வேண்டும் விடுதலை
வரலாறு
Back
வேண்டும் விடுதலை
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
வேண்டும் விடுதலை
— பாவலரேறு பெருஞ்சித்திரனார்
பதிப்பு : முதல் பதிப்பு : தி.பி. 2037 மீனம் 19 (02.04.2005)
நூல் தலைப்பு : வேண்டும் விடுதலை
உள்ளடக்கம் : கட்டுரை
ஆசிரியர் : பாவலரேறு பெருஞ்சித்திரனார்
வெளியீடு : தென்மொழி பதிப்பகம்,
பாவலரேறு தமிழ்க்களம்,
1, வடக்குப்பட்டுச் சாலை,
மேடவாக்கம்,
சென்னை - 601 302.
தொலைபேசி : 044 - 22771231
அச்சாக்கம் : தென்மொழி அச்சகம்,
சென்னை - 601 302.
தாள் : வெள்ளைத்தாள்
பக்கங்கள் : 352
அளவு : மடி(தெம்மி) 1/8
படிகள் : 1000
விலை : உரூ.120.00
பதிப்புரை:
* * *
தமிழ் மொழி, இனம், நாடு நலிகையில் வேறு எதனையும் பெரிதென எண்ணாமல், கருத்துரைத்துச் செயலாற்றியவர் நம் பாவலரேறு ஐயா அவர்கள்.
மொழி நமது விழி, நாடு நமது வீடு – என்கிறபடி தமிழ்நாட்டுக்கு வரும் இன்னல்களைத் தம் வீட்டுக்கு நேர்ந்த இன்னல்களாகவே கருதிப் போர்ப்பரணி பாடி வீர நடையிட்டவர் பாவலரேறு.
மறைமலையடிகளால் தொடங்கப் பெற்று மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களால் உரமிடப்பெற்ற தூய தமிழ்ச் செயற்பாடுகளுக்குக் களமாகவும், தனித் தமிழ்நாட்டுத் தேவையை வலியுறுத்திப் பேரியக்கம் தொடங்குகிற முயற்சிக்குப் பாசறையாகவும் ‘தென்மொழி’ செயலாற்றியது.
தந்தை பெரியார் அவர்களால் முன்மொழியப்பட்ட ‘திராவிட நாடு’ கோரிக்கைகளுக்கும், பின் அரசியல் ஆரவாரக் காரர்களால் தடம் மாற்றப்பட்டு நழுவிய ‘மாநிலத் தன்னாட்சி’ப் பேச்சுகளுக்கும், பொதுவுடைமைக்குப் பொறுப்பற்ற நிலையில் வரிந்து கொண்ட இந்தியப் பார்ப்பனியத்திற்கான கட்சிகளின் வாய்வீச்சுகளுக்கும் இடையில் தென்மொழி பதாகை விரித்துத் தனித்தமிழ்நாட்டு விடுதலைக்கு வேட்டெஃகத்தை ஏந்திப் பூட்டறுக்கப் புறப்பட வேண்டுமாய் அழைத்தது.
தமிழக வரலாற்றில் தமிழ்நிலத்தை விடுவிக்கக் கோரி மூன்று மாநாடுகளை நடத்தியதும், தமிழக விடுதலையில் அக்கறை கொண்ட கட்சிகளை இணைத்துத் 'தமிழக மக்கள் விடுதலை முன்னணி' — எனும் முயற்சியை வரலாற்றில் முதன்முதல் ஆற்றியதும் தென்மொழியே.
'மிசா'க் கொடுஞ்சிறையில் தனித்தமிழ்நாட்டு முயற்சிக்கெனச் சிறைப்பட்டவர் பாவலரேறு ஒருவர் மட்டுமே என்பதும், 'மிசா', 'தடா' — எனக் கொடுஞ் சட்டங்களாலும், தமிழக விடுதலைக்கெனப் பதினெட்டு முறைக்கும் மேலாகச் சிறை சென்றவருமாகப் போராட்ட வாழ்க்கை வாழ்ந்தவர் பாவலரேறு என்பதும் தமிழக வரலாற்றுப் பதிவுகள்.
தமிழ்த் தேச முயற்சிக்குத் தந்தையாக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஐயா அவர்களின் போராட்ட முயற்சிகள் எதிர்கால இளைஞர்களுக்குப் போர்வாள்! அவரின் ஆற்றல் சான்ற எழுத்துகள் தமிழ்இன உணர்வினர் பட்டைத் திட்டிக் கொள்ளுகிற கற்பாறை! அவரின் நெஞ்சுறுதி தமிழர்களுக்கு உள்ளவூற்றம்!
ஐயா அவர்களின் அத்தகைய விடுதலை வேண்டுகைக்கான ஆற்றல்சான்ற எழுத்துகளை ஒருசேரத் தொகுத்தே 'வேண்டும் விடுதலை' — எனும் தலைப்பிட்டு இந்நூல் கொண்டுவரப் பெற்றிருக்கிறது.
தென்மொழி, தமிழ்நிலம், தமிழ்ச்சிட்டு, தீச்சுடர் இதழ்களில் எழுதப்பெற்ற தமிழ்நாட்டு விடுதலைத் தொடர்பான, கட்டுரைகளும், நிகழ்வுப் பதிவுகளும் இத் தொகுப்பு நூலுள் காலவரிசைப்படி உள்ளன. அதேபோது இவைகுறித்துப் பாவலரேறு அவர்கள் எழுதிய நூற்றுக்கும் மேலான பாடல்கள் இத் தொகுப்புள் இடம்பெறவில்லை. அவை 'கணிச்சாறு' — எனும் 'பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்' தொகுப்பில் 'நாட்டுரிமை' எனும் தலைப்பின் கீழ் இடம்பெற்றுள்ளன.
இத் தொகுப்பு நூலுக்கு ஐயா அவர்கள் எழுதிய 'வேண்டும் விடுதலை' — எனும் ஆசிரியவுரைத் தலைப்பே இடம்பெற்றிருக்கிறது.
அவ்வகையில், ஐயா அவர்களின் வேண்டும் விடுதலை பற்றிய இத் தொகுப்பு நூலைக் கொண்டு வருவதில் முயற்சி எடுத்துக் கொண்டியங்கிய அன்புள்ளங்களுக்குத் தென்மொழி பதிப்பகம் தன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.
இந் நூலுக்கானத் தொகுப்பு அச்சாக்க முயற்சிகளில் பெரும்பங்கேற்று உழைத்த உயர்திருவாளர்கள் புலவர் கு. அண்டிரன், தென்மொழி ஈகவரசன், கி. குணத்தொகையன், மா. பிறைநுதல், அரசி, மா. பூ. தமிழ்மொய்ம்பன், கு.பி. சுடரொளி — ஆகியோர்க்குத் தென்மொழி பதிப்பகம் உளம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.
தி.பி. 2037. மீனம் 19
— தென்மொழி பதிப்பகம்
(02.04.2005)
உள்ளுறை
எண்.
பக்க எண்
தலைப்பு
1. நாடும் மக்களும்
2. பிரிவினைத் தடைச்சட்டம்
3. தனித்தமிழ்நாடு
4. தமிழகம் பிரிதலே தக்கது
5. பிரிவினை நோக்கித் தள்ளப்படுகிறோம்!
6. விடுதலை பெறுவது முதல் வேலை
7. இந்தியாவின் அரசியல் வீழ்ச்சியும் தமிழனின் விடுதலை எழுச்சியும்
8. பிரிவினை தவிர வேறுவழியில்லை
9. யாருமில்லை நாங்கள்தாம்!
10. தமிழகப் பிரிவினை தேவையே
11. நேரம் வந்துவிட்டது படைமுகத்துக்கு வாருங்கள்!
12. தமிழ்நிலத்தை விடுவிப்போம்! தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டு மாநாடு!
13. வரலாறு படைத்தது திருச்சி! கொள்கைச் சிறப்புடைய முதல் விடுதலை மாநாடு.
14. தமிழ்க் குமுகாயம் என்றொரு குமுகாயம் இருக்கிறதா?
15. அழைக்கின்றேன். உங்களை! புறப்படுங்கள் போருக்கு!!
16. இரண்டாவது தமிழ்கப் பிரிவினை மாநாட்டு நிகழ்ச்சி
17. வெறும் கருத்தரங்குகளால் இதுவரை எந்தப் பயனும் விளைந்ததில்லை!
18. நம் மூச்சு, நோக்கம், கொள்கை, முயற்சி!
19. மூன்றாம் விடுதலை மாநாடு! சென்னைக்கு வாருங்கள்!
20. மூன்றாம் விடுதலை மாநாட்டுக்கு முன்னும் பின்னும்
21. 'தனிநாடு கோரிக்கை' - அனைத்துலகச் சட்டப்படி குற்றமன்று!
22. தேசியம் பேசும் திருடர்கள்
23. அரசியலை விட்டு விலகித் தமிழக விடுதலைக்குப்பாடுபடுங்கள்!
24. தனித்தமிழ்நாட்டுச் சிக்கலைக் கடுமையாக எதிர்நோக்க வேண்டியிருக்கும்
25. தனித்தமிழ்நாட்டுக் கோரிக்கைக் குரல் முழக்கப்பட வேண்டும்
26. தேசிய இனங்களின் விடுதலைக் கோரிக்கை தீவிரமடைகின்றது
27. விடுதலைப் பாசறை கட்டமைக்கப்படுகிறது
28. தமிழ்த் தேசிய இனவுணர்வாளர்கள் ஒன்று சேரவேண்டும்
29. இந்தியாவின் ஒற்றுமை, தேசிய இனங்களின் உரிமையில்தான் ஏற்பட முடியும்
30. தமிழினமே ஒன்றுபட்டியங்குக!
31. நம் நெடுநாளையக் கனவான தமிழக மக்கள் விடுதலைக் கூட்டணி அமைந்தது!
32. இந்திய அரசு தன்நாட்டு மக்கள் மீதே போர் தொடுக்கிறது!
33. உண்மையான இனமுன்னேற்றம் என்பது உரிமை மீட்பே!
34. இந்தியாவில் தேசிய இனங்களின் எழுச்சிகள்
35. தமிழக விடுதலைக் கோரிக்கையே தமிழிழத்தையும் வென்றெடுக்க வல்லது!
36. தொடர்வண்டிப் போராட்டத்தைத் தொடர்ந்து படிப்படியாகத் தனித்தமிழ்நாட்டுப் போராட்டத்தை முன்வைக்க வேண்டும்.
37. இந்தியாவின் அமைதியின்மைக்கு இந்திய அரசே காரணம்
38. கெஞ்சுவதில்லை பிறர்பால்
39. தமிழ்நாடு தனிநாடு ஆகாமல் இந்தி ஒழியாது!
40. தென்மொழி, தமிழ்நிலம் ஆசிரியர் தமிழ்நாட்டு பிரிவினை உணர்வைத் தூண்டிவருகிறார்.
41. குடமுருட்டியில் வெடித்த குண்டு
42. தமிழின எதிர்காலத் தீர்மானிப்புக் கருத்தரங்கம்
43. தமிழ்நாட்டை முழு இறைமையுடைய தனிநாடாகப் பிரித்து தமிழரே ஆளுமை செய்வது.
44. தமிழ்நாட்டு விடுதலை முயற்சிகளை எவராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது!
45. தமிழை விரும்புங்கள்! தமிழரை நேசியுங்கள்! தமிழ்நாட்டுப் பற்றுக் கொள்ளுங்கள்!
46. எரிவதைத் தடுக்காமல் கொதிப்பை அடக்க முடியாது!
47. தமிழருக்கு வாழ்வுரிமைகளும் தனிநாடும் கிடைத்துவிடக் கூடாதென்பதே இந்தியாவின் கொள்கை
48. தமிழ்நாட்டு விடுதலையே உரிமை அரசியலை மீட்டெடுக்கும்!
49. தமிழரசன் தம்பிகளுக்கு!
50. முன்புபோல் ஆட்சி கவிழ்க்கப்பட்டால் அடுத்து நடப்பது வேறு
51. சிறுசிறு நன்மைகளும் சலுகைகளும் இனத்தை ஈடேற்றிவிட முடியாது!
52. மக்களை அச்சுறுத்தியோ, துன்புறுத்தியோ இந்திய ஒருமைப்பாட்டை உருவாக்கிவிட முடியாது!
53. நாம் எதிர்த்துப் போராடுவது இந்திய ஒருமைப்பாட்டையோ ஒற்றுமையையோ அன்று!
54. இராசீவின் ஐந்தாய அரசு கரவான, சூழ்ச்சியான ஓர் அமைப்பு!
55. மொழி, இன, நாட்டு உரிமைகள் படிப்படியாகப் பறிக்கப்படுகின்றன!
56. இந்தியா யார் அப்பன் விட்டுச் சொத்தும் இல்லை; இங்குள்ள தேசிய இனங்களின் சொத்து!
57. தேர்தல் வேண்டுகை!
58. இந்தியாவில், பார்ப்பனீய, முதலாளியங்களின், இன அரசியல் தாக்குதல்கள் இருக்கும்வரை இந்திய ஒருமைப்பாடு, ஒற்றுமை உணர்வுகள் வெற்றிபெறா! பிரிவினை உணர்வும் வளர்ந்தே தீரும்!
59. தனித்தமிழ் நாடு உருவாவதை எவராலும் தடுக்கமுடியாது
60. காவிரிச் சிக்கலை இனச் சிக்கலாக மாற்றிவிட்டார் பங்காரப்பா
61. விடுதலைப் புலிகளை ஆதரிப்பதும். தனித்தமிழ் நாடு கேட்பதும் தேச விரோதமன்று
நாடும் மக்களும்
"நாடென்ப நாடா வளத்தன ” - என்றார் பொய்யாமொழியார். மக்களெல்லாம் தம் உயிர் வாழ்க்கைக்கு வேண்டிய வற்றை வேறெங்கும் நாடிப் போகாமல், தன்னகத்தேயே வளம் கொழுவியதாய் அமைந்த ஒரு நிலப்பரப்பே, நாடு எனப் பெயர் பெறுவதாகும். ஆனால் இத்தகைய இயற்கைவளம் பொதுளியதாய் அமைந்த ஒருநாடு இக்கால் உலகில் வேறெங்கும் இல்லையாயினும், நம் பண்டைத் தமிழகப் பகுதி அவ்வாறிருந்தது என ஒங்கிப் பேசலாம்.
"உழவர் உழாதன நான்கு பயனுடைத்தே"- எனக் கூறி மாரி வண்கைப் பாரியாண்ட பறம்பு மலை இயற்கை வளம் மிக்கதாய் இருந்தது என்றார் கபிலர். ஆயினும் அத்தகைய வளங்கனிந்த நாட்டை நாம் காண்பதற்கரிதெனினும், அவ்வாறு வளம் மிக்கதாய் ஆக்கிக்கொள்ள வல்ல அறிவாற்றல் மிக்கோர் பலரும் உள்ளனர். அவ்வறிவாற்றலிற் சிறந்தோரை நாம் ஆளுநராகக் கொள்வோமாயின் நாமும் அவ்வளம் சான்ற நாட்டில் வதிந்து வாழ்வை நுகரலாகும்.
இனி இத்தகைய நாட்டை உண்டாக்க ஆளுநருமே அன்றி, மக்களும் உயர்ந்தோராய் இருத்தல் வேண்டும்.
நாடாகொன்றோ காடாகொன்றோ
அவலாகொன்றோ மிசையாகொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே. புறம்
-என்றார் ஒளவை மூதாட்டியாரும். நாடாகட்டும், காடாகட்டும், பள்ளமாகட்டும், மேடாகட்டும், எங்கு மக்கள் நல்லவராக உள்ளனரோ, அந்த நிலமே நல்ல நாடு என்பது அவர் கருத்து.
“ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
ஒதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை”
- என்று முதுமொழிக்காஞ்சி முழங்கும்.
ஒருநாட்டின் பெருமைக்கு, முதற்பெருங் காரணமாய் நிற்போர் அந்நாட்டு மக்களே.
பொய் அறியா வாய் மொழியால்
புகழ் நிறைந்த நல் மாந்தரொடு -(மதுரைக் காஞ்சி)
விளங்கும் நாடே நாடெனப்படும்.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்பால், அவன் ஆண்ட உறையூரைப்பற்றி வெள்ளை நாகனார் என்னும் நல்லிசைப் புலவர்.
‘அரசெனப் படுவது நினதே பெரும!
.............................................................
நாடெனப் படுவது நினதே!’
- என்று பாடிப் பரவுகின்றார்.
அத்தகைய நன்மக்கள் வாய்ந்த ஒரு திருநாட்டை அரசும் நெறி திறம்பாமல் ஆளல் வேண்டும்.
“அறநெறி முதற்றே யரசின் கொற்றம்!
அதனால் நமரெனக் கோல் கோடாது
பிறரெனக் குணங் கொல்லாது
ஞாயிற் றென்ன வெந்திற லாண்மையும்
திங்க ளன்ன தண்பெருஞ்சாயலும்”
உடையராய் ஆளுநர் இலங்க வேண்டும்.
“யான் உயிர் என்பது அறிகை
வேல் மிகு தானை வேந்தர்க்குக் கடனே.”
- என்று பண்டைத் தமிழரசர் எண்ணி,
“முதுவோர்க்கு முகிழ்ந்த கையினராகவும்
இளையோர்க்கு மலர்ந்த மார்பினராகவும
ஏரோர்க்கு நிழன்ற கோலினராகவும்
நேரோர்க்கு அழன்ற வேலினராகவும்”
-(சிறுபாணாற்றுப்படை)
ஊரை ஆண்டுத் தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனர். தண்டமிழ்ச்சான்றோர் பல்கிய பண்டைத் தமிழரசு அவ்வாறிருந்தது.
“அரசியல் பிழையாது அறநெறிகாட்டி
பெரியோர் சென்ற அடிவழிப் பிழையாது”
-(மதுரைக்காஞ்சி)
நடப்பதாகி
முறை வேண்டுநர்க்கும்
குறை வேண்டுநர்க்கும்
வேண்டுப வேண்டுப வேண்டினர்க்கருளி
(பெரும்பாணாற்றுப்படை)
நீர் சூழ் தமிழகத்தைச் சீர் சூழ்ந்ததாக்கிய பண்டை அரசின் கீழ்தான். மாந்தர் இன்புற்று வாழ்ந்தனர், இவையெல்லாம் பழங்கதை!
இற்றைத் தமிழரசோ, ஒழுங்கற்றார் கையிற்றங்கியது. மக்கள் நலங்கருதாது, தன்னலங் கருதுவார் பின்புறத்திற் போயொடுங்கியது. இதுவேயுமன்றி, மக்களும் அரசு பிறழ்ந்த அடிவழித் தாமும் பிறழ்ந்தனர். மேனாட்டாரிடமிருந்து கற்க வேண்டுவன கல்லாது, கற்கக் கூடா நாகரிகமென்னுங் கொடுவழி பற்றிக் குலைந்து போகின்றனர் மக்கள்
“இல்லது நோக்கி இளிவரவு கூறாமுன்
நல்லதுவெஃகி வினை செய்வாரையும்” (-பரிபாடல்)
“இலனென்னும் எவ்வம் உரையாமுன்
ஈயுங் குணமுடையாரையும் காண”
ஆவலாகவிருக்கின்றோம்.
“கொள்வதும் மிகை கொளாது
கொடுப்பதுஉம் குறைகொடாது” (பட்டினப்பாலை)
வாழும் வணிகரைக் காணோம்.
‘அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கிச்
செற்றமும் உவகையும் செய்யாது காத்து
ஞெமன்கோல் அன்ன செம்மைத்து ஆகிச்
சிறந்த கொள்கை அறங்கூறும்’
(-மதுரைக்காஞ்சி)
அவையத்தைப் பார்க்கவும் கேட்கவும் விருப்பமுடைய வராகித் தேடுங்கால் பொய்மையும் புலையும், வெப்பச் சூழ்வும் கொண்ட அறமன்றம் நம் கண்களிற் படுகின்றது.
இத்துணை ஏற்றத் தாழ்வுக்கும் காரணம் என்னை ? என்னை ? என்று கடாவுவாரையும், கவலுறுவாரையும் கூடக் காணவியலவில்லை. ஊன்றிப் பார்க்குங்கால் நமக்குக் கிடைத்த முடிபுகள் இரண்டு.
இற்றைத் தமிழகத்தில்,
அரசுக்குத் தக்க குடிகளில்லை!
குடிகளுக்குத் தக்க அரசில்லை.
இவ்விரு குறைகளுள் ஒன்று நிறைவாயிருப்பினும், காட்டரசாகவோ, அன்றி நாட்டரசாகவோ இஃது இயங்க முடியும். ஈண்டோ, காடுமல்லாது, நாடுமல்லாது, மக்காளும், மக்களும் புகுந்த காடுங் கழனியுமாக வன்றோ காண்கின்றோம். நல்ல மக்கள் நல்லாட்சியை அமைத்தல் இயலும். அல்லது நல்ல ஆட்சி, நல்ல மக்களை, ஆக்கலும் இயலும் ஈண்டு நாம் பெற்ற தன்னரசாட்சியில் மக்களே ஆள்நரைப் பொறுக்குவதால் நல்ல ஆட்சி அமையாமைக்கும் அவரே காரணமாவார். இதற்குக் கல்லாமையைக் காரணங் காட்டுவாருமுளர்.
அதுவும் ஒரு காரணமேயன்றி, அதுவே முழுக் காரணமாகாதென்போம். அதற்கு வலித்தமும் காட்டுவோம்
கல்லாதவர் பெருகியிருப்பதாலேயே ஆள்நரைத் தெரிந்தெடுக்க இயலாதவராய் மக்கள் இருக்கின்றனர் என்பது உண்மையாயின் கற்றவர் என்பவர் எல்லோரும் ஒழுக்கமுடையவராயும், நெறியுடையவராயும் பிறர் நலம் பேணும் பெற்றியராயும் இயங்குகின்றனரோ? அவ்வாறில்லையே! கற்றவரில் நூற்றுக்குப் பதின்மர் தாமும் அவ்வாறில்லாதிருக்கக் கல்லாமையே ஆட்சிச் சிறப்பின்மைக்குக் காரணமாவ தெங்ஙன்?
ஆக இது பற்றி நாம் கொண்ட கருத்து என்னை யெனின் கற்றவர் மாட்டுமன்றிக் கல்லார் மாட்டும் திகழுவனவாகிய மக்கட்பண்பும், ஒழுக்க விழுப்பமும் இல்லாமைப் பொருட்டே நாடும். நாட்டை இயக்குகின்ற அரசும் சிறப்பாக நாம் இலக்கியங்களில் படிக்குமாறும். கேட்குமாறும் அமைய இயலவில்லை.
“என்னிழல் வாழ்நர் சென்னிழற காணாது
கொடியன்எம் இறையெனக் கண்ணிர் பரப்பிக்
குடிபழி தூற்றுங் கோலே னாகு!” (புறம்)
என்று சூளுரைக்கும் அரசையுங் காணமுடியவில்லை.
“யான்கண் டனையரென் இளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கு மதன்றலை
ஆன்றவிந் தடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழு மூரே!” (புறம்)
என்று பாடி மகிழ்வாரையும் காணற் கியலவில்லை.
இனி, ஒழுக்கத்தானும் பண்பாலும் கவலுறாமல் பொருளும், அரசுமே வாழ்வெனக் கொண்டு சிறக்கும் புறநாட்டார் எல்லா வற்றானும் பெருமையுறல் காண்கின்றோமே. அஃதெப்படியோ? என்று கேட்பார்க்குச் சில கூறுகின்றோம்.
மேனாட்டாரின் வாழ்வு எத்தகையது என்பதையும் நம் நாட்டாரின் வாழ்வு எத்தகையது என்பதையும் நன்றாக அறிந்து கொள்ளக் கருவிகளாயிருப்பன அவரவர் நாட்டு இலக்கியங்ளே!
மேன்னாட்டாரின் இலக்கியங்கள் யாவும் ஒழுங்கு ஒழுங்கு என்று அரற்றுவன. நம்நாட்டு இலக்கியங்கள் முற்றும் பசி பசி என்று அழுங்குவன. அவர்க்கு வயிற்றைப் பற்றிக் கவலையில்லை. வாழ்வைப் பற்றிய கவலையே மிகுவானது நமக்கு வாழ்வைப் பற்றிக் கவலையில்லை. வயிறு பற்றிய ஏக்கமே மிக இருந்தது.
“ஒரு நா ளுணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக் கேலென்றால் ஏலாய்- ஒருநாளும்
என்நோ வறியாய் இடும்பைகர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது”
என்று மேனாட்டார் யாரும் பாட இயலாது.
ஒழுக்கம் ஒழுக்கம் என்று முழக்கிய அன்னா கரினினாவும், ஒழுங்கற்றுப்போன கதையும் அதுபோன்றவையுமே அவரின் இலக்கியங்களாகத் திகழ்கின்றன. அவர்தம் சாகா இலக்கியங்கள் வாழ்வின் உண்மைப்பயன் காண ஏங்கியதாகவும் அது அங்குக் கிடைக்கவில்லை யென்றும் உலகப் பேரறிஞர் டால்ஃச்டாய் அடிகள் எழுதியுள்ளனர்.
ஆனால் இங்கோ,
“குப்பைக்கீரையை உப்பின்றி உனக்கி ஒருநாள் ஒருபொழுது’’ உண்டதாக இலக்கியங்கள் பேசுகின்றன.
இற்றைத் தமிழகத்திலும் மாந்தர் பசியைப் பற்றிப் பேசுகின்றனர். ஆனால் அதற்கொரு வழியும் காணவில்லை. ஒழுக்கத்தைப் பற்றியும், பண்பாடு பற்றியும் பேசிப்பேசிக் காற்று மண்டலத்தை கூற்று மண்டலமாக்குகின்றனர். ஆனால் அவ்வாறு நடப்போரையும் நடந்து காட்டுவாரையும் காணோம். ஆகலின் மக்கள் என்று பண்பாட்டில் சிறந்து விளங்குகின்றனரோ, அன்றே ஆட்சியும் நெறியிற் சிறந்து விளங்க இயலும். கற்றால் மட்டும் போதாது; கற்றவாறு நிற்கவும் மக்கள் பழகல் வேண்டும். இதுபற்றியே வள்ளுவர் ஒழுக்கம், பண்பு என்று முழங்குகின்றார்.
இன்று தமிழகங் காண்கின்ற நிலையில் மக்கள் செய்ய வேண்டுவனவும் ஆள்நர் செய்ய வேண்டுவனவும் நிறைய உள. இருவரும் முறையாக அவற்றைக் கடைப்பிடியாய் நின்றாற்று வாராயின் நம் தமிழகம் விரைந்து முன்னேறும். மக்கட்பிரிவும் சமயப்பிரிவும் அவற்றை வளர்க்கும் கொள்கையும், சட்டமும் உடனே நீக்கப்படல் வேண்டும். வெற்று ஆரவாரச் சிறுத்தொழில்களையும் பெருந் தொழில்களையும் தடைப்படுத்தி நாட்டை ஒரு உழவு நாடாக முதலில் அமைத்தல் வேண்டும். கைத்தொழில் நாடாகவும் உழவு நாடாகவும் ஒருங்கே ஆக்கி விடுதல் என்பது எவ்வாற்றானும் இயலாததொன்று, ஒரு கைத்தொழில் நாட்டிற்கு மிகுந்த பொருள் தேவை; உழவு நாட்டிற்கோ, மிகுந்த உழைப்புத் தேவை. நம்நாடு பொருளற்ற, நாடு மக்கட் பெருக்கம் மிகுந்த நாடாகிய இஃது உழைக்க முற்படுமானால் பொருள் தானே குவியும், மக்கள் ஒருங்கே இருந்து உழைக்கத் தடையாயிருப்பன சாதிகளும் சமயங்களும். ஆதலின் அவற்றை முதலில் ஒழுங்கு செய்து கொள்ளல் அரசின் தலையாய கடமை
இவ்வாறு, அரசினர் செய்யும் நல்வினைகட்கு மக்கள் எல்லாவற்றானும் துணையாக நிற்றல் வேண்டும். இவ்வாறன்றி இந் நாவலந் தீவையோ, தமிழகத்தையோ முன்னேற்றிவிட வேண்டுமென்று முனைவோர் நெல் குற்றிக் கைசலிப்பாரே ஆவர் என்பதை மீண்டும் கூறுகின்றோம்.
- தென்மொழி, இயல் : 1, இசை 5, 1959
பிரிவினைத் தடைச் சட்டம்
எங்குப் பிரிவினை பற்றிப் பேசப் பெறுகின்றதோ, அங்கு பிரிவினைக்குத் தக்க பொருட்டுகள் இருக்கும் என்பதையும் எங்குப் பிரிவினைக்குத் தடையிருக்கின்றதோ அங்கு விடுதலை வேட்கை மிகும் என்பதையும், வெள்ளையர் ஆட்சியிலும் அதை எதிர்த்துத் தன்னாட்சி நிறுவிய பேராயக்(congress) கட்சி வரலாற்றிலும் இன்னும் பிற உலக நிகழ்ச்சிகளிலும் நாம் தெளிவாகக் கண்டோம்.
எங்கும் பிரிந்து போக விரும்புவார் சிறுபான்மையராக விருப்பதையும், பிரிந்து போகத் தடையிடுவார் பெரும்பான்மையராக விருப்பதையும் நாம் அறிவோம். இப்பெரும்பான்மையரிடமிருந்து சிறுபான்மையினர் பிரிந்துபோக விரும்புவது ஏன்? இதற்கு வெறும் உணர்ச்சியும் மேலோட்டமான எண்ணமும், சட்ட திட்டங்களில் வலிந்த கட்டுக் காவல்களால் தகர்த்தெறியத் தக்க காரணங்களுமே அடிப்படையாக விருக்க முடியாது. பெருத்த அரசியல் வரலாற்று மொழி, பண்பாட்டு அடிப்படையிலேயே ஒரு சாரார்க்கு விடுதலை வேட்கை பிறக்கும். அவை பொருட்டே ஒரு கூட்டம் அவ்விடுதலை வேட்கைகையத் தடுக்க முயற்சி செய்யும்.
உலகியல் முறைப்படி ஒருவர் பிரிவு கேட்டதோ, இன்னொருவர் அதைத்தடுத்து ஒற்றுமையை வலியுறுத்துவதோ குற்றமாகாது. ஆனால் விடுதலை வேட்கையினர் தாறுமாறான வழிகளில் அதனை வற்புறுத்துவதோ, ஒற்றுமை விரும்புவார் ஆணை அடக்குமுறைகளால் அதனைத் தடுக்க முயல்வதோ தான், தமக்கும் நாட்டுக்கும் சொல்லொணாக் கேடுகளைப் பயக்கும்.
அண்மையில் இந்திய அரசியலார் கொண்டுவர விருக்கும் பிரிவினைத் தடைச் சட்டம், எதிர்காலத்தில் என்றேனும் ஒரு நாள் இந்தியா பற்பல வகையில் பிளவுண்டு போகும் என்பதற்கே அடிப்படையாகுமன்றி, அதனைத் தடுத்து நிறுத்தும் முயற்சிக்குக் கட்டாயம் வழி வகுக்காது.
குடியரசு அமைப்பு முறையின் முழு முதல் அடிப்படைச் சிறப்பு என்ன வென்றால், எல்லாக் குடிமக்களின் அன்றிக் குடிமக்களில் ஒருசிலரின் அவ்வப்பொழுதைய உரிமைக் குரலுக்குக் செவி சாய்ப்பதே ஆகும். அவ்வுரிமைக் குரல் எழுப்பப்படுகையில் அதற்குச் சரியான வகையில் அமைவு கூறி அதனைத் தணிக்க முயல்வதே குடியரசு முறையைக் கட்டிக்காக்க விரும்புவார் செய்ய வேண்டிய செயலாம். அஃதன்றிக் குடிமக்கள் சிலரால் எழுப்பப் பெறும் உரிமை வேட்கையின் குரல்வளையை அழுத்தி நெரித்து அக்குரலெழாமல் தடுக்கும் குடியரசை விட, தன் விருப்பம் போல் மக்களை அலைக்கழித்து அச்சுறத்தித், தன் வலிந்த கைகளால் குரலெழுப்பும் மக்களைத் தடுத்து வன்மம் புரியும் முடியரசே நூறு மடங்கு மேலாம்.
இந்தியப் பேராயக் கட்சியின் ஆளுநர், அண்டை நாட்டாரொடு எல்லைப் போரிட்டுக் கொண்டிருக்கும் இதே பொழுதில் எவ்வகையிலும் தமக்குத் தொல்லை தராத - மாறாகத் துணை புரிகின்ற ஒரு சார் மக்கள், தாம் பின்னர் எழுப்பப் போவதாகக் கூறும் விடுதலைக் குரலுக்கு அணையிட முயன்று, அவர் தம் வெறுப்புக்கும் பகைக்கும் ஆளாகின், அந்நிலை எத்துணைப் பெருந் தீங்கை விளைவிக்கும் என்று நாம் கூறற்கியலாது.
இப்பொது நிலைகளை ஒருவாறு விடுத்துப் பிரிவினைக்குரிய சிறப்பு நிலைகளை ஒரு சிறிது பார்ப்போம்.
இந்திய அரசினர் இப்பிரிவினைத் தடைச் சட்டத்தை விரைந்து கொண்டுவரும் இந்நிலைக்குத் தமிழ்நாட்டில் அன்று தொட்டிருந்து வரும் விடுதலை யுணர்வே தலையாய காரணமாக விருக்க முடியும். அண்மையில் நடந்த தேர்தலில் பெருமளவில் மக்கள் துணையைப் பெற்று மாநில அரசவையிலும், நடுவண் அரசவையிலும் ஒரு நல்லிடத்தை கைக் கொண்ட தென்னக விடுதலைக் கட்சி ஒன்றின் நிலை வலுத்த பின்பு, இத் தடைச் சட்டம் கொண்டு வரப்படுவதே, இதனை வலியுறுத்திக் காட்டும்.
தமிழ் நாட்டு மக்கள் ஒரு சிலர்க்கு உடன்பாடற்றவையாக இத்தென்னக விடுதலைக் கட்சிக் கொள்கைகள் இருந்தாலும், அக் கட்சிக்கு அடிப்படையான தமிழக விடுதலை யுணர்வையும், வரலாற்று உண்மையையும், எவரும் மதியாது புறக்கணித்துவிடல் முடியாது. ஓரளவிற்கு அந்தக் கட்சியின் உணர்வு, தமிழர் தம் உள்ளத்துக் கனல் விட்டுக்கொண்டிருக்கும் உரிமை உணர்வே என்று கூறுவதானாலும் அது மிகையாகாது.
இவ்விடுதலை உணர்வு இன்று நேற்று ஏற்பட்டதா? அன்றி வெள்ளையரை எதிர்த்துப் பொருதிக் காலக் கோளாறுகளால் தன்னாட்சியை மறைமுகமாக நிறுவிக் கொண்ட பேராயக் கட்சியின் விடுதலை உணர்விற்குப் பின்னர் தோன்றியதா? பருக்கைச் சோற்றுக்குக் கையேந்தி, படுக்கும் பாய்க்கு உடல் சொரிந்து, பிறன் வீசி எறியும் ஒரு சில காசுகளைக் குனிந்து பொறுக்கிக் கும்பி நிறைக்கும் தன்மானமிழந்த தம்பிரான்மார்கள் ஒரு சிலரன்றி, உண்மைத் தமிழன் என்று சொல்லிக் கொள்ளும் ஒவ்வொருவனுடைய உள்ளுணர்விலும் எழுந்ததாகும் இத்தமிழக விடுதலை வேட்கை இதை எவராலும் அழித்துவிடல் முடியாது. தமிழ் மொழி உள்ளளவும் தமிழன் இருப்பான். தமிழன் இருக்கும் வரை, தமிழ் நாட்டுணர்வும் இருந்தே தீரும் என்பதை எவரும் மறந்துவிடல் வேண்டாம்.
மொழி, இலக்கிய, பண்பாட்டு, சமய அடிப்படையில் தனக்கு ஓரகம் நடைபெறுங் காலத்து ஒவ்வொரு தமிழனும் எழுந்து தன் விடுதலையுணர்வை வெளிப்படுத்தியே தீர்வான் வெறும் சட்ட திட்டங்களாலும், அடக்கு முறைகளாலும் இதனை அடக்கிவிடல் முடியாது. போலி ஒற்றுமை மணிலாக் கொட்டையின் புறத் தோலைப் போன்றது. வேட்கையுள்ளத்தால் அக்காய் உடைத் தெறியப்படும்பொழுது மணிகள் விடுதலை பெற்றே தீரும்.
முற்றி முதிர்ந்து வளர்ந்து பரந்து சிறந்த ஓரினத்தின் ஆணி வேரை ஒருவராலும் அவ்வளவு எளிதில் அறுத்தெறிந்து விடல் முடியாது. தமிழ் மொழி விடுதலை, தமிழ் இலக்கியப் பண்பாட்டு விடுதலை, தமிழர் சமய விடுதலை என்பவற்றிற்குத் தீங்கு நேருங்கால் நாட்டு விடுதலை முழக்கம் எம்மருங்கும் ஒலித்தே தீரும். அக்கால் விடுதலை முழக்கமிடும் இத்தென்னகக் கட்சியோடு ஒவ்வொரு தமிழனும் ஒன்றித் தன்னை முழுமைப்படுத்திக் கொள்ள நேரினும் நேரும் என்று அரசியலார்க்கு எச்சரித்துக் கூறுகின்றோம். சாவைவிட அடக்கியொடுக்கப் படுந்தன்மை. இனிப்பதன்று. இந்திய நாட்டின் ஒற்றுமை உணர்வைவிடப் பன்னூறாயிர மடங்கு உயர்ந்து வலிந்ததாகும் தமிழக விடுதலை யுணர்வு. அதைச் சட்டத்தால் அடக்குதல் சீறும்புயலை மீன் வலை கொண்டு மறிக்கும் மடமைச் செயல் போன்றது. குடியரசு கொள்கைக்கே மாறான இச் சட்டம் நன்மை பயப்பதன்று. மேலும் மேலும் விடுதலை உள்ளத்தைக் கிண்டிக் கிளறுவதாகும். ‘துஞ்சு புலி இடறிய சிதடன்’ போல ஆளுநர் ஆகிவிடக் கூடாது என்பதே நாம் விரும்புவதாகும்.
- தென்மொழி, சுவடி 1 ஓலை-2, 1963
தனித்தமிழ் நாடு!
“தனித்தமிழ் நாட்டு விடுதலைப் போராட்டத்தை நான் இன்னும் கைவிட்டு விடவில்லை. தென்னிந்தியர் மேல் வட நாட்டினர் இந்திமொழியை வலுக்கட்டாயமாகத் திணிப்பதானால், நாட்டு விடுதலைப் போராட்டத்தை மீண்டும் நான் தொடங்குவேன்” என்று அண்மையில் திராவிடர் கழகத் தலைவர் ஈ.வே. இரா. பெரியார் வேலூரில் பேசியுள்ளதாகச் செய்தித் தாள்களில் செய்தி வந்துள்ளது. செய்தி உண்மையோ பொய்யோ என்று தெளிவாகக் கூறமுடியாமற் போனாலும், பெரியார் உள்ளத்தில் இருப்பதாகக் கூறப்பெறும் விடுதலை உணர்ச்சி பெரும்பாலான தமிழர்களின் உள்ளத்தில் பெரிய புயல் வடிவாகக் காழ்த்துக் கொண்டிருப்பது உண்மையே! முதலமைச்சர் திரு. பக்தவத்சலத்தின் வல்லாண்மைத்தனத்தால் தமிழ்மொழிக் காப்புணர்வும் தமிழ்நாட்டு விடுதலை ஆர்வமும் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியுள்ளன. நூற்றுக்கணக்கான தமிழர்களைச் சுட்டுப் பொசுக்கிய அரசினரின் அடக்கு முறை வலுக்க வலுக்கத் தமிழர்களும் தங்கள் கைகளை முருக்கேற்றிக் கொண்டும், தங்கள் நெஞ்சங்களில் கனப் பேற்றிக் கொண்டும் வருகின்றனர் என்பதை வடவர் மறந்துவிடக் கூடாது.
இந்திய நாட்டின் எல்லைச் சண்டைகளைச் சாக்காக வைத்துக் கொண்டு, இந்திய அரசினர் நாட்டு ஒற்றுமையை மிகவும் வலுப்படுத்துகின்றனர். மன ஒருமைப்பாட்டாலன்றிச் சட்டத்தாலும் கடுமையான அடக்குமுறைகளாலும் நாட்டில் ஒற்றுமையை உண்டாக்கி விடலாம் என்று கருதுவதுதான் நமக்கு வியப்பாக விருக்கின்றது. பாதுகாப்புச் சட்டம் என்ற ஒரு சட்டம் இவ் வொற்றுமையை வலுப்படுத்தும் எல்லா அடக்குமுறை நடவடிக்கைகளுக்கும் துணையாக நிற்கும் ஒரு சட்டம், வெளி நாட்டுத் தொடர்பில் நாட்டின் பொதுக்கருத்துக்கு மாறாக எவரேனும் நாட்டை எதிரி நாட்டுக்குக் காட்டிக் கொடுக்க முற்படின், அவர் தம்மை நாட்டின் உட்பகையாகக் கருதுவது இயற்கையே. அப்படி உட்பகையாகக் கருதப்பெறுவார் மேல் தண்டம், சிறை முதலிய கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதும் இயற்கையே! ஆனால் அத்தகையதொரு சட்டத்தை வைத்துக் கொண்டு இந்திய நாட்டை வேட்டெஃகத்தால் ஒற்றுமைப்படுத்த நினைப்பதும், அவ்வாறு ஒற்றுமைப்படுத்தும் முயற்சியில் தலையாயதாக இந்திமொழியை நாடு முழுவதும் ஆட்சி மொழியாகச் செய்ய முற்படுவதும், அதன் பொருட்டுப் பிறமொழிகளின் இயற்கை உரிமையைப் பறிப்பதும், பிறமொழிகள் பேசும் மக்களின் தன்னுரிமையான எண்ணங்கட்கு மாறாக நடப்பதும், மீறினால் அடக்க நினைப்பதும், அதையும் மீறுவராயின் சிறைப்படுத்திக் கடுங்காவல் தண்டங்களை வழங்குவதும் மக்களுரிமை அரசாட்சி அமைப்புக்கே மாறான செயல்களாகும். இத்தகைய செயல்களால் அரசினர் எதிர்பார்க்கும் நாட்டு ஒற்றுமைக்கும், பாதுகாப்புக்கும் மாறாக உள்நாட்டுக் குழப்பங்களும் ஒற்றுமைக் குலைவுந்தாம் ஏற்படும் என்பதைத் தொடக்க நிலை அரசியலறிவு வாய்ந்தவன்கூட எளிதில் புரிந்து கொள்ளுவான்.
இந்நிலையில் அரசினர் தாம் கொண்ட விடாப்பிடியான நடவடிக்கைகளை மேலும் மேலும் வலுப்படுத்திக் கொண்டுள்ளனர் என்பதை, ஆங்காங்கே மேற்கொள்ளப்பெறும் கடுமையான அடக்குமுறைகளைக் கொண்டு திட்டவட்டமாக உறுதிப்படுத்தலாம். இந் நடவடிக்கைகளுக்கு முதற்படியாக மக்களின் மொழி உரிமைகளைப் பற்றிப் பேசும்தாளிகைகள் கட்டுப்படுத்தப் பெற்று வருகின்றன. மக்களின் கருத்துகளைத் தெளிவாக உணர்த்தும் செய்தித்தாள்கள் ஒருநாட்டின் அரசியல் அமைப்புகளை விளக்கிக் காட்டும் காலக்கண்ணாடிகள் ஆகும். செய்தித்தாள்கள் அவ்வப்பொழுது அரசினரின் உள்நாட்டு நடவடிக்கைகளைக் கண்டித்துப் பேசுவது, விளையப் போகும் விளைவுகளை ஆட்சிப் பித்தம் தலைக்கேறிய அரசினர்க்கு எதிர்காலத்தை உணர்த்தும் முன்னறிவிப்பாகும். அதற்காக அச் செய்தித்தாள்களின் மேல் அடக்கு முறைகளைப் பாய்ச்சுவது அந்த உண்மையாக ஏற்பட்டிருக்கும் மக்களின் உள்ளக் கிளர்ச்சிகளைப் புதைத்து விடுவதாகாது. அடக்கு முறைகளாலும் கடுந்தண்டங்களாலும் உரிமையுணர்வு மேன் மேலும் கிளர்ந்தெழுமே யொழிய என்றும் அடங்கிவிடாது. இதனை மக்களின் வரலாறு அறிந்த யாவரும் தெள்ளிதின் உணர்வர். வெளிநாட்டு அரசியல் போக்கிற்காக உள்நாட்டு அரசியல் நடவடிக்கைகளைத் தடுத்துவிட முடியாது. ஊரில் கொள்ளைக்காரர்கள் மிகுந்து விட்டார்கள் என்பதற்காக, வீட்டிற்குள் எவரும் பசி என்று கிளர்ச்சி செய்யாமல் இருத்தல் வேண்டும் என்று கட்டுப்பாடு செய்வது மடமை. பசி முதலிய தேவைகள் இருந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தக் கூடாது என்று நெறிமுறைகள் கூறுவது அரசியல் அறம் ஆகாது. இன்னும் சொன்னால் வெளிநாட்டு அரசியல் தொடர்பைச் சரிகட்ட உள்நாட்டின் உரிமையுணர்வுகளை விட்டுக்கொடுக்கும் மனப்பாங்குடன் அணுகுவதும், தேவையானால் மக்களின் உள்ளார்ந்த உரிமையெழுச்சிகளை மதித்துப் போற்றி அதற்காவன செய்வதுமே இந்நெருக்கடியான நேரத்தில் அரசினர் கடைப்பிடிக்க வேண்டிய முறைகளாகும். இதைவிட்டு, விட்டு மக்களின் உரிமை உணர்வுகளையே தவறென்றும் கண்டிக்கத்தக்கன வென்றும் கூறி அடக்கு முறைகளால் அவற்றை ஒடுக்க நினைப்பது, உட்புண்ணை மூடிமறைத்து விட்டு, வெளிப்புண்ணுக்கு மருந்திடும் அறியாமைச் செயலே. காலப்போக்கில் உரிமையுணர்வுகளை மதியாத அரசினரையும் மக்கள் மதியார். அவ்வரசினர் தம் வெளிநாட்டுத் தொடர்பான நடைமுறைகளுக்கும் (அவை சரியாகவே இருப்பினும்) அவர் தம் ஒத்துழைப்பை நல்கார். இனி, ஒத்துழைப்புத் தாரமற் போவதுடன், வெளிப்பகையைப் புறக்கணித்துவிட்டுத் தம் உரிமைக் கிளர்ச்சிகளையும் வெளிப்படையாகவே நடத்த முற்படுவர். தமக்கு மறுக்கப்படுகின்ற உரிமைகளை வைத்துக் கொண்டிருக்கும் அரசின் உடைமைகள் எதிரிகளால் தாக்குறும் பொழுது அதைப்பற்றித் துளியும் கவலை கொள்ளார். இந்நிலையில் அரசு கடைப்பிடிக்க வேண்டிய வழங்க வேண்டிய உரிமை முறைகளை கடைப்பிடிக்காமலும் வழங்காமலும் இருப்பதுடன் எதிரியை முறியடிக்க ஒற்றுமையாக இருங்கள் என்று மருட்டிக்கொண்டிருப்பது எவ்வளவு பெரிய மடமை என்பதை அரசினர் காலப் போக்கில் உணரத்தான் போகின்றனர்.
இந்தச் சூழ்நிலையின் முதல் விளைவுதான் நாம் இக்கட்டுரைத் தொடக்கத்தில் பெரியார் ஈ.வே.இரா. பேசியதாகக் கூறிய கூற்று. நாட்டு விடுதலை உணர்வையும், தம் கட்சி நோக்கங்களையும் சிறிதுகாலம் மறந்து விட்டு, ஆளுங் கட்சியான பேராயக் கட்சிக்குத் தம் முழுத்துணையையும் ஆற்றலையும் நல்கிய பெரியார், தம் மறந்து போன எண்ணங்களை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருவதும், அதன் வழியே தாம் இனிநடக்க வேண்டும் என்று கருதுவதும் அரசினர்க்கு ஏற்பட்ட இரட்டை இழப்பே! ஒன்று பெரியாரின் பெருந்துணையைப் பேராயக் கட்சி இழப்பது. இரண்டு, அவரின் வலிந்த அரசியல் எதிர்ப்பைத் தாம் ஏற்படுத்திக் கொள்வது, இந்த இருவகையான இழப்பும் அரசினரின் ஆட்சிக் கப்பலில் விழுந்த இரண்டு ஓட்டைகளாகும். அரசினர் இவை போன்ற ஓட்டைகளுக்கு மதிப்புக் கொடுத்தே ஆகல் வேண்டும். இல்லெனில் அவர்தம் ஆட்சிக் கப்பல் மூழ்கடிக்கப்படும் என்று எச்சரிக்கின்றோம்.
இனி, பெரியார் நடத்தப் போவதாகக் கூறும் தமிழ் நாட்டு விடுதலைக் கிளர்ச்சியை அவர் துணிந்து நடத்துவாரோ இல்லையோ என்ற ஐயப்பாடு முறையே ஆட்சியினர்க்கும் மக்களுக்கும் எழாமல் இல்லை. ஒரு வேளை ஆட்சியினர்க்கு அவர் ஐயப்பாடு ஊதியமாகவும் படலாம். ஆனால் மக்களைப் பொறுத்தவரையில், பெரியாரின் புரட்சியுள்ளத்தைப் பார்க்கினும் வலிவான, மேலான ஒரு பெருத்த புரட்சி மனப்பான்மை உருவாகிச் செயல்படப் போவதை எவரும் தடுத்து நிறுத்திவிட முடியாது. உண்மையிலேயே இந்தியைப் பல வகையான எதிர்ப்புகளுக் கிடையிலும் வடநாட்டு அரசினர் வலிந்து புகுத்துவதை மேற்கொள்ளுவார்களானால், அவர்தம் முடிவு இரங்கத்தக்கதாகவும், எதிரிகளால் பழித்துரைக்கப்படுவதாகவும் இருக்கும் என்று கணித்துக் கூறுகின்றோம். இந்தி எதிர்ப்பை முறியடிக்க மக்கள் மேற்கொள்ளவிருக்கும் பெரும் புரட்சிக்கு முதல் நடவடிக்கையே அண்மையில் நடந்த மாணவர் புரட்சியாகும். இம் மாணவர் புரட்சியால் அரசினர் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள் விரைந்து மேற்கொள்ளப் பெறாவிடில் மக்கள் குறிப்பாகத் தென்னாட்டு மக்கள் கிளர்ந்தெழப் போவது கல்மேல் எழுத்துப் போன்ற உண்மை! இந்த உண்மை நடந்து தீர வேண்டிய கட்டாயம் நடக்கப்போகின்ற உண்மை.
தமிழ் நாட்டு அரசியலைப் பொறுத்த மட்டில் வடநாட்டு அரசினரின் கைப்பாவையாக இங்குள்ள முதலமைச்சர் இயங்கிக் கொண்டிருப்பது வெள்ளிடைமலை, மேலும் தமிழக முதலமைச்சர் இருவகையான குற்றங்களைத் தம்மையறியாமல் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார். அவை. வடநாட்டாரின் நடைமுறை ஆட்சி முறைகள் தமிழ்நாட்டு மக்களுக்குக் கேடு பயப்பன என்று தம்மளவில் அரசினர்க்கு உணர்த்தாமலிருப்பதும். இம்மாநில மக்களிடத்தே வளர்ந்து வரும் மனக்கசப்புகளை ஆளுநரிடம் தக்க முறையில் எடுத்துக் கூறாமல் மூடிமறைத்துத் தம் பதவிப் பொறுப்பை நீட்டித்துக் கொள்வதுமாகும். தாம் எவ்வாறாகிலும் பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி மக்களின் உரிமை உணர்வுகளைக் கட்டுப்பாடு செய்துவிடலாம் என்று உறுதி பூண்டிருப்பதும் அவரின் அறியாமையே! இவ்வகையில் ஆங்காங்குள்ள தமிழ்ச் செய்தித்தாள்களின் ஆசிரியர்களைச் சிறைப்படுத்தி அவர்மேல் கடுமையான நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டுள்ளார் அண்மையில் ஏற்படவிருந்த தமிழ் உரிமைப் பெருநடைப்பயணத்தை (அவ்வேற்பாடும் சரியான முறையில் அமைக்கபடாமற் போயினும்) நடந்த முற்பட்ட தமிழ்ப் பேராசிரியர். இலக்குவனாரைப் பாதுகாப்புச் சட்டப்படி சிறைப்படுத்தியுள்ளனர். இந்நிலை தமிழ்ப் பேராசிரியர் பிறர்க்கும் நேரவிருக்கும் நிகழ்ச்சிக்கு ஓர் எச்சரிக்கையே! துடிப்பும், பொறுப்பும் வாய்ந்த திரு. இலக்குவனார் போன்ற தமிழ் உரிமைக் காப்பாளர்களைச் சிறைப்படுத்தி விட்டால், தமிழ்மொழியுணர்வு அற்றுப் போகும் என திரு. பக்தவத்சலம் போட்ட தப்புக்கணக்கின் விளைவு இனிமேல்தான் நடக்கவிருக்கின்றது. மொழியுணர்வு அற்ற முதலமைச்சரின் போக்கு நகைப்பை விளைவிக்கின்றது. தமிழ் மொழி விடுதலை உணர்வு தமிழக விடுதலை உணர்வாகக் கிளைக்க நெடுங்காலம் ஆகாது. பேராசிரியர்களால் தான் தமிழ்மொழியுணர்வு கிளப்பப்பெறுகின்றது என்று கருதுவது அறியாமையாகும். காட்டுமிராண்டிக்கும் மொழியுணர்வு உண்டு. தாய் உள்ளவனுக்கெல்லாம் தாய்மொழிப் பற்று அதனைப் பேணி வளர்க்கும் கடப்பாடும் உரிமையுணர்வும் இருப்பது இயற்கை, இந்தி யாட்சியினர் இந்தியைப் பரப்புவதற்கும் போலிக் காரணமாக ஒருமைப்பாட்டைக் கூறினாலும் உண்மையாக அதற்கும் அவர்தம் மொழியுணர்வே அடிப்படையான காரணம் ஆகும்.
மக்கள் எல்லார்க்கும் பொதுவான மொழியுணர்வு மொழிப் பேராசிரியர்களுக்கு மட்டுமே இருப்பதாகக் கருதிக்கொள்ள அத்தகையாரை ஒழித்துக்கட்ட முனைந்திருப்பது. பேதையுள் பேதையின் செயலாகும். இவ்வாறு செய்வதால் ஒரு மொழி அடக்கப்பட்டு, அதன் உணர்வும் முடக்கப்பட்டு விடுவது உண்மையாயின், ஆங்கிலத்தை இந்நாட்டினின்று அகற்றப் பெரும் பாடுபட்டுக்கொண்டிருக்கும் தன்மானம் வாய்ந்த(!) வட ஆட்சி வெறியர் சிலர் ஆங்கிலப் பேராசிரியர்களையும் சிறைப் பிடிப்பதுதானே, அவ்வாறு செய்வது ஆங்கிலத்தை அகற்றுவதற்கும், அவ்விடத்தில் இந்தியை வலிந்து திணிப்பதற்கும் ஏற்ற ஓர் அருஞ்செயலாக இருக்குமே! எனவே எழுந்து வரும் தமிழ் உணர்வை அடக்கித் தமிழ் விடுதலை இயக்கத்தை அழித்துவிட முயல்வது தமிழ் நாட்டு விடுதலை இயக்கத்திற்கு வித்திடுவது போல ஆகும் என்றும், அவ்வாறு தமிழ் நாட்டு விடுதலை இயக்கம் தொடங்கப்பெறுமானால் அதனை அடக்குதல் எதிரிநாடுகளை அடக்குவதினும் அரிதாகும். என்றும் அரசினர் தெளிவாக உணர்ந்து கொள்வாராக!
-தென்மொழி, சுவடி 3, ஒலை 4, 1965
தமிழகம் பிரிதலே தக்கது
இந்தியா எக்காலத்தும் அரசியலில் ஒன்றிய தனி நாடாக இருந்ததில்லை. மிகப் பழங்காலத்தில் இந்நாடு ஐம்பத்தாறு தேசங்களாகவும். அதன்பின் 1947 வரை 632 சிறு நாடுகளாகவுமே தனித்தனி ஆட்சிக்கு உட்பட்டு வந்திருக்கின்றது. ஏறத்தாழ முப்பத்து மூன்று கோடி மக்கள் உடைய முன்னைய இந்தியாவே 632 நாடுகளாகப் பிரிந்து தனித்தனி ஆட்சி ஏற்படுத்திக்கொண்டு வாழ்ந்ததென்றால் (1961 மக்கள் கணக்குப்படி) 43.9 கோடி மக்கள் உள்ள இன்றைய இந்தியா தன் ஆட்சி முறையில் ஒன்றியிருக்க வேண்டும் என்பதும், அதனால் பல நன்மைகள் விளையுமென்பதும் அறியாமையாகும். அவ்வாறு இருப்பது பெரும்பான்மையான ஓர் இனத்தின் அல்லது ஒரு மொழியின் தனிப்பட்ட வல்லாண்மைக்கே அடிகோலுமேயன்றி எந்த அரசியல் சட்ட அமைப்பாலும் அதிகாரத்தாலும் நாட்டுக்கு நன்மையாக விளைந்துவிடப் போவது இல்லை. இது இப்படியே இருக்குமானால் இந்தியா முழுவதும் ஊடுருவியுள்ள இனமோ, ஒரு மொழியோ தான் இந்நாட்டை ஆண்டு கொண்டிருக்கமுடியும். குறிப்பாகச் சொன்னால் இக்கால் விளையும் எல்லாவகை அரசியல் குமுகாயப் பொருளியல் தோல்விகளுக்குக் கெல்லாம் இவ் வடிப்படையான - பிழையான அரசியல் அமைப்புத்தான் காரணம் ஆகும். இந்தியா தன்னாட்சி பெற்ற இப்பதினெட்டாண்டுக் காலத்தில் பேராயக்கட்சியன்றி வேறு எந்தக்கட்சி இந்திய ஆளுமையைக் கைப்பற்றி இருந்தாலும், அதுவும் இந்தியாவை இந்த நிலைக்குத்தான் - இன்னும் சொன்னால் இதைவிட மிகக் கீழான நிலைக்குத்தான் கொண்டுவந்திருக்க முடியும் என்பதைத் திட்டவட்டமாகக் கூறலாம். வெள்ளையனே தன் வல்லதிகாரத்தால் செம்மைப்படுத்தவியலாத இவ்விந்திய ஒருமைப் பாட்டை இங்குள்ள ஒரிரு அரசியல் காயாட்டக்காரர்களின் தம் பதற்றப் போக்காலும் ஆட்சி வெறியாலும் ஏற்படுத்திவிடக்கூடும் என்று காண்கின்ற கனவு என்றும் நிறைவேற முடியாது. அந்நிலை பூனை வளர்க்கத் தெரியாதவன் யானையை வளர்க்க விரும்பியது போலாகும். மொழியாலும் இனத்தாலும், சமயத்தாலும் குலத்தாலும், பண்பாட்டாலும் பலவகையாகப் பகுக்கப்பட்ட இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில் இப்பிரிவுநிலை தவிர்க்க முடியாதது. இயற்கையுமே ஆகும். பிரிவற்ற ஒரு நிலை இந்நாட்டு முன்னேற்றத்திற்கும் ஒருமைப்பாட்டிற்கும் என்றும் வழி விட முடியாது. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் போயினும் இந்தியாவின் ஒரு மூலையில் மொழியெழுச்சியும், இனவெழுச்சியும், பண்பாட்டு எழுச்சியும், சமயவெழுச்சியும் தோன்றித் தோன்றி அவ்வக்கால் ஏற்பட்டு வருகின்ற சிறியளவு பயன்களையும் அரித்து வருமேயன்றி, ஓர் அமைதி நிறைந்த சூழலையோ அரசியல் முன்னேற்றத்தையோ ஏற்படுத்திவிட முடியா. பிரிவு மனப்பான்மையால் வருகின்ற முடிவன்று இது. உலகவியற்கையினையும், மக்களின் உரிமை வேட்கையினையும், அரசியல் அறிவுவிரிவையும் அடிப்படையாகக் கொண்டு கணிக்கின்ற உண்மை இது.
ஏறத்தாழ 43.9 கோடி மக்களுள்ள இந்தியாவில் ஏறத்தாழ 165 மொழிகள் வழங்கி வருகின்றன. இவற்றுள் அரசியல் மொழி சட்டத்தில் உள்ள அசாமி, ஒரியா, உருது, இந்தி, கன்னட, காசுமீர், குசராத்தி, தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, மராட்டி, மலையாளம், வங்காளம், சமற்கிருதம் முதலிய 14 மொழிகளையும் ஏறத்தாழ 38 கோடி மக்கள் பேசுகின்றனர். இவற்றுள் சமற்கிருதத்தை மட்டும் 1951 ஆம் ஆண்டு மக்கள் கணக்குப்படி 555 பேர்களும் 1961 -ஆம் ஆண்டு மக்கள் கணக்குப்படி 2666 பேர்களும் பேசிவருவதாகக் கணக்கிட்டிருக்கின்றனர். அவ்வாறு இருந்தும் இம்மொழியும் மற்ற 13 மொழிகளுடனும் சேர்த்து எண்ணப்படுவது, இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பெற்ற ஊடுருவல் சூழ்ச்சியால் நேர்ந்த விளைவு ஆகும். இவ்வூடுருவல் இன்றைய நிலையில் எந்த அளவு வளர்ந்திருக்கின்றது என்றால் “சமற்கிருதம்” வழக்கிழந்த ஒரு மொழியன்று” என்று திரு.சி.பி. இராமசாமி அவர்கள் பேசுமளவிற்கும், “சமற்கிருதம் அழிந்துவிடுமானால் இந்தியாவிலுள்ள எல்லா மொழிகளும் அழிந்து விடும்” என்று அண்மையில் கூடிய சமற்கிருத மொழிக்குழு கூறுகின்ற அளவிற்கும் என்று கூற வேண்டியுள்ளது. எனவே இந்தியா ஒரு பெரிய நாடாகவே இயங்குமானால் தென்னாட்டுப் பகுதிகளில் தென்னாட்டுப் பார்ப்பனர்களும், வடநாட்டுப் பகுதிகளில் வடநாட்டுப் பார்ப்பனர்களும் தாம் மேலோங்கி நின்று இங்குள்ள மற்ற பெரும்பான்மை மக்களை அடிமைப்படுத்திக் கொண்டிருக்க வேண்டியிருக்கும் என்று வெளிப்படையாகக் கூறலாம். இவ்வடிப்படை உண்மையை இனி வரப்போகும் இந்தியாவில் உள்ள எந்தக் கட்சியின் ஆட்சியும் மாற்றிவிட முடியாது என்பதைத் திட்டவட்டமாகக் கூறலாம்.
பேராயக் கட்சியில் திரு. காமராசரின் கை ஓங்கியிருப்பது போலத் தோன்றினாலும், உள்ளூர நடைபெறும் பலவகையான ஆட்சி அரிப்புகளில், தமிழர்கள் குறிப்பாகத் தென்னாட்டு மக்கள் தென்பகுதி வடபகுதிப் பார்ப்பனர்களுக்கு ஏதோ ஒரு வகையிலேனுேம் அடிமைப்பட்டுத்தான் கிடக்க வேண்டியிருக்கின்றனர். தமிழகத்திற்கு வந்து வாய்த்த அடிமை நிலைகளோ சொல்லுந்தரமல்ல. மொழியாலும், இனத்தாலும், சமயத்தாலும், இன்றையத் தமிழன் மிகக் கீழான நிலையில் தனக்குற்ற அடிமை நிலையினைக் கூட உயர்வு என்று நினைக்கும் அளவிற்கு அறியாமை அடிமையாகக் கிடந்து உழல்கின்றான். இங்குள்ள அரசியல் கட்சிகளும் கூட அவ்வறியாமை அடிமைகளின் கூட்டமாகவே இயங்கிவருகின்றனவேயன்றி, தம்தம் வல்லடிமைப் போக்கை அடியூன்ற உணர்ந்து அறிந்து அதினின்று தேர்ந்து தெளியுமாறில எனவே இன்றிருத்தல் போல இன்னும் எத்தனை ஆண்டுக் காலமாயினும். இப்பொழுதுள்ள காமராசர் போல் இன்னும் எத்தனை காமராசர்கள் வந்தாலும் இந்தியாவின் ஆணி வேருடன் ஊன்றப்பட்டுக்கிடக்கும் இவ்வுண்மையான ஒற்றுமையற்ற ஆண்டான் அடிமைப் போக்கை மாற்றிவிடவே முடியாது. அடங்கி அடங்கித் தலையெடுக்கும் இச்சிக்கலால் தான் இந்தியா இத்தனை காலம் கடன் பட்டும் பொருள்களையும் உழைப்பையும் செலவிட்டும் அகப்புற விளைவுகளில் நசித்துக் கொண்டே உள்ளது. ஊன்றிக் கவனிப்பின் இந்தியாவின் இன்றையக் குமுகாயத் தோல்வியினை உணராமற்போகார்
மேலே குறிப்பிட்ட இயற்கைக் குறைபாடன்றிச் செயற்கை குறைபாடுகளும் இந்தியாவின் ஒருமைப்பாட்டு எண்ணத்தால் செழித்து வளர்ந்து வருகின்றன. தமிழர்களின் வாழ்விற்கு இன்றியமையாமை என்று கருதும் ஒன்று வடவரின் வாழ்விற்கு தேவையற்ற ஒன்றாகப் பட்டுத் தூக்கியெறியப் படுகின்றது. நல்முறைப் பழக்க வழக்கங்களிலும், மொழியீடுபாடிலும், தமிழன் அல்லது தென்னாட்டவர்கள், வடவர்களால் புறக்கணிக்கப் பட்டவர்களாகவே இருக்கின்றார்கள். வடநாட்டில் வழங்கும் இந்தி மொழி மட்டும் தென்னாட்டு மக்களை அடிமைப்படுத்த முற்படவில்லை, அங்கு விளையும் கோதுமை கூட, தென்னாட்டு அரிசியினை அகற்றப்பாடுபடுகின்றது! அரசியல் ஒருமைப் பாட்டிற்காகச் செய்யப்பெற்ற முயற்சிகள் அத்தனையும் தென்னாட்டு மக்களுக்குத் தீங்காவும் இவர்களைத் தாழ்த்துவதாகவுமே அமைந்திருக்கின்றன. இக்கொடுமையை நெடுநாட்களுக்குப் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. தொடக்கத்தில் அரசியல் அமைதிக்காக ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் உலக ஒற்றுமைக்காக ஒப்புக்கொள்ளக் கூடியதாகவே இருக்கும் சிற்சில சீர்திருத்தங்கள் கூட, முடிவில் ஓரின அழிவிற்கும் வளர்ந்து முழுமைப்பட்ட ஒருவகைப் பண்பாடின் வீழ்ச்சிக்கும் சிறந்து நிறைவுகொண்ட ஒரு மொழியின் தாழ்ச்சிக்கும் அடிகோலுவனவாகவே அமைகின்றன. இவையன்றி ஆளுமைத் தொல்லைகளும் பலவாகிப் பெருகி அடிப்படைக் கொள்கையையே ஆட்டி அசைக்கின்றன. தமிழகத்தில் நடைபெறவிருக்கின்ற ஒரு செயலிற்கு வடநாட்டார் இசைவைப் பெறவேண்டியுள்ளது. இங்குச் செய்யத் திட்டமிடும் ஒரு வாணிகத்திற்குத் தில்லியின் கடைக்கண் பார்வை வேண்டியிருக்கின்றது. மதுரையிலிருந்து சென்னைக்கு விடுக்கப் பெறும் அஞ்சலில் ஒட்டவேண்டிய ஓர் உருவத்தை வடநாட்டினர் தேர்ந்தெடுக்க வேண்டி உள்ளது. தென்னாட்டு மக்களுக்காக உழைக்கின்ற அரசியல் அல்லது குமுகாயவியல் தலைவர்களின் வாய்களை வடநாட்டினர் தம் கைகள் திறந்து மூட வேண்டியுள;; குமரி முனையில் நடத்தவிருக்கும் ஒரு தாளிகையின் பெயரைக் கூட தில்லியில் தமிழ் தெரியாத தமிழ்ப்பற்றில்லாத தமிழ்ப் பண்பாட்டிற்கு மதிப்பளிக்காத ஒரு வடநாட்டான் தேர்ந்தெடுத்துக் கொடுக்க வேண்டியுள்ளது. இங்கிருக்கும் சூழல், பண்பாடு, மொழி முதலியவற்றை அங்குள்ள ஒருவன் கணித்து நல்லதைச் செய்துவிட முடியும் என்று எவ்வடிப்படையில் கருதப்படுகின்றதோ நாம் அறியோம். வடநாட்டுத் தாளிகைகள் பெயர்களை இங்குள்ளவர்கள் தேர்ந்தெடுப்பதை அங்குள்ளவர்கள் ஒப்புக் கொள்ளுவர்களா? இவ்வாறு சிறிய சிறிய செயல்களிலெல்லாம் தமிழர் - அல்லது தென்னாட்டவர் தம் அறிவையும், ஆற்றலையும், வடவர்க்கு விட்டுக் கொடுக்க வேண்டியுள்ளது. அவ்வாறு விட்டுக் கொடுத்தாலும் இங்குள்ளவர்கள் அவர்களின் முழு இசைவைப் பெறத் தவங்கிடக்க வேண்டியுள்ளது. செயலுக்கும் காலத்திற்கும் ஒத்துவராத இவ்வொருமைப்பாட்டின் அமைப்புக்கு எத்தனைத் துயரமும் பட்டு, தன்மானத்தையும் விட்டுக்கொடுத்துதான் ஆக வேண்டுமோ?
இங்குள்ள திருக்குறளை அறநூலாக ஒப்புக் கொள்ளும் வட நாட்டினர் எத்தனைப் பெயர்? இங்குள்ள பாரதிதாசனை ஒரு புலவராக மதிக்கும் வடநாட்டுப் புலவர்கள் எத்தனைப் பெயர்? இங்குள்ள வரலாற்றை அங்குள்ள வரலாற்றோடு பொருத்தி எழுதும் வடநாட்டு வரலாற்றாசிரியர்கள் எத்தனைப் பெயர்? இத்தனை ஏன்? இக்கால் தேசிய ஒருமைப்பாட்டிற்கு வித்தூன்றியவராக இங்குள்ளவர்கள் பீற்றிக்கொள்ளும் பாரதியாரை அங்கிருக்கும் எத்தனைப் பெயர்கள் மதித்துப் போற்றுகின்றனர்? எந்தத் துறையிலும் அங்கிருக்கும் தமிழர்களில் ஒருவராகிலும், அல்லது இங்கு நடைபெறும் ஒரு செயலாவது அங்குள்ளவர்களால் மதிக்கப் பெறுவதற்காக எவராகிலும் தெளிவுபட எடுத்துக் காட்ட முடியுமா? காமராசர் ஒருவரைக் காட்டி- அதுவும் அவர் அடிமைத்தனம் தங்களுக்கெல்லாம் ஒரு பெரிய துணையாக இருக்கின்ற காரணத்தை மனத்திற்கொண்டு- வடநாட்டினர் எத்துணை விழிப்பாகத் தங்கள் நலங்களையும், இனங்களையும், மொழியினையும் வளர்த்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை இங்குள்ள அடிமைத் தமிழர்கள் உய்த்துணர்ந்து அறிந்து கொள்ளுதல் வேண்டும். மொத்தத்தில் இந்தியாவில் 96.3 இலக்கம் மக்களுக்கே தெரிந்த மொழி, இங்குள்ள 44 கோடிப் பேர்களின் வாயிலும் நுழையத்தான் வேண்டும் என்றும் அவர்கள் இட்ட ஆணை ஒன்றே அமைத்துக் கொண்ட சட்டம் ஒன்றே தென்னாட்டவர்களுக்கு வடநாட்டவர்கள் என்றென்றைக்கும் தீங்கே என்பதைப் தெளிவாகப் புலப்படுத்துகிறதல்லவா?
இந்த நிலையில் இங்குள்ள தந்நலக்காரர் ஒரு சிலரின் நல்வாழ்வுக்காக, ஒருசிலர் பெறும் பட்டம் பதவிகளுக்காக இங்கிருக்கும் நான்கு கோடித் தமிழரும் (இக்கணக்கும் பிழையே, இதுவும் அவர்கள் கணித்ததே.) தம் வாழ்வு நலன்களையும், மொழி நலன்களையும் தன்மானத்தையும் விட்டுக்கொடுக்கத்தான் வேண்டு மென்பது எத்துணை மடமையும், ஏமாளித் தன்மையுமாகும். இச்சூழ்நிலைகள் எல்லாம் மாற வேண்டுமானால் இங்குள்ள ஒருசிலர் பதவியினின்றிறங்கி, வேறு சிலர் அரசியல் அதிகாரம் பெற்றுவிடுவது மட்டும் போதாது. தமிழக அரசியல் அதிகாரத்தை எந்த ஓர் எதிர்க் கட்சி கைப்பற்றினாலும் நிலைமை இதுவாகத்தான் இருக்க முடியும். வேண்டும் பொழுது அரசியல் அதிகாரத்தையோ, சட்ட அமைப்புகளையோ உடனுக்குடன் மாற்றிக்கொள்ள முடியுமாறு, பாராளுமன்றப் பெரும்பான்மை பெற வடநாட்டினரின் ஆட்சியமைப்பை, தனிப்பட இயங்க வல்லமையற்றதும், சட்ட வரம்புக்குட்பட்டதும், எந்த நோக்கத்திலும் விலக்கலுக்கு உட்படுவதுமான இம்மாநில ஆட்சியின் முனை முறிந்த அதிகாரம் இங்குள்ளவர்களின் நன்மைக்கும். தன்மானக்காப்பிற்கும் என்றும் பக்கத் துணையாக இருந்துவிட முடியாது என்பது அரசியல் நுணுக்கமறிந்தவர்களுக்குத் தெளிவான உண்மையாகும்.
மாநில அரசாட்சி மாற்றம் மட்டும் மாநில உரிமைக்காப்பிற்கு துணையாக அமைந்துவிட முடியாது என்ற நிலை சட்ட அடிப்படையில் ஆணியறைந்து வைக்கப்பட்டிருக்கும் பொழுது, நாம் ஏன் இன்னும் அரசியல் நாடக அரங்கில் நடக்கும் வெறும் உப்புச்சப் பற்ற நடிப்புகளிலேயே மயங்கிக் கிடக்க வேண்டும்? எல்லாற்றானும் வட நாட்டுப்பிடிப்புகளிலிருந்து தமிழகம் தன்னை விடுவித்துக் கொள்ளமுயலுவதே அறிவுடைமையும், சரியானதும், காலத்தால் செய்யப்பட வேண்டிய செயலும் ஆகும் என்பதை இங்குள்ள தமிழர் ஒவ்வொவரும் உணர வேண்டும். நம் நிலைகளை நாமே வரையறுத்துக் கொள்ளும் உரிமையை நாம் பெற்றாலன்றி நாம் நினைக்கின்ற எந்தத் திருத்தத்தையும் அரசியலிலோ, பொருளியலிலோ குமுகவியலிலோ செய்து விட முடியாது. சிறு வினைகட்கும் மக்கள் ஆற்றலைத் திரட்டுவதும், அதனைக் கொண்டு வடவரை மிரட்டுவதும். அவர்கள் காவலர்களையும் பட்டாளப் படைகளையும் வைத்துக்கொண்டு வெருட்டுவதும், அதற்காகப் பலகோடி உருபாக்களைச் செலவிடுவதும் இந்நாட்டிற்கும் மக்களுக்கும் துளியும் நன்மை பயவா. இருக்க இருக்க மனச் சோர்வும் வாழ்வு அயர்ச்சியும் இவற்றால் ஏற்படுமேயன்றி, வெளி நாட்டினர் ஒரு சிலரைப் போல் ஒப்பற்ற உரிமை வாழ்வையும். அச்சமற்ற அரசியல் நடைமுறைகளையும் அமைத்துக்கொள்ளவே முடியாது. கால் கைகளின் கட்டுகளை அவிழ்த்துப் போட்டுவிட்டுத் தலைக் குடுமியை மட்டும் பிறருடைய கைகளில் நாம் தந்து கொள்ளுவது எவ்வாற்றானும் விடுதலை ஆகிவிடாது. எந்த நலத்தைக் கருதி நாம் அவ்வாறு நம்முடைய குடுமிகளைத் தந்துகொண்டாலும் அது நம்மின் அறியாமையையே காட்டும்; நமக்குத் தாழ்வு வழியையே காட்டும்!
"துறக்க(சொர்க்க)மே என் சிறையாக அமைந்தாலும், நான் அதைத் தாண்டிக் குதித்து விடுதலை பெறவே விரும்புவேன்' என்று கூறும் விடுதலை எண்ணம் தமிழர்களுக்கு ஏற்பட வேண்டும். நாம் இப்படிக் கூறுவதால் இந்தியாவின் அரசியல் நலத்திந்கு எந்தவகையிலும் ஊறு நினைப்பதாகக் கருதிவிடக் கூடாது. இந்தியாவைப் பல சுற்றுச் சுவர்களால் குறும் பிரிவுகளாகப் பிரித்துவிட வேண்டும் என்பது நம் எண்ணமன்று. ஒவ்வொரு மாநிலமும் தனியாட்சி பெற்று இந்தியக் கூட்டரசாக இயங்கவேண்டும் என்பதே நம் கொள்கை. ஒவ்வொரு மாநிலத்தின் நன்மை தீமைகளும் அவ்வம் மாநில ஆட்சியமைப்பைப் பொறுத்தே அமையவேண்டும். மொழிவழியாகப் பிரிக்கப்பெற்றுத் தன்னாட்சியுரிமைபெய்திய கூட்டுக் குடியரசில் வேற்றுமைகளுக்கே துளியும் இடமில்லை. ஒவ்வொரு நாட்டுப் படைகளும் சேர்ந்து உலக ஒன்றிப்பு அவையின் நடுநிலைப் படைகளை அமைத்தல் போல், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்தின் படைகளும் சேர்ந்து சம தொகையினதாக ஒருபெரும் இந்தியப் படையினை ஏற்படுத்தி அதன் புறக்காப்பை வலுப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். இதுவன்றி அவ்வம்மாநிலங்களில் நிகழும் எல்லா வகையான அரசியல், பொருளியல், குமுகாயவியல் மாறுபாடுகளும் அவ்வம்மாநில அதிகார வரம்பிற்கு உட்பட்டனவாகவே அமைதல் வேண்டும்
தமிழகத்தில் ஓடும் தொடர்வண்டி அஞ்சல் இயக்கம், கல்வியமைப்பு, தொழில் விளைவு முதலியன யாவும் தமிழக அரசையே சார்தல் வேண்டும். தேவையானால் ஒரு மாநிலத்தின் மிகையான விளைவு மற்ற மாநிலத்தின் குறைவான விளைவைச் சரிகட்டுவதற்கு ஏற்ப ஒப்பந்தம் செய்து கொள்ளல் வேண்டும். இங்கு நடைபெறும் எந்த ஒரு செயலுக்கும் திருத்தத்திற்கும். இங்கு அமைக்கப்பெறும் அரசையே முழுப்பொறுப்பாக்க வேண்டும். அப்பொழுதுதான் மாநில அரசு தனக்கு மேலுள்ள அதிகாரத்தைக் காட்டித் தப்பித்துகொள்ளல் இயலாது. இம்முறையால் ஒரு மாநிலத்தின் ஆக்கமும் கேடும் ஆங்குள்ள மக்களின் அறிவையும், சுறுசுறுப்பையும், உழைப்பையும் பொறுத்தனவாகவின், எல்லா மாநிலத்தவரும் பொறுப்புணர்ந்து எல்லாத்துறைகளிலும் மெய்யாக ஈடுபடுகின்ற ஒரு போட்டித் தன்மையை உண்டாக்கிக் கொண்டு முன்னேற வாய்ப்பிருக்கும். ஒரு மாநிலத்தவர் அண்டை அயல் மாநிலத்திற்குச் செல்லுவதும் அங்குள்ள நடைமுறைகளில் ஈடுபடுவதும் இருமாநிலத்தவரின் விருப்பத்தையும் இசைவையும் பொறுத்தனவாக அமைய வேண்டும். இவையன்றி இன்னும் பல விரிந்த அமைப்புகளையும் ஒழுங்குபட இந்தியத் துணைக் கண்டத்தின் நன்மைக்கு ஊறு விளையாவண்ணம் ஏற்படுத்திக் கொள்ளலாம்.
உலகம் இக்கால் மெச்சிப் பேசும் குடியரசு முறை எல்லா வகையிலும் இப்பொழுதுள்ளபடியே இருந்துவிட வேண்டும் என்பது உலக அறிஞர்களின் கருத்தன்று. முடியரசு முறையில் எப்படிப் பல தீமைகளும் இயலாமைகளும் இருந்தனவோ அவ்வாறே குடியரசிலும் தீமைகளும் இயலாமைகளும் இருக்கவே செய்கின்றன என்பதே அவர்தம் கருத்தாகும். எனவே இப்பொழுதுள்ள முறையை இப்படியே வைத்துக் கொள்ளுவது தான் சிறந்த தென்று கூற முடியாது. அதிலும் காலப் போக்கில் பல திருத்தங்களைச் செய்தே ஆக வேண்டும். அதன் முடிவு நாம் கூறிய மொழியுரிமைத் தன்னாட்சிக்குத்தான் வித்தாகும். என்பதை எவரும் மறுத்து விட முடியாது. அப்படிப்பட்ட ஒரு சூழலுக்கு நாம் வலிந்து கொண்டு செல்லப்படுமுன் நாமே அச்சூழலைத் திருத்தமான முறையில் வரவேற்றுக் கொள்ளுவது தாழ்வோ பிழையோ ஆகிவிடாது. எனவே தமிழக விடுதலை தேவையான இன்றியமையாத ஒன்று! பிற மாநிலங்களும் தன்னாட்சி பெற வேண்டும் என்பது நம் எண்ணம். இதுபற்றிப் பிறிதொருகால் இன்னும் விளங்கப் பேசுவோம்.
- தென்மொழி, சுவடி : 4 ஓலை 5, 1966
பிரிவினை நோக்கித்
தள்ளப்படுகிறோம்
“சீனம் மீண்டும் புகைந்து கொண்டுள்ளது ; பாக்கித்தான் மறுபடியும் குமுறிக் கொண்டுள்ளது” என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றைத் தொடர்ந்து இனி இந்திய அரசின் எச்சரிக்கைகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்து கொண்டிருக்கும். எச்சரிக்கைகளைத் தொடர்ந்து மீண்டும் பல புதிய சட்டங்கள் இந்திய ஒருமைப்பாட்டை வலுவுடையதாக்கும்; கை விடப்பட்ட பழைய சட்டங்கள் மீண்டும் புதுப்பிக்கப்பெற்று நடைமுறைக்கு வரும். இவற்றிற்கிடையில் "மக்கள் பசி பஞ்சத்தையும், பிற சிக்கல்களையும் பாராது, இந்திய நாட்டு ஒருமைப்பாட்டில் நம்பிக்கை வைக்க வேண்டும்" என்பது போன்ற வேண்டுகோள்கள் இங்குள்ள அமைச்சர்கள், தலைவர்கள், தொண்டர்கள் என்பவர்களின் வாய்களிலிருந்து அன்றாடம் வெளிவந்து கொண்டே இருக்கும். இப்படிப் பல மாதங்கள் வரலாற்றில் கழியும். மீண்டும் அமைதி; அதைத் தொடர்ந்து சலசலப்பு; என்ற படி இந்திய அரசியல் நாடகம் நடத்தப் பெற்று, அதில் ஒருமைப்பாட்டு நாட்டியம் ஆடப்பெற்று வருகின்றது. இந்நாடகத்திற்குள் நாடகமெனப் பீகார் உணவுப் பஞ்சம், மராட்டியத்தில் உள்ள சிவசேனை இயக்கம், அப்துல்லாவின் விடுதலை வேட்கை, சீக்கியரின் தனி நாட்டுக் கோரிக்கை, நாகர்களின் புரட்சிப் போராட்டம், காசுமீரத்தின் அவிழ்க்க முடியாத சிக்கல், வங்காளிகளின் உள்நாட்டு எழுச்சி, இந்திய இலங்கை ஏதிலிகளின் பரிமாற்றம், பருமிய - இந்தியரின் உடைமைப் போராட்டம், இன்னோரன்ன பற்பல துணைக் காட்சிகள், இக் காட்சிகளுக்கிடையிடையே தொங்க விடப்பெறும் திரைச் சீலைகளின் உள்ளிருந்து கொண்டு முழக்கப் பெறும் தேசிய இசை, இந்தி விளம்பரம் ஒருமைப்பாட்டின் பின்பாட்டு! இதுதான் இந்திய அரசியல்!
மூக்கு உள்ள வரை சளியும் போகாதது போல், இந்தியா உள்ளவரை அதன் வடகிழக்கு எல்லையில் பரந்து விரிந்துகிடக்கும் சீனாவும் அதன் வடமேற்கு எல்லையில் இணைந்து கிடக்கும் பாக்கித்தானும் அவற்றின் சலசலப்புகளும். முர முரப்புகளும் என்றைக்கும் போகா. இவ்வார்ப்பாட்டங்கள் உள்ளவரை இந்திய அரசியல் நாடகத்தில் என்றைக்கும் ஒரே கதைதான்! கதையின் வழக்கமான காட்சிகள் தாம். காட்சிகளுக்கு இடையே ஒரே பின்பாட்டுத்தான். எவருக்கும் இதில் எள்ளளவும் ஐயப்பாடு வேண்டா. வேண்டுமானால் பேச்சுக்காகக் கொஞ்சகாலம் நிகரமைக் கொள்கையைப் பேசலாம்; சிறிது காலம் பொதுவுடமைக் கொள்கைக்குத் துணைநிற்கலாம்; சில காலம் பேராயக்கட்சி அரசேற்கலாம்; சிலகாலம் பிறகட்சிகள் ஆட்சி செய்யலாம் ; ஆனால் இம்மாற்றங்களெல்லாம் நாடக நடிகையர், இசைக் குழுவினர் மாற்றங்கள் போல் நாடகக் கதைக்கும் காட்சிகளுக்கும் புறம்பானவையாகவே இருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளல் வேண்டும்.
இந்தியாவின் இத்தகைய குழப்பங்கள் இந்திய மக்களையே மூச்சுத் திணற வைத்துக் கொண்டுள்ளன. இனி இவற்றைவிட இந்தியாவின் உள்ளீரலையே பற்றிக் கொண்டிருக்கும் நோய்கள் பல. அவை இங்குள்ள குல, சமய வேறுபாடுகள், தென்னாட்டு வடநாட்டுப் பார்ப்பனரின் உள்ளரிப்புகள், அவற்றின் அடியாக எழுந்த மூடநம்பிக்கைகள் முதலியவை. இவற்றைப் பற்றிய சிக்கலைத் தீர்ப்பதற்கு எந்த உலக ஒன்றிப்பும் முன்வராது. இச்சிக்கல்களுக்குள் அறிந்தோ அறியாமலோ மாட்டிக் கொண்டிருக்கும் கட்சி பேராயக் கட்சி. வாகாகக் கிடைத்த இக்கட்சியின் சிணுக்கு துணிகளைக் கைகளில் பிடித்துச் சில பணக்கார முதலைகளும், சமயத் தலைவர்களும் எந்த அளவுக்கு இந்தச் சிணுக்குகளை அவிழ்த்து நூல்களை உருவிக் கொள்ள முடியுமோ, அந்த அளவில் உருவிக் கொண்டிருக்கும் தவிர்க்க முடியாத ஒரு தந்திரப் போக்கு, உலக அரசியல், பொருளியல் அறிஞர்களுக்கே விளங்காத ஒரு புதிர். இவற்றிற்கெல்லாம் ஓர் அடிப்படைக் காரணம் உண்டு. அது தான் இந்நாட்டின் அரசியல் பொருளியல் அமைப்புச் சட்டம். இந்தச் சட்டத்தையே வங்காள விரிகுடாவிலோ, குமரிமாக் கடலிலோ கொண்டுபோய் வீசியெறிந்து விட்டு, புத்தம் புதிய சட்டங்களைப் புத்தம் புதிய மூளைகளைக் கொண்டு செய்வித்தால் ஒழிய, இந்தியாவின் அரசியல் நாற்றத்தைப் பனிமலையளவு சவர்க்காரம் கொண்டு, பசிபிக் மாக்கடல் அளவு தண்ணீர் விட்டுக் கழுவினாலும் தீர்த்துவிட முடியாது. ஏனென்றால் இந்தச் சட்டத்தை அமைத்தவர்கள் அறுவர். அதில் நால்வர் பார்ப்பனர்; ஒருவர் தாழ்த்தப்பட்டவர் ஒருவர் முசுலிம், அறுவரில் நால்வரால் ஒப்புக் கொள்ளப் பெற்ற சட்ட அமைப்புகளே இவ்விந்திய வரலாற்றையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றன. ஏனென்றால் அவர்களால் ஒப்புக் கொள்ளப்பெற்ற சட்ட அமைப்புகளின் இன்றியமையாத தந்திரச் சொற்களெல்லாம் பழங்கதைப் புளுகர்களான மநு, சாணக்கியர் முதலியோர் எழுதிய குலவேறுபாட்டுக் கொள்கை என்ற குட்டையில் ஊறிக் கிடந்த மட்டைகளே! எனவேதான் “இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உள்ளவரை, இங்குக் குமுகாய உரிமைக்கு வழியில்லை; வழங்கப்பட்ட உரிமைகளும் குல, சமய அடிப்படையில் தான் வழங்கப்பட்டுள்ளன; இவை இருக்கும் வரை இங்குள்ள மக்களுக்குள் உள்ள ஏற்றத் தாழ்வுகளும், அரசியல் போராட்டங்களும் இருந்தபடியேதான் இருக்கும். நாமும் அவறிற்காகப் போராடிப் போராடி இறந்தபடியே தான் இருப்போம். இவ்விரண்டு நிலைகளுக்கும் உட்பட்டு நாம் செத்துக் கொண்டிருக்கும் இப் போராட்டமே நமக்கு வாழ்க்கையாக இருக்கும்” என்று சொல்கின்றோம். எண்ணிப் பார்ப்பவர்களுக்கு நாம் கூறுகின்ற இக்கருத்து எத்துணையளவு உண்மையானது என்று புரியாமல் போகாது. தெளிவாக விளங்கும். விளங்கிக் கொள்ளாதது அவர்களின் பின் தங்கிய நிலையைப் பொறுத்தது ஆகும்.
மேற்கண்ட வகையில் பெருத்த சிக்கலுக்குட்பட்டதான இந்திய அரசியல் அமைப்பில் நம் தாய் நிலமாகிய தமிழகம் ஆட்பட்டுத் தவிப்பது நம் போன்ற நெஞ்சினார்க்கு எத்துணைக் கவலை தருவதாக உள்ளது! இப்பொழுதுள்ள சூழ்நிலையில். இந்தியா ஒன்றாக இருக்கும் வரை பேராயக்கட்சிதான் பெரும்பான்மைக் கட்சியாக விளங்கும். அது பெரும்பான்மை பெறுகிறவரை வடநாட்டினர்தாம் இந்திய அரசியலை ஆட்டிப் படைத்துக் கொண்டு இருப்பர். தென்னாட்டுக் காமராசரின் கை தென்னக அரசியல் பிடியை நெகிழ விட்டு விட்டதால், இனி அவரின் வடநாட்டுப் பிடியையும் தளர்த்தி விடுவதற்கு வடவர்கள் உறுதிபூண்டு விட்டனர். அவர் ஒருவராகிலும் தென்னாட்டவர்க்கு - குறிப்பாகத் தமிழர்க்குத் தீங்குதரும் வாடைக்காற்றுக்குத் தடுப்புச் சுவராக இருந்து வந்தார். அவரையும். இடித்துத் தள்ளிவிட வேண்டிய ஒரு கட்டாய நிலை இப்பொழுது வடநாட்டு அரசியல் தலைவர்களிடையே ஏற்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. இவர் வழி நின்ற அரசியல் தடுப்பு நீக்கப்படுமானால், பேராயக் கட்சி இங்குள்ள ஓரிரு நாத்தடிப்புக்காரர்களின் வாய்க்கு வரகரிசியாக இருக்குமே தவிர, தமிழர்களின் உரிமை பறிபோகாமல் காக்கும் கைக்கேடயமாக இருக்காது என்பது அழுத்தத் திருத்தமாக நம்பலாம்.
மேலும் இந்தியாவில் பேராயக் கட்சி ஆட்சியில் உள்ளவரை மொழிச்சிக்கலை. இந்திச்சிக்கலை அது தீர்க்காது; தீர்க்க விரும்பாது. இந்திச் சிக்கல் உள்ளவரை பிற தேசிய மொழிகளின் வளர்ச்சிக்கு முகாமை காட்டப்பெறாது. பேராயக் கட்சி பெரும்பாலும் வடவரின் கைக் கோடரியாகவே இருக்கின்ற காரணத்தால், இந்திய அரசியல் அதிகாரங்கள் முற்றும் தில்லியிலேயே குவிக்கப்பட்டுக் கிடக்கும். அவற்றைப் பரவலாக்க வடவர் ஒரு போதும் இசையார். அதுவரை தமிழகத்தில் ஏற்படும் சிறுசிறு சிக்கல்களுக்கெல்லாம் (தமிழகப்பெயர் மாற்றம்: ஆகாசவாணி பெயர் நீக்கம் போன்றவற்றிற்கு) கூட 2000 கற்களுக்கு அப்பாலுள்ள தில்லிக்குப் போய்த்தான் முடிவுகாண வேண்டும். நம் தமிழக அமைச்சர்களும் உறுப்பினர்களும் எவ்வளவு பாடுபட்டாலும் தம் அரசியல் உரிமையை ஓர் அணுவளவுகூடத் தம் விருப்பப்படி பயன்படுத்திக் கொள்ள முடியாமல் இருப்பர். இவற்றைப் பற்றியெல்லாம் அரசியல் சட்டத்தில் மிகத் தெளிவாகவும், முன்னெச்சரிக்கையாகவும் எழுதிவைக்கப்பெற்றுள்ளது.
“எந்த ஒரு மாநிலத்திலிருந்தும் அதன் பகுதிகளைப் பிரித்தோ, பிற மாநிலப் பகுதிகளுடன் இணைத்தோ, பல மாநிலங்களை ஒன்றாக இணைத்தோ ஒரு மாநில அமைப்பைப் புதியதாக்கலாம். ஒரு மாநிலத்தின் பரப்பைக் குறைக்கவோ, கூட்டவோ, அதன் எல்லைகளை மாற்றவோ, பெயரை மாற்றவோ, செய்யலாம், இந்த மாற்றங்களைக் குடியரசுத் தலைவர் தம் இசைவுடன் கூடிய சட்ட மன்றத் தீர்மானத்தின் படி பாராளுமன்றம் செய்யலாம்” என்பது அரசியல் சட்டம்.
இந்நிலையில் அவர்கள் ‘காசி’ யை (வாரணாசி)யாக மாற்ற விரும்பு வார்களே தவிர, ‘மெட்ராசை’த் ‘தமிழக’மாக்க விரும்பார். இதுபற்றி அவர்கள் முன்பே எண்ணி முடிவு கட்டிக் கொண்டுள்ளனர். இந்தியாவில் உள்ள பிற வடமாநிலங்களின் பெயர்களையெல்லாம் (காசுமிரி- காசுமிரம், பஞ்சாபி- பஞ்சாப், வங்காளி- வங்காளம்; ஒரியா- ஒரிசா, பீகாரி- பீகார்; குசாரத்தி- குசராத், மராத்தி- மகாராட்டிரம் என) மொழியடிப்படையில் பெயர் வைத்தவர்கள் தென் மாநிலங்களான தெலுங்கு வழங்கும் மாநிலத்தை ஆந்திரம் என்றும், மலையாளம் வழங்கும் மாநிலத்தைக் கேரளம் என்றும்; கன்னடம் வழங்கும் மாநிலத்தை மைசூர் என்றும்; தமிழ் வழங்கும் மாநிலத்தை மெட்ராசு என்றும் வைக்கின்ற பொழுதே தென்னாட்டினர்க்கு மொழியுணர்வும் இனவுணர்வும் ஏற்பட்டுவிடக் கூடாதென்று கருத்துக் கொண்டிருக்கின்றனர் என்று தெரிகின்றது இல்லையா? இப்படிப்பட்ட மொழியுணர்வு ஏற்படக் கூடாதென்று கருதிக் கொண்டதற்குக் காரணம் பிராமணியமே! பொதுவாகப் பார்ப்பனர் இந்தியா முழுமையும் பரவியுள்ளனர் என்றாலும், அவர்களின் மிகுந்த வலிமை தென்னகத்திலேயே ஊடுருவி நிற்கின்றது. தென்னகத் திராவிடக் குடும்பத்தில், அவர்களின் வல்லாண்மை மொழியளவிலும், இன அளவிலும் இரண்டறக் கலந்து நிற்கின்றது. திராவிட மொழிகளான மலையாளம் தெலுங்கு, கன்னடம் முதலியவற்றிலிருந்து சமசுக்கிருதம் முற்றும் நீக்கப்படுமானால் அவற்றின் எஞ்சிய பகுதிகளெல்லாம் தமிழ் மொழியாக ஒளிவிடுவதை எவரும் மறுத்தோ, தடுத்தோ விடமுடியாது, எனவே தான் தென்னகத்தார்க்கு மொழியுணர்வு ஏற்பட்டுவிடக் கூடாதென்ற எண்ணம் வடவர்களை விடப் பிராமணர்களுக்கு மிக ஆழமாகப் பதிந்து கருவளவில் பொதிந்து நிற்கின்றது. இந்நிலையில் திராவிட மாநிலங்கள் எவற்றையும் மொழிப் பெயரிட்டுக் கூறுவதை எந்தப் பிராமணனும், வடவனும் ஒப்புக்கொள்ளான். அதற்கான சட்ட அமைப்புகளையும் அவர்கள் கைகளில் வைத்துக் கொண்டுள்ளனர் என்பதை எல்லாரும் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.
மேலும் அரசியல் அமைப்பு போன்றே இந்தியாவின் குமுகாய அமைப்பும் சிக்கல் வாய்ந்ததாகவே உள்ளது. எவரும் எந்தக் காலத்தும் இங்குள்ள வேறுபாடுகளையும், சமயப் பூசல்களையும் வேரறுத்து விடாதபடி சட்டத்தில் காப்புச் செய்யப்பட்டுப் பூட்டிடப் பெற்றுள்ளது. சமயச் சார்பற்ற அரசு என்று சொல்லளவில் கூறப்படுகின்றதே தவிர “சட்ட அமைப்பில் அந்தப்படியான ஒரு சொல் எந்த ஒரு வரியிலும் எழுதப்படவில்லை” என்று திரு. சி. பி. இராமசாமி உட்பட்ட பெருந்தலைப் பிராமணர்களே உரைத்துப் பெருமைப்பட்டுப் போயிருக்கின்றனர். இதன் உட்பொருள் என்னவெனின், “இந்தியாவிலிருக்கும் வரை இந்துச் சமயமும் இருக்கும் என்பதே!” இந்துச் சமயம் இருக்கும்வரை இங்குள்ளவர் இனம் இனங்களாவும், குலங்குலங்களாகவுமே பாகுபட்டுக் கிடப்பர் என்பது உறுதி. தமிழரும் அப் பாகுபாட்டில் என்றும் நாலாந்தர அடிமைகளாகவே கிடப்பர் என்பதும் அழிக்க முடியாத உறுதி. இந்நிலையில் குமுகாயத் துறையிலும் தமிழர் என்றென்றும் தம் உரிமைகளை இழந்தபடியே இருப்பர் என்பது தெளிவாகின்றது. பொருளியல் அளவில் தமிழகமும் பிற மாநிலங்களும் நடுவணரசின் அடிமையாகவே இருக்கும் என்பதை, அண்மையில் தமிழக முதலமைச்சர் திரு, அண்ணாத்துரை அவர்களுக்கு வட்டி நீக்கம் பற்றியும் அரிசியிழப்பு ஈட்டுத் தொகை பற்றியும் திரு. மொரார்சி தேசாய் விடுத்த விடையிலிருந்து நன்றாக விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்.
இவ்வாறு அரசியல், பொருளியல், குமுகாயவியல், மொழி பண்பாடு முதலிய அத்தனைத் துறைகளிலும் தமிழகம் தாழ்த்தப்பட்டுக் கிடக்கின்றதை எந்தக் கட்சி உண்மைத் தலைவரும் ஒப்புக் கொள்ளாமல் இருக்கமுடியாது. இச்சூழ்நிலையில் இந்திய அரசினரின் ஒருமைப் பாட்டு அமைப்பு மராட்டியரின் 'சிவசேனை’ இயக்கத்தாலும், வங்காளியரின் மொழியெழுச்சியாலும், நாகர்களின் விடுதலை வேட்கையாலும் அப்துல்லாவின் தளராத தன்னம்பிக்கையாலும் சிதறியடிக்கப்பட்டு வருகின்றது. இன்னும், “பலகோடி உருபாக்கள் இழப்பானாலும் இந்தி மொழியை நுழைத்தே தீருவோம்” என்று கொக்கரிக்கும் சேத் கோவிந்ததாசு போன்றாரின் வெறிக் கொள்கையும் தென்னவர்க்கு அமைதியும் ஆறுதலும் தருவதாக இல்லை. என்றும் வாய் வாளாத அரசியல் அடிமைகளாகத் தமிழர் கிடப்பதைவிட உரிமைப் போரிட்டுச் செத்துத் தொலைப்பதே மேல் என்று படுகின்றது. வடநாட்டினின்றும், வெளி நாடுகளினின்றும் தமிழ் இனம் துரத்தியடிக்கப் படுகின்ற நிலையில், தமிழனின் இருக்கின்ற கையளவு புகலிடமும் பறிக்கப் பட்டு விடுமோ என்று அஞ்சவேண்டிஉள்ளது. இந்தியக் கூட்டாட்சியால் தமிழனுக்குக் கிடைக்கின்ற ஊதியத்தைவிட மிகுதியாக இழக்க வேண்டியுள்ளது. அவன் இழந்த, இழக்கின்ற அரசியல் பொருளியல் குமுகாய உரிமைகளுடன், அவனின் மூலப் பொருள்களான தன்மானமும் பண்பாடும் வேறு பறிபோகின்றன. தமிழன் தான் இறப்பக் கொடுத்த வரலாறு ஏராளம்;ஈந்து ஈந்து அவன் தன் சிறப்பையே கெடுத்துக்கொண்டான்; அறவாழ்வையே ஏளனமாக்கி விட்டது தமிழனின் தன் மான இழப்பு! அவன் இனியும் ஏமாளியாக இருக்க விரும்பவில்லை. ‘சிவசேனை’ போன்ற இயக்கத்திற்குத் ‘தமிழ்ப்படை’ எவ்வகையிலும் தாழ்ந்ததன்று. மராட்டியத்தில் இருக்கும் தென்னாட்டவரை - தமிழரைவிட இங்குள்ள வடவர்கள் வலிந்தவர்களும் அல்லர். பொதிய வெற்பில் பொடியாக்கப்படும் அவர்தம் எலும்புகள், கன்னி மணலில் புதைக்கப்படுவது தமிழர்களின் மறுமலர்ச்சி வாழ்வின் தொடக்கமாக அமைவது பெருமைதரக் கூடியதே. தமிழன் தன்னை உணர்த்தக் காலம் வந்துள்ளது; நெடிதுயர்ந்த மடிதுயில் களைந்து, தமிழன் தெளிவடைந்து எழுந்துள்ளான். எழுந்ததும் தமிழக விடுதலைக் குரல் அவன் செவிகளில் படுகின்றது. பிரிவினை நோக்கி அவன் தள்ளப்படுகிறான். இடப்படும் ஆணைக்குக் காத்துக்கிடக்கும் இளைஞர் பட்டாளம் ஆட்சியினர்க்கு எச்சரிக்கை கொடுத்துப் புறப்படுகின்றது. வெற்றியை நோக்கி நடையிடட்டும் அதன் முனைப்பு!
- தென்மொழி, சுவடி : 5, ஓலை 5, 1967
விடுதலை பெறுவது முதல் வேலை!
‘தமிழகம் விடுதலை பெறவேண்டும்’ - என்ற கருத்தே நம் நாட்டிலுள்ள அரசியல் கட்சிக்காரர் சிலர்க்குப் பெருத்த எரிச்சலை மூட்டுவதாகும். அதற்கவர் சொல்லும் கரணியங்கள் வியப்பானவையாகும். முதலில் “தமிழகம் எங்குக் கட்டுப் பெற்றுக் கிடக்கின்றது? தமிழகம் உட்பட இந்தியா முழுவதுமே அண்மையில்தானே வெள்ளைக்காரன் கைகளினின்று மீட்கப் பெற்று உரிமை எய்தியது? உரிமை பெற்றபின் நமக்கென்று ஒரு குடியரசமைப்பையன்றோ அமைத்துக் கொண்டுள்ளோம்? இவ்வமைப்பின் கீழ் உள்ள நிலத்தின் எந்தப் பகுதியும் அடிமையுற்றுக் கிடக்கின்றது என்பது பொருளற்றதே. அவ்வாறு அடிமையுற்றுக் கிடக்கும் ஒரு நிலப்பகுதியன்றோ விடுதலையுரிமைக்குப் போராடலாம்? தமிழகம் எப்படி அடிமை நாடாகும்?" - என்பது அவர்களின் எதிர் வினாவாகும். இத்தகையவர்கள் விடுதலை என்ற சொல்லின் பொருளையே சரிவரப் புரிந்து கொள்ளா தவர்களாவர். புரிந்து கொண்டாலும் ஒப்புக்கொள்ளாதவர்களாவர். இத்தகையவர்களுக்கும். இவர் தம் மதிமயக்கமான பேச்சுகளினாம் கட்டுண்டு தமக்குத்தாமே அடிமையுற்றுக் கிடக்கும் பேதைத் தமிழர்க்கும் முதற்கள் விழிப்பூட்டியாகல் வேண்டும்.
ஓராட்சிக்குள் அடங்கும் தனி மாந்தன் ஒருவனின் உரிமைகள் என்பவை வேறு கூட்டுமாந்த உரிமைகள் என்பவை வேறு. வெள்ளைக்காரன் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தான் என்று சொன்னால் நம் ஒவ்வொருவரின் கைகால்களிலும் இரும்பு விலங்குகளை மாட்டி நம் குடுமிகளைப் பிடித்து அவன் எப்பொழுதுமே ஆட்டிக் கொண்டிருக்கவில்லை. நம் தனிப்பட்ட இயக்கங்களை நாம் உண்ணுவது, உறங்குவது உடுத்துவது மனைவி மக்களுடன் உறவாடுவது போன்றவற்றின் ஈடுபாடுகளை அவன் தடைசெய்து வைத்திருந்தான் என்பதிலும் பொருளில்லை. மாறாக இவைபோன்ற எல்லா வகையான இன்பநுகர்ச்சிகளுக்கும் அவன் ஆட்சிக்காலத்தில் பெரிதும் நல்ல வாய்ப்புகளையே ஏற்படுத்திக் கொடுத்திருந்தான். நம் கல்விக் கண்களையும் திறந்து நம்மைப்பற்றியிருந்த அறியாமை இருளையும் ஓட்டுதற்கு அவன் பெரிதும் உதவியிருந்திருக்கின்றான். அப்படிப்பட்ட நிலையில்- அவன் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தான் என்று சொல்வதற்கே தனிபட்ட ஒருவனைப் பொறுத்தமட்டில் எந்த ஒர் அடையாளமும் இல்லாத நிலையில் அவனுக்கு நாம் அடிமைப்பட்டுக் கிடந்தோம் என்று ஏன் சொல்லிக் கொண்டிருந்தோம்? .
அவன் நமக்கு- தனிப்பட்ட நம் ஒருவருக்கு என்ன வகையான நன்மை செய்திருந்தாலும். நம் எல்லாருக்கும் வேண்டாதவனாக இருந்தான் என்பதைக் கருதியே அவன் நம்மை அடிமைப்படுத்தியிருந்தான் என்று கூற வேண்டியிருந்தது. நாம் எல்லாரும் சேர்ந்து அவனை ஒன்றும் கேட்க முடியாது. நம் எல்லாரைப் பற்றியும் நாமே எண்ணி முடிவுகட்டிக் கொள்ள முடியாது. அவன் உதவியின்றி நம் எல்லாராலும் எங்கும் செல்ல முடியாது. நம் எல்லாருக்கும் சொந்தமான இந்நிலப்பகுதியில் ஒரு துண்டு நிலத்தை வெட்டியெடுத்துக் கப்பலில் போட்டு இங்கிலாந்துக்குக் கொண்டு போனாலும் நாம் அவனைப் போய் ஏன் அப்படிச் செய்கிறாய் என்று கேட்க முடியாது. இங்கிருந்த பொன்னையும் பொருளையும் வாரிக் கொண்டு போய் அவன் நாட்டில் குவித்துக் கொண்டாலும் அவன் பார்த்து ஏதாவது கொடுப்பதை - நாம் பெற்றுக் கொண்டாலொழிய நாமாகப் போய் அவன் கொண்டு போனவற்றைப் பிடுங்கிக் கொண்டு வர முடியாது. நம்மை முன்னேற்றிக் கொள்ளக்கூடிய எண்ணங்கள் நம் மனத்தில் தோன்றினாலும் நாம் அவற்றை மற்றவர்களுக்குச் சொல்ல முடியாது. அவற்றைச் செய்தித்தாளில் எழுதிப்பரப்பிவிட முடியாது. நாம் எழுதுவதற்கும் பேசுவதற்கும்.அவன் ஒப்புக்கொண்டால்தான் ஆயிற்று இல்லையென்றால் நாம் எழுதாமலும் பேசாமலும் ஊமை நாடகந்தான் போட்டுக் காட்டிக் கொண்டிருக்க முடியும். ஆனால் இத்தனைத் தடைகள் இருந்தாலும் அவன் நமக்குச் சோறு போட்டான். இங்கிலாந்திலிருந்து நம் வாழ்க்கைக்கு வேண்டிய பொருள்களைக் கப்பல் கப்பலாக ஏற்றிக் கொண்டு வந்து நமக்குக் கொடுத்தான்; உடைகளை நன்றாக உடுக்கக் கற்றுக்கொடுத்தான். இருந்தாலும் இவற்றிலெல்லாம் நாம் நிறைவுபெற்றுவிடாமல், நம் குடுமி என்னவோ அவன் கையிலிருப்பது போன்ற உணர்ச்சியே நமக்கிருந்து வந்தது. நம் கைகால்களைக் கட்டிப் போட்டு வைத்துக் கொண்டு நமக்குச் சோறு போட்டுக் காப்பது போன்ற உணர்ச்சியே நம் எல்லாருக்கும் இருந்தது. எனவே நாம் அவனுக்கு அடிமையுற்றுக் கிடப்பதாகக் குமுறினோம்; குமைந்தோம்; புழுங்கினோம்; பேசினோம்; எழுதினோம்; இறுதியாக அவனிடமிருந்து நாம் விடுதலை பெற்றுவிட்டதாக ஒருகால் பகுதித்தாளில் எழுதி வாங்கிக் கொண்டு அவனைக் கப்பலேற்றி இங்கிலாந்துக்கு அனுப்பி விட்டோம்.
அந்தக் கால் தாளை நாம் (நாம்கூட அன்று ; நமக்காக யாரோ ஒருவர்) வாங்கிக் கொண்டவுடன், நமக்கென்னவோ நம் கைகால்களில் உள்ள விலங்குகளெல்லாம் தகர்க்கப்பட்டன. போன்ற ஓர் இன்ப உணர்ச்சி இருந்தது; உரிமைஉணர்ச்சி இருந்தது. இந்த மகிழ்ச்சியில் நாம் ஆடினோம்; பள்ளுப் பாடினோம்! ஆரவாரம் செய்தோம். ஆனால் அதன் பின்னும் நமக்குப் பசித்துக்கொண்டு தான் இருந்தது; உடை தேவையாகத்தான் இருந்தது; நாமும் உழைத்துக்கொண்டுதான் இருக்க வேண்டியிருந்தது. நாம் இந்த உலகில் எந்த மூலையில் பிறந்திருந்தாலும் உழைத்துத் தான் ஆகவேண்டும்; சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும்; தொல்லைப்பட்டு வாழ்ந்துதான் ஆகவேண்டும். இவற்றிலிருந்து எவனும் நம்மை விடுதலை செய்துவிட முடியாது. ஆனால் இவற்றைப் பற்றி யெல்லாம் விளங்கிக் கொள்ளாத நம் தலைவர்கள் அன்றெல்லாம் "வெள்ளைக்காரனை நாம் ஓட்டிவிட்டால் நம் ஆற்றிலெல்லாம் தண்ணீருக்கு மாறாகப் பால் ஓடும்; நெய் ஒடும்; நம் மலைகளில் கொட்டிக் கிடக்கும் கல்லெல்லாம் பொன்னாகும்; கடுகெல்லாம் மலையாகும்” என்றெல்லாம் கனவுகண்டு கிளுகிளுப்பை மூட்டிக் கற்பனைவளம் பொங்கப் பேசினார்கள், ஆனால் வெள்ளைக்காரன் போனபின் நம் ஆறுகளில் பாலும் ஒடவிலை, நெய்யும் ஓடவில்லை. இருந்த தண்ணீரும் வற்றிப்போனது. கல்லெல்லாம் பொன்னாகவில்லை; கடுகும் மலையாகவில்லை; நம் பெண்டு பிள்ளைகள் காதுகளிலும் மூக்குகளிலும் போட்டுக் கொண்டிருந்த கடுகத்துணைப் பொன்னும் பறிபோய்விட்டது. பின் என்னதான் பயன்? உரிமை பெற்றது எதற்கு? விடுதலை பெறுவது எதற்கு? இந்தக் குழப்பங்கங்களி லிருந்துதான் நாம் உண்மையை உணர்ந்தாக வேண்டும் அந்த உண்மைகள் என்பவை எவை? உரிமைகள் என்பவற்றிற்கு என்ன விளைவு? விடுதலைக் கனியின் சுவை என்ன? அதன் பரிமாணப் பொருள் எது ? தமிழனுக்கும் அது தேவைதானா? இவற்றை முதலில் விளங்கிக்கொள்வோம்.
மக்களினத்தைப் பொறுத்தவரையில் ஒருண்மையை முதன் முதலில் நன்றாகப் புரிந்து கொள்ளுதல் வேண்டும். இந்த மக்களினம் என்றைக்கும் பழக்க வழக்கத்திற்கு அடிமையுற்ற இனமே! இந்தப் பழக்க வழக்கந்தான் நமக்கு அறியாமையாகவும் இருப்பது; அறிவாகவும் இருப்பது. நாம் அறியாத ஒன்றைத் தவறாகவும் அறிந்த ஒன்றைச் சரியாகவும் கருதிவிடுகின்றோம். எடுத்துக்காட்டாக, நாம் கண்டு அறிந்த சிவவடிவம், மால்வடிவம் முதலிய வடிவங்களையே இறைவன் உருவங்கள் என்று நம்புகின்றோம். ஏசுநாதரையும், புத்தரையும் மக்களில் உயர்ந்தவர்கள் என்றே நினைக்கின்றோம். இனி, ஏசுநாதரையும், புத்தரையும் வழிபடுபவர்கள் நாம் வணங்கும் வடிவங்களை இறைவனுடையன என்று ஏற்பதில்லை. இவ்வாறு பழக்க வழக்கமே நமக்கு அறிவாகிறது. நமக்குப்பழக்கமும் வழக்கமும் அல்லாதது அறிவில்லாததாகி விடுகின்றது. இந்த உண்மை நம் எல்லா வகையான இயக்கங்களிலும் ஊடுருவி நிற்கின்றது. இந்த உண்மையின் அடிப்படை நம்மை எங்குக் கொண்டுபோய் விட்டுவிடுகின்றது தெரியுமா? நம்மை நாமே அடிமைப்படுத்திக் கொள்ளும் ஓர் அறியாமைப் படுகுழியிலே கொண்டுபோய்த் தள்ளிவிடுகின்றது. எனவே நாம் எதைப் படித்தாலும், எதை எண்ணினாலும் நம் பழக்க அடிமைத்தனத்தினின்று விடுபடவே மறுத்து விடுகின்றோம். இந்த அமைப்பின் புறச் செய்கையாகத்தான் நாம் அரசியல் அமைப்பிலிருந்தும் குமுகாய அமைப்பிலிருந்தும் நம்மை முன்னோக்கிக்கொண்டு செலுத்த முடியாமல் அழுந்திப்போய் விடுகின்றோம். இதனாலேயே விடுதலையுணர்வு என்று நாம் கேள்விப்பட்டவுடன் நாம் உழைக்காமல் உண்டுவிட முடியுமா? பாய் போடாமல் படுத்துக்கொள்ளமுடியுமா? என்றெல்லாம் கற்பனை செய்யத் தொடங்கி விடுகின்றோம். அரசியல் தலைவர்களும் நம் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு விடுதலையுணர்வையும், உரிமை எய்துவதையும் நம் கண்பார்வைக்கும் காதுப்பறைக்கும் தக்க படியான கோணங்களில் - பரிமாணங்களில் உருவாக்கிக் காட்டுகின்றனர். ஆனால் விடுதலை என்பது என்ன?
அதுதான் ஒவ்வொரு மாந்தனின் உயிர்ப்பயன்; ஒவ்வோரினத்தின் இயக்க முடிவு. ஒவ்வொரு நாட்டின் இறுதி அரசியல், மொத்தத்தில் உலகின் இறுதிக்கொள்கை, அங்கு நாம் உழைக்கலாம்; உண்ணலாம்! உழைக்கவும் தடையிருக்கக்கூடாது; உண்ணவும், தடையிருக்கக் கூடாது. மாந்தன் மலையை வெட்டிக் கடலில் போடலாம்; கடல் நீரை வயலுக்குப் பாய்ச்சிக் கொள்ளலாம். என்ன விரும்புகின்றானோ அதைப் படிக்கலாம்; எதை விரும்புகின்றனோ அதை எழுதலாம். எப்படி வாழ விரும்புகின்றானோ அப்படி வாழலாம். அதற்காகத் தன்போல் ஒருவன் அப்படிச் செய்வதை இவன் தடுக்கவும் கூடாது; இவன் விருப்பத்தை இன்னொருவன் தடுக்கவும் கூடாது. இந்த அமைப்பை இவனே ஒருவகையான கோணத்தில்-ஒரு பரிமாணத்தில் அமைத்துக்கொள்ள இவனுக்கு உரிமையிருக்க வேண்டும். இவ்வுரிமைக்கு எவன் தடையாக இருக்கின்றானோ அவன் இவனின்று மாறுபட்டவன். அவன் கோணம்பரிமாணம் எல்லாமே இவன் கோணத்திற்கும் பரிமாணத்திற்கும் மாறுபட்டன. இப்படி ஒருவனன்றி ஓரினமே இயங்குமானால் அவ்வினத்திற்குப் பிறிதோர் இனம் மாறுபட்ட இனம். அந்த இனமும் இந்த இனமும் தனித்தனி இயக்கம் உடையன. தொடக்கம் உடையன; முடிவு உடையன பயன் உடையன.
இவ்வாறு இன்றி உலக மாந்தரனைவரும் ஒரே யியக்கமும் ஒரே வகையான பரிமாணமும் உடையவராக நாம் கருதிக் கொள்வதைப் போன்ற அறியாமை வேறு இல்லை. இப்படி நான் கூறும் கருத்துப் புதிய உலக அமைப்புக்கு எள்ளளவும் மாறுபட்டதில்லை. இன்னுஞ் சொன்னால் அந்த அமைப்புக்குப் புதிய வடிவம் கொடுப்பது புதிய வலிவூட்டுவது வரப்போகும் பல புதிய சிக்கல்களை விடுவிப்பது. முதலில் ஒன்றை நாம் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும் உலக மக்களினம் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பண்பு, அமைப்பு இயக்கம், இயல்பூக்கம் முதலியன உண்டு என்றால் - அவற்றில் ஒவ்வோரினமும் பிறிதொன்றிற்கு வேறுபட்டுக் கிடக்கின்றது என்றால், ஒன்றையொன்று பகைத்துக்கொண்டுதான் கிடக்க வேண்டும் என்பதில்லை. எருமைகளும் மாடுகளும் ஒன்றையொன்று முட்டிக்கொண்டும் மோதிக் கொண்டுந்தான் நடக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் அவை வெவ்வேறு இனங்களே! இவ்வேறுபட்ட உணர்வை ஒன்றுபோல் கருதுவதென்பது வேறு; ஒன்றாக்கி விடுவதென்பது வேறு ஒன்று போல் கருதுவதென்பது அறிவால் நமக்குக் கிடைத்த பயன்; ஒன்றாக்கி விடுவதென்பது அறியாமையால் நாம் கண்ட இருள் துயரம் ! எந்த வகையான அறிவியல் உலகம் வந்தாலும் உலக மாந்தர் எல்லாரும் ஒரே வகையினர்; இனத்தினர் என்ற தன்மை வரவே வராது: அவரவர்களின் உறுப்புகளும் பிறவும் ஒன்றுப்பட்டே இருக்கும். உணர்வு வேறுபட்டுத்தான் இயங்கும். இந்த உண்ர்வு நிலைக் கொப்ப அறிவு கலக்கப் பெற்றதோர் இயக்கமே மாந்தரை வேறு பிரிக்கின்றது. நாம் எல்லோரும் ஓரினந்தான். ஆனால் பல்வேறு பிரிவினர் இப்பிரிவு நிறத்தினடிப் படையிலோ 'சாதி’யின் அடிப்படையிலோ அமைந்த தன்று; நிலத்தின் அடிப்படையில் அமைந்தாகும். மூலத்தோற்றத்தின் அடிப்படையில் அமைந்ததாகும்! அறிவியல் முன்னேற்றத்தின் எந்தப் புள்ளியிலும் ஓர் உருசியனும் ஒரு சப்பானியனும் ஒன்றாகி விடுவதென்பது தவறு. இந்நிலையை நாம் மிக நன்றாக மிகத் துல்லியமாகப் புரிந்து கொண்டால், வேறுபாட்டுணர்வுக்கே, பகையுணர்ச்சிக்கே இடமில்லாத வகையில் புரிந்து கொண்டால், ஓரினத்தைப் பிறிதோர் இனம் அடிமைப்படுத்தியோ, ஒன்றின் இயக்கத்துக்குள் பிறிது ஒன்றை அடக்கிக் கொண்டோ வாழ்வது என்பது குற்றமாகவும் கொடுமையாகவும் கருதப்படும்.
இங்கு ஒருண்மையை நாம் நன்றாக விளங்கிக் கொள்ளுதல் வேண்டும் நிலத் திணையியலில் எப்படிப் பூண்டினமும், புல்லினமும் தண்டினமும், மரவினமும் பகுக்கப் பெறுகின்றனவோ, விலங்கியலில் எப்படிக் குதிரையினமும், நாயினமும், யானையினமும், பகுக்கப் பெறுகின்றனவோ அப்படியப்படி மாறுபாடுற்று விளங்குகின்றனவேயன்றி ஒரேயினத்துள் வேறுபாடுகள் கொண்டு இவை விளங்கவில்லை. குதிரை யொன்றையும் அதன் இனத்தினதான கழுதை ஒன்றையும் இணைத்து எவ்வாறு கோவேறு கழுதையை நாம் படைத்துக்கொள்ள முடியுமோ, அப்படியே இந்தியனையும் சீனனையும் இணைத்து இந்தோசீனனையும், இந்தியனையும் ஐரோப்பியனையும் இணைத்து இந்தோ ஐரோப்பியனையும் நாம் உருவாக்கிக் கொள்ளலாம். அதனால் இந்தியனும் சீனனும் இந்தோசீனனும் இந்தோ ஐரோப்பியனும் ஓரினத்தவரல்லர். தனித்தனி இனத்தவரே. இப்படிப் பகுப்பதில் நமக்கு வேறுபாட்டுணர்வுதானே மிகும்; ஒற்றுமையுணர்விற்கு இடம் உண்டாவது எப்படி என்றால், இந்தியனும் சீனனும் வேறுவேறு என்று சொல்வோமே தவிர, இந்தியனைவிடச் சீனன் உயர்ந்தவன் என்றோ, தாழ்ந்தவன் என்றோ நாம் சொல்லுதல் கூடாது. உயர்வு தாழ்வு என்பது அறிவாலும், உழைப்பாலும் பண்பாட்டாலும், நாகரிகத்தாலும் கருதப்படுவது. ஆனால் அவ்வாறு கருதப்பெறும் உணர்வுகளிலும் கசப்புச்சுவை இருத்தல் கூடாது. இங்கு நாம் முகாமையாகக் கவனிக்க வேண்டியது, இக்கட்டுரையின் கருத்துப் பொருளாக நாம் மதிக்கவேண்டியது என்ன வென்றால் ஓரினத்தின் வாழ்வு இன்னோரினத்தின் கைகளில் ஒப்படைக்கப்படக் கூடாதென்பதுதான். இதையே சற்று அறிவியல் விளக்கமாகக் கூறினால் ஓரினத்தை, அல்லது பல இனங்களை ஆட்சி செய்யும் உரிமை, பிறிதோர் இனத்தில் அல்லது பிறிதோர் இனத்தின் நலத்தை மட்டுமே கருதக்கூடிய ஒருவரின் அல்லது ஓரினத்தின் கைகளில் ஒப்படைக்கப்படக் கூடாது என்பதே!
இந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டுதான் விடுதலையுணர்ச்சியின் பரிமாணப் பொருள் எழுதப் பெறுதல் வேண்டும். உரிமையுணர்வின் அறிவியல் பொருள் கூறப்பெறுதல் வேண்டும். இதில் இன்னொரு கருத்தும் கவனிக்கப்படுதல் வேண்டும். உரிமை வேண்டும் இனம் என்னென்ன குறைகளைக்கூறி உரிமை கேட்கின்றது என்பதும் அதேபோல் உரிமை தரவேண்டிய இனம் என்னென்ன நிறைகளைக்கூறி உரிமைதர மறுக்கின்றது என்பதுமே அது. இப்பொழுது இதுவரை நாம் ஆராய்ந்த கருத்துகள் அனைத்தையும் வைத்து நாம் வெள்ளைக்காரனிடம் உரிமைகேட்ட வரலாற்றை நினைவு கூர்வோமானால் நமக்கு விடுதலையுணர்வின் அகரவரிசை தெரிந்துவிட்டது போன்ற ஓருணர்வு ஏற்படும். அதுதான் இது. அஃதாவது விடுதலை என்பது வயிற்றுப் பசியில்லாம லிருப்பதற்கோ, உழைக்காமல் உண்பதற்கோ கேட்கப்படுவதன்று அப்படியானால் நாம் விடுதலையே கேட்டிருக்க மாட்டோம். பின் விடுதலை என்பது எது? அது நம் மான உணர்வில் பழுத்த பயனுடைய கனி. அது நம் வயிற்றை நிரப்பாது; உணர்வின் நரம்புகளை நிரப்பும் உழைக்காமல் உண்ண வைக்காது; உழைப்பது மிகுந்து உண்பது குறைவாக இருந்தாலும் அது நம் நெஞ்சத் துடிப்புக்கு நிறைவளிப்பதாகும். எனவே வயிற்றை நிரப்பி வாழ்க்கையின் உள்ளுணர்வை நிரப்பாமல் இருப்பதே விடுதலை என்று ஆகாத பொழுது வயிற்றையும் நிரப்பாமல் வாழ்வின் உள்ளுணர்வுக்கும் பொருந்திவராத இன்றைய ஆட்சியை நாம் எப்படி விடுதலையாட்சி என்று கருதுவது? இதையும் சிலர் விடுதலைதான் உரிமையாட்சிதான் என்று கருதுகின்றார்களே என்றால், அவர்கள் ஒரு வேளை வயிறுமுட்ட உண்பதாலும் கள்ளக்காசு அடிக்க முடிவதாலும் ஏழையினத்தைச் சுரண்டிவாழ வழியிருப்பதாலும் தான் மட்டும் மேலானவன் என்ற பட்டயம் தீட்டிக்கொள்ள முடிவதாலுமே அவ்வாறு கருதலாம் நடக்கலாம். அவ்வாறு இல்லாத இருக்க முடியாத பிறர் எப்படி இந்த ஆட்சியை விடுதலை ஆட்சி தன்னுரிமை ஆட்சி என்று கருதிக்கொள்ள முடியும்?
எனவே நம்மைப் பொறுத்த வரை, தமிழர்களாகிய நம் இனம் நம்மினும் வேறுபட்ட முற்றிலும் மாறுபட்ட வடவாரிய இனங்களினால் ஆளப்படுவதும் அதன் பொருட்டு மாள விருப்பதும் விடுதலை பெறும் இன்றியமையாமையை வலியுறுத்துவதாகும். அரசியலில் பொருளியலில் குமுகாயவியலில், பண்பாட்டியலில் நமக்குப் பொருந்திவராத ஓர் ஆட்சி, குடியாட்சி என்று இயங்கினாலும் சரி முடியாட்சி என்று கூறப்பெற்றாலும் சரி, நம் உரிமைகளைப் பெறும் பொருட்டு நாம் பெற விரும்புவது, பெற வேண்டுவது விடுதலையே. இன்னும் விரிவாகவும் விளக்கமாகவும் சொன்னால் இந்தியக் குடியரசாட்சியினின்று நாம் - தமிழர்களாகிய நாம், நம் நாட்டை - நம் இனம் பரவிய இந்நிலத்தை- இந்நிலத்தில் உள்ள மக்களின் நலத்தை. இந்நலத்தின் அடியொட்டி விளையும் வாழ்க்கை வளத்தை உண்மையிலேயே நம்முடையனவாக்கிக் கொள்ள வேண்டுமென்பதுதான் நாம் கூறும் விடுதலைக்குப் பொருளாகும்.
நம் துயரங்கள் மலைபோல் வளர்ந்துவிட்டன; நம் தேவைகள் கடல் போல் பெருகிவிட்டன; நம் இழிவுகள் இன்று கூட்டித் தூய்மைச் செய்ய முடியாத அளவுக்கு மேலும் மேலும் மண்டிவிட்டன. பேச்சு உரிமையற்று விட்டோம்; எண்ண உரிமையற்று விட்டோம் நம்மைக் குமுகாயத்தின் அடித்தளத்தில் கொண்டுவந்து நிறுத்திவிட்டோம். நமக்குப் பசி பெரிதுதான்; ஆனால் பசி மட்டும் பெரிதில்லை; சோறு தேவைதான்; ஆனால் சோறு மட்டும் தேவையில்லை; நமக்கு வறுமையுண்டு; துயரம் உண்டு; போராட்டம் உண்டு; ஒற்றுமை எண்ணம் உண்டு. ஆனால் அவை போலவே நமக்கு மானமும் உண்டு, நம்மை நம் இனமல்லாத, நம் இனத்தின் நலம் பாராட்டாத எவனும் ஆளுதல் கூடாது. ஆம்! நாம் வடவனுக்கு - ஆரியனுக்கு என்றுமே அரசியலிலும் குமுகாய அமைப்பிலும் அடிமைகளல்லர்! உரிமைபெற வேண்டியவர்கள். விடுதலை வேண்டுபவர்கள். இதனை மறுக்கும் உரிமை எவருக்கும் இல்லை. அறிவின் பெயரால் அறிவியலின் பெயரால் இதனைப்பெற வழியில்லை என்றால், வலிவின் பெயரால் நாம் இதனைப்பெற்றே ஆகல் வேண்டும். என் உடன்பிறந்த தமிழனே! நீ என்ன சொல்கின்றாய்? விழி; எழு; நட!
-தென்மொழி, சுவடி :7, ஒலை 2, 1969
இந்தியாவின் அரசியல் வீழ்ச்சியும்
தமிழனின் விடுதலை எழுச்சியும்!
இந்தியக் குடியரசு வரலாற்றிலேயே இதுவரை ஏற்பட்டிராத பெரியதோர் அரசியல் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை இன்று நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் எண்ணிக் கொண்டிருப்பவர் அத்தனைப் பேரும் உணர்ந்து வருந்துகின்ற நேரம் இது. இந்திய அரசியல் அமைப்பில் வலிந்ததும் மிகப் பெரியதுமான பேராயக் கட்சியில் தாய்ச்சுவரிலேயே வெடிப்பு கண்டுள்ளது! அடிமரமே பிளவுபட்டுள்ளது. இப் பிளவு அதிகாரச் சார்பினது மட்டுமன்றிக் கொள்கைச் சார்பினதுமாகும் என்று இருதரப்பினரும் பன்னிப்பன்னி உரைத்து வருகின்றனர். கட்சித்தலைவரும், ஆட்சித்தலைவரும் தங்களின் கட்சியை மட்டுமன்றி மக்கள் கூட்டத்தையே கூறுபோட்டுப் பிரிக்கத் தொடங்கிவிட்டனர். பிரிக்கத் தொடங்கியதோடமையாமல் தம்தம் பங்குக்கு வலிவு, மெலிவுகளையும் எடை போடத் தொடங்கிவிட்டனர். ஒற்றுமை என்றும் ஒருமைப்பாடு என்றும் பேசிய கட்சி மேலாண்மையும், அதிகாரமும் இன்று ஒற்றுமை குலைந்து ஒருமைப்பாடு சிதைந்துள்ள நிலைக்கு வந்துவிட்டன. மக்களைத் திருந்த வேண்டும் என்று வேண்டிக்கொண்டவர்கள் மக்கள் திருத்தியும் திருத்த முடியாத அளவு இழிந்துவிட்டனர். அமைப்பும் அதிகாரமும் ஒன்றை யொன்று அழிக்கத் தொடங்கிவிட்டன. கணவனும் மனைவியுமாக இயங்கவேண்டிய கட்சியும், ஆட்சியும் பிரிவினை மனப்பான்மையுடன் தம்முள் வாய்ச்சண்டையும், கைச் சண்டையும் போடத் தொடங்கிவிட்டன. குடியும், குடித்தனமுமாக விரிந்து சிறக்கவேண்டிய இப்பெற்றோர்களிடையே போராட்டங்களைப் பார்த்துப் பிள்ளைகளாகிய மக்கள் மருண்டு திகைப்புண்டு என்ன செய்வதென்று அறியாமல் கூனிக்குறுகிப் போய்விட்டனர். மொத்தத்தில் இந்திய அரசியல் அமைப்பே ஆட்டங் காணத் தொடங்கிவிட்டது. இந்நிலை இந்தியாவிற்குப் பெரியதோர் அரசியல் வீழ்ச்சி என்பதை எவரும் மறுக்க முடியாது.
இன்றுவரை தமிழகம் இந்தியாவின் ஒரு பகுதியாதலின் இந்திய அரசியல் அல்லது பொருளியல் அல்லது குமுகாய வீழ்ச்சி எந்த அளவினதாயினும் அந்நிலை தமிழகத்தையும் ஓரளவு தாக்கவே செய்யும். எனவே இந்தியாவின் நடுவணரசில் ஏற்படுகின்ற மாற்றங்கள், கட்டுக்குலைப்புகள் அல்லது சீர்குலைவுகள் தமிழகத்திலும் ஒருவகை மாற்றத்தை, ஏற்படுத்தியே தீரும். இந்திய அரசியலில் இக்கால் ஏற்பட்ட குமட்டல் கொந்தளிப்புகளும் அதிகாரப் பொருமல்களும் தமிழகத்தையும் தாக்கியுள்ளதாக நாம் கருதிக் கொள்ள வேண்டும். ஆகையால் இந்திய அரசியலின் செரிமானக் குறைவு நம் ஆராய்ச்சிக்குகந்த முழுப்பொருளாக அமையாவிடினும் தமிழகத்தை இந்த நிலை எந்த அளவு தாக்குகின்றதோ அந்த அளவிற்கு நாம் இதைப்பற்றிக் கவலைப்பட்டாகல் வேண்டும். கப்பலில் ஓட்டை ஏற்பட்டு அது முழுக வேண்டிய நிலையில், இதில் அடிமையாக்கப் பட்டுக் கிடக்கும் ஓர் அரசியல் அடிமை, கப்பல் மூழ்கிவிட்டால் என்ன செய்வது என்று எந்த அளவில் வருந்துவானோ, அந்த அளவில் நாமும் வருந்தியாக வேண்டி உள்ளது. எனவே பேராயக்கட்சியின் பிளவு அக்கட்சிக்காரன் ஒருவனை எவ்வளவு வருத்துமோ அந்த அளவு இல்லாமற் போயினும், அக்கட்சியின் நடுவணரசு ஆளுகைக்குட் பட்டுக் கிடக்கும் நாம் அதன் கட்டுக்குலைவை எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது. இந்த நிலை நமக்கு ஒரு புடை தீமையாகவும் ஒரு புடை நன்மையாகவும் அமையலாம்.
பொதுவாக நம்மை அஃதாவது தமிழர்களைப் பொறுத்த அளவில் நாம் வடநாட்டானின், அஃதாவது நடுவணரசின் அரசியல் அடிமைகளே. நாம் அடிமைகள் ஆகமாட்டோம் என்று நினைக்கும் அளவிற்கு நமக்குள்ள உரிமைகளில் எதுவும் நமக்கு உறுதிப்படுத்தப்படவில்லை. அரசியல் சட்டங்களில் எவ்வளவோ பேசப்பட்டிருக்கலாம். ஆனால் அவற்றின் நடைமுறைகள், அவ்வரசியல் சட்டங்களைப் பொருளற்றவையாகச் செய்துள்ளன. எனவே பேராயக்கட்சி ஒரு யானையின் அளவிற்கு வலிமை பெற்றாலும் சரியே. அல்லது, ஒரு பூனையின் அளவிற்கு மெலிவுற்றுப் போனாலும் சரியே, நாம் அக்கட்சியின் அஃதாவது அக்கட்சிப் பெரும்பான்மையின் அஃதாவது அக்கட்சியை ஆட்டிப்படைக்கும் வடநாட்டாரின் - இந்திக்காரரின் அடிமைகளே. அந்த அடிமைக் கூட்டத்திற்குத் தலைமை என்று கூறிக் கொண்டு ஓர் அநும பகத்தவத்சலம் போனாலும் சரியே - அல்லது ஒரு வீடண சுப்பிரமணியம் போனாலும் சரியே. அல்லது ஒரு சுக்ரீவக் காமராசு போனாலும் சரியே. வடநாட்டானிடம் நமக்கென்று ஒரு தனிப்பெருமை, இன்றன்று, இனி என்றும் வரப்போவதில்லை. இந்தியாவின் இனத்தை இன்று நேற்றுன்று ஏறத்தாழ மூவாயிரமாண்டுக்காலமாகத் தமிழன் நம்பிப் பார்த்துவிட்டான். அந்த அம்மையினத்தாரின் குருதியில் என்றைக்கும் அழுத்தம் குறைந்ததே இல்லை. அது முன்னேற்றப் பேராயக் கட்சி என்று பேசினாலும் சரி; அல்லது உண்மைச் சமவுடைமைக்கட்சி என்று கூறினாலும் சரி; அல்லது பொதுவுடைமைக்கட்சி என்று கூப்பாடுப் போட்டாலும் சரி; அந்த அம்மையாரின் குரலையும் தமிழர்கள் நம்ப வேண்டியதில்லை. அவரின் எழுத்தையும் தமிழர்கள் ஒப்பவேண்டியதில்லை; அவர் ஒரு முழு ஆரியப் பார்ப்பனத்தி, நம்மைப் பொறுத்தவரை ஆரியப் பார்ப்பானுக்கு இருக்கின்ற இனப்பாங்கைவிட ஆரியப் பார்ப்பனத்திக்கு இருக்கின்ற இனப்பாங்கு இரண்டு மடங்காகவே இருக்கின்றது என்று சொல்லலாம்."பார்ப்பனர்கள் இன்று திருந்திவிட்டனர்; நேற்றுப்போல இல்லை" என்று பேச்சில் பேசலாம்.அல்லது எழுத்தில் எழுதலாம்; ஆனால் பார்ப்பனன் என்றும் திருந்தான். அது நிலவுலகமானாலும் சரி; நிலா உலகமானாலும் சரி. இந்திர பிரம்ம உலகங்கள் ஆனாலும் சரி. அங்குள்ள பார்ப்பனனும் பூணுலைத்தான் போடுவான். பார்ப்பனத்தியும் பார்ப்பானுக்கு மேலாகத்தான் இருப்பாள். அவர்கள் வேலை உட்காய்ச்சல் போன்றது. அவர்களிடம் காமராசரின் அரசியல் தந்திரமும் செல்லாது. கருணாநிதியின் அரசியல் மந்திரமும் ஏறாது. காமராசர் அந்த வகையில் தம் தோல்வியை உணர்ந்து விட்டார். கருணாநிதி உணர்வார். இனி, இந்திராவின் கண்ணாடிக்குக் காமராசரும். கருணாதிதியும், சுப்பிரமணிய, பக்தவத்சலங்களும் இன்னும் யாவரும் கறுப்பாகத்தான் தோன்றுவர். அதில் எள்ளளவும் ஐயப்பாடில்லை. காரணம் இந்தியாவில் நடப்பது முழு அரசியல் அன்று; ஆரியவியல் கலந்த அரசியல்.
ஆகவே தமிழர்கள் இத்தகைய அரசியல் வண்ண மத்தாப்புகளின் வெளிச்சத்தில் தங்கள் மேனி யழகுகளைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்க வேண்டா. அவர்தம் நோக்கமும் கொள்கையும் இனம் வீழ்த்தப்பட்டதையும், தம் பெருமை சாய்க்கப்பட்டதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். இவற்றைப் பற்றி அறிவுணர்ச்சியற்ற உடம்புகளும், வினையுணர்ச்சியற்ற மேனிகளும் வேண்டுமானால் “அவன் நல்லவன்: இவன் வல்லவன்; அவன் சொத்தை, இவன் சொள்ளை” என்று சொல்லிக் கொண்டு திரியட்டும். மானமுள்ள நாம் அடிமைத்தனத்தினின்று விடுதலை பெற்றாக வேண்டும் அரசியல், பொருளியல், குமுகாயவியல் அல்லது பண்பாட்டியல் முதலிய நிலைகளினின்றும் நாம் விடுதலை பெற்றாக வேண்டும். இவ்வத்தனைத் துறைகளிலும் நாம் முன்னேறியாகவும் வேண்டும்.
எங்காவது எவனாவது "தமிழ் முன்னேறிவிட்டது; தமிழ் ஆளுகிறது; தமிழ் வாழுகிறது; அங்குத் தமிழ்; இங்குத் தமிழ்” என்று சிலம்பாடுவானானால் அவனுக்காக இரக்கப்படுங்கள். அவனிடத்தில் இப்படிக் கூறுங்கள்: "ஐயா, தமிழரே! தமிழ் எவ்வளவு முன்னேறி இருக்கின்றது என்று கூறுகின்றீரோ; அவ்வளவில் அது வீழ்த்தப்படவிருக்கின்றது. மணலுள் நட்ட மரம்போல் விரைவில் சாய்ந்துவிடப் போகின்றது. ஏனென்றால் நீர் கூறும் முன்னேற்றத்தில் அடிப்படை என்பது எள்ளத்துணையும் இல்லை; உண்மையில்லை; இனி விளைந்துபோக வேண்டிய எருவில்லை; அதன் பருமையில் திண்மையில்லை; அதன் பளபளப்பு உடலின் ஒளியன்று; நோயின் மினுக்கு மொத்தத்தில் தமிழ் “சட்டிக்குத் தப்பி நெருப்பில் விழுந்த கதை” - என்று விளக்கிக் காட்டுங்கள். விளங்கிக்கொண்டால் போகட்டும்; விளங்காவிடில் கவலை வேண்டா. பக்தவத்சலத்தின் கொடியைவிட உயரமாகப் பறந்த கொடி வேறில்லை; காமராசரின் ஒரு கை கன்னியாகுமரி முனையையும் மறுகை பனிமலை உச்சியையும் தொட்டுக் கொண்டிருந்தது; அக் கால்கள் இந்தியாவைச் சுற்றிச் சுற்றி நடையிட்டன. இன்று அவர்தம் கைகால்களை முடக்கிக் கொண்டு நிசலிங்கப்பாவின் வீட்டுத் திண்ணையில் முடங்கிக்கொண்டு கிடக்கின்றார். இப்படிப் பெரிய அரசியல் மூளைகளெல்லாம் மூழ்கிப் போயின. இவர்கள் எம்மாத்திரம் வற்றிய ஓலை சலசலக்கும்: எஞ்ஞான்றும் பச்சோலைக்கில்லை என்பது அழிக்கமுடியாத உண்மை
எனவே தமிழா, “நாம் முன்னேற்றம் அடைந்துவிட்டோம். இனி நமக்கு வேறொன்றும் வேண்டுவதில்லை; நடப்பது நம் தமிழ் ஆட்சி: ஆளுவது நம் தமிழன்” என்றெல்லாம் கனவுலக வாழ்க்கையின் காட்சியில் இறுமாந்து போகாதே! பேராயக் கட்சியும் தொலைந்துவிட்டது. காமராசும் பக்தவத்சல சுப்பிரமணியங்களும் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு கால்முறிந்து கிடக்கின்றனர் என்று பெருமைப்படாதே என்றைக்கும் உன்னால் வீழ்த்தப்படாத ஆரியம் உன் நடவடிக்கைகளில் எது சரியோ அதற்குப் புறத்தே பாராட்டும் அகத்தே குழிப்பறிப்பும். எது தவறோ அதற்குப் புறத்தே கண்டிப்பும், அகத்தே தூண்டுதலும் செய்து கொண்டுள்ளது. ஆகையால் மொழியறிவற்ற நீ, வரலாற்றறிவுகாணா நீ, ஆட்சித்தருக்குக் கொண்ட நீ உன் பாட்டன் பூட்டன்களாகிய பாண்டிய, சோழ, சேரர்களைவிடத் தோள்வலிவற்ற நீ, அவர்களாலேயே சாய்க்கவியலாத ஆரியத்தைச் சாய்த்து அதன் வாயைக் கிழித்து விடுவாய் என்று, நீ ஏதுமற்ற நீ, நினைப்பாயானால் அந்த அறியாமைக்குத் திருவள்ளுவரின் கல்லறை சிரிக்கும்; சிவஞான முனிவரின் கல்லறை நகைக்கும்; மனோன்மணியம் சுந்தரனாரின் கல்லறை எள்ளும், பா. வே. மாணிக்கனாரின் கல்லறை இரங்கும்; மறைமலையடிகளின் கல்லறை இகழும்; சோமசுந்தர பாரதியாரின் கல்லறை ஏசும்; பாவேந்தர் பாரதிதாசனின் கல்லறை ஏங்கும். ஆகவே உனக்குத் தேவையான உண்மையான விடுதலை கிடைப்பதற்குமுன் நீ உன் முயற்சிகளில் ஒருசிறிதும் பின்னடைய வேண்டா.
இந்தியாவில் இக்கால் ஏற்பட்டிருக்கும் அரசியல் வீழ்ச்சி, உன் விடுதலை - எழுச்சிக்கு வித்திட்டிருக்க வேண்டும். உன்நிலை முன்னையினும் இப்பொழுது மிகவும் இரக்கத்திற்குரியது. ஓய்விருந்தால் இந்திய வரலாற்றைச் சற்றே திருப்பிப் பார். அரசர்கள்மூ அதிகாரத்திலிருந்தவர்கள் தங்களுக்குள் அடிபிடிச் சண்டைகள் நடத்தியவற்றிற்கு யார் காரணர்களாக இருந்திருக்கின்றனர். என்றுபார். அங்கு நடந்துள்ள வீழ்ச்சிகளெல்லாம் எந்தெந்தச் சூழலில் நடந்தன என்பதை உன்னிப்பாகப் படித்தறி. எடுத்துக்காட்டிற்கு ஒரு நிகழ்ச்சியைத் தருகின்றேன். நாகப் பேரரசின் வரலாறு உனக்குத் தெரிந்திருக்கும். அதை நிறுவியவர்கள் ‘நந்தர்கள்’ என்றழைக்கப்படும் ஒன்பது நந்தர்கள். அவர்கள் எண்பத்துமூன்று ஆண்டுகளாக இந்தியாவில் ஆரிய இனத்தை அலற அடித்தவர்கள். அவர்களின் ‘புராண’, இதிகாசங்களைக் கொளுத்தியவர்கள்! அவர்களுள் கடைசி அரசனான் 'நந்தன்' என்பவன் ஆரியர்களை மிகவும் அடக்கி ஆண்டான் என்பதற்காக, விஷ்ணுகோபன் என்னும் ஓர் ஆரியப் பார்ப்பனன் அவர்களைச் சந்திரகுப்தன் என்னும் மெளரியனைக் கொண்டு வீழ்த்தினான் என்பது வரலாறு. நந்தன் ஆரிய எதிரி. சந்திரகுப்தன் ஆரிய அடிமை. நந்தன் ஆரிய இறைமறுப்புக்காரன்; சந்திரகுப்தன் ஆரிய இனவழிப்பாட்டுக்காரன்,'நந்தன்' என்னும் அந்த சைசு நாக இனத்தின் கடைசிப் பேரரசன் மிகவும் ஆற்றல் வாய்ந்தவன்தான். அவனிடம் இருபதினாயிரம் குதிரைப் படைகளும், இருநூறாயிரம் காலாட் படைகளும், இரண்டாயிரம் தேர்ப்படைகளும், நான்காயிரம் யானைப் படைகளும் இருந்தன. அவனுக்கு அக்காலத்திருந்த தென்னக அரசர்களின் துணையும் இருந்ததாக வரலாறு உரைக்கின்றது. அத்தகைய வல்லானை, பேரரசனை, அவன் ஆரியர்களிடம் அடங்கவில்லை, மாறாக அவர்களை அடக்கியாண்டான். என்னும் ஒரே காரணத்திற்காக, சந்திரகுப்தன் என்னும் ஓர் அறியாச் சிறுவனைக் கொண்டு சூழச்சியால் வீழ்த்தியவன் ஓர் ஆரியப் பார்ப்பனன். அவன்தான் “விஷ்ணுகோபன்” அவன்தான் பிற்காலத்தில் 'சாணக்கியன்’ என்று தன் பெயரை மாற்றிக்கொண்டவன். அவன்தான் "கௌடில்யன்” அவன் எழுதிய அர்த்தசாத்திரத்தின் இறுதியில் காணப்படும் வரி வரலாற்றுப் புகழ்பெற்றது. அஃது இது. ("ஆரியர்க்கு வந்த) கொடுமைகளிலிருந்து புனித ஏடுகளையும் (சாத்திர புராணங்களையும்), போர் நூல்களையும் (ஆரியன் தந்திர நூல்களையும்) (ஆரியரை எதிர்க்கும்) நந்தரின் வயமாகிவிட்ட நாட்டையும் எவன் காப்பாற்றினானோ, அவனால் (அந்த விஷ்ணுகோபனால்) இந்த (அர்த்த) சாத்திரம் (புனிதநூல்) இயற்றப்பட்டது.”
(இந்திய வரலாறு: வின்சென்ட் ஏ. சுமித் : பகுதி.1, பக். 168)
அத்தகைய சூழ்ச்சியும் வஞ்சமும் கரவும் நிறைந்தவர்களாகியப் பார்ப்பனர்களும். அவர்களைச் சுற்றியுள்ள ஆரிய வெறியர்களும் அவர்களினத்தில் வந்த பெண்ணொருத்தியின் தலைமையைப் பார்ப்னர்களும் எவ்வாறு முட்டுக்கொடுத்துத் தாங்குகின்றனர் என்பதைத் தன்னுணர்வும் தன்மானமும் தன்னாண்மையும் மிக்கவர்கள் நன்கு அறிவர். பதவிப்பித்தர்களும், அதிகார மயக்குற்றவர்களும் கவலைப்படார். மறைந்த அறிஞர் அண்ணாவின் “ஆரியமாயை” நூலின் கருத்துகளை அவர் மூளையிலிருந்து மறைந்து போகுமாறு அல்லது செயலற்றுப் போகுமாறு செய்தவர்கள் ஆரிப்பார்ப்பனர்கள். இல்லையானால் அதுபோன்ற ஒரு நூலாசிரியரை ஆட்சிக்குக் கொணர்ந்த பயனை அந்த நூல் பெற்றிருக்க வேண்டும். வெளிப்புடையாகச் சொன்னால் அவர் காலத்தில் நம் குமுகாயக் கொள்கைக்கு உலை வைக்கப்பட்டது. இக்கால் நம் அரசியல் கொள்கையே ஆட்டம் கண்டுள்ளது. பக்தவத்சலமும் சுப்பிரமணியமும் முழு ஆரிய அடிவருடிகள் என்பதை வரலாற்றிலிருந்து எந்த நிலையிலும் அழித்துவிட முடியாது. அவர்கள் ஆரிய அடிமைகள் மட்டுமல்லர்; தமிழர்களின் பகைவர்கள். நாம் எதையோ எண்ணிக்கொண்டு எவருக்கோ போடும் பூமாலைகள் அப்படிப்பட்டவர்களின் கழுத்துகளில் போய் விழுகின்றன என்றால் நம் அரசியல் கொள்கையும் வீழ்ச்சியுறுங்காலம் நெருங்கிற்று என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? அத்தகைய சூழ்ச்சிக் குப்பைகளை இப்படியே கிளறிக்கொண்டே போனால், அவற்றில் நாம் தொலைத்த கொள்கை மணிகள் இன்னும் எத்தனையோ மின்னிக் கொண்டிருப்பதைக் காணலாம். எனவே இந்த நிலையில் நாம் செய்யவேண்டுவது என்ன என்பதை மட்டும் ஒரு முறை நினைவூட்டிக்கொள்ள வேண்டும்.
தமிழகம் தன்னாட்சி பெற்றாலன்றித் தமிழும் தமிழனும் நாளைக்கன்று, இன்னும் ஆயிரமாண்டுகள் போனாலும் இப்படியே தான் இருத்தல் முடியும். அவ்வப்பொழுது எவராகிலும் சில பக்தவத்சல சுப்பிரமணியங்கள் இருக்கத்தான் செய்வர். இவர்களின் காட்டிக் கொடுப்புகளின்றும், ஆரியவடவரின் சூழ்ச்சிகளினின்றும் என்று நாம் மீட்சியுற்று நம்மைக் காத்துக்கொள்கின்றோமோ, அன்றே நாமும் வாழ்கின்றோம் என்று பொருளாகும். உலகில் அன்று தொலைநோக்கிக்கும் அகப்பட்டிராத எத்தனையோ இனங்கள், நாடுகள் இன்று தொலைக்காட்சியில் மிளிர்ந்து கொண்டிருக்கின்றன. அன்று உலகளாவிப் பெருமையுற்ற தமிழினமும், தமிழகமும் தமிழும் இன்று தேய்ந்து மாய்ந்து வருகின்றன என்பதை உலகியலறிவுற்ற ஒவ்வொரு தமிழனும் உணர்வான். போலிகள் சிலர்தாம் பெருமைப்பட்டுக் கொள்வர். அவர் தம்மை மேலும் சீர்குலைக்க ஆரிய வடவரின் அதிகார வாய்கள் சிலதாம் அவர்களையும் அவர்களின் போக்கையும் சரி, உயர்ந்தது, சிறந்தது என்று புகழ் பாடிக் குழிபறித்துக் கொண்டிருக்கும். அவற்றின் ஒவ்வொரு பாராட்டும் நம்மை ஒரு படி கீழிறக்குகின்றது. அவற்றில் மயங்கிக் கிறங்குகிறான் தமிழன். இவன் இந்தத் தலைமுறையில் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளத் தவறுவானானால், இனி எந்தத் தலைமுறையிலும் தலையெடுக்க மாட்டான் என்பதை நெஞ்சில் பொறித்துக் கொள்ளுதல் வேண்டும். நம்மூச்சு தமிழக விடுதலை; நம் பேச்சு தமிழக விடுதலை நம் அரசியல் கொள்கை தமிழக விடுதலை; நம் அரசியல் கொள்கை தமிழக விடுதலை; நம் முழு வாழ்க்கையும் செலவிடப் பெற்றாகல் வேண்டும். தமிழனே! வீழ்ந்து கிடவாதே; விழி எழு! நட!
- தென்மொழி, சுவடி 7, ஓலை 8, 1969
பிரிவினை தவிர வேறுவழியில்லை!
மானமுள்ள தமிழர்களாகிய நாம் ஒன்றுபட வேண்டிய நேரம் வந்துவிட்டது. நாட்டின் அரசியல் அமைதி பார்ப்பனரால் சீர் குலைக்கப்பட்டுவிட்டது. ஆரியப்பார்ப்பான் ஒவ்வொருவனும் இன்று நஞ்சைக் கக்கத்தொடங்கிவிட்டான். அரசியல் நிலையிலும் குமுகாய நிலையிலும் அவன் தமிழர்களில் தனக்குகந்தவர்களைத் தேடிப்பிடித்துத் துணையாக்கிக்கொள்ள முனைந்துவிட்டான். பயிற்சிமொழிச் சிக்கல் என்ற பெயரால் பார்ப்பான் தன் இனத்தை ஒன்றிணைத்து வருகின்றான். தமிழர்களிடையே தப்பிப் பிறந்த சில வீடணப் பிரகலாதன்கள், பார்ப்பானின் வீடு தேடிப்போய், அவன் திட்டத்திற்குக் கைகொடுக்க முன் வந்து விட்டனர். தம் காலில் தாமே நிற்கத் தகுதியுடையவர்களாகக் கருதப் பெற்றவர்கள் பார்ப்பான் துணையுடன் தாமிழந்த பட்டம் பதவிகளுக்காகத் தமிழர்களின் அனைத்து நலன்களையும் அடிகு வைக்க முற்பட்டு வருகின்றனர். ஆம், பேராயக் கட்சியின் தன்னலமற்ற ஒரே தலைவர் என்று பெரியார் ஈ.வே.இரா.வால் பாராட்டப் பெற்ற காமராசர் கூடத் தம் பதவி வேட்கைக்காகத் தமிழர் நல எதிரியாகிய இராசாசியுடன் இணைந்து செயலாற்ற முடிவு செய்து விட்டார். 'கல்வியறிவற்ற கருப்புக் காக்கை' என்றும் "அரசியலிலிருந்தே கல்லால்லடித்துத் துரத்தப்பட வேண்டியவர்.' என்றும் எந்தக் காமராசரைப் பார்த்து இராசாசி நேற்றுவரை கூறிவந்தாரோ, அந்தக் கருப்புக் காக்கையுடன் இந்தப் பார்ப்பனக் கிழட்டுக் கழுகு இணையத் தொடங்கி விட்டது. 'காமராசும் நானும் ஒன்றே' என்று அறிக்கைமேல் அறிக்கை விட்டுத் தன் ஆராக் காதலைப் புலப்படுத்தி வருகின்றது.
'காமராசும் நானும் ஒன்றே' என்று கூறும் அந்த ஆரியக் கழுகின் மனநிலையைத் தமிழர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளுதல் வேண்டும். காமராசும் தாமும் ஒன்று என்றால் எதில் ஒன்று? என்ற கேள்விக்குத் தமிழர்கள் உடனடியாக விடை கண்டுபிடித்தல் வேண்டும். காமராசு என்னும் மரமேறிக் கள்ளிறக்கும் ஒருவரும் இராசாசி என்னும் பூணூல் அணிந்த ஆரியப் 'புரோகிதர்' ஒருவரும் ஒன்றாகிவிட்டனர் என்றால், அதற்கு என்ன பொருள் என்பதைத் தமிழர்கள் விளங்கிக்கொள்ளுதல் வேண்டும். இராசாசியின் குடும்பத்தில் காமராசர் பெண்னெடுத்துக் கொள்ளலாம் என்பது பொருளா? அல்லது இராசாசி இனத்துடன் காமராசரின் இனம் கொள்வினை கொடுப்பினை வைத்துக்கொள்ள ஒப்பந்தம் செய்தாயிற்று என்றும் கருமாதி கல்லெடுப்புகளுக்குப் ‘புரோகிதம்’ பண்ணலாம் என்பதும் பொருளா? அல்லது காமராசரும் பூணூல் அணிந்து கொண்டு ஐயர், ஐயங்கார் என்று பட்டங்கள் சூட்டிக் கொள்ளலாம் என்பதும் பொருளா?- இவற்றில் எந்தப் பொருளின் அடிப்படையில் இராசாசியும் காமராசும் ஒன்றாகி விட்டனர் என்பதைத் தமிழர் எனப்படும் ஒவ்வொருவரும் நன்கு அறிந்துகொண்டே ஆகல் வேண்டும்.
'இராசாசியும் காமராசரும் ஒன்றே' - என்று இராசாசியும் வாயினிக்கக் கூறிக்கொள்ளலாம்; காமராசரும் வயிறு குளிரக் கூறிக்கொள்ளலாம். ஆனால் 'அவர்கள் இருவரும் ஒன்றாக மாட்டார்கள்; அப்படி இருவரும் சேர்ந்து தமிழர்களை ஏதுமறியாப் பொதுமக்களை எப்படியோ ஏமாற்றத் திட்டமிட்டிருக்கின்றனர்' என்பதை மட்டும் அவர்களின் கரவான எண்ணங்களால் ஏமாறி நிற்கும் ஒருசிலர் தவிர, உண்மைத் தமிழர் ஒவ்வொருவரும் சரியாகப் புரிந்து கொள்வார் என்றே உறுதியாக நம்புகின்றோம். காமராசருக்கு வேண்டுமானால் இராசாசியின் நரித்தனம் புரியாமல் இருக்கலாம். அல்லது புரிந்துதான் இருக்கிறது என்று வெளிப்படையாகக் கூறும்ந்துணிவில்லாமல் இருக்கலாம். அல்லது, அவரை ஏதோ ஓர் அரசியல் காரணத்திற்காகத் துணைக்கழைக்கும் நம்பிக்கைக் குறைந்த தன்மையாகவும் இருக்கலாம், ஆனால் இங்குள்ள தன்மானத் தமிழர்கள் அவரைப்போல் புரியாதவர்களும் அல்லர்; துணிவற்றவர்களும் அல்லர் தன்னம்பிக்கை குறைந்த வர்களும் அல்லர். காமராசர் எப்படி தாம் இழந்த அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குத் தம் நேருக்கு நேரான அரசியல் எதிரியைக் கூட தோளுக்குத் தோளிணைய அணைக்க முற்பட்டாரோ, அப்படியே இங்குள்ள தன்மானத் தமிழர்களும், தாம் பெற்ற அரசியல் அதிகாரத்தைக் காப்பற்றிக் கொள்ள தத்தமக்குள்ள கருத்து வேறுபாடுகளையும் மறந்து, தோளோடு தோளிணைந்து போராடத் தெரிந்தவர்கள் என்று கூறிக் கொள்ள விரும்புகின்றோம்.
வாழ்க்கை என்பது எப்படி வெறுமையாக இல்லாமல் ஓர் இலக்கு நோக்கிய வாழ்க்கையாக இருக்க வேண்டும் என்று நாம் சொல்லி வருகின்றோமோ, அப்படியே அரசியல் என்பதும் வெறும் பதவிப் பேராட்டமாக இல்லாமல் அறவியலை நோக்கியே போக வேண்டும் என்பதும் நம் கொள்கை. ஆனால் அரசியல் என்றாலே காற்றடித்த பக்கம் சாயும் கயவாளித் தனந்தான் என்று காமராசரும் இராசாசியும் பொருள் கொள்வார்களானால், நாமும் அதே கயவாளித்தனத்தைச் செய்தேனும் இன்றுள்ள அரசியல் நிலைமையைக் காத்துக்கொள்ள முடியும் என்று கூறிக்கொள்ள விரும்புகின்றோம். கண்ணுக்குக்கண்' 'பல்லுக்குப் பல்' - என்பதை மோசே-காலத்து நெறியாக இதுவரை நாம் நினைத்து வந்தோம். ஆனால் அதுதான் கீதையிலே சொல்லப்பெற்றிருக்கும் அரசியல் மாமந்திரம் என்பதாக இராசாசி கூறுவாரானால், அதைக் கடைப்பிடிக்க இராசாசிக்கு மேல் நமக்கும் தெரியும்; அப்படிக் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நேரமும் தெரியும்.
ஆனால் இராசாசியும் காமராசரும் இணைந்து ஒன்று சேர்வதற்குரிய காரணத்தை இருவருமே தனித்தனியாகக் கூறுவதிலிருந்துதான், அவர்கள் இருவருக்கும் அரசியலைக் கைப்பற்றுவது நோக்கமில்லை என்றும் அவ்வாறு அரசியலைக் கைப்பற்றும் துணிவு அவர்களுக்கு இல்லை என்றும் நாம் கருத வேண்டியிருக்கின்றது. எனவே அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து ஒருங்கே நடுவணரசையும், தமிழக அரசையும் கைப்பற்றிவிடுவார்கள், அந்த நிலையில் நமக்கும் ஏதாவது கிடைக்காதா என்று நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு தமுக்கடித்துத் திரியும் அரசியல் தித்திருக்கக்காரர்களை அவ்வாறு எண்ணி ஏமாறி விட வேண்டா என்று எச்சரிக்கின்றோம்.
இனி, நானும் காமராசரும் ஒன்று. என்று இராசாசி கூறுவதற்குரிய அடிப்படை நோக்கம்தான் என்ன? அவர் அறிக்கைக் கூறுவது இது (தமிழ்ப் படுத்தாமல் அவரின் அம்மாமித்
தமிழிலேயே தருகிறோம் “முதலாவது என் எச்சரிக்கை நாஸ்திக வலையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். பகவானுடைய கருணை இருந்தால் தான் எல்லாக் காரியங்களும் வெற்றி பெறும். கண்ணுக்கு எட்டாத ஒரு பரம்பொருள் பிரபஞ்சத்தையெல்லாம் ஆண்டு வருகின்றது. அந்த ஆதர்சயமான பரம்பொருள் வியக்த ரூபமாக ஸ்ர்வாச்சர்யமயமான ஆகாயத்தில் நம்முடைய பூவுலகத்தைப் பொறுத்தமட்டில் கண்ணைக் கூசும் ஜோதியாக சூரியன் ஜொலிக்கிறான். பௌதீக விஞ்ஞானிகளும் கூட சூரியனுடைய இயல்பை முற்றிலும் அறிந்ததாக சொல்ல மாட்டார்கள். சூரிய பகவான் இந்த பூவுலகத்திலுள்ள ஜீவன்களுக்கெல்லாம் மரம், செடி, கொடி உள்பட எல்லா ஜீவராசிகளுக்கும் தாயும் தகப்பனும் ஆவான். நம்முடைய உயிருக்கு வேண்டிய எல்லாவற்றையும் தரும் தெய்வம் சூரியன். அந்தத் தெய்வத்தின் தேஜஸை தாம் தியானிப்போமாக. பக்தியுடன் தியானித்தால் அது நாம் உள்ளங்களை யெல்லாம் சுத்தமாக்கி நம்முடைய எண்ணங்களை யெல்லாம் நல்ல முறையில் நடத்தும். சூரிய பகவான்தான் நமக்குப் பலம், விவேகம், அன்னம், ஆரோக்கியம், எல்லாம் தரும் தெய்வம், இதுவே மகாமுனிவர் உலகத்துக்குத் தந்த காயத்ரீ மந்திரம். சூரிய பகவானுக்கு நாம் செலுத்தும் பக்தி. நம்முடைய நோக்கங்கள் எல்லாம் வெற்றி பெறச் செய்வதாக இந்த மாநாட்டில் சுருக்கமாக நான் சொல்லும் செய்தி என்னவென்றால் இது முதற்கொண்டு நானும் காமராசரும் ஒன்று என்பதை உணர்வீர்களாக தேசம் அபாய நிலையில் இருக்கிறது. நாம் இருவரும் தேசத்தின் நலனுக்காக ஒரு நுகத்தடியின் கீழ் வண்டியை இழுத்துச் செல்வோமாக. எங்களுடன் உழைப்பவர்கள் எல்லாருக்கும் என்னுடைய ஆசீர்வாதம்”
எப்படி, அறிக்கை? ‘சத்வேத சதஸுக்கோ சூரிய பகவானின்’ கோடியார்ச்சனைக் கும்பாபிஷேகத் திருவுத்ளலவத் 'திற்கோ’ விடுக்கப்பெற்ற 'ஸூர்ய நாம ஸங்கீர்த்தனம்' அன்று இது, ஓர் அரசியல் மூதறிஞர் (!) என்று விளம்பரப்படுத்தப்பெறும் பூணூல் அறுக்காத, ஒரு ‘சுத்த' வைதீக' ஆரிய 'பிராமண'ராகிய இராசாசி என்னும் ஓர் அரசியல் கட்சியின் வழிகாட்டி, அண்மையில் சேலத்தில் கூட்டப்பெற்ற அவரது கட்சி மாநாட்டிற்கு விடுத்த செய்தி!
இப்பொழுது சொல்லுங்கள். அவர் அரசியலைப் பற்றி ஏதாவது கவலைப்படும் செய்தி இதில் எங்காவது வருகின்றதா? அல்லது ‘இந்நாட்டு மக்களெல்லாம் அறியாமையிலும் வறுமையிலும் சிக்கித் தொல்லைப்படுகின்றனர். அவர்களை மீட்பதற்கு எவரும் முன்வரவில்லை. நானும் காமராசரும் இந்நாள் வரையிற் பிரிந்திருந்தோம், ஆனால் இன்றைய மக்களோ நாளுக்கு நாள் முன்னேற்றம் அடையாமலேயே இருக்கின்ற நிலையைப் பார்க்கின்ற பொழுது, நாங்கள் இருவரும் பிரிந்திருப்பது எனக்குச் சரியாகப்படவில்லை; எனவே ஒன்று சேர்ந்து, மக்களெல்லாரும் தாங்கள் தாங்கள் கற்பித்துக்கொண்ட குல, இன வேறுபாடுகளை அறவே நீக்கிக் கொள்ளவும், சம வாய்ப்புடன் கல்வி கற்கவும் நாட்டு நலன்களை ஒருமித்து நுகரச் செய்யவும் பாடுபடுவோம். அதற்கு முன்னோடித்தனமாக இதோ பாருங்கள் என் மேனியிலிருந்த பூணூலைக் கழற்றி யெறிந்துவிட்டேன், விட்டு வைத்திருந்த ஓரிரண்டு வெள்ளை மயிர்களையும் பிடுங்கி எறிந்து விட்டேன்: இன்றிலிருந்து நானும் காமராசரும் ஒன்றே! - என்ற முறையில் இவ்வறிக்கையில் கூறப் பெற்றிருக்கின்றதா? இல்லையே! பின் காமராசரும் தாமும் ஒன்று என்று மக்கள் ஏன் கருதிக்கொள்ள வேண்டும் என்று இராசாசி குறிப்பிட்டிருக்கிறார் என்று கேட்கின்றீர்களா? மக்களே, தேசம் அபாயநிலையில் இருக்கின்றது, அஃதாவது நாஸ்திக வலைவிரிக்கப் பெற்றிருக்கின்றது. அதில் சிக்கிக்கொள்ளாதீர்கள். அதில் சிக்காமல் இருக்க வேண்டுமானால், சூரிய பகவானைக் காயத்ரீ மந்திரத்தால் பக்தி செய்து உங்களைச் சுத்தமாக்கிக் கொள்ளுங்கள். காயத்ரீ மாந்திரம் தெரியவில்லை என்று கவலைப்படத் தேவையில்லை என் ஜாதிக்காரர்கள் அங்கங்கே இருக்கிறார்கள்; இதோ என் பக்கத்தில் உள்ள கருப்புக் காக்கை காமராஜை நான் காயத்ரீ மந்திரத்தால் ஆசீர்வாதம் செய்து சுத்தப்படுத்தி விட வில்லையா? அப்படியே சுத்தப்படுத்துவார்கள், நீங்களும் உடனே சோப்பு சீப்பு என்று நன்றாக போட்டு 'ஸ்நானம்' பண்ணாமலேயே சுத்தமாகி விடுவீர்கள் என்று பச்சையாகப் பொருள் படும்படியும் 'இத்தகைய நம் இனக்காப்பு வேலைகளுக்காகவே காமராஜை விபீஷணத் தலைவரைத் துணையாக்கிக் கொண்டுள்ளேன்; அவரும் இனிமேல் என் சொற்படி நடப்பதாக உறுதி, கொடுத்துள்ளார்’ என்றும் அவர்களுக்கு விளக்கியிருக்கிறார். அந்தப்பொருளைத் தவிர அந்த அறிக்கையில் வேறு என்ன எழுதப்பட்டிருக்கின்றது என்பதை எந்தச் சுதேசமித்திரனோவது, 'தினமணி'யாவது 'கல்கி'யாவது 'ஆனந்த விகட'னாவது 'துக்ளக்'காவது அல்லது எந்த வீபிடணப் பிரகலாதனாவது விளக்கிக் கூற முடியுமா?
இராசாசி என்ன 'சூரியபகவானு'க்குத் தாத்தாவா? அல்லது பெயரனா? அல்லது புரோகிதனா? சூரியன் 'ஜகஜ்ஜோதியாக' ஜொலிப்பது, மூதறிஞர் (!) இராசாசி சொல்லித்தான் உலகத்திற்குத் தெரியுமா? 'அவன்தான் இந்தப் பூலோகத்திலுள்ள ஜீவன்களுக்கெல்லாம், மரம், செடி கொடி உட்பட எல்லா ஜீவராசிகளுக்கும் தாயும் தகப்பனும் ஆவான்’ என்றால் அவன் பிள்ளைகளாக உள்ள நமக்குள் ஏன் பூணூல் தன்மையும் பூணூல்லற்ற தன்மையும்? பூணூல் போட்ட பார்ப்பனப் புரோகிதர்கள் எந்தச் சூரியனுக்குப் பிறந்தவர்கள்? போடாதவர்களு எந்தச் சூரியனுக்குப் பிறந்தவர்கள்? சூரியபகவான்தான் நமக்குப் பலம், விவேகம். அன்னம் ஆரோக்கியம் எல்லாம் என்றால், சீனனுக்கும், உருசியனுக்கும், அமெரிக்கர்க்கும் வேறு சூரிய பகவானா இவற்றைக் கொடுத்துவருகின்றான்? காயத்ரீ மந்திரத்தால் தினம் 'பக்தி செலுத்தித்தியானித்து' அவன் தேஜஸை பெறவிரும்பாத அவர்களுக்கு, இந்த இராசாசியின் தாத்தாவான சூரிய பகவான் எதற்காக நம்மை விடப் பலம், விவேகம், அன்னம் ஆரோக்கியம் முதலிய எல்லா நலன்களையும் தர வேண்டும்? நாள்தோறும் ஆயிரக்கணக்கான பிராமணப் 'புரோகிதர்கள் பல்லயிரக் கணக்கான நீர் நிலைகளில் நின்று கொண்டு காலையும் மாலையும் காயத்ரீ மந்திரத்தைச் சொல்லிப் பக்தியுடன் தியானிக்’கும் இந்நாட்டில் ஏன் அறியாமையும், பஞ்சமும், பட்டினியும் தாண்டவமாட வேண்டும்? சூரியத் தாத்தாவையே அளந்தறிய முற்படும் அறிவியல் காலத்தில் எதற்காக இந்தப் பித்தலாட்டமெல்லாம்? இராசாசிக்கு மூளைக்குழப்பமா என்ன? நாட்டின் மேலாளுநர் (Governer Genernaral) ஆக இருந்த ஒருவர், பச்சையாகப் புளுகி இந்த அளவில் மக்களை ஏமாற்றுவதா? இந்தக் கொடுமை எந்த நாட்டில் நடக்கும்? இவர் எப்படியோ உளறிக் கொட்டிக்கொண்டு கிடக்கட்டும்! இந்தக் காமராசருக்கு என்ன வந்தது? ஏன் அவருடைய மூளை இப்படி யெல்லாம் போனது? தெளிவான கொள்கையும், கருதியதைச் செய்யும் துணிவும், வல்லமையும் படைத்தவராகக் கருதப்பெற்று வந்த அவருக்கு ஏன் இந்த இழிநிலை வந்தது.?
'அவரவர் தலையெழுத்துப்படி படிக்கட்டுமே' என்று அன்று இராசாசி கூறியதற்கு வெகுண்டெழுந்து, "தலையெழுத்தா ? எவனதை எழுதினான் கொண்டுவா; நான் அதை மாற்றி எழுதுகிறேன்" என்று ‘67 தேர்தலில் கூட்டந்தொறும் முழங்கி வந்தவர் ‘1972 வருவதற்கு இரண்டாண்டு இருக்கையிலேயே, தம் தலையெழுத்தை மாற்றி யெழுதும்படி ஏன் இராசாசியிடம் போய்த் தலையைக் குனிந்து கொடுத்தார்? தூ..! இதுவும் ஓர் அரசியல் பிழைப்பா? இருபதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற வீடணப் பிரகலாதன்களான பக்தவத்சல, சுப்பிரமணியன்களை ஏற்கனவே தலையாய 'சீடர்’ களாக ஏற்றுக் கொண்டிருக்கும் இராசாசியிடமே காமராசரும் மூன்றாந்தரச் சீடராகப் போய்ச் சேர்ந்ததைப்போல 'நல்லடிமைக் கதை' தமிழக வரலாற்றிலேயே இல்லை என்ற குறைபாட்டைக் காமராசர் நீக்க முற்பட்டு விட்டாரா? இத்துணை இழிவோடு அரசியல் நடத்தி எந்த மக்களை வாழ வைத்து விட உறுதி பூண்டுள்ளது இவ்வுருவம்? இந்த அரசியல் முல்லை (கற்பு) மாறித்தனங்களை யெல்லாம் ஒருபுறம் ஒதுக்கிவிட்டு. இத்தகைய அரசியல் நாடகமாடிகள் இக்கால் தலையாய அரசியல் சிக்கலாக்கி வாழ்வு நடத்த முற்பட்டிருக்கும் பயிற்சி மொழித் திட்டத்தைப் பற்றி சிறிது பார்ப்போம்.
தமிழக அரசின் பயிற்சி மொழித் திட்டம், மிகத் தெளிவானதும் செப்பமானதுமாகும். இஃது ஏற்கனவே இருந்த பேராயக் கட்சியின் ஆட்சியிலேயே உறுதிப்படுத்தப் பெற்ற திட்டமேயாகும். இத் திட்டச் செயற்பாட்டில் எவ்வகைப் பதற்றமோ, உணர்ச்சி வயப்பட்ட நிலையோ இன்றுவரை ஏற்பட்டதே இல்லை. இதுபற்றிய இன்றைய அரசின் கொள்கை இது:
(1) தாய்மொழி (அஃதாவது தமிழ் நாட்டிற்கு) தமிழ், நாட்டு மொழி (அஃதாவது இந்தியாவில் மிகுதியான பெயர்களால் பேசப்படுவதாக நடுவணரசின் வெறியர்களால் விளம்பரப்படுத்தப் பெற்ற) இந்தி, உலக மொழியாகவும், அறிவியல் மொழியாகவும் உள்ள ஆங்கிலம் என்னும் மும்மொழித் திட்டம் தேவையற்றது. தமிழும் ஆங்கிலமுமே போதும் என்ற இரு மொழிக் கொள்கையே சரியான கொள்கை என ஏற்கப் பெற்றது. இக்கொள்கையையே மக்கள் ஏற்றுக்கொண்டனர். என்பதற்கு மும்மொழித் திட்டத்தை ஏற்றுக்கொண்ட பேராயக் கட்சியைத் தேர்தலில் தோல்வியுறச் செய்து மூலையில் அமர வைத்ததே சான்றாகும்.
(2) தாய்மொழியாகிய தமிழைப் பல வகையிலும் ஆங்கில மொழிக்கு ஈடான மொழியாக ஆக்குவதும், உலகத் தொடர்புக்குரிய ஆங்கிலத்தில் போதிய அளவு திறமையுள்ளவர்களாக எதிர்காலக் குடிமக்களாகிய மாணவர்களை ஆக்குவதும்.
(3) இதுவரை ஆங்கில மொழிவழியாகப் பயிற்றுவித்தமையைப் படிப்படியாக மாற்றித் தமிழில் அறிவியலையும் பிற துறைகளையும் கற்பிப்பது.
ஆங்கிலத்தில் திறமையுள்ள மாணவர்களும் மாணவர்கள் விரும்பினால் ஆங்கிலமொழியிலேயே கல்லூரிக் கல்வியைக் கற்பிப்பது, ஆங்கிலத்தில் திறமைக்குறைவான மாணவ மாணவிகள் மட்டும் அவர்கள் தாய் மொழியாகிய தமிழிலேயே கற்கலாம்.
இத்திட்டங்கள் தாம் தமிழக அரசின் பயிற்சிமொழித்திட்டம் இத்திட்டத்தில் எல்லாரும் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். கல்வி என்பது ஒரு மொழியைக் கற்பது அன்று ? ஏதாவது தாய் மொழி வழியே உலக அறிவைப் பெறுவதே கல்வி. எனவே உலகத்திலுள்ள எல்லாத்துறை அறிவையும் தமிழ் மொழியாகிய தாய்மொழி வழியாகவே கற்பிக்க வேண்டித் தமிழ்மொழியில் அதற்குரிய கலைச் சொல்லாக்கம் நடைபெற்றுக் கல்லூரிக் கல்விக்கான பாடநூல்களை ஆக்கும் வேலையில் கவனம் செலுத்தப் பெற்று, இத்திட்டம் நன்றாகச் செயல்பட ஊக்கமளிக்கப் பெற்று வருகின்றது. ஆங்கில மொழியில் வழிவழியாகத் திறம்பெற்று வருபவர்கள் இராசாசி இனத்துப் பார்ப்பனர்களே என்பதாலும், அவர்கள் ஆங்கிலக் கல்வி கற்று எத்துறையிலும் நம் தமிழ் மாணவர்களை விஞ்சக்கூடும் என்று கண்டதாலும் , தமிழ்வழிக் கல்வி கற்கும் தமிழ் மாணவர்கள் வாழ்க்கை நிலையில் பின் தங்கிவிடக் கூடாதே என்பதற்காகத் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு கல்லூரிக் கல்வி கற்றவர்களுக்கே, தமிழை ஆட்சி மொழியாகக்கொண்ட அரசினர் அலுவல் துறைகளில் முதலிடம் தருவது என்று அரசு முடிவு செய்தது. இதில் இராசாசி இனத்தார் கொதிப்படைவதிலேனும் கொஞ்சம் பொருளுண்டு. காமராசர் கொதிப்பதற்கு என்ன பொருள் என்று நமக்கு விளங்கவில்லை. ஆரியப் பார்ப்பனர்களே எல்லா மாநிலங்களிலும் எல்லா நாடுகளிலும் எல்லாத் துறைகளிலும் புகுந்து வாழ்நலன்களை நுகர்ந்து கொண்டு வருகையில், தமிழ்வழிக் கல்வி பயிலும் தமிழ் மாணவர்கள் தமிழ் நாட்டில் கூட வாழ்வதற்கு வழி செய்யாத நிலை எப்படிச் சரியாகும்? இதைப் புரிந்து கொள்ளாத தமிழ்மாணவர் சிலரும், பார்ப்பன மாணவர்களுடனும் காமராசர் போன்ற காட்டிக் கொடுப்பான்களுடனும் சேர்ந்து கொண்டு தங்கள் எதிர்கால வாழ்க்கைக்கே வளங்கொடுக்கும் இத்திட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும்? பதற்ற மடைந்துள்ள மாணவர்கள் நன்கு எண்ணிப்பார்க்க வேண்டுகின்றோம்.
இத்தகைய குழப்பங்களை யெல்லாம் நோக்குகையில் பார்ப்பனர்களுடன் இணைந்து வாழும்வரை - அவர்களின் தனி நலத்திலேயே முழுக் கவனமும் செலுத்திக் கோடிக் கோடியாகப் பொதுப் பணத்தைக் கொட்டி அழும் நடுவணரசுடன் இணைந்து போகும் வரை நம் மக்களுக்கென்று எந்தத் தனித் திட்டத்தையும் வகுத்துக் கொள்ளக்கூட நமக்கு உரிமை கிடையாது என்றே எண்ண வேண்டியுள்ளது. கோயில் பூசனை முறைகள் போன்ற ஒரு சில துறைகளில் ஏற்படும் திருத்தங்களுக்குக்கூட எதிர்ப்புக் காட்டும் இப்பார்ப்பனர் சலசலப்புக்கெல்லாம் இனி விடை சொல்லிக் கொண்டிருக்க தேவையில்லை என்றே நாம் கருதுகின்றோம்.
எனவே நம் தமிழக அரசினரும் தன்மானம் மிக்கத் தமிழர்களும் இனி தமிழகப் பிரிவினைக்குப் போராடித்தான் தீரல் வேண்டும் என்ற நிலை உருவாகிவிட்டது. எனவே தன்மானத் தலைவர் பெரியார் அவர்கள் விடுதலைப் போராட்டத்தை உடனடியாகத் தொடங்கி, எதிர்காலத் தமிழ் மக்களையேனும் முழுவுரிமை பெற்று தமிழ் நாட்டில் வாழச் செய்வதற்கு வழிவகுக்க முன் வருதல் வேண்டும் என்று தலைவணங்கிக் கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு போராடத் தொடங்கின் நாமும் எம்மைச் சார்ந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மறவர்களும் அவர்தம் கட்டளைக்குத் தலைவணங்கி, அவர் இட்ட கட்டளையை ஏற்று, எந்தமிழுக்காகவும் இந்நாட்டிற்காகவும் போராடுவோம் என்று சூளுரைத்துக் கூறுகின்றோம். அந்த நல்ல நாள் விரைவில் வருவதாகுக!
- தென்மொழி : சுவடி : 8, ஓலை 7, 1970
யாருமில்லை; நாங்கள்தாம்!
அண்மையில், தமிழகப்பிரிவினைப் பற்றித் தமிழ் நாட்டின் உள்முகக் கிளர்ச்சி ஒன்று சூடு பிடித்துக்கொண்டு வருகின்றது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாநிலத்தன்னாட்சி முறையை ஆங்காங்கே வலியுறுத்தி வருகின்றார். அவர் கொள்கைக்குச் சில கட்சிகளின் தவைர்கள் வலிவான எதிர்ப்புக் காட்டி வருகின்றார்கள். அந்த எதிர்ப்புகளைத் தற்காலிகமாகச் சரிகட்ட வேண்டியோ, வேறு கரணியம் பற்றியோ தமிழக முதல்வர். தாம் கேட்கும் மாநிலத் தன்னாட்சிக்குப் பல வகையான கொள்கை விளக்கங்களைக் கூறி வருகின்றார். அத்துடன் நம் நாட்டு ஒற்றுமைக்குத்தான் முதலிடம் கொடுக்க விரும்புவதாகவும் தன்னாட்சிக்கு அடுத்த இடந்தான் என்றும் எடுத்துக்கூறித் தாம் கேட்கும் மாநிலத் தன்னாட்சி என்பது தமிழகம் இந்திய ஆட்சியினின்று தனியாகப் பிரிய வேண்டும் என்னும் கருத்தில் கூறப்படுவதன்று மாநிலங்களுக்குத் தன்னிறைவான அதிகாரங்கள் வழங்கப் பெற்று. அவை நாட்டு முன்னேற்றத்திற்கெனத் தன்விருப்பமாகச் செயற்பட வேண்டும் என்னும் வகையில் கூறப்படுவதாகும் என்று தெளிவாக விளக்கியுள்ளார். அதுவுமன்றிப் பிரிவினைக் கோட்பாட்டைத் தம் கட்சி எப்பொழுதோ கைவிட்டுவிட்டது என்றும். எனவே நாட்டில் வேறு சிலரால் எழுதப்பப் பெறும் அத்தகைய கொள்கை முழக்கங்களுக்குத் தம் கட்சி பொறுப்பாகாதென்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இக்கொள்கைக் குழப்பங்களைக் கண்டஎதிர்க்கட்சிகள் சிலவும். இந்திய ஒற்றமை என்னவோ தம்மால்தான் கட்டுண்டுக் கிடப்பதாக எண்ணிப் பெருமிதப்பட்டுக் கொள்ளும் ஒருசில செய்தித்தாள்களும், முதலமைச்சரின் தன்னாட்சிக் கொள்கையைப் பகடி செய்வதுடன், நீறு பூத்தநெருப்பாய்க் கனன்றுக் கொண்டிருக்கும் தமிழக விடுதலையுணர்வையே இழித்தும் பழித்தும் பேசி வரத் தலைப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் மொழியடிப்படையில் தனித்தமிழ்க் கொள்கையையும் அரசியல் அடிப்படையில் தனித்தமிழ் நாட்டுக் கொள்கையையுமே தன் தலையாய கொள்கைகளாக கொண்டுள்ள தென்மொழி, மக்களின் கொள்கைக் குழப்ப இடிபாடுகளுக்கிடையில் சிக்கிய ஓர் உயர்ந்த மாந்த உரிமைக் கோட்பாட்டை விளக்கத் தன்னை அணியப்படுத்திக்கொண்டு முன்வர வேண்டியுள்ளது.
தமிழகத்தின் பிரிவினை எண்ணம் இன்று நேற்று ஏற்பட்டதன்று; ஏறத்தாழ கடந்த ஐம்பது ஆண்டுக்காலமாகவே, தமிழ் நலமும், தமிழர் நலமும் கருதி வருகின்ற தமிழகத் தலைவர்களிடையில் அரசியல் முறைப்படி தமிழகத்தை வடஇந்திய ஆட்சித் தொடர்புகளின்று துண்டித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உண்டு. அரசியல் கருத்துப்படியும். பொருளியல் அடிப்படையிலும், குமுகாய அமைப்பு படியும் அதற்குப் பெருத்த வலிவான கரணியங்கள் பல இருந்தன. இன்னும் இருந்து வருகின்றன. ஆனால் நாடு அப்போது வெள்ளைக்காரனின் கையில் இருந்ததாலும் ஒட்டு மொத்தமாக இந்தியாவுக்கே விடுதலை வேண்டும் என்ற வேட்கை நாடு முழுவதும் பரந்துபட்டிருந்ததாலும், தென்னிந்தியா வடவர் தொடர்பின்று தனியே பிரிக்கபட வேண்டுமென்ற கோரிக்கை வலியுறுத்தப்பெறாமல் வெறும் கருத்தளவிலே மட்டும் ஒப்புக்கொள்ளப் பெற்ற கொள்கையாக இருந்துவந்தது. அக்கொள்கைக்கு அரணாக நின்ற தூண்கள் தமிழகத்தும், ஆந்திரத்தும் கேரளத்தும் கன்னடத்தும் தம் கால்களை ஊன்றிக்கொண்டு நின்றன. அவை அனைத்தும் தங்கள் ஒட்டுமொத்த கொள்கைக்கு இட்டுக் கொண்ட பெயர் திராவிட நாட்டுப் பிரிவினை என்பதே ஆகும். ஆனால் காலச் சிதைவினாலும், காந்தியின் சூழ்ச்சியினாலும் வெள்ளைக்காரன் வடவர்களிடத்தும், முசுலீம்களிடத்தும் இந்தியாவையும் பாக்கித்தானையும் ஒப்படைத்து விட்டுப்போக வேண்டியானது. இதன் பின்னும் இக்கொள்கை மேலும் வலுப்பெற்றுத் தீப்பற்றி எரியலானது. தென்னாட்டு மக்களிடையே குறிப்பாகத் தமிழரிடையே இவ்வெண்ணம் பெரியார் ஈ.வே.இரா. அவர்களாலும் நெய்யூட்டி வளர்க்கப் பெற்றது. பாவேந்தரால் நாட்டுப் பண்ணும் முழங்கப்பெற்றது. ஆனால் இடையில் ஏற்பட்ட கருத்துச் சிதைவாலும், கட்சிக் குலைப்பாலும், திராவிட நாட்டுப் போர் முழக்கம் சிறிது சிறிதாகத் தேய்ந்து போனது, திராவிட நாட்டுப் பிரிவினைத் தீ கொழுந்துவிட்டு எரிந்த அந்த நிலையில் அறிஞர் அண்ணா முன்னறிவுடன் ஒரு தவற்றைக் செய்யாமலிருந்திருப்பபாரானால், இந்நேரம் தமிழர்கள் தனித்தமிழ்க் கொடிபறக்கும் தன்னுரிமைத் தமிழ் நிலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பர்; தம் நிலையிலும் பெருத்த முன்னேற்தைக் கண்டிருப்பர்.
ஆனால் தமிழர் இனத்தின் மறுமலர்ச்சி வரலாற்றில் ஏனோ தெரியவில்லை, இப்படியொரு சறுக்கல் ஏற்பட்டு விட்டது. அன்று ஏற்பட்ட சறுக்கலுக்குப் பின் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி அதுவும் தேய்ந்து சிற்றெறும்பாகியதைப் போல் திராவிட நாட்டு விடுதலை முழக்கம், தமிழ்நாட்டு விடுதலை முழக்கமாகத் தேய்ந்து இக்கால் மாநிலத் தன்னாட்சிக் கொள்கையில் வந்து நின்று கொண்டுள்ளது. இனி இந்தச் சிற்றுெம்பும் கூட மேலும் தேய்ந்து ஒரேயடியாக இல்லாமல் போய் விடுமோ என்று எண்ணும் அளவிற்கு, அக்கொள்கைக்குப் பல விளக்கவுரை, விருத்தியுரைகள் சொல்லப் பெற்று, இறுதியில், “நாங்கள் கேட்பது நாட்டுப்பிரிவினை அன்று; அதிகாரப் பிரிவினையேயாகும்” என்று கருத்துரை கூறப்பெறுகின்றது. இனி, இன்னுஞ் சில ஆண்டுகள் போகுமானால் இக்கொள்கையும் போய், நாங்கள் கேட்பது அதிகாரப் பிரிவினை கூட அன்று வருமானப் பிரிவினைதான் என்று முடிவுரை கூறும்படி ஆனாலும் ஆகலாம். அதனால்தான் எதற்காகவோ தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தம் தோளில் சுமக்கப்படாதென்று கூறுகின்ற தன்னாட்சிக் கொள்கைளை, அஃதாவது பச்சையாகச் சொன்னால் பிரிவினைக் கொள்கையை (பிரிவினைத்தடைச் சட்டம் நடைமுறையில் உள்ளதென்பது எனக்குத் தெரியும்) தாம் அடிக்கடி போய் வருகின்ற வெளி நாட்டில் எங்காகிலும் அல்லது பறந்து வரும் வழியில் உள்ள கடல் நீரில் எங்காவது தூக்கியெறிந்து விடாமல், எங்கள் தோள்களின் மேல் இறக்கி வைத்துவிட்டு, அச்சமின்றி எங்கும் எவரிடத்தும் எதற்காகவும் சொற்கோட்டமும் உடற்கோட்டமுமின்றிப் போய் வரலாம். என்று வறிக்கொள்ள விரும்புகின்றோம். இந்நிலையில் உயர்திரு. கலைஞர் அவர்களை நான் ஏதோ பகடி பண்ணுவதாக எண்ணிக் கொள்ளக் கூடாது. உண்மையிலேயே சொல்கின்றேன் அவருக்கிருக்கும் பொறுப்பு பெரிது. மேலும் இதுவரை ஆற்றிய பணியும் (!) மிக மிகப் பெரிது அவருக்கு மேலும் பல திறமைகள் இருக்கலாம்! ஆனால் அவற்றை யெல்லாம் செயற்படுத்த நேரமிருக்குமோ இருக்காதோ, எதற்கும் இந்தப் பொறுப்பை அவர் எங்களிடம் ஒப்புவித்துவிட நேரடியாகவே வேண்டிக் கொள்கிறேன். “வேறு எவரெவரோ எழுப்புகின்ற பிரிவினைக் கூப்பாடுகளுக்கெல்லாம் எதிர்க்கட்சிகாரர்களும் மக்களும் எங்கள் மேல் பழி சுமத்துகின்றார்கள்; நாங்கள் பிரிவினைக் கொள்கையை என்றோ விட்டு விட்டோம்; அதில் ஐயப்பட வேண்டா என்று கலைஞர் அவர்கள். இலை மறை காயாகப் பேசியதைப் பார்த்து என் போன்றவர்கள் மனம் மிகவும் புழுங்கிச் சாகின்றது. இதில் என்ன தயக்கம் - இரக்கம் காட்ட வேண்டி வந்தது?
இந்நாட்டில் பிரிவினைக் கொள்கையை உடும்புப் பிடியாக விடாமல் கூறிவருபவர் தமிழர் தந்தை பெரியார் ஒருவர்தாம். அடுத்தபடி ஆதித்தனார். ஏதோ வருமானத்திற்காகக் கொஞ்ச நாட்கள் கூப்பாடு போட்டுப் பார்த்தார். அதன் பின் கூப்பிட்ட குரல் வந்த பக்கம் போனவர் இது வரை திரும்பவே இல்லை; குரல் கொடுக்கவும் இல்லை. அவருக்கடுத்தபடி தமிழ்நாட்டைப் பிரித்தே ஆக வேண்டும் என்று முரண்டு பிடிப்பவர்கள் நாம்தாம்! அஃதாவது தனித் தமிழ்க் கொள்கைக்காரர்கள் தாம் பின் வேறுயார் இருக்கிறார்கள்? எங்களை எதற்குப் பெரியவர்களாகக் காட்டவேண்டும் என்பது கலைஞர் கருத்தோ என்னவோ? ‘யாரோ’ என்று சொல்லியிருக்கிறார் எஃது எப்படியானாலும் இங்குள்ள ஆட்சியாளர்கள் சிலர் சொல்வதைக் கேட்டும், பிரிவினைக் கொள்கையால் இந்தியாவுக்கே ஏதோ பெரிய கேடு வந்து விட்டதைப் போலும், இங்குள்ள தேசியத் (1)தலைவர்கள் சிலர் (அதுவும் திருவாளர் பக்தவத்சல, சுப்பிரமணியன்களை நினைத்தால் எனக்குச் சிரிப்பாக வருகிறது. ஐயோ, பிரிவினையா? 'ஆச்சா, போச்சா' என்று இருப்புச் சட்டியில் ஊற்றிய எண்ணெய் போலவும், எண்ணெயில் இட்டபலகாரம் போலவும் கொதிக்கவும் குதிக்கவும் செய்வதைப் பார்த்தால், இந்திராகாந்தி அம்மையார் யாரங்கே பிரிவினை கேட்பது? ஓ! மானெக்சா... ஓடிப் போய் அந்த முண்டத்தைப் போய்க் கட்டியிழுத்து வந்து பிண்டம் பிண்டமாக அறுத்துப் பிழிந்து எண்ணெயாக்கி எனக்குத் தலை முழுக்காட்டுங்கள்! என்று சொல்லி விடுவது போல ஏன் அஞ்சி அஞ்சித் தொலைக்க வேண்டும்? அப்படியே சொல்லி விட்டால் தான் என்ன கேட்டுப் போகிறது? இக்கேடு கெட்ட ஆட்சியில் உள்ளதை விட இந்திராகாந்தி தலைக்கு எண்ணெயாகப் போனாலும் நல்ல பயனில்லையா? அதுதான் நாங்களே - அதாவது நானே முந்திரிக் கொட்டைத்தனமாக இதைக் கூறவேண்டி வந்தது.
“ஐயா, பொதுமக்களே! (பழைய பாணியில் சொல்வதானால் மகாசனங்களே!) இந்தப் பிரிவினை கிரிவினை என்று கூறுவதுதெல்லாம் வேறு யாருமில்லை’ங்க, நாங்க, தாம் ஆமாம்; உறுதியாகச் சொல்வி விட்டோம். இதிலே ஒளிவு மறைவுக்கே இடமில்லை’ங்க” இங்கு ஒரு வேண்டுகோள்: இந்த என் மனச் சான்றுக்கு வேறுபாடில்லாத கருத்தைத் தினமணி சிவராமன்களும், துக்ளக் இராமசாமிகளும், இன்னும் பேராயக் கட்சித் தேசி.....யங்களும் அப்படியே மொழி பெயர்க்காமல் இந்திரகாந்திக்கு அனுப்பி வைக்கப்பார்களாக)
அடுத்தப்படியாக இன்னொன்றையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். நான் அஃதாவது நானும் என்னை (அந்த ஒருவகையிலாகிலும்) பின்பற்ற விரும்புகிறவர்களும் (அப்படி யாராவது இருத்தால், அப்படி இல்லாத விடத்து ‘நான் ஒருவனே’ என்று பொருள் பண்ணிக் கொள்ளும்படி) எதிர்காலத்தில் என் மேல் வழக்குப் போட்டோ போடாமலோ மன்றில் கொண்டுப் போய் நிறுத்தி உசாவப் போகும் நடுவருக்குக் கூறிக் கொள்கின்றேன்) விரும்புவது தமிழக விடுதலையே. (இதில் யாரும் விருத்தியுரை விளக்கவுரை எதிர்பார்க்க வேண்டா) பச்சையான (காய்ந்து போன அன்று) தமிழகப் பிரிவினையே! அதற்குக் காரணங்கள் இவை:
முதலில், பிரிந்து போகும் உரிமை என்றன் பிறப்புரிமை. குடியரசு அமைப்பில் நானும் ஒரு குடி மகன். நானும் ஓர் ஆட்சியின் உறுப்பு. எனக்கு இந்த இந்திய நாட்டு ஆட்சியினின்று பிரிந்து போக வேண்டும் என்ற எண்ணம் வந்ததற்கே இந்த அரசு நான் குற்றவாளி. என்னைக் காட்டாயப்படுத்தி ஓர் ஆட்சியன் கீழ் (அது குடியரசாட்சியாக இருந்தாலும் சரி; வேறு எந்த ஆட்சியாக இருந்தாலும் சரி) என்னைக் குடிமகனாகச் செய்து கொள்ள, என்னைப் போல் உள்ள எவருக்கும் உரிமை இருக்கக்கூடாது.
இரண்டாவது, இவ்விந்திய ஆட்சி ஒரு சரியான குடியாட்சி அமைப்பில் அமைக்கப்பெற்ற ஆட்சியன்று. இங்குள்ள குடிமக்கள் எல்லாரும் வரலாற்று முறையாகவும் இன முறையாகவும் மொழி வழியாகவும், தாங்கள் அனைவரும் சமம் என்பதை ஒப்புக் கொள்ளவில்லை. ஒவ்வொருவரும் தங்களை வேறு வேறாகவே இன்னொருவருக்குத் தங்களை உயர்த்தியோ தாழ்த்தியோ, ஆண்டான் என்றோ அடிமை என்றோதான் இன்னும் கூறிக்கொள்கின்றனர். இவ்வாறு வரலாறு, இனம், சமயம், மொழி முதலியவற்றின் அடிப்படையாக உள்ள ஏற்றத்தாழ்வுகளை அறவே களைந்தெறியாமல், அரசியல் அமைப்பு ஒன்றினால் மட்டும் அனைவரும் சமம் என்பதும்; இது குடியரசு என்பதும், ஒரு பெரிய அரசியல் ஏமாற்று ஆகும். இதை என் மனச்சான்று சரியான ஆட்சியமைப்பாக ஒப்புக்கொள்ள மறுக்கின்றது.
மூன்றாவது, இந்நாட்டு மக்களின் ஒட்டு மொத்தமான மூடநம்பிக்கைகளுக்கு என்னால் கட்டுப்பட முடியாது. நான் இவர்களில் ஒருவன் என்பது என் விரும்பமின்றியே பறைசாற்றப்படுகின்றது. அப்படி என்னையறியாமலேயே நான் இவர்களைப் போலப் பகுத்தறிவற்றவனாகவும், திருந்தாத பண்பற்ற மாந்தனாகவும் ஒப்புக்கொள்ளவேண்டியிருக்கின்றது. நான் அல்லது என்னைப் போல் உள்ள தனிப்பட்ட ஒருவன் எவ்வளவுதான் அறிவாலும் பண்பாட்டாலும் உயர்ந்திருந்தாலும், என்னையும் சமய, குலப் பிரிவினைகளால் நெருக்குண்டு அறியாமைச் சேற்றில் அழுந்திக் கிடக்கும் இவர்களுடன் ஒப்பவைத்துக் கூறிக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு நான் உட்பட வேண்டியிருக்கிறது. எனவே இம்மக்களிலிருந்து நான் பிரிந்து போகவே விரும்புகின்றேன். அல்லது என்னைப் போல் தன்னுரிமை விரும்பும் மக்களுடன் நான் ஒருங்கிணைய விரும்புகின்றேன். இப்படியிருப்பவர்களின் தொகைக் கேற்ப, ஒரு நிலப்பகுதியை இந்நாட்டிற்குள்ளேயே என் போன்றவர்களுடன் எங்கள் வாழ்விடமாக ஒதுக்கிக் கொள்ளவும் விரும்புகின்றேன்.
நான்காவதாக, நான் சார்ந்துள்ள இந்நாட்டுச் சட்டத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. இச்சட்டம் இங்குள்ள என் போன்ற மக்கள் யாவருக்கும் பொதுவாக இயற்றப் பெற்ற சட்டம் என்பதை ஒப்புக்கொள்ள முடியாது. இதை இயற்றிய ஆறு பேர்களில் நான்கு பேர் இந்நாட்டின் மிகச் சிறுபான்மையராகவும் இங்குள்ள மிகப்பெரும்பான்மை மக்களைக் காலங்காலமாய் ஏமாற்றிக் கொண்டும் அடிமைப்படுத்திக் கொண்டும். அவர்களுக்குள் மேலும் மேலும் ஒற்றுமையும் முன்னேற்றமும் ஏற்படாதவாறு மடமைப் படுத்திக் கொண்டும் உள்ள ஆரியப் பார்ப்பன அஃதாவது பிராமண இனத்தின் காவலர்களாவர். அவர்கள் தங்கள் இனத்தைக் காத்துக்கொள்ள வேண்டியும் பிற இனத்தவர்களைத் தங்கட்கு அடிமைப்படுத்திக் கொள்ள வேண்டியும் தங்கள் முன்னோர்களால் எழுதிவைக்கப் பெற்ற வேத, புராண, இதிகாசங்களைப் போலவும் தங்களுக்கு முற்றும் உகந்ததும் இந்நாட்டிலுள்ள என் போன்ற பிறரை முற்றும் வஞ்சிப்பதும் ஆன 'மனு தரும சாத்திரம்' என்ற வருணாசிரம தர்மக்கோட்பாட்டு நூலை அடிப்படையாக வைத்தும் செய்து கொண்ட நூலே இந்நாட்டில் சட்டம் என்ற பெயரில் நடைமுறைப் படுத்தப்படுவதாக நான் ஐயுறுகின்றேன். அந்த ஐயத்தைப் போக்கும் வரையில் என் வாழ்வுரிமையில் தலையிட இந்த அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது. எனவே நான் நாட்டுப்பிரிவினையை வரவேற்கிறேன். ஐந்தாவதாக, என் தாய்மொழியில் எவ்வளவோ சிறப்புகளிருந்தும், அஃது இந்நாட்டின் தேசிய மொழிகளுள் ஒன்று என்று ஏற்கப் பெற்றும் இம்மொழியில் கல்விகற்றவர்கள் இந்நாட்டில் எங்கும் சென்று அரசினர் பணி செய்ய வாய்ப்பில்லாமல் இருக்கின்றனர். இதைவிட இன்னும் அவலமான நிலை என்னவென்றால், இம்மொழியில் படித்தவர்கள் இப்பொழுது நான் வாழும் பகுதியும், என் தாய் மொழி வழங்கும் மாநிலமும் ஆகிய தமிழ்நாட்டில் கூட அரசினர் பணியேற்பதற்கான வாய்ப்புகள் இந்நாட்டு அரசியல் சட்ட அமைப்புகளால் உறுதிப் படுத்தப்பெறவில்லை. இதற்கு நேர்மாறாக இந்த நாட்டின் வடமாநில மொழியான இந்திக்கும் வேற்று இனமொழி படித்தவர்களுக்குமே அரசு அலுவலங்களிலும் பிற துறைகளிலும் வாய்ப்பு ஏற்பட்டு வருகின்றது. இதை என் போன்றவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. இவ்வகையில் மேலோங்கி நிற்கும் இந்தி வல்லாண்மையை 1937 இலிருந்து போராடியும் இன்னும் அகற்ற முடியவில்லை. இங்குள்ள சட்டமன்ற, பாரளுமன்ற உறுப்பினர்களும் இவ்வகையில் என்ன முயற்சி செய்தும் ஒரு முடிவை ஏற்படுத்த முடியவில்லை. என்நாடு அஃதாவது நான் வாழும் இத் தமிழ்நாடு, இவ்விந்திய நாட்டிலிருந்து முழு விடுதலை பெற்றாலொழிய இச்சிக்கலுக்கெல்லாம் வழி பிறக்காதாகையால், நான் தமிழகப் பிரிவினையை முழு மூச்சோடு வற்புறுத்துகின்றேன்.
ஆறாவதாக, இவ்விந்தியக் குடியரசாட்சி மத, இன வேறுபாடற்ற ஆட்சியாகும் என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. பெரிய ஆலைகள் திறக்கப்படும் பொழுதும், புதிய புதிய கப்பல்கள், வானூர்திகள், புகைவண்டிகள் முதலியன செயலாற்ற விடுவதற்கு முன்னும், அவற்றிற்கு அரசுச்சார்பில் பூசை வழிபாடுகள் முதலிய மூடத்தனமான செயல்களைக் கைக்கொள்ளுவதிலும், தேவையற்ற சாதி, சமய, புராண, இன ஆரவாரப் பண்டிகைகளைத் தேசியத் திருவிழாக்கள் என்றாக்கி அவற்றிற்கு விடுமுறைகள் விடுவதன் வழி ஏராளமான பொருட்செலவுகளையும், பொழுதுச் செலவுகளையும் வருவித்து, இந்நாட்டு மக்களை மேலும்மேலும் ஏழைகளாகவும் - அடிமைகளாகவும் மூடர்களாகவுமே வைத்திருக்க விரும்புகின்றஅல்லது வைத்திருப்பதைத் தவிர வேறு வகையற்ற ஆட்சியை எப்படி மதவேறுபாடற்ற குடியாட்சி என்று ஒப்புக்கொள்ள முடியும்”; எனவே இத்தகையப் பழைய அடிமைப் பழக்க வழக்க ஆட்சியினின்று என்னையும் நான் பிறந்த மொழி வழங்கும் இந்நாட்டையும் வேறு பிரித்து, அரசியல் பொருளியல், ஆகியவற்றில் சமத்துவம் வாய்ந்ததும், குமுகாயவியலில் சாதி, சமய, வேறுபாடற்ற பொதுமை நிறைந்ததும், மொழியுரிமை பெற்றதும் பண்பாட்டில் தலைசிறந்ததுமான ஓர் ஆட்சியை நிறுவிக்கொள்ள விரும்புகின்றேன்.
ஏழாவதாக, ஒரு பெரிய நிலமாக இருப்பதாலும், இந்தியா விடுதலை பெற்று இருபத்தைந்து ஆண்டுகளாக, பெரும்பாலும் வடவர்களே ஆட்சியின் தலைமைப் பொறுப்பைக் கைக்கொண்டு வருவதாலும், ஆட்சி வரலாற்றில் சிறந்ததும், மூத்த நாகரிகம் உடையதும் முதன்மையான மொழிச்சிறப்புடையதும் ஆகிய என் தமிழினத்திலிருந்து ஒருவருக்கும் இதுவரை ஆட்சியின் தலைமைப் பதவியை விட்டுக் கொடுக்காமல் ஏமாற்றிவருவதாலும், பொருளியல் நிலையில் இன்னும் என் தாய் மாநிலம் முன்னேறாது இடருற்று வருகின்ற இந்த அவல நிலையை மாற்ற, இவ்விந்திய நாட்டினின்று நாங்கள் விடுதலை பெற்றேயாக வேண்டும் என்ற முழக்கத்தை எப்பொழுதும் வற்புறுத்த அணியமாக உள்ளோம் என்பதை யாவர்க்கும் வெளிப்படையாக மிக மிகப் பச்சையாகக் கூறிக்கொள்கின்றேன். இக்கோரிக்கை வங்காள தேசம் போல் போராடித்தான் நிறைவேற்றப் படவேண்டும் என்பதும், வழக்காடியும் பெற்றுக் கொள்ளலாம் என்பதும் இவ்விந்திய ஆட்சியினரையும், காலத்தையும், இடத்தையும் பொறுத்ததாகும் என்று கூறி முடிக்கிறேன். அதுவரை என் தோள்கள் அமைந்திருக்குமாக!
- தென்மொழி, சுவடி :9, ஓலை 9-10, 1972
தமிழகப் பிரிவினை தேவையே!
ஒருவரோடொருவர் சேர்ந்து வாழ்வது எப்படி ஒரு மெய்ப்பொருளோ, அப்படியே பிரிந்து வாழ்வதும் ஒரு மெய்ப்பொருளே! சேர்ந்து வாழ்வதால் நன்மைகள் சில பெறுவதைப் போலவே, பிரிந்து வாழ்வதிலும் நன்மை யுண்டு. இவ்விடத்தில் 'சேர்ந்து' என்பதற்கு எப்படி 'வேற்றுமை யற்ற முறையில் இணைந்து' என்று பொருள் கொண்டுவிடக் கூடாதோ, அல்லது அவ்வாறு மட்டுந்தான் பொருள் படுத்திக் கொள்ளக் கூடாதோ, அப்படியே ‘பிரிந்து’ என்பதற்கும் 'பகைமையுற்ற நிலையில் வேறுபட்டு' என்று பொருள் கொண்டுவிடக் கூடாது; அல்லது அப்படி மட்டுந்தான் என்று பொருள்படாது. தனிமொழி, பண்பாடு, வரலாற்று அடிப்படை, குமுகாயப் பொருளியல் அரசியல் அடிப்படைகளே ஓர் இணைந்துள்ள நாட்டின் பகுதி மக்களைப் பிரிவினை எண்ணத்திற்குத் தூண்டுகின்றன. இணைந்து வாழ்வதற்கும் அவையே அடிப்படைகளாகின்றன. இவ்வடிப்படைகளால் இணைப்பு நிலைக்கு எப்படிச் சார்பு நிலைக் கரணியங்கள் காட்ட முடியுமோ அப்படியே அதே அடிப்படைகளைக் கொண்டு பிரிவு நிலைக்கும் சார்பு நிலைக் கரணியங்கள் காட்ட முடியும். இப்படிப்பட்ட நிலையில் பிரிவு வேண்டும் என்ற எண்ண. எழுச்சிக்குத்தான் அடிப்படைக்கான வேண்டுமேயன்றி, பிரிந்து போகக்கூடாது என்பதற்கான அடிப்படையை எவரும் ஆராய்தல் தேவையில்லாதது. மாந்தனின் தனிப்பட்ட ஒரு நிலைப்பாடு என்பது வேறு, ஒரு நாட்டின் தனிப்பட்ட ஒரு நிலைப்பாடு என்பது வேறு. இரு வேறுபட்ட அடிப்படை அமைப்புகள் அமைந்த இரு நாடுகளோ, இனங்களோ ஒன்றோடு ஒன்றை இணைப்புச் செய்து கொள்ள விரும்புவதால் எப்படிச் சிலர்க்கு சில நன்மைகள் விளையத்தான் செய்யுமோ, அப்படியே அவை இரண்டும் தம்முள் தனித்தனிப் போக்குகளை ஏற்படுத்திக்கொள்ள முனைவதாலும் சில நன்மைகள் விளையத்தான் செய்யும். முன்னைய நன்மைகளைக் காட்டிப் பின்னைய நன்மைகளை மறுப்பது அறியாமையாகும். அவ்வறியாமை நல்ல அரசியல் அறிவாகாது; மாந்த மெய்ப்பாட்டியலுக்கு ஒத்ததாகவும் கருதப்பெறாது.
பெரும்பாலும், இரு வேறு நிலப்பகுதிகளின் இணைப்பு நிலைக்கு எப்படி வரவேற்பு இருக்குமோ, அப்படியே பிரிவு நிலைக்கும் வரவேற்பு இருக்கத்தான் செய்யும். இதில், இரு நிலைகளையும் நன்கு விளங்கிக் கொண்டு செயலாற்றுவதில்தான் அறிவு துணைநிற்க வேண்டுமே தவிர, மட்டையடித்தனமாக ஒன்றிற்காக ஒன்றைத் தவிர்த்து விட முயற்சி செய்வதற்கு அறிவுத் துணை தேவையே இல்லை. குருட்டுத்தன்மை என்பது அறிவு நிலையில் இருசாரார்க்கும் பொதுவே! ஆள்பவனுக்கு அந்நிலை குறைவாக இருக்குமென்றோ, ஆளப்பெறுவோர்க்கு அது மிகுந்திருக்கு மென்றோ கருதுகின்றவன் காலப்போக்கில் புறந்தள்ளப் பட்டு விடுவது இயற்கை. பிரிவு என்பது பகையாகாது: இணைப்பு என்பது நட்பும் ஆகிவிடாது. எனவே பிரிவு என்றவுடன் வெகுண்டெழுக் கூடியவனோ, முகத்தைச் சுளிப்பவனோ, இணைப்பு நிலைபற்றிப் பேசுவதற்குத் தகுதியற்றவனாவான். தாயை மகள் பிரிவதற்கும் காலம் ஒன்று உண்டு என்பதையும், குஞ்சைத் தாய் தனித்து வாழ விடுவதற்கும் அடிப்படை உண்டு என்பதையும் அரசியல் மூடர்கள் எண்ணிப் பார்த்தல் வேண்டும். பிரிந்து போவதைத் தடுப்பவன் ஒருகால் இணைந்திருக்கும் நிலையினால் மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ அந்நிலையினால் ஊதியம் பெறுவோனாகத்தான் இருக்க வேண்டும், தாய்மைப் பாசத்துடன் பிரிவைத் தடுப்பவன் ஓரின மக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் அறியாமையைச் செய்கின்றான். தனி மாந்த நிலையிலும் பொதுமாந்த அல்லது குமுகாய நிலையிலும் பிரிவு என்பதையும் 'இணைப்பு’ என்பதையும் ஒரே பொருளுடைய சொற்களாகக் கருதிக்கொள்ளக் கூடாது. அதனால் பிழைகளும் கடுமையான விளைவுகளுமே எஞ்சும்.
இவ்வுலகம் தோன்றியதிலிருந்து தன்னுடன் இணைந்துள்ள ஒரு நாட்டைப் பிரிந்து போவதற்கு மன நிறைவோடு இசைவளித்த வேறொரு நாடு இருந்ததே இல்லை. அந்த நாடு தன்னொடு சேர்ந்திருப்பதால் தன் நாட்டுக்கு ஏதோ ஒரு வகையில் இழப்பு என்பதை உணர்ந்தாலன்றி, சேர்ந்துள்ள நாட்டின் நன்மைக்காக. தனிநிலைக் கோட்பாட்டின்படி உரிமைக்கு ஒப்பிய நாடோ, ஒரு தலைவனோ முன்னறிவோடு நடந்து கொண்டதாக இன்று வரை வரலாறு இல்லை. ஒவ்வொரு நிலையிலும் கண்ணீரும் குருதியும் சிந்தப் பெற்றுத்தான் ஒரு நாட்டின் வல்லதிகாரத்தினின்று அதன் பகுதி நாடுகள் விடுபாடு கொண்டிருக்கின்றன. இந்நிலைக்கு மாந்த முன்னறிவோடு ஒப்புதல் தரக்கூடிய பேரறிஞன் ஒரு நாட்டின் தலைவனாக இருந்ததில்லை, என்றும் அதனாலேயே ஒரு நிலத்தில் பல கொடிகள் அடுத்தடுத்துப் பறந்திருக்கின்றன; கிழித்தெறியப் பட்டிருக்கின்றன. இப்பொது மெய்ப்பாட்டியல்களின் அடிப்படையில் தான் தமிழகப் பிரிவினையை விளங்கிக் கொள்ளல் வேண்டுமேயன்றி, மனச்செருக்குடனோ அறிவுச்செருக்குடனோ ஆளுமை அதிகாரச் செருக்குடனோ இச் சிக்கலைத் தீர்க்க முனைவது யாகியாக்கானின் மூடத்தனத்தைப் போன்றது; அயூப்கானின் அகங்காரத்தைப் போன்றது; சார்மன்னனின் கொடுமையைப் போன்றது. அத்தகையோர்க்கு இத்தகு மெய்ப்பாட்டியல் (உண்மைக்கூறுபாடு) களால் விடை சொல்லிக் கொண்டிருக்கத் தேவையில்லை; வேறு வகை மெய்ப் பாட்டு இயல் (உடல் முயற்சிக்கூறுபாடு)களாலேயே விடை சொல்லுதல் வேண்டும். உண்மையின் வலிவைப் புறக்கணிப்பவர்கள், உடல் வலிமையை என்றும் புறக்கணித்ததில்லை. வரலாறு முன்னோக்கித் தான் போகுமேயன்றி, பின்னோக்கிப் போனதில்லை. எனவே தான் தமிழகப் பிரிவினையை ஏதோ தீண்டத்தகாதவனின் கோரிக்கையைப் போல் கருதிக்கொண்டு குதிக்கும் இந்திரா அம்மையாருக்கும். அவரைப் போன்ற பிறர்க்கும் ஒன்று சொல்விக்கொள்ள விரும்புகின்றோம். தீண்டத்தகாதவனையும் தீண்டவேண்டும் என்று சட்டமியற்றும் காலம் இது. அதற்குத் தகுந்தவாறு மக்களின் இயற்கையான கூர்தலற மனவெழுச்சிகளை விளங்கிக்கொண்டு அவற்றிற்குச் செவிசாயுங்கள். இல்லையெனில் யாகியாக்கானைப் புறங்கண்ட உங்களை, அதே மெய்ப்பாட்டுக்காக நாங்கள் புறங் காண நேரும். எங்கள் இனத்திலும் உங்களிடம் வந்து பொறுக்கித் தின்ன நினைக்கும் ஓரிரண்டு சுப்பிரமணியன்களும், பக்தவத்சலங்களும், அண்டேக்களும் இருக்கலாம். தமிழ் மக்களின் குடுமி வடவனின் கைகளில் சிக்கியிருப்பதால் அத்தகையோர்க்கு ஏதாகிலும் நன்மைகள் கிடைத்து வரலாம். அவற்றுக்காக அவர்களின் வாய்கள் இப் பிரிவினையெழுச்சியின் மேல் குப்பைகளையும் சருகுகளையும் வாரியெறியலாம். ஆனால் அவற்றையே பற்றிக்கொண்டு கனன்றெழுகின்ற உரிமைத்தீ, விடுதலை உணர்வு அவர்களையும் தீய்த்து. உங்களையும் முகங்கருக்குகின்ற நாள் ஒன்று வரத்தான் வரும். அந்த நல்ல நாளை வரவேற்க, அணியமாகிக் கொள்ளுங்கள் என்பதையே தென்மொழி உங்கட்கு முன் எச்சரிக்கையாக முழங்குகின்றது. என்று கருதிக்கொள்ளுங்கள்.
தென்மொழியின் இந்தப் போக்கைப் பொறாமையும் பொச்சரிப்பும் உடைய சிலர் 'தன் முனைப்பு’ என்னலாம் 'தன்னழுத்தம்’ என்னலாம்; சிலரோ தம் கட்சித்தலைவர்களைக் கொண்டு மட்டுந்தான் இக்கோரிக்கை முழங்கப் பெறல் வேண்டும் என்று ‘கந்தாயம்' பேசலாம். ஆனால் தென்மொழியைப் பொறுத்தவரை இனி எந்தத் தமிழகத் தலைவரையும் நம்பிப் பயனில்லை என்ற நிலை தெளிவாக உணரப் பெற்றுவிட்டது. எதற்காகச் சட்டமன்றம் போக வேண்டும் என்று தொடக்க நிலையில் தமிழகப் பிரிவினை விரும்பிய தலைவர்கள் கரணியங்கள் காட்டினரோ, அந்தக் கரணியங்கள் அவர்கள் அமர்ந்த பதவி நாற்காலிகளுக்கு ஆணியாக அறையப் பெற்றுவிட்டன. அவர்களின் மனைவி மக்களுக்கும் எதிர்காலப் பிறங்கடைகளுக்குமான ஒப்பந்தப் பட்டயங்களாகவும், நில புலம் வீடுகளாகவும் மாற்றப் பெற்றுவிட்டன. இன்னும் விளக்கமாகச் சொன்னால் அவர்கள் தங்களுக்குள்ளேயே எவரெவர் முன்னே போவது; எவரெவர் பின்னே வருவது என்ற போராட்டத்தை வேறு எழுப்பிக்கொண்டு விட்டனர். தமிழர் வடவரோடு ஒட்டி உறவாட வேண்டியதற்காகக் கூறப்பெறும் ஒருமைப்பாட்டின் பகட்டான போலி உரைகளைப் போலவும் செயல்களைப் போலவும், நம்மையாள வந்த - வழி நடத்திச் செல்ல வந்த தலைவர்களிடையில் போலியான ஓர் உடன்பிறப்புப் பாசமும் ஒற்றுமையுணர்வும் பேசப்பெறுகின்றன; காட்டப் பெறுகின்றன. அவர்கள் உள்ளத்தி விருப்பதெல்லாம் ஒருவரை ஒருவர் எடுத்து விழுங்குவதற்கான கால ஆராய்ச்சியும், இட ஆராய்ச்சியுந்தான், இத்தகைய தலைவர்களை நோக்கிக் கைகாட்டும் குட்டித் தலைவர்களைப் பற்றியோ, குறும்புப் பேச்சுக்காரர்களைப் பற்றியோ நமக்குக் கவலையில்லை. அவர்களுடைய அறிவின் மேலும் நம்பிக்கையின் மேலும் அவர்களுக்கிருக்கும் அழுத்தமான பிடிப்புப் போலவே நமக்கும் நம் அறிவின் மேலும் நம்பிக்கையின் மேலும் வலிந்த இரும்புப் பிடி உண்டு. பிரிவினை என்ற சொல்லைச் சொல்லவும் அஞ்சுவதையும் அவ்வாறு அஞ்சுவதை 'அரசியல் விரகு' என்பதையும் நம்புகின்றவர்கள் மேலும் நம்பிக் கொண்டிருக்கட்டும், நம்பாமல் போகிறவர்கள் தனித்துப் போனால்தான் என்ன? கூட்டமாகப் போனால்தான் என்ன? இந்நிலையை இவர்கள் அணுகின்ற முறைக்கும், தமிழகத்தை இந்திராகாந்தி அணுகுகின்ற முறைக்கும் எள்ளளவும் வேறுபாடு இருப்பதாக நமக்குப் படவில்லை.
நமக்கு இரண்டில் ஒன்று தெரிய வேண்டும். ஆண்டாண்டுக் காலமாய் அடிமைப் பட்டுக் கிடக்கும் தமிழனுக்கு விடுதலை தேடித் தருவது யார். அல்லது எப்படி என்பதன்று - இப்பொழுதுள்ள சிக்கல், எப்பொழுது என்பதுதான், இப்பொழுதுள்ள கேள்வி. இந்நிலையில் நான் என்று வந்து எவரேனும் தலைமைப் பட்டயம் சாற்றிக் கொள்ளட்டும்; அல்லது தளபதிப்பட்டம் சூட்டிக் கொள்ளட்டும். நமக்குக் கலையில்லை. நமக்குள்ள கவலையெல்லாம், இந்தத் தலைமுறையிலேயே பெரியார் காலத்திலேயே நமக்கெல்லாம் மொழி உணர்வும் தமிழ் வரலாறும் ஊட்டிய பாவாணர் காலத்திலேயே நாம் விடுதலை பெற்றாக வேண்டும். அண்ணா தளபதியாக இருந்து முன் நடத்துவார் என்று நம்பியிருந்தோம். அண்ணா தம்மையே தாம் காத்துக் கொள்ள முடியாமல் தலை சாய்ந்தார். அவரின் தம்பிகளாகிலும் நம்மை வழி நடத்துவார்கள் என்று நம்பினோம். அவர்கள் தம் கைகளையும் கால்களையும் வலுப்படுத்திக் கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பதாகத் தெரிகின்றது. அவர்கள் மேல் சாட்டப் பெற்ற அரசியல் குற்றச்சாட்டுகளுக்கிடையில், விடுதலை- பிரிவினை என்ற சொற்களைப் பலுக்குவதற்குக் கூட அவர்களுக்குத் திறமையிருக்குமோ? இருக்காதோ? நமக்கெல்லாம் உணர்வு கொளுத்திய பெரியாரோ கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தைப் பேசிப்பேசியே வீணடித்து விட்டதாக நாம் கருத வேண்டியுள்ளது. கத்தியை வைத்துக்கொள்; பயன்படுத்தாதே’ “-என்ற அவரின் அறநிலைப் போக்கிற்கு தர்மோபதேசத்திற்கு” எதிராளிகளில் எவனும் தலைசாய்த்ததாய்த் தெரியவில்லை. அவருடைய கட்டளை இன்று வரும் நாளை வரும் என்றெல்லாம் இனியும் ஏமாறிக் கொண்டிருப்பதற்கு நமக்கு அகவையில்லை; உடலும் உணர்வும் முதுமையுற்றுவிடும் போல் தெரிகின்றது. அதற்குப்பின் பெரியாரைப்போல் பிறரை நம்பித்தான் காலந்தள்ள வேண்டும் என்ற கட்டாயம் நமக்கு வந்து விடும் போல் தோன்றுகின்றது.!
அண்மையில் கோவைத் தொழிலறிஞர் அறிவியல் முனைவர் கோ. து. (நாயுடு) அவர்களிடம் நேரில் போய், அவர் வைத்திருக்கும் வலிவுகளில் ஒரு பகுதியையாகிலும் அறிவியல் கருவிகளையாகிலும் எங்கட்குத் துணையாகத் தாருங்கள் என்று கேட்டுப்பார்த்து விட்டேன். அவ்வாறு கொடுக்காமற்போனால் எதிர்காலத்தில் அவர்கள் போன்றவர்களிடமே முதன் முதல் போராட வேண்டியிருக்கும் என்றும். அவர்களின் குவிந்த செல்வங்களையே முதன் முதலில் கரைக்க முற்பட வேண்டியிருக்கும் என்று நேருக்கு நேர் அச்சுறுத்திப் பார்த்து விட்டேன். அவர் நம் விடுதலைக் கொள்கையை முழுக்க முழுக்க வரவேற்றாராயினும் நம் உணர்ச்சியையும் முயற்சியையும் ஓர் ஐந்தாண்டுக் காலத்திற்குத் தள்ளிப்போடும் படி கேட்டுக்கொண்டார். அவ்வைந்தாண்டுக் காலத்திற்குள் நாம் விடுதலை கோருவதற்கான நோக்கங்கள் நிறைவு செய்யப் பெறாமல் போகுமானால் தாமும் நாம் தொடங்கவிருக்கும் போராட்டத்தில் கலந்து கொள்வதாகக் கூறினார் அவ்வாறு கூறுவதை எழுத்தால் நான் சொல்லுகிற படி ஓர் ஒப்பந்தம் எழுதிக் கொடுக்க வேண்டும் என்று கேட்டேன். அவரும் ஒப்புக்கொண்டு என்னை எழுதச் சொன்னார் நான் எழுதியது. (தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆங்கிலப் பெயர்ப்பு பாவலர் திரு. மகிழரசனுடையது)
கோவைத் தொழிலியற் பேரறிஞரும் அறிவியல் முனைவரும் ஆகிய கோ. துரைசாமி நாயுடு அவர்கள் தென்மொழி ஆசிரியர் திரு. பெருஞ்சித்திரனாருக்கு எழுதிக் கொடுத்த விடுதலை எழுச்சி நாள் கால நீட்டிப்பு ஒப்பந்த விளக்கம்.
தி.பி. 2003 கும்பம் 23 கி.பி. 1972 மார்ச்சு 6 ஆம்நாள் திங்கட்கிழமை, கோவை கோ. து. நாயுடு (G.D Naidu) ஆகிய நான் கடலூர் தென்மொழியிதழ் ஆசிரியர் திரு. பெருஞ்சித்திரனார் அவர்களுக்கு, இவவொப்பந்த வரைவின் வழி, அவர் மிக அண்மையில் தொடக்கவிருக்கும் இந்திய ஆட்சியின் அரசியல், இன, மொழி, சட்ட அமைப்புகளினின்று முற்றும் வேறுபட்ட தமிழகத் தனி ஆட்சியமைப்புப் போராட்டத்தை இவ்வொப்பந்த நாளினின்று அடுத்த ஐந்தாண்டுக் காலத்திற்குத் தள்ளிப் போட வேண்டும் என்று வேண்டிக் கொள்வதுடன் அவ் வைந்தாண்டுக் கால எல்லைக்குள் அவர் எதிர்பார்க்கும் தமிழ்நாட்டு விடுதலை, “ஏதோ ஒரு வகையில் “ கிடைக்கத் தவறுமானால் அவருடன் கையொடு கையும் தோளோடு தோளுமாக இணைந்து நிற்பதோடு நானே முன்னின்று அவர் கொள்கையை நிறைவேற்றும் வகையில் ஒரு கருவிப் புரட்சி போராட்டத்தைக் கட்டாயம் தொடங்குவேன் என்று உறுதியளிக்கின்றேன்.
Agreement by Thiru. G. Duraiswamy Naidu the eminent Industrialist and the foremost Scientist, coimbatore pledged to Thiru, Perunchittiranar, Editor, Thenmozhi, Cuddalore bidding extenion of period for the Tamil Nadu Freedom upheaval : -
I. G. Duraiswamy Naidu, Coimbatore request Thiru. Perurichittiranar, Editor, Thenmozhi Cuddalore, on this day of 23rd Kumbam Thi. Pi. 2003 (Monday the Sixth of March 1972) Through this statement of Agreement, to postpone his new-proposed struggle to be started in the closer days demanding an Independant set-up of “Free Tamil Nadu Government” that entirely differs from the political, racial, linguistic and legal constitution of the Government of India, from this day of the Agreement to a period of next five years and that, in case the said Freedom of Tamil Nadu as he expected is not achieved in any way, within that stipulated period of five years, I pledge and agree to join him arm with arm and shoulder with shoulder, and to initiate and come forth for an armed revolution in the cause of fulfilling his aims to liberate Tamil Nadu, without fail.
ஆனால், எழுதியபின் அவர் தாம் அதிற் பின்னால் கையெழுத்திட்டு அனுப்புவதாகக் கூறி, நான் ஒப்பந்த அடிப்படையில் எழுதிய உறுதிப்பாட்டை மடல் அடிப்படையில் சுருக்கி எனக்கு விடுத்து வைத்தார். அம்மடலை இவ்விதழ் அட்டை மேற்புறத்தில் வெளியிட்டுள்ளேன். நானும் கோவை, கோ. து. நாயுடு அவர்களும் செய்து கொண்ட இவ்வொப்பந்தத்தின் போது தென்மொழி விடுதலை அரிமாக்களில் சிலரும் என்னுடன் வந்திருந்தனர். (சட்ட நெரிசல்களைக் கருதி அவர்கள் பெயர்களை இங்கு வெளியிடவில்லை. தேவையாகும் பொழுது அவர்களை வெளிப்படையாகப் பாராட்டுவேன்.) திரு. கோது. நாயுடு அவர்கள் எப்படிப்பட்டவர்’ என்பதை என்னை அவர் அறிந்ததை விட நான் நன்கு அறிவேன். எனவே அவர் போன்றர்கள் நம் தமிழகப் போராட்டத்தில் ஒதுங்கியிருந்து விட முடியாது. பெரியார். ஈ. வே. இரா அவர்கள் தனித் தமிழ் நாட்டுக் கோரிக்கையைத் தமிழக அரசினர் சார்பாக நிறுத்தி வைத்துள்ளதாகச் செய்தித் தாள்களில் பார்க்க நேர்ந்தது. தி.மு.க. தலைவர்களில் ஒருவரும் முன்னணிக் கொள்கையாளருமாகிய திரு. மனோகரன் அவர்கள் தம் கட்சி நாட்டுப் பிரிவினையைக் குழி தோண்டிப் புதைத்து விட்டதாகப் பேசியதையும் படிக்க நேர்ந்தது. இச்செய்தி எவ்வளவில் உண்மையோ நமக்குத் தெரியாது. அப்படியே உண்மையாக இருந்தாலும் ‘இஃதெல்லாம் ஓர் அரசியல் தந்திரம்’ என்று அடங்கிப் போகவும் முடியாது. அப்படித் தேற்றிக் கொண்டு நம்பிக் கிடப்பவர்களைப் பற்றியும் நமக்குக் கவலையில்லை. திரு மனேகரளைப் பொறுத்தவரை தமிழகப் பிரிவினை தேவையில்லாமல் இருக்கலாம்; ஏனெனில் அவர் ஒரு மலையாளி;” அல்லது திரு. கோ. து. நாயுடு அவர்களைப் பொறுத்தவரை தமிழகப் பிரிவினை தற்காலிகமாகவோ, நிலையானதாகவோ தள்ளிப் போடக் கூடியதாகவோ தள்ளிவிடக் கூடியதாகவோ (அவர்க்குத் தனிப்பட்ட நிலையில் நன்மை வருகிறபொழுது) இருக்கலாம்; ஏனெனில் அவரும் ஒரு தெலுங்கர், அப்படியே தான் பெரியாரையும் கருதிக் கொள்ள வேண்டியிருக்குமா என்பது தான் நமக்குத் தெரியவில்லை. அவரைப் பொறுத்தவரை, அவர் ஒரு கன்னடியர் என்பதையும் மறந்து. இந்தத் தமிழர்களுக்காக தமிழரோடு தமிழராய் ஓர் அரை நூற்றாண்டுக் காலம், உரிமையுணர்வுக்கு எருவிட்டும், விடுதலை எழுச்சி தழைக்கவும் பாடுபட்டாரே, அவரையும் அப்படித்ததான் கருதிக் கொள்ள வேண்டியிருக்குமோ என்பதை அவர் தான் நமக்கு விண்டு விளக்க வேண்டும்.
எவரோ, எப்படியோ, இனியும் நாம் சாக்குப் போக்குகள் காட்டிக் காலத்தை நீட்டிப் போட்டுக் கொண்டிருக்கத் தேவையில்லை. அப்படியிருக்கக் கூடவும் கூடாது. வடநாட்டினரின் வல்லாட்சி ஒரு சார்பு அதிகார உரிமை தமிழர்களையும், தமிழர் தம் பண்பாட்டு வளங்களையும் பூண்டோடு அழித்து, அவர்களை என்றென்றும் மொழி இன, பொருளியல், அரசியல் அடிமைகளாக அழுத்திவைத்துக் கொண்டிருக்கும் கரவு சான்றது, அதற்குத்தக சட்டங்கள் மாற்றி அமைக்கப் பெறுகின்றன; அரசியல் நடை முறைகள் தலை கீழாக்கப்படுகின்றன; நிலக் கூறுபாடுகள் பூசி மெழுகப் படுகின்றன. இவற்றின் இடிபாடுகளுக்கிடையில் அவர்களின் மொழி, இன, பண்பாடுகள் விரிவு படுத்தப்பெறுகின்றன. அறிவும் அக நோக்கும் அற்ற அவர்களைச் சேர்ந்த புல்லியர்களெல்லாரும் நாம் வணங்கத் தகுந்த தலைவர்களாக, வழிகாட்டிகளாக வந்து அமர்ந்து கொள்கின்றனர். நம் இன வழிகாட்டிகளும், நம்மின் பழம்பெரும் அறிஞர்களும் அவர்களுக்குக் கோமாளிகளாகவும் வாயில் காப்போர்களாகவுமே பயன்படுத்தப் பெறுகின்றனர். இந்நிலைகளை நன்கு உணராத அறிவு முண்டங்களாகிய பக்தவத்சல சுப்பிரமணியன்கள் தம் மண்டைப் புழுக்குடைச்சலினால் ஏற்படும் உளறல்களை யெல்லாம் நாம் அறிவுரை என்று ஏற்கத் தேவையில்லை. காமராசர் போலும் ஓரிரு பேராயக் கட்சித் தலைவர்கள் உண்மையிலேயே மக்கள் நலம் விரும்பிகள் என்றால், தாங்கள் தமிழகப் பிரிவினையை வலியுறுத்துவதைத் தவிர வேறு முயற்சிகளில் தங்களைக் கொண்டு செலுத்த வேண்டா என்று எச்சரிக்கின்றோம். ஒரு பெரும் அரசியல் மறுமலர்ச்சி வரலாறு உருவாவதை எந்தத் தலைவனோ தொண்டனோ தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதை மட்டும் உறுதியாகக் கூறிக் கொள்ள விரும்புகின்றோம். காலத்தின் விளைவு இது என்று ஏற்றுக்கொள்ள வேண்டுமேயல்லாமல் எந்த எதிர்விளைவுக்கும் முயற்சி செய்து வரலாற்று வெள்ளத்தில் மூழ்கிப் போக வேண்டா என்று எதிரது உணரும் ஆற்றல் உள்ளவர்களையும் வேண்டிக்கொள்கின்றோம்.
- தென்மொழி, சுவடி :9, ஓலை 11, 1972
நேரம் வந்து விட்டது!
படைமுகத்துக்கு வாருங்கள்!
என்னைப் பற்றி எண்ணிப் பார்க்க எனக்கு எவ்வளவு உரிமை உண்டோ, அப்படியே என் நாட்டைப் பற்றி- என் இனத்தைப் பற்றி என் மொழியைப் பற்றி எண்ணிப் பார்க்கவும், கருத்தறிவிக்கவும் எனக்கு முழு உரிமை உண்டு. இந்த இயற்கை உணர்வின் அடிப்படையிலேயே பிறரையும் எண்ணிப் பார்க்கின்றேன். என் போல் பிறரும் அப்படி எண்ணிப் பார்த்துக் கொண்டிருப்பர் என்பதையும் உணர்கின்றேன். அவ்வாறு எண்ணிப் பார்த்துக் கூறும் அவர்களின் கருத்துகளிலும் உண்மை இருக்கவே செய்யும் என்பதையும்கூட என்னால் அறிந்து கொள்ளமுடியும் ஆனால் இவ்வாறு ஒவ்வொருவரும் தம்மளவில் தாமே எண்ணிப் பார்க்கும். இயல் முறையை விடுத்து, என்னைப் பற்றிப் பிறரும், பிறரைப் பற்றி நானும் எண்ணுகின்ற முறையில் எல்லாமே இயற்கைக்குப் பொருத்தமாக இருந்து விடும் என்று எவரும் கூறிவிட முடியாது. நாட்டைப் பற்றிய செய்தியிலும் மொழியைப் பற்றிய செய்தியிலும் இனத்தைப் பற்றிய செய்தியிலும்கூட இந்த உண்மைகளைத்தான் மாந்தன் கடைப்பிடித்தாக வேண்டும். அல்லாக்கால் குழப்பங்கள் மிஞ்சும்; ஒன்றுக்கொன்று போராட்டங்கள் மிகும்; ஒன்றால் ஒன்றுக்கு நேரும் அழிவுகள் தவிர்க்க முடியாதன வாகிவிடும்.
நான் மொழியால் தமிழன்; எனவே இனத்தாலும் தமிழன், இன்னுஞ்சொன்னால் நான் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நிலத்தாலும் தமிழன். இப்படிப்பட்ட உரிமைகளை எண்ணிப் பார்ப்பதிலும், அவற்றைத் தேடிப் பெறுவதிலும் அவை கிடைக்காமற் போகுமிடத்து அவற்றிற்காகப் போராடுவதிலும் என்னைப் பிழையென்று சொல்ல எவருக்கும் உரிமையில்லை. மாந்தன் வகுத்துக் கொண்ட உலகியல் சட்டங்கள் எல்லாமே ஓரினத்துக்காக ஓரினத்தாரே வகுத்துக் கொண்டதில்லை. ஓரினத்தை அடிப்படுத்தி ஆள முயன்ற பிறிதோர் இனம் அமைத்துக் கொடுத்தவையாகத் தான் பெரும்பாலும் காணப் பெறுகின்றன. மாந்தர் யாவரும் ஒரே இனத்தவரே என்பதினும் ஒரே உலகத்தவர் என்பதில் தான் பசையிருக்கின்றது. அவ்வாறு தருக்கத்திற்காக வேனும் உலக மக்கள் யாவரும் ஒன்றென்று கருதிக் கொள்ள வேண்டும் என்பதாகக் கூறப் பெறுமானால், அப்படிக் கூறுபவன் என் நம்பிக்கைக்கு முற்றும் உகந்தவனாக இருக்க வேண்டும் அப்படிப்பட்டவனுக்கு மொழி, இனம், நாடு என்பதாக ஒன்றுமே இருக்கக்கூடாது. அவன் கால் நடையை எந்த எல்லைச் சுவரும் தடுத்து நிறுத்திவிடக் கூடாது. அவன் பேசுகின்ற மொழி நான் பேசுகின்ற மொழியாக இருக்க வேண்டும். அவன் என்போல் உண்ண வேண்டும். என்போல் உடுக்க வேண்டும். என்போல் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். என்னைக் கீழாக வைத்துத் தன்னை மேலாக வைத்துக் கொண்டிருப்பவனின் அறிவுரையை என்றும் நான் ஏற்றுக் கொள்ளுவதற்கில்லை. எனவே அப்படிப்பட்ட ஒருவன் இவ்வுலகத்தில் எந்த ஊழியிலும் வாழ்ந்து விடமுடியாது.
உலகம் முழுவதுமே வேற்றுமையில் ஒற்றுமை காண்பதாகத்தான் இயங்கிக் கொண்டிருக்ககின்றதே தவிர வேற்றுமையற்ற ஒற்றுமையுடன் திகழ்வதாக எவரும் கூறமுடியாது. ஆனால் என்மொழி, என் இனம், என்நாடு என்பதாகக் கூறப் பெறும் உள்ளுணர்வை எவரும் எளிதில் சுட்டுப் பொசுக்கிவிட முடியாது. வேண்டுமானால் ஒரு பொழுதில் தூங்கி ஒரு பொழுதில் விழித்துக் கொள்வதைப் போல் ஒரு கால கட்டத்தில், ஒரு நில எல்லைக்குள் அதைச் செயற்படுத்தி, அடுத்த கால வட்டத்தில், அடுத்த நில எல்லைக்குள் அதைத் தகர்த்துவிட வேண்டியதாக இருக்கும். இவ்வியற்கை அமைதிக்குள்தான் உயிரினத்தின் உரிமை உணர்வும் விடுதலை உணர்வும் அடக்கப் பெற்றுக் கிடக்கின்றன.
இவ்வடிப்படையிலேயே தென்மொழி தன் மொழி உரிமையையும் இன் உரிமையையும் கடந்த பதினான்கு ஆண்டுக் காலமாக முழக்கி வருகின்றது. இக் கடுமையான தொடர்ந்த முயற்சியால் விளைந்த விளைவுகள் எத்தனையோ உள மொழியைப் பொறுத்தவரையில் இதன் முழக்கங்கள் எவ்கையான போராட்டமுமின்றி ஓரளவு வெற்றி பெற்று வருகின்றன என்று கூறி மகிழலாம். ஆனால் இனத்தைப் பொறுத்த அளவில் இதன் நோக்கம் ஓர் இம்மியளவும் நிறைவேறியதாகக் கூற முடியாது. ஏனெனில் தமிழனின் வரலாறு அத்துணை இறுக்கம் வாய்ந்த ஓர் அடிமை வரலாறாக ஆக்கப்பெற்றுக் கிடக்கின்றது. இவ் விறுக்கத்தை இலக செய்ய எடுத்துக் கொண்ட முயற்சிகள் பல. அவ்வாறு எடுத்துக் கொண்ட தலைவர்கள் பலர். இன்னும் அத்தகைய முயற்சி நடந்து கொண்டே இருக்கின்றது. இவ்விடத்தில் ஒன்றை மறந்து விடக்கூடாது. தமிழனின் வரலாறு பிற நாட்டவனின் பிறநாட்டவன் ஏதோ ஓர் இனத்தானிடம் ஏதோ ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் தான் அடிமைப்பட்டுக் கிடந்திருப்பான். ஆனால் தமிழனின் அடிமை வரலாறு ஏறத்தாழ மூவாயிரமாண்டுத் தொடர்கதை. இவனின் ஆண்டைகள் பல பேர் ஒவ்வோர் இனத்தானிடமும் இவன் மாறி மாறித் தொழும்பு வேலைகள் செய்திருக்கின்றான். இக்கால் இவனுக்கு ஆண்டையாக வந்து அமர்ந்தவன் வடநாட்டான். அதிலும் ஆரியப் பார்ப்பான். இவனிடத்திலிருந்து இவன் தன்னை விடுவித்துக் கொள்வது அவ்வளவு எளியதன்று - சட்டத்தாலும் அதிகார நெருக்கத்தாலும் பொருளியல் முட்டுப் பாட்டாலும் இவன் அடிமைத்தனம் மூச்சு முட்டக் கிடக்கின்றது. இவன் தன்னைத்தானே அடிமைப்படுத்திக் கொண்டு கிடக்கின்ற நிலைகள் வேறு. அவை இவனை என்றும் உயர்த்திக் கொள்ளாதபடி அழுத்திக் கொண்டுள்ளன. இத்தனைக்கும் மீறி இவனை அவற்றினின்று விடுவிக்கும். ஒரு பேராற்றல் வாய்ந்த ஒருவனை எந்த ஆற்றலாலும் கட்டுப்படுத்த முடியாத ஒருவனை எத்தகைய கொடுமைகளுக்கும் ஏச்சுப் பேச்சுகளுக்கும் அஞ்சாத அசையாத ஒருவனை எவ்வகையான பற்றுப் பாசங்களுக்கும் அடிமைப்படாத ஒருவனை-எத்தகைய அகப்புறப் பகையுணர்வுகளுக்கும் சலிப்படையாத ஒருவனைத் தமிழகம் எதிர் நோக்கிக் கொண்டுள்ளது. அவனே தமிழக அடிமை வரலாற்றிற்கு முற்றுப்புள்ளி இட வேண்டி யவனாவான். ஆனாலும் அத்தகைய ஒருவனும் நம்முடைய வயிற்றினின்று தான் தோன்றித் தீர வேண்டும். எனவே இன்றைக்குப் புடைத்தெழும் நம்நாடி நரம்புகளின் வேகம் நாளைக்கு அப்படிப்பட்ட ஒருவனைச் சமைத்துக் கொடுக்காதா என்று எண்ணி நான் அங்காந்து அலமந்து கிடக்கின்றேன். அதன் முடிவாகவே இவ்வளவு நாட்கள் என் எண்ணங்கள் யாருக்கும் கட்டுப்படாமல் வெடித்துச் சிதறின. பொங்கிப் புடைநிரம்பின. ஆனால் எத்தனை நாட்களுத்தான் இப்படி எண்ணத்திலும் எழுத்திலும் உணர்ச்சிகளை ஓட விடுவது? எனவே இறுதியாக ஒரு முயற்சி.
வரும் சூன் மாதம் 10, 11ஆம் பக்கல்களில் திருச்சித் தேவர் மன்றத்தில் ஒரு மாநாடு நடைபெறும், என்னைப் போல், எண்ணங்கொண்ட அல்லது என் எண்ணத்தையே எளிது என்று கருதும் படியான ஓர் உள்ளம் அல்லது உள்ளங்கள் எத்தனையோ இருக்கலாம். அவற்றிற்குப் போதிய துணையில்லாமலும் இருக்கலாம். அவற்றை யெல்லாம் ஒன்று கூட்டி ஒரு முடிவு காண்பதில் பிழையென்ன என்று எண்ணிக் கூட்டப் பெறுவது இம் மாநாடு. முன்பொரு முறை இப்டியொரு சிறு முயற்சி நடந்தது. ஆனால் மறைமுகமாக- எவருக்கும் தெரியாத முறையில் நடந்து முடிந்த அம்முயற்சி அப்பொழுதைய நிலையில் ஒரு பட்டறிவை எனக்குத் தந்தது. அதன் அடிப்படையில் அம் முனைப்பை இவ்விடைக் காலமெல்லாம் ஆறப் போட்டேன். அதற்குள் என்னை எனக்கு நேரெதிராகக் கருதிக் கொண்டவர் சிலர் பயனற்றவன் என்று ஏகடியம் பேசியவர் சிலர்; வெறும் வாய்ச் சொல்லில் வீரன் என்று ஏளனம் செய்தவர் சிலர்; உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு மக்களை ஏமாற்றி வாழ்கின்றவன் என்று குற்றம் சாட்டியவர் சிலர்; பெருந்தன்மையான திருடன் 'தகவிலாதவன்' என்று ஏசி வக்கனைப் பேசியவர் சிலர். இருப்பினும் என் வேலை தொடர்ந்தது. என்னால் ஏதோ ஒன்று நடைபெற வேண்டும் என்று மட்டும் என் உள்ளுணர்வு அடிக்கடி கூறி வந்தது. அதைச் செயற்படுத்திப் பார்த்து விடத் துடித்தேன். ஆனால் என் மன உணர்வுக்குத் தகுந்த வகையில் நான் நெருங்குகின்ற சிக்கல்களைத் தீர்த்துக்கொடுக்க முன்வருவோர் எவரும் கண்களில் படவில்லை. தமிழகத்துத் தலைவர்களை யெல்லாம் தனித்தனியாக எண்ணிப் பார்த்தேன். வல்லடிமைப் பட்டுக் கிடக்கும் இத் தமிழகத்தை விடுவிக்கும் ஒருவர்க்கு என்னென்ன திறமை தகுதி இருக்க வேண்டும் என்று என் மன இலக்கணம் சொல்கின்றதோ அதற்குப் பொருத்தமான ஒருவரைத் தேடிப் பார்த்தேன். எல்லாரும் ஏதோ ஒருவகையில் மக்களையும் தங்களையும் ஒட்டு மொத்தமாக ஏமாற்றிக் கொண்டு செல்பவர்களாகவே எனக்குப் பட்டனர். மக்களை எண்ணுபவர் மொழியைப் பற்றிக் கவலையில்லாதவராக இருக்கின்றார். மொழியைப் பற்றி நினைப்பவர் மக்களைப் பற்றிக் கருத்தில்லாதவராக இருக்கின்றார். இரண்டைப் பற்றியும் இணைத்து நினைப்பவர் பதவிக்காகத் தன்னைக் காவுகொடுத்துக் கொள்பவராக இருக்கின்றார். மூன்றிலும் தன்னை நெறிப்படுத்தி கொண்டவர் செல்வ நாட்டம் உடையவராக மக்களை ஏமாற்றிப் பணம் பண்ணிக் கொண்டு வாழ்கின்றார். இப்படி எல்லாரும் ஏதோ ஒரு வகையில் அல்லது சிலவகையில் உயர்ந்தும், பிறிதொன்றில் அல்லது பலவகையில் தாழ்ந்துமே என் கண்களில் படுகின்றனர். இனி என்னைப் பொறுத்தவகையிலும் இத்தகைய ஏற்றத்தாழ்வுகளும் இருக்கத்தானே செய்யும் என்று நானே என்னைக் கேட்காமவில்லை. ஏற்றத் தாழ்வுகள் என்பன பலவகைப்பட்டன. என் மூக்கு நீளமாக இருக்கலாம். அதனால் என் பார்வை கோளாறு உள்ளதாகக் கூற முடியாது. என்நாக்கு நீளமென்று சிலர் கூறலாம். அதனால் என் கருத்தில் கூனல் விழுந்து விட்டது என்று எவரும் கூறிவிட முடியாது. இதுவரை எவரையும் எதற்காகவும் நான் வஞ்சித்ததில்லை. எவர்க்காகவும் எதற்காகவும் நான் என் கருத்தை மாற்றிக் கொண்டதில்லை. முன்னொன்று பேசி அதனைத் தவறு என்று உணர்ந்ததாக இதுவரை எனக்கு நினைவில்லை. அவ்வாறு உணரும் பொழுது அதைத் திருத்திக் கொள்ளவும் நான் அணியமாகவே இருக்கின்றேன். அன்றிலிருந்து இன்று வரை என் குணங்கள் மாறுபட்டதில்லை. எதற்காகவும் என்னை நான் பணித்துக் கொண்டதில்லை. கட்டுப்படுத்திக் கொண்டவனும் இல்லை. பதவியையும் செல்வத்தையும் தானே என் காலில் வந்து ஒட்டிக் கொள்ளும் தூசைவிடக் கீழானவையாகவே என் மனம் நினைக்கின்றது பணம் என் வினைபடு கருவி; வழிபடுகருவியன்று.
என்னை என்றும் தலைவன் என்ற சொல்லுக்கு அணிமைப்படுத்திக் கொண்டதே இல்லை. என்னை விட, இங்குள்ள யாவரையும் விட ஒரு பேராற்றல் இவ்வுலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பதாக நான் என்று மெய்யறிவால் கண்டு கொண்டேனோ, அன்றிலிருந்தே என்னை ஒரு கருவிப் பொருளாகக் கருதிக் கொண்டிருகின்றேனேயன்றி, ஒரு கருத்தா அஃதாவது ஒரு தலைமைப் பொருளாக என்னை ஒரு நொடிப் பொழுதேனும் நினைத்துப் பார்த்ததே இல்லை. என்னை அப்படிக் கூறுபவர்களைப் பொறுத்தமட்டில் அவர்களுக்கு அப்படியொரு தலைவன் தேவையாக இருக்கின்றது போலும் என்று கருதிக் கொண்டு இருக்கின்றேனே தவிர, என்னையே அவர்களின் விளிப் பொருளுக்கு உகந்தவனாகக் கருதிக் கொள்ளவில்லை. இவ் வகையில் எனக்கு நேர்மாறான பொருளைக் கற்பித்துக் கூறிக்கொண்டிருப்பவர்கள் மேல் எனக்கு அவர்களின் அறியாமையைப் பற்றி இரக்கமே ஏற்பட்டுள்ளது.
எனவே, எதைப்பற்றியுமே எண்ணிச் செருக்குறாத நினைவுடன், தமிழர்களின் இயற்கை மெய்ப்பாட்டியலுக்கு மாறுபடாத விடுதலை நோக்குடன், ஒரு மாநாட்டைத் திருச்சியில் கூட்டியுள்ளேன். அது முழுக்க முழுக்க விடுதலை மாநாடுதான். ஆனால் அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவுவதற்காகத் “தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டு மாநாடு” என்று பெயர் கொடுத்துள்ளேன். அவர்களின் கண்களுக்கு இப்பெயர் மட்டும் தெரிந்து இதன்நோக்கம் தப்ப வேண்டும் என்று நான் எண்ணியது. இம் மாநாட்டிற்குக் கிடைக்க வேண்டிய எல்லா வகை இசைவுகளும் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான். (இப்படி வெளிப்படையாக எழுதுவதை அவர்கள் படித்துத் தெரிந்து கொள்ள மாட்டார்களா என்பதை நான் எண்ணாமல் இல்லை. அவர்கள் தங்களைப் பற்றிய கருத்துரைகளில் கவனம் செலுத்துவதில்லை என்பதை நான் நமக்கு ஆக்கமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளேன். அவ்வளவுதான்) எப்படியாவது மாநாடு நடக்க வேண்டும்; நாமெல்லாம் ஒன்று கூடவேண்டும்; மனம் விட்டுப் பேச வேண்டும்; நம் உரிமைகளை நாம் போராடிப் பெற வேண்டும். என்பவைதான் என் உயிர் நோக்கம். மாநாட்டிற்குத் தலைவராக ஒருவரையும் அமர்த்தவில்லை. வரப்போகும் அன்பர்களில் ஒருவர் அங்கேயே தலைவராக அமர்த்தப்பெறுவர். மாநாட்டின் அறிக்கை வேறு பக்கங்களில் அச்சாகியுள்ளது. இம் மாநாடு உ. த. க. மாநாடு அன்று. அதற்கு எதிரானதும் அன்று. விடுதலை நோக்கம் அதில் இணையாமையால் இப்படித் தனி மாநாடாக இதை நடத்த வேண்டியுள்ளது.
மற்றப்படி தமிழகத்தின் எல்லாக் கட்சித் தலைவர்களுக்குமே மாநாட்டின் அழைப்பு அச்சிட்டு விடுக்கப் பெறும். என் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரிய சிலரை மட்டும் மாநாட்டுச் செயற்குழு உறுப்பினர்களாக, அவர்களைக் கேளாமலேயே, தெரிந்தெடுத்துள்ளேன். விருப்பமில்லையானால் அவர்கள் தங்களுக்குத் தந்த பொறுப்பினின்று விலகிக் கொள்வதாக எனக்கு எழுதலாம். அவற்றை அடுத்த இதழில் அறிவித்து விடுவேன். மாநாட்டுத் தொடர்புடைய பிற செய்திகளைப் பற்றி அடுத்த இதழிலும் எழுதுவேன். நான் உங்களைத் தலைவணங்கி வேண்டிக் கொள்வதெல்லாம் ஒவ்வொருவரும் தவறாமல் மாநாட்டிற்கு வரவேண்டும்; நாம் இனிசெய்ய விருப்பதைப் பற்றி எண்ணம் வேண்டும் என்பது தான்! நேரம் வந்துவிட்டது; படை முகத்துக்கு வந்து சேருங்கள்.
- தென்மொழி, சுவடி :9, ஓலை 12. 1972
தமிழ்நிலத்தை விடுவிப்போம்!
தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டு மாநாடு!
(தமிழக விடுதலை மாநாடு)
பேரன்புடையீர்!
வணக்கம், ஆண்டுகொண்டிருந்த நிலைமாறி மாற்றானின் அடிமைச் சகதியில் சிக்கிக் கடந்த மூவாயிரமாண்டுகளாகப் பல்லாற்றானும் அல்லலுறும் தமிழ்ப் பேரினத்தை விடுவிக்கும் முயற்சியின் இறுதிக் கட்டமாக வருகிற 10,11-6-1972 (விடைத் திங்கள் 28,29) காரி, ஞாயிறு இருநாட்களிலும் முறையே தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டுக் குமுகாய, அரசியல் மாநாடுகள் திருச்சிராப்பள்ளி தேவர் மன்றத்தில் நடைபெற விருக்கின்றன.
தமிழ், தமிழக, தமிழின விடுதலைப் புரட்சிக்கு வித்திடும் தீர்மானங்களை நிறைவேற்றவும், தொடர்ந்து வினையாற்றவும் தமிழின் எழுச்சியில் நாட்டங் கொண்ட முன்னணித் தலைவர்களும் புலவர் பெருமக்களும், இளந்தலை முறையினரும், ஒருமித்து முனைந்து ஏற்பாடு செய்துள்ள இம் மாநாட்டில் தாங்களும் வந்து கலந்து கொண்டு ஊக்குவிக்க வேண்டுகின்றோம்.
முதல் நாள் இரவில் வெங்காளுர்த் தன்னுரிமை நாடக மன்றத்தாரின் 'எந்நானோ?' என்னும் கொள்கை முழக்க நாடகம் நடைபெறும்.
இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காகத் தனிப்பட்ட முறையில் எவரும் அழைக்கப் பெறவில்லை. இஃது ஒவ்வொருவருக்கும் அழைப்பு விட்டுச் செய்யப் பெற வேண்டிய செயல் அன்று. தமிழ் மொழி, இன, நாட்டு நலன்களில் உண்மையாகவே அக்கரை? கொண்டிருப்பதாகக் கருதிக் கொண்டிருக்கும் கீழ்க்காணும் தலைவர்களும் எல்லாரைப் போலவே இதழ் வழியும் அறிக்கைவழியும் அழைக்கப் பெற்றுள்ளனர். அவர்கள் வருவார்களோ, வரமாட்டார்களோ நமக்குத் தெரியாது. மாநாட்டுத் தொடக்கத்தில் அங்கு வந்திருக்கும் நல்லுணர்வுள்ள அன்பர்களில் ஒருவர் (அவர் எத்தனைச் சிறிய அகவையினராக இருப்பினும்) தலைமை தாங்கி நடத்துவிக்கக் கேட்டுக் கொள்ளப் பெறுவார்.
எனவே அன்பர் மாநாட்டிற்கு எவரெவர் வருவர் எவரெவர் பேசுவர் என்றெல்லாம் ஆராய்ந்து பார்த்துக் கொண்டிராமல் தன்மானத் தமிழினத்தின் இவ்விறுதிப் போராட்டத்தில் ஒவ்வொருவரும் தவறாமல் போய் கலந்து கொள்ள வேண்டும்; கருத்தறிவிக்க வேண்டும். எதிர்காலத் தமிழினப் புத்துணர்வுக் குமுகாயம் அமைக்கின்ற பணியில் ஒவ்வொருவரும் பங்கு கொள்ள வேண்டும் - தன்னலம் மறந்த உயரிய நோக்குடன் திருச்சி மாநாட்டிற்கு வருதல் வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். இன்னும் அங்கு வரவிருக்கும் அன்பர்களில் திருமணமான அன்பர்களாயிருப்பின் கட்டாயம் தம் மனைவி மக்களுடனும் திருமணமாகாத அன்பர்களாயிருப்பின் தம் உடன்பிறப்புகளுடனும் நண்பர்களுடனும் வந்து கலந்து கொள்ளுதல் வேண்டும்.
மாநாட்டின் முதல் நாள் காலை 7 மணிக்கு மாநாட்டு அரங்கினின்று பெரிய ஊர்வலம் தொடங்கி நகரத்தின் முகாமையான தெருக்களில் வீர நடையிட்டு மீண்டும் மாநாட்டு அரங்கிற்கே மீளும்.
மாநாட்டில் தொண்டர்களாக உழைக்க விரும்பும் அன்பர்கள் முன்கூட்டியே தென்மொழிக்குத் தங்கள் விழைவை எழுதி ஒப்புதல் பெறவேண்டும்.
மாநாட்டில் கலந்து கொள்ள விருக்கும் தமிழ் வளர்ச்சி மன்றங்கள், கழகங்கள் முதலியவை தங்கள் தங்கள் பெயர் பொறித்த துணிப்படாங்களை ஏந்தி வரலாம். அத்துடன் தனித் தமிழ் மொழி முழக்கங்களையும் நாட்டு விடுதலைக் கருத்துகளையும் அட்டைகளில் எழுதிப் பிடித்துக் கொண்டு வரலாம். அத்தகைய மன்றங்கள் தங்கள் பெயர்களையும் தாம் ஊர்வலத்தில் கலந்து கொள்ள விருக்கும் வகையையும் முன் கூட்டியே தென்மொழிக்கு எழுதித் தெரிவிக்க வேண்டும்.
மாநாட்டின் பொழுதோ, ஊர்வலத்தின் பொழுதோ அன்பர்கள் தாங்களாகவோ, பிறர் தூண்டுதலாகவோ எவ்வகைப் பரபரப்பான நிகழ்ச்சிகளிலோ, போராட்டப் பூசல்களிலோ ஈடுபட வேண்டா என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாநாட்டின் திட்டவட்டமான செயல் முறைகள் தீர்மானமாக மாநாட்டின் முடிவில் அறிவிக்கப்பெறும். அன்பர்கள் அவ்வறிவிப்பு வரை அமைதியைக் கடைப் பிடிக்கக் கேட்டுக்கொள்ளுகின்றோம்.
அடுத்த தென்மொழி இதழில் மேலும் சில விளக்கங்கள் அறிவிக்கப்பெறும், மறவாதீர்கள்! ஒன்றை மட்டும் தவறாமல் நினைவில் வையுங்கள்! மாநாட்டிற்கு மட்டும் எல்லோரும் தவறாமல் வந்துவிட வேண்டும்.
- தென்மொழி, சுவடி :9, ஓலை 12. 1972
தென்மொழிக்கொள்கைச் செயற்பாட்டு மாநாடு அறிக்கை
திருச்சிராப்பள்ளித் தேவர் மன்றத்தில் (10-6-72, 11-6-72) ஆகிய நாட்களில் புறப்படுங்கள் திருச்சிக்கு!
'தென்மொழி' எனும் இதழ்க்கு இரண்டு கொள்கைகள் உண்டு. 1. தமிழன் தன் மொழியாலும் இனத்தாலும் விடுதலை பெற வேண்டும் என்பது 2. தமிழன் தன் நிலத்தாலும் விடுதலை பெற வேண்டும் என்பது.
மொழி விடுதலையும் இன விடுதலையும்:
உலகிலேயே முதன்மையானதும், ஆரியம், இலத்தீன் கிரேக்கம் சாக்சானியம் முதலிய உலகப் பழம்பெரும் மொழிகளுக்கெல்லாம் தாயானதும், பழம் இலெமுரியாக் கண்டத்து. ஏறத்தாழ ஐம்பதினாயிரம் (50,000) ஆண்டுகளுக்கு முந்தித் தோன்றியதும். முழு வளம் பெற்றதும் இன்றைய அறிவியலுக்கும் இனி வரப்போகும் அறிவியல் வளர்ச்சிக்கும் முழுதும் ஈடு கொடுப்பதுமாகிய நம் தமிழ் மொழி, கடந்த மூவாயிரமாண்டுகளாக ஆரியத்தாலும் பல வேற்று இன மொழிகளாலும் சிதைக்கப்பெற்றுத் தன் உருவிழந்து ஒலியிழந்ததாலும் அடிமைப்பட்டுத் தன் இனத்தையும் அடிமைப்படுத்தித் தட்டுக்கெட்டுத் தடுமாறி இன்று ஏதோ ஒரு வகையில் உருமாறி உயிர்வாழ்ந்து வருகின்றது. உலகில் வேறெம் மொழிக்கும் இல்லாத மூவகைப் பாகுபாடும். ஐவகை இலக்கணமும். எண்வகைச் சிறப்பியல்புகளும் கொண்ட நம் தமிழ்மொழியை ஆரியத் தளையினின்றும் பிறமொழிச் சிதைவினின்றும் மீட்டுக் காத்து வருவது தமிழர்களாகப் பிறந்த நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
இன்றோ, நம் தாய்மொழி ‘தமிழ்’ என்று கூறவும் வெட்கப்பட்டு நிற்கின்றோம். “தமிழில் என்ன இருக்கின்றது” என்று நமக்குள் நாமே ஒரு முழு மூடத்தனமான கேள்வியை எழுப்பிக் கொண்டு, ஆங்கில மொழிக்கும். பிற வட நாட்டு மொழிகளுக்கும் வால் பிடித்துக் கிடக்கின்றோம். நம் மொழியைத் தமிழ் என்று பெருமிதத்துடன் கூறிக் கொள்ள முடியாத நாம், நம்மைத் தமிழரென்றும் கூறிக்கொள்ளத் தயங்குகின்றோம். நமக்குள் பல குலப்பிரிவுகளையும் கிளைப் பிரிவுகளையும் உண்டாக்கிக் கொண்டு, நம்மை நாமே அடையாளங் கண்டு கொள்ள முடியாதவர்களாக-நமக்குள் நாமே அடையாளங் கண்டு கொள்ள முடியாதவர்களாக- நமக்குள் நாமே பகைமை பாராட்டிக் குத்திக்கொண்டும் வெட்டிக் கொண்டும் சாகுமாறு பலவகைப் பூசல்களை உருவாக்கி வருகின்றோம். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல். மொழியாலும் அதன் வழி இனத்தாலும் வேறுபட்டுக் கிடக்கும் நம்மை, மொழியாலும் இனத்தாலும் தென்னாட்டு ஆரியம் பார்ப்பானும் பொருளாலும் அரசியலாலும் வடநாட்டு ஆரியப் பார்ப்பானும் ஏமாற்றி, அடிமைப்படுத்திக் காலங்காலமாய்ச் சுரண்டி வருகின்றனர்.
'சமசுக்கிருதம் இல்லாமல் தமிழ் இல்லை', 'சமசுக்கிருதமே இந்திய மொழிகளுக்குத் தாய்; அதுவே இந்திய ஒற்றுமைக்கு வழியமைத்துக் கொடுக்கும்' - என்றபடி இந்தியக் குடியரசுத் தலைவர் உள்ளிட்ட அனைத்து ஆரியத் தலைவர்களும் நாளுக்கு நாள் ஊருக்கு “ஊர் உரத்த குரலில் முழங்கி வருகின்றனர். ஆளைக் கண்டு' ஏமாறி வரும்” நம் அடிமைத் தமிழர்களும் நம் பெறுதலரிதாம் தமிழ் மொழியைப் புறக்கணித்துத் தம்மைத் தாழ்த்தியும் நம் இனத்தை வீழ்த்தியும் வருகின்றனர்.
இவ் வீழ்ச்சி நிலைகளினின்று தமிழன் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டுமானால் அவன் தன் தாய்மொழியாகிய தமிழைத் தூய்மையாகவும், பிறசொல் கலப்பின்றியும் பேசிவருவதுடன். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளைப் போல் குல, சமய, வேற்றுமைகள் இன்றி ஒரே குமுகாயமாக வாழவும் முயற்சி செய்ய வேண்டும்.
தமிழனின் நிலவிடுதலை:
உலக அடிமை வரலாற்றில் தமிழனின் வரலாறு மிகவும் இரங்கத் தக்கதான ஓர் இழிந்த வரலாறாகும். பிற நாட்டு இன அடிமைகள் அனைவரும் அரசியல் அடிமைகள் அல்லர், இனத்தால் அடிமைப்பட்டு அரசியலால் உரிமை பெற்ற மக்களும் உள்ள தமிழன் இனத்தாலும் அரசியலாலும் அடிமை பட்டுக் கிடக்கின்றான்.
பிற அடிமை இனங்கள் ஏதோ ஓர் இனத்தால் மட்டுமே அடிமிைப்படுத்தப்பட்டுக் கிடக்கின்ற வேளையில், தமிழினம் பல்வேறு இனங்களால் அடிமைப் படுத்தப்பட்டுக் கிடக்கின்றது.
பிற இனங்கள் ஏதோ ஒரு குறுகிய கால எல்லைக்கு அடிமையுற்றுக் கிடப்பதும். பிறகு எழுச்சியுற்றுப் போராடி உரிமை பெறுவதும் வரலாறு, தமிழினமோ கடந்த மூவாயிரமாண்டுகளாக ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து அடிமையுற்றே கிடக்கின்றது. அதன் வரலாறே அடிமை வரலாறாகும்.
ஆரியரிடத்தும், மொகலாயரிடத்தும், பல்லவரிடத்தும், ஆங்கிலரிடத்தும் போர்த்துக்கீசியரிடத்தும் பிரஞ்சுகாரரிடத்தும் அடிமைப்பட்டுச் சிதைந்த தமிழினம் இன்று வடநாட்டாரின் கிடுக்கிப் பிடியில் சிக்கித் தவிக்கின்றது. வடநாட்டானுக்குக் கண்காணியாரகளாக இருந்து பொறுக்கித்தின்னும் அடிமைத் தமிழர் ஒரு சிலரையும், மொழி, இன நலமற்றுத் தந்நல நெஞ்சினராக வாழும் கல்ருளித் தமிழர் ஒரு சிலரையும் தவிர மிகப் பெரும்பான்மைத் தமிழர் தாங்கள் தங்கள் அடிமைத் தளையினின்று மீள வகை தெரியாதவராக அல்லற்பட்டே கிடக்கின்றனர்.
ஆட்சி அதிகாரங்கள் முழுவதும் வடவனின் கைப்பிடியுள் சிக்கிக் கிடக்கின்றன. இங்குள்ள மாநில அரசினர் வெறும் குழுத் தலைவர்களே! அரசியல் செயலாளர்களே!
இங்குள்ள பெருந்தொழில்கள் யாவும் வடவரின் கையுள்! நிறைந்த வருமானங்கள் தரும் துறைகள் அவர்களுக்குச் சொந்தம். ஊர்க்குப் பெயர் வைப்பதானாலும் அவர்களைக் கேட்க வேண்டும்; உரிமைக்கு வாழ்த்துப் பாடுவதானாலும் அவர்கள் இசைவு தரவேண்டும்.
இங்குள்ள செல்வங்கள் ஏராளம்! நிலவளமும் மலைவளமும் கடல் வளமும், தமிழகத்துள் கொஞ்ச நஞ்ச மல்ல! இருப்பினும் இங்குள்ள தமிழன் வடநாட்டுச் சோம்பேறிகளுக்காகத் தன் வயிற்றைக் கட்டித் தீரவேண்டியிருக்கின்றது. அவர்கள் கொட்டிக் கொள்ள இவன் உழைத்துச் சாகவேண்டியிருக்கின்றது.
இப்படி அரசியலாலும் பொருளியலாலும் அடிமைப்பட்டுக் தன் திலையினில் என்றென்றும் ஏழையாகவே இருக்கும் தென்னாட்டுத் தமிழன்- திரவிடன் தன் இனத்தாலும் மொழி யாலும் ஒன்று பட்டு எழுச்சி கொள்ளாதவாறு பிரித்தாளப்பட்டும், அதிகாரத்தால் மடக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் கிடக்கின்றான்.
தென்மொழிப் போராட்டம்!
இவ்வாறான அடிமை நிலைகளை மாற்றத் தென்மொழி இதழ் தூய பொதுவுணர்வுடன் கடந்த பதின்னான்கு ஆண்டுகளாகப் போராட்டம் நடத்தி வருகின்றது.
'தென்மொழி என்பது ஒர் இதழன்று ஓர் இயக்கம்' என்னுமாறு அதன் கொள்கைகள் வளர்ச்சியுற்றுச் செம்மாந்து. நிற்கின்றன. அதற்கென ஒரு கூட்டம்! அதற்கென ஓர் எழுச்சி! அதற்கென ஒரு பாசறை! அதன் செயலாண்மைத் திறம் தனி! அதன் படை மறவர்களின் போராட்டம் தனி! அக முகமாக அவர்கள் செய்துவரும் நூற்றுக்கணக்கான முயற்சிகளின் இறுதிப் பயனாக அவர்களின் புறமுக முயற்சி இப்பொழுது முகிழ்ந்துள்ளது!
ஆம்; அதுதான் வரும் மாதம் 10,11-ஆம் நாட்களில் திருச்சித் தேவர் மன்றத்தில் நடைபெற விருக்கும் மாநாடு.
(10-6-72 காலை 7 மணி முதல் 12வரை ஊர்வலம். ஊர்வலம் திருச்சித் தேவர் மன்றத்திலிருந்து புறப்படும்) அன்று மாலை 2 மணிக்குக் குமுகாய மாநாடு தொடங்கும். இரவு 'எந்நாளோ?' - கொள்கை நாடகம்.
11-6-72 காலை 8 மணி அரசியல் மாநாடு.
இரண்டு நாள் முடிவிலும் வரலாற்றுச் சிறப்புடைய இரண்டு சிறந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். எனவே அம்மாநாடு ஒரு செயல் அறிவிப்பு மாநாடு: அஃது ஓர் உரிமைப் போராட்ட மாநாடு அஃது ஓர் விடுதலை மாநாடு!
அது தாழ்வுற்ற தமிழர்களுக்கு விடிவு காணப் புறப்பட்ட தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடித் தங்கள் செயல் திட்டங்கள் பற்றி ஆராயும் மாநாடு!
அதில் நீங்கள். தன்மானமுள்ள தமிழராகிய நீங்கள் கலந்து கொள்ள வேண்டாவா? உடனே குடும்பத்துடன் அணியமாகுங்கள்!
திருச்சியிலே ஒன்றிணைவோம்!
நினைவிருக்கட்டும் சூன் 10-11.
வாழ்க தமிழர்! வாழ்க தமிழ்நாடு !
தமிழகம் பிரிய வேண்டுவதற்கான பத்துக் கரணியங்கள்
தமிழகம் இந்தியவரசினின்று பிரியாமலிருக்குமானால்...
1. தமிழ்மொழி உயர்வடைய வழியில்லை. (பலவகை களிலும் முட்டுக் கட்டைகள் இருந்து கொண்டே இருக்கும்)
2. இந்தியை விலக்கவே முடியாது.(என்றைக்கேனும் ஒரு நாள் ஏற்க வேண்டியே தீரும்)
3. குல, சமயப் புரட்டுகள் என்றைக்கும் அகலா.
4. ஆரியப் பார்ப்பன நச்சுத் தன்மை இருந்துகொண்டே இருக்கும்.
5. தமிழ்ப் பண்பு படிப்படியாகக் கெடும்.
6. தமிழ் மொழியின் இலக்கண இலக்கியம் அழியும்.
7. சமசுக்கிருதம் தலையெடுக்கும்.
8. தமிழினம் மேலும் சிதறுண்டு போகும்.
9. பொதுவுடைமை யரசமைப்புக்கு வழியே இல்லை.
10. அரசியல் அதிகாரங்கள் தன்னிறைவு பெறா.
திருச்சி மாநாட்டு ஊர்வத்திற்கென
தென்மொழியில் வெளியிடப்பெற்ற முழக்கங்கள்
1. தாய்மொழித் தமிழைத் தவறின்றிப் பேசுங்கள்
2. தனித்தமிழ்ப் பெயரையே தாங்கிக்கொள்ளுங்கள்.
3. கலப்புத் தமிழைக் கடிந்து ஒதுக்குங்கள்.
4. விளம்பரப் பலகையைத் தமிழில் எழுதுங்கள்
5. 'சாதிப் பெயர்களைத் தூக்கி எறியுங்கள்.
6. குலப்பட்டங்களைக் குப்பையில் போடுங்கள்.
7. தமிழர்கள் யாவரும் ஓரினம், ஒரு குலம்!
8. யாதும் ஊரே யாவரும் கேளிர்.
9. கோயில் வழிபாடு தமிழில் செய்க.
10. சாதியும் மதமும் வேதியர் புரட்டு.
11. இந்தி மொழிக்கு என்றும் இடங் கொடோம்.
12. தனித்தமிழ் நாட்டை அடைந்தே திருவோம்.
13. தமிழர் நாடு தமிழருக்கே!
14. வடக்குக் காற்று தமிழர்க் காகாது
15. ஆரியப் பூசல் அறவே ஒழிக!
16. பார்ப்பனப் புரட்டு பயனளிக்காது.
17. அடிமைத் தமிழரே விடிந்தது எழுங்கள்!
18. அரசியல் விடுதலை அடைந்தே திருவோம்!
19. விடுதலை பெற்ற தமிழகம் வேண்டும்!
20. தில்லி ஆட்சிக்கு எல்லை கட்டுவோம்.
21. பார்ப்பன ஆட்சிக்குப் பாடை கட்டுவோம்.
22. ஏற்றத் தாழ்வுகள் மாற்றி அமைப்போம்.
23. ஏழை பணக்காரன் இல்லாது ஒழிப்போம்.
24. உலகத் தமிழரே ஒன்று சேருவோம்!
25. தமிழ்ப்பெரு நிலத்தை விடுவிக்க வாரீர்!
தமிழகப் பிரிவினைக் கொள்கை
1. இப்பொழுதுள்ள தமிழ்நாட்டையும் புதுவை, காரைக்கால் பகுதிகளையும் நடுவணரசுத் தொடர்பினின்று விடுவித்துத் தன்னுரிமை பெற்றதும் சட்டம். ஆளுமை இவற்றில் புதிய முறை வகுத்துத் தனியாட்சி செய்வதும் இந்திய அரசோடு நிலக்காவல் இணைப்பும் வாணிகத் தொடர்பும் கொண்டதுமாகிய தனித்தமிழ் நாடாக இயங்கச் செய்தல்.
2. தன்னுரிமைத் தமிழ்நாடு அமைக்கப் பெற்றபின் அண்டை அயல் மாநிலங்களை நட்பு நாடாகக் கருதி, இந்திய அரசுடன் தொடர்பு கொண்டு, முன் இழந்து போன திருப்பதி, தேவிகுளம், பீர்மேடு முதலிய பகுதிகளை மீட்டுத் தமிழகத்துடன் இணைப்பது.
3. உரிமை பெற்ற தமிழகத்தில் குல, மத வேறுபாடற்ற பொதுமைக் குமுகாய அமைப்பும், நிகரமைப் பொதுவுடைமை சார்ந்த பொருளியல் அமைப்பும் குடிவழிக் குழுவாட்சி அரசிய லமைப்பும் ஏற்படுத்தப்பெறும். இவற்றின் விரிவான விளக்கங்கள் பின்னர் வெணியிடப் பெறும்.
- தென்மொழி, சுவடி :10, ஓலை : 1. 1972
வரலாறு படைத்தது திருச்சி
கொள்கைச் சிறப்புடைய முதல் விடுதலை மாநாடு.
வீறு கொண்ட ஊர்வலம்! காவலர்கள் வெகுண்டு பார்த்தனர்! விழித்து, வேடிக்கை பார்த்தனர்!
செய்தித்தாள்களின் ஒருமித்த இருட்டடிப்பு! மாநாட்டைப் புறக்கணிக்க ஆட்சியாளர் செய்த சூழ்ச்சி! இருநாள்களிலும் உறுப்பினர்களின் நெருப்புரைகள்! தொடங்கிற்று தமிழக விடுதலை இயக்கம்!
தூங்குகின்ற தமிழர்களும், தொடை நடுங்கிக் கோழைகளும், காட்டிக் கொடுக்கும் நரிகளும், பொறாமைப் பிண்டங்களும், தான் தோன்றித் தம்பிரான்களுமே ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தனர்! தென்மொழி மறவர்கள் அத்தனைப் பேரும் தவறாது வந்திருந்தனர்!
மாநில அரசு, நடுவணரசு, மறைமுக நடவடிக்கைகள்!
தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டு மாநாடு
(நிகழ்ச்சிச் சுருக்கம்)
கடந்த விடைத் திங்கள் 28,29 (சூன் 10,11-1972) காரி, ஞாயிறு நடைபெற்ற தமிழக விடுதலை மாநாட்டிற்கு அஃதாவது தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டு மாநாட்டிற்கு என சூன் 9ஆம் பக்கலே தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும், வெங்காளுர், காளிக் கோட்டம்(கல்கத்தா) முதலிய அயல் மாநிலங்களிலிருந்தும் தென்மொழியன்பர்களும் வீறு குறையாத விடுதலை மறவர்களும் திருச்சியில் வந்து கூடத் தொடங்கி விட்டனர். மாநாட்டு அமைப்பாளர் திரு. பெருஞ்சித்திரனாரும் மாநாட்டுச் செயலர் திரு. இறைக்குருவனாரும் 7-11-72 அன்று இரவே புறப்பட்டு 8-11-72 காலையிலிருந்து திருச்சியில் தங்கி, மாநாட்டு முன்னணிச் செயற்குழு உறுப்பினர்களாகிய திரு. வெற்றிக்கூத்தன், திரு. மகிழ்நன், திரு சின்னத்துரை, திரு தமிழநம்பி, திரு மு. வ. பரமசிவம், திரு. அருட்குவை, முதலியோருடன் மாநாட்டுத் தொடர்பான அனைத்து வேலைகளிலும் மும்முரமாக ஈடுபட்டனர். திரு. வெற்றிக்கூத்தன், திரு. மகிழ்நன் இருவரின் ஒத்துழைப்பையும் சொல்லில் வடிக்க முடியாது. இரவு பகலென்று பாராமல் இருவரும் ஓடி ஓடிச் செய்த பணிகள் எண்ணிலடங்கா தொண்டுகளின் அழுத்தத்தால் இருவரும் நான்கைந்து நாட்கள் சரிவர உணவுண்ணவோ உறங்கவோ முடியவில்லை. அவர்களுடன் அமைப்பாளர், செயலர் ஆகியோரும் அவர்களுடன் இருந்த பிற அன்பர்களும் வினைகளைப் பகிர்ந்து கொண்டு செய்த இணைவு முறையாலேயே மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்த முடிந்தது. இறுதிவரை மாநாடு நடைபெற விருந்த தேவர் மன்ற இசைவும், ஊர்வலத்துக்கான பிற இசைவுகளும் தரப்பபடாமலேயே இருந்து அன்பர்களின் இடைவிடாத முயற்சிகளால் மாநாட்டிற்கு ஓரிரு நாட்களின் முன்னமேயே பெறப் பெற்றன. அப்பொழுதும் இயங்கி வழியாக ஒலிபரப்பும் இசைவுக்கு இறுதிவரை அரசினர் இசைவு தரவே இல்லை. குமுகாய மாநாடு நடக்க விருந்த 10-6-72 காரியன்று காலை தேவர் மன்றச் சுவர்களில் விடுதலை முழக்கங்கள் கொட்டை கொட்டையான எழுத்துகளில் சிவப்பு மையில் தாள்களில் எழுதி ஒட்டப்பெற்றிருந்தன. அவை போவோர் வருவோரைச் சற்று இடை நிறுத்திப் படிக்கத் தூண்டும் படி அவ்வளவு எடுப்பாக அமைந்திருந்தன. தேவர் மன்ற நுழைவாயிலில் வாழை மரங்கள் கட்டப் பெற்று அழகுடன் காட்சியளித்தன.
ஊர்வலம் காலை 7 மணியளவில் தொடங்கும் என்று குறிக்கப் பெற்றிருந்தாலும், அன்பர்கள் நகர்ப்புறத்தின் பல பகுதிகளிலும் வந்து தங்கியிருந்ததனால் அவர்கள் வந்து கூடி ஊர்வலம் தொடங்க 8மணி ஆனது ஊர்வலத்தில் மறவர்கள் இருவர் இருவராக நின்றனர். ஊர்வலத்தின் இறுதியில் பெண்களும் அவர்களை யடுத்துத் தொண்டர்கள் சிலரும் கூடினர். மொத்தத்தில் ஊர்வலம் தொடங்குகையில் அதிலிருந்தவர் 150 பேர், ஊர்லம் பல வீதிகளிலும் சென்று கொண்டிருக்கையில் இடையிடையே பலர் வந்து கலந்து கொண்டனர். பெரும்பாலும் மாநாட்டுக்கு அழைக்கப் பெற்றிருந்த தலைவர்களுள் தமிழ்மறவர் திரு. வை. பொன்னம்பலனார் ஒருவரே ஊர்லத்தில் கலந்து கொண்டார். ஆனால் அன்றைய மாநாட்டில் கோவை மாவட்ட தி. க தலைவரும் வழக்கறிஞருமாகிய திரு. கசுத்தூரி அவர்களும் கலந்து கொண்டு சொற்பொழி வாற்றினார்.
உர்வலத்தில் கலந்து கொண்டவர் ஏறத்தாழ 200 பேராக இருந்தாலும், பலவகையான நடவடிக்கைகளும் இருக்கும் என்று தெரிந்தும், சட்டத்திற்கும் சிறைக்கும் அஞ்சாமல் என்ன நேர்ந்தாலும் எந்தமிழ் நாட்டிற்கென ஏற்றுக்கொள்வோம் எனத் துணிந்தும் வந்தவர்களாகவே அவர்களைக் கருதிக் கொள்ள வேண்டும். இதுபற்றி வேறு முன்பே தென்மொழியில் எச்சரிக்கை தரப் பெற்றுள்ளது. எனவே ஊர்வலத்தில் கலந்து கொண்டவர் ஒருவர் பதின்மருக்கு இன்னுஞ்சொன்னால் நூற்றுவருக்குக் கூடச் சமமாவர். அப்படிக் கணக்கிட்டால் ஊர்வலம் மிகுந்த அளவில் வெற்றி பெற்றது என்றே சொல்லுதல் வேண்டும்.
‘தமிழர் நாடு தமிழருக்கே 'தனித்தமிழ் நாட்டை அடைந்தே திருவோம்’ தில்லி ஆட்சிக்கு எல்லை கட்டுவோம்” , அடிமைத் தமிழரே விடிந்தது எழுங்கள், பார்ப்பனப்புரட்டு பயனளிக்காது, விளம்பரப் பலகையைத் தமிழில் எழுதுங்கள் போன்ற முழக்கங்கள் விண்ணைப் பிளக்கவும், தென்மொழியில் வெளிவந்த முழக்கங்கள் எழுதப்பெற்ற தட்டிகளையும் படங்களையும் ஏந்திக்கொண்டும் ஊர்வலம் திருச்சித் தேவர் மன்றத்திலிருந்து வடக்கு நோக்கிச் சரியாகக் காலை எட்டரை மணிக்குப் புறப்பட்டது. ஊர்வலத்தினர் அணி அணியாகப் பிரிந்து, தமிழ் குமுகாய, தமிழக விடுதலை முழக்கங்களைத் தொடர்ந்து எழுப்பிய வண்ணம் சென்றனர். மறவர் இருவர் ஊர்வலத்தின் முன் ‘தமிழக விடுதலை மாநாடு’ என்று செம் மையில் எழுதப் பெற்ற பதாகையைப் பிடித்துச் சென்றனர். ஊர்வலத்தின் வலப்பக்கத்தில் மாநாட்டு அமைப்பாளரும் தென்மொழி ஆசிரியருமாகிய பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களும், மாநாட்டுச் செயலரும் வலம்புரி ஆசிரியருமாகிய புலவர் இறைக்குருவனார் அவர்களும் அன்பர் சிலரும் அவ்வப்பொழுது வரிசையை ஒழுங்கு படுத்திக் கொண்டும், வேறு சில விரும்பத்தக்காத வன்முறைச் செயல்கள் நிகழ்ந்து விடாதவாறு கண்காணித்துக் கொண்டும் நடந்து வந்தனர். உரத்த குரலுடைய மறவர்கள் சிலர் முன் முழக்கமிட, அவர்களைத் தொடர்ந்து அன்பர்கள் வீறுபட கொள்கைகளை முழங்கியது. தெருக்களில் போவார் வருவாரையும் சந்து பொந்துகளில் நின்றாரையும் கடை கண்ணிகளில் வாணிகம் செய்து கொண்டிருந்தாரையும் நிலைகுத்தி நிற்கச் செய்து வியப்புடனும், வேடிக்கையுடனும் ஊர்வலத்தைப் பார்க்கவும் முழக்கங்களைக் கேட்கவும் செய்தது. முழக்கமிட்டவர்களில் திரு. அரணமுறுவல் அவர்களின் குரலும் திரு. நெடுஞ்சேரலாதன் அவர்களின் குரலும் இன்னுங்கூட திருச்சியிலுள்ள பொதுமக்களின் காதுகளில் சிலையோடிக்கொண்டிருக்கும்.
தேவர் மன்றத்தில் இருந்துபுறப்பட்ட ஊர்வலம் மேலரண் சாலை வழியே வடக்கு நோக்கிச் சென்ற பின், பிசப்சாலைக்குத் திரும்பி உறையூர் சென்று புத்தூர்ச்சாலை, மருத்துவமனைச்சாலை வழியே படையிருப்புப் பகுதியை அடைந்தது, வெயில் கடுமையாகக் கொளுத்தியதாலும், ஏறத்தாழ இரண்டு மணிநேரம் உரத்த குரலில் தொடர்ந்து முழக்கங்களிட்டதாலும் அனைவரும் தண்ணீர் அருந்தினர். பின் உடனே தொடர்ந்து சென்ற ஊர்வலம் பேருந்து நிலையம் சென்று மதுரைச் சாலையில்க் கிழக்கு நோக்கித் திரும்பிப் போய்க் கொண்டிருந்தது. ஊர்வலத்தோடு ஏற்கெனவே வந்து கொண்டிருந்த காவலர் சிலருடன் புதிதாகச் சிலரும் வந்து சேர்ந்தனர். சற்றுத் தொலைவில் பின்னால் காவலர் வண்டி ஒன்று ஊர்வலத்தைத் தொடர்ந்து முதலில் வந்தது போல் வந்து கொண்டிருந்தது தீடீரென்று ஊர்வலம் இடும் முழக்கங்களைத் தலைமைக்காவலர் ஒருவர் விரைந்து விரைந்து எழுதிக் கொள்ள முயன்றார். அவரால் முடியவில்லை. அவருக்கு 25 முழக்கங்களும் அச்சிட்ட படி ஒன்று கொடுக்கப் பெற்றது. அப்போது காவல் துறைப் பொது இயங்கி(jeep) ஒன்று ஊர்வலத்தைத் தாண்டிச் சென்று பின் மதுரைச்சாலை வழியே பாலக்கரைக்கடைத் தெருவினுள் நுழையும் போது காவல் துறைத் தலைமை அதிகாரிகள் ஏறிய இன்னியங்கி ஒன்று ஊர்வலத்தை முந்திச் சென்றது. சற்று நேரங்கழித்து ஊர்வலம் காந்தி அங்காடியை அடைந்ததும், காவல்துறை அதிகாரிகள் ஊர்வலத்தை மறித்தனர். காவலர் பலர் ஊர்வலத்தைச் சுற்றி வளைத்துக்கொண்டனர். அப்போது ஊர்வலம் நின்ற போதிலும் விடுதலை முழக்கங்கள் முன்னிலும் பன்மடங்கு உரத்த குரலில் முழக்கப்பெற்றன. மக்கள் கூட்டங் கூட்டமாய் ஆங்காங்கு நின்று வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஊர்வலத்தை மறித்த அதிகாரிகள் மாநாட்டு அமைப்பாளர் பாவலரேறு பெருஞ்சித்திரனாருடன் ஏதோ பேசினர். அப்போது அவர்கள் பக்கத்தில் திருவாளன்மார் மகிழ்நனும், தமிழ்நம்பியும் போய் நின்று கொண்டனர். (காவல் துறை அதிகாரிகளுடன் பேசிய பேச்சைப் பாவலரேறு அவர்கள் மாநாட்டில் பின்னர் வெளியிட்டார்கள். காவல் துறை அதிகாரிகள் (மாநிலத் துணைப் பொது ஆய்வாளர் D.I.G. மேலாண்மை அதிகாரி - Supeerintendent) ஊர்வலத்தை அத்துடன் முடித்துக்கொண்டு கலைந்து செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்வதாகச் சொன்னார்கள். அதற்குப் பாவலரேறு அவர்கள் அதிகாரிகள் ஊர்வலத்தை நிறுத்தி யிராவிட்டால் அதுவரை வந்தது போல் ஊர்வலம் அமைதியாக நெடுந்தொலைவைக் கடந்திருக்கும் என்றும்; ஊர்வலத்தினர் படித்துப் பட்டம் பெற்ற பண்புடையர் என்றும் எந்த வன்முறையிலும் ஈடுபடார் என்றும்; எப்படியும் ஊர்வலம் திட்டமிட்டபடி செல்லும் என்றும்; ஆனால் அதிகாரிகள் சட்டப்படி தம் கடமையைச் செய்யலாம் என்றும் தெளிவாகச் சொன்னார்கள். இறுதியில் அதிகாரிகள் விடுதலை முழக்கங்கள் எழுதிய சில தட்டிகளைக் கொடுத்துவிட்டுப் போகுமாறு கேட்டார்கள். அதற்கு அமைப்பாளர் அவர்கள் ஊர்வலத்தினர் தட்டிகளைக் கொடுக்கார் என்றும் வேண்டுமானால் அதிகாரிகள் பிடுங்கிக் கொள்ளலாம் என்றும்; அவ்வாறு செய்யின் அதை ஊர்வலத்தினர் தடுக்கார் என்றும் சொன்னார்கள். அதற்கு அதிகாரிகள் கொடுப்பதும் பிடுங்குவதும் ஒன்றெனக் கூறியதற்கு அமைப்பாளர் அவர்கள் கொடுத்தால் இருவர் (ஊர்வலத்தினர் - அதிகாரிகள்) கடமையும் நிறைவேறா என்று கூறி மேலும் விளக்கினார்கள்) உணர்வழுத்தம் மிகுந்த குரலில் திரு. மு. மகிழரசன் விடுதலை முழக்கங்களை எழுப்பியது போல் ஊர்வலத்தினரும் முழக்க மிட்டுக்கொண்டிருந்தனர். அவ் விடுதலை மறவர்களின் உணர் வெழுச்சி முழக்கங்களாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது திரு. மகிழ்நன் முழங்குவதைச் சற்று நிறுத்தவேண்டும். என்பதும் அதிகாரிகள் எந்தெந்தத் தட்டிகளை எடுத்துக் கொண்டாலும் வாளாவிருக்க வேண்டும் என்பதும் அமைப்பாளர் கட்டளை என்றும் சொன்னார். பின் அதிகாரிகள் விடுதலை முழக்கத் தட்டிகள் சிலவற்றை எடுத்துக்கொண்டனர். ஊர்வலம் தொடர்ந்தது.
புதிய உணர்வுடன் புறப்பட்ட ஊர்வலம் காந்தி அங்காடியினின்று பெரிய கடைத்தெரு, தெப்பக்குளம் ,கீழைச் சிந்தாமணி வழியே மீண்டும் மேலரண் சாலையை அடைந்து ஏறத்தாழப் பகல் 1230 மணிக்குத் தேவர் மன்றத்தை அடைந்தது ஊர்வலம் கடந்த மொத்தத் தொலைவு ஏறத்தாழ 12 கல்! தேவர் மன்றத்தின் வாயிலை அடைந்ததும் "தாய்மொழித் தமிழைத் தவறின்றிப் பேசுங்கள்” முதல் “தமிழப்பெரு நிலத்தை விடுவிக்க வாரீர்!” ஈறாகவுள்ள இருபத்தைந்து முழக்கங்களும் வரிசையாய் ஒவ்வொன்றாய் முழக்கப்பெற்றன. பின் அனைவரும் நன்பகல் உணவுக்காகக் கலைந்து சென்றனர்.
பிற்பகல் 2 மணியளவில் செல்வி மா. தேன்மொழியின் தமிழ் வணக்கப் பாடலுடன் குமுகாய மாநாடு தொடங்கியது. மாநாட்டு அமைப்பாளர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் செயலர் புலவர் இறைக்குருவனார், தமிழ்மறவர் புலவர் வை. பொன்னம்பலனார், கோவை மாவட்ட தி. க. தலைவர் கசுத்துளரி, ‘கைகாட்டி' ஆசிரியர், திரு. தமிழ்க்குடிமகனார் முதலியோர் மேடையிலும் , அதற்கண்மையிலும் அமர்ந்திருந்தனர். மாநாட்டிற்கு வருவதாகத் தெரிவித்திருந்த பர். சி. இலக்குவனாரும், புலவர் குழந்தையும் என்ன கரணியத்தாலோ வரவில்லை. முதலில் மாநாட்டரங்கில் ஏறத்தாழ இருநூற்றுவர் கூடியிருந்தனர். பின் அன்பர்களும் பொதுமக்களும் வரத் தொடங்கினர். மாநாட்டினுள் தென்மொழி , தமிழ்ச்சிட்டுப் பழைய இதழ்களும் தென்மொழி வெளியீட்டு நூல்களும், புன்செய்ப்புளியம்பட்டி மறைமலையடிகள் மன்றத்தார் வழிப் பாவாணர் நூல்களும், திருவாரூர் இயற்றமிழ் பயிற்றகத்தாரின் நூளும் விற்பனைக்குக் வேண்டுவரப் பெற்றிருந்தன.
தமிழ் வணக்கப் பாடல் முடிந்ததும் மாநாட்டு அமைப்பாளர் எழுந்து காலையில் நடந்த ஊர்வலச் சிறப்புப் பற்றிச் சொன்னார்கள் எந்த நடவடிக்கைக்கும் அஞ்சாமல் துணிந்து மாநாட்டிற்கு வந்த அன்பர்களைப் பாராட்டி நன்றி தெரிவித்தார்கள். பின் மாநாட்டிற்குத் தலைமை தாங்க அங்கு வந்திருந்தவருள் ஒருவரைத் தேர்ந்தெடுக்க முற்பட்டார்கள். எவருடைய துணையுமின்றி, எவரையும் எதிர்பாராமல், தம் ஊரினின்று தனியராய்த் தாம் ஒருவரே வந்த அன்பர்களை மேடைக்கு அழைத்தார்கள். நான்கைந்து பேர் வந்தனர். அவருள் நீண்ட நாட்களாகத் தொடர்ந்து ‘தென்மொழி’ படித்துவரும் அன்பரைத் தேர்ந்தெடுக்கும் பொருட்டு ஒவ்வொரு வரையும் வினவினார்கள். அவர்கள் விடையிறுக்கையில் மதுரையினின்று வந்த திரு. இராச சேகரன் என்னும் கல்லூரி இறுதியாண்டு அறிவியல் மாணவர் தாம் ஒரே ஒரு தென்மொழியை அஃதாவது மாநாடு நடைபெறப் போகும் செய்தி வெளிவந்த தென்மொழி சுவடி 10 ஓலை 1- ஐத்தான் முதலில் படித்ததாகவும் அதையும், மதுரைச் சுப்பிரமணியபுரம் கிளை நூலகத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் பார்த்ததாகவும், அத் தென்மொழியில் வந்த தமிழக விடுதலை மாநாட்டுச் செய்தியே தம்மை மிகவும் கவர்ந்ததாகவும்; தாம் தென்மொழி படிக்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் நூலகம் மூடவிருந்ததாலும் தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டு மாநாடு இரண்டொரு நாளில் நடக்கவிருந்ததை அறிந்ததாலும் அவ்விதழை நூலகத் தினின்று திருடிச்சென்று முழுவதையும் படித்து விட்டு மாநாட்டிற்கு ஓடிவந்திருப்பதாகவும் கூறினார். அவர்தம் அறிவுணர்ச்சித் திருட்டையும், அஞ்சாமை யையும், திறமையையும். தமிழுணர்வையும் பாராட்டி அவரைத் தலைவராக அமர்த்தினார்கள். திரு. இராசசேகரன் தாம் தலைவராக அமர்த்தப் பெற்றமைக்கு நன்றி தெரிவித்து மாநாட்டைத் தொடங்கினார். திருவாளன்மார் எழிற்கண்ணன், பெ.வெற்றிக் கூத்தன், இரா. பாவாணன், புலவர் சா. அடல் எழிலன், த. அரிமா வளங்கோ, ந. அரணமுறுவல், தரங்கை- பன்னிர்ச்செல்வன், புலவர். சரவணத் தமிழன் முதலியோர் உரையாற்றினர், இன்றைய நிலையில் தமிழ்க்குமுகாயம் அடைந்துள்ள சீர்கேடு, சீர்கேட்டுக்குக் கரணியம் அவற்றை நீக்குவது எப்படி என்பன பற்றி விளக்கமாகச் சொல்லி இறுதியில் தமிழகம் நாவலந்தீவினின்று விடுதலை பெற்றால் தான் தமிழ்க்குமுகாயம் சீர்கேடுகளினின்று விடுதலை பெறும் என்பதை வலியுறுத்திப் பேசினார்கள்.
கோவை மாவட்ட தி.க. தலைவர் வழக்குரைஞர் கசுத்தூரி அவர்கள் பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளை விளக்கியும் தமிழகம் விடுதலை பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் உரையாற்றினார்கள்.
'கைகாட்டி' ஆசிரியர் பேரா. தமிழ்க்குடிமகனார் பேசுகையில் மாநாடு வரலாற்றுச் சிறப்புமிக்க தெனறும் பிரிவினை கேட்டால் கடும் நடவடிக்கை எடுக்கச் சட்டமும் அரசியல் சூழலும் உள்ள நேரத்தில் தமிழக விடுதலை கேட்டு மாநாடு நடத்தும் அமைப்பாளரின் திறம் பாராட்டிற்குரியதென்றும், மற்று பிரஞ்சுப் புரட்சியில் பயன் பெற்ற 'கில்லட்டின்' கருவி போன்று தமிழக விடுதலைக்கும் ஒன்று தேவையென்றும்; நாட்டிலே சொல்லித்திருத்துவதற்கு ஒரு கூட்டமும் உதைத்துத் திருத்துவதற்கு ஒரு கூட்டமும் தேவையென்றும்; மதுரையிலிருந்து வெளிவரும் 'தினமணி' இதழில் தியாகராயர் கல்லூரி மாணவர்கள் போராடியதாலேயே ஆட்பெயருக்கு முன் 'ஸ்ரீ' யை நீக்கி , 'திரு' வைப் பயன்படுத்துவதாகவும் தியாகராயர் கல்லூரி மாணவர் செய்தது போல் சென்னை மாணவர் செய்யாததால் சென்னையினின்று வெளிவரும் 'ஸ்ரீ தினமணியில்' என்று வட மொழி அடையையே தொடர்ந்து அதன் ஆசிரியர் பயன்படுத்துவதாகவும் பேசினார். மேலும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஒரு தனி அரசியற் கட்சி தொடங்கினால் தேர்தலில் போட்டியிட்டுச் சட்ட மன்றம் வழியேயும் தமிழக விடுதலைக்குக் குரல் எழுப்பலாம் என்றும் அவ்வாறு கட்சி தொடங்கினால் தாம் துணை நிற்பதாகவும் சொன்னார்.
தமிழ் மறவர் புலவர். வை. பொன்னம்பலனார் பேசுகையில் இன்று தமிழகத்தில் தமிழர்களுக்காக எந்த நேரமும் எண்ணிக்கொண்டு செயலாற்றும் பொதுத் தொண்டர் ஒருவர் பெரியாரென்றும் மற்றவர் பெருஞ்சித்திரனாரென்றும், அவர் தம் மாணவராக இருந்தமைக்குத் தம் உள்ளம்மிகப் பூரிப் படைவதாகவும் சொன்னார். இம்மாநாட்டிற்குப் பெரியார் வந்திருந்தால் நன்றாயிருந்திக்குமென்றும், ஆனால் மாநாட்டில் முடிவெடுக்கும் தீர்மானத்தைப் பெரியாரிடம் காட்டி அவருடைய துணையைப் பெறத் தாம் முயற்சி செய்யப்போவதாகவும், பெருஞ்சித்திரனார் தமக்கென்று ஒரு வழியை ஏற்படுத்திக்கொண்டு புரட்சியுடன் செயலாற்றுவதாகவும் சொன்னார். சில் ஆண்டுகளுக்கு முன்னால் தமிழர்கள் ஆரியப் பார்ப்பனர்களால் எவ்வாறு இழிவு படுத்தப் பெற்றனர் என்பதையும். எவ்வாறு பெரியாரின் தொண்டு மக்களின் இழிவைத் துடைக்கப் பயன் பெற்றது என்றும், தமிழர்கள் முழுமையாக மேம்படவேண்டுமென்றால் கோயில்களையும் கடவுள்களையும் அறவே ஒழித்தாக வேண்டும் என்றும் ‘பெருஞ்சித்திரனார்’ ஏனோ இறைவனிடம் சிக்கிக் கொண்டாரென்றும் பேசினார். மேலும் பேசுகையில் தனித்தமிழ் இயக்கம் எப்பொதெல்லாம் முளைவிட்டதென்றும், தனித்தமிழ் நாட்டுக் கோரிக்கை எப்பொதெல்லாம் கிளப்பப்பெற்ற தென்றும் பல நிகழ்ச்சிகளை விளக்கிக் காட்டிப் பெரியாரின் தொண்டுகளை எடுத்துக் கூறினார்.
அதன்பின் மாநாட்டு அமைப்பாளர் பாவலரேறு பெருஞ் சித்திரனார் உணர்வெழுச்சி மிக்க ஓர் உரையாற்றிக் குமுகாய மாநாட்டுத் தீர்மானத்தைப் படித்து விளக்கினார். (சொற்பொழிவு மற்றொரு பக்கத்தில் வெளியிடப் பெற்றுள்ளது) மொழியும் இனமும் பிரிக்கப்பட முடியாதவை என்றும்; எனவே தமிழ்மொழி, குமுகாய விடுதலை மாநாடு என்று இணைத்துப் போட்டதாகவும் இவ்வுண்மையை உணராத திராவிடர் கழகத்தினர் இனத்திற்காக மட்டுமே பாடுபடமுயல்கின்றனர்; மொழியை அறவே விட்டு விடுகின்றனர்; மொழி நிலையில் ஏற்படும் தாழ்வால் இனம் எப்படித் தாழ்கிறது என்பதை அவர்கள் உணராமல் இருக்கின்றனர். என்றும்; தனித்தமிழ் இயக்கம் எப்படி எப்படிக் குமுகாய விடுதலைக்கு அடிப்படையாய் இருக்கிறதென்றும் விளக்கினார்கள். குமுகாய மாநாட்டுத் தீர்மானத்தை (வேறொருபக்கத்தில் வெளியிடப் பெற்றுள்ளது.) விளக்கும்முன்னர் மற்ற மாநாடுகளில் போலன்றித் தீர்மானத்தில் குறிக்கோளுடன் செயல் திட்டமும் கொடுக்கப் பெறும் சிறப்பைச் சொன்னார்கள். செயல் திட்ட முழு விளக்கத்தை அரசியல் மாநாட்டின் முடிவில் அறிவிப்பதாகச் சொன்னார்கள் மொழி குலமத விடுதலைக்குத் தடையாக இருக்கும் ஆரியப்பார் பனரைத் தீர்மானத்தில் குறிக்கப் பெற்ற வேண்டுகோள் காலத்திற்குள் திருந்தி விடுமாறு எச்சரிதும், அதே போல் இந்திய அரசை எவ்வத்துறையில் விடுதலை இயக்க மறவர்கள் இருக்கிறார்கள் என்பதைக் கூறித் தமிழகத்தை விடுதலை நாடாக அறிவிக்குமாறு கடுமையாக எச்சரித்ததும் வீறுரை ஆற்றினார்கள். எல்லாப் பேச்சுகளையும் நடுவணரசு ஒற்றர்கள் எழுதிக் கொண்டனர். மாநாட்டரங்கினுள்ளும், வெளியேயும் நின்றுக் கொண்டிருந்த காவலர்களும், பாவலரேற்றின் உணர்வழுத்த உரையால் கட்டப்பெற்றிருக்காமல் இருந்திரார் என்றே சொல்லல் வேண்டும். மாநாட்டு வாயிலில் கொட்டை எழுத்துகளில் ஒட்டப்பெற்றிருந்த விடுதலை முழக்கச் சுவரொட்டிகளைக் கண்டும், சொற்பொழிவைக் கேட்டும் மாநாட்டில் பார்வையாளர் வரிசையில் எண்ணிக்கை கூடிக்கொண்டே வந்தது. பாவலரேறு பேசி முடித்தபோது இரவு மணி 8-00. அப்போது இரவு உணவுக்காக அனைவரும் கலைந்து சென்றனர்.
பின் வெங்காளூர் திரு. அறவாழி எழுதி, இயக்கி, நடத்திய 'எந்நாளோ?’ என்னும்நாடகம் (தமிழக விடுதலைக்) கொள்கை நடிக்கப்பெற்றது. அந்நாடகத்தில் ஒன்றிரண்டு அயற் சொற்கள் கலந்து உரையாடல் எழுதப்பெற்றிருப்பினும் தமிழுணர்வும் , தமிழக விடுதலைக் கருத்துகளுமே மிகுதியும் புகுத்தப்பெற்றிருந்தன. நாடகத்தில் வீர உணர்வு இழையோடிற்று. அவ்வுணர்வுக்குத் தக்க அனைவரும் சிறப்பாக நடித்திருந்ததோடு அன்றி வெங்காளூம் அன்பர் இசைத்த 'கிதார்’ப் பின்னிசை இசை உணர்வுக்கு உணர்வு ஊட்டுவதாக சிறப்பாக அமைந்திருந்தது. நாடகத்தில் திருவாளன்மார் மணிவேங்கை விட்டுணு, பன்னீர்ச்செல்வன். இரா. மன்னன், பீர்முகம்மது, சிவநேசன், நடராசன், செல்வி. பிரேம்குமாரி ஆகியோர் நடித்தனர். மாநாட்டுக்கு வந்திருந்த அன்பர்களும் நாடகம் பார்க்க வந்திருந்த பொதுமக்களும் நாடகத்தைப் பாரட்டிப் பேசிக் கொண்டனர். இரவு 12 மணியளவில் நாடகமும் குமுகாய மாநாடும் முடிவுற்றன.
அரசியல் மாநாடு
ஞாயிற்றுக்கிழமை (11-6 -1972) காலை 9. 30 மணியளவில் அரசியல் மாநாடு தொடடங்ற்று. மாநாட்டின் முதல் கட்டமாக மாணவர் அரங்கமும் இரண்டாவதாக மகளிர் அரங்கமும் நிகழ்ந்தன. இவ்விரு அரங்குகளுக்கும் மாநாட்டு செயலாளர் புலவர் . இறைக்குருவனார் தலைமை தாங்கினார், செல்வி மா. தேன்மொழி தமிழ் வணக்கப் பாடல் பாடினார். மாணவர் அரங்கத்தில் திருவாளன்மார் வே. மு. பொதிய வெற்பன், கோ. திருநாவுக்கரசு, அரிமா மகிழ்கோ, ஆ. மதியழகன், ஆடலரசு, அன்பழகன், பாமகன், கரிகாலன், சிவந்த பெருமாள் ஆகியோர் பேசினர். இவர்கள் பேசுங்கால், மாணவர்கள் தமிழில் ஆழமான அறிவைப் பெற வேண்டும் என்றும்; அயல் நாடு செல்ல நேரின் அவ்வறிவால் தமிழின் மேன்மையைப் பரப்ப வேண்டும் என்றும் அவ்வத் துறையில் உள்ள மாணவர்கள் அவ்வத் துறையில் முதிர்ச்சியடைய வேண்டும் என்றும்; மாணவரிடையே தமிழக விடுதலை உணர்வு நன்றாகப் பரவி வருகிறதென்றும்; எனவே ஆட்சியாளர்கள் கேட்பதைக் கொடுக்க அணியமாக இருக்க வேண்டுமென்று எச்சரித்தும்; வடமொழிக்கும் இந்திக்கும் நடுவணரசினர் செலவிடுவதைக் கண்டித்தும் உரையாற்றினர்.
மகளிர் அரங்கில் திருவாட்டிமார் இறை. பொற்கொடி. உலகமுதல்வி, தாமரைபெருஞ்சித்திரன் ஆகியோர் பேசினர். அவர்கள் பேசுகையில் தமிழகத் தாய்மார் ஒவ்வொருவரும் தம் பிள்ளைகட்கு நல்லுணர்வு ஊட்டி வளர்ப்பதுடன் தம் பிள்ளைகளைத் தமிழக விடுதலைக்கு உழைக்க அணியமாக்கி நாட்டுக்குக் கொடுக்க முன்வரவேண்டுமென்றும்; அத்துடன் தாமும் எந்தெந்த நிலைகளில் பாடுபட முடியுமோ அந்தந்த நிலைகளில் பாடுபட்டுத் தாமும் தம் குடும்பமும் பெருமையுற வழிவகை செய்ய வேண்டுமென்றும் குறிப்பிட்டனர். நண்பகல் இடை நேரத்தில் பெகும்ப கல்லா திரு. நா. இளமாறன் தமிழியக்கப் பாடல்கள் சில பாடினார்.
இறுதியாக அரசியல் அரங்கம் தொடங்கியது. அதற்குத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பொருட்டு மாநாட்டு அமைப்பாளர் சார்பில் திரு. க. வெ. நெடுஞ்சேரலாதன் நான்காண்டுகள் தொடர்ந்து திரைப்படம் பார்க்காத அன்பர் யாரேனும் உளரா என்று கேட்டார் யாரும் வரவில்லை. சிலர் வந்து ஆறாண்டு ஏழாண்டுகள் பார்க்காமல் இருந்து அண்மையில் ஒரு படம் பார்த்ததாகக் கூறினர். இறுதியில் இரண்டரை ஆண்டுகளாகத் தொடர்ந்து திரைப்படம் பார்க்காத திருவாரூர் அன்பர் திரு. வை. தமிழ்க்குமரன் தலைவராக அமர்த்தப் பெற்றார். திருவாளன்மார் இரா. மெய்யறிவன், கந்த. கண்ணன், தமிழநம்பி, மு. மகிழரசன், இரும்பொறை திருக்குறள் பெருமாள், இரா. அருட்குவை, க.வெ. நெடுஞ்சேரலாதன், மறை. நித்தலின்பனார் ஆகியோர் தத்தம் பாணியில் தமிழக விடுதலைபற்றி வலியுறுத்தித் தம் உணர்வு கனலும் உள்ளங்களை வெளிக்காட்டினர். திருவாட்டி கோன். பாப்பா அரசியலில் மகளிர் பங்குபற்றி உரையாற்றினார்.
கடைசியாக மாநாட்டு அமைப்பாளர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் குமுகாய மாநாட்டில் பேசியது போல் உணர்வு கொளுத்தும் உரையாற்றித் தமிழக விடுதலைத் தீர்மானத்தையும் செயன்முறையையும் படித்துக்காட்டிச் செயல் திட்டத்தை விளக்கினார்கள்.
“நேற்றைய மாநாட்டு ஊர்வல, நிகழ்ச்சிகள் பற்றி எந்தத் தமிழ்த் தாளிலும் ('இந்தியன் எக்சுபிரசு' ஏட்டில் சுருக்கமாகச் செய்தி வந்திருந்தது) செய்தி வெளிவராதது பற்றி அன்பர்கள் குறைபட்டுக் கொண்டதாகக் கேள்விப்பட்டேன்; அவர்கள் தனித்தமிழ்நாடு கேட்ட ஆதித்தனாரின், 'தினத்தந்தி’யிலும் செய்தி வராதது பற்றிச் சொன்னார்கள்” என்று கூறி யாரும் எதற்கும் குறைப்படவோ, கவலைப்படவோ வேண்டியதில்லை என்றும் தினத்தந்தி ஒரு செய்தித்தாளே அன்று என்றும் கூறினார்கள். இதை விளக்கும் பொருட்டு 11.6.1972 ஞாயிறன்று வந்த தாளைக் கையில் எடுத்து முதல் பக்கத்திலிருந்து கடைசிவரை உள்ள செய்திகளைப் படித்துக் காட்டியும், திரைப்படச் செய்திகளையும் நடிக நடிகையர் படங்களையும், ஓரைப்பயன் (இராசிபலன்)களையும் விளம்பரங்களையும் சுட்டிக் காட்டியும்; அது மக்களுக்குப் பயன்பெறும் செய்தித்தாளே அன்றென்றும்; காசு சேர்க்கும் ஒரு வணிக நிறுவனம் என்றும் விளக்கினார்கள்.
'தினமணி'த் தாளிகையில் தேவையான செய்திகளை ஒருவாறு தொகுத்து எழுதினாலும் தன் (ஆரியப் பார்ப்பன) இனப்பற்றால் 'விஸ்தரிப்பு' 'ஜரூர்’ என்று வடசொற்கலந்து எழுதுவதையும், புராணப் புரட்டுகளைப் பரப்பியும், "காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீசங்கராச்சாரியார் மதுரையில் காலடி எடுத்துவைத்தார்; தெய்வீக மனம் கமழ்ந்தது" என்பது போன்று செய்தி எழுதியும் தன் இனத்தைக் காத்துத் தமிழினத்தைத் தாழ்த்தியே வைத்திருக்க நினைப்பதையும் கண்டித்தார்கள். இதேபோல் தமிழினத்தின் விடுதலைக்காகப் பாடுபடுவதாகச் சொல்லும 'விடுதலை’ நாளேட்டிலேயே "பகிஷ்கரிப்பு, இங்கிலீஷ் மீடியம்" என்பன போன்று மொழிக்கலப்பு செய்வதையும் சாடினார்கள். பெரியாரிடம் உள்ளவர்களே தமிழில் ஒன்றும் இல்லை என்று சொல்லிக் கொண்டும்; தம் பிள்ளைகளை ஆங்கிலப் பயிற்று மொழிப் பள்ளியில் பயிலச்செய்து கொண்டும்; “டாடி, மம்மி” என்று கற்றுக் கொடுத்துக் கொண்டும் இருப்பதாகச் சொல்லி அதை வன்மையாகக் கண்டித்தார்கள். தனித்தமிழில் ஒரு நல்ல செய்தித்தாள் நடத்திக் காட்டத் தாம் முன்பே திட்டமிட்டதாகவும் ஆனால் திட்டம் நிறைவேறாமற் போனதென்றும்; இருப்பினும் இன்னும் முயன்று கொண்டிருப்பதாகவும் சொன்னார்கள்.
தமிழை மதிக்காத திராவிடர் கழகத்தினர் திருக்குறளைப் 'பெண்ணடிமை செய்கிறது: கண்முடி வழக்கங்களைக் கற்பிக்கிறது' என்று சொல்லி வருவதற்கு மறுத்தார்கள். அவர்களுடன் திருக்குறளில் பெண்ணடிமை சொல்லப் பெறவில்லை யென்றும்; திருக்குறளில் அறிவுக்குப் பொருத்தமானவையே சொல்லப் பெறுகிறதென்றும் தாம் தருக்கமிட அணியமென்றும் சூளுரைத்தார்கள்.
“பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து
ஈண்டிய கேள்வி யவர்”
என்னும் திருக்குறட் பொருளை அரைமணி நேரம் விளக்கியிருப்பார்கள். இழைத்துணர்ந்து ஈண்டிய கேள்வியவர் - மனத்தில் தேய்த்துத் தேய்த்து உரசி உரசி - சரியா தவறா என்று இழைத்து - அஃதாவது மொத்தமாக இல்லாமல் மெல்லியதாக ஆகும் வரை இழைத்து அதைச் சரி என்று மனத்திலே உணர்கின்ற - போய்ப் போய்த் தேடி அறிவைத் தேடுகின்ற அறிவினார்.
பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் பிழையாகத் தம் மனத்துள்ளே உணர்ந்தாலும் அந்தப் பிழையானவற்றை வெளியே வாய்திறந்து சொல்லமாட்டார்கள் - என்று பற்பல கூறி விளக்கித் திருக்குறள் அறிவுக்குப் பொருத்தமானவற்றை எந்த அறிஞனும் இருந்து சொல்லாத உயர்நிலையில் இருந்து அறிவைக் கூறுவதாகக் கூறினார்கள்.
பலர் இன்று பொதுவுடைமை பேசிக்கொண்டு தொழிலாளர்க்குத் தலைவராய் இருப்பதாகக் கூறிக் கொள்கிறார்கள்; அவர்கள் வெறும் போலித்தலைவர்களே; தொழிலுக்குத் தலைவராக இருந்து தொழிலாளர்க்குத் தலைவராய் அமர வேண்டிய உண்மையன தலைவர் ஒருவரும் இலர் என்று போலித் தலைவர்களைக் கண்டித் தார்கள்.
தமிழக விடுதலைக்குப் பெரியாரையே இனியும் நம்பிக் கொண்டிருக்கத் தேவையில்லை என்றும்; அவர் ஆற்ற வேண்டிய பணிகளை இதுநாள் வரை ஆற்றிவிட்டாரென்றும்; அவர் காட்டிய வழியில் நாம் மேலே ஒருபடி சென்று அவர் செய்யாதவற்றைச் செய்ய வேண்டும் என்றும்; கலைஞர் மாநிலத் தன்னாட்சிகோரினாலும் அவர் உள்மனத்தில் தமிழக விடுதலை உணர்வுதான் இருக்கிறதென்றும் கூறினார்கள்.
விடுதலையடைந்த பல நாடுகளின் வரலாறுகளைப் புரட்டிப் பார்த்துக் கொண்டு பலர் பலவாறு சொல்லிக்கொண்டு நம் மக்கள் ஒத்துழைப்பார்களா என்று தயங்குகின்றார்கள்; மயங்குகின்றார்கள். பிரெஞ்சுப்புரட்சி ஏறத்தாழ 400 பேர்களால் தான் முன்னின்று நடத்தப் பெற்றது. மக்கள் தக்க நேரத்தில் அவர்களாகவேவந்து சேர்ந்து கொண்டார்கள். எனவே மக்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. அவர்களை எந்தநேரத்திலும் இழுத்துக் கொள்ளலாம். வங்காளத்தில் நடந்த விடுதலைப் புரட்சியில் இலக்கக் கணக்கில் மடிந்துள்ளார்களே என்கிறார்கள் அங்கு மடிந்தால் இங்கும் மடிய வேண்டுமா என்ன? அப்படியே செத்தாலும்தான் என்ன கெட்டுப் போகிறது. இப்போதுள்ள நிலை வாழ்ந்து கொண்டா இருக்கிறது? இந்திரா அம்மையாருக்கு அவ்வளவு துணிச்சல் வராது. வரலாறு புரட்சியைப் படைக்காது, புரட்சிதான் வரலாற்றைப் படைக்கும் ஒவ்வொரு நாட்டு விடுதலைப் புரட்சியும் ஒவ்வாரு வரலாற்றைப் படைக்கும், நம் நாட்டில் ஐந்தே ஐந்து பேர் செத்தால் போதும் நமக்கு விடுதலை கிடைத்துவிடும் என்று விடுதலை கேட்டு எழத் தயங்கும் தமிழர்களைத் தூக்கி நிறுத்துமாறு பேசினார்கள். மேலும் பேசுகையில் காவல்துறையினரும், புலனாய்வுத் துறையினரும் இப்போது தம்தம் கடமைகளைச் செய்யலாம். ஆனால் ஒருகாலம் வரும். அப்போது நீங்கள் உடனே மாறிக் கொண்டு எங்களுடன் சேர்த்து ஒத்துழைக்க வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிட்டார்கள்.
தம் கை பாட்டு மட்டும் எழுதாது; கருவியும் செய்யும் - அஃதாவது கருவி ஏந்தும் என்று சொல்லவில்லை; கருவி செய்யும் என்று கூறித் தாம் எல்லாவற்றிற்கும் அணியமாக இருப்பதாகவும் அவ்வாறே பலர் அணியமாக இருப்பதாகவும் கூறி நடுவணரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்கள்.
பின் பாவலரேறு அவர்கள் தமிழக விடுதலைத் தீர்மானக் குறிக்கோளையும், செயற்பாட்டையும் (பிறிதொரு பக்கத்தில் உள்ளன) படித்துக்காட்டிக் குமுகாய மாநாட்டுத் தீர்மானத்தையும் நிறைவேற்றுவதற்கான பொதுச்செயல் திட்ட அமைப்பை விளக்கினார்கள். அதை விளக்கும் முன் தமிழக விடுதலை இயக்கம் சூன் 1, 1972 முதல் இயங்கத் தொடங்கிவிட்டதென்று அறிவித்தார்கள். செயல் திட்ட அமைப்பில் 'வேந்தம்' தலைமையானதென்றும் அதில் பொதுச் செயலர் உள்ளிட்ட ஐவர் இருப்பர் என்றும், பொதுச் செயலரை மாற்றும் உரிமை வேந்த உறுப்பினர்க்கு உண்டென்றும், தலைவர் இல்லை என்றும் கூறினார்கள். தலைமைப் பொறுப்பின் சுமையை விளக்க முற்பட்டுத் தாம் கலைஞர் மு. கருணாநிதியைச் சிலகால் கண்டித்துப் பேசினாலும், பல எதிர்ப்புகளுக்கிடையில் அவருடைய தலைமையை நிலைப்படுத்திக் கொண்டிருக்கும் திறம் கண்டு எல்லாம் அவர்க்குத் தகும் என்று கருதுவது உண்டென்றும் கூறினார்கள்.
வேந்த அமைப்புக்குக் கீழ் கொற்றம், வாரியம், ஆயம் என்னும் மூன்று கீழ்ப் படிநிலை அமைப்புகள் இருக்குமென்றும் ஆயத்தில் உறுப்பினராக எவரும் இராரென்றும். பத்துப் பேர் ஆர்வலராகச் சேர்க்கப் பெறுவர் என்றும், ஆர்வலர்க்குக் கட்டணம் இராதென்றும், ஓர் ஆர்வலர் ஆபயத்தில் சேரப் பதின்மர் பரிந்துரைக்க வேண்டுமென்றும், பதின்மர் கொண்ட இவ்வாய அமைப்பு 9 க்கு மேற்படின் இரு வாரியங்களாகப் பிரியும் என்றும் இதே போல் கொற்ற அமைப்பும் அமைக்கப்பெறும் என்றும், இக்கொற்ற, வாரிய, ஆய அமைப்புகள் வேந்தத்தின் கட்டளைப்படி நடக்குமென்றும் கூறினார்கள்.
இந்நான்கு அமைப்புகளும் வேண்டுகோள் காலமான மே 1975 வரை தொடர்புடைய அனைவர்க்கும் மாதந்தோறும் நேரிலும், மடல்வழியும் (மொழி , இனவிடுதலை ஆவதற்குத் தாம் சொல்வது போல் செய்யுமாறும், தமிழக விடுதலை தருமாறும்) கோரிக்கைகள் விடுத்தவண்ணமிருக்கும். பயனளிக்காவிடத்துப் போராட்டக் காலமான மே 1978 வரைப் பல்வகையான போராட்டங்களை அமைதியாக நடத்தும் அஃதும் பயனளிக்காவிடத்து சூன் 1978 முதல் எல்லா அமைப்புகளும் வன்முறையில் ஈடுபடும். கோரிக்கைக்கிணங்காத பொது அமைப்புகளும் நடுவணரசு நில , நீர், வான் அலுவலகங்களும் தீவைத்துக் கொளுத்தவும் தக்கன கொண்டு தகர்க்கவும் பெறும் என்பதைப் பாவலரேறு அவர்கள் மிகவும் அழுத்தந்திருத்தமாக முழு உணர்வோடு வெளியில் நிற்கும் காவல் துறை அதிகாரிகளுக்கும் கேட்குமாறு சொன்னார்கள். ஒலிபெருக்கியில் இறுதியாக விடுதலை முழக்கங்களை மறவர்கள் எழுப்ப மாநாடு இனிதே முடிவுற்றது. எனினும் மறுநாள் பாவலரேறு அவர்கள் திருச்சியினின்று வெளியேறும் வரையிலும் நடுவணரசு ஒற்றர்களின் தொடரும் பணி முடிவுறவில்லை.
தீர்மானங்கள்
திருச்சிராப்பள்ளித் தேவர் மன்றத்தில் 10.6.72, 11.6.72 ஆம் நாட்களில் கூடிய தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டு மாநாட்டில் நிறைவேற்றுப் பெற்ற தீர்மானங்கள்;
தீர்மானம் -1
(10-5-72 அன்று பிற்பகல் நடைபெற்ற குமுகாய மாநாட்டின் (Social conference) இறுதியில் நிறைவேற்றப் பெற்றது.)
குறிக்கோள் : தமிழ்மொழி, குமுகாய விடுதலை.
இக் குறிக்கோளின் அடிப்படையில் தமிழகத்தின் அரசுச்சார்பில் உள்ள ஆட்சி, அலுவல், கல்வி, தொழில் எனும் நான்கு துறைகளிலும்; தனியார் சார்பிலுள்ள பொது வாழ்வியல், வாணிகம், செய்தித்தாள், வானொலி, பிற பொழுது போக்குகள் எனும் ஐந்து துறைகளிலும் தூய தமிழ் மொழியையும் உலகத் தொடர்புக்கு ஆங்கில மொழியையுமே கையாள வேண்டும் என்றும், அவ்வகையில் அவ்வத் துறையினர் இதுவரை கையாண்டு வரும் பிறமொழிக் கலவை நிலையைக் கைவிட வேண்டுமென்றும்.
மேற்காட்டிய இரு சார்பின் ஒன்பான் துறைகளிலும் ஏதாவதொரு சமயமோ, குலமோ, (சாதியோ) பெயரளவிலும் செயலளலும் கையாளப் பெறுதல் கூடாதென்றும், அவ்வகையில் அவ்வத்துறையிலும் இதுவரை கையாளப்பெற்று வரும் சமய குலப் பெயர்கள், அவை தழுவிய நடை முறைகள் ஆகியவற்றை அறவே கைவிட வேண்டுமென்றும் இம்மாநாடு தொடர்புடைய எல்லாரையும்கேட்டுக்கொள்கின்றது.
செயற்பாடு:
இக்குறிக்கோளின்படி இம் மாநாட்டில் அமைக்கப் பெற்ற தமிழக விடுதலை இயக்கம் இன்றிலிருந்து 1975 மே மாதம் வரை உள்ள காலத்தை வேண்டகோள் காலம் (Period of entreaty or period of Suppalication) ஆகக் கொண்டு, இவ்வியக்கம் வகுக்கும் திட்ட முறைப்படி செயலாற்று மென்றும் அச்செயல் முறைகளால் பயன்காணாவிடத்து, 1975 சூன் முதல் 1978 மேவரை உள்ள காலத்தைப் போராட்டக் காலம் (Period of Agitation ஆக அறிவித்து இயக்க முறைகளுக்குக் கேற்ப போராடுமென்றும் அப்போராட்டத்தாலும் பயன்கானா விடத்து, 1978 சூன் முதல் தொடங்கும் காலத்தைப் புரட்சிக் காலம் (period of Revaolution ஆக அறிவித்து இக்கொள்கை வெற்றி பெறும் வரை பலவகையாலும் நேரடிச் செயல்களிலும் வன்முறையிலும் ஈடுபடுமென்றும் உறுதிச் செய்வதுடன் தொடர்புடையவர்களையும் எச்சரிக்கின்றது.
தீர்மானம் -2
(11-6-72 அன்று நடைபெற்ற அரசியல் மாநாட்டின் (poiltical conference) இறுதியில் நிறைவேற்றப் பெற்றது.)
குறிக்கோள் : தமிழக விடுதலை.
இக்குறிக்கோளின் அடிப்படையில் இப்பொழுது உள்ள தமிழ் நாட்டையும், புதுவை, காரைக்கால் ஆகிய தமிழ் நிலப் பகுதிகளையும் தன்னுள் அடக்கி முழு ஆட்சி செய்து வரும் நடுவணரசு தன் ஆளுமை, சட்ட , அதிகாரத் தொடர்பினின்று விடுவித்து, நிலக்காவல் இணைப்பு வாணிகத் தொடர்பு ஆகியவற்றில் ஓர் அரசியல் ஒப்பந்தம் (poli tcal cointract) செய்து கொண்ட தன்னுரிமை பெற்ற தனி நாடாகத் தமிழகத்தை ஏற்றுக்கொண்டு அறிவிக்குமாறு இந்திய அரசை இம்மாநாடுடு கேட்டுக்கொள்கின்றது.
செயற்பாடு :
இதன்படி, இம்மாநாட்டில் அமைக்கப் பெற்ற தமிழக விடுதலை இயக்கம் இன்றிலிருந்து 1975 மே மாதம் வரை உள்ள காலத்தை வேண்டுகோள் காலம் (Period of entreatl
or period of supplication) ஆகக் கொண்டு இவ்வியக்கம் வகுக்கும் திட்ட முறைப்படி செயலாற்றுமென்றும், அச்செயல் முறைகளால் பயன் காணாவிடத்து, 1975 சூன் மாதம் 1978 மே வரை உள்ள காலத்தைப் போராட்டக் காலம் (period of Agitation) ஆக அறிவித்து இயக்க முறைகளுக் கேற்பப் பேராடுமென்றும், அப்போராட்டத்தாலும் பயன்காணா விடத்து 1978 சூன் முதல் தொடங்கும் காலத்தைப் புரட்சிக்காலம் (period of Revolution) ஆக அறிவித்து இக்கொள்கை வெற்றி பெறும் வரை பலவகையாலும் நேரடிச் செயல்களிலும், வன்முறைகளிலும் ஈடுபடுமென்றும் உறுதி செய்வதுடன் இந்திய அரசையும் எச்சரிக்கின்றது.
செயல்திட்டம்:
திருச்சிராப்பள்ளித் தேவர் மன்றத்தில் 10-6-72, 11-6-72 ஆம் நாட்களில் கூடிய தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டு மாநாட்டில் நிறைவேற்றப் பெற்ற இரண்டு தீர்மானங்களின் அடிப்படையில் வகுக்கப் பெற்ற செயல் திட்டம்.
1. ஆளுமை
1. செயற்குழு, ஆர்வலர், வகுமுறைகள் தொடர்பானவை:
1. தமிழகப் பிரிவினைக் கொள்கையை வலியுறுத்துவதற்கும் செயற்படுத்துவதற்கும் தமிழக விடுதலை இயக்கம் எனுமோர் இயக்கத்தை அமைப்பது.
2. அத்தமிழக விடுதலை இயக்கம் ஒரு கட்சியைப் போன்றதன்று, அதற்கு உறுப்பினர்கள் இல்லை. ஆர்வலர்கள் தாம் உண்டு. தலைவர் இல்லை. பொதுச்செயலர் ஒருவரும், அவரடங்கிய ஐவர் குழுவும் இயக்கச் செயற்பாடுகளை வகுத்துச் செயலமைப்புகளைக் கவனிப்பர். இக்குழுவுக்கு வேந்தம் என்று பெயர். இவ்வைவர் குழு உறுப்பினர்களும் ஆர்வலர்களே இவ்வைவரில் பொதுச்செயலர் உள்ளிட்ட ஒருவர் தாமே விலகினால் அன்றி, அனைவரும் வாணாள் உழைப்பாளர்களே! நீக்கப்பெற்ற அல்லது நீங்கிய ஒரு மாதத்திற்குள் வேறு ஒருவரை அமர்த்திக்கொள்ளலாம்.
3. இதுபற்றிய அமைப்பு முறைகளைக் குழு அமைக்கப்பெற்ற மூன்று மாதங்களுக்குள், தமக்குத்தாமே வகுத்துக்கொண்டு அவ்வகு முறைகளுக்கேற்பத் தம்மையும் இயக்கத்தையும் செயற்படுத்த வேண்டும்.
4. பொதுச் செயலரை வேந்தத்தின் பிற நால்வரும் அப்போதுள்ள ஆர்வலரில் நான்கில் மூன்று பங்கினரும் குழுவினின்று நீக்கலாம்.
5. எப்பொழுதும் ஆர்வலரில் பத்தில் ஒன்பதின்மர் கூடிப் பொதுக்குழுவின் முன்னிலையில் வேந்தத்தின் மேல் குற்றஞ்சாட்ட அதைக் கலைக்கலாம் புது வேந்தத்தையும் தெரிந்தெடுக்கலாம் எப்படியும் வேந்தம் கலைக்கப்பெற்ற இருபத்துநான்கு மணி நேரத்திற்குள் மறு வேந்தம் தெரிந்தெடுக்கப் பெறல் வேண்டும்
6. இயக்கத்தில் உள்ள ஆர்வலரைச் செயற்குழு நாலில் மூவர் வலிவுடன் எப்பொழுதும் விலக்கலாம்.
7. இயக்கத்தில் ஆர்வலராகச் சேர ஏற்கெனவே உள்ள ஆர்வலரில் பதின்மர் ஒப்புதலளிக்க வேண்டும். அவ்வாறு சேர்க்கப் பெறும் ஆர்வலரின் குற்றங்குறைகட்கு அப்பதின்மரும் இறுதிவரை பொறுப்பாவர்
8. தொடக்கத்தில் வேந்தம் தேர்ந்தெடுக்கும் ஆர்வலர் ஒவ்வோர் ஊருக்கும் பதின்மரே.
9. அவர்க்குப்பின் தேர்தெடுக்கப் பெறும் ஆர்வலர் ஒவ்வொருவர்க்கும் முன்னுள்ள ஆர்வலர் பதின்மர் ஒப்புதலளிக்க வேண்டும்.
10. தேறப்பெறும் ஒவ்வோர் ஆர்வலரையும் ஒப்பிய பதின்மர் ஒரே ஊரினராக இருத்தல் வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
11. இவ் வகுமுறைகளை மேலும் விரிவுபடுத்தவோ, இவை தொடர்பான வகுமுறைகளைப் புதிதாக அமைக்கவோ முதல் மூன்று மாதத்திற்குள் கூடும் முதல் வேந்தத்திற்கு முழுவதிகாரம் உண்டு.
12. அடுத்தடுத்துத் திருத்தப்பெறும் அல்லது நீக்கப்பெறும் வகுமுறைகளுக்கு வேந்தத்தின் முழு ஒப்புதலும் அப்போதுள்ள ஆர்வலரில் நான்கில் முப்பங்கினரின் ஒப்புதலும் வேண்டும்.
13. வேந்தத்தின் கட்டளைகளை ஓர் ஆட்சிக்குழு செயற்படுத்தும். ஆட்சிக் குழுவில் அமைச்சர் ஒருவரும், பொருளர் ஒருவரும், எழுத்தர் ஒருவரோ அவர்க்கு மிகுதியானவரோ இருப்பர். இம்முத்துறையினர்க்கு ஊதியம் உண்டு. அவர்களும் இயக்க ஆர்வலரினின்று பொறுக்கப் பெற்றவர்களே. அவர்கள் வேந்தத்தால் அமர்த்தப் பெறுபவர்கள்.
14. பொதுச் செயலாளர், தாமோ, அவரில் நால்வரில் மூவரோ விரும்பும் நாளிலும் நேரத்திலும் ஐவர் குழுவைக் கூட்டலாம்.
15. ஆர்வலரின் இருபதிற் பதினைவர் விரும்பின், பொதுச் செயலாளர், அவர் விரும்பந் தெரிவித்த ஏழுநாட்களுக்குள் பொதுக் குழுவைக் கூட்டியாகல் ப்வண்டும்.
16. இயக்கத்தின் எல்லாவகைச் சிக்கல்கட்கும் இறுதித் தீர்ப்பாளார் பொதுச் செயலாளரே,
2. மாவட்டத் துணைக்குழு, வட்டக் கிளைக்குழு, ஊர்க்
குழு - தொடர்பானவை :
1. பதின்மூன்று ஆர்வலர் சேரும் ஒவ்வொர் ஊரிலும் ஊர்க்குழு அமைக்கப்பெறும். ஊர்க்குழு ஆயம் எனப்பெயர் பெறும்.
2. ஆயக்குழுவினர் மூவர்: ஆயத்தலைவர் ஆயச்செயலர், ஆயப்பொருளர்.
3. எப்பொழுதும் ஆயத்தாரைத் தவிர்த்த பதின்மர் ஆயத்து ஆர்வலராக இருத்தல் வேண்டும். பதின்மாருக்குக் கீழுள்ள ஆர்வலருடன் உள்ள ஆயம் மூன்று மாதத்திற்குள், தன்னை நிறைவு செய்து கொள்ளவில்லையானால், ஆயம் தானே கலைந்ததாகக் கொள்ளப் பெற்று, அதிலுள்ள ஆர்வலர்கள், அண்மையிலுள்ள ஆயத்துடன் இணைக்கப் பெறுவர்.
4. ஒரு வட்டத்திலுள்ள ஒவ்வோர் ஐந்துக்கு மேலும் ஒன்பதுக்குக் கீழும் உள்ள ஆயங்கட்கும் ஒவ்வொரு வட்டக் கிளைக்குழு அமைக்கப்பெறும். வட்டக் கிளைக்குழு வாரியம் எனப் பெறும்.
5. வாரியத்தார் மூவர்: வாரியத் தலைவர், வாரியச்செயலர், வாரியப் பொருளர்.
6. பத்து ஆயங்கள் தோன்றின் அவை இரண்டு வாரியங்களாகப் பிரிக்கப்பெறும்.
7. ஆயங்கட்கு வாரியமே நேரடி அதிகாரக்குழு.
8. ஒரு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு மூன்றுக்கு மேலும் ஐந்துக்குக் கீழும் உள்ள வாரியங்களை ஆள, ஒவ்வொரு மாவட்டத்தும் துணைக்குழு ஒன்று அமைக்கப் பெறும் மாவட்டத் துணைக்குழு கொற்றம் எனப் பெயர் பெறும்.
9. ஆறு வாரியங்கள் உருவாகின் இரண்டு கொற்றங்கள் அமைக்கப்பெறும். அக்கால் அவற்றின் திசைகளுக் கேற்ப கீழைக் கொற்றம், மேலைக் கொற்றம் குணக்கொற்றம் குடக்கொற்றம் எனப்பெயர் பெறும்.
10. கொற்றக் குழுவினர். கொற்றத் தலைவர், கொற்றச் செயலர் கொற்றத் துணைச் செயலர், கொற்றப் பொருளர்-என நால்வர்
11. வாரியங்கட்குக் கொற்றமே நேரடி அதிகாரக் குழு
12. எல்லாக் கொற்றங்கட்கும் வேந்தமே நேரடி அதிகாரக்குழு. வேந்த இயக்கம் கொற்றம், வாரியம், ஆயம் எனப் படிப்படிக் கீழும், ஆய இயக்கம், வாரியம் கொற்றம் வேந்தம் எனப்படிப்படி மேலும் அமையும் . வேந்தம் விரும்பின் படிதாண்டி இறங்கும். ஆயம்படி தாண்டி ஏறாது.
2. செயன்மை
1. வேண்டுகோள் காலம் :-(Period of entreaty or Period of supplication}
க) மொழி :
அ) தமிழ் நிலத்துள்ள, தனிமர், வீடு, தெரு, ஊர், நகர், மலை, குன்று, ஆறு, ஏரி கால்வாய், ஓடை, குளம், குண்டு, குழி, துறை முதலிய அனைத்துப் பெயர்களும், கருவியால் எனைப் பொருளும், மொழியால் தமிழ்ப்பெயரும் தாங்குமாறு ஒவ்வோர் ஆயமும், வாரியமும் கொற்றமும் வேந்தமும் அவற்றின் ஆர்வலரும், தனித்தோ இணைந்தோ சொல்லாலோ எழுத்தாலோ ஒவ்வொரு மாதத் தொடக்கத்தும் வேண்டுகோள் காலம் முடிவுறும் வரை தொடர்புடையார்க்கு வேண்டுகோள் விடுத்த வண்ணமே இருப்பர்.
ஆ) தமிழ் நிலத்திலுள்ள, தனித்துறை, அரசுத்துறை, வெளியீடுகள் நூல்கள், தாள்கள், ஒலிபரப்புகள், வழிபாடுகள், விளையாட்டுகள், உணவுப்பண்டங்கள், இறக்குமதி ஏற்றுமதிப் பொருள்கள், படைத்துறைக்கருவிகள் முதலியவற்றிலும், ஆட்சி, அலுவல், கல்வி, தொழில் ஆகியவற்றிலும் தூய தமிழையே பேணுமாறு ஒவ்வோர் ஆயமும், வாரியமும் கொற்றமும், வேந்தமும் அவற்றின் ஆர்வலரும், தனித்தோ இணைந்தோ சொல்லாலோ எழுத்தாலோ ஒவ்வொரு மாதத் தொடக்கத்தும் வேண்டுகோள் காலம் முடிவுறும் வரை தொடர்புடையார்க்கு வேண்டுகோள் விடுத்த வண்ணமே இருப்பர்.
இ) முன்னிரு நிலையினும் வேண்டுகோட் பயன் பாராட்டப் பெறும் பயனின்மை அடுத்தபோராட்டக் காலத்திலும் செயன்மையைத் தொடரச் செய்யும்.
கா) குமுகாயம்:-
அ) தமிழ் நிலத்துள்ள அல்லது அந்நிலத் தொடர்புள்ள இனங்கள் தாய்மொழி வழி தமிழர், திரவிடர், ஆரியர், ஆங்கிலர், வங்காளியர், குசராத்தியர் முதலியவாறே அழைக்கப் பெறுவர், மாறாகச் சமய வழி இந்து, கிறித்துவர், இசுலாமியர், பெளத்தர் சமணர் எனச் சமயநிலைப் பெயர்வழியோ பள்ளர், பறையர், பாணர், குறவர், மறவர், அகம்படியர், கைக்கோளர், கவுண்டர், வேளாளர் முதலியபடி தொழில்வழிக் குலப்பெயராலோ கொடிவழிக் குலப் பெயராலே தம்மை அழைத்துக்கொள்ளவோ, குறித்துக்கொள்ளவோ அல்லது குறிக்கப்பெறவோ கூடார்.
விளக்கம்:
இவ்வகையில் குலப்பாகுபாடு, இன, நிற, தொழில் வேற்றுமைப்பட்டதோர் அமைப்பாகலானும், சமயப்பாகுபாடு கட்சி வேற்றுமைப் போல்வதொரு பாகுபாடாகலானும் விலக்கற்பாலன. புதிதாகப் பிறந்த ஒருவர்க்கு அவர் விரும்பாமலேயே சமயமும் குலமும் அவர் மேல் புகட்டப் பெறுவது கொடுங் குமுகாயக் குற்றமாகும். பொதுவறத்திற்கும் இந்நிலை மாறுபட்டது. தொழிலான் உழுவோன் மகன் உழத்தான் வேண்டுமென்பதும், கட்சியான் பொதுவுடைமையோன் மகன் பொதுவுடைமைக் கட்சியிலேயே உறுப்பினன் என்பதும், எவ்வளவு பிழையோ, குற்றமோ, அவ்வளவு பிழையும் குற்றமுமாம் சமயத்தான் ஓர் இந்துவின் மகன் இந்து என்பதும், குலத்தான் ஒரு பாண மகன் பாணனே என்பதும்.
எனவே, மொழிவழிப் பெயர் சுட்டா அனைத்துப் பிரிவுகளும் தம்தம் மரபுகளையும் பழக்கங்களையும் அறவே விட்டுவிடுதல் வேண்டுமென ஒவ்வோர் ஆயமும், வாரியமும், கொற்றமும், வேந்தமும், அவற்றின் ஆர்வலரும் தனித்தோ இணைந்தோ, சொல்லாலோ செயலாலோ ஒவ்வொரு மாதத் தொடக்கத்தும் வேண்டுகோள் காலம் முற்றுப்பெறும் வரை தொடர்புடைய தனியார்க்கும் குழுவுக்கும் வேண்டுகோள் விடுத்தவண்ணமே இருப்பர்.
ஆ) இந்நிலையில் வேண்டுகோட் பயன் பாராட்டப்பெறும். பயனின்மை அடுத்த போராட்டக் காலத்தினும் செயன்மையைத் தொடரச் செய்யும். -
கி) அரசியல்:
அ) இயக்கத் தொடக்கக் காலத்து நடைமுறையுள்ள தமிழ்நிலத்துள் அடங்கிய நாட்டையும், புதுவை, காரைக்கால் பகுதிகளையும் தன்னுள் அடக்கி முழுவாட்சி செய்துவரும் நடுவணரசு தன் ஆளுமை, சட்ட அதிகாரத் தொடர்பினின்று விடுவித்து, நிலக்காவல் இணைப்பு, வாணிகத் தொடர்பு ஆகியவற்றில் ஓர் அரசியல் ஒப்பந்தம் (Political Contract) செய்து கொண்ட தன்னுரிமை பெற்ற தனி நாடாகத் தமிழகத்தை ஏற்றுக்கொண்டு அறிவிக்குமாறு ஒவ்வோர் ஆயமும் வாரியமும், கொற்றமும் வேந்தமும் அவற்றின் ஆர்வலரும் தனித்தோ இணைந்தோ சொல்லாலோ செயலாலோ ஒவ்வொரு மாதத் தொடக்கத்தும் வேண்டுகோள் காலம் முற்றுப்பெறும் வரை தொடர்புடைய அரசின் உட்கரும, புறக்கரும ஆட்சியாளரும் அனைவர்க்கும் வேண்டுகோள்விடுத்தவண்ணமே இருப்பர் . இவ்வேண்டுகோள் விளக்கம் அவ்வக்கால் அறிக்கை வழியும், கூட்ட வழியும் மக்கட்கும் எடுத்து விளக்கப் பெறும்.
ஆ) இந்நிலையில் வேண்டுகோட்பயன் பாராட்டப் பெறும் பயனின்மை அடுத்தப் போராட்டக் காலத்திலும் செயன்மையைத் தொடரச் செய்யும்.
II. போராட்டக்காலம் (Period of Agitation):-
க. மொழி:-
அ) வேண்டுகோள் காலத்து நடைமுறைகள் ஐவரைவராக இணைந்த குழுக்குழுவாக வேண்டப் பெற்றார். முன் நின்று நேரடியாய் மறித்தும் சூழ்ந்தும் எச்சரித்தும் விட்டுவிட்டோ தொடர்ந்தோ போராடிப் பயன் கிடைக்குமாறு செய்யப்பெறும்.
ஆ) போராட்டப் பயன் பாராட்டப் பெறும் பயனின்மை அடுத்த புரட்சிக் காலத்திலும் செயன்மையைத் தொடரச் செய்யும்.
கா. குமுகாயம்:-
அ) இதற்கும் மொழிநிலைப் போராட்ட முறையே பின்பற்றப் பெறும்.
ஆ) இத்துறையினும் போராட்டப் பயன் பாராட்டப்பெறும். பயனின்மை அடுத்த புரட்சிக்காலத்தினும் செயன்மையைத் தொடரச் செய்யும்.
கி. அரசியல்:
அ) கொள்கை முழக்குடன் இயக்கத்தின் அவ்வப்பொழுதைய வகுபாட்டுக் கிணங்கவும் ஐவர் ஐவராகவோ கூட்டங் கூட்டமாகவோ நடுவணரசு ஆட்சி அலுவலகங்கள் முன் நேரடியாகப் பணி செய்ய வருவாரை மறித்தும், சூழ்ந்தும், எச்சரித்தும் விட்டுவிட்டோ தொடர்ந்தோ, போராடியோர் சிறைப்பட்ட வழியும், சிதைக்கப்பட்ட வழியும் அடுத்தடுத்தோ போராட்டம் நிகழ்த்தப் பெறும். நடுவணரசுத் தொடர்புடைய நிலத்துறை, வான்துறை, ஆகிய இயக்கங்கள் போக்கு வரத்துகள் தடை செய்யப் பெறுவதும் போராட்டத்தின் ஒரு பகுதி.
ஆ) போராட்டப் பயன் பாராட்ட பெறும்ப் பயனின்மை அடுத்த புரட்சிக் காலத்தினும் செயன்மையைத் தொடரச் செய்யும்
ஈ) இப்போராட்டக் காலத்து வேந்தம் தன் அகவியக்கத்தை நிறுத்திப் புறவியக்கத்துப் பெரிதும் செயல்படும்.
III. புரட்சிக்காலம் (Period of Revolution)
அ) மொழியுட் குமுகாயமும், குமுகாயத்துள் அரசியலும் அடக்கப் பெற்று முத்துறைப் புரட்சியும் ஒரு துறைப் புரட்சியாக வெடிக்கும்.
ஆ) சமய. குல நிறுவனங்கள் தகர்க்கப்பெறும், நடுவணரசு அலுவலகங்கள், வாணிக நிலையங்கள், சேமிப்புக் கிடங்குகள் பட்டாளப் பாசறைகள் முதலியன தீ வைத்துக் கொளுத்தப் பெறும் மொத்தத்தில் வன்முறை நிலையில் முன்னண்மையில் வங்காளத்து நடந்தவாறும் இக்கால் வியட்நாமில் நடக்கின்றவாறும் போர் முறைகள் பின்பற்றப் பெறும்.
இ) மொத்தத்தில் ஒரு புதுக் குமுகாயமும், ஒரு புது நாடும் தோற்றுவிக்கப்பெறும்.
3. கொளுவுரை:-
அ) இவ்வுலகத்து முந்தித் தோன்றியதும், உலகெலாம் பரவியதும், பண்பாட்டிற் சிறந்ததும் ஒண்மையும் திண்மையும் சான்றதும், முதன்மொழி தோற்றியதும், இன்றும் அழியாது நின்றிலங்குவ துமாகிய தமிழினப் பெருங் குமுகாயத்தின் கடந்த மூவாயிரமாண்டுக் கால அடிமை வரலாற்றுக்கு ஒரு முடிவுக் காலமும் தமிழ்ப் பேரினத்திற்கொரு விடிவுக் காலமும் தொடங்கி விட்டது. வரலாற்றில் இனப்புரட்சி என்றும் தோற்றதில்லை.
இதனை நன்றாக உள்ளத்தில் ஏற்றிக்கொண்டு கனன்று வரும் பெரும் புரட்சித் தீயினுக்குக் காற்றாயிராமல் உளத்தால் நீர்மையாகவும் அறிவால் முன்மையராகவும் நடந்து கொள்ள வேண்டி மொழி, குமுகாய அரசியல் தொடர்புடை அனைவரும் வேண்டிக் கொள்ளப்பெறுகின்றனர்.
- தென்மொழி, சுவடி :10, ஓலை :1-5, 1972
தமிழ்க் குமுகாயம் என்றொரு
குமுகாயம் இன்று இருக்கிறதா?
★ பள்ளி மாணவர்களிடம் மதத்தையும் குலத்தையும் கேட்பது எதற்கு?
★ தமிழுணர்வு பரவாமல் தமிழனை முன்னேற்றிவிட முடியாது.
★ மொழி இல்லாமல் இனம் இல்லை, இனம் இல்லாமல் மொழி இல்லை.
★ பகைவர்களே எச்சரிக்கையாய் இருங்கள்; தமிழன் விழித்துக்கொண்டான்.
★ திருச்சி குமுகாய மாநாட்டில் பெருஞ்சித்திரனார் முழக்கம்!
தாய்மார்களே! பெரியோர்களே! தனித்தமிழ் அன்பர்களே
இப்போது மாநாடு இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. காலையிலிருந்து இந்த நகரத்தையே அலைக்கழித்த அந்த ஊர்வல ஒலிகளுக்கும் இப்போது இதுநேரம் வரை உங்கள் காதுகளிலே விழுந்துகொண்டிருந்த அந்தப் புரட்சி மொழிகளுக்கும் ஒரு விடிவான வழியை அமைத்துக்கொடுக்க இருக்கின்ற ஒரே ஒரு தீர்மானம் நிறைவேறுவதுடன் இன்றைய மாநாடு முடிவடைகிறது. அந்தத் தீர்மானத்திற்கு முன் இந்த மாநாடு, குமுகாய மாநாடு. என்றழைக்கப் பெற்றதற்கும் இங்குப் பேசியவர்கள் குமுகாய, நிலையிலே இருக்கின்ற பலவகையான சூழல்களையும் இழிவுகளையும் எடுத்து உங்கள் முன்னே வைத்ததற்கும் ஒருசில வகையிலே உங்கட்கு விளக்கத்தைக் கொடுத்துக் கொண்டு தீர்மானத்தை இறுதியாக நிறைவேற்ற விரும்புகின்றேன். அருள்களிைந்து மிக அமைதியாக இருந்து இந்தக் கருத்துகளைச் செவிமடுக்கக் கேட்டுக்கொள்கின்றேன்.
பெரியோர்களே! இந்தத் தமிழ்க் குமுகாயம் என்று சொல்லிக் கொள்கின்றோமே, இப்படி ஒரு குமுகாயம் இருக்கின்றதா என்ற நிலையை யாரும் ஒப்புக் கொள்ளவில்லை, தமிழர்கள் என்கிற நிலை, ஏதோ ஓர் எழுத்திலே சொல்லப் பெறுகின்ற-வரலாற்றில் பொத்தகத்தில் - குறிக்கப் பெறுகின்ற நிலையாக இருந்து வருகிறதே தவிர, நம்முடைய உள்ளங்களில் வெளிப்படுகின்ற நிலையில் இல்லை. இம்மாநாட்டுக்குப் பலர் வந்திருக்கிறோம்; பல ஆண்டுகளாக தமிழுணர்ச்சி பெற்று வந்திருக்கிறோம். இருப்பினும் ஒவ்வொருவருக்கும் தமிழ், தமிழன் என்கின்ற உணர்வுகள் இருக்கின்றனவா என்றால், இருக்கும் என்பதில் ஐயப்பாடுதான். இங்கு வந்திருப்பவருள் யாராவது ஒருவரைத் தனியறையிலே அழைத்துச் சாதி, மதம் பற்றிக் கேட்டால் சொல்லத் தயங்குபவரும் ஏன் கேட்கின்றீர்கள் என்று எதிர்த்துக் கேட்பவரும் இருப்பர் என்று கருத முடியவில்லை. பெரியார் 50, 60 ஆண்டுக் காலமாகப் பேசிவருகிறார். அவருடன் இருந்து அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் நாய் கூட அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க நினைக்காது. அப்படிப் பேசியும். வாழ்வில்-நடைமுறையில் அந்தக் கருத்துகளை ஏற்றுக்கொண்டோமா?
இப்போது பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்கும் நாட்கள். மாணவர்களைச் சேர்க்குங்கால் சாதி என்ன என்று கேட்கின்றார்கள். 'தமிழ்நாடு' என்று நாட்டுப் பெயரை மாற்றிவிட்டோம்; ஆனால் இனப்பெயரை இன்னும் மாற்றிக் கொள்ளவில்லை. மதம் என்ன என்று கேட்கின்றார்கள்? இந்து என்று கொட்டை எழுத்துகளில் எழுதுகிறோம். இந்து என்றால் என்ன பொருள்? நமக்குத் தெரியாது. தாய் தந்தையர் சொன்னார்கள், 'இந்து' என்று குறித்து விடுகிறோம். படிக்கும் ஒரு மாணவனிடம் உன் மதம் என்ன என்று ஏன் கேட்க வேண்டும்? 'மதம் என்ன' ? என்றால் என்ன பொருள்? எந்தக் கடவுளைக் கும்பிடுகிறாய் என்று தானே பொருள்? இதை எந்த இராசாசியோ, வாரியாரோ மறுத்துக் கூறமுடியுமா? ஒரு மாணவனிடம் போய் எந்தக் கடவுளைக் கும்பிடுகிறாய் என்று ஏன் கேட்க வேண்டும்? அவன் கும்பிடுகிறான் அல்லது கும்பிடாமல் இருக்கிறான். அதைப்பற்றி என்ன? அவனிடம் உன் அகவை என்ன? படிப்பென்ன? எங்குப் படித்தாய்? யார் உன் பெற்றோர் என்று வேண்டுமானால் கேட்கலாம். மதம் என்ன? சாதி என்ன? என்று ஏன் கேட்க வேண்டும்? என்ன தேவை வந்தது?
சாதி, மதம் வேண்டாம் என்று பெரியார் பேசுகிறார்; எழுதுகிறார். ஆனால் அவற்றை உடனே எடுக்க வேண்டாம் என்கிறார். நம்மவனெல்லாம் படித்து வரட்டும்; அப்புறம் எடுக்கலாம். இல்லையென்றால் பார்ப்பானே படித்து வந்து கொண்டிருப்பான் என்கிறார். இவனெல்லாம் எப்போது படித்து முடிப்பது? இவற்றை எப்போது எடுப்பது? ‘சாதி’யை ஏன் குறிக்க வேண்டும்? ‘தமிழன்’ என்று ஏன் குறிக்கச் சொல்லக்கூடாது? அப்படிக் குறித்தால் பார்ப்பானும் ‘தமிழன்’ என்று போட்டுக் கொண்டு படிக்க வந்து விடுவான் என்கிறீர்களா? பார்ப்பான் ஒரு போதும் தன்னைத் தமிழன் என்று குறிப்பிட முன்வரமாட்டான். அப்படியே குறிக்கிறான் என்று தெரிந்தால், அந்த மாணவன் பூணூல் போட்டிருக்கிறானா? என்று சட்டையைக் கழற்றச் சொல்லிப் பார்ப்பது? இல்லையென்றால் அவனுடைய வீட்டுக்குச் சென்று அவனுடைய பெற்றோர் பூணூல் போட்டிருக்கின்றனரா என்று ஆய்வு செய்தால் என்ன கெட்டுப் போய்விடும்? பள்ளிக்கூடச் சுவடியில் மாணவனின் சாதியையும், மதத்தையும் குறிப்பிடும் வரை இவ்விரண்டையும் ஒழிக்கவே முடியாது. பள்ளிக் கூடச் சுவடியிலிருந்து நீக்கிவிடுவரென்றும் முடியாததன்று; முடியக் கூடியதே. அப்படிச் செய்தால் சாதி மதம் தன்னாலேயே ஒழிந்து விடும்; அதை விட்டுக் கோயில் குளங்களைப் போய், இடிக்க வேண்டியதில்லை. எல்லாம் அடிப்படையில் தாம் செய்ய வேண்டும் நாம் 'விளம்பரப் பலகையைத் தமிழில் எழுதுங்கள்’ என்று கத்திக்கொண்டு ஒரு மாநாடே கூட்டியிருக்கிறோம். என்ன பயன்? 'ராயல் சில்க் ஹவுஸ்' என்று விளம்பரம் எழுதியிருக்கிறான். அதை மாற்ற முடிந்ததா? முடியவில்லை. அதற்கு என்ன செய்ய வேண்டும்?
கடைக்கு உரிமம் வழங்கும் போது, அந்த வேண்டுகோள் படிவத்தில் ‘பெயரைத் தனித் தமிழில் எழுத வேண்டும்’ என்ற சிறு குறிப்பு போட்டால் போதும். எல்லாம் தமிழிரேயே எழுதி விடுவார்கள் இதைப்போல் அடிப்படையில் மாற்றம் செய்தல் வேண்டும்.
சாதி, மதம் ஒழிய வேண்டும் என்று பேசுகிறோம் . ஆனால் அவை ஒழிய வேண்டும் என்று எவருக்கும் விருப்பம் இல்லை. இங்கு வந்திருக்கும். தி.க. வினரைக் கேட்கிறேன்; பள்ளியில் உங்களுடைய பிள்ளைகளைச் சேர்க்குங்கால் சாதி , என்ன என்று கேட்கும், இடத்தில் எப்படிக் குறிக்கின்றீர்கள்? நான் 'தமிழன்’ என்று குறிக்கிறேன். அப்படிக் குறித்தால் பள்ளியில் சேர்க்க முடியாது என்று சொன்னால், எந்தெந்த வகையில் போராடுவேன் என்று எச்சரித்திருக்கிறேன். 'தமிழன்’ என்று குறிப்பதால் இடம் இல்லை என்று சொல்லி விடுவானா? மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்காரரிடமும் ‘தமிழன்’ என்றுதான் குறிக்கச் சொல்லுகிறேன். “அப்படியொரு சாதி பட்டியலில் இல்லையே” என்றால் "இருக்கிறது”; இங்கே இருக்கிறோம்; போய்க் குறித்துக் கொண்டு வந்து எழுதிவிட்டுப்போ” என்று சொல்லுவேன். சாதி, மதங்களை ஒழிக்க நாம் உள்ளத்தால் விரும்பவில்லை; எனவே இதுநாள்வரை அழிக்க முடியவில்லை. பார்ப்பான் அவை உள்ளன என்று எங்கே சொல்கிறான். அவனுடைய வேத, பஞ்சாங்க, புராணங்களைச் சுட்டிக் காட்டிச் சொல்கின்றீர்களா? நம்மில் எத்தனைப்பேர் அவற்றைப் படித்தும் பின்பற்றுகிறோம்? இன்று வேதத்தையும், மநு தருமத்தையும் யாரும் படிக்கவில்லை. நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்.
பார்ப்பான் கோயில்களைக் கட்டவில்லை. அங்கே வழிபாடு செய்தவனும், மநுதர்மம் எழுதியவனும், பரப்பியவனும் தமிழனே! அவற்றை நீங்கள் தான் பரப்புகின்றீர்கள். ஒரு தி.க, தலைவர் மிகப் படித்தவர்: மிகஉயர்ந்தவர். அவருடைய வீட்டுத் திருமணம் ஒன்று நடந்தது. அதுவும் பெரியார் தலைமையிலேயே நடந்தது. பெரியார் வந்தார்; தாலியைத் தொட்டுக் கொடுத்தார்; மணமக்கள் மாலை மாற்றிக்கொண்டனர்; தாலி கட்டத் திருமணம் முடிந்தது ஆனால் உண்மையென்ன வென்றால் பெரியார் வரும் முன்பே அன்று காலை 4.5 மணிக்கே ஏற்கெனவே பழைய சடங்கு முறையில் திருமணம் முடிந்து விட்டது. இஃது இரண்டு மூன்றாண்டுகளுக்கு முன்பு நடந்தது. நாம் கொள்கையைப் பேசுகிறோம். செய்வதில்லை. பார்ப்பான் மேல் பழியைப் போட்டுவிடுகிறோம். இப்படி நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு நாட்களைக் கடத்துவதற்கு நாணவேண்டும்.
ஒரு கருத்தைச் சொன்னால், நம்மால் அதை நிறைவேற்ற முடியுமா என்பதை முதலில் எண்ணிக் கொள்ள வேண்டும். எல்லாம் நம் அமைச்சர்கள்; நம் கட்சி தான் ஆள்கிறது என்று பெரியார் சொல்கிறார். ஆம்; என் கட்சிதான் ஆள்கிறது என்று நான் கூடப் பெருமையாகச் சொல்லிக் கொள்வேன். சொன்னால் போதாது. செயலுக்கு வரவேண்டும்; பிறருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். கோவை மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் ககத்துரி அவர்கள் பேசுகையில் தனித்தமிழ் மட்டும் வந்துவிட்டால் போதுமா என்று கேட்டார்கள். அவர்கட்குச் சொல்வேன்; சான்றாகத் தினமணியில் 'கல்வி வசதிகளை விஸ்தரிக்க முடிவு’ என்று போடுகின்றான். பார்ப்பான் எழுதுகிறான். இப்படி 'விடுதலை' ஏன் அப்படி எழுத வேண்டும்’?. தினமணி அலுவலகத்திலிருந்தே தனித்தமிழ்க் கொள்கையைப் பற்றித் தெரிந்து போக 4 பேர் வந்தனர். அவர்கள் படித்துப் பட்டம் பெற்றவர்கள். அவர்களுடன் 2 மணிநேரம் பேசியிருப்பேன். அவர்கள் போகும் போது "இதைச் சொல்லுங்கள்” என்று சிவராமனுக்கு ஓர் எச்சரிக்கை கொடுத்தனுப்பினேன். இன்னும் கொஞ்ச நாட்களில் தன் போக்கைத் தினமணி மாற்றிக் கொள்ளவில்லையானால் அலுவலகம் இருந்த இடம் தெரியாமல் போகும். என்று! இன்று சொன்னால் தினமணி அலுவலகம் நாளை இல்லாமல் போய்விடும். ஒற்றர்கள் குறித்துக் கொள்ளலாம். தினமணி மட்டுமன்று வேறு எந்த அலுவலகமும் இருக்காது. நாளை புரட்சியான ஒரு தீர்மானம் வருகிறது. செயல் திட்டம் சொல்லட்டும் என்று ஐயா சொன்னார்கள்; நாளை சொல்லப் போகிறேன். கசுத்துரி அவர்கள் தனித்தமிழ்ப் போராட்டத்திற்குச் செயல் திட்டம் அறிவித்தால் தம் பிள்ளையை அனுப்ப அணியமாக இருப்பதாகச் சொன்னார்கள். இது எப்படி? இதிலிருந்து தாம் அணியமில்லை என்று சொல்லிவிட்டார்கள். இந்தக் காலத்துப்பிள்ளை தந்தை சொல்வதைக் கேட்கும் படியாகவா உள்ளான்? தனித்தமிழ்ப் போராட்டமா? உங்களைத்தானே வரச்சொன்னார்; என்னை எதற்குக் கூப்பிடுகின்றீர்கள் என்றல்லவா கேட்பான். செயல் திட்டமென்றால் பெரியார், அண்ணா அறிவிக்காத திட்டமா? அவர்கள் செய்யாத போராட்டமா? இன்று இராமனைப் பெரியார்தான் காப்பாற்றுகிறார். இராமாயணத்தில் என்ன இருக்கிறது? ஒன்றுமில்லை. எவனும் இன்று இராமாயணம் படிக்கவில்லை. இராமாயணத்தில் ஒன்றுமில்லாததால் தான் கம்பன் அதைப் பாவிய உணர்ச்சியோடு எழுதினான். இராமாயணப் பெயர்கள் தனித்தமிழில் இல்லை. தனித்தமிழில் அவற்றை விளக்கிவிட்டால் எவனும் அதைப் படிக்கமாட்டான். பெரியார்தான் இன்று இராமாயண ஆராய்ச்சி, இந்த ஆராய்ச்சி என்று புத்தகம் போட்டுப் பரப்புகிறார். இராமாயணத்திற்கும் தமிழனுக்கும் எந்தத் தொடர்புமில்லை. இராமாயணம் விந்திய மலையைத் தாண்டிவரவில்லை இராவணன் இலங்கையில் இருக்கவுமில்லை; அநுமன் சீதையைப் போய்ப் பார்க்கவும் இல்லை இது வரலாறு. இதை எந்த வாரியாரும் மறுக்க முடியாது.
'காஞ்சி காமகோடிப் பெரியவாள் 3 நாட்களுக்கு முன் மதுரைச் சென்றார். மதுரையில் தெய்வீக மணம் கமழ்ந்தது’ என்று எழுதுகிறான். அப்போது மட்டும் ஏன் கமழ்ந்தது? அங்கு மதுரை மீனாட்சி இருக்கிறாள். அப்போது கமழவில்லையா? இவன் மணம் கொண்டு போய்த் தடவினானா? எல்லாம் இன்னும் கொஞ்ச நாட்களுக்குச் சொல்லுங்கள், 'கல்வி விரிவாக்க முடிவு' என்று தமிழில் எழுதினால் நாக்கு கீழே அற்று விழுந்து விடுகிறதா? மொழியில் தான் ஓர் இனத்தின் பெருமையே இருக்கிறது. இதைப் பலர் உணர்வதில்லை. தலைவர்களும் அப்படியே. ஆகவே முதலில் நம்முடைய இழிவுகளை நாமே போக்கிக் கொள்ள வேண்டும். பார்ப்பான்மேல் பழியைத் தூக்கிப் போட்டுவிடக்கூடாது. இதையெல்லாம் விளக்கிப் 'பார்ப்பானையே குறை கூறிப்பயனில்லை' என்று தென்மொழியில் எழுதியிருக்கிறேன். 100-க்கு 97. பேராகக் இருக்கும் நம்மை 3 பேராக இருக்கும் பார்ப்பான் எப்படிப் பொடிபோட்டு மயக்க முடியும்? தொண்ணூற்றேழு பேர்களில் ஒருவன் கூடவா விழித்துக் கொள்ளவில்லை? அதுவும் கடந்த 3000 ஆண்டுக்காலமாக! அப்படித்தான் என்றால் இப்படிப்பட்டவன் என்றும் முன்னேறப் போவதில்லை. பேசாமல் முன்னேற்றும் முயற்சியை விட்டு விடலாம்.
நாம் கொஞ்சம் சொன்னாலும் செய்ய வேண்டும். பெரியார் சொல்கிறார் யாருமே திருமணம் செய்து கொள்ள வேண்டாமென்று! எப்படிப் பலகாரம் சாப்பிடுகிறோமோ, அப்படியே உடற்சுவையையும் நுகரலாம் என்கிறார். அதற்குத் தனி விடுதிவைத்துக் கொள்ள வேண்டுமென்கிறார். திருவள்ளுவர்தான் பெண்ணடிமையை மிகுதியும் சொல்கிறார் என்கிறார். திருக்குறளில் பெண்ணடிமை சொல்லப் பெற்றுள்ளளதா? தருக்கம் எப்போது வைத்துக் கொள்ளலாம்? ஆய்ந்து பார்ப்போம? வாய்புளித்ததோ? மாங்காய் புளித்ததோ? என்று நாமே நம்மைத் தாழ்த்திக் கொள்ளக்கூடாது. “தமிழ் காட்டு மிராண்டி மொழி” என்று உன் தலைவரே சொல்கிறார் என்று அவன் தாழ்த்துவானே, பெரியார் பக்கத்தில் இருப்பவர் பெரியாரை 'டாடி'என்றும், தம் மனைவியை 'மம்மி' (அம்மி) என்றும் அழைக்குமாறு தம் பிள்ளைகளிடம் சொல்கிறாராம். தம் மீதே நம்பிக்கை இல்லை. அம்மா என்று சொன்னால் என்ன கெட்டுப் போய்விடும்? இப்படி ஒரு தமிழன் இருப்பானா? வெளியில் இருக்கும் சொல்லெல்லாம் நம் சொல்லென்று ஆராய்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கையில் இப்படியா?
மொழியில் என்ன இருக்கிறது என்று அதைப் புறக்கணிக்கக் கூடாது."பூவராகவன்’ என்றால் நிலப்பன்றி என்று பொருள் தெரிந்த எந்தத் தந்தையும் அப்பெயரைத் தம் மகனுக்கு ஆசையுடன் வைப்பாரா? பேராசிரியை ஒருவர் தம்பெயரை மண்டோதரி என்று வைத்துக்கொண்டிருக்கின்றார். அதன் பொருள் தெரிந்தால் அப்படி வைத்துக்கொள்ள மாட்டார்கள். ஆரியன் அவனுடைய வடமொழியைக் கருவியாகக் கொண்டு நம்மை, அடிமைப்படுத்தினான். அவன்தான் 'கல்வி விஸ்தரிப்பு’ என்று எழுதுகிறான் என்றால், 'விடுதலை'யிலும் அப்படித்தானே எழுதுகிறார்கள். அவன் எவனாவது தப்பித்தவறித் தலைப்புகளில் ஒன்றிரண்டு தமிழ்ச் சொற்களைக் கையாண்டாலும், 'விடுதலை' யில் அதுகூட வருவதில்லையே! 'நாத்திக”த்தில் எழுதுகிறான், ‘மந்ரி’ என்று! ஆங்கிலத்தில் ஓர் எழுத்துப் போனால் ஒத்துக்கொள்வானா? தமிழன் தான் 'சூத்திர' னென்றால், தமிழுமா அப்படி? குமுகாய இழிவைப் பேசுவதென்றால் எவ்வளவோ இருக்கின்றன. அதற்குத் தனிக் கூட்டங்கள், மாநாடுகள் போட வேண்டும்.”
'பார்ப்பான் வேண்டாம்' என்று சொல்லிவிங்டடுத் தினமணியை விடத் தாழ்வாக விடுதலையில் 'வடசொற்' கலந்து எழுதுகிறார்கள். மிகவும் வருந்துகிறேன். (இப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்து "தீர்மானத்தைச் சொல்லவில்லையா? என்றார். அதற்குப் பாவலரேறு அவர்கள், தீர்மானம் சொல்லுவேன். மாநாட்டுக்கு வந்திருக்கிறீர்கள் முதலில் பேசுவதை முழுவதும் கேளுங்கள் : தீர்மானம் அப்புறம் சொல்வேன்’ என்று சொல்லி விட்டுத் தொடர்ந்து பேசினார்கள்)’ மன்னார்குடியில் 'கிசான் ஊர்வலம்' என்று கிசான் என்பது இந்திச் சொல் என்று நினைத்துக்கொண்டு எழுதுகின்றனர். மன்னார்குடியில் கிசான் என்னும் சாதி இருக்கிறதா? கிழான் என்றால் உழவன், கிழான் என்பதையே அவன் கிசான் என்று சொல்லிக் கொண்டு அது இந்தி என்று பெருமைப்படுகிறான். ‘உழவர்கள் போராட்டம்’ என்று ஏன் போடக்கூடாது? வேண்டுமென்றே இந்தி, வடமொழிச் சொற்களைக் கலந்து எழுதுகின்றனர். அவர்களுடைய இன உணர்வு அப்படி அந்நிலை நம்மிடம் இருக்கலாமா?
பெரியாரை நாம் எதிர்க்கவில்லை. பெரியாரின் பகுத்தறிவில் திருத்தம் செய்கிறோம்; அவ்வளவே, பெரியாரைத் தி.க. வினர் கொண்டாடுவதைவிட 100 மடங்கு நாங்கள் கொண்டாடுகின்றோம். பெரியார் இல்லை என்றால் இன்று இந்தக் கூட்டம் இல்லை. அவர் இல்லையென்றால் இந்த (ஒலிபெருக்கி முதலிய) க் கருவிகள் இங்கு வந்திரா. எல்லாம் வடநாட்டோடு நின்று போயிருக்கும். அவரைப், பெருமைப் படுத்தவே நினைக்கிறோம். நாமெல்லாம் பெரியாரை விட ஒருபடி மேலே உயர வேண்டும். மொழி இல்லாமல் இனம் இல்லை இனமில்லாமல் மொழியில்லை. இரண்டும் ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்க முடியாதவை. நம் மொழி அழிந்திருப்பின் இனமும் அழித்திருக்கும், தமிழ்மொழி சிறந்தது. எனவே அதை அழிக்க முடியவில்லை.
ஓரளவுக்காவது துணிந்து சொல்வது என்று வந்து விட்டோம். இன்னும் நிலை எப்படிப் போகுமோ? யாரும் சொல்ல முடியாது நாளைய திட்டத்திலே 6 ஆண்டுக்கால எல்லை வகுக்கப்பட்டிருக்கிறது. திரு. கோ. து. (நாயுடு) 5 ஆண்டுகள் கேட்டார். ஆனால் இங்கு ஆறாண்டுகள் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆறாண்டுகளை மூன்று தகுதியாகப் பிரித்திருக்கிறோம். மூன்றாந் தகுதியில் தான் புரட்சி விளையும். அப்போது தான் நீங்கள் சொல்லுகிறபடி தினமணி கொளுத்தப் பெறும் (கைதட்டல்) எந்தெந்தக் கட்டடங்கள் வங்காளத்தில் வீழ்ந்தனவோ, அதே போலக் கட்டடங்கள் இங்கும் பார்த்தழிக்கப்படும் (உரத்த கைத்தட்டல்) எங்கெங்கு அரத்த ஆறு ஓடியதோ, அதேபோல் இங்கும் ஓடும். (தொடர்ந்த கைதட்டல்) இங்கு யாரும் சளைத்தவர்கள் இல்லை. வேண்டுமானால், உங்களுடைய உள்ளங்களிலே எப்படி இருக்கிறதோ, தெரியவில்லை. எங்கள் உள்ளங்களிலே இதுதான் இருக்கிறது நாளைக்குச் சில நிலைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்; அவ்வளவே. கருவிகளைச் செய்து கொண்டிருக்கும்போதே சண்டைக்கு வா என்று கூப்பிடுகிறாய்; கருவியைக் கொஞ்சம் தீட்டிக்கொண்டு வருகிறோம் என்று சொல்கிறோம். நாங்கள். வேறொன்றும் இல்லை ? எண்ணம், செயல் எல்லாம் நடக்கும். நீங்கள் வங்காளத்தை என்ன பார்க்கிறீர்கள்? இங்கே பாருங்கள். பெரியார் குடுமியை அறுக்கச் சொல்லுவேன். என்று சொன்னார். திருவரங்கத்தில் 2 பார்ப்பான் குடுமியை அறுக்கவே அறுத்தார்கள். இது 15, 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது, ‘விடுதலை' யில் வந்தது; குளித்துக் கொண்டிருந்த 2 பார்ப்பனர் குடுமிகள் காணாமற் போயின. ஆனால் பெரியார் மறுநாளே அறிக்கை விட்டு விட்டார் யாரும் அப்படிச் செய்யக் கூடாதென்று இங்கு நாங்கள் அறுங்கள் என்று சொல்லவும் மாட்டோம்; நிறுத்துங்கள் என்று சொல்லவும் மாட்டோம், தாமே குடுமிகளெல்லாம் காணாமற் போகிற நிலை ஒன்று வரும். நான் இருந்தாலும் சரி, இல்லாமற் போனாலும் சரி; சுட்டுப் பொசுக்கினாலும் சரி; வருகிறது! எச்சரிக்கையாய் இருங்கள். தமிழர்களுக்கும் சொல்கிறேன். இனி எப்பொழுதும் தமிழன் தூங்கிக் கொண்டே இருக்க மாட்டான்; நீங்களும் அவன் தொடையில் கயிறு திரித்துக் கொண்டே இருக்க முடியாது. என்றைக்காவது தூங்கிக் கொண்டிருப்பவன் விழிப்பான்; நீங்கள் திரித்துக் கொண்டிருக்கிற கயிற்றையே உங்கள் கழுத்தில் போட்டு இறுக்குவான்; தூக்கில் தொங்கவிடுவான். அப்படி ஒரு நிலை வரத்தான் போகிறது. எச்சரிக்கையாய் இருங்கள். நாளைக்கு நீங்கள் போய்ச் சொல்லுங்கள் என்ன வேண்டுமானாலும் நடக்கும்.
நாளைக்கு நடக்க இருக்கிற மாநாட்டிலே தீர்மானத்தைக் கொண்டுவரப் போகிறேன். செயல் திட்டத்தையும் அறிவிக்கப் போகிறேன். வேடிக்கையாவது பார்த்துவிட்டுப் போங்கள். நாங்கள் ஐந்தாறு பேர் இருக்கிறோம். ஐந்தாறே பேர்தாம்! எந்த இயக்கமும், எந்த இந்திராவும் எங்களை அசைக்க முடியாது. பதவிக்கோ பட்டத்திற்கோ நாங்கள் விரும்பியவர்கள் அல்லர். கனவில்கூடக் கண்டவர்கள் அல்லர்.
எனவே , மொழிதான் எல்லாவற்றிற்கும் அடிப்படை. மொழி கொஞ்சங் கொஞ்சமாக அழிந்தது; இனவுணர்ச்சியும் கொஞ்சங் கொஞ்சமாகச் சிதைக்கப் பெற்றது. நம்முடைய பொருளியல், அரசியல் அமைப்புகள் கொஞ்சங் கொஞ்சமாகச் சிதைக்கப் பெற்றன. கோயில்கள் கட்டியவன் பார்ப்பானில்லை; தமிழன்தான். களப்பிரர் காலத்தில்தான் வழிபாட்டு முறை வந்தது. வடமொழி மந்திரங்களைச் சொல்லச் சொன்னார்கள். அதற்குச் சட்டமும் செய்யப் பெற்றது. தமிழன் தான் முன்னோடி பார்ப்பான் இடையூறாக இல்லை. நம்மை நாமே திருத்திக்கொள்ள வேண்டும். ஒருமுறை கோ.து. (நாயுடு) அவர்கள் என்னிடம் பேசிக் கொண்டிருக்கையில் நாம் அடிமை நாட்டிலே தானே இருக்கிறோம். என்றார்கள், ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?’ என்றேன் இல்லை அப்படித்தானே பார்ப்பனர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள்’ என்றார்கள். ‘நீங்கள் வேண்டுமானால் அடிமையாக இருக்கலாம்; நாங்கள் அடிமைகள் அல்லர். நாங்கள். அவன் எழுதி வைத்ததை நம்பவில்லை’ என்றேன் அவரிடமிருக்கும் செல்வத்திற்குக் கொஞ்சம் இப்படிக் காட்டினாரென்றால் என்னென்ன வேலை நடக்கும் தெரியுமா? தமிழ் நாட்டிலிருக்கும் செல்வர்களில் ஒரு சிலர் நேரடியாகக் கூட வேண்டாம்; மறைமுகமாகக் கொஞ்சம் உதவினாலே போதும், அவர்கள் வியக்கும்படிச் செயல்கள் நடக்கும்.
மொழி விடுதலைதான் அடிப்படையானது என்று சொன்னேன். அதில் நாம் வெற்றி பெறவில்லை. எனவே நம் இயக்கமும் வெற்றி பெறவில்லை. இவ்வாண்டு 5-ஆம் வகுப்பு வரை பாடத் திட்டத்தை அரசினர் மாற்றியிருக்கின்றனர். நன்றாகப் படம் போட்டுச் சில பழைய பாடங்களை எடுத்து விட்டுப் புதிய பாடங்களைச் சேர்த்திருக்கின்றனர். அதில் சில தூய தமிழ்ச் சொற்களைப் புகுத்தியிருக்கின்றனர். அவ்வளவுதான். உடனே பார்ப்பன ஆசிரியரெல்லாரும் கூடித் 'தலைமையாசிரியர் கருத்தரங்கு' என்று மாநாடு கூட்டித் தமிழக அரசு மாணவர் நிலைக்குப் புரியாத சொற்களைக் கொண்டு வந்திருக்கிறது; சிறுவர்கட்கு அறிவு விளங்காது என்று ஒப்பாரி வைக்கத் தொடங்கிவிட்டனர். இவன் 'பூ' என்றிருந்ததைப் புஷ்பம்’ என்று போட்டது எப்படிப் புரிந்தது? நீர் என்றும் தண்ணீரென்றும் இரண்டு நிலைகளில் குறிக்கப் பெற்றதை 'ஜலம்' என்று போட்டாயே அப்போது எப்படிப் புரிந்தது? மூத்த மகன் ஜேஷ்டகுமாரனாகவும், இளையமகன் கனிஷ்ட குமாரனாகவும், திருமணம் 'விவாஹ சுப முகூர்த்த' மாகவும் மாற்றப்பட்ட போது மட்டும் எப்படிப் புரிந்தது? மொழியில் விழிப்புறின், இனம் விழிப்புறும். மொழி இன்றி, இனமில்லை. எனவேதான் மொழி, இன, நாட்டு விடுதலை என்று முக்கொள்கையாகச் சொல்ல வேண்டியதை மொழி-இன விடுதலை, நாட்டு விடுதலை என்று இருகொள்கையாகச் சொன்னேன்.
இப்போது இன்றையக் குமுகாய மாநாட்டில் நிறைவேற இருக்கும் ஒரே ஒரு தீர்மானத்தைப் படிக்கப் போகிறேன். இதுமிகச் சிறந்த தீர்மானம். இது நன்றாக எண்ணி எழுதப் பெற்றிருக்கிறது. நம் கருத்துகள் முழுக்க முழுக்க எழுத்து வடிவில் அடக்கப் பெற்றிருக்கின்றன. சொற்கள் நமக்குப்புரியும் அவர்களுக்குப் புரியாது. இந்த மாநாடு நடத்துவதற்குத் 'தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டு மாநாட்டு’ என்று பெரிய எழுத்தில் போட்டுத் 'தமிழக விடுதலை மாநாடு’ என்பதைச் சிறிய எழுத்தில் போட்டேன். இல்லையென்றால் மாநாட்டிற்கு இசைவு மறுக்கப்பட்டிருக்கும். நம் அதிகாரிகளிடம் இசைவு வாங்கவே இந்த ஏமாற்றுதல்! நூற்றுக்கு 3 பேராக இருக்கும் பார்ப்பனர் 97 பேரை ஏமாற்றுகிறார்களே, நாமும் கொஞ்சம் ஏமாற்றிப் பார்ப்போமே என்று ஏமாற்றினேன். எல்லாம் எப்படியாவது ஒரு மாநாடு நடத்த வேண்டும்; நம் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான்!
அடுத்த நாள் மாநாட்டைத் தடுத்தாலும்சரி; ஒன்றும் செய்ய இயலாது. தீர்மானமெல்லாம் அச்சுப் போட்டுக்கொண்டு வந்து விட்டேன். தடுக்கப் பெற்றால் எல்லாம் சுவரொட்டிகளாக ஒட்டப்பெறும்; அஃதாவது எப்படியும் நிலையைத் தவிர்க்க முடியாது. இஃது அரசினர்க்கு எச்சரிக்கை, தமிழர்க்கன்று. அன்பர்களே! இந்தத் தீர்மானத்தைச் சற்றுக் காது கொடுத்துக் கேட்கக் கேட்டுக் கொள்கின்றேன். ஒரு தீர்மானத்திற்கு இரண்டு நிலைகள் இருக்கின்றன. ஒன்று குறிக்கோள். மற்றொன்று செயற்பாடு. இதுவரை யாரும் இப்படித் தீர்மானம் போடவில்லை. ஐயா (புலவர் வை. பொன்னம்பலனார்) அவர்கள் குறிப்பிட்டது போல் ஒரு புதிய முறையில் போடப் பெற்றிருக்கிறது. தீர்மானம் போட்டால் அதை நிறைவேற்ற வழி இருக்க வேண்டும். (தீர்மானத்தைப் படிக்கத் தொடங்குகிறார்கள்) 'குறிக்கோள்' தமிழ்மொழி, குமுகாய விடுதலை, இக்குறிக்கோளின் அடிப்படையில், தமிழகத்தின் அரசுச் சார்பில் உள்ள ஆட்சி, அலுவல், கல்வி, தொழில் எனும் நான்கு துறைகளிலும்; தனியார் சார்பிலுள்ள பொதுவாழ்வியல், (பொது வாழ்வியல், தனிவாழ்வியல் என்றால் என்ன என்று பின்னர் விளக்குவேன்) வாணிகம், செய்தித்தாள், பிற பொழுது போக்குகள் எனும் ஐந்து துறைகளிலும். (இப்போது 'பொழுபோக்குகள்’ என்பதை விளக்கத் தொடங்கித் திரைப்படத்தின் இழிவை எடுத்துரைக்கின்றார்கள்) என் அருமை நண்பர் திரு. சரவணத் தமிழன் அவர்கள் திரைப்படத்தின் இழிவுகளை உங்கள் முன்னே நன்றாக விளக்கினார்கள் ஆனால் அவர் சொன்னது மிகக் குறைவே. நீங்கள் சென்னைப் பக்கம் போய்ப் பார்த்தால் எல்லாம் தெரியும் அதுவும் வேறெங்கும் போக வேண்டாம் விடுமுறை நாட்களிலே கல்லூரிப் பகுதிகளுக்குச் சென்றால் போதும் அங்குப் பாலியல் உணர்வுப் படங்கள் மாணவர்களுக்குக் காட்டப் பெறுகின்றன. நாம் இங்கே குமுகாய மாநாடு நடத்திக் கொண்டிருக்கிறோம்; அங்கே ஒரு பெரிய இனத்திற்கே குழி தோண்டிக் கொண்டிருக்கிறார்கள். ஏன்? பார்ப்பான் ஒரு நாளில் 23 மணி நேரமும் திரைப்படம் முதலானவற்றில் ஈடுபட்டு ஒரு மணி நேரம் படிப்பில் கவனம் செலுத்தினாலும் தேறிவிடுவான். ஆனால் நம் பையனோ 23 மணி நேரமும் படித்து, ஒரு மணிநேரமும் வீணடித்தாலும் தேறமாட்டான். இது உண்மை, என்னுடைய வாயில் அறிவுத் தொடர்போ, உளத்தொடர்போ இல்லாமல் சொற்களில் வருவதில்லை. நான் பெரிய இவன் என்று சொல்லிக் கொள்ளவில்லை உண்மை இன்று புரியாதிருக்கலாம். நாளை புரியும். அப்போது எண்ணி வருந்துவீர்கள். அந்த நிலைக்கு உங்களை ஆளாக்கிக் கொள்ளாதீர்கள். அதனால் தான் வன்முறையைக் கொஞ்சம் தள்ளி வைத்திருக்கிறேன். அப்போது வாயால் சொல்ல மாட்டோம்: முதலிலேயே சொன்னேன். பாட்டெழுதுகின்ற கை மட்டுமன்று கருவியும் செய்யும் என்று சொன்னேன். அதிலே பல குறிப்புகள் இருக்கின்றன.
வானொலி இன்று பெயருக்கே அரசுச் சார்பில் இருக்கிறது. ஆனால் உண்மையில் தனியார் (பார்ப்பனர்) சார்பிலேயே இருக்கிறது. இப்போது உங்கட்கு இன்னோர் எடுத்துக் காட்டைச் சொல்ல விரும்புகிறேன். கோவை மாவட்டத்தில் அமராவதியில் ஒரே ஒரு படைத்துறைப் பள்ளி (sainick school) இருக்கிறது. அந்தப் பள்ளிக்கு ஒவ்வோராண்டும் தமிழக அரசுச் சார்பிலே உரு. 30.000 செலவிடப்படுகிறது. ஆனால் அங்கே நடுவணரசு சொல்லிக் கொடுக்கும் பாடங்கள் தாம் கற்பிக்கப்பெறுகின்றன. அங்குத் தமிழுக்குக் கிழமைக்கு ஒரே ஒரு பாடவேளை (Period) மட்டும் தான். 10 ஆம் வகுப்புக்கு ஒரே ஒரு நூல்தான் பிற எல்லாம் இந்தி, ஆங்கிலப் பாடங்கள். இன்னும் சொன்னால், உங்கட்கு வியப்பாக இருக்கும். அந்த ஒரே ஒரு நூலும் என்ன தெரியுமா? 'கோவலன்' என்னும் நூல்! இங்கு, அஃதாவது தமிழக அரசுப் பள்ளிகளிலே 6 ஆம் வகுப்புக்கு வைத்திருக்கும் தமிழ்ப் பாடம் அங்கு 9 ஆம் வகுப்புக்கு வைக்கப் பெற்றிருக்கிறது. இவ்வளவு போதுமா? இவ்வளவு படித்தால் அவன் தமிழைப் படித்துக் கொள்வானா? அடிப்படையிலேயே கை வைக்கிறீர்கள்! தமிழில் என்ன இருக்கிறது? ஏதாவது கண்டு பிடித்திருக்கிறீர்களா?” என்று அவன் கேட்டால் "ஆமாம்" (ஒன்றும் இல்லை) என்கிறார்கள் நம் தலைவர்.
இப்போது தீர்மானத்தின் குறிக்கோளைப் படித்தேன்; செயற்பாட்டையும் இப்போது சொல்லிவிடலாம். ஆனால் செயல் திட்டம் நாளை அறிவிக்கப் பெறும். என் மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய தமிழ்க்குடிமகன் அவர்கள் என்னை ஓர் அரசியல் இயக்கம் தொடங்க வேண்டும் என்று சொன்னார். அவர் வேண்டுமானால் தொடங்கட்டும். நான் துணைநிற்பேன். தனித்தமிழ் அன்பர்களை யெல்லாம் கூட்டி அவரையும் இன்னும் பலரையும் சட்டமன்றத்தில் கொண்டுபோய்வைக்க முடியும். ஆனால் அரசியல் கட்சி தொடங்கினால் என்னென்ன ஆகும் என்று எனக்குத் தெரியும் சட்ட மன்றத்திற்குப் போகும் அந்த நிலை மட்டுமே சரி என்று எனக்குப் படவில்லை. எனக்கு வேறு வேலை இருக்கிறது.
இந்தத் தீர்மானத்தின் படிகள் வழக்குரைஞர் கட்கெல்லாம் அனுப்பப்பெறும். நமக்கென்று எல்லாத் தீர்ப்பு மன்றங்களிலும் வழக்குரைஞர்கள் இருக்கிறார்கள். இன்னும் வெளிப்படையாகச் சொல்கிறேன். ஒற்றர்கள் குறித்துக் கொள்ளுங்கள். நான் கொஞ்சம் துணிவானவன். நாட்டிற்குக் கொஞ்சம் கேடுகாலம் வந்து கொண்டிருக்கிறது, என்று நினைத்துக் கொள்ளுங்கள். படைத்துறையில் கூட நான் சொன்னால் திருப்பு நிலை வரும் (கை தட்டல்). ஏதோ சும்மா கத்திக் கொண்டிருக்கிறான் என்று நினைக்காதீர்கள் நான் இவ்வளவு துணிவாகப் பேச் முடியாது. என்னவோ செய்தித் தாளைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். வங்காளத்தில் நடந்ததில் நூற்றில் ஒரு பங்கு தான் வெளிவந்தது. அங்கு நடந்தது வேறு: செய்தித்தாளில் வந்தது வேறு. நாம் இவ்வளவு பெரிய மாநாடு நடத்துகிறோமே, எவ்வளவு செய்தி வரும்? ஒரு காமகோடி பீடாதிபதி மதுரை மண்ணில் கால் வைத்தும் மதுரையெல்லாம் மணந்தது என்று எழுதுகிறான் அதையும் நாம் படித்துக்கொண்டு மூடர்களாக இருக்கிறோம்.
ஆரியர்களுக்கு உண்மையாகவே கேடுகாலம் வந்துவிட்டது. ஆரியர்களுக்கு உண்மையாகவே சொல்கிறேன், என்னென்ன நடக்கும் என்று சொல்ல முடியாது, ஒழுங்காக அவனுடைய பூணூலை இன்றைக்கே கீழே கழற்றி வைத்துவிட வேண்டும். அவனுடைய குடுமி தப்பித் தவறி 'இப்பி' க்குடுமியாக இருந்தாலும் நான் அவனுடையது என்றுதான் நினைத்துக் கொள்வேன் (கைத்தட்டல்) ஏன் தெரியுமா? அவன்தான் பெரும்பாலும் 'இப்பி' யாக இருக்கிறான் அவர்களெல்லாம் அடுத்த கப்பலிலேயே போகப் போகிறார்கள். அது தான் அமெரிக்கப் பழக்கங்களை யெல்லாம் பழகுகிறார்கள். இராசாசி முன்பே சொல்லிவிட்டார். நாங்கள் இந்த நாட்டை விட்டு விரைவில் போகிறோம் என்று விளையாட்டில்லை.; உண்மையாகவே போகத்தான் போகிறார்கள். உங்களுக்கு அவனைப் பற்றிக் கவலை வேண்டா, நம்மைப்பற்றிக் கவலைப்படுவோம். போதிய காலம் அமைந்து விட்டது. அதனால்தான். இவ்வளவு நாள் அமைந்திருந்தேன். இதை நேற்றே செயற்குழுக் கூட்டத்தில் சொன்னேன்.
பெரியார்தான் விரைவில் செயல்படக் காரணமாக இருந்தார். பிரிவினையைத் தள்ளிப் போட்டிருக்கிறேன் என்று இதே திருச்சியில் பேசுகையில் சொன்னார். நம்மவர்கள் ஆள்கிறார்கள் இந்திராவிடமிருந்து அதிகாரம் கேட்டுச் சில நிலைகளை வாங்கிக் கொள்ள வேண்டும் என்கிறார். இப்படிப் பட்ட ஒருவர் இனி நமக்குச் செய்யப் போகிறார் என்று நினைத்தால் நம்மைப்போல் ஒரு குருட்டுத் தனமான கொள்கையை உடையவர் வேறு எங்கும் இருக்க முடியாது. இளைஞர்கள் நாம் உடலில் சூடு ஆறிப்போகும் முன் சிலவற்றைச் செய்ய வேண்டும். இப்பொழுதே சிலநிலைகளில் தளர்ந்து போய் இருக்கிறோம். இன்னும் தளர விரும்பவில்லை. இப்போது மாணவர்கள் பேசினார்கள். எந்தெந்தக் கல்லூரியில் எப்படியெப்படி மாணவர்கள் இருக்கின்றார்கள் என்று. எனக்குத் தெரியாது. என்னைத் தொட்டுப் பார்த்தால் என்னென்ன நடக்கும் என்பதை அவர்களே உணர்ந்து கொள்ள வேண்டும். அந்தப்படியான நிலை வருகிறபடி சூழலை வருவித்துக் கொள்ள யாரும் விரும்ப வேண்டாம். இதையெல்லாம் சொல்லுவது தவறு. இருந்தாலும் சிலவற்றைச் சொல்லியும் நிறைவேற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது.
இந்த மாநாட்டிற்கு வராதவர்களைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. ஊர்வலத்திற்கு 100 பேர் வந்திருப்பார்கள். இந்த ஊர்வலத்தால் உணர்வு பெற்றோர் சிலரேனும் இருப்பர். நாளை செயல்திட்டத்தை அறிவித்தபின் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது, செயல்திட்டம், செயல்திட்டம்தான். நம்மை இந்த மாநாடு மேலும் உறுதியான உள்ளங்களாக்கிக் கொடுத்தது. இம் மாநாட்டை நான் நினைத்ததற்கு மேலாக, மிகச்சிறப்பாக நடத்திக் கொடுத்த உங்களுக்கு என் பணிவான நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாநாடு இத்துடன் முடிவடைகிறது. ஆனால் ஓர் அருமையான நாடகம் ஏறத்தாழ 9.30 மணியளவில் நடக்க இருக்கிறது. எல்லாரும் உணவருந்தி விட்டுத் தவறாது வந்து பார்த்துச் செல்லும்படி கேட்டுக் கொள்கிறேன். நாடகத்தைத் தனித்தமிழ் வேங்கை, வெங்காலூர் அறவாழி அவர்கள் மிகவும் சிறப்பாக எழுதி யிருக்கிறார்கள். நாடகத்தில் வேறொன்றுமில்லை; நம் கொள்கை நன்றாக விளக்கப் பெற்றிருக்கிறது. நாடகத்திற்கு நாமெல்லாம் வத்திருந்து நம் உணர்வு அவிந்து போகாமல் மேலும் மேலும் சூடேற்றிக் கொண்டிருப்போமாக! (ஒலிபெருக்கியில் விடுதலை முழக்கங்கள் எழுப்பப் பெறுகின்றன)
- தென்மொழி, சுவடி :10, ஓலை-2-4, 1972
அழைக்கின்றேன் உங்களை!
புறப்படுங்கள் போருக்கு!
'தென்மொழி'யின் இவ்விரண்டாவது விடுதலை மாநாடு தமிழக விடுதலை வரலாற்றின் இரண்டாம் படிநிலை. அடுத்த மாநாடு கோவையில் இன்னும் ஆறு மாதத்திற்குள் நடைபெறும்.
1975-க்குள் மாவட்டப் பெருநகர்கள் தோறும் விடுதலை மாநாடு நடத்திவிட வேண்டும் என்பது கொள்கை.
நாம் வகுத்துக் கொண்ட திட்டப்படி 1975-இல் இருந்து 78-க்குள் போராட்டங்கள் நடைபெறும்.
1978-இல் கட்டாயம் புரட்சி நடந்தே தீரும். எவரும் வரவில்லையானாலும் நானும் என்னைச் சேர்ந்த மறவர்கள் ஒரு சிலரேனும் முனைந்து நடத்தியே தீருவோம்; நாங்கள் நாடு கடத்தப்பட்டாலும் அவ்வினைப்பாடு நடந்தே தீரும். எனவே ஆரியப் பார்ப்பனரும், தமிழ்ப் பகைவர்களும், சில பம்பைத் தலைகளும் இவ்வியக்கத்தை எவ்வாறேனும் முளையிலேயே கிள்ளிவிடலாம். கையிலேயே நசுக்கிவிடலாம் என்றெல்லாம் கனவு காண வேண்டா என்பது மட்டும்ன்று மனப்பாலும் குடிக்க வேண்டா.
அப்புரட்சிக் கோபுரத்திற்குப் போகும் படிக்கட்டுகள்தாம் இம் மாநாடுகள்!
எனவே இம்மாநாடுகளில் விடுதலை மறவர்கள், புரட்சி யேறுகள், உரிமை அரிமாக்கள் எவரும் தப்பாமல் கலந்து கொள்ள வேண்டும் என்பது என் கோரிக்கை!
கோரிக்கை விட்டு விடுதலைப் போராட்டத்திற்கு அழைப்பதே எனக்கு நகைப்பைத் தருகின்ற செயல்!
இருப்பினும் என் செய்வது?
உறங்குகின்ற நம் மக்களை உலுப்பி எழுப்பி, உணர்வேற்றி, முதுகுக் கூனை நிமிர்த்தித்தானே அழைத்துக் கொண்டு போக வேண்டியுள்ளது!
ஏளனக்காரர்கள், எக்களிப்புப் பேசுவோர், மெத்தனம் பாராட்டுவோர், புறக்கணிப்பாக நடந்துகொள்வோர், பொதுத் தொண்டால் வரும் ஊதியங்களைத் தம் தீனிப் பைகளிலேயே கொட்டிக் கொள்வோர் - அனைவரும் ஏமாறிப் போகும் காலம் பெருமூச்செரியும் நேரம் - வயிறு வீங்கி, வெடித்துச் சாகும் ஒருநாள் - வரத்தான் போகிறது.
எனவே அவர்களின் மாற்றத்திற்காக நாம் காத்திருக்க வேண்டா. நமக்குரியவேலைகள் எத்தனையோ நமக்காகக் காத்துக்கிடக்கின்றன. கடமைகள் எதிர்நிற்கின்றன. அவற்றை நோக்கியே நாம் ஒவ்வொருவரும் பாடாற்றியாகல் வேண்டும். -
அதுவரை. நீங்கள் சோர்ந்து போகவே கூடாது!
புறப்படுங்கள் மதுரைக்கு!
பாண்டியன் கழகம் வளர்த்த வெறும் மதுரையாக இஃது இருந்தது போதும்! தமிழக விடுதலைக்குக் களம் அமைத்த மதுரையாக வரலாற்றில் இதைப் பேச வைப்போம்: புகழச் செய்வோம்; புறப்படுங்கள்!
குடும்பம் குடும்பமாக - கூட்டம் கூட்டமாக
நண்பர்களோடு - மனைவி மக்களோடு
வாருங்கள்!
உங்கள் முகங்களை அந்த விடுதலைப் போர்க்களத்தில் பார்க்கத் துடிக்கின்றேன்!
தவறாமல் வாருங்கள்!!
- தீச்சுடர், 1973
தமிழ்நிலத்தை விடுவிப்போம்!
தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டு மாநாடு!
இரண்டாவது தமிழகப் பிரிவினை மாநாடு
பாண்டியன் தலைநகராம் மதுரையில்!
விடுதலை மறவன் வீரபாண்டியக் கட்டபொம்மன் சிலையிலிருந்து ஊர்வலம் விடுதலை முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன! மதுரை தெருக்கள் அதிர முழங்கினர்!
மக்கள் வியப்பெய்தினர்; விழிப்பெய்தினர்! இடையில் ஊர்வலம் தடைப்படுத்தப் பெற்றது! காவலர்கள் சுற்றி வளைத்தனர்! தடையிட்டனர்! களிற்றுப் பிளிறலுடன் மறவர்கள் தடைமீறவே தளைப்படுத்தினர்.
ஐந்து காவல் வண்டிகள் அலறப் பறந்து ஊர்வலத்தினரைக் காவல் நிலையத்திற்குக் கொண்டு சேர்த்தன! பிற்பகல் மாநாடு காவல் கட்டுப்பாட்டு நிலையத்திற்குள் நடந்தது!
தமிழகம் விடுதலைபெறச் சூளுரைத்தனர் மறவர்கள். மாலையில் விடுவிப்பு! மறுநாள் மாநாட்டுத் தடைமீறல்!
மீண்டும் பதினொரு பேர் நான்கு நாள் காவற்பட்டனர்!
தாய்த்தமிழகம் விடுதலை நோக்கி அமைத்த இரண்டாம் பாசறை வரலாறு இது!
விடுதலை வரலாற்றில் வீரமறவரின் முதற்பட்டியல்!
துடித்துக் கிடக்கும் தோள்மறவர்கள் அடுத்த முற்றுகைக்கு அங்காந்து கிடக்கின்றனர்!
பகைவர்கள் அஞ்சுகின்றனர் ஆட்சியினர் பரபரப்படைகின்றனர்!
ஒடியுமா பகையெலும்பு? முடியுமா அடிமை நிலை? விடியுமா தமிழகம்? படியுமா உரிமை ஒளி? - எதிர்காலமே விடை சொல்!
தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டு மாநாடு
(நிகழ்ச்சிச் சுருக்கம்)
மதுரையில் கடந்த சிலை 10. (24-12-72) அன்று இரவு 2 மணியளவில் வஸலம்புரி இல்லத்தில், மாநாட்டு, அமைப்பாளர் திரு. பெருஞ்சித்திரனார் தலைமையில் அமைக்கப்பெற்ற செயற்குழு முடிவின் படி தென்மொழிக் கொள்கை (தமிழகப் பிரிவினை) 2ஆவது மாநாடு. மதுரையில் தி.பி. 2004. விடை 27,28 (9.10 சூன் 72) காரி ஞாயிறு இரீகல் திரையரங்கில் நடைபெறுவதென உறுதி செய்யப் பெற்றது. அதன்படி, திரு. க. வெ, நெடுஞ்சேரலாதன் (ஆசிரியர், 'தீச்சுடர்') மாநாட்டு வரவேற்புக் குழுத்தலைவராகவும், திரு. உ, அரசுமணி செயலராகவும் திரு. க. ம. முருகுவேந்தன் துணைச் செயலராகவும் திரு. கா. தென்னவன் பொருளராகவும், திருவாளர்கள், கி. மாவேந்தன், அ. தமிழன்பன், ப. முருகவேள். ஓடை. தமிழ்ச் செல்வன், பெ. திருவேங்கடம் ஆகியோர் செயற்குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப் பெற்றனர்.
செயற்குழு, திட்டமிட்டுக் குறித்த நாளில் மாநாடு நடைபெறவும், ஊர்வலம் முதலியன சிறப்புற நடக்கவும் ஏற்பாடுகள் செய்து வந்தது. மாநாட்டு வரவுக்காக, அறிக்கைகளும், பற்று முறிகளும் அச்சிடப் பெற்று, தமிழகம் முழுவதும் ஆங்காங்குள்ள விடுதலை இயக்க அமைப்பாளர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் அவற்றை அனுப்பிவைத்து, மாநாட்டுச் செய்தியைப் பரப்பவும், நன்கொடைகள் தண்டவும் ஏற்பாடுகள் செய்யப் பெற்றன. மாநாட்டுப் பொறுப்பாளர்களில் திரு. க. வெ. நெடுஞ்சேரலாதனும், திரு. அரசுமணியும், திரு. சு. ம. முருகுவேந்தனும், திரு. கா. தென்னவனும், திரு. ப. முருகவேளும் திரு. ஓடை. தமிழ்ச்செல்வனும் அடிக்கடி கூடி, மாநாட்டுப் பணிகள் திட்டமிட்டவாறு நடைபெற உழைத்து வந்தனர். திரு. க. வெ. நெடுஞ்சேரலாதனும், திரு. அரசமணியும் இரவு பகல் பாராது செயலாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
அறிக்கைகள் பலவாறு விளக்கமாகவும் சுருக்கமாகவும் அச்சிடப் பெற்றுப் பரப்பப் பெற்றன. ஆங்கில அறிக்கையும் அச்சிடப் பெற்று, நடுவணரசு அமைச்சர்கள் சிலர்க்கும், ஆங்கிலச் செய்தியிதழ்களுக்கும் அனுப்பி வைக்கப்பெற்றது. மாநாட்டுச் செய்திகள் தென்மொழி, தமிழம், தீச்சுடர், வலம்புரி ஆகிய இதழ்களின் வாயிலாகவும் பரப்பப் பெற்றன. இருப்பினும் மாநாட்டுத் தொடர்பாகச் சுவரொட்டிகள் ஏதும் அடிக்கப் பெற்று முன் கூட்டியே விடுக்கப் பெறாதது பெருங்குறையாக விருந்தது. போதுமான பொருள் வலிவு இருந்திருந்தால் செய்திகளை இன்னும் முன் கூட்டியும் விரிவாயும் பரப்பிருக்க முடியும் என்று செயற்குழு குறைபட்டுக் கொண்டது. ஆனால் இருப்பதை வைத்துக்கொண்டுதானே செயலாற்ற முடியும். மாவட்ட அளவில் ஒதுக்கப்பெற்ற குறியீட்டுத் தொகை சரிவரத் தண்டப்பெறவில்லை. பெகும்பகல்லா இளமாறன், நெய்வேலியன்பர்கள். கோவை நித்தலின்பன் போலும் மெய்யன்பர்கள் தம் பொறுப்பில் அளித்த தொகைகளுடன், மாநாட்டுச் செயற்குழு மதுரையளவில் தாமே புரட்டிக் கொண்ட தொகைகள் தாம் மாநாட்டு அடிப்படைச் செலவுகளைச் செய்யவுதவின. எத்தனையோ இன்றியமையாச் செலவுகளுக்காக வரவேற்புக் குழுத் தலைவரும், செயலரும் தம் தம் உடைமைகளைக் கூட அடகுக் கடைகளில் வைக்க வேண்டியிருந்தது. மாநாடு தொடங்கினால் பட்டினி கிடந்தாகிலும் பணம் தண்டுவோம்; மடியேந்தியாகிலும் படியளப்போம்’- என்றவர்களெல்லாரும் வாயினால் அளந்தார்களே தவிர மாநாட்டுக் கடைசிநாள் வரைக் கையினால் அளக்கவில்லை. தமிழனுக்கு இவ்வகையில் என்றைக்குத் தான் சுறுசுறுப்பும் நம்பிக்கையும் வருமோ, தெரியவில்லை. பொருள் வலிவும், குழுவலிவும் இல்லெனில் எவ்வளவு சிறந்த திட்டங்களும் இடைமுறிந்து விடும் என்பதை இத்துறையில் ஈடுபட்ட எல்லாருக்கும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். இவ்விடத்தில் இன்னொன்றையும் கூற வேண்டியுள்ளது.
நம்மில் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் நம்க்குள் நாமே வேறுபட்டுக் கிடக்கின்றோம். நாம் செய்வதில் 'இது சொத்தை; இது சொள்ளை' என்று கூறிக்கொண்டு வேறு பிரிந்து போவாரை இன்னும் காண்கிறோம். ‘சொத்தையும் சொள்ளையும்’ இல்லாத ஒருவராக அவரேனும் இருப்பதில்லை. தம் முதுகுப்படையை மூடிமறைத்துக் கொண்டு, நம் முகத்துத் தேமலைப் படையென்று பிதற்றித் திரிபவரை பின்பற்றுவற்குப் பத்துப்பேர் இருக்கத்தான் இருப்பார்கள். நம்மவர்களில் இன்னும் சிலர் உண்டு. அவர்கள் நம் வினைத் திட்டங்கள் அனைத்தும் சரியில்லை யென்று கூறிக் கொண்டே நம்முடன் உணவுக் கடை முதல் சிறைக்கூடம்வரை ஒட்டி வந்து கொண்டிருக்கின்றார்கள். இன்னும் சிலர் இப்படியும் இல்லாமல் அப்படியும் இல்லாமல் நடுவில் ஊசலாடிக் கொண்டிருக்கின்றதை மிகுவாகப் பார்க்கலாம். அவர்கள் இருதரப்பினரையும் ஏமாற்றிக் கொண்டு. அல்லது இரண்டு புறத்தினரிடையும் நன்மைகளைப் பெற்றுக் கொண்டு, இலைக்கு எண்ணிக்கையாக வந்து நிற்பவர்கள். அவர்களே வினைக்கு வேறு முகம் காட்டுபவர்கள். இவர்களிடத்திலெல்லாம் உண்மையான விடுதலைத் தொண்டர்கள் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். இனி, இவர்கள் தவிர வேறு வகையான ஒருசிலரும் இருப்பதாகத் தெரியவருகிறது. ‘இன்னான் தொடங்கினான் இதை நாம் இதற்கேன் துணைபோக வேண்டும்: எதையாகிலும் சொல்லித் தட்டிக் கழித்து விட்டால் போகிறது'- என்று அவ்வகையினர் எண்ணுவதாகவும் தெரிகிறது. அத்தகையினர்க்கும் அவரைச் சார்ந்து போவார்க்கும் பணிவாக ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம்.
'பொதுத் தொண்டு என்பது இயல்பாக நாம் காற்றை உள்ளுக்கிழுத்து விட்டுக் கொண்டிருக்கின்றோமே, அதைப் போன்றதன்று மூச்சைப்பிடித்துக்கொண்டு, நம் வழியில் கிடக்கும் பாறையை முதுகைக் கொடுத்து முட்டித்தள்ளுவதைப் போன்றது. நாம் இயல்பாக மூச்சை இழுத்து விடுவதைப் போல அதையும் செய்ய முடியாது. எவரேனும் முதலில் முன்னுக்கு வந்து மூச்சுப்பிடித்து நம் முன்னேற்ற வழியை யடைத்துக் கிடக்கும் தடைக் கல்லை முட்டுக்கொடுத்து, அப்புறத் தள்ளியே யாகல் வேண்டும். அதற்கு நீங்களும் முன் போகலாம். நாங்களும் முன் போகலாம். எவர் முன்னே போக வேண்டும். என்பது கட்டளையன்று. துணிவுள்ளவன், பொதுவுணர்வை அடக்க முடியாமல் வைத்துக் திணறிக் கொண்டுள்ளவன் எவனாகிலும் முன்னே போக வேண்டியது தானே! அவன் எவனாயிருந்தால் என்ன? ஊரறிந்த ஒருவன் தான் அதற்கு முன் வர வேண்டும் என்பதில்லை. வீடு தீப்பற்றிக் கொண்டால் “முதன்முதல் எங்கள் ஊர்த்தலைவர் தண்ணீர்க்குடத்தைத் தூக்கட்டும்; அல்லது சொல்லட்டும்; அதன் பின்தான் நாங்களும் தண்ணீரைத் தூக்குவோம்; அணைப்போம்” என்று எவனும் சொல்வதில்லை. வீடு தீப்பற்றிக் கொண்ட ஒரு நிலையை எப்படி ஒரு காலத்தால், துணிவுடன், முன்னேறிச் செய்ய வேண்டுமோ, அப்படியே ஒரு நாடு அடிமைத் தீப்பற்றிக் கொண்ட பொழுது, உரிமை நீரை அதன்மீது வாரி இறைப்பதில், குறிப்பிட்ட எவரையும் எதிர்பார்த்துக் கிடக்கத் தேவையில்லை. உலகில் ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொருவர் ஒவ்வொரு வகையான நயன்மையை (நியாயத்தை)க் கற்பிக்கலாம். அவரவர் சொல்லுவதையும் சிற்சிலர் பின்பற்றவே செய்வர். எனவே ஒவ்வொரு காலத்துக்கும் ஒவ்வொருவராக எல்லாரையும் பின்பற்றிக் கொண்டு செல்ல வேண்டுமென்பதில்லை. எவரையும் பின் பற்றுவது என்பது நமக்குத் தெளிவாகத் தெரிவதானால், நாம் எல்லாரையும்விட அறிவுள்ளவராக இருத்தல் வேண்டும். இப்படித்தான் ஒவ்வொருவரும் தம்மை மிகையாகக் கருதிக் கொண்டும் கற்பனை செய்து கொண்டும் நடைமுறை நிகழ்ச்சிகளுக்கு ஊறுகள் செய்து வருகின்றனர்.
பின்பற்றப்படுவர் எவர் என்பதைக் கால நீட்சியும் வினை விளைவும், அறிவுக் கூர்மையுமே காட்டும். இவற்றில் கால நீட்சி என்பது ஒருவன் கொள்கை எத்தனை நெடுங்காலம் தடம் புரளாமல் உள்ளது என்பது. வினை விளைவு என்பது அக்கொள்கை தொடக்கத்தில் உள்ளதைவிட அவன் முயற்சியால் எவ்வளவு விளைந்துள்ளது என்பது. அறிவுக் கூர்மை என்பது அவன் அறிவால் செய்த செயல்கள், உரைகள், வெளியீடுகள் எவ்வளவு என்பது இம்மூன்று வகையாகவும் கணித்துப் பின்பற்றப் படவேண்டியவர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவர் கொண்ட கொள்கையைத் தம்முடையாக்கிக் கொண்டு, அவர்மேல் நம்பிக்கை வைத்து, உறுதியுடன் அவர் காட்டும் பாதையில் முன்னேறிப் போக வேண்டுமே தவிர, ஒன்றைப் பற்றுவதும் சறுக்குவதுமாகவே இருந்தால் எந்த விளைவையும் எதிர் பார்க்கவே முடியாது. இவற்றையெல்லாம் இங்கு ஏன் குறிப்படுகிறோமெனில், கடந்த மாநாட்டின் பொழுது சில கூழாங்கற்கள் வயிர ஒளி காட்டி, அங்குக் கூடிய அன்பர்களின் மனங்களைக் குழப்பியடித்துக் கொள்கைக் கூறு போட்டதை நேரிலேயே காணவும் கேட்கவும் நேர்ந்தது. பொதுவாக இன்ன பிற குழப்பக்காரர்களாலேயே நம் கொள்கைக்கும் முடக்கம் ஏற்படுகின்றதை நம்மைப் போல் அன்பர்கள் சிலரும் கண்டு வருந்தி நம் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். ஆக்கி வைத்த சோற்றுக்குப் பங்குக்கு வந்து படையல் போட்டுக் கொண்டு பழுது கூறும் அவர்களைக் காலந்தான் காட்டிக்கொடுக்க வேண்டும். மற்றப்படி அவர்களை முகங்காட்டுவதும் முறியடிப்பதும் நம் வேலையன்று.
மேற்குறிப்பிட்ட இடையூறுகள் நம் இயக்கத்தில் மட்டுந்தான் இருப்பதாக எவரும் கருதிக் கொள்ளக்கூடாது. பத்துப்பேர் சேர்ந்து செய்யும் எந்தப் பணியோ, தொண்டோ, விழாவோ, கட்சியோ, கழகமோ எதுவாக விருந்தாலும் இவ்வத்தனை எதிர்நிலைகளும் எழவே செய்யும். இந்நிலை இயற்கையின் தேர்வுநிலைக் கொள்கையை அடியொட்டியது. இத்தனை எதிர்ப்புகளுக்கும் இடையில் எவன் துணிந்து, சலிப்புறாமல், சோர்வுறாமல் தன் வினையைச் செய்கின்றானோ அவனே அதற்குத் தகுதியானவன் என்பதை மக்கள் கண்டுகொண்டு, அவனைப் பின் பற்றித் தாங்களும் முன்னேறிக் கொள்ள வேண்டுமென்பது இயற்கை வகுத்த சட்டம். எனவேதான் இந்நிலைகளுக்கெல்லாம் நாம் என்றும் மனஞ்சலித்ததில்லை. இனி, இன்னும் இதில் விளங்கிக் கொள்ள வேண்டிய உண்மைகளும் பலவுள. அவை மெய்யறிவுக் குட்பட்டவை யாதலால் இங்குக் காட்டப்பெற வேண்டியதில்லை.
இனி, மதுரை விடுதலை மாநாட்டுச் செயற்குழுவின் திட்டப்படி எல்லா வினைப்பாடுகளும் முன் பின்னாகவோ, ஒன்றுக் குத்தலாகவோ படிப்படியாகச் செய்யப் பெற்று வந்தன. அன்பர்கள் நெடுஞ்சேரலாதனும், அரசுமணியும் முனைந்து ஈடுபட்டிலரேல் மாநாடு நடைபெற்றிருக்குமா என்பது ஐயமே! எப்படியோ மாநாடு குறிப்பிட்ட நாளில் நடைபெறுவதை, இடையில் எத்தனையோ இடர்ப்பாடுகள் குறுக்கிட்டும், தள்ளிப்போட முடியாமற் போய்விட்டது. .
மாநாட்டுக்கு ஒரு கிழமைக்கு முந்தியே அமைப்பாளர் பெருஞ்சித்திரனார் மதுரைக்குப் போய் பாசறையமைத்துக் கொண்டு, எல்லாச் செயல்களையும் நேரில் நின்று கண்காணித்துக் கொண்டிருந்தார். மாநாட்டுக்கு முந்தின நாளே வெளியூர் அன்பர்கள் பலர் வரத் தொடங்கிவிட்டனர். நம் மாநாட்டு அலுவலகத்தைத் தேடிப்பிடிப்பதுதான் பலருக்குத் தலைச்சுற்றலாகப் போய் விட்டது. மாநாட்டு அலுவலகத்தை ஏனோ தெரியவில்லை. நம் செயற்குழு ஒரு சந்தில் கொண்டு போய் அமைத்திருந்தது. ஆனாலும் வெளியூரிலிருந்து வந்த அன்பர்கள் பலரும் மனஞ்சலியாமல் ஆங்காங்கு அவரவர்களின் ஏந்துகளுக்குத் தக்கபடி, பல்வேறிடங்களிலும் தங்கிக் கொண்டனர். 8ஆம் பக்கல் வெள்ளி யிரவே மாநாட்டுக் கூட்டம் கலகலக்கத் தொடங்கி விட்டது. மதுரை நகரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப் பெற்றிருந்தன. மாநாட்டில் பெரியார் கலந்து கொள்வதாக விருந்தபடியால், அறிவிப்புகளில் அவர் பெயர் கொட்டை யெழுத்துகளில் போடப் பெற்றிருந்தன. மாநாட்டு நாளன்று மதுரை பல்வகைச் சிறப்புகளையும் எதிர் நோக்கிக் காத்திருந்தது. முதலமைச்சர் கலைஞர் அருட்செல்வர் அன்றைய நாள் ஒரு திருமணத்திற்கெனவும் வேறு சிறப்புக் கூட்டம் ஒன்றிற் கலந்து கொள்ளவும் வந்திருந்தார். பெரியாருக்கு நம் மாநாட்டு நிகழ்ச்சியோடு வேறு ஒரு பொதுக் கூட்டமும் , அருப்புக்கோட்டையில் ஒரு திருமணக் கூட்டமும் இருந்தன. அ.தி.மு.க தலைவர் ம.கோ.இரா. வேறு ஒரு நிகழ்ச்சிக்காக மதுரை வழியாக அன்று போக வேண்டியிருந்தார். அவர் அன்றைய நாள் மதுரையில் தங்குவதென ஏற்பாடு செய்யப் பெற்றிருந்தது. இம் மூவகை நிகழ்ச்சிகளுக்காகவும் காவலர்கள் மாநாட்டுக்கு முந்தின நாளிலிருந்தே பல முடுக்கமான பணிகளை யமர்த்திக் கொண்டு சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கினர். இந்நிலையில் நம் மாநாட்டு ஊர்வலத்துக்கு எங்கு இசைவு கிடைக்காமற் போய்விடுமோ என ஐயுற்றிருந்தோம். நல்ல வேளை வரவேற்புக் குழுத் தலைவர், செயலாளர் போலவே இங்கும். அங்கும் ஓடி, இவரையும் அவரையும் பார்த்து, ஊர்வலத்திற்கும் மாநாட்டிற்கும் இசைவுகளை வாங்கியே விட்டார்.
மாநாட்டுக்கு முந்தின நாள் இரவு தட்டிகள், பதாகைகள், தூக்குத் தட்டிகள் முதலியனவற்றை எழுதுவதிலும் ஆங்காங்குக் கொண்டு போய் வைப்பதிலும், கட்டுவதிலும் அன்பர்கள் பலரும் முடுக்கமாக ஈடுபட்டிருந்தனர். புலவர். திரு. இறைக்குருவனார் தம் ஆசிரியப் பணிகளுக்கிடையில், மாநாட்டு வினைப்பாடுகள் சிலவற்றில் தாமே ஈடுபடுவதிலும் கருத்தறிவிப்பதிலும் முனைந்திருந்தார். வெங்காளுரிலிருந்து நாடகக் குழு வந்து இறங்கியிருந்தது. கொடிகளும் மார்பொட்டிகளும் ஊர்வலத்திற்கென அணியமாகிக் கொண்டிருந்தன.
வெள்ளி(8-6-73) இரவு 8 மணிக்கு முன்பே அறிவித்தபடி மேலமாசி வீதியிலுள்ள 'அப்சரா' விடுதியின் 1-ஆம் எண் அறையில் ‘தென்மொழியன்பர்’ கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஏறத்தாழ முப்பதுபேர் வந்திருந்தனர். அக்கால், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையும் மூன்று மாதங்களுக்கு ஒன்றாகவும் தட்டுத்தடுமாறி வெளி வந்து கொண்டிருக்கும் தென்மொழியின் இப்பொழுதைய நிலை, அதற்குள்ள கடன் சுமைகள், அது தொடர்ந்து வந்தாக வேண்டிய தேவை முதலியவை பற்றியெல்லாம் அன்பர்கள் முன்னிலையில் ஆசிரியர் திரு. பெருஞ்சித்திரனாரும். தென்மொழி அமைச்சர் திரு. அன்பழகனும் எடுத்து விளக்கினார்கள். இடையிடை திரு. இறைக்குருவனாரும் நிலைகளை விளக்கினார். அதன்பின், தென்மொழி அடுத்து வரவிருக்கின்ற புதிய அமைப்புப்பற்றி அன்பர்கள் கருத்தறிவிக்கக் கேட்டுக் கொள்ளப் பெற்றனர். விளம்பரங்கள் ஏற்பது பற்றியும். அட்டைப்படம் பற்றியும், உள்ளே வெளியிட வேண்டிய செய்திகள் பற்றியும் கருத்துரைகள் பரிமாறிக் கொள்ளப் பெற்றன. இறுதியில் "எவ்வாறேனும் சிறப்பாகவும், இடையீடின்றியும் கொண்டு வர எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டுமென்றும், தனித்தமிழிலோ தனி ஆங்கிலத்திலோ தரும் விளம்பரங்களை மட்டும் ஏற்றுக் கொள்ளலாம் என்றும், பொது மக்களும் விரும்பிப் படிக்கும் படியான செய்திகளைத் தரவேண்டும் என்றும் முடிவுகள் செய்யப் பெற்றன. கூட்டம் 11-30 மணியளவில் முடிந்து அன்பர்கள் மாநாட்டு அமைப்பாளர் பெருஞ்சித்திரனாரவர்களிடமிருந்து விடை பெற்றுச் சென்றனர்.
மறுநூாள் காரி (9-6-73) காலைக்குள் பல ஊர்களிலிருந்தும் அன்பர்கள் கூட்டங் கூட்டமாகவும் குடும்பங் குடும்பமாகவும் மதுரைக்கு வந்து சேர்ந்தனர். கருநாடகம் மைசூர், கேரளா ஆகிய வெளி மாநிலங்களிலிருந்தும். மலேயாவினின்றும் மாநாட்டிற்காக அன்பர்கள் சிலர் வந்திருந்தனர். பொருள் வலிவிருந்து நன்றாக விளம்பரம் செய்யப் பெற்றிருந்தால். உண்மையிலேயே விடுதலை உணர்வுள்ள அன்பர்கள் பல்லாயிரக் கணக்கில் வந்து சேர்வர் என்பதுறுதி. இவ்விடத்தில் ஓருண்மையை அன்பர்கள் தெரிந்து கொள்வது நல்லது.
பொதுவாகவே ஓரியக்கத்திற்கு மூன்று வலிமைகள் வேண்டும். முதலாவது அவ்வியக்கம் கொள்கை வலிமை படைத்ததாகவிருத்தல் வேண்டும். இரண்டாவது அந்தக் கொள்கையை நன்றாக அறிந்து உறுதியுடன் ஏற்றுச் செயற்படுத்துகின்ற உறுப்பு வலிமை படைத்ததாக விருத்தல் வேண்டும். மூன்றாவதாக, அவ்வுறுப்பினர்கள் தான் வகுத்துக் கொண்ட செயல்களில் ஈடுபட்டு வினையாற்றப் போதுமான பொருள் வலிமை படைத்ததாக விருத்தல் வேண்டும். இம்மூன்று வலிமைகளிலும் தொய்வின்றி இயங்கும் இயக்கமே தான் கொண்ட கொள்கையில் படிப்படியாக வெற்றிபெறும். இம்மூன்று வலிமைகளுக்குமான அளவிடென 100 என்று கொண்டால், முதலாவதாகிய கொள்கைக்கு 40 எண்ணும், இரண்டாவதாகிய உறுப்புக்கு 35 எண்ணும், மூன்றாவதாகிய பொருளுக்கு 25 எண்ணும் ஒதுக்கலாம். அஃதாவது கொள்கை 8 பங்கு வலிவுள்ளதாகவும், உறுப்பு 7 பங்கு வலிவு படைத்ததாகவும், பொருள் 5 பங்கு வலிவுள்ளதாகவும் இருத்தல் வேண்டும்.
கொள்கையைப் பொறுத்த அளவில் தமிழக விடுதலை இயக்கத்திற்கு முழு வலிமை உண்டு. ஆனால் உறுப்பைப் பொறுத்த அளவிலும் பொருளைப் பொறுத்த அளவிலும் நாம் முக்காற் பங்குக்கும் கூடுதலான வலிமையையும் பெற்றாகல் வேண்டும். இன்னுஞ்சொன்னால் நூற்றுக்கு ஐந்து பங்கு வலிமைகூட நம்மிடம் இல்லை. இந்நிலையிலும் நம் இயக்க முயற்சியில் ஏதேனும் ஓரிரண்டு வெற்றி வாய்ப்புகள் கிடைத்துள்ளன என்றால், அது நம் போன்றவர்களால் கிடைத்த வாய்ப்பென்பதை விட நம் கொள்கைக்குக் கிடைத்த வாய்ப்பென்றே நாம் கருதிக் கொள்ளுதல் வேண்டும். உறுப்பாலும், பொருளாலும் நாம் என்றைக்கு முழுவலிமை பெறுகின்றோமோ அன்றைக்கே நம் இயக்கம் முழுவெற்றி பெறக்கூடிய வாய்ப்பைப் பெறுகின்றது என்று உறுதியாய் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். மற்றப்படி உறுப்பு வலிமையும் பொருள் வலிமையுமின்றி வெறும் வாய் வலிமையால் 'நான் இதை வீசிக் காட்டுவேன், அதை வீசிக் காட்டுவேன்’ என்று வாயால் குண்டு வீசிக் காட்டுபவர்கள் என்றென்றைக்கும் வாய்வீச்சுக்காரர்களே! அப்படி ஏதாகிலும் ஒன்றை வீசுவதற்கும் கூட இயக்கத்தில் உறுப்பு வலிமை மிகுந்திருத்தல் வேண்டும், என்பதை அவர்களும் பிறரும் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். இனி மதுரையில் நடந்ததைக் கவனிப்போம்.
9-6-73 காலை 8-30 மணியளவில் மதுரைப் பேரியங்கி நிலையத்திற்கு அருகில் உள்ள கட்டபொம்மன் சிலையருகில் அன்பர்கள் இருவர் இருவராக அணிவகுக்கத் தொடங்கிவிட்டனர். 'தமிழக விடுதலை மாநாடு’ என்றும் Liberation Conference of Thamizh Naadu” என்றும் எழுதப் பெற்ற பெரிய பதாகைகள் கட்டபொம்மன் வட்டமேடையின் மேல் சாலைகளை நோக்கிக் கட்டப்பட்டிருந்தன. தெருக்களில் பார்க்குமிடங்களிலெல்லாம் 'தமிழக விடுதலை மாநாடு’ என்று நன்றாகத் தெரியும் படியான சுவரொட்டிகள் ஒட்டப் பெற்றிருந்தன. இவையன்றி மாநாட்டரங்கத்தின் (விக்டோரியா எட்வர்டு மண்டபம் அல்லது இரீசும் திரையரங்கம்) முன்பும் மற்றும் பல இடங்களிலும் பெரிய பெரியதட்டிகளும் வைக்கப் பெற்றிருந்தன.
மணி 9வரை ஊர்வலத்துக்கு முன்னே செல்லவேண்டிய யானை வரவில்லை. அன்பர்கள் சிலர் யானையை அழைத்து வருவதில் ஓட்டமும் நடையுமாக ஈடுபட்டனர். காவலர்கள் இரண்டு வண்டிகளில் வந்து ஊர்வலத்தின் பின்னாலும் ஓரத்திலும் நின்று கொண்டனர். ஊர்வலத்தின் முன்னே தமிழக விடுதலை இயக்கத்தின் நீலமும் சிவப்பும் பாதிப்பாதி உடையதும், இடையில் தமிழ்நாடு வரையப் பெற்றுத் 'தமிழ்நாடு தமிழருக்கே’ என்னும் முழக்கத்தை எழுதப் பெற்றதுமான, பெரிய கொடியை மறவர் ஒருவர் பிடித்தவாறு பெருமிதத்துடன் நின்றிருந்தார். ஊர்வலக் கூட்டத்தில் நூற்றைம்பதுக்கும் கூடுதலான பேர்கள் நின்றிருந்தனர். கூட்டம் நிமையத்திற்கு நிமையம் மிகுந்துகொண்டே இருந்தது. மிகத் தொலைவான ஊர்களில் இருந்தவர்களுக்கெல்லாம் செய்தி பிந்தித்தான் எட்டியதாகையால் பெரும்பாலார் வருவதற்கு இயலாமற் போனது.
மாநாட்டிற்கு முந்தி வரவேண்டிய தென்மொழி வராதது ஒரு குறை. தென்மொழி வராமையால் தீச்சுடரில் மாநாடு உறுதியாக நடைபெறும் செய்தி இறுதியாக அறிவிக்கப் பெற்றுத் தென்மொழி அன்பர்களுக்கெல்லாம் விடுக்கப் பெற்றிருந்தது. ஆனால் தீச்சுடர் கிடைக்காமற் போனவர்களும் பலபேர். எனவே நண்பர்கள் வழியாகவும் ஏற்கனவே விடுக்கப் பெற்ற அறிக்கைகள் வழியாகவும் மாநாடு நடைபெறும் செய்தியை உறுதியாக தெரிந்து கொண்டவர்களே ஊர்வல நேரத்திற்கு வர முடிந்தது, ஊர்வலத்தின் இடைப் பகுதியில் பெண்கள் நின்றிருந்தனர், தென்மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் (திருவாட்டி தாமரை பெருஞ்சித்திரன் அவர்களும், அவர்களுடன் ஆறுமக்களும்) அணியில் நின்றிருந்தனர். பெருஞ்சித்திரனாரின் மூத்த மகள் திருவாட்டி பொற்கொடி இறைக்குருவன் தம் குழந்தைகள் இரண்டுடனும் ஊர்வலத்தில் நின்றிருந்தார். இவர்கள் தவிர நாடகத்தைச் சேர்ந்த ஓரிரு பெண்களும் மலைநாட்டைச் சேர்ந்த ஓரிரு குடும்பங்களும் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தினர், 'தமிழர் நாடு தமிழருக்கே', 'தமிழ்நிலத்தை மீட்போம்', 'தில்லி ஆட்சிக்கு எல்லை கட்டுவோம்', 'பார்ப்பனப் புரட்டு பயனளிக்காது', 'உலகத் தமிழரே ஒன்று சேருவோம்', 'அரசியல் விடுதலை அடைந்தே தீருவோம்', ‘விடுதலை பெற்ற தமிழகம் வேண்டும்’ என்பன போலும் முழக்கங்களை எழுதிய தட்டிகளைப் பிடித்துக் கொண்டிருந்தனர். தெருக்களில் நடந்து போவாரும் வருவாரும் உந்துகளில் செல்வாரும் விடுதலை முழக்கங்ககளை வியப்புடன் படித்துக் கொண்டே சென்றனர். ஆசிரியர் அவர்கள் ஊர்வலத்தை ஒழுங்கு படுத்திக்கொண்டு யானையின் வரவுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தர்கள். அப்பொழுது ‘பெரியார்’ தம் மூடு வண்டியில் (van) அங்கு வந்தார். ஊர்வலத்தை ஒட்டி வண்டி நிறுத்தப் பெற்றது. ஆசிரியர் பெருஞ்சித்திரனார் அவர்கள் உடனே சென்று வண்டியுள் ஏறி, பெரியாருக்கு வணக்கம் செலுத்திவிட்டு, நலம் கேட்டார். பெரியார் நலம் கூறி, ஊர்வலத்தை மேற்கொண்டு நடத்துமாறும், தாம் அருப்புக் கோட்டை சென்று மறுநாள் மாநாட்டில் கலந்து கொள்ள வருவதாகவும் கூறிச் சென்றார். யானை வர நேரமாகும் என்று தெரிந்ததால் சரியாக 9-30 மணிக்கு ஊர்வலம் புறப்படலாம் என அமைப்பாளர் பெருஞ்சித்திரனார் கட்டளையிட்டார். ஊர்வலம் புறப்படுமுன் எல்லாருக்கும் அச்சிட்டு வழங்கப் பெற்றிருந்த இருபத்தேழு முழக்கங்களையும் ஊர்வலத்தினர் ஒருமுறைக்கு மும்முறை உரக்க முழங்கி விட்டுச் செல்லத் தொடங்கினர்.
ஊர்வலம் கிழக்கு நோக்கித் திண்டுக்கல் சாலையில் சென்று கொண்டிருந்தது. திருவாளர்கள். தமிழநம்பி, அரணமுறுவல், அருட்குவை, சின்னத்துரை, கதிரவன், நெடுஞ்சேரலாதன், அரசுமணி, நாவை. சிவம், ப. அறிவழகன், பொழிலன், தேன்மொழி, பிறைநுதல் முதலியோர் பகுதி பகுதியாக நின்று, உரத்த ஒலியுடனும் மிக்க ஆர்வத்துடனும் விடுதலை முழக்கங்களை முழங்கிக் கொண்டே சென்றனர். இவர்களைத் தொடர்ந்து ஊர்வலத்தினரும் முழக்கங்களைத் தெளிவாகவும் உரக்கவும் கூறிச் சென்றனர். வானம் சிறிது மப்பும் மாந்தரமுமாகவும் இருந்ததால் அன்பர்கள் சுறுசுறுப்பும் ஆர்வமும் ததும்ப முழக்கமிட்டுச் சென்றதைப் பொதுமக்களும் நின்று கவனித்துக் கேட்டும் கைத்தட்டிகளில் எழுதியிருந்தவற்றைப் படித்துக் கொண்டும் சென்றனர். ஊர்வலம் செல்லுங்கால் மாநாட்டு அறிக்கைகளும், அச்சிட்ட முழக்கங்களும் பொதுமக்களுக்கு வழங்கப் பெற்றன.
ஊர்வலம் எவ்வகை இடையூறுமின்றி திண்டுக்கல் சாலை வழியே கிழக்கு நோக்கிச் சென்று, பின் தெற்கில் திரும்பி மேலமாசி வீதியின் கடைசிக்கு ஏறத்தாழச் சென்றுவிட்டது. அப்பொழுதுதான் யானையும் வந்தது. ஊர்வலத்தின் முன் பெருமிதமாகப் பிளிறியது. இயக்கக் கொடியுடன் யானை மேல் ஒருவரை அமர்த்தவும் யானையை ஊர்வலத்தின் முன்பு சரியாக நிற்கச் செய்யவும் ஏற்பாடு செய்து கொண்டிருக்கையில் உதவிக்காவல் துறை மேலாளுநர் (D.S.P.) மலையுந்தில் வந்து இறங்கினார், ஊர்வலத்தை மேலும் செல்லாமல தடுத்து நிறுத்தினார். அவர் வண்டியை யொட்டிப் பின் தொடர்ந்து வந்த இரண்டு மூன்று காவல் வண்டிகளிலிருந்து இரும்புக் கவிப்பு அணிந்த காவலர்கள் சடசடவென இறங்கி ஊர்வலத்தினரை முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் சூழ்ந்து அணிவகுத்து நின்றனர். மிக வேகமாக நடத்தி வந்த யானை திடுமென மேலும் செல்லாமல் கட்டுபடுத்தப்பெற்றதும் உணர்வை அடக்கமாட்டாமல் கோடைக்கால இடிமுழக்கம் போல் ஊரே அதிரும்படி அடிக்கடி பிளிறிக் கொண்டும் திமிறிக் கொண்டும் ஆடிக்கொண்டும் இருந்தது. அதன் பாகன் தன் கைத்தோட்டியால் அடிக்கடி அதை அடக்க முயற்சி செய்தும் களிற்றுப் பிளிறல் நொடிக்கொருமுறை வானைப் பிளந்து கொண்டிருந்தது. அந்தப் பிளிறல் 'தமிழ்நாடு தமிழருக்கே’, ‘அரசியல் விடுதலை அடைந்தே தீருவோம்’ என்று முழக்க மிடுவதைப் போல் இருந்தது. யானைப் பிளிறல் ஊரையே அங்குக் கூட்டி விட்டது. பொதுமக்கள் சாலை யோரங்களிலும், உயரமான இடங்களிலும் நின்று வேடிக்கை பாத்தனர்.
துணை மாவட்டக் காவலதிகாரி, ஊர்வலத்தினர் தாம் இசைவு பெற்றதற்கு மாறான முழக்கங்களை யிடுவதாகவும், அவற்றைத் தட்டிகளில் வேறு எழுதிப் பிடித்துக் கொண்டு போவதாகவும், மாநாட்டு அமைப்பாளர் திரு. பெருஞ்சித்திரனார் அவர்களை அழைத்துக் கூறி, அவற்றை விலக்குதல் வேண்டும் என்றும், அப்பொழுதுதான் ஊர்வலத்தை மேற்கொண்டு நடத்திச் செல்ல இசைவு தர முடியும் என்றும் தெரிவித்தார். அமைப்பாளர் ஊர்வலத்திற்கு முன்பே முறைப்படி இசைவு பெற்றிருக்கின்றோம். என்றும் எனவே தடுப்பது முறையன்றென்றும், ஊர்வலத்தினர் அனைவரும் கற்றவர்களாகையால் எவ்வகை வன்முறையோ கலவரமோ செய்ய முற்பட மாட்டார்களென்றும், ஊர்வலத்தை மேற்கொண்டு போக விட்டால் அமைதியாக போய்ச் சேர்ந்து, பிற்பகல் மாநாடும் மிக அமைதியாக முடியும் என்றும். இதனால் அரசினர்க்கோ பொதுமக்களுக்கோ எவ்வழியும் தீங்கு வருவதற்கில்லையென்றும், எவரும் தங்கள் கொள்கைகளையும் கருத்துகளையும் அமைதியாகப் பரப்புவதற்கு இந்திய அரசியல் அடிப்படை உரிமைச்சட்டம் இசைவு தருகின்றதென்றும். அந்தவழி தங்களுக்கும் அவ்வுரிமைச்சட்டம் உண்டென்றும். அதைத்தடுப்பது முறையாகாதென்றும் பலவாறு மாவட்டத் துணைக்காவல் அதிகாரியிடம் அமைதியாக எடுத்துரைத்தார்.
காவல் அதிகாரி அவற்றை அமைதியாகக் கேட்டுக் கொண்டாராயினும், எவ்வகையானும் பிரிவினை பேசுவது கூடாதென்றும், அதைச் சட்டம் ஒப்புக்கொள்ளவில்லை யென்றும் கூறி, ஊர்வலத்தை மேலே செல்ல விடாமல் தடுத்தார். பிறகு இதுபற்றி மேலதிகாரிகளிடம் பேசுவதாகக் கூறி, காவல் இயங்கியில் இருந்தவாறே தொலைபேசி வழியாக அரைமணி நேரத்துக்கும் மிகுதியாக அவர்களுடன் உரையாடி விட்டுப் பின் திரும்பி வந்து அமைப்பாளரிடம் “வேண்டுமானால் மாநிலத் தன்னாட்சி வேண்டும் என்று முழக்கமிடுங்களேன். அவ்வாறு செய்தால் நாங்கள் விட்டு விடுகின்றோம். நீங்கள் கொஞ்சம் கவனிக்க வேண்டும். நம் முதலமைச்சர் இன்று இங்கு வருகிறார். அவருக்கு வீண் தொல்லைகளை நீங்கள் உண்டாக்க வேண்டாம். மாநிலத் தன்னாட்சிக் கொள்கை அவருடையக் கொள்கையாகவும் இருக்கிறதில்லையா?” என்றார் துணை காவலதிகாரி,
அதற்கு அமைப்பாளர் பெருஞ்சித்திரனார் ‘அக்கொள்கை முதலமைச்சருடையதாக இருக்கலாம்; எங்களுக்குத் தனிக் கொள்கை உண்டு; அதுவே தமிழகம் தில்லி ஆட்சியினின்று பிரிய வேண்டும் என்பது. எனவே எங்கள் கொள்கைபபடி தமிழக விடுதலை முழக்கங்களைத்தான் எழுப்புவோம்’ என்றார். அதன்பின் அதிகாரி மீண்டும் தொலைப்பேசியில் தொடர்பு கொள்ளச் சென்றார். உடனே அமைப்பாளர். “இன்னும் பத்து நிமையங்களுக்குள் இசைவு தராவிடில் நாங்கள் ஊர்வலத்தைத் தொடர்ந்து நடத்துவோம்” என்றார். காவல் அதிகாரி தொலைபேசியில் உரையாடி விட்டு “உங்களுக்கு ஊர்வலத்திற்காகவும் மாநாட்டிற்காவும் கொடுக்கப்பட்டிருந்த இசைவு மறுக்கப்பட்டு விட்டது” என்றார். அதற்கு அப்படிச் சொல்வது முறையற்றது. நாங்கள் முறைப்படி இசைவு பெற்றுத்தான் பெருத்த பொருட் செலவில் இந்த ஊர்வலத்தையும் மாநாட்டையும் ஏற்பாடு செய்துள்ளோம். இப்பொழுது இசைவை மறுப்பது உங்கள் பொறுப்பற்ற தன்மையைத்தான் காட்டும்” என்றார் அமைப்பாளர். “இல்லை. நீங்கள் தென்மொழிக் கொள்கை மாநாடுதான் என்று இசைவு கேட்டுள்ளீர்கள். இப்பொழுது விடுதலை முழக்கங்களை இடுவது தவறில்லையா?” என்றார் அதிகாரி, உடனே பெருஞ்சித்திரனார், "தென்மொழிக் கொள்கை என்பது தமிழக விடுதலைதான். அப்படித்தான் நாங்கள் அறிக்கைகள் வெளியிட்டிருந்தோம். அந்த அறிக்கைகளை வைத்துத்தான் இசைவுக்கும் எழுதியிருந்தோம். நீங்கள் அதைச் சரியாகக் கவனிக்காமல் விட்டு விட்டீர்கள், தென்மொழிக் கொள்கை என்றால் என்ன கொள்கை என்று கேட்டிருந்தால் விளக்கியிருப்போம். நீங்கள் சரியாக விளங்கிக் கொள்ளாத குறைக்காக நாங்கள் பொருளையும் முயற்சியையும் இழக்க வேண்டுமா?” என்று கேட்டார்.
“எப்படியும் நாங்கள் கொடுத்த இசைவுகள் திரும்பப்பெறப் படுகின்றன; ஊர்வலமும் மாநாடும் தடைசெய்யப்படுகின்றன; நீங்கள் மீறி ஊர்வலம் நடத்தினால் நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டிவரும்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார் அதிகாரி, "அஃது உங்கள் கடமை, அப்படித் தடை செய்யப் பெற்றதாக வாயால் சொன்னால் போதாது. எழுதிக் கொடுத்து விடுங்கள்” என்றார் அமைப்பாளர். உடனே தொலைபேசி வழி அலுவலக எழுத்தர் வரவழைக்கப் பெற்றார், இசைவு நீக்கக் கட்டளை அவ்விடத்திலேயே எழுதப் பெற்று முத்திரையிடப் பெற்றுக் கைகளில் வழங்கப் பெற்றது. அதன்பின் அமைப்பாளர் ஊர்வலத்தினர்க்குச் செய்தியைத் தெரிவித்து, “இக்கால் தடை மீறப்படும்” என்று கூறி முன்னே சென்றார், உடனே அதிகாரிகள் “நாங்கள் உங்களைத் தளைப் (கைது)படுத்துகிறோம்” என்றனர். அதன்பின்னர் காவல் வண்டிகள் வந்தன. மொத்தக் கூட்டமும் உரத்த கொள்கை முழக்கத்துடனும் ஆவலுடனும் வண்டிகளில் ஏறியது. மிகப் பலரைக் காவலர்களே ஏற விடாமல் தடுத்து விரட்டியடித்தனர். விடுதலை மறவர்களை ஏற்றிக் கொண்டு வண்டிகள் குற்றப்பிரிவுக் காவல் நிலையத்தை நோக்கி விரைந்தன. அப்பொழுது மணி காலை 10-45 இருக்கும். காவல் வண்டிகள் சென்ற வழியெல்லாம் உள்ளிருந்த தொண்டர்கள் தொடர்ந்து விடுதலை முழக்கங்களை எழுப்பிக்கொண்டே சென்றனர். உணர்வின் கொந்தளிப்பால் அவர்களின் குரல்வளைகள் முறுக்கமேறி முழக்கங்களுக்குச் சூடேற்றின.
காவல் நிலையத்திற்குக் கொண்டுசென்ற அனைவரும் காவல் நிலையத் தாழ்வாரத்தில் அமர்த்தப் பெற்றனர். அதன்பின்னரும் மறவர்கள் குழுக்குழுவாகப் பிரிந்து, மாறிமாறி விடுதலை முழக்கங்களைத் தொடர்ந்து முழங்கியவண்ண மிருந்தனர். காவல் நிலையம் அதிர்ந்தது. காவலர்களும் காவல் அதிகாரிகளும் செய்வதறியாது திகைத்தனர். காவல் நிலையத்திற்கு வெளியில் தெருவில் போவாரும் வருவாரும் உள்ளிருந்து வரும் முழக்கங்களைக் கேட்டுக் குழுமி நின்று மறவர்களின் செயல்களை வியந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
பின்பு, அங்கேயே மாநாடு தொடங்கலாம் என அமைப்பானர் அறிவித்தார். அன்பர்கள் அனைவரும் அமைதியுடன் ஒருபுறமாக வந்து அமர்ந்து கொண்டனர். தொடக்கத்தில் பெகும்பகல்லா (நீலமலை) நா. இளமாறன் அவர்கள் தாமே இயற்றிய விடுதலைப் பாடல்களை உரத்த குரலுடனும் எடுப்பான இசையுடனும் வீறுணர்வுடனும் பாடிக் காவல் நிலையத்தையே அமைதிப்படுத்தினார். முதலமைச்சரின் மதுரை வரவுக்காகவும், திரைப்பட நடிகர் இராமச்சந்திரனின் வரவுக்காகவும் ஏற்கனவே காவலர்கள் வெளியூர்களினின்றெல்லாம் வரவழைக்கப் பெற்றுக் காவல் நிலையத்தில் அடைந்து கிடந்தனர். அவர்கள் அனைவர்க்கும் காவல் நிலையத்தில் நடந்த விடுதலை மாநாட்டு நிகழ்ச்சிகள் மிகவும் மகிழ்ச்சியும் உணர்ச்சியும் தருவதாக விருந்தன. இளமாறனின் விடுதலைப் பாடல்களைக் கேட்டு அவர்கள் தங்களையே மறந்திருந்தனர். நம் அன்பர்களும் ஊக்கமும் உணர்வும் பெருகத் துணிவுடன் அமர்ந்திருந்தனர்.
விடுதலைப் பாடல்களுக்குப் பின் திருவாளன்மார் பாவிசைக் கோ(வெங்காலூர்), சி. இராசாங்கம்(தஞ்சை), அ. மு. சம்பந்தம் (வழக்குரைஞர் - திருச்சி), அறவாழி (வெங்காலூர்), இராவணன் (கூடலூர் - மதுரை), தமிழநம்பி (திருக்கோவிலூர்-தெ.ஆ), ந. அரணமுறுவல் (மஞ்சப்புத்தூர் -தெ-ஆ), பொற்செழியன் (வெங்காலூர்) ஆகியோர் சொற்பொழிவாற்றினர். அமைப்பாளர் பெருஞ்சித்திரனார் அனைவர் பேச்சுகளையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். இடையில் வந்திருந்தவர்களின் பெயர்களையும் முகவரிகளையும் பதிந்து கொண்டிருந்த காவல் அதிகாரிகளிடம் போய்க் கவனித்துக் கொண்டிருந்தார். பேச்சு தொடர்ந்தது.
முதலில் பேசிய திரு. பாவிசைக்கோ, இவ்வியக்கம் தோன்றிச் சில ஆண்டுகள் ஆகிவிட்ட தென்றும் பெரியாரை விட்டு அண்ணாத்துரை பிரிந்திருக்காமலும், பிரிந்த பின்பு இந்தியை எதிர்த்த மாணவர்களை வலக்காரமாக அடக்காமலும் இருந்திருந்தால் விடுதலை இயக்கம் நன்றாக வளர்ந்திருக்கும் என்றும் பெரியாரால் விடுதலை வாங்கித்தர இயலாதென்றும், மாநாடு நடத்துவதில் தமக்கு நம்பிக்கை இல்லை என்றும் அதனால்தான். தாம் முன்பு நடந்த (திருச்சி) மாநாட்டிற்கு வரவில்லையென்றும், உணர்வுபெறப் பெருஞ்சித்திரனாரை நம்பிக் கொண்டிருக்கக் கூடாதென்றும், அவர் செத்தாரா இருக்கிறரா என்றுகூடக் கவனிக்கவும் கவலைப்படவும் வேண்டிய தில்லையென்றும், அவரவரே தனித் தனியாகச் செயல்பட வேண்டுமென்றும்; மறைமுகமாகத் திட்டங்கள் தீட்டிக் கொள்ள வேண்டுமென்றும்; தம்மிடம் உள்ள திட்டங்களைத் தெரிய விரும்புவார் முறையோடு அணுகினால் தெரிந்து கொள்ளலாம் என்றும்; இப்போதைக்கு அரசினர் அலுவலில் இருப்போரெல்லாம் சிறைப்பட்டுத் துன்பப்படுவதில் பயனில்லை என்றும்; ஒவ்வொருவரும் ஒவ்வொரு நடுவணரசுத் துறையில் ஊடுருவித் தம்மை நிலைப்படுத்திக் கொண்டு, அதன் பின் வினையாற்ற வேண்டும் என்றும் தலைவர் என்று யாரும் இருக்கக் கூடாதென்றும் பேசினார்.
திரு. இராசாங்கம் பேசுகையில் தமிழகம் எவ்வாறேனும் விடுதலை பெற வேண்டுமென்றும்; தாம் அவ் வினைப்பாட்டிற்குத் துணை செய்ய உறுதியுடன் இருப்பதாகவும் சொன்னார்.
வழக்குரைஞர் திரு. அ. மு. சம்பந்தம் தாம் தி.மு.க.வைச் சேர்ந்தவரென்றும், மிகுந்த விடுதலை உணர்வுடன் இருப்பதாகவும், ஏற்கனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடத் தொடங்கி விட்டதாகவும் குறிப்பிட்டார்.
திரு. அறவாழி பேசுகையில், தமிழினத்தை வீழ்த்துவதில் குறியாயிருக்கும் துக்ளக் 'சோ'வுக்குச் செருப்புகளைப் பரிசாக அனுப்ப வேண்டும் என்றும் கச்சதீவுப் புலனத்தில் இந்திரா அம்மையார் நடந்து கொண்டதைக் கண்டித்தும், ஆனால் கச்சத்தீவை இலங்கையுடன் சேர்த்து விட்டால் இலங்கைத் தமிழர்களே முதலில் தனிநாடு வாங்கி நமக்கு வழிகாட்டுவார்களென்றும் கூறினார்.
திரு. இராவணன் பேசுகையில் இளமையிலிருந்தே தாம் பார்ப்பனரால் நசுக்கப் பெற்றது பற்றிக் குறிப்பிட்டு, அவர்களை வன்முறையில் தான் ஒழிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
திரு. தமிழநம்பி உரையாற்றுகையில் திரு. பாவிசைக்கோ நடை முறைக்கு ஒவ்வாமல் நம்முடைய ஒற்றுமையைக் குலைக்கும் கருத்துக்களைக் கூறுவதாகவும் ஒழுங்கு படுத்தப் பெற்ற இயக்கம் வேண்டுமானால் ஒரு தலைவர் தேவை என்றும், நாம் அவருக்குக் கட்டுப்பட்டே நடக்க வேண்டும் என்றும் அவரவர் விருப்பப்படி இயங்குவதால் எவ்வகைப் பயனும் விளையாதென்றும், பாவிசைக்கோ ஏதோ தம்மிடம் உள்ளதாகக் குறிப்பிட்ட திட்டத்தை வெளிப்படையாக நம்மிடமேனும் சொல்லட்டும். என்றும், ஒரு வேளை பிறர் செய்யும் எல்லா வினைப்பாடுகளையும் முறியடிப்பதே அவர் திட்டமாக இருக்கக்கூடுமென்றும் குறிப்பிட்டார்.
திரு. அரணமுறுவல் விடுதலை அடைய வேண்டிய இன்றியமையாமைபற்றியும், அதற்கென அனைவரும் இணைந்து செய்யும் வினைப்பாடுகள் பற்றியும் கூறினார்.
திரு. பொற்செழியன் உரையாற்றுகையில் ஐயா பெருஞ்சித்திரனார் அவர்கள் காட்டும் வழியில் நடக்கத் தாம் எப்பொழுதும் அணியமாக இருப்பதாகவும் இயக்கத்திற்குத் தலைமை தேவை என்றும் வலியுறுத்திப் பேசினார்.
அதன் பின்னர் திரு. அரிமா மகிழ்கோவும்(புதுவை), திரு. பொதிய வெற்பனும்(குடந்தை) ஒன்றிரண்டு இயக்கப் பாடல்களைப் பாடினார்கள் இத்துடன் காலை மாநாட்டு நிகழ்ச்சிகள் முடிவடைந்தன.
காவல் துணை ஆய்வாளர் வந்திருந்தவர்களின் பெயர்ப் பட்டியலை இன்னும் எடுத்துக் கொண்டிருந்தார். ஆசிரியர் பெருஞ்சித்திரனார் அவர்களும் அதற்குத் துணை செய்து கொண்டிருந்தார்கள். தென்மொழிக் குடும்ப உறுப்பினர் எல்லாருடைய பெயர்களும் பதியப்பெற்றன. ஆசிரியர் அவர்களின் தந்தையாரும் (சேலம்)மாநாட்டுக்காக வந்திருந்தார்.
புதுவையில் இருந்தபொழுது பாவேந்தர் பாரதிதாசனார்க்குப் பல வகைகளில் துணை நின்றவரும் அவர்மேல் ஆராக் காதல் கொண்டவரும், இக்கால் அப்சரா உணவு விடுதிக்கு இனிப்புச் செய்து கொடுப்பவருமாகிய திரு. மதன்மோகன் சேட் என்பாரும், ஆசிரியர் பெருஞ்சித்திரனார் அவர்களின்மேல் வைத்த அளவிறந்த அன்பினாலும் மதிப்பினாலும் தாமும் மாநாட்டு ஊர்வலத்தில் கலந்து கொண்டு தளைப்படுத்தப் பெற்று, மகிழ்ச்சியுடன் இருந்தார் என்பது, குறிப்பிடத் தக்கது. அவர் தாமும் ‘தமிழ்நாடு தமிழர்க்கே’ என்று முழக்கமிட்டதும், தம்மை ஒரு வடநாட்டார் என்று கூறாது தாமும் தமிழரே என்று நெஞ்சை நிமிர்த்திக் கூறியதும், ஆசிரியர் அவர்களை வாய் நிறைந்த அன்புடன் ‘அண்ணா' 'அண்ணா' என்று அடிக்கடி அழைத்து வளைய வளைய வந்ததும், தென்மொழிக் குடும்பத்தாரிடமும் மற்ற தமிழன்பர்களிடமும் அவர் பாசத்தோடு பழகியதும் அவர் தமிழராகவே மாறிவிட்டாரோ என்று எண்ணி மகிழச்செய்தன.
பெயர்ப் பட்டியல் ஒருவாறு எடுக்கப் பெற்றது. மொத்தம் தொண்ணூற்றிரண்டு பெயர்கள் பதிவாகியிருந்தனர். உள்ளிருந்தவர்களைக் கண்காணிக்க ஐந்தாறு இரும்புத்தலைக் காவலர்கள் நிறுத்தப் பட்டிருந்தனர். இருப்பினும் தளைப்படுத்தப் பெற்ற அன்பர்கள் சிலர் தேநீர் அருந்தவென்றும் காலகம் (சோடா) குடிக்க வென்றும் அடிக்கடி காவல் நிலையத்தின் முன்புறக் கடைகளுக்குப் போவதும் வருவதுமாக விருந்தனர்.
பிற்பகல் இரண்டரைமணி யளவில் காவல் அதிகாரிகளால் அன்பர்களுக்கு எலுமிச்சை, தயிர் உணவுப் பொட்டலங்கள் வருவித்து வழங்கப் பெற்றன. அன்பர்கள் அனைவரும் அவற்றை உண்டு பசியாறினர். உணவுக்குப் பின்னர் முன்பதிந்த 92 பெயர்களின் உடல் அடையாளங்களும் இரண்டு உறவினர் பெயர்களும் பதிய வேண்டி, காவல் அதிகாரிகள் மீண்டும் வரிசைப்படி அன்பர்களை அழைத்தனர். அக்கால் முன்பு பதிந்தவர்களுள் பன்னிருவர் இல்லாமலிருந்தனர். காவலர்களும் முன்னணி அன்பர்கள் பலரும் பலமுறை கூவியழைத்தும் தேடியும் அப்பன்னிருவரையும் காண முடியவில்லை. அவர்கள் ஒருகால் நழுவியிருக்கலாம். அல்லது அக்கால் வெளியில் சென்றிருக்கலாம். ஆனால் அவர்கள் அன்று மாலை வரை திரும்பவே இல்லை. இங்கு அன்பர்கள் ஒன்றினை நினைவில் வைத்துக் கொள்ளுதல் எல்லாருக்கும் நல்லது.
பொதுத் தொண்டில் பலவகை உண்டு. நோகாமல் நோன்பு கும்பிடுவது போல் பேச்சாலும் எழுத்தாலும் இவ்வுலகத்தையே மாற்றியமைப்பது போல் வீறராப்புக்காட்டுவது ஒரு வகை. செயலுக்கு இறங்கினாலும் காலிலோ கையிலோ ஒரு சிராய்ப்புக்கூட இல்லாமல் மீண்டு விட வேண்டும் என்ற தன்மையில் ஈடுபடுவது ஒருவகை. தன் வேலைக்கோ பிழைப்புக்கோ குந்தகம் வராமல் ஏதோ சில பெருமைகளுக்காக எந்த வகை ஆராவாரங்களையும் செய்யத் துணிந்து விடுவது ஒருவகை இனி, எந்த நிலையிலும் என்ன சூழலிலும் எதிர்வரும் விளைவுகளைப் பாராமல் தான் கொண்ட கொள்கைக்காகத் தன்னை முழுமையாக ஒப்புவித்து விடுவது ஒரு வகை. இவ்வகைகளில் இறுதி வகையினர்தாம் எந்த வினைக்கும் தகுதியுடையவர். குறிப்பாக விடுதலை வரலாறுகள் இப்படிப் பட்டவர்களால்தாம் எழுதப் பெறுகின்றன.
மதுரை மாநாட்டு ஊர்வலத்தில் கலந்து கொண்ட அன்பர்களில் இறுதி வகையினர் மிகுதியும் இல்லை. எனினும் ஓரளவு துணிவுள்ளவர்களாக இருப்பார்கள் என்றுதான் நாம் அனைவரும் கருதியிருந்தோம். அப்படிப்பட்டவர்கள்தாம் அதில் கலந்து கொண்டிருக்க வேண்டும். இவர்களன்றி “நானும் விடுதலை வீரன்தான் எனக்கும் நாட்டுப்பற்று, மொழிப்பற்று, இனப்பற்று முதலியவை மிகுதியும் உண்டு” என்று பெருமையடித்துக் கொள்பவர்களும் கூட அங்கு வந்துவிட்டார்கள் என்றே கருத வேண்டியிருந்தது. அத்தகையவர்கள் எந்தக் கட்சியிலும் உண்டு. இன்னுஞ் சொன்னால், தமிழகத்தில் உள்ள எல்லாக் கட்சியிலும் இருக்கின்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களும் அப்படிப்பட்டவர்களே! இவர்களை வைத்துக் கொண்டுதான் எந்தக் கட்சியாலும் எந்தவகை வினைப்பாட்டையும் ஒழுங்காகச் செய்ய முடியவில்லை. அண்ணா அவர்கள் திராவிட நாட்டுப் பிரிவினையைக் கை நெகிழ விட்டதற்கும், பெரியார் அவர்கள் தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தைத் தொடங்காமல் வெறும் இராமர் சீதைகளை வைத்துக் கொண்டு கூட்டங்களை மட்டும் நடத்திக் கொண்டிருப்பதற்கும். தி.மு.க. தன்னாட்சி என்று மழுப்பிக் கொண்டிருப்பதற்கும், இவ்வகை உறுப்பினர்களின் தக்கை நிலைகள்தாம் அடிப்படைக் ராணியங்கள். ஆனாலும் தென்மொழி மறவர்களில் இப்படிப்பட்டவர்களைப் பெரும்பாலும் நாம் எதிர்ப்பார்க்கவில்லை.
தென்மொழி, ஈடுபாடுடையவர்கள் என்றாலே அவர்களுக்கு ஒரு தனி நிலை உண்டு. அவர்கள் உறுதியான கொள்கைப் பிடித்தம் உடையவர்களாக இருப்பார்கள். தெளிந்த அறிவுணர்வுடையவர்களாக இருப்பார்கள்; செயலில் துணிவும் முனைப்பும் உடையவர்கள் அவர்கள் பொருள் நிலைத் தொல்லைகளால் சிற்சில நேரங்களில். அவர்கள் சிறிது சோர்வடைந்திருந்தாலும், தங்களைத் தாங்களே தூக்கி நிறுத்திக் கொள்ளும் தன்னாற்றல் உடையவர்கள். தென்மொழி மறவர்கள். எனவேதான் பொதுவுடைமைக் கொள்கையினர் தம் கட்சிக்காக வீசும் வலைகளைத் தென்மொழி வயல்களில் வீசுகின்றனர்.
முன்பு தீவிரத் தென்மொழி ஈடுபாடுடையவர்களாக விருந்தவர்களில் சிலர் அல்லது பலர் இக்கால் பொதுவுடைமையியக்கங்களில் ஈடுபாடுடையவர்களாக இருப்பதை நாம் பார்க்கத்தான் செய்கின்றோம். அவர்கள் அவ்வாறு போனதற்குத் தென்மொழிக் கொள்கையில் உள்ள குறைபாடு கரணியமன்று: பொதுவுடைமைக் கொள்கையில் உள்ள கவர்ச்சியே கரணியமாகும். தென்மொழி வயலில் எருவாக வேண்டிய நிலையை அவர்கள் விரும்பாது பொதுவுடைமை வயலில் பயிராகத் திகழும் நிலையை அவர்கள் வரவேற்கின்றார்கள். மற்றப்படி உலக அறிவெல்லாம் அவர்கள் மூளைகளில் வந்துவிட்ட தென்றோ, இருக்கின்ற அறிவெல்லாம் நம் மூளைகளினின்று போய்விட்டதென்றோ எவரும் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டா.
ஆரவாரத்தை விரும்புவர்கள் அறிஞர்களிலும் உண்டு; அறிவற்றவர்களிலும் உண்டு. இன்னுஞ் சொன்னால் அறிவியலறிஞர்களிலேயே போலிகள் உளர். போலி நிலைகள் எங்கும் உண்டு. தென்மொழி இயக்கமும் அதற்கு விலக்கில்லை. எனவேதான் மாநாடு தொடங்குவதற்கு முன் வீரதீரம் பேசிய சிலர் ஊர்வலம் தொடங்குகையில் கொஞ்சம் மனந்தொய்ந்து காணப்பட்டனர். அவர்கள் காவலர்கள் கூட்டத்தை வளைத்த உடனேயே தப்பி விட்டனர். இனி, ஊர்வலம் தொடங்குகையில் வீறர்ப்புக் காட்டிய சிலர் காவலர்கள் வந்தவுடன் மனம் நெகிழ்ந்து போயினர். அவர்கள் தாம் தளைப்பட்டவுடன் காவல் நிலையத்தில் கழன்று கொண்டவர்கள். அவர்கள் எத்தனையோ கரணியங்களைச் சொல்லலாம். அக் கரணியங்களை அவர்கள் முன்பே கருதாமல் ஊர்வலத்திற்கு வந்திருந்து நம் கூட்டத்திலும் அத்தகையோர் உளர் என்று காட்டி இழிவு தேடித் தந்திருக்க வேண்டா என்பதே நாம் அவர்களுக்குப் பணிவுடன் தெரிவித்துக் கொள்வது, இனி, அத்தகையவர்களை நாம் முன்பே இனங்கண்டு கொள்ள முடியாது. “எனைவகையான் தேறியக் கண்ணும், வினைவகையான் வேறாகும் மாந்தர் ‘சிலர்’ இல்லை, 'பலர்'... என்பது திருக்குறளின் தெளிவுரை. ஆனாலும் நாம் அவர்களைப்பற்றிக் கவலைப்பட வேண்டுவதில்லை. அவர்களை வலிவற்றவர்கள் என்றோ தெளிவற்றவர்கள் என்றோ கருதவேண்டுவதும் இல்லை. அவர்கள் ஒருவகையினர்; அத்தகையினர் என்றும் நம்மோடு நாமாகக் கலந்து இருந்து கொண்டுதான் இருப்பர்; அவர்களை விலக்க முடியாது. வேண்டுமானால் சில பொறுப்புகளை அவர்களிடம் ஒப்படைக்காமல் நாம் தப்பித்துக் கொள்ள முடியும். அந்த நிலைகளை இம்மாநாட்டு நிலைகள் பலருக்கும் உணர்த்தியிருக்க முடியும் என்றே நாம் கருதுகின்றோம்.
மீண்டும் சொல்கின்றோம் நாட்டு விடுதலை முயற்சிகள் என்பது எளிதன்று உயிர் துறக்கும் முயற்சியாகும். ஈக வரலாற்றின் இறுதிப் படலமே விடுதலைப் படலம் கோழைகள் விடுதலை வரலாற்றை என்றும் எழுதியதில்லை; எழுதவும் முடியாது. துணிவு: துணிவு: துணிவு! அதுதான் விடுதலை இயக்கத்தின் கொள்கை மந்திரம் இதை நன்கு விளங்கிக் கொண்டவர்களைப் பொறுக்குவதற்குத்தான் திருச்சி மாநாட்டில் மூன்று கட்டத் தீர்மானம் நிறைவேற்றப் பெற்றது.
இனி, அன்று இறுதியாகப் பதியப்பெற்ற எண்பது ஊர்வல மறவர்களின் பெயர்களும் , ஊர்களும் வருமாறு:
1.பெருஞ்சித்திரனார்(மாநாட்டு அமைப்பாளர்), கடலூர். 2. உ. அரசுமணி (மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர்), மதுரை, 3. க. வெ. நெடுஞ்சேரலாதன் (மாநாட்டுச் செயலாளர்), மதுரை. 4. அரசங்குடி சம்பந்தம் (வழக்குரைஞர்), திருச்சி. 5. மறை. நித்தலின்பன், கோவை. 6. அறவாழி, வெங்காலூர். 7. மகிபை. பாவிசைக்கோ, வெங்காலூர். 8. ப. முருகவேள், மதுரை. 9. பொற்செழியன், வெங்காலூர். 10. வேங்கையன், வெங்காலூர் 11. கா. தமிழரசன், முதுகுன்றம்(தெ.ஆ.), 12. பொன். மணிமொழி, வாழைக்குறிச்சி, 13. கு. ஈகவரசன், பெரகம்பி. 14. எழிலன்பன், கண்டராதித்தம் 15. உலகக்குடிமகன், கமுதக்குடி, 16. கோ. மனோகரன், இராசிபுரம் 17. இரா. அருட்குவை, நெய்வேலி-3. 18. கரு. நடவரசன், நெய்வேலி-3. 19. ப.அறிவழகன், சென்னை-2. 20. தா. இளந்திரையன், கொடும்பப்பட்டி. 21.(ஆர்தர்)மாசிலாமணி, கலிக்க நாய்க்கன்பட்டி. 22. கி. அரிமா மகிழ்கோ, புதுவை-5, 23. அ. பூங்குன்றன், தளவாய்ப்பட்டணம். 24. ப. அறவாழி, தளவாய்ப்பட்டணம். 25. ப. துரையரசன், கைகாட்டிப்புதூர். 26. ப. கு. முருகவேள், புன்செய்ப் புளியம்பட்டி. 27. த. அன்பழகன், கடலூர்-1, 28. நாவை. சிவம் (தமிழ்மகன்), கொடும்பாவூர். 28. அ. தெ. தமிழநம்பி, அறங்கண்டநல்லூர். 29. செ. புத்தன், சென்னை-2. 30. மு. மகிழரசன், சென்னை-24. 31. கல்லை. அருட்செல்வன், கெ. கல்லுப்பட்டி. 32. தாமரை பெருஞ்சித்திரன், கடலூர்-1, 33. மா. தேன்மொழி, கடலூர்_1, 34. மா. செந்தாழை, கடலூர்-1. 35. மா. பிறைநுதல், கடலூர்-1, 36. மா. பூங்குன்றன். கடலூர்-1. 37. மா. பொழிலன், கடலூர்- 1, 38. இறை. பொற்கொடி, மதுரை-10. 39. புலவர் இறைக்குருவனார், மதுரை - 10. 40. செம்பியன், சென்னை - 21. 41. கோ. மு. பரண் ஆக்கன். சென்னை - 2, 42. துரைசாமி, திருப்பூர். 43. சேதுராமசாமி, கைகாட்டிப்புதூர். 44 அ. துரைசாமி, அவிநாசி. 45. ச. சின்னத்துரை, சிவபுரம். 46. வை. தமிழ்க்குமரன், திருவாரூர். 47. ஆ. மதியழகன், திருவாரூர். 48. கா. இராவணன், கூடலூர் 49. பழங்கரைவேள், பழங்கரை. 50. மதன்மோகன், மதுரை - 1. 51. இல. திருமுகம், தென்குலம். 52. இரா. திசைவேந்தன். அ. இலக்குமிபுரம். 53. தே. அரசன், மதுரை - 10, 54. நா. இளமாறன், பெகும்பகல்லா. 55. சு. ம. முருகுவேந்தன், மதுரை. 56. சி. இராசாங்கம், தஞ்சை. 57. உ. ச. எழில், வாழ்வாங்கி. 58. அன்பு ந.வை. இளஞ்செழியன், அம்மையன்பட்டி 59. வே. மு. பொதியவெற்பன். குடந்தை. 60. ந. அரணமுறுவல், நாயனார்பாளையம், 61. புலவர் சா. அடல்எழிலன், திருவையாறு. 62. இர. முத்தையன், தீபாமங்கலம். 63. குன்னத்தூர். ச. தம்பி, சென்னிமலை. 64. க. தமிழப்பன், திருப்பூர் - 4. 65. பூபதி (வேங்கையன்), சோலையார்பேட்டை. 66. அருள் வேட்டன், கண்ணூற்று. 67. ஓடை. தமிழ்ச்செல்வன், மேலுனர். 68. கதிரவன், உரத்தநாடு. 69. ஒளி. மலரவன், வெங்காலூர், 70. சேரலாதன், வெங்காலூர்.
(இப்பட்டியலில் பத்துப் பெயர்கள் விடுபட்டுள்ளன. அவர்களின் பெயர்கள் எங்களுக்குக் கிடைக்கவில்லை. எனவே ஊர்வலத்தில் கலந்துகொண்டு, 9.6.73 அன்று காவல் நிலையத்தில் சிறைப்பட்டு இறுதி முறையாகப் பெயர்ப்பதிவு செய்து கொண்டவர்கள் தங்கள் பெயர்களையும் முகவரிகளையும் தெரிவிப்பார்களாயின், அவை அடுத்த இதழில் வெளியிடப் பெறும்)
அடுத்து, பிற்பகல் மாநாட்டு நிகழ்ச்சியும் காவல் நிலையத்திலேயே நடந்தது. திரு. நா. இளமாறன் மீண்டும் தம் விடுதலையுணர்வுப் பாடல்களைப் பாடினார். திருச்சி வழக்குரைஞர் அ.மு. சம்பந்தம் பிற்பகல் நிகழ்ச்சியை முன்னின்று நடத்தினார். குறிப்பிட்ட வேளையில் வரவியலாமையால் காலையில் நடந்த ஊர்வலத்தில் கலந்துகொள்ளவும், காவல் நிலையத்தில் தளைப்படவும் இயலாத தஞ்சைப் புலவர் திரு. த. சரவணத்தமிழனாரும், காரைக்குடிக் கல்லூரி மாணவர் திரு. மா. ஆடலரசும், புதுவைக் கல்லூரி மாணவர் ப. அடியார்க்கருளியும் பிற்பகல் மாநாட்டில் தொடக்கத்தில் பேசினர். (இம் மூவரும் காலங் கடந்து வந்தும் காவல் நிலைய அதிகாரிகளிடம் சென்று தங்கள் பெயர்களையும் பதிவு செய்து கொண்டு சிறைப்படுத்துமாறு வேண்டினர். ஆனால் ஊர்வலத்தில் வந்தவர்களை மட்டுமே நாங்கள் சிறைப்படுத்த முடியும் என்று அதிகாரிகள் அறவே மறுத்துவிட்டனர்.)
திரு. தமிழனார், தாம் காலங் கடந்து வந்து ஊர்வலத்தில் கலந்து கொண்டு தளைப்படுத்தப் பெறாமைக்கு வருந்தியும், மாநாட்டுப் பெருமைகளை விரித்தும் பேசினார். திரு. ஆடலரசு விடுதலையுரையாற்றினார். திரு. அடியார்க்கருளி தமிழின் பெருமை பற்றிக் காவலர்களுக்கு மிகத் தெளிவாகச் சுவைபட எடுத்துக் கூறினார். காவலர்கள் மிக நெருக்கமாக வந்து நின்று மிக ஆர்வத்துடன் கேட்டனர். அதன்பின்னர் திருவாளர்கள் க. வெ. நெடுஞ்சேரலாதனும், அருட்குவையும் தமிழரின் அடிமைத்தனம் பற்றியும். இந்திராவின் ஆட்சிபற்றியும் பேசினர். திரு. மறை. நித்தலின்பன் அறம் வெல்லும் என்று பேசினார்.
வழக்குப் பதிவு பெறவிருந்த எண்பது பெயர்களையும் சிறைக்குக் கொண்டு சென்று காவலில் வைக்கின்ற நிலை ஏற்படவிருந்ததால், காவல் அதிகாரிகள் உள்ளே இருப்பவர்கள் தம் தம் உடைமைகளையும், விலை மதிப்புள்ள பொருள்களையும், பணங்களையும் வைத்துக் கொள்ளக் கூடாதென்றும், அவ்வாறு இருந்தால் அவர்கள் வெளியிலுள்ள பொறுப்பானவர்களிடம் கொடுத்துவிடலாம் என்றும் கூறினர். அதன்படி அன்பர்கள் வரவழைக்கப் பெற்றனர். அவர்களிடம் எல்லாருடைய பணம், பெட்டி, துணி முதலிய பொருள்கள் பெண்களின் நகை நட்டுகள் முதலியவை வைப்பகத்திலோ வேறிடத்திலோ வைத்திருக்குமாறு ஒப்படைக்கப் பெற்றன.
இதற்கிடையில் அதிகாரிகள் பரபரப்போடு இயங்கியில் வெளியே போவதும் வருவதுமாக இருந்தனர். அடிக்கடி தொலைபேசித் தொடர்புகள் நிகழ்த்தப் பெற்றன. மாலை 6 மணியளவில் அதிகாரி ஒருவர் மாநாட்டு அமைப்பாளரை அழைத்து, எல்லாரும் விடுதலை செய்யப் பெற்றனர் என்று கூறி, எல்லாரையும் அமைதியாகக் கலைந்து போக ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொண்டார். அச் செய்தியை அமைப்பாளர் அன்பர்களிடம் தெரிவித்து, எல்லாரும் அமைதியாகக் கலைந்து செல்ல வேண்டிக்கொண்டு, அன்று இரவு 9 மணிக்கு அப்சரா விடுதியில் பொதுக்குழுக்கூட்டம் நடக்குமென்றும் அக்கூட்டத்திற்கு அன்பர்கள் அனைவரும் தவறாது வரவேண்டுமென்றும்; அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை பற்றி அங்கு ஆராயப்பெறும் என்றும் சொன்னார். அதன்பின் விடுதலை முழக்கங்களுடன் விடுதலை மறவர்கள் காவல் நிலையத்தை விட்டு வெளியேறினர்.
இரவு 9.30 மணியளவில் பொதுக்குழுக் கூட்டம் அமைப்பாளர் பெருஞ்சித்திரனார் தலைமையில் கூடியது. மறுநாள் மாநாடு நடத்துவதா வேண்டாவா என்ற கருத்து பற்றித் தனித்தனியே ஒவ்வொருவரிடமும் கேட்கப் பெற்றது. விடுதலையுணர்ச்சி உள்ளவர்களின் மனநிலைகளைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதே அதன் நோக்கம். பொதுக்குழுக் கூட்டத்திற்கு வந்திருந்த அறுபது பெயர்களில் ஐம்பத்தைந்து பெயர்கள் மறுநாள் எப்படியும் மாநாட்டை நடத்தியே தீரவேண்டும் என்று உணர்ச்சியுடன் முழங்கினர். ஐந்து பெயர்கள், இக்காலம் நமக்குக் கருத்தறிவிப்புக் காலம் என்றும், எனவே நாம் போராட்டத்தில் கவனம் செலுத்தக் கூடாதென்றும், அது போராட்டக் காலத்தில் நடைபெற வேண்டிய ஒன்று என்றும், கூறினர். அமைப்பாளர் அவர்கள் இருசாரார் கருத்தையும் அமைதியாகக் கேட்டிருந்துவிட்டு, "எதிர்க்கருத்துகள் சிறுபான்மையினரால் கூறப் பெற்றாலும், நான் அவற்றில் மிகவும் கவனம் செலுத்துகின்றவன்; அவற்றை ஆராய்கின்றவன். ஒரே ஒருவர் தம்மில் மாறுபட்டாலும்கூட அவர் மாறுபடுவது ஏன் என்னும் விளக்கத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்வதிலே நான் அக்கறையுள்ளவன். அவர் நம் கருத்துகளை விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதற்காக அவற்றைப் பலவாறு விளக்க அணியமாக விருக்கின்றவன். பெரும்பாலும் நாம் எல்லாரும் அப்படித்தான் இருக்க வேண்டும். ஒருவர் மாறுபட்டாலும் அவரைப் புறக்கணிக்கக் கூடாது. கூடிய வரையில் அவரையும் இணக்கத்திற்குக் கொண்டுவரவே முயல வேண்டும். இப்பொழுது மாநாட்டைத் தொடர்ந்து நடத்துவதில் நமக்குள் மாறுபாடான கருத்து இருக்கக் கூடாது. மாநாட்டை நடத்துவதா, இல்லையா, எங்கு, எப்படி நடத்துவது என்பது நாளை காலையில் செய்யப்பெறும் ஒரு சட்ட முயற்சிக்குப் பின் அன்பர்களுக்கு அறிவிக்கப்பெறும். இது கொள்கைப் பரப்புக் காலந்தான் என்பதை அறிவேன். இப்பொழுதும் நாம் கொள்கையைப் பரப்புவதற்குத்தான் மாநாடுகளை நடத்துகின்றோம். நாம் திருச்சி மாநாட்டில் தீர்மானித்துக் கொண்டபடி இக் கொள்கைப் பரப்புக் காலத்தில் சரிவரச் செயல்படாமைக்குக் கரணியம் பொருளியல் வலிமையின்மையே! பொருளை வைத்துக் கொண்டிருப்பவர்களெல்லாம் இதில் ஈடுபடத் தயங்குகின்ற பொழுது, பொருளில்லாத நிலையில் நாம் இவ்வாறு ஈடுபடுவது கூட, மிகப் பெரிய செயல்தான். 'நாடு பிரியவேண்டும்’ என்று கருத்தறிவிக்கவே எல்லாரும் அஞ்சுகின்ற காலத்தில், நாம் பிரிவினை மாநாடு என்று வெளிப்படையாகக் கூட்டுவது மிகவும் அரிய செயல் என்பதை நீங்கள் உணர வேண்டும். எனவே, அன்பர்கள் சிலர் குறைப்பட்டுக் கொண்டது போல், கொள்கைப் பரப்புக் காலத்தில் நாம் சரிவரச் செயல்படவில்லையே என்றும் எவரும் மனச்சோர்வு கொள்ள வேண்டாம். முதலில் நம்மை அந்நிலைக்குப் பக்குவப்படுத்திக் கொள்வதும் ஒரு முயற்சிதான். இன்று நம் ஊர்வலத்தின் முடிவில் நடந்த சில தொய்வுகளைப் பற்றி அறிவீர்கள். நாம் முனைப்பாளர்கள். நாம்தாம் கொள்கைகளைப் பரப்ப வேண்டும். நமக்குள்ளேயே சிலர் தெளிவற்று இருக்கின்றார்கள். அவர்களுக்கும் நாம் தெளிவேற்ற வேண்டும். அதுவும் ஒரு முயற்சியே! சும்மா வாயளவில் கொள்கையைச் சொல்லிக் கொண்டிருப்பது வேறு. செயலளவுக்கு அதைக் கொண்டுவருவது வேறு. செயலுக்கு வரும்பொழுது அதில் பலவகையான இழுப்பு பறிப்புகள் இருக்கவே செய்யும். அஃது அவரவர் மனநிலைகளைப் போறுத்தது. கொள்கைப் பரப்புக் காலத்தில் போராட்டத்தில் ஈடுபட வேண்டா என்று அன்பர் சிலர் கேட்டுக் கொண்டனர். உண்மைதான். நாம் இப்பொழுதுங்கூட கொள்கையைப் பரப்புவதற்குத்தான் மாநாட்டைக் கூட்டினோம். இது போன்ற மாநாடுகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்பட வேண்டும். அப்பொழுதுதான் மக்கள் கவனமும் அரசினர் கவனமும், செய்தித்தாள்களின் கவனமும் நம் பக்கம் திரும்பும். அப்பொழுதுதான் நாம் சொல்வதை அவர்கள் எண்ணிப் பார்க்க முயற்சி செய்வர். அந்த முயற்சியைத்தான் நாம் இப்பொழுது செய்தோம். அதற்குத்தான் இப்பொழுது தடையிட்டிருக்கின்றார்கள். மாநாடு நடைபெறவிருந்த மன்றம் சாத்திப் பூட்டி முத்திரையிடப் பெற்றுக் காவலர்களால் காக்கப் பெற்று வருகின்றது. நம்மை அமைதியாக ஊர்வலம் நடத்தவும், மாநாட்டை நடத்தவும் விட்டிருந்தார்களானால் இந்த மதுரையில் ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் அப்படி நடைபெறுவதை இந்த அரசு விரும்பவில்லை போலும்! கொள்கையைப் பரப்பும் முயற்சியில்தான் ஈடுபட்டோம் போராட்டத்திலன்று. ஆனால் அதற்கே இப்பொழுது தடையிடப் பெற்றுள்ளது. கொள்கை பரப்பப்படும் பொழுது அது தடுக்கப் பெறுமானால் அதனை மீறுவதும் ஒரு முனைப்பான கொள்கை பரப்புச் செயலே யாகும்; போராட்டம் ஆகாது. எனவே அன்பர்கள் எதற்கும் அணியமாக விருக்க வேண்டும். நாளை காலை 9 மணிக்கு மேற்கொண்டு நாம் என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக அறிவிக்கப் பெறும். அன்பர்கள் பலருடைய உணர்ச்சியையும் நான் நன்கு அறிவேன். சிலர் இப் போராட்டத்திலீடுபட்டு எத்தனை ஆண்டுகளேனும் சிறைக்குச் செல்ல அணியமாக விருக்கின்றார்கள் என்றும் எனக்குத் தெரியும். சிலர் கூட்டத்தோடு வந்துவிட்டோமே, நடவடிக்கைகள் கடுமையாக விருந்தால் என்ன செய்வது என்று அலமருகின்றதையும் அறிவேன். அனைவரும் காலை வரை பொறுத்துக் கொள்ளுங்கள். காலையில் எல்லாம் தெரிந்துவிடும். நீங்கள் இப்பொழுது அமைதியாகப் போகலாம்” என்று விரிவாக எடுத்துரைத்தார். இரவு பதினொன்றரை மணியளவில் கூட்டம் முடிவுற்றது. அதன்பின் ‘கைகாட்டி’ ஆசிரியர், திரு. தமிழ்க்குடிமகனும் உடுமலைப்பேட்டை திரு. இறையனும் வந்து அமைப்பாளர் பெருஞ்சித்திரனார் அவர்களைப் பார்த்துப் பேசிச் சென்றார்கள். இருவரும் மாநாட்டுச் செய்தி மிகவும் பரபரப்பூட்டி யிருப்பதாகவும், அரசுவரை எட்டியிருப்பதாகவும் சொன்னார்கள். அன்றையச் செய்தி அன்றைய மாலை வெளியீடுகளிலும், மறுநாளைய காலை வெளியீடுகளிலும் வந்திருந்தன. தினத்தந்தி, மாலைமுரசு, தமிழ்முரசு, தினமணி, அலைஓசை, தனிமலர், நவசக்தி, The Indian Express, The Hindu முதலிய எல்லாத் தாள்களிலும் செய்தி பெரிய அளவில் போடப் பெற்று நன்கு விளம்பரம் ஆகியிருந்தது. அவற்றில் 'அலை ஓசை' என்னும் செய்தித்தாள் ஒன்று தான் செய்தியை நடந்தது நடந்தவாறே ஓரளவு உண்மையாகவும் விரிவாகவும், நடுநிலையோடும் முதன்மை கொடுத்து எழுதியிருந்தது. பிற தாள்கள் அனைத்திலும் செய்திகள் திரிக்கப்பட்டும், மாற்றப்பட்டும், குறைக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் வெளியிடப் பெற்றிருந்தன. 'தினத்தந்தி’ தனக்கேயுரிய முறையில், மதுரையில் திராலிடர் கழகத்தினர் 92 பேர் கைது” என்று புளுகியிருந்தது. 'தினமணி'யும் அதற்கு ஒத்தூதியிருந்தது. அது 'தென்மொழி' ஆசிரியர் என்பதற்குத் 'தமிழ்மொழி' ஆசிரியர் என்றும், 'தென்மொழிக் கொள்கை மாநாடு’ என்பதைத் 'தமிழ்மொழி அபிவிருத்தி மாநாடு’ என்றும் வெளியிட்டிருந்தது. அதற்கு இயல்பாகவுள்ள பார்ப்பனக் குறும்புக்கு ஓர் எடுத்துக்காட்டாக விருந்தது. தென்மொழி என்னும் பெயரைச் சொல்லவும் ஆரியப் பார்ப்பனர்கள் நாக்கூசுகின்றனர் என்று அதனால் தெரியவருகின்றது. 'மாநாடு' என்பதைக் கூட மகாநாடு என்று எழுதி நிறைவடைகிறார்கள் அவர்கள் என்பதை நம் ‘அடிமை’கள் கவனித்தால் நல்லது. இந்து ஆங்கில ஆரிய நாளிதழ், 'தளைப்பட்ட ஒருசிலர் பிணையல்(Bail) கொடுத்து வெளிவர முயற்சி செய்ததாக'ச் செய்தியையே களங்கப்படுத்தியிருந்தது.
திருச்சியிலிருந்து வெளிவரும் 'தினமலர்' என்னும் இதழ் 'தில்லி ஆட்சிக்கு எல்லை கட்டுவோம்’ என்னும் முழக்கத்தைத் 'தெள்ளிய ஆட்சிக்கு எல்லைகட்டுவோம்’ என்று முழங்கியதாகச் செய்தி வெளியிட்டிருந்தது. தில்லிக்கும் தெள்ளிய என்பதற்கும் வேறுபாடும் பொருளும் கூடத் தெரியாமல் தமிழ்நாட்டில் தமிழ் மக்களிடத்தில் நடத்தப்பெறும் தமிழ் நாளிதழ்களின் ஆசிரியர்களை நினைத்துச் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. நவசக்தி (பெரிய பெரிய அளப்புகளையெல்லாம் அளப்பது) 'பெருஞ்சித்திரனாரைப்’ 'பெருஞ்சித்தனார்’ என்று எழுதியிருந்தது. மற்றும் ஒவ்வொரு செய்தித்தாளும் தளைப்பட்டவர்களின் எண்ணிக்கையை ஒவ்வொரு வகையாகக் குறித்திருந்தது இன்னும் வியக்கத்தக்க செய்தியாம். அலைஓசை 90 பேர்கள் அவர்களுள் 5 பெண்கள் என்று எழுதியிருந்தது. தினத்தந்தி 92 பேர்கள் அவர்களுள் 5 பெண்கள் என்று எழுதியிருந்ததுடன், அவர்கள் திராவிட கழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று 'மிகவும் ஆராய்ந்து' கண்டதுபோல் எழுதியிருந்தது. மதுரைத் தமிழ்முரசு 100 பேர் என்றும் அவர்களுள் பெண்கள் 10 பேர் என்றும் எழுதியிருந்தது. திருச்சி தினமலர் 4 பெண்கள் உட்பட 100 பேர் என்று வெளியிட்டிருந்தது.
நம் நாட்டில் உள்ள செய்தித்தாள்கள் எவ்வாறு பொறுப்பில்லாமல் செய்திகளை வெளியிடுகின்றன என்பதை உணர்த்தவே இந்நிலைகளையெல்லாம் இங்குத் தெரிவிக்க வேண்டியிருக்கின்றது. எத்தனைப் பேர் சிறைப்படுத்தப்பட்டனர் என்பதைக் கூட அவை முறையாகக் கேட்டுத் தெரிந்துகொள்ள முயலாமல் கேள்விப்பட்டதை வைத்துக்கொண்டே செய்திகள் வெளியிடும் தாள்கள், நாட்டு மக்கள் நலனில் எவ்வாறு அக்கறையுடன் நடந்து கொள்ள முடியும் என்பதை நம்மால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. இதில் இன்னொரு வியப்பான செய்தி என்னவென்றால், திராவிடர் கழக நாளிதழும், தமிழ்நாட்டுப் பிரிவினைக்குப் பாடுபடுவதாகச் சொல்லிக் கொள்வதும், விடுதலை என்ற பெயரிலேயே இயங்குவதும் பெரியாரின் சொந்த விதழாக உள்ளதும், 'தமிழ்நாடு தமிழருக்கே' - என்னும் முழக்கத்தை தலைப்பிலிட்டு வெளிவந்துகொண்டிருப்பதும், பிற மாநிலத்து எழும் விடுதலை உணர்வுக்கு ஆக்கங் கொடுத்துக் கொண்டிருப்பதும. கி. வீரமணியால் இயக்கப் பெறுவதுமாகிய விடுதலை என்னும் நாளிதழும், முரசொலியுந்தாம் இந்த மாநாட்டுச் செய்திகளை ஒருவரி கூட போடவில்லை. அவற்றிற்கு இம்மாநாடும் மாநாடில்லை. அதன் செய்தியும் செய்தியில்லை என்பது கருத்துப் போலும். தமிழரின் எதிர்காலம் பற்றி இவற்றின் கருத்து என்னதான் என்பதை அந்தக் காலமே தான் முடிவு கட்ட வேண்டும். இன்னும் இதைவிட வியப்பான செய்தி ஒன்று உண்டு. அதுதான் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்ற விருந்தவரும், மதுரை மாநாட்டு ஊர்வலந் தொடங்குவதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பு வந்து ஊர்வலத்தை ஊக்கிவிட்டுச் சென்றவரும் ஆகிய அருமைத் தலைவர் பெரியார் மதுரையில் மறுநாள் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில், 'மதுரை விடுதலை மாநாட்டை நடத்தியவர்கள் யாரோ ஊர் பேர் தெரியாதவர்கள். என்றதும், ‘அவர்களுக்கும் எங்களுக்கும் எவ்வகைத் தொடர்பும் இல்லை என்றதும்! இவற்றிற்கெல்லாம் ஒட்டுமொத்தப் பெயர்தானோ அரசியல்’ என்பது!
- தென்மொழி, சுவடி :10, 11. ஓலை :1-12, 1-2,
வெறும் கருத்தரங்குகளால் இதுவரை
எந்தப் பயனும் விளைந்ததில்லை.
• தமிழன் வடநாட்டானுக்கு அடிமையாயிருக்கும் வரை, அவன் நம் கருத்துகளையும், நம் உரிமைகளையும் காதுகளிலேயே போட்டுக்கொள்ளமாட்டான்.
• திண்னையிலே இடம் கேட்டு உட்கார்ந்தவன் வீட்டையே தனக்குச் சொந்தம் என்பதா?
• பாவாணர் போன்ற அறிஞர்கள் வேண்டுமானால் கருத்தரங்கை நம்பியிருக்கட்டும். இளைஞர்கள் போராடித்தான் உரிமைகளைப் பெற முடியும்.
• நிலை இப்படியே போனால் தமிழன் என்றொருவன் இருக்கின்றானா என்று கேட்கப்படுகின்ற நிலை வந்தாலும் வரும். எனவே இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டுமானால் தமிழகத்தை வடநாட்டான் ஆளுகையினின்று பிரித்தே ஆக வேண்டும்.
• தஞ்சைக் கருத்தரங்கில் பெருஞ்சித்திரனார் முழக்கம்!
தஞ்சையில் (உலகத் தமிழ்க் கழக ஏற்பாட்டில் கடந்த சிலை ௧௭ (31- 12, 72) அன்று நடந்த தமிழன் பிறந்தகத் தீர்மானிப்புக் கருத்தரங்கில் பெரும்புலவர் நீ. கந்தசாமியார் அவர்களின் தலைமையில் தென்மொழி ஆசிரியர் பெருஞ்சித்திரனார் ஆற்றிய சொற்பொழிவு:
பேரன்புக்கும் பெருமதிப்பிற்குரிய தலைவர் அவர்களே! வணக்கத்திற்குரிய பாவாணர் அவர்களே! அறிவியல் முனைவர் கோ. து. அவர்களே! மற்றும் இங்குக் கூடியிருக்கும் பேராசிரியப் பெருமக்களே! புலவர் பெருமக்களே! தமிழன்பர்களே! தாய்மார்களே! உங்கள் அனைவர்க்கும் என் பணிவான வணக்கம்.
இந்த மாநாடு தமிழன் பிறந்தகத் தீர்மானிப்புக் கருத்தரங்கு என்ற பெயரிலே கூடியிருக்கின்றது. இது மிகவும் தேவையான ஒரு மாநாடாக இருந்தாலும் கூட, இந்த மாநாட்டு நடைமுறைகளும் இதனுடைய முடிவான கருத்து அறிவிப்பும் பெரிதும் வருத்தத்திற்குரிய செய்தியாக எனக்குப் படுகின்றது. ஏனென்றால் கடந்த காலத்திலெல்லாம். யாரையோ ஒருவனைப் பார்த்து அவன் எங்கிருந்தோ வந்தவன் என்று சொல்லிக்கொண்டிருந்தவர்கள் நாம். ஏதோ மழைக்காக இருளுக்காக அஞ்சி, நம்முடைய திண்ணையிலே வெளிப்புறத்திலே வந்து ஒன்ற வந்தவன் போலிருந்து அத்திண்ணையிலே கொஞ்சம் இடம் கேட்டு உட்கார்ந்து கொண்டு இப்பொழுது, வீட்டிலுள்ள நம்மைப் பார்த்து, “இந்த வீடு எனக்குச் சொந்தமா? உனக்குச் சொந்தமா? உனக்குச் சொந்தமில்லை, நீ வெளியிலே வா ஒரு வேளை நான் இதற்குச் சொற்தமாக இருப்பேன் த என்று சொல்லக்கூடிய அளவிலே,” சொல்லுகிறது போலவும் நாம் இல்லை, எங்களுக்குத்தான் சொந்தம்” என்று தருக்கமிட்டுக் கொண்டு இருப்பது போலவும் ஆகிய ஒரு நிகழ்ச்சியை நினைவூட்டுகின்றது. இம் மாநாடு.
“தமிழ் தன்னுடைய நிலையிலே வளர வேண்டும், அதற்குரிய பெருமையைப் பெற வேண்டும்” என்று போராடிக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்திலே "தமிழ் எங்குப் பிறந்தது? தமிழன் எங்குப் பிறந்தான்?” என்று ஆய்கின்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டவர்களாக இருக்கிறோம். தமிழனுடைய பிறந்தகம் இதுதான் என்பதிலே ஒரு சிறிதும் ஐயமில்லாமல் இருந்த அந்த நிலைபோய், இப்பொழுது ‘தமிழனும் வேறு எங்கோ இருந்து இங்கு வந்தவன்’ என்று சொல்லக் கூடிய ஒரு கருத்தும் அப்படியில்லை: இங்குதான் இருந்தான்; இதுதான் அவனுடைய பிறந்தகம்” என்று நாம் எதிர்த்துச் சொல்லக் கூடிய ஒரு நிலையும் நமக்கு உண்டாகியிருப்பது, மிகவும் வருத்தத்திற்குரிய ஒரு செய்தி.
தமிழனுடைய பிறந்தகம் எது? அதைத் தீர்மானிக்க வேண்டியவர் யார்? என்கின்ற நிலையெல்லாம். இப்பொழுது இல்லை. தமிழன் இப்பொழுதிருக்கின்ற இந்த நிலையைக்கூட வலுப்படுத்திக் கொள்வானா என்று வருந்திக் கொண்டிருக்கிற இந்த நேரத்திலே பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் நடந்த அந்த செய்தியைப் பற்றிப் போரிட்டுக் கொண்டிருப்பவர்களாக நாம் இருகின்றோம். இனி, தமிழன் என்று ஓர் இனம் இருக்கின்றதா என்று ஐயப்பட்டு அதை நிலை நாட்டுகின்ற ஒரு கருத்தரங்கு நடந்தாலும் நடக்கும். 'தமிழன் பிறந்தகம் குமரிக்கண்டமா’ என்கின்ற கருத்தரங்கு நடைபெறுகின்ற நிலை போய், தமிழன் என்று ஒருவன் இருக்கின்றானா என்று ஆய்வு நடத்தக்கூடிய நிலைக்கே நாம் வந்தாலும் வருவோம். இதையெல்லாம் ஒட்டுமொத்தமாக எண்ணிப் பார்க்கின்ற பொழுது, தமிழன் தன்னுடைய பெருமையை மறந்துவிட்டு எவ்வளவு கீழ்த்தரமான நிலையில் இருந்து கொண்டிருக்கின்றான். என்று கருதி வருந்த வேண்டியுள்ளது.
இது தொடர்பாகக் காலையிலிருந்து மாலையில் பேசிய கருத்துரைகள் முடிய, அருமையான விளக்கங்களை இவற்றை விட வேறு விளக்கங்கள் தேவையே இல்லையென்று சொல்லுமளவிற்கு-அறிஞர்கள் பலரும் நமக்குத் தந்தார்கள். இருந்தாலும் கூட, இந்த விளக்கங்கள் பாவாணர் அவர்கள் நினைத்துக்கொண்டு இருப்பது போல, இனிமேல் உலக முழுவதும் ஏற்றுக் கொள்ளும் முடிவான விளக்கங்கள் என்று கொள்வதற்கில்லை. இன்னும் பல நூல்கள் நாளுக்குநாள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. இன்னும் பல கருத்துகளை நாள்தோறும் சொல்லிக் கொண்டே இருக்கின்றார்கள். அப்படிப்பட்ட கருத்துகளையெல்லாம். அப்பொழுதைக்கப்பொழுது நாம் மறுத்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்ற நிலை இருக்குமே தவிர, இந்தப் போராட்டத்திற்கு முடிவே இருக்காது. எனவேதான் இத்தகைய நிலைகளைப் பற்றி யெல்லாம் கவலைப்படாமல் இருக்கும் படியான ஒரு நிலைக்கு நாம் வந்தாலொழிய வேறு எந்தப் பயனும் இவ்வகைக் கருத்தரங்குகளால் ஏற்படவே போவதில்லை.
இனி, பாவாணர் அவர்களுக்குச் சொல்லிக் கொள்கின்றேன். இந்தக் கருத்துகளை இனி ஒரு கருத்தரங்கப் போராட்டமாக நடத்திக் கொண்டிருக்க வேண்டுவதில்லை. இந்தக் கருத்துப் போராட்டம் வேண்டுமானால் அறிஞர்கள் அளவிலே நிகழ்ந்து கொண்டிருக்கட்டும். ஆனால் நம்மைப் போன்ற இளைஞர்கள் நமக்கு இருக்க வேண்டிய உரிமைகளை நாமே பெற்றுக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். . இளைஞர்களும் சேர்ந்து வாயளவிலே, அல்லது நூலளவில் இத்தகைய கருத்துகளுக்காகச் சொற் போராட்டங்கள் நிகழ்த்திக் கொண்டிருப்பது நம் ஆற்றல்களையும் காலத்தையும் வீணடிக்கின்ற செயலாகவே எனக்குப் படுகின்றது. எனவேதான் என்னுடைய நோக்கும், போக்கும் வேறு அளவிலே விரைவிலே இதற்கு ஏதாவது ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும் தமிழகத்தை எப்படியாகிலும் வடநாட்டார் ஆளுகையினின்று பிரித்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால் நமக்கு எந்த வகையான நன்மையும் ஏற்படப் போவதில்லை என்ற அளவிலே போய்க் கொண்டிருக்கின்றன. (பெருத்த கையொலி) மற்றபடி, இப்படிப்பட்ட கருத்துப் போராட்டங்களை நாம் நடத்தி நடத்தி, நம்முடைய கருத்துகளுக்கு நேர் எதிரிடையான கருத்துகள் வடநாடுகளிலும், வெளிநாடுகளிலும் எதிரிகளால் பரப்பட்டு வருகின்ற அந்த நிலைகளை நாம் தடுத்து நிறுத்திவிட முடியாது. நமக்குள்ள அடிப்படை உரிமைகளை மொழி, இனம், நாடு என்ற மூவகை நிலைகளிலும் நமக்குள்ள உரிமைகளை நாம் பெற்றாலொழிய, நாம் எத்தகைய மாநாடுகள் கூட்டி, எவ்வளவு வலிவான உண்மையான கருத்துகளைச் சான்றுடன் நிறுவினாலும் அவற்றிற்கு வெற்றிகிட்டப் போவதே இல்லை. இவற்றுக்குச் செயலளவில் நாம் ஒரு முடிவு கட்டியாக வேண்டும். இது தான் என்னுடைய முடிவான கருத்து. பாவாணர் அவர்கள் பேசச் சொன்னதற்காக இதையும் இங்குச் சொல்ல வேண்டியவனாக இருக்கின்றேன்.
மற்றபடி, தமிழனுடைய பிறந்தகம் குமரிக் கண்டந்தான் என்று அவனுக்குப் பன்னிப் பன்னிச் சொன்னாலும், அவன் ஆளுகையில் நாம் உள்ளவரை, மாறான அதை ஒப்புக்கொள்ளப் போவதில்லை. இக் கருத்துக்கு வலிவான சான்றுகளைப் பாவாணர் அவர்கள் தம் நூல்கள் எல்லாவற்றிலும் பல இடங்களிலும் காட்டியிருக்கின்றார்கள். மீண்டும் மீண்டும் அவற்றையே சொல்லிக் கொண்டிருப்பதில் நமக்கு எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. எனவே இந்த வகையில் கருத்துப் போராட்டத்தைவிடக் கைப் போராட்டமே நாம் செய்ய வேண்டுவது என்று கூறி முடித்துக் கொள்கின்றேன் வணக்கம்.
- தென்மொழி, சுவடி :11, ஓலை 4, 5, 1974
நம் மூச்சு, நோக்கம், கொள்கை, முயற்சி!
தென்மொழியின் உயிர்க்கொள்கையை தன் உயிர் மூச்சாகவும் அதையே தன் வாழ்நாள் கொள்கையாகவும் கொண்ட நம் ஐயா சுவடி 12 ஒலை 1 முதல் (1975) தென்மொழியின் முகப்பில் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்த உயிர் மூச்சு.
“இந்தியா ஒன்றாக இருக்கும் வரை இந்து மதம் இருக்கும் இந்து மதம் இருக்கும் வரை தமிழர்களும் இந்துவாகவே இருக்க வேண்டும். தமிழர்கள் இந்துவாக இருக்கும் வரை மதப் பூசல்களும் குலக் கொடுமைகளும் அவர்களை விட்டு விலகவே முடியாது, மதப்பூசல்களும் குலக்கொடுமைகளும் அவர்களை விட்டு விலகாதவரை, ஆரியப் பார்ப்பனரின் வஞ்சகத்திலிருந்தும் மேலாளுமையினின்றும் தமிழன் மீளவே முடியாது. அத்தகைய பார்ப்பனியப் பிடிப்புகளிலிருந்து தமிழன் மீளாதவரை, தமிழ் மொழி தூய்மையுறாது; தமிழினம் தலைதூக்காது; தமிழ்நாடு தன்னிறைவு அடைய முடியாது. எனவே, இந்து மதத்தினின்றும், மதப்பூசல்களின்றும், ஆரியப் பார்ப்பனியத்தினின்றும் விடுபட வேண்டுமானால் நாம் இந்திய அரசியல் பிடிப்பினின்றும் விடுபட்டேயாகல் வேண்டும். ஆகவே, தமிழக விடுதலை தான் நம் முழுமூச்சு, நோக்கம், கொள்கை, முயற்சி என்று தமிழர் ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும்.”
- தென்மொழி, சுவடி :12, ஓலை 1, 1975
மூன்றாம் விடுதலை மாநாடு!
சென்னைக்கு வாருங்கள்!
சூழ்நிலைகள் நிகழ்ச்சிகளுக்கு உயிரூட்டுகின்றன! நிகழ்ச்சிகள் சூழ்நிலைகளுக்குப் பெருமை தருகின்றன!
தில்லிப் பேரரசு இந்தியக் குடிமக்களின் அடிப்படை
உரிமைகளுக்கு விலங்குகள் பூட்டியுள்ள நேரம் இது!
எங்கு - எந்தப் பொழுதில் உரிமைகள் தடுக்கப்
படுகின்றனவோ, அது அந்தப் பொழுதுதான்.
அவ்வுரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்குரிய
சரியான இடம் பொருத்தமான நேரம்!
மற்ற இடங்களில் - நேரங்களில் உரிமைகள்
கேட்கப் பெறுவதற்குச் சரியான மதிப்பும் இல்லை!
அதற்கான தேவையும் இல்லை.
உரிமைகள் தரப் பெறுவதில்லை! அப்படித் தரப்பெறும்
உரிமைகளுக்கு உயிரூட்டமும், இருப்பதில்லை!
உரிமைகள் வலுக்கட்டாயமாக எடுத்துக்கொள்ளப்
பெறவேண்டியவை! அப்பொழுதுதான் அவை
மதிக்கப்பெறும் காக்கப்பெறும் மாந்தனின் இயற்கை
வளர்ச்சிக்கேற்றத் துணையாகக் கருதப் பெறும்!
தரப்பெற்ற உரிமைகள் தாமே விளைந்த புல்லரிசிகள்!
எடுத்துக் கொள்ளப் பெற்ற உரிமைகள் வெயிலொடு,
புயலொடு போராடி விளைவித்த நெல்லரிசிகள்!
உரிமைகள் பெறுவதில் மூன்று நிலைகள்!
ஒன்று, கொடுக்கப்பெறும் உரிமைகள்!
இரண்டு, கேட்கப்பெறும் உரிமைகள்!
மூன்று, மீட்கப் பெறும் உரிமைகள்!
முன்னது, பிஞ்சு! துவர்ப்பது! - பசியற்ற ஒருவனுக்கு
இடப்பெறும் நல்விருந்து போன்றது! பருவமில்லாத
ஒருவனுக்குச் செய்து வைத்த திருமணம், அது!
அடுத்தது, காய்! புளிப்பது! - பசிக்கின்ற ஒருவனுக்குக்
கொடுக்கப் பெறும் பற்றாத பழங்கஞ்சி போன்றது!
இளைஞன் கைக்கு எட்டாமல்
நிற்கின்ற எழிலார்ந்த கன்னிப்பெண், அது,!
மூன்றாவது, பழம்! - பட்டினி கிடப்பவன் பறித்து
உண்ணும் பாலமிழ்து போன்றது: பாய்ச்சல் கொண்ட
புலியை வெற்றிகொண்டு, தன் தாயை அதன்
பிடியிலிருந்து மீட்கும் வீர விளையாட்டு, அது!
முதலது, ஆங்கிலேயர் தில்லிக்கு வழங்கிய குடியரசுரிமை!
பின்னது தில்லி, தமிழர்க்கு வழங்கிய வாழ்வுரிமை!
இறுதியது, தமிழர்கள் தமக்குள்ள தாய் நிலத்தைத் தாமே
மீட்டுக்கொள்ளப் போராடும் விடுதலை உரிமை!
ஆம்! உரிமை நாட்டியம் ஒடுக்கப்பெற்று, நெருக்கடி
நிலைகள் தாண்டவமாடும் இந்நேரத்தில்தான்,
தென்மொழி தொடங்கிய உரிமைப் போரின் மூன்றாவது
போராட்டக்களம் அமைக்கப் பெற்றுள்ளது.
அமைக்கப் பெற்றுள்ள இடம் சென்னை! நாள் சூலை :13
உரிமைத்தடை கோழைகளுக்கு அச்சமூட்டும் அரிமா முழக்கம்!
ஆனால், அதுவே மறவர்களுக்கு வீரமூட்டும் யானைப்பிளிறல்
விடுதலைப் போராட்ட மறவர்களின் வீர முழக்கங்கள்
சென்னைத் தெருக்களில் முழங்கும் நாள் அது!
வீறு கொண்ட வேங்கைகள் வெற்றி கொள்ளப்
புறப்படும் உரிமைப் போர் வரலாற்றின் உணர்ச்சி வரிகளைச்
சமைக்கப் போகும் நாள் அது!
விடுதலையணிகள் பல இணைந்து தலைகொடுக்கப்
புறப்பட்டுள்ளன!
முரசொலி அடியார்-
தோளோடு தோளிணைவார்!
முழங்குகின்ற பேரொலியில் அவரின்
தேரொலியும் கலந்து வரும்!
அறிக்கைகள்-சுவரொட்டிகள் தனியே அனுப்பப்பெறுகின்றன.!
காத்துக் கிடந்த பாசறை மறவர்களே!
யாத்திடப் போகும் விடுதலைப் பரணிக்குக்
கோத்திடப் போகும் கூர் மழுங்காச் சொற்களாக
வந்துச் சேருங்கள் சென்னைக்கு!
சூலை 13.
ஆம் , அன்று தமிழக விடுதலை போராட்ட நாள்!
- தென்மொழி, சுவடி : 1.2 ஓலை 8, 1975
தமிழ்நிலத்தை விடுவிப்போம் சென்னையில் 3-ஆவது தமிழகப் பிரிவினை மாநாடு
பைந்தமிழ் மறவர்களே! புறப்படுங்கள் சென்னைக்கு!
தமிழன், மொழியால் ஆரியத்திற்கும், இனத்தால் ஆரியப் பார்ப்பனியத்திற்கும், ஆட்சியால் வடவர்க்கும் பொருளியலால் வடநாட்டு முதலாளியத்திற்கும், பண்பாட்டால் மேலை நாட்டினர்க்கும் நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே படிப்படியாய் அடிமைப்பட்டுத் தாழ்ந்திழிந்து போனான். உலகின் முதல் மாந்தனும் மக்கள் குலத்திற்கே நாகரிகம் பரப்பியவனுமாகிய அவன், இன்று உலகின் கடை கெட்டக் கீழ்மகனாய்த் தன்மானம் இழந்து, தன்னுணர்வுகெட்டுக் கூனிக் குறுகிக் கோழையாய்க் கிடந்து புழுவாய் நெளிகின்றான். இது மறுக்க முடியாத கடந்தகால, இக்கால வரலாற்றுண்மை.
அவன் இன்று கொஞ்சங் கொஞ்சமாய் உணர்வுவயரப் பெற்றுக் கண்கள் விழிப்புற்று, எழுந்து, விரைந்தோடும் முன்னேற்ற உலகின் ஓட்ட நடையோடுளர் தளர் நடையிட்டுப் போகப் புறப்பட்டுவிட்டான் துவண்டு கிடந்த அவன் உடல்நரம்புகள் புடைக்கத் தொடங்கி விட்டன. தொய்ந்து கிடந்த அவன் தோள்கள் வீறுபெற்று வருகின்றன. புதைந்து கிடந்த அவன் அரிமா நெஞ்சு, அதர்ந்து பொருத அணியமாகி விட்டது.
இனியும் அவன் அடிமையாய் வாழ விரும்பவில்லை. இழிபிறவியாய், என்றென்றும் சூத்திரனாய் வாழ்ந்துவந்த அவன் இனிமேலும், பிராமணியத்திற்குக் கீழ்ப்பட்டவனாய், வடவராளுகையின் கீழ் வல்லடிமைப்பட்டவனாய் வாழ விரும்பவில்லை எல்லாத் தளைகளினின்றும், எல்லா அடிமைப் போக்கினின்றும். தன்னை விடுவித்துக் கொள்ளத் தீர்மானித்து விட்டான். எப்பாடு பட்டேனும் இவ்விருபதாம் நூற்றாண்டின் இறுதிக்குள், உலகின் உரிமை பெற்ற ஒருவனாய் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளத் தொடங்கிவிட்டான்.
அவனின் அத்தகைய முருகிய முனைப்பால் பல கட்டுகள் ஒவ்வொன்றாய்த் தெறிக்கத் தொடங்கிவிட்டன. அவன் கை விலங்குகளும், கால் விலங்குகளும் ஒவ்வொன்றாய் உடைபடத் தொடங்கி விட்டன. இனி அவனை உலகின் எந்த ஆற்றலாலும் தடுத்து நிறுத்தி விட முடியாது; எந்த வல்லரசாலும் அவனை மீண்டும் அடிமைக் கூட்டுக்குள் தள்ளிவிட முடியாது. அவன் இனி அரசரால் தனியன் உறவால் இனியன்; தண்டமிழ் நாடு அவனுடையது. உரிமைக் கொடி அவன் ஆளுமைக் கோட்டத்தில் பறக்கத் தொடங்கிவிட்டது.
கடந்த காலத்தில் அவன் தன் உரிமை முழக்கத்தைத் தில்லியின் இரும்புக் கதவுகளும் பிளக்கும் வண்ணம் வானதிர முழக்கிக்காட்டினான்; 1972-இல் திருச்சியில் முதல் விடுதலை மாநாடு தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டு மாநாடு) நடந்தது. 1973இல் மதுரையில் தன்னுரிமைத் தந்தை பெரியார் துணையுடன் 2ஆவது மாநாடு நடந்தத் திட்டமிடப்பெற்று முயற்சிகள் நடந்தன. ஆனால் அரசின் அதிகார வல்லாண்மையால் மாநாட்டு முன்னணியாளர்கள் பதினொருவர் நடந்துகொண்டிருந்த ஊர்வலத்திலேயே வளைத்துச் சிறைப்பிடிக்கப் பெற்று முயற்சிகள் முறியடிக்கப் பெற்றுன. வகுக்கப்பெற்ற வரலாற்று விடுதலைப்போராட்டக் கொள்கைத் திட்டப்படி, அம்முயற்விகளின் தொடர்ச்சியாக, இக்கால் அதன் 3ஆவது தமிழகப் பிரிவினை மாநாடு வரும் சூலை 13 ஆம் நாள் தமிழகத்தின் தலைநகரம் சென்னையில் நடத்தத் திட்டமிடப் பெற்றள.
மாநாடு அன்று மாலை 6 மணியளவில் சென்னைக் கடற்கரையில் அறிஞர் அண்ணாவின் அடக்க மேடைக்கும் பாவேந்தர் பாரதிதாசன் சிலைக்கும் இடையில் உள்ள மணல் வெளியில் நடத்தப்பெறும் அதற்கு முன் அன்று காலை 6 மணியிலிருந்து மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல விடுதலை அணிகள் புறப்பட்டு வீறு தெறிக்கும் இடி முழக்கங்களுடன், ஆரவாரமிக்க சாலைகளின் வழியாகப் பகல் 12 மணியளவில் அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை வழியாகப் பெரியார் சிலைக் கருகில் ஒன்று கூடிக் கொள்கை முழக்கத்துடன் மாநாட்டு மணல் திடல் நோக்கிச் சென்று முடிவெடுத்துக் கலையும்.
அன்று மாலை நடைபெறும் மாநாட்டுக் கூட்டத்தில் மாநாட்டு அமைப்பாளர் பெருஞ்சித்திரனாரும், முரசொலி அடியாரும் வேறு சில அரசியல் கட்சி விடுதலை வேங்கைகளும் கொள்கைகள் முழக்குவர். இறுதியில் மாநாட்டின் ஒரே தீர்மானத்துடனும், அடுத்து திட்ட அறிவிப்புடனும் மாநாடு முடிவுறும்.
எனவே,
தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க அவ் விடுதலை மாநாட்டில் கலந்து கொள்ள விரும்பும் அரிமா மறவர்களும், விடுதலைக் களிறுகளும், கொள்கைக்கோளரிகளும், வல்லுணர்வு வேங்கைகளும், இன்றே தலைநகரை நோக்கிப் புறப்பட அணியமாகட்டும்!
அடுத்த தலைமுறைக்கு உரிமைப் பட்டயம் தீட்டட்டும்! எழுச்சி பெறும் எரி முழக்க நாள் சூலை 13, இடம், சென்னை கடற்கரை! மாநாட்டை மறவாதீர்கள்! பிற தொடர்புகளை மறவுங்கள்! புறப்படுங்கள் தலைநகரை நோக்கி!!
- தென்மொழி, சுவடி 12 ஓலை 8. 1975
மூன்றாவது விடுதலை மாநாட்டுக்கு
முன்னும், பின்னும்.
என் சிங்கைச் செலவால் மூன்றாவது தமிழக விடுதலை மாநாடு ஓராண்டுத் தள்ளிப் போனதேனும், கோவையில் நடைபெறுவதாக இருந்த மாநாடு தமிழகத்தின் தலைநகராகிய சென்னையிலேயே நடந்தது, அக் காலத்தாழ்த்தத்தை ஈடு செய்தது. வெறும் மாநாடுகள் போடுவதும், கூட்டங்கள் நடத்துவதுமே நம் நோக்கமன்று, ஆனால், மக்கள் மனத்துள் நம் நோக்கம் பற்றிய கருத்துகளை மலர்த்துவிப்பதற்கு அவற்றைவிட வேறு வழியில்லை. மேலும், நெடுங்கால வல்லடிமைத் துய்ப்பாலும் மடித்துயிலாலும், ஈக மனப்பாங்கின்மையாலும், நம் இனத்துக்கே உரிய உள்ளரிப்பாலும், இந்நாட்டில் மக்கள் புரட்சி அத்துணை எளிய முயற்சியன்று. ஏனோ தானோ என்று கொள்கைகளை விளங்கிக் கொண்ட உள்ளங்களும், சிறைக்கஞ்சும் போக்கும் எந்த வினைப் பாட்டுக்கும் அத்துணை எளிதில் வளைந்து கொடுப்பதில்லை. இதனாலேயே இங்குக் கொளுத்தப்பெற்ற எல்லாவகை உணர்வுகளும் பயனற்றுப் போகின்ற ஒரு புன்மை நிலையை நாம் நன்கு உணர முடிகின்றது.
எனவே வழக்கம்போல் கூட்டிய இந்த விடுதலை மாநாடும் எதிர் பார்த்த பயனை நல்கவில்லை. கடந்த ஆண்டுகளில் திருச்சியிலும், மதுரையிலும் நடந்த மாநாடுகளை விட இந்த மாநாட்டில் ஒரு திருப்பம் இருந்தது. பிரிவினைக் கொள்கையைத் தன் உயிர் மூச்சாகக்கொண்ட திராவிடர் முன்னேற்றக் கழகம் அக் கொள்கையை வெளிப்படையாகக் கைவிட்ட பின்னரும், அக்கழகத்தின் முன்னிணிக் கொள்கை பரப்பாளராக விருந்த திரு, முரசொலி அடியார் நம் இயக்கத்தின் கொள்கையால் ஈர்க்கப்பெற்றுத் தம் கழகக் கொள்கையில் நிறைவு பெறாத அந்நிலையைச் சுட்டிக்காட்டி ஓர் அறிக்கை விட்டு, நம் வினைப்பாடுகளுக்குத் துணையாக வந்தார். அவரின் மாய்ந்து போகாத கொள்கைப் பற்றையும் வெளிப்படையான உள்ள உணர்வையும் மதித்துப் பாராட்டி அவரையும் நம்முடன் இணைத்துக் கொண்டோம்.
ஆனால், வழக்கம்போல் நம் மாநாட்டு முயற்சிகள் அனைத்தும் அரசால் முன் கூட்டியே தடைசெய்யப் பெற்றன. அதன் முதல் நடவடிக்கையாக நானும் அடியாரும், எங்களுடன் மாநாட்டு செயற்குழுவினர் அறுவரும் மாநாட்டுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே சிறைப்பிடிக்கப்பெற்றுக் காவலில் வைக்கப்பெற்றோம். எங்களைத் தொடர்ந்து அடுத்து இரண்டு நாட்களிலும் மேலும் பதினான்கு பேர் சிறைப் பிடிக்கப்பெற்று, எங்களைப் போலவே, காவலில் வைக்கப்பெற்றனர். முதலணியினரான எங்கள் எண்மருக்குப் பின் சிறை வந்தவர்கள் ஊர்வலம் போனதாகவும் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் மாநாடு நடத்தியதாகவும் சிறைப்பட்டவர்களாவார்கள். ஆனாலும் மொத்தம் இருபத்திரண்டு பேர்களே சிறைப்பட்டுக் காவலில் வைக்கப் பெற்றோம். நம் இத்தொகை நம் கொள்கையை நோக்கவும், அதன் வெற்றி முறைகளை நோக்கவும் மிகமிகச் சிறிய தொகையானாலும், நாட்டின் நெருக்கடிகளையும், கடுபிடிகளையும் நோக்க மிகவும் பெரியதும் ஒரளவு பாராட்டக் கூடியதும் ஆகும். இருப்பினும் ஓர் ஆயிரம் பேரோ, ஈராயிரம் பேரோ சிறைப்படாத எந்தக் கொள்கையும் முயற்சியும் அரசினர் கவனத்துக்கும் மதிப்புக்கும் உட்படுவதில்லை.
மேலும், அடியார் ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழகக் கொள்கையில் அறிமுகப் பட்டவராக இருந்தமையாலும், அவர் நம் மாநாட்டுச் செயற்குழுவினர்க்கு தாமே தம் பெயரை முன் வைத்தும், உதயசூரியன் இலச்சினையுடனும், கறுப்பு சிவப்பு ஆகிய இரு வண்ணத்திலும் மிகப்பெரிய அளவில் அடித்துக் கொண்ட சுவரொட்டியாலும், நம் மாநாட்டைத் தி.மு.க. சார்பில் நடந்த மாநாடாகவே ஒரு சில இதழ்கள் அறிமுகப்படுத்தியிருந்தன. இதற்கு, நேர் எதிர் நடவடிக்கையாக, நீல, சிவப்பு வண்ணத்தில் என் பெயரை முன் வைத்து அடித்துச் சிறு அளவில் ஒட்டப் பெற்றிருந்த சுவரொட்டி, அவ்விதழ்களின் கருத்தை மாற்ற அத்துணையளவு பயன் படவில்லை. அடியாரின் இந்த நடவடிக்கையால் மாநாட்டு முயற்சிகளில் முன் கூட்டியே தொய்வு விழுந்துவிட்டது. அவரின் அந்த நடவடிக்கையும், அடுத்தடுத்துச் சிறைக்கு வெளியிலும், சிறைக்குள்ளும் அவர் நடந்து கொண்ட நடவடிக்கைகளும், ஏற்கனவே திட்டமிட்டுச் செய்யப் பெற்றனபோல் எனக்குப்பட்டன. மேலும், அக்கட்சித் தொடர்பற்ற நம்பகமான நடுநிலையாளர் சிலரிடமிருந்தும், அவர் நம் இயக்கத்தைப் பிளவுப்படுத்த வேண்டியே விடுக்கப்பெற்றவராக நமக்குக்கிடைத்த செய்திகளை உறுதிப் படுத்துவது போல் அவர் நடவடிக்கைகள் இருந்தன.
சிறைக்குப் போகுமுன்பே கிடைத்த தொடக்கச் செய்திகளை நான் பொருட்படுத்தாமற் போனதற்கு அவர் என்பால் வைத்த பேரன்பும், பெருமதிப்புமே கரணியங்களாக விருந்தன. அவற்றை யடியொட்டி அவர் தம் நீட்டோலை நாளிதழில், நெஞ்சந் திறந்து, நெஞ்சோடு பேசியதாக வெளியிட்ட கருத்துரையை நான் பெரிதும் மதித்தேன்; நம்பினேன். ஒருவேளை அவ்வுரை உண்மையாகவே இருந்திருந்தாலும், அவர் நம் கொள்கையையும், நம் விடுதலை மறவர்களின் உள்ளங்களையும், பதமும் ஆழமும் பார்ப்பதுபோல் அவர் சிறைக்குள் நடந்துகொண்ட முறைகளும் கொள்கைக் கட்டுப்பாடுகளுக்கு மாறாகச் செயல்பட்ட தன்மைகளும் அவரின் தாய்க்கட்சியின் மேல் அவர் கொண்ட பற்றையும், பாசத்தையுமே காட்டின. அத்தகைய அவர் உணர்வில் கூட நான் களங்கம் கற்பிக்க விரும்பவில்லை. ஆனால், அவர் சிறையில் வெளிப்படையாக தம் கட்சிக் கொள்கைகளையும் இளமையுள்ளங்களுக்கு இனிப்பான சில செய்திகளையும் பேசி, நம்முடன் சிறைப்பட்டிருந்த சில இளந்தை நெஞ்சங்களைத் திசை திருப்பியது தான் எனக்குப் பெரிய அதிர்ச்சியையும், வருத்தத்தையும் தந்தன.
அரசியல் கட்சி ஈடுபாடுடையவர் எப்படி இயங்குவார் என்பதை தான் நன்கு உணர்வேன். அதிலும் தி.மு.க உணர்வுடைய பலரை உள்முகமாகவும், வெளிமுகமாகவும் நான் நன்றாக அறிவேன். இருப்பினும் தி.மு.க. மேல் எனக்கு வெறுப்பில்லாமலிருந்ததால் எதற்கும் நான் மனம் சோர்ந்து போகவில்லை. ஆனால் கடந்த பதினாறாண்டுகளாக நூற்றுக்கணக்கான தமிழுணர்வுப் பாடல்களையும், தமிழக விடுதலைப் பாடல்களையும் கருத்துக ளையும் ஆயிரக்கணக்கானப் பக்கங்கள் எழுதியும் பல நூற்றுக் கணக்கான கூட்டங்களில் பேசியும் வந்த என்னையே நாங்கள் சிறையிலிருந்த ஒரு சிலநாட்களுக்குள் அங்கிருந்த மறவர்களில் சிலர் ஐயுற்றுப் புறக்கணிக்கும்படியாக, அவர் நடந்துகொண்டது எனக்குப் பெரிதும் வியப்பளித்தது. ஆயினும், இருபது ஆண்டுகள் ஒரு கட்சியுடன் பழகி வளர்ந்து ஒருசில நாட்களில் நம்மைத் தெரிந்துகொண்டது போல் வந்து நம்முடன் இணைந்து ஓரிரு வினைப்பாடுகளில் பங்கு கொண்ட அவரின் உணர்ச்சி நிலையை விட நம் மறவர்கள் சிலரின் பதினாறாண்டுப் பழக்கத்தின் முடிவு எனக்குப் பெரிதும் அதிர்ச்சியுறும்படி செய்யவில்லை. அரசியல் நாடகக் காட்சிகளுக்கு முன் என் மெய்யுணர்வு சான்ற உண்மை நடைமுறைகள் பயனற்றுப் போனது. எனக்கு மேலும் சில படிப்பினைகளையும், உறுதிப்பாடுகளையும் தந்தது. (அடியாரின் சிறை நடவடிக்கைகளையும், அவற்றுக்குரிய உள்முக நோக்கங்களையும் இங்கு விளக்குவதால் எந்தப் பயனும் விளைந்துவிடப் போவதில்லை. தேவையானவிடத்து, அவற்றையும் விளக்க வேண்டிய அழுத்தம் வரும்பொழுது விளக்கலாம். ஆனால் அவற்றையெல்லாம் ஒரு தீக்கனவுப் போல் மறந்துபோகவே முயற்சி செய்கின்றேன்.
மொத்தத்தில் சிறையிலிருந்த நாற்பத்தொன்பது நாட்களில் இறுதிப் பதினோரு நாட்களாக என் நடவடிக்கைகளில் நிறைவுறாதவர்களாகவும், அடியார்பாலும் அவர் இருந்த கட்சியின் பாலும் ஏற்கனவே ஓரளவு ஈடுபாடும், இக்கால் இணக்கமும் எற்படுத்திக் கொண்டவர்களாக மாறியுள்ள ஒரு சிலர். இனிமேல் திரு. அடியார் அவர்கள் அவர்க்களுக்காகிலும் நம்பிக்கையுடையவர்களாகவும், நன்றியுடையவர்களாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். ஏனெனில் எந்த ஒரு இயக்கமும் வலுப்பெற வேண்டுமானால் அதன் கொள்கைகளில் முதற்கண், ஐயமற்ற தெளிவுவேண்டும். அடுத்து, அவ்வியக்க அமைப்பாளர்களிடம் நம்பிக்கையுடனும் நன்றியுணர்ச்சியுடனும் நடந்து கொள்ளுதல் வேண்டும். அத்துடன் இயக்கத்தின் மேனிலை நடைமுறைகளுக்குக் கீழ்ப்படியும் கொள்கைக் கடைப்பிடியும் வேண்டும். ஒருவரைத் தலைவராகவோ, பொதுச்செயலாளராகவோ ஏற்றுக்கொண்டுவிட்ட பின்னர், அவரின் கொள்கை நடவடிக்கைக நடவடிக்கைகளில் ஐயப்பாடு கொள்வதும், அவரைப் பற்றிக் குறைவாக மதிப்பிடுவதும், இயக்கத்தின் ஒருமைப்பாட்டையே சிதைத்து விடக்கூடிய செயல்களாகும் என்பதை இனியேனும் புதுக்குடி புகுந்த அன்பர்கள் உணர்ந்துகொள்ளக் கேட்டுக் கொள்கின்றோம்.
‘அனைத்துப் போகாத தன்மை’ என்பால் இருப்பதாக அவ்வன்பர்களில் ஒரு சிலர் நெகிழ்ச்சித் தன்மைகளுக்குத் தாமே கரணியம் காட்டிப் பேசி வருவதை அறிகிறேன். இஃது என்மேல் உள்ள மிகப் பழகிய குற்றச்சாட்டு. இவர்கள் எனக்குப் புதியவர்களும் அல்லர்; அவர்களுக்கு நான் புதியவனுமல்லன். நேற்று இன்று தொடங்கியனவல்ல என் நடவடிக்கைகள். கடந்த இருபது ஆண்டுகளாக என் இயக்கம் வெளிப்படையானது. மக்களின் மனத் தொடர்பும், அறிவுத் தொடர்பும், வினைத் தொடர்பும் எவ்வெவ் வடிப்படையில் நிகழ்கின்றன; வளர்கின்றன; முடிவுறுகின்றன என்பதை நான் நன்கு அறிவேன். அவ்வடிப்படையிலேயே எச்சிறு நிலையினையும்’ எண்ணுகின்றேன்; துணிகின்றேன்; செயல் படுகின்றேன், நான்! நாலே முக்கால உள்ள ஒரு கோலை ஐந்தடி உள்ளது என்றோ, நாலரையடியுள்ளது என்றோ என்னால் என்றும் எந்த இடத்திலும் ஒப்புக்கொள்ள முடியாது. ஒருவரோடு அணைத்துப் போவதற்கேனும் அப்படி நான் சொல்லவேண்டும் என்றும் என்னை எதிர்ப்பார்ப்பவர்களை நான் நிறைவு செய்ய முடியாது. போலி ஆரவார நிகழ்ச்சிகளையும், புரையோட்டப் போக்குகளையும் நான் என்று வரவேற்று மாலை சூடமுடியாது. நடிப்பும், நயமான ஈரப்பேச்சும் என்னோடு பிறக்காதவை. பிறர் இழுத்த இழுப்புகளுக்கெல்லாம் நான் நீளவேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கு நான் இழுவையல்லன். பிறரும் அவ்வாறு நீண்டு வரவேண்டும் என்று எதிர்பார்ப்பவனுமல்லன். அவரவர்களின் அறிவுக்குப் பொருந்தும் செயல்களையே நான் அவர்களிடம் எதிர்பார்க்கின்றேன்.
ஓர் அறிவியல் அறிஞனுக்குப் போலவே கொள்கை எனக்குப் பெரிது. அதில் ஓர் இம்மியையும் அது தவறு என்று உணராத பொழுது பிறர்க்காக மட்டும் குறைத்துக் கொண்டு என்னால் ஈடுபட முடியாது. அதைச் செயலுக்குக் கொண்டுவர என் அறிவுக்குச் சரி என்று பட்ட எந்த நடவடிக்கையிலும் நான் நம்பிக்கையுடன் ஈடுபட்டு வருபவன். அந்நடவடிக்கை பிறர் அறிவுக்கும் சரி என்று பட வேண்டும் என்று எதிர்பார்ப்பவனும் அல்லன். தேவையானால் இரவு பகலாக என் கொள்கைகளைச் சரியான உணர்வு உள்ளவர்கள் என்று நான் கருதுபவர்களிடம் எடுத்து விளக்க இதுவரை தயங்கியதுமில்லை, இனித் தயங்கப்போவதுமில்லை. இந்த நிலையில் என்னொடு வந்து பொருந்துபவர்களை நான் தடுத்தவனுமல்லன்: பொருந்தாமல் விலகிப் போகின்றவர்களை நான் கெஞ்சியவனுமல்லன்.
வெட்டு ஒன்று, துண்டு இரண்டாகப் பேசுபவன் நான்; வினையிலும் அப்படியே! குழைவு நெளிவுகளால் என் கருத்தை என்றும் வயப்படுத்த முடியாது. கொள்கையை இறைவனாகக் கருதுகின்றேன். அக்கொள்கைப் போக்குடைய நேர் நோக்குடையவர்களை என் தோள் மேல் தூக்கிக்கொண்டு போகவும் தயங்கமாட்டேன். அமைச்சர்களைப் போய்ப் பார்க்கவும், அவர்களுக்கு மாலைசூட்டவும், அம்மாலைக்கீடாக எதையேனும் எதிர்பார்க்கவும் எனக்குத் தெரியாது. அவர்கள்பால் சலுகைகளை வேண்டுதல் நம் வாழ்வில் என்றும் நேர்ந்ததில்லை; நேரவும் நேராது. பட்டத்திற்காகவோ பதவிக்காகவோ என்னை எவரும் அடியாள் ஆக்கிவிட முடியாது. நான் வெளிப்படையாவன். எந்த விளம்பரமும், கொழு கொம்பும் எனக்குத் தேவையில்லை. என்னை நானே நடத்திக் கொள்ள எனக்குத் தெரியும். உதவி வேண்டும் என்பதற்காகப் பிறர் கால்களை முத்தமிடும் பழக்கம் எனக்கில்லை. உதவி செய்தவர்களின் கைகளை நன்றியுடன் என்றும் கண்களில் ஒற்றிக்கொள்ளக் காத்திருப்பவன் நான். முடிந்தால் என் கொள்கைகளைச் செயற்படுத்துவேன். இல்லெனில் அவற்றுடன் என்னைப் புதைத்துக் கொள்வேன். மொத்தத்தில் என்னால் பலருக்கும் ஊதியமுண்டு. ஆனால் எவருக்கும் என்னால் இழப்பில்லை. இந்தக் குணங்கள் ஒரு விடுதலை மறவனுக்குத் தேவையில்லை யென்றால், அவனுக்கு விடுதலை உணர்வும் தேவையில்லை என்பதே என் முடிவு.
ஏனெனில் இவைதாம் ஒருவனைத் தம் கொள்கைப் பிசிறுகளினின்று காப்பவை; தம் கடடையைப் பிறர்க்கு விலை போக்குவதினின்றும் தடுத்து நிறுத்துபவை. எனவே, இவற்றை என்றைக்கும் ஒத்துப் போகாத தன்மை என்றோ, அனைத்துக் கொள்ளாத தன்மை என்றோ குறைத்து மதிப்பிட வேண்டா. ஒத்துப் போகின்ற தன்மைகள் வேறு: அணைத்துக் கொள்கின்ற தன்மைகள் வேறு. கொள்கை நெகிழ்ச்சி என்பதெல்லாம். பொறுத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கலாம்; மறந்துவிடக் கூடியதாகவும் இருக்கலாம். ஆனால் இயக்கத்துக்கு ஏற்றவையாகக் ஒப்புக்கொள்ளக் கூடியனவல்ல.
இனி, கொள்கையிலும் சில நெகிழ்ச்சிகள் இருக்கலாம் என்பவர்களும் சிலர் உண்டு. அந்த நெகிழ்ச்சி நிலைகள் முற்றும் அவர்களைப் பொறுத்த செய்தி. அந்த நிலையே பிறர்க்கும் இருக்கவேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதும், அதற்கு இயைபாக நானும் நடந்து கொள்ள வேண்டும் என்று கட்டியங் கூறிப் பேசுவதும் எனக்கு ஒத்துவராத செய்திகள். எனவே, ஒத்துப் போகாத ஒன்றை எதனுடைய அடிப்படையில் என்று கவனிக்க வேண்டுமே தவிர, எட்டா முட்டித்தனமாக அஃது எல்லா நிலையிலும் இருக்க வேண்டும் என்று முரண்டு பிடிப்பது. அறியாமையும் வினைப்பிதுக்கமும் ஆகும். அறிவுடைமையும் வினைத்திறமும் ஆகாது.
இனி, இறுதியாகக் கடந்த விடுதலை மாநாட்டினின்று நான் தெரிந்துகொண்ட உண்மைகள் ஒரு சில உண்டு. அவற்றுள் ஒன்று. இக்கால், தமிழக விடுதலையை எவரும் அறிவு நிலையாகவோ, உணர்வு நிலையாகவோ விரும்பவில்லை; இயக்க நிலையாகவே விரும்புகின்றனர் என்பதே. அப்படி விரும்புகின்றவர்களும் தம்மை விளம்பரப்படுத்திக் கொள்ள விழைபவர்களாவே இருக்கின்றனர். வெறும் விளம்பரத்திற்காகவோ, புகழுக்காகவோ, விடுதலையை விரும்புகின்ற நெஞ்சங்கள், அவை வாய்க்காத விடத்து, அவ்விடுதலையையும் தவிர்க்கின்ற உணர்வு கொள்பவையாகத் தான் இருக்க முடியும். விடுதலையை ஓர் உயிராகக் நிலையாக விரும்புகின்றவன் எவனோ, அவன் முதலில் தன்னை எல்லாவகைத் தளைகளினின்றும் கட்டறுத்துக் கொள்ளுபவனாக ஆக்கிக் கொள்ளுதல் வேண்டும். அந்நிலையே தான் மன நிறைவுடன் ஒப்புக்கொண்ட கொள்கைக்கும் கட்டுப்பட்டு நடக்கும் மனப் பாங்கை வளர்த்துக்கொள்ளப் பயன்படுவதாகும். அம்மனப் பாங்கு வளரும் வரை தமிழினத்தை எவராலும் ஒன்றுபடுத்திவிட முடியாது. தமிழக விடுதலையும் எட்டாத ஒரு கனவாகவே போய்விடும் என்று எச்சரிகை விரும்புகின்றேன்.
இனி, கொள்கைமேல் நம்பிக்கை வைத்துள்ள நம் விடுதலை இயக்க மெய்யன்பர்கள் தொடர்பாகவும், அவர்கள் இனிநடந்து கொள் வேண்டிய வினைகள் தொடர்பாகவும் அடுத்து வரும் இதழ்களில் பேசுவோம்.
- தென்மொழி, சுவடி :12, ஓலை 10, 1975
“தனி நாடு” கோரிக்கை
அனைத்துலகச் சட்டப்படி குற்றமன்று!
“அனைத்து நாடுகள் சட்டப்படியும், உலக ஒன்றிய நாடுகள் (U.N.O) அமைப்புறுதிப்படியும், கூட்டுச்சேரா நாடுகளின் (1964) ஆம் ஆண்டு அறிவிப்புப் படியும், தமிழ் மக்கள் தனிநாடு கோருவதற்கு முற்றிலும் தகுதி படைத்தவர்கள். சட்ட அடிப்படையான தன்னுரிமைக்காக, தன்மானமுள்ள தமிழர்கள் நடத்தும் தமிழக விடுதலைப் போராட்டத்தை இந்திய அரசு குற்றமாகக் கணிப்பது அடிப்படை மக்கள் உரிமையைப் பறிக்கும் சட்டப்புறம்பான செயலாகும்’ -என ஈழத்தமிழ்நாடு அமைத்திட அரும்பாடுபட்டு வரும் தமிழர்களுக்கு உதவிகள் செய்து பெரும்புகழ் பெற்ற இங்கிலாந்து நாட்டின் ஆங்கில வழக்குரைஞர் இருவர், இந்தியத் துணைக்கண்ட அரசு கொணர்ந்த பிரிவினைத் தடைச்சட்டம் பற்றி பிரிட்டனில் உள்ள 'தமிழர் முன்னேற்றக் கழகம்’ (T.M.K) கேட்டிருந்த சட்ட விளக்கம் பற்றி ஆய்ந்து கருத்தறிவித்துள்ளதாக அங்கு நடந்து t U < j A H < F us ' (Voice of Tamils Anti-official Newsletter Published by T.M.K) என்னும் செய்தியேடு தன் ஆகத்து 77 இதழில் ஆசிரியவுரை எழுதியிருக்கின்றது. அக் கட்டுரையில் அதன் ஆசிரியர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது.
தங்கள் சொந்த ஊதியம் (நன்மை) கருதி அதிகாரத்தில் உள்ள வடஇந்தியக் கட்சியினர் கொண்டு வந்த பிரிவினைத் தடைச்சட்டம் அம்பேத்கார் குழுவினர் வகுத்தளித்த இந்திய அரசியல் சட்டத்திற்கு முற்றிலும் புறம்பாவதாகும். ஐம்பது ஆண்டுக் காலமாகத் தமிழ் நாட்டுப் பிரிவினை கோரும் தமிழர்களைக் கருத்தில் கொண்டு கொணர்ந்த தடைச்சட்டமாகையால், அதற்குத் தமிழ்மக்களின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே, அப்பிரிவினைத் தடைச் சட்டத்திற்கு சட்டவலு இருக்க முடியும்.
'இந்தியத் துணைக்கண்டம் முழுமையும் அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாகவும், நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டம் நாடு முழுமைக்கும் பொருந்தும் எனவும் கூறுவதை அனைத்து நாடுகள் சட்டத்தின் அடிப்படையில் ஏற்றுக் கொள்ளுகின்ற அதேநேரத்தில் அதே அனைத்து நாடுகளின் சட்டத்தின் கீழ் தன்னாட்டு உரிமைக் கோரிக்கைகளும் அவற்றுக்கான போராட்டங்களும் சட்ட நிறைவானவை என்பதையும் எவரும் மறுத்தற்கியலாமற் போகும். எனவே தமிழன் - நிலப்பிரிவினைக்குக் குரல் கொடுக்கும் எவரும் அனைத்துநாட்டின் சட்டப்படி குற்றவாளியல்லர். அம்பேத்கார் குழுவினர் ஆக்கிய இந்திய அரசியல் சட்டப்படி'இந்திய ஒன்றியத்தில் (Union) சேர்ந்துள்ள நாடுகள் பிரிந்து போகும் உரிமை வரையறுக்கப்பட்டிருப்பதால் இந்திய அடிப்படை அரசியல் சட்டப்படியும் குற்றமாகாது.
கூட்டுச்சேரா நாடுகளின் இரண்டாவது மாநாடு 1964ஆம் ஆண்டு செய்ரோவில் நடைபெற்றபோது 'தங்கள் அரசியல் உரிமையைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ள ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தன்னுரிமை உண்டு' என்று தீர்மானம் அங்கு நிறைவேற்றப் பெற்றது. அத்தீர்மானத்தை இந்தியாவும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. தங்களுக்கென ஒரு நாடும் அரசும் இல்லாத பாலத்தீனியர்களின் தன்னமைப்பு உரிமைக் கோரிக்கையை இந்தியா உட்படப்பெரும்பாலான நாடுகள் ஏற்றுக் கொண்டிருக்கும் பொழுது, தங்களுக்கென ஒரு நாடு இருந்தும், அரசுரிமையற்றிருக்கும் தமிழர்களின் பிரிவினைக் கோரிக்கை எந்த வகையில் தவறானதாகும்?
இருநாடுகளின் சட்டமன்றங்கள் அல்லது மக்களால் தெரிவு செய்யப்பெற்ற படி நிகராளிகள் விரும்பிச் சட்டமியற்றி, ஒரே நாடாக இணைவதற்கு அதிகாரம் அளிப்பதன் வழியும், ஒருநாடு மற்றநாட்டை வலிந்து கவர்ந்து கொண்ட (seized by violence or occupied by force) வழியும், ஒரு நாடு தனது அரசுரிமையை மற்றநாட்டிற்கு உரிமைப்படுத்திக் கொடுப்பதன் வழியும், இருநாட்டு மக்களின் விருப்பத்தின் வழியாகவும் தான், இருநாடுகள் ஒரு நாடாக ஆக முடியும்.
ஆனால் சேர, சோழ, பாண்டிய நாடு எனப் பண்டையக் காலத்தில் அழைக்கப் பெற்றுவந்த தமிழ் நாட்டு மக்களின் ஏற்பு ஒப்புதலை (acceptance) பெறாமலேயே இந்தியத் துணைக்கண்டத்தினுள் வந்தேறியவர்களாகிய ஆரிய ஆட்சியாளர்களால் பிரிவினைத் தடைச்சட்டம் அவர்களின் அடிமைகள் நிரம்பிய நாடாளு மன்றத்தில் தன் இன நலம் காத்திட இயற்றப்பட்டதாகும். அதனைத் தமிழ் மக்களின் தொண்டைக்குள் வலிந்து சட்டப் புறம்பாகத் (illegal) திணித்துள்ளனர்.
ஆங்கிலேயர்கள் 1947-ஆம் ஆண்டு இந்தியத் துணைக்கண்ட ஆட்சியுரிமையை ஆரியர்களிடம் ஒப்படைத்தமையால் தமிழர்கள் தமது நாட்டுரிமையை இழந்தார்களே தவிர , தமிழ்மக்களின் ஒப்புதல் படி அவர்கள் இந்திய ஒன்றியத்தில் (Indian Union) சட்டப்படி இணைக்கப்படவில்லை என்பது நமக்கு உதவ முன்வந்துள்ள சட்ட வல்லுநர்களின் (Q.C) கருத்தாகும்.
இக்கருத்துகளின் அடிப்படையில் பிரிட்டன் தமிழர் முன்னேற்றக் கழகம் தமிழர்களுக்குக் கீழ்வரும் வேண்டுகோளைக் கொடுத்துள்ளது.
'நாங்கள் பிரிவினையாளர்கள் அல்லர்; நாங்கள் அனைத்திந்திய கட்சியினர்’ எனக் கூறிவரும் திரைப்படக் கவர்ச்சியும் அறியாமையும் மிக்க மக்களும், தமிழர்கள் எனக் கூறிக்கொள்ள வெட்கப்பட்டு, இந்தியத் தேசியம் பேசி அரசியல் ஊதியம் பெறும் வீடண அநுமன்களும், 'நாங்கள் அன்று பிரிவினை கேட்டோம், இப்பொழுது உண்மையாகக் கேட்கவே இல்லை; உறுதியிட்டுக் கூறுகிறோம். நாங்கள் பிரிவினையாளர்கள் அல்லர்’ என்று சொல்லுக்குச் சொல், கூட்டத்திற்குக் கூட்டம் இந்திய தேசியத் திருப்பாட்டுப் பாடித் தாம் வாழ வழி தேடிக்கொண்ட தமிழ்ப் பதடிகள் சிலரும், எக்கட்சியும் சாராத தன்மானமுள்ள தமிழ்ப் பெருங்குடி மக்களும், ஆசிரியப் பெருமக்களும், மாணவ மணிகளும் ஆங்கில வழக்குரைஞர்களின் பரிந்துரையை எண்ணிப்பார்க்க வேண்டுமெனவும், கட்சிக் கட்டுப்பாட்டிற்குள் அடங்கிக் கிடப்போர் இதுநாள் வரை தமிழ் இனத்திற்குச் செய்த மாபெரும் வஞ்சகத்திற்கு மன்னிப்புப் பெறும் வகையில், தாம் தமிழர் என்பதையுணர்ந்து தமிழ்த்தரையின் விடுதலைக்குப் போரிட வாருங்கள்” எனவும் பிரிட்டன் தமிழர் முன்னேற்றக் கழகம் அறைகூவி அழைக்கிறது.
- தென்மொழி, சுவடி : 14, ஓலை 5-6, 1977
தேசியம் பேசும் திருடர்கள்
நிலம் பரவலாக இருந்தால் கொள்ளையடிப்பவர்களுக்குத் தங்கள் வேலை எளிதாக முடியும்; சிறப்பாகவும் நடைபெறும். அரசியல் கொள்ளையர்களுக்குச் சொல்லவே வேண்டியதில்லை. ஏனென்றால் இவர்கள் பகலில் கொள்ளையடிப்பவர்கள். இவர்கள் தேசியம் பேசுகிறார்கள் என்றால், உண்மையில் நாட்டு மக்கள் நலனில் முழு அக்கறை கொண்டுதான் அப்படிப் பேசுகிறார்கள் என்று எவரும் தவறாக எண்ணிவிடக் கூடாது, மெய்யாகவே இப்பொழுதுள்ள அரசியல் தலைவர்கள் அவ்வப்போது வெளிப்படுத்துகிற கருத்துகளில் பற்பல வகையான உள்நோக்கங்கள் உள்ளன. என்பதைப் போகப் போகத்தான் கண்டு கொள்ள முடியும். மேலும் இன்றைய நிலையில் தேசியத் தலைவர்கள் என்ற உயர்ந்த தகுதியுடைய தலைவர்கள் எவரும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே தேசிய நலன் கருதிக் கூறுவதாக இவர்கள் வெளிப்படுத்தும் பேச்சுகளில் எவரும் நம்பிக்கை வைக்கவும் தேவையில்லை. இக்கால் இந்தியத் தேசியம் பேசும் தலைவர்களை இந்த அளவில் தான் நாம் மதிப்பிட முடியும்.
இந்தியா, பல தேசிய இனங்கள் ஒன்று சேர்ந்த நாடு என்றாலும் இங்கு இரண்டு வகையான அடிப்படைக் கோட்பாடுகள் நிலவுவதை எவரும் மறுத்திடவியலாது. ஒன்று, மிகமுன்பே இங்குத் தோன்றி வேரூன்றி நிற்கும் திரவிடக் கோட்பாடு. அஃதாவது பழந்தமிழ்க் கோட்பாடு. இரண்டு, இந்தக் கோட்பாட்டை உள்ளடக்கிச் செரித்துக் கொண்டு பரவி நிற்கும் ஆரியக் கோட்பாடு. இந்த இருவகை நீரோட்டங்களை மக்களின் ஆய்வாளர்கள் மிகத் தெளிவாகப் பார்க்கலாம். இங்குப் பேசப்பெற்று வரும் தொழில்களை எடுத்துக் கொண்டாலும் சரி; இங்குள்ள நாகரிகம் பண்பாட்டு நிலைகளை எடுத்துக் கொண்டாலும் சரி: அல்லது இங்குள்ள கலைகள், கல்வி நிலைகளை எடுத்துக் கொண்டாலும் சரி; அவை அத்தனையுள்ளும் திட்டுத் திட்டான இவ்விரண்டு திரவிட ஆரிய இன மெய்ம்மக் கூறுகள் இழையோடுவதை வெளிப்படையாகக் காணலாம். இவை காலப் போக்கில் ஒன்றினோடொன்று அல்லது ஒன்றினுள் ஒன்று அல்லது ஒன்று போல் ஒன்று கலந்து ஊடாடுவதாகத் தெரிந்தாலும், எத்தனைக் காலத்திற்குப் பின்னும், இவ்விரண்டு தன்மைகளையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்த்துச் தேர்ந்து கொள்ளும்படியாகவே, இவற்றின் அடிப்படைகள் வெளிப்படையாக அமைந்துள்ளன. எனவே, எத்துணை தான் தேசியப் பூச்சுகளை இவற்றின் மேல் பூசினாலும், அல்லது இவையிரண்டையும் ஒட்டவைப்பதற்கான பற்றவைப்புகளைச் செய்தாலும் இவையிரண்டும் அகத்தும் புறத்தும் ஒட்டாமலே வேறுபட்டுத்தான் காட்சியளிக்கும் தன்மையுடையன.
ஏனெனில், இவையிரண்டும் நேர் எதிரான தன்மைகள் உடையன. ஒன்றையொன்று அழித்துத் தன்னுள் அடக்கும் வலிமை சான்றன. அந்த வகையில் இங்குள்ள திராவிட இன மரபுத் தன்மைகள் ஆரிய இனமரபுத் தன்மைகளால் காலச்சூழலில் வலிமை குறைக்கப்பட்டன; பதவியதிகாரங்களால் சிதைக்கப்பட்டன. இந்தச் சிதைவே பின் வந்த ஆரிய இனமரபுக் கொள்கைக்கு வலிவாக அமைந்து விட முடியாதெனினும், தெரிந்தோ தெரியாமலோ, இந்தியாவுக்கு விடுதலை தந்து அதனைக் குடியரசு நாடாக ஆக்கிவிட்டுச் செல்லும் வேளையில் வெள்ளைக்காரர்கள் அதன் இறைமை முழுவதையும் ஆரிய இனத்தவர்களின் கைகளில் ஒப்படைத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். அந்த நிலை அவர்களின் இனமரபை இன்னும் ஒருபடி வலிமைப்படுத்திக் கொள்ளும் படியான வாய்ப்பை அவர்களுக்குத் தந்து விட்டது. இதன் வழி, அவர்களின் மேலாளுமை மிக்கோங்கி பழந்திரவிட இனமரபு நிலைகள் அனைத்தும் சிறிது சிறிதாகச் சிதைக்கப் பெற்றும் வலுக் குறைக்கப் பெற்றும் உருமாற்றப்பெற்றும், தாழ்த்தப்பெற்றும் வரலாற்று அடிநிலைகள் திரிக்கப் பெற்றும், இன்று இந்தியாவே ஆரிய நாடு என்னும் வகையில் வெளி உலகத்தவர்களுக்குப் பறைச்சாற்றப்படும் அளவில் பொய்களையும், புரட்டுகளையும் புனைகருட்டுகளையும் கருவிகளாகக் கொண்டு, நிலைகள் தலைகீழாக்கப்பட்டு விட்டன. இந்நிலை அவர்களுக்குத் தேசியம் பேசுவது எளிதாகி விட்டது. இந்தியத் தேசியம் என்பது ஏதோ, அரசியல் படிநிலை வளர்ச்சி போலும், பொருளியல் நாகரிக முதிர்ச்சி போலும் திட்டமிட்டுப் பேசிக்காட்டப் பெறுகிறது. வெளியுலகத்தவர்களும் இவர்களின் கரவான பேச்சையும். ஒரு மிகப்பெரும் தேசிய இனத்தையும் வழிவழியாய் மிக்கூர்ந்து வரும் அதன் கலை, கல்வி, பண்பாட்டு நலன்களைக் கட்டழிக்கும் கொடுஞ் செயலையும் வெளிப்படையாக அறிந்து கொள்ள வாய்ப்பின்றி, இத் தேசியம் பேசும் திருடர்களின் உயர்ந்த தேசிய இன முன்னேற்ற முயற்சிகளே என்பதாக நம்பிக்கொண்டிருக்கின்றார்கள். இந்நிலை தகர்த்தெறியப்பட வேண்டும். அதற்கு இத்திரவிட இன வழி முனறயினர்தாம் பெருமுயற்சி செய்ய வேண்டும்.
இம் முயற்சிக்குப் பெருந்தடையாக உள்ளவர்கள், இத்திரவிட இனத்திலேயே பிறந்து, இவ்வின நலன்களையே உண்டு கொழுத்து, இங்குள்ளவர்களுக்கே பகைவர்களாகவும் காட்டிக் கொடுப்பான்களாகவும் மாறித் தேசியம் பேசி, வடநாட்டுத் திருடர்களின் கையாட்களாகச் செயல்பட்டு வரும் சில்லறைத் திருடர்களே. இவர்களைத்தாம் நாம் முதலில் இனங் கண்டு கொள்ள வேண்டும். கடந்த கால இனநல முன்னேற்ற முயற்சிகளும், நாட்டு விடுதலை முனைப்புகளும் சாணேறி முழஞ்சறுக்கும் வீணான வெற்று ஆரவாரக் கூத்துகளாகவே போயின. பெரியார் ஈ.வெ. இரா. அவர்களின் பின்பற்றிகளும் தங்கள் பெயர் முத்திரைகளை மாற்றிக் கொள்ளவில்லையானாலும் அவற்றிலுள்ள சொல்லகங்களை மாற்றிக்கொண்டனர். அவர்களினின்று வெளியேறிய முன்னேற்றங்களோ, திசைமாறித் தங்கள் கட்சிக் கப்பல்களை வலித்துக் கொண்டுள்ளன. இந்நிலையில் திரவிட இன மரபை நிலைநாட்ட விரும்பும் எஞ்சிய தமிழர்கள் என்ன செய்வது? இந்தியத் தேசிய நீரோட்டத்தில் நீந்திக் கொண்டுள்ள அரசியல் கொள்ளைக்காரர்களை இனங்கண்டு, அவர்களின் போலி முகமூடிகளைக் கிழித்தெறிந்து, அவர்களின் கைகளைப்பிடித்து வெளியே இழுத்துவிடுவதே முதலில் செய்ய வேண்டுவது, இந்தியத் தேசியமும், அதற்கப்பால் உலகத் தேசியமும் பேசப் புறப்பட்டிருக்கும் மக்கள் கட்சியினர், இந்திரா பேராயத்தார், அரசு பேராயத்தார் முதலிய அனைத்திந்தியக்கட்சி அமுக்கர்களையும் வரும் சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடையச் செய்தல் வேண்டும். தென்னாட்டு அரசியலில் அவர்களின் பங்கு இங்குள்ள திராவிட இனமரபுக் கட்சிகளிடம் குட்டை குழப்புவதும் குழிகள் பறிப்பதுமே!
-தென்மொழி, சுவடி :16, ஓலை 9, 1980
“அரசியலை விட்டு விலகித் தமிழக
விடுதலைக்குப் பாடுபடுங்கள்”
கலைஞர்க்கு நேரடி வேண்டுகோள்!
பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய கலைஞர் அருட்செல்வர்(கருணாநிதி) அவர்களுக்கு,
உங்கள் அரசியல் திறனில் நம்பிக்கையும், தமிழ். தமிழர் முன்னேற்றத்தின் மேல் நீங்கள் வைத்த அக்கறையில் உறுதியும்? கொண்ட அன்புள்ளம் எழுதிக்கொள்ளும், காலங்கருதி இடத்தால் விடுக்கும் நேரடி வேண்டுகோள்.
கலைஞர் அவர்களே! கடந்த தேர்தலில் நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ, அல்லது மக்களெல்லாம் எதிர்பார்த்தோ எதிர்பாராமலோ, நேர்ந்த அரசியல் வீழ்ச்சி, உண்மையிலேயே தமிழர்தம் இன முன்னேற்றத்தில் ஏற்பட்ட சரிவே ஆகும். என்பதை நாங்கள் மனமார உணர்கின்றோம். அவ்வீழ்ச்சியின் அடிப்படையில், இனி நாம் மேற்கோள்ள வேண்டிய உறுதிப்பாடுகளை, நம் மன அடைப்புகளையெல்லாம் விட்டு விட்டுக் கூர்மையான வெளிப்படையான முறையில் சிந்தித்துப் பார்க்காமல், நாம் அடைந்த தோல்விக்கான கரணியங்களைப் பற்றி ஆராய்வதும், பேசுவதும், அயர்வு வர எழுதிக் கொண்டிருப்பதும், மேலும் தம்மை சிதைத்துக் கொள்கின்ற செயல்களாகும். என்பதை உங்களுக்குக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
தந்தை பெரியார் அவர்களிடம் நீங்கள் கற்றுக்கொண்ட இன எழுச்சிப் பாடமும், அறிஞர் அண்ணா அவர்கள் உங்களுக்குக் கற்றுத் தந்த அரசியல் அறிவுறுத்தங்களும் இன்னும் உங்கள் குருதி நாளங்களில் இடையறாது ஓடிக்கொண்டிருக்கும் என்று நம்புகின்றோம். ஆனால் கடந்தகால இடைவெளியில் நீங்கள் உங்களையே திரையிட்டுக் கொண்டு, உங்கள் மனச்சான்றுக்கு மாறான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டு வந்தீர்கள். அவற்றிலெல்லாம் உங்களுக்குரிய திறப்பாடுகள் வெளிக்குக் கொண்டு வரப்பெறவில்லை என்றே நாங்கள் கருதுகின்றோம். மாறாக, அப்பொழுதெல்லாம் வீசிய அரசியல் சூறாவளிகளில் சிக்கிக்கொண்டு, திக்கித் திணறிப் போனீர்கள். அவற்றிலிருந்தெல்லாம் இன்றுவரை உங்களை நீங்களே மீட்டுக்கொண்டு வெளியே வரமுடியவில்லை. அந்நிலையில் இறுதியாக உங்கள் அழியாத கொள்கையுணர்வுகளையும் புறத்தே வைத்துவிட்டு, உங்கள் போக்குக்கு, உள்ளுணர்வுகளுக்கு என்றும் மாறாகவே, வேறு வேறு திரிபுணர்வு கொண்டவர்களிடமெல்லாம் உங்களை நீங்கள் விரும்பாமலேயே இணைத்துக்கொண்டீர்கள். ஆனால் அந்நிலைகளில் எல்லாம் நீங்கள் தோல்வியே கண்டீர்கள். அத் தோல்வியின் வடுக்களைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல், இன்னும் அரசியல் பட்டம் பதவிகளிலும் நாற்காலிகளிலுமே உங்கள் மனம் கிடந்து உழன்று கொண்டிருப்பது மிகவும் வருந்தத் தக்கதாகும்.
தமிழின முன்னேற்றத்தைப் பற்றியே எந்நாளும் எண்ணிக் கொண்டிருக்கும் திறமுடையவரே!
தங்களைச் சுற்றியிருக்கும் அன்பர்களைச் சற்றே விலக்கி விட்டுத் தங்களைச் சூழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் பூசல்களை ஒருவாறு ஒதுக்கி வைத்துவிட்டு நாங்கள் கூறுகிற அன்புரைக்குச் சிறிதே செவிசாய்க்கும்படி, காலத்தின் கட்டாய அழுத்தத்தில் உங்களை வேண்டிக்கொள்கிறோம்.
உங்களை- உங்கள் அறிவாற்றலை- உங்கள் இனவுணர்வை உங்கள் தமிழார்வத்தை மூடி மறைத்திருக்கும் அந்த அரசியல் மாயையை பதவிப் புதைச்சேற்றை உதறி யெறிந்து விட்டு, உடனே உங்களை விடுவித்துக்கொண்டு வெளியே வாருங்கள். உங்களுக்கென்று ஒரு பெரிய விடிவு காத்திருக்கின்றது. உங்களுக்கென்று தமிழர் வரலாற்றில் ஒரு முன்னேற்ற ஊழி தன் கதவுகளைத் திறந்து வைத்திருக்கின்றது. அதன் தொடக்கம் உங்கள் முடிவாக இருக்கட்டும். அதற்காக நீங்கள் செய்யப் போகும் பெரும்பணி தமிழரின் இன முன்னேற்ற வரலாற்றுப் பொத்தகத்தில் அகன்ற பொன்னேடுகளை உங்களுக்கு அமைத்துக்கொடுக்கட்டும்.
ஒரு பெரும் போராட்டம் இன்றி- பெரிய புரட்சியின்றி- காலச் சகதியில் உள்ளழுந்திக் கிடக்கும் இத் தமிழினம் முன்னேற முடியாது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாகப் படுகுழியில் தள்ளப்பெற்றிருக்கும் அத் தமிழினத்திற்கு விடிவு காணும் வல்லமை, அரசியல் அங்காப்புகள், பொருள் நசைகள், பதவிப் படுகுழிகள் , விளம்பரத் தவிப்புகள் போன்றவற்றிலிருந்தெல்லாம் நம்மை மீட்டுக் கொள்ளும் ஒருவரிடந்தான் இருக்க முடியும். அத்தகைய ஒருவராய் இனி உங்களை நீங்களே ஈடேற்றிக் கொள்ளுங்கள். அத்தகுதியெல்லாம் உங்களிடம் உண்டு. கடந்தகால அரசியல் பாடங்களும் அதனை உங்களுக்கு நன்கு உணர்த்தியிருக்கின்றன.
தமிழின வரலாற்று வீழ்ச்சியை நீங்கள் உணராதவரல்லர், தமிழின மேம்பாட்டுக்காவே நெட்டுயிர்க்கும் உங்கள் உணர்வு இன்னும் சாம்பி விடவும் இல்லை. நீங்கள் செய்ய வேண்டுவதெல்லாம், உங்களைச் சுற்றியிருக்கும் அரசியல் கட்டுகளினின்றும் பதவித் தளைகளினின்றும் உங்களை வேரறுத்துக் கொண்டு ‘தமிழ்நாடு தமிழர்க்கே’ என்று குரல் கொடுப்பதுதான். இந்த ஒலி முழக்கம் உங்களுக்குப் புதியதன்று. நீங்கள் புறந்தள்ளியதுமன்று. ஏதோ ஒரு சட்ட உந்துதலால், காலத்தின் அழுத்தத்தால் , விலக்கி வைக்கப் பெற்ற, அன்றைய வாயொலி இன்றும் உங்கள் மன ஒலியாக - அடி மனத்தின் துடிப்பாக இருக்கவே இருக்கும். இருக்கத்தான் செய்யும். அதை முழுவதும் மூடி மறைத்துவிட உங்களால் முடியாது. பெரியாரும் அண்ணாவும் கண்டு கொண்டிருந்த கனவு அதுதான். இன்றைய நிலையில் உலகம் வாழ் தமிழரெல்லாரும் ஒரே யொரு தலைவராக உங்களை மதிக்கவும் போற்றவும் வைக்கும் தலையாய முழக்கமும் இதுதான். மற்றபடி, உங்களுக்கு இனி என்ன தேவையிருக்கின்றது? உங்களுக்கென்று எதனை நாடப் போகிறீர்கள்? நீங்கள் அமர்ந்த நாற்காலியின் சூட்டில் யார் வேண்டுமானாலும் வந்து குளிர்காய்ந்து கொள்ளட்டும். அவர்களைப் பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்படாதீர்கள்; கருத்தழியாதீர்கள். நீண்ட நெடும் வரலாறு உங்களுக்காகக் காத்துக் கிடக்கின்றது. இன்றைய நிலையில் உலகத் தமிழர் விடிவுக்கென எழுச்சிக் குரல் கொடுக்கும் இன்னொரு தலைவரை நாங்கள் காணமுடியவில்லை.
எனவே , அன்புக் கலைஞரே , அருமைத் தலைவரே, நீங்கள் அரசியலை விட்டு உடனடியாக விலகுங்கள். உலகத் தமிழின விடிவுக்கென ஒரு விடுதலை வரலாற்றைத் தொடங்கி வையுங்கள். உங்களுடன் ஒத்துழைக்க ஒரு கோடித் தமிழர் முன்வருவர். உங்கள் தோளுக்குத் தோளாக, கைக்குக் கையாக தொண்டுக்குத் துணையாக, அடிநிலைத் தொண்டர்களாக, விடுதலை முழக்கமிட நாங்கள் காத்திருக்கின்றோம். நீங்கள் அரசியலில் ஈடுபட்டு செய்யவிருக்கும் அத்தனை மாற்றங்களுக்கும் ஒரே விடிவு தமிழக விடுதலைதான் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் குரலிருந்து விடுதலை ஒலி கிளம்பும் அதே பொழுதில் உங்கள் மேலுள்ள கறைகளெல்லாம் கழுவப்பட்டு விடும்; உங்கள் மேல் வஞ்சகர்கள் சுமத்தும் பழிகளெல்லாம் துடைக்கப்பட்டுவிடும்; உலகத்தமிழினம் உடனே தன் இருகைகளாலும் உங்களை ஏந்திக்கொள்ளும்! உங்கள் வரலாறு விடுதலைக் கனவில் புடமிடப் பெற்றுப் பொன் போல் சுடர்விடும். இறுதியில், நீங்கள் உலகத் தலைவராகி விடுவீர்கள்! இல்லெனில் உங்களுக்கென ஓர் எதிர்காலம் இருக்காது; உங்கள் கனவெல்லாம் கானல் நீராகப் போய்விடும்! இஃது உறுதி! எனவே, எங்கே, குரல் கொடுங்கள். ‘தமிழ்நாடு தமிழர்க்கே!’ ‘மலர்க தமிழகம்’.
- தென்மொழி, சுவடி :16, ஓலை 12, 1980
தனித்தமிழ் நாட்டுச் சிக்கலை மிகக்
கடுமையாக எதிர்நோக்க வேண்டியிருக்கும்!
நடுவணரசுக்குப் பாவலரேறு எச்சரிக்கை!
தமிழர்கள் உலகில் மிகவும் பழைமையான இனத்தைச் சேர்ந்தவர்கள், தொன்மையான நாகரீகம் படைத்தவர்கள். இன்றைக்கு உலகில் உள்ள நாகரீகங்கள் அனைத்திலும் அவர்களது நாகரீகத் தாக்கம் இல்லாத ஓர் இன நாகரீகமே இல்லை. அதுபோலவே அவர்களின் கலையியலும் பண்பாட்டியலும் மிகமிகப் பழைமையானவை. அவர்களது மொழியும், உலகில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் மூல முதன்மையானது. சமசுக்கிருத மொழி எவ்வளவு பழைமையானதோ, அதைவிடப் பத்து மடங்கு பழைமையானது தமிழ் மொழி. சமசுக்கிருதத்தில் தமிழ் மொழியின் சொற்களும் சொல் முலங்களும் எண்பது விழுக்காட்டிற்கும் அதிகம். இத்துணைப் பழைமையும் சிறப்பும் முதன்மையும் வாய்ந்த மொழியையும், தொன்மைப் பண்பாட்டையும் நாகரீகத்தையும் படைத்த அதன் இனத்தையும் இன்று, அரசியலாலும், பொருளியலாலும், குமுகாயத்தாலும், கலை, பண்பாட்டாலும், மொழியாலும் அடிமைப்படுத்தி அழித்துக் கொண்டிருக்கின்றது ஓர் இனம் என்றால், இஃது எத்துணை இரங்கத்தக்க கொடுமை வாய்ந்த ஒர் உண்மையாக இருக்கிறது. உலகில் தமிழினம் அவ்வாறு கொடுமைப்படுத்தப்படும் நாடுகள் இரண்டு. ஒன்று தமிழ்நாடு மற்றொன்று இலங்கை
இந்திய ஒற்றுமை, பாரதப் பண்பாடு என்றெல்லாம் பெருமை பேசித் தமிழையும் தமிழினத்தையும் நாலாந்தர ஐந்தாந்தர நிலையில் வைத்துள்ளது. இந்தியா, இதன் முழு ஆட்சியையும் ஆரியம் தன் தந்திரத்தாலும், அரசியல் சூழ்ச்சியாலும், மதப் புரட்டுகளாலும் கைப்பற்றிக் கொண்டு, இந்நாட்டின் மிகப் பழைமையான உரிமையின மக்களை தமிழர்களை அவர்கள் தம் நிலையினின்று ஒரு சிறிதும் மீளாதவாறு மிகவும் அடிமைப்படுத்தி வைத்துக் கொண்டிருக்கின்றது இந்தியாவின் ஆரியப் பார்ப்பன அரசு. இந்த அடிமை நிலையின் முழு இழிவையும் இயலாமையையும், அண்மையில், தமிழீழத்தில் அடித்து, நொறுக்கி, அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தன் இன மக்களுக்கு ஒரு வகையிலும் நேரிடையாக உதவ முடியாமற் போன பொழுதே, தெள்ளத் தெளிவாக உணர முடிந்தது. என்ன கொடுமை! தாம் வணங்கத்தக்க பெற்றோர்கள் முன்னிலையிலும், தாம் பேணத்தக்க தம் உடன்பிறப்புகள் முன்பும், தாம் வழிபடத்தக்க தம் அன்புக் கணவன்மார்கள் எதிரிலும் தமிழ்ப் பெண்கள், ஆ! எவ்வாறு கதறக் கதறக் கற்பழிததுச் சீரழிக்கப்பெற்றுச் சிதைக்கப் பெற்றார்கள்! அவ்வாறு அவர்கள் சிதைக்கப் பெற்ற பொழுது, எப்படி அவர்கள் குமுறித் துடிக்கும் நெஞ்சோடும், குமைந்துருகும் உயிரோடும், செயலற்ற உடலோடும் ஒன்றும் செய்ய இயலாதவர்களாய் உணர்விழந்து கரைந்தார்களோ, அப்படித்தான், இத்தமிழ் நாட்டில் உள்ள ஐந்து கோடித் தமிழர்களும் (தேசியம் பேசும் இந்திரா அடிமைகள் தவிர) நைந்தழிய வேண்டியிருந்தது. இந்த நிலையில் தமிழர்கள் எப்படி ஓர் உரிமை நாட்டில் வாழ்வதாக ஒப்ப முடியும்? இனி இந்தியாவில் தமிழர்கள் எப்படி அடிமையாக வைக்கப்பட்டு இருக்கின்றார்களோ, அப்படியே இலங்கையிலும் தமிழர்கள் அடிமைகளாக வைக்கப்பட்டிருப்பதுடன் மிக கொடுமைக்கும் இழிவுக்கும் அழிவுக்கும் ஆளாக்கப்பட்டிருக்கின்றனர். அதற்கு அண்மையில் அங்கு நடந்த இனக் கலவரங்களும் அழிவுகளுமே மிகத் தெளிவான வெளிப்படையான சான்றுகளாகும்!
உலகில் தமிழர் வாழும் ஏறத்தாழ நாற்பத்தேழு நாடுகளில், மேற்கூறிய இரண்டே இரண்டு நாடுகளில் மட்டுமே அவர்கள் மட்டுமே ஆளுமை உரிமைபெற முடியும். ஏனெனில் அவையிரண்டுமே இன்றைய நிலையில் அவர்களின் தாய் நாடுகள். வரலாற்று அடிப்படையில் இந்த இரண்டு நாட்டிலும் அவர்களுக்குள்ள ஆளுமை உரிமையை, வேறு எந்த நாட்டு அரசாலும் இனத்தாலும் மறுத்துவிடவோ, அல்லது மறைத்துவிடவோ முடியாது.
கடந்த காலங்களில் தமிழினத்துக்கு நேர்ந்த வாழ்வுரிமைத் தாக்கங்களால் மீண்டும் இவ்வினத்துக்கு உரிமை உணர்வு இக்கால் கிளர்ந்தெழுந்துள்ளது. அவ்வுணர்வைச் செயற்படுத்துவதற்குரிய முழுத் தகுதியும் முழுவுரிமையும் வாய்ந்தவர்கள் தமிழ்நாட்டிலும், தமிழீழத்திலும் வாழ்ந்து வரும் தமிழர்களே! இரண்டு நாடுகளிலுமே அவர்கள் நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து வருகின்றார்கள். அவர்கள் தோன்றியதும் இவ்விரு நாடுகளையும் உள்ளடக்கிய இலெமூரியா என்னும் இந்நிலப்பகுதியிலேயே ஆகும்! எனவே அவர்களின் இனவுரிமைத் தாக்கத்தையும் வாழ்வுரிமைச் சிக்கலையும் முன்வைத்து ஆட்சியுரிமைக் கோரிக்கைக்கு எழுச்சிக் குரல் கொடுப்பார்களேயானால் அவர்களைத் தடுத்து நிறுத்திவிடவும், அவர்களின் உரிமைக் குரலை ஒடுக்கிவிடவும் உலகில் இன்றுள்ள எந்த ஆற்றலாலும் இயலாது. அந்த அளவுக்கு இந் நிலவுருண்டைப் பகுதியில் நிலவுரிமை படைத்தவர்கள், அவர்கள்!
தமிழர் வாழ்வுரிமை பெறத் தக்கனவாகிய மேற்கண்ட இரண்டு நாடுகளில், இன்றைய நிலையில் இலங்கை வாழ் தமிழர்களே ஆட்சியுரிமைக்குப் போராடும் வகையில் கிளர்ச்சியுற்றுப் போராடத் தலைப்பட்டுள்ளனர். அவர்களின் தமிழீழத் தனி நாட்டுப் போராட்டம் பல்வேறு அரசியல் உரிமைக்குப் பின்னர் வடிவம் பெற்றதாகும். அது கடந்த முப்பத்தைந்தாண்டுக் காலமாக நடந்து வருவது, அவ்வகையில் இலங்கைத் தமிழினச் சிறுபான்மையரை ஒடுக்கி அடக்கி ஆண்டு கொண்டுள்ள, சிங்களப் பெருபான்மையினம், அங்குள்ள தமிழரை முற்றாக அழிப்பதற்கே திட்டமிட்டுள்ளது என்பதைக் கடந்தகால இன அழிப்புக் கலவரங்களைக் கொண்டு அறிய முடிகிறது.
கடந்த சூலை மாதக் கலவரம் இதுவரை அங்கு நேர்ந்த கலவரங்கள் அனைத்துக்கும் கொடுமுடியானது; கொடுமையானது. அரசு படைத்துறை, காவல்துறை, சிங்கள மக்கள் ஆகிய நான்கு ஆற்றல்களும் ஒருமுகமாக அங்குள்ள தமிழர்களுக்கு எதிராக நின்று, நேரடியாக அவர்களை அழிக்கத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், இவ்வினப் போராட்டத்திற்கு ஒரு முடிவு காண இன்று இந்தியா அதில் தலையிட்டுள்ளது. அதன் தலையீடு நல்ல நோக்கத்துடன் அமைந்ததாக, அதன் நடைமுறைகளைக் கொண்டு கணிக்க முடியவில்லை. அதன் தொடக்கமே தமிழீழக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. ஆனால் தமிழீழம் தனியே பிரிந்தாலன்றி, இலங்கையிலுள்ள தமிழர்கள் தங்கள் உரிமையைப் பெறுவதற்கு வழியே இல்லை; அந்த நம்பிக்கை யெல்லாம் கடந்த கால இனக் கலவரங்களின் வழி முழுதுமாக அழிக்கப்பட்டு விட்டன. தமிழீழக் கோரிக்கையின் வெற்றியில்தான் எதிர்காலத் தமிழினத்தின் வாழ்வு அமைந்து கிடக்கிறது. அடிமையுற்றுக் கிடக்கும் தமிழினத்திற்கு, இவ்விரண்டு உரிமைத் தகுதி பெற்ற நாடுகளில் ஒன்றேனும் தன்னரசு பெற்றால்தான், எதிர்கால முன்னேற்றத்திற்கு வழியுண்டு. எனவே, இரண்டு நாடுகளில் முன் விழிப்புள்ள தமிழீழக் கோரிக்கையை வெற்றி பெறச் செய்வதில் உலகத் தமிழினம் முழுவதுமாக முனைந்து பாடுபடுவது ஒரு தேவையும் காலத்தின் கட்டாயமுமாக அமைந்துவிட்டது.
ஆனால், தமிழீழக் கோரிக்கையின் வெற்றி, அதன் அண்டை நாடான தமிழ்நாட்டிலும் ஒரு தன்னாட்சிக் கோரிக்கையை எழுப்பி விடுமோ என்று இந்திரா அரசு அஞ்சுவதாகத் தெரிகிறது. இந்த அச்சத்தின் அடிப்படையில் அது தமிழீழக் கோரிக்கை வெற்றிக்கு முழு அளவில் உதவுவது என்பதும் ஒரு கனவேயாகும். எனவே அதன் முயற்சி தமிழீழ விடுதலைக்கு எவ்வகையானும் பயன்படவே முடியாது. அவ்வாறின்றி, அது தமிழீழக் கோரிக்கை தவிர்த்த வேறு தீர்வுக்கு முயற்சி செய்வதைத் தமிழர்கள் எள்ளளவும் ஏற்கமாட்டார்கள்.
இந்த இக்கட்டான இன அழிவுச் சுழலில் இந்திய(இந்திரா) அரசுக்கு நாம் கூறுவதும் எச்சரிப்பதும் இதுதான். ஒருவேளை, ஓரின உணர்வின் அடிப்படையில் செயவர்த்தனேயின் தமிழின அழிம்பு முயற்சிகளுக்கு ஆதரவாகவும், தமிழீழ விடுதலை நோக்கத்திற்கு எதிராகவும், இந்திரா காந்தி, நடுநிலைத் தீர்வு செய்வது போன்ற வெளிப்படை முயற்சியில், மறைமுகமாகவும் தந்திரமாகவும் செயல்பட்டு, செயவர்த்தனேயின் நோக்கத்திற்கு வெற்றியையும், தமிழீழக் கோரிக்கைக்குத் தோல்வியையும் ஏற்படுத்திக் கொடுப்பாரானால், அல்லது அதில் விரைந்து ஒரு நடவடிக்கையை மேற்கொள்ளாமல் ஒரு காலத்தாழ்வை இடையில் புகுத்தி, தமிழின உணர்வைத் தணிவிக்கும் சூழ்ச்சியில் ஈடுபடுவாரானால், அந்நிலை, இந்தியாவிலும் எதிரொலியை ஏற்படுத்தித் தனித்தமிழ்நாட்டுப் போராட்டத்திற்கு உரமிட்டது போல் ஆகும் என்று எச்சரிக்க விரும்புகின்றோம். ஓர் இனம் அடிமைத்தனத்தில் கொஞ்சங் கொஞ்சமாக அழிந்து போவதைவிட, உரிமைப் போராட்டத்தில் ஒரேயடியாக மாண்டு போவதையே நாம் விரும்புகிறோம். ஏனெனில் விடுதலையுணர்வு என்பது அடிமைப்பட்டுக் கிடக்கும் இனத்தில் இயல்பாகத் தோன்றுவது. அது வலுப்பெறுமானால், எத்துணைக் கொடுமையான வல்லாண்மைப் போக்கையும் எதிர்கொள்ளத்தக்கது என்பதை ஆள்பவர்கள் உணர்ந்திருப்பார்கள் என்று நம்புகிறோம்.
- தமிழ்நிலம், இதழ் எண். 23, செபுதம்பர், 1983
தனித் தமிழ்நாட்டுக் கோரிக்கைக் குரல் முழக்கப்பட வேண்டும்!
இந்தியாவில் உள்ள தேசிய இன மக்கள் உரிமை எழுச்சிக்காகப் போரிட வேண்டிய காலகட்டம் இது. தில்லியின் வல்லாட்சியானது, இன்றைய நிலையில் அனைத்துத் தேசிய இனங்களின் தனிவளர்ச்சியை ஏதாமொரு வகையில் ஒடுக்கிக் கொண்டே வருகிறது. அசாமியரின் இன எழுச்சிப் போராட்டத்தையும், பஞ்சாபியரின் தன்னதிகாரக் கோரிக்கை எழுச்சியையும் தன் வல்லதிகாரக் கொடுங்கைகளால் கடுமையான அடக்கு முறைகளின் வழி, அடக்கி ஒடுக்கப் பார்க்கிறது தில்லி, தேசியம், ஒருமைப்பாடு என்னும் முதலாளியக் கோட்பாடுகளின் அடிப்படையில், மாநிலங்களின் நயன்மையான இன நலக் கோரிக்கைகளைப் புறக்கணிப்பதும், இழிவுபடுத்துவதும், படைத் துறைகளையும் காவல்துறையையும் கொண்டு வன்முறைகளை ஏவிவிடுவதும் தில்லியின் வழக்கங்களாகி விட்டன. பொதுவாகவே, இந்தியா தன்னுரிமை பெற்ற நாளிலிருந்து, அதன் ஓரினக் கருத்துக் கோட்பாடு, ஆரியத்தின் சார்பாகவும், அவ்வினத்தின் சாதிய, மதவியற் கொள்கைகளை நிலைநிறுத்தும் முயற்சியாகவுமே, இருந்து வருகிறது.
தென்னாட்டுத் திரவிட இனங்களுக்கிடையில், இதுபற்றிய ஒரு முணுமுணுப்பு இடை நாளிலிருந்தே இருந்து வந்தாலும், போதிய இனநலக் கருத்தெழுச்சிக்குரிய சரியான வடிவம் கிடைக்காமல், தேசியப் போர்வையில், அவை மறைக்கப்பட்டே வந்திருக்கிறது. ஆனால் தில்லியின் கரவான போக்கை, இக்கால் தென்மாநிலங்கள் நன்குணர்ந்து வருகின்றன. தேசிய இனங்களின் உரிமைக் கிளர்ச்சிகளை வித்திட்டு வளர்த்தெடுக்க வேண்டிய இந்தியப் பொதுவுடைமைக் கட்சி கூட, ஏனோ தன்னைப் பிற்போக்கு ஆற்றல்களுடன் இணைத்துக் கொண்டும், அக்கட்சிக் கோட்பாடுகளுக்குப் புதுவகையான விளக்கங்களைக் கூறிக் கொண்டும் தில்லியின் இன எழுச்சி ஒடுக்கல் முறைக்கே தன் மறைமுக ஆதரவைக் கொடுத்து வருகிறது.
இலங்கைத் தமிழர் சிக்கல் அனைத்துலகப் பார்வைக்கு வளர்ந்துவிட்ட நிலையில், தமிழ்த் தேசிய இனம் ஒரு புதிய எழுச்சி பெற்றுத், தமிழர்களுக்கென ஒரு தனிநாட்டைச் சமைத்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு வருகிறது. எனவே, இந்தக் கால நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, தமிழகத் தமிழர்களும், என்றோ எழுப்பப்பட்டுப் பலவகையான அரசியல் சட்டச் சூழல்களால் கைவிடப்பெற்ற அல்லது தள்ளி வைக்கப் பெற்ற, தனித்தமிழ்நாட்டுக் கோரிக்கையை முழு மூச்சுடன் செயல்படுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது என்றே நாம் கருதுகிறோம்.
இக்கால் உள்ள தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு, ஆட்சியில் உள்ள எதிர்க்கட்சியைக் குறைகூறுவதும், அதை ஆட்சியிறக்கம் செய்து விட்டுப் பதவியை அல்லது அதிகாரத்தைக் கைப்பற்றுவதுமே நோக்கமாயிராமல், தில்லிப் பிணைப்பிலிருந்து ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டை விடுவிப்பதையே முழு நோக்கமாகக் கொண்ட போராட்டத்தைத் தொடங்குவதே, தம் தலையாய குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். அப்போராட்ட வெற்றியில்தான் எதிர்காலத் தமிழினத்தின் மறுமலர்ச்சியே அடங்கியுள்ளது என்பதைத் தமிழ்த் தலைவர்கள் ஒவ்வொருவரும் நன்கு சிந்தித்துப்பார்க்கவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம். அத்தகைய எழுச்சிக் குரல் எந்த அணியிலிருந்து, எந்த மூலையிலிருந்து வந்தாலும், அவ்வணியுடன் நம் இருகைகளையும் பிணைத்துக் கொள்ள நாம் என்றும் அணியமாயிருக்கிறோம் என்பதை இப்பொழுதைக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
- தமிழ்நிலம், இதழ் எண் : 30, சனவரி, 1984
தேசிய இனங்களின் விடுதலைக்
கோரிக்கை தீவிரமடைகிறது!
தென்னார்காடு மாவட்டத்தில் திருமுதுகுன்றம் - திருச்சி சாலையில் உள்ள பெண்ணாகடம் என்னும் ஊர், சமயச் சார்பிலும், அரசியல் சார்பிலும் வரலாறு படைத்த ஊர். பாடல் பெற்ற திருத்தலமாகிய அதில்தான் உழவர்களும் தொழிலாளர்களும் கடந்த காலத்தில் கிளர்ந்தெழுந்து புரட்சிக்கொடி ஏந்தி, முதலாளியக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போரிட்டனர்.
அந்தப் புரட்சிப் போராட்டத்தின் முதல் புரட்சியாளராய், முழுமைப் போராளியாய் விளங்கிய தீவிரப் பொதுவுடைமையாளர் புலவர் கலியபெருமாள் அவர்களும், அவர் குடும்பமும் அந்த மண்ணில்தான் வீரவரலாறு படைத்தனர். பொதுவுடைமைப் போர் புரிந்த கலியபெருமாளின் குடும்பத்தையே கொலைக் குற்றம் சாட்டிப் பதினைந்தாண்டுகள் சிறைவைத்தது அந்த நாளின் மக்கள் உரிமையை மதிக்காத மாநில அரசு! ஆம்! அந்த அரசு ஒரு திரவிட அரசே! இன்னும் சொன்னால் தமிழன் அரசே! ஆனாலும் அதிகார வெறியாலும் ஆளுமை அங்காப்பினாலும் அந்த அரசு அவ்வாறு செய்தது! கலியபெருமாளும், அவர் துணைவியார் திருவாட்டி வாலாம்பாள் அம்மையார், அவர் மக்களாகிய வள்ளுவன், நம்பியார் என்னும் இரண்டு குலக்கொழுந்துகளும், கலியபெருமாளின் தம்பி, வாலாம்பாளின் தமக்கையார் ஆகிய அனைவரும் முதலாளியக் கொடுமைகளுக்குப் போர்க்கொடி ஏந்திப் போரிட்டனர். பொதுவுடைமைப் போரில் அவர்கள் பதினைந்தாண்டுச் சிறைசென்ற பெருமை அவர்களைச் சேரக்கூடாது என்று நினைத்த தன்னதிகாரத் தந்நலத் தான்தின்னிக் கொடுமையர்கள் அவர்களைக் கொலைக்குற்றவாளிகள் எனச் சிறையில் அடைத்தனர். வரலாறு எப்பொழுதும் கண்மூடிக் கிடப்பதில்லை; அஃது எப்பொழுதும் தூங்குவதே இல்லை. அறிதுயில் கிடக்கின்ற அது, பாசறை வீரன் போல அடிக்கடி விழித்துக் கொள்ளும்! வெகுண்டு சீறும் ! வரலாற்றை யாரும் தூங்கவைத்துவிட முடியாது! ஏனென்றால் உண்மைதான் வரலாறாக மாறுகிறது.
அத்தகைய வீரவரலாறு படைத்த மண்ணில் தான் வரும் மே மாதம் 5, 6ஆம் ஆம் நாள்களில் தமிழீழ விடுதலை ஆதரவு மாநாடும், இந்தியாவில் தேசிய இனங்களின் விடுதலை மாநாடும் நடைபெற இருக்கின்றன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மாநாட்டைத் தமிழகத்தின் முற்போக்கு இளைஞர் அணி நடத்துகிறது. அதில் தீவிரப் பொதுவுடைமை (மார்க்சிய இலெனினிய) வீரர் கலியபெருமாள் அவர்களும், பெரியார் சம உரிமைக் கழகப் பொதுச் செயலாளர் வே. ஆனைமுத்து அவர்களும், உலகத் தமிழின முன்னேற்றக் கழக முதல்வர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களும், மக்கள் உரிமைக் கழகத் தலைவர்களும், இன்னும் பிற முகாமையரும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
இரண்டு நாள் மாநாட்டிலும் தலைவர்கள் நாட்டின் எதிர்காலம் பற்றியும், தமிழின விடுதலைப் போராட்டத்தின் அடிப்படை முயற்சிகள் பற்றியும் தீவிரமாகக் கலந்து ஆய்வு நிகழ்த்தி, இரண்டாம் நாள் மாநாட்டு இறுதியில் முடிவான எதிர்காலத் திட்டங்களை வெளியிட உள்ளனர்.
தமிழ்த் தேசிய இன விடுதலை வேட்கை கொண்ட அனைத்து அணிகளின் அறிஞர்கள், இளைஞர்கள், மாணவ மாணவியர் அனைவரும் தவறாமல் மாநாட்டில் பங்குகொள்ள வேண்டுகின்றோம்.
மாநாட்டில் கலந்துகொள்ளும் அறிஞர்கள், வீரர்கள், வரலாறு படைக்கப் போகும் மறவர்கள் அனைவரின் பெயர்ப்பட்டியலும், நிகழ்ச்சி நிரலும் அடுத்து வெளிவரும்.
- தமிழ்நிலம், இதழ் எண். 34, மார்ச்சு, 1984
விடுதலைப் பாசறை கட்டமைக்கப்படுகிறது!
வரும் மே மாதம் 5, 6ஆம் பக்கல்களில், தென்னார்க்காடு மாவட்டம், பெண்ணாடகத்தில 'தமிழீழ விடுதலை ஆதரவு மாநாடு'ம், ‘தேசிய இனங்களின் விடுதலை மாநாடு'ம் நடைபெற விருக்கின்றன. மாநாடுகள் சிறப்பாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பெற்று வருகின்றன. தமிழின, தமிழ்நாட்டு மறுமலர்ச்சியையும் விடுதலையையும் விரும்பும் அனைத்து உள்ளங்களும் தவறாமல், தவிர்க்காமல் மாநாடுகளுக்கு வந்திருந்து, நல்ல எதிர்காலத் திட்டங்கள் நிறைவேறுவதற்குத் துணை நிற்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
பொதுவாகவே, மாநாடுகளை நடத்துவதிலும் பேரணிகள், ஊர்வலங்கள் போவதிலும் நமக்கு நம்பிக்கையில்லை. ஆனால், குடியரசு நாட்டில், இப்பொழுதைய வல்லாட்சியதிகாரமும், மக்கள் உரிமைக் கோரிக்கைகளை அடக்கியொடுக்கும் ஆட்சிப் போக்கும் உள்ள நிலையில், நேர்மையான முறையில், நம் கருத்துகளை மக்களுக்கும் அரசுக்கும் எடுத்துக் கூற இவற்றைத் தவிர வேறு வழிகள் இல்லை. எனவேதான் நாமும் இடையிடையே கூட்டங்களைக் கூட்ட வேண்டியிருக்கின்றது. பிறர் கூட்டும் கூட்டங்களில் சில நேரங்களில் கலந்துகொள்ளவும் வேண்டி யிருக்கின்றது. ஆனால், இவ்வகை முயற்சிகளே போதுமானவையாகவும், தொடர்ந்து செய்யக் கூடியனவாகவும் இருக்க வேண்டும் என்பது நம் கொள்கையன்று. மேலும் இத்தகைய மாநாடுகள், பேரணிகள் என்பவற்றைக் கூறிப் பொதுமக்களிடம், பொருளியல் சுரண்டல் நடத்துவதும் நமக்கு விருப்பமான செயல் அன்று. நம்மிடம் போதுமான பொருள்வள வாய்ப்பிருந்தால், பொது மக்கள் உதவியில்லாமலேயே இவற்றைச் செய்துகாட்ட இயலும். ஆனால் இதை இப்பொழுது கூறி என்னபயன்?
இக்கால் நடைபெறவிருக்கும் மாநாடு, நம் எதிர்காலக் கொள்கையையும் நடவடிக்கையையும் ஓரளவு உறுதி செய்யப் பயன்படும் என்றே நாம் கருதுகிறோம் ஆனாலும் இம் மாநாடு நாம்மட்டும் தனித்துக் கூட்டுகின்ற ஒன்றன்று; கொள்கைத் தீவிரமும், மக்கள் நல நோக்கமும் உண்மையான உறுதியான செயற்பாடும் உள்ள நான்கைந்து இயக்கங்கள் கூடி அமைக்கும் மாநாடுகள் இவை. எனவே, வெளிப்படையான பயன் இப்பொழுதைக்குக் குறைவாக இருந்தாலும், எதிர்காலத் திட்ட அமைப்பிற்கு இம் மாநாட்டுச் செயற்பாடுகள் வலிவான அடிப்படைகளைக் கட்டாயம் தோற்றுவிக்கும் என்று உறுதியாக நம்புகின்றோம்.
உண்மையான இனநலங் கருதுபவர்கள் தங்கள் பாங்கில் ஏதாவது இயன்ற அளவு செய்து கொண்டிருப்பார்களே தவிர, பிறரின் செயல்களை மூக்கறுப்பதும், முடக்கம் செய்வதும் ஆகிய தன்னம்பிக்கைக் குறைவான வேலைகளில் என்றும் ஈடுபடக் கூசுவார்கள். ஆனால், நம் தமிழினத்தைப் பொறுத்த மட்டில் வசதி வாய்ப்புகளைப் பெற்றவர்கள் பொதுநலத்தையும் ஒரு வாணிகமாகக் கருதி, இவ்வகையில் முயற்சி செய்யும் பிற அணியினரை ஒடுக்கவும் ஒழிக்கவும் பார்க்கின்றனரே தவிர, எங்கிருந்து வரினும் எவ்வகையில் வரினும் பொதுநல, இனநல முயற்சிகளை வரவேற்றுப் போற்றிக்கொள்ள மனமற்றவர்களாகவே உள்ளது வருந்தத்தக்கது. நம் தமிழினப் பொதுமை நல உணர்வு இன்னும் படிநிலை வளர்ச்சி எய்தவேண்டும் என்பதையே வன்மையாக இது காட்டுகிறது.
இனி, நாம் இன நலத்துக்கென்று முயற்சி செய்கையில், அந்நலத்துக்கான பல்வேறு கூறுகளில் ஒவ்வொன்றுக்குமாக ஒவ்வொரு போராட்டம் நடத்திக் கொண்டிருப்பது தேவையற்றதும், மக்களைத் திசை திருப்புவதுமான ஒரு முயற்சியே என்பது நம் தெளிவான கருத்து நம் தமிழினத்தைப் பொறுத்த அளவில் நமக்கு வந்துற்ற வீழ்ச்சிகளைப் பார்க்குமிடத்து, நம் இன, நாட்டு விடுதலைக்காக ஒட்டுமொத்தமான ஒரு முயற்சியையே படிப்படியாக வளர்த்தெடுக்க வேண்டுமேயல்லாமல், வேறு எந்த வகையான சிறு சிறு முயற்சியும் அறவே பயனில்லாமல் போய்விடும் என்பதை நாம் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். இந்தியெதிர்ப்புக்காக ஒரு போராட்டம், வகுப்புரிமைக்காக ஒரு முயற்சி, மாநில உரிமைகளுக்காக ஓர் அறைகூவல், என்பன போன்றவை யெல்லாம் சிறு சிறு முயற்சிகளே ஆகும். இவையனைத்தையும் உள்ளடக்கிய நாட்டு விடுதலையே இக்கால் நமக்கு வேண்டப் பெறுவது.
இம்முயற்சியில் ஈடுபடும் அல்லது கருத்து வளர்க்கும் இயக்கங்கள் மிகமிகக் குறைவே. 'தமிழ்நாடு தமிழர்க்கே' என்னும் கொள்கைக் குரலை ஓங்கி ஒலிக்கவே அஞ்சிக் கொண்டுள்ளவர்கள், தமிழினத்திற்கொன்றும் பெரிதாகச் செய்துவிட முடியவே முடியாது. வெறும் விளம்பர வளர்ச்சிக்கும், பொருள் வாய்ப்புகளுக்குமே அம் முயற்சிகள் பயன்படலாம். ஆனால் தமிழினத்தை முன்னேற்றுவதற்கு அவை ஒரு விரல் நுனியளவும் பயன்பட முடியாது.
இக் கால் நடைபெறவிருக்கும் மாநாடுகளை நடத்தத் திட்டமிட்டுள்ளவர்கள் ஒன்றும் ஊரை ஏமாற்றி உலையில் போட்டுக் கொண்டிருப்பவர்கள் அல்லர். உண்மையான இன நாட்டு விடுதலைக்காகத் தங்களையே ஈகப்படுத்திக் கொண்டவர்கள். அவர்களின் கடந்தகால தொடர்ந்த வரலாறுகள் இவற்றைத் தெளிவாக உணர்த்தும் அவர்கள் மேல் பல குறைகளும் இழிவுகளும் பழிகளும் கூறிக் கொண்டிருப்பவர்கள் ஒன்றால், அவர்களின் நடவடிக்கைகளை நேரிடையாக உணராதவர்களாக இருக்க வேண்டும்; அன்றால், அவர்கள் நிலைப்பாடுகளிலும் வினைப் பாடுகளிலும் பொறாமை கொண்ட தந்நல உணர்வாளர்களாக இருக்க வேண்டும். இனி, இவர்கள் செய்கின்ற இடைத்தடுப்புச் செயல்களும், மூடி மறைப்புகளும், ஊடறுப்புகளும், வஞ்சகங்களும், உண்மையான நம் முயற்சிகளுக்குச் சிறு சிறு தொல்லைகளாக இருக்குமே தவிர, எல்லைகளாக இருக்க முடியாது.
எனவே, நடக்க விருக்கும் மாநாடுகள் உண்மையான இனநல, நாட்டுநல உரிமை மீட்புகளுக்கானவை, என்று கருதி, அனைவரும் இவற்றுக்கு ஒத்துழைப்புத்தரக் கேட்டுக் கொள்கிறோம்.
விடுதலைப் பாசறை கட்டமைக்கப் பெறுகிறது! திட்டங்கள் வகுக்கப்பெறுகின்றன. செயல் மறவர்கள் அனைவரும் தவறாது வந்துகூடி ஒன்றிணைந்து வினைப்பகிர்வு செய்து கொள்ள வேண்டுவது நம் கடமையாகும்! காலக் கட்டாயமுமாகும்!
- தமிழ்நிலம், இதழ் எண். 34 மார்ச்சு 1984
தமிழ்த்தேசிய இனவுணர்வாளர்கள்
ஒன்றுசேரவேண்டும்!
இந்தியாவில் அடுத்துவரும் காலம் தேசிய இனவிடுதலைப் போராட்டக் காலமாகும். இதை யாரும் தடுத்து நிறுத்திவிட முடியாது.
பஞ்சாபில் இறுதியாக அரசு மேற்கொண்ட முயற்சிகள் எந்த ஓர் ஆளும் பிரிவும் இயல்பாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளே. எனவே அதுபற்றி யாரும் அச்சமடையவோ கலக்கமடையவோ தேவையில்லை. ஆனால் இப்போராட்டக் கலவரங்களுக்குப் பின்னர் படிநிலை வளர்ச்சியுறும் (பரிணாமமுறும்) மக்கள் மனவெழுச்சிகளுக்கு நாம் முகாமை (முக்கியத்துவம்) அளிக்க வேண்டும்.
ஒரு நாடு எவ்வளவு முகாமையானதோ அவ்வளவு முகாமையானவர்கள் அதன் மக்கள். இனி, மக்களில் ஆளும் பிரிவினராகிய ஆட்சியாளர்க்குச் சார்பாக இயங்குபவர்கள் எவ்வளவு மதிக்கத் தகுந்தவர்களோ, அவ்வளவு மதிக்கத் தகுந்தவர்களே, அவர்களுக்கு எதிரானவர்களும். குடியரசமைப்பின் நேர்மையான அரசியல் இலக்கணம் இது. எனவே, ஆட்சியாளர்க்கு எதிராக மக்களில் ஒரு பகுதியினர் கிளர்ந்து எழுகிறார்களென்றால், அக் கிளர்ச்சியினை அடக்கியொடுக்க அரசினர் முனைவது குடியரசு அமைப்பு முறைப்படி அறியாமையிலும் அறியாமையாகும். கொள்கை முடிவுகள் (சித்தாந்தங்கள்) என்றும் சாவதில்லை; அவற்றைச் சாகடிக்கவும் முடியாது.
குடியரசுக் கொள்கைப்படி, இணைப்பாட்சிக்கு எத்துணை மதிப்புண்டோ அத்துணை மதிப்பு தனிப்பிரிவு ஆட்சிக்கும் உண்டு. பல்வேறின மக்களின் மனவுணர்வைப் பொறுத்த செய்திகளே இவை! “இந்தியா ஒருநாடு” என்று நிலக்கோள அமைப்பை வலியுறுத்திப் பேசும், ஆட்சியாளர்கள், மக்களின் அமைப்புக்கும் அதைப் பொருத்திக் காட்டிவிட முடியாது. பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட நாடு இந்தியா, இதில் எந்தக் கருத்து வேறுபாட்டுக்கும் இடமில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி. ஆனாலும் ஆட்சியாளர்கள் ஏதோ ஒரு மந்திரமாயப் புரட்டுப் போல், இந்தியா ஓராட்சி முறையில் இயங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றனர். அதில் தங்கள் தந்நலவுணர்வு தவிர வேறு அடிப்படைகளைக் காரணங்களாக காட்டிவிட முடியாது. இந்த உணர்வும் ஒருமைப்பாடும் ஆட்டங் காண வேண்டிய காலம் வந்துவிட்டது என்பதையே பஞ்சாப், அசாம், நாகலாந்து, மிசோராம் முதலிய இனக் கலவரப் போராட்டங்கள் நமக்கு அறிவுறுத்துகின்றன.
தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில், தேசிய இன விடுதலை உணர்வு என்றோ கனிந்து பயன் நல்கியிருக்க வேண்டும். கொளுத்தப்பட்ட வெடி இடையில் அணைந்துவிட்டது போல், ஏனோ சூடு மங்கிக் கிடக்கிறது. இதற்கு மூலக் காரணம் இங்குள்ள பல்முனைப் போராட்ட முயற்சிகளே ஆகும். பல்முனைப் போராட்ட முயற்சிகள் எப்பொழுதும் இனவிடுதலையைப் பின்னடைவு செய்வன ஆகும் என்பதை, இங்குள்ள இன விடுதலைத் தலைவர்களாகத் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் அரசியல், குமுகாயத் தலைவர்கள் உணராமல் இருக்கிறார்கள். உணராமல் இருக்கிறார்களோ, அல்லது உணர்ந்தும் துணியாதவர்களாக இருக்கிறார்களோ, நாம் அவர்களைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்க நேரமில்லை.
தமிழினத்தின் ஒட்டுமொத்த நலமே, தமிழக விடுதலையில் தான் இருக்கிறது என்பதைத் தமிழின மக்களில் பெரும்பாலார் உணர்ந்திருந்தும், இவ் விடுதலை முயற்சிகள் ஏனோ இன்னும் இங்குத் தலையெழுச்சி கொள்ளாமல் இருக்கிறது. இவ்வெழுச்சி காலத்தால் தூண்டப்பெறுவதற்கும், வழிநடத்திச் செல்லப் பெறுவதற்கும் உரிய தலைவர்கள், மக்களைப் பல்வேறு திசைதிருப்பு முயற்சிகளில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தமிழினம் இன்று எழுச்சி கொள்ளாவிடில், இதன் உள்ளுணர்வும், உந்து வேகமும் காலத்தால் கரியாகிப் போய்விடும் என்று நாம் அஞ்ச வேண்டியுள்ளது.
எனவே, பஞ்சாபியரின் போர்க்குணமும், வீர வெடிப்புகளும் உடனடியாகத் தமிழர்களிடம் தோன்றியாக வேண்டும். அதன் உந்து விசையை ஒருமுகப்படுத்தும் ஒரு கூட்டு முயற்சி தமிழ்த்தேசிய இன விடுதலையை விரும்பித் தவங்கிடக்கும் இளைஞர்களிடையில் காழ்கொண்டு எழுச்சி பெறுதல் இன்றைய நிலையில் மிக மிக இன்றியமையாதது.
இதுதொடர்பாக, விரைவில் சென்னையில் ஒரு கலந்துரையாடலை நாம் தொடங்கியாக வேண்டும். அம் முயற்சியின் வரவேற்பைப் பொறுத்தது அதன் செயற்பாடு, எனவே, இம்முயற்சியை முழுமனவுணர்வுடன் வரவேற்கும் தனி மறவுணர்வுள்ளங்களும், ஆங்காங்குக் கிளர்ந்துள்ள இன விடுதலைச் சிற்றியக்கங்களும் ஒன்றிணைந்து ஒரு விடுதலைக் கூட்டணியை உருவாக்க முன்வருதல் வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். அத்தகைய துணிவான செயல்களுக்குத் தம்மை உள்ளாக்கிக்கொள்ள விழையும் உணர்வாளர்கள் உடனடியாக எங்களுக்குத் தம் உறுதி மொழிகளை வழங்கக் கேட்டுக் கொள்கிறோம்! வெல்க, தமிழ்த்தேசிய இன, நாட்டு விடுதலை முயற்சிகள்!
- தமிழ்நிலம், இதழ் எண், 39, சூன், 1984
இந்தியாவின் ஒற்றுமை, தேசிய இனங்களின்
உரிமையில்தான் ஏற்படமுடியும்!
இந்திராகாந்தி எவருக்கும் கட்டுப்படாத ஒரு முழு வல்லாண்மை அதிகாரிபோல் செயல்பட்டு வருவது, இந்தியாவை ஒற்றுமைப்படுத்தும் அவரின் நோக்கத்துக்கு நேர் மாறான விளைவை உண்டாக்கக் கூடியது. எதற்கெடுத்தாலும் அடக்குமுறைப் பாணியைக் கையாளும் அவரின் ஆட்சி உத்தி பாராட்டக் கூடியதன்று. குமுகாய அறிவியல் சிந்தனையற்ற அவரின் வெறி ஆளுமைப் பேர்க்கு மிகவும் கண்டிக்கத்தக்கது. படைத்துறையை அவர் மனவிருப்பதிற்குகந்தவாறு பயன்படுத்துவது, அவரின் அரசியல் முன்னறிவைக் காட்டாது. நாட்டில் பல்வேறு சீர்திருத்தம் மண்டிக்கிடக்கின்றபொழுது, அவரின் அரசியல் கையாளுமையால், மேலும் மேலும் வறுமையும், குமுகாயக் கொடுமைகளும் சட்டப் புறம்பான செயல்களுமே தீவிரமடைகின்றன.
தேசிய இனங்களின் எழுச்சியைக் குமுகாயக் குற்றமாக மதித்து அதை அழித்து ஒழித்துவிட நினைக்கும் அவரின் தன்னதிகார வெறிப் போக்கால் நாடே சிதைந்து சீர்குலையப்போகிறது. ஆட்சிப் பகிர்வால் ஏற்பட விருக்கும் ஆக்க நிலைகளை அவர் சிந்திக்க மறுக்கிறார். ஏறத்தாழ ஐம்பது கோடி ஏழை மக்களைத் தேசிய ஒருமைப்பாடு, என்னும் கற்பனைப் படுகுழியில் இறக்கிப் பட்டினி போட்டுக் கொல்லப் பார்க்கிறார். இந்திரா. இதற்கு, பஞ்சாப் சிக்கலைப் பகடைக்காயாகவும் துருப்புச் சீட்டாகவும் பயன்படுத்தப் பார்க்கிறார். இந்தியாவின் ஒற்றுமையே தேசிய இனங்களின் உரிமையின் அடிப்படையில்தான் ஏற்பட முடியும் என்பதை அவர் ஒத்துக்கொள்ள மறுக்கிறார். அவரின் தனிப்பட்ட விருப்பத்தையே இந்தியாவின் உள்நாட்டு, அயல்நாட்டுக் கொள்கையாக ஆக்கிவிடப் பார்க்கிறார்.
மக்களைச் சார்ந்துதான் ஓர் ஆட்சி இயங்க முடியுமே தவிர ஆட்சியைச் சார்ந்து மக்களை இயக்கிவிட முடியாது என்னும் அரசியல் அடிப்படைப் பாடத்தையே இந்திரா கற்றுக் கொள்ளவில்லை என்று தெரிகிறது. புராண இதிகாச காலங்களைப் போல, அரசியல், அறிவியல், மக்கள் உரிமையியல் வளர்ச்சிபெற்ற இக் காலத்தையும் கருதிக்கொண்டு அரசின் அனைத்துக் கருவிகளையும் உறுப்புகளையும் தம் அரசியல் நிலைப்பாட்டுக்காகவும், கட்சி வலிவிற்காகவும், தன்னலத்துக்காகவுமே பயன்படுத்தி வருகிறார், இந்திரா.
வறுமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு, பொருளியல் சுரண்டல்கள் ஒழிப்பு முதலிய அனைத்துக் கோட்பாடுகளையும், முயற்சிகளையும், இந்திய தேசிய ஒருமைப்பாடு என்னும் எப்பொழுதுமே மெய்யாக முடியாத பொய் மாயைப் புனை சுருட்டுப் போலிக் கொள்கையுள் மூடி மறைத்துவிட அவர் முயற்சி செய்வது, விரிசல் விட்டு விழுந்து விடப்போகும் சுவருக்கு வெள்ளையடிக்க முற்படுவதைப் போன்றது. கொள்ளைக்காரர்கள் மக்களைச் சுரண்டி ஏப்பமிடத் துடிக்கும் அரசியல் ஊதியக்காரர்கள், முழுத் தந்நலக்காரர்கள், சில இந்தி வெறியர்கள் முதலியவர்களுக்காக, முழு இந்தியாவையும் சீர்குலைத்துவிடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அவர், நிலைமை இப்படியே போனால், இந்தியா சுக்கு நூறாகச் சிதைந்து போகும் என்பதை ஏனோ அவர் உணர்ந்துகொள்ள மறுப்பதாகத் தெரிகிறது.
இந்திரா இல்லை, வேறு எவர் முனைந்தாலும் இந்தியாவில் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்ட உணர்ச்சியை, மெய்ம்மத்தை ஒடுக்கிவிட முடியாது. அவை உரிமை பெறுவதைத் தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதை இந்திராகாந்தியும். அவரைக் கண்கண்ட கடவுளாக மக்களுக்குக் காட்டிக் காசு பறிக்கும் அரசியல் கொள்ளைக்காரர்கள் சிலரும் கருத்து நொள்ளையர்கள் பலரும் உணர்ந்துகொள்ள வேண்டுகிறோம்.
பொய்யான, கருத்துப் பரப்புதல்களாலும், போலியான நடைமுறைகளாலும் மக்களை என்றுமே ஏமாற்றிவிட முடியும் என்று மனப்பால் குடித்துக்கொண்டிருக்கும் அரசியல் கயவர்களுக்கும், ஆட்சித் திருடர்களுக்கும் நாம் சொல்ல விரும்புவது இதுதான் படைத்துறையையும் பதினக் கருவிகளையும் வைத்துக் கொண்டு மக்களின் உள்ளுணர்வுகளை என்றுமே சிறைப்படுத்தி விடலாம் என்று கனவு காணாதீர்கள். மக்கள் என்றுமே மெதுவாகச் சிந்திப்பவர்கள்; ஆனால் விரைவாகச் செயல்படுபவர்கள். அவர்கள் தூங்கலாம்; ஆனால் விழித்துக் கொள்ள நெடுநேரம் ஆகாது.
மக்கள் ஆற்றல் ஓர் எரிமலையைப் போன்றது. அ’து எப்பொழுது வெடிக்கும் என்று எவருமே கணித்துச் சொல்லிவிட முடியாது. இந்தியா முழுமையுமே பஞ்சாபாக மாறும் காலம் மிகத் தொலைவில் இல்லை! மாவீரன் பிந்தரன் வாலேயை வழிபடுகின்ற இளைஞர்கள் பஞ்சாபில் மட்டுமன்று வேறு மாநிலங்களிலும் இலக்கக் கணக்கில் உள்ளனர். அவர்கள் உங்களின் சொல் விளையாட்டு வேடிக்கைகளை உணர்ந்து வருகிறார்கள்! அவர்களின் செயல் விரைவில் எழுச்சி கொள்ளத்தான் போகிறது! எச்சரிக்கை!
- தமிழ்நிலம், இதழ் எண். 40, சூலை 1884
தமிழினமே ஒன்றுபட்டு இயங்குக!
தமிழின விடிவிப்புக்கான காலம் கனிந்துள்ளது. ஆனால் வீணே கழிந்துகொண்டுள்ளது. நம் தேசிய விடுதலைக்குரல் வலிவாக இன்னும் தில்லிக்குப் படவில்லை. தமிழீழ விடுதலைக்கே தில்லி செவிசாய்க்கவில்லை. செவிசாய்க்கும் என்னும் நம்பிக்கை இல்லை. இந்த நிலையில் தமிழக விடுதலைக் குரலை அவர்கள் மதிக்கப் போவதே இல்லை இந்தியாவில், அன்றைய நிலையில் அசாம், பஞ்சாப், மிசோரம், நாகாலாந்து, ஒரிசா முதலிய பல மாநிலங்களில் தேசிய இன விடுதலைக்கான முயற்சிகளும் முத்தாய்ப்புகளும் தொடங்கிவிட்டன. இந்தியாவிலிருந்து தேசிய இன விடுதலை பெறுவதற்குரிய தகுதி தேவையும் பெற்ற முதல் மாநிலம் தமிழகமே!
ஆனால் இது கண்மூடி அடிமைப்பட்டுக் கிடப்பது பெரிதும் வருந்தத்தக்கது. அனைத்துலகும் ஒன்று எனும் எண்ணம் வேறு; அனைத்துரிமைகளும் பெறவேண்டும் என்னும் கோரிக்கை வேறு. முன்னது பொதுவானது பின்னது சிறப்பானது! மேலும் இந்திய அரசு நமக்குள்ள உரிமைகளை என்றுமே முழுமையாக வழங்கப் போவதில்லை. மாறாக, நம்மினத்தின் தனிச்சிறப்புக் கூறுகளையும் நலன்களையும் ஒன்றுமற்ற பிற காட்டு விலங்காண்டி இனங்களுடன் பங்கு போட்டுக் கொள்ளவே திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. நூறை இழந்து ஒன்றைப் பெறுவதே நமக்குப் போதும் என்று கருதிவிடக் கூடாது. இந்திக்கு நூறு கோடி! தமிழுக்கு ஓர கோடி! இந்தியை விட தமிழ் நூறு மடங்கு தாழ்ந்ததா? மூடர்களையும் அடிமைகளையும் தவிர, அறிவுள்ளவர்களும், உணர்வுள்ளவர்களும் இதை எப்படி ஏற்க முடியும்? எண்ணிப் பார்க்க வேண்டும்.
தமிழர் அனைவரும் ஒன்றிணைந்து ஓங்கிக் குரல் கொடுத்தால் தவிர, நமக்குள்ள எல்லாமே இன்னும் சில ஆண்டுகளில் பறிபோய்விடும். இந்தத் தலைமுறையில் நாம் நடுவணரசிடமிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள வில்லையானால், வேறு எப்பொழுதுமே எந்தச் சூழ்நிலையிலுமே நம்மை விடுவித்துக் கொள்ள முடியாமற் போய்விடும். பின்னர் என்றென்றுமே நாம் அடிமைகளாகத்தான் கிடக்க வேண்டும்!
இன்றைய நிலையில் இந்தியத் தேசியம் என்னும் பெயராலும், ஒருமைப்பாடு என்னும் பெயராலும் நம் மொழி, பண்பாடு, கலைகள் ஆகிய அனைத்துக் கூறுகளுமே ஆரியப்படுத்தப்படுகின்றன. நம் இலக்கியங்கள், வரலாறுகள் அனைத்தும் மூடிமறைக்கப்படுகின்றன. மற்ற இனங்களுக்கு அஃது ஊதியம்; நமக்கு இழப்பு! இந்த நிலைகள் தொடருமானால், பிற முன்னேறாத இனங்களுடன் நாமும் முன்னேறாத இனமாகவே கிடக்கவேண்டும். இது கொடுமை! மிக மிகக் கொடுமை! இஃது ஓர் இன அழிப்பு முயற்சியே!
இந்தியாவிலேயே மிகவும் பண்பட்ட, அறிவு வளர்ச்சியுற்ற, மிகச்சிறந்த மூத்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழினம், வேறு காட்டு விலங்காண்டி இனங்களுடன் ஒன்றிணைந்து தன் தனிச்சிறப்பியல், கூறுகளை இழந்து கொண்டு, பின்தங்கிக் கிடக்க வேண்டும் என்னும் அறியாமைக்கும் அடிமைப்படுத்தத்திற்கும் நாம் இசைந்துவிடக் கூடாது. நமக்கென்று நம் நாட்டை நாம் பெற்றுத் தீரவேண்டும் என்பதைக் கட்டாயக் கடமையாகக் கொள்ள வேண்டும்.
தில்லிக்கு நேர் எதிர் முயற்சிகளைத் தமிழகமும் தமிழர்களுந்தாம் செய்ய முடியும். ஏனெனில் ஆரியத்துக்கு நேர் எதிரான கூறுகளைக் கொண்டது தமிழினமே! எனவேதான் தமிழினத்தை ஒருமைப்பாடு என்னும் பெயரால் தில்லி, ஒடுக்கப் பார்க்கிறது. ஒழிக்கப் பார்க்கிறது. இதற்கொரு சிறந்த எடுத்துக்காட்டு தமிழீழச் சிக்கலில் அது கையாளுகின்ற முறையே. தமிழினத்தை மறைமுகமாக அழிக்கின்ற சூழ்ச்சியையே, தமிழீழச் சிக்கவில் தில்லி அரசு கையாள்கிறது. இங்குத் தில்லிக்கு அடிமையாகிக் கிடக்கும் பேராயக் கட்சிகள் இந்த உண்மையை உணர்ந்து, தமிழின உணர்ச்சி பெற வேண்டும்.
இங்குள்ள முன்னணித் தலைவர்கள் பிற சிறிய இயக்க முயற்சியாளர்களை முன்வைக்கக் கூடாதென்னும் சூழ்ச்சியைக் கையாண்டு வருகின்றனர். அவர்கள் வேண்டுவதெல்லாம் பொருளும் புகழும் பதவிகளுமே! இவற்றோடு தமிழின முன்னேற்ற முயற்சியை ஒன்றாகக் கருதிவிடக் கூடாது. எனவே அவர்களின் தன்முனைப்புச் சூழ்ச்சிகளைத் தவிர்த்துக்கொண்டு, தமிழ்த்தேசிய இன விடுவிப்புக்கான முயற்சிகள் அனைத்தையும் ஒன்று கூட்டி வலிவுபடுத்த வேண்டும். இதனைச் செய்வதற்கு அவர்கள் தவறுவார்களானால், அவர்களின் வரலாறு வெறும் குப்பை மேடுகளாகிவிடும் என்று எச்சரிக்கின்றோம்.
இப்பொழுதுதான், தமிழின விடுதலை முயற்சிகளை முன்வைப்பதற்கான காலம் கனிந்துள்ளது. எனவே காலங் கருதாத வேறு எந்த முயற்சியும் இப்பொழுது தேவையில்லை. இந்தியெதிர்ப்புகூட, தனி நிலையில், நமக்கு வெற்றியைத் தேடித் தராது. தமிழகம் தனி நாடாவதே இக்கால் நம் எடுத்துச் செல்லும் முழு முயற்சியாகவும் முதல் முனைப்பாகவும் இருத்தல் வேண்டும். அதற்குத் தமிழினம் ஒன்றுபட்டாகல் வேண்டும். தமிழினமே ஒன்றுபட்டு இயங்குக!
-தமிழ்நிலம், இதழ் எண். 55 ஏப்பிரல், 1985
நம் நெடுநாளையக் கனவான தமிழக
மக்கள் விடுதலைக் கூட்டணி, அமைந்தது!
இப்பொழுதுள்ள இந்திய அரசியல், மற்றும் பொருளியல் குமுகாயச் சூழலில், தமிழ்நாடு தன்னிறைவு பெற முடியாதென்றும், முன்னேற்றம் அடைய முடியாதென்றும், கருதி, தமிழகத்தில் உள்ள பாராளுமன்ற அரசியல் சார்பற்ற முறையிலும், மக்கள் நலன் கருதியும் இயங்கிவரும் ஐந்து இயக்கங்கள் ஒன்றிணைந்து, தமிழக மக்கள் விடுதலைக் கூட்டணி என்னும் ஓர் அமைப்பை அண்மையில் உருவாக்கியுள்ளன.
அவ்வியக்கங்களாவன: 1. உலகத் தமிழின முன்னேற்றக் கழகம், 2. பெரியார் சமஉரிமைக் கழகம், 3. அறிவியக்கப் பேரவை, 4. தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிய இலெனினிய), 5. தமிழக மாநிலக் குழு, இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மா.இலெ. நடுவண் சீரமைப்புக் குழு).
இந்த வலிவான அமைப்பு ஏற்பட்டதன் வழி, தந்தை பெரியார் அவர்களின் வலிந்த, தலையாய கொள்கையும், நம் நீண்ட நாளைய கனவும் நிறைவேறுகின்றன. இக் கூட்டணியின் ஒரே கொள்கையாகத் தமிழகத்தின் விடுதலை உறுதி செய்யப்பெற்று, அது வெளியிட்டுள்ள இயக்க அறிவிப்பு அறிக்கையில் அதன் கொள்கை கீழ்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது.
'அனைத்து வல்லரசுகளின் கொள்ளைகளைக் குழிதோண்டிப் புதைக்கவும், அரசு - தரகு முதலாளியத்தின் மற்றும் அதிகார வகுப்பின் கொட்டங்களை ஒழிக்கவும், சாதிய - நிலக்கிழமை அடிமைத்தனத்திற்கு முடிவு கட்டவும், உண்மையான மக்கள் குடியாட்சியை அமைத்திடவும், தமிழக மக்களின் விடுதலையைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது இக் கூட்டணி.
'அவ்வகையில் இந்தியாவில் வாழும் பிற தேசிய இனங்களின் புரட்சி வழி விடுதலைக்குச் செயல் வடிவமும் ஆதரவும் அக் கூட்டணி நல்கிடும். மற்றும் உலகில் போராடும் அனைத்து மக்களின் உரிமைப் போராட்டங்களுக்கும் 'தமிழக மக்கள் விடுதலைக் கூட்டணி' பக்கத் துணையாக நிற்கும்.
கூட்டணி வெளியிட்டுள்ள விரிவான நான்கு பக்கமுள்ள இயக்க அமைப்பின் அறிவிப்பு அறிக்கையில், இவ்வியக்கம் எதற்காகத் தோற்றுவிக்கப் பெற்றது என்பதற்குப் பலவாறான மிக விளக்கமான காரணங்கள் தெளிவாகக் கூறப்பெற்றுள்ளன.
இப்பொழுதைய நிலையில் இந்தியா ஒரு சிறைக் கூடமாக உள்ளதென்றும், தமிழகத்தின் சிற்றூர்ப்புறங்கள் வல்லரசுகளின்; பெரும் நிலக்கிழார்களின் வேட்டைக்காடாக எவ்வாறு ஆக்கப்பட்டுள்ளனவென்றும், தமிழக மக்களின் வேலைவாய்ப்பைப் பெருக்கவும், முறையான வேளாண்மையை வளர்க்கவும், குடியிருப்பு, உடை, உடல்நலம், கல்வி போன்ற அடிப்படைத் தேவைகளில் தன்னிறைவு அடையவும், இங்குள்ள வளங்கள் அனைத்தையும் பெருக்கிடும் வகையிலும், தொழில் திட்டங்கள் அமையாமல், எவ்வாறு அவை வல்லரசு மற்றும் முதலாளிய நாடுகளுக்கும், இந்தியப் பெரும் தரகு முதலாளியக் கும்பலுக்கும், அதிகார வகுப்பிற்கும், பெரும் நிலவுடைமையாளர்களுக்கும் கொள்ளையடிப்பதற்கே வழி வகையாக உள்ளன என்றும், இக்கால் இந்தியா கடைப்பிடிக்கும் வாணிகக் கொள்கை, எப்படி இந்தாட்டை வல்லரசுகளிடம் அடகுவைத்துள்ளது என்றும், இங்குள்ள கெடுக்கும் கல்விமுறை; எப்படி, இங்குள்ள ஏழை மக்களிடம் தாழ்வுணர்ச்சியையும், இயலாமையையும், அடிமைத் தனத்தையும் வளர்த்து வருவதுடன், மேட்டுக்குடியினரிடையே ஒட்டுண்ணித்தனத்தையும் நாட்டு நலனற்ற தந்நலத்தையும், கோழைத்தனத்தையும் வளர்ப்பதற்கே அமைக்கப்பட்டிருக்கின்றது என்றும், மற்றும், இங்குள்ள மொழியடிமைத்தனம், சாதிக் கொடுமை, சீரழிந்து வரும் மக்கள் நலம், பண்பாட்டுச் சீரழிவுகள் – முதலியவற்றையெல்லாம் சுட்டிக்காட்டி அவை எப்படித் தீர்க்கப்பட வேண்டும் என்றும், அறிக்கை விரிவாகவும் விளக்கமாகவும் விளத்தப்படுத்துகிறது.
இன்றுள்ள தமிழக அரசு, எத்துறையிலும், தற்சார்பின்றித் தில்லியிலுள்ள நடுவண் அரசிற்கும் அதன்வழி பல்வேறு வல்லரசு நாடுகளுக்கும், தலைகுனிந்து, எடுபிடி அரசாகவே செயல்பட்டு வருவதையும்; இங்குள்ள அரசியல் கட்சிகளும், தங்களுக்கென்று தாங்கள் தொடக்கத்தில் அறிவித்த கொள்கைகளையும் கோட்பாடுகளையும் செயல்முறைகளையும், அவற்றுக்கான நயன்மையான மக்கள் போராட்டங்களையும் வழிநடத்த முடியாமல் மறந்தும், துறந்தும் பெருநலந் துய்க்கின்ற வாழ்க்கையிலேயே மிதந்து, இலக்கக் கணக்கில் செலவு செய்து, கோடிக் கணக்கில் பணம் ஈட்டுவதையே குறிக்கோளாகக் கொண்டு, இந்திய ஆளும் கும்பலுக்கு ஏவலாட்களாக, நேரத்திற்கு ஒரு கட்சி, நிமையத்திற்கு ஒரு கொள்கை என்று பச்சோந்தித்தனமாகச் செயல்பட்டு வருவதையும் இவ்வறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.
இறுதியில், முற்ற முடிந்த முடிபாக, மேற்குறிப்பிட்ட இழிநிலைகளையெல்லாம் ஒழித்துத் தமிழக மக்களுக்கு உண்மையான – வளமான வாழ்வை உறுதிப்படுத்திட வேண்டுமெனில், அனைத்து வல்லரசு நாடுகளின் வல்லாளுமைகளை எதிர்ப்பதும், பன்னாட்டு மூலமுதலீடுகளையும், இந்தியப் பெரு முதலாளிகளின் மற்றும் தமிழகத் தரகு முதலாளிகளின் மூலமுதலீடுகளையும் பறிமுதல் செய்து, உழைக்கும் மக்களின் உடைமையாக்குதல் வேண்டும் என்பதையும், பெரும் நிலக்கிழார்களின், கோயில் மடங்களின் நிலங்கள், உடைமைகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து, கடைநிலைக் குத்தகைக்காரர்களுக்கும், கூலி உழவர்களுக்கும் உடைமையாக்கிடல் வேண்டும் என்பதையும், மக்களுக்கு நன்மை பயக்கும் உண்மையான மக்கள் சமநிலைக் குடியாட்சியை அமைத்துத் தருவதன் மூலம் மட்டுமே இவை அனைத்தையும் செய்திட இயலும் என்பதையும், இன்றைய அரசியல் சிறைக்கூடத்தில் அல்லலுற்றுக் கிடக்கும் நிலையில், மக்களுக்கு நன்மை பயக்கும் இந்த அடிப்படையான பணிகளை மேற்கொள்ள முடியாது என்பதையும் தெளிவாக எடுத்துக்காட்டி, இச்சிக்கல்களையெல்லாம் தீர்ப்பதற்குத் தமிழக மக்கள் விடுதலை என்பதே ஒரு கட்டாயக் கடமையாக இருக்கிறது என்றும் அவ்வறிக்கை தெரிவிக்கிறது.
எனவே, இக் கூட்டணி எடுத்துக் கொண்ட மிக மிகக் கடுமையானதும் மிகவும் சுமையானதுமாகிய இக் குறிக்கோள்களுக்குச் செயல் வடிவம் நல்கிட தமிழகத்து இளைஞர்களையும், தொழிலாளர்களையும், உழவர்களையும், பிற அனைத்துத் தரப்பு மக்களையும், தமிழக மக்கள் விடுதலைக் கூட்டணி அறைகூவி அழைக்கிறது! வாழ்க கூட்டணி! வளர்க புரட்சி! வெல்க மக்களியக்கம்! விடுதலை பெறுக தனித்தமிழ்நாடு!
— தமிழ்நிலம், இதழ் எண். 49, திசம்பர், 1984
இந்திய அரசு, தன் நாட்டு மக்கள்
மீதே போர் தொடுக்கிறது!
இந்திய அரசு, தன் நாட்டு மக்கள் மீதே போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. மக்களின் உண்மையான உரிமை எழுச்சிகளை அடக்கவும், ஒடுக்கவும். முறியடிக்கவும் அதில் அவர்களை வெற்றி கொள்ளவும், போர் முயற்சிகளைக் கடுமையான கொடுமையான கருப்புச் சட்டங்கள் வழியாகவும், போர், படைத்துறைகளை ஏவிவிட்டும், காவல் துறையைக் கட்டவிழ்த்து விட்டும், மக்களை அடித்தும், நொறுக்கியும், வன்கொடுமைச் சிறையிலிட்டும், சுட்டுப் பொசுக்கியும் அழித்துக் கொண்டுள்ளது. இது மிகவும் கொடுமையானது அரக்கத்தனமானது; குடியரசு கோட்பாட்டுக்கே முரணானது; அம் முறைக்கே உலைவைப்பது.
ஒப்போலை முறையில், அதுவும் பண மூட்டைகளையும், படை, காவல் துறைகளையும் வைத்துக்கொண்டு, மக்களைக் கவர்ச்சியால் உறுதி மொழிகளால் ஏமாற்றியும் விளம்பரங்களால் ஏமாற்றியும் அவை செல்லுபடியாகாத விடத்தில் மக்களை மிரட்டியும் கொடுமைப்படுத்தியும் தில்லுமுல்லுகள் செய்தும் தேர்தலில் பெரும்பான்மை பெற்று, ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டு மக்களின் உரிமைக் குரல்வளைகளைத் நெரிக்கும் வகையில், அவர்களைக் கொடுங்கோல் முறைகளில் அடக்கி யாண்டு வருகிறது நடுவண் அரசு எனப்படும் இந்திராப் பேராய ஆட்சி!
இந்தியா விடுதலை பெற்று பல ஆண்டுகளாகியும் இங்குள்ள பெரும்பான்மை மக்களைப் பட்டினி போட்டும் வாழ்வதற்குரிய வழிவகைகளை அமைத்துக் கொடுக்காமலும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, இந்நாட்டு முதலாளிகளுக்கே ஆக்கமான பல சட்டதிட்டங்களை அமைத்துக் கொடுத்து, அவர்களின் நிழவிலேயே தன் வல்லதிகாரங்களை வளர்த்துக் கொண்டு வருகிறது, இந்திராப் பேராயம்.
வெள்ளையராட்சியைக் கொள்ளையராட்சி என்று குறை கூறினர், இந்நாட்டின் புரட்டல் தேசிய அரசியல்காரர்கள். ஆனால், அவர்கள் என்றுமே ஏழைகளைக் கொள்ளையடித்ததில்லை. கொடுங்கோலர்கள் என்று வண்ணித்தார்கள்; ஆனால் அவர்கள் என்றுமே பாட்டாளிகளுக்கும் உழவர்களுக்கும் எதிராகப் போர் தொடுத்ததில்லை. வெறும் வெற்றுத் தேசிய உணர்ச்சிகொண்ட போராட்டக்காரர்களையே வேளை வந்த பொழுது அடக்கி ஒடுக்கினார்கள். அதே வேளை முகிழ்த்தபொழுது இந்திய நாட்டின் ஆளுமை உரிமையை இவர்களிடம்தூக்கிக் கொடுத்து விட்டு இந்நாட்டை விட்டே நாணயமாகவும், பெருந்தன்மையாகவும் வெளியேறினார்கள். பொதுமக்களை நோக்கி ஒரு போதும் அவர்கள் தம் வல்லதிகாரப் போக்குகளைக் கையாண்டதில்லை. இதை வரலாறு பேசும் வாழ்வியல்கள் உறுதிப்படுத்தும் அவர்களுடைய ஆட்சி எச்சங்கள்தாம் இன்று நம் நாட்டில் கல்விக்கூடங்களாகவும், கலைக்கழகங்களாகவும் பாரளுமன்றங்களாகவும், கோட்டைகளாகவும் கொத்தளங்களாவும் ஏன் அரசியல் சட்டங்களாகவும், அறமன்றங்களாகவும் கூட ஒளி வீசி, அவர்களின் ஆட்சியின் மாட்சியை உலகுக்கே உணர்த்திக் கொண்டிருக்கின்றன. அவர்கள் இந்தியாவைக் கைப்பற்றினார்கள்; ஆனால் என்றென்றும் ஆட்சி செலுத்த விரும்பியதில்லை. மக்களை ஆளவிரும்பினார்கள்; ஆனால், அடிமைப்படுத்த விரும்பவில்லை. மக்களுக்குக் கல்வி கற்பித்தார்கள்; அறியாமையைப் போக்கினார்கள்; ஆளுமையைச் சொல்லிக் கொடுத்தார்கள் அறநெறியை நிலைநாட்டினார்கள்! அவர்களுக்கு முன் இங்கே நால்வருணக் கோட்பாடும். மனு அதர்ம ஆட்சியும் முப்புரி நூலுந்தானே மக்களை ஆண்டு கொண்டிருந்தன! வெள்ளையர்களன்றோ மக்களுக்கு வாழ்வியலைக் கற்றுத்தந்த வள்ளல்கள் அறிவியலை ஆற்றுப்படுத்திய அறிஞர்கள்! அறவியலை நிலைநாட்டிய அறவோர்கள்! நாகரிகத்தை நல்கிய நயன்மையாளர்கள் பொதுமையை வித்திட்ட புதுமையாளர்கள்! அவர்களுக்கு முன்னர் இங்கு சாதிகள் தாமே ஒழுக்கம் சமயங்கள் தாமே ஆட்சி நெறி! பண்டாரங்கள் தாமே பள்ளியாசிரியர்கள் கோயில் தாமே கண்காட்சிகள்! திருவிழாக்கள் தாமே குமுகாய நெறிக் கருத்தரங்குகள்
ஆனால், இன்று, இங்கு, நிலைமைகள் மீண்டும் தலைகீழாக அன்றோ மாறிவருகின்றன. மதப்பித்தர்கள் ஆட்சிக் கட்டில் ஏறுகிறார்கள்; பண மூட்டைகள் பதவிகளில் அமர்கின்றன; கொடுமையாளர்கள் அதிகாரங்களைக் கைப்பற்றுகின்றனர்; பழமைக்கு மீண்டும் ஆலவட்டம் வீசப்படுகிறது! புதுமைக்கு மீண்டும் கதவடைப்பு செய்யப்படுகிறது! அறியாமை அறிவியலுடன் கைகோத்துக் கொண்டு, உலா வருகிறது. முதலாளியக் கோமான்கள் நாட்டையே விலை பேசிக் கொண்டிருக்கிறார்கள்! மதங்கள் மெருகூட்டப் பெறுகின்றன! சாதிகள் சதிராட்டம் போடுகின்றன! கொள்ளையர்கள் திட்டங்கள் தீட்டுகின்றனர்! கொடுமையாளர்கள் சட்டங்களை உருவாக்குகின்றனர்! இங்கே இப்பொழுது அறமெங்கே? ஆட்சியெங்கே? ஆள்பவர்கள் தாம் எங்கே துமுக்கியும் குண்டுகளும், நச்சுப்புகைகளும், தகரிகளும் அன்றோ ஆட்சி செய்கின்றன! படைத்துறைகளும் காவல்துறைகளுமன்றோ அதிகாரங்களைக் கைகளில் எடுத்துக் கொண்டன! நாள்தோறும் எத்தனைத் துமுக்கிச் சூடுகள்! எத்தனைக் கொடுமைச் சாவுகள் ! எத்தனையெத்தனை உறுப்புச்சிதைவுகள்! எத்தனை யெத்தனைக் கற்பழிப்புகள்! இராசீவ் காந்தியின் மனைவியும் நடுத்தெருவில் காவலின்றிப் போக முடியாதே!- இது முடியாட்சியை வீழ்த்திய குடியாட்சி நாடு! இங்கு வாழ்க அன்னை (வந்தே மாதரம்) பாட்டு இசைகள்! தூ! இஃதொரு நாடா? இதற்கோர் அரசா? வெட்கம்! வெட்கம்!
இந்தக் கேடுட்ட நாட்டில்தான், வறுமையைப் போக்கச் சட்டங்கள் இல்லை; வலிந்துகேட்பவர் (வன்முறையாளர்) களுக்குச் சாவுத் தண்டனையாம்! மக்கள் குடியிருப்புக்கு வக்கில்லை; கோரிக்கையாளர்களுக்கு வாணாள் சிறையாம்! படித்த இளைஞர்களுக்கு வேலையில்லை; பதவி வெறியர்களுக்குப் பல்வேறு அதிகாரங்களாம்! காந்தி பிறந்த நாடாம் இது விளம்பரப்படுத்துகிறார்கள்! ஆனால் கயமைக்கும். களியாட்டத்துக்குமே இங்கு வாழ்க்கை, ஆனால், இவர்கள் சுட்டியுரைக்கும் வன்முறையாளர்களும், கொடுமையாளர்களும் யார்? அவர்கள் எங்கே தோன்றினர்? ஏன், அவர்கள் கருவிகளைக் கையிலெடுத்தார்கள்? அவர்களின் கோரிக்கைகள் என்ன? போராட்டங்களை ஏன் செய்கிறார்கள்? மீண்டும் இந்தப் புனித(!) நாட்டை வெள்ளைக்காரனிடம் ஒப்படைக்கக்கேட்டார்களா? ஆளுநரும் (கவர்னரும்) அரசப் பகராளரும் (வைசிராயும்) மீண்டும் இந்நாட்டை ஆளுமை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனரா? இல்லை, நாணயம் அடிக்கத்தான் தங்களுக்கு உரிமை வழங்க வேண்டும். என்று வழக்காடினார்களா? இல்லை, இல்லை. அவர்கள் கேட்பது மொழி உரிமை! இனநல உரிமை வாழ்வியல் உரிமை தன்னாட்சி உரிமை! வறுமைக்கு மருந்து உரிமைக்கு விடுதலை! அவர்கள் ஏன் அவற்றை வேண்டினர்?
அனைத்து இனங்களுக்கும், அனைத்து நாகரிகங்களுக்கும், பண்பாடுகளுக்கும். அனைத்து மொழிகளுக்கும் பொதுவான இந்நாட்டை, ஓரினமே, ஒரு நாகரிகமே ஒரு பண்பாடே, ஒரு மொழியே ஆள்வதற்கு முற்றாட்சி உரிமை கேட்கிறது. அதனால் பிற இனங்களை, பிற தேசிய இன நாகரிகம் பண்பாடுகளை அழிக்கிறது; பிற தேசிய இன மொழிகளைச் சிதைக்கிறது! இவையனைத்தும் மதத்தின் பெயரால். ஒருமைப்பாட்டின் பெயரால், ஒற்றுமையின் பெயரால் துமுக்கிகளின் துணையைக் கொண்டு குண்டுகளின் வலிமைகளைக் கொண்டு படையாளிகளையும் காவலாளிகளையும் சார்பாக வைத்துக் கொண்டும் செய்யப்படுகின்றன. சீரழிக்கப்படுகின்றன!
பேசிப் பார்த்தார்கள் மக்கள்! கோரிக்கை விடுத்துப் பார்த்தார்கள், தங்கள் வாழ்வைப் பறிகொடுத்தவர்கள்! எழுதிப் பார்த்தார்கள், அறிஞர்கள்! ஏனென்று கேட்கவில்லை அரசு! அணியணியாகத் திரண்டு, மாநாடுகள் கூட்டி, அமைதியான , மென்மையான, வேண்டுகோள்கள், தீர்மானங்கள் முழக்கங்கள் முதலிய அனைத்தும் இந்நாட்டு ஆட்சியாளர்களை மேலும் மேலும் வலிந்த ஊமையர்களாக்கின; செவிடர்களாக்கின; செருக்குடையவர்களாக மாற்றின. இறுதியில் இறுமாப்புடையவர்களாக மாறினர் அரசினர்; நெருக்கடி நிலைகள் வந்தன கருப்புச் சட்டங்கள், உருவாக்கப்பட்டன! மிசாக்கள் தோன்றின; சிறைச் சாலைகள் நிரப்பப்பட்டன. தலைவர்கள் சிறைக்குள்ளே வைக்கப்பட்டார்கள்; வெளியே அடிதடிகள்; கண்ணீர்ப்புகைகள் குண்டு வெடிப்புகள்; அடாவடித்தன அடக்குமுறைகள்; கொடுமைக் கொலைகள்; தீ வைப்புகள்:- இவற்றை ஆட்சியாளரின் கைக்கூலிகள் செய்தனர். அரம்பர்கள் (ரெளடிகள்) செய்தனர்; அவர்களால் ஏழைகளின் இருப்பிடங்கள் தகர்க்கப்பட்டன. அவர்களின் குடியிருப்புகள் பற்றியெரிந்தன: அவர்களின் விளைநிலங்கள் பறிக்கப்பட்டன ஊர்விட்டு ஊர். மாநிலம் விட்டு மாநிலம் என்று அந்த ஏழைக் குடிமக்கள், வாயில்லாப் பூச்சிகள், புன்மைத் தேரைகள் - ஓடியும் ஒளிந்தும், உயிர்களைக் காத்துக் கொள்ள முயற்சி செய்தனர் ஆனால், பல இடங்களில் பல நேரங்களில், பல காலங்களில் அவ்வேழை உயிர்கள் அவ்வெலும்புக்கூடுகள், இந்நாட்டு மண்ணில் கிளர்ந்த மண் புழுக்கள். ஒட்டு மொத்தமாகப் பிடிக்கப்பட்டன: உயிரோடு புதைக்கப்பட்டன; உயிர்த்துடிப்புள்ளவை சாகடிக்கப்பட்டன; உடலோடும் உணர்வோடும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன!
இவற்றுக்கெல்லாம் அரசு என்ன காரணம் சொன்னது? அவர்கள் தீவினையாளர்கள்; வன்முறையாளர்கள்; கொடுமையாளர்கள்; குமுகாயப் பகைவர்கள்; அரசுக்கு எதிரானவர்கள்; ஆட்சியைக் கைப்பற்ற விரும்பும் நாட்டு இரண்டகர்கள்; அயல் நாட்டுக் கையாள்கள்; ஒற்றுமைக் கேடர்கள்; ஒருமைப்பாட்டின் எதிரிகள்; இந்தியத் தேசியத்திற்கு மாறானவர்கள்; இவ்வாறெல்லாம் அவர்களின் மேல் குற்றச் சாட்டுகளைப் பொழிந்து தள்ளியது பார்ப்பனிய முதலாளிய வல்லாதிகார மதக்கேடர்களின் கைகளில் உள்ள தில்லியரசு!
எனவே, பல்வேறு காரணங்களுக்காக, இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களின் சார்பாக, ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக மலைவாழ் மக்களின் சார்பாக, தேசிய இன எழுச்சியாளர்களின் சார்பாக, மொழியுரிமைப் போராட்டக்காரர்களின் சார்பாக, கொடுமையான கருப்புச் சட்டங்களின் எதிர்ப்பாளர்களின் சார்பாக, மத வல்லாண்மைக் கொடுமையாளர்களின் எதிர்ப்பணிகளின் சார்பாக, பார்ப்பனியத்தின் எதிராளிகள் சார்பாக முதலாளிகளின் எதிர்ப்பாளர்களின் சார்பாக, உள் நாட்டுத் தரகு முதலாளிகளின் எதிர்ப்பாளர்களின் சார்பாக, தொழிலாளர்களின் அடக்கு முறைக்கு எதிராக, உழவர்களின் உரிமைப் போராட்டக்காரர்களின் சார்பாக, இலங்கையில் அழிக்கப்படும் தமிழீழத் தமிழர்களின் சார்பாக, ஆங்காங்கு, இந்திய நாடு முழுவதும் உத்திரப்பிரதேசம், பஞ்சாப் , அசாம், மிசோரம், ஒரிசா, காசுமீர், குசராத், மகாராட்டிரம், கேரளம், ஆந்திரம், கருநாடகம், தமிழ்நாடு, பீகார், நாகாலாந்து முதலிய மாநிலங்ககளில் ஏதோ ஒரு வகையில் மக்கள் போராட்டமாக, எழுச்சிகளும், கிளர்ச்சிகளும் போராட்டங்களும், வன்முறைகளும், சிறை நிரப்பும் போராட்டங்களுமாக வெடித்துக் கிளம்பிக் கொண்டிருக்கின்றன.
தில்லியரசும், மாநில அரசுகளும் இவ்வெதிர்ப்புகளைப் பல வேறு வகைகளில் அடக்கியும் ஒடுக்கியும் வருகின்றன. ஒவ்வோரிடத்திலும் வெவ்வேறு வகையான உத்திகளும், பாணிகளும் கையாளப்படுகின்றன. போராட்டங்கள் தொடர்ந்து நடப்பதால், அடக்குமுறைகளும் தொடர்கின்றன. சிலவிடங்களில் மாநிலக் காவல் துறையினரைக் கொண்டே எழுச்சிகள் அடக்கி யொடுக்கப்படுகின்றன. சிலவிடங்களில் படைத்துறைகள் அழைக்கப்படுகின்றன. சிற்சில விடங்களில் ஆளுங் கட்சிகளில் உள்ள குண்டர்களைக் கொண்டும், குமுகாயக் கொடியவர்களைக் கொண்டும் அரசுகளே எதிர்ப்போராட்டங்களை நடத்தி, நேர்மையான உரிமைப் போராட்டக் காரர்களை முறியடிக்கின்றன. இவ்வாறாகக் கடந்த முப்பது ஆண்டுகளாக இக் கிளர்ச்சிகளும், போராட்டங்களும் நாளுக்கு நாள் உள்நாட்டுப் போர்களாகவே நடந்து வருகின்றன.
நடுவணரசும் இவற்றை ஒடுக்கவும் நடைமுறையில் உள்ள சட்டங்கள் போதாவென்று புதுப்புதுக் கடுமையான கொடுமையான கருப்புச் சட்டங்களை, வெள்ளைக்காரர்கள் மக்களின் உரிமைக் கிளர்ச்சிகளை ஒடுக்க எவ்வளவு கொடுமையான சட்டநடைமுறைகளைக் கையாண்டார்களோ, அவற்றைவிட மிகமிகக் கொடுமை வாய்ந்த சட்டங்களை, அயலவரின் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றுக் குடியரசுமைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் வாழ்வியல் உரிமைக் கிளர்ச்சிகளுக்கெதிராக, இந்நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் வல்லாளுமைக் காரர்கள், போட்டுப் பலவகையானும் மக்களுக்கெதிரான உள்நாட்டுப் போரைத் தொடங்கி நடத்தி வருகிறார்கள்.
இதுவன்றி, மக்கள் தங்கள் உரிமை உணர்வுகளில் மனம் செலுத்தாத வண்ணம், இதுநாள் வரையில் இல்லாத மத விழா நாள்களை நடைமுறைப் படுத்தியும், கலை, பண்பாட்டியல் என்னும் பெயர்களில், ஆரவார அருவருப்புத்தனங்களைப் புகுத்தியும், பற்பல தேசிய விளையாட்டுகளைப் புகுத்தியும் அனைத்துலக அரசியல் , கலை, பண்பாட்டியல், பொருளியல் மாநாடுகளை நடத்தியும், அவற்றின் செயல்பாடுகளை யெல்லாம் இந்தியாவிலுள்ள அனைத்து வானொலி நிலையங்களின் வழியாகவும், தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையங்களின் வழியாகவும், ஒலி ஒளி பரப்புதல்களைச் செய்தும், இங்குள்ள வல்லதிகாரக் கொடுமை அரசு, மக்களை மூளைச் சலவை செய்தும் திசைதிருப்பியும் வருகிறது. இவ்வகையில், நாட்டின் மிகு பொருளியலைச் சீரழித்தும் சிதைத்தும், வீணாக்கியும் வருகிறது. இன்னும், 1962இல் சீனத் தாக்குதலும், 1985இல் பாக்கித்தான் வன்வரம்பு(ஆக்ரமிப்பும்), 1971-இல் வங்காளப் போரும் தவிர இன்று, எந்தவகையான வெளிநாட்டுப் போரும் நடைபெறாத நிலையில், அயல்நாடுகளான பாக்கித்தான், சீனா முதலிய நாடுகள் போர் மூட்டங்கள் இட்டிருப்பதாக மக்களிடத்தில் ஓர் அச்சத்தையும் செயற்கையாகப் பரப்பி வருகிறது. இந்த நிலையில், கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னிருந்த தன் பாதுகாப்புச் செலவை நான்கு மடங்கு பெருக்கிப் படைத்துறைகளை மக்களுக்கெதிரான போராட்டங்களில் ஈடுபடுத்துவதற்காகக் கருவிகளாலும் ஆட்களின் எண்ணிக்கையாலும் வலுப்படுத்தி வருகின்றது. 1975 -76ஆம் ஆண்டில் இந்தியாவின் பாதுகாப்புச் செலவு 2.000 கோடி. ஆண்டுக்கான, அண்மையில் வகுத்த வரவு- செலவுத் திட்டப்படி இச்செலவு 1985-86ஆம் ஆண்டு 8,000 கோடியாக உயர்ந்திருக்கிறது) இவ் வகையில் இந்நாட்டின் மொத்த வருமானத்தில் ஏறத்தாழ ஏழில் ஒரு பங்கை, அஃதாவது 15 விழுக்காட்டைச் செலவு செய்து கொண்டிருக்கிறது.
ஆனால், இத்தனை முன்னெச்சரிக்கைகளும், அண்மையில் அது கொண்டுவந்த, வன்முறை யொடுக்கத் தனிச்சட்டம், நாட்டின் பாதுகாப்பிற்கெதிராகக் கருவிகளை உருவாக்குவதும் கொள்முதல் செய்வதும் ஆகியவற்றுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கும் சட்டம் போடுவதும், கொடிய வன்முறையாளர்களுக்குச் சாவுத் தண்டணை, வாணாள் சிறைத்தண்டனை வழங்கும் சட்டம் ஆகிய கொடிய சட்டங்களை நடைமுறைப்படுத்த விழைவதும், தன் நாட்டு மக்கள் மீதே அது போர் தொடுக்கத் தொடங்கிவிட்டது என்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் ஆகும்.
ஒரு நாடு, தன் சொந்த நாட்டு மக்களின் உரிமைப் போராட்டங்களை உள்நாட்டுப் போராகக் கண்டு அஞ்சுவதும் அவற்றுக் கெதிராகத் தானே அம்மக்கள் மேல் போர் தொடுக்க முற்படுவதும் நல்ல எதிர்காலத்திற்கான அறிகுறிகள் அல்ல. அது நாடு, உள் உடைவுகளை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதற்கான அறிகுறியே ஆகும். உள்நாட்டுச் சிக்கல்கள் எத்தகையனவானாலும், அவற்றைப் போர் முனைப்புக்களாக ஒரு நாடு அல்லது ஓர் அரசு கருதி அவற்றை அடக்குகின்ற முனைப்புகளில் போர் வேகம் காட்டுவது எந்த நாட்டு அரசுக்கும் அழிவை தேடிக் கொடுப்பதாகும். என்றமட்டில் இப்பொழுது எச்சரிக்கை விடுக்கிறோம். இனி, போகப் போகப் பார்ப்போம்!
- தென்மொழி சுவடி 21, ஓலை 7, 1985
உண்மையான இன முன்னேற்றம்
என்பது உரிமை மீட்பே!
தமிழர்கள் இன்றைக்குத் தங்களை ஈடேற்றிக் கொள்ளச் செய்து கொண்டிருக்கும் ஒட்டு மொத்தமான முன்னேற்ற முயற்சிகளில், முதலில் செய்ய வேண்டிய தலையாய முயற்சி, தமிழின உரிமை மீட்பு முயற்சியே, என்பது பலவகையான ஆய்வுகளுக் கிடையே தெளியப்பெற்ற உண்மையாகும். எவ்வளவு பெரிய அறிஞரோ, ஆராய்ச்சியாளரோ, சாய்கால் உள்ள தலைவரோ இன்றைக்கு இதை அறியாமையாலோ, அறிந்தோ, மறுத்தாலும் நாளைக்கு இக்கருத்தையே உண்மை என்று ஒப்புக் கொள்ளப் பெறும். காலம் வரத்தான் வரப்போகிறது. கடந்த 25 ஆண்டுக் காலமாக நாம் இதை மிகவும் அழுத்தமும் திருத்தமுமாகவே கூறி வருகிறோம். அன்றைக்கு இதை ஏளனப் படுத்தியவர்கள் இழிவாகப் பேசியவர்கள், எதிர்த்தவர்கள் கூட இன்றைக்கு நேரடியாக இல்லாமற்போனாலும், தங்கள் சாய்காலை இழந்து கொள்ளாத நிலைக்கு இலை மறை காயாகவேனும், பேசியும் எழுதியும் வருவதைக் குமுகாய மாறுபாடுகளை மிகவும் கூர்மையாகக் கவனித்துக் கொண்டு வருபவர்கள் கட்டாயம் உணருவார்கள்.
தமிழ்மொழியைப் பற்றியே பேசாதவர்கள் கூட இன்றைக்கு ஆங்காங்கே தனித்தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி வருவதைப் பார்க்கிறோம். தமிழ் இனம் என்று பேசாமல் திராவிட இனம் என்று பேசியே எழுதியே வந்தவர்கள், எங்கு எதிர்காலம் தங்களைப் புறக்கணித்து விடுமோ என்று அஞ்சி 'சாற்றில் மலம் கிடக்கிறது; கொஞ்சம் இறுத்தால் போல் ஊற்று’ என்னும் பாணியில், அடிக்கடி தமிழினம் தமிழினம் என்று பேசுவதும், 'தமிழா இன எழுச்சி கொள்' என்று கடந்த இருபத்தைந்தாண்டுகளாகக் கூறிவரும் உணர்வுக்குரலை உரிமை முழக்கத்தை, ஏதோ இப்பொழுதுதான் இவர்கள் புதிதாகக் கண்டு சொல்பவர்களைப் போல, நொடிக்கு நூறு முறை கூறிப் புரட்சிக்குக் கட்டியங்காரர்களாக நடந்து கொள்வதையும், பார்க்கிறோம். இன்னும் சிலர் குமரிக்கண்ட வரலாற்றையும் பஃறுளியாற்றின் கடல்கோளையும் கூட கூட்டங்கள் தோறும் எடுத்து முழக்கும் வழக்கம் கூடிவருகிறது. இவற்றாலெல்லாம் நமக்கு இரட்டிப்பான மகிழ்ச்சியே. நாம் தாம் சொன்னோம், செய்தோம் என்பதில் தமிழர்களுக்குள் போட்டியிருப்பதும், அவ்வினத் தாழ்ச்சிக்கு ஒரு காரணமே! நமக்கு வேண்டுவதெல்லாம், யார் குத்தி அரிசியானாலும் நல்லது என்பதுதான். இவையிவற்றை இத் தமிழினம் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் நமக்கு முகாமையானது. அவற்றை யார் செய்கிறார்கள் என்னும் பொறாமைப் பார்வையன்று. வெறும் ஆரியம், திராவிடம் என்றும், திராவிட நாடு திராவிடர்க்கே என்றும் கூறப் பெற்ற பொழுதிலும்கூட நாம் அவற்றை மறுத்துத் திராவிடம், என்பது சரியான கொள்கையன்று என்றும் தமிழம் என்பதும். ‘தமிழ்நாடு தமிழர்க்கே’ என்பதுந்தாம் வரலாற்று அடிப்படையில் சரியானதாகும். என்றும் எழுதியும் பேசியும் வந்தோம். ‘தென்மொழி’ தன்னை வெளிப்படுத்திக் கொண்டபொழுதே தனிநாட்டுக் கோரிக்கையைத்தான் முன் வைத்தது. அதன்பின் மற்ற அரசியல் கட்சிகள் எங்கெங்கோ சுற்றி மூக்கைத் தொட்டு வந்து அக் கொள்கையால் விளைவு வரும் இந்நேரத்தில் நாம் தொடக்கத்தில் வரையறுத்த “மொழியால் இனம். இனத்தால் நாடு” என்னும் மெய்ம்மத்தை உள்ளட்க்கிய ‘மொழி, இனம், நாடு’ என்னும் நம் முப்படி முழக்கத்தைச் சிலர் ஏதோ தங்களின் மூலக் கொள்கையைப் போல் முழங்கத் தொடங்கியுள்ளனர். எஃது எவ்வாறாயினும், நம் முயற்சிகளால் வரும் விளைவுகளுக்காகவே அனைத்து நிலைகளிலும், நாம் பொறாமையற்ற, வஞ்சனையற்ற, பயனைக் கூறுபோட்டுக் கொள்ளாத நடுநிலைப் பார்வையால் காலத்தை எதிர்பார்த்திருக்கின்றோம். இது நிற்க.
தமிழினத்தின் உண்மையான முன்னேற்ற முயற்சிகளை விரும்பும் நாம் அனைவரும். அவரவர்களுக்குச் சரியான வழிவகை என்று நாம் தேர்ந்தெடுத்துக்கொண்ட கொள்கைகளின் வழியில் பாடாற்றி வருகின்றோம். அவற்றுள், “தமிழர்க்கென்று தனி நாடு தேவையில்லை; அவர்கள் இந்தியத் தேசியத்தில் இணைந்து விடுவதே அனைத்து நிலைகளுக்கும் நன்மை பயப்பது, தேசிய ஒருமைப்பாட்டைத் தவிர்த்துப் பிரிவினை பேசுவதால் பயனில்லை” என்பது. வடவர்க்கும் பார்ப்பனியத்திற்கும் ஏற்கனவே தம் தம் சிந்தனைகள் , செயல்கள் ஆகியவற்றை அடகுவைத்து விட்டு, அடிமைப்பட்டுப்போன தந்நலக்காரர்களின் கூற்று. இவ்விரண்டுங் கெட்டான்களின் அடிமைக் கொள்கையால், அத்தேசியக்கங்காணிகளுக்கே நன்மையாகுமேயன்றி, தமிழின மக்களுக்கு என்றைக்கும் ஓர் எள்ளளவும் நன்மையோ முன்னேற்றமோ கிடைக்கப் போவதில்லை.
அடுத்தபடி, பொதுவுடைமை என்னும் ஓர் உண்மையான இன முன்னேற்ற மெய்ம்மைக் கொள்கையின் பெயரால் போலித்தனமான அரசியல் குமுகாய நடவடிக்கைகளை மேற்கொண்டு, உருசியாவுக்கும் போகாமல்,சீனாவுக்கும் செல்லாமல், இடையில் தில்லியிலேயே விழுந்து கிடக்கும், சாதி மதவுணர்வுகள் சாகா மனங்கொண்ட பொக்கைப் பொதுவுடைமைக் காரர்களால் தமிழினத்திற்கோ, தமிழ்நாட்டுக்கோ எவ்வகை விளைவும் எக்காலத்திலும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. இத்தகையவர்களின் பேச்சுக்கோ செயலுக்கோ எவ்வகைத் தொடர்புமில்லை. இந்த உலகம் அழியுமட்டும் இவர்கள் நின்று கொண்டிருக்கும் குழப்ப மேடையில் இருந்து இவர்கள் அகலப் போவதுமில்லை. இவர்களுக்கு ஒரு தேசிய இன உரிமை என்பதிலேயே தெளிவான கருத்து இல்லை. ‘இந்தியத் தேசியம்’ என்னும் மாய்மாலக் கோட்டைக்குள் புகுந்து கொண்ட இவர்கள் வெளிவருவது கடினம்.
இனி, இவர்களையும் தவிர்த்து, இங்குள்ள சிலர் காலத்தால் நசுங்கிய, காந்தியின் பெயராலும், கருமமே கண்ணாகக் கொண்ட காமராசரின் உழைப்பாலும், பேராய வெள்ளையடித்துக் கொண்டு அவ்வப்பொழுது, தமிழ் என்று வாய்ச்சிலம்பமாடுவதும், தமிழர் நலன் என்று கைக்கம்பு வீசுவதுமாக, வெள்ளை ஊர்திகளில் வீதியுலா வந்து, தங்களின் சாதிக் கோட்டையின் வலிவான கதவுகளுக்குப் பின்னால் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இவர்களால் இந்நாட்டில் ஊர்ந்து கொண்டிருக்கும் ஒரு சிற்றெறும்புக்கும், ஒரு சிறு அளவினும் நன்மையில்லை. இவர்கள் அள்ளிக்கொடுக்கும் காசுகளுக்கு அங்காந்து திரியும் சாதிச் சாரணர்களே இவர்களின் ஐந்தாம் படைத் தொண்டர்கள்! இவர்களின் ஆரவாரக் கூப்பாடுகளில் இத்தலைவர்கள் மெய் மயங்கிக் கிடப்பதே இவர்களின் வாழ்க்கை. இவர்களின் பொய் போலி, உரைகள், இவர்கள் ஊரைவிட்டுப் போனதும், வெறும் குப்பைக் காற்றாகச் செயலிழந்து போவதை அனைவரும் கண்டிருக்கலாம். இவர்களால் தமிழும் தமிழினமும் ஓர் இம்மி அளவாகிலும் முன்னேறும் என்பது ஊமையன் கண்ட ஒரு நொடிக் கனவே ஆகும்.
இனி, இன்னோரையும் அடுத்து, அன்று முதல் இன்று வரை, ஆட்சியைப் பிடித்தாலன்றி நம் இனத்திற்கு ஆவது ஒன்றுமில்லையென்று அறைகூவல் விடுத்து, இடையில் சிலகாலம் பதவி நலம் கண்டு சுவைத்திருந்தாலும், தமிழர் நலத்திற்கென்று அடித்தளமான ஓர் ஆக்கத்தையும் செய்யாமல், உருப்படியான ஒரு சிறு விளைவையும் உருவாக்காமல், பேச்சோ, பேச்சென்று பேசி முழக்கியே வாணாளை வீணாளாக்கி இறுதியில் மனம் நொடிந்து ஊடாடிக் கொண்டிருக்கும் திராவிட இயக்கத்தின் தலைமைக் கூட்டமும், தமிழ்மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் இனிமேல் செய்வது ஒன்றுமில்லை என்றும், செய்தனவும்(!) செய்து வருவனவுமே(!) போதுமென்னும் முடிவுக்கு வந்துவிட்டதாகத் தெரிகிறது. இனி, இறுதி வாய்ப்பாகத் தங்களுக்கு ஆட்சிக்கட்டிலில் அமர ஒரு வாய்ப்புக் கிடைத்தால், திடுமென இவ்வினத்துக்குத் தன்னாலான அத்துணையும் செய்து விடுவோம் என்று வாயலப்பிக் கொண்டிருப்பது என்றுமே நிறைவேறி விடப் போவதில்லை.
‘செய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க
செய்யாமை யானும் கெடும்’
- என்னும் செயலின் மாறுபாட்டிலக்கணத்திற்கு முழு இலக்கியமாகிய இவ்வியக்கம், இருமுறை பதவிக்கு வந்தும், இரண்டு நிலைகளாலும் கெட்டது. முதன்முறை செய்தக்க அல்லாதவற்றைச் செய்ததால் கெட்டதும், இரண்டாம் முறை செய்தக்க செய்யாமையாற் கெட்டதும், வேறு எவர்க்கும் விளங்காமற் போனாலும், அதன் வேளாண்மையாளர்க்கும் அறுவடையாளர்க்கும் விளங்கியிருக்கும். இனி, பழைய நிலை, புதுப்பிக்கப் பெற்று, மணல்மேடு குடியிருப்பாக மாறும் என்பது அத்தைக்கு மீசை முளைத்தால் என்னும் கதையைப் போன்றதே! நெஞ்சு துணுக்குற்றாலும் உண்மையைச் சொல்லித்தானே ஆக வேண்டும். எனவே, ஆற்றொணாக் கவலையோடுதான் இக் கருத்தை இங்கே வெளிப்படுத்துகிறோம்.
அடுத்து, ஆட்சி மாளிகையை மக்களின் அறியாமை மேட்டில் கட்டிக்கொண்டு, கவர்ச்சி வண்ணம் பூசிக் கைம்மை நோன்பு நோற்று, ஊமை ஊரைக் கெடுக்கும், பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும் என்பதற்கிணங்க, மூங்கை நாடாகமாடிக் கொண்டு வீணான சாரவுணவுத் திட்டத்திலும், சாராயக் கிடங்குகளிலும் திரைப்படக் கூத்தாட்டங்களிலுமே சிற்தனையைப் பேரக்கி, எதிர்கால மக்கள் நலத்திட்டம் என்ற எண்ணமே இல்லாமல், அவ்வப்பொழுதைய ஆரவாரத்திற்கும், கொள்ளையடிப்புகளுக்கும் தக்கவாறு, வடநாட்டு அரசியல் வல்லாண்மைக்காரர்களிடமும், சுரண்டல் முதலாளிகளிடமும் பேரம்பேசி, ஊதியத்தில் பங்கு போட்டுக் கொண்டு சாப்பசி தணிக்கும் சதுர ஆட்டக் காரர்களின் பெரியாரிச, அண்ணாயிசக் கொள்கைத் திராவிடர்களுக்கோ, தமிழ் நலத்திலும் ஊற்றமில்லை; தமிழர் முன்னேற்றத்திலும் நாட்டமில்லை. அவர்கள் நினைப்பவையெல்லாம் இன்றைக்குக் கட்டி நாளைக்குச் சரிந்து போகும் வெற்றாரவார வீணடிப்புத் திட்டங்களே! முதலமைச்சருக் கேற்ற துறையமைச்சர்கள்! துறையமைச்சர்களுக்கேற்ற முதலமைச்சர்! கடந்த ஈராயிரம் மூவாயிரமாண்டுகளாக விழுந்து கிடக்கும் இத் தமிழினம் இந்தச் சாராய வருமானத்திலா தலைதூக்கப் போகிறது? இவர்கள் நடத்தும் பரிசுச்சீட்டுத் திட்டத்திலா, முட்டுக்கொடுத்து நிறுத்தப் பட்டுவிடப் போகிறது.?
வரலாற்றை யுணராத வாய்வீச்சுகள்! அறிஞர்களை மதிக்காத ஆராவாரப் பேச்சுகள்! வெறும் வாய்ப்புரளிக்காரர்களுக்கு வாய்க்கரிசி போட்டு, வீக்கத்தை ஆக்கம் என்றும் விழுந்தெழுவதை நடிப்பு என்றும், கெக்கலிப்பைக் கலையென்றும், கேடுகளை நலன்கள் என்றும் வெட்கங்கெட்ட விளம்பரங்களால் ஆட்சி வண்டி யோட்டிக் கொண்டிருக்கும், இவ் வாளுங்கட்சித் திராவிடங்களால், இவ்வேதுங்கெட்ட தமிழினத்திற்கு ஏதாவது உண்மையிலேயே முன்னேற்றம் ஏற்படுமா? அந்த மூகாம்பிகைக்கே வெளிச்சம்! மொழியின் அழிவைத் தடுக்கவும் அதனை வளர்த்தெடுக்கவும் வாய்ப்பை உருவாக்காத இவர்கள், அதனைச் சீர்திருத்தும் முயற்சிகளென ஏராளமான கோணல் மாணலான முயற்சிகளைச் செய்வதும், நான்காம் கழகம், ஆராய்ச்சிகள், அது இது என்றெல்லாம் வந்த வேகத்தில் உளறியவர்கள், நாளடைவில் அவற்றை மறந்துவிட்ட, அன்றாட அரசியல் ஆரவாரத்தில் ஊதியந்தேட முயல்வதும், இன முயற்சிக்கும் முன்னேற்றத்திற்குமென்று எதையும் அடியூன்றச் செய்யாமல், ஆரியத்திற்கும் வடநாட்டுப் பூரியத்திற்கும் அடிபணிந்து கிடப்பதும் கொடுமை கொடுமையிலும் கொடுமை!
இனி எதிர்க்கட்சி ஆளுங்கட்சி மூஞ்சி முகரைகள் இவ்வாறிருக்க இனங்காப்பதற்கென்றே எழுந்த இயக்கமாகத் தன்னைக் கூறிக்கொள்ளும் இயங்கத்தான். இத்தமிழினத்திற்கு ஏதாவது பயனுள்ள செயல்களைத் திட்டமிட்டுச் செய்கின்றதா எனில், ஐயகோ பெரியார் தொடங்கிய அப் பெரும்பயன் இயக்கமும் வெறுஞ் செயல்களிலும் வீணான விளம்பரங்களிலுமன்றோ தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தலை தடுமாறி பண வாணிக முதலாளி போல் வருவாயைப் பெருக்கிக் கொண்டு வறிதான முயற்சிகளில் ஈடுபட்டுக் கால அழிவு செய்து கொண்டு வருகிறது.
பகுத்தறிவு என்பதை இனமுயற்சியாக அவ் வியக்கம் அறிவிப்பதையும் 'கடவுள் இல்லை' என்பதை அதன் கொள்கையாகப் பரப்பவதையுமே அது செய்து கொண்டுள்ளது பெரிதும் வருந்தத்தக்கது. பகுத்தறிவு என்பது மாந்த இனத்திற்கே பொதுவான ஓர் அறிவு முயற்சி. தமிழின முன்னேற்றத்துக்கான தனி முயற்சியன்று அது. அது போலவே கடவுள் இல்லை என்பதும் அல்லது இருக்கின்றது என்பதும் ஓர் அறிவுக் கொள்கையாகவும் இருக்கலாம்; அல்லது மூட நம்பிக்கையாகவும் இருக்கலாம். அதற்கும் ஓர் இனத்தின் அடிமை நீக்கத்திற்கும், அல்லது உரிமை மீட்புக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. உலக உரிமை மீட்பு வரலாறுகளில் விடுதலை உணர்வுதான் செயல்பட்டு, அடிமைப்பட்ட இன முன்னேற்ற முயற்சிகளுக்குப் பயன்பட்டிருக்கின்றதே தவிர, பகுத்தறிவுணர்வோ இறைமறுப்புக் கொள்கையோ அல்ல. இக்காலும் உலகத் தேசிய இனங்கள் அத்தகைய கருத்துகளில் கவனம் செலுத்தாமல், உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டங்களையும் கருத்துகளை மக்களிடையில் பரப்புவதையுமே தம் இன முன்னேற்ற முயற்சிகளாகக் கொண்டு இயங்கி வருகின்றன. இனி கடந்த காலத்தில் உருசியாவில் மார்க்சீயக் கொள்கையை முன் வைத்துப் பெரும் புரட்சிப் போராட்டங்களை நடத்தி, நாட்டை மீட்டுத் தேசிய இனமுன்னேற்றத்திற்கு அடிப்படையான பொதுவுடைமைச் சமநிலைக் குடியரசை அமைத்துக் கொடுத்த இலெனின், ஏங்கல்சு போன்ற மேதைகளும், பகுத்தறிவையோ, இறைமறுப்புக் கொள்கையையோ தங்களின் இன மீட்புக்கும் அரசியல் அதிகார மீட்புக்குமான உத்திகளாகப் பயன்படுத்தவில்லை.
மேலும், தமிழினத்தின் முன்னேற்றத்திற்கு, முற்ற முடிந்த முடியாகத் தமிழக விடுதலையே முதற் கொள்கையாகும். தமிழகம் விடுதலை பெற்றால்தான், தமிழினத்தின் அனைத்து முன்னேற்றங்களுக்கும் வாய்ப்பிருக்க முடியும். இவ் விடுதலை உணர்வை, இனவுணர்வாலேயே தட்டியெழுப்ப முடியும். இவ்வினவுணர்வையும், மொழியுணர்வாலேயே கட்டியமைக்க இயலும். வேறு நாடுகள் சிலவற்றில், ஒரே மொழி பேசும் மக்களே பிரிந்து கிடக்கின்றார்கள் என்பதும், அங்கெல்லாம் தாய்மொழியுணர்வு ஒற்றுமைக்குப் பயன்படவில்லையென்பதும், வேறு வேறு அடிப்படைகளைக் கொண்ட வேறு வேறு செய்திகள் ஆகும். அவற்றை யெண்ணி, இனவெழுச்சிக்கு மொழி பயன்படாதென்பது சரியான கொள்கையாகாது, தமிழ் மொழியைப் பொறுத்த அளவில் அதன் வழிப் பிரிந்த திராவிட மொழியினங்களைக் கூட தமிழ் மொழியாலும் அதன் வழிப்பட்ட பண்பாட்டாலும் நாம் ஒன்றுபடுத்திவிட முடியும்.
ஏறத்தாழ 142 தேசிய இனங்களைக் கொண்ட உருசியாவிலும் 50 தேசிய இனங்களைக் கொண்ட சீனாவிலும், உருசிய மொழியையும் சீன மொழியையும் வைத்தே, அந்நாட்டு மக்களை ஒன்றுபடுத்தியிருக்கிறார்கள் என்பதையும், இந்தியாவிலும் ஏறத்தாழ 1700 மொழிகள் பேசப் பெறுகின்றன. என்பதையும், இந்தியத் தேசிய மொழிகள் 14 இலும் கூட, 380 வகையான தாய்மொழிகள் உள்ளடங்குகின்றன என்பதையும், இருப்பினும் இந்திமொழி ஒன்றையே இணைப்பு மொழியாகக் கொண்டு இந்தியத் தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முனைகின்றார்கள் என்பதையும் நோக்குகிறபொழுது, மக்கள் இன ஒருமைப்பாட்டிற்கு மொழி எத்துணை முகாமையானது என்பது நன்கு விளங்கும். இம் முகாமையான மொழியுணர்வைத் தவிர்த்து விட்டுத் தமிழினத்தை வேறு எந்த உணர்வாலும் ஒன்றுபடுத்திவிட முடியாதென்பது, நம் அசைக்க முடியாத கொள்கை. தொழிலாளர், உழவர்களைத் தட்டியெழுப்பி, ஒரு பொருளியல் போராட்டத்தையோ புரட்சியையோ உருவாக்குவதென்றாலும் கூட, நம் தாய்மொழி உணர்வைக் கொண்டே அதைச் செய்ய இயலும்.
இவ் வடிப்படையில், எவ்வாறாகப் பார்ப்பினும், தமிழின உரிமைகளை மீட்காமல், நம் நாட்டைஅரசியல், பொருளியல், குமுகாயவியல் அடிப்படையில் விடுதலை பெறச் செய்யாமல், எந்தவகையிலும் தமிழின முன்னேற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். அதற்கிடையில் நாம் செய்யும் எந்த முயற்சிக்கும் அதுவே அடிப்படையாக அமைய வேண்டுவது மிகமிக இன்றியமையாதது.
- தென்மொழி : சுவடி :21, ஓலை 9, 1985
இந்தியாவில் தேசிய
இனங்களின் எழுச்சிகள்
உலகெங்கிலும் உரிமைப் போராட்டங்கள் கிளர்ந்து வரும் காலம் இது. இவ்வகையில், ஆங்காங்கு ஒடுக்கப்படும் மக்கள், பல்வேறு வகையாகத் தங்களுக்கு மக்கள் குமுகாயத்திடமிருந்து கிடைக்க வேண்டிய நயமான உரிமைகளுக்காகப் போராடி வருவதை, உலக நோக்கில் கவனம் செலுத்துவார் அறிந்து கொள்ளலாம். அத்துடன் இப்போராட்டங்களை ஆளுமைக்காரர்கள், பல்வேறு கோணங்களில் ஒடுக்கி வருவதையும் கூடவே உணரலாம்.
இந்தியாவைப் பொறுத்தவரையில், இந்தியா ஒரே இனமக்கள் வாழும் நாடு அன்று என்பதை அனைவருமே உணர்ந்திருக்கின்றோம். அவ்வவ் வினங்களுக்குப் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அவ்வச் சிக்கலுக்காக, அவ்வவ் வினமக்களும், தங்களைத் தேசிய இனமக்கள் என்று உரிமைப்படுத்திக் கொண்டு, ஆங்காங்கு சிற்சில எழுச்சிகளைக் காட்டி வருகின்றனர்.
ஆனாலும், அதிகார ஆளுமைக்காரர்கள், இவர்களுக்குரிய சிக்கல்களையெல்லாம் நன்கு எண்ணிப் பார்த்து அணுகித் தீர்வு செய்ய இயலாமல், அவற்றை வேறுவேறு பெயரால், மூடி மறைக்கவும், அடக்கி ஒடுக்கவும் முயன்று வருகிறார்கள்.
செய்தித்தாள் படிப்பவர்களுக்குப் பஞ்சாப், அசாம், மிசோரம், நாகாலாந்து, ஒரிசா, திரிபுரா, மணிப்பூர் முதலிய இடங்களில் கிளர்ச்சிகளும் எழுச்சிகளும் போராட்டங்களும் சிற்சில பொழுது அரசுத் தாக்கங்களும் நிகழ்ந்து வருவது தெரிந்திருக்கும். ஆனால் அரசு இயந்திரங்கள் இவற்றைப் பல்வேறு வகையாகச் சித்தரித்து அப் போராட்டங்களின் அடித்தளங்களையே மூடி மறைத்து, அவற்றின் முழு வடிவங்களையும் மக்கள் அறிந்து கொள்ளாமல் செய்து வருகின்றன.
ஆனாலும் அவ்வப்பொழுது, ஆங்காங்கு நடைபெறும் கிளர்ச்சிகளும், போராட்டங்களும், அங்குள்ள மக்கள் தங்களின் அரசியல், பொருளியல், வாழ்வியல், மொழி, கலை, பண்பாட்டு உரிமைகளுக்காகத்தான் போராடுகிறார்கள் என்பதைத் தெள்ளத் தெளிவாக் நமக்கு உணர்த்திக்கொண்டுதாம் இருக்கின்றன. எவ்வாறாயினும் இவ்வின வெழுச்சிகளும் போராட்டங்களும். இந்தியாவில் ஆங்காங்கே தேசிய இனங்கள் கிளர்ந்து வருகின்றன என்பதையே நமக்குக் காட்டுகின்றன.
இந்தியா உரிமைபெற்று முப்பத்தெட்டு ஆண்டுகளாகியும், இன்னும் அந்த உரிமைகள், இங்குள்ள அனைத்துத் தேசிய இனங்களுக்கும், பகிர்ந்தளிக்கப்படவில்லை என்பதை நாம் உணர வேண்டும். இங்கு வருகின்ற நலன்களையும் வளங்களையும் மேல் மட்டங்களில், சாதியாலும், மதத்தாலும், பொருளாலும், அரசியலாலும் மேலாண்மை பெற்ற மிகச் சிலரே சுரண்டிக் கொழுத்து வருகின்றனர். நயமாகக் கிடைக்கப்பட வேண்டிய இவ்வுரிமை நலன்கள் தங்களுக்குக் காலத்தால் கிடைக்கும் என்று எதிர்பார்த்த மக்கள், அடிபட்டு எழுந்த புலிகளாக அரிமாக்களாகச் சீறியெழுந்து பாயத் தொடங்கியுள்ளனர்.
இவ்வெழுச்சிகளின் உண்மையான உணர்வுகளை முறையாக அணுகித் தீர்வு செய்ய இயலாத அரசு, தேசியம், ஒருமைப்பாடு, ஒற்றுமை என்னும் பெரிய கனத்த போர்வைகளால், மக்களின் வெப்பமூச்சுகளை, எங்கும் வெளியில் தெரியாதவாறு மூடி மறைக்கப்பார்க்கின்றது. இது ஆட்சிக்கும் நல்லதன்று; அது பேசும் தேசிய, ஒருமைப்பாட்டுக்கும் நல்லதன்று என்று மட்டும் இப்பொழுது கூறி வைக்கிறோம். ஆனால், உண்மைகள் காலத்தால் வலுப்பெறாமல் போகாது அன்றோ?
- தமிழ்நிலம், இதழ் எண். 55, ஏப்பிரல், 1985
தமிழக விடுதலைக் கோரிக்கையே
தமிழிழத்தையும் வென்றெடுக்க வல்லது!
நாமெல்லாரும் எதிர்பார்க்கும் அல்லது நம்பியிருக்கும் அளவுக்குத் தமிழீழம் அவ்வளவு அண்மையில் கிடைக்குமாறு தெரியவில்லை. அதற்கு அடிப்படையான காரணங்கள் மூன்று, ஒன்று. தமிழ்ப் போராளிகளிடம் நாம் விரும்புகிற மன இணக்கம் இன்னும் ஏற்படவில்லை; எனவே ஒட்டு மொத்தமான, வலிவான ஒருங்கிணைந்த போராட்டத்திற்கு வாய்ப்பில்லாமலே இருக்கிறது. இரண்டு. கொடுமையும் கயமையும் நிறைந்த இலங்கை ஆட்சியினர் தம்மைப் பலவகையிலும் வலுப்படுத்திக் கொள்ள, அமைதிப் பேச்சுகள் என்னும் பெயரால் வழியமைத்துக் கொடுத்து விட்டது. மூன்று இந்திய அரசு தேன் தடவிய பேச்சாலும் நஞ்சு தடவிய நெஞ்சாலும் கரவாக நடந்து, இலங்கைக்கு மறைமுகமான ஆதரவும், நமக்கு வெளிப்படையான சொல்லளவு ஆறுதலும் தந்து கொண்டிருப்பதும், அதைத் தமிழீழப் போராட்ட இயக்கங்களுள் சில நம்பிக்கொண்டு கிடப்பதும்.
இம்மூன்று காரணங்களாலும் தமிழீழப் போராட்டத்தில் ஒரு தொய்வு ஏற்பட்டிருந்தாலும், அதன் நம்பிக்கையில் இன்னும் நமக்கு ஒரு சிறு தொய்வோ நெகிழ்வோ ஏற்படவில்லை. அவ்வாறு ஏற்படவும் வாய்ப்பில்லை. நாம் ஓரிரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சொல்லி வருவது போல் இங்குள்ள பொருள் வலிமையுடைய தமிழின இயக்கங்கள், தமிழீழப் போராளிகளுக்கு ஒரு கணிசமான தொகையைக் கருவிகள் வாங்க, ஒப்பந்ததத்தின் பெயரிலாகிலும் கொடுத்திருக்கலாம். அந்த ஒப்பந்தமும், நம் உதவியால், அவர்கள் தமிழீழம் பெற்றால், நம் நாட்டு விடுதலைக்கு அவர்கள் உதவ வேண்டும் என்பதாகவும் இருந்திருக்கலாம். இந்த நிலைகளை யெல்லாம் நாம் இவ்வளவு வெளிப்படையாகப் பேசவேண்டிய தேவை ஏன் வந்தது என்றால், கமுக்கமாகப் பேசிக்கொள்ள நம் ஒருவருள்ளும் மனவொற்றுமையோ, நம்பிக்கையோ இன்னும் ஏற்படவில்லை என்பதால்தான்.
ஆனால், நம் கருத்துப்படி அல்லது ஆசைப்படி நடைபெறாமற் போனதற்குக் காரணம் இங்குள்ள தமிழின நலம் நாடும் கட்சிகள் அல்லது நாடுவதாகக் கூறிக்கொண்டுள்ள பணத்தால் வலிவுள்ள இயக்கங்கள், மனத்தால் மெலிவுள்ள அல்லது நலிவுள்ளவையாக இருப்பதுதான். நாம் (நம்மைப் பொறுத்தவரையில் ஒரு வகையிலும் வலிவான இயக்கமாக இன்னும் வளர முடியவில்லையே அதுவும் ஒரு காரணத்தான் - என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. வலிவிருந்தால் நாம் அவ்வாறு நடந்திருப்போமா என்பதைக் காலந்தான் உணர்த்திக் காட்ட முடியும்) ஆனால், இப்பொழுதுள்ள நிலையில் இதையெல்லாம் பேசி, நடக்கப் போவது ஒன்றுமில்லை. ஓர் ஆற்றாமைக்காகத்தான் இதைக் கூற வேண்டி உள்ளது. இது நிற்க.
இனி, இக்கட்டுரைத் தொடக்கத்தில், தமிழீழத் தொய்வுத் தொடர்பாகக் கூறிய மூன்று காரணங்களை இனிமேலாகிலும் நாம் தவிர்த்துக்கொள்ள இயலுமா என்பது பற்றிப் பார்க்க வேண்டும்.
இவற்றுள்இத் தொய்வுக்கு முதல் காரணமாகக் கூறப் பெற்றது. தமிழீழப் பேராளிகளின் இயக்கங்களுக்குள்ள ஒற்றுமையின்மை. இந்நிலை, இந்த அளவில் மட்டுமே நின்றிருந்தாலும் தாழ்வில்லை. அதனால் ஒன்றும் அவ்வளவு பெரிய இழப்புகள் நேர்ந்துவிடப் போவதில்லை. ஆனால், ஒற்றுமையில்லாத தன்மையை விட, தங்களுக்குள் ஒன்றையொன்று அரித்துகொள்கின்ற தன்மை அதிகமாகிக் கொண்டே வருவதுதான், நம்மால் ஏற்றுக் கொள்ள இயலாததாகவும் மிகவும் உள்ளம் நைய வேண்டியதாகவும் உள்ளது. தமிழினத்தின் பலவாறான உள்முகத் தன்னழிவுகள் இவ்வின முன்னேற்றத்தையே பெரிதும் தடைப்படுத்தி வருகின்றன என்பதை நம் முற்கால இக்கால அரசியல் வரலாறுகள் தெளிவாக உணர்த்துகின்றன. ஆனாலும். நாம் இதிலிருந்து இன்னும் மீள முடியாதவர்களாகவே உள்ளது. நம்மைப் பெரிதும் அழிவுக்குள்ளாக்கி அடியோடு அழித்து விடுமோ என்று அஞ்ச வேண்டியுள்ளது.
வெறும் அரசியல் நிலைகளில், அஃதாவது பதவிப் போராட்டப் போட்டிகளில் இவை இருப்பது போலவே, விடுதலைப் போராட்ட முயற்சிகளிலும் இருப்பது, இவ்வினத்தை என்றுமே ஈடேற்றாது என்பதை நாம் ஒவ்வொருவரும் உறுதியாக நெஞ்சில் இருத்திக் கொள்ளவேண்டும். இங்கு இன்னொன்றையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். சில பொதுக்குற்றங்களை நம்மில் ஒருவர் நம் இனநலம் பற்றிக் குறிப்பிடுகையில், நாம் ஒவ்வொருவரும் அக் குற்றம் நம்மிடம் இல்லாதது போலவும் பிறரிடம் இருப்பது போலவுமே கருதிக் கொள்கிறோம். ஏனெனில் பொதுமாந்த மனவியல்பு அப்படி. ஆனால், நம் போல் உண்மையிலேயே பொது நலம் கருதுபவர்கள் அப்படிக் கருதிக் கொள்வது கூடாது. இங்கு உண்மையல்லாதவரும் உண்மையுள்ளவர் போல் நடிக்கின்றனர். உண்மையுள்ளவரும் உண்மையில்லாதவர் போல் பிறர் கருதுமாறு இயல்பாகவே நடக்கின்றனர். பெரும்பாலும் போலிகளுக்கே நடிக்க முடிகிறது. உண்மைகள் நடிக்க இயல்வதில்லை. எனவே நிலைகள் தடுமாறிப் போகின்றன. விளைவுகள் தலைமாறிப்போகின்றன.
நம் விடுதலைப் போராட்ட முயற்சிகளிலும் சில நிலைகள் இப்படித்தான் உள்ளன. ஆனாலும் எப்படியோ அம் முயற்சிகளை நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பாராட்டவும், ஊக்கவுமே செய்கிறோம். என்றாலும், நம் பாராட்டும், ஆதரவும் ஊக்கமும் முழுவதும் பயன்படாத வகையிலும், அல்லது வீணாகிப் போகும் அளவிலும் அப்போராட்ட இயக்கங்கள் தங்களுக்குள்ளேயே பொருதிக்கொள்ளும் பொழுது நாம் என்ன செய்ய முடியும்?
நாம் அனைவரும் நமக்கென ஒருபொது எதிரி, வரலாற்றுப் பகைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை மறக்கவே கூடாது. அத்துடன் நமக்குள் பல வேறுபாடுகள் இருந்தாலும் சிறப்பான பொதுவான ஒரு நோக்கம் இருக்கின்றது. என்பதையும் நாம் மறந்துலிடவே கூடாது. ஆனால், இதை நாம் எங்கே செய்கிறோம்? நேர்மை பேசும், பொதுநலம் உண்மையாகக் கருதும் அனைவரும் பொழுதுதேனும் எண்ணிப் பார்க்கவே வேண்டும் இதுவரை (நம் மனச்சான்றின் பார்வையுடன் சொல்லுங்கள்) நாம் எண்ணிப்பார்த்தோமா? அல்லது இனியாவது எண்ணிப் பார்ப்போமா? எவ்வாறு எண்ணிப் பார்க்கின்ற அன்றுதான் நம் முயற்சிகள் வலுப்பெற முடியும். அதுவரை நம் அறிவுகள். இயக்கங்கள், முயற்சிகள் அனைத்தும் விழலுக்கிறைத்த நீரே! பாலை நில நிலவே!
இனி, பேச்சு, பேச்சு என்று நாம் பேசுகின்ற கால இடைவெளிக்கு இடமே தரக்கூடாது. இந்தப் பேச்சால் முதலில் எதிரியின் தாக்குதல் குறைந்ததா? இல்லையே, மாறாக எதிரியின் கைகளையன்றோ வலுப்படுத்தி யுள்ளது. இவ் விணக்கப் பேச்சு என்னைறக்குத் திம்புவில் தொடங்கினதோ அன்றிலிருந்து இன்று வரை ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்னும் வகையில், நாளுக்கு நாள் மேலுக்கு மேல் சிங்கள வெறியரின் தாக்கங்களும் அழிவுகளும் அதிகமாகி உள்ளனவே தவிர, ஓர் எள்மூக்குத்துணையும் குறைய வில்லையே! இனியும் பேச்சு எதற்கு? இதைப் பேச்சு தொடங்கு முன்பிருந்தே சொல்லி வருகிறோம். இனியும் போராளிகள் இதனை உணர்ந்ததாகத் தெரியவில்லை. இந்தப் பேச்சைத் தவிர்ப்பதால் சில விரும்பத்தகாத விளைவுகளை நாம் எதிர்நோக்க வேண்டியிருந்தாலும், அவற்றையும் நாம் வரவேற்கவே வேண்டும். சாகத் துணிந்தவனுக்கு கடல் நீர் முழங்கால் ஆழமன்றோ? ஒன்றால் நாம் அனைவருமே வாழ்ந்தாக வேண்டும்; அன்றால் நாம் அனைவருமே போராடிச் செத்தாக வேண்டும்! இதில் பேச்சென்ன மூச்சென்ன? இப்பொழுது மட்டும் வாழவா வாழ்கிறோம்? செத்துக்கொண்டுத் தானே உள்ளோம்! எனவே, இனியும் எதிரி வலுப்பட நாம் கால இடையீடு தருதல் கூடாது.
அடுத்து, இந்தியாவின் அணுகுமுறையே கரவானது; ஓரவஞ்சனையானது; நயன்மையில்லாது; நடுநிலையற்றது. நாம் இன்னும் அதை நம்பிக் கொண்டுதானே உள்ளோம். இது வரை இராசீவ் காந்தியின் வாயிலிருந்து இலங்கைப் பேயர்களைக் கண்டிக்கும் ஒரு சொல்லாகிலும் வெளியே வந்துள்ளதா? எவராவது சொல்லமுடியுமா? கண்டிக்கவே மனம் வராத அவர்களிடம், நன்மையான முடிவை எதிர்பார்க்க முடியுமா? ஆனால், ஏனோ, எப்படியோ தெரியவில்லை, இந்தியாவின், இராசீவ் காந்தியின் கரவான, நம்மை மெலிவுபடுத்தும் முயற்சிகளில் இன்னும் நம் போராளிகள் சிலர் நம்பிக்கை வைத்துள்ளனர். இதுநம் முயற்சிகளை எங்குக் கொண்டு போய் விடுமோ, தெரியவில்லை! அஃது அவர்களுக்கும், அந்த இராசீவ் காந்திக்குமே வெளிச்சம் நம் கருத்துகள் காலத்தால் பொய் போகாதவை என்பதை அந்தக் காலமேதான் உணர்த்த வேண்டும். அதுவன்றி, வேறு வகையாக, நாம் இதைவிட வெளிப்படையாக எப்படி உணர்த்துவது?
இனி, இறுதியாகவும் உறுதியாகவும் நாம் ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகிறோம்
தமிழீழம் கிடைத்துத்தான், தமிழ் நாட்டுக்கான முயற்சிகள் நடைபெற வேண்டும் என்பதாக இதுநாள் வரை, ஒருவகையாக நாம் நம்பியிருந்தோம். ஆனால் இன்றைய நிலையில், தமிழீழ முயற்சிகள் அவ்வளவு நம்பிக்கை ஊட்டுவதாக இல்லை. நம்பிக்கை இயல்பான நம் உள்ள ஊக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருப்பினும், தமிழீழப் போராளிகளின் செயல் முயற்சிகளும் நடைமுறைப் போக்குகளும் அந்நம்பிக்கையை உடைப்பதாகவே உள்ளது.
எனவே, தமிழ்நாட்டுக் கோரிக்கையை நாம் உடனடியாக எழுப்பியாக வேண்டும். அதை இங்குள்ள தமிழினக் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து வெளிப்படுத்தியாக வேண்டும். இதற்காக நாம் எந்த நிலையிலும், யாருடனும் ஒன்றிணைய இரு கைகளை நீட்டி அணியமாக உள்ளோம். இந்தக் கோரிக்கை தான் இந்திய அரசை உடனடியாகத் தமிழீழத் தீர்வை நோக்கி நடையிடச்செய்யும் உந்து வேகத்தைக் கொடுப்பதாக இருக்க முடியும்! தமிழ்நாட்டில் இப்படி யொரு கோரிக்கை, இலைமறை காயாக இருப்பது நடுவணரசுக்கும், இராசீவ் காந்திக்கும் தெரியும். இருப்பினும் அது, வெறும் குரல் கோரிக்கையாகத்தான் இருக்கிறது என்பதாலும், அதைக் கைவைத்துப் பெரிதுப்படுத்தக் கூடாது என்னும் தந்திர உத்தியாலும், இதுவரை, எந்தவகையான நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் முன்வராமல் இருக்கின்றனர். ஆனால், இங்குள்ள அனைத்து இனநலக் கட்சிகளும் ஓங்கி அக்கொள்கையை ஒரு பெரும் முழக்கமாக எழுப்பும் பொழுது, அவர்கள் கட்டாயம் அதைச் செவிமடுத்தே ஆகவேண்டும். அதன்பின் அவர்களின் செயற்பாடுகள் நடவடிக்கைகள் மிக வேகமாகத் தீவீரமடையும் என்றாலும், அத்தீவிரந்தான் தமிழீழ நெருப்பை நீரூற்றி அணைக்க ஓர் உந்து விசையை அவர்களுக்குத் தரும். இந்த அணுகு முறை பயனளிக்குமே தவிர, எவ்வகையாலும் பயனில்லாமல் போகாது என்பதை உறுதியாக எண்ணிக்கொள்ள வேண்டும். மேலும் இந்தக் கோரிக்கை இங்கிருந்து எழுப்பப் பெறுமாயின், உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களின், ஒட்டு மொத்தமான விடுதலைக் குரலும் அக்கோரிக்கை முழக்கத்துடன் ஒன்றிணையும் என்பதில் ஐயமே இல்லை.
ஆனால், இங்கிருக்கும், ஏனோ தானோ போக்குகளைக் கொண்ட இயக்கங்கள் எண்ணிப் பார்க்க வேண்டுமே! அஃது என்று நடக்குமோ? பொறுத்திருந்துதான் சொல்ல் முடியும்!
- தென்மொழி, சுவடி : 21, ஓலை :11, 1985
தொடர்வண்டிப் போராட்டத்தைத் தொடர்ந்து
படிப்படியாகத் தனித்தமிழ் நாட்டுப்
போராட்டத்தை முன்வைக்க வேண்டும்!
திம்புப் பேச்சு ஒருபுறம்! இலங்கையில் தமிழின ஒழிப்பு மறுபுறம்! இதுவா இராசீவின் அரச தந்திரம்? இங்குள்ள இந்திராக் கட்சியினர்க்கு இது விளங்கவில்லையா? நடுநிலைமை அணுகுமுறை என்று இப்படியா செயல்படுவது? இந்த ஓரவஞ்சனைக்குப் பெயர்தான் ஒப்புரவுப் பேச்சா? தன்மானமுள்ள எவனும் இதை ஒப்பமாட்டான். பொறுக்கித் தின்னும் இந்திராக் கட்சித் தலைவர் அவருக்குத் தன்மானம் இல்லாமல் இருக்கலாம். நிலையறிவு கூடவா இல்லாமல் போய்விட்டது? சிங்களக் கயவர் கொடுமை நாளுக்கு நாள் மிகுவது. திம்புப் பேச்சு தொடங்கியதிலிருந்து இக் கொடுமையைப் பற்றி இராசீவ் ஒருமுறை கூட வாயே திறக்கவில்லையே! அடிப்பவனைக் கண்டித்து பேச்சும் பேசாமல், அடி வாங்குபவனை ‘அமைதியாக இரு ஒத்துப்போ’ என்று கூறிவரும் கொடுமையை என்னென்பது? சிங்களத் தாக்குதலை மறைமுகமாக ஊக்கி விடுவதும், கொடுமை நிகழ்த்தச் செய்வதும், தமிழிழப் போராளிகளை அச்சுறுத்திப் பணியச் செய்வதும், வேறு வழியில்லாத ஒப்புதலுக்கு வற்புறுத்துவதுமே ஆகும்.
தமிழீழப் போராட்ட இயக்கத்தினரை நாடு கடத்தியது. தமிழினத்தின் மேல் தொடுத்த அச்சுறுத்தலே? உரிமைக்குப் போராடுபவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதும், அதன்வழி நாட்டு நுழைவுப் போராட்டத்திற்கு மக்களை எழுச்சி கொள்ளச் செய்வதுமான அதிரடி மருத்துவ முறை, இங்குள்ள தலைவர்களின் நோக்கத்தைத் திசைதிருப்புகின்ற உத்திகளே!
தலைவர்களை வெளியேற்றி விட்டு, ‘இங்குள்ள தந்நலக்காரர்களால் தாம் பேச்சு தடைப்படுகிறது’ என்பதெல்லாம் கொடுமையான குற்றச்சாட்டு பேச்சு தொடங்கிய பின்னரும், இலங்கைக் கயவாளிகள் தங்கள் கொடுமைகளைக் கைவிடாமல் இருப்பது இந்திய அரசியல்காரர்களுக்குத் தெரியவில்லையா?
'டெசோ' நடத்திய தொடர்வண்டிப் போராட்ட விளைவைக் கூட, இங்குள்ள இந்திராக் கட்சித் தலைவர்கள் தில்லியில் போய், இராசீவ் காந்தியைச் சந்தித்ததால் ஏற்பட்ட விளைவு என்று திசை திருப்புவதை மக்கள் உணரவேண்டும். அதிகாரமும், விளம்பரமும் வாய்த் தித்திரிக்கமும் இருந்தால், கழுதையைக் கூடக் குதிரையாக விலைபோக்கிக் காட்டலாமே!
இந் நிலையில், சில தவிர்க்கவியலாத அழுத்தம் காரணமாகத் திம்புப் பேச்சில் தொடர்ந்து ஈடுபட விரும்பும் தமிழீழப் போராளிகள், தமிழீழம் ஒன்றே என்னும் தங்கள் குறிக்கோளில் சிறிதும் நெகிழ்ச்சி காட்டாமல் இருப்பது நல்லது. அதற்கிடையில், இந்தியாவின் பேச்சுக்கு ஒத்துழைப்புத் தர விரும்பினால், முதலில் பேச்சுரைக்கு மூல அடிப்படையாக, பேச்சுரை முடியும் வரை இரு தரப்பாரும் போராட்ட நடவடிக்கைகளை நிறுத்திவைக்க வேண்டும் என்பதையே, இந்தியாவின் முயற்சிகளுக்கு முத்தாய்ப்பாக வைக்கவேண்டும்.
கலைஞர் அவர்களின் இன்றைய ஈடுபாடு மிகவும் மதிக்கத்தக்கதும், போற்றிக் கொள்ளத் தக்கதும் ஆகும். போராடாமல் தமிழினம் எந்தப் பயனையும் பெற்றுவிட முடியாது. போராடித்தான் எதையும் பெறமுடியும் என்னும் நிலைவந்துவிட்ட பின், நாம் பின்வாங்க வேண்டியதில்லை. ஆனால், இடையில் குறுக்கிடும் எந்த அரசியல் நலனையோ, சலுகையையோ நாம் புறக்கணிக்க வேண்டும். கலைஞர், தொடர்வண்டிப் போராட்ட முடிவுபற்றியும், அடுத்த போராட்டத் தொடக்கம் பற்றியும், அண்மையில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்த, "உரிமைத் தமிழீழம்தான் ஈழத் தமிழர்களின் நலன் காக்கும் ஒரேவழி என்பது 'டெசோ'வின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்... தமிழ் ஈழத்தை ஆதரிப்பதும், ஈழத்தமிழர் நலனுக்காகக் கவலைப்படுவதும் பிரிவினைக் கொள்கை என்றான் நாங்கள் அந்தக் குற்றத்தை (குற்றமா அது? கொடுமை, நீக்கம், உரிமை மீட்பு குற்றமாகுமா? அதை ஏன் குற்றம் என்று கலைஞர் ஒப்புக்கொள்ள வேண்டும்?; செய்துகொண்டே இருப்போம்” என்று கூறியிருக்கும் கருத்தை தமிழர் அனைவரும வரவேற்க வேண்டும்; கலைஞர்கள் அவர்கள் எதற்கும் அஞ்சவேண்டுவதில்லை. "உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர்" என்னும் திருக்குறளில் தன் வலிமை உணராமல் , தன் அளவு மீறிய வினையில் ஈடுபடுவது எவ்வளவு அறியாமையோ, அவ்வளவு அறியாமை மிக்கது, தன் வலிவை உணர்ந்தும் ஒருவர் அவ்வினையில் ஈடுபடாமல், செய்தக்க செய்யாமல், காலத்தை வீணாக்குவது என்பதை கலைஞர் உணர்தல் வேண்டும். தமிழினத்தின் உயிரை தம்மின் உயிராகக் கலைஞர் கருதவேண்டும். அரசியல் பதவிபெறும் முயற்சியில் அவ்வுயிர் வீணாய்ப் போவதைவிட, தமிழின உரிமை மீட்பு முயற்சியில் அதுபோவது அவர்க்கு எவருக்குமே இல்லாத வரலாற்றுப் பெருமை தருவதாகும். எனவே தமிழீழக் கொள்கையில் அவர் சிறிதும் தளர்ச்சிக் காட்ட வேண்டியதில்லை. நேற்று வந்த பழனியாண்டிகளின் அச்சுறுத்தலுக்கும் இளைஞர் இந்திராப் பேராயக் குட்டித் தலைவர்களின் மிரட்டல்களுக்கும் கலைஞர் அவர்கள் பின்வாங்க வேண்டியதில்லை. தங்கள் தந்நலத்துக்காகத் தமிழினத்தையே அடகு வைக்கத் துணிந்துவிட்ட அவ்வின நலக் கேடர்களின் குருட்டுப் போக்குக்கு ஓர் இறுதி முடிவு வரும்.
தனித்தமிழ் நாட்டுப் போராட்டத்தை அல்லது கோரிக்கையை முன்னெடுத்துச் செல்ல இதுவே தக்க நேரம், அவ்வாறான ஒரு தக்கப் போராட்டத்தை கலைஞர் நேரம் பார்த்து அறிவிப்பாரானால், அவரைப் பின்பற்றித் தமிழகமே எழுச்சியுறுவது திண்ணம். அத்தகைய வீர வெற்றிப் போராட்டத்தை அவரே முன்னறிவிக்க வேண்டும். மற்றபடி உதிர்ந்து போகும் வெறும் அரசியல் சில்லுண்டி நலன்களுக்கு கருத்து செலுத்துவது அவர்க்குத் தாழ்ச்சியையே கொடுக்கும்.
நல்லாண்மை என்ப தொருவற்குத் தாம்பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல்.
- தமிழ்நிலம், இதழ் எண். 63, 1985
இந்தியாவில் அமைதியின்மைக்கு
இந்திய அரசே காரணம்!....
மக்களின் உண்மையான எழுச்சிக்குக் காரணத்தை விளங்கிக் கொள்ளாமலும், அக்காரன நீக்கத்திற்குரிய வழியைப் பின்பற்றாமலும், எந்த ஓர் அரசாலும் மக்கள் கிளர்ச்சிகளை அடக்கிவிட முடியாது. “அடங்கியிருப்பவர்களே மக்கள்! அடங்காதவர்கள் வன்முறையாளர்கள்’ தீவிரக்காரர்கள், கொடுமைக்காரர்கள்” என்றெல்லாம் குறைத்துப் பேசி, இழித்துப் பேசி மக்கள் கோரிக்கையாளர்களை ஒழித்துவிடலாம் என்று கனவு காண்பது அறியாமை. விடுதலைக்காகப் போராடி மக்களாட்சியை அமைத்தவர்கள், மக்கள் உரிமைகளை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்! இப்பொழுதுள்ள ஆட்சியாளர்கள் அவ்வாறு நடந்து கொள்ளாமல் இருப்பதற்கு, உரிமைக்காகப் போராடியவர்கள் வேறாகவும், ஆட்சியில் உள்ளவர்கள் வேறாகவும் இருப்பதே காரணம். பெற்றவளுக்கே குழந்தையின் மீது பாசமும் பரிவும் ஏற்படும். பெறாதவளுக்கு அவை எங்கிருந்து வரும்? இராசீவ்காந்தி அரசு அதிகார மமதையால் கிளர்ந்து வரும் தேசிய இன எழுச்சிகளை ஒடுக்கத் தொடங்குவதும் அத்தகையதே!
வெறும் அழகுச் சொற்களாலும் கவர்ச்சி அரசியலாலும் மக்களை அமைதிப்படுத்திவிட முடியாது. இந்திய அரசு இப்போது கடைப்பிடித்து வரும் பாசிசக் கொள்கையால் மக்கள் எழுச்சிகள் மீண்டும் மீண்டும் கிளர்ந்தெழுந்து, நாட்டைச் சீரழிக்குமே அன்றி, அமைதியான ஆட்சியை உருவாக்கிவிட முடியாது. இந்தியாவில் அமைதியின்மைக்கு இந்திய அரசின் அரசியல் அதிகார வெறி அடக்கு முறைகளே முழுக்காரணம்!
வெறும் போர்க்கருவிகளால் மக்களை அச்சுறுத்தி, அடக்கி, ஒடுக்கிப் பணிய வைக்கும் உத்திகள் எல்லாம் இனிமேல் செல்லாது என்பதையே ஆங்காங்கே கிளர்ந்து வரும் பஞ்சாப், மிசோரம், குசராத், மேற்கு வங்காள, கூர்க்கா போராட்ட எழுச்சிகள் காட்டுகின்றன. இவற்றின் உண்மையான உணர்வுகளை விளங்கிக் கொள்ளாமல், படை பட்டாளம் கையில் உள்ளன என்று சரமாரியாகச் சுட்டுத் தள்ளுவதனால் மக்களை அமைதியடையச் செய்துவிட முடியாது.
இந்தியாவில் இன்றைய நிலையில் எந்த மாநிலத்திலுமே மக்கள் அமைதியாக இல்லை. இந்தியத் தலைநகரான தில்லியிலேயே நாளுக்கொரு குண்டுவெடிப்பும், நகரத்துக்கொரு போராட்டமுமாக நடந்து கொண்டிருக்கின்றன. காரணம் மக்கள் வறுமை மட்டுமில்லை, அதிகாரச் செருக்குகள், ஆட்சி வல்லாண்மைகளே அப் போராட்டங்களை மேலும் மேலும் வலுப்படுத்திக் கொண்டு ஊக்கி வருகின்றன.
நாட்டைப் பொறுத்தவரையில் வெளிநாட்டுப் போர் முட்டங்களை விட, உள்நாட்டுப் போராட்டங்களே அரசை அமைதியிழக்கச் செய்து வருகின்றன. இவற்றையெல்லாம் ஒரே அதிகார அணுகுமுறையைக் கொண்டு அரசு அடக்கப் பார்க்கிறது. எல்லைகளைப் பாதுகாக்கவும், வெளிநாட்டுத்தாக்கங்களை முறியடிக்கவும் வாங்கிக் குவித்து வைக்கப் பெற்றிருக்கும் போர்க் கருவிகளெல்லாம் மக்களின் உரிமையெழுச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கே பயன்படுத்தப் பெறுகின்றன. கிளர்ச்சியுறும் மக்களைக் கட்டுப்படுத்துவதற்கும், அடக்குவதற்கும் வெள்ளைக்காரர்கள் பயன்படுத்திய அதே உத்திகள் கையாளப் பெறுகின்றன. நீடித்து வரும் இந்த நிலை இந் நாட்டின் எதிர்காலத்தை ஒரு கேள்விக்குறியாக மாற்றியிருக்கிறது.
அரசியலில் எங்குப் பார்த்தாலும் ஊழல்கள், கையூட்டுகள், அதிகாரக் கொள்ளையடிப்புகள், சட்டத்தின் தவறான நடைமுறைகள்!!
பொருளியல் நோக்கில், நாட்டில் பெரும்பகுதி மக்கள் வறுமையின் கொடுமையான பிடியிலிருந்து விடுபடாத அவல நிலை! செத்தும் சாகாத நிலையில் பல கோடி மக்கள்!
தொழிலியல் சீரழிவுகள், ஊதியக் கிளர்ச்சிகள், மொழியியல் வாழ்வியல் போராட்டங்கள்!
எங்கும் எந்த நிலையிலும் அமைதியாக இருக்க வேண்டிய கல்வித் துறைகளிலேயே போராட்டங்கள் ஊடுருவி விட்டன. மாணவர்கள் அமைதியாகப் படிக்க முடியாத சூழ்நிலைகள் உருவாகி விட்டன. பள்ளிகளையும் கல்லூரிகளையும் விட்டு வெளியேறி, மாணவர்கள் தொழிலாளர்களுடனும், போராட்டக்காரர்களுடனும், அரசியல்காரர்களுடனும் இணைந்து, தங்கள் எதிர்காலங்களைச் சிதைத்துக் கொள்ளுகின்ற முறையில், போர்க்கருவிகளைக் கைகளில் எடுக்கத் தொடங்கிவிட்டனர். இந்நிலை நாட்டின் எதிர்காலத்தை எங்கே கொண்டு போய்விடும் என்று கருதிப் பார்க்கவும் இயலாமல் செய்து வருகிறது.
போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள், கதவடைப்புகள், அதிகார முற்றுகைகள், கட்டட உடைப்புகள், போக்குவரத்துச் சிதைவுகள், பொதுச் சொத்துச் சேதங்கள் முதலியவை அங்கிங்கெனாதபடி எங்கும் நடந்து வரும் அன்றாடக் காட்சிகளாகி விட்டன.
போதும் போதாமைக்குக் கொலைகள், கொள்ளையடிப்புகள், கற்பழிப்புகள், கயமைத்தனங்கள் போன்ற குமுகாயச் சீரழிவுகள் வேறு, ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களுக்குச் சூளுரைகளாக வானோங்கி வளர்ந்து வருகின்றன.
இவ்வாரவார அழிவுக் கிளர்ச்சிகளுக்கிடையில் தாம் அரசு விழாக்கள், வேடிக்கைகள், விளையாட்டுகள், சமயச் சந்தடிகள், கலை, காமக் கூத்தடிப்புகள் முதலிய பணப் பாழடிப்பு முயற்சிகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரசாலேயே வளர்க்கப் பெற்று வருகின்றன.
ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள், திரைப்பட நடிக நடிகையர்களை விடக் கவர்ச்சியாக நடிக்கவும் பேசவும் முற்பட்டு, வெட்கங்கெட்ட விளம்பரப் பாணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு நாடகமாடி வருகின்ற இழிவுகள் நாள்தோறும் மிகுந்து வருகின்றன.
அறிவாளிகளுக்கும், அறிவிலிகளுக்கும் வேறுபாடு தெரியவில்லை. படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் அடையாளங்கள் விளங்குவதில்லை; நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் வேற்றுமைகள் புரிவதில்லை; அதிகாரிகளும் அரசியல்காரர்களும் ஒன்றாகவே காட்சியளிக்கின்றனர். இரு தரப்பினரின் சொற்களும் கூட ஒன்று போலவே தோற்றமளிக்கின்றன பேசுவது காந்தியம்! நடப்பது பாசிசம்!
இந்நிலையில்தான் அரசு (இந்தியத் தேசியம்,) நாட்டு ஒருமைப்பாடு, ஒற்றுமை என்று மாய்மாலக் கூத்துகளையும் வாய்நீள உரைகளையும் தொடர்ந்து நடத்தி வருகின்றன. இந்தியத் தேசியம் என்னும் செயற்கை உணர்வில் மக்களைச் சிக்க வைக்க அரும்பாடுபட்டு வருகிறது. இயற்கையான, உண்மையான மொழித் தேசியத்தையோ, இனத் தேசியத்தையோ, அரசு கண்களாலும் காண மறுக்கிறது; காதுகளாலும் கேட்க மறுக்கிறது. மனத்தாலும் மதிக்க மறுக்கிறது. இந்தியா, இந்தியா என்று பொய்த் தேசியம் பேசி, புளுகு ஆட்டம் ஆடி வருகிறது.
அரசு அனைத்து நிலைகளிலும் தனக்கு எதிராகக் கிளர்ந்தெழும் செயல்படும் மக்களின் உண்மையான எழுச்சிக் காரணத்தை அறிந்து கொள்ள விரும்பாமல், அறிந்து கொண்டாலும் செயல்பட முற்படாமல், மக்கள் உணர்வை அவமதிக்கிறது; அவர்களின் கோரிக்கைகளைப் புறக்கணிக்கிறது; அவர்களின் நாயமான போராட்டங்களை முறியடிக்கிறது; போராடுபவர்களையே அழிக்கப் பார்க்கிறது; அழிக்கிறது!
உண்மையான உணர்வாளர்களையும், சிந்தனையாளர்களையும், போராட்ட உணர்வுள்ளவர்களையும், கொள்கையாளர்களையும், தன்னை எதிர்க்கும் தலைவர்களையும் இல்லாமல் செய்துவிட்டு, அல்லது அடக்கி, ஒடுக்கி, அழித்துவிட்டு, யாரை மக்களென்று கூறி, இவர்கள் ஆட்சி நடத்திப் பார்க்க விரும்புகிறார்கள் என்று விளங்கவில்லை. ஊமை மக்களையும், கருத்துக் குருடர்களையும், மண்ணுளிப் பாம்புகளையும், வெறும் முக்கு விழி வைத்த உடல்களையுமே ஒரு நாட்டுக்குத் தேவையான மக்கள் என்று இவர்கள் கருதுகிறார்களோ?
உள்நாட்டில் செழித்து வளர்ந்துள்ள உணர்வாளர்களையும், கருத்தாளர்களையும் போராட்ட வீரர்களையும் அடக்கி ஒடுக்கி அழித்துவிட்டால், வெளிநாட்டுப் போர் வருகிறபோது, இவர்களுக்குத் துணை நிற்க எஞ்சியவர்கள், வெறும் மாந்தப் பாவைகளாகவே இருக்க முடியும். அக்கால், உண்மையான எழுச்சியுள்ள வீரர்களையும் உணர்வாளர்களையும் இவர்கள் பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப் போகிறார்களோ?
எனவே, நாட்டுணர்வுகளையும், போராட்ட எழுச்சிகளையும் வெறும் அழிவுக் கருவிகளைக் கொண்டே அடக்கிவிட நினைக்க வேண்டாம். ஆட்சியாளரிடம் உள்ள அக் கருவிகள் மக்கள் கைகளுக்குவர நெடுநாள் ஆகாது! ஒரேயொரு கால எல்லைதான் தேவை! அஃது எந்தக் காலம் என்று யாராலும் வரையறுக்க முடியாது. ஊர் நலனுக்கென்று தேக்கி வைக்கப் பெறுகின்ற அணைநீர்! அவ்வணையின் கரை உடைக்கப்படும்பொழுது, அஃது ஊரையே அழித்துவிடும் என்பதை எப்பொழுதும் ஆளுமைக்காரர்கள் உணர்ந்து கொள்வதை விடப் போராட்டக்காரர்கள் உணர்ந்திருப்பார்கள் என்பதையேனும் ஆட்சியில் உள்ள இராசீவ்காந்திகளும், இராமச்சந்திரன்களும் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்!
புரட்சி வாழ்க! புதுமை பொலிக!
வறட்சி நீங்குக! வல்லாண்மை ஒழிக!
-தமிழ்நிலம், இதழ் எண். 75, அத்தோபர், 1986
‘கெஞ்சுவதில்லை பிறர்பால்’
(‘பாவலரேறு பெருஞ்சித்திரனார் விடையளிக்கிறார்’ - எனும் தலைப்பின் கீழ் தென்மொழியில் வெளிவந்த வினா-விடைப் பகுதியில் வெளியிடப்பெற்ற தமிழக விடுதலைத் தொடர்பான வினா)
“மிசாக்காலத்தில் தாங்கள் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு இடையிலேயே வெளியே வந்ததாகவும் அப்படிப்பட்ட நீங்கள் தமிழ் நாடு கேட்பதற்கு என்ன வக்கு இருக்கிறது. என்றும், பிரிவினைத் தடைச் சட்டத்தை எரிப்பதாக ஈரோட்டில் தீர்மானம் போட்டு விட்டுப் பின்னர் சட்டத்திற்கு அஞ்சிக் கைவிட்டு விட்டீர்கள் என்றும், அண்மையில் திருச்சியில் கூடிய தி.க. வின் செயற்குழுக் கூட்டத்தில் பேசப்பெற்றதாகக் கேள்விப்பட்டோம். அதற்குத் தங்களின் விளக்கம் என்ன?
- குழந்தை ஈகவரசன், திருச்சி
பார்ப்பன இனம் முன்னேறிப் போவதற்கும், தமிழினம் தாழ்ச்சியுற்றுப் போவதற்கும் நாம் ஒருவர்க்கொருவர் தாழ்வாகக் குறை கூறிக் கொள்ளும் இத்தகைய குற்றச்சாட்டு உணர்வுதான் தலையாய காரணம். அவர்கள் தங்கள் இனத்தவர்களைக் கட்டிக் காத்துக் கொள்கிறார்கள். நாம் ஒருவரை ஒருவர் தாழ்த்திக் கொண்டு பின்னிறங்குகிறோம். நமக்கிதில் விருப்பமில்லை என்றாலும் அவர்கள் கூறுவதற்கு நாம் விடை சொல்ல வேண்டியுள்ளதே என்ன செய்வது?
முதலாவதாக, நாம் எதற்காகவும் யாரிடத்தும் என்றும் மன்னிப்புக் கேட்டது. இல்லை. “கெஞ்சுவதில்லை” என்னும் கொள்கை முழக்கத்தைத் தென்மொழி என்றுமே கைவிட்டதில்லை. மிசாக் கால ஓராண்டுச் சிறையை முழுவதும் நான் ஏற்றுக் கொண்டே வெளிவந்தேன். இடையில் விடுமுறை(parole) எடுத்துக் கொண்டு வெளிவந்து, வீட்டு நிலையையும் அச்சக, இதழ்கள் நிலைகளையும் சரிப்படுத்திவிட்டுப் போக எண்ணி, அரசுக்கு விடுமுறைக்கு வேண்டுகோள் எழுதியிருந்தேன். ஏனெனில், அக்கால் மிசாவில் இருந்தவர்களுக்கு அவரவர் கட்சிச் சார்பில் மாதத்திற்கு 300, 400, 500,1000 என்று அவரவர் குடும்பங்களுக்கு உதவித் தொகை கொடுக்கப் பெற்றது. ஆனால் நமக்கோ அக்கால் உதவுவார் (நம் அன்பர்களைத் தவிர) எவரும் இல்லை. எனவே விடுமுறை கேட்க வேண்டியிருந்தது. அதுவும் கிடைக்கவில்லை அதை இப்பொழுது இவ்வாறு திரித்துப் பேசுவது அவர்களுக்கே நல்லதில்லை. ஒருவரை யொருவர் குற்றம் சாட்டிக் கொள்வதானால், அந்நிலை எங்கே போய் நிற்குமோ தெரியாது. முடிவாக நாம் என்றும் எப்பொழுதும் எந்தக் கொள்கையையுமே கைநெகிழ்த்ததில்லை.
பொதுவான உண்மை ஒன்று உண்டு; ஒருவர் தாம் மெலிவு அடைகிற போதுதான் பிறரைக் குறைகூற முற்படுகிறார் என்பதே அது. அதன்படி அவர்கள் இவ்வாறு கூறத் தொடங்கியுள்ளார்களோ, என்னவோ?
அடுத்தபடி, நாம் பிரிவினைத் தடைச்சட்டத்தை எரிப்போம் எனத் தீர்மானம் போட்டது உண்மைதான். ஆனால் அதன் பின்னர்தான் அப்படி ஒரு தனிச்சட்டமே (separate Law) இல்லை என்று தெரிய வந்தது. அதன் பின்னர் வேறு நடவடிக்கை எடுப்பதற்காக எண்ணி வருகிறோம்
அதுசரி, செயலில் நாம் கோழைகள் அல்லது மோழைகள் என்று குறைகூறப் புகுந்த இவர்கள் இதுவரை செய்த வீரச் செயல்கள்தான் என்ன? கூட்டம் கூட்டுவதும் மாநாடுகள் போடுவதுமா? அவற்றுக்கான எதிர்விளைவுகளைத்தாம் நடுவணரசின் இந்தித் திணிப்பில் நாம் நேரடியாகப் பார்க்கிறோமே! இனி, இன்னொன்று நமக்கும் நம் முன்னோர் வைத்த வைப்பு என ஒன்றிருந்தால் நாமும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான மாநாடுகளையும் நடத்தலாம்; மேலும் மேலும் வருவாய்களையும் "அறுவடை" செய்யலாம், அவ்வாறு செய்வதற்கு நம் இயக்க முதலீட்டுக் கென்று ஓர் 'ஐயா' வோ 'அம்மா' வோ இருக்கவில்லையே, நாம் தாமே முதலும் ஈட்டமும். பின் என்ன செய்வது? எதையும் மெதுவாகத்தான் (ஆனால் உறுதியாக) நாம் செய்ய முடியும்.
- தென்மொழி, சுவடி :22, ஓலை 6, 1986
தமிழகம்! தன்னாட்சியா?
(பெருஞ்சித்திரனார் நேருரைகள் ! (தென்மொழி இதழ்-ஒரு மதிப்பீடு - 1972-76 அண்ணாமலை பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் திரு. ஆ. மணவாளன் க.மு. அவர்களின் மெய்.மு (M.phil) பட்ட ஆய்வுக்காக எடுக்கப் பெற்ற குறிப்புகளிலிருந்து.)
தமிழகம் தன்னாட்சி பெற முடியுமென்று தாங்கள் கருதுகிறீர்களா?
இஃதொன்றும் மலையைக் கரைக்கின்ற செய்தியோ, கடலை வற்றடிக்கின்ற செய்தியோ அன்று. அவையும் கூட இற்றை நாள் அறிவியல் வளர்ச்சிக் காலத்தில் முடிகின்ற செய்திகளே?
தமிழகத் தன்னாட்சி என்பது தமிழகம் நடுவணரசு, ஆட்சியதிகாரத் திவிருந்து விடுதலை பெறுவதே இது வெறும் ஆட்சி மாற்றந்தான், ஒருவர் கையிலிருக்கும் ஆட்சி அதிகாரம் இன்னொருவர் கைக்கு மாறுவதும் மாற்றப்படுவதும் முடியாத வியப்பான செயலன்று. முடிகின்ற செயல்தான். அது வெள்ளைக்காரர்களின் கையிலிருந்த ஆட்சி, வடநாட்டார் கைகளுக்கு வரவில்லையா? அது போன்றதே அது தமிழ் நாட்டார் கைக்கு வரவேண்டும் என்பதும். இது முடியாது என்பதற்கு எந்தக் காரணமோ அடிப்படையோ இல்லை. முயற்சி செய்தால் அனைத்தும் ஒரு கால கட்டத்தில் முடிந்தே ஆக வேண்டும். நான் கருதுவது போல், பலரையும் கருதும் படி செய்து விட்டால், அது செயலாவதற்கு நீண்ட காலம் ஆகாது.
- தென்மொழி, சுவடி :23, ஓலை 12, 1988
‘தமிழ்நாடு தனிநாடு’ ஆகாமல்
இந்தி ஒழியாது!
கடந்த கிழமை திராவிடர் கழகம் இந்தி எதிர்ப்பு மாநாட்டைச் சென்னை பெரியார் திடலில் நடத்திப் பல தீர்மானங்களை நிறைவேற்றி, ஓர் எதிர்ப்பு முயற்சியை அரசுக்குத் தெரிவித்துள்ளது.
திராவிடர் கழகம், நமக்கு எதிரான இயக்கம் அன்று தோழமைக் கழகமே! ஆனாலும், அதன் செயற்பாடுகளும், அணுகுமுறைகளும், நம் தமிழின முன்னேற்றத்தை முறையாக எடுத்துச் செல்வதற்குப் போதுமானவையாக இல்லாமல் இருப்பதுடன், சில நிலைகளில் போலித்தனமானவையாகவும் இருப்பதும், ஏதோ ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்திடையில், தம் பொதுநல ஈடுபாட்டைத் தக்கவைத்துக் கொள்ளவும், புதுப்பித்துக் கொள்ளவும் வேண்டும் என்ற அடிப்படையிலேயே அமைந்திருப்பதால், தமிழின நலம் கருதியும், காலத்தின் அருமையும், தேவையும் கருதியும் நாம் அதனையும், அதன் செயற்பாடுகளையும் இக்கால் திறனாய்வு முறையில் எடுத்துக் கூறியாக வேண்டியுள்ளதற்குப் பெரிதும் வருந்துகிறோம்.
இந்த வகையில் நாம், இதுவரை நேரிடையாக எந்தக் கருத்தையும் அதன் செயற்பாடுகள் தொடர்பாக இவ்வாறு எடுத்துக் கூறிட முன்வந்ததில்லை. ஆனாலும், இக்கால், தவிர்க்கவியலாத சில விளைவுகளை நோக்கி, அதைப்பற்றியும் சில பல கருத்துகளைக் காணவேண்டிய கட்டாயத்துக்குக் கொணரப்பட்டுள்ளோம். எதிரான நோக்கிலன்று; சார்பான நோக்கிலேயே, இக் கருத்துகள் இங்குக் கூறப்பெறுகின்றன என்பதை அன்பர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
நம் மதிப்பிற்குரிய, மானமிகு வீரமணி அவர்களின் தமிழின முன்னேற்ற முயற்சிகளையும், செயற்பாடுகளையும், உணர்ச்சியளவிலும், உழைப்பின் அடிப்படையிலும் என்றுமே நாம் பாராட்டவும் போற்றவும் கடமைப்பட்டவர்கள். தேவையான இடத்தில் தொலைவில் நின்றும், இணைந்து – இயங்கியும் நாம் அவ்வாறு பாராட்டியும் – போற்றியும் வந்திருக்கிறோம். ஆனாலும், அவரின் முயற்சிகளிலும், தமிழின முன்னேற்ற அணுகுமுறைகளிலும், அவை தொடர்பான போராட்ட நிலைகளிலும், சில முரண்பாடான போக்குகள் தோன்றிய பின்னர், நாம் ஒதுங்கியும், ஒதுக்கப்பட்டுமே இருந்து வருகிறோம். இருப்பினும் அவர் முயற்சிகளுக்கு எதிர்ப்பான நிலைகளை நாம் அன்றும் – இன்றும் எந்த நிலையிலும் கடைப்பிடித்ததில்லை, இனியும் அத்தகைய நிலைக்கு நாம் வந்துவிடப் போவதுமில்லை. ஆனாலும், கருத்துநிலையில், தமிழின நலம் நோக்கி, அவர் போக்குகளை உண்மையும் – உறுதியாகவும் நடத்திட வேண்டும் என்னும் கவலையுடன் வெளிப்படையாகச் சிலவற்றைச் சொல்லியே ஆகவேண்டும் என்ற காலக் கட்டாயம் வந்துவிட்டது. இந்தவகையில் சில சொற்களை நாம் எச்சரிக்கையுடனும், தோழமையுணர்வுடனுமே கையாள விரும்புகிறோம். இவ்வாறு வெளிப்படையாக எழுதுவதற்காக, நடுநிலையும் அழுத்தமுமான உணர்வுடன், தமிழ் நலமும், தமிழின நாட்டு நலமும் கருதும் மெய்யன்பர்கள் நம்மைப் பொறுத்துக் கொள்வார்களாக,
நம் இந்தி எதிர்ப்பு முயற்சிகள் இன்று – நேற்று ஏற்பட்டதன்று. சரியாகச் சொன்னால், கடந்த அறுபது ஆண்டுகளாக நாம் இந்தியை எதிர்த்துக் குரல் கொடுத்து வருகிறோம். 1926ஆம் ஆண்டிலேயே, இந்தி எதிர்ப்புக் குரல் தொடங்கிவிட்டது. தந்தை பெரியார் அவர்கள், தாம் தம் 7.3.1926ஆம் நாள் 'குடி அரசு' இதழிலேயே முதன் முதலாக 'தமிழிற்குத் துரோகமும் இந்திமொழியின் இரகசியமும்' என்று இந்தியை எதிர்த்தும், கண்டித்தும், 'தமிழர்களுக்கு ஏற்பட்டு வரும் பல கேடுகளில் (ஆபத்துகளில்) இந்தியும் ஒன்று” என்று எச்சரிக்கை செய்தும், விரிவாகவும் - விளக்கமாகவும் ஒரு கட்டுரை எழுதி வெளியிட்டார். அப்பொழுதெல்லாம், இந்தி திணிக்கப்படவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இருப்பினும், பின்னால் இந்தத் தமிழினத்துக்கு வரவிருந்த மிகப் பெருங்கேட்டை முன்னமேயே உணர்ந்து, முன்னறிவித்த பெருமை அவருடையது. அப்பொழுதெல்லாம் நாமும், இன்று இந்தியைத் தீவிரமாக எதிர்க்கும் பலரும் (அறுபது அகவையைத் தாண்டியவர்களைத் தவிர) பிறந்தே இருக்கமாட்டோம். எனவே, நாம் பிறப்பதற்கு முன்பிருந்தே 'இந்தி' எனும் நச்சுச்செடிக்கு, இங்கிருந்து எதிர்ப்புக் குரல் கிளம்பிவிட்டது. அந்த முதல் குரலும், தந்தை பெரியாருடையது என்று எண்ணும்பொழுது நாம் வியப்பும், அதே சமயத்தில் சொல்லவொண்ணாத் துயரமும் கொள்கிறோம்.
இனி, தந்தை பெரியார் அந்தக் கட்டுரையைத் தொடர்ந்து இந்தியை எதிர்த்துப் பல மாநாடுகளை நடத்தியும், பல நூற்றுக் கணக்கான தீர்மானங்களை நிறைவேற்றியும் நில்லாமல், பல போராட்டங்களையும் தம் இறுதிக்காலம் வரை செய்து கொண்டிருந்தார். அந்தப் போராட்டங்களில் பங்குகொண்ட பெருமக்கள், பெரும்புலவர்கள், பெருந்தலைவர்கள், பேரறிஞர்கள் அனைவரும் ‘தமிழக இந்தி எதிர்ப்பு’ வரலாற்றில் நெடுகவும் வருகிறார்கள்; இன்னும் வந்து கொண்டுதானிருக்கிறார்கள்.
எனினும், இந்தி எனும், அன்று தோன்றிய நச்சுச் செடி, இன்று படிப்படியாய் பார்ப்பனர்களாலும், வடவர்களாலும், வல்லாட்சியாளர்களாலும் பெரிய நச்சு மரமாக வளர்க்கப்பட்டுப் பரவி, நம் அனைத்து மொழி, இன, நாட்டு, கலை, பண்பாட்டு முயற்சிகளையும் முன்னேற்றங்களையும் துளிர்க்கவும், வளரவும் விடாமல் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாகக் கால்கொண்டு காழ்த்து வருகிறது.
அந்த இந்தி எனும் சண்டி மாட்டை - மதங்கொண்டு வெறிபிடித்துத் தமிழினத்தையே கட்டுக்குலைக்க வந்த வடநாட்டு யானையை இன்னும் நாம் அடக்கமுடியாமல், தந்தைபெரியார் அவர்களால் எண்ணியும், எழுதியும், எதிர்ப்புக் காட்டியும், தீர்மானங்கள் போட்டும், போராட்டம் நடத்தியும், சிறை சென்றும், இம்மியும் அடக்கவோ, ஒடுக்கவோ இயலாமற்போன, அதே வழிகளை நாமும் கடைப்பிடித்து இந்தித்திணிப்பை ஒடுக்கவோ, ஒழித்தோ விட முடியுமா என்பதே நமது கேள்வி.
'தம்மின் தம் மக்கள் அறிவுடைமை' என்பார் திருவள்ளுவர். தந்தை பெரியார் அவர்கள் கையாண்ட அதே முறைகளை, அந்த அளவில் கூட கையாளாமல், அவர் ஈட்டியை எடுத்துக் குத்தியிருந்தால் நாம் ஆணியைக் கொண்டு குத்துவதைப்போல், அவர் தகரி(பீரங்கி)யைக் கொண்டு வேட்டுக் கிளப்பியிருந்தால், நாம் பட்டாசு வெடிகளைக் கொளுத்தி, அந்த வெறி யானையின் முன்னர் போடுவதுபோல், நாமும் சலசலப்புகளைக் கிளப்புவதும், தகரக் குவளைகளை எடுத்துத் தட்டிக் காட்டுவதும், தீப்பந்தங்களைப் போன்ற தீர்மானங்களை, வெறும் வாய்ச் சொற்களால் கொளுத்தி வீசி எறிவதும், போராட்டங்கள் என்னும் பெயரில் வண்ண வாணங்களையும், விளம்பரப் பூ மத்தாப்புகளையும் கொளுத்திப் பெரியார் திடலிலிருந்து வெளியிட்டுக் காட்டுவதும், ஏற்கனவே நாம் கண்டும், காட்டியும், கையாண்டும் புளித்துப்போனவையும், சலித்துப் போனவையுமான வழிமுறைகள் இல்லையா, என்பதே நம் அடுத்த கேள்வி.
தந்தை பெரியார், 1930ஆம் ஆண்டு, தஞ்சை, நன்னிலத்தில் கூட்டிய சுயமரியாதை மாநாட்டிலேயே (திராவிடர் கழகமாகக் கருக்கொண்டு உருவாகாமல் இருந்தபொழுதே இந்தியை எதிர்த்துப் பேசியும், தீர்மானம் போட்டும் காட்டினார். அதன்பின் 1937இல் இராசாசி இந்தியைக் கட்டாயமாக்கியதை, அதே ஆண்டு இறுதியில், மாநாடு கூட்டிக் கண்டித்துத் "தமிழ்நாட்டை தனிநாடாகப் பிரிக்க வேண்டும்" என்னும் வரலாற்றுப் புகழ்மிக்கத் தீர்மானத்தையும் நிறைவேற்றிக் காட்டினார்.
இன்று, நாம் அதுபோல் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவரவும், நிறைவேற்றவும் தொடை நடுங்கிக்கொண்டு, அஞ்சியஞ்சி, 'இப்படியே இந்தியைத் திணித்துக் கொண்டிருந்தால், இந்தியா சுக்கல் சுக்கலாக உடைந்துவிடும்' என்று பேசியும், அப்பேச்சையே கூடத் தீர்மானமாக நிறைவேற்றத் துணிவின்றி, 'ஆங்கில மொழியையே இணைப்பு மொழியாக ஆக்கவேண்டும்' என்று ஆங்கிலத்தையே தூக்கிப் பிடித்தும், தீர்மானம் போட்டுக் கொண்டிருக்கிறோம். காட்டாற்று வெள்ளம்போல் கரைபுரண்டு வரும் போரின் இந்தித் திணிப்புக்கு இந்த எதிர்ப்பும், இணைவான், இனிப்புப் பேச்சும் போதுமா, என்பதே நம் மூன்றாவது கேள்வி
சூடற்றுச் சுரணையற்று, நாம் காட்டுகின்ற உள்ளுணர்வுகளையும், கருத்துகளையும் கோரிக்கைகளையும், எதிர்ப்புகளையும், போராட்டங்களையும், ஒரு சிறு அளவிலும் காதிலோ, கருத்திலோ வாங்கிக் கொள்ள்த வட் நாட்டு இத்தி வெறியர்களுக்கும், வலதிகார் வஞ்சகர்களுக்கும், நெஞ்சில் ஈரமும் - இரக்கமும் அற்ற அர்சியில் கென்டியவர்களுக்கும் பெரியார் என்னும் அரிமாவாலேயே இவ்வகையான முயற்சிகளின் வழி உண்மையை உணர்த்த முடியவில்லை என்றால் அவரேந்திக் கீழே போட்டுவிட்ட, எரிந்துபோய்க் கரியாகிவிட்ட போராட்ட நெய்ப் பந்தங்களை நாம் எடுத்து வீசி என்ன பயன்? யார் அஞ்சிக் குலை நடுங்கப் போகிறார்கள்? இதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டாவா?
1978 ஆகத்து 15-இல் பெரியார் திடலில், மானமிகு வீரமணி கூட்டிய இந்தி எதிர்ப்பு மாநாட்டிலேயே நம்மை ஏதோ, மதிப்பும் அன்பும் காட்டி அழைத்துக் கலந்துகொண்டு கருத்துரையாற்றக் கேட்டுக் கொண்டதால், நாம் அன்றே, அங்கேயே, கலைஞர், செட்டி நாட்டரசர், கி.ஆ.பெ. குன்றக்குடி அடிகளார், கி. இராமலிங்கனார் போன்ற தலைவர்களையெல்லாம் மேடையில் வைத்துக் கொண்டு சொன்னோம். 'இந்தியை எதிர்ப்பதெல்லாம் வீணான முயற்சிகள்: இந்தியை எதிர்க்கமுடியாது; பெரியாரை விட நாம் ஒன்றும் அதிகமான முயற்சியை அதில் செய்துவிட முடியாது; எனவே, இந்தியை எதிர்த்து மாநாடுகள் கூட்டுவதையும், தீர்மானங்கள் நிறைவேற்றுவதையும், போராட்டங்கள் நடத்துவதையும் கூட நாம் விட்டுவிட வேண்டும். இவ் வகையாலெல்லாம் நம் ஆற்றலை இழந்துகொண்டே போகக்கூடாது; நாம் இந்தியை எதிர்ப்பதை விட்டுவிட்டு இந்திய அரசையே எதிர்க்கவேண்டும். தமிழ்நாட்டைத் தனிநாடாகப் பிரிக்கப் போராடவேண்டும். தமிழ்நாடு தனியாகப் பிரியும்வரை இந்தியும் ஒழியாது; வடநாட்டுச் சுரண்டலும் வல்லாண்மையும் ஒழியாது; பார்ப்பணியமும் ஒழியாது; இந்து மதமும் ஒழியாது; அதனால் தமிழும் வாழாது; தமிழனும் தலையெடுக்கமாட்டான்” என்று.
இதுபோலும் கருத்துகளை நாம் கூறுவதாலேயே 'திராவிடர் கழகம்' நம்மை ஒதுக்கிவைத்திருக்கிறது என்பதையும், நம் மிகச்சிறிய இயக்க முயற்சிகளுக்கும், ஆங்காங்கே, தரப்பெறுகின்ற ஆதரவைத் தடைப்படுத்தி, வளரவிடாமல் செய்கின்றார்கள் என்பதையும் நாம் நன்கு அறிவோம். நாம் எவருக்கும் எதிராகவோ, அல்லது நம் வாழ்க்கை உயிர் பிழைப்புக்காகவோ, எந்த முயற்சியையும் தொடங்கவில்லை; செய்துகொண்டும் வரவில்லை. இமைய மலை போலும் நலன்களைக்கூட, நாம் எடுத்துக்கொண்டு சுமந்து நிற்கும் கொள்கைக் குன்றுக்காக, எற்றி உதைத்துவிட்டு, எட்டி வந்து, இடறாமல் நடைபோட்டு வருகிறோம். இந்த நிலைகளை நாம் எந்த விளம்பர நோக்கத்துடனும் கூறவில்லை. இந்திரா காந்தி, இராசீவ் காந்தி அல்லர், எந்தக் காந்தியையுமே, நம் மொழி, இன, நாட்டுநலக் கொள்கையில் என்றுமே பொருட்படுத்தியதும், மதித்ததும் கூட இல்லை. 'நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்' என்னும் கொள்கையுணர்வில் மூச்சு விட்டுக் கொண்டிருப்பது எம் வாழ்க்கை இம் மூச்சு அதன் பொருட்டு நிறுத்தப்படும் என்பதற்காக நாம் வருந்திக்கொண்டும் அஞ்சிக்கொண்டும் வாழவேண்டிய தேவை நமக்கில்லை. ஊரை அடித்து உலையில் கொட்ட வேண்டிய இன்றியமையாமையும் எமக்கில்லை. இன்றும் அரிசியும், பருப்பும், உப்பும், புளியும் அன்றாடப் பட்டியலிலேயே சேர்க்கப் பெற்றுள்ளன. எனவே, இன்றிறந்தாலும் ஒன்றுதான் என்று இறந்தாலும் ஒன்றுதான்! எனவே எவருக்காகவும் அஞ்சிக்கொண்டு, நமக்கென்று தேர்ந்து கொண்ட மொழி - இன - நாட்டு நலக் கருத்துகளைப்பற்றி உண்மைகளை யாருக்காகவும் ஒளிக்க வேண்டுவதில்லை.
இவற்றையெல்லாம் நம் நல்ல நெஞ்சுணர்வால் எண்ணிப் பாராமல் எம்மேல் இல்லாத பழிகளையும் இழிவுகளையும் சாற்றிக் கொண்டும், தூற்றிக்கொண்டும் கோழைகளையும் வயிறு கழுவ வாழ்க்கை நடத்தும் மோழைகளையும் தூண்டிவிட்டுக் கொண்டும், எம் தூய மொழி, இன, நாட்டு நலத் தொண்டுக்கு மாசு கற்பித்து, எம்மையோ எம் கருத்துகளையோ வீழ்த்திவிட முடியாது என்பதால், இக் கருத்துகளை இத்துணை அழுத்தந்திருத்தமாக வெளியிட வேண்டியிருக்கின்றதென்று அன்பர்கள் கருதிக்கொள்ள வேண்டுகின்றேன். மற்று, இனநல, நாட்டுநலக் கொள்கையில் நாம் தொய்வு கொள்ள வேண்டிய தேவை என்ன வந்தது? யாருக்காக நாம் அஞ்ச வேண்டும்? பின்னர் ஏன் நம் முயற்சிகளில் இத்துணைத் தொய்வு? அச்சம்? கோழைத்தனம்?
என்ன இந்தி எதிர்ப்பு வேண்டிக் கிடக்கிறது இன்னும்? மாநாடுகள் எதற்கு? தீர்மானங்கள் எதற்கு? சொல்லிக் கொண்டிருந்தவர்களுக்கே, சொல்லிக் கொண்டிருந்தவற்றையே, சொல்லிக் கொண்டிருப்பவர்கள், சொல்லிக் கொண்டிருக்கிறோம்! இவற்றால் யாருக்கு என்ன புதுப்பயன் விளைந்து விடப் போகிறது? ஏன் நம்மிடத்தில் இந்த அடிமைத்தனமும் மடிமைத்தனமும்! நாங்கள் கூட்டினால், இந்தி எதிர்ப்பு மாநாடு சிறப்புறாது என்ன பயனும் விளைந்துவிடாது என்பது போலவேதான் நீங்கள் கூட்டினாலும்! ஏன், கலைஞர் கூட்டுவதுதானே! அவர் கூட்டினால் வடநாட்டு அரசு, ஓரளவுக்கு அஞ்சும்! ஆனால் அவர் அவர்களைப் பார்த்து அஞ்சுகிறார் அஞ்சுவதும், நாணுவதும், ஆமைபோல் வாழுவதும், கெஞ்சுவதுமாக எத்தனை நாளைக்குக் கிடப்பது?
இந்தியைப் பற்றித்தான் எல்லா வரலாறும் இங்குள்ளவர்களுக்குத் தெரியுமே! கடந்த அறுபது ஆண்டுகளாக அதுபற்றிய விளக்கங்களும், அதை எதிர்த்துத் தகர்க்க வேண்டிய தேவைகளும்தாம் மலைமலையாக கூறப்பட்டு வந்துள்ளனவே! இன்னும் யாரைத் தட்டியெழுப்ப இம் மாநாடுகள்? யாருக்கு உணர்வூட்டுவதற்கு இம்முயற்சிகள்? யாரை ஏமாற்றுவதற்கு இப்போராட்டங்கள்?
நாம் இனி எழுப்ப வேண்டுவது, மக்களை அன்று நம்மைத்தான் நாம் எழுப்பிக் கொள்ளவேண்டும்!
நாம் இனி உணர்வூட்ட வேண்டுவது, இளைஞர்களுக்கு அன்று, நமக்குத்தான் உணர்வூட்டிக் கொள்ளவேண்டும்!
நாம் இனி, ஏமாற்றுவதற்காகப் போராட்டங்கள் நடத்தக் கூடாது; ஏமாறாமல் இருக்கின்றோம் என்கிற போராட்டங்களை நடத்த வேண்டும்?
எழுதியிருக்கின்ற இந்தி எழுத்துகளை அழித்தால் அவன், மீண்டும், நம்முடைய வரிப்பணத்தை எடுத்தே நன்றாக அழுத்தந் திருத்தமாகவும், முன்னையவற்றையும் விடப் பெரிதாகவும் எழுதிக் கொள்கிறான்!
நாம் தூக்கும் கரிநெய்(தார்)ச் சட்டிக்கும் எழுது தூரிகைக்கும் செலவழிக்கும் பணத்தை, வெடி மருந்துக்கும், துமுக்கிக்கும் (துப்பாக்கி) செலவழிக்க வேண்டும். அதே எழுத்துகளை யாகிலும் மண்ணெய் கொண்டு அழிக்காமல் துமுக்கிகொண்டு சுடப் போகிறோம் என்று அறிவிக்க வேண்டும். இந்திக்காரனைச் சுடாமற் போனாலும், இந்தி எழுத்தையாவது சுடும்படியான புதிய போராட்டத்தை, உந்துவேகம் கொண்ட உணர்வுச்செயலை நாம் நடத்திக்காட்ட வேண்டும்.
இதற்குப் பெயர்தான் ‘தம்மின் தம்மக்கள் அறிவுடைமை’ !
தந்தை பெரியார் கரிநெய்ச்சட்டி எடுத்துக்கொண்டு போய் இந்தியை அழித்தால், நாம் துமுக்கி கொண்டாவது அந்த எழுத்தைச் சுட்டிக்காட்டிப் போராட வேண்டாவா? இப்படிச் செய்தாலன்றோ, நமக்குப்பின் வருபவர்களாகிலும், அதே துமுக்கியை எடுத்துப் போரிட வருவார்கள்!
எனவே, பறவைகளை விரட்டுகின்ற முறையில், 'ஆலோலம்' என்னும் இந்தி எதிர்ப்புக் கருத்துகளை மாநாடுகளில் எடுத்துக் கூறி அல்லது பாடி, இந்தி என்னும் காட்டெருமையை விரட்ட முடியாது. அதைக் கல்லால் அடித்துத் துரத்துகின்ற வகையில், 'தனித்தமிழ்நாடு' என்னும் கொள்கைக் கல்லால் அடித்து விரட்ட வேண்டும். 'தமிழ்நாடு தனிநாடு' ஆகாமல் இந்தி ஒழியாது! யாராலும் ஒழிக்க முடியாது. இதனைத் தெளிவாகத் தந்தை பெரியார் அவர்கள் உணர்ந்துதான் 1937-இலேயே தனித்தமிழ் நாட்டுப் பிரிவினையை வலியுறுத்தினார்கள். ஆனால், உயிர் மூச்சான இந்தக் கொள்கை என்னாயிற்று? ஏன் கைவிடப்பட்டது? இந்தக் கொள்கையை முன்வைத்து நாம் போராடினால் என்ன? ஏன் அச்சம்? அச்சப்பட்டு அச்சப்பட்டுத் தமிழினம் இத்துணைக் காலம், ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகள் அடிமையுற்றது போதாதா? அடுத்த தலைமுறையில் இப்பொழுதுள்ள போராட்ட நிலைகள் என்னாகும்? – என்பவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்து, அவற்றுக்கெல்லாம் முற்ற முடிந்த முடிபாக – வலித்தமான – ஒரு முயற்சியை நாம் மேற்கொள்ள வேண்டாவா?
வீரமணி நடத்துகின்ற இந்த இந்தியெதிர்ப்பு மாநாட்டைக் கலைஞர் நடத்தினால், எல்லா நிலையிலும் இன்னும் வலுப்பெற வாய்ப்பிருக்குமே! மேலும் இதுபோன்ற மாநாடுகளைக் கடந்த அறுபது ஆண்டுகளாகச் சென்னையிலேயே நடத்திக் கொண்டிருப்பதை விட, வடமாநிலங்களில், குறிப்பாகத் தில்லியிலேயே போய் நடத்தினால், இன்னும் எழுச்சியாக இருக்காதா?
வடநாட்டுத் தலைவர்களையும், இங்கு நடைபெறும் இந்தி எதிர்ப்பில் சேர்ப்பது ஒருவகை விளம்பரத்திற்குத்தானே பயன்பட முடியும்? அவர்களால் என்ன விளைவு ஏற்பட்டுவிட முடியும்? அவர்கள் இந்தியை எதிர்க்கவில்லை; இந்திரா பேராயத்தை – அதன் ஆட்சியை எதிர்க்க இதையொரு வாய்ப்பாகத்தானே பயன்படுத்திக் கொள்கிறார்கள்! மேலும், அவர்கள் இந்தியை எதிர்ப்பதானால், அத்தகைய எதிர்ப்பை நம் தென்னாட்டு உறுப்பினர்களுடன் சேர்ந்து பேசுவதுதானே முறை? அந்த வகையில் அவர்கள் வடநாட்டுத் தலைவர்களையும் இணைத்துப் போராடலாமே! அவ்வாறில்லாமல், அவர்கள் தென்னாட்டில் கூட்டப்பெறும் மாநாடுகளில் வந்து, இந்தியெதிர்ப்புக் கருத்துகளை இங்குள்ள மக்களிடமே கூறுவதால் என்ன விளைவு ஏற்படப் போகிறது? அவர்களின் பொருட்டாகவே நாம் ஆங்கிலத்தை வேறு அளவிறந்து தூக்கிப்பிடித்துப் பேச வேண்டியிருக்கிறது.
இந்நேரத்தில், இங்குள்ள திராவிடர் கழகத் தோழர்களுக்கு நாம் ஒன்றைத் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.
நாம் ஆங்கிலத்தை முன்னிருத்தி இந்தியை எதிர்க்கத் தேவையில்லை. தமிழ்மொழியை முன்னிருத்தியே – தமிழ்மொழியின் வளர்ச்சியையும் வளத்தையும் முன்வைத்தே – இந்தியை நாம் எதிர்க்கவேண்டும். நாம் நம் தாய்மொழிக்காக இந்தியை எதிர்த்துப் போராடுகையில், இந்திக்காரர்கள் ஆங்கிலத்துக்காக இறங்கிவரட்டுமே! இப்பொழுது நாம் தமிழுக்காக இந்தியை எதிர்க்கிறோமா, அல்லது ஆங்கிலத்துக்காக அதை எதிர்க்கிறோமா? ஏன், இதில் குழப்பம் உண்டாக்க வேண்டும்?
தமிழ்மொழியை எண்ணுகையில் நமக்கு ஆங்கிலமும் சரி, வேறு எந்த மொழியும் சரி, அனைத்தும் இந்தியைப் போலவே அயல் மொழிகளே! ஆங்கிலம் என்றால் சருக்கரை மொழி; தமிழ் என்றால் வெல்லமா? இந்த மனப்பான்மையுடன் நாம் இந்தி எதிர்ப்புச் செய்யும்வரையில், நம் கோரிக்கையும் வெற்றி பெற முடியாது; நாமும் தன்னுரிமை பெறமுடியாது.
ஆங்கிலம் என்கிற மொழியின் பயன்படுத்தத்திற்காக நாம் அதைப் படித்துக்கொள்வதென்பது வேறு அதற்காக நாம் இந்தியை எதிர்ப்பது என்பது வேறு. தமிழுக்காகவே நாம் இந்தியை எதிர்க்கின்றோம் என்பதைப் பட்டையை உரித்தாற்போல் பளிச்சென்று வடநாட்டானுக்கு அடித்துச் சொல்ல நாம் ஏன் தயங்க வேண்டும்.
நம்மைப் பொறுத்தவரை, ஆங்கிலமும் இந்தியும் ஒன்றுதான். ஆங்கிலம் அறிவு மொழியானால் என்ன? அதற்கு மட்டும் நாம் அடிமை ஆகலாமா? 'இந்திமொழி வேண்டாம், ஆங்கிலத்தை இணைப்பு மொழியாக்கு' என்று நாம் சொல்லும்போது, 'ஆங்கிலம் என்னும் வேற்று நாட்டு மொழிக்காக' நாம் வழக்குரிமை (வக்காலத்து) வாங்குவதாக அவர்கள் கூறுவார்களே தவிர, நம் தாய்மொழி தமிழுக்காகப் போராடுவதாக அவர்கள் கூறமாட்டார்களே!
அண்மையில் சென்னை, உயர்நெறி மன்றத்தில், இந்திப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு சலுகையைக் காட்டி மருத்துவக் கல்லூரியில் இடம் வேண்டும் என்று தொடுக்கப்பெற்ற வழக்கொன்றில், 'இந்தியை எதிர்த்ததை, தமிழ் மொழியின் பாதுகாப்புக்குப் போராடியதாகக் கருதுவதற்கு இடமில்லை' என்று தீர்ப்பு வழங்கியதை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். (தினமணி 28.11.1985) (வழக்கு மன்றத் தீர்ப்பின் பிற பகுதிகள் நம் கருத்துக்கு மாறுபட்டவையாகவே உள்ளன என்பதை நாம் கவனிக்கவேண்டிய தேவையில்லை.)
ஆங்கிலம் - இந்தி - தொடர்பான இந்தக் கருத்தையும் 1978ஆம் ஆண்டில் மதிப்பிற்குரிய வீரமணி அவர்கள் கூட்டிய மாநாட்டிலேயே நாம் சுட்டிக் காட்டியிருக்கிறோம் என்பதையும் இங்கு நினைவூட்ட விரும்புகிறோம்.
எனவே, நம் தாய்மொழியான தமிழ்மொழியை வளர்க்கவும் வளப்படுத்தவுமே நாம் இந்தியை எதிர்க்கவேண்டும். இதே காரணத்துக்காகவுமே சமசுக்கிருதத்தையும் நாம் தவிர்க்கிறோம்; அல்லது எதிர்க்கிறோம் என்பதையும் அறிதல் வேண்டும்.
ஆங்கிலம் இந்தியாவின் இணைப்புமொழி ஆகவேண்டும் என்பதை வடநாட்டு இந்தி வெறியர்களும், இங்குள்ள தேசிய அடிமைகளும் ஒப்பமாட்டார்கள். இதற்குக் காரணம் வடவர்க்கு இந்திமொழியின் மேல் உள்ள வெறியும், இங்குள்ள தேசியத் திருடர்களுக்குத் தமிழ்மொழியின்மேல் உள்ள பற்றின்மையுமே! அதுபோலவே, இந்தியை எதிர்ப்பதற்கும் நாம் தமிழை விரும்புவதே அதன் மேலுள்ள பற்றே காரணமாக இருக்கவேண்டும்.
'சப்பான் மொழியில் படிக்க சீனர் விரும்பமாட்டார்கள்' என்பதை, 'இந்தியில் படிப்பதைத் தமிழர் விரும்பமாட்டார்கள்' என்பதற்கு எடுத்துக்காட்டாக மதிப்பிற்குரிய வீரமணி கூறுகிறார். 'அவ்வாறு கூறும்போது தமிழர் ஆங்கிலத்தில் மட்டும் படிப்பதை ஏன் விரும்பவேண்டும்?'
'எனக்குத் தமிழ்ப்பற்று இல்லாமல் இல்லை' என்று வீரமணி சொல்ல வேண்டுவதில்லை. அவ்வாறு இல்லை என்று யார் சொன்னது?
'ஆங்கிலம் அறிவியல் மொழியாக வளர்ச்சிபெற்றிருக்கிறது – என்பதில் நமக்குக் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால், அந்த அளவுக்குத் தமிழும் வளர்ச்சிபெறவேண்டும்' என்னும் கருத்து இன்னும் தோன்றவில்லையே என்பதுதான் நம் வருத்தம்; மனக்குறை! அந்நிலை எளிதில் முடிகிறதோ இல்லையோ அந்த நோக்கமே நமக்கு வேண்டியதில்லை என்று நாம் சொல்ல முடியுமா? அப்படியானால், தமிழுக்காக நாம் ஏன் இத்தனை முயற்சிகள் செய்யவேண்டும்? எனவே, இந்திமொழிக்கு மட்டுமன்று, சமசுக்கிருதத்திற்கு மட்டுமன்று, ஆங்கிலத்திற்கும் நாம் அடிமையாகி விடக்கூடாது என்பதே நம் வலித்தமான ஒன்றிணைந்த கொள்கையாக, உணர்வாக இருத்தல் வேண்டும். இந்தக் கருத்து, இன்றுள்ள சூழலில் இயலாமல், அல்லது, நிறைவேறாமல் இருக்கலாம். நாளைக்கும் அது நிறைவேறக்கூடாது என்றிருக்கலாமா? எண்ணிப்பார்க்க வேண்டுகிறோம்.
ஆங்கிலத்தை நாம் விரும்பிக் கற்கலாம்; அதன்வழி, இன்றுள்ள அறிவியல் பயனையும் நாம் பெறலாம். ஆனால், வாழ்வியல் பயனையும், இழந்துபோன உரிமைகளையும், இனநலத்தையும் நாம் நம் தாய்மொழி வழியாகத்தானே பெறமுடியும்!
இந்தியோ எதற்கும் பயன்படாத ஒரு வெற்றுமொழி. இந்திய தேசிய நீரோட்டம் இந்திய ஒருமைப்பாடு, ஒற்றுமை என்பதற்காக மட்டுமே இந்தியைக் கற்கவும், தொழில்மொழியாக்கவும் முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், அதனால் முழுப்பயன் பெறுபவர் அல்லது பெறப்போகிறவர்கள் வடநாட்டுக்காரர்களும் இந்தி வெறியர்களும் பார்ப்பனர்களுந்தாம். தமிழரோ, இந்தியால் என்றுமே இரண்டாந்தரக் குடிமக்களாகவே இருக்க முடியும். ஆங்கிலத்தை ஏற்பதும் ஓரளவு இத்தகைய விளைவைத்தானே ஏற்படுத்தும்? ஆங்கிலத்தை, நம் தமிழ்மொழியை இன்றைய அறிவியல் வாழ்க்கைக்கேற்பத் தகுதியுடையதாகச் செய்வது வரையே, பயன்படுத்திக் கொள்ளும்படி செய்தல் வேண்டும். இறுதிவரையிலான, நிலையான முடிவு ஆங்கிலமே என்று இருக்கும்படி நாம் ஏற்றுக்கொள்ளவும் கூடாது; அவ்வாறு காலப் போக்கில் ஆகிவிடும்படி நாம் விட்டு விடவோ திட்டமிடவோ கூடாது.
ஏற்கனவே, வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் ஆங்கிலத்தையும், பிரெஞ்சையும் செருமனியையும், சீன, உருசிய, மொழிகளையும், அந்தந்த நாடுகளில் படித்தும் பேசியும் வருவதுடன், தங்கள் தாய்மொழியான தமிழைப் படிக்க வாய்ப்பின்றியும், மறந்தும் வருகின்றனர். அத்தகைய நிலை ஆங்காங்குள்ள சூழல்களாலும் ஏற்படுகிறது. அந்த நிலைகளைத் தடுக்கவும் அவர்களுக்கிருக்க வேண்டிய தமிழ் ஈடுபாட்டை வளர்த்தெடுக்கவும் ஆன கவலையும், முயற்சியும் எடுத்துக் கொள்ள வேண்டிய இந்நேரத்தில், நம் அனைத்து முயற்சிகளும், போராட்டங்களும், நம் தாய்மொழியான தமிழை நோக்கியும், இன அடிமை நீக்கத்தையும் உரிமை மீட்பையும், நாட்டு விடுதலையையும் கருத்தில் கொண்டுமே செய்யப்பட வேண்டும் என்பது மிகவும் இன்றியமையாதது.
எனவே, விளம்பரத்திற்காகவும், நம்மேல் மக்கள் வைக்க வேண்டிய நம்பிக்கைக்காகவுமே நாம் வீணான போராட்டங்களையும், பயனற்ற முயற்சிகளையும் செய்துகொண்டிராமல், திட்டமிட்டுத் துணிவான, ஒட்டுமொத்தமான நாட்டு விடுதலை முயற்சியைக் கையிலெடுக்க வேண்டும் என்றும், அதையும் கலைஞர் முன்னின்று செயல்படுத்த வேண்டும் என்றும், பிற தமிழின நலங்கருதும் தலைவர்கள் இன்றைய அரசியல் பயன்களைக் கருத்தில் கொள்ளாமல் அதற்குத் துணிந்து, துணைநிற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
அனைத்துலக அளவில் இராசீவ்காந்தி தம் கைகளை வலுப்படுத்திக்கொள்ளும் அரசியல் தந்திர முயற்சிகள் நாள்தோறும் வேறு வேறு வகைகளில் திட்டமிட்டுச் செய்யப்பெற்று வருகின்றன. கிழக்காசிய வல்லதிகார நாட்டுத் தலைவர்கள் பலர் ஒன்றுகூடி, மக்களின் உண்மையான கோரிக்கைகளை நசுக்கிக் கீழ்மைப்படுத்தி வருவதும், அவர்களுடன் இணைந்து இராசீவ் காந்தியும் அத்தகைய முடிவை நோக்கித் திட்டமிட்டு வருவதும் இந்தியாவையே குடியரசு என்னும் பெயரால் ஓரதிகார ஆட்சிக்கும், மன்னர் மரபு தழுவும் ஒரு குடும்ப ஆட்சிக்கும் உட்படுத்த முயன்று வருவதும், இந்நிலையில் இந்தியத் தேசிய இனங்களின் உரிமையுணர்ச்சிகளே எதிர்காலத்தில் குழிதோண்டிப் புதைக்கப்படும் வாய்ப்புக் கூறுகள் வலிமை பெற்று வருவதும் உற்று நோக்கத் தக்கன. எனவே, நாம் உண்மையான தமிழின முன்னேற்றத்தையும், உரிமை மீட்பையும் நலத்தையும் விரும்புவோமானால், அத்தகைய முயற்சிகளுக்கான காலம் இதுவே என்று கருதி, இங்குள்ள அனைத்து இயக்கங்களும் தமிழ்த் தேசிய உரிமைக் குரலை உடனே எழுப்பியாக வேண்டும் என்று, மன, அறிவு, செயல் காழ்ப்பின்றி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
செய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின்.
- தமிழ்நிலம், இதழ் எண். 68, சனவரி, 1986
தென்மொழி, தமிழ்நிலம் ஆசிரியர் தமிழ்நாட்டுப்
பிரிவினை உணர்வைத் தூண்டுகிறார்!
நடுவணரசின் கண்டனம்!
• அவரின் எழுத்துகள் வன்முறையைத் தூண்டுவனவாக இருக்கின்றன!
• அவர் எழுத்துகளை ஆராய்ந்த நடுவணரசின் உசாவல் குழு அவரைக் கடுமையாகக் கண்டிக்கிறது!
• அக்குழுவின் முடிவை, நடுவணரசின் செய்தித்தாள் கழகமும் ஏற்றுக்கொள்கிறதாக அரசுக்கு அறிக்கை கொடுத்திருக்கிறது!
நடுவணரசின் செய்தித்தாள் கழகத்தின் (Press Council of India) சார்பில், தென்மொழி, தமிழ்நிலம் இதழ்களின் ஆசிரியர் பெருஞ்சித்திரனார் அவர்கள்மேல் சாட்டப்பட்டிருந்த குற்றச் சாட்டுகளை ஆய்வதற்காகக் கடந்த அக்தோபர் 28-ல் ஐதராபாத்தில் ஓர் ஆய்வுக் குழு அமைக்கப் பெற்றிருந்தது.
அக்குழு, தன் ஆய்வு அறிக்கையையும் இறுதியான தீர்ப்பு முடிவையும் அரசுக்குக் கொடுத்திருந்தது. அதனடிப்படையில் செய்தித்தாள் கழகம், நவம்பர் 10 ஆம் பக்கல் அத்தீர்ப்பு அறிக்கையை ஆசிரியர் அவர்களுக்கு அனுப்பித் தன் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது. அறிக்கையின் ஆங்கில வாசகத்தையும். அதன் தமிழ் மொழிபெயர்ப்பையும் கீழே தருகிறோம்.
எத்தகைய சூழ்நிலையிலும், எதற்கும் அஞ்சாமல் அரசு நடவடிக்கைக்குக் கவலைப்படாமல் தமிழின முன்னேற்ற முயற்சிகளை எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. என்பதை அன்பர்கள் தெளிவாக, இவ்வறிக்கையினின்று விளங்கிக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்.
இந்தச் சூழ்நிலையில், நம் இயல்பான முயற்சிகளுக்காக அரசு எந்த அளவு தண்டனை கொடுத்தாலும் நாம் மனமுவந்து ஏற்றுக் கொள்ள அணியமாகவே இக்கடுமையான, அஞ்சத்தக்க நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறோம். அப்போக்கில் இன்று போல் என்றுமே உறுதியுடன் இருப்போம் என்பதை அன்பர்களுக்கும் அதே பொழுது அரசுக்கும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இனி, ஐதராபாத்தில் நடந்த ஆய்வுக் குழுவின் அறிக்கை வருமாறு:-
தமிழ் மாத இதழ் 'தென்மொழி' தமிழ்க்கிழமை இதழ் 'தமிழ் நிலம்’ ஆகியவற்றின் மேல் அரசின் செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் கூறிய குற்றச்சாட்டுகளின்படி, நடுவணரசின் செய்தித்தாள் கழகம் 1986, அக்டோபர் 28 இல் ஐதராபாத்தில் எடுத்த தீர்மான முடிவு.
கடந்த 1986, சனவரி 17-இல் அரசின் (தகவல்) மற்றும் செய்தி பரப்புத்துறை அமைச்சகம், தமிழ் மாத இதழான ‘தென்மொழி' தன் சூலை - ஆகத்து 1985 வெளியீட்டிலும், தமிழ்க்கிழமை இதழான ‘தமிழ்நிலம்' தன் 1985 சூலை 28 வெளியீட்டிலும், அவற்றின் வாசகர்களிடையில் பிரிவினை நோக்கத்தைத் தம் ஆசிரியவுரைகளில் வெளிப்படுத்தியிருந்தன என்று, ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. இவற்றுள், முதல் வெளியீட்டில் இலங்கை அரசாலும், அதன் பாதுகாப்புப் படைகளாலும் கொடுமைப்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவாத திரு. இராசீவ் காந்தியின் நடவடிக்கையைத் திறனாய்வு செய்திருக்கிறது. இரண்டாம் வெளியீட்டில், தமிழின் முன்னேற்றத்ததிற்கு முடிவான தீர்வு இறைமை பெற்ற தமிழ்நாட்டு அரசை அமைப்பதே என்று கூறப்பெற்றிருக்கிறது. அத்துடன் தமிழகத் தலைவர்களைத் தனித்தமிழ் நாட்டைத் தனியரசாக உறுதி செய்ய அறைகூவி அழைக்கிறது.
இச் செய்தி கடுமையானது என்று கருதப்பட்டதால், அவ்விதழ்களின் ஆசிரியர் மேல் அது தொடர்பாக ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்தற்குக் காரணம் காட்டுமாறு அறிக்கை கொடுக்கப்பட்டது.
அதற்கு ஒரு முழுத் தொகுப்பான எழுத்துரை விடையாகக் கொடுக்கப்பட்டதில், அவ்விதழ்கள் தமிழர்களுக்கு தம் முந்தைய வரலாற்றை அறிவிக்கும் நோக்கத்துடனும், அவர்களின் நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைப் பிறவினத் தாக்குதல்களிலிருந்து காக்கும் எண்ணத்துடனும் அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் கருத்துடனும் அவை எழுதப் பெற்றனவாகக் கூறப்பட்டது. அத்துடன் அவர்களின் மொழி, இலக்கியம் பண்பாடு ஆகியவை பிறவினத்தவரால் அழிக்கப்படுவதாகவும், அவற்றைக் காப்பது தங்கள் கடமை என்றும் கூறப்பெற்றது. மற்றபடி, தமிழரல்லாத பிற இனத்தவரின் உணர்வுகளை ஊறுபடுத்துவது தங்கள் நோக்கமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இச்செய்தி, 1986 செப்டம்பர் 18-இல் புதுத்தில்லியில் மேற்படி கழகத்தின் உசாவல் குழுவில் கருத்தாய்வு செய்யப்பட்டது.
அக்குழுவின் உசாவலுக்கு முறையீட்டாளரோ குற்றஞ் சாட்டப்பட்டவரோ நேரில் வரவில்லை.
எனவே, பதிவில் இருந்த செய்திகளை மட்டும் நன்கு ஆய்ந்து பார்த்ததில், அவ்வாய்வுக் குழு, குற்றஞ்சாட்டப் பெற்ற அக்கருத்துரைகள், எல்லா வகையான செய்தியிதழ் நெறிமுறைகளையும் வரைமுறைகளையும் அல்லது. இந்நாட்டுச் சட்ட முறைகளையும் வலித்தமாக மீறுவனவாக முழு மனத்துடன் முடிவு செய்தது. அவை நாட்டுப் பிரிவினைக் கருத்துகளைப் பரப்பத் தூண்டுவனவாகவும், நாட்டு ஒற்றுமைக்கு ஏதம் விளைவிப்பனவாகவும் உள்ளன. என்று ஆய்வுக்குழு தீர்மானித்து, இவ்விதழாசிரியரைக் கண்டித்தது.
செய்தியிதழ்க் கழகமும் அவ்வாறே முடிவு செய்கிறது.
- தென்மொழி, சுவடி 22 ஓலை 12, 1986
தமிழ்நாட்டுப் பிரிவினைக் கருத்துகளைப்
பெருஞ்சித்திரனார் தூண்டிவருகிறார்.
அண்மையில் நடுவணரசுச் செய்தி ஒலி - ஒளிபரப்புத்துறை அமைச்சகம், பாவலரேறு பெருஞ்சித்திரனார் மேலும், அவர் தென்மொழி, தமிழ்நிலம் ஆகிய இதழ்களில் எழுதிவரும் பாடல்கள், கட்டுரைகள், பேச்சுகள், நடவடிக்கைகள் ஆகியவற்றின் மேலும் நேரடி நடவடிக்கை எடுத்துக் கொண்டுள்ளது.
நடுவணரசுச் செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சகத்திலிருந்து, அரசுச் செயலர், திரு. சி.டி. குலட்டி(G.D. Gulati) இந்திய அரசின் செய்தித்தாள் பேரவை(Press Council of India)க்கு கடந்த 17.1.1986ஆம் பக்கல் எழுதிய குற்றச்சாட்டு மடலில், ‘குறிப்பிடப்பெற்ற பின்வரும் இதழ்களின் கட்டுரைகள், பாடல்கள் இவற்றின் பகுதிகள் அவற்றைப் படிக்கின்றவர்களுக்கு, நாட்டுப் பிரிவினை உணர்வாளர்களைத் தூண்டுகின்ற வகையில் அமைந்துள்ளன. அவை தொடர்பாக, அமைச்சகச் செய்தித்தாள் பிரிவகம் போதிய கருத்துச் செலுத்தித் தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
நடவடிக்கை எடுக்க வேண்டியனவாக அமைச்சகச் செயலர் குறிப்பிட்டுள்ள பகுதிகள் வருமாறு:
தென்மொழி:
1. சுவடி 21, ஓலை : 10 (சூலை - ஆகத்து ‘85)
அட்டைப்பாடல் : ‘உரிமை ஒடுக்கமே விடுதலை. முழக்கம்'
2. மேற்படி இதழ் பக்கம் : 6
'சிங்கள வெறியர்களால் கற்பழிக்கப்பட்ட ஒரு தோழியின் கடிதம்'
3. மேற்படி இதழ் பக்கம் : 17
வள்ளிவேள்வனின் பாடல் ‘மண்ணில் ஒங்குக உரிமை ஈழமே'
4. சுவடி 21, ஓலை : 11 (ஆகத்து - செப். ‘85)
அட்டைப்பாடல் : ‘வன்பு வடவரை நடுங்கிட வைப்போம்’
5. சுவடி 21, ஓலை 12
அட்டைப்பாடல் : ‘அரசியலைச் சாராமல் இனவியலால் ஒன்றுபடுக'
தமிழ்நிலம்: இதழ் எண். 56 (28.4.1985)
1. முகப்புக் கட்டுரை: இந்தக் கட்டுரையில், இலங்கை பற்றிய செய்திகளில் தமிழ்நாடு அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பது. இராசீவ் காந்தி செயவர்த்தனனுக்குத் துணை போகின்றார் என்ற பகுதிகளும் கரடிப்பட்டி க. கண்ணன் எழுதிய கட்டுரைப் பகுதிகளும்.
2. இதழ் எண். 56 (28.7.1985)
'திம்புப் பேச்சில் தென்பில்லை' என்னும் முகப்புக் கட்டுரையும், 3-ஆம் பக்கத்தில் வெளிவந்த உ.த.மு.க. மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் பேசிய பேச்சுகளும்.
3. மேற்படி இதழ் : பக்கம் 5
பக்கம் 5-இல் வெளிவந்த மலேசியா சுப. சிதம்பரம் அவர்களின் 'தமிழ்நாடும் தமிழீழமும் உடனே அமைந்தாக வேண்டும்' என்னும் மடலும், மடற் பகுதிகளும்.
4. இதழ் எண். 62 (1.1.8.1985)
முகப்புப் பக்கச் செய்தி. இதில் செயவர்த்தனாவை இராசீவ் காந்தி நல்லவராக்கப் பார்க்கிறார். தமிழர்களின் ஒரே போராட்டம். தமிழீழம் அல்லது தமிழ்நாட்டுப் போராட்டமே எனும் கருத்துகள்.
5. இதழ் எண். 66 (24.11.1985)
பக்கம் 2. 'குமுதத்திற்கு ஒரு மறுப்பு மடல்' - தி.மு.க. பொதுச் செயலாளர், திரு. க. அன்பழகன் அவர்களின் பேச்சுப்பற்றி.
6. மேற்படி இதழ் பக்கம் 4:
'தந்தை பெரியாரின் தலையாய கொள்கை தனித்தமிழ்நாடு பெறுவதே' - கட்டுரை.
7. மேற்படி இதழ் பக்கம் 4: 'தமிழகத் தலைவர்களே! தமிழ்நாட்டை அமையுங்கள்' எனும், மலேசியா சுப. சிதம்பரம் அவர்களின் மடல்.
இப் பன்னிரண்டு கட்டுரை, பாடல் பகுதிகளில் வெளியிடப் பெற்ற கருத்துகளின் மேலும், இவற்றை வெளியிட்ட இதழ்களாகிய தென்மொழி, தமிழ்நிலம் ஆகியவற்றின் ஆசிரியர் பெருஞ்சித்திரனார் மேலும், 1978-ஆம் ஆண்டு செய்தித் தாள்கள் பேரவைச் சட்டம் பிரிவு எண். 14-இன் படி ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கான காரணத்தை 14 நாள்களுக்குள் காட்டவேண்டும் என்றும், அவ்வாறு காரணம் காட்டாவிடத்து எவ்வகையான மறு அறிவிப்பும் இல்லாமல் மற்ற சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அறிக்கை வந்துள்ளது.
இது தொடர்பாக ஆசிரியரின், சட்ட ஆய்வுக் குழு ஆராய்ந்து, தக்க விடையளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
- தமிழ்நிலம், இதழ் எண். 69 பிப்பிரவரி, 1986
குடமுருட்டியில் வெடித்த குண்டு
"ஏறத்தாழ எழுபது கோடி மக்கள் வாழ்கின்ற, உலகின் மிகப் பெரிய குடியரசு நாடு இந்தியா. இந்த நாட்டில்தான் உலகில் மிகச் சிறந்த ஆன்மீக உணர்வு பொங்கித் துளும்புகிறது; இங்கு தான் வற்றாத 'புனித' ஆறுகளும், எண்ணிலடங்காத கோயில் - குளங்களும் நிறைந்திருக்கின்றன; மேலும், இந் நாட்டைத்தான் முப்பத்து மூவாயிரம் தேவர்களும், பதினெண்ணாயிரம் முனிவர்களும், கின்னரர், கிம்புருடர் போன்றவர்களும், சிவன், விண்ணு, பிரம்மா போன்ற கடவுள்களும், வலம் வந்து காக்கிறார்கள். (மற்ற நாடுகளை யார் காக்கிறார்களோ தெரிய வில்லை). இஃது உலகிலேயே மிகவும் புண்ணியம் நிறைந்த நாடு” என்றெல்லாம் தொன்மைப் பெருமைகள் நிலவுகின்றன. இங்குதான் வெறும் மேலுடன் சுற்றித் திரிந்த காந்தி என்னும் மாந்தத்தெய்வம்(!) பிறந்தது; இங்குதான் புத்தர் என்னும் 'புண்ணியன்' நல்லிறக்கம் கொண்டார்’ என்றவாறெல்லாம் புகழ்பாடிக் கொண்டாடுகிறார்கள்.
இத்தகைய சீரும் சிறப்பும்(!) கொண்ட இந்நாட்டின் தலைமை அமைச்சர்தாம் குண்டு தொளைக்காத எஃகுக் கவசச்சட்டை அணிந்துகொண்டு, பல்லாயிரக்கணக்கான காவலர்கள் புடைசூழ்ந்து காவல் காக்க, குண்டுகள் ஊடுருவாத கண்ணாடிக் கூண்டுக்குள் நின்று பேசுகிறார் என்றால், இஃது ஒரு குடியரசு நாடு என்றோ, இங்குள்ள தலைமையமைச்சர் மக்கள் நலம் கருதுகிறவர் என்றோ கூறவியலுமா என்பதைத் தேசியம் பேசும் திருடர்கள் எண்ணிப்பார்த்தல் வேண்டும்.
அண்மையில் திருவையாறு இசை விழாவிற்கு வரவிருந்த இந்நாட்டின் தலைமை அமைச்சர் வருகைக்கு இரு நாள்களின் முன், தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் வழியில் உள்ள குடமுருட்டி ஆற்றின் பாலத்தில் வெடிகுண்டு வெடித்தது. இதை வெடிக்கச் செய்தவர்கள் 'உழவர்கள் விடுதலை இயக்கம்' என்றும் 'தமிழக விடுதலைப் படை' என்றும் செய்தித்தாள்களில் செய்தி வந்தது. யார் இந்தக் குண்டை வைத்தார்கள் என்பதை நாம் எண்ணிப் பார்க்கும்பொழுது, நம் இந்திய ஆட்சித் தலைமையைப் பற்றி வெட்கித் தலை குனியத்தான் வேண்டும்.
“காவிரி வறண்டு கிடக்கும்போது, இராசீவ் காந்தியே, தியாகராயர் திருப்போற்றி விழாவுக்காக உங்கள் வருகை தேவைதானா?" என்றும்,
"இராசீவ் காந்தி ஓர் இந்தி வெறியர், அவர் இலங்கைத் தமிழர் சிக்கல் குறித்துப் புறக்கணிப்பாக இருக்கிறார்" என்றும் குண்டு வெடித்த பாலத்துக்கு அருகில் கிடைத்த அறிக்கைகளிலும், சுவரொட்டிகளிலும் செய்திகள் இருந்தனவாகத் தெரிகின்றன. இவற்றில் உள்ள கேள்வியும், கருத்தும் ஞாயம் அற்றனவென்று கருதிவிட முடியாது. இங்குள்ள இலக்கக்கணக்கான தமிழ் நெஞ்சங்களில் இருக்கின்ற உணர்வுதான் அது.
வெறும் விளம்பரத்தாலும், வேடிக்கை விழாக்கள், விளையாட்டுகள் போலும், பணக்காரப் பொழுதுபோக்குகளாலும் இந்நாட்டில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஏழை மக்கள், உழவர்கள், தொழிலாளர்கள் போன்றவர்களின் வயிறு நிரம்பிவிடாது. ஆட்சி என்பது அவர்களுக்காகத்தான் - பெரும்பான்மையும் இருக்க வேண்டுமே தவிர, வடையும், பொங்கலும் நெய் வழிய வழிய முக்கிவிட்டுப் பண்பாடு, கலை, என்று வாய்ப்பாட்டுப் பாடிக்கொண்டும் அதற்குத் தக ஆடிக் கொண்டும், பட்டாடை உடுத்திக்கொண்டு அவற்றைக் கேட்டும் பார்த்தும் தலைகளை ஆட்டிக் கிறுகிறுத்துப் போகும் சிறுபான்மை மக்களுக்காக மட்டுமே அன்று என்று எச்சரிக்கை செய்யத்தான் இந்தக் குடமுருட்டிப் பாலத்தில் வெடித்த குண்டு என்று அதிகார வெறியர்கள் எண்ணிக்கொள்க!
காவிரி நீரின் ஒப்பந்தத்தை ஓர் ஒழுங்கு செய்து, தமிழக உழவாண்மைக்கு உயிரூட்ட ஒரு முயற்சியும் செய்யாத அதிகாரிக் கிறுக்கர்கள், இசைவிழாவில் வந்து பாடி ஆடிக்களிக்க வேண்டுவது தேவைதானா என்னும் வினா, இராசீவ் காந்திக்கு உண்மையான அகக் கண்களைத் திறந்திருக்க வேண்டும்.
அதேபோல், இலங்கையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் மிகக் கொடுமையாகச் சாகடிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு ஏதோ நன்மை செய்வது போல் வாயளவில் பேசிவிட்டுச் செயலில் மறைமுகமாகச் சிங்கள ஆட்சி வெறியன் செயவர்த்தனன் கையை வலுப்படுத்திக் கொண்டிருப்பதும், அதே பொழுதில், ஆப்பிரிக்க இனமக்களுக்காகவும், அராபிய மக்களுக்காகவும் முதலைக் கண்ணீர் வடிப்பதும் எத்துணையளவு கரவான கொடுமை! இதை இராசீவுக்கு நினைவூட்டத்தான் குடமுருட்டிப் பாலத்தில் குண்டு வெடித்தது!
ஆனால், பல்லாயிரக் கணக்கான கருவிக் காவலர்களின் அதிகாரச் சுவர்களுக்குப் பின்னால், இந் நாட்டின் வல்லதிகாரி இராசீவ் காந்தி திருவையாறு வந்ததும், தியாகராயர் திருப்போற்றி விழாவைத் தொடங்கி வைத்ததும், வழக்கம்போல் நடந்தேறி விட்டன.
இந்த நாட்டின் தலைமை அதிகாரம் பார்ப்பனர்க்கே என்பதை மெய்ப்பிக்கும் அளவில், தியாகராயர் பெயராலும் கலை, பண்பாடு என்னும் புனைவாலும் பார்ப்பனக் கும்பலுக்கு நடுவில், பார்ப்பனீய, முதலாளிய, மதவெறி, இந்திவெறி முதலிய உணர்வுகள் கொண்ட இரண்டுங்கெட்ட, பார்ப்பனத் தலைமையமைச்சர் இராசீவ்காந்தி திருவையாற்றில் உள்ள பார்ப்பன அதிகாரி ஒருவரின் வீட்டில் உணவுண்ண இசைந்திருக்கிறார் எனில், இந் நாட்டு மக்களுக்கு உண்மையான விடிவு எவ்வாறு கிடைக்கப் போகிறது?
தலைமையமைச்சர் ஒருவர் தமக்குக் கீழுள்ள அதிகாரி ஒருவரின் அதுவும் அய்யர் ஒருவரின் வீட்டில் உணவுண்ணுவது என்றால், இந் நாட்டின் அரசியக்கம் எப்படிச் சரியாக நடக்க முடியும்? ஊழல் எவ்வாறு ஒழியும்? நேர்மை எங்ங்ன் விளையும்?, நடுநிலையாளர் எண்ணிப் பார்க்கவேண்டும்.
இவை எல்லாவற்றுக்குமான ஒட்டுமொத்த எச்சரிக்கைதான் குடமுருட்டிக் குண்டு! அந்தக் குண்டு திருவையாற்றில் மட்டுந்தான் வெடிக்கலாம் என்பது நாட்டு நிலையாக இல்லை. பஞ்சாபில் வெடித்துக் கொண்டுள்ளது! அசாமில் வெடித்தது! மிசோராமில் வெடித்தது! நாகலாந்தில் வெடித்தது! வங்காளத்தில் வெடித்தது! குசராத்தில் வெடித்தது! திரிபுராவில் வெடித்தது! இன்னும் பல இடங்களில் வெடிக்க உள்ளது! எழுச்சி கொண்டுவிட்ட இத் தொடர் நிகழ்ச்சியை இனி வாயால் ஊதி அணைத்துவிட முடியாது.
எந்நாட்டிலும், எப்பொழுதும், புதுமைப் புரட்சிக்கு ஆதரவாக எப்படி மக்கள் பலர் உள்ளார்களோ, அப்படியே அதற்கு எதிராகவும் ஆட்சிக்குச் சார்பாகக் கைத்தாளம் போடவும் மேல்மட்ட வாழ்க்கையினர் இருக்கவே செய்வர். அவர்களை வைத்து மட்டும் ஆட்சியினர் மதிமயங்கிவிடக்கூடாது என்பதற்கான எச்சரிக்கையே இக் குடமுருட்டிக் குண்டு நிகழ்ச்சி!
— தமிழ்நிலம், இதழ் எண். 69 பிப்பிரவரி 1986
தமிழின எதிர்காலத்
தீர்மானிப்புக் கருத்தரங்கு!
(தமிழக முன்னேற்றத்தின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் ஒரே தீர்மானம்)
உ.த.மு.க.வின் செயல் மேனிலைக் குழு, அண்மையில் தஞ்சையில் கூடி வரும் திசம்பர் மாதம் 27, 28-ஆம் பக்கல்களில், சென்னையில் "தமிழின எதிர்காலத் தீர்மானிப்புக் கருத்தரங்கு" என்னும் பெயரில், மிகப் பெரிய அளவில் ஒரு கருத்தரங்கை நடத்துவதெனத் தீர்மானித்தது.
கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளர், பேச்சாளர் என்னும் அளவில், எவரையுமே அழைக்காமல், தமிழின எதிர்கால முன்னேற்றத்தில் அக்கறையும், ஆர்வமும் கொண்ட அனைவருமே கூடி, அதன் எதிர்கால உறுதிப்பாட்டிற்கென ஒரு தீர்மானமாக இறுதி முடிவு ஒன்றை, உறுதி செய்வதென்றும், அதையே கழகம் எதிர்காலச் செயல் நடவடிக்கையாக மேற்கொள்வதென்றும், உலகத் தமிழின முன்னேற்றக் கழகத்தின் செயல் மேனிலைக் குழு தீர்மானித்தது.
குறிப்பிடப் பெற்ற இரண்டு நாள்களிலும், சென்னை நடுவிடத்தில், வரலாற்றுச் சிறப்புடைய இக் கருத்தரங்கம் நடக்கும்.
இக் கருத்தரங்களில் அனைவரும் பங்குகொள்ளலாம். அனைவருமே முன்னிசைவு பெற்றுக்கொண்டு பேசலாம். இறுதியில் பார்வையாளர்கள் நடுவில், ஓர் 'ஒப்போலைப் பதிவு' நடைபெறும். அதன் முடிவு இரண்டாம் நாள் கருத்தரங்கின் முடிவில் கருத்தரங்கின் ஒரே தீர்மானமாக நிறைவேற்றப்பெறும்.
கருத்தரங்கில் தம் முடிவான கருத்துகளை எடுத்துக்கூற விரும்புபவர்கள் முன்னமேயே, முதல்வர்க்கு எழுதித் தம் பெயர்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டுகிறோம்......
— தமிழ்நிலம், இதழ் எண். 74, செபுதம்பர் 1986
தமிழின எதிர்காலத் தீர்மானிப்புக் கருத்தரங்கு !
பேரன்புள்ள தமிழ் நெஞ்சங்களே!
வணக்கம்.
தமிழினம் இன்றைக்கு உள்ள நிலை மிகவும் கேடானதாகும். அரசியல் நிலையிலும், பொருளியல் நிலையிலும் மற்ற மொழி, கலை, பண்பாட்டு நிலைகளிலும் நாளுக்கு நாள் இது மிகவும் நலிந்துகொண்டும் வலுவிழந்து கொண்டும் வருகிறதை நாம் அனைவருமே உணர முடியும்.
நமக்கென்று உள்ள நம் அரசியல் கட்சித் தலைவர்களும், பிற சாதி, இனத் தலைவர்களும் அவரவர்களால் ஆன முன்னேற்ற முயற்சிகளைச் செய்துகொண்டு வந்தாலும், அவர்கள் ஒன்றிணைந்து ஒட்டுமொத்தமான வலுவை வருவித்துக் கொண்டு, அல்லது உருவாக்கிக் கொண்டு முயற்சி செய்வார்களேயானால், ஏதாவது ஒரு சிறு அளவிலாகிலும் நாளுக்கு நாள் நம் இனத்திற்கு ஒரு வகை முன்னேற்றம் ஏற்படும் என்று கருதலாம். ஆனால், நிலைமை அவ்வாறு இல்லை.
எனவே, இதைப் பற்றி நாம் அனைவரும் இக்கால் மிகக் கவலைப்பட வேண்டியிருக்கிறது. நம்மை ஆள்வதாகச் சொல்லிக் கொள்ளும் இந்திய அரசின் முதலாளியப் பார்ப்பனிய ஆட்சியாளர்களும் சரி, நம் தமிழ்நாட்டுத் தில்லியரசின் அடிமைகளும் சரி, நாளுக்கு நாள் நமக்கு நலிவுகளையும் மெலிவுகளையுமே உருவாக்கி வருவதுடன், இவ்வினம் மேலும் மேலும் சிதைந்து வலுக்குறைந்து போக வேண்டும் என்னும்படியாகவே செயலாற்றி வருகிறார்கள். எனவேதான் நாம் முழுமூச்சுடன் இறங்கி, ஏதாவது உருப்படியாகச் செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.
இம் முயற்சியில் மற்றவர்களை நாம் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதும், 'பூனைக்கு யார் மணி கட்டுவது' என்னும் கதையாகவே முடிந்துவிடும் என்று கருதவும் அஞ்சவும் வேண்டி யிருக்கிறது.
எனவே, நம் தமிழினத்தைப் பற்றி நாம் எதிர்காலத்தில் என்னென்ன முயற்சிகளை எடுத்துக் கொண்டு சிந்திக்கவும் செயலாற்றவும் வேண்டும் என்பது பற்றி, நாம் அனைவரும் கூடிப் பேசித் தீர்மானிப்பது, என்று நம் உ.த.மு.க. மேனிலைச் செயற்குழு தீர்மானித்து 'தமிழின எதிர்காலத் தீர்மானிப்புக் கருத்தரங்கு' என்னும் ஒரு கருத்தரங்கைக் கூட்டுவதற்கு முடிவெடுத்தது.
அக் கருத்தரங்கு வரும் திசம்பர் மாதம் 27, 28-ஆம் பக்கல்களில் சென்னையில் நடைபெறவிருக்கிறது என்பது முன்னமேயே தெரிவிக்கப்பெற்றுள்ளது. அது ஒரு வரலாற்றுச் சிறப்புடைய கருத்தரங்கு ஆகும். அக் கருத்தரங்கிற்கு, மாணவர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள், உழவர்கள், தொழில் முதல்வர்கள், பல கட்சித் தலைவர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் ஆகிய பல்வேறு துறைகளில் உள்ள ஆடவர் பெண்டிர் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு, நல்லபடியான, உருப்படியான, உறுதியான ஒரு முடிவெடுக்க உதவும்படி நம் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இக் கருத்தரங்கை நடத்தி முடிக்க ஏராளமான பொருள் செலவு ஆகும் என்று கருதுகிறேன். இச் செலவுகளுக்காகும் பெருந்தொகையை ஆங்காங்கு அன்பர்களிடம் நாடு முழுமையும் திரட்டிக் கொண்டிருக்க நேரமும் முயற்சியும் இன்றைய நிலையில் நமக்குப் போதாது. ஆகையால், இவ்வறிக்கையையும், முன் தமிழ்நிலம் இதழ் எண். 74-இலும், தென்மொழி சுவடி : 22, ஓலை : 10-இலும் வெளிவந்துள்ள அறிக்கையையும் கண்ணுற்ற, கண்ணுறும் அன்பர்கள், ஆதரவாளர்கள், கொள்கையுணர்வு உள்ளவர்கள், செல்வர்கள், கொடையாளிகள் ஆகிய அனைவரும் கூர்ந்து தங்களால் பேரளவு முடிந்த தொகைகளை உடனடியாக என் பெயருக்குப் பணவிடையாகவோ, வரைவோலையாகவோ, நேரிலோ அனுப்பி, இவ்வரும் பெருஞ் செயலில் பங்கு கொண்டு வரலாற்றுச் சிறப்புப் பெறும்படி கேட்டுக் கொள்கிறேன். பற்றுச் சீட்டுகள் அச்சிட்டு அனுப்பவும், அவற்றைக் கொண்டு தொகை தண்டிக் கொண்டிருக்கவும் நமக்கு நேர்மில்லை. ஆனால், அனுப்பப்பெறும் ஒரு காசுக்கும் தமிழ்நிலத்தில் பெயர்ப் பட்டியல் வெளியிடப் பெறும்.
மொத்தமாகத் தண்ட விரும்புபவர்கள் இந்த அறிக்கையையே பொதுமக்களிடம் காட்டி, ஆங்காங்கே தண்டி அனுப்பலாம். ஆனால் தண்டுபவர்களைப் பற்றி அவர்கள் நன்கு தெரிந்திருப்பது நல்லது. ஏமாறிப் போகிறவர்களை நாம் தடுக்க முடியாதாகையால் இவ்வகையில் அவரவரும் விழிப்புடன் இருக்க வேண்டுவது அவர்கள் பொறுப்பாகும்.
கருத்தரங்கில் தம் முடிவான கருத்துகளை எடுத்துக் கூற விரும்புபவர்கள் அனைவர்க்கும் கூடியமட்டில் வாய்ப்பளிக்கப்படும்.
அனைத்துக்கும் இன்றே தொடர்பு கொள்ளுங்கள். பிற விளக்கங்கள் பின்னர் வரும்!
— தமிழ்நிலம், இதழ் எண். 75, அத்தோபர், 1986
தமிழ்நாட்டை முழு இறைமையுடைய
தனிநாடாகப் பிரித்துத்
தமிழரே ஆளுமை செய்வது
— என தமிழின எதிர்காலத் தீர்மானிப்புக் கருத்தரங்கு
உறுதியாகவும் இறுதியாகவும் தீர்மானிக்கிறது !
கடந்த திசம்பர் 27, 28-இல், சென்னை மாநகரில், பெரியார் திடலில், நாம் அனைவரும் மிக்க ஆர்வத்துடனும், அழிக்கவொண்ணாத் தேவையுடனும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தமிழின எதிர்காலத் தீர்மானிப்புக் கருத்தரங்கு இறுதியில் நடந்தே முடிந்தது.
காலம் இக் கருத்துக்கு இயைபாக இருக்கவில்லையானாலும், காவல்துறை கட்டவிழ்த்து விடப் பெற்றுக் கையில் பை வைத்துக் கொண்டு, வண்டியிலிருந்து இறங்கி நடந்து வந்தவர்களெல்லாம், தடுத்து நிறுத்தப் பெற்று, ஆய்வு செய்யப்பெற்று, உசாவலுக்கு அழைத்துச் செல்லப்படுவர் என்னும் அஞ்சத்தகுந்த நடுநடுக்கும் அரசியல் சூழலிலும், தமிழுக்கு ஆதரவாகவும் இந்திக்கு எதிராகவும் குரல் கொடுத்த தமிழின வீரர்கள் இருபத்தையாயிரவர்க்கு மேல் கடுஞ்சிறை புகுந்த நேரத்திலும் நடைபெற்ற இக் கருத்தரங்கிற்கு யார் வரப் போகிறார்கள் என்று எண்ணியிருந்த வேளையிலும், நூற்றுக்கணக்கான வீரத் தமிழர்கள், அறிஞர்கள், தலைவர்கள், கலைஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், மகளிர் முதலிய அனைவரும் கருத்தரங்கில் மிகத் துணிவுடன் கலந்துகொண்டனர்! ஒப்போலை இட்டனர். தனித்தமிழ்நாடுதான் தேவை என்று உறுதியான கொள்கையைத் தேர்ந்தனர்.
அடடா! எத்துணை ஆர்வம் அவர்கள் முகத்தில் குமிழிட்டது! எத்துணை வீரம் அவர்கள் பேச்சில் கொப்பளித்தது! எத்துணை உறுதி அவர்கள் குரலில் கனன்று நின்றது! காட்சி! காட்சி! கண்கொள்ளாக் காட்சி!
இறுதியாக, இரண்டாம் நாள் முடிவில், ஒப்போலைக் கருத்தெடுப்பு மிக மிக அமைதியாக, மிக மிக நேர்மையாகப் பொறுப்புணர்வுடன் நடைபெற்றது. அதன் முடிவோ அனைவரும் வியக்கும்படி அமைந்திருந்தது. வியப்பு! வியப்பு! வாய்மேல் விரல் வைக்கும் வழிந்தோடும் வியப்பு!
முடிவில் தேர்தல் முடிவு அறிவிக்கப்பெற்றது. தேர்தலில் கலந்துகொண்டவர்கள் : 241. இவர்களுள் இந்தியத் தேசியத்திற்காக ஒப்போலையிட்டவர் ஏழு பேர்; மாநிலத் தன்னாட்சியை விரும்பி ஒப்போலை இட்டவர் இருபத்து மூவர்! தனித்தமிழ்நாட்டுக் கொள்கையே, எதிர்காலத் தமிழின முன்னேற்றத்திற்கு ஏற்றந் தருவது என்று உறுதியாகவும் இறுதியாகவும் ஒப்பம் அளித்தவர், இருநூற்று எட்டு பேர்! இது மொத்தத்தில் 87 விழுக்காடு!
இந்தியத் தேசியத்தை விரும்பும் 2.7 விழுக்காடு எங்கே! மாநிலத் தன்னாட்சியை விழையும் 9.6 விழுக்காடு எங்கே ! தனித்தமிழ்நாட்டை வேட்கும் 87 விழுக்காடு எங்கே!
எத்துணைப் பொருத்தமான தீர்ப்பு!
தமிழக மக்கள் அனைவருமே வந்து கொடுத்த தீர்ப்போலையாக அம்முடிவு பெரும் வெற்றி முழக்கத்துடன், பெரியார் அரங்கமே எதிரொலிக்குமாறு உரக்க வாழ்த்தி வரவேற்கப் பெற்றது. அதைக் கேட்ட அனைவரும் தமிழகமே தனியாட்சி எய்தியது போன்று பூரிப்பெய்தினர், அங்கு வந்திருந்தோர்! தமிழகத்திலுள்ள - அங்கு வர வாய்ப்புக் கிடைக்காத தமிழரும் - பிற வெளிநாட்டுத் தமிழரும் அவ்வெற்றி முழக்கத்துடன் தங்கள் வாழ்த்தொலியையும் கலந்து ஒலிப்பார்களாக!
வெல்க தமிழின முன்னேற்றக் கழக முயற்சிகள்!
வாழ்க தனித்தமிழகப் போராட்டம்!
விரைந்து சமைப்போம் தனித்தமிழ்நாடு!
— தமிழ்நிலம், இதழ் எண். 78, சனவரி 1987
தமிழ்நாட்டு விடுதலை முயற்சிகளை
எவராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது!
அண்மையில் தமிழ்நாட்டில் நடந்த இரண்டு மூன்று குண்டு வெடிப்பு நிகழ்ச்சிகளை யடுத்து, நடுவணரசுப் புலனாய்வுத் துறையினர்(C.B.I.), தென்மொழி யன்பர்களையும் உ.த.மு.க. அன்பர்களையும் பலவகையிலும் ஆங்காங்கே கடுமையாக அணுகி உசாவி வருவதாகச் செய்திகள் கிடைத்துள்ளன. தலைமையகங்களிலும் அவ் வுசாவல்கள் நடந்து வருகின்றன.
பொதுவாக நடுவணரசுக்கு - குறிப்பாக இராசீவுக்குத் தாங்கள் செய்யும் குற்றங்கள் என்னென்ன என்பது பற்றியோ, அவற்றைப் பற்றி மக்கள் என்ன கருதுகிறார்கள் என்பது பற்றியோ, அதனால் மக்களிடையில் என்னென்ன எதிர்விளைவுகள் நேரும் என்பது பற்றியோ சிறிதும் கவலையிருப்பதாகத் தெரியவில்லை. அதைப்பற்றி யார் என்ன கருதினாலும் சரி, தாங்கள் செய்வதைச் செய்து கொண்டுதான் இருக்க வேண்டும் என்னும் முரண்டும், பொதுமக்கள் நலன் கருதாத தன்மையும், இந்திரா காலத்தை விட, இராசீவ் காலத்தில் அரசுக்கு மிகுதியாகவே உண்டு. இந்த அகங்கார - ஆணவ எண்ணமே இராசீவ் அரசுக்கு வெடிகுண்டாக அமைந்துவிடக்கூடியது. வேறு வெடிகுண்டுகள் தேவையே இல்லை.
மக்கள் தங்களுடைய இழுப்புகளுக்கெல்லாம் அல்லது கட்டுப்பாட்டுக்கெல்லாம் அடங்கி நடக்கவேண்டுமே அல்லாமல், தாங்கள் மக்கள் விரும்பும் அல்லது அவர்களுக்கு நலந்தரும் போக்குக்கு ஆளாகி விடக் கூடாதே என்பதுதான் அரசின் எண்ணமாக இருக்கிறது என்பதைக் கடந்த காலத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகள் உறுதி செய்துள்ளன. இத்தகைய எதிர்விளைவு நிகழ்ச்சிகள் இங்கு அங்கு என்னாதபடி இந்தியா முழுவதும் பல்வேறு தேசிய இன மக்களிடம் கடந்த ஐந்தாறு ஆண்டுகளாகவே நடந்து வருவது எல்லாருக்கும் தெரியும். இது ஏதோ திடுமெனக் கிளம்பி விட்டதாக யாரும் கூறிவிட முடியாது.
ஆட்சி அதிகாரக்காரர்களின் வன்முறைப் போக்கும் மிகத் திமிரான நடவடிக்கைகளும், மக்களிடையே கொந்தளிப்பையும் மனக்கொதிப்பையும் ஏற்படுத்துவது உலகெங்கணும் நடந்துவரும் செய்தியே! அவற்றுக்கான எதிர்விளைவு அடையாளங்களே அண்மையில் நடந்த குண்டு வெடிப்புகளும், பிற வன்முறை நிகழ்ச்சிகளும், இவற்றைச் செய்தவர்கள் பெரும்பாலும் இளைஞர்களாகவே இருத்தல் கூடும். ஏனெனில், நடுவண் அரசை எதிர்க்கின்ற அரசியல் முது தலைவர்களெல்லாம் தமிழகத்தைப் பொறுத்த வரையில், நன்கு காயடிக்கப் பெற்ற - ஆண்மையற்ற - கோழைகளாகவே இருப்பதை நாம் பார்க்கிறோம். எதிர்க்கட்சிகளில் உள்ள இரண்டு மூன்று துணிவுள்ள சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களைத் தவிர, பிற அனைத்துப் பேரும், நடுவணரசு எது செய்தாலும் என்ன பேசினாலும் அவற்றுக்கு எதிராக வலிக்காமல் பேசும் - நோகாமல் அடிக்கும் தந்திரக்காரர்களாகவே இருக்கின்றனர்.
இந்த நிலையில், நடுவணரசின் அடாவடித்தனமான நடவடிக்கைகளையெல்லாம் தட்டிக்கேட்கும் துணிவுள்ளவர்களாக, இங்குள்ள இளைஞர்கள் மாறிவருவதில் வியப்பில்லை. கருத்தளவில் போராடிப் போராடிக் கோரிக்கையளவில் கூட்டங்கள் மாநாடுகள் நடத்தி நடத்தித் தீர்மானங்கள் போட்டுப் போட்டு, இனி அவற்றினும் விஞ்சிய வகையில் பேரணிகள், ஊர்வலங்கள், போராட்டங்கள் நடத்தி நடத்திச் சோர்வுற்ற – சலித்துப் போன, குருதி கொப்புளிக்கும், இளம் உள்ளங்களே, இப்பொழுது கருவிகளைத் தூக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
இவர்களின் போக்குகளைத் தவறு என்று கூறுவதற்கு முற்பட்டவர்கள், அரசின் போக்குகளையும் கண்டிக்கத் தெரிந்தவர்களாக அல்லது கண்டிக்கத் துணிவுள்ளவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் இளைஞர்களின் எழுச்சிகளை மட்டும் கண்டிப்பதும், அவற்றுக்கு மூல காரணமாக உள்ள அரசின் அரம்பத்தனமான, கொள்ளையடிப்புத் தன்மையிலமைந்த நடைமுறைகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் எந்த வகையில் ஞாயமானது என்று கேட்க விரும்புகிறோம்.
இனி, இவை எப்படியோ இருக்கட்டும். இளைஞர்கள் எழுச்சி கொண்டுள்ளார்கள் என்பதற்காக, இவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும் – ஒடுக்க வேண்டும் என்னும் அரசின் தவறான கொள்கைக்காக, இந்தப் பழியை யார்மேல் போடலாம் என்றபடி நம் தமிழ்நாட்டில் உள்ள நடுவணரசுக் காவல்துறை மேல்மட்ட அதிகாரிகள், கடந்த ஒரு மாதமாகப் பலவிடங்களிலும் பல வகையிலும் ஆய்வு செய்து அலையோ, அலையென்று அலைந்து, அங்கும் இங்கும் சுற்றி, இறுதியில் நம் தென்மொழி அலுவலகத்திற்கும் அச்சகத்திற்கும் வந்து, ஒருவாறு நிறைவு கொண்டு, நம்மைப் பற்றியும், நம் தென்மொழி அன்பர்களைப் பற்றியும், உ.த.மு.க. தொண்டர்களைப் பற்றியும், தென்மொழி, தமிழ்நிலம் விற்பனை செய்யும் முகவர்களைப் பற்றியும், பலவாறு நம்மிடம் வினாக்கள் எழுப்பியும், அவர்களிடம் சென்று உசாவியும், பல்வேறு வகையான நெருக்கடிகளையும், அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் செய்து வருகிறார்கள் என்பதைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
நம் நாட்டைப் பொறுத்தவரையில், ஒருவன், எத்துணைக் கொடியவனாகவும் ஒழுக்கக் கேடனாகவும் திருடனாகவும் இருந்தாலும், ஒரு மதத்தைச் சார்ந்த செயல்களைச் செய்வானானால், அவன் எத்துணை நல்லவனாகவும், அறக்காப்பாளனாகவும், நேர்மையாளனாகவும், மக்களால் மதிக்கப்பட்டு, குமுகாயத்தில், ஓர் உயர்ந்த இடத்தைப் பெற்று விடுகிறானோ, அதேபோல, ஓர் அறக் கொடியவன், சுரண்டல்காரன், முடிச்சுமாறி, கொள்கைக்காரன் அல்லது கொலைகாரன் கொஞ்சம் பசையுள்ளவனாக விருந்து, ஆளுங்கட்சியைச் சார்ந்து இயங்கிவிட்டால், அவனுக்குக் காவல் துறையினராலோ, அல்லது அறத்துறையினராலோ எந்தவகைத் தொல்லையோ இடர்ப்பாடோ அல்லது தண்டனையோ ஏற்படுவதில்லை; மாறாக அவர்கள் சார்பிலிருந்து பாதுகாப்போ, பாராட்டோ, பட்டங்களோ, வெகுமதிகளோ கிடைத்து விடுகின்றன. இன்னும் பொதுமக்களிடமிருந்தும் அளவற்ற மதிப்பும் பெருமையும் வேறு ஏற்பட்டுவிடுகின்றன.
ஆனால், நம்போல், மக்கள் நலம் கருதித் தூய தொண்டிலோ, நேர்மையான நடவடிக்கைகளிலோ உண்மையான போக்கிலோ, ஆனால் அரசைச் சாராமல் வேறு எந்த அரசியல் கட்சிகளையும் சாராமல், இயங்கும் ஒருவர்க்கு, இத்தகைய காவல்துறைக் கடுபிடிகளும், நெருக்கங்களும், உசாவல்களும், மிரட்டல் உருட்டல்களும் தாம் பரிசுகளாகக் கிடைக்கின்றன.
இருப்பினும் இவற்றுக்கெல்லாம் அஞ்சாமல், மனம் சோர்வுறாமல், செயல் நெகிழ்ச்சி கொள்ளாமல் நாம் பாடாற்றியாக வேண்டும்; தொண்டு செய்தாக வேண்டும். ஏனெனில் இது நாமே விரும்பி ஏற்றுக்கொண்ட தூய பணி; மக்கள் தொண்டு; காலத்தால் கட்டாயப்படுத்தப் பெற்ற தேவையான கடமை!
இந்தத் தூய மக்கள் தொண்டு, தமிழின முன்னேற்றமும் இன, நாட்டு விடுதலை நோக்கமும் உயிராகக் கொண்ட பணியானாலும், இன்றைய பார்ப்பனிய முதலாளிய நடுவணரசுக்கு நேர் எதிரானது! அதன் கரவான அரசியல் அடிமைத்தனத்திற்குத் துளியும் அடி பணியாதது. இங்குள்ள பிற ஒப்போலை - பதவி நாட்டம் கொண்ட கட்சிகளைப் போல் அல்லாமல், அரசை நேரடியாக எதிர்த்துப் போராடி வெற்றி கொள்ள வேண்டும் என்னும் இனமான, உரமான கொள்கையை உடையது, இதன் வலிமை நாளுக்கு நாள் வளர்ந்து வருவது. எனவே, இதை எவ்வாறாயினும் ஒடுக்கிவிட வேண்டும் என்று இராசீவ் அரச நினைப்பதில் வியப்பில்லை. அதற்காக, ஒரு கால கட்டத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தது. அதற்கு நல்ல சூழலாக அண்மையில் தமிழகத்தில் சில குண்டுவெடிப்பு நிகழ்ச்சிகள் நடந்ததை அடிப்படையாகக் கொண்டு, அதற்குப் பின்னணியாக நாமும் நம்மைச் சார்ந்த தொண்டர்களும் இருக்கவேண்டும் என்று கருதி, நம்மைக் கடந்த பதினைந்து இருபது நாள்களாகக் கடுமையான உசாவல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும், நடுவண் ஒற்றுத் துறையைக் கொண்டு, ஆளாக்கி வருவதாக நாம் கருதவேண்டி உள்ளது
இத்தகைய அச்சுறுத்தல்களுக்கெல்லாம் நாம் நம்மை அணியப்படுத்திக் கொண்டவர்களே என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். எனவே நாம் இதற்கெல்லாம் அஞ்சப் போவதில்லை. மாறாக, நாம் நம் கொள்கையில் இன்னும் வலிவுடையவர்களாகவே இயங்கப் போகிறோம் என்பது நம் வரலாறு போன்ற உண்மையும் உறுதியும் வாய்ந்ததாகும்!
இறுதியாக இராசீவ் அரசுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறோம். தமிழ்மொழியும், தமிழ் இனமும், தமிழ்நாடும் தில்லியின் அரசியல் வல்லாண்மையிலிருந்து விடுபடும் வரை நம் நேர்மையான போராட்டம் ஓயப் போவதில்லை என்பதை இன்றிருந்து நாளை அழியப் போகும் இராசீவும் அவரின் அடிவருடித் தமிழர்களும் ஆட்சி அதிகாரக் கும்பல்களும் தெளிவாக உணர்ந்து கொள்வார்களாக.
வெல்க மக்கள் போராட்டம்! விளைக மக்கள் விடுதலைப் புரட்சி!
— தமிழ்நிலம், இதழ் எண். 104, மே, 1988
தமிழை விரும்புங்கள்! தமிழரை நேசியுங்கள்!
தமிழ்நாட்டுப்பற்றுக் கொள்ளுங்கள்!
நம் அரும் பெறல் தாய் மொழியாம் தமிழ் மொழி உலக மொழிகளிலெல்லாம் இனியது; எழில் மிக்கது; மிகப் பழைமையானது; முதன்மையானது; மூத்தது; தாய் போன்றது; இலக்கண இலக்கியச் செறிவு மிக்கது; உயிரோட்டமுள்ளது; உணர்வு சான்றது; அறிவு நிரம்பியது; மெய்யறிவு கால் கொண்டது; பண்பாடு மிகுந்தது; பயனுடையது; அறிவியல் மூலங்கள் கொண்டது; அழியாது தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் தகைமை சான்றது, இவ்வாறு இன்னும் இதன் சிறப்பியல்புகளை மேன்மேலும் அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஆனால், இன்று இத்தன்மைகளெல்லாம் மறைக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் வருகின்றன. உண்மையான தமிழ்த் தேசியத் தன்மைகளை, பொய்யான இந்தியத் தேசியக் கற்பனைக் கருத்துகளாலும், தேசிய ஒருமைப்பாடு என்னும் நடைபெறாத செயற்கை உணர்வாலும் மூடி மறைத்து அழிக்கப்பார்க்கின்றது தில்லியரசு. இதற்கு நம்மவர்களும் துணை போகிறார்க்ள்.
நம் தாய்மொழி உணர்வைத் தவறு என்கிறார்கள். தாய் மொழியாகிய தமிழ்ப்பற்று என்றாலே முகஞ்சுழிக்கிறார்கள். தாய் மொழியில் பேசுவதையே வெறி என்கின்றனர்! இன்னும் தூய தமிழில் பேசுவதை எழுதுவதை 'வன்முறை' என்பது போல் வெறுத்து இகழ்கின்றனர். இதை எங்கே போய்ச் சொல்லி முறையிடுவது? எந்த வழக்கு மன்றத்தில் எடுத்துக் கூறி ஞாயம் கேட்பது?
அவரவர் தாய் மொழியில் பேசுவது தவறா? அவரவர் தாய் மொழியைப் பேணுவது குற்றமா? இந்தியத் தேசியம் என்னும் முரண்பாடான கொள்கைக்காக இந்தி மொழியில் பேசுவதுதான். சரியா? இந்தி மொழி வளர்ச்சிக்காகப் பல்லாயிரங் கோடி உருபாவை நம் வரிப் பணத்தில் செலவிடுவதா? தாய் பசித்திருக்க, நம் பிள்ளை பாலுக்கு ஏங்க வேற்றுத் தாய்க்கு விருந்து வைப்பதா? வேறு பிள்ளைக்குப் பாற் சோறு ஊட்டுவதா? எங்கு அடுக்கும் இக்கொடுமை? யாருக்கு நிறைவு தரும் இம் மாற்றாந்தாய் மனப்பான்மை?
எனவே, எத்துணைத் துயர் அடுக்கடுக்காக வந்தாலும் நம் தாய்மொழியான தமிழை நாம் வளர்த்தே ஆக வேண்டும். அது தான் நமது கடமை. தாய்மொழி வழியாகத்தான் நாம் கல்வி கற்றாக வேண்டும். அதன் வழியாக நாம் அறிவு பெறுவதுதான் நமக்கு ஏற்றது; இயல்வது. என்ன மொழியாயினும் நமக்குப் பிறர்மொழி பிறமொழிதான். ஆகவே நம் தாய் மொழியை நாம் விரும்ப வேண்டும்; விரும்பிப் படிக்க வேண்டும். அதைக் கண்ணும் கருத்துமாக நாம் பேணிக் காக்க வேண்டும். அதுவே நமக்கு வாழ்வியலைக் கற்பிக்கும்மொழி; அறிவை, அறிவியலைக் கற்பிக்கும் மொழி. அதில் சில குறைபாடுகள் இருக்கலாம். சில வகையில் அது வளர்ச்சி குன்றியிருக்கலாம். அவ்வவ்வகை யிலெல்லாம் அதை வளர்த்தெடுக்க வேண்டும். அதன் இலக்கிய வளமையைப் போலவே, வாழ்வியல் சிறப்பைப் போலவே, இஃது அறிவியல் வளம் பெற்றதாகவும் வேண்டும். பல்வேறு அறிவியல் கூறுகளை யெல்லாம் நம் மொழியில் வளர்த்தெடுக்க வேண்டும்.இதற்கு நம் அரு முயற்சி. வேண்டும். பெரிதும் உழைக்க வேண்டும்.
நம்மிடையே வேறு பல மொழி பேசுபவர்கள் இருக்கலாம். அவர்களுள் தெலுங்கு பேசுபவர் இருக்கலாம்; கன்னடம் பேசுபவர் இருக்கலாம்; மலையாள மொழி பேசுபவர் இருக்கலாம். அவர்களெல்லாரும் நம் தாய் நாட்டில் வாழலாம். அவர்களும் நம் தாய்மொழியாகிய தமிழைத் தங்கள் தாய்மொழிகளுடன் படிக்கலாம். அதில் தவறு ஒன்றுமில்லை. பார்க்கப் போனால் தமிழ் மொழி அவர்களுக்கும் தாய்மொழி போன்றதுதான், தமிழ் மொழியிலிருந்தே அவர்களின் தாய்மொழியாகிய தெலுங்கு, கன்னடம், மலையாளம், முதலிய திராவிட மொழிகள் தோன்றின. தமிழில்லாமல் அம் மொழிகள் இயங்க முடியாது. எனவே, அவர்களுக்குத் தமிழ் தாய்மொழியே! இன்னும் சொன்னால், அவர்களுக்கு அம் மொழிகள் தாய் மொழிகளானால் நம் தமிழ் மொழி அவர்களுக்கும் தாய்க்குத் தாயான மொழியே! அஃதாவது பாட்டி மொழியே! தமிழை அவர்கள் வெறுப்பது தேவையில்லை தாய்க்குத் தாயான தமிழ்மொழியில்லாமல் அம்மொழிகள். உயிர் வாழ முடியாது. எனவே அவர்களுக்கும் நம் தமிழ் மொழியைப் படிக்கும் கடமையுண்டு உரிமை உண்டு. அவர்களும் இம் மொழியை விரும்பிப் படிப்பிதில் தவறில்லை; கேடில்லை; இழுக்கு ஒன்றும் இல்லை.
இனி, தாய்மொழிக்கு அடுத்தபடி நம் தமிழினம் மேலானது ஆகும். தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் நம் தமிழினத்தை நேசிக்க. விரும்ப உறவு கொண்டாட வேண்டும். தமிழினத்தவர்கள் அனைவரும் நம் உடன் பிறப்புகளே! உறவானவர்களே! அவர்கள், சாதி நிலையில் மத நிலையில் வேறு வேறானர்கள் ஆகலாம். அவர்கள் முதலியார்கள், செட்டியார்கள் வேளாளர்கள், கவண்டர்கள், பிள்ளைமார்கள், படையாட்சிகள் என்று வேறு வேறாகப் பிரிந்து காணப்படலாம். இன்னும் அவர்களுள் தாழ்ந்த சாதியினராகப் பள்ளர்கள், பறையர்கள் சாணார் என்று கீழ்ச் சாதியிராக மதிக்கப் பெறலாம். ஆனால் அவர்கள் எல்லாரும் தமிழ் மொழியைத் தாய், மொழியாகக் கொண்ட தமிழரே! அவர்கள் அனைவரும் ஓரினத்தவரே! அவர்களுக்குள் சாதிப் பாகுபாடுகள் இருந்தாலும், அவர்கள் ஏற்றத் தாழ்வில்லாத தமிழர்களே! அவர்கள் இன்று நேற்றன்று; கடந்த பல்லாயிரம் ஆண்டுகளாக இத் தமிழ் நிலத்திலேயே! வாழ்ந்து வருபவர்களே! தொடக்கத்தில் அவர்களுக்குள் வேறுபாடுகள் இருந்ததில்லை. இடைக்காலத்திலேயே அவர்கள் செய்யும் தொழில்களால் வேறுபட்டுப் போனார்கள். பல வேறு சாதிகளாகப் பிரிந்து போனார்கள். பிளவுபட்டுப் போனார்கள். அதனால் அவர்களுக்குள் வேற்றுமை தலையெடுத்தது; வேறுபாடுகள் தோன்றின; பகைகள் கால் கொண்டன; ஏற்றத் தாழ்வுகள் இடம் பிடித்தன. தொடர்புகள் அறுந்தன; உறவுகள் முறிந்தன. உண்மைகள் மறைந்தன. எனவே அவர்கள் நிலையாக வேறுபட்டனர். வேறுபட்டது மல்லாமல், ஒருவருக்கொருவர் பகைகொண்டு, ஒருவரையொருவர் அழித்தொழிக்கவும் முற்பட்டு விடுகின்றனர். எனவே தமிழினம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது; இழிந்து வருகிறது; ஒற்றுமையுணர்வுகள் குறைந்து, வேற்றுமை யுணர்வுகள் மிகுந்து, சீர்குலைந்து சிறப்பிழந்து வருகின்றது.
இந்த நிலைகளின் உண்மையுணர்ந்து தெளிந்தவர்களே தமிழினத்தை ஒன்று படுத்தத் துணிகின்றனர். இதன் வேற்றுமைப் பாடுகளை அகற்ற முயற்சி செய்கின்றனர். எப்படியாயினும் இவ்வினத்தில் வேரோடிக் கிடக்கும் சாதி வெறிகளையும் மத மூட நம்பிக்கைகளையும் அகற்ற அரும்பாடு படுகின்றனர். இருப்பினும் இம் முயற்சி ஒரு சாண் ஏறினால் ஒரு முழம் சறுக்குவதாகவே உள்ளது. இவ்வாறு கடந்த மூவாயிரம் ஆண்டுகளாகவே இச் சீர்திருத்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் பயனோ மிகக் குறைவாகவே உள்ளது. இதற்குக் காரணம் தமிழின முன்னேற்றத்தை விரும்பாதவர்களும் எதிர்ப்பவர்களும் முறியடிப்பவர்களுமான இதன் எதிரிகளின் வலிவு மிகுந்து வருவதே ஆகும்.
தமிழினம் முன்னேறிவிட்டால் எங்கு தன்னினம் பின்னிறக்கம் அடைந்து விடுமோ என்று அஞ்சியும் அலமருண்டும். அதன் எதிரி இனம் இதனைப் பலவகையிலும் ஒற்றுமைப்படாமல் தடுத்து வருகிறது. அத்துடன் மேலும் அதன் உட்பிளவுகளையும் பகைமைகளையும், வேறுபாடுகளையும் அதிகமாக்கிக் கொண்டே வருகிறது. பல வகையான சூழ்ச்சிகளையும் தந்திரங்களையும் அதன் பொருட்டு மேற்கொள்ளுகிறது. சாதியுணர்வுகளைப் பல நோக்கங்களுக்காகத் தூண்டி விட்டும், தம் மூடநம்பிக்கைகளைப் பலவகையிலும் வேரூன்றச் செய்தும், தமிழ் மக்களுக்குள் உடன்பாட்டுச் சிந்தனையையும், உரிமை உணர்வையும் அழித்து வருகிறது; தமிழின இளைஞர்களிடம் பொழுது போக்கு, போலி விளையாட்டு உணர்ச்சிகளை வேரூன்றச் செய்தும் பண்பாட்டுச் சீரழிவுகளைப் பரப்பியும், அவர்களிடம் கால் கொள்ள வேண்டிய மொழி, நல, இனநல, நாட்டு உரிமை நல்லுணர்வுகளை முளையிலேயே கிள்ளி வருகிறது.
ஆனால் நம் இளைஞர்கள் இவைபற்றிய உண்மை நிலைகளை நன்கு உணர்ந்து கொண்டு, இவ்வினம் முன்னேறுவதற்குரிய அனைத்து முயற்சிகளையும் செய்து, எப்படியாகிலும் தமிழின நலம் காக்கவேண்டும். அதற்கு இப்பொழுதிருந்தே நம் தமிழ் மாணவர்களும் இளைஞர்களும் உள்ளத்தில் ஓர் உறுதி- சூளுரைஎடுத்துக் கொள்ளுதல் வேண்டும். நம் இன மக்களின் மேல் அன்பு பொழிதல் வேண்டும் அக்கறை கொள்ளுதல் வேண்டும். இவ்வினத்தில் உள்ள சாதி வேற்றுமைகளைக் களைந்தெடுப்பதாய் உறுதி பூணுதல் வேண்டும் ; இந்நிலைக்கு முதலில் தங்களிடம் உள்ள சாதியுணர்வைக் களைந்து நீக்குதல் வேண்டும். சாதியற்ற சமனிலைக் குமுகாய உணர்வை வளர்த்தெடுக்க வேண்டும். இவ்வாறெல்லாம் பெரும்பாலார் முயன்றுதான் இவ்வினத் தாழ்ச்சியை நீக்கப் பாடுபடுதல் வேண்டும்.
இனி, அடுத்தபடி, நம்நாட்டின் பற்றை மேலும் மிகுவித்துக் கொள்ளுவது இன்றியமையாதது. நாட்டுப்பற்றுக்கு இனப்பற்று அடிப்படை, நம்முடைய மொழி, நம்முடைய இனம் என்று சொல்லுவதைப் போல் நம்முடைய நாடு என்றும் சொல்வதே இயற்கைக்குப் பொருந்திய உணர்வாகும். மொழியில்லையேல் இனமில்லை; ஓர் இனம் வாழ்கின்ற நிலப்பரப்பே நாடு. தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் - தமிழினத்தவர்கள் - வாழும் நிலப்பரப்பு தமிழ்நாடு ஆகும். எனவே நம்நாடு தமிழ்நாடு என்றே உணர்தல் வேண்டும்.
இந்தியாவை நம் நாடாகக் கருத முடியாது. ஆனால் ஒரு காலத்தில் இந்தியா முழுவதம் தமிழர்கள் வாழும் நாடாகத்தான் இருந்தது. காலத்தால் அந்நிலை குறுகி, இப்பொழுதுள்ள நில அளவே தமிழ்நாடு எனப்படும். நிலைக்கு வந்து விட்டது. இதுவும் தமிழினத்தின் கேடுகளால் நேர்ந்த நிலைதான். எனவே இப்பொழுதுள்ள தமிழ்நாட்டை மேலும் நாம் காத்துக் கொள்ளுதல் வேண்டும், இல்லெனின் இதுவும் குறுகிப் போய் ஒன்றுமிலாமல் ஆகித் தமிழினம் நாடற்ற நாடோடி இனமாக ஆகிவிடும். எனவே தான் நாம் நாட்டின் மீதும் பற்றுக் கொண்டு, இந்நிலப்பரப்பைக் கட்டிக் காக்க வேண்டும்.
இப்பொழுதைய நிலையில் தமிழ்நாடு, தில்லி ஆட்சிக்கு அடங்கிக் கிடக்க வேண்டி உள்ளது. இன்னும் சொன்னால் அடிமைப்பட்டுக் கிடக்கின்றது. இந்தியா குடியரசு நாடு என்பதால், நாமும் உரிமை பெற்று வாழ்கிறோம் என்று சொல்வது பொருந்தாது. இனி, அவ்வாறு கூறுவது தவறுமாகும்; உண்மைக்குப் புறம்பானதும் ஆகும். நாம் உரிமை பெற்றதாகக் கூறமுடியாது: உரிமை பெற்றிருப்பது உண்மை என்றால், நாம் நம் தாய்மொழியில் கல்வி கற்கவும், கற்றவுடன் அரசுப்பணி செய்யவும் வாய்ப்பிருக்க வேண்டும். ஆனால் நிலைமை அவ்வாறில்லை; இப்பொழுதைய நிலையில் நாம் தாய்மொழியில் கல்விகற்கவும் முடியாது; ஒரு வேளை கல்வி கற்றாலும் நாம் அரசுப்பணியில் அமரவும் முடியாது. இனி, இதற்கு மாறாக, நாம் தில்லிக்காரர்கள் பேசும் மொழியாகிய இந்தி மொழியில் படிக்க வேண்டும் என்று வலியுறுத்தப் பெறுகிறோம். இந்தி மொழியில் படித்துப் பட்டம் பெற்றால் உடனே அரசுப்பணி கிடைக்கும். சம்பளமும் கூடுதலாகவே கிடைக்கும். இந்நிலை எதைக் காட்டுகிறது? நாம் தில்லியரசுக்கு அடிமை என்பதையே உறுதிப்படுத்தவில்லையா இந்த இழிவான நிலைமாறியாக வேண்டுமா? இந்நிலை மாறியாக வேண்டாமா? இதற்கு இளைஞர்கள் எதிர்காலத் தமிழ்க்குடி மக்களாகிய மாணவர்கள் ஆகியோர்தாம் ஒரு முயற்சி செய்தாக வேண்டும்; ஒரு முடிவு கண்டாக வேண்டும்; போராடியாக வேண்டும். உரிமைக்காகப் போராடாவிட்டால் எதுவும் செய்ய முடியாது.
நமக்கு மொழியுரிமை இல்லை; இன முன்னேற்றத்திற் கென்று எதுவும் செய்ய முடியாது. தமிழ் நாட்டுக் கோயில்களில் நம் தாய் மொழியாகிய தமிழில் கூட வழிபாடு செய்ய நமக்கு உரிமையில்லாத பொழுது, வாழ்வியல் உரிமைகளுக்கு எப்படி வழி கிடைக்கும்?
இவற்றை யெல்லாம் மாணவர்கள் நன்கு எண்ணிப் பார்த்து தமிழ் மேல் விருப்பமும், தமிழினத்தின் மேல் பாசமும், தமிழ் நாட்டின் மேல் பற்றும் கொண்டு இயங்குதல் வேண்டும். அல்லாக்கால் தமிழ் நாட்டின் தமிழினத்தின், தமிழ் மொழியின் எதிர் காலம் இருண்டுவிடும். இவ்விருளைப் போக்க ஒளியேற்ற வேண்டாமா? அதற்கு உங்கள் ஒவ்வொருவரின் பங்குதான் என்ன? சிந்தியுங்கள் இளைஞர்களே! சிந்தித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்!.
- தமிழ்ச்சிட்டு, குரல் 19, இசை, 4, 1988
எரிவதைத் தடுக்காமல் கொதிப்பை
அடக்க முடியாது!
இந்தியாவின் அரசியல் நிலைமை மிகக் கொடுமையானதாக மட்டுமன்று, மிக மிகக் கீழ்மையுடையதாகவும் ஆகிவிட்டது. மக்கள் ஒவ்வொரு நாளும் ஏதாகிலும் இரண்டு மூன்று இடங்களில் கொடிய அடக்குமுறைக்கும், கொலைகள் கொள்ளைகளுக்கும், துமுக்கி (துப்பாக்கி)ச் சூட்டிற்கும் ஆளாகுகிறார்கள். இந்திராக் கட்சியின் அடக்குமுறைகளும் ஆணவ அதிகார வெறித்தனங்களும் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கின்றன. பணவலிமையும் அதிகாரமும் கைகோத்துக் கொண்டு நாட்டை அலைக்கழிக்கின்றன. ஏழை மக்கள் கேள்வி கேட்பாரற்றுக் காவல் துறையினராலும், படைத்துறையினராலும் சுட்டுப் பொசுக்கப்படுகின்றனர். எந்த வகைக் காரணமும் இன்றி ஆளுங்கட்சிக்காரர்களாக இல்லை என்ற ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமே அவர்கள் இவ்வாறு துன்புறுத்தப் படுகிறார்கள் என்று தெரிய வருகிறது.
அரசுக்கு எதிராக அன்று, ஆளுங்கட்சிக்கு எதிராகவும், அல்லது தனிப்பட்டட முறையில் அக்கட்சியில் உள்ள யாருக்கு எதிராகவும் நடந்தாலும் கூட, அவ்வாறு நடப்பவர்கள் ‘மக்கள் பகை ஆற்றல்கள்’ (மக்கள் விரோதச் சக்திகள்) அல்லது குமுகாய எதிர்ப்பு ஆற்றல்கள் (சமூக விரோத சக்திகள்), தேசிய இனப் பகைவர்கள், நச்சுத் தன்மை கொண்டவர்கள் (விஷமிகள்) என்றவாறு பட்டம் சூட்டப்பெற்று, அவர்களைக் காவல்துறையினர் தளைப்படுத்தவும் கொடுமை செய்யவும் முற்பட்டு விடுகின்றனர். இவ்வகையில் ஆட்சியாளர் கொடுமையும் பணமுதலைகள் கொள்ளையடிப்பும் அளவுக்கு மீறி விட்டன. அரசு அதிகாரிகள் எல்லாரும் தங்களின் இயல்பான சட்டமுறை நடவடிக்கைகளைக் கைவிட்டுவிட்டு, ஆளுங்கட்சியில் உள்ள ஓர் எளிய தொண்டனுக்கும் தொண்டர்களாய் இயங்கத் தொடங்கிவிட்டனர். நடுநிலையாக நடக்க வேண்டிய அறமன்றங்களும் நடுவர்களும் கூட அரசுக்கும் ஆளும் கட்சியினர்க்கும் அஞ்சிக்கொண்டு, குடியாட்சி அமைப்பு முறைகளையும் ஞாயத் துறை நேர்மைகளையும் குழிதோண்டிப் புதைத்துவிட்டன.
இந் நிலைகளையெல்லாம் எதிர்க்கட்சிக்காரர்கள் கூட தட்டிக் கேட்க முடியாதபடி நிலை மிகக் கீழாகப் போய்விட்டது. அரசியல் நிலையில் தங்களுக்கு ஒத்துவராத, இணங்கிப் போகாத மாநில அரசுகளை, நடுவணரசு கொஞ்சமும் தயக்கமின்றிக் கவிழ்க்கத் தொடங்கி விட்டது.
நாட்டின் பொருளியல் நிலையோ, அரசியல் நிலையை விட மிகவும் கேடாகப் போய்விட்டது. யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பொதுமக்களைக் கொள்ளையடிக்கலாம்; அவர்களிடமிருந்து கையூட்டு, பணிக்கொடை, தொண்டுக் கட்டணம் (சேவைக் கட்டணம்), அன்பளிப்பு என்னும் பெயர்களால், பள்ளிகள், கல்லூரிகள், நகராட்சி அமைப்புகள், வாரியங்கள், ஆட்சித் துறை அலுவலகங்கள், காவல்துறை, போக்குவரத்துத் துறை இன்னோரன்ன அனைத்து நிலைகளிலும் பணங்களை அளவுக்கு மீறிச் சுரண்டலாம், கொள்ளையடிக்கலாம், கொழுக்கலாம் என்றாகிவிட்டது. இவற்றை எவரும் கேட்க முடியாதவாறு ஒருவர்க் கொருவர், ஒருதுறைக்கு ஒருதுறை மிகக் கவனமாகவும் இணக்கமாகவும் நடந்துகொள்வது, அலுவலக நடைமுறைகளிலேயே ஒன்றாகிவிட்டது.
மக்களின் இன்றியமையாத தேவைக்கான உண்ணு பொருள்கள், உடுத்தற் பொருள்கள், உறையுள்கள் ஆகியவை அளவுக்கு மீறி, ஏழை மக்களின் கைகளுக்கு எட்டாதவாறும், கிட்டாதவாறும் விலையேற்ற மலைகளில் ஏறி அமர்ந்துவிட்டன. அன்றாடம் தங்கள் உடல்களை வருத்தி வாழ்கின்ற வறுமை மக்களும், ஏழை உழவர்களும், இக் கடுமையான விலையேற்றங்களால் நசுக்குண்டு நலிந்து அங்கங்கு அழியத் தொடங்கி விட்டனர்.
இவையன்றிப் பொழுதுபோக்குகள் என்னும் தன்மையில் கீழ்மையும் கயமையும் முதலாளியக் கோட்பாடுகளும் ஒன்றிணைந்து பூத வடிவாக மக்களை அச்சுறுத்திக் கொண்டுள்ளன.
இவ்வனைத்துச் சீரழிவுகளையும் கொடுமைகளையும் கண்டு கண்டு எண்ணி எண்ணிப் புழுங்கிய இளமை மனங்கள் - இளைஞர்கள், தங்களால் மேலும் பொறுத்துக் கொள்ள முடியாதவர்களாகி, இவ்வழிம்புகளுக்கெல்லாம் ஆக்கமாகவும் உரமாகவும் இருக்கின்ற முதலாளியப் பார்ப்பனிய நடுவண் அரசுடன் முரண்பட்டு எழுச்சி கொண்டு, எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில் ஆங்காங்கே வெகுண்டு எழுந்து அரசுடன் போராடத் தொடங்கி விட்டனர். தங்கள் கைகளில் கிடைத்த போர்க் கருவிகளை அரசின் அலுவலகங்களின் மேலும், ஆட்சியாளர்களின் மேலும், அவர்கள் பரம்பரையினர் மேலும் வீசத் தொடங்கித் தங்கள் வெறுப்புகளைக் காட்ட முற்பட்டுவிட்டனர். இவர்களை அமைதிப்படுத்தவோ அடக்கவோ வேண்டுமானால், அரசுச் சார்பில் நடைபெறும் அத்தனை இழுக்கல்களையும் சறுக்கல்களையும் சரிப்படுத்த அரசுத்தலைமை முன்வரவேண்டும். எரிவதைத் தடுத்தால் கொதிப்பு அடங்கிவிடுகிறது. அதைச் செய்ய முன்வராமல், இவ்விளைஞர்களை அரசு 'நக்சலைட்டி'னர் என்றும் இந்திய ஒருமைப்பாட்டிற்கும், தேசிய வுணர்வுக்கும், பகைவர்கள் என்றும், பிரிவினைக்காரர்கள் என்றும் குற்றஞ்சாட்டிக் கொள்ளை முதலாளிகளை ஏவிவிட்டுப் பொதுமக்களுக்கு உண்மைகள் புலப்படாதவாறு மலையளவு விளம்பரங்களைச் செய்யச் சொல்லி மாநாடுகளை நடத்தத் தொடங்கிவிட்டனர்
உண்மையில், இந்தியத் தேசியம் என்பது இந்துமத ஆளுமை, பார்ப்பனியத் தலைமை, முதலாளிய வல்லாண்மை என்னும் பொருளுடையதே! இவற்றுக்கு மாறாக யார் எந்தக் கருத்தைச் சொன்னாலும், செயலைச் செய்தாலும் அவர்கள் மக்கள் பகைவர்கள், தேசியப் பகை ஆற்றல்கள், பிரிவினைக்காரர்கள் என்று கூறுவது நடைமுறை ஆகிவிட்டது.
இந்த அழிம்புகளை யெல்லாம் ஒழிக்க வேண்டும். உழைக்கும் மக்கள் ஒருங்கிணைந்து எழுச்சி கொண்டு எதிர்த்தால்தான் இந்தத் தில்லி வல்லாண்மையை வீழ்த்த முடியும்.
இந்திராக் கட்சி பெரும் பெரும் பணமுதலைகளைக் கைக்குள் போட்டுக் கொண்டு அடுத்துவரும் தமிழ்நாட்டுத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க பெரும் பெரும் முயற்சிகளையும் தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும் செய்து வருகிறது.
தமிழகத்தில் நல்லாட்சி தமிழின முன்னேற்றம் கருதிய தமிழராட்சி வரவேண்டுமானாலும், தமிழீழம் அமைய வேண்டுமானாலும், இங்கு இந்திராக் கட்சி எதிர்க்கட்சியாகக் கூட வரவிடாதபடி தடுத்து நிறுத்த வேண்டும். இல்லெனில் தமிழர்களுக்கு அழிவே நேரும். எனவே தமிழர்கள் அனைத்து நிலைகளிலும் விழிப்பாய் இருக்க வேண்டுவது மிக மிக இன்றியமையாததாகும்.
- தமிழ்நிலம், இதழ் எண். 103, மே, 1988
தமிழர்க்கு வாழ்வுரிமைகளும் தனிநாடும் கிடைத்துவிடக்
கூடாதென்பதே இந்தியாவின் கொள்கை!
கடந்த 16.7.1988 செவ்வாயன்று கொழும்பில் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஓராண்டுக்காலம் என்ற தலைப்பில் வெளிநாட்டுச் செய்தியாளர் கழகத்தின் சார்பில் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. அங்கு இந்திய உயர் ஆணையர் தீட்சித் பேசும்பொழுது, "இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நீக்கி விட்டுத், தமிழீழப் போராளிகளிடம் இலங்கை நேரடியாகத் தொடர்பு வைத்துக் கொண்டால் தமிழீழம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது. இப்படியொரு நிலைமை உருவாகிவிடக் கூடாதென்பதே இந்தியாவின் நோக்கம். அதில் இந்தியா எச்சரிக்கையாக இருக்கிறது என்று, இந்தியாவின் கரவான உள்நோக்கத்தைத் தெளிவுபடுத்தினார்.
அவர் மேலும் பேசுகையில் இலங்கைத் தொடர்பான இந்தியாவின் கொள்கைகளைப் பலவகையிலும் வெளிப்படுத்தித் தெளிவாகப் பேசியுள்ளார்.
"இலங்கை மாகாணங்களுக்குக் கூடுதல் அதிகாரம் தரப்பட வேண்டும் என்ற சிக்கலுக்குக் காலப்போக்கில் தீர்வு ஏற்படும். அதற்காக விடுதலைப் புலிகளுடன் இந்தியா பேச்சு நடத்தி வருகிறது. ஆனால் இந்திய இலங்கை ஒப்பந்தத்தைத் தவிர்த்து விட்டு, இலங்கை விடுதலைப் புலிகளுடன் தானே புதிய பேச்சுகளைத் தொடங்கினால் தனிஈழம் உருவாவதைத் தடுக்க முடியாது என்று தீட்சித் இலங்கையை எச்சரித்துள்ளார்.
இவ்வெச்சரிக்கை, இந்தியாவின் மறைமுக வல்லதிகாரக் கொள்கையை உறுதிப்படுத்துவதுடன், புலிகளைக் காட்டி, இலங்கை ஆட்சியை எப்பொழுதும் தன் கைக்குள்ளேயே வைத்திருக்க விரும்புகிறது என்பதையும் வெளிப்படுத்துகிறது. அத்துடன் போராளிகளுக்கும் இலங்கை ஆட்சிக்கும் ஒரு நல்லுறவு ஏற்படுவதையோ அதன் வழி இலங்கையில் அமைதியான ஆட்சி நடைபெறுவதையோ, இவற்றினால் தமிழினத்திற்கு ஒரு நல்விளைவு உருவாவதையோ விரும்பவில்லை என்பதையும் இப் பேச்சு தெளிவாகக் காட்டுகிறது. அதில் அச்சுறுத்தல் உணர்வும் கலந்தே இருப்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இனி, தீட்சித் மேலும் பேசுகையில், இந்திய ஆட்சியினரின் உள்மனத்தில் அழுந்திக் கிடக்கும், "தமிழர்க்கு இறைமை ஆட்சி உரிமைகள் உள்ள ஒரு நாடு கிடைக்கவே கூடாது என்னும் கரவான எண்ணத்தை வெளிப்படுத்துகிறார். அவர் பேச்சைக் கவனியுங்கள்.
"இலங்கையில் (அல்லது இந்தியாவிலுமோ வேறு எங்குமோ) தமிழர்களுக்கென தனிநாடு ஒன்றை உருவாக்குவது இந்தியாவின் நோக்கமன்று. (இதைத்தான் நாம் கடந்த முப்பது ஆண்டுகளாக நாம் மக்களுக்குக் கூறி வருகிறோம். அதை இப்பொழுது தீட்சித் (அஃதாவது இராசீவ் பரம்பரையினர் கருத்தை) உறுதிப்படுத்திக் கூறுகிறார். இதை நம் வீடணத் தமிழர்கள் மூப்பனாரும் சிதம்பரங்களும் கவனிக்க வேண்டும். இனி இன்னும் தீட்சித் கருத்தை உண்மைத் தமிழாகள் கவனிக்க வேண்டும்.) இலங்கையில் பிரிவினையை உருவாக்குவதற்கான வேலையில் இந்தியா உடைந்து சிதறுவதற்கான தொடக்கப் பணிகளைத் தொடங்கியதாகத்தான் பொருள். தனி ஈழக் கோரிக்கையை (அஃதாவது தனி ஈழம் அமைவதை) இந்தியா ஒருபோதும் ஆதரித்ததில்லை. தனிஈழக் கோரிக்கையை ஏற்பதென்பது இந்தியா இதுவரை எந்தக் கொள்கைகளுக்காக வழக்காடியதோ, (அஃதாவது இந்தியா ஆரிய இனத்தவர்களாலேயே நிலையாக ஆளப்பெற வேண்டும் என்பதுதான் அவர்கள் கொள்கை என்பதைத் தமிழர்கள் இப்பொழுதேனும் விளங்கிக் கொள்க) அவை அனைத்தையும் தவிர்ப்பதாகும். பிளவுபடாத பல இன் மக்களைக் கொண்ட் நாட்டையே இந்தியா எப்பொழுதும் வலியுறுத்தியுள்ளது. (எப்பொழுது என்றால்; வரலாற்றுக் காலத்திலிருந்தா? இல்லையே, அப்பொழுதெல்லாம் இந்தியா ஒன்றாக இருந்ததில்லையே இந்தியா ஆரியர் தங்கள் கைகளில் ஐரோப்பிய ஆரியர்கள் இந்திய ஆட்சி உரிமையை (சுதந்திரத்தை) ஒப்படைத்த திலிருந்து தானே இந்தக் கரவான ஓரின நுகர்வுரிமையை (ஏக போக சுதந்திரத்தை) பிற இனத்தவர்களுக்கு விட்டுவிடக் கூடாது; நிலைநாட்டிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்க முடியும். நேரு, அவருக்குப் பின் அவர் மகள், அவருக்குப் பின் அவர் பெயரன் என்னும் வரிசையில் வந்த வலியுறுத்தம் தானே அது.)
தீட்சித்தின் இந்தக் கருத்துக்கு இலங்கை மகாவேலி மீவளர்ச்சி (அபிவிருத்தி) அமைச்சர் காமினி திச்சநாயக, அக் கருத்தரங்கிலேயே தன் உணர்வு ஒப்புதலை அளித்துக் கீழ்வருமாறு கருத்தறிவித்திருக்கிறார்.
'திராவிடர்கள் (அஃதாவது தமிழர்கள்) பலமுறை இலங்கை மீது படையெடுத்தனர். ஆனால் சிங்கள அரசன் துட்டகைமுனு திராவிட (தமிழ்) அரசன் ஒருவனை முறியடித்து உரிமை இலங்கையை ஏற்படுத்தினான். (அதற்கு முன் இலங்கையின் பெரும்பகுதி தமிழரசர் கையிலும், ஒருசிறு பகுதி(மேற்கே) சிங்கள அரசரின் கையிலும் இருந்தன. துட்டகைமுனு என்பவன் இராசீவ் போன்ற ஆரிய இனவெறியன். அவன் கைக்கு இலங்கை வந்த பின்தான் சிங்களவர் ஆட்சியை, இப்பொழுது இராசீவ் செய்கிற முயற்சியைப் போல் செய்து நிலைப்படுத்திக் கொண்டான்) அந்தச் சிங்கள அரசன் (துட்டகைமுனுவின்) அரத்தம் ஒரு துளியாவது நம் அனைவரின் உடலிலும் ஓடிக் கொண்டுள்ளது. என்றார் (துட்டகைமுனுவின் அரத்தம் சிங்களவன் உடலில் இன்றும் ஓடினால், பாண்டியன் நெடுஞ்செழியன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பனிமலை நெற்றியில் புலிபொறித்த கரிகாற் பெருவளத்தான் ஆகியோர் அரத்தங்கள் தமிழினத்த்வர்களின் உடல்களில் ஓடக் கூடாதா, என்ன?)
இனி, அக்கருத்தரங்கில் பேசிய இலங்கை உரிமை (சுதந்திர)க் கட்சி உறுப்பினர் அனில் சிங்கே, இந்திய இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து (ஆனால், தமிழர்களுக்குச் சார்பாக அன்று), தீட்சித்துக்கு விடை கூறும் வகையில் கீழ்வருமாறு பேசியதும் நாம் நினைவில் வைக்கத்தக்கது.
"இலங்கைக் குடிமக்களில் 95 விழுக்காட்டுப் பேர் ஒப்பந்தத்தை ஆதரிக்கவில்லை. இலங்கை உச்சநெறி மன்றம் கூட ஒருமனதாக அதை ஆதரிக்கவில்லை. நடுவர் சிலர் ஒப்பந்தத்திற்கு எதிரான கருத்தையே தெரிவித்துள்ளனர்... வங்கதேசப் போரில் இறந்த இந்திய வீரர்களை விட அதிகமான வீரர்கள் இலங்கையில் இறந்துவிட்டனர்... இந்திய இலங்கை ஒப்பந்தம் ஒரு முழுத் தோல்வியாகும் இலங்கை உரிமை(சுதந்திர)க் கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்திய இலங்கை ஒப்பந்தம் நீக்கப்பட்டு விடும்.
இவரின் இந்தப் பேச்சுக்குத்தான், தீட்சித் "இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நீக்கிவிட்டுப் புதிய பேச்சுகளைத் தொடங்கினால், தனிஈழம் உருவாவதைத் தடுக்க முடியாது என்று விடை தந்து பேசினார்.
எதை மனத்தில் வைத்துக்கொண்டு தீட்சித் இப்படிப் பேசினாரோ, தெரியவில்லை, ஆனால் அவர் சொன்னபடி 'இந்திய இலங்கை ஒப்பந்தம் தவிர்க்கப்பட்டுத்தான் போகும் என்பதில் ஐயமில்லை. அதன்படி, தனிஈழமும் உருவாகித்தான் தீரும். இதை யாராலும் தவிர்த்துவிட முடியாது.
தெரிந்தோ தெரியாமலோ, அனில் சிங்கேவும் தீட்சித்தும் இந்த உண்மையை உறுதிப்படுத்திக் கூறியதாகவே நாம் கருதுகிறோம்.
ஒழிக இலங்கை - இந்திய உடன்பாடு!
வாழ்க தனித்தமிழ் ஈழம்!,
- தமிழ்நிலம், இதழ் எண். 108, ஆகத்து, 1988
தமிழ்நாட்டு விடுதலையே உரிமை
அரசியலை மீட்டெடுக்கும்!
இந்திராவையும் இராசீவையும் நாம் அன்றைக்கே தமிழினப் பகைவர்கள் என அடையாளம் காட்டினோம்
இன்றைக்குத்தான் தமிழினத் தலைவர்கள் உணர் கிறார்கள்!
இப்பொழுதும் சொல்கிறோம். எல்லாருமே ஒன்றிணைந்து ஒரே குரலில் தமிழக விடுதலைக்குரல் எழுப்ப வில்லையானால், தமிழினத்தை அழித்துவிட்டுத்தான் இராசீவ் வேறு வேலை பார்ப்பார்!
அரசியலைத் தூக்கி எறியுங்கள்! வேற்றுமையை அகற்றுங்கள்! தில்லி அரசியல் நம்மை அடிமையாகவே வைத்திருக்கும்! தமிழ்நாட்டு விடுதலையே உரிமை அரசியலை மீட்டுக் கொடுக்கும்!
இனமான உணர்வைக் கலைஞர், வீரமணி, நெடுமாறன், கலிவரதன், நெடுஞ்செழியன், சானகி, செயலலிதா, வீரப்பன், காளிமுத்து, இரா. செழியன், சோமசுந்தரம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே குரலில் எழுப்ப வேண்டும்!
அன்று, தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி ஆட்சியிலிருந்த பொழுது, இந்திராவை, வலிவுபடுத்தி ஆதரித்துக் கை கொடுத்ததை, கலைஞர் இன்றைய நிலையில் மறந்திருந்தாலும், தமிழக வரலாறு என்றென்றும் மறவாது மன்னிக்கவும் செய்யாது. தாம் எதையுமே சரியாக எண்ணிச் செய்வதாகவே நினைத்துக் கொண்டு செய்யும் கலைஞரின் வரலாற்றுப் பிழைகளுள் இதுவும் ஒன்றாகும். அன்று காமராசரைப் புறந்தள்ளினார். இந்திராவை எடுத்துப்போற்றினார். இப்பிழையை, இந்திரா ம.கோ. இராவை ஆதரித்தபொழுதுதான் உணர்ந்து விழித்துக் கொண்டார். இந்திராவுக்குக் கலைஞரும் ஒருவர்தாம் ம.கோ.இராவும் ஒருவர்தாம். எவரிடம் தமிழக மக்களைத் தமக்குச் சார்பாகத் திரட்டி ஆற்றுப்படுத்தும் ஆற்றல் மிகுதியாக உள்ளதோ, அவரையே இந்திரா, தன் நிலைமையை வலுப்படுத்திக் கொள்ள ஆதரிப்பார் என்னும் உண்மை கலைஞருக்கு மிகவும் பிந்திக் காலத்திலேயே விளங்கியது.
அதேபோல், காமராசரும், இந்திரா தலைமையமைச்சுப் பதவி ஏற்கவும், தன்னைப் பெருவலிவுபடுத்திக் கொள்ளவும் தொடக்கத்தில் தம் முழுத் துணையையும் தந்து விட்டுப், பின்னர் அவரால் தாம் அனைத்திந்திய அளவில் புறக்கணிக்கப்பட்டபொழுது. தாம் செய்த பெரும் பிழையை உணர்ந்து வருந்தித் தாம் அரசியலில் மீண்டும் ஈடேறாமலேயே மறைந்தார்.
இதே பிழையைக் கலைஞருக்குப் பின்னர் தமிழக ஆட்சிக் கட்டிலேறிய ம.கோ.இரா.வும் தம் இறுதிக்காலம் வரை தொடர்ந்து செய்து வந்து, இந்திராவோ அவருக்குப் பின்வந்தஇராசீவோ, தம்மைப் புறக்கணிப்பதற்குமுன் தம் பிழையை உணராமலேயே மறைந்து போனார். ஆனால், அப்பிழையை அவருக்குப் பின்வந்த திருவாட்டி, சானகி ம.கோ. இராவும் அவரின் உள்முகச் சாணக்கியர் வீரப்பனும் பின்னர் உணர்ந்து வருந்த வேண்டியவர்களானார்கள்.
இவ்வகையில்தான், தமிழகத்திலுள்ள பிற சிறிய அரசியல் கட்சியினரும் கூட, இந்திரா அளவிலோ, இந்திராப் பேராய அளவிலோ முன்னர் செய்து விட்ட பிழைகளுக்காககப் பின்னர் இத்தமிழக மக்களை எண்ணி மிகவும் வருந்தி உணர்ந்திருக்கின்றனர். நெடுமாறனும் அப்படித்தான். இனி சேழியனும் அவ்வாறுதான் கலிவரதனும் அன்னவர்தாம் இந்திராவையும், இந்திராப் பேராயத்தையும், இராசீவையும் நம்பித், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒருவகை வெற்றியைப் பெற்றுவிடலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்த விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகானும், பிற போராளிக் குழுக்கள் தலைவர்களும் கூடத் தத்தம் பிழைகளைப் பின்னர் உணரத் தொடங்கினர்.
அடுத்து, தமிழக அரசியல் களத்தில் , எத்தனையோ தப்பு விளையாட்டுகளை விளையாடி, இறுதியில் செயலலிதாவின் பணநிழலைப் பற்றியிருக்கும் திரு. சோமசுந்தரம் கூட, அண்மையில் ஓர் அறிக்கையில் இராசீவின் தமிழின இரண்டகச் செயலை ஆய்ந்து கண்டுபிடித்துக் கடுமையாகச் சாடியிருக்கிறார்.
ஆனால், இந்நிலைகளை யெல்லாம் முன்னரே வரலாற்றடிப் படையில் கணித்துக் கூறி, இந்திராவையும் இராசீவையும் தமிழினத்தின் பகைவர்கள் என அடையாளங் காட்டிய பெருமை தென்மொழிக்கும் தமிழ்நிலத்துக்குமே உண்டு என்பதை, அவ்விதழ்களின் வாசகர்களும் அறிவார்கள்; நடுநிலையாக எண்ணிப் பார்ப்பின் முன் சுட்டிய தலைவர்களும் உணர்வார்கள். கலைஞரோ தம் விருப்பு வெறுப்புகளை அகற்றிக் கொண்டு, யார் பெரியவர் யார் சிறியவர் என்று எடையிட்டுப்பார்க்கும் மயக்க வுணர்வயுைம் தவிர்த்து விட்டு, எண்ணிப் பார்ப்பாரானால், அவருக்கும் புலப்படாமல் போகவே போகாது.
இனி, அன்றைக்கு மட்டுமன்று, இன்றைக்கும் இப்பொழுதும் சொல்கிறோம், தமிழினத்திற்கு இரண்டகம் மட்டுமன்று, இதையே அழிக்கின்ற தன்மையில், இந்திராவை விடவும் இராசீவ் பல மடங்கு கொடுமை மிக்கவராகவே விளங்குகிறார். தமிழகத்தலைவர்கள் எல்லாருமே ஒன்றிணைந்து ஒரே குரலில் தமிழக விடுதலைக்குரல் எழுப்பவிலையானால் தமிழினத்தை அழித்து விட்டுத்தான் இராசீவ் வேறு வேலை பார்ப்பார்!
இன்னொன்றையும் இங்கு நினைவூட்டுகிறோம். காமராசர் காமராசர் என்று மூச்சுக்கு முந்நூறு முறை கூறிக் கொண்டு, தம் திரண்ட சொத்து நலன்களை, எவ்வாறேனும் காத்துக் கொள்வதற்காக அரசியல் பேச்சுப் பேசித் திரியும் மூப்பனார் இறுதிக் காலத்தில் தம் குருவானவர்க்கு ஏற்பட்ட ஏமாற்றங்களையும் இழிவுகளையும் எண்ணிப் பார்த்துக் கொள்ள இப்பொழுதே சொல்லி வைக்கிறோம். அரசியல் சூறாவளியில் அடி மேலாகவும், மேல்கீழாகவும் புரட்டப்பட்ட பெருந்தலைவர்கள் ஏராளம்! ஏராளம்! அதற்கு மூப்பனாரும், சிதம்பரமும் மட்டும் நெறிவிலக்கானவர்களாக இருந்துவிட முடியாது. அவதூறு சட்டத்தைத் தம் ஆண்டை இராசீவின் தூண்டுதலால் தாம் சட்டாம் பிள்ளையாக இருந்து அறிவித்து விட்டு, இராசீவுக்கு வந்த அளவற்ற கடுமையான எதிர்ப்புகளால், எய்தவனின் அம்பாக ‘அம்போ’ என்று வீழ்ந்து கிடக்கும் அவரின் அவல நிலையை அவர் உணர்ந்து கொள்ளாத’ அறிவற்றவர் என்று கீழ்மையாக நாம் நினைத்து விடவில்லை ஆனாலும் வடவாரியர்களை நம்பிய எவனும் இத்தமிழினத்தில் தலையெடுத்ததும் இல்லை; தலை தப்பியதும் இல்லை. மிக மிகத் தூய்மையான அரசியல் காரர்களான வ.உ.சி., திரு.வி.க. போன்றவர்களும் கூட இந்நிலையைத் தங்கள் இறுதிக் காலத்தில் உண்ர்ந்து நெஞ்சு நோகவே செய்தார்கள் என்றால் இப்பொழுதுள்ளவர்கள் எம்மாத்திரம்?
அடுத்து வரும் தேர்தலில் இந்திராப் பேராயம் ஆயிரங்கோடி உருபா முதலீடு (செலவு செய்ய விருக்கிறதாக அனைவரும் கூறி வருகின்றனர். சில காலத்திற்கு முன் அரசியலோடு அறவியல் கைகோத்திருந்தது. ஆனால், இக்கால் உலக முழுவதும், அறிவியலும் கைபிணைந்து மக்களை ஆட்டக் களமாக்கி வருகின்றன. இனி அறம் செல்லாது; பேச்சு எடுபடாது; கருத்துகள் வெல்ல முடியாது நேர்மை, நயன்மை, உண்மை எதுவுமே முன்வர இயலாது. போலித்தனமும், பொய்ம்மையும் ஆரவாரமும், அடாவடித் தனமும், அரம்பச் செயல்களும், பணமும், படையுமே வெற்றி பெற நன்றாக எண்ணிப் பாருங்கள்!
இந்நிலையில் தமிழீழத்தில் தமிழின மக்கள் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்திலும் ஆளுநர் ஆட்சியினால் அவர்கள் பாடு வெகு திண்டாட்டமாக இருந்து வருகிறது. அனைத்து நிலையிலும் இங்குள்ள தமிழ் மக்கள் அரசியல், பொருளியல், குமுகவியல், கலை, பண்பாட்டு உரிமைகளை இழந்து, ஏற்கனவே அடிமைப்பட்டுக் கிடப்பதுடன், இன்றும் பேரவலத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எதிர்காலம் இவர்களின் நிலையில் எப்படியிருக்குமோ என்று உய்த்துணர இயலாது.
இங்குள்ள கட்சித் தலைவர்கள் அனைவரும் இந்த அழிவு நிலைகளை முற்றும் உணர்ந்திருக்கிறார்கள் எனினும், தங்களுக்குள் அனைத்து நிலைகளிலும் வேறுபட்டும், மாறுபட்டும் ஒருவரை ஒருவர் அமுக்கிக் கொண்டும் அழித்துக் கொண்டுமே கிடக்கின்றனர். ஆனால் அனைவரும் வடிவாரிய வணிகக் கூட்டு அரசியலின் கீழ்மைத் தனங்களையும், வஞ்சகங்களையும், தமிழின அழிப்பையும் உணர்ந்தே உள்ளனர். எனினும் அவர்கள் ஒன்றுபட்டு, அவர்களை எதிர்க்கும் ஆற்றலை இழந்தே உள்ளனர் இவ்வழங்கல் நிலையில் அவர்களுக்கு நாம் மிகவும் வருத்தத்துடனும் அன்புடனும், வேண்டுதலாகம் கூறுவது இதுதான்.
நீங்கள் அனைவரும் இக்கால் உள்ள இழிவான அரசியல் நலன்கனைத் தூக்கி எறியுங்கள். வேற்றுமையை அகற்றுங்கள்! தில்லி ஆட்சி எனறென்றும் நன்மையும் நம் பிறங்கடைகளையும் மீளாத கொத்தடிமையாகவே வைத்திருக்கும் நம்மில் எவர் ஆட்சிக்கு வந்தாலும், அவர், அவர்களுக்கு முழு அடிமையாக இருக்கிற வரையிலேயே அவர்கள் உங்களைப் பாராட்டி ஏற்றுக் கொள்வார்கள். உரிமை நிலையிலோ, ஒத்துழைப்பு நிலையிலோ நீங்கள் அவர்களில் யாரேனும் ஒருவர்க்கு மாறுபட்டாலோ, வேறுபட்டாலோ, உங்களை உடனே கீழிறக்கி விட்டுவிட்டுச் சட்டத்திற்குப் புறம்பாக அவர்களே நேரடியாக ஆட்சி நடத்தத் தயங்கமாட்டார்கள். இது இமயமலை போன்ற வரலாற்று உண்மையாகும். எனவே, தமிழ்நாட்டுத் தேசிய இன விடுதலையே தமிழினத்தின் ஒட்டுமொத்தமான உரிமை அரசியலை உங்களுக்கு மீட்டுக் கொடுக்க முடியும்.
ஆகவே, நீங்கள் அனைவரும் நமக்குள் என்றென்றும் நிலையாக இருந்துவரும் அனைத்து வேறுபாடுகளையும் களைந்து விட்டு, முழுமையான இனவுணர்வுடனும், நம் தாய்மொழி உணர்வுடனும், தமிழ் நாட்டு விடுதலை உணர்வை நம் மக்களிடையே ஊட்டுதல் ஒன்றே இந்நூற்றாண்டுக்கு உரிய தலையாய கடமையாகக் கொள்ளுதல் வேண்டும்.
இந்தக் கொள்கை நோக்கை அடிப்படையாகக் கொண்டே நம் கலைஞர் கருணாநிதி, மானமிகு வீரமணி, மாவீரன் நெடுமாறன். மக்கள் நலன் கருதும் கலிவரதன் நெடுஞ்செழியன், சானகி, இராமச்சந்திரன், சோமசுந்தரம், காளிமுத்து, இரா. செழியன் இந்திராப் பேராயத்திற்கு முற்றிலும் தம்மை கொத்தடிமையாக் கொண்டவர்கள் போக எஞ்சியுள்ள தமிழின முன்னோடிகள் முதலிய அனைவரும் ஒன்றிணைந்து ஒரே குரலில் தமிழக விடுதலைக்குக் குரல் கொடுக்குமாறு, இன்றுவரையிலும் இனியும் கூட எந்த வகையிலும் அரசியல் நலனோ பிற எவ்வகை வாழ்வியல் நலனோ கருதாத, ஒரு தமிழின நலத் தொண்டன் என்ற முறையில் மிகவும் பணிவன்புடனும் அறிவார்ந்த உள்ளுணர்வுடனும் வேண்டிக் கொள்கின்றேன்.
-தமிழ் நிலம், இதழ் எண். 12 நவம்பர், 1988
தமிழரசன் தம்பிகளுக்கு!
தமிழகத்தின் இன எழுச்சிக்கும், பார்ப்பனிய எதிர்ப்புக்கும் இந்துமதத் தாக்கத்திற்கும் வித்திட்ட தந்தை பெரியார் அவர்கள் தாம், தனித்தமிழ் நாட்டுக் கொள்கையினையும் முன்னெடுத்தார். தொடக்கத்தில் திராவிட நாட்டுப் பிரிவினையை வலியுறுத்திய அவர், பின்னர் தமிழ்நாடு தமிழருக்கே என்னும் தமிழ்த் தேசிய இன விடுதலைக் கொள்கையை முன் வைத்தார். ஆனால் அக்கொள்கை, திராவிட இயக்கக் கொள்கையின் அரசியல் பிரிவினராகிய அறிஞர் அண்ணா அவர்களின் கட்சியினராலேயே, பெரியார் காலத்திலேயே, பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது. எனவே பெரியார் அவர்கள் தம் இறுதிக் காலம் வரை, தன்னந்தனியராகவே இருந்து, தமிழ்நாட்டுக் கோரிக்கைப் போராட்டதையும் கூட நடத்தாமல் தறைந்து போனார்.
ஆனால் அவரின் இறுதிக்கால முதலே. நம் தென்மொழி தொடங்கப் பெற்ற நாளிலிருந்தே, நீர்த்துப் போன, அத்தனித்தமிழ் நாட்டுக் கொள்கையினை மறைந்து போகாமலும், தமிழ் மக்கள் மறந்து போகாமலும் நாம் காத்து வந்தததுமன்றி, சிறிது சிறிதாக அதற்கு வலிவூட்டியும் வந்திருக்கிறோம். என்று இங்குக் குறிப்பிட வேண்டியிருப்பதற்குப் பெருமைகொள்கிறோம். இதெற்கெனப் பல படிநிலைகளையும் வேறான அணுகுமுறைகளையும் நாம் பின்பற்ற வேண்டியிருந்தது.
தமிழின மக்களுக்குப் பெரியார் காலத்திலேயே இருந்த தலையாய மன மயக்கங்கள் மூன்று. ஒன்று மொழிபற்றியது. ஆரியப் பார்ப்பனீயம் எவ்வாறு இனநிலையில் தமிழர்களிடம் சாதிக்குழப்பங்களை வலிவூன்றச் செய்திருந்த, அவர்களை ஒன்றுபடாமல் செய்திருந்ததோ, அவ்வாறே மொழிநிலையிலும் ஆரிய மொழியாகிய சமசுக்கிருதக் கலப்பால், தமிழ் மொழியின் தூய்மையையும், உண்மை வடிவினையும் சிதைத்து, வலுக்குன்றச் செய்து தனித்தியங்க இயலாமல் அதனைத் தாழ்த்தி வைத்திருந்தது. இதனால் தமிழர், உண்மையான தாய்மொழி உணர்வு கொள்ள முடியாத வர்களாகவும் இன உணர்வால் எழுச்சியுற்று ஒன்றுபட முடியாதவர்களாகவும் இருந்தனர். அத்துடன் அவர்கள் தங்கள் தாய் மொழியின் பெயரால் தமிழினத்தவர்கள் அல்லது தமிழர் என்று கூறிக்கொள்ளவும் கூட இயலாதவர்களாக இருந்தனர். மேலும், தமிழர், ஆரியத்தை எதிர்த்துத் தனித்துப் போராட முடியாதவாறு, மதத்தாலும், சாதியாலும் சிதறிச் சிறுபான்மையினராகவும் இருந்தனர்.
எனவேதான், பெரியார் அவர்கள் குமுகாய, அரசியல் பொருளியல் நிலைகளில் மிகவும் வல்லாண்மை யுற்றிருந்த ஆரியத்தை எதிர்த்துப் போராடுவதற்காகத் தமிழர், தெலுங்கர், கன்னடியர், மலையாளிகள் ஆகிய தென்திராவிட மொழியின மக்களை ஒன்று கூட்டக்கருதினார். இவ்விக்கட்டான தவிர்க்க முடியாத நிலையில் தான் திராவிடத்தின் பெயரால் இயக்கம் காண வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது போலும், மேலும் பெரியார் அவர்களே பிறப்பால் கன்னடியர். ஆகையால் தமிழுக்கென்று மட்டும் தனித்து ஓர் இயக்கத்தைக் கூட்டவும் தமிழர்கள் அவர்மேல் நம்பிக்கை வைக்கவுமான ஒரு சூழல் அன்று உருவாகியிருக்கவில்லை என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். காலப்போக்கில் மொழிவழி மாறியவர்கள் பிரிக்கப் பெற்றுத் திராவிட இனங்கள் இனி ஒன்றாக முடியாத நிலை ஏற்பட்ட பின்னர் பெரியார் திராவிட நாட்டுணர்வைத் தவிர்த்துத் தனித்தமிழ் நாட்டுணர்வு கொண்டாரேனும் அவரால் முன்னர் தொடங்கப் பெற்ற திராவிட இயக்கத்தைக் கைவிடவோ, அதைத் தமிழின உணர்வாக வேறுபடுத்திக் காட்டவோ இயலாமற் போனது. எனவே திராவிட இனமயக்கத்தையும் இரண்டாவதாக நாம் பிரித்துக்காட்டித் தவிர்க்க வேண்டுவதாயிருந்தது. இவ்விடத்தில் நாம் ஓர் உண்மையைத் தெளிவாக அறிந்து கொள்ளல் மிகவும் இன்றியமையாதது. திராவிடம் என்னும் சொல் ஆரியர் உருவாக்கிய சொல். அது முந்தித் தமிழர் வரலாற்றிலோ, பழந்தமிழ் இலக்கியங்களிலோ எங்கும் இல்லை. இக்கால் தூய தமிழர் மதங்களாகிய சிவனியமும் (சைவம்) மாலியமும் (வைணவம் எவ்வாறு ஆரியர் கலப்பால் இந்து மதம் என்றொரு புதுப்பெயரால் குறிக்கப் பெறுகின்றனவோ, அவ்வாறே, தமிழம் (தமிழ் மொழி) அவர்களால் 'திராவிடம்’ என்று குறிக்கப் பெற்றது. பின்னர் அது. தமிழ் தவிர்த்த தமிழினில் கிளைத்த மலையாளம், தெலுங்கு கன்னடம், துளு முதலிய மொழிகளைக் குறிப்பதற்கு ஆகிய சொல்லாகக் கால்டுவெல் போலும் மொழி நூல் ஆசிரியர்களால் பயன்படுத்தப் பெற்றது. இனி அதனினும் பின்னர், திராவிட மொழிகள் தமிழினின்று பிரிந்த சேய்மொழிகள் என்பதைப் பெருமைக் குறைவாகக் கருதிய அத்திராவிட மொழியாசிரியர்களும், புலவர்களும் திராவிட மொழிகளுக்கும் மூல மொழியாக இருந்த ஒரு பழம் பெரும் மொழியைக் குறிக்கப் பயன்படுத்திக் கொண்டனர். ஆனால், உண்மையில் திராவிடம் என்று ஒரு மொழியோ, அது தழுவிய ஓர் இனமோ என்றுமே இருந்தன. அல்ல, இந்து மதம் ஓர் இந்தியா போலும் அதுவும் ஒரு கற்பனைப் பெயரே. வரலாற்றுப் பெயரே அன்று, தமிழே ஆரிய வழக்கில் திராவிடம் ஆயிற்று, எனவே தமிழரே திராவிடர் என்று அவர்களால் குறிக்கப்பட் வேண்டியவராகவும் ஆயினர் - இங்கு கவனிக்க;
தமிழ் வழக்கு ஆரியவழக்கு
தமிழ் தமிழம்,திரமிளம், திராவிடம்,
தமிழர் திராவிடர்
சிவனியம் சைவம்
மாலியம் வைணவம்
தமிழ் என்னும் மொழியை இன்றைய மலையாளிகளும், கன்னடியரும் தெலுங்கரும் தங்கள் மொழிகளுக்கு மூல மொழி என்று ஏற்றுக் கொள்ள விரும்பாதது போலவே, தாங்கள் திராவிட இனத்தவர் என்பதையும் ஒப்புக் கொள்ள விரும்பாததையும் கவனிக்கவும்.
எனவே, ஆரியத்தை ஒழிக்க வேண்டும் என்னும் பெரியார் கொள்கையில் நாம் சில திருத்தங்களையும் மாறுதல்களையும் செய்து அதன் பின் ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. அவற்றில் முதலாவது, சமசுக்கிருதம் தவிர்த்த தூய தமிழ் வழக்கு (தூய தமிழைப் பெரியார் தொடக்கத்தில்- மறைமலையடிகளாரின் தொடர்புப் பயனால் ஏற்றிருந்தாலும், பின்னர் படிப் படியாய்த் தமிழ் மேல் கொண்டிருந்த கொள்கைகளைத் தவிர்த்து- இறுதியில் தமிழையே ஒரு காட்டு மிராண்டி மொழி என்று சாடவும் செய்தார். இதையும் தென்மொழியின் தொடக்கக் காலத்தில் நாம் விளக்கவும் சிக்கறுக்கவும் வேண்டியிருந்தது) இரண்டாவது, திராவிடம் என்னும் சொல்லைத் தவிர்த்துத் தமிழர் அல்லது தமிழினம் என்னும் இனநிலை விளக்கக் குறிப்பு. இவையிரண்டையும் ஏற்கனவே பெரியாரைப் பின்பற்றி வந்த தமிழினத்தவர்கள் எதிர்த்தனர். முகஞ்சுழித்தனர். ஏற்றுக் கொள்ளத் தயங்கினர். ஏனெனில், முன்னரே , திராவிடம் என்னும் பெயரால். தங்கள் இயக்கங்களில் ஒன்றி நிற்கும் தெலுங்கரையும். கன்னடியரையும் இந் நிலை வேறு பிரித்து, அகற்றி விடுமோ என்று அஞ்சினர். நல்ல வேளை இத்திராவிட இயக்கங்களில் மலையாளியர் மிகுதியாகச் சேர விரும்பவில்லை. ஏனெனில் மலையாளியா பழஞ் சேர நாட்டினராகலின், அவர்கள் பழந்தமிழ் மரபின் உணர்வினராக இருந்ததால், வேறு திரிபுத் தமிழராகிய திராவிட இனத்தவருடனும், இற்றைத் தமிழர் எனப்பெறும் கலப்பு இனத்தவருடனும் தொடர்பு கொள்ள விரும்புவதில்லை. (முன்னாள் முதல்வர் ம.கோ. இரா. வின் செய்தி வேறு வகையானது; வேறானது) ஆனால் , பெரியாரின் தலையாய கொள்கை தனித்தமிழ் நாட்டுக் கொள்கையே ஆதலால், அதை நாம் கைவிட முடியாததாகப் போனது. எனவேதான் பெரியாரின் நேரடியான கொள்கை வழியினர்க்கும் நமக்கும், பெரியார் காலத்திலிருந்தே ஒரு பொருந்தாமை உணர்வும் புலத்தல் நடைமுறையும் இருந்து வந்தன, இருந்தும் வருகின்றன.
இனி, பெரியாரின் தனித்தமிழ் நாட்டுக் கொள்கையை அவரினும் வலிவாகவும் பொலிவாகவும் மெய்ம்மையாகவும் நாம் எடுத்துச் செல்ல வேண்டியிருந்ததால், மூன்றாவதாக அவரின் இன்னொரு கொள்கையினையும் நாம் கைநெகிழ்க்க வேண்டியிருந்தது. இது அவரின் இறைமறுப்புக் கொள்கை.
இறைமை மறுப்பு என்பது கொள்கையாக இருக்கலாம். ஆனால் இறைமை என்பது உண்மை. உண்மையை எப்பொழுதும் கொள்கை அளவில் சுருக்கிப் பொருள் கொள்ளக் கூடாது. தமிழர்தாம் இறைமையை உலகுக்கு உணர்த்தியவர். ஆரியர் அல்லர். ஆரியர்க்கு இறைக் கொள்கை கிடையாது. பூதவியல் கொள்கையே அவர்களுடையது. இக்கொள்கை ஆரியர்கள் பரப்பியது என்பதாகத் தவறாக விளங்கிக் கொண்டுதான் பெரியார் இதை எதிர்த்ததாகக் கொள்ள இடமுண்டு. இன்னும் உலக இனங்களில் இன்றுள்ள தெய்வக் கொள்கைகள் அனைத்தும் தமிழரின் பழைய இறையியல் கோட்பாடே ஆகும். தமிழரின் மொழி எப்படிப் பழைமையோ, அவ்வாறே அவரின் இறைமையும் பழைமையே! தமிழ்மொழிதான் உலக மொழிகள் அனைத்துக்கும் எவ்வாறு மூலமும் முதலும் ஆனதோ, அவ்வாறே அதன் இறைமை உண்மையும் அனைத்து இனங்கட்கும் மூலமும் முதலுமாக இருக்கிறது.
ஆனால், தமிழர்களிடம் ஏற்கனவே வலிவாக வேரூன்றிப் போன இறைமை உண்மையை ஆரியம் மதமாகக் கீழிறக்கம் செய்து இந்து மதமாக்கி இழிவு படுத்தியது. எனவே, இந்து மதத்தைத் தாக்குவதற்கு இறைமையையும் தாக்க வேண்டிய தேவை பெரியாருக்கு ஏற்பட்டிருக்கலாம். என்று நாம் கருத வேண்டி உள்ளது. ஆனால் இதைப்பற்றியெல்லாம் நாம் அதிகமாகக் கவலைப்பட்டுக் கொள்ளத் தேவை அன்றும் இல்லை; இன்றும் இல்லை. ஆனால் தமிழின முன்னேற்ற முயற்சியாளர்களுக்கு இவை பற்றிய தெளிவுகள் தேவை! இல்லெனில் அம் முயற்சிகள் இறுதி வரை உறுதியாகவும் சரியாகவும் இருக்க இயலாது.
இனி, இத்துணையளவில், ஆரியக் கேடுகளை அழித்தொழிக்க வேண்டியிருந்த வலிமை தேவையாக இருந்ததால் தான் பெரியாரைத் தவிர வேறு எவரும் ஒரு போருணர்வு கொண்டு அதனொடு முடுக்கமாகப் பொருத முன்வராது பின் வாங்கிப் போயினர். இந்த நிலையில் பெரியாரேனும் இதைச் செய்தாரே என்று எண்ணித்தான். சிறிது மாறுபாடான அவரின் கருத்து நிலைகளையும் நேரடியாக நாம் எடுத்துக் கூறி முரண்பட்டுக் கொள்ளாமல், நமக்குகந்த முறையில் - தமிழருக்குத் தேவையான தனித்தமிழ்நாட்டுக் கொள்கையை நாம் அனைத்துக்கும் மேலாக உயர்த்திப் பிடித்துக் கொண்டு உரக்க முழக்கிவந்தோம்; வருகிறோம்; வருவோம்!
இத்தனித்தமிழ் நாட்டுக் கொள்கையும் கூட தமிழின உணர்வுள்ளவர்களிடம் தான் தோன்றி வலுப்பெற முடியும் இனி, தமிழின உணர்வு தோன்ற வேண்டுமாயின் தமிழ் மொழியுணர்வு மிக மிகத் தேவை. தாய்மொழியுணர்வின்றி இனவுணர்வு தோன்றவே தோன்றாது; அவ்வாறு ஒரு வேளை தோன்றினாலும் அது நிலைபெறாது உறுதியாயிராது; என்றோ ஒரு நாளில் அது நீர்த்துப் போய்விடும். இனி இனவுணர்வு வலுப்பெறாமல் நாட்டுணர்வு வலுப்பெறவே பெறாது. நாட்டுணர்வு வலுப் பெறாமல் தனிநாட்டுப் போராட்டம், விடுதலை முயற்சிகள் எப்படி வெற்றிபெற முடியும்?
ஆகவே, தனிநாட்டு விடுதலை முயற்சியில் ஈடுபட்டு உழைக்கவும் போராடவும் முன்வரும் இளைஞர்களுக்கும் அறிஞர்களுக்கும் உண்மையான தூய தமிழ் உணர்வு கால் கொள்ளுதல் மிக மிக வேறு எவற்றையும் விட - இன்றியமையாதது என்பதை நாம் முதற்கண் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும் என்க. இவ்வுணர்வின்றி, ஈடுபடும் எந்த இளைஞரும் அறிஞரும் தலைவரும் தமிழினத்தை முன்னேற்றவும், தமிழ்நாட்டை விடுதலை செய்யவும் இயலவே இயலாதென்க, அவ்வாறு ஒரு வேளை இற்றை நாள் விளைவேறி, வெளியேறிவரும் கருவிகளைக் கொண்டு, போராடி வெற்றி பெற்றுத் தனித் தமிழ் நாட்டைப் பெற்றாலும், அது மீண்டும் ஆரியத்திற்கே அடிமைப்பட்டுக் கிடக்கும் என்பதைக் கடந்த மூவாயிரம் ஆண்டுக்காலத் தமிழ், தமிழின தமிழ்நாட்டு வரலாறுகளையும், உலக நாடுகளில் விடுதலை வரலாறுகளையும் உணர்ந்தவர்கள் தவிரப் பிறர் எவரும் மாறுபட்டும் வேறுபட்டுமே இயங்குவர். இறுதியில் மீண்டும் ஆரியத்துக்கும் அடிமைப்பட்டே கிடப்பர் என்பதை உறுதியாய் நெஞ்சில் நிறுத்துக.
இனி, தனித்தமிழ் நாட்டு விடுதலை என்பதை வெறும் அரசியல் விடுதலையாக மட்டுமே இளைஞர்கள் கருதிக்கொள்ளக் கூடாது. இது வெறும் அரசியல் விடுதலை மட்டுந்தான் என்றால், இப்பொழுதுள்ள இந்திய அரசியல் சட்டதிட்டங்களுக்குட்பட்டே தமிழக ஆட்சியை மட்டுமே நாம் அடைந்து விட்டால் போதும்; நம் இனத்தையும் நாட்டையும் மொழியையும் நாம் முன்னேற்றி விடலாம் என்று கருதுகிற அளவில் நம் கொள்கை நிறைவு பெற்று விட முடியும் முழுவதுமாக இல்லையேனும் ஓரளவாவது தொடக்கத்திலும், பின்னர் படிப்படியாக முழுமையும் நம் இலக்கை அடைந்து விடலாம் என்று நம் அரசியல்காரர்கள் சிலர் கருதி முயன்று வருவதை நாம் அறிவோம், அவ்வளவில், அவர்கள் அரசியல் வழிப் போராட்டமே முயற்சியே - போதும் என்று கருதி, அதற்குத் தேர்தலே வழி, என்றும் கூறி வருகிறார்கள்.
தேர்தல் என்பது ஒரு நல்ல அரசியல் அதிகார மாற்றுக் கருவிதான். அக்கருவி கையாளப் பெறுபவர்களின் கைகளுக் கேற்ப பெருமை பெறுகிறது; அல்லது இழிவடைகிறது. இந் நாட்டைப் பொறுத்த வரையில் அது பட்டிருக்கிற இழிவுக்கு- அல்லது தாழ்ச்சிக்கு எல்லையே இல்லை எனினும், அதன் வழியாகத்தான் அதிகராங்கள் கை மாற வேண்டி உள்ளது. என்ன செய்வது? எனவே, அரசியல் அதிகார மாற்றத்தை இதன் வழியாகச் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறவர்கள். இத்தேர்தலை நம்ப வேண்டியவர்களாகவே இருக்கிறார்கள். இப்படி இருப்பவர்கள். இக் கருவி எந்த அளவுக்கு இழிவுபடுத்தப்பட்டுக் கிடக்கிறதோ, அந்த அளவுக்குத் தாங்களும் கீழிறங்கி விடுகிறார்கள். அவர்களில் மிக மிகக் கீழிறங்கி நடப்பவர்களே வெற்றியும் பெறுகிறார்கள், எனவே இந்த வகையான அரசியல் விடுதலையால், இத்தமிழையும் தமிழ் நாட்டையும், தமிழினத்தையும் எவராலும் முன்னேறச் செய்து விட முடியாது. அவ்வாறு நினைத்துக் கொண்டிருப்பவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளும் பேதைகள்! வேண்டுமானால் அறிவறிந்த பேதைகளாக இருக்கலாம்! அதே போல் அவ்வாறு பேசிக் கொண்டிருப்பவர்கள் மக்களை ஏமாற்றும் எத்தர்கள்! வேண்டுமானால் படித்த எத்தர்கள் என்று சொல்லலாம். எனவே இப்படிப்பட்ட நிலைகளிலேயே ஈடுபட்டு ஈடுபட்டுக் காலக்கழிவு செய்பவர்களால் உண்மையான அரசியல் விடுதலையைப் பெற்றுத்தர முடியாது. அவ்வாறு பெற்றுத் தந்தாலும் அஃது அரசியல் விடுதலை, ஆகாது. இந்தியாவுக்குக் கிடைத்த விடுதலையும் இதை அல்லது இதைவிடக் கீழான ஒரு நிலையைப் போன்றதே என்பதை நாம் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
இனி, இது போன்றதொரு விடுதலையல்லாமல், உண்மையான தேர்தல் வழி, முறையான செயல்முறைகளுடன் நேர்மையான வகையிலேயே, நம் தமிழ்நாட்டுக்கு அரசியல் விடுதலையே கிடைத்தாலும் அதால் இந்த மொழியும், இனமும், நாடும் முன்னேறி விட முடியாது. ஏனெனில், தில்லி ஆண்டை தமிழக அரசியல் விடுதலையை எப்பொழுதுமே தன் கையசைவுக்குள்தான் அடக்கி வைத்திருக்க முடியும். அப்படித்தான் இந்நாட்டு அரசியல் அமைப்பியல் சட்டம் உருவாக்கம் செய்யப் பெற்று இருக்கிறது. (ஒரு வேளை தில்லி, தமிழகத்திற்கென்று தனி இறைமையும் தன்னதிகாரமும் உள்ள விடுதலையையே கொடுத்துத் தனித் தமிழ்நாடு ஆக்கினாலும், இப்பொழுதைய நிலையில் மூப்பனும், சிதம்பரமும், பழனியாண்டியும் போன்றவர்கள்தாம் இதன் அரசியல் தலைமையைக் கைப்பற்றுவார்கள். அதால் மக்களுக்கு எந்த விடிவோ முன்னேற்றமோ வந்து விடாது.) எனவே, தில்லி யாட்சியிலிருந்து, அறவே விலகி, மக்களாக அமைக்கும் ஒன்றைத்தான். நாம் இப்பொழுதைக்கு அரசியல் விடுதலை என்று சொல்ல முடியும். இதை மேலும் தீவிரமான இலக்கண முறையோடு ஆராய்ந்து, இலக்கிய விளைவோடு ஒத்திட்டுப் பார்க்க வேண்டிய நிலை இப்பொழுது தேவையில்லை என்பதால் இத்துடன் இதை நிறுத்திக் கொண்டு, இவ் வரசியல் விடுதலைக்கு அப்பால் முதலில் எவ்வெவ் வகையில் நாம் விடுதலை பெற வேண்டியவர்களாக இருக்கிறோம். என்பது பற்றி இனிச் சிந்திப்போம்.
தமிழினத்தைப் பொறுத்த வரையில் உலகிலுள்ள பிற தேசிய இனங்களைப் போல் வெறும் அரசியல் விடுதலை மட்டுமே இதற்குப் போதுமான தேவையன்று. அரசியல் விடுதலையுடன் கூடிய இன விடுதலையும் இதற்குக் கட்டாயம் தேவை என்பதையும் தெளிவாக உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
சிலர் இதன் பரு விளக்கத்தைத் தவறாக விளங்கிக் கொண்டு, அரசியல் விடுதலை பெறுவதுதான் நம் முதல் தொண்டு; அதைப் பெற்று விட்டால், இன விடுதலையையும் பிற விடுதலைகளையும் நமக்கு நாமே வழங்கிக் கொள்ள முடியும்’ என்று கருதுகின்றனர். அவர்கள் நிலமிருந்தால் நாமே விளைவித்துக் கொள்ள முடியும் என்ற கருத்தை உடையவர்கள். நிலமிருந்து விட்டால் மட்டும் போதும், நாமே விளைவித்துக் கொள்ள முடியும் என்பது ஒரு பொது உண்மையே! ஆனால் அது சிறப்பு உண்மையாக முடியாது. நிலத்திற்கு மேலும் எத்தனையோ உடைமைகளையும் உரிமைகளையும் நாம் பெற வேண்டிப் பாடுபடவேண்டியிருக்கும்.
அரசியல், விடுதலை பெற்று இனவிடுதலை பெறாத பொழுது, இற்றை இந்தியா தன்னுரிமை பெற்ற வரலாறாகத்தான். அது முடியும். இந்தியாவில் நாற்பதாண்டுக்காலத் தன்னுரிமை வரலாற்றில் மக்கள் படுந்துயரையும், இழந்த உரிமைகளையும் எவரே எடுத்து முழுமையாக இயம்பி விட முடியும்? இதைவிட தமிழ் நாடு இன விடுதலை பெறாமல் அரசியல் விடுதலை மட்டும் பெற்று இயங்குவது கொடுமையிலும் கொடுமையாக இருக்குமன்றோ?
நாம் இன விடுதலை என்று குறிப்பது தமிழினத்தில் ஏற்கனவே இரண்டறக் கலக்கப் பட்டுள்ள மதப்பூசல்களையும் சாதி வேறுபாடுகளையும் அறவே விட்டு விலகி இன ஒருமை எய்துவதற்கான சூழ்நிலையை உருவாக்குவதுதான். நாடு அரசியல் விடுதலை பெற்றுத் தன்னுரிமை உற்று இருக்கையில், மக்கள் பிறவியின் அடிப்படையில் வேறுபட்டுக் கிடப்பாரானால், அவ்வுரிமையை நாம் எப்படிச் சரி சமமாகப் பகிர்ந்து கொள்ள இயலும்? உரிமை சரிசமமாக மக்களால் நுகரப் பெறாத பொழுது, நாட்டின் அரசியல் விடுதலையால் யாருக்கு பயன் விளையும் என்று எண்ணிப் பார்க்கவும்
தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்லாமல் இந்தியாவிலுள்ள மக்கள் அனைவருமே பல்வேறு மதவுணர்வுகளாலும், பல நூற்றுக் கணக்கான சாதி உணர்வுகளாலும் ஆண்டாண்டுக் காலமாகப் பிளவுண்டு, பிரித்து வைக்கப் பெற்றுள்ளனர் என்பதை நாம் அறிவோம். இங்கு ஆளும் சாதியென்று ஒன்றுண்டு; ஆளப்படுகிற பல்வேறு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகள் எனப் பற்பலவுண்டு. இவையெல்லாம் அப்படி அப்படியே இருக்க, அரசியலில் மட்டும் விடுதலை பெற்றுவிட்டதாகவும், உரிமை எய்தி விட்டதாகவும் கருதிக் கொண்டு, செயல்களில் மட்டும் அவரவர் சாதி மதங்களுக் கேற்பப் போராடிக் கொண்டும் சண்டையிட்டுக் கொண்டும் வேறுபாடுகளைக் கற்பித்துக் கொண்டும், அதற்கேற்ப வளங்களை ஒருசார்பாகவே பங்குபோட்டுக் கொண்டும் இருப்பதால் யாருக்கு என்ன பொதுப் பயன் விளைந்து விட்டது, இந்த இந்தியாவில்? எனவே, நாளை தமிழ்நாடும் அரசியல் உரிமை பெற்றால், இதே நிலைதான் தொடர்ந்து இருக்க முடியும்? இராதென்பது எப்படி? அதற்கென்ன உறுதி?
ஆனாலும், அரசியல் விடுதலை பெற்று விட்டால்தான் நாம் இன வேறுபாடுகளைக் களைந்து கொள்ள முடியும் என்பதும், இன விடுதலை பெற்ற பின்னரே அரசியல் விடுதலை பெற்றுக் கொள்ளலாம் என்பது இயலவே இயலாது என்பதும் நாம் அறிந்தனவே! ஆனால், இன வேறுபாடுகளையும், மற்ற பொருள் நிலை வேறுபாடுகளையும், களைந்து கொள்ள விரும்புகின்ற அளவில் மக்கள் பெரும்பாலாரின் மனம் பக்குவப் பட்டு வருகின்ற அல்லது பக்குவப்பட்டு விட்ட அந்த நிலையில் தான் அரசியல் விடுதலைக்கு நாம் முயற்சி செய்தல் வேண்டும்.
அடுத்து, இங்குள்ள பொருளியல் ஏற்றத்தாழ்வுகளும் கூட நாம் இரண்டாவதாகக் குறிப்பிட்ட மதச்சேற்றுடனும் சாதிக் குப்பைகளுடனும் இரண்டறக் கலந்து ஆழமாகப் பதிந்து கிடக்கின்றதை நாம் உணர முடியும். இவற்றிலிருந்து நாம் விரும்பும் பொருளியல் விடுதலையை மீட்டெடுக்க வேண்டுமானாலும் அம்மத இழிவு நிலைகளையும் மூட நம்பிக்கைகளையும் சாதிச்சேற்றையும் நாம் கழுவித்துப்புரவு செய்தே ஆக வேண்டும். அப்பொழுது தான். நாம் விரும்பும் பொருளியல் விடுதலையையும் உரிமைகளையும் மக்கள் சமமாகத் துய்க்க முடியும். பிறவியால் சிதறுண்டு கிடக்கும் இன வேறுபாடுகளையும் மத மூட நம்பிக்கைகளையும் அகற்றாமல் அரசியல் உரிமைகளைத் துய்க்கக்கொடுப்பது ஈயம் பூசாத பித்தளை யேனத்தில் பெய்யப் பெற்ற களிம்பு உணவை உண்ண வைப்பது போன்றது. அதில் களிம்பு போன்ற நச்சுணர்வுகள் ஊறிக் கொண்டே இருக்கும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. புண்ணின் உள்ளே ஊறிக் கொண்டிருக்கும் சீழ் அப்படியே இருக்கும் பொழுது வெறுமனே மேல் மருந்து பூசி உடலை நலப்படுத்துவது யாங்கன் இயலும்?
எனவே, மக்களுக்கு ஓரளவேனும் பொதுமை உணர்வையும் பொதுவுடைமைச் சமநிலை வேட்கையையும் ஊட்டி, உணர்த்தி, விளக்கப் படுத்தாமல், அரசியல் உரிமையை மீட்டுக் கொடுக்க முயற்சி செய்வது, என்றோ எங்கோ எப்பொழுதோ செய்யத் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் விருந்துக்கென இப்பொழுதே இங்கேயே இலை விரித்து வைக்கும் பொருத்தமற்ற செயலாகவே போய்விடும் என்பதை நன்கு உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
எனவே, தமிழ் நாட்டு விடுதலைக்கெனத் தங்களை ஈகப்படுத்திக் கொள்ள விரும்பும் இளைஞர்கள், முதலில் தாங்கள் மீட்டெக்க விரும்பும் விடுதலை எந்த இன மக்களுக்காக என்பதையும், அவர்களின் இப்பொழுதைய அரசியல், இனவியல், பொருளியல் விழிப்புணர்ச்சி எத்தகையது, எந்த அளவினது என்பதையும் அடியூன்ற எண்ணிப் பார்த்து, அதற்குத்தக தம் விடுதலை முயற்சிகளைப் பல்வேறு கட்டங்களாகப் பகுத்து அளவிட்டுக் கொண்டு, முதல் கட்டம், இரண்டாவது கட்டம், மூன்றாவது நான்காவது கட்டங்கள் என்று வரையறை செய்து கொண்டு, அவற்றுக்குத் தகுந்தாற் போல், தங்கள் இயக்க ஆற்றல், துணையாற்றல், பொருள் நிலை ஆற்றல், கருவிநிலையாற்றல் ஆகியவற்றை எடையிட்டுப் பார்த்து அதைச் செயல்படுத்துவதே திட்டமிட்ட கட்டுக்கோப்பான, வரைமுறையான விடுதலை முயற்சியாகும் என்று நாம் கருதுகின்றோம்.
இனி, விடுதலை முயற்சி அதன் செயல் கட்டங்களுக்கு ஏற்ப எவ்வாறு அமைதல் வேண்டும் என்பதைப் பற்றியும், எதன் அடிப்படையில் வெளிப்படல் வேண்டும் என்பதையும், அம் முயற்சிகளுக்கு, நம் நாட்டைப் பொறுத்த அளவில், நம் மக்களைப் பொறுத்த அளவில் நாம் செய்யவிருக்கும் உரிமைப் போராட்டம் மக்கள் புரட்சியாக இருக்குமா, அல்லது கருவிப் போராட்டமாக இருக்க வேண்டுமா, எது சரி என்பன பற்றியும் அடுத்து வரும் கட்டுரையில் விளக்கமாகப் பேசுவோம்.
- தென்மொழி, சுவடி :24, ஓலை 5, 1988
முன்பு போல் ஆட்சி கவிழ்க்கப்பட்டால்,
அடுத்து நடப்பது வேறு!
இந்திய நாட்டில் பெயருக்குத்தான் குடிநாயக (சனநாயக) அரசு என்று சொல்லப்பெறுகிறதே தவிர, நடப்பதெல்லாம் முதலாளிய- வல்லதிகார அனைத்ததிகார(சர்வாதிகார)ப் பார்ப்பனிய ஆட்சிதான் என்பது அனைவருமே அறிந்த ஒன்றாக இருக்கிறது. பதவியதிகாரத்தின் தலைமையிடத்தில் இருந்தாலும் சரி, அ’து எதிர்க்கட்சிக்காரர்கள் ஆள்கிற மாநிலமாக இருந்தால் அதை உடனே அழித்தொழித்துவிடவும், உடனே குடியரசுத் தலைவர் ஆட்சி என்கிற பெயரால், ஒரு பூசாரி ஆளுநரை அங்கு அனுப்பவும், அவருக்குத் துணையாகத் தங்களுக்கு வேண்டிய இரண்டு மூன்று பார்ப்பனச் செயலாளர்களை அமர்த்திக் கொள்ளவும்; அடுத்துத் தங்களுக்குப் பிடித்தமான, வாய்ப்பான ஒர் ஆட்சிச் சூழ்நிலையைத் தங்கள் பணவலிவால் உருவாக்கிக் கொள்ளவும் இந்த நாட்டில் முடிகிறதென்றால், இங்கு நடப்பதைக் குடிநாயகம் (சனநாயகம்) என்பதை எவருமே ஒப்புக் கொள்ளமாட்டார்கள்.
இந்திரா காலத்தில் இவ்வாறு கவிழ்க்கப்பட்ட மாநில அரசுகள் ஏராளம். 1975 -இல் தமிழ்நாடு அரசு (கலைஞர் ஆட்சி) அதற்கு முதற்பலியானது. பின்னர் 1980 -இல் சரத்பவார் முதலமைச்சராகவிருந்த மகாராட்டிரம், பிரகாசு சிங் தலைமை தாங்கிய பஞ்சாப், சுந்தர்லால் பட்வா முதலமைச்சராக இருந்த நடுவண் பைதிரம் (மத்தியப் பிரதேசம்), நீலமணி ரவுத்திரி முதலமைச்சராக ஆண்ட ஒரிசா, ராம்நரேசு யாதவ் ஆட்சியேறிய வடப்பைதிரம் (உத்திரப்பிரதேசம்) பாடிபாசு பட்டேல் முதன்மை தாங்கிய குசராத், ம.கோ. இரா. (எம். சி. ஆர்) தலைமை பூண்ட தமிழ்நாடு (2-ஆம் முறை) பெய்ரான் சிங்சேக் ஆளுமை செய்த இராசத்தான் ஆகிய மாநிலங்களும், அதன் பின்னர் 1983 இல் கர்பூரிதாகூர் ஆட்சியேற்றிருந்த பீகார், டி. இராமச்சந்திரன் ஆட்சிக் கட்டிலேறிய புதுச்சேரி ஆகிய மாநிலங்களும், மீண்டும் 1984 - இல் தர்பராசிங் தலைமையிலான பஞ்சாப், நர்பகதூர் பண்டாரி வீற்றிருந்த சிக்கிம், பரூக் அப்துல்லா ஆட்சி பூண்ட சம்மு காசுமீர், என். டி. இராம இராவ் தலைமை தாங்கிய ஆந்திரா ஆகிய மாநிலங்களும் அவ்வம்மையாரின் வெறுப்புக்கு ஆளாகி அடித்து வீழ்த்தப்பட்டன.
இந்த ஆட்சிக் கவிழ்ப்பு வரலாறுகளை அறிந்த அரசியல் பார்வையாளர் எவரும். இவ்வீழ்ச்சிக் கதைகளை ஞாயம் என்று மதிப்பிட்டு விட முடியாது. அத்துணை அழிம்புகளின் மேல் கட்டப் பெற்று வருகின்ற வல்லதிகார ஆடம்பரப் பெருமாளிகைதான் இராசீவின் பரம்பரை ஆட்சி அரண்மனை. இந்த வகையில் தாய்க்குப் பிள்ளை சளைத்ததில்லை என்பதை ஆட்சிக் கவிழ்ப்பால் மட்டுமன்று, கருப்புச் சட்டங்களாலும், கடுமையான ஆட்சியதிகார ஊடுருவல்களாலும் மெய்ப்பித்து வருபவர் அவர். பஞ்சாபில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகக் குடியரசுத் தலைவர் ஆட்சி! ஆனால் மூன்று ஆண்டுகள் வரை அதைத் தொடர்ந்து நடத்த, தனி அரசியல் கருப்புச் சட்டத்தை இயற்றிக் கொண்டது, இராசீவ் ஆட்சி!
தமிழகத்தில் பஞ்சாபைப் போன்ற ஒரு நிலை எப்பொழுதுமே வந்ததில்லை. இருப்பினும் 1988 ஓராண்டு முழுவதும் குடியரசுத் தலைவர் பெயரால் ஆளுநர் ஆட்சி நடத்தப் பெற்றது. தமிழகத்தை நிலையான அடிமைத் தளையில் வைத்திருக்க - பேராயக் கட்சி ஆட்சியை வலுக்கட்டாயமாக மக்கள் மேல் திணிக்க இங்கே பல வகையிலும் பலகோடி உருபா செலவு செய்து, முயற்சிகள் மேற்கொள்ளப்பெற்றன. கடந்த சட்டமன்றத் தேர்தலுக்காக மட்டும் இராசீவ் 12 தடவைகள் இங்கு வந்திருக்கிறார். அவர் வரவுக்காக ஒரு தடவைக்கு 6 கோடி முதல் 7 கோடி உருபா வரை செலவிடப் பெற்றிருக்கிறது. இது முழுக்க முழுக்க அரசு பணம். அஃதாவது மக்கள் வரிப்பணம். இத்தேர்தல் பணி ஓர் இந்தியத் தலைமையமைச்சரின் பணியன்று. இருப்பினும் இவர் மாவட்ட ஆட்சித் தலைவர்போல், மாநில ஆட்சியைக் கைப்பற்ற் செயல்பட்டார். இங்குள்ள கட்சித் தலைவர்கள் அவரைத் தெருத் தெருவாக, வீடு வீடாக அழைத்துச் சென்று ஒப்போலை கேட்கச் செய்தனர். இவருடைய தாய்கூட இத்தகைய ஆரவார வேலைகளைச் செய்ததில்லை. அது மட்டுமன்று. வேறு எந்த நாட்டிலுமே இல்லாத கொடுமை இது. ஏறத்தாழ 100 கோடி உருபா அரசுப் பணத்தைத் தம் கட்சிப் பணத்தைப்போல், தாராளமாகச் செலவிட்டுக் கொண்டு தில்லிக்கும் தமிழ் நாட்டிற்கும் நகர உந்தைப் போல் வானூர்தியைப் பயன்படுத்திக் கொண்டு, ஒரு படை பரிவாரத்துடன் 12 முறை வந்து போக, இராசீவுக்கென்ன தமிழக மக்கள் மேல், தமிழ்நாட்டின் முன்னேற்றத்தின் மேல் அவ்வளவு அக்கறை? அது வேறொன்றுமில்லை; தமிழர்களை என்றென்றும் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் படி விட்டுவிடக் கூடாது என்பதும், அவர்களை என்றென்றும் நிலையான அடிமைகளாகவே வைத்திருக்கவேண்டும் என்பதுந்தாம்! இதுதான் அவரின் உள்நெஞ்சத்தில் ஊசலிட்டுக் கொண்டிருக்கும் கருத்தாகும் நோக்கமாகும்!
இந்தியாவிலேயே பார்ப்பனியத்திற்கும் வடநாட்டு முதலாளிய ஆட்சிக்கும் சாவு மணி அடிக்க முயற்சி மேற்கொள்ளப்படுவது தமிழ் நாட்டில் மட்டுந்தான்! தமிழர்கள்தாம் தங்கள் மொழி, இன, நாட்டு உரிமைகளுக்காக இங்கே போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை எப்படியேனும் இங்குள்ள விபீடணக் கும்பலை வைத்துக் கொண்டு, நிலையாக அடக்கி ஒடுக்கிவிட வேண்டுமென்று கனவு காணுகிறது இராசீவ் கும்பல்!
இந்த நிலையில் நீண்ட நெடுங்காலத்திற்குப் பின், அஃதாவது பதின் மூன்றாண்டுகளுக்குப் பின், இராசீவின் அம்மா இந்திரா காலத்தில் இறக்கிவிடப்பட்ட தி.மு.க., தம்முடைய ஆட்சிக் காலத்தில் மீண்டும் மேளதாளத்துடன் ஆட்சி அதிகாரத்தில் கால் வைக்கிறது, என்றால் இராசீவால் பொறுத்துக் கொள்ள முடியுமா? முடியாது தான்! தாமும் எவ்வளவோ முண்டி மூச்சுப் பிடித்துக் கொண்டு மூப்பனார் துணையுடனும், திண்டிவனத்தார், குமரியார் தாங்குதல்களுடனும், சிதம்பரனார் கெட்டிக்காரக் கட்டியங்காரத் தனத்துடனும், தம் மனைவி சோனியாவுடன் தமிழகம் முழுவதும் தேர்தல் ஊர்கோலம் வந்தார்; ஏழைகளின் மேல் அன்பிருப்பது போல் நாடகம் ஆடிக் காட்டினார்.
ஆனால் இவரும் இவரின் கட்சிக் கோடரிக்காம்புகளும் எதிர் பார்த்ததற்கு நேர் எதிராக, இங்குள்ள மக்கள் ஏதோ ஒரு காரணத்தினால் தி.மு.கவை ஆட்சியில் அமர வைத்தனர். கலைஞர் ஆட்சிக் கட்டிலேறினார். அன்றிலிருந்து இராசீவும் அவர் கட்சிக் கேடயங்களும் ஒன்றைப் பார்த்து ஒன்று பொருமிக் கொண்டன; கருவிக் கொண்டன; பற்களை நறநறவென்று மென்று துப்பிக் கொண்டன. 'உன்னால்தான் நான் கெட்டேன்; என்னால் தான் நீ கேட்டாய் - என்றெல்லாம்' அவை கூறின: அம்பல் தூற்றின. ஆனால் காலப்போக்கில், “இனி விளைந்ததைக் கொட்டி அளந்து கொண்டிருப்பதில் பயனில்லை; விளைவிப்பதைத் தாறுமாறாக்குவோம்; சிதைப்போம்; ஆக்கிய சோற்றுச் சட்டியை உடைப்போம்” என்று மறைமுக உறுதியெடுத்துக் கொண்டு, சட்டமன்றத்தில் புதிதாகக் கால் வைத்த ஆரிய மாரீசையையும் அவருக்குப் பக்க மேளங்களாக உள்ள திருநாவுக்கரசு, சாத்தூர் இராமசந்திரன், குமரிஅனந்தன், இராதா, அண்ணாநம்பி, செங்கோட்டையன் இன்னோரன்ன வீடணப் பிரகலாத சுக்கிரிவப் பிறப்புகளையும் தூண்டிவிட்டு, முதலமைச்சர் கலைஞர்க்கு முன்னாக நின்று முரண்டு பிடிக்கவும், முடிந்தால் முரட்டுவலி காட்டவும், இன்னும் முடிந்தால் கலைஞர் மூக்கை உடைக்கவும் (இங்கு மூக்குடைப்பை மானக்கேடு செய்தல் என்னும் பொருளில் கொள்க) திட்டம் இடப்பட்டது; திட்டமிட்டபடி உணர்ச்சித் தூண்டல்கள், வாய்க் கொப்பளிப்புகள், செயலிழிவுகள் முறைப்படி கடந்த 25-3-89 இல் சட்டமன்றத்தைக் களரி மன்றமாக்கின.
அடுத்து, மக்கள் மன்றத்தில் அ.தி.மு.கவினரும், இந்திராப் பேராயத்தினருமாகச் சேர்ந்து இல்லாத பழிகளைச் சொல்லாத சொற்களால் கலைஞர் மேலும், அவர் ஆட்சி மேலும் ஏற்றிக் கூறினர். இவ்வாறாக மக்களால் அரியணையேற்றப் பெற்ற தி.மு.க.வை இராசீவ் ஏதோ ஒரு காரணம் காட்டி இறக்கிக் காட்டப் பார்க்கின்றார். இத் திரைமறைவு நாடகத்தின் இறுதிக் காட்சி எப்படியிருக்கும் என்று இப்பொழுது கூற முடியவில்லையானாலும், இராசீவுக்குக் கட்டியங்காரராக இருந்து கோமாளிக் கூத்து நடத்தும் தஞ்சை நிலக்கிழார் மூப்பனாருக்கு ஒன்று சொல்லிக் கொள்வோம்.
"இந்திய மாநிலச்சட்ட மன்றங்களில் அடிதடிகள், செருப்பு வீச்சுகள், ஒலிவாங்கிகளைப் பிடுங்கியடித்தல்கள் போன்ற செயல்கள் பொதுவான நிகழ்ச்சிகளாகிவிட்டன. ஏன், பாராளுமன்றத்திலேயே இவை போன்ற நிகழ்ச்சிகள் அவ்வப் பொழுது நடப்பது இயல்பாகிவிட்டது. எதிர்க்கட்சிகள் ஆட்சி நடத்தும் ஆந்திராவிலும், கேரளாவிலும், கருநாடகத்திலும், அரியானாவிலும், மேற்கு வங்காளத்திலும், எதிர்க்கட்சியாக இருந்து வரும் இந்திராக் கட்சியினர் செய்து வரும் கலகங்கள், கலவரங்கள், மற்றும் சட்டத்திற்குப் புறம்பான, குடியரசு அமைப்புக்கே மாறான செயல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அண்மையில் கூட இராசத்தான் சட்ட மன்றத்திலும் உறுப்பினர்கள் கூச்சசலும் குழப்பமும் ஏற்படுத்தியதாகப் பலமுறை பேரவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதே முறையிலேயே தமிழகத்திலும் அ.தி.மு.க வைத் தூண்டி விட்டுப் பேராயக் கட்சி செயல்படத் தொடங்கிவிட்டது; நாள் தோறும் அக்கட்சியின் தலைவர் இராசீவின் தூண்டுதலால் நடக்கும் அடாவடித்தனமான, அரம்பத்தனமான நிகழ்ச்சிகள் பாராளுமன்றக் குடியரசு அமைப்பையே அவமதிக்கும் போக்கை உறுதிப்படுத்துகிறது.
“செய்வதையெல்லாம் செய்துவிட்டு, நடுவண் அமைச்சர் தினேசு சிங்கை அனுப்பிச் செய்தியாளரிடம் 'இந்த (தி.மு.க) ஆட்சி - மக்களாட்சிக்கு மாறான ஆட்சியென்றும் அரசியல் சட்டத்திற்குப் புறம்பான ஆட்சியென்றும், அதைப் பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்றும் சொல்ல வைத்துள்ளது தில்லியாட்சி. இதை வி.பி.சிங், முன்னாள் நடுவண் அமைச்சர் சி. சுப்பிரமணியம், முன்னாள் உச்சநெறி மன்ற நடுவர் வி. ஆர். கிருட்டிணையர் முதவியோர் கூடக் குறிப்பாகவும் வெளிப்படையாகவும் கண்டித்துள்ளனர்.
இனி, இவ்வளவுக்குப் பின்னும் கலைஞரின் ஆட்சி ஏதோ ஒரு காரணம் கூறி 1975 ஆண்டுப் போல், கலைக்கப்பட்டால், தமிழ் நாட்டில் நடப்பதோ வேறாக இருக்கும் என்பதை மட்டும் இப்பொழுதைக்குச் சொல்லி வைக்கிறோம். அந்த நிலையை இராசீவ், வருவித்துக் கொள்ளமாட்டார் என்றே நம்புகிறோம்.
- தென்மொழி, சுவடி :24, ஓலை 11.1989,
சிறுசிறு நன்மைகளும் சலுகைகளும்
இனத்தை ஈடேற்றிவிட முடியாது
நாம் விரும்பியது போல், தமிழின நலம் கருதும் கலைஞர் ஆட்சி - திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி – தமிழகத்தில் அமைந்துவிட்டது. இந்த ஆட்சி மாற்றமே நமக்கு மகிழ்ச்சி தருவதன்று. மேலும் நாம் மகிழுவதென்பதே இல்லை; நம் இன நல நோக்கம் நிறைவேறும் என்று நம்பிக்கை தோன்றும் வரை நமக்கு எத்தகைய செயல்களும் மகிழ்வூட்ட முடியாது. கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது – என்னும் திருவள்ளுவக் கொள்கையுடையவர்கள் நாம்! எனவே, இவர்களின் ஆட்சிப் பேறு தற்காலிகமான ஒரு வல்லாளுமைத் தடுப்பு என்ற நாம் கருத முடியும், மள மளவென்று பொங்கிப் பாயும் வடவாரிய ஆற்று வெள்ளத்தை அணைகட்டித் தடுக்கும் ஆற்றலாகவே கலைஞரையும், தி.மு.க.வையும் நாம் கருதுகிறோம். மற்றபடி இவர்களின் ஆட்சியமைப்பே தமிழினத்திற்கான முழு விளைவையும் – விடிவையும் ஏற்படுத்தித் தரும் என்று நாம் எதிர்பார்த்து விட அன்று, நம்பி விடவும் முடியாது. அவ்வாறு நாம் நம்பிவிடும் அளவிற்கு இவர்களும் இதுவரையும் – ஏறத்தாழ 10 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த போதும் கூட - தமிழின விடுவிப்புக்கான எந்த முயற்சியும் செய்துவிடவில்லை – என்பதை நாம் உணர்வோம். முதலில், இவர்களிடம் அன்று, பெரியாரிடம் இருந்த திராவிட உணர்வையே நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் இப்பொழுதுள்ள அரசியல் அமைப்பிலும், ஏற்கனவே சிதைந்து கிடக்கும் தமிழின வரலாற்று நிலையிலும், இந்நிலை ஒருவாறு போற்றிக் கொள்ளக் கூடியதாக இருப்பதால், நாம் இவர்களின் வரவை, வேறு யாரையும் விட, வரவேற்கவும், வாழ்த்தவும் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம்.
இன்னுஞ் சொன்னால் வேறு யாரும் நாம் இவர்களை வரவேற்பது போல் – அந்த நோக்கத்திற்காக – அந்த நோக்கத்தின் இன்றியமையாமையை அவர்கள் அறியாததால் – இவர்களை வரவேற்கவும் இல்லை.
இந்நிலையில், இவர்கள் ஆட்சிக் கட்டிலேறி, மக்களியல் நிலையில், அல்லது ஆட்சியியல் நிலையில், ஏதோ சிறு சிறு தீமைத் தவிர்ப்புகளும், நன்மை விளைப்புகளும், அல்லது ஒரு சில சலுகைகளும் செய்து விடுவதாலேயே இவ் வேதுங்கெட்ட தமிழினத்தை ஈடேற்றி விடமுடியாது.
நம்மைப் பொறுத்தவரை, தமிழினத்திற்கான அடிப்படை உரிமைகளை மீட்பதும், தமிழ்நாட்டு விடுதலை பெறுவதுமே நம் அனைவர்க்கும் உண்டான ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று நாம் கருதுகிறோம். மற்ற படி சிறு சிறு ஆக்க நிலைகளெல்லாம் நம்மை மகிழ்வித்து விடவும் முடியா; நிறைவு செய்து விடவும் முடியா. இவர்களெல்லாரும் இவ்வாறின்றித், தங்கள் தங்கள் பதவிப் பேறுகளையும், இன்ப ஆக்கங்களையுமே பெரியனவாகக் கருதி மகிழ்ச்சியுறுகின்றார்களென்றால், இவர்கள் நம் இனத்திற்கான – நம் மொழிக்கான ஒட்டுமொத்தமான விடுவிப்பு எது என்பதையே வரலாற்று, இனவியல், மொழியியல் அடிப்படையில் அறியாமலிருக்கின்றார்கள் என்றுதான் நாம் கருத வேண்டியிருக்கிறது. எனவே, நம்மைப் போன்ற ஆழமான நெஞ்ச வருத்தம் இவர்களுக்கு இருக்க முடியாது.
'நன்றறி வாரில் கயவர் திருவுடையர்; நெஞ்சத்து அவலம் இலர்' – என்னும் திருக்குறள் மொழியை நாம் மறந்தாலும் நம் நெஞ்ச அவலம் நமக்கு என்றும் எப்பொழுதும் எந்நிலையிலும் அதை நினைவூட்டிக் கொண்டே யிருக்கின்றது. நாம் எந்த நிலையில் ஆக்கம் பெற்றாலும், நம் இனம் வலிவு பெற்று, அஃதிழந்து நலன்களைப் பெறும் வரையில், அத்தகைய ஆக்கங்கள் தலைமாறி அழிந்து போய்க் கொண்டேதாம் இருக்கும் என்பதை நம் இன வரலாறு கூறுகிறது. 'மன நலம் நன்குடைய ராயினும், சான்றோர்க்கு இனநலம் ஏமாப்பு உடைத்து' என்னும் பொய்யா மொழியை ஓர்க!
நம் முன்னேற்ற முயற்சிகளுக்கான இறுதித் தலைமுறை இது; இறுதி நூற்றாண்டும் இதுதான். எனவே, நாம் இப்பொழுதைக்குப் பெற வேண்டுவன ஆட்சி நன்மைகள் அல்ல; இன, நாட்டு உரிமைகள் மீட்பே! கலைஞரும் அவரின் தோழர்களும் மிகத் துணிவாகவும் அதேபொழுது மிகவும் எச்சரிக்கையாகவும் – 'தூண்டில்காரனுக்கு மிதப்பு மேல் கண்' என்றவாறு – நம் தலையாய குறிக்கோள் மேல் எப்பொழுதும் கண் வைத்து, காது வைத்து, மனம் வைத்துச் செயலாற்ற வேண்டும்.
'தூக்கத்தில் உளறினாலும் தூய்தமிழ் உளறும் என் வாய்' – என்பார் பாவேந்தர். அவ்வாறான முறையில் "தூக்கத்தில் உளறினாலும் இனநலமே உளறுமாறு" இவர்களின் உணர்வு, அறிவு, செய்ல அனைத்தும் – கொண்ட குறிக்கோளில் – அல்லது – கொள்ள வேண்டிய குறிக்கோளில் - நாட்டத்தோடு இயங்குதல் வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இம் முயற்சியில் எந்த ஒரு சிறு புறக்கணிப்போ, தோல்வியோ கண்டாலும் தமிழினம் இன்னும் ஐநூறு ஆண்டுகளில், முன்னைய வரலாற்றுச் சிறப்புடைய உரோமானிய, கிரேக்க இனங்களைப் போல் அழிந்துவிடும் என்பது அழிக்க முடியாத உறுதி, உறுதி! எண்ணிப் பாருங்கள்!
– தமிழ்நிலம், இதழ் எண். 17 பிப்ரவரி 1989
மக்களை அச்சுறுத்தியோ, துன்புறுத்தியோ
இந்திய ஒருமைப்பாட்டை
உருவாக்கிவிட முடியாது!
இந்தியா பல்வேறு தேசிய இன மக்களைக் கொண்ட நாடு என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் அத்தனைத் தேசிய இன மக்களுக்கும் தனித்தனியான மாநிலங்கள் அமைக்கப் பெறவில்லை. முகாமையான சில தனி மொழிகளையும், அவற்றைப் பேசும் இனங்களுக்குமே, அவற்றின் தனித்தனியான கலை, பண்பாடு நாகரிகங்கள் ஆகியவற்றின் பின்புலங்களைக் கொண்டு, தனித்தனி மொழி மாநிலங்கள் அமைக்கப் பெற்றுள்ளன. இவையும் ஆட்சி எளிமையைக் கருத்தில் கொண்டே, அரசியல் முறையில் பிரிக்கப் பெற்றுள்ளனவே தவிர, அந்தந்த மொழியின மக்களின் தனித்தன்மையான நலன்களைக் கருதி அமைக்கப் பெற்றனவல்ல. இந்த நாட்டுக்கு விடுதலை வழங்கியபொழுது, இதனை முன்னாள் ஆண்ட வெள்ளையர்கள், தெரிந்தோ தெரியாமலோ, இந்நாட்டை ஆரியப் பார்ப்பன முதலாளியர்களிடம் ஒப்படைத்துச் சென்றனர். அவர்களே தங்கள் விருப்பத்திற்கும் நோக்கத்திற்கும் சுரண்டலுக்கும் மேலாளுமைக்கும் பொருத்தமாக இந்த மொழி மாநிலங்களைப் பிரித்தமைத்தார்கள். எனவே இவை இந்தியத் தேசிய இனங்களுக்கான முழுமை மாநிலங்கள் அல்ல. இந்தியத் தேசிய இனச் சிக்கல் படிநிலை வளர்ச்சியுற்று தேசிய மாநிலங்கள் பிரிக்கப் பெறும்பொழுது அவை சரியான மொழி, இன, வரலாற்றோடும், கலை, பண்பாட்டு நிலைகளோடும் பொருந்தும்படியாக அமைக்கப் பெறும்.
அடுத்து, இந்தியாவில் உள்ள தேசிய இனங்கள் அனைத்துமே இந்திய ஒன்றியத்திலிருந்து பிரிந்து போகும் நோக்கத்தை இக்கால் கொண்டிருக்கவில்லை. ஒரு சில மாநிலங்களே அந்நோக்கத்தைக் கொண்டுள்ளனவாக அவற்றின் அரசியல், பொருளியல், இனவியல் செயற்பாடுகளிலிருந்து தெரிய வருகிறது. அதற்குத் தலையாய காரணம், இந்திய மாநிலங்கள் பலவும், இந்தியாவினின்று பிரிந்து தனியே முழு இறைமை பொருந்திய தனியரசை அமைத்துக் கொண்டு முன்னேற்றம் காணும் அளவிற்கு, மொழி, இனம், கலை, பண்பாடு, வரலாறு, பொருளியல் ஆகிய நிலைகளில் தனித்தன்மைகளும் வலிவும் கொண்டன அல்ல. எனவே, அவை இந்தியாவுடன் தங்களை இணைவித்துக் கொண்டு ஒன்றாயிருக்க விரும்புவதில் வியப்பில்லை. இன்னும் வெளிப்படையாகவும் தெளிவாகவும் பச்சையாகவும் சொல்வதானால், இந்திய ஒன்றியத்திலிருந்து, இக்கால் முழு இறைமையுடன் பிரிந்துபோய்த் தனி நாடாக இயங்குவதற்குரிய முழுத் தகுதியும் முழு விருப்பமும் கொண்ட ஒரே நாடு தமிழ் நாடேயாகும். ஏனெனில் இஃது ஒன்றுதான் தனித்தேசிய இன ஆளுமைக்குப் பொருத்தமானதாக உள்ளது. அதற்கு முழுமையான அடிப்படைக் காரணம், தமிழ்நாடு ஒன்றுதான், இந்தியத் தேசிய இனங்களுக்குள்ளேயே, மொழி, இன, நிலம், கலை, பண்பாடு, அரசியல், பொருளியல், வரலாற்று நிலைகளில் முழுத் தனித்தன்மையும், முழு வலிமையும் கொண்ட ஒரு நாடாக உள்ளது. இதை ஒப்பவைத்துப் பார்க்கும் பொழுது இங்குள்ள வேறு எந்தத் தேசிய இனத்திற்கும் இத்தகுதிகள் குறைவாகவே உள்ளதை ஆய்ந்து உணரலாம். பின்னர் ஏன் அவற்றுள் ஒரு சில இந்திய ஒன்றியத்திலிருந்து பிரிந்துபோய்த் தனித்தேசிய இன நாட்டை உருவாக்க விரும்புகின்றன என்றால், அது, இன்று இந்தியாவை ஆட்சி செய்யும் பார்ப்பணிய வணிக முதலாளிகளின் ஓரினச் சார்பான கொடுங்கோலான ஆட்சித் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாததால்தான் என்க.
இத்தகைய ஆட்சிக் கொடுமை நிலை, இப்பொழுதுள்ள ஆட்சியமைப்பில் என்றுமே மாறாத மாற்றமுற விரும்பாத தன்மையில் என்றென்றுமே நிலைத்திருக்கும் வலிமைபெற்றதாகும். அவ்வாறு வலிமை குன்றுகிற நேரம் ஒருவேளை எதிர்காலத்தில் வந்தாலும், இவ்வாட்சி இப்பொழுதுள்ளதைப் போல் உருசியாவையோ, அல்லது அமெரிக்காவையோ சார்ந்து, தன் நிலையை வலுப்படுத்திக் கொள்ள முடிந்ததாக இருக்கும்.
ஆனால் எத்தகைய சூழ்நிலையிலும், தமிழகம் இந்திய ஆட்சியாளருடன், அவர் எத்தகைய உயரிய நோக்கமும் நடுநிலை உணர்வும் கொண்டிருப்பவர்களாக அமைந்தாலும் கூட அவர்களுடன் ஒத்துப்போய் தனித் தமிழ்நாட்டை அமைக்காமல் இருப்பது அனைத்து வகையிலும், தமிழினத்திற்கே கேடு தருவதாகவே முடியும். அதனால்தான் தமிழ்நாடு, தனி நாடாக ஆக வேண்டும் என்று நாம் கரடியாய்க் கத்தி வருகிறோம். அது முடிகிறதோ இல்லையோ இறுதி வரை இந்தக் குறிக்கோளில் தாழ்ச்சி ஏற்பட ஓர் இம்மியளவும் இடமில்லை. இவற்றையெல்லாம் நன்கு விளங்கிக் கொள்ள அறிவில்லாமலும், அல்லது விளங்கிக் கொண்டாலும் விட்டுக் கொடுக்க மனமில்லாமலுமே நம்மில் சிலர் இதனைச் சரியென்று ஒப்புக் கொள்வதில்லை.
அண்மையில் இந்திய உள்துறை அமைச்சர் பூட்டாசிங் அவர்கள் தேசிய ஒருமைப் பாட்டுக்கெதிராகச் சிலர் பிரிவினைக் கருத்துக் கொண்டிருப்பதாக மிகுதியும் கண்டித்துப் பேசினார். அவரின் அதிகாரச் செருக்கான வரட்டு மிரட்டல் என்றுமே பயன் தராது என்பதைக் காலம் உணர்த்தும். மக்களை அச்சுறுத்தியோ, துன்புறுத்தியோ இந்திய ஒருமைப்பாட்டையோ ஒற்றுமையையோ பெயருக்குக் கூட பூட்டாசிங் போன்றவர்களால் உருவாக்கிவிட முடியாது. தமிழகத்தின் விடுதலை முயற்சிகள் ஒருவேளை காலந் தள்ளிப் போனாலும், என்றுமே தவிர்ந்துவிடப் போவதில்லை என்பதை உறுதியாக நினைவில் வைத்துக் கொண்டு, இப்பொழுதைய நிலைமைக்கு ஏற்றபடி, ஓர் இடைக்கால ஏற்பாடாகவேனும், பிரிந்துபோகும் உரிமை கொண்ட தேசிய இனங்களின் கூட்டாட்சியையேனும் இந்திய அரசு உருவாக்குவது நல்லது. இந் நாணயமான நடுநிலையான முடிவை எண்ணிப் பார்க்க வேண்டும் அது!
– தமிழ்நிலம் இதழ் எண். 119, ஏப்பிரல் 1989
நாம் எதிர்த்துப் போராடுவது இந்திய
ஒருமைப்பாட்டையோ ஒற்றுமையையோ அன்று!
இந்தியத் தலைமையமைச்சர் தமிழினத்தைப் பொறுத்த அளவில் மிகமிக விழிப்பாகச் செயல்படுகிறார். எங்கு தமிழீழத்தில் விடுதலைப் போராளிகளின் கை ஓங்கி விடுமோ என்பதில் மிகவும் எச்சரிக்கையாக உள்ளார். தமிழீழத்தில் அமைதியை உண்டாக்க என்று ஏறத்தாழ ஒன்றரை இலக்கம் இந்தியப் படைகளைக் கொண்டு, மிகவும் கரவாக, விடுதலைப் புலிகளின் பேரெதிர்ப்பை ஒழித்துக் கட்டுகிற முயற்சியைச் செய்தார். புலிப்படையின் பெரும் பகுதியை மிகவும் கொடுமையாக அழித்தார். அமைதியை ஏற்படுத்த என்றும், ஆட்சியாளர்க்கு உதவுவது என்றும் படைகளை ஓர் அளவில் திரும்பப் பெறுவது என்றும் - அவர் எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் இலங்கைத் தமிழர்களுக்கு மாறானதாகவே இருந்து வருகிறது.
இலங்கையின் தலைமை நிலையில் செயவர்த்தனே மாறியதையும் பிரமதேசா வந்ததையும் கூட அவர் நடவடிக்கைகளுக்குச் சார்பாகவே ஆக்கிக் கொண்டார். அண்மையில், இந்திய அரசின் எந்தத் தலையீடும் இன்றி, இலங்கை அதிபர் பிரமதேசாவும் விடுதலைப் புலிகளின் படிநிகராளிகளான அரசியல் கருத்தாளர், இலண்டன் பாலசிங்கமும், அரசியல் பிரிவுத் தலைவர் யோகியும், கிளிநொச்சி பகுதித் தலைவர் மூர்த்தி வலித்தும், லாரன்சும், திருவாட்டி பாலசிங்கமும் இலங்கை ஆட்சி அதிகாரப் பங்கீடு தொடர்பாகப் பேச்சுரையாடல் நடத்தியதில் கூட, இராசீவ், தமிழீழக் கோரிக்கைக்குச் சிங்கள அரசு எவ்வகையானும் இசைந்து விடக் கூடாது என்பதில் பிரமதேசாவிற்கு பல வகையான எச்சரிக்கைகளைக் கொடுத்துள்ளார். எது எவ்வாறாயினும், தமிழர்களுக்கென்று தமிழீழம் என்றொரு தனிநாடு அமைந்துவிடாமல் இருக்க, இராசீவ் முன்கூட்டியே எத்துணை விழிப்பாகச் செயல்பட வேண்டுமோ அத்துணை விழிப்பாகச் செயல்பட்டு வருகிறார்.
இதுபோலவே கடந்த பிப்ரவரி தேர்தலில், தமிழ்நாட்டில், வேறு கட்சி ஆளுமைக்கு வந்துவிடக் கூடாது என்பதில் இராசீவ் காட்டிய அக்கறையும், ஆர்வமும், சொல்லுந்தரமன்று. பின்னர், அவர் எதிர்பார்த்ததற்கு நேர் மாறாகவும் வேறாகவும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைக் கைப்பற்றியவுடன், அந்நிலைக்கு மூப்பனாரே முழுக் காரணம் என்று காரணம் காட்டி, ஒருவாறு தமக்கு நேர்ந்த இழிநிலையையும் பழிநிலையையும் சரிகட்டிக் கொண்டதுடன், அடுத்து நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலிலும் அந்நிலை நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக, முன்னர், வேண்டாம் என்று ஒதுக்கிய செயலலிதா அ.தி.மு.க. அணியைத் தம் கட்சியுடன் இணக்கப்படுத்திக் கொண்டார்.
அத்துடன் நில்லாது, தமிழ் நாட்டிலும், மற்ற சில, மாநிலங்களிலும், ஆட்சிக்கு வந்துவிட்ட எதிர்க் கட்சிகளின் வலிவையும் அதிகார நிலையையும் குறைககும் நோக்கத்துடனும், தம் ஆட்சி அதிகாரங்களை விரிவுபடுத்தும் எண்ணத்துடனும், கருநாடக அரசைக் கவிழ்த்ததுமன்றி, சிற்றூர்ப்புற ஐந்தாய (பஞ்சாயத்து) ஆட்சியை விரிவுபடுத்தவும் அவற்றுடன் நேரடித் தொடர்பு கொள்ளவும் இக்கால் ஆழமாகக் கருதி முடிவு செய்து செயல்பட்டு வருகிறார். அதற்கென ஆட்சியியல் சட்டத்திலும் திருத்தம் கொண்டு வர விருக்கிறார்.
இந்தியாவைப் பொறுத்தவரை, நடுவண் ஆட்சி எப்பொழுதும் இந்தியத் தேசிய இனங்களுக்கு மாறான ஆட்சியே! அதுவும் தமிழ்த் தேசிய இனத்திற்கு, வேறு எந்தத் தேசிய இனத்தை விட முற்றிலும் வேறான ஆட்சியே! இத்தனை மாறுபாடுகளையும் வேறுபாடுகளையும், தம் வல்லதிகாரத்தாலும், சூழ்ச்சிகளாலும் அடக்குமுறைச் சட்டங்களாலும், அடியோடு துடைத்து, அழித்து விட்டுத் தில்லியை ஆளும் முதலாளியமும் பார்ப்பணியமும் இணைந்து, என்றென்றும் தாங்களே தங்கள் பிறங்கடைகளே ஆண்டு வரலாம் என்று நன்கு திட்டமிட்டு, அதன்படி செயல்பட்டு வருகின்றன. இத் தில்லுமுல்லுகளுக்கும் திருட்டு, சூழ்ச்சி, ஏமாற்றுத்தனங்களுக்கும் ஒட்டுமொத்தமாகத் தரப்படும் பெயர்களே இந்திய ஒற்றுமை, ஒருமைப்பாடு, தேசிய நீரோட்டம் என்பவெல்லாம். இவை என்னவோ உலகக் கண்ணோட்டம், மக்கள் நலம் கருதிச் சொல்லப்படுவனவாகச் செயல்படுவது இன்னொரு வகை ஏமாற்றே!
இந்நிலையில் நாமும் அதே உணர்வுடன் நம் நோக்கத்தை மிகத் தெளிவாகச் சொல்ல வேண்டியுள்ளது. நாம் எதிர்த்துப் போராடுவது இந்திய ஒருமைப்பாட்டையோ ஒற்றுமையையோ அன்று. இன நிலையில் ஆரியத்தையும், பொருள் நிலையில் முதலாளியத்தையும், மொழி, கலை, பண்பாட்டு நிலையில் இந்தி, சமசுக்கிருதத்தையும், ஆட்சி அதிகார நிலையில் வடநாட்டு வல்லதிகாரத்தையுமே ஆகும். இவ்வத்தனையும் இணைந்ததுதான் இந்திய ஒருமைப்பாடு என்றால், நாம் தனித்தமிழ் நாட்டுக் கோரிக்கையையே முன்வைக்க வேண்டும். அதற்காகவே போராடவும் வேண்டும்.
— தமிழ்நிலம், இதழ் எண். 121, மே, 1989
இராசீவின் ஐந்தாய அரசு கரவான,
சூழ்ச்சியான ஓர் அமைப்பு!
அண்மையில் இராசீவ் அரசு, இந்திய அரசியல் சட்டத்தின் 64-ஆவது பிரிவுக்கு ஒரு திருத்தச் சட்ட வரைவைத் திட்டமிட்டுக் கொணர்ந்து, நாடாளுமன்றத்தில் கடந்த மே மாதம் 15-ஆம் பக்கல் அதைப் பெரும்பான்மை ஒப்போலைகளால் நிறைவேற்றியும் கொண்டது.
பெரும்பாலான இந்திய மாநிலச் சட்டமன்றங்களில் இந்திரா பேராயக் கட்சி தன் ஆட்சி வாய்ப்பை இழந்து போன நிலையில், தனக்குள்ள நடுவணரசு அதிகாரத்தை வைத்துக்கொண்டு, எதிர்க்கட்சி ஆட்சிக்கமர்ந்த மாநிலங்களில், அவற்றின் அதிகாரத்தை ஒடுக்கித், தன் ஆட்சிக் கால்களை எவ்வாறு அகல ஊன்றிக் கொள்ளலாம் என்று திட்டமிட்டு, மிக மிகக் கரவாகவும், மிகவும் சூழ்ச்சியாகவும் எண்ணிப் பார்த்தது. இறுதியில், தாயிடத்திலிருந்து குழந்தைகளைப் பிரிக்கின்ற முறையில் மாநிலங்களின் ஆளுமையில் உள்ள சிற்றூர்ப்புறங்களை நேரடியாகத் தன் ஆளுமையின் கீழ்க் கொணரும் முயற்சியாக ஐந்தாய அரசு, (பஞ்சாயத்து ராஜ்ஜியம்) என்னும் ஓர் அமைப்பை உருவாக்கிக் கொண்டது.
இந்த ஐந்தாய ஆட்சி அமைப்பைப் பற்றிச் சுருக்கமாக மதிப்பிட்டால், நடுவணரசு, மாநில அரசிடம் உள்ள அதிகாரங்களை வாங்கிச் சிற்றூர்ப்புறங்களில், ஐந்து பெயர்கள் கொண்ட குழுவினரிடம் ஒப்படைக்கின்ற செயலே ஆகும்.
ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வாறு முழு அதிகாரம் கொண்ட மாவட்ட அமைப்புகள் மாவட்டக் குழுவாட்சி முறை (District Board Administration) என்று ஒரு முறையிருந்தது. அதில், இன்றுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் (District Collector), வட்டாட்சித் தலைவர்(Tashildar) ஆகியோருக்குள்ள பெரும்பாலான அதிகாரங்கள் கொண்ட குழு ஒன்று செயல்பட்டுச் சிற்றூர்புறங்களில் உள்ள கல்வி, சாலை அமைப்பு, ஊர்ப் பாதுகாப்பு, தண்ணீர் வசதி முதலியவற்றைக் கவனிக்கவும் அவற்றுக்கான பொருள் ஒதுக்கீடு செய்யவும் போதுமான அதிகாரம் பெற்றிருந்தது. மாநில அரசும் அதற்குப் போதுமான பொருள் ஒதுக்கீடு செய்து வந்தது. அந்த மாவட்டக் குழுவாட்சி உறுப்பினர்களும் தேர்தல் வழியாகத்தான் தேர்ந்தெடுக்கப் பெறுவார்கள். ஆனால் பேராயக் கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றுக் காமராசர் முதலமைச்சராக வந்தபின் அம் மாவட்டக் குழு ஆட்சி முறையைத் தவிர்த்து விட்டுச் சிற்றுார்ப் புறங்களை ஊராட்சி மன்றங்களின் ஆட்சிப் பொறுப்பிலும், அவற்றைப் படிப்படியாக ஆளுகின்ற அதிகாரத்தை வட்டாட்சியர், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் பொறுப்பிலும் உட்படுத்தினார். ஆனால் அனைத்து அதிகாரங்களும் மாநில அமைச்சரவைக்கு உட்பட்டிருந்தன.
இதுநாள் வரையிருந்த இம்முறையை மாற்றி மாநில அமைச்சரவைக்கு உட்பட்டிருக்கும் அதிகாரங்களைக் குறைத்து, பொருள் ஆட்சி உட்பட அவற்றை நேரடியாகச் சிற்றூர்ப்புற ஐந்தாயங்களே(பஞ்சாயத்துக்களே) ஆளுமை செய்யும்படி, அதற்கு அரசியல் அமைப்பியல் சட்டத்தில் உள்ள 64-ஆவது பிரிவை விரிவுபடுத்திப் புதுச் சட்ட அமைப்புகளை இப்பொழுது ஏற்படுத்தியுள்ளது இராசீவ் அரசு.
இப்படிச் செய்ததன் வழி, நடுவண் அரசு, சிற்றூர்ப்புற ஐந்தாய ஆட்சியோடு நேரடியாகத் தொடர்பு கொண்டு தனக்கேற்றவாறு, சிற்றூர் ஆட்சியை அமைத்துக் கொள்ள முடியும். நடுவணரசு கொணரும் திட்டங்கள் அனைத்தையும் எவ்வகை மறுப்பும் இன்றி அச்சிற்றூர்ப்புற அமைப்புகள் செயல்படுத்தியாக வேண்டும் என்னும் கட்டாயம் அவற்றுக்கு உண்டு. இதனை நடுவணரசுக்கு வேண்டாத அல்லது வேறான மாநில அரசுகள் தடைப்படுத்த முடியாது. இப்பொழுதுள்ள நிலையில் நடுவணரசு போடும் திட்டங்களை எதிர்க்கட்சிகளின் கைகளில் உள்ள மாநில அரசுகள் மறுக்கலாம், அல்லது தவிர்க்கலாம். இனி அவ்வாறு நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. இதுநாள் வரை மாநில அரசுகள் சொல்வதை, நேற்று வரையிருந்த ஊராட்சி மன்றங்கள், ஊராட்சி ஒன்றியங்கள் மறுக்க இயலாது. மாநில அரசுகளின் கட்டளைப்படி அவை செயற்பட்டாக வேண்டியிருந்தது. இனி, ஐந்தாய அமைப்புகள் அவ்வாறு செயல்பட வேண்டிய தேவையில்லை. ஆனால் நடுவணரசு இடும் கட்டளைப்படி மாவட்ட ஆட்சி அமைப்புகளும், அவற்றின் வழி ஊராட்சி ஒன்றியங்களும், அவற்றின் வழி ஐந்தாயங்களும், செயல்பட வேண்டியிருக்கும். இதில் மாநில அரசுகள் குறுக்கிட முடியாது. இம்மாறுதல்களால், மாநிலங்களுக்குள்ள அதிகாரங்கள் உரிமைகள் தவிர்க்கப்படுகின்றன; தகர்க்கப்படுகின்றன. இதுதான் ஐந்தாய அமைப்பால் மாநில அரசு இழக்கின்ற உரிமை. இந்த உரிமையை நடுவணரசு நேரடியாகக் கைப்பற்றிக் கொள்கிறது. மாவட்ட ஆட்சித் தலைவர்கள் வழியாக இந்த அதிகாரச் செயல்பாடுகள் நேரடியாகவே நடுவணரசால் நிகழ்த்தப் பெறும். பொருளதிகாரத்தைக் கொண்டும் கூட மாநில அரசுகள், தங்கள் மாநிலங்களில் உள்ள சிற்றூர்களை இனி மிரட்ட முடியாது; பணிய வைக்க முடியாது; தங்கள் சார்பாகத் திருப்ப முடியாது. அந்தப் பொருள் ஒதுக்கீடும், நடுவணரசு வகுத்துக் கொடுக்கின்ற முறையில், மாநிலப் பொருள் குழு ஐந்தாயங்களுக்கு இயல்பாகவே ஒதுக்கியாக வேண்டும். இதிலும் மாநில அரசு தன் அதிகாரத்தைக் காட்ட முடியாது. வரவு செலவுக் கணக்குகளைப் பார்க்கின்ற அதிகாரத்தைக் கூட நடுவணரசு மாநில அரசுகளுக்கு விட்டு வைக்கவில்லை. அதைக் கூட நடுவணரசின் அதிகாரத்தில் உள்ள மாநிலத் தணிக்கை அதிகாரி பார்த்துக் கொள்வார்.
இம் முறைகள் பற்றி வெளிப்படையாக - பச்சையாகச் சொல்வதானால், வேர்கள் நேரிடையாகக் கிளைகளொடு தொடர்பு கொள்ளும். அடிமரம் வழியாகத் தொடர்பு கொள்ளத் தேவையில்லை. எனவே கிளைகள் அடிமரத்துக்கன்று, வேர்களுக்கே நன்றிக் கடன் ஆற்றும். இதனால், மாநிலத்தில் எந்தக் கட்சி, ஆட்சி அமைக்கிறது என்பதுபற்றி நடுவணரசுக்குக் கவலையில்லை. நடுவணரசில் உள்ள கட்சிக்குத்தான் நாடு முழுதும் கடமைப்பட்டிருக்கும்.
எனவே, இனி மாநிலத்தன்னாட்சி (மாநில சுயாட்சி) என்ற பேச்சுக்கே இடமில்லை. அதுமட்டுமன்று, தனிநாட்டுக் கோரிக்கைக்கும் இடமில்லை. ஏனெனில் தனிநாடு கேட்கின்ற உணர்வே தோன்றாதவாறு, நடுவணரசு, தன் நேரடி அதிகாரத்தின் கீழ் உள்ள சிற்றூர்ப்புறங்களை (அஃதாவது கிராமங்களை)ச் செய்து விட முடியும். இன்னும் தெளிவாகச் சொல்வதானால், இப்பொழுது, மாநில எல்லைக்குள் வானொலி நிலையங்களும், தொலைக்காட்சி நிலையங்களும் இருந்தாலும், அவை எவ்வாறு மாநில ஆட்சியாளர்களைப் பொருட்படுத்தாமல், நடுவண் அரசு சொல்கிறபடி - இராசீவ் விருப்பப்படி நடந்துகொள்கின்றனவோ, அப்படியான நிலையில் ஐந்தாய ஆட்சி அமைப்புகள் நடந்து கொள்ளும். எனவே அவற்றின் கீழ் உள்ள மக்களும் அப்படியே நடந்து கொள்வர். மாநில அமைச்சர்களையோ, அவர்கள் கட்சியையோ அவை பொருட்படுத்த வேண்டிய தேவையே இல்லை! இதில் ஆண்கள் பெண்கள் அனைவரும், நடுவணரசு ஆட்சிக்குக் கட்டுப்பட்ட பெட்டிப் பாம்புகளைப் போல் அடங்கிக் கிடப்பர். மாநில உரிமைகள் என்பவற்றைப் பற்றியோ, அவற்றை வாங்கித் தருவதாகக் கூறும் மாநில அரசுகளைப் பற்றியோ, அவர்கள் கவலைப்படவோ, அக்கறைப்படவோ தேவையில்லாத நிலையில் உயர்ந்துவிடுவார்கள்.
நடுவணரசுக்குகந்த இந்த வாய்ப்பான சூழ்நிலையில், சவகர் வேலை வாய்ப்புத் திட்டம் மட்டுமன்று, இந்திரா நீர்வசதித் திட்டம், இராசீவ் சாலை வசதித் திட்டம், பிரியங்கா கல்வியமைப்புத் திட்டம், இராகுல் தேசியக் குடும்பத் திட்டம், என்று இராசீவுக்கு இனிமேல் பிறக்கப் போகிற பெயரன்கள், பெயர்த்திகள் ஒவ்வொருவரின் பெயராலும் திட்டங்களைத் தீட்டிக்கொண்டே போகலாம் என்பதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுதல் வேண்டும் என்க.
தமிழ்நாட்டில் இராசீவின் வீழ்ச்சிக்குப் பின்னர், அவர் மூளையில் தோன்றி, உருசியப் பின்னணியில் உருவாக்கப் பெற்றதே ஐந்தாய ஆட்சித் திட்டம். இவ்வொரே திட்டத்தில் மாநில உணர்வுகள், விடுதலை உணர்வுகள், மாநிலத் தேசிய இன உணர்வுகள் அனைத்தையும் வீழ்த்திவிட்டு இவ் விந்தியாவையே இந்திரா பாரத் ஆக்கப் போகிறார் இராசீவ். பொறுத்திருந்து பாருங்கள்.
மற்றபடி இத்திட்டத்தைப் பற்றி எதிர்க்கட்சியினர் அனைவரும் எவ்வளவோ எதிர்ப்புக் காட்டினர். இருப்பினும் இவ் வைந்தாய ஆட்சி பற்றிய சட்டத்திருத்தத்தை நிறைவேற்றியே விட்டார், இராசீவ். அவருக்கு அவரைப் பற்றித் தவிர வேறு எவரைப் பற்றியும் கவலையில்லை என்பது அவர் எடுக்கின்ற ஒவ்வொரு முடிவிலிருந்தும் நாம் தெரிந்து கொள்ளலாம்.
இராசீவுக்கு உள்ள கவலையெல்லாம் தாம் நினைக்கின்ற ஒவ்வொரு திட்டத்தையும் அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்பதுதான். அதுவுமன்றி அவர் நடவடிக்கைகளை எவரும் எதிர்க்கக்கூடாது என்பதும் அவர் கொள்கையாக இருக்கிறது. அவ்வாறு எதிர்ப்பவர்களையெல்லாம் அவர் சகட்டுமேனிக்குக் கடுமையான சொற்களால் சாடுகிறார். இவருக்குத் தவிர, வேறு எவருக்கும் மக்கள் மேல் பற்றில்லை என்று இவர் கருதுவது, இவர் அறியாமையையே காட்டுகிறது.
மேலும் ஐந்தாய அரசைக் கொண்டு வந்த மறைமுகமான நோக்கத்தையும், 18 அகவை வந்த அனைவர்க்கும் ஒப்போலையளிக்கும் உரிமை வழங்கியதையும் பார்த்தால், அவர் விரைவில் இந்தியா முழுமைக்கும் சட்டமன்றத் தேர்தலையும், பாராளுமன்றத் தேர்தலையும் ஒன்றாகவே நடத்த விரும்புகிறார் என்றும் கருதத் தோன்றுகிறது. அவ்வாறு இரண்டு தேர்தல்களையும் ஒன்றாக நடத்துவதானால், அவர் இப்பொழுது அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தல் வழியாக அமைந்துள்ள தமிழ்நாடு முதலிய மாநிலங்கள் உள்பட அனைத்து மாநிலங்கள் அரசையும் கலைத்தாக வேண்டும். பாராளுமன்றத் தேர்தல், வரும் திசம்பர் மாதத்தில் நடைபெறும் என்று சில செய்திகள் தெரிவிக்கின்றன. அக் கருதுகோள் உண்மையாக இருந்தால் நம் கணிப்பும் உண்மையானதாகவே இருக்க வேண்டும். அஃது உண்மையாக இருந்து விட்டால், தமிழ்நாட்டில் மீண்டும் கலைஞர் அரசு கீழிறக்கப்பட்டுவிடும். அவ்வாறு கலைஞர் அரசு கீழிறக்கப்பட்டால், மீண்டும் ஆட்சிக் கட்டில் ஏறுவது மிகவும் கடினமாகவே இருக்கும். அந்நிலைக்கு இந்த ஐந்தாய அமைப்புகள் கட்டாயம் இராசீவுக்குக் கைகொடுத்தே ஆக வேண்டும். எதற்கும் அண்மைக் கால விளைவுகளைப் பொறுத்தே எதிர்கால இந்தியாவின் நிலைப்பாடு இருக்கும் என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. அதை எதிர்காலமே கட்டியங் கூறி உரைத்து விடும் என்று நம்புக.
— தமிழ்நிலம், இதழ் எண். 22 மே 1989
மொழி, இன, நாட்டு உரிமைகள்
படிப்படியாகப் பறிக்கப்படுகின்றன!
நம் தமிழினத்தின் நிலை வரவரக் கேடடைந்து கொண்டே போகின்றது. இந்திராவினால் எத்தனையெத்தனைத் தொல்லைகளை இத் தமிழினம் அடைந்ததோ, அவற்றை விட இன்றைய தலைமையமைச்சர் இராசீவால் இத்தமிழினம் மிக மிகச் சீர்கேடடைந்து வருகின்றது. தாய்த் தமிழகத்தில் உள்ள தமிழினம் மட்டுந்தான் இவ்வாறு இராசீவால் தொல்லையுறுகின்றது என்றில்லை. தமிழீழத்தில் உள்ள ஈழத்தமிழர்களும் ஒவ்வொரு நாளும் இவரால் படும் தொல்லைகளையும் துன்பங்களையும் உயிரிழப்புகளையும் உலகமே அறிந்து அவற்றுக்கு மாற்றாக ஒன்றும் செய்யவியலாமல் கையற்று நிற்கின்றது.
இராசீவ் தமிழினத்தைப் பொறுத்த அளவில் மிகக் கரவாகவும் பழிவாங்கும் நோக்கத்துடனும், இவ்வினத்தையே அழித்தொழிக்கும் குறிக்கோளுடனும் நடந்துகொள்வது வெளிப்படையாகவே தெரிகிறது. பொதுவாக இந்தியாவில் உள்ள அனைத்துத் தேசிய இனங்களின் தனித்தன்மைகளையுமே தம் சூழ்ச்சியான அரசியல் நடவடிக்கைகளால், திட்டங்களால் அழித்தொழித்துவிட்டு, ஆரிய இனக் கலைப் பண்பாடுகளையே பெரிதும் வளர்த்தெடுத்து நிலைப்படுத்துகிறார். எனினும், பல்லாற்றானும் சிறந்து விளங்கும் இத் தமிழ்ப் பேரினத்தின் அனைத்துத் தனித் தன்மைகளையும் பிற யாவற்றினும் மேலாக நேரிடைத் தாக்குதலால் அச்சு அடையாளமின்றித் தரையோடு தரையாக மண்ணோடு மண்ணாகவே தேய்த்து ஒன்றுமில்லாமல் செய்துவிடப் பார்க்கிறார். இதை அவரால் செய்ய முடியுமோ முடியாதோ, ஆனால் அவர் இறுதி முயற்சியாக உறுதி கொண்டு செய்ய முற்பட்டுவிட்டார் என்றே கருத வேண்டியிருக்கிறது.
தமிழினத்தின் மொழி, இன, நாட்டு உரிமைகள் படிப்படியாக இராசீவால் பறித்தெடுக்கப்படுகின்றன. தமிழ்மொழியை மூன்றாந்தர நாலாந்தர மொழியாகவே நடுவணரசு மதிப்பிடுகிறது. உலகின் மூல முதல் மொழியாகிய தமிழ், ஏதுமற்ற இந்தி மொழிக்கு மிக மிகத் தாழ்வான மொழியாகவே மதிக்கப்படுகிறது. உருப்படியான ஒரு சிறப்பையும் கொண்டிராத, இலக்கண வழுக்களும் மிகப் பிந்திய இலக்கியங்களையும் கொண்டுள்ள இந்தி மொழிக்கு ஆண்டுக்கு நூறு கோடி உருபா செலவிட்டால், இலக்கிய இலக்கணச் செழுமையுற்று விளங்கும் நம் தாய்மொழியாம் தமிழ்மொழிக்கு ஒரு கோடி உருபாவே செலவிடப் பெறுகிறது. அதுவும் அந்தத் தமிழையும் பார்ப்பனத் தமிழாகவே வளர்த்தெடுக்க விரும்புகிறது.
இனி, இன நிலையில் நம் இனத்தவர்கள் தமிழர் என்று தங்களை எழுத்தளவில், பள்ளிச் சான்றிதழ், ஒப்போலைப் பதிவுகள், பிற அரசுப் பதிவேடுகள், எல்லைக்கடவுகள் முதலியவற்றில் பதிந்து கொள்ளவும் உரிமையற்றவர்களாகவே உள்ளார்கள். வேறு பிற திராவிட மொழியினத்தவர்கள், தங்களைத் தெலுங்கர், கன்னடியர், மலையாளர், குசராத்தியர், வங்காளியர், மராட்டியர் என்று தங்கள் இனத்தின் பெயர்களை அரசுப் பதிவேடுகளில் பதிவு செய்து கொள்ள உரிமை இருக்கும்பொழுது, தமிழர் மட்டும் 'இந்து' என்னும் மதந்தழுவிய பெயரையும், பிள்ளை, முதலி, படையாச்சி, செட்டி, கவுண்டர் என்னும் சாதி தழுவிய பெயரையும் மட்டுந்தாம் பதிவுசெய்து கொள்ள முடியும் என்றால், இஃதென்ன கொடுமை ! ஏன் தமிழர் மட்டும் தங்கள் இனப்பெயரைப் பதிவுசெய்து கொள்ள உரிமையில்லாதவர்களாக வேண்டும்?
இனி, தமிழினத்தின், தமிழ்நாட்டின் சிறுசிறு உரிமைகளுக்காக ஏன் அவ்வப்பொழுது தில்லியரசை நாடிப் போக வேண்டும்? கல்வி, வணிகம், தொழிலமைப்பு, உணவு, இதழ் வெளியீடு போன்ற நூற்றுக்கணக்கான இன்றியமையாத தேவைகள் ஒவ்வொன்றிற்கும் கூட நடுவணரசை எதிர்பார்த்துக் கையேந்தி நிற்கின்ற நிலை இன்னும் நமக்கு எதற்கு? நம் கலைகள், பண்பாடுகள் முதலிய அனைத்தின் மூலப் பெயர்களும் அழிக்கப்பட்டுப் பாரதக் கலைகள், பாரதப் பண்பாடுகள் என்று மாற்றாந்தாய்ப் பெயர் சூட்டி அழைக்கப்படும் இழிநிலை நமக்கு ஏன்? ஒவ்வொரு நிலையிலும் தமிழர் என்ற தனித்தன்மையை நாம் இழந்து ஆரியமயப்படுத்துகிறோம். அல்லது இந்திக்காரர்க்கு நாம் அடிமைகள் என்று முத்திரை குத்தப்படுகின்றோம்? இவ் விழிநிலையை இன்னும் எத்தனைக் காலத்திற்கு நாம் பொறுத்துக் கொள்வது? எங்குப் பார்த்தாலும் இந்தி, சமசுகிருதம், ஆரியம், முதலாளியம் - என்று மாற்றார்களின் மொழிக்கும் இனத்திற்கும் ஆளுமைக்கும் என்றென்றுமே தலையசைத்துக் குட்டிக் கரணம் போட்டுக் கொண்டிருக்க நாம் நிலையான அடிமைகளா? உரிமை வாழ்க்கையை முதன்முதல் அமைத்துக் கொண்டவரும், அவ்வுரிமையை உலக மக்களுக்கு முதன் முதல் கற்றுக் கொடுத்தவரும் தமிழரில்லையா? வரலாறு அவ்வாறிருக்க, இன்னு முழுப் பச்சைப் பார்ப்பனியத்திற்கும், வடநாட்டு முதலாளியத்திற்கும் ஏன் நாம் கால் கை பிடிக்கவும், கண்காணிகளாகவும் வேண்டும். தன் மானமற்ற குமரி அனந்தன்களும், திண்டிவனம், வாழப்பாடிகளும், ம.கோ. இரா. அடிமைகளும் அவ்வாறு இருக்க விரும்பினால் தன்மானம் மிக்க நாமும் ஏன் அவ்வாறு இருக்க வேண்டும்?
இவ்விழிவு நிலைகளை ஒழித்துக் கட்டுவதற்கு இங்குள்ள எந்த இயக்கமும் போராட முன்வரவில்லை; முன் வராது. எனவே, தன்மானமும், இனமானமும் மிக்கவர்கள்தாம் ஒன்று கூடி உயர்த்தெழுந்து உரக்கக் குரல் கொடுத்தாக வேண்டும். அப்படிப்பட்ட அவர்களைப் பிரிவினைக்காரர்கள், தேசியப் பகைவர்கள், வன்முறையாளர்கள், தீய ஆற்றல்கள் என்றெல்லாம் வல்லதிகாரக் குற்றஞ்சாட்டிப் பற்பல துன்பங்களுக்கு ஆளாக்கலாம். இருப்பினும் இக் கொள்கைக்காக மக்கள் போராடியே ஆக வேண்டும்.
தமிழ்நாட்டு அரசியல் தலைமை (அதை எவர் கைப்பற்றினாலும்) இங்குள்ள எல்லா வகையான எழுச்சி நிலைகளையும் அடக்கித் தன்னாளுமை பெறவே பாடுபடுகிறது! சில நேரங்களில் சில நிலைகளில் அது துணிவு பெற்று ஒருவாறு நடுவணரசைப் பேச்சளவிலாகிலும் எதிர்ப்பதுபோல் நடிக்கிறதென்றால் அல்லது நாடகமாடுகிறதென்றால், அதுவும் தனக்கு வலிவு தேடிக்கொள்ளவோ தனக்குக் கிடைத்த பதவியை நிலைநிறுத்திக் கொள்ளவோ, அல்லது மறைமுகமாகத் தங்கள் விட்டுக் கொடுப்பு அல்லது இனக் காட்டிக் கொடுப்பு நிலைகளுக்குப் பொருளியல் நிலையில் நன்றி தேடிக் கொள்ளவோதான் இருக்க முடியும். இத்தகையவர்களுக்கு அழிக்கப்பட்டு வரும் தமிழினத்தைப் பற்றியோ, பெருமை குறைக்கப்பட்டு வரும் தமிழ்மொழியைப் பற்றியோ, நாளுக்கு நாள் பறிபோய்க் கொண்டிருக்கும் தமிழ்நாட்டு உரிமைகளைப் பற்றியோ அக்கறையோ கவலையோ எவ்வாறு இருக்க முடியும்?
ஏதோ அரசியல் ஆளுமை உரிமைகளுக்காகப் போராடுவதாக இங்கு ஆட்சிக்கு வரும் மாநில அளவிலான கட்சிகள் அவ்வப்பொழுது பெயர் பண்ணிக் கொண்டு, விளம்பரம் தேடிக் கொள்வதுதான் மிச்சம்! மற்றபடி, இங்குள்ள தன்மானத்(!) தமிழர்கள் இராசீவுக்கு ஆட்சியரண் சேர்ப்பதற்குப் பேரம் பேசும் தரகு முதலாளிகளாகவேதாம் இருக்கிறார்கள்.
இதுவரை இங்கு ஆட்சிக்கு வந்த, வரும் அதிகாரக்காரர்கள் செய்த அரசியல் முயற்சிகளால் அப்படி என்ன நன்மை ஏற்பட்டு விட்டது? இவர்கள் இங்குள்ள அரைக்காலே வீசம் ஆளுமை உரிமைக்காக நடுவணரசுடன் போராடும் அரசியல் முயற்சிகள் தேவையே இல்லை. ஒட்டுமொத்தமான இனநல முயற்சிகளே தேவை! இனநலமே எதனினும் பெரியது! வலியது! எதிர்கால வளர்ச்சிக்கு அடிப்படையானது!
"மனநலம் நன்குடையராயினும், சான்றோர்க்கு இனநலம் ஏமாப்பு உடைத்து" "மனநலத்தினாகும் மறுமை; மற்றஃதும் இனநலத்தின் ஏமாப்புடைத்து" - என்பன நம் இனக்காப்பு நூலாகிய திருவள்ளுவம் நமக்குக் கற்பிக்கும் நெறிமுறைகள்.
"இனம் நலமாக - வலிவுள்ளதாக - இருக்கும் நிலையில்தான், அது, நம் மனநலத்தால் பெற்ற - பெறுகின்ற அறிவு நிலைகள் ஆகிய இலக்கியம், இலக்கணம், மொழி, வாழ்வியல், அறிவியல் முதலியவற்றையும், மனநிலைகள் ஆகிய கலை, பண்பாடு, ஒப்புரவு, உலகியல், பொதுமை முதலியவற்றையும், அறநிலைகளாகிய சமன்மை, பொதுவுடைமை, அரசியல், அறவியல் முதலியவற்றையும் நாம் கட்டிக் காத்துக் கொள்ள முடியும்” என்பது முதல் குறள் நெறியின் திரள் கருத்து.
அதே போல், "மேற்கூறிய மனநலத்தின் அனைத்துக் கூறுகளும் தாம் ஓர் இனத்தின் எதிர்கால வளர்ச்சிக்குப் பயன்படுவன ஆகும்; மற்று, அவைதாம் ஓர் இனத்திற்கு நலமாகவும், காப்பாகவும் இருக்கும்” என்பது இரண்டாம் குறள் நெறியின் அடைவுக் கருத்து!
இவ்விரு திருக்கூற்றுகளால் நாம் பெறப்படுபவை என்னென்றால், ஓர் இனத்தின் முழு நலமே, வலிவே, அவ்வினத்தின் அனைத்து அறிவுக் கூறுகளுக்கும் காப்பாக இருப்பது போல், அவ்வறிவுக் கூறுகளுமே அவ்வின வலிவுக்குக் காப்பாக அமைவன ஆகும். நம் கலை, பண்பாடு, நாகரிகம், மொழி, இலக்கியம் முதலியவை நம் இனத்துக்கு வலுவூட்டக் கூடியவை. ஆனால் அவை இற்றை வடநாட்டுப் பார்ப்பனிய முதலாளிய இராசீவ் அரசால் அழிக்கப்படுகின்றன. அதேபோல் நம் இனத்தின் வலிவே - நலமே - நம் கலை, பண்பாடு, நாகரிகம், மொழி முதலியவற்றுக்கும் காப்பாக விளங்கக் கூடியன. அந்த இனமும் இன்றைய ஆரியமயத் தில்லியரசால் அழிக்கப்படுகிறது. இவ்வாறு நம் இனத்தின் காக்கும் பொருளும், காக்கப்படும் பொருளும், மற்றோர் இனமாகிய நம் பகை இனத்தால் அழிக்கப்படுகையில் நம் எதிர்காலமே இருண்டு வருகிறது என்பதை நாம் உணர வேண்டாவா?
இதை நம் மக்கள் உணர்ந்து எழுச்சியுற்றுப் போராடித் தடுத்து நிறுத்த முன்வர வேண்டாமா ? முன் வருதல் வேண்டும். அப்பொழுதுதான் நம் பழம்பெருந் தமிழினம் உய்வு பெறும். அதுவரை நாம் எதிர்கொள்ளும் எத்தகைய அரசியல், பொருளியல், வாழ்வியல், வரலாற்றியல், பண்பியல் ஆகியனவும் மற்றும் பிற அனைத்து நலன்களும் பயனற்றனவே, நிலையற்றனவே ஆகும்!
- தமிழ்நிலம், இதழ் எண். 129, செபுதம்பர், 1989
இந்தியா யார் அப்பன் வீட்டுச் சொத்தும் இல்லை;
இங்குள்ள தேசிய இனங்களின் சொத்து!
நாம் முன்னரே கூறியிருக்கின்றோம். "தில்லியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களாகிய நாம் முழு உரிமையுடன் வாழ முடியாது; இந்தியா ஒன்றாக இருந்தால்தான் தமிழர்கள் என்றென்றும் வடநாட்டு வணிகர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் அடிமையாகவே இருக்க வேண்டி இருக்கும்" என்று!
இந்தியா ஒன்றாக இருப்பதை யாராலும் பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால் தமிழர்களால் மட்டும் பொறுத்துக் கொள்ளவே முடியாது. ஏனெனில் இந்தியாவில் உள்ள மற்ற தேசிய இனங்களைக் காட்டிலும், வடநாட்டுக்காரர்களாலும், பார்ப்பனர்களாலும், ஏற்பட்ட தாக்கங்கள் தமிழினத்திற்கே மிகுதி என்பது முதல் காரணம். தமிழினம் இந்தியத் தேசிய அனைத்தினங்களிலும் இந்தியாவையே ஆண்ட பேரினம் என்பது இரண்டாவது காரணம். இனி, மூன்றாவது காரணம், தமிழர்களின் தாய்மொழியாகிய தமிழ் இந்தியாவில் சமசுக்கிருதம் உள்ளிட்ட அனைத்துத் தேசிய மொழிகளுக்கும் மூத்த, மூலமான மொழியாக இருப்பதுடன், சமசுக்கிருதத் தொடர்பில்லாமல் வேறு தேசிய மொழிகள் இயங்காமல் இருக்கின்ற நிலையில், அதன் தொடர்பு சிறிதும் இல்லாமல் தனித்து இயங்கும் வல்லமை பெற்றிருப்பதும், அனைத்துத் தேசிய மொழிகளினும் மிகப் பழைமை வாய்ந்த இலக்கிய இலக்கணங்களையும், கலை, பண்பாடுகளையும் நாகரிக முதிர்ச்சியையும் பெற்றிருப்பதும் ஆகும். எனவே, அனைத்து இந்தியத் தேசிய இனங்களை விட, இந்திய வடநாட்டுப் பார்ப்பனிய, வணிக வல்லாட்சியினின்று, முதன் முதலில் பிரிந்து போகும் முகாமைத் தேவையும், இன்றியமையாமையும், முதல் உரிமையும் பெற்று விளங்குவது தமிழ்த் தேசிய இனமே ! அதனால்தான் தமிழகம் முழு இறையாண்மை கொண்ட தனி முழு ஆட்சியுள்ள தனிநாடாக ஆகவேண்டும். அந்தக் கருத்துக்கு இங்குள்ள தமிழ் மக்களை இசைவுடையவர்களாக அணியப்படுத்த வேண்டும் என்பது நம் அழுத்தமான, என்றும் மாறாத கொள்கையாக இருப்பதுடன், அதற்கான முயற்சிகளில் இடையறாமல் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்பது நம் நோக்கமாகவும் இருக்கிறது.
'இந்தியா பிரியக்கூடாது; இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு மொழி பேசுபவர்களாகவும், பல்வேறு கலை, பண்பாடுகளையும், பழக்க வழக்கங்களையும், உடையவர்களாகவும், இருந்தாலும் பல்வேறு சாதிப் பிரிவுகளையும் மதப் பிரிவுகளையும் கொண்டவர்களாகவும் இருந்தாலும் அவர்கள் தங்களின் வேறுபாடுகளையும் பிரிவுகளையும் மறந்து(!) ஒற்றுமையுடையவர்களாகவும், ஒருமையுணர்வு பெற்றவர்களாகவும் இந்திய தேசியம் என்னும் ஒரு நாட்டுணர்வு கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்' என்று இக்கால், வரலாறும், வாழ்வியலும் அறியாத பலரும் கூறிக் கற்பனைக்கனா கண்டு வருகிறார்கள்.
இந்தியா யார் அப்பன் வீட்டுச் சொத்தும் இல்லை; அது இங்குள்ள தேசிய இனங்கள் அனைத்துக்கும் சொந்தமான சொத்து ஆகும். இதை முந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆண்ட வெள்ளைக்காரர்களை ஏமாற்றி, அல்லது சமநிலைத் தரகு (பேரம்) பேசி, அவர்களிடமிருந்து எக்குத் தப்பாக - ஒற்றுக்குத்தலாகத் தங்கள் ஆளுமைக்கு ஏற்றுக் கொண்ட வடவாரியப் பார்ப்பனரும், வல்லரசுகளின் அடிநிலை முதலாளிகளும், இந்தியா பிரியக் கூடாது, பிரிக்க விட மாட்டோம் என்று ஏகடியமும் எகத்தாளமும் கொண்டு பேசுவதற்கு என்ன உரிமை இருக்கிறது என்று எண்ணிப் பார்க்க வேண்டும். இங்கு, பிரிவினை கூடாது என்று கூறுவதற்குப் பிறர்க்கு எத்துணை உரிமை உண்டோ, அத்துணை உரிமை உண்டு, நாங்கள் பிரிவினை வேண்டும் என்பதற்கும்!
இந்தியா ஒன்றாக இருக்க வேண்டும் என்பது ஒரு கருத்துதான்! என்றும் மாறாத, அல்லது மாற்ற முடியாத இயற்கை நெறியன்று. இவர்கள் கூறுவதுபோல் இந்தியா என்றுமே ஒன்றாக இருந்ததில்லை. வரலாற்றுக் கெட்டாத காலந் தொட்டு, இதில் பல்வேறு இன மக்கள், அவர்களின் சிறியதும் பெரியதுமான பல்வேறு மொழிகள், அவை தழுவிய கலை, பண்பாடுகள், நாகரிகங்கள், பழக்கவழக்கங்கள், கடவுள் கொள்கைகள், ஆட்சி முறைகள் - முதலியவை என்றுமே இந்தியாவை ஒன்றாக, ஒரே தன்மையாக இருக்க விட்டதில்லை. எனவே, இந்தியா ஒன்றாக, ஒருமைப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்பதும் ஒரு பொருளற்ற ஆட்சிப் பேராசை கொண்ட வெறுங் கருத்துதான், அதனை இயற்கையாக்கி விட வடநாட்டிலுள்ள அரசியல் வீணர்கள் சிலர் கற்பனைக்கனாக்கண்டு வருவதும், அக்கனவை நனவாக்க இங்குள்ள சில அடிவருடிகளும், பதவி மோப்ப நாய்களும் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அங்காந்து திரிவதும் வேடிக்கையிலும் வேடிக்கையாகப் போய்விட்டது. மேலும் இயற்கையே காலப்போக்கில் பல்வேறு படிநிலை மாறுதல்கள் அடையும்போது, இப்பொருளற்ற புன்னிலைப் பொய்க் கருத்துகள் மாறுபாடு அடைவதற்கு என்ன தடையாக இருக்கமுடியும்? இவ்வகையில் இந்தியா ஒன்றாக இருப்பதைத் தங்கள் வாழ்க்கைக்கு ஊதியமாகப் பயன்படுத்திக் கொள்ளும் ஒருவகைத் தந்நலக் கூட்டமே, பிரிவினை வேண்டாம், ஒற்றுமை வேண்டும், ஒருமைப்பாடு வேண்டும் என்று முரண்டு பிடிக்கின்றனர்.
அன்றிருந்தது கூட்டுக் குடும்ப நிலை. இக்காலத்தில் நிலவுவதோ தனிக் குடித்தன நிலை மனப்பாங்கு இவ்வாறு காலநிலையும் ஒட்டுமொத்த மாறுபாடடைந்து, மக்கள் மனநிலைக்கு உகந்தபடியாய் இருக்க, ஓர் ஐந்தாண்டுக் காலம் ஆட்சி செய்ய வந்தவர்கள் 'இந்தியாவைப் பிரிக்கவிட மாட்டோம்' என்று கூறுகின்ற அளவில் அதிக உரிமை கொண்டாடுவது வல்லதிகார மனப்பாங்கே தவிர வேறில்லை. வலிவும் பொலிவும் பெற்றிருந்து அவற்றைக் காலப் போக்கில் இழந்து நிற்கும் ஒரு தேசிய இனத்தை, சாதி, மத அரசியல் பொருளியலால் வல்லாண்மை பெற்று நிற்கும் ஓர் இனத்தவர்கள் தங்கள் ஆளுமைக்குக் கீழ்தான் அடங்கி ஒடுங்கி உரிமையிழந்து வாழ்விழந்து கிடக்க வேண்டும் என்று கூறுவதற்கு என்ன உரிமையிருக்கிறது? தாக்குண்ட இனம் ஒட்டியிருக்க விரும்பினால் ஒட்ட வைத்துக் கொள்வதிலும் ஒருமைப்பாடும் ஒற்றுமையும் பேசுவதிலும் தவறில்லை. ஆனால் விரும்பத் தகாத ஒட்டுறவினின்று விடுபட்டுப் பிரிந்து போய், முழு உரிமையுள்ள தனி நிலை ஆட்சி அமைத்துக் கொள்ள விரும்பும் ஓரினத்தைச் சட்ட திட்டங்களாலும், ஆளுமைத் தந்திர சூழ்ச்சிகளாலும் அடக்கு வன்முறைகளாலும், கிடுக்குப் பிடி போட்டு, ஒடுங்கியே கிட என்று சொல்வது எந்த வகையில் மாந்த நேயமும், மக்கள் ஞாயமும் ஆகும் என்று நம்மால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.
மாமியார், மாமனார், நாத்தனார் கொடுமைக்கும் தாக்குதலுக்கும் உரிமையிழப்புக்கும் ஆளான மருமகள், தன் கணவனுடன் தனிக் குடித்தனம் நடத்த விரும்பினால், அதை அம் மாமியார் மாமனார் தடுப்பது எவ்வகையில் ஞாயம், அறம் ஆகும்! அதுபோன்றதுதான் தனிநாட்டு விடுதலைக் கோரிக்கையும் என்று நாம் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு ஞாய வழியில் அறவழியில் கருதாமல் அம் மாமியாரும் மாமனாரும் தங்கள் ஆளுமை அதிகாரம் போய்விடக் கூடாதே என்பதற்காக, குடும்ப ஒற்றுமை குலைந்து போகும், வலிமை குறைந்து போகும் என்றெல்லாம் ஞாயம் பேசுவது, இயற்கை நெறிக்கும் உயிர்வாழ்க்கை முறைக்குமே எதிரானது, கேடானது என்பதை நாம் உணர்ந்து பார்க்க வேண்டும்.
இவ் விழிநிலைக் கோட்பாடுகளால் இந்தியா பிளவுபடக் கூடாது என்பதற்கோ, தமிழ்நாட்டுப் பிரிவினை கூடாது என்பதற்கோ, அல்லது இங்குள்ள தேசிய இனங்கள் பிரிந்து போக ஒப்பமாட்டோம் என்பதற்கோ யாருக்குமே உரிமையில்லை என்று தெளிவாக உணர்ந்து கொள்க!
தேசிய இன விடுதலை இயற்கையானது; தேவையானது!
— தமிழ்நிலம், இதழ் எண். 133, திசம்பர், 1990
தேர்தல் வேண்டுகை!
கடந்த இரண்டாண்டுகளில் இந்திய அரசில் குழறுபடிகளும் கூத்தடிப்புகளும் சண்டை சள்ளுகளுமே நடந்து வருகின்றன. நல்லவர்களாலும் ஆட்சி செய்ய முடியவில்லை. வல்லவர்களாலும் ஆட்சி அமைக்க முடியவில்லை. கொள்கை உள்ளவர்களின் ஆட்சியும் கவிழ்க்கப்படுகிறது; கொள்கையற்றவர்களின் ஆட்சியும் கவிழ்க்கப்படுகிறது. பதவிச் சண்டைக்காரர்களும், பகல் கொள்ளையடிப்பவர்களுமே மேலாங்கி நிற்கின்றனர். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கின்ற இராசீவ், செயலலிதா, தேவிலால், சுப்பிரமணியம் சுவாமி போன்றவர்கள் இந்திய அரசியலை ஆட்டிப்படைக்கின்றார்கள்.!
வி. பி. சிங் அரசைச் சந்திரசேகர் இராசீவுடன் சேர்ந்து கவிழ்த்தார். 11 மாதங்களே ஆட்சியிலிருந்த வி. பி. சிங்கை, அவர் மண்டல் குழு அறிக்கையைச் செயலுக்குக் கொண்டுவர முயற்சி செய்தார் என்பதற்காகவும், அத்வானி, வாச்பேயி முதலிய பச்சைப் பார்ப்பனப் பதடிகள் தலைமையேற்றிருக்கும் பாரதீய சனதா, விசுவ இந்து பரிசத், ஆர். எசு. எசு. போன்ற இயக்கங்கள் கொண்ட இராமர் கோயில் சிக்கலுக்காகவுமே வி. பி. சிங் என்னும் நேர்மை மாந்தர் அரசு கவிழ்க்கப்பட்டது.
அந்நிலையில், மக்கள் சாய்காலை இழந்த பல ஊழல்கள் புரிந்த முன்னாள் தலைமையமைச்சர் இராசீவ் கரவான முறையில் வஞ்சக மனத்துடன் சாணக்கிய சூழ்ச்சி செய்து , குரங்கு தன் குட்டியின் வாலை விட்டு ஆழம் பார்ப்பதைப் போல, 54 பாரளுமன்ற உறுப்பினர்களையே ஆதரவாளராக்கிக் கொண்ட சந்திரசேகரரை ஆட்சியில் ஏற்றி அவரைத் தம் கைப்பாவையாக ஆக்கித் தம் விருப்பத்திற்கு ஆட்டி வைத்து அசாம், தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரி, முதலிய மாநில அரசுகளை அடியோடு குப்புறக் கவிழ்த்துக் குடியரசுத்தலைவராகிய பார்ப்பன வெங்கட்டராமனின் ஆட்சியை அமையச் செய்தார். அரசியலும். அதிகாரமும் வாய்ப்புகளும் பார்ப்பனியத்திற்கு இருக்கவேண்டும் என்று எண்ணுவதில் குடியரசுத் தலைவர் வெங்கடராமன் யாருக்குமே கீழான வரல்லர் என்பதைக் கடந்த இரண்டாண்டுகளாக நடந்த இந்திய ஆட்சி நாடகங்கள் தெள்ளத் தெளிவாகக் காட்டி விட்டன.
இவ்வாறான, சூழ்நிலையில், இரு காவலர்கள் வேவு பார்த்தனர் என்னும் நொண்டிச்சாக்கை அடிப்படையாக வைத்து, ஏறத்தாழ மூன்றரை மாதங்களை ஆட்சி செய்த சந்திரசேகரரையும் அண்மையில் கவிழ்த்து விட்டார், இந்த அரசியல் பத்தினியான இராசீவ்!
இந்த ஊழல் பேர்வழிக்குத் துணையாகவும் இவரின் கொள்ளைப் பணத்திற்குப் பங்காகவும், இங்கு முன்பு மூப்பனார் கூட்டமும், இக்கால் செயலவிதா, வாழைப்பாடி, திண்டிவனங்கள், குமரி அனந்தன்கள் போன்றவர்கள் கூட்டமும் செயல்பட்டன; படுகின்றன. பணம் என்றால் வாய் திறந்து வயிறு கழுவுகின்ற இப்பிணந்தின்னிக் கழுகுகள் அரசியலில் ஏதோ பெரிய அறிஞர்கள் போலவும் தேசியப் பற்றுள்ளவர்கள் போலவும் கதைநாயகனுக்கேற்ற கட்டியங்காரன்களாக நாடகம் ஆடுகின்றனர்.
அவர்களும் இவர்களைப் போன்றவர்களும் பேசுவதெல்லாம் இந்திய ஒருமைப்பாடும் ஒற்றுமையும்! ஆனால் செய்வது எல்லாமே திருட்டுத்தனங்களும், பார்ப்பனியச் சூழ்ச்சிகளும் வேற்றுமைகளுமே! இந்தியாவில் அரசியலா நடைபெறுகிறது? பதவிச்சண்டைகளும், கள்ளப்பணங்களைப் பகிர்ந்து கொள்ளும் புகழ் கொள்ளைகளுந் தாமே! விளக்காக ஓரிரண்டு இடங்களில் ஓரிரண்டு நல்ல செயல்கள் இருக்கலாம் ஆனால் அவற்றால் என்ன பயன்?
முதலாளியமும் பார்ப்பனியமும் இணைந்து, சாதியத்தையும் மதவெறியையும் முன்னிறுத்தி, இவர்கள் செய்யும் அட்டூழியங்களுக்கும் அறக்கேடுகளுக்கும், காந்தியத்தையும், பார்ப்பனப் பாவலன் பாரதியையும் பின்னிறுத்தி நடத்தப் பெறும் இந்திய ஆட்சி ஒரு கொடுங்கோல் ஆட்சி, கொள்ளையர் ஆட்சி; கொலைகாரர் ஆட்சி வல்லதிகார ஆட்சி என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!
இந்தச் சூழ்நிலையில் இனிமேலும், இந்திய நடுவண் அரசுடன் தமிழின மக்கள் அரசியல் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. எத்தனை வழக்காடினாலும், ஞாயம் பேசினாலும், வடநாட்டானும் ஆட்சித் தலைமையைப் பிடித்துக் கொண்டிருக்கும் பார்ப்பானும் தமிழினத்தை மதிக்கமாட்டார்கள் அவர்களுக்கு உரிமைகளை வழங்க மாட்டார்கள். இவர்களுக்காகவே இவர்களே எழுதி வைத்துக் கொண்டிருக்கும் சட்டங்களும் அதிகாரங்களும் அறமன்றங்களும் இவர்களுக்குத் துணையாகவே இருக்கும். இந்த நிலையை எந்த மாநில அரசாலும் என்றைக்கும் மாற்றவே முடியாது. இன்னும் குறிப்பாகத் தமிழ்நாட்டு அரசைக் கைப்பற்றும் எந்தக்கட்சி ஆட்சியும் கூட இவர்களைத் தட்டிக் கேட்கவோ, தங்களின் வாழ்வுரிமைகளைப் பெறுவதற்கோ முயற்சி செய்யாது; செய்ய முடியாது. இந்தியா உரிமை பெற்று நாற்பத்து நான்கு ஆண்டுகளாகியும். தமிழர்கள் திராவிடர்கள் என்று இம்மாநில ஆட்சியைக் கைப்பற்றிய எங்கும் கூட அவ்வாறு செய்ததில்லை. செய்வதற்கு முயற்சி செய்வதும் கூட இல்லை.
இறுதியாக, தமிழக அரசுப் பொறுப்பைக் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்றிருந்த கலைஞரின் தி.மு.க. அரசு கூட மாநில ஆட்சி என்ற அளவில்தான், வடநாட்டாருடனும் தமிழினத்தின் கழுத்தை அரிந்து கொண்டிருக்கும், பார்ப்பனருடனும் கூடிக்குலவி, தனிப்பட்ட தங்களின் நன்மைக்கும், பதவி நலத்திற்கும், அதிகார வாய்ப்பிற்குமாக ஆட்சி நடத்தியதே தவிர, தமிழுக்கென்றோ தமிழினத்தின் நிலையான அடிமை நீக்கத்திற்கென்றோ, தமிழ் நாட்டின் உரிமை மீட்சிக்கென்றோ எந்த ஒரு செயலையும் செய்ததில்லை. வள்ளுவர் கோட்டமும், பூம்புகார் அமைப்பும், கன்னியாகுமரியில் அமையவிருக்கும் திருவள்ளுவர் சிலையும், இலவயக் கல்வியும், சாரவுணவும், இலவய அரிசியும் வேட்டி சேலைக் கொடுப்பும் அரசியலும் அன்று ஆட்சியியலும் அன்று: இனமீட்பும், உரிமை மீட்சியும் அல்ல! வெறும் ஏமாற்றும் கண்துடைப்புமே ஆகும். நாற்பது இலக்கம் உறுப்பினர்கள் உள்ள கட்சி எங்கள் கட்சி என்று பீற்றிக் கொள்ளும் தி.மு.க. பின்பற்றிகளுக்கும், ஏன் கலைஞர்க்குமே சொல்லிக் கொள்கிறோம்!
“கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது’
என்னும் திருவள்ளுவப் பெருமானின் திருவாய் மொழியை நன்கு படித்திருப்பீர்கள். ஆனால் உணர்ந்திருக்க மாட்டீர்கள்; உணர்ந்திருந்தாலும் அதை வாழ்க்கையிலும் கடைப்பிடித்து உணர்த்தியிருக்க மாட்டீர்கள்! ஆட்சிச் செருக்கும் அறிவு அகம்பாவமும் உள்ள உங்களிடம் படைச் செருக்கும், வினைத் தூய்மையும் இருத்தல் அரிதினும் அரிது.
திருவள்ளுவர் பெருமானின் கருத்தை ஊரெல்லாம் முழக்குவீர்கள். அவர் திருவுருவச் சிலையையும் நாட்டுவீர்கள்! ஆனால் அவர் என்ன சொன்னார், எதற்குச் சொன்னார், ஏன் சொன்னார், எப்படிச் சொன்னார், எவருக்காகச் சொன்னார் என்கின்ற மெய்ப்பொருளை நீங்கள் அறிந்திருப்பதாக இதுவரை எங்கும் எப்பொழுதும் எதன் பொருட்டும் நீங்கள் காட்டவில்லை. உங்களிடம் உள்ள போலித்தனமான அறிவும், புரையோடிய உள்ளமும், புல்லிய செயல்களுமே உங்களை அவற்றினின்று வேறு பிரித்து வைத்திருக்கின்றன. உங்கள் முதுகில் நீங்களே தட்டிக் கொடுக்கவும் உங்களை நீங்களை மெச்சித்துக் கொள்ளவுந்தாம் நீங்கள் அறிவீர்கள். எனவே எந்த வாய்ப்பையும் நீங்கள் உங்களுக்காகத்தான் பயன்படுத்துவீர்களே தவிர, இம்மொழிக்காகவும், இனத்திற்காகவும், நாட்டிற்காகவும் பயன்படுத்த மாட்டீர்கள்.
இவ்வாறு நீங்கள் என்றுமே சிந்தித்துக் கூட பார்த்திருக்க மாட்டீர்கள், ஏனெனில் பிறர்க்கு உடலில் மட்டுந்தான் கொழுப்புப்படரும். ஆனால், கலைஞரே, உங்களுக்கு நீங்கள் மூச்சுயிர்க்கும் நெஞ்சாங் குலையிலும் கொழுப்பு! நீங்கள் பார்க்கின்ற கண்களிலும் கொழுப்பு! நீங்கள் சிந்திக்கின்ற மூளையிலும் கொழுப்பு படர்ந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள் கிடைத்த வாய்ப்பு களையெல்லாம் பறிகொடுத்து விட்டீர்கள்! இனி உங்கட்கு வெறும் வாய்ப்பூ தான்! இது நிற்க.
எனவே, தமிழர்களே! இனி எந்த அரசியல் கட்சியையோ, அரசியல் தலைமையையோ நம்ப வேண்டா. இனிமேலாகிலும் இந்திய அரசியலிலிருந்து பிரிந்து தனித்தமிழ்நாடு பெறுவதே நம் குறிக்கோளாக, முழு முயற்சியாக, இருத்தல் வேண்டும்.
ஆகவே, வருகின்ற, வந்து போகின்ற தேர்தல் திருவிழாக்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டா. அதில் குதித்துக் கொம்மாளமிட்டுக் குளிர்காய விரும்பும் எவரையும் நீங்கள் நம்பவும் வேண்டா. அப்படி ஒரு வேளை நீங்களும் தேர்தலில் ஈடுபட்டு, எவரையேனும் உங்கள் மனத்துக்கும் அறிவுக்கும் பிடித்தவர் ஒருவர்க்கு, நீங்கள் ஒப்போலைவிட விரும்பினால், அவர் தனித்தமிழ் நாட்டுக் கொள்கை உடையவராக இருக்கட்டும்.
ஆமாம்! இந்தியக் கொடுங்கோல் சாதிமத வெறிகொண்டே பார்ப்பனீய முதலாளிய வடநாட்டு அரசினின்று தமிழகத்தை மீட்டுத் தனி இறையாண்மை அரசமைப்பவரையே அவ்வாறு உறுதி கொடுப்பவரையே தேர்தலில் வெற்றி பெறச் செய்யுங்கள்!
தமிழ்நிலம், இதழ் எண் : 144, நவம்பர் 1990
இந்தியாவில், பார்ப்பனிய, முதலாளியங்களின் இன,
அரசியல் தாக்குதல்கள் இருக்கும்வரை இந்திய
ஒருமைப்பாடு, ஒற்றுமை உணர்வுகள் வெற்றிபெறா!
பிரிவினை உணர்வும் வளர்ந்தே தீரும்!
இந்தியாவைப் பொறுத்த அளவில், வேறு எந்த நாட்டையும் விட, ஆளுகின்ற இனம், ஆளப்படுகின்ற இனங்களை விட மிகக் கொடுமையானதும், சூழ்ச்சி மிக்கதும், மக்கள் மேல் அன்பில்லாததும், மக்களை விலங்குகளுக்கும் கீழான தன்மையில் மதிப்பதும், பிறவியிலேயே வேறுபாடுகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் கற்பிப்பதும் ஆன ஓர் இனமாக இருப்பது, இங்குள்ள மக்கள் அனைவருமே என்றென்றைக்கும் கவலைப்படுகின்ற ஒரு செய்தியாக இருக்கிறது.
ஆம்! இங்குதான் ஆரியப் பார்ப்பனர்கள் அரசியலில் ஆளும் இனத்தவராகவும், பொருளியலில் கொழுத்த முதலாளிகளாகவும், குமுகாய அளவில் உயர்ந்த மேலாண்மை(மேலாதிக்கம்) உள்ள இனமாகவும், மத நிலையில் அதிகாரத் தலைமைப் பிரிவாகவும், சாதி நிலையில் தலைமைச் சாதிக் குலமாகவும் தங்களை மேலேற்றி நிறுத்திக் கொண்டு, இந்த நாட்டு மக்களை மிகக் கீழாகப் போட்டு, அவர்களை முன்னேற விடாமல் அழுத்தி மிதித்துக் கொண்டு உள்ளனர். இது வேண்டுமென்றோ, வெறுப்பாலோ, மிகைப் படுத்தியோ சொல்லப் பெறுவதன்று, முழு உண்மையாகக் கூறப்பெறுவது.
ஐரோப்பிய ஆரியர்களாகிய வெள்ளைக்காரர்கள் இந்நாட்டை விட்டு வெளியேறும் பொழுது, ஆசிய ஆரியர்களான இந் நாட்டுப் பார்ப்பனர்கள், அவர்கள் விட்டுச் சென்ற ஆட்சியதிகாரங்களைக் கைப்பற்றிக் கொண்டதுடன், அவர்களின் வருகைக்கு முன்பிருந்தே தாங்கள் கைப்பற்றி மேலோங்கியிருந்த இன, மத, குமுகாய, கலை, பண்பாட்டு வல்லாண்மைகளை அழுத்தமாக நிலைப்படுத்திக் கொண்டனர்.
அதன் பின்னர் கடந்த நாற்பதாண்டுகளுக்கு மேலாகப் பார்ப்பன வணிக வல்லதிகார ஆட்சியாக ஒரு காசுமீரப் பார்ப்பன நேரு குடும்ப ஆட்சியாகவே - இந்திய ஆட்சி நடந்து வந்தது. நேரு, இந்திரா, இராசீவ் - என்னும் முப்பார்ப்பனக் கொடுந்தலைமை முழு வல்லாண்மை ஆட்சியில், இந்தியாவில் வேறு எந்தத் தேசிய இனமும் அதிகாரத்திற்கு வரவொட்டாமல் அடக்கி ஒடுக்கப் பெற்றது. தமிழினத்தின் நிலைகளையோ சொல்லவே வேண்டுவதில்லை. இந்தியத் தமிழ்நிலத்தில் தமிழர்கள் எத்துணையளவு துன்பமும் துயரமும் பட்டார்களோ, உரிமைகளை இழந்தார்களோ, அதைவிட இலங்கைத் தமிழ்நிலத்தில் அங்குள்ள தமிழர்கள் அங்கும் ஆட்சியைக் கைப்பற்றியிருந்த அதே ஆரியப் பார்ப்பனர்களான சிங்கள ஆட்சியினரால் அடக்கி யொடுக்கிக் கொடுமைப்படுத்தப்பட்டுக் குற்றுயிராயும் கொலையுயிராயும் அவல வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
தமிழீழ விடுதலைக்காக, அங்குள்ள தமிழ் இளைஞர்கள் பல்வேறு குழுவினராகப் பிரிந்திருந்தாலும், கடந்த ஏழெட்டு ஆண்டுகளாகக் கருவிப் போர் நடத்திப் போராடி வருவதை உலகமே வியந்து கவனித்துக் கொண்டுள்ளது. அவ்வாறு போராடி வருகின்ற அனைத்துக் குழுக்களிலும், மிகவும் வலுப்பெற்ற, குழுவாக, இறுதி வரை தம் ஒரே கொள்கை 'தமிழீழ விடுதலைக் கொள்கையே' என்னும் இலக்குடன் போராடி, இலங்கையின் வடக்குப் பகுதியிலுள்ள தமிழிழத்தை இன்றைக்கு முழுவதும் தன் கையகப்படுத்தியுள்ள, பெருமாவீரன் பிரபாகரன் தலைமையிலுள்ள விடுதலைப் புலிகள் குழு இருந்து வருவது, உலகத் தமிழினத்தை மிகவும் மகிழ்ச்சிக்கும் பெருமிதத்திற்கும் உள்ளாக்குகிற ஒரு சிறப்புச் செய்தியாகும்.
தொடக்கத்தில் பெருமாவீரன் பிரபாகரனை குருவிக் குஞ்சைப் போல் நசுக்கிக் கசக்கிப் பிழிந்துவிடலாம் என இங்குள்ள பார்ப்பனிய அரசு கனவு கண்டது; அதற்காகச் சில சூழ்ச்சிக் கோணங்கள்(வியூகங்கள்) அமைத்து, இங்குள்ள படையைத் தந்திரக் கரவாக அங்கு அனுப்பி, முற்றிலும் தமிழர்களையும் தமிழின வரலாற்று நாயகன் பிரபாகரனையும் அழித்தொழிக்கத் திட்டமிட்டது; ஏறத்தாழ இரண்டாண்டுகளாகியும் இரண்டாயிரங் கோடி உருபா செலவிட்டும், அவ் விமயமலை வீரனை இம்மியும் அசைக்கவும் முடியாமல், எதிர்த்து நிற்கவும் இயலாமல், தோல்வி வெட்கத்துடன் இந்தியா திரும்பியது. அதற்குள் இராசீவின் கொடுங்கோலாட்சிக் கதையும் முடிந்து போனது அதுவுமின்றித் தமிழகத்திலும் தி.மு.க. ஆட்சி வந்தது. தில்லியிலும் தேசிய முன்னணி, ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனாலும், இலங்கையில் பிரபாகரன் வலிமை பெற்றிருப்பது பார்ப்பனர்களுக்குப் பிடிக்கவில்லை.
தமிழகத்திலுள்ள கலைஞராட்சிக்கும், தமிழீழத்தில் வலிமை பெற்றுள்ள விடுதலைப் புலிகளுக்கும் தொடர்புபடுத்தி அவ்வப்பொழுது எதையேனும் தேசிய முன்னணி அரசுத் தலைமைக்கு எரிச்சல் வரும்படி சொல்லிக் கொண்டு வருகின்றனர். அத்துடன் தமிழகத்திலும் வன்முறை, பிரிவினை உணர்வு, அவற்றுக்குக் கலைஞர் ஆதரவு என்றெல்லாம் கூறி, நடுவணரசு உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று துண்டி வருகின்றனர்.
இந்த நிலையில், பார்ப்பனர்களுக்கு நாம் வெளிப்படையாக ஒன்றைச் சொல்லிக் கொள்ளுகிறோம். "இந்தியாவில், பார்ப்பனீய, முதலாளியங்களின், இன, அரசியல் தாக்குதல்கள் இருக்கும்வரை இந்திய ஒருமைப்பாடு, ஒற்றுமை என்னும் போலியுணர்வுகள் வெற்றி பெறப் போவதில்லை. மாறாக அவற்றுக்கு இனி என்றுமே தோல்விதான்! அது மட்டுமன்று, அவ்வினம் அஞ்சிக் கொண்டிருக்கும் பிரிவினை உணர்வும் வளர்ந்தே தீரும்" – என்பதைப் பார்ப்பனர்கள் ஆழமாகத் தங்கள் உள்ளங்களில் பதித்துக் கொள்வார்களாக
— தமிழ்நிலம், இதழ் எண். 137 ஏப்பிரல், 1990
தனித்தமிழ் நாடு உருவாவதை
எவராலும் தடுக்க இயலாது!
அண்மையில் சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய தமிழர் வாழ்வுரிமை மாநாடு அதன் அமைப்பிலும், செயற்பாடுகளிலும், அது நடத்திய பேரணியிலும், இறுதியில் அது நிறைவேற்றிய தீர்மானங்களிலும், தமிழகப் பார்ப்பனீயத் தலைமை யரசும், தில்லியின் பார்ப்பனீய முதலாளிய அடக்குமுறை அனைத்ததிகார அரசும் மிகவும் அச்சம் கண்டு ஆடிப்போய் இருக்கின்றன.
குறிப்பாக, தமிழக முதல்வர் செயலலிதா இப்படியொரு மாநாடும், அதன் செயற்பாடுகளும் நடைபெறும் என்று எதிர்பார்த்திருக்க முடியாது. அதே பொழுது தில்லி உள்துறை அமைச்சர் சவானும், தலைமையமைச்சர் நரசிம்மராவும் இந்த மாநாட்டால் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். ஆனால் அதை உடனடியாகக் கண்டு கொள்ளாதது போல் நடந்துகொண்டனர்; கொள்கின்றனர். இனி, போகப் போகத்தான் அவர்களின் மறைமுக நேர்முகத் தாக்கங்கள் தெரிய வரும்.
அரும்பாடுபட்டு நடத்தி முடிந்த இம்மாநாட்டினாலும், அது நடத்திக் காட்டிய பேரணியாலும், இறுதியில் அது நிறைவேற்றிய தீர்மானத்தினாலும், பாட்டாளி மக்கள் கட்சியும், அமைப்பும், தலைமையும், உறுப்புகளும் மிகப் பெரும் வெற்றி பெற்றுள்ளன. என்பதை எவருமே மறுக்கவும் முடியாது; மறைக்கவும் முடியாது. இஃதொரு தமிழின வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சி மட்டுமன்று; தமிழர்களின் இன, நாட்டு, அரசியல் முன்னேற்றத்தில் ஒரு சிறந்த திருப்பு முனையுமாகும். இதனால் தமிழரின் தேசிய இனத் தன்னுரிமைக் கோரிக்கைக்கு ஒரு வலிவும், தமிழ்நாட்டின் தனியாட்சிக் கொள்கைக்கு ஒரு பொலிவும் உண்டாக்கியிருக்கின்றன என்பதை எவரும் மிகையென்று கூறமுடியாது. பாட்டாளி மக்கள் கட்சியை, அதன் அமைப்பாளராகிய பெருமை மிகு மருத்துவர் இராமதாசு தமிழர்களுக்கு ஒரு நம்பிக்கைக்குரிய கட்சியாகவும் தலைமையாகவும் இதன்வழி அடையாளம் காட்டியுள்ளார் என்றே சொல்ல வேண்டும். வெறும் 'சாதிக் கட்சி' என்றும், 'பிரிவினை'வாதக் கட்சி என்றும், வன்முறைக் கட்சி என்றும், அதில் உள்ளவர்களும், அதை ஆதரிப்பவர்களும், தீய சக்திகள் என்றும், 'தேசத் துரோகிகள்' என்றும், பார்ப்பனர்களோ, அவர்களின் இதழ்களோ, வடநாட்டு வல்லதிகாரக் காரர்களோ — இனிமேலும் அதையும் அதைச் சார்ந்தவர்களையும் எளிதாகக் குறைகூறி அல்லது குற்றஞ் சாட்டி, அதன் வளர்ச்சியைத் தடுதது நிறுத்திவிட முடியாது. இதன் அடிப்படையில் எதிர்காலத்தில் தமிழர்களுக்கென்று இலங்கையிலும், ஏன் இந்தியாவிலும் கூட ஒரு தனித்தமிழீழமும், தனித்தமிழ்நாடும் உருவாவதை எவராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது.
ஒரு தேசிய இனம் புதிதாக உருவாவதையே எந்த ஆற்றலாலும் தடுத்துவிட முடியாதபொழுது, ஏற்கனவே பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே உருவாகி, அதற்கான மொழி, வரலாறு, இலக்கியம், கலை, பண்பாடு, நாகரிகம் முதலியவற்றைத் தனித்தன்மையுடன் படைத்துக் கொண்டு ஈராயிரம் மூவாயிரம் ஆண்டுகள் அரசு, ஆட்சி வரலாறுகளையும் பெற்றிருக்கின்ற தமிழினம், இன்றைய வடநாட்டுப் பார்ப்பனீய, முதலாளிய இந்தி வெறியர்களிடம் தன்னுரிமையும், தனியாட்சியும் கேட்கக் கூடாது. என்பது, முட்டாள்தனமும், முரட்டுத்தனமும் ஆகும் என்பதை அனைவருமே உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
இந்த ஆட்சி வெறியர்களுக்கு, இங்குள்ள பொதுவுடைமைக்காரர்களும் துணையாக நிற்பதுதான் நமக்கு வியப்பாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது. இவர்கள் நடத்தும் வகுப்பு(வர்க்க)ப் போராட்டம், தேசிய இனம் விடுதலை பெறாத நிலையில் பொருளற்றது; விணானது. இதுபற்றி மார்க்சு தெளிவாகத் தெரிவிக்கிறார்.
"தேசிய இன விடுதலைப் போராட்டத்தைப் புறக்கணித்து விட்டு, வகுப்புச் சிக்கலை (வர்க்கப் பிரச்சினையை - அஃதாவது ஏழை, பணக்காரன் சிக்கலை) முன்னிலைப்படுத்துதல், வகுப்பு(வர்க்க)ப் புரட்சியையே இழிவுபடுத்துவதாகும்".
— மார்க்சு 'Vulgarization of class — struggle'
பக்.39, Class and Nations.)
"பிரிந்து போகும் உரிமையுள்ள முழக்கமே தேசிய இன விடுதலைக்கான முழக்கம். அஃதில்லாமல் பிரிந்துபோகும் உரிமையற்ற தன்னாட்சி முழக்கம் தேசிய இன நசுக்கலுக்கான முழக்கமே. இது பொய்யான கோரிக்கையும் ஆகும். இது நிகரமைக்கு(சோசலிசத்திற்கு)ச் செய்யும் இரண்டகமுமாகும்" என்பது இலெனின் தரும் விளக்கமாகும்.
— இலெனின் ‘’The socialist revolution and the right of
nation to self-determination)
“அரசு என்பது ஒரு வகுப்பு(வர்க்கம்) (இந்தியாவைப் பொறுத்த அளவில் இன நிலையில் பார்ப்பனீயமும், பொருள் நிலையில் முதலாளியமும்) இன்னொரு வகுப்பின் (வர்க்கத்தின்) ஆட்சியை நிலைப்படுத்தும் கருவி. தனி உடைமை இருக்கின்ற வரை மக்கள் நாயகக் குடியரசு (Democratic Republic) என்று அழைக்கப்படும் அரசு என்ற கருவியும், முதலாளிகள் பாட்டாளிகளை நசுக்கப் பயன்படுத்தும் கருவிதான்” என்றும் இலெனின் கருத்தறிவிக்கிறார். மேலும் அவர் இன்னோர் இடத்தில்,
“தன்னுரிமையை அஃதாவது பிரிந்து செல்லும் உரிமையை ஆதரிப்பவர்களைப் பிரிவினைவாதிகள் -பிரிவினைக்கு ஊக்குவிப்பவர்கள் என்று குற்றம் சாட்டுவது முட்டாள்தனமானது; நயவஞ்சகமானது. மணவிலக்கு உரிமையை ஆதரிப்பதால் குடும்பத்தைக் குலைக்க ஊக்குவிப்பதற்குச் சமம் என்னும் முட்டாள்தனமான — பாசாங்குத்தனமான குற்றச்சாட்டு போன்றதாகும்”
— இலெனின் "Selections from V.I. Lenin
and J.V. Stalin on National Colonial Question — ” பக் 22
– தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை பக். 5 )
மேலும் கூட்டுச் சேரா நாடுகளின் இரண்டாவது மாநாடு 1964ஆம் ஆண்டு கெய்ரோவில் நடைபெற்றபோது, "தங்கள் அரசியல் உரிமையைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ள ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தன்னுரிமை உண்டு” என்ற தீர்மானம் அங்கு நிறைவேற்றப்பட்டது. அத் தீர்மானத்தை இந்தியாவும் ஏற்றுக் கொண்டு உள்ளது.
தேசிய இன விடுதலை என்பது இயற்கையின் ஒரு கோட்பாடு. வெறும் அரசியல் சூப்பான்களாக இருப்பவர்களுக்கு மொழி, இனம், நாடு பற்றி எந்தக் கவலையும் இருக்க முடியாது! அவர்கள் வெறும் பொறுக்கித் தின்னிகளே! மக்கள் உரிமைகளைப் பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை.
எனவே, பாட்டாளி மக்கள் கட்சி செய்யும் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழர் பேராதரவு தரவேண்டுவது அவர்களின் தலையாய கடமைகளில் ஒன்றாகும்.
— தமிழ்நிலம், இதழ் எண். 159, அத்தோபர், 1992
எளிதாகத் தீர்க்கப்பட வேண்டிய காவிரி நீர்ச் சிக்கலை
இனச் சிக்கலாக மாற்றி விட்டார் பங்காரப்பா...!
இனி, தமிழ்நாடு தனியாகப் பிரிந்தால்தான் தமிழர்கள் வாழமுடியும்
(6.1.92 'சத்ரியன்’ இதழ்க்கு அளித்த
நேருரையில் பாவலரேறு!)
தமிழர்களும் தமிழ்நாடும் எந்த வகையிலும் வளம் பெறவும் கூடாது. முன்னேறி விடவும் கூடாது என்பதுதான் இப்பொழுதைய தில்லி அரசின் எண்ணமாகும்.
பார்ப்பனீயமும் முதலாளியமும் சேர்ந்து இயங்குவதே தில்லி ஆட்சி. அதற்கு இந்தியாவில் உள்ள எந்த மாநிலமும், எந்தத் தேசிய இனமும் எந்த நிலையிலும் வலுப்பெற்றுவிடக் கூடாது என்பதே உட்கருத்தாகும்.
அவ்வாறு வலுப்பெறுமானால் அந்த மாநிலமும் அந்தத் தேசிய இனமும் தன் அதிகாரக் கட்டுக்குள் இல்லாமற் போய்விடுமே. என்பதுவே தில்லியரசின் கவலை கரவான எண்ணம்..!
இதற்கு உகந்தவராக, தில்லி அரசுக்கு, அஃதாவது இந்திரா பேராய (காங்கிரசு)க் கட்சிக்குக் கிடைத்தவர்தாம் பங்காரப்பா..!
இவர் 1990 அத்தோபரில், வீரேந்திர பாட்டீல் விலக்கப்பட்டதைத் தொடர்ந்து பதவிக்கு வந்தவர். எல்லா நிலைகளிலும் இவர் தமிழர்களுக்கு நேர் எதிரானவர். இதற்கு முன்னர் இருந்த முதல்வர்களைக் காட்டிலும் இவர் பெரும் கன்னட வெறியர். இவர் பதவிக்கு வந்த பின் கர்நாடகத்தில் வாழும் தமிழர் முன்னேற்றத்தில் ஒரு கண்ணாக இருந்து அவர்களைப் பலவகையிலும் ஒடுக்க முற்பட்டார்.
பணி நிலைகளில் தமிழர்களுக்குக் கிடைத்து வந்த வாய்ப்புகளைக் குறைத்தார். கல்வி நிலையிலும் தமிழ்க்கல்வியைப் பின்தள்ளிக் கன்னட மொழிக்கே அனைத்து வாய்ப்புகளையும் உருவாக்கித் தந்தார். கன்னடம் படித்தவர்க்கே அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்கினார். தமிழர்கள் புதுத் தொழில் தொடங்குவதற்கும் வாணிகம் செய்வதற்கும் பல முட்டுக் கட்டைகளைப் போட்டார்.
எனவே, தமிழர்கள் அங்குப் பலவகையிலும் தொல்லைகளே பெற்று வந்தனர். அவர்கள் வீடுகள் கட்டவும், நிலங்கள் வாங்கவும் வாய்ப்பின்றி மிகவும் இடர்ப்பட்டு வந்தனர். அதனால் நூற்றுக்கணக்கான தமிழர்கள் பெங்களுரை விட்டே வெளியேறிப் போயினர்.
பங்காரப்பா ஆட்சிக்கு வந்த நேரம், தமிழகத்திலும் ஆட்சி மாறியது. செயலலிதா தாம் பதவிக்கு வந்த பின், முன்பு விடுதலைப் புலிகளுக்கும், தமிழீழப் போராட்டத்திற்கும் ஆதரவாயிருந்த நிலையை மாற்றிக் கொண்டு, அவர்களை ஒடுக்கும் செயலிலும், அவர்களை அறவே தமிழகத்திலிருந்து வெளியேற்றும் நிலையிலும் வெகு முனைப்புக் காட்டினார்.
காரணம் விடுதலைப்போராளிகள் எங்கு தி.மு.கவுக்கு ஆதரவாக இருந்து தம்மைக் கவிழ்த்து விடுவார்களோ அல்லது அழித்து விடுவார்களோ என்று அஞ்சினார். எனவே, அவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார்.
இந் நடவடிக்கைகள் கர்நாடகத்திலும் குறிப்பாகப் பெங்களூரிலும் விரிவடைந்த பொழுது, பங்காரப்பா செயலலிதாவிற்கு அனைத்து வகையிலும் துணையாக இருந்தார்.
இருவரும் கன்னடத் தாய்மொழியினர். ஆகையால், தமிழீழ எதிர்ப்பு முயற்சிகளைக் கைகோத்துக் கொண்டு செயல்படுத்தினர். போராளிகள் பலரைப் பெங்களூரிலிருந்து சிறைப்பிடிக்கவும் அழிக்கவும் கர்நாடக முதல்வர் பங்காரப்பா, தமிழக முதல்வர் செயலலிதாவிற்குப் பெரிதும் துணையாக நின்றார்.
இதற்கிடையில்தான் ஏற்கனவே இருந்த காவிரி நீர்ச் சிக்கலும் பெரியளவில் உருவெடுத்தது.
இதன் உண்மையான சிக்கல் என்ன? அது பற்றிச் சிறிதேனும் மக்களுக்குத் தெரியவேண்டும் என்பதற்காக, சிலர் வரலாற்று நிலைகளை இங்குக் கூறியே ஆதல் வேண்டும்.
காவிரி கர்நாடகத்தில் உள்ள குடகு மாவட்டத்தில், குடகு மலையில் தோன்றிக் கர்நாடகம் வழியாகத் தமிழ்நாட்டில் பாய்ந்து, தஞ்சை மாவட்டத்தைத் தாண்டி வங்காளக் குடாக் கடலில் கலக்கிறது.
அதன் மொத்த நீளம் ஏறத்தாழ 500 கற்கள் (800 கி.மீ.) இதில் 200 கற்கள் கர்நாடகத்திலும், 261½ கற்கள் தமிழ்நாட்டிலும், 52 கற்கள் இரண்டு மாநிலங்களுக்கு இடையில் எல்லையாகவும் அமைந்திருக்கின்றன.
இதனுடன் எட்டு கிளையாறுகள் இணைகின்றன. இவற்றுள் ஏமாவதி, ஆரங்கி, இலட்சுமண தீர்த்தா, கபினி, சுவர்ணதி ஆகிய ஐந்தும் கர்நாடகத்திலும், பவானி, நொய்யல், அமராவதி ஆகியவை தமிழ்நாட்டிலும் பாய்கின்றன.
இவற்றுள் கபினி, அமராவதி, பவானி ஆகிய முன்றும் கேரளத்தில் தோன்றிக் கர்நாடகம் வழியாகக் கபினியும், தமிழ்நாடு வழியாகப் பவானியும் அமராவதியும் காவிரியுடன் கலக்கின்றன.
காவிரியில் ஓடுகின்ற தண்ணீர் மூடகிலிருந்தே வந்துவிடாமல், இடையில் அதனுடன் வந்து கலக்கின்ற மேற்கூறிய சிற்றாறுகளின் தண்ணீருமாகும். இந்த வகையில் அதில் பாய்வதாகக் கணக்கிடும் 79,200 கோடி கன அடி தண்ணீரில் (74000 கோடி க.அ. தண்ணீர் என்பதும் ஒரு கணக்கு) கர்நாடகம் 38,800 கோடி க.அ. (388 டி.எம்.சி.) நீரும், தமிழ்நாடு 21700 கோடி க.அ. (217 டி.எம்.சி) நீரும், கேரளம் 1250 கோடி க.அ. (125 டி.எம்.சி.) நீரும், அஃதாவது கர்நாடகம் 53 விழுக்காடு, தமிழ்நாடு 30 விழுக்காடு, கேரளம் 17 விழுக்காடு காவிரியாற்றுக்குத் தண்ணீர் தருவதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள்.
இந்தத் தண்ணீரைக் கர்நாடகமும் கேரளமும் தென்மேற்குப் பருவ மழையாலும், தமிழ்நாடு வடகிழக்குப் பருவ மழையாலும் தருவதாகக் கணக்கிடப் பெற்றுள்ளது.
எனவே, காவிரி நீரைக் கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய மூன்று மாநிலங்களும் பகிர்ந்து கொள்ள ஞாயம் உண்டு என்னும் நிலையில், இந்நீர்ப் பகிர்வு ஒப்பந்தம், முதன் முதலில் 1892-ஆம் ஆண்டிலும், அதன்பின் அது சில திருத்தங்களுடன் 1924-ஆம் ஆண்டிலும் அன்றைய மைசூர் அரசும், சென்னை மாகாண அரசும் செய்துகொள்ளப்பெற்றது.
இந்த ஒப்பந்தம், மேலும் கர்நாடகத்தில் மைசூரில் 1924-இல் ஓர் அணையும், தமிழகத்தில் மேட்டுரில் 1934-இல் ஓர் அணையும் கட்டிக் கொள்ளவும் வழிவகுத்தது.
இந்த ஒப்பந்தம் ஏற்பட்ட பொழுதும், அதன்பின்னர் 1956-இல் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்ட பொழுதும், கர்நாடக, தமிழ்நாடு, கேரள மாநிலங்களின் அமைப்பு நிலைகள் வேறு வேறு; எல்லைகளும் மாறின. நில அமைப்பு மாறுபாடுகளும் எல்லை மாற்றங்களும் ஒப்பந்தத்தில் சில சிக்கல்களை உருவாக்கிவிட்டன.
அதன்பின்னர் தமிழ்நாடு பவானி ஆற்றுக்குக் குறுக்கேயும், கர்நாடகம் கபினி ஆற்றுக்கு குறுக்கேயும், ஒவ்வோர் அணையைக் கட்டிக் கொண்டன. அதன்பின்னும் கர்நாடகம், தமிழ்நாடு தீவிரமாக எதிர்த்தபோதும், நடுவணரசு இசைவு தராத நிலையிலும், ஏமாவதி ஆற்றுக்குக் குறுக்கேயும், ஆரங்கி ஆற்றுக்குக் குறுக்கேயும் இரண்டாவது மூன்றாவது அணைகளைக் கட்டிக் கொண்டது.
தமிழ்நாடு மறுத்தும், திட்டக்குழு இசைவு பெறாமலும் கட்டப்பட்ட இவ்விரண்டு அணைகளாலும் காவிரிநீர்ச் சிக்கல் மேலும் இறுகியது. இது தொடர்பாக 1968 முதல் தமிழ்நாடும், கர்நாடகமும் பேச்சுவார்த்தை தொடங்கி இன்னும் தீர்ந்தபாடில்லை. நடுவண் அரசு இந்தச் சிக்கலைக் கண்டும் காணாததும் போலவே நமக்கென்ன என்று இருந்துவிட்டது. அதனால் சிக்கல் மேலும் மேலும் இறுகி, 1970 முதல் 26 பேச்சுகள் நடந்தும் - இன்னும் தீர்வு இல்லாமல் இருந்தது.
அதன் இறுதி முயற்சியாக 1990 சூன்-2-இல் பம்பாய் உயர்நீதிமன்ற நடுவர் சிட்தோசு முகர்சி தலைமையில், காவிரி நீர் பங்கிடுவதற்கான நடுவர் மன்றத்தை உச்சநீதிமன்றத்தின் கட்டளைப்படி நடுவணரசு அமைத்தது.
அந்நடுவர் மன்றம், கர்நாடகம், தமிழ்நாடு இரண்டு மாநிலங்களிலும் பரவலான சுற்றுச் செலவு செய்தும், பார்வையிட்டும், ஆங்காங்குள்ள உழவர்களின் நேரடியான வாய்மூலங்களைக் கேட்டும், அவற்றை நன்றாக ஆய்ந்து, ஆண்டுதோறும், கர்நாடகம் தமிழ்நாட்டுக்கு 2050 கோடி கன அடி (அஃதாவது 205 டி.எம்.சி.) தண்ணீர் விடுமாறு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இந்தத் தீர்ப்புக்கு எதிராகத்தான் அது செல்லாது என்று கர்நாடகம் பங்காரப்பா சட்டமன்றம் ஒரு தீர்மானத்தையும் ஒரு புதுச்சட்டத்தையும் போட்டது.
அதன் பின்னர் நடந்த கதைதான் அனைவருக்கும் தெரியும்.
நடுவர் மன்றத் தீர்ப்பைப் பங்காரப்பா கடுமையாக எதிர்த்தார். நடுவணரசு அதை உச்சநீதிமன்றக் கருத்துரைக்கு அனுப்பியது; அது, நடுவர் மன்றத் தீர்ப்பு சரியென்றும், கர்நாடகம் அதையெதிர்த்துச் சட்டம் இயற்றியது தவறென்றும் கூறியது; நடுவணரசு அதை அரசிதழில் (கெஜட்டில்) வெளியிட்டது.
அது வெளிவந்த நாளிலிருந்து கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக வன்முறை, தீவைத்தல் முதலிய கொடுமைகள் கன்னடக் காடையர்களால் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.
இது காவிரி நீர்த் தீர்ப்புக்கு எதிராக எழுந்த போராட்டம் அன்று என்பதை அது தொடங்கிய மூன்று, நான்கு நாள்கள் நிகழ்ச்சிகளே காட்டி விட்டன.
இது திட்டமிட்டுத் தமிழர்களின்மேல்; தமிழினத்தின் மேல் நடக்கின்ற ஓர் இனப்படுகொலையே ஆகும்.
ஆயிரக்கணக்கில் தமிழர்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். பெண்களின் புடைவைகளை அவிழ்த்துவிட்டு அவர்கள் அம்மணமாகவே விரட்டப்பட்டுள்ளனர்.
இக்கலவரங்களால் 2000-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரையர்கியுள்ளன. ஓரிலக்கத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் பாதுகாப்புத்தேடி தமிழகத்திற்குள் தங்கள் உடைமைகளையும் வீடு வாசல்களையும் விட்டுவிட்டுத் தங்கள் உயிர்களைப் பாதுகாத்துக்கொள்ள வந்துள்ளனர். இன்னும் வந்த வண்ணமாகவே உள்ளனர்.
இந்தியாவின் உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கொச்சைப்படுத்தியது பங்காரப்பாவின் மேலுள்ள கடுமையான குற்றமாகும். அதற்காகவே அவரைப் பல தண்டனைகளுக்கும் உள்ளாக்கலாம்.
அத்துடன் அவர் தூண்டிவிட்டதன் பேரிலேயே இக்கொடுமைகள் நிகழ்ந்தன என்று கர்நாடக முன்னாள் முதல்வர் இராமகிருட்டிண கெக்டே கூறுவது மிகமிக உண்மையானதாகும்.
ஆட்சியில் ஊழலும் கட்சியில் எதிர்ப்பும் பங்காரப்பா தேடிக் கொண்ட இழிவுகளாகும். இவற்றைத் திசைதிருப்பவே இவர் இக்கலவரங்களைத் தூண்டி விட்டார் என்று கெக்டே கூறியுள்ளார்.
1983-இல் இலங்கையில் தமிழர்களைச் சிங்களவர் கொடுமைப்படுத்தியதைப் போல், இங்கும் தமிழர்கள் கொடுமைக்கும் அழிவுக்கும் உள்ளாக வேண்டியுள்ளது பற்றித் தமிழ் நலம், தமிழர் நலம் கருதும் தலைவர்கள் சிந்திக்க வேண்டும்.
இத்தனை கொலை, கொள்ளை, தீவைப்பு, மாந்தர் இழிவு, பொருள் சேதங்கள் நடந்தும் நடுவணரசு, அதன் தலைமையமைச்சர் நரசிம்மராவ். அவரின் அமைச்சர்கள், இந்திரா கட்சித் தலைவர்கள் எனப்படுவோர் ஒரு கண்டனம், சிறு வருத்தம், கண்டிப்பு - எதுவும் சொல்லவில்லையே..!
அதுதான் இந்தியா. அதுதான் பார்ப்பனிய ஆட்சி..!
தமிழினம் அழிக்கப்பட வேண்டும் என்பதுதான் நடுவணரசின் கோட்பாடு. கொள்கை. மறைமுக ஏற்பாடு. எல்லாம்..!
ஒற்றுமையும் ஒருமைப்பாடும் வெறும் பேச்சளவில்தான்.!
இலங்கையில் தமிழர்கள் அழிக்கப்படுகையில், அது அயல்நாட்டுச் சிக்கல், நாம் தலையிடுவது கூடாது என்று ஞாயம் பேசினர், இங்குள்ள அரசியல் தலைவர்கள்...!
ஆனால், இங்கேயே ஒரு மாநிலத்து மக்கள் இன்னொரு மாநிலத்து மக்களை அழித்து ஒழிக்கிறார்களே - அதை என்னவென்று கூறி அமைதி சொல்வார்கள்..?
எல்லாவற்றுக்கும் விடை ஒன்றுதான். காவிரி நீர்ச்சிக்கலை இனச் சிக்கலாக மாற்றி விட்டார் பங்காரப்பா!
இனி, தமிழினம் தமிழர்கள் . தங்களைத் தாங்களே காத்துக் கொள்ள வேண்டியது தான். அதன் நோக்கம் (இலட்சியம்). இனி, தமிழ்நாடு தனியாகப் பிரிந்தால்தான் தமிழர்கள் வாழமுடியும் என்ற நிலைக்குப் போவதுதான் என்றால் அதைக் காலமே இத்தகைய சூழல்களை உருவாக்கட்டும்.!
— தமிழ்நிலம், இதழ் எண். 151, பிப்பிரவரி, 1992
விடுதலைப் புலிகளை ஆதரிப்பதும்,
தனித்தமிழ் நாடு கேட்பதும் தேசவிரோதமன்று!
பாவலரேறு அவர்களின் அறிக்கை!
தமிழ் இனம் கடுமையான - மிகக் கொடுமையான ஒரு காலகட்டத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. தமிழுக்காக, தமிழினத்திற்காக, தமிழ்நாட்டுக்காக உழைப்பவர்களெல்லாரும் ‘தீய சக்திகள்' என்றும், 'தேச விரோதிகள்'. என்றும் 'நாடு கடத்தப்பட வேண்டியவர்கள்' என்றும் குற்றஞ்சாட்டப் பெற்றுச் சிறைகளில் வைக்கப்பட்டு வருகிறார்கள். - அவர்கள். மேல் கறுப்புச் சட்டங்கள் பாய்ந்திருக்கின்றன.
அண்மையில் தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில், தமிழர்களின் அரசியல், பொருளியல், இனவியல், வாழ்வியல் உரிமைகளுக்காகப் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்களாகிய பெருமைக்குரிய மருத்துவர் - இராமதாசு, பண்ணுருட்டி இராமச்சந்திரன், பேராசிரியர் தீரன், தலித் எழில்மலை முதலியவர்களால் சென்னையில் கூட்டப்பெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க 'தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில்', வெளிப்படுத்தப் பெற்ற ஞாயமான, உண்மையான கருத்துகளையும், கோரிக்கைகளையும், தீர்மானங்களையும் தாங்கிக் கொள்ள இயலாத பார்ப்பனிய முதலாளிய அரசு, அத்தலைவர்களின் மேலும், அம்மாநாட்டில் பேசிய தமிழ்த் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், கடல் தனசேகரன், மணியரசன், தியாகு முதலிய துணிவும் நேர்மையும் கொண்ட தமிழினத் தலைவர்கள் மேலும் தேசவிரோதம், சதி முதலிய கடுமையான சட்டங்களைச் சுட்டிக் குற்றவாளிகளாக்கி அவர்களைப் பொறுப்பில் ளிெவராதபடி சிறைப்படுத்தியுள்ளது. இது மிகவும் கண்டிக்கத் தக்கதும் எதிர்த்துப் போராடத்தக்கதுமான ஒரு கொடுமையான அடக்குமுறையாகும்.
இலங்கையில், சிங்கள அரசின் கொடுமைகளுக்கும் கொலை வெறிக்கும் இன அழிப்புக்கும் ஆளாக்கப்பட்ட தமிழினத்தைக் காக்க வேண்டியும் தங்களுக்கென்று இறைமையுள்ள ஒரு தனித்தமிழ் ஈழ நாட்டை உருவாக்கிக் கொள்ளவும், தங்கள் உயிர்களையும் மதியாது, பலவகை அழிவுகளுக்கும் இடையில் எழுந்து போராடி வரும் விடுதலைப் புலிகளாகிய தமிழினப் போராளிகளைத் தவறாகப் புரிந்து கொண்டு, அவர்களைக் கொடுமையாளர்கள் என்றும் வன்முறையாளர்கள் என்றும் கொள்ளையர்கள் என்றும் இழிவுபடுத்தி அவர்கள் இயக்கத்தை இங்குத் தடைப்படுத்தியும், அங்கு நேர்ந்த கொடுமைகளுக்குத் தப்பி இங்கு வந்த இலக்கக் கணக்கான ஏதிலி(அகதி)களை இங்கிருந்து விரட்டியடித்தும் வருகின்ற செயல்களைக் கண்டித்து அவர்களின் நேர்மையான, ஞாயமான கோரிக்கைகளை எடுத்துப் பேசுவது, எப்படித் தேசவிரோதம் ஆகும்?
பாலத்தீனர்களின் விடுதலையைப் பற்றியும், தென்னாப்பிரிக்கர்களின் அரசியல் உரிமைகளைப் பற்றியும் இங்குள்ள தலைவர்களும் நாமும் பேசவில்லையா? அங்குள்ள மக்களுக்காகப் போராடி வரும் தலைவர்களான யாசீர் அராபத்தையும் மண்டேலாவையும் நாம் வரவேற்றும், பாராட்டியும் நம் இந்திய அரசு அவர்களுக்குப் பற்பல உதவிகளையும் பரிசுகளையும் வழங்கவில்லையா? அவையெல்லாம் தேச விரோதமில்லாத பொழுது, 'சதி'யில்லாதபொழுது, தமிழீழ விடுதலையைப் பற்றியும் தம்பி பிரபாகரனைப் பற்றியும் பேசுவது மட்டும் எப்படி தேசவிரோதமும் சதியும் ஆகும்?
இனி, இவையன்றித் தமிழ்நாட்டுக்கும் தமிழின மக்களுக்கும் ஞாயமாகக் கிடைக்க வேண்டிய அரசியல், பொருளியல், மக்களியல் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதும், கருத்துகள் கூறுவதும், கோரிக்கைகள் வைப்பதும எப்படிக் குற்றமாகும்? இவையெல்லாம் குடியரசு அமைப்பிலுள்ள ஒரு குடிநாயக ஆட்சியின் நடைமுறைகள் இல்லையா? தாக்கமுற்ற ‘பாதிக்க’ப்பெற்ற மக்கள் தங்கள் இன உரிமைகளையும், வாழ்வியல் உரிமைகளையும் பேசுவது எழுதுவது எப்படித் தவறாகும்? தமிழர்கள் இந்தியாவின் ஒரு தேசிய இனமில்லையா? இங்குள்ள மற்ற தேசிய இனங்களைப் போல இத்தமிழ்த் தேசிய இனமும் தன்னுரிமை கேட்பதும், இனி அதுவும் நிறைவேறாதபொழுது, தனிநாடு கேட்பதுந்தான் எப்படித் தேச 'விரோத' 'சதி' ஆகிவிடும்? அத்தகைய குரல் எழுப்புதல்கள், கோரிக்கை வேண்டல்களே குற்றம், சதி, தேச விரோதம் என்றால், குடியரசின், மக்களாட்சியின் இலக்கணம்தான் என்ன என்பதை ஆட்சியாளர்கள் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டாமா?
அண்மையில் இரும்புத் திரைக்குப் பின்னால், பொதுவுடைமைக் கொள்கை என்ற பெயரில் மக்கள் நலத்துக்கு எதிரான அனைத்ததிகார அடக்குமுறை ஆட்சி நடந்த உருசியா, அதன் நோக்கத்திற்கு எதிராகச் சின்னா பின்னப்பட்டுப் போய்விட்டது. இந்த உலக நாடுகளின் ஆட்சியாளர்களுக்கே ஒரு தலைசிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.
தேசியத் தன்னுரிமை என்பது ஏதோ மக்கள் நலத்துக்கு மாறான கோட்பாடு அன்று. அப்படியே தன்னாட்சி உரிமை - தனிநாட்டுக் கொள்கை என்பதும் அரசியல் கொள்கைக்கே ஆகாத கோரிக்கையும் அன்று. மக்களரசின் படிநிலை (பரிணாம) வளர்ச்சியே அவை.
இந்தியா ஒற்றுமையுடனும் ஒருமைப்பாட்டுடனும் இருக்க வேண்டும் என்று சொல்பவர்கள், ஏதோ மக்கள் நலம், நாட்டு நலம் கருதுகிறவர்கள் போலும், தன்னுரிமை. தன்னாட்சி அல்லது தனியாட்சி என்று கோருபவர்கள் மக்கள் நலன், நாட்டு நலன்களுக்கு மாறாகச் சிந்திப்பவர்கள் போலும் - ஆளும் வகுப்பினரால், அரசினரால் ஒரு மாயையான ஒரு தவறான எண்ணம் மக்களிடையில் உருவாக்கப்படுகிறது. இது மக்கள் நலனுக்கே எதிரான சிந்தனையாகும்.
வழி வழியாக அடக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் அடிமைப் படுத்தப்பட்டும் வரும் ஓர் இனம், தன்மான உணர்வு கொண்டு, தனக்குள்ள தான் இழந்துபோன வாழ்வியல் உரிமைகளுக்காக குரல்கொடுப்பதும், போராடுவதும் தவறு என்று எந்த அரசியல் நலச் சிந்தனையாளரும் இதுவரை கூறியதில்லை.
இக்கால் ஆட்சியிலுள்ள பார்ப்பனீய முதலாளிய ஆட்சியாளர்தாம் இதற்குக் குதர்க்கமான பொருளை எடுத்துக்கொண்டு மக்கள் நலத்துக்கு விரோதமான பொருளை அதற்குத் தந்து, மக்களிடையில் தவறான கருத்துப் பரப்புதலை உருவாக்கி வருகின்றனர். ஒற்றுமை என்பதும் ஒருமைப்பாடு என்பதும் அதிகாரத்தாலோ அடக்குமுறையாலோ, உருவாக்கப்படுவன அல்ல. அவை ஓர் ஆட்சியின் கீழ் உள்ள மக்களிடையில் தானே உருவாகி, உணர்வு அடிப்படையில் வளர்ந்து மலர்ச்சியடைய வேண்டிய ஓர் அரசியல் மெய்ம்மம் (தத்துவம்) ஆகும். இதை வெறும் கருத்துப் பரப்புதலாலும் (பிரச்சாரத்தாலும்) கலை, பண்பாட்டுக் கூத்துகளாலும் உருவாக்கிவிட முடியாது என்பதைத் தமிழக முதல்வர் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.
மக்கள் நலக் கருத்துகளை அவை எந்த வடிவில் எந்தக் கோணத்தில் இருந்தாலும் அவற்றை வளர விடுவதே நலமான மக்களாட்சிக் கோட்பாடாகும். ஆளும் வகுப்பினர் தங்கள் ஆட்சி அதிகாரம் பறிபோய் விடுமே என்னும் அச்சத்தால் அவற்றை அடக்கி ஒடுக்க முற்படுவார்களானால், அவை வெட்ட வெட்டத் தழைக்கும் வெள்வேல மரம் போல் பூதாகாரமாக வளர்ந்து, ஆட்சி அதிகாரங்களையே ஆட்டங்காணச் செய்யும் என்பதே மக்களாட்சி வரலாறாகும்.
இதை நன்றாக உணர்ந்து, அதிகாரமும், காவல்துறையும் தம் கையில் உள்ளது எனும் எக்களிப்பில் முதலமைச்சர் செயலலிதா வரம்பு மீறிய அடக்குமுறைகளையும் ஒடுக்கு முறைகளையும் கடைப்பிடித்து, மக்கள் நலம் கருதும் தலைவர்களையும் சிந்தனையாளர்களையும் சிறைப்பிடிப்பதும், அவர்கள் மேல் வீணான பழிகளையும் குற்றச்சாட்டுகளையும் கூறித் தண்டிக்க முற்படுவதும் ஆட்சியின் எதிர்க் காலத்தையே சிதைப்பதாகும் என்று எச்சரித்துக் கூற விரும்புகிறோம்.
எனவே நலுமான அரசியல் நடைமுறைகளுக்கு வழியமைத்துக் கருத்து வேறுபாடுகளைக் கருத்தளவிலேயே எதிர்கொள்ள முயலுமாறு முதலமைச்சரையும் ஆளும் வகுப்பினரையும் அன்புடனும் கடமையுணர்ச்சியுடனும் கேட்டுக் கொள்வதுடன், சிறைப் படுத்தியுள்ள தலைவர்களை விடுவிக்கவும் வேண்டிக்கொள்கிறோம்.
இவ்வாறு பாவலரேறு பெருஞ்சித்திரனார் தம் அறிக்கையில் கூறியுள்ளார்.
—தமிழ்நிலம், இதழ் எண். 159, அத்தோபர், 1992
பாவலரேறு
பெருஞ்சித்திரனார்
அவர்களின்
நூல்கள்
• பாவியக்கொத்து 22.00
• ஐயை 30.00
• கழுதை அழுத கதை 35.00
• கொய்யாக்கனி 25.00
• கற்பனை ஊற்று 40.00
• திருக்குறள் மெய்ப்பொருளுரை - தொகுதி 1 100.00
• திருக்குறள் மெய்ப்பொருளுரை - தொகுதி 2 120.00
• திருக்குறள் மெய்ப்பொருளுரை - தொகுதி 3 120.00
• திருக்குறள் மெய்ப்பொருளுரை - தொகுதி 4 100.00
• வேண்டும் விடுதலை 120.00
• பெரியார் 40.00
• கணிச்சாறு(பெருஞ்சித்திரனார் பாடல்கள்)
முதல் தொகுதி 50.00
2ஆம் தொகுதி 90.00
• நூறாசிரியம் 100.00
• தன்னுணர்வு 5.00
• பாவேந்தர் பாரதிதாசன் 25.00
• இலக்கியத் துறையில் தமிழ் வளர்ச்சிக்கான ஆக்கப்பணிகள் 5.00
• ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள் 100.00
• சாதி ஒழிப்பு 40.00
• செயலும் செயல் திறனும் 90.00
• ஓ!ஓ! தமிழர்களே! 11.00
• தனித்தமிழ் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 10.00
• நெருப்பாற்றில் எதிர் நீச்சல் 6.00
• இளமை விடியல் 50.00
• இட்ட சாவம் முட்டியது 10.00
• மொழி ஞாயிறு பாவாணர் 50.00
• எண் சுவை எண்பது (அச்சில்)
• மகபுகுவஞ்சி (அச்சில்)
• அறுபருவத் திருக்கூத்து (அச்சில்)
• கணிச்சாறு (பெருஞ்சித்திரனார் பாடல்கள்)
- (தொகுதி 3 முதல் 8 வரை) (அச்சில்)
• பாவலரேறு பெருஞ்சித்திரனார் கட்டுரைகள் (அச்சில்)
• வாழ்வியல் முப்பது (அச்சில்)
• தமிழிழம் (அச்சில்)
மற்றும்
• பாவலரேறு நினைவேந்தல் மலர் (முதலமாண்டு) 80.00
• பாவலரேறு வாழ்க்கைச் சுருக்கம் 40.00
• மொழிஞாயிறு பாவாணர் மலர் 100.00
கருத்துகள்
கருத்துரையிடுக