லாம் பலப்பல எண்ணிக்கொள்வேன்.
ஒருநாள் மனதைத் திடப்படுத்திக் கொள்வேன், நாம் இருக்கும் நிலையில், தங்கத்தைத் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று.
மறுநாள், ஆசை பிய்த்துவிடும்; இருந்தால் என்ன? கேட்டால் ஒப்புக் கொள்வார்கள் என்று நினைப்பேன்.
உடல் உறுப்பா, வெட்டி எடுத்து எறிந்துவிட! உள்ளத்திலே ஊறும் எண்ணம்! எடுத்து எறிந்துவிடத்தான் முடிகிறதா அல்லது எழாதபடி தடுக்கத்தான் முடிகிறதா?
பெரிய டாக்டர், காலிழந்த எனக்கு, ஊன்றுகோல் கொடுத்து நடக்கப் பயிற்சி அளித்தார் - இனிக் கவலை யில்லை, பயமில்லை; கால் இருப்பது போலவே எண்ணிக் கொள்ளலாம். ஊன்றுகோல்கொண்டு நன்றாக நடக்கலாம்; ஒட்டப் பந்தயத்துக்குக்கூட போகலாம்," என்றார் என்னை உற்சாகப்படுத்த.
பெரிய டாக்டரை அனைவரும் பாராட்டினார்கள்; அவர் சரியான நேரத்தில், சரியான முறையில் என் காலைத் துண்டாக்கி என்னப் பிழைக்க வைத்தாராம். சிறிது திறமை குறைவாக இருந்திருந்தால்கூட அழுகிக் கிடந்த காலிலிருந்து விஷம் உடல் பூராவும் பரவி நான் செத்துப்போய் இருப்பேனாம். இப்போது நான் வாழ்கிறேன் என்று எண்ணிக் கொண்டார்கள்!
நானும்தான் பாராட்டினேன் - நன்றி தெரிவித்தேன் டாக்டருக்கு.
”உனக்குக் கால் போச்சு மிஸ்டர் சோமு! எனக்கு பேர் வந்தாச்சி!! என்று அந்த டாக்டர் வேடிக்கை பேசினார். போட்டோக்கூட எடுத்தார்கள் டாக்டரை - டாக்டருடன் நான், நான் மட்டும் ஊன்றுகோல் இல்லாமல் - ஊன்று கோலுடன் இப்படிப் பல போட்டோக்கள்! தங்கத்துக்கு அனுப்ப வேண்டாமா, அதற்காக!
குழம்பிக் கொண்டிருந்த எனக்குத் தெளிவு ஏற்படச் செய்தார் பெரிய டாக்டர். என் விஷயத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, புத்தி கூறி அல்ல, தற்செயலாக.
"மிஸ்டர் சோமு! உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா?" என்று கேட்டார் பெரிய டாக்டர்.
"இல்லை, டாக்டர்! கலியாணம் ஆகவில்லை" என்று கூறினேன். பெரிய ஆறுதல் அடைந்தவர் போலானார் பெரிய டாக்டர் 'நல்ல வேளை!" என்றார்.
எனக்குத் தெளிவும் திடமும் ஏற்பட்டுவிட்டது. எங்கே எனக்குத் திருமணம் ஆகிவிட்டிருக்கிறதோ, நான் நொண்டி யாகிவிட்டதால் என் மனைவி என்னென்ன அல்லல் படுகிறாளோ என்று எண்ணிக் கொண்டிருக்கிறார் டாக்டர். திருமணம் ஆகவில்லை என்றதும், அவர் மனதுக்கு ஆறுதல் ஏற்பட்டது.
பொருள் என்ன? நான் கலியாணம் செய்து கொள்ளக் கூடாது என்று. பெரிய டாக்டர் கருதுகிறார்! டாக்டர் மட்டுமா, பெரிய மனம் உள்ளவர்கள் எல்லோருமே அப்படித் தான் எண்ணுவார்கள். நான் என்ன சிறுமதி கொண்டவனா! என் மனமும் பெரியதுதான், என் இன்பம் அல்ல முக்கியம். என்னால் ஒரு பெண்ணுக்கு இழிவும், இன்னலும் ஏற்படக்கூடாது. அதற்கு நான் இடந்தரக்கூடாது. அந்தப் பழியைத் தேடிக் கொள்ள மாட்டேன். அவள் இருக்கும் பக்கமே என் கால்கள் செல்லாது. கால்களா ...... ஒன்றும் மற்றொரு பாதியும். ஐயா! இந்த முடிவுக்கு நான் வந்த பிறகுதான், ஓரளவுக்குத் தூக்கம் பிடித்தது. பசி எடுத்தது.
ஆசாமி பிழைத்துக் கொண்டான்; தேறிவிட்டான் என்று என்னுடன் இருந்தவர்கள் கூறினர், களிப்புடன்.
நான், பட்டாளப் பணியிலிருந்து விலகினேன் --- விலக அனுமதி எளிதிலே கிடைத்தது. எங்கெங்கோ அலைந்தேன். பல ஊர் - பல இடம் - துக்கம் என்னை அண்டாதபடி, கேளிக்கையாக இருக்க முயற்சித்தேன். குடித்துப் பழகியவனல்ல. புதிய தோழனாக்கிக் கொண்டேன், போதைப் பொருளை! சூதாடுவது, சுற்றித் திரிவது. சுருண்டு கீழே விழுவது, மயக்கம் ஏறிய நிலையில். இதுதான் என் வாழ்க்கை முறையாக அமைந்தது. கைப்பொருளை வேக மாகக் கரைத்தபடி இருந்தேன். எல்லாம் தங்கத்தை இழந்து விட வேண்டி நேரிட்டதே கால் போனதனால் என்ற துக்கத்தைப் போக்கிக் கொள்ள, ஊர் விஷயம் உலக விஷயம் எதைப் பற்றியும் நான் அக்கரை கொள்ளவில்லை; எழ வில்லை. ஒண்டிக்கட்டை நான். திருமணமாகிவிட்டால் வீட்டோடு வந்து இருந்து விடுவேன் என்றுகூட சித்தி நினைத்ததுண்டு.
அவர்களைப் பற்றிய நினைப்பு எல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டேன். உதிர்ந்துபோன மலரை எடுத்துச் செடியிலே ஒட்டிவிட முடியுமா? நான் கொண்டிருந்த எண்ணங்கள் பலவும் உதிர்ந்த மலர்களாகிவிட்டன; இதயத்தில் மீண்டும் அவைகளுக்கு இடமில்லை.
எப்போதாவது, தங்கம் எப்படி இருக்கிறாள் என்று பார்க்க வேண்டும் என்ற ஆசை மட்டும் எழும். ஆனால் அதற்காக அந்த இடம் சென்று மறுபடியும் சிக்கலை ஏற் படுத்திக் கொள்ளக் கூடாதே. அதனால் சில காலமாவது அந்தப் பக்கமே போகக் கூடாது -- தங்கத்துக்கு ஒரு சலியா ணமாகி, அவள் குடியும் குடித்தனமுமான, பிறகு வேண்டும் மானால் அந்தப் பக்கம் போகலாம்; அதற்கு முன்பு போகக் கூடாது என்று தீர்மானமாக இருந்து வந்தேன்.
போன செவ்வாய்க்கிழமை மறைந்து போயிருந்த பழைய எண்ணங்கள் எல்லாம் குதித்துக் கிளம்பிக் கொண்டு என் மனதைக் குடையும் நிலை ஏற்பட்டது. தற்செயலாக ஒரு பத்திரிகையைப் பார்த்தேன் - பழைய பத்திரிகை - அதிலே தங்கம் தன் கணவனுடன் -- லெப்டினன்ட் கண்ணப்பாவுடன் நின்றுகொண்டிருக்கும் படம் வெளியிடப்பட்டிருந்தது. மகிழ்ச்சி மருட்சி இரண்டும்! திருமணமாகிவிட்டது தங்கத்துக்கு ! ஒரு லெப்டினன்டு அவள் மணவாளன்! நிம்மதி தான்! மகிழ்ச்சிதான்! விவரம் ஆறாம் பக்கம் பார்க்க என்று பத்திரிகையில் இருந்தது; ஆனால் ஆறாம் பக்கம் இல்லை; அது பழைய பத்திரிகை, மெத்தக் கிழிந்து போன நிலையில் இருந்தது. அதை எடுத்துப் பத்திரமாக மடித்து, என் சட்டைப் பையில் வைத்துக் கொண்டேன். எந்தப் பொருளையும், அவ்வளவு அக்கரையுடன் நான் பாதுகாத்ததில்லை.
விவரம் தெரிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு குடி , சூதாட்டம், எதுவும் என்னைத் தடுக்க முடியவில்லை. பத்திரிகைகளைத் தேடிக் கண்டுபிடித்து, நாலு நாள் பசி யோடு இருப்பவனுக்கு உணவு கிடைத்தால் எவ்வளவு ஆவலுடன் அவசரத்துடன் தின்பானோ, அந்த நிலையில் விவரங்களைப் படித்துத் தெரிந்து கொண்டேன். இன்று இந்த ஊருக்கு வருகிறார்கள் என்று தெரிந்தது -- காண ஓடோடி வந்தேன் - கண் குளிரக் கண்டேன்.
சோமுவின் கதையின் உருக்கத்தில் நான் என்னை மறந்து போயிருந்தேன். எவ்வளவு நல்ல மனம் இந்தச் சோமுவுக்கு. ஒரு பெண்ணின் வாழ்வை வதைக்கக்கூடாது என்பதிலே அவ்வளவு பெருந்தன்மையைக் காட்டி யிருக்கிறான்.
”சோமு! நான் உம்மை வணங்க விரும்புகிறேன். உத்தமரய்யா நீர்! ஒரு பெண்ணின் வாழ்வு பாழாகக்கூடாது என்பதற்காக எத்தனை பெரிய தியாகம் செய்திருக்கிறீர். யாருக்கு வரும் இந்தப் பெருந்தன்மை" என்று நான் உள்ளபடி உருக்கமாகத் தான் உரைத்தேன்.
சோமு என்னை வெறிக்க வெறிக்கப் பார்த்தான்.
"சோமு! இவ்வளவு தூய்மை நிறைந்த தாங்கள், ஏன் தங்களைக் குருடர் என்று கூறிக் கடிந்து கொண்டீர்கள் என்ப தல்லவா எனக்கு விளங்கவில்லை." என்று நான் கேட்டேன். சோமு, என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு.....
"ஐயா! நான் உம்மிடம் சொன்னது நினைவிருக் கிறதா! நான் கண்ணிருந்தும் குருடன்! பெண்களின் குணத்தின் பெருமையினை உணராததால் தவறான பாதை சென்று இடறி விழுந்தேன் என்றேனே, நினைவிலிருக்கிறதா?
நன்றாக நினைவிலிருக்கிறது; மறந்து போகவில்லை. ஆனால் சோமு! தாங்கள் அப்படிக் கூறுவதுதான் தவறு. தவறான பாதை செல்லவில்லை; தியாகப் பாதை சென்றீர்கள். இடறி விழவில்லை; ஒரு மங்கையின் வாழ்வுக்கு இடராகக் கூடாது என்று தியாகம் செய்தீர்கள்."
”நொண்டியாகிவிட்ட நான் தங்கத்தை மணந்து கொள்வது கொடுமை ; அவளே அதற்குச் சம்மதம் தரமாட்டாள் - அப்படிச் சம்மதித்தாலும் நான் அவளை அடைய எண்ணுவது கொடுமை என்பதால்தான், நான் அவளைத் திருமணம் செய்து கொள்ள முயற்சிக்காமல், தெருச்சுற்ற லானேன்; உருமாறிப் போனேன்..."
"உத்தமராகி இருக்கிறீர் - உருக்குலைந்தது உடல் அளவு; உள்ளம் மிகப் பெரிது..."
”அவள் உள்ளத்தை அறிந்து கொள்ள முயற்சித் தேனா?"
"அதுதான், உம்முடைய தியாகச் சிறப்பிலேயே உச்சக் கட்டம். மகுடத்தில் பதிந்துள்ள ஒளிவிடு வைரம்."
”என் நிலை இது; இந்த நிலையில் என்னைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதமா என்று நான் தங்கத்தைக் கேட்காதது என் தியாக குணத்திலேயே சிறப்பான பகுதி! ஒளி விடு வைரம்! என்னைவிடக் குருடு ஐயா, நீர்! நான் நொண்டி யாகி விட்டேன் - என்னை மணம் செய்து கொண்டால் தங்கம் இழிவும் பழியும் பெறுவாள் என்று எண்ணியும், நொண்டியாகிவிட்ட என்னைத் திருமணம் செய்து கொள்ள அவள் சம்மதிக்கமாட்டாள், கேட்கவும் கூடாது என்று எண்ணியும்தானே. நான் வேறு பாதை சென்றேன். இந்தக் கோலம் பெற்றேன் ஐயா! கண்ணிருந்தும் நான் குருடனாகிவிடவே நமது நாட்டுப் பெண்குலத்தின் பெருமையை அறியாது போய் விட்டேன் என்பதை உணர்ந்து கொண்டேன் - அரை மணி நேரத்துக்கு முன்பு ... நொண்டி, தங்கத்தின் கணவனாகக் கூடாது என்பதற்காக நான் தியாகம் செய்தேன். ஆனால் அவள் திருமணம் செய்து கொண்டிருக்கிறாளே! 'லெப்டினன்ட் கண்ணப்பா, அவனும் என் போலத்தான். போர்க் களத்திலே காலிழந்தவன் - நொண்டி!"
எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. நொண்டியாகிப் போனவனை மணம் செய்து கொண்டாள்! எவளுடைய வாழ்க்கை நொந்து போகும் என்பதற்காக தியாகம் செய் தானோ சோமு, அந்தத் தியாகத்துக்கே துளியும் பொருள் இல்லாமல் போய்விட்டதே! தங்கம், கடைசியில் மற்றொரு நொண்டியைத்தானே கணவனாகப் பெற்றாள். சோமு மனக் குழப்பத்தில் பேசுகிறானா அல்லது உண்மை அது தானா? நான் பதறிப்போனேன்.
”என்ன, என்ன? கண்ணப்பாவுக்குக் கால் இல்லையா?" என்று கேட்டேன். நொண்டி என்று சொல்லக்கூட எனக்குக் கூச்சமாக இருந்தது.
"ஓ! உங்களுக்கு அது தெரிந்திருக்க முடியாது. கண்ணப் பாவுக்கு ஒரு காலில் எனக்கு இருப்பது போலத்தான் ஒரு பகுதி துண்டிக்கப்பட்டுப் போய்விட்டது."
”இல்லையே! இரண்டு காலாலும் தானே நடந்து வந்தான்.”
அதிலே ஒன்று பொய்க்கால்! அவ்வளவு நேர்த்தியாக விஞ்ஞான முறைப்படி அமைத்து இயங்க வைத்திருக்கிறார்கள்."
"துளிகூடத் தெரிந்து கொள்ள முடியவில்லையே"
'எனக்கு மட்டும் தெரிந்ததா முதலில்? அவனும் நிரம்ப பயிற்சி செய்திருக்கிறான் போல இருக்கிறது. நடக்கும்போது கால் ஊனமாகிவிட்டது என்பது துளிகூடத் தெரிய வில்லை. நிருபர்கள் விவரமாகச் சொன்னார்கள்."
எனக்கு எதுவுமே சொல்லத் தோன்றவில்லை. சோமு வேதான் பேசினான்; நான் திகைத்துப் போய்விட்டேன்.
"நான் தங்கத்தைப் பற்றி நினைத்தது தவறு. நம்முடைய பெண்குலமே தனியான குணம் கொண்டு விளங்குவது எனக்கு அப்போது புரியாமல் போய் விட்டது. நான் கால் மட்டுமல்ல கண்ணை இழந்துவிட்டிருந்தேன் ; கருத்தை இழந்து விட்டிருந்தேன். நொண்டி என்று தெரிந்ததும், என்னை வெறுத்து ஒதுக்கிவிடுவாள் தங்கம் என்று எண்ணிக் கொண்டேன். கண்ணப்பா , அப்படி அல்ல; கால் போயிற்றே தவிர கருத்து இருந்தது தெளிவாக. உண்மையை மறைக்கவும் மில்லை; எடுத்துச் சொல்லப் பயப்படவில்லை. கூச்சப்பட வில்லை. தங்கத்தை ஏமாற்றவில்லை, அவன். ஏமாற்றி அவளை மணம் செய்து கொண்டிருந்தால் நான் கொலைகாரனாகக்கூட ஆகிவிட்டிருப்பேன்... ஆத்திரம் பொல்லாத்தல்லவா! கண்ணப்பன், புத்தியுள்ளவன். நிலைமையை மறைக்காமல் எடுத்துச் சொல்லியிருக்கிறான். விஞ்ஞான உதவியால், செயற்கை கால் பெற்றிருப்பதைக் காட்டினான். தங்கம் இசைவு அளித்தாள் ; திருமணம் நடைபெற்றது. எனக்கு ஏற்படவில்லையே அந்தத் தைரியம் - களங்கமற்ற போக்கு - கோழைத்தன மல்லவா மேலிட்டுவிட்டது. உண்மையைச் சந்திக்கப் பயந்து கொண்டு ஓடி ஒளியலானேன். உருமாறிப் போனேன். அவன் வீரன். பிரச்சினையை நேரிடையாகவே சந்தித்தான் - நல்ல முடிவு கிடைத்தது. கால் போய்விட்ட உடனே நான் என் காதல் போய்விடுகிறதே என்று கவலை மேலிட்டு கலங்கிப் போனேன் ; தங்கத்தைப் பெறமுடியாது என்று எண்ணம் ஏற்பட்டதும் எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போய்விட் டது. பொறுப்புகள் எதனையும் மேற்கொள்ளாமல் இருந்து விட்டேன். எனக்குக் கூடத்தான் தெரியும், செயற்கை முறையில் கால் அமைத்துக் கொள்ள முடியும் என்பது செய்து கொள்ள முயற்சி எடுக்கவே இல்லை. ஏன்? எதற்காக எடுக்க வேண்டும்; தங்கமோ நமக்குக் கிட்ட மாட்டாள், நொண்டி ! நொண்டி நடந்தாலென்ன? ஊர்ந்து கொண்டு போனால் என்ன? என்று எண்ணும் அளவுக்கு மனம் வெறுத்துவிட்டது. கண்ணப்பா அப்படி இல்லை. நடக்கக் கூடாதது நடந்து விட்டது. அதற்காக என்ன செய்யலாம். அதையே எண்ணி மனம் உடைந்து போவதா? அதுதான் கூடாது. உள்ளதைக் கொண்டு திருப்தி அடைய வேண்டும்; இருப்பதையே மேலும் செம்மைப் படுத்திக் கொள்வது என்று கண்டறிய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அவன் கோழையாகிவிட வில்லை. துன்பத்தின் பிடரியைப் பிடித்து இழுத்து அடித்து விரட்டி வெற்றி பெற்றான்."
”நிருபர்கள் விவரமாகச் சொன்னார்களா?"
”ஆமாம்! அப்போதுதான் தெரிந்தது எனக்கு, நான் ஒரு குருடன் என்று. விவரமான கட்டுரையே வெளியிடுகிறார்கள். இன்று ஒரு விஷயம் தெரியுமா ... அதை நினைக்கும் போதே என் மனச் சங்கடம் யாவும் பறந்தே போகிறது. புது மகிழ்ச்சிகூடப் பிறக்கிறது. ஒரு நிருபர் சற்று துணிச்ச லுள்ள ஆசாமி போல இருக்கிறது. எக்கச்சக்கமான கேள்வி யைக் கேட்டிருக்கிறார், தங்கத்திடம். என்ன கேள்வி தெரியுமா? லெப்டினன்ட் கண்ணப்பா நொண்டி என்று தெரிந்ததும் திருமணம் செய்து கொள்ள சம்மதித்த காரணம் என்ன ? என்று .....”
"போக்கிரித்தனமான கேள்வியாக இருக்கிறதே..."
"அப்படித்தான் நானும் கருதுவேன்... சச்சரவே ஏற்பட்டிருக்கும். ஆனால், தங்கம் என்ன பதில் கூறினாள் தெரியுமா?"
”இதற்குப் பதில் வேறு கூறிற்றா அந்தப் பெண்."
”நான் தான் கோழை ஐயா! என் தங்கை தங்கம், மிகுந்த தைரியமுள்ளவள். லெப்டினன்டின் மனைவி அல்லவா! என்ன பதில் தந்தாள் தெரியுமா தங்கம்! நாட்டுப் பாதுகாப்புக்காக காலிழந்தவரைக் கணவராகக் கொள்வதிலே நான் பெருமை அடைகிறேன்" என்றாள்.
அதற்கு மேல் அவனாலும் பேச முடியவில்லை . என்னாலும் முடியவில்லை. இருவரும் நகர் மன்றம் சென்றோம். சோமு, ஊன்றுகோல் இல்லாமல் கூட நடப்பான் போலிருந்தது; அப்படி ஒரு புதிய வலிவு, எழுச்சி, உற்சாகம், பெருமிதம்!!
-------------
கருத்துகள்
கருத்துரையிடுக