தமிழகம்
வரலாறு
Back
தமிழகம்
ந.சி. கந்தையா
1. தமிழகம்
2. தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
3. அகம் நுதலுதல்
4. நூலறிமுகவுரை
5. கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
6. பதிப்புரை
7. தமிழகம்
தமிழகம்
ந.சி. கந்தையா
நூற்குறிப்பு
நூற்பெயர் : தமிழகம்
ஆசிரியர் : ந.சி. கந்தையா
பதிப்பாளர் : இ. இனியன்
முதல் பதிப்பு : 2003
தாள் : 16.0 கி. மேப்லித்தோ
அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 11 புள்ளி
பக்கம் : 20 + 164 = 184
படிகள் : 2000
விலை : உரு. 80
நூலாக்கம் : பாவாணர் கணினி
2, சிங்காரவேலர் தெரு,
தியாகராயர் நகர், சென்னை - 17.
அட்டை வடிவமைப்பு : பிரேம்
அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட்
20 அஜீஸ் முல்க் 5வது தெரு
ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006
கட்டமைப்பு : இயல்பு
வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம்
328/10 திவான்சாகிப் தோட்டம்,
டி.டி.கே. சாலை,
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே.
‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’
என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர்.
ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:-
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார்.
ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார்.
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின.
ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம்.
அகராதிப் பணி
தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை.
ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார்.
இலக்கியப் பணி
புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள்.
பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர்.
தமிழ்மொழி - தமிழினம்
தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை.
திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும்
தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:-
திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார்.
பிற
மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார்.
“ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.”
வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்!
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன்.
அன்பன்
கோ. தேவராசன்
அகம் நுதலுதல்
உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம்.
உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது.
தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது.
தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம்.
எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள்.
இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது.
எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை.
வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது.
அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன.
உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும்.
இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது. மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது.
சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி.
அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம்.
உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது.
நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம்.
அன்பன்
புலவர் த. ஆறுமுகன்
நூலறிமுகவுரை
திரு. ந.சி. கந்தையா பிள்ளை 1930-40களில் தமிழ், தமிழிலக்கியம், தமிழ்மொழி, தமிழர் வரலாறு, திராவிட வரலாறு, தமிழ்நாட்டுக் குடிகள் போன்ற பல விடயங்கள் பற்றி அக்காலத்துச் சாதாரண தமிழ் வாசகர் நிலையில் பெரிதும் வாசிக்கப்பட்ட நூல்களை எழுதினார். பண்டைய இலக்கியங்களான அகநானூறு, கலித்தொகை, பரிபாடல் போன்ற வற்றினை உரைநடையில் எழுதி மக்களிடையே சங்க இலக்கியம் பற்றிய உணர்வினை ஏற்படுத்தினார். திருக்குறளுக்கான ஒரு சொல்லடைவைத் திருக்குறள் அகராதி என்னும் பெயரில் வெளியிட்டவர். இவை யாவற்றுக்கும் மேலாக உலக வரலாற்று நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காலவரிசைப்படுத்தித் தந்தார். செந்தமிழ் அகராதி என்றவோர் அகர முதலியையும் தொகுத்தார்.
இன்று பின்னோக்கிப் பார்க்கும் பொழுது 1940-50களில் இளைஞர் களாக இருந்த பல தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றிய தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கான வாசிப்பு விடயங்களை அளித்தவர். இவருடைய பெரும்பாலான படைப்புக்கள் அக்காலத்திற் பிரசுரிக்கப் பட்ட ஒற்றுமை என்னும் இதழின் அலுவலகத்தாலேயே வெளியிடப் பெற்றன. இவர் வெளியிட்டனவற்றுள் பல ஒற்றுமை இதழில் வெளிவந் திருத்தல் வேண்டும். ஆனால், அதனை இப்பொழுது நிச்சயமாக என்னாற் சொல்ல முடியவில்லை. ஒற்றுமை அலுவலகம் இவற்றைப் பிரசுரித்தது என்பதை அறிவேன். ஏனெனில் இலங்கையில் தமிழாசிரியராக இருந்த எனது தகப்பனாரிடத்து இந்நூல்களிற் பெரும்பாலானவை இருந்தன.
திரு ந.சி. கந்தையா பிள்ளையின் பெயர் தமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படுமளவுக்கு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியுள்ளது. அங்கு அவர் அத்துணைப் போற்றப்படாதிருப்பதற்குக் காரணம் ஏறத்தாழ அவர்களது எல்லா நூல்களுமே தமிழகத்திலேயே வெளியிடப் பெற்றன.
இந் நூல்களின் பிரசுரப் பின்புலம் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அவற்றின் பொருளியல் அம்சங்கள் பற்றிய தரவுகளும் இப்பொழுது தெரியாதுள்ளன.
ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிற்கூட இவரது பெயர் முக்கியப் படுத்தப் பெறாது போயுள்ளது. மிகுந்த சிரமத்தின் பின்னர் அவரைப் பற்றிக் கிடைத்துள்ள தகவல்கள் பின்வருமாறு:
சுவாமி ஞானப் பிரகாசர், ந.சி. கந்தையா பிள்ளை போன்ற அறிஞர்களின் தமிழ்ப் பங்களிப்புக்கள் தமிழகத்தில் போற்றப்படுகின்றமை ஈழத்தவர்க்குப் பெருமை தருகின்றது. இவர் எழுதிய நூல்களின் பெயரை நோக்கும்பொழுது தமிழ் வாசகர்களுக்கு உலக நிலைப்பட்ட, தமிழ்நிலைப் பட்ட தரவுகளைத் தொகுத்துத் தருவதே இவரது பெருஞ்சிரத்தையாக இருந்தது என்பது புலனாகின்றது. இப்பதிப்பகத்தின் பணியினை ஊக்குவிக்க வேண்டியது தமிழ்சார்ந்த நிறுவனங்களினதும் தமிழ்ப் பெரியோர்களினதும் கடமையாகும். உண்மையில் இதனை ஒரு அறிவுப்பசிப் பிணித் தீர்வாகவே நான் காண்கிறேன்.
2/7, றாம்ஸ்கேட், அன்புடன்
58, 37ஆவது ஒழுங்கை,
கார்த்திகேசு சிவத்தம்பி
வெள்ளவத்தை, தகைசார் ஓய்வுநிலை பேராசிரியர்
கொழும்பு - 6 யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.
கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மூலவர்களில் யாழ்ப்பாணம் தந்த பேரறிஞர் ந.சி. கந்தையாவும் ஒருவர். உண்மையான அறிஞர்களைக் காலங்கடந்து அடையாளம் காண்பதும் அவர்தம் படைப்புக்களைத் தேடிப் பிடித்துப் புரப்பதும் தமிழினத்தின் பழக்கங்களில் ஒன்று.
தமிழின், தமிழரின் தொல்பழங்கால வரலாறு தொடர்பாகத் தமிழில் நூல்கள் மிகக் குறைவு. ஓர் ஆயிரம் நூல்களாவது தமிழின் தமிழரின் தொல்பழங்கால வரலாறுபற்றி வெளிவரவேண்டும். விரிவாக எழுதப்பட வேண்டிய தமிழ், தமிழர் வரலாற்று வரைவு முயற்சிக்கு வழிகாட்டும் கருவி நூல்களை வரைந்திருப்பவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.
உலகம் முழுவதும் உற்றுக் கவனிக்க வேண்டிய வரலாற்றிற்கு உரியவர்கள் தமிழர்கள். அவர்களே உலக மொழிகளை ஈன்ற மூலமொழிக்குச் சொந்தக்காரர்கள். அவர்களே உலக நாகரிகங்களின் பிறப்பிற்குக் காரணமான உலக முதல் நாகரிகத்தைப் படைத்தவர்கள். இந்த உண்மைகளைத் தமிழர்களும் அறியவில்லை உலகமும் அறியவில்லை.
தமிழர் சரித்திரம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந் தமிழர், தமிழர் யார், உலக நாகரிகத்தில் தமிழர்பங்கு, சிந்துவெளித் தமிழர், தமிழ் இந்தியா, தமிழகம், மறைந்த நாகரிகங்கள் ஆகியன ந.சி. கந்தையாவின் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும்.
உலக முதல் நாகரிகம் என இன்று உலகம் நம்பிக்கொண்டிருக்கக் கூடிய நீல ஆற்றங்கரை நாகரிகம் (Nile Civilisation) தமிழ் நாகரிகத்தின் அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் வழிப்பட்ட நாகரிகமே என்பதை ஏராளமான சான்றுகளால் விளக்குபவை மேலைய நூல்கள்.
மொழிநிலையில் தமிழின் உலக முதன்மையைப் பாவாணர் நிலைநாட்டினார் என்றால் இன நிலையில் தமிழின உலக முதன்மையை ந.சி. கந்தையா நிலைநாட்டினார் என்று உரைக்கலாம்.
நீல ஆற்றங்கரை நாகரிக முடிவின்பின் நண்ணிலக் கடற் பகுதியில் உருவான பிறிதொரு வழிநாகரிகமே கிரேக்க நாகரிகம். கிரேக்க நாகரிகத் தின் உடைவில் தெறிப்பில் பிறகு மலர்ந்தவையே இன்றைய மேலை நாகரிகம். உலகின் எல்லா நாகரிகங்களையும் தாங்கிநிற்கும் தாய் நாகரிகமே தமிழ் நாகரிகம்.
தமிழ் நாகரிகத் தொன்மையைச் சங்க நூல்களுக்கு அப்பால் சிந்துவெளி அகழ்வாய்வும் உலக வரலாற்றாசிரியர்கள் உலக முதல் நாகரிகம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் நமக்கு மேலும் விளக்கும் பகுதிகளாகத் திகழ்கின்றன. இங்கெல்லாம் சென்று நுண்மாண் நுழைபுல முயற்சியால் தமிழின வரலாறு எழுதியவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.
ந.சி. கந்தையா பெருமகனார் நூல்களைத் தமிழரின் தொல்பழங்கால வரலாற்றைக் கற்கும் முயற்சியில் நான் ஈடுபடத்தொடங்கியபோது தேடிக் கற்றேன். பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் சென்ற ஆண்டு இயற்கையெய்திய வரலாற்றுப் பேரறிஞர் கோ. நிலவழகனார் ந.சி. கந்தையா அவர்களைச் சென்னையில் அவர் வாழ்ந்த நாளில் சந்தித்தது பற்றியும் அவரின் பன்னூற்புலமை பற்றியும் எம்மிடம் மகிழ்ந்து கூறுவார். ந.சி. கந்தையா அவர்களின் நூல்கள் பலவற்றையும் அவர் வைத்திருந்தார். அருகிய பழைய நூல்களைப் பேணுவாரிடத்திலும் நூலகங்கள் சிலவற்றிலும் மட்டுமே ஒடுங்கிக்கிடந்த ந.சி. கந்தையா நூல்களை மீண்டும் அச்சில் வெளியிடுவார் இலரே என்று கவலையுற்றேன். அமிழ்தம் பதிப்பகம் இவரின் நூல்களை வெளியிடுகின்றது. உண்மைத் தமிழ் நெஞ்சங்கள் இந் நூல்களை உச்சிமோந்து வாரியணைத்துப் புகழ்ந்து கற்றுப் பயனடைவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.
பேரா. கு. அரசேந்திரன்
பதிப்புரை
வளம் சேர்க்கும் பணி
“குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம்.
இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன.
ந.சி. கந்தையா
இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது.
தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர்.
தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது.
தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர்.
நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள்
1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன.
வாழும் மொழி தமிழ்
தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம்.
ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா?
தமிழர்களின் கடன்
இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன்.
மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள்.
எழுச்சிக்கு வித்திட…
உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது.
இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிப்பகத்தார்
தமிழகம்
கடவுள் வணக்கம்
“அரியசடை முடிபோற்றி யருள்பொழிசெம் முகம்போற்றி
விரையிதழி மலரணிநூல் விளங்கியமார் பகம்போற்றி
மருவுமுயர் பேரழகு வளருதர நிலைபோற்றி
திருவளர்செந் தமிழ்ச்சொக்கன் திருவடித்தா மரைபோற்றி”
“தவளத் தாமரைத் தாதார் கோயில்
அவளைப் போற்றுதும் அருந்தமிழ் குறித்தே”
தமிழ்த் தெய்வ வணக்கம்
“மறைமுதற் கிளந்த வாயான் மதிமுகிழ் முடித்த வேணி
இறைவர்தம் பெயரை நாட்டி இலக்கணஞ் செய்யப் பெற்றே
அறைகடல் வரைப்பிற் பாடை யனைத்தும்வென் றாரி யத்தோ
டுறழ்தரு தமிழ்த்தெய் வத்தை யுண்ணினைந் தேத்தல் செய்வாம்.”
சீகாளத்திப் புராணம்.
“பல்லுயிலும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினும்ஓர்
எல்லையறு பரம்பொருள்முன் னிருந்தபடி யிருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமும்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே யொன்றுபல ஆயிடினும்
ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துமே”
மனோன்மணீயம்
மிழ்நாட்டின் தொன்மை நிலை
1. குமரிக்கண்டம்
இந்நிலவுலகம் இன்று நமக்கு எப்படிக் காணப்படுகின்றதோ அப்படிப் பல்லாயிர மாண்டுகளுக்குமுன் காணப்பட்டிலது; அப்படியே பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் காணப்படாது. பல்வேறு ஊழிகளிற் றோன்றிய கடற் பெருக்குகளால் நிலப்பரப்பு நீர்ப்பரப்பாகவும், நீர்ப்பரப்பு நிலப்பரப்பாகவும் மாறுதலடைந்ததுண்டு. இம் மண்ணகம் பல்வேறு காலங்களில் அடைந்திருந்த வடிவங்களை நிலநூலார் தமது உய்த்துணர்வு கொண்டு படங்களமைத்துக் காட்டியிருக்கின்றனர்.
ஸ்காட்எலியட்1 என்பவர் இவ்வுலகில் ஐந்து பெருங்கடற் பெருக்குகள் உண்டாயினவென்றும், அவற்றுள் முதலாவது பதினாயிரம் நூற்றாண்டுகளுக்கு முற்பட்டதென்றும், இரண்டாவது எண்ணூறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதென்றும், மூன்றாவது இருநூறாயிரம் ஆண்டு களுக்கு முற்பட்டதென்றும், நாலாவது எண்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதென்றும், ஐந்தாவது கி.மு. 9564இல் உண்டானதென்றும் குறிப் பிட்டிருக்கின்றனர். இப்போது அட்லாண்டிக் கடல் அலைகொழிக்கின்ற இடத்தில் முன் ஒரு பூகண்டம் விளங்கியது. அப்பூகண்டம் கடலுள் மூழ்கிப்போக அதில் மிச்சமாக விளங்கிய பொசிடோனிஸ் (posedonis) என்னும் தீவு கி.மு. 9564 ஆம் ஆண்டில் உண்டான வெள்ளத்தால் மறைந்த தெனச் சொல்லப்படுகின்றது. இதற்குச் சான்று இலண்டன் நூதனப் பொருட்காட்சிச் சாலையிலே உள்ளதும் 3500 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதுமாகி (Troano Mss.) தொறானோ கையெழுத்துப் படியில் இருப்பதை ஸ்காட் எலியட் என்பவர் எடுத்துக் காட்டியிருக்கின்றனர்.2 அதன் மொழி பெயர்ப்பு வருமாறு:
“ஆறாவது கான் ஆண்டில் 11ஆவது மலுக்கில் சாக் என்னும் திங்களில் அங்கு மிகவும் கடுமையான பூகம்பம் உண்டாய்ச் சூன் திங்கள் 13 ஆம் நாள் வரையும் நீடித்தது. இதன் விளைவாகச் சேற்றுமலைகளி லுள்ள நாடுகளும், மூவென்னும் தரையும் மறைந்தன, இப்பகுதிகளின் அடித்தளங்கள் எரிமலை அதிர்ச்சியினால் இடைவிடாது ஆட்டி அலைக் கப்பட்டு இருமுறை மேலே எழுந்து சடுதியில் இராக்காலத்தில் மறைந்து போயின. இக்குழப்பங்கள் இன்னும் நிலைத்தமையால் பல இடங்களில் பல முறைகளில் நிலங்கள் எழுந்தும் மறைந்தும் போயின. இறுதியில் நிலம் வெடித்தமையால் பத்து நாடுகள் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்பட்டன. இந் நடுக்கத்தைப் பொறுக்க முடியாமையால் அந்நாடுகள் 64,00,000 மக்களுடன் இந்நூலெழுதுவதற்கு 8060 ஆண்டுகளின் முன் ஆழ்ந்து போயின”
இவ்வுலகில் ஒன்பது கண்டங்களும் ஏழு கடல்களும் ஏழு தீவுகளும் உண்டெனப் புராணங்கள் அறைகின்றன. இஃது ஒருகாலத்து இவ்வுலகம் அடைந்திருந்த வடிவினைக் குறிப்பதாயிருக்கலாம். தயிர்க்கடல் பாற்கடல் எனச் சொல்லப்பட்ட பெயர்கள் இக்காலம் கருங்கடல் (Black sea) செங்கடல் (Red sea) வெண்கடல் (white sea) என வழங்கும் பெயர்களை மானுதல் கூடும். மேலே காட்டியவை இவ்வுலகம் காலத்துக்குக் காலம் பல்வேறு மாறுதல்களடைந்து வருகின்றதென்பதை வலியுறுத்துவன.
இந்திய நாடு இன்று காணப்படும் வடிவினை முன் அடைந்திருக்க வில்லை. கன்னியாகுமரிக்குத் தெற்கே காணப்படும் இந்து மாகடல் முன் ஒரு பெரிய நிலப்பரப்பாக விளங்கியது. அது கிழக்கே பர்மா தொடங்கித் தெற்குச் சீனா வரையிலும், மேற்கே ஆப்பிரிக்காவின் கிழக்குத் தெற்குக் கரைகள் வரையிலும், வடக்கே விந்திய வரை வரையிலும் விரிந்திருந்தது. அந் நிலப்பரப்புக்கு ஆங்கில பௌதிக நூலார் லெமூரியா என்னும் பெயர் இட்டனர். தமிழ் முன்னோர் இதனைக் குமரிக்கண்டம் என வழங்கினர்.
மிக முற்காலத்தில் இந்தியக் குடாநாடு ஒரு பெரிய பூகண்டத்தின் பகுதியாக விருந்தது. அப் பூகண்டம் கிழக்கே பர்மா தென்சீனம் வரையும், மேற்கே தென்னாப்பிரிக்கா வரையும், வடக்கே விந்தியமலை வரையும், தெற்கே ஆத்திரேலியா வரையும் அகன்று கிடந்தது. இவ்வாறு கொள்வ தற்கு நிலநூல் சான்று உள்ளது.
ஒருகாலத்துக் கடல், பொங்கியெழுந்து அதன் பல பகுதிகளைத் தன்னகப்படுத்திக்கொண்டது. முன் ஒன்றாயிருந்த ஆத்திரேலியா, சீனா, ஆப்பிரிக்கா, இந்தியா முதலிய நாடுகள் அக்காலத்திலேயே பிளவு பட்டிருத்தல் வேண்டும். ஸ்காட் எலியட் கூறும் ஐந்தாவது கடல் கோட் காலமே அவ் வெள்ளப்பெருக்கின் காலமெனக் கருதப்படுகின்றது.1
குமரிக்கண்டம் அழிவெய்தியபின் தென்னிந்தியாவின் தொடர்ச்சி யாக இலங்கை சுமத்திரா யாவா முதலிய நாடுகளை உள்ளடக்கிய ஒரு பெருந்தீவு விளங்கிற்று. அதன்கண் நாவன் மரங்கள் செழித்தோங்கி வளர்ந்தமையான். அது நாவலந் (சம்புத்) தீவு என்னும் பெயரைப் பெறுவ தாயிற்று. ‘குமரித்தீவு’ ‘குமரி நாடு’ என்றும் அது வழங்கப்பட்டது. குமரி நாட்டின் வடக்கெல்லை விந்திய மலையாகவிருந்தது. இமயமலையும் சிந்து கங்கைச் சமவெளிகளும் அக்காலத்தில் தோன்றவில்லை. ஆகவே குமரி நாடு அல்லது பழைய தமிழகம் ஆசியாக் கண்டத்தின் பகுதியாக இருக்க வில்லை. தெற்கே கிடந்த நிலப்பரப்புகளிற் பெரும் பகுதி கடலுள் மறைந் தது. அப்போது இமயமலையும் சிந்து கங்கைச் சமவெளிகளும் கடலாழத் தினின்றும் மேற்கிளம்பின. இமயமலைச் சாரல்களில் நீர்வாழ் உயிர்களின் என்புக்கூடுகள் காணப்படுகின்றன. அதனால் இமயமலை ஒருகாலத்தில நீரின் மூழ்கிக்கிடந்ததெனத் துணியப்படுகின்றது. இமயமலையும் அதனைச் சார்ந்த நிலங்களும் மேற்கிளம்பிய பின்னும் விந்திய மலைக்கு வடக்கே நிலவிய கடல் முற்றாக மறைந்துவிடவில்லை. அதன் ஒரு சிறு பாகம் வட இந்தியாவைத் தென் இந்தியாவினின்றும் பிரித்தது. நிலநூலார் அதன் ஒரு பகுதிக்குக் கிழக்குக் கடலென்றும், மற்றைப் பகுதிக்கு இராசப் பட்டினக் கடலென்றும் பெயரிட்டனர்.
குமரி நாட்டின்கண் வடக்கே குமரியாறும் தெற்கே பஃறுளி (பல்+துளி) ஆறும் ஓடிக்கொண்டிருந்தன. பஃறுளியாறு வடிம்பலம்ப நின்ற பாண்டியனுக்கு உரியதாகப் புறம் 9ஆம் பாட்டால் விளங்குகின்றது. குமரியாறு கன்னியாகுமரிக்குத் தெற்கே சிறிது தொலைவில் இருந்திருத்தல் கூடும்.
முற்காலத்தில் இப்பொழுதைய இராசபுதானத்தின் பெரும் பகுதி தெற்கிலும் கிழக்கிலும் அராவலி மலைவரை கடலால் மூடப்பட்டிருந்தது. நிலநூலார் அக்கடலுக்கு இராசபுத்தானாக் கடலென்று பெயரிட் டுள்ளார்கள். அப்பகுதியே இப்பொழுது காணப்படும் பெரிய இந்திய பாலைநிலமாகும்.1
அதனையடுத்து அதன் பெயரால் ஒரு மலைத்தொடரும் விளங்கியது. பிற்காலத்தோர் அதற்கு மகேந்திரம் எனப் பெயரிட்டனர். இரண்டு ஆறுகளுக்குமிடையே எழுநூறு காவதம் நிலப்பரப்பிருந்தது. ஒரு காவத2 மென்பது எண்ணாயிர முழங்கொண்ட தூரம். எழுநூறு காவதம் நிலப்பரப்பும் நாற்பத்தொன்பது சிறு நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு விளங்கிய பஃறுளி குமரி என்னும் ஆறுகளையும் அவற்றி னிடையே கிடந்த நாற்பத்தொன்பது நாடுகளையும் கடல் கொண்ட மையைப் “பஃறுளியாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக்கோடுங் கொடுங்கடல் கொள்ள” என்று கூறுவதுடன் அமையாது “வடிவேலெறிந்த வான்பகை பொறாது” என்று இக்கடல் கோட்குக் காரணமுங் கூறுவர் ஆசிரியர் இளங்கோவடிகள். சிலப்பதிகாரத்துககு உரைகண்ட அடியார்க்கு நல்லார், ‘நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் என்புழி’ “அக்காலத்து அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி யென்னும் ஆற்றுக்கும் குமரியென்னும் ஆற்றுக்குமிடையே எழுநூற்றுக் காவத ஆறும் அவற்றின் நீர் மலிவானென மலிந்த (1) ஏழ் தெங்கநாடும் (2) ஏழ் மதுரை நாடும் (3) ஏழ் முன்பாலை நாடும் (4) ஏழ் பின்பாலை நாடும் (5) ஏழ் குன்றநாடும் (6) ஏழ் குணகாரை நாடும் (7) ஏழ் குறும்பனை நாடுமென இந் நாற்பத்தொன்பது நாடும், குமரி கொல்லம் முதலிய பன்மலை நாடும், காடும் நதியும் பதியும் தடநீர்க் குமரி வட பெருங்கோட்டின்காறும் கடல் கொண்டொழிதலால்” எனக் கூறிய உரையில் கடல்கொண்ட நாடுகளும் பிறவும் இவை இவை என விரித் துரைத்தார்.
இனிக் குமரியாற்றிற்கும், பஃறுளியாற்றிற்கும் இடையேயுள்ள பெருவள நாட்டரசனாகிய செங்கோனை முதலூழித் தனியூர்ச் சேந்தன் பாடிய ’செங்கோன் தரைச் செலவு’ என்னும் ஒரு சிறு நூல் உளது. இந்நூலினும் உரையினும் உள்ள ஏழ்தெங்க நாட்டு முத்தூரகத்தியன், பேராற்று நெடுந்துறையன் முதலிய புலவர் பெயர்களும் பெருவள நாடு மணிமலை முதலிய இடப்பெயர்களும், அடியார்க்கு நல்லார் உரையிற் கண்ட நாடுகள் கடல்கொள்ளப்படுவதற்கு முன் உள்ளன என்பதை வலியுறுத்துவன.1
2. குமரி நாடு என்னும் பெயர்க் காரணம்
மனு என்பவன் ஒரு தமிழ்வேந்தன். இவனுக்கு இளை என்னும் ஒரு பெண் மகவும் இயமன் என்னும் ஓர் ஆண் மகவும் இருந்தனர். மனு தான் ஆண்டுவந்த நாட்டின் தென் பகுதியை இயமனுக்கும் வட பகுதியை இளைக்கும் அளித்தான். இயமன் ஆண்ட தென்னாடு கடல்வாய்ப்பட்டது. இதுபற்றியே இயமனுடைய உலகம் தெற்கில் உள்ளது என்னும் கோட்பாடு இன்றுவரையும் உள்ளது. கூற்றுவனாகிய இயமனும் இவனும் ஒருவனாகப் பிற்காலத்திற் கருதப்பட்டமையினாற் போலும் இறந்தவர்கள் இயமனாட் டில் (தெற்கில்) வாழ்கின்றார்கள் எனக் கருதப்பட்டு அவர் தென்புலத்தார் என வழங்கப்படலாயினர். வடக்கே இருந்த நாடு பெண்ணால் ஆளப்பட்டமையின் குமரிநாடு என்று வழங்கப்பட்டது. தமிழகத்தின் ஒரு பகுதியாகிய மலையாளத்தில் பெண்களுக்கே ஆண்களிலுங் கூடிய அதிகார முண்டு. அரசுரிமையும் சொத்துரிமையும் பெண் வழியையே சாருகின்றன. தமிழ்நாட்டில் பெண்களே நெடுங்காலம் ஆட்சி புரிந்திருக்கிறார்கள். தீர்த்த யாத்திரையிற் சென்ற அருச்சுனன் பாண்டி நாட்டில் பெண்ணரசு செலுத்திக்கொண்டிருந்த சித்திராங்கதை (அல்லி)யை மணந்து பப்புரு வாகனைப் பெற்றான் என்று பாரதம் கூறுகின்றது.
“திராவிட மக்களின் அரசனாகிய மனு, நாட்டை இரண்டாகப் பிரித்துத், தென்பகுதியை இயமனுக்கும் இராசதானியிருந்த பகுதியை இளை என்னும் புதல்விக்கும் அளித்தான் எனப் புராணங்கள் கூறுகின்றன. கடலுள் மறைந்துபோன தென்தேசம் இன்றுவரையும் இயமன் நாடு என மக்கள் ஞாபகத்திற் கொண்டுவருகின்றனர். இளையின் நாடு பெண்களால் ஆளப்பட்டுவந்தது. தமிழகத்தின் ஒரு பகுதியாகிய தமிழ்நாட்டில் அரசி நாட்டுக்குரியவள்; அவளுக்குப் பதில் ஆளாக அவள் உடன் பிறந்தான் நாட்டை ஆளுகின்றான். அரசுரிமை பெண் வழியாக வருகின்றது. மலை யாளத்தில் பெண்களே சொத்துக்கு உரியோர். அவர்கள் ஆடவரிலும் சிறப்பாகவும் மேலாகவும் மதிக்கவும் நடத்தவும் பட்டு வருகிறார்கள்.2
ஆராய்ச்சியில் இத்தரை (குமரிநாடு) குமரிக்கு நேர் தெற்காகக் காணப்படவில்லை. சற்றுச் சரிந்து தென் கிழக்காகவிருக்கலாம். ஆசியாக் கண்டத்தின் ஒரு படம் எடுத்துப் பார்த்தால் நான் கூறுவது எளிதிற் புலப்படும். குமரிக்கும் இலங்கையின் வடபாலுக்கும் ஒரு வரை கீறி அவ் வரையிலிருந்து தென்கிழக்காகப் போகிறதாயிருந்தால் இலங்கை, மலேயா சாவா, சுமத்திரா, பண்டா, செலிபிசு, போனியோ, புதுக்கினி, நியுசீலந்து முதலான எண்ணிறந்த தீவுகளைக் காணலாம்.
“தெளிந்த வானத்தில் உடுக் கூட்டங்கள் விளங்குதல் போல் நீருக்கிடையில் இவ்வகையாக ஆங்காங்கு நிலத்துண்டுகள் பல அளவினும் இருப்பதைப் பற்றி எண்ணும்போது, தென்னிந்தியா முதல் நியுசீலந்து வரைக்கும் ஒரு காலத்தில் கடுந்தரையாயிருந்ததாகவும் ஏதோ காரணத்தால் அது பிளப்புண்டு, பலவிடத்திலும் பள்ளம் விழுந்து கடலுடன் தொடர்பு பட்டுக் கடல்நீர் ஏறினதாகவும் கருதவேண்டியிருக்கின்றது. இக்கருத்தை ஐரோப்பிய கலைஞர்களும் சரித்திர ஆசிரியர்களும் உறுதிப்படுத்துகின் றார்கள். கடலின் கண்ணுள்ள, மண் கல் முதலியவற்றை ஆராயும்போது மேற்குறித்த கருத்தை நிலைநாட்டுகின்றார்கள்.
“இக்கொள்கையை நிலைநிறுத்த வேறு காரணங்களுண்டோவென ஆராய்வோம். மேற்கூறிய யாவாமுதலிய தீவுகளில் நடைபெற்றுவரும் மொழிகள் தமிழ் மொழிக்கு மிக உறவுள்ளனவாகக் காணப்படுகின்றன.
“ஐரோப்பியப் பாதிரிமார் தமது கருத்தை நியூசீலந்தில் செலுத்திய காலத்தில் அவர்களுடைய நாட்டம் மேயோரிஸ் (Maoris) என்னும் பண்டுள்ள அத்தேசத்தவரின் மொழியிற் சென்றது. அதை அவர்கள் ஆராய்ந்து பார்த்ததில் அது தமிழுக்கு எவ்வளவோ அடுத்ததாகக் காணப் பட்டது.1 அது குறித்து தேயிலர் (Taylor) என்னும் பாதிரியார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னே வெளியிட்டிருக்கின்றார்.
“மேற்கூறிய காரணங்களால் தென்னிந்தியாவின் மேற்குக் கரையி லிருந்து நியூசீலந்து வரைக்கும் பண்டு ஒரே மொழி நடைபெற்று வந்ததாகக் காணப்படுகின்றது. இதில் ஆத்திரேலியாவும் உட்பட்டிருக்கலாம்.” - திருவாளர் டி. பொன்னம்பலம் பிள்ளை, M.R.A.S.
“மனிதனுடைய அறிவு எட்டிய ஒரு காலத்தில் தென்னிந்தியா ஆசியாவின் பகுதியாக விளங்கவில்லை யென்பதை நிலநூல், உயிர்களின் வரலாறு முதலியன உறுதிப்படுத்துகின்றன. பல காரணங்களால் தென் னிந்தியா தெற்கேயிருந்த பெரிய கண்டத்தில் மிச்சமெனக் கருதப்படு கின்றது. இலங்கைப் புத்தர், புராணகாரர் முதலியோர் எழுதியுள்ள வரலாறுகளும் மேற்குக் கரையில் உள்ளவர்களின் கன்ன பரம்பரையும் இலங்கையும் தென்னிந்தியாவும் சமீபத்தில் பல குழப்பங்களுக்குள்ளாயின வென்பதைக் குறிப்பிடுகின்றன.2
“முதலாம் காலப் பகுதியின் கடைக்கூறில் இந்து சமுத்திரத்தினூடே விளங்கிய ஒரு கண்டம் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆத்திரேலியா முதலிய நாடுகளை இணைத்துக்கொண்டிருந்தது.3
“இந்தியாவின் தென்பகுதி கங்கையாறு பாயும் நிலப்பரப்புக்கும் இமயமலைக்கும் வேறானது. இஃது இப்போது இந்து சமுத்திரம் இருக் கின்ற இடத்தில ஆப்பிரிக்கா வரையில் தொடர்ச்சியாக நீண்டிருந்த பழைய கண்டத்தின் மிச்சமா யிருக்கின்றது. இதிலுள்ள குன்றுகள் உலகத்தி லுள்ள மிகப் பழையவற்றுட் சேர்ந்தன. இவை ஒருகாலத்திலும் நீருள் மூழ்கி யிருந்த குறிகள் இல்லவேயில்லை. இக்குன்றுகளின் பலவிடங்களிற் கருங்கற்பாறை தகடாகப் பரவியிருக்கின்றது. ஆகையால் அஃது உலகில் முற்காலத்தில உயிர்கள் தோன்றும் முன்னர் இருந்தபடியே தெற்கில் இருக்கின்றது. சிந்து கங்கைச் சமவெளி சிந்துநதி தொடங்கிக் கங்கைக் கழிமுகம் வரையில் ஆயிரத்திருநூறு மைல் தொலைவு இடைவெளியின்றி நீண்டிருக்கின்றது. மண்ணுலகு பதப்பட்டுக் கொண்டுடிருக்கும்போது இமயமலை கிளம்பும் முன்னர்க் கங்கை நிலவெளியிருக்கும் இடம் கடலாயிருந்தது. அந்தக் கடலின் தெற்குக் கரையில் தென்னிந்தியா விருக்கிறது. இமயமலை கிளம்பியபோது கடல் மறைந்தது. இமயமலையி லிருந்து ஓடும் ஆறுகள் வாரிக்கொண்டு வந்த மண்ணினால் இப்போதுள்ள வெளி நிலம் உண்டானது.”2
“தென்னிந்தியா ஆப்பிரிக்கா தொடக்கமாக இந்தியா வரையும் அகன்றிருந்த ஒரு பூகண்டத்தின் கிழக்குப் பகுதியாகும். மக்கட் கூட்டத் திற்குப் பிறப்பிடமாகிய அக்கண்டத்தினின்றும் மக்கள் வேற்றிடங் களுக்குச் செல்லத் தொடங்கியபோது தென்னிந்தியா மேற்கே மடகாசி கரோடும் கிழக்கே மலாயத் தீவுகளோடும் இணைக்கப்படாமல் இருக்க வில்லை. மக்கள் தென்னிந்தியாவினின்றும் பெயர்ந்து பிறவிடங்களுக்குச் செல்லத் தொடங்கிய காலத்தில் மாத்திரமின்றி அதற்குப் பின்னும் இந்தியா ஆசியாவின் வடமேற்கு நாடுகளோடு இணைக்கப்பட்டிருக்கவில்லை. அக்காலம் நடு ஆசியாவில் நிலவிய கடல் இந்தியாவில் வடமேற்கெல்லை யாயிருந்தது. முன் பிறநாடுகளிற் குடியேறிய மக்கள் (தமிழர்) வடஇந்தியாவை அடையவில்லை. அக்காலத்து இந்தியாவின் தென்பாகம் வடபாகத்தோடு முற்றாக இணைக்கப்பட்டிருக்கவில்லை. தமிழர் வடக்கேயுள்ள சாதி யாரில் (Tribes of Northern countries) வேறுபட்டவர்களாகக் காணப்படுகின் றனர். அவர்கள் (தமிழர்) தாம் இப்போது வாழ்வதும் தம் முன்னோர் பல தலைமுறைகளாக வாழ்ந்ததுமாகிய தென்னிந்தியாவுக்குத் தொடர்பில்லாத வர்கள் எனக் கூறுதல் பொருந்தாது. ஒருகாலம் வங்காளத்தின் கீழ்ப்பாகம் தமிழர் அதிகாரத்தின்கீழ் இருந்தது. புத்தருடைய காலத்துக்குமுன் தமிழர் அனம் (Annum) என்னும் நாட்டைவென்று அதற்குப் பொங் லொங் (Bong Long) என்னும் பெயரிட்டார்கள். வங்காளத்தில் ‘லக்லம்’உடைய சந்ததியார் கி.மு. ஏழாம் நூற்றாண்டு தொடங்கிக் கி.பி.258 வரை நீண்ட காலம் அரசு புரிந்திருக்கிறார்கள். சரித்திர காலத்தில் இந்தியாவுக்குப் புதிதாக வந்த வர்கள் எனச் சொல்லப்படும் ஆரியர், மக்கள் இனத்தைக் குறித்த ஆராய்ச்சி யால் தமிழரிலிருந்து வேறுபடவில்லை. திராவிடர் முற்காலத்தில் தோற்றத்திலாவது மன வலிமையிலாவது ஆரியருக்குக் குறைந்தவரல்லர். தமிழர் பழமைதொட்டு தென்னிந்தியாவில் வாழ்ந்தார்கள் என்று ஒப்புக் கொண்டால் புதிதாக வேறு சாதியார் கூட்டங் கூட்டமாக வந்தபோது முன்னிருந்த தமிழர் என்ன செய்தார்கள் என்னும் கேள்வி எழுவது இயல்பு. அக்காலத்தில் வட இந்தியாவுக்கும் தென் இந்தியாவுக்கும் இடையே கிடந்த கடல் தரையாக மாற இருநாடுகளும் தொடுக்கப்பட்டன. தெற்கே இருந்தவர்கள் வடக்கே சென்றார்கள். இந்தச் செழிப்பும் செல்வமும் பொருந்திய வடநாட்டை அடைய முடியாதவர்களாயிருந்தால் அவர்கள் (தமிழர்) புதிதாக வந்தவர்களைத் துரத்தியிருப்பார்கள். தெற்கே இருந்த தமிழர் இயற்கைக்கு மாறாக நடந்துகொண்டார்களென்று சொல்வதற்கு இடமில்லை.”1
இந்திய வானநூற்படி இலங்கையில் இராவணனுடைய இராச தானிக்கு ஊடாகச் சென்றதாகச் சொல்லப்படும் நிரட்சரேகை (Meridian) இலங்கைக்கு மேற்கே 400 மைல் தூரத்திலிருக்கும் மாலைத் தீவுக் கூடாகச் செல்கின்றது.
“இக்கரைப்பாகத்தில் அமிழ்ந்திப்போய்க் காட்டின் பகுதிகளாகக் கண்டுபிடிக்கப்பட்ட குறிகள் இன்னும் இருக்கின்றன. இப்பகுதி அமிழ்ந்து போன லெமூரியாக் கண்டத்தின் பகுதியோ அல்லது பிந்திய காலத்ததோ என்பது மயங்கக் கிடக்கின்றது” -கதிர்காமவேலர் -சர்.பி.அருணாசலம்
“இலங்கையிலே இருந்த தெய்வங்கள் வெகுண்டு ஒரு கடல்கோளை உண்டுபண்ணின. 400,000 தெருக்களும் 25 அரண்மனைகளும் இராவண னுடைய கோட்டைகளும் இருந்த தூத்துக்குடி முதல் மன்னார் வரையு முள்ள நிலத்தைக் கடல் அடித்துக்கொண்டு போய்விட்டது. இது துவாபார ஊழியில் நிகழ்ந்தது. அப்படியே கழனி இராசாவாகிய திச ராசன் காலத்தில் 100,000 பட்டணங்களையும் 970 மீன்பிடிகாரர் குப்பங்களையும் 400 முத்துக் குளிகாரர் குறிச்சிகளையும் கடல் விழுங்கிவிட்டது.
இராசாவளி
“பாஸ்கராசாரியார் எழுதிய வான நூற்குறிப்பில் நடுக்கோடு (Equator) பழைய இலங்கைக் கூடாகச் செல்கின்றது. இதனால் இராவண இலங்கை இப்போதுள்ள சுமத்திராவாக இருக்கலாமெனக் கருதுகின் றனர்.”1 - Ravana of Lanka by N.S.Adhikari
“லெமூரிய அல்லது சிலாற்றறின் கொள்கை.” இக்கொள்கையின் படி தமிழர் தோன்றின இடம் இமயமலை உண்டாவதன்முன் இந்து சமுத்திரத்தில் மூழ்கிப்போன லெமூரியாக் கண்டமாகும். இப்பூகண்டம் மேற்கே மடகாசிகர் வரையும் கிழக்கே மலாய்த் தீவுகள் வரையும் பரந்து தென்னிந்தியா ஆஸ்திரேலியா என்னும் நாடுகளையும் தொட்டுக் கொண்டிருந்தது. அப்படியிருந்தால் இந்நிலப் பரப்பு நீருள் மறைவதன் முன் தமிழர் தெற்கினின்றும் இந்தியாவை அடைந்திருத்தல் வேண்டும். - Tamil Studies, P. 21
‘சாவா’ என்னும் தீவின் வடகரையில் மதுரை நீரிணையென்னும் ஒரு சிறிய நீரிணை உளது. அதற்கு வடக்கே மதுரை யெனும் ஒரு சிறு தீவும் உண்டு. போணியோவின் கிழக்குக்கரையிலும் மேற்படி பெயருடன் ஒரு தீவு இருக்கின்றது. இது முற்றாக அல்லது சிறிதாகக் கடலாற் சூழப்பட்டது. இவ்விடங்களிலொன்று பழைய மதுரையாயிருத்தல் கூடும். ”2 - திருவாளர் T. பொன்னம்பல பிள்ளை M.R.A.S.
3“மூன்றாம் காலப் பகுதியின் பெரும் பகுதியில் இலங்கையும் தென்னிந்தியாவும் வடக்கே கடலை எல்லையாகப் பெற்றிருந்தன. தெற்கேயிருந்த கண்டம் அல்லது பெரிய தீவின் பகுதியாக அவை இருந்திருத்தல் கூடும்”
4“ஒரு காலத்தில் இமயமலைகள் கடல் ஆழத்தினின்றும் மெதுவாக மேலே உயர்த்தப்பட்டவை. ஒருகால் திமிங்கிலங்கள் உலாவிய இடங்களில் இன்று கழுகுகள் வாழ்கின்றன. ஒரு காலத்தில் அத்லாந்திக் கடலின் மத்தியில் திட்டமாக ஒரு பூகண்டமிருந்தது.”
5“தற்கால ஆராய்ச்சி அறிவினால் மலைத்தொடர்களின் உற்பத்தி அமைப்பு முதலியவற்றைக் குறித்த உண்மைகளை அறிந்து கொள்ளுதல் முடியாததன்று. இரண்டாம் காலப் பகுதியில் தென்னிந்தியா கடுந்தரையாக விருந்தது. அது மூன்றாம் காலப் பகுதியில் இந்து சமுத்திரத்துக் கூடாக தென் ஆப்பிரிக்கா வரையில் அகன்றிருந்த கண்டத்தின் பகுதியாகும். அதன் வடக்குக் கரையில் எதே (Tethys) கடல் இருந்தது. அக்கடல் மூன்றாம் காலப் பகுதியின் நடுப்பகுதியிலும் பிற்பகுதியிலும் கிழக்கு மேற்காக ஆசியாவுக்கு ஊடாகப் பரந்திருந்தது. இங்கேதான் இமயமலையின் தளம் இருந்தது”
“இரண்டாம் உகத்தின் முற்பகுதி தொடக்கத்திலிருந்து நாலாம் உகத் தொடக்கம்வரை இமயமலை இருக்கும் இடம் கடலாயிருந்தது”1
3. குமரிக்கண்டம் கடல்வாய்ப்பட்டதன் காரணம்
“இது (ஆஸ்திரேலியா) விந்தை மிக்க நாடு; இங்குள்ள மரஞ்செடி களிற் பல இயற்கையாய் வேறெந்த நாட்டிலும் வளர்வதில்லை. அவ்வாறே வீணைப்பறவை, சுவர்க்கப்பறவை, ஏமு முதலிய பறவைகளிற் பலவும், கங்காரு முதலிய விலங்குகளிற் சிலவும் உலகில் வெறெங்கும் இயற்கையிற் காணக் கிடைப்பனவல்ல. மக்களும் அவ்வாறே. இவற்றால் கொள்ளக் கிடப்பது யாதெனில், ஆஸ்திரேலியா முதலில் உலகொடு சார்பு பெற்றிராத ஒரு நில உருண்டை என்பதே. உண்மையில் இதுவோர் விண்வீழ்மீன் (Comet). இது விசும்பினின்று யாதோ காரணத்தால் இம் மண்ணுலகின்மீது வீழ்ந்திருக்க வேண்டும். இருவகை இயக்கத்தோடு கூடிய உலகின் மேல் வீழ்ந்தபோதுதான், லெமூரியா கடல்வாய்ப்பட்டது. சிந்து, கங்கைவெளி, இமயமலை, மத்திய ஆசியா முதலிய நிலப்பகுதிகள் வெளிக்கிளம்பின. இவ்வாறு கொள்ளுமிடத்து இப்போது பூகோள நூலாராய்ச்சியில் காரணங்காட்ட முடியாவாறு நம்மை மலைவுறுத்தும் இருபத்து மூன்று இடையூறுகள் விலகிவிடுகின்றன. அத்தடைகட்கெல்லாம் தக்க விடை ஏற்படுகின்றன. இவற்றையெல்லாம் இங்கு விரித்துரைக்க இயலாது. ஒன்றுமட்டும் கூறலாம். விரைவாய்ச் சென்று கொண்டிருக்கும் பம்பரத்தின் மீது ஒரு கல் தாக்குமாயின் அது வளைவாய்ச் சாய்ந்து சுற்றிப் பின்னர் ஓய்ந்து விடும். அதுபோன்றே இவ்வுலகம் பண்டை நாளில் செங்குத்தாய்ச் சுழன்று கொண்டிருக்க வேண்டும். அதுகாலை மேற் குறித்த வண்ணம் ஆஸ்திரேலியா வானத்தினின்றும் தவறிப் பூமியின்மேல் தாக்கியிருக்க வேண்டும். அதனால் மேற்குறித்த நில நீர் மாறுதல்கள் உண்டானதோடு, பூமியும் சாய்ந்து சுழலலாயிற்று. இன்றைக்கு நூறாண்டுகளுக்கு முன்னர் 26 டிக்கிரி சாய்வோடு சுழன்றது. அதற்கு முன்னர் இன்னும் அதிகச் சாய்வுற்றிருந்திருக்க வேண்டும். இப்போதுள்ள சாய்வு 23 டிக்கிரிகளுக்கு மேலில்லை. இவ்வாறு சென்றால் நாளடைவில் இச்சாய்வு அடியொடு மறைந்தொழியலாம். அந்நாளில் இருவகை அயனங்களும் பட்டொழியும்; பருவ வேறுபாடுகளும் சுருங்கிவிடும். உயிர்த்திரள்களின் வாழ்க்கை நிலையும் பெரிய மாறுதலடையும். இன்னும் தொடர்ந்து இது குறித்து நாமிப்போது எண்ணிப்பார்க்க வேண்டியதில்லை. இங்குக் குறிக்கத்தக்க தெல்லாம் ஆஸ்திரேலியா இப்புவியின்மீது வீழ்ந்து தாக்கிய ஒரு விண்மீனா மென்பதே.
- திருவாளர் பா.வே.மாணிக்க நாயகரவர்கள் B.E. M.C.I. - செ.செல்வி சிலம்பு 1. பரல் 3.
முன் கடலாயிருந்த சகரா வனாந்தரத்திலிருந்த நீர் வற்றத் தொடங்கியதால் அது நிலனாக மாறியதே குமரி நாட்டின் அழிவுக்கு ஏது என்பது பிறிதொரு கொள்கை.
“சகரர் வேள்விக் குதிரை நாடித் தொட்ட காலத்துட்பட்டுக் குமரியாறும் பனைநாட்டோடு கெடுவதற்கு முன்” எனக் குமரியாற்றுக்கும் அதனை அடுத்த நிலத்தின் அழிவுக்கும் காரணங் கூறுவர் பேராசிரியர். சகரகுமாரர் தோண்டியதாற் கடலுண்டானதென இராமாயணங் கூறுகின்றது. இஃது ஒரு காலத்து நேர்ந்த எரிமலைக் குழப்பத்தைக் குறிப்பதாயிருக்கலாம். புராணகாரர் அதனைக் கற்பனைக் கதையால் புனைந்து கூறியிருத்தல் வேண்டும்.
4. இந்தியா
இந்தியா என்பது சிந்து நதிக்கு இரு பக்கங்களிலுமுள்ள நாடுகள் என்று பொருள்படும். இது பாரசீகரால் (Persians) சிந்துநதிப் பக்கங்களி லுள்ள நாடுகளுக்குக் கொடுக்கப்பட்ட பெயர். இப்பெயர் கெரதோதஸ் (Herodotus) என்னும் வரலாற்றாசிரியராலும் அலெக்சாந்தர் படையெழுச்சிக் காலத்திலிருந்த வரலாற்றாசிரியர்களாலும் கிரேக்க தேசத்துக்குக் கொண்டு போகப்பட்டது. இப்போது இந்தியா என்பது இமயமலைக்கும் கன்னியா குமரிக்கும் இடையிலுள்ள நாட்டைக் குறிக்கின்றது. இது பிறநாட்டார் பரத கண்டத்துக்குக் கொடுத்த பெயராகும்.
5. மக்கள் தோற்றம்
மக்கட் படைப்பு முதற்றோன்றிய இடம் இப்போது இந்து சமுத்திரத் துள் மூழ்கிக்கிடக்கும் கண்டமாகுமென ஐரோப்பியப் பண்டிதர்கள் பலர் ஆராய்ந்து கூறுகின்றனர்.
1“இந்து சமுத்திரம் ஆசியாவின் கரையை ஒட்டிச் சந்தாத் தீவுகள் முதல் ஆப்பிரிக்காவின் கரைவரை நீண்ட ஒரு பூகண்டாமாயிருந்தது. இந்தப் பூகண்டம் ஆதியில் மக்கள் முதலிற்றோன்றினாரென்னுஞ் சிறப் புடையதாயிருக்கின்றது.” (ஹெக்கல்)2 புதிய ஆராய்ச்சிகளால் மக்களினம் முதற்றோன்றியவிடம் இப்போது இந்து சமுத்திரத்தில மூழ்கிக் கிடக்கும் நிலமெனத் தெரிகிறது. (மக்கணூல்)
“மக்கள் இனத்தைக் குறித்த ஆராய்ச்சியால் வடக்கேயுள்ள சாதி களும் மத்தியதரைக் கடற்பக்கங்களிலுள்ள சாதிகளும் தென்னிந்தியா வினின்றும் சென்றனவென்று காணப்படுகின்றன. கிழக்குக் கரைகளில் மக்கள் என்பு முதலிய சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவை இவ்வளவு காலத்துக்கு முற்பட்டனவென்று அறிந்து சொல்லமுடியாத பழைமையுடையனவாயிருக்கின்றன. தென்னிந்தியாவிலிருந்த பெரிய சாதியார் தமது அறிவையும் உயர்ந்த குணங்களையும் தமது தோற்றம் வடிவம் (Physical qualities) முதலியனவற்றையும் உலகம் முழுவதிலும் பரப்பியவர்களாகக் காணப்படுகின்றனர்” என டாக்டர் மக்லீன் கூறியுள்ளார்.!
“ஆதிமாலமல நாபி கமலத்தய னுதித்
தயன் மரீசியெனு மண்ணலை யளித்த பரிசும்
காதல் கூர்தருமரீசி மகனாகி வளருங்
காசிபன் கதிரருக்கனை யளித்த பரிசும்
அவ்வருக்கன் மகனாகி மனுமே தினிபுரந்
தரிய காதலனை யாவினது கன்றுநிகரென்
றெவ்வருக்கமும் வியப்பமுறை செய்த பரிசும்
இக்குவாகுவிவன் மைந்தbன்ன வந்த பரிசும்”
என்னும் கலிங்கத்துப்பரணி மக்கட் படைப்புத் தமிழகத்தில் உற்றதாகவே கூறுகின்றது. இங்குக் கூறப்பட்ட இராச பரம்பரையிலுள்ளோர் தமிழ் மக்களாகவே காணப்படுகின்றனர்.
“வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி, பண்பிற்றலைப்பிரித லின்று” என்னும் திருக்குறள் உரையில் பரிமேலழகர் “பழங்குடி தொன்று தொட்டு வருகின்ற குடி; தொன்றுதொட்டு வருதல் சேர சோழ பாண்டிய ரென்றாற்போலப் படைப்புக் காலந்தொட்டு மேம்பட்டு வருதல்” எனப் பொருள் கூறினர்.
தமிழர் தென்னிந்தியாவை வென்று குடியேறினார்களோ அல்லது பூர்வமே அங்கு வாழ்ந்து வருகின்றார்களோ என்று அறியக்கூடாத அவ்வளவு பழைமை தொட்டு இந்தியாவில் உறைகின்றார்கள் என்றும், அவர்களுடைய உற்பத்தி மதுரை அல்லது தஞ்சாவூருக்குச் சமீபத்தில் இருக்கலாமென்றும், அவர்கள் பிறநாடுகளிலிருந்து இந்தியாவை அடைந்தார்க ளென்பதற்கு யாதும் வரலாறு காணப்படவில்லையென்றும் டாக்டர் வெர்கூசன் என்பவர் கூறுவர்.1
“விவிலிய நூலின் கூற்றை நம்பி பலஸ்தீன் நாட்டிற்றான் மக்கட் படைப்பு முதற் றோன்றியதென்பது சிலர் கருத்து. யெகோவாவால் ஓர் ஆண் மகனும் பின் அவன் என்புகொண்டு ஒரு பெண்மகளும் திடீரென்று உண்டாக்கப்பட்டமை விவிலிய நூலிற் சொல்லப்படுகிறது. இத்தகைப் படைப்பு வரலாறு உடல் வளர்ச்சி முறை நன்கு ஆராய்ந்து நாட்டப்பட்ட இந்நாளில் அறிஞரால் ஒத்துக்கொள்ளப்பட மாட்டாது. நடுக்கோட்டுப் பகுதியிலேயே முதல் உயிர்கள் தோன்றுவதற்கேற்ற வசதிகள் உண்டு என்பது ஆராய்ச்சியாளர் துணிபு.” ‘புரோடஜா’ (Protozoa) என்னும் (வருணமும் உருவமுமற்ற) நொய்ய நீர் வாழுயிர்களிலிருந்து கடற்பஞ்சைப் போன்ற (Sponges) பிராணிகள் தோன்றுகின்றன. அவைகளிலிருந்து பவளக்கொடியாக்கும் (Coral Builder) பிராணிகள் தோன்றுகின்றன. அவைகளிலிருந்து வெள்ளி மீன்களும் (Star fish) நத்தை நண்டு புழு பூச்சிகளும் தோன்று கின்றன. அவைகளிலிருந்து பறவைகளும் வெளவால் களும், அவைகளிலிருந்து மிருகங்களும். அவைகளிலிருந்து வானரங் களும், அவைகளிலிருந்து வாலில்லாக் குரங்குகளும் தோன்றின. கடைசியில் மக்கள் தோன்றினர் என்றும் குரங்குக்கும் மனிதனுக்குமிடையில் உள்ள ஒருவகைப் பிராணி இருந்திருக்க வேண்டுமென்றும் கருதப்படுகின்றன. இதுவே தொல்லுயிர் நூலார் படைப்புக்கிரமங்களைக் குறித்துக் கூறும் முறையாகும். இச்சாத்திரிகள் கொள்கையோடு விவிலிய நூற் கூற்றுச் சிறிதும் ஒத்துப் போகவில்லை. மக்கட்படைப்பு இவ்வுலகில், பத்து அல்லது இருபது இலட்சம் வருடங்கட்கு முன் தோன்றியிருக்க வேண்டு மெனச் சாத்திரிகள் கருதுகின்றனர், மனுவின் காலத்தில ஒரு வெள்ளப் பெருக்கு உண்டானதென்றும். அவ்வெள்ளப்பெருக்குக்குப் பிழைத்திருந்த மனுவினின்றும் மக்கட் சந்ததி உலகில் பெருகியதென்றும் புராணங்கள் நுவல்கின்றன.
சலப்பிரளயத்துக்குப் பின் மக்கட் சந்ததி இந்தியாவிலேயே பல்கியது என சர் வால்டர் ரலி என்னும் மேல் நாட்டறிஞர் கூறுகின்றனர்.1
மனு கிருதமாலை என்னும் ஆற்றங்கரையில் தவஞ் செய்துகொண் டிருந்த ஒரு முனிவர்2 என மச்சபுராணங் கூறுகின்றது. மனு சத்தியவிரத னென்னுமொரு தமிழ் வேந்தனெனப் பாகவத புராணம் புகலும். வையை நதிக்குக் கிருதமாலையென்னும் பெயர் ஆலாசிய மான்மியத்திற் காணப் படுகிறது.3
தமிழ்நாட்டுப் பழைய வேந்தர்களாகிய முசுகுந்தன் சிபி முதலானோர் மனுவழித் தோன்றியவர்களெனச் சொல்லப்படுகின்றனர்.
பழைய புராண வரலாறுகளிற் சொல்லப்படும் அரசர் முனிவர்களும் தென்னாட்டினராகவே எண்ணப்படுகின்றனர். காசிபர் பழைய இலங்கையை ஆண்ட சூரபன்மாவுக்குப் பிதா. இவர் தக்கன் புதல்வியர் பதின்மூவரை வதுவை அயர்ந்து அவர்கள்பால் அசுரர், அமரர், கருடர், முனிவர், யக்கர். பூதர், நாகர், கந்தருவர், சித்தர் முதலிய பதினெண் கணங்களுட் பலரைப் பிறப்பித்தவராகக் காணப்படுகின்றனர். பதினெண் கணங்களெனப் பகரப்படுவோர் பழந்தமிழருக்குட் காணப்பட்ட பதினெண் குழவினர் எனக் கருத இடமுண்டு. கி.மு. 543 இல் விசயன் இலங்கையை அடைந்தபோது அங்கு வாழ்ந்தோர் இயக்கர் நாகர் என்னும் சாதியினர். இலங்கையைச் சூரன் முதலிய அசுரரும், குபேரன் முதலிய தேவரும், இராவணன் முதலிய இராக்கதரும் ஆண்டார்கள்.
இந்திரன் வருணன் இயமன் இராமன் கண்ணன் அருச்சுனன் முதலானோர் கார் நிறமுடையவர்களாகக் கூறப்படுகின்றனர். தரும புத்திரனைக் கௌதமனார் என்னும் புலவர் பாடி மகிழ்வித்த பாடலொன்று புறநானூற்றில் காணப்படுகின்றது. அதில் தருமபுத்திரர் அறன்மகனெனக் கூறப்படுகின்றனர். அறன்மகனென்பதே பிற்காலத்தில தருமபுத்திரன் எனச் சமக்கிருதத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருத்தல் கூடும். தருமன் (இயமன்) தருமபுத்திரன் முதலானோருக்குரிய மொழி தமிழென்பது புலனாகின்றது. வருணன் தென்தேசத்தின் ஒரு பகுதிக் கிறை. மாருதி (அனுமந்தன்) பிதா நெய்தல் நிலத்துத் தெய்வத்துக்கும் பெயர் வருணன். இவ்வருணனே வடக்கே உள்ளவர்களின் வழிபாட்டுக்குரியவனாகவும் இருந்தானாதல் கூடும். மால் கரியமேனியன்; முல்லைநிலத் தெய்வம். இந்திரன் தென்னாட்டு அரசன்; அருச்சுனனுக்குப் பிதா. இவன் இராசதானி கிருஷ்ணா நதியின் முகத்துவாரத்திலுள்ள அமராவதியென்ப. சிவபெருமான் வீரஞ்செலுத்திய எட்டு இடங்களும் தென்னாட்டிலுள்ளன. பிரம விட்டுணுக்கள் அடிமுடி தேடியது திருவண்ணாமலையில். புராணங்களில் திரிலோகங்கள் என்று சொல்லப்படுவன தமிழகத்துள்ள சேர சோழ பாண்டிய மண்டலங் களென்று கருதப்படுகின்றன.
1மனுவை மீன்வடிவினதாகிய ஒரு தெய்வம் சலப்பிரளயத்தினின்றும் தப்பவைத்தது என்றும், அம்மனுவின் மரபினின்றும் (‘பண்டையர்’ களாகிய) பாண்டியர் தோன்றினார்களென்றும் பொருள்பட அவர் மீன் வடிவினதாகிய இலச்சினையைத் தமது கொடியிற் பொறித்து வந்தனர். மீன் பிடிக்கும் பரதவர் குலத்திற் தோன்றினபடியால் அவர்கள் மீன் கொடியை யுடையவர்களாயிருக்கின்றனரென்பது சில ஆராய்ச்சியாளர் கருத்து. அது பொருந்துவதாகத் தெரியவில்லை.
1சாலடியர் பாபிலோனியர், எகிப்தியர், கிரேக்கர், அசீரியர் முதலிய எல்லாச் சாதியாரும் ஒரு சலப்பிரளயத்தைக் குறித்த வரலாற்றைக் கூறுகின்றனர். எபிரேயர் நாற்பது நாள் விடாமழை பொழிந்ததாகச் சொல்லும் சலப்பிரளய வரலாறும் மனு சம்பந்தமானதே. மக்கள் வெவ்வேறிடங்களிற் பிரிந்து சென்று தங்கினபோது ஒரு சலப்பிரளய வரலாற்றினையே சிறிது வேறுபடுத்தி வழங்குவாராயினர்.
“நாங்கள் பூர்வகுடிகள் என்பதில் குறைவான எண்ணம் வைத்திரா விட்டாலும் நாகரிகத்தை எல்லாத் திசைகளிலும் பரப்பியதும் மக்கட் சாதியார் தோன்றிப் பெருகி வேறு நாடுகளிற் செல்வதற்கு ஏதுவாயிருந்தது மாகிய ஒரு கண்டம் கன்னியாகுமரிக்குத் தெற்கே இருந்ததென நம்பினாலும் தமிழர் ஊழிக்காலத்துக்கு முற்பட்டவர்கள் என்பதில் சந்தேகம் தோன்ற மாட்டாது.
இப்போதுள்ள நூல்கள் மூன்று முறைகளில் தமிழகத்தின் தென்பகுதியைக் கடல்கொண்டதாகக் கூறுகின்றன. பழைய சாலடியா பாபிலோனியா முதலிய நாடுகளில் பழைய நாகரிகத்தின் அறிகுறிகள் பழைய நூல்களில் காணப்படுவன போலத் தென்னிந்தியாவில் ஏன் காணப் படவில்லை யென்பதற்குச் சமாதானஞ் சொல்ல வேண்டியிருக்கிறது. தமிழர் எழுதுவதற்குப் பயன்படுத்திய பனையோலை காலத்தில் ஒடிந்து அழிந்து போவதற்கேதுவாயிருந்தது என்பதை அதற்கு ஒரு சமாதானமாகக் கூறலாம் ” - பேராசிரியர் சுந்தரம் பிள்ளை.
இந்தியர், பாரசீகர், கிரேக்கர், ரோமர், சிலாவியர், கெல்தியர், செர்மனியர் முதலானோர் ஒரு காலத்தில் ஒரே இடத்தில் வாழ்ந்தவர்கள் என மாக்ஸ்முல்லர் என்னும் பண்டிதர் கூறுகின்றனர்.2
6. தமிழர் தொன்மை அகவல்
“ஒண்மை யறிவு மோர்வுமிக் கோரே
உண்மை கேண்மின்! உண்மைக் கேண்மின்!!
மீன்கொடி படைத்த மேன்மை மனுக்கள்
ஆன்ற பாண்டிய ரனைவருந் தமிழர்
5 தென்கட் பஃறுளி யாறு சீர்சால்
நற்புகழ் வடக்கண் நளிரிமை யார்மலை
உரைதமிழ் நாடா வயங்கிய முற்கால்
திருவிட மெனும்பே ரதற்குச் சிறந்தது
பின்னா ரியர்கள் பிறங்கிந் நாட்டில்
10 உன்னி வந்துகுடி யுறுமுன மிங்குத்
தமிழ்மொழி வழக்குந் தகையொண் ணூலும்
இமிழிசை யைந்திணை இனமுந் தேவும்
போற்றுவர் யார்க்கும் பொதுச்சிவக் கோளும்
ஆற்றருந் தளியு மகத்தெண் ணெழுத்தும்
15 நயமிகு மொழுக்கமும் நனிச்சீர் தேற்றமும்
உயிர்த்திருந் தனவற முயற்றர சிருந்தது
மற்றிவை யாவும் வான்றமிழ்ப் புலவர்
சொற்ற மொழிகள் தொகைப்படு வேதம்
ஆகமம் புராணம் மவரிதி காசம்
20 வாகய லார்சொல் மருளி லாங்கிலங்
கற்றவர் கற்பொறி கவின்பந் தாக்கர்
தத்தர் முன்னையர் தம்முரை வழியால்
துணியப் பட்டன - தோன்றீ ரினத்தில்
இணங்கா நாற்குல மியற்றினர் பின்னோர்
25 என்று மொருதலை விவையுள்
மன்னி யுணர்ந்து மயக்கொழி வீரே.”
விருதை.சிவஞான யோகிகள்
7. குமரிநாட்டில் தமிழ் வழங்கிய தென்பது
“முன்னிருந்த பாலி மொழியுங்கீர் வாணமும்
துன்னுங் கருப்பையிலே தோய்வதற்கு - முன்னரே
பண்டைக் காலத்தே பரவைகொண்ட முன்னூழி
மண்டலத்தி லேபேர் வளநாட்டின் - மண்டுநீர்ப்
பேராற் றருகில் பிறங்கு மணிமலையில்
சீராற்றுஞ் செங்கோற் றிறற்செங்கோன் -நேராற்றும்
பேரவையி லேநூற் பெருமக்கள் சூழ்ந்தேத்தப்
பாரரசு செய்த தமிழ்ப் பைந்தேவி”1
என்னும் தமிழ்விடு தூதினால் பாலி கீர்வாணம் (ஆரியம்) முதலிய மொழிகள் தோன்றுவதற்குமுன் குமரிநாட்டில் சீரும் திருத்தமும் பெற்று விளங்கியது செந்தமிழ் மொழியெனப் புலனாகின்றது. இறையனார் அகப்பொருளுரை, சிலப்பதிகாரத்துக்கு அடியார்க்கு நல்லா ரெழுதிய உரை, குமரிநாடு கடல்வாய்ப்படுவதன்முன் பாடப்பட்ட சில புறநானூற்றுச் செய்யுட்கள் பஃறுளியாற்றிற்கும் குமரியாற்றிற்கும் இடையேயுள்ள பெருவள நாட்டரசனாகிய தனியூர்ச் சேந்தன் பாடிய செங்கோன் தரைச் செலவு, அதன்கண் காணப்படும் பஃறுளியாற்றுத் தலைப்பாய்ச்சல் ஏழ் தெங்க நாட்டு முத்தூர் அகத்தியன் பாட்டு முதலியனவும் குமரி நாட்டகத் துக்குப் பண்டு வழங்கிய மொழி, தமிழ் என்பதை வலியுறுத்துகின்றன.
8. தமிழர் பிறநாடுகளிற் குடியேறுதல்
இந்து சமுத்தரத்தினூடே விளங்கிய பெரிய கண்டத்தின் பல பகுதிகள் கடல்வாய்ப்படுதலும் அங்கு வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் பலதிசைகளை நாடிச் செல்வாராயினர். இங்ஙனம் ஓரிடத்தினின்றும் பிரிந்து சென்று ஆசியா ஐரோப்பா ஆப்பிரிக்கா முதலிய நாடுகளிற்றங்கிய ஓரின மக்களே தமிழர் தொடர்பும் கூட்டுறவும் இல்லாமற்போகத் தாமுறைந்த நிலத்தியல்பு, வெப்பநிலை, குளிர், நடை, உடை, ஊண், தொழில் வேற்றுமை முதலியவற்றால் பழக்க வழக்கங்களும் அவை பற்றிய சமயக் கோட்பாடுகளும் மாறித் தம்மை நாளடைவில் வேற்றுமொழியினர் போலவும் வேறு கூட்டத்தினர் போலவுங் கருதினர். தாம் சென்று உறையும் நாடுகளின் வெப்பதட்ப நிலைகளுக்கேற்பக் கறுப்பு நிறமுள்ள சாதியார் வெண்ணிறமாகவும் வெண்ணிறமுள்ள சாதியார் கறுப்பு நிறமாகவும் மாறுதல் கூடும்.1
இவ்வுலகில் ஆங்காங்கு நாகரிக வாழ்க்கையிற் சிறந்து விளங்கிய பண்டை மக்கட் சாதியாரின் சமயம்., பழக்க வழக்கம் முதலியன பெரும் பாலும் ஒத்திருத்தலின், அச் சாதியார்களின் முன்னோர் ஓரிடத்தினின்றுஞ் சென்று வெவ்வேறிடங்களிற் குடியேறினார்களென்பது தெற்றெனத் துணியப்படுகின்றது.
எகிப்திய நாட்டில் தெறல்பஃறி (Der-el-Bahri) என்னும் ஊரின்கண் உள்ள அஷ்தாப் (Hastap) அரசியின் கோயிற் சுவரிற் பொறிக்கப்பட்டிருக்கும் ஓவிய எழுத்துக் கல்வெட்டுகளில் இவ் எகிப்தியர் தென் கடலகத்துக் குமரி நாட்டிலிருந்த பாண்டி2 (Punt) தேயத்திலிருந்து சென்று நீலாற்றங்கரைக்கட் குடியேறினர் என விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.1 அமெரிக்கா விலும் தென்னமெரிக்காவிலும் ஏழாயிர மாண்டுகட்குமுன் உயிர் வாழ்ந்த மக்களும் தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்களே என்பதற்கு வேண்டுஞ் சான்றுகள் புலனாய் வருகின்றன.2 (See prof. Konrod Heable’s article in Harms worth History of the world) எகிப்தில் முதல் இராச பரம்பரையைத் தாபித்து அரசு செலுத்திய ‘மேன்ஸ்’ என்பவர் கி.மு. 4,400 இல் வாழ்ந்தார். எகிப்து அமெரிக்கா முதலிய நாடுகளிலுள்ள பழைய கோயிற் சுவர்களிற் காணப் படும் சித்திர வேலைப்பாடுகள் இந்தியாவில் கோயிற் சுவர்களிலுள்ள சித்திர வேலைப்பாடுகளுடன் ஒத்திருக்கின்றன. வட அமெரிக்காவிலுள்ள மக்கள் தம் முன்னோர் சூரியன் உதயமாகும் ஒரு தீவினின்றும் வந்தார் களெனக் கூறுகின்றனர். ஞாயிற்றுக்குப் பகலவன் என்னுஞ் சொல்லும் மாந்தர் வாழுமிடத்திற்கு ‘ஊர்’ என்னுஞ் சொல்லும் இவை போன்ற பிறவும் பாபிலோனியர் அசீரியர் 3சாலதியர் என்னும் பண்டைத் தமிழ் மக்களில் ஒரு சாரார் அந்நாடு கடல் கொள்ளப்பட்ட ஞான்று ஆண்டு நின்றும் போய்ப் பாபிலோனியா சாலதியா முதலான நாடுகளில் குடியேறி னார் என்பதூஉம் புலனாகா நிற்கும். அஃதன்றியும் சாலதியர் வழங்கிய மற்றொரு கடவுட் பெயரான முருகன் என்னுஞ் சொல்லும் தமிழ்க் கடவுளான முருகன் என்பதனோடு ஒற்றுமையுடையதாய்க் காணப்படு தலும் உற்றுணர்தற்பாலதாம். அல்லதூஉம் பகலவனை வழிபட்டு வந்த ஏதுவானே அந்நாடு பாபிலோனியா என்னும் பெயர் பெறுதலானும், அது பண்டைத் தமிழர் உறைந்த நாடு என்பதைப் புலப்படுத்தும்.
“அமெரிக்காவிலே மெக்சிக்கோ யூகாற்றன் என்னுமிடங்களிற் காணப்படும் ஆலயங்களின் அழிபாடுகள் எகிப்திலுள்ள அவ்வகை யழிபாடுகளை ஒத்துள்ளன. அமெரிக்கா, எகிப்து, இந்தியா என்னும் ஆலயக் கட்டிடங்களிற் காணப்படும் அலங்கரிப்பும் கொத்து வேலைப் பாடுகளும் ஒரே வகையின. சுவரில் எழுதப்பட்டுள்ள சித்திரங்கள் சிலவும் ஒரே வகையின. அமெரிக்க மக்களிடையே தம் முன்னோர் சூரியன் உதயமாகும் நாட்டினின்றும் வந்தார்களென்னும் பழைய நம்பிக்கை உண்டு. அயோவா, தக்கோலோ என்னும் தீவு மக்கள், ‘எல்லா அமெரிக்க மக்களும் சூரியன் உதயமாகும் திசையிலுள்ள ஒரு தீவில் ஒருமித்து வாழ்ந்தார்கள் எனக் கூறுவர்’ என மேசர் லிந் என்பவர் கூறுகின்றார்’ அத்லாந்திசின் வரலாறு.
1‘பினீசியரின் பழைய கடவுள் வழிபாடும் தமிழருடைய சிவ வழிபாட்டோடு ஒற்றுமையுற் றிருக்கின்றது. அவர் ஞாயிற்றுக்குச் சாலப் பழைய பெயராக இட்டு வழங்கிய, ‘எல்’ என்னுஞ் சொல் செந்தமிழ்ப் பழஞ் சொல்லாதல் கவனிக்கற்பாலது. அவர் சிவலிங்கம் போன்று நீண்டு தலைகுவிந்த கற்களை மலைமுகடுகளில் வைத்து வழிபட்டு வந்தனர். மகமதியர் தம் கடவுளுக்கு இட்டு வழங்கும் பெயராகிய “அல்லா” என்னும் சொல்லும் ‘எல்’ என்னுந் தமிழ்ச் சொல்லின் திரிபேயாகுமென இதனுண்மையை ஆராய்ந்து கண்டார் கூறுகின்றனர். கிரேக்கர் ஒலிம்பஸ் என்னும் மனைமுகட்டின் மேல் வைத்து வணங்கிய சியஸ் என்னும் தெய்வம் சிவபிரானோடு பெரிதும் ஒத்திருக்கின்றது. சியஸ் என்பது சிவம் என்பதன் திரிபு என்பது ஆராய்ச்சி வல்லோர் கருத்து. சடைமுடியுடைய ராயும் முத்தலை வேல் கையில் ஏந்தியவராகவும் சியஸ் என்னுங் கடவுள் கூறப்படுதல் இவ்வுண்மையை நிறுவும். அவர்கள் அமைத்த கோயில்களின் வடிவமும் இத் தென் தமிழ்நாட்டிலுள்ளகோயில் வடிவத்தைப் பெரி தொத்து நிற்றலும் கருத்தில் பதித்தல் வேண்டும்.
வரிசை வரிசையாகக் கற்றூண்கள் நிறுத்தி அமைத்த அவர்கடம் கோயிலுள் கிணறு குளங்களும் கோயிலின் வெளியே ஒரு பலிபீடமும் (வேள்வி மேடையும்) உள்ளே திருவுருவங்களினெதிரே ஒரு பலிபீடமு மாக இரண்டு நெற்றிகள் தமிழ்நாட்டுத் திருக்கோயில்களிலுள்ளவாறே அமைத்திருக்கின்றனர். உரோமருடைய சூபிதர் வழிபாடும் தமிழர்களது சிவ வழிபாட்டையே பெரும்பாலும் ஒத்திருக்கின்றது. “ஆங்கிலர் சர்மனியர்” என்னும் இருதிறத்தாருக்கும் முன்னோரான மக்கள் செய்து போந்த தெய்வ வழிபாடும் தமிழ் மக்கள் செய்துபோதரும் வழிபாட்டோடு ஒப்புடைத்தாதலும் ஒரு சிறிது ஆராய்ந்துணர்தல் இன்றியமையாதா கின்றது. ஆங்கிலர் சர்மனியர்களுக்கு முன்னோர் தியுதோனியர் (Teutons). இவர் ‘Woden’ எனப் பெயரிய கடவுளை இறைஞ்சி வந்தனர். . . . . இக்கடவுள் எல்லா கடவுளர்களுக்குந் தாயான ஒரு பெண்தெய்வத்தைத் தமது பக்கத்தே வைத்திருப்பவரென்றும் ஞாயிற்றினைக் கண்ணாகவுடையராயும் உள்ளவ ரென்றும் சொல்லப்படுகின்றது. . . . . . இனித் தெய்வங்களை அவர்கள் காடு களிலும் தோப்புகளிலும் வைத்து வணங்கி வந்தனர். அவ்வாறு வழிபடுங் கால் முழுமுதற் கடவுளின் குறியாக ஒரு பெரிய மரத்தூணைத் திறந்த வெளியிலே நிறுத்தி அதனெதிரிற் பலிபீடமமைத்துத் தீவளர்த்து வழி பாடாற்றி வந்தனரென்பதூஉம் அவர்தம் பழைய வரலாறுகளாற் புலனா கின்றது. இங்ஙனமே நம் முன்னோரும் திறந்த வெளியாகிய அம்பலத்தே இறைவனருட்குறியாகிய தூண்வடிவான ஒரு தறியை நிறுத்தி அதனெதிரே ஒரு பலிபீட மெழுப்பி வழிபட்டுப் போந்தாரென்பதற்கும், நம் முன்னோரும் காடுகளிலும் தோப்புகளிலும் இத்தகையவாம் பல அம்பலங்களில் இறை வனைப் பண்டுதொட்டுத் தொழுது போந்தாரென்பதற்கும் திருமறைக்காடு, திருவாலங்காடு, தில்லைவனம், கடம்பவனம், திருவானைக்கா என்னும் பெயர்களும் உறுசான்றாமென்க. தூண்வடிவு, தறிவடிவு, கற்குழவிவடிவு, குவிந்த புற்றின் வடிவு முதலியன வெல்லாம் சிவலிங்க வடிவமேயாதலு முணரற்பாற்று.
“கிறித்துவ மறையின் முதற்புத்தகத்தில் எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளுக்கு, ‘எலோகிம்’ என்னும் பெயரே நனி சிறந்ததாய்ச் சாலப் பழையதாய் எடுத்தாளப்பட்டிருகின்றது. இச்சொல் ‘எல்’ என்னுஞ் சொல்லிலிருந்து வந்ததெனக் கிறித்து வேத ஆராய்ச்சி வல்ல புலவோர் உரை கூறுகின்றனர். . . . . . . . . கிறித்து சமயத்துக்கு முன்னோரும் முதல்வனை ‘எல்’ என்றும் எலோகிம் என்றும் எல்சடை யென்றும் ஒரோவிடங்களில் எல்எலியன் என்றும் வழங்கி வந்தமையினை உற்று நோக்குங்கால் அவருங் கடவுளை ஒளி வடிவினன் என்றே கருதி வழிபட்டமை புலனாகா நிற்கும்……. ஈண்டுக் காட்டிய இவ்வரலாற்றில் ‘எல்சடை’ என்னும் பெயரிற் கண்ட சடையென்னுஞ் சொல்லுஞ் சிவபெருமாற்குச் சிறப்புப் பெயராகத் தமிழ்நாட்டில் வழங்கும் சடையன் என்னுஞ் சொல்லும் ஒன்றாயிருத்தல் பெரிதும் நினைவு கூரற் பாலதாகும்,”
“மேலும் யாக்கோப்பு என்னும் அடியவர் இறைவனருளை நேரே பெற்று அவனைத் தொழுகுறியாக ஒரு குவிந்த கல்லினை நிறுத்தி அதன்மேல் எண்ணெயைச் சொரிந்து அதனைப் ‘பீத் தெல்’ அல்லது முதல்வனிருக்குமிடம் (கோயில்) என்று பெயரிட்டு வழிபாடாற்றி வந்தமையும், ஆன் என்னும் ஊரிலிருந்த பகலவன் கோயிலின் கண் ஆன் கன்றினை (நந்தியை) இரசவேல் மரபினர் வழிபட்டமையும், பலிபீடங் களின் மேலே குன்றாத் தீவேட்டு வழிபட்டமையும் இரசவேல் மரபினர் குமாரர் ஒளிவடிவின் அடையாளமான குவிந்த மணிக்கற்களை மார்பிற் கட்டிக் கொண்டு, இருந்தமையும் (சிவலிங்க தாரணம்) ஆராய்ந்து பார்க்கும் நடுநிலையாள ரெல்லாம் கிறித்துவ சமயத்தினர் தம் முன்னோர் செய்து போந்த முதற்கடவுள் வழிபாடும் தமிழ்நாட்டினர் செய்து போதரும் சிவவழிபாடும் ஒன்றேயா மென்பதும் உணராமற் போவரோ?1
“ஒரு காலத்தில் நமது தமிழ்மொழி உரோமாபுரி முதலான தேசங் களிலும் பரவியிருந்தது போன்று சைவ சமயமும் அன்னிய நாடுகளெல் லாம் பரவியிருந்ததாகத் தெரிகின்றது. கீழ்க்காணும் தேசங்களில் சிவா லயங்கள் இன்னுங் காணக்கிடைப்பதால் தகுந்த சாட்சியமாகின்றது.
“வட ஆப்பிரிக்காக் கண்டத்து ஈஜிப்ட் தேசத்திலுள்ள மெம்பீஸ் நகரத்தில் நந்திவாகனன் திரிசூலன் சாம்பவாக்ர சர்ப்பாம்பரதாரியான பரமேசுர விக்கிரகமும், பாபிலோன் பட்டணத்தில் 120 அடி உயரமுள்ள சிவலிங்கமும், ஹைட்டோபோலீஸ் என்னும் பட்டணத்தில் 60 அடியுள்ள சிவலிங்கமும் மெக்காவில் ஸகமக்கேஸ்வர நாமமுள்ள ஒரு சிவலிங்கமும் ஸம்ஸம் என்னும் கிணற்றில் ஒரு சிவலிங்கமும் இருக்கின்றன. ப்ரஜில் (பிரேசில்) தேசத்தில் அநேக சிவலிங்கங்களும் விக்னேசுரமூர்த்தங்களும், காரிந்த் பட்டணத்தில பார்வதி தேவியின் ஆலயமும், கிளாஸ்கோவில் சுவர்ண கவசத்தினால் போர்க்கப்பட்ட ஒரு சிவலிங்கமும், பிரிஜியன் தேசத்தில் ஏடன் என்னும் சிவலிங்கமும், வினியா, யகோதி, சிதரால், காபூல் பலக்புகார் முதலான இடங்களில் அநேக சிவலிங்கங்களும் இருக்கின்றன. அங்குள்ள சனங்கள் பஞ்சாட்சர பஞ்சவீர என்னும் பெயரால் அழைத்தும் அர்ச்சித்தும் வருகின்றார்கள் என்று வீர சைவம் என்னும் மாதாந்தப் பத்திரிகை கூறுகின்றது.” (சித்தாந்தம் மலர்-3 இதழ் 3)
இங்கிலாந்திலுள்ள கிறித்துவ ஆலயங்களையும் மூலை முடுக்கு களையும் கவனித்து நோக்கும்போது அஃது ஒரு சைவநாடு அன்று என்று கருத இடம் தரவில்லை எனச் சித்தாந்த தீபிகை என்னும் பத்திரிகையில் ஒருவர் எழுதியுள்ளார்.1
லிடியா என்னும் நாட்டில் ஒரு சமாதியின் மேல் ஒன்பதடிக் குறுக்களவுள்ள ஒரு சிவலிங்கம் இருக்கிறது. தமிழ்நாட்டில் சமாதியின் மேல் லிங்கம் தாபிக்கும் வழக்கினையே அந்நாட்டவரும் கைக்கொண் டனர் போலும்.
பாபிலோனிலே உள்ள கோயில்களில் தமிழ்நாட்டின் ஆலயங் களிலே காணப்படுவதுபோலத் தேவதாசிகள் இருந்தார்கள் என வரலாற் றாசிரியர்கள் கூறுகின்றனர். தமிழகத்தினின்றும் பெயர்ந்து சென்று பாபிலோனிற் குடியேறிய தமிழர் இவ்வழக்கத்தையும் உடன்கொண்டு சென்றார்கள் போலும்.
வட அமெரிக்காவின் ஒரு பகுதியாகிய மெக்சிகோ நகரத்தில் சந்திர சூரியர்களுக்கு ஆலயங்கள் இருந்தனவென்றும், மொண்டி சூமா அரசன் காலத்திலும் அக்கோயில்களில் ஆராதனை, திருவிழா முதலியன நடந்து வந்தன வென்றும் சரித்திரங்களிற் படிக்கின்றோம்.
“சுமேரியரின் உடற்கூறு முதலியன அவர்களைச் சூழவிருந்த மக்கட் சாதியாரைவிட வேறுபாடுடையனவாயிருந்தன. அப்படியே அவர் களுடைய மொழியும் செமித்தியர், ஆரியர் அல்லது மற்றவர்களுடைய மொழிகளோடு சம்பந்தமில்லாதிருந்தது. அவர்கள் திட்டமாக இந்தியரின் இனத்தைச் சேர்ந்தவர்கள். பொதுவாகத் தற்கால இந்தியனின் முகவெட்டு இற்றைக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னிருந்த திராவிட சாதி முன்னோரின் வடிவை ஒத்திருக்கின்றது. இன்றும் தக்கணத்தில் திராவிட மொழிகளைப் பேசுகின்ற இந்தியரைச் சுமேரியர் ஒத்திருக்கின்றனர். இந்தியாவினின்றும் தரைமார்க்கமாக அல்லது கடல் மார்க்கமாகச் சென்று பாரசீகத்துக் கூடாக தைகிரஸ் யூபிறாதஸ் என்னும் இரு நதிகளின் பள்ளத் தாக்குகளை அடைந்த மக்களே சுமேரியராவர். இந்தியாவிலேயே அவர் களின் நாகரிகம் வளர்ச்சியுற்றது. அங்கே அவர்கள் எழுதும் முறையை அறிந்திருத்தல் கூடும். முதலில் ஓவிய முறையாகவும் அதிலிருந்து இலகுவாக வும் சுருக்கமாகவும் எழுதும் முறையை அவர்கள் பயின்றனர்.
அவர்கள் பாபிலோன் நாட்டையடைந்தபோது சதுரமாகிய எழுதுகோலினால் மிருதுவான் களிமண்ணில் எழுதி வந்தார்கள். இதனால் எழுத்துக்கள் கூர்நுதி வடிவினவாகக் காணப்பட்டன. மக்கள் முதலில் நாகரிகம் அடைந்தவிடம் இந்தியா என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. சுமேரியர் இந்தியரினத்தைச் சேர்ந்தவர்களாகக் காணப்படும்போது கிழக்கிலிருந்து மேற்கே நாகரிகப் படுத்துவதற்குச் சென்ற செமித்தியரும். ஆரியரும் அல்லாத சாதியார் இந்திய உற்பத்தியினரேயெனத் தெரிகின்றது. இந்திய நாகரிகம் ஆரியருக்கு முற்பட்டது; ஆகவே இந்திய நாகரிக மென்பது ஆரியருடையதன்று1 என டாக்டர் ஹால் என்னும் பண்டிதர் கூறுகின்றனர். இதனால் பழைய நாகரிக மக்களாகிய சுமேரியரும் தமிழ் நாட்டினின்றும் சென்றவர்களேயென்பது ஐரோப்பிய பண்டிதர்களுக்குக் கருத்தாதல் கருத்திற் கொள்ளற்பாலது.
“சாலடியாவில் ‘ரொல்ரோ’ என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சிலைகளின் தலைகள் தமிழர்களின் முகச்சாயலை ஒத்திருக்கின்றன.”
பி.தி. சீனிவாச அய்யங்கார் கூறுவது:
இந்தியாவிலே புதிய தற்கால நாகரிகம் 20,000 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி எல்லா ஆற்றோரங்களிலும் பரப்பியது. தமிழில் முதற்பருவத்தி லுள்ள சொற்களெல்லாம் ஓரசையின. சர்.சான் மார்சல் என்பவர் ‘அரப்பா’ ‘மொகஞ்சதரோ’ என்னுமிடங்களில் அகழ்ந்து கண்டுபிடிக்கப் பட்ட ஓவிய எழுத்துக்களைக் குறித்து எழுதி இருந்தவாறு இவ்வோரசைச் சொற்களைச் சித்திர எழுத்துக்களாக அமைத்தல் கூடும். இந்தியாவின் புதிய தற்கால நாகரிகம் இந்தியாவினின்றும் கடல்வழியாகச் சென்று சுமேரிய நாகரிகத்துக்கு ஏதுவாக அசீரியாவில் தங்கினது சுமேரியருக்கும் தமிழருக்கும் முகவெட்டு ஒரு வகையாக விருத்தல் தற்செயலாக ஏற்பட்டதன்று.”1
“நாகரிகம் முதற்றோன்றியவிடம் தென்னிந்தியாவென்று சொல்வது ஆதாரமற்ற கட்டுக்கதையன்று. ஹால் (Dr. Hall) என்பவர் சுமேரியரின் உற்பத்தியைக் குறித்துக் கூறியது உண்மையாக விருந்தால் நாகரிகம் முதல் இந்தியாவிற்றோன்றிப் பழந்தமிழர்களுக்கிடையே பழகினதென்பது நாட்டப்படும் பின் அது பாபிலோனின் நாகரிகத்தை உதயமாக்குவதற்குக் கொண்டுபோகப்பட்டது. மக்கள்நூல் வல்லார் ஒருவர் முற்பட்ட மக்கள் இந்து சமுத்திரத்துள் மறைந்த கண்டத்தில் உற்பத்தியானார்கள் எனக் கூறுகின்றனர். சர்.வால்டர் ராலி2 என்னும் பண்டிதர் சலப் பிரளயத்துக்குப் பின் மக்கள் பல்கிய விடம் இந்தியாவென நவில்கின்றனர். சர் சான் எவான்ஸ் (Sir Johan Evans) தென்னிந்தியா ஆதி மனிதனுக்குப் பிறப்பிடமென அறைகின்றனர். (திராவிட இந்தியா. பக்.59-60)
சுவாமி விவேகானந்தர் சொல்வது:-
3“மிகவும் புராதன நாகரிகமுடைய தமிழருடைய வாசத்தானமே சென்னை நகரமாகும். தமிழரின் ஒரு பிரிவினர் மிகப் பழைய காலத்தில் யூபிறாட்டிஸ் நதிப் பக்கங்களில் தங்களுடைய நாகரிகத்தைப் பரப்பினர். அவர்களுடைய சோதிடம், சமயம், காதல், நீதி, கிரியை முதலியன அசீரிய பாபிலோனிய நாகரிகத்துக்கு அடிப்படையாயிருந்தன. அவர்களுடைய பழங்கதைகள் விவிலிய நூலுக்கு ஆதாரமாகவிருந்தன. தமிழரில் இன்னொரு பிரிவினர் மலையாளக் கரை வழியாகச் சென்று நூதனமான எகிப்திய நாகரிகத்தைக் கட்டி எழுப்பினார்கள். ஆரியர் இந்தச் சாதி யாருக்குப் பலவகையில் கடமைப்பட்டவர்களாயிருக்கின்றனர். தென் னிந்தியாவிலுள்ள பிரமாண்டமான கோவில்கள் தமிழர்களின் கட்டிட மமைக்கும் கலைத்திறமையைத் தெரிவிக்கின்றன.”
இன்னும் சுவாமி விவேகானந்தர் தமது இரண்டாம் மேற்றிசைப் பிரயாணத்தைக் குறித்து எழுதிய ஆங்கில நூல் ஒன்றில் ‘கருநிறமும் நீண்ட மயிரும் நேரிய மூக்கும் சரிவில்லாத கரிய கண்களும் உடைய ஒரு சாதியார் பூர்வ எகிப்திலும் பாபிலோனியத்திலும் வசித்தார்கள். அச்சாதியார் இந்நாள்களில் இந்தியா முழுமையிலும் விசேடமாகத் தெற்குப் பக்கத்திலும் வசித்துவருகிறார்கள். ஐரோப்பாவின் சில பாகங்களிலும் இவர்களைக் காணக்கூடும். இவர்களே திராவிடர் எனப்படுவர்.’ என்று எழுதியிருக்கின்றார். (தமிழ் தொகுதி - 1 பகுதி 3 ப.19)
‘எகிப்தியருடைய நாகரிகம் மிகவும் பூர்வீகமானது. அசுர் என்னும் பட்டணத்தைத் தலைநகரமாகக்கொண்ட அசுரேய நாட்டின் (Assyria) நாகரிகம் எகிப்திய நாகரிகத்துக்கு முந்தியது. இவ்வசுரேய நாகரிகந்தானும் பாபிலோனிய நாகரிகத்தைப் பின்பற்றியது. பாபிலோனிய சீர்திருத்தம் சுமேரிய அக்கேடிய நாகரிகத்தின் வழி வந்தது. இங்குக் கூறியன யாவும் ஆராய்ந்து தாபிக்கப்பட்ட உண்மைகள். சுமேரிய அக்கேடிய நாகரிகத் துக்கும் தமிழ்நாட்டுப் பூர்வீக நாகரிகத்துக்கும் ஒற்றுமை காணப்படு கின்றது. மேற்குறிப்பிட்ட பொருளைப்பற்றிப் பிரபல பண்டிதர்களாகிய ஸர்.எச்.எச். ஜான்ஸ்டன், எச்.ஜீ. உவெல்ஸ், உவில் விறடஸ்காவேன் பிளன்ற், ஹக்ஸ்லி இவர்கள் சொல்வதை மொழிபெயர்த்து எழுதுவாம். முன்னையோர் இருவரும் சொல்வது முன்னைய ஆராய்ச்சி முறையின் முடிபாகக் கண்டது; பிஷப் கால்டுவெல் பண்டிதருடைய கொள்கைக்கு மாறுபட்டது; யுத்திக்கு ஏற்றதாகத் தோன்றுகிறது. அது வருமாறு: - உலகத்தில் முதன்முதற் கட்டிடங்களையும் பட்டணங்களையும் உண்டாக் கியவர்கள் சுமேரியரென்னும் சாதியார். இவர்கள் யூத வகுப்பு ஆரிய வகுப்பைச் சேர்ந்தவர்களல்லர்; எங்கிருந்து வந்தார்களோ தெரியவில்லை., இவர்களுடைய பாஷை பலுச்சிஸ்தானத்தின் சில பாகங்களிலும் காக்கேசிய மலை நாட்டிலும் உள்ள பாஷைகளையும் ஸ்பானியாவில் ஒரு பக்கத்திற் பேசப்படுகிற பாஸ்க் என்னும் பாஷையையும் ஒத்திருக்கின்றது. இப்பாஷைகளெல்லாம் திராவிட மொழிகளோடு நெருங்கிய சம்பந்த முடையன. சுமேரியர் கோபுரத்தோடு கூடிய கோயிலைக் கட்டினார்கள். நிப்பூர் என்னுமிடத்திலே தமது பிரதான தெய்வமாகிய எல்-லில் என்னுஞ் சூரிய தேவனுக்கு ஒரு கோயிலைக் கட்டியிருந்தார்கள்.
பின்னர் ஹக்ஸ்லி அவர்கள் சொல்வது:- எகிப்தியரும் திராவிடரும் ஒரே குலமுறையில் வந்தவர்களாகவிருத்தல் வேண்டும். முன்னாறுற் கருப்பென்றும் வெள்ளையென்றுஞ் சொல்லக்கூடாத மங்கல் நிறத்தின ராகியவரும் மிகவும் சீர்திருத்தமெய்தியவருமாகிய ஒரு சாதியார் ஐரோப்பா வில் இங்கிலாந்து பிரான்சு ஸ்பானியா என்னுமிவற்றிலும் மத்திய தரைக்கடலின் இருபக்கத்திலும், எகிப்திலும், இந்தியா முழுமையிலும், சீன தேசத்திற் பசுபிக் சமுத்திரக் கரையிலும், அமெரிக்காவிற் பீரு மெக்சிகோ ஆகிய இரண்டு நாட்டிலும் பரவியிருந்தார்கள். இவர்கள் சூரியனையும் சர்ப்பங்களையும் சமயக் கொள்கைகளிற் சம்பந்தப்படுத் தியும் இன்னும் இந்தியாவில் வழங்குகிற சுவஸ்திக் அடையாளத்தையும் அங்ஙனமே சமயக்கொள்கைகளிற் கொண்டும் வந்தவர்கள். இவர்கள் கிறிஸ்தவாப்தத்துக்குப் பதினாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர்கள். அது முதல் கி.மு.ஆயிரம் ஆண்டுவரையும், அஃதாவது பதினாயிரம் வருடத் துக்கு இவர்களுடைய நாகரிகம் நிலைபெற்றிருந்தது: வடக்கிலிருந்து வந்த வெள்ளை நிறமுள்ள ஒரு சாதியார் இவர்களைத் துரத்திவிட்டார்கள். ஐரோப்பாவின் தெற்குப் பாரிசங்களிற் புதிய கற்காலத்தினராகிய இவர்கள் குறைந்தபடி பத்தாயிரம் வருடங்களுக்குத் தமது பாஷையைப் பேசிக் கொண்டு வந்தார்கள். ஆரிய பாஷை வருதலும் இவர்களுடைய மொழி அருகி மறைந்து போயிற்று. சென்ற வருஷத்திற் ‘கிறீற்’ என்னுந் தீவிலகப் பட்ட கற்சாசனங்களை யாராய்ந்த ஸர்.எச்.எச்.ஜான்ஸ்டன் என்னும் பண்டிதர் கிறித்தவாப்தத்துக்கு மூவாயிரம் வருஷத்துக்கு முன்னுள்ள அச் சாசனங்களில் எழுதப்பட்ட மொழியும் திராவிட மொழியோடு தொடர்புடையதென்றார்.
உற்று நோக்கும் போது எகிப்தின் பிரதான நதியாகிய நீலநதி சுமேரிய தலைநகராகிய நிப்பூர் எல்.வேல் என்னுங் கடவுட் பெயர்கள் தமிழ் மொழியாகவிருக்கின்றன. பின்னும் யவனமொழி எழுத்துக்களின் வடிவம் தமிழ் எழுத்துக்களோடும் கிரந்த லிபியிலுள்ள எழுத்துக்களோடும் தொடர்புடையதாகக் காணப்படுகின்றது. (செந்தமிழ் XX. . . . 10)
“பாபிலோனியத்தில் எல்.றாமார்த்துக் என்னும் பெயர்களையுடைய சூரியதேவன் அசுரேயத்தாரால் அசூர் என்னும் பெயரால் துதிக்கப் பட்டான். (அசூர் என்னும் பதத்திற் சூரியன் என்னும் பதத்தின் பிராதிபதிகந் தோற்றுவதும், றா என்னும் பதத்தில் ரவி தொனிப்பதும் எல்லென்னும் மொழி தமிழிற் பரிதியங் கடவுளுக்குரிய பெயராதலும் உற்று நோக்கற் பாலன) இச்சூரியதேவனோடு ஒப்புடைய தேவர் மூவருளர். அவர் அநு, வேல், எயா என்னும் பெயரினர். மேலும், சின், ஷாமஸ், உல் என வேறு திரிமூர்த்திகளும் உளர். சின் மற்றெல்லாத் வேதர்களினுஞ் சிறந்து விளங்கினார். இவர்கட்கு ஊர், போசிப்பா, பாபிலோன், கலா. தூர்சர்க்கினா முதலிய இடங்களிலெல்லாம் பெரிய கோயில்களமைந்திருக்கின்றன. ஆண்டின் மூன்றாம் மாதமாகிய சிவன் என்னும் மாதம் இவருக்கு உரிய தாயிருந்தது. இளம்பிறைச் சந்திரன் இவருடைய இலச்சினை; இவ் வடையாளத்தினால் குறிக்கப்படுவர். அன்றேல் நீண்ட அங்கியணிந்த மானிட வுருவமும் சிரசில் மும்முடியும் முடியின்மீது பிறைச் சந்திரனு முள்ள உருவமும் இவருடைய உருவமாகும். ஆசுரேய பாபிலோனிய காலதேய மனைத்தினும் படைத்தற் கடவுளுக்கு வேல் என்று பெயருண்டு. (செந்தமிழ் XX. . . . 12)
வடஇந்தியாவுக்கும் தென்னிந்தியாவுக்குமிடையில் கடல் கிடந்த போது இருநாடுகளுக்கும் தொடர்ச்சி ஏற்பட்டிலது. அக்காலத்துத் தென் இந்தியாவினின்றும் மரக்கல வழியாக வட இந்தியாவை அடைந்த வணிகர் அங்கே தங்குவாராயினர். இவர்களிடமிருந்து ஆரியர் மரக்கலம் செய்யும் முறையைக் கற்றுக்கொண்டனர். இருக்கு வேதத்திலே சொல்லப்படும் பாணீஸ் (Panis) என்பவர்கள் தமிழ் வியாபாரிகளே. இவர்கள் தமிழ்ப் பாணர்களென்பது சிலர் கருத்து. வடநாட்டிற்றங்கிய பின் அவர்களாற் றுரத்தப்பட்ட பாணீஸ் சோழமண்டலக் கரையிற்றங்கி அங்கிருந்து மரக்கல வழியாக பினீசியாவில் குடியேறினர். இவர்களே ‘Punic race’ என மேற்றிசைச் சரித்திரக்காரராற் குறிப்பிடப்படுவோர். சோழமண்டலக் கரையினின்றும் சாலடியாவிற்றங்கினோர் சாலடியர்களென்றும். பாண்டிய நாட்டினின்றும் சென்று எகிப்திற்றங்கினோர் எகிப்தியர் களென்றும் சரித்திர வல்லார் மொழிகின்றனர்.
“ஆரியரின் மிகப் பழைய நூலெனக் கருதப்படும் இருக்கு வேதத்திலும் பாணரைப்பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அவர் கடலிலுங் காலிலுஞ் சென்று வாணிகஞ் செய்பவரென்றும் வகுப்பு வேற்றுமை பாராட்டாதவராயினும் ஆரியர் கொள்கைக்கு உடன் படாதவரென்றும் கூறப்பட்டிருக்கின்றது. அவரைப் 1பாணூஸ் (Panis) என்று இருக்கு வேதங் கூறும். மேல் நாட்டிலக்கியங்கள் அவரைப் புயூனிக் குழுவினர் (Punic race) என்று கூறுகின்றனர். அவர்கள் தாம் சிரியாவின் பக்கத்திற் குடியேறிய பின்னர் பொனீசியர்கள் என்றழைக்கப்பட்டனர். பாணர் காந்தார கபூலிஸ்தான் வழியாக மேலாசியாவிற்கும் போண்டஸ் (Pontus) மாகாணம் பாஸ்போரஸ் நிலவொடுக்கம் (Isthmus of Bosphorous), இவைகளின் வழியாக ஐரோப்பாவிற்கும் பல பிரிவினராகச் சென்றனர். காந்தார கபூலிஸ்தான் வழியாகச் சென்ற பாணர் கீழ் அரேபியாக் கரையை யும் பாபிலோனியாவையுந் தாண்டிச் சிரியாவின் வழியாகச் சென்று நிலைத்த நாட்டுக்குப் பொனீஷியா என்று பெயர்; பாணருடைய நாடு பொனீசியா எனப்பட்டது. போசியன் குடாக்கரையிலிருந்தோர்கள் அவரைக் கடற் கடவுளென்று நினைத்து வணங்கினர்.
“பின்னும் பாணர் டைகிரிஸ் யூப்ரெட்டிஸ் ஆற்றுப் புறங்களுக் கருகே குடியேறி நாகரிகமாகிய விளக்கை ஏற்றினர். அவ்வாறேற்றப்பட்ட விளக்கிலிருந்து வட ஆசியாவெங்குமொளி பரவிற்று. பாணர் குடியேறு வதற்கு முன் பொனிசியா லெபெனான் (Lebanon) என்ற பெயர் பெற்றிருந்தது. பொனிஷியரென்பவர் கிறித்து பிறப்பதற்கு முற்பட்டவரென்பது சூலியர் அபிரிக்கானசின் முடிவு. ஆகவே, பாண்டியரின் வரலாறு அதற்கு முற்பட்டதென்பது தெரியவரும்.
“இதற்குள்ளாக நிலத்தினமைப்புச் சிறிது மாறிற்று. பஞ்சாபிற்குத் தெற்கே இருந்த கீழ்கடலும் அரச பட்டணத்தை ஒட்டியிருந்த அரச பட்டணக் கடலும் ‘நாடு கடலாகும்; கடல் நாடாகும்’ என்பதை யொட்டி மேடாயின. மரக்கல மோட்டப் பாணரிடங் கற்றுக் கொண்டும் போதிய மரக்கலமில்லாததால் கடல் கடக்க முடியாதிருந்த ஆரியருக்கு அப் பொழுது தென்னாடு நோக்கிப் போக முடிந்தது. ஆதலால் தமிழரது நாகரிகத்தைக் கற்றுக்கொண்டு மேன்மேலும் பெருகுவதற்கு அவரால் முடிந்தது. சோழமண்டலக் கரையிலிருந்த தமிழர் வடநாடு போந்த கடற் பாணரை ஒத்த நாகரிகத்தினர். அச்சோழர்கள் பாணருடன் சென்று ஒரு நாட்டிற் குடியேறினர். அக் குடியேற்ற நாட்டிற்குச் சோழநாடு அல்லது சாலிதியா (Chaldia) என்பது பெயர்.1 அந்நாட்டையே ஷைனார் நாடென் றும் (Shinar Land) பாபிலோனியா என்றுங் கூறுப. அங்குக் குடியேறிய வருக்குச் சுமேரியர் என்று வேறு பெயருமுண்டு பாபிலோனியாவிலே சுமேரியர் பிறந்தவர் என்று கூறுவதற்கு அந்நாட்டு மண்ணும் நிலமும் இடந்தரா. சாலிதியாவிலுள்ள டெல்லா2 என்ற விடத்திலிருந்து அகப் பட்டுள்ள சில உருவங்களின் தலைகள் தமிழரின் தலைகளை ஒத்திருக் கின்றன. தமிழரது மொழியைப் போன்ற சுமேரியரது மொழியும் ஒட்டுச் சொற்களையுடையது. அச் சுமேரியர்தாம் பாபிலோனியாவிலும் அசீரியா விலும் நாகரிகத்தை வளர்த்தவராவர். இருக்கு வேதத்திலும் சந்தனமரத்தைக் குறித்து யாதொரு குறிப்புங் காணப்படாததாலும், சந்தனமரம் மலையாளக் கரையின் தனிப்பொருளாகையாலும் பாபிலோனியா இலக்கியங்களிற் காணப்படும் சந்தனம் தமிழராகிய சாலிதியராலேதான் கொண்டுபோகப் பட்டதென்று நினைக்க இடமுண்டு. மொழி பற்றிய இலக்கணமும் மண்டையோடு பற்றிய செய்திகளும் தமிழர்களுக்கும் சுமேரியர்க்குமுள்ள தொடர்ச்சியை வலியுறுத்துகின்றன. பாபிலோனியாவிலும் ‘பாம்பைத் ’தெய்வமாகக் கொண்டாடுவதினின்று அத் தொடர்ச்சி பசுமரத்தாணி யாகின்றது. சோழர்கள் சாலிதியர்க்குச் சிற்ப வேலைகளைக் கற்பித்தனர். தென்னிந்தியாவினின்று சென்ற சேத்துக்கள் அல்லது சிரேஷ்டிகள் (Seths or Shrestis) என்போரே சாலிதியாவில் சேட்டுகள் (Saits)3 என்றழைக்கப் பட்டனர். அச்சேட்டுகள் இன்றேல் சாலிதியாவின் கலைப்பெருக் கவ்வளவு மிகுந்திரா தென்பது திண்ணம். மெசப்பொட்டேமியாவி லெழுந்த இந்தச் சாதியாரின் நாகரிகம் பதினோராயிரமாண்டுகளுக்கு முற்பட்டதென்ப. பாண்டியர்கள் பெர்சியா அரேபியா வழியாகச் சென்று எகிப்தில் குடியேறினர். அவர்கள் பண்டு நாட்டிலிருந்து1 வந்தவராக அந்நாட்டு வரலாற்றிலுங் கூறப்பட்டுள்ளது. பண்டு நாடென்பது பாண்டி நாடாகிய தமிழ் நாடே. எகிப்தியருடையவும் தமிழருடையவும் மண்டை யோடுகள் ஒத்திருப்பதே போதிய சான்று. தமிழரைப் போலவே எகிப்தி யரும் ஒவ்வொரு திங்களிலும் மலக்கழிவு மருந்தருந்தினர். பெரியோரை வணங்குதல் இருபாலாரிடத்துமுண்டு. உயிரினழிவிலாத் தன்மையில் இரு பாலார்க்கும் நன்னம்பிக்கையுண்டு. துன்ப காலத்திலும் பிரிவாற்றாமை நிகழ்ந்துழியும் தலைமயிரைக் களையாது வளரவிடும் வழக்கமிருவரிடமும் உண்டு. அம்மை அப்பன் என்ற பகுப்பு எகிப்தியரிடமுமுண்டு. புறவழுக்கு மிகுந்த உயிரென்று பன்றி தமிழராலும் எகிப்தியராலும் பன்னாளாக இகழப்பட்டு வருகிறது. இவையெல்லாம் எகிப்தியருக்கும் தமிழருக்கு முள்ள புணர்ச்சி யுண்மையைக் காட்டுகின்றன.
“இவ்வாறு தமிழராகிய பாண்டியரின் தொடர்பால் வந்த எகிப்தியருடைய நாகரிகமே உலகிற் பெரும்பாலும் பரவிற்று. எகிப்தியர் நாகரிகமே முதலிலெழுந்ததென்று சிலரும் பாபிலோனியரின் நாகரிகமே முற்பட்டதென்று சிலரும் கூறி வாதிப்பர். அவ்விருவர் நாகரிகமும் தமிழரான் வந்ததேயன்றி வேறல்லவென்பது பாண்டியர் குடியேறிய நாடே எகிப்தென்றும், சோழர் குடியேறிய நாடே சாலிதியாவென்றும்., சாலிதியர் குடியேறிய மெசப்பொட்டேமியாவாகிய நாடே பாபிலோனியா என்றும் வழங்கப்பட்டன என்றும் முற்கூறிப் போந்தவற்றால் விளங்கா நிற்கும். பாணருடைய நாடே பொனீஷியாவென்றும் மேலே கூறப்பட்டது. இவ் வெகிப்தியரும் பாபிலோனியரும் பொனீஷியருமே கிரேக்கருக்கு நாகரிகங் கற்பித்தவர். கிரேக்கருக்குக் கற்பிக்கப்பட்டதைக் கிரேக்கரிடமிருந்து உரோமர் அறிந்தனர். பின்னர் உரோமர் தாங் கற்றுக் கொண்டவற்றை ஐபீரியர், கெல்த்கள், தியூதர்கள்., சிலேவர்கள்2 முதலானோர்க்குத் தெரிவித் தனர். இவ்வாறே உலகெங்கும் தமிழரிடமிருந்து நாகரிகம் பரவிற்று (செந்தமிழ்ச் செல்வி சிலம்பு -7 பரல் 1)
இதுகாறும் கூறியவற்றால் தமிழகத்தினின்றும் சென்ற மக்கள் இப்பூவுருண்டையின் பல பாகங்களிற் சென்று தங்கிப் பற்பல சாதியினர் என்னும் பெயரினைப் பெற்றார்களென்பது தெளிவுற விளங்கும்.
9. முதற்கண் தோன்றிய மொழி
தமிழ்நாட்டிலேயே மக்கட் படைப்பு முதற்கணுற்றதெனத் தக்க பிரமாணங்களால் மேலே நிறுவப்பட்டது. ஆகவே, மக்கள் முதற் பேசிய மொழி தமிழ் என்பது தானே பெறப்படும். ஒருமொழியின் அடியாகவே உலகில் உள்ள பல மொழிகள் தோன்றியிருக்கின்றன வென்று மொழி ஆராய்ச்சி வல்ல பண்டிதர்கள் துணிகின்றனர். மொழி ஆராய்ச்சி வல்ல வண.நல்லூர் ஞானப்பிரகாசர் தமிழ்ச் சொற்கள் இந்து ஐரோப்பிய மொழிகளில் திரிந்து வழங்கியிருக்கும் வகையினை யாவரும் எளிதிற் கண்டு மகிழுமாறு பத்திரிகைகள் வாயிலாகவும் புத்தக வாயிலாகவும் விளக்கி யிருக்கின்றனர். சுமேரியா மொழிக்கும் தமிழுக்கும் உற்பத்தித்தானம் ஒன்று என்பது அவர் கருத்து.1 ஆரியமும் அம் மொழியிலுள்ள நான்மறைகளும் தோன்றுவதன் முன் உலக முழுமையும் தமிழ் மொழி வழங்கியதென்பது பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் கருத்து.
“சதுமறை ஆரியம் வருமுன் சகமுழுது நினதாயின் முதுமொழி நீ யனாதியென மொழிகுவதும் வியப்பாமே” எனத் தமது கருத்தைப் பிள்ளை அவர்கள் மனோன்மணீயத்தில் விளங்கக் கூறியிருக்கின்றனர்.
“2சாவகம் முதலிய ஐவகைத் தீவிலுள்ள மொழிகளும் இமயமலைச் சார்பில் ஒருவகைச் சாதியார் பேசுகின்ற மொழியும், விந்திய மலையின் கிழக்கு முனையிலுள்ள சூடிய நாகபுரியில் ஒருவகைச் சாதியார் பேசுகின்ற மொழியும் அம்மலையில் அம்பரமென்னுஞ் சிகரத்தில் (Mt. Abu) வசிப்பவர் தம் மொழியும், திபெத் நாட்டு மொழியும், பெலுச்சித்தான் தேசத்தில் தவுத்புத்திர என்னுஞ் சாதியார் பேசுகின்ற மொழியும், ஐரோப்பாக் கண்டத்துள் ஆஸ்திரியா நாட்டு மொழியும் பிறவும் தமிழின் சிதைவென வரலாற்றாராய்ச்சியில் வல்ல பெரியோர் கூறுவர். “தவுத்புத்திர என்பது திராவிட புத்திர என்பதன் சிதைவு.” “ஆப்கானித்தான் என்னும் மகம்மதிய நாட்டில் ஒரு நகருக்குத் தமிழ் என்னும் பெயர் வழங்குவதோடு அந்நகரில் குடியேறிய மகம்மதியரும். தமது பாஷையோடு தமிழையுங் கலந்து பேசுகின்றார்கள்.”
“ஆசியாவில் சைபீரியா நாட்டில் அக்கீன் சாதியார் மொழியும், வட ஐரோப்பாவில் பின் சாதியார் மொழியும், மீட்டியா நாட்டிலுள்ள பிஹிஸ்டன் சாசனங்களில் எழுதியுள்ள மொழியும், திராவிட சம்பந்தம் பெற்றுள்ளன. பால்டிக் கடல் முதல் மலையாளம் வரையில் திராவிட சம்பந்தமாம். திராவிடம் தொன்றுதொட்டுள்ள தொன்று; ஆரியருக்கு முன் நாகரிகமடைந்தவர் திராவிடர்; வடபால் மேல்பாலுள்ள ஆஸ்திரேலியா தேசத்தாரது மொழியுள் நான், நாம், நீ, நீங்கள், அவ னென்னுஞ் சொற்களொத்துள்ளன; மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளுவம், குடகு, தோடம், கோட்டம், காண்டி, ஊரான், முதலிய பாஷைகள் தமிழ்ச் சிதைவு” என்று வரலாற்றுப் புலவர் ஹண்டர் என்பவர் கூறுவர்.
“இன்னும் வடமொழிக்குத் தமிழ் முற்பட்டது” எனவும், “இத்தாலிய தேசத்திற் பல நூற்றாண்டுகளுக்கு முன்னே தமிழர்களுக்குச் சம்பந்தமான சாதியார்கள் இருந்தார்க”ளெனவும், அறிஞர் கால்டுவெல் கூறுவர். எட்வர்ட் க்ளார்டு1 என்பவர் தாம் எழுதிய யூதருடைய சரித்திரத்தில் மங்கோலியர், பினீஸ் இச்சாதியர்களுக்கு மூலபுருடர்களாக இருந்த வர்கள், ஈழ நாட்டிலிருந்து பாரசீக வளைகுடாவைச் சூழ்ந்து குடியேறி யிருந்தார்கள் எனவும், சுமேரியரென்னும் சாதியாருக்கு முன்னும் எகிப்து தேசத்தார் தலையெடுப்பதற்கு முன்னும் அவர்கள் நகரங்களையும் இராசதானிகளையும் உண்டாக்கினார்களெனவும், அவ்விராசதானிக்கு ஊரெனவும், அவ்வூர் சோமசுந்தரக் கடவுளுக்கு உறையுளெனவும். வெற்றி வேற் குமரன் அவர்தங் கடவுளெனவும் கூறுவர்.” (மொழிநூல் -மா.கா.முதலியார்)
“தென்னாட்டுத் திராவிட மொழியிலிருந்து சப்பான் மொழி தோன்றிய” தென்று புங்கி உத்தமர் கூறுகின்றார். (லோகோபகாரி, அக்டோபர் 9,1930)
புத்த இந்தியாவின் ஆசிரியராகிய (Prof. Rhys) டேவிட் என்பவர் “வேத பாடல்களில் தமிழ்ச் சொற்கள் கலந்திருக்கின்றன” எனக் கூறுவர்.
“வேதபாடல்கள் செய்யப்படுகின்ற காலத்தில் ஒலிவேறுபாடுடைய வேறு மொழி ஒன்று இருந்திருக்க வேண்டுமென்றும், அம்மொழியி லுள்ள பல சொற்கள் வேதபாடல்களிற் கலந்திருக்கின்றன” வென்றும் (A.A. Macdonell) மக்டானெல் என்னும் பண்டிதர் கூறுவர்.
டாக்டர் கால்டுவெல்“அக்கா, அத்தை. அடவி, அம்மா, ஆணி, கடுகு, கலா, குடி, கோட்டை, நீர், பட்டணம், பாகம், பலம், மீன், வள்ளி முதலிய சொற்கள் சமக்கிருதத்திற் கலந்திருக்கின்றன” எனக் கூறுவர்.
“பஞ்சாப் சிந்து பழைமையை நோக்கியபின் பி.தி. சீனிவாச ஐயங்கார் கொண்டுள்ள உய்த்தறிவு உருசிகரமானது. தனித் தமிழ்ச் சொற்களின் ஆராய்ச்சியால் இந்தியாவின் புதிய தற்கால நாகரிகத்தை நன்கு அறிந்து கொள்ளலாமென்றும், முதற்பருவத்துள்ள தமிழ்ச் சொற்கள் ஓரசையினவா யிருத்தலின், ஜேர்யோன் மார்ஷல் குறிப்பிட்ட ஓவிய எழுத்துக்களை இப் பழந்தமிழ்ச் சொற்களால் எழுதிக் காட்டலாமென்றும், 20,000 ஆண்டு களுக்கு முன் இந்தியாவில் வழங்கிய மொழிகள், தமிழ் சம்பந்தமானவை யென்றும், கோதாவரிக்குக் கீழ்ப்புறத்து வழங்கும் மொழி பழந்தமிழ் சம்பந்தமான தென்றும் அவர் கருதுகின்றனர். தற்காலம் வட இந்தியாவில் வழங்கும் வடமொழி சம்பந்தமாகிய மொழிகள் பழந்தமிழ் வழி வந்தனவும் மிகுதியும் சமக்கிருதப் போக்கைத் தழுவியனவுமாகிய மொழிகளே யென்பது ஐயங்காரவர்கள் கருத்து. (திராவிட இந்தியா - ப. 78, 79)
10. சிந்துவெளித் தமிழர்
1922இல் பஞ்சாப் மாகாணத்திலே சிந்து வெளியில் ‘அரப்பா’ ‘மொகஞ்சொதரோ’ என்னும் இரண்டு புராதன நகரங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. அந்நகரங்களிற் கிடைத்த எழுத்துப் பொறிக்கப்பட்ட முத்திரைகளும் பிற பொருள்களும் பழம்பொருள் ஆராய்ச்சியாளரால் நன்கு ஆராயப்பட்டுள்ளன. வரலாற்றுக்கு முற்பட்ட பழைய இந்திய வரலாறு என்னும் நூலில் பனேசி என்பார் கூறியிருப்பன வருமாறு:
“ஆரிய மக்கள் கி.மு. 2000க்கு முன் இந்தியாவுக்கு வரவில்லை. இவர்கள் வருகைக்கு நெடுங்காலம் முன் தொட்டு இந்நாட்டில் உறைந்த தமிழரின் சீர்திருத்தத்துக்கும் இவர்களுக்கும் தொடர்பில்லை. சிந்துநதிப் பள்ளத்தாக்கில் கிடைத்தன போன்ற முத்திரைகள் எல்லாம், சுமேரியா முதலிய இடங்களிற் கிடைத்துள்ளன. மேற்கு ஆசியாவிலே தைகிரஸ் யூபிராதஸ் வெளிகளில் வாழ்ந்த மக்களுக்கும் சிந்துவெளியில் வாழ்ந்த மக்களுக்கும் சீர்திருத்த முறை வாணிகம் என்பவைகளில் தொடர்பிருந்த தென்பதற்கு வேறு பல சான்றுகளும் உள்ளன.
பழைய சிந்து வெளிமக்கள் பயிரிடுவோராயிருந்தனர். அவர்களின் வாழ்க்கை ஒழுங்கு, அவர்களின் நன்றாயமைக்கப்பட்ட நகரங்களையும் கட்டிடங்களையும் கொண்டு அறியக் கிடக்கின்றது. கட்டிடங்கள் சூளையில் வெந்த களிமண் கற்களால் (செங்கல்) கட்டப்பட்டுள்ளன. மெசபொதோமியாவிலும், கிரேத்தாவிலும் போல வீடுகளுக்குச் சாளரங் களும், நிலைகளும் இருந்தன. தரைக்குச் சாந்திடப்பட்டிருந்தது. தண்ணீர் செல்வதற்குக் கான்கள் இருந்தன. வீடுகளுடன் குளிக்குமறைகள் இணைக் கப்பட்டிருந்தன. பலவகையான ஏனங்கள் செய்யப்பட்டன. செம்பு, தகரம், ஈயம் முதலியன பயன்படுத்தப்பட்டன. பொன், வெள்ளி, தந்தம், என்பு, நிறக்கற்கள் முதலியவைகளாலும் ஆபரணங்கள் செய்யப்பட்டன. சிந்துநதி நாகரிகம் கற்கால இறுதிக்கும் உலோக கால ஆரம்பத்திற்கும் இடைப்பட்டது. யானை, ஒட்டகம். நாய், இமிலும் குறுகிய கொம்புள்ள மாடுகள், 1ஆடு முதலியன வளர்க்கப்பட்டன. வாளி, கோதுமை, பருத்தி முதலியன பயிரிடப்பட்டன. நூல் நூற்று நெசவு செய்தல் முதலிய தொழில்கள் மிகத் திருத்தமடைந்திருந்தன. அங்குக் காணப்பட்ட மண்ணினாற் செய்யப்பட்ட உருவங்களும்இலிங்கங்களும் சிவ, துர்க்கை வணக்கங்களைப் புலப்படுத்துகின்றன. இவ்வளவு காலமும் எண்ணப் பட்டதிலும் பார்க்க இவ்வணக்கங்கள் மிகவும் பழைமையுடையன என்று புலனாகின்றது. (ஜேர்யோன் மார்ஷல், ஹண்டர் முதலியோரும் பிற ஆராய்ச்சியாளரும் மொகஞ்சொதரோ நாகரிகம் தமிழருடையதென அறுதியிட்டுக் கூறியுள்ளனர். இங்குக் காணப்பட்ட எழுத்துக்கள் சீன எழுத்துக்கள் போன்றன. ஒவ்வொரு சொல்லைக் குறிக்கவும் ஓவ்வொரு குறியீடு வழங்கப்பட்டது. இவ்வெழுத்துக்களின்றும் பினீசிய வட செமத்திய பிராமி எழுத்துக்கள் தோன்றின. பிராமி எழுத்துக்களின் வளர்ச்சியே இன்றைய தமிழ் எழுத்துக்கள்.)
“கிரேத்த, உரோட்ஸ் (Rhodes) திராய், பாபிலோன் முதலிய நாட்டினரைப்போலவே தமிழர்களும் இறந்தவர்களின் உடலைத் தாழிகளிலிட்டுப் புதைத்தனர். இறந்தவர்களின் உடல், அல்லது அவர்களின் என்புகள் அடங்கிய தாழிகள் மத்தியதரைக் கடலின் வடக்குக்கரை நாடுகள் மெசபொதோமியா, பாபிலோன், பாரசீகம், பலுச்சித்தானம், சிந்து, தென்னிந்தியா முதலிய இடங்களிற் காணப்பட்டன. தாழிகளுள் ஆடை, இறந்தவரின் ஆபரணங்கள், அவர் ஆயுதங்கள், இன்னும் அவரின் பிரிய மான பொருள்கள் முதலியன வைக்கப்பட்டிருந்தன.
“பல கால்களுள்ள ஈமத்தாழிகள் சென்னைப் பிரிவிலுள்ள பெரம்பூரிலும் இன்னும் பல இடங்களிலும் காணப்பட்டன. இவை கிரேத்தா (Crete) வின் பல பாகங்களிற் காணப்பட்ட ஈமத்தாழிகளை ஒத்தன. கெரதோதசு ஆசிரியர், சின்ன ஆசியாவிலுள்ள இலைசியர் பழைய கிரேத்தா மக்களினின்றும் தோன்றியவர்களென்றும், அவர்கள் அங்கு நின்றும் வரும்போதே ‘தெர்மிலே’ என்னும் தங்கள் குலத்துக்குரிய பெயரையும் உடன் கொண்டு வந்தனர் என்றும் கூறியுள்ளார். இலைசியரின் பழைய சாசனங்களால் அவர்கள் கிரிமிலி (Krimmili) என அழைக்கப் பட்டார்களென விளங்குகின்றது. இது கிரேக்கரின் உச்சரிப்பு முறையெனக் கெரதோதசு குறிப்பிட்டுள்ள பெயர்.
“தாழியில் வைத்துப்பிணங்களைப் புதைத்தல், பெயர்களின் ஒற்றுமை, கிரேத்தா எழுத்துக்களுக்கும் சிந்து வெளியிற் காணப்பட்ட எழுத்துக்களுக்குமுள்ள ஒற்றுமை முதலியவைகளால் பழைய திராவிட மக்கள் கிரேத்தா மக்களின் ஒரு கிளையினராகக் காணப்படுகின்றனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக