அறிவுலக மேதை பெர்னாட்சா
வரலாறு
Back
அறிவுலக மேதை பெர்னாட்சா
கா. அப்பாத்துரையார்
மூலநூற்குறிப்பு
நுற்பெயர் : அறிவுலக மேதை பெர்னாட்சா (அப்பாத்துரையம் - 8)
ஆசிரியர் : கா.அப்பாதுரையார்
தொகுப்பாசிரியர் : முனைவர் கல்பனா சேக்கிழார்
பதிப்பாளர் : கோ. இளவழகன்
முதல்பதிப்பு : 2017
பக்கம் : 20+340 = 360
விலை : 450/-
பதிப்பு : தமிழ்மண் பதிப்பகம், எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை 600 017, தொ.பே.: 24339030, செல்: 9444410654
மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in
தாள் : 16.0 கி. மேப்லித்தோ, அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 11.5 புள்ளி, பக்கம் : 312
கட்டமைப்பு : இயல்பு படிகள் : 500
நூலாக்கம் : கோ. சித்திரா
அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)
அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.
நுழைவுரை
தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர்.
பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம்.
தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும்.
தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம்.
தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார்.
அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன.
இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும்.
தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள்
கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலை
யிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர்
திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன்,
திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர்.
இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய ‘கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும்’சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி.
நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
“ஆக்கத்தை எனக்கிந் நாட்டார்
அளித்திட்ட அறிவை யெல்லாம்
தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே
செலவிடக் கடமைப் பட்டேன்.”
- பாவேந்தர்
கோ. இளவழகன்
தொகுப்புரை
மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்!
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின.
“அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார்.
பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார்.
சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன.
- தனித்தமிழ் இயக்கத் தோற்றம்
- நீதிக் கட்சி தொடக்கம்
- நாட்டு விடுதலை உணர்ச்சி
- தமிழின உரிமை எழுச்சி
- பகுத்தறிவு விழிப்புணர்ச்சி
- இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர்
- புதிய கல்வி முறைப் பயிற்சி
- புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம்
இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன.
“தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது!
அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்!
பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக,
- உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல்.
- தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல்.
- தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல்.
- தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல்.
- திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல்.
- நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல்.
இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது.
பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது.
உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன.
1. தமிழ் - தமிழர் - தமிழ்நாடு
2. வரலாறு
3. ஆய்வுகள்
4. மொழிபெயர்ப்பு
5. இளையோர் கதைகள்
6. பொது நிலை
பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும்.
இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின்
உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன.
கல்பனா சேக்கிழார்
நூலாசிரியர் விவரம்
பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார்
இயற்பெயர் : நல்ல சிவம்
பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989
பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி
பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி)
உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர்
மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு
வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா
தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி
பள்ளிக் கல்வி : நாகர்கோவில்
கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம், இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி ‘விசாரத்’, எல்.டி.
கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி)
நூல்கள் : 120 (ஆங்கிலம், 5)
இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை.
பணி :
- 1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர்.
- 1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர்.
- பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு.
- 1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி
- 1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர்.
- 1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர்
அறிஞர் தொடர்பு:
- தொடக்கத்தில் காந்திய சிந்தனை.
- 1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு
விருதுகள்:
- மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது,
- 1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் ’சான்றோர் பட்டம்’, ‘தமிழன்பர்’ பட்டம்.
- 1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் ’கலைமாமணி’.
- 1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய ’திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம்.
- மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய ’பேரவைச் செம்மல்’ விருது.
- 1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர்.
- 1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார்.
- இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது.
பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்:
- அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005.
- பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007.
பதிப்பாளர் விவரம்
கோ. இளவழகன்
பிறந்த நாள் : 3.7.1948
பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625,தஞ்சாவூர் மாவட்டம்.
கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு
இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல்
ஆற்றியுள்ள பொதுப்பணிகள்
1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர்.
பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் ’ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர்.
உரத்தநாட்டில் ’தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர்.
பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ’உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர்.
தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும்,
19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர்.
பொதுநிலை
தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர்.
தொகுப்பாசிரியர் விவரம்
முனைவர் கல்பனா சேக்கிழார்
பிறந்த நாள் : 5.6.1972
பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம்.
கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர்
இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
ஆற்றியுள்ள கல்விப்பணிகள்
- அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி.
- திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு.
- புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர்.
- பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார்.
- பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார்.
- 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
- மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார்.
- இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார்.
- செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார்.
நூலாக்கத்திற்கு உதவியோர்
தொகுப்பாசிரியர்:
- முனைவர் கல்பனா சேக்கிழார்
கணினி செய்தோர்:
- திருமதி கோ. சித்திரா
- திரு ஆனந்தன்
- திருமதி செல்வி
- திருமதி வ. மலர்
- திருமதி சு. கீதா
- திருமிகு ஜா. செயசீலி
நூல் வடிவமைப்பு:
- திருமதி கோ. சித்திரா
மேலட்டை வடிவமைப்பு:
- செல்வன் பா. அரி (ஹரிஷ்)
திருத்தத்திற்கு உதவியோர்:
- பெரும்புலவர் பனசை அருணா,
- திரு. க. கருப்பையா,
- புலவர் மு. இராசவேலு
- திரு. நாக. சொக்கலிங்கம்
- செல்வி பு. கலைச்செல்வி
- முனைவர் அரு. அபிராமி
- முனைவர் அ. கோகிலா
- முனைவர் மா. வசந்தகுமாரி
- முனைவர் ஜா. கிரிசா
- திருமதி சுபா இராணி
- திரு. இளங்கோவன்
நூலாக்கத்திற்கு உதவியோர்:
- திரு இரா. பரமேசுவரன்,
- திரு தனசேகரன்,
- திரு கு. மருது
- திரு வி. மதிமாறன்
அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு:
- வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14.
அறிவுலக மேதை பெர்னாட்சா
முதற் பதிப்பு - 1950
இந்நூல் 2003இல் வசந்தா பதிப்பகம், சென்னை - 88. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது.
நூன்முகம்
திருவள்ளுவர், கௌதம புத்தர் ஆகியோர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த உலகப் புகழ்பெற்ற பண்டை உலகப் பெரியார்கள். கீழ்த்திசையுலகில் அவர்கள் பண்டைப் புகழுடன் போட்டியிடவல்ல இக்காலப் பெரியார் காந்தியடிகள். அவரைப் போலவே மேல் நாடுகளில் பண்டை உலகப் பெரியார்களுடன் போட்டியிடத் தக்க இக்கால அறிவுலக மேதை பெர்னார்டுஷா. பொதுவாக, பெரியார்களுள் பலர் தம் காலத்துக்குப் பின்னரே புகழாட்சி பெறுவர். ஆனால், அறிஞர் பெர்னார்டுஷா, காந்தியடி களைப்போல, தம் வாழ்நாள் காலத்திற்குள்ளேயே உலகறிந்த புகழ்வேந்தர் ஆகியுள்ளார்.
பெர்னார்டுஷா ஒரு தலைசிறந்த ஆங்கில நாடக ஆசிரியர். இங்கிலாந்தின் பழங்கால நாடக ஆசிரியரான ஷேக்ஸ்பியர் இன்று உலக மேடையெங்கும் புகழ் நாட்டியுள்ளார். பெர்னார்டுஷா தம் காலத்துக்குள்ளேயே, உலக மேடையில் தனியாட்சி செலுத் தினார். இஃது ஒன்றே அவருக்குப் பெரும்புகழ்தரப் போதியது. ஆனால் அவர் பெருமை இத்துடன் அமையவில்லை. அவர் செய்தியிதழ் எழுத்தாளர், கலை ஆய்வுரையாளர், வசைத்துறை யாளர், கட்டுரையாளர், புனைகதையாளர் ஆகிய மற்றப் பல எழுத்தாண்மைத் துறைகளிலும் பெருமதிப்புப் பெற்றவர். அவர் இயற்றிய நாடகங்கள், புனைகதைகள், கட்டுரைகள் அள விறந்தன. அவை பொது மக்களாலும், அறிஞராலும் பெரிதும் பாராட்டப் பெறுபவை.
ஷா ஒரு எழுத்தாளர் மட்டுமன்று; அவர் ஒரு சிறந்த அறிஞர்; ஒரு சிறந்த சீர்திருத்தவாளர். சீர் திருத்தவாளிகளி டையேகூட அவர் ஓர் அறிவுப் புரட்சியாளராக மதிப்பிடத் தக்கவர். இதற்கேற்ப, அவர் வாழ்க்கை ஒரு நீண்ட போராட்ட மாகவே இருந்தது. அவர் வறுமையினிடையே பிறந்தார். தம் வறுமையை எதிர்த்தே முதலில் அவர் போராடவேண்டியிருந்தது. இதில் போராடி அவர் வெற்றிகண்டார். இவ்வெற்றி செல்வரை ஆட்சியாளரையோ சார்ந்துபெற்ற வெற்றியன்று. தனியாக நின்று தன் முயற்சியினாலும் தற்சார்புடனும் பெற்ற வெற்றி. அதே சமயம் சீர்திருத்தவாதியாகிய அவர் பொதுமக்களைத் தட்டிக்கொடுத்தோ, அவர்கள் உணர்ச்சியைத் தூண்டியோ மலிவான புகழ்பெறவும் நாடவில்லை. மேலும் அவர் தம் வாழ்க்கைப் போராட்டத்தில் தாம் வெற்றிபெற்றதுடன் நிற்க வில்லை. அடிக்கடி தம்மையும் தம் நலனையும் மறந்து, உலகின் வறுமை, போலித்தனங்கள், மடமைகள் ஆகியவற்றையும் எதிர்த்துச் சாடினார். இவற்றிலும் அவருக்குப் பேரளவு வெற்றி கிடைத்தது.
அவர் வாழ்க்கையில் எதிர்நீத்து நீந்தி வியத்தகு வெற்றி கண்ட தற்காலப் பெரியார். அவர் வாழ்க்கை வரலாறு மாணவ இளைஞர்க்கும் நங்கையருக்கும் ஓர் அரும் பொருட் சுரங்கம் ஆகும். எதிர்கால வாழ்வு பற்றிக் கனவு காண்பது இளமை உள்ளம். எதிர்கால உலகம் பற்றியும் அது கனவு காணவேண்டும். இவ்விருவகையிலும் ஷாவின் வாழ்க்கை வருங்கால உலகின் சிற்பிகளாகிய இளைஞருக்குப் படிப்பினையாகத்தக்கது.
ஷா பிறந்தது 19-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில். அவர் நம்மைவிட்டகன்றது 20-ம் நூற்றாண்டின் நடுவிலேயே. இவ்விரண்டு எல்லைகளுக்கிடையே அவர் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்காலம் வாழ்ந்திருக்கிறார். எனவே அவர் உலகப் பெரியார் மட்டுமல்லர்; நிறைநீள்வாழ் நாள் பெரியார்கூட. மன்னர் ஆட்சியிடையே விக்டோரியா அரசி ஆட்சி மிக நீண்ட ஆட்சி. அவ்வாட்சியின் பிற்பாதி முழுவதும் வாழ்ந்து, ஷா அடுத்த நான்கு மன்னர் ஆட்சியையும் நான்கு தலைமுறை களையும் கண்டவர். அவர் வாழ்வு நமக்கு ஒரு நூற்றாண்டின் படப்பிடிப்பாகவும், நான்கு தலைமுறைகளின் வாழ்வாகவும் விளங்குகிறது.
இந்திய மாநிலத்திலுள்ள நமக்கு, அவர் நீண்ட வாழ் நாளில் ஒரு தனி அக்கறை ஏற்பட இடமுண்டு. இந்தியாவில் பிரிட்டனின் முடியாட்சி ஏற்படுவதற்கு முன்னரே அவர் வாழ்க்கை தொடங்கிற்று. ஆனால் அவர் இயற்கை யெய்துமுன் இந்தியா பிரிட்டன் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றுக் குடியர சாய்விட்டது. படைவீரர் கிளர்ச்சி என்று ஆங்கிலேயரால் குறிக்கப்பெறும் முதல் இந்திய விடுதலைப் போராட்டமும், இந்தியப் பெருநாட்டாண்மைக் கழகத்தின் (Indian National Congress) தோற்ற வளர்ச்சி களும், இந்திய விடுதலையியக்கமும், யாவும் அவர் வாழ் நாளுக்குட்பட்ட செய்திகளே. அவர் இந்தியாவில் ஓர் ஆடல் அரசின் வீழ்ச்சியையும் ஒரு புது அரசின் எழுச்சியையும் கண்டவர். அத்துடன் இந்தியாவில் காந்தியடி களுக்கு முன்பு விடுதலை இயக்கத்தை நடத்திய வீரமாதரார் ஆன அன்னை வாசந்தி என்று அனிபெஸண்டம்மையார் அவரைப் போல் அயர்லாந்தில் பிறந்து அவருடனிருந்து இங்கிலாந்தில் விடுதலை இயக்கங்களை நடத்தியவரே. வாழ்நாளின் பிற் பகுதியில் அவர் இந்தியாவுக்கு வந்து இந்தியப் பெரு நாட்டாண்மைக் கழகத்தில் தலைவராகவும், விடுதலைப்போர்த் தலைவராகவும் உழைத்தார். விடுதலை இயக்கத்துக்காகச் சிறை சென்று அல்லலுற்ற இந்தியத் தலை வருள் அவர் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாவின் வாழ்க்கை பலவகைப் புதுமைகளும் தனிச் சிறப்புக் களும் உடையது. அவர் நீண்ட வாழ்நாள் அச்சிறப்புக்களுள் ஒன்றுமட்டுமே.
மனித வாழ்க்கை வளம்பெற்று உயர உதவும் பண்புகளே நாகரிகப் பண்புகள். அதன் வளர்ச்சியைத் தடுக்கும் மாசுகள், களைகள், நச்சுப் பண்புகள் ஆகியவையும் பல. வளர்ச்சிக்குரிய பண்புகள் இவை; தளர்ச்சிக்கும் அழிவுக்கும் வழி வகுக்கும் பண்புகள் இவை என்று நமக்கு எடுத்துக்காட்டுபவர்களையே நாம் அறிஞர் என்கிறோம். மனித நாகரிகத்தின் அடிப்படை உழைப்பாளிகள் இவர்களே. இவ்வறிஞர் அறிவைப் பயன்படுத்தி, அவர்களுடன் ஒத்துழைத்து, நாகரிகப் பண்பை வளர்ப்பவர்கள் கலைஞர்கள். இவர்கள் வாழ்க்கையிலுள்ள பாலைவனங்களைச் சோலைவனங்களாக்கக் கனவு காண்பவர். குறைபட்ட நம் இயற்கையுலகின் அருகே, நிறையுலகாக மற்றொரு கனவுலகை அவர்கள் நமக்குப் படைத்தளிக்கின்றார்கள். கவின்நலமிக்க அக் கனவுக் காட்சிகளால், அவர்கள் நம் உணர்ச்சியைத் தூண்டு கிறார்கள். உணர்ச்சி செயலார்வமளிக்கிறது. அவ் ஆர்வம் நம்மை இயக்க, நாம் அக் கனவுகளை நனவாக்க முயல்கிறோம். இத்தகைய முயற்சிகளில் தாமும் முனைந்து, முனையும் வீரர் களையும் இயக்குபவர்களை நாம் பெரியார் என்கிறோம்.
மேற்கூறிய அறிஞரிடையே ஓர் அறிஞராகவும், கலை ஞரிடையே ஒரு கலைஞராகவும், வீரரிடையேயும், பெரியாரிடை யேயும் ஒரு வீரப்பெரியாராகவும் விளங்கியவர் பெர்னார்டுஷா! இத்தகைய முழுநிறை வாழ்வுப் பெரியார் பிறந்த நாட்டிலுள்ள மக்கள், ‘எங்கள் நாட்டில் ஷா பிறந்தார்’ என்று பெருமையடை யலாம். ஆனால் அவர் ஒரு நாட்டுப் பெரியார் மட்டுமல்லர்; ஓர் உலகப் பெரியார். ஆகவே, ‘நம் உலகில், அதுவும் நம் காலத்தை ஒட்டியே அவர் வாழ்ந்தார்’ என்று நாமும் பெருமைப்படலாகும். பெரியார் பிறக்கும் நாடு என ஒரு தனி நாடோ இருக்க முடியாது. அதுபோலவே பெரியார் பிறக்கும் காலம் என ஒரு தனிப்பட்ட காலமும் இருக்கவேண்டும் என்பதில்லை. இது நமக்கு - சிறப்பாக இளைஞருக்கு - நம்பிக்கையும் ஊக்கமும் தரத்தக்க செய்தி. ஏனெனில் இது நம்மைப் பற்றியும், நம் காலத்தைப்பற்றியும் நமக்கு நம்பிக்கை யூட்டவல்லது.
நாகரிகத்தில் பிற்பட்ட நாடுகளில் நாகரிக ஒளிபரப்பிய நல்லார் உண்டு. நலிவுற்ற பழங்கால நாகரிகங்களைத் தட்டி யெழுப்பிய நல்வீரர் பலர். ஆனால், பெர்னார்டுஷாவோ உலகின் நாகரிகமிக்க காலத்தில் - 19,20-ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்; நாகரிகமிக்க மேலை ஐரோப்பிய நாடுகளையே தட்டியெழுப்பி யவர். பொதுமக்களிடையே கரந்து வழங்கும் தப்பெண்ணங் களையும் தவறான மரபுகளையும் எடுத்து விளக்கும் அறிஞர் பலர். ஆனால், பொது மக்களைமட்டுமன்றி அறிஞருல கையே ஆட்டிப் படைக்கும் பல போலி மரபுகளையும், புத்துருவில் மறைந்து வளரும் அநாகரிக காலச் சின்னங்களையும் எடுத்துக் காட்டிச் சாடியவர் பெர்னார்டுஷா. அவர் பொது மக்களின் கண்களை மட்டுமின்றி அரசியலார் கண்களையும் இவ்விரு சாராருக்கும் அறிவூட்டும் அறிஞருலகின் கண்களையும் திறந்தார்.
பழமைப் பற்றுடைய நாடுகளில் மக்கள் வாழ்க்கைப் பண்புகளில் பற்றிய காலத்துக் கொவ்வாத பழமைப் பாசடையை நீக்கப் பாடுபட்டவர், பாடுபடுபவர் உண்டு. ஆனால் பழமையில் மட்டுமன்றி, புதுமையிலும் பாசடை உண்டு என்றும்; ஆராயாப் பழையகுருட்டு நம்பிக்கைகளைப் போலவே, ஆராயாப் புதியகுருட்டு நம்பிக்கைகளும் உண்டு என்றும் அறிஞர் ஷா விளக்கினார். அவர் செயல் பழமையில் புதுமை யூட்டியசெயல் மட்டுமன்று, புதுமையில் புதுமை யூட்டிய செயலும் ஆகும். அடிமை நாடுகளில் அடிமைத்தனத்தை நீக்கப் பாடுபடுபவர் பலர். நாட்டு மக்கள் உள்ளத்தில் தோய்ந்த அடிமைப் பண்பு களைப் போக்கச் செயலாற்றும் அறிவுவிடுதலை வீரர் பலர். ஆனால், அடிமை நாடுகளின் மக்கள் அடிமைப் பண்புக்கு ஆட்பட்டிருப்பது போலவே, ஆதிக்க நாடுகளின் மக்களும் ஆதிக்கப் பண்புக்கு அடிமைப்பட்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டியவர் ஷா. அடிமை நாட்டின் ஏழை மக்கள் அடிமைத் தனத்தை வேண்டா வெறுப்பாகவே மேற்கொள்வர். ஆதிக்க நாட்டின் ஏழை மக்களோ, ஆதிக்கக் குழுவினரின் ஆதிக்கத்துக்கு அடிமைப்பட்டிருப்பதுடன், ஆதிக்கப் பண்பு என்ற அம்மயக்க வெறி காரணமாக அதே அடிமைப் பண்பை அரவணைத்து மகிழ்வர். மெலியாரை வாட்டி மகிழும் வலியாருக்கு ஷா தந்த விளக்க எச்சரிக்கைகள் இவை!
பெர்னார்டுஷா வாழ்ந்த நாடு பிரிட்டன். அது பாதி உலகளாவிய பேரரசின் தலைமை பூண்ட நாடு. அவர் வாழ்க்கை தொடங்கிய காலமோ விக்டோரியா ஆட்சிக் காலம்.
“ஆளுக, ஆளுக! பிரிட்டா னியா!
அலைகடல் ஆளுக, பிரிட்டானியா!!”
என்று வெற்றி வீறாப்புடன் பிரிட்டானியர் பாடிய காலம் அது. ஆனால், அதே பாட்டின் அடுத்த அடிகளில் அவர்கள் தொடர்ந்து,
“ஆளுக, ஆளுக! பிரிட்டானியா!
அலைகடல் ஆளுக பிரிட்டானியா!!
பிரிட்டானியர் என்றும்,
அடிமைகள் ஆகமாட்டார்!!!”
என்று பாடினர். இந் நாட்டுப் பாடலின் முதலிரண்டு அடி களிலும், பின் இரண்டு அடிகளிலும் உள்ளீடாகக் காணப்படும் முரண்பாட்டைக் கண்டு பெருநகை நகைத்த பெரியார் அவர். பேரரசாட்சியின் இறுமாப்பு, செல்வத்தின் செழிப்பு, அறிவிய லாற்றலின் அளவிலா வெற்றி எக்களிப்பு இத்தனையும் தம் வாழ்வின் தாயகத்துக்கு, தம் இனத்தவருக்கு, தம் மொழி யினருக்குத் தான் என்ற நிலை இருக்கும் இடத்தில், எவர்தான் கவலைப்படுவர், முன்பின் பார்ப்பர், சிந்திப்பர்? ஆனால், ஷா இந் நிலையிலேயே கவலைப்பட்டார்; முன்பின் பார்த்தார்; சிந்தித்தார்; பிறர் எவரும் காணாத உண்மைகளைக் கண்டார்! வெற்றி, இறுமாப்பு, எக்களிப்பு ஆகியவற்றில் தன்னை மறந்திருந்த பிரிட்டானியாவுக்கு - உலகையே திருத்தி ஆட்கொள்ளப் புகுந்த மேலையுலகுக்கு - அவர் அவ்வெற்றியின் போலித் தன்மையை, இறுமாப்பின் சிறுமையை, எக்களிப்பின் உள்ளீடான வெறுமையைக் கண்டுணர்ந்து காட்டத் துணிந்தார். பிரிட்டனிலேயே பொதுமக்களை வாட்டுகின்ற வறுமையையும், தணிய மாட்டாப் பெரும் பசியையும், மருத்துவ உதவிப் பெருக்கத்திடையே பெருகும் பிணிகளையும் அவர் அறிவுக் கண்ணொளி கூறு படுத்திக் கண்முன் கொணர்ந்து நிறுத்திற்று. நாகரிக முகட்டில் மிதப்பதாகப் பெருமித உணர்ச்சிகொண்ட வெள்ளையுலகுக்கு, அதன் மக்கள் வாழ்வை உருக்குலைத்துவந்த போலிப் பண்பு களை அவர் வெளிப்படுத்தினார்.
ஷாவின் அறிவுத் தாக்குதலுக்கு அரசியல் வாழ்வும் பொது வாழ்வும் மட்டும்தான் உள்ளாயின என்றில்லை. பொருளியல் வாழ்வு, கலை வாழ்வு, சமய வாழ்வு ஆகிய எல்லாத் துறைகளுமே உட்பட்டன. உயர் வகுப்பினர் இறுமாப்பை அவர் கண்டித்தார். அவர்களைப் பார்த்துத் தாமும் அவர்களைப்போல உயர் வகுப்பினராய்விட வேண்டும் என்னும் விருப்பங்கொண்டு அலையும் உயர் நடுத்தர வகுப்பினரின் போலித் தகிடு தத்தத்தையும்; உயர் வகுப்பினராக நடக்க மாட்டாமல், நடப்பதாக நடிக்கும் கீழ் நடுத்தர வகுப்பினரின் அவல நிலையையும் அவர் நையாண்டி செய்து ஒறுத்தார். விலங்கினும் கீழான வறியோரின் நிலை பற்றி எச்சரித்தார். சமயவாதி களிடையே மலிந்திருந்த புறவேடப் பசப்பையும், அன்பிலாக் குருட்டு ஆசாரங்களையும், அறிவிலாச் செயல்முறைக் கட்டுப்பாடுகளையும் அவர் அருள் நோக்குத் துளைத்தரித்தது. மற்றும் கலையை இன்பப் பொழுது போக்கெனக்கொண்டு, இன்பத்துக்காக மக்கள் கீழ்த்தர உணர்ச்சிகளைத் தூண்டி, இவற்றால் இன்ப வகுப்பினர்களைப் பசப்பிப் புகழ்ந்து பொருளீட்ட வகைதேடும் போலிக் கலைஞரின் இயல்புகளையும் அவர் மக்கள் மன்றமேற்றினார்!
சமயத் தலைவர்களையும் சமயவாதிகளையும் ஷா எதிர்க்கத் துணிந்தார் என்ற காரணத்தால், தொடக்கத்தில் அவரைப் பலர் சமயப் பகைவர், கடவுள் மறுப்பாளர் என்று கருதியதுண்டு. ஆனால், ‘எதையும் எதிர்க்கத் தயங்காத இப் பெரு வீரர், எவரையும் என்றும் தாக்கவில்லை,’ என்னும் உண்மையை உலகம் படிப்படியாகக் கண்டுகொண்டது. அவர் சமய வேறுபாடு கடந்த, சமயம் கடந்த, கட்சி, நாடு, வகுப்பு ஆகிய வேறுபாடுகள் யாவும் கடந்த அருளாளர் என்பதை உலகம் நாளடைவில் அறிய லாயிற்று. மேலும், கடவுள் மறுப்பாளர் துறையில் அவரை ஒரு கடவுள் மறுப்பாள நல்லார் என்றும்; கடவுட்பற்றாளர் துறையில் அவரை ஒரு கடவுட் பற்றாளநல்லார் என்றும் கொள்ளுதல் சாலும். ஏனெனில், பொதுவாகக் கடவுட் கோட்பாட்டாளர் கொள்ளும் குணங்குறிக் கடவுளை அவர் ஏற்றதில்லை. ஆயினும் உயிராற்றல் என்ற ஓர் இயக்கு முதற்பொருளை அவர் தம் வாழ்க்கைக் கோட்பாட்டின் அடிப்படை மெய்ம்மையாகக் கொண்டு பலவிடத்தினும் பலவாற்றாலும் வற்புறுத்தினார்.
சமயவாதிகளின் சமயம் பலவிடங்களில் நூலளவிலோ, சொல்லளவிலோ நின்றுவிடலாம். செயலளவில் அது பின்பற்றப் பெறாதிருப்பதே பெரும்பான்மை. பலவிடங்களில் பின்பற்று வதாக அது நடிக்கப்பெறுவதும் உண்டு. சிலவிடங்களில் சொல்லை உள்ளமும் செயலும் மறப்பதும்; செயலை உள்ளமும் சொல்லும் மறுப்பதும் அரிதன்று. ஷாவின் கோட்பாடோ, எத்துறையிலும் உண்மைச் சமயத்துக்குரிய கண்டிப்பும் நேர்மையும் உடையது. அவர் நினைத்ததைக்கூறத் தயங்கவில்லை; கூறியதைச் செய்யத் தயங்கவில்லை: அத்துடன் விரும்பியதையும், விரும்பாததையும் நினைவில்கொண்டு சிந்திக்க அவர் என்றுமே பின் வாங்கிய தில்லை. எனவே, அவர் கோட்பாடுகளை அவர் நூலில் காண்பது போலவே, அவர் வாழ்க்கையிலும் காணலாம்.
அவர் ஊனுணவு மறுத்தவர். குடிமறுத்தவர். ஆனால், ஊனுணவை மறுத்த அவர், கொலையை அதனினும் வெறுத்தார். கொலையினும் மிகுதியாக நோவூட்டித் துன்புறுத்துவதை வெறுத்தார். நம் கீழ் நாடுகளில் உயிர்களை உண்ணாமல், கொலைசெய்ய ஒருப்படுபவர் உண்டு. கொலை செய்ய ஒருப் படாமல் உயிருடன் வதைப்பவர், கொடுமை செய்பவர் உண்டு. உயிர்களைப்பேணி, மனிதனைத் துன்புறுத்த, இழிவுபடுத்திப் பிரிக்கத் தயங்காதவர் உண்டு. ஷா இத்தகையர் அல்லர். அறிவியலில் பெருமதிப்புடையவராயினும், உயிரறுவை முறையை அவர் கண்டிக்க அஞ்சவில்லை. குடி மறுத்த அவர், குடியின் கேட்டினுக்கு வறுமையும் அறியாமையும் காரணம் என்று கூறக் கூசவில்லை.
ஷாவை சமயப் பகைவர், கடவுள் மறுப்பாளர் என்று கூறியவர் அவரது அருள்திரு ஜோன் நாடகத்தைக் கண்ணுற்ற பின் வாயடைத்தனர். ஆனால் வாயடைத்த பின்னும் அவர்கள் உள்ளம் அடைக்கவில்லை. அவர் பரந்த மனப்பான்மையும் மக்கட்பற்றும் பல சமயவாதிகள் மனத்தை உறுத்தின. மற்றும் கடவுள்மறுப்பினும் மிகுதியாக, குடிமறுப்பும் ஊன்மறுப்பும் அவர்களுக்குத் தலையிடியாயிருந்தன. கீழ்நாடுகளில் கடவுட் பற்றுடன் பிறப்பு உயர்வு தாழ்வுக் கொள்கையும் இணைக்கப் பட்டுள்ளது. பிறப்பு வேறுபாட்டைக் கண்டிப்பவன் எவ்வளவு நல்லவனாயினும், எத்துணை உயரிய அருளாளனாயினும், கடவுட் பகைவன் எனத் தூற்றப்படுகிறான். அதுபோலவே மேலையுலகில் கடவுட்பற்றுடன் ஊனுணவும் மட்டுக்குடியும் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றை மறுப்பவர் கடவுள் மறுப் பாளர் எனக் கோவிலார், மடத்தாரால் தூற்றப்படுகின்றனர். அன்பகத்தில்லா இப் போலிச் சமயவாளிகளைக் கடவுள் வந்து திருத்த முற்பட்டால்கூடத் திருத்துதல் அரிது என்னலாம்! ஏனெனில் இவர்களுக்குச் சமயம் ஒரு பிழைப்புக்கான நெறி; அவர்களுக்கு நல்வாய்ப்பளிக்கும் ஒரு வாழ்க்கைச் சட்டம். கடவுளோ, அச்சட்டத்துடன் மக்கள் அறியாமையைப் பிணிக்கும் ஒரு நம்பிக்கைத் திருகாணி. திருகாணி திருகுவதாகக் கண்டால், சட்டம் கழன்றுவிடுமென்று அவர்கள் அஞ்சுவர். ஆனால் ஷா போன்றார் அறிவுரையும் அறவுரையும் மக்கள் உள்ளங்களில் பரவுந்தோறும், மக்களுக்குள்ளே மக்களாய் வாழும் இத்தகை யோரின் உள்ளங்களும் பண்பட்டே தீரும்!
ஷாவின் அருளாண்மை, வீரமும் அஞ்சாமையும் உடைய அருளாண்மை. அவர் அறிவியலின் பெருமையை வானளாவப் புகழ்ந்தவர். ஆனால், டால்ஸ்டாயையும் காந்தியடிகளையும் போல, அவர் உயிர் அறுவை முறையைக் கண்டித்தார். சமயத்தைப் பிழைப்புத் தொழிலாகக்கொண்ட குருமாரை அவர் கண்டித்தது போலவே, மருத்துவத்தைத் தொண்டூழியம் எனக் கருதாது, பிழைப்பூதிய நெறியாகக் கொண்டவரையும் அவர் தாக்க முற்பட்டார். நல்ல கோயில்களைவிட, நல்ல நாடக மேடைகள் தூய்மையான ஒழுக்கத்திற்கு உதவத்தக்கவை என்று அவர் கூறினார். ஆனால் ஷேக்ஸ்பியரின் நாடகங்களில்கூடத் தாம் கருதிய கலை ஒழுக்கமுறையின் அடிப்படை இல்லை என்று அவர் ஓயாது தாக்கினார்.
மற்ற எல்லாத் துறைகளிலும் ஷா கொண்டுவர எண்ணிய சீர்திருத்தங்களைவிட, கலையில் அவர் கொண்டுவர நினைத்த சீர்திருத்தமே புதுமைவாய்ந்தது. கலை என்பது மக்கள் வாழ்க்கைப் பண்பை உள்ளவாறு, ஆனால் மனங்கொள்ளும் வகையிலும், பயன் நல்கும் வகையிலும் தீட்டி, அதன் நல்ல பண்புகளையும் தீய பண்புகளையும் விளக்க வேண்டும். கலைஞர்களுள் பெரும் பாலார் ஆண்பெண் பாலார் தொடர்பு ஒன்றே வாழ்க்கை எனக் கொண்டு, உடலழகை அடிப்படைப் பண்பாக்கி, சிற்றின்ப மயக்கத்தையே கலைப்பொருளாக்கினர். ஆனால், இதனை வாழ்க்கையின் பொழுதுபோக்கின்பங்கள், ஓய்வுக்கால எழுச்சிகள் எனக்கொண்டு, வாழ்க்கைமேம்பாட்டுக்கு உழைக்கும் ஆடவர், பெண்டிரே உலக நாகரிக வளர்ச்சியில் பங்கு கொள்பவர் என்று ஷா கருதினார். இன்றைய உலகில் பெண்பாலார் தம் அறிவுத் திறம் முழுவதையும் அக அழகைப் பேணுவதில் செலவுசெய்யா மல், புறஅழகைப் பேணுவதில் செலவுசெய்கின்றனர். ஆடவரைப் பெருஞ்செயல் செய்யத்தூண்டி, அவர்களுடன் ஒத்துழைப்பதற்கு மாறாக, அவர்கள் ஆடவர் தற்சார்பை அடக்க முனைகின்றனர். இவற்றைக் கண்டு ஷா காதலையும், அதையே தன் முழுப் பண் பாகக் கொண்ட போலிப்பெண்மையையும் ஒருங்கே கண்டித் தார். ஆனால், இதனால் அவர் காதல் வாழ்வையே வெறுப்பவர் என்று பலர் எண்ணிவிடக்கூடும்; எண்ணுகின்றனர். இது தவறு. அவர் ஒரு மாதை மணந்து வாழ்ந்தார் என்பதை இத்தகையோர் எண்ணிப் பார்க்கவேண்டும். எனினும், அவர் மற்றக் கணவரைப் போல், மனைவியைத்தம் வாழ்க்கை வாய்ப்புக்களுக்கு ஒரு துணைப்பொருள் என்று கொள்ளாமல், அவரிடம் தம் வாழ்க்கையை முற்றிலும் ஒப்படைத்தார். அவர் துணைவியாரின் உடலழகை மதித்தவராக மட்டுமிராமல், அவர் அறிவையும் திறனையும் மதித்து, அவரை ஒரு தோழராகக் கொண்டார்.
கடவுள் என்ற சொல்லைப்போல, காதல் என்ற சொல்லை யும் அவர் வழங்க மறுத்தார் என்பது உண்மையே. இரண்டு சொல்லும் போலிப்பண்பாளரால் மதிப்பிழந்து போயிருந்தன. கடவுள் என்ற சொல்லின் உண்மையான கருத்தை உயிராற்றல் என்ற புதுச்சொல் மூலம் அவர் விளக்கினார். அதுபோலவே வாழ்க்கையின் மறைஆற்றல்* என்று அவர் உண்மைக் காதலுணர்ச் சியைக் குறிக்கிறார்.
காதலில்லாப் புனைகதைகள், நாடகங்கள் எழுத நாட்டங் கொண்டவர் அரியர்; நாட்டங்கொண்டு வெற்றி பெற்றவர்கள் அதனினும் அரியர். ஷா இங்ஙனம் வெற்றி பெற்றவருள் தலை சிறந்தவர். அவர் இயற்றிய காதலில்லா நாடகங்களும், காத லுணர்ச்சியை எதிர்த்த நாடகங்களும் ஒன்றல்ல, இரண்டல்ல; பல. ஆயினும் அவை வாசிப்பவர்களுக்குச் சலிப்புத் தருவதில்லை என்று கட்டாயமாகக் கூறலாம். இவற்றுள் பல, ஷேக்ஸ்பியரின் நாடகங்களைப் போலவே சிறப்புடையவை என்பதும் குறிப்பிடத்தக்கன.
எதையும் எதிர்ப்பவர், எதையும் மறுப்பவர், எதையும் நையாண்டி செய்பவர் என்ற பெயர் ஷாவுக்கு ஒட்டிக் கொண்டு விட்டது. உண்மையில் இவ் வெண்ணத்தை வலியுறுத்தி, மக்களி டையே பரப்பியவர் அவரே என்னலாம். எக்கொள்கையிலும் சார்பாளர், மறப்போர் ஆகிய இருதிறத்தினரிடமிருந்தும் தம்மைப் பிரித்து, தம் தனித் தன்மையையும், விருப்பு வெறுப்பற்ற அறிவுச் சார்பான நடுநிலையையும் வற்புறுத்தவே அவர் இம் முறையைக் கையாண்டார். இது வெற்றிபெறவே, அவர் இதனை ஒரு புதுக் கலையாக்கிவிட்டார். முனைப்பான இறுமாப்பு நடையும் மனித இனத்தையே எள்ளி நகையாடுவதுபோன்ற பெருநகையும் அவர் தாமே விரும்பி மேற்கொண்ட இத்தகைய பண்புகளே. இவை உண்மையில் இறுமாப்பல்ல; பகை, தன்னல உணர்ச்சிகள் சார்ந்தவையுமல்ல. அவர் புறத்தோடாகிய அரணைத் துளைத்து, அவர் நட்புரிமை பெற்ற ஒருசிலர் இதனைக் கண்டறிந்துள்ளனர். அவர் எதிர்ப்பு, பகைமை எதிர்ப்பல்ல என்பதை அவர் குறும்புச் சிரிப்பு ஓயாது நினைவூட்ட வல்லது.
ஷா உலகப் புகழ்பெற்றவர். ஆனால், அவரது புகழிலும் ஒரு தனித் தன்மை உண்டு. பிரிட்டனைவிட அமெரிக்காவிலும், அமெரிக்காவைவிட ஐரோப்பாவிலும், அவர் உயர்வாகப் போற்றப்பட்டவர். பெர்லினிலும் நியூயார்க்கிலுமே அவர் நாடகங்கள் முதன்முதல் பெரு வெற்றி பெற்று, அவர் புகழ் பரப்பின. வருங்காலத்தில் கீழ்நாடுகளில் அவர் பண்புகள் உணரப்படுந்தோறும், அவர் புகழ் அத்திசையில் இன்னும் பரவி உயர்வுபெறும் என்பது உறுதி. அவர் உலகப் பண்பு உலகளாவுந் தோறுமே உயர்வுறுவது என்பதற்கு இதுவும் ஒரு சான்று ஆகும்.
பிரிட்டன் முதன் முதலில் ஷாவின் பண்புகளை எதிர்ப்புப் பண்புகளாக மட்டுமே காணமுடிந்தது. அப் பண்பு பொதுமக்கள் அறிவை உயர்த்திப் பொது அறிவாக்கிய பின்னரே, அவர்கள் அதனை உண்மை உருவில்கண்டு மதிக்கமுடிந்தது. எல்லா நாடுகளிலும் சிறப்பாக, பிரிட்டனிலும், அந் நாட்டின் குழுநல வாளர்களே மக்கள் பொது நல வாழ்வில் ஆக்கலாற்றலையும் அழித்தலாற்றலையும் இயக்கலாற்றலையும் உடையவராயிருந்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஷா என்றுமே புரியமுடியா ஒரு பெரும் புதிராயிருந்துவந்துள்ளார். அவர் கூறுவதில் உண்மை உண்டு என்பதை அவர்கள் உணர்வர்; ஆனால் அவர் குற்றச் சாட்டுகளை அவர்களால் அப்படியே ஏற்கமுடிவதில்லை. அவர் எதிர்ப்புத் தன்மை தம்மை நேரடியாகவோ, தனிப்பட்ட முறை யிலோ தாக்கவில்லை என்பதை அவர்கள் காண்பர்; ஆனால் அது தம்மை யறியாமல் தம்மையும், பொது மக்கள் கவனியாமல் பொதுமக்களையும் மாற்றிவருகிறது என்பதையும் அவர்கள் உணர்ந்துவந்தனர். இக் காரணங்களாலேயே, அவர்கள் பல நாளாக. அவரை மதித்தும் மதியாதவராய் இருந்தனர். முதலில் அவர்கள் அவரை ஒரு வெறியர் என்றும், பித்தரென்றும் கூறினர். பின் ஓர் அறிவுலகக் கோமாளி என்று தட்டிக்கழிக்கப் பார்த்தனர். இதனை ஷா உள்ளூற உணர்ந்துகொண்டதனால், அவர் அறிவுலகக் கோமாளியாகவே முழுதும் நடிக்கத் தொடங் கினார். அவர் அருள்நிலைப் பண்பை அறியாமல், அவரை எதிரியாகக் கொள்பவர்களின் அச்சத்தை நீக்குவதே இந் நடிப்பின் நோக்கம் ஆகும். ஆயினும், அறிஞர் அறிவுத்திறத்துக்கும், கோமாளிகளின் வெற்றுக் கோமாளித் தனத்துக்கும் இடையேயுள்ள புறத்திரை மிக நுண்ணியதே என்பதை நாம் அறிய வேண்டும்.
கீழ்நாட்டுலகில், சிறப்பாகத் தமிழ் நாட்டில், ஷா ஒரு புதிராகத் தோற்றவேண்டியதில்லை. அவர் சிறப்புக்கள் பலவற்றைப் பண்புகளாகக் கொண்ட பல பெரியார்கள் நம்மிடையே உண்டு. பழங்காலப் பெரியார்களிடையே அறிவுத் திறமும், நடுநிலை நேர்மையும் உடைய ஒரு திருவள்ளுவர் அல்லது திருமூலர், புனைவாற்றல் திறமிக்க ஒரு இளங்கோ, அல்லது மதுரைக் கூலவாணிகன் சாத்தனார், வசைத்திறமிக்க ஒரு கபிலர் அல்லது சிவவாக்கியர் ஆகியவர்கள் பண்புகளை மனத்திரையில் கொண்டு இணைத்தால், அவ் இணைப்பமைப்பு கிட்டத்தட்ட ஒரு ஷாவாகவே விளங்கக்கூடும். இக் காலத்திலும் சமய, கட்சி வேற்றுமை கடந்த ஒரு காந்தியடிகள், திரு.வி.க. (திரு.வி.கலியாண சுந்தரனார்) மக்கள் உணர்ச்சிகளை எதிர்த்து மக்களை உயர்த்தத் தொண்டாற்றிய ஒரு வ.உ. சிதம்பரம் பிள்ளை அறிவாழமிக்க வசைதேர்ந்த நாவுடைய ஒரு புதுமைப் பித்தன், நகைத்திறத்தில் நின்று அறிவூட்டும் ஒரு என்.எஸ்.கே. (நகைத்திற நடிகர் என்.எஸ். கிருட்டினனார்) ஆகியவர்கள் பண்பு களின் ஒரு கூட்டமுதுணவாக, ஒரு முழு மணிக்கோவை யாக ஷா மிளிரத்தக்கவர்.
அன்பற்ற நம் உலகில் பண்டு அன்பே உருவான ஒரு புத்தன் தோன்றினான். அவன் நிலமிசை நடந்தான்; அன்புப் பூமேல் இவர்ந்தான். அறிவுப் பண்பிலும், அன்புப் பண்பிலும் தட்டித் தடுமாறும் நம் இன்றைய உலகில், ஒரு ஷா தோன்றினார், புயலிடையே ஒரு எரிமலைபோல. ஆனால், அன்பையே அனற் கொழுந்துகளாகவும், அறிவையே புகைப் படலங்களாகவும், ஆற்றலையே பாறையுருகிய குழம்பாகவும் கொண்ட எரிமலை யாய், உறுமிக் கொண்டே நடந்தார். இறுதியில் அவரும் அறிவுப் புகழ் மலர்மீது இவர்ந்துள்ளார். அன்பின் வழி நின்றாலும், ஒப்புரவிழந்து நிற்கும் கீழ்நாடும்; அறிவின் வழி நின்றாலும், ஒப்புரவிழந்தலையும் மேல்நாடும் ஒப்புரவின் மூலம் ஒன்றுபடும் நாளில், ஷா ஒரு புதிய ஊழியின் புதுமைப் புத்தராக விளங்குவார் என்பதில் ஐயமில்லை.
இன்று மேற்குலகின் எடைமிகுந்து கீழ்த்திசை யுலகின் எடை குறைந்துள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இவற்றின் தொடர்பு மாறியிருந்தது; ஆனால், அன்றும் உலக நிலை கிட்டத்தட்ட இதுவே. இவ்வுயர்வு தாழ்வுகளால் உலகில் சரிசம நிலை கெடுகிறது. சரிசம வளர்ச்சியில்லாத உடல் நோயுற்ற உடல். உடலின் சரிசம நிலையையும் வளர்ச்சியையுமே நாம் உடல்நலம் என்கிறோம். உலகில் இன்று சரிசம நிலை ஏற்படவேண்டுமானால், தாழ்ந்துபட்டழியும் கீழ்நாடுகள் உயர்வுற வேண்டும். பெர்னார்டுஷாவின் பண்பு கீழ்நாடுகளிலும் பரந்து, பல பெர்னார்டுஷாக்களைத் தோற்றுவிப்பதன் மூலமே குணபால் உலகு உயர்வுற்று உலகில் ஒத்த பண்பும் ஒத்த அமைதியும் ஒத்த நாகரிக வளர்ச்சியும் ஏற்படும். கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்னும் வேறுபாடுகள் தோற்றுவதற்கு முன்னிருந்த ஒருபண்புநிறை பண்டைப் பேருலக நாகரிகத்தில் எஞ்சிய மாளாச் சிறுவடிவமாய்த் தமிழகம் இயங்குகிறது. இத்தகைய தமிழகத்தில் தோன்றிய இளைஞரும், நங்கையரும் அந்நிலை ஏற்பட உழைக்கும் பொறுப்புடையவர் ஆவர். பெர்னார்டுஷாவின் வரலாறு மூலமாக, அவர் பண்புக்கூறுகள் அவர்கள் உள்ளத்தில் ஊறி, உணர்விற்கலத்தல் வேண்டும். அவர் தரும் படிப்பினைகள் அவர்கள் கருத்துச் சோலைகளில் உலவவேண்டும்.
தாயக மரபு
பெர்னார்டுஷா காலங்கடந்த பெரியார். ஆனால், அவர் தாம் வாழ்ந்த காலத்தின் செல்வராகவும் விளங்கினார். அவர் புகழ் நாட்டெல்லையையும், மொழியெல்லையையும் கடந்தது. ஆயினும் அவர் வாழ்க்கைப் பண்புகள் அவர் பிறந்து வளர்ந்த தாயகமாகிய அயர்லாந்தின் மரபுச் சூழல்களையும் அவர் வாழ்ந்த தாயமாகிய இங்கிலாந்தின் மரபுச் சூழல்களையும் பொறுத் தவையே. இவ் இரு நாடுகளின் பின்னணி அறிவில்லாமல் அவர் வாழ்க்கையின் போக்கையும், அதிலுள்ள புதிர்களையும் மேல் நாட்டினரால் கூடப் புரிந்துகொள்ள முடியாது. கீழ்நாட்டின ராகிய நமக்கு அவை இன்றியமையாதவை என்று கூற வேண்டு வதில்லை.
ஷா அயர்லாந்தில் பிறந்தவர்; தம் இருபதாம் ஆண்டுவரை அங்கேயே வளர்ந்தவர். ஆயினும் அதன்பின் அவர் தம்நீண்ட வாழ்நாள் முழுவதும் இங்கிலாந்தில் கழித்தார். இருந்தபோதிலும், பசுமண்போன்ற நெகிழ்ச்சியுடைய இளமைப் பருவத்தில், அவர் உள்ளத்தடத்தின் மீது தம் அழியாத் தழும்புகளைப் பதித்த சூழல்கள் அயர்லாந்தின் சூழல்களே. அவர் வளர்ச்சியுடன் இத் தழும்புகள் வளர்ந்தனவேயன்றி, அவை என்றும் மங்கவில்லை.
அயர்லாந்தையும் பிரிட்டனையும் சேர்த்து பிரிட்டானி யத்தீவுகள்(Maps of British Ises) என்று அழைத்தல் ஆங்கிலேயர் மரபு. ஆயினும் அயர்லாந்து உண்மையில் ஒரு தனித் தீவே. சற்றுப் பெரிய தீவாகிய பிரிட்டனுக்கு அப்பால், அயர் கடற்காலுக்கு மேற்கே அஃது அமைந்துள்ளது. அரசியலிலும் அஃது இன்று தன்னாண் மையும், தற்சார்பும் உடைய தனியரசு (free state of Ireland) ஆகவே நிலவுகிறது. ஆயினும், அது தனியரசு நாடாகி விடுதலை பெற்றது 1924-லேயே. அதற்குமுன் அது பிரிட்டனின் பகுதிகளான இங்கிலாந்து, ஸ்காட்லந்து ஆகிய நாடுகளுடன் சேர்ந்து, பிரிட்டானியா ஒன்றுபட்ட அரசின் (United kingdom, GreatBritish & Ireland) ஓர் உறுப்பாகவே இருந்தது.
ஷா பிறந்துவளர்ந்த அயலார்ந்து இன்றைய தன்னாட்சி யுரிமைபெற்ற தனி அரசு அயர்லாந்து அன்று; அது 1924-க்கு முற்பட்ட, பிரிட்டானிய ஒன்றுபட்ட அரசின் உறுப்பான அயர்லாந்தே என்பது நினைவில் வைக்கத்தக்கது.
அயர்லாந்து விடுதலைபெற்றுத் தன்னாட்சி நாடான பின்பும், அயர்லாந்துடன் சேராமல் இங்கிலாந்துடனேயே சேர்ந்து, ஒன்றுபட்ட பிரிட்டன் அரசிலேயே இன்னும் உறுப்பாய் இருந்துவரும் அயர்லாந்துப் பகுதி ஒன்று உண்டு. இதுவே வட அயர்லாந்து என்று குறிக்கப்படும் அல்ஸ்டர் மாவட்டம். இன்று, விடுதலைபெற்ற அயர்லாந்துடன் அஃது ஒன்றுபடாமல், அயல் நாடாகிய பிரிட்டனுடன் ஒன்றுபட்டிருக்கிறதன்றோ? இது போலவே, அயர்லாந்து பல நூற்றாண்டுகளாக நடத்திவந்த விடுதலைப் போராட்டத்திலும், அஃது அயர்லாந்துடன் சேராமல் வேறுபட்டே நின்றது. இதுமட்டுமோ? அயர்லாந்து மக்களின் பொருளியல் வாழ்வு, மொழி வாழ்வு, பண்பாட்டியக்கங்கள் ஆகிய எல்லாவற்றிலுமே இஃது அயர்லாந்துடன் மாறுபட்டே இயங் கியது. அது பெயரளவில் வட அயர்லாந்து என்று கூறப்பட்டதே தவிர வேறில்லை. உண்மையில் அஃது அயர்லாந்தின் ஒரு பகுதியாக நிலவவில்லை. அயர்லாந்திலுள்ள ஓர் இங்கிலாந்தாக, இங்கிலாந்தின் கடல்கடந்த ஒரு மறுபதிப்பாகவே அது நிலவிற்று.
நாட்டு மக்களின் ஒரு பகுதியாகவும் இயங்காமல், அயல் நாட்டவராகவும் இயங்க நாடாத இம்மாயப் பிறப்பினத்தின் மரபறியாமல், ஷாவின் அயர்லாந்து மரபுச் சூழலை முற்றிலும் நாம் அறிந்துகொள்ள முடியாது இவ்வட அயர்லாந்துமக்கள் உண்மையில் இங்கிலாந்திலிருந்து சென்று அயர்லாந்தில் குடியேறிய ஆங்கிலப்பெருமக்களின் ¹ மரபில் வந்தவர்களே. அவர்கள் அயர்லாந்தில் சிறுபான்மையினரேயாயினும், அந் நாட்டில் ஆட்சியுரிமை பெற்ற உயர் குடியினராய் இயங்கினர். அவர்கள் ஆங்கில ஆட்சியாளரின் செல்வப் பிள்ளைகளாய், அவ்வாட்சியின் கைக்கருவிகளாய் அமைந்தனர். அந்நாட்டின் அரசியலாட்சி, மொழியாட்சி, பொருளாட்சி, பண்பாட்டாட்சி ஆகிய யாவும் அவர்கள் கையிலேயே இருந்தன. அயர்ப் பொது மக்கள் வறியோராகவும், கல்வியற்றவர்களாகவும், உருளைக் கிழங்கு முதலிய கீழ்த்தர விலங்குணவு உண்பவர்களாகவும் இருந்தனர். மேலையுலகெங்கணும் அவர்கள் ஒரு கூலியினமாய் அலைக்கழிக்கப்பட்டனர். அயர்லாந்துக்காரர் என்ற சொல் பஞ்சை ஏழைகளுக்கான மறுபெயராய் இருந்தது. ஐரோப்பிய இனங்களுக்குள்ளே தாழ்த்தப்பட்ட இனமாக வாழ்ந்தனர் அவர் கள். அவர்களிடையே வட அயர்லாந்துக்காரர் அயர்லாந்தின் ஆங்கிலேயராக, அந்நாட்டின் ஆங்கிலோ ஐரிஷ்காரராக இயங்கினர்.
மொழி, பண்பாடு, பொருளியல் வாழ்வு ஆகிய துறைகளில் இருந்த இவ்வேற்றுமைகளுடனே, 16-ம் நூற்றாண்டில் புதிதாக மற்றொரு வேற்றுமையும் வந்து புகுந்தது. இந்நூற்றாண்டில் ஐரோப்பாவில் எழுந்த சமயச் சீர்திருத்த இயக்கம் கிரித்தவ உலகை இருபெரும் படைவீடுகளாகப் பிரித்தது. வட ஐரோப் பாவின் பெரும் பகுதியும் இங்கிலாந்தும் ஸ்காட்லாந்தும் சீர்திருத்த கிரித்தவ சமயம் அல்லது புரொட்டஸ்டண்டு நெறி தழுவின. தென் ஐரோப்பாவின் பெரும்பகுதி அந்நெறி தழுவாது, கத்தோலிக்க நெறி என்ற பெயர்கொண்ட பழநெறி தழுவிற்று. வட அயர்லாந்து தன் இனத்தாயகமான இங்கிலாந்தைப் பின்பற்றி எளிதில் புரொட்டஸ்டண்டு நெறியணைந்தது. அயர்லாந்துப் பொதுமக்களோ தம்மை அடக்கி ஆண்ட ஆட்சியாளரின் இப் புது நெறியைத் தழுவாமல், கத்தோலிக்கர் களாகவே அமைந்தனர்.
உலகில் அடிமைகளாக வாழும் இனங்கள் அலைக்கழிவுறுதல் இயல்பு. அயர் மக்களோ ஆயிரக் கணக்கான ஆண்டுகள் அடிமைப்பட்டு அல்லலுற்றவர்கள். மேலும் நாகரிகமற்ற இனங்கள் நாகரிக இனங்களுக்கு அடிமைப் பட்டால், நீடித்த அலைக்கழிவு பெறமாட்டா. ஆளும் இனத்திற்கு அவர்கள் விருப்புடனோ, வெறுப்புடனோ எளிதில் அடிமைப்பட்டு நாளடைவில் அவர் களுடன் இரண்டறக் கலந்துவிடுவர். எந்த நாகரிக இனங்களும் சில நாள் போராடி நட்புரிமையால் ஒன்றுபட்டுவிட முடியும். ஆனால் பெருமித வாழ்வு வாழ்ந்த இனம் அடிமையில் வாழவும் முடியாது; எளிதில் மாளவும் முடியாது. என்புருக்கி நோயினால் பீடிக்கப்பட்ட உறுதி வாய்ந்த உடல்போல, அஃது இளைத் திளைத்துப் போராடி வதைபட்டே மாளும். ஆங்கிலேயர் இங்கிலாந்துக்கு வந்து குடியேறி நாகரிகப்படுமுன்பே அயர் நாட்டுமக்கள் நீண்டநாள் நாகரிக வாழ்வு வாழ்ந்த இனத்தவர். பண்டை ஆங்கிலேயராகிய ஆங்கிலோ - சாக்ஸானியர் ஜெர்மானியப் பகுதியிலிருந்து பிரிட்டானியாவில் வந்து குடியேறுமுன் பிரிட்டானிய தீவுகள் முழுவதிலும், தென் ஐரோப்பா முழுவதிலும் பரந்து வாழ்ந்தவர்கள். ஆகவே மற்ற எல்லா இடங்களிலும் அவர்கள் இனத்தவராகிய பண்டைப் பிரித்தானியப் பழங்குடி மக்கள் அடிமையுற்றுப் பண்பிழந்து போனபின்பும், அவர்கள் தம் பழைய உலகின் மேல்கோடியில் நின்று போராடினர். ஏழ்மையிலும் பண்பாட்டுறுதியுடன், இழிவிலும் இறுமாப்புடன் அவர்கள் பிரிட்டனின் வல்லமையை எதிர்த்தற்கான மரபுக் காரணம் இதுவே. உலகில் வேறு எந்த இனமும் நாட்டு விடுதலைக்காக இவ்வளவு நீண்டகாலம் போராடியதில்லை. புலியுடன் போராடும் முள்ளம்பன்றிகள் போல், நச்சுப் பாம்புகளுடன் போராடும் கீரியினம்போல், அவர்கள் எட்டு நூற்றாண்டுகளுக்கு மேலாகப் போராடினர்.²
பெர்னார்டுஷா பிறந்தது விடுதலைபெறாத அயர்லாந்தி லேயாயினும், வட அயர்லாந்திலன்று; அயர்லாந்தின் தலை நகரான டப்ளினிலேயே. ஆனால், அவர் குடும்பத்தினர் புரொட்டஸ்டண்டுகள்! அவர் வாழ்க்கையை ஊடுருவி நின்று நிலவி, அவர் பண்புகளை உருவாக்கிய சிறப்புடைய சிறு செய்தி இதுவே. அஃது அவர் குடும்பமரபையே இயக்கி அவர் வாழ்வில் தன் மாறாச் சுவட்டைப் பொறித்தது.
அயர்லாந்தில் புரொட்டஸ்டண்டு நெறி ஒரு சமய நெறி யாக மட்டும் இயங்கவில்லை. ஒரு வகுப்பு நெறியாகவும், ஒரு உள்நாட்டு நெறியாகவுமே இயங்கிற்று. இவ்வகையில் அது புறஉலகிலுள்ள புரெட்டஸ்டண்டு நெறியிலிருந்தும், மற்ற உலகச் சமயநெறிகளிலிருந்தும் பெரிதும் வேறுபட்டது. கிரித்தவம், இசுலாம், புத்தம், சமணம் முதலிய எல்லா உலகச் சமயங்களுமே நாடு, மொழி, இனம், வகுப்பு, பிறப்பு வேறுபாடு, நிறவேறு பாடு ஆகிய எல்லாவகைப்பட்ட எல்லைக் கோடுகளையும் கடந்து மனித உலகில் பரவியுள்ளன. அவையனைத்துமே மனித உலகை ஒன்றுபடுத்தத்தான் பாடுபடுகின்றன. புற உலகில் புரொட்டஸ் டண்டு நெறியும் சரி, கத்தோலிக்க நெறியும் சரி, இப் பொது அமைதிக்கு விலக்கல்ல. ஆனால் அயர்லாந்துப் புரொட்டஸ் டண்டு நெறி அயர்லாந்துக்குள்ளேயே பரவ முடியாத ஒன்று - அது பரவ விரும்பியதுகூடக் கிடையாது! மேலே காட்டியபடி, அஃது அயர்லாந்தின் பொதுமரபிலிருந்து உயர்குடிமக்களின் ஆங்கிலமரபைப் பிரித்துக் காட்டும் ஒரு பிரிவினைக் குறியீடாக அம்மரபினருக்கு மட்டும் உரிய ஒருதனி வேறுபாட்டுச் சின்னமாக விளங்கிற்று.
பெர்னார்டுஷா தமக்கு வழக்கமான குறும்பு நகைப்புடனும், முரண்பாட்டுச் சுவைத்திறத்துடனும் தம் நண்பர்களிடம், “நான் ஒருமுதல்தர அயர்லாந்து நாட்டான்; ஆனால், என் குடிமரபு ஹாம்ப்ஷயருக்குரியதே,” என்று கூறுவது வழக்கம். இங்கே ஹாம்ப்ஷயர் என்றது ஆங்கில நாட்டின் மாவட்டங்களுள்(shires) ஒன்றையே. தாம் அயர்லாந்து நாட்டவர் என்பதை ஷா ஏற்கத் தயங்கியதில்லை. ஆனால், ஷா மரபினர் தாம் உயர்குடியாளர் என்றும், ஆங்கில இன மரபு உடையவர் என்றும் ஓயாது வற்புறுத்தி வந்தார்கள்.
ஷா மரபினர் உண்மையில் அயர்லாந்தின் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள். எனினும், அவர்கள் வறுமை அவர் களை இவ் வகுப்பின் மதிப்புத்தரத்தைக் கூடப் பேண முடியாத அளவுக்கு வாட்டி வதைத்தது. பொதுமக்களுடன் ஒன்றுபட்டுப் போகவோ, அவர்கள் செய்துவந்த மதிப்பற்ற உழைப்புத்தொழில் களில் ஈடுபடவோ அவர்கள் விரும்பவில்லை. இந்நிலையில் அவர்கள் வறுமை ஏலமாட்டா வீம்புப் பெருமைகளை வலியுறுத்தவேண்டிய தாயிற்று. தம் வறுமையை மறைத்துக் காட்ட அவர்களுக்கு உதவிய பண்புகள் இரண்டே. ஒன்று அவர்கள் பழங்குடிப் பெருமை. மற்றொன்று அதற்கு வலிவுதரும் புரொட்டஸ்டண்டு நெறி.
அவர்கள் தங்கள் குடிமரபுக் கொடியைப் பின்னோக்கி ஹாம்ப்ஷயருக்கு எடுத்துச்சென்று, தாம் ஆங்கில மரபில் வந்த வர்கள் என்பதை வலியுறுத்திக் காட்டினர். ஆனால் இத்துடன் அவர்கள் நிற்கவில்லை. அதனை அவர்கள் இன்னும் பின்னோக்கித் தொடுத்தார்கள். ஷேக்ஸ்பியரின் மாக்பெத் நாடகத்தில் குறிப்பிடப்பெறும் ஸ்காட்லந்து அரசர் மாக்டஃவ்வுடன் அவர்கள் தம் மரபைத் தொடர்புபடுத்தினர். மாக்டஃவ்வின் மூன்றாவது புதல்வன் ஷேஃய்கை அவர்கள் தம்குடி முதல்வனாகக் கொண்டனர். இவ் இளங்கோ மரபுரிமைக் கேற்ப, இளங்கோப் பட்ட முடைய பலருடனும் அவர்கள் தொலை உறவுரிமை கொண்டாடினர்.
இவ் வுயர்குடி மரபுரிமையால் அவர்கள் வறுமை பெருகிற் றேயன்றிக் குறைய முடியவில்லை. அதைப் பின்னும் மறைக்க அவர்கள் மேற்கொண்ட பொய்ம்மை ஒழுக்க முறை களுள் புரொட்டஸ்டண்டு நெறியும் ஒரு போலி நெறியாய் உதவிற்று. ஷா குடும்பத்தினர் பலர் புரொட்டஸ்டண்டு நெறியில் முனைத்த தூநெறிக் கொள்கை அல்லது அகத்துறவொழுக்க நெறி (Puritanism) தழுவினர். குடிமறுப்பு, இன்பவாழ்வு மறுப்பு, ஆடையணி எளிமை ஆகியவை இந்நெறியாளர் வற்புறுத்திய உயர் கோட்பாடுகள்.
ஷாவின் தந்தைமரபின் பல பண்புகளுக்கு அவர் பாட்டனும் தந்தையும் எடுத்துக் காட்டுக்கள் ஆவர். அவர் பாட்டனார் டப்ளின் நகரில் ஒரு சட்ட அறிவுரையாளர்(solicitor) ஆக இருந்தார். செல்வமீட்டும் திறனைவிட அவருக்கு அதனைச் செலவிடும் திறன் மிகுதி. குடும்பம் பேணவகை செய்யாமலே, அவர் குடும்பம் பெருக்கி, தம் பின் மரபினரை வறுமையில் உழலும்படி விட்டுச் சென்றார். ஆண்களும் பெண்களுமாகப் பதின்மூன்று பிள்ளை களுடன் அவர் கைம்பெண் மனைவி பெரிதும் அல்லலுற்றார். இப் பிள்ளைகளுள் ஒருவர்தாம் பெர்னார்டுஷாவின் தந்தையாரான ஜார்ஜ் கார் ஷா.
குடும்பத்தினரின் மரபிறுமாப்பு, திறமையின்மை, ஏல மாட்டா நல்லெண்ணம் ஆகியவற்றுக்கு ஜார்ஜ் கார் ஷா பேரிலக் கமாயமைந்தார். அவர் அயர்லாந்து உயர் வழக்கு மன்றத்தில்(four courts of dublin) ஒரு நற்பணியில் அமர்ந்து தொண்டாற்றியிருந்தார். 1850-ல் அயர் பொதுமக்களின் சார்பான கிளர்ச்சிகளின் பயனாய், ஆட்சி யாளர் பல செலவினங்களைக் குறைக்கத் திட்டமிட்டனர். அதன் ஒரு பகுதியாக இம்மன்றப் பணித் துறைகள் குறைக்கப் பட்டன. ஜார்ஜ் கார் ஷா இதனால் பணியிழந்தார். ஆயினும் அவருக்கு ஆண்டுக்கு 60 பொன் ஓய்வு உதவிச் சம்பள உரிமை தரப்பட்டிருந்தது. இதைக்கொண்டு அவர் அமைந்து வாழ்ந்தி ருக்கலாம். ஆனால், பேரவாவால் உந்தப்பட்ட அவர் இவ்வுதவிச் சம்பள உரிமையை உடனடிக் காசாக மாற்றிப் பெற்றுக் கொண்டார். கூலவாணிகப் பங்குக் களத்தில் அவர் இத் தொகையை ஈடுபடுத்தி வணிகச் சூதாட்ட மாடி அதனை இழந்தார்.
திறமையின்மையினாலும், ஊதாரித்தனத்தினாலும் ஜார்ஜ் கார் ஷா வெறுங்கையராய்விட்டார். ஆனாலும் அவர் பேரவாவும் பெருமித எண்ணங்களும், அவரை ஓயாது திறமையில்லா முயற்சிகளில் ஈடுபடுத்திக்கொண்டே இருந்தன. இம் முயற்சி களால் குடும்பம் நடத்தப் போதிய வருவாய் அவருக்கு என்றும் கிடைத்ததேயில்லை. ஆனால், தம் குடி மதிப்பை வெளிக்குப் போற்றிக் கொள்ளுமளவுக்கு எப்படி யாவது எதையாவது புரட்டி அவர் கீழ்மேலாக உருண்டு கொண்டேதானிருந்தார். நகரில் அவருக்கு ஒரு பண்டக சாலையும் ஒரு பணிமனையும் இருந்தன. நகர்ப்புறத்தில் சற்றுத் தொலைவிற்குள் டால்ஃபின்ஸ் பார்ன்(dolphins barn) என்னும் ஒரு மாவரைக்கும் ஆலை இருந்தது. ஆலையில் மிகுதி வருவாய் கிடைக்காவிட்டாலும், கிடைத்த வருவாய் மூலம் அவர் தம் குடிக்கூலியை மட்டுங் கொடுக்க முடிந்தது. அவர் புறப் பகட்டு வாழ்க்கைச்சகடம் இவ்வாறாகத் தட்டுத் தடங்கலின்றி உருண்டோடிற்று.
ஷாவின் அன்னையார் திருமதி ஷா ஆகுமுன்பு லூஸிந்தா எலிஸபெத் கர்லி என்ற கன்னிப்பெயர் உடைய வராயிருந்தார். அவர் தந்தை வால்ட்டர் பாக்னல் கர்லி என்ற நடுத்தர வேளாண் குடிச் செல்வர். லூஸிந்தா இளமையிலேயே தாயை இழந்தவர். ஆகவே, அவர் தம் சிற்றன்னையாரிடம் வளர்ந்தார். சிற்றன்னை யார் செல்வ முடையவர். தம் செல்வத்தை லூஸிந்தாவுக்கே உரிமையாக்கவும் எண்ணியிருந்தார். ஆயினும் அவர் கண்டிப்பு லூஸிந்தாவுக்குப் பிடிக்கவில்லை. தந்தையும் இதற்கிடையில் மறுமணம் செய்துகொண்டார். பிறப்பகத்திலும் வளர்ப்பகத் திலும் இங்ஙனம் ஆதரவற்ற நிலையில் நங்கை லூஸிந்தா வாழ்வில் கசப்புற்று, தன்னை மணங்கோரிய முதல் ஆடவனை ஆய்ந்தோய்ந்து பாராமல் மணக்கத் துணிந்தாள். இவ்வாடவனே ஜார்ஜ் கார் ஷா. மண வினையின் போது கணவன் 40 ஆண்டினர்; லூஸிந்தாவுக்கு 20 ஆண்டுகளே.
தம் விருப்பத்தைக் கேளாமல் மணந்துகொண்டாள் என்பதற்காகத் திருமதி ஷாவின் சிற்றன்னையார் அவருக்குத் தம் செல்வ உரிமையை மறுத்துவிட்டார். ஜார்ஜ் கார் ஷாவின் வருவாயற்ற நிலையும், மண வினைக்குப் பின்தான் தெரியவந்தது. அத்துடன் அவர் குடிமறுப்புப் பற்றி வானளாவப் பேசிவந்தவரா யினும், தம் வறுமையை மறைக்க மறைவில் குடித்தும் வந்தார். திருமதி ஷாவின் வாழ்வு நெருப்புச்சட்டியிலிருந்து நெருப்பில் குதித்த வாழ்வாயிற்று. ஆனால், இந்நிலையிலும் அவர் மனந்தளர வில்லை. அவருக்கு நல்ல இசைக்குரிய குரல் இருந்தது. அவர் தாயக மரபும் அவருக்குச் சிறிது. இசைப் பயிற்சி தந்திருந்தது. இவ்விசையைப் பயன்படுத்தி அவர் இப்போது வருவாய்க்கான வாழ்க்கைப் போராட்டக் களத்தில் தாமே நேரடியாக இறங்கத் துணிந்தார்.
திருமதி ஷாவின் இசைத்துறை முயற்சிக்கு ஜார்ஜ் ஜான் வாண்டலேர் லீ என்னும் குடும்ப நண்பர் பலவகையிலும் உதவியாயிருந்தார். அவர் திருமதி ஷாவுக்கு இசைப் பயிற்சியில் தேர்ச்சி உண்டாக்கினார். மேலும், இசையாசிரியராகமட்டு மிருந்த அவரை லீ இசையரங்குகளுக்கு அழைத்துச்சென்று, தம் பக்கப்பாடகராக அமர்வித்துக்கொண்டார். இதனால் திருமதி ஷாவுக்குச் சற்று மிகுதி ஊதியம் கிட்டிற்று. லீ அவர்கள் குடும்ப நண்பராய் அவர்களுடனேயே குடியிருந்து அவர்கள் குடும்பப் பொறுப்பிலும் பங்குகொண்டு உதவினார்.
இங்ஙனம் பொருளீட்டும் ஆடவர் மரபினைத் தட்டிக் கழித்த தந்தை, இல்லத்தில் ஒதுங்கி வாழும் பெண்டிர் மரபினைத் துணிந்து உதறி உழைக்க முன்வந்ததாய் ஆகிய இருவர் மரபுகளின் உரிமைச் செல்வராய்த் தோன்றியவரே, மேனாட்டிலக்கிய உலகின் புரட்சிச் செம்மல் பெர்னார்டுஷா. அவர் 1856 ஜூலை 26-ல் பிறந்தார். அவர் தாய் தந்தையருக்கு ஆண்மகவு அவர் ஒருவரே. ஆனால், அவருக்கு இரண்டு தமக்கையர் இருந்தனர். மூத்தவர் லூஸி, இளையவர் எலினார் ஆக்னிஸ். பிந்தியவர் 1876-ல் எலும்புருக்கி நோயால் இயற்கையெய்தினார். “முந்திப் பிறந்தவர்; எல்லாருடைய உள்ளத்திலும் முந்திய நேச உரிமை கொண்டவர்; ஆனால், அவர் யாரையும் நேசித்ததில்லை,” என்ற சொற்களால் மூத்த தமக்கையார் லூஸியின் பண்போவியத்தை ஷா நமக்கு வரைந்தளித்துள்ளார்.
தற்கால ஆங்கில இலக்கிய உலகில் ஷாவுக்கு அடுத்த படி சிறப்புடையவர் ஆஸ்கார் ஒயில்டு. இவரும் அயர்லாந்து நாட்டினர்; ஷா பிறந்த ஆண்டிலேயே அவரும் பிறந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
ஷா பிறந்த அடுத்த ஆண்டிலேயே வட இந்தியாவின் முதல் விடுதலைப்போர் கிளர்ந்தெழுந்ததென்பதும் நினைவில் கொள்ளுதற்குரியது.
ஷாவுக்குக் குடும்ப மரபாகவந்த செல்வம் கார்லோப் பண்ணை என்ற மனையிடம் ஒன்றே. இதுவும் அவர் தாய் வழியாக வந்ததே. தாயின் உடன்பிறந்தார் ஒருவர் இறந்தபோது தாய்வழிப் பாட்டனார் உரிமையாக அது திருமதி ஷாவுக்குக் கிடைத்தது. இது தவிரக் குடும்ப மரபில் அவர் வாழ்க்கையை உருவாக்க உதவிய பண்புகள் பெரும்பாலும் தாயின் பண்புகளே என்று கூறலாம். திருமதி ஷா தன்முயற்சியும் விடாமுயற்சியும் துணிச்சலும் உடையவர். ஷா பிற்காலத்தில் ஈடுபட்ட புதுமைப் பெண் இயக்கத்தின் பெண்மைக் குறிக்கோளுக்கு அவர் ஓர் இலக்காக விளங்கினார். அவர் இசைப்பண்பும் ஷாவின் வாழ்க்கைப்பண்புகளுள் சிறந்த ஒரு கூறாகக் கொள்ளத்தக்கது. அன்னையாரைப்போலவே, அன்னையின் நண்பர். லீயும் இவ் வகையில் அவருக்குப் பேருதவியாயிருந்தார். இருவராலும் ஷாவுக்கு ஓரளவு இசைப் பயிற்சி கிடைத்தது. ஷாவின் குரல் இதற்கேற்ற பண்புடையதா யில்லாவிட்டாலும், அவர் இசைக் கருவிகளில் பெரிதும் தேர்ச்சியடைந்தார். இசைத் துறையில் அவர் தொழில் தனி முறையில் திறம்பெற முடியவில்லை யானாலும், சுவைத்திறத்திலும், கலைபற்றிய ஆராய்ச்சியிலும் இப்பயிற்சி அவருக்கு மிகவும் உதவியாயிருந்தது. அவர் இசைத் தொழிலாளராகா விட்டாலும் அத்துறையாளர் தோழராக விளங்கினார்.
தாய் மரபைப்போல, தந்தை மரபு ஷாவுக்கு ஆக்கப் பண்புகளாக எதனையும் தரவில்லை என்னலாம். ஆனால், அவரது எதிர்ப்புப்பண்பு முழுவதும் அயர்லாந்துப் புரொட்டஸ் டண்டு நெறியிலும், தூநெறியிலும் தோய்ந்த தந்தைமரபில் வந்தவைகளே. இதைத்தவிர அவர் வாழ்க்கையை உருவாக்க உதவிய அவர் தந்தையின் தனிப் பண்பாகக் குறிக்கக் கூடியது தந்தையின் நகைச்சுவை ஒன்றே. இதுபற்றிய ஒரு நிகழ்ச்சியை அவர் குறித்துள்ளார். தந்தையின் முழந்தாள் அளவாக அவர் இருக்கும் சிறுமைப்போதில், தந்தை அவரைக் கடல் நீராட்ட இட்டுச் சென்றார். நீந்தும் திறமைபற்றியும் அதன் பயன்கள் பற்றியும் அவர் புதல்வருக்கு ஒரு சிறு சொற்பொழிவாற்றினார். அதன்பின், தான் இவ் அருந்திறமையின் துணையால், தம் இளவலின் உயிர்காத்த வீர நிகழ்ச்சியைப் பெருமையுடன் எடுத்துக் கூறினார். கூறி முடியுமுன் இதற்கு ஒரு செயல் விளக்க மாக அவர் கடலில் குதித்து நீந்தினார். அதன்பின் அவர் ஷாவை வாய்பேசாது வீட்டுக்கு அழைத்து வந்தாராம்!
நகைத்திறம் நீங்கலான தந்தையின் பண்புகளும் தந்தை மரபுப் பண்புகளும் முற்றிலும் ஷாவுக்கு எச்சரிக்கைப் பண்பு களாகவே உதவின. தந்தையின் பண்புகளைப் பற்றி ஷாவே அவருக்கு வழக்கமான வாய்மைத் திறத்துடனும், நகைச்சு வையுடனும் பல நிகழ்ச்சியோவியங்கள் வரைந்து தந்துள்ளார். அவர் தற்பெருமை அவர் உயர்ந்த குறிக்கோள்கள் ஆகியவற்றுக் கும், செயல் முறைக்கும் எத்தகைய பொருத்தமும் இருந்ததில்லை. “ஏழ்மையிலும் முற்றிலும் வாய்மை தவறாத வணிகர் என் தந்தை என்று ரஸ்கினைப்போல நான் என் தந்தையைப்பற்றிப் புனைந்து கூற முடியவில்லை. அவர் வாய்மை தவறாதவரோ, தவறு பவரோ எனக்குத் தெரியாது. ஆனால், ஒன்றுமட்டும் என்னால் கூறமுடியும். இருவகையிலும் அவர் திறமையற்றவர்.” அவர் தொழிற் களத்தைப்பற்றித் தரும் நற்சான்று இதுவே. “என்னளவில் அவர் ஆலையின் ஒரே பயன் யாதெனில், அஃது எனக்கும் என் விளையாட்டுத் தோழர்களான மற்றப் பங்காளிகளின் பிள்ளை களுக்கும் நல்ல காட்சியிடமாகவும் பொழுதுபோக்கு விளை யாட்டிடமாகவும் இருந்தது என்பதே.”
ஷாவின் குழந்தைப் பருவ வாழ்வில் உண்மையில் விளை யாட்டு மிகுதி இடம்பெறவில்லை. அவரிடம் அன்புகாட்டுப வரும் மிகக்குறைவு. இந்நிலையில் சிறுமைப்போதிலேயே அவர் வாழ்வு இன்பமற்ற வறண்டவாழ்வாகவே இருந்தது. பிற்காலத்தில் அவர் தம் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களில் அவரது அக்கால உள்ள நிலைகளின் கோரமான அச்சங்கள், ஐயப்பாடுகள், வினாக்கள், குழப்பங்கள் ஆகியவற்றைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
அவர் தந்தை குடி மறுப்புப்பற்றி வானளாவப் பேசு பவராயினும், மறைவில் குடிப்பவராகவே இருந்தார். அவர் உண்மையிலேயே நல்லெண்ணமுடையவரும், குடியை வெறுத்தவரும் ஆயிருந்தார். எனவே குடி மயக்கத்தை மறைக்க அவர் அரும்பாடுபட்டார். ஆயினும், இஃது எவர் கண்ணுக்கும் மறைசெய்தியாய் இருந்ததில்லை. ஷாவின் குழந்தையுள்ளத்தில் கூட இதுபற்றி ஐயம் ஏற்படத் தொடங்கிற்று. ஒருநாள் தந்தை யுடன் உலவிவிட்டு வீட்டுக்கு வந்தபோது, அவர் அன்னை யாரிடம் மெள்ள, “அம்மா! அப்பா ஒருவேளை குடிப்பாரோ என்று எனக்கு ஐயமாயிருக்கிறது,” என்றாராம்! திருமதி ஷா தம்வெறுப்பையும் மனக் கசப்பையும் அடக்கமுடியாமல், முகத்தைத் திருப்பிக்கொண்டு, “ஒருவேளை, இருவேளை என்ன! எல்லாநாளும் எல்லாவேளையும் இதுதான் நிலை; அவர் மயக்கமில்லாதிருக்கும் நேரம்தான் ஏது?” என்றாராம்.
குடும்பத்திற்குள்ளிருந்தே குடிகெடுக்கும் குடிப்பேயின் கோர உருவம் அன்றுமுதல் ஷாவின் உள அமைதியைக் கெடுக்கத் தொடங்கிற்று.
தந்தையின் குடிமறுப்பு மதிப்பு இது. ஆனால், அவர் தம் குடும்ப மதிப்புப்பற்றியும் மிகக் கண்டிப்பான கொள்கையுடை யவராக இருந்தார். ‘ஷா மரபினர்’ என்றசொல்லை அவர் பெரிய அரச மரபினருக்குரிய இறுமாப்புடன் வழங்குவார். ஒருநாள் ஷா ஒரு சிறுவனுடன் விளையாடிக் கொண்டிருந்தது அவர் கண்களில் பட்டுவிட்டது. அவன் ஒரு செல்வ வணிகன் மகன் - ஆனால், அவனுடன் விளையாடியது ஷா மரபின் பெருமையைக் குலைத்துவிடும் என்று ஷாவின் தந்தை கருதினார். இதற்குக் காரணம் என்ன? அவன் தந்தை செல்வனாயினும், செல்வ மரபினன் அல்லன். அத்துடன் அவன் வணிகனாயினும், சில்லறை வாணிகம் செய்பவன் என்பது தந்தையின் குற்றச்சாட்டு.
இதுபற்றி ஷா கூறும் விளக்கமாவது:- “உயர் குடியின் பண்புகளில் கடைசிச் சின்னம் கந்தலாடை. வறுமையின் கொடுமை அக்கந்தலுக்கும் வழியில்லாது பண்ணி விடுகிறது, இவ் வயர்லாந்து நாட்டிலே! இத்தகைய நாட்டில் உழைப்பவரைத் தாழ்த்தவும், உழையா உயர்குடியினரை உயர்த்தவும் கற்றுக் கொடுக்கப்படும் முறைகளை எண்ணிப் பாருங்கள்! கடவுள் ஒருவரே என்று கூறிக்கொள்கின்றனர். ஆனால் அவர் ஒரு புரோட்டஸ்டண்டு உயர்குடி மகன் என்று அதே மூச்சில் குறிக்கிறார்கள்! வானுலகை அவர் உயர்குடியினருக்கெனக் கட்டிக் காத்து வருகிறவர். பொது மக்களோவென்றால், அவர் களுக்கு உரிய இடம் நரகமே. ஒரு கத்தோலிக்கத் திருத்தந்தை (pope) அவர்களுக்கென்று அந்நரகத்திற்குச் செல்லும் பாதையைச் செப்பனிட்டுக் காக்கிறார். உருவ வழிபாட்டாளராகிய அத் திருத்தந்தை வேறென்ன செய்முடியும்!” இவ்விளக்கத்துக்குப்பின் ஷா கூறும் முடிபாவது: “வகுப்புடன் வகுப்பையும், சமயத்துடன் சமயத்தையும் மோதவிட்டுக் கொண்டு, அவ்வேறுபாடுகளை வளர்ப்பவர்கள் என்னைச் சமூக அமைப்பின் எதிரி என்று கூறுகின்றனரே! இத்தகைய சமூக அமைப்பை வெறுக்காமல் என்ன செய்வது!”
தாய்தந்தையர், சுற்றத்தார் சமயவாழ்வில் ஷா தூநெறி யாளரின் உயர்குறிக்கோள்களைப்பற்றி அடிக்கடி கேள்விப் பட்டார். குறிக்கோளளவில் இவ்வுரைகள் அவர் உள்ளத்தைப் பற்றி அவர் உயர் அருட்பான்மையையும் தொண்டார்வத் தையும் தூண்டியிருக்கவேண்டும். ஏனெனில், அவர் என்றுமே வாழ்க்கையில் பற்றற்ற அன்பிலா வெறுப்புத் துறவியாகவோ, உலகவாழ்வைப் பழித்த வசையாளராகவோ, வாழ்க்கையை விளையாட்டாக நினைத்த இன்பவேடராகவோ இருந்ததில்லை. அத்தகையோரை மதித்ததுமில்லை. செயலளவில்மட்டும் இத்தகைய அன்புக் குறிக்கோள்களை அவர் எங்கும் காணமுடிய வில்லை. அயர்லாந்துப் புரோட்டஸ்டண்டு நெறியும் அவர் குடும்பச் சூழல் நெறிமுறைகளும் இவற்றுக்கு நேர்மாறாக இருந்தன. அன்பு, மனித இனப்பற்று, பரந்த மனப்பான்மை, ஆர்வம் ஆகிய அவர் விரும்பிய பண்புகள் அவற்றில், இல்லை. நேர்மாறாகக் கண்டிப்பு, குறுகிய மனப்பான்மை, வெறுப்பு வேறுபாடுகள், பொய்ம்மை ஆகியவற்றையே அவர் எங்கும் கண்டார். அத்தகைய பல காட்சிகளையும் அவற்றால் அவருக்கு ஏற்பட்ட கருத்துக் குழப்பங்களையும் அவர் குறித்துள்ளார். அவர் நூல்கள் பலவும் இக் குழப்பங்களுக்கு அவர் கண்ட தெளிவுரை விளக்கங்களே.
கிறித்தவர் பிறக்கும்போது அவர்களுக்கு அவர்கள் குடும்பப் பெயர் (surname) உரிமையாகிறது. அத்துடன் தனிப்பட அவர்களுக்கென இடும்பெயர் கிறித்தவப் பெயர் எனப்படும். இப்பெயரைத் திருக்கோயிலில் அவர்கள் குடும்ப நண்பராகிய ஒருவர் இருந்து சூட்டுவது வழக்கம். இவரை நற்றந்தை என்பது கிறிஸ்தவ உலக மரபு. ஷாவின் பெயரீட்டு விழாவில் குறித்த வேளையில் நற்றந்தை வரமுடியவில்லை. அவர் அச்சமயம் குடி வெறியிலிருந்தாராம். அவரது இடத்தில் கோயிற் பணியாள் ஒருவர் இருந்து நற்றந்தை யாக நடிக்கவேண்டி வந்தது.
கோயில் வழிபாடுபற்றிய ஷாவின் இளமைப் பருவ நிகழ்ச்சி களைப்பற்றி அவரே கூறுவதாவது: “நான் சிறுவனாயிருக்கும் போது ஞாயிற்றுக்கிழமைதோறும் கோயிலுக்குச் செல்லும்படி என்னை வற்புறுத்துவார்கள். இப் பொல்லாத கட்டுப்பாட்டை நான் பத்து ஆண்டாகு முன்பே மீறிவிட்டேன். மீண்டும் நான் கோயில்களுக்குச் சென்றது இருபது ஆண்டுகளுக்குப்பின், அதுவும் வெளி நாடுகளில்தான். இங்ஙனம் பின்னாட்களில் சென்றது கூடக் கலைநயம் நாடும் நோக்குடனேயே. இங்ஙனம் நெடுநாள் கோயிலுக்குச் செல்வதைத் தடுத்தவை இளமையில் இக் கோயில்களால் எனக்கு ஏற்பட்ட வெறுப்பெண்ணங்கள் தாம்! இன்றுவரை அயர்லாந்துப் புரோட்டஸ்டண்டுக் கோயிலை நினைத்தால், என் தசைநார்கள் துடிக்கின்றன. ஏனெனில் அதனைக் கட்டிய தொழிலாளிகள், கட்டியபின் அதனுள் நுழைவதனினும் பெரும் பழிச்செயல் வேறு எதுவும் இராது என்று தாமே எண்ணியவர்கள்! அக்கோயிலின் ஒவ்வொரு செங்கல்லும் ஒவ்வொரு படிக்கல்லும் மாடமும் என் உள்ளத்தில் ஒவ்வொரு தீய கருத்தைத்தான் பதித்தன! என் நூல்களில் ஏதேனும் இழிகருத்து, பொல்லாங்கு, வெறுப்புணர்ச்சி இருக்குமே யானால், அது பெரும்பாலும் அந்தச் சைத்தான் மாளிகை யிலிருந்தே வந்திருக்கவேண்டும்!”
இங்கே ஷா வெறுத்தது சமயத்தையன்று; சமயத்தின் போர்வையுள் புகுத்தி நடமாட விடப்பட்ட பல வாழ்வியல் தீமைகளையே என்று காணலாம். ஷாவின் மனத்தைச் சமயக் சூழல்கள் புண்படுத்தின. ஆனால் கலை, சிறப்பாக இசைக்கலை அப்புண்ணை ஆற்றுவதாயிருந்தது. அவர் அன்னையாரும், இசையில் ஈடுபட்ட லீ முதலிய பிற அன்பர்களும் கலைத் துறையில் உயர்குடியினர், இழிகுடியினர்; பூரோட்டஸ்டண்டு கள், கத்தோலிக்கர், அயர்லாந்து நாட்டினர், பிறநாட்டினர் என்று வேறுபாடு பாராட்டவில்லை என்பதை ஷா கண்டார். இதனா லேயே அவர் அயர்லாந்தின் சமயம் இசை ஆகிய வற்றைப்பற்றி ஓர் அழகிய ஒப்புரை விளக்கம் தந்திருக்கிறார். “மக்களை ஒருவருடன் ஒருவர் ஒன்றுபடச்செய்வது சமயம்; அவர்களைப் பிரிப்பது சமயப் பகைப்பண்பு என்று கூறக்கூடுமானால், என் நாட்டின் சமயத்தை நான் இசைக்கலை யிலேயே கண்டேன்; கோயில்களிலும் இல்லங்களிலும் நான் அதன் சமயப் பகைமைப் பண்பையே கண்டேன் என்று நான் உறுதியாகக் கூற முடியும்.”
இத்தனை கசப்புக்கள், கருத்துமாறுபாடுகளிடையிலும் ஷா கல்மனமுடையவராகவோ, தன்னலமுடையவ ராகவோ மாறவில்லை; அருளாளராகவே மாறினார். வறுமையின் கடுமை அவருக்கு உறுதியையும் வசைத்தற எதிர்ப்புப் பண்பையும் மட்டுமே ஊட்டின. அவர் குழந்தையுள்ளத்தின் மாசற்றதன்மை, அவர் சிறுமைப் பருவத்தின் பகைமையற்ற குறும்பு, அவர் இளமையின் கனவார்வம் ஆகியவையாவும் மற்ற மனிதரிடம் பருவ வளர்ச்சியால் மாறுபடுவதுபோல் அவரிடம் மாறாமல், எல்லை யில் மட்டும் பரந்து அருளாண்மையாயிற்று என்னல் தகும்.
ஷாவின் பிற்காலவசையுரைகள் அன்பில் தோய்ந்த தாய் மையின் கடுமொழிகள் போன்றவை. உரக்க அழுது பார்த்தும், தொட்டிலை உதைத்துப்பார்த்தும், எந்தத் தாயும் தன்னைவந்து அணைக்கக்காணாத குழந்தை, இயற்கை யன்னையைப் பார்த்து உரக்கச் சிரிக்கும் சிரிப்பையே நாம் அவர் நகைத்திறம் சார்ந்த வகைப்பண்பில் காண்கிறோம். காலத்தின் புத்தார்வத்தில் தோய்ந்த அவர் அறிவாராய்ச்சிகள் சிறுவர் சிறுமியர் விளை யாட்டுப் போட்டிகளையும், பூசல்களையும் நினைவூட்டுபவை. தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் அவர் முரண்பாட்டு ரையும், மரபெதிர்ப்புரையும் வெறுப்புக் காட்டி விருப்பூட்டும் காதலர் ஊடலுரிமையோடு ஒப்புடையது. இங்ஙனமாகத் தாய்தந்தை அரவணைப்பாலும், சிறுவர் விளையாட்டுக் களாலும், காதல் வாழ்வாலும் இயற்கையாக மலர்ச்சியுற்றுக் கனிவுறாத அவர் குழந்தை, சிறுமை, இளமைப்பண்புடன் கலையுருவில் அவர் வாழ்வில் வாடாமலர்களாக நிலைபெற்றன என்னலாம். வறுமை என்னும் வாடைக்காற்றால் நயப்புலர்ந்தும், உதிர்ந்தும், வண்ணமும் மணமும் அறாத மகிழ மலரிதழ்கள் போல, ஷாவின் இப்பண்புகள் ஆங்கில இலக்கியப் பூங்காவில் நமக்குக் கிடைக்கின்றன.
ஷா ஓர் உலக அறிஞர்; உலக அறிஞர்களிடையேகூடத் தனிச் சிறப்புவாய்ந்தவர். ஆயினும் பல்கலைக்கழகப் பட்டமோ கல்லூரிப் படிப்போ அவருக்கு இருந்ததில்லை. இருந்திருக்கவும் முடியாது. அவர் குடும்ப வறுமையில் இவை தொலைதூர வாய்ப்புக்கள். ஆனால் பள்ளிவாழ்வு கூடத் தமக்கு நன்மை எதுவும் செய்யவில்லை என்றே அவர் கூறுகிறார். அவர் முதல் ஆசிரியர் தூய திரு. வில்லியம் ஜார்ஜ் கார்லைறு(William George Carlyle) என்ற அவர் தாய்மாமனே யாவர். இவர் டப்ளினிலுள்ள ஒரு சமயத்துறைப் பணியாளர். அயர்லாந்தின் தன்னாட்சி யியக்கத்தை (home rule movement) ஆதரித்த முதல் புரோட்டஸ்டண்டு சமயத்துறையாளர் இவரே என்று கூறப்படுகிறது. வீட்டில் படித்தபின் ஷா ஒன்றன்பின் ஒன்றாக டப்ளினிலுள்ள நான்குபள்ளிகளில் படித்ததாகத் தெரிகிறது. இவற்றுள் முதலாவது பள்ளி வெஸ்லியன் இணைப்புப் பள்ளி என்பதே. இது பின்னாட்களில் ஒரு கல்லூரி ஆகியுள்ளது. அப் பள்ளியின் நுழைவுப்பேரேட்டில் அவர் 1867- ஏப்ரில் 13-ல் சேர்ந்ததாகக் குறிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பாடங்களிலும் தேர்வுகளிலும் கிடைத்த மதிப்புக்குறிகளைப் (marks)பார்க்க, அவர் வகுப்புக்களில் எப்போதும் கடைசியிடத்தில் அல்லது அதனை யடுத்த இடத்திலேயே இருந்தார் என்று அறிகிறோம். ஒரே ஒரு தடவை மேலிருந்து இரண்டாமிடத்தை அவர் பெற்றனர் என்றும், ஆனால் அதன்பின் மீட்டும் அவ்வகைப் போட்டியில் அவர் நாட்டம் கொள்ளவில்லை என்றும் அவர் ஆசிரியர்களுள் ஒருவர் பின்னாட்களில் குறிப்பிட்டுள்ளார்.
வெஸ்லியன்பள்ளி முனைத்த மறுப்பியல்(extreme protestant) கோட்பாடு டையது. சிறுவர் பெரும்பான்மையும் அயர்நாட்டின் (அரசியல் துறை) திருக்கோயில் சார்ந்தவராயினும், பள்ளியின் முனைத்த மறுப்பியல் கோட்பாடே சிறுவர் சிறுமியர்க்குக் கற்பிக்கப் பட்டது. ஆனால், பிள்ளைகளின் தாய் தந்தையர் இதுபற்றிச் சிறிதும் பொருட்படுத்தவில்லை என்று ஷா குறித்துள்ளார். அந்நெறி தமதன்றாயினும், வெறுக்கத்தக்க கத்தோலிக்கரின் நெறியன்று; அதைத் தம்மைவிட மிகுதியுமாக்கி எதிர்த்த நெறியே என்று அவர்கள் மனநிறைவு பெற்றிருக்க வேண்டும் என ஷா நையாண்டி செய்துள்ளார்.
பள்ளிக் கல்விமுறையையே ஷா வெறுப்பவர். தம் பள்ளி வாழ்வுபற்றி அவர் குறிப்பதாவது: “பள்ளி என்றவுடனே எனக்கு நான்கு பள்ளிகளின் நினைவுகள் எழுகின்றன. ஒரு அரைநாளுக் காவது என் தொல்லையிலிருந்து விடுதலை பெறுவதற்காக என் பெற்றோர் என்னை அங்கே அனுப்பினர். இந்தச் சிறு சிறைக் கூடங்களில் - சிறைக் கூடங்களிலிருந்து அவை பெரிதும் மாறு பட்டவையல்ல - நான் கல்வியறிவு என எதுவும் பெற்றதாகக் கூறமுடியாது. போகமாட்டேன் என்று மறுக்கும் துணிச்சலின்றி நான் எப்படித்தான், கிடைக்குள் அடைபடக் கிடக்கச் செல்லும் ஆடுபோல், போக இசைந்தேன் என்பது எனக்கு மலைப்பையும் எரிச்சலையுமே உண்டுபண்ணுகிறது. இப் பள்ளிகளால் எனக்கு எத்தகைய நன்மையும் ஏற்பட்ட தில்லை. தீமைகளே மிகுதி……… மடமையுள் ஆழ்ந்த இந் நிலையங்களுக்கு என் கண்டனப் பழிப்புரைகள் சென்று எட்டக்கூடுமானால், என் மனத்துக்குச் சிறிது ஆறுதல் ஏற்படும்.” பள்ளிவாழ்வுக் காலத்துள்ள தம் இயல்பு பற்றி அவர், “பள்ளிச்சிறுவனாயிருக்கும்போது நாள் முழுதும் சோம்பேறியாகவும், எவராலும் திருத்தமுடியாதவனா கவுமே இருந்தேன். ஆனால், இதுபற்றி நான் மிகவும் பெருமைப் பட்டுக்கொள்கிறேன்,” என்று குறித்துள்ளார்.
ஷா இங்ஙனம் பள்ளிவாழ்வை வெறுப்பானேன்? அவர் உண்மையிலேயே சோம்பேறி வாழ்வு வாழ்ந்தவரா? ஷாவின் காலதேசச் சூழல்களே இவற்றுக்கு விடையும் விளக்கமும் தரவேண்டும். ஷாவுக்குக் குடும்பத்திலிருந்து வந்த புறக்கணிப்பு அவர்தம் தன்மதிப்புணர்ச்சியையும், தற்சார்புணர்ச்சியையும் இளமையிலேயே வளர்த்திருந்தது. அவர் எதிலும் தற்பொறுப் புடையவராகவும் விளங்கினார். ஆகவே அவர் பள்ளிவாழ்வின் கட்டுப்பாடுகளையும் கடுமைகளையும் வெறுத்தார். இக் கட்டுப் பாடுகளில் பல காலப்போக்கில் பொருளிழந்த குருட்டுக்கட்டுப் பாடுகளாய், வாழ்க்கையறிவும் உளப்பண்பறிவும் அற்றவர்களால் இயக்கப்பட்டு வந்திருந்தன. தாயின் மடியிலிருந்து தாவிவந்த பிள்ளைகள் மாட்டுக்கொட்டில்கள்போன்ற வகுப்பறைகளில் அடைக்கப்பட்டனர். ஓடியாடும் விளையாட்டுப் பருவத்தில், தங்குதடையின்றி உடலும் அறிவும் வளர வேண்டிய பருவத்தில், அவர்கள் பாடங்களை நெட்டுருச் செய்யும்படி வற்புறுத்தப் பட்டனர். தவிர, தாய்ப்பாலால் உடல்வளம்பெற்ற நிலையில் வந்த அவர்களுக்குத் தாய் மொழிப்பாலாலேயே அறிவுவளர்ச்சி பெற முடியும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தொடக்கத்திலிருந்து இறுதி வரை பிறமொழிகளும் சிறப்பாக வழக்கிறந்த பண்டை மொழிகளான இலத்தீனும் கிரேக்கமும் குத்தித் திணிக்கப் பெற்றன. அவற்றின் வறண்ட இலக்கணமும், வற்றற் சுவடிகளும் பிள்ளைகள் இளமைவாழ்விற்குக் கூற்றுக்களாயி யன்றன. தவிர அம் மொழிகளின் ஒலிமரபறியாமல், தவறான ஒலிகளுடனேயே ஆங்கிலநாட்டில் கல்லூரிப்படிப்பு வரை அவை பயிற்றுவிக்கப் பட்டன. ஷா பள்ளிவாழ்வைக் கண்டித்தது இவ் விளங்காப் பழமரபு காரணமாகவே.
உண்மையில் ஷா பள்ளிவாழ்வில் சோம்பேறியாக இருந்த வரல்லர். பிற பிள்ளைகள் விளங்காப் பண்டை மொழிச் சுவடி களில் மண்டையை உடைத்துக்கொண்டிருந்தபோது, அவர் தாய்மொழியில் நாட்டுப்பாடல்களையும், தாய்மொழி இலக்கியக் கதைகளையும் படித்துச் சுவைத்தார். பண்டை இலக்கியங்களையும் பிறநாட்டிலக்கியங்களையும் கூட அவர் தாய்மொழி மொழிபெயர்ப்புகள்மூலம் பரக்க வாசித்துணர்ந்தார். தம் 18-வது ஆண்டுக் குள்ளாகவே கிரேக்கப் பழம்பெரும் காவியமாகிய இலியட்கதை முழுமையும் அறிந்து பிறருக்குக் கூறிவந்ததாகவும், ஷேக்ஸ்பியர் கதையுறுப்பினர்களுள் ஹாம்லட்முதல் அப்ஹார்ன் வரை எல்லாரையும் தம் தோழர்களாக்கிக் கொண்டதாகவும் அவரே குறித்துள்ளார். பள்ளியில் அவர் இருபுறமும் இருந்த தோழர்கள் பிற்காலத்தில் சிறந்த கணக்கியல் அறிஞராகவும், பண்டைமொழிப் புலவராகவும் விளங்கியுள்ளார்கள். ஷாவுக்கு அவர்களே அவ்வப் பாடங்களை எழுதிக்கொடுத்தனராம். இவ் வுதவிக்கு எதிர் உதவியாக, ஷா அவர்களுக்குத் தாய்மொழி இலக்கியக் கதைகளையும், பண்டைமொழி இலக்கியக் கதைகளையும் கூறுவது வழக்கமாம்!
பள்ளிவாழ்வே தமக்குப் பயன்படவில்லை என்று கடிந்த ஷா, கல்லூரி, பல்கலைக்கழக வாழ்வு தமக்குக் கிடைக்க வில்லை என்று என்றும் வருத்தப்பட்டது கிடையாது. கல்லூரி, பல்கலைக் கழகங்களால் பண்டைமொழிப் புலமைபெற்ற அவர் நண்பர் களைப்பற்றி அவர் குறிப்பது காண்க: “பண்டைய இலத்தீன் கிரேக்கமொழி இலக்கணங்கள் இவர்களுக்குத் தெரியலாம். ஆனால், அம் மொழிகளை இவர்கள் தவறாகவே ஒலிக்கின்றனர்.³ அம் மொழியின் கவிதை, அறிவுநூல்கள் ஆகியவற்றையும் அவர்கள் இவ்வாறு குருட்டுப் பாடமாகவே கற்றுள்ளனர்” ஷாவின் இக்கண்டனம் கல்விமுறை, உயர்தரக் கல்வி ஆகியவற்றின் மற்றும் இரு தவறுகளை எடுத்துக்காட்டு கிறது. உண்மையான கல்விமுறை ஆர்வத்துடன் கற்போர் தாமே கற்கும் தற்கல்வி முறையேயாகும். இவ் ஆர்வத்தைப் பள்ளிகளும் கல்வி நிலையங்களும் ஆசிரியர்களும் தூண்டத் தவறுகின்றனர். மற்றும் தாய்மொழி மூலமே கல்வியறிவு உயிருள்ள அறிவாய், உணர்ச்சி தூண்டி வளர்ச்சிதர முடியும். பிறமொழியறிவுகூடத் தாய்மொழி மூலம், தாய்மொழி அடிப்படையிலேயே வளர முடியும்.
ஷாவின் வாழ்வில் தற்கல்வி முறை, தாய்மொழிக் கல்வி முறை ஆகியவற்றின் வெற்றிகளைக் காணலாம். பண்டை மொழி இலக்கிய அறிவு, பிறமொழி நாடுகள் பற்றிய அறிவு ஆகிய இரண்டையும் ஷா தாய்மொழி மொழி பெயர்ப்புகள் மூலமே முழுதும் உணர முடிந்தது. இன்று அவர் நூல்களை மட்டும் கற்று, ஒருவர் உலகின் தற்கால, முற்கால நாகரிகங்களனைத்தின் அறிவுத் தொகுதியையும் அறிந்து கொள்ளுதல் முடியும். வேறு எந்த ஆசிரியர் நூலாலும் இப்பரந்துபட்ட படிப்பினைப் பெறுதலரிது.
தவிர ஷாவின் தற்கல்வி முறைக்கு உதவியவை தாய் மொழியும் தாய்மொழி ஏடுகளும் மட்டுமன்று. இசை முதலிய கலைகள் மூலமே ஒருவர் உலக அறிவு மேன்மைக்கு வழி காண முடியும் என்பதை அவர் வாழ்க்கை காட்டுகிறது. கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் நிழலுக்குக்கூட ஒதுங்காதவர் அவர். ஆனால், அவர் குடும்பச் சூழலிலுள்ள இசையறிவும், டப்ளினி லுள்ள அயர்லாந்து நாட்டுரிமைக்கலைக் கூடமும் (national gallery of Ireland) அவர் வாழ்வில் உண்மைக் கல்விக்கூடமாகவும், பல்கலைக்கழக மாடமாகவும் பயன்தந்தன. இவைதவிர அவர் இளமையிலேயே தம் வறுமையிடையேயும் உண்டி சுருக்கிச் சிறிது பொருள் சேர்த்து, அதனைக்கொண்டு கலை பற்றிய நூல்கள் வாங்கினார். 15-ம் ஆண்டுக்குள் ஜெர்மனியின் இசைச் செல்வர்களையும், இத்தாலிய ஃபிளெமிஷ்(Flemish) ஓவியச் செல்வர்களையும் பற்றி அவர் நன்கு அறிந்துகொண்டார். அவர்கள் கலைப் படைப்புக்களைக் கண்டவுடன் வகைதிரித் தறியும் ஆற்றல் அவருக்கு ஏற்பட்டது. கலையிலிருந்து கலைஞருக்கும், கலைஞர் வரலாற்றிலிருந்து நாட்டு வரலாற்றுக்கும், உலக வரலாற்றுக்கும், கலைப்பண்புத் திறத்திலிருந்து வாழ்க்கைப் பண்புத் திறங்களுக்கும் அவர் இளமையுள்ளத்தைக் கலைச்செல்வி இழுத்துச் சென்ற, கலைப் பால் மூலமே அவருக்கு முழு உலக அறிவுப்பால் ஊட்டினாள்!
அன்னையாருக்கும், குடும்ப அன்பர் லீனுக்கும்; அவர்களால் வளர்க்கப்பெற்ற கலையார்வத்துக்கும் அடுத்தபடியாக, ஷாவின் வாழ்க்கைப் பண்பை உருவாக்கிய சூழல் அவர் நண்பர்களின் தோழமைச் சூழலே. இவர்களுள் இருவர் குறிப்பிடத்தக்கவர். அவர்கள் அவர் பள்ளித் தோழரான மாக்தள்ட்டி என்பவரும், இளமைக்கால நண்பரான பெல் என்பவருமேயாவர்.
மாக்தள்ட்டி பிற்காலத்தில் அயர்லாந்து நாட்டு மக்களின் வாழ்க்கையோடொட்டிய பல புகழ்பெற்ற புனை கதைகள் எழுதியவர். ஷா அவருடன் பழகிய காலம் சிறிதேயாயினும், அவர்கள் கடிதப் போக்குவரவு மூலம் நீண்டநாள் தொடர்பு வைத்துக்கொண்டிருந்தனர். கலை, நாடகம் ஆகியவற்றைப் பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாறிக் கொண்டனர்.
மற்ற இளமைக்கால நண்பரான பெல் தொலைபேசியைக் கண்டுபிடித்துப் புகழ்பெற்ற ‘பெல்’ என்பாரின் உறவினர். ஷா இவருடனேயே ஐரோப்பாவின் ’கலைஞர்தாயக மொழி’யாகிய இத்தாலிய மொழி பயின்றார். ஷா எந்த அயல் மொழியையும்⁴ பேசியதில்லையாயினும், இத்தாலிய மொழியில்மட்டும் பிறர் பேசுவதை அறியவும் வாசித்தறியவும் போதிய பயிற்சி அவருக் கிருந்தது. ஆனால், இத்தாலிய மொழியறிவைவிட ’பெல்’லின் தொடர்பால் ஷாவுக்குக் கிட்டிய பெருஞ்செல்வம் ஒன்று உண்டு. அதுவே இயக்க நூல்(Physics) நோய்க்குண நூல்(Pathology) ஆகிய இயல் நூல் துறைகளில் அவருக்குக் கிட்டிய பரந்த அறிவு ஆகும். இவற்றில் ஆர்வமும் பயிற்சியுமுடைய பெல்லின் தொடர் பால், ஷா புத்தம் புதிய ஆராய்ச்சிகளில் அக்கரையும் ஆர்வமும் உடையவரானார். அவர் நூல்கள் இதனாலேயே பழமை நோக்கியவையாயிராமல், கால வேகத்தில் முன்னின்ற புத்தம்புது அறிவுச் சூழலும் பின்னணியறிவு முடையனவாகத் திகழ்ந்தன.
பள்ளித் தோழர்களையும் நண்பர்களையும் ஷா கதை கூறும் ஆற்றலாலும், வாத எதிர்வாதத்தாலும் ஆட் கொண்டதாக அறிகிறோம். அவர் நல்ல உடல் வலுவுடைய யவரேயா யினும், அவர் வீரம் உடல் வீரமாயில்லை, அறிவு வீரமாகவே இருந்தது. உடல் வலிமையைக் காட்டிப் பிறரை அடக்கமுயன்ற சிறுவர்களை அவர் நையாண்டி செய்தே பணியவைத்து விடுவாராம்! தடியடியைவிடச் சொல்லடி சிறந்தது என்பதும், சீற்றத்தைவிடச் சிரிப்பு ஆற்றல் மிக்கது என்பதும், கத்தியைத் தீட்டும் செயலினும் புத்தியைத் தீட்டும் செயல் வளமுடையது என்பதும் இளமை யிலேயே அவர் பெற்ற படிப்பினைகள்.
தற்கல்வி முறையில் ஷா எவ்வளவோ முன்னேறினார். ஆனால், பள்ளி வாழ்வில் அவர் முன்னேற்றம் வறுமையால் தடைபட்டது. தந்தையின் குடிப்பழக்கம் நற்குடும்பங்களில் தொடர்பை அறுத்தது. அத்துடன் ஷாவின் இல்லத்தில் பணியாற்றிய செவிலித் தாயருள் ஒருவர் ஷாவைத் தம் சிறுகுடிச் சேரிக்கு இட்டுச் சென்று நேரம் போக்கினார். இதனால் குடும்பக் கோட்டைக்கு வெளியேயுள்ள பொதுமக்கள் வறுமைவாழ்வின் கொடுமையை அவர் குழந்தை உள்ளம் தொடக்கத்திலிருந்தே காண முடிந்தது. ஷாவுக்கு 15ஆண்டு முடிவுறுமுன் ஷாவின் தந்தைக்கு வலி நோய் கண்டு, குடும்ப வருவாய் பின்னும் குறைந்தது. ஆகவே ஷாவின் பள்ளி வாழ்வு இடையறுந்தது. அவர் சிறு பணித்துறைகளை நாடவேண்டியதாயிற்று.
ஷாவின் சிற்றப்பனார் ஒருவரின் உதவி மூலம் சார்ல்ஸ் யூனியாக் டௌண்ஷெண்ட் என்பவரால் நடத்தப் பெற்ற பண்ணைநிலக் குத்தகை நிலையம் ஒன்றில் ஷாவுக்குத் தொடக்க நிலை எழுத்தாளராக(junior clerk) ஒரு பணி கிடைத்தது. ஷாவின் தற்சார்பும் தற்பொறுப்புப் பண்பும், அவர் நேர்மையும் விடா முயற்சியும், நிலையத் தலைவரின் நன்மதிப்புப்பெற்றன. ஆகவே, அவர் படிப்படியாக உயர்வுற்றுக் காசுக்கணக்கராக (casheir) அமர்வு பெற்றார். அவர் நடுத்தர வகுப்புச் சூழலில்கூட இப்பணிக்கு மிகுதி மதிப்பிருந்தது. நடுத்தரக் குடிச்செல்வர் பிள்ளைகள் பலர் இத்துறையில் பயிற்சி மாணவராக அந்நாளில் கணக்கரிடம் பழகவிடப்படும் வழக்கம் இருந்தது. ஷாவிடமும் இத்தகைய சோம்பேறிச் செல்வ இளைஞர்கள் விடப்பட்டனர். அவர்கள் ஏலமாட்டா இறுமாப்பும், போலிப்பகட்டும், திறமை யின்மையும் ஷாவின் தற்பெருமைக்கும் நகைத்திறத்திற்கும் நல்விருந்தாயின.
அடுத்த ஆண்டில் ஷாவின் குடும்பநிலையில் இன்னொரு மாறுதல் ஏற்பட்டது. அன்பர் லீ தம் கலைத்தொழில் மேம் பாட்டை நாடி அயர்லாந்தைவிட்டு லண்டனுக்குப் புறப்பட்டார். அவர் போனபின் ஷா குடும்பத்தின் வருவாய் பின்னும் குறைந்தது. குடும்பச்செலவில் அவர் கொண்ட பங்கை இப்போது ஷாவின் தாயே பொறுக்கவேண்டி வந்தது. செலவு பெருகிற்று. திருமதி ஷா இந் நிலைமையை நெடுநாள் தாங்கிக்கொண்டிருக்க முடிய வில்லை. அவர் தம் புதல்வரை மட்டும் தந்தையுடன் தங்கும்படி விட்டுவிட்டு, தம் இரு புதல்வியருடனும் இலண்டன் சென்றார். இளைய புதல்வி மறைவுற்றது இலண்டனுக்குச் சென்றபின்ன ரேயாகும். லீயின் உதவியுடன் திருமதி ஷாவும் அவர் மூத்த புதல்வியாரும் இசைத்துறையில் படிப்படியாக மேம்பட்டு, இலண்டனில் வாழ்வுபெற்று வந்தனர்.
வருங்காலத்தில் தாம் ஒரு எழுத்தாளராக விளங்கக் கூடும் என்ற எண்ணமோ, அத்தகைய ஆவலோ ஷாவுக்கு இளமையில் முனைப்பாக இருந்ததாகத் தெரியவில்லை. ஆயினும் அவர் அவா ஆர்வமற்றவராக இருக்கவில்லை. தாய் பெருந்தகுதி உடையவர், பெருந்தக்க நிலைக்கு வரவேண்டியவர் என்ற எண்ணம் உள்ளூற அவருக்கு இருந்தே வந்தது. நிலக்குத்தகைப் பணிமனையிலுள்ள அவர் தோழர் ஒருவர் ஒரு நாள் அவரிடம், “இருபதாம் ஆண்டுப் பருவம் வரை ஒவ்வொரு இளைஞனும் தான் ஒரு பெரிய மனிதராகப் போவதாகக் கனவு காண்பது வழக்கமே,” என்று கூறினார். அத்தகைய எண்ணம் தம்மிடம் எப் போதுமே இருந்து வந்தது என்பதை இச்சொற்கள் அவருக்கு மின்னொளிபோல் திடுமென எடுத்துக் காட்டினவாம் !
ஷாவின் இவ்வுள்ளார்ந்த ஆர்வமும், கனவுக்கோட்டையும் முதலில் எழுத்தாண்மைத் துறையை நாடவில்லை. கலைத்துறை யிலேயே வட்டமிட்டுக்கொண்டிருந்தன. ஒருவர் வாழ்க்கையின் மேம்பாட்டுக்கும் சிறப்புக்கும் உரிய துறை, அவர்கள் அவா ஆர்வத்துக்குரிய துறையன்று; அவர்கள் தகுதிக்குந் திறமைக்கும் உரிய துறையே என்பது ஷாவின் கோட்பாடு. இது முற்றிலும் உண்மை யன்று. அவா ஆர்வத்தால் தூண்டப்பெறாத தகுதி திறமைகளும், தகுதி திறமையற்ற வீண் அவா ஆர்வமும் பயன்பெறுவதில்லை. இசைத் துறையில் ஷாவுக்குத் தகுதியும் திறமையும் ஒரளவு இருந்தன. ஆனால், தம் அவா ஆர்வத்தளவு அவர் அதில் முன்னேற முடியவில்லை. எனினும் இசைத்துறை, கலைத்துறை ஆய்வுரையாயராகவே அவர் பின்னாட்களில் எழுத்தாண்மைத் துறையிலும் முதன் முதலில் ஈடுபட்டார். இசை முதலிய கலைகளில் மேம்பாடு பெறமுடியாத நிலையிலேயே அவர் உள்ளார்ந்த தகுதியும் அவா ஆர்வமும் அவரிடம் மறைந்துகிடந்த எழுத்தாண்மைத்திறனை வெளிக்கொணர்ந்தன. ஆயினும், முனைப்பான வடிவம் அடையாமலே இளமைக் காலத்திலிருந்து எழுத்தாண்மைத் தகுதியும், அத்துறையில் இயற்கை ஆர்வமும் அவரிடம் இருந்தே வந்தன என்னலாம். பள்ளிவாழ்வுக் காலத்திலேயே மற்றொருவருக்கு அவர் பரிசுக்குரிய கட்டுரை ஒன்று எழுதியிருந்ததாக அறிகிறோம். அத்துடன் ஷேக்ஸ்பியர் மரபை ஒட்டி செந்தொடையாப்பில் (Blank Verse) ஷேக்ஸ்பியர்காலச் சமயத்துறை நாடகமுறையில் (passion play) அவர் ஒரு நீண்ட நாடகச் செய்யுள் நூல் எழுதினாராம்! இம் முதன் முயற்சியின் படிகள் நமக்கு வந்தெட்டவில்லை.
நிலக்குத்தகை மனையில் ஷா சேர்ந்த ஆண்டிலேயே வாடிவில் திங்களிதழில் (Vaudeville magazine) வாசகர் வினாக் களுக்கான விடை விளக்கப்பகுதியில் ஷாவின் வினாவுக்குரிய விடை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இவ் இளமைக் காலத்திலேயே அவர் இயற்கை எழுத்தாண்மைத் திறம் அதில் கண்டறிந்து பாராட்டப் பெற்றுள்ளது:
"(முகவரி) ஜி.பி. ஷா, டார்க்கா இல்லம், டார்க்காக்குன்று, டாக்கி வட்டம், டப்ளின், அயர்லாந்து:-
அன்பரீர்,
தங்கள் முடங்கலைத் தாம் பதிவுசெய்தே அனுப்பியிருக்க வேண்டும். கூரிய சொற்றிறமும், வசைத்திறமும் கூடிய இவ்வளவு திறனுடைய முழுக்கூட்டமைதி பொது அஞ்சல் துறைக்குரிய கட்டணப்படியில், வரத்தக்கதன்று. வந்த அளவிலும் அது வாளாநின்றுவிடவில்லை. தங்கள் வாதங்களின் எடை மிகுதிக்காக இரண்டுபணம் மிகுதிக் கட்டணமாக எங்களால் கொடுக்கப்பட வேண்டிவந்தது," என்பதே நகைநயமிக்க அவ்வாசிரியரின் பாராட்டு.
1875-ல் ஏப்ரல் 3-ஆம் நாளில் பொதுக் கருத்துரை (public opinion) என்ற வெளியீட்டிதழுக்கு ஷா எழுதிய கட்டுரை ஷாவின் எழுத் தாண்மைத் துறையில் அவரது பிற்காலப் பண்புச் சிறப்புக்களை முன்னறிவிக்கும் விதைமூலமாக விளங்கத் தக்கது.
சமயப்பணியை மேற்கொண்டு மூடி, ஸாங்கி என்ற இரண்டு அமெரிக்கப் பண்பாளர்கள், புத்துணர்ச்சியற்று மரத்துப்போய் விட்ட மக்கள் சமயஉணர்வில் புத்தார்வ மூட்ட முயன்று, எங்கும் சுற்றிப் பழமையில் புதுமை யூட்டிவந்தனர். எங்கும் உயர்குடிச் செல்வரும் ஆட்சிக் குழுவினரும் செய்தி வெளியீட்டிதழ்களும் அவர்கள் இயக்கத்துக்குப் பரப்பாதரவு தந்தன. டப்ளினிலும் அவர்கள் வந்தபோது எங்கும் பரபரப்பு ஏற்பட்டது. சமயத்தின் இப் புத்துருவ வேடம் உண்மைச் சமயமுமன்று, உண்மைப் புதுமையுமன்று என்று ஷா தம் கட்டுரைமூலம் தாக்கினார். நாளிதழில் இடம் பெற்றுவிட்ட இக் கட்டுரை எழுப்பிய அதிர்ச்சியலையும் எதிர்ப்புப் புயலும் மிகுதி. ‘விளம்பரத்தின் உயிர்நிலை எதிர்ப்பிலேயே உள்ளது.’ என்னும் உண்மையினை ஷா காண இது பெரிதும் உதவிற்று என்னலாம்.
ஷாவின் குடும்ப வாழ்விலும் வாழ்வியல் சூழலிலும் அவர் கண்ட பொய்ம்மையும், அதில் அவர் கொண்ட வெறுப்பும் முழு உருவில் இக்கட்டுரையில் கொட்டப்பட்டுள்ளது. அஃது உண்மையில் சமயத்தைத் தாக்கவில்லை என்பதைக்கூட அக் காலத்தில் பலர் கவனித்திருக்க முடியாது. சமயத்திலும் சமய மரபே எப்போதும் சமய ஆட்சிக் குழுவின் நலன்களுக்கான அரணாக இயங்குகிறது. ‘இது சமயமானால், எனக்குச் சமயப் பகைமையே போதும்; அது மொத்தத்தில் இதனைவிட நன்று.’ என்ற முடிவை அவர் அதில் வலியுறுத்தினார். ‘மூடி, ஸாங்கியின் புகழ் அவர்கள் சமய ஆர்வத்தின் பயனன்று; அவர்கள் சொல் லாற்றல், பண்புடைய உயர்குடியினரிடையே அவர்களுக்குள்ள செல்வாக்கு ஆகியவற்றின் பயனே. கலைஞர் களின் இத்தகைய சமயப் பணிகளால், சமய வாழ்வு நலப்படாது; உயர்குடியினர் சமயப் பசப்புப் போர்வைதான் சற்று வலிவுபெறும்,’ என்று அவர் விளக்கினார். ‘இவ் வியக்கம் சமய இயக்கமன்று; ஓர் அரசியல், வாழ்வியல் இயக்கமே. சமய உணர்வை உள்ளூற ஒழிக்கும் இயக்கமாகக்கூட அதனைக் கருதல் தகும்,’ என்ற அவர் உரைகள் சமயவாதிகளின் புத்தார்வத்தை எவ்வளவு புண்படுத்தி யிருக்கும் என்று கூறத் தேவையில்லை.
ஷா இங்ஙனம் மும்மரமான எதிர்ப்பில் ஈடுபடவேண்டிய சூழல் இக் கட்டுரைக்குப்பின் அவர் வாழ்வில் நெடு நாள் ஏற்படவில்லை. அயர்லாந்தின் சூழலில் கருமுதிர்ச்சியுற்று வெளிவந்த ஷாவின் பண்பு, பிற்பட்டு இங்கிலாந்தில் ஒரு புதிய சூழலில் புகுந்து மீண்டும் சிலநாள் முதிரா நிலையில் இருக்கத் தொடங்கிற்று. இப் புதிய சூழல் மாறுபாடு 1876-ல் ஏற்பட்டது.
நிலக் குத்தகைமனையில் ஷாவின் திறமை அவருக்கு மேம்பாட்டைத் தந்தாலும், அவர் அதில் முழு அமைதி பெற வில்லை. அத்துறையிலுள்ள வெற்றியால் அவர் மனம் நிறைவு பெறவொட்டாது அவரிடம் கருநிலையில் தூங்கிக் கடந்த எழுத்தாண்மை யார்வம் தடுத்தது. மேலும் அயர்லாந்தின் சூழலில் ஒருவர் உள்ளார்ந்த திறமைக்கேற்ற வளர்ச்சிபெற முடியாது. அன்னையாரின் இலண்டன் வாழ்வு இதனை அவருக்கு எடுத்துக்காட்டிற்று. அவர் தம் அன்னையாரைப் போலவும், தம் தமக்கையாரைப் போலவும் இலண்டன் சென்ற தம் வாழ்வின் நலம் பெருக்க விரும்பினார். எனவே, அவர்தம் பணிமுதல்வர் விருப்பத்தை மதியாமல் தம் பணியைத் துறந்து இலண்டன் நகருக்குப் புறப்பட்டார்.
ஷா தொழில் துறையிலேயே இருந்திருந்தால், அதிலும் மேம்பாடுற்று ஓரளவு செல்வராயிருக்கமுடியும் என்பதில் ஐயமில்லை. அவர் இலண்டன் சென்றபின் பணிமனைத் தலைவரிடமிருந்து ஷாவின் தந்தையார் விரும்பிப் பெற்ற நற்சான்றுச் சீட்டு இதனை நன்கு காட்டுகிறது மனவிருப்ப மின்றியே தலைவர் அவர் பணித்துறப்பை ஏற்க வேண்டிவந்தது என்பதை அது காட்டுகிறது. மேலும் சமயத் துறையில் மிகக் கட்டுப்பாடற்ற முற்போக்கான கருத்துடையவர் ஷா. பணிமனைத் தலைவரோ சமயப் பழம்போக்காளர் மட்டுமன்று. அதன் புத்தார்வ இயக்கங்களிலும் ஈடுபட்டவர். அப்படியிருந்தும் பணிமனையில் அவர் ஷாவுக்குப் பல தனிச் சலுகைகளையும் உரிமைகளையும் வழங்கியிருந்தார். பணிமனையில் சமயத்தையும் சமூகத்தையும் எதிர்த்து இளைஞர் ஷா ஆரவாரத்துடன் வாதாடிய காலங்களில்கூட திரு. டௌண்ஷண்ட் அவரைக் கண்டிப்பின்றி நயமாகவே வரம்புக் குட்படுத்திவந்தார்.
ஷாவுக்குத் தொழில் துறையில் ஏற்பட்ட மதிப்புக்கு அவர் தளரா முயற்சியூக்கமும் விடாப்பிடியும் பெரிதும் காரணம் ஆகும். இவற்றுடன் அவரது கோடாதநேர்மை தொழில் துறையில் அவர்பணிக்கு மிகுதி மதிப்புத்தந்தது. வறுமையிடையே பிறர் பொருளைக் கையாட எண்ணாத சான்றாண்மை, பணத்தைப் பொருளாகக் கொள்ளாது, தம்முயற்சியைப் பொருளாகக் கொள்ளும் அறவோர்க்கே உரியதன்றோ? ஷாவிடம் இளமை யிலேயே இப் பண்பு அமைந்திருந்தது. ஷாவின் நேர்மை, தொழில் நேர்மையன்று; அற நேர்மை என்பதை மற்றும் ஒரு செய்தி வற்புறுத்திற்று. பணிமனைக் கணக்கர்களுக்குச் செல்வர் சிறு பரிசுகள் வழங்கி அவர்களை வசப்படுத்துவது உலக மரபு. ஷாவின் அமைந்த பார்வையையும் நிமிர்ந்த நடையையும் கண்ட செல்வர், அவரை இவ்வகையில் வசப்படுத்த எண்ணவோ அணுகவோ அஞ்சினர். இதனால் அவர் இருந்த பணிமனையின் மதிப்பே உயர்வுற்றது. பணிமனைத் தலைவர் அவரை இழக்கச் சிறிதும் விரும்பாதது இந்நிலையில் வியப்புக்குரியதன்று.
ஷாவின் அயர்லாந்து வாழ்வில் வறுமை அவரைச் சூழ்ந் திருந்தது. வறுமையிடையே அவர் வாழ்க்கைப் பண்புகள் உருவாயின. இக்காலத்தில் அவர் வறுமையையும் வறுமையின் சூழலையும் வெறுத்தார். செல்வம் வரும் வகைகளையு முணர்ந் தார். ஆனால், அவர் செல்வத் தால் மட்டும் பெருமையுறுவதை விரும்பவில்லை. கலையின் மூலம் செல்வமும், அத்துடன் பெருமையும் பெறுவதையே அவர் மேலும் நாடினார். அச் செல்வத்தைப் பெருக்கும் வகையிலும் அவர் தற்சார்பையும், நேர்மையையும் கடைப்பிடிகளாகக் கொண்டிருந்தார்.
“இருவேறு உலகத் தியற்கை; திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.”
என்ற உண்மையை அவர் இளமையிலேயே அறிந்து கொண்டார். திருவை அவர் நாடினார். ஆனால் தெள்ளியராகவே திருவை அடையவேண்டும என்று அவர் உறுதிகொண்டார். இரண்டை யும் பெற அவர் வகுத்த நெறி ‘வறுமையிற் செம்மை’ நெறி எனக் கூறத்தகும் ஷாவின் வறுமையிற் செம்மை நெறி எத்தகையது; அஃது எவ்வாறு வெற்றிபெற்றது என்பவற்றை வரும் பிரிவுகளில் காண்போம்.
அடிக்குறிப்புகள்
1. இவ் ஆங்கிலப் பெருமக்கள் இங்கிலாந்தில் வந்து ஆங்கிலேயருடன் ஒன்றுபட்டு ஆங்கிலப் பெருமக்களாய் விடினும், உண்மையில் ஃபிரஞ்சு நாட்டிலுள்ள நார்மண்டி மாவட்டத்திலிருந்து முதலாம் வில்லியம் மன்னனுடன் வந்து இங்கிலாந்தை வென்று ஆண்ட ஆட்சியாளர்களே. இவர்கள் ஃபிரான்சிலும் ஒரு நூற்றாண்டுக்கு முன்தான் வந்து போர் வலிமையால் நார்மண்டியைக் கைக்கொண்டவர்கள். அதற்குமுன் அவர்கள் வடவர் (North
man or Normans) என்ற டேனிய நாடோடிக் கடற்கொள்ளை மரபினராயிருந்தவர்களே. இத்தகைய இனங்கள் நாகரிக உலகில் வந்தபின் ஆட்சியாளராய் விடுவது எல்லா நாட்டிலும் இயல்பே.
2. இந்திய மாநிலத்திலும் ஆசியாவிலும் பாபிலோனிய, சிந்து நாகரிகங் கண்ட பண்டைப் பழங்குடியினத்தவர் இதே தரத்தவர் இதே இனத்தவராகக் கூடக் கருதக்கூடியவர்கள்.
3. ஆங்கிலமொழியின் எழுத்துக்கள் இலத்தீன்மொழியிலிருந்து இரவலாகப் பெற்றவை. ஆனால் ஆங்கில மொழியில் அவற்றின் ஒலிப்புமுறை மாறிவிட்டது. ஆங்கிலமொழியின் ஒலிகளையே அவை சரியாகக் குறிப்பதில்லை. பிறமொழியின் ஒலிகளையோ அவை முற்றிலும் பிழைபாடாக்கிவிடுகின்றன. இதனாலேயே இலத்தீனிலும் மற்ற எல்லா உலகமொழிகளிலும் தவறில்லாமல் ‘தாவீது’, ‘தீதுஸ்’ என ஒழுதி ஒலிக்கப்படும் சொற்கள் ஆங்கிலத்தில் இதே எழுத்துக் குறிகளில் எழுதப்படினும் ‘டேவிட்’ டைட்டஸ்’ என ஒலிக்கப்படுகின்றன. ஆங்கில நாட்டில் உள்ள பல இலத்தீன், கிரேக்கப் பேராசிரியரும் வடமொழி, பிறமொழிப் பேராசிரியருங்கூட இத்தகைய நகைப்பிற்கிடமான பிழைப்பட்ட ஒலிமரபிலிருந்து விடுபட்டவர்களல்லர். ஷா ஆங்கில ஒலிமரபிலும் எழுத்துச் சீர்திருத்தத்திலும் மிகுதி ஆர்வமும் ஈடுபாடும் உடையவராயிருந்ததன் காரணம் இதுவே.
4. ஷா அயர்லாந்தில் பிறந்தார். ஆயினும் ஆங்கிலமே அவர் தாய்மொழி என்பது நினைவில் வைக்கத்தக்கது. தவிர, ஆங்கில மொழியின் கலைநயத்தேர்ச்சியில் 18ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து தலைமைச்சிறப்புப் பெற்றிருந்ததுபோல் 19 ஆம் நூற்றாண்டில் (வட) அயர்லாந்து தலைமைச் சிறப்புப் பெற்றிருந்தது என்பதும் கவனத்துக்குரிய செய்தி. பழம் பிரிட்டானியரின் கலைப்பண்பை ஆங்கில மொழியில் தோய்ந்த பல பெரியார்கள் அயர்லாந்து, வேல்ஸ் ஸ்காட்லாந்து ஆகிய பழங்குடிமரபு நாடுகளுக்கே உரியவர் என்பதும் காணலாம்.
வறுமையிற் செம்மை
அயர்லாந்திலிருந்து இங்கிலாந்துக்கு வரும்போதே ஷாவின் பல சிறப்புப்பண்புகள் அவரிடம் படிந்துவிட்டன. இங்கிலாந்தின் புதிய சூழ்ச்சிகள் இவற்றுட் பலவற்றை வலியுறுத்தின. இஃது இயல்பே. செல்வரின் குலமரபு இறுமாப்பு, ஆதிக்கப்பண்புகள்; சமயத்துறையாளர், பொதுமக்கள் ஆகியவர்களின் ஆராயாச் சமயமரபுகள், குருட்டு நம்பிக்கைகள் முதலியவை அயர்லாந்துக் கும் இங்லாந்துக்கும் மட்டுமன்றிக் கிட்டத்தட்ட எல்லா நாடுகளுக்கும் உரியவையே. மேலும், அயர்லாந்தில் ஷாவின் குடிமரபும், வாழ்வியல் சூழல்மரபும் இங்கிலாந்துடன் தொடர் புடையவையே. ஆயினும், இங்கிலாந்துக்கு வந்ததனால் அவர் வாழ்க்கைப்போக்கில் சில குறிப்பிடத்தக்க நுட்பமாறுபாடுகளை நாம் காணக்கூடும். கூர்ந்து கவனிப்பவர்களுக்கு அவர் எதிர்ப்புப் பண்பிலும், வாழ்க்கைக் குறிக்கோளிலும் இங்கிலாந்துக்கு வந்தபின் ஒருபுதிய போக்கும், தொனியும் ஏற்படுவது தெரியவரும்.
அயர்லாந்தில் ஷா தம் வறுமைச் சூழலில் வெறுப்பும் கசப்பும் கொண்டார். ஆனால், அவர் எதிர்ப்பு பெரிதும் செயலற்ற எதிர்ப்பாகவே இருந்தது. அவர் தற்சார்பும், நேர்மையும், தன் முயற்சியும் பெரிதும் தம் வாழ்வின் எதிர்கால வெற்றியை மட்டுமே நோக்கின. இங்கிலாந்திலோ அவர் எதிர்ப்பு தம் எதிர்கால வெற்றியில் நம்பிக்கைமிகுந்த உறுதி எதிர்ப்பாயிற்று. அத்துடன் அவர் எதிர்ப்பில் படிப்படியாக வெறுப்பும் கசப்பும் குறைந்தன. மேலும், அவ் எதிர்ப்பு தம் எதிர்கால வாழ்வுபற்றிய அவா ஆர்வத்தால்மட்டும் தூண்டப்படாமல், உலகின் எதிர் காலம்பற்றிய அவா ஆர்வத்தால் தூண்டப்பட்டதாயிற்று. ஒரு புதிய சமயம் தோற்றுவிப்பவருக்குரிய புத்தார்வமும் கனவார் வமும் அவர் எதிர்ப்பைக் கனிவித்தது. இயல்பிலேயே அருளாள ரான அவர், நாளடைவில் உலகத்தொண்டார்வ மிக்க உலகப் பேரருளாளரானார்.
இங்கிலாந்தில் அவர்கண்ட புதிய சூழலின் தன்மையை அவரே விளக்கியுள்ளார். “அயர்லாந்திலிருந்து இங்கிலாந்துக்கு வந்தபோது, நான் 17-ம் நூற்றாண்டிலிருந்து 19-ம் நூற்றாண்டுக்கு வந்ததாகவே எனக்கும் தோற்றியது” என்பதே அவ்விளக்கக் குறிப்பு. அயர்லாந்து உலகநாகரிக அலையியக்கங்களிலிருந்து ஒதுங்கியிருந்தநாடு. நீண்டநாள் அடிமைத்தனம் காரணமாக அஃது உலக நாகரிக வளர்ச்சியில் பிற்பட்டிருந்தது. இங்கிலாந்தோ உலக நாகரிமாகிய அகல்வெளியின் காற்றோட்டமும் ஒளிக்கதிர் களும் தங்குதடையின்றி உலவிய நாடு அயர்லாந்தின் குறைகள் அடிமை, பழமை ஆகியவற்றின் குறைகள். பலகூறுகளில் அவை ஓர் இனம், ஒரு வகுப்பின் குறைபாடாகக்கூட இயங்கின. ஆனால், இங்கிலாந்தின் குறைகளோ புதுமையின் குறைகள்; உலகின் குறைகள் ஷாவின் எதிர்ப்புப் பண்பைப் பரந்த உலக அடிப்படை எதிர்ப்பாக மாற்றிய சூழல் இதுவே.
வகுப்புவேறுபாடு, உயர்வுதாழ்வுகள், குடியிறுமாப்பு ஆகியவை அயர்லாந்தைப்போலவே இங்கிலாந்திலும் இருந்தன. ஆனால், அயர்லாந்திலுள்ள அளவில் அஃது இன வேறுபாடா கவோ, பகைமையுடையவையாகவோ இல்லை. வறுமையுடைய ஒருவன் அயர்லாந்தைப்போலவே இங்கிலாந்திலும் புறக்கணிக் கப்படுவான். ஆனால், இங்கிலாந்தின் புறக்கணிப்பில் அவ மதிப்போ, புண்படுத்தும் பகையுணர்ச்சியோ இல்லை. வறியவன் செல்வந் தேடித் தன் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான உதவிகளை அயர்லாந்திலும் சரி, இங்கிலாந்திலும் சரி, பொதுவாக எந்நாட்டிலும் எவரும் பெறமுடியாது. ஆனால், பொதுவாக இங்கிலாந்திலும் சிறப்பாக இலண்டன்போன்ற பெருநகரங்களிலும் அவ்வகையில் உதவும் சூழ்நிலைகள் உண்டு. இதனைத் தடுக்கும் சூழ்நிலைகளும் அவ்விடங்களில் இருக்க முடியாது. இந்நிலையில் ஷாவின் எதிர்ப்புப் பண்பில் அருளாள ராகிய அவரிடம் கூட இடம் பெறக்கூடிய சிறிதளவு பகைமையும், கசப்பும், வெறுப்பும் நீங்கியது இயல்பே. அவர் தவறுகண்ட போது எதையும் எதிர்த்தார். “எப்பொருள் எத்தன்மைத்தாயினும், அப்பொருள் - மெய்ப்பொருள் காண்பதறிவு.” என்ற முறையில் இதில் ஒருசார்பு காட்டவில்லை. ஆனால், தவறு கண்டபோது கூட அவர் எவரையும் தனிப்பட எதிர்க்கவில்லை. ஆட்களை விட்டு, அவர்களின் பண்புகளிலேயே அவர் எதிர்ப்புத் தாக்குதல் சென்றது.
இங்ஙனம் ஷாவின் தன்முயற்சிக்கும் வெற்றி தந்து, அவர், ‘காந்தீய,’ அருட்பண்புக்கும் ‘திரு.வி.க,’ வின் நடுநிலையுணர்வுப் பண்புக்கும் உறுவலிமை தந்த நாடு, இங்கிலாந்தே யாகும்.
ஷா இங்கிலாந்துக்கு வந்தபோது, அவர் 19 ஆண்டு இளைஞராக வந்தார். அவர் புறத்தோற்றம் பற்றிக் குறிப்பிடுபவர் எவரும் அவர் தோற்றத்திற்குரிய சிறப்புப் பண்பாக அவர் செம்பட்டைநிறத் தாடியைக்குறிக்கத் தவறுவதில்லை. இறுதி நாட்களில் இது தூய வெண்தாடியாகவும் காட்சி யளித்தது. ஆனால், அயர்லாந்தைவிட்டு இங்கிலாந்துக்கு வந்தவர் வெண் தாடி வேந்தரும் அல்லர்; செந்தாடி வீரரும் அல்லர். அவர் தாடியில்லா இளைஞர் பெர்னார்டு ஷாவாகவே வந்தார். அவர் எக்காலத்திலும் உடையிற் கவனம் செலுத்தாதவர். வாழ்க்கைப் பொறுப்பில் பெரும் பங்குகொண்ட அவர் வாழ்க்கைத் துணைவி அவர் வாழ்விற் புகுமுன், அவர் உடையும் தோற்றமும் இன்னும் அவலமிக்கதாயிருந்தது. அயர்லாந்திலிருந்து வந்த நிலையில் அவர் உடை பெரிதும் அழுக்கடைந்ததாகவும், கந்தலாகவுமே இருந்தது. அடிக்கடி அவர் ஒரே உடையுடையவராய், அதை நீண்டகாலம் அணிந்துகொள்ள வேண்டியவராயிருந்தார். அவர் வாட்டசாட்டமான நெட்டையுடனும் நீண்டு பரந்த திரட்சிநயமற்ற முரட்டெலும்புருவமும் கவிந்தடர்ந்த புருவங் களும் நயநாகரிகமற்ற அவர் நடைக்கு இன்னும் முரண்பாட்டுப் பண்பளித்தன. கோதப்பெறாத அவர் தலைமுடி பிற்காலத் தாடிபோலவே செம்பட்டை நிறமாயிருந்தது. பண்பமையத் தைக்கப்பெறாத அவர் சட்டை கால்சட்டை ஆகியவை அளவுக்கு மீறித் தொங்கலாயிருந்தன. அவற்றின் அருகுகள் நீடித்த உழைப் பால் நைந்து புரிபுரியாய்க் கிடந்தன. மதயானை போன்ற அவர் தாவிய நடையும் அடுத்த ஊர்தியை எட்டிப் பிடிக்க விரைபவர் போன்ற அவரது இடையறா வேகமும் இந்நாளிலேயே அவர் தனிச்சிறப்புப் பண்புகளாயிருந்தன.
இக்காலத்திய அவர் ஆடையணிகளைப்பற்றி இருபது ஆண்டுகளுக்குப் பின் ஒரு நண்பரிடம் குறிப்பிடுகையில், “என் ஆடையின் பழம்போக்குப்பற்றிப் பேச்செடுக்கும் பலர் ஒரு செய்தியைக் கவனிப்பதில்லை. எனக்கு இவ்வாடைகள் மன்னன் சாலமோனின் புகழணியாடை போன்றதாகவே இருந்தது,” என்று அவர் கூறுகிறார்.
நிலக்குத்தகைப் பணிமனை துறந்து பெர்னார்டுஷா 1876-ல் இலண்டன்மாநகர் வந்து சேர்ந்தார். தம் அன்னையாருடன் அவர் ஃவுல்ஃகம் சாலையிலுள்ள விக்டோரியா வளாகத்தில் 13-ம் எண் இல்லத்தில் சென்று தங்கினார்.
விக்டோரியா அரசி இந்தியாவின் பேரரசியாக மணிமுடி யேற்றதும், அதன் மூலம் இந்தியா ஒன்றுபட்ட பிரிட்டனின் பேரரசில் ஓர் உறுப்பானதும், ஷா இலண்டன் வந்த இதே ஆண்டிலேயே என்பது குறிப்பிடத்தக்கது. ஷா இருபதாம் ஆண்டு நிறைவெய்தி அரசியல் முறைப்படி முழுநிறை உரிமை பெற்றது இதற்கு ஓர் ஆண்டுக்குப் பின்னரேயாம்.
இருபதாம் நூற்றாண்டில் வாழும் மக்கள் ஷாவை, இருபதாம் நூற்றாண்டுக்குரியவர் என்றே கருதினர். அவர் அந்த அளவுக்கு இருபதாம் நூற்றாண்டில் அந்நூற்றாண்டின் ஒரு பகுதியாய்விட்டார். அத்துடன் அவர் நீண்ட வாழ்வில் புதுமை யிலும் புத்தார்வத்திலும் என்றும் முன்னேறிக்கொண்டேயிருந் தார். அவரைப் பழங்காலத்திற்குரியவர் என்று எவரும் கருத வில்லை. ஆயினும், இருபதாம் நூற்றாண்டில் அவர் எதிர்ப்பு, வாளின் கூடற்ற முனையால் தாக்கும் விளையாட்டு எதிர்ப் பாகவே பெரிதும் விளங்கிற்று. அவர் காலத்தின் பகுதியாய் விட்டாரேயன்றி, 19-ம் நூற்றாண்டில் தோற்றியதுபோல் மூர்க்க மான எதிர்ப்புடையவராய்க் காட்சியளிக்கவில்லை. உலகுக்குரிய அவர் வாழ்க்கைப்பண்புகளை இங்கிலாந்தின் சூழலும் அயர் லாந்தின் சூழலுமே உருவாக்கியதுபோல், இருபதாம் நூற்றாண்டுக் குரிய அவர் வாழ்க்கைப்பண்புகளையும் உருவாக்கிய காலச் சூழலும், மரபும், 19-ம் நூற்றாண்டுக்குரியவையே என்னல் தகும்.
ஷா புகுந்த இங்கிலாந்து 19-ம் நூற்றாண்டின் நடுப்பகுதி கடந்த விக்டோரியா கால இங்கிலாந்து. பிரிட்டானியப் பேரரசு அக்காலத்தில் தன் முழுநிறை வளர்ச்சியும் பெற்று, வெற்றி இறுமாப்பில் மூழ்கி யிருந்தது, அறிவியல் அந்நாளில் செயற்கரிய செய்யும் ஆற்றலும், அறிதற்கரிய அறிவுப் பரப்பும் எய்தி ‘இனியும் அறிய வேண்டுவது உளதுகொல்லோ?’ ன்று செம்மாந்து கேட்கும் நிலையில் இருந்தது. பொருளியல் வாழ்வில் ஜான் ஸ்டியூவர்ட் மில்லின் ‘தடையற்ற வாணிகக் கோட்பாடு; அறிவியல் துறையில் டார்வினின்படி வளர்ச்சிக் கோட்பாடு; அரசியல் துறையில் பிரிட்டனின் குடியாட்சியுயர் வுடன் உலகில் நாகரிகம் பரப்பும் அதன் தெய்வீகப் பொறுப்புப்பற்றிய நம்பிக்கை; சமயத் துறையில் பிரிட்டனின் செல்வ ஆட்சியின் பரந்த உயர் ஒழுக்க முறை பற்றிய பற்றுறுதி’ ஆகியவற்றின் ஆட்சி நிலவிற்ற. சமயத்துடன் அறிவியலும், குடியாட்சியுடன் பேரரசும், செல்வ ராட்சியுடன் வெள்ளை யராட்சியும், ஒழுக்க உயர்வுடன் வெற்றியும் வியத்தகு முறையில் இணைத்துக் காட்டப் பட்ட இவ்வியக்கத்தக்க முரண்பட்ட இணைப்பமைதி கருதி, அறிஞர் இக்காலத்தை ‘விக்டோரியா கால இணைப்பமைதி’(Victorian compromise என்று குறித்தனர்.
விக்டோரியா கால இணைப்பமைதியின் மேற்பரப்பு ஷாவின் இளமைக் காலத்திலேயே உலைவுகொள்ளத் தொடங்கி விட்டது. மனிதன் விலங்குகளிலிருந்தும், மனிதனின் நாகரிகம் விலங்குகளின் வாழ்விலிருந்தும் படிப் படியாக வளர்ந்துயர்ந்தன என்று டார்வின் ‘மனிதனின் மரபு’(Descent of Man) என்ற நூலில் விளக்கிக் காட்டினார். இது வெளி வந்தது 1872-லேயே. 1864-ல் உலகத் தொழிலாளர் இணைப்பறவு ஏற்பட்டது. அதன் வருங்காலப் புத்தூழி யறிஞரான காரல் மார்க்ஸின் (Das Kapital) முதலீடு என்ற முழு முதனூல் 1867-ல் தோன்றிச் செல்வராட்சிமீது தன் கண்டனத் தைத் தெரிவித்தது. மார்க்ஸியக் கோட்பாட்டின் அடிப்படையில் இரண்டாம் உலகத் தொழிலாளர் இணைப்புறவு 1889-லும் மூன்றாவது 1918-லும் விரிவடைந்து புத்தம்புது உலகைக் கொண்டு வரவிருந்தன. இங்கிலாந்திலேயே ஒப்பியல் நெறி (Socialism) யைப் பரப்பவிருந்த தலைவர்கள் வளர்ந்து உருவாகி வந்தனர். ஒழுக்கத்துறை இறுமாப்புக் கோட்டையினுள்ளிருந்தே கார்லைல், ரஸ்கின் ஆகிய கலைத்துறைத் தலைவர் ஒரு புறமும், சற்றுத்துணிந்து அதன் புற மதிலிலிருந்த தீன் இங்க், பட்லர் ஆகியவர்களும் தாக்குதல் தொடங்கியிருந்தனர் பெர்னார்டுஷா ஒப்பியல் நெறியாளருள் ஒருவராகவும், ஒழுக்க இறுமரப்பு எதிர்ப்பாளருள் ஒருவராகவும் விக்டோரியா கால இணைப்பு களைத் தாக்கும் முதல்வராகவுமே இருந்தார்.
பிரிட்டனில் அடியெடுத்து வைத்தபோதே ஷா தன் வாழ்க்கை வெற்றியைமட்டும் குறிக்கோளாகக் கொண்டவராக அடியெடுத்து வைக்கவில்லை. பிரிட்டனையே மாற்றியமைத்து விடத் தக்கவர் என்ற உணர்ச்சியுடனேயே அவர் வந்தார். “என் வாழ்க்கைப்பணி இலண்டனுக்கு அறிவுரை தருவதாகும் ஆனால், நான் இன்னும் என் மாணவர் உள்ளப் பாங்கினை நன்கு ஆராய்ந்துணரவில்லை. அத்துடன் உலகின் பொது அறிவுத் தொகுதியுடன் நான் இன்னும் என் கருத்துக்களை ஒழுங்குபடத் தொடர்பு படுத்திக் கொள்ளவில்லை,” என்று 1896-ல் அவர் ஒரு பேட்டியாளரிடம் கூறியுள்ளார். மற்றும் இதேபோல, “இலண்டன் எனக்கேற்ற அளவு முதிர்ச்சி பெறவில்லை. இலண்டனுக்கேற்ற அளவு நானும் முதிர்ச்சி பெறவில்லை. எம் இருவரிடையே பொருந்தா முரண்பாட்டு நிலையே இருந்து வந்தது. நான் ஒரு அயலான் - அயர்லாந்து நாட்டான். பல்கலைக் கழக ஆலையில் ஆட்டி உருவாக்கப் பட்டாலன்றி அயர்லாந்துக்காரனே பிரிட்ட னுக்குரிய எல்லா அயல்நாடுகளிலும் மிகத் தொலைத்தொடர் புள்ள அயல் நாட்டான் ஆவான். நான் கல்வியறிவற்றவனல்ல என்பது உண்மை ஆனால், இதில் கேடு யாதெனில், எனக்குத் தெரிந்தது எதுவோ அதுவேதான் ஆங்கிலேயருக்குத் தெரியவ ராததாகவும், அல்லது அவர்களது நம்பிக்கை பெறாததாகவும் இருந்தது,” என்று இவர் குறித்துள்ளார்.
உலக நாகரிக முகட்டில் மிதந்த இறுமாப்புக் கோட்டையை முற்றுகையிட்டு எதிர்க்கவந்த இவ் இறுமாப்பு வீரர்தான் 1876-ல் அழுக்கடைந்த கந்தலாடையுடன் கையில் காசின்றி, கால்பட்டினி அரைப்பட்டினி நிலையில், கால் நடையாய் இலண்டன் தெருக் களில் எவராலும் சட்டை செய்யப் பெறாமல் சுற்றித்திரிந்த இளைஞர் பெர்னார்டுஷா.
இலண்டனில் ஷாவின் வாழ்க்கை வறுமையின் வாடை யிலேயே தொடங்கிற்று. கலைத் துறையிலோ, எழுத்தாளர் துறையிலோ தாம் முன்னேறுவது உறுதி என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. அவரளவு வறுமையிடையே அவரளவு தன்னம்பிக்கை யுறுதியுடைய இன்னொரு இளைஞரை நாம் கனவார்வத்தில்கூடக் கருதிப் பார்க்க முடியாது. இவ்வுறுதி காரணமாக அவர் துணிந்து மேற்கொண்ட வாழ்க்கை முறையும் வறுமையை உணர்ந்த எவருக்கும், கலைத் துறையில் வேறு எவருக்கும் ஏற்படாத ஒரு துணிந்தமுறை. பெருஞ் செல்வர் குடியிலுள்ள இளைஞர் தம் உடனடிவருவாயில் கருத்துச் செலுத்தாமல், தம் செல்வத்தை இறைத்துக் கல்லூரியிலும் பல்கலைக் கழகங்களிலும் தம் எதிர்கால நல்வாழ்வு நோக்குடன் உழைக்கின்றனரன்றோ! அதே துணிவுடன் ஷா தம் அன்னையின் சிறு செல்வச் சேமிப்பையும், அன்னையர் தமக்கையாரின் சிறு வருவாயையும் தயங்காது பெற்று, இலண்டன் தெருக்களில் திரிந்து வாழ்க்கைக் கல்லூரியில் பயிலவும், கலைக் கூடங்களில் அறிவுத்தேர்ச்சி பெறவும் முற்பட்டார். அயர்லாந்தில் அவர் பெற்றதற்கல்விமுறை அவர் பள்ளிக் கல்வியாகவும், கல்லூரிக் கல்வியாகவும் விளங்கிற்று என்றால், இங்கிலாந்தில் மீண்டும் அதே முறையில் அவர் மேற்கொண்ட தற்பயிற்சி முறை அவருடையபட்டங்கடந்த புத்தாராய்ச்சி, சிறப்பறிவுத் தேர்ச்சி முறையாயிற்று. உயர்குடி இளைஞரும், நம்கையரும் தம் தாய் தந்தையர் செல்வக்குவையைச் செலவு செய்து ஒய்யாரமாக உண்டு உடுத்துக் கலைமாடங்களில் கல்வி நீரோடையில் உலாவும், அதே உணர்ச்சியுடன், அன்னை வருவாயை உண்டு அவர் வறுமைக் கோட்டையை நம்பி அவரும் இலண்டன் தெருக்களிலும் கூடங்களிலும் உலவினார்.
1876 முதல் 1885 வரை ஷா வேலையற்று, வருவாயும் தேடாது திரிந்தார். இதுவே அவர் பயிற்சிப் பருவமாகிய வறுமையிற் செம்மைக்காலம். அவர் தந்தையார் அவருக்குச் செலவுக்காக இப் பருவத்தில் வாரம் ஒரு பொன் அனுப்பித் தந்துகொண்டிருந்தார். இச்சிறு தொகைபோக மீந்த செலவு முழுவதும் அவர் அன்னையார் செலவே. கணவன் குடிபற்றியும் வறுமைபற்றியும் திருமதி ஷா கவலைப்படாதது போலவே, ஷாவின் செயலற்ற வறுமை பற்றியும் அவர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அன்னை வருவாய் போதாதபோது ஷா அவர் தாயகவழிவந்த 4000 பொன் மதிப்புடைய செல்வத்தில் சிறிது சிறிதாகக் கேட்டு வாங்கிச் செலவு செய்தார். அன்னையார் இது வகையில் மற்ற மாதரைப்போல, மற்ற அன்னையரைப் போலக் கூட முணுமுணுத்ததாகத் தெரியவில்லை. பின்னாட்களில் ஷா புகழ்பெற்ற எழுத்தாளரானபின், கலைமரபிலும் அறிஞரைப் பேணிப் போற்றும் மரபிலும் வந்த ஓரெழுத்தாளர் ஷாவின் வறுமையிற் செம்மை வாழ்வைச் சித்திரிக்கையில், அவர் தம் அன்னையாரின் வறுமை தவிர்க்கத் தம் கடுமையான வறுமையை எதிர்த்துப் போராடியதாக அவரைப் புகழ்ந்து கூறியிருந்தார். ஷா தமக்கு உரிய முரட்டெதிர்ப்புப் பாணியை மேற்கொண்டு, “நான் உழைத்து என் அன்னையைப் பேணவில்லை. அத்தகைய நல் இளைஞன் நானல்லன். என்தாயின் உழைப்பைத் தின்று கவலை யற்றுத் திரிந்தவன் நான். என் அன்னையும் என்னை உழைக்க வைத்துத் தாம் வாழவில்லை. அறிவுடையமாதராகிய அவர் தாம் உழைத்து என்னை உழையாது வாழ வைத்தார். கலைக்கு வீரவணக்கம் வேண்டுவதானால், ஒப்பற்ற அம்மாது நல்லாருக்கு வணக்கம் செய்க!” என்று கண்டனஉரை பகர்ந்தார்.
இவ் ஒன்பதாண்டுக் காலத்திலும் ஷா பெரும்பாலும் எத்தகைய ஊதியத் தொழிலிலும் ஈடுபடவில்லை. அவ்வகையில் எதையும் நாடவும் இல்லை. அத் துறையில் கவலைசெலுத்திய தாகக்கூட நாம் அறியோம். இக் கால முழுமையிலும் எழுத் தாண்மை மூலமாக ஷாவுக்குக் கிடைத்த மொத்த வருவாய் ஆறு பொன்* தான்! இதில் முதல் பதினைந்து வெள்ளி ஜி.ஆர்.ஸிம்ஸ் என்ற ஒரு நண்பருக்கு அவர் எழுதித் தந்த ஒரு கட்டுரைக்காகக் கிடைத்தது. “எவருக்கும் யாவருக்கும் பொருத்தமான கிறித்தவப் பெயர்கள்”(Christian names for one and all) என்பதே அக் கட்டுரையின் தலைப்பு. இது ஷாவினால் நட்புமுறையில் விளையாட்டாகவும் கேலியாகவுமே எழுதப்பெற்றது. அவர் வறுமையிடையே இப் பதினைந்து வெள்ளி அவருக்கு மிக உயர்தொகையாகத் தோற்றிற்று. தம் சிறு முயற்சிக்கு இஃது எதிர்பாராத நல்ல கைம்மாறு என்று அவர் வியந்தார். தம் நன்றியறிதலைத் தெரிவிக்கும் முறையில் உண்மை யிலேயே முனைந்து நல்லதொரு கட்டுரை வரைந்து நண்பரிடம் தந்தார். ஆனால் வியப்புக்குமேல் வியப்பு யாதெனில், இஃது அவர் பெயரையும் வாய்ப்பையும் கெடுத்துவிட்டதாம்! நம் பொருளியல் உலகுபற்றிய ஷாவின் முதல் செயலறிவு இது!
ஷாவின் ஒன்பதாண்டு வருவாயான ஆறு பொன்னில்* (ஆங்கில நாணய முறையில் பொன் (pound) என்பது இருபது வெள்ளி (shilling)) இந்தப் பதினைந்து வெள்ளிபோக மீதித்தொகை முழுவதும் ஒரே ஒரு மருந்து விளம்பரத்திற்காகவே!
ஷாவின் வறுமையிற் செம்மைக்கு அவர் வணங்காமுடி மரபே காரணம். அவர் தன் முயற்சியும் விடா முயற்சியும் இதற்கு வீறுதந்தன. ஆயினும், அவர் பல தொடக்கத் தோல்விகளுக்கு ஆளானார். அவர் வாழ்க்கையைக் கடும்போராட்டமாக்கிய இத் தோல்விகளுக்கு அவர் துணிகர வாய்மைப்பண்பே பெரிதும் காரணமாயிருந்தது அவர் அன்னையாரின் நண்பரான லீ கலையுலகில் தமக்கிருந்த மதிப்பைப் பயன்படுத்தி. ‘ஹார்னெட்’ என்ற வெளியீட்டிதழுக்கு இசைபற்றிய கட்டுரை எழுதும் பணிபெற்று அவருக்குத் தந்தார். கட்டுரைகள் லீயின் பெயரி லேயே வெளியிடப்பட்டன. ஆயினும் ஷாவே முழுதும் எழுதி, ஊதிய முழுவதும் தாமே பெற்று வந்தார். அவர் இசையுலக மரபைச் சிறிதும் சட்டை செய்யாது தம் கருத்தைத் துணிந்து எழுதலானார். இசையுலகில் இன்னும் புகழ்பெற்றுவிடாத ஜெர்மன் இசைஞர் வாக்னர் புதிதாக இலண்டனில் அணிமை யில் கட்டப்பட்டிருந்த ஆல்பெர்ட் மாளிகையில் இசையரங்கு நடத்தினார். லீயைப்போலவே வாக்னரிடம் ஈடுபட்ட ஷா அவரை வானளாவப் புகழ்ந்தார். இதனால் சீற்றமடைந்த இசையுலகம் அவரையும் அவருக்கு இடந்தந்த செய்தியிதழையும் ஒருங்கே வெறுத்தொதுக்கிற்று. முதலில் இசையரங்குகளுக்கு அவருக்கும் அவர் இதழுக்கும் நுழைவுச் சீட்டுக்கள் அனுப்புவது நிறுத்தப்பட்டது. நாளடைவில் அவர் எழுத்தாண்மைக்கு மட்டுமன்றி, அதற்கு இடந்தந்த வெளியீட்டிதழுக்கும் முற்றுப் புள்ளியிட வேண்டியதாயிற்று.
தோல்விகளால் என்றுமே ஷா மலைப்படைந்ததில்லை. இத்தோல்வியோ அவருக்குத் துணிவையே அளித்தது தம் கட்டுரைகளுக்கு எழுந்த எதிர்ப்பே அவருக்குத் தம் ஆற்றலை எடுத்துக்காட்ட உதவிற்று. அத்துடன் அவர் உலகியலறிவும் செயல் திறமும் இப்போது பெருகின. இசைமேளக் கருவிகள் செய்யும் தொழிலாளர் ஒருவர் இச்சமயம் அவரை வழியில் இடை மறித்துக் காசுக்காகத் தொப்பியை விரித்தபோது, அவர் செய்திய கத்தார் பாணியில் ‘செய்தியகம்’ என்று கூறி அகன்றா ரென்று அவர் வாழ்க்கைக் குறிப்பொன்று கூறுகிறது. ஷாவின் ஆடை யலங்கோலமும் இப் பருவத்தில் சிறிது குறை வடைந்தது. கலையரங்கங்களுக்குச் செல்லத்தக்க ஒரு நல்ல உடை அவரிடம் இருந்தது. மேலும் இசைத்துறையாளர்களிடையே இசைத்திற முணர்ந்து சுவைத்துக் கேட்கும் குணமும், இசையினைப் பாராட்டும் பண்பும் அவரிடமிருந்தன. இசைக் கருவிகளை இயக்க ஆளில்லாதபோது அவர் தாமே இயக்கி, அரங்கினர்க்கு உதவினார். எனவே அவருக்கு இசைக்கலைக் குழுவினரிடையே எப்போதும் வரவேற்புக் கிடைத்தது. உணவு கிட்டாத பசிப்பிணி வேளைகளில் இதன் மூலம் அவருக்கு இசைஞர் தேநீர் விருந்துகளில் கலக்கும் வாய்ப்பு ஏற்பட்ட துண்டு.
1879-ம் ஆண்டில் அவர் சில மாதங்கள் ஈடிஸன் தொலை பேசிக் கழகம் என்ற புதிய கழகமொன்றில் காட்சித்துறை யாளராகப் பணியாற்றினார். இக்கழகம் புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்ட தொலைபேசிக் கருவியைப் பரப்புவதற்காக இரண்டாண்டுகட்கு முன்னரே நிறுவப்பட்டிருந்தது. புத்தம் புதிய இவ் அறிவியற் கருவியின் கவர்ச்சியால் பல அமெரிக்க நாட்டுச் செல்வர்கள் இங்கே காட்சிகாண வந்தனர். அயர்லாந்தில் வறுமையின் கீழ்க்கோடி வகுப்பினரின் இயல்புகளைக் கண்டுணர்ந்த ஷா, இங்கே செல்வத்தின் உயர்முகட்டு வகுப் பினரையும் அமெரிக்கரையும் நன்கு கண்டுணரும் வாய்ப்பு ஏற்பட்டது. அக்கழகம் மற்றொரு பெருங் கழகத்தால் வாங்கி இணைத்துக்கொள்ளப் பெற்ற போது, ஷாவுக்கு இப் பணியும் நின்றுவிட்டது.
ஷாவின் வறுமைப் பருவ வாழ்விடையே இவ்வாண்டை ஒரு திருப்புகட்டம் என்னலாம். ஏனெனில் இதனிடையே அவர் வாழ்வை உருவாக்கிய இரு நிகழ்ச்சிகள் தொடங்கின. அவர் எழுத்தாளராக முடிவுசெய்து, புனைகதைத் துறையில் முனையத் தொடங்கிய காலம் இதுவே. அத்துடன் இவ் வாண்டில் பல துறை அறிஞராகிய லெக்கி என்பவரின் நட்புமூலம் அவர் சொற்போர்க் கழகங்களில் சேர்ந்து, ஒப்பியல்நெறி இயக்கத்தில் ஈடுபடவும், சொற்பொழிவாளராக நற்புகழ் பெறவும் இடமேற் பட்டது. தவிர, லெக்சியின் வாயிலாகவே அவர் அலெக் ஸாணடர் எல்லிஸ், ஹென்ரி ஸ்வீட் ஆகிய பேராசிரியர்கள் தொடர்பைப் பெறமுடிந்தது.
ஆங்கிலமொழியிலும் அதன் ஒலி முறைகளிலும் ஈடுபட்டுப் பகட்டாரவாரமின்றிப் பொதுமக்களுடன் ஊடாடி உழைத்த ஹென்ரி ஸ்வீட்டிடம் ஷாவுக்கு ஈடுபாடு மிகுதி. “அந்தப் புரட்சிகரமான பேராசான்.”(That revolutionary don) என்று அவரைப் பற்றி ஷா குறிப்பிடுவது வழக்கம். அவர் பண்போவியமும் அவர் கருத்துக்களும் பிக்மாலியன் என்ற ஷாவின் தலைசிறந்த நாடகத்தில் நடமாடுகின்றன. ஆங்கில ஒலிப்பு முறையிலும் எழுத்துச் சீர்திருத்தத்திலும் ஷா காட்டிய அக்கரையை அவர் நூல்கள் யாவற்றிலும் காணலாம். அவர் வாழ்நாளிறுதியில் அவர் தாம் ஈட்டிய பெருஞ் செல்வத்தின் செம்பகுதியை இத் துறைக்கே விட்டுச் சென்றார் என்பது குறிப்பிடத் தக்கது.
ஷாவின் புனைகதைகள் அவர் விடாமுயற்சிக்கும், அவர் திட்டதிட்ட வாழ்க்கைப் பண்புக்கும் ஒரு நற்சான்று. அவர் ஒவ் வொரு நாளும் ஐந்து பக்கம் எனத்திட்டமிட்டு எழுதிவந்தார். வாரத்தின் ஒவ்வொரு நாளிலும், மாதத்தின் ஒவ்வொரு வாரத்திலும், ஆண்டின் ஒவ்வொரு மாதத்திலும் இத்திட்டந் தவறாமல் அவர் எழுதிக் குவித்தார். எழுதும் தாள்கள் வாங்கு வதற்காக அவர் உணவைச் சுருக்கி அதில் மீந்த பணத்தைப் பயன்படுத்த வேண்டிவந்தது. இது தவிர, புனைகதை நூல்கள் ஒவ்வொன்றையும் வெளியீட்டாளர்களுக்கு அனுப்பி, ஒவ் வொருவரும் அவர் முகவரிக்கே திருப்பிவிட்டபோது, அவர் சிறிதும் ஊக்கம் தளராமல், மீண்டும் பணமிச்சப் படுத்தி, அஞ்சல் தலையிட்டு, அவற்றை அனுப்பிக் கொண்டேயிருந்தார். இத்தனை தொல்லைகளுடன் ’மெய்வருத்தம் பாரா’து, ’பசி நோக்கா’து ஆண்டுக்கு ஒரு புனைகதையாக ஒவ்வொரு பாரிய கையெழுத்துக் கட்டு உண்டு பண்ணி அதனை அவர் எங்கும் சுமந்து சென்றுவந்தார்.
1879-ல் முதிரா இளமை(Immaturiy); 1880-ல் பொருந்தாக் காதல் முடிச்சு(The irrational knot); 1881-ல் கலைஞரிடையே காதல் (love among the artists); 1882-ல் காஷெல் பைரனின் வாழ்க்கைத் தொழில்(Cashel Byron’s profession); 1883-ல் ஒப்புரவிணக்கமில்லா ஒப்புரவுச் சமநெறியாளர்(an unsocial socialist) என ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு புனைகதையாக அவர் புனைவுக் கருவிலிருந்த வெளிவந்தன. பல தடவைகள் அஞ்சல் பணியகம் கடந்து கடந்து வெளிவந்ததும், இவற்றுள் எவையும் வெளியீட்டாளர் ஏற்பையோ, பாராட் டையோ பெறவில்லை. பொதுமக்கள் பார்வைக்கே வரமுடியாத படி அச்சேறாமல் அவரிடமிருந்த இப் புனைகதை ஏடுகளில், முதல்முதல் அச்சிடப்பெறும் வாய்ப்புப் பெற்றது இறுதிப் புனைகதையே ஆகும்.
1885 வரை ஷா விடாமுயற்சியுடன் புனைகதைகள் எழுதினாலும், அவ்வாண்டுக்குள் அவருக்கே அதில் வெறுப்பு உண்டாகிவிட்டது. முதல் புனைகதையை அவரே ‘முதிரா இளமை’ எனப் பெயரிட்டிருந்தார். ஆனால் இப் புனைகதை களுள் எவையும் ஒரு முதிரா இளைஞனது அறிவுநிலையைக் காட்டுபவையாயில்லை. இளமையிலேயே முதிர்ந்த ஷாவின் அறிவுத் திறத்தைத்தான் இவற்றில் காணலாம். இப் புனைகதை நூல்களில் அவர் வாழ்க்கை பற்றியும் வாழ்க்கைத் தத்துவம் பற்றியும் ஆராய்ச்சிகள் செய்துள்ளார். அவர் பிற்கால நாடகங் களில் காணும் உரைநடைத் திறமும் ஆராய்ச்சித் திறமும் இவற்றிலும் பெரிதும் காணப்படுகின்றன. அவற்றின் பாரிய நீளம், வறண்ட ஆராய்ச்சித் தத்துவங்கள், புனைகதையில் எதிர் பார்க்கப்படும் கவர்ச்சி இல்லாமை ஆகியவையே அவற்றின் குறைபாடுகளாயிருந்தன.
அந்நாளைய சிறந்த புனைகதையாசிரியரான பெரிடித், ஒரு வெளியீட்டு நிலையத்தில் கருத்துரையாளராயிருந்தார். அவர் ஷாவின் நான்காவது புனைகதையான காஷெல் பைரனைத் ‘தகாதது’ என்ற ஒரே சொல்லால் ஒதுக்கிவிட்டாராம்! ஆயினும் இப்புனைகதையின் கதைத்தலைவன் மற்போர் வீரனாயிருந்த தனால், தற்போரில் அந்நாள் இருந்த ஆர்வத்தின் பயனாக அது சிறிது பாராட்டுப்பெற்றது. புத்தார்வமிக்க புனைகதை யாசிரியரான ஆர்.எல்.ஸ்டீவென்ஸன் அதனைப் புகழ்ந்து வரவேற்றதாக அறிகிறோம்.
தவிர, ஒப்பியல் நெறியாளரிடையே ஷா செல்வாக்குப் பெற்றபின், அந்நெறியாளரின் புதிய செய்தியிதழ்களாகிய “இந்நாள்,(today)” “நம் மூலை(our corner)” ஆகியவற்றில் அவை வெளியிடப் பட்டன. இறுதிப் புனைகதை முதலாகவும் பின் முறையே காஷெல் பைரன், பொருந்தாக் காதல், கலைஞரிடையே காதல் ஆகியலையும் அவற்றில் தொடர்கதையாக வெளிவந்தன. காஷெல் பைரன் ’இந்நா’ளின் பதிப்பாசிரியரால் ஒரு வெள்ளி விலையில் அப்பதிப்பக வெளியீடாக வெளியிடப்பட்டது. இதே நூலைப் பின் 1889-ல் வால்ட்டர் ஸ்காட் என்பவர் மறுபதிப் பாகவும் வெளியிட்டார். முதல் புனைகதை மட்டும் வெளியிடப் படாமல் நெடுநாள் இருந்தது. அத்துடன் அதன் பெரும் பகுதி சுண்டெலிகட்கு இரையாயிற்றாம்! இறுதியில் 1905-ல் ஷா தம் நாடகங்கள் மூலம் புகழ்பெற்றதன் பின் தான் எல்லாப் புனை கதைகளும் அத்துடன் முதிரா இளமையும் அச்சேறின.
லெக்சியும் ஷாவும் 1879-ல் ஆய்வியற் கழகம் (zetetical society) என்ற ஒரு சொற்போர்க் கழகத்தில் உறுப்பினராகச் சேர்ந்தனர். இவ்வாண்டில் இலண்டன் மாநகர் முழுதும் ஒரு பெருத்த பொருளியல் நெருக்கடியால் தாக்குண்டிருந்தது. இத்தகைய பொருள் துவக்கநிலை இதற்குமுன் என்றும் ஏற்பட்டதில்லை. இதற்குப் பின்னும் 1931-ம் ஆண்டைய உலகப் பொருளியல் நெருக்கடி காலத்திலன்றி வேநு எப்போதும் ஏற்பட்டதில்லை யென்று அறிகிறோம். இளைஞரிடையேயும் சிறப்பாக இள மாதரிடையேயும் இது பெருங்கிளர்ச்சியை ஊட்டிற்று. இக் கிளர்ச்சியில் பல கழகங்கள் தோன்றின; பல இதில் கலந்து கொண்டன. ஆய்வியற் கழக வாதங்களிலும் இக் கிளர்ச்சிகள் வலுப்பெற்றன. அதில் பெரும் பங்கெடுத்துக்கொண்டவர் திருமதி பெஸண்டு. இவர் இந்நாளில் இங்கிலாந்தில் ஷாவுடன் உழைத்த முன்னணி வீரராயிருந்துவந்தார். அந்நாட்டில் பலவகை அடக்கு முறைகளுக்கு ஆளாய், அவர் இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்து சமய சமூக இயக்கங்களில் ஈடுபட்டார். வ.உ.சிதம்பரனாருக்குப்பின், ஆனால் காந்தியடிகளுக்கு முன்பு, திலகருடன் நின்று இந்தியப் பெருநாட்டாண்மைக் கழகத்தின் தன்னாட்சி இயக்கத்தில்(congress home rule movement) பெரும் பங்கு எடுத்துக்கொண்டவர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.
ஆய்வியல் கழகத்தில் ’காம்டே’யின் வாழ்க்கைக் கோட் பாடு, ’மில்’லின் பொருளியல் கருத்துக்கள், ’மால்தூ’ஸின் மக்கட்பெருக்கக் கொள்கைகள், ’இங்கர்ஸா’லின் கடவுண் மறுப்பு வாதங்கள், ’டார்வி’னின் உலகத் தோற்றமுறை யாராய்ச்சி ஆகிய யாவும் அலசிவாதாடப்பெற்றன. ஷாவுக்கு இக் கழகத்தில் கிட்டிய மிகச் சிறந்த நண்பர் ஸிட்னிவெப் என்பவரே. அவர் பாரிய அறிவுப்பரப்பும், புள்ளிவிவரத் தொகுதிக்கோப்புத் திறமும் பெர்னார்டுஷாவின் அறிவுத் துறைப்பணிக்குப் பேரு தவியா யிருந்தன. “வேறு எவரையும் விட ஸிட்னி வெப்பே எனக்கு மிகவும் பயனுடையவராயிருந்தார்; இக்காலத்தவர் எவரையும் விட இங்கிலாந்துக்குப் பெரும்பயன் அளிப்பவரும் அவரேதான் என்னலாம்,” என்று ஷா அவரை வாயாரப் பாராட்டியுள்ளார்.
1881-ம் ஆண்டு ஷாவுக்கு அம்மைநோய் கண்டது. அவர் முகமெல்லாம் தழும்பேறிற்று. முகம் சவரம் செய்ய முடியாத நிலையிலேயே அவர் முதல்முதல் தாடி வளர்க்கலானார். இது தழும்புகளை மறைக்கவும் உதவியது கண்டு அவர் நிலையாகவே தாடி வளர்த்துக்கொண்டார். இன்று ஷாவின் உருவத்தை நினைப்பவர் அதன் சிறப்புக் கூறாக எண்ணுவது அதன் செந் தாடியோ அல்லது நிறை முதுமைக்குப்பின் அதன் வெண் தாடியோ தான் எனினும், அது அமைந்தவகை இங்ஙனம் அம்மை நோய்த் தழும்பை மறைப்பதற்காகவே என்பது சுவைகர மான செய்தியாகும்!
ஷாவுக்கு இவ்வாண்டில் கிடைத்த சில புதிய நண்பர்கள் மூலமும், ஷெல்லியின் கவிதைகளில் அவர் ஈடுபட்ட தன் மூலமும். அவர் சைவ உணவுமுறையை மேற்கொள்ளலானார். அவர் சைவ உணவுமுறை தமிழகத்தில் பலரிடையே காணப் படும் சாதிக் குறியீடான நெறியன்று; வகுப்பிறுமரப்புச் சின்னமு மன்று. அஃது அவர் அன்பு நெறியின் ஒரு கூறேயாகும். அவர் உயிர்க்கொலையை மிகவும் வெறுத்தார். உயிர்க் கொலையினும் மிகுதியாக, உயிர்களுக்குத் துன்பம் செய்வதை வெறுத்தார். பாவ்லாங் போன்ற ருஷ்ய அறிவியல் அறிஞரைக்கூட அவர் இதற்காக எதிர்த்துக் கண்டிக்கத் தயங்கியதில்லை.
இதற்கு அடுத்த ஆண்டு ஷாவின் வாழ்க்கையில் ஒரு பெருத்த மாறுதலை உண்டுபண்ணிற்று. அந்நாளைய புகழ் பெற்ற ஒப்பியல் நெறியியக்கப் பேச்சாளரான ஹென்றி ஜார்ஜ் ஒரு நாள் ஆல்பெர்ட் நினைவு மண்டபத்தில்(Albert memorial hall) பெருங் கூட்டத் திடையே பேசிக்கொண்டிருந்தார். கூட்டத்தில் பொது மக்களுள் ஒருவராயிருந்து கேட்ட ஷா இதில் பெரிதும் ஈடுபட்டார். பொருளியல் துறை மக்கள் வாழ்வுக்கு எவ்வளவு இன்றியமையா அடிப்படைப் பண்பு என்பதனை ஷா இதுமுதல் உணர்ந்து கொண்டார். இது ஹென்றி ஜார்ஜின் பேச்சினால் அவருக்கு ஏற்பட்ட விழிப்பேயாகும். அவர் இந்நாள் முதல் ஒப்பியல் நெறியின் அன்பரானார்.
ஹென்றி ஜார்ஜின் பேச்சிலிருந்தும், ‘முன்னேற்றமும் வறுமையும்’(progress poverty) என்ற அவர் நூலிலிருந்தும், ஷா முதல்முதல் கார்ல்மார்க்ஸைப் பற்றிக் கேளவிப் பட்டார். அதுமுதல் அவர் ‘முதலீடு’ என்ற மார்க்ஸின் நூலையும், பிற பொருளியல் ஏடுகளையும் விடாப்பிடியாய் ஊன்றிக் கற்கலானார். மார்க்ஸின் நூல் ஷாவுக்கு ஒரு புதிய உலகத்தின் வாயிலாய் அமைந்தது. பொருளியல் நூல்களைக் கற்பதில் இஃது ஆர்வத்தையும் பயனிறைவையும் உண்டுபண்ணிற்று. இலக்கியத்துறையில் ஒரு பொருளியலறிஞனாயிருந்து, பொருளியல் துறையறிவை இலக் கியத்திற் பயன்படுத்திய தனிப்பெருமை ஷாவிற்குரியதாகும். மார்க்ஸின் கருத்துக்களில் அவர் பிற்காலத்தில் பல மாறுபாடுகள் வகுத்துக்கொண்டாலும், அவர் வாழ்க்கைக்கோட்பாட்டின் பொருளியலடிப்படை இறுதிவரை மார்க்ஸியமும் ஒப்பியல் நெறியுமாகவே இருந்தது.
1883-ல் புதுவாழ்வுத் தோழமை இயக்கம் என ஒரு புத்தியக்கக் கழகம் தாமஸ் டேவிட்ஸன் என்பவரால் தோற்றுவிக்கப் பட்டது. அது தற்கால வாழ்க்கைக் கேற்ற புதிய சமய அடிப்படை உணர்ச்சியைத் தட்டி எழுப்ப முயன்றது. தூநெறியாளரான ஷா இதில் ஈடுபட்டதில் வியப்பில்லை. ஆனால், அடுத்த ஆண்டுக்குள் சமயச்சார்பற்ற, வாழ்வியல் அரசியல் நோக்குள்ள ஒரு எதிர்ப்புக் கிளை இதனுள் தோன்றிற்று. இது தனியாகப் பிரிந்து ஃவேபியன் கழகம் எனப் புதிய உருவில் நிறுவப் பெற்றது. ஃவேபியன் என்ற பெயர் ஃவேபியஸ் என்ற பண்டை உரோம அரசியல் தலைவரைச் சுட்டிற்று. வாழ்வியல் இயக்கமாயிருந்தே அரசியலில் படிப்படி யாக வலுப் பெற வேண்டுமென்பது இக் கழக நோக்கமாயிருந்தது. உரோமர் காலத்தில் ஃவேபியஸ் இதே கொள்கையினரா யிருந்ததால், இப்பெயர் மேற்கொள்ளப் பெற்றது. இக் கழகம் நிறுவப்பட்ட முதலாண்டிலேயே ஷா இதில் உறுப்பினராகச் சேர்ந்தார்.
ஷாவின் புனைகதைகளைப் பகுதி பகுதியாக வெளியிட உதவிய இந்நாள்,(today) நம் மூலை(our corner) என்ற நாளிதழ்கள் இவ் ஒப்பியல் நெறியாளர்களாலேயே வெளியிடப்பட்டன. பின் கூறப்பட்ட வெளியீட்டை நடத்தியவர் அன்னி பெஸெண்ட் அம்மையாரே. அவர் சமநெறி தழுவியதற்கு பெர்னார்டுஷாவே தூண்டுதலா யிருந்தனர் என்ற அறிகிறோம். ஷாவின் புனைகதைகள் ஒப்பியல் நெறிச் சங்கத்தின் நிறுவனத் தலைவராக வில்லியம் மாரிஸின் பாராட்டினைப் பெற்றன. தவிர, வில்லியம் ஆர்ச்சர் என்ற நண்பர்மூலம் ஷாவுக்குப் பால்மால் கெஜெட்டில் கருத்துரை எழுத்தாளர் பணி கிடைத்தது. இதில் அவர் மூன்றாண்டுகள் தொடர்ந்து எழுதிவந்தார். இப்பணியில் அவருக்கு ஆயிரம் சொற்களுக்கு இரண்டு பெரும்பொன்* தரப்பட்டது.
இவ்வாண்டில் ஷாவின் தந்தை இயற்கை எய்தியதனால், அவர் அனுப்பிவந்த வாரப்படியான ஒருபொன் நின்ற போதிலும் அவருக்கு இப்போது எழுத்தாண்மை மூலம் ஆண்டுக்கு 117 பொன்வரை கிடைக்கத் தொடங்கியது.
ஃவேபியன் கழக நுழைவுடன் ஷாவின் வறுமையிற் செம்மைப் பருவம் முடிவடைகிறது. அவர் வாழ்வியல் ஒப்பியல் நெறிப்போராட்ட ஊழி தொடக்கமுறுகிறது.
செல்வத்திற் செம்மை அரிது வறுமையிற் செம்மை அதனினும் அரிது. ஆனால், வறுமையிற் செம்மை உடையவர்கள் கூட, வறுமைமாறிச் செல்வம் வந்தால், செம்மையுடைய செல்வராகவே இருத்தல் அரிதினும் அரிது. ஷாவின் வாழ்க்கை இவ்வகையில் மிகவும் புதுமையும் தனிப்பெரும் பொலிவும் உடையது. வறுமையைப்பற்றியும் செல்வத்தைப்பற்றியும் அவர் கொண்ட கோட்பாடுகளே இவ்வறுமையிற் செம்மைக்கு உறு காரணமாகும். பல அருளாளர்களைப் போல அவர் வறியோர் வாழ்வில் எளிமையின் வனப்பைக் காணவில்லை. வறுமையை அவர் ஒரு குறைபாடாகவும் மற்ற எல்லா வாழ்க்கைக்குறை பாடுகளுக்கும் தீமைகளுக்கும் மூல முதலாகவுமே கருதினார். இக்குறைபாடுகளைக் குற்றங்கள், பழிகள் எனப் பழிப்பது தவறென்றும்; அவற்றுக்குக் காரணமான வறுமையை ஒழிப்பதே மக்கட்குழுவின் தலைவனுக்குத் தலையாயகடன் என்றும் ஷா ஓயாது வற்புறுத்தினார். ‘கைம்பெண்களின் இல்லங்கள்,’ ‘திருமதி வாரனின் வாழ்க்கைத் தொழில்’ முதலிய நாடகங்கள் இவ்வுண்மையை விளக்கவே எழுதப்பெற்றன.
வறுமை பற்றி ஷா ஆராய்ந்து அதனின் வகைதிரிபுகளைக் கூட விளக்கியுள்ளார். அவர் கூறுகிறபடி வறுமை இருவகைப் பட்டது. ஒன்று பொருளறியா வறுமை. மற்றது பொருளில்லா வறுமை. முதலதே ஏழைகளின் வறுமை. அவர்கள் வறுமையை வெறுப்பதில்லை; அவர்கள் வாழும் உலகம் இது. அவர்கள் செல்வமின்னதென அறிவதில்லை. ஆகவே அவர்கள் வறுமையை ஒழிக்கவும் பாடுபடுவதில்லை. இவ்வறுமை பிறரால் இழிவாகக் கருதப்படுவது; ஆனால், அதற்குரியவர்களுக்குத் துன்பம் மிகுதியில்லை; தீமையே மிகுதி. அதிலும் பிறருக்குத் தங்களை அறியாமல் அவர்கள் செய்கிற துன்பங்களே பெரும்பான்மை. ஆனால் தெரிந்து செய்யும் துன்பங்களும் பல. தெரிந்து செய்யும் துன்பங்களையே ‘உயர்ந்தோர்’ உலகப் பழிகள் எனப் பழிக் கின்றனர். வறுமை நீங்குமளவும் இப்பழிகள் ஒழியமாட்டா.
இரண்டாவது வகைப்பட்ட வறுமை செல்வத்தை நாடு வோர், போதிய செல்வமின்றிச் செல்வ வாழ்வு நாடுவோர் ஆகிய நடுத்தர வாழ்க்கை வகுப்பினரின் வறுமை. இவர்கள் மட்டும் வறுமையை மறைக்க விரும்பாவிட்டால், அவர்கள் துன்பம் குறைவே. ஆனால், இவர்கள் உயிருக்கு அஞ்சுவதைவிட, வறுமைக்கு அஞ்சுகின்றனர். வறுமையைப் போக்கிக்கொள்ள, அவர்கள் ஓய்வு ஒழிவின்றி உழைத்து உருக்குலைகின்றனர்; துன்ப அளற்றில் திளைக்கின்றனர். ஆயினும் இத்துன்ப அளற்றிலேயே நாகரிகம், கலை, இலக்கியம் ஆகிய யாவும் பிறந்துள்ளன; வளர்கின்றன என்பதை ஷா எடுத்துக்காட்டியுள்ளார். இந்நடுத் தர வகுப்பினரின் வறுமை நீக்கமும் நல்வாழ்வுப் பெருக்கமுமே நாகரிகத்தின் தங்குதடையற்ற வளர்ச்சி ஆகும். அத்துடன் ஏழைகளின் வறுமையும் நீக்கப்படுமாயின் உலகிலுள்ள கொடும் பழிகள் ஐம்பெரும் பழித்தீங்குகள் (பஞ்சபாதகங்கள்) ஆகியவை தொலையும்.
இங்ஙனம் ஷாவின் வாழ்க்கையும், அவர் வாழ்க்கை விளக்கமும் வெறும் வறுமையிற் செம்மை மட்டுமன்று, உலகின் வறுமை ஒழிப்புக்கும், செல்வ, பண்பாட்டு வளத்துக்கும் வழி காட்டும் பண்பு ஆகும்.
ஃவேபியன் கழகம்
பழமை புதுமைப் போராட்டங்கள் கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் எல்லாக் காலங்களிலும் இருந்தே வந்துள்ளன. இஃது ஒருவகையில் இயல்பே. ஏனெனில் இப்போராட்டங்கள் மனித நாகரிகப்போக்கின் பல படிகளான மாறுதல் கட்டங்களைக் குறிப்பனவாகும். கீழ்நாடுகளில் வரலாற்றுக்கால முழுவதும் அணிமைக்காலம்வரை இம் மாறுபாடுகள் பெரிதும் பழமை நோக்கியவையாகவே இருந்துவந்துள்ளன. மேல் நாட்டிலோ பெரும்பாலும் இப்போராட்டங்கள் புதுமை நோக்கியனவாகவே உள்ளன. ஓரளவு பழமை நோக்கிய இயக்கங்கள் அவற்றுள் இரண்டே என்னலாம்.
தற்கால ஐரோப்பிய நாகரிகத்தின் தொடக்கத்தில் அஃதா வது 15-ம் நூற்றாண்டில் நாகரிக முதிர்ச்சியற்ற மேலை யுலகில் கிரேக்க இலக்கியத் தொடர்பால் ஏற்பட்ட மறுமலர்ச்சி இயக்கம் ஓரளவு பழமை நோக்கிய மேனாட்டு இயக்கங்களுள் ஒன்று. மற்றொன்று 19-ம் நூற்றாண்டின் நடுவில் பிரிட்டனின் பேரரசு இறுமாப்பை எதிர்த்து எழுந்தது. இஃது இடையிருட் கால நோக்கிய கார்லைலின் அருளார்வ இயக்கமாகவும் ரஸ்கின், மாரிஸ் ராஸ்ட்டடி ஆகியவர்களின் கலையார்வ இயக்கமாகவும் இயங்கிற்று. இவ்வெதிரலையை அடுத்து அந் நூற்றாண்டின் இறுதியில் புதுமையில் ஆர்வம். முன் என்றும் இல்லாத அளவில் பெருக்கெடுத்தோலாயிற்று. ஐரோப்பியத் தலைநிலத்தில் ‘நீட்ஷ்’ என்ற அறிஞரின் அறிவுவிளக்கக் கருத்துக்களும், இப்ஸென் எனும் நாடக ஆசிரியரின் கலைத்துறை சார்ந்த புதுமைப் பெண் இயக்கமும் பிரிட்டனில் புகுந்தன. இவையே புதுமையியக்கமாகிய புத்தூழியியக்கத்துக்குத் தூண்டுதல் தந்தவை. இக்காலத்தில் வாழ்க்கையின் எல்லாத்துறைகளும் புதுமைப் போர்வையில் துலங்கலாயின.
இப்புத்தூழியைக் கொண்டுவரப் பாடுபட்டு அதன் அலை முகட்டில் மிதந்த கழகங்களுள் ஃவேபியன் கழகம் ஒன்று. அதன் தொடக்கத்திலிருந்து அதனுடன் வளர்ந்து, அதன் போராட்டங் களுடன் போராடி, அதன் புகழ்ச்சியில் நின்று அதன் தலைவராய் விளங்கியவர் பெர்னார்டு ஷா. 1884 முதல் 1911 வரை அவர் அக்கழகத்தின் நடுநாயகமணியாய் விளங்கினார். அதன் துண்டு விளம்பரங்கள், நூல்கள் ஆகியவற்றை எழுதி வெளியிடுபவராகவும், அவற்றின் தொகுப்பாளராகவும், அக்கழகத்தின் சார்பில் மேடைப்பேச்சாளராகவும், பத்திரிகை எழுத்தாளராகவும், குழு உட்குழு ஆகியவற்றின் உயிர்நிலை உழைப்பாளியாகவும் அவர் விளங்கினார்.
ஷாவுடன் சேர்ந்து ஃவேபியன் கழகத்தில் தொண்டாற்றி யவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் ஸிட்னிவெப், ஸிட்னி ஆலிவர், கிரகாம்வாலஸ் திருமதி அனி பெஸண்ட் ஆகியவர்கள் . அவர்களுள் குடியேற்றப் பணிமனையில் உயர்தர எழுத்துத் துறையாளாராயிருந்த ஸிட்னி வெப் ரூவின் தொடர்பாலும், ஸிட்னி வெப்பின் தொடர்பால் அவருடன் ஆக்ஸ்ஃபோர்டு பல் கலைக் கழக உடன்மாணவரான கிரகாம் வாலஸூம் கழகத்தில் சேர்ந்தனர். இத்தோழர்கள் தொடர்பு ஷாவுக்கும் கழகத்துக்கும் நிரம்பப் பயன் தருவதாயிருந்தது. ஷா வருமுன்பே கழகம் ஒப்பியல்நெறிக் கொள்கைகளில் ஈடுபட்டிருந்தது. காசுபணப் பரிமாற்றம் உலகில் இருக்கக்கூடாதென்பது அன்று கழகத்தில் பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால், “அதனிட மாகத் தொழிற்சீட்டு வழங்குதல் நலமா? அல்லது தனி மனிதரின் பேரேட்டுக் கணக்குமுறையை ஏற்படுத்துதல் நலமா?” என்ற வாதம் நடைபெற்றுவந்தது. ஷா இவ்வாதத்தினிடையே வந்து கலந்துகொண்டார்.
கழகத்தின் துண்டு வெளியீடுகளில் 2,3,4 எண் உள்ளவை பெரிதும் ஷாவினாலேயே இயற்றி வெளியிடப்பட்டன. 4-வது வெளியீட்டில் அவர் மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகிய ஒப்பியல்நெறி முதல்வர்களைப் பின்பற்றி, இங்கிலாந்தின் பொருளியல் வளர்ச்சிப் பற்றிய புள்ளி விவரத் தகவல்களைக் கொடுத்திருந்தார். இவற்றின் பயனைக்கண்டு புள்ளி விவரங்கள் தருவதன் வலிமையை அவர் உணர்ந்தார். இத்துறையில் திறமையும் பல்துறைப் பரப்புடைய அறிவுப் புலமையும் மிக்கவர் ஸிட்னி வெப். அவர் வந்து சேர்ந்தபின் ஷாவுக்கு இதில் பேருதவி கிட்டிற்று. ‘ஒப்பியல் நெறியாளருக்கு வேண்டிய மெய்ச்செய்திகள்’ (facts for socialists) என்ற 5-வது வெளியீட்டுக்குக் கருத்துக்களாகிய உடலை ’வெப்’பும் கலைப் பண்பாகிய ஆடையை ஷாவும் அளித்துக் கழகப்பணியில் உயிர்ப்புத் தூண்டினர். துண்டு விளம்பரம் 7 ஆலிவராலேயே வெளியிடப்பட்டது.
ஃவேபியன் கழகத்தைப் போலவே ஒப்பியல் நெறிக் கோட் பாட்டுடன் நடத்தப்பட்ட வேறு இரண்டு கழகங்கள் இருந்தன அவையே ஒப்பியல்நெறிக் குடியாட்சிக் கூட்டுக் கழகம் (socialist league) ஒப்பியல்நெறிக் கழகம் (socialist democratic federation) ஆகியவை ஷா முதலில் ஒப்பியல் நெறிப்பண்பில் திளைத்தவராய், மற்றக் கழகங்களின் பக்கமே சாய்ந்திருந்தார். ஆனால், மற்ற இரு கழகங்களும் பெரும்பாலும் தொழிலாளர் குழுவுடன் செயல்துறையிலீடு பட்டுக் கிளர்ச்சி செய்யவே முனைந்தன. ஃவேபியன் கழகமோ நடுநிலைவகுப் பாரிடையே தோன்றி, அவர்களுக்கு அறிவு விளக்கம் தந்து அரசியலில் அடிப்படை அறிவுதர முனைந்தது ஷாவும் தம்மை ஒத்த அறிவுநிலையுடைய இவ் வகுப்பினரின் அறிவுக்கிளர்ச்சியி லேயே ஈடுபட்டார்.
1885-ம் ஆண்டிலும் அதனையடுத்த இரண்டாண்டுகளிலும், மற்ற ஒப்பியல்நெறிக் கழகத்தவர்கள் தேர்தலில் ஈடுபட்டும் அதன்பின் மிகவெறித்த செயற்கிளர்ச்சிகளிலீடுபட்டும், அரசியல் முதல்வர் கிளாட்ஸ்டனின் அடக்கு முறைகளுக்காளாயினர். ஷாவின் தோழர்களுள் ஒருவரான திருமதி. பெஸண்ட் அக் கிளாட்ஸ்டனின் அடக்கு முறைகளுக்காளாயினர். ஷாவின் தோழர்களுள் ஒருவரான திருமதி. பெஸண்ட் அக் கிளர்ச்சியி டையே காய முற்றவர்களுக்கு உதவிப்பணி செய்யும் வீரத் தொண்டாற்றினர். இதன்பின் ஃவேபியன் கழகம் அரசியல் மன்ற முறையிலேயே பணியாற்ற முனைந்து, முதலில் தம்மிடையே யுள்ள வெறித்த போக்கினரைச் சிலநாள் போராடி விலக்கிற்று. இதில் மாரிஸ், திருமதி வில்ஸன், டேவிஸ், டாச்செட்டி ஆகிய முனைப்பியலாளர்களை எதிர்ப்பதில் திருமதி பெஸண்ட், பிளாண்டு, டோனால்டு, ராஸிட்டர் ஆகியவர்கள் ஷாவுக்கு உதவியாயிருந்தனர். ஃவேபியன் கழகத்துக்குள்ளாகவே அவர்களால் அமைக்கப்பட்ட ‘ஃவேபியன் அரசியல்மன்ற நடவடிக்கைக் குழாம்’, வளர்ந்து இறுதியில் கழகமேடையையே கைப்பற்றியது. 1887-ல் இக்குழு வகுத்த ஃவேபியன் கோட்பாடே கழகத்தின் அடிப்படைத் திட்டமாயிற்று.
ஃவேபியன் கழகம் மிகவும் உள்ளீடான கழக நடைமுறை களில் வெற்றிபெற்றது. ஆயினும், தொழிலாளர்களைத் திரட்டியும் அகல்வெளிகளில் கூட்டமிட்டுப் பார விரிவுரைகளாற்றியும் வந்த மற்ற ஒப்பியல் நெறியாளர்களைப் பார்க்க, ஃவேபியன் கழகத்தார் ஒதுங்கிய பணியாளராகவே தோற்றமளிக்கவேண்டி வந்தது. தொழிலில்லாமையை நீக்கவும், அவர்கள் உடனடித் திட்டம் எதுவும் தரமுடியவில்லை. இந்நிலையில் அறிவுத்துறை யிலேயே கழகத்தின் செயலெல்லையை விரிவுபடுத்த எண்ணி அவர்கள் பிற ஒப்பியல்நெறிக் கழகத்தவர் ஒப்பியல்நெறிக் குடியாட்சிக் கூட்டுக்கழகத்தவர் ஆகியவர் செயல்களத்தி லிருந்து துணிந்து விலகி, முற்போக்காளர்(liberals) அடிப்படை உரிமைக் கோட் பாட்டாளர்(radicals) முதலிய பிற கட்சியினரனை வரையும் உள்ளிட்ட பொது மாநாடொன்றை வெற்றிகரமாக நடத்தினர். இதன்பின் கழகப்பெயர்ப் பண்புக்கியைய, மற்றக் கட்சிகளில் தனித்தனி உறுப்பினராகச் சேர்ந்து எல்லாக் கழகங்களுடனும், கட்சி களுடனும் தொடர்புகொண்டு அரசியல் மன்றிலேயே வலிவு பெற்றனர். பிற்காலங்களில் தொழிற்கட்சியாக வளர்ந்தது. இந்த ஃவேபியன் கழகத்தின் அமைப்பேயாகும். 1888-ல் இதற்கு ஒரு நல்ல கூட்டாதரவும் பெரும்பான்மையும் ஏற்பட்டது. பரந்து உட்செல்லும்முறை இனிப் பயன் தராதென்றும், கொள்கை யுறுதி யுடையவரே இனித் திரண்டு ஒரு கட்சியாயிருக்க வேண்டு மென்றும் ஷா இப்போது கழகத்துக்குக் கட்டுரைத்தார்.
1887-ல் நடந்த கிளர்ச்சிகளில், ஷா முற்றிலும் பங்கெடுத்துக் கொள்ளாமலில்லை. ஆயினும், ‘குறுதிக்கள ஞாயிறு,’ எனக் குறிக்கப்படும் நவம்பர் 13-ல் நடந்த கலவரத்திலிருந்து அவர் சற்று முன்னெச்சரிக்கையுடன் விலகியே இருக்கவேண்டிய தாயிற்று. பள்ளி வாழ்விலேயே கத்தி தீட்டுவதினும் புத்தி தீட்டும் முறையில் சிறப்பை உணர்ந்தவர் ஷா. அரசியலில் அவர் ஈடுபட்ட காலத்திலும் அவர் இப்பண்பிலிருந்து விலகவில்லை. அவர் கருவிப்போரை எதிர்க்கவில்லையாயினும், அதனினும் அறிவுப் போரே சிறந்ததெனக் கொண்டார்.
இவ்வாண்டில் ஷா இன்னும் இரண்டு ஃவேபியன் கட்டுரைகளை வரைந்ததுடன், முந்திய கட்டுரைகளையும் தொகுத்தார். இவை 1889-ல் வெளியிடப்பட்டன. இவ்வெளியீடு எதிர்ப்பாரில்லாமல் பொது ஆதரவுபெற்றது. இதனையடுத்து 1891-2-ல் ‘அரசியலார் நெறியின் முரண்பாடுகள்,’ ‘ஃவேபியன் கழகம்,’ அஃது ‘ஆற்றியுள்ள பணியும் ஆற்றிய வகைகளும்,’ முதலிய கட்டுரைகளை அவர் கழகமேடையில் வாசித்துப் பின் வெளியீடுகளாகவும் பரப்பினார்.
1892-ல் முன்னேற்றக் கட்சி(liberals) ஃவேபியன் கழகத்தாரால் வகுக்கப்பட்ட நியூக்காஸில் திட்டத்தையே தம் தேர்தல் திட்மாக் கிற்று. இதே ஆண்டில் ஷா ஃவேபியன் கழகத் தேர்தல் கொள்கை யறிவிப்பு(fabian election menifesto) ஒன்று வெளியிட்டார். தொழிலாளர்களுக்கு ஒரு தனி அரசியல் கட்சி இருக்கவேண்டு மென்றும்; அது முன்னேற்றக் கட்சி, பழமைக்கட்சி ஆகிய மற்றக் கட்சிகளுடன் தொடர்பு கொள்ளாமலும், அவர்கள் பொருளுதவியை எதிர்பாராமலும் தொழிலாளர்கள் மகமை வரிப் பணத்திலிருந்தே நடத்தப்பெறல் வேண்டுமென்றும் ஷா இவ்வறிவிப்பில் வாதாடினர். ஒவ்வொரு தொழிலாளியும் ஆண்டுக்கு மூன்ற துட்டு மகமைவரி கொடுத்தால், ஆண்டுக்கு 50,000 பொன் வருவாயுள்ள செல்வக்குவை திரட்டுவது அரிதன்று; இங்ஙனமிருக்க, அத்தகைய கட்சி ஒன்றை அமைக்காதது தொழிலாளரின் பெருங் குற்றமாகும் என்று அவர் இடித்துரைத்தார். மேலும், மன்ற உறுப்பினர்க்கு ஊதியம், தேர்தல் செலவுகளைப் பொதுச்செலவுச் சேமிப்புக் கணக்கில் ஏற்றல், மன்ற இருக்கைக் காலக் குறுக்கம் ஆகிய புதுத்திட்டங்கள் வகுக்கும் புதுச்சட்டக் கோரிக்கை கொண்டுவரப்பட வேண்டு மென்பதும் அவர் அறிவுரை. பொதுமக்கள் தம் மொழியுரி மையைக் கட்டாயமாகப் பயன்படுத்தித் தீரவேண்டுமென்று வற்புறுத்த அவர் “மொழியுரிமை, மொழியுரிமை, மொழி யுரிமை!” என்ற மூன்றடுக்கிய பெயரையுடைய துண்டுவெளி யீட்டையும் கொணர்ந்தார்.
ஷாவின் இத் திட்டங்கள் பெரும்பயனளித்தன. ஷா அரசியல் வாழ்விலிருந்து பிற்காலத்தில் வெறுப்புடன் விலகி நின்று, கலைத்துறையிலேயே உழைத்தவர். ஆயினும் அவர் அரசியல் திறமும் முன்நோக்கும் உடையவர் என்பதை இவ்வெற்றி காட்டுகிறது.
1893-ல் ஷா விரும்பியபடியே தனிமுறைத் தொழிலாளர் கட்சி அமைந்தது. பழமைக் கட்சி, முன்னேற்றக் கட்சி என்ற இரண்டு கட்சிகளாலேயே இரண்டு நூற்றாண்டுகள் நடைபெற்று வந்த பிரிட்டனின் அரசியலில் இப்போது மூன்றாவது கட்சியாகத் தொழிற்கட்சி இடம்பெற்றது. சிலகாலம் முன்னேற்றக் கட்சியுடன் அது இணைந்து செயலாற்றினாலும், நாளடைவில் முன்னேற்றக் கட்சியின் இடத்தைத் தானே பெரிதும் ஏற்கத் தொடங்கிற்று. இங்கிலாந்தின் அரசியல் பேரரசாட்சியின் பொறுப்புடைய அரசியலாய், உலகிலே அப் பேரரசாட்சி முறையின் ஒரு கோட்டையாய் இயங்கிவந்துள்ளது. ஆயினும், பேரரசில் பழங்கொள்கையை மாற்றிக் குடியேற்ற நாடுகளுக்குக் கிட்டத் தட்ட விடுதலைநிலையும், இந்தியாபோன்ற சார்பு நாடுகளுக்குக் குடியேற்ற நிலையும் அளிக்கக் காரணமா யிருந்தது இந்தத் தொழிற்கட்சியின் முற்போக்கான குறிக் கோள்களே என்னலாம். ஷா தொழிற்கட்சி உருவாவதற்கு உயிர்நிலையான காரணரா யிருந்தார். எனவே, சுற்று முகமாக இந்தியாவின் விடுதலை வெற்றியிலும் அவருக்குப் பெரும்பங்கு உரியது என்பதை நாம் குறித்துக் காணல் வேண்டும்.
தனியாகத் தொழிலாளர் கட்சி அமைக்கப்பட்டபின் முன்னேற்றக்கட்சி நியூக்காஸில் திட்டத்தை உதறித் தள்ளித் தன் பழைய திட்டங்களின்படியே தேர்தலுக்கு நிற்கத் தொடங்கிற்று. இதனால் ஷா எண்ணியபடியே அக் கட்சியினருக்கு உள்ளூறத் தொழிலாளர் திட்டத்தில் நம்பிக்கையில்லை என்பது விளங்கிற்று. அவர்கள் அரசியல் போலிப்பசப்பை எதிர்த்து அவர், “மீளுதிர் உம்தம் பாசறைக்கே, ஏ இஸ்ரவேலீர்!”(To your tents, O Israel!) என்ற உணர்ச்சிமிக்க துண்டு வெளியீட்டை வெளியிட்டார். ஷாவின் நேர்முக அரசியல் வசையுரை வெளியீடுகளில் இது தனிச்சிறப் புடையது. இச்சமயம் மாடக் என்னும், ஒருவர், “ஏழைக்குத் தக்கபடிதான் ஏழைக்கு வருவாய்; செல்வருக்குத் தக்கபடியே செல்வருக்கு வருவாய்,” என்று கூறியதுடன், “தொழிலாளர்க்கு வருவாய் குறைவதும் ஏழ்மைமிகுவதும் அவர்கள் மூளைத்திறனுக் கேற்ற படிதான்,” என்று அவமதிப்பாகப் பேசியும் எழுதியும் வந்தார். இதற்கு மறுப்பாக ஷா எழுதிய ‘ஒப்பியல் நெறியும் தனிஉயர் அறிவுத்திறனும்’(socialism and superior brains) என்ற காரசாரமான எதிர்ப்புரை அவர் வாயை அடக்கிற்று. இஃது இருவார இதழில்(fortnightly review) வெளிவந்தது.
1896-ல் ஷா ‘செவாய்’ என்ற வெளியீட்டுத் தொகுதிக்குப் பலர் கட்டுரைகளுடன் கட்டுரையாகத் ‘திருக்கோயிற்செலவு’ என்ற சமய எதிர்ப்புக் கட்டுரை ஒன்று வரைந்தார். தம் இளமைக் காலக் கோயில்களைத் தாம் சைத்தான் மாளிகைகளாகக் கருதி வெறுப்பதாகவும், ஒப்பியல் நெறியாளன் என்ற முறையிலும், கடவுள் மறுப்பாளனென்ற முறையிலும் அவற்றிலிருந்து விடு தலைபெறவே விரும்புவதாகவும் அவர் இதில் குறிப்பிடுகிறார். ஆயினும் கலைமனையாகக் கோயில் இருக்கவேண்டுமென்ற தம் கோட்பாட்டை இதில் இவர் வலியுறுத்துகிறார். இறுதியில், “நான் விரும்பும் கோயில் ஒன்றுதான். அஃது என்னகங் கொண்ட கோயிலுக்கு வழிகாட்டும் புறங்கண்ட கோயிலாக இருக்க வேண்டும்,” என்று முடிக்கிறார்.
1897-ல் ஷா “வருகிற நூற்றாண்டு பற்றிய முன்குறிப்புக்கள்” என்ற தொகுப்பு வெளியீட்டில் ‘ஒப்பியல் நெறியின் மயக்கங்கள்’ என்ற கட்டுரை வரைந்தார். “உணர்ச்சி நாடகத்தில் தீமைக்குக் காரணமான ஒரு தீயவனைக் காட்டி மனிதர் பழியுணர்ச்சிக்கு வழிவிடுவது போலவே தான், ஒப்பியல் மேடையிலும் வாழ்வியல் தீங்குகளுக்கு யாரையேனும் பழிவாங்குகிறோம். ஆயினும் மக்களிடம் இவ் வகையாலன்றி உணர்ச்சியெழுப்பி அவர்கள் அக்கறையை அதில் தூண்ட முடிவதில்லை,” என்று தம் கட்சியின் ஒரு மறை குறைபாட்டைக்கூட அவர் சுட்டிக்காட்டுகிறார்.
‘அப்பாவி ஷேக்ஸ்பியர்,’ ‘இரண்டு மோசமான நாடகங் கள்,’ ‘திரு. ஐர்விங் அமுதசஞ்சீவிக்குழம்பு உட்கொள்கிறார்!’ ‘சார்டூடில்டம்’(sardodledom) என்ற கிளர்ச்சிகரமான பெயர் களுடன் ஷேக்ஸ் பியர், குடியாட்சி, நடிப்புக்கலை ஆகியவை பற்றிய பொது வழக்கான பல கோட்பாடுகளையும் ஷா தாக்கி எழுதினார்.
ஆனால் தன் எதிர்ப்புமுறைகள் உண்மையில் ஒரு விளம்பர முறையே என்பதனையும் அவர் இவற்றுள் குறிக்கிறார். “இவ் வுலகில் கேட்பவரைத் துளைத்தரிக்கும்படியாகவே எதையும் கூறவேண்டும். அங்ஙனம் கூறமுடியாவிட்டால், கூறாதிருப்பதே நன்று. ஏனெனில், தமக்குத் தொல்லை தராத ஒன்றினைப்பற்றித் தாம் தொல்லை எடுத்துக்கொள்ள எவரும் விரும்பமாட்டார் கள். ஒருவரால் ஒரு கருத்துரையில் செலுத்தப்படும் கவனம் அஃது ஏற்றுக் கொள்ளமுடியாதபடி முரண்பட்டிருக்கும் முரண் பாட்டின் அளவையே பொறுத்தது,” என்பது தம் கலைமுறை பற்றிய அவர் விளக்கமாகவே அமைந்துள்ளது.
ஷாவின் வாழ்க்கையிலும், அவர் கலைத்துறை வாழ்விலும் அவர் அடைந்த முதல் வெற்றி மேடைப் பேச்சாளர் துறை யிலேயே என்னலாம். வாத எதிர்வாத வடிவில் எதையும் தாமும் அலசி ஆராய்ந்து பிறருக்கும் விளக்குதல், எதிரியைத் திணற டிக்கும் வகையில் சொல்லையும் பொருளையும் விரைந்து அடுக்குதல், யாரும் எதிர்பாராத வகையில் அதிர்ச்சியூட்டும் சொற்களாலும் விளக்கங்களாலும் எடுத்துக்காட்டுக்களாலும் எதிரியை மலைக்கவைத்துத் தன்வயப்படுத்துதல், கூறுபடுத்திக் கூறுதல், மாறுகொளக் கூறி முரண் அணிச் சுவையூட்டுதல், உலகையே துச்சமெனக்கொண்ட இறுமாந்த தொனியோடு உள்ளார்ந்த அன்புடன் நையாண்டிசெய்யும் பெருநகைப் பண்பு, நாடக நடிகர் முறையில் ஆர்வ அவா உணர்ச்சிகளையும் வியப்புணர்ச்சிகளையும் இயக்குதல் ஆகியவை அவரிடம் ஓரளவு இயல்பாயமைந்த பண்புகளாயினும், அவற்றை அவர் இக் காலத்திலேயே பெரிதும் வளர்த்துக்கொண்டார். அவர் ஆராய்ச்சிவிளக்கந்தான் அவர் புனைகதைகளை நெடுநீளமா கவும், காலத்துக்கும் பொது ஆர்வத்துக்கு மொவ்வாததாகவும் ஆக்கிற்று. ஆனால், பேச்சாண்மைத் துறையில் இது ஷாவுக்குப் பெருவெற்றி தந்தது. கேட்பவர்க்கியையத் தம் கருத்துக்களுக்கு வடிவும் கவர்ச்சியும் முறுக்கும் ஊட்டும் அவரின் பேச்சாண்மைப் பண்பு எழுத்தாண்மையிலும் இதன்பின் ஒளிர்வுற்றது.
ஆங்கில அரசியல் மேடையில் ஷாவினும் தலைசிறந்த அரசியற் புகழுடைய சொற்பொழிவாளர் உண்டானாலும் மக்களிடையே அவரளவு விதிர்விதிர்ப்பை ஊட்டிய பேச்சாளர் கிடையாது எனலாம். நாடகங்களிலும் இப் பண்புகள் முனைப் பாகவே இருந்தன. ஆனால், நாடகப் பண்பும் இவற்றுள் ஒன்றா யிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தவிர, வாத எதிர்வாதங் களிடையே கூட ஷா நாடக மரபின் கலைப்பண்பிலிருந்து மாறு படவில்லை. இக்காரணங்களாலேயே அவர் நாடகங்கள் புனைகதைகளைப்போலக் காலத்துக்கேற்ற உருப்பெற்றது.
பேச்சாண்மையில் பெற்ற புகழ் ஷாவுக்குச் செய்தி இதழ்த் துறையிலும் படிப்படியாக வெற்றி தந்தது. அயர்லாந்தில் சாங்கி - மூடி இயக்கம்பற்றிய அவர் கட்டுரை இத்துறையில் ஒரு தொடக்க அதிர்வேட்டு மட்டுமே. இதன்பின் இலண்டனில் ஹார்னெட்டுக்கு அவர் எழுதியது புகைப்படலமெழுப்பிய ஒரு புகைக்குண்டாக முடிந்தது. 1885-க்கும் 1888-க்கும் இடையில் அவர் ‘பால்மால் கெலெட்டுக்’கும், ’உலகம்’ என்ற செய்தி யிதழுக்கும் தன் பெயரிடாமலே பல நூல்மதிப்புரைகளும் கருத்துரைகளும் கட்டுரைகளும் எழுதிவந்தார். இவற்றில் அவர் பெயரில்லாதது போலவே அவர் தனிச்சிறப்புப்பண்புகளும் பெரிதும் இடம்பெற வில்லை.
மூடி - சாங்கி வகையில் அவர் முனைமுகமாகக் காட்டிய அவர் தனிச் சிறப்புப் பண்புகள் முதல் முதலாகக் ‘கார்னோ டி பாசெட்டோ’ என்ற புனைபெயருடன் ‘விண்மீன்’(star) என்ற பத்திரிகைக்கு அவர் வரைந்த கட்டுரைகளிலேயே காணப்படு கின்றன. இத்துடன் 1886-ல் ‘உலகம்’ (world) என்ற பேர்போன செய்தியி தழின் கலைக் கருத்துரையாளர் இடம் ஒழிவுற்றதனால், அவர் அதில் 1889-வரை இடம் பெற்றார். 1890-ல் இதே இதழுக்கு அவர் இசைக் கட்டுரைகளும் எழுதினார். இதில் தான் அவர் தம் முதலெழுத்துக்களால் முதல் முதலாக கையொப்பமிட்டு ஜி.பி. எஸ். என்ற அவ்வெழுத்துக்களுக்குத் தனிச்சிறப்புத் தந்தார். செறிந்த வீறுமிக்க நடை, வசைத்திறம், முரண்பாட்டுச் சுவை ஆகியவை பொதுவில் ஷாவின் நடைப்பண்பாயினும், சிறப்பாக அவை அவர் செய்தியக எழுத்தாண்மைப் பண்புகள் ஆகும். கார்னொடி பாஸெட்டொ, ஜி.பி.எஸ். கட்டுரைகளில் இப்பண்புகளை முனைப்பாகக் காணலாம்.
மக்கள் கவனத்தைத் தம் பக்கம் திருப்புவதற்கு ஷா மேற் கொண்ட முயற்சிகள் புதுமை வாய்ந்தவை. இது வரை கலைஞர் இவ்வகையில் கையாண்ட முறைகளுக்கு இவை நேர்மாறானவை. மக்கள் இயற்கை உணர்ச்சிகளையும் உணர்ச்சி மரபுகளையும் பின்பற்றுவதும், அவற்றை மிகைப்படுத்துவதும் தூண்டுவதுமே கலையின் கவர்ச்சியாகப் பொதுவாகக் கொள்ளப்பட்டு வரு கின்றன. ஆனால், ஷா இவ்வுணர்ச்சிகளையும் மரபுகளையும் எதிர்ப்பதன் மூலமே இக் கவர்ச்சியைப் பெறுவதில் தனி வெற்றி கண்டார். அவர் இயற்கை எதிர்ப்புப்பண்பு இதில் அவருக்கு உதவியாயிருந்தது.
ஷா ஷேக்ஃபியரை அடிக்கடி மும்மரமாக எதிர்த்து வந்தார். இதுவும் ஒருவகையில் மேற்கூறப்பட்ட எதிர்ப்புப் பண்பில் ஒரு கூறேயாகும். அயினும் அவர் ஷேக்ஸ்பியரை எதிர்க்கத் துணிந்தது முற்றிலும் கலைத்துறையிலன்று; கலை பற்றிய நோக்க வேறுபாட்டிலேயே ஷேக்ஸ்பியர் கலையை வாழ்க்கையின் ஒரு சிறந்த கண்ணாடியாக்கினார். அக் கண்ணாடி உலகை அப்படியே காட்டும் கண்ணாடியன்று. அதன் மறை நுட்பநுணுக்கங்கள், உணர்ச்சிகள், அதில் இயல்பாயெழும் சிக்கல்கள் ஆகியவற்றை அம் மாயக் கண்ணாடி முனைப்பாக எடுத்துக்காட்ட வல்லது. வாழ்க்கையைத் திறம்பட எடுத்துக் காட்டும் இக்கலையின் பண்பு ஷேக்ஸ்பியரினும் குறைவுற்ற கலைப் பண்புடையவர்களால், வெறும் உணர்ச்சிக் கோளங் களாக்கப் பட்டு வாழ்க்கைத் தொடர்பிழந்தது. அவர்கள் கலை கலைக் காகவே என்று கூறி அதன் வாழ்க்கைத்தொடர் பற்ற தன்மையை வற்புறுத்தினர். இவர்கள் கம்பரின் கலையின்றி அவர் கலை வடிவைப் பின்பற்றிய கவிராயர் போன்றவர்கள். ஷா இம்மரபை முழுதும் எதிர்த்தார். கலைவாழ்க்கையுடன் தொடர் புடையதாய், வாழ்க்கைக்கு வழிகாட்டியாய், அறிவாராய்ச்சி யுடன் வாழ்க்கையை எடுத்து விளக்கிக் காட்டுவதாய் இருக்கவேண்டுமென்றார். எனவே ஷேக்ஸ்பியரும் ஷாவும் வேறு வேறுபட்ட கலை வகையில் தனித்தனிச் சிறப்புடையவர்கள். உணர்ச்சிக் கலையில் ஒப்பற்றவர் ஷேக்ஸ்பியர். அறிவுக் கலையில் ஒப்பற்றவர் ஷா. எனவே, ஷா ஷேக்ஸ்பியரைத் தாக்கியது அவர் கலைக்காக அன்று, அவர் கலைவகைக்காவே என்னல் தகும்.
ஷாவின் முதலாவது ஷேக்ஸ்பியர் எதிர்ப்பை இக் காலத்தில் காண்கிறோம். 1888 ஜூன் 8-ல் ‘அடங்காப்பிடாரியை அடக்கி வகை’(taming of the shrew) என்ற (கலைப்பண்பிற் கிட்டத்தட்டக் கடைப்பட்ட) ஷேக்ஸ்பியரின் நாடகம் பற்றிய கருத்துரையில் இவ்வெதிர்ப்பு இடம் பெறுகிறது. பெண்களை இழிவாகக் கூறும் இடைக்கால நாகரிகத்தில் வாழ்ந்த ஷேக்ஸ்பியரின் கீழ்வரும் அடிகள் தற்கால நாடக மேடையில் இடம்பெறத் தக்கதன்றென அவர் காட்டுகிறார்.
“நும் கணவரே நும் ஆண்டகை, நும் உயிர், நும்மை இயக்குபவர்;
நும் தலைவர், நும் மன்னர். உம்மையும் உம்வாழ்வையும்
(ஷாவின் குறிப்பு: சாட்டைகொண்டு) காப்பவர்.”
ஷேக்ஸ்பியரின் நாடகத்தை நடிக்கும் நடிகரையே குறை கூறுவது போல் ஷா தொடங்குகிறார். முரட்டுத்தனமான மனைவியை அடக்கும் ஷேக்ஸ்பியர் நாடகத்தலைவன் பண்பைக் கெடுத்து, அந்த நடிகர் பொருந்தா மனைவிக்கு ஏற்ற பொருந்தாக் கணவனாக நடிக்கிறார் என்றும், இது நாடகமன்று, கேலிக்கூத்து என்றும் ஷா வசைபாடுகிறார். அதனிடையே முரட்டுத்தனமாக மனைவியை அடக்கும் கணவனையே ஷேக்ஸ்பியர் சித்திரித்ததாக ஷா குறிப்புக் காட்டிவிடுகிறார்!
கலைக் கருத்துரையாளராக இருக்கும்போது ஷாவுக்கு இதழின் வரி ஒன்றுக்கு 5 துட்டு விழுக்காட்டில் ஆண்டுக்கு 40 பொன்னே வந்தது. ஆயினும், 1895-க்குள் அவர் செய்தியிதழ்த் துரை வருமானம் 500 பொன் ஆக உயர்ந்தது. இவ்வாண்டில் அவர் ‘சனிக்கிழமை இதழ்’(saturday review) என்ற நாளிதழில் நாடக மதிப்புரை யாளரானார். இவ்விதழுக்கு அவர் 1898-வரை எழுதி வந்தார். இதில் அவருக்கு வாரம் 6 பொன் தரப்பட்டது. இவ்வூதியம் இவ்விதழின் பொதுவான ஊதியத்தரத்துக்கு இருமடங்காகும்.
இசைபற்றிய அவர் மதிப்புரைகள் ‘முழுநிறைவாக்னரியன்’ (perfect wangerite) எனவும் நாடக மதிப்புரைகள் ’இப்ஸெனியத்தின் ஐம்முறை வடிச்சாறு’(quintessence of Ibsenism) எனவும் வெளியிடப்பட்டன. பின்னது ஃவேபியன் கழக மேடையில் ஏற்பட்ட மந்தநிலையைப் போக்குவதற்காகவே வகுக்கப்பெற்ற சொற்பொழிவின் நூல்வடிவ வெளியீடு. இவ்விரு நூல்களும் ஐரோப்பிய இசைக்கலைஞர் வாக்னர், ஐரோப்பிய நாடகக் கலைஞர் இப்ஸென் ஆகியவர்களுக்கான கலைமதிப் புரைகளாகவே இயற்றப்பெற்றன. ஆயினும், ஷாவின் மதிப்புரை யில் வாக்னரையும், இப்ஸனையும்விட ஒப்பியல்நெறி, கலை ஆகியவைபற்றிய ஷாவின் கருத்துக்களே மிகுதியாக இடம் பெறுகின்றன. ஷாவின் விளக்கத் தொகுதிகளில் எல்லா ‘இயல்’ களும் உண்மையில் ஒரே ’ஷாவியல்’களாய் விடுவது இயல்பு. ஏனெனில், அவர் தாம் விரும்பிய இயல்களையே தேர்ந்தெடுப் பார். அத்துடன் அவர் நோக்கு அவர் விருப்பக்கோட்பாட்டிலே எதனையும் தோய்த்துவிடும்.
செய்தி இதழ் எழுத்தாண்மையில் ஷா ஆற்றிய மிகப் பெரு வெற்றிச் செயல் மாக்ஸ் நார்டோ என்பவரின் கோட் பாட்டை அவர் தாக்கியது ஆகும். ‘இழிபு’(degeneration)என்ற அவர் இயக்க வெளி யீட்டில் அவர் கருத்துக்கள் இடம் பெற்றன. கலை, கவிதை ஆகியவை மனிதநாகரிகத்தின் நலிவையே காட்டுகின்றன என்று அவற்றைப் பழிப்பதாக அவர் கோட்பாடு அமைந்தது. ஒவியம், கவிதை, நாடகம் ஆகிய துறைகளை அவர் ஒருங்கே குழப்பி அவையனைத்தையும் தாக்கினார். இதேபோன்று இத்துறைக ளனைத்திலும் ஒருங்கே ஈடுபட்ட ஷாவே இதற்கு விடையளிக்கத் தக்கவர் என்று அமெரிக்காவிலுள்ள ‘விடுதலை’(liberty) இதழின் ஆசிரியர் கருதினார். அவ் விதழுக்கு ஷா எழுதிய ‘நார்டோ பற்றிய இழிஞனொருவன் கருத்து’(a degenerate’s view of nardeau) என்ற கட்டுரை அவ்விதழ் முழுவதிலும் தனிச் சிறப்புமலராக அச்சிடப்பட்டு, அமெரிக்கா எங்கும் இங்கிலாந்திலும் பரந்தது. இதற்கு அவர் எந்த எழுத்தாளரும் - கிளாட்ஸ்டன் கூட - பெறாத உயர் தொகை பெற்றார். நார்டோ ஷாவைப் போலவே இசை, ஓவியம், இலக்கியம் ஆகிய மூன்று துறைகளிலும் தலையிட்டவர். அத்துடன் கலைஞர்கள் வாழ்வின் இழிபு நாடுபவர்களென்று அவர் தாக்கிவந்தார். ஷாவின் தாக்குதலுக்குப்பின் அவர் வெளியீடு மீட்டும் தலைகாட்டவே செய்யாதுபோயிற்று! இக் கட்டுரை ‘கலை பற்றிய அறிவமைதி’(sanity of art) என்ற பெயரில் தனி நூலாகப் பின்னால் வெளியிடப்பட்டது.
ஷா 1885, 1886-ல் இரு தடவையும், 1889-ல் ஒரு தடவையும் அன்னையாருடன் குடியிருக்கும் வீடு மாறிப் புதுக்குடி புகுந்தார். முந்திய ஆண்டிலேயே பெண்மைக்கு இடந்தராத ஷாவின் இளமைக் கோட்டையினுள் அவர் அன்னையாரின் இசை மாணவியருள் ஒருவராகிய திருமதி ஜென்னி பாட்டர்ஸனும், செல்வி ஃவிளாரன்ஸ் ஃவார் என்ற நடிகையும் பிளவுகள் உண்டு பண்ணினர். ஆனால், ஷா விரைவில் இத்தாக்குதலைச் சமாளித்து மீண்டும் அக்கோட்டையை வலிவுறுத்திக் கொண்டார்.
நாடகத்துறையில் ஷாவின் கவனம் சென்றது 1885-லேயே. வில்லியம் ஆர்ச்சர் என்ற நாடகக்கலை நண்பர் கதையை அடிப்படையாகக்கொண்டு அவர் கருத்துக்கு மாறுபட அவர் தம் முதல் நாடகத்தை எழுதினார். ஆனால், இதனை முற்று வித்து வெளியிட்டது 1897- லேயே ஆகும்.
இதே ஆண்டில் அவர் எலென் டெரி என்ற புகழ் பெற்ற நடிகையுடன் கடிதப்போக்குவரத்துத் தொடங்கினார். ஷா எப்போதும் நடிகர்களிடம் மிகுதி ஒத்துணர்வுடையவர். பல நாடகங்களை அவர் இன்னின்ன நடிகர்களுக்குக்கேற்ற உறுப்பு எனற எண்ணத்துடனேயே எழுதுவதும், உறுப்புக்களுக்கேற்ற நடிகர்களைத் தேர்ந்து காண விரும்புவதும் வழக்கம். எல்லென் டெரியின் நடிப்பை அவர் மிக உயர்வாக மதித்ததனாலேயே அவர் நட்புக்கு மிகுதி மதிப்புக்கொடுத்தார். அந் நடிகருக்கு அவர் வரைந்த கடிதங்கள் உண்மையில் அவர்தம் வரலாறாக இயங்குகின்றன. அவர் உள்ளார்ந்த கலை, இலக்கிய, அரசியல் கருத்துக்கள் மட்டுமன்றி, அவர் குடும்பச் செய்திகள் முதல் இதில் மனந்திறந்து விரித்துரைக்கப்படுகின்றன.
ஃவேபியன் கழகத்துடன் ஷாவின் தொடர்பு 1911-வரை நீடித்திருந்தது. ஆனால், கழகத்தில் அரசியல் வேலைகளில் அவர் பங்கு வரவரக் குறைந்தது. அதன் அறிவுப் பரப்புதல் வேலையை அவர் கழகவாயிலாக மட்டும் செய்யாமல், கலை நாடகவாயிலா கவும் செய்துவந்தார். 1897-ல் அவர் ஸென்ட் பாங்கிராஸ் வட்டத்தின் நாட்டாண்மைக்காரரானார். அது 1900-ல் நகராண்மையாக்கப் பட்டபோது அவர் அந் நகர்மன்ற உறுப்பினரானார். 1903-ல் அவர் இதிலிருந்து விலகினார். இவ் வட்டத்தில் ஆறு ஆண்டுகளாக ஷா செய்த தொண்டுகள் ஃவேபியன் கழகத்திற்கு அவர்செய்த தொண்டுகளைப்போலவே அவர் செயற்களத் திறனையும், செயல்வாய்மையையும் நன்கு விளக்குபவை. அவர் அரசியல் கருத்துக்கள் மிகமிக முற்போக்கா யிருந்ததே அவர் அரசியலில் நீடித்து ஈடுபடாததற்குக் காரணம் என்னலாம். ஏனெனில், அக் கருத்துக்களுள் பல அவர் வாழ் நாளிலேயே நிறைவேறின. பிறவும் நிறைவேறத் தக்கவையே என்பதில் ஐயமில்லை. அவர் 1892-ல் வெளியிட்ட தேர்தல் அறிவிப்பின் கோரிக்கைகள் பல நிறைவேறியுள்ளன. பல அவர் முயற்சியால் அமைந்த புதிய தொழிற்கட்சியின் திட்டங்களுக் கான அடிப்படைக் குறிக்கோள்கள் ஆயின.
20-ம் நூற்றாண்டு தொடங்குவதற்குள், புகழும் செல்வமும் மறுத்த ஷாவின் வாழ்வின் புகழ்மாதும் செல்வமாதும் புகத் தொடங்கிவிட்டனர். இவ்விருவரையும் பின்பற்றி, காதல் வெறுத்த அவர் வாழ்வில் அவருடன் ஒத்த காதல் வெறுப்பை யுடைய ஒரு காதல்மாதும் புகுந்தார். இவ் வெல்லா மாறுதலுக்கும் காரணமாயிருந்தது அவர் நாடகமேடைப் போராட்ட வாழ்வின் வெற்றியேயாகும். அப் போராட்டத்தின் போக்கை வரும் பிரிவில் காண்போம்.
நாடகமேடைப் போராட்டம்
கலைகளுள் சிறந்தவை அழகுணர்ச்சியும் இன்ப நுகர்வும் தரும் கவின்கலைகள். ஓவிய முதலாகக் காவியமீறாகக் கவின் கலைகள் பல. இவற்றுள் வடிவோவியம், வண்ண ஓவியம், உருவோவியம் முதலிய யாவும் கட்புல நுகர்வுடையன. மேலும் அவை நிலையான உணர்ச்சிகளைத் தூண்டுமேயன்றி உணர்ச்சி யியக்கம் குறிக்காது. இசை செவிப் புலனுகர்வுடையது; அத்துடன் உணர்ச்சியை இயங்கச் செய்யவல்லது. காவியமோ ஐம்புலனு கர்வும், உணர்ச்சியியக்கமும் அறிவுப் பயனும் உடையது. காவியங் களுட் சிறந்தது நாடகம். இது மேற்கூறிய எல்லாப் பண்புகளுடன் செயற்பண்பும் கூட்டி, எல்லாக் கலைகளின் முழு நிறைவாய் அமைந்துள்ளது. நாடக ஆசிரியர் பலர் இம்முழு வாழ்க்கைப் பண்பின் தனித்தனிக் கூறுகளையே தீட்டமுடிந்தது. இளங்கோ, காளிதாசன், ஷேக்ஸ்பியர் ஆகியவர்கள் அதன் முழு அகல நீள உயரங்களையும், திட்பங்களையும் ஒருங்கே தீட்டினர். அணிமைக்காலங்களில் அதன் முழுப்பரப்பையும் தாவி அளந்து, அத்துடன் தற்கால நாகரிகப் பண்பாகிய அறிவுப் பண்பையும் இணைத்த கலைஞர் பெர்னார்டுஷா ஒருவரே. இவ்வகையில் நிறைகலைஞராகிய ஷேக்ஸ்பியரிடமோ வேறு எக்கலைஞ ரிடமோகூடக் காண முடியாத தனிச்சிறப்பு ஷாவுக்கு உண்டு. அதுவே இவ்வறிவுப் பண்பும் அதன் நிறைவாய் நாட கத்தின் பின்னணியாக அவர் அமைத்த வாழ்க்கைக் கோட் பாடும் ஆகும்.
ஒன்றிரண்டு சிறந்த நாடகங்களால்கூட உலகச் சிறப்புற்றவர் உண்டு. உண்மையில் உலக நாடகாசிரியருட் பெரும்பாலார் இத்தகையவரே. பல தலைசிறந்த நாடகங்கள் உட்பட, 20 ஆண்டுக்காலம் நீடித்த தம் இலக்கிய வாழ்விடையே, 33 நாடகங் கள்வரை எழுதிக் குவித்தவர் ஷேக்ஸ்பியர். ஷா இதே வகையில், ஆனால் இலக்கிய வாழ்வுக்கால அளவிலும், நாடகங்களின் எண்ணிக்கையிலும், ஷேக்ஸ்பியரைத் தாண்டிச் சிறப்புற்று விளங்குகிறார். அவர் நாடக இலக்கிய வாழ்வில் ஈடுபட்ட காலம் 70 ஆண்டுகள். அதனிடையே அவர் எழுதி முடித்த நாடகங்கள் 58. கடைசி நாட்களில்கூட ஒரு நாடகம் புதிதாகத் தொடங்கினார். ஆனால், அதை அவர் முடிக்கமுடியாமல் விட்டுச்சென்றுள்ளார்.
ஷாவின் நாடகங்களிலுள்ள இன்னொரு தனிச்சிறப்பு அவற்றில் காதலுணர்ச்சி ஈடுபாடு அகற்றப்பட்டிருப்பதும், அவ்வுணர்ச்சியார்வத்தினிடமாக உள்ளார்ந்த அன்பொழுக்க ஆர்வம் இடம்பெறுவதுமாகும். தவிர, அறிவாராய்ச் சியிலிறங்கு பவர் கலைப்பண்பைப் பேணுதல் அரிது. ஷா, ஷேக்ஸ்பியர், டால்ஸ்டாய் போன்ற இயற்கைக் கலைஞராதலால், உணர்ச்சி யில்லாமலே கலைப்பண்பூட்டவல்லவராயுள்ளார். அறிவா ராய்ச்சியால் மட்டுமன்றி, உணர்ச்சிவகையிலும் உயர்கலைப் பண்பை அவர் எட்டமுடியும் என்பதற்குக் ‘காண்டிடா’ ‘அருள் திரு.ஜோன்’ போன்ற நாடகங்கள் சான்றுபகரும்.
வாழ்வில் ஷா எதிர்ப்பில் வளர்ந்தது போலவே, நாடகக் கலையிலும் எதிர்ப்பில் வளர்ந்தவர் ஆவர். அவர் நாடகக் கலையில் வெற்றிபெறுமுன் எத்தனையோ தடையரண்களைத் தகர்த்துத் தமக்கென ஒரு புதுச் சூழ்நிலை உண்டுபண்ணிக் கொள்ளவேண்டியதாயிருந்தது. உணர்ச்சி நாடக மரபை ஒழித்து, ஒழுக்க, அறிவுரை நாடகமரபையும், அறிவாராய்ச்சி நாடக மரபையும் அவர் உண்டுபண்ண வேண்டியிருந்தது. அத்துடன் உயர்தர நாடக மேடைகள் செல்வராட்சியிலிருந்தன. செல்வ வகுப்பினரின் இன்பப் பொழுதுபோக்கை எதிர்பார்த்து, அவர்கள் ஆதரவில் அவை நடைபெற்றன. ஷாவின் நாடகங்களும் பிற புதுமை நாடகங்களும் அவற்றில் நுழைவுச்சீட்டுப் பெறமுடிய வில்லை. ஷா வெளியில் நின்று முற்றுகையிட்டுப் போராடியே அதனுள் நுழைய வழியுண்டாக்கவேண்டி வந்தது. செல்வராட்சி யிலில்லாத ‘விடுதலை அரங்கு’ போன்ற புதுமை மேடையோ, உயர்தர நடிகர்களால் புறக்கணிக்கப்பட்டவை. உயர்தர நாடகங் களுக்கேற்ற துணைப்பொருள் கருவிகள் அவற்றிற்கு இல்லை. ஷாவின் பல நாடகங்கள் புதுமை அரங்குகளில் நடத்தப்படக் கூடாதவையாயும், செல்வ மேடைகளில் நுழைவு பெறாதவை யாயும், மேடையேறாமல் நெடுநாள் காத்திருக்கவேண்டி வந்தது. இறுதியாக, நாடகம் பார்க்க வரும் காட்சியாளர்கள் உணர்ச்சி நாடக மரபை எதிர் பார்த்தவர்கள். அவர்கள் மனப்பழக்க மரபை மாற்றிப் புதிய காட்சியாளர் குழுவை ஷா உண்டுபண்ண வேண்டியிருந்தது. இவ்வளவு தடையரண்களையும் பிற எதிர்ப்புக் களையும் தனி நின்று சமாளித்து வென்ற கலைஞர், கலையுலகில் ஒரு புரட்சிக்காரரேயன்றோ?
சிறுவராயிருக்கும்போதே ஷா ஷேக்ஸ்பியரைப் பின் பற்றிச் செந்தொடையாப்பியல்(Blank Verse) கோவிலக நாடக முறையில் (Passion Play) ஒரு நீண்ட நாடகம் எழுதியிருந்தார் என்று குறித்துள்ளோம். அவர் உள்ளார்ந்த நாடகப் பண்பையும் ஆர்வத்தையும் இது காட்டுகிறது. 1885-ல் புனைகதைகளில் அவர் மனக்கசப்புற்ற பின் மீண்டும் நாடகத்தில் கருத்துச் செலுத்தத் தொடங்கினார். அவர் கலைநண்பர் வில்லியம் ஆர்ச்சர் தாம் இயற்றிய கதைக்கு உரையாடல் வகுத்து நாடகமாக்கும்படி ஷாவை வேண்டினார். ஷாவின் சீர்திருத்த ஆர்வமும் வசைப் பண்பும் கதையை மாற்றி, மக்கள்வாழ்க்கையின் ஒரு பெருஞ் சீர்கேட்டைத் தாக்குவதாக அமைத்தன. அத்துடன் ஆர்ச்சரின் கதை முழுவதும் ஒரு காட்சியுள் அடங்கிவிட, ஷா அதனைத் தொடர்ந்து பிற காட்சிகள் சேர்த்தார். நாடகத்தை ஆர்ச்சருக்கு வாசித்துக் காட்டும்போது அவர் தூங்கியதாக எண்ணி, ஷா அதனைக் குப்பைக்கூடையில் எறிந்தார். தாம் உண்மையில் தூங்கவே யில்லையென்றும், தம் விருப்பின்மையைக் காட்டவே அவ்வாறு பாசாங்கே செய்ததாகவும், ஆர்ச்சர் பின்னாட்களில் ஒத்துக் கொண்டுள்ளார். ஆயினும், இந் நிகழ்ச்சி ஷாவின் கலைப் படைப்பை ஏழாண்டுகள் ஒத்திப்போடப் போதியதாயிருந்தது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் ஃவேபியன் கழகம் முதலிய ஒப்பியல் நெறி, புதுமைக் கழகங்களின் வளர்ச்சியாலும்; ஐரோப்பாவிலிருந்துவந்த இப்ஸனின் புது நாடக, புதுமைப்பெண் இயக்க அலைகளாலும், இங்கிலாந்தில் புதுமையார்வம் மிகுதிபரந்து வந்தது. புதுமை இதழ், புதுமைக் கலை, புதுமை அரசியல் என எல்லாத் துறையிலும் புத்தூழியின் புதுமையார்வம் புகுந்தது. இதன் பயனாக இப்ஸனின் புதுமை நாடகத்துறைக்கு ஆதரவு ஏற்பட்டது. செல்வர் மேடைகள் இவ்வியக்கத்தை எதிர்த்ததனால், இத்துறை நாடகங்களுக்கென ‘விடுதலை அரங்கு’ எனப் புதியமேடை அமைக்கப்பட்டது. இதன் மேலாளான ரிச்சர்டு கிரைன் வெளிநாட்டுப் புதுமை நாடகங்களையே நடத்தும் மரபை வெறுத்தார். ஆங்கிலேயரால் இயற்றப்பட்ட நாடகங்கள் வேண்டுமென அவர் அவாக்கொண் டார். அத்தகைய நாடகமொன்று இயற்றித் தரும்படி 1892-ல் ஷாவை அவர் கோரினார்.
ஷாவுக்கு இப்போது ஏழாண்டுகளுக்கு முன் தாம் எழுதிக் குப்பைக்கூடையில் எறிந்த நாடகம் நினைவுக்கு வந்தது. காலத்துக்கு ஏற்றதன்று என்று அவர் அன்று கருதிய நாடகம், இப்போது ஏற்புடையதாகக் கூடியதே என்று அவர் துணிந்து, அதனை முற்றுவித்துக் கொடுத்தார். அதுவே, “மனையிலார் மனைகள்” என்ற அவர் முதல் நாடகம்.
ஏழாண்டுகள் கருவிலிருந்து பிறந்த இப்புரட்சிக் குழவிக்குப் புரட்சிகரமான வரவேற்பே கிடைத்தது. இதில் வியப்புக்கிட மில்லை. இதன் பெயர் பழுத்த விவிலிய நூற் பண்புத்தொடர்பு உடையதே. ஆனால் அதன் போக்கு செல்வர் ஆட்சியையும், அவர்கள் அறநிலையங்களின் மதிப்பாட்சியையும் தாக்கிப் புண்படுத்துவதாயிருந்தது. மனையிலாப் பஞ்சை ஏழையருக்குச் செல்வர் குச்ச வீடுகளை வரிசை வரிசையாய்க் கட்டிக்கொடுத் தனர். அவற்றின் குடிக்கூலி அளவிற் சிறிதாயினும், குடியிருக்கும் வீடமைதி நோக்க, மட்டுமீறியதாகவே அமைந்தது. அத்தொழிலி லீடுபட்டவர் சிறுமுதலீட்டில் பெருவருவாய் பெருக்கும் முதல் தர முதலாளிகளாயினர். செல்வத்தின் ஆற்றலால் அவர்கள் அரசியலாட்சியைக் கைக்கொண்டது மட்டுமின்றி, அறநிலை யங்களை இயக்கி மதிப்பாட்சியும் பெற்றனர். இம்முறையில் உயர்வு பெற்றுவந்த ஒரு செல்வன், இப் புதுவாழ்வுக்குத் தகுதியுடையவளாகத் தன் புதல்வியைப் பயிற்றுவிக்கிறான். அவள்மூலம் ஓர் உயர்குடிப்பண்பாளனான இளைஞனைக் கவர்ச்சியூட்டி, தன் செல்வத்துடன் அவ்வுயர்குடிப்பண்பை இணைத்துவிட முயல்கிறான். எத்தகைய பொய்ம்மை, போலி நடிப்பு, கீழ்நோக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தூய உயர் குடிப் பண்பாண்மை நிலைபெறுகிறது என்பதை நாடகப் போக்குக் குத்தலாக எடுத்துக் காட்டுகிறது.
இந்நாடகம் மேடையிலும் பேரமளியை உண்டுபண்ணிற்று. கலைக் கருத்துரையாளராலும் வன்மையாகத் தாக்கப்பட்டது. தூற்றுரைகளாகிய கடற்கொந்தளிப்பில் புதுமை மேடையின் பெயரும், ஷாவின் பெயரும் மிதந்தன. ஆனால், ஷா புறக்கணிப் பிடையே ஆண்டு தோறும் ஒரு புனைகதை எழுதத் தயங்காதவர் அன்றோ? புறக்கணிப்பைவிட இதழ் ஒரு கலைப்படைப்பின் ஆற்றலுக்கு நல்ல சான்று என்பதை அவர் அறிந்தவர். ஆகவே, அவர் தம் ஆற்றல் உணர்ந்து ஊக்கம்பெற்று மீண்டும் நாடகங்கள் எழுதினார்.
ஷாவின் அடுத்த நாடகம் “காதல் வேடர்” என்பது. இது 1893-ல் எழுதப்பட்டது. புத்தூழியின் புதுமைப் பெண் இயக்கத்தை இது நேரடியாகச் சித்திரிப்பது. ஷாவும் ஃவேபியன் கழகமும் இப்ஸனியத்தை அவா ஆர்வத்துடன் பரப்பிவந்த காலம் இது. ஆனால், ஷாவின் இப்ஸனியம் இப்ஸனைப் பின்பற்றி யமைந்த தன்று. இப்ஸனும் ஷாவும் ஒருங்கே இப் புத்தூழியின் படைப் பாளிகள் ஆவர். எனவே ஷாவின் இப்ஸனியத்தை நாம் ஷாவியம் என்றுகூடக் கூறலாம். இங்கிலாந்தில் அது இப்ஸனியத்தைத் தாண்டி வளர்ச்சியடைந்து ஷாவியம்(Shavinism) என்றே பெயர் பெறுகிறது. ’காதல் வேடரி’ல் இப்ஸனின் கருத்துக்கள் மட்டு மன்றி, இப்ஸனே தன் அரையுருவச் சிலை வடிவில் ஒரு உறுப்பினனாய் இயங்குகிறான் என்னலாம். வாய் பேசாத அச்சிலை வாய்பேசு பவரினும் மிகுதியாகப் பிறரைத் தூண்டி யியக்கும்படி செய்யப் படுகிறது. ஷாவின் தனி வாழ்க்கை நிகழ்ச்சிகளும், பண்புகளும் இதில் இடம் பெற்றுள்ளன. பெண்மைக்கும் காதலுக்கும் இடம் கொடாத அவர் புற வாழ்க்கைக் கோட்டையில் திருமதி செல்வி பாட்டர்ஸனும், ஃபிளாரென்ஸ்வாரும் செய்த தாக்குதல் நிகழ்ச்சிகளின் நிழற் படிவம் இந்நாடகத்தில் காணப்படுகிறது.
இந் நாடகத்தின் நடிப்புக்கு உயர்தர நடிகரும், உயர்தரச் செல்வ மேடையின் நடிப்புவாய்ப்புக்களும் இன்றியமையாத் தேவைகளாயிருந்தன. ’விடுதலை அரங்’கில் இவற்றுக்கு இட மில்லை. எனவே 1905-வரை இது மேடையேற முடியாமலே போய்விட்டது.
1893-ம் ஆண்டிலேயே ஷா ’திருமதி.வாரனின் வாழ்க்கைத் தொழில்’ என்ற தம் மூன்றாவது நாடகத்தை எழுதி முடித்தார். பெண்களுக்குச் செல்வ உரிமையும் தொழிலுரிமையும் இல்லா விட்டால், அவர்களுக்குத் தன் மதிப்பும் உரிமை ஒழுக்கமும் இருக்கமுடியாது என்பதை இந்நூல் பசுமரத்தாணிபோல் வாசகர் மனத்தில் பதியவைக்கிறது. குடும்ப வாழ்வு என்பது ஆணைச்சார்ந்து வாழும் வாழ்வு. அதில் காதல் ஒரு அடிமைப் பொருளாக மட்டுமே இயங்கமுடியும், காதலையன்றி வேறு தொழிலுரிமையோ செல்வ உரிமையோ அற்ற பெண், செல்வ நிலையுடைய ஒரு ஆணுக்கு ஆட்படாவிட்டால், அவ்வடிமை வாழ்வுகூட அவளுக்கு நல்வாழ்வு ஆவதில்லை. இவ்வமை வாழ்வில் வெற்றி கிட்டாவிட்டாலோ, அல்லது அதைப் பெறத் தவறிவிட்டாலோ, அவளுக்கு இரண்டே இரண்டு வாழ்க்கை நெறிகள்தான் உண்டு. ஒன்று துணிந்து பொய்ம்மைவாழ்வு வாழ்வது. மற்றொன்று பொய்ம்மையில் தவறி வெளிப்படையாக வீழ்வது. பிந்திய நெறியில் செல்பவர் தூற்றப்படுகின்றனர். வாழ்க்கையிலிருந்து ஒதுக்கப்பட்டு அழிந்தொழிந்து செல் கின்றனர் முந்திய நெறியில் செல்பவரோ திருமதி வாரன்போல. வாழ்கின்ற உலகின் ஆதரவும், மதிப்பும் பெறுகின்றனர். தன் பொய்ம்மை வாழ்வில் பெற்ற செல்வச் சிறப்பால் திருமதி வாரன் தன் புதல்வி செல்வி விவி வாரனுக்கு, உண்மையிலேயே உணர் வதற்குரிய கல்வியும், பிற வாய்ப்புக்களும் அளிக்கிறாள். ஆனால், மகள் இக்கல்வியறிவு, பண்பாடு ஆகியவற்றின் பயனாக அன்னை வாழ்வின் கயமையைப் பகுத்துக் காட்டி எதிர்க்கிறாள். திருமதி வாரன் மகளுக்குக் கூறும் மறுமொழியும், அவளது வாழ்க்கை வரலாறும் மக்களுலகின் நேர்மையற்ற முறைகளைச் சுட்டிக் காட்டிப் பழிப்பதாக உள்ளது. இந் நாடகத்தில் திருமதி வாரனும், விவி வாரனும் சிறந்த பண்போவியங்களாவர்.
காதலைச் சாடும் பண்புக்கும், காதலுணர்ச்சி நாடகத்தை எதிர்க்கும் பண்புக்கும் இந்நாடகம் சிறந்த எடுத்துக்காட்டு. அன்னை வாழ்க்கையால் ஆடவர் காதலின் பசப்புணர்ந்த விவி, தன் காதலனைக் காதலித்தும், அக்காதலைத்துச்சமென வீசி எறிந்து, பெண்களுக்கு உழைப்பதிலேயே உறுதிகொள்கிறாள்.
இந் நாடகம் எழுதப்பெற்று முப்பதாண்டுக் காலம் வரை, அஃதாவது 1924-வரை, அது மேடையேறவில்லை. ஏனெனில் அரசியலாரால் அது தணிக்கை செய்யப் பட்டது. தணிக்கை முறையில்லாத அமெரிக்காவில்கூட, அதில் நடித்தவர்கள் குழப்பம் விளைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுச் சிறையிடப் பெற்றனராம்.
இங்ஙனமாக ஷாவின் முதல் நாடகம் புதுமை மேடையில் கூட எதிர்ப்பைக் கிளப்பித் தோல்வியுற்றது; இரண்டாவது நாடகம் செல்வமேடைக்கு மட்டுமே ஏற்றதாயிருந்ததனால் மேடையேறாமற் போயிற்று. மூன்றாவது அரசியலாளர் தணிக் கையால் தோற்றது. இவ்வெல்லா வகை எதிர்ப்புக்களையும் பகைச்சூழல்களையும் துடைத்தழிக்க ஷா இதுமுதல் பல புத்தம் புதிய முறைகளைக் கையாண்டார்.
அம் முறைகளுள் முதன்மைச் சிறப்புடைய முறை நாடகங் களை மேடைக்குரிய காட்சிப் பதிவுகளாக மட்டும் ஆக்காது, பார்ப்பதையெல்லாம் வாசித்துணரத்தக்க நூல் வெளியீடுகளாக அச்சிட்டு வெளியிடும் முறையேயாகும். காட்சி நாடகத்தில் திரைக்கட்டளைகள் விரிவாகக் குறிக்கப் படுவதில்லை. அது கலைஞர் துறை என விடப்படும். ஷா கலைஞர் தொழிலிலும் தனக்குள்ள உயரிய அறிவாற்றலை நன்கெடுத்துக் காட்டி, திரைக் கட்டளைகளையும் ஏற்பாடு களையும் காட்சியிடையே எங்கும் மிக மிகத் தெளிவுபட எடுத்துரைத்தார்.
மேலும், நாடகத்தை எதிர்க்கும் கலைக் கருத்துரையாளரை எதிர்க்கவும், வாசிப்பவர்களிடையே கலைக் கருத்தை வளர்த்து, புது நாடகக் காட்சியாளரைப் பெருக்கவும் ஒரு ஒப்பற்ற புதுக் கருவியை ஷா உண்டுபண்ணினார். இதுவே நாடகங்கள், நாடகத் தொகுதிகளுக்கு அவர் எழுதிய முன்னுரைகள். நாடகங் களிலும் நீளமான அவர் முன்னுரைகள் டிரைடனின் முன்னுரைகள் போலத் தனி இலக்கியச் சிறப்புடையவை ஆகியுள்ளன.
ஷாவின் நாடகக்கலையில் ஏற்பட்ட மற்றொரு மாறு தலை நாடகத் தொகுதிகளின் பெயர்த் தலைப்பு எடுத்துக் காட்டுகிறது. முதல் மூன்று நாடகங்களும் மக்களுக்குக் கசப்பான பல வாழ்க் கைச்செய்திகளைக் கூறியதனால் ’உவர்ப்பான நாடகங்கள்’ (Plays Unpleasant)) என்ற பெயருடன் வெளியிடப்பட்டன. இவற்றுக்குப் பின் வந்த நான்கு நாடகங்கள் இவற்றுக்கெதிராக ‘உவப்பான நாடகங்கள்’(Plays Pleasant) என்றும் அடுத்த மூன்று நாடகங்கள் “தூநெறியாளர்க்கான நாடகங்கள்”(Plays for the Puritans) என்றும் குறிக்கப்பட்டன. இரண்டாவது தொகுதியின் பெயர் அவர் குறும்புடைய, ஆனால் இனிய, நகைத்திறப் பண்புக்கு ஓர் எடுத்துக்காட்டு.
அவர் நாடகங்களிற் பல தனித்தனிச் சுவையார்வமுடைய நண்பர்களின் வேண்டுகோள்களை முன்னிட்டு எழுதப்பட்டன. அவர் நட்பின் தன்மையையும், கலையின் அருந்திறனையும் இவை குறிக்கின்றன.
உவப்பான நாடகங்கள் என்பன: ‘வாளும் போர் வீரனும்;’ ‘காண்டிடர்’; ‘ஊழ்கண்ட வீரன்’; ‘யாருக்குத் தெரியும்?’ என்பவை.
‘போர் பெருமக்களின் விளையாட்டு; அதில் பந்தயம் வைத்தாடப்படும் பகடைகளான பொது வீரருக்குப் படைக் கருவிகளைவிட உணவே ஆர்வமிக்க இன்றியமையாத் தேவை.’ ‘போர்முறை மரபு புகழையும் துணிகரவீரத்தையும்விட, அச்சத் தையே அடிப்படை உணர்ச்சிப் பண்பாகக் கொண்டது.’ ஷாவின் இவ்விரண்டு கருத்து முடிவுகளையும் விளக்குவது ‘வாளும் போர்வீரனும்’(Arms and the Man) என்ற நாடகம். வர்ஜில் என்ற இலத்தீன் கவிஞரின் பெருங்காப்பியமான ஈனிடை டிரைடன் ஆங்கில மொழியில் மொழி பெயர்த்த மொழிபெயர்ப்பின் முதலடியி லிருந்தே. இந்நாடகத்தின் பெயராயமைந்த அழகிய தொடர் எடுக்கப்பட்டுள்ளது. இக்கதை வீரப் புகழார்வத்தையே காதலாகக்கொண்ட ஒரு பெண்மணி; குடிப்பெருமை காக்கச் சிறு செய்திகளை மறைத்து அல்லாடும் அவள் அன்னை; படைத்துறை மரபும் குடிப்பொருமை மரபும் பேண விரும்பினும், எழுத்துத் திறனும் செயல் திறனும் அற்ற படைத்தலை வனான தந்தை; புகழையும் வீரத் துணிவையும் இகழ்ந்து, இடையூறுகளில் தன்னம்பிக்கையும் நகைத்திறமும் இழவாது நிற்கும் சிற்றுண்டிப் படைவீரன் (Chacolate Soldier) ஆகிய சிறந்த பண்போவியங்களைக் கொண்டது. ஸ்விட்ஸர்லாந்து நாட்டவனும் கூலிக்காக அயல் நாட்டில் போர் புரிபவனுமான சிற்றுண்டி வீரன் ஒரு பெண்மணியின் படுக்கையறையில் அடைக்கலம் பெறும் காட்சி உணர்ச்சி நாடகக் காட்சிகளின் சுவையுடன் நகைச் சுவையும் மிகுந்தது. ’உன் மதிப்பு நிலையாது?’ என்ற வினாவுக்கு அவன் கூறும் விடை அரசியல் துறையில் ஓர் ஒப்பற்ற படிப்பினையாய் அமைந்துள்ளது. “என் மதிப்புநிலை ஸ்விட்ஸர்லாந்து நாட்டின் உச்ச மதிப்பு நிலையே - அந்நாட்டின் மன்பதைக் குடியுரிமை யாளன்நிலை,” என்பதே அவ்விடை. மகள் தந்தையின் உடுப்பை வீரனுக்குக் கொடுத்து அதன் பயனாக, தந்தையிடம் அதை மறைக்க அரும்பாடுபடும் தாயின் சிறு சூழ்ச்சிமுறைகள் ஒரு ஒப்பற்ற நகைக்களியாட்டமா யமைகிறது.
போரையும் போர்முறையையும் பழிக்கும் இந்நாடகத்தைக் கண்டு ‘அமைதி காவலர்’ எனச் சிறப்பித்துக் கூறப்படும் பிரிட்ட னின் மன்னர் ஏழரம் எட்வர்டு முனிவுகொண்டதாக அறிகிறோம்.
ஃவிளாரென்ஸ் ஃவார் நடத்திய புதிய மேடையாகிய ’சாலை அரங்’கில்(Avenue Theratre) தம் குடும்பத்தார் அறியாது நடிப்பிலீடுபட்ட ஆர்வ நடிகையான செல்விஹார்னிடனுக்காக இந்நாடகம் நடிக்கப்பட்டது. நாடகத்தால் 4000 பொன் இழப்பு நேரிட்ட போதிலும், ஷாவின் மனம் புண்படா திருப்பதற்காக இது நெடு நாள் அவரிடமிருந்து மறைத்து வைக்கப்பட்டதாம்! ஆயினும், பொருளியல் இழப்பு இவ்வகையில் நாடகத்தின் புகழையோ, நடிப்பின் புகழையோ தாக்கவில்லை. நாடகம் எங்கும் மேற் கொண்டு காட்டப் பெற்றுப் புகழ்பெற்றது.
ஸெர்வியா, பல்கேரியா நாடுகளை யறியாத ஷா சில செய்திகளையும், அந்நாட்டு மொழியின் சில சொற்களையும் உசாவியறிந்துகொண்டே இதை எழுதினார். ஆயினும், இதில் வரும் பணியாள், பணிமகள் ஆகியவர்கள் கூட பால்கன் நாடு களின் அரைஐரோப்பிய, அரை ஆசிய நாகரிகத்தை நன்கு நிழற்படுத்திக் காட்டுகின்றனர் என்று சிறந்த கருத்துரையாளரான பிராண்டிஸ் குறித்துள்ளார்.
ஷாவின் எதிர்ப்புப் பண்புகள், அறிவுரைகள் ஆகியவற்றால் தாக்குறாமலே, தனிப்பட்ட கலைப்பண்பு மூலம் கலைமுகட்டை எட்டிய ஷாவின் நாடகம் காண்டிடா (Candida).. கலைக்கட்டுக் கோப்பு வகையில் இது ஒரு கிரேக்க நாடகமோ என்று கருதத்தக்க வடிவ வனப்புடையதான் இது இலங்குகிறது. கத்தோலிக்க சமயத்துறை யாளர் கருத்திலும் இத்தாலியக் கவிஞர் கலையிலும் வீற்றிருக்கும் ‘கன்னித்தாய்’ மேரியையே அது நினைவூட்ட வல்லதாயுள்ளது. காண்டிடாவின் கணவன் ஒப்பியல் நெறியிலும், கிறித்தவ சமயத்திலும் ஒருங்கேபற்றுடைய கிறித்தவ ஒப்பியல் நெறிக் கோட்பாடுடைய ஒரு அருட்செல்வன். அவனும் அவன் நண்பனான ஒரு இளங்கவிஞனும் காண்டிடாவின் உள்ளத்தின் நடுவிடம் பெறப் போட்டியிடுகின்றனர். பிற காதலர் காதற் போட்டியெல்லாம் உடற் காதலுக்கான போட்டிகளே. உடற்காதற் போட்டியிலேயே பகைமையும் பொய்ம்மையும் பழியும் உண்டு. இங்கே உடலழகினைவிட உள அழகு மிக்க ஒரு பெண்மணிக்காக இருவர் உளக்காதற் போட்டியிலீடுபடும் ஓர் இன்பக் காட்சி காட்டப்படுகிறது. இதில் பகைமையில்லை பழியில்லை; பொய்ம்மையில்லை. ஆனால், குழந்தைப் பண்புடைய சிறு தன்னலமும் அதனை ஒட்டிய நகைத்திறமும் காணப்படுகின்றன. நாடக இறுதியில் மட்டும் ஷாவின் பெண் மைபற்றிய ஒரு முடிவு வலியுறுத்தப்பெறுகிறது. பெண்கள் ஆடவர் பெருந் தகுதியிலீடு படக்கூடும், ஈடுபடுவர். ஆனால், போட்டியில் ஆடவரை வெல்லவிடுவது அவர்கள் பெருமை யன்று; அவர்கள் அடிமைத்தன்மையே. இவ்வுண்மையும் கலை நயம்படவே வலியுறுத்தப்பெறுகிறது.
முதல் முதல் தடங்கலின்றி எளிதாக மேடையேறிய ஷாவின் நாடகம் இதுவே. பதிப்புரிமைச்சார்பாக 1895-லும், விடுதலை மாளிகைச் சூழ்வரு கழகத்தாரால் 1897-லும் இது நடித்துக் காட்டப்பெற்றது.
ஷாவின் பிற்கால நாடகங்களுக்கு ஒருவகை வழி காட்டி யாயுள்ளது ‘ஊழ்கண்ட வீரன்’(Man of Destiny). இது ஓரங்க நாடகம். அக்காலச் சிறந்த நடிகர்களான ரிச்சர்டு மான்ஸ் ஃவீல்டு, எலென் டெரி ஆகியவர்களை எதிர்பார்த்து இது எழுதப் பெற்றது. முந்தியவர் நடிக்க மறுத்ததனால் இது நீண்டநாள் நடிக்கப்பெறாமலிருந்து. 1897-ல் கிராய்டன் நகரில் உள்ள பேரரங்கில்(Grand Theatre) இது நடிக்கப் பட்டது.
வாழ்க்கையின் தனியுயர் வீரன் பண்புபற்றிய ஷாவின் கருத்தை விளக்கும் ஸீஸரும் கிளியோப்பாட்ராவும், மனிதனும் மீயுயர் மனிதனும் முதலிய நூல்களுக்கு இது முன்னோடியாகும். விழிப்புணர்ச்சி. தெளிந்த அளிவு, விருப்பு வெறுப்பற்ற செயல் திறம், முடிவுபற்றிய கவலையின்மை ஆகிய பண்புகள் நெப் போலியன் வாயிலாகத் தனி உயர்வீரர் பண்புகளாகக் காட்டப் பட்டுள்ளன. நெப்போலியனுடன் வீரப்போட்டி, சொற்போட்டி, செயற் போட்டிகளிலீடுபடும் ‘மாயமங்கை’ அவன் மனைவியால் ஒருமறை முடங்கலைக் கவர்ந்துவர அனுப்பப்பெற்ற தோழியே யாவள். அவளுடன் நெப்போலியன் ஈடுபட்டு ஊடாடும் போட்டியுரையாடல் ஓர் ஒப்பற்ற கலைக் காட்சியாகவுள்ளது.
’யாருக்குத் தெரியும்?,’(You Never can Tell) 1895-96-ல் எழுதப்பெற்றது. காலத்துக்கியைந்த களியாட்டக்கூத்து நிறைந்த நாடகம் ஒன்று எழுதவேண்டும் என்ற பல நண்பர் கோரிக்கைப் படி இது எழுதப்பெற்றது. இதில் உயர்தர வாழ்க்கை, பகட்டாடை யணிமணிகள், முகமூடியாடல்பாடல், இசை, நகையாடல், விருந்து முதலியன மிகுதி இடந்தரப்படுகின்றன. இதில் ஆசிரியர் எதிர்பாரா நிகழ்ச்சிப் பண்பினை இறுதிவரை திறம்படத் தொடர்ந்து இயக்கி வெற்றி பெற்றுள்ளார். ஷாவின் பல்வகைத் திறத்துக்கு இஃது ஓர் நற்சான்று. ஆனால், தம் இயல்புக்கு மாறான இத்தனை கூறுகளுக்கிடையிலும் அவர் தம் தனிச் சிறப்புப் பண்புகளையும் இணைத்துள்ளார். காதல்வாழ்வில் வெறுப்புக் கொண்டு காதலையே வெறுத்துப் பெண்ணின் முழுவிடுதலை உரிமையியக்கம் நடத்திய ஒரு மாது, அத்தகைய ஒரே தாயினால் பயிற்றுவிக்கப்பட்டும், பல வகையில் அப் பயிற்சியின் விளைவை எடுத்துக் காட்டும் அவள் புதல்வியர், பெண்டிரியக்கத்தின் புதுமைப் போக்கினுள்ளும் போட்டியிட்டுப் புதுமுறை ஆடவர் சதிகளைக் கையாளும் காதலன், காதலில் சறுக்கித் தோல்வி யேற்கும் புதுமை இளம்பெண் ஆகிய பல சுவைமிக்க காட்சிகள் இந் நாடகத்தின் விருந்துடன் விருந்தாகத் தரப்படுகின்றன. இந்நாடகத்தில் வரும் விடுதிப் பணியாள் வில்லியம் ஷாவின் ஒப்புயர்வற்ற சிறந்தகலைப்படைப்பாக விளங்குகிறான். ஷேக்ஸ்பியரின் ஃவால்ஸ்டாஃவ் ப்வ் போன்ற நாடகக்கலைப் படைப்புக்களையும் டிக்கன்ஸின் புனைகதை உறுப்போவியங் களையுமே வில்லியத்துடன் ஒப்பிட்டுக் கூறத்தகும்.
உயர்தர மேடைக்கென இயற்றப்பட்ட இந் நாடகப் தொடக்கத்தில் அம் மேடையினால் ஏற்கப்படவில்லை. ஆனால் ஷா உலகில் தம் புகழ் மேடை நிறுவியபின் அது அம்மேடைக்கு உரியதாயிற்று.
தூநெறியாளர்க்கான நாடகங்கள் என்ற தலைப்புடன், “பேய்மகன் சீடன்,” “ஸீஸரும் கிளியோப்பாட்ராவும்,” ‘முகவன் பிராஸ்பௌண்டின் மனமாற்றம்’ ஆகியவை வெளியிடப் பட்டன. இவை முறையே 1896, 1898, 1899 ஆகிய மூன்று ஆண்டுகளில் எழுதப்பெற்றன. முதலது அவரது மணவினைக்கு முன்பும், மற்றவை அதன் பின்பும் எழுதப்பெற்றன.
உணர்ச்சிகரமான ஒரு வீறுநாடகம் வேண்டுமென்று விரும்பிய நடிகர் வில்லியம் டெரிஸூக்காகப், ‘பேய்மகன் சீடன்,’(Devil’s Disciple) எழுதப்பெற்றது. இதில் திருமதி டட்ஜன் என்ற ஒரே உறுப்போவியம் மட்டுமே ஷாவின் வழக்கத்துக்கு மாறாக, முழுதும் வெறுக்கத்தக்க ஓவியமாகத் தீட்டப் பட்டுள்ளது. ஆனால், இது டிக்கன்ஸின் புனைகதை உறுப்பு ஒன்றைப் பின்பற்றி அமைக்கப்பட்டதென அறிகிறோம். இம்மாது சமயத்தின் கண்டிப்பொழுக்கம் என்னும் புறப்போர் மறைந்த தன்னலம், பொய்மை, வஞ்சம் ஆகியவற்றின் பிண்டமாய் விளங்குகிறாள். டிக்(ரிச்சர்டு) டட்ஜன் இதன் எதிர்மாற்றாகப் புறத்தே தீயொழுக்க மரபும் இகழும் ஏற்ற ஓர் உள்ளார்ந்த உயர்பண்பாளனாகத் தீட்டப்பட்டுள்ளான். டிக்குடன் சமயப்பணித் தலைவன் ஹெண் டர்ஸன் அவன் மனைவியின் உள்ளத்தே காண்டிடாவின் அன்புப்போட்டியி லீடுபடுத்தப் படுகின்றனர். வீரனான டிக்கின் முரட்டுவீரம் செறிந்த புறத் தோற்றத்திடையே பெருந்தன்மையும் அருட்பண்பும், கரந்திருந்து நெருக்கடியிடையே வெளிவரு கின்றன. அதுபோலப் புறத்தே அருளாண்மைத் தோற்றமுடைய ஹெண்டர்ஸனிடம் உள்ளார்ந்த வீரம் கரந்துள்ள காட்சி இன்பமூட்ட வல்லது. டிக் தன் உயிரை ஒரு பெண்ணுக்காக விடத் துணியவில்லை; பெண்மைக்காகவே விடத் துணிந்ததாகக் கூறும் கூற்று, தன்னலக் காதலிலும் மக்கட்பற்றாகிய அருளன்பு உயர்வுடையது என்பதைச் சுவைபட உணர்த்துகிறது. இதன் கதை அமெரிக்க விடுதலைக் கிளர்ச்சிக் சூழலிடையே அடைக்கப் பட்டுள்ளது. கதைக் கோப்பு நாடகக் கலைத் துறையில் தனிச் சிறப்புடையது.
நாடக மேடையில் ஷாவுக்குப் பெரும்புகழ் தந்த நாடகம் இதுவே. ஆனால், இம்மேடை இலண்டன் மேடை யன்று, நியூயார்க் மேடை. டெரிஸூக்காகவே இது எழுதப்பட்டாலும், டெரிஸ் ஷாவால் எப்போதும் மன்னிக்கமுடியாத ஒரு குற்றத்திற் காளானார் - நாடகத்தை வாசிக்கும்போது தூங்கினார்! இந் நிகழ்ச்சி ஒருவகையில் ஷாவுக்கு நலமாகவே முடிந்தது. முன் ஷாவின் நாடகத்தை நடிக்க மறுத்த மான்ஸ்ஃவீல்டு இதை ஏற்று நடித்து ஆசிரியருக்குத் திடீர்ப்புகழும் செல்வமும் தந்தார்.
ஸீஸரும் கிளியோப்பாட்ராவும்(Caesor & Cliopatra) மற்றொரு தலைசிறந்த உயர்மேடை நடிகருக்காக எழுதப்பெற்றது. நெப்போலியனைப் போல ஸீஸரும் தனி உயர் வீரர் பண்பு பற்றிய ஷாவின் குறிக் கோள் ஆவர். காதல் முதலிய உணர்ச்சிகளை ஸீஸர் பொழுது போக்குக்காக மட்டுமே கொள்பவர் என்பது, கிளியோப்பாட்ரா விடம் போர் நெருக்கடியில் விடைபெறும்போது பேசும் குறிப்பால் விளங்குகிறது. அதேசமயம் இடுக்கண் நேரத்தில் துணிவும் அமைதியும், ஆய்ந்தோய்ந்து செயல் செய்யும் சூழ்ச்சித்திறமும் அவரிடம் உள்ளன. பிழைபொறுத்தல் என்பது உயர் அறிவுத் திறத்தின் குறியாகக் காட்டப்படுகிறது. பிரிட்டானியரின் பண்புகள், சிறப்புத்திறங்கள், குறைபாடுகள் ஆகியவற்றை பிரிட்டானஸ் என்ற ஸீஸரின் தோழர்வாயிலாக ஷா தீட்டுகிறார். எகிப்திய கன்னிமுகச் சிங்கச்சிலை(Sphinx)யின் அடித்தடத்தில் ஸீஸரும் கிளியோப்பாட்ராவும் நிலவில் சந்திக்கும் காட்சி கவிதையின் முழுக்கவர்ச்சியும் உடையது. இது 1899-ல் மன்னுரிமை அரங்கத்திலேயே (Royalty Theatre) அரங்கேற்றப் பெற்றது. மேடைப் போராட்ட வாழ்வு இத்துடன் முடிவுற்ற தென்னலாம்.
ஷாவின் நடிகை நண்பரான எலென் டெரிக்கு ஒரு பேரன் பிறந்தபோது, “பாட்டியாகிவிட்ட நடிகைக்காக இனி யார் நாடகம் எழுதப்போகிறார்?” என்றாராம். இது முடியாத தன்று என்று காட்டவே முகவன் பிராஸ் பெண்டின் மனமாற்றம் (Captian Brassbound’s conversion) எழுதப்பெற்றதாகக் கூறப்படுகிறது. இதன் உறுப்போவியங்களுள் தலைசிறந்தவர் சிகிலிச் சீமாட்டியே யாவர். அன்புமுறையில் எவரையும் திருத்தும் ஒரு வியத்தகு பெண்மை ஒலியமாக அவர் காட்சி யளிக்கிறார். விக்டார் ஹியூகோவின் ‘ஏழைமக்கள்,’(Les miserables) என்ற புனைகதையில் ‘நல்ல சமயப்பணி தீட்டப் பெறும் முதல்வரின்’ ஒருபெண் பதிப்பென அவரைக் கூறலாம். இந்நாடகக் கதை வட ஆபிரிக்காவில் ஆட்லஸ்மலைப் பகுதியில் அமைக்கப் பட்டுள்ளது. இதற்கு முதலிலிட்ட தலைப்பாகிய ‘அட்ஸாஸ் மலை மாயாவிமாது.’ இந்நாடகத்திடையேயும் அவர் புனை கதையிடையேயும் இடம்பெறும் சொற்றொடர் ஆகும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவு ஷாவின் வறுமை வாழ்வு, போராட்ட வாழ்வு ஆகிய இரண்டுக்கும் ஒரு முடிவாக அமைந்துள்ளது. கலைச்செல்வியும் புகழ்ச் செல்வியும் அவர் வாழ்வினுட் புகுந்தனர். அவ்விருவருடனும் கைகோத்து அவர் வாழ்வில் அவருடன் பங்குகொள்ளும் பேறுபெற்ற வாழ்க்கைத் துணைச்செல்வியும் இடம்பெற்றார்.
வெற்றிச்செல்வி
குறிக்கோளற்ற வாழ்க்கை வாழ்பவரே உலகில் மிக மிகப் பெரும்பாலர். குறிக்கோளுடையவர் மிகச் சிலர். குறிக்கோளுடை யவர்களுள்ளும் தம் இன்ப வாழ்வுவகைகள், பணம், பிறரை அடக்கியாளும் ஆற்றல், பிறரால் புகழப்பட்டு உயர்வுபெறல் ஆகிய சிறு குறிக்கோள்களுக்காகத் தம் வாழ்க்கையை ஒப்படைப் பவரே மிகுதி. குடி, வகுப்பு, இனம், நாடு, மொழி ஆகிய எந்த எல்லையிலாவது அல்லது முழுஉலக எல்லையிலாவது, உலக வாழ்க்கை நலத்தை ஒருசிறிதேனும் மேம்படுத்துவதைத் தம் குறிக்கோளாகக்கொண்டு, புகழ்வரினும் இகழ்வரினும் பொருட் படுத்தாது உழைக்கும் அருட்பெரியார் மிகவும் அரியர். உலகநல ஆர்வமும் உயர் அன்பொழுக்கமும் நேர்மை யொழுக்க ஆர்வமு முடைய இத்தகையோர்களுள் ஒருவர் ஷா. மேலும் அவ்வருட் பெரியார்களுள்ளும் காணுதற்கரிய தன்முயற்சியும் தற்சார்பும் அவரிடம் சிறக்க அமைந்துள்ளன.
அரசியலில்கூட ஒழுக்க உயர்வு பேணுதல் இன்றியமை யாதது என்ற கருதிய காந்தியடிகளைப்போல, கலையிலும் எழுத்தாண்மையிலும்கூட நேர்மையையும் ஒழுக்க உயர்வையும் கையாளுதல் இன்றியமையாதது என்ற உறுதி கொண்டவர் ஷா. இதற்காகவே அவர் தற்சார்பை விழிப்புடன் பேணினார். தற்சார்பும் தன்முயற்சியும் இல்லாதவிடத்து எழுத்தாண்மை யுரிமையும் கலைநேர்மையும் பயனற்றவை என்று கூற வேண்டுவ தில்லை. ஷாவின் வாழ்வு இந் நேர்மைக்குப் பல எடுத்துக் காட்டுக்கள் தருகின்றன.
ஷா கலைக் கருத்துரையாசிரியராக ஒரு செய்தியிதழில் பணியாற்றுகையில், ஆசிரியரிடமிருந்து அவருக்கு நட்புமுறையில் ஒரு குறிப்பு அனுப்பப்பட்டது. ஆசிரியரின் சில கலையன்பர்களை அதில் குறித்து, அவர்கள் கலைக்குத் தனிச்சலுகை காட்டிப் பாராட்ட வேண்டுமென்று அதில் ஆசிரியர் தம் விருப்பம் தெரிவித்திருந்தார். அத்துடன் இதே சலுகை யுரிமையை அவர் தாமும் தம் நண்பர்வகையில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் குறித்திருந்தார். இன்றும் எழுத்தாண்மைத் துறையில் இத்தகைய தனிச்சலுகைகளை இயல்பாக ஏற்பவர்கள் அரிய ரல்லர். ஷாவின் இடத்தில் வேறு எந்த எழுத்தாளர் இருந்திருப் பினும், தம்மை அமர்த்தியவரும் தம்மை உயர்த்தும் உரிமையுடைய வருமான தம் மேற்பணியாளருக்கு இணக்கமாகவே நடந்து கொண்டிருப்பார் என்பதில் ஐயமில்லை. பணி உயர்வு, புகழ், ஆசிரியத் தொழிலில் திறமையுடையவர் என்ற பெயர் ஆகிய வற்றை இத்தகைய இணக்க நடையினாலே பெறமுடியும் என்பதையும் யாவரும் அறிவர். தம் ஒழுக்கப் பண்பைச் சிறிது உயர்த்திக்கொள்ள விரும்புபவர்கூட, நயமாக இக்கோரிக்கையை மறுத்துப் பணிக்கு ஊறு ஏற்படாமலாவது நடந்துகொண்டி ருப்பர். ஆனால், ஷா காட்டிய கண்டிப்பு நேர்மையை அருளாளர் வாழ்வில்கூடக் காண்டலரிது. அவர் மறுத்தெதுவுங்கூறாமல், வாளாது அப்பணியைத் துறந்துவிட்டார்!
இச்செய்தி பற்றிய அவர் விளக்கக் குறிப்புக்காண்க: “இக்கோரிக்கை அதனை ஏற்றுக்கொள்வது பற்றிய எத்தகைய மயக்கதயக்கமோ, அது ஒரு குற்றமாகக் கருதப்படக்கூடும் என்ற உணர்ச்சியோ சிறிதும் இல்லாமலே செய்யப்பட்டது. (அஃதாவது, இது ஒரு பொது வழக்கமாய்விட்டது.) கலையை எவரும் ஒரு விளையாட்டுப்போலக் கொள்கின்றனரேயன்றி, அதனை வாழ்வு தாழ்வுக்குரிய உயிர்நிலைப்பண்பாகக் கொள்ளக்காணோம். அதில் ஒழுக்கம், நேர்மைபற்றிய வினாக்கள் எழக்கூடும் என்று அவர்கள் கனவில் கூடக் கருதுவதில்லை. இந் நிலையில் நான் சற்று உணர்ச்சியுடன், ஆனால் சிறிதும் மன வருத்தத்துக்கு இடமின்றிப் பணி துறப்பதொன்றே இயல்பாக எதிர்பார்க்கக் கூடியது. என் செயல் உலகியல் அமைதிக்கு மாறானது; நட்பின் அருமை பாராதது; நன்றிகெட்டது என்று பலர் மனமார எண்ணியது கண்டு மன வருத்தமும், இரக்கமும் அடைகிறேன். உண்மையில் ஆசிரியராயலுவல் பார்த்த செல்வர் ஒரு சில நாட்கழித்துக் காலமானபோது, அவர்கள் என்னைக் கிட்டத் தட்டக் கொலைக் குற்றத்திற்குரிய ஒருவனாகக்கூட நினைத் திருக்கக் கூடும்.”
சிறுசிறு வழுக்களுக்குக்கூட இடமின்றித் தம் பணித்துறப் பெச்சரிக்கைமூலம் ஷா தம் எழுத்துரிமையை எங்கும் வலியுறுத் திக்கொண்டார். அவர் பணி துறக்க நேர்ந்த சமயங்களும் பல. இதனால், அவர் கட்டுரை கருத்துரைகளை எவரும் சிறிது மாற்றியமைக்கக்கூடத் துணிந்ததில்லை. சௌரிசௌரா நிகழ்ச்சியின்போது பொறுமை யெதிர்ப்புக் கோட்பாட்டு வகையில் காந்தியடிகள் காட்டிய கண்டிப்பையே ஷாவின் இக் கண்டிப்பு நினைவூட்டுகிறது. அடக்குமுறைகளினால் அல்லலுறும் போதுகூட, மக்கள் காவற்படையினரை எதிர்த்ததைக் கண்டித்து அவர்தம் இயக்கத்தையே நிறுத்திக்கொண்டார்!
ஷா செல்வத்தை வெறுத்தவரும் அல்லர். வறுமையை விரும்பி ஏற்றவரோ, வறுமையிடையே கலைப் பண்பு, கடவுட் பண்புகளைக் கண்டவரோ அல்லர். வறியவர் வாழ்விலிருந்து வறுமை ஒழியவேண்டும் என்றும், எல்லாரும் செல்வத்திற்குரிய வராய்ச் செல்வமீட்டி வளம் பெறவேண்டுமென்றுமே அவர் கருதினார். ஏனெனில் செல்வமின்றிக் கல்வி, கலை, நாகரிக வாழ்வு ஆகியவை நடை பெறமுறையாதென்பதும், வறுமை உலக வாழ்வின்எல்லாத் தீய பழிகளுக்கும் வித்து என்பதும் அவர் கோட்பாடுகள். வறுமை குற்றங்களுக்கெல்லாம் தாயாதலால் அதனைவிடப் பெரிய குற்றம் இல்லை; அதை ஒழிப்பதே அறிவாளர். ஆட்சியாளர் ஆகியவர் கமன் என்பதை அவர் வற்புறுத்தினார். அவர் கலை தம் வறுமையை மட்டுமன்றி உலகின் வறுமையையும் அகற்ற முனையும் செயலில் ஈடுபட்ட தினாலேயே, அவர் செல்வர் ஆதிக்கத்துக்கும் அடிமைப் படாமல், வறியவர் அடிமை யச்சங்களுக்கும் இரையாகாமல், தன்முயற்சியிலும் தற்சார்பிலும் உறுதியாய் நின்றார்.
ஷாவின் வறுமை அயர்லாந்தில் இல்லாமையால் ஏற்பட்ட வறுமை. அதில் அவருக்கு மனக்கசப்பும், எதிர்ப்புப் பண்புமே வளர்ந்தன. இங்கிலாந்தில் அவர் வறுமை இத்தகையதன்று. நிலக்குத்தகை மனையில் அவர் வேலை பார்த்த காலத்திலிருந்தே எளிதில் செல்வமீட்டும் முறைகளை அவர் அறிந்திருந்தார். ஆனால், அவர் தொழில்மூலமாகச் செல்வமீட்டும் வகையை ஒதுக்கித்தள்ளிக் கலைத் துறைநாடித் தற்காலிகமாக வறுமையை ஏற்றார். இக்காலத்தில் அவர் வறுமையிடையே, வெற்றிச் செல்வியைநாடி மன உறுதியுடன் உழைத்தார். இதுவே அவரது வறுமையிற் செம்மைப்பருவம். அவர் கலைக் கருத்துரையாளரா கவும், புனைகதை எழுத்தாளராகவும் வாழ்ந்து, அதன்பின் நாடகமேடையை முற்றுகையிட்ட காலமே வறுமையுடன் அவர் போராடிய காலம் ஆகும். இப்போராட்டம்! முடி வடைந்து 1898 முதல் அவருக்கு வெற்றிமேல் வெற்றிகள் வரத்தொடங்கின. அவ்வெற்றிகளின் முதல் வெற்றியாக அவர் வாழ்க்கையில் இடம் பெற்றவரே, அவர் வாழ்க்கையின் வெற்றிச்செல்வியாக அமைந்த திருமதி ஷா.
திருமதி ஷாவின் கன்னிப்பெயர் சார்லட்டி பேய்ன் டௌண்ஷெண்ட் என்பது. ஷா முதல் முதல் வேலை பார்த்த நிலக் குத்தகைக் கழக முதலாளியின் பெயரும் டௌண்ஷண்டு என்றே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஷாவைப்போல் சார்லட்டியும் அயர்லாந்திற் பிறந்தவரே; ஆனால், அவர் ஷாவைப்போல ஏழைக்குடியிற் பிறந்தவரல்லர்; பெருங்குவைச் செல்வக் கடியிற் பிறந்தவர். அத்துடன் அவர் அச்செல்வத்துக்கே மரபுரிமையுடைய உரிமையரசி. எனினும் செல்வ மரபில் பிறந்தோரிடையேயும், சிறப்பாகச் செல்வக்குடியிற் பிறந்த பெண்டிரிடையேயும் காணமுடியாத ஓர் அரும்பண்பு அவரிட மிருந்தது. அவர் செல்வத்தில் தன்னலப் பற்றற்றவர். அதே சமயம் செல்வத்தைவிட அறிவிலும் கலையிலும் பற்றுடையவர். மற்றப் பெண்டிரைப்போல அவர் ஆடவர் காதற்பசப்பில் ஈடுபட வில்லை. “தானறியாப் பண்பே தன்நிறைவுடைய முழுப்பண்பு” (The unconscious is the alone perfect) என்னும் கார்லைலின் மெய்ம்மைப்படி, ‘காதலைப்பற்றிக் கருதாத நெஞ்சமே உண்மைக் காதல் நிலை யுடையது’ என்பதை அவர் இயல்புணர்ச்சியால் உணர்ந்திருந்தார் என்னலாம். ஏனெனில், ஷாவைப் போலவே அவரும் காதலையும் மண வினையுறவையும் வெறுத்தவர். விருப்பு விருப்பை ஈர்ப்பது போல, வெறுப்பும் வெறுப்பை ஈர்க்குமன்றோ? அவர் காதல் மறுப்பே காதல் மறுத்த ஷாவின் காதலுக்கு அவரை உரியவர் ஆக்கிற்று என்னலாம்.
ஷாவின் வாழ்வில் அவர் இடையறா நட்பினைப்பெற்ற பெண்மணிகள் இருவரே. ஒருவர் புகழ்பெற்ற நடிகையான எலென் டெரி. வாழ்க்கையில் ஷாவின் மிக நெருங்கிய நட்புறவு டையவர் இவரே என்னலாம். ஏனெனில் குடும்பச் செய்திகள் உட்பட அவர் வாழ்க்கையின் எல்லா விவரங்களையும், கலை, பணித்துரை முதலியவைபற்றிய அவர் கோட்பாடுகள் யாவற் றையும் அவர் ஒருவரிடமே ஷா மனம்திறந்து கடிதமூலம் விளக்கியிருக்கிறார். இந் நட்புரிமையினும் ஒருபடி மேற்பட்ட கவர்ச்சிக்குரிய பெண்ணரசி சார்லட்டியேயாவர்.
எலென் டெரியுடன் ஷா தற்செயலாக 1892-லேயே கடிதப் போக்குவரவு தொடங்க நேரிட்டது. அதுமுதல் அவரிடம் அவர் தம் வாழ்க்கை, கருத்துக்கள், நிகழ்ச்சிகள் ஆகியவைபற்றி இடை விடாது எழுதிக் கடிதத் தொடர்பு வைத்துக்கொண்டு வந்தார். 1896-ல் ஃவேபியன் கழகத்தில் வந்து சேர்ந்த ஒரு அயர்லாந்து நாட்டுக் கோடியஞ் செல்வியைப் பற்றியும், அச்செல்வியர் தம் மனத்தகத்தே ஏற்படுத்திய கருத்துக் குழப்பத்தைப் பற்றியும் அவர் எலென் டெரிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார்.
“நாம் அனைவரும் ஒருவரை ஒருவர் பாராட்டுகிறோம்; ஒருவர் தோழமையில் ஒருவர் மகிழ்கிறோம்; ஒருவரை ஒருவர் நேசிக்கிறோம்; ஒருவருடன் ஒருவர் வகைவகையான தொடர்பு களை உண்டுபண்ணிக் கொள்கிறோம். ஆனால், இவையனைத் தும் மேலீடான நம் இன்ப வாழ்வுப் பகுதிகள் மட்டுமே. இந் நிலை கடந்து நம் உள்ளத்தின் ஆழ்தடத்தில், ஒரோரு சமயம் நாம் ஆழ்ந்த மதிப்பும், நம்மால்கூட உதறித் தள்ளமுடியாத திண்ணிய ‘தெய்விகமான’ தனிப்பற்றும் கொண்டு விடுகிறோம். நாமாக இதனைக் கொடுக்கவோ ஏற்கவோ முடிவதில்லை. அது தானாக எழுந்து செயலாற்றுகிறது. நாம் மீற முடியாமல் நம்மை மீறிய ஆணையாக அது இயங்குகிறது. அவ் வுணர்ச்சிவகையில் அறிவு, அழகு, கலைத்திறம், வாழ்க்கைப்படி, பருவம், கல்விநிலை ஆகிய எந்தத் தராதர அளவுக்கும் இடமிருப்பதில்லை. ஒருவர் பேரறிஞரானாலும் சரி, முழு மூடரானாலும்சரி இவ்வுணர்ச்சி வகையில் அவர்களிடையே மிகுதி வேறுபாடு காட்டமுடியாது. அவர்களிடையே காணத்தகும் வேறுபாடெல்லாம், ஒருவர் அதனை உணர்ந்து வெளியிடுவர்; மற்றவர் கூறமுடியாது என்ற அவ்வளவுதான். மனித சமூகத்தின் மூல முதற் பொருள் - முதல் தொல்பழங்குடியாட்சிப் பண்பு இதுவே…….”
காதல் மறுத்தவர் காதலுணர்ச்சியில் பிடிபட்டபோது கூறும் காதல் விளக்கம் இது!
இவ்வுணர்ச்சியைத் தூண்டியபேறுபெற்ற பெண்மை நல்லார் பற்றிய குறிப்புக் கீழே வருகிறது: “இங்கே எனக்கு ஒரு பேரதிர்ச்சி ஏற்பட்டுள்ளது,” என்று அவர் குறிப்பிட்டுவிட்டு, நேரடியாக உடன்தானே செய்தி குறிக்காமல் ‘காதல் வேடர்’ போன்ற தம் நாடகங்கள் ’ஊசிப்’போய் விட்டது பற்றியும்; ஷேக்ஸ்பியர் நாடகங்களின் வகையில் காலப்போக்கால் ஏற்பட்டுவரும் மாறுதல்பற்றியும் சுற்றி வளைத்துப் பேசுகிறார். அதன்பின் இச்செய்தி அவர் உள்ளத்தைப் பீறிக்கொண்டு வெளிவருகிறது.
“எங்களுடன் (ஃவேபியன் கழக உறுப்பினருடன்) இப் போது ஒரு அயர்லாந்து நாட்டுக் கோடியஞ் செல்வி வந்து சேர்ந்துள்ளார். அவர் அறிவுத்திறம் உடையவர். ‘கடவுளருளால் செல்வருக்கு வாய்த்த’ பெரிய இடத்தை வலைபோட்டுப் பிடிக்கும் வழக்கமான குடிநிலை மரபைத்துறந்துவிடத்தக்க பண்புரம் உடையவராய் அவர் விளங்குகிறார். அவரை நாங்கள் ஃவேபியன் கழகத்தில் சேர்ப்பதில் வெற்றி கொண்டுள்ளோம். அவருடன் ‘காதல் புரிவதன்’ மூலம் நான் என் உள்ளத்துக்கு உரமூட்டப் போகிறேன். ஆம். காதல்மீது எனக்குக் காதல் உண்டு - ஆனால், இதுகோடியில் ஒருவராகிய அவரைக் காதலிக்கும் காதல்மீது மட்டுதான் - கோடியில் மற்ற எவர்மீதுமல்ல - அதுவும் காதல்மட்டும்தான்; காதலுக்குப்பின் வர வேண்டும் மணத் தொடர்புக்கு வேறுயாராவதுதான் வரவேண்டும்.”
நோயை ஆராயும் மருத்துவன் போலவும், சேர்மானங்களை ஆராயும் இயைபியலறிஞன் போலவும் காதலை ஆராய்ந்து கடிந்தொதுக்கிய அறிஞரை, அது தன் அகப்பண்புருவால் தன்வயப்படுத்திய செய்தியையே நாம் இக் கடிதத்தில் காண் கிறோம். ஆனால், இங்கும் அவர் காதலின் வலையில் சிறிது வளைந்து நெளிந்து தப்பிவிடத்தான் திட்டமிடுகிறார் என்று காண்கிறோம். ‘காதலுக்குப் பின்வரும் மணத்தொடர்புக்கு வேறு யாராவதுதான் வரவேண்டும்,’ என்ற தான் அவர் இன்னும் கூறுகிறார். காதலை இயக்கும் இயற்கையூழ் அவர் வாழ்க்கையை எங்ஙனம் பற்றிப் பின்னி விடுகிறது என்பதை மேலே காண்போம்.
உண்மையில் உயர் பண்புடைய பெண் எவ்வாறிருக்க வேண்டுமென்றும் இச்சமயத்தில் அவர் ’எலென் டெரி’க்கு வரைந்த கடிதம் ஒன்றில் குறிக்கிறார். எலென் டெரி அவர் கருத்தில் இவ்வுயர் பண்பிலிருந்து ஒரு சிறிதுதான் குறைபட்டவர் என்று அவர் கருதுகிறார் என்னலாம். (அவர் அன்னை அதில் குறைபடாதவர்; அவர் மனைவியும் குறைபடாதவராகவே காணப்பெற்றிருத்தல் வேண்டும் என்பதில் ஐயமில்லை.) இச் சமயத்தில் ஷா ஷேக்ஸ்பியரைக் காலத்திற் கேற்பவும் தம் கருத்துக் கேற்பவும் திருத்திக் காட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். தம் திருத்த உருப்பெற்ற ஸிம்பலின் நாடகத்தில் எலென் டெரியை இமொஜெனாக நடிக்கச் செய்யவே அவர் இக்கடிதத்தில் வற்புறுத்தி வேண்டுகிறார். இது வகையில் தயக்கம் கொண்ட ஹெலனுக்கு அவர் குறிப்பிட்டதாவது: “நீங்கள் மட்டும் ஷேக்ஸ்பியரின் வழக்கமான அறிவுமழுக்கத்தையும் சப்பை உணர்ச்சிப் பண்புகளையும் தள்ளிவிட்டு, அவரிடம் ஆங்காங்கே சிதறிக் காணப்படும் தெய்வீக நுண்பொற்பொடி களைத் திரட்டி ஒளிர்வுபடுத்தல் வேண்டும். இதுவகையில் (ஷேக்ஸ்பியர் காலத்தைவிட) உங்கள் ஊழிக்குரிய உயர்விலும் அதன்சிறந்த மரபுரிமையிலும் நீங்கள் நம்பிக்கை வைக்கவேண்டும் …….ஒரேயடி யான பேராவலின்றி, சிறுகச் சிறுக நற்பண்புகளை ஆண்டு பெருக்கும் தன்னடக்கமும் தன்னம்பிக்கையும் வேண்டும்……..”
**“நீங்கள் முழுதும் தன் நிறைவுடைய மாதரே; காதலுணர்ச்சிக்கு நீங்கள் அடிமைப்பட்டவர்களல்லர். அதை நீங்கள் அடக்கி அடிமைப்படுத்தியிராவிட்டால், அதன் இழுப் பாற்றலால் நீங்கள் தன்செயலற்று அடித்துக் கொண்டுபோகப் பெற்றால், நீங்கள் அவ்வுணர்ச்சியில் மகிழ்வூட்ட முடியாது -** தன் விருப்பால், கலைப்பண்பால், அதை இயக்க, முடிவதாலேயே உங்களால் அதன்மூலம் பிறருக்கு மகிழ்வூட்ட முடிகிறது.”
**“பெண்மையின் உயர் குறிக்கோள் ஒரு மனிதனா யிருப்பதே.** பொதுப்பட, பெண்கள் இதனை மறைக்கப்பார்த்துத் தாழ்வுறுகிறார்கள்.”
பெண்மைபற்றிய ஷாவின் இக் கருத்தைப் பலர் ஏற்கலாம். பலர் ஏற்கமுடியாதிருக்கலாம். ஆனால், அக்கருத்தில் பேரளவு உண்மை அடங்கியிருக்கிறது என்பதை எவரும் ஒத்துக்கொள்ளா திருக்க முடியாது. உயிரின மரபில் ஆணுக்கு வேறுமரபு, பெண்ணுக்கு வேறுமரபு இல்லை. உடல் வேறுபாடு, செயல்வேறு பாடுகள் வளர்ச்சியில் வரும் வேறுபாடேயன்றி அடிப்படை வேறுபாடோ பண்புவேறுபாடோ அல்ல. கீழினங்கள் பலவற்றில் ஆண்பால் பெண்பால் ஒன்றுபட்டு மயங்குவதும், ஒன்று மற்றொன்றாய்த் திரிவதும், பால்வேறுபாடற்ற உயிர்கள் இருப்பதும் காண்கிறோம். ஆனால், பெண்மையின் நிறைவு ஆண்மை என்று கொள்ளாதவர், ஆண்மையின் நிறைவு பெண்மை என்றும் கொள்ளல்வடம். இருபாலின் பண்புகளும் கூடியதே மனித நிறைபண்பு என்பதுதான் எவரும் இயல்பாகவும் ஆராய்ச்சியாலும் எளிதில் காணக்கூடும் முடிபு என்னலாம். ஷாவின் கருத்து உலகில் பெரும் பாலார் பெண்மையைப் பற்றிக்கொள்ளும் உணர்ச்சி மரபுக் கருத்தைக் கண்டிக்கும் ஒரு வலியுறுத்துமுறை என்றே கொள்வதில் தவறு இருக்கமுடியாது.
குழந்தைகளைப்பற்றியும் இங்கே ஷா குறிப்பிடுகிறார். “குழந்தைகளைக் கொடுமைப் படுத்துவதை நினைக்கவே எனக்கு மனம் புண்படுகிறது. ஆயினும் நேசம், அன்பு பாராட்டுவதால் ஏற்படும் மகிழ்ச்சி ஆகிய உணர்ச்சிகளைக் குழந்தைகள் மீது காட்டுவது பயனற்ற வீண்செய்திகள் என்று நான் எண்ணு கிறேன்,” என்ற ஷாவின் சொற்கள் அவர்தம் இயற்கையன்பை ஒருபுறம் நமக்குக் காட்டி, அவர் தனிப்பட்ட குழந்தை உள்ளத்தினையும் நமக்கு நினைவூட்டுகிறது. குழந்தைகளை எண்ணியவுடன், “மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம், மற்று அவர் - சொற்கேட்டல் இன்பம் செவிக்கு,” என்றும், “குழல் இனிது யாழ் இனிது என்ப, தம் மக்கள் - மழலைச்சொற் கேளாதவர்” என்றும் குறிப்பிட்டுள்ள வள்ளுவரின் கருத்துக்கள் நம் நினைவுக்கு வருகின்றன. அவர் கண்ட குழந்தைப் பருவ இன்பமும், குழந்தை இன்பமும் ஷாவின் உள்ளத்தைத் தீண்ட முடியாமற் போனமைக்காக நாம் வருந்தாதிருக்க முடிய வில்லை. வள்ளுவர் பண்பிற் பெரும்பகுதி யுடைய அவரை வறுமை எனும் ‘பாவி’, வள்ளுவர் கண்ட முழு இன்பம் காண முடியாமற் செய்திருக்கவேண்டும்.
சார்லட்டியின் காதலுணர்ச்சி அவருக்கு ஒரு பெருத்த வாழ்க்கை வினா ஆகிவிட்டது. “இது நிற்க, இந்த அயர்லாந்துக் கோடியஞ்செல்வியை நான் மணந்துகொள்வதா? எடி (எலெனின் ஒரு தோழி)யைப் போலவே, அவரும் (சார்லட்டியும்) விடுதலை வாழ்விலேயே பற்றுடையவர். மணத்தில் பற்றுடைய வரல்லர். ஆயினும் அவர் இணங்குவார் என்று நான் எண்ணுகிறேன்; அதன்மூலம் எம் முயற்சியுமின்றியே நான் திங்களுக்குப் பன்னூறு பெற்றுவரவும் முடியும். எனக்கு அவர்மீதும், அவருக்கு என்மீதும் பற்று மிகுதி என்பதும் உண்மையே. ஆயினும் இவ் வகையில் தாங்கள் என்னை மன்னிக்கக்கூடுமா? கூடாதென்று தான் நான் அஞ்சுகிறேன்.”
ஷா பணத்துக்காக எச் செயலும் செய்யும் பண்புடைய வரல்லர் என்று கூறத் தேவையில்லை. இவ் வகையில் அவர் நேர்மையையும் கண்டிப்பையும் மேலே கண்டோம். ஆனால், இங்கே இயற்கை நட்புணர்ச்சியின் முதிர்வான காதலால் அவர் குழப்பமடைகிறார். அவரைப் போல் அவர் காதலித்த மாதும் காதலை வெறுத்தவர். அத்துடன் அம்மாது பெரும் செல்வர். மணம் கூடாது; செல்வத்தைக் கலைஞர் நாடக்கூடாது என்ற இரண்டு தடைச்சுவர்களை அவர் இப்போதைய உணர்ச்சி தாண்டிக் குதிக்கிறது. காதலுக்கு அடிமையற்ற ஆடவர் பெண்டிர் உறவை அவர் மதித்தவர் என்பதை அவர் நாடகங்கள் பல காட்டு கின்றன. ஆணைக் கட்டுப்படுத்தாத பெண்ணின் காதலுறவு, பெண்ணைக் கட்டுப்படுத்தாத ஆடவன் காதலுறவு - இதுவே ஷாவின் மணக்கோட்பாட்டுக் குறிக்கோள்; இது அவர் மண வாழ்வில் நிறைவேறியுள்ளது. ஆனால் மனைவியின் பொருளைக் கலைஞன் பயன்படுத்தலாமா? இவ் வகையில் ஷா தம் கருத்துக் களை இங்கே வெளியிடுகிறார்! “என் அன்னையின் வறுமையில் நான் பங்குகொண்டவன்; அதனை நான் மிகுதிப்படுத்தியவனும் கூட. உண்மையில் அவருக்குச் சுமையாக நான் வாழத் தயங்கிய தில்லை - மிக நீண்டநாள் வாழத் தயங்கியதில்லை. என் இலக்கிய வாழ்வை நான் ஐந்து நீண்ட புனைகதைகளுடன் தொடங் கினேன். அத்துடன் எத்தனையோ கட்டுரைகளையும் எழுதினேன். ஆனால், எதையும் எவரும் வெளியிட முனையவில்லை. ஒன்ப தாண்டு களாக என் உழைப்புக்குக் கிடைத்த கூலி 15 வெள்ளிகள் தான்!”
‘வருவாயில்லாத காலத்தில் ஒரு தாயைச் சார்ந்து மகன் வாழலாமானால், தற்சார்புடன் வாழ வருவாய் வந்து விட்டபின் ஒரு மனைவியைச் சார்ந்து பின்னும் நல்வாழ்வு வாழ்வதில் என்ன தவறு?’ என்று ஷாவின் வளர்ந்து விட்ட குழந்தையுள்ளம் கேட்டிருக்கவேண்டும். இவ் வாதம் தவறல்ல என்று நாட் கூறலாம். ஏனெனில், தாயிடமும் மனைவியிடமும் கலைஞர் பெறும் பணம் அவர்கள் உழைப்பின் கூலியும் அல்ல; அதன் மதிப்பும் அல்ல! ஆனால், அதேசமயம் அவை அதன் நேர்மை நடுநிலையைக் கெடுப்பவையும் அல்லவே! ஆகவே செல்வ மீட்டுவதில் தற்சார்பும் நேர்மையும் கெட வகை யேற்படும் இடத்தில் தான், ஷாவின் வணங்காமுடிப் பண்பு செயலாற்று கிறது என்று காணலாம்.
1896-இல் ஷாவுக்குக் காண்டிடா மூலம் இங்கிலாந்தில் நிலைத்த கலைப்புகழ் கிடைத்திருந்தது. இந் நாடகம் ஜெர்மனி யில் பெர்லின்நகரில் வெற்றிகரமாகப் பல முறை ஆடப்பட்டு அவருக்கு வெளிநாட்டுப் புகழையும் பேரளவில் தந்திருந்தது. ஆனால், இவ்வாண்டிறுதியில் இயற்றப்பெற்ற “பேய்மகன் சீடன்” அமெரிக்காவில் பெருவெற்றியுடன் ஆடப்பெற்றது. அதனை நடித்த கழகத்தின் வருவாய் 25,000 பொன். ஷாவுக்கு இதில் நூற்றுக்குப் பத்து விழுக்காடு உரியதாயிற்று. இதழ் எழுத்தாண்மை முறையில் இத் தொகை அவர் ஆறாண்டு உழைப்புக்குச் சரியா யிருந்தது. இத்துடன் இதே ஆண்டில்தான் அவர் தம் நாடகங்களை வெளியிடத் தொடங்கியது. இதிலும் அவருக்கு வெற்றியும் வருவாயும் கிட்டியது. இனி, தம் வாழ்க்கை ஊதியத்துக்காக இதழ் எழுத்தாண்மையைச் சாரவேண்டிய தில்லை என்று கண்ட ஷா, “சனிக்கிழமை இதழ்”(saturday review) என்ற வார இதழில் தாம் கொண்டிருந்த கருத்தாண்மைப் பணியை நிறுத்தி விட்டார்.
1896-இலிருந்து ஷா இலண்டனில் இருந்தபோதெல்லாம் மாலை நேரங்களை ‘அடெல்ஃபி மேடை’(Adelphi terrace) சார்லட்டியின் என்ற அவர் இல்லத்தில் சென்று கழித்துவந்தார். அவர்களிடையே காதல் என்ற சொல்லுக்கும் அவ்வுணர்ச்சிக்கும் தேவையில்லாத அளவு ஒன்றுபட்ட நட்புணர்ச்சி இருந்துவந்தது. அவர்கள் தொடர்பு,
“புணர்ச்சி பழகுதல் வேண்டா; உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்”
என்னும் வள்ளுவர் நிறைநட்பின் பண்பினை எட்டியது என்ன லாம். 1898-ல் ஷாவுக்கு ஒரு பரு ஏற்பட்டு அறுவையால் அவர் மிகவும் செயலற்றவராயிருந்தார். இயல்பிலேயே புறத் தோற்றமும் மனையக ஒழுங்குப்பாடும் அற்ற அவர் வீட்டுச் சூழல், அத்துன்ப வேளையில் பன்மடங்கு அவலநிலையுற்றது. செல்வி சார்லட்டி பேய்ன் டௌண்ஷெண்டு அவரைத் தம் இல்லத்துக்கு இட்டுச் சென்று பேண விரும்பினார். ஆனால், அவர் தம் கன்னிப் பெயரை மாற்றிக்கொண்டால்தான் தாம் இடம்பெயரமுடியும் என்று ஷா கூறினார். இருவரும் மண வாழ்வை வெறுத்த வராயினும், இருவரையும் பற்றியவரையில் அவர்களிடையே அவ்வுறவின் கசப்புக் குறைந்துவந்தது. அதன் படி ஒரு கணையாழியும் ஒரு மண உரிமைச்சீட்டும் கொண்டுவரப் பெற்றன. சார்லட்டி பேய்ன் டௌன்ஷெண்டு திருமதி ஷா ஆயினார். ஷா திருமண விழாவிற்கு கையூன்று கட்டையுடனும் நோயாளி யின் உடையுடனும் சென்றாராம்! திருமண விழாவைச் சிறப்பிக்க வந்த நண்பர்களுள் ஃவேபியன் கழகத்தினரான அவர் நண்பர் கிரகாம் வாலஸ் ஒருவர். மணச்சிறப்பாடை உடுத்த அவரையே மணமகனென்று மணப்பதிவாளர் பிழைபட எண்ணியிருந்த தாகவும், ஷா பதிவுக்குரிய நேரத்தில் வந்த பின்னரே அவர்தம் தவறு உணர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
இங்ஙனம் கலையில் வெற்றி, வருவாயில் வெற்றி ஆகிய வற்றை யடுத்து, அவர் வாழ்க்கைப்பண்பிலும் வெற்றியூட்டத் தக்க மணவாழ்வு வெற்றியும் ஷாவுக்கு ஒருங்கே கிடைத்தது. உலகின் தலைசிறந்த எழுத்தாளரும் புகழாளருமானவர் ஷா. அவர் மனைவி திருமதி ஷா மட்டுமல்லர். தம்மளவில் ஒரு வகையில் ஒரு பெருஞ் செல்வ மாதும் ஆவர். ஆயினும், அவர் தம் சிறப்புக்கள் சிறிதும் வெளியே தோன்றாவண்ணம் முற்றிலும் ஷாவுடன் ஷாவாக ஒன்றிவிட்டார். அத்தன்மை பெண்மையின் தன் மறுப்பு வரலாற்றில்கூட அரிதாகிய ஒரு செய்தியேயாகும். தம் அன்னையைப்போலவே பெண்ணின் ஆண்மைப் பண்புக் குரியவராக ஷாவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி ஷா, மற்றப் பெண்களைப்போல் கணவன் நிழலாகக்கூடக் காணப் பெறாமல், ஒதுங்கித் தனிவாழ்வே வாழலானார்.
ஷாவின் வாழ்வில் அவர் மனைவியின் கைத்தடம் மட்டும் கூர்ந்து கவனிக்கும் எவருக்கும் புலப்படாது போனதில்லை. அக் கைத்திறத்தால் அவர் புறத்தோற்றம் மாறுபட்டுவிட்டது. கவலையற்ற, இயற்கைக் குறும்பு நகையுடைய அவர் முகத்தில் முன்னிலும் ஆண்மையும் அருளும் மிகுதியாயிற்று. அதேசமயம் அவர் வாழ்க்கை நிறைவின் பயனாக, அவர் பெரும்பாலும் கலைமூலமன்றி வேறு எவ்வகையிலும் உலகுடன் அவர் மிகுதி தொடர்பு கொள்ள மறுத்து ஒதுங்கிவாழ்ந்தார். அவர் உடலைப் போலவே ஆடையிலும் மனையிலுள்ள பொருள்களின் ஒழுங்கிலும் மாறுதல் ஏற்பட்டது. அவர் வரவு செலவுகள், பொருளியல் வாழ்வு யாவும் மனைத்துணைவியின் ஆட்சியில் செம்மையடைந்தன என்று கூறத் தேவையில்லை.
மணவாழ்வு புக்க ஷா பத்தொன்பதாம் நூற்றாண்டி லிருந்து விரைந்து இருபதாம் நூற்றாண்டைக் கண்டார். ‘ஸீஸரும்கிளி யோப்பாட்ராவும்,’ ‘முகவன் பிராஸ்பௌண்டின் மனமாற்றம்’ ஆகிய இரண்டு நாடகங்கள் மட்டுமே திருமணத்தின் பின் பத்தொன்பதாம் நூற்றாண்டிறுதியில் அவரால் இயற்றப் பெற்றவை ஆகும். நாடகங்களின் தொகுப்புக்களுக்கு அவர் முன்னுரைகள் எழுதத் தொடங்கியதும் இப்பொழுதேயாம்.
அருளாளர், கலைஞர் அறிஞர் என்ற மூன்று துறைகளில் உலக நாகரிக மரபுகளைத் தாக்கியவர் ஷா. அவர் அறிஞர் என்ற முறையில் அரசியலையும் தம் பணியுள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஓரளவு சேர்த்தே உழைத்தாராயினும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே அரசியலிலிருந்து படிப் படியாக விலகத் தொடங்கினார். இவ்வகையில் பெர்னார்டு ஷாவை ஒத்த பிற தற்கால உலக அருளாளருடன் அவரை ஒப்பிட்டுக் காண்பது பயனுடையது.
ஷாவைப் போலவே அரசியலுட் புகாமல் உலக அரங்கில் நின்று கலைஞராகவும், அறிஞராகவும் செயலாற்றியவர் ரோமன் ரோலந்து. ஆனால், அவர் கலைப்பண்பு உயர் வகுப்பினரிடம் உணர்ச்சி தூண்டும். அளவில் நின்றது. அது பொதுமக்கள் செயலார்வத்தையோ, நடுத்தர வகுப்பினர் அறிவார்வத்தையோ எழுப்பவில்லை. இந்தியாவில் காந்தியடிகள் முற்றிலும் அருளாளராக வாழ்ந்தாரென்றாலும், அரசியலிலும் முழுப் பங்கெடுத்துக்கொண்டார். அவரால் அரசியல் வாழ்வின் மதிப்பு உயர்ந்தது. ஆனால், அவராலும் அதன் பண்பை மாற்றமுடிய வில்லை. ஷாவைப்போலவே. முழுதும் அருளாளராகவும் அதே சமயம் ஒப்பற்ற முதல்தர உலகக் கலைஞராகவும் விளங்கியவர் டால்ஸ்டாய். கலையில் அவர் அடைந்த வெற்றியை அவர் நிறையருளாண்மை இன்னும் ஒளிர்வுடைய தாக்கிற்று. ஆனால், இவற்றாலும் அருளாண்மைத் துறையில் ஆட்சி செலுத்தும் சமயமரபை அவரால் மாற்ற முடியவில்லை. கலை, அறிவு, அருள் ஆகிய முத்துறைகளிலும் நிறைவுடைய ஷா அரசியல், சமயம், வாழ்வியல் ஆகிய முத்துறையையும் தீண்டாது ஒதுக்கித் தள்ளினார். அறிவுபரப்பும் துறையிலும் உணர்ச்சியூட்டும் கலைத்துறையிலும் மட்டும் அவர் செயலாற்றினார். மக்களின் அடிப்படை அறிவு மாற்றம் ஏற்பட்டாலன்றி, அரசியல், சமயம், வாழ்வியல் ஆகிய மூன்று துறைகளிலும் சீர்திருத்தம் ஏற்படுவது முடியாத காரியம் என்பது அவர் கண்டுணர்ந்த உண்மை ஆகும்.
ஷா, டால்ஸ்டாய் ஆகியவர்களின் ஒற்றுமையில் ஒரு கூற்றினை அவர்களிடையே 1898-ல் ஏற்பட்ட சிறு தொடர்பு எடுத்துக்காட்டுகிறது. நாள்முறைக் காலக் குறிப்பு(Daily chornicle) என்னும் வெளியீட்டிதழில் டால்ஸ்டாயின் ‘கலை என்பது யாது?’ என்னும் நூலுக்கு ஷா மதிப்புரை வரைந்தார். “கலை என்பது ஒருமனிதன் தானுணர்ந்து கண்ட உணர்ச்சியினை மனமார மற்றொருவன் உள்ளத்திலும் ஏற்படுத்தும் வகையாகும்,” என்னும் டால்ஸ்டாயின் விளக்க முடிவு பற்றிய ஷாவின் கருத்துரை யாவது: “உண்மையில் பட்டாங்குரைத்த உரை இதுவே. கலை யுணர்வுடைய எவரும் இதைக்கேட்ட உடனே கலையாட்சி யுடைய ஒரு தலைவன் குரல் இது என உணர்வர்.”
ஷாவின் நாடகங்களுள் “பிளாங்கோ பாஸ்நெட்டின் சாயம் வெளுத்தது(shewing up of balanco posnet)” என்ற ஒன்றை டால்ஸ்டாய் பெரிதும் விரும்பிப் பாராட்டியதாக அறிகிறோம். ஷா இதனை அறிந்து 1909-ல் அவருக்கு அதன் படி ஒன்றைப் பரிசனுப்பி ஒரு கடிதம் வரைந்தார்.
டால்ஸ்டாயைப்போலவே ஷா வாழ்க்கையில் ஒரு குறிக் கோளுடையவர். அக் குறிக்கோளடிப்படையில் டால்ஸ்டாயைப் போலவே அவர் ஒரு வாழ்க்கைத் தத்துவம் வகுத்தார். ஆனால், டால்ஸ்டாயின் வாழ்க்கைத் தத்துவம் தற்கால நாகரிக அடிப் படையை அலசிற்று. தற்கால அடிப்படையில் நின்ற அதை அலசவில்லை; ஷாவோ தற்கால அறிஞருள் ஒரு அறிஞராய், தற்கால அறிவுத்துறையின் அறிவுப் படைக்கலங்களனைத் தையும் வழங்கினார். அத்துடன் அவ்வடிப்படை மீதே ஒரு முழு வாழ்க்கைத் தத்துவம் வகுத்து, அதனையே தம் கலைக் கண்ணாடி யாகக்கொண்டு உலகிற்கு அத் தத்துவத்தை விளக்கினார். இருபதாம் நூற்றாண்டில்தான் அவர் இம்முழு வாழ்க்கைத் தத்துவத்தை கலைமூலம் கையாண்டார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைப்பகுதியில் எழுதப்பட்ட நாடகங்கள் பெரும்பாலும் வாழ்வியலின் தனித்தனிக் கூறுகளை எடுத்துத் தாக்கும் வசைநாடகங்களாக மட்டுமிருந்தன. ‘ஊழ் கண்ட மனிதன்’ ஒன்றிலேயே அவர் வாழ்க்கைத் தத்துவம் கருநிலையில் தோன்றுகிறது. அவரது நடுக்கால, பிற்கால நாடகங்கள் பலவற்றில் இவ்வாழ்க்கைத் தத்துவத்தை முழுமையாகவும் பகுதியாகவும் காணலாம்.
புகழ்மேடை
ஷாவின் நாடகமேடைப் போராட்டம், அவர் வாழ்க்கைப் போராட்டத்தின் ஒரு பகுதி. ஆனால், அதுவே தலைமைச் சிறப்புடைய பகுதி என்பதில் ஐயமில்லை. வறுமையை எதிர்த்து அவர் முழுமூச்சுடன் போராடினார் என்று கூற முடியாது. ஏனெனில், தொழில் துறையில் எளிதில் செல்வமீட்டக்கூடிய துறைகளை அவர் உதறி எறிந்தார். இதழ் எழுத்தாண்மைத் துறையிலும் அவர் எளிதில் வெற்றிபெற்றிருக்கக்கூடும். அவர் வளையாத வாய்மையும், வணங்காத நிமிர்நோக்கும், ‘தாஅன் நாட்டித்தனாஅது நிறுத்தும்’ அவர் தற்கொள்கை உறுதியுமே அவரை அத்துறையில் முதலில் வெற்றிநாட்டாது தடுத்தன. சொற்பொழிவுமேடை யொன்றிலேயே அவர் தொடர்ந்து பேரும் புகழும் நாட்டமுடிந்தது. இப்புகழுடன் அவர் அயரா உழைப்பும் திறமையும் நல்லெண்ணமும் உடையோரை உளந் திறந்து பாராட்டும் பண்பும் ஃவேபியன் கழகத்துக்குப் பெரு வெற்றி தந்தது. அக்கழகம் அரசியல் வாழ்விலும் நாட்டுவாழ் விலும் வரவர முனைப்பான இடம்பெற்றது. ஒப்பியல்நெறி யாளரின் அறிவுத்திறத்தையும் உழைப்புத்திறத்தையும் கண்டு அரசியலின் ஆட்சிக் குழுவினர் அவர்கள் முறைகளைக் கைக் கொண்டு நாட்டில் புதுவாழ்வு பெருக்கினர். எனவே, ஒப்பியல் பொது நெறி(socialised property)அரசியல் பொதுநெறி (state capitalism) ஆயிற்று. பொதுமக்கள் நிலை உயர்வுற்றது. ஆனால், ஒப்பியல் நிலை ஏற்படவில்லை. ஆட்சி மரபு மாறவில்லை. இதனைக் குறிப்பாய் உணர்ந்த ஒரு சிலருள் ஷா ஒருவர். ஆகவேதான்அவர் அரசியலில் நாட்டம் விடுத்தார். அத்துடன் சொற்பொழிவு மேடையையும் அவர் தம் தனிமேடையாக்காது விலக்கினார். மக்கள் மனத்தில் புதிய உலகப்படைப்புக்கான அறிவைப் பரப்ப முடியுமென்று அவர் உறுதிகொண்டார்.
ஷாவின் முதல் பத்துநாடகங்களும் மக்கள் வாழ்வியற் களத்தை ஒவ்வொரு துறையில் தாக்குபவையாகவே இருந்தன. அவற்றின் வசைத்திறம் அவர் ஆற்றலைக் காட்டிற்று. ஆனால், இன்பநாட்டமுடைய மக்களை அது கவரவில்லை என்று அவர் கண்டார். எனவேதான் முதன் மூன்று நாடகங்களையும் உவர்ப்பான நாடகங்கள் என்று பெயரிட்டு ஒதுக்கி, உவப்பான நாடகங்கள் என்ற அமுத்த தொகுதி இயற்றினார். இவற்றிலும் அவர் வசைநோக்குக் கலந்தே இருந்தது. இவையும் ஆர்வத்துடன் வரவேற்கப் பெறவில்லை. எனவே, வசை, இன்பக் கவர்ச்சி ஆகிய இரண்டையும் விடுத்து, நேரிடையாக அறிவுரை கூறும் ‘தூநெறி யாளர்க்கான நாடகங்கள்’ என் அடுத்த தொகுதியில் முனைந்தார். இவையும் அவர் எதிர்பார்த்த பயன் தர வில்லை.
மேலும் அவர் புதுமை மேடையின் குறிக்கோளை அவா வினும், செல்வமேடையின் நல்வாய்ப்புக்களையும் அவற்றுட னேயே தொடர்புகொண்டிருந்த உயர் தரக் கலைநடிகரையும் தம் நாடகக்கலையில் ஈடுபடுத்த நினைத்தார். அம் மேடையையும் அதன் நடிகரையும் எதிர்பார்த்தே நாடகம் எழுதியதன் காரணம் இது. அம் மேடையை எப்படியாவது முற்றுகையிட்டுப் பிடித்து விடவும், அக்கலை நடிகரை எப்படியாவது வசப்படுத்தித் தம் நாடகங்களை ஆடவைக்கவும் அவர் அரும்பாடுபட்டார். இவ்விரண்டிலும் அவர் எளிதில் வெற்றிபெறவும் இல்லை; என்றும் முழுவெற்றிபெறவுமில்லை. அவர் புகழ் இம்மேடை களைத் தாண்டிச் சென்றன. அம்மேடைகள் தலைவணங்கின; அவ்வளவே! அவர் கருத்துக்கேற்க அம்மேடைகள் மாறிவிடவு மில்லை. அவர் நாடகங்களை நடத்தி அவை வெற்றிபெற வழிகாணவுமில்லை. மேடையாளர் தம் வழக்கமான நாடக வெற்றிகளிடையே, சிறிது அவர் புகழுக்காக விட்டுக்கொடுத்து அவர் நாடகங்களையும் ஆடத் துணிந்தனர். ஆயினும் எதிர் காலத்தில் உலகநாடக மேடையை அவர் கைப்பற்றுதல் கூடியதே. ஏனெனில் அவர் காலத்திலேயே, இங்கிலாந்தைவிட ஜெர்மனி யிலும், ஜெர்மனியைவிட அமெரிக்காவிலும் அவை வெற்றி காண முடிந்தன.
செய்தியிதழ்த் துறையில் ஷாவின் நிமிர்ந்த வாய்மை, அவர் முன்னேற்றத்தைத் தடுத்ததுபோலவே, செல்வ மேடையிலும் ஷாவின் முன்னேற்றம் அவர் தற்சார்புறுதியினாலேயே நீண்ட நாள்தடைபட்டது. அவரை எதிர்ப்பவர்கள் இத் தற்சார்புறு தியையே பிடிவாதம், முரண்டு என்றனர். உறுதி, பிடிவாதம் இரண்டும் பொருள் வேறுபாடு உடையவையல்ல; கூறுவோர் நிலைவேறுபாட்டை மட்டுமே குறிப்பவை என்று ஷாவே கூறியுள்ளார். உறுதி என்று நண்பர் பாராட்டும் பண்பினையே எதிரிகள் பிடிவாதம் என்பர். ஷா நாடகங்களை எழுதுபவராக மட்டு மில்லை; அதனை இன்ன மேடை, இன்னின்ன நடிகர் தான் நடிக்கவேண்டும் என்று கூறினார். அத்துடனும் அவர் விட வில்லை. நாடக ஒத்திகைகளின்போது அவர் உடனிருந்து இன்னின்னபடி நடிக்கவேண்டும் என்று கூறுவார். மேடைத் தலைவர்க்கும் பல புகழ் நடிகர்களுக்கும் இது தலையிடியாக வேயிருந்தது என்று கூறவேண்டியதில்லை. அத்துடன் மேடைக் கேற்கவோ, காட்சிப்படமாயின் அதற்கேற்கவோ நாடகங்களைக் கூட்டிக் குறைக்க, திருத்த அவர்தம்மையன்றி யாருக்கும் உரிமை தருவதில்லை. தொழில் துறையினரின் சிறப்புரிமைகளை அவர் மதிப்பதில்லை என்ற தப்பெண்ணத்தை இவை உண்டு பண்ணின.
ஷா உண்மையில் கலைநடிகரையோ மேடைத்தலை வரையோ புறக்கணித்தவரல்ல. அவர் அத் துறைகளிலிருந்து வந்த மரபுகளை மாற்ற எண்ணியவர். அவ்வத் துறைகளில் அவர் அவ்வத் துறையாளரின் கலையையும் நன்கு அறிந்தவர். இவ் வுண்மைகளை யாவரும் அறிய நாள் சென்றது. இன்னும் உலகம் அறிந்துகொண்டுதான் வருகிறது.
அவர் காட்சிப்படமொன்றைத் திரைப்படுத்தும் போது, நடிகையான ஆன் கிரேயின் காதல் நடிப்பை அவர் திருத்த முனைந்தார். அப்போது காதலியாக அவரே நடித்துக் காட்டினார். வேறுபுறம் திரும்பிக்கொண்டிருந்த நடிகக் காதலன் பிளண்ட்ஷ்லி புதிய நடிப்பொன்றையும், புதிய ‘பெண்’ குரலையும் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினார்! பெண்ணுக்கு மாறாக ஒரு ‘வெண் தாடி,’ மனிதர் நின்றதுகண்டு அவர் வியப்படைந்தாராம்!
நடிப்புக்கலையில் மட்டுமன்றி, மேடைத்துறையிலும் ஷாவின் அறிவுத்திறத்தை அவர் நாடகவெளியீடுகள் காட்டு கின்றன. திரைக்கட்டளைகள் திரையறிவுடைய திரைவாண ரையும் திடுக்கிடச்செய்யும் திட்பமுடையனவாயுள்ளன. எடுத்துக் காட்டாக, மேடையில் வலம் எது இடம் எது என்பதில் மேடைவாணரிடையே ஒருமுகத்திட்டமில்லாமல் குழப்பநிலை இருந்து வந்தது. (தமிழ் இலக்கண வாணரிடையேயும் உரை யாசிரியரிடையேயும் இடமுன், காலமுன் ஆகிய இரு ’முன்’கள் இருந்து குழப்பம் தருவது இங்கே ஒப்பிட்டுக் காணத்தக்கது). ஷா மேடை நடிகரை அளவையாகக் கொள்ளாது காண்போரையே அளவையாகக்கொண்டு வலம், இடம் ஆகியவற்றை ஒரு நிலைப்படுத்தினார். அவர் நீண்ட விரிவான திரைக்கட்டளைகள் திரைக்கே அறிவுறுத்தா யமைந்தன.
நாடகவெளியீட்டுடன் வெளியீடாக ஷா நாடகம் பற்றியும், நாடகத்திற் குறிப்பிடப்பட்ட வாழ்க்கைக் குறிப்புக்கள் பற்றியும், காலத்திற்கேற்ற கருத்துரைக் கட்டுரைகள் எழுதி, டிரைடனைப் போல் முன்னுரைவடிவில் தந்தார். நாடகங்களை வாசிப்பவர், வாசிக்குமுன் படிக்காவிட்டாலும், வாசித்தபின் அவற்றைப் படித்து நுகர்வது உறுதி என்பதை மக்கள் உளப்பாங்கறிந்த அவர் உணர்ந்திருந்தார். நாடகமேடைக்குச் செல்லாதவரும் வாசிப்பராதலால், வாசிப்பவர் தொகையைப் பெருக்கி, அவர் நாடகம் காண்பவர் தொகையையும் பெருக்க முனைந்தார். அவர் நாடகம் பற்றிய குறிக்கோளை இப் புதுக்குழு உணருமாதலால், நாடகமேடையும் மாறுபட இடமுண்டு. இத்துணையும் நிகழ நாளாகுமாயினும், அவர் காலத்திலேயே அவர் மேடை கடந்த புகழாளர் என்பதை உலகம் உயர்ந்துகொண்டது. அவருக்கும் அவர் நாடகங்களுக்கும் செல்வரின் சீரிய மேடை அவ்வப்போது வாயில் திறந்து வணங்கி வரவேற்பளிக் கலாயிற்று.
இம் முழு வெற்றிக்கிடையில் அமெரிக்கநாட்டு மேடையின் வருவாய் ஷாவின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திற்று. மண வாழ்வால் திருமதி ஷாவின் செல்வநிலை அவருக்கு உண்மையில் கலைசாரா விடுதலைவாழ்வே அளித்தது. ஆயினும், 1904-க்குள் அவர் தம் நாடகங்களின் கதையாசிரியர் பங்குரிமை(royalty) மூலமே நல்வாழ்க்கை ஊதியம் பெறத்தக்க நிலையை அடைந்தார். அத்துடன் அவர் முற்றுகையிட்ட செல்வர் மேடையிலும் 1901 முதல் 1907 வரை அவருக்கு முழுவரவேற்புக் கிட்டிற்று.
இருபதாம் நூற்றாண்டின் வாயில் திறந்தவுடன் ஷா அதனை வரவேற்க இயற்றிய முதல்நாடகம் **“பாங்கான பாஷ்வில்** அல்லது பயனடையாப் பற்றுறுதி(admirable bashville or constancyunrewarded)” என்பது. இது ஷாவின் புனைகதைகளுள் ஒன்றான “காஷெல் பைரனின் வாழ்க்கைத் தொழி”லின் நாடக உருவம். இது முழுதும் செந்தொடை யாப்பில்(blank verse) எழுதப் பெற்றுள்ளது. 1901-ல் உள்ள உலகப் பொதுச் சட்டமரபுப்படி நூலாசிரியர் உரிமை நூலுக்கன்றி நூலின் நாடக வடிவத்துக்குச் செல்லுபடியாகாது. அமெரிக்காவில் அது நாடகமாக்கி நடிக்கப்பட்டபின், இங்கிலாந்தில் அவ்வுரிமையைக் காத்துக் கொள்ளவே அது மிக விரைவில் நாடக வடிவாக்கப் பட்டது. இதை ஏன் செந்தொடையாப்பில் எழுத வேண்டும் எனற கேள்விக்கு ஷா தரும்விடை வழக்கம்போல வினாவுக்கு விடையாகாமல், புதிய வினாக்களை எழுப்புவதாயுள்ளது. “உரைநடை யெழுதுவதைவிட செந்தொடை எளிதானது. ஷேக்ஸ்பியர் செந்தொடையைப் பெரிதும் பயன்படுத்தியதன் காரணம் இதுதான். உரைநடையில் ஒருமாதத்தில் எழுதிமுடிக்க வேண்டுவதை ஷேக்ஸ்பியர் செந்தொடையில் எழுதியதனால் ஒரு வாரத்துக்குள் முடித்தார்!” என்பதே அவர் விளக்கம். ஷாவின் கருத்துரைக் குறும்புக்கு இது ஒரு நல்ல எடுத்துக் காட்டு. ஆனால், இக் குறும்புநகையை நாம் காண்பது இவ் விளக்கத்தில் மட்டுமன்று. நூல் முழுவதும் ஷேக்ஸ்பியர் செந்தொடையாப் பினுக்கு ஒரு கேலிச்சித்திரமாகவே இயல்கின்றது. எனினும், அது சுவையூட்டவும் தவறவில்லை.
“பாங்கானபாஷ்வி”லையடுத்து, “மனிதனும் மீமிசை மனிதனும்,” “ஜான்புல்லின் மற்றத்தீவு,” “அவள்கணவனிடம் அவன் புகன்ற பொய்ம்மை,” “மேஜர் பார்பாரா,” “நசை, நஞ்சு, நமைச்சல் அல்லது பாழ்செய்யும் கடுநீர்க் கருவி,” “மருத்துவர் இருதலை மணியம்,” ஆகிய நாடகங்கள் வெளிவந்தன. இவற்றுள், மனிதனும் மீமிசை மனிதனும், “ஜான்புல்லின் மற்றத்தீவு,” “மேஜர் பார்பாரா,” “மருத்துவர் இருதலை மணியம்” ஆகிய நான்குமே, ஷாவின் கலை தம் உச்சநிலையடைந்த இக்காலப் புகழ் மேடையின் நான்கு பொற்கால்களாகக் கருதத்தக்கன.
சீவகனைப்போலக் கன்னியர் வேட்டையாடும் டான் ஜூவான் என்ற ஸ்பானியக் கதையை நாடகமாக்கும்படி ஷாவிடம் ஒரு நண்பர் கூறியிருந்தார். ஷா அதில் வரும் ஸ்பானிஷ் பெயர் களையும் பின்னனி வண்ணங்களையும் ஆங்கில மயமாக்கி எழுதிய நாடகமே, ’மனிதனும் மீமிசைமனிதனும்(man and superman)’ என்பது. இதனை இன்பநாடக உருவான மெய்விளக்க நூல்(A comedy and philosophy) என்று ஷா குறித்துள்ளார். ஷாவின் நாடகங்களுள் அவர் முழுவாழ்க்கைக் கோட்பாட்டையும் தீட்டிக் காட்டும் முதல் நாடகமும், முதன்மை வாய்ந்த நாடகமும் இதுவே. ஷாவின் பிற்கால நாடகங்களுக் கெல்லாம் இது ஒரு நல்ல முன்மாதிரியான தலைமணியாய் விளங்குகிறது. அதன் கதையுறுப்பினர்கள் உயிருடை மனிதர்கள் போலவே செயலாற்றுபவர். உயிருடை மனிதர் எண்ணங்களும் உணர்ச்சி களும் விருப்பு வெறுப்புக்களும் உடையவர். ஆனால், ஷாவின் நாடகங்களில் அவர்கள் உள்ளுணர்ச்சிகள் உணர்வு நிலையடைந்து அறிவாராய்ச்சியாகிச் சொல்லாடலாகக் காட்சி யளிக்கின்றன. உறுப்பினர் பண்போவியங்களும் தனிமனிதன் நிலையிலிருந்து பொது மனிதநிலைக்கு உயர்த்தப்படுகின்றன. ஆணுலகின் பொது நிலை ஆட்பேராக ஜான்டானரும் பெண்ணுலகின் பொது நிலை ஆட்பேராக ஆன் விட்ஃவீல்டும் இடம் பெறுகின்றனர்.
‘உயிராற்றல்,(life force)’ என்ற சொல் இந் நாடகத்திலேயே முதன் முதலாகவும், பெருக்கமான அளவிலும் கையாளப் படுகிறது. மனிதநாகரிகத்தை மேம்படுத்திக்கொண்டு செல்லும் ஒரு ‘முழு நிறைவலிமை,’ என இதனைக் குறிக்கலாம். கடவுளினிடமாக ஷா கொண்ட ‘ஆற்றல்’ இது. ஆனால் சமயவாளிகள் கருதும் ’கடவுளி’னிடத்திலிருந்தும், உலகியலறிஞர் கூறும் இயற்கை(nature) யிலிருந்தும் இது கருத்தளவில் மாறுபட்டது. கடவுள் இயற் கையையும் உயிரையும் படைத்த ஒரு நிறையாற்ற லாகவே கொள்ளப்படுகிறார். இயற்கையாற்றலோ உயிருக்குப் புறம்பான உயிரிலா உலகின் ஆற்றல். ஆனால், உயிராற்றல் இயற்கையை ஆட்கொண்டு உயிரை இயக்கும் ஆற்றல். இவ்வுயிராற்றலின் தன்மையினாலேயே உயிர்கள் உயிரிலா இயற்கை அல்லது புறஉலகையும், மனிதன் புறஉலகையும், ஏனை உயிர்களையும் வென்று ஆளுகிறான். உயிர்களும் மனிதனும் இவ் வுயிராற்றலின் கருவிகள்மட்டுமே. எல்லா உயிர்களின் செயல்களும், எல்லா மனிதரின் செயல்களும் இவ்வுயிராற்றல் அவ்வவர்களைக் கருவிகளாகக்கொண்டு நின்று, மறைந்து இயக்கிச் செயலாற்றும் செயல்களே.
ஆண்மை, பெண்மைபற்றிய ஷாவின் கருத்தும் இந் நாடகத்தில் தெள்ளத்தெளியக் காட்டப்படகிறது. மனிதன் இயற்கையை வென்றாளூம் செயலில், வெல்லுதல் ஒரு செயல்; ஆளுதல் அல்லது பேணுதல் மற்றொரு செயல். மன்னர் போரில் நாடுபிடிப்பது அல்லது பிறரை மடக்கு வதுபோன்றது வெல்லும் செயல். வெற்றியை நிலையாக்கி, அடுத்த வெற்றிக்கான மூலமுத லாக்குவதுபோன்றது ஆளும்செயல். வெல்லும்செயலைச் செய்வது ஆண்மை; இது வீரன் அல்லது ஆணின் தன்மை. ஆளும் செயலை அதாவது, பேணும் செயலைச் செய்வது பெண்மை அல்லது பெண்ணின்தன்மை. பொதுப்பட ஆண் புதுமையில் முனைகிறான். பெண் புத்தறிவைப் பழைய அறிவுடன் வகுத்துத் தொகுத்துப் பழமை பேணுகிறாள். ஆண் செயலில் முந்துகிறான். பெண் அவனை வாழ்க்கையிற் பிணைத்து அச் செயலை மரபுகடந்து நீடிக்கச்செய்கிறாள். எனவேதான் ஆன் விட்ஃவீல்டிடம் உயிராற்றல் டானரை வயப்படுத்தி ஈர்க்கவல்ல காதலாக இயங்குகறிது.
தனிச்சிறப்புடைய மனிதர், ஆடவராயினும் பெண்டிரா யினும், பொதுமனிதர்போலப் பொதுநிலைவாழ்வில் கட்டுப்பட்டு நிற்பதில்லை; புது நெறியில் முனைவர். ஆனால், இத்துறையில் சிறப்பாக முனைபவன், முனையவேண்டியவன் ஆணே. ஜான் டானர் அத்தகைய ஆணாகத் தோற்ற மளிக்கிறான். அவன் ஆனிடம், “உயிராற்றலே என்னை மயக்குகிறது. நான் உன்னைக் கட்டிப் பிடிக்கும்போது, உலக முழுமையும் என் கைக்குள் அமைவதாகத் தோற்றுகிறது. ஆனால், நான் அதனை எதிர்த்து, என் விடுதலைக்காக, என் தன்மதிப்புக்காக, என்னுடன் இரண்டற ஒன்றி நிற்கும் ஒன்றினுக்காக - எனக்காகப் போராடுகிறேன்,” என்று கூறுகிறான். ஆனால், காதலிலும் உயர்ந்ததில்லை என ஆன் கட்டுரைக்கிறாள்.
காதல்வாழ்வு உலகவாழ்வின் நட்புக்கும் தொடர்புக்கும் உரியதே. பெரும்பான்மை ஆடவர், பெண்டிர் அதில் நிற்பர். ஆனால், அதனைத் தாண்டி வாழ்க்கையை உயர்த்துபவரே, மனித இனம் உயரப் பாடுபடுவரே, ‘உயிராற்றலின்’ முனைத்த உருவான வீரர் இக்கோட்பாட்டை ஷாவின் எல்லா நாடகங் களிலுமே காணலாம். ஆனால், இந்நாடகத்தின் மூன்றாம் காட்சி கிட்டத்தட்ட ஒரு தனி நாடகமாய் இக்கருத்தைச் செயலுருப் படுத்திக் காட்டுகிறது.
“வாளைப்பற்ற நாள் பயன்படுத்தும் என் உறுப்பு என் கைவிரல். தன்னை உணர இயற்கை பயன்படுத்தும் அதன் உறுப்பு என் மூளை.” “உலகின் விருப்பப்படி நாம் நடக்கிறோம் நம் விருப்பப்படியல்ல.” “நான் வீரனையும் வாளையும் பாட மாட்டேன்; அறிவுடை மனிதனையும் அறிவையும் பாடுவேன்,” முதலிய ஒப்பற்ற நன் மணியுரைகள் இந்நாடகத்தில் சிதறிக் கிடக்கின்றன.
புரட்சிகரமான கதைத்தலைவன் தான் ஒரு நூல் இயற்றி யுள்ளதாகக் கதையினுள் குறிக்கிறான் - ஷா பிற் சேர்க்கையாக அந்த நூலையே நமக்குத்தந்து நம்மை மலைக்கவைக்கிறார். புனைவியலாளர் தனியுரிமையில் தாம் புனைந்துருவாக்கிய ஓர் ஆசிரியர் நூலாக, இயற்கையினுள்ளார்ந்த திருவாருயிர்(holy spirit) அல்லது மீமிசை மனிதன்(superman) பற்றிய தம் ஆழ் கருத்துரைகளை இதில் அவர் தருகிறார்.
ஆடவன் காதலில் பெண்ணை வேட்டையாடுகிறான் என்ற பொதுமரபைத் தலைமாற்றி, பெண் ஆணை வேட்டை யாடுவதாகச் சித்திரித்து இந்நாடகம் புதுமைநாடும் அமெரிக்க மேடையை முழுதுற ஆட்கொண்டது. இது எதிர்பார்க்கத் தக்கதே. மேடையாளர் அவ்வொரு நாடகத்தால் ஏழுமாதங் களில் 40,000 பொன் வருமானம் அடைந்தனராம்!
இந்நாடகத்தில் வரும் நரகக்காட்சி மேடைக்கு எடுக்கவே எடுக்காது என்று நாடக மேடையாளர் அனைவரும் கருதினர். ஆனால் நாடக மேடையில் அது ஆரவாரமிக்க பெருவெற்றி யாய் எங்கும் அமைந்தது. மனித உள்ளத்தை எவரினும் ஷா நன்கறிந்தவர் என்பதற்கு இது ஒரு பெரும்படியான சான்று!
1904-ம் ஆண்டில் ஷா "ஜான் புல்லின் மற்றத் தீவு(John Bull’s other island)" என்னும் நாடகத்தை எழுதி முடித்தார். அது டபிள்யூ. பி. யீட்ஸ் என்பவரால் அயர்லாந்து இலக்கிய மேடைக்காக இயற்றப்பட்டது. ஆனால், அயர்லாந்து இன்னும் உலகிற்கெனத் தானீன்று புறந்தந்த குழவியை உணரவில்லை. அந்நாடகம் அயர்லாந்து மேடைக்கு எடுபடவும் இல்லை. எனினும் இலண்டன் மேடை யிலும் அமெரிக்க மேடையிலும் அது பேராதரவு பெற்றது. இலண்டனின் தலைசிறந்த செல்வமேடை யாகிய வெஸ்ட் எண்டில்கூட அது பேரளவில் ஷாவின் புகழ்நாட்டிற்று. மன்னர் ஏழாம் எட்வர்டு இந்நாடகத்தைப் பார்க்கும்போது சிரித்த சிரிப்பின் அதிர்ச்சியால் அவர் அமர்ந்திருந்த நாற்காலி அறுந்த தாம்!
‘ஜான் புல்லின் மற்றத் தீ’ விலுள்ள பண்போவியங்கள் தனிச் சிறப்புடைய உயிரோவியங்களாய், டிக்கன்ஸ் புனை கதை யுறுப்பினர்போல, ‘கதைக்குப் புறம்பேயும்’ உயிர்த்துடிப்புடன் ஆடுபவர்போன்றிருக்கின்றன. அயர்லாந்தின் விடுதலையால் இந்நாடகத்தின் கதைப் பொருளுக்கு இன்று ஒரு முடிவமைதி ஏற்பட்டிருக்கிறது. ஆனால், கதை முடியினும், கதையில் வரும் அயர்லாந்து, இங்கிலாந்துக்கு உரிய உறுப்பினர் இன்றும் அவ்விரு நாடுகளின் அழியா வாழ்க்கைச் சித்திரங்கள் ஆக விளங்குகின்றனர். முரண்பட்ட இருநோக்கு, இரு செயல் களுடைய கிளாட்ஸ்டனின் முன்னேற்றக் கட்சியாளரையும், மடமையையும் ஒரு திறமையாக்கிக்கொண்ட ஆங்கிலேயர், அறிவுத்திறத்தையும் ஒரு ஏலமாட்டாமை யாக்கிக்கொள்ளும் அயர்லாந்துக்காரர் ஆகியவரை இந்நாடகம் நகைச்சுவை யுடனும் கலையின்ப நயத்துடனும் வசைப்படங்களாக்கிக் காட்டுகிறது.
லாரன்ஸ் டாய்ல் அயர்லாந்தின் ஏலமாட்டாமையாகிய மூடுபனியைக் கிழித்துச் செயலாற்றும் செயல்துறை வீரனா கவும், அக நோக்காளனும் கவிஞனும் ஆகிய கீகன் அதன் பழம் பெருமைகளையும் கனவுகளையும் திரட்டி எதிர்கால ஆர்வக் கனவுகளாக்கும் கலைஞனாகவும் தோற்றமளிக்கின்றனர். கீகனே இந்நாடகத்தின் ஒப்பற்ற தனியுயர் ஓவியம். ஷேக்ஸ்பியரின் ஓதெல்லோ ஷேக்ஸ்பியரின் கவிதை யெல்லையையும் கடந்த கவிஞனாய்த் திகழுதல் போலவே, கீகனும் ஷாவின் கலைப்பண்பு கடந்த கனவியற் கவிஞனாக விளங்குகிறான். அவன் உரைகள் கவிதைச் செறிவுமிக்கவை.
வானுலகம் என்பது யாது என்பதற்கு விடையான கீகனின் மாயச் சித்திரம் காண்க: “என் கனவுகளில் அது ஒரு நாடாகக் காட்சியளிக்கிறது. அந் நாட்டில் அரசே திருக்கோயிலாகவும், திருக்கோயிலே மன்பதை யாகவும் விளங்குகிறது:- மூன்றும் ஒன்று, ஒன்றில் ஒரு மூன்று. அது ஒரு பொது அரசாகக் காட்சிதருகிறது. அப்பொது அரசில் உழைப்பு ஒரு கேளிக்கை, கேளிக்கையே வாழ்வு: மூன்றும் ஒன்று, ஒன்றில் ஒரு மூன்று. அது ஒரு கோயிலாகத் திகழ்கிறது. அக்கோயிலில் பூசகனே வணங்கு பவன், வணங்குபவனே வணங்கப்படுபவன்: மூன்றும் ஒன்று, ஒன்றில் ஒரு மூன்று. அது ஒரு இறைமை. அவ்விறைமையில் எல்லா உயிரும் மனிதப் பண்புடையதே, மனித உயிர்யாவும் தெய்வப்பண்பே: மூன்றும் ஒன்று, ஒன்றில் ஒரு மூன்று. சுருங்கக் கூறினால் அது ஒரு பித்தன் கனவு.”
இந் நாடகத்தில் ஷாவின் நோக்கம் உயர்குடியினருக்குத் தன் ‘ஷேக்ஸ்பியர் போன்ற’ அகல்கலைக் காட்சி யறிவைக் காட்டு வதாகவே அமைந்துள்ளது. இதனை முதலமைச்சர் தாமே நான்கு தடவை பார்த்து, மற்ற அமைச்சர்களையும் இட்டுச் சென்றனராம்! மன்னர் அதன்பின்னர்த் தாமே சென்றுபார்க்க விரும்பினர்.
ஜான்புல்லின் மற்றத்தீவு இயற்றப்படுவதற் கிடையிலேயே, காட்சியிடை நாடகமாக ஷா மற்றொன்று எழுதி முடித்தார். இதுவே, ‘அவள் கணவனிடம் அவன் புகன்ற பொய்ம்மை’(how he lied to her husband) என்பது. இது மகிழ்ச்சிக் குதியாட்டமிக்க ஓர் ஒரங்கநாடகம். குடும்பவாழ்வுபற்றிய பொது மரபையே நையாண்டி செய்து காட்டும் ஒரு சிறந்த களி நாடகம் இது. மணமான மாது ஒருத்திக்கு ஓர் இளைஞன் எழுதிய காதற் பாட்டுக்கள் கணவன் கைப்படுகின்றன. பாட்டைத் தான் அம்மாது குறித்து எழுத வில்லை என்று இளைஞன் பொய் கூறுகிறான். இப்பொய் எதிர்பார்த்ததற்கு மாறுபட்ட, வேடிக்கையான பலனைத் தருகிறது. இன்னொருவரால் விரும்பப்படும் தகுதியற்றமாது எனக்கருதிக் கணவன் அவளை வெறுக்கிறான். அத்துடன் தன்னால் விரும்பிக் காதலிக்கப்பட்ட மாதினைக் காதலுக்கு உரியவளல்லள் என்று கருதிய இளைஞனையும் அவன் வெறுக் கிறான். தன் காதலுரிமையை நிலைநாட்ட அவன் இளைஞனுடன் போராட்டத்துக்கு முனைகிறாள். இப்போராட்ட முடிவு நகைச்சுவையின் முகட்டுச்சி எய்துகிறது. மாதைத் தான் காதலிப்பதனாலேயே தான் போராடப்போவதாக இளைஞன் கூறவே, கணவன் தன் சீற்றம் விடுத்து அவனை அணைத்து நட்பாடுகிறான்!
மூவரின் மூவகையான இக் காதல்கூத்து ஓரளவு காண்டி டாவை நினைவூட்டுகிறது. காண்டிடா பற்றிய குறிப்புக்களும் உரையாடலில் இடம் பெறுகின்றன.
ஷாவின் நாடகங்களுள் முதன் முதல் படக்காட்சி யாக்கப் பெற்ற நாடகம் இதுவே.
இதே ஆண்டில் நடிகக் கலைஞரின் உதவியற்ற பிள்ளை களின் ஆதரவில்லத்திற்காக ஷா எழுதிய சிறுகளி நாடகமே ‘நசை நஞ்ச, நமைச்சல்’(passion, poison and petrifaction) என்பது. இது பேர் அமளிகுமளியுடன் மேடையை ஆட்கொண்டது.
ஷாவே பொருளியல் அறிவைக் கலைத் துறையில் மிகுதியும் புகட்டிய கலைஞர். 1905-இல் எழுதப்பெற்ற ‘மேஜர் பார்பாரா’ (Major Barbara) அவர் பொருளியல் கோட்பாட்டின் கலை முகடு எனத்தகும். ஒழுக்கம், சமயம் ஆகிய இரண்டுமே பொருளியல் வாழ்வை அடிப்படையாகக் கொண்டவை என்பதும்; சமயம் வாழ்க் கையில் மிகுதி ஆற்றல்வாய்ந்த கூறாயினும், அதன் தலைமைச் சிறப்பு அதன் ஆற்றல் சார்ந்த தல்ல, அதன் நற்பயனே என்பதும்; நன்னெறியிலீட்டிய பொருளால் தீநெறி வளர்ப்பதினும், தீநெறியிலீட்டிய பொருளால் நன்னெறி வளர்த்தல் மிகுதி கேடுடையதாகக் கருதப்பட வேண்டியதில்லை என்பதும்; ஆனால் நன்னெறிகளுக்குப் பயன்படும் அத்தீநெறி நன்னெறியை வளர்க்காது தீநெறியையே வளர்க்கும் என்பதும் நாடகத்தின் மூலம் வற்புறுத்தப்படும் உண்மைகள். மேஜர் பார்பாராவும் ஆண்ட்ரூ அண்டர்ஷாஃவ்ட்டும் இதன் திறம்பட்ட ஓவியங்கள். இந்நாடகம் பற்றிய ஷாவின் விளக்க முடிவாவது: “நாட்டினுக் குரிய இன்றைய மிக நெருக்கடியான தேவை திருந்திய உயர் ஒழுக்கமுறையன்று; மிகுதி மலிவான உணவு, மட்டுக்குடி வரம்பு, தன்னுரிமை, பண்பாடு, சறுக்கிவீழ்ந்த மாதர், மாந்தர் ஆகியவர் மீட்பு முதலியவையே; இறைமையின் மும்மைத் திருவுருவின் பற்றும் தோழமையன்று, போதிய பணநட மாட்டமே. எதிர்த் தழிக்கப்படவேண்டிய அடிப்படை தீமைகளும். பழி, துயரம், பேரவாக் குருமார் ஆட்சி, அரசியல் ஆட்சிமுறை, தனியாதிக்கம், அறியாமை, குடி, போர், கொள்ளைநோய் முதலிய சீர்திருத்த வாளரின் எந்தப் போராட்டக் கூச்சலுமன்று; வறுமை ஒன்றேதான்.”
‘மீட்புப்படை(salvation army)’ என்ற சமயப் பணியாளரை தாக்குவது போல் நாடகம் தோற்றமளிக்கிறது. ஆனால், உண்மையில் அது அவர்கள் நற்சிறப்புப்பண்புகளை எடுத்துக் காட்டிச் சில குறை பாடுகளையும் அன்பு நகையுடன் சுட்டிக்காட்டுவதாகவே உள்ளது.
ஷாவின் நாடகமேடை வருமானப் பங்கே அவர் வாழ்க் கையின் தற்சார்புக்குப் போதியதாக வளர்ந்தது இவ்வாண்டிலேயே. அவர் புகழ்மேடை நாடகத்தில் இறுதி நாடகம் 1906-ல் இயற்றப் பெற்ற மருத்துவர் இருதலை மணியும்ஙீ என்பது. இது மருத்துவத் துறையின் சட்ட திட்ட அமைப்புக்களையும் மருத்துவர் போலிநடவடிக்கைகளையும் நையாண்டி செய்வது. ஆனால், இந் நாடகம் மருத்துவத் துறையில் பல சீர்திருத்தங் களுக்கும் வழிகாட்டியுள்ளது. இன்னும் வழிகாட்ட வல்லது. மக்கள் உயிர்ப்பாதுகாப்பு, உடல்நலம் ஆகியவற்றுக்குரிய இத்துறை தனி மனிதர் கையில் விடக்கூடாது; அறிஞர் கூட்டுற வாதரவுகள் கூடிய அரசியலே திட்டமாயமைய வேண்டும் என்பதை அவர் முன்ரையிலும் விளக்கமாகக் கூறியுள்ளார். இதில் வரும் மருத்துவர்கள் மருத்துவராக மட்டுமன்றி மனிதரா கவும், சிறந்த பண்போவியங்களாகவும் அமைகின்றனர். அவர்கள் மருத்துவக் கருத்துவேறுபாடுகளுக்கிடையே ஒரு கலைஞன் மாள்கிறான். அக்கலைஞன்மீது குற்றம் எதுவும் காணப் பொறாத அவன் காதலி, அவன் இறந்தபின்பும் அவன் பெருமையை நிலைநாட்டி மகிழ்கிறாள்!
கடன் வாங்குவதையே தொழிலாகக்கொண்டு ‘பகைமை யின்றி’ ஏய்க்கும் ஒரு நல்ல ஏழை மருத்துவனும் இந்நாடகத்தில் ஒரு உறுப்பாகிறான். இந்நாடகம் பெயரளவில் சாவும் கொலையும் காட்டினும், அவை அச்சம் நடுக்கம், பெருமிதம் ஆகிய உணர்ச்சி களைக் கிளறாது. கனிவு, நகை, வசை ஆகிய சுவைகளையே தருகின்றன.
திருமதி ஷா விரும்பிப் பாராட்டிய நாடகம் இதுவே என அறிகிறோம். நாட்டுப்பற்றாளர், மனிதஇனப்பற்றாளர் ஆகியவர்களை ஒரு தனித்துறையில் அறிவுநெறியில் கொண்டு செலுத்தி மெய்ந்நெறி காட்டும் நாடகம் இது என்பதில் ஐயமில்லை.
ஷாவின் நாடகக்கலை 1901 முதல் 1907 வரை இங்ஙனம் புகழின் உச்சியையும், வெற்றியின் உச்சியையும் எட்டிற்று. ஆனால், அடுத்த மூன்றாண்டுகளிலும் அவர் மைக்கோல் மூனையைவிட்டுக் கலைச்செல்வி விலகித் துயில் கொண்டாள் என்னல் வேண்டும். “நாடகமேடை இடைக்காட்சி(interlude at the play house)" ”மணம் புரிதல்,(getting married)" “பிளாங்கோ பாஸ்னெட்டின் சாயம் வெளுத்தல்(the shewing up of Blanco Posne)" ”செய்தி யிதழ்த்துண்டுகள்(Press cuttings)" “சிங்காரக் குழவி** (Fascination founding)” “மெய்ம் மையின் காட்சி(a glimpses of reality)" ”பொருந்தா மணம்(misalliance)" "காதற்பாடலில் குறிக்கப் பெற்ற காரழகி**(the dark lady of the sonnets)" என்பவை இச் சிறு திற நாடகங்கள்.
இறுதி நாடகம் ஷேக்ஸ்பியர் காதற் பாடல்களிலிருந்தும், அவர் நூற்குறிப்புக்களிலிருந்தும் அவர் வாழ்க்கையின் தலைமை யுணர்ச்சிக் கோவை ஒன்றை உருவாக்கித் தீட்டிற்று. ‘’மணம் புரிதல் மணவிழா பற்றியது. இது நீண்ட உரையாடல் ஒன்றன் மூலமே நாடகமா யியலும் தனித்தன்மையுடையது. ’செய்தியிதழ்த் துண்டுகள்’ குடியுரிமைகள், நாகரிக உரிமைகளுக் கெதிராகப் படை வலிமையை வழங்கும் வழக்கத்தைத் தாக்கும் ஒரே வசையுரை. அதில் கோரப்பட்ட பெண்டிர் மொழியுரிமையும், படைவீரர் குடியுரிமையும் அத்துறைச் சீர்திருத்தங்களுக்கு நல்ல வழிகாட்டியாயின. ‘பொருந்தா மணம்’ கருத்திலும் காட்சியிலும் புத்தம்புது நடப்புக்களைப் படம் பிடித்துக் காட்டும் சிறப்பு டையதாக அமைக்கப்பட்டது.
1911-ல் கலைச்செல்வி துயில்நீங்கி மீண்டும் ஷாவின் மைக் கோலில் நடமிடலானாள். அடுத்த நான்கு ஆண்டுகளில் அவர் இயற்றிய நாடகங்கள் புகழ்மேடை நாடகங்களைவிட ஒரு சிறிதே குறைந்து. அவர் சீரிய நாடகங்களுடன் இடம் பெறக் கூடியவை. இவற்றுள் ‘ஃபாணியின் முதல் ஆட்டம்,’ ‘ஆன்ட்ராக்ளிஸ்,’ ‘பின் மாலியன்,’ ஆகியவை தனிப்படக் குறிக்கத்தக்கவை. ‘அடக்கப் பட்டவர்(overruled)’ ‘பேரரசி காதரீன்(great chatharine)’ இதே காலத்தவை.
ஃபானியின் முதல் ஆட்டம்(fanuy’s first play) 1911-ல் எழுதப்பட்டது. முந்திய நாடகங்களை எதிர்த்த பல இதழகக் கருத்துiராளர்களைச் சாடவே இது எழுந்தது. டைம்ஸ் இதழின் கருத்துரையாளரான ஏ.பி. வாக்லி (வாக் = நட) இங்கே டிராட்டர் (ட்ராட் = ஓசைபட நட) என்றும்; நாட் செய்தி(daily news) இதழிலுள்ள ஈ.ஏ. பாகன் இங்கே வாகன் என்றும்; விண்மீன்(star) இதழிலுள்ள கில்பர்ட் கானன் (கானன் = பீரங்கி) இங்கே கன் (கன் = துப்பாக்கி) என்றும் தீட்டப் பட்டுள்ளனர். வசைத்திறம் வசை நயமுடையதாகவும், இதழகத் துறையாளரின் பண்புகளை நிலையான உயிர்க் கலையோ வியமாகக் காட்டுபவையாகவும் அமைந்துள்ளன. நாடகத்தினுள் நாடகமாக ஃபானியால் நடத்தப்படும் அக்நாடகம் ஷாவுக்கு வழக்கமான உரையாடல் போராட்டத்திலீடுபடாமல், விரை கதைப் போக்குடையதாகவே அமைந்துள்ளது. மொத்தத்தில் இந்நாடகம் ஷாவின் முதல்தர வெற்றிகளுள் ஒன்று. மேடையில் இரண்டரை ஆண்டுக்காலம், கொடுத்து 600 தடவை இது ஆடப்பெறும் பெருஞ் சிறப்புப் பெற்றது.
இன்று பழமையாளர் பழமைச் சின்னமாய்விட்ட கிறித்துவ சமயம் பழமையை எதிர்த்த புதுமையாக நிலவிய காட்சியை ‘அன்ட்ராக்ளிஸூம் அரிமாவும்(androcles and the lion)’ என்ற அடுத்த நாடகம் வரைந்துருவாக்குகிறது. சமய உணர்ச்சியின் புத்தார்வம், உயர்வு ஆகியவைபற்றி ஷா இங்கே கூறும் கருத்து தனிச்சிறப்பு வாய்ந்தது. “நீ எதற்காகச் சாக வேண்டும்?” என்ற கேள்விக்கு இளங் கிறித்துவக் கன்னி, “எனக்குத் தெரியாது. அது தெரியத்தக்க சிறு செய்தியானால், அத்தகைய சிறு செய்திக்காக யார் சாகத் துணி வார்கள். நான் சாவது கடவுளுக்காக. சாவதற்குரிய உண்மையான தூண்டுதல் இதுவே,” என்கிறான். “கடவுள் என்பது என்ன?” என்பது மற்றொரு கேள்வி. “அது தெரிந்துவிட்டால், பின் நாமே கடவுளர் ஆய்விடலாகும்.” என்பது அந்நங்கையின் விடை.
துன்ப நாடகமாகக் கருதப்படத்தக்க நிகழ்ச்சிகள் இங்கே இன்ப வசைநயத்துடனும் உயர் குறிக்கோள் பண்புகளுடனும் கலக்கப்பெற்றுள்ளன. சமயத்துறையாளர் கிறித்துபெருமான் பிறந்தநாள் விழாவில் கொண்டாடத்தக்க சிறந்த சமய நாடக மாகவே இது காட்சியளிக்கிறது. ‘கலைத்துறையில் கிறித்தவ சமயத்தில் தொடக்கக்கால ஆர்வத்தை ஷாவின் அருட்கண் களன்றி வேறெவை காணமுடியும்? அவர் அருட்கலையன்றி வேறு எது தீட்டமுடியும்?’ என்று கேட்கத் தோற்றுகிறது.
இக் கதையில் அரிமாவுக்குக்கூட மனிதப்பண்புகள் மிகப் பொருத்தமாகத் தரப்பட்டுள்ளன. காதல் வேடர் நாடகத்தில் செயலற்ற இப்ஸென் சிலைக்கே மனிதப்பண்பூட்டிய ஷா ஒரு விலங்குக்கு அப் பண்பு ஊட்டியதில் வியப்பில்லை. நாடக மேடையிலும் அரிமா உருவில் எட்வர்டு ஸில்வேர்டு என்ற ஒரு மனித நடிகரே நடிக்கவேண்டி வந்தது! பதினெட்டு நூற்றாண்டு களுக்கு முன் நிகழ்ந்ததாகக் கருதப்படும் ஒரு கதைக்கு ஷா உயிர் கொடுத்ததுடன் மட்டுமின்றி, அதனை இக்காலத்துக்கும் எக்காலத்துக்கும் பொருத்தமான ஒரு காலங்கடந்த ஒவியம் ஆக்கியுள்ளார்.
1911-க்கும் 1914-க்கும் இடைப்பட்டகால நாடகங்களுள் தலைசிறந்த நாடகம் அன்ட்ராக்ளிஸே.
**‘அடக்கப்பட்டவர்** (overruled)’ பெண், ஆண்பால் திறங்களின் பண்பு வேறுபாடு பற்றிய பெண்களும் ஆண்களும் நடத்தும் ஆராய்ச்சி விளக்கமா யமைந்துள்ளது.
பிக்மாலியன் (pygmalion) ‘ஒலியியல்’ சீர்திருத்தக் குறிக்கோள் உடையது. இங்கிலாந்தின் மாவட்டந்தோறும் ஒலிப்பு முறை வேறுபடுகிறது. உயர்மக்கள் வாழும் மாவட்டத்தின் உயர்குடி மக்கள் ஒலிப்பு முறையே அவர்கள் குல மரபுச் சின்னமா யமைகிறது. ஒலிப்பு முறை ஆராய்ச்சியில் முனைந்த ஒரு பேராசிரியர் தம் ஆராய்ச்சித் தேர்வுமுறைகளுள் ஒன்றாக, ஒரு பூ விற்கும் பூவையைத் தேர்ந்து பயிற்றுவிக்கிறார். ஒலிப்பு முறையுடன் உயர்குடி வாழ்க்கைப் பழக்க முறையும் பயிற்று விக்கப்படுவது உண்மையிலேயே நகைச்சுவை யூட்டும் காட்சி களைத் தருகின்றது. ஆனால், திருத்தப்பெற்ற நங்கை தன்னைப் புதிதாய்ப் படைத்த ஆசானிடம் தன் படைப்புரிமைகளைக் கோருகிறாள்! அஃதாவது, படைத்தவனே வழிவகுத்து விடவேண்டும் என்கிறாள்.
ஆசிரியரின் இல்லத்தலைவி நங்கையைத் திருத்தும் பணி யில் ஈடுபடும்போது கீழ்குடி, மேல்குடி வாழ்வுபற்றி ஒப்பிடும் ஒப்புமை சுவைமிக்கது. இயற்கையோடொட்டிய சாக்கடை வாழ்வே செயற்கையான உயர்குடி வாழ்விலும் சிறந்ததென அவள் கட்டுரைக்கிறாள்.
“உன் வாழ்க்கை முறையில் (குளிப்பதால்) உடலுக்குக் குளிர் வரப்பெற்று அதை நீ தாங்கமுடியாததானால், மீண்டும் உன் சாக்கடைக்கே போ! ஓயாது வேலைசெய்து, மனிதப் பண்பிழந்து, விலங்காகும்வரை வேலைசெய்து, அதன்பின் அடித்துக் குடித்து அடங்கிக்கிட! ஓ, இச் சாக்கடை வாழ்வுதான் எத்தகைய சீரிய வாழ்வு! அது பொய் வாழ்வு அன்று; உணர்ச்சி யார்வமிக்க வாழ்வு; விரைதுடிப்புடைய வாழ்வு. மரத்துப் போன தோல்வழியாகக்கூட அதன் விறுவிறுப்பை உணரலாம். மிகுதி பயிற்சியோ, உழைப்போ இல்லாமல் இதனைத் துய்க்க, சுவைக்க, நுகரமுடியுமே! அறிவியல், இலக்கியம், பழமரபின் இன்னிசை, மெய்ந்நூல், கலை ஆகியவற்றைப்போலல்ல அது!”
‘பிக்மாலியன்’ என்பது, ஷாவின் தலைசிறந்த முதல்தர நாடகங்களுள் ஒன்று. இதுவே, ‘வெஸ்ம் என்ட்’ மேடையை
நிலவரமாக ஷாவுக்கு உரிமையாக்கித் தந்தது. தம் நாடகங்களுக்காக உயர்தர மேடையையோ, நடிகரையோ ஷா இதன்பின் தாங்கவேண்டி வந்ததுமில்லை - தாங்கியதுமில்லை. இதுமுதல் அவர் கலை நோக்கன்றி வேறு எந்நோக்கமுமற்று நாடகங்கள் எழுதலானார்.
பேரரசி காதரின்(great catharine) உண்மையில் ஷாவின் கனவார்வத் தால் படைத்துருவாக்கப்பட்ட ஒரு புத்துலக அரசியே யாவர். அமைச்சர்கள் ஆதரவால் நடத்தப்பட்டு முறிவுற்ற ’மார்க்கோனி கழகத்தை’த் தாக்குவது.
நாடக உலகில் ஷா முன்னேறிப் புகழ்பெற்ற அதே காலத்தில், அரசியல் உலகில் அவர் முந்திய நூற்றாண்டில் கலந்து கொண்டிருந்த இயக்கங்களிலிருந்து படிப்படியாக விலகினார். 1903-ல் ஸெண்ட் பாங்கிராஸ் வட்டத்திலிருந்து அவர் விலகியபின் அதே வட்டச் சார்பில் அடுத்த ஆண்டு லண்டன் மாவட்ட மன்றத்திற்கு அவர் தேர்தலில் நின்றார். இதில் அவர் வெற்றி பெறவில்லை. இதற்குப் பின் அவர் அரசியல் துறையிலோ, தேர்தல்களிலோ நம்பிக்கையற்றவராய் அவற்றிலிருந்து விலகினார். அவர் நண்பர்கள் யாரேனும் தேர்தல்களில் ஈடுபடும்போதெல்லாம், அவர் அவர்களிடமும் தேர்தலின் பயனின்மையை விளக்கி வற்புறுத்தியே வந்தார். ஆயினும், நெடு நாள் திணைநில ஆட்சியில் தாம் பெற்ற செயலறிவை “நகராட்சி வணிக முறை பற்றிய அறிவமைதி(commonsense of municipal training)” என்ற நூலின் மூலம் பொதுமக்களுக்கு அளித்தார். தலைமைத் தொழில்களைத் தனி மனிதர் போட்டிக்கு விட்டுவிடாமல் நகராட்சிமன்றங்கள் எடுத்து நடத்தினால், பொதுநலமிகுதி ஏற்படும் என்பதை இதில் விளக்கினார். இன்று இது உலகெங்கும் பின்பற்றப்பட்டு வரும் முறையாகியுள்ளது.
ஷா எப்போதுமே கனிந்த உள்ள முடையவர். ஆனால், உள்ளக்கனிவுடையவர் யாவரும் நற்செயல்களே செய்வர் என்று கூறமுடியாது. அவர்கள் கனிவை நல்லோர், தகுதியுடையோர் காணுமுன்பே, திறமையுடைய போலிகள் கண்டு பயன்படுத்திக் கொள்வதே உலக மரபு. ஆனால், ஷாவின் உளக்கனிவு அவர்புற முரண்பாடாகிய தோட்டினுள் மறைந்து கிடந்தது. தகுதி கண்ட விடத்திலேயே அவர் புறத் தோடு விலகும்; அவர் உள்ளார்ந்த வள்ளன்மைப் பண்பு செயலாற்றும். வறுமைக் குழியிற் சிக்கிய எத்தனையோ கலைஞர், எழுத்தாளர் கட்கு அவர் சந்தடியற்ற உதவி செய்துள்ளார். எலென் டெரிக்க அவர் 1899-இல் வரைந்த கடிதமொன்றில், “300 பொன் வருவாயுடன் தாம் சிக்கனமாகச் செலவு செய்வதுடன் நில்லாது, சிக்கன மறியாத பிறர்க்கும் பணம் கொடுத்துதவுவது போன்ற இன்பம் வேறு ஏதேனும் உண்டா?” என்று குறிக்கிறார்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டனின் இறுமாப்புக் கோட்டைக்கு அரசியல் துறையிலேயே தாக்கு தல்கள் தொடங்கின. தென் ஆப்ரிக்காவில் பிரிட்டனை எதிர்த்த பூயர்கள் பிரிட்டனின் போர்வீரத்தை மட்டும் ஏளனம் செய்ய வில்லை. உலகெங்கணும், பிரிட்டனிலும், பல நல்லோர் உள்ளத்தில் இடம்பெறவும் செய்தனர். பிற பல எழுத்தாளர்களையும் போல ஷாவும் பூயர் பக்கமாகவே இருப்பார் எனப் பலரும் எண்ணினர். ஆனால், ஷா பேரரசின் பக்கமாகவேபேசி அந்நண்பர்களை அதிர்ச்சியுறச் செய்தார். இதற்குரிய காரணத்தை உய்த்துணர்வது கீழ் நாட்டவராகிய நமக்குப் பயன்தருவதாகும். பிரிட்டனின் ஆட்சிப் பிணைப்பிலிருந்து விடுபடுவதில் உலக அருளாளர் ஒத்துணர்வைப்பெற்ற பூளர்கள் தம்மைப் போலவே ஆப்பிரிக்காவில் குடியேறிய ஆசிய மக்களிடமும், நாட்டின் பழங்குடிகளாகிய நீகிரோவர்களிடமும் இவ்வருள் மனப்பான் மையையோ நேர்மையையோ காட்டியவர்களல்லர். பிரிட்டனின் பேரரசிலிருந்தால் மட்டுமே இப்பேரினப் பொது மக்கள் பிரிட்டி ஷாரின் நல்லெண்ணத்தின் உதவி மூலம் சிறிது சலுகைகளை யாவது பெறமுடியும். அயர்லாந்தில் அரை அயர்லாந்துக்கார ராகிய தம்மவர் மனப்பான்மையை உணர்ந்த ஷா இதனை எளிதில் உய்த்துணர்ந்துகொண்டார்.
வெறிபிடித்த சமய உணர்ச்சியைவிட, செல்வநெறி மேம் பட்டதென ஷா வாதாடுகிறார். வெறிபிடித்த சமய வாதிகளான யூதர்களின் தெய்வம் ‘ஜெஹோவா,’ செல்வத்திற்குரிய பண்டை யுலகத் தெய்வம் ‘மாம்மன்’ ஆகிய இவ்விருதிறத்து வெறிகளை ஒப்பிட்டு அவர் கூறுவதாவது: “ஜெஹோவா மனமாற்றத்துக்கு வழிவிடுவதில்லை. இயற்கை யாற்றல்களை நன்மை, தீமை என்ற இரு வேறுபட்ட கூறுகளாக அவர் பிரிக்கிறார். இதன்விளைவுகள் போர், பகைமை, தாக்குதல், தண்டனை, அடக்குமுறைகள் ஆகியவையாகவே இருக்கமுடியும். ஆகவே, என் சார்பு ’மாம்ம’னுடனேயே. பொன்னிலும் மணியிலும் மனிதருக்குள்ள இயற்கைக் கவர்ச்சி ஜெஹோவாவின் அடியார்கள் கூறும் நற்பண்பு, அப்பண்பு வேறுபாட்டைவிட இடர் குறைந்தது. மெஃவிஸ்டாஃவிலிஸ் (கெதேயின் ஜெர்மன் நாடகத்தில் கடவுட் பகைவனாக வரும் பேய்மகன்) கூறுவதுபோல், ஜெயோவாவின் ஒழுக்கமுறை மனிதனை விலங்கிலும் கேடுகெட்ட விலங்கியற் பண்புடையவனாக்குகிறது. தவிர ஜெஹோவோ நீக்கமுடியா வல்லமை வாய்ந்தவர். ஏனெனில், அவர் மாந்தர் உள்ளங்களையே எஃகுச் சங்கிலிகளால் பிணிப்பவர். நம் ’பார்னபாஸ்’களும், ராத்சில்டுகளும் (= செல்வர்கள்) பணத்தைத் தவிர வேறு பிணைப்புக்கருவி யற்றவர்கள். இச் சங்கிலியை அவர்கள் எவ்வளவு இறுகப்பிணித்தாலும் பிரிட்டனின் தொழிலாளிகளிடமிருந்து ஒரு வாரத்தில் பத்து மணி நேர உண்மையான உழைப்பைக்கூட அவர்கள் பெறமுடியாது.”
உலகில் தனித்தனி நாடுகளைத் தனித்தனி அரசியல்கள் நடத்துகின்றன. ஆனால் இது மாவட்ட மன்றங்கள் மாவட்ட அரசியல்கள் நடத்துவது போன்ற சிறு திறச் செய்திகளே. உண்மையில் உலக ஒழுங்கைக் காப்பது ஒரு சில வல்லரசுகளே. இத் தத்துவத்தை ’ஃவேபியனியமும் பேரரசும்’ என்ற அவர் வெளியீடு வற்புறுத்துகிறது. இதில் பாதுகாப்பு வாணிக முறை யையும் அயல்நாட்டுப் பேராண்மை நிலையங்கள்(consular services) மூலம் நாடுகளிடையே வாணிக உறுதி ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். இவை இன்றைய பொது நடைமுறைகளாகியுள்ளது.
ஷாவின் கொள்கை உறுதியை 1902-ல் நடை பெற்ற ஒரு நிகழ்ச்சி நன்கு எடுத்துக் காட்டுகிறது. அவர் நாடகங்களுள் மூன்று ஆஸ்டிரியத்தலைநகரான வியன்னாவில் நடைபெற விருந்தது. நாடகங்களில் சில மாற்றங்கள் செய்ய ஒப்புக்கொண்டாலன்றித் தாம் இணங்க முடியாது என அரசியலார் கூறினர். ஷா அது கேட்டு “ஃபிரான்ஸ் ஜோஸஃவ் ஆஸ்டிரியா ஹங்கேரியின் பேரரசராயிருக்கலாம். ஆனால், நாடகமேடைகளைப்பற்றிய வரை, ஷா ஐரோப்பாவுக்கே பேரரசர். ஐரோப்பிய மேடை முழுவதும் அவர் வாக்கே கடைசி வாக்கு,” என்று ஆணித்தர மாகத் தம் கொள்கையை வலியுறுத்தினார். மாறுபாடு எதுவு மில்லாமலே நாடகம் நடத்தப்பட்டது.
1905-ல் ஷா கென்ஸிங்டன் நகர மண்டபத்தில் ஷேக்ஸ்பியர் பற்றிய ஒரு சொற்பொழிவாற்றினார். “கலைப்பண்பு முறையிலும், கலைக்கோப்பு முறையிலும் ஷேக்ஸ்பியரைவிடத் திறம்பட எவராலும் எழுதமுடியாது. அவ்வப்போது அவருக்கு ஏற்பட்ட சோம்பற் புறக்கணிப்பு மனப்பான்மை நீங்கலாக, மனித ஆற்றலின் வரம்பையே அவர் ஆற்றல் சென்றெட்டுகிறது.” ஷேக்ஸ்பியர் கலையை இவ்வளவு உயர்வாக மதித்த ஷா தான் அவரது நாடகங்களுள் ‘மனம்போல வாழ்வு (as you like it)’ என்பதுபோன்ற மோசமான நாடகம் வேறு இல்லை எனக் கண்டித்தவர் என்பது கருத்தில் வைக்கத்தக்கது. அவர் போற்றியது ஷேக்ஸ்பியர் கலைமுறையை; தாக்கியது கலையின் குறிக்கோளில்லா நிலையை.
பாதைகளில் ஊர்திகள் செல்லும் நெறிவகைகளையும், திரும்புதல், குறுக்கே செல்லுதல் வகைகளையும் ‘கோடிட்டு’ விளக்கலாகும் என்று முதல் முதல் கூறியவர் ஷாவே. 1906-ல் அவர் கூறிய கருத்து இன்று உலகெங்கும் பின் பற்றப்பட்டு வருகிறது.
பெண்ணினத்தின் போக்குகளையும், மரபுகளையும் மிகுதி கண்டித்தவர் ஷா. அதேசமயம் அவர் பெண்ணுரிமைக்கும் பேராதரவளித்தவர். ‘மணம்புரிதல்’ என்ற நாடகத்தில் தெய்வ வெறியாட்டு ஒரு நாடகமுறையாகச் கையாளப்படுகிறது. வெறியாட்டுக்குட்பட்ட பெண் ’பெண்மை’யின் குரலாகி ஆடவர் உலகுநோக்கித் தன் இனச் சார்பில் பேசுகிறது. “நீ என்னை நேசித்தபோது, நான் உனக்கு ஒரு முழுஞாயிற்றையும் எல்லையிலா விண்மீன் குழுக்களையும் விளையாடக் கொடுத்தேன். எல்லையில்கால இன்பத்தை ஒரு நொடிக்குள் அடக்கிக் கொடுத்தேன். மலைகளின் ஆற்றலையெல்லாம் உன் ஒரு கைப்பிடியினுள் அளித்தேன். கடல்களின் பேரெழுச்சி களனைத்தையும் உன்சிற்றுள்ளத்தில் பெய்தேன். எல்லாம் ஒரு நொடிப் போது தான். ஆனால், அது போதாதா? உன் வாழ்க்கைப் போராட்டம் அத்தனைக்கும் அவ்வொரு நொடியிலேயே உனக்கு ஊதியம் கிட்டவில்லையா? அது போதாமல், அது தந்த நானே உன் ஆடைதிருத்தி உன் வீடு பெருக்கவும் செய்தேனே! அது போதாதா? பேரம்பேசாது உனக்கு எல்லாம் தந்தேன். சிறிதும் முனங்காது நான் பிள்ளைகளைப் பெற்றேன்! பெற்ற காரணத்துக்காகவோ மேலும் பல சுமைகள் என்மீது சுமத்தப் படவேண்டும்? குழந்தையை நான் தூக்கிச் சுமந்தேன். அதன் தந்தையையுமா தூக்கிச் சுமப்பது? என் உளத்தை நான் உனக்குத் தந்தேன். நீ என் உடலைக்கூட உன் விளையாட்டுப் பொருளாகக் கேட்கிறாய். இவையும் போதாதா? இவையும் போதாதா?”
‘இதழகத்துண்டுகளில்’ ஷா வெளியிட்ட கருத்துக்களிற் பல உடனடி அரசியல் சீர்திருத்தங்களுக்கும், சில நீண்டகால மாற்றங்களுக்கும் வழி வகுத்தன.
பெண்ணினத்தைப் பழிக்கும் முறையான பொது மகளிர் மனையகங்களை ஷா வெள்ளை அடிமை வாணிகமுறை என்று தாக்கியுள்ளார். மண ஒப்பந்தமுறை இரு புறமும் சரிசம நீதி யுடைய ஒப்பந்தமாக இல்லை என்பதையும் இத்துடன் அவர் இணைத்துக்காட்டியுள்ளார். அவர் விளக்கமாவது: “ஒரு புறம் மணவாழ்வுக்குரிய ’பண்பிணக்கப் பயிற்சி’யாக வெள்ளை அடிமை வாணிகமுறை யமைத்து, அவ் வணிகர்களுக்குப் பாது காப்புத்தருகிறோம். மற்றொரு புறம் அவ் வடிமைகளை மிதித்துத் துவைத்து, நம் வழக்கு மன்றங்களில் கூட அவர்கள் நேர்மையான உரிமை பெறமுடியாத நிலையை உண்டுபண்ணிவிடுகிறோம். தெரு மூலைக்குத் தெருமூலை நம் காவலர் நிற்பர். ஐரோப்பா முழுவதும் நம் சட்டம் தாண்டவமாடும். இவற்றால் அவர்கள் அவதியுறுவர். ஆனால், இதனிடையே உலகின் ஒரு மூலையி லிருந்து மறுமூலைக்கு அவர்கள் கடத்தப்படலாம். மந்தை மந்தையாக ஓட்டிச்செல்லப்படலாம். அவர்களை அடிப்பவர் அடிக்கலாம்; ஏமாற்றுபவர் ஏமாற்றலாம்; இழுத்து உதைப்பவர் உதைக்கலாம். அவர்களை வேட்டையாடிப் பிடித்து வெறுக்கத் தக்க, வேண்டாத தொழில்களில் கட்டாயப்படுத்தி உழைக்க விடலாம். இவற்றை அக் காவலர் படைகளும், சட்ட ஆட்சியும் தடைசெய்ய மாட்டா. அதுமட்டுமோ? இத்தனையையும் அவர்கள் பொறுமையாகத் தாங்கும்போது உதவிகோரவோ, கூவியழவோகூடாது. கூவினால் வருவது உதவியல்ல; அவர்கள் அம்பலப்படுத்தப்பட்டு இகழுக்கே ஆளாவர். மனித இனத்தின் மீது இவ் அப்பாவி இவற்றுக்கெல்லாம் பழிவாங்கும் முறையில் பழிவாங்காமலும் இல்லை. சட்டம் அதை அறியாது; தடுக்காது. கண்குருடு, மலடு, உருவழிப்பு, எல்லையிலா நோவு, பித்துவெறி, சாவு ஆகிய பழிகள் இவ்வடிமைகளாலே மனித இனப்பரப் பெங்கும் தாவிப் பரப்பப்படுகின்றன. இவற்றைத் தடுக்கவோ, இவற்றைப் பரப்பும் அவர்களைத் திருத்தவோ நாம் சிறிதும் நாடமாட்டோம் என்பது அவர்களுக்குத் தெரியும். இவற்றைப் பற்றி வாய்திறந்து பேசக்கூட நம் சமய ஒழுக்கம் நம் ஒழுக்கத்தின் மதிப்பு இடந்தராது.”
திருமணத்தைப்பற்றிய ஷாவின் கொள்கை புதுமையானது. மிகச் சிறந்த மணம், ஆண் பெண் தொடர்பு பற்றிய பண்பு எதனையும் கருதாதது. அழகு, பணம், சுவைப்பொருத்தம், பழக்கவழக்கப் பொருத்தம், வகுப்பு ஒற்றுமை ஆகியவையற்ற கூட்டுழைப்பினடிப்படையில் அமைவதே சிறந்த மணம். ஷாவின் மணம் இத்தகையதே என்றுகூறத் தேவையில்லை.
சமயத் துறையில் சமயத்துக்கு எதிரி அதன் பழமையே என்பது ரூவின் கோட்பாடு. இதுபற்றி அவர் கூறுவதாவது: “நம் சமயத்தை நாம் கீழ்நாடுகளிலிருந்து பெற்றதனால் ஏற்பட்ட விளைவு இது. மேல்நாட்டவர் உணர்ச்சியடிப்படையாக, மேல் நாட்டவர் அறிவுத் தூண்டு தலின்படி நமக்கென நாம் ஒரு சமயம் வகுத்துக்கொண்டிருக்கவேண்டும். இங்ஙனம் செய்யாததனா லேயே நம் சமயவாழ்வு அதன் வாழ்க்கையிறுதி யடைந்து விட்ட தென்று நாம் கருதுகிறோம். உண்மையில் நம் சமயம் இன்னும் பிறக்கவில்லை. அது இன்னும் கருவிலேயே இருக்கிறது!”
1911-ல் ஷா கேம்பிரிட்ஜ் ‘சமய எதிர்ப்பாளர்’ கழகத்தில் சொற்பொழிவாற்றினார். “மன உறுதி, பிடி முரண்டு ஆகிய இரண்டும் ஒரே பண்புகுறித்த இரண்டு சொற்களே. முன்னது நம்பு முறையில் மக்கள் கூறுவது; பின்னது பகைமையுட் கொண்டவர் கூறுவது.” இவ்வரிய மெய்ம்மை விளக்கத்தை அவர் முதல்முதல் கூறியது இங்கேயே. மேலும், “ஆடவர், பெண்டிர் பொதுவாக, மிக உயர்குடி மரபிடையேகூட இன்ப வாழ்வுடைய வராயில்லை,” என்றும், “இன்றைய சமய வாழ்வு அவ்வகையில் போதியதாக இல்லை,” என்றும், “ஒரு புதுச் சமயம் ஏற்பட்டாக வேண்டு,” மென்றும் அவர் பேசினார்.
அடுத்த ஆண்டு மார்ச் 21-ல் புதிய சீர்திருத்தக் கூட்டுக் குழுவில்(new reform club) ஷா ‘தற்கால சமயம்,’ எனும் பொருள் பற்றிப்பேசினார். கடவுட் கருத்துத் தோன்றிய வகையையும், சமயம் பற்றிய தம் மனிதவாழ்வு கடந்த உயிர் உணர்ச்சி நிலைக்கோட்பாட்டையும் இதில் அவர் விளக்கியுள்ளார்.
1912-ல் ‘ஜான்புல்லின் மற்றத்தீவு’ அயர்லாந்துத் தன்னாட்சிக் கிளர்ச்சிக்காதரவாக மீண்டும் பதிப்பிக்கப் பெற்றபோது, ஷா அதற்கு எழுதிய முன்னுரையில் அவர் உலக ஒற்றுமைக்கான தம் கோட்பாட்டை விளக்கினார். இதுவே பிற்காலங்களில் ஜெனிவா உலகச் சங்கத்துக்கும் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கும் வழிகாட்டி யான குறிக்கோள் ஆகும்.
“நம் எதிர்காலம் அடிமை நாடுகள் அடங்கிய பேரரசு வழிச்சார்ந்த தன்று; தன்னுரிமை யாட்சியுடைய நாடுகள் அடங்கிய கூட்டுறவு வழிச்சார்ந்தது. ஒவ்வொரு நாட்டிலும் உலக அடிப்படையில் எல்லா நாட்டினருக்கும் நுழைவுரிமை, வெளிச்செல்லும் உரிமை; பாதைகள், காவலர், அஞ்சல்துறை ஆகிய வாய்ப்புக்கள்; நேர்மையடிப்படையான மனச்சான்றுரிமை ஆகியவை வேண்டும் என்று நான் கருதுகிறோன்…….தற்போதைய ஆங்கில ஆட்சியிலில்லாத பல தீங்குகள் கூடத் தன்னாட்சி யுடைய அயர்லாந்தில் இருத்தல்கூடும் என்பது கவனிக்கத் தக்கது. ஆயினும் நாளடைவில் எல்லா நாடுகளும் ஒன்றை ஒன்று சார்ந்து வாழவேண்டியவை யாகிவிடும். ஆகவே, அயர்லாந்து இன்று அடிமையாயிருக்க விரும்பித் தன்னாட்சியை மறுத்தால் கூட, விரைவில் இங்கிலாந்தினால் அது அயர்லாந்தின் மீது வலுக்கட்டாயமாகச் சுமத்தப்படநேருவது உறுதி. ஏனெனில், இன்று தன் நாட்டு அரசியல் பொறுப்புக்களையே பிரிட்டன் தட்டிக்கழித்துக் குழறுபடை பண்ணிக்கொண்டிருக்கிறது. இந் நிலை மாறிவிட்டால் தன் வாழ்வைச் சரிவர உணர்ந்து செப்பம் செய்யவே இங்கிலாந்துக்குத் தன் அரசியல் ஆற்றல் முழுதும், தன் நேரமுழுதும் போதாதென்றாகிவிடும். அது அயர்லாந்தையும் சேர்த்துக் கட்டிச்சுமக்க விரும்பாது!”
இக் கூற்று மிகமிக உண்மை. ஏனெனில் 1924-ல் அயர்லாந்துக்குத் தன்னாட்சி கொடுப்பதே பிரிட்டனின், தொல்லைகளிலிருந்து விடுபடவழி என்று ஆங்கிலேயர் உணர்ந்தனர். இவ்வுண்மையை இந்தியாவின் வகையிலும் பிறநாடுகளின் வகையிலும் பிரிட்டன் உணர்ந்திருந்தால், தன்நலங்கருதியே பிரிட்டன் அந்நாடுகளுக்கு முன் கூட்டி விடுதலை அளித்திருக்கும். 1947-ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் அளித்த விடுதலையை 1929-ல் அளித்திருந்தால் பிரிட்டன் இரண்டாம் உலகப்போரால் நலிவுற்றுத் தன் உயர்நிலை இழந்திருக்காது! அதேசமயம் இந்தியர் பிரிட்டனை எதிர்ப்பதில் மட்டும் செலவு செய்த நேரத்தைத் தம்மைத் திருத்துவதில் செலவுசெய்திருந்தால், இன்று இம்மாநிலம் உலக அரங்கில் ஒரு குறைபாட்டுக்கூறா யிராது. அதன் நிறைநல உறுப்புக்களுள் இடம்பெற்றிருக்கும் என்பது காணத்தக்கது.
பிரிட்டனிலும், ஐரோப்பாவிலும் 1911-லிருந்து போர்ப்பு யலின் முன்னறிகுறிகள் கிளம்பின. பூயர் போரிலேயே தம் தோழருடன் முற்றிலும் இணங்காது நின்ற ஷா, போர் நோக்கங் களில் பின்னும் மாறுபட்டார். அதன் பயனாக 1911-ல் அவர் ஃவேபியன் கழகத்திலிருந்தும், அதன் செயற்குழுவிலிருந்தும் விலகிக்கொண்டார். இதுமுதல் அவர் பழந் தோழர்களான ஃவேபியன் கழகத்தார் ஒரு கழகமா யியங்காமல், பிரிட்டனின் தொழிற் கட்சிக்குரிய அறிவாட்சிக் குழு ஆயினர். பிரிட்டனின் அரசியலில் அக்கழகம் வரவர மிகுதி இடம்பெற்றது. ஷா தனிமுறையில் முன்பு ஃவேபியன் கழகம் நடத்திய அறிவுப் புரட்சிப் பணியில் நின்றார். ஆனால், அவர் புதிய அறிவுப் புரட்சி கலைத்துறை வரம்பில் நின்றது.
புயல் எதிர் புயல்
அயர்லாந்தின் அரசியலிலிருந்து ஷா விலகியிருந்தார். பிரிட்டனின் அரசியலிலிருந்தும் 1912-க்குள் விலகியே நின்றார். ஆனால், அவர் அதே ஆண்டில் திடுமென வெளி நாட்டு அரசியலில் கருத்தைத் திருப்பினார். ஆங்கில நாட்டு அரசியலின் அயல்நாட்டுப் பணிமனைக்கு அவர் எழுதிய கடிதமொன்றில் பிரிட்டன், ஃபிரான்சு, ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நான்கு வல்லரசுகளும் சேர்ந்து ஐரோப்பாவில் அமைதியை அரண் செய்யவேண்டுமென்று கூறினார்.
1913-ல் நாள்முறைக் காலக்குறிப்பு (Daily chronicle) என்ற இதழில் ‘படைக் கலங்களும் ஆட்சேர்ப்பும், போரெதிர்க்கும் ஒரு மூவிணைப்பு நேசர் குழு’ என்ற தலைப்புடன் ஒரு கட்டுரை ஷாவினால் எழுதப்பெற்றது. தாக்குதல், தற்காப்பு ஆகிய இரண்டு தரப்பிலும் பிரிட்டன், ஃபிரான்சு, ஜெர்மனி ஆகிய மூன்று வல்லரசுகளும் தனித்தனி ஒப்பந்தம் செய்யும்படி பிரிட்டன் வற்புறுத்தவேண்டு மென்று அவர் இதில் கூறியிருந்தார். பிரிட்டன் இதனைச் செய்ய முன் வந்தால், ஜெர்மனியோ, ஃபிரான்சோ அதை மறுக்கத் துணியமுடியாது; ஏனெனில், மறுக்கும் நாடு தனிப்பட்டு விடும் என்பதை ஷா காட்டியிருந்தார். அத்துடன் வலிமைவாய்ந்த படையே அமைதி சார்பிலும் மிகுதி உதவுவது என்றும், வயது வந்தவர் அனைவர்க்கும் போர்ப்பயிற்சிப் பொறுப்பு ஒரு நாட்டுரிமைத் திட்டமாகவேண்டும் என்றும் அவர் வலியுறுத் தினார். முதலுலகப் போரில் அவர் வற்புறுத்திய இச்செய்திகள் பிரிட்டனால் இரண்டாம் உலகப் போர்வரை கவனிக்கப்படா திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ஷா பொருளியல் துறையிலும் கருத்துச் செலுத்தி வந்தார். இதே ஆண்டில் அவர் ‘நிகர்நிலையின் சார்வு எதிர்வுகள்’(Case for equality) என்ற ஒரு கட்டுரை வெளியிட்டார். உழைப்பூதியம் கிட்டத்தட்டச் சரிநிகர்நிலையடையும் முறையில் அதையே குறிக்கோளாகக் கொண்டு பொருளியல் சீர் திருத்தங்களில் முனையவேண்டும் என்று அவர் இதில் விரித்துரைத்தார். இவற்றால் அடிமைப் பண்புக்கு மாறாக, தன்விருப்புடைய இணக்கமும், வகுப்பு வேறு பாட்டடிப்படையிலன்றி விருப்ப அடிப்படையுடைய மண உறவுகளும், வகுப்பு வேறுபாட்டடிப் படையிலன்றி நேர்மை அடிப்படையுடைய நல்லொழுக்க முறையும் ஏற்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
படக்காட்சி அரங்கம் (Play pictorial) என்ற இதழில் இச்சமயம் ஷா பழங்கால நாடகத் தலைவர், இக்காலத் தலைவர் வேறு பாட்டை விளக்கினார்: “இப்போது மக்கள் தேவைப்படும் கதைவீரர் நம் மனிதப் பண்புகளையே எடுத்துக் காட்டுபவர்கள். ஒரே வீரவெறியில் தனித்துநின்று பெருநடை, பேருரையாற்றி, பலரைத் தனித்தெதிர்த்துப் போராடிச் சலிப்பூட்டும் முறைக்கு மாறாக, இத்தகைய உயர் முகடுகளை அவ்வப்போது மட்டும் எட்டி, நகை அவலம் முதலிய பள்ளங்களில் அவ்வப்போது இறங்கி மற்றச் சமயங்களில் மனிதர்நிலை மட்டத்திலேயே செயலாற்றுபவர்கள் அக்கால வீரர்கள். காலமும் இடமும் இன்றி எப்போதும் வானிற் பறப்பவர்களும், அகழியில் உழல் பவர்களும் அல்லர் இவர்கள்.” 1914-இல் எழுதப்பெற்ற ‘பெற்றோரும் பிள்ளைகளும்,’ என்ற கட்டுரை பொருளியலிலிருந்து கல்விக்குத் தாவுகிறது. “பிள்ளைகள் பிறப்பிலேயே சில நற்சார்புகளும் சில அல்சார்புகளும் உடையவர்கள். கண்டிப்பு, சலுகை ஆகிய இரண்டுமே அவர்களைத் தனிநின்று திருத்துபவையல்ல. ஆனால், இரண்டில் பிந்தியதே மிகத் தீமை செய்வது. கல்வி அவர்களுக்கு இருதரப்பட்டது. பிறருக்குத் துன்பமின்றி, தான் வாழ்க்கையில் முன்னேறுவதற்குரிய வழிகாண்பது ஒருபடி. அரசியல் (குடியுரிமை), சமயம் ஆகிய துறைக்கல்வி அடுத்தபடி. இரண்டாவது படியில் முடிந்த முடிபான அறிவைவிட, பல் சார்புடைய அறிவை அப்படியே அறிவுத்தொகுதியாகக் கொள்வதே சிறப்புடையது. இவ்விருபடிகளும் கடந்தபின் தன்னியலாக எல்லாரும் கற்க விடப்படவேண்டும். அரசியல் அதற்கான துணைக்கருவிக்களங்களை அமைக்கவேண்டும். இம் மூன்றாம் படிக் கல்வியே உயர்தர நாகரிகக் கல்வி(Liberal education) எனப்படும்.” குடும்பம், கல்விபற்றிய ஷாவின் தெளிவுரை இது.
‘வேட்டையிற் கொல்லுதல்,’ என்ற சிறு நூல் அன்பு நெறிக் குழாத்தினருக்காக, ’சால்ட்’டினால் வெளியிடப் பட்டது. கொல்லுதலை விலக்கவேண்டும் என்பதற்குரிய காரணம், அது கொலை செய்யப்படும் உயிருக்குத் துன்பம் தரும் என்பதுகூட அன்று. அது காண்பவர்களுக்குக் கொலையில் மகிழும் பண்பு ஊட்டுகின்றது என்பதே. மனிதன் இதனால் இழிபண்புடைய வனாகிறான். “கரடிப் போரைத் தூநெறியாளர் வெறுப்பதன் காரணம் கரடிக்குத் துன்பம் விளையும் என்பதன்று; மனிதருக்கு இன்பம் விளையும் என்பதே,” என்று தூநெறியாளரைப் பலர் நையாண்டி செய்வதுண்டு. ஷா அதே தூநெறியாளர் கோட் பாட்டை அறிவுமுறையில் விளக்கிக் காட்டுகிறார்.
1911-லிருந்து போர் வானம் கருத்திருண்டது. கார் முகில் களிடையே மின்னல்கள்போல் போர் வாள்கள் துளங்கின. 1914-ம் ஆண்டு இறுதியிலேயே மின்னல்களுள் ஒன்று பேராரவாரத் துடன் இடியாக ஐரோப்பிய அரசியல் உலகில்வந்து விழலாயிற்று. போர்த் தொடக்கத்திலிருந்து ஷா போர்பற்றிய அறிக்கைகளும், விளக்கங்களும் வெளியிட்ட வண்ணமாகவே இருந்தார். அவை பெரிதும் புறக்கணிக்கவே பட்டன. ஆயினும், இன்று அவற்றை வாசிக்கும் நமக்கு அவருடைய காலங்கடந்த, தேசங்கடந்த அறிவும் அருளாண்மையும் நம் வியப்புக்குரியவை யாகவே இருக்கின்றன. போர்தொடங்க ஒருசில நாட்களுக்கு முன்பு நவம்பர் 7-ல் ‘நாடு,’(The Nation) என்ற இதழில் அவரது ‘அமெரிக்க ஒன்றுபட்ட நாட்டுத் தலைவருக்கு வரைந்த திறந்த மடல்,’ வெளிவந்தது. பெல்ஜியச் சார்பாக அது உலகை அறை கூவி அழைத்தது கண்ட பெல்ஜிய அரசியலார், தம் பெயராலேயே மீண்டும் மடல்வரையக் கோரினார். இப்போது அவர் மீண்டும் ஒரு ‘திறந்த மடல்,’ வரைந்தார். அதில் அவர் அமெரிக்கா நடு நிலைநாடுகளுடன் கலந்து கூட்டமைப்பாக வேண்டுமென்றும், பிரிட்டன், பிரான்சு ஜெர்மனி ஆகிய நாடுகள் தங்கள் போரைத் தம் நாட்டு வரம்புக்குள்ளேயே நடத்தும்படியும், நடுநிலை நாடுகளின் ஆட்சி நிலத்துக்குள் வராதிருக்கும்படியும் கோர வேண்டும் என்றும் குறித்திருந்தார். ஒரு வாரத்திற்குள் இதே கருத்துடன் ‘போர்பற்றிய அமைந்த அறிவு,’ என்ற கட்டுரை ‘புதிய அரசியலாளன்’ (new statesman) என்ற இதழில் சிறப்பு மலராய் வெளி வந்தது. போர்பற்றிய ஷாவின் இம் முடங்கல்களை ஏற்றதாகக் கூட அமெரிக்கத் தலைவர் எதுவும் குறிப்பிடவில்லையாயினும், போர் முடிவில் நேச ஒப்பந்தம் செய்யும் சமயம் தலைவர் வில்ஸன் கிட்டத்தட்ட ஷாவின் கோட்பாடுகளையே தம் கோட்பாடு களாகக்கொண்டு செயலாற்ற முன்வந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. ஷாவின் காலங்கடந்த முன்னறிவுக்கு அவர் போர்பற்றிய நூல்களும், அதில் அவர் போர்ப் பிற்கால ஏற்பாடு கள்பற்றிக் குறிப்பிட்ட செய்திகளும் போதிய சான்றுகள் ஆகும். போர், அரசியல், உலக அமைப்புக்கள் ஆகிய முத்திறங்களிலும் அவர் அறிவுத்திறம் இன்று எவருக்கும் பொது அறிவாய் விடினும், அவர் காலச்சூழலில் அவை எவராலும் காணப் பெறாமலே இருந்தன.
எடுத்துக்காட்டாகச் சில கூறலாம். போர்ப் பிற்கால ஏற்பாட்டின் முதல் கடாவான போர் இழப்பு ஈடுபற்றி அவர் ’போர்பற்றிய அன்பார்ந்த அறிவிப்பிலேயே குறிக்கிறார். தோற்றசாடுகள் மீது எத்தகைய இழப்பீடும் கோரக்கூடாது என்பதே அவர் எச்சரிக்கை. நேசநாடுகள் நான்கு ஆண்டுகட்குப் பின்புகூட இவ் வெச்சரிக்கையை மறந்தனர் என்பதும், அதனால் இருபது ஆண்டுகளுக்குப்பின் மற்றும் ஒரு உலகப் போருக்கான விதை விதைத்தனர் என்பதும் இன்று நமக்கு விளங்கத்தக்க செய்திகளேயாகும். போருக்குப்பின் ஐரோப்பாவின் நில இயற் படத்தை மீட்டும் வகுத் துருவாக்கவேண்டும் என்பதுபற்றியும் அவர் குறிப்பிடுகிறார். இங்கும் அவ்வவ்விடத்து மக்கள் விருப்ப அடிப்படையிலேயே நாட்டெல்லைகள் வகுக்கப்படவேண்டும் என்று அவர் எச்சரித்துள்ளார். இவ்வெச்சரிக்கையும் பல இடங்களில் மீறப்பட்டன. இவற்றின் பயனாகவும் பிற்காலத் தொல்லைகளுக்கு விதைகள் ஊன்றப்பெற்றன.
1906-க்குமுன் பிரிட்டனின் செய்தித்தாள்கள் ரஷ்யப் பெருமன்னர்(Tsar) ஆட்சிப் போக்கில் குறைகண்டன. அதன்பின் பிரிட்டனிடம் இதழ்கள் கடன்பெற்று ரஷ்யா பிரிட்டனின் இதழ்களில் விளம்பரம் செய்தபின் இக் கண்டனம் நின்றது. பிற நாடுகளும் இதே வழியைப் பின்பற்றின. முதலாளிகள் சார்பான இவ்வுலக ஒற்றுமை இடையூறு மிக்கதென ஷா எச்சரிக்கிறார். ரஷ்யாவின் பகுதிகள் குடியரசுகளாய், குடியாட்சிப் பண்புடைய கூட்டுறவாட்சி யாகினாலன்றி ரஷ்யமுடியரசுக்கு ஆதரவு தருவது தவறு என்பது ஷாவின் கருத்து. இன்றைய ரஷ்யப் பொது வுடைமையாட்சியை அன்றே முன்னோக்கி அவாவிய ஷாவின் முன்கருதல் வியப்புக்குரியதன்றோ?
ஆனால், இன்று போற்றுதலுக்குரியதாய் விளங்கும் ஷாவின் ‘போர்பற்றிய அறிவமைதி’ அவர் காலத்தில் பல வகைப் புறக்கணிப்புக்கும், தூற்றலுக்கும் உட்பட்டிருந்தது. ஜெர்மானியர் அதனைத் தமக்குச் சார்பாகத் திரித்துத் தம் சார்பான விளம்பரமாகப் பயன்படுத்தினர். சிறப்பாக ஆபிரிக்க மூர்(முஸ்லிம்) களிடையே பிரிட்டனுக்கெதிரான ஷாவின் விளம்பரமாக அது பயன்படுத்தப்பட்டது. இஃதறிந்த ஷா ‘மூர்களுக்கான மடல்’ ஒன்று வரைந்தார். அந் நாட்டவருக்கும் கவர்ச்சி தரும்படி அராபியக்கதைகள், கொரான் மொழிகள் அதில் இடைப் பெய்யப்பட்டிருந்தன. இந்நூல் மூர்களிடையே மிகுதியும் பயன் தந்தது.
போர்பற்றிய ஷாவின் கருத்துரைகள் பொதுவாக ஆங்கில நாட்டுக்கோ, உறவு நாடுகளுக்கோ மாறானவையல்ல. ஆயினும் அவர் விளக்கங்களும், அவர் எச்சரிக்கைத்தொனியும், பிறர் அறிவுநிலைபற்றிய அவர் ஏளன நகைப்பும் அவ்வத் துறையின் மரபாட்சியாளருக்கு அச்சமும், அதிர்ச்சியும் தந்தன., இத்தகை யோர் அவர் கருத்துக்களை எதிர்க்கத் துணியாது அவரையே தூற்ற முடிந்தது. ‘என்னிட மிருந்து மாறுபடுபவருள் பலர் தம் கூற்றுக்களால் போரின் போக்குக்கு ஏற்படும்விளைவுகளைப் பற்றிக்கூடக் கவலைப் படுவதில்லை. என் அறிவிறுமாப்புத் தொனிக்காக என் மீது பழியும் இகழும் சுமத்துவதொன்றிலேயே அவர்கள் கண்ணும் கருத்துமாயிருக்கின்றனர்.’ என்ற அவர் சொற்கள் இவ்வுண்மையை அவர் உணர்ந்துகொண்டார் என்பதை உணர்த்தும்.
ஷாவினால் போருக்குப்பின் 1919-ல் வெளியிடப்பட்ட “அமைதி மாநாட்டுக்கான தூண்டுதற் கருத்துக்கள்”(peace conference hints) முப்பது ஆண்டுகளுக்குப்பின் நடந்த நிகழ்ச்சிகள் யாவற்றையும் முன்னே படம் பிடித்துக்காட்டும் தன்மையுடையவை யாயும், அத்தீமைகளை விலக்கும் வகைதுறைகள் தரும் தன்மை யுடையவையாயும் உள்ளன. ஆனால், தூண்டுதலுரைகள் என்ற தலைப்பே அதை அரசியல் அறிஞர்குழு விரும்பி ஏற்கமுடியாத நிலையை உண்டு பண்ணிற்றென்னலாம். இதன் வருங்கால நோக்கின் திறனைக் கீழ்வரும் வாசகங்களால் காணலாம்.
“அடுத்த போர் என்ற ஒன்று நடக்கும்படி விட்டோமே யானால், அந்தப் போர் வெறும் ’மன்னர்விளையாட்’டாயிராது. உயிரற்ற பகடைகளுக்கு மாறாக உயிருள்ள மனிதப் பகடைகளை வைத்து ஆடப்பெற்று, அவற்றை உயிரற்ற பகடைகளாக்குவதன் மூலமே வெற்றிபெறும் சூதாட்டமாகக்கூட அது இராது. அது போரிலீடுபடாத மக்களையும் முழு நகரங்களையும் அழிக்கும் அறிவுத் திறமை மிக்க முயற்சியாயிருக்கும். படைவீரர் மட்டுமல்ல, நாம் அனைவருமே நிலத்திலகழ்ந்த வளைகளுக்குள் சென்ற எலி பெருச்சாளி வாழ்க்கை வாழவேண்டியிருக்கும்.”
இது தவிர, ஜெனீவா உலக சங்கம் ஏற்படும்போதே, அதன் எதிர்கால இடையூறுகளை அவர் விளக்கியுள்ளார். ஐரோப்பா வின் உட்பூசல்கள் அமெரிக்காவையும் தாக்கித் தீருமென்றும், அவற்றைத் தலைவர் வில்ஸன் தீர்க்கமுடியா விட்டால் அடுத்த போரைத் தடுக்க முடியாதென்றும் கூறியுள்ளார். மேலும், உலகை ஒன்றுபடுத்துமுன் ஐரோப்பாவை ஒன்றுபடுத்தவேண்டு மென்றும், கீழ்த்திசை நாடுகளை முதலிலேயே சேர்ப்பது பயன் தராதென்றும் குறிப்பிட்டுள்ளார். “அரசியல் துறையில் மனித இனக்குழு கட்டவிழ்ந்து மாறுபட்டு வருகிறது. அதனை ஒரே கட்டுக் கோப்புள்அடக்க இன்னும் நீண்டகாலம் பிடிக்கும்………. வரம்புகடந்த எல்லை, வலிமையும் தரும்; மிகுந்த தொல்லை களையும் இடையூறுகளையும் அத்துடன்கூட உண்டுபண்ணும்.” சீனா, ஜப்பான் ஆகியவற்றால் ஜெனீவாவில் கூட்டமைதி முதலில் முறிவுற்றது என்பதை நாம் அறிவோம். ஷா இதனை முன்கூட்டி அறிந்து கூறினார்.
“நாம் கொன்ற ஒவ்வொரு ஜெர்மானியனும், நாம் உறுப்பிழக்கச்செய்த ஒவ்வொரு ஜெர்மானியனும், ஜெர்மன் குழந்தையும், அந்த ஜெர்மானியர் பிரிட்டனிலும் நேச நாட்டிலும் கொன்ற நம்மவர் போலவே நாமிழந்த செல்வங்களாவர்.” ஷாவின் தொலைநோக்குக்குக், அருள் நோக்குக்கும் இவ்வுரை ஒரு நற்சான்று.
பொதுவாகப் போர்பற்றி ஷா கூறும் கூற்றுக் கூட அவர் நுண்ணறிவைக் காட்டுகிறது. போரை வெறுக்க வேண்டுமானால் போரைப் பார்க்கவேண்டும். “போர்க்களத்திலிருந்து ஒருவர் எவ்வளவு தொலை விலகியிருக்கின்றனரோ, அந்த அளவுக்கே அவர்கள் போர்வெறிமிக்கவராயிருப்பது காணலாம்.”
போர்க்களங்களையும் போரழிவுகளையும் வந்து பார்வை யிடும்படி போர்முடிவில் ஷாவைப் பிரிட்டனின் படைத்தலைவர் அழைத்திருந்தார். ஷா அதன்படி சென்று தாம் கண்டவற்றைத் திறம்பட வெளியீட்டிதழ்களுக்கு வரைந்தனுப்பினார்.
ஷா தம் ஒழுக்கமுறை வழிகாட்டியான ஷெல்லியும், அவர் நெறியினரும் உடலூற்றையே உயிரூற்றினும் மிகுதி கண்டிப்பதன் காரணத்தை 1915-ல் ஒரு கட்டுரையில் விளக்கியுள்ளார். “மிக உயர்ந்த மக்களை மிக இழிந்த மக்கள் கைப்பற்றி அவர்கள் உயர்வை இழிவுபடுத்தப் பயன்படுத்தத் தக்க கருவி உடலூறு ஒன்றே. அத்துடன் கீழ்த்தரக் களியாட்டச் சுவை உடல் சார்ந்த தாயிருப்பதனாலேயே, கடவுட் பற்றிற் சிறந்தவருக்கும் கடவுள் மறுப்பாளருக்கும் ஒருங்கே அது உரிய தாயிருக்கிறது,” என்பது ஷாவின் கூற்று.
முதல் உலகப்போர் 1914-ல் தொடங்கி 1918 வரை நடை பெற்றது. இக்கால முழுவதும் ஷா போர்பற்றிய பல நூல்கள், கட்டுரைகள் எழுதியதுடன் “மனமுறிவு மாளிகை”(Heart break house) என்ற ஒரு நாடகமும் எழுதி வந்தார். தவிர “ஓஃவ்ளாஃகர்ட்டி” (O’ Flaherty,V.C.) “பெருரூஸ லத்தின் இங்கா” (Inca of Perusalem) “அகஸ்டஸின் தொண்டு”(Augustin does his bit) “போல்ஷிவிக் பேரரசி ஆனாஜான்ஸ்கா” ஆகிய நாடகங்களும் இதே காலத்திற் குள்ளேயே எழுதி முடிக்கப்பட்டன.
“ஒஃவ்ளாஃகர்ட்டி” அயர்லாந்தில் படைச் சேர்ப்புக்காக எழுதப்பெற்ற ஓரங்க நாடகம். ஆங்கிலேயரையே ஜெர்மானி யரினும் மிகுதி வெறுத்தவர்கள் அயர்லந்துக்காரர்கள். ஆகவே, “ஷா ஆங்கிலேயரே நம் எதிரிகள், அவர்களுக்கெதிராக எழுங்கள்” என்று நகைத்திறம்பட ஜெர்மானியரை ஆங்கில இனத்தவரென்று சுட்டிக்கூறினார். பெருஸலத்து இங்கா ஜெர்மன் பேரரசர் கெய்சரின் நற்பண்புகளை எடுத்துக்காட்டி, அவர் தவறு களையும் விளக்கிற்று. “பல்லாண்டுகளாக நான் அவர்களுக்கு இலக்கியம், கலை, அறிவியல்கள், செல்வம் யாவும் வழங்கினேன். அவற்றால் அவர்கள் வாழ்வு பொங்கி மலரும் என்று அவாவினேன். அவர்கள் அதனைப் புறக்கணித்தனர். இப்போது நான் அவர்களுக்குக் கொடுங்கொலைக் கூற்றுவனைத் தருகிறேன். இப்போது அவர்கள் வாழ்த்துப்பாடுகிறார்கள். வாழ்க்கைவளம்பெறத் தராத பணத்தை அதை அழிக்கத் தருகிறார்கள் வரி தருவோர்,” என்ற கெய்ஸரின் சொற்கள் மனித இனத்தின் ஒரு குறைபாட்டையே தூண்டிக் காட்டுகின்றன.
“அகஸ்டஸின் சிறுதொண்டு” போர்க்காலப் பணிமனை களின் திறமையின்மையைப் படம்பிடித்துக் காட்டிக் கிண்டல் செய்து அல்லது வசையாக்கித் தாக்குகிறது. போர்முயற்சியின் பாரிய அளவே இத் திறமையின்மைக்குக் காரணம். பேரரசுப் பயிற்சிபெற்ற புதிய ஆட்கள் சேர்க்கப்பட்டிருந்தனர். திறம் பட்ட பழைய ஆட்களின் திறமை வெற்றிக்கு உதவினும், பிறர் துணை உதவி அதற்கிணங்கச் சரிசம நிலையடையாதது இயல்பே. ஆயினும், ஷாவின் தாக்குதல், அக் குறைபாட்டைப் பொது மக்கள் கண்முன் கொண்டுவரும் நற்பணி செய்தது என்பதில் ஐயமில்லை.
போரின்முடிவு ஷாவின் வாழ்க்கையில் ஒரு பகுதியின் முடிவைக் குறிக்கிறது என்னலாம். உண்மையில் இப்போது அவர் 60 ஆண்டுக்கு மேற்பட்ட கிழவரே யாயினும், அவர் பேச்சும் உரையும் இப்போது கூட அவற்றின் துடுக்குத்தனத் தையோ, நிமிர்ந்த இறுமாப்பையோ, எதிர்கால நோக்கிய தன்னம்பிக்கையையோ இழந்துவிடவில்லை. ஆயினும், உள்ளார்ந்த அறிவுப்பண்புகளை நோக்க, இப்பருவமே ஷாவின் இளமைக்காலம்; அஃதாவது, வளர்ச்சிக்காலம் முற்றிய பருவம் என்னலாம். இதற்குப் பிற்பட்ட நூல்களில் போராட்டப் பண்பு சிறிது குறைவுற்று அவர் செயலறிவுமுதிர்ச்சியும், அருட்கனிவும், கலைப்பண்பும் நிறைவுற்றுக் காணப் பெறுகின்றன. அவர் கலை ஞாயிறு தன் உச்சநிலை திரிந்துவிட்டதாயினும், அதன் ஒளிக் கதிர்கள் மாலைவானிற் சிதறுண்டு பல்வண்ண ஓவியங்களாகப் பரக்கின்றன.
1913-ல் ஷாவின் அன்னையாரும், 1920-ல் அவர் தமக்கை யார் லூஸியும் காலமாயினர். போர்க்கால அதிர்ச்சியும், அவர் வாழ்வில் முதல் தாயக ஒளியாயிருந்த அன்னையாரும் தமக்கை யாரும் பிரிந்ததால் ஏற்பட்ட தனிமையுமே, அவர் வாழ்வின் நம்பிக்கை உறுதியைச் சிறிது அலைத்திருக்க வேண்டும் என்று நாம் கருத இடமுண்டு. ஏனெனில் “மனமுறிவு மாளிகை”யில் நாம் இம்மனவுலைவின் சின்னத்தையே காண்கிறோம். இந்நாடகம் ரஷ்ய ஆசிரியர் செக்காவின் மெல்லிய சிலந்தி நூல் வலைபோன்ற தொய்வும் விரிவுமுடைய கலைப்பண்புடன் தொகுக்கப்பட்டுள்ளது. 1915-ல் அவர் இல்லமாகிய “அயாட் ஸென்ட்லாரன்” ஸினருகே விழுந்த ஒரு ஜெர்மன்குண்டின் நினைவுத் தூண்டுதலாய், கதை ஒரு குண்டு வீழ்ச்சியுடன் முடிவுறுகிறது.
மாலைச் செவ்வானம்
ஷாவின் கொள்கை உறுதியை அவர் வறுமையிடையே காணலாம். அவர் போராட்டப் பண்பை அவர் இடைக்கால வாழ்வில் காணலாம். ஆனால், அவர் வாழ்க்கையிறுதியிலேயே காணலாம். அவர்வாழ்வின் இம்முழுநிறை பண்பை இப் பருவத்தில் பலரும் உணர்ந்து போற்றத் தொடங்கிவிட்டனர் என்பதையும் காண்கிறோம். 1916-ல் கிரெகரிப் பெருமாட்டி தாம் இயற்றிய ‘பொன் இலந்தைப்பழம்’(Golden Apple) என்ற நூலை அவர் பெயருக்கப் படைப்பாக்குகையில், “என் நண்பருள் இனிய நற்பண்புக்குரிய நண்பரான ஜார்ஜ் பெர்னார்டு ஷாவுக்கு,” என்று அவரைக் குறிக்கிறார். போர்க்காலத்தில் காயம்பட்ட படைவீரர் பாடியில் பல பணி மனையாட்களுடன் அவர் பழகிவந்தார். அப்போது ஒருவர் அவரைப்பற்றிப் பிற்காலத்தில், “நாங்கள் கண்ட மனிதருள் பணிவுமிக்கவரும், இயேசு கிறித்து வுடன் மிகவும் ஒப்புமையுடைய அருளாளரும் அவரே. உண்மை யில் இப் பண்பை முதலில் கண்டு பாராட்டியவர் எங்களிடையே உள்ள ஒரு சமயத்துறைவரேயாகும்,” என்றாராம்!
1924-ல் ஷாவின் உயர்கலைப் பண்புகளும், உலக அமைதிக்கு அறிவுத்துறை, கலைத்துறைகளில் அவர் ஆற்றிய நற்பணிகளும் உலகெங்கும் நன்மதிப்புப்பெற்றன. இதன் சின்னமாக அவ் வாண்டில் அவருக்கு இலக்கியச் சார்பில் நோபல் பரிசு வழங்கப் பெற்றது. ஷா அதன் வருவாயை அப்பரிசுவழங்கிய செல்வரான டாக்டர் நோபெலின் தாய்நாட்டின் நன்மையையும், உலக நன்மையையும் பெருக்கவே செலவு செய்தார். ஆங்கிலம் பேசும் நாடுகள் எல்லாவற்றிலும் ஸ்வீடன்நாட்டு இலக்கிய, கலைப் பண்பாடுகளை வளர்ப்பதற்கான ஏற்பாடுகளுக்கு அவர் அவ் வருவாயை ஈடுபடுத்தினார்.
அடுத்த ஆண்டில் முதலமைச்சராயிருந்த திரு. ராம்சே மாக்டனால்டுக்கு டி. பி. ஓகோனர் என்ற செல்வர் அளித்த விருந்தில் ஷாவும் அழைக்கப்பெற்றிருந்தார். அச்சமயம் ஷா முகிழ்த்தருளிய சொற்கள் அவர் வாய்மை, பணிவு, ஏழையர் நலங்களை மறவாமை ஆகிய பண்புகளை நன்கு எடுத்துக் காட்டுகின்றன. உணவைக் கையிலெடுத்துக் கொண்டு, “இவ்வுணவு ஐம்பதாண்டுகளுக்குமுன் எனக்கு வாழ்க்கைக்கு எத்தனையோ நற்பயன் அளித்திருக்கும்,” என்றார். புகழ் தகுதிக்கு உதவுவரோ அல்லது தகுதி கண்டு மரிப்பதோகூட அல்ல; செயல் வாழ்வு தீர்ந்த தகுதியைக் குறிக்கும் சின்ன மாகவே பெரும்பாலும் இயங்குகிறது என்பதை இது சுட்டிக் காட்டுகிறது. வாழ்க்கையில் வெற்றியடைந்த புகழாளர் பலர் தம் வெற்றியிடையே தோல்வியையும், தோல்வியளற்றில் இன்னும் கிடந்துழல்பவர்களையும் மறந்தே விடுவர். ஷா இவற்றை நினைத்தார்; நினைத்ததுடன் அவற்றைத் தம் செல்வ நண்பருக்குப் பகைமையற்ற ஒரு படிப்பினையாக எடுத்துக் காட்டினார்.
ஷாவின் தலைசிறந்த அருட்செயல்களில் ஒன்று டாக்டர் ஆக்ஸ்ஹம் என்ற மருத்துவர் வகையில் அவர் எடுத்துக் கொண்டதே. பண்டைத் தமிழரிடையே வணிகரும், தொழிலாளரும் தொழிற்குழுக்கள் அல்லது செட்டுக்கள் அமைத்துத் தமக்குள் சட்டதிட்டங்கள் அமைப்ப துண்டன்றோ? அதுபோலவே, மேனாட்டிலும் மருத்துவரிடையே பழங்கால முதலே தொழிற் குழு உண்டு. புதிய மருத்துவ ஆராய்ச்சிகளுக்குப் பின் இக்குழு சட்டப்படி பதிவுபெற்றுப் பின்னும் கட்டுப்பாடடைந்தது. இப் பதிவு பெற்ற குழுவின்(Registered medical practitioners) திட்டப்படி பதிவுபெறாத மருத்துவரை ஆதரிக்கவோ, உதவவோ கூடாது. இத்தகைய பதிவு பெறாத ஒரு மருத்துவர் ஸர் ஹெர்பட் பார்க்கர். அவருடைய நோயாளி களுள் ஒருவருக்கு டாக்டர் ஆக்ஸ்ஹம் பதிவு பெற்றவர் குழுவின் தனிமருந்தாகிய மயக்க மருந்தை வழங்கினாராம். இதற்காக டாக்டர் ஆக்ஸ்ஹம் பொது மருத்துவக்குழு மன்றத்தினால் குழுவிலிருந்து நீக்கப்பட்டார்.
ஷா டாக்டர் ஆக்ஸ்ஹமின் செயலின் நேர்மைக்காகப் பொதுமக்களிடையேயும், செய்தியிதழகங்களிலும் போராடி வெற்றிகண்டார். இவ் வாதாட்டத்தில் அவர் தம் அருள் முடிவுக்கு எத்தனை செயலுலக நிகழ்ச்சிகளின் படிப்பினைகளை எடுத்துக்காட்டுகிறார் என்று காண்டல் வேண்டும்.
“இச்சிறு தவறைத் திருத்த நான் முயலும்போது பலர் எனக்கு மருத்துவர்மீது ஏதோ பகைமை இருப்பதுபோலசும், ஸர் ஹெர்பர்ட் பார்க்கர் பதிவுபெற்றிருந்தால் எல்லாருமே பதிவு பெற்றுவிடுவது போலவும் பேசுகின்றனர். ஒருவர் பதிவினால் யாவரும் பதிவுபெறுவர் என்பது, இசைப் பயிற்றியில்லாமலே பிராம்ஸூக்கு இசைப்பேராசிரியர் பட்டம் கிடைத்ததால் தெருப்பாடகர் ஒவ்வொருவருக்கும் அது கிடைத்துவிடும் என்பதுபோன்றதே. பல்கலைக்கழகங்கள் அவ்வண்ணம்செய்ய மாட்டா. ஒருவருக்குத் தனிப்படச் செய்வதால் எல்லாருக்கும் செய்யவேண்டுமென்ற கட்டாயமுமில்லை. மேலும் மருத்து வரிடையே எனக்கு இருக்கும் அத்தனை சிறந்த நண்பர்கள் வேறு யாருக்கும் இருக்க முடியாது. மருத்துவரைப்பற்றிய என் நூல்கள் அவ்வளவு வாய்மைத் திறம் உடையனவாய் இருப்பது அதனா லேயே. மருத்துவர் என்ற முறையில் அந் நண்பர்களால் பேச முடியாத அடங்கிய உள்அவா ஆர்வங்களையே நான் வெளியிட்டுக் கூறுகிறேன். காரணம் அவர்களைப்போல் வாய்திறப்ப தனால் என் வாழ்க்கையை நான் அழித்துக் கொள்ளவோ, என் பெயரை இகழுக்கிரையாக்கிக்கொள்ளவோ போவதில்லை. அவர்களுக் கில்லாத விடுதலை உரிமை எனக்குண்டு. வாயற்ற இவ்வாழ்க்கைக் குழுவுக்கு நான் வாயாய் உதவுகிறேன்.”
ஷா தமக்குரியதாகக் கூறும் மருத்துவ உலகு பற்றிய அறிவு வெறும் வீம்புரையல்ல. மருத்துவர் இருதலை மணியம், அதனை நன்கு விளக்கிக் காட்டுகிறது. 1918-ல் அவர் ‘மருத்துவர் மயக்கங்கள்’ என்று மற்றும் ஒரு நூல் எழுதினார். ஷாவின் கேலியும் வசையும் இறுமாப்பும் கலந்த வழக்கமான தொனியும் தலைப்புமே அவர் நூல்களின் உண்மை அறிவுத்துறை மதிப்பை மறைக்கின்றன. மேலும் அவர் அறிவுத்துறையாளர் துறைச் சொல் நடையை வழங்காமல் மக்கள்மொழியில் நேரிடையாக மக்களுக்கே அறிவுதரும் வழக்கமுடையவர். இதுவும் அறிவுத் துறையாளரின் இறுமாப்பைப் புண்படுத்திற்று. இத்தடைகளை அகற்றி அவர் நூல்களை அறிவுத்துறையினரிடையே உலவவிடக் கூடுமானால், அவை அறிவுத்துறையிலும் நிறைந்த செயலறிவுத் தூண்டுதலுக்குரிய சீர்திருத்த உரைகளாக இயலத்தக்கன.
ஷாவின் வாழ்விலும், கருத்துரைகளிலும் காணும் இம் முதிர்ச்சிக்கனிவை அவர் பிற்கால நாடகங்களில் இன்னும் சிறக்கக் காணலாம். 1918 முதல் 1920 வரை அவர் பெருமுயற்சி யுடன் விரைந்தெழுதி முடித்த “மீண்டும் மெத்துஸலே நோக்கி” (Back to methusaleh) என்னும் நாடகக்கோவை இதனை மலைமிசை மதியமென வளமுற விளக்குகிறது. இக்கோவை ஒரு தனி நாடகமன்று; ஒரே பொருள்பற்றித் தொடரும் ஐந்து பெரிய நாடகங்களே. இது விவிலிய நூலில் கூறப்பட்ட உலக வரலாற்றை ஒரு நாடகமாக்கிக் காட்டுகிறது. ஆனால், ஷாவின் ஆழ்ந்த ஆராய்ச்சிப் பண்பு விவிலிய நூலிற் குறிக்கப்பட்ட படைப்புக் காலத்திலிருந்து இன்றுவரையிலுள்ள 4000 ஆண்டு வாழ்க்கை யையும் புதிதாகப் படம் பிடித்ததுடன் நில்லாது, கி.பி. 31,920 வரை தன் கனவியல் திறத்தைக்காட்டிப் புத்துலகு படைத்துள்ளது!
தொல் முதல் காலம்(in the beginning) கி. மு. 4004; பார்னபாஸ் உடன் பிறந்தார் வரலாறு(Gospel of the brothers Barnabas) கி. மு. 1920 வரை; சேதி நடைபெறுகிறது(The thing happens). கி.பி. 2170; முதிய நன்மகன் துயர் முடிவு(Tragedy of an elderly gentleman) கி.பி.3000; கருத்தெல்லை யின் வெளிவரம்பு(As far as thought can reach) கி. பி. 31,920.
அரசியலாரிடம் நாடகங்கள் ஒவ்வொன்றையும் பதிவு செய்யும்போது நாடகம் ஒவ்வொன்றுக்கும் பதிவு கட்டணம் செலுத்தவேண்டும். ஷா இந் நாடகக்கோவையை எட்டு நீண்ட காட்சிகளாக்கி ஒரே நாடகமாக பதிவு செய்ய நாடினாராம்! ஆனால், மன்னவைச் செயலாளர்(Lord Chamberlain) அதனை ஐந்து நாடகங் களாகவே பதிவு செய்து கட்டணம் கணித்ததாக அறிகிறோம்!
ஊழ்கண்ட மனிதரில் நாடகத்தின் கலைத்தத்துவமாக அவர் வாழ்க்கைக் கோட்பாடு கருவுற்றது. ஸீஸரும் கிளியோப் பாத்ராவிலும், மனிதனும் மீமிசை மனிதனிலும் அது கலையின் அடிப்படையாயிற்று. ஆனால், ‘மெத்து ஸலே நோக்கி’ என்னும் இந்நாடகக் கோவையில் அவர் வாழ்க்கைக் கோட்பாடு கலை கடந்து தனிப்பெருமை கொண்டுவிட்டது. கலைக்குரிய அடிப் படையாகக் கோட்பாடு இங்கு வகுக்கப்படவில்லை. கோட் பாட்டுக்கு விளக்கந்தரும் ஒரு மேற்கோப்பாகவே கலை இங்கே காட்சி தருகிறது. கோட்பாடும் முழுநிறைவு பெற்றதனுடன் அமையாமல், அவர் கனவார்வமாகப் பொங்கி வழிகிறது. அவர் சீர்திருத்த ஆர்வம் தொடக்க நாடகங்களில் வாழ்க்கையின் தனிக்கூறுகளைத் தாக்கித் தகர்ப்பதுடன் நின்றது. பின் ஆக்க முறையில் ஒரு வாழ்க்கைத் திட்டமாக விளங்கிற்று. இங்கே அதுவாழ்க்கை முழுமையையும், இதன் எதிர்காலத்தையும் முற்றிலும் கலைஞன் கலைக்களத்திலிட்டு உருக்கிப் புதிதாக வார்க்கும் ஒரு வார்ப்படமாக உருவளிக்கிறது.
வாழ்க்கையை உருவாக்கி வகுப்பது சூழ்நிலையே என்பது டார்வின் கோட்பாடு. ஷா இதனைத் தொடக்கத்திலிருந்தே எதிர்த்தார். உயிர்களின் படிவளர்ச்சி முறையை அவர் ஏற்றுக் கொண்டாலும், லமார்க்கைப் பின்பற்றி அதை உள்ளுயிராற்றலின் விளைவாகவே அவர் கொண்டார். ஆகவே, ஒருவர் வாழ்வின் வெற்றி தோல்விக்கு முடிவான காரணம் அவர்கள் செயலறிவு அன்று; அவர்கள் அவா ஆர்வமே. ஆனால் அது தனிமனிதனின் அவா ஆர்வ மட்டுமன்று; தனிமனிதன் அவா ஆர்வங்களை உள்ளடக்கி, அதனைத் தன் கூறு ஆகக்கொண்டு அதனைக் கடந்த பொது மனித இனத்தின் அவா ஆர்வமே. இதன் செயலையும், விளைவையும் உள்ளவாறு கணித்துணர நம் தனிவாழ்வு போதாது. ஆகவேதான் ஷா வரலாறு கடந்து ஆதியும் அந்தமும் வளைத்துக் காண்கிறார். மேலும், இப் பொது அவா ஆர்வத்தில் பங்குகொள்ளுந் தோறும் மனிதன் வாழ் நாளும் அதற்கேற்ற அளவில் நீளும் என்பது ஷாவின் புதிய கோட்பாடு.
இது வெளிப்பார்வைக்கு கவிஞனின் கனவுப் பித்தம் எனத் தோற்றலாம். ஆயினும் ஷா 94 ஆண்டு வாழ்ந்தார் என்பதும், இறுதிவரை உடல்நலமும் அறிவுநலமும் குன்றாதிருந்தார் என்பதும் கண்கூடான உண்மை. அவர் 94-ம் ஆண்டில் பிரிந்தது கூடத் தற்செயலான ஒரு இடரினாலேயேயன்றி வேறல்ல.
மேலும், ஆர்ச்சிபால்டு ஹென்டர்ஸன் இதற்கு மற்றும் ஒரு புறச்சான்று தருகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் பிரிட்டனின் வாழ்வெல்லை மதிப்பு(Expectation of life), 40 ஆக இருந்தது. 20-ம் நூற்றாண்டின் முதற்பாதியில் அது 60 ஆகியுள்ள தாம்! இதே விரைவில் வளர்ச்சி தொடர்ந்தால், ஒரு நூற்றாண்டுக்குள் வாழ்வெல்லை 150 ஆய்விடமுடியும் என்றும் அவர் துணிகிறார். கி.பி. 2000-க்குப் பின் மனித வாழ்வெல்லை மீண்டும் மெத்துசலே கால நோக்கிப் பன்னூறாக நீளும் என்ற ஷாவின் கோட்பாடுடன் இது ஒத்து உணரத்தக்கது. டார்வின் படிவளர்ச்சி முறையிலும் இது கூடாததன்று. நொடிக்குப் பல முறை பிறந்திறக்கும் உயிரின அணுக்களிலிருந்து மனிதன்வரை நீடித்து வளரும் வாழ்வின் தொடர்பே இது. இயற்கையின் அழிவுச் சூழ்நிலை மாறினால், ஆக்கச் சூழ்நிலை செயலாற்றி, மேலும் பெருக்கமும் வாழ்க்கை நீட்டிப்பும் ஏற்படும் என்பதை டார்வினும் எடுத்துக் கூறியுள்ளார்.
பிரிட்டிஷ் முதல்வர்களான ஆஸ்குவித்தும், லாயிட் ஜார்ஜூம், லூபின், ஜாபிஸ் பர்ஜ் என்ற உறுப்பினர் வடிவில் நாட கத்தில் இடம் பெறுகின்றனர். ஷாவின் புனைவியற் புகைக் கூண்டுகளை ஒரேயடியாகப் புனைவியல் முகில் மண்டலத்தில் பறக்காதபடி மெய்யுலகுடன் அவற்றை இணைத்துக் காட்ட இவ்வுறுப்பினர் உதவுகின்றனர்.
1945-ல் ஷாவின் 90-வது பிறந்தநாளின் சிறப்பு வெளியீடாக இந்நாடகக் கோவை உலக இலக்கிய வரிசைப் பதிப்பில்(World’sClassics series) 500-ஆவது ஏடாக வெளியிடப்பட்டது. இதற்கு ஷா எழுதிய பாரிய 6000 சொற்களடங்கிய முன்னுரையில், அவர் தம் வழக்கமான நீண்ட வாதங்களால் தம் நூலுக்குத் தாமே ஆராய்ச்சி மதிப்புரை எழுதி இறுதியில், ‘மெத்து ஸலே நோக்கி’ எனும் நாடகம் உலக இலக்கிய வரிசையில் இடம்பெற்றுவிட்டது. இது ஒன்று, ஒரு உலக இலக்கியமாயிருக்கவேண்டும்; அன்றெனில் அது ஒன்றுக்கும் உதவாதது என்று கூறவேண்டும்! என்று முடிக்கிறார்.
இது முதன் முதல் 1922-இல் வெளியிடப்பட்டது. அடுத்த ஆண்டிலேயே அது பிர்மிங்ஹாங் மேடையில் நடிக்கப்பெற்றது.
‘ஜித்தாவின் பழி நீக்கம்(Jitta’s Atonment)’ 1922-ல்இயற்றப் பெற்றது. ஆஸ்டிரியா வில் ஷாவின் நாடகங்களை மொழி பெயர்த்து அவருக்குப் பெருமை தந்தவர் ஸீஜ்ஃவீரீட்டி ரொபிட்ஸ். அவர் இயற்றிய நாடகமொன்றின் ஆங்கிலத் தழுவல் பொழிபெயர்ப்பே இந்நாடகம்
‘மெதுஸலே நோக்கி’ என்ற கோவையே ஷாவின் வாழ்க்கைத் தத்துவங்களை உணர்பவருக்கு நாடகத் துறையில் கிட்டும் உச்சக் கலைமுகடு என்னலாம். ஆனால் கலைக்கோப்பு, பண்போவியச் சிறப்பு, ஷாவின் அருளாண்மையின் புறப்பொறிப்பு ஆகியவைககளிலும் அவருக்குத் தனிப் பெருஞ் சிறப்புத் தரும் நாடகம் ‘அருள் திரு. ஜோன்’(St. Joan) ஒன்றே ஆகும். அவருட னொத்த வயதினரான பிற பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கலைஞர்களனைவரும், பிரிட்டனிலும் பிறநாட்டிலும் ஒவ்வொரு வராக 1924-க்குள் இறந்துவிட்டனர். பழைய நூற்றாண்டின் எஞ்சிய மிச்சமாக நின்ற ஷா, இப்போதும் தம்வாழ்க்கை யுயிர்ப் பிழவாமல் ஒரு புது மலர்ச்சி எய்தி, தம் தலைமைப் படைப்பாக ஒரு நாடகத்தை இயற்றியது மிகவும் வியப்பும், இறும்பூதும் தரும் செய்தியேயாகும்.
ஜோன் 16-ம் நூற்றாண்டில் ஃபிரான்சின் தனிப் படைத் தலைவராய் நின்று, பிரிட்டனை வென்ற ஃபிரஞ்சு நாட்டு இளநங்கை. அவள் நாட்டினரே அவள் அருமை யறியாமல் அவளைக் காட்டிக்கொடுத்தனர். அவள் எதிரிகளான பிரிட்டிஷ் காரர் அவளைச் “சூனியக்காரி, கடவுளை மறுத்தபேய்மகன் கையாள்” எனக்குற்றஞ்சாட்டி எரித்து விட்டனர். அவள் வீரப் பெண்மணியா, தெய்வ அருள் பெற்றவளா, அல்லது மாயக் காரிதானா என்ற கேள்விகள் உலகில் 500 ஆண்டுகளாகப் பலவாறாகக் கேட்கப்பட்டு. எவராலும் முடிவுபடுத்தப் படாமலே இருந்தன. 1920-ல் ஜோன் எரியுண்டதற்கு 489 ஆண்டுகட்குப் பின்னர். அவளை எரித்த கத்தோலிக்கத் திருக்கோயிலகத்தாரே அவளைத் தெய்வ அருள்பெற்ற திருவருள் தொண்டருள் ஒருவராக ஏற்றனர்.
ஷா ‘மீமிசை மனிதர்’ வாழ்வில் மிகுதி அக்கரை கொண்டவர். அவர் தேடிய பண்புகள் நெப்போலியன், ஸீஸர் ஆகியோரிடம் காணப்பெற்றன. அவர்களை அவர் சித்திரித்துக் காட்டினார். ஆனால், தம் முழுப்படமாக ஒரு பெருவாழ்வை அவர் நாடியவண்ணமிருந்தார். இவ்வகையில் கிராம்வெல், முகம்மது ஆகியவர்கள் அவர் மனக்கண் முன் நடமாடினராம்! ஆனால், முன்னவர் ஒரு நாட்டுக்குட்பட்ட பெருமையுடையவர். பின்னவரைப்பற்றி எழுதுவதோ கருதக்கூடியதன்று. அவர் உலகளாவிய ஒரு பெருஞ் சமய முதல்வர். அச்சமயத்தார் உளப் பாங்குகளை முழுதும் கலைப்பண்பமைந்த சித்திரம் புண்படுத்தக் கூடும். இந் நிலையில் ஜோன் பற்றிய புத்தெழுச்சியும், புது நிகழ்ச்சியும் அவர் ஆர்வத்தை அப் பக்கம் திருப்பின. திருமதி ஷாவே அருள் திரு. ஜோனிடம் மிகுதி ஆர்வம்கொண்டு அவரை அவ்வகையில் தூண்டியதாக அறிகிறோம்.
ஷாவின் நாடகங்களில் பல தனிச்சிறப்புக்கள் உண்டு. ஆனால், அவற்றுள்ளும் ஜோன் நாடகம் பல தனிச்சிறப்புக்கள் உடையது. ஷேக்ஸ்பியர் தம் நாடகங்களுள் சிலவற்றுள் தம்முதனூலைப் பலவிடங்களில் பகர்த் தெழுதியுள்ளனர். ஆனால், இங்ஙனம் பகர்த்தெழுதிக் கலைப்பண்பு தருவது கலையெளி மையாயினும், எளிய கலை அன்று என்பதைப் பலரும் அறிவர். அது கூரிய பளபளப்பான வாளால் உடலைத் தடவும் வாட் கலைஞன் செயல்போன்றது. ஷா இந்நாடகத்தில் இதே வகைப்பட்ட செயலைத் துணிந்து செய்து காட்டியுள்ளார்! நாடகத்தின் பெரும் பகுதியும் வழக்குமன்றப் பதிவேடுகளை அப்படியே பகர்த்தி எழுதியது போல்காட்சி தருகின்றது. நாடகக் கலைஞர் தாமாகத்தம் புனைவியலை விளிப்பக் காட்டாமலே, உரையாடல்கள், கதைப்போக்கு ஆகியவற்றால் கதையுறுப்பினர் பண்புகளும், நிகழ்ச்சிகளின் இயற்கையுணர்ச்சிகளும் ததும்பும் படி செய்துள்ளார். இச்செயல் கலைத்திறத்தின் உச்ச எல்லையைக் காட்டுகிறது என்பதில் ஐயமில்லை.
இந் நாடகத்தில் வசை இல்லை; தனி வாழ்க்கைக் கோட்பாடு எதுவுமில்லை. ஷாவியற்பண்பு((Shavianism)) எதுவும்கூட இல்லை யென்னலாம். ஷாவின் கலைத்திறம் மட்டுமே தனித்து நிற்கிறது. அத்துடன் காண்டிடாவில் பெண்மையை ஒருகன்னித் தாய்மை யாகக் காட்டிய ஷா, இங்கே பெண்ணையும் தம் மீமிசைமனிதன் எல்லைக்குக் கொண்டு சென்று இயேசுவோடொத்த ஒரு தூய பெண் வீரமரபை எடுத்துக்காட்டியுள்ளார். இந் நாடகம் ஷாவின் நாடகங்களிடையேகூடத் தனிப்பட இறவாச் சிறப்புடையது என்று உறுதியாகக் கூறலாம். இருபதாம் நூற்றாண்டில் ஷேக்ஸ்பியர் மீட்டும் பிறந்துவந்திருந்தால்கூட. ஜோனின் படைப்புக்கண்டு அதிர்ச்சியுற்றிருப்பார் என்பதில் ஐயமில்லை. உண்மையில் ஷேக்ஸ்பியர் நாடகத்தில் வரும் இதே ஜோன் அவர் இளமைக் கால முதிராப்படைப்பாயிராவிடில், நாம் ஷேக்ஸ்பியரின் ஜோனுடன் ஷாவின் ஜோனை ஒப்பிட்டுக் காணும் நிலையிலேயே இருந்திருக்கக் கூடும்.
ஷா ஓர் அறிஞரா, கலைஞரா என்பதற்கு இந் நாடகமே இறுதியான மறுமொழி தரப்போதியது. அவர் அறிஞர். கலையில் அவர் அறிவு அடிக்கடி தலையிட்டது. பல தடவை கலையை அது ஆட்கொண்டது. ஆனால், அவர் அறிவிலும் அவர் கலை சிறப்புக் குறைந்ததன்று. ஜோனில் கலப்பற்ற அவர் தூய கலைத் திறத்தைக் காண்கிறோம். இத்தகைய தூய கலைப்படைப்புக் களை அவர் இன்னும் படைத் திருந்தால், அறிவுக் கலைஞராக ஷேக்ஸ்பிய ருடன் ஒத்த இடம் பெறுவதுடன், மற்றொரு புதிய ஷேக்ஸ்பிய ராகக் கூட விளங்கியிருக்கக்கூடும்!
ஷா ஆசிரியர் கூற்றாக எதுவும் கூறாமல், புதிய உறுப்பினராக எவரையும் மிகுதி உருவாக்காமல், ஜோனை உலக முள்ளளவும் மறவாத ஓர் ஒப்பற்ற தெய்விக நங்கையாக்கியுள்ளார். ஷாவின் கையில் ஜோனின் தனிச் சிறப்புக்குக் காரணம் உண்டு. அவர் ஒரே வீச்சில் ஜோனை மூன்று குறிக்கோள்கள் வந்து ஒன்றுபடும் நிலையில் படைத்துள்ளார். அவள் புராட்டஸ்டண்டு சமயத்தின் எதிர்ப்புக்காளாக மாண்ட முதல் திருவீரர்; நாட்டுரிமை யுணர்ச்சியின் முதல் தெய்விக உரு; போர்த் துறையில் இயற்கையறிவின் தூண்டுதலால் நேரடி நடைமுறை கண்ட முதல் படைத்தலைவர். முன் எவராலும் முற்றிலும் புரிந்து கொள்ள முடியாது, எல்லாரையும் மலைக்கவைத்திருந்த ஜோனின் வியத்தகுவெற்றி ஷாவின் இம் முத்திற விளக்கத்தால் இயற்கைத்தன்மையடைகின்றது. ஆயினும், அதன் முத்திறக்கூறே அதன் தனியுயர் சிறப்பையும், மனித உணர்ச்சி சென்றெட்ட முடியாத அதன் உயர் அருமைப் பாட்டையும் எடுத்துக் காட்டுகிறது.
வரலாற்றுச் சார்பான நாடகங்கள். எழுதியவர் பலர். ஷேக்ஸ்பியர் பல வரலாற்று நாடகங்கள் எழுதியுள்ளார். ஆயினும் உண்மையிலேயே வரலாற்றுக்கு வரலாறாகவும், கலைக்குக் கலையாகவும் உள்ள முதல்வரலாற்றுக் கலைப் படைப்பும் அத் துறையில் முனைபவருக்கு மூலமுன்மாதிரியும் ஆக விளங்கத்தக்கது ‘அருள் திரு ஜோனே.’
ஷாவின் வாழ்க்கைநிறைவை நிழற்படுத்திக் காட்டுவது ‘அருள் திரு ஜோன்.’
புகழ்மேடை, வெஸ்ட்என்ட் போன்ற சிறப்புயர் மேடைகள் இப்போது அவர் ஆணையிற்கிடந்தன. முன் அவர் நாடகங்களை நடிக்க மறுத்த நடிகர் நடிகையர், அவர் அறிவுரை கேட்டு நடிக்க மறுத்தவர், இப்போது அதற்காகக் காத்துக்கிடந்தனர். ஜோனாக நடித்த ஸிபில் தார்ன்டைக் அவர் நாடகத்தை என்றும் மறவாதவர்; அவர் புகழே தம் புகழாகக்கொண்டு, அவர் ஜோன் நாடகத்தை அவரே வாசிக்கக் கேட்டு, ஜோனாகத் தன்னைப் பயிற்றுவித்துக் கொண்டவர். இந்நாடகத்தை ஷாவின் கலையன்பர் மட்டு மன்றிக் கலையுலகும் அறிவுலகும் சமயத்துறையாளரும் கூட, மாறுபாடும் தயக்கமுமின்றித் தலைமேற்கொண்டு கொண்டாடினர்.
ஜோனைப்போன்ற தூய சமய வீரரை உண்டுபண்ணும் அவர் அருளாளராகவே இருக்கமுடியும்; சமயப் பகைவராக, சமூகப்பகைவராக இருக்கமுடியாது என்ற உறுதி கனவுப் பண்பற்ற பிரிட்டானியர் உள்ளத்திற்கூடப் பதிந்துவிட்டது! மெய்மையை எளிதில் நம்பாத, உணராத ‘திண்தோல் வீரர்’ என்று கூறப்படுபவர் பிரிட்டானியர். ஆனால், இத்தகையோர் நம்பியபின், கண்டபின் மாறாத, உலையாத உறுதியுடையவர் ஆவது இயல்பு. ஷாவும் பல எதிர்ப்புப்புயல் கடந்து தம் பண்பை நிலைநாட்டியபின், ஆங்கிலேயரால் ஆங்கிலாநாட்டின் ’நற்பண்புத் திருவுரு’வாக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.
ஜோன் வாழ்வில் வரும் அருஞ்செயல்களை ஷா சமய உணர்ச்சியாளரையும் புண்படுத்தாது, கலைப்பண்புக்கும் அறிவுப் பண்புக்கும் முரண்படாமல் தீட்டும் திறன் வியப்புக்குரியது. அருஞ் செயல் என்பது நம்பிக்கையார்வம்(குயiவா) ஊட்டும் ஒரு செயல் என்பது அவர் நடுநிலை விளக்கம். இதனை நாடகத்தி னிடையே ஜோனின் மறுமொழியால் அவர் நன்கு விளக்குகிறார். ஊர்ப்புற வெளியில் ஜோன் கேட்ட தெய்வக் குரல்கள் அவளுடைய கருத்துப் புனைவுகளாக இருக்கக்கூடாதா என்று கேட்கப் படுகின்றது. ஜோன், “ஆம், தெய்வத் திருச்செய்திகள் வேறு எவ்வகையில் மனிதருக்க அறிவிக்கப்படும்?” என்று கேட்கிறாள். இது அறிஞருலகின் வினாவுக்கு ஒரு விடை யாகவும், சமயத் துறையாளர் விடைக்கு ஒரு விளக்கமாகவும் அமைந் துள்ளது.
முடிவுரை விவிலிய நூலின் ’மலைமேல் பேருரை’யுடன் போட்டியிடத் தக்க அழகிய உயரிய உரைநடைக் கவிதையாய் இயங்குகிறது. வயலில் விளையாடும் சிறுமியர், இறுதி மூச்சு வாங்கும் படைவீரர், திருக்கோயில் தலைவர்கள், அரசியல்மன்ற அறிஞர் யாவரும் ஜோனின் புகழை அதில் பாடுகின்றனர்.
1925-ல் சிறைச் சீர்திருத்தத்திற்காக அமர்த்தப் பெற்ற ஒரு குழுவில் ஷா இடம் பெற்றார். இக் குழுவின் அறிக்கைக்கான முன்னுரை எழுதும்படி ஷா கோரப்பட்டார். ஆனால், அவர் கோரப்பட்டபடி முன்னுரை அதில் இடம்பெறாமல் ‘வெட்’ என்பவர் எழுதிய திணைநில ஆட்சி வரலாற்றில் சிறைக்கூடம் பற்றிய ஏட்டின் முன்னுரையாக வெளிவந்தது. ‘சிறையில் மிகப் பெருங்கொடுமை அதில் விடுதலையில்லாமலிருப்பதே’ என்ற பொதுவுண்மையை, ஷா மனங்கொள்ளும்படி வாதத்தினால் நம்மீது அடித்திறுக்குகிறார். அதே சமயம் தண்டனை மிக மிக அவசியம் என்றும் அவர் ஒத்துக்கொள்கிறார். சிறைவாழ்வு நல்ல தண்டனையன்று. குற்றம் செய்தவனைச் சிறையில் சில காலம் வைத்துத் திருத்த முயன்று, அவன் பொறுப்பேற்றால் வெளியே படிப்படியாக விடுதலையுடன் உலவவிடுவதே அவர் பாராட்டும் முறை.
1927 - ல் ஆங்கிலப் பேச்சுமுறைபற்றிய பிரிட்டனின் வானொலி நிலையத்தின் அறிவுரைக் குழுவில் ஷா இடம் பெற்றார். அடுத்த ஆண்டில் அவர் அரசியலிலும், வாழ்க்கை யிலும் தம் கருத்துக்களைத் திரட்டித் தமக்கு வழக்கமான முரண்பாடு, மிகைபாடு ஆகிய விளம்பரமுறைகிளன்றி, ஒரே தொகுப்பாக வெளியிட்டார். இது ‘ஒப்பியல்நெறி, முதலாளி நெறி ஆகியவற்றிற்கான அறிவுடைமாதரின் கையேடு’(An intelligent woman’s guide to socialism and capitalism) என்ற பெயருடன் வெளிவந்தது. ஷாவின் முறையின்றி இது ஒரு கவர்ச்சியற்ற அறிவுநூல் ஆகிவிடுகிறது. ஆனால், இது ஷாவின் குறையன்று. நூல் கருத்து விளக்கமும் தெளிவும் தருவதே.
அருள் திரு.ஜோனுக்குப் பின் ஷா ஆறாண்டு நாடகக் கலைக்கு ஓய்வு தந்து மீண்டும் ‘கைவண்டி’(Aple cart) என்ற நாடகத்துடன் வெளிவந்தார். ‘அருள் திரு ஜோன்’ ஷாவின் கலை ‘ஆனை மலை’ ஆனால், இது அதன் உயர்வில் குறைந்த, ஆனால் உயர்வும் பொலிவும் குன்றாத கலைப் ‘பொதிகை’ என்னலாம். மேடையிலும் அரசியல் உலகிலும் அது முன்னதிலும் வெற்றிதந்தது. ஷா குடியாட்சியையும் மக்கள் உரிமையையும் வலியுறுத்துபவர். ஆனால், அவர் எப்போதுமே அதன் குறைபாடுகளை உணர்ந் தவர். குடியாட்சியின் வெற்றிக்கு அம்முறையினும் அதன் உயிர் நிலை மைய இடங்களில் உள்ள ஆளின் தன்மையேபெரிதும் காரணம் என்பதை அவர் உணர்ந்துகொண்டிருந்தார். கட்சியரசி யலை இயக்கும் கட்சிசாரா அவைத்தலைவர், கட்சிகளுக்குப் பாற்பட்ட சட்டம், முறைவர், பிற பணித்துறையாளர் ஆகியவர்கள் மட்டுமன்றி, அவர்களைப் போலவே ஆட்சிக்குழுவின் நிலையான நடுநிலைத் தலைவராக ஒரு வரம்பியல் முடிமன்னர் அமைவது நலம் என்பதே இந்நாடகத்தில் ஷா விளக்கும் சித்திரவிளக்கம். கிட்டத்தட்ட நீண்டதொரு அமைச்சவைக் கூட்டமாக நிகழ்வது இந்நாடகம். மன்னர் மாக்னஸ் நற்குணமும் திறமையும் உடையவர். ஆயினும், குழந்தைபோன்ற தூய உள்ளமுடையவர். அரசியல் கைவண்டியின் விலாசுதல்களிடையேயும், குடை வண்டி மறிப்புக்களிடையேயும் அவர் காட்டும் அமைந்த அன்பு அறநெறியாளர் கருத்தையும் கவர்கிறது.
குடியாட்சிச் சார்பாளரான ஷா, உயர்குடியாட்சியையும் மன்னராட்சியையும் மதிப்பதும், ஆங்கில அரசியலினைக் கண்டனம் செய்துவந்த ஷா, அதனை அமெரிக்க அரசியலுக்கு மேம்பட்டதாகக் காட்டுவதும், அவர் நண்பர்கட்கு வியப்பூட்டின. ஆனால், ஷாவை உணர்பவர் அவர் கருத்துக்களைத் தனித்தனி குழு, கட்சி, திட்டங்களுடன் ஒன்று படுத்தமுடியாது. இவற்றுள் அடைபடுபவர் வழக்கறிஞராயிருக்கமுடியும்; அறிஞராகவோ, ஷாவைப்போல அறிஞருலக அறிஞராகவோ இருத்தல்முடியாது. ஷா இங்கிலாந்தைக் கண்டித்தாரானால் அக்கண்டனம் ஒரு பாராட்டின் அடிப்படையான கண்டனம் மட்டுமே. அவர் பாராட்டெல்லாம் கண்டனங் கலந்ததாயிருந்ததுபோலவே, கண்டனமெல்லாம் பாராட்டுக் கலந்தனவாகவே இருந்தன. அவர் அறிவு செயலாற்றாமல், எதையும் ஏற்பதோ எதிர்ப்பதோ இல்லை.
இவ்வாண்டில் ஷா ஹெலென் டெரியின் கடிதப்போக்கு வரத்துக்களை வெளியிட்டார்.
இவ்வாண்டிலேயே எழுதப்பட்ட “மன்னனும் மருத்து வரும்”(King’s doctors) நாடக வடிவமாயமையாத ஒரு நாடகம். முதல் பாதி வழக்கமான அவர் நாடக முன்னுரைபோலமைந்த ஒரு கட்டுரை. பிற்பாதி உரையாடலாயினும் புனைகதை உரையாடல் போல மைந்தது. இச்சிறு நூலுக்குத் தூண்டுதலான நிகழ்ச்சி ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் உடல் நலிவின்போது மருத்துவத் துறையினர் காட்டிய குறுகிய மனப்பான்மையே யாகும். எதிர் செயல் மருத்துவமுறையாளரே (Asllopathic school) இங்கிலாந்தில் ஆதிக்கம் செலுத்தினர். அவர்களால் நோயை உணர்ந்து சரிசெய்ய முடியவில்லை. ஆயினும் பிறமுறை மருத்து வரை அழைக்க அவர்கள் தடைசெய்தனர். ஷா இம்மனப்பான்மையை நையாண்டி செய்வ துடன் மன்னர் உயிரினும் இம்மருத்துவருக்குத் தம் குழுநலன் இனி தாயிருக்கிறது என்று குற்றம்சாட்டுகிறார்.
ஷாவினால் மிகவும் பாராட்டப்பெற்ற இசைக்கலைஞர் எல்கார். ஷா முன்னறிந்து கூறியபடி அவர் அத்துறையில் புகழ்ச் சிறப்புப் பெற்றார். அவர் 1930-இல் தம் கலைப் படைப்பொன்றை ஷாவின் பெயருக்குப் படைப்புச் செய்தார்.
ஷாவின் அடுத்த நாடகம் ‘நம்ப முடியாது, நன்மையுமன்று, ஆனால் உண்மை’(Too true to be good) என்பது. இது 1931-ல் இயற்றப்பட்டது. ‘மன உலைவு மாளிகை’யைப்போல் இதுவும் வாழ்க்கையில் மனக் கசப்பைக் காட்டும் சித்திரம் ஆகும். சமயத்தில் நம்பிக்கை உறுதிபெறாது கடவுள் மறுப்பு, கடவுள் புறக்கணிப்பு, உலகியல் வாதம் ஆகியவற்றில் கருத்துச் செலுத்துபவர் அவற்றிலும் அமைதி பெறார். அறிவு கடந்த கடவுள் குருவின் தொடர்புடைய ’பன்யன்’ போன்றார் அக் குரல்கண்டு அஞ்சுகின்றனர்; பிறரையும் அச்சுறுத்துகின்றனர். கொள்கையற்ற கட்டுப்பாடற்றவர் வாழ்வும் பயனில்லை. இம்முடிவுடன் கூடிய கதை துயர முடிவுடைய தாயிருத்தல் இயல்பு. ஆனால் இடைக்காட்சிகள் நல்ல இன்பக் காட்சிகள். சிறு நிகழ்ச்சிகள் நல்உவகைத் திறமுடையன. இக்காலம் அரேபியாவில் சென்று புத்தரசியல் வகுத்த அவர் நண்பர் லாரன்ஸை வீரன் மீக்கவன் என்ற உறுப்பின் மூலம் ஷா தீட்டிக் காட்டியுள்ளார்.
ஷாவின் அடுத்த முக்கிய நூல் நாடகமன்று: ஒரு நீண்ட கதை. ‘கடவுளை நாடிய கறுப்புநிற நங்கையின் வாழ்க்கை நிகழ்ச்சிகள்’(History of a black girl in her search for God) என்பது அதன் தலைப்பு. இது 1932-இல் இயற்றப் பெற்றது. நாகரிகத்தின் பழக்கவழக்கத் தோடுகளிற் கட்டுப்படாத பண்படாக் கன்னியுள்ள மொன்றில், கடவுள் பற்றி, சிறப்பாகக் கிறித்தவ சமயக் கடவுட் கருத்துப்பற்றி எழும் வளர்ச்சி தளர்ச்சி களை ஷா இதில் உருவாக்கிக் காட்டுகிறார். கிறித்தவ சமயம் பற்றிய வரலாற்றுப் பின்னணி யறிவில்லாதமக்களிடையே அவ் வறிவால் ஏற்படும் எதிர்பாரா விளைவுகள் இந்நாடக நிகழ்ச்சிகள் ஆகின்றன. விவிலிய நூலிலேயே காணப்படும் பலவகைக் கடவுட் கருத்துக்களும் பிரித்து ஒப்புமைப்படுத்தியும், வேறு படுத்தியும் காட்டப்பெறுகின்றன. உயிரினங்களைக் கொடுமைப் படுத்தும் செயலுடையோர் பற்றி வாதம் எழுப்பப்படுகிறது. கடவுட் படைப்பிலேயே கொடுமையும் உயிர்க்கொலையும் இடம் பெறுவானேன் என்ற வினாவை ஷா எழுப்பியுள்ளார். அவர் கூறும் விளக்கம் ‘கடவுள் முழுதும் நல்லவரானால்’ நல்லன வல்லாதவற்றைப் படைத்திருக்கமாட்டார்; முழுதும் வல்லவ ரானால் அவற்றைப்படைத்த அவர் நல்லவராயிருக்க முடியாது என்பதே. ஷா முதல் விளக்கத்தை ஏற்றுக் கடவுள் நல்லவர்; ஆனால், முழுதும் வல்லவரல்லர் என்று நாடக உறுப்பினரைக் குறிக்கச் செய்கிறார். (நன்மை தீமைகள் அவரவர் வினைப் பயன்கள் என்ற கீழ்நாட்டவர் கோட்பாடு இங்கே கவனிக்கப்பட வில்லை.)
வரலாற்றுப் பின்னணி இல்லாமல் இயேசுவின் வாழ்க்கை பற்றிய போதனை கறுப்பு நங்கiயின் உள்ளத்தில் அவரை ஒரு சூனியக்காரராகவே தோற்றும்படி செய்கிறது. அருஞ்செயல் களின் நோக்கம் வற்புறுத்தப் பெறாததால், வரும் விளைவு இது என்பது ஷாவின் கருத்து. அவற்றின் நோக்கம் கடவுளின் ஆற்றலைக் காட்டுவதல்ல, அவர் நல் அருள் பண்பைக் குறிப்பது என்பது அவர் முடிவு. காந்தியடிகள், டால்ஸ்டாய் போன்ற அருளாளர்கள் முடிவும் இதுவே. “தீமையிடையே, நற்பலன் எதிர்பாராமல், தாயும், நல்லாரும், நண்பரும், காதலரும் செயலாற்றுதல் காண்கிறோம். இதுவே அருட்பண்புடைய கடவுளின் உண்மைக்கு சீரிய நற்சான்று,” என்பதே காந்தியடிகள் கடவுள்பற்றிய ஒலிப்பதிவின் குறிப்பு என்பது காண்க.
கிறித்தவ சமயத் தலைவரும் அவர்கள் சார்பான இதழக உலகும் இந்நூலை மும்முரமாகத் தாக்கின. எதிரிகளை அணைக்கும் கிறித்தவப்பண்பு அவர்களிடம் இல்லையென ஷா இறு மாப்புடன் அவர்களைக் கண்டு நகையாடினர்!
‘கிறித்தவ உலகு’ என்ற ஒரு இதழ் மட்டும் ஷாவின் தாக்குதல் உண்மைச் சமயத்தின் மீதன்று, சமயத் துறைவரின் போலிச் சமய மரபின்மீதே என்பதை ஒத்துக்கொண்டுள்ளது. ஷாவின் தாக்குதல் ஒரு நல்ல சமயச் சீர்திருத்தமே, சமய எதிர்ப் பன்று என்பது அதன் கருத்து.
1932 இறுதியில் ஷா உலகச் சுற்றுப்பயணம் செய்து அதனிடையே அமெரிக்காவில் அமெரிக்க அரசியல் துறைக் கழகத்தில் அமெரிக்க, உலக அரசியல் பொருளியல் கோட்பாடு களைப்பற்றிச் சொற்பொழிவாற்றினார். இச் சொற் பொழிவு ஒரு முன்னுரையுடன் ‘அமெரிக்காவிலும் அணிமைத் தாயகத்திலும் உள்ள அரசியல் பித்தர் விடுதி,’(The political madhouse in America & nearer home) என்ற பெயருடன் நூலாக வெளியிடப்பெற்றது. தனி மனிதன் கட்டுப்பாடற்ற விடுதலை, நாணய அடிப்படையான செல்வத்தில் நம்பிக்கை, விலையு யர்வில் நம்பிக்கை ஆகியவற்றை அவர் தாக்கினார்.
1929-க்கும் 1939-க்கும் இடையில் ஷா முன் கூறிய மூன்று நாடகங்கள் நீங்கலாக வேறும் பத்துநாடகங்கள் எழுதினார். 1933-ல் ‘சிற்றூர்க் காதல்(village wooing),’ ‘பாறைகள் மீதில்(on the rocks),’ ‘ஓர் உரையாடல்(An untitled dialogue)’ ஆசியவையும், 1934-ல் எதிர்பாராத் தீவுகளிலுள்ள அப்பாவி (simpleton of the unexpectedisles), கலேசார்ந்த அறுவர்(six of calais) ஆகியவையும், 1935-ல் கோடியஞ் செல்வியும்(millionairess), 1936-ல் மன்னர், மன்னரசியல், மாதினி யாரும்(King, constitution & the lady), 1937-ல் திருத்தப்பெற்ற ஸிம்பலினும், 1938-இல் ஜெனிவாவும், 1939-ல் நல்வேந்தன் சார்லஸின் பொன்னாட்களில் (n good King Charles’ golden days) என்பதும் இயற்றப்பெற்றன.
சிற்றூர்க் காதல் கடலில் பயணம்செய்கையில் எழுதிய ஓய்வுநேர நினைவுகளின் தொகுதி. ‘பாறைகளின் மீது,’ ஐரோப்பாவில் வல்லாளகண்டர்களான ஹிட்லர், முஸ்ஸோலினி ஆகியவர்கள் வளர்ச்சி கண்டு அவர் பிரிட்டனின் அரசியல் மந்தநிலைபற்றிக் கண்டித்த கண்டனக் கருததுக்கள் அடங்கியது. எதிர்பாராத் தீவுகளின் அப்பாவி மெத்துஸலாவைப்போல, உலகத்தோற்றத்தைப் பற்றியது. ஆனால், அது முன்னைய நாடகங்களின் பெருமித வெற்றியைச் சிறிதும் எட்டவில்லை. ‘கலேயின் அறுவர்,’ மூன்றாம் எட்வர்ட் காலத்திய, அப் பெயருடன் வழங்கும் வீரநிகழ்ச்சிபற்றிய உருவச்சிலைகளைக் கண்டு அவர் தீட்டிய சிறுநாடகம். ‘கோடியஞ் செல்வி,’ மீண்டும் வல்லாளர் கடா எழுப்பி அவர்கள் கையிற்படவிருந்த எதிர்கால உலகம்பற்றிய கவலையைத் தூண்டுகிறது. ‘மன்னர், மன்னரசியல், மாதினியார்’ என்னும் நாடகம், மன்னர் எட்டாம் எட்வர்டு முடிதுறப்புக்குக் காரணமாகவிருந்தகாதல் தொடர்பு பற்றிய அவர் கருத்தாராய்ச்சியாகும். மன்னர் கிறித்தவக் கோயிலக மணம் செய்யாது, பதிவு மணம் செய்து அரசிருக்கை ஏறலாம் என்பதே ஷா காட்டும் முடிவு. ஆனால், இங்கிலாந்து இக் கடாவை இவ்வளவு எளிதாக விடுவிக்க முடியவில்லை. மன்னர் முடிதுறக்க நேர்ந்த செய்தியை உலகம் அறியும்.
‘ஜெனிவா,’ அதன்பெயருக்கேற்ப, ஜெனிவா உலகச் சங்கத்தின் வருங்காலம் பற்றியது. ஆனால், ஷாவின் நாடகத்தை அடுத்து அதன் வீழ்ச்சியும் விரைந்து ஏற்பட்டது. ஐரோப்பாவின் இத்துயர் முடிவிடையே ஷா அதனை ஒரு களிநாடகமாகக் காட்டினார். ஹிட்லரும், முஸோலினியும் இதில் அந்நாளைய நிலைக்கேற்றபடி ஜெனிவாவை ஒழிப்பதில் வெற்றி பெறுபவராகவே தீட்டப்பட்டனர். ஆனால், விரைவில் அவ்விருவரும் ஷாவால் எதிர்பாராதவகையில் ஜெனிவாவினை அழித்து இரண்டாம் உலகப்போரில் முனைந்தனர். ஷா போருக்கேற்ற படி நாடகத்தையும், ஹிட்லர், முஸோலினி பண்போவியங்களையும், முடிவையும் திருத்த முயன்றும் மிகுதிவெற்றி காணவில்லை. போரின்சூழல் அவர் நாடகத்தின் சிறுவெற்றியையும் கௌவிக் கொண்டது.
ஷாவின் இறுதிக்கால நாடகங்களில் பெரும்பாலும் அவர் கலைப்பண்பு மிகவும் குறைவே. ஆனால், அவர் வாழ்க்கைத் தத்துவங்களைக் கைவண்டியும் கிட்டத்தட்ட இறுதிநாடகமான ‘நல்வேந்தன் சார்ல்ஸின் பொன்னாட்களில்’ என்பதும் நயம்பட விளக்குகின்றன. ‘நல்வேந்தன் சார்ல்ஸ்,’ இரண்டாம் சார்ல்ஸ் மன்னன் காலத்தைப் பின்னணியாகக் கொண்டது. முதலாம் சார்ல்ஸ் மக்கட் புரட்சியால் தலையிழக்க, சிலகாலம் கிராம் வெல் என்னும் வீரன் குடியரசாட்சி செலுத்தினான். பிரிட்டன் குடியரசை உணராத அக்காலத்தில், மக்கள் அதனை உதறித் தள்ளி முதலாம் சார்ல்ஸின் புதல்வன் இரண்டாம் சார்ல்ஸை மன்னராக்கினார். குடியும் கூத்தும் காதலும் புதியமன்னன் வாழ்க்கைக்களமாயின. ஆனால், மன்னன் அரசியலில் மிகவும் சூழ்ச்சிநயங்களில் வல்லவனாய் ஆண்டான் இன்ப நாடகம் அவன் நாளில் உயர்நிலை பெற்றது. ஆனால், ஷா இத்திறங்களை நாடகமாகத் தீட்டவில்லை. அவர் சார்ல்ஸ் அவைக்களத்தை அக்பர் அரசவையிலுள்ள ஒரு சமய, கல்வி ஆராய்ச்சிக்கூட மாக்கி உலகம், சமயம், உடல், உயிர் ஆகிய பழைய உலகக் கோட்பாடு களையும், அவற்றின் போர்வையுள் படைப்பு, உயிர்வளர்ச்சிக் கோட்பாடு, ஒப்பியல்நெறி ஆகிய தற்காலக் கோட்பாடுகளையும் ஆராய்ந்து விளக்குகிறார். சுவைநயமும் ஆர்வமும் உடைய இவ்வுரையாடல்தொகுதி எல்லையிலா வானவெளியில் நடத்தப் படும் சொல்திறமிக்க உதைபந்தாட்ட மெனக் காட்சி யளிக்கிறது. நாடகமரபிலுள்ள வாளும் காதலும், கோமாளியும் செயலுறுப் பினரும், ஷாவுக்கு வழக்கமான கோட்பாடும் முடிபும் யாவும் இங்கே கைவிடப்படுகின்றன. ஷாவின் கட்டுப்பாடற்ற புனை வாற்றலின் ஒரே திருவிளையாடலாய், கலை கடந்த கலையாய் இந்நாடகம் புதுச் சுவையின் மூட்டுகிறது.
நல்வேந்தன் சார்ல்ஸையே ஷாவின் இறுதிநாடகமாகக் கொள்ளத்தகும். அதன்பின்னும் 1948-ல் பிஃவ்வின் என்ற பெயருடன் முதலிலும், கிளர்ச்சிகொள் கோடிபத்தாயிரம் (buoyant billions) என்னும் நாடகமும், அதன்பின் முடியாது விடப்பட்ட மற்றொரு நாடகமும் எழுதப்பெற்றன. ஷாவின் திருமணத்தை அடுத்து அவர் திருமதி ஷாவின் தூண்டுதலால் அயர்லாந்து சென்றிருந்தார். ஆனால், அதற்குள் இங்கிலாந்தில் அவர் பெரும்புகழ் பெற்றிருந்த போதிலும், அயர்லாந்து அவர் பெருமையையோ, அவரால் தனக்கு வரும் சிறப்பையோ உணரவில்லை. 1943-ல் திருமதி ஷா உலகவாழ்வு நீத்தார். அதுமுதல் ஷா முன்னிலும் மிகுதியான தனித்துறவு வாழ்வே வாழ்ந்து வந்தார்.
முதுமையில் அவர் பிறந்த நகராகிய டப்ளின் நகராட்சி மன்றம் அவர் பெருமையை இதுகாறும் மதித்துணராததற்கு வருந்திற்று. காலங் கடந்தேனும் அவருக்கு அந்நகர் உரிமை வழங்கிப் பாராட்ட விரும்பிற்று. ஆனால் ஷாவின் தளர்ந்த முதுமை அதற்கு இடந்தரவில்லை. ஆயினும், அந்நகரின் ஆட்பேர்க்குழு ஒன்று, 1946-ல் இலண்டனில் அவரைக் கண்டு அவ்வுரிமையை வழங்கிற்று. இதே ஆண்டில் ஸென்ட் பாங்கி ராஸ்வட்டமும் அவருக்குத் தன் உரிமை வழங்கிற்று. 1948-ல் இலண்டனிலுள்ள அயர்லாந்துக்காரர் சங்கம், அவருக்கு வாழ்த்துரை வழங்க முன்வந்தது. ஆனால், அவர் அதற்கு விடையாக, “நல்ல அயர்லாந்துக்காரர் பிறநாடுகளில் தனித்து வாழாமல், அந்நாட்டினருடன் ஒன்றுபட்டு அந்நாட்டினராகவே வாழ்தல் சிறப்புடையது,” என அறிவுரை தந்தார்.
ஷாவின் இறுதிப் பத்தாண்டுகளில் அவர் உலகெங்கும் பிரிட்டனின் மிகப்பழைய, ஆனால் மிக இளமையுணர்ச்சி கெடாத அறிஞராகப் பாராட்டப் பெற்றார். 1946-ல் அவர் 90-வது ஆண்டுவிழா அவர் விருப்பத்திற் கெதிராக நண்பரால் கொண்டாடப்பட்டது. அத்துடன் பிரிட்டிஷ் வானொலி நிலையமும் அதன் சிறப்புரையாக அவரைப் பேசும்படி அழைத்தது. ‘நாட்டு ஏடுகள் கழகம்’ ஷாவின் நூல் தொகுதிக் கண்காட்சி நடத்தியதும், ஆக்ஸ்ட்போர்டு பல்கலைக் கழகம் தன் உலக இலக்கிய வரிசையில் மெத்துஸலேயை உளப்படுத்தியதும் இவ்வாண்டிலேயே. அடுத்த ஆண்டு வானொலி நிலையத்தார் ஷாவின் நினைவுநாள் விழாக் கொண்டாடினர். அதில் அவருடைய ‘மருத்துவர் இருதலை மணியம்’ ஆண்டின் ஓர் சிறந்த ஒலிபரப்பென முடிவு கூறப்பட்டது. யுகோஸ்லாவியாவில் பிரேக்நகரில் நடைபெற்ற நூலாசிரியர் கூட்டுறவு மாநாட்டிற்கு அவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றார்.
1950 ஜூலை 26-ல் முறைப்படி ஷாவின் 94-ம் ஆண்டுப் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது ஷா, “என் பிறந்த நாளை நினைவூட்டுவது எனக்கு வெறுப்பைத் தருவ தாகும். நினைவூட்டுபவர்களையும் நான் என் பகைவர்களாகவே கருதத்தகும்,” என்றாராம். ஆனால் இப்பிறந்த நாளே அவர் இறுதிப் பிறந்தநாள் கொண்டாட்டமாயமைந்தது. பிறந்தநாட் பரிசுகளை யாரும் அனுப்பக்கூடாது என்று அவர் திட்டம் செய்திருந்தார். அப்படியும் வந்த பரிசுகளை அவர் அறநிலையங் களுக்கு வழங்கிவிட்டார்.
1950 செப்டம்பர் 11 -ல் அவர் தம் தோட்டத்தல் உலவிக் கொண்டிருக்கையில் கீழே இடறி விழுந்தார். இதில் அவர் கால் எலும்பு முறிவுற்றது. அறுவை மருத்துவம் செய்தும் நிலைமை மாறி அவர் 1950 நவம்பர் 2-ஆம் நாள் இயற்கை எய்தினார். 94 ஆண்டு வாழ்ந்து நிறைவாழ் நாளுடன் அவர் பிரிந்தனரானாலும், அவர் பிரிவு உலகுக்கு அதிர்ச்சியும், வருத்தமுமே ஊட்டிற்று. ஏனெனில், அவர் இறுதிவரை அறிவுளம் குன்றாது, வாழ்க்கையில் முழுப்பங்குகொண்டவர். அவரை உலகம் தம் உலகின் ஒரு பழங்கால மிச்சம் எனக் கருதாது, தன் புதுமையின் ஒரு பகுதி எனக் கொண்டிருந்தது.
ஷா தம் இறுதி விருப்ப ஏட்டில் தம் உடல் எரிக்கப்படவே வேண்டும், புதைக்கப்படக் கூடாதென்றும், முன்பே எரிக்கப் பட்டுப் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள தம் மனைவியின் சாம்பலுடன் தம் சாம்பலைக் கலந்து தம் வீட்டிலோ தம் தோட்டத்திலோ தூவப்படல்வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். நூறாயிரம் பொன் அளவான தம் பாரிய செல்வத்தை அவர் ஆங்கில மொழி எழுத்துச் சீர்திருத்தங்களுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்று குறித்துள்ளார்.
நூறாண்டு அறிவுலகின் அறிவுப்புயலாக வாழ்ந்த பெரியாரின் அறிவமைதியுடைய இறுதி விருப்பம் இது!
முடிவுரை
மழைபெய்து வெறித்துவிட்டது; சூறாவளி அடித்து ஓய்ந்துவிட்டது; வெள்ளம் புரண்டோடி அடங்கிவிட்டது; அரை நூற்றாண்டு உலகுடன் போராடி உலகை ஆக்க உதவி, உலகில் தன் பெயர் பொறித்தவர்; மற்றொரு அரை நூற்றாண்டு உலக நாடகமேடையில் எல்லாக் காட்சிகளுடனும் நீக்கமற நிறைந்து ஒன்றுபட்ட பின்னணி இசையாகவும், பின்னணி வண்ணமாகவும் நிலவியவர் - இத்தகைய ஷா திடுமென 1950 நவம்பர் 2-ந் தேதி நம்மைவிட்டகன்ற போதுதான், உலகைவிட்டுப் பிரித்தறியப்படா திருந்த அவர் முழு இயல்பும், செல்வாக்கும் நமக்கு விளங்கலாயின.
வறுமைநாடுகளிலும் வறுமைநாடாகக் கணிக்கப்படும் அயர்லாந்தில், அடிமைச்சேற்றில் அழுந்திய அயர்லாந்தில் பிறந்தவர், இன்று பேரரசு ஆதிக்கமும் உலகளாவிய ஆட்சி வளமும் நிறைந்த பிரிட்டனையே தம் பீடு வாய்ந்த அறிவுருவால் இயக்கி, அதன் நாகரிக மரபுகளையே அலசி ஆராய்ந்து நகையாடி வெற்றிபெற்றுவிட்டார். நாடகமேடையில் இடம்பெறாத நாடகங்கள், வெளியீட்ட கங்களின் கடைக்கணிப்புப் பெறாத புனைகதைகள், இதழகங்களின் பீடு தகர்க்கும் கடும்போக்குடைய கட்டுரைகள் - இவற்றின் காலம் மலையேறின. அவர் எழுதிய வற்றுக்கெல்லாம் உலகல் வேறு எந்த ஆசிரியருக்கும் கிட்டாத மதிப்பும் விலையும் அவர் பெற்றுவாழ்ந்தார். அவர் காத்திருந்து முற்றுகையிட்ட காலம் போய், இன்று இதழக ஆட்பெயர்கள், வாழ்க்கை வரலாறெழுதுவோர், நாடுசூழ்வருவோர் அவரை முற்றுகையிட்டுக் காத்து, சிலசமயம் காண முடியாமலும், சிலசமயம் கண்டு கையொப்பமோ செய்தியோ புகைப்படமோ பெறமுடியாமலும் அவலமுறும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகச் சுற்றுப் பயணத்திடையே இந்தியா, இலங்கை வந்தபோது வெள்ளைய நண்பர் ஒருவர் அவருடன் பலகால் பழகிப் பயின்று பாராட்டுப் பெற்றும், தாம் விரும்பிய கையொப்பம் பெற முடியாது போயினராம். இச் சிறு மரபுகளை வெறுத்து, ஷா தம் புரியமுடியாச் சீற்றமுழுவதும் யாவர் மீதும் காட்டினார். இவை உலகின் போலி மரபுகள் என்றும், பொதுமக்கள் வாழ்வை உயர்த்துவதற்குமாறாக அவர்களைச் சுரண்டி வாழ்பவரின் புறவேடப் பசப்புக்கள் என்றும் அவர் எண்ணியதே இதற்குக் காரணம்.
பெர்னார்டுஷாவின் துணிச்சல், பிடிவாதம் ஆகியவை, அவர் புகழை ஒரு சரக்காக்க முனையும்போதெல்லாம் பீறிட் டெழுந்து பிறரைத் திகைக்க வைத்தன. வணக்க இணக்கத்தையும் பணிவார்வத்தையுமே கண்டு பழகி, அவைகளையே பெரிதும் எதிர்பார்க்கும் செல்வரும், அவர் வணங்காமுடிப் பண்பும் தற்போக்குத் தற்சார்புகளும் கண்டு முதலில் புறக்கணிக்கப் பார்த்தனர்; பின் சீறினர். இறுதியில் அதனை அவரளவில் தனிவிலக்களித்து மதிக்க வேண்டியதாயிற்று. இஃது அவர் தனித்திறமை, தனிப்பட்ட தற்பண்பு காரணமாகவேயாயினும், அஃது உலகில் பிற்பட்டவர், பிற்பட்ட வகுப்புக்கள், பிற்பட்ட நாடுகளுக்கு ஒரு நல்ல வழிகாட்டி ஆகும். பிறரின் பரிவையும் அருளிரக்கத்தையும் எதிர்பாராமல், அதில் நிறைவுபெற்று உள்ளூற அடிமைத்தனத்தை அணைக்காமல், தற்சார்பும் தன் முயற்சியுமுடையவராய், தன்மதிப்புடன் போராடி வெற்றிபெற்ற வருக்கே, சரிநிகர் அடிப்படையில் நட்புத் தோழமை கிட்டும் என்பதை அவர் வாழ்க்கை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
அறிவுத்துறையில் ஷாவின் வாழ்வு ஸர் ஃவிரான் ஸிஸ் பேக்கன் கூறிய பலவகை மரபுமருள்களையும் அகற்றி, உலகுக்கே நிலையாக ஒரு புதுவழி வகுத்த தென்னலாம். இம்மருட்சியின் பொதுத்தன்மையைத் திருவள்ளுவர் நமக்குத் தெள்ளத்தெளிய விளக்கியுள்ளார்:
“பொருள்அல்ல வற்றைப் பொருள்என்று உணரும்
மருளான்ஆம் மாணாப் பிறப்பு.”
உண்மையில் பொருள் அல்லாதவற்றை உண்மைப் பொருள் என மயங்குபவர் வாழ்க்கை, மேம்பாட்டுக்கு உரியதாகாது என்பது இதன் கருத்து. ஸர் ஃபிரான் ஸிஸ் பேக்கன் இம்மருட்சியைக் குடும்ப மருட்சி,(Idols of the hearth) ஊர் மருட்சி(Idols of the market lace), வகுப்பு மருட்சி(Idols of the calss), மனித இன மருட்சி(Idols of the ‘race’ i.e. human race)என்று வகுத்துள்ளார். குடும்பத்தி னருக்குப் பொதுவான அடிப்படைப் பொது அறிவையும் தப்பெண்ணங் களையும் அதில் பிறப்பவன் பிறப்பிலேயே பெற்று ஆராயாமல் ஏற்றுக் கொள்கிறான். இதுபோலவே ஊர், நாடு, உலகப்பகுதி ஆகிய வற்றின் அறிவெல்லைக்கும் ஆராயாமல் அறிவுகட்கும், மனித இனத்தின் அறிவெல்லைக்கும் வரம்பு உண்டு. ஷா பேக்கனைப் போல இவ்வுள்ளார்ந்த உண்மையை அறிந்தவர். அத்துடன் அவ்வறிவைச் செயற்படுத்தவும் முனைந்தவர். இதனை ஷாவின் பல துணிகர ஆய்வுரைகளிலும் காணலாம். கலையுடன் வாழ்க்கையும், வாழ்க்கையுடன் கலையும் தொடர்பற்றனவென்பது ஷாவின் காலத்தவரும், அக்காலத்தில் ஆட்சி நலமுடைய உயர் நடுத்தர வகுப்பினரும் கொண்ட கோட்பாடு. கலை அறிவைப் பரப்புதல், ஒழுக்கம் ஆகிய நோக்கமுடையதன்று; நோக்கமுடைய தாயிருத்தல் கூடாது என்று அவர்கள் கருதினர். நாம்கூட ஷா உரைகளைக் கேட்குமுன் அப்படித்தான் நினைத்திருக்கக்கூடும். ஏனெனில், ஒழுக்க நூல்கள் பெரிதும் கலைவடிவில் எளிதில் எழுதப் பெறுவதில்லை. கலைநூல்கள் ஒழுக்கமுடிபுடை யவையானால், கலைப்பண்பை இழந்துவிடுவதும் காணலாம். கலை வாழ்க்கைத் தொடர்பும், அறிவாராய்ச்சித்தொடர்பு முடையது என்பதை வாதிட்டு நிலைநாட்ட ஷா மிகவும் பாடுபட்டார். அவ்வாதத்தை விட அதற்கு இலக்கியமாக அவர் படைத்தளித்த ‘அறிவுக்கலை’ என்ற புதிய துறை நமக்கு நல்ல படிப்பினையாகி யுள்ளது.
வாழ்க்கையில் அறிவே முற்போக்குக்குக் காரணம். ஆனால், அதன் அடிப்படைப் பண்பு உணர்ச்சி. அதுவே ஆற்றல் தரும் பண்பும், செயல் தூண்டுதல் தரும் பண்பும் ஆகும். அறிவு, உணர்ச்சி இரண்டிற்கும் அடிப்படையான தற்பண்பும், தற்சார் பும், உறுதியும் அக ஆற்றலின்(will power) பண்புக் கூறுகள். இவற்றுள் மற்ற இரண்டும் அறிவுத்திறத்துக்கு உதவ வேண்டும் என்றும், கலையிலும் வாழ்விலும் உணர்ச்சியை உணர்பண்பாகப் பரப்பி முன்னேற்றம் தடைப்படுத்தப்பெறக் கூடாதென்றும் முதன் முதல் எடுத்துக்காட்டியவர் பெர்னார்டு ஷாவே என்னலாம். அறிவுத்திறம் ஆண்மைக்குரிய சிறப்புப் பண்பு. பெண்மைக்கு உணர்ச்சித்திறமே இயற்கைப் பண்பாயினும், அறிவுத்திறமுடைய பெண்டிரே உயர்சிறப்புக்குரியவர். அங்ஙனம் சிறப்பெய்தாத பெண்டிர் ஆடவர் அறிவு முயற்சிகளைத் தடை செய்யத் தம் உணர்ச்சியையும், கவர்ச்சியையும் பயன்படுத்தக் கூடாது. இவ் வெச்சரிக்கையைத் தந்தது ஷா ஒருவரே.
வாழ்க்கை குறிக்கோளற்றதன்று. ஆனால், சமயவாளிகள் அக்குறிக்கோளைப் பெரிதும் பழமையிலேயே பார்ப்பர். அதனைத் தொடர்ந்த வளர்ச்சியாகக் கருதுவதில்லை. அறிவி யலாளரோ அக்குறிக்கோளை அறிவற்றி, பொருளற்ற ஒரு குருட்டுப் போக்கெனவே காண்கின்றனர். ஷா உலக வாழ்வையும், நாகரிகத்தையும் ஒரு தொடர்ந்த நிலையான உள்ளார்ந்த உயிராற்றலின் செயல் திறம் எனக் கொண்டார். இஃது ஒரு வகையில் கடவுள் போன்ற ஆற்றலேயாயினும், கடவுளைப் போலன்றி வளர்ச்சியும், அவா ஆர்வநோக்கும் உடையது. உலகை வளர்த்து அவ்வளர்ச்சியுடன் வளர்வது. அதே சமயம் அஃது இயற்கைபோன்ற குருட்டு ஆற்றலன்று; குறிக்கோளற்ற ஆற்றலுமன்று. அஃது எல்லா உயிர்களையும் ஒரு குறிக்கோளை நோக்கித் திட்டமிட்டியக்கும் இயக்க ஆற்றல் ஆகும். இங்ஙனம் வாழ்க்கைக்கு ஒரு குறிக்கோளும் கற்பித்து, இதனடிப்படையாக ஒரு வாழ்க்கைத் திட்டம் வகுத்து அதன் வாயிலாகவே ஷா கலையில் அறிவும் ஒழுக்கமும் ஊட்டும் ஒப்புயர்வற்ற அரும் பணியை ஆற்றினார். அறிவுக்கலை என்ற புதிய கலைமரபையும், அறிவார்வ உணர்ச்சி என்ற ஒரு புது உணர்ச்சியையும் கலை உலகுக்கு அவர் தந்துள்ளார்.
சமயத்துறையின் பொருளற்ற குருட்டுநம்பிக்கை களையும், பழக்க வழக்கக் கட்டுப்பாடுகளையும் ஷா வெறுத்தார். அறிவாராய்ச்சியிற் சிறந்த பலர்கூட அறிவுத்துறையில் உயர் கருத்துக்களுடன், உணர்ச்சித்துறையில் இக் கீழ்த்தர மரபு கொண்டு, முரண்பட்ட இருதன்மைகள் உடைய ஒரு மனிதராக(double personality) வாழ்கின்றனர். ஷாவின் தனிச் சிறப்பு அவர் அறிவடிப்படையாக உணர்ச்சியையும் உள்ள உறுதியையும் உருவாக்கி, முழுநிறை பண்புடைய, ஆனால் முரண்பாடற்ற மனிதராக விளங்கினார் என்பதே. இந் நிலையில் முரண்பாடற்ற ஒருமைப்பாட்டமைதியுற்ற அவர் வாழ்வும் சொல்லும் செயலும், முரண்பாடுகளை வாளர ஏற்கக் கொண்டுள்ள உலகுக்கு முரண்பாடுகளாய் தோற்றியது இயல்பே. ‘கோவணமுடுத் தாதவன் நாட்டில் கோவணமுடுத்தவன் பித்தன்’ என்ற தமிழ்ப் பழமொழி அவர் வாழ்க்கையின் தனித்தன்மைக்குரிய ஒரு விளக்கம் ஆகும். சமயத்துறையிலேயே இம்முரண்பாடு ஷாவின் வாழ்வின் முதலில் தோன்றிற்று. அவர் சமயத்தினர் புறத்தோற்றங் களையும் சமயப் போர்வையில் மறைந்திருந்த தீய பண்புகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இவற்றையே சமயம் எனக் கொண்ட உலகோரை அவர் எதிர்த்ததன் காரணம் இதுவே. ஆனால், அதே சமயம் அவர் சமயத்தின் இப்புறத் தோற்றங்கள், கட்டுப்பாடுகள் கடந்து அதன் குறைபாடுகள், குணங்கள் ஆகிய யாவும் கண்டு விளக் கினார். ‘அன்ட்ராக்ளிஸூம் அரிமாவும்’ என்ற நாடகத்தில் தொடக்க காலங்களில் கிறித்தவர் உணர்ச்சிப் பண்பை வேறு எந்த இலக்கிய வாளரையும்விட அவர் திறம்பட எடுத்துக் காட்டியுள்ளார். அது கிட்டத்தட்ட விவிலிய நுலின் ஒரு ஆராய்ச்சியாய் அமைந் துள்ளது. இயேசுவின் பண்போவியம், அவர் அருஞ் செயல்கள் பற்றிச் சமய குருமார் பரப்பும் போலிப் பண்புரைகள் யாவும் எத்தகையோரும் காண அவர் ‘கடவுளை நாடிய கறுப்பு மங்கை’ என்னும் கதை நூலில் காட்டியுள்ளார். தம் பிறப்புச் சமயமாகிய கிறித்துவ நெறியினுள் அடைபடாமல் அவர் கூரிய அருள்நோக்கு, இஸ்லாம் புத்தம் சமணம் முதலிய கீழ்நாட்டுச் சமயங்களிலும் அக்கரை செலுத்தி வியத்தகு மதிப்புரைகளை வழங்கியுள்ளது.
காந்தியடிகள் ஷாவின் மறைவுக்கு ஒரு சில ஆண்டுகட்கு முன்பே மறைவுற்றார். இருவரும் தலைசிறந்த அருளாளராயினும் பலவகைகளில் காந்தியடிகள் பண்பும், கருத்தும், தன்மையும் ஷாவினிடமிருந்து வேறுபடுகின்றன. இருவர் சூழ்நிலைகளும் வேறுபட்டவையே. ஆயினும், ஷா காந்தியடிகளையும் அவர் நாட்டுச் சூழல் மரபையும் நன்கு உணர்ந்துகொண்டார். காந்தி யடிகள் மறைவு பற்றிய அவர் உரை இதனை நன்கு உடுத்துக் காட்டுகிறது. “அவர் ஒருமிக நல்ல மனிதர். இனி இந்த உலகில் வாழ முடியாது என்று அவர் தம் வாழ்வை முடித்துக்கொண்டு விட்டார்.” காந்தியடிகளின் தனிச் சிறப்பையும், அவர் சூழ்நிலை யின் முரண்பாட்டையும் இவ்விரு சிறுவாக்கியங்களில் அவர் அடக்கியுள்ளார்.
ஷாவின் அருட்பண்புத் திறம் ஒன்றே அவரைக் காந்தியடி களைப்போன்ற உலகப்பெரியாராக்கப்போதியது. அவர் அறிவுப் பண்பு, அவரைச் சாக்ரட்டீஸின் மரபில் வந்த இருபதாம் நூற்றாண்டின் சாக்ரட்டீஸாக்க வல்லது. அத்துடன் அவர் கலைப்பண்பும் உண்மையில் ஷேக்ஸ்பியரின் பண்பிற் குறைந்த தல்ல என்பதை அவருடைய ஒரு சில தனிக் கலைப் படைப்புக்கள் தெளிவாகக் காட்டுகின்றன. அவர் அறிவுத்திறம் கலையை மறைக்குமளவு முனைப்புடைய தாயினும், அது கலைத்திறத்தின் மீதே எழுப்பப் பெற்றுள்ளது என்பதில் ஐயமில்லை. இத்தனைக்கும் மேலாக அவர் ஒரு போர்வீரர். அறிவுப் படைக்கலங் கொண்டு சீர்திருத்தக் களத்தில் வெற்றி நாடிய செம்மல் அவர்.
1933-இல் கில்பெர்ட் மரே அவருக்கு உரிமைப் படுத்திய தம் அரிஸ்டாஃவானிஸ் பதிப்பின் படைப்புரையில் ஷாவைப் பற்றிக் கூறுவதாவது:
“இக் காலத்தின் சூழ்நிலைகளிடையே மீட்டும் பண்டை உலகப் பெருநகை அறிவுவிளக்க அறிஞர் ஒருவர் வரவைப் பலரும் விரும்புவர். போர்க்காலப் பித்தவெறிகள், குறுகிள குருட்டுத் தப்பெண்ணங்கள் ஆகியவற்றிடையே அவற்றைச் சிறிது அகற்றிக் காட்ட வால்ட்டேரின் ஓர் உயிர்ப்புக்காற்று, பகைமையா லெழுப்பப்பெற்ற பொய்மைச் சூழலிடையே சற்று ஓய்வு தந்து சிந்திக்கத் தூண்டும் ஓர் இராஸ்மஸின் அமைதி ஆகியவற்றுக்கு நாம் ஏங்கியிருந்தோம். சென்ற பல ஆண்டு களாக, என்னளவில், இன்றும் சிறப்பாக, என்மனம் அரிஸ்டோஃ வானிஸை நாடியே அலமந்து நின்றது. அவர் புகழ்பெற்ற களிநாடகங்களிரண்டில் இறந்தபின் மீண்டும் உயர்பெற்றெழுந்த பெருந்திறல் வீரரைப் பற்றிக் கூறுகிறார். இவ் வகையிலேனும் அவர் வந்து இக் காலத்தவர்க்கு உதவக் கூடாதா என்று நான் எண்ணியதுண்டு. இகழினிடையே, தம உலகின் குறுகிய நாட்டுப் பற்று, போர்க்காலக் காய்ச்சல்கள் ஆகியவற்றினிடையே போராடியது போல - சாவினுக்கு அஞ்சாது பகைமையும், பழியுணர்வுமின்றித் தம் வீர நகையால் உலகைத் தட்டி யெழுப்பியதுபோல - இன்றைய சூழ்நிலைகளிடையேயும் அவர் போராடலாம் அன்றோ? ………. நாடுகள், வகுப்பினங்களிடையே ஒப்புரவு, நேசம், உயர் நாகரிகம், கலை நயப்பண்பு, தனி மனிதன் வாழ்வில் பண்டை உலகமக்கள் கூறிய அருட்பற்று ஆகிய உயர்நலங்களெல்லாம் இப்போது மறைந்தொழிந்து விட்டன. இவற்றை மீட்டும் உயிர்ப்பித்தெழுப்ப, தனி மனிதரும் வகுப்புக் களும் மட்டுமன்றி, நாடுகளே ஆர்வத்துடன் கேட்கத்தக்க நடுநிலைப் பண்புடைய பேரறிஞர் குரல் ஒன்று இப்போது மிக இன்றியமையாது வேண்டப்படுகிறது.”
நாடுகளின் ஆர்வத்தைத் தூண்டவல்ல பேரறிஞராகவே ஷா விளங்கினார். கில்பர்ட்மரே எதிர்பார்த்த அரிஸ்டோஃ வானிஸ் அவரே என்பது வெள்ளிடைமலை.
ஷாவின் தனிச் சிறப்புக்களுள் ஒன்று, அவருடைய நகைச் சுவை. ‘நகைத் திறத்தால் பலநாடுகளிலும் மக்கள் உள்ளத்தில் இடம் பெற்றவர்’ என்று மரே தம் படைப்புரையில் அவரைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அவருடைய வசைமொழி எவரையும் பெரிதும் புண்படுத்தாதன் காரணம் இந் நகைச்சுவையே. சீன நாட்டினர் ஒருவர் ஷாவை நேரிற் கண்டு அவர் உடலமைப் படையாளம் ஒவ்வொன்றையும் பாராட்டத் தொடங்கினாராம். அவர் பற்களை அன்பர் கவனிப்பது கண்டு ஷா, “பல்லின் தோற்றம் எப்படி?” என்றார். “மிகப் பாராட்டத்தக்கதாகவே இருக்கிறது,” என்றார், அச்சீன அன்பர். “அப்படியானால் அதை அருகில்வைத்தே பாருங்களேன்,” என்று கூறி ஷா பற்களைக்கை யில் எடுத்துக்கொடுத்தாராம். பாராட்டுக்குரிய பற்கள் பொய்ப் பற்கள் என்பதை இதைவிட நகைத் திறம்பட எப்படிக் காட்ட முடியும்! நகைச்சுவை விளைவிப்பதற்காக அவர் எவ்வகை முரண்பாட்டையும் எடுத்துக் காட்டத் தயங்கியதில்லை; எத்தகைய முரணுரையையும் வலியுறுத்தப் பின் வாங்கியதில்லை. பலசமயம் அவர் தம்மையே தம் நகைத்திறத் திற்கு ஆளாக்கிய துண்டு, உண்மையில் அவர் பண்போவியங்களுள் தலைசிறந்த புனைவிய லோவியம் ஷாவின் ஓவியமே. நாட்டுமக்கள் ஷாவைக் காணும்போது இப்புனைவியலோவியத்தையே காணும்படி அவர் அதனைத் திறம்படப் பரப்பிவந்தார். எதையும் எதிர்ப்பவர், எவரையும் குறைகூறுபவர், பொருந்தாக் கூற்றுக்களைப் பொருத்திக் கூறுபவர், சுருங்கச் சொன்னால் அறிஞரிடையே ஒரு களிக்கூத்தர்! இதுவே அவர் தம்மைப்பற்றித் தாம் சித்திரித்துக் காட்டிய உருவம். ஆனால், இஃது அவர் புற உருவம். அவர் மேற்கொண்ட தோற்றம் மட்டுமே. அவர் சீர்திருத்த ஆர்வத்தை, ஒழுக்க உயர்குறிக் கோளை, உள்ளார்ந்த ‘சமயங் கடந்த சமய’ ஆர்வத்தை மக்கள் விருப்பத்திற்கு மாறுபடாமல் ஊட்டுவதற் கான வழியாகவே ஷா இதனை வகுத்துருவாக்கினார்.
தம் வாழ்க்கையில், தம் தோற்றத்தில் ஷா அசட்டையா யிருந்தார். இஃது உண்மையில் அவர் தன்மதிப்பு இறுமாப்பின் ஒரு கூறேயன்றி வேறன்று. அவர் மனம் வைத்தால் எதையுந் திருந்தச்செய்யும் ஆற்றலுடையவர் என்பதைப் பிறருக்காக அவர் செய்த செயல்கள் காட்டுகின்றன. பெரியார் பலர் தம் வாழ்க் கையில் காட்டும் சிறு குறைபாடுகள், பொதுத் திறமையின்மை, சீற்றம் ஆகியவை அவரிடம் கிடையா. தம் வாழ்க்கைத் தேவைகள் எதனையும் அவர் பிறர் உதவியில்லாமல் திறமையாக நிறை வேற்றிக்கொள்ளும் ஆற்றலுடையவர். ஆகவே, புறத் தோற்றத்தில் உலகின் பார்வைக்கு அவர் தம்மை ஒரு கோமாளியாகக் காட்டிக் கொண்டாலும், தனி வாழ்க்கையில் அவர் ‘பொது மனிதன்’ திறங்களில் குறைவுபடா முழுமனிதனாகவே விளங்கினார். மிதிவண்டி ஊர்ந்து செல்லல், தொலைபேசி கையாளல், வானூர்தி யியக்கல், தேவைப் பட்டபோது இவற்றைத் தாமே செப்பனிடல் முதலிய சிறுதிறச் செயல்களையும் அவர் தேர்ச்சி யுடன் செய்ய வல்லவர். தொடக்க நாட்களில் பணிமனையில் இத்திறங்களாலேயே அவர் நல்ல பணியாளராகப் பொலிவுற்றார். அவர் நினைத்தால் கலைஞனாக மட்டுமன்றி வேறு எத்தொழில் துறையாளராகவும் சீரும் சிறப்பும் பெற்றிருக்கக் கூடும். பெரியோருள் அவர் தனிச்சிறப்புக்கூட அவர் பொது மனிதத் தன்மைநிறைந்த பெரியார் என்பதேயாகும்.
ஷாவின் தனிச்சிறப்புக்களுள் அறிஞரே, அறியத்தக்க வையும், நுண்கலைஞரே அறியத்தக்கவையும் உண்டு. ஆனால், எவராலும் எளிதில் கண்டுணரத்தக்க வெளிப்படையான, முனைப்பான கூறுகளும் மிகுதி. அரும்பொருள்களை வந்து பார்ப்பதுபோல, அவரை மக்கள் வந்து பார்க்கும் படி தூண்டிய பண்புகள் இவையே. பிறர் எதிர்பாராத, பிறரை மலைக்க வைக் கக்கூடிய தோற்றம், நடையுடை, கருத்துக்கள் ஆகியவற்றை அவர் என்றும் மேற்கொண்டார். அவர் வாதமுறை அறிஞர் ஆராய்ச்சி களுக்கு மட்டும் உரியதன்று. அடிக்கடி பொதுமக்கள் கருத்தைக் கவரும் புத்துவமை, புதுவிளக்கம், புதுமுடிபுகளை அவர் வாதங்கள் போர்த்துக்கொண்டு வெளிவந்தன. வாத எதிர் வாதத்தில்கூட அவர் புதுமைச்சுவையும், நகைச்சுவையும் ஊட்டினார். அவர் வாதங்களின் நோக்கம் எதிரியை முறியடிப்பதோ, புண்படுத்து வதோ அன்று; அவர்களையும் தம் நகைத்திறத்தால், தம் ஆர்வத்தில் ஈடுபடுத்திவிடுவதேயாகும்.
ஷா எத்துறையிலும் ஒரு வெற்றியுள்ள வாழ்க்கை நடத்தி யிருக்கக்கூடியவர். அரசியல்துறையில் அவர் என்ன செய்யக் கூடும் என்பதனை ஸென்ட் பாங்கிராஸ் வட்டத்திலும், ஃவேபியன் கழகத்தின் வாயிலாகத் தொழிற்கட்சி அமைப்பிலும் அவர் நன்கு காட்டியுள்ளார். ஃவேபியன் கழகக் குழு நடவடிக் கைகளிலும் மற்ற நடைமுறைகளிலும் அவர் பேச்சாளர், எழுத்தாளர், பணியாளர் ஆகிய எல்லாத் துறைகளிலும் தம் முழு நிறை உழைப்புப் பண்பையும் விடாமுயற்சியையும் துணிவையும் விளக்குகிறார். ஆனால், இத்துறைகள் அனைத்தையும் விடுத்து அவர் கலைத் துறையை நாடியது அதன் பெரும்பயன் கருதியே. அப் பயனை உலகமக்களாகிய நாம் அனைவரும் பெற்றுவரு கிறோம். பிற துறைகள் யாவும் இயங்கும் துறைகள், அல்லது இயக்கும் துறைகள். கலை இயக்குவோரை இயக்கும் துறை. ஷா இத்துறை மூலம் தேசகாலங் கடந்து உலகை என்றென்றும் இயக்கிவர வல்லவர் என்பதில் ஐயமில்லை. அவர் பண்புகளை மேற் கொண்ட இளைஞரும் மங்கையரும் பல்கிப் பெருகும் நாடு, உலக நாகரிகத்துக்குச் சிறந்த வழிகாட்டியாக விளங்கும். தமிழகமும், தென்னாடும் அத்தகைய உணர்பண்புகள் தாங்கி, அவற்றின் வாயிலாக இந்திய மாநிலத்தை ஒரு புறமும், தென் கிழக்கு ஆசியாவை மறுபுறமும் இயக்கி மேல்திசை சார்ந் தொளிரும் அறிவுஞாயிற்றை மீண்டும் கீழ்த்திசைக்குக் கொண்டு வருமாக. படிஞாயிற்றின் ஒளியெடுத்து விரைவில் எழுஞாயிற்றின் புத்தொளி உலகிற்குப் புத்துணர்வூட்டுமாக.
கருத்துகள்
கருத்துரையிடுக