ஈரோட்டுத் தாத்தா
கவிதைகள்
Back
ஈரோட்டுத் தாத்தா
பாவலர் நாரா. நாச்சியப்பன்
ஈரோட்டுத் தாத்தா
நாரா நாச்சியப்பன்
அன்னை நாகம்மை பதிப்பகம்
2/141 கந்தசாமிநகர், பாலவாக்கம்
சென்னை 600 041
17-9-1995
பெரியார் 117வது பிறந்தநாள் வெளியீடு
விலை ரூ.4.00
* * *
கவின் கலை அச்சகம்,2, 141 கந்தசாமி நகர்
பால வாக்கம், சென்னை 600 04l
முதல் காவியம்
ஈரோட்டுத் தாத்தா என்ற இந்நூல் 1948 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் பொன்னி வெளியீடாக வந்தது.
முதலில் எழுதிய “கொய்யாக் காதல்” என்ற சிறு காவியமும் அதே ஏப்பிரல் மாதம் வெளிவந்தது.
இரண்டு நூல்களுக்கும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தம் ‘குயில்’ இதழில் ‘வெண்பா’வில் மதிப்புரை எழுதினார். வேறு பல திராவிட இயக்க இதழ்களிலும் மதிப்புரைகள் வெளிவந்தன.
புரட்டுக்களை வெளிப்படுத்திய பெரியாரின் புரட்சிக் கருத்துக்கள் இளமைப் பருவத்தில் என்னை ஈர்த்ததில் வியப்பில்லை. அந்த ஈடுபாட்டின் வெளிப்பாடுதான் “ஈரோட்டுத் தாத்தா”
இருட்டைக் கிழிக்கும் சோதியாய் வந்தவர் ஈரோட்டண்ணல், பெரியார் பணிச் சிறப்பை விளக்கிப் பெருங் காவியம் ஒன்று படைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன் அறிவியக்கவாதிகளின் ஆதரவு என் பணியை விரைவுபடுத்துமென நம்புகிறேன்.
-நாரா நாச்சியப்பன்
உள்ளடக்கம்
வாழ்வளிக்க வந்தார்
செயற்கரிய செயல்கள்
உரிமை வேட்கை
ஆரியத்தின் வைரி
தமிழ்காத்த போராட்டம்
சொல்லின் செல்வர்
அவர்தம் ஆற்றல்
வாழ்வளிக்க வந்தார்
உலகெலாம் இன்பம் உற்றிடத் தமிழகத்து
இலகுநா கரிகம் எங்கணும் பரப்பி
வாழ்ந்தநாள் யாவும் வீழ்ந்தன! தமிழகம்
தாழ்ந்தது, துயரே தழைத்தது! எங்கணும்
குறுகிய மார்பும் குனிந்த தலையும்
சிறுமனப் பான்மையும் நிறைந்து விளங்கத்
தமிழர்கள் யாரும் தளைப்பட் டாராய்
அமைதியில் லாத அடிமை மாக்களாய்
இலங்கினர் அறிவில் ஏற்றம் இன்றிக்
கலங்கினர்! ஏறக் கருதிய துறைஎலாம்
பிறவிப் பகைவர்கள் பெருமையோ டிருந்து
முறைசெயும் அரசியல், மொழி, மதம், கல்வி
எனுமித் துறைகள் எவற்றினும் மேலாய்த்
தனியர சோச்சித் தமிழர் முன்னேற்றம்
எளிதடை யாமல் இயன்றவா றெல்லாம்
வழியடைத் திருந்தார் வஞ்சனை பெருகவும்
தமிழரில் சாதி வகுப்புகள் நாட்டித்
தமையுயர்ந் தோராய் அமைத்துக் கொண்டார்!
ஒருவரை யொருவர் தாழ்த்திப் பேசியும்
பொருதும், வாயாற் பொல்லாங் குரைத்தும்
ஆரிய நாடுவிட் டழகுறு தமிழகத்
தேறிய பார்ப்பனர் எதிர்வரக் கண்டால்
‘சாமி!’ எனத்தலை தாழ்த்தி வணங்கியும்,
ஊமைகள் போல ஒதுங்கி நடந்தும்,
தன்மதிப் பிழந்தும் புன்மதி கொண்டும்
தன்னிலை குன்றி நாய்போல் உழன்றும்,
வாடும்நாள், வாழும் வகையினை அறிஞர்
தேடும்நாள் அறிஞரைத் தேற்றுதற் கென்று,
தமிழறம் பேணும் தகைமை யாளர்!
அமைதியாய்ச் சிந்தித் தறியும் மாண்பினர்!
வள்ளுவர் நெறியை வாழ்க்கையிற் காட்டும்
தெள்ளிய உள்ளச் செவ்வி யுடையார்!
உளம்சொல் உடலால் உவப்புறும் பணியை
இளமைப் பொழுதிலும் வளர்தமிழ் நாட்டுக்கு
அளித்த வள்ளல்! அஞ்சாச் சிங்கம்!
உழைப்பின் பயனை விழையாச் செல்வன்!
சிந்தனைச் சிற்பி! திராவிடத் தந்தை!
வந்தனைக் குரிய வடிவிற் பிறந்தார்!
ஈரோட்டுத் தாத்தா! தமிழர்
பாராட்டும் பெரியார் இராம சாமியே!
செயற்கரிய செயல்கள்
தன்வீட்டார் பிறர்வீட்டில் உண்ணாமல்
பார்ப்பனர்போல் இருக்கச் சொல்லும்
புன்மைதனை வெறுத்துத்தம் புத்திவழி
போனதனால் பொறுமை மீறித்
தென்னாட்டில் யானைகட்குக் கால்விலங்கு
போட்டடக்கல் போலே யந்நாள்
தென்னாட்டுப் பெரியாருக் கன்னார்தம்
பெற்றோர் தாம் தளையிட் டாரே!
பார்ப்பனரும் பண்டிதரும் தம் வீட்டில்
கதைபேசிப் பணம்ப றிக்கப்
பார்க்குங்கால் அவர் கதையில் பலகுற்றம்
இழிவுபல இருத்தல் கண்டே
ஆர்ப்பரித்து நகையாடிக் கேள்விபல
கேட்குங்கால் அவர்கள் நாணி
வேர்த்துப்போய்த் தக்கபடி விடைகூறத்
தெரியாமல் விழித்து நிற்பார்!
ஈரோட்டில் கடைவைத்தோன் தலைவிதியின்
வலிவுதனை எடுத்துப் பேசும்
பார்ப்பனனின் கடைத்தட்டி தனைத்தள்ளித்
தலைவிதிதான் படுத்திற் றென்றே
ஈரோட்டுத் தாத்தாதன் இளம்பருவம்
தனில்செய்த குறும்பை யெல்லாம்
யாரேனும் நினைத்ததில்லை! அறிவியக்கக்
கொள்கையது வாகும் என்றே!
தன் மனைவி தனைத்தொட்டால் தீட்டென்று
தலைமுழுகிப் பிள்ளைப் பேற்றிற்கு
என்றுவெள்ளிக் கிழமைதொறும் நோன்பிருக்கும்
நிலைபோக்க எண்ணி ஆய்ந்து
சின்னஓர் எலும்பெடுத்துச் சோற்றுக்குள்
புதைத்திடுவார் சென்றவ் வம்மை
தன்னுணவை உண்ணுங்கால் தலை நீட்டும்
எலும்புகண்டு நோன்பி ழப்பார்!
தாலி எனும் சங்கிலிதான் பெண்ணினத்தைப்
பிணித்திருக்கும் தளைஎன் றெண்ணித்
தாலிதனைக் கழற்றென்னத் தன் மனைவி
மறுத்துரைக்க, நானி ருக்கத்
தாலிகட்டிக் கொள்ளுவதன் பொருளென்ன
எனக்கேட்டு வாங்கிக் கொண்டார்!
'தாலிஎங்கே?’ எனக்கேலி செய்தபெண்கள்
தமைக்கண்டு சினந்தார் அம்மை!
உரிமை வேட்கை
அன்னியர்கள் இந்நாட்டில் வாணி கத்தில்
அடிக்கின்ற பகற்கொள்ளை தனை ஒழிக்கத்
தன்முதுகில் துணிமுட்டை தூக்கி விற்றுத்
தனக்குள்ள சொல்வன்மை யாலே, மக்கள்
புன்கருத்தைப் போக்கியிந்த நாட்டி லுள்ளார்
புலையரென்றும் கடையரென்றும் ஒதுக்கப் பட்ட
இந்நிலையை ஒழித்துவிட எண்ணி நாளும்
எழுதிவந்தார், பேசிவந்தார் ஈரோட்டண்ணல்!
உடலுக்குத் தீமைதரும் கள்ளிற் செல்வம்
ஒங்குவதைக் கண்டந்த வெள்ளைக் காரர்
கடமையினை எண்ணாமல் ஆளும் போக்கில்
கள்ளினுக்குக் கடைபெருக்கக் கண்டார் காந்தி!
உடனொழிக்க வேண்டுமெனச் சித்தங்கொண்டார்
ஓங்கியதே பெரும்புரட்சி தமிழர் நாட்டில்
அடலேறு போலிளைஞர் ஈரோட் டண்ணல்
அன்றெழுந்தார்! தமிழர்களும் உடனெ ழுந்தார்!
தொண்டர்களில் நூற்றுவரை அண்ண லோடு
தொழுவத்தில் மாடுகட்டிப் போட்ட தேபோல்,
கொண்டடைத்தார் சிறையுள்ளே, மக்கள் நெஞ்சில்
கொழுந்துவிட்டு வயிறெரிய ஆட்சி யாளர்
கண்டனர்பத் தாயிரம்பேர் மறியல் செய்து
கடுஞ்சிறைக்குள் அண்ணலுடன் செல்ல, நெஞ்சில்
எண்ணினராய் நிற்கும்நிலை கண்டார் அங்கே
இடமில்லை சிறைக்குள்ளே வெளியில் விட்டார்!
காதலனின் நெஞ்சுவக்கத் தொண்டு செய்யும்
கற்புடையார் நாகம்மை யம்மை யாரும்
மாதரிடம் வீரமுண்மை காட்ட வென்றே
மாநிலத்தில் பிறந்ததங்கை கண்ணம் மாளும்
மோதிவரும் ஆர்வத்தால் இவர்கள் பின்னே
முன்னேறும் பெண்ணினமும் கள் ஒழிப்பை
ஆதரித்த ஈரோட்டுத் தாத்தா தம்பின்
அணிவகுத்துக் கிளர்ச்சிசெய்தார்! பணியைச் செய்தார்!
திருவாங்கூர் வைக்கத்தில் தெருவில் நாயைத்
திரியவிட்டுத் தமிழர்களில் ஒருவ குப்பை
வரக் கூடா தெனக்கட்டு வைத்தி ருந்தார்.
மனம்புழுங்கி மலையாளத் தலைவ ரெல்லாம்
ஒருபுரட்சி தொடங்கிடவும், சாதிப் பித்தம்
ஒங்குமுளத் திருவாங்கூர் அரசாங் கத்தார்
வருங்காலம் நினையாமல் தலைவ ரெல்லாம்
வாடத்தம் சிறைக்கூடத் தடைத்துப் போட்டார்.
நாட்டுநலம் கருதியஅத் தலைவ ரெல்லாம்
நன்றாய்ந்து தொடங்கிவிட்ட தொண்டு செய்யக்
கேட்டெழுதி ஈரோட்டிற்காள னுப்பிக்
கிளர்ச்சியினைத் தொடர்ந்துசெயப் பணித்த போதில்
வீட்டில்வயிற் றுக்கடுப்பால் படுக்கை தன்னில்
விழுந்திருந்த அண்ணலவர் எழுந்துவேண்டும்
மூட்டைகட்டி நாகம்மை யாரைக் கண்டு
முடிந்தது நோய் என்றுரைத்தார்! வைக்கம் வந்தார்!
ஈவேரா வைக்கத்தில் தலைமை ஏற்றார்
இவர் வீட்டில் பலமுை றகள் தங்கி டில்லி
போவாரவ் வரசர்அதை நினைத்துப் பார்த்துப்
போய்விருந்திற்.கழைக்கவெனப் பணிக்கக் கண்டிந்
நாவேந்தர், :தீமைக்கோ? புரட்சிப்போரை
நடவாமல் தடுப்பாரோ?” என்று மக்கள்
கூவாமல் நினைக்குங்கால், அண்ணல் நன்றி
கூறியதி காரிகளையனுப்பி வைத்தார்.
உரிமைக்குப் போராடத்தொடங்கி விட்ட
உடனவரைச் சிறையிட்டார்! பின் நாகம்மை
திரு.ராமநாதனுடன் வைக்கம் வந்தார்
சிலநாளிற் சிறைப்பட்டார் இராமநாதன்!
பெருவாரிப் பெண்களுடன் அம்மையார்தாம்
பெருங்கிளர்ச்சி செய்யுங்கால் ஈரோட் டண்ணல்
ஒரு மாதம் சிறையிருந்துவிடுத லைப்பட்
டூர்விட்டு வெளியேறப் பணிக்கப்பட்டார்!
வெளியேற்றச் சட்டத்தை மீறி மீண்டும்
விளைத்தபெரும் புரட்சிகண்ட் ஆட்சி யாளர்
எளியாரின் உரிமைக்குப் பாடு பட்ட
எம்பெரியார் தலைச்சிதையில் ஆறுமாதம்
துளியேனும்,அருளின்றி அடைத்துப் போட்டார்
தொண்டுக்குச் சளையாத நாகம்மையார்
வெளிநின்று பெருங்கிளர்ச்சி செய்ய லானார்
வெற்றிபெற்றார்! உரிமைபெற்றார் தாழ்த்தப்பட்டோர்!.
தனித்தனியே பார்ப்பனர்க்கும் திராவி டர்க்கும்
தமிழ்நாட்டுக் குருகுலத்தில் உணவளித்துத்
தன் இனத்துக் குயர்வுதனை வ.வெ.சு. ஐயர்
தழைக்கவைக்க முயன்றதனால் பணங்கொடுக்க
இனிமுடியா தென மறுத்தார் தந்தை. காந்தி
இத்தவற்றைக் கண்டித்தும் ஐய ரோதாம்
நினைத்ததுதான் சரியென்றார்: பார்ப்ப னியம்
நீங்கும்வரை இழிவிருக்கும் என அறிந்தார்!
தன்னாலே யான வரை பார்ப் பனீயம்
தனையொழிக்க வழியாய்ந்தார் வகுப்பொவ் வொன்றும்
முன்னேற வேண்டுமெனும் கொள்கை நாட்ட
முதன்முதலில் குடியரசு தொடங்கிவைத்தார்
தென்னாட்டார்க் கென்னென்ன தேவை என்று
தெளிவாக ஆராய்ந்து மனுவின் நீதி
சொன்னாலும் வெட்கம்வரும் கம்பன் பாடல்
சூழ்ச்சிசொலும் புராணங்கள் எரிக்கச் சொன்னார்!
ஆரியத்தின் வைரி
சாதிகள் நான்குண் டாக்கிச்
சமத்துவக் கொள்கை நீக்கி
வேதியப் பிழைப்புக் கண்டார்
வீணர்கள் அவரின் போக்கை
ஆதியில் மாடு மேய்த்திங்
கடைந்தநாள் வரையில் ஆய்ந்து
போதிய சான்று காட்டிப்
புகன்றனர் ஈரோட் டண்ணல்!
பார்ப்பனர் பேச்சை நம்பிப்
பாழ்பட்ட தமிழ கத்தில்
சூத்திர ராக மக்கள்
துயர்ப்படும் தமிழகத்தில்
நாத்திக னென்றும் இந்த
நாயக்கன் துரோகி என்றும்
கூர்த்தறி யாதார் சொல்லக்
கொஞ்சமும் அஞ்ச வில்லை!
சாதியால் மதத்தால் பார்ப்பான்
சதியினால் சேர்ந்த இந்து
நீதியால் மூட பக்தி
நிறைவினால் கெட்டி ருக்கும்
போதிலே தன்மா னத்தைப்
புகட்டுதற் கென்று வந்த
சோதியாய் ஈரோட் டண்ணல்
தோன்றினார் தமிழர் நாட்டில்!
மக்களைப் பிரித்து வைத்து
மயக்கிடும் சமயத் திற்குப்
பக்கலில் நின்று பாட்டுப்
பாடிடும் இந்நாள் ஆட்சி
சிக்கென ஒழியு மாயின்
சிறப்புண்டு நாட்டிற் கென்று
தக்கவா றெழுதக் கண்டு
சிறையினுள் தள்ளப் பட்டார்!
ஆரியத்தின் வைரி யாகி
அதனாலாம் தீமை நீக்கப்
போரியக்கும் வீரன்! எங்கள்
பொன்னாட்டுத் தந்தை! மிக்க
சீரியற்றித் தமிழ கத்தார்
சிறப்புற வேதன் மானப்
பேரியக்கம் கண்டோன்! நல்ல.
பெரியார் ஈரோட்டுத் தாத்தா!
தமிழ்காத்த போராட்டம்
தன் வாழ்வைத் தொண்டாக்கித் தமிழ்நாட்டை
வளமாக்கத் தகுஞ்செயல்கள்
நன்றாற்றி நம்பெரியார் ஈ.வேரா
முதுமைதனைக் கண்ட போதில்
தென்னாட்டில் தமிழகத்தில் இந்திஎனும்
புன்மொழியைத் தேசப் பேரால்
சென்னைமுதல் அமைச்சர்வர் கட்டாயம்
ஆக்கிவிடத் திட்டம் செய்தார்:
தாய் மீதில் விருப்பற்ற ஒரிளைஞன்
தன்னுழைப்பைத் தாய்நாட் டிற்கே
ஈயென்றால் மதிப்பானா?, எதிரிமொழி
மதித்துயிர்வைத் திருப்பான் பேடி!
தூயதமிழ் நாட்டில்செந் தமிழ்மொழியை
மறைத்திந்தி தோன்றின் நாடே.
தாயென்ற நிலைபோகும் தமிழ்சாகும்!
இந்தியெனும் கனிமே லாகும்!
ஈதறிந்த ஈரோட்டுத் தாத்தாதாம்
ஓயாமல் எழுத்தி னாலும் - மோதியுணர்
வலையெழுப்பி மக்களைத்தம்
வயப்படுத்தும் மொழியி னாலும்,
தீதுவரும் இந்தியினால் முன்னேற்றம்
தடையாகும்! தீந்த மிழ்க்கும்
ஆதரவு கிடைக்காமல் அழிவுவரும்!
இந்திஉயர் வாகும் என்றார்.
சிறுதுரும்பும் பற்குத்த உதவும் இந்த
இந்தியெனும் தீமை மிக்க
சிறு மொழியால் எட்டுணையும் பயனில்லை!
அது வளர்க்கச் செலவ ழிக்கும்
பெரும்பணமோ தமிழர்களின் பணமாகும்.
படிக்கவரும் பெரும்பா லோர்தாம்
வெறும்பேச்சுப் பேசித்தம் வயிறடைக்கும்
வித்தைகற்ற மேலோர் என்றார்!
ஆட்சிசெயும் முதலமைச்சர் பார்ப்பனராய்
இருந்தமையால் அவர்வ டக்குப்
பேச்சுதனைத் தமிழகத்தில் வளர்த்துத்தீந்
தமிழ்கெடுக்கும் பெருவிருப்பால்
சூழ்ச்சிசெய்தார்! இவ்வுண்மை தனையறிந்து
மக்களுக்குச் சொன்னார் தாத்தா
‘சீச்சியிவர்’ துரோதி எனச்செந்தமிழ்
ராய்ப்பிறந்தும் சிலர்ப ழித்தார்!.
தூய்தமிழை வடமொழியாம் நச்சகற்றிக்
காப்பாற்றத் துடிக்கும் நெஞ்சு
வாய்ந்ததிருப் பாரதியார் தலைமையிலே
கூடிநின்ற மிக்க ஆர்வம்
பாய்தமிழர் மாநாட்டைத் திருச்சியிலே
பார்த்தவர்கள் இதுதான் அந்தத்
தூய்மனத்தார் ஈரோட்டுத் தாத்தாவின்
நினைவெடுத்த தோற்றம் என்றார்!
கிளர்ச்சியினை அடக்கித்தம் இந்தியினைப்
புகுத்திவிடும் கீழ்மை யான
உளவுறுதி முதலமைச்சர்க் கிருப்பதனைத்
தமிழரெல்லாம் உணர்ந்த போதில்
தளர்ச்சியிலை எருமைத்தோல் இல்லை யெமக்
கெனவுரைத்துத் தமிழ்வாழ் கென்று
கிளர்ந்தெழுந்தார்! பெரியாரே தலைவரெனில்
வேறென்ன கேட்க வேண்டும்?
இந்து-தியா லாஜிக்கல் பள்ளிமுன்னும்
முதலமைச்சர் வீட்டு முன்னும்
செந்தமிழை மீட்பதற்குச் சேர்ந்தபடை
வீரரெலாம் சென்று நின்று
இந்திவிழ! தமிழ்வாழ்க! என முழங்கப்
பல்லடத்துப் பொன்னு சாமி
செந்தமிழைக் காவாமல் எனக்குணவு
செல்லாதென் றாணை யிட்டான்!
தமிழ்காக்கும் வீரரைத்தண் டிக்கவிலை
மற்றெவர்க்குத் தண்டிப் பென்றால்
எமைவிட்டின் எதிர்நின்று வசைமொழிந்த
தாற்செய்தோம் என்று சொன்ன
அமைச்சர்மொழி கேட்டபின்னர் ஈரோட்டுத்
தாத்தாஒர் அறிக்கை யிட்டார்:
தமிழர்களே இனிஅமைச்சர் வீட்டின்முன்
கிளர்ச்சியின்றித் தமிழ்காப் பீரே!
தலைவர்சொல் பின்பற்றித் தமிழரெலாம்
ஒதுங்கிவிட்ட தன்மை கண்டும்
நிலைமையறி யாமல்ஒரு சிங்கத்தின்
எதிர்வாலை நீட்டி நின்று
அலைக்கழிக்கும் சிறுநரிபோல் உமையெல்லாம்
சிறைக்குள்ளே அடைக்க வல்லோம்!
இலை எம்மைத் தடுப்பவர்கள் எனுமமதை
அரசியலார்க் கேறிற் றன்றே!
மமதையினைத் தமிழரிடம் காட்டுகின்ற
அரசியலை மட்டந் தட்ட
அமைத்தபடை வீரரொரு நூற்றுவரைத்
திருச்சியினிள் றனுப்பி வைத்துத்
தமிழ்காத்துத் திரும்பிடுவீர் என வாழ்த்துக்
கூறியந்தத் தமிழர் போற்றும்
தமிழ்த்தலைவர் ஈரோட்டுத் தாத்தாநற்
சென்னைக்குத் தாமும் சென்றார்!
சென்னையிலே கடற்கரையில் மற்றுமொரு
கடல்வெள்ளம் சேர்ந்த தேபோல்
மின்னனைய மாதர்களும் ஆடவரும்
இளைஞர்களும் மிகுந்த ஆண்டு
சென்றவரும் தமிழகத்தார் எல்லோரும்
சேர்ந்திருந்து செய்மு ழக்கம்
நின்றுகடல் செய்த அலை ஓசையினும்
பெரிதாக நிறைந்த தன்றே!
எழுபதினா யிரமக்கள் தமிழ்வாழ்க
ஒழிகஇந்தி என ஒ லிக்கக்
கிழவரவர் எனினுமொரு இளைஞரென
முனைந்துதமிழ்க் கிளர்ச்சி செய்ய
எழுந்தனர் அங் கோர்மேடை தனிலேறி
நின்றாரவ் ஈரோட் டண்ணல்!
எழுந்ததுகாண் வீரத்தின் திருத்தோற்றம்
மனிதஉரு வெடுத்துக் கொண்டே!
விழுந்துவிட்ட தமிழினத்தை விழித்துப்போர்
செயச்செய்த வீரப்பேச்சை;
எழுந்துதமிழ்ச் சொற்களினால் இளைஞர்களைத்
தட்டிவிட்ட இலக்கியத்தைக்
கொழுந்துவிட்டுத் தமிழார்வம் இன்றெரியச்
செயஅன்றே கொளுத்திவிட்ட
செழுந்தமிழின் வீறார்ப்பைச் செவிமடுத்தோர்
உணர்வடைந்தார்! சிங்க மானார்!
தாய்மொழியைக் காப்பாற்றத் துடித்தெழுந்து
கிளர்ச்சிசெய்த தமிழ்ச்சிங் கங்கள்
ஆயிரத்தைந் நூற்றுவரை அரசியலார்
சிறைக்கூடத் தடைத்து வைத்தார்
நோயிருந்தும் தாளமுத்து நடராசர்
தமிழ்க்குற்ற நோயை நீக்கப்
போய்ச்சிறையில் உயிர்விட்டார்! அரசியலார்
கைவிட்டார்: பொருமிற் றுள்ளம்!
மறைமலை பார் தமிழ்க்களித்த திருநீலாம்
பிகைமுதலாய் மாத ரெல்லாம்
நிறை தமிழ்நாட் டுப்பெண்கள் மாநாட்'டில்
கூடிநின்றோர் நெஞ்சிற்பாய
இறைத்துவிட்ட தாத்தாவின் சொல்வெள்ளம்
உணர்வெழுப்ப எங்கும் பெண்கள்
சிறைபுகுதற் கஞ்சாமல் கிளர்ந்தெழுந்த
வரலாறோ சிலம்புக் காதை !
நெடுநாட்கள் உறங்கிவிட்ட தமிழ்ப்பெண்கள்
தமையெல்லாம் நீ எழுப்பித்
தொடுப்பீர் போர், தமிழ்த்தாயைத்தொலைக்கும்வழி
தடுத்தென்றே தூண்டி விட்டாய்!
கொடுங்குற்றம் செய்தனை நீ யபராதம்
கொடுவென்று கூறி இன்னும்
கடுங்காவல் தண்டனையிட் டடைத்தார்கள்
தாத்தாவைக் கம்பிக் கூட்டில்!
வெள்ளியமென் தாடிய சைந் தாடத்தன்
மேனியிலே முதுமை தோன்ற
அள்ளி உடை ஒரு கையில் தடியை மறு
கையிலெடுத் தலர்ந்த பூப்போல்
வெள்ளைமனத் தூய்மையது முகத்தினிலே
மலர, உடல் மெலிந்து, கண்டோர்
உள்ளமெலாம் கசிய, மழை போற்கண்ணீர்
பொழிய, சிறைக் குள்ளே சென்றார்!
தாத்தாவைச் சிறையிட்டுத் தமிழர்களை
எளிதாகத் தாம்அ டக்கப்
பார்த்தார்.அவ்வரசியலார் பயனில்லை!
தமிழகத்தைப் பார தத்தில்
சேர்த்தாளும் முறைமையினால் தமிழழிக்கப்
பகைசூழ்ச்சி செய்த தாய்ந்து
தாத்தாசெந் “தமிழ்நாடு த மிழர்க்கே’’
எனுந் திட்டம் தமிழர்க் கீந்தார்!
தமிழரெலாம் மாநாடு கூட்டிஅதில்,
சிறையிருக்கும் தாத்தா வைப்போல்
அமைத்தஉரு வம்தலைவ ராகப்பன்
னீர்ச்செல்வம் அருகு வந்தார்.
சுமைசுமையாய் மறவரெலாம் தனக்கிட்ட
மாலைகளைத் தூக்கி வந்து
எமதுபெருந் தலைவரே என் றடிபணிந்து
மாலைபடைத் தெழுந்தார் செல்வம்!
மலைபோலும் மலர்மாலை தனைப்பன்னீர்ச்
செல்வம்அவர் மதிப்பு வாய்ந்த
தலைவர் சிலை முன்படைத்த போதிலங்குக்
கூடிநின்றோர் தாத்தா உள்ள
நிலைநினைந்தார். உளம்நொந்தார்! அருவிஎனக்
கண்களினால் நீர் பொழிந்தார்!
தலைவணங்கிப் பெரியாரே தலைவரென
உறுதிசொன்னார் தமிழ்நாட் டிற்கே!
ஓயாத உழைப்புத்தான் உடல்நலத்தைக்
காப்பாற்றும்! உழைப்புக் கெட்டால்
நோயாகும் உடல்மெலியும் இவ்வியற்கை
முறைப்படியே நோய்வாய்ப் பட்டுப்
போய்விடுமோ உயிரென்று தமிழரெலாம்
ஏங்குகின்ற போதில் நாட்டின்
தாய்போன்றான் தந்தைதனை விடுதலைசெய்
தரசியலார் தமிழர்க் கீந்தார்!
நோயோடு வெளிவந்தார் விரைவில்தன்
வலிகுறைத்த நோய்ப றக்க
ஓயாமல் உழைத்திட்டார்! ஊரெல்லாம்
தன் கொள்கை உரைத்து வந்தார்!
தீயாரின் அரசியலை மதமாயை
தனையொழிக்கத் திட்டம் சொன்னார்!
பாயாத புதுவெள்ளம், பரவாத
பெருநெருப்புப் பார்த்த துண்டோ?
சொல்லின் செல்வர்
பெரியார்தம் சொற்பொழிவைச் கேட்டவர்கள்
வெறுப்பகற்றிப் பெரியார் கொள்கைக்
குரியாராய் மாறுவதாம் விந்தையிதன்
உட்பொருளைச் சொல்வேன், கல்வி
தெரியாத மக்களையும் வசப்படுத்தும்
முறைமைதனில் திறமை யாக
உரைபகர்வார் தன்னுளத்துப் பட்டதெலாம்
ஒளியாமல் உரைப்பார் கண்டீர்!
காற்றடிக்கும்! புயல் வீசும்! இடையின்றி
மழைபொழியும்! கருத்து, வெள்ளம்
போற்பெருகும்! அருவிஎன ஓடிவரும்!
மணிக்கணக்காய்ப் பொழியும்! பேச்சில்,
ஆர்த்திருக்கும் நாட்டிலுள்ள வகைப்பட்ட
பழமொழிகள் அத்த னையும்!
சோற்றினுக்குக் காய்கின்ற ஏழைகட்குச்
செயல்காட்டிச் சோர்வ கற்றும்!
உவமைகளோ குவிந்திருக்கும்! சுவைப்பேச்சுப்
பேசுங்கால் ஒன்றோ டொன்றாய்த்
தவழ்ந்துவரும் கேள்விகட்குப் பதில்சொல்லத்
தெரியாமல் தவித்த பேர்கள்
இவர்கட்சித் தொண்டர்களாய் இன்றிருக்கும்
நிலையொன்றே ஈரோட் டண்ணல்
இவர்பேச்சின் திறம்விளக்கப் போதுமெனக்
கூறிடுவேன்! எழுச்சி கொள்வேன்!
சொற்பொழிவு மேடையிலே ஏறியதும்
நான்சொல்லும் சொற்கள் தம்மில்
நெற்பயிரை அறுத்துவந்தே உமியரசி
தவிடிதென நிலைபி ரித்து
வைப்பதுபோல் தனித்தனியே ஆராய்ந்து
பார்த்ததன்பின் வளர்க ருத்திற்
கொப்புவன ஏற்றிடுக ஒவ்வாதேல்
தள்ளுகென உரைப்பார் தாத்தா
கருத்துக்குத் தடையிட்டு வைத்திருந்த
மதத்தலைவர் கயமை மாற்றிக்
கருத்துவெளிப் பட்டால்தான் மற்றவரும்
சிந்தித்துக் காரி யத்தில்
கருத்துடனே உழைத்திடலாம்! இல்லை எனில்
முன்னேறக் கருதிச் செல்லும்
கருத்துடையார் தடைப்படுவர் எனப்பேசிப்
புதுமைமிக்க கருத்து ரைப்பார்!
அவர்தம் ஆற்றல்
தவறுமிகச் செய்துவிட்டார். அந்நாளில்
தமிழரெலாம்! தமிழர் நாட்டில்
சுவரிருந்தும் கூரையில்லை! வளமிகுந்தும்
வாழ்வில்லை! சொன்னால் வெட்கம்!
பகருமிந்த நிலைமாற்றப் பிறந்திருக்கும்
தாத்தாவின் பண்பைத் தொண்டை
அவராற்றல் தன்னைமுழு துரைக்கவெனில்
எனக்கந்த ஆற்ற வில்லை!
எனினும்ஒரு வாறுரைப்பேன் தமிழகத்தில்
அறிஞரென இலகு கின்றார்
அனைவருமே அவர்பேச்சைக் கேட்டபின்னர்
தெளிவடைந்தோர்! ஆய்ந்து தத்தம்
தனிக்கருத்தைச் சொல்வதுதான் அறிவியக்கம்
வளரவழி தானா மென்ற
நனிபெரியார் ஈரோட்டுத் தாத்தாவின்
அறிவுவழி நடத்தல் நன்றாம்!
அறிஞர் அண்ணாத் துரையென்றே உருவெடுத்து
முதுமைக ளைந்(து) ஆரியத்தை
முறியடித்துச் சூழ்ச்சிகளைக் குழிபறித்துப்
புதைத் தொழித்து முன்னேற் றத்தை
அறிய வைத்தார்! திராவிடத்தார் பழமைகளைத்
தேறிவந்தே ஆட்சி செய்யும்
சிறப்படைந்தார்! வாழ்வடைந்தார் முதலமைச்ச
ராயுமின்றுத் திகழு கின்றார்!
தமிழென்றால் புராணமெனும் நிலைமைதனை
இடைக்காலத் தமிழ்ப்பா வாணர்
தமிழ்க்காக்கிக் கெடுத்ததெலாம் மறைத்தகவி
பாரதிதா சன் புரட்சித்
தமிழ்க்கவியைப் புதுமையெலாம் சேர்த்தின்பம்
தரும்பாடல் தமிழில் ஆக்கித்
தமிழ்ப்பெருமை வளர்த்தவனைத் தாத்தாவின்
அறிவியக்கம் தந்த தன்றே!
நற்பார தியின் தாசன் பரம்பரையாய்ப்
பலகவிஞர் நாட்டில் தோன்றிச்
சொற்களிலே உணர்ச்சியையும் எழுச்சியையும்
கொட்டிவைத்துச் சொந்த நாட்டின்
முற்போக்குக் கெனக்கவிதை பெருக்கியின்பத்
தமிழ்வளர்த்து முன்னேற்றத்தைக்
கற்பித்தல் எலாம்பெரியார் அறிவியக்கம்
கண்டதனாற் கண்டதன்றே!
EROTU THAATHA
ЕХАМPLE ОF FINE SIMPLICITҮ
The whole book is written in traditional Poetry of different kinds like Kali Venba, Virutham, Agaval, Venba all confirming to the requirements of prosody unlike Modern Verse libre to which most budding poets and poetasters fall a prey. The Style is simple, racy, requiring or dictionary or pandit for help.
The biography of E.V. Ramaswami Naicker, entitled "Erotu Thaatha" is an example of such fine simplicity, recounting the struggle he carried on against society and the Government to preach and achieve his ideals of social justice, Political equality and nationalism.
Review by
The Indian Express
Madurai, 8-11-1980
For Nachiappan
கருத்துகள்
கருத்துரையிடுக