கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்
வரலாறு
Back
கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்
என். வி. கலைமணி
கவியரசர்
இரவீந்திரநாத் தாகூர்
புலவர் என்.வி. கலைமணி, எம்.ஏ.,
பாரதி நிலையம் '126 / 108, உஸ்மான் சாலை,
தியாகராய நகர், சென்னை-600 017.
விலை: ரூ. 30.00
□ KAVIYARASAR RABINDRANATH TAGORE □ By: N.V. KALAIMAN □ First Edition: December 2002 □ Price : Rs. 30.00 □ Copyright Holder & Publisher: BARATHi NILAYAM, 126/108, Usman Road, T. Nagar: Chennai - 600 017. □ Printed at : Sivakami Printo Graphics, 160, Big street, Triplicane, Chennai-600 005. □ : 28445051 □
கவியரசர்
இரவீந்திரநாத் தாகூர்
ஆசிரியரின் பிற நூல்கள்
கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் 22.00
உலக அறிஞர்களின் ந. மே. எண்ணங்கள் 38.00
எமர்சனின் ந. மே. எண்ணங்கள் 20.00
டாக்டர் முத்துலட்சுமியின் ந. மே. எண்ணங்கள் 20.00
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. 28.00
கலிலியோவின் ந. மே. எண்ணங்கள் 20.00
கன்பூசியஸின் ந. மே. எண்ணங்கள் 20.00
கவிக்குயில் சரோஜினியின் ந.மே.எண்ணங்கள் 24.00
மார்ட்டின் லூதரின் ந. மே. எண்ணங்கள் 24.00
தமிழ் நாவல் உலகின் தந்தை மாயூரம் வேதநாயகம் பிள்ளை 22.00
வ.உ.சி. ஐயர் 22.00
ஆல்ஃப்ரெட் நோபல் 25.00
கோபால கிருஷ்ண கோகலே 40.00
சர் சி. வி. ராமன் 32.00
திருப்பூர் குமரன் 25.00
ரைட் சகோதரர்கள் 35.00
உள்ளடக்கம்
1. தமிழ்ப் பற்று ஊட்டினார் தாகூர்
2. தொடக்கப் பள்ளி நடைமுறையை வெறுத்தார்
3. தாகூரைக் கவர்ந்தன காளிதாசர் நூல்கள்
4. தாகூரின் சமயக் கொள்கை
5. ஆங்கிலமொழியின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடினார்
6. அரசியல் தொண்டு
7. ‘கீதாஞ்சலி’ நூலுக்கு நோபெல் பரிசு!
8. தாகூர் உருவாக்கிய விசுவ பாரதி, ஸ்ரீ நிகேதன்
9. தாகூர் எழுதிய கடிதங்கள்
10. தாகூர் பார்வையில் காந்தியடிகள்
11. நோபல் பரிசு பெற்ற ‘கீதாஞ்சலி’ கூறும் வாழ்வியல்
கவியரசர்
இரவீந்திரநாத் தாகூர்
* * *
தமிழ்ப் பற்று ஊட்டினார் தாகூர்
எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! என்ற முழக்கம் இன்றும் தமிழ் நாட்டில் கேட்டுக் கொண்டே தான் இருக்கிறது!
அரசியல் அரங்குகளிலும், மக்கள் அவைகளிலும், அரசு அலுவல்களிலும், அறிவியல் துறைகளிலும், நாடகமேடைகளிலும், இலக்கிய விழாக்களிலும் அழகுத் தமிழோசை கேட்ட வண்ணம் உள்ளது.
பல்கலைக் கழகக் கல்வியையும், பழகு தமிழில் பயிற்றுவிக்க முடியும் என்ற முயற்சி நாட்டில் நடை பெற்று வருகின்றது.
எல்லாம் தமிழ்மொழியால் முடியும் என்ற எண்ணம், இன்று எல்லாத் துறைகளிலும் உறுதிப்பட்டுள்ளது.
ஆனால், எண்பது ஆண்டுகளுக்கு முன்னர்; இத்தகைய தாய்மொழிப் பற்றுணர்வைக் காண்பதரிதாகவே இருந்தது. தமிழ் மொழியிலே பேசுவதும், எழுதுவதும் கூட இழிவாகக் கருதப்பட்ட காலம் அது.
ஆங்கிலத்தில் பேசுவதும், எழுதுவதும், பெருமையாகப் பேசப்பட்ட நேரம்! வட மொழி என்கின்ற சமஸ்கிருதம் தமிழிலே புகுந்து; புலவர் பெருமக்களை மணிப் பிரவாளம் என்ற பைத்தியம் பற்றிக் கொண்டிருந்த சமயம்!
ஆங்கில மொழி, ஆட்சி மொழிப் பல்லக்கில் ஏறிச் சவாரி செய்து கொண்டு, தமிழர்களையும்: தமிழ்ப் புலவர்களையும் பல்லக்குச் சுமப்பவர்களாக்கி, அரசுப் பணியின் சுமைதாங்கிகளாக, அதிகாரச்சுமை தூக்கிகளாக வைத்துக்கொண்டிருக்கும் நிலைமை-அக்காலத்தில்!
ஆங்கிலப் பேரரசுக்கு அடிமைகளாக இருந்து கொண்டு, இங்கிலீஷ் மோகம் என்ற வியாதியுடன் வங்காள மாநிலத்திலே திரிந்து கொண்டிருக்கும் இந்தியர்கள்-அதவாது வங்காளியர்களைக் கண்டித்து, தாய்மொழிப்பற்றுணர்ச்சியின் முக்கியத்துவங்களை அறிவுறுத்திக் கொண்டிருந்தார்-வங்கக் கவிஞர் தாகூர்.
1912-ஆம் ஆண்டில் கவிஞர் தாகூர் நோபல் பரிசு பெற்றதற்குப் பிறகு இந்தியா முழுவதும் அவரைப் பெருமைப்படுத்த எடுக்கப்பட்ட விழாக்களில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர், தமிழ் நாட்டிற்கும் வருகை தந்தார்!
சங்கம் வைத்து மொழி வளர்த்த மதுரையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாராட்டு விழாவிலே கலந்து கொள்ள தாகூர் மதுரை மாநகர் வந்தார். அவருடன் அவரது செயலாளர் பியர்சன் என்பவரும் வந்திருந்தார்.
தமிழ் நாட்டில், கவிஞர் திலகம் ரவீந்திரநாத் தாகூர் தங்கியிருந்த இடத்தில், அவரைக் காண வந்தவர்கள் எல்லாம் இங்கிலீஷிலே பேசினார்கள், விருந்துபசாரமும் நடத்தினார்கள் அறிமுகங்களும் செய்து வைக்கப்பட்டார்கள்.
இந்த வேடிக்கைகளை எல்லாம் கவிஞர் தாகூர் பார்த்து “தமிழ் மக்கள் இங்கிலீஷ் மோகத்திலே இவ்வாறு பேய் பிடித்தது போல அலைகிறார்களே, இவர்களை எவ்வாறு திருத்துவது” என்று மனம் நொந்தார்.
ஒவ்வொரு இந்தியனும், அவரவர் தாய் மொழியில் தான் பேசவேண்டும்; எழுத வேண்டும் என்ற கொள்கையுடையவர் கவிஞர் கோமான் தாகூர். அந்தத் தாய்மொழிப் பற்றுணர்ச்சியை, தான் பிறந்த வங்காள மக்களுக்கும்-மாணவர்களுக்கும் இடைவிடாமல் வலியுறுத்தி வருபவர். பாராட்டு விழா நடத்தும் தமிழர்களிடம் தாய் மொழிப் பற்றை எப்படி வலியுறுத்துவது என்று சிறிது தயங்கினார்.
அப்போது இரண்டு தமிழறிஞர்கள் அவரைச் சந்திக்க வந்தார்கள். விழாப் பொறுப்பாளர், அந்த இரு பெரும் தமிழ்ப் புலவர்களை கவிஞர் ரவீந்திரரிடம் அறிமுகப்படுத்தும்போது, “ஐயா, இவர்கள் இருவரும் சிறந்த தமிழப் பேச்சாளர்கள், சிந்தனையாளர்கள் கவிஞர்கள், பத்திரிகை தொடர்புடைய எழுத்தாளர்கள்” என்று ஆங்கிலத்தில் பேசி அறிமுகப்படுத்தினார்!
அந்த இரு தமிழ் மேதைகளுக்கும் கவிஞர் தாகூர் கைகூப்பி அவரது வங்காள மொழியிலே வணக்கம் உட்காரும்படி சொன்னார். கவிஞரின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட அவர்கள் கெளவுரவமாக அமர்ந்து விட்டார்கள்.
நோபல் பரிசு பெற்ற தாகூரைப் பாராட்டி ‘ஆங்கிலத்திலே எழுத்ப்பட்ட பாமாலை வாழ்த்திதழ்கள் இரண்டை அவர்கள் கொண்டு வந்திருந்தார்கள்.
கவிஞர் தாகூருக்குத் தமிழ் மொழி தெரியாது; தமிழில் எழுதினால் தாம் எழுதும் அற்புதமான தமிழ்ச் சொல்சோவியங்களின் உட்பொருள் புரியாது; அதனால் தமிழின் அருமையை, அவர் பெருமையோடு உணர முடியாது போய் விடுமே என்ற ஆர்வத்தில் ஆங்கிலத்திலே பாமாலைகளை எழுதி வந்திருந்தார்கள்.
பாமாலை பாட எழுந்த புலவர் தனது வாழ்த்திதழை ஆங்கிலத்தில் தங்குதடையின்றிப் படித்தார்! இந்தப் பாடலை மிகவும் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்த கவிஞர் தாகூர்,
“குயில் தன் குரலிலேயே கூவிட வேண்டும். கிளியைப் போல பாட பயிற்சி செய்யக் கூடாது.” நீங்கள் உங்களுடைய அருமையான தாய் மொழியிலேயே என்னைப் பெருமையோடு பாராட்டிப் பாடியிருக்க வேண்டும்.
நான் 1911-ஆம் ஆண்டில், எனது ஐம்பதாவது பிறந்தநாள் விழாவில், இந்திய நாட்டிற்காக ‘நாட்டு வணக்கம்’ என்ற பாடலை எழுதினேன். அந்தப் பாடலில் எனது தாய் நாடான வங்காள மாநிலத்தை, உங்களுடைய தாய் நாடான ‘திராவிட நாட்டின் பெருமைக்குப் பின்னே தான்-வைத்து எழுதினேன். ஏன் தெரியுமா?
“எனது வங்கம் ஒரே ஒரு நாடு! அதாவது ஒரே ஒரு மாநிலம்! எனது தாய்மொழி வங்கம், வளமான மொழிகளிலே ஒன்று. ஆனால், உங்களது ‘திராவிட’ என்ற நாடு, நான்கு நாடுகள். அதாவது நான்கு மாநிலங்களைக் கொண்ட தென்னாடு... மூலமொழியான தமிழைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள நான்கு மொழிகள் உடைய மொழி உங்களது தமிழ் மொழி என்ற மேல் நாட்டு மொழி ஆய்வாளர்களது கருத்துக்களைப் படித்தவன் நான்! உண்மையும் அதுதானே!
“நான் உங்களுடைய மொழியைப் பெருமைப்படுத்திய பிறகு, நீங்கள் குயிலைப் போலக் கூவி, உங்களது தாய் மொழியிலே பாடி என்னைப் பாராட்டாமல், யாரோ கற்றுக் கொடுத்த மொழியிலே பாராட்டிப் பாடலாமா? இது அவமானம் அல்லவா? நமக்கு?
“உங்களுடைய தாய் மொழியான தமிழிலேயே என்னைப் பாராட்டியிருக்க வேண்டாமா? இனியாகிலும், தாய் மொழியிலேயே உமது எண்ணங்களைச் சிந்தித்துப் பாராட்டுங்கள்! பேசுங்கள்; எழுதுங்கள்; பாடுங்கள்; அது இந்திய நாட்டுக்கே பெருமை, இவ்வாறு கவிஞர் தாகூர் அறிவுறுத்தினார்.
கவிஞர் தாகூர், மதுரை அறிஞர்கள் இடையே தனது தாய் மொழியான வங்காள மொழியில் பேசியதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் சாந்திநிகேதனம் பொறுப்பாளராக இருந்த ஆண்ட்ரூஸ் என்ற ஆங்கிலேயர்.
இந்த மொழிபெயர்ப்பினை கவிஞர் தாகூர் நடத்திய ‘பாரதி’ என்ற மாத ஏட்டிலே 1914-ஆம் ஆண்டு டிசம்பர் இதழிலே ஆண்ட்ரூஸ் என்பவர் கட்டுரையாக வெளியிட்டுள்ளார். கட்டுரைக்குத் தலைப்பு ‘தாய் மொழிப் பற்று ஏன்?’ என்பதாகும்.
கவிஞர் தாகூர், ஆங்கிலத்திலே வாழ்த்துப் பாடிய தமிழறிஞரைக் கண்டித்த அறிவுரையினை கேட்டு வெட்கமடைந்த மற்றொரு தமிழறிஞர், தனது வாழ்த்துப் பாடலைப் பாடாமலே மறைத்து வைத்துக் கொண்டபடியே வெளியே சென்றார்.
கவிஞர் பெருமகன் தாகூர், தமிழறிஞர்கள் இருவரையும் அழைத்து, தாய்மொழிப் பற்றும், தாய் மண்ணைப் பற்றிப் பேசுவதும், எழுதுவதும் குறுகிய நோக்கமல்ல என்று அமைதிப்படுத்தி அவர்களை அனுப்பி வைத்தார்.
இந்தியாவின் எந்தெந்த மாநிலத்தவர்கள் நோபல் பரிசு பெற்ற கவிஞர் தாகூரைப் பாராட்டி, மதிப்பும், மரியாதையினையும் காட்டிட அழைத்தார்களோ, அவரவர்களுக்கெல்லாம் அவரவர் தாய்மொழிப் பற்று வளர்ந்திட, அறிவுறுத்தி வந்தார் கவிஞர் தாகூர்.
“உங்களுடைய தாய் மொழியான தமிழ் ஓங்கி வளர்ந்திட, ஒவ்வொருவரும் கடமையாற்றுங்கள்” என்ற அறிவுரையை, தனக்களித்த பாராட்டு விழாவுக்குரிய நன்றியுரையாக, தமிழ் நாட்டுக்கு அடையாளம் காட்டியவர் கவிஞர் தாகூர்.
அவரவர் தாய்மொழிப் பற்றுக்கொண்டு உணர்ச்சியுடன் வாழவேண்டும் என்ற பரந்த நோக்கத்தாலும், அவருக்கே இயல்பாக அமைந்திருந்த மொழிப் பற்றினாலும், ‘யாம்பெற்ற மொழியுணர்ச்சிப் பேரின்பம்-பெறுக இந்த வையகம்’ என்ற தனியா வேட்கையாலும், ஒவ்வொரு மொழியும் அவரவர் மாநிலத்தில் ஓங்கி வளர வேண்டும் என்ற கடமை உணர்ச்சியாலும் தான் கவிஞர் தாகூர் எல்லா மொழியாளர்களுக்கும் உரிய சுயமரியாதை உணர்வைத் தட்டி எழுப்பினார்! அதனால், தமிழ் மக்களும் தமிழ் மொழி வளர்ச்சியில் தன்மானம் பெற வேண்டும் என்று கவிஞர் தாகூர் தமிழர்களுக்கு மொழிப் பற்றை ஊட்டினார்!
2. தொடக்கப் பள்ளி
நடைமுறையை வெறுத்தார்
இந்திய நாடு, உலகப் புகழ் பெறுவது வானைமுட்டும் இமயச் சிகரங்களாலோ, கங்கை, பிரமபுத்ரா, யமுனா, கோதாவரி, மஹாநதி, காவேரி, வைகை ஆறுகளாலோ சித்தன்ன வாசல், மாமல்லபுரம், குடுமியான் மலை, திருச்சி, காஞ்சி, அஜந்தா, எல்லோரா, தாஜ்மஹால், பூரி ஜகன்னாத், ஆக்ரா, அஜ்மீர் போன்ற சிற்பக் கோயில் கட்டடங்களாலோ நெய்வேலி நிலக்கரி, சேலம் இரும்பாலை, டாடா இரும்பு ஜெம்ஷெட்பூர் தொழிற்சாலை, பெரம்பூர் ரயில்பெட்டி அல்லது கோலார் தங்க வயல்களாலோ சென்னை மரீனா, திருவனந்தபுரம், கோவளம், விஜயவாடா கப்பல் தொழிற்சாலை, கல்கத்தா துறைமுகக் கடற்கரைகளாலோ அன்று!
திருவள்ளுவர் பெருமான், காந்தியண்ணல்; நேரு பெரு மகன் சுபாஷ் சந்திர போஸ், ஜகதீச சந்திர போஸ், சர்.சி.வி.ராமன், அப்துல்கலாம், டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன், கணக்கியல் மேதை ராமானுஜம், வல்லபாய் படேல், வீரசாவர்கர், டாக்டர் அம்பேத்கர், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம், பெருந்தலைவர் காமராஜர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்ற பெருமக்கள் ஒவ்வொருவரும்
ஒவ்வொரு துறையிலும் தோன்றி, அவரவர் சான்றாண்மைகளை நிலைநாட்டுவது தான் இந்தியா புகழ் பெறக் காரணம்,
வெறும் இயற்கைச் செல்வங்களின் பெருமைகளால் மட்டுமே ஒரு நாட்டின் சான்றாண்மையை நிலை நாட்டி உலகின் முன் புகழ்பெற இயலாது. இந்த மண்ணிலே தோன்றி, அந்த மண்ணிற்காக அரும்பெரும் தியாகத்தைச்செய்து, அரிய பணிகள் பலவாற்றி, தன்நலம் மறந்து பொதுநலம் பேணி, தனது நாட்டு மக்களுக்காக உடல், பொருள், ஆவி, அனைத்தையும் ஈந்து ஒவ்வொரு துறையிலும் ஈந்து யார்யார் புகழ் பெறுகிறார்களோ. அவர்களால் தான் ஒரு நாடு வானளாவிய புகழையும், வல்லமையையும் பெற முடியும்.
இந்த அளவுகோல் படி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு துறையில் நாம் நோக்கும் போது, கவிஞர் ரவீந்திர நாத் தாகூர் இலக்கியத்துறையிலே, ஈடில்லாப் புகழ்பெற்று, இந்திய நாட்டுக்கு உலக அரங்கில் பெரும் பெருமையை நிலை நாட்டியவர்.
அறிவியல், ஆன்மிகம், இலக்கியம், அரசியல், புரட்சி போன்ற பல துறைகளிலே பெரும் பெரும் அறிவாளர்களை ஈன்றளித்துள்ள மாநிலம், வங்காள மாநிலமாகும்! குறிப்பாகக் கூறுவதானால், ராமகிருஷ்ண பரமஹம்சர், அன்னை சாரதா தேவி, சுவாமி விவேகானந்தர் அரவிந்த கோஷ், சுபாஷ் சந்திர போஸ், ஜகதீச சந்திர போஸ், சரத் சந்திர போஸ், பங்கிம் சந்திர சட்டர்ஜி, ரவீந்திர நாத் தாகூர் போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர்.
வங்கம் என்றால், பண்டைய ஐம்பத்தாறு நாடுகளுள் ஒன்று, பதினெட்டு மொழிகளிலே ஒன்று; மரக்கலம், வளைவு என்றும் மேலும் பல பொருள்கள் உள்ளன. வங்க நாட்டிலே தோன்றிய மேதைகள் எல்லாம் பலதுறைகளிலும் பலவாறு பங்களித்துள்ளனர்.
கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், கொல்கத்தா மாநகரிலே, 1861-ஆம் ஆண்டில், தாகூர் எனும் செல்வாக்கான குடியிலே தோன்றினார்! தந்தை பெயர் தேவேந்திர நாத் தாகூர்; அவர் உயர்ந்த பண்பாளர்; சிறந்த அறிஞர்; எல்லாரிடமும் மனித நேயத்தோடு பழகும் நல்ல உள்ளம் பெற்றவர்!
தேவேந்திர நாத் தாகூர் சற்றேறக் குறைய வங்காளத்துக்கு குசேலரோ என்னவோ, பதினான்கு பிள்ளைகளுக்கு தகப்பனாராக விளங்கினார். குழந்தைகளை ஆடம்பரம் ஏதுமில்லாமல் எளிமையோடு வளர்த்து வந்தார். தந்தை எவ்வழியோ அவ்வழியே- அவரது மக்களும் ஒழுக்கத்தைப் பின்பற்றி வாழ்ந்தார்கள்.
ரவீந்திரர் தனக்குரிய விளையாட்டுப் பொருட்களைத் தாமே தயாரித்துக் கொள்ளும் புத்திசாலியாக சிறுவயதிலேயே விளங்கி வந்தார். தேவேந்திர நாத் தாகூரின், எளிமையான, சிக்கனமான, ஆடம்பரமற்ற வாழ்க்கை அவரது மக்களையும் தங்களை அறியாமலேயே, பின்பற்றிடச் செய்தது.
ரவீந்திரர் வெளியுலகம் தெரியாத குழந்தையாகவே வளர்ந்தார். எந்நேரமும் தனது வீடு, முற்றம், பின்புறத் தோட்டம் என்றே விளையாடிக் காலம் தள்ளுவார். தனது வீட்டுத்திண்ணையிலே அவர் உட்கார்ந்து கொண்டு, வீதியிலே போவோர்-வருவோர், வண்டி-வாகனங்கள் மக்களிடையே மூளும் சண்டை சச்சரவு குழப்பங்கள் போன்றவற்றைத்தான் அவர் பார்த்துரசிப்பார்!
வீட்டுத்தோட்டம், முற்றம்,தெருத்திண்ணைக் காட்சிகளைப் பார்த்துப் பார்த்துச் சலித்துப்போன ரவீந்திரர், சில நேரங்களில் தனது அண்ணன்மார்களோடு விளையாடலாம் என்று அவர்களை நாடுவார். ரவீந்திரர், தேவேந்திர நாத் தாகூரின் கடைசி மகன்; அதாவது பதினான்காம் குழந்தை.
அதனால், எல்லா அண்ணன்களும் அவரைத் தம்மிடம் சேரவிடாமல்,அன்பாக, செல்லமாக, “ரவீந்திரா,நீ,நல்ல தம்பி தானே! தனியாகவே போய் விளையாடுதம்பி, போ,” என்று ரவீந்திரரைத் தட்டிக் கொடுத்து அனுப்பி விடுவார்கள்.
உடனே, தன்னை ஏன் எல்லாரும் சேர்த்துக் கொண்டு விளையாட மறுக்கிறார்கள்? என்ன காரணம் என்று அந்தச் சிறிய வயதிலேயே அவர் சிந்திக்கலானார்! பிறகு, வேறு வழியெதுவும் தெரியாமையால், தனது வீட்டிலிருக்கும் வேலைக்காரர்களிடம் நட்புக்கொள்வார்.
சிறுவரல்லவா ரவீந்திரர்? அதனால் கிராமத்துக் கதைகளை எல்லாம் வேலைக்காரர்கள் மூலம் கேட்பார். அவர்கள் ஆடியும்-பாடியும் கூறுவார்கள்.
அந்த வேலைக்காரர்கள் சொல்லும் கதைகள் ஒவ்வொன்றிலும் உள்ள சொற்களை, வாக்கியங்களை, நீதிகளை, ரவீந்திரர் ஆழ்ந்து கவனிக்கின்றார் என்று அந்த வேலைக்காரர்களுக்குக் கதை சொல்லும்போது தெரியாது!
ஆனால், வேலைக்காரர்கள் என்னென்ன சொன்னார்கள் என்பதை, ரவீந்திரர் மறுநாள் அவர்களிடம் சொல்லிக் காட்டி, நான் சொன்னது நீங்கள் கூறிய கருத்துக்கள் தானே! ‘சரியாக இருக்கின்றதா?’ என்று அவர்களைக் கேட்கும் நேரத்தில்தான், ஓ, சிறுவன் நாம் சொல்லும் எல்லாவற்றையும் ஆழமாகக் கூர்ந்து கேட்கிறான் என்பதைப் புரிந்து கொண்டார்கள்.
இவ்வாறு தாகூர் அறிந்த விவரங்கள் எல்லாம் பிற்காலத்தில் அவருக்கு எவ்வெவ்வாறு பயன்படப் போகின்றன என்ற உணர்வுகள் அவர்களுக்குத் தெரியாதல்லவா?
தனது வீட்டு வேலைக்காரர்கள் மூலம் கிடைக்கும் கருத்துக்களை, உணர்வுகளைத் தொடர்ந்து கேட்க வேண்டும் என்ற ஆர்வம், அவருக்கு ஏற்படும் போதெல்லாம், ரவீந்திரர் அவர்களை நாடிச் செல்வார்.
சில நேரங்களில் வேலைக்காரர்கள் இல்லாதபோது, தனது தாயிடமும், அத்தையிடமும் சென்று அவர்களை வற்புறுத்தி வற்புறுத்திக் கதைகளைக் கேட்பார். அவர்களும் தங்களுக்கு ஓய்வு கிடைக்கும் நேரங்களிலே எல்லாம் வங்காளத்துக் கதைகளை எல்லாம் கூறுவார்கள். ரவீந்திரரின் இலக்கிய தாகத்தை அவர்கள் தீர்த்து வைத்தார்கள்.
வேலைக்காரர்களிடம் கேட்ட கதைகள் அம்மா, அத்தையிடம் அறிந்து கொண்ட இலக்கிய உணர்வுகளுடன் தேவேந்திர நாத தாகூர் பணியாற்றிடும் அலுவலக கணக்கர் கைலாசம் என்பவரும் கதை சொல்வார். அந்தக் கணக்கர் தேவேந்திர நாத தாகூரின் குடும்ப நண்பர்களுள் ஒருவர். வங்க மொழியின் புராணக் கதைகளை அறிந்தவர்! புராணிகர் அவரிடம் சென்று கதைகள் கூறுமாறு தொல்லைகளைக் கொடுப்பார் ரவீந்திரர்.
அதனால் தனக்குத் தெரிந்த புராணக்கதைகளைக் கூறி மகிழ்விப்பார் .இடையிடையே புராண, இதிகாச ஸ்லோகங்களையும் எடுத்துச் சொல்லி அவற்றுக்குப் பொருள் உரைத்து விளக்கிச் சொல்வார்.
ரவீந்திரர் இவ்வளவு பேர்களிடம் கேட்ட கதைகளை எல்லாம் தொகுத்துத் தொகுத்துச் சிந்திப்பார்! வங்காள மொழியிலே உள்ள சொற்களை எல்லாம் புரிந்து கொண்டு, அதற்கு இணையான பொருள் தரும் சொற்களை எல்லாம் தெரிந்து தனிமையிலே இவற்றை எண்ணியெண்ணி- எழுதியெழுதி மனப்பாடம் செய்து மகிழ்வார்.
கவிதைக்குச் சொல்லடுக்குவது கவிஞர்களது இளமைக் காலப் பைத்தியம்: இந்த ஞானக் கிறுக்குதான். சிறுவன் ரவீந்திரனைப் பிற்காலத்தில் ‘கீதாஞ்சலி’ என்ற உலகம் போற்றும் இலக்கியத்தை எழுத வைத்தது. அதன் எதிரொலி தான் தாகூர் பெற்ற நோபல் பரிசு!
தமிழ் நாட்டிலே கூட விடுதலைக் கவிஞர் பாரதியாரை, அவரது தந்தை ‘கணக்கு போட்டு விட்டாயா?’ என்று கேட்டதும், உடனே பாரதியார் கணக்கு, பிணக்கு, மணக்கு, ஆமணக்கு என்று பிதற்றிய படியே தந்தையார் கேட்ட எண்ணத்தைச் சிதறடிப்பாராம்!
“ஏன், விழிக்கிறாய்? என்று தந்தை மீண்டும் பாரதியாரை வலியுறுத்திக் கேட்டால், உடனே அவர், ‘விழி, கழி, சுழி, வழி, குழி, பழி, இழி, பிழி’ என்று சொற்களை அடுக்கிக் கொண்டே போய் தந்தையைச் சொல் ஜால மாயத்திலே மயக்கிவிடுவதும் உண்டாம் என்பர்!
அதனைப் போல, அமரகவி பாரதியாருக்கு வழிகாட்டியாக, ஒரு முன்னோடியாக ரவீந்திரரும் இருந்துள்ளார். பாரதி யாரைப் போல ரவீந்திரர் என்ன செய்தார் என்பதைப் பாருங்கள.
அன்னை, அத்தை, தனது வீட்டுப் பணியாளர்கள், தந்தை அலுவலகக் கணக்கர் கைலாசம் போன்றவர்கள் கூறிய கதைகளை எல்லாம் காட்சி காட்சியாக, ரவீந்திரர் தொகுத்து, அக்காட்சிகளை தனது மனக் கண்முன் கற்பனை உருவிலே கொண்டு வருவார்! அப்போது, அவரது வீட்டுத் தாழ்வாரத்தில் ஒரு பழைய பல்லக்கு இருந்தது. அது சவாரி செய்வாரற்று இருந்தது.
ரவீந்திரர் கற்பனை வானிலே சிறகடித்துப் பறக்கும் போது, அந்தப் பல்லக்கினுள்ளே ஏறி அமர்ந்து அதன் கதவை மூடிக் கொள்வார்! அவ்வளவுதான்! உடனே ரவீந்திரர் கற்பனையில் ராவணனுடைய புஷ்பக விமானம் போல் அந்தப் பல்லக்கு பறக்குமாம். அந்த மாயவிமானம் வானில் ஊர் ஊராக, சிற்றூர் பேரூராக, காடு காடாக பாலைவனம் தாண்டி, ஆறுகள் பலகடந்து, கடல்கள் தாண்டி, ஏதோ ஒரு குபேரபுரி போன்ற பெரும் நகரத்துக்குப் போகுமாம். உள்ளே உட்கார்ந்துள்ள சிறுவர் ரவீந்திரர் உடனே அலெக்சாண்டராவாராம், இராமனாக மாறுவாராம்; அசோகனைப் போல முடி சூட்டிக் கொண்டு பெருமிதமாக நீதி விசாரணையினை நடத்துவாராம். பல்லக்கு அந்நகரத்துக்குள் தரை இறங்குமாம், காலாட்படை, குதிரைப்படை, வேழப்படை, தேர்ப்படை இவையெல்லாம் அவரது பல்லக்கைப் புடைசூழ்ந்து கொள்ளுமாம்! உடனே பல்லக்கில் மீண்டும் பேரரசுப் பெருமிதத்தோடு அங்கிருந்து அவர் புறப்பட்டு விடுவாராம்.
மீண்டும் திரும்பும்போது கடல்கள் குறுக்கிட்டால், கப்பலாக மாறிவிடுமாம் பல்லக்கு, ஆறு தென்படுமானால் அதே பல்லக்கு அழகான ஓடமாக மாறுமாம்!
இயற்கை அவரை ஈர்த்தது எப்படி?
ரவீந்திரர் சிறுவராக இருக்கும்போது, இயற்கைக் காட்சிகளைப் பார்த்து ரசிப்பார் என்று முன்பே குறிப்பிட்டோம்! மக்களிடையே நடக்கும் இயற்கைச் சம்பவங்களை எல்லாம் கண்டு அதற்கேற்ப தனது கற்பனையை வளர்த்து பெருக்கிக் கொள்வார்.
மழை பொழியும் அழகை ரசிப்பார். பெய்த மழை சிறு சிறு கால்வாய்களாக நகரின் ஓரத்திலே ஓடும் சலசல என்ற ஒலியைக் கேட்டும் பார்த்தும் மகிழ்வார்! பனிக்காலங்களிலே புற்களில் காலையிலே காணப்படும் பனிநீர்த் துளிகளைக் கண்டு மெய் மறந்து சிந்திப்பார்!
மழைக் காலங்களிலும், பனிக்காலங்களிலும் துளிர்விடும் மரத்தின் புதிய இலைகள், செடி, கொடிகளின் இலைகளிலே படர்ந்து தங்கியுள்ள பனித்துளிகளின் பளபளப்புத் தோற்றம், அப்போது வீசும் மெல்லிய காற்றில் மலர்வனத்துப் பூக்கள் அசைந்தாடும் காட்சிகள் அவருடைய குழந்தை மனத்தை பித்துப் பிடிக்க வைத்து விடுமாம். மெய் மறந்து ரசிப்பாராம்.
வயது என்னவோ ஏழு எட்டிலே நடைபோடும் சிறு பருவம்தான், என்றாலும் அந்த வயதிலேயே அவர் விண்ணையும் மண்ணையும் தனது கற்பனையால் அளந்து பார்த்தார்!
வீட்டு வாயிலின் முன்பு விசேஷ நாட்களில் பந்தல் போட குழி தோண்டும் போதும், கம்பங்களை நடும் போதும், எதற்கு எது ஆதாரமென்று மண்ணின் ஆழத்தை, அதன் குழியைப் பார்ப்பாராம். அதாவது மண்ணுக்குக் கீழே பாதாள லோகம் இருக்கிறது. என்று அத்தை சொன்னதை வைத்து பந்தல்
கம்பங்களை நடுவதற்குத் தோண்டிய குழிகளின் கீழே மேலும் ஆழமாகத் தோண்டத் தோண்ட என்னென்ன புதுமைகள் புலப்படுமோ என்று ரவீந்திரர் எதிர் பார்ப்பாராம் ஆனால், வேலைக்காரர்கள் கம்பம் நடுமளவு ஆழம்தானே தோண்டுவர் அதனால், சிறுவன் மனம் ஏமாறும்!
நீலவாளில் நிலவு இருந்தாலும் சரி, இல்லாமல் போனாலும் சரி, அதன் விரிப்பு அவருக்கோர் விருந்தாகவே விளங்கியது.
வாணவெளியில் அதிகாலையிலும், மாலையிலும் பாடிப் பறந்து செல்லும் பறவை இனங்களின் பல்விதக் குரலோசைகள் அவருடைய காதுகளுக்கு ஓர் இசைத் தேனாகவே இனித்தது.
சுருக்கமாகச் சொன்னால், அவர் வானியல் ஆய்வுப் பேராசிரியரைப் போலவே அவற்றையெலாம் கேட்டுக்கேட்டு, பார்த்துப் பார்த்துப் புரிந்து கொண்டார். அந்தச் சிறுவயதில் அதாவது ஏழெட்டு வயதுக் காலத்திலேயே அவர் ரசிக்காத, கற்பனை செய்யாத, ஆழ்ந்து நோக்காத துறைகளே இல்லையென்று கூறலாம். ஆன்மிகத் துறை ஒன்றைத் தவிர!
தாய்மொழியில் ஆரம்பக் கல்வி
ரவீந்திர நாத் தாகூரின் அண்ணன்கள் அனைவரும் நாள்தோறும் பள்ளிக்குச் சென்று வருவார்கள். இவர் மிகமிகச் சிறுவர் என்பதால், இவரைப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப் பெற்றோருக்கும் விருப்பமில்லை; உடன் பிறப்புக்களுக்கும் மனமில்லை. அதனால், அவர் வீட்டிலே தனிமையாக இருக்கும் நிலை ஏற்பட்டது.
சிறுவன் ரவீந்திரருக்குத் தனிமை பிடிக்கவில்லை; ஒருவித விரக்தியும், வெறுப்பும் ஏற்பட்டது. அதனால், அவர் கல்வி கற்றிடப் போக வேண்டும் என்று, தந்தையாரையும், தமையன்மார்களையும் வற்புறுத்திப் போராடினார்! அவர்களும் சிறுவன் என்று மறுத்துவிட்டார்கள். இருந்தாலும், போயே தீருவேன் என்ற பிடிவாதத்திலே ரவீந்திரர் வெற்றி பெற்று பள்ளி செல்லத் தொடங்கினார்.
எந்தப் பள்ளிக் கூட வாழ்க்கைக்காகப் போராடினாரோ அப்பள்ளி வாழ்க்கை அவருக்கு எட்டிக் காயாகக் கசந்தது. ஏனென்றால், பள்ளிக்குப் போய் வருவது, வீட்டில் அவர் தனிமையாக இருந்ததைவிட, மிகக் கொடுமையான சிறை வாழ்க்கையாக இருந்தது என்கிறார்.
ஆரம்பப் பள்ளிக் கல்வி வாழ்க்கை எப்படிப்பட்டது தெரியுமா? என்ற கேள்வியை எழுப்பிய ரவீந்திரர், அதை “அந்தமான் தீவு” என்று குறிப்பிட்டார். ஆரம்பப் பள்ளிகளில் சிறுவர்களைக் கல்வி என்ற பெயரால் கொடுமைப்படுத்துவதைத் தவிர, சிறுவர்களின் உள்ளம் கவர்ந்திழுக்கும் பகுதி ஒன்றும் இல்லை. அதனால், அவர் ஆரம்பக் கல்வி நடை முறைகளை அடியோடு வெறுத்தார்.
அக்காலம் வெள்ளையர் ஆட்சிக் காலம் அல்லவா? அதனால், ஆங்கில மோகம் அனைவரையும் ஆட்டிப்படைத்தது. பிற்கால வாழ்க்கைக்கு அரசுப் பணியைச் சுலபமாகப் பெறலாம் என்ற ஆசையினாலே நூற்றுக்கு எண்பது பேர் ஆங்கிலக்கல்வி ஆசையில் உழன்றார்கள். இதை ரவீந்திரர் எதிர்த்தார்.
அந்நிய நாகரிகமோகம், நடை உடை பாவனைகள், பேச்சு, எழுத்து, எல்லாம் அளவுக்கு மேலே தீராத ஒரு நோய் போல நடுத்தர, மேல்மட்ட மக்களைப் பற்றியிருந்தது.
ரவீந்திரருக்கு தனது தாய்மொழியான வங்காள மொழியிலேயே ஆரம்பக் கல்வியை வீட்டில் கற்பிக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்கள். இவ்வாறு ஏற்பட்ட அடிப்படைத் தாய் மொழிக் கல்விப் போதனை, பிற்காலத்தில் ரவீந்திரருக்கு சிறந்த உதவியானது.
ரவீந்திரருக்கு காலை, மாலை இருவேளைகளிலும் கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டது. அத்துடன் ஓவியம் எழுதுவதிலும் அவர் பயிற்சி பெற்றார். ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும் ஆசான் தினந்தோறும் இரவு நேரங்களில் வந்து கற்றுக் கொடுப்பதால், சில நேரங்களில் துக்கம் கெட்டுவிடுகின்றது என்பதால், ஆங்கிலம் கற்பதிலே அவருக்கு வெறுப்பு உருவானது. எப்போது மணி ஒன்பது அடிக்கும், ஆங்கில ஆசிரியர் பாடத்தை முடித்துக் கொண்டு வெளியேறுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டே இருப்பார். ரவீந்திரா்!
ஒன்பது மணிக்குப் பிறகு, தனது அன்னையிடம் செல்வார். கதைகள் ஏதாவது கூறுமாறு கேட்பார். அம்மையார் புராணக் கதைகளைச் சொல்லிக் கொண்டே இருக்கும் போது தாய் மடியிலே மகன் உறங்கிவிடுவாராம்.
பள்ளிக் கூடப் பாடம் ஒரு புறம்; அதே நேரத்தில் வீட்டிலே இங்கிலீஷ் ஆசிரியர் நடத்தும் பாடம் மறுபுறம்! இந்தக் கல்விச் சுமைகளே அவருக்குப் பெரிய பாரமாகி விட்டது. ஆங்கிலப் பாடம் நடக்கும்போது, ரவீந்திரா் தனக்கு வயிற்றுவலி என்று பொய்க் காரணம் சொல்லி, ஆங்கிலப் பாடச் சுமையிலே இருந்து தப்பித்துக் கொள்வார் பள்ளிக்கூடப்பாடச் சுமைகளைத் தாங்க முடியாமல் வெறுப்பு ஏற்படுவதுபோல, வீட்டுப் பாடப் போதனைகளையும் அவர் வெறுப்பதற்காகவே, ஏதாவது நோய் தமக்கு வாராதா என்று எதிர்பார்ப்பாராம்.
3. தாகூரைக் கவர்ந்தன
காளிதாசர் நூல்கள்
ரவீந்திரருக்குப் பாட்டு எழுதும் ஆசை, அவர் பள்ளியில் படிக்கும்போதே ஏற்பட்டது. பாடங்களை எழுதிட நோட்டுப் புத்தகங்களை அவரது தந்தையார் வாங்கிக் கொடுத்தால், அவற்றில் எல்லாம் பாடல்களாக நிரப்பிவிடுவார்.
நோட்டுப் புத்தகங்களை நிரப்பி விடுவதோடு மட்டும் நில்லாமல், தான் எழுதிய பாடல்களை தனது வீட்டிலேயே எல்லாருக்கும் கேட்கும்படி தாகூர் படித்துக் கொண்டே இருப்பார்! உரத்த குரலில் அவர் படிப்பதை அவருடைய தந்தையும், அண்ணன்களும் கேட்டு ரசிப்பார்கள்.
தந்தையின் கனவு
தனது மகன் பதினொரு வயதிலேயே வங்கமொழியின் அருஞ்சொற்களைத் தனது பாடல்களில் புகுத்தி எழுதியிருப்பதைக் கண்ட அவரது தந்தை, மிக வியந்து கேட்பார்! எதிர்காலத்தில் தனது மகன் சிறந்த ஒரு வங்கக் கவிஞன் ஆவானோ என்று அவர் பலமுறை ஆச்சரியப்பட்டதுமுண்டு. அந்த அளவுக்கு தாகூர் தனது சிறு சிறு பாடல் வரிகளிலே வங்க மொழியின் அருஞ்சொற்களை எழுதிவந்தார்!
தாகூர் எழுதிய பாடல்களிலே இன்பவியல் சம்பவங்கள் குறைவாகவே இருந்தன. ஆனால், துன்பவியல் கருத்துக்களும், சம்பவக் கோர்வைகளுமே அதில் குவிந்து கிடந்தன! சோக நிகழ்ச்சிகளை அவர் அழகாக எழுதுவதையே தனது கொள்கையாகக் கொண்டிருந்தார்.
ஒரு நாள் பள்ளியின் தலைமையாசிரியர் ரவீந்திரரை அழைத்து, ‘தாகூர் நீ பாட்டு எழுதுவதாக உன்னுடன் படிக்கும் நண்பர்கள் கூறுகிறார்களே, இது உண்மைதானா?’ என்று கேட்டு, ஒரு பொருளைத் தலைப்பாகக் கொடுத்து ‘இதைப் பற்றி எழுது பார்ப்போம்’, என்று கேட்டார்!
உடனே ரவீந்திரர், அவர் எதிரிலேயே, அந்தப் பொருளைப் பற்றிய பாடலொன்றை எழுதி, பாடியும் காட்டினார். வகுப்பு மாணவர்கள் கையொலி எழுப்பி மகிழ்ந்தார்ள். பொறாமை மனங்கொண்ட ஒரு சில மாணவர்களும் இருந்தனர்.
அவர்களில் ஒருவன் எழுந்து, தலைமையாசிரியர் முன்பே, ‘இந்தப் பாடல் ரவீந்திரன் எழுதியதன்று; புத்தகங்களில் ஏற்கனவே படித்து மனப்பாடம் செய்து வைத்திருந்த கருத்துக்களைப் புகுத்தி அடுக்கிக் காட்டியது போல இருக்கிறது என்றான்.
ஆனால், ஆசிரியர், அந்த அழுக்காறுப் பேச்சை நம்ப வில்லை. நான் திடீரென்றுதானே உங்கள் கண்ணெதிரே பாடல் தலைப்பைத் தந்து பாடல் எழுதுமாறு கேட்டேன். உங்கள் எதிரிலே அல்லவா எழுதிய பாடல் இது? இதை எப்படிக்குறை கூறிட உங்களுக்கு மனம் வந்தது? என்று கேட்டுவிட்டு, ரவீந்திரரைத் தன்னருகே அழைத்து, தழுவி, தட்டிக்கொடுத்துப் பாராட்டி, ‘ரவீந்திரா, மேலும் முயற்சி செய்!உனக்கு எதிர்காலம் வெளிச்சமாக இருக்கும்’ என்று அனுப்பி வைத்தார்.
நாடகப் பயிற்சி
தேவேந்திர நாத் தாகூரின் இல்லம் எப்போதும் ஒரு கலைக்கூடமாகவே காட்சியளித்துக் கொண்டிருக்கும். அவரது மூத்த மகன்களில் சிலர் நாடகம் எழுதி பொழுது போக்காக நடிப்பார்கள் இதை வீட்டார் எல்லாரும் உற்சாகத்துடன் ஒன்று சேர்ந்து வேடிக்கை பார்த்து மகிழ்வார்கள்.
அந்த நாடகத்தைப் பார்க்க அக்கம் பக்கத்துச் சிறுவர்களை அவர்கள் அனுமதிக்கமாட்டார்கள். காரணம் படிக்கும் சிறுவர்கள் மனதைக் கூத்தாட்டத்திலே திளைக்க விடக் கூடாது. எதிர்காலத்தில் அவர்கள் படிப்புக்கு ஏதாவது தீமைகள் நிகழ்ந்து விடக் கூடாது என்ற அக்கறையால் சிறுவர்களைப் பார்க்கவிட மறுத்தார்கள்.
ரவீந்திரருக்கு மட்டும் இதில் விதி விலக்களிப்பார்களா என்ன? எனவே, தமது தம்பி ரவீந்திரரையும் நாடகம் பார்க்கவிடுவதில்லை. அதனால் அவர், முற்றத்தில், தோட்டத்துச் சுவரோரங்களில் நின்று கொண்டே நாடக வசனங்களைக் கேட்டு மகிழ்வார். சில நேரங்களில் எட்டியெட்டிப் பார்த்துக்களிப்பார்.
எதிர்காலத்தில் உலகம் போற்றும் நாடகங்களை எழுதப் போகும் ரவீந்திரனின் ஆற்றலை அவர்கள் எப்படி அறிவார்கள்? உலகப் பெரும் பேரறிவாளர்கள், மகாத்மா காந்தியடிகள், லோகமான்ய பால கங்காதர திலகர், பண்டிதர் மதன் மோகன் மாளவியா, சி.எஃப். ஆண்ட்ரூஸ் போன்றவர்கள் அனைவரும், ரவீந்திரரின் நாடக அறிவை, ஆற்றலைக் கண்டு பாராட்டப் போகிறார்கள் என்பதை அவருடைய வீட்டாரால் எவ்வாறு உணரமுடியும?
வீட்டுக்குள் நடக்கும் நாடகத்தையே பார்க்க விடாத ரவீந்திரரின் குடும்பத்தார், பிறகு எப்படி வெளியிடங்களுக்கு அவரை அனுப்பி வைப்பார்கள்? இதனால், அவர் பூட்டிய இரும்புக் கூட்டுக்குள் அடைபட்ட சிங்கமாகவே காலம் கழித்து வந்தார். கல்கத்தாவிலே ஒடும் ரயிலிலே கூட அவர் ஏறிப் பார்த்ததில்லை, பாவம்!
முதல் இரயில் பயணம்
தேவேந்திர நாத் தாகூர் ஒரு முறை போல்பூர் என்ற நகருக்கும், அங்கேயிருந்து இமயமலைச் சாரலுக்கும் போக வேண்டிய சூழ்நிலை வந்தது. அதனால், தனது கடைசி மகன் ரவீந்திரரை அவர் உடன் அழைத்துச்சென்றார். அப்போதுதான், ரவீந்திரா் முதன் முதலாக வெளியுலகைக் காணும் நிலை யேற்பட்டது. முதல் முறையாக அப்போதுதான் ரயில் வண்டி ஏறிப் பயணமும் செய்தார்! அந்த அனுபவம் அவருக்கு அளவில்லா ஆனந்தத்தை அளித்தது. மகிழ்ச்சி உண்டானது மட்டுமன்று; ரவீந்திரர் அண்ணன்மார்களில் ஒருவரான சத்யா என்பவர், ரயிலில் பயணம் செய்வது பெரிய ஆபத்தானது; ரயில் நடுங்கும், கர்ஜிக்கும் நினைத்தால் உலுக்கும்; குலுக்கும்! முடிந்தால் பள்ளத்திலே கூடத் தள்ளிவிடும்; புகையைக்கக்கும்; கண்களைக் கசக்கும் படியான கரித்தூள்களை நம்மேலே வாரி வீசும் என்றெல்லாம் பயங்காட்டி இருந்தார்! சிறுவரல்லவா ரவீந்தர்! அதை அப்படியே நம்பிவிட்டார்! அதற்கேற்ப அனுபவம் இல்லை. அந்தப் பயத்தை எல்லாம், தந்தையுடன் சென்ற போல்பூர் ரயில் பயணம் தகர்த்தெறிந்ததைக் கண்டு பேரானந்தம் அடைந்தார்.
சாந்தி நிகேதனும் தாகூரும்
போல்பூர் நகரிலே இருந்து இரண்டு மைல் தூரத்தில், அவரது தகப்பனார் தேவேந்திர நாத் ஓர் ஆசிரமம் கட்டி இருந்தார்! அங்கே அவர் அடிக்கடி சென்று அமைதியை நாடுவார்! சில நாட்கள் தங்கி இருப்பார். அந்த ஆசிரமத்திற்கு அவர் தந்தை சூட்டிய பெயர் சாந்தி நிகேதன்! இன்றும் உலகம் போற்றும் ஆலயமாக சாந்திநிகேதன் விளங்குகின்றது.
அந்த சாந்தி நிகேதனுக்கு ரவீந்திரர் தனது தந்தையுடன் 1873-ஆம் ஆண்டு சென்றார். அப்போதுதான் அவருக்கு வெளியுலகம் என்றால் என்ன என்பது புரிந்தது.
சாந்திநிகேதன் முழுவதையும் ரவீந்திரர் சுற்றிப் பார்த்தார். அங்கே தவழ்ந்த தட்ப வெட்பத்தையும், இதமான சாந்தி நிலையையும் கண்டு வியந்தார். தனது தந்தை காலை விடியுமுன்பு எழுந்து, அமைதியாக அமர்ந்து தியானம் செய்வதையும் அவரது வழிபாட்டையும் பார்த்து அவரும் ஒருவித மனத்தெம்பு பெற்றார்.
இவற்றையெல்லாம் ரவீந்திரர் அன்றே மிகக் கூர்ந்து கவனித்ததால் தான் பிற்காலத்தில் அவர் பெரியவரான பிறகு, தனது தந்தையார் வழிபட்டுவந்த தியான இடத்தை அவரது நினைவுக்குரிய சிறந்த அடையாளமாகப் போற்றி அமைத்தார்.
அவரது தந்தையார் தியானம் செய்த இடத்திலே இருந்த இரண்டு மரங்களை இன்றும் சாந்தி நிகேதன் செல்வோர் காணலாம். அந்த மரங்களுக்கு இடையே தனது தந்தை யாருக்குரிய நினைவு மண்டபத்தை அமைத்துள்ளார்.
இமயமலையில்; தந்தையும்-மகனும்!
இமயமலையின் அடிவாரத்தில் டல்ஹவுசி என்ற ஓர் இடம் உள்ளது. அது ஓர் அழகான தோற்றமுடைய சிற்றூர். பிரிட்டிஷ் ஆட்சியில் கவர்னர்-ஜெனரலாக இருந்த டல்ஹவுசி என்பவரின் பெயரை அதற்குச் சூட்டினர். சுற்றுலா செல்பவர்கள் தங்குவதற்கான அழகான விருந்தினர் மாளிகையும் அங்கே இருந்தது. இமய மலையின் அழகையும், அதன் சாரல் சுகபோகங்களையும் அனுபவிக்கச் செல்பவர்கள் டல்ஹவுசியிலே தங்குவது உண்டு.
அந்த டல்ஹவுசியிலே தேவேந்திர நாத் தாகூரும், ரவீந்திர நாத் தாகூரும், அதாவது தந்தையும்-மகனும் நான்கு மாதம் தங்கியிருந்தார்கள். அங்கே, ரவீந்திரர் தனது கவிதை உள்ளத்திற்கேற்றவாறு விருப்பம்போல இயற்கைக் காட்சிகளைச் சுற்றிச் சுற்றிப் பலமுறை பார்த்தார்.
அந்தக் குளிர்ச்சியான இடத்திலும் தேவேந்திரர் தனது மகனை குளிர்ந்த தண்ணீரிலேயே குளிக்க வைப்பார்! எக்காரணம் கொண்டும் வெந்நீரே தரமாட்டார்.
தனது மகன் பலவழிகளிலும், இன்ப-துன்ப நிலைகளிலும் பழக வேண்டும்; இயற்கையோடு அவனது உடலும் ஒத்துப் போக வேண்டும்; என்ற ஆசைதான். அங்கே இருக்கும் தண்ணீர் பனிக்கட்டிபோல சில்லென்று இருப்பதைக் கண்ட பிறகும், தனது தந்தையார் விருப்பத்திற்குகந்தவாறு ரவீந்திரர் பச்சைத் தண்ணீரிலேயே தினந்தோறும் குளித்துப் பழகினார். இதனால் பிற்காலத்தில் அவர் இங்கிலாந்துக்குப் படிக்கச் சென்றிருந்த போது, அங்கு குளிர் காலத்திலும் தினந்தோறும் குளிர்ந்த தண்ணீரிலேயே குளித்தார்.
இமயமலைச் சாரலுக்கு அவர் சென்று நான்கு மாதங்கள் தங்கியிருந்ததால் ஏற்பட்ட மற்றோர் நன்மை ரவீந்திரருக்கு உண்மையான கல்வி அங்கேதான் தொடங்கியது எனலாம். தேவேந்திர நாத் தாகூர் அங்கே தனது மகனுக்கு இங்கிலீஷ், சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளையும் போதித்தார். அதேநேரத்தில் அவர் தனியாகவும் படித்துக் கொள்ளக் கூடிய திறனையும் உருவாக்கினார்.
கவிகாளிதாஸை படித்தார்
வட நாட்டிலே மிகப் பெரும் புகழ் பெற்ற மகாகவி காளிதாசர் எழுதிய காவியங்களைத் திரும்பத் திரும்பப் படித்து. அக் காவியச் சுவைகளிலே தனது மனத்தைப் பறிகொடுத்தார். ஓய்வு கிடைக்கும் நேரத்திலே எல்லாம் காளிதாசரின் இயற்கைக் காட்சி வருணனைகளை ஆழ்ந்து ஊடுருவிப் படித்தார்! அவ்வாறு அவர் கற்ற இயற்கை வருணனைகளில் மேலும் ஊக்கம் பெறும் எண்ணத்தில் இமயமலைக் காட்சிகளை ஒப்பிட்டுப் பார்த்து மகிழ்வார்! குறிப்பாக, காளிதாசர் எழுதிய மேக தூது’ எனும் இலக்கிய நூலைத் திரும்பத் திரும்பப் படித்தார். அதன் சொற்சுவை அவருக்கோர் ஆசானாகவே அமைந்து விட்டது.
தந்தை மகற்காற்றும் நன்றி எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கேற்ப, ஒவ்வொரு நாள் இரவு வந்ததும், தேவேந்திர நாத் தனது அருமை மகனை அருகே அமர வைத்து வானவியல் தத்துவங்களைக் கற்பிப்பார். அதுவும் அவர்கள் தங்கியிருந்த இடம் இமயமலை அடிவாரமல்லவா?
வான மண்டலத்தின் கோள்களைப் பற்றி அவர் தந்தை விளக்குவார்; அவற்றின் இயக்கங்களை விவரிப்பார். அப்போதுள்ள விண்மீன்களின் தோற்ற இயல்புகளைச் சுட்டிக் காட்டிக் கற்பிப்பார். இவ்வாறு வானவியல் இயக்கத்தைக் கற்பிப்பதன் மூலமாக, ரவீந்திரருக்கு வானியல் கல்வியைப் போதித்தார்.
இமயமலைச் சாரல்களில் தந்தையும் மகனும் காலையில் எழுந்து நடை பயிலும்போது, மரம், செடி, புல், பூண்டு போன்றவற்றின் பயன்பாடுகளையும் சொல்லிக் கொடுத்து, தாவரவியலின் தத்துவங்களை எடுத்துரைப்பார்.
இன்றைய மாணவர்கள், ஒவ்வொரு பாடத்திலும் பரீட்சையில் எந்தெந்த கேள்விகள் வருமோ, அவற்றை இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பு தெரிந்து கொள்கிறார்கள். அக் கேள்விகளுக்குரிய விடைகளை கிளிப் பிள்ளைகளைப் போல மனனம் செய்கிறார்கள். தேர்வில் அக் கேள்விகளுக்குரிய பதில்களை மனப்பாடம் செய்தபடி வந்து எழுதுகிறார்கள்.
எந்தக் கேள்விகளைக் கேட்டாலும், அதை உணர்ந்து எழுதும் அறிவு என்று மாணவர்களிடம் வளருகின்றதோ அன்றுதான் மாணவர்களின் அறிவு நாட்டுக்கும் மக்களுக்கும் பயன்படும்! இந்த எண்ணமுடைய லட்சியவாதிதான் தேவேந்திரநாத் தாகூர்.
அதனால்தான் தன் செல்வன் ரவீந்திரர் எதையும் எண்ணி உணரும் அறிவு வளர அரும்பாடுபட்டார். அதற்கு ஒரு தந்தை என்னென்ன செய்ய வேண்டுமோ, அவற்றையெல்லாம் செய்து கல்வி கற்க வைத்தார்.
சில நேரங்களில் ரவீந்திரர் தனது தந்தையிடம் அவர் சொல்லிக் கொடுக்கும்போது அடாவடித் தனமான கேள்வி களையும், தவறான வினாக்களையும் கேட்டு வாதாடுவார். அந்த நேரங்களிலே எல்லாம் ஒரு தந்தையின் கடமையை உணர்ந்த தேவேந்திரா், பொறுமையாகவும், பொறுப்பாகவும் கோபப்படாமல், எரிச்சல் அதட்டல் உருட்டல் ஏதும் காட்டாமல், மகனுடைய அறிவு வளர்ச்சிக்கு இடம்தந்து, தவறான கேள்விகளைச் சுட்டிக்காட்டி, விளக்கமளித்து மகனை திருப்திப்படுத்தி நிறைவு செய்வார்.
ரவீந்திரரின் அறிவில் அஞ்சாமையும், நேர்மையும் இருந்ததை அவருடைய பேச்சிலும், எழுத்திலும் இன்றும் நம்மால் காண முடிகின்றது. அது மட்டுமன்று, எதையும் எப்போதும் அவராகவே எண்ணிப் பார்க்கும் தெளிந்த சிந்தனைத் திறனும் இருந்தது.
இமயமலைச் சாரலைவிட்டும், சாந்தி நிகேதனத்திலிருந்தும், தந்தையும்-மகனும் கல்கத்தா நகருக்கு மீண்டும் வந்து சேர்ந்தார்கள். தேவேந்திரர் தனது செல்வன் ரவீந்திரரை,கல்கத்தா நகரிலே உள்ள புகழ்பெற்ற செயிண்ட் சேவியர் கல்லூரியிலே சேர்த்தார்.
கல்கத்தா நகர் சூழ்நிலை கல்வி கற்க ஏற்றவாறு வசதியாக அமைந்திருந்தது. அவருடைய மனநிலைக்கேற்றவாறு செயிண்ட் சேவியர் கல்லூரியில் போதனைகளும் இருந்தன. ஆங்கில வகுப்பு ஆசிரியர் ஒருவர், உலகப் புகழ்பெற்ற நாடகச் சக்கரவர்த்தியான ஷேக்ஸ்பியர் எழுதிய ‘மாக்பெத்’ என்ற நாடகத்தை வங்காள மொழியிலே மொழி பெயர்க்குமாறு கூறினார்.
ரவீந்திரரின் நெஞ்சைவிட்டு, இமயமலைச் சாரல்களின் இயற்கைக் காட்சிகளும் பேரின்பங்களும், அகலவில்லை. சாந்தி நிகேதனில் அனுபவித்த தியான அமைதிச் சூழ்நிலைகளும் அவர் மனதை விட்டு அகலவில்லை. அந்த இன்பங்களை எண்ணும் போதெல்லாம் பள்ளிக்கூட கல்வி, கல்லூரிக் கல்வி எல்லாம் அவரைக் கவரவில்லை.
தந்தையுடன் ரவீந்திரர் இமயமலைச் சாரலுக்குச் சென்று திரும்பியது முதல் தமது தம்பியின் சிந்தனையில் ஏதோ ஒரு திருப்பு முனை நிகழ்ந்துள்ளதை அவரது அண்ணன்கள் கண்டார்கள். அதனால், பள்ளி கல்லூரிக் கல்வியை தம்பி வெறுப்பதை அவர்கள் எவரும் எதிர்க்கவில்லை. காரணம் தம்பி ரவீந்திரன் தானாகவே படித்து முன்னேறி அறிவுத் தெளிவடைந்துள்ளான் என்பதை அவர்கள் அறிந்தார்கள்.
அதனால், ரவீந்திரா் வீட்டிலிருந்தவாறே தனது அறிவை வளர்த்துக் கொள்வதை அவர்கள் ஆதரித்தார்கள்.
4. தாகூரின் சமயக் கொள்கை
நல்ல குடும்பம் பல்கலைக் கழகம் என்பதற்கேற்ப, தாகூர் குடும்பத்தையே பல்கலைக் கழகம் என்று பெருமிதத்தோடு கூறலாம். அத்தகைய ஒரு கலைக்கழகமாக தாகூர் குடும்பமும் திகழ்ந்தது. தேவேந்திர நாத் வீட்டில் அவர் பெற்ற மக்கள் எப்போதும் அறிஞர்களோடு அளவளாவிக் கொண்டே இருப்பார்கள்! அப்படிப்பட்ட பல்கலைவாணர்களுடன் ரவீந்திரர் பழகும் வாய்ப்பு உருவானது. அதுவும் அவருக்கு உதவியது.
ரவீந்திரரின் பெரிய அண்ணன் பல்கலையில் வல்லவர். அவருடைய தத்துவஞான வித்தகமும், கணக்கியலறிவும் ரவீந்திரரைப் பெரிதும் ஈர்த்தன! அதே நேரத்தில் வங்க மொழியில் பாடல் எழுதுவதில் மிகச் சிறப்பானவர். அவர் தனது தம்பி ரவீந்திரருக்கு நீச்சல் கலையைக் கற்றுக் கொடுத்தார்.
ஐந்தாம் அண்ணன் ஜோதிரீந்திர நாத் ஒரு சமூக சீர்த்திருத்தவாதி. வங்க சமுதாயத்தில் நிலவி வரும் மூடப் பழக்க வழக்கங்களை எதிர்ப்பவர். வங்க மக்களிடையே ஒரு மறுமலர்ச்சி இயக்கம் உருவாக வேண்டும் என்று அரும்பாடு பட்டு வந்தவர்! பிரம்ம சமாஜம் போன்ற சமூக சீர்திருத்த இயக்கங்களுடன் தொடர்பு கொண்டவர்.
ஊருக்கு மட்டும்தான் சீர்திருத்தவாதியின் உபதேசம்! அவனது வீட்டுக்குள் இல்லை என்ற நிலையிலே நில்லாமல், மூடப் பழக்க வழக்கங்களில் ஒன்றான, பெண்களின் முகத்தையும் உடலையும் மறைத்துக் கொள்ள பயன்பட்ட ‘பர்தா’வை அகற்றிய சீர்திருத்தக்காரா் ஆவார்.
அந்த நேரத்தில் வங்காளத்தில் பெண்கள் அணியும் பர்தா முறையை அகற்றுவதென்பது அவ்வளவு சாமானியமானதல்ல. ஆனாலும் எது வந்தாலும் ஏற்கத் தயார் என்ற துணிவோடு தாகூர் குடும்பம் அந்த முறையை அகற்றி விட்டது. தனது ஐந்தாம் அண்ணன் செய்த இந்த மகத்தான சமுதாய சீர்திருத்தச் செயல் ரவீந்திரருக்கு மிகவும் பிடித்திருந்தது.
என்றாலும், அவரது ஐந்தாவது அண்ணனிடமிருந்து அவருக்கு மிகவும் பிடித்தது அவருடைய இசை ஞானம் தான். அதே மாதிரி அவருடைய நாடகக் கலை அறிவும், நடிப்பாற்றலும் ரவீந்திரருக்குப் பிடித்திருந்தது. அக்கலையைத் தாமும் பின்பற்ற வேண்டும் என்ற ஆர்வத்தையும் தூண்டிக் கொண்டே இருந்தது.
ஜோதிரீந்தா் தாகூர் இசைக் கருவிகளை இயக்கிப் பாடும் போதெல்லாம், தம்பி ரவீந்திரர் தனது பாடல் புனையும் ஞானத்தால் அண்ணனுக்கேற்ற ‘பா’க்களை எழுதிக் கொடுப்பார்! எழுதிக் கொடுப்பதோடு மட்டும் நில்லாமல் தமையனின் ராகத்திற்கேற்றவாறு பாடவும் செய்வார்; இசை ஆர்வம் அவ்வளவு இருந்தது அவருக்கு!
எதிர்காலத்தில் உலகப் பெரும் கவிஞர்களுள் ஒருவராக விளங்கப் போகின்ற தாகூருக்கு இந்தப் பயிற்சி ஒரு குறிப்பிடத்தக்க காரணமாகவே அமைந்தது. ஒவ்வொரு நாளும், மாலை வேளை தோறும் தனது அண்ணியார் எதிரே அமர்ந்து பாராட்டி மகிழ, அண்ணன்மார்களுள் ஒருவரான ஜோதிரீந்திர நாத் வீணை வாசிக்க, ரவீந்திரர் பாடல்களைப் பாடிப் பாடி வீட்டாரைப் பரவசப் படுத்துவார்.
பங்கிம் சந்திரா் கருத்து கவர்ந்தது
உலகத்திலும், இந்தியா முழுமையிலும் உள்ள மாநிலங்களிலும் வங்காள இலக்கியத்தைப் பற்றி பெரியதோர் மதிப்பும், மரியாதையும் அக்காலத்தில் பரவியிருந்தது. அந்த இலக்கியவாதிகளில் முக்கியமானவரும் பெரும் புகழுக்குப் பாத்திரமானவருமான சந்திர சட்டர்ஜி. மிகச் சிறந்த நாவலாசிரியா்; சிறந்த சிறுகதை மன்னா்; வங்க இலக்கிய உலகில் ஈடும் இணையுமற்றவராக விளங்கினார். பிற்காலத்தில் ‘ஆனந்த ஆஸ்ரமம்' போன்ற பல கதைகள் திரைப்படமாக வந்து இந்திய மக்களைப் பெரிதும் கவர்ந்தன என்பது மட்டுமன்று; இந்திய மக்களையும் பெருமைப்படுத்தின.
அத்தகைய பெரும் எழுத்தாளர், வங்கத்திலே இருந்து வெளிவந்து கொண்டிருந்த “பங்க தாஸன்” என்ற ஒரு வங்க மொழி மாதப் பத்திரிகையில் தொடர்ந்து எழுதிவந்தார். மக்கள் அக் கதைகளைத் தொடர்ந்து வாங்கிப் படித்து, பங்கிம் சந்திரனைப் புகழ்ந்தார்கள்.
தாகூர் குடும்பமும் அந்தப் பத்திரிக்கையைத் தொடர்ந்து வாங்கிப் படித்து வந்தது. அதனால், பங்கிம் சந்திரருடைய பெருமையை அவர்களும் பாராட்டினார்கள். அந்தப் பத்திரிகையிலே தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் பங்கிம் சந்திரர் கதைகளை ரவீந்திரர் ஆர்வமாய் உரக்க எல்லாரும் கேட்கும்படி படிப்பார்!
‘பங்காதஸன்’ என்ற வங்கமொழி மாதஇதழைப் போலவே, ரவீந்திரரின் தமையன் மார்களுன் ஒருவரான சத்யேந்திர நாத் என்பவர், ‘பாரதி’ என்ற பெயரில் ஒரு மாதப் பத்திரிகையைத் துவக்கினார். சத்யேந்திரர் ஐ.சி.எஸ். பட்டம் பெற்றவர். ரவீந்திரரின் மூத்த அண்ணன் அதற்கு ஆசிரியராக இருந்தார்.
ரவீந்திரர், பாரதி பத்திரிகையில் தமது பாடல்களையும், கதைகளையும், கருத்துக்களையும் எழுதி வெளியிட்டார். பத்திரிகை நிர்வாகக் குழுவிலும் ஒருவராகச் சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது பதினாறு!
‘பாரதி’ பத்திரிகையில் ஜோதிரீந்தரர் நாடகங்களைத் தொடர்ந்து எழுதி வந்தார். இந்த நாடகத்தை அப்போதைய கல்கத்தா நகர மக்களில் சிலர், அவரவர் வீடுகளிலே நாடகமாக்கி நடித்தார்கள். அந்த நாடகத்தை ரவீந்திரரும் தனது இல்லத்தில் நாடகமாக்கி நடித்தார்.
துன்பவியலானாலும் சரி, இன்பியலானாலும் சரி, அல்லது வேடிக்கைப் பகுதியானாலும் சரி, உணர்ச்சியூட்டிடும் பகுதிகளானாலும் சரி, எந்தக் கட்டத்தையும் அதனதன் சுவையுணர்வுகளுக்கு ஏற்றவாறு அவர் நடித்துக் காட்டிப் பாராட்டுப் பெற்றவரானார். ரவீந்திரரின் இந்த நாடகப் புலமைத்திறமை பதினாறு வயதோடு நின்று விடவில்லை. வாழ்நாள்முழுவதும் அவர் இக்கலையிலே ஒன்றி விட்டார்!
இலக்கியம் படிக்க லண்டன் சென்றார்
ரவீந்திரர், பதினான்காம் வயதில் தாயை இழந்தார். தாய் இறக்கும் போது அவருக்கு மரண துன்பம் ஏதும் எழவில்லை. பிறந்தவர் இறப்பது தானே நியாயம் என்ற நினைப்பில் மரணத்துக்கு அவர் மதிப்பு தரவில்லை! ஆனால், அவரது அன்னை உடல் வீட்டைவிட்டு தகனத்துக்காக வெளியே வந்தபோது, தனது தாயின் முகம் கண்டு கதறி விட்டார்! கண்ணீர் சிந்தினார்! மீளாத்துயருற்றார்!
தாய்க்குப் பிறகு ரவீந்திரருடைய அக்காள், அண்ணி, அண்ணன்மார்கள், அப்பா உட்பட பலர் அவருக்கு ஆறுதல் கூறியும் கூட, அவரது துன்பத்தை எவரும் தணிக்க முடியாததாக இருந்தது. அதே நேரத்தில் அவர் கடைசிப் பையனல்லவா? அதனால் எல்லாரும் அவரைப் பரிவுடனும், பாசத்துடனும் வளர்த்து வந்தார்கள். ஜோதிரீந்தரரின் மனைவி தான் ரவீந்திரரை மிகப் பாசமாக தனது பிள்ளையைப் போல வளர்த்து வந்தார். அதனால் அவர் தனது அண்ணியின் கடைசி நாள் வரை அவரது பாசத்தை மறவாமல் நன்றி காட்டிவந்தார்.
ரவீந்திரர் எவ்வாறு தனது தாயின் மரணத்தைக் கண்டாரோ, அந்த நிலை அவரது பிள்ளைகளுக்கும் வந்து விட்டது. ரவீந்திரரின் அருமை மனைவி மிருணாளினி மரணப் படுக்கையிலே வேதனையுற்றபோது, தனது இரண்டாம் மகனான சமீந்திர நாதனைத் தன் தாயருகே இருக்கவிடவில்லை அவர். மரணத்தின் வேதனையை தமது மக்கள் காணக்கூடாது என்பதற்காகவே அவ்வாறு அவர் செய்தார். ஆனால்,துன்பங்கள் அடுக்கடுக்காய்த் தொடர் கதையாயின.
சத்யேந்திர நாத் தாகூர், 1878ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்றார். லண்டன் மாநகரில் இங்கிலீஷ் இலக்கியங்களைக் கற்றிட ரவீந்திரா், தனது அண்ணனுடன் சென்றார். ஓர் ஆங்கிலப் பள்ளியில் அவர் சேர்ந்தபோது, அப் பள்ளி மாணவர்கள் அவருடன் அன்பாகப் பழகினார்கள்.
பிறகு, லண்டன் மாநகரிலே உள்ள ஓர் ஆங்கிலக் கல்லூரியில் சேர்ந்து இங்கிலீஷ் இலக்கியங்களைக் கற்றார். ஏறக்குறைய 18 மாதங்கள் அக் கல்லூரியிலே சேர்ந்து அவர் படித்தும்கூட, எந்த ஓர் இலக்கியப்பிரிவிலும் அவர் தேறவில்லை. மாறாக, ஆங்கில மாணவர்கள் சிலரிடம் அரிய நண்பராக, அவர் நெருங்கிப் பழகினார். அவர்களிடம் நட்பு பெற்றதுதான் அவருக்கு லாபமாக இருந்ததே தவிர, எந்தப் பட்டமும் பெறாமலேயே அவர் இந்தியா திரும்பி வந்தார்.
எந்தப் படிப்பும் படிக்காமல், எந்தப் பட்டமும் பெறாமல், எடுத்த பாடப் பிரிவுகளையும் முடிக்காமல் அரை குறையாகவே ரவீந்திரா் இருப்பதைக் கண்ட குடும்பத்தினர் அனைவரும் மிகவும் கவலையும்- வருத்தமுமுற்றார்கள். அதனால், சட்டப்படிப்பு படிப்பதற்காக மறு ஆண்டே அவர் லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கல்கத்தா நகரிலே இருந்து தனது அண்ணன் மகனுடன் கப்பல் ஏறினார்! இருவரும் சென்னை துறைமுகம் வந்தபோது, ரவீந்திரர் அண்ணன் மகன் நோய் வாய்ப்பட்டார். அதனால், ரவீந்திரர் லண்டன் போகாமல், சென்னையிலே இருந்து நேராகக் கல்கத்தா சென்று விட்டார். சட்டப் படிப்பும் இத்துடன் முற்றுப் பெற்று விட்டது. இப்போது ரவீந்திரருக்கு இருபது வயது. கிழக்கு வங்காளத்திலுள்ள நிலங்களில் விவசாயம் செய்யும்படி தேவேந்திரா் ரவீந்திரரிடம் அதற்கான பொறுப்புகளை எல்லாம் ஒப்படைத்தார்.
சட்டப்படிப்பு படிக்க லண்டன் சென்ற ரவீந்திரர் சென்னை துறைமுகத்தோடு மீண்டும் கல்கத்தா திரும்பிய பிறகு, மறுபடியும் வழக்குரைஞர் பணிக்காகக் கல்வி கற்றிடும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. அதற்குப் பிறகு அவர் கலை, இலக்கியத் துறையிலே ஈடுபடலானார்.
தாகூர் எழுதிய முதல் புத்தகம்
முதலில் இசைத் துறையில் மும்முரமாகப் பணியாற்றினார். புதிய சில இசை நயங்களைக் கண்டு பிடித்து வங்காளத்திற்கு வழங்கினார். அந்த நேரத்தில் வங்காளத்தில் கல்கத்தா அருகே கங்கை நதிக் கரையிலே உள்ள சந்திர நாகூர் என்னும் நகரில் அவரது அண்ணன் ஒருவர் வசித்து வந்தார்.
அந்த ஊருக்கு ரவீந்திரர் சென்றார். கங்கை நதியில் பொங்கி வரும்வெள்ளத்தின் அழகையும், அதன் ஆரவார ஆர்ப்பரிப்பு ஓசை நயங்களையும் பலவிதமாகப் பல முறைகள் பார்த்தும், கேட்டும் வியந்தார்.
கங்கை ஆறு ஓரத்திலே ஓரிடத்தில் அமர்ந்து, அதன் ஒசை, வேகம், வெள்ளப்பெருக்கு நீர்க்கொந்தளிப்பு ஆகியவற்றைக் கூர்மையாகக் கவனித்து, அதனதன் செயலசைவுகளுக்கு ஏற்றவாறு பல பாடல்களை எழுதினார்.
இவ்வாறு அவர் தொடர்ந்து எழுதிய பாடல்கள் பற்பல. அவற்றை எல்லாம் தொகுத்து ‘மாலைப் பாடல்கள்’ என்ற பெயரில் ஒரு புத்தகமாக ரவீந்திரா் வெளியிட்டார். இந்தப் புத்தகம் தான் அவரது பெயரில் வெளியான முதல் புத்தகமாகும்.
‘மாலைப் பாடல்கள்’என்று வெளி வந்த தாகூரின் முதல் புத்தகத்தைப் பார்த்து அவரது தந்தையார் தேவேந்திர நாத் தாகூர், பேரானந்தம் பெற்றார். அதனைப் போலவே, ரவீந்திரரின் எல்லா அண்ணன்மார்களும், அண்ணியார்களும், மகிழ்ச்சியடைந்தார்கள்.
அந்த நூல், வங்காளத்து மக்களிடையே பெரும் பரபரப்புடன், விற்றது. ஒவ்வொரு இசைக் கலைஞர்களும் அந்த நூலைப் பாராட்டி மகிழ்ந்து போற்றினார்கள். விற்பனையும் அதிகமானது. வங்க மக்களின் இலக்கிய அறிவாளர்கள் பலர் அந்நூலின் சொற்சுவை, பொருட்சுவை, இசை நயச்சுவை அனைத்தையும் வாயார வாழ்த்தியது மட்டுமின்றி, ‘வங்காளத்தின் ஷெல்லி’ என்று தாகூரை மனம் திறந்து பாராட்டினார்கள். இசை உலகுக்கு அன்று வரை கிடைக்காத ஒரு இசைப் பாடல் தொகுப்பு நூற் புதையல் ஒன்று கிடைத்ததாக எல்லாகும் வியந்தார்கள்!
கல்கத்தா நகரில் புகழ் பெற்ற ஒரு குடும்பத்தினரின் திருமணம் நடைபெற்றது. அந்த திருமண வீட்டார் புகழ்பெற்ற வங்கக் கவிஞரான தாகூருக்கும் அழைப்பு அனுப்பி, அவரை நேரிடையாகச் சென்று வரவேற்றார்கள். காரணம், வங்கத்தில் புதிதாகப் புகழ்பெற்றுவரும் ஓர் இளையதலைமுறைக் கவிஞர் தமது திருமண நிகழ்ச்சியில் கலந்து வாழ்த்துவது மண வீட்டார்களுக்கும் பெருமை அல்லவா? அதனால் தாகூரை நேரில் சென்று இரு வீட்டாரும் அழைத்தார்கள்.
அந்த அழைப்பை ஏற்று வங்கக் கவிஞர் தாகூர் சென்றிருந்தார். அவரை அமோகமாக இரு வீட்டாரும் வரவேற்று அமரச் செய்தார்கள்.
அப்போது, வங்க மொழி மக்கள் இடையே மிகச் சிறந்த நாவலாசிரியர் என்று புகழ் பெற்றிருந்தவர் பங்கிம் சந்திர சட்டர்ஜி, அவரையும் திருமண வீட்டார் நேரில் சென்று அழைத்ததால், அவரும் அந்த திருமண நிகழ்ச்சிக்கு வருகைதந்திருந்தார்!
பங்கிம் சந்திரர் பாராட்டு
இந்தச் சம்பவத்தைக் குறித்து பிற மொழியாளர்கள் சிந்திக்கும் போது ஒன்று புரிகின்றது. அதாவது, வங்க மொழியைத் தாய் மொழியாகப் பெற்றவர்கள். அந்த மொழிக்குத் தொண்டு செய்வோரை, அவர்கள் தங்களுக்கு முன்பின் நேரிடையான அறிமுகமோ, அல்லது தொடர்போ இல்லாமலிருந்தாலும் கூட, அந்த வங்கமொழி வித்தகா்களை அவரவர் வீட்டிலே நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வந்து பலரறியப் பாராட்டி அறிமுகப்படுத்துவதையும்-மொழித் தொண்டாகக் கருதி இருந்தார்கள்.
அந்தத் திருமணத்திற்கு பங்கிம் சந்திரரும், கவிஞர் தாகூரும் வந்திருந்தார்கள்! அப்போது திருமணம் நடத்துவோர். தாகூரையும், சட்டர்ஜியையும் பெருமைப்படுத்துவதற்காக மலர்மாலைகைளை எடுத்துக் கொண்டு வந்து, முதன் முதலாக சட்டரிஜி கழுத்தில் அணிய முற்பட்டபோது, பங்கிம் சந்திரர் அதைத் தடுத்தார்!
அந்த மாலையைத் தனது கைகளிலே வாங்கிக் கொண்டு, இரண்டு மூன்று இருக்கைக்கு அப்பால் அமர்ந்திருந்த ரவீந்திரரிடம் சென்று, அவர் கழுத்திலே சூட்டி சட்டர்ஜியே முதலில் கையொலியை எழுப்பினார்.
அனைவரது முன்பும் தாகூரது கலைத் தொண்டைப் பாராட்டி அங்குள்ள அனைவருக்கும் மூத்த எழுத்தாளரான சட்டர்ஜி அவரை அறிமுகப் படுத்தி வைத்தார்! பிறகு திருமண மண்டபமே அதிர கையொலிகள் எழுந்தன!
இதுபோன்ற சான்றாண்மை மனம் தமிழ்நாட்டு எழுத்தாளர்களிடம் இன்றாவது இருக்கின்றதா? “தந்தை பெரியார் சொல்வதைப் போல மூன்று புலமையாளர்கள் கூடினால் போலீஸ் லாரிதான் வரும்”
காண்பனவெல்லாம்; கவின் மிகு காட்சியே!
ஒரு நாள் காலையில் கல்கத்தா நகரில் ஒரு வீட்டின் தாழ்வாரத்தில் நின்று கொண்டிருந்தார் ரவீந்திரர். அப்போது சூரியன் உதயமாகிக் கொண்டிருந்தது. இரண்டு மரங்களுக்கு இடையில் கதிரவன் ஒளிக்கதிர்கள் பரவி ஒளியைப் பரப்பிக் கொண்டிருந்ததைத் தாகூர் பார்த்து ஆச்சரியப்பட்டுக் கொண்டே நின்றார். அப்போத அந்தக்காட்சி அவரது சிந்தனையிலே ஒரு புதிய மாற்றத்தைப் புகுத்திக் கொண்டிருந்தது.
அன்றுவரையில் அவரது கண்கள் உலகை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தன. ஆனால், அப்போது பார்த்த பார்வையில் அவருடைய உள்ளமும். உயிரும் ஒன்றி எதையோ நோக்குவதாகவும் உணர்ந்தார்.
அப்போது வீதியிலே இரண்டு பேர் கை கோத்துச் சிரித்து மகிழ்ந்து செல்லும் காட்சியில் புதிய ஓர் இன்பம் பூத்து உலவுவதையும் அறிந்தார்.
ஒரு பசு தனது இளங்கன்றுடன் தலையை ஆட்டியாட்டிச் சென்றது. ஒருதாய் தனது குழந்தையை அணைத்துக் கொண்டு நடந்தது போன்றவை அழியாக் காவியமாக அவருக்குத் தெரிந்தன.
ஊற்றின் எழுச்சி
இதற்கு முன்பு பார்த்துப் பழகுவதற்கு வெறுப்பாக இருந்த ஒருவன், அவரை நெருங்கி வந்து கொண்டிருப்பதைத் தாகூர் கண்டனர்; ஆனால், பழைய வெறுப்பே தோன்றாமல், அன்பும் பரிவும் அவனைக் கண்டதும் தனது உள்ளத்தில் உந்துவதை அவர் உணர்ந்தார். அந்தப் புதிய இன்ப உணர்ச்சியைப் பாட்டாக அவர் எழுதினார். ஊற்றின் எழுச்சி’ என்று அதற்குப் பெயரிட்டார்.
அன்று முதல் அவர் கண்டபுதிய மாறுதல் என்னவென்றால், கண்களுக்குப் பயனற்ற பொருளாக எதுவும் கிடையாது என்பதாகும். இயற்கையில் எந்தப் பொருளும், கை புனைந்தியற்றாக் கவின் பெறும் அழகின் பகுதியாகவே தோன்றுகின்றது. அந்த தோற்றமே தாகூர் உள்ளத்திற்கு ஒரு கலை விருந்தாகியது.
இயற்கையின் இந்தக் கண்டுபிடிப்பு அவருக்கு 1882-ஆம் ஆண்டில்தான் தெரிந்தது. இந்த புதிய மாறுதல் அவருக்குப் புறத்தே ஏற்பட்ட மாறுதலன்று; உள்ளத்திலே உதயமான ஒரு புதுமையான மாறுதலாகும்.
இயற்கை அழகு அவரது உள்ளத்திற்கு எப்படி ஒரு புதிய உணர்வையூட்டியதோ, அதே போல-அன்பு நெறியும் அவருக்கு ஒரு புத்துணர்வை புகுத்தியது.
இலக்கிய உலகைக்கலக்கிய ‘துறவி’
இந்தியாவின் மேற்குக் கரையில் அதாவது அரபிக் கடலோரத்திலே உள்ள கத்தியவார் நகரில் தாகூரின் அண்ணன் சத்யேந்திர நாதத்தின் குடும்பம் இருந்தது. ரவீந்திரர் அந்த அண்ணன் வீட்டிற்குச் சென்று தங்கியிருந்தார்.
அரபிக்கடலின் அகன்ற தோற்றமும், அதன் அழகும் ரவீந்திரர் உள்ளத்தை வெகுவாகக் கவர்ந்தது. அக் கடலோரத்தின் அலைகளது ஆடலும் அதன் ஒசைகளும், இவற்றிடையே அவர் இரவின் நிலவொளியில் நடந்து செல்வதும் அவருக்குப் பேரின்பமாக இருந்தது.
அந்தக் கடலோரக் காட்சிகளை அனுபவித்துக் கொண்டே ஒரு நாடகத்தை எழுதினார்! அதற்கு ‘துறவி’ என்ற பெயரைச் சூட்டினார்! அந்த நாடகம் இன்றும் இலக்கிய உலகிலே ஒரு விண்மீனாக விளங்கி, மக்கள் பாராட்டைப் பெற்று வருகின்றது.
உலகத்தின் ஆசைகளை எல்லாம் உதறித் தள்ளிவிட்ட ஒரு துறவி. அவர் நீண்ட நாட்களாகத் துறவு மனப்பான்மையில் பழுத்த ஞானி! எல்லாவற்றையும் அறவே துறந்துவிட்ட சந்நியாசி அவர். அவருக்கு தன் துறவு மீதிருந்த அசைக்க முடியாத மன உறுதியால், இனி ஊருக்குள்ளே செல்லலாம், மக்களது ஆசாபாசங்கள் நம்மை எந்த விதத்திலும் ஊனப்படுத்தாது என்ற மன உறுதியோடு ஓர் ஊருக்குள்ளே வந்தார்.
ஒரு இடத்தில் வசந்தி என்ற ஒரு பெண் குழந்தை யாரும் அற்ற அநாதையாகத் துறவி பக்கத்திலே வந்து உட்கார்ந்தது. துறவிதானே அவர், அதனால் மனதிலே எந்தச் சலனமும் இல்லாமல் அக்குழந்தைக்கு தன் பக்கத்திலே அமர இடம் கொடுத்தார்.
அந்த குழத்தை துறவியிடம் அதிகமான அன்பைக் காட்டிப் பழகியது. பாறை போன்ற துறவியின் மனம் அக்குழந்தையின் அன்புள்ளத்தால் நெகிழ்கின்றது. என்னடா நமது உள்ளம் இவ்வாறு ஓர் உருக்கத்தை அப்பெண் குழந்தையிடம் காட்டுகின்றதே என்று எண்ணிய துறவி, சந்நியாசி நெஞ்சில் பாசச்சலனம் புகக் கூடாது என்ற முடிவில், குழந்தையான வசந்தியை விட்டு விட்டு ஓடுகின்றார்!
ஓடிக்கொண்டிருக்கும் துறவி, வேறோர் சிறு பெண், தனது தந்தையைக் காணாமல் அப்பா, அப்பா என்று அழுதபடியே வறுமைக் கோல வடிவத்தோடு வருவதை, தனது ஓட்டத்தைத் தீடீரென்று நிறுத்தி விட்டுக் கவனித்தார்.
அப்போது, முன்பு அன்பைப் பொழிந்த வசந்தி என்ற குழந்தையின் நிலையை எண்ணி துறவியின் நெஞ்சம் உருகுகின்றது. அதனால், மீண்டும் வசந்தியைப் பார்க்க வேண்டும் ஆறுதல் கூற வேண்டும் என்று நெஞ்சம் உருகி பழைய இடத்திற்கே மீண்டும் ஓடி வருகிறார் வசந்தியைக் காணவில்லை அக்கம் பக்கம் எங்கும் தேடி அலைகிறார்! பரிதவிக்கின்றார்!
துறவுக்குரிய கமண்டலத்தைக் கீழே போட்டு உடைக்கிறார். திரி தண்டத்தை உடைத்தெறிகிறார்! அந்த வழியே வருகின்றோர் போகின்றோர் அனைவரிடமும் வசந்தியைப் பார்த்தீர்களா? என்று கதறிக் கேட்கிறார். வசந்தி எங்கே? எங்கே வசந்தி? என்று கூவுகின்றார்! ஓலமிட்டுக்கொண்டே ஓடி ஓடி அலைகின்றார்! இறுதியில் ஒருவர். வசந்தி இறந்து விட்டாள் என்று கூறக் கேட்டு துயரடைகின்றார்! அழுது கொண்டே அமர்ந்து விடுகின்றார் துறவி!
தாகூர் எழுதிய அந்தத் ‘துறவி’ என்ற கதை இதுதான். உலக வாழ்க்கை, உயர்வுக்குத் துணையே அன்றித் தடை ஆகாது என்பதற்காகவும், அன்பு நெறிதான் வாழ்க்கைக்கு உரியது என்பதை உலகுக்கு உணர்த்தவும், இந்தத் துறவி நாடகத்தை அவர் உலகுக்கு வழங்கினார்!
வாழ்வியலில் தாகூர் துன்பவியலை எழுதுவதில் வல்லவர் என்பதை நாம் முன்பே குறிப்பிட்டிருந்தோம் அல்லவா? அதற்குரிய சான்றான ஒன்றுதான் ‘துறவி’ நாடகமாகும்.
அதே ஆண்டில், ரவீந்திரருக்குத் திருமணமும் நடந்தேறியது. மிருணாளினி என்ற மாதரசியை, அவருக்கு மனம் செய்வித்தார்கள். அந்த அம்மையார் கவிஞர் தாகூரின் குண்ங்களுக்கேற்ப பண்பரசியாகவே அமைந்தார்!
“என் சமயம் மனிதன் என்பதே!”
கவிஞர் இரவீந்திர நாத் தாகூரின் தந்தையார், பிரம்ம சமாஜம் எனும் ஓர் அமைப்பை உருவாக்கிய சான்றோர்களிலே ஒருவர். இந்த அமைப்பு இந்து மதத்திலே உள்ள மூடப்பழக்க வழக்கங்களை அகற்றி, மக்களிடையே மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக அமைந்த ஒரு சீர்திருத்த அமைப்பாகும்.
பலதெய்வ உருவ வழிபாடுகளை எதிர்த்தும், ஒன்றே தேவன் என்பதை ஆதரித்தும் உருவான அமைப்புதான் பிரம்ம சமாஜம்! தனது தந்தையாருக்குப் பிறகு அந்த சமாஜம் உடைந்து போனதால், ரவீந்திரர் ஆதி பிரம்ம சமாஜம் என்ற ஒரு பிரிவுக்கு செயலாளரானார்! தனது இயக்கத்தை ஆதரித்துப் பல கூட்டங்களிலே அவர் பேசினார்! மக்களுக்கான தொண்டுகளைச் செய்தார்.
சமயத்தின் பெயரால் பல பிரிவுகளும் வேறுபாடுகளும் உருவாகிக் கொண்டே போனதை எதிர்த்து, அவர் அந்த இயக்கத்தை விட்டு விலகினார். ஆனால் “எனக்கென்று ஒரு சமயம் உள்ளது ‘என் சமயம் மனிதன் என்பதே” என்று உலகுக்கு உணர்த்தினார்.
நான் மனிதன்; சமய வேறுபாடுகளைக் கடந்தவன்; தேச பக்தியிலும் நான் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவன் என்றார். நாடுகளுக்கு இடையே வளரும் பகையைத் தாகூர் வெறுத்தார். ஆனால், நாட்டிற்குத் தொண்டாற்றுவதே பிறவியின் பணி என்று நம்பினார். அதனால், தான் அவர் எந்த நாட்டுப் பற்றாளர்களுக்கும் குறைந்தவர் அல்லர் என்பதைப் பல நேரங்களிலே நிரூபித்துக் காட்டினார்.
தேசத்திற்கு யார் தீங்கிழைத்தாலும், அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், அவற்றை உடனுக்குடன் கண்டிப்பதையே தனது தேசத் தொண்டடென்றும் கருதினார். ஆனால், எக்காரணத்தைக் கொண்டும் அவர் நாட்டு மக்களுக்கு விரோதமாக நடந்தவரல்லர். அவருடைய நெஞ்சம் பகைக்கும் அன்பு காட்டும் மனமாக இருந்தது.
5. ஆங்கிலமொழியின்
ஆதிக்கத்தை எதிர்த்துப்
போராடினார்
கவிஞர் தாகூர் மனதில் உலகம் வாழ்ந்து கொண்டிருந்தது; உலக மக்கள் எல்லாரும் அவருடைய அன்புக்கு உரியவர்களாக இருந்தார்கள். அதே போல தாகூர் மனமும் உலக மக்களது நல்வாழ்வின் மீதே நாட்டமாக இருந்ததால், அவரது கவிதைகளில், சிறுகதைகளில், நாடகங்களில், பாடல்களில் மக்கள் வாழ்க்கைக்குரிய நீதிகளை, நெறிகளை, அறவழிகளை, அன்புரைகளை, பண்புரைகளை, நாட்டுப்பற்றுணர்வுகளை, ஆன்மிக மார்க்கங்களை, பொதுச் சேவைகளின் மாண்புகளை எல்லாம் விதையாக விதைத்தார்.
உலக மக்கள் அனைவரும் அமைதியான, இன்பமான வாழ்வு வாழ வேண்டும் என்பதே தாகூருடைய தொண்டுகளின் அடிப்படையான, உணர்வாக அமைந்தது.
கவிஞர் தாகூர் எழுதிய பாடல்களில் வங்க நாட்டின் முன்னேற்றமே தலையாயதாக இருந்தது. வங்க மொழியின் பெருமையே, தாய்மொழிப் பற்றே தன்மான உணர்சிசியாகத் தலை நிமிர்ந்து நின்றது. திரும்பத் திரும்ப அந்த உணர்ச்சிகளையே அவருடைய பாடலில் அவர் கூறியிருந்தார்.
வங்க மக்கள் இடையே பரவியிருந்த ஆங்கில மோக வெறியை வீழ்த்திட அவர் பெரும்பங்காற்றினார். சிங்கமாக நின்றார்!
எந்தப் பள்ளிகளானாலும் சரி, ஆங்கிலத்தின் குழந்தைகளுக்குப் பாடல்களைப் போதிப்பதை அவர் மிக வன்மையாகக் கண்டித்தார். ஒவ்வொரு பள்ளியும் தாய்மொழி மூலமாகத்தான் பாடங்களைக் கற்பிக்க வேண்டும் என்பதிலே அவர் கண்டிப்பாக இருந்தார். ஏனென்றால், தாய் மொழியின் வாயிலாகத்தான் அறிவை வளர்க்க வேண்டும் என்ற உலக நோக்கம் அவரிடையே ஆழமாக வேரூன்றியிருந்தது.
எவருக்கும் அஞ்சாமல், எந்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், ஆங்கிலேயர் ஆட்சியினுடைய கல்விக் கொள்கைகளை ஆணித்தரமாக எதிர்த்து, உறுதி வாய்ந்த உள்ளத்தோடு எடுத்துரைத்தார்! அதற்கு முன்னோடியாக, ஆங்கிலத்திலே பேசுவதைக் கண்டனம் செய்தார். அதை ஒரு பழக்கமாக்கக் கூடாது என்று தாகூர் போராடினார்.
அதற்குச் சான்றாக, கவிஞர் தாகூர் தனது தாய் மொழியிலேயே எல்லா நிகழ்ச்சிகளிலும் பேசிப் பெருமை பெற்றார். மற்றவர்களும் தாய் மொழியிலேயே எழுத, பேச வேண்டும் என்று வற்புறுத்தினார். அறிவுறுத்தினார்.
கல்கத்தா பல்கலைக் கழகத்துப்பட்டமளிப்பு விழா சொற்பொழிவாற்றிட செல்வோர் எல்லாரும், அங்கே சென்று ஆங்கிலத்திலே பட்டமளிப்பு விழா உரையாற்றக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். அவ்வாறு ஆங்கில மோகிகளாக நடமாடுவது உயர்ந்த நாகரிகமாகாது என்று கண்டித்தார் வங்காளி ஒருவன் வங்க மொழியிலே பேசாமல் வேற்று மொழியிலே பேசுவது பிறந்த மண்ணுக்குச் செய்யும் துரோகம் என்று முழக்கமிட்டார். பட்டமளிப்பு விழா ஒன்றுக்கு பல்கலைக்கழகம் அவரை அழைத்தபோது, வங்கமொழியிலே அங்கே முழக்கமிட்டு தனது தாய்மொழிக்கு உயர்வு தேடினார்.
வங்கமொழியை வளர்ப்பதுதானே வங்காளியின் உரிமை? அதைவிடுத்து இங்கிலீஷ் மொழிக்கா அவன் பெருமை தேடுவான்? தனது தாய் மொழியை அவனவன் வளர்க்காமல் அதற்குப் பெருமை சேர்க்காமல், பிற மொழிக்குப் புகழ் தேடி அடிமையாகவா வாழ்வான்? என்ற கேள்விகளை எல்லாம் பட்டமளிப்பு உரையிலே எழுப்பினார்!
தாய் மொழி உரிமைக்காக மட்டுமே அவர் போராடவில்லை. கிராம முன்னேற்றங்களுக்காகவும் அவர் அயராது உழைத்தார். குறிப்பாக, வங்க மாநிலத்தில், பத்மா என்ற ஆற்றங்கரையிலே உள்ள நிலபுலங்களைக் கவனிக்கும் பொறுப்பை அவரது தந்தையார் ஒப்படைத்த பிறகு. கிராமங்கள் என்றால் என்ன? உழவர்கள் உழைப்பு என்பது என்ன? கிராமங்கள் சீரழிந்து, சிறப்பிழந்து நிற்பது ஏன்? என்ற காரணங்களை அவர் கண்டுணர்ந்தார்.
கிராம மக்கள் அரசியல்வாதிகளை நம்பி, பணக்காரர்களுக்கு அடிமையாகி, தங்களது முன்னேற்றங்களுக்காக உழைக்கும் தன்னம்பிக்கைகளையும், முயற்சிகளையும் செய்யாமல் கோழைகளாய், ஊமைகளாய் வாழ்வதைக் கிராமங்களுக்கு நேரில் சென்று கண்டறிந்தார். அவர்களை வாழ்விக்க என்ன வழிகள் என்பதைக் கவிஞர் தாகூர் இரவு பகலாகச் சிந்தித்தார்.
கிராமங்கள் பலவற்றுக்கும் அவர் சென்று கண்டறிந்த விவரங்களை எல்லாம் செய்திகளாக, கிராமத்துச் சிறுகதைகளாக, எழுதினார்! பிற்காலத்தில் அந்த எழுத்துக்கள் எல்லாம் உயர்ந்த இலக்கியங்களாகப் போற்றப்பட்டன. அதேநேரத்தில் படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள் அனைவரையும் கிராமச் சீர்திருத்தத்தில் ஈடுபட வைத்தார். இவ்வாறு கவிஞர் தாகூர், தனது எழுத்துக்களின் வலிமைகளை, வலியோர் சிலரை எதிர்க்கவும், எளியோர் பலரை வாழ்க்கையில் உயர்த்தவும், கிராம முன்னேற்றத்துக்காகவும் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சாந்திநிகேதன் பற்றி காந்தியடிகள் கருத்து
கவிஞருக்கு இப்போது வயது நாற்பது. அதாவது 1901-ஆம் ஆண்டில் மற்றுமோர் மாறுதல் அவரிடையே தோன்றியது. அவரது உள்ளத்திலிருந்து அமைதி கலைந்தது. ஏதோ ஒரு புது உணர்வைத் தேடி அவரது அறிவு அலைந்தது.
தேவேந்திர நாத் தாகூர் போல்பூர் அருகே சாந்திநிகேதன் என்ற ஓர் அமைதிக் கோயிலை உருவாக்கி இருந்ததையும், முன்பே கவிஞர் தாகூர் தனது தந்தையாருடன் சென்று அந்த ஆசிரமத்தைக் கண்டு ஆனந்தப்பட்டதையும் ஆண்ட்ரூஸ், பியர்சன் போன்ற பேரறிவாளர்கள் பலர் அங்கே சென்று கல்வி, கலை, அமைதி, தியானம் போன்ற வளர்ச்சிகளுக்காக உழைத்து வந்ததையும், அதுதான் இன்றும் உலகம் போற்றும் சாந்திநிகேதன் என்ற கலைக்கோட்டம் என்பதையும் முன்னரே குறிப்பிட்டிருந்தோம்.
இப்போது கவிஞர் தாகூருக்கு ஏற்பட்டுள்ள புத்துணர்வு சாந்திநிகேதன் என்ற இத்தொண்டுக் கோயிலைக் கலைத் தொண்டு புரிய வழி வகுப்பதாகும்.
சாந்திநிகேதனத்தைப் பற்றி உலக உத்தமரும், அகிம்சா மூர்த்தியுமான மகாத்மா காந்தியடிகளார் என்ன பேசுகிறார் என்பதைக் கேளுங்கள்;
“ராஜ் கோட்டிலிருந்து சாந்திநிகேதனுக்குச் சென்றேன். அங்கே ஆசிரியர்களும், மாணவர்களும் என்னை அன்பில் மூழ்கடித்து விட்டனர். எளிமையும் அன்பும் கலந்ததாக இருந்தது. வரவேற்பு இந்த சாந்திநிகேதனில்தான் காக்கா சாகிப் என்பவரை நான் முதன் முதலில் சந்தித்தேன். காகா என்றால் சிற்றப்பா என்று பொருள் என்பதையும் உணர்ந்தேன்.
“பல ஸ்தாபனங்களையும் பார்த்து அனுபவம் பெறுவதற்காகக் காக்கா சாகிப் அப்பொழுது பிரயாணம் செய்து வந்தார். நான் சாந்திநிகேதனுக்குச் சென்றபோது அவர் அங்கே இருந்தார். சிந்தாமணி சாஸ்திரியும் அப்பொழுது அங்கே இருந்தார். இவருவரும் அங்கே சமஸ்கிருதம் கற்பிப்பதில் உதவி செய்து வந்தார்கள்.
தென்னாப்பிரிக்காவில் நான் துவக்கிய மாணவர் பள்ளியைச் சேர்ந்த போனிக்ஸ் குடும்பத்தினருக்குச் சாந்திநிகேதனில் தனி இடம் கொடுத்திருந்தார்கள். அக் குடும்பத்திற்குத் தலைவராக இருந்தார். மதன்லால்காந்தி, போனிக்ஸ் ஆசிரமத்தின் விதிகள் யாவும் இங்கேயும் கண்டிப்பாக அனுசரிக்கப்பட்டு வருகின்றனவா? என்று கவனிப்பதை அவர் தமது வேலையாகக் கொண்டார். அவர் தமது அன்பினாலும், விடா முயற்சியினாலும் தம்முடைய புகழ்மணம் சாந்திநிகேதனம் முழுவதிலும் கமழும்படி செய்திருந்ததைக் கண்டேன்.
சி.எஃப். ஆண்டரூசும் அங்கே இருந்தார். பியர்சனும் இருந்தார். வங்காளி ஆசிரியர்களில் ஜகதான்ந்த பாபு, நோயால் பாபு, சந்தோஷ்பாபு, க்ஷிதி மோகன் பாபு, நாகேன் பாபு, சரத்பாபு, காளி பாபு ஆகியவர்களுடன் ஓரளவுக்கு நெருங்கிய பழக்கம் எங்களுக்கு ஏற்பட்டது.
என்னுடைய வழக்கப்படி அங்கே இருந்த ஆசிரியர்களுடனும், மாணவர்களுடனும் நான் சீக்கிரத்தில் ஒன்றிப் போய் விட்டேன். அவரவர்களின் காரியங்களை அவர்களே செய்து கொள்ளுவதைக் குறித்து அவர்களுடன் விவாதித்தேன். ஆசிரியர்களுக்கு ஒரு யோசனை கூறினேன்.
“சம்பளத்திற்கு வைத்திருக்கும் சமையற்காரர்களை அனுப்பிவிட்டு, ஆசிரியர்களும், மாணவர்களுமே தங்கள் உணவைச் சமைத்துக் கொள்ளுவதானால் சிறுவர்களின் உடலுக்கும் ஒழுக்கத்துக்கும் ஏற்ற வகையில் சமையலறையை நிர்வகிக்க ஆசிரியர்களால் முடியும் என்றேன். இது, தங்கள் காரியங்களைத் தாங்களே செய்துகொள்ள வேண்டும் என்பதில் மாணவருக்கு ஓர் அனுபவப் பாடமாகவும் இருக்கும் என்றேன்.
ஆசிரியர்களில் இரண்டொருவர், அது ஆகாத காரியம் என்று தலையை அசைத்தார்கள். சிலர், என் யோசனையைப் பலமாக ஆதரித்தார்கள். சிறுவர்களும் அதை வரவேற்றனர். புதுமையான காரியங்களில் ஈடுபடும் சிறுவர்களுக்கு இருக்கும் ருசியே இதற்குக் காரணமக இருக்கலாம். ஆகவே, நாங்கள் இப்பரீட்சையில் இறங்கினோம்.
இதுபற்றி தமது கருத்தைத் தெரிவிக்குமாறு கவிஞர் தாகூரை நான் கேட்டதற்கு, அதை ஆசிரியர்கள் ஆதரிப்பதாயிருந்தால் தமக்கு ஆட்சேபமில்லை என்று கூறினார். ‘இந்தச் சோதனையில் சுயராஜ்யத்தின் திறவு கோல் அடங்கியிருக்கிறது’ என்று கவிஞர் சிறுவர்களிடம் கூறினார்.
இந்தப் பரீட்சை வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, ஸ்ரீ பியர்சன் தமது உடலை வருத்திப் பாடுபட்டார். அதிக உற்சாகத்தோடு இவ் வேலைகளில் ஈடுபட்டார். காய்கறிகளை நறுக்குவதற்கு ஒரு கோஷ்டி, தானியத்தைச் சுத்தம் செய்வதற்கு ஒரு கோஷ்டி, என்று இவ்விதம் ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு கோஷ்டி அமைக்கப்பட்டது.
சமையலறையையும், அதன் சுற்றுப் புறங்களையும் சுத்தமாக வைத்திருக்கும் வேலையை நாகேன் பாபுவும், மற்றவர்களும் மேற்கொண்டனர். கையில் மண்வெட்டியுடன் அவர்கள் வேலை செய்வதைப் பார்க்க எனக்கு ஆனந்தமாக இருந்தது.
அங்கே நூற்றியிருபத்தைந்து பையன்களும், அவர்களின் ஆசிரியர்களும் இருந்தனர். அவர்கள் எல்லோரும், உடலுழைப்பான இந்த வேலையைச் சுலபமாக ஏற்றுக் கொண்டு விடுவார்கள் என்று எதிர் பார்த்துவிட முடியாது. தினமும் விவாதங்கள் நடந்து வந்தன. சிலர் சீக்கிரத்திலேயே சோர்வடைந்து விட்டனர் என்பது தெரிந்தது. ஆனால், அப்படிச் சோர்ந்து விடக் கூடியவரல்ல பியர்சன். எப்பொழுதும் புன்னகை பூத்த முகத்துடன் சமையலறையிலோ அதன் பக்கத்திலோ அவர் ஏதாவது ஒரு வேலையைச் செய்து கொண்டிருப்பதைக் காணலாம்.
பெரிய பாத்திரங்களை எல்லாம் சுத்தம் செய்யும் வேலையை அவர் மேற்கொண்டார். பாத்திரங்களைத் துலக்குகிறவர்களுக்கு அந்த வேலையில் சலிப்புத் தோன்றாமல் இருப்பதற்காகச் சில மாணவர்கள் அவர்களுக்கு முன்னால் சித்தார் வாத்தியம் வாசிப்பார்கள். எல்லோருமே இந்த வேலையில் உற்சாகத்துடன் ஈடுபட்டனர். தேனீக்கள் சுறுசுறுப்பாக இருக்கும். தேன் கூடுபோல் இருந்தது சாந்தி நிகேதன்.
இத்தகைய மாறுதல்கள் ஒரு முறை ஆரம்பமாகி விட்டால், எப்பொழுதும் வளர்ந்து கொண்டே இருக்கும். போனிக்ஸ் கோஷ்டியினர் தாங்களே சமைத்துக் கொண்டனர். அவர்கள் சாப்பாடு மிகவும் எளிமையாகவும் இருந்தது. மசாலாச் சாமான்களே அந்தச் சாப்பாட்டில் இல்லை.
அரிசி, பருப்பு, கறிகாய் மாத்திரமேயன்றிக் கோதுமை மாவுகூட ஒரே சமயத்தில், ஒரே பாத்திரத்தில் நீராவியில் சமைக்கப்பட்டன. வங்காளிச் சமையலில் சீர்த்திருத்தம் செய்வதற்காகச் சாந்தி நிகேதனின் பையன்கள் அதே போன்ற சமையலைத் தொடங்கினார்கள். இரண்டொரு உபாத்தியாயர்களும், சில மாணவர்களும் இச் சமையலைச் செய்து வந்தார்கள்.
கொஞ்ச காலத்திற்குப் பிறகு இப் பரீட்சை நிறுத்தப்பட்டுவிட்டது. பிரபலமான இந்த ஸ்தாபனம், கொஞ்ச காலத்திற்கு இந்தப் பரீட்சையை நடத்தியதால், அதற்கு எந்தவிதமான நஷ்டமும் இல்லை என்பதே என் அபிப்ராயம். இதனால் ஏற்பட்ட சில அனுபவங்கள் உபாத்தியாயர்களுக்குப் பயனுள்ளதாகவே இருந்திருக்க முடியும்.
சாந்திநிகேதனில் கொஞ்ச காலம் தங்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், விதியோ, வேறு விதமாக இருந்து விட்டது. நான் சாந்திநிகேதனத்திற்கு வந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. இதற்குள் கோபாலகிருஷ்ண கோகலே காலமாகி விட்டார் என்று புனாவிலிருந்து எனக்குத் தந்தி வந்தது.
சாந்திநிகேதனும் துக்கத்தில் ஆழ்ந்தது. அங்கிருந்தவர்கள் எல்லோரும் என்னிடம் வந்து துக்கம் விசாரித்தார்கள். தேசத்திற்கு ஏற்பட்ட நஷ்டத்தைக் குறித்துத் துக்கப்படுவதற்காக சாந்தி நிகேதனின் கோயிலில் ஒரு விசேஷக் கூட்டம் மிகுந்த பயபக்தியுடன் நடந்தது. அன்றே நான் என் மனைவியோடும், மகன் லாலுடனும் புனாவுக்குப் புறப்புட்டேன். மற்றவர்கள் எல்லோரும் சாந்திநிகேதனிலேயே தங்கினார்கள்.
(காந்தியடிகள் எழுதிய “சத்திய சோதனை”
பக்கம் 456-453)
தேவேந்திரநாத் தாகூர் சாந்திநிகேதனை ஓர் அமைதிக்கான ஆசிரமமாக உருவாக்கினார்! அவருக்குப் பிறகு அதன் பொறுப்பை ஏற்றுக் கொண்ட கவிஞர் தாகூர், அந்த அமைதிக் கோட்டத்தைக் கலைக் கோயிலாக்கி உலகத்துக்கே ஒரு கல்விக் கோட்டமாக்கினார்! ஆண்டுதோறும் உலகக் கல்வியாளர்கள் அங்கு வருகை தந்து, அங்கே நடைபெற்றுவரும் அறிவற்புதங்களைக் கண்டு களித்துக் கற்றுச் செல்கிறார்கள். ரவீந்திரநாத் தாகூர். மேலாளராக இருந்தபோது. கவிஞரின் உள்ளத்தில் குழந்தைகள் மேல் அன்பும், அவர்களது கல்வி போதனைகளில் அக்கறையும் கொண்டிருந்தார். இன்றைக்கு வேண்டுமானல் எண்ணற்றோர் குழந்தை நலம் பேணுபவராகவும். குழந்தைகளைப் பற்றிப் பாடிய கவிஞர்களாகவும் வரலாம்; வாழலாம் ஆனால், கவிஞர் தாகூரைப் போல குழந்தைகளுக்காகப் பாடியவர்கள், அவர்களது எதிர் காலம் மேல் அக்கறை கொண்டவர்கள் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே ஆவர்!
இளம் பிஞ்சுகளான குழந்தைகள் அதனதன் ஆசைகளைப் போல ஆடிப்பாடி வளரவேண்டும். கட்டுப்பாடுகள், இருக்கக் கூடாது என்பது அவரது ஆவல். அவ்வாறு அந்தக் குழந்தைகள் வளர்ந்தால் தான், உள்ளத்திறனும், உயர்வும், எண்ண எழுச்சியும் பண்பாடும் சிறப்பும் என்பது அவரது முடிவு. அதனால்தான், குழந்தைகளின் அறிவை வளர்க்கும் மென்மைபான கல்வியைப் போல வேறொன்றும் இல்லை என்று அமெரிக்கக் குழந்தைகள் விழாவிலே அவர் பேசிய போத பெருமிதமாகக் குறிப்பிட்டார்.
அதே நேரத்தில் கவிஞர் தனது இளமைக் காலத்தில் கல்விக்காகப் பட்ட கஷ்ட நஷ்டங்களையும் அவர் அடிக்கடி நினைவு கூருவார். அந்த அனுபவத்தைக் கொண்டு தான், பள்ளி வாழ்க்கை ஒரு சிறைக் கூடமாகக் குழந்தைகளுக்குக் காட்சிதரும் கொடுமையை எப்படியும் மாற்றியே தீரவேண்டும் என்று திட்டமிட்டார். அது போலவே, உணர்வற்ற பாடப் புத்தகங்களிலே இருந்து கண்மூடிப் பழக்க வழக்கங்களை மாற்றக் கடுமையாகப் போராடினார்.
பொருள் விளங்காத பாடங்களை யந்திரம் போல் குழந்தைகள் கற்பதால், இயற்கையாக அவர்களுக்குள்ளே இருக்கும் தெளிவு, ஆற்றல் உணர்ச்சி போன்றவை மயங்குவதால் அதை மாற்றிடச் சிந்தனை செய்தார். குழந்தைகள் அவர்கள் ஆசை போல ஆட வேண்டும், பாட வேண்டும் என்ற உரிமைகளை அவர்களுக்கு மறுக்கக் கூடாது என்று முடிவு செய்தார்.
குறிப்பிட்ட ஒரு நேரத்தில் திட்டமிட்டு, குழந்தைகளை விளையாட விட்டு, வேண்டியவற்றை கற்கும்படி உரிமை கொடுக்க வேண்டும். அப்போதுதான், குழந்தைகள் அறிவு தட்டுத் தடங்கல் இல்லாமல் வளரும் சூழ்நிலை உருவாகும் என்று கருதினார்.
இசையாலும், நாடகத்தாலும், குழந்தைகளுக்கு கல்வி புகட்டவேண்டும். குழந்தைகளுக்கு இயற்கை நண்பனே தவிர விரோதி அல்ல என்பதை உணர்த்தி, இயற்கையோடு பழகிக் கற்கச் செய்ய வேண்டும். என்றெல்லாம், தாகூர் குழந்தைகளைப் பற்றி வெளிப்படையாகவே தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.
கவிஞர் எளிமையும்; மனைவியின் மாண்பும்!
கவிஞர் தாகூர், தனது அருமை மனைவியோடு இல் வாழ்க்கையை பதினைந்து ஆண்டுகளே நடந்தினார். மனைவி மிருணாளினி கணவனுக்கு ஏற்ற இல்லத்தரசியாகவே வாழ்ந்து வந்தார். இனிமையான சொற்களோடு வருவார்போவார்களை இன்முகங்காட்டி உபசரிப்பார். உயர் பண்புகளுக்கான உறைவிடமாகத் திகழ்ந்தார்.
கணவர் கலையுள்ளச்சிந்தனைகளுக்கேற்ப அந்தக் கற்புக்கரசி மிருணாளினி திகழ்ந்தார். அந்த அம்மையார் குடும்பப் பொறுப்புக்களை ஏற்று, அத்தனை பெரிய மூத்தவர்கள் அனைவரிடமும், அவர்களது துணைவியார்களிடமும், மாமனால் மாமியாரிடமும், மற்றுமுள்ள சுற்றத்தார்களிடமும் உண்மையான பாச உணர்வோடு வாழ்ந்தார்.
கவிஞரது துணைவியார் எந்தவிதமான குடும்பப் பாரத்தையோ, கஷ்ட நஷ்டங்களையோ, சிக்கல்களையோ கணவரிடம் விடாமல் எல்லாவற்றையும் தானே சுமந்து கொண்டு வாழ்ந்தார். அதனால் தான், கவிஞர் தாகூர் எந்தவிதமான கவலைகளும் இல்லாமல் அவரது சிந்தனைகளைச் செம்மையாக ஓட வைத்தார்! அந்த ஓட்டம் உலகம் போற்றும் பல நூல்களை உருவாக்கியது.
கவிஞர் தாகூர் கலைத் தொண்டுகளுக்காக அடிக்கடி சாந்தி நிகேதன் செல்வார். அங்கே நாள் கணக்கில் தங்கி நூல்களை எழுதி முடித்துவிட்ட பிறகே கல்கத்தா திரும்புவார். கவிஞர், ஆண் மக்கள் இருவருக்கும், பெண் மக்கள் மூவருக்கும் அரிய தந்தையாக விளங்கினார்.
கவிஞர் தாகூர் தனது தந்தையாரைப் போலவே ஆடம்பரத்தை வெறுத்தார். பகட்டு, படாடோபம், வெற்று விளம்பரம், இலக்கியக் கோஷ்டி, அரசியல் கோஷ்டி தன்னைப் புடை சூழாமல், ஜால்ரா தட்டிகளையும், முகஸ்துதியாளர்களையும் அண்ட விடாமல் செம்மையாக வாழ்ந்து காட்டினார்.
தூய்மை என்பதும், அழகு என்பதுமே அவருடைய உள்ளத்தை ஈர்த்தன! அதற்காக அவர் ஆடம்பரத்தை நாடிய வரல்லா்! தமது குடும்பத்தினருக்கும், மனைவிக்கும் துணி மணிகள் வாங்கும் நிலையேற்படும்போது, எளிமையாகவும், சிக்கனமாகவும் இருப்பார்! அதிகச் செலவுகளை யார் செய்தாலும் தடுப்பார்.
பணக்காரக் குடும்பத்திலே பிறந்து வளர்ந்த மாதரசியான மிருணாளினி, தனது கணவர் என்ன சொல்கிறாரோ, எப்படிச் செயல்படுகின்றாரோ அவற்றையெல்லாம் வரும்பொருள் உரைக்கும் மந்திரியைப் போல, வருமுன் உணர்ந்து நடந்து கொள்ளும் அருங்குணவதியாக வாழ்ந்தார். பெற்றோர் அணிவித்த நகைகளை எல்லாம் பெட்டிக்குள் வைத்துவிட்டு, ஓர் ஏழைப் பெண்போலவே அவர் விளங்கினார். அந்த அரிய பண்பை அவரது வீட்டார் அனைவரும் பாராட்டி மகிழ்வார்கள்.
தாகூர், தேவேந்திர நாத் குடும்பத்தின் பதினான்காவது, கடைசிப் பிள்ளை அல்லவா? அதனால், கவிஞரது மனைவியார் எல்லா மருமகள்களையும் விட மிக இளைய மருமகளாகவும், அழகாகவும், எளிய கோலமாகவும் இருந்ததைக் கண்ட குடும்பத்தினர் எல்லாருமே அந்த அம்மையாரிடம் தனி அன்பு, மரியாதை, மதிப்பு வைத்தே பழகி வந்தார்கள்.
அத்தகைய மதிப்பு வைத்திருக்கும் அவர்கள் எதிரே பணிவாகவும், அடக்கத்தோடும், செல்வந்தன் மகள் என்ற செருக்கற்றும், நகையலங்காரம், ஏதுமின்றி பொறுமையாகவும், பெருமையாகவும் அந்த அம்மையார் நடந்து கொண்டது கவிஞருக்கு மிகப் பெரிய மரியாதையை அந்தக் குடும்பத்தில் பெற்றுத் தந்தது.
கவிஞர் தாகூருக்கு பிறந்த நாள் விழா வந்தது. அப்போது கணவருக்குத் தங்கத்தால் பொத்தான்கள் செய்து கொடுத்து அணிந்து கொள்ளச் செய்தார் கவிஞர் மனைவி. அதற்குத் தாகூர் ‘நான் என்ன பெண்ணா? ஆண்கள் நகை அணிந்து கொள்வதா! என்று பேசி, அந்தப் பொத்தான்களை அணிந்துகொள்ள மறுத்து விட்டார். அம்மையாரும் அவரது எண்ணத்தை வரவேற்றார்.
மனைவி மிருணாளினி தேவியோடு கவிஞர் தாகூர் சாந்தி நிகேதன் சென்று அமைதியை நாடினார்! மற்றவர்கள் எப்படி அங்கே குடிசையிலே வாழ்ந்தார்களோ, அதுபோல தாகூரும் தனக்கென ஒரு குடிசையை அமைத்துக் கொண்டு வாழ்ந்தார்! எளிமையான உணவு வகைகளையே அவர் உண்டார்.
மிருனாளினி அம்மையார், கணவருடைய கொள்கைகளையும், அவரது மன உறுதிகளையும் ஏற்று, மதித்து அவருக்குத் தக்கவாறு, உண்மையான வாழ்க்கைத் துணைவியாக நடந்தார்! கவிஞர் ரவீந்திரரும் தனது மனைவியின் அற்புதமான குடும்பச் சேவையை எண்ணிப் போற்றினார்!
இவர் மனைவியாக வாய்த்த அருமையைதாம் பெற்ற பெரும் பேறாகவே மதித்தார். சில நேரங்களில் சமையலறைக்கே வந்து மனைவிக்கு தக்கபடி உதவுவார்!
மிருனாளினி தேவியார் திடீரென நோய் வாய்ப்பட்டார். படுத்த படுக்கையாக இரண்டு மாதம் நோயால் வருந்தினார்! வேதனைப்பட்டார்! அப்போதெல்லாம் கவிஞர் பெருமான் தாகூர், தனது மனைவி அருகேயே அமர்ந்து, வாடிய முகத்தோடு இரவு பகல் என்று பாராமல் கண் விழித்தபடியே விசிறிக் கொண்டே இருந்தார்! மனைவியின் அருமைச் செயல்களை எண்ணியெண்ணி மனம் தளர்ந்து, அம்மையாரின் இறுதி நேரம் வரை அருகிருந்தே எல்லாப் பணிகளையும் செய்தார்! அதைப் பார்த்து சாந்தி நிகேதனே வியந்து இந்தக் கணவன்-மனைவி உறவினைப் பாராட்டியது.
கவிஞர் தாகூர் பெருமான் திடீரெனக் கண்ணீர் விட்டார். வாய்விட்டு அழமுடியாமல் தேம்பித் தேம்பிக் கண் கலங்கினார்! அதாவது தனது அருமை மனைவி மிருணாளினி மறைந்து விட்டார் என்று மற்றவர்களுக்குக் கூற முடியாமல் அவரது கண்கள் கண்ணீரை மட்டுமே சிந்திக் கொண்டிருந்தன!
மிருணாளினி தேவியார் அருகே உலகம் புகழும் கவிஞர் பெருமான்! பெற்ற பெண்கள் மூவர்! மகன்கள் இருவர்! பதின்மூன்று மூத்தார்கள் கண்ணிர் பெருக்கோடு; அவர்களது துணைவியர்கள் அனைவரும் கதறலோடு, மாமியாரும், மாமனாரும் துன்ப உணர்வுகளோடு துவண்டு கிடந்தார்கள்.
முப்பத்தொன்பதாம் வயதிலேயே கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் மனைவியை இழந்தது முனிவர் போல வாழ்ந்தார்!
6. அரசியல் தொண்டு
மனைவியாக மட்டுமன்று-மங்கையர்களுக்கு அரசி போல வாழ்ந்து கொண்டிருந்த மிருணாளினி தேவி மரணமடைந்த பிறகு, கவிஞர் தாகூர் ஒரு மகானைப் போல வாழ்ந்து கொண்டிருந்தார்.
கடைசி மருமகள் இறந்த அதிர்ச்சியால் கவிஞர் தாகூரின் தந்தையார் தேவேந்திரர் நாத் மிகவும் தளர்ச்சி அடைந்தார். கவிஞர் தாகூர், தனது தந்தையை ஆறுதல் படுத்தி, தந்தையார் இறை வழிபாட்டிலும் தியான நிலையிலும் இருக்கும்போது, அவருடன் இருந்து, தான் எழுதிய ‘நை வேத்தியம்’ என்ற நூலிலுள்ள பல பாடல்களைப் பாடி மன அமைதிப் படுத்தி வந்தார்.
மகன் எழுதிய பாடல்களைக் கேட்டுக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த தேவேந்திரர் தனது செல்வனைப் பார்த்து, “பழங்காலத்திலே வாழ்ந்த புலவர் பெருமக்கள் மன்னர்களிடமும், செல்வந்தர்களிடமும் சென்று, தாம் பாடிய பாடலைப் பாடிக் காட்டினால் பரிசு வழங்குவது வழக்கம். அதுபோல நானும் உனக்குப் பரிசு தருகிறேன்” என்று ஒரு பெருந்தொகையை ரவீந்திரருக்குப் பரிசாகக் கொடுத்தார். அந்தப் பரிசால் தனது நூலை அச்சிட்டு வெளியிட்டார்.
கவிஞர் தாகூர் தனது குடும்பத்துடன் 1901ஆம் ஆண்டில் சாந்தி நிகேதன் சென்று குடியேறிய பின்பு வந்த நூல் ‘நைவேத்தியம்’ அதற்கடுத்து வேறு இரண்டு நூல்களையும் சாந்தி நிகேதனில், இருக்கும்போது அவரது வெளியிட்டது தந்தைக்கு மேலும் மகிழ்ச்சியூட்டியது.
வழிபாட்டுக் கொள்கை
தேவேந்திர நாத்துடன் அவரது மூத்த மகனும், ரவீந்திரரும் இணைந்து சாந்திநிகேதனில் யோகக் கலைகளையும், தியான வழிபாடுகள் மற்றும் இறைத் தொண்டுகளையும் தொடர்ந்து செய்து வந்ததால், அந்தக் கலைக் கோயிலுக்கு இந்திய மாநிலங்களிலிலே உள்ள பேரறிவாளர்கள் பலர் அங்கே அடிக்கடி வந்து அதன் பயனை மக்களும் அனுபவிக்க வேண்டும் என்று விரிவுபடுத்திச் சென்றார்கள். அதற்கான பொருளாதார வரவும் பெருகியது.
மக்கள் வழிபாட்டுக்காக ஒர் தனி இடம் ஒதுக்கப்பட்டு அதற்கான சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டு வந்தன. வழிபாட்டுக்குரிய சில விதிகளும் அங்கே உருவாயின. கடவுள் உருவமற்றவர்! விக்கிரக வழிபாடு கூடாது; எந்தச் சமயத்தையும் குறை சொல்லக் கூடாது; எந்த உயிருக்கும் துன்பம் செய்யக் கூடாது என்பவை சாந்தி நிகேதனில் நடைபெறும் சில வழிபாட்டு விதிமுறைகளாகும். இதனால் அந்தப் பகுதி வாழ் மக்கள் அந்த வழிபாடுகளில் ஏராளமாக வந்து கலந்து கொள்வார்கள்.
இந்த சமயத்தில் ரவீந்திரர், சாந்திநிகேதனில் குழந்தைகள் பள்ளி ஒன்றையும் தனது தந்தையின் வாழ்த்துதலோடு துவங்கினார். அவர் ஆரம்பித்த பள்ளியிலே தொடக்க காலத்தில் தனது மகளுட்பட ஐவரைத்தான் சேர்க்க முடிந்தது. நாளடைவில் அதே பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் வந்து சேர்ந்தார்கள்.
அந்தப் பள்ளி, பழங்காலத்தில் சான்றோர்கள் கற்ற கல்வியைப் போல, ஒழுக்கம், தியானநிலை, இறை வழிபாடு, இயற்கையோடு ஒன்றிய எளிய வாழ்க்கை போன்று போல நடைபெற்றது.
பள்ளிக் கூடங்களைப் பற்றித் தாகூர் கூறிய கருத்துக்கள் என்ன வென்றால், ஏராளமான பெரிய பெரிய கட்டடங்கள் தேவையில்லை. பொருள்கள் சேர்க்க வேண்டும் என்ற ஆசை பள்ளி நடத்துபவர்களுக்கு வரக் கூடாது. அதுதான் இன்ப வாழ்வு என்ற எண்ணமே எழக்கூடாது. எளிமையில் செம்மை என்ற விதிப்படிபள்ளிகள் இயங்கவேண்டும்.அப்போதுதான் அங்கே அமைதி தவழும்; இயற்கை நிலையோடு ஒன்றி வாழும் எண்ணங்கள் தோன்றும். நகரங்களின் நெருக்கடிகளுக்கு நடுவே பள்ளிகளை நடத்தக்கூடாது. காடுகள் போன்ற இயற்கைச் சூழலில் பாதுகாப்போடு பள்ளிகள் அமைவது எல்லாநலன்களுக்கும் நல்லது” என்றார்.
சாந்தி நிகேதன் நடைமுறைகள்
சாந்தி நிகேதன் பள்ளியிலே புதிதாக ஒருவர் புகுந்தால் அவ்வளவு விரைவில் அவர் வெளியே வர முடியாது. மெய் மறந்து அங்கேயே தங்கி விடலாமா? என்று நினைப்பார். பாடம் நடந்தநேரம் போக மிகுதியான வேளைகளில் பாட்டும் இசையுமே பெருகிக் காட்சி தரும்.
தினந்தேறும் காலையிலே பள்ளி இசை முழக்கத்தோடு ஆரம்பமாகும்! முடியும்போது இசை ஒலியோடு தான் முடியும். காலை விடியலில் சிறுவர்கள் எழுந்து ஆசிரமத்தை சுற்றியபடியே இசைவலம் வருவார்கள். இந்த இசை ஒலி மற்ற சிறுவர்களையும் எழுப்பிவிடும். சுருக்கமாக, இப்பாடலொலிகள் சிறுவர்களது பள்ளி எழுச்சியாகவே இருக்கும். இங்கே பாடப்படும் பாடல்கள் எல்லாம் கவிஞர் தாகூர் எழுதிய குழந்தைகள் பாடல்களே. காலை, மாலை இரண்டு நேர இறை வழிபாடுகளிலும் இசைஒலிக்கும். அந்தந்த பருவ காலத்துக்கு ஏற்றவாறு பள்ளிக் கூடத்து உள்ளேயே, மாணவர்கள் விருந்தினர்களைச் சூழ்ந்தபடியே திருவிழாக் கொண்டாட்டங்கள் நடைபெறும்.
உழவர்கள் உழத் தொடங்கும் போது, சாந்தி நிகேதனில் உழவர் திருவிழா நடக்கும். அந்த விழா விவசாய மக்களுக்கு மகிழ்ச்சியை விளைவிக்கும். அந்த நேரங்களில் ஆடலுண்டு, பாடலுண்டு, கண்காட்சி மற்றும் நாடக இன்பமும் உண்டு. ஒவ்வொரு விழாவிலும் தாகூரின் நாடகம் அரங்கேறும். இவ்வாறு எழுதப்பட்டது தான் அவர் எழுதிய நாடகங்கள் எல்லாமே!
கவிஞர் தாகூர் சாந்தி நிகேதனத்துக்கான ஆசிரியர்களை மிகவும் கவனமாக தேர்வு செய்து நியமித்தார். உலகவாழ்க்கை என்றால் என்ன? மக்கள் அவ்வாழ்க்கையை எவ்வாறு நடத்த வேண்டும்? என்பதைச் சிறுவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர் களாக அவர்களை உருவாக்கினார்!
பயனில்லாத, பழங்காலப் பெருமைகளை சொல்வதையும் கற்பிப்பதையும் ஒதுக்கித் தள்ளினார்.
மாணவர்களின் விரும்பியபடி கல்வி கற்பிக்கும் வழிகளை ஆராய்ந்து தாகூர் அறிவித்தார். விளையாட்டுக் கல்வியிலும் மாறுதல் செய்தார்.
மாணவர்கள் விருப்பப்படி செய்தால், வேலைக்கும் விளையாட்டிற்கும் உள்ள வேறுபாடுகள் மறையும். வீட்டிற்கும் பள்ளிக் கூடத்திற்கும் இடையே உள்ள வேறுபாடும் அகன்றுவிடும் என்று கவிஞர் தாகூர் எண்ணினார்.
ஆள்வோர் ஆளப்படுவோர் என்ற வேறுபாடில்லாமல் பள்ளியை நடத்தினார். ஆசிரியர்களும்-மாணவர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்ச்சிக்குப் பாதை அமைத்தார். அதனால் மாணவர்களும்-ஆசிரியர்களும் பிரச்சினைகள் ஒன்றும் தோன்றதபடி பழகி பாசத்தோடு கல்வி கற்க முடிந்தது.
சாந்திநிகேதன் பள்ளியில், சட்ட திட்ட ஆட்சியும், அடக்குமுறையும் இல்லாமல் செய்தார். அதே நேரத்தில், மாணவர்-ஆசிரியர்கள் இடையே கட்டுப்பாடுகள், ஒழுக்க முறைகள் தவறாதபடியும் பள்ளியை நடத்திவந்தார்.
எல்லார்க்கும் பொதுவான, எல்லார்க்கும் நன்மையான, எவருக்கும் தீமைகள் ஏற்படாத, செயல்முறை ஒழுக்கங்களை வளர வைத்தார். ஒருவேளை இந்த ஒழுங்குமுறைகளிலே யாராவது தவறுவார்களேயானால், அவர்களைத் தண்டிக்கும் பொறுப்பை ஒருவரிடமும் அவர் ஒப்படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சரி, மாணவர்களே மன்றம் அமைத்துக் கூடி அவர்கள் நிலைக்கு ஏற்றவாறு தண்டனை வழங்கலாம் என்ற முறையை கவிஞர் தாகூர் உருவாக்கினார்!
எல்லா உயிரிடத்தும் அன்பு செலுத்தவேண்டும் என்பதைக் கவிஞர் பொது விதியாக்கினார். மற்றவர்களது பழக்க வழக்கங்களையும், மொழி உணர்வுகளையும் கேலி பேசிடாமல், மதிப்பும் மரியாதையும் கொடுத்து நடக்குமாறு அம்மாணவ மணிகளுக்கு கல்வியோடு கல்வியாகக் கற்பித்தார்.
பொருளாதார இடையூறுகள்
சாந்திநிகேதன் பள்ளியின் பழக்க வழக்கம் அக்காலத்திலிருந்த கல்விமுறைப்படி இல்லாமல் வித்தியாசமாக இருந்தது. இதை இந்திய மக்களும், குறிப்பாக உலகக் கல்வியாளர்களும் உணரும் நிலை ஏற்பட்டது. அப்படி ஒரு சிறந்த கல்விமுறைப் பள்ளியை உருவாக்குவது என்றால் சாமான்யமான வேலையா என்ன?
கவிஞர் தாகூர் இப்பணி வெற்றிகரமாக அமைய அரும்பாடு பட்டாலும், அந்த முயற்சிகளும், சிந்தனைகளும், ஆக்கவேலைகளும் அவருக்குச் சலிப்பைத் தரவில்லை மகிழ்ச்சியையே வழங்கின. ஆனால், இதற்கெல்லாம் பணம் வேண்டாமா?
தாகூர் மனைவியான மிருனாளினி தேவியார் உயிரோடு இருந்தபோது பெட்டிக்குள் பூட்டிவைத்திருந்த தனது நகைகளை எல்லாம் கணவரிடம் கொடுத்து, பள்ளிப் பணிகளைக் கவனிக்க ஏற்பாடு செய்தார்!
நகைகளை எல்லாம் கொடையாகக் கொடுத்த மிருணாளினி தேவியார் 1902ஆம் ஆண்டில் சாந்தி நிகேதனிலேயே மரணமடைந்தார். கவிஞருக்கு இது மிகப்பெரிய இடையூறாக அமைந்து விட்டது. மனைவியைப் பறிகொடுத்து விட்ட மறுஆண்டே கவிஞர் தனது அருமை மகள் ரேணுகா என்பவளை இருமல் நோய்க்குப் பலி கொடுத்து விட்டார். அவளுக்கு செலவு செய்த பணமும், முயற்சியும் வீணாகிவிட்டதே என்ற வருத்தம் கவிஞர் தாகூரை மேலும் பாதிப்புக்கு உள்ளாக்கியது.
1904ஆம் ஆண்டில், சாந்தி நிகேதனை மிகப்பொறுப்புடன் நிர்வாகம் செய்துவந்த சதீஸ்சந்திர ராய் என்ற ஆசிரியர் காலமானதும் கவிஞருக்கு மேலும் கவலை ஏற்பட்டது.
சாந்தி நிகேதன் என்ற ஆசிரமத்தை முதன் முதல் உருவாக்கிய தேவேந்திரரநாத் தாகூர், ரவீந்திரரின் உயிருக்கும் உயிரான தந்தையார், 1905ஆம் ஆண்டில் மரணமுற்றார்.
கவிஞர் தாகூரின் இளைய மகனான சமீந்திர நாதன் என்பவர், தனது பதின்மூன்றாம் வயதிலே, 1907ஆம் ஆண்டில் உயிர்நீத்தார். அடுத்தடுத்து வந்த இவ்வளவு மரணத் துன்பங்களுக்கு இடையே கவிஞர் ஓயாமல் உழைத்துவரும் நிலையேற்பட்டு விட்டது. இந்த துன்பங்களுக்கு இடையே அவ்வப்போது எதிர்பாராமல் ஏற்பட்டு வந்த பொருளாதாரச் சிக்கலும் அவரை வருத்தியபடியே இருந்தது.
தாகூரின் நண்பர்களிலே சிலர் வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து, இங்கிலாந்திலே இருந்து உற்பத்தியாகி வரும் பொருட்களை நாம் வாங்க கூடாது. இந்தியப் பொருளாதார லாபம் பிரிட்டிஷ் நாடுகளுக்குப் போகக் கூடாது என்று போராடினார்கள்.
சுதேசிக் கைத் தொழிலும் சுதேச வாணிகமும் மேலோங்கி வளர வேண்டும் என்ற ஆர்வத்தால், கவிஞர் தாகூர் கூட அக்கொள்கைகளின் உணர்ச்சிகளைப் போற்றி மதித்தார். அது மட்டுமன்று; இது காந்தீயக் கொள்கைகளில் ஒன்றாக உள்ளது என்பதனால் அவற்றுக்கு ஆதரவும் அளித்தார்.
கவிஞருடைய நண்பர்களும், உறவினர்களும் தொடங்கிய இந்த இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்குரிய அமைப்புகளில் கவிஞர் தாகூரும் பங்கு கொண்டு, தனது பணத்தை அதிலே பங்குகளாகச் செலுத்தினார். ஆனால் அவற்றுக்கு எப்படி அரசு ஆதரவு கிடைக்கும்? அதனால் அந்த தொழில் வளர்ச்சி பெறாமல் வீழ்ச்சியுற்றது. கவிஞர் ரவீந்திரர் போட்ட முதலும், பங்கும் நட்டத்தை விளைவித்தது. தாகூர் பெருங் கடன்காரரானார். அவரது பொருளாதார நிலைக்கு மேலும் பெருத்த அடி வீழ்ந்தது. தனது சொத்துக்களை எல்லாம் இழந்தார்!
அரசியல் பிரவேசம்
எப்போதெல்லாம் நாட்டு மக்களுக்குத் துன்பம் நேர்கின்றதோ, அப்போதெல்லாம் ரவீந்திரர் தனது நிலைகளைக் கூட ஆராயாமல் தேசத் தொண்டாற்றிட முன்வரிசையிலே நிற்பார்.
1889ஆம் ஆண்டு கல்கத்தா நகரிலே பிளேக் நோய் பரவியபோது, முதன் முதலாக ரவீந்திரர் மக்கள் தொண்டாற்றிடப் புறப்பட்டார். அந்த நேரத்தில் வங்க ஞானி ராமகிருஷ்ணர் மடத்திலே ஆன்மிகத் தொண்டாற்றிய நிவேதிதை என்ற அம்மையாருடன் சேர்ந்து, இரவும் பகலுமாக ஓய்வில்லாமல் நோய் தடுப்புப் பணிகளிலே ஈடுபட்டு சேவையாற்றினார். பணம் திரட்டி மக்களுக்குரிய வசதிகளைச் செய்து தந்தார்.
வங்காள மாநிலத்தில் அடிக்கடி ஏற்படும் கங்கையாற்று வெள்ள கோர அழிவுகளால், துன்பங்களை அனுபவிக்கும் மக்களுக்கும் முன்னின்று பணம் சேகரித்துத்தக்க உதவவிகளை வழங்கினார்.
பீகார் மாநிலத்தில் ஏற்பட்ட பெரும் பூகம்ப அழிவுகளால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கும், குவெட்டா நகரினை ஆட்டிப்படைத்து உலுக்கிய பூகம்ப நாசங்களால் அவதிப்பட்ட மக்களுக்கும், தாகூர் செய்த உதவிகளை மக்கள் துயர் துடைத்த பணிகளை யாரும் மறக்க முடியாது. அவ்வளவு கடும் உழைப்புகளை ஆங்காங்குள்ள அரசு அதிகாரிகளுடனும் பொது மக்கள் நிறுவனங்களுடனும் சேர்ந்து செய்தார்.
பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரலாக இருந்த கர்சான் பிரபு, 1905ஆம் ஆண்டில் வங்காள மாநிலத்தை கிழக்கு வங்கம், மேற்கு வங்கம் என்று இரண்டாகப் பிளந்தார். வெள்ளையர் ஆட்சியின் இந்த ஆணவச் செயலை வங்க மக்கள் கங்கையின் பெருவெள்ளம் போல பொங்கித் திரண்டு எதிர்த்தார்கள். அந்தப் போராட்டங்களைப் பல அணிகள் செய்தன. அவற்றுக்குத் தலைமை தாங்கிப் போராட்டம் நடத்திய பெருமை ரவீந்திரநாத் தாகூரையே பெரும்பாலும் சாரும்! அவ்வளவு தீவிரமாக மக்களைத்திரட்டிப் போராடினார்.
அந்தப் போராட்டம் வெற்றி பெற அவர் கண்டன முழக்கமிட்ட கூட்டங்கள் பல. அவருடைய பேச்சுக்களின் இடிமுழக்க ஒசைகளை உலகமே கேட்டு வியந்தது எனலாம்! பெரிய போர்த் தளபதி போலவே வங்க மக்களும், இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்துத் தலைவர்களும் தாகூரை மதித்தார்கள். மரியாதை தந்தார்கள்.
பேச்சு முழக்கங்களோடு மட்டுமா நின்றார் தாகூர்! வங்கத்து ஷெல்லி என்றல்லவா வங்கம் போற்றியது அவரை! அதனால், தனது கவிதை வரிகளால் மக்களை எழுச்சி பெற வைத்தார்! மக்களும் ஆயிரக் கணக்கில் திரண்டு போராடினார்கள்! அதற்குக் காரணம் ரவீந்திரருடைய கவிதைகளே. என்றால் மிகையன்று!
இன்றைய புதுச்சேரி மாநிலத்தில் அரவிந்தர் ஆசிரமம் என்ற ஒன்று உள்ளதல்லவா? அந்த ஆசிரம நிறுவனரான அரவிந்த மகரிஷி, அன்று கவிஞர் பெருமான் தாகூரின் பேச்சுக்களையும், கவிதை முழக்கங்களையும் கேட்டும், படித்தும் வங்கப் பிரிவினை தடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
கவிஞர் தாகூர், கல்கத்தா நகரில் மிகப் பெரிய போராட்ட ஊர்வலத்தை தலைமையேற்று நடத்திக் காட்டினார். பல கூட்டங்களில் பேசி, ஏறக்குறைய ஐம்பதினாயிரம் ரூபாய் வரை போராட்ட நிதியாக மக்களிடையே திரட்டிக் கொடுத்தார். அவ்வளவு செல்வாக்கும், மக்கள் பலமும் இருந்தது அவருக்கு.
பகை கொள்ளாத ஒத்துழையாமை
“பகை கொள்ளாத ஒத்துழையாமை வேண்டும்” என்று பகிரங்கமாக மேடையிலே கூறியே போராட்டம் நடத்தினார் அவர். அரசு அதிகாரிகளைத் தாக்கக் கூடாது. அதிகாரிகளை வருத்த வேண்டிய அவசியமில்லை!
ஆனால் நாளா வட்டத்தில் கவிஞருடைய பகை கொள்ளாப் போரின் அன்பு நெறிகள் ஓடிவிட்டன; அதனால் தாகூர் அரசியல் போராட்டத்தை விட்டு அகன்றுவிட்டார். பழையபடி சாந்தி நிகேதன் சென்று அமைதித் தொண்டாற்றிடலானார்!
கவிஞர் பெருமானுடைய அரசியல் போராட்டத்திலே ஆழ்ந்து கிடந்த தத்துவ உணர்வுகளையும், மனித நேய மாண்புகளையும் ஆழ்ந்தறிய முடியாத வங்கத்துப் பொது மக்களில் பலர், தாகூரை பழித்தார்கள், வைதார்கள், இழிந்துரையாடினார்கள், ஏசினார்கள்! ஆனால் தாகூர் எவருடைய இழிவையும் புகழையும் எதிர்பாராமல் நாட்டுப்பற்றோடு நடந்தார்! அதனால் அவர் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. மக்கள் தொண்டு என்ற கடமையிலேயே கண்ணாய் இருந்தார்.
அரசியல் போராட்டத்தை நெறிதவறி, மனித நேயம் மீறி, வன்முறைகளுடன் நடத்துவதைவிட, சிறந்த சேவைகளை பள்ளிக் கூடத்திலும், எழுத்திலும், கிராம மக்களிடத்திலும் செய்ய முடியும் என்ற மன உரத்தோடும், பொறுமையோடும் தனது அரசியல் பகையாளர்களுக்கு உணர்த்தினார்.
இந்து-முஸ்லீம் கலகங்கள் 1908ஆம் ஆண்டிலும் ஏற்பட்டது. அந்தப் பிணக்கத்தைத் தடுக்க அமைதியான முறையிலே எவ்வளவோ அரும்பாடுபட்டார்! இணக்கமே ஏற்படவில்லை. அதற்கு நேர்மாறாக வங்காள மாநிலம், இரண்டாக மதத்தின் பெயராலேயே துண்டாடப்பட்டு விட்டதே என்று ஆற்றொணாத் துயருற்றார் கவிஞர் தாகூர்.
மறுபடியும் சாந்தி நிகேதன்
உலகப் புகழ்பெற்ற நோபல் பரிசு பெற்று இந்திய அறிவுக்குப் புகழ் ஈட்டிய ‘கீதாஞ்சலி’ எனும் நூலை கவிஞர் தாகூர் அரசியலை விட்டு விலகிய பின்னர்தான் எழுதினார்.
கவிஞர் தாகூர் பல நாடகங்களை எழுதினார்! அந்தநாடகங்களை சாந்திநிகேதனிலேயே அரங்கேற்றினார். அதற்கான ஒத்திகைகளை கவிஞர் ரவீந்திரரே முன்னின்று நடத்தினார் என்பது மட்டுமன்று, அவரே நாடகத்தில் நடித்தார். இந்த நாடக ஒத்திகைகளும், நாடகங்களும், அவரது நடிப்பும் ஏதோ பொழுது போக்கிற்காக நடத்தப்பட்டவை அல்ல! சாந்தி நிகேதன் வந்து பல்கலைகள் பயிலும் மாணவ மணிகளுக்குரிய இலக்கியமாக, நாடகத் துறைக்கு இலக்கணமாக, கல்வித் துறைக்குரிய பாடபோதனைகளாகவும் திகழ்ந்தன.
கவிஞர் தாகூர் பெருமானுக்கு 1911ஆம் ஆண்டில் ஐம்பதாவது பிறந்த நாள் விழா, சாந்திநிகேதனில் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதே நேரம் வங்காள மாநிலத்து அறிஞர்களால். கல்வியாளர்களால் பல இடங்களிலே அந்த புகழ் மகனுக்கு விழா எடுக்கப்பட்டது. யார் யார் அரசியல் பெயரால் கவிஞரை அவமதித்தார்களோ, பழித்துப் பேசினார்களோ, அவர்கள் அனைவரும் ‘தாகூர் பெருமானைப் போற்றித் திரு அகவல்கள் பாடினார்கள்!
1912-ஆம் ஆண்டில், கல்கத்தா நகர மண்டபத்தில் நடை பெற்ற கவிஞர் தாகூர் பாராட்டுவிழாக் கூட்டத்தில் வங்க இலக்கியக் கழகம் அவருக்கு விருது வழங்கிப் பாராட்டி மகிழ்ந்தது. பிரம்ம சமாஜ ஆண்டு விழாவில் கவிஞர் தாகூர் கலந்து கொண்டு, இந்திய நாட்டு வணக்கப் பாடலாக ‘ஜன கண மன’ என்ற புகழ் பெற்ற பாடலைப் பாடினார். அந்தப் பாடல் தான்.
இன்று இந்திய தேசிய கீதமாக ஒலிக்கிறது.
ஜன கணமன அதிநாயக ஜய ஹே
பாரத பாக்ய விதாதா
பஞ்சாப லிந்து குஜராத மராட்டா
திராவிட உத்கல பங்கா
விந்திய ஹிமாசல யமுனா கங்கா
உக்சல ஜலதி தரங்கா
தவ சுப நாமே ஜாகே
தவ சுப ஆசிஸ் மாகே
காஹே தவஜயகாதா
ஜன கண மங்கள நாயக ஜயஹே
பாரத பாக்ய விதாதா
ஜயஹே ஜயஹே ஜயஹே
ஜய ஐயஜய ஜயஹே
இந்தப் பாடலைத்தான் மஹாகவி ரவீந்திர நாத் தாகூர், 1911-ஆம் ஆண்டில், தனது ஐம்பதாம் ஆண்டு பிறந்த நாள் பரிசாக பிரம்ம சமாஜ ஆண்டு விழா நடைபெற்ற போது பாடிக்காட்டினார்!
தாகூர் பாடலின் தமிழாக்கம்:
இந்தியத் தாயே!
மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற நீயே
எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய்.
நின் திருப்பெயர் பஞ்சாபையும், சிந்துவையும்,
குஜராத்தையும் மராட்டியத்தையும், திராவிடத்தையும்,
ஒரிசாவையும், வங்காளத்தையும்
உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது.
நின் திருப்பெயர்
விந்திய, இமயமலைத் தொடர்களில் எதிரொலிக்கிறது;
யமுனை, கங்கை ஆறுகளின் இன்னொலியில் ஒன்றுகிறது; இந்தியக் கடலலைகளால் வணங்கப்படுகிறது.
அவை நின்னருளை வேண்டுகின்றன;
நின் புகழைப் பரப்புகின்றன.
இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே!
உனக்கு வெற்றி! வெற்றி! வெற்றி!
இந்திய நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, கவிஞர் பெருமான் ரவீந்திர நாத் தாகூர் பாடிய அந்தப் பாடலை, இந்திய அரசாங்கம் நாட்டு வணக்கப் பாடலாக ஏற்றுக் கொண்டு, கவிஞர் தாகூரைக் கெளரவித்துள்ளது அந்தப் பாடல் இந்திய அரசு மூவண்ண அரசுக் கொடியை ஏற்றும்போது கவிஞர் தாகூரது தேசப் பக்தியை நினைவிருத்திக் கொண்டு ஒலிக்கப்படுகிறது. இந்திய அரசும் மாநில அரசுகளும் நடத்தும் ஒவ்வொரு அரசு நிகழ்ச்சிகளின் இறுதியிலும் கவிஞர் தாகூர் பெருமகன் எழுதிய ‘ஜன கண மன’ பாடலைப் பாடியே முடிப்பதை இன்று நாம் பார்த்துப் பரவசப்படுகிறோம்!
7. ‘கீதாஞ்சலி’ நூலுக்கு
நோபெல் பரிசு!
அரசியலை விட்டு விலகிய கவிஞர் தாகூர், இலக்கிய வெறியோடு ‘கீதாஞ்சலி’ என்ற உள்ளொளி நூலை எழுதினார். ஆனால், அதைத் தன் தாய்மொழியான வங்காள மொழியில் தான் எழுதினார். அதனால், அதை வங்கப் பேரறிஞர்கள் மட்டுமே பாராட்டும் நிலையேற்பட்டது.
தன்னுடைய உடல் நலக் குறைவினால் கிராமம் ஒன்றிற்குச் சென்றார்! உடல் சுகமானதும் சில நாட்கள் ஓய்வெடுத்தார். அந்த நேரத்தில் ‘கீதாஞ்சலி’ நூலை ஆங்கில மொழியிலே மொழி பெயர்த்தார். பொழுது போக்கிற்காக செய்த இந்த மொழி மாற்றப் பணி, அவருடைய புகழை உலக மெல்லாம் பரப்பியது. பொருளாதாரத்தில் நொடிந்து போயிருந்த அவரது வாழ்க்கை அந்த மொழி பெயர்ப்பால் நன்மை பெற்றது; புகழைத் தேடித் தந்தது; உலக அறிஞர்கள் கவிஞர் தாகூரை வானளவாகப் புகழ்ந்து போற்றினார்கள். அவரை அறிவுலகம் தேடிவந்து அணைத்துக் கொண்டது. ஆரத்தழுவி மகிழ்ந்தது.
கவிஞர் தாகூர் 1912-ஆம் ஆண்டில் லண்டன் மாநகர் சென்றார். அப்போது ரோதென்ஸ்டின் என்ற பழைய நண்பரைக் கவிஞர் கண்டார். அந்த நண்பர் ஒரு முறை சாந்தி நிகேதனுக்கு வந்த போது நண்பரானவராவார். அந்த நண்பர் ஆங்கிலத்தில் அருமையாக மொழி பெயர்க்கப்பட்ட கீதாஞ்சலி நூலைப் படித்துப் பார்த்து மகிழ்ச்சியடைந்தார். அதிலுள்ள ஒவ்வொரு பாடலையும் அவர் திரும்பத் திரும்பப் படித்து, அதன் இனிமையைச் சுவைத்தார். தனது நெருங்கிய நண்பரான யீட்ஸ் என்பவரிடமும் ‘கீதாஞ்சலி’யைக் கொடுத்து படிக்குமாறு கேட்டுக்கொண்டார். மற்றும் பல ஆங்கில நண்பர்களுக்கெல்லாம் ரோதென்ஸ்டின் அந்த நூலைக் கொடுத்து படிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
ரோதென்ஸ்டின் நண்பர்கள் வட்டம் முழுவதும் கீதாஞ்சலி நூலைப் போற்றிப் புகழ்ந்தது. கவிஞர் தாகூரின் நண்பர்களான வெல்ஸ், பெர்னாட்ஷா, பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், ராபர்ட் பிரிடம்ஜ் போன்ற அனைவரும் அவரது நூலைப் பாராட்டினார்கள். அப்போது ஆண்ட்ஸ் சாந்திநிகேதனின் நிர்வாகப் பொறுப்பை ஏற்று நடத்திக் கொண்டிருந்தார்.
லண்டன் நகர் நண்பர்கள் வட்டம் தாகூருக்கு விருந்தளித்துப் பாராட்டியது. புத்தகமாகிவிட்ட ‘கீதாஞ்சலி’ நூல் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளிலே அச்சிட்டுப் பரபரப்பாக விற்பனையானது. உலக நாடுகள் எல்லாம் தாகூரையும், அவரது எழுத்தாற்றலையும் புரிந்து கொண்டன.
கீதாஞ்சலியை நன்றாக ஊடுருவி வாசித்த சமயச் சார்புடைய சங்கத்தார், ரவீந்திர நாத் தாகூர் வெறும் கவிஞர் மட்டுமன்று; அவர் ஒரு சமயத் தலைவராகவும் காட்சியளிக்கின்றார் என்று அவரை மத பேதமின்றிப் பாராட்டினார்கள். ‘கீதாஞ்சலி’யின் பாடல்கள் அன்புப் பாடல்களே என்று அவர்கள் கருத்தறிவித்தார்கள்.
கவிஞர் தாகூர் லண்டன் மாநகரிலிருந்து அமெரிக்கா சென்றார். அங்கே சில பல்கலைக் கழகங்களது வேண்டுகோள்களுக்கு ஏற்ப, சொற்பொழிவுகளாற்றி அரிய கருத்துகளைக் கூறினார்.
நோபெல் பரிசு பெற்றார் தாகூர்
அமெரிக்காவிலே சொற்பொழிவாற்றி விட்டு மீண்டும் லண்டன் வந்தார் கவிஞர் தாகூர். பிறகு, நேராக 1913-நவம்பர் மாதத்தில் இந்தியா திரும்பினார். சாந்திநிகேதன் வந்து சேர்ந்த கவிஞர் தாகூருக்கு ஓர் அவசர தந்தி வந்தது. அதில், இரவீந்திர நாத் தாகூருக்கு இலக்கியத்துறை பிரிவு சார்பாக நோபல் பரிசு வழங்கப்பட்டிருப்பதாக செய்தி வந்தது. சாந்திநிகேதனையே அந்தத் தந்தி மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.
இந்த நோபல் பரிசு அன்று வரை ஐரோப்பிய அறிஞர்களுக்கே தொடர்ந்து வழங்கி வரப்பட்டது. அந்த பரிசு வழங்கல் மரபை. ‘கீதாஞ்சலி’ உடைத்தெறிந்து விட்டது. ஐரோப்பியர்கள் அல்லாத இந்தியரான ரவீந்திரநாத் தாகூருக்கு அந்த பரிசு வழங்கப்பட்டது.
நோபல் பரிசு பெற்றுவிட்ட ரவீந்திர நாத் தாகூரை வங்க அறிஞர்கள் முன்பைவிட இப்போது மிக மரியாதை கொடுத்துப் பாராட்டினார்கள். வங்காளத்திலே யார் யார் அவரை அவமரியாதையாக அன்று பேசினார்களோ, கேலியும் கிண்டலும் செய்து மிகவும் கேவலமாக நடந்து கெண்டார்களோ, அவர்களனை வரும். இப்போது பாராட்ட வந்த அறிஞர்களோடு சேர்ந்து கொண்டார்கள்.
கல்கத்தா நகரில் நடைபெற்ற ஒரு திருமண வீட்டில் வங்க நாவலாசிரியர் பங்கிம் சந்திர சட்டர்ஜியும், கவிஞர் தாகூரும் சந்தித்துக் கொண்ட நேரத்தில், சட்டர்ஜி தாகூரை புகழ்ந்து போற்றியது நினைவிருக்கலாம். அப்படிப்பட்ட ஒருவர் அத்தனை பெரிய திருமண மண்டபத்தில் அப்போது பாராட்டியதை வங்காளிகள் உணரவில்லை.
ஆனால், ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும், லண்டன் நகரத்தவர்களும் தாகூரைப் பாராட்டிப் பரிசு கொடுத்துப் போற்றிய, பிறகுதான் வங்காளிகள் அவரது அருமையை அறிந்து பெருமை கொண்டார்கள். அதுவரை அலட்சியப்படுத்தியே வந்தார்கள்.
வங்காள மொழியில் பழுத்த புலவர்கள், தாகூரின் பாட்டுக்களையும், எழுத்துக்களையும் குறை கூறி கிண்டலடித்தார்கள். அவர் இலக்கணம் அறியாதவர் என்று இகழ்ந்து எழுதினார்கள். மாணவர்கள் எழுதும் வினாத்தாள்களில், ‘பிழை திருத்துக’ என்ற தலைப்பின் கீழ், தாகூரின் நூல்களில் கண்ட வரிகளைக் கொடுத்து எழுத வைத்தார்கள்.
தாகூரின் வாக்கியங்கள் தவறானவை என்பதை மாணவர்கள் உணர வேண்டும் என்ற தப்பான பிரசாரத்தைச் செய்தார்கள். ஆனால், அதே புலவர்கள் தாகூர் நோபல் பரிசு பெற்ற பிறகு ஊமைகளாகி விட்டார்கள்.
கல்கத்தா பல்கலைக் கழகம் தாகூரைப் பாராட்டியது. கல்லூரியில் பட்டம் பெறாத அவருக்கு 1913-ஆம் ஆண்டு டாக்டர் பட்டம் வழங்கிப் பெருமை கொண்டது. அதற்குப் பிறகு பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் ரவீந்திரரை பட்டமளிப்பு விழா உரையாற்றுமாறு கேட்டுக் கொண்டது.
டாக்டர், கவிஞர் இரவீந்திர நாத் தாகூர் அந்த அழைப்பை ஏற்று, தன் தாய்மொழியான வங்காளத்திலேயே பட்டமளிப்பு உரையாற்றினார்! ஆங்கிலத்திலே வழக்கமக உரையாற்றுபவர்களுக்கும் தாய்மொழிப் பற்று வரவேண்டும் என்பதற்காகவே அவர் அவ்வாறு முன்னோடியாக விளங்கினார்.
இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷ் அரசு, டாக்டர் கவிஞர் இரவீந்திரநாத் தாகூருக்கு 1915-ஆம் ஆண்டில் ‘சர்’ பட்டம் வழங்கிப் பாராட்டியதால், டாக்டர் கவிஞர் சர் ரவீந்திர நாத் தாகூர் என்று அவர் மக்களால் அழைக்கப்பட்டார்.
இந்தப் பெரும் பட்டங்கள் எல்லாவற்றையும் மீறிய புகழோடு, உலகப் புகழ்பெற்ற முதல் இந்திய மகாகவியாக தாகூர் விளங்கினார். உலக மக்கள் அவருடைய பாடல்களையும், எழுத்துக்களையும் படிப்பதுடன் மட்டுமல்லாமல் அதை ஆராய்ச்சிகளும் செய்து வந்தார்கள். இதற்கெல்லாம் காரணம் அவரது கீதாஞ்சலி நூல் தான். அதே நேரத்தில் ‘கீதாஞ்சலி’ நூல் வெளிவரக் காரணர்கள் யார் யாரோ அவர்களை எல்லாம் கவிஞர் மறக்கவில்லை. அந்த மொழி பெயர்ப்பு நூலின் உரிமையுரையில், கவிஞர் தாகூர் தனது நண்பரான ரொதென்ஸ்டினுக்குக் காணிக்கை என்று குறிப்பிட்டிருக்கிறார்.
கவிஞர் தாகூர், சிறுவயதிலிருந்தே இங்கிலீஷ் மொழியை முழுமையாகக் கற்கவில்லை. ஆங்கிலம் கற்பது அவருக்கு வேம்பு போல் கசந்தது; வெறுப்பும் ஏற்பட்டது. பிற்காலத்தில், அவரது கவிதைக்கும், பாடலுக்கும், கதைகளுக்கும் ஆங்கில மக்களிடையே நல்ல செல்வாக்கு வளர்ந்து கொண்டிருந்த போது, இங்கிலீஷ் மொழியின் பயனை உணர்ந்து தன்னுடைய சொந்த முயற்சியால் அதைக் கற்றுக் கொண்டார். வங்காள மொழியிலே இருந்து எந்தக் கருத்தையும், செம்மையான ஆங்கில நடையில் மொழி பெயர்க்கும் அளவிற்கு நல்ல திறமையையும் வளர்த்துக் கொண்டார்!
‘கீதாஞ்சலி’யை ஆங்கிலத்திலே அவர் மொழிபெயர்த்த போதும் கூட, அதை அவர் நூலாக அச்சிட விருப்பம் காட்டவில்லை. ஆனால், அவரது மொழி பெயர்ப்பை ஆங்கிலேய அறிஞர்கள் பாராட்டுவதை அறிந்த பிறகு தான் அதை நூலாக வெளியிட்டார்.
நோபல் பரிசு கீதாஞ்சலிக்கு கிடைத்த பிறகும் கூட, தான் எழுதிய எல்லா நூல்களையும் தனது தாய் மொழியான வங்களாத்திலேயே எழுதினார். ஆண்ட்ரூஸ் என்ற அவரது நண்பருக்கு எழுதிய கடிதத்தில் “உமது தாய் மொழியான இங்கிலீஷில் இயல்பாக, நீங்கள் அழகாக எழுதுகின்றீர்கள். எனக்கு அந்த இயல்பு வரவில்லை” என்று குறிப்பிட்டு, அவரவர் தாய் மொழியின் இயல்பை அவர் பெருமையாகச் சுட்டிக்காட்டினார். இந்த நம்பிக்கையை கவிஞர் தாகூர் தனது இறுதிநாள் வரையிலும் கடைப்பிடித்தார்.
முதல் உலகப் போர் துவங்குவதற்குச் சிறிது காலத்திற்கு முன்னரே, கவிஞர் தாகூர் அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளுக்குச் சென்று திரும்பிவிட்டார். அதனால், அந்தந்த நாடுகளிலுள்ள அறிஞர்களுடன் கலந்து உரையாடி நட்பும் வைத்துக் கொள்ளும் வாய்ப்பு அவருக்கு உண்டாயிற்று.
ஐரோப்பிய நாடுகள் தங்களது நாகரிகத்தை வளர்த்துப் பெருக்கிக் கொண்டாலும், அந்த நாடுகள் ஒன்றை ஒன்று அழிக்கும் பகையையும் வளர்த்துக் கொண்டிருக்கின்றனவே என்று தாகூர் வருத்தப்பட்டார். காரணம், அந்த நாடுகள் இடையே அன்பும், மனிதநேயமும் போதிய அளவு வளராததால்தான், அவை ஒன்றைக் கண்டு மற்றொன்று அஞ்சும் நிலையிலே உள்ளன. அதற்கு அவர்கள், அவரவர் நாடுகளைத் தற்காத்துக் கொள்ளவே படை திரட்டுகிறோம், பெருக்குகிறோம் என்று பேசுகிறார்கள். அழிவு வேலையில் போட்டியும்-பொறாமையும் வளர்வது நாகரிகமாகாது என்பதை அவர் தெளிவாகவே அந்தந்த நாட்டு அறிஞர்களுடன் பேசும்போது சுட்டிக் காட்டினார்.
கவிஞர் தாகூர் இந்தியா திரும்பி வந்ததும், அவருக்கு நடந்த பாராட்டு விழாக்களில் கலந்து கொண்டு பேசும் போது மேற்கண்ட கருத்தைக் கூறியதுடன் நில்லாமல், உருவாகும் போர் மயக்கத்தை வேரறுக்க இந்திய நாடுதான் வழிகாட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
தாகூருடைய ஆங்கில நண்பர்களான ஆண்ட்ரூஸ், பியர்சன் என்ற இருவரும் 1914-ஆம் ஆண்டு சாந்தி நிகேதனுக்கு தொண்டாற்ற வந்து சேர்ந்தார்கள்.இவர்கள் சாந்திநிகேதனுக்கு வந்துள்ளதால், இவர்கள் சேவை உலக அமைதிக்கு உதவும் என்று தாகூர் மகிழ்ந்தார். அதுபோலவே, அவர்களுடைய தொண்டுகளால் 1915-ஆம் ஆண்டு தென்னாப்ரிக்க நாடுகளுடன் சாந்திநிகேனுக்கு தொடர்பு உருவானது. தென்னாப்ரிக்காவில் காந்தியண்ணல் ஏற்படுத்திய போனிக்ஸ் பள்ளியின் மாணவர்கள், இந்தியாவிற்கு வந்து சாந்திநிகேதனில் தங்கியிருந்தார்கள். அப்போதுதான், மகாத்மா காந்தியடிகள் சாந்திநிகேனுக்கு வருகை தந்தார்.
கவிஞர் தாகூரும் கூடி அளவளாவிய முதல் கூட்டம் சாந்தி நிகேதன் சந்திப்பாகும். இதற்குப் பிறகுதான். சாந்திநிகேதன் புகழ் உலக அறிஞர்களைக் கவர்ந்தது. தாகூரும் அரசியல் உலகை அறவே மறந்து சாந்திநிகேதன் தொண்டிலே மும்முரமாக ஈடுபட்டார்.
8. தாகூர் உருவாக்கிய
விசுவ பாரதி, ஸ்ரீ நிகேதன்
முதல் உலகப்போர் முடிந்ததும், 1918-ஆம் ஆண்டில், கவிஞர் தாகூர் சாந்தி நிகேதனில் விசுவ பாரதி என்ற உலகப் பொது நிலையத்தை, அதாவது உலகக் கலைக் கழகத்தைத் துவக்கினார்.
இந்தியாவில் இருந்த நாளந்தா பல்கலைக்கழகம் எவ்வாறு பழங்காலத்தில் உலகப் பல்கலைக்கழகமாகச் செயல்பட்டதோ அதனைப் போலவே விசுவ பாரதி உலகக் கலைக் கழகமும மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்று கவிஞர் தாகூர் விரும்பினார். அவரது நண்பர்களான ஆண்ட்ரூஸ், பியர்கள் என்னும் ஆங்கிலேயர் இருவரும் சாந்திநிகேதனிலேயே தங்கி விசுவபாரதியின் ஆக்கப் பணிகளைக் கவனித்தார்கள்.
கவிஞர் பெருமான் தாகூர் 1920-ஆம் ஆண்டில் ஐரோப்பிய நாடுகளில் பயணம் செய்த போது, உலகக் கலைக் கழகம் தேவை என்பதின் அவசியத்தை உணர்ந்தார். இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலங்களின் கலைகள் அதில் எவ்வாறு இடம் பெற்றுச் சிறந்ததோ, அதேபோல, சீனா, ஜப்பான் முதலான கிழக்கு நாடுகளின் கலைகளையும், ஐரோப்பிய நாடுகளின் கலைகளையும் இடம் பெறச் செய்தார் தாகூர்.
ஐரோப்பிய நாடுகளின் நாகரிகத்தை எப்போதும் அவர் புறக்கணித்தது இல்லை. ஆனால், அதற்காக, அந்த நாடுகளின் நாகரிங்களைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுவதும் தீமை அதுபோலவே அடியோடு அவற்றை ஒதுக்குவதும் நமது வாழ்க்கைக்கு நட்டமே என்று நம்பினார். ஒவ்வொரு நாட்டின் நன்மை-தீமைகளையும் ஆராய்ந்து பார்த்து ஏற்க வேண்டியதை ஏற்றும், தள்ளவேண்டியவற்றைத் தள்ளுவதும் நல்லது என்றார்.
விசுவ பாரதி கலைக் கழகத்தில், எக்காரணத்தைக் கொண்டும் சாதி, சமயப் பிளவு புகுந்து விடாதபடி தாகூர் பாதுகாத்தார். எல்லாச் சமயத்தாரும், எல்லா இனத்தாரும் ‘மனிதர்’ என்ற பொதுத் தன்மையில் விளங்கி வாழ வேண்டும் என்று ஆர்வம் கொண்டார். அதே போல அங்கே இருந்த உணவு விடுதிகளிலே எவ்வகையான வேறுபாடுகளும் புகுந்து பிளவு படுத்தாதபடி எச்சரிக்கையோடு செயல்பட்டார். வழிபாடுபோன்றவற்றிலும் எந்தக் கட்டுப்பாடும் விதிக்காமல், முழு உரிமைகளை அங்கே நிலை நிறுத்தினார் ரவீந்திரர்!
ஜப்பான் பயணத்தில் ஏற்பட்ட கசப்பு
கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் 1916-17ஆம் ஆண்டின்போது ஜப்பான்நாட்டிற்குப் பயணம் சென்றார். அவருக்கு அந்தநாடு சிறப்பான வரவேற்புகளை வழங்கியது. பல கூட்டங்களிலே அவர் சொற்பொழிவாற்றினார். ஜப்பான் தேசத்துக் கவிஞர்களோடும், கலைஞர்களோடும் கலந்துரையாடி நட்புக் கொண்டார்.
ஜப்பானியர்களின் மண்ணாசையையும், பகையுணர்ச்சியையும் அவர் வெறுத்தார்! அதே நேரத்தில் அவர்களது உள்ளத்திலுள்ள அழகுணர்ச்சியைப் பாராட்டினார். சீனர்களிடம் ஜப்பானியர் நடந்து கொள்ளும் மனப்போக்கை எதிர்த்தார். டோக்கியோ பல்கலைக் கழகத்தில் அவர் பேசிய நாட்டுணர்ச்சி உரைகள் நூல்வடிவில் வெளிவந்தன. அது பல உண்மைகளை உலகுக்கு உணர்த்தியது.
தேசபக்தி என்ற முகமூடியை அணிந்துகொண்டு நாட்டுக்குச் செய்யும் துரோகத்தனங்களையும், நாட்டு முன்னேற்றத்தை நினையாமல், கேடு பயக்கும் தவறான உணர்ச்சிகளையும் அந்த நூல் சுட்டிக் காட்டியது. ஜப்பான் சென்ற கவிஞர் தாகூர், அவர்கள் நாட்டிலேயே அவர்களது தவறுகளைச் சுட்டிக் காட்டியதால், ஜப்பானியர்களும், அந்த நாட்டு அரசும் அவரை எதிர்த்தனர். அதனால் கவிஞர் தாகூர் தனத பயணத்தை விரைந்து முடித்துக் கொண்டு இந்தியா வந்தார்.
‘சர்’ பட்டத்தை தூக்கி எறிந்தார்!
கவிஞர் தாகூரின் மூத்த மகன், 1918-ஆம் ஆண்டில் மரணமடைந்ததால், தாகூர் பெரும் துயரடைந்தார் சிறிது காலம் எப்பணியிலும் ஈடுபடாமல் மெளனமாகவே இருந்தார்.
பஞ்சாப் மாநிலத்திலுள்ள அமிர்தசரஸ் நகரருகே, வெள்ளையர் ஆட்சியின் ராணுவ தளபதிகளுள் ஒருவரான ஜெனரல் டயர் என்பன், ஜாலியன் வாலாபாக் படுகொலையை நடத்தினான்! அமைதியாகக் கூட்டம் கேட்கக் கூடியிருந்த நிராயுதபாணிகளான பொதுமக்களை, பீரங்கியிலே குண்டுகள் உள்ளவரை, சிட்டுக்குருவிகளைச் சுட்டுத் தள்ளுவதைப் போல கொடூரமாகச் சுட்டுக் கொன்றான் என்பதை அறிந்து கவிஞர் பெருமகன் தாகூர் மீளாத்துன்பமுற்றார்.
வேங்கை ஒன்று கூண்டை உடைத்து வெளியேறுவது போல, கவிஞர் தாகூர் சாந்திநிகேதனை விட்டு வெளியேறி கல்கத்தா நகரையடைந்தார். தனது எதிர்ப்புணர்ச்சியை பிரிட்டிஷ் அரசுக்குத் தெரிவித்தார். கூட்டம் போட்டுக் கண்டனம் தெரிவிக்க மக்களைத் திரட்டினார். ஆனால், அரசியல் தலைவர்கள் எல்லாரும் அப்போது அஞ்சினார்கள். ஆனால் நெருப்பு வெப்பம் போல் கோபம் கனன்றதால், தான் மட்டுமே தனியாக நின்று தனது எதிர்ப்பைப் பிரிட்டிஷ் அரசுக்குத் தெரிவித்தார்.
இந்திய வைசிராய்க்கு உடனே கடிதம் எழுதி, தனக்கு ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் அளித்த ‘சர்’ பட்டத்தை-ஜெனரல் டயர் செய்த மக்கள் கொடுமையை எதிர்த்துத் தூக்கி எறிகிறேன் என்று அவர் தெரிவித்தார். இந்தியன் என்ற உணர்ச்சியோடு மட்டுமன்று, நானும் ஒரு மனிதன் என்ற உணர்ச்சியால், வெள்ளையரின் கொடுமையான ஆட்சியைக் கண்டிக்கின்றேன் என்று அவர் உலகமறிய அறிக்கைவிட்டுக் கண்டித்தார். வெள்ளையர் வழங்கிய பட்டத்தை இனியும் நான் சுமந்தால், அது மனிதாபிமானத்துக்கே பெரும் அவமானம் என்றும் தாகூர் குறிப்பிட்டார்.
ஸ்ரீ நிகேதன் உருவானது!
எப்போதுமே கவிஞர் தாகூருக்கு, கிராம மக்கள் மீதும், கிராமத் தொண்டுகள் மேலும் ஒரு வித பாச உணர்ச்சி உண்டு. அதை நன்கு புரிந்து கொண்ட கவிஞரின் மூத்த மகன், தனது தந்தையார் தாகூரை அமெரிக்காவிற்கு அனுப்பி கிராம முன்னேற்றம் பற்றி அறியச் செய்தார். தாகூருடன் எல்மிர்ஸ்ட் என்ற ஆங்கிலேயரும் துணையாகச் சென்றார். அவர் கிராமத் தொண்டுகள் செய்து பழக்கப்பட்டவராவார்.
இந்தியா கிராமங்கள் நிறைந்த ஒரு விவசாய நாடு. இங்கே கிராமங்கள் முன்னேறா விட்டால் இந்தியா முன்னேறுவது என்பது வெறும் பகற்கனவு என்று நம்பியவர் தாகூர். விசுவபாரதி என்ற கலைக்கழகத்தில் ‘கிராமத்தொண்டு’ என்பதையும் மாணவர்களுக்குரிய ஒரு பாடமாக வைத்தார்.
சாந்திநிகேதன் அருகில், இரண்டு மைல் துரத்தில் ‘இருள்’ என்ற சிற்றுரில் தனக்குரிய வீட்டைத் தலைமை நிலையமாகக் கொண்டு, ‘ஸ்ரீநிகேதன்’ என்ற கிராமத் தொண்டு நிலையத்தை 1922-ஆம் ஆண்டு தொடங்கினார் தாகூர்!
அந்தத் தலைமை நிலையத்தைச் சுற்றி நூல் நிலையம், அலுவலகம், தொண்டர்களுக்குரிய வீடுகள் போன்ற வசதிகளைத்தாகூர் அமைத்தார் உழவுத்துறையில், அவ்வூரைச் சுற்றியுள்ள கிராம மக்கள் முன்னேற வேண்டும் என்றார். நெல்லும், கரும்பும் சிறப்பாகப் பயிரிடப்பட்டன. மரங்கள் நடப்பட்டுச் செழித்தன! கிராம மக்களுக்கான கூட்டுறவுக் கழகங்கள் பல உருவாயின.
கிராம மக்கள் அனைவரும் அக் கழகத்தில் உறுப்பினரானார்கள். இந்த கழகத்தின் மூலம் கிராம சுகாதாரத்திற்கும், மருத்துவமனைக்கும் நிதி ஒதுக்கி செலவிடப்பட்டன. வைத்தியத்திற்கு என்று கட்டணம் கட்டத் தேவையில்லை. மருந்துவர்கள் அந்தந்தக் கிராமத்திலே கிராம மக்களுள் ஒரு குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். நோய் வந்த பிறகு மருந்து தரும் பணியில் ஈடுபடாமல், வருவதற்கு முன்னரே மக்களுக்கு மருந்துகள் வழங்கப்படும் வழக்கம் வளரலாயிற்று.
இதுபோன்ற சுகாதாரச் சீர்த்திருத்த ஏற்பாடுகளால்.அப்பகுதியிலே மலேரியா போன்ற கடும் நோய்களிலே இருந்துமக்கள் காப்பாற்றப்பட்டார்கள். ஒவ்வொரு குடும்பமும் உடல் நலத்தோடு வாழ்வதற்காக கூட்டுறவுக் கழகத்தில் மருத்துவக் கட்டணத்தொகையையும் சேர்த்துக்கட்டிய காரணத்தால் உடல் நலத்தைக் காப்பதில் டாக்டர்கள் முழுக்கவனம் செலுத்தி நோயே வராமல் செய்தனர். கிராம மருத்துவர்களும், மக்களுடன் கிராமங்களிலே வாழ்ந்து தொண்டாற்றி வந்தார்கள்.
கிராமங்களில் கல்வித் தொண்டு
கிராமத்துப் பள்ளிக் கூடங்களிலே பணியாற்றிடும் ஆசிரியர்களது குறைகள் என்ன என்று உணர்ந்து, அவர்களுக்குரிய தேவைகளைச் செய்து, அவர்களுடைய கல்வித் தொண்டு வளருமாறு கவிஞர் தாகூர் திட்டமிட்டுப் பணியாற்றினார். கிராம முன்னேற்றத் தொண்டர்களுக்கும், கிராம ஆசிரியர்களுக்கும் இடையே தொடர்பு இருக்குமாறு தாகூர் திட்டம் அமைத்தார்.
கிராமப் பள்ளிகளது மாணவர்களுக்கும், கிராமத்தொண்டர் படைகளுக்கும் இடையே தொடர்புகள் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கவிஞர் தாகூர், தொண்டர் படையை அமைத்துக் கொடுத்தார். மாணவர்கள் அந்தத் தொண்டர் படையில் சேர்ந்து கூட்டுறவு அடிப்படையில் அவரவர்களுக்குரிய நன்மைகளைச் செய்து கொள்ள முடிந்தது.
இந்தத் தொண்டர் படையினர் கடைப்பிடிக்கும் விதிகளைச் சுருக்கி நான்கே நான்கு வரிகளில் கவிஞர் தாகூர் ஒரு பாடலை அவர்களுக்கு எழுதிக் கொடுத்தார். துன்பங்கள் கிராம மக்களுக்குச் சூழும் போதெல்லாம், அக்கிராமத்து தொண்டர் படை ஓடிவந்து உதவும் மனப்பாங்கை அவர் உருவாக்கினார். மாணவர்களும், பயனுள்ள துறைகளில் பழகிவந்தார்கள். அதனால், அவர்களது உடலும் தூய்மையானது; உள்ளமும் தூய்மை பெற்றது.
மரம், செடி, கொடி, தோட்டம் ஆகியவற்றை மாணவர் படையினர் வளர்த்தார்கள் பயிரிட்டார்கள் தோட்டத்தின் காய்கறிகளை தமக்கும், ஊராருக்கும் வழங்கி நன்மை பெற்று, நல்ல பெயரடைந்தார்கள்.
கிராம மக்கள் ஒவ்வொருவர் வீட்டிலும், அதாவது ஒவ்வொரு தொண்டர் வீட்டிலும் ஒவ்வொரு காய்கறித் தோட்டம் இருக்க வேண்டும் என்பது கட்டாய விதியாயிற்று. பொதுத் தோட்டத்து விளைச்சலைச் சந்தையில் விற்றுப் பள்ளி மாணவர்களுக்குப் புத்தகங்களை வாங்கினார்கள். மருத்துவர்களிடமிருந்து மருந்துகளை வாங்கிக் கொண்டு போய் நோயாளிகளுக்குக் கொடுப்பதும், வேறு சில வேலைகளை கிராம முன்னேற்றத்துக்காகச் செய்வதும் தொண்டர் படையினர் பணிகளாகும். இவை மட்டு மல்லாமல், பொழுது போக்குகளுக்கும் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தொண்டர் படையினதும். கிராம மக்கயினதும் மகிழ்ச்சிகளுக்காக, விளையாட்டுக்கள், நாடகங்கள், கதைகள், பாடல்களைக் கொண்ட நிகழ்ச்சிகளும் நடந்து வந்தன.
தேர்வு முறையற்ற கல்வி
மேற்கண்டவாறு ஒவ்வொரு கிராமத்திலும் நடைபெற்றதால், அவற்றிலே தேர்வும், பண்படும் மனமும் அமைந்த மாணவர்கள், தலைமை நிலையமான ஸ்ரீ நிகேதன் வர வேண்டும். அங்கே கொஞ்சக் காலம் தங்கிப் பயனடைவது பழக்க வழக்கமானது.
ஸ்ரீ நிகேதன் நிலையத்தைச் சுற்றி, பல கிராமங்களுக்குப் பொதுவான உயர்நிலைப் பள்ளியும், உணவு விடுதியும் அமைந்தன. எட்டு அல்லது ஒன்பது வயதில் அங்கு வந்து சேரும் மாணவர்கள், பதினைந்து, பதினாறு வயது வரைக்கும் தங்கிக்கற்றார்கள். வங்காள இலக்கியமும், வங்காள வரலாறும் அங்கே கற்பிக்கபப்பட்டது. உலகச் செய்திகளை அறிந்தும், வாழ்க்கை வரலாறுகளைப் படித்தும் மாணவர்களின் அறிவு வளர ஏற்பாடு செய்தார்கள். கைத் தொழில்கள் கற்பிக்கப் பட்டன. ஆனால், மதிப்பெண்கள் பெற்றுத் தேற வேண்டிய பொதுத்தேர்வு முறையை தாகூர் அங்கே நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஏன் கவிஞர் தாகூர் தேர்வு முறையை அங்கே நடத்தாமல் விட்டு விட்டார்? காரணம், தேர்வுமுறை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு இடையூறானது; முட்டுக் கட்டை போட்டு ஓடும் தேரை நிறுத்துவது போன்ற ஒரு மனத்தடங்கல் கல்வி முறை அது என்பது கவிஞரின் கொள்கை. அதனால் அங்கே அவர் தேர்வு முறையை நடத்தவில்லை.
அறிவை வளர்ப்பதில் உணர்ச்சியே மிக முக்கியமானது. கல்வி என்பது கட்டாய உணவு அல்ல என்று கவிஞர் உணர்ந்தார்.
சாந்தி நிகேதன் பள்ளியில் மற்றவர்களது விருப்பத்திற்கு இணங்கி, ஆரம்பத்தில் மெட்ரிகுலேஷன் தேர்வுத் திட்டத்தின்படி கல்வி முறையை அமுலாக்கினார். ஆனால், முதலில் இருந்தே அவருடைய மனத்தில் தேர்வு முறையை எதிர்த்துப் போராட்டம் நடந்து வந்தது.
சில ஆண்டுகள் நடைமுறையில், அதன் தீமைகளை உணர்ந்தபின்பு, மெட்ரிகுலேஷன் தேர்வோடு சாந்திநிகேதன் மாணவர்களுக்குத் தொடர்பே கூடாது என்ற முடிவிலே கவிஞர் நின்றார். அப்போது மற்றவர்கள் கவிஞர் எண்ணத்திற்கு இணங்கவில்லை. மீண்டும் பொறுத்தார்.
கவிஞர் ரவீந்திர நாத் தாகூர் 1920-ஆம் ஆண்டு மீண்டும் ஐரோப்பா நாடுகளுக்குப் பயணம் சென்றார். கப்பல் ஏறிய பிறகுதான். சாந்திநிகேதன் ஆசிரியர்கள் கவிஞருடைய உணர்ச்சியை, எண்ணத்தை, உள்ளக் கருத்தை உணர்ந்தார்கள். அவர் முடிவுக்கேற்ற படியே நடத்த முன்வந்தார்கள்.
கப்பலில் பயணம்சென்றுகொண்டிருந்த கவிஞர் தாகூருக்கு அஞ்சல் வாயிலாக அச்செய்தியை சாந்திநிகேதன் பொறுப்பாளர்கள் அனுப்பியபோது, அதைப் பெற்ற கவிஞர் பெருமான் தாகூர் சொல்ல முடியாத மகிழ்ச்சியைப் பெற்றார். சாந்திநிகேதனின் கல்வி முறையிலே இருந்த பெருங்குறை அகன்று விட்டதாக அகமகிழ்ந்தார்.
9. தாகூர் எழுதிய கடிதங்கள்
அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும், கவிஞர் தாகூரின் நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. நூல்கள் பரபரப்பாக விற்பனையாவதை அறிந்து இங்கிலாந்து பதிப்பகம் ஒன்று அவரது மற்ற நூல்களையும் அச்சிட்டன. தாகூர் பாடல்கள் மட்டுமல்ல, அவரது சிறுகதைகள். நாவல்கள், கட்டுரைகள். நாடகங்கள், சொற்பொழிவுகள் எல்லாம் நூல்களாக்கப்பட்டு விற்பனையாகிக் கொண்டிருந்தன. இந்த நூல்களை மற்ற ஐரோப்பிய நாடுகள் எல்லாம் தாகூரின் உரிமையுடன் வெளியிட்டு, விற்பனையைப் பெருக்கின.
இந்தியாவிலே இருக்கின்ற விசுவபாரதி, உலகக்கலைக்கழக நிகழ்ச்சிகளை, உலகம் முழுவதும் அறிந்திட, கவிஞர் “விசுவபாரதி” என்ற மாதப் பத்திரிகையை வெளியிட்டார். அதற்கு தாகூரே ஆசிரியர். அந்தப் பத்திரிகையில் கவிஞர் மாதந்தோறும் தவறாமல் எழுதிவருவார்.
தாகூரின் சிறுகதைகள், சுவை மிகுந்த இலக்கியங்கள்! அவருடைய பாடல்களில் நவரசங்களும் இருக்கும். ஒவ்வொரு கதையும், நாவலும், நாடகங்களும் ஒவ்வொரு சுவையை விளக்குபவையாகவும், நகைச்சுவையாகவும், வேடிக்கை, கேலி, கிண்டல், கண்டிப்பு, சோகம் ததும்பும் வகையிலும் இருக்கும்.
தாம் எழுதுகின்ற புதிய புதிய படைப்புக்களை கவிஞர் எழுதி முடித்தவுடன், அதைத் தனது நண்பர்களிடமோ, மாணவர் களிடமோ படித்துக் காட்டிக் கருத்தறிந்த பிறகே மனநிம்மதி பெறுவார். சில நேரங்களில் அவரே உரக்கப் பாடி மகிழ்வார்.
தாகூர் கதைகள், நாவல்கள் பெரும் பகுதி வங்கத்து கிராம மக்களது வாழ்க்கைச் சம்பவங்களாகவே இருந்தன. இந்திய மக்களின் பண்பாடுகள், நாகரிகங்கள் அவரது கதைகளிலே ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும். எப்படி கவிஞரது பாடல்கள் அவரது புலமையை உலகுக்குப் புலப்படுத்துகின்றனவோ, அதனைப் போலவே கதைகளும், நாவல்களும் கற்பனைச் சிறகடித்து புகழ் வானத்திலே வட்டமிட்டபடியே இருந்தன.
நோபல் பரிசு பெற்ற பிறகு, அவரது இலக்கியப் பணிகள் அவருக்கு ஓய்வு கொடுக்காமலே நெருக்கிக் கொண்டே இருந்தன. அவ்வளவு கடமைகளுக்குப் பிறகும், அவர் அழகான பாடல்களைப் புனைந்து பாடிக்கொண்டே வாழ்ந்தார்.
கவிஞர் எழுதும் பாட்டுக்கள் அத்தகைய அனுபவம் வாய்ந்தது என்பதை 1892-ஆம் ஆண்டில் அவர் எழுதிய கடிதம் ஒன்று விளக்குவதைப் பாருங்கள். இதோ...
“கோயில் மணி ஒன்றும் இங்கு அடிப்பதில்லை. மக்கள் வாழும் பகுதி அருகே இல்லாமையால், மாலை நேரமானதும் பறவைகள் பாடலை நிறுத்தியவுடன் முழு அமைதி நிலவுகிறது.
முன்னிரவுக்கும், நள்ளிரவுக்கும் இங்கே பெரிய வேறுபாடு இல்லை. கல்கத்தா நகரத்தில் உறக்கம் இல்லாத போது, இரவு என்பது இருள் என்ற பெரிய ஆறு மெல்ல ஓடுவது போல் தோன்றும்; அதன் ஓட்டத்தில் எழும் பலவகை ஒலிகளையும், ஒருவர். படுக்கையில் மல்லாந்து படுத்த படியாகவே கேட்டுக் கொண்டிருக்கலாம்.
ஆனால், இங்கே இரவு என்பது, அமைதியாக அடங்கி இருக்கின்ற, அசைவின் அறிகுறியே இல்லாத பெரிய ஏரிபோல் இருக்கின்றது. நேற்று இரவு நான் படுக்கையில் இப்பக்கமும் அப்பக்கமும் திரும்பித் திரும்பிப் பொழுது போக்கினேன். ஏதோ ஒரு பகுதியாகத் தேங்கி நிற்பது போன்ற நிலையில் கிடந்தேன்.
இன்று காலையில் வழக்கமாக எழும் நேரத்தில் எழாமல், சிறிது நேரம் கழித்தே படுக்கையிலிருந்து எழுந்தேன். கீழடுக்கில் என் அறைக்கு வந்து தலையணையின் மேல் சாய்ந்து கொண்டு, ஒரு காலை மற்றொரு முழங்காலை மேலிட்டபடி கிடந்தேன்.
ஒரு கரும்பலகையை எடுத்து மார்பின்மேல் வைத்துக் கொண்டு, காலைத் தென்றலும் பறவைகளின் இசையும், தொடர, பாட்டு ஒன்று எழுதத் தொடங்கினேன். என்முயற்சி வெற்றியாகவே நடைபெற்றுக் கொண்டிருந்தது.
என் இதழ்களில் புன்முறுவல் நிற்க கண்கள் பாதி மூடியபடி இருக்க, பாட்டின் ஒலி நயத்திற்கு ஏற்ப என் தலை அசைய, என் முணுமுணுப்பு பாட்டுருவாக அமைந்து கொண்டிருந்தது. ஆனால், தபால் வந்து குறுக்கிட்டது.
ஒரு கடிதம், சாதனா பத்திரிகையின் கடைசி இதழ், இன்னும் சில அச்சுத் தாள்கள் ஆகியவை வந்தன. கடிதத்தைப் படித்தேன். சாதானாவின் கிழிக்கப் படாத பக்கங்களுக்குள் பார்த்தேன். மறுபடியும் தலை அசைத்துக் கொண்டும், முணுமுணுத்துக் கொண்டும், பாட்டு எழுதத் தொடங்கினேன். அதை முடிக்கும் வரைக்கும் நான் வேறு எதுவும் செய்யவில்லை.
பக்கம் பக்கமாக உரை நடை எழுதிய போதிலும், அது ஒரு பாட்டு எழுதுவதற்கு இணையான மகிழ்ச்சியைத் தருவதில்லை. என்ன காரணமோ? ஆச்சரியமாக இருக்கிறது. எழுதுகின்ற பாட்டில் ஒருவரது உணர்ச்சிகள் அப்படிப்பட்ட மேன்மையான உருவம் பெறுகின்றன.
கைவிரல்களால் தொட்டு எடுக்கக் கூடியவை போல் அவைகள் அமைகின்றன. ஆனால், உரை நடை என்பது ஒட்டாத பொருள்களை ஒரு கோணிப்பை நிறைய அடைத்திருப்பது போல் கனவாகவும், கையாள முடியாததாகவும், விருப்பம் போல் அசைக்க முடியாததாகவும் இருக்கின்றது.
தினந்தோறும் ஒரு பாட்டு எழுத முடியுமானால், என் வாழ்வு ஒருவகை இன்பமாகவே இருக்கும். ஆனால், பல ஆண்டுகளாக நான் தொடர்ந்து பாட்டோடு பழகியும், எனக்கு அது நன்கு பழக்கப் பட்டதாக ஆகவில்லை. கடிவாளம் இட்டு என் விருப்பம் போல் ஏறிப் போகக் கூடிய பறக்கும் குதிரையாக அது அமையவில்லை.
கற்பனைக்கு ஏற்றவாறு தொலைவில் பறந்து செல்லும் உரிமையில்தான் கலையின் இன்பம் அமைந்திருக்கிறது. அதற்குப் பிறகு, இந்த உலகச் சிறைக்குள் திரும்பிப் புகுந்த பிறகும் அந்த இன்பம் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது. மனத்திலும் ஊறிக்கொண்டிருக்கிறது.
சிறு சிறு பாட்டுகள், தாமாகவே நான் முயற்சி செய்யாமலே, என்னிடம் வந்து அமைகின்றன; நாடகம் எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும்போது அவை தடையாக வந்து சேர்கின்றன. இந்தப் பாட்டுக்கள் குறுக்கே வராமலிருந்தால், என் மனத்தில் வந்து தூண்டும் இரண்டு மூன்று நாடகத்திற்குரிய கருத்துக்களுக்கு வரவேற்பு கொடுத்திருப்பேன்.
ஆனால், குளிர்காலம் வரும் வரையில் காத்திருக்க வேண்டுமோ என அஞ்சுகிறேன். ‘சித்ரா’ தவிர, எல்லா நாடகங்களையும் குளிர் காலத்தில் தான் எழுதி முடித்திருக்கிறேன். அக்காலத்தில் பாட்டுக்குரிய உணர்ச்சி குளிர்ந்து விடும் போல் தெரிகிறது. அதனால்தான் அப்போது நாடகம் எழுத ஓய்வு கிடைக்கிறது போலும்"
(1892, மே, 16-ஆம் நாள் போல்பூரிலிருந்து எழுதிய கடிதம்)
நாடகத் தொண்டு
நாடகக் கலைக்கு கவிஞர் தாகூர் ஆற்றிய தொண்டு எவராலும் மறக்க முடியாதது. கவிஞர் சிறுவராக இருந்தபோது தேவேந்திர நாத் குடும்பம் ஒரு கலைக் குடும்பமாகவே காட்சியளிக்கும் ரவீந்திரர் அண்ணன்கள், அண்ணிகள், தாய், தந்தை அனைவருமே தங்களது வீட்டில் நாடகம் பார்த்துக் கொண்டிருக்கும்போது, அவர் மட்டும் பார்க்க அனுமதி கிடைக்காது. நாடகம் பார்த்தால் கெட்டுப்போவாய், போ-போ, என்று இளம் வயது ரவீந்திரரை அவர்கள் விரட்டிவிடுவார்கள். அப்போது கூட எங்காவது ஓரிடத்தில் மறைந்து கொண்டு ரவீந்திரர் நாடகம் பார்ப்பார்.
ஓரளவு ரவீந்திரர் வளர்ந்த பிறகு, தனது அண்ணன்களோடு சேர்ந்து அவரும் குடும்பம் நடத்தும் நாடகத்தில் நடிப்பார். பிறகு, அவரே பல புதிய நாடகங்களை எழுதும் நாடக ஆசிரியரானார்! அப்போதும் அவர் நாடக மேடையை மறக்கவில்லை. மேடை ஏறி நடிக்கும் கலை தாகூருக்கு மிக விருப்பமான கலையாக இருந்தது. பத்தொன்பதாம் வயதில் “வால் மீகி பிர தீபம்” என்று எழுத முனைந்த அவர், தனது இறுதி ஆண்டுவரை அக்கலைக்காகவே உழைத்தார். அவர் நடித்த முதல் கதாபாத்திரம் எது தெரியுமா? வால்மிகி மகரிஷி! இது கவிஞர் வீட்டிலேயே நடத்தப்பட்ட நாடகம். வயதான காலத்திலும் தாகூர் நடிகராகவே இருந்தார். முடிந்தபோதெல்லாம், அவர் சாந்திநிகேதன் நடத்தும் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
காந்தியடிகள் மூலம் 60 ஆயிரம்
நிதி பெற்ற கதை
கவிஞர் தாகூர் 1936-ஆம் ஆண்டு புது தில்லிக்குச் சென்றார். காந்தியடிகளைக் கண்டார். இருவரும் கலந்துரையாடி மகிழ்ந்தார்கள். அப்போது கவிஞர் வயது எழுபத்தைந்து. இந்த தள்ளாத வயோதிகத்தில் இந்திய நாட்டுப் பெருங்கவிஞர்; உலகப் புகழ் பெற்ற கவிஞர்; விசுவபாரதி உலகக் கலைக்கழகத்தை வளர்க்க இப்படி ஊர் ஊராகச் சுற்றி அலைகிறாரே என்று கவலைப்பட்டகருணாமூர்த்தி காந்தி பெருமான், ஒரு பெரும் செல்வந்தரை அழைத்து, கலைஞரிடம் ஓர் அறுபதினாயிரம் ரூபாய் கொடுத்தனுப்புங்கள்’ என்று கூறினார்.
அந்தச் செல்வந்தர் மகாத்மா கூறியபடி தொகையை கவிஞர் தாகூரிடம் வழங்கியதும், நேராக சாந்தி நிகேதன் சென்று ஒய்வெடுங்கள்” என்று அப்போது காந்தி அடிகள் இடைமறித்து கூறினார் கவிஞரிடம்.
‘விசுவபாரதி’ கலைக் கழகத்தை வளர்க்கப் பணம் திரட்டினார் கவிஞர் தாகூர். இந்தியாவிலே உள்ள பல மாநிலங்களுக்குச் சென்று பணம் சேகரித்தார். அறுபது வயதில் அவர் நிதி திரட்டிட ஊர் ஊராக அலைந்து திரிந்து அரும்பாடுபட்டார். தனது எழுபத்தைந்தாம் வயதில் காந்தியடிகளிடம் அவர் பெற்ற கடைசி நிதியோடு அதை முடித்துக் கொண்டார்.
தாகூர் பாடல்களின் கற்பனை வளத்தை உலக அறிஞர்களில் ஏராளமானவர்கள் போற்றினார்கள்; புகழ்ந்தார்கள்; பாராட்டு விழா கூட்டங்களை நடத்திக் கவுரவித்தார்கள். கவிஞர் தாகூரிடம் அதிகமான உயர்வு நவிற்சி அணி இராது; கண்டதை கேட்டதை, உணர்ந்ததை மட்டுமே கூறுவார். அவரது எழுத்தோவியங்களைக் கற்போர் மனக் கண்ணிற்கு புரியும் வகையில் எழுதுவார். அதற்கு இதோ இரண்டு அஞ்சல்கள்;
வெட்ட வெளியில் கிடைக்கும் கடல் அலைந்து புரண்டு நுரைக்கிறது. அதைப் பார்க்கும் போதெல்லாம், கட்டுண்டு வருந்தும் பெரிய பூதம்போன்ற தோற்றம் மனத்தில் எழுகின்றது. அந்தப் பூதத்தின் அகன்ற வடிவான வாய்க்கு எதிரே, கடற்கரையில் நாம் நம் வீடுகளை அமைத்துக் கொண்டு ஆது புரள்வதைப் பார்க்கின்றோம். என்ன
வலிமை! அளவற்ற பலம்! ஒர் அரக்கனுடைய தசைநார்களைப் போல அல்லவா அலைகள் எழுந்து எழுந்து அசைகின்றன.
படைப்புக்காலம் முதல் நிலத்திற்கும் நீருக்கும் இந்தப் போர் நடந்தே வருகிறது. உலர்ந்த நிலம் மெல்ல மெல்லத் தன் பகுதியை விரிவு படுத்திக் கொள்கிறது. தன் குழந்தைகளாகிய உலக மக்களுக்கு வாழ்விடம் பெருக்கித் தருகிறது. ஆனால், நீர்ப் பகுதியாகிய கடலோதன் இடம் பறிபோவதை உணர்ந்து பின் வாங்கிச் சென்று கூக்குரலிடுகிறது; விம்மி அழுகிறது. துயருற்றுத் தன் மார்பை அடித்துக் கொள்கிறது.
ஒரு காலத்தில் கடலே எல்லாமாக, தனிச் செங்கோலோச்சி, முழு உரிமையோடு விளங்கியது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். நிலம், கடலின் வயிற்றிலிருந்து பிறந்த குழந்தை, தாயின் அரியணையைக் கைப்பற்றிக் கொண்டது; அது முதல் பெற்ற தாய், பித்துப் பிடித்தவளாய் நுரை நுரையாய் கக்குகிறாள். ஓயாமல் அழுது விம்முகிறாள்; தன்னந்தனியே புயலில் சிக்குண்டு வருந்திய லியர் மன்னன் போல் துயருறுகிறாள்.
(1885-ஆம் ஆண்டு அக்டோபரில் எழுதிய கடிதம்)
புருவத்தில் தீட்டப்பட்ட மை!
“மாலையில்; மாடியின் மேல்; தனியாக நிலா முற்றத்தில்; உலாவுவது! நேற்றுப் பிற்பகலில் வீட்டிற்கு வந்தவர்களை அழைத்துச் சென்று, இந்த இடத்தின் இயற்கைக் காட்சிகளைக் காண்பிக்க வேண்டியது என் கடமை என்று உணர்ந்தேன்!
ஆனால், அகோர் என்பவனை வழிகாட்டியாக அழைத்துக் கொண்டு அவர்களோடு வெளியே புறப்பட்டுச் சென்றேன்.
வானத்தின் அடிவாரத்தில், தொலைவில் கண்ட மரங்களின் உச்சி நீல நிறமாகத் தோன்றிய திசையில், கரு நீலமான மேகத்தின் மெல்லிய ஒழுங்கு அந்த மரங்களின்மேல் அழகாக விளங்கியது. நான், கற்பனை உணர்வோடு விளக்க முயன்றேன். அழகிய நீலநிறக் கண்ணின் மேல் புருவத்தில் தீட்டப்பட்ட மை போல் விளங்குவதாகக் கூறினேன்.
என் நண்பர்களில் ஒருவருக்கு அது கேட்கவில்லை.இன்னொருவர்க்கு அது விளங்கவில்லை. மற்றொருவர், “ஆமாம்! மிக மிக அழகானது” என்று சொல்லி முடித்து விட்டார். அதற்கு மேல் கவிதை உணர்வோடு எண்ணவும் பேசவும் எனக்கு ஊக்கம் பிறக்கவில்லை.
(1892ஆம் ஆண்டு, மே 12இல் பூரிலிருந்து எழுதிய கடிதம்)
10. தாகூர் பார்வையில்
காந்தியடிகள்
இந்திய நாடு வெள்ளையர் ஆட்சியிலே இருந்து முழு சுதந்திரம் பெற வேண்டும் என்று அண்ணல் காந்தியடிகள் அல்லும் பகலும் அயராது பாடுபட்டார்! இது உலகறிந்த உண்மை. அதற்காக மகாத்மா ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். வழக்கறிஞர்கள் முதல் மாணவர்கள் வரையில் எல்லோரையும் நாட்டு விடுதலைப் போரில் கலந்து கொள்ளுமாறு அவர் அறை கூவல் விடுத்தார்
கவிஞர் தாகூர் காந்தியடிகளது செயலைக் கண்டு மனம் வருந்தினார். மாணவர்கள் ஒத்துழையாமைப் போராட்டத்தில் கலந்து கொள்வதைத் தாகூர் விரும்பவில்லை. கல்லூரிகளை விட்டு அவர்கள் வெளியேறிப் போராட்டத்தில் கலந்து கொண்டால், அவர்களது கல்வி பாழாகிவிடும் என்பதால் அந்தத் திட்டத்தை ரவீந்திரர் வெறுத்தார்.
மாணவர் உலகம் தாகூர் கருத்தை வெறுத்தது; பழித்தது. அவரது எண்ணத்தின் உண்மையை உணர மறுத்தது. காந்தியடிகளின் போர் முறையைத் தாகூர் வெறுத்தாரே ஒழிய, காந்தியடிகளை அவர் தனிப்பட்ட முறையில் வெறுத்தவரல்லர் எதிர்த்தவரல்லார்! மாறாக, அண்ணலின் தன்னலமற்ற தியாக வாழ்வைப் போற்றிப் பாராட்டியவர் கவிஞர் பெருமகன்.
மகாத்மா காந்தியடிகள், இராட்டைச் சக்கரத்தில் நூல் நூற்றுக் கதர் துணிகளை அணிய வேண்டும் என்றார். அதை ஓர் இயக்கமாகவே அவர் நடத்தி வந்தார்.
கவிஞர் தாகூர் காந்தியடிகளின் இராட்டைப் பொருளாதாரத்தை, லட்சியத்தை வெறுத்தார்; குறைகளைக் கூறினார். தனது கருத்தை ஆதரித்து தாகூர் கட்டுரைகளை எழுதினார். கையால் நூல் நூற்று ஒரு நாட்டுக்கு சுதந்திரம் வாங்க முடியுமா? என்று வங்க அறிஞர் சரத் சந்திர போஸைப் போலக் கேட்டார். எச்சில் துப்பினால் ஏரி நிரம்பிவிடுமா? என்றெல்லாம் தனது கட்டுரைகள் மூலமாகக் காந்தியடிகளைக் கேட்டார். அவரது கொள்கைகளைத்தான் தாகூர் விமரிசனம் செய்தாரே தவிர, காந்தியடிகளைத் தனிப்பட்ட முறையில் தாகூர் வெறுக்கவில்லை.
காந்தி பெருமானுடைய தூய வாழ்க்கையையும், அற நெறியையும் தாகூர் பெருமகன் மதிப்புக் கொடுத்துப் பாராட்டிப் போற்றி வந்தார் என்பதற்கு காந்தி அடிகள் சாந்திநிகேதன் வந்த போது ‘மகாத்மா’ என்ற பட்டம் சூட்டி உலகறியப் புகழ்ந்தவரே கவிஞர் தாகூர்தான் என்றால், அவர் அண்ணல் மீது எத்தகைய அளப்பரிய அன்பை வைத்திருந்தார் என்பதை எண்ணிப் பார்த்து தான் அதன் உண்மையை உணர முடியும்.
காந்தியடிகள் தாகூர் நடத்தி வந்த சாந்திநிகேதன் கலைக் கோட்டத்திற்கு வருகை தந்த போது, தாகூர் பெருமகன் தானே கதராடைகளை அணிந்து கொண்டு மகாத்மாவை எதிர் நோக்கி வரவேற்றார். கொள்கையில் மிக உறுதி கொண்ட கவிஞர் தாகூர். மற்றவர்களிடம் பழகும் போது குழந்தையிலும் குழந்தையாய் விளங்கி வந்தார்.
மனித குலமேதைகளாகச் சிறந்த இவர்கள், அவரவர் கொள்கைகளில் மிகமிக உறுதியாக நின்று உயிரையும் பொருட்படுத்தாமல் வாழ்ந்த சான்றாண்மையே அவர்கள் இருவரையும் வானளாவ உயர்த்தியது. பகைவர்க்கும் அருள்வாய் நெஞ்சே என்ற பண்பும், தூய நெஞ்சும், தூய வாழ்க்கையும் ஒருவரை ஒருவர் வெறுப்பது, விரோதிப்பது, அவமதிப்பது, என்பனவற்றைக் கணவிலும் எண்ணாமல் வாழவல்லவர்கள் என்பதை மெய்பித்துக் காட்டிய மனித நேயர்களாக அவர்கள் வாழ்ந்தவர்கள்.
காந்தியடிகளும், கவிஞர் தாகூரும் இருவேறு வகையில் தொண்டாற்றி அவரவர் லட்சியங்களுக்கு சந்திர சூரியர்களாக, ஒருவர்க்கு ஒருவர் துணையாக, விளங்கி மறைந்தவர்களாவர்.
தாகூர் நடத்தி வந்த சாந்திநிகேதன் பொருளாதாரச் சிக்கலால் தடைப்பட்டு விடக் கூடாது என்ற நோக்க முடையவராக காந்தியடிகளும், அதனைப் போலவே, காந்தியடிகளது அரசியல் கிளர்ச்சிகள் ஆங்கிலேயர்களது அடக்கு முறைகளால் பலவீனப்பட்டுவிடக் கூடாது என்று தாகூரும் அரும்பாடுபட்டார்.
தாகூரின் எழுபதாம் ஆண்டு விழா, 1931-ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் மிகச் சிறப்பாக நடைபெற எல்லா ஏற்பாடுகளும் நடந்தேறியது. உலக அறிஞர்கள் எழுதிய கட்டுரைகளை எல்லாம் திரட்டி தாகூர் பிறந்த நாள் நினைவு மலா் வெளியானது. கல்கத்தா நகர விழா மண்டபத்தில் கண்கொள்ளாக் காட்சியாகக் கூடிய மக்கள் கூட்டத்தில் தாகூரிடம் அந்த மலர் வழங்கப்பட்டது.
ஆனால், லண்டன் வட்ட மேசை மாநாட்டிலே இருந்து காந்தியடிகள் இந்தியா திரும்பிவந்தபோது, 1931 ஜனவரி 6-ஆம் நாள் அவர் கைது செய்யப்பட்டார் பிரிட்டிஷ் ஆட்சியினரால், என்ற செய்தி காதுக்கு எட்டியவுடனே மகிழ்ச்சியின் கோலாகல ஆரவாரங்களிலே மூழ்கிக் கிடந்த தாகூர் பெருமகன் இந்தியா முழுவதிலும், எங்கும் எனது பிறந்த நாள் விழாவை நடத்தக் கூடாது என்று அறிக்கை விடுத்து, தனது பிறந்த நாள் விழாவைத் துயர நாளாக மாற்றி விட்டார்.
அத்தோடு நின்ற வரல்லர் தாகூர்! காந்தியடிகள் எரவாடா சிறையிலே உண்ணா நோன்பு கொண்டு பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தபோது, தாகூர் பெருமகன் பூனா நகரிலே உள்ள அந்தச் சிறைக்குச் சென்று, உண்ணா நோன்பு முடியும் வரையில் காந்தியடிகளுடனே இருந்தார் என்றால், இந்த நட்பு நேயம் எப்படிப்பட்டதாக இருக்க முடியும்? எண்ணிப் பாருங்கள்!
காந்தியடிகளும், கவிஞர் தாகூரும் இவ்வாறு இரு பெரும் பண்பாளர்களாக, அன்பாளர்களாக, நடந்து இந்திய நாட்டின் கலங்கரை விளக்கங்களாக இந்திய நாட்டிறகு மட்டுமன்று, மனித நேய உலகுக்கே வழிகாட்டிய மாண்டாளர்களாக இருந்தார்கள்.
கவிஞர் தாகூர் எல்லாரிடமும் அன்பு காட்டிய மாமேதை அவர் உளப்பூர்வமாக வெறுத்தது ஏதாவது ஒன்று உண்டு என்றால், அது மனித உயிர்களைக் கொன்று குவிக்கும் போர் ஒன்றே ஆகும்.
போர் நடந்து முடிந்தவுடன் பிரெஞ்சு நாடு சென்றார். போரால் பாழடைந்து போன பல ஊர்களைக் கண்டு மனம் வருந்தினார். ஆயிரக் கணக்காக மாண்டொழிந்த மக்களின் மயானக் கல்லறைகளைக் கண்டு மனம் கலங்கினார்! அங்கிருந்து ஜெர்மன் நாடு சென்றார்! நெஞ்சம் நெருப்பிலே மூழ்கியது போலானார்! அவ்வளவு போர்க் கொடுமைகளைத் தான் அங்கே அவர் கண்டார்!
சீன நாட்டிற்கு 1944-ஆம் ஆண்டு சென்றார். அந்த நாட்டு அறிஞர்கள் அவரை அமோகமாக வரவேற்று மகிழ்ச்சியுற்றார்கள். அதேபோல சீன அறிஞர்களும் தாகூர் சாந்திநிகேதன் வந்து, அங்குள்ள விசுவபாரதி, ஸ்ரீ நிகேதன் போன்ற கலைக் கோட்டங்களைக் கண்டு வியந்து போனார்கள்!
கவிஞர் தாகூர் இத்தாலி, ரஷ்யா, போன்ற நாடுகளுக்கும் சென்றார்! அந்தந்த நாட்டின் கல்வி முறை, விவசாய முறை ஆகியவற்றைக் கண்டார். ஒவ்வொரு நாட்டிலும் பள்ளி மாணவர்களைப் பார்ப்பதே அவர் செல்லும் நாடுகளில் முதல் பணியாக திட்டமிட்டார்! அதற்கேற்ப மாணவர்களைக் கண்டு மகிழ்ந்தார்!
மாணவர்களும் அவரவர் புத்தகங்களிலே கவிஞர் தாகூரின் புகைப்படங்களை ஒட்டி வைத்துக் கொண்டு அப்படத்தின் அடியில் தாகூர் கையெழுத்துக்களைப் பெற்றுக்கொண்டார்கள். அது போலவே, அந்தந்த பள்ளி மாணவர்கள் தாகூரைப் பற்றி எழுதி வைத்திருந்த கட்டுரைகளையும் பெற்றுக்கொண்டு வந்து தனது வாழ்நாள் இறுதிவரை அவற்றைச் சாந்திநிகேதன் நூல் நிலையத்திலே பாதுகாத்து வந்தார்.
தாகூரின் அரிய பண்புகளில் மிக முக்கியமானது அனைவரிடமும் அன்பு செலுத்துவதுதான். அன்புக்கு உண்டோ அடைக்குந் தாழ்? அன்பு என்றால், உறவினர்களிடம், நண்பர்களிடம் காட்டிடும் அன்பன்று! எங்கு இயல்பாக அன்பு செய்வதில்லையோ அங்கு அன்பு செலுத்துவதே அன்புக்குரிய இலக்கணமாகும். தாகூரது அன்பின் மிகுதி அவர் யாரையும் விரோதித்தவரல்லர், வெறுத்தவரல்லர், பகைத்தவரல்லர். அதனால், விருப்பு வெறுப்பு என்பது அவரிடம் அண்டவே இல்லை எனலாம். அதனால்தான் தனிப்பட்டவர்கள் மேல் அவருக்கு வெறுப்புணர்ச்சி உருவானதில்லை. ஆனால், ஆங்கிலேயர்களது ஆட்சியை மட்டும் அடியோடு வெறுத்தார்! வெள்ளையர்களை அல்ல!
தாகூர் மறைந்தார்
கவிஞர் தாகூர், தனது தாயார், தந்தையார், தன்னுடன் பிறந்து வளர்ந்த அண்ணன்மார், தமக்கையர், நண்பர்கள் தன்னிடம் பணிபுரிந்த அன்பு பணியாளர்கள் ஒவ்வொருவராக மரணமடைந்து வருவதைத் தனது வயோதிகக் காலத்தில் கேட்டுக் கேட்டு நெஞ்சமே கலங்கிப் போய் விட்டார். கடைசியாக ஒரே ஒருவர் தான் மரணத்தை மீறி கவிஞர் தாகூருடன் இருந்தார். அவரோடு பிறந்த ஒரே ஒரு தமக்கைதான் அப் பெருமாட்டி!
கவிஞர் தாகூரின் அருமை மனைவியும், மூன்று மக்களும் முன்பே மறைந்து போனார்கள். அவருடன் உயிரோடு ஒரு மகனும் ஒரே மகளும், ஒரே ஒரு பேரனும், பேத்தி ஒருத்தி மட்டுமே இருந்தார்கள் அந்த ஒரு பேரனும் ஜெர்மனியில் கல்வி கற்கச் சென்றான். அங்கே 1932லே இறந்துபோனான்!
கவிஞர் தாகூரின் உயிருக்கு உயிரான நண்பர் சி.எஃப். ஆண்ட்ரூஸ் 1940-ஆம் ஆண்டில் இறந்தார்! மற்றோர் அருமை நண்பரான பியர்சன், ஒரு ரயில் விபத்தில் மாண்டார். எல்லாரையும் ஒன்றன்பின் ஒன்றாக இழந்து இழந்து அவர் கலங்கினார்.
ஆனாலும், இந்திய நாடு விடுதலை பெற வேண்டும்; அதற்காக காந்தி பெருமான் நீண்ட ஆயுளைப் பெறவேண்டும் என்று இறை வழிபாடு செய்துவந்தார்! சாந்திநிகேதனில் காலை, மாலை இசை வழிபாடுகள் நடைபெறும் போது, இந்த வழிபாட்டையும் சேர்த்தே செய்து வந்தார். எல்லாநாடுகளிலும் இருக்கும் எல்லா நண்பர்களும் நீண்ட நாள் வாழ விரும்பி வழிபாடுகளைச் செய்வார்.
கவிஞர் உடல் முதுமைத் துன்பத்தால் நலிந்தது; அடிக்கடி நோய் அவரை அலைக்கழித்தது; பல நாள் படுத்த படுக்கையோடு நலிந்தார்! ஒவ்வொரு நாளும் சாந்திநிகேதன் விசுவபாரதி, ஸ்ரீநிகேதன் பணியாளர்கள் அவருடனே இருந்து தக்க உதவிகளைச் செய்து வந்தார்கள்.
மாபெரும் கவி உள்ளம் மறைந்தது
கவிஞர் தாகூர் பெருமகனுடைய எண்பதாம் ஆண்டு பிறந்த நாள்விழா 1941-ஆம் ஆண்டு நடைபெற்றது. அந்த விழாக் கூட்டத்திற்கு தாகூர் சென்றார். அந்தக் கூட்டத்தில் அவரால் பேச முடியவில்லை.
உடலில் நலிவு நகா்ந்து கொண்டே சென்றது. நண்பா்கள், பணியாளர்கள், மாணவா்கள் எல்லாரும் அருகமா்ந்து கண்ணைக் காக்கும் இமைகள் போல அவரிடம் செயல்பட்டார்கள் சாந்தி நிகெதன் கலைக் கழகத்தை விட்டு,சத்திர சிகிச்சைக்காகக் கவிஞர் கல்கத்தா நகா் சென்றார்.
“மனிதன் தெய்வமானான்”
காந்தியடிகள் கண்ணீர்
சிகிச்சையும் முடிந்தது, கவிஞர் பெருமான் தாகூரின் ஆவியும் பிரிந்தது! 1941-ஆகஸ்டு 7-ஆம் நாள் ரவீந்திர நாத் வங்க மண்ணைவிட்டு மறைந்தார். இந்த ஆறாத் துக்கத்தைக் கேட்ட காந்தியடிகள் மனம் மயங்கிப் பதறி, சொல்லொணாக் கவலையடைந்தார். ‘மனிதன் தெய்வமானான்’ என்று அறிக்கை விடுத்து ஆறுதல் பெற்றார்.
“நான் மக்களிலே ஒருவன்! அவர்களை விட உயர்ந்தவன் அல்லன்! நான் வணங்கும் மக்கள் அவர்களிலே அநேகர் உண்டு! என்ற உண்மையை உலகுக்கு உணர்த்திய அறிவுத் திருமகள், இந்தியாவின் அன்புச் செல்வன்” என்றார். காந்தியடிகள் கவிஞர் தாகூர் பெருமகனுடைய மறைவால், அவர் உருவாக்கிய அறிவாலயங்களான சாந்திநிகேதன், விசுவபாரதி, ஸ்ரீ நிகேதன் பணியாளர்கள் கண்ணிர் பெருக்கினர்.
11. நோபல் பரிசு பெற்ற
‘கீதாஞ்சலி’ கூறும் வாழ்வியல்
‘கீதாஞ்சலி’யில் கவிஞர் வாழ்வு
எங்கே மனம் அச்சமற்றிருக்கிறதோ,
தலை நிமிர்ந்திருக்கிறதோ
எங்கே அறிவு உரிமையுடனிருக்கிறதோ
எங்கே உலகம் குறுகிய குடும்ப எல்லைகளால்
துண்டு துண்டாகப் பிளவு படாதிருக்கிறதோ
எங்கே உண்மையின் ஆழ்ந்த அடிப்படையிலிருந்து
சொற்கள் பிறக்கின்றனவோ
எங்கே சலியாத உழைப்பு
விழுமிய நிலையை நோக்கி நீளுகிறதோ
எங்கே பகுத்தறிவு என்னும் தெளிந்த ஓடை
மூடப் பழக்க வழக்கம் என்னும்
வறண்ட பாலையில் போகாதிருக்கிறதோ
எங்கே என்றும் விரிந்து நோக்கும்
எண்ணத்திலும் செயலிலும்
மனத்தை நீ முன்னின்று அழைத்துச் செல்கிறாயோ
அங்கே, அந்த உரிமையுள்ள இன்ப உலகத்தில்,
என் தந்தையே, என் நாடு விழிப்புறுக.
(கீதாங்சலி-35ம் பாடல்)
மரணத்திற்கு விருந்து
மரணம் உன் வாழ்வின் கதவைத் தட்டும் அந்த நாளில் நீ அதற்கு என்ன நல்குவாய்?
ஆ! என் விருந்தாளியாக வந்த மரணத்திற்கு முன் என் வாழ்வு என்னும் நிறை குடத்தையே வைத்திடுவேன்; வந்த விருந்தாளி வெறுங்கையுடன் திரும்பிப் போக விட மாட்டேன்.
மரணம் என் வாழ்வின் கதவைத் தட்டும் இறுதி நாளில் மரணத்தின் முன்னிலையில் மழைக்காலப் பகல்களுக்கும், வேனில்கால இரவுகளுக்கும் உரிய இனிய தேனையெல்லாம் வைத்திடுவேன்; என் வாழ்வில் முயன்று தேடிய பயனை எல்லாம் வைத்திடுவேன்.
(கீதாஞ்சலி பாடல்-90)
ஓ! மரணமே! என் மரணமே! வாழ்வின் இறுதிப் பேறே! வருக வந்து என் செவியருகே மெல்லச் சொல்லுக
உன்னை எதிர்பார்த்து ஒவ்வொரு நாளும் நான் காத்து வந்தேன்; ஏன் எனில், உன் பொருட்டாகவே நான் வாழ்வின் இன்ப துன்பங்களைப் பொறுத்து வந்தேன்.
யானாக இருப்பவை, என்னிடம் இருப்பவை, என் நம்பிக்கை, என் அன்பு எல்லாம் யாரும் அறியாமல் உன்னை நோக்கி என்றும் சென்று கொண்டிருக்கின்றன; உன் கண்களின் இறுதிப் பார்வை ஒன்று போதும்; என் வாழ்வு என்றும் உன்னுடையதாகி விடும்.
(கீதாஞ்சலி பாடல் 91)
நான் விடை பெற்றுக் கொண்டேன். என் சகோதரர்களே விடைகொடுங்கள். எல்லோர்க்கும் வணக்கம் செலுத்தி விடைபெற்றுப் புறப்படுகிறேன்.
இதோ என் இல்லத்தின் சாவிகளை எல்லாம் திரும்பக் கொடுத்து விடுகிறேன். என் வீடு பற்றிய உரிமைகளை எல்லாம் விட்டு விடுகின்றேன்; உங்களிடமிருந்து இறுதியான அன்பு மொழிகளே வேண்டுமென்று கேட்கின்றேன்.
நாம் நெடுங்காலம் அடுத்து வாழ்வோராக இருந்தோம். ஆனால், நான் கொடுக்கக்கூடியதை விட மிகுதியாகப் பெற்றுக் கொண்டேன். இப்போதோ பொழுது விடிந்து விட்டது. என் இருண்ட வீட்டை ஒளி பெறச் செய்திருந்த விளக்கோ அணைந்துவிட்டது. புறப்பட ஆணை பிறந்து விட்டது. யானும் பயணத்திற்கு ஆயத்தமாக இருக்கின்றேன்.
(கீதாஞ்சலி பாடல் 93)
இந்த வாழ்வின் வாயிலுக்குள் நான் சேர்ந்தது எப்போது என்பது எனக்குத் தெரியவில்லை.
நள்ளிரவில் காட்டில் மலரும் அரும்புபோல் இந்த வியப்பான சூழலில் நான் தோன்றுமாறு செய்த சக்தி எதுவோ?
காலையில் ஒளியைக் கண்டபோது, நான் இந்த உலகத்திற்கு அயலான் அல்லன் என்பதை நொடிப் பொழுதில் உணர்ந்தேன். பெயரும் வடிவும் அற்ற அந்தப் பரம் பொருள் என் தாய் வடிவாக இருந்து, என்னைத் தன் கையில் அனைத்துக் கொண்டது.
அதுபோலவே, மரணத்திலும், நான் என்றும் அறிந்த ஒன்றாகவே, உணர முடியாத அந்தப் பரம் பொருள் என் முன் தோன்றும். இந்த வாழ்க்கை யான் விரும்புகிறேன். ஆகையால், மரணத்தையும் அவ்வாறே விரும்புவதாக உணர்கின்றேன்.
தாய் தன் குழந்தையை வலது மார்பிலிருந்து எடுத்திடும் போது அது அழுகின்றது. ஆனால் அடுத்த நொடியிலேயே இடது மார்பில் அமைந்து ஆறுதல் பெறுகின்றது.
(கீதாஞ்சலிபாடல் 95)
கருத்துகள்
கருத்துரையிடுக