விஜய ரங்கம்
நாடகங்கள்
Back விஜய ரங்கம்
-அல்லது-
"தோன்றிற் புகழொடு தோன்றுக"
நாடக பாத்திரங்கள்.
விஜயரங்கப் பிள்ளை | ஓர் நூலாசிரியன் |
ரங்கநாதப் பிள்ளை, நண்பனும் | விஜயரங்கப் பிள்ளையின் பந்துவும் |
தாமோதரம் பிள்ளை. | விஜயரங்கப் பிள்ளையின் மாமனார். |
சுப்பராய ஐயர். | ஓர் வக்கீல் |
திருமெஞ்ஞான முதலியார் | ஓர் பணக்காரச் சீமான்; |
கரி கிருஷ்ண நாயக்கர் | ஓர் வயோதிகன் |
பரஞ்சோதி | விஜயரங்கம் பிள்ளையின் வேலையாள் |
கிருஷ்ண ராவ் | ஓர் வயித்தியர் |
கோவிந்தராஜ முதலிநார் | ஓர் உதவி வயித்தியர் |
அ.ர.மு. முத்தையன் செட்டி | ஓர் நாட்டுக்கோட்டைச் செட்டி |
கிருஷ்ணசாமி முதலியார், முத்துகிருஷ்ண நாயுடு } | நாடகமாடுபவர்கள் |
சாமிநாதன் | விஜயரங்கப் பிள்ளையின் மகன் |
மங்கையர்க்கரசி | விஜயரங்கப் பிள்ளையின் மனைவி |
ராஜேஸ்வரி | ரங்கநாதப் பிள்ளையின் மனைவி |
அன்னபூரணி | ஓர் கைம்பெண் |
மனோன்மணி | திருமெஞ்ஞான முதலியார் குமாரத்தி |
லோகநாயகி | நாடகமாடுபவள் |
ஓர் பிச்சைக்காரன், ஜனங்கள், ஓர் வேலைக்காரன், எட்டினபுரம் ஜமீன்தார், வேஷதாரிகள், ஓர் கான்ஸ்டெபில், ஓர் குதிரைக்காரன் முதலியோர். |
--------------------------------
அல்லது
தோன்றிற் புகழொடு தோன்றுக.
கதை நிகழ் இடம்:- திருநெல்வேலியிலும், சென்னையிலும்.
கதை நிகழ் காலம்:- 1926
முதல் அங்கம் - முதல் காட்சி
இடம்- திருநெல்வேலியில் தாம்ரபர்ணியின் கரையோரமாயுள்ள
ஓர் மெத்தை வீட்டின் மேல்மாடியில் ஓர் அறை.
கிழக்குப்புறத்தில் திறந்திருக்கும் பலகணி வழியாக ஓடுகிற நதி தெரிகிறது.
அறையின் மேற்குப்புறத்து வாயில் வழியாக மாடிக்கு வருகிற படிக்கட்டு
தெரிகிறது. அறையிலுள்ள சாமான் களெல்லாம் மிகவும் ஒழுங்காய்
வைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு மூலையில் வீணை முதலிய வாத்தியக்
கருவிகள் இருக்கின்றன. இன்னொரு மூலையில் சித்திரப் படம் எழுதும்
கருவிகளும், இப்பொழுது தான் எழுதி முடிந்த பட மொன்றும் வைக்கப்பட்டிருக்கின்றன. அறையின் வடக்கு தெற்கு சுவர்களின் ஓரமாக ஆங்கிலேய தமிழ்ப் புஸ்தகங்கள் வரிசை வரிசையாக அடுக்கப்பட்டிருக்கின்றன. பச்சைப்பட்டு
ஜாலர் கட்டப்பட்ட தீபமொன்று அறையின் மத்தியிலுள்ள மேஜையின்மீது எரிந்துகொண்டிருக்கிறது. அதன் இருபக்கங்களிலும் பிழை திருத்தவேண்டிய
அந்தக் காகிதங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.
படிக்கட்டின் வழியாக கைகளைத் துடைத்துக்கொண்டு விஜயரங்கப்
பிள்ளையும் ரங்கநாதப் பிள்ளையும் அறைக்குள் வருகிறார்கள்.
[சிரித்துக்கொண்டே] ஆம், ஆம்! இன்றைத்தினம் மழை
எப்படி திடீரென்று வந்ததோ, அப்படித்தான் திடீரென்று நீயும் வந்தாய்.
[இருவரும் பிரம்பு நாற்காலிகளை இழுத்துக்கொண்டு பலகணி
ஓரமாக உட்காருகிறார்கள்]
ர. என்ன மழை! என்ன காற்று! என்ன இடி மின்னல்!
அதுவும் பகற்பொழுதில்!
வி. காலையில் சூர்யோதய காலத்தில் என்ன களங்கரஹிதமாயிருந்தது
தெரியுமா ஆகாயம்? திடீரென்று இன்றைக்குள் இப்பெரும் புயல்
அடிக்குமென்று எவனாலும் கூறியிருக்க முடியாது.
ர. அப்படித்தான் வருகின்ற நமக்கு நேரிடும் தீமைகளும்
-திடீரென்று-முன்குறிப்பு ஒன்றுமின்றி
வி. ரங்கநாதம், நீ யாரையோபற்றி பேசுகிறாய்-யாருக்கு
அப்படி நேரிட்டது இப்பொழுது?
ர. [ஒருவாறு நகைத்து] யாருக்காவது அப்படி நேரிட்டால்தான் சொல்ல
வேண்டுமோ? பொதுவில் ஊகிததறியலாகாதா? நீயே உன் புதிய கதைப்
புஸ்தகங்களில் இதைப்பற்றி எத்தனைமுறை எழுதியிருக்கிறாய்?
வி. அது சரிதான்-நீ கூறியபோது எதையோ குறிப்பிட்டதுபோல் தோற்றியது-
அதிருக்கட்டும்-என்கடைசி புஸ்தகம் உனக்குச் சேர்ந்ததா?
ர. "தோன்றிற் புகழொடு தோன்றுக" என்பதுதானே?
வி. ஆம்-அதை முற்றிலும் படித்தாயா? அல்லது புஸ்தகம் அனுப்பியபடியே
இருக்கிறதோ? -முதலில் புஸ்தகம் இருக்கிறதா, எங்கேயாவது
போக்கடித்து விட்டாயா?
ர. இல்லை இல்லை! இருக்கிறது-அதை நான்கு ஐந்து முறை படித்தேன்,
திரும்பித் திரும்பி.
வி. ஆஹா! என்ன ஆச்சரியம்!-அது தான் காற்றுமழை அடித்தது இன்று.
ஒரு தட்டில் திருத்தப்பட்ட பழம் முதலியன எடுத்துக்கொண்டு
படி வழியாக மங்கையர்க்கரசி வருகிறாள்.
ம. நான் வரலாமோ ?
வி. வா சீக்கிரம்.
ர. யார் அது?-- நீயா! என்ன அம்மா, நீ வருகிறதற்குக்
கூடவா கேட்டுக்கொண்டு வரவேண்டும்?
ம. அப்படித்தான் உத்தரவு செய்திருக்கிறார்கள்.
ர. இதென்ன விஜயரங்கம்? உனக்கென்ன பயத்தியமா?
வி. உனக்கென்ன சொல்லாமல், அந்த கஷ்டம் எனக்கல்லவோ தெரியும்.
இல்லாவிட்டால் நான் ஏதாவது மிகுந்த கடினமான விஷயத்தைப்பற்றி
ஒரே சிந்தையாய் யோசித்துக்கொண் டிருக்கும்பொழுது, பாலில் மிளகு
தூள் போடவா அல்லது கல்கண்டு போடவா என்று கேட்கவருவாள்.
அவ்வளவுதான் அவள் புத்தி--
ம. [ஒன்றும் பேசாமல் அவர்களிருவருக்கும் மத்தியில் ஒரு சிறு
மேஜையைப்போட்டு அதன் மீது தான் கொண்டுவந்த தட்டை
வைக்கிறாள்].
ர. இதெல்லாம் என்ன ? நிஜமாகவே எனக்கு விருந்து
பண்ணுகிறீர்களா என்ன ?
வி. ஆம், உனக்குக் கலியாணமானபின் இதுதானே முதல்முறை
நீ இங்கே வருவது ?
ம. ஆம் நல்ல கலியாணம்தான்! என்னதானிருந்தபோதிலும் உற்றார் உறவினர்
என்று வேண்டாமா? சொந்த உடன்பிறப்பா யில்லாவிட்டாலும்,
இரண்டாங்காலாகத்தான் இருந்தால் என்ன? கலியாணம் என்று ஒரு
கடிதமாவது போடவேண்டாமா? தகப்பனாரில்லாததற்கு
சிற்றப்பாராயிருக்கிறாரே என்று அண்ணாவுக்காவது தெரிவிக்கலாகாதா?
வி. [பழத்தைத் தின்றுக் கொண்டே] சரிதான்- அவருக்குத் தெரி
வித்திருந்தால், வேண்டாம் என்று ஒரே ஆட்சேபனை
செய்திருப்பார்-- அவ்வளவு தான் பலன்.
ர. இல்லை அம்மா, நீ கோபித்துக் கொள்ளாதே-- அங்கே போயிருந்த
இடத்தில், திடீரென்று மறுதினம் முகூர்த்தம் என்று நிச்சயிக்கப்பட்டது.
அன்றியும் இங்கிருந்து அவ்வளவு தூரம் யாழ்ப்பாணத்திற்கு
வரப்போகிறீர்களா என்று முன்பாகத் தெரிவிக்கவில்லை.
ம. இல்லை-- எனக்கேதோ சந்தேகமாயிருக்கிறது-- அவர்கள் சொல்லியபடி
[ தன் கணவனைப் பார்த்து] ஏதோ காரணமிருக்கவேண்டும்.
ர. இல்லை அம்மா, அப்படி யொன்றுமில்லை.
ம. ஏன் அண்ணியை அழைத்துக்கொண்டு வரவில்லை?
ர. திடீரென்று நான் புறப்பட்டு வரவேண்டியதாயிற்று.
ம. என்ன அப்படி அவசரமான வேலை?
வி. [ரங்நாதத்தின் முகத்தை உற்றுப் பார்க்கிறான்].
ர. ஒரு காரணமாய் வரவேண்டி நேர்ந்தது--
[வாயில் பழத்தைப் போட்டுக்கொண்டு]
இன்னொருமுறை--வந்தால்--வரும்பொழுது அழைத்து வருகிறேன்.
ம. சந்தோஷம்--அதிருக்கட்டும்--அண்ணி எப்படி யிருக்கிறார்கள்—
சிகப்பா யிருக்கிறார்களா--மாநிறமா யிருக்கிறார்களா?
வி. சரி, ஆரம்பித்தாயா?, அப்புறம் என்ன நகை போட்டுக்
கொள்ளுகிறார்கள், என்ன புடைவை கட்டிக்கொள்ளுகிறார்கள்,
எல்லாம் கேட்க ஆரம்பிப்பாய் நீ! புத்திசாலிதான்--
ம. [தன் கணவனை உற்றுப் பார்க்கிறாள்].
வி. நீ கீழே போ.
ம. [போகும் பொழுது] இன்னொருமுறை வரும்பொழுது எப்படியும்
அண்ணியை அழைத்துக் கொண்டுதான் வர வேண்டும்.
[கீழே இறங்கிப் போகிறாள்]
வி. படிப்பில்லாததின் கெடுதி இது தான்-ரங்கநாதம், என்ன
யோசித்துக்கொண்டிருக்கிறாய்?-
ர. அடடடா! என்ன மடையனாயிருக்கிறேன்! இது வரையில்
தோற்றாமல் போயிற்றே.-
வி. என்ன அது ரங்கநாதம்?
ர. இங்கேவா இப்படி-சொல்லுகிறேன்-
[அறையின் மூலையில் வைக்கப் பட்டிருக்கும் புதிதாய் எழுதிமுடிந்த
சித்திரப்படத்தின் எதிராக அழைத்துக்கொண்டு போய்] இந்தப்படம்
ஒருவருடைய முகத்தையும் பார்த்து எழுதியதல்ல வென்கிறாயா?
வி. இல்லையென்று உனக்கு எத்தனைமுறை சொல்லி யிருக்கிறேன்,
இதுவரையில், நீ வந்தது முதல்?
ர. உண்மையில்?
வி. இன்னொருமுறை என்னை இப்படிக் கேட்பாயாயின் எனக்குக்
கோபம்வரும்-எத்தனைமுறை சொல்வது?- இதில் நான் ஒளிப்பானேன்
உன்னிடம்? –எனக்கென்ன பயமா?
ர. பயமில்லாதிருக்கலாம்-வெட்கமாயிருக்கலாம்!
வி. வெட்கமாவது? உனக்கென்ன பயித்தியம் பிடித்திருக்கிறதா என்ன?
ர. அப்படியானால் உன்னையு மறியாதபடி நீ இதைச் செய்திருக்கவேண்டும்-
இந்தப் படம் மங்கையர்க்கரசியின் ஜாடையாயிருக்கிறதா இல்லையா?
இப்படி வந்துபார்.
வி. என்ன? மங்கையர்க்கரசியின் ஜாடையா? உனக்கென்ன பயித்தியம்
முத்திவிட்டதா? அல்லது இன்றைத்தினம் இருண்டு மழை பெய்தபொழுது
மின்னிய மின்னலினால் கண் பொட்டையாய் விட்டதா? இந்தப் படத்தின்
அழகெங்கே, மங்கையர்க்கரசியெங்கே?
ர. பிடிவாதம் பிடிக்காதே-இப்படி அருகில்வா- அந்த கண் மூக்கு வாய்
எல்லாம் அப்படியே இருக்கிறதா இல்லையா பார்-அவசரப்படாதே-
அவள் அணிந்திருக்கும்படியான தெற்குத்திய ஆடை ஆபரணங்களை
யெல்லாம் கழற்றிவிட்டு, இதேமாதிரியான ஆபரணங்களையும்
ஆடையையும் அணிவித்துப் பக்கத்தில் நிறுத்திப்பார், அப்படியே அச்சில்
வார்த்ததுபோலில்லாவிட்டால் என் பெயர் ரங்கநாதம் அல்ல!
வி. [கொஞ்சநேரம் படத்தை உற்றுப் பார்த்து] ஆம்-அந்த ஜாடை யிருக்கிறது-
வாஸ்தவம்தான்-இதுவரையில் நான்-இதைக் கவனிக்கவில்லை.
ர. அம்மாதிரியாக நீ கவனிக்காத விஷயங்கள் அநேகம் இருக்குமென்று நினை.
வி. நிரம்ப கெட்டிக்காரன்தான்-வா இப்படி உட்கார்-
[இருவரும் முன்பிருந்த இடம் போய் உட்காருகிறார்கள்]
என்ன பேசிக்கொண்டிருந்தோம் கொஞ்சம் முன்பாக?- ஆம்-நான்
கடைசியாக அச்சிட்டப்புஸ்தகத்தைப்பற்றி.
ர. ஆம்.
வி. ஆமாம்-ஏன் வழக்கத்தைப்போல் அப்புஸ்தகத்தைப்பற்றி உன்
அபிப்பிராயத்தை எனக் கெழுதவில்லை?- நன்றாகயில்லையா என்ன?
ர. நன்றாக இல்லையாவது! - உனக்கப்பொழுதே எழுத வேண்டுமென்றிருந்தேன்.
ஏதோ அவசரத்தில் மறந்தேன். அந்த புஸ்தகம் வந்தவுடன் சாப்பாட்டு
வேளை தவிர ஒரே மூச்சாய் படித்துக்கொண்டிருந்தேன்; இரவு பன்னிரண்டு
மணியாகிவிட்டது; அப்படியே தூங்கி விட்டேன். பிறகு ஐந்து மணிக்கு
விழித்துக்கொண்டு பார்த்தால், ராஜேஸ்வரி-அந்தப் புஸ்தகத்தை படித்துக்
கொண்டிருக்கிறாள்-இரவெல்லாம் கண் விழித்து- என்னவென்று கேட்டால்,
ஆரம்பித்த பிறகு மத்தியில் விட்டுவிட முடியவில்லை என்று சொல்லி, பிறகு
கடைசி பக்கம் வரையில் படித்தபிறகே என்னிடம் கொடுத்தாள்
-பிறகு விசாரித்ததில் நீ அச்சிட்டிருக்கும் புஸ்தகங்களையெல்லாம் சற்றேறக்
குறைய முழுமையும் குருட்டுப் பாடமாக ஒப்பிக்கிறாள்.
வி. அடடா! நான் பெரியநூலாசிரியனாய் விட்டேன் போலிருக்கிறதே;
அதிருக்கட்டும்-அதில் என்ன குறைகளிருந்தன சொல்.
ர. அப்படி முக்கியமான குறையிருந்ததாக நான் கவனிக்கவில்லை.
வி. முக்கியமான குறைகளகப்படாவிட்டாலும், முக்கியமில்லாத
குறைகளைத்தான் கூறு.
ர. எனக்கொன்றும் ஞாபகத்திற்கு வரவில்லை.
வி. அதெல்லாம் உதவாது சொல்.
ர. ஞாபகமிருந்தால் சொல்ல பயமென்ன?
வி. உம்-எந்நேரமும் சிருங்காரமே எழுதிக்கொண் டிருக்கிறேன் என்றாயே,
இதற்கென்ன சொல்லுகிறாய்- முதல் முதல் கடைசி வரையில் எங்கேயாவது
சிருங்காரத்தின் அருகிற் சென்றேனா?
ர. ஆமாம்-அதுதான் எனக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுத்தது.-ஆயினும்-
வி. ஆயினும், என்ன சொல். என்ன அஞ்சுகிறாய்?-ஏதாவது குறையிருந்தால்
கிழி கிழி யென்று கிழி! நான் என்ன பயப்படப் போகிறேனா?
கோபங்கொள்ளப் போகிறேனா?
ர. அப்படி நீ கோபித்தாலும் நான் பயப்படப் போகிறேனா? -அதொன்றுமில்லை-
அது இன்னதென்று சொல்வது கஷ்டமாயிருக்கிறது-அது- [யோசிக்கிறான்]
படியோரமாகப் பரஞ்சோதி வருகிறான்.
ப. எசமான்-எசமான்
வி. யார் அது?
ப. நான்தான்.
வி. மடையா! உன் பெயரா நான்தான்? உனக் கெத்தனைமுறை சொல்லி-
யிருக்கிறேன் பெயரைச் சொல்லவேண்டுமென்று.
ப. புத்தி-
வி. இங்கே யார் வரச்சொன்னது உன்னை இப்பொழுது?
ப. அம்மா வெற்றிலை பாக்கைப் கொண்டுபோய்க் கொடுக்கச் சொன்னார்கள்.
வி. இத்தனை நாழிகை கழித்தா? கொண்டுவா சீக்கிரம்? வாடா சீக்கிரம்.
ப. [விரைவாக நடக்க முயன்று கால்தடுக்கி, தட்டைக் கீழே
போட்டுக்கொண்டு விழுகிறான்]
வி. தடிக்கழுதை! [பரஞ்சோதியின் கன்னத்தில் புடைக்கிறான்] எத்தனை முறை
சொல்லியிருக்கிறேன் ஜாக்கிரதையாக நடக்க வேண்டுமென்று.
ர. விஜயரங்கம், வா இப்படி போதும்-பாபம்!
வி. என்ன விழித்துக்கொண்டு நிற்கிறாய்! போ கழுதை!
[தட்டை எடுத்துக்கொண்டு மெல்ல பரஞ்சோதி போகிறான் படிவழியாக]
ர. ஏன் அந்தக் கிழவனை அடித்தாய்? பாபம்!
வி. உனக் கொன்றும் தெரியாது; நான் எத்தனைமுறை பொறுப்பது? வரவரக்
குருட்டுக் கழுதையாகப் போகிறான்.
ர. அதனால்தான் அவன்மீது நீ கோபித்துக் கொள்ளக் கூடாது; அவன்மீது
பரிதாபம் அல்லவோ நீ கொள்ள வேண்டும்.
ர. அப்படி பரிதாபப்படுவதினால்தான் இன்னும் அவனை வேலையில்
வைத்துக்கொண்டிருக்கிறேன். இல்லாவிட்டால் எப்பொழுதே அவனை
நாட்டுப்புறத்திற்கு அனுப்பிவிட்டிருப்பேன் தெரியுமா? நான் பிறந்ததற்கு
முன்பாக இந்த வீட்டில் வேலைக்காரனா யிருக்கிறானாம்; ஆம் ஊம்
என்றால், எசமான் தகப்பனார் தாயார் சின்ன வயசிலேயே இறந்தபோது
நான்தானே எசமானே எடுத்து வளர்த்தேன் என்கிறான்; அவனை என்ன
செய்கிறது?- ஒரு வேலையும் செய்ய முடியவில்லை-அவனால் எனக்கு
ஒரு பிரயோஜனமுமில்லை.
ர. உனக்கு ஒரு பிரயோஜனமு மில்லாவிட்டாலும் எனக்குப் பெரிய
பிரயோஜனமானான் இப்பொழுது.
வி. என்ன அது?-விளையாடுகிறாயா என்ன?
ர. இல்லை உண்மையில்-சற்று முன்பாக உனது புஸ்தகங்களில் ஒருகுறை
யிருக்கிறது; அதை இன்னதென்று குறிப்பிட்டுச் சொல்வது எனக்குக்
கஷ்டமா யிருக்கிறதென்று யோசித்துக்கொண் டிருந்தேனே.-அதை
விளக்கினான் அவன்.
வி. எப்படி?
ர. மற்றெல்லாம் நீ அநேகமாய் அறிந்திருந்த போதிலும், உலக வாழ்க்கையின்
கஷ்ட மிப்படிப்பட்தென்று உண்மையில் நீ நன்றாயறியவில்லை இன்னும்.
வி. ஏன்? என் கடைசி புஸ்தகத்தில் மதிவாணன் கஷ்டங்களைப்பற்றி நான்
எழுதியது சரியாக வில்லையோ?
ர. ஒருவாறிருந்தது-- ஆயினும்--எப்படி யிருந்தபோதிலும் பிறந்தது முதல்,
தகப்பனார் தாயாரால் சிட்சிக்கப்படாமல், மாமனாரால் செல்வக் குழந்தையாய்
வளர்க்கப்பட்டு, சுகத்திலேயே வாழ்ந்து வந்து விட்டாய். உலகத்தின்
கஷ்டம் என்பது இத்தன்மையது என்று அதைக்கொஞ்சம் அனுபவித்தால்தான்,
அதன் உண்மையை யறிவாய். என்னதான் ஊகித்தறிந்தாலும் அனுபவ
ஞானத்திற்கு ஈடாகாது அது அந்தக்குறை உன் சுபாவத்திலு மிருக்கிறது.
உன் புஸ்தகங்களிலு மிருக்கிறது. அக்குறையை மாத்திரம் நீ தீர்ப்பாயாயின்
எல்லா விதத்திலும் மிகவும் மேலாம்.
வி. ஆனால்-- நீ சொல்வதைப் பார்த்தால்-- எனக்கு ஏதாவது பெருங்கஷ்டம்
நேரிடவேண்டுமென்று கோருகிறாயா என்ன?
ர. சீச்சீ! அப்படி ஒன்றும் நேரிடாவண்ணம் ஈஸ்வரன்
உன்னை ரட்சிப்பாராக!
வி. பிறகு என்னை என்ன செய்யவேண்டுமென்கிறாய்?
ர. உம்--எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது-- இந்த செல்வாக்கை யெல்லாம்
விட்டு, ஒருவருக்கும் தெரியாமல் எங்கேயாவது தூரதேசம் போய், மூன்று
மாத காலம் ஒரு எளிய வேலைக்காரனாய் கஷ்டப்பட்டு ஜீவனம் செய்துபார்.
அப்பொழுது இல்லாமையின் கொடுமை இப்படிப்பட்டதென்று உண்மையாய்
அறிவாய், அன்றியும் உன் குணத்திலுள்ள கெடுதிகளையும் அது விலக்கும்.
வி. நான் ஏன் அப்படி செய்யக்கூடாது?-- அதுவும் ஒரு
வேடிக்கையா யிருக்கும்.
ர. வேடிக்கையா யிருக்கிறதோ இல்லையோ அதை அப்புறம்
சொல் என்னிடம்.
வி. அப்படியே ஆகட்டும்--
[சுவற்றின் ஒருபுறம் இருக்கும் பெரிய கடியாரம் ஒன்பது மணி அடிக்கிறது].
ர. ஒன்பதாகிவிட்டதா!-- ஆனால் சீக்கிரம் உன் மோடார் வண்டியைக்
கொண்டுவரச் சொல்--நான் றெயிலுக்குப் போக நேரமாய் விட்டது.
வி. முன்பே உத்தரவு செய்திருக்கிறேன்--சரியாக வரும்-- இன்னும் எவ்வளவு
நாழிகை இருக்கிறது, இதற்குள் அவசரமா?
ர, பிறகு றெயில் தவறிப்போனால்?--
[ தன் சட்டை தலைகுட்டை முதலியன போட்டுக் கொள்ளுகிறான்].
வி. ரங்கநாதம், இப்பொழுதாவது நீ திடீரென்று யாழ்ப்பாணம்விட்டு
வந்ததற்குக் காரணம் சொல்லமாட்டாயா?
ர. அறிவு துன்பம் தருவதாயின் அறியாமையே மேலாகும்
என்னும் வாக்கியம் நீ கேட்டதில்லையா?
வி. ஆனால் உன் இஷ்டம், ஆயினும்--நீயாகக் கூறாவிட்டாலும், நான்
ஒன்று கூறுகிறேன், அது சரியா இல்லையாவென்று அதையாவது சொல்லுகிறாயா?
ர. உன்னால் கூறமுடியாது. சாப்பிட்டு இளைப்பாறுவதை விட்டு உன் புத்திக்கு
ஏன் விருதாவாகக் கஷ்டம் கொடுக்கிறாய்?
வி. ஏதோ திடீரென்று பெருங் கவலைக்குள்ளாகி திடீரென்று யாழ்ப்பாணம்
விட்டு வந்திருக்கிறாய்? உண்மையா இல்லையா?
ர. அதைக்கூற, விஜயரங்கம்--பெயர் பெற்ற நூலாசிரியன்!
ஒருவன் வேண்டுமோ?
வி. நான் பெயர் பெற்ற நூலாசிரியன் அல்ல--இப்பொழுது--
ர.இப்பொழு தில்லாவிட்டாலும் சீக்கிரத்தில் அப்படி ஆவாய் என் ஜோஸ்யத்தைப்
பார்--நான் வரவா?
வி.ரங்கநாதம்--என்னை மன்னிப்பாய்--அக்கவலை—விரைவில் முடிந்த உன்
விவாஹத்தைப் பொறுத்தது—என்று என் புத்தியில் ஏதோ படிகிறது--
ர.[அவன் எதிரில் வந்து அவனது தோள்மீது தன்கையைவைத்து]
நான் ஒன்று கேட்டுக்கொள்ளுகிறேன், அதன்படி செய்கிறாயா?
வி.ஆகட்டும்.
ர.கை போட்டுக்கொடு.
வி.[கையடித்து] ஆகட்டும்.
ர.[அவனிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்து] இக்கடிதத்தை நான் போனபின்
ஐந்து நிமிஷம் பொறுத்துப் பிரித்துப் படித்துப்பார். அதில் உன்னை ஒன்று
வேண்டி யிருக்கிறேன் கடைசியில், அதன்படி செய்கிறதாக வாக்களி.
வி.அப்படியே
[மறுபடி கையடித்துக் கொடுக்கிறான்]
ர.[அப்படியே அவன் கரத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு]
நீ கடைசியில் அச்சிட்ட புஸ்தகத்தின் பெயரென்ன?
வி.தோன்றிற் புகழொடு தோன்றுக.
ர.அஃதிலார்?
வி.தோன்றலிற் றோன்றாமை நன்று.
ர.அது வாஸ்தவமாயின் என்மீது குறை கூறமாட்டாய்--
[வெளியில் மோடார் வண்டி சத்தம் கேட்கிறது]
இங்குதான் நில். கீழே இறங்கி வரவேண்டாம் வண்டி வரையில்—
நான் வருகிறேன்--விஜயரங்கம்--நான் வருகிறேன்.
[திடீரென்று கையைவிட்டு, கண்களில் நீர் ததும்ப, விரைந்து வெளியே போகிறான்]
வி. [சற்றுநேரம் நின்றுவிட்டு, கடியாரத்தைப் பார்த்து, பிறகு மேஜையின்மீது
அக்கடிதத்தை வைக்கிறான்] றெயில் தவறமாட்டான் -சரியாகக்
கொண்டுபோய்விடும் வண்டி-
[நாற்காலியின்மீது சாய்கிறான்]
படிவழியாக மங்கையர்க்கரசி, ஒரு தட்டில் வெற்றிலைப்பாக்கு எடுத்துக்கொண்டு
வருகிறாள்.
ம. நான் வரலாமோ?
வி. வா.
ம. அண்ணா போய்விட்டார்போ லிருக்கிறதே?
வி. ஆம்.
ம. பரஞ்சோதி முன்பு அனுப்பிய வெற்றிலையைக் கீழே கால் தடுக்கிக்
கொட்டிவிட்டதாகச் சொன்னான்.-வேறே கொண்டு வந்திருக்கிறேன்-
போட்டுக் கொள்ளுகிறீர்களா?
வி. இப்பொழுது வேண்டாம்-ஓரு புறமாய் வை.
ம. என்ன ஒருவா றிருக்கிறீர்கள்? -நான் கேட்டால் சொல்வீர்களா?
வி. இப்படி வா.
[அவள் கரத்தைப்பற்றி அழைத்துக்கொண்டுபோய் படத்தின் பக்கத்தில்
நிறுத்தி படத்தையும் அவளையும் சற்றுநேரம் உற்றுப் பார்க்கிறான்]
ரங்கநாதன் சொன்னது உண்மைதான்.
ம. என்ன சொன்னார் அண்ணா?
வி. இந்தப் படம் உன் ஜாடையா யிருக்கிறதென்று.
ம. என் ஜாடையா யிருக்கிறதா! என் படமல்ல இது?
வி. உன் படமென்றா நினைத்துக்கொண்டிருந்தாய்?
ம. ஆம்-இல்லாவிட்டால் வேறொருத்தியின் படத்தை நீர் எழுத நான்
பார்த்துக்கொண்டு சும்மா இருப்பேன் என்று நினைத்தீர்களோ?
வி. ஊம்!- [சிறு நகைப்பாய் நகைக்கிறான்]
ம. உங்களுக் கென்ன இது நகைப்பா யிருக்கிறதோ? என் படமா யில்லாவிட்டால்
வேறு யாருடைய படத்தை எழுதினீர்கள் சொல்லுங்கள்.-சொல்லாவிட்டால்-
நான் உங்களுக்கு ஒரு முக்கியமான சமாசாரம் சொல்லலாமென்றிருந்தேன்,
அதைச் சொல்லவே போகிறதில்லை.
வ. என்ன அப்படிப்பட்ட சமாசாரம்?
ம. அது ஒரு ரகசியம்- நீங்கள் இதைச் சொன்னால் நான் அதைச் சொல்லுவேன்.
வி. நான் சொல்லாவிட்டால்?
ம. நானும் சொல்லவேமாட்டேன்-என்ன? சொல்லுகிறீர்களா மாட்டீர்களா?
வி. நான் சொல்லுவதற் கொன்றுமில்லை-நான் ஒருத்தியையும்
நினைத்து எழுதியதன்று இப்படம்-
ம. நீங்கள் உண்மையை எனக்குச் சொல்லாவிட்டால் நானும் என்
ரகசியத்தை உங்களுக்குச் சொல்லமாட்டேன்.
வி. சொல்லவேண்டாம்-போ.
ம. அவ்வளவுதானே?
வி. நீ போய் படுத்துக்கொள்-எனக் கொருவாறாய் இருக்கிறது-என்னைத்
தொந்தரவு செய்யாதே.
ம. என் ரகசியத்தை மாத்திரம் சொன்னால் உங்கள் தொந்தரவெல்லாம் போய்விடும்.
வி. அப்புறம் உன் ரகசியத்தைக் கேட்கிறேன்-இப்போழுது என்னைத்
தொந்தரவு செய்யாதே.
ம. நான் தொந்தரவா செய்கிறேன்? -இந்த ரகசியத்தை உங்களுக்குச்
சொல்கிறேனா பாருங்கள்!
வி. சொல்லவேண்டாம் போ.
ம. ஆகட்டும். [போகிறாள்]
வி. ஐந்து நிமிஷம் ஆய்விட்டது:-
[விரைந்து மேஜை யருகிற்போய் கடிதத்தைக் கிழித்துப் பிரித்துப் பார்க்கிறான்]
என்ன!- [கதவண்டை விரைந்து போய் திடீரென்று நிதானித்து]
சீ! பிரயோஜனமில்லை! இந்நேரம் றெயில் போயிருக்கும்!-
[மறுபடியும் கடிதத்தை வாசித்துப்பார்த்து]
" நீ கூறிய வாக்குதத்தித்தின்படி என்னைப் பின் தொடராதே."
[திகைத்து நிற்கிறான்]
காட்சி முடிகிறது.
-------------------------
முதல் அங்கம் - இரண்டாம் காட்சி.
நடுவில் ஒரு மேஜை போட்டிருக்கிறது. அதைச் சுற்றிலும் நான்கு நாற்காலிகள்
இருக்கின்றன. மேஜையின்மீதிலும் தரையின் மீதிலும் அநேகம் கணக்கு புஸ்தகங்கள்
கிடக்கின்றன.
தாமோதரம்பிள்ளை மிகவும் வாடியமுகத்துடன் மேஜையினருகிலுள்ள ஓர்
நாற்காலியில் சாய்ந்திருக்கிறார்.
விஜயரங்கம் கையில் ஒரு நிருபத்துடன் மனக்கவலையுடன்
உலாவிக்கொண் டிருக்கிறான்.
வி. [சற்றே பொருத்து] இந்தக் காகிதம் எப்பொழுது வந்தது உங்களுக்கு?
தா. நேற்றிரவு.
வி. இதையேன் என்னிடம் முன்பே சொல்லவில்லை?
தா. சொல்லலாமா-கூடாதா-எப்படி சொல்வது-என்று ஏங்கியே இராத்திரி
யெல்லாம் தூக்கமில்லாமல் கழித்தேன்.
வி. இந்த நஷ்டமெல்லாம் எவ்வளவு ஆகும்?
தா. கணக்கிட்டுப் பார்த்தேன். சற்றேறக்குறைய மூன்றரை லட்சமாகும்.
வி. நம்முடைய சொத்துகளெல்லாம் சேர்த்தால் எவ்வளவாகும்?
தா. எனக்குத் தற்காலம் இருக்கும் சொத்துகளை யெல்லாம் ஜாபிதா
போட்டுப் பார்த்தேன். இதோ பார்-கொஞ்சம் ஏறக்குறைய மூன்று
லட்சத்திற்கு இருக்கிறது.
வி. என் சொத்து-அதாவது-என் தகப்பனார் வைத்து விட்டுப்போன
சொத்து எவ்வளவு இருக்கிறது?
தா. பூஸ்திதி யெல்லாம் ஒரு ஐம்பதினாயிரத்திற்கு இருக்கிறது-
ரொக்கப்பணம், இப்பொழுது அறுபதினாயிரத்திற்கு வியாஜ்யம்
செய்திருக்கிறோமே-அவ்வளவுதான்.- அதையேன்கேட்கிறாய்?
வி. ஒரு காரணமாகத்தான். -மாமா-தயவுசெய்து குறுக்கே ஒன்றும் பேசாதீர்கள்-
நான் சொல்வதைக் கேளுங்கள்- இந்தக் கடிதத்தில் அந்த சென்னபட்டணத்து
லாயர் எழுதி யிருக்கிறபடி ஒரு மோசமும் செய்யவேண்டாம். பிறரை மோசம்
செய்து இப் பொருளை யெல்லாம் நம்மிடம் வைத்துக்கொண்டிருப்போமானால்
அப்படிப்பட்ட பொருள் எத்தனைநாள் நிலைக்கும் நம்மிடம் என்று
எண்ணுகிறீர்? அப்படி நிலைத்தாலும் அதனால் நாம் என்ன சுகம் அடையப்
போகிறோம்? வேண்டாம். உடனே நம்முடைய சொத்துகளையெல்லாம் விற்று
ரொக்கமாக்கி, அந்த மூன்றரைலட்ச நஷ்டத்தையும் அடைத்துவிடும்-
மிகுதியாயிருக்கும் அந்த அறுபதினாயிரம் ரூபாயைக் கொண்டு நாம்
எல்லோரும் சௌக்கியமாய் வாழலாம்- குறுக்கே பேசாதீர் என்றேனே!-
தா.அப்பா - நான் சொல்வதைக்கேள் - இப்படி ஏதாவது விபரீதமாய்ப்
பேசுவாயென்றே, இக்கடிதத்தை உனக்குக் காட்டலாமா வேண்டாமா
என்று இதுவரையில் யோசித்தேன் - நான் சொல்வதையும்கேள் - சுளிக்காதே
முகத்தை - என் மைத்துனனை நம்பி நான் மோசம் போனதினால் உண்டான
நஷ்டத்தை, நான் என் பொருளைக் கொடுத்து அடைக்கவேண்டியது என்
கடமையாகும். அதற்காக உன் பொருளை நீ கொடுப்பது நியாயமல்லவே?
வி.இல்லாவிட்டால் நீர் எப்படி இந்த நஷ்டம் முழுவதையும் அடைக்கப் போகிறீர்?
தா. கொடுக்க வேண்டியவர்களுக்கெல்லாம் கொஞ்சம் குறைவாகக்
கொடுத்துப் பைசல் செய்கிறேன்.
வி. அவர்கள் வாங்கமாட்டேன் என்றால்? - இன்சால்வென்ட்ஷெட்யூல்
தாக்கல் செய்வீர்களோ?
தா. ஈசனே!ஈசனே!-வேறு வழியில்லை.
வி. அப்படிச் செய்வீராயின் யாருக்கு சுகம்? யாருக்கு சந்தோஷம்? உம்முடைய
கடன்காரர்களும் வருத்தப்படுவார்கள்,நீரும் வருத்தப்படுவீர்!
தா.நீயாவது சந்தோஷமாயிருப்பாய் - உன் பொருள் ஒன்றும் பறிகொடுக்காமல்.
வி. உமக்கென்ன பயித்தியம் பிடித்திருக்கிறதா? – திவால் ஆனவருடைய
மருமகப்பிள்ளை யென்று பெயரெடுத்து சந்தோஷமயிருப்பேனா நான்?
மாமா, இனி வீண் வார்த்தை வேண்டாம். நான் சொன்னபடி உடனே
செய்யும்.
தா.ஈசனே! ஜகதீசா! இக்கதியும் எனக்கு வரவேண்டுமா! - எனக்கு நேர்ந்த
நஷ்டத்தின் பொருட்டு என்பொருளில் பாதியும் இழக்கச் செய்து, நீ
வருத்தப்பட, அதைக்கண்டு நான் எப்படி சகிப்பேன்?
வி. .நான் வருத்தப்படுவேன் என்று உமக்கு யார் சொன்னது? என் பொருளில்
பாதியல்ல முழுவதும் உமது
கடனுக் காகக் கொடுப்பதானாலும் வருத்தப்படமாட்டேன் நான்; இப்படி
உமக்கு ஆபத்காலத்தில் உதவுகிறேனே யென்று சந்தோஷப்படுவேன்.
என்னை நீர் நன்றா யறியவில்லை இன்னும் - நான் கடைசியில் அச்சிட்ட
புஸ்தகத்தைப் படித்திருக்கிறீரா? - நீர் தான் என் புஸ்தகங்கள் ஒன்றையும்
படிப்பதில்லையே.
தா. உன் கடைசி புஸ்தகம் "தோன்றிற் புகழொடு தோன்றுக" என்பதை
நேற்றிரவுதான் படித்தேன் - தூக்கம் வராமலிருந்தபொழுது.
வி.ஏது! அம்மட்டும் என் அதிர்ஷ்டம்தான், - மாமா அதைப் படித்த பிறகு,
அதை எழுதியவன் வேறு ஏதேனும் செய்ய உடன்படுவான் என்று
எண்ணுகிறீரோ? - இன்னும் என்ன யோசனை?
தா.வேறொன்றுமில்லை - எனக்காக நான் ஒன்றும் யோசிக்க வில்லை - நான்
இனி நெடுநாள் உயிருடன் இருப்பேன் என்று நம்பவில்லை நான் - நீ பிறந்த
நாள் முதல் செல்வத்திலேயே வளர்ந்து வந்தவன் -
வி.எனக்காக நீர் துக்கப்படவேண்டியதில்லையென்று முன்பே கூறினேனே.
தா.நீ கூறிவிட்டால் ஆமோ? நான் எப்படி துக்கப்படாமலிருப்பேன்? - என்
துர் அதிர்ஷ்டம் உன்னையும் பற்ற வேண்டுமா?
வி.இதென்ன இவ்வளவு நியாய மெடுத்துக் கூறியும் இப்படி பேசுகிறீரே!
என் கடைசி நியாயத்தைக் கேளும் - உமதிச்சைப்படி நடப்பதானால்
உம்முடைய கடன்காரர்களுக்கும் துக்கம், எனக்கும் துக்கம், உமக்கும்
துக்கம், நான் சொல்கிறபடி நடப்பதானால், எங்களுக்கெல்லாம் சந்தோஷம்
உமக்கு மாத்திரம் துக்கம் - இவ்விரண்டில் எதுமேம்பட்டது எது கீழ்ப்பட்டது?
தா.[கண்ணீர்விட்டு] அப்பா! விஜயரங்கம், உன் நற்குணத்திற்கு, உனக்கும்
இக்கதி வரலாமா, என் தீவினைப் பயனால்? - ஜகதீசன் உனக்கு எப்படியும்
அருள் செய்வார்.
[வீதிக்குப் போகும் நடை வழியில் "என்னடா இழவு! நான் அவசரமாய்ப்
பார்க்க வேண்டுமென்கிறேன் தடுக்கிறாயா!" என்று கூச்சல் கேட்கிறது].
வி. யார் அது?
வக்கீல் சுப்பராய ஐயர் வாயிற்படி வழியாக கூடத்திற்கு விரைந்து வருகிறார்.
சு. இந்த வேலைக்காரர்கள் தொந்திரவு பெரிய இழவாய்ப் போய்விட்டது! -
தா.வாருங்கள் - வக்கீல் அவாள் - உட்காருங்கள் – என்ன விசேஷம்?
சு. வேறோரு இழவும் இல்லை - நான் அவசரமாகப் பிள்ளையவாளைப்
பார்க்க வேண்டுமென்றால் - அந்த இழவெடுத்த வேலைக்காரன் உள்ளே
விடமாட்டேன் என்றான். என்ன இழவு போங்கள்' - அவனை மீறிக் கொண்டு
வருவது போதும் என்று போச்சுது - உங்களுக்கு உடம்பு என்ன மாயிருக்கிறது?
நேற்றிரவு வந்தபொழுது, ஏதோ, மார்பு நோய் இப்பொழுது பார்க்க
சாத்தியப்படாதென்று சொன்னார்கள். இப்பொழுது எப்படி யிருக்கிறது
அந்த இழவு வலி?
தா. அப்படித்த னிருக்கிறது - கொஞ்சம் தேவையில்லை -
தாங்கள் அவசரமாக வந்த விஷயம் என்ன?
சு. வேறேன்ன இழவு இருக்கப் போகிறது? அந்த துலுக்கச்சி, மாப்பிள்ளை
பேருக்கு எழுதிக்கொடுத்த அண்டி மாண்டின்பேரில் வியாஜ்யம்
போட்டிருக்கிறோமே - அதிலே ஒரு பெரிய இழவு கஷ்டம் வந்திருக்கிறது?
தா. என்ன? என்ன?
சு. என்ன இழவு போங்கள்! - அந்த அண்டிமாண்டில் சாட்சி கையெழுத்துப்
போட்ட இரண்டு பேரில், ஒருத்தன் எங்கேயோ இருப்பிடம் தெரியாமல்
ஓடிப்போய்விட்டான். மற்றொறுவனாவது சாட்சி சொல்வானென்று
அவன்மீது சாட்சி சம்மன் செய்து வைத்திருந்தேன். நம்முடைய
இழவு - என்னவென்றால் அவன் இறந்து போய்விட்டதாக நேற்று செய்தி
வந்தது - இந்த இழவு இப்படி நேரிடுமென்று நான் நினைக்கவேயில்லை!
வி. என்ன கஷ்டம் அதில்?
சு. என்ன கஷ்டமாவது? பெரிய இழவாகவல்லவோ முடிந்திருக்கிறது? –
பிரதிவாதி தான் பத்திரத்தில் கையெழுத்துப் போடவில்லை என்று
மனு கொடுத்திருக்கிறாள் - அவள் பெண்பிள்ளை, துலுக்கச்சி,கோஷா! –
இந்த இழ வெடுத்த சட்டப்பிரகாரம் அவள் கையெழுத்துப்
போட்டதாகவும் ரூபாய் பெற்றுக்கொண்டதாகவும் நாம் ருஜூப்
படுத்தவேண்டும்.
தா. ஐயோ! இதற்கென்ன செய்வது?
சு. அந்த இழவைத்தான் கேட்கலாமென்று வந்தேன் அவசரமாக. - நாளைக்கு
வாயிதா போட்டிருக்கிறது -ஒரு வேளை அவள் கையெழுத்துப் போட்டபோது –
நம்முடைய - மாப்பிள்ளை பார்த்திருக்கக் கூடுமோ?
வி. என்ன ஐயா அது? நான்தான் அன்று நீர் கேட்டபொழுதே அப் பத்திரத்தைப்
பற்றி எனக்கு நேரில் ஒன்றும் தெரியாது என்று கூறிவிட்டேனே.
சு. ஆமாம் அப்போழுது சொன்னீர்கள் - இழவு - வாஸ்தவம்தான் –
இப்பொழுது இந்த கஷ்டம் - ஒரு இழவு - வந்திருக்கிறதே -
வி. அதற்காக- இப்பொழுது என்னைப் பொய்யா பேசச் சொல்லுகிறீர்கள்?
சு. சும்மாகக் கோபித்துக் கொள்ளாதீர்கள் - மாப்பிள்ளை- நான் சொல்லவந்த
தென்னவென்றால்-இழவு- தொகை யெனனமோ பெருந்தொகையா யிருக்கே-
வி. அதற்காகப் பொய்யாகப் பிரமாணம் செய்யலாம் போலிருக்கிறது?
சு. என்ன இப்படி பேசுகிறீர் இழவு?-நீர் அஷ்டப்பிராப்தியாக அந்த
இழவு அறுபதினாயிரம் ரூபாய் கொடுத்தது உண்மைதானே?
வி. ஆம்.
சு. அவள் பெற்றுக்கொண்டு கையெழுத்துப் போட்டதும் உண்மைதானே?
வி. உண்மைதானென்று நினைக்கிறேன்.
சு. அப்படி யிருக்கும்பொழுது கையெழுத்துப் போடும் பொழுது பார்த்தேன்
என்று ஒரு வார்த்தை சொல்வதில் என்ன தவறு?
வி. அதுதான் பொய்யாகும்-நான் பார்க்கவே யில்லையே.
சு. சரி-அப்படி -இழவு, ஒரே பிடிவாதமா யிருப்பதானால் அந்த
அறுபதினாயிரம் ரூபாயும் வட்டியும் போனது தான்!-போதாக் குறைக்கு-
இழவு-பிரதிவாதியின் செலவையும் நீங்கள் கட்டிக் கொடுக்க வேண்டும்-
நான் சொல்லவேண்டிய இழவைச் சொல்லி விட்டேன் - பிறகு
உங்கள்பாடு-என்ன சொல்லுகிறீர்?
வி. முன்பு சொன்னதைத்தான்.
சு. என்ன பிள்ளையவாள்-மாப்பிள்ளைக்கு நீங்களாவது கொஞ்சம்
புத்தி சொல்லக்கூடாதா? அவருக்கு இள வயதாகையால் பொருள்
அருமை தெரியவில்லை-அறு பதினாயிரம் ரூபாய் போவதென்றால்
இலேசான இழவா?
தா. [தழதழத்து] அப்பா - விஜய - ரங்கம்.
வி. [கோபத்துடன்] மாமா! என்ன - நீங்களும்!
தா. பரமேஸ்வரா! உகிர்ச் சுவற்றின்மேல் அம்மி வீழ்வதே போல்,
ஒன்றின்பேரில் ஒன்றாய் வருகிறதே - இப்படியும் எங்களைச்
சோதிக்கிறீரா? நாங்கள் எந்த ஜன்மத்தில் என்ன பிழை செய்தோமோ?
[கண்ணீர் விட்டழுகிறார்]
வி. மாமா! உம்முடைய மனத்தை திடப்படுத்திக் கொள்ளுங்கள் - மூன்றரை
லட்சம் போனதற்கு இவ்வளவு துக்கப்படவில்லை - கேவலம் இந்த
அறுபதினாயிரத்திற் காகவா இவ்வளவு துக்கப்படுவது தாம்?
சு. அதென்ன இழவு ஐயா அது, மாப்பிள்ளை?
வி. இக் கடிதத்தைப் பாரும்.
சு. [அவசரமாய்ப் படித்துப் பார்த்து] அடடா! பேரிழவாயிருக்கிறதே!-
இதற்கென்ன செய்யப் போகிறீர்கள்?
வி. எங்களிருவருடைய சொத்துக்களை யெல்லாம் விற்று இந்த
நஷ்டத்தை அடைக்கப் போகிறோம்.
சு. ஐயோ பாபம்! - என்ன இழவாயிருக்கிறது!- இந்த சமயத்தியலே
அந்த அறுபதினாயிரம் ரூபாய் கைக்கு வந்தால் -
வி. ஐயா, தாங்கள் தயவுசெய்து விடை பெற்றுக் கொள்ளுங்கள் - எங்களுக்குக்
கோபம் வரும்படிச் செய்யாதீர்.
சு. இந்த இழவைத்தான் கலிகாலம் என்கிறது! நன்மையைச் சொன்னால்
கோபம் வருகிறதே! - நான் வருகிறேன். - பிள்ளயவாளுக்கல்லவா,
எனக்கு சேர வேண்டிய பீசு இழவில் கொஞ்சம் பாக்கி யிருக்கிறது –
எனக்கு இந்த சமயம் செலவின்பேரில் செலவாய் வந்து
சேர்ந்தது இழவு -ஆகவே. -
வி. ஐயா! தாங்கள் ஒன்றும் பயப்படவேண்டாம். ஒரு காசும் பாக்கியில்லாமல்
கொடுத் தனுப்புவார்.
சு. அதற்கு சந்தேகப்படவில்லை நான் - இந்த சமயம் கேட்டேன் என்று
என்மீது வருத்தம்வேண்டாம். இந்த சம்சார செலவென்றால் – அவ்வளவு
கஷ்டப்படுத்துகிறது அந்த இழவு - என்ன செய்கிறது? - நான் வருகிறேன்.
[போகப் புறப்படுகிறார்]
அவசரமொன்றுமில்லை -எதற்கும் நாளைத்தினம் காலை குமாஸ்தாவை
அனுப்பவா?
தா. அனுப்புங்கள்.
சு. நான் வருகிறேன். உங்கள் உடம்பை ஜாக்கிரதையாகப்
பார்த்துக்கொள்ளுங்கள்.
[வாயில் வரையில் போய் திரும்பி வந்து]
நாளைத்தினம் எப்படியாவது பார்த்து அந்த பீசு பாக்கியை கொடுத்தனுப்பி-
விடுங்கள் - என் கடைசி பெண்ணிற்கு - ஒரு கலியாணம் இழவுக்கு நாள்
குறித்து விட்டேன் - அதற்காகத்தான் உங்களுக்குக் கஷ்டம் கொடுக்க
வேண்டி யிருக்கிறது.
தா.உங்களுக்குச் சேரவேண்டிய பாக்கி-எவ்வளவு?
சு. ஏ - எழுபத்தைந்து ரூபாய்தான்.
வி. ஆனால் இன்றைக்கே - இப்பொழுது உம்முடைய குமாஸ்தாவை
அனுப்பும் - அனுப்பிவிடுகிறேன்.
சு. அப்படி அவசரம் ஒன்றுமில்லை - இந்த கலியாண இழவு ஒன்று வந்ததில்
கொஞ்சம் கஷ்டமா யிருக்கிறது - இல்லாவிட்டால் இதை ஒரு
பொருட்டாகக் கேட்கவு மாட்டேன். என்மீது கோபம் வேண்டாம்.
வி. இல்லை இல்லை
சு. நான் வருகிறேன். [போகிறார்]
வி. இப்படியும் இருக்குமா உலகம்?
தா. அதுதான் எனக்குப் பெருங் கவலையாயிருக்கிறது.- உலகக் கஷ்டம்
இன்னதென்று தெரியாது வளர்ந்து வந்தாய் இதுவரையில் – அப்படிப்
பட்டவனை கஷ்ட சாகரத்தில் மூழ்த்திவிட்டாரே கடவுள்! - எப்படி அவர்
கரையேற்றப் போகிறாரோ?
வி. மாமா, அதையும் அனுபவித்துப் பார்க்கவேண்டுமென்று கொஞ்ச நாளாக
எனக்கு ஆவலிருந்தது. அது கைகூடும் சமயம் வந்தாற்போலிருக்கிறது –
இது எனக்கு சந்தோஷத்தைத் தருகிறது.
தா. அப்பா! அப்படி கூறாதே - இந்த உலகத்தின் கஷ்டம் இப்படிப்பட்டது
என்று நீ அனுபவித்திருந்தால் அப்படி கூறமாட்டாய்.
வி. ஊம் - பார்ப்போம்.
தா. விஜய ரங்கம் - என் மார்பு நோய் அதிகமா யிருக்கிறது. கொஞ்சம் ஆளை
அனுப்பு அந்த வயித்தியரை சீக்கிரம் வரவழை.
வி. இதோ போய் அனுப்புகிறேன். [விரைந்து போகிறான்]
[தாமோதரம்பிள்ளை நாற்காலியில் சாய்ந்துகொள்ளுகிறார்]
காட்சி முடிகிறது
----@-------
மூன்றாம் காட்சி
இடம் - ஓர் படுக்கை வீடு
ஒருபுறமாக மஞ்சத்தின்மீது மங்கையர்கரசி படுத்துறங்குகிறாள
மற்றொருபுறம் மூலையில் போட்டிருக்கும் ஒரு சிறு மேஜையின் பக்கத்தில்
விஜயரங்கம் உட்கார்ந்துகொண்டு எழுதியவண்ணம் இருக்கிறான்
வி. என்ன உலகம்! என்ன உலகம்!- இறந்து போவதன் முன் அவர்
கூறியது உண்மைதான் - உலகிலுள்ள தீமை இப்படிப்பட்டது என்று
இன்னும் நன்றா யறிந்திலன் நான் - ஆயினும் இப்பொழுது இந்த
பதினாறு நாளாகத் தெரிந்ததே போதும்போ லிருக்கிறதே! - ஒருவனாவது
முற்றிலும் யோக்கியனா யிரானா?- என் மாமனாருக்காக என் சொத்து
முழுவதையும் இக் கடன்காரர்களுக்குக் கொடுத்தும், ஒருவனாவது என்
உண்மையான மன நிலைமையை அறிந்தவனாகக் காணப்படவில்லையே! –
எல்லோரும் நான் எதோ அதிகமாய் ஒளித்துவைத்து, மேலுக்குப்
பாசாங்கு செய்வதாகவல்லவோ எண்ணுகிறார்கள்! - பண ஆசை பிடித்த
இவர்கள்தான் இப்படியோ, அல்லது உலகமடங்கலும் இப்படித்தானோ?
எல்லாம் சீக்கிரத்தில் அறிகிறேன் - இன்னும் யாருக்காவது எழுதவேண்டியது
இருக்கிறதா? - என்ன அது? - விழித்துக்கொண்டாளா என்ன? -
விழித்துக்கொண்டாலும் பெரிதல்ல. - வழக்கத்தைப்போல் ஏதோ
காகிதத்தில் கிறிக்கிக்கொண்டிருக்கிறேன் என்று எண்ணுவாள்! - என்
மனைவியே என் மனத்தை யறியாமற்போனால்,உலகம் எப்படி அறியும்?-
[வீதியில் ஒரு பிச்சைக்காரன் மாலைகவளம் தாயே! என்று
கூவிவிட்டுப் பாடுகிறான், "வாழ்வாவது மாயம்"]
வாஸ்தவம்!
பி. [வெளியில் பாடுகிறான்].
"இது மண்ணாவது திண்ணம்."
வி. நிரம்ப வாஸ்தவம்!
[பரஞ்சோதி வெளியிலிருந்து "யாரடா அப்பா அது? எல்லோரும்
படுத்துக்கொண்டார்கள் இப்பொழுது -"]
வி. பரஞ்சோதி! வா இப்படி - [தனக்குள்] இவன் இன்னுமா
விழித்துக்கொண் டிருக்கிறான்?
பரஞ்சோதி உள்ளே வருகிறான்
வி. பொறு! அவன் பாட்டை முடிக்கட்டும்.
பி. [வெளியில் பாடுகிறான்].
"பாழ்போவது பிறவித்துயர் பசிநோய்செய்த பறிதான்
தாழாதறஞ் செய்மின் தடங்கண்ணான் மலரோனும்
கீழ்மேலுற நின்றான்றிருக் கேதாரமெ னீரே."
வி. பரஞ்சோதி, அவனுக்கு ஏதாவது சாதம் போட்டனுப்பு.- ஊம் –
அனுப்பிவிட்டு நீ போய்படுத்துக்கொள் - இந்தக் காகிதங்களை யெல்லாம்
நாளைத்தினம் மேல்விலாசப்படி சரியாகக் கொடுத்துவிடு.
ப. எசமான் உத்தரவு. [போகிறான்]
வி. என்ன விந்தை! இந்தப் பாட்டை, இதே பிச்சைக்காரன் எத்தனையோ
நாளாகப் பாடக்கேட்டிருக்கிறேன்.இன்று பட்டதுபோல் இதன் பொருள்
என் மனத்தில் இது வரையிற் பட்டதேயில்லை. வேறு புதிய அர்த்தம்
எவ்வளவோ தோற்றுகிறதே இதில் இப்பொழுது! - இப்புஸ்தகமொன்றை
நம்முடம் கொண்டு போகவேண்டும்.
[எழுந்து ஒரு புஸ்தகத்தை தன் மூட்டையில் வைத்துக் கட்டுகிறான்].
இன்னும் நான செய்ய வேண்டியது என்ன இருக்கிறது?
[உலாவுகிறான்]
நான் சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் நாடகமாடக் கற்றுக் கொண்டது
எவ்வளவு உபயோகமாகிற திப்பொழுது - நான் மாறுவேஷம் பூண!
[உறங்கும் மனைவி யருகிற் சென்று]
இந்த ஒரு வருஷகாலம் என்னைக்காணாது வருந்துவாளா? நான்
நினைக்கவில்லை.இந்த ஒரு வருஷம் அவள் சுகமாய் வாழ்வதற்குத்தக்க
ஏற்பாடுகள் எல்லாம் செய்திருக்கிறேனென்று என கடிதத்தின்
மூலமாகக் கண்டறிந்ததும் - கவலைப்படமாட்டாள் என்று நினைக்கிறேன்.
கண்ணிற் படும்படியாக இவள் கடிதத்தை அருகில் வைக்கிறேன்.
[அப்படியே செய்கிறான்]
என்ன இது? ஏதோ புஸ்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தாள்போலும்
உறங்குமுன் - என்ன புஸ்தகம் பார்ப்போம்
[தலையணை யருகிலிருந்த ஓர் புஸ்தகத்தை எடுத்து]
அடடா! "தோன்றிற் புகழொடு தோன்றுக!" இதைப் படிக்கும்படியாக
அவ்வளவு கற்றுக் கொண்டாளா? உம்! - படிக்கட்டும் -
[அப்படியே வைத்து விடுகிறான்]
என்ன மணியிருக்கும்?
[கடியாரத்தைப் பார்த்து]
ஓஹோ! நாம் தீர்மானித்த மணியாகிவிட்டது. இனி புறப்பட வேண்டியதுதான்.
[விரைவில் மாறுவேஷம் பூணுகிறான்].
நான் நடப்பது நான் எழுதும் கதைகளிலொன்றைப் போலிருக்கிறது! –
எப்படி முடிகிறதோ இது பார்ப்போம் ---
[மனைவி யருகிற் போய்]
நான் வருகிறேன்.
[முத்தமிடப் போகிறான்]
என்ன பிரயோஜனம்? விழித்துக்கொண்டால் பிறகு இந்த வேஷத்தை
யெல்லாம் காண்பாளாயின் கஷ்டமாய் முடியும்! - காலதாமதம்
செய்யலாகாதினி! -
[ஒரு மூட்டையை எடுத்துக் கொண்டு கதவை மெல்லத் திறக்கிறான்].
வெளியில் என்ன இருட்டா யிருக்கிறது! ஓ! அமாவாசை யல்லவா?
ஒரு விதத்தில் இது நல்லதுதான்.
[வெளியே வீதிக்குப் போகிறான்]
காட்சி முடிகிறது.
-----------------------------------------------------------
இரண்டாம் அங்கம் - முதல் காட்சி
இடம் - சென்னபட்டணத்தில் திருமெஞ்ஞான முதலியார்
வீட்டில் மெத்தையின்மீதிலுள்ள ஓர் அறை.
விலையுயர்ந்த நாற்காலிகள், மேஜைகள், படங்கள் நிறைந்திருக்கின்றன.
விஜயரங்கம் வேலைக்காரன் உடையில் ஒரு மூலையில் நின்றுகொண்டு,
வெற்றிலை கிழித்து ஒரு வெள்ளித் தட்டில் வைத்துக்கொண் டிருக்கிறான்.
வி. வி அடடா! தேதியைத் திருப்பிவைக்க மறந்தேன், அதற்காக இரண்டு
திட்டு கேட்கவேண்டி வரும் இன்னும் -
[தேதியைத் திருப்பி வைக்கிறான்]
இன்னும் நான்கு நாளிருக்கிறதா நமது வருஷம் முடிய? எப்பொழுது அந்த
நான்கு தினமும் தொலையுமென்றிருக்கிறது. ஏறக்குறைய இவ்வுலகிலுள்ள
எல்லாவித கஷ்டங்களையும் இந்த ஒரு வருஷமாக அனுபவித்துப்
பார்த்தேன். தெருத் திண்ணைகளில் தூங்கினேன், பசியால் களைப்புற்றேன்,
வெயிலிலும் மழையிலும் அடிபட்டேன், எல்லாவித கஷ்டத்தையும்
அனுபவித்தேன்! அவைகளெல்லாம் எனக்கு ஒரு விதத்தில் சந்தோஷத்தையே
தந்தது. இந்த ஒரு வருஷமாக நான் சந்தித்த மனிதர்களும் ஸ்திரீகளுமே
எனக்கு வருத்தத்தை யுண்டு பண்ணினர். உலகம் இவ்வளவு பாழானது என்று
இப்பொழுதுதான் அறிகிறேன். இப்படி யிருக்குமென்று முன்பு நான்
கனவிலும் எண்ணி யிருக்கமாட்டேன். ஒரு மனிதனிடத்திலாவது - ஒரு
ஸ்திரீயிடத்திலாவது- ஏதாவது ஒரு தீமையேனும் - தீய குணமேனும் –இல்ல
திருக்குமா?- இதைத்தானோ நமது பூர்வீகர கலிகாலமென்று கூறினர்? இது
போனாற் போகிறது.-
எவர்களாவது சிறிது நற்குணமுடையவர்களாக இருந்தால்,அவர்கள்
முன்னுக்கு வருவதாகக் காணோம்! அவர்களேல்லாம் வறிஞர்களாயும்
புகழற்றவர்களாயும் காலம் கழிக்கின்றனர். தர்மம் தலை யெடுக்கக்
காணோமே! பாபமே மேலுக்கு வருகிறது. பாபிகளே விர்த்தி யடைகின்றனர்.
துர்க்குணமும், பாபமும் எங்கு செறிந்திருக்கிறதோ, அங்கேயே ஐஸ்வரியமும்,
உலகத்தின் புகழும் நிறைந்திருக்கிறது! இப்படிப்பட்ட புகழைக் கருதியோ
திருவள்ளுவர் "தோன்றிற் புகழொடு தோன்றுக" என்று எழுதினார்! இதைப்
பெறுதலைவிட நான் பிறவாதிருத்தலே மேலாகும். இவ்வுலகம் இப்படிப்பட்ட
தென்று இப்பொழுதுதான் உண்மையில் அறிகிறேன்! சீ! என்ன உலகம்!
என்ன செல்வம்! என்ன புகழ்! -- நான் இவ் வொரு வருஷமாக
அனுபவித்ததையெல்லாம் எழுதினால் நல்ல கதையாகும். கட்டுக் கதையில்
நான் எழுதுவதைவிட நான் கண்ணாரக்கண்டது அதிக விந்தையாயிருக்கும்.
இந்த நான்கு தினங்களையும் இவ்விடம் ஒழித்துவிட்டு நமது ஊருக்குப்
போனவுடன் இதையே ஒரு புஸ்தகமாக எழுதவேண்டும். நான் இதுவரையிற்
பட்டதெல்லாம் எனக்குப் பாரமாகத் தோற்றவில்லை. இந்த நான்கு
தினங்களையும் இந்தப் பாழும் எஜமானனிடம் எப்படி கழிக்கப்போகிறோ
மென்பதே பெருங் கவலையா யிருக்கிற தெனக்கு! நற்குணமுடையவர்க
ளெல்லாம் நசிக்க, இப் பாழும் பாபி சுகமாய் சகல சம்பத்துகளுடன்
வாழ்வதைப் பார்க்குமிடத்து, பரமேஸ்வரன் என்று ஒருவனிருப்பதாக
நான் எவ்வாறு நம்புவது! ஏதாவது தீயகுண மில்லாதிருக்க வேண்டுமே
இவனிடம்! இவனது சிற்றப்பாவை விஷம் கொடுத்துக் கொன்றே, இவன்
இப் பெருஞ் செல்வத்தை யெல்லாம் பெற்றதாக ஜனங்கள் கூறுவது,
உண்மையாகத்தானிருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். தயை யென்பது
இவனது பெரிய உடலில் எங்கேயாவது ஒரு அணுவளவேனும்
ஒளித்துக்கொண்டாவது இருக்குமா என்று நானும் பார்த்து வருகிறேன்
இத்தனை தினங்களாக! இப்படி யிருந்தும், இவன் என்ன துன்பம்
அனுபவிக்கிறான்? எல்லாச் செல்வங்களுடன், மனைவி மக்களுடன்,
சுகமாய் வழ்ந்து வருகிறான்! பாபிகளுக்குத் தான் இப் பாழும் உலகம்!
நமது பெரியோர்கள் முற்காலத்தில் இவ்வுலக வாழ்வை வெறுத்ததற்குக்
காரணம் இது தான் போதும்--
அன்னபூரணி கதவின் வழியாகத் தலையை நீட்டுகிறாள்.
அ. [மெல்லிய குரலுடன்] ஐயா, எசமான் சாப்பிட்டாச்சுதுங்களா?
வி. அம்மா! வந்தீர்களா மறுபடியும் நீங்கள்! ஐயோ! உங்களுக்கு எத்தனை
தரம்தான் சொல்வேன்! நீங்கள் என்ன கேட்டபோதிலும் அவர் மனம்
கரையப் போகிறதில்லை. எல்லாம் வட்டியுடன் சரியாகக் கொண்டு
வந்திருக்கிறீர்களா பணமெல்லாம்?
அ. ஏறக்குறைய எல்லாம் கொண்டு வந்திருக்கிறேன் - ஒரு
பன்னிரண்டு ரூபாய்தான் குறைகிறது-
வி. ஐஐயோ! ஒரு காசும் குறைந்து வாங்கிக் கொள்ள மாட்டாரே அவர்!
நீங்கள் என்ன அழுது கேட்டபோதிலும் பிரயோஜன மில்லை. ஒரு காசு
குறைவாகக் கொண்டு வந்தாலும், உள்ளேவிடக்கூடாதென்று எனக்கு
கட்டளை யிட்டிருக்கிறாரே-- நீர்தான் நேற்றைத்தினம் அதைக் கேட்டீரே.
அதோ சாப்பிட்டுவிட்டு கையலம்பிக் கொள்கிறார்போ லிருக்கிறது.
தயவுசெய்து இங்கிராதேயும் - பிறகு இங்கே உம்மை உள்ளே விட்டதற்காக
எனக்கு இரண்டு திட்டுதான் லாபம்! வீணாக எனக்கும் ஏன் கஷ்டம்
வைக்கிறீர்கள்? கொஞ்சம் தயவுசெய்து போய் விடுங்கள். --
அ. அப்பா, உன் முகவாய்க்கட்டையைப் பிடித்துக் கொள்ளுகிறேன்.
கொஞ்சம் நீயாவது என்மீது பச்சாத்தாபப் படலாகாதா? என்னைத்
துரத்திவிடாதே அவர் வந்தவுடன் அவர் காலில் வீழ்ந்தாவது கடைசி
முறை கேட்டுப் பார்க்கிறேன். அவ்வளவு தயவுசெய் நீ--போதும்.
வி. சரி-நடக்கப்போகிற தென்னமோ எனக்குத் தெரியும்--
அப்புறம் உங்கள் பாடு.--
திருமெஞ்ஞான முதலியார் ஏப்பமிட்டுக்கொண்டு வருகிறார்.
அவருக்குப் பின்னாக மனோன்மணி வருகிறாள்.
தி. அடே முத்தா!--
வி. இதோ வந்தேன்.
தி. எங்கேயடா வெற்றிலை?--
[சாய்வு நாற்காலியின் மீது சாய்ந்துகொள்ளுகிறார்}.
வி. இதோ.
தி. அடே! இவளை யாரடா இங்கே உள்ளேவிட்டது?-- என்ன அன்னபூரணி,
கொண்டுவந்தாயா ரூபாயெல்லாம் சரியாக?
அ. இதோ--கொண்டு வந்திருக்கிறேன்.
தி. ஆத்தெரி!-- இப்பொ என்னமாடி கிடைச்சுது! நேற்று என்ன பாசாங்கு
போட்டாய் மாயக்கள்ளி!--கொண்டு வந்தததற்குமேல் ஒருகாசும் கிடையாது
என்று ஒரே அழையாய் அழுதாயே, இப்போது அந்த மிகுதிப்பணம் எப்படி
கிடைச்சுது?--எண்ணிவை சரியாக மேஜையின்மேல்--யாரை நம்பினாலும்
நம்பலாம் இந்த கம்மினாட்டிகளை மாத்திரம் நம்பக்கூடாது.
அ. ஐயா, என்பேரில் கோபித்துக்கொள்ளாதீர்கள்—இதோ எரிகிறானே
சூரியபகவான் அவனறியச் சொல்லுகிறேன், இந்த மிகுதிப் பணம் என்
கூறைப் புடவையை விற்றுக்கொண்டு வந்தேன்.
[ரூபாய்களை எண்ணிக் குவியல் குவியலாக வைக்கிறாள்].
தி. [வெற்றிலையை விஜயரங்கம் கொடுக்க வாங்கி போட்டுக்கொண்டே]
ஏன், அதை முன்பே செய்திருந்தால்?
அ. எங்களவர்கள் மணப் புடவையோடு ஸ்மசானத்துக்கு போகவேண்டும்
என்று சொல்வார்கள், அதற்காக வைத்திருந்தேன்.
தி. இப்பொழுது மாத்திரம் என்னமாக விற்றாய்?
அ. பெற்ற வயிறு கேட்கவில்லை - அதற்காகத்தான்- இல்லா
விட்டால் அதை விற்பேனா?
தி. அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?
அ. உங்களுக்குத் தெரியாததல்ல - எனக் கிருக்கிறது ஒரே பெண் –
மற்றதெல்லாம் வாரிக் கொடுத்துவிட்டு அனாதையா யிருக்கிறேன்.
அந்த பெண்ணுக்கு இரண்டு வருஷமாக ஒருவித க்ஷயம். அவள்
இப்போழுது ஏழுமாதமாய் கர்ப்பமா யிருக்கிறாள். வயித்தியர்கள் இந்த
கண்டம் தப்புவது அசாத்தியம் என்கிறார்கள். இந்த கம்மலை மீட்டுக்
கொண்டுபோய் - அவள் காதில் போட்டு, அவளுக்குப் பூ முடித்துப்
பார்க்கவேண்டும் என்று பதறுகிறது - இந்தப் பாழும் வயிறு! - அவளையும்
வாரிக் கொடுப்பதிற்கு முன்பாக! [அழுகிறாள்]
தி. அழுகிறது அப்புறம் இருக்கட்டும் - எத்தனை ரூபாயை வைத்தாய்?
எதோ குறைகிறாற் போலிருக்கிறதே! -
அ. ஐயா! ஐயா! - ஒரு பன்னிரண்டு ரூபாய்மாத்திரம் குறைகிறது! –
அது மாத்திரம் பெரிய மனசு பண்ண வேண்டும் - உங்கள் காலைப்
பிடித்து வேண்டிக்கொள்ளுகிறேன்.
தி. அப்படியா சமாசாரம்! - விடு காலை!
[காலை உதறிக்கொண்டு]
கழுதை முண்டை! நான் நேற்றைத்தினமெல்லாம் கிளிப்பிள்ளைக்குச்
சொல்லுகிறதுபோல் சொல்லியும் - குறைவாகக் கொண்டு வருகிறாயா!
அந்த பன்னிரண்டு ரூபாயையும் முன்னே வைக்கிறாயா என்ன?
அ. ஐயோ! என்னிடத்தில் அதற்குமேல் அரக்காசு மில்லை. ஐயா!- ஐயா!
பன்னிரண்டு ரூபாய்தானே! லட்சாதிபதி உங்கள் கால் தூசுக்குக் காணுமா?
அதை மாத்திரம் மன்னித்துவிடலாகாதா?
தி. ஊம் ஊம்! அதெல்லாம் உதவாது! இந்த மாயாக் கள்ளித்தனமெல்லாம்
எனக்கு நன்றாய்த் தெரியும். போய் எப்படியாவது கொண்டுவா அந்த
பன்னிரண்டு ரூபாயையும் திருட்டு முண்டை!
அ. ஈஸ்வரா! ஈஸ்வரா!- ஐயா, என்னிடத்தில் அந்த ரூபாய்க்கு ஏதாவது
வழி யிருந்தால் உங்களிடம் இந்த வார்த்தை யெல்லாம் கேட்பேனா? –
கொஞ்சம் மனசு இரங்குங்களேன்? சாகக் கிடக்கிறாள் என் பெண் -
அவள் முகத்தையாவது பார்த்து இந்த பன்னிரண்ட ரூபாயை மன்னித்து
விடுங்களேன்?
தி. பழய கதையை மறுபடியும் ஆரம்பித்தாயா? - ஏனடா மடையா,
சரியாக ரூபாயெல்லாம் கொண்டு வராவிட்டால் இங்கே உள்ளே
விடக்கூடா தென்றேனே, ஏன் இவளை விட்டாய் இப்பொழுது?
தடிக்கழுதை! உனக்கென்ன உதை கேட்கிறதா என்ன?
அ. ஈஸ்வரா! ஈஸ்வரா! - ஐயா, அந்த பிள்ளையானண்டான் பேரில்
கோபித்துக்கொள்ளாதீர்கள் - இந்த ஒரு வார்த்தை மாத்திரம் தயவு
செய்து கேளுங்கள் - இந்த முன்னூற்று எண்பத்திரண்டு ரூபாயையும்
நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் - அந்த கம்மலை இரண்டு நாள்
இரவலாகக் கொடுங்கள். அவள் காதில் போட்டுப் பார்த்துவிட்டு –
கொண்டுவந்து கொடுத்துவிடுகிறேன். - பிறகு எப்பொழுது அந்த
பன்னிரண்டு ரூபாய் கிடைக்கிறதோ அப்பொழுது கொண்டுவந்து
கொடுத்து நகையை மீட்டுக் கொண்டு போகிறேன்.
தி. ஓகோ! அதுவரைக்கும் என் வட்டி நஷ்டமாகிறதா? அந்த நஷ்டத்தை யார்
கொடுக்கிறது? உன்னோடு வாதாடிக்கொண்டிருக்க எனக்கு நேரமில்லை.
உன்னை கடைசிமுறை கேட்கிறேன். அந்த பன்னிரண்டு ரூபாயையும்
முன்னே வைக்கிறாயா இல்லயா? எங்கேயாவது முடித்துவைத்திருப்பாய்.
அ. ஐயோ! இல்லையே!-
தி. ஆனால் இதை வாங்கமாட்டேன் இப்போழுது - எல்லாம்
மொத்தமாய்க் கொண்டுவா போ!
[ரூபாயைக் கீழே தள்ளி]
அ. ஆ! ஆ!- இதுவும் என் விதியா!
[ரூபாய்களைப் பொறுக்கிக்கொண்டு]
சூரிய பகவானே! இதையும் நீ பார்த்துக் கொண்டிருக்கிறாயே அப்பா!
தி. ஏ! கழுதைமுண்டை! என்ன அதிகமாகப் பேசுகிறாய்? பேசாதே வாயை
மூடிக்கொண்டு உன் ரூபாயை எடுத்துக்கொண்டு போ! ஒரு வார்த்தை
பேசினால், கழுத்தைப் பிடித்துத் தள்ளச் சொல்லுவேன்.
அ. [கைகூப்பி வணங்கி] ஐயா! கோபித்துக் கொள்ளாதீர்கள். என்னை
மன்னியுங்கள் - ஏதோ வாய்தவறிச் சொல்லி விட்டேன்! உங்கள் பேரில்
தவறில்ல. போன ஜன்மத்தில் நான் யார் வயி றெரியும்படி என்ன பாபம்
செய்தேனோ அதை நான், இந்த ஜன்மத்தில் அனுபவிக்கிறேன்.
உங்கள்மீது குறை சொல்லி என்ன பலன்? என் தலைவிதி!-
நான் வருகிறேன் ஐயா! [போகிறாள்]
தி. ஒழிந்ததுசனி:-- அப்பா!
[நாற்காலியில் நன்றாய்ச் சாய்ந்து கொள்ளுகிறார்]
வி. [கீழே மூலையில் உருண்டோடிய ஒரு ரூபாயைக் கண்டெடுத்து]
ஐயோ பாபம்! இங்கொரு ரூபாய் இருக்கிறது! இதை விட்டுவிட்டுப்
போய்விட்டார்கள் அந்த அம்மா! இதைக் கொடுத்துவிட்டு வருகிறேன்.
தி. என்னடா மடையா! அகப்பட்டது லாபம் என்றிராமல்
அவள் பின்னால் போய்க் கொடுப்பதா?
வி. எஜமான் மன்னிக்கவேண்டும்-இதோ வந்துவிட்டேன்.
[வேகமாய் வெளியே போகிறான்]
ம. அப்பா. அந்த நாற்காலியின் கீழ் இன்னொரு ரூபாய்
கிடக்கிற தப்பா.
தி. எடு எடு அதை!
[மனோன்மணி அதை எடுத்துக்கொடுக்க, தன் மடியில் அதை மறைத்து வைத்துக்
கொள்ளுகிறான்]
விஜயரங்கம் திரும்பி வருகிறான்.
தி. ஏனடா, இதற்குள்ளாகவா வந்துவிட்டாய்! என்ன ரூபயைக் கொண்டுபோய்க்
கொடுத்தாயோ அல்லது நான் பார்த்துவிட்டேனே யென்று கொடுப்பது
போலக் கொண்டுபோய், மறைத்து வைத்துக்கொண்டு வந்துவிட்டாயோ?
என்ன கேட்பதற்கு பதில் சொல்லாமலிருக்கிறாய் திருடா?
வி. இல்லை-கொடுத்துவிட்டேன்.
ம. அப்பா, அந்த ரூபாயையும்-
தி. சத்!-பேசாமலிரு-அந்த சுதேசமித்திரனைப் படித்து ஏதாவது முக்கியமான
சமாசாரம் இருக்கிறதா சொல்- அடே! தடிக்கழுதை! கொஞ்சம் விசிறு.
[விஜயரங்கம் விசிறுகிறான்]
ம. [பத்திரிகையைப் பிரித்துக்கொண்டே] அவ்வளவு அழுதாளே
பாவம்! அப்பா, அந்த கம்மலை இரண்டுநாள் இரவலாகக்
கொடுத்தால் என்ன கெட்டுப்போகிறது அண்ணா?
தி. மனோன்மணி! இந்த விஷயங்களி லெல்லாம் நீ தலை நுழைத்துக்
கொள்ளக் கூடாதென்று எத்தனை முறை உனக்குச் சொல்லியிருக்கிறேன்-
உன் வேலையைப்பார் -படித்துப்பார்த்து ஏதாவது விசேஷமிருந்தால்
சொல்-யாராவது செத்தார்களா பார்--அடே! தூங்கு மூஞ்சி!-விசிறு நன்றாக.
ம. அப்பா! அப்பா- [படித்துக்கொண்டே]
"திருநெல்வேலி பெருஞ் ஜனச்சேதம்"
தி. என்ன என்ன! படி படி!
ம. [படிக்கிறாள்] "திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்குப் புதிதாய்ப்
போடப்பட்ட றெயில் மார்க்கமாய் கிர்த்திகையின்பொருட்டு, வெகு
ஜனங்களுடன் இன்று காலை ஆறு மணிக்குப் புறப்பட்ட ஸ்பெஷல்
வண்டி, இடையில் ஒரு பாலம் ஒடிந்து, வண்டிகளெல்லாம் ஒன்றின்மேல்
ஒன்றாய்விழ, உயிர்ச்சேதத்தையும் பொருட் சேதத்தையும் உண்டுபண்ணி
விட்டது. இதுவரையில் அகப்பட்ட கணக்கின்படி இருபது பெயருக்குமேல்
இறந்துபோய் விட்டிருக்கிறார்கள்-காயம் பட்டவர்கள்- நூறு
பெயருக்குமே லிருக்கும்"
தி. அடடா! இறந்துபோனவர்கள் பெயர் என்னவாகிலும் இருக்கிறதா பார்!-
நம்முடைய கடன்காரன் எவனாவது இருக்கப் போகிறான் அதில்!
ம. [படித்துக்கொண்டே] "இறந்தவர்களுக்குள் அடையாளம் கண்டுபிடிக்கப் –
பட்டவர்கள், வக்கீல் காந்திமதியா பிள்ளையும் அவர் மனைவியும்,
மிட்டாதார் சோமசுந்தர செட்டியார், மேற்படியாருடைய இரண்டு
பிள்ளைகள், சென்னப்பட்டணம் முருகேச செட்டியார், பாளையங்கோட்டை
குமாரசாமி முதலியாரும் அவருடைய தாயாரும்- காயம் பட்டவர்கள்-"
தி. போ!-செத்துப்போனவர்களில் நமக் கொருவரும் பாக்கியில்லை.
ம. அப்பா அப்பா! இதைக்கேளுங்கள்-
[படித்துக்கொண்டே]
"இதில் ஓர் ஆச்சரியம்-ஒடிந்த வண்டியின் சாமான்களையெல்லாம்
எடுத்துக்கொண்டு வரும்பொழுது-ஒரு சிறு காயமும் படாமல் ஒரு
ஸ்திரீயும் அவளது மடியில் ஒரு பச்சைப் பாலகனும், கண்டெடுக்கப்-
பட்டார்கள். விசாரித்ததில் அவர்கள் "தோன்றிற் புகழொடு தோன்றுக"
முதலிய சிறந்த புஸ்தகங்கள் இயற்றிய, தற்காலம் தேசாந்தரம் போயிருக்கும்
நூலாசிரியராகிய திரு நெல்வேலி விஜயரங்கம்பிள்ளையின் மனைவியும்
குழந்தையும் என்று கண்டறிந்தோம்"
தி. போகட்டும்!-அந்தமட்டும், அவன் தன் மாமன் பட்ட கடனையெல்லாம்
நமக்குக் கொடுத்துவிட்டான்-அடே! விசிறுவதில் ஒய்யாரம் என்ன?
பளுவில்கீழே விழுந்து விட்டதோ? எடு தூங்குமூஞ்சிக்கழுதை!-இப்படிக்
கொண்டுவா அம்மா, பத்திரிகையை.
[மனோன்மணி பத்திரிகையைக் கொண்டுவந்து கொடுக்கிறாள்]
அடே! விளக்கைக்கொண்டுவா இப்படி.
[விஜயரங்கம் விளக்கை எடுத்துக் கொண்டு வரும்பொழுது, கை நடுக்கமுற்று
கீழே விட்டுவிட அது உடைந்து போகிறது]
தடிக்கழுதை! [விஜயரங்கம் கன்னத்தில் புடைக்கிறான்]
அவ்வளவு அஜாக்கிரதையா?
வி. அப்பா! - [பல்லைக் கடித்துக் கொண்டு]
பரஞ்சோதி! பரஞ்சோதி!
தி. அது யாரடா அவன் பரஞ்சோதி? உன் பரஞ்சோதி, உடைந்துபோன
விளக்கை வாங்கிக்கொண்டு வந்து வைக்கப்போகிறானா? இந்த
நஷ்டத்தைக் கொடுக்கப் போகிறானா?
வி. இல்லை-புத்திவந்தது!--இந்த நஷ்டத்தை நானே
கொடுத்துவிடுகிறேன்.
தி. எங்கிருந்தடா கொடுக்கப்போகிறாய்! இந்தமாச சம்பளத்தின்
வாயில் மண்தான்!
வி. எசமான், கோபித்துக் கொள்ளவேண்டாம்--இந்த மாச
சம்பளத்தை அப்படியே எடுத்துக் கொள்ளுங்கள்.
தி. அப்புறம்?-நீ சாப்பாட்டிற் கென்ன செய்வாய்? ஏதாவது திருடுவாயோ?-
உனக்குக் கொழுத்துப்போ யிருக்கிறது, அதுதான் இவ்வளவு அதனப்
பிரசங்கித்தனமாய்ப் பேசுகிறாய்- உன்னை வேலையினின்றும்
நீக்கிவிடுகிறேன் பார்.!
வி. எஜமானுக்கு அந்த கஷ்டம் வேண்டியதில்லை--நானாக
ராஜீனாமா கொடுத்துவிடுகிறேன்.
தி. என்னடா அது! உனக்கென்ன பயித்தியமா பிடித்திருக்கிறது?
வி. ஒருவித பயித்தியம்தான்-என்று நினைக்கிறேன்.
தி. ஆனால் இந்த க்ஷணமே போ வீட்டைவிட்டு?
வி. உத்தரவுபடி. [வீட்டினுள்ளே போகப்பார்க்கிறான்]
தி. உள்ளே எங்கேயடா போகப் பார்க்கிறாய்?
வி. என் மூட்டையொன் றிருக்கிறது-அதை எடுத்துக்
கொண்டு போக.
தி. ஓகோ! அதெல்லாம் உதவாது-வா இப்படி-இப்பொழுது நீயாக நின்று
போகிறாய்-ஒரு மாசம் நோட்டீஸ் கொடுக்காமல்- ஆகவே உனக்கு
இந்த மாச சம்பளம் கிடையாது சட்டப்படி-ஆகவே அந்த ஒடிந்த
விளக்கின் விலையைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு அந்த
மூட்டையை யெடுத்துக் கொண்டுபோ.
வி. அப்படியா சட்டம்?-அப்படியே-பார்க்கிறேன்-
[விரைந்து வீட்டிற்கு வெளியே போகிறான்]
தி. இவனுக்கென்ன உண்மையில் பயித்தியம் பிடித்திருக்கிறதா என்ன? –
இந்தா அம்மா-மனோன்மணி-அவன் மூட்டையை எங்கே வைத்திருக்கிறான்
தெரியுமா உனக்கு?
ம. தெரியும் அண்ணா-இரண்டாம் கட்டில் விளக்குகள் வைக்கும் அறையில்.
தி. அதைப்போய் எடுத்துவா இப்படி-
ம. ஏன் அண்ணா?
தி. சொன்னபடி செய் முன்பு.
[மனோன்மணி உள்ளே போகிறாள்]
இவன் வந்தது முதல்-ஏதோ எனக்கு சந்தேகமாகவே இருந்தது-இவன்
பேசுவதும் நடப்பதும் சாதாரண வேலைக்காரர்களைப்போல் இல்லை-
ஒருவேளை நம்மிடம் எதாவது திருடவேண்டி-எங்கே என் சொத்துகள்
யெல்லாம் வைத்திருக்கிறேன் என்று கண்டுகொண்டு போக வந்தவனோ?-
மனோன்மணி ஒரு சிறுமூட்டையை எடுத்துக்கொண்டு மறுபடியும் வருகிறாள்.
ம. இதோ அப்பா-வேலையிலிருந்துதான் தள்ளிவிட்டீர்களே-இந்த
மூட்டையை அவனுக்குக் கொடுத்து விடுகிறதுதானே அப்பா?
தி. [மூட்டையை அவிழ்த்து] எல்லாம் கொடுக்கத் தெரியுமெனக்கு-
புஸ்தகங்கள்!-தேவாரத் திரட்டு!-தாயுமான சுவாமிகள் பாடல்!-
பட்டினத்துப் பிள்ளையார் சரித்திரம்-பகவத்கீதை மொழி பெயர்ப்பு!-
"தோன்றிற் புகழொடு தோன்றுக"-
[உள்ளே முதல் பக்கத்தைத் திருப்பிப் பார்த்து]
அடடா!-இப்பொழுது தெரிகிறது!
ம. என்ன அப்பா?
தி. ஒன்று மில்லை. [கவலையோடு நிற்கிறான்]
காட்சி முடிகிறது.
--------------
இரண்டாம் அங்கம் - இரண்டாம் காட்சி
இடம்-சென்னப்பட்டணம் கடற்கரை யோரம்.
சமுத்திர ஸ்நானத்திற்காக ஜனங்கள் ஓர் பாதை வழியாக ஏராளமாய்ப்
போய்க்கொண் டிருக்கின்றனர். சந்திரன் சற்றேறக்குறைய பூரண கிரஹணத்தினால்
பீடிக்கப்பட்டு இருண்டிருக்கிறது. பாதையின் ஒருபக்கமாக கரிகிருஷ்ண நாயக்கர்
என்னும் வயோதிகன் ஒரு பிட்டீலைக் கையில் வைத்துக்கொண்டு வாசித்துக்
கொண்டும் பாடிக்கொண்டுமிருக்கிறான். அவன் எதிராக ஒரு வெள்ளைத்துணி
பரப்பப் பட்டிருக்கிறது. அதன் ஒரு மூலையின்பேரில் ஒரு தகர விளக்கு எரிந்து
கொண் டிருக்கிறது. சில ஜனங்கள் அவனைச் சுற்றிலும் நின்றுகொண்டு அவன்
பாட்டைக் கேட்டு, பரப்பியிருக்கும்துணியின்மீது தம்பிடி, பைசா,போடுகின்றனர்.
ஒரு போலீஸ் கான்ஸ்டபில் அருகில் சுற்றிக்கொண் டிருக்கிறான்.
மற்றொருபுரம் ஜனசந்தடி யில்லாதவிடத்தில் விஜயரங்கம் தன் முகத்தைத்
துணியால் பாதி மூடியவண்ணம் சந்திரனை நோக்கி நிற்கிறான். அவனுக்குப்
பின்னால், சற்று தூரத்தில் ராஜேஸ்வரி சாதாரண ஆடை யுடுத்தி முக்காடிட்டு ஒருவருமறியாதபடி ஒதுங்கி நின்று விஜயரங்கத்தை உற்றுப் பார்த்தவண்ணம்
அசைவற்று நிற்கிறாள்.
வி. [தனக்குள்] சற்று முன்பாக பூரண கலைகளுடன் அழகாய் விளங்கிய
சந்திரன் இப்பொழுது கிருஹணத்தினால் பீடிக்கப்பட்டு என்ன இருண்டு
காட்டுகிறான்! இவ்வுலகில் சுகமும், புகழும், வாழ்வும், இத்தன்மையதுதான்
போலும்! இவைகளின் பொருட்டு, ஒருவன் கஷ்டப்பட்டு கல்வி கற்பானேன்?
தன் ஐம்பொறிகளையும் அடக்க தர்மவழியில் நடப்பானேன்?
நற்குணமுடையவனா யிருப்பானேன்? இதனால் நான் பெற்ற பலன்?
இக்கதி யடைந்ததே!-என் சொந்த மனைவி!-அவளது குறைகளையெல்லாம்
பொறுத்து என்னாலியன்ற அளவு அன்பு பாராட்டி வந்த -என் சொந்த
மனைவியே- எனக்குத் துரோகி யாயினளே!-நான் என்ன பாபமிழைத்தேன்
இக்கதிக்கு வருவதற்கு? வேறு ஜன்மத்தில் இழைத்த பாபத்தின் பலனோ இது?
ஐயோ! அப்படி எண்ணுவதற்கு என் அறிவிற்கு ருஜு ஒன்றும் அகப்பட
வில்லையே! அப்படி யிருக்குமாயின் அப்பாபம் இழைக்கும்படி என்னை
யேன் படைத்திருக்கவேண்டும் அந்த ஈஸ்வரன்?சரி! இந்த கேள்விக்குப்
பதில் அந்த ஈசனைத்தான் கேட்கவேண்டும்! உடனே- இவ்வுடலாகிய
கவசத்தைவிட்டுப் பிரிந்து அவரிடம் போய்க் கேட்டுப் பார்ப்போமே!
தற்கொலை புரியலாகாதென்று என்னுள்ளே ஏதோ ஒன்று க்ஷணத்திற்கு
க்ஷணம் தடுக்கிறதே!-இல்லாவிடின் அப்பொழுதே என் வேலையையும்-
என்னைப் பீடிக்கும் இவ்வுலகமென்னும் துக்கத்தையும்-முடித்திருப்பேன்
க்ஷணத்தில்! சமுத்திர ஸ்நானம் செய்யும்பொழுது ஏதோ மூழ்கிவிட்டான்
என்று உலகம் தீர்மானித்துவிடும், சுலபமாய் முடிந்து விடும்-அப்படி
இதனுடன் எல்லாம் முடிவதானால்- நான் ஒரு க்ஷணமும் யோசிக்க
வேண்டியதில்லையே! இதனுடன் எல்லாம் முடியும் என்பது என்ன
நிச்சயம்? முடிந்தால் நலமே-முடியாவிட்டால்? மற்றவைகளோடு
தற்கொலை புரிந்த இப் பெரும் பாப மொன்றையும் அனுபவிக்க
வேண்டுமன்றோ மறு பிறப்பில்!- இப்படி யோசித்துக்கொண்டிருப்பேனாயின்
எனக்குப் பித்தம் பிடித்துப் போம்! அப்படிப் பித்தம் பிடித்து
இப்பாழுலகில் பலர் நகைக்க உழல்வதைவிட, இவ் வுடலை விட்டுப்
பிரிந்து, அதனால் வரும் பாபத்தை மற்றொரு பிறப்பில் அனுபவித்தலே
மேலாகும்-அப்பொழுதும் இக்கதி வாய்த்தாலோ?-
க. [உறத்த சத்தமாய்] ஐயா ஐயா! ஐயா! ஐயா! அறுக்காதைங்க!
அறுக்காதைங்க ஐயா!
வி. யார் அது? பாபம்! [கும்பலருகில் போகிறான்]
போ-கா. வழியிலே பாடக்கூடாதிண்ணு எத்தனிதரம் சொல்ரது?
எடுத்தும்போ உம் பிட்டீலெ!
க. அய்யோ! ரெண்டு தந்தி அறுந்து போச்சே! -பன்னெண்டு அணா போச்சு!
ஐயா, சும்மா போகச்சொன்னா போவமாட்டேனா? ரெண்டு தந்தியெ
அறுத்தூடணூமா?
போ.-கா. அடே! என்னா அதிகமா பேசரே! இன்னம் அதிகமா
பேசனா அந்த மீதி தந்தி ரெண்டும் பூடும்!-
[கும்பலைப் பார்த்து]
என்னா ஐயா! கும்பலிங்கே! போங்க எல்லாம்!
[கும்பல் கலைகிறது; கான்ஸ்டபில்
ஒரு பக்கமாகப் போகிறான்]
க. அரை மணி நேரமா பாடி, ஒண்ணரை அணா வந்தது! இந்த பாவிக்கு
ரெண்டணா எங்கிருந்து நான் கொடுப்பென்!-தலைவிதி! தலைவிதி!
நானு எங்கே இண்ணு போவே? ரெண்டு தந்தி! பன்ரெண்டணா! பாவி! பாவி!
வி. ஏன் ஐயா? இரண்டணாவா கேட்டான்?
க. ஆமாம்-கையிலே இருந்தாலு அழுதிருப்பே அவனுக்கு! இப்போ-
பன்ரெண்டணா நஷ்டமாச்சி-இனி வரும்படி வாயிலேயும் மண்ணு விழுந்தது!-
வி. கொஞ்சம் பொறும் ஐயா-இதோ வருகிறேன்.
[ஒரு புறமாகப் போய் போலீஸ் கான்ஸ்டபிலுடன் ஏதோ பேசுகிறான்.]
போ-கா. [திரும்பி வந்து] ஏ! கிழவா! போனால்போகிது-ஒரு
பக்கமாக உக்காந்துகினு பாடுபோ-[போய்விடுகிறான்]
க. நான் என்னாத்தெ பாட்ரது! தந்தியேதான் அறுத்துத் தொலைச்சியே பாவி!
வி. ஐயா பெரியவரே, அந்த பிட்டீலை இப்படிக் கொடுங்கள் பார்க்கலாம்.
[அதை இரண்டு தந்திகளுடன் சுருதி செய்துகொண்டு]
எனக்குக் கொஞ்சம் வாசிக்கத்தெரியும்-நீங்கள் பாடுங்கள்-நான் வாசிக்கிறேன்.
க. நீ-யாரப்பா நீ?
வி. எல்லாம் அப்புறம் சொல்லுகிறேன்-நீங்கள் பாடுங்கள்.
க. அப்படியே-
[பாடுகிறான்; விஜயரங்கம் வாசிக்கிறான்; ஜனங்கள் மறுபடியும்
கும்பலாகக் கூடுகின்றனர்]
ஒரு மனிதன்: நண்ணா வாசிக்கிறாண்டா இவன்!
மற்றொருவன்: ரெண்டு தந்தியிலே வாசிக்கிறாண்டா!
[அநேகர் பைசா, அரை அணா, இப்படி போடுகிறாரகள்; கடைசியாக
சற்றுதூரமாகவே பின் தொடர்ந்து வந்த ராஜேஸ்வரி ஒரு ரூபாயை
பரப்பியிருக்கும் வஸ்திரத்தில் எறிகிறாள்]
வி. [அதை யெடுத்து] யார் அம்மா அது? -தவறிப் போட்டு விட்டாற்
போலிருக்கிறது!அரை அணா போடுவதற்கு பதிலாக-இருட்டில்
தெரியாமல்- இதோ-வாங்கிக் கொள்ளுங்கள்.
ரா. மெல்லிய குரலுடன்] வேண்டாம்-பெரிதல்ல-நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்-
க. அம்மா! நீங்க மஹராஜியா யிருக்கணும்!
[ராஜேஸ்வரி விரைந்து ஒரு புறமாய்ப் போய்விடுகிறாள்]
ஒரு மனிதன்: அது யார்டா அது, இந்தப்பாட்டுக்கு ஒரு ரூபா கொடுத்தவ!
மற்றொருவன்: ஏண்டா கொடுக்கக்கூடாது? எங்கிட்ட ரூபாயிருந்தா
நானும் கொடுத்திருப்பேனே!-ஐயா, அந்த தாயுமானவர் பாடல்லே
இன்னொரு பாட்டு-
[விளக்கு அவிந்து போகிறது]
அடடா!-இந்தாங்கையா தீக் குச்சி; கொஞ்சம் கொளுத்திகுங்கோ!-
க. [விளக்கைக் கொளுத்தப்பார்க்க, அது மறுபடியும் அவிந்து போகிறது]
ஓகோ! எண்ணெ ஆயிபூட்டாப்போலே யிருக்குது-என் அதிஷ்டம்!
ஐயா, கொஞ்சம் மன்னிச்சிக்குங்கோ-என் தொண்டையும் கட்டிப்போச்சி
[கும்பல் விரைவில் கலைகிறது; கரிகிருஷ்ண நாயக்கன் துட்டையெல்லாம்
பொறுக்கி எண்ணுகிறான்]
அப்பா, நீ யாரு இப்பவாவது சொல்லமாட்டாயா?
வி. தாதா, அதென்னத்திற்கு உமக்கு?-எவ்வளவு மொத்தம் சேர்ந்தது தாதா?
க. ஒரு ரூபாய் பதினாலரையணா-அப்பா, இந்தா, இந்த
ஒரு ரூபாயெ நீ எடுத்துக்கொ-
[கொடுக்கப் பார்க்கிறான்]
வி. [தடுத்து] தாதா, இதற்காகவா கேட்டேன் என்று எண்ணினீர்கள்?-
எனக்கு ஒரு காசும் வேண்டாம்- நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்-
வி. அப்பா! நீயார்?
வி. அதுஏன் உங்களுக்கு?
க. அப்பா அப்படியல்ல, நீ செய்தபெரிய உபகாரத்துக்கு, நான் என்னா
செய்யப்போரே?-நீ இல்லாவிட்டா இண்ணைக்கு அந்த ஒண்ணரை
அணாவோட அழுது கொண்டே வீடு போய்ச் சேர்ந்திருப்பே! உன்னாலேதா
இந்த பணமெல்லாம் வந்தது-ஒரு ரூபாய்க்கு மேலே எவ்வளவு ஓணும்
இண்ணு தோணனாலும் எடுத்துக்கோ- உன் இஷ்டப்பிரகாரம் –எனக்கு
சாதாரணமா நாலணா ஆப்பிடும்-இந்த பன்னெண்டணா அறந்துபோன
தந்திக்காக எடுத்து வைச்சே-மீதி ஒரு ரூபாயெ உனக்குக் கொடுக்கரே-
என்மேலே கோவம் வாணாம்.
வி. தாதா, எனக்கு உங்கள்மீது கொஞ்சமும் கோபமில்லை. எனக்கு
ஒருகாசும் வேண்டாம். நீங்கள் மறுபடியும் துட்டை வாங்கிக் கொள்ளும்படி
கேட்டால்தான் கோபம்வரும்.-
க. அப்பா, அது எனக்கு நியாயமில்லெ-ஏதாவது வாங்கிக்கொள்- என் மனசு
திர்ப்திக்காவது."காலத்தினாற் செய்த உதவி, சிறிதெனினும் ஞாலத்தினும்
மாணப் பெரிது" இண்ணு படிச்சிருக்கே! நீ செய்த உதவிக்கி உனக்கு என்ன
கொடுத்தாலும் தீராது-நானு உனக்கு ஒண்ணும் செய்யாப்போனா பாவம்-
அந்த ரொணம் வேண்டாம் எனக்கு-
வி. அடடா-உம்-ஆனால்,தாதா,நான்ஒரு உதவி கேட்
கிறேன் செய்கிறீர்களா?
க. கேளப்பா, என்னாலே முடியுமானா, மனசார செய்யரெ.
வி. ஆனால்-முதலில் என்னை யார் என்று கேட்காதீர்கள்.
க. இல்லையப்பா-உன் இஷ்டப்படி.
வி. இரண்டாவது - நீர் ஏதோ படித்தவராகத்தொணுகிறது; பிச்சை
யெடுக்கும்படி யாக இந்த கதிக்கு - எப்படி வந்தீர்? - உண்மையைக் கூறும்.
க. ஐயோ! அதை யேன் கேக்கரே? - கேட்டு வருத்தப் படப்போரே –
அவ்வளவுதான்.
வி.உங்களுக்கு வருத்தத்தை தருவதானால் - சொல்லவேண்டாம்.
க. எனக்கொண்ணும் வருத்தமில்லெ - நீ கேட்டு வருத்தப்
படப்போராயெ இண்ணே யோசிச்சே. பெரிதல்ல சொல்லும்கள்.
க. நீ நெனைச்சபடி நான் கொஞ்சம் அந்தஸ்திலே இருந்தவன்தான்.
அப்பொ வேடிக்கையா இந்த பீட்டில் எல்லாம் கர்றுக்கொண்டேன்.
மொதல் தாரம் தப்பிப்போக இரண்டாந்தரம் ஒரு பாவியெக் கட்டிக்கினேன்.
அவள் நான் பென்ஷன் வாங்கிகின பிற்பாடு, என் சொத்தையெல்லாம்
எடுத்துக்கினு ஒரு நாள் - என் வேலைக்காரனோடே நடந்துவிட்டாள்-
தான் பெத்த ஒரு பொண் கொழந்தையெ விட்டுட்டு- வெளியே சொன்ன
வெக்கக்கேடிண்ணு - வாயெ மூடிகினு பேசாம லிருந்தூட்டேன்.
அந்த கொழந்தையெ நானா வளர்த்து வர்ரேன் கஷ்டப்பட்டு. ராத்திரி
காலத்திலே எங்கேயாவது இப்டி பாடி, தினம் நாலணா சம்பாதிச்சி,
எம்பென்ஷனோடெ சேத்து, அந்த கொழந்தையே காப்பாத்தி, சம்சாரம்
பண்ணிகினு வர்ரேன்.
வி. அந்த குழந்தைக்கு என்ன வயசாகிறது?
க. இப்பொதான் - பத்து வயசாகிறது - இந்த வயசுலே
நான் கை உட்டூட்டா அதுங்கதி என்ன ஆவரது பாவம்!
- அதோ கதிதான்! - அதுக்காவத்தான் இந்த வயசுலெ
நான் கஷ்டப்பட்ரேன் இப்படி - இல்லாவிட்டால் எனக்
கென்னா- எங்கேயாவது அன்னதான் சமாஜத்துக்கு
போனா - அவ்வளவு சாப்பாடு போட்ராங்க-
வி. தாதா- ஒரு கடைசி வேண்டுகோள்- இதை நீங்கள்
மறுக்கவே கூடாது.- கையைப் பிடியுங்கள்-
[தன் மடியிலிருந்து ஒரு பையை எடுத்து ஏழு எட்டு ரூபாயை
கிழவன் கையில் கொட்டி]
இதை அப்படியே எடுத்துக்கொண்டு, திரும்பிப் பாராமல் வீடு போய்ச்
சேருங்கள்! ஒரு வார்த்தையும் இனி பேசவேண்டாம்- நான் வேண்டிக்
கொள்ளுகிறேன்.- அப்பா!-. பார்த்தீர்களா!
க. இல்லை இல்லை - இதோ போகிறேன்- அப்பா, அந்த பரமேஸ்வரன்தா,
உன்னையும் உன் பெண்சாதி பிள்ளைகளையு காப்பாத்தணும்- என் மனசு
குளிர்ந்தது போலே உன் மனசும் குளிர்ந்திருக்க வேணும் எப்பொழுதும்!
[போகிறான்
. ஆம்!-என் உடல் குளிர்ந்திருக்கும் சீக்கிரம்!- என்ன பாழுலகம்!-
இக் கிழவன் கதியும் இப்படியா?-ரங்க நாதத்திற்கும் இவ்வாறான
கதி ஏதோ சம்பவித்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது!- இந்த
உலகத்தில் ஏன் ஸ்திரீகளைப் படைத்தான் அந்த ஈசன்?- இனி தாமதிப்
பேனாயின் எனக்கு முழுப் பயித்தியம் பிடித்துப்போம்- எல்லாம் அனுபவித்
தாச்சுது- இது மாத்திரம் ஒன்று மிகுதி வைப்பானேன்?- "யானேதும்
பிறப்பஞ்சேன் இறப்பதனுக் கென்கடவேன்" என்றார். அது
என்ன அவ்வளவு கஷ்டமா?- அதையும் பார்த்துவிடுவோம்-
அடா! சந்திரகிரஹணம் இப்பொழுதுதான் நீங்குகிறது!-
[சமுத்திரத்தை நோக்கி விரைந்து செல்கிறான்; மறைவிலிருந்த
ராஜேஸ்வரி அவனைப் பின்தொடர்ந்து விரைந்து செல்கிறாள்]
காட்சி முடிகிறது
---------
இரண்டாம் அங்கம் - மூன்றாம் காட்சி.
இடம் - அதே யிடம்.
கிரஹணம் விட்டு பூரணசந்திரன் பிரகாசிக்கிறான்.
ஜனக் கூட்டம் அதிக நெருக்கமாய் இருக்கிறது.
சிலர். என் ஐயா!பொழைச்சிகினானா? பொழைச்சிகினானா?
மற்றும் சிலர். பொழச்சிகினா ஐயா! பொழச்கிகினா ஐயா!
முதல் மனிதன். அதெப்படி ஐயா பொழச்சிகிவா! நான் தான் அந்த மூணு
கரையாருங்க பொணமா தூக்கிகினுவந்து போட்டதே பாத்தேனே!
செத்தவன் பொழச்சிகினானோ?
இரண்டாம் மனிதன். அடே! நான்தான் சொல்ரனே! நான்தான் நேராய்
பாத்தூட்டு வந்தேனே. அங்கே, ஒரு டாக்டரா, எவனோ ஒருத்தன் வந்து,
குப்புர கவுக்கப் போட்டு, வயத்திலே அமுக்கினா, வாய் வழியா
தண்னியெல்லாம் வந்துது. அப்புறம் மல்லாக்கப் போட்டு கையெ மடக்கி
மடக்கி என்னமோ பண்ணா. நாலைஞ்சு பேரு ஆளுங்களே ஒடம்பெல்லாம்
நண்ணா தேய்க்கச் சொன்னான்.-
மு-ம உசிர் வந்தூட்டுதோ?
இ-ம. நாந்தான் சொல்ரனே! வந்துதுடா இண்ணா? பேச்சு
மூச்சில்லாதெ கெடந்தவன்-மூச்சுவிட ஆரம்பிச்சா-
மு-ம நீ பாத்தியோ?
இ-ம அந்த டாக்டர்தான் சொன்னானே- மூச்சு வருது பொழச்சிகினா-
இனிமேலே பயப்படவேண்டியதில்லெ இண்ணு -அந்த பொம்மனாட்டி கிட்ட-
மூன்றாம் மனிதன். யார் அப்பா அந்த பொம்மனாட்டி?
இ-ம. எனக்கு தெரியாதுங்க.-யாரோ பணக்காரியாட்டம் இருக்குது.
அந்த டாக்டருக்கு உடனே தன் கையிலே யிருந்த மோதரத்தெ கழட்டி கொடுத்தா.
மு.ம. அந்த கரையாருங்களுக்கு ஒண்ணும் கொடுக்கலையா?
இ-ம அவள் சொன்னபடியே ஒவ்வொரு கரையானுக்கும்
ஒவ்வொரு சவரன் கொடுத்தா.
நான்காம் மனிதன். யார் அந்த பொம்பளே? அவனுக் கென்ன
மானா பாத்யமா?
மு-ம. அவன் பொண்டாட்டியா?
இ-ம. சே! இருக்காது. அவனெ பாத்தா ஏழையாட்டம் இருக்குது!
இவள் ரொம்ப பணக்காரியா யிருக்கரா, பொடவெ மாத்திரம்
சாதாரணமா கட்டிகினிருந்த போதிலும்.
நா-ம. அந்த மனுஷன் யார் இண்ணு தெரிஞ்சுதா?
இ-ம தெரியல. போலீஸ்காரு கூடவந்து கேட்டாங்க, அந்த
பொம்மனாட்டி தனக்குக் கூட தெரியாதிண்ணா.
நா-ம அப்புறம் அந்த மனுஷன் என்னமானா?
இ-ம மூச்சு கொஞ்சம் வர ஆரம்பிச்ச்வுடனே- அந்த டாக்டர்
கம்பிளியாலே நண்ணா போத்து, அப்படியே ஆஸ்பத்திரிக்
கொண்டுபோவணு மிண்ணா-
ஐந்தாம்-மனிதன். இல்லெ இல்லெ-ஆஸ்பத்திரிக்கு கொண்டு
போவலே.- அந்த பொம்மனாட்டி தன் வண்டியிலே அப்படியே
தூக்கிகினுபோயி வைக்கச்சொல்லி, அந்த டாக்டரையும் கூட
அழைச்சிகினு பூட்டா-
மு-ம அவன் கூத்தியாரா இருக்கும் இண்ணு நெனைக்கிறே.
[சிலர் நகைக்கின்றனர்]
ஐ-ம ஏண்டாப்பா அந்த பொம்மனாட்டி பாவத்தெ கொட்டிக்ரெ! அவள்
அவ்வளவு தூரம் ஓடிகீடி அலைஞ்சி கஷ்டப் பட்டில்லாப்போனா ஆள்-
ஆசாமியெ-ஆப்பிட்டிருக்க மாட்டானே!- அந்தமுட்டும் யாரொ நல்ல
புண்ணியவதி-பாவம்! அவள்தான், இந்த மனுஷனை யார்
இண்ணு தெரியாதிண்ணாளே-
இ-ம. நான் கிட்ட மூஞ்சியெ பாத்தே- அந்த பிட்டில் வைச்சிகினு கொஞ்ச
நாழிக்கு முன்னே இங்கே வாசிச்சிகினு இருந்தேனடா அந்த கெழவனோட-
அவன் மூஞ்சாட்ட இருந்தது.
மு-ம. அடடே! அந்த பொம்மனாட்டிதான், அவனுக்கு ஒரு
ரூபா போட்டாடா! இப்ப கியாபகம் வந்தது!
ஆறாம் மனிதன். ஊம்! யாராயிருந்தாலும் நமக்கென்னா? அவன் தலைவிதி
கெட்டியா யிருந்தது, பொழச்சிகினா- இதாம் உலகம் இண்ரது!-
யார் கிட்டவானா ஒரு தீக்குச்சி இருக்குதா?
மீ-ம. ஏன் ஐயா?
ஆ-ம. சுருட்டு அவிஞ்சிப் போச்சி, இந்த கல்பாவிலே-அத்தெ பத்த வைக்கணும்.
[போகிறார்கள்]
காட்சி முடிகிறது.
-----------------------------------------------------------
இரண்டாம் அங்கம் - நான்காம் காட்சி.
இடம்-சென்னபட்டணம்; தேனாம்பேட்டையில் ஓர் பங்களாவின் நடு அறை.
மிகவும் ஒழுங்காய் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.
ஓர் சாய்வு நாரற்காலியில் சாய்ந்தவண்ணம் விஜயரங்கம் இருக்கிறான்.
ஒருபுறமாக ராஜேஸ்வரி நிற்கிறாள். விஜயரங்கத்தின் பக்கத்தில் ஓர்
நாற்காலியில் டாக்டர் கிருஷ்ணராவ் உட்கார்ந்திருக்கிறார்.
கி. இனி ஒன்றிற்கும் பயப்பட வேண்டியதில்லை அம்மா, இவ்வளவு
சீக்கிரத்தில் உடம்பு தேறிவிடும் என்று நான் நினைக்கவில்லை. நன்
கொடுத்த மருந்தைவிட, நீங்கள் அவருக்கு மனத்தில் ஒரு கவலையில்லாமல்
பாதுகாத்து வந்ததே, இவரை இவ்வளவு சீக்கிரத்தில் பூரணமாய்
சுவஸ்தப்படுத்திவிட்டதென்று நம்புகிறேன்.
ரா. சரிதான்!-நான் என்ன செய்தேன்?
வி.என் உயிரைக் காப்பாற்றினீர்கள்-டாக்டர், எனக்காக நீங்கள்
இத்தனைநாளாக எடுத்துக்கொண்ட சிரமத்திற்கெல்லாம்-இப்போழுது
என் வந்தனத்தைத் தான் அளிக்கக்கூடும்-ஆயினும் உங்களுக்குச்
சேரவேண்டிய தொகைக்காக கணக்கனுப்பினால்-
கி. அனுப்புவதாவது? நேற்றையதினம் தான் கணக்குப்படி பணம்
எல்லாம் அனுப்பிவிட்டீர்களே-இன்றைத் தினம் நான் வந்தது
சிநேகபாவமாய் வந்ததாக எண்ணும்; இதை நான் கணக்கிடமாட்டேன்-
எனக்கு நேரமாகிறது-நான் வருகிறேன்.-இனிமேல் சமுத்திரத்தின்
ஆழத்தைப் பார்க்காதீர்கள் மறுபடியும்!
வி. இல்லை-வாருங்கள்-
கி. நான் வருகிறேன் அம்மா- இனி பத்தியம் கித்தியம் ஒன்றும்
வேண்டாம், அவர் இஷ்டமானதைச் சாப்பிடட்டும்- இனி ஒன்றுமே
பயமில்லை-எல்லாம் பரிசோதித்துப் பார்த்தேன்-நான் வருகிறேன்;.
ரா. வாருங்கள். (டாக்டர் கிருஷ்ணராவ் போகிறார்)
வி. அம்மா, எவ்வளவு கொடுத்தீர்கள்-டாக்டருக்கு நேற்று?
ரா. அதையேன் கேட்கிறீர்கள்?
வி. முன்பு-உட்காருங்கள்-தயவுசெய்து இத்தனை நாளின் கதை இனி
உதவாது. நான் கேட்பதற்கெல்லாம் நீங்கள் தயவுசெய்து பதில்
உறைத்துத்தான் ஆகவேண்டும். என் உடம்பு பூரணமாய் சவுக்கியமாய்
விட்டதென்றும், இனி ஒருபயமும் இல்லையென்றும் டாக்டரே சொல்லிவிட்டார்.
ரா. சரி-உங்களிஷ்டம்-ஒருகேள்வி தவிர வேறு எது
வேண்டுமென்றாலும் கேளுங்கள் சொல்லுகிறேன்.
வி. நான் கேட்கக்கூடாத கேள்வி என்ன? -அதைச்சொல்லும், நான் கேட்கவில்லை.
ரா. நான் யாரென்று என்னைக் கேட்கவேண்டாம். வேறு
என்ன வேண்டு மென்றாலும் கேளும். சொல்லுகிறேன்.
வி. உம்-சரி-உங்களிஷ்டம்-நான் யாரென்று தெரியுமா உங்களுக்கு?
ரா. தெரியும்.
வி. நான்யார்?
ரா. விஜயரங்கப்பிள்ளை-"தோன்றிற் புகழொடு தோன்றுக"
முதலிய கிரந்தங்கள் எழுதிய நூலாசிரியர்.
வி. (பெருமூச்செறிந்து) ஊம்-எப்பொழுது இதைக் கண்டு பிடித்தீர்கள்?
ரா. அன்றைத்தினம் அந்த வயோதிக பாடகனுக்கு –நீர் உதவி செய்தபொழுது.
வி. ஓ!-அந்த-பாடகனுக்கு-ஒரு ரூபாய்-கொடுத்தது-நீங்கள்தானோ?
ரா. ஆம்.
வி. ஏன்?
ரா. என் சந்தேகம் நிவர்த்தியாகும் பொருட்டு-
வி. இதற்குமுன் என்னைப் பார்த்திருக்கிறீர்களா?
ரா. இல்லை- அன்றுதான் முதல் முதல் நேரில் பார்த்தது- நீர் சந்திரனை
உற்றுப் பார்த்தவண்ணம் பெருமூச்சு விட்டீரே- இப்படிச்செய்வது யார்
என்று எனக்கு சந்தேகம் பிறந்தது-உம்மைக் கவனித்துப் பின்
தொடர்ந்தேன்-அதற்காக மன்னிக்கவேண்டும்-
வி. நீங்கள் சாதாரணமாய் உடுக்கும் ஆடையாபரணங்களுடன் இல்லையே அன்று?
ரா. இல்லை.
வி. ஏன் அப்படி?
ரா. நான் மாறுவேஷம் பூண்டிருந்தேன்.
வி. மாறு வேஷத்தில்-நீங்கள்-அன்று சமுத்திரக்கரைக்கு
வரவேண்டிய காரணம் என்ன? சொல்லக்கூடுமா?
ரா. கூடும்-நீர் என்ன காரணத்திற்காக-அன்றைத்தினம்
அங்கு வந்தீரோ, அதே-யோசனையோடு- நானும் வந்தேன்.
வி. என்ன! - நான் எதற்காக வந்தேன் அவ்விடம் என்று
தெரியுமா உனக்கு?
ரா. தெரியுமென்று நினைக்கிறேன்-காரணத்தை காரியத்தினால்
ஊகித்தறியலாம் என்று நீங்களே உங்கள் புஸ்தகத்தில் எழுதியிருகிறீர்களே!-
வி. அதே காரணத்தோடா நீங்கள் அங்கு வந்தீர்கள்?
ரா. ஆம்.
வி. ஆயின்-என்னை யேன் தடுத்தீர்கள்? -காப்பாற்றி
ரா. நான் செய்யத் துணிந்தது தவறு-என்று எனக்கு நீர்
ரூபித்து-என்னைக் காப்பாற்றினதின் பொருட்டு-நன்றியறிதலாக-
வி. நான் ரூபித்தேனா? உம்மைக் காப்பாற்றினேனா?
ரா. ஆம்-அன்றைத்தினம் நீர் ஒரு பலனையும் கருதாது அந்த
வயோதிகனுக் குதவியதைக் கண்டபொழுது- என் மனத்திலிருந்த
பெரும் பாரம் நீங்கியது-அதுவரைக்கும் உலகமானது எனக்காகப்
படைக்கப்பட்டது என்று எண்ணியிருந்தேன்-அப்பொழுதுதான்,
உலகத்தின் நன்மைக்காக நான் படைக்கப்பட்டேன் என்பதை
யறிந்தேன்- இந்த உண்மையை உம்மிடமிருந்து அறிந்தபின்- நான்
எப்படி என்னுயிரை மாய்த்துக்கொள்வது? -உம்மையும் எப்படி
தற்கொலை புரியவிடுவது? என்ன யோசிக்கிறீர்?
வி. வேறொன்றுமில்லை-அப்போழுது நான் உமக்கு
ஞானோபதேசம் செய்தேனா? அல்லது இப்பொழுது
நீர் எனகு ஞானோபதேசம் செய்கிறீரா, என்று யோசிக்கிறேன்.
ரா. நீங்கள் அவ்வாறு சொல்லக்கூடாது-நீர் அன்றைத்தினம் எனக்குச்
செய்த மஹேபகாரத்திற்கு நான் எந்த ஜன்மத்திலும் உமக்கு நன்றி
பாராட்டவேண்டும்- நான் அன்றைத்தினம் உம்மைக் கண்டிராவிட்டால்-
என் கதி என்னாயிருக்கும்? நான் இப்பொழுது எங்கிருப்பேன்?
வி. எதன்பொருட்டு-நீங்கள்-உங்கள் உயிரைப் போக்கத்
தீர்மானித்தீர்கள் என்று நான்-கேட்கலாமோ?
ரா. [பெருமூச்செறிந்து] நான் சொல்லத் தடையிலை-ஆயினும்
இப்பொழுது நீர் அதை அறியாதிருத்தல் நன்கெனத் தோன்றுகிறது.
அறிவு துன்பம் பயப்பதானால் அறியாமையே மேலஆகும் என்று
நீரே எழுதியிருக்கிறீரே!
வி. ஆம் உண்மை-நான் ஏன் அதை அறியவிரும்ப வேண்டும்? என்ன
புத்தியின்மை! நான் அவ்வாறு துணிந்ததற்குக் காரணத்தை உங்களிடம்
கூற என்மனம் விரும்பவில்லை. உங்களுடைய காரணத்தை மாத்திரம்
அறிய விரும்புகிறேன்!-நான் உங்களைக்கேட்டது தவறு, என்னை
மன்னிக்கவேண்டும்.
ரா. ஐயோ! நீங்கள் கேட்டதில் தவறொன்றுமில்லை என்று நினைக்கிறேன்-
ஆயினும் -இவ்விஷயத்தைப்பற்றி, இனிமேல் நாம் ஒன்றும்
பேச்செடுப்பதில்லை, என்று ஒரு ஏற்பாடு செய்துகொள்வோம்-
என்ன சொல்லுகிறீர்கள்?
வி. அப்படியே ஆகட்டும்-உங்களிச்சைப்படியே.
ரா. சரி-வேறு ஏதாவது பேசுவோம்.
வி. ஆம்-அப்படியே செய்வோம்-நீங்கள் இதுவரையில் எனக்காக
எவ்வளவு பணம் செலவழித்திருக்கிறீர்கள்? தயைசெய்து சொல்ல வேண்டும்-
ரா. [சிறுநகைப்புடன்] வேறேபேசவேண்டுமென்றால்-இது தானே?
வி. இல்லை சொல்லுங்கள்.
ரா. அதையேன் கேட்கிறீர்கள்?
வி. உங்களுக்கு நான் பலவிஷயங்களிலும் கடன் பட்டிருந்த போதிலும்,
பணவிஷயத்திலும் கடன்பட்டிருக்க எனக்கிஷ்டமில்லை.
ரா. அதை, நான்கொடுக்கவேண்டிய கடனாகபாவித்தாலோ?
வி. அது தவறாகும்-என்வேண்டுகோளை மறுக்காதீர்.
ரா. ஐயோ! நான் உமது வேண்டுகோளை மறுப்பேனா? அப்படியே
ஆகட்டும்.-பிறகு சொல்லுகிறேன் அக்கணக்கை இப்பொழுது என்னத்திற்கு?
வி. இப்பொழுதே அக்கடனைத் தீர்ப்பதற்காக நான் கேட்க வில்லை-
அப்படிச்செய்யவும் எனக்குச் சக்தியில்லை யென்பதை நீரே
அறிந்திருக்கிறீர்கள்-ஆயினும்- இவ்வளவென்று தெரிந்திருந்தால்
கூடிய சீக்கிரத்தில் அதைத் தீர்க்கவேண்டுமென்பதே என்கருத்து.
ரா. அப்படியே செய்யுங்கள்-நான் கணக்கு வைக்கவில்லை- ஆயினும்
ஞாபகமிருக்கும்வரையில் நான் கணக்கிட்டு மொத்தம்செய்து
சொல்லுகிறேன்-கூடிய சீக்கிரத்தில்.
வி. ஆம்-கூடியசீக்கிரத்தில் சொல்லுங்கள்-
ரா. ஆம்-அதற்குமுன்பாக, அக்கடனைத்தீர்க்க ஓர் உபாயம்
நான் சொன்னாலோ?
வி. என்ன உபாயம்?
ரா. நான் இப்பொழுது சொல்லப்போகிறதைக் கேட்டு என்மீது
கோபித்துக்கொள்ளக் கூடாது.
வி. இல்லை சொல்லுங்கள்.
ரா. நான்நேற்றைத்தினம் உம்முடைய "தோன்றிற் புகழொடு தோன்றுக"
என்னும் கதையைப் படித்துக்கொண்டிருந்தேன்-அதை நான் படிப்பது
பதினான்காவது முறையாகும்! -இச் சிறந்த கதையை நாடகமாக எழுதினால்-
என்ன நன்றாகயிருக்கும் என்று நான் யோசித்துக்கொண்டிருக்கும்
தருணத்தில்-தெய்வாதீனத்தால்-ஒரு நாட்டுக்கோட்டைச் செட்டி வந்து
சேர்ந்தான்-அவன் தற்காலத்தில் சென்னபட்டணத்தி லிருக்கும் நாடக
கம்பெனிகளுக்கெல்லாம் மிகவும் சிறந்ததான லக்ஷ்மி விலாச
சபையின் ஏஜெண்டு -அவன் தனது கம்பெனிக்கு ஏதாவது புதிய நாடகம்
எழுதித்தர வேண்டுமென்று வற்புறுத்தினான்-அவனுக்கு சில சமயங்களில்
நமது தேசத்திய பூர்வீக கதைகளை நாடகரூபமாக எழுதிக்
கொடுத்திருக்கிறேன்.-அதற்கு அவன் பணம் கொடுத்திருக்கிறான்-
அவனை இன்று காலை வரச்சொன்னேன்-அவன் வரும் சமயமுமாயிற்று-
வி. நாடகரூபமாய் எழுதினால் நன்றாயிருக்குமென்று நினைக்கிறீர்களா?
ரா. என்மனதிற் கொஞ்சமேனும் சந்தேகமில்லை. அதைப்பற்றி, கதையாகப்
பத்துபெயர் படிப்பதானால், நாடகமாக ஆயிரம் பெயர் சுலபமாகக்
கண்டுகளிப்பார்கள். நீர் எழுதித்தான் பாரும்-என் வேண்டுகோளை
மறுக்காதீர்-
வி. என்ன? என்னையா எழுதச் சொல்லுகிறீர்கள்? நீங்களல்லவோ
எழுதப்போகிறீர்கள் என்று பார்த்தேன்.
ரா. சரிதான்! அது என் சக்திக்கு மேற்பட்டது-உம்மால் தான் முடியும் அது. –
நீர் எப்படியும் எழுதி முடிக்க வேண்டும் அதை. -உமக்கு ஒரு கஷ்ட மாகாது.
ஒரு வாரத்தில் நீர் அதை எழுதி முடிக்கலாம்-ஆகட்டும் என்று சொல்லும்-
என்-கடனையும் நீர் தீர்க்கலாம், நீர் விரும்பியபடி சீக்கிரத்தில்.
வி. முயன்று பார்க்கிறேன்-எனக்கென்னவோ, நன்றாயிருக்குமோ
இராதோ,என்று சந்தேகமாயிருக்கிறது.
ரா. எனக்கென்னவோ சந்தேகமாகவேயில்லை-
(கீழே முத்தையன் செட்டி குரல் "அம்மா எங்கே யிருக்கிறார்கள்"?)
அதோ! வந்துவிட்டான். நான் இங்கழைத்து வருகிறேன்-அவன்
அசாத்தியன்.-பணத்தைப்பற்றி பேச வேண்டிய விஷயம் என்னிடம்
விட்டுவிடுங்கள்.-
ஓர் வேலைக்காரன் வருகிறான்.
வே. . அம்மா, முத்தையன் செட்டியார் வந்திருக்கிறார், உங்களைப்
பார்க்கவரலாமா என்று கேட்டுவரச் சொன்னார்.
ரா. வரச்சொல் (வேலைக்காரன் போகிறான்) அவன் எந்நேரமும்
தன் நஷ்டத்தைப்பற்றியே பேசுவான்-சம்பாதிப்பதெல்லாம்
லாபம்-பேசுவதெல்லாம் நஷ்டம்!
அ.ர.மு.முத்தையன் செட்டி வருகிறான்.
மு. நமஸ்காரம்!
ரா. வாருங்கள் செட்டியார், உட்காருங்கள்-
மு. என்ன போங்கோ! இந்த வருஷம் களுதே-நஷ்டத்தும்
பெர்லே நஷ்டமா வருதூங்கிறே!
ரா. என்ன ஐயா, புது நஷ்டம்?
மு. என்ன போங்க!! நேத்துகாலமே முக்கால் ரூபாய்க்கு ஒரு புதுசெருப்பு
வாங்கனே, சாயங்காலம் ஒரு நாய் குட்டி அதைக் கடிச்சூட்டுது-முக்கால்
ரூபாய், பன்னெண்டணா-நஷ்டம்! செருப்பில்லாமே நடந்து
வந்திருக்கிறேங்கரெ இப்போ-
ரா. அது போனாற்போகிறது-இவர் யார் தெரியுமோ உங்களுக்கு?
மு. ஏ! -தெரியலை-மன்னிக்கணும்.
ரா. இவர்-(விஜயரங்கம் கண்ணாற் சைகைசெய்ய) ஒரு பெரிய
தமிழ் வித்வான்-உங்கள் கம்பெனிக்காக ஏதோ புதிதாய் நாடகம்
எழுதவேண்டுமென்றீரே-இவரைக்கொண்டு அதை முடிக்கலாம்
என்று ஒரு யோசனை-
மு. இவாள்-நாமதேய மென்னவோ?
ரா. இவர் ஒரு காரணம்பற்றி சிலகாலம் தன்பெயரை வெளியிடக்
கூடாதென்று தீர்மானித்திருக்கிறார்.
மு. இவா-ஏதாவது நாடவம் எழுதியிருக்காகளா? ஆடப் பட்டிருக்கா?
ரா. அதையெல்லாம்பற்றி உங்களுக்குக் கவலை வேண்டாம்- நாடகம்
நன்றாயிருப்பதற்கு நான் உத்தரவாதம்-உங்களுக்கு எப்படிப்பட்ட
நாடகமா யிருக்கவேண்டுமோ சொல்லுங்கள்-
மு. என்ன போங்க-உங்களுக்குத் தெரியாததல்ல- இந்த நாடவம் எங்கிற
களுதையிருக்கே-தேவடியாளெப் போல-வேளைக்கொரு சேலை
கட்டினாதான் வெலையாகும்; ஆகவேநாடவக்கதே புதுசாயிருக்கணும்.
இந்தக் களுதெ கோவிலன் நாடகத்தை எடுத்துக்கொண்டேனா!
முதல்லே லாபம்போல காட்டி கடைசியா –நஷ்டமா முடிஞ்சுது.
ரா. என்னசெட்டியாரே, கோவிலன் நாடகத்தில் மூவாயிரம்
ரூபாய் நீங்கள் சம்பாதித்ததாகச் சொல்லுகிறார்கள்-
மு. வாயாலே சொல்ரவாளுக் கென்னாங்கிறே! நஷ்டப்பட்ட
எனக்கல்லவோ தெரியும்-போனமாசம் அதிலே ஐயாயிரம் ரூபா நஷ்டம்-
ரா. எப்படி?
மு. போனமாமாங்கம் வந்துதே, அப்போ கும்பகோணத்துக்கு இந்த
களுதெ நாடக கம்பெனியே அழைச்சிகிண்டு போயிருக்கே, ஐயாயிரம்
ரூபாய் லாபம் கிடைச்சிருக்கும்-கொட்டகே அங்கே ஆப்பிடாமே-
களுதே ஐயாயிரம் ரூபாய் நஷ்டம் வைச்சூட்டுதிங்கிரே!
ரா. நிரம்பசரி!-அதிருக்கட்டும்-நீங்கள் கோருகிறபடியே புதிய கதையை
வைத்து நாடகமாக எழுதச்சொல்லுகிறேன்.
மு. அதிலேயும் பாருங்க-இந்த களுதே-ஜனங்களுக்கு தெரிந்த கதையா
யிருந்தாதான், காசு வருதுங்கிரே- இந்த கதே புஸ்தகம் நீங்க படிச்சி
இருக்கைகளா?- யாரெப்பாத்தாலும் இந்தக் கதெயே நாடவமா
போட்ரதுதானே எங்கிரா!-
(ஒரு புஸ்தகத்தை ராஜேஸ்வரி கையில் கொடுக்கிறான்)
ரா. "தோன்றிற் புகழொடு தோன்றுக"!
(விஜயரங்கம் கையில் கொடுக்கிறாள்)
வி. (அதைப்பார்த்து) இது யாருடைய புஸதகம்?
மு. நம்மிடகம்பெனியிலே அயன் ஸ்திரீபார்ட் லோகநாயகி வாங்கனா.
ஒருத்தர் தவறாதே எல்லாம் படிச்சாச்சி- எல்லோரும் இதெ நாடவமா
போட்டா நண்ணாயிருக் குங்கிராக, அத்தே அம்மாளுக்கு காட்டலாமிண்ணு
எடுத்து வந்தே-நீங்க இதெபடிச்சி இருக்கிகளா?
ரா. நன்றாகப் படித்திருக்கிறார்-அவர் சீக்கிரம் நாடகமாக
எழுதிக்கொடுப்பார்-அதற்கு என்ன- ஏற்பாடு?
மு. ஏற்பாடென்னாங்கிரே? அல்லாம் உங்களுக்கு தெரிஞ்சிருக்கே-
இந்த களுதே நாடவத்திலே ரொம்ப நஷ்டப்பட் டிருக்கிறே முன்னையே-
ஆகவே ஏதாவது கொறைச்சி-
ரா. குறைக்கிறதாவது! இதென்ன நான் எழுதுகிறேனே அம்மாதிரி
நாடகமென்றா நினைத்தீர்கள்? இதில் பேரம் ஒன்றும் வேண்டாம்.
ஐந்நூறு ரூபாய் கொடுத்துவிட வேண்டும் கண்டிப்பாய்-அச்சிடுகிற
பாத்யதை அவருடையது. அல்லாமலும் உங்கள் கம்பெனி தவிர
மற்றவர்கள் ஆடுவதானால் அவருடன் வேறு ஏற்பாடுசெய்து
கொள்ளவேண்டும்.
மு. அடடடா! அப்புறம் எனக் கேது லாபம் கிட்டரது இங்கிரே?
நஷ்டத்தோடெ நஷ்டமா?-சரி, ஆனா நான் பொறப்படவேண்டியதுதான்-
ரா. சரி, புறப்படுங்கள்.
மு. என்னாம்மா, அவ்வளவு கண்டிப்பா சொல்லிவிடரைகள்!-
உங்களோடே நான் பேரம் பண்ண இஷ்டமில்லெ- முன்னூறு
ரூபாய் வைத்துக் கொள்ளுங்கள்-கண்டிப் வார்த்தை.
ரா. செட்டியாரே, நான் முன்பெ சொன்னேனே, பேரம் வேண்டாமென்று-
வேறு ஏதாவது பேசுங்கள்.
மு. ஆனா-நீங்க என்னா நானூறு ரூபாயிலெயா இருக்கிரைக?
ரா. இல்லை-ஐந்நூறு-அதற்கு ஒரு காசும் குறைந்தால் இவர் எழுதமாட்டார்.
மு. என்ன வெஹு கண்டிப்பா யிருக்கே! –ஒங்களுக்காக ஒப்புக்கொள்ளரே-
அதிலே ஒரு ஐம்பது ரூபாய் தள்ளி விடுங்க.
ரா. செட்டியாரே, அப்படியானால் இந்த நாடகத்தை விட்டு
விடுங்கள்-வேறு ஏதாவது எழுதச் சொல்லுகிறேன்.
மு. ஏஏ!- அப்படி சொல்லாதைங்க இங்கிரெ!-இதுதான் முக்கியமா
வேண்டியிருக்கு-அயன் ராஜபார்ட் ஆசாமி கூட, தனக்கு ரொம்ப
நண்ணா யிருக்குமிண்ணு சொல்லியிருக்கரா-
ரா. ஆனால் ஐந்நூறு ரூபாய் சரியாகக் கொடுத்து விடுங்கள்.
மு. சரி-நீங்க அவ்வளவு கேக்கும்போது ஒரு ஐம்பது ரூபாதான் எனக்கு
நஷ்டமாகட்டுமே-எப்பொழுது முடித்துக் கொடுப்பார்? எனக்கு
அவசரமாக ஒரு வாரத்தில் வேணும்-அவர் ஒன்றும் வாயெ திறக்கலையே?
வி. அதெல்லாம் சரிதான் செட்டியாரே, இதை நாடகமாக
ஆடுவதென்றால், முதலில் இந்த நூலாசிரியருடைய உத்தரவு
பெறவேண்டுமே-அதைப் பெற்றிருக்கிறீரா? இல்லாவிட்டால்
கிரிமினல் சட்டத்திற்கு உள்ளாகுமே.
மு.அடடா! அதென்ன களுதெ அது? அது தெரியாதே எனக்கு;
அதென்ன சமாசாரம்?
வி.ஒரு நூலாசிரியருடைய உத்தரவில்லாமல், அவர் எழுதிய கதையை
நாடகமாக எழுதினாலும், அல்லது ஆடினாலும், போலீஸ் வியாஜ்யமாகும்—
ஆகவே முதலில் இந்த நூலாசிரியருக்கு எழுதி, இதை நாடகமாக
அமைத்து ஆட உத்தரவைப் பெறவேண்டும் நீர்.
மு.அடடா! எல்லாம் தீர்ந்தது இண்ணு பார்த்தா இந்த களுதெ கஷ்டம்
ஒண்ணிருக்குதா? ஐயோ! அவரெ எனக்கு--தெரியாதே--உங்களுக்கு தெரியுமோ?
ரா.ஆம், அவருக்குத் தெரியும் நன்றாய்.
மு.ஐயா, நான் என்னா சொல்ரேங்கிரே, நானு எளுதி கெட்டா,--அந்த ஆளு,
அதிகமா ரூபா கேப்பா, நீங்க எளுதி கேட்டைங்கண்ணா--சுலபமா பூடும்—
நான் சொல்ரத்தெ கேளுங்க--மொத்தத்துலே அறநூறு ரூபா கொடுத்தூடரென்;
அந்த உத்தரவு எல்லாம் நீங்க பாத்துகணும்--எனக்கு வேறெ நஷ்டம் வைக்காதைக.
ரா.சரி--அப்படியே ஆகட்டும்.
மு.ஏதாவது--முதல்லெ--ரூபா வேணுமா?
வி.ஒன்றும் வேண்டாம்--போம்.
மு.அப்படியல்லாங்கிரே!--எதுக்கும் இந்த முன்னூறு
ரூபாயெ வைச்சுகொள்ளுங்க--
[மூன்று நூறு ரூபாய் நோட்டுகளை மடியிலிருந்து எடுத்துக் கொடுக்கிறான்]
வி.எனக்கிப்பொழுது வேண்டாம்--நாடகத்தை எழுதி
முடித்து அப்புறம் வாங்கிக் கொள்ளுகிறேன்.
மு.அப்படியல்லாங்கிரே--உங்களுக்கு வியவஹாரம் தெரியலே--அம்மா,
நீங்க வாங்கிக்கொங்கோ அவருக்கு பதிலா?
ரா. சரி-கொடும். (வாங்கிக் கொள்ளுகிறாள்)
வி. ஐயா, என்னை அவசரப்படுத்தாதீர்-என்னால் கூடிய
சீக்கிரத்தில் எழுதி முடிக்கிறேன்.
மு. இனிமே-உங்க பாரம் இங்கிரே-எனக்கென்னா? நான் வர்ரே-அம்மா,
நான் வர்ரேன்-ஏ-அவர் கையாலே ரசீது அனுப்பிச்சூடுங்க வழக்கப்படி-
நான் வர்ரேன் ஒருவாரம் பொறுத்து-நடுவிலேயும் வந்து பாத்திண்டு
போரேன்-உத்தரவு. (போகிறான்)
ரா. சீ! நாம் ஏமாந்துபோனோம்-இன்னும் அதிகமாய்க் கேட்டிருக்க
வேண்டும்-அவனுக்கு மிகவும் அவசியமாய் வேண்டியிருக்கிறாற்
போலிருக்கிறது.-இல்லாவிட்டால் அவ்வளவு எளிதில் ஒப்புக்
கொண்டிருக்க மாட்டான்- தானாகவே நூறு ரூபாய் அதிகமாய்
உயர்த்தினானே- நாம் கேளாமலே!
வி. போனாற்போகிறது-என்ன ரூபாய் இது! என்னை நேராகக்
கேட்டிருந்தால் சும்மாக எழுதிக்கொடுக்க இசைந்திருப்பேன்-
ரா. அது தவறாகும்-சும்மாகப் பெறும் பொருள்களின் மஹிமையை
உலகம் உண்மையில் அறிகிறதில்லை. அன்றியும் உலகத்திற்கு
நன்மைபுரிய முயன்றால் அதற்குரிய பொருள் கையில் சேகரித்து
வைத்தல் இன்றியமையாததாம். சரி, சாப்பிட்டானவுடன்,
இன்றைக்கே ஆரம்பியும்- இனிமேல் பொழுது போக்குவதற்கு
மார்க்க மில்லாமல்-எதையோ யோசித்துக் கொண்டிருக்க மாட்டீர்-
வி. ஆம், உண்மையே-என் மனதிற்கு ஏதாவது வேலை வேண்டும்-
ரா. நீர் விரும்பும்வேலையே கிடைத்ததே, இனி யென்ன?
வி. ஆயினும்-எனக்காக-ஏன் நீங்கள் இவ்வளவு கஷ்டமெல்லாம்
எடுத்துக் கொள்ளுகிறீர்கள்?
ரா. என்மனதிற்கு -ஏதாவதுவேலைவேண்டுமே யென்று-
போஜனவேளை ஆயது போவோம் வாரும்-
(போகிறார்கள்)
காட்சிமுடிகிறது.
-----------------
இரண்டாம் அங்கம் - ஐந்தாம் காட்சி.
இடம்: சென்னபட்டணம் விக்டோரியா பப்ளிக் ஹால்
நாடகமேடை-திரைக்குப் பின்புறம்.
ஒரு சோபாவின் மீது விஜயரங்கத்தை வளர்த்தி யிருக்கிறது. பக்கத்தில்
ராஜேஸ்வரி நின்று விசிறிக்கொண்டிருக்கிறாள். சுற்றிலும், கிருஷ்ணசாமி
முதலியார், லோகநாயகி, முதலிய வேஷதாரிகள் வேஷத்துடன் சூழ்ந்து
நிற்கின்றனர். திரைக்கு வெளியாக பெருங் கோஷ்டமா யிருக்கிறது.
டாக்டர் கிருஷ்ணராவ் விஜயரங்கத்தின் பக்கத்தில் முழந்தாளிட்டு நிற்கிறார்-
கி. ஒன்றும் பயமில்லை-நீங்கள் எல்லாம் ஒருபுறம் ஒதுங்கியிருங்கள்-
காற்றை அடைக்காதீர்கள்-அதோ மூர்ச்சை தெளிகிறாற் போலிருக்கிறது.
அந்தக் கூச்சலை நிறுத்துங்கள் யாராவது திரைக்கு வெளியே போய்!-
(கிருஷ்ணசாமிமுதலியார் வெளியே போகிறார்; கிருஷ்ணராவ்
விஜயரங்கத்தின் முகத்தில் குளிர்ந்த ஜலத்தைத் தெளிக்கிறார்.)
வி. (கண்விழித்து) நான் எங்கே-இருக்கிறேன்?-நான் மூர்ச்சையானேனோ?
கி. ஆம், கொஞ்சம்-அதொன்றுமில்லை-அதைப்பற்றி யோசியாதீர்-
ஜனங்கள் சந்தோஷத்தினால் போட்ட கூச்சலில் கொஞ்சம்
மூர்ச்சையானீர்-அவ்வளவுதான்-
வி. நான்-விழுந்தேனா?
கி. விழுந்திருப்பீர்-ஒரு பக்கமாய் நின்றுகொண்டிருந்த மைதிலி ஓடிவந்து
உம்மைக் கரத்தில் தாங்கி யிராவிட்டால்-இதற்குள்ளாக நானும்
ஓடிவந்து பிடித்துக் கொண்டேன். நீர் பேசிக்கொண் டிருந்தபொழுது,
உமது நா தழதழத்தும் நான் சந்தேகப்பட்டு உள்ளே வரலாமென்று
விரைந்துவந்தவன், நீர் மூர்ச்சையானதும் அப்படியே மேடையின்
பேரில் குதித்தேறிப் பிடித்துக்கொண்டேன்.
வி. என்ன கஷ்டம் வைக்கிறேன்-உங்களுக்கெல்லாம்-
கி. சரிதான்!-கஷ்டமென்ன இதில்?-
கிருஷ்ணசாமிமுதலியார் மறுபடியும் வருகிறார்.
கி.மு. ஐயா டாக்டர்! ஜனங்களெல்லாம் அப்படியே நின்று
கொண்டிருக்கின்றனர். நான் என்ன சொல்லியும் போகமாட்டேன்
என்கிறார்கள்-நீங்கள் திரைக்கு வெளியே போய் நூலாசிரியருக்கு
உடம்பு ஒன்றும் இல்லை, என்று கூறினால்தான் போவார்கள் போலிருக்கிறது.
கி. இதைன்னடா கஷ்டம் ஒன்று!
(திரைக்கு வெளியே போகிறார்)
ரா. என்னமாயிருக்கிறது உடம்பு?
வி. இப்பொழுது ஒன்றுமில்லை-வண்டியைக் கொண்டுவரச்
சொல்லுங்கள் சீக்கிரம்-
கி.மு. உங்கள் வண்டி வருகிறதற்கு இன்னும் அரைமணிநேரம்
பிடிக்கும்! என்ன கும்பல்! என்ன ஜனம்! இதுவரையில்
இந்த கும்பலை விக்டோரியா ஹாலில் நான் பார்த்ததில்லை.
ரா. இதோ போய்ச்சொல்லிப் பார்க்கிறேன்.
(பின்புறமாகப் போகிறாள்)
டாக்டர் கிருஷ்ணராவ் திரையின் பக்கமிருந்து மறுபடியும் வருகிறார்.
கி. கேட்பவர்களுக் கெல்லாம் பதில் சொல்வ தென்றால்!- அவர்கள்
கூச்சலுக்குமேல் நான் கூச்சல் போட்டுப் பேச வேண்டியதாயிற்று!-
உங்களுக்கு எப்படி யிருக்கிறது இப்பொழுது?
வி. ஒன்றுமில்லை-சரியாய் விட்டது-ஏதோ கொஞ்சம் பலஹீனம்-
கி. அவ்வளவுதான்-நீங்கள் சீக்கிரம் வீட்டிற்குப்போய்- பேசாமல்
படுத்துக்கொண்டு தூங்குங்கள்-நான் நாளை காலை-வருகிறேன்-
(வெளியில் பெண்டுகள் ஏறும் படிக்கட்டி னருகிலிருந்து
"டாக்டர் டாக்டர்! டாக்டரைக் கூப்பிட்டு வாங்கள்!"
என்று கூச்சல் கிளம்புகிறது)
கி. என்ன அது?
லோ. டாக்டர்! டாக்டர்! யாரோ பொம்மனாட்டி-கையிலே குழந்தையே
வைச்சிண்டிருக்கிரா! அப்படியே படிக்கட் டண்டே மூர்ச்சையானா!
போய்ப்பாருங்க! போய்ப்பாருங்க!
கி. என்னடா கஷ்டம் இது?
வி. டாக்டர்! சீக்கிரம் போய்ப் பாருங்கள்-என்னவென்று -பாவம்!
கி. இதோ!
(விரைந்து பின்புறமாகப் போகிறார்)
ராஜேஸ்வரி மறுபடியும் வருகிறாள்.
ரா. வண்டியைப் பின் பக்கமாகக் கொண்டுவரச் சொன்னேன்
நாம் பின் பக்கமாகப் போவோம்-
வி. கொஞ்சம் பொறுங்கள்-
ரா. உங்களிஷ்டம் - எனக்கொன்றும் அவசரமில்லை - ஏதாவது
தாகத்திற்கு சாப்பிடுகிறீர்களா?
கி-மு. இதோ - கொஞ்சம் சோடா சாப்பிடுங்கள்.
(விரைந்து போய் ஒரு சோடா புட்டியைத் திறந்து ஒரு டம்ளரில்
விட்டுக் கொண்டுவந்து கொடுக்கிறான்)
வி. (அதைச் சாப்பிட்டு) அப்பா, உனக்கு வந்தனம்.
கி-மு சரிதான் - இதற்கெல்லாம வந்தனம் ஒன்றா -
ஒரு பக்கத்திலிருந்து முத்தையன் செட்டி பணப்பெட்டியொன்றைத்
தூக்கிக்கொண்டு வருகிறான்.
மு. களுதெ செனங்க! இன்னம் போவமாட்டேங்கிறாக!
(ஒரு நாற்காலியில் உட்கார்ந்து)
ஐயாவுக்கு உடம்பு என்னமாயிருக்கு? கொஞ்சம் தேவலையா?-
வி. ஒன்றுமில்லை - சவுக்கியமாய் விட்டது.
மு. அடே! யார்டா அது? ஐயாவுக்கு தாகத்துக்கு கொண்டாந்து
கொடுடா ஏதாவது!
கி.மு. கொடுத்தேன் செட்டியாரே, கொஞ்சம் சோடா கொடுத்தேன்.
மு. களுதெ சோதா என்னத்துக்கு? - உப்புத் தண்ணி! -
கொஞ்சம் பால் கொண்டுவந்து கொடுக்கச் சொல்லு-
வி. வேண்டாம் செட்டியாரே - எனக்கொன்றுமில்லை இப்பொழுது.
ரா. என்ன செட்டியாரே, இப்பொழுது என்ன சொல்லுகிறீர்கள்?
நாடகம் ஜனங்களுக்குப் பிரீதியாயிருக்குமோ என்னவோ என்று
சந்தேகப்பட்டுக் கொண்டிருந்தீர்களே? இப்பொழுது என்ன சொல்லுகிறீர்கள்?
மு.அடடா! நானா சந்தேகப்பட்டேங்கிரைக? ஐயா தான்
சந்தேகப்பட்டார்-எனக்கு சந்தேகமே யில்லையே- ஐயாவுக்குப்போட
சாயங்காலமே ரோஜாப்பூ மாலெகூட உத்தரவு செய்திருந்தேனே-
ஐயாவுக்குப் போடலையா அந்த ஜமீன்தார்?-எங்கே அந்த மாலெ?
ரா. அதோ, கழற்றி வைத்திருக்கிறது-மூர்ச்சையானபோது
எடுத்துவிடச் சொன்னார் வைத்தியர்.
மு. அது கெடக்கட்டுங்கிரே-நாளைக்கு ஐயாவுக்கு
எங்கையாலே ஜரிகெயாலே போடப்பொரே!
வி. நாளைக்கா? என்ன நாளைக்கு?
மு. நாளைக்கு மறுபடியும் ஐயா நாடவம் தான்! இந்த வாரம் எல்லா
இதுதான்!-இண்ணைக்கே நாளைக்காவ எத்தனெ திக்கட்டு
வித்துபோச்சுது எங்கிரைக!-அதுக்காத்தானே, இத்தனி
நாழி புடிச்சுது, நான் இங்குவர!
ரா. அதோ நம்முடைய வண்டி சப்தம்-புறப்படுவோம்?
மு. அம்மா,உங்களோடெ ஒரு பேச்சு-
(ராஜேஸ்வரியை ஒரு புறமாய் அழைத்துக்கொண்டு போய்)
இனிமேலெ ஐயா எளுதர நாடவ மெல்லாம் எனக்கு ஒப்பந்தம்-
நாடவம் ஒண்ணுக்கு ஆயிரம் ருபாய் கொடுத்து விடரெ-
நீங்க எப்படியாவது பேசி-ஏற்பாடு பண்ணிடணும்-
ரா. எல்லாம் பிறகு ஆகட்டும்
மு. நீங்க அப்படி சொல்லிடக் கூடாது-உங்களுக்கு நான்
பிரத்யேகமா-ஏதாவது ஏற்பாடு பண்ரேங்கிரெ-
ரா. சரிதான்-கெட்டிக்காரர்தான்!-எல்லாம் நாளை காலை வீட்டிற்கு
வாருங்கள் பேசிக்கொள்ளுவோம்-
டாக்டர் கிருஷ்ணராவும் எட்டினபுறம் ஜமீன்தாரும் வருகிறார்கள்.
வி. டாக்டர்,என்ன சமாசாரம்,போயிருந்தீரே?
கி. ஒன்றுமில்லை சரியாகிவிட்டது கும்பல் நெருக்கத்தில் மூர்ச்சையானாற்
போலிருக்கிறது. அப்படியே விழுந்ததில் குழந்தைக்கு முழங் கையில்
கொஞ்சம் காயம் பட்டது. குழந்தையின் காயத்தைக் கட்டி, பிறகு
தாயின் மூர்ச்சை தெளிவிக்க, இவ்வளவு நேரம் பிடித்தது-
வி. வேறொன்றும் அபாயமில்லையெ?
கி. இல்ல இல்லை வீட்டுக்குபோய் விட்டார்கள் அவர்கள்- திரும்பி
வரும்பொழுது நம்முடைய எட்டினபுறம் ஜமீன்தார் உம்மை நேரில்
பார்த்து விசாரித்துவிட்டுப் போகவேண்டுமென்றார்-அழைத்துக்
கொண்டு வந்தேன் அவரை
வி. வரவேண்டும் உங்களுக்கெல்லாம் என்னால் நிரம்ப சிரமம்?
எ-ஜ.நன்றாகச் சொன்னீர்கள்!-உங்களுக்கு உடம்புக்கு ஒன்று
மில்லையே இப்பொழுது?
வி.ஒன்றுமில்லையே இப்பொழுது, தங்களைபோன்ற பெரியோர்களுடைய
ஆசீர்வாதத்தால்-ஏதோ கொஞ்சம் பலஹீனம்-
எ-ஜ ஆமாம், ஒரு புஸ்தகம் எழுதுவதென்றால் என்ன கஷ்டமிருக்கிறது!
மூளைக்கு எவ்வளவு வேலை! உடம்பைக் கொஞ்சம் ஜாக்கிரதையாய்ப்
பார்த்துக் கொள்ளுங்கள்- நீங்கள் இன்னும் இந்த மாதிரி எத்தனையோ
நாடகங்கள் எழுதவேண்டும். பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ
வேண்டும்- அதுவே என் ஆசீர்வாதம்- நீங்கள் சீக்கிரம் வீட்டிற்குப்போய்
கொஞ்சம் நித்திரை செய்யுங்கள், என் வண்டியைத் தருவதா?
வி. இல்லை - வண்டியிருக்கிறது.
எ-ஜ. நான் நாளை காலை வந்து பார்க்கிறேன். நான் வருகிறேன்.
கி. நானும் வருகிறேன்; நீர் சீக்கிரம் வீட்டிற்குப் போம்
(இருவருமாகப் போகிறார்கள்)
மு. யாரடா அது? ஐயா வண்டியெ சீக்கிரம் கூப்பிடச் சொல்.
ரா. வேண்டாம், முன்பே வந்திருக்கிறது.
வி. (எழுந்திருந்து) இந்த நாடகத்தில் வேஷம்தரித்த உங்களுக்கெல்லாம்
நான் வந்தனம் செய்கிறேன். இப்பொழுது சாவகாசமில்லை –
நாளை தினம் சாவகாசமாய் உங்களெல்லோருடனும் பேசுகிறேன்.
கி.வி. அப்படியே, மிகவும் சந்தோஷம்- இப்படிப்பட்ட அற்புதமான
கதையை நாடகமாக எழுதி, நாங்கள் அதில் பெயர் பெறும்படியாகச்
செய்வதற்காக,நாங்கள் எல்லோரும் உங்களுக்கு நன்றி
யறிதலுடையவர்களாக இருக்கிறோம்.
(எல்லோரும் வணங்குகிறார்கள்)
வி. (அவர்களை வணங்கி) நான் வருகிறேன் - செட்டியாரே
நான் வருகிறேன்.
வி. அதென்னாவுங்கோ - இதோ நானும் வர்ரெ உங்களோடேகூட,
உங்கள் வீட்டுவரைக்கும் -
லோ. ஐயா,இந்த ரோஜாப்பூ மாலையெ விட்டுட்டுப் போரைகளே –
இதே கழுத்துலே போட்டிண்டு போங்க-
வி. அம்மா, இப்படி - கொடு - அதை - கையில்
லோ. ஆமாம் - நாங்கல்லாம் போட்டா நீங்க போட்டுகிவைகளா!
ரா. (போகும் பொழுது மெதுவாய்) தோன்றிற் புகழொடு தோன்றுக!
வி. உம் -
(பெருமூச்செறிகிறான்)
(போகிறார்கள்)
காட்சி முடிகிறது.
-----------------------------------------------------------
மூன்றாம் அங்கம் - முதல் காட்சி.
இடம் - சென்னையில் புதிதாய்க் கட்டப்பட்ட "விஜய ரங்கம்" என்னும்
நாடகசாலையில் ஒத்திகை நடத்தும் அறை.
நடுவில் சாமிநாதன் நிற்கிறான். அவனைச் சுற்றிலும் லோகநாயகி முத்துக்கிருஷ்ணநாயுடு முதலிய நாடகமாடுபவர்கள் நகைத்துக்
கொண்டு நிற்கின்றனர்.
லோ. இன்னொரு தரம் சொல்லம்மா, இன்னொருதரம் சொல்லு.
சா. "மானம் போனபின்னே வாழ்வேனோ, மண்ணின் மேல்"
(தன்னைக் குத்திக் கொண்டு சாவது போல் நடிக்கின்றான்.
எல்லோரும் கைகொட்டி நகைக்கிறார்கள்)
எல்லோரும். அச்சம், கிருஷ்ணசாமி முதலியார் தான்!
லோ. இதோ வர்ரார்!
கிருஷ்ணசாமி முதலியார் வருகிறார்
கி. என்ன அது? என்ன அது? பிள்ளை அவர்கள் வரவில்லையா என்ன இன்னும்?
லோ. இல்லெ, இன்னம் வரலே.
கி. கூச்சல்என்ன இங்கே?
லோ. வேறொன்னுமில்லெ.இந்தப் பையன் உங்களைப் போல
நடித்துக் காட்டனா,அத்தெப் பார்த்து சிரிச்சோம்!
லோ. என்னைப் போலவா? எதோ நான் பார்க்கவேண்டும் எதோ.
லோ. எதோ இன்னொருதரம் சொல்லம்மா.
சா."மானம் போனபின் வாழ்வேனோ மண்ணின்மேல்?"
[முன்புபோல் நடித்துக் காட்டுகிறான்].
கி. [நகைத்து] நன்றாய்க் கவனித்திருக்கிறான். புத்திசாலி!-- அப்பா,
இப்படிவா, இன்னும் யார் யாரைப்போல் நடிக்கத் தெரியும் உனக்கு?
மு-கி. ஒருத்தர் பாக்கி இல்லாமல் நேற்று மேடையில் யார் யாரைப்
பார்த்தானோ அவர்களைப்போ லெல்லாம் நடிக்கிறான்.
கி. அப்படியா!-- எதோ-- லோகநாயகியைப்போல் கொஞ்சம் நடி.
லோகநாயகி தவிர} ஆம்! ஆம்! மற்றவர்கள். }
லோ. பையா என்னெ எழுத்தாளி செய்தையோ, கொடுப்பேன்
தவடையில்!
கி. ஏளனமாவது? குழந்தை வேடிக்கையாக நடித்துக்
காட்டினால் அதில் தவறென்ன? சந்தோஷ மல்லவோ
படவேண்டும். நீ சொல்லம்மா-சொல்.
சா. அந்த அம்மா-கோவிச்சிக்கிவாங்க.
கி. கோவித்துக் கொள்ளுகிறதாவது! அப்படி யொன்றும்
கோவித்துக்கொள்ளமாட்டார்கள்--நானிருக்கிறேன்
பயப்படாதே-- [சாமிநாதனைத் தட்டிக் கொடுக்கிறான்].
சா. "பெண்ணாய்பொறக்கிறத்தெவிட. பேயாபொறக்கலாம்!"
[லோகநாயகி அழுவது போல் அழுதுக் காட்டுகிறான்].
லோ. தவிர மற்றவர். ஆஹாஹா! [நகைக்கின்றனர்].
லோ. நான் அப்பவே சொன்னேனே!
[சாமிநாதன் கையைப் பிடித்திழுத்து கன்னத்தில் ஒரு
அறை அறைகிறாள். சாமிநாதன் உரத்த சப்தமாய் அழுகிறான்].
மற்றவர்: ஆ! ஆ!
விஜயரங்கம் சரேலென்று உள்ளே வருகிறான். உடனே
எல்லோரும் அசைவற்று நின்றுவிடுகின்றனர்.
சாமிநாதன் அழுகையை அடக்கிக்கொள்ளப் பார்க்கிறான்.
வி. என்ன இது எல்லாம்? -ஏன் அழுகிறான் குழந்தை?- இங்கே வாடா
அப்பா-(சாமிநாதன் மெல்ல அருகில் வர) யார் இவனைக் கன்னத்தில்
அறைந்தது இப்படி சூடு உண்டாக?-யார் சொல்லுகிறீர்களா என்ன?
கி.மு. லோகநாயகி.
வி.ஏன்?-ஏன் அம்மா அடித்தாய் இவனை?
லோ. அவன் என்னா செய்தா கேளுங்கோ முன்னே.
வி. என்னடா அப்பா செய்தாய்?
சா. (அழுதுகொண்டே) இந்த ஐயா -அந்த அம்மா-நேத்து ஆட்டத்துலெ-
சொன்னா போலே-சொல்லச் சொன்னாங்கோ-அப்படியே சொன்னே-
அதுக்கு தவடையிலே அடிச்சாங்க-
லோ. நானு வேண்டா மிண்ணு சொன்னனா இல்லையா?
வி. அவர்கள் வேண்டாமென்று சொன்னபொழுது ஏன் செய்தாய்?
சா. இந்தஐயாதான்-சொல்லச் சொன்னாங்க.
வி. கிருஷ்ணசாமி முதலியார், நீங்கள் சொல்லினீர்களா?
கி.மு. இதென்ன நீங்கள் கூட கேட்கிறீர்களே? குழந்தை ஏதோ,
தான் நேற்று பார்த்ததுபோல் அவரவர்களைப்போல் நடித்துக்
காட்டினால், அதற்கு சந்தோஷப்படுவதை விட்டு-கோபம் கொள்ளலாமோ?-
என்னைப் போல் நடித்தான், அதற்காக நான் கோபம் கொண்டேனோ?-
இல்லை இஷ்ட மில்லாவிட்டால்-வேண்டாமென்றால் போகிறது,
அதற்காகக் குழந்தையை அடிப்பதாவது? விரல்விரலாக
எழுப்பிப்போ யிருக்கிறதே!
வி. ஆம்-லோகநாயகி, அப்படித்தான் ஏதாவது தவறிழைத்த போதிலும்
வாயால் கண்டிப்பதைவிட்டு, கையால் அடிக்கலாமா?-உன் குழந்தையா
யிருந்தால் இப்படி அடித்திருப்பாயா?
லோ. எங் கொழந்தைய யிருந்தா அப்படியே கொண்ணு போட்டிருப்பேன்!
எதோ தெருவிலே போகிற கொழந்தைக்கே இவ்வளவு பரிஞ்சி
பேசரைகளெ-இன்னும் உங்க கொழந்தையா யிருந்தா என்னா
செய்வைங்களோ?
வி. என் குழந்தையாயிருந்தால்-நான் ஒருகால் பொறுத்தாலும்
பொறுப்பேன்-இல்லாதபடியினால்தான் நீ செய்தது தவறு என்று
அதிக கண்டிப்பாய்க் கூற வேண்டியிருக்கிறது- இனி இம்மாதிரி
செய்வாயானால் எனக்கு மிகவும் கோபம் வரும், ஜாக்கிரதை.
சரி, நேரமாகிறது! -இன்று நான் கொஞ்சம் நேரம் பொறுத்து
வந்ததற்காக மன்னியுங்கள்-கொஞ்சம் அவசரமான வேலையாய்ப்
போயிருந்தேன்-ஒத்திகை ஆரம்பியுங்கள்-முதல் காட்சியில்
யார் ஆரம்பம் செய்கிறது?
(புஸ்தகத்தை எடுத்துக்கொண்டு)
-லோகநாயகி, ஆரம்பி-
லோ. எனக்கு உடம்பு சவுக்கியமாயில்லே-நான் ஒத்திகெ
பண்ண முடியாது.
வி. உம்-வீணாகப் பிடிவாதம் செய்யாதே-நான் சொல்வதைக்
கேள், ஆரம்பி.
லோ. ஆனால்-அந்த பையனுக்கு அந்த வேஷம் கொடுக்காதிருந்தா-
நான் ஒத்திகை பண்றேன்.
வி. என்ன!-வீணாகக் கெட்டுப்போகாதே-ஆரம்பி.
லோ. நான் கெட்டுப் போறேனா, யார் கெட்டுப் போறாகளோ
பாப்போம்!-நான் மாட்டேன்-நான் கேட்டபடி செய்யாப்போனா-
வி. என் கடைசி வார்த்தையைக்கேள் - உன் நிபந்தனைப் பிரகாரம்
நான் உனக்கேற்படுத்தும்படியான எந்த நாடக பாத்திரத்தையும்
நீ வேண்டாமென்று மறுக்கலாகாது. அப்படி மறுப்பாயாயின் நான்
உன்னை நீக்கிவிடலாம்.
லோ. நீங்க நீக்கிவிடுரதென்னா? நானே விலகிப் போறேன். -
என் சம்பளத்தெ கொடுத்துவிடுங்க - சரஸ்வதி விலாச சபையில்
நான் எப்போ வருவேனோ இண்ணு காத்திண்டிருக்கா.
வி. சரி, ஆனால் - இன்னும் இந்த மாசம் முடிய நான்னு நாளிருக்கிறது;
நீயாக விலகிப் போகிறபடியால் நான் உனக்கு இந்த மாசத்திய
சம்பளத்தைக் கொடுக்க வேண்டிய நிமித்தியமில்லை. ஆயினும்,
இதோ பூராவாகக் கொடுக்கிறேன். - பெற்றுக்கொண்டு போ.
(தன் ஜேபியிலிருந்து ஒரு செக் புஸ்தகத்தை எடுத்து அதில்
ஒரு செக் எழுதி அவள் கையில் கொடுக்கிறான்.)
லோ. சரி - கொடுங்கள்- நானில்லாமே இந்த நாடகம் என்னமா நடக்கிறதோ பார்க்கிறேன்!
வி. உம் - சரிதான் - போய்வா.
(லோகநாயகி கோபத்துடன் போகிறாள்)
இன்றைக்கு இனி ஒத்திகை வேண்டாம்.மறு ஒத்திகை
என்றைக்கு என்று உங்களுக்கெல்லாம் சொல்லியனுப்புகிறேன்.
நீங்கள் எல்லாம் உத்தரவு பெற்றுக்கொள்ளுங்கள்.
(எல்லோரும் விடை பெற்றுச் செல்கின்றனர்).
கிருஷ்ணசாமி முதலியார் - இப்படி வாருங்கள்.
(கிருஷ்ணசாமி முதலியார்மாத்திரம் சாமிநாதனுடன் திரும்பி வருகிறார்.)
உங்களை நேற்றிரவே கேட்கவேண்டுமென் றிருந்தேன் -
இந்த குழந்தையை எங்கே பிடித்தீர்? நிரம்ப புத்திசாலியாகக்
காணப்படுகிறான்-
கி-மு. எங்கள் பக்கத்து வீட்டிலிருக்கும் குழந்தை; என் பையனோடு
பள்ளிக்கூடத்திற்கு ஒன்றாய்ப் போய்ப் படிக்கிறான். சாயங்காலத்தில்
என் பையனுக்கு "வடிவேலு" வின் பாகத்தைச் சொல்லிக்கொண்டு
வரும்பொழுது, இவனும் கூடவிருந்து அந்த பாகத்தை யெல்லாம்
அப்படியே ஒப்பித்துக்கொண்டு வருவான். நேற்றைத் தினம்
திடீரென்று என் பையனுக்கு வலி காணவே - நான் எப்படி
நாடகத்தை நடத்துவது "வடிவேலு" வின் பாகமில்லாமல், என்று
யோசித்துக்கொண்டிருக்கையில் இந்த குழந்தையை அதை
நடிக்கும்படிச் செய்யலாமேயென்று யோசனை பிறக்க இவன்
தாயாரிடம் மிகவும் மன்றாடி உத்தரவு பெற்று அழைத்து வந்தேன்
நம்முடைய நாடக சாலைக்கு. எங்கே மேடைக்கு வந்தபின்
பயப்படுகிறானோ என்று பார்த்தேன். என் பையனைவிட
நன்றாய் நடித்தான்.
வி. ஆம்- அப்படித்தான் எல்லோரும் சொன்னார்கள்- எனக்கும்
அப்படித்தான் தோன்றியது-. உங்கள் பையனுக்கு இன்று
உடம்பு எப்படியிருக்கிறது?
கி.மு. கொஞ்சம் சுமாராக யிருக்கிறது பார்த்தீர்களா? மறந்தேன்!
அவனுக்கு ஒரு மருந்து வாங்கிக்கொண்டு போக வேண்டியதாயிருக்கிறது.
நான் டிராம் வண்டியில்போய் வாங்கிக்கொண்டு வருகிறேன்.
நீங்கள் கொஞ்சம் நேரம் இங்கே இருப்பீர்களோ இல்லையோ?
வி. இருப்பேன்.
கி.மு. இவன் இங்குதானிருகட்டும் நான் போய் அந்த மருந்தை
வாங்கிக்கொண்டு திரும்பிவந்து இவனை வீட்டிற்கு அழைத்துப் போகிறேன்.
வி. அப்படியே செய்யுங்கள்.
கி.மு. அப்பா, இங்கு தானிரு- நான் இதோ வந்துவிடுகிறேன்.
(போகிறார்)
வி. (சாமிநாதனை சற்றுநேரம் உற்றுப் பார்த்து) இப்படி வா.
(சாமிநாதன் அருகிற் போகிறான்)
உன்பெயர் என்ன?
சா. சாமிநாதன் எம்பேரு எங்கம்மா சாமி இண்ணு கூப்பிடராங்க.
வி. உன் அம்மா பெயர் என்ன?
சா. அம்மா பேரா? அம்மாதான்.
வி. உன் அப்பா இருக்கிறாரா?
சா. இருக்கறாரு.
வி. எங்கே?
சா. ஊர்லே.
வி. எந்த ஊரிலே?
சா. அது அம்மா சொல்ல மாட்டேண்ராங்கோ – நான் கேட்டா அழராங்கோ
அம்மா, அத்தொட்டு நான் கேக்ரதில்லே.
வி. ஊரில் இருக்கிறார் என்று உனக்கு எப்படித் தெரியும்?
சா. அம்மா தான் சொல்ராங்களெ.
வி. அவர் ஊரிலிருந்து எப்பொழுது வருவார் தெரியுமா உனக்கு?
சா. தெரியும்.
வி. தெரியுமா? எப்பொழுது?
சா. சாமிக்கு எப்போ இஷ்டமோ அப்போ வருவாரு.
வி. எந்த சாமிக்கு?
சா. எனக்கல்லா கோவில்லே இல்லெ சாமி? அந்த சாமிக்கி.
வி. யார் சொன்னது அப்படி?
சா. அம்மா சொன்னாங்க.
வி. (பெருமூச்செறிந்து) உனக்கிஷ்ட மில்லையா உங்கள் அப்பா
-ஊரிலிருந்து வரவேண்டுமென்று?
சா. எனக்குக்கூட இஷ்டம்-அதாம் கோவுலுக்கு போவும்
போதெல்லாம்,-கண்ணை மூடிகினு- சாமியே கேக்கரனே
எங்கப்பாவெ எங்கிட்ட அனுப்பிக்கச் சொல்லி.
வி.சாமி என்ன பதில் சொன்னார?
சா. இத்தினி நாளும் பதில்சொல்லலே போன வெள்ளிக் கெழமெ,
கண்ணெ மூடிகினு கேட்டனா, அப்போ மாத்திரம் ஆகட்டும் இண்ணாரு.
வி. சாமியா?
சா. ஆமா-நான் தான் காதாலே கேட்டனெ.
வி. அப்பொழுது, உங்கள் அப்பா வருவாரா சீக்கிரம்?
சா. ஓ! சாமி பொய் பேசுவாரா?
வி. மாட்டார்! உம் இதை உங்கள் அம்மாவிடம் சொன்னையா?
சா. சொன்னே- அம்மா அத்தெ கேட்டு அழுதாங்க-
அழுதாலும் அப்புறம் எனக்கு முத்தி கொடுத்தாங்க.
வி. ஈசனே! அப்பா, உன் வயசென்ன? தெரியுமா உனக்கு?
சா. தெரியும் எனக்கு ஆறு வயசாவுது நாயித்துக் கெழம
வந்தா ஏழாவது வயசு பொறக்கும்.
வி. அதெப்படி தெரியும் உனக்கு?
சா. தெரியுமே வெள்ளிக்கிழமெ வருஷம் பொரப்புவல்லே?
பள்ளிக்கூடத்திலேகூட லீவு உடலே?
வி. ஆமாம்.
சா. அண்ணக்கி தான்நான் பொறந்தனா வருஷப் பொறப்பு
பொறந்ததும் நானு பொறந்தேன் இண்ணு அம்மா சொன்னாங்க
எனக்கு நண்ணா தெரியும்; வருஷா வர்ஷம், வருஷப்பொறப்பு
நண்ணு, நானு பொறந்த நாளிண்ணு, அம்மா எனக்கிஷ்டமானது
என்ன மானா வாங்கி கொடுக்கிறாங்களெ! நானு நண்ணா படிச்சாகா.
வி. ஈசனே! நான் நினைக்கும் வண்ணம் இருக்குமாக! என்ன
மதிமோசம் போனேன் நான்!
சா. என்னா அது?
வி. உன் பேச்சல்ல- கிட்டவா உம்- இந்த வெள்ளிக் கிழமையா
உனக்கு வாங்கிக் கொடுக்கப் போகிறார்கள் உங்கள் அம்மா?
சா. ஆமாம்.
வி. என்ன கொடுக்கப் போகிறார்கள் உனக்கு?
சா. நானு, எங்கே ஊட்டு எதிர்லே நாய்காரெ வைச்சினு
இருக்கிறானெ நாலு நாயிகுட்டி, அதிலெ சின்னகுட்டியெ
வாங்கிதரச் சொன்னே-
வி. வாங்கிக் கொடுக்கிறேன் என்றார்களா?
சா. நாய்க்காரன் ரொம்ப வெலெ சொல்லரா-இப்பொ ரூபாயில்லெ,
எல்லாம் வாரவர்ஷம்பார்த்துக்கலாம்- இந்தவர்ஷம் பொம்மே
நாய்குட்டி வாங்கி தரெண்ணாங்க-
வி. அது உனக்கு துக்கமா யிருக்கிறதா?
சா. ஒரு வர்ஷத்துக்குள்ளே அந்த சின்ன குண்டு குச்சி
நாயிகுட்டியே, யாரானாலும் வாங்கிகினு பூட்டா என்னா
செய்யரது இண்ணு நெனைச்சிகினா எனக்கு அழெ வருது-
ஆனா நானு அழரதில்லெ-
வி. ஏன்?
சா. நானு அழுதா, அப்புறம் அம்மா அழுவாங்க-அம்மாவுக்கு
அழவரப் பண்ணலாமா நானு?-அம்மா எம்மேலே எவ்வளவு
ஆசையா யிருக்கிறாங்கோ? அத்தொட்டு.
வி. சாமி,அந்த நாய்க்குட்டியை நான் உனக்கு வாங்கித்தரவா?
சா. (சிரித்த முகத்துடன்) வாங்கித்தர்ரைங்களா?
(திடீரென்று முகம்மாறி) ஆனா
வி. என்ன ஆனால்?
சா. ஊம்-அம்மா-ஒர்த்தரையும் ஒண்ணும் வாங்கிக் கொடுக்கச்
சொல்லி கேக்கக் கூடாதிண்ணாங்களே?
வி. நீ கேட்பதன் முன்பாக நானே வாங்கிக் கொடுப்பதாகச்
சொன்னேனே.
சா. நீங்களே சொன்னைங்கல்லா?
வி. ஆமாம் நானாகத்தான் சொன்னேன் முன்பு.
சா. அப்பொ, அம்மா கோவிச்சிக்க மாட்டாங்கல்லா?
வி. கோபித்துக் கொள்ளமாட்டார்கள்-என்னு நினைக்கிறேன்.
சா. ஒருவேளெ அம்மா கோவிச்சிகினா அந்த நாயிகுட்டியே
நீங்க இங்கயே வைச்சிகிங்கோ நானுஎப்பவானா இங்கே
வந்தேனிண்ணா பார்த்துட்டுப் போறேன்.
வி.அந்த நாய்க்குட்டியின்மேல் ஏன் உனக் கவ்வளவு ஆசை?
சா.அது நல்ல நாய்க்குட்டி- சின்னதா, குண்டா, அழகாயிருக்குது வால்
மாத்திரம் கறுப்பா நானு கண்ணு கண்ணு இண்ணு கூப்பிட்டா
குடுகுடுகுடு இண்ணு ஓடியாருது! அதுக்கு எம்மேலெ ரொம்ப
ஆசை இண்ணு நாய்காரன் கூட சொன்னான்.-
கிருஷ்ணசாமி முதலியார் மறுபடியும் வருகிறார்.
கி.மு. வாடா அப்பா, போகலாம்.
சா. நானு வரட்டுமா?
வி. போய்வா.
சா. காபகம் வைச்சிகிரைங்களா? நாலு குட்டியிலே சின்ன குட்டி.
வி. கிருஷ்ணசாமி முதலியார், நான் இரண்டு தினம் பட்டணத்தைவிட்டு
வெளியே போகவேண்டி யிருக்கிறது. நான் வருகிற வரையில்
ஒத்திகையெல்லாம் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.
கி.மு. எங்கே அவ்வளவு அவசரமாக?
வி. திருநெல்வேலி வரையில்.
கி.மு. சரி, அப்படியே ஆகட்டும்.
சா. அந்த நா குட்டிக்கி வாலு மாத்திரம் கறுப்பாயிருக்கும் தெரியுமா?
வி. சரிதான்.
(கிருஷ்ணசாமி முதலியார் சாமிநாதனை அழைத்துக் கொண்டு
போகிறார்)
வி. பிறந்த தேதியை முனிசிபல் ரிஜிஸ்டரில் பார்த்தால் தெரிந்து
போகிறது. என்ன மணி? உடனே புறப்பட்டால் இன்றைத்தினமே
போகலாம் பரமேஸ்வரா! நீர்தான் என் சந்தேகத்தையெல்லாம்
நிவர்த்தி செய்ய வேண்டும்! (விரைந்து போகிறான்)
காட்சி முடிகிறது.
-----------------------------------------------------------
மூன்றாம் அங்கம் - இரண்டாம் காட்சி.
இடம்-சென்னை-திருவல்லிக்கேணியில் ஓர் சிறிய வீட்டின்
முன்பாகத்தின் கூடம்.
சாமிநாதன் பொம்மை நாய்க்குட்டியைக் கையில் வைத்துக்கொண்டு
நிற்கிறான். அருகில் மங்கையர்க்கரசி அவன் முதுகைத் தடவிக்
கொடுத்துக்கொண்டு நிற்கிறாள்.
ம. கண்ணே!வருத்தப்படதே-நான் என்ன செய்வது? உன்
முகவாட்டத்தைப் பார்த்து சஹிக்காமல்-ரூபாய் போனால்
போகிறதென்று அந்த நாய்க்காரனிடம் போய்ப் பார்த்தேன்.
அந்தக் குட்டியை வேறு யாரோ நேற்று சாயங்காலம் வாங்கிக்கொண்டு
போய்விட்டதாகச் சொல்லுகிறான்.மற்ற மூன்று குட்டிகளில்
ஏதாவதொன்று-உனக் கிக்ஷ்டமானதைச் சொல்-வாங்கித்
தருகிறேன்.நீயாக வந்து பார்த்துச் சொல்லுகிறாயா?
சா. வேணாம்-வேறொண்ணும்.
ம. கண்ணே!நான் சொல்வதைக் கேள்.இன்று நீ பிறந்த
நாளில் முகவாட்டத்துடன் இருக்கலாமா?
சா. நானு-சந்தோக்ஷமதா யிருக்கணும் இண்ணு பாக்கரெ-
அந்த நாய் குட்டியே நெனச்சிகினா-துக்கம் அதுவா
-உள்ளே யிருந்து வருதும்மா!
ம. கண்ணே!கண்ணே!-நான் இனி என் செய்வது?-போனது போகட்டும்,
அதைப்பற்றி நினையாதே-நீ துக்கப்பட்டு-எனக்குத் துக்கம்
வரும்படி செய்யலாமா?
சா. இல்லெ அம்மா,நீங்க-துக்கப்படாதைங்கோ-நானு
சந்தோக்ஷமா யிருக்கரே-
ம. அதுதான் நல்லது-நீ விளையாடிக்கொண்டிரு.நான்
உள்ளே சென்று உனக்கு பூரிலட்டு சுட்டுக்கொண்டு வருகிறேன்.
சா. ஏன் அம்மா? சாமி பொய் பேசமாட்டார் அல்லா?
ம. மாட்டார் கண்ணே-ஏன் கேட்கிறாய்?
சா. அந்த நாய்குட்டியெ உனக்கு கொடுக்கரே எப்படியும்,
இண்ணு சொன்னாரு-
ம. ஆனால்-எப்பொழுதாவது-கொடுப்பார் பயப்படாதே.
(முத்தமிட்டுவிட்டு உள்ளே போகிறாள்)
சா. (பொம்மை நாய்க் குட்டியை தூரத்தில்வைத்து) சு சு சு! சு!
-இது கழுதெ நாய் குட்டி! கவுறு கட்டி இழுத்தாதாம் வரும்!
(ஒருபக்கமாகப் போய் உட்கார்ந்து கண்ணை மூடிக்கொள்ளுகிறான்)
சாமி! என் கண்ணு நாகுட்டியெ கொடுங்க!-
விஜயரங்கம் ஒரு நாய்க்குட்டியுடன் வாசற்படி யருகில்
வந்து நிற்கிறான்.
சா. சாமி! என் கண்ணு நாய்குட்டியெ கொடுங்க!
(விஜயரங்கம் தான் கொண்டு வந்த நாய்க் குட்டியை அவன்
முன்னிலையில் விட்டுவிட்டு சற்றே ஒதுங்கி நிற்கிறான்)
(கண்விழித்து நாய்க்குட்டியைப் பார்த்து, பரபரப்புடன் எடுத்துக்
கட்டி யணைந்து முத்தமிட்டு) அம்மா! அம்மா! சாமி
நாகுட்டியெ கொடுத்தாரு எனக்கு!
(உள்ளே நாய்க்குட்டியுடன் ஓடுகிறான்)
வி. ஜகதீசனே! ஜகதீசனே! (பெருமூச்செறிகிறான்)
மங்கையர்க்கரசி சாமிநாதனுடன் உள்ளே யிருந்து விரைந்து மறுபடி வருகிறாள்.
ம. ஏதடா சாமி இது?
சா. சாமி குடுத்தாரு அம்மா!
ம. [விஜயரங்கத்தைப் பார்த்து திடுக்கிட்டு நின்று] சாமி--இவர்
யார் தெரியுமா--உனக்கு ?
சா. தெரியும் அம்மா--அங்கே நாடகமெல்லாம் போடராங்களே,
அங்கே இருக்கிறவங்க அம்மா.
ம. அவரை--நாய்க்குட்டி வேண்டுமென்று--கேட்டாயா நீ ?
சா. இல்லெ அம்மா,--நானா கேக்கலெ அம்மா--அவுங்களா
கொடுக்கிரே இண்ணு--சொன்னாங்கம்மா !
ம. அவர் கையிலிருந்து இதை உன்னை யார் வாங்கச் சொன்
னது ?
சா. அவர் கையிலிருந்து வாங்கலே அம்மா !--நானு கண்ணெ
மூடிகினு--சாமியெகேட்டனா--ஊம்--கண்ணெதெறந்து
பாத்தா--நாய்குட்டி எதிர்லே இருந்துது அம்மா--
ம. என் உத்தரவில்லாமல் ஒருவரிடமிருந்தும் ஒன்றும் வாங்கக்
கூடாதென்று சொல்லியிருக்கிறேனோ இல்லையோ ?
சா. [வருத்தத்துடன்]சொல்லி--இருக்கரைங்க.
ம. முன்பு--இதைக்கொண்டுபோய்--அவரிடம்-கொடுத்து விட்டு வா.
வி. [கஷ்டத்துடன் பேசுகிறான்] மங்கையர்க்கரசி--பொறு
பொறு--அவசரப்படாதே--
ம. [கோபத்துடன்]சாமிநாதன் !--முன்பு கொடுத்து விட்டு வா.
சா. [கண்களில் நீர் ததும்ப] இந்தாங்க ஐயா--
[நாய்க் குட்டியை விஜயரங்கத்திடம் கொடுக்கிறான்].
வி. மங்கையர்க்கரசி !--நான் செய்த தப்பிதத்திற்காக--
என்னை உன் மனம் பூரணமாகுமளவும்--எவ்வளவு
வேண்டுமென்றாலும் தண்டி--அவன்--அறியாப் பாலன்
--அவனையேன் தண்டிக்கிறாய் ?
ம. உமக்கு என்னத்திற்கு அது?
வி. சொல்லுகிறேன்-நான் சொல்வதை, அவன் குழந்தை
கேட்பது நல்லதல்ல-அவனை உள்ளே அனுப்பிவிடு
கொஞ்சம் நேரம்.
ம. சாமி கொஞ்சம் உள்ளே போயிரு.
(சாமிநாதன் நாய்க் குட்டியைத் திரும்பி திரும்பிப் பாரத்து
விட்டு மெல்ல உள்ளே போகிறான்; கீழேயிருந்த நாய்க்குட்டி
அவன் பின்னால் உள்ளே ஓடுகிறது, மங்கையர்க்கரசி அதைத்
தடுக்கப் பார்க்கிறாள்.)
வி. (அவளைத் தடுத்து) வேண்டாம், உன்னை வேண்டிக்
கொள்ளுகிறேன். பரமேஸ்வரனாகப் பார்த்து அந்த நாய்க்
குட்டிக்கு அவனைப் பின்தொடரும்படியாகப் புத்தி கொடுத்திருக்கிறார்.-
அதனைத் தடுக்காதே-அவனுக்கு இன்னும் வருத்தத்தை யுண்டுபண்ணாதே.
ம. ஆம்! அந்த பரமேஸ்வரனாகப் பார்த்து, உம்மை நான்
தூங்கிக்கொண்டிருந்தபொழுது ஒரு வார்த்தையும் சொல்லாமல்
விட்டுப் பிரியச் சொனனாரோ? எங்கு போகிறீர் என்பதையும்
தெரிவிக்காமற் போகச் சொன்னாரோ? ஆறுவருஷங்களாக
இவர்கள் எக்கதி யானாலென்னவென்றிருக்கச் சொன்னாரோ?
உம்மை மாத்திரம் எதேச்சையாய் சுகமாயிருக்கச் சொன்னாரோ?
வி.நான் இக்காலத்தையெல்லாம் சுகமாய்க் கழித்தேனோ
இல்லையோ என்பதை பிறகு சொல்லுகிறேன்- இப்பொழுது
நீ முதலில் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லுகிறேன்.-
இவ்வாறெல்லாம் என்னை நடக்கச் செய்தது அந்த பரமாத்மாவின்
இச்சைதான் என்று உறுதியாய் நம்புகிறேன்.
ம. என்ன? பரமாத்மா ஒருகாலும் உம்மைப் பாபமிழைக்கும்படிச்
சொல்லியிருக்கமாட்டார். செய்தது நீர் இருக்க, அவர்மீது
பழியையேன் விருதாவில் சுமத்துகிறீர்?
வி. நான் அவர்மீது பழி சுமத்தவில்லை. நான் முன் ஜன்மங்களிற்
செய்த பாபங்களுக்கெல்லாம் தக்க பிராயச்சித்தம்
அனுபவிக்கவேண்டும் என்று சொல்ல வந்தேனோயொழிய,
வேறொன்றுமில்லை.
ம. என்ன நீர் பிராயச்சித்தமாகக் கஷ்டம் அனுபவித்தது இந்த ஆறு
வருஷமாக? பெண்சாதி பிள்ளையோடிருந்தால் காலுக்குக
கட்டாயிருக்குமென்று எதேச்சையாய் மனம் போனவழி
சந்தோஷமாயிருந்ததா? இது பிராயச்சித்தமானனால், உலகில்
எல்லோரும் பாபமே செய்ய விரும்புவார்கள். இப்படிப்பட்ட
பிராயச்சித்தத்தை அனுபவிக்க!
வி. இந்த ஆறு வருஷங்களாக- நான் அனுபவித்ததைச்
சொல்லுகிறேன், பிறகு நீயே தீர்மானம் செய்- நான்
சுகமனுபவித்தேனோ துன்பமனுபவித்தேனோ என்பதை, சொல்லவா?
ம. சொல்லும்
.
வி. உன் தகப்பனார் இறந்தவுடன் இவ்வுலகத்தின்மீது எனக்கு
ஓர்வித வெறுப்பு உண்டாகி இவ்வுலகத்தின் கஷ்டம் இன்னதென்று
உண்மையில் அறிய வேண்டுமென்று, நான் ஒரு வருஷம் உருமாறி
வசிக்க எண்ணங் கொண்டவனாய் உன்னை விட்டுப் பிரிந்தேன்
அன்றிரவு. பிறகு அந்த ஒரு வருஷம் எளிய வேலைக்காரனைப்போல்
வேஷம் பூண்டு இவ்வுலகத்தில் எனக்கிருந்த நம்பிக்கையெல்லாம்
போய் கஷ்டப்பட்டது அந்த பரமாத்மாவுக்குத்தான் தெரியும்!
இவ்வுலகத்தில் ஒருவன் எவ்வளவு மனத்துயர் அனுபவிக்கலாமோ,
எவ்வளவு தேககஷ்டம் அனுபவிக்கலாமோ,
அவ்வளவையும் அனுபவித்துத் தீர்த்தேன்! பிறகு ஒரு
காரணம்பற்றி சமுத்திரத்தில் வீழ்ந்து என்னுயிரையே
மாய்த்துக்கொள்ளப் பார்த்தேன். தெய்வாதீனமாக
உயிர்ப்பிக்கப் பெற்றேன்.
ம. ஏதாவது புதிய கதை எழுதுகிறீரா இப்பொழுது?
வி. மங்கையர்க்கரசி! உன் மனம் வந்தபடிசொல்-நீ சொல்லத்தகும்,
நான் கேட்க வேண்டியவனே. ஆயினும் நான் இப்பொழுது
கூறுவதில் அணுவளவேனும் பொய்யிருக்கிறதென்று எண்ணாதே.
ம. சொல்லி முடியும் கதையை.
வி. சரி, உன் இஷ்டம். நான் என் கடமைப்படி சொல்ல
வேண்டியதைச் சொல்லுகிறேன். அதை நீ நம்பினாலும்
நம்பாவிட்டாலும் உன் இஷ்டம். பிறகு நான் உயிர்ப்பிக்கப்பட்டபின்,
உலகில் ஒருவன் பெறக்கூடிய சகல ஐஸ்வர்யங்களையும் பெற்றேன்!
எல்லோராலும் புகழப்பட்டேன்! ஆயினும், இந்த ஐந்து வருஷங்களாக
எனக்கு மனத்தில் நிம்மதி கிடையாது, சந்தோஷம் என்பதும் கிடையாது.
ம. ஏன்? உமக்கென்ன குறைவாயிருந்தது?
வி. இந்த ஐந்து வருஷ காலமாக உன்னைப்பற்றி நான்
நினைக்கும்பொழுதெல்லாம், என் மனம் பட்டபாடு
அந்த பரமாத்மன்தான் அறிவார். சிறு குழந்தைகளைக்
காணும்பொழுதெல்லாம் என் மனம் உள்ளுக்குள்ளே
குன்றியது. அவர் ஒருவர்தான் அறிவார். எனக்குப்
பித்தம் பிடிக்காதிருந்ததே அதுதான் ஆச்சரியம்!
ம. பொய்யான கதைகளையும் நாடகங்களையும் எழுதும்பொழுது,
படிப்பவர்களெல்லாம் இது மெய்யாகவே நடந்திருக்கும் என்று
நம்பும்படிச் செய்கிறீரே, இந்தக் கதையை நான் நம்பும்படிச்
செய்ய உமக்கேன் சக்தியில்லாமற் போயிற்று?
வி. அந்த பரமேஸ்வரன் பாதத்தாணைப்படி சொல்லுகிறேன்!
இதை உறுதியாய் நம்பு, இதில் அணுவளவும் பொய்யில்லை.
ம. நம்புகிறேன் இந்த ஒரு காரணத்தைச் சொல்லிவிடும்,
பிறகு நீர் கூறுவதையெல்லாம் நம்புகிறேன். இந்த
ஐந்து வருஷ காலமாக என்னைப்பற்றியும் குழந்தையைப்
பற்றியும் ஏதோ நினைந்து வருந்தியதாகச் சொன்னீரே,
அது உண்மையாயின் அரைநொடியில் எங்களிடம்
வந்திருக்கமாட்டீரா? இந்த ஆறுமாதமாகத்தானே
சென்ன பட்டணம் வந்தேன். அதற்குமுன், நாமிருந்த வீடு
தெரியாமற் போச்சுதா? கர்ப்பிணியாயிருந்தபொழுது
விட்டுவிட்டுப் போனோமே, என்னவானாள், எக்கேடு
கெட்டாள், என்றாவது விசாரித்தீரா? அதற்குக் காரணத்தைச்
சொல்லும் முன்பு.
வி. நான் உன்னைவிட்டுப் பிரிந்தபொழுது நீ கர்ப்பிணியாயிருந்தது
எனக்குத் தெரியாது.
ம. தெரியாதா? நான் உமக்குச் சொல்லவில்லையா?
வி. இல்லை.
ம. இல்லையா? உண்மையில் உமக்கு நான் சொல்லவில்லையா
ஓர் இரவு?
வி. இல்லை. சத்தியமாகக் கூறுகிறேன்.
ம. அப்படியே இருக்கட்டும். அந்த தப்பிதத்திற்காகவா அதற்காகவா
ஒரு வருஷமானவுடன் திரும்பி பரவில்லை. நீர் எழுதிவைத்துப் போனபடி?
வி. அல்ல. அக் காரணமல்ல.
ம. வேறு எக் காரணம்?
வி. பரமேஸ்வரன் என்னை மன்னிப்பார்! அந்த ஒரு வருஷ
முடிவில் திருச்செந்தூருக்குப் போகிற மார்க்கத்தில் நீயும்
குழந்தையும் றெயில் உடைந்து நேரிட்ட அபாயத்தில்
தேய்வாதீனத்தால் தப்பியதாக, சுதேசமித்திரன்
பத்திரிகை மூலமாக, நான் கண்டறிந்தேன் ஒரு நாள்.
அப்பொழுதுதான் உனக்குக் குழந்தை பிறந்த விஷயம்
எனக்குத் தெரிந்தது.
ம. நிரம்பசரி! அப்படிப்பட்ட அபாயத்தினின்றும் தப்பியதாகவறிந்துந்
திரும்பி வராமலிருந்தீரே! உமது குழந்தையின்
முகத்தைப் பார்ப்பதற்காவது!
வி. பரமேஸ்வரா! பரமேஸ்வரா! நான் செய்த பாபங்களையெல்லாம்
அனுபவித்துத்தானே தீரவேண்டும்! மங்கையர்க்கரசி!
அக் குழந்தை என் குழந்தையென்று
அப்பொழுது நான் அறியவில்லை.
ம. என்ன! யார் குழந்தை என்று- ஓ!- அப்படியா சமாசாரம அவ்வளவு
கேவலமாகவோ என்னை எண்ணினீர்? நில்லும் தூர!
வி. ஐயோ! நான் அவ்வாறு நினைத்தது தவறு என்று
ஒப்புக்கொள்ளுகிறேன்! ஒப்புக்கொள்ளுகிறேன்! மங்கையர்க்கரசி!
ம. என்னைப் பெயரிட்டழையாதீர்! அவ்வாறு கேவலமாக
எண்ணியபின் உமக்கு அந்த சுதந்தரம் கிடையாது!
உம்மைப்போல் என்னையும் எண்ணி விட்டீரா?
வி. என்னைப்போலவா?
ம. ஆம். உம்மைப்போல என்றுதான் கூறினேன்!
வி. மங்கையர்க்கரசி, நான் உன்மீது சந்தேகப்பட்டதற்காக
உனக்கு இஷ்டமானபடியெல்லாம் திட்டு பொறுக்கிறேன்.
என்னை மஹாபாபி, பாதகன், என்று அழை ஒப்புக்கொள்ளுகிறேன்-
இந்த ஆறு வருஷமாக உனக்குத் துரோகம் கனவிலும் நினைத்தேன்
என்று மாத்திரம் எண்ணாதே. உன்னைக் கையிரந்து
வேண்டிக்கொள்ளுகிறேன்.
ம. தீண்டாதீர் என்னை! இன்னொருத்தியை தீண்டிய கரத்தால்!
வி. இன்னொருத்தியையா? ஐயோ! கேவலம் பாமர
ஜனங்கள் நம்புவதை நீ நம்பாதே! நான்-
ம. ஜனங்கள் கூறுவதை நான் நம்புவதாவது? என்
கண்ணாரக் கண்டபிறகு! அன்றைத்தினம் விக்டோரியா
பப்ளிக் ஹாலில் நடந்ததை மறந்தீரோ?
வி. நான் மறக்கவில்லை. அந்த உண்மையையும் உறைக்கிறேன்.
நான் பேசிக்கொண்டிருந்தபொழுது என் கண்கள் உன்னையும்
குழந்தையையும் சந்திக்கவே அப்பொழுது உண்மையறியாதிருந்தபடியால்
எனக்குப் பெரும் துக்கம் மேலிட மெய்ம் மறந்தேன். பக்கத்தில்
ஒருபுறமாய் நின்றுகொண்டிருந்தவள், நான் கீழே விழாதபடி
ஓடி வந்து தாங்கியதாகக் கேட்டறிந்தேன் பிறகு அப்பொழுது
என்னைத் தீண்டினது தவிர வேறொன்றில்லை சத்தியமாக நம்பு!
மங்கையர்க்கரசி! உன்மீது நான் சந்தேகப்பட்டு ஐந்து வருஷம்
கஷ்டம் அனுபவித்தேன். மற்றொரு பெண்மீது பழி சுமத்தி
அப்பாபத்திற்குள்ளாகிக் கொள்ளாதே உன்னை! வேண்டாம்! வேண்டாம்!
ம. யார் அப் பெண்?
வி. உண்மையில் யார் என்று எனக்குத் தெரியாது இதுவரையில்.
முன்பு நான் கூறிய என் விர்த்தாந்தத்தில் சிறிது பாகம் கூறாமல்
மறைத்தேன், அதையும் சொல்லிவிடுகிறேன், கேள். நீ எனக்குத்
துரோகம் செய்தாய் என்று நான் நினைத்ததும் உலகத்திலுள்ள
என் நம்பிக்கை யெல்லாம் அடியுடன் அற்றவனாய்--என் உயிரை
மாய்த்துக்கொள்ளவே சமுத்திரத்தில் ஓர்நாள் வீழ்ந்தேன்-- மடிந்தேன்
என்றே நான் சொல்லி யிருக்கவேண்டும்--எப்படியோ அதைப்
பார்த்துக்கொண் டிருந்து, பிணமாய்க் கிடந்த என்னுடலை
சமுத்திரத்தினின்றும் எடுப்பிக்கச் செய்து, வயித்தியர்களைக்
கொண்டு மிகவும் கஷ்டப்பட்டு எனக் குயிருண்டாக்கிய
மாதுசிரோமணியவளே!--அது முதல் என்னைத் தன் சகோதரனைப்
போலவே பாவித்து வருகிறாள்.
ம. அதைத்தானோ "சொல்லுகிறார்கள்--சொல்லட்டும்"
என்னும் நாடகமாக எழுதினீர்?
வி. ஆம்.-அதை நீ படித்திருக்கிறாயோ?
ம. அதை மாத்திரமன்று--நீர் அச்சிட்டிருக்கும் புஸ்தகங்களில்
ஒன்றையும் விடவில்லை.
வி. ஆனால் அந்த நாடகத்தில்--ரகுநாதன், தன்மீது பழியில்லையென்று
பிரமாணம் பண்ணுகிற மொழியனைத்தும் என்னுடைய மொழி
என்று நினை.--ரகுநாதன் மனைவி அவனை மன்னித்தது போல்,
நீ என்னை மன்னிக்கமாட்டாயா?
ம. ஆம்--ரகுநாதன் என்ன, நீர் என்மீது சந்தேகப்பட்டதுபோல்-
அவன் மனைவிமீது சந்தேகம் கொண்டனா?
வி. இலை-ஆயினும் அந்த சந்தேகமெல்லாம் நீங்கி நான்
எண்ணியது தவறு என்று உன்னிடம் கூறவே நான்
இங்கு வந்தேன்--இனியாவது என்னை மன்னிக்க மாட்டாயா?
வி. எப்பொழுது அந்த சந்தேகம் நிவர்த்தியாயது?
வி. அதையும் சொல்லுகிறேன் கேள்-அகஸ்மாத்தாய்-
சாமிநாதன் போனவாரம் எனது நாடகசாலைக்கு வர,-- இப்பொழுது
அங்கே நடக்கும் நாடகத்தில் முக்கிய ஸ்திரீ வேஷம் தரிக்கும்
லோகநாயகி என்னும் பெண், சாமிநாதன் முகமும்,குரலும்,அச்சம்
என் ஜாடையாயிருக்கிறதென்று,என்னை ஏளனம் செய்தாள்-
எனக்கும் அதே மாதிரியான சந்தேகம் பிறக்க,இவன் யாரென்று
கண்டறிய வேன்டுமென்று, உங்கள் வீட்டுப் பக்கத்து வீட்டுக்காரராகிய
கிருஷ்ணசாமி முதலியாரை, மறுநாள் சாமிநாதனை நாடகசாலைக்கு
அழைத்து வரும்படி கேட்டேன்.பிறகு கிருஷ்ணசாமி முதலியார்
கூறிய மொழிகளினாலும், நான் மறுநாள் காலை விசாரித்ததினாலும்,
நீ இன்னாள் என்று கண்டறிந்தேன்.பிறகு மறுநாள் சாமிநாதனுடன்
பேசிக்கொண் டிருந்தபொழுது, அவன் பிறந்ததினம் இன்றைக்கு
என்று அறிந்தவுடன் -நான் சந்தேகப்பட்டது தவறு என்று என்
புத்தியிற் படவே,அவன் பிறந்த தினத்தைக் கணக்கிட்டுப் பார்க்க
வேண்டுமென்று. உடனே அன்றைத்தினமே,றெயிலேறி
திருநெல்வேலிக்குப் போய்,முனிசிபல் பிறப்புக் குறிப்பைப் பார்த்து-
சந்தேகம் நிவர்த்தியானேன். உடனே தந்தி கொடுத்து, அவன்
விரும்பிய நாய்க்குட்டியை வாங்கச் சொல்லி, இன்று காலை
றெயிலிலிருந்து இழிந்ததும்,அதை எடுத்துக்கொண்டு- உன்னைக்
காண வந்தேன்-உன் மன்னிப்பைப் பெற.மங்கையர்க்கரசி!
நான் இதுவரையில் அனுபவித்ததெல்லாம் போதாதா?
ம. நீர் அனுபவித்ததைப்பற்றி யோசிக்கிறீரே யொழிய-
நான் இந்த ஆறு வருஷமாக என்ன துயரம் அனுபவித்தேன்
என்று யோசித்தீரா?--அன்றைத்தினம் இரவு-- கண் விழித்து
உம்மை என் பக்கலில் காணாது நான் கலங்கியது தெரியுமா உமக்கு?
--பிறகு உமது கடிதத்தைப் படித்துப் பார்த்து கதறியதை கண்டீரா நீர்?
பிறகு திக்கில்லாமல்,அனாதையாய் ஒன்பது மாதம் உமது
பாலனைச் சுமந்து பெற்று--ஆண் குழந்தையென்று கண்டபொழுது,
நமது புருஷன் நம்முடன் சந்தோஷிப்பதற்கில்லையே யென்று
வருந்தியதை அறிவீரா? பிறகு றெயில் ஆபத்திலிருந்து தப்பியபொழுது
எல்லோரும் சமாதானம் செய்தும், உமது மொழி என் காதில் விழ
வில்லையே யென்று என் மனம் கலங்கியதைச் சொல்லவா நான்?
அப்புறம் நாடகசாலையில் நம்முடைய புருஷனை எல்லோரும்
புகழ்கிறார்களே என்று நானாக உம்மைப் பார்க்க வந்தபொழுது –
எங்களைக் கண்டதும் நீர் மூர்ச்சையாக - அவள் - உம்மைத் தாங்கியதைக்
கண்டபொழுது, என் உள்ளம் எவ்வாறு பதறியது என்பதையும்,
அதை நினைத்து நான் மூர்ச்சையானேன் என்பதையும், யார்
உமக்குச் சொல்வது? - பிறகு இந்த ஐந்து வருஷ காலமாக –
சாமிநாதனுக்கு புத்திவந்தவுடன் - மற்ற பிள்ளைகள் ஏளனம்
செய்யும்பொழுது, வாடிய முகத்துடன் என்னிடம் வந்து,
என் அப்பா எப்பொழுது வருவார், என்று கேட்கும்பொழுதெல்லாம்,
பதில் கூற வகையறியாது தேம்பி யழுது திகைத்ததை
யெல்லாம் அந்த பரமேஸ்வரர்தான் உமக்குச் சொல்ல
வேண்டும்! - என்னை மன்னிப்பு கேளாதீர்! - அவரைக் கேளும்!
[தேம்பி அழுகிறாள்.]
சா. [உள்ளேயிருந்து] அம்மா! நான் வரலாமா?
வி. மங்கையர்க்கரசி! உன் கண்ணைத் துடைத்துக் கொள்.
உன்னை நான் வேண்டி கொள்ளுகிறேன் - என்னை நீ
மன்னிக்காவிட்டாற் போகிறது - ஈசன் என்னை மன்னிப்பார்
என்று நினைக்கிறேன் - அதோ, நமது குழந்தை வருகிறான் –
நீ கண்ணீர்விட்டழுது அவனுக்கு இன்றைத் தினம் துக்கம் விளைவிக்காதே -
சா. [உள்ளேயிருந்து] அம்மா! நான் வரட்டுமா?
ம. வா - கண்ணே.
சாமிநாதன் வருகிறான்; பின்னால் நாய்க்குட்டி ஓடி வருகிறது.
சா. ஏம்மா அழுதைங்க? - இந்த நாய்க்குட்டியெ, எம் பின்னாலே
நான் வரச் சொல்லலெ அம்மா! அதுவா ஓடி வந்துது அம்மா!
நான் இத்தெ கொடுத்தூடரெம்மா -- நீங்க அழாதைங்க –
இந்தாங்கையா நாகுட்டி--
வி. மங்கையர்க்கரசி! --
ம. [கண்ணீரைத் துடைத்துக்கொண்டு] சாமி, -- இப்படி வா --
வைத்துக்கொள் அதை நீயே --
சா. உங்களுக்கு வருத்தமில்லையே?
ம. இல்லையடா கண்மணி--
சா. ஆனா எனக்கு ரொம்ப சந்தோஷம் -- என் கண்ணுக்கு
கூட சந்தோஷம். [நாய்க்குட்டிக்கு முத்தமிடுகிறான்].
ஐயா, சாமி கொடுத்தாரா, நீங்க கொடுத்தீங்களா, இந்த
நா குட்டியெ?
வி. அப்பா -- ஸ்வாமிதான் -- உனக்குக் கொடுத்தார் –
என்னை கொடுக்கச் சொன்னார் --
சா. ஏன் ஐயா -- அழுவரைங்க? - அம்மா -- ஏன் அவரு
அழுவராரு? பாவம்! நாகுட்டி குடுத்துட்டாரு
இண்ணா? - வோணும் இண்ணா, நீங்களே வைச்சிகிங்கோ
-- நானு வந்து அப்பப்போ பாத்தூட்டு வர்ரெ.
வி. வேண்டாம் அப்பா, நீயே வைத்துக்கொள் -- அவருக்கு
மனம் எப்பொழுது வருகிறதோ அப்பொழுதுதான்
மன்னிப்பார் என்னை! அப்பொழுதே நீயும் மன்னிப் பாய்! –
மங்கையர்க்கரசி! நான் வருகிறேன் -- சாமி, நான் வருகிறேன்.
[சாமிநாதனை வாரி எடுத்து முத்தமிட்டுவிட்டு, திடிரென்று
கண்களில் நீர்வடிய வெளியே விரைந்து போகிறான்].
சா. பாவம்!அழுவராரு!--ஏம்மா அழுதுகினு போனாரு?
யார் அம்மா அது?
ம. கண்ணே!-அவர்தான் உன் அப்பா!
[வாரி எடுத்து மார்புடன் அணைத்து முத்தமிடுகிறாள்].
காட்சி முடிகிறது.
--------------------------------------
மூன்றாம் அங்கம் - மூன்றாம் காட்சி..
இடம்--சென்னை-"விஜயரங்கம்"என்னும் நாடகசாலையில்
மேடைக்குப் பின்புறமாயுள்ள ஓர் அறை)
ஒரு மூலையில் ஒரு நாய்க்குட்டி கட்டப்பட்டிருக்கிறது. விஜயரங்கம்
சாமிநாதனைக் கையில் பிடித்துக்கொண்டு உள்ளே வருகிறான்.
ராஜேஸ்வரியும்,லோகநாயகியும், பின் தொடர்ந்து வருகிறார்கள்.
லோ. ஐயா!ஐயா! நான் செய்தது தப்பு இண்ணு ஒப்புக்
கொள்ளறே--எனக்கு புத்தி வந்தது-இனி அந்த மாதிரி
சொல்லமாட்டே-இந்ததரம் மாத்திரம் மன்னிங்க--
வி. இதுவரையில் மன்னித்தது போதும்! இன்றைத்தினம்
கடைசி நிமிஷத்தில்,இவர்கள் உன் வேஷத்தைத் தரிப்பதாக
ஒப்புக்கொண் டிராவிட்டால்,என் நாடகம் என்ன
கதி யாயிருக்கும்!
[சாமிநாதன் நாய்க் குட்டியை, அவிழ்த்துக்கொண்டு
வெளியே போகிறான்].
லோ. ஐயா! நான் செய்தது ரொம்ப தப்புதான்!
புத்தியில்லாமே அப்படி பிடிவாதம் பண்ணே--என்பேர்லே
தயவுவச்சி,இந்ததரம் மாத்திரம் மன்னிங்க;என்
ஜன்மமிருக்குர வரையிலே நான் உங்களிடத்திலேயே
உழைக்கிறே;உங்க காலைப் பிடிச்சி வேண்டிக்கொள்றேன்-
இந்த கடைசிமுறை மன்னிங்க.
வி. இது எத்தனையாவது கடைசிமுறை?
தொந்தரவு செய்கிறாய்?நீ வீடுபோய்ச்சேர்.
சாமிநாதன் நாய்க்குட்டி யில்லாமல் உள்ளே வருகிறான்.
சா. நாயினா--அம்மா உள்ளே வரலாமா இண்ணு கேக்கச்
சொல்ராங்க.
வி. அம்மாவா?--உடனே வரச்சொல் கண்ணே!
( தானாகக் கதவுவரையில் போய் மங்கையர்க்கரசியை
அழைத்து வருகிறான்.)
மங்கையர்க்கரசு,நீ வருவதற்குக் கூடவா கேட்டுக்
கொண்டு வர வேண்டும்?--உட்காருகிறாயா?
ம. வேண்டாம்-சீக்கிரம் உங்கள் வேலையை முடியுங்கள்.
வி. இதோ வந்து விட்டேன்-லோகநாயகி,என்னை இனி
தொந்தரவு செய்யாது--நான் என் உத்தரவை இனி மாற்ற மாட்டேன்.
லோ. அம்மா!நீங்களாவது கொஞ்சம் சிபார்சி செய்யுங்க;
நான் தான் உங்களுக்கு சிரமம் கொடுத்தே--ஆனாலும்
பெண்பாலாகிய நீங்களாவது என்மேலே கொஞ்சம்
இரங்கக்கூடாதா?
ரா. இந்த ஒரு முறை-மன்னிக்கலாகாதா நீங்கள்?
வி. அம்மா!என்ன நீங்களும் அவள் பக்கம் பேசுகிறீர்கள்?
எல்லா ஏற்பாடுகளும் செய்தான பிறகு,ஜெனங்கள்
எல்லாம் கூடியபின்,இன்று நாடகம் நடத்த முடியாது
என்று நான் எந்த முகத்துடன் சொல்லியிருப்பேன்!
பணம் போனாற் போகட்டும்-பிறகு என் பெயர் என்னவாகும்?
நடு ஆற்றில் போனபின் கவிழ்த்து விடுவது போலல்லவோ
செய்தாள்! நீங்கள் எனக்கு உதவியிராவிட்டால் என் பெயர்
என்னாயிருக்கும்! உங்கள் வேண்டுகோளை மறுப்பதாக
எண்ண வேண்டாம்.
லோ. அம்மா! நீங்களாவது சொல்லுங்களேன் உங்கள் புருஷனிடம்
ஒரு வார்த்தெ--இங்கே தள்ளிவிட்டா வேறெங்கெயும் என்னெ
எடுத்துக்கொள்ள மாட்டாகளே! --அம்மா, உங்களுக்கும் என் மேலே
பரிதாபமில்லையா?-- அப்பா குழந்தெ!--நீயாவது உங்க அப்பாவுக்கு
ஒரு வார்த்தெ சொல்ல மாட்டாயா? இந்த வேலையிலிருந்து என்னெ
தள்ளிவிட்டதெ அறிந்தா, என் கடன்காரர்களெல்லாம் என்னைக்
கொண்ணூடுவாங்க!
சா. [தன் தகப்பனிடம் சென்று] பாவம்! நாயினா--இந்த அம்மாளெ
மன்னிச்சுடுங்க நாயினா-இல்லாப்போனா அவுங்களெ
யாரோ கொண்ணூடுவாங்களாம்--பாவம்!
வி. [மங்கையர்க்கரசியைத் திரும்பிப் பார்த்து பிறகு தலைகுனிந்து]
லோகநாயகி,--சரிதான்போ, நாளை காலை வா--சொல்லு
லோ. அவ்வளவு போதும்--கையெடுத்து உங்களெக் கும்பிடுறேன்.
[சாமிநாதனை நோக்கி]
அப்பா!-- என் வயத்திலே பாலைவார்த்தெ! உங்க அப்பாவைப்
போலெ பேரெடுத்து நீ நூறு வருஷம் வாழணும்! --நான் வர்ரேன்.
[கண்ணைத் துடைத்துக் கொண்டு வெளியே போகிறாள்].
வி. மங்கையர்க்கரசி, இவர்கள்தான் மைதிலி அம்மாள், முன்பு
ஒரு முறை என்னுயிரைக் காப்பாற்றியதாகச் சொன்னேனே,
அவர்கள்தான். இவர்கள் இன்றைத் தினம் எனக்கு மஹோபகாரஞ்
செய்தார்கள். இன்று சாயங் காலம் வரைக்கும் பேசாமலிருந்து
விட்டு, நானில்லாமல் இன்றைத்தினம் நாடகமெப்படி நடக்கப்
போகிறதென்று அகங்காரம் கொண்டவளாய் அந்த லோகநாயகி,
இன்றைத்தினம் ஆட்டத்திற்கு தன் சம்பளத்தை இருமடங்காக்கினா
லொழிய வரமாட்டேன் என்று சொல்லி யனுப்பினாள், உடனே
இவர்கள், தான் அந்த வேஷம் தரிப்பதாகத் தெரிவித்து, சொல்ப
காலத்திற்குள் பாடத்தையெல்லாம் படித்து வெகு நன்றாய்
நடித்தார்கள் – ஜனங்களெல்லாம் மிகவும் சந்தோஷப் படும்படியாக. –
நீதான் பார்த்துக் கொண்டிருந்தாயே. -
ம. ஆம் - மிகவும் நன்றாயிருந்தது.
வி. அம்மா - உங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்யக்கூடும்?
ரா. நான் வேண்டும் கைம்மாறு ஒன்றிருக்கிறது.
வி. என்ன சொல்லுங்கள் - உடனே செய்கிறேன்.
ரா. என்னை மறுபடியும் மேடைமீது வரும்படியாகக்
கேட்கலாகாது என்பதே.
வி. உம் - சரி - அப்படியே உங்களிஷ்டப்படி.
ரா. அம்மா, உங்களை ஒன்று கேட்கலாமா நான்?
ம. கேளுங்கள்.
ரா. சீக்கிரம் குழந்தையை உங்கள் புருஷன் வீட்டிற்கு
அழைத்துக் கொண்டுபோய் திருஷ்டி சுற்றிப் போடுங்கள்.
இன்றைத்தினம் நாடகம் நன்றாய் முடிந்ததெல்லாம்
அவனுடைய புத்திசாலித்தனத்தினால் தான் என்று
எண்ணுகிறேன். ஆயிரக்கணக்கான ஜனங்களின் கண்
பட்டிருக்கும் - என் கண்ணே பட்டிருக்கும் ஒருகால்.
ம. அப்படியே ஆகட்டும்.
ரா. அம்மா, நான் வருகிறேன் "ஈன்றபொழுதிற் பெரிதுவக்கும்
தன் மகனைச் சான்றோன் எனக் கேட்டதாய்" என்றபடி
இன்றைத்தினம் நீர் மிகவும் சந்தோஷப் பட்டிருக்க வேண்டும்.-
அப்படியே எல்லா விஷயத்திலும் இன்று முதல், நீர்
சந்தோஷமா யிருப்பீராக!-நான் வருகிறேன்- {போகிறாள்].
சா. அம்மா,அந்த அம்மா ரொம்ப நல்லவங்கல்லா?
[மங்கையர்க்கரசி அவனை வாரி எடுத்து முத்தமிடுகிறாள்].
வி. மங்கையர்க்கரசு-இப்பொழுதாவது என்னை
மன்னித்ததாக ஒருவார்த்தை கூறமாட்டாயா?
[அவள் கரத்தைப் பற்றுகிறான், இட்சணம் வெளியில்
"குதிரை! குதிரை!குதிரை!ஒதுங்குங்கள் ஒதுங்குங்கள்!"
என்கிற கூச்சல் கேட்கிறது].
சா. [ஜன்னல் வழியாக வெளியேபார்த்து]
நாயினா!நாயினா!என் நாய்குட்டி!என் நாய்குட்டி!
[வெளியே ஓடுகிறான்].
வி-ம. சாமி!சாமி!போகாதே!போகாதே!
[என்று கூவிக்கொண்டு பின்னால் ஓடுகிறார்கள்]
காட்சி முடிகிறது.
-----------------------------------------------------------
மூன்றாம் அங்கம் - நன்காம் காட்சி.
இடம்- "விஜயரங்கம்" எனும் நாடகசாலையின் பின்புறத்தில்,
வேஷம் தரிப்பவர்கள் பிரவேசிக்கவும் வெளியே
போகவும் ஏற்படுத்தப்பட்ட வாயில்.
ஜனங்கள் ஒருபக்கம் கும்பலாய் உரத்த சப்தமாய் பேசிக்
கொண்டிருக்கின்றனர்.மற்றொருபுறம் சில ஜனங்கள் இங்கு
மங்குமாய் ஓடிக்கொண் டிருக்கின்றனர்.
சிலர். குதிரெயெ புடிச்சாங்களா? குதிரெயெ புடிச்சாங்களா?
மற்றும் சிலர். குதிரெ எக்கெடானா ஆவுது! குழந்தே தப்
பிச்சிக்கினானா ஐயா?
முதல் மனிதன். கொழந்தைக்கி அபாய மொண்ணு மில்லெ--
அவுங்கப்பனுக்கு தான் ரொம்ப அடி பட்டாப்பொலெயிருக்குது!
சிலர். ஐயோ!பாவம்!எப்டி?எப்டி?
மு-ம. குதரெ ஓடிவரும்போது,ஒரு நாய்குட்டி எதிரிலே
இருந்துதாம், அத்தெ எடுக்கணும் இண்ணு,கொழந்தே
போனானா-அப்படியே கால் சறுக்கி குதிரெக்கி நேரே
உழ்ந்தூட்டானாம்.அவங்கப்பெ ஓடிவந்து கொழந்தை
யெ இழுத்து போட்டானாம்.-கொழந்தைக்குப் படர
அடி, அவங் கப்பனுக்கு பட்டுதாம்.
சிலர். எங்கே பட்டுதாம் அடி?எங்கே பட்டுதாம்?
மு-ம. குதிரெ கொளம்புபட்டு அப்படியே மண்டெ தெறந்து
போச்சா!
சிலர். பொழச்சிகிவானா? பொழச்சிகிவானா?
மு-ம. சொல்ரத்துக்கில்லெ! மோட்டார் வண்டியிலே வைச்சி
இப்பதாம் எடுத்தும் போராங்கோ!-
இரண்டு மனிதர்கள் வருகிறார்கள்.
இ-ம. பாவம்!பாக்கரத்துக்குப் பரிதாபமா யிருக்குது!
மு-ம. என்னா!பூட்டுதா என்னா?
இ-ம. இல்லெ-உயிரிருக்குது இண்ராங்க-அவர் பொண்சாதியாம்
பாவம்,அந்தம்மாளும் அந்த கொழந்தையும் அழவுரதே பாக்க முடியலே!
மு-ம. அந்த சின்ன நாகுட்டி கூட அழுவராப்போலெ கத்துதே!
சிலர். அந்த நாகுட்டியாலெ தானே இவ்வளவு வந்துது,
அத்தே கொண்ணூடணும் முன்னே.
மு-ம. அதென்ன செய்யுமையா பாவம்!-அவுங்கவுங்க தலெ விதி.
சிலர். யாருக்கையா காயம் பட்டது?
மூ-ம. விஜயரங்கப் பிள்ளைக்கி ஐயா!அவர் பேராலெ இந்த
நாடகசாலெ கட்டும்போதே தெரியு மெனக்கு-திர்ஷ்டி
கெட்டதையா!
மூ-ம. ஆனா அந்த பையன் அவர் கொழந்தையா?
மூ-ம. ஆமாம்.
சிலர். யாரு?நாடகத்திலெ ஆடனானே சின்ன பையன், அவனா?
மூ-ம. ஆமாம்.
சிலர். ஐயோ பாவம்!இத்தினி பேரு கண் திர்ஷ்டியே
பட்டிருக்கும்!பாவம்!
ஒரு குதிரைக்காரன் தள்ளாடிக்கொண்டு வருகிறான்.
கு. ஐயா,நாடவம் கலைஞ்சி போச்சிங்களா?
இ-ம. அடே!-நீ என்னா செய்துகினு இருந்தெ இத்தனி நாழி?
கு. எசமாங்க கோவிச்சிகாதைங்க! - நாடவம் ஆய்போச்சா –
இண்ணு கேக்கரெ!
இ-ம. நீ என்னா, தூங்கிகினு இருந்தியா என்னா?
கு. [உரக்க] எங்கப்பா! கோவிச்சிகாதைங்க - நாடவம் கலைஞ்சி
போச்சிங்களா இண்ணு கேக்கரெ நானு!
மு.ம. அடே அவன் குடிச்சீட்டிருக்கிராண்டா! அப்பா, நாடவம்
அப்பவே கலைஞ்சி போச்சி - நீ ஏன் கேக்கரெ?
கு. எஜமான் வந்தூடுவாருங்க - என் குதிரையெ காணோம் - அதுக்குதானுங்க.
பலர். அடடடே! இவன் குதிரெதாண்டா! இவன் குதிரெதாண்டா!
இவன் குடிச்சீட்டு எங்கேயே உழ்ந்து கெடந்தா, குதிரெ
பிச்சிகினு பூட்டுது.
கு. எங்குதிரெ - ஓடிப்பூட்டுதுண்ணா சொல்ரைங்க! எங்குதிரெ ஓடாதுங்க!
சிலர். போடா! கழுதெ! அப்பவே ஓடிப்போச்சுடா! போய் பார்ரா! ஓடுடா!
கு. ஏங் - குதிரெ - ஓடாதுங்க! [போகிறான்]
[சிலர் நகைக்கின்றனர்]
காட்சி முடிகிறது.
--------------------------
மூன்றாம் அங்கம் - ஐந்தாம் காட்சி.
இடம் - சென்னையில் தேனாம்பேட்டையில் விஜய ரங்கப்
பிள்ளையின் பங்களாவின் மேல்மாடியில் ஓர் பெரிய அறை.
மிகவும் விலையுயர்ந்த நாற்காலிகள் மேஜைகள் போட்டிருக்கிறது. ஒருபுறம் சுவற்றில் திரிமூர்த்திகளின் படம் தொங்கவிட்டிருக்கிறது. மற்றொருபுறம் மடிப்புத் திரையொன்று அமைக்கப்பட்டிருக்கிறது. வடக்குப் புறத்திலுள்ள படிக்கதவு திறந்திருக்கிறது. மேற்குப்புறமாகப் படுக்கையறைக்குப் போகும் கதவு மூடப்பட்டிருக்கிறது.
சாமிநாதன் திரிமூர்த்திகளின் படத்தில் கீழிருக்கும் ஒரு சோபாவின்
மெல் உட்கார்ந்து கண்ணைமூடி கைகூப்பிக் கொண்டிருக்கிறான்.
ரங்கநாதப் பிள்ளை மெல்ல படியின் வழியாக மெத்தைக்கு வருகிறான்.
சா. சாமி! - எங்க நாயினாவெ நீங்க எப்படியாவது காப்பாத்தணும்!
- நீங்க இட்டுகினு பூடக்கூடாது - நீங்க இட்டுகினு பூட்டா
அம்மா அழுவாங்க! - நானும் அழுவேன் - அது உங்களுக்கு
பாவம்! - நீங்க சொல்ரபடி யெல்லாம் கேக்கரெ - எங்க
நாயினாவெ மாத்தம் காப்பாத்துங்க!
[அப்படியே சோபாவின் மீது படுத்துவிடுகிறான்.]
[மெல்லிய குரலுடன் ] வயித்தியர்கள் உள்ளே இருக்கிறார்கள்
போலிருக்கிறது - எப்படியும் இதனுண்மையை நான் சீக்கிரம்
அறியவேண்டும் - இல்லாவிட்டால் எனக்குப் பயித்தியம்
பிடித்துப்போம்! அவள் இங்குதான் வந்ததாகச் சொன்னார்களே –
அதோ அவளது குரல்! - இங்குதான் வருகிறாள் போலிருக்கிறது –
நான் மறைந்து கொள்ளுகிறேன்.
[திரைக்குள்ளாக மறைந்து கொள்ளுகிறான்].
படியின் வழியாக மங்கையர்க்கரசி, ராஜேஸ்வரியால்
தாங்கப்பட்டு வருகிறாள்.
ரா. அம்மா, தைரியமாயிருங்கள். பரமேஸ்வரன் கருணையினால்
உமது கணவன் இக்கண்டமும் தப்புவார் என்று எனக்குள்
ஏதோ தோன்றுகிறது. அவர் எத்தனை பெயருக்கு தர்மம்
செய்திருக்கிறார் என்பதை இன்று காலை தான் கண்டேன் –
அவரது தேக சௌக்கியத்தைப்பற்றி விசாரிக்க வருபவர்களிடமிருந்து.
அவர் செய்த தர்மம் அவர் தலையைக் காத்திடும், அஞ்சாதீர்கள்.
ம. பரமேஸ்வரா! பரமேஸ்வரா! - கொஞ்சம் வயித்தியர்களைக்
கேளுங்கள், தயவுசெய்து - நான் உள்ளேபோய் அவரைப்
பார்த்துக்கொண்டாவ திருக்கிறேனே.-
ரா. வேண்டாம் - நான் சொல்வதைக் கேளுங்கள் - வயித்தியர்கள்,
ஒருவரும் அருகில் இருக்கக்கூடாதென்று கட்டளையிட்டிருக்கிறார்கள்.
இவ் விஷயங்களிலெல்லாம் அவர்கள் சொல்லுகிறபடியே
நாம் நடக்கவேண்டும் - சற்று இப்படி உட்காருவோம் வாருங்கள்.
[ஒரு சோபாவின் மீது உட்காருகிறார்கள்].
ம. சாமி! - இங்கென்ன செய்கிறான் இவன்?
ரா. உறங்குகிறான் போலிருக்கிறது - அவனை எழுப்பாதீர்கள்.
படுக்கையறையின் கதவை மெல்ல திறந்துக்கொண்டு டாக்டர்
கிருஷ்ணாராவும் அவருக்கும் உதவியான ஒரு வயித்தியரும்
வருகிறார்கள்.
கி. அம்மா, உங்களுக்கு சந்தோஷமான சமாசாரம் கொண்டு
வந்திருக்கிறேன் - பிள்ளையவர்களுக்கு இனி ஒரு அபாயமு
மில்லையென்று நம்புகிறேன். - ஆயினும் அவர் தப்பிப்
பிழைத்தது தெய்வாதீனம் எனச் சொல்ல வேண்டும் -
ம. ஐயா! எனக்கு மாங்கல்ய பிச்சை கொடுத்தீர்கள்! உங்களுக்கு
நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்?
சி. அம்மா, நான் வயித்தியனா யிருந்தபோதிலும் இப்படிப்பட்ட
விஷயங்களில் தெய்வத்தின் கருணையே முக்கியமென்று
உறுதியாய் நம்புகிறேன். ஆயினும் மனுஷ்ய யத்னத்திற்காக
வந்தனம் அளிப்பதனால் - எங்களை வந்தனம் செய்வதைவிட,
மைதிலி அம்மாளுக்கு வந்தனம் செய்யவேண்டும் - ஏனெனில் –
ரத்தச்சேத மில்லாதபடி அவ்வளவு ஜாக்கிரதையாக, அடிபட்ட
உடனே நேற்றிரவு இவர்கள் கட்டியிராவிட்டால், ரத்தப்
பெருக்கினால் அவரது உயிர் போயிருக்குமென்று உறுதியாய்
நம்புகிறேன். கற்றறிந்த வயித்தியன் கூட அவ்வளவு
ஜாக்கிரதையாகக் கட்டியிருக்கமாட்டான் - அம்மா, நீங்கள்
இதை எங்கே கற்றீர்?
ரா. நான் சில வருஷங்களுக்கு முன்,காயம்பட்டவர்களுக்கு
முதல் உதவி புரியும் விதம் இப்படி என்று ஸ்திரீகள்
கற்கும்படி ஏற்படுத்திய வகுப்பில் சேர்ந்து கற்றேன்-
ம. நான் உள்ளேபோய் அவரைப் பார்க்கலாமா? –
நான் ஒரு வார்த்தையும் பேசவில்லை –
கி. அம்மா, இப்பொழுது வேண்டாம் - இப்பொழுதுதான்
மயக்கம் தெளிகிறாற்போ லிருக்கிறது - அவராகக்
கூப்பிட்டால் போங்கள். அதற்காக என்னுடைய மற்றொரு
அசிஸ்டெண்ட் கோவிந்தராஜ முதலியாரை அறைக்குள்
உட்கார வைத்திருக்கிறேன். அவர் உங்களுக்குத் தெரிவிப்பார்.
- எனக்கு கொஞ்சம் அவசரமான வேலையிருக்கிறது.
நாளை காலை வருகிறேன் - நீங்கள் இனி ஒன்றும்
பயப்படவேண்டாம் - நான் வருகிறேன் அம்மா. நீ ஒரு
டாக்டராக பிறந்திருக்க வேண்டும் அம்மா மைதிலி!
நான் வருகிறேன்.
[டாக்டர் கிருஷ்ணாராவும் உதவி வயித்தியரும் போகிறார்கள்.]
ம. அம்மா!நீங்கள் முன்பொருதரம் என் கணவனது உயிரைக்
காப்பாற்றினீர்கள்-மறுபடியும் இம்முறையும் காத்தீர்கள்-
உங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்யக்கூடும்?-
எதை வேண்டுமென்றாலும் கேளும் தருகிறேன்--
ரா. தருகிறீர்களா?
ம. ஆம்.சத்தியமாக!என்னால் கொடுக்கக் கூடிய எதை
வேண்டினும்.
ரா. ஆயின்-இந்த உறுதிமொழி எனக் களியும்-கேவலம்
பாமர ஜனங்கள் சந்தேகிப்பதுபோல்-உமது கணவன்
மீது எப்பொழுதும் சந்தேகம் கொள்வதில்லையென்றும்--
ம. அப்படியே.
ரா. [அவளது கரத்தைப் பற்றி] அம்மா!என்னை உமக்கு
இன்னாரென்று தெரியாது.என் விர்த்தாந்தத்தையும்
நீர் அறியீர்.தெய்வா தீனத்தால் உமக்குத் தெரியுமாயின்
நீர் என்மீது பரிதாபப்படுவீரே யொழிய,என்மீது ஒரு
குற்றமும் சாற்றமாட்டீர்--ஆயினும் இதைமட்டும்
உமக்கு உறுதியாய்க் கூறுகிறேன்.எதோ நான் ஜன்
மாந்திரத்திற் செய்த பாபத்தினால்,என் கணவனிட
மிருந்து நான் பிரிக்கப்பட் டிருக்கிறேன்-ஆயினும்
உமது கணவனுக்கும் உமக்கும் இடையில்,நான் கனவிலும்
வந்தவ ளல்லவென்று பரமேஸ்வரன் பாதத் தாணைப்படி
கூறுகிறேன்!--நம்பும் என் வார்த்தையை- என்னுயிரை
அவர் காப்பாற்றினார்,அது முதல் நான் அவரை என்
சகோதரனாகவும் குருவாகவும் பாவித்து வருகிறேன்! இது சத்யம்--
ம. அம்மா,மைதிலி,உமது வார்த்தையை உறுதியாய்
நம்புகிறேன்.உம்மீது சந்தேகப்பட்டதற்காக என்னை
மன்னியும்.
ரா. மன்னித்தேன்--உம்மீது தவறில்லை--ஒரு அற்ப
காரணத்தைக் கொண்டு--கற்றறிந்த என் கணவனே சந்தேகப்
பட்டாரென்றால்--நீர் சந்தேகப்பட்டது ஓர் ஆச்சரியமாமோ?-
ரா. [கண்விழித் தெழுந்து] நாயினா கூப்பிடராங்க என்னே!--
ம. என்னடா சாமி?
சா. உங்க நாயினாவுக்கு ஒடம்பு ஒண்ணு மில்லெ,உன்னெ
கூப்பிடராங்க போ,இண்ணு சொன்னாரே சாமி.-
நான் பொரெ நாயினாகிட்ட.
ம. கண்ணே! பொறு!--உன்னைக் கூப்பிடவில்லை நாயினா--
நீ கனவு கண்டிருப்பாய் ஒரு வேளை.
சா. கூப்பிட்டாங்கம்மா இண்ரெ--என் காதிலே கேட்டுதெ-
படுக்கை யறையின் கதவை மெல்லத் திறந்துகொண்டு
கோவிந்தராஜ முதலியார் வெளியே தலையை நீட்டுகிறார்.
கோ. அம்மா,--உங்களையும் குழந்தையையும் பார்க்கவேணு மென்கிறார்.-
சா. நான்தான் சொன்னனெ.
கோ. [வெளியே வந்து]இனி பொகலாம் நீங்கள்--ஒன்றும்
இனி பயமில்லையம்மா-
[மங்கையர்க்கரசி சாமிநாதனை அழைத்துக் கொண்டு
படுக்கையறைக்குள் போகிறாள் கண்ணைத் துடைத்துக்கொண்டு].
ரா. இவ்வுலகில் நமது அற்ப புத்திக்கு எட்டாத விஷயங்கள்
எத்தனை இருக்கின்றன!
கோ. அவர்கள் அதிக நாழி பேசவேண்டாம் என்று
சொல்லுங்கள்-கொஞ்சம் தூங்கட்டும்-இன்னும் பலஹீனமா
யிருக்கிறார்-நான் போய் சாப்பிட்டுவிட்டு வருகிறேன்.
-- நேற்றிரவு சாப்பிட்டது.
ரா. போய் வாருங்கள்-இங்கேயெ சாப்பிடுகிறது தானெ?
கோ. இல்லை-நான் வந்து விடுகிறேன் சீக்கிரம்.
[படி வழியாகக் கீழே போகிறார்]
ரா. பரமேஸ்வரா!நான் பூர்வ ஜன்மங்களிற் செய்த
பாபங்களுக் கெல்லாம் பரிஹாரமாக இந்த புண்ணியமாவது
செய்யும்படி அனுக்கிரஹித்தீரே!மங்கையர்க்கரசி தன்
கணவனைக் கண்டு மகிழ்வதுபோல் நான் எப்பொழுது--
எந்த ஜன்மத்தில்-என் கணவனைக் கண்டு மகிழப் போகிறேன்?
ரங்கநாதம் திரைக்குள்ளிருந்து திடீரென்று
வெளியே வருகிறான்.
ரா. ஆ!-யார் அது?-நான் கனவு காண்கிறேனா?
ர. இல்லை இல்லை! நினைவுதான்!--உன் எதிரில் நிற்பவன்-
உன்மீது வீணான சந்தேகங்கொண்டு--உன்னை இத்தனை
வருஷமாக விட்டுப் பிரிந்து--உலகில் உழன்று--முடிவில்
உன்னைக் கொல்வதற்காக இங்கு வந்து ஒளிந்திருந்த
பாபியே பாபியே!
ரா. கொஞ்சம்-மெல்ல-பேசுங்கள்-அவர்கள் இதைக்
கேட்பானேன்?
ர. ஆம் ஆம்.-என் வெட்கக்கேடு அவர்களுக்குத் தெரிவானேன்?-
ராஜேஸ்வரி!--என்னை மன்னிப்பாயா நீ?- உனக்கு நான்
பெரும் தவறிழைத்தேன்--ஒப்புக்கொள்கிறேன்-
நீங்களிருவரும் சற்று முன்பாக இங்கு பேசிய வார்த்தைகள்,
மூடியிருந்த என் கண்களை விளக்கின நன்றாய்!--நீ
என்னை மன்னித்ததாகக் கூறாவிட்டால் சற்றுமுன் உனக்கு
நான் தீர்மானித்திருந்த தண்டனையை எனக்கே விதித்துக்
கொள்ள வேண்டியது தான்.--
ரா. பொறும்!
[அவனது கரத்தைப் பற்றி]
வேண்டாம்!-நான் மன்னித்தேன் உம்மை-உம்மீது
குற்ற முமில்லை-என் ஊழ்வினைப் பயனாகும் இது!அம்
மட்டும்--இப்பொழுதாவது--
ர. பரமேஸ்வரன்--என் கண்களை விளக்கினாரே! கண்னே!
[அவளைக் கட்டியணைத்து முத்த மிடுகிறான்].
காட்சி முடிகிறது.
-------------------------------
மூன்றாம் அங்கம் - ஆறாம் காட்சி.
இடம்-திருநெல்வேலியில்,முதல் அங்கம் முதல் காட்சிப்படியே.
பின்புறத்து படியின் வழியாக விஜயரங்கம்,ரங்கநாதம்,
மங்கையர்க்கரசி, ராஜேஸ்வரி ,நால்வரும் பேசிக்கொண்டு வருகிறார்கள்.
ர. ஏனம்மா,இனிமேல் என்பேரில் ஒன்றும் குறை கூற
மாட்டாயே?மணவிருந்து கூட சாப்பிட்டா யிற்று--
இனி ஏதாவது மிகுதி இருக்கிறதா?
ம. இல்லை--கலியாணப் பெண்ணை மாமியார் வீட்டிற்கு
அனுப்ப வேண்டியதுதான்!
[எல்லோரும் நகைக்கிறார்கள்].
சாமிநாதன் அந்தகனான பரஞ்சோதியைக் கையைப்
பிடித்துக்கொண்டு மெல்ல படியின் வழியாக அழைத்து வருகிறான்.
ர. இந்தக் கிழவனுக்கு இந்த வேலையேன் வைக்கிறீர்கள்
இன்னும்?
வி. [அவனிடமிருந்து வெற்றிலை பாக்கு தட்டை வாங்கிக்கொண்டு]
நானா வைக்கிறேன்?ஏதாவது வேலை செய்துகொண்டிரா-
விட்டால் அவனுக்கு தூக்கம் வராது. - நான் வேண்டாமென்றால்
கேட்டாலல்லோ?
சா. [பரஞ்சோதிக்கு] வா, தாதா. கீழே இட்டும் போரெ -
ர. என்ன தாதா என்றழைகிறான் சாமி அவனை?
வி. நான் வனவாசம் போயிருந்தேனே - அந்த சமயமெல்லாம்
- சாமியை பிறந்ததுமுதல் அவன் தான் எடுத்து வளர்த்து வந்தான்.
[மெல்ல] இவர்கள் கஷ்ட ஸ்திதியிலிருந்தபொழுது தன்
சம்பளத்திலிருந்து சேர்த்து வைத்த பொருளை யெல்லாம்
இவர்களுக்கே சிலவழித்திருக்கிறான். அப்பணத்தை நான்
திருப்பிக் கொடுத்தால் வாங்கமாட்டேன் என்கிறான். –
நான் என்ன செய்வது? வயது வந்ததுமுதல், சாமி அவனை
தாதா என்றே அழைத்து வந்தானாம் - அப்படியே இருக்கட்டும்
என்று நானும் விட்டுவிட்டேன்.
ர. நிரம்ப சரி - என்ன பரஞ்சோதி?
ப. ஐயா.
ர. நான் வடக்கே காசி முதலிய இடங்களுக்கெல்லாம் போய்
வருகிறேன். அங்கிருந்து உனக்கேதாவது வேண்டுமா?
ப. மருமகப்பிள்ளெ எஜமாங்க தயவு! - எனக்கு என்னாவோணும்!
ஒண்ணும் வேணாம் - நீங்கல்லா சுகமா யிருந்தா போதும்.
வி. ஆ ஆ! - நிஜத்தைச் சொல்லிவிடு - பரஞ்சோதிக்கு
மனசுலெ ஒரு குறைதா னிருக்கிறதாம் -
ப. என்ன அது?
வி. நான் சொல்லிவிடுகிறேன் - தன் குட்டி எஜமானுக்கு
கலியாணம் பண்ணி பார்த்துவிட்டுப் போகவேண்டுமாம்.
ரா. சாமிக்கா?
வி. ஆம். [எல்லோரும் நகைக்கிறார்கள்]
ர. ஆமாம் - கண் தெரியாதே அப்பா உனக்கு? என்ன பிரயோஜனம்?
ப. தெரியாபோனா என்னாங்க? - மனசு திருப்திக்கி - அது
ஒன்னுதாம் கொறெ இருக்குதுங்க.
ர. ஒன்றும் பயப்படாதே அப்பா! ஸ்வாமி அந்தக் குறையையும்
நிறைவேற்றுவார் - பயப்படாதே.
ப. நானு வர்ரேனுங்க.
ர. போய்வா.
[சாமிநாதன் பரஞ்சோதியின் கையைப் பிடித்து கீழே
அழைத்துக்கொண்டு போகிறான்]
வி. எனக்கு ஞானம் புகட்டியவர்களில் இவனை ஒருவனாகக்
கொள்ளவேண்டும் நான்!
ர. நானோ?
வி. நீ தான் முதல் குருவாயிற்றே!
ர. இல்லையோ? - நான் ஐந்தாறு வருஷங்களுக்குமுன் இதே
அறையில் நாமிருவரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தபொழுது
- உனது புஸ்தகங்களில் இருந்த குறையை உனக்கு
எடுத்துக் கூறியிராவிட்டால், பிறகு உன்னை துரதிர்ஷ்டம்
பீடித்தபொழுது - அதையே ஒரு பற்றுக் கோடாகக்கொண்டு –
உலகத்தின் உண்மையை அறிந்திருப்பாயா? - பெரிய
நூலாசிரியன் என்று பெயர் பெற்றிருப்பாயா? உலகம்
உன்னை இப்பொழுது புகழ்வதுபோல் புகழுமா?
ம. [சிரித்துக்கொண்டே] என்னைவிட்டுப் பிரிந்திருப்பீர்களா?
இவ்வளவு கஷ்டமெல்லாம் நேர்ந்திருக்குமா?
வி. இத்தனை நன்மையையும் நேர்ந்திருக்குமா? - மங்கையர்க்கரசு,
பரமேஸ்வரன் நமக்கு அனுப்பும் கெடுதிகளெல்லாம் நம்மைப்
பரிசுத்தமாக்கி, முடிவில் நமக்கு சுகத்தையளிக்கும் பொருட்டே
என்று உறுதியாய் நம்புகிறேன். இப்படி யெல்லாம்
நேர்ந்திராவிட்டால் உனது நற்குணத்தை நான் அறிந்திருப்பேனோ?
ம. ஆம் - உண்மையே - நானும் உங்களை நன்றாய் –
இப்பொழுது அறிகிறபடி - அறிந்திருக்க மாட்டேன் அல்லவா?
ரா. [ரங்கநாதப் பிள்ளையிடம்] நாமும் - ஒருவருக்கொருவர்
அப்படியே சொல்லிக் கொள்ளலாம்போ லிருக்கிறதே!
ர. ஆம் வாஸ்தவத்தில் - வேறு ஏதாவது பேசுவோம் -
[மங்கையர்க்கரசியும் ராஜேஸ்வரியும் ஒருபுறமாய்போய்
பேசிக் கொண்டிருக்கிறார்கள்].
விஜயரங்கம், இந்த ஆறு வருஷமாக நடந்தது
எல்லாம் ஒரு கனவு போலிருக்கிறதெனக்கு - அன்றித்
தினம் நாம் பேசிக்கொண்டிருந்தபடியே உறங்கிவிட்டோம்,
மறுபடியும் கண் விழித்தோம், என்று எண்ணுவோமே! –
இந்த அறையும் அன்றிருந்தபடியே இருக்கிறதே!
வி. ஆம் - அதற்கென்றே முன்பிருந்தபடியே இருக்கவேண்டுமென்று
ஏலம் போடப்பட்ட பொருள்களை யெல்லாம்
ஒவ்வொன்றாக அதிக விலைகொடுத்து வாங்கி
சேகரித்து முன்பிருந்தபடியே ஏற்படுத்தினேன் –
அன்றியும் - உண்மையில் கண் விழித்தோம் நாமிருவரும்!
ர. உண்மையில்!
வி. பரமேஸ்வரன் அருளால்!
ர. ஆம்.
சாமிநாதன் மறுபடியும் வருகிறான்; அவன் பின்னால் நாய்க்குட்டி வருகிறது.
சா. நாயினா, மோடார் வண்டி வந்தூட்டுது.
ர. [எழுந்திருந்து] ஆம், நேரமாகி விட்டது. - ராஜேஸ்வரி
புறப்படு - என்ன ரகசியம் பேசுகிறாய் உன் அண்ணியுடன்?
ம. [முன்னால் வந்து] நீங்களிருவரும் மாத்திரம் ரகசியம்
பேசலாம் போலிருக்கிறது? - நாங்கள் பேசினால் தான் தவறோ?
ர. நீ கோபித்துக்கொள்ளாதே யம்மா! அன்றைக்கு அந்த
படத்தைக் குறித்து நீ உன் புருஷனைக் கோபமாகப்
பார்த்த பார்வையை நினைத்துக் கொண்டால் இன்னும்
எனக்கு பயமா யிருக்கிறது!
ரா. எந்த படத்தை?
ர. ஓ! உனக்கு நான் காண்பிக்கவில்லையே? –
இப்படிவா, இப்படி.
[ஒரு மூலையிலிருக்கும் படத்தருகில் போய் அதை
மூடியிருக்கும் திரையைத் தள்ளி]
இந்த படம் யாருடையது பார்த்து சொல்?
ரா. [உற்றுப் பார்த்து] மிகவும் தெரிந்தமுகமா யிருக்கிறது.
சா. எங்கம்மா படம், மாமி. அது!
ரா. ஆமாம்! என்ன புத்தியற்றவள் நான்! இது தெரியாமற் போச்சுதே!
ர. நீ அதற்காக கவலைப்பட வேண்டாம் உன்னைவிட
புத்திசாலி ஒருவருக்குக்கூட தெரியாம லிருந்தது! என்ன
விஜயரங்கம்? - உன்னைவிட உன் பிள்ளை புத்திசாலியா
யிருக்கிறான் போலிருக்கிறதே.
வி. 'தம்மிற்றம் மக்கள் அறிவுடைமை, மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது'
ரா. [ஒருபுறமாகத் தன் கணவனிடம்] இவர்களுக்கிடையில்
கூட ஒரு படம் வந்ததா?
ர. சரி, இப்படி பேசிக்கொண்டிருந்தால் - பொழுது விடிந்துவிடும் –
நாம் புறப்படுவோம், ராஜேஸ்வரி.
ரா. அப்படியே.
ர. நாங்கள் வருகிறோம் - விஜயரங்கம் - மங்கையர்க்கரசு.
செய்யுங்கள் - சொன்ன தவணைப்படி திரும்பி வந்து சேருங்கள் –
அண்ணியுடன் நேராக இங்கே வரவேண்டும் திரும்பி வரும்போது.
ர. அப்படியே -ஆ!கேட்க மறந்தேன் - அங்கிருந்து உனக்கு
என்ன கொண்டு வருவது சொல் -
ம. வேறு ஒன்றும் வேண்டாம் - கொஞ்சம் கங்கா தீர்த்தம்
கொண்டு வாருங்கள்.
ர. அப்படியே - உனக்கு என்ன வேண்டும் விஜயரங்கம்?
வி. நீங்களிருவரும் சுகமாய் வந்து சேரவேண்டும்.
ரா. உனக்கென்ன வேண்டும், சாமி?
சா. எனக்கு - ஒரு பெண்ணு பெத்துகினு வாங்க - நானு கண்ணாலம் பண்ணிக!
[எல்லோரும் நகைக்கிறார்கள்].
வி. சாமி! இதை யார் உனக்கு கற்றுக் கொடுத்தது?
சா. தாதா - பரஞ்சோதி -
[ராஜேஸ்வரி சாமிநாதனுக்கு முத்தமிடுகிறாள்.]
ர. ரா. நாங்கள் வருகிறோம்.
வி. ம. வாருங்கள் - சாமி கூறியதை மறக்காதீர்கள்! -
[ரங்கநாதமும் ராஜேஸ்வரியும் போகப் புறப்படுகிறார்கள்]
காட்சி முடிகிறது.
------------
கருத்துகள்
கருத்துரையிடுக