முஸோலினி
வரலாறு
Back
முஸோலினி
வெ. சாமிநாத சர்மா
1. முஸோலினி
1. காப்புரிமை அறிவிப்பு
2. நன்றி
3. மூலநூற்குறிப்பு
4. அணிந்துரை
5. வெ. சாமிநாத சர்மாவின் சாதனைகள்
6. பதிப்புரை
7. நுழையுமுன்…
8. முஸோலினி
9. முதற் பதிப்பின் பதிப்புரை
10. முஸோலினி
11.I பழமையில் புதுமையின் தோற்றம்
12. II விளையும் பயிர் முளையிலே
13. III கல்விப் பயிற்சி
14.IV உத்தியோக வேட்டை
15. V நாடுவிட்டு நாடு பாய்தல்
16. VI ஆராய்ச்சியும் அநுபவமும்
17. VII மறு மலர்ச்சியும் சமூக வாதமும்
18. VIII பத்திரிகைத் தொழிலும் பிரசாரமும்
19. IX சிறைவாசமும் கட்சித் தலைமையும்
20. X ஐரோப்பிய யுத்தமும் இத்தாலியரின் சேவையும்
21.XI பாசிட் கட்சித் தோற்றம்
22. XII பாசிட் கட்சி வளர்ச்சி
23. XIII பாசிட் ஆட்சி
24. XIV முஸோலினி - கர்மவீரன்
25. பின்னிணைப்பு - 1
26. பின்னிணைப்பு - 2
27. பின்னிணைப்பு - 3
28. கணியம் அறக்கட்டளை
முஸோலினி
வெ. சாமிநாத சர்மா
மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com
உரிமை : Creative Commons Attribution Share Alike 4.0 unported கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
அட்டைப்படம் - லெனின் குருசாமி - guruleninn@gmail.com
மின்னூலாக்கம் - அ.சூரியா - suriya.alagar97@gmail.com
This book was produced using pandoc
பதிவிறக்கம் செய்ய - http://FreeTamilEbooks.com/ebooks/musolini}
கணியம் அறக்கட்டளை (kaniyam.com/foundation)
காப்புரிமை அறிவிப்பு
இந்நூல் CREATIVE COMMONS ATTRIBUTION SHARE ALIKE 4.0 UNPORTED என்ற உரிமையின் கீழ் வெளியிடப்படுகிறது.
இது பற்றிய கூடுதல் தகவல்களுக்கு http://archive.org/download/thamizhmann-cc-declaration/Thamizhmann-cc-declaration-tamil.pdf என்ற இணைப்பில் காணவும்.
நன்றி
இந்நூல் படைப்பாக்க பொது உரிமையின் கீழ் வெளியாவதற்கு பொருளாதார ஆதரவு வழங்கிய ரொறன்ரோ இசுகார்புரோ பல்கலைக்கழக நூலகம், கனடா (UNIVERSITY OF TORONTO SCARBOROUGH LIBRARY, CANADA) விற்கு நன்றி
மூலநூற்குறிப்பு
நூற்பெயர் : முஸோலினி
தொகுப்பு : வெ. சாமிநாத சர்மா நூல்திரட்டு - 8
ஆசிரியர் : வெ. சாமிநாத சர்மா
பதிப்பாளர் : இ. இனியன்
முதல் பதிப்பு : 2005
தாள் : 16 கி வெள்ளைத் தாள்
அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 10.5 புள்ளி
பக்கம் : 16 + 432 = 448
நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்)
விலை : உருபா. 280/-
படிகள் : 500
நூலாக்கம் : பாவாணர் கணினி, தி.நகர், சென்னை - 17.
அட்டை வடிவமைப்பு : இ. இனியன்
அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர், ஆயிரம் விளக்கு, சென்னை - 6.
வெளியீடு : வளவன் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு,, தியாகராயர்நகர்,, சென்னை - 600 017., தொ.பே. 24339030
அணிந்துரை
எழுத்திடைச் செழித்தச் செம்மல் வெ. சாமிநாத சர்மா (1895-1978) அவர்கள் தன்னுடைய எழுத்துப் பணியை எதிர்காலம் மறக்காது எனும் நம்பிக்கையை தமது நாள் குறிப்பு ஒன்றில் (17.9.1960) பின் வருமாறு பதிவு செய்துள்ளார்.
ஆங்கிலக் கணக்குப்படி இன்று என்னுடைய 66வது பிறந்த நாள். வாழ்க்கைப் பாதையில் அறுபத்தைந்தாவது மைல் கல்லைக் கடந்துவிட்டேன். என்ன சாதித்துவிட்டேன்? அதைச் சொல்ல எனக்கு சந்ததிகள் இல்லை. ஆனால் வருங்காலத் தமிழுலகம் ஏதாவது சொல்லுமென்று நினைக்கிறேன்.
அவருடைய எழுத்துப் பணியோகத்திற்கு உறுதுணையாக வாழ்க்கைத் துணைவியாக, விளங்கிய மங்களம் அம்மையார், மகப் பேறு - சந்ததி - இல்லாததை ஒரு குறையாகக் கருதாமல் சாமிநாத சர்மாவின் நூல்களே குழந்தைகள் எனும் கருத்தை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குழந்தைகள்தாம் - நூல்கள்தாம் - எங்களுக்குப் பிற்காலத்தில் எங்கள் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும்.
இறுதிக் காலத்தில் தம்முடைய நூல்கள், கையெழுத்துப் படிகள் அனைத்தையும் வெளியிடும் உரிமையை எனக்கு வழங்கிய சமயத்தில் அவருடைய நூல்கள் அனைத்தையும் பொருள்வாரி யாகப் பிரித்துப் பல தொகுதிகளாக வெளிவரும் காலம் கைகூடும் என்று உணர்ச்சிப் பெருக்கில் கூறினேன். அதைக் கேட்டு அவர் புன்னகை பூத்தார்.
ஆமாம் வெ. சாமிநாத சர்மாவின் நூல்கள் தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி ஆட்சி காலத்தில் கி.பி. 2000த்தில் நாட்டுடைமை யாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பல பதிப்பகங்கள் போட்டி போட்டுக் கொண்டு அவருடைய நூல்கள் பலவற்றை மறுவெளியீடுகளாகக் கொண்டு வந்துக் கொண்டிருக்கின்றன.
இவற்றிற்கெல்லாம் மணிமகுடம் வைப்பது போன்று, வளவன் பதிப்பகம் சாமிசாத சர்மா அவர்களுடைய நூல்கள் அனைத்தையும் பல தொகுதிகளாக வெளியிடுகின்றது.
83 ஆண்டுகால வாழ்க்கையில் சாமிநாத சர்மாவின் இலக்கிய வாழ்க்கை 64 ஆண்டுகாலமாகும். அவருடைய 78 நூல்கள் அவருடைய இலக்கிய வாழ்க்கையின் சுடர் மணிகளாக ஒளிவீசிக் கொண்டிருக் கின்றன.
அண்மைக் காலமாகத் தமிழ்ப் பேரறிஞர்கள் தன்னே நூல்கள் அனைத்தையும் பல தொகுதிகளாக வெளியிட்டு தன்னேரில்லாத சாதனைகள் படைத்து வருகின்றது தமிழ்மண் பதிப்பகம்.
காலத்தேவைக்கேற்றத் தமிழ்த்தொண்டாற்றி வரும் வளவன் பதிப்பகம் சாமிநாதசர்மாவின் நூல்களனைத்தையும் தொகுத்து வெளியிடும் அரிய முயற்சியைத் தமிழர்கள் வரவேற்று வெற்றி யடையச் செய்ய வேண்டும், செய்வார்கள் என்று உறுதியாக நம்புகின்றேன்.
இராமகிருஷ்ணபுரம், 2வது தெரு, மேற்குமாம்பலம், சென்னை - 600 033.
பெ.சு. மணி
வெ. சாமிநாத சர்மாவின் சாதனைகள்
தமிழ் மொழியின் உரைநடை நூல்களின் வளம் பெருகத் தொடங்கியக் காலக்கட்டத்தில், தரமான உயர்ந்த நூல்களை எழுதியும், மொழிபெயர்த்தும் வெளியிட்டதன் மூலம், தமிழ்ப் பணியாற்றிய பெருமக்கள் பலர். இன்றும், என்றும் நாம் நன்றியுடன் நினைவு கூறவேண்டியவர்களில் பெரும் பங்காற்றியச் சிறப்புக்கு உரியவர், திரு. வெ. சாமிநாத சர்மா அவர்கள். சர்மாஜி என்று அனைவராலும் அழைக்கப் பட்டவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என போற்றப்பட்டவர். அவருடன் குரு-சீடர் உறவுப் பிணைப் போடு பணியாற்றியவர்! சுதந்திரமான எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்டதால் அரசுப் பணியை உதறிவிட்டு, இதழியல் துறையைத் தேர்ந்தெடுத்தவர். 1895ஆம் ஆண்டில் பிறந்த சர்மாஜி தனது பதினேழாவது அகவையில் எழுதத் தொடங்கி, பத்தொன்பதாவது அகவையிலேயே தனது முதல் நூலை (கௌரீமணி) வெளியிட்டார். மூன்று ஆண்டுகள் திரு. வி. க. நடத்திய தேச பக்தன் நாளேட்டிலும், பன்னிரெண்டு ஆண்டுகள் நவசக்தி கிழமை இதழிலும், இரண்டாண்டுகள் சுயராஜ்யா நாளேட்டிலும் உதவியாசிரியராகப் பணியாற்றினார். சென்னை தமிழ் எழுத்தாளர் சங்க வெளியீடான பாரதியில் ஓராண்டு ஆசிரியராக இருந்தார். திரு. ஏ.கே. செட்டியார் அயல் நாடு சென்றிருந்தபோது அவரது குமரி மலர் மாத இதழுக்கு ஆசிரியராய்ப் பொறுப்பேற்றிருந்த பெருமையும் இவருக்கு உண்டு.
தமிழ்த் தென்றல் திரு. வி. க.; மகாகவி பாரதியார், பரலி சு. நெல்லையப்பர், வீர விளக்கு வ. வே. சு. ஐயர், தியாகச் செம்மல் சுப்பிரமணிய சிவா, அக்ரஹாரத்து அதிசய மனிதர் வ. ரா. பேராசிரியர் கல்கி, உலகம் சுற்றிய தமிழர் திரு. ஏ.கே. செட்டியார் முதலான தமிழ் கூறும் நல்லுலக மேதைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் சர்மாஜி. இவரது இல்லற வாழ்க்கை இலட்சியப் பிடிப்பாலும், தமிழ்ப்பணியாலும் சிறப்பு பெற்றது. தம்பதியர் இருவருமே அண்ணல் காந்தியின் பக்தர்கள். தனது அனைத்து எழுத்துலகப் பணிகளிலும் உறுதுணையாக நின்று, ஊக்கமளித்து, தோழமைக் காத்து, அன்பு செலுத்திய மனையாள் மங்களம் அம்மையாருடன் 1914ஆம் ஆண்டு முதல் 42 ஆண்டுகள் இல்லறத்தை நல்லறமாக்கி நிறைவு கண்டவர் சர்மாஜி. இத்தகைய பாக்கியம் பெற்ற எழுத்தாளர்கள் ஒரு சிலரே! தம்மிருவரின் ஒத்துழைப்பால் தோன்றிய நூல்களையே தங்கள் குழந்தைகளாக எண்ணி மகிழ்ந்தனர் அந்த ஆதர்ச தம்பதியர். ஆங்கிலம், தமிழ், வட மொழி, தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஆறு மொழிகளை அறிந்திருந்தவர் அம்மையார். தனக்கு உற்றத் துணையாயிருந்த மனையாள் உயிர் நீத்தது சர்மாஜியைத் துயரக் கடலில் ஆழ்த்தியது. தனது ஆற்றாமையை தன் நண்பருக்கு எழுதிய கடிதங்கள் வாயிலாக வெளிப்படுத்தினார். இவைதான் பின்னர் அவள் பிரிவு என்று நூலாக்கம் பெற்றது.
இரங்கூனுக்குச் சென்ற சர்மாஜி 1937 இல் ஜோதி மாத இதழை தொடங்கினார். பத்திரிகை உலகிற்கு ஒரு புதிய வெளிச்சமாக அமைந்தது ஜோதி. பிற்காலத்தில் பிரபலமான எழுத்தாளர்களில் பலரும் ஜோதியில் தங்கள் எழுத்தாற்றலை வெளிப்படுத்தியவர்கள்தாம். புதுமைப் பித்தனின் விபரீத ஆசை முதலான கதைகள் ஜோதியில் வெளிவந்தவையே! இலட்சியப் பிடிப்போடு ஒரு முன் மாதிரி பத்திரிகையாக விளங்கிய ஜோதியில் வருணன், சரித்திரக்காரன், மௌத்கல்யன், தேவதேவன், வ.பார்த்த சாரதி முதலான பல புனைப் பெயர்களில் பல துறைகளைத் தொட்டு எழுதியவர் சர்மாஜி. இரண்டாம் உலகப் போரில் இரங்கூனில் பெய்த குண்டு மழைக்கு நடுவிலும் ஜோதி அணையாமல் தொடர்ந்து சுடர்விட்டது குறிப்பிடத்தக்கது.
போர்க் காலத்தில் குடும்பத்தோடு அவர் மேற்கொண்ட பர்மா நடைப் பயணம் துன்பங்கள் நிறைந்தது. தனது உடமைகளில் எழுது பொருட் களையே முதன்மையாகக் கருதினார். குண்டு மழையால் திகிலும், பரபரப்பும் சூழ்ந்திருந்த போது பாதுகாப்புக் குழிகளில் முடங்க வேண்டிய தருணத்திலும் தன் தமிழ்ப் பணியை மறந்தார் இல்லை. உயிருக்கு உத்திரவாதமற்ற சூழலில், உயிர் போவதற்குள் தான் மேற்கொண்டிருந்த மொழிபெயர்ப்புப் பணியை முடித்தே ஆகவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பாதுகாப்புக் குழியில் இருந்தபடி மொழிபெயர்த்து எழுதி முடிக்கப்பட்டதுதான் பிளாட்டோவின் அரசியல் என்ற உலகம் போற்றும் நூல்.
சர்மாவின் நூல்களை வெளியிடுவதற்காகவே இரங்கூனில் தோற்றுவிக்கப்பட்ட பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம், பின்னர் புதுக்கோட்டைக்கு மாற்றப்பட்டது. வரலாறு என்பது உண்மை களை மட்டுமே தாங்கி நிற்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தவர் சர்மாஜி. உலகத் தலைவர்கள், இராஜதந்திரிகள், புரட்சி வீரர்கள், தீர்க்கதரிசிகள்; அறிவியல் அறிஞர்கள் முதலானோரின் வாழ்க்கை வரலாற்றையும், அவர்தம் சாதனைகளையும் உள்ளது உள்ளபடி, மிகச் சரியானபடி தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர். இன்றளவும் இச்சிறப்பில் இவருக்கு இணை இவரே என்பது மிகையல்ல! ஆங்கில மொழி அறியாத அல்லது ஆங்கிலத்தில் போதிய பரிச்சயம் இல்லாத தமிழர்களுக்கு உலக நாடுகளின் அரசியல், தத்துவங்கள், வரலாறு தொடர்பான ஆங்கில நூல்களை எளிய, அழகுத் தமிழில் மொழிபெயர்த்து அளித்தார். மொழி பெயர்ப்புகள் நீங்கலாக மற்ற நூல்களை எழுதும் போதும் தனது விமர்சனங்களையும், அபிப்பிராயங்களையும், கற்பனை களையும் ஒருபோதும் கலந்து எழுதியவரல்ல! இப்பண்பே அவரது நூல்களின் மிகச் சிறந்த அம்சமாகும்.
சர்மாவின் மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழ் மக்களிடையே மிகவும் புகழ்ப் பெற்றவை. சாதாரன வாசகனுக்கும் புரியக் கூடியவை. மூல நூலின் வளத்தைக் குறைக்காதவை. ஆக்கியோன் உணர்த்த நினைத்ததை சற்றும் பிசகாமல் உள்ளடக்கி, மொழியின் லாவகத்தோடு சுவைக் குன்றாமல் பெயர்த்துத் தரப்பட்டவை. ‘பிளாட்டோவின் அரசியல்’, ‘ராஜதந்திர யுத்தகளப் பிரசங்கங்கள்’, ரூஸ்ஸோவின் ‘சமுதாய ஒப்பந்தம்’, மாஜினியின் ‘மனிதன் கடமை’, இங்கர்சாலின் ‘மானிட சாதியின் சுதந்திரம்’, சன்யாட்சென்னின் ‘சுதந்திரத்தின் தேவைகள் யாவை? முதலான நூல்களைப் படித்தவர்களுக்கு இது நன்கு விளங்கும்.
காரல் மார்க் வாழ்க்கை வரலாறு பற்றி அநேக நூல்கள் இதுவரை வெளிவந்திருந்தாலும், முதன் முதலாக மிக விரிவாக எழுதப்பட்டதும், மிகச் சிறப்பானதென்று எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டதும் சர்மாஜியினுடையதே!
எழுபதுக்கும் மேற்பட்ட மணி மணியான நூல்களை சர்மாஜி எழுதினார். ‘The Essentials of Gandhism’ என்ற ஆங்கில நூலும் அவற்றில் அடங்கும். நாடகங்கள் எழுதுவதில் அவருக்கிருந்த ஆர்வத்தையும், ஆற்றலையும் அவர் எழுதிய லெட்சுமிகாந்தன், உத்தியோகம், பாணபுரத்து வீரன், அபிமன்யு ஆகிய நாடக நூல்கள் வெளிப்படுத்துகின்றன.
எண்பத்தி மூன்று வயது வரை வாழ்ந்து, தமிழ்ப் பணியாற்றி மறைந்த சர்மாஜியின் நூல்களை இன்றைய தலைமுறையினர் படித்தறிந்து கொள்வது அவசியம். ஏற்கனவே படித்து அனுபவித்த வர்கள் தங்கள் அனுபவத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இவற்றிற்கு ஏதுவாக வளவன் பதிப்பகம் மீண்டும் அவற்றை பதிப்பித்துத் தனக்குப் பெருமை சேர்த்துக் கொள்ளும் வகையில் தமிழ்ப் பணியாற்றியுள்ளது போற்று தலுக்கு உரியது. இதன் பொருட்டு திரு. கோ. இளவழகன் அவர்களுக்கும், அவர்தம் மகன் இனியனுக்கும் நாம், தமிழர் என்ற வகையில் நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளோம். பதிப்புத் துறையில் வரலாறு படைத்து வரும் கோ. இளவழகன் வரலாற்றறிஞர் சர்மாவின் நூல்களை வெளியிடுவது பொருத்தமே!
6, பழனியப்பா நகர், திருகோகர்ணம் அஞ்சல், ஞானாலயா பி. கிருஷ்ணமூர்த்தி, புதுக்கோட்டை - 622 002. >டோரதி கிருஷ்ணமூர்த்தி
பதிப்புரை
‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும்; கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்! என்ற தமிழ்ப்பெரும் பாவலர் பாரதியின் கட்டளைக்கேற்ப உலகெங்கும் கொட்டிக் கிடந்த அறிவுச் செல்வங் களைத் தாய்மொழியாம் தமிழுக்கு கொண்டு வந்து சேர்த்த பெருமையர் சாமிநாத சர்மா. பல்துறை அறிஞர்; பன்முகப் பார்வையர்; தமிழக மறுமலர்ச்சி சிந்தனையாளர்களில் ஒருவர்; தமிழ் கூறும் நல்லுலகம் புதியதோர் கருத்துக்களம் காண உழைத்தவர்; தமிழுக்கு உலக சாளரங்களைத் திறந்து காட்டிய வரலாற்று அறிஞர்; இவர் ஆற்றிய பணி வரலாற்று ஏடுகளில் பொன்னெழுத்துகளால் பதியத்தக்கது.
தம்மை உயர் தகுதி உடையவர்களாக்கிக் கொண்ட மாந்தர்களைத் தான் வரலாற்று ஆசிரியர்கள் உலகுக்கு வரலாறாக வடித்துத் தந்துள்ளனர். மக்களின் மகிழ்ச்சிக்காக உழைத்த உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை, நூல் தொகுப்பாகத் தமிழ் இளம் தலை முறைக்கும், எதிர்வரும் தலைமுறைக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காகத் தந்துள்ளோம். தமிழ்க் குமுகாயம் வலிமையும், கட்டமைப்பும் மிக்கப் பேரினமாக வளர வேண்டும்; வாழவேண்டும் என்ற உணர்வோடு இந்நூல் தொகுப்புகளை உங்கள் கைகளில் தந்துள்ளோம்.
சாதிப்பித்தும், சமயப்பித்தும், கட்சிப்பித்தும் தலைக்கேறி தமிழ்க் குமுகாயத்தைத் தலைநிமிரா வண்ணம் சீரழித்து வருகிறது. மொழி இன நாட்டுணர்வு குன்றிக் குலைந்து வருகிறது. இச்சீரழிவில் இருந்து தமிழர்களை மீட்டெடுக்க வேண்டும். இழிவான செயல் களில் இளம் தலைமுறையினர் நாட்டம் கொள்ளாத நிலையை உருவாக்குவதற்கும், மேன்மை தரும் பண்புகளை வளர்த்தெடுப்ப தற்கும், அதிகாரப் பற்றற்ற - செல்வம் சேர்க்க வேண்டுமென்ற அவாவற்ற - செயல்திறமையைக் குறிக் கோளாகக் கொண்ட - பகுத் தறிவுச் சிந்தனையை அறிவியல் கண் கொண்டு வளர்த்தெடுக்கும் உணர்வோடு இந்நூல்களைத் தமிழர்களின் கைகளில் போர்க் கருவிகளாகக் கொடுத்துள்ளோம்.
தன் மதிப்பும், கடமையும், ஒழுங்கும், ஒழுக்கமும், தன்னல மின்றி தமிழர் நலன் காக்கும் தன்மையும், வளரும் இளந்தலை முறைக்கு வேண்டும். இளமைப் பழக்கம் வாழ்நாள் முழுவதும் உதவும். விடாமுயற்சி வெற்றி தரும்; உழைத்துக் கொண்டே இருப்ப வர்கள் எந்தச் செயலிலும் வெற்றி பெறமுடியும் எனும் நல்லுரை களை இளம் தலைமுறை தம் நெஞ்சில் கொள்ள வேண்டும் என்ற மனஉணர்வோடு இந்நூல் தொகுதிகள் வெளியிடப்படுகிறது.
சர்மா தாம் எழுதிய நூல்களின் வழியாக மக்களிடம் பேசியவர். மக்கள் இவரின் நூல்களைப் படிக்கும் போது அந்த நூல்களின் கதைத்தலைவனோடு நெருங்கி இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியவர். இவரின் உரைநடை நீரோட்டம் போன்றது. தமிழ் உரைநடைக்குப் புத்துயிர் ஊட்டிப் புதுவாழ்வு அளித்தவர். வேம்பாகக் கசக்கும் வரலாற்று உண்மைகளை சர்க்கரைப் பொங்கலாக தமிழ் குமுகாயத்திற்குத் தந்தவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என்று போற்றப்பட்ட இவரின் நூல்கள் தமிழ்க் குமுகாயத்திற்கு வலிவும், பொலிவும் சேர்க்கும் என்ற தளராத உணர்வோடு தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம்.
முன்னோர்கள் சேர்த்து வைத்த அறிவுச் செல்வங்களைத் தேடித் தேடி எடுத்து நூல் திரட்டுகளாக ஒரு சேர வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தொகுப்பு நூல் பதிப்பகம் என்பதை நிலை நிறுத்தி வருகிறோம். சாமிநாத சர்மா 78 நூல்களை எழுதியுள்ளார். இதில் தலைவர்கள், அறிவியல் அறிஞர்களின் வரலாற்று இலக்கி யங்கள் 26 ஆகும். இதனை 9 நூல் திரட்டுகளாக வெளியிடுகிறோம். ஏனைய நூல்களையும் மிக விரைவில் தமிழ் கூறும் உலகுக்கு வழங்க உள்ளோம்.
தமிழர்கள் பொதுவாழ்வில் நாட்டம் கொள்ள வேண்டும்; உலக அரசியல் அறிவைப் பெறவேண்டும் என்னும் பெருவிருப்பால் இந்நூல் களைக் கண்டெடுத்து நூல்திரட்டுகளாக உங்கள் முன் தந்துள்ளோம். வடமொழியின் ஆளுமை மேலோங்கி இருந்த காலத்தில் இவரின் தமிழ் உரைநடை வெளிவந்த காலமாகும். அந்தக் காலப் பேச்சு வழக்கையே மொழிநடையின் போக்காக அமைத்துக் கொண்டு நூலினை உருவாக்கி யுள்ளார். மரபு கருதி உரை நடை யிலும், மொழிநடையிலும், மேலட்டைத் தலைப்பிலும் மாற்றம் செய்யாது நூலை அப்படியே வெளியிட்டுள்ளோம்.
அடிமை உணர்வையும், அலட்சியப் போக்கையும் தூக்கி யெறிந்து உலக அரங்கில் தமிழினம் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இவ்வரலாற்று இலக்கியங்கள் கலங்கரை விளக்காக அமையும் என்று நம்புகிறோம். தலைவர்களின் வரலாற்று இலக்கியங்களைப் படியுங்கள். அவர்களின் வாழ்வை நெஞ்சில் நிறுத்துங்கள். தமிழின மேன்மைக்கும், வளமைக்கும் தம் பங்களிப்பைச் செய்ய முன் வாருங்கள். நூலாக்கத்திற்கு உதவிய அனைவருக்கும் எம் நன்றி உணர்வை தனிப்பக்கத்தில் குறித்துள்ளோம்.
பதிப்பாளர்
நுழையுமுன்…
இட்லர் - முசோலினி
- பாசிசம், நாசிசம் எனும் வல்லாண்மையின் கொடுமை யால் இன அழிப்பைக் கொண்ட கொடுங் கோலர்கள். உலக அமைதிக்குக் கல்லறை எழுப்பியவர்கள். இவர்கள் இருவரின் வாழ்க்கைப் போக்கால் மக்கள் இவர்களைத் தூக்கிஎறிந்த வரலாற்றையும், உலக நாடுகள் இவர்களை அழித்தொழித்த வரலாற்றையும் நீங்களும் தெரிந்துக் கொள்ள வேண்டாமா? இவர்களின் ஆளுமை கொடுமை மிக்கது. தள்ளத்தக்கது.
இட்லர்
- குமுகாய வாழ்வில் மக்களை அவன் வழி நடத்திய பாங்கு வரவேற்கத் தக்கது. பிறர் உழைப்பில் வாழ்பவர்கள் மாந்தத் தன்மைக்கு மாறானவர்கள் என்பதை வலியுறுத்தியவன். உழுவோர் உலகத்தார்க்கு அச்சாணி எனும் வள்ளுவப் பெருமைக்குச் சான்று தரும் செய்தி.
- கல்வியறிவு நிறைந்தவனைவிட, நல்ல கட்டுடலும், உள்ளத்தில் உறுதியும், தன்னம்பிக்கையும் உடையவனே குமுகாய மாற்றத்திற்குத் தேவை என்றவனின் வரலாறு.
- ஒவ்வொரு செருமானியனும் தம்முடைய முன்னோரைப் போற்றவும், பிறந்த நாட்டின்மீது நாட்டங் கொள்வதற்குத் தூண்டியவனின் வரலாறு.
- குடும்பவாழ்க் கையில் ஒழுங்கும், ஒழுக்கமும் இல்லா விட்டால் பொது வாழ்வில் அமைதியும், ஆற்றலும் இல்லையென்றவனின் வரலாறு.
- சிறுவர்களுக்கு ஒழுக்கத்தின் உயர்வைப்பற்றியும், சிறுமி களுக்குத் தாய்மையின் பெருமையைப் பற்றியும் கற்பித்த வனின் வரலாறு.
- தன்னலத்துக்கு முன்னர் பொதுநலம் எனும் தத்துவம் கொண்டவன். தொழிலாளியாக இருந்தவன். உழைப் பாலும் ஊக்கத்தாலும் மேல்நிலைக்கு வந்தவனின் வரலாற்றைப் படியுங்கள்.
- ஆக்கப்பணிக்கு ஆரியரையும் அழிவு வேலைக்கு யூதரையும் அறிகுறிகளாகக் கொண்டு இவன் செய்த இன அழிப்புக் கொலைகளை நீங்களும் தெரிந்துக்கொள்ள வேண்டாமா?
- உரிமைகள், கடமைகள் என்பவற்றைப் பொறுத்த மட்டில் செருமானிய மக்கள் அனைவரும் சமமானவர்களே.
- உழைப்பினால் பெறாத வருமானத்தை எல்லாம் அரசுக்குச் சொந்தமாக்கியவன். மொத்தவியாபாரத்தில் கிடைக்கும் இலாபத்தை அனைவருக்கும் பங்குப் போட்டுக் கொடுத் தவன். முதியோர்களுக்குப் பாதுகாப்பு அளித்தவன். மேலும் படியுங்கள்.
- குமுகாய வாழ்வைச் சீர்குழைக்கும் வண்ணம் தோன்றும் கலை, இலக்கியம் முதலியவற்றின் செயல்பாடுகளை சட்டப்படி அடக்கியவன்.
- திறமையும், உழைப்பும் உள்ள செருமானியர்கள் மேல் நிலைக் கல்வி பெரும்பொருட்டு தேசியக் கல்வி முறையை மாற்றி யமைத்தவன்.
- செருமானிய ஏழைப் பெற்றோர்களுடைய அறிவுக் குழந்தைகள் எந்த வகுப்பினராக இருந்தபோதிலும், எந்த தொழில் செய்து கொண்டிருந்த போதிலும் அரசின் செலவில் கல்வி கற்க உதவியவன்.
- ஊதியத்திற்காக உழைக்கும் படைபலத்தை தூக்கி எறிந்து, நாட்டுப்பற்றோடு உடைய தேசியப் படைபலத்தை கட்டி அமைத்தவன். இவனைப் பற்றித் தெரிந்துக் கொள்ளுங் கள். கொள்ளுவன கொண்டு, தள்ளுவன தள்ளுங்கள்.
முசோலினி
- வேற்றுமைகளினால் அரிக்கப்பெற்றும், சோர்வினால் உறங்கியும் கிடந்த ஒரு குமுகாயத்தைத் தலைநிமிர்ந்து நிற்கத் செய்த வரலாற்று நாயகன்.
- தான் பிறந்த குமுகத்திற்குத் தன்மதிப்பு, கடமை, ஒழுங்கு, ஒழுக்கம் ஆகிய கருத்துக்களை உட்புகுத்தி இத்தாலிய மக்களைத் தலைநிமிரச் செய்தவன். மற்ற குமுகங்களுக்கு எதிராகத் தன் மக்களைத் தோள் தட்டவும் செய்தவன்.
- இவன் கொண்ட வல்லாண்மைப் போக்கால் இத்தாலிய நாடு சீரழிந்து சின்னா பின்னமானது.
வாழ்க்கையின் இலக்கு
- பிறர் நலன் நாடிச் செய்யுங் காரியங்களை, இவன் தன் கடமையாகக் கொண்டவன்.
அமைதி காணும் ஆற்றல்
- பெரும் கலக்கத்திலும் அமைதி காணும் ஆற்றலையும் நிலைகுலையா உள்ள உறுதியையும் பெற்றவன். ஓய்வறிவா உழைப்பாளி.
- “மேலே செல்லுங்கள்”, “ஆபத்தாக வாழ்”, “சும்மா யிருப்பது மரணத்திற்குச் சமம்”, முதலில் செயல், பேச்சல்ல, “என்னைப் பார்க்க வருகிறவர்கள் என்னைக் கௌரவப் படுத்துகிறார்கள்; என்னைப் பார்க்க வராதவர்கள் எனக்கு மகிழ்ச்சி யளிக்கிறார்கள்” இந்த வரிகள் இவன் வாழ்க்கைச் சுவடுகள்.
நாவன்மை
- உலக இராசதந்திரிகளில் இவன் ஒருவனே, இராசதந்திர சொற்களில் பேசாமல் நேராக ஆணி அடித்தாற்போல் பேசுவான் என்று ஓர் ஆங்கிலேயே அறிஞர் கூறுகிறார். இவன் அவ்வப்பொழுது பேசிய பேச்சுக்களிலிருந்து சில:-
- ஒருவன் மாற்றத்திற்குத் தக்கபடி தன் நிலையைச் சரிப் படுத்திக் கொள்ள வேண்டுவது கட்டாயமாகும். ஒருவன் குடிசையிலிருந்து அரண்மனைக்குச் செல்லலாம். ஆனால் அவன் அரண்மணையிலிருந்து குடிசைக்குத் திரும்பவும் தயாராக இருக்க வேண்டும்.
- வேலை செய்து கொண்டே வாழ வேண்டும்; போர் செய்து கொண்டே இறக்க வேண்டும், நான் முன்னே சென்றால் பின்னே வாருங்கள்; நான் பணிந்தால் என்னைக் கொல்லுங்கள்.
- நேற்று என்பது கழிந்த பொருள்; இன்று என்பது இருக்கும் பொருள்; நாளை வெற்றிக்கு இன்றைய ஒழுங்கு வேண்டும்,குளிரையும் பசியையும் பொறுத்துக் கொள்வோம். இவை போரின் விளைவுகள். ஆனால் அவமானத்தை மட்டும் சகித்துக்கொள்ள மாட்டோம்.
- உடன்பிறப்புகளே! உங்களை நான் அதிகமாக நேசிக்கிறேன். அதனாலேயே, நீங்கள் தூய்மையின் றிருக்கிறீர்களென்றும், உங்களைத்தூய்மைப் படுத்திக் கொள்ள வேண்டுமென்றும், உங்களிடத்தில் அறியாமை குடிகொண்டிருக்கிறதென்றும்,அதனைக் களைய, கல்வி அறிவுபெறவேண்டு மென்றும் கூறுகிறேன்.
- மாந்தர்களைப் பற்றி என்ன கவலை? அவர்கள் மறைந்து விடு கிறார்கள். அவர்களுடைய எண்ணங்களே நிலைத்து நிற்கின்றன.
- பழமையை நாம் மறுக்க விரும்பவில்லை. அப்படி மறுப்பது நம்மையே மறுப்பதாகும். நாம் நிகழ் காலத்தைக் கடந்து விட்டோம். பழமையைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பது பின்னுக்குப் போவதாகும். அதற்கு மாறாக நாம் முன்னோக்கி நம்மை உயர்த்திக் கொள்ள வேண்டும். எதிர் காலத்தின் தொடர்பை நாம் அறுத்துக் கொள்ள விரும்பவில்லை. ஏனெனில், நமது நிகழ் காலமும், நமக்கு முன் சென்றவர்களுக்கு எதிர் காலமாக இருந்ததல்லவா?
- வரலாறானது கோழைகளுக்குச் சொந்தமானதல்ல; வீரர்களுக்குச் சொந்தமானது. அது சோம்பேறி களுக்காக இருப்பதில்லை. செயல் வீரர்களுக்காகவே இருக்கிறது. வரலாற்றை, யார் தங்களுடைய மனோ திடத்தால் வளைக் கிறார்களோ அவர்களுக்கே அஃது உரிமைப் படுகிறது.
- தேசப்பற்று என்பது ஓர் உணர்ச்சி மட்டுமே. அதனோடு ஈகம் சேர்ந்தால்தான் அது நற்குண மாகிறது.
- இளமை அழகுள்ளது. சந்தடி நிறைந்த இந்த அகன்ற உலகத்தை அது தெளிவுறக் காணக்கூடும். மரணத்தையும் எதிர்த்து நிற்கும் அஞ்சாத நெஞ்சம் அதற்குண்டு.
- இளைஞர்களே! நீங்கள் வாழ்க்கையின் உதயம்; நாட்டின் நம்பிக்கை; நாளைய படைவலு.
- விடுதலை என்பது நன்கொடையல்ல; அஃது ஒரு வெற்றி. அது சலுகையல்ல; உரிமை; கடமையின்றி உரிமையில்லை. என்றவனின் வரலாற்றை நீங்களும் படியுங்கள்.
நூலாக்கத்திற்குத் துணை நின்றோர்
_நூல் கொடுத்து உதவியோர்_ _ஞானாலயா_ கிருட்டிணமூர்த்தி வாழ்விணையர், பெ.சு. மணி,
_புலவர்_ கோ. தேவராசன், முனைவர் இராகுலதாசன், முனைவர் இராம குருநாதன், முத்தமிழ்ச் செல்வன் க.மு., ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
_நூல் உருவாக்கம்_ _நூல் வடிவமைப்பு_ செ. சரவணன்
_மேலட்டை வடிவமைப்பு_ இ. இனியன்
_அச்சுக்கோப்பு_ _முனைவர்_ செயக்குமார், மு. கலையரசன், சு. மோகன், குட்வில் செல்வி, கீர்த்தி கிராபிக் பட்டு, விட்டோ பாய்
_மெய்ப்பு_ வே.மு. பொதியவெற்பன், கி. குணத்தொகையன், உலோ. கலையரசி, அ. கோகிலா, கு. பத்மபிரியா, நா. இந்திரா தேவி, இரா. நாகவேணி, சே. சீனிவாசன்
_உதவி_ அரங்க. குமரேசன், வே. தனசேகரன், நா. வெங்கடேசன், மு.ந. இராமசுப்ரமணிய இராசா
_எதிர்மம் (Negative)_ பிராசசு இந்தியா (Process India)
_அச்சு மற்றும் கட்டமைப்பு_ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்
இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . .
முஸோலினி
கனவான்களே! ஆரம்பமாகிறது!
முஸோலினி எழுதிய நாடகங்களுள் ஒன்றன் தலைப்புப் பெயர் இது. ஆனால், உண்மையிலேயே, சென்ற சிலவருஷங் களாகத் தமிழ்நாட்டின் இதிகாச மறுமலர்ச்சி, கனவான்களே! ஆரம்பமாகிறதல்லவா? இதற்காகவே, முகவுரை யென்று சம்பிரதாயமாகச் சொல்லப்படும் இந்தப் பாகத்திற்கு மேற்படி தலைப்பு கொடுக்கப்பெற்றிருக்கிறது. சம்பிரதாயங் களை மீறிச் செல்வதிலே எனக்கு ஓர் ஆசை. ஏன்? இடறிவிழுந்தாவது அநுபவம் பெறலாமேயென்ற எண்ணந்தான்.
முஸோலினி ஒரு சரித்திர புருஷன். வேற்றுமைகளினால் அரிக்கப்பெற்றும், சோர்வினால் உறங்கியும் கிடந்த ஒரு சமூகத்திற்குத் தன்மதிப்பு, கடமை, ஒழுங்கு, ஒழுக்கம் ஆகிய மருந்துகளை உட்புகுத்தி, அதனைத் தலைநிமிர்ந்து நிற்கச் செய்ததோடு, மற்றச் சமூகங்களுக்கு எதிரே தோள் தட்டவும் செய்வித்தவன், ஒரு சரித்திர புருஷனாக அல்லாது வேறு எவ்விதமாக இருக்கமுடியும்?
முஸோலினியின் பேச்சுக்கள், எழுத்துக்கள், அவனுடைய நெருங்கிய நண்பர்கள் எழுதியுள்ள நூல்கள் முதலியவற்றின் துணை கொண்டு முஸோலினியை, பின்வரும் பக்கங்களில் ஒருவாறு படம் பிடித்துக் காட்டியிருக்கிறேன். படம் பிடிக்கும் போது தளர்ச்சியின் காரணமாக எனது எழுதுகோல் காமிரா சிறிது அசைந்து கொடுத் திருக்கலாமோ என்னவோ?
இந்தப் படத்தில் முஸோலினியின் வாழ்க்கைச் சரித்திரம் மட்டுமே ஒருவாறு தெரியும். அவன் தோற்றுவித்த பாசிட் இயக்கத்தின் வளர்ச்சி, அவ் வளர்ச்சியின் காரணமாக இத்தலி யில் உண்டான மாற்றங்கள் முதலியன, பட்டும் படாததுமாகவே தெரியும். இவை, அரசியல் சாதிர நூல்களாக, அறிஞர்களால் எழுதப்பெறின் பெரிதும் உபகாரமாயிருக்கும்.
உள்ளதை உள்ளபடி படம் பிடித்துக் காட்டுவது தான் சரித்திரக்காரனுடைய கடமை. இதை விடுத்து கற்பனையாகிற ப்ரஷை, விருப்பு வெறுப்பு என்கிற வர்ணக் கலயங்களிலே தோய்த்து, இடை யிடையே தீட்டி விடுவானாகில், அவன் ஓவியக்காரனாகவோ, காவியக் காரனாகவோ மாறிவிடுகிறான். ஆனால் கற்பனைக் கண்ணில்லாத நான் ஒரு சரித்திரக்காரனா கவே இருந்துவிட விரும்புகிறேன். எனது கடமையை எவ்வளவு தூரம் இந்த நூலைப் பொறுத்தமட்டில் உணர்ந்திருக்கிறேன் என்பதை வாசகர்களே கூறவேண்டும்.
பன்மையில் பயில்வது பொது. அதில் தனிமை காண்பது சிறப்பு. அத்தனிமையில் இன்பம் நுகர்வது அச் சிறப்பின் சிகரம். அவ்வின்பத்தைப் பிறர்க்கு நுகர்விப்பது சிகரத்திலிட்ட விளக்கு. தமிழர்களாகிய நாம், கொழுமுனையற்ற கலப்பையாகிவிட்ட தனித் தமிழைக் கொண்டு, புராதன பெருமை என்ற மணற் காட்டை எத்துணை நாட்கள் உழுது கொண்டிருப்பது? இதி லிருந்து நாம் என்ன சாகுபடி செய்ய முடியும்? எனவே, தமிழ் மொழியானது, தனது தனித்துவத்தை விட்டுக்கொடாமல், பிறமொழிகளுடன் உறவாடவேண்டும். பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்; இறவாத புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும். இந்தப் புனித நோக்கங்கொண்ட இலக்கியத் தொண்டர் படையில் சேர்ந்தவர் எனது உழுவலன்பர் - இந்நூற் பதிப்பாளர்.
இந்த நூலில், முஸோலினியை, படர்க்கை ஒருமையிலேயே அழைத்திருக்கிறேன். இப்படி அழைப்பதே கம்பீரமாகவும் சரித்திர நாயகனுக்குப் பெருமையைத் தருவதாகவும் இருக்கிற தென்பது எனது கருத்து. ஸு. ஐயர் அவர் களே இதில் எனக்கு வழிகாட்டி. பின்னர் நான் ஏன் முஸோ லினியை அவன் இவன் என்று தைரியமாக அழைக்கக் கூடாது?
யுவ, தை, கூ வெ.சாமிநாதன்
இனிது உயிர்; அதனினும்
இனிது காதல்;
இரண்டும் ஈவேன்
சுதந்திர தேவி நினக்கே!
ஒரு ருஷ்ய அறிஞர்
முதற் பதிப்பின் பதிப்புரை
தமிழ் நாட்டார் எத்தனையோ பிரசுராலயங்களின் ஆக்க வேலையில் நாட்டஞ் செலுத்தியதே போல், அழிவு வேலை யிலும் ஈடுபடாதிருக்கவில்லை. இதற்குத் தாய்மொழிப் பற்றின்மை ஒரு காரணம் என்று கூறலாம். தாய்மொழிப் பற்றில்லையேல், தாயகத்தின் எழுச்சி உண்டாதல் எங்ஙனம்? ஆனால், சின்னாட் களாகப் பிறமொழிகளின் வளர்ச்சி கண்டு தமிழருக்கும் ஓரளவு ஊக்கம் பிறந்திருப்பது அனைவரும் அறிந்த விஷயம்.
இந்நிலையில் பிரபஞ்ச ஜோதி— அதாவது உலகவொளி என்ற தலைப்பில், உலகத்தின் பல துறை அறிஞர்களையும் வேறு பல விஷயங் களையும் புத்தகங்கள் வடிவாகத் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கத் தீர்மானிக்கப்பட்டிருப்பதை நமது சகோதரர்கள் வரவேற்பார் களென்றே நம்புகிறோம். பிரபஞ்ச ஜோதி பிரசுரங்கள் கூடியவரை சிறந்த முறையில் வெளிவரும்.
இப்பொழுது, முதற் சுடராக வெளி வந்துள்ள முஸோலினி யின் ஜீவிய சரித்திரத்தை எழுதியவர் எமது நண்பர் ஸ்ரீமான் வெ.சாமிநாத சர்மா அவர்கள். இவர், தமிழ்நாட்டின் தேசீய உணர்ச்சியைத் தட்டியெழுப்பிய தேசபக்தன் நவசக்தி முதலிய பத்திரிகைகளில் உதவி ஆசிரியராக இருந்தவர். இவருடைய நடையும் கருத்தும் ஒரு புதுப்போக்கு. இதனை இந்த முஸோலினியிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.
எவ்வகையிலும் மேன்மையுற்ற எழுத்தாளர்களைக் கொண்டு கட்டப்பெற்ற பிரசுராலயமாயினும், அதில் குடியிருப்பவர் களாகிய வாசகர்களின் ஆதரவு இல்லாவிட்டால் அக்கட்டிடத் திற்குச் சிறப்புண்டாதல் எங்ஙனம்? ஆதலின் நமது சகோதரர்கள் பிரபஞ்ச ஜோதி பிரசுரங்களை ஆதரிக்க வேண்டுகிறோம். அப்படி ஆதரிப்பார்களாயின், அவர்கள், நாற்றிசைகளிலு மிருந்து சேகரிக்கப்பட்ட மதுரமான தேனை எந்நேரமும் பருகிக் கொண்டிருக்கலாம்.
பதிப்பாளர்
முஸோலினி
I பழமையில் புதுமையின் தோற்றம்
புராதன இத்தலி
ஐரோப்பா கண்டத்தின் தெற்கேயுள்ள இத்தலி ஒரு தீப கற்பம். பிரான், விட்ஜர்லாந்து, ஆதிரியா ஆகிய மூன்று நாடுகளும் இதன் வடக்கெல்லைகளாக அமைந்திருக்கின்றன. மத்தியதரைக் கடலும் அட்ரியாடிக் கடலும் மற்ற மூன்று பக்கங்களிலும் சூழ்ந்திருக்கின்றன. இதன் விதீரணம் 119,703 சதுர மைல்; ஜனத் தொகை 41,175,000.
இத்தலி உருவத்திலே சிறியது; ஆனால் பண்டைய பெருமை நிரம்பியது. ஒரு காலத்தில் இஃது உலக நாகரிகத் திற்குத் தாயகமாயிருந்தது. ரோம ஏகாதிபத்தியத்தைக் கண்டு மேற்கு ஐரோப்பா முழுவதும் நடுங்கிய காலமும் உண்டு. இப்பொழுது இத்தலிக்குத் தலை நகராயுள்ள ரோம் என்னும் நகரத்தின் பெயராலேயே இந்நாடு முற்காலத்தில் அழைக்கப் பெற்றுவந்தது. ரோமகர் என்ற ஒரு மகரிஷி இங்கு வந்து குடி யேறியதாகவும், இவருக்குப் பின் வந்தோர் ரோமகர்கள் என்று அழைக்கப்பெற்றார்களென்றும், இதனாலேயே ரோமாபுரி என்ற பெயர் வந்ததென்றும் ஒரு சிலர் கூறுவர். இப்பொழுது உலகத்திலேயுள்ள அரசாங்க அமைப்புக ளெல்லாம் ரோமா புரியி லிட்ட வித்தின் விளைவே. மனிதனுக்கு மனிதன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்பதைப்பற்றி ஒருவாறு வரை யறுத்துக் கூறும் சட்டம் பிறந்த இடமும் ரோமாபுரிதான்.
கிறிது பிறப்பதற்கு எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர்-அதாவது இற்றைக்கு இரண்டாயிரத்து எழுநூற்றைம்பது வருஷங்களுக்கு முன்னர் - ரோமராஜ்யம் தாபிக்கப்பெற்றது. அது முதல் நாளது வரை இந்த நாட்டில் எத்தனையோ மன்னர்கள் தோன்றி மறைந்திருக்கிறார்கள்; எத்தனையோ வீரர்கள் பிறந்து வீர சொர்க்கத்தை விசாலப்படுத்தியிருக் கிறார்கள். இவர்களால் உலகத்திற்குச் சில சமயங்களில் நன்மையும், சில சமயங் களில் தீமையும் ஏற்பட்டதுண்டு. ஆனால் இவர்களில் ஒவ்வொருவரும் அவ்வக் காலத்தில் உலகத்தாரின் கவனத்தை ஈர்த்துவந்திருக்கிறார்கள் என்பது நிச்சயம்.
உலகத்தின் பல பாகங்களிலும் உண்டான அரிய பொருள் களும் ஆடம்பரச் சாமான்களும் ஒரு காலத்தில் ரோமாபுரியி லேயே வந்து குவிந்தன. தென்னிந்தியாவிலிருந்து மட்டும் வருஷந்தோறும் சுமார் நூற்றிருபது கப்பல்கள், துணிமணி வகைகளை ஏற்றிக்கொண்டு சென்றதாகச் சரித்திரம் கூறுகிறது. ரோமாபுரி திரீகள் தங்கள் ஆடம்பர வாழ்க்கைக்காக லட்சக் கணக்கான பொன்களை இந்தியாவுக்கு அள்ளிக் கொடுக்கி றார்கள் என்று பிளினி என்ற ஆசிரியர் ஏங்கியிருக்கிறார். ஆடம்பர வாழ்க்கையோடு அரசியல் வாழ்க்கையிலும் ரோம ராஜ்யம் உலகத்திற்கு வழி காட்டிக்கொண்டு வந்ததனாலேயே இஃது உலக நாயகி என்று போற்றப்பட்டு வந்ததுபோலும்.
இத்தலியின் இதிகாச மண்டலம் மிகப்பெரியது; அதிக பிரகாசமுடையது. இதில் மன்னரின் மணி மகுடங்களை வீரர்களின் வாளாயுதங்கள் சூழ்ந்துநின்றன. ஜுலிய சீஸரின் (கி. மு. 59-44) ஏகாதிபத்திய ஆவல் நம்மை பிரமிக்கச் செய்கிறது. அகட சக்ரவர்த்தி (கி. மு. 31-14) தான் எல்லோருக்கும் மேலானவன் என்பதைத் காட்டிக்கொள்ள இம்பரேடார்1 என்று வைத்துக் கொண்ட சொற்றொடரானது இப்பொழுது உலகமன்னர்களுக்கு எம்பரர் என்ற முன்னழகைக் கொடுக் கிறது. மார்க்க அருலி (கி. பி. 161-180) மன்னனுடைய தத்துவங்கள் ஞானஉலகத்தில் வாசனை வீசிக்கொண்டிருக் கின்றன. கான்டன்டைன்2 (கி. பி. 288-337) ஷார்ல்மேன்3 (கி. பி.742-814) ஆகிய மன்னர்களின் திருப் பெயர்கள் இன்னும் மனிதர்கள் மனதிலே பதிந்திருக்கின்றன. நீரோ (கி. பி. 54-68) மன்னனின் கொடுமைக் கனலை, செயின்ட்பிரான்சி அப் அஸிலி (கி. பி. 1182-1226) என்பாருடைய அன்பு வெள்ளம் தணித்து விட்டது. கிறிதவ மதமானது, மன்னர்களால் அங்கீ கரிக்கப்பெற்று உலக முழுவதும் பரவுவதற்கு ரோமாபுரியே காரணமாயிருந்தது. கிறிது நாதரின் சீடரான பீடர்1 ரோமா புரிக்கு வந்து முதல்பிஷப்பாக அமர்ந்ததனாலேயே பிற்காலப் போப்பரசர்களுக்குப் பெருமை உண்டாயிற்று.
இங்ஙனம் பழமையில் பெருமை வாய்ந்த இத்தலி, இடைக் காலத்தின் பிற்பகுதியில் உள்நாட்டுச் சண்டைகளாலும், ஆள் வோருக்கும் ஆளப்படுவோருக்கும் ஏற்பட்ட பிணக்குகளாலும் சிதறுண்டு கிடந்தது. தான்றோன்றி ராஜ்யங்கள் ஆங்காங்குக் கிளம்பின. இதனால் பொதுவாக வெளிநாட்டார்களுடைய - சிறப்பாக ஆதிரியாவினுடைய செல்வாக்கு அதிகமாயிற்று ஆதிரியாவின் ஆதிக்கம் ஜனங்களின் மனதை உறுத்திக் கொண்டேயிருந்தது. பிரான்ஸைச் சேர்ந்த சிலர் ஆங்காங்கு வந்து குடியேறிக் கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர். பத்தொன்பதாம் நுற்றாண்டின் தொடக்கத்தில் இத்தலியின் நிலை இங்ஙனமே இருந்தது. இத்தலிமட்டும் ஏன்? ஐரோப்பா முழுவதும் அரசியல் பொருளாதாரக் குழப்பங்களுக்கு இரை யாகியிருந்ததென்று கூறலாம். ஒரு பெரும் புரட்சி ஏற்படப் போவதை முன்கூட்டி அறிவிக்கும்சூசகங்கள் யாவும் தோன்றின. இவைகளை ஒருவாறு அடக்கிவைக்க இந் நூற்றாண்டின் முற் பாகத்தில் சில சூழ்ச்சிகள் செய்யப்பட்டன. ஆனால் இவைகள் பலிக்கவில்லை. இடைப் பாகத்தில் எங்கணும் புரட்சிகள் ஏற்பட்டன. இத்தலியிலும் இந்தப் புரட்சி உண்டாயிற்று. இதற்குக் காரணர் மூவர். அவர்களே மாஜினி (கி. பி. 1805-1872) காரிபால்டி (கி. பி. 1807-1882) காவர் (கி. பி. 1810-1861) என்போர். இத்தாலிய புரட்சிக்கு, மாஜினி ஆத்மாவாகவும், காரிபால்டி ஆயுதமாகவும், காவர் அறிவாகவும் விளங்கினார்கள். மாஜினி 1831ம் வருஷத்தில் இத்தாலிய இளைஞர் சங்கமொன்றைக் கண்டான். தனது எழுத்தாலும் பேச்சாலும் இளைஞர் களிடையே ஒரு புத்துணர்ச்சியை உண்டாக்கி ஒன்றுபடச் செய்தான். இதன் பயனாக இவன் அடைந்த துன்பங்கள் பல. ஆனால் தனது எண்ணங்களையும் லட்சியங்களையும் செயலில் கொணர்வதற்கு, காரிபால்டியின் வீரமும் செயல் திறனும் துணையாயிருந்தது குறித்துச் சிறிது ஆறுதல் பெற்றான். இருவரும் இத்தாலிய விடுதலையில் ஒரேநோக்க முடையவர் களாயிருந்தனர். இச்சமயத்தில் பீட்மாண்ட் என்ற ஒரு சிறு பகுதிக்கு அரசராயிருந்த விக்டர் இமானுயுவல் என்பாரை இத்தலியின் சக்ரவர்த்தியாகச் செய்ய வேண்டுமென்ற ஆவல், அவரிடம் பிரதம மந்திரியாயிருந்த காவர் என்பானுக்கு இருந்தது. அவனும் இந்தச் சந்தர்ப்பத்தைத் தனது அரசருக்குச் சாதகமாக உபயோகப்படுத்திக் கொண்டான். இதன் விளைவு இத்தலி மீண்டும் ஒன்றுபட்ட ஒரு தேசமாயிற்று. 1872-ம் வருஷம் விக்டர் இமானுயுவல் அரசர் ரோமாபுரியை இத்தலியின் தலைநகராகக் கொண்டு சக்ரவர்த்தியானார். அது முதல் இத்தலியில் கோனாட்சி நடைபெற்று வருகிறது.
ஆனால் இந்த ஆட்சி மாற்றத்தினால் ஜனங்கள் எதிர் பார்த்த நன்மையைப் பெறவில்லை. மாஜினி கோரியது குடியரசு; கிடைத்தது கோனாட்சி. இதன் தோற்றங்களாகிய பிரதிநிதிகள் சபை, தேர்தல் சூழ்ச்சிகள், முதலாளிகளின் செல்வாக்கு முதலியன தலைகாட்டின. குடி மக்கள் சுதந்திரம் பெற்றும் பெறாதவர்கள் போலானார்கள். ஆயினும் மாஜினியின் லட்சியத்தை ஆதரித்த வர்கள் ஆங்காங்கு இல்லாமற் போகவில்லை. இந்த நிலைமை யில்அதாவது பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்இத்தலிக்குப் புதியவாழ்வு நல்க ஒரு தலைவர் அவசியமா யிருந்தது.
முஸோலினியின் மூதாதையர்
இத்தலியின் வட பாகத்தில் ரொமாக்னா என்றொரு மாகாணம் உண்டு. இது சரித்திரப்பிரசித்தி பெற்றது. இந்த மாகாணம் இயற்கை வளத்தில் ஆனால் அதைவிட மனித வளத்தில் அதிகம் சிறந்தது என்று ஓர் இத்தாலிய கவிஞர் வருணித்திருக்கிறார். இம் மாகாண வாசிகள் தன்மதிப்புள்ள வர்கள்; கர்மவீரர்கள்; அடைக்கலம் புகுந்தாரை ஆதரிக்கும் அரிய குணத்தினர். ஒரு சமயம் காரிபால்டியின் தலையை வெட்டிக் கொணர்வோர்க்குச் சன்மானம் அளிக்கப்பெறும் என்றும், அவனுக்கு உதவிசெய்வோர் கடுமையான தண்டனை களுக்கு ஆளாவார்களென்றும் ஆதிரிய அரசாங்கம் அறிக்கை யிட்டிருந்தது. அப்பொழுது ஆதிரியத் துருப்புகளால் தாக் குண்ட வெனி நகரத்தை நோக்கி, அந்நகரத்தைக் காப்பாற்றத் தனது வீரர்களுடன் காரிபால்டி புறப்பட்டான். அதற்கு ரொமாக்னா வழியாகவே செல்லவேண்டியிருந்தது. அப்படி சென்று கொண்டிருந்தபோது காரிபால்டியின் மனைவி நோயால் இறந்துவிட்டாள். ரொமாக்னா மாகாணவாசி களுக்குக் காரிபால்டியின் நிலவரங்கள் யாவும் தெரிந்திருந்தன. ஆயினும் ஒருவராவது அரசாங்கத்தாருக்குத் துப்புக் கூற வேண்டுமே; இல்லவே இல்லை. பொதுவாகவே ரொமாக்னா வாசிகள், தேசத் துரோகிகள், போருக்கு அஞ்சும் கோழைகள் முதலியவர்களைக் கண்டு வெறுத்து வந்தார்கள். சுதந்திர உணர்ச்சியுள்ளவர்களாதலால், பிறர்க்கு அடங்கி வாழ்வது உண்மையான வாழ்க்கையாகாது என்பது இவர்கள் கொள்கை. தவிர இவர்கள் பெண்மையைப் போற்றி வந்தார்கள். பெண் மக்களின் அன்பும் தன்னல மற்ற தியாகமும் இவர்கள் மனதைக் கவர்ந்தன. ரொமாக்னாவின் தாய்மார்கள், நூற்றல், நெய்தல், பசுக்களைப் பராமரித்தல் முதலிய குடும்ப வேலைகளனைத் தையும் கவனித்து வந்தார்கள். இத்தகைய ரொமாக்னாவிலேயே நமது சரித்திர நாயகனான பெனிடோ முஸோலினி பிறந்தான்.
ரொமாக்னா மாகாணத்தில் பிரேதாப்பியோ (Predappio) என்பது ஒரு பெரிய கிராமம். இஃதொரு குன்றைத் தழுவி யிருந்தது. இந்தக் குன்றின் சரிவில் வரானோடிகாடோ (Varano-di-Costo) என்று ஒரு குக்கிராமம் உண்டு. அதன் அருகில் டோவியா என்று மற்றொரு கிராமம். சிறிது தூரத்தில் பார்லி என்று வேறொரு கிராமம். இவைகள் தனித்தனிப்பெயர்களால் அழைக்கப்பெற்றபோதிலும் எல்லாம் ஒரு கிராமத் தொகுதி யாவே இக் கிராமவாசிகள் மிக நெருங்கியிருந்தன. அது போல் கிராம ஜனங்களின் மனமும் நெருங்கிய உறவு பூண்டிருந்தது.
இந்தப் பிரதேசத்தில் முஸோலினி குடும்பம், பரம்பரைக் கௌரவம் வாய்ந்ததொரு குடும்பமாகக் கருதப் பெற்றுவந்தது. இந்தக் குடும்பத்தினர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் மலின் துணி வியாபாரம் செய்து வந்தார்கள். இதனாலேயே இவர்கள் குடும்பப் பெயர் முஸோலினி1 என்று ஆயிற்று. மலின் துணி ஆடம்பர வது. அதில் வியாபாரஞ் செய்கிறவர்கள் மிகக் கௌரவம் வாய்ந்தவர்களாயிருக்க வேண்டுமல்லவா? அந்தக் கௌரவத்தை இவர்கள் விடாமல் காப்பாற்றி வந்தார்கள். பன்னிரண்டாவது நூற்றாண்டிலேயே முஸோலினி குடும் பத்தைச் சேர்ந்த தலைவர் பொலோக்னாவின் நாட்டாண்மைக் காராக நியமிக்கப் பெற்றார். அக்காலத்தில் இந்தக் கௌரவம் எல்லோருக்கும் கிடைக்காது.
இத்தகைய பெருமை வாய்ந்த குடும்பத்தில் 1854ம் வருஷம் பிரேதாப்பியோவில் லூயிஜி முஸோலினிக்கும் காதரீனாகார் தூனிக்கும் குமாரராய் அலெஸாந்த்ரோ முஸோலினி பிறந்தார். இவருடைய பெற்றோர்கள் இவரைப் பள்ளிக்கூடத் திற்கு அனுப்பவில்லை. எனவே இவர் ஒழுங்கான கல்வி கற்றார் என்று சொல்வதற்கில்லை. சுமார் பத்து வயதானதும், தோவா தோலாவிலுள்ள ஒரு கொல்லன் பட்டரையில் வேலை கற்றுக் கொள்ள இவரை அனுப்பினார்கள். சிலகாலம் கழித்து மெல்தோலா என்ற ஊருக்குச் சென்று வேலை பழகினார். இங்கு 1875-ம் வருஷ முதல் 1880-ம் வருஷம் வரையில் இருந்ததாகத் தெரிகிறது. இந்த இடத்தில்தான் இவருக்குப் பொதுவுடமைக் கொள்கைகள் அறிமுக மாயின. இவர் சிறு வயது முதற் கொண்டே அரசியல் விஷயங்களில் அக்கரை காட்டும் மனப் பான்மையுடையவராயிருந்தார். பின்னர் டோவியா என்ற ஊருக்கு வந்து தம் சொந்தத்திலேயே கொல்லன் பட்டரை யொன்று ஏற்படுத்தினார். இந்தக் கிராமத்தில் கட்சிப் பிணக்குகள் அதிகமாயிருந்தன. ஆயினும் இவருக்கு நிறைய வேலை கிடைத் தது. இந்த ஊரில் இவர் பொதுவுடமைக் கொள்கையைப் பரப்பும் நோக்கத்துடன் ஒரு சங்கத்தை தாபித்தார். இதில் பலர் அங்கத்தினர்களாகச் சேர்ந்தார்கள். ஆனால் அரசாங் கத்தாருக்கு இது பிடிக்கவில்லை. சங்கத்தைக் கலைத்து விட் டார்கள். அலெஸாந்த்ரோவையும் சிறையில் வைத்தார்கள். சிறிது காலம் கழித்துச் சிறையிலிருந்து வெளி வந்தவுடன் இவர் பத்து மாதம் போலீ கண்காணிப்பில் இருந்தார். இப்படி யிருந்தும், அரசாங்கத்தாரால் சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு இவருடைய வீடு அடைக்கலம் அளித்து வந்தது. அலெ ஸாந்த்ரோ இவர்கள் அனைவருக்கும் ஆறுதல் கூறிய துடன் இவர்களுடைய ஊக்கம் குன்றாமலிருக்கும்படியும் செய்து வந்தார். இந்த நிலைமையில், இத்தலியிலுள்ள சமூகவாதக் கட்சியினர் எல்லா தல தாபனங்களையும் கைப்பற்றித் தங்கள் கொள்கைகளை நிலை நிறுத்த வேண்டுமென்று முயற்சி செய்து ஒருவாறு வெற்றியும் அடைந்தார்கள். பிரேதாப்பியோ நகர சபையிலும் சமூக வாதக் கட்சியினர் பெரும் பான்மையோ ராயினர். அலெஸாந்த்ரோ முஸோலினி, பிரேதாப்பியோவின் மேயரானார். நகர சபைத் தலைவருக்குரிய பொறுப்புக ளனைத்தையும் இவர் நன்கு உணர்ந்து நிறைவேற்றினார். 1892-ம் வருஷத்தில் பிரேதாப்பியோவில் இவர் தொழிலாளர் சங்க மொன்றை நிறுவினார். மற்றும், சமூகவாதக் கொள்கைகளை ஆதரித்துப் பத்திரிகைகளில் அடிக்கடி கட்டுரைகள் எழுதி வந்தார். இவைகளினால், இவரை அதிகாரிகளின் சந்தேக மானது எப்பொழுதுமே சூழ்ந்து கொண்டிருந்தது. 1902-ம் வருஷத்தில் இத்தலி பார்லிமெண்டுக்குத் தேர்தல் நடைபெற்றது. இதன் காரணமாக ஆங்காங்குச் சில்லரைக் குழப்பங்கள் எற் பட்டன. அலெஸாந்த்ரோ மறுபடியும் கைது செய்யப்பட் டார். தவிர, பாதிரிகள் கட்சியினரும், மிதவாதக் கட்சியினரும் அரசாங்க அதிகாரிகளோடு சேர்ந்துகொண்டு இவருக்குச் சில்லரைத் தொந்தரவுகள் பல விளை வித்தனர். இதனிடையே இவர் மனைவி நோயுற்று இறந்துபோனார். இதனால் அலெ ஸாந்த்ரோவின் தேகமும் மனமும் கட்டுத் தளர்ந்தன. 1910-ம் வருஷம் விண்ணுலகடைந்தார். சிறந்த நண்பர், உயர்ந்த மனிதர் ஒருவர் இறந்து போனதைக் குறித்து எல்லோரும் துக்கப் பட்டார்கள்.
முஸோலினியின் பிறப்பு
கண்ணுக்கெட்டியதூரம் பசுமை நிறைந்த மைதானம் ஒருபுறம்; பிறிதொரு பக்கம் குன்றுகளின் சரிவு; இடையிலே ஒரு கிறிதுவக் கோயில். இது பார்லி கிராமத்துக் காட்சி. இந்தக் கோயிலின் நிழலில் அக்கம் பக்கத்துக் கிராம வாசிகளிற் சிலர் தினந்தோறும் கூடி முக்கியமான விஷயங்களைக் குறித்துப் பேசுவார்கள். இப்படி கூடிப் பேசுவது ஒரு பழைய வழக்கம். இந்தக் கூட்டத்திலுள்ளோர் அறிவும் அனுபவமும் நிறைந்த வர்கள். வயோதிகர்களும் உற்சாகமுள்ள இளைஞர்களும் இங்குச் சமமாகப் பழகுவார்கள். அடிக்கடி கூடும் இக்கூட்டங் களில் காரிபால்டியுடன் ரோம் நகரத்தின் மீது படையெடுத்துச் சென்று அனுபவம் பெற்ற வயதான பலர் இருந்தனர். மாஜினி, காரிபால்டி இவர்களுடைய லட்சியங்களைப் பற்றியும், அந்த லட்சியங்கள் ஒருவாறு கைகூடினாலும், நாடு தற்போது சோர்வடைந்திருப்பதைப் பற்றியும், இத்தலி, மீண்டும் சரித்திரப் பெருமையடைய வேண்டுமானால் ஒரு லட்சிய புருஷன் தலைவனாகத் தோன்ற வேண்டுமென்பதைப் பற்றியும் இவர்கள் அவ்வப்பொழுது பேசிக்கொண்டு வந்தார்கள். இவைகளைக் கேட்டுக் கொண்டிருந்த இளைஞர்களின் மனதில் நாமும் அத்தகைய லட்சிய புருஷனாக ஏன் வரக்கூடாது என்ற எண்ணம் உதித்தது. இந்தப் பேச்சுகளினிடையே, சில சமயங் களில், பத்திரிகைகளும் வந்து புகும். சிறிது நிதானமாகவும் ஆனால் தெளிவாகவும் படிக்கக் கூடிய ஒரு சிறுவனை, உயர மானதோர் இடத்தில் நிறுத்தி, அவனிடம் பத்திரிகையைக் கொடுத்துப் படிக்கச் செய்வார்கள். அவன் படிக்க, இடை யிடையே அநுபவ வியாக்கியானங்கள் நடைபெறும். அக் காலத்திலேயே கிராமவாசிகள் பத்திரிகையின் பயன்களை நன்கு உணர்ந்திருந்தார்கள். நாகரிக வேகத்தோடு உருண்டு செல்ல முடியாத ஒரு மூலைக் காட்டுக் கிராமம்; அதில் படிக்கத் தெரிந்தவர் ஒரு சிலர்; உலக விஷயங்களைப் பத்திரிகைகளைப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று ஆவலுடையோர் அதிலும் சிலர்; இவர்கள் அன்றாடச் செய்திகளைத் தங்கள் வியாக்கியானத்தோடு சேர்த்துப் பிறர்க்குச் சொல்லும்போது என்ன ஆனந்தமடைகிறார்கள்? எவ்வளவு பெருமை கொள்கிறார்கள்?
1883-ம் வருஷம் ஜுலை மாதம் 29ந் தேதி. கோடைகாலம். பகல் வேளை. சூரியன் காய்கின்றான். பார்லி கிராமத்து மாதா கோயிலின் நிழலில் கூடியிருந்த மஹா ஜனங்கள், மிகுந்த கவனத்தோடு, பத்திரிகைச் செய்திகளைக் கேட்டுக்கொண்டி ருந்தனர். ஆனால் அவர்களில் ஒருவருக்குமட்டும் இவ்விஷயங் களில் மனம் செல்லவில்லை. அவர், தமது மனதை எங்கேயோ அனுப்பிவிட்டு உடலை மட்டும் அங்கே இருத்தி வைத்திருந் தார். அவர் திடீரென எழுந்திருந்து தமது வீட்டை நோக்கிப் புறப்பட்டார். அவர் கால்கள் வேகமாக அடியெடுத்து வைத்தன.
இது முதற் பிரசவமல்லவா? சுகமாக முடிய வேண்டுமே. ஆண்டவன் அருள் கூட்டுவானா? ஆண் குழந்தையா யிருந்தால் அதற்கு என்ன பெயரிடலாம்? ஆம்; இத்தலியின் தற்போதைய சோர்வை நீக்கிப் புத்துயிர் கொடுக்க ஓர் ஆண்மகன் தேவைதான்அத்தகைய வீரனுக்குத் தகப்பனா யிருக்கும் பாக்கியம் எனக்குக் கிட்டுமா?
இப்படி ஒன்றன்பின்னொன்றாகத் தொடர்ந்து பல எண்ணங்கள் அவர் மனதில் தோன்றின. நடை சிறிது ஓட்ட மாகவும் மாறியது. பாதி வழியில் தலை நிமிர்ந்து பார்த்தார். எதிரில் ஒரு கிழவி வேகமாக வருவது தென்பட்டது. அவள் முகத்திலே சந்தோஷம். கையையும் காலையும் வீசி ஆட்டிக் கொண்டு வந்தாள். இருவரும் நெருங்கினார்கள்.
‘அலெஸ்ஸாந்த்ரோ!
‘என்ன செய்தி?
ஆண் குழந்தை!!
இதைக் கேட்டு, அலெஸாந்த்ரோ புதிய மனிதனானார். முகத்திலே புதியகளை! தகப்பனாகி விட்டோம் என்ற பெருமை! உலகத்திலே பிள்ளை களைப் பெற்று விடுவது மிகவும் சுலபம். ஆனால் அவைகளுக்குத் தாயாகவோ தகப்பனாகவோ இருத்தல் கடினம். அந்தப் பொறுப்பை அலெஸாந்த்ரோ நன்கு உணர்ந்திருந்தார்.
அலெஸாந்த்ரோ கூட வந்த தாதியுடன் வீடு நோக்கி வேகமாகச் சென்றார். தமது மனைவி ரோஸா மால்தோனி களைத்துப் படுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார். பக்கத்தில் குழந்தை குவா குவா என்று அழுதுகொண்டிருந்தது. அலெஸாந்த்ரோ, அருகே சென்று இந்தக் காட்சியைக் கண்டார். சிறிது விலகி வந்தார்; உடனே கண்கள் மூடின; கரங்கள் குவிந்தன; நா கடவுளைத் துதித்தது. பெனிடோ என்பது இக்குழந்தையின் பெயர் என்ற சொற்கள் வாயினின்று மெதுவாக வெளி வந்தன.
சிறிது நேரம் நிசப்தம். உடனே இச்செய்தி பிரேதாப்பியோ முழுவதும் பரவியது. அக்கம்பக்கத்தாரில் பலர் வந்து அலெ ஸாந்த்ரோவைப் பாராட்டினார்கள்; குழந்தையை ஆசீர்வதித் தார்கள்.
II விளையும் பயிர் முளையிலே
தாய்மையின் பெருமை
உலகத்திலே தோன்றிய மகா புருஷர்கள் அனைவரும் முதலில் தாயின் பள்ளிக்கூடத்திலேயே பயின்றிருக்கிறார்கள். தாயின் கனிந்த அன்பும் இனிய போதனைகளும் இவர்களிடத்தி லிருந்த மனிதத் தன்மையைத் தட்டி எழுப்பி யிருக்கின்றன.
பெனிடோவின் தாயார் ரோஸா மால்தோனி அன்புக்கு அரசி. இவளுக்கு அமைதியே மகுடம்; பெருந்தன்மையே செங்கோல்; வீடே ராஜ்யம். இவளைத் தெய்வப் பிறப்பென்றே கிராமவாசிகள் கருதினார்கள். இவளுடைய முகத்தில் சாந்தமும் புன் சிரிப்பும் தாண்டவம் செய்தன. இவள் மெலிந்த தேகத் தினள். ஆனால் அசைக்க முடியாத உறுதி பூண்டவள் என்று இவள் கண்கள் கூறின. இவளுக்கு உழைப்பில் சலிப்பென்பதே கிடையாது. இவள் வீட்டு வேலைகளைக் கவனித்து வந்ததோடு, கிராமத்துப் பிள்ளைகளை ஒன்று கூட்டிப் பாடஞ் சொல்லிக் கொடுத்து வந்தாள். பெனிடோ முதன் முதலாகப் பாடங் கற்றுக் கொண்டது இந்தப் பள்ளிக்கூடத்தில்தான். வீட்டின் ஒரு பகுதி தகப்பனாரின் உலைக்களம்; மற்றொரு பகுதி தாயாரின் பள்ளிக் கூடம். இரண்டிலும் முஸோலினி பயிற்சி பெற்றான். சம்மட்டி யின் சப்தம், தாயார் மெலிந்த குரலில் பிள்ளைகளுக்குப் பாடஞ் சொல்லிக் கொடுக்கும்போது தாளம் போடுவது போலிருந்தது. ரோஸா மால்தோனி, கிராம வம்புகளில் சேரமாட்டாள். சிறிது ஒதுங்கி வாழ்வதிலேயே விருப்பங் கொண்டவள். முஸோலினியின் பிற்காலப் பெருமைக்கு ரோஸா தேவியின் போதனையே காரணம் என்பதை யாரே மறுக்க முடியும்?
அந்தோ! என் தாயார் தினந்தோறும் எவ்வளவு காரியங்களைச் செய்து முடிக்கவேண்டியிருந்தது! அவள் நோய்வாய்ப்பட்டிருந்தாள்! நரம்புகள் தளர்ச்சியுற்றிருந்தன! இரவில் தூக்கமில்லை! அவள் இராக்காலங்களில் தனது படுக்கையிலிருந்து பலமுறை எழுந்து அங்குமிங்கும் உலவுவாள். பத்து முறை இருபது முறை அவள் எழுந்திருப்பாள். ஆயினும் விடியற்காலை எழுந்து தனது வீட்டு வேலை களைக் கவனிக்கத் தொடங்குவாள். சரியாக எட்டு மணிக்குப் பள்ளிக் கூடம் தொடங்க வேண்டுமல்லவா?
இவை முஸோலினியின் எழுத்துக்கள். தாயார் அளித்த பயிற்சியே தனக்கு இந்தப் பெருமையைத் தந்திருக்கிற தென்பது முஸோலினியின் பூரண நம்பிக்கை.
அலெஸாந்த்ரோ முஸோலினி, தமது தேசபக்தியைச் சொல்லளவில் வரம்பு கட்டிக் கொண்டாரில்லை. கர்ம வீர ரல்லவா? எப்படி வாய் வேதாந்தத்தில் திருப்தியடைய முடியும்? அலெஸாந்த்ரோ வீரர்களையும் தியாகிகளையும் லட்சிய புருஷர்களையும் வழிபடுவதில் பெரு நம்பிக்கை கொண்டவர். தமது குடும்பத்தின் பரம்பரையான கௌரவத்தைக் காப்பாற்று வதில் கண்ணுங் கருத்துமாயிருப்பவர். தாம் வருந்தி பிறர்க்குதவு வதில் இன்பம் காண்பவர். இவர் சிறிது காலம் டோவியாவில் ஹோட்டல் ஒன்று வைத்து நடத்திக் கொண்டிருந்தார். அப் பொழுது பலரும் இவரிடத்தில் வந்து பழகுவார்கள். சிலரிடத் தில் பணமே வாங்காமல் இருப்பார். முக்கியமாகத் தேர்தல் காலங்களிலும், மகா நாடுகள் நடைபெறும் போதும் வருவோர் பலருக்கு இவருடைய இடம், இலவச போஜன சாலையாகவே இருந்தது. சில சமயங்களில் தமது ஆப்த நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வந்து விருந்துகள் நடத்துவார். அனைவரும் உல்லாச மாகப் பொழுது போக்குவார்கள். ரோஸா மால்தோனி அம்மையார் இவற்றையெல்லாம் பொறுமையுடன் ஒரு மூலை யில் உட்கார்ந்து பார்த்துப் பெருமூச்சு விடுவாள். வேறென்ன செய்வது?
அலெஸாந்த்ரோ முஸோலினி, தமது மூத்த குமார னுக்கு பெனிடோ என்று பெயர் வைத்ததன் ரகசியம் இப் பொழுது புலனா கிறதல்லவா?
இந்த பெனிடோ என்பவன் யார்? வட அமெரிக்காவின் தென்பாகத்தில் மெக்ஸிகோ என்றொரு நாடு உண்டு. இது கி.பி. 1521ம் ஆண்டு முதல் 1821ம் ஆண்டு வரை பெயின் தேசத்தவர் ஆளுகைக் குட்பட்டிருந்தது. இதற்குப் பிறகு இது வாதீன மடைந்து குடியரசாக மாறியது. இடையிடையே உள் நாட்டுக் குழப்பங்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. இக்குழப்பங்களின் விளைவாக மாக் மிலியன் என்பான், தான் சக்ரவர்த்தி என்று பட்டஞ்சூட்டிக்கொண்டான். இவனை எதிர்த்துப் போராடிய வனே பெனிடோ என்பவன் இவனுடைய முழுப்பெயர் பெனிடோ பாப்ளோ ஜூவார. இவன் மெக்ஸிகோ குடியரசின் தலைவனாக கி. பி. 1861 முதல் 1872 வரை இருந்தான். இவன் சிறந்த வீரன். நாட்டுப் பற்றுடையவன். இவனைப்போல் தமது மகன் இருக்க வேண்டுமென்பது அலெஸாந்த்ரோவின் விருப்பம். இதனாலேயே குடும்பப் பெயரையும் சேர்த்து பெனிடோ முஸோலினி என்று தமது குமாரனுக்குப் பெயரிட்டார்.
1883ம் வருஷம் ஜூலை மாதம் 29 தேதி பிற்பகல் இரண்டு மணிக்கு வரானோ டிகாடாவில் பெனிடோ முஸோலினி பிறந்த அதே சமயத்தில் ஆதிரியா தேசத்துத் தலை நகரான வியன்னாவிலுள்ள ஷோன்ப்ரன் தோட்டத்தினிடையே அலங்காரமாக அமைக்கப் பெற்றிருந்த இரட்டைத் தலைக் கழுகுச்சிலையின் மீது ஒரு பேரிடி விழுந்தது. இதன் பயனாகச் சிலையின் தலையானது அருகிருந்த ஒரு குட்டையில் அடைக்கலம் புகுந்து கொண்டது. சிலையின் மீது இடி விழுந்தது; இத்தலி யின் சோர்வு மீதும் இடி விழுந்தது! பெனிடோ முஸோலினி பிறந்தான்; புதிய இத்தலியும் பிறந்தது!
பிள்ளைப் பருவம்
பெனிடோ, சிறு வயது முதற்கொண்டே துடுக்காக இருந்தான். அரைக் கணமும் சும்மாயிருக்க மாட்டான். எவரை யேனும் சீண்டிக்கொண்டேயிருப்பான். தனது தாயாரின் பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருந்த போதும் இவனைக் கண்டு எல்லாப் பிள்ளைகளும் பயப்படுவார்கள். பிள்ளைகள் புத்தகங்கள் மீது கவனஞ்செலுத்திப் படித்துக் கொண்டிருக்கும் போது பெனிடோ, ஓசைப்படாமல் பெஞ்சுகளின் கீழே குனிந்து நுழைந்து பிள்ளைகளின் காலை வடுக்கென்று கிள்ளி விட்டுப் பின்னுக்குச் சென்று விடுவான். அவர்கள் அழுவதைப் பார்த்துச் சிரிப்பான். அவர்களிடமிருந்து தனக்கு ஏதாவது விளையாட்டுச் சாமான் முதலியன வேண்டுமானால் அவர் களை முறைத்துப் பார்ப்பான்; அவர்கள் அஞ்சுமாறு முகத்தை வைத்துக்கொள்வான்; உடனே அவர்கள் கொடுத்து விடுவார்கள். இவனது அகன்ற நெற்றியும் பிரகாசமான கண்களும் எவரையும் இவனிடத்தில் இழுத்தன. இவனோடு வகுப்பில் படித்துக் கொண்டிருந்த மேரியட்டா என்ற பெண் இவனிடத்தில் அதிக பயம் வைத்திருந்தாள். அந்தச் சிறுமி மிக அழகுடையவள். அவளிடத்தில் பெனிடோ அதிக ஆசை வைத்திருந்தான். அவளை அச்சுறுத்தியும் அழச்செய்தும் வேடிக்கை பார்ப்பதில் பெனிடோவுக்கு அதிக ஆர்வம். மேரியட்டா தனது வீட்டி லிருந்து வயல்களினூடே பள்ளிக்கூடத்திற்கு வந்து கொண்டி ருப்பாள். அப்பொழுது பெனிடோ வழியில் ஒரு புதரில் மறைந் திருந்து திடீரென்று அவள் மீது பாய்வான். அவள் பயந்து ஓடுவாள்; ஓடக் கூடாதென்பான். அழுவாள்; அழக்கூடா தென்று உத்திரவு போடுவான். அவள் பயந்து பேசாமலிருப் பாள். எனவே, தான் வெற்றி கொண்டுவிட்டதாக பெனிடோ கருதித் தலை நிமிர்ந்து முன்னே செல்வான். அவள் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு தலை குனிந்து பின்னே செல்வாள். தனக்கு உபாத்தினியின் குமாரனுடைய பிரத்தியேக மான சிநேகம் கிடைத்திருக்கிறதேயென்று மேரியட்டாவுக்குப் பெருமை. அழகான ஒரு சிறு பெண், தான் சொல்கிறபடியெல்லாம் ஆடுகிறாளே யென்று பெனிடோவுக்கு ஆனந்தம். சில சமயங் களில் மேரியட்டாவின் இரண்டு வரிசையாகத் தொங்கும் தலைமயிரைப் பிடித்துக்கொண்டு பெனிடோ குதிரையோட்டு வான். இப்படியெல்லாம் விளையாடிக் கொண்டிருக்கும்போது, திடீரென்று அவளைப் பிடித்திழுத்து முத்தம் கொடுப்பான். அவளோடு விளையாடி சலிப்பேற்பட்டுவிட்டால், அவளைப் பார்த்து மிகக் கண்டிப்புடன் நீ போ என்பான். அவளும் வாய் பொத்திக்கொண்டு போய்விடுவாள்.
பெனிடோ, தன் தாயார் பள்ளிக்கூடத்தில் எவரையும் சண்டைக் கிழுப்பான். பிறரை அடிப்பான்; தானும் அடிபடு வான். வெளியில் சென்று கொண்டிருக்கும் போது, உயரமான மரம் முதலியவற்றின் மீது ஏறி கால் சட்டை, கைச் சட்டை களைக் கிழித்துக் கொள்வான். சில சமயங்களில் தேகத்தில் இரத்த காயங்களும் உண்டாகும்.
கோழை யார்?
பெனிடோ தினந்தோறும் காலையில், தன் தகப்பனா ருடைய குதிரையை நீர்த்தொட்டிக்கு அழைத்துச் செல்வான். அந்தச் சிறிய தூரத்திலும் அதனை வேகமாக ஓட விட்டு வேடிக்கைப்பார்ப்பானேயன்றி மெதுவாக நடத்திச் செல்ல மாட்டான். அது மட்டுமா? துணிகரமாக, எவருடைய உதவியு மின்றி, குதிரை மீதேறிச் சவாரி செய்வான். வரானோ டிகாடா கிராமத்தில் சாமான்களை ஏற்றிச் செல்வதற்கு உபயோகப்படும் கைவண்டியொன்று புதிதாக வந்து வேலை செய்து கொண் டிருந்தது. கிராமத்துச் சிறுவர்கள் ஒன்று கூடி அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். பெனிடோ, ஒரு பக்கத்துச் சக்கரத்தைப் பிடித்துச் சுழற்றிக் கொண்டிருந்தான். அப்பொழுது பெரிய பையனொருவன் இவனை விளையாட அழைத்தான். பெனிடோ, அவன் வார்த்தையை நம்பி, சக்கரத்தைவிட்டுச் சென்றான். சென்றதும் பெரிய பையன் இவனை முகத்தில் நன்றாக அடித்துவிட்டுத் தான்போய் சக்கரத்தைப் பிடித்துச் சுழற்ற ஆரம்பித்தான். இது நம்பிக்கைத் துரோகமல்லவா? இந்த முதல் அநுபவம் பெனிடோவின் பசு மனதில் நன்றாகப் பதிந்துவிட்டது. இவன் உள் நரம்புகள் துடித்தெழுந்தன. முகத்திலே இரத்தம் வடிந்தது. அழுது கொண்டே வீட்டுக்கு ஓடினான். என்று அலெஸாந்த்ரோ கேட்டார். நடந்த வரலாற்றை பெனிடோ கூறினான். ஓ! அந்தப் பெரிய பையன் அடித்தானா? நீ திருப்பி அடிக்கவில்லையே! பொட்டச்சி மாதிரி இங்கே அழுதுகொண்டு வருகிறாய். போ வெளியே! அவனைத் திருப்பி நீ ஒருகை பார்க்கிற வரையில் நான் உன்னை பார்க்க மாட்டேன் என்று சிறிது கடிந்து கூறினார். பெனிடோ கண்ணீரைத் துடைத்துக்கொண்டான். வன்மம் தீர்ப்பதெப்படியென்று சிறிதுநேரம் ஆலோசித்தான். பிறகு ஒரு பெரிய கல்லை எடுத்து அதற்குக் கூர்மையுண்டாகும்படி தீட்டிக் கொண்டான். பெரிய பையன் இருக்குமிடஞ் சென்று சமயம் பார்த்துத் தான் கொண்டுவந்த கல்லால் அவன் தலையில் ஒரு முறையல்ல மூன்று முறை அடித்துவிட்டுத் திரும்பினான். அப்படி அடித்த போது, என் முகத்தில் காயமுண்டாக்கினாயல்லவா? இப் பொழுது உன் முகத்தைக் காப்பாற்றிக் கொள் என்று சொல்லிக் கொண்டே அடித்தான். வீட்டுக்கு வந்து, தான் வெற்றியடைந் ததைச் சந்தோஷத்துடன் வெளியிட்டான். அந்தச் சந்தோஷத் தில் தனது காயங்களின் நோயையும் மறந்தான். இந்தச் சம்பவத்தைப் பற்றி முஸோலினி பிற்காலத்தில் பல முறை பேசியிருக்கிறான். பிறருடைய உருட்டல் மிரட்டல்களுக்கு நாம் பயந்துவிடக்கூடாது. அப்படி பயப்படுகிறவன் கோழை என்று இவன் அடிக்கடி கூறுவதுண்டு. மனிதன் தன்னுடைய பிறப்புரிமையைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமானால், ஒரு கன்னத்தில் அடித்தால் மற்றொரு கன்னத்தைக்காட்டு என்ற தத்துவத்தையோ, தோல்தோயின் சத்தியாக்கிரகக் கொள்கை யையோ கடைப்பிடிக்கக் கூடாதென்பது முஸோலினியின் கருத்து. அலெஸாந்த்ரோ, தமது மகனுக்குக் கூறிய மொழி களில் அடங்கிய தத்துவமே பிற்கால பாசிட் கொள்கையின் விரிவு என்று கூறினும் மிகையாகாது. நமது கடமையைக் கை நழுவ விட்டுவிட்டு, எதற்கும் அரசாங்கத்தாருடைய உதவியை நாடுவதென்பது முஸோலினிக்கு எப்பொழுதும் பிடிப்பதில்லை. தலையில் கல்லால் அடிப்பட்ட காயங்களுடன் நான் வீட்டுக்கு வந்தது ஒரு முறையல்ல; பலமுறை. ஆனால் அப்பொழுதும் என்னைக் காத்துக்கொள்ள எனக்குத் தெரிந்திருந்தது என்று முஸோலினி ஓரிடத்தில் கூறுகிறான்.
தளகர்த்தன் போல
பெனிடோ தன்னுடனிருந்து விளையாடும் சிறுவர்களுக்கு ஒரு தளகர்த்தன் போலவே இருந்தான். துணிகரமான செயல் ஏதேனும் செய்யவேண்டுமானால், அதற்கு எல்லோரும் சேர்ந்து பெனிடோவையே ஏவுவார்கள். ஒரு சமயம் கிராமத்தருகாமை யில் இருந்த ஒரு தோட்டத்தில் ஓர் ஆப்பிள் மரம் இருந்தது. அதில் ஆப்பிள் பழங்கள் நிறைந்து பார்ப்பவர் நாவில் ஜலம் ஊறும்படி செய்தன. பெனிடோவைத் தலைவனாகக் கொண்ட சிறுவர் கூட்டம் இத்தோட்டத்தில் புகுந்தது. ஒரு பையன் மரத்தின் மீதேறிக் கிளைகளை உலுக்கிக் கொண்டிருந்தான். கீழே விழும் பழங்களை மற்றவர்கள் பொறுக்கிச் சேர்த்துக் கொண்டிருந்தார்கள். தோட்டக்காரன் இதைப் பார்த்து விட்டான்; வந்ததுகோபம்; உடனே ஒரு துப்பாக்கியை எடுத்து, மரத்தின் மீதிலுள்ள சிறுவனை நோக்கிச் சுட்டான். சுடவே சிறுவன் பொத்தென்று கீழே விழுந்தான். காலிலே காயம், பார்த்தார்கள் மற்றச் சிறுவர்கள். பயந்து ஓடி விட்டார்கள். ஆனால் ஒருவன் மட்டும் ஓடவில்லை. அவன் தான் பெனிடோ. காயமடைந்து மூர்ச்சையாகிக்கிடக்கும் சிறுவனிடம் சென்று அவனைத் தூக்கித் தோள்மீது சார்த்திக்கொண்டு வீடு சேர்ந்து அவனுக்கு வேண்டிய சிகிச்சை களைச் செய்வித்தான். இதனோடு இவன் மனம் திருப்தியடையவில்லை. பயந்து ஒடிவந்த கோழை களைத் தண்டிக்கவும் செய்தான்!
பெனிடோவுக்குப் பட்சிகளைக் கண்டால் நிரம்பப் பிரியம். எந்தப் பறவையாயிருந்தாலும், அவை எங்கேயிருந்தாலும் அவற்றைப் பிடித்துக் கொண்டு வந்து விடுவான். ஒரு சமயம், உயர்ந்ததோர் ஆப்பிள் மரம் இருந்தது. அதன் அடியில் ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும் பயந்த சுபாவத்துடன் மேல்நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தனர். மரத்தின் உச்சாணிக் கிளையில் ஒரு சிறுவன் காணப்பட்டான். எதற்காக அவன் அவ்வளவு உயரம் சென்றான்? மரத்தில் பழங்கள்கூட இல்லையே. சிறிது நேரங் கழித்துச் சிறுவன் கீழிறங்கி வந்தான். இவன் கையிலே இரண்டு சிறு பட்சிகள் கீச்சு கீச்சென்று கத்திக் கொண் டிருந்தன. இவனே பெனிடோ. சிறுமி மேரியட்டா. மற்றொரு சிறுவன், பெனிடோவின் சகோதரன் ஆர்னால்டோ.
பெனிடோ! எங்களுக்குக் கொடு என்றார்கள் சிறுவர்கள்.
முடியாது என்றான் பெனிடோ. இவன் முகத்தில் வெற்றியும் சந்தோஷமும் கலந்து விளையாடின. உயர இருக்கும் பொருள்களை அடைய விரும்புவோர் கீழே இருந்தால் கிடைக்குமா? அவர்களும் மேலேற வேண்டுமல்லவா?
பகற்காலங்களில் பதுங்கிக் கிடக்கும் ஆந்தைகளை வெளியே இழுத்துக் கொணர்ந்து வெளிச்சம் காட்டுவதில் பெனிடோவுக்குப் பரம சந்தோஷம். இதற்காக என்ன கஷ்டங் கள் நேர்ந்தாலும் சகித்துக் கொள்வான். ஒரு சமயம், கண்ணியி லகப்படுத்தி வைக்கப்பெற்றிருந்த சில பட்சிகளின் மீது பெனிடோ ஆசை கொண்டான். உடனே அவற்றின் சொந்தக் காரனுக்குத் தெரியாமல் கண்ணியிலிருந்து அவற்றை விடுதலை செய்து எடுத்துக்கொண்டு வந்துவிட்டான். இதனையறிந்த சொந்தக்காரன் இவனைத் துரத்திக்கொண்டு ஓடி வந்தான். குறுக்கே ஒரு நதி. வீரமுள்ள பெனிடோ ஆற்றைக் கடந்து அப்புறம் போய்விட்டான். ஆனால் அகப்படுத்திய பறவைகளை மட்டும் கை விடவில்லை.
பெனிடோவுக்கு ஒரு கணமும் சும்மாயிருக்க முடியாது. ஏதாவது ஒரு காரியத்தைச் செய்துகொண்டிருக்க வேண்டும். பள்ளிக்கூடமில்லாத நாட்களில் இவன் தன் சகோதரனான ஆர்னால்டோவுடன் மண்வெட்டி எடுத்துக்கொண்டு ஆற்றங் கரையோரமாக ஏதேனும் வேலைசெய்து கொண்டிருப்பான். ஒரு சமயம் பெனிடோ, தன் வீட்டிலிருந்த வண்ணம் சுமார் ஒரு மைல் தொலைவிலுள்ள ஒரு மலைச்சரிவின் இயற்கையழகில் ஈடுபட்டிருந்தான். அப்பொழுது அங்கே பிலிப்போன் என்ற ஒரு கிழவன் மண்வெட்டியால் நிலத்தைப் பண்படுத்திக் கொண் டிருந்தான். இதைப் பார்த்த பெனிடோ ஓர் அம்புபோல் அவனிடம் பாய்ந்துசென்று, அவன் மண்வெட்டியைப் பிடுங்கி வேலை செய்யத் தொடங்கினான். கிழவனோ பிரமித்துப் போய்விட்டான். பெனிடோ அவனிடம் ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லை. அவன் முகத்தையும் பார்க்கவில்லை. தேகத் தில் நன்றாக வியர்வை உண்டாகும் வரை வேலை செய்து விட்டுத் திரும்பினான்.
தகப்பனார் கற்றுக்கொடுத்த பாடம்
சிறிது வயது வந்த பிற்பாடு, பெனிடோ, தன் தகப்பனா ருடைய பட்டரையில் வேலை கற்றுக்கொள்ளத் தொடங்கி னான். வாழ்க்கை யானது கரடுமுரடானதென்றும் அதில் ஈடுபடுவ தற்கு உரமுள்ள சரீரம் வேண்டுமென்றும் அலெஸாந்த்ரோ நம்பினார். எனவே, தமது மகனுக்குக் கடுமையான பயிற்சிகளைக் கொடுத்துப் பழக்கினார். பெனிடோ, சம்மட்டி எடுத்து அடிப்பது, துருத்தி ஊதுவது முதலிய எல்லாவேலைகளையும் சிறிதும் சோம்பலின்றிச் செய்வான். சிறிது கவனக்குறைவாக இருந்தால் அலெஸாந்த்ரோ தலையில் குட்டுவார். சம்மட்டி எடுத்து அடிக்கும் போது, நெருப்புப் பொறி பறப்பதைக் கண்டு பயந்து ஒதுங்கினாலும் அல்லது கண்ணை மூடிக்கொண்டாலும் அலெஸாந்த்ரோவுக்குக் கோபம் வரும். இப்படியெல்லாம் பயந்தால் வேலை கற்றுக் கொள்வதெப்படி? என்று கடிந்து பேசுவார். சில வேளைகளில் தோற்பட்டையால் அடித்தும் விடுவார். விதி, விதி என்று சொல்லி வாய் மூடி மௌனியா யிருப்பவன் மனிதனாகானென்றும், அவ்விதியை வெல்ல முயல்வோனே மனிதத்தன்மையை எளிதில் பெறுவான் என்றும் அலெஸாந்த்ரோ கூறுவார். பிறர் கையால் இரண்டு அடிபடுவதைக் காட்டிலும் என்கையால் ஓர் அடி படு என்று பெனிடோவுக்கு உபதேசிப்பார். ஆனால் பெனிடோவுக்கு, இந்தக் கடுமையான பயிற்சி சில சமயங்களில் கசப்பாயிருக்கும். ஒரு நாள், அலெஸாந்த்ரோ இவனை நன்றாக அடித்து விட்டார். இவனுக்கு இது தாங்கவில்லை. சொல்லாமல் ஓடி விட்டான். பிறகு இரவு நெடுநேரம் கழித்து, வீட்டுக்குத் திரும்பி வந்து மௌனமாகப் படுக்கையில் படுத்துக் கொண்டான். இதை யறிந்த தாயார் இவனை அருகேயழைத்து இருத்திக்கொண்டு நல்ல புத்திமதிகள் கூறினாள். பெனிடோவின் மனம் மாறு பட்டது. மறுநாள் காலை வழக்கம்போல் பட்டரைக்குச் சென் றான். அன்றுதான் தாய்மையின் வெற்றியை பெனிடோ நன்கு உணர்ந்தான். பெனிடோவுக்கு விளையாட்டுப் புத்தி அதிகமா யிருந்த போதிலும் உலைக்களத்தில் தகப்பனாருக்குப் பேருதவி யாக இருந்தான். குறிப்பறிந்து நடந்து கொள்ளும் ஆற்றல் இவனிடம் நிரம்பியிருந்தது. மற்றும் இயந்திர சம்பந்தமான வேலைகளில் இவனுக்கு இயற்கையான ஒரு பற்றும் கூர்மை யான அறிவும் இருந்தன. இந்த இயந்திர அறிவு இவனுக்குப் பிற்காலத்தில் பெரிதும் பயன்பட்டு வந்தது. ‘mtªâ! என்ற தினசரிப் பத்திரிகையின் ஆசிரியராகப் பிற்காலத்தில் இவன் இருந்தபோது, புழுதி நிறைந்த ஒரு பாதையில் தனது மோட் டாரைச் செலுத்திக் கொண்டு சென்றான். வழியில் வண்டி கெட்டுவிட்டது. அருகாமையிலுள்ள ஓர் ஊருக்கு அதனைத் தள்ளிச் சென்றான். அவ்வூரில் அன்று ஒரு திருவிழா. பட்டரைகள் உள்பட எல்லாத் தொழிற் சாலைகளும் மூடப்பட்டிருந்தன. ஒரு பட்டரைச் சொந்தக்காரன் மட்டும் இவனுக்கு உதவி செய்ய முன்வந்தான். ஆனால் அவன் உலையில் நெருப்பில்லை. உடனே முஸோலினி உள் சென்று துருத்தி ஊதி நெருப்புண்டாக்கி, கெட்டுப்போன சாமான்களைப் பழுது பார்த்துக்கொண்டு சென்றான். பட்டரைச் சொந்தக்காரன் பிரமித்து நின்றான்!
III கல்விப் பயிற்சி
கல்லூரியும் சிறையும் ஒன்றே
பெனிடோவின் கல்வி விஷயத்தில் ரோஸாமால் தோனி பெரிதும் கவலை கொண்டாள். கிராமத்தில் அளிக்கப்படும் கல்வி, வாழ்க்கைக்குத் துணை செய்யாதென்றும், பல பெரியா ருடைய பழக்கம் தன் மகனுக்கு ஏற்பட வேண்டு மென்றும் அவள் கருதினாள். இது விஷயமாகத் தம்பதிகள் பல நாட்கள் யோசனை செய்தனர். அக்காலத்தில் பாதிரிமார்கள் வைத்து நடத்திய பள்ளிக்கூடங்களே முக்கிய நகரங்களில் இருந்தன. இந்தப் பள்ளிக்கூடங்களில் அளிக்கப்பெற்ற பயிற்சியை அலெஸாந்த்ரோ வெறுத்தார். பொதுவாகவே, அக்காலத் தில் பாதிரிமார்களிடத்தில் ஒருவித துவேஷம் பரவியிருந்தது. கடைசியில், தமது மனைவியின் வற்புறுத்தலுக்கு இணங்கி, பேன்ஸா (Faenza) என்ற ஊரில் சலேஷியப் பாதிரிமார்கள் நடத்தி வந்த பள்ளிக்கூடத்திற்கு பெனிடோவை அனுப்புவ தென்று அலெஸாந்த்ரோ தீர்மானித்தார். இதைப்பற்றி முஸோலினி தனது சுயசரிதையில் பின்வருமாறு குறிப்பிடுகிறான்:
பாதிரிகள் பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப என் தகப்பனார் முதலில் சம்மதிக்கவில்லை. பிறகு (என் தாயார் வற்புறுத்தலின் பேரில்) சம்மதித்தார். நான் புறப்படுவதற்கு முன்னாடி சில வாரங்களாக என் மனதில் ஒரு வித அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. கல்லூரிகளும் சிறைச்சாலைகளும் ஒன்றே என்ற கருத்து எனக்கு இருந்தது. இதில் போய்ச் சேருவதற்கு முன்னர் எனக்கிருந்த சுதந்திரத்தைப் பூரணமாக அனுபவித்து விடத் தீர்மானித்தேன். அக்டோபர் மாத மத்தியில் நான் புறப்படுவதற்கு வேண்டிய துணி மணிகள் பணம் முதலியன யாவும் தயாராகி விட்டன. சகோதர சகோதரிகளை விட்டுப் பிரியப் போகிறோமே யென்ற துக்கம் என்னை அதிகம் பாதித்ததாக நினைவில்லை. அப்பொழுது எட்விட்ஜ் என்ற என் சகோதரிக்கு மூன்று வயது; ஆர்னால்டோ என்ற என் சகோதரனுக்கு ஏழு வயது. ஆனால் நான் கூட்டிலே அடைத்து வைத்திருந்த ஒரு சிறிய பட்சியை விட்டுப் பிரிகிற வருத்தம் மட்டும் என்னை அதிகமாகத்துன்புறுத்தியது. நான் புறப்படு வதற்கு முந்திய நாள், ஒரு பையனோடு சண்டை போட்டேன். என் கையால் அவனைக் குத்தப் போனேன். அவன் மீது அடி விழுவதற்குப் பதிலாகச் சுவர் மீது விழுந்தது. இதன் பயனாக விரல் கணுக்களில் நல்ல காயம் ஏற்பட்டது. எனவே, மறுநாள் நான் கைக்கட்டுடனேயே புறப் பட்டேன். என் தாயாரிடம் பிரயாணம் சொல்லிக் கொள்ளும்போது நான் அழத்தொடங்கினேன். பிறகு என் தகப்பனாரும் நானும் ஒரு கழுதை வண்டியில் ஏறி உட்கார்ந்தோம். வண்டி மெதுவாகச் சென்றது. சுமார் இருநூறு கஜம் போனதும், கழுதை கால் தடுமாறிக் கீழே விழுந்தது. அபசகுனம் என்றார் என் தகப்பனார். சிறிது நேரத்திற்கெல்லாம் கழுதை சமாளித்துக் கொண்டு எழுந்து முன்னோக்கிச் சென்றது. வழியில் நான் வாய் திறந்து ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை. சுற்று முற்றும் இயற்கைக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டு சென்றேன். பட்சிகள் பறப்பதிலும், சலசலவென்ற சப்தத்துடன் ஓடும் நதியின் போக்கிலும் என் மனம் ஈடுபட்டது. பார்லி கிராமத்தைக் கடந்தோம். அந்த ஊரின் காட்சி என் மனதில் நன்றாகப் பதிந்தது. ஒரு சமயம், நான் நான்கு வயதுக் குழந்தையாயிருந்த போது இந்த ஊரில் வழி தெரியாமல் திரிந்ததாக ஞாபகம் இருக்கிறது. அப்பொழுது என் பெற்றோர்கள் என்னை நெடுநேரம் தேடினார்கள். கடைசியில் ஒரு சக்கிலியன் வீட்டில் அமைதியாக உட்கார்ந்திருப்பதைக் கண்டுபிடித்து அழைத்துச் சென்றார்கள்.
பேன்ஸா நகரத்திற்குள் நுழைவதற்கு முன்னால் வழியிலிருந்த இரும்புப் பாலம் என்னைப் பெரிதும் ஈர்த்தது. சலேஷியப் பாதிரிமார்கள் கல்லூரிக்கு நாங்கள் சென்றபோது பிற்பகல் இரண்டு மணியிருக்கும். கல்லூரித் தலைவரிடம் என்னைக் கொண்டு நிறுத்தினார் என் தகப்பனார். அவர் என்னை ஏற இறங்கப் பார்த்து இவன் சுறுசுறுப்புள்ள சிறுவனாயிருப்பானென்று எதிர்பார்க்கிறேன் என்று சொன்னார். பிறகு என் தகப்பனார் என்னைக் கட்டித்தழுவி முத்தங் கொடுத்தார்; கண்ணீர் பெருக்கினார். என்னைவிட்டு அவர் பிரிந்து சென்றவுடன் நான் தேம்பித் தேம்பியழத் தொடங்கினேன்.
கல்லூரியில் சேர்ந்த சில நாட்கள் வரை பெனிடோ இயற்கையான சுறுசுறுப்போடு இல்லை. பெற்றோரின் பிரிவு இவனைப் பெரிதும் வருத்தியது. அதுமட்டுமல்ல; தன்னுடைய சுயேச்சை வாழ்க்கையானது கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக இவன் கருதினான். பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளோடு சந் தோஷமாகக் கலந்து பேசமாட்டான். சில சமயங்களில் ஆசிரியர்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொள்வான். வகுப்பு வேலை முடிந்ததும், நேரே கல்லூரிப் புத்தகசாலைக்குச் சென்று நீண்டநேரம் தலை குனிந்து படித்துக்கொண்டிருப்பான். தாந்தே1, வர்ஜில்2, சீஸர்3 முதலிய பேராசிரியர்கள் எழுதிய நூல் களிடம் பெரிதும் இவன் இச்சமயம் ஈடுபட்டான். அவர்க ளுடைய நடையும் உயர் கருத்துக்களும் இவனை ஒருகாவிய ரஸிகனாகச் செய்துவிட்டன. பிற்காலத்தில் பெனிடோ ஒரு சிறந்த நூலாசிரியனாக விளங்கினான் என்பதில் என்ன ஆச்சரியம்!
பாவ மன்னிப்பா?
கல்லூரியின் போக்கும், தான் அங்கே அடைபட்டிருப் பதும் பெனிடோவுக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. இவனோடு நெருங்கிப் பழகவும், கல்லூரியின் மற்ற மாணாக்கர்கள் அஞ்சினார்கள். இவனுடைய நடவடிக்கைகள் ஆசிரியர்களுக்கு வெறுப்பைத் தந்தன. கல்லூரியைச் சேர்ந்த ஆலயத்திற்குச் சென்று, தொழுகையில் கலந்துகொள்ளமாட்டான். இதனால் பாதிரிமார்கள் இவனைப் பள்ளிக்கூடத்தினின்று விலக்கிவிடத் தீர்மானித்தார்கள். இதையறிந்த தாயார் ஓடிவந்து, தன் குடும்பத்தின் ஏழ்மை நிலையைக் கூறி, மகனை எப்படியாவது படிப்பிக்க வேண்டு மென்று கேட்டுக்கொண்டாள். தாயாரின் கண்ணீரினால் பாதிரிகள் மனமிளகி, பெனிடோவைப் பள்ளிக் கூடத்தில் வைத்துக்கொண்டார்கள். ஆயினும் அவர்களுக்குப் பெனிடோவிடம் விருப்பு ஏற்படவில்லை.
மற்றொரு சமயம் பெனிடோவின் முரட்டுச் சுபாவம் பாதிரிமார் களுக்கு அருவருப்பைத் தந்தது. எப்படியாவது இம்முறை கல்லூரி யினின்று இவனை விலக்கிவிடுவதென்று தீர்மானித்தார்கள். பெனிடோவின் தாயார் மீண்டும் வேண்டிக் கொண்டாள். தன் மகனுக்கு ஏதேனும் தண்டனை கொடுத்துத் திருத்திக் கல்லூரியில் வைத்துக் கொள்ளுமாறு பிரார்த்தித் தாள். எனவே இவன் பன்னிரண்டு நாட்கள் வரை தினந்தோறும் நான்கு மணி நேரம், கீழே பரப்பப்பட்டிருக்கும் சோளத்தின் மீது மண்டியிட்டுக் கொண்டிருக்க வேண்டுமென்று உத்திர விட்டார்கள். தான் நடந்து கொண்டது தவறென்றும் தன்னைத் திருத்திக் கொள்வதாகவும் ஒத்துக்கொண்டால் இவனை மன்னித்து விடுவதாகக் கூறினார்கள் பாதிரிகள். பெனிடோவா மன்னிப்புக் கேட்பவன்? பன்னிரண்டு நாட்களும் மண்டி யிட்டுத் தண்டனையை அனுபவித்துத் தீர்த்தான். பத்தாவது நாள் இவன் முழங்காற்களில் இரத்தம் வடிய ஆரம்பித்தது. தண்டனை முடிந்ததும் ஒரு பாதிரி இவனைப் பார்த்து முஸோலினி! உன் ஆத்மா நரகத்தைவிடக் கொடியது. நாளையே சென்று செய்வினைக்கு மனமிரங்கி, பாவமன்னிப்புக் கேள் என்றார். பாவமன்னிப்புக்கும் முஸோலினிக்கும் எவ்வளவு தூரம் என்பதை அந்தப் பாதிரி அறிய வில்லை. மறுநாள் பாவ மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டான். பாதிரிமார் களின் வற் புறுத்தலுக்கு அஞ்சி எவருக்கும் சொல்லாமல் பள்ளிக் கூடத்தை விட்டு ஓடிவிட்டான். ஆயினும் இவனைத் தேடிப்பிடித்து நன்றாக அடித்தார்கள்.
இந்தக் கடுமையான பயிற்சி, பெனிடோவுக்குப் பிற் காலத்தில் பெரிதும் உதவியது. எவனொருவன் தலைவனாக இருக்க விரும்புகிறானோ அவன் முதலில் தொண்டனாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டுமல்லவா? வாழ்க்கையில் ஒழுங்கு வேண்டும் என்ற பெரிய பாடத்தைப் பாதிரிகள் பள்ளிக்கூடத்தி லேயே இவன் கற்றான். பிற்காலத்தில் ஒரு சமயம் இவன் பெருமூச்செறிந்து பின் வருமாறு கூறுகிறான்: -
என் வாழ்க்கையில் என்மீது யார் இரக்கங்காட்டியிருக்கிறார்? ஒருவருமில்லை. பரம தரித்திர நிலையிலே என் குடும்பம் இருந்தது. என் வாழ்க்கையோ துவர்ப்புச் சுவை நிரம்பியது. அப்படியிருக்க, நான் எங்கிருந்து கருணையென்பதைக் கற்றுக் கொண்டிருக்க முடியும்? பள்ளிக்கூடத்திலா? பாதிரிகள் மடத்திலா? அல்லது உலகத்திலா? எங்குமில்லை. அப்படியிருக்க நான் ஒதுங்கியிருக்கிறேன், தனிமையை விரும்புகிறேன், கடுமையாக நடந்து கொள்கிறேன், பிடிவாதம் பிடிக் கிறேன் என்று ஏன் ஜனங்கள் ஆச்சரியப்படுகிறார்கள்?
இதிகாச நாயகர் வரிசை
சலேஷியப் பாதிரிமார்கள் கல்லூரியில் படிப்பை முடித்துக்கொண்டு பெனிடோ, தன் கிராமத்துக்குத் திரும்பி வந்தான். அப்பொழுது இவனுக்கு வயது பதினைந்து. அப் பொழுதே இவன் உள்ளத்தில் உயர்ந்த லட்சியங்கள் குடி கொண்டுவிட்டன. வாழ்க்கையைப் பண்படுத்துவன ஒழுங்கும் ஒழுக்கமும் என்பதை நன்கு உணர்ந்தான். மதுபானத்தையும் சிகரெட் பிடிப்பதையும் நிறுத்திவிட்டான்.
பள்ளிக்கூடத்திலிருந்தபோது இவன் ரோமபுரியின் பழைய சரித்திர நூல்கள் பலவற்றையும் படித்தான். ரோம ஏகாதிபத்தியத்தின் முற்கால நிலையையும் தற்கால நிலையையும் மனதிற்குள் சீர்தூக்கிப் பார்ப்பான். பள்ளிக்கூடத்து நோட்டுப் புத்தகங்களின் ஓரத்திலெல்லாம் ரோம் என்று அடிக்கடி எழுதுவான். பெஞ்சுகளின் மீது கத்தி முனையினால் ரோம் என்று செதுக்கி வைப்பான். ரோமாபுரியின் இதிகாச நாயகர்களின் வரிசையில் தனக்கு ஒரு தானம் உண்டு என்ற உறுதியான எண்ணம் இவன் பசுமை உள்ளத்திலே துளிர்க்க ஆரம்பித்தது. பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வந்த பிறகு இவனுடைய செயல்கள் யாவும் மேற்படி லட்சியத்தையே குறிக்கோளாகக் கொண்டிருந்தன. ஒரு சமயம் நள்ளிரவில் இவன் தன் அறையின் கதவைத் தாளிட்டுக்கொண்டு பிரசங்கஞ் செய்யத் தலைப் பட்டான். இஃது உறங்கிக்கொண்டிருந்த தாயாரை எழுப்பியது. அவள் பயந்து எழுந்து கதவைத் தட்டி என்ன செய்தியென்று விசாரித்தாள். பைத்தியக்காரர்க ளன்றோ இரவில் தாங்களே பேசிக் கொள்வார்கள் என்கிறாள். அதைப்பற்றிக் கவலையில்லை அம்மா! பொதுக்கூட்டங் களில் பேசுவதற்குப் பழக்கிக்கொள்கிறேன். இத்தலி முழுவதும் என் முன்னர் நடுங்கக்கூடிய ஒரு காலம் வரப்போகிறதென்பதை நம்புங்கள் என்று அமைதியாகப் பதில் கூறினான் பெனிடோ.
மற்றும் பெனிடோ ஒரு நிமிஷமாவது சும்மாயிருந்த தில்லை. ஏதாவது புத்தகங்களைப் படித்துக்கொண்டிருப்பான்; பிறருக்கு உரக்கப் படித்துக் காண்பிப்பான். பிரஞ்சு ஆசிரிய னான விக்டர் ஹ்யூகோ1 என்பானுடைய நூல்களில் இவனுக்கு அதிக மதிப்பு உண்டு. ஓய்வு நேரங்களில் கிராமத்தைச் சுற்றி யுள்ள இயற்கைக் காட்சிகளைக் கண்டு களித்து வருவான். இப்படி சுற்றித் திரியும்போது கிராமவாசிகளின் குறைநிறை களை நன்கு அறிந்துகொள்ளச் சந்தர்ப்பம் ஏற்பட்டது.
பெனிடோவை எந்தத் தொழிலில் அமர்த்துவது என்பதைப் பற்றி அலெஸாந்த்ரோவும் ரோஸாமால்தோனியும் கலந்து ஆலோசித்து உபாத்திமைத் தொழிலே சிறந்ததென்று முடிவுக்கு வந்தார்கள். இதில் ஆச்சரியமில்லை. தாயாரின் தொழிலை மகன் ஏற்றுக்கொள்ள வேண்டாமா? பார்லிம் போபோலி என்ற ஊரிலுள்ள ஆசிரியர் பயிற்சிக் கூடத்தில் பெனிடோவைக் கொண்டு சேர்ப்பது என்று தீர்மானிக்கப் பெற்றது. அப்படியே பெனிடோ அங்கு போய்ச் சேர்ந்து மூன்று வருஷ காலம் படித்தான். அங்குப் பல அறிஞர்களின் கீழிருந்து பாடங் கேட்டு வந்ததனால் இவனுடைய அறிவு வளர்ச்சியடைந்தது; இவன் உள்ளத்தில் கவி மணங்கமழ்ந்தது. படிப்பு முடிந்து இவனுக்குத் தகுதிப் பத்திரமும் கிடைத்தது. வீடு திரும்பினான். அப் பொழுது இவனுக்கு வயது பதினெட்டு.
IV உத்தியோக வேட்டை
பள்ளிக்கூட ஆசிரியர்
தகப்பனாருக்கு வயதாகிவிட்டது. தாயாரோ உடல் மெலிவுற்றிருந்தாள். இந்த நிலையில் குடும்பப் பாதுகாப்புப் பொறுப்பை பெனிடோ அதிகமாக உணர்ந்தான். பெற்றோரை விட்டுப் பிரிந்து வெகுதூரம் சென்று சம்பாதிப்பது இவனுக்குப் பிடிக்கவில்லை. எனவே பிரேதாப்பியோவிலேயே எங்காவது உத்தியோகம் கிடைத்தால் நல்லது என்று கருதினான். அச்சமயத்தில், பிரேதாப்பியோ நகர சபை காரியால யத்தில் ஒரு குமாதா வேலை காலியாக இருந்தது. அதற்கு மனுச் செய்து கொண்டான். ஆனால் இவன் வயதில் மிகச் சிறியவனென்றும், அரசியல் விஷயங்களில் தீவிரக் கொள்கையைக் கொண்டி ருக்கிறானென்றும் காரணங்கள் காட்டி இவன் மனு நிராகரிக்கப் பட்டது. அப்பொழுது பெனிடோ, நகர சபைத் தலைவரைப் பார்த்து, கனவான்களே! இந்த மனுவை நிராகரித்ததற்காக நீங்கள் ஒரு காலத்தில் வெட்கப்படவேண்டி வரும் என்று தைரியமாகக் கூறினான். உண்மையான மொழிகள்!
பிறகு இத்தலியின் அழகுக் களஞ்சியம் என்று சொல்லத் தக்க ரெக்கியோ எமிலியா ஜில்லாவிலுள்ள குவால்டீரி (Gualtieri) என்னுமூரில் ஓர் ஆரம்பப் பாடசாலையில் ஆசிரியராக நியமிக்கப்பெற்று அங்கே போய்ச் சேர்ந்தான் பெனிடோ. மாதச் சம்பளம் ஏறக்குறைய இருபத்தெட்டு ரூபாய். இதில் சுமார் இருபது ரூபாய் சாப்பாட்டிற்கும், தங்குமிடத்திற்கும் செலவு செய்துவிட வேண்டியிருந்தது. மிகுதித் தொகையைக் கொண்டு வாழ்க்கைச் சுகங்களை எங்ஙனம் அநுபவித்தல் முடியும்? தகுந்த நண்பர்களும் இல்லை. முதலில் சிறிது சிரமப்பட்டான்.
பள்ளிக்கூடம் காலையில் தொடங்கிப் பகல் ஒரு மணி வரை நடைபெறும். அதன் பிறகு பெனிடோவுக்கு ஒய்வு தான். அப்பொழுது படிப்பதிலும், நண்பர்களுடன் பழகுவதிலும் காலத்தைச் செலவழிப்பான். இந்த ஓய்வு காலங்களில்தான் பெனிடோ, நாட்டியமாடவும் பிடில் வாசிக்கவும் கற்றுக் கொண்டான். பெனிடோவிடம் நாற்பது பிள்ளைகள் படித்
தார்கள். இளமை நிறைந்த ஆசிரியருக்கும் இள மனமுள்ள மாணாக்கர் களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது.
ஆனால் பெனிடோவுக்கு இந்தவேலை பிடிக்கவில்லை. புதிய எண்ணங்களிலும் புதிய செயல்களிலுமே இவன் மனம் நாடிச்சென்றது. உயிரற்ற பழமையைப் போற்றிவிட்டுச் செயலளவில் சும்மாகிடப்பதை இவன் பெரிதும் வெறுத்தான். குவால் டீரியில் சமூக வாதக் கட்சி யினருக்குச் செல்வாக்கு இருந்தது. அந்தக் கட்சித் தலைவர்களுடன் இவன் பழகினான். அவர்கள் அரசியலை ஒரு பொழுதுபோக்காகவே கருதி னார்கள்; வாழ்க்கையின் உயிர் நாடியாகக்கொள்ளவில்லை. இது பெனிடோவுக்குப் பிடிக்குமோ? இதனால் இவன் ஆடல் பாடல்களில் வெறுப்புக்கொண்டவனென்றோ, வரட்டு வேதாந்தி யென்றோ கருதிவிடக் கூடாது. அரசியலை ஒரு களியாட்டமாகக் கருதக்கூடாதென்பதே இவன் கோரிக்கை. குவால்டீரியில் இவன் ஆறு மாத காலமே இருந்தான். இந்தச் சொற்ப காலத் தில், இவன் தன் பிற்காலத்திற்கு உபயோகப்படக்கூடிய பல அநுபவங்களைப் பெற்றான். நெற்றி வியர்வை நிலத்தில் வீழ ஏழைகள் உழைப்பதையும், அவ்வுழைப்பின் பயனைச் செல் வர்கள் ஆடம்பர வாழ்க்கை மூலமாக அநுபவிப்பதையும் இவன் கண்டு மனம் புண்ணடைந்தான்.
வாழ்க்கையிலே லட்சியமும், அதனைச் செயலில் கொணர்ந்து நிறைவேற்றிய பெருமையுமுடைய காரிபால்டி, பெனிடோவுக்கு முன் மாதிரியாக இருந்தான். ஒரு சமயம் குவால்டீரியின் சதுக்கமொன்றில் காரிபால்டியின் உருவச் சிலையின் திறப்புவிழா நடைபெற்றது. ஏராளமான ஜனங்கள் கூடியிருந்தார்கள். அப்பொழுது பேசுவதாக ஏற்பாடு செய்யப் பெற்றிருந்த பெரியவர் வரவில்லை. மாலை வேளையானதால் காற்று வாங்க பெனிடோவும் சதுக்கத்திற்குச் சென்றான். பேசு வதற்கு யாரும் இல்லையேயென்று, விழாவை ஏற்பாடு செய்த வர்கள் கலங்கிநின்றார்கள். அதில் ஒருவருக்கு ‘பெனிடோவை ஏன் பேச வைக்கக்கூடாது? என்ற எண்ணம் உண்டாயிற்று. உடனே பெனிடோ முஸோலினி மேடை மீதேறி நின்று சுமார் ஒன்றரை மணி நேரம், எல்லோரும் பிரமிக்கத்தக்க வண்ணம் காரிபால்டியின் உயர்ந்த லட்சியங்களைப் பற்றிப் பேசினான். இன்னும் அந்தப் பேச்சைப்பற்றி எல்லோரும் பேசிக்கொண் டிருக்கிறார்கள்.
விழாவைச் சிறப்பிக்க வந்திருந்த நகர சபைத் தலைவருக்கு, பெனிடோவின் இந்த பிரமிக்கத்தக்க பேச்சு பிடிக்கவில்லை. அவருடைய உள்ளத்தில் பொறாமைத் தீ எழுந்தது. ஒரு நாள் பெனிடோவுக்கும் நகர சபைத் தலைவருக்கும் பேச்சு பலமாக முற்றியது. உங்களிடத்திலே நான் உபாத்தியாயராக வந்து அமர்ந்தபோது என்னுடைய சுதந்திரத்தை நான் விற்பதாகச் சொல்லவில்லை என்று பெனிடோ கடுமையாகக் கூறினான். உத்தியோகத்திற்கும் சீட்டுக் கிடைத்துவிட்டது. பள்ளிக்கூடத்தி னின்று விலகிய கடைசி நாளில் பெனிடோ, தனது வகுப்பின் கரும்பலகையில் கொட்டை எழுத்துக்களில் என்ன எழுதி வைத் திருந்தான் தெரியுமா? விடா முயற்சி வெற்றி தரும். பெனிடோ முஸோலினியின் வாழ்க்கையில் இந்த வாக்கியம் எவ்வளவு உண்மையாயிருக்கிறது! இதே பெனிடோ, இத்தலியின் பிரதம மந்திரி என்ற முறையில் குவால்டீரிக்கு 1924ம் வருஷத்தில் விஜயஞ்செய்தபோது அவ்வூராரும் பெனிடோவிடம் படித்த மாணாக்கர்களும் மேற்படி வாக்கியத்தை உருவமாகக் கண்டன ரன்றோ?
விட்ஜர்லாந்து பிரயாணம்.
உபாத்தியாயர் உத்தியோகம் போய்விட்டது. இனி பிழைக்கும் வழி என்ன? சிறிய இடத்தில் சிறிய வேலை செய்து கொண்டிருப்பதில் பெனிடோவுக்கு எப்பொழுதும் விருப்பம் இருப்பதில்லை. ஆகாயத்தில் பறக்க விரும்புவோன் மண்ணில் ஊர்ந்து செல்லச் சம்மதிப்பானா? நாட்டுப் பற்று மிகுந்த பெனிடோ, தன் நாடு முழுவதையும் சுற்றிப்பார்க்க வேண்டு மென்று ஆவல் கொண்டான். சுதந்திரம் பெற்ற நாடுகளில் வாழும் ஜனங்கள் எப்படியிருக்கிறார்கள் என்பதைக் காணவும் விரும்பினான். உத்தியோக பந்தமிருந்ததினால் இந்த விருப்பம் இதுகாறும் ஒருவாறு அடங்கியிருந்தது. இனி நாடுகளைச் சுற்றிப் பார்க்கச் சுதந்திரமுண்டல்லவா?
சுதந்திர நாடான விட்ஜர்லாந்திற்குச் சென்று பிழைப் புக்கு வழி தேடத் தீர்மானித்தான் பெனிடோ. ஆனால் இவன் கையில் பணமில்லை. என்ன செய்வது?
என் இனிய தாயே! நான் என் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டியவனாயிருக்கிறேன். எனக்கு உடனே தந்தி மூலமாக இருபத்தைந்து ரூபாய் அனுப்பாவிட்டால், நான் தற்கொலை செய்து கொள்ள நேரிடும். நான் போற்றிடும் தாயே! கடவுள் உங்களை ஆசீர்வதிப் பாராக! என்னை நீங்கள் இனி உயிரோடு பார்க்க முடியாது.
இந்த விதமாகத் தாயாருக்கு பெனிடோ ஒரு கடிதம் எழுதினான். உடனே தாயார் தந்தி மூலமாக இருபத்திரண்டு ரூபாய் அனுப்பினாள். அதை எடுத்துக்கொண்டு விட்ஜர் லாந்துக்குப் புறப்பட்டான். வழியில் ஒரு டேஷனில் இறங்கி தினசரிப் பத்திரிகையொன்றை விலை கொடுத்து வாங்கினான். என்ன கண்டான் அதில்? பிரேதாப்பியோவில் தன் தகப்பனார் கைது செய்யப்பட்டசெய்தி அதில் வெளியாயிருந்தது. பிரேதாப் பியோவில் நடைபெற்ற தேர்தலில் உண்டான குழப்பங் காரண மாகச் சமூகவாதக் கட்சியினர் பலர் கைது செய்யப்பட்டன ரென்றும், அதில் அலெஸாந்த்ரோ முஸோலினி ஒருவர் என்றும், விவரமாக அதில் கண்ட பெனிடோவின் மனம் எப்படி இருக்கும்? இந்த நிலையில் தனக்கு அவசரமாகப் பணம் அனுப்பிய தாயாரை வியந்து போற்றினான். ஊருக்குத் திரும்பிச் செல்வதா? அல்லது கொண்ட கருமத்தை விடாது முடிப்பதா? கடைசியில் விட்ஜர்லாந்திற்குச் செல்வதென்றே தீர்மானித்து மேற்படி நாட்டெல்லைக்குள்ளிருக்கும் வெர்டன் என்ற டேஷனில் வந்திறங்கினான். அப்பொழுது இவன் கையில் ஏறக்குறைய ஒரு ரூபாயே இருந்தது. சுமார் முப்பத்தாறு மணி நேரம் ரயில் பிரயாணம் செய்ததால் இவனுக்குக் களைப்பு மேலிட்டிருந்தது. ரயிலிலிருந்து இறங்கி ஒரு ஹோட்டலுக்குச் சென்று பசி தீர்த்துக் கொண்டான். பிறகு, தன்னோடு பிரயாணம் செய்த ஒருவர், தனக்கு வேலை சம்பாதித்துக் கொடுப்பதாகச் சொல்லியதை நம்பி, ஒரு துணி வியாபாரியிடம் சென்றான். அவன் நல்ல வார்த்தைகள் சொல்லி மறுநாள் தன் னுடன் இருந்து உண்ணுமாறு பெனிடோவை அழைத்தான். அதற்கு பெனிடோவும் ஒப்புக் கொண்டான். அனால் அன்று ராத்திரி எங்கேனும் தங்குமிடம் வேண்டுமே. ஊரும் புதிது; மனிதர்களும் புதியவர்கள். என்ன செய்வான் பெனிடோ? ஊருக்கு அருகாமையில் ஓர் அகலமான பெரிய பாலம் இருந்தது. அதன் ஒரு பக்கத்தில் ஓர் அழகிய உருவச் சிலை இருந்தது. அஃது பெனிடோவின் மனதைக் கவர்ந்தது. அதனிடம்சென்று அதன் அடியில் தலைவைத்து அப்படியே உறங்கிவிட்டான். மேலே ஆகாயம்; கீழே பூமி; சுற்றிலும் பனிக்காற்று வீசியது. ஆனால் கற்பாறைபோல் பெனிடோ உறங்கினான்.
மறுநாள், மேற்சொன்ன வியாபாரியின் வீட்டிற்கு விருந்துண்ணச் சென்றான். அவன், வாய், குளிரப்பேசி, வயிறு நிறைய ஆகாரம் அளித்து, கைச் செலவுக்கு ஏறக்குறைய ஒன்பதரையணா நாணயமொன்று கொடுத்து பெனிடோவை அனுப்பினான். பெனிடோவுக்கு இந்த இனாம் தொகை வாங்குவது பிடிக்கவில்லை. அதற்குப் பதிலாக, தன்னிடமிருந்த ஓர் அராபியக் கத்தியை அந்த வியாபாரிக்குச் சன்மானமாக அளித்துவிட்டு வந்தான். பின்னர், வேலை தேடிப் பல இடங் களிலும் திரிந்தான். கடைசியில் அருகாமையிலுள்ள ஓர்பே என்ற இடத்தில் புதிய வீடு ஒன்று கட்டிக்கொண்டிருந்தார்கள். அதில் ஒரு சிற்றாளாகப் போய் அமர்ந்தான். மாடிமீது வேலை செய்யும் கொத்தர்களுக்குக் கீழிருந்து கற்கள் எடுத்துக் கொடுப்பது இவன் வேலை. முதல் நாள் இவன் தன் தலைமீதும் தோள்மீதும் கற்களைச் சுமந்து கொண்டு நூற்றிருபது முறை ஏறி இறங்கினான். இவனுக்கு மணிக்குச்சுமார் மூன்றணா வீதம் கூலி பேசப்பட்டிருந்தது. இப்படி முதல் நாள் பதினோரு மணி நேரம் வேலை செய்தான். தோள் பட்டைகள் வீங்கி விட்டன. ஆயினும் என்ன செய்வது? இவ்வளவு கஷ்டப்பட்டும் வயிறு நிறைய ஆகாரம் கிடைத்ததா? நெருப்பிலே சுட்ட உருளைக்கிழங்கே ஆகாரம்; வைக்கோற் பரப்பே படுக்கை. இவைகளினால் பெனிடோ மனஞ்சலித்தானோ? இல்லை. இப்படியாக இரண்டு நாள் வேலை செய்தான். ஆனால் கஷ்டப்பட்டு வேலை செய்து கூலி வாங்குவோன் கீழானவன்; கஷ்டப்படாமல் சுகமாக இருந்து கூலி கொடுப்போன் மேலானவன் என்ற கொள்கை பெனிடோவுக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. மறுநாள், வீடு கட்டும் எஜமானன், பெனிடோவைப் பார்த்து நீ ஒழுங்காக உடைகள் போட்டுக் கொண்டிருக்கிறாயே என்று பரிகாசம் செய்தான். இஃது, இவன் மனதைப் பெரிதும் புண்படுத்தியது. என் தோள் பட்டைகள் வீங்க நான் வேலை செய்யும்பொழுது சோம்பேறியென்று என்னைச் சொல்லாமற் சொல்லிக்காட்டு கிறாயே என்று கோபங் கொண்டான். அந்தக் கோபத்தில் அவன் மண்டையையும் நொறுக்கியிருப்பான். ஆனால் அதிகார பலமில்லாதவர்களுடைய கோபம் என்ன செய்ய முடியும்? உடனே பெனிடோ, தான் வேலை செய்ததற்குக் கூலியைக் கொடுத்து விடுமாறும், இனி அவ்விடத்தில் வேலை செய்ய முடியாதென்றும் எஜமானனிடம் தெரிவித்துக் கொண்டான். அந்த எஜமானன் மிகுந்த கோபத்துடன் உள்ளே சென்று சுமார் பத்தரை ரூபாயை எடுத்துக் கொண்டு திரும்பி வந்து, அதனை பெனிடோவிடம் வீசி எறிந்து இந்தா, உன் பணம். இது நீ வேலை செய்து சம்பாதித்ததல்ல; திருடி எடுத்துக் கொண்டது என்று கடுகடுத்துக் கூறினான். இந்தச் சொற் களைக் கேட்டு பெனிடோ கற்சிலைபோல் நின்று விட்டான். வேறென்ன செய்வான்? அவன் கோபம் எஜமானனை என்ன செய்ய முடியும்? வயிறு பசிக்கிறது. காலில் அணிய பூட் இல்லை. ஏற்கனவே அணிந்திருந்த பூட், இந்த இரண்டு மூன்று நாள் கூலி வேலை செய்ததன் பயனாகக் கிழிந்து போய் விட்டது. இந்த நிலையில், வீசி எறியப்பெற்ற காசுகளை எடுத்துக்கொண்டு பெனிடோ மௌனமாகத் திரும்பினான். நேராக ஓர் இத்தாலி யன் கடைக்குச் சென்று ஒரு ஜதை பூட் வாங்கிக் காலில் போட்டுக் கொண்டான். அன்றிரவு வெர்டனில் கழித்துவிட்டு மறுநாள் லாசேன் என்னும் நகரத்திற்குச் சென்றான்.
பசியால் பரிதவித்தல்
லாசேனுக்குச் சென்றதும் அங்கு யார் வேலை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்? தான் ஓர்பேயில் சம்பாதித்த பணத்தில் மிச்சம் வைத்துக் கொண்டிருந்ததைக் கொண்டு, ஒரு வாரம் காலட்சேபம் செய்தான். பிறகு கையில் பணமில்லை. வேலை யும் கிடைக்கவில்லை. பெனிடோவின் கையில் கார்ல்மார்க் என்பவருடைய உருவமடங்கிய நிக்கல் நாணயம் ஒன்றுதான் இருந்தது. எட்டாவது நாள் காலையில்-அன்று திங்கட்கிழமை-ஒரு துண்டு ரொட்டி தான் இவன் ஆகாரம். அன்றிரவுக்கு ஆகாரம் எங்கே? படுக்க இடம் எங்கே? ஒன்றும் தோன்றாமல் வீதிகள் தோறும் சுற்றித் திரிந்தான். பசி, வயிற்றை அலைக்க ஆரம்பித்தது. வெகு தூரம் நடக்க முடியவில்லை. அருகாமையிலிருந்த ஒரு பூந்தோட்டத்திற்குள் சென்றான். அங்கு விட்ஜர் லாந்துக்குச் சுதந்திரம் சம்பாதித்துக்கொடுத்த வில்லியம்டெல் என்பவனுடைய உருவச் சிலை இருந்தது. அதன் கீழ் போய் உட்கார்ந்தான். அங்குக் காற்று வாங்க வந்தவர்கள், இவனைப் பார்த்து ஒரு பித்தனென்றே கருதினார்கள். இவன் உருவம் அவ்வளவு கேவலமாக இருந்தது. எவ்வளவு நேரம் அவ்வுருவச் சிலையின் கீழ் உட்கார்ந் திருப்பான்? மாலை ஐந்து மணிக்கு மேலாகி விட்டது. ஊருக்கரு காமையிலுள்ள ஜினீவா ஏரிக் கரையின் வழியாக பெனிடோவின் கால்கள் அடியெடுத்து வைத்தன. சூரியன் நன்றாக மறைந்து விட்டான். இருட்படலம் பரவத் தொடங்கியது. பெனிடோவின் மனதில் இருந்த சொற்பத் தைரியமும் ஒடுங்கிக்கொண்டது. அந்த தானத்தில் அளப்பரிய துக்கம் கவிந்துகொண்டது. இனி உயிர் வாழ்வதிலே என்ன பிரயோஜனம் என்ற வெறுப்புச் சொற்கள் பெனிடோவின் வாயினின்று வந்தன. தாயே, உன் திருவடி சரணம்! தந்தையே, தாங்கள் சிறையிலே வாசம்! தங்கள் மூத்த குமாரன் இங்கே ஜினீவா ஏரிக்கரையில் உயிர் நாசம்! என்பன போன்ற எண்ணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அவன் உள்ளத்தினின்று எழுந்தன.
இப்படி இவன் ஆழ்ந்த சிந்தனையிலிருந்தபோது திடீரென்று ஓர் இனிய நாதம் இவன் செவியில் விழுந்தது. அருகாமையிலுள்ள ஒரு ஹோட்டலிலிருந்து நாற்பது பேர் சேர்ந்து பாடும் சங்கீதத்திலே இவன் மனம் ஈடுபட்டது. உடனே சிறிது சோர்வு நீங்கினான். கவலையினால் குழம்பியிருந்த மூளையும், பசியினால் கலங்கியிருந்த வயிறும் சிறிது அமைதி பெற்றன. ஆனால் இந்த அமைதி எவ்வளவு நேரம் நிற்கும்? பசி வந்திடப் பத்தும் பறந்து போமல்லவா? ஏரிக் கரையில் காற்று வாங்க வந்தவர்கள் வீடு நோக்கினார்கள். அவர்களில் யாரை யாவது அணுகி, இரவு ஆகாரத்திற்கும் படுக்கைக்கும் பணவுதவி செய்யுமாறு கேட்கலாமா என்று எண்ணம் எழுந்தது. ஆனால் வாயினின்று சொற்கள் வரவில்லை. பிறரைக் கெஞ்சிக் கேட்பது பெனிடோவுக்கு எப்பொழுதுமே முடியாத காரியம். இப்படி யாக இரவு பதினோரு மணி வரை ஏரிக்கரையில் சுற்றி அலைந்தான். குளிர் தாங்க முடியவில்லை. அருகாமையில் ஒரு பழைய படகு இருந்தது. அதன் அடியில் சென்று பதுங்கிக் கொண்டான். இரவு பன்னிரண்டு மணி அடித்தது. அதற்கு மேல் இவனால் குளிர் தாங்க முடியவில்லை. நகர்ப் பக்கமாக வந்தான். வழியில் ஒரு பாலம் இருந்தது. அதன் அடியில் சென்று தன்னை மறந்து தூங்கிவிட்டான். காலையில் எழுந்து, ஊருக்குள் சென்று, ஒரு கடை முன் இருந்த கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொண்டான். தனக்கே தான் அடையாளம் தெரிய வில்லை. அவ்வளவு கேவலமாக இருந்தான். பிறகு ரொமாக்னா மாகாணத்திலிருந்து வந்த ஓர் இத்தாலிய நண்பரைச் சந்தித்து, தன் வரலாற்றைச் சுருக்கமாகத் தெரிவித்துக் கொண்டான். அதைக் கேட்டு அவர் பெருமிதத்துடன் சிரித்தார். அப்பொழுது பெனிடோவின் மனம் என்ன பாடு பட்டது? அவர் தம் ஜேபியி லிருந்து நாலணா நாணய மொன்றை எடுத்து இவன் கையில் கொடுத்தார். பெனிடோ அவருக்கு வந்தனம் செலுத்தி விட்டு அருகாமையிலிருந்த ஒரு ரொட்டிக் கடைக்கு வேகமாக ஓடினான். ரொட்டித் துண்டம் ஒன்று வாங்கிக் கொண்டு நகர்ப் புறத்திற்குச் சென்று தனியாக இருந்து அதைத் தின்றான். இருபத்தாறு மணி நேரம் பட்டினி கிடந்ததால் அந்த ரொட்டித் துண்டத்தை இவன் மிக ஆத்திரமாகத்தின்று, பசியைத் தீர்த்துக் கொண்டான். இவன் தேகத்திலே புதிய சக்தி உதயமாயிற்று. கண்கள் பிரகாசமடைந்தன. மனதில் தைரியம் மீண்டும் தோன்றியது. வாழ்க்கைக்கு இன்னும் போராடிப் பார்ப்போம் என்று தீர்மானித்து ஒரு பாதை வழியாகச் சென்றான்.
அதில் ஜினி என்ற ஓர் இத்தாலிய அறிஞர் வசித்துக் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்த இவன், அவர் உதவியை நாடிச் சென்றான். அவருடைய பங்களாவுக்குள் நுழைவதற்கு முன்னால், அழுக்குப் படிந்த தனது பூட்ஸைத் துடைத்துக் கொண்டான்; கழுத்துப் பட்டையையும் தலைக் குல்லாயையும் சரிப்படுத்திக்கொண்டான். உள்ளே சென்று அவரை வணங்கி, இத்தாலிய பாஷையில் தன் வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டான். அவன் இவனைச் சிறிதுகூட நிமிர்ந்து பாராமல் இஃதென்ன தொந்திரவு! தினந்தோறும் இந்தத் தொந்திரவு களா? என்று சிடுசிடுத்துப் பேச ஆரம்பித்தார். அட கிழட்டு பிணமே என்று கூறிக்கொண்டே பெனிடோ வேகமாகத் திரும்பி வந்துவிட்டான். அன்று பகல் முழுவதும் பல இடங்களி லும் வேலைக்கு அலைந்து திரிந்தான். எங்கும் அகப்படவில்லை. பொழுது அதமித்ததும், நகருக்கு வெளியேயுள்ள இடங்களில் எங்கேனும் படுக்க இடமும் உணவும் கிடைக்குமாவென்று பார்ப்பதற்குப் புறப்பட்டான்.
விட்ஜர்லாந்தில் குடியானவர்கள் தங்கள்தங்கள் வயல் களில் சிறுசிறு வீடுகள் கட்டிக்கொண்டு வாழ்வது வழக்கம். அத்தகைய வீடு ஒன்று, பெனிடோவின் கண்ணுக்குப் புலப் பட்டது. வீட்டுக்குள்ளே ஒரு சிறு குடும்பத்தினர் உணவு உட் கொண்டிருந்தனர். பெனிடோ, அக் குடும்பத்தினர் சாப்பிடு வதைக் கண்டு, அதிக பசி யெடுக்கப் பெற்றவனாய் வேலி யண்டை சென்று உங்களிடம் மிஞ்சிய ரொட்டித் துண்டுகள் இருக்கின்றனவா? எனக்கு ஏதேனும் கொடுங்கள் என்று உரக்கக் கேட்டான். அந்த வீட்டு எஜமானன் இதைக் கேட்டு, ஒரு ரொட்டித் துண்டை எடுத்து பெனிடோவின் கையில் கொடுத்து விட்டு உள்ளே போனான். அவன் வாயிலிருந்து ஓர் அன்பான வார்த்தை வரவில்லை. இரக்கக்குறி அவன் முகத்தில் தென்பட வில்லை. நன்கொடையானது, இனிய மொழிகளோடு கலந்திருந் தால்தான் சிறப்படைகிறது. அஃதொன்று இல்லையேல், கொடுத்தார்க்கும் அதனைப் பெற்றார்க்கும் அக்கொடை இன்பம் பயப்பதில்லை. பெனிடோ, அந்த ரொட்டித் துண்டைத் திருப்பி எறிந்து விடலாமாவென்று ஒரு கண நேரம்! யோசித் தான். ஆனால் பசி! பசி! என்ன செய்வான்? அன்றிரவு அந்த ரொட்டித் துண்டைக் கொண்டு வயிற்றை நிரப்பிக் கொண் டான்.
முதல் முறை கைதியானது
இப்படியாக இவன் லாசேனிலும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலும் வேலைக்காக அலைந்து திரிந்த நாட்கள் பல. இந்த நாடோடி வாழ்க்கை இவனுக்குச் சகஜமாகி விட்டது. இதனால் இவனடைந்த மன வேதனைகள் சில; கற்றுக்கொண்ட அநுபவங்கள் பல. இந்த நாடோடி வாழ்க்கையில், பல தேசத்தாருடைய கூட்டுறவு இவனுக்கு ஏற்பட்டது. அவர்களுடைய குணா குணங்களை நன்கு தெரிந்து கொண்டான். பல பாஷை களிலும் பேசப் பழகிக் கொண்டான். இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக இவனடைந்த நன்மை, இவன் தாய்நாட்டின் மீது கொண்டிருந்த பற்று பன்மடங்கு அபிவிருத்தியடைந்ததே யாகும். பிறநாட்டாரோடு பழகும் போது இத்தாலியன் என்ற முறையில் தான் எவ்வளவு கேவலமாக மதிக்கப்படுகிறான் என்பதை இவன் நன்கு உணர்ந்தான். மற்றும் இத்தாலியர்கள் ஏன் இங்ஙனம் அவமதிக்கப்பட வேண்டும்? அவர்களுடைய குறைகள் என்ன? அக்குறைகளைத் தீர்ப்பதற் குரிய பரிகாரங்கள் என்ன? என்பன போன்ற விஷயங்களை இவன் ஆராயத் தொடங்கினான். அந்நியர் முன்னிலையில் தன் குழந்தைகள் கேவலமாக நடந்து கொண்டால், அதைக் கண்டு ஒரு தாய் எப்படி மனம் புண்படுவாளோ, அதுபோலவே, பெனிடோவும் இத்தாலியர்கள் வெளி நாடுகளில் கொள்வதைக் கண்டு வருத்த முற்றான். இந்தச் சிந்தனைக் கடலில் மிதந்து செல்கையில் இவன் வயிற்றுக்கும் வழி தேடிக் கொள்ள வேண்டியிருந்தது. இந்த ஒரு சாண் வயிற்றை நிரப்பிக் கொள்ள பெனிடோ கீழான முறைகளை எப்பொழுதுமே கையாண்டது கிடையாது. கஷ்டப் பட்டு வேலை செய்து அதன்மூலமாக இரண்டு காசு சம்பாதித்துப் பசியைத் தணித்துக் கொள்வான். மற்றும் தன்னுடைய நிலைமை எவ்வளவு கேவலமாக இருந்தபோதிலும், அசுத்தமான இடத்தை யும், கீழ் மக்களின் கூட்டுறவையும் பெனிடோ எப்பொழுதும் வெறுத்துவந்தான். தூய்மையான ஆகாரம் பெறவும், கௌரவ மான இடத்தில் படுக்கவும் போதிய பணம் தன் கைவசமில்லா விட்டால் பெனிடோ, தனக்கு வேண்டிய ஆகாரத்தை வாங்கிக் கொண்டு வெளியிடங்களில் சென்று தின்றுவிட்டு எங்கேனும் ஒதுக்கமான ஓரிடத்தில் படுத்துக்கொள்வான். கீழ்த்தரமான பேச்சுக்களும், கீழ்த்தரமான செயல்களும் பெனிடோவுக்கு எப்பொழுதுமே பிடிப்பதில்லை. லாசேன் ஊருக்கும் ஜினீவா ஏரிக் கரைக்கும் இடையே ஒரு பாலம் இருந்ததல்லவா? அந்தப் பாலத்தின் அடியில் ஓரிடத்தைத் தன் படுக்கை இடமாகப் பொறுக்கியெடுத்துக் கொண்டான். நல்ல இடம் அகப்படாத பொழுது இவன் அங்கேதான் சென்று படுத்துக்கொள்வான். ஒரு சமயம் இரவு இந்தப் பாலத்தை நோக்கி இவன் வந்து கொண்டிருந்தான். அப்பொழுது நல்ல மழை. தங்குவதற்கு எங்கும் இடம் அகப்படவில்லை. வழியில் அச்சாபீ ஒன்று இருந்தது. அதன் வெளியில் உடைந்துபோன எழுத்துக்கள் போட்டு வைக்கும் மரப்பெட்டியொன்று கிடந்தது. அதை யெடுத்துத் தன்மீது கவிழ்த்துக் கொண்டு அப்படியே உறங்கி விட்டான் பெனிடோ. காலையில் யாரோ வந்து இவனை எழுப்பினார்கள். அவர்கள் யார்? இரண்டு போலீகாரர்கள்! பெனிடோ, போலீஸாரைச் சந்தித்தது இதுவே முதல் தடவை. அச்சாபீசுக்குள் சென்று திருட முயற்சித்தான் என்ற காரணத் திற்காகவோ என்னவோ, இவனைப் போலீ காப்பில் ஒரு நாள் பகலும் இரவும் வைத்திருந்து பிறகு விடுதலை செய்து விட்டார்கள்.
சில்லரை வேலைகள்
பெனிடோ சிற்றாளாக வேலை செய்துகொண்டிருந்த போது, கொத்து வேலையையும் கற்றுக்கொண்டான், முக்கிய மாக சிமெண்டு வேலையில் இவன் பெரிய நிபுணனாகி விட்டான். சில மாதங்களுக்குள் இவன் இவ்வளவு திறமை யாளனாகிவிட்டது குறித்துப் பலரும் வியந்தனர். மற்றும் புதிய வீடுகள் கட்டி முடிந்ததும் அதன்மீது கொடியை நிலை நாட்டுவது இத்தாலியர்கள் வழக்கம். இந்தக் கொடி நாட்டும் வேலையில் பெனிடோ மிகவும் கெட்டிக்காரன். இதில் ஒரு சந்தோஷத்தையும் இவன் கண்டான். ஒரு பூனைபோல் மிக வேகமாக இவன் கூரைமீதேறி, சிறிதுகூடத் தயக்கமின்றி கொடியை நாட்டிவிட்டுக் கைகொட்டுவான். கீழே இருப்பவர் அனைவரும் கைகொட்டுவார்கள்.
இந்தக் கொத்துவேலை பெனிடோவுக்கு எப்பொழுதுமே கிடைத்துக் கொண்டிருக்கவில்லை. விட்ஜர்லாந்தில் குளிர் காலம் மிக நீண்டது; கொடியது. அப்பொழுது வீடு கட்டும் வேலை அதிகமாயிராது. அந்தக் காலங்களில் என்ன செய்வது? பிழைப்புக்கு வழியென்ன? லாசேனில் ஓர் இத்தாலிய சாராய வியாபாரி இருந்தார். அவரிடம் சென்று வேலை யாளாக அமர்ந்தான் பெனிடோ. இந்த வேலை இவனுக்குப் பிடிக்க வில்லை. ஆனாலும் என்ன செய்வது? இந்த வேலைக்குச் சம்பளம், தினந்தோறும் இரண்டு வேளை ஆகாரந்தான். இரவில் படுக்க இவனுக்கு ஒரு சிறு இடம் கொடுக்கப் பெற்றிருந்தது. அந்த வியாபாரியின் மனைவி சில சமயங்களில் ஐயோ, இந்தப் பையன் எவ்வளவு சாப்பிடுகிறான்! என்று கூச்சல் போடுவாள். தினம் நான் பன்னிரண்டு மணி நேரம் நின்று வேலை செய்ய வேண்டியிருக்கிறது; அதற்குத் தகுந்தபடி ஆகாரம் வேண் டாமா? என்று பெனிடோ மறுத்துப் பேசுவான். அவ்வப் பொழுது இவன் வாடிக்கைக்காரர்களின் வீடுகளுக்குச் சென்று சரக்குகளைக் கொடுத்துவர வேண்டியிருக்கும். அதிகாலை இவன் காலுக்கும் தலைக்கும் ஒன்றும் தரித்துக்கொள்ளாமல், தூய்மையான ஓர் அரைக்கைச் சட்டையுடன் சிறு கைவண்டி யில் சரக்குகளை அடுக்கிவைத்துக் கொண்டு வீடுதோறும் சென்று கொடுத்துவருவான். இவனுடைய ஒழுங்கான முறை களைக் கண்டு சிலவாடிக்கைக்காரர்கள் இவனுக்கு இனாம் கொடுப்பதுண்டு. அதை இவன் மிகுந்த பணிவோடு பெற்றுக் கொள்வான்.
படிப்பிலே ஊக்கம்
இப்படி இவன் வேலை செய்துகொண்டிருக்கும் போது சில சமயங்களில் ஓய்வு கிடைக்கும். அநேகமாக பிற்பகல்களில் இவனுக்கு வேலை இராது. அப்பொழுது இவன் சர்வகலா சாலை மாணாக்கர்கள் போல் அழகாக உடைகள் அணிந்து கொண்டு அருகாமையிலுள்ள ஜினீவா சர்வகலாசாலைக்குச் செல்வான். அங்குப் புத்தக சாலைக்குச் சென்று பல அரிய நூற் களைப் படிப்பான். அல்லது சர்வகலாசாலையின் பேராசிரி யர்கள் நிகழ்த்தும் சொற்பொழிவுகளைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருப்பான். இதன்மூலமாக இவனுக்குப் பல அறிஞர் களுடைய பழக்கம் ஏற்பட்டது. முக்கியமாக பெனிடோவின் மனதைக் கவர்ந்தவன் வில்ப்ரேடோ பரேடோ என்ற பேராசிரி யன். இவன் சிறந்த விஞ்ஞானசாதிரி. இவனிடத்தில் பெனிடோ மிகுந்த பக்தி விசுவாசம் வைத்திருந்தான். பெனிடோ, புத்தகசாலையில் சென்று படித்த நூல்கள் பல. குறிப்பாக பிரடெரிக் நீட்ஷே1 என்ற பேராசிரியனின் நூல்கள் இவன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. இந்த நூல்களில் காணப்பெற்ற பல அரிய கருத்துக்களை இவன் மனப்பாடஞ் செய்தான். அதிகாரத்திற்கு வழி என்ற நூல் இவன் வாழ்க்கையி லேயே ஒரு முக்கியதானத்தைப் பெற்று விட்டது என்று கூறலாம்.
கொத்து வேலைக்காரனாகவும், சாராயக் கடையில் வேலையாளாகவும், சர்வ கலாசாலை மாணாக்கனாகவும் இப்படி மூன்று விதமான வாழ்க்கையைப் பெனிடோ நடத்திக் கொண்டிருந்தபோது, ஊரில் தாயாருக்கு உடம்பு அசௌகரிய மென்று செய்தி கிடைத்தது. உடனே பெனிடோ ஊருக்குச் சென்று தாயாருக்கு ஆறுதலாகப் பக்கத்தில் இருந்தான். அவளுக்கும் உடம்பு குணமாகிவிட்டது. மீண்டும் பெனிடோ லாசேனுக்குத் திரும்பினான். இப்பொழுது நான்காவது வாழ்க்கை யொன்றையும் இவன் ஏற்றுக்கொள்ள வேண்டி யிருந்தது. அதுவே அரசியல் வாழ்க்கை. இவன் லாசேனுக்குத் திரும்பிவந்தபோது இவன் கையில் பணமில்லை. கையில் காசின்றித் திரிபவர்கள் போக்கிரிகள் என்று கருதப்பெற்று அவர்களைக் கைது செய்யும் வழக்கம் விட்ஜர்லாந்தில் இருந்தது. அதன்படி பெனிடோ கைதியாக்கப்பட்டான். மற்றும் இவன் புரட்சிக்காரர் பலரோடு நட்புக் கொண்டி ருந்தான். இது போலீஸாருக்கு அதிக சந்தேகத்தை உண்டாக் கியது. ஆயினும் இவன் தன்னை விரைவில் விடுதலை செய்து கொண்டு வெளிவந்தான்.
கிறிது நாதர்
பெனிடோ, பல சமூகத்தாரோடு பழகிவந்ததால் இவனுக்குப் பல பாஷைகளில் பயிற்சி ஏற்பட்டது. இங்கிலீஷ், பிரஞ்சு, ஜர்மன், பானிஷ் முதலிய பாஷைகளில் பேச இவனுக்குத் திறமை உண்டாயிற்று. பல சமூகத்தாருடைய பழக்க வழக்கங்களும் இவனுக்குப் பரிச்சயமாயின. முக்கியமாக ருஷ்யப் புரட்சிக் கூட்டத்தாருடன் அதிக நட்புக் கொண்டிருந்தான். அக்காலத்தில் ருஷ்யாவில் ஜார் ஆட்சியின் கொடுமை மிகுந்திருந்தது. அந்த ஆட்சியின் கொடுமையை உணர்ந்தவர்கள், தாங்களாகவோ அல்லது அரசாங்கத்தாருடைய தொந்தரவு களுக் கஞ்சியோ வெளிநாடுகளில் வந்து குடியேறினர். இத்தகைய கூட்டத்தினர் லாசேனிலுமிருந்தனர். இவர்கள் அடிக்கடி ஒன்றுகூடி ருஷ்யாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்கள். இந்தச் சம்பாஷணைகளில் பெனிடோவும் கலந்து கொள்வான். அக்காலத்தில் மத்திய ஐரோப்பாவில் சமூகவாதக் கட்சிக்குச் சிறிது செல்வாக்கு இருந்தது.
பெல்ஜிய சமூகவாதக் கட்சியின் தலைவனாகிய வாண்டர் வெல்டே (Vandervelde) என்பவனுக்கு விட்ஜர்லாந்திலும் செல்வாக்கு உண்டு. அவன் நல்ல அறிவாளி. தர்க்க நிபுணன். ஆனால் மிதவாதி. அவனுடைய சமூக வாதம் சொல்லளவில் அடங்கியிருந்தது. பெனிடோவுக்கு இந்த மிதவாதப்பேச்சுக்கள் பிடிப்பதேயில்லை. ஒருநாள் லாசேன் நகர மண்டபத்தில் கிறிது நாதரும் பொதுவுடமையும் என்னும் விஷயத்தைப் பற்றி வாண்டர்வெல்டே பேசுவதாக ஏற்பாடு செய்யப் பெற்றிருந்தது. சில ருஷ்ய நண்பர்களுடன் பெனிடோவும் இக் கூட்டத்திற்குச் சென்றான்.
ஹாலில் ஏராளமான கூட்டம். ஆண்களும் பெண்களும் நிரம்பியிருந்தனர். வாண்டர்வெல்டே எழுந்து, கிறிது நாதர் சமூகவாதக் கொள்கைகளையே பின்பற்றினார் என்பதைப் பல ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டி மிக அழகாகப் பேசி முடித்தான். ஜனங்களின் கரகோஷமும் அடங்கியது. திடீ ரென்று, வாண்டர் வெல்டேயின் தத்துவங்கள் யாவும் தவறு என்று ஒரு குரல் எழுந்தது. கூட்டத்தினர் திகைத்துப் போயினர்; குரல் எழுந்த பக்கத்தை நோக்கினர். பெனிடோ ஒரு நாற்காலி யின் மீது நின்றுகொண்டிருந்தான். நான் பேச விரும்புகிறேன். எனக்கு அநுமதி வேண்டும் என்றான் பெனிடோ. மாவிலும் படாமல் மாங்காயிலும் படாமல் பேசிய வாண்டர்வெல்டேயின் பேச்சைக் கண்டித்து நீண்டதொரு பிரசங்கம் செய்தான் பெனிடோ.
சக்தி வாய்ந்த ரோம ஏகாதிபத்தியத்தின் கட்டிடத்தைத் தகர்த் தெறிந்த குற்றம் கிறிது நாதரையும் அவருடைய சீடர்களையும் சார்ந்த தாகும். ரோமாபுரியை உன்னத நிலைக்குக் கொண்டுவந்த ரோமர்களை அமரர்களாக்கிய உறுதியையும் வீரத்தையும் அவர்கள் கொலை செய்து விட்டார்கள். சீஸர்கள் வீற்றிருந்த சிங்காசனத்தின் மீது உறுதி, வீரம், ஆண்மை இவையினை வைத்துப் போற்றுவதற்குப் பதிலாக, பணிவு, வறுமை, பொறுமை இவைகளைக் கொண்டு புகுத்தினார்கள். இவை அடிமைகளின் ஒழுக்கமன்றோ? ஒரு காலத்தில் சர்வசக்தியோடு கூடி யிருந்த ரோம ஏகாதிபத்தியம், இந்த அடிமைத் தத்துவங்களினால் அரிக்கப் பெற்று, வடக்கே இருந்து வந்த அநாகரிகர்களுடைய படையெடுப்பை எதிர்த்து நிற்கும் ஆற்றலை இழந்துவிட்டது. இந்தக் குற்றத்தை ஏசு நாதர் செய்தாரென்று இங்குப் பகிரங்கமாகக் கூற விரும்புகிறேன்
பெனிடோ பிரசங்கத்தின் இந்த முடிவுரையைக் கேட்டு, ஜனங்கள் புதிய சக்தி பெற்றவர்கள் போல் ஆரவாரஞ் செய் தார்கள். வாண்டர் வெல்டே, பெனிடோ அபூர்வ சக்தி வாய்ந்தவ னென்பதை உணர்ந்தான்.
V நாடுவிட்டு நாடு பாய்தல்
அன்னமெஸேயில் வாழ்க்கை
லாசேனிலுள்ள அரசாங்க அதிகாரிகளுக்கு நல்ல பிள்ளையாக நடந்துகொள்ள பெனிடோவுக்கு தெரியவில்லை. அங்கிருந்த இத்தாலிய தானீகரும், பெனிடோவிடம் அதிக அன்பு காட்டினார் என்று சொல்வதற் கில்லை. இத்தாலிய அரசாங்க உத்தியோகதர்களும், விட்ஜர்லாந்து அரசாங்க அதிகாரிகளும் பெனிடோ விஷயத்தில் சந்தேகங்கொண்டார் கள். வாண்டர்வெல்டேயை இவன் எதிர்த்துப் பேசியது அதிகாரிகளின் சந்தேகத்தை இன்னும் வலுக்கச் செய்தது. இதன் விளைவாக, பெனிடோ தேசப்பிரஷ்டம் செய்யப்பட்டான். இவன் நட்புக்கொண்டிருந்த ருஷ்ய நண்பர்களைப் பிரிய வேண்டியிருந்தது. முக்கியமாக அக் கூட்டத்தைச் சேர்ந்த ஹெலேன் என்ற ஓர் அழகிய பெண்ணைவிட்டுப் பிரிவது இவனுக்குச் சிறிது வருத்தமாகவே இருந்தது. ஆயினும் வேறு வழியின்றி, லாசேனைவிட்டுப் புறப்பட்டு பிரான்ஸின் எல்லைப் புறத்தி லிருந்த அன்னமெஸே (Annamesse) என்ற ஊருக்குச் சென்று வசிக்கத் தொடங்கினான். அங்கே முதலில் ஒரு கொத்தனாக வாழ்க்கையைத் தொடங்கினான். சில நாட்கள் கழித்து, கௌரவமான ஒரு குடும்பத் தாருடன் நட்புக்கொண்டு, அக்குடும்பத்துப் பிள்ளைகளுக்குப் பாடஞ் சொல்லிக்கொடுத்து வந்தான். இதன் மூலமாக இவன் பல பெரிய மனிதர்களை அறிமுகப்படுத்திக் கொண்டான். நகர உதவி அதிகாரி, இவனை அடிக்கடி விருந்துக்கு அழைத்தார். தவிர, இவன் பலராலும் அறியப்படுவதற்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது. கியோவன்னா என்ற ஒரு கிழவி, சீட்டுக்கட்டின் மூலமாக ஆரூடம் சொல்லும் வித்தையை இவனுக்குக் கற்றுக்கொடுத்திருந்தாள். இஃது, இச் சமயத்தில் இவனுக்குப் பெரிதும் உபயோகமாயிருந்தது. நகர உதவி அதிகாரியின் மனைவி, இவனிடம் ஆரூடம் கேட்டாள். இவன் சீட்டுக் கட்டின் உதவியைக் கொண்டு, நெருங்கிய உறவினர் ஒருவர் நோயாய்ப்படுத்துக் கொண்டிருக் கிறாரென்றும் அது சம்பந்தமாக அவளுக்கு ஓர் அவசரக் கடிதம் கிடைக்கு மென்றும், ஆனால் எவ்விதகவலையும் வேண்டுவதில்லையென்றும் பெனிடோ ஆரூடம் கூறினான். இவன் கூறியபடி எல்லாம் உண்மையாக நடந்தது. இதனால் இவன் பெயர் பலரிடையிலும் பரவலாயிற்று.
ஒரு விநோத சம்பவம்
ஒருநாள், லாசேனில் தன்னோடு உறவாடி வந்த ஹெலன் என்ற பெண்ணைப் பார்த்துவிட்டு வரவேண்டுமென்ற எண்ணம் பெனிடோவுக்குத் தோன்றியது. ஆனால், லாசேனுக்கு எப்படி போவது? அதிகாரிகளுக்குத் தெரியாமலன்றோ போக வேண் டும். எனவே, ஒரு நாள் மாலை இருள் படர்ந்த பிறகு லாசேனுக்குக் கால்நடையாகப் புறப் பட்டுச் சென்றான். இவன் மேற்படி பெண்ணின் இருப்பிடத்தை அடைந்து கதவைத் தட்டினான். ஹெலேனும் மற்றொரு பெண்ணும் அச்சமயம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். கதவைத் திறந்து பார்த்தார்கள். பிரஷ்டம் செய்யப்பெற்ற பெனிடோ! ஆச்சரியப்பட்டார்கள்! அன்போடு வரவேற்று உபசரித்தார்கள். அவர்களுடனிருந்து உண்டுகளித்த பெனிடோ, அன்றிரவே திரும்பிச் செல்ல வேண்டுமென்றும் அதிகாரிகள் பார்த்துவிட்டால் ஆபத்தாக முடியுமென்றும் கூறினான். ஆனால் ஹெலேனும் அவள் தோழியும் இவனைத் தகைந்து அன்றிரவு அங்கேயே கழிக்கும்படி வற்புறுத்தினார்கள். அவர்கள் தங்கள் படுக்கையை அவனுக்குக் கொடுத்துவிட்டுத் தாங்கள் வேறோர் அறையில் சென்று படுத்துக்கொண்டார்கள். தங்கள் அறையில் வேறொருவன் படுத்துக் கொண்டிருப்பதை அவர்கள் வீட்டு எஜமானியிடம் தெரிவிக்கவில்லை. பெனிடோ, ஹெலேன் படுக்கையில் அயர்ந்து நித்திரை செய்துவிட்டான். பக்கத்து அறையில் இருந்த வீட்டு எஜமானி, அந்நியன் ஒருவன் வந்து படுத்துக்கொண்டிருப்பதை எப்படியோ தெரிந்து கொண்டு விட்டாள். திருடன் வந்திருப்பதாகக் கருதி புருஷனை எழுப்பினாள். அவன் முணுமுணுத்துக்கொண்டு துப்பாக்கி சகிதம் கிளம்பினான். பெனிடோ பாடு எப்படியிருக்கும்? உரக்கக் கத்துவதா? அல்லது தான் திருடனல்லன் என்று தெரிவித்து விடுவதா? ஒன்றும் புரியாமல் மௌனமாக இருந்தான். இவன் அதிர்ஷ்டவசமாக எஜமானனுடைய துப்பாக்கியில் குண்டுகள் இல்லை! உடனே போலீ டேஷனுக்குச் சென்று தகவல் தெரிவித்து போலீஸாரை அழைத்துவரச் சென்றான். இப் பொழுது பெனிடோவின் நிலைமை என்ன? அரசாங்க உத்திரவை மீறி லாசேனுக்குத் திரும்பிய குற்றம் ஒன்று; அந்நியர் இடத்தில் உத்திரவின்றிப் பிரவேசித்த குற்றம் ஒன்று. தன்மீது எந்தக் குற்றஞ் சுமத்தப்படுமோ வென்று பல விதமாக பெனிடோ யோசித்துக் கொண்டிருந்தான். அது மட்டுமல்ல; தனக்கு இடங் கொடுத்த இரண்டு திரீகளையும் இது பாதிக்குமல்லவா? அவர்களை இப்பொழுது காட்டிக்கொடுக்கலாமா? எனவே, தான் திருடவந்தவனென்று ஒத்துக்கொண்டு திருட்டுக் குற்றத் திற்குரிய தண்டனையை ஏற்றுக்கொள்வதென்று தீர்மானித் தான். வீட்டு எஜமானன், போலீ டேஷன் பூட்டியிருக்கிற தென்றும், அங்கு ஒருவரும் இல்லையென்றும் சொல்லிக் கொண்டு திரும்பிவந்தான். இதற்குள் உதயமாகிவிட்டது! அந்த இரண்டு பெண்களும் திரும்பி வந்தனர். நடந்த வரலாற்றை பெனிடோ வாயிலாகக் கேட்டுக் குலுங்கச் சிரித்தனர். பெனிடோவும், தப்பியது தம்பிரான் புண்ணியமென்று கருதி, அன்னமேஸேயிக்குத் திரும்பி விட்டான்.
அன்னமேஸேயில் இவன் அதிகநாள் தங்கியிருக்க வில்லை. அங்கிருந்து மார்சேல்ஸுக்குச் சென்றான். அங்குச் சில தொழிலாளர் சங்கங்களுடன் தொடர்பு கொண்டதன் பயனாக, அதிகாரிகளால் வெளியேற்றப்பெற்று, விட்ஜர்லாந்திலுள்ள ஜுரிச் நகரத்திற்குவந்து சேர்ந்தான். ஜுரிச்சில் ஜர்மானியர் களுடைய ஆதிக்கம் அதிகமாக இருந்தது. இதனால் ஜர்மானிய நாகரிகத்திலிருந்து பல அம்சங்களைக் கற்றுக்கொள்ள இவனுக்குச் சந்தர்ப்பமேற்பட்டது. ஓர் இயக்கத்தை- அஃது எத்தகையதா யிருப்பினும்- எப்படி தோற்றுவிப்பது, அதை எப்படி ஒழுங்காக நடத்துவது என்ற இரண்டு அம்சங்களை ஜுரிச்சிலேயே இவன் நன்கு கற்றுக் கொண்டான்.
புரட்சிக்காரர்களுடன் கூட்டுறவு
ஜுரிச்சில், பெனிடோ, பாலாபனாப் (Balabanoff) என்ற ஒரு ருஷ்ய திரீயின் நட்பைப்பெற்றான். இவள் புரட்சிக் கூட்டத்தைச் சேர்ந்தவள். விட்ஜர்லாந்துக்கு ஓடிவந்த புரட்சிக்காரர் கூட்டத்திற்கு உயிர்நாடி போலிருந்தாள். இவளைச் சூழ்ந்து ஒரு கூட்டம் எப்பொழுதும் இருந்து கொண்டிருந்தது. இவர்களிலே ஒருவனாக பெனிடோவும் இருந்தான். ஆனால் இவர்களில் லெனின், ட்ரோட்கி, பெனிடோ ஆகிய மூவரே உண்மை யான புரட்சிக்காரர்கள் என்பது பாலாபனாப்பின் நம்பிக்கை. ருஷ்யாவில் போல்ஷ்வெக்கர் ஆட்சியை நிலைநாட்டிய லெனின், ட்ரோட்கி இவர்களுடன் பெனிடோ நெருங்கிய உறவுகொண்டிருந்தான் என்று இதனால் தெரியவருகிறது. அவர்களும் பெனிடோவிடம் அதிக மதிப்பு வைத்திருந்தார்கள். இந்த பாலாபனாப் என்ற பெண், பிற்காலத்தில் ‘அவந்தி! என்ற பத்திரிகையின் ஆசிரியராக பெனிடோ நியமிக்கப்பெற்ற போது, உதவி ஆசிரியராக வந்து சேர்ந்தாள். பத்திரிகையின் கொள்கை சம்பந்தமாக இருவருக்கும் அடிக்கடி அபிப்பிராய பேதங்கள் உண்டாகும். இதன்விளைவு, நாட்கள் கணக்காக இருவரும் பேசாமலேயே இருப்பார்கள். காரமுள்ள வாக்கியங்கள் அடங்கிய துண்டுச் சீட்டுகள் மூலமாகவே பேசிக்கொள்வார்கள். கடைசி யில் பாலாபனாப் ‘அவந்தி!யிலிருந்து பிரிந்துசென்றுவிட்டாள்.
ஜுரிச்சில், ஒருநாள்இரவு இவன் ஒரு ஹோட்டலில் சென்று உணவு உட்கொண்டான். அப்பொழுது இவன் கையில் சுமார் இரண்டே கால் ரூபாயே இருந்தது. எனவே, இரண்டு ரூபாய்க்கு உட்பட்டே உணவுவகைகள் கொண்டுவரும்படி பரிசாரிகையிடம் கூறினான். அவள் கொண்டுவந்துவைக்க, இவன் பேசிக்கொண்டே எல்லாவற்றையும் சாப்பிட்டான். கடைசியில் பரிசாரிகை, மூன்று ரூபாய்க்கு பில் கொடுத்தாள். இவன் கையில் இருந்தது இரண்டேகால் ரூபாய் தான். தான் சொல்லாத ஆகாரவகையொன்றைக்கொண்டு கொடுத்து இப்பொழுது அதிக பணம் கேட்பதைக் குறித்து இவன் கண்டித்து, அதிகமாகக் கொடுக்க முடியாதென்று கூறினான். ஹோட்டல் சொந்தக்காரர், பரிசாரிகையின் தவறல்ல என்று கூறி, முழுத் தொகையைக் கொடுக்க வேண்டுமென்று வற் புறுத்தினார். பெனிடோ, தன்கையில் பணமில்லையென்றும் மறுநாள் வந்து மிகுதித் தொகையைக் கொடுப்பதாகவும் கூறினான். இவனிடத்தில் அவநம்பிக்கை கொண்டவர் போல் ஹோட்டல்காரர் பேசினார். பெனிடோவுக்குக் கோபம் வந்துவிட்டது. நான் என்ன ஏமாற்றுகிற பேர்வழியா? என்று உதடு துடித்தான். வாய்ச்சண்டை முற்றியது. புட்டிகள் பறந்தன; மேஜைகள் இடம்விட்டு இடம் நகர்ந்தன; நாற்காலிகள் அங்கு மிங்குமாக வட்டமிட்டன. சிலருக்கு இரத்த காயமும் ஏற்பட்டது. ஹோட்டல்காரர், கடைசிவரை பெனிடோவிட மிருந்து இந்த அதிக தொகையைப் பெற முடியாமலே போய்விட்டது.
விட்ஜர்லாந்திலிருந்து வெளியேற்றம்
ஜுரிச்சிலிருந்தும் அதிகாரிகள் பெனிடோவை விரட்டி விட்டார்கள். பிறகு ஜர்மனிக்குச் சென்று சில காலம் வசித்தான். இங்குக் கொத்து வேலை செய்து ஜீவனம் நடத்திக்கொண்டான். மிகுதி நேரத்தை, பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள் எழுதுவதிலும் சமூகவாதக் கட்சியின் சார்பாகப் பேசுவதிலும் கழித்தான். இப்படியாக இவன் பல இடங்களிலும் அலைந்து திரிந்து, 1904-ம் வருஷத்தில் விட்ஜர்லாந்திலுள்ள பெர்ன் என்ற ஒரு நகரத்திற்கு வந்து சேர்ந்தான். இந்த ஒரு நகரமே இவன் வரவைத் தடை செய்யவில்லை. மற்ற இடங்கள் யாவும் இவனுக்கு மறுக்கப் பட்டிருந்தன. பெர்னில், இவன் ஒரு பெண்ணினால் நடத்தப்பெற்ற போஜன விடுதியில் தங்கி வந்தான். இவனுடன் வேறோருவனும் வசித்துக்கொண்டிருந்தான். இருவருக்கும் ஒருநாள் பேச்சு பலமாக முற்றியது. இந்தப் பேச்சுக்குக் காரணம் விளங்கவில்லை. அரசியல் விஷயங்களில் கருத்து வேற்றுமை காரணமாக இந்த வாக்குவாதம் ஏற்பட்டதோ, அல்லது, விடுதியை நடத்தும் பெண்மணியின்மீது இருவரும் காதல் கொண்டு அதன் விளைவாக எழுந்த பொறாமை காரணமாக ஏற்பட்டதோ தெரியவில்லை. வாதப்போர் நடத்திக்கொண் டிருந்த இருவரும் திடீரென்று வீட்டைவிட்டு வெளியேறினர். ஒரு மைதானத்திற்குச் சென்று, கைத் துப்பாக்கிகளைக் கொண்டு, தத்தம் கட்சிக்கு நியாயந்தேடிக் கொள்ளத் தீர்மானித்தனர். துப்பாக்கிச் சப்தம் கேட்டது. ஆனால் இருவருக்கும் காயம் உண்டாகவில்லை. அரசாங்க அதிகாரிகளுக்கு இந்த விஷயம் எப்படியோ தெரிந்துபோய், பெனிடோவை மட்டும் கைது செய்து கொண்டு போயினர். விசாரணை நடந்தது. முடிவாக விட்ஜர்லாந்திலிருந்தே வெளியேற்றப்பட்டான். முன்னர், நகரத்திலிருந்து நகரத்திற்கு வெளியேற்றம்! இப்பொழுது நாட்டிலிருந்தே வெளியேற்றம்!
மீண்டும் இத்தலிக்குத் திரும்புதல்
பெனிடோ விட்ஜர்லாந்திலிருந்து வெளியேற்றப் பெற்ற சமயம் ஈடர் பண்டிகை. அதனால் போலீ அதிகாரிகளும் சிறைக் காவலாளர்களும் ரஜாவிலிருந்தனர். இதன் பயனாக பெனிடோ ஈடர் பண்டிகையைச் சிறைச் சாலையிலேயே கொண்டாட வேண்டியிருந்தது. இவன் அடைக்கப் பட்டிருந்த அறையில் ஒரு வயோதிகனும் இருந்தான். அவன் தேகத்தில் கந்தைகளே காணப்பெற்றன; அவன் கண்களில் அச்சம் குடி கொண்டிருந்தது; ஒரு நடைபிணம் போலவே காணப்பட்டான். அவன் ஒரு ஜர்மானியன். அவனை ஜர்மனிக்குத் திருப்பி அனுப்பப் போவதாகச் சொல்லப்பெற்றது. ஆனால் பிறகு விசாரித்ததில் அவன் ஒரு போலீ உளவாளி என்றும், பெனிடோவைப்பற்றித் துப்பறிவதற்காகவே அவ்வறையில் வைக்கப்பட்டிருக்கிறானென்றும் தெரிய வந்தன. உடனே பெனிடோ, சிறைச்சாலை அதிகாரியிடம் சென்று, தன்னோடு ஓர் உளவாளி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து, அவனை உடனே அப்புறப் படுத்த வேண்டுமென்று கூறினான். அதிகாரி யும் அதற்கிசைந்து அப்படியே செய்தார்.
கடைசியில் ஈடர் பண்டிகை முடிந்ததும், பெனிடோவைப் போலீ அதிகாரிகள் இத்தாலிய எல்லைப் புறத்திலுள்ள கோமோ (Como) என்ற ஊரில் கொண்டுவிட்டனர். கோமோவில், சமூகவாதக் கட்சியினர் பலர் பெனிடோவுக்குப் பழக்கமா யிருந்தனர். இவர்கள் பெனிடோவை டேஷனில் வரவேற்று உபசரித்தனர். அன்றிரவு கோமோ உயர்தரக் கலாசாலையில் ஆசிரியபதவி வகித்த ரென்சி என்பாருடைய வீட்டில் பெனிடோவுக்கு விருந்து நடைபெற்றது. விருந்து முடிந்ததும் இவன் படுப்பதற்குத் தூய்மையான ஒரு படுக்கை அளிக்கப் பட்டது. ஆனால் பெனிடோ, அதை உபயோகிக்கவில்லை. சிறைவாசத்தினாலும் ரயில் பிராயணத்தினாலும் தான் மிக அசுத்தமடைந்திருப்பதாகவும், இந்த அசுத்தத்துடன் அப் படுக்கையில் படுத்துக்கொண்டால் அது கெட்டுப் போய்விடு மென்றும் இவன் கருதி, அருகாமையிலிருந்த ஒரு சாய்வு நாற்காலியிலேயே இராப்பொழுது முழுவதையும் கழித்தான். மறுநாள் காலை, தாய்நாட்டின் குளிர்பூங்காற்றைச் சுவாசித்துப் புத்துயிர் பெற்றார் பெனிடோ.
VI ஆராய்ச்சியும் அநுபவமும்
ராணுவப் பயிற்சி
1904-ம் வருஷம் இத்தலிக்குத் திரும்பி வந்த பெனிடோ முஸோலினி, வெரோனா என்ற ஊருக்குச் சென்று அங்கு அப்பொழுது தங்கியிருந்த பதினோராவது பெர்சாகிளீரி ரெஜிமெண்டில் (11th Bersaglierri Regiment) ஒரு சாதாரண போர் வீரனாகச் சேர்ந்துகொண்டான். புரட்சிக் கூட்டத்தைச் சேர்ந்த இவன் ராணுவ ஒழுங்குகளுக்குக் கட்டுப்பட்டிருக்க முடியுமா வென்று முதலில் பலரும் சந்தேகித்தனர். ஆனால் இவன் வந்து சேர்ந்த ஒரு வாரத்திற்குள், இவனைப் போல் ஒழுங்கான படை வீரனைக் காண்டல் அரிது என்னும் படியாகப் பெயரெடுத் தான். பெர்சாகிளீரி ரெஜிமெண்டில் எல்லாரையும் சேர்த்துக் கொள்வது கிடையாது. இத்தாலிய ராணுவத்திற்குக் கௌரவம் தேடிக்கொடுக்கிறவர்களே இதில் சேர்த்துக் கொள்ளப்பட் டார்கள் என்று கூறலாம். இந்த ரெஜிமெண்டைச் சேர்ந்த படை வீரருக்கு விசேஷமான பயிற்சிகள் அளிக்கப்பெற்றன. ஓடுதல், குதித்தல், தாண்டுதல், பாரமான சாமான்களைத் தூக்கு தல் முதலியவற்றில் இப்படையினர் விசேஷ திறமையுடைய வர்களா யிருந்தனர். பெனிடோ, இவற்றில் மிகத் தேர்ச்சிபெற்று முதற் பரிசு பெறுவதற்குரியவனானான். இதனால் ராணுவ உயர்தர உத்தியோகதர்கள் இவனிடம் விசேஷ அன்பு செலுத்தினார்கள்.
தாயின் பிரிவு
1905-ம் வருஷம் பிப்ரவரி மாதம் ஒரு நாள் காலை பெனிடோவை யாரோ வந்து எழுப்பினார்கள். தாயார் மரணப் படுக்கையிலிருப்பதாகவும், உடனே புறப்பட்டு வர வேண்டு மென்றும் டோவியாவிலிருந்து தகப்பனார் தந்தி கொடுத் திருந்தார். உடனே படைத் தலைவனிடம் ரஜா பெற்றுக் கொண்டு மறு வண்டியிலேயே டோவியாவுக்குப் புறப்பட்டான் பெனிடோ. இவன் போய்ச்சேருவதற்குள் தாயார் பரலோகம் சென்றுவிட்டாள். பெனிடோ, மூன்றுநாள் வரை கண்ணீர் ஆறாய்ப் பெருக்கினான். ரோஸாமால்தோனி அம்மையார், பெனிடோவுக்குத் தாயாராக மட்டும் இல்லை; வரும் பொரு ளுரைக்கும் மந்திரியாகவும், உற்ற துணை வனாகவும் இருந்தாள். தகப்பனாரும் மகனும் பரபரம் ஆறுதல் கூறிக்கொண்டு மன அமைதி பெற்றார்கள். ஒரு நாள் பெர்சாகிளீரி ரெஜி மெண்டின் படைத்தலைவனிடமிருந்து, பெனிடோவின் தாயார் தேக வியோகமானதைக் குறித்து அநுதாபங் காட்டி ஒரு கடிதம் கிடைத்தது. இந்தக் கடிதம் பெனிடோவின் துயரத்திலே ஒரு பிரகாசத்தைக் காட்டியது. இந்தக் கடிதத்திற்கு, பெனிடோ உடனே பின்வருமாறு பதில் எழுதினான்:
கௌரவம் வாய்ந்த எனது தலைவரே!
தாங்களும் படையிலேயுள்ள மற்றச் சகோதரர்களும் சேர்ந்து அனுப்பிய அநுதாபச் செய்திக்கு என் தகப்பனார், சகோதர சகோதரிகள் இவர்களின் சார்பாகவும் என் சார்பாகவும் எனது மனப்பூர்வமான வந்தனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துக்ககரமான நாட் களில் எனக்குக் கிடைத்த பல கடிதங்களை நான் தீயிலே எறிந்துவிட்டிருக் கிறேன். அவற்றில், சாதாரண அநுதாபந் தெரிவிக்கும் வாக்கியங்கள் அடங்கியிருந்ததே இதற்குக் காரணம். ஆனால் தங்களுடைய கடிதத்தையோ, என் தலைவரே! அருமையான எனது ஞாபகச் சின்னங் களில் ஒன்றாகக் கருதிக் காப்பாற்றி வைப்பேன்! தாங்கள் கூறியுள்ளவாறு, என் தாயாரின் புத்திமதிப்படி நடப்பதைத் தவிர எனக்கு வேறு கடமை யில்லை. அவளுடைய ஞாபகத்தைப் போற்றி, ஒரு போர் வீரனுக்கும் குடி மகனுக்கும் உரிய கடமைகளைச் செய்துகொண்டு செல்வேன். அரற்றலும் புலம்பலும் பெண்களுக்கே உரியன. ஆண் மகனாயிருக்கப்பட்டவன் அழுவதில்லை; மௌனமாகத் துன்பத்தை ஏற்று மரிக்கிறான். மனிதனாகத் தோன்றியவன் வேலை செய்துகொண்டே நேரிய பாதையில் செல்லவேண்டும்; தான் பிறந்த குடும்பத்தினுடைய, தாய் நாட்டினுடைய, பரம்பரையான கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டும். பயனற்ற பேச்சுக்களால் இந்தக் கௌரவத்தைக் காப்பாற்ற முடியுமா? முடியாது. தீவிரமான வேலையைச் செய்துதான் காப்பாற்ற முடியும். தாய்நாட்டைத் தங்களுடைய ரத்தத்தினாலே ஒன்றுபடுத்திய வீரர்களை நினைவுபடுத்திக் கொள்வது அழகான காரியந்தான். ஆனால், இத்தலி பூகோள அமைப்பிலே ஒன்று என்று மட்டும் கருதி, அதனை இழிவுபடுத்த வடக்கேயிருந்து அநாகரிகர்கள் படையெடுத்து வருவார்களானால், அவர்களுக்கு எதிர் நிற்க, நமது மார்பகத்தை உயிருள்ள கவசமாகத் தயார் செய்து கொள்வது அதனினும் அழகான செயலல்லவா? நான் நினைப்பது இதுவே.
எனது வணக்கத்தை, தலைவரே! அங்கீகரித்துக் கொள்ளுங்கள்.
பிரேதாப்பியோ
26-2-1905
பெனிடோ முஸோலினி
பெனிடோவின் இந்தக் கடிதத்தை, படைத் தலைவன் ஒரு முறைக்கு இரு முறை படித்தான். சாதாரண ஒரு படை வீரனிட மிருந்து இத்தகைய அறிவு நிரம்பிய, உறுதியான கடிதத்தை அவன் எதிர்பார்க்கவில்லை. இக்கடிதமெழுதியவன் சாதாரண படை வீரனா? அல்லது ஒரு தீர்க்கதரிசியா?
படித்தலும் படிப்பித்தலும்
தகப்பனாருக்கு ஆறுதல் கூறும் பொருட்டு பெனிடோ, டோவியாவில் சில காலம் தங்கியிருந்தான். இவன், இந்தக் காலத்தை எப்படி செலவழித்தான்? மாலை வேளைகளில் கிராமத்தின் முக்கியதர்கள் எல்லாரையும் ஒன்று கூட்டித் தனக்குப் பிடித்த இரண்டு நூல்களை வாசித்துக் காண்பிப்பான். இவன் உரக்கப் படிப்பான். படிக்கும்போது அந்தந்த சந்தர்ப் பங்களுக்கேற்றாற்போல் முகத்திலே உணர்ச்சிகளை மாற்றிக் கொள்வான். நாடக மேடையில் ஒரு நடிகன் எப்படி நடித்துக் காட்டி பிறர்க்கு உணர்ச்சியையூட்டுவானோ அப்படியே இவனும் நடிப்பான். கேட்பவரும் உணர்ச்சி பெறுவார்கள். அலெ ஸாந்த்ரோ முஸோலினி சிறிது விலகி உட்கார்ந்து கொண்டு, தன் மகன் உரக்கப் படிப்பதை மகிழ்ச்சியோடு கேட்டுக் கொண் டிருப்பார். அந்த மகிழ்ச்சியிலே ஒரு கர்வமும் கலந்திருந்தது. தன் மகனைச் சான்றோனெனக் கேட்ட தந்தைக்குக் கர்வ மிராதா? மற்றும், மனைவியை விட்டுப் பிரிந்த பிறகு வாழ்க்கை, சாரமற்ற கரும்பு போன்றதென்று கருதிய அலெஸாந்த்ரோ முஸோலினிக்கு, அவ்வாழ்க்கையில் இன்பத்தைக் காட்டிக் கொடுத்தவன் பெனிடோவன்றோ? மக்களினாலே பெருமை அடையும் தந்தைமாரைக்காண்டல் உலகத்திலே அரிது. அவ்வரியரிலே ஒருவரன்றோ அலெ ஸாந்த்ரோ?
பெனிடோவுக்குப் பிடித்தமான நூல்கள் யாவை? கார்டூஷி1 எழுதிய காவியங்களும், மாசெவில்லி2 எழுதிய இளவரசன் என்ற நூலும் பெனிடோவின் பிற்கால அரசியல் வாழ்க்கையைப் பண்படுத்தின என்று கூறலாம். இந்த நூல்களை இவன் பன்முறை படித்தும், பிறருக்குப் படித்துக்காண்பித்தும் இருக்கிறான்.
இவை தவிர, ஜர்மன் தத்துவ ஞானியாகிய ஆர்தர் ஷோபன்ஹேர் (1788-1860) முதலியோருடைய நூல்களிலும் பெனிடோ ஈடுபட்டிருந்தான். மற்றும் புத்த மத தத்துவங் களையும், இந்து சமய உண்மைகளையும் இவன் நன்கு ஆராய்ச்சி செய்தான்.
இவன் இந்த மாதிரியான நூல்களைப் படிக்கும் போது அவ்வப் பொழுது சிலர் கேள்விகள் கேட்பார்கள். அவற்றிற்குத் தகுந்தபடி சமாதானம் சொல்வான். சில சமயங்களில் வாதங்கள் நிகழும். அப்பொழுது பெனிடோ தன் கட்சியை ஆதரித்து வெகு உக்கிரமாகப் பேசுவான். இப்படியாக டோவியாவில் இவன் பொழுது கழிந்தது. ஆனால் இவன் ஆற்றலை உபயோகப் படுத்துவதற்கு டோவியா மிகச் சிறிய இடம் அல்லவா? தவிர டோவியாவிலேயே இருந்தால் ஜீவனம் நடப்பதெப்படி? எனவே வெளியூர்களுக்குப் புறப்பட்டான்.
ஆசிரியத் தொழிலும் அரசியல் வாதமும்
1905-1906ம் வருஷங்களில் முதலில் கானிவா (Caneva) என்ற ஊரிலும், பிறகு டோல்மெஸோ (Tolmezzo) என்ற ஊரிலும் பெனிடோ பள்ளிக்கூட ஆசிரியனாக அமர்ந்து வேலை பார்த்தான். வகுப்பில் பாடஞ்சொல்லிக் கொடுக்கும் போது கோபத்தினால் கண்களை உருட்டுவான்; பற்களை நறநறவென்று கடிப்பான்; முகத்தைச்சிடுசிடுவென்று வைத்துக் கொள்வான்; தன் அபிப்பிராயத்தை வலியுறுத்திக் கூறும்போது மேஜைமீது குத்துவான். ஆயினும் பிள்ளைகள் இவனிடத்தில் விசுவாச மாகவே நடந்து கொண்டார்கள். டோல்மெஸோவில் இவன் வகுப்பில் மொத்தம் நாற்பது பிள்ளைகள் படித்துக் கொண் டிருந்தார்கள். இவன் வசித்திருந்த இடத்திற்கும் பள்ளிக்கூடத் திற்கும் இரண்டரை மைல் தூரம் இருந்தது. தலையில் தொப்பி யின்றியும் தேகத்தில் குளிர் சட்டை இன்றியும் இவன் தினம் இரண்டு முறை நடந்துசென்றுவருவான். வழி நெடுக ஏதேனும் ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டு செல்வானேயன்றிச் சும்மா செல்லமாட்டான். இடையில் ஒரு பாலம் உண்டு. அந்த பாலத் தருகில் வரும்போது மட்டும் புதகத்தை மூடிவிட்டு, சிறிது நேரம் ஆற்று நீரை உற்றுப்பார்த்து இயற்கையில் ஈடு பட்டிருப்பான்.
பள்ளிக்கூட நேரங்களைத் தவிர, மற்ற நேரங்களில் காண் டொட்டி என்ற ஒரு பாதிரியாரிடம் கிரேக்க பாஷையையும், லத்தீன் பாஷையையும் கற்றுக்கொண்டான். இவற்றில் பூரண பாண்டித்திய முமடைந்தான். தவிர, அவ்வப்பொழுது பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு அரிய விஷயங்களைப் பற்றி அழகாகப் பேசிவந்தான். இத்தகைய பிரசங்கமொன்றில், பொது தாபனங்களை மிகப் பலமாகத் தாக்கிப் பேசியதன் பய னாக இவனைக் கைது செய்யுமாறு அதிகாரிகள் உத்திரவிட்டனர். ஆனால் இவன் கைது செய்யப்படாமல் தப்பித்துக் கொண்டு மலைப் பக்கங்களில் சுமார் ஒரு வாரம் வரை ஒளிந்து கொண்டிருந்தான். அப்பொழுது இவனுடைய நண்பர்கள் ரகசியமாக இவனுக்கு ஆகாரம் அனுப்பிவந்தார்கள். கடைசி யில் ஆள் அகப்பட வில்லையென்ற காரணத்தினால் இவனைக் கைது செய்யும் யோசனையை அதிகாரிகள் கைவிட்டு விட் டார்கள். இவனும் வெளி வந்தான். வந்த சில நாட்களுக்குள் ஊரில் நடுவிலுள்ள சதுக்கத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடாகியிருந்தது. ஏராளமான ஜனக்கூட்டம். ஆனால் யார் பேசுவதாக இருந்ததோ அவர் வரவில்லை. உடனே பெனி டோவைப் பேசச்சொன்னார்கள். சுமார் ஒன்றரை மணி நேரம் வாசாம கோசரமாகப் பேசி முடித்தான் பெனிடோ. ஆனால் இந்தப் பேச்சு இவன் உத்தியோகத்திற்குத் தீங்குவிளைவித்தது. இவ்வளவு துணிச்சலுடன் பொதுக் கூட்டங்களில் பேசக்கூடிய ஒருவன், ஆசிரியனாக இருக்கலாமாவென்று பள்ளிக்கூட அதிகாரிகள் கருதினார்கள். எனவே இவன், பள்ளிக் கூடத்தி னின்று விலக வேண்டியதாயிற்று.
பிறகு ஒனேகிளியா என்ற ஊருக்குச் சென்று அங்கிருந்த ஒரு பள்ளிக்கூடத்தில் பிரெஞ்சு பாஷையைப் போதிக்கும் ஆசிரியராக நியமனம் பெற்றான். விடுமுறை நாட்களில் தன் சொந்த கிராமத்திற்கு வந்து தகப்பனாரோடு வசிப்பான். இப்படி வசிக்கும்படியான சந்தர்ப்ப மொன்றில் டோவியாவில் ஒரு சிறிய சச்சரவானது முதலாளி தொழிலாளிப் போராட்டமாகப் பரிணமித்தது. இதில் பெனிடோ கலந்துகொண்டதன் பலனாக இவன்மீது கிரிமினல் வழக்குத் தொடரப் பெற்று, பத்து நாள் சிறைவாச தண்டனை விதிக்கப்பெற்றான். இந்த மாதிரி சமயங்களில் கூட இவன்மன அமைதியை இழந்தவனன்று. இவனைக் கைது செய்வதற்காகப் போலீஸாரும், குதிரைப் படை வீரரும் விலங்குகளை எடுத்துக்கொண்டுவந்து நின்றனர். அப் பொழுது பெனிடோ, ஒரு புத்தகத்தை ஆழ்ந்து படித்துக் கொண் டிருந்தான். போலீஸாரின் வருகையைக் கேட்டு தலைநிமிர்ந்து பார்த்து இந்த அத்தியாயத்தைப் படித்து முடித்துவிட்டு உங்களுடன் வருகிறேன் என்று மிகச் சாந்தமாகக் கூறினான். அப்படியே முடித்துவிட்டுக் கைகளை நீட்டினான். போலீஸார் விலங்குகளை மாட்டி அழைத்துச் சென்றார்கள். இதைப் பார்த்து போலீஸாரே ஆச்சரியப்பட்டுப் போய்விட்டனர்.
சிறையிலிருந்து வெளி வந்ததும், பெனிடோ, ட்ரெண்ட் (Trent) பிரதேசத்திலிருந்த தொழிலாளர் சங்கத்திற்குக் காரிய தரிசியாக இருந்து வேலை பார்க்கும்படி அழைக்கப் பெற்றான். இத்தலியின் வட பாகத்தி லிருந்த ட்ரெண்ட், ட்ரெடே, போலா ஆகிய இந்த மூன்று பிரதேசங்களும் அப்பொழுது ஆதிரியாவின் ஆளுகைக்குட்பட்டிருந்தது. இங்கு வசித்து வந்த இத்தாலியர்கள், ஆதிரியாவின் ஆட்சிக்குட்பட்டிருக்க விரும்பியவர்கள் என்றும், இத்தலியோடு சேர்ந்திருக்க விரும்பி யவர்கள் என்றும் இரு கட்சியினராக இருந்தார்கள். மற்றும், இவர்களுக்குள், தொழிலாளி முதலாளி வேற்றுமை வேறே இருந்தது. எனவே இந்தப் பிரதேசங்களை அடக்கியாண்டு கொண்டிருப்பது ஆதிரிய அதிகாரிகளுக்கு மிகச் சுலபமாக இருந்தது.
ட்ரெண்டில்செஸாரேபாட்டிடி (Cesare Battisti) என்ற ஒருவன் இருந்தான். இவன் சமூகவாதக் கட்சியின் தலைவன். ஆயினும் ஆதிரியாவின் ஆதிக்கத்தின் கீழ் இத்தலியின் சில பிரதேசங்கள் இருப்பதை இவன் விரும்பவில்லை. இதனால் ஆதிரிய அரசாங்க அதிகாரிகள் இவனை வெறுத்து வந்தார்கள். இவன் 1916ம் வருஷம் ஜூலை மாதம் 12ந் தேதி அதிகாரிகளால் தூக்கிலிடப்பட்டான். பெனிடோ, ட்ரெண்டில் போய்ச் சேர்ந்தபோது, பாட்டிடிக்கு அதிக செல்வாக்கு இருந்தது. இவன் அப்பொழுது போபோலோ1 என்ற ஒரு பத்திரிகையை ஆரம்பித்து நடத்தி வந்தான். அதில் பெனிடோ, கட்டுரைகள் பல எழுதி வந்ததோடு, தன் வேலையுடன் பத்திரிகையின் உதவி ஆசிரியராகவும் வேலை பார்த்துவந்தான். இவன் மாதச் சம்பளம் ஏறக்குறைய அறுபது ரூபாய். இதைக் கொண்டு இவன் திருப்தியடைந்தான். தனது வேலை நேரம் போக மிகுதியான நேரத்தில் சிலருக்கு பிரெஞ்சு மொழியில் பாடங்கள் சொல்லிக் கொடுத்தும், பிடில் வாசித்தும், மேல் வரும்படி சம்பாதித்துக்கொண்டான். இந்தச் சந்தர்ப்பத்திலே தான் பெனிடோ, இந்திய கணித சாதிரத்தையும் ஆராயத் தொடங்கினான். மற்றும், ஜர்மன் மொழியிலும் பானிஷ் மொழியிலும் உள்ள இலக்கிய நூல்களை ஆராய்ந்தான். கிளாப்டாக்2 என்ற ஜர்மன் கவியின் தேவ தூதன் என்ற காவியத்தில் இவனுக்குப் பெருமதிப்பு உண்டு. இக்காவியத்தைப் பற்றி இவன் ஒரு விமர்சனமும் எழுதினான். மற்றும், பிளேட னும் இத்தலியும்3 என்றொரு கட்டுரை எழுதினான். இவை யெல்லாவற்றையும்விட மற்றொரு முக்கியமான நூலை இவன் எழுதி முடித்தான். உலக சமயங்களின் தத்துவத்தை ஒரு சரித்திர ரூபமாக இவன் வரைந்திருந்தான். இதில் இவன் தன் ஆராய்ச்சித் திறமையை நன்கு காட்டியிருந்தான் என்று சொல்லப்படுகிறது. ஆனால், துரதிருஷ்ட வசமாக இந்நூல் வெளி வரவேயில்லை. இந்த நூலின் கையெழுத்துப் பிரதி தயாராகி அச்சாபீசுக்குச் செல்லும் தறுவாயிலிருந்தது. பெனிடோவின் மீது காதல் கொண்டிருந்த ஒரு பெண் வசம் இந்தக் கையெழுத்துப் பிரதி சிக்கியது. கையெழுத்துப் பிரதியில் காணப்பெற்ற புதிய சொற் களைக் கண்டு, தன் காதலனான பெனிடோ, வேறு பல பெண் களைக் காதலிக்கிறானென்றோ, அல்லது பல பெண்கள் தனது நாயகனைக் காதலிக்கிறார்களென்றோ கருதி, அந்த பெண்க ளுடைய புதிய பெயர்களே இவையென்றும், இக் கையெழுத்துப் பிரதியில் காணப்பெற்றுள்ள யாவும் காதற் கடிதங்களென்றும் நம்பி அதை அப்படியே அக்கினி தேவனுக்கு அர்ப்பணம் செய்து விட்டாள். ஒரு துண்டுக் காகிதத்தைக்கூட வெளியில் எறிந்து விட அவள் விரும்ப வில்லை. இந்தச் சமயத்திலே ஜான் ஹ1 என்ற மதச் சீர்திருத்தவாதியைப் பற்றி ஒரு சிறந்த ஆராய்ச்சி நூல் எழுதினான். மற்றும் போபோலோ பத்திரிகையோடு வெளி யான அநுபந்தத்தில் பல சிறு கதைகளை எழுதி வெளியிட்டான். இதனால் பத்திரிகைக்குச் சந்தாதார்களும் பெருகினர். பாட் டிடிக்கும், பெனிடோவிடம் பரம சந்தோஷம் உண்டாயிற்று. ஆனால் இந்தச் சந்தோஷம் வெகு சீக்கிரத்தில் மாறிவிட்டது.
வாய்மை காத்த பெற்றி
ஆதியாவின் ஆதிக்கத்துக்குட்பட்டிருந்த இத்தாலியப் பிரதேசங்கள் மீண்டும் இத்தலிக்கே போய்ச் சேர வேண்டு மென்ற கிளர்ச்சியில் பெனிடோ ஈடுபட்டிருந்ததன் காரணமாக ஆதிரிய அதிகாரிகள் இவனைச் சிறையில் அடைத்தார்கள். சிறைவாசம் முடிந்ததும் இவன் ஆதிரிய அதிகார எல்லையி லிருந்து அப்புறப்படுத்தப் பெற்றான். ஆலா என்ற பிரதேசத் தோடு, இத்தலியின் எல்லைப்புறம் முடிந்துவிடக் கூடாதென்று இவன் கிளர்ச்சி செய்ததற்கு வஞ்சம் தீர்ப்பது போல், அதே ஆலா பிரதேசத்திலிருந்த எல்லைப்புற போலீ காப்பு நிலையத் தில் ஒரு நாள் மாலை இவன் கொண்டுவந்து நிறுத்தப்பெற்றான். இவன் கைகள் விலங்கிடப்பெற்றன. போலீ டேஷன் அறையில் இவன் அடைக்கப்பட வேண்டும். ஆனால் போலீ டேஷன் மூடப் பெற்றிருந்தது. எனவே, அருகாமையில் இருந்த ஒரு தனிக் கட்டிடத்திற்கு இவன் அழைத்துச் செல்லப்
பெற்றான். இது போலீ அதிகாரியின் வீடு. அவர் ஹங்கேரிய தேசத்துப்பிரபு வமிசத்தைச் சேர்ந்தவர். அவர் தமது மனைவியுடன் இன்பமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். பெனிடோவைப் பார்த்ததும் அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. பெனிடோ! இப்பொழுது மணி ஒன்று. இத்தலியை நோக்கிச் செல்லும் வண்டி ஏழு மணிக்குத்தான் புறப்படுகிறது. இடை யிலேயுள்ள இந்த ஆறு மணி நேரம் வரை உன்னை விடுதலை செய்துவைத்தால், ரெயில் புறப்படுவதற்கு முன்னாடி சரியாக வந்து சேர்ந்துவிடுவாயா? நீ வாக்குக் கொடுப்பதாயிருந்தால் உன்னை இந்த ஆறு மணி நேரம் வரை விடுதலை செய்கிறேன் என்றார். பெனிடோ அப்படியே திரும்பி வந்துவிடுவதாக வாக்குக் கொடுத்தான். போலீ அதிகாரியும் விடுதலை செய்தார். பெனிடோவும், ஊரைச் சுற்றிப் பார்த்து விட்டு, ரெயில் புறப் படுவதற்குச் சரியாக அரை மணி நேரம் முன்னாடி ரெயில்வே டேஷனுக்கு வந்து சேர்ந்தான். போலீ அதிகாரியும் டேஷ னில் வந்து காத்துக்கொண்டிருந்தார். தமது உத்தியோகத்திற்கே ஆபத்து வரக்கூடிய விதமாக அவர் அன்பாக நடந்துகொண்டத னால், அந்த அன்பு எங்குத்தவறாக உபயோகிக்கப்பட்டுவிடுமோ என்று கவலை யுடனிருந்தார். பெனிடோவை டேஷன் பிளாட்பாரத்தில் பார்த்ததும் அவர், தமது தொப்பியைக் கழற்றி வணங்கினார். பெனிடோவும் புன் முறுவலுடன் பதிலுக்கு வணங்கினான். இந்தச் சம்பவத்தைப் பெனிடோ பிற்காலத்தில் அடிக்கடி நினைவுபடுத்திக்கொண்டு, போலீ அதிகாரியின் பெருமையை வியந்து பேசுவான். பெனிடோவின் பிரிவைக் குறித்து பாட்டிடி தனது பத்திரிகையில் உருக்கமானதொரு கட்டுரை வரைந்தான். அதில் பின்வரும் வாக்கியங்கள் கவனிக்கத்தக்கன:
பெனிடோவின் பிரிவினால் நமக்குத் துக்கம்; ஆனால் அவருக்குக் கௌரவம். நமக்கு நஷ்டம்; அவருக்கு வெற்றி.
VII மறு மலர்ச்சியும் சமூக வாதமும்
இரண்டு நண்பர்கள்
பெனிடோ, தன் தாய்நாடு வந்து சேர்ந்ததும் ட்ரெண் டீனோ-ஒரு சமூகவாதியின் கருத்து என்ற தலைப்புடன் தொடர்ச்சியாகச் சில கட்டுரைகள் எழுதினான். இது பின்னர் நூல் வடிவாகவும் வெளி வந்தது. இந்தக் கட்டுரைகளை இவன் லாவோஸே என்ற பத்திரிகையில் வெளியிட்டு வந்தான். இந்தப் பத்திரிகையின் ஆசிரியர்களாயிருந்த வர்கள் இரண்டு இளைஞர்கள். கியோவன்னி பாபினி (Giovanni Papini) என்றும் கைஸெப்பே பிரெஸோலினி (Guiseppe Prezzolini) என்றும் பெயருடைய இவ்விருவரும், இத்தலியின் மறுமலர்ச்சிக்காகப் பெரிதும் பாடுபட்டார்கள். வெறும் அரசியல் கிளர்ச்சி செய்து அதன்பயனாக இந்த மறுமலர்ச்சியைக் காண இவர்கள் விரும்பவில்லை. புதிய லட்சியங் களோடு கூடிய இலக்கியங் களை வெளியிடுவதன் மூலமாகவும், சமூகத் தொண்டு செய் வதன் மூலமாகவும் இந்த மறுமலர்ச்சியைக் காண விரும்பி னார்கள். இதற்காக இவர்கள் பல பத்திரிககைகள் கண்டு, ஒவ்வொன்றின் மூலமாக ஒவ்வொரு விதமான உணர்ச்சியை ஊட்டி வந்தார்கள். இவர்களுடன் பெனிடோ நெருங்கிய நட்புக் கொண்டான்.
அக்காலத்தில்-அதாவது 1908-10ம் வருஷங்களில் இத்தலி யின் தேசீய வாழ்வு மிகவும் சீர்குலைந்திருந்தது. சமூகவாதம் என்ற பெயரால் வெற்றுரைகள் பல கிளம்பின. ஆடம்பரங்கள் மலிந்தன. அரசியலை, பண வருவாய்க்குச் சாதகமாக உப யோகிக்கும் கூட்டத்தார் தோன்றி அட்டகாசம் செய்தனர். இவர்கள் உள்ளத்திலே உணர்ச்சியில்லை; உதட்டிலே மட்டும் எல்லாரும் ஒரு குலம்; எல்லாரும் ஓரினம்; எல்லாரும் ஒரு வாழ்வு வாழ வேண்டும் என்ற போலிப் பேச்சு. வெறும் ஆர வாரத்திலேயே ஜனங்கள் மயங்கியிருந்தார்கள். கவைக்குதவாத வர்களெல்லோரும் சமூகவாதிகள் என்று சொல்லிக் கொண் டார்கள்.
சமூக வாதம் என்றால் என்ன?
இச்சமயத்தில் சமூகவாதம் என்றால் என்னவென்பதைப் பற்றிச் சிறிது தெரிந்து கொள்ள வேண்டுவது அவசியமல்லவா? சமூகவாத தத்துவங்கள் என்று இப்பொழுது நாம் கூறுவன வற்றுள் பெரும்பாலன, பல நூற்றாண்டுகளுக்கு முன்னரிருந்தே-அதாவது பிளாடோ (கி.மு. 429-347) என்ற கிரேக்க தத்துவ ஞானி எழுதிய குடியரசு என்ற நூல் வெளியான காலத்தி லிருந்தே- ஆங்காங்குச் சமூக அமைப்பில் இயங்கிக்கொண்டு வந்திருக்கின்றன. ஆனால் கார்ல்மார்க் (கி.பி. 1818-1883) என்ற ஜர்மானிய அறிஞர்தான், சோஷலிஸம் என்ற சமூகவாதக் கொள்கையைத் தனிப் பட்ட ஒரு கொள்கையாக அமைத்துப் பிற்காலத்தில் ஓர் இயக்கமாக வளர்வதற்கு அடி கோலினார். ஒரு பொருளின் மதிப்பு, அஃது உற்பத்தி செய்யப்படுவதற்குச் செலவழிக்கப்படும் முயற்சியைப் பொறுத்திருக்கிறது. பொருளை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள், தங்களுடைய தேவைக்கு அதிகமாகவே உற்பத்தி செய்கிறார்கள். இந்த அதிக உற்பத்தியினால் வரும் லாபத்தை இவர்கள் அநுபவிப்பதில்லை; தொழிலை வைத்து நடத்தும் முதலாளிகளே அநுபவிக்கிறார் கள். இதனால், முதலாளிகள் தொழிலாளிகளுக்கு விரோதிகள். இவர்களுடைய ஆதிக்கத்தினின்று விடுதலை செய்துகொள்வது தொழிலாளர்கள் கடமை இதற்காக, இவர்கள் ஒன்றுபட்டிருத்தல் அவசியம். இப்படி ஒன்று பட்டிருப்பதோடு, பொருள் களை உற்பத்தி செய்யும் தாபனங்களையெல்லாம் இவர்கள் சொந்த மாக்கிக் கொண்டு, ஜன சமூகத்தின் நன்மைக்காக, உற்பத்தி செய்யப் பெறும் பொருள்களை விநியோகிக்க ஏற்பாடு செய்தலும் அவசியமாகும். இதனால் ஒரு முதலாளியின் கீழ், பல தொழிலாளிகள் வேலை செய்து அந்த முதலாளிக்கு லாபம் சம்பாதித்துக் கொடுப்பது நின்று போவதோடு, தொழிலாளி களே முதலாளிகளாகி விடுகிறார் களாதலால், உற்பத்தி செய்யப்பெறும் பொருள்களும் ஜனங்களுக்கு மலிவாகக் கிடைக்க இடமுண்டாகிறது. ஏனென்றால், முதலாளி, தன் சுய லாபத்தை முன்னிட்டோ, அல்லது பிற காரணங்களாலோ, பொருள்களின் விலையை அதிகப்படுத்த வேண்டியதன் அவசியம் அடியோடு இல்லாமற் போகிறதல்லவா? முடிவாக, தொழிற் தாபனங்களைத் தொழிலாளர் களுக்கே சொந்த மாக்கிவிடுவதும், தொழிற் தாபனங்களில் உற்பத்தி யாகும் பொருள்களை எல்லாருக்கும் ஒரு படித்தாக வழங்குவதும் சமூக வாதத்தின் சுருங்கிய கொள்கையென்று கூறலாம். இந்தக் கொள்கை களைச் செயலில் கொண்டு வருவதற்கு, உலகத்தி லுள்ள ஒவ்வொரு நாட்டிலும், அந்தந்த நாட்டியல்புக்கு ஏற்றவாறு கட்சிகளும் சங்கங்களும் காணப்பெற்றன. இவைகள் மேற்படி கொள்கைகளை அநுஷ்டானத்தில் கொணர, பலவித முறைகளையும் கையாண்டன. இந்த முறைகளிலே தான் கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டு, சச்சரவுகளும் குழப்பங்களும் நிகழும். இங்கிலாந்திலேயே தொழிற்கட்சியென்றும், சுயேச்சைத் தொழிற் கட்சியென்றும், பேபியன் (Fabian) கட்சியென்றும் எத்தனை கட்சிகள் நிலவுகின்றன! இவை யாவும் சமூகவாதக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவையேயாகும்.
1910ம் வருஷத்திற்கு முன்னர் இத்தலியில் இயங்கிக் கொண்டுவந்த சமூகவாத இயக்கமானது, தொழிலாளிகளுக்கு அதிக நன்மையைச் செய்யாதிருந்ததோடு, முதலாளிகளின் ஆதிக்கத்தை அதிகப்படுத்தத் துணையாகவும் இருந்ததென்று சொல்லலாம். மற்றும், சமூகவாதம் என்ற பெயரால், தலைவர் பலர், இத்தலியில் அந்நியர் ஆதிக்கம் அதிகரித்ததற்குத் துணை யாயிருந்ததோடு, தன் தேசம், தன் பாஷை என்று கூறுவது குறுகிய மனப்பான்மையாகும் என்ற எண்ணத்தையும் ஜனங் களிடையே புகுத்திவிட்டனர். இதனால் இத்தலியில் வசித்து வந்த இத்தாலியர்கள் நாமிருக்கு நாடு நமது என்பதறியாத நிலையில் இருந்தார்கள் என்று சொல்லலாம். இந்த நிலையி லிருந்து ஜனங்களை மாற்றவே பாபினியும் பிரெஸோலினியும் அரும்பாடுபட்டார்கள். ட்ரெண்ட் நகரத்தில், தான் கண்ட சம்பவங்களைப் பற்றி பெனிடோ எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை களிலும் இந்தத் தத்துவங்களை விளக்கிக் காட்டினான். சர்வதேச சகோதரத்துவமானது, உயர்ந்த லட்சியந்தான். ஆனால் அதற்காக சுய தேசாபிமானத்தை இழந்து விடலா குமோ? தான் பிறந்த நாட்டின்மீதே ஒருவனுக்குப் பற்று இல்லையென்றால், பிற நாடுகளின் மீது அவனுக்கு எப்படி பற்று உண்டாகும்? அப்படி உண்டாகும் பற்று அதிவாரமில்லாத கட்டிடமாகவன்றோ அமையும்? இப்படி அமையும் கட்டிடத் திலே, அடிமை, பேராசை, பொறாமை முதலிய பேய்களே வாழும். இதை நன்கு உணர்ந்திருந்தான் பெனிடோ. இதனை ஜனங்கள் உணராதவரை ஒரு நாட்டின் மீது மற்றொரு நாடு ஆதிக்கங் கொள்வதற்குச் சமயம் பார்த்துக்கொண்டேயிருக்கு மென்றும், உலகத்தின் பலபாகங்களிலும் சிதறிக் கிடக்கும் ஜர்மானியர் அனைவரும் ஒன்றுபட்ட ஓர் இனத்தவர் என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு ஜர்மனியில் தோன்றிய இயக்கத்தினின்று இத்தலி பாடங் கற்றுக்கொள்ள வேண்டிய அம்சங்கள் பல உள்ளனவென்றும் இவன் மேற்படி கட்டுரைகளில் வற்புறுத்தி வந்தான். 1914ம் வருஷத்திலே தொடங்கப் பெற்ற ஐரோப்பிய மகா யுத்தத்தின் சூசகங்களை இவன் இக்கட்டுரை களிலேயே தெரிவித்திருந்தான். இத்தாலி யர், பிறரால் எளிதில் அவமதிக்கப்படக்கூடிய தன்மையில் இராமல் உடல் உரமும் மனத்திண்மையும் கொண்டவர்களாய் இருக்க வேண்டுமென்று இவன் பிரசாரஞ்செய்து வந்தான்.
இத்தாலியர் தன் மதிப்புள்ள சமூகத்தினராக வாழ வேண்டுமானால், முதலில் அவர்கள் தாய்மொழிப் பற்றுடைய வர்களாக வேண்டுமென்று பெனிடோ கருதினான். ஒரு தேசத் திலே தோன்றும் தேசீய இயக்கம் உண்மையான வெற்றியை யடைய வேண்டுமானால், அது தாய்மொழி வளர்ச்சியை முக்கிய துணையாகக்கொள்ள வேண்டும். பெனிடோ, ட்ரெண்டில் வசித்துவந்த காலையில், அங்கு வசித்த இத்தாலியர்கள் இத்தாலிய மொழியைப் பேசாமல் பலவித பாஷைகளைப் பேசி வந்ததையும், இதனால், இவர்களனைவரும் இத்தாலியர் களாயிருந்தும் ஒற்றுமையற்றவர்களாயிருப்பதையும் நேரில் கண்டிருந்தான். எனவே, தாய்மொழியின் அவசியத்தை இவன் வற்புறுத்தியதில் ஆச்சரிய மில்லையல்லவா? பிற்காலத்தில் இவன் தோற்றுவித்த பாசிட் கட்சியின் தத்துவங்களை இப்பொழுது முதலே இவன் மறை முகமாகப் பிரசாரஞ் செய்யத் தொடங்கினான் என்று கூறினும் மிகையாகாது.
VIII பத்திரிகைத் தொழிலும் பிரசாரமும்
வாரப்பத்திரிகையின் ஆரம்பம்
ஆதிரிய அதிகாரிகளால் ட்ரெண்டிலிருந்து வெளி யேற்றப்பெற்ற பெனிடோ முஸோலினி 1909ம் வருஷம் இறுதி யில் தனது கிராமத்திற்கு வந்து சேர்ந்தான். அடுத்தாற் போலுள்ள பார்லி என்ற ஊரில் சமூகவாதி களின் சங்கமொன்று இருந்தது. அதன் காரியதரிசியாக இவன் நியமிக்கப் பெற்றான். மாதம் ஏறக்குறைய அறுபது ரூபாய் சம்பளம். அப்பொழுது இவனுக்கு வயது இருபத்தெட்டு. இந்தச் சொற்ப சம்பளத்தில், இவன், தனது மனைவி, ஒரு குழந்தை இவர்கள் அடங்கிய சிறு குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டியிருந்தது. இதற்குமேல் தனக்குச் சம்பளம் வேண்டாமென்றும் இவன் சொல்லி விட்டான். சமூக வாதக்கட்சியின் கொள்கைகளைப் பிராசாரஞ் செய்யவே, இவன் இந்தப் பதவியில் நியமிக்கப்பெற்றான். ஆனால் இவனுடைய பரந்த அறிவுக்கும் சுறு சுறுப்புக்கும் இந்த வேலை போதுமானதாயில்லை. மற்றும், வெறும் மேடைப் பிரசங்கங்களினால் மட்டும் ஒரு கட்சியை வளர்க்க முடியா தென்றும், பத்திரிகை மிக அவசியமென்றும் இவன் கருதினான். எனவே, வகுப்புவாதம்1 என்ற பெயருடன் ஒரு வாரப் பத்திரிகையை ஆரம்பித்தான். இதன் முதல் இதழ் 1910ம் வருஷம் ஜனவரி மாதம் வெளியாயிற்று. பத்திரிகை சம்பந்தமான எல்லா வேலைகளையும் இவன் ஒருவனே செய்து கொண்டான். சில சமயங்களில் அச்சடிக்கும் வேலையிலும் இவன் துணை செய்தான். என் மனத்திருப்திக்காக நான் வேலை செய்கிறேனே தவிர, சம்பளத்திற்காக வேலை செய்யவில்லை என்று இவன் அடிக்கடி கூறுவான். தன்னுடைய கருத்துக்களைச் சிறிதும் ஒளிமறைவின்றிக் கூற, தனக்கென்று ஒரு பத்திரிகை ஏற் பட்டதைக் குறித்து இவன் மகிழ்ச்சியடைந்தான். ஆனால் இவன் இந்தப் பத்திரிகையை ஆரம்பித்தது எந்த இடத்தில்? யாரிடையே இவன் பிரசாரஞ் செய்ய வேண்டியிருந்தது? இவற்றை நாம் கவனித்துப் பார்ப்போமானால் இவனுடைய உழைப்பின் பெற்றி புலனாகும். அக்காலத்துக் கிராம வாசிகள், முக்கியமாகப் பார்லி கிராமத்தைச் சுற்றியிருந்தவர்கள், புதக சாலைகளைவிட மதுபானக் கடைகளையே அதிகமாக நாடினார்கள்; நனவு உலகத்தைவிட கனவு உலகத்திலேயே வாழ விரும்பினார்கள்; வீரத்தை விரட்டியடித்துவிட்டு கோழைத் தனத்தை ஆபரணமாகக் கொண்டார்கள்.
இத்தகைய மனப்பான்மையுள்ளவர்களிடையே என்ன விதமான பிரசாரம் செய்யமுடியும்? அதுவும் ஓர் அணா விலையுள்ள சிறிய பத்திரிகையைக் கொண்டு! இவனுடைய லட்சியங்கள் எவ்வளவு உயர்வுள்ளனவாக இருந்த போதிலும், உள்ளூர் வாசிகளின் ஒத்துழைப்பின்றி இவன் என்ன செய்ய முடியும்? சிறு பையனாயிருந்தது முதல் இவனை எல்லாரும் அறிந்திருந்த இடத்திலிருந்து இவன் தலைவனாக அங்கீகாரம் பெறுதல் எங்ஙனம்? எங்கேயாவது ஓர் ஆதாரம் கொடுங்கள்; நான் இந்த உலகத்தையே ஆட்டி வைக்கிறேன் என்று ஒரு கிரேக்க தத்துவ ஞானி கூறினார். அந்தக் கூற்றில் பெனிடோ வுக்குப் பூரண நம்பிக்கை இருந்தது.
பதினேழு நூற்றாண்டுகளாக அடிமை வாழ்விலே ஈடுபட்டிருந்த இத்தலி, மிகப் பிரயாசையின் பேரில்ஆனால் அதி சீக்கிரமாக- விடுதலை யடைந்தது. ஆயினும் இத்தாலியர் கள் இன்னும் ஒற்றுமைப்பட்ட ஒரு சமூகமாகவில்லை. வட மாகாணத்தான் தென் பிரதேசத்தில் வழங்கும் பாஷையை அறிந்து கொள்ளமுடியவில்லை. ஒவ்வோர் ஊரிலும் எத்தனை விதமான கட்சி வேற்றுமைகள்! வகுப்புப் பிணக்குகள்! இத்தாலி யரின் வாழ்க்கையிலேயே ஒரு சோர்வு காணப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் நடைபெற்ற சுதந்திரப்போராட்டத்தில் எல்லா வற்றையும் இழந்த மத்திய வகுப்பார் அயர்ச்சியில் மூழ்கியிருந்தனர். இத்தலிக்குப் புத்துயிர் கொடுக்கத் தக்க தலைவர் இல்லை; ஒழுங்கான வேலைத் திட்டங்கள் இல்லை. அரசாங்க நிருவாகதர்களோ சுய நலப் பிரியர்களாயிருந்தார்கள். இந்த நிலையிலே, தேசத்தைத் தட்டி யெழுப்ப, பெரிய சாட்டை வேண்டியிருந்தது. பெனிடோ, தனது பத்திரிகையை இந்தச் சாட்டையாக உபயோகப்படுத்திக் கொண்டான். சமூகவாதக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட ஜன நாயகத்தைப் பரப்பும் முயற்சியில், எதிரிகளைக் கடுமையாகவும் ஆனால் கண்ணியமாகவும் தாக்கினான். சமூகவாதக் கொள்கையைத் தழுவி, பல பத்திரிகைகள் வெளிவந்த போதிலும், முஸோலினியின் பத்திரிகை என்ன அபிப்பிராயங் கூறுகிறது என்று தான் ஜனங்கள் கவனித்து வந்தார்கள்.
சில உதாரணங்கள்
எதிர்க்கட்சியினரை இவன் எவ்வளவு நிர்த்தாட்சண்ய மாகத்தாக்கி வந்தான் என்பதைக் கீழ்க்கண்ட வாக்கியங்களினால் தெரிந்து கொள்ளலாம்:
நமது கண்டனங்கள் உண்மையை அடிப்படையாகக் கொண்டன வென்றும், ஒழுங்கான அபிப்பிராயங்களுக்கு நாம் மதிப்புக் கொடுக்கிறோ மென்றும் நமது எதிரிகளுக்குக் கூற விரும்புகிறோம். தனி மனிதர் களைத் தாக்குவது, அவர்கள் மீது துவேஷங் கொள்வது முதலியவற்றி னின்று விலகியிருக்கவே நாம் விரும்புகிறோம். ஆனால், செல்வாக்கு, ஓட்டுகள், பணம், கட்சிக்காரர் ஆகிய இவற்றைச் சம்பாதிப்பதற்காகத் தொழிற் கட்சியில் சேரும் போலி மனிதர்களை நாம் மன்னிக்க முடியாது; மன்னிக்கப் போவதில்லை.
இன்றைய உலகமானது, இளமை மனங்கொண்ட புரட்சிக்காரர் களை உற்பத்தி செய்வதில்லை; உயிரோடு கூடிய உணர்ச்சியுள்ள புரட்சிக்காரர்களை உண்டுபண்ணுவது கிடையாது. ஆனால் பிஞ்சிலே பழுத்த, குறுகிய மனமுள்ள வயோதிகர்களையே உண்டாக்குகிறது. இவர் களுடைய ஒரே நோக்கம் பணத்துக்கும் கட்சிக்காரர்களுக்கும் வேட்டை யாடுவதுதான். இவர்கள், சிறிதும் தயக்கமின்றி, பூமி மீது மண்டியிட்டு, தங்கள் மனச்சாட்சியை விற்கத் தயாராயிருக்கிறார்கள். நமது பொருளாதார வாழ்விலும் அரசியல் வாழ்விலும் தற்போதைய தலைவர் களாயிருப்போர், ஒன்று அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர் களாகவாவது இருக்கிறார்கள்; அல்லது, தங்களுடைய அரசியலறிவை விற்று வயிறு பிழைக்கும் தொழிலுடையவர்களாகவாவது இருக்கி றார்கள்; அல்லது புரட்சியிலே நம்பிக்கையற்ற புரட்சிக்காரர்களாகவாவது இருக்கிறார்கள். அரைப் படிப்பும் அரை அறிவும் உடைய அரை மனிதர்கள்!
சமூக வாதம் என்றால் என்னவென்பதை இவன் பின் வரும் வாக்கியங்களினால் விளக்கிக் காட்டுகிறான்:
சமூகவாதம் என்பது ஒரு வியாபார முயற்சியல்ல; அரசியல்வாதி களின் ஆடற்கருவியல்ல; லட்சிய புருஷர்களின் கனவல்ல; பாமர ஜனங் களின் விளையாட்டல்ல. மனித சமூகத்தின் ஆன்ம ஒழுக்கத்தை யும் செல்வ நிலையையும் வளர்க்கும் ஒரு ஜீவ சக்தியாகும். விலங்கு நிலையிலிருக்கும் மனிதனுக்கும் மனிதத்தன்மை நிறைந்த மனிதனுக்கும் இடையே ஒரு பாலத்தை-வாழ்க்கைப் போராட்டத்திலிருந்து அமைதியான வாழ்க்கைக்கு மனித சமூகத்தை அழைத்துச் செல்லும் ஆற்றல் பெற்ற பாலத்தை-அமைக்குமாறு மனித சமூகத்தைத் தூண்டிய பெருமை யுடையது சமூகவாதம் என்கிற இந்த மஹா நாடகம்.
பெனிடோவின் அரசியல் எந்த லட்சியத்தைக் கொண் டது? இதற்கு விடை பின்வரும் வாக்கியங்களில் காண்க:
நல்வாழ்வு வாழ ஒவ்வொருவனுக்கும் உரிமையுண்டு. பட்டினி கிடக்கும் ஒரு மனிதனுடைய கையிலே புதகத்தைக் கொடுத்துப்படிக்கச் சொல்வது கொடுமையான பரிகாசமாகும். வயிறு காய்ந்து கிடக்கும் ஒரு மனிதனிடத்தில் தத்துவங்களைப் பற்றியும் லட்சியங்களைப் பற்றியும் பேசுவது இயலாத காரியம். வயிற்றுக்கில்லாது வாடும் ஜனங்கள் முன்னிலையில், கலையும், அரசியலும், விஞ்ஞானமும் இலக்கியமும் வெற்றுரைகளாகவே முடியும். முதலில் ஆகாரம். பிறகுதான் எழுத்து. வயிறு நிறைய உண்டவர்களே சிந்தனை செய்ய முடியும்.
பத்திரிகையின் தலையங்கங்களின் வாயிலாகச் சில சமயங் களில் பெனிடோ, தன்னுடைய தனித்துவத்தை வெளிப் படுத்திக்கொள்வான். ஒரு தலையங்கத்தில் பின் வரும் வாக்கியங் களை இவன் புகுத்தி யிருக்கிறான்:
நமது வாழ்க்கை ஒரு பகிரங்கக் காகிதம். அதில் அறிவு, போராட்டம், துக்கம் என்ற வார்த்தைகள் பொறிக்கப் பெற்றிருப்பதை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். நாம் வீறு கொண்டு நிற்கிறோம். ஏன்? நாம் தூய்மையுள்ளவர்களானதால்; நமக்கு நண்பர்களில்லையாதலி னால். நாம் புகழையோ, ஓட்டுகளையோ, விரும்பிக் கேட்கிறோமில்லை. பட்டவர்த்தனமாக, தாட்சண்யமின்றி, நம்மைப் பின்பற்றுபவர்கள் உள்பட எல்லாருக்கும் நாம் உண்மையை எடுத்துரைக்கிறோம். எம்மைப் பொறுத்தமட்டில், பத்திரிகை ஒரு யுத்த களமாகவே இருக்கிறது. வாளாயுதம் எஃகினால் செய்யப் பெற்றது. அதே எஃகினாலேயே எமது எழுதுகோலும் அமைந்திருக்கிறது. இந்தப் பேராயுதத்தைக் கொண்டே நாம் இதில் போராடுகிறோம். நாம் சுதந்திர புருஷர்களான படியால் இதில் நாம் இழப்பதொன்றுமில்லை.
பெனிடோ தனது பத்திரிகையை எங்ஙனம் கருதியிருந் தான் என்பதைப் பின் வரும் வாக்கியங்களினால் விளக்குகிறான்:
நாம் உயர்ந்த சம்பளம் பெறுவதற்காகப் பத்திரிகாசிரியத் தொழிலை ஏற்று கொண்டிருக்கிறோமில்லை. வருஷக் கடைசியிலே அழகாக பைண்ட் செய்து பார்த்து மகிழ பத்திரிகையை வெளியிடுகிறோமில்லை; ஒரு காலுமில்லை. பத்திரிகையே நமது கட்சி; நமது லட்சியம்; நமது ஆத்மா; வெற்றிக்கு நம்மை அழைத்துச் செல்லும் கொடி.
பார்லி சமூக வாதச் சங்கத்தின் காரியதரிசிப்பதவியை ஏற்றுக்கொண்ட பிறகு அச்சங்கத்திற்கும் சங்க அங்கத்தினர் களுக்கும் இவன் புத்துயிர் கொடுத்தான். ஒரு கணமும் இவன் சும்மா இருந்த தென்பது கிடையாது. ஓய்வென்பதே இவனுக்குத் தெரியாது. தனது பத்திரிகாசிரியத் தொழிலுடன், ஆங்காங்குச் சென்று பிரசங்கங்களும் செய்துவந்தான். ஒரு சில மாதங் களுக்குள் இவன் நூற்று முப்பது சொற்பொழிவுகள் நிகழ்த்தி னான். தன்னைப்போல் பிறரும் சுறுசுறுப்பாயிருக்க வேண்டு மென்று இவன் எதிர் பார்த்தான். அரை மனதோடு அரை வேலை செய்வது இவனுக்குச் சிறிதும் பிடிக்காது. ஓரிடத்தில் இவன் கூறியதாவது:
நாம் எவ்வளவு வேலையைச் செய்கிறோமென்பது முக்கியமல்ல; எத்தகைய வேலையைச் செய்கிறோமென்பதே முக்கியம். இடையனைப் பின் பற்றிக் கண் மூடித்தனமாகச் செல்லுவதும்-ஆனால் ஓநாய்களின் இரைச்சலைக் கேட்டுச் சிதறி ஓடுவதுமான பெரிய ஆட்டுமந்தையை விட, நம்பிக்கையோடும் மன உறுதியோடும் தனது லட்சியத்தை நாடிச் செல்கிற வீரமுள்ள ஒரு சிறிய கூட்டமே எனக்குத் தேவை.
தனது நண்பர்களில் யாராவது கொடுத்த காரியத்தைச் செய்து முடிக்காவிட்டாலோ, அல்லது அயலூர்களுக்குச் செல்லப் பின் வாங்கினாலோ இவன் பின்வருமாறு கடிந்து பேசுவான்:
ஒரு திரீயினிடத்தில் சில ஆசை வார்த்தைகள் சொல்லிவிட்டு வர, பனியிலே நனைந்து, காற்றை எதிர்த்து மைல்கள் கணக்காகச் சென்று வருவீர்கள். நமது கட்சி, நமது வாழ்க்கை, இருப்பதோ இறப்பதோ என்ற நிலையில் இருக்கும் இத்தறுவாயில் நூறுமடங்கு சுறுசுறுப்புடனும், தைரியத் துடனும், சந்தோஷத்துடனும் நீங்கள் வேலை செய்ய வேண்டாமா?
இப்படியாகப் பல வழிகளிலும் இவன் ஜனங்களுக்கு ஊக்க மூட்டி வந்தான். ஜனங்களிடத்திலே காணப்படும் சோர்வு, இவன் உற்சாகத்தைக் குன்றச் செய்யவில்லை மற்றும் சமூக வாதக் கட்சித் தலைவர்கள், உள்ளொன்று வைத்துப் புறம் பொன்று பேசுவதையும், ஒரு கட்சியின் பெயரைச் சொல்லிக் கொண்டு மற்றொரு கட்சியின் தயவைச் சம்பாதிக்க முயல் வதையும் இவன் பலமாகத் தாக்கி வந்ததோடு, ஜனங்களுக்கு இத் தலைவர்களிடமிருந்த மோகத்தையும் குறைக்கச் செய்தான்.
சமூக வாதி என்று சொல்லிக் கொள்கிறவன் சமூகவாதியாகவே இருக்கட்டும். போர்ஷ்வா1 வாகவுள்ளவன் போர்ஷ்வாவாகவே இருக்கட்டும். இவர்களுக்கிடையே சமாதானம் வேண்டாம்; சமரஸப் பேச்சுகள் வேண்டாம். இதனால் துர்நாற்றமே உண்டாகும். பாமர ஜனங்கள் போர்ஷ்வா கூட்டத்தினின்று விலகியே இருத்தல் வேண்டும். இவர்கள் வேறெவருடனும் சமரஸம் செய்து கொள்ளக் கூடாது. இவர்கள், தனியாகத் தங்கள் வகுப்புயர்வினிமித்தம் மும்முரமாகப் போராட வேண்டும். சமூகவாதக் கட்சியின் சட்டமானது, பதிலுக்குப் பதில் செய்வதிலேயே அடங்கியிருக்கிறது.
தொழிலாளர் காங்கிர
இம்மாதிரி பல வழிகளிலும் பெனிடோ, தன் கருத்துக் களைப் பத்திரிகை வாயிலாக வெளியிட்டு வந்தான். பொது ஜனங்களின் சோர்வு ஒருபுறமிருக்க, நாட்டில் அதி தீவிரக் கட்சி என்று சொல்லப்பெற்ற சமூக வாதக் கட்சிக்குள்ளும் பிணக்கு, ஊக்கமின்மை முதலியன காணப்பட்டன. 1898ம் வருஷம் மிலான் என்ற ஊரில் நடைபெற்ற கலகத்தின் விளைவாகச் சமூகவாதக் கட்சியின் தலைவர்களாகிய பிலிப்போ டுராடி என்பானும் அன்னா குலிஷியாப் என்பவளும் நீண்ட காலச் சிறைவாசத் தண்டனை விதிக்கப்பெற்றனர். இதனால் இக் கட்சியின் செல்வாக்கு குறைவுற்றிருந்தது. இந்தக் கட்சியையும் இதன் மூலமாகப் பொதுஜனங்களையும் தட்டி எழுப்ப வேண்டிய பெரிய பொறுப்பை பெனிடோ வெகு திறமையாக ஏற்று நடத்தினான். இதனால் இவன் பலருடைய கோபத்திற்கும் சாபத்திற்கும் ஆளாகாமல் போகவில்லை. மற்றும் சமூக வாதக் கட்சியின் தலைமை தாபனம் மிலான் நகரத்திலிருந்தது. இங்கிருந்து ‘அவந்தி! என்றொரு பத்திரிகை இக்கட்சியின் சார்பாக வெளிவந்து கொண்டிருந்தது. இதன் ஆசிரியராக கிளாடியோ டிரவி என்பான் இருந்தான். இவனுக்கும் பெனிடோவுக்கும் அடிக்கடி பத்திரிக்கைகளில் வாதப் போர் நிகழும். சமூகவாதக்கட்சியானது, தனித்தியங்க வேண்டு மென்றும், இத்தாலிய பார்லிமென்டில் தானம் பெறுவதற் காகப் பிற கட்சிகளை நாடுவதால், இது நாட்டிற்கு எவ்வித நன்மையும் செய்யமுடியாதென்றும், இது வழவழப்பான கொள்கைகளை விடுத்து நேரிய தீவிரமான கொள்கைகளைக் கைக்கொண்டால் ஜனங்களின் ஆதரவு கிடைக்குமென்றும், இதன் மூலமாகவே நாட்டிற்கு நன்மை உண்டாகுமென்றும் இவன் அடிக்கடி பத்திகைகளில் எழுதி வந்தான். மற்றும் அரசாங்கத்தை நடத்தும் பார்லிமெண்டரி கட்சியினரையும் இவன் விட்டுவிடவில்லை.
இத்தாலிய பார்லிமெண்ட் வேலை செய்ய வில்லை. ஒழுக்கமும் அறிவும் அற்ற இருநூற்றைம்பது பார்லிமெண்ட் அங்கத்தினர்கள்-கியோலிட்டி என்ற தலைவருக்கேற்ற அங்கத்தினர்கள்-இத்தாலி கழுத்தின் மீது அமர்ந்து நெருக்குகிறார்கள். அவர்களை நாம் வீழ்த்து வோம்; அல்லது நாம் வீழ்வோம். இத்தலியை ஆள்வதற்கு இவர்கள் கையாளும் முறைகள், சென்ற நூற்றாண்டுக் குப்பைக்கூடையிலேயே போடத் தகுதியுடையவை. தொழிற் கட்சியாளர், மற்றக் கட்சியாரோடு சேந்துழைக்க முடியாது. அப்படி உழைப்பது, பாமர ஜனங்களைத் துரோகம் செய்வதாகும். என் படையின் மீதுள்ள நம்பிக்கையைக் கொண்டுதான் நான் போராட வேண்டுமே தவிர, ஏதோ கிடைக்கப் போகிற தென்று யாருடனோ ஒன்று படுவதென்பது முடியாத காரியம்.
தொழிற் கட்சிக்கு இந்தப் பார்லிமெண்டினிடத்தில் என்ன வேலை? போர்ஷ்வாக்களோடு இஃது ஏன் ஒத்துழைக்க வேண்டும்? ஏன் இவர்கள் கியோலிட்டி அரசாங்கத்தின் கழுத்தைப்பிடித்து நெருக்கக்கூடாது? எதற்காக இவர்கள் அஞ்சுகிறார்கள்? நாம் தனியாக நின்றுவிடுவோம் என்றா? அல்லது ஜனங்களின் துவேஷத்திற்கு ஆளாக வேண்டி வருமே யென்றோ? எவன் ஜனங்களால் துவேஷிக்கப்படுகிறானோ அவன் பலசாலி என்ற உண்மையை இவர்கள் தெரிந்து கொள்ளவில்லை போலும்.
இந்தத் தீவிரமான முறைகளைப் பார்லிமெண்டரி தொழிற் கட்சியினர் விரும்பவில்லை. பெனிடோவைத் தாறு மாறாகப் பேசினர். ஆயினும் இவன் சிறிதும் சலிக்கவில்லை.
1910ம் வருஷம் அக்டோபர் மாதம் மிலானில் தொழி லாளர் காங்கிர கூடியது. அப்பொழுது பெனிடோ அங்குச் சென்று, அதி தீவிரக் கட்சியின் தலைவனாக நின்று போராடி னான். பார்லிமெண்டரி கட்சியை ஒழித்துவிட வேண்டுமென் றும், புதிய தேர்தல்கள் நடைபெற வேண்டு மென்றும், தொழிற் கட்சியானது பிற கட்சிகளுடன் சேர்ந்து ஒத்துழைக்கக் கூடா தென்றும், உடனே தேசத்தில் புரட்சியைக் கிளப்பவேண்டு மென்றும் இவன் பல தீர்மானங்கள் கொண்டு வந்தான். இவை யாவும் தோல்வியடைந்தன. கட்சித் தலைவர்கள் இவனுடைய தீர்மானங்களைப் பரிகசித்தும் பாலமாகத் தாக்கியும் தோல்வி யுறச் செய்துவிட்டனர்.
சொல்லும் செயலும்
ஆயினும் பெனிடோ, தன்னம்பிக்கை இழக்கவில்லை. மீண்டும் பார்லி கிராமத்திற்கு வந்து தனது பத்திரிகையின் மூலமாகப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினான். தன் கொள்கைகளை முன்னிலும் பன்மடங்கு ஊக்கத்துடன் வலியுறுத்தினான். மற்றும், ஜனங்களின் நன்மைக்கு விரோதமாக அதிகாரிகளால் செய்யப்பெறும் செயல்களில் இவன் காட்டிய எதிர்ப்பு சொல்லளவோடு நிற்கவில்லை; செயலாகவும் பரிணமித்தது. ஒரு சமயம், பார்லி கிராமத்தில், பாலின் விலை உயர்ந்துவிட்டது. இதைக் கண்டிக்க ஒரு பொதுக்கூட்டம் கூடியது. வழவழப்பான பேச்சுக்களோடு கண்டனத் தீர்மானங் களும் நிறைவேறின. ஆனால் பெனிடோ கூட்டத்தில் ஒரு புதிய சக்தியை உண்டுபண்ணினான். பலஹீனர்களுக்கும், பிணி யாளர்களுக்கும், பாலர்களுக்கும், விருத்தர் களுக்கும் அவசிய மான ஆகாரமாகவுள்ள பாலின் விலை எல்லோரும் வாங்கி உபயோகிக்கக்கூடிய விதமாகக் குறையவேண்டும். குறையத் தான் வேண்டும்! இனி இதைப்பற்றி எவ்வித பேச்சும் வேண்டுவ தில்லை. என்னோடு சேரவாரும் எல்லோரும் என்று கூறி விட்டு, நகர சபையின் காரியாலயத்திற்கு நேரே சென்றான். இவன் பேச்சிலே நம்பிக்கை கொண்ட கூட்டத்தினரும் அப்படியே பின்தொடர்ந்துசென்றனர். கூட்டத்தினரை வெளியே நிற்க வைத்துவிட்டு, நாலைந்து பேர்களுடன் பெனிடோ நகர சபையின் மண்டபத்திற்குள் சென்றான். தலைவரைக் கண்டு விஷயங்களைக் கூறினான். பாலின் விலை உடனே குறைக்கப் படவேண்டும். இன்றேல் நகரசபைத் தலைவரும் அங்கத்தினர்களும் கீழே தூக்கி எறியப்படுவார்கள் என்று சுருக்கமாகவும் மிடுக்காகவும் கூறினான். உடனே நகரசபைக் காரியாலத்திலிருந்து பாலின் விலை குறைத்து விற்கப்பட வேண்டும் என்று உத்திரவு பிறந்தது!
IX சிறைவாசமும் கட்சித் தலைமையும்
படையெடுப்புக்கு எதிர்ப்பு
ஆப்ரிக்கா கண்டத்தின் வட பாகத்தில் லிபியா1 என்றொரு சிறிய நாடு இருக்கிறது. இஃது உலகத்திலேயுள்ள புராதன நாடுகளில் ஒன்று. இது நெடுங்காலம் துருக்கி சுல்தான்களின் ஆதிக்கத்தில் இருந்தது. இதனைக் கைப்பற்ற இத்தாலிய அரசாங்கத்தார் கருதி 1911ம் வருஷம் செப்டம்பர் மாதம் லிபியாவின் தலை நகரமும் பெரிய துறைமுகப் பட்டினமுமாகிய டிரிபோலியில் தங்கள் படைகளை இறக்கத் தீர்மானித்தனர். இத்தலி முழுவதிலும் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. இந்தப் படையெடுப்பைப் பற்றிச் சமூகவாதக் கட்சியின் கொள்கை என்ன? கட்சியின் தலைவராகிய டுராடியும், கட்சிப் பத்திரிகை யான ‘அவந்தி!’யின் ஆசிரியர் ட்ரெவிஸூம், இத்தாலிய சமூக வாதக் கட்சியின் அறிவுக் களஞ்சியம் என்று சொல்லத்தக்க அன்னா குலிஷியாப் என்ற ருஷ்ய ஸ்திரீயும் “அவந்தி! காரியாலயத்தில் கலந்தாலோசித்தனர். அரசாங்கத்தார் இந்தப் போராட்டத்தில் இறங்கக் கூடாதென்று தீர்மானித்தனர். மறுநாள் ‘அவந்தி! பத்திரிகையின் தலையங்கம், நீண்டதொரு கண்டனத்தைத் தாங்கி வந்தது. பார்லியில் பெனிடோவும் இந்த அபிப்பிராயமே கொண்டிருந்தான். உடனே ஆங்காங்குப் பொதுக்கூட்டங்கள் கூட்டியும், பத்திரிகைகளில் கட்டுரைகள் வரைந்தும் அரசாங்கத்தின் முறையைக் கண்டித்து வந்தான். சுழற் காற்றுபோல் பல இடங்களுக்கும் சென்று பிரசாரஞ் செய்தான். பார்லியில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் இவன் பேசியது வருமாறு:
அரசாங்கத்தாரின் இந்த லிபியா படையெடுப்பை ஒவ்வொரு சமூகவாதியும் கண்டனம் செய்ய வேண்டும். பயனற்ற, மூடத்தனமான இரத்தஞ் சிந்துதலாகவே இது முடியும். நமது பணத்தை வாரி இறைத்து, ஒரு பயனுமின்றி, ஐரோப்பாவின் சமாதானத்தைக் குலைக்கிறோம். இதோ என் கையில் பூகோள புதகங்களும் படங்களும் இருக்கின்றன. இந்த லிபியா என்பது என்ன? மணல் நிறைந்த ஒரு பாலைவனம்; ஒரு சூனியப் பிரதேசம். எதற்காக, இதைத் தங்கள் நாட்டுடன் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று அரசாங்கத்தார் முனைந்து நிற்கின்றனர்? ஒருவருக்கும் தெரியாது. அரசாங்கத்தாருக்கே தெரியாது. பிறநாடு களின் மீது படையெடுப்பதென்றால், சரியான கணக்குப்போட்டுப் பார்க்க வேண்டும். எவ்வளவு பணம் செலவழிக்கவேண்டும்? எத்தனை பேர் இறந்து போவார்கள்? நாம் அடையும் லாபம் என்ன? நாம் அடையும் நஷ்டத்தை விட பெறும் லாபம் அதிகமாக இருக்குமானால், போராட் டத்தைத் தொடங்கலாம். இந்த லிபியா விஷயத்தில், நாம் எதிர்பார்க்கும் லாபமானது, நம்மிலே இறந்துபோவோருக்கும் ஈடுபடுத்த முடியாது. இதிலே செலவழிக்க வேண்டிய தொகையை உத்தேசித்தால், இந்த முயற்சியே வேண்டாமென்று தோன்றுகிறது. நமது கண்டனங்களை மீறி இந்த அரசாங்கம் இந்தப் படையெடுப்பில் இறங்குமானால் இதற்கு விரோதமாக நாம் கலகம் செய்யவேண்டும்.
பெனிடோவின் பிரசாரத்தின் பயனாக ஜனங்களுக்கு ஆத்திரம் கிளம்பியது. ஆங்காங்குக் கலகங்கள் உண்டாயின. ரெயில், டிராம் முதலியவை போகவொட்டாதபடி கலகக் காரர்கள் தடை செய்தார்கள். சில கட்டிடங்களின் பலகணிகள் உடைபட்டன. ஆனால், அரசாங்கத் துருப்புகளைக் கண்ட வுடன், கலகக்காரர்கள் ஓட ஆரம்பித்தார்கள். ஓடும் கூட்டத்தினரைக்கண்டு பெனிடோ, கோழைகள்; கோழைகள் என்று வெறுப்புடன் கத்தினான். கலகம் அடங்கியது. அரசாங் கத்தாரும் தங்கள் யுத்த முதீபுக்களை அதிகப்படுத்தினர். கடைசியில் 1912ம் வருஷம் அக்டோபர் மாதம் அவுச்சி என்ற இடத்தில் நடைபெற்ற உடன்படிக்கைப் படி லிபியா இத்தலியின் ஆதிக்கத்துக்குட் பட்டது.
விசாரணையில் வாக்கு மூலம்
ஆங்காங்குத் தோன்றிய கலகங்களை அடக்கிவிட்ட தோடு அரசாங்கத்தார் அமைந்திருக்கவில்லை. கலகத்தைத் தொடங்கியவன் பெனிடோ முஸோலினியே என்று தீர்மானித்து, இவனைக் கைது செய்தனர். இவன் மீது எட்டு விதமான குற்றங்கள் சுமத்தப்பெற்றன:-
1. அரசாங்கத்திற்கு விரோதமாக அதிகாரிகளை எதிர்த்தது.
2. சேனைக்கு ஆள் சேர்க்கும் முயற்சியைத் தகைந்தது.
3. தொழிற்சாலைகளை வேலை செய்ய வொட்டாதபடி பலவந்தப் படுத்தியதோடு, தொழிலாளர்களை வேலை செய்யாதிருக்குமாறு தூண்டியது.
4. டிராம் போக்குவரத்தை நிறுத்தியதோடு தண்டவாளங் களுக்குச் சேதம் உண்டாக்கியது.
5. தந்திக் கம்பிகள் அறுத்தது.
6. ஒரு தந்தி ஆபிஸை சேதப்படுத்தியது.
7. ஒரு ரெயில்வே இஞ்சினைப் பலவந்தமாகப் பற்றிக் கொண்டது.
8. ரெயில் தண்டவாளங்களுக்குக் குறுக்கே தந்திக் கம்பங் களைப் போட்டு வைத்திருந்தது.
1911ம் வருஷம் செப்டம்பர் மாதம் கடைசி வாரத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. பெனிடோ, தன் கட்சிக்குத் தானே ஆஜராகி வாதஞ்செய்தான். இவன் கொடுத்த வாக்குமூலத்தின் சாரம் வருமாறு:
பார்லி கிராமத் தொலிலாளர்களே, பொது வேலை நிறுத்தம் வேண்டுமென்று விரும்பினார்களே தவிர நான் விரும்பவில்லை. பார்லி தொழிலாளர்கள் என் ஆதிக்கத்தில் இருந்ததாகக் குற்றப் பத்திரிகை கூறுகிறது. ஆனால் அதற்கு மாறாக பெரும்பான்மையோர் எனக்குக் கீழ்ப்படிவதில்லை. நான் விரும்புவது போல் அவர்கள் செய்வதுமில்லை. தீர்க்கதரிசிகள் செல்வாக்கைப்போல், அலங்காரச் சொற்களைக் கொண்டு பிறரை வசப்படுத்தும் காலம் மலையேறி விட்டது. பொதுஜனக் கூட்டமானது, தன் விருப்பப்படியும் கருத்துப்படியுமே நடந்து கொள்கிறது. என்னைப் பொறுத்தமட்டில், பொருளாதார சம்பந்தமான வேலை நிறுத்தங்களையே நான் ஆதரிக்கிறேன். பொருள்களுக்கு நாசமுண் டாக்கக் கூடிய வேலை நிறுத்தங்களை நான் ஆதரிக்கவில்லை.
என்னுடைய கண்டனத்தைத் தெரிவிப்பதற்காக நான் ஒரு தந்திக் கம்பத்தைப் பூமியிலிருந்து பெயர்த்தெடுக்கலாம். ஆனால், ஓடும் ரெயில் வண்டிகளை வீழ்த்திவிட வேண்டுமென்ற நோக்கத்துடன், தண்டவாளங் களின் குறுக்கே அந்தக் கம்பங்களைப்போட்டு வைக்கக்கூடாது. ஏனென்றால், ரெயில்வண்டி எந்தக் கட்சியிலும் சேராதது. அதில், நிரபராதிகளான ஜனங்கள் நிரம்பியிருக்கிறார்கள். நான் ஒரு போர்வீரன். ஆதலின் நிரபராதிகளையும் கட்சிச் சார்பில்லாதவர்களையும் வீணாகக் கொலை செய்ய விரும்பேன். வேலை நிறுத்தமானது, ஆன்ம லட்சியத்தைக் கொண்டதாயிருக்க வேண்டும். தபால் தந்தி தாபனங் களைத்தகர்த்தெறியக் கூடாதென்று கூட்டத்தினரைத் தடுத்தவன் நானே. அப்பொழுதே நான் அடிபட்டுக் கீழே விழுந்தேன். போலீ படைகளின் பலாத்காரத்தின் காரணமாகவே, ஜனக் கூட்டமானது இந்த விஷமச் செயல்களைச் செய்ய நேரிட்டதென்று நான் கூறுவேன்.
டிரிபோலியின் மீது படையெடுப்பது பயனற்றதாகவே முடியு மென்று சரித்திர பூர்வமாகவும் பூகோள ரீதியாகவும் தக்க ஆதாரங் களுடன் எடுத்துப் பொதுக் கூட்டத்தில் பேசினேன். தேசீய வாதிகளுக்கும் சமூக வாதிகளாகிய எங்களுக்கும் உள்ள வேற்றுமையை மேற்படி பொதுக் கூட்டத்தில் எடுத்துக்காட்டும் போது, தேசீய வாதிகள் இத்தலியின் நாட்டெல்லை விசாலமடைய விரும்புகிறார்களென்றும், சமூகவாதி களாகிய நாங்களோ சுதந்திரமுள்ள, செல்வங்கொழிக்கிற, கலைஞானம் நிறைந்த இத்தலியை விரும்புகிறோமென்றும் கூறினேன். இப்படி கூறுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. நான், பெரிய சீன ஏகாதிபத்தியத்தின் அடிமைப் பிரஜையாக இருப்பதை விட சிறிய டென்மார்க் தேசத்து உரிமைப் பிரஜையாக இருப்பதையே விரும்புவேன்.
வேலை நிறுத்தத்திற்கு நான் ஏற்பாடு செய்யவில்லை. நான் ஒரு தொழிலாளியல்ல; ஒரு பத்திரிகாசிரியன். தொழிலாளிகளுடைய விஷயங்களில் தலையிடுவது என் வேலையல்ல. உண்மை யென்ன வென்றால், பார்லி கூட்டத்தில் பதினையாயிரம் பேர் கூடியிருந்தார் களாதலால், வேலை நிறுத்தம் செய்ய வேண்டுமென்ற எண்ணம் இவர்களிடத்தில் தானாகவே உதயமாயிற்று. இந்த வேலை நிறுத்தத்தின் விளைவாக உண்டான பொருட்சேதங்களுக்கு நான் காரணன் என்பதை மறுக்கிறேன். ஆதலின் கௌரவம் வாய்ந்த நீதிபதிகளே! என்னை விடுதலை செய்தால், எனக்கு மகிழ்ச்சியைத் தந்தவர்களாவீர்கள்; ஏனென்றால் நான் திரும்பவும் மனித சமூகத்திடையே சென்று தொண்டு செய்ய இயலும். அதற்கு மாறாக எனக்குத் தண்டனை விதிப்பீர்களாயின் என்னைக் கௌரவப் படுத்தினவர்களாவீர்கள். ஏனென்றால் நீங்கள் ஒரு குற்றவாளியைத் தண்டிக்கவில்லை. லட்சியத்தைப் பின்பற்றுகிற, மனச்சாட்சிப்படி கொள்கைகளை வலியுறுத்துகிற, சத்தியத்தை நாடிச் செல்கிற ஒரு வீரனையே தண்டிக்கிறீர்கள். இவற்றை நீங்கள் அங்கீ கரிக்கவே வேண்டும். ஏனென்றால் இவற்றில் இத்தலியின் எதிர்கால வாழ்வும், சத்தியத்தின் வலிமையும் அடங்கியிருக்கின்றன.
நீதிபதிகள், ஒரு வருஷ சிறைவாசத் தண்டனை விதித் தார்கள். சிறிது கூட முகத்தைச் சுளிக்காமல் புன்சிரிப்புடன் பெனிடோ அதனை ஏற்றுக் கொண்டான். சிறைவாசத்திற்காக இவன் துயரப்பட்டதே கிடையாது.
ஒரு வருஷ தண்டனையை பூராவும் பெனிடோ அநுபவிக்க வில்லை. ஐந்து மாதமானவுடன் சிறையிலிருந்து விடுதலையடைந்தான்.
தந்தையின் பிரிவு
பெனிடோ முஸோலினியின் வாழ்க்கையில் 1912ம் வருஷம் குறிப்பிட வேண்டிய பாகமாகும். அவ்வாண்டிலே, இவனுக்குத் துயரங் களும் வெற்றிகளும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. ஏற்கனவே மனைவியின் மரணத்தால் மனமுடைந்து போயிருந்த அலெஸாந்த்ரோ முஸோலினி, தன் மகன் சிறைவாசத்தை ஏற்றான் என்று கேள்வியுற்று துன்பக் கடலில் அமிழ்ந்து விட்டார். பெனிடோ, சிறையிலிருந்து வெளி வந்த பிறகு, அவர் அக்கடலினின்று வெளிவரவேயில்லை. அவர் தமது ஐம்பத் தேழாவது வயதில் இரண்டு புத்திரர்களையும் ஒரு புத்திரியையும் தவிக்கவிட்டு ஆண்டவன் திருவடி நீழலடைந் தார். தந்தையின் பிரிவால், பார்லி, டோவியா கிராமங்கள் சூனியப் பிரதேசங் களாகவே பெனிடோவுக்குத் தென்பட்டன. ஆனால் இதன் பொருட்டு இவன் மனமுடைந்து போகவில்லை. இந்தத் துக்கத்தில் இவன் ஓர் உறுதி கண்டான். தனது தந்தையின் மரணத்தைக் குறித்து, தனது பத்திரிகையில் ஒரு தலையங்கம் எழுதினான். அதனைப் பின்வரும் வாக்கியங் களைக் கொண்டு முடித்தான்:-
அவர்-அலெஸாந்த்ரோ முஸோலினி-தமது தோழர்களுக்கும் எதிரிகளுக்கும் நன்மை செய்தார். அவருடைய வாழ்க்கை, பல அமிசங் களில் துக்ககரமாகவே இருந்தது. ஆனால் அவருடைய முடிவு வெகு விரையில் வந்துவிட்டது. உலகியற் பொருள்களாக அவர் ஒன்றும் வைத்துப்போகவில்லை. ஆன்மார்த்தப் பொருள்களே ஏராளமாக வைத்துச் சென்றிருக்கிறார். அவையொரு பொக்கிஷம்! எண்ணங்கள் நிறைந்த லட்சியம் பொருந்திய பொக்கிஷம்!!
இப்பொழுது துயரப்படவேண்டிய காலம் முடிந்து விட்டது. வாழ்க்கையானது, இனி தன் வழியில் தனக்குரிய எல்லாக் கடமை களுடனும் முன்னோக்கிச் செல்ல வேண்டியதுதான்.
தந்தை இறந்த காலத்தில் இவன் சகோதரிக்கு விவாகமா யிருந்தது. அவள் புருஷன் வீட்டில் சௌக்கியமாக வாழ்ந்து கொண்டிருந்தாள். இவன் சகோதரனான ஆர்னால்டோ தொழிற்கல்வி கற்பதற்காகச் சில வருஷங்களுக்கு முன்னாடியே வேற்றூருக்குச் சென்றுவிட்டான். எனவே, கிராமத்திலே தனியாக ஒரு குடும்பம் தேவையில்லையென்று கருதி, பெனிடோ அதனைக் கலைத்துவிட்டான்.
மகாநாட்டில் வெற்றி
இச்சமயத்தில், இத்தலி முழுவதிலும் பரபரப்பு ஏற்படக் கூடிய ஒரு சம்பவம் நடைபெற்றது. இத்தாலிய மன்னரைக் கொலை செய்யச் சிலர் சூழ்ச்சி செய்தனர். இதனால், இத்தாலிய பார்லிமெண்டிலுள்ள கட்சி களுக்குள் பிணக்கு ஏற்பட்டது. சமூகவாதக் கட்சியின் பலம் ஊசலாடிக் கொண்டிருந்தது. கட்சித் தலைவர்களில் முக்கியமானவராகிய பிஸோலடி என்பாருடைய நிலை தடுமாற்றத்திலிருந்தது. இதுதான் சமயமென்று, பெனிடோ முஸோலினி, தனது பத்திரிகையில் மேற்படி கட்சியைப் பலமாகத் தாக்கி வந்தான். இது கோரிய பலனை விளைவித்தது. 1912ம் வருஷம் சமூகவாதக்கட்சியினரின் மகாநாடு, ரெக்கியோ என்ற ஊரில் கூடியது. பெனிடோ மகாநாட்டுக்குச் சென்று, கட்சிக் கொள்கைகளிலே நம்பிக்கை யில்லாத கட்சித் தலைவர்களைப் பலமாகத் தாக்கிப் பேசினார். சமூகவாதக் கட்சியானது, உண்மையான கொள்கைகளோடு இயங்க வேண்டுமானால், அது தற்போதைய அரசாங்கத்தோடு ஒத்துழைக்க முடியாதென்று வற்புறுத்தினான். மகாநாட்டுப் பிரதிநிதிகள் இவன் கட்சியை ஆதரித்தனர். பிஸோலடி முதலியோர் கட்சியினின்று விலக்கப்பட்டனர். கட்சிப் பத்திரிகை யாகிய ‘அவந்தி! யின் ஆசிரியரான டிரேவிஸும் அவர் பதவியி னின்று நீக்கப் பட்டார். எனவே, சில மாதங் களுக்குள் பெனிடோ, சமூகவாதக் கட்சித் தலைவனாகவும், ‘அவந்தி! பத்திரிகையின் ஆசிரியனாகவுமானான். இவன் ஆசிரிய பதவியை ஏற்றுக் கொண்ட பிறகு பத்திரிகையின் செல்வாக்கு அதிக மாகியது. நாற்பதினாயிரம் சந்தாதார்களுடன் திருப்தி யடைந்திருந்த ‘அவந்தி! பத்திரிகை இப்பொழுது நூறாயிரம் சந்தாதார் களுடன் பிரகாசித்தது. பெனிடோவின் தலையங்கங் களில் வேகமும் உணர்ச்சியும் நிரம்பியிருந்தன.
பொது ஜனங்களுக்காகப் போராட்டம்
இச்சமயத்தில் இத்தலியின் தென்பாகத்தில் ஏழை மக்கள் பெரிதும் கஷ்டப்பட்டனர். தொழிலாளர்களுக்குச் சரியான வேலை அகப்பட வில்லை. அப்படி அகப்பட்டாலும் கிடைத்த கூலி சொற்பம். குடியிருக்கச் சரியான வீட்டுவசதிகளில்லை. குடி தண்ணீர் இல்லை. பொது ஜனங்கள் கூடி அரசாங்கத் தாருக்கு விண்ணப்பங்கள் அனுப்பினார்கள். பயனில்லை. கடைசியில் 1913ம் வருஷம் நவம்பர் மாதம் பெரிய கலகம் கிளம்பியது. அரசாங்கத்தார், துருப்புகளை அனுப்பிக்கலகத்தை அடக்கினர். பத்திரிகையில் பெனிடோ, அரசாங்கத்தைத் தாக்கிப் பல கட்டுரைகள் வரைந்தான். ஒரு கட்டுரையில் பின் வரும் வாக்கியங்கள் காணப்பட்டன:-
என்ன! இத்தலியில், நாகரிகம் வாய்ந்த ஒரு நாட்டில், நிராயுத பாணிகளான வயோதிகர் மீது துப்பாக்கிப் பிரயோகமா? கர்ப்பதிரீ களின் மீதா? பச்சைக் குழந்தைகளின் மீதா? ரொக்காகோர்கா என்ற கிராமத்து ஜனங்கள், வைத்திய வசதிகளும், வயிற்றுக்கு ஆகாரமும், தண்ணீரும், வெளிச்சமும் கேட்டார்கள். அரசாங்கத்தார், அவர்களுக்கு உதவி செய்வதற்குப் பதிலாக அவர்களைக் கொலை செய்தார்கள். இதற்கு என்ன பொருள்?
இவன் எழுதிய கட்டுரைகளுக்காக அரசாங்கத்தார் இவன் மீதும், ‘அவந்தி! பத்திரிகாலயத்தைச் சேர்ந்தவர்கள் மீதும் வழக்குத் தொடுத்தனர் மிலான் நகரத்திலுள்ள நீதி தலத்தில் விசாரணை நடைபெற்றது. கோர்ட்டில் ருசிகரமான வாதங்கள் பல நடைபெற்றன. இவ்வழக்கில் பெனிடோ கொடுத்த வாக்கு மூலத்தின் சாரம் வருமாறு:-
இந்தக் கட்டுரைகள் எழுதியதற்காக நான் வருத்தப்பட்டதில்லை; வருத்தப் படப்போவதுமில்லை. ரொக்காகோர்கா வாசிகள் துன்பத்திலே உழன்று கொண்டிருக்கும் போது,அத்துன்பங்களை அறிந்து கொண் டிருக்கிற இத்தாலியர் பலர் இருக்கின்றனர் என்பதை வெளிப்படுத்த வேண்டுமென்பதே என் நோக்கம். இந்த உண்மையை ஆள்வோரும் ஆளப்படுவோரும் கவனிக்கவேண்டுமென்பது என் வேண்டுகோள். இக்கட்டுரைகளுக்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன். சட்டப்படி விழ வேண்டிய இடிகள் யாவும் என் தலை மீதே விழட்டும். நான் குற்றவாளியல்ல என்று கூற முன்வரவில்லை இந்தக் குற்றத்தை இனியும் பன்முறை செய்வேன். அங்ஙனம் செய்வதைக் கௌரவமாகவும் கொள்வேன். மற்றும் சிறைவாசம் எனக்கு சகஜமே. ஒருவன் பூரண மனிதனாவதற்குப் பள்ளிக்கூடத்தில் நான்கு வருஷமும், சர்வ கலா சாலையில் ஒரு வருஷமும், சிறைச்சாலையில் இரண்டு வருஷமும் வசிக்க வேண்டுமென்று ருஷ்யா தேசத்துப் பழமொழியொன்றுண்டு. ஆதலின் நீதிபதிகளின் உடையிலே உள்ள உங்களுக்கு ஒரு யோசனை கூற விரும்புகிறேன். நீங்கள் எங்களை விடுதலை செய்ய வேண்டும். ஏன்? குற்றம் செய்யவில்லை என்பதற்காக அல்ல. குற்றம் செய்ததற்காக: இனியும் செய்யப் போவதற்காக. சச்சரவுகளையும் எதிர்ப்புகளையும் நீங்கள் ஏன் வெறுக்கிறீர்கள்? மனித சமூகம் ஒரு படித்தாக இருக்கு மானால் விளைவது மரணந்தான். கனவான்களே! எங்களை நீங்கள் விடுதலை செய்வீர்களானால், உலகத்திலே தோன்றிய யாவும் போராட்டத்தினிற்றே பிறந்தன என்று கூறிய ஹெராகிளிட என்ற தத்துவ ஞானியைக் கௌரவித்தவர்களாவீர்கள். ஆதலின் சேரவாரும் போருக்கு. அப்படி வருவீர்களானால் அந்தத் தத்துவஞானியை மட்டுமல்ல, சுதந்திரத்தையும் கௌரவித்தவர்களாவீர்கள்.
பெனிடோவின் மீது குற்றமில்லையென்று சொல்லி நீதிபதிகள் இவனை விடுதலை செய்து விட்டார்கள். பெனிடோ, வழக்கம்போல் தனது பத்திரிகையில், நாட்டு மக்களின் கஷ்டங் களைப் பல பட எடுத்துரைத்தும் இவற்றிற்குப் பரிகாரம் புரட்சியே யென்றும் எழுதி வந்தான்.
இவனுடைய விசாலமான அறிவுக்கு, ‘அவந்தி! பத்திரிகை மட்டும் போதுமானதாயில்லை. எனவே, உடோபியா1 என்ற ஒரு வாரப் பத்திரிகையையும் தொடங்கி நடத்தினான். இதில் சமூகவாதக் கட்சியின் தத்துவங்களை ஆராய்ந்து பல கட்டுரைகள் எழுதினான். இக்கட்டுரைகள், அறிஞருலகத்தில் பெனிடோ வுக்கு ஒரு புதிய தானத்தை அளித்தன.
இத்தலியின் ஏழை மக்கள் அநுபவித்து வந்த பல கஷ்டங்களை அரசாங்கத்தாருக்குத் தெரிவிக்கும் பொருட்டு, தொழிற்கட்சியார் 1914ம் வருஷம் ஜுன் மாதம் ஏழாந் தேதி முதல் பதினான்காந்தேதி வரை ஒரு வாரம் சிவப்பு வாரம் என்று ஒரு திட்டம் ஏற்பாடு செய்தார்கள். இவ்வாரத்தில் பல ஊர்களில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தஞ் செய்தார்கள். சில இடங்களில் கலகங்களும் நிகழ்ந்தன. அரசாங்கத் துருப்பு களுக்கும் தொழிலாளர்களுக்கும் சச்சரவு ஏற்பட்டு இரு சார்பி லும் சேதங்கள் உண்டாயின. இதைக் கண்ட பெனிடோ முஸோலினி, தொழிற் கட்சித் தலைவர் என்ற முறையில் சச்சரவை நிறுத்திக்கொண்டான். இங்ஙனம் நிறுத்திக் கொண்டது கோழைத்தனத்தினாலன்று. காலநிலை இடநிலை இவைகளை உத்தேசித்தும் பெரும்பான்மையோருடைய நலனை முன்னிட்டும் இவன் இங்ஙனம் சமரஸம் செய்து கொண்டான்.
பெனிடோ உண்மையான தலைவனாகவே இந்தச் சச்சர வில் நடந்து கொண்டான். தொழிலாளர்களுக்கும் அரசாங்கத் துருப்புகளுக்கும் சச்சரவுகள் நிகழ்ந்தபோது, இவன் பின்னால் பதுங்கியிருந்து சூத்திரக் கயிறுகளை மட்டும் விட்டுப் பிடித்துக் கொண்டிருக்கவில்லை. தொழிலாளர் கூட்டத்திற்கு முன்னணி யில் நின்று, துருப்புகளின் தாக்குதல்களை மார்பிலே ஏந்திக் கொண்டான். பலமான சச்சரவுக் கிடையே இவன் துணிந்து சென்றான். செயலில் தலைமை தாங்கி நடத்துபவனே உண்மைத் தலைவன் என்பதை இவன் நிரூபித்துக் காட்டி வந்தான்.
X ஐரோப்பிய யுத்தமும் இத்தாலியரின் சேவையும்
நடு நிலைமைக் கட்சி
பானியாவின் தலைநகரமாகிய ஸெராஜிவோவில் செர்விய மாணவனொருவன் ஆதிரியா தேசத்து இளவர சனான பெர்டினாந்தைச் சுட்டுக்கொன்று விட்டான். இது நடந்தது 1914ம் வருஷம் ஜூன் மாதம் இருபத்தெட்டாந் தேதி. இச்சிறிய தீப்பொறி, ஐரோப்பிய வல்லரசு களுக்கிடையே போரை மூட்டி விட்டது. இங்கிலாந்து, பிரான், பெல்ஜியம் முதலிய நாடுகள் ஒன்று சேர்ந்தன. ஜெர்மனி, ஆதிரியா - ஹங்கேரி முதலிய நாடுகள் எதிர்க் கட்சியில் வீறிட்டு நின்றன. இத்தலி, எப்பக்கம் சேர்வது? இத்தாலிய அரசியல்வாதி களுக்குள் இது பெரிய பிரச்னையைக் கிளப்பியது. மூவர் ஒப்பந்தப்படி1 இத்தலி ஆதிரியாவுடனேயே சேரவேண்டும். ஆனால் ஆதிரியாவுக்கும் இத்தலிக்கும் பரம்பரையான பகைமை புகைந்துகொண்டே யிருந்தது. மற்றும், இத்தலியின் வடபாகத்தில், ஆதிரியா, ஆதிக்கஞ் செலுத்திக்கொண்டி ருந்தது. இத்தலி ஜர்மனியுடன் சேருவதா? ஒரு காலுமில்லை. ஜர்மனி தனது ராணுவத் திமிரினால் இத்தலியின் அநுதாபத்தை இழந்துவிட்டது. எனவே, ஸெராஜிவோ சம்பவமானது, மூவர் ஒப்பந்தத்தின் அதிவாரத்தையே அசைத்துவிட்டது என்று கூறலாம்.
இத்தலி, எந்தக் கட்சியையும் சேராமல் நடு நிலைமை வகிக்க வேண்டுமென்று பெனிடோ ‘அவந்தி! பத்திரிகையில் வற்புறுத்தி வந்தான். கோனாட்சிக்குட்பட்ட ஆதிரியாமீது, சமூகவாதக் கொள்கைகளையுடைய பெனிடோவோ, அவன் கட்சியாரோ அன்பு காட்ட முடியாதல்லவா? மற்றும், இத்தாலிய பார்லிமெண்டில் முக்கிய பகுதியினராகக் கருதப்பெற்ற தேசீயக் கட்சியினருக்கும் மூவர் ஒப்பந்தத்தில் அதிக நம்பிக்கையில்லை. இதனால் பெனிடோவின் கொள்கை வலுப்பெற்றது. தனது ‘அவந்தி! பத்திரிகையில் 27-7-14ல் எழுதிய தலையங்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டான்:-
(யுத்தத்தில் தலையிடக் கூடாதென்ற) தேசத்தின் ஒரு முகமான அபிப்பிராயத்தை அரசாங்கத்தார் கவனியாவிட்டால், சிவப்பு வாரத்தின் போது நாம் செய்து கொண்ட சமரஸத்தை முறித்து விடுவோம். மிக உறுதியுடன் நமக்குள்ளேயே ஒரு போரைத் தொடங்குவோம். தொழி லாளர்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த நிமிஷத்தில் இத்தலியானது, நடுநிலைமையினின்று விலகி ஐரோப்பிய மத்திய அரசாங்கங்களை ஆதரிக்க முற்படுகிறதோ, அந்த நிமிஷத்தில் இத்தாலியத் தொழிலாளர்களுக்கு ஒரு வேலைதானுண்டு. அதுவே - இதைப் பகிரங்கமாகக் கூற விரும்புகிறோம். கலகம் செய்வது.
அரசாங்க நிருவாகக் கட்சியினரும் இவ்விஷயத்தைப் பற்றித் தீர ஆலோசித்து, யுத்தத்தில் கலவாமல் நடுநிலைமை வகிப்பதே இத்தலியின் நன்மைக் குகந்தது என்று தீர்மானித் தார்கள்.
கட்சியினின்று பிரிதல்
ஆனால், இந்த நடுநிலைமையில் இத்தலி நீண்ட காலம் இருக்கவில்லை. ஜர்மானிய ராணுவப்படையானது, பெல்ஜி யத்தை இரத்தக்களமாக்கி விட்டு பாரி நகரம்வரை சென்றது. நிரபராதிகள் ஜர்மானியரால் சுட்டுக் கொல்லப் படுவதை இத்தாலியர்கள் எத்தனைநாள் சும்மா பார்த்துக் கொண்டிருப் பார்கள்? நாளாவட்டத்தில் இத்தாலிய பொது ஜனங்களுக்கு ஆதிரோ - ஜர்மானியர் மீது வெறுப்பும், இதன் விளைவாக நேசக் கட்சியாரிடம் ஆதரவும் வளரலாயின. இத்தலி, யுத்தத்தில் கலந்துகொள்ள வேண்டுமென்று பொது ஜனங்கள் ஆங்காங்குக் கூட்டங்கள் போட்டு கலகம் விளைவித்தனர். இத்தாலிய தொழிற் கட்சிக்குள்ளேயே, யுத்தத்தில் கலந்துகொள்ள வேண்டு மென்ற பிரிவு வலுத்து வந்தது.
இப்பொழுது பெனிடோவின் நிலைமை என்ன? கடமை என்ன? இவன் மனதிலே ஒரு பெரிய நாடகம் நடிக்கப் பெற்ற தென்று கூறலாம். இவன் உள்ளத்திலே இது காறும் அடித்துக் கொண்டிருந்த சமூக வாதம் என்கிற சண்டமாருதம் சிறிது ஓய்ந்தது. இதுவே சமயமென்று பிறப்புடனேயே தொடர்ந்து வந்த, ஆனால் இதுவரை அடங்கியிருந்த - தேசீய வாதமானது தலையெடுத்துப் பார்த்தது. இக்காலத்தில் டி அனன்ஸியோ என்ற கவிஞர்1 நாடு முழுவதும் சுற்றித் திரிந்து, தமது தேசீயப் பாடல்களாலும் பேச்சுகளாலும் இத்தாலியருக்குச் சுதந்திர உணர்ச்சியை ஊட்டினார். இதுவும், பெனிடோவுக்குத் துணை யாகச் சேர்ந்தது.
பெனிடோவின் உள்ளம் ஊசலாடியது. நடுநிலைமை யினின்று விலகி, இத்தலி யுத்தத்தில் கலந்துகொள்ள வேண்டு மென்று கூறினால், சேரக் கூடாதென்பதற்கு இதுகாறும் இவன் எடுத்துக் காட்டி வந்த ஆதாரங்கள் என்னவாவது? இவனுடைய சமூகவாதக் கொள்கையை எந்தக்காற்றிலே பறக்க விடுவது? சமூகவாதக்கட்சியினரிடையேயுள்ள செல்வாக்கை எப்படி ஒரு கணத்தில் இழந்து விடுவது? ஆனால் மனச்சாட்சியோ, தேசீய வாதத்தைத் தட்டியெழுப்பி, யுத்தத்திலே கலந்துகொள்ளு மாறு ஆணையிடுகிறது. என்ன செய்வான்? பல நாட்கள் இதைப் பற்றிச் சிந்தித்தான். கடைசியில், யுத்தத்தில் இத்தலியைச் சேரும் படி செய்வதென்று தீர்மானித்தான். இக்காலத்தில் இவன் மனதுக்குள் நடந்த போராட்டத்தை, ‘அவந்தி! உடோபியா என்ற பத்திரிகைகளில் இவன் எழுதிய தலையங்கங்களின் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம்.
இதுவே சமயமென்று இவன்மீது பொறாமை கொண் டிருந்தவர்களும், இவனால் இதுகாறும் வாயடக்கி வைக்கப் பெற்றிருந்தவர்களுமான தொழிற் கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள் இவனுக்கு விரோதமாகக் கிளர்ச்சி செய்யத் தொடங்கினார்கள். இதன் பயனாக 1914ம் வருஷம் அக்டோபர் மாதம் இருபத்தைந்தாந் தேதி மிலான் நகரத்தில் தொழிலாளர் மகாநாடு கூடியது.பெனிடோ கட்சித் துரோகியென்று சொல்லி இவன் மீது கண்டனத் தீர்மானங்கள் நிறைவேறின.
எந்தக் கட்சிக்காக இவன் அரும்பாடு பட்டானோ, எந்தக் கட்சியைத் தனது ரத்தத்தையும் வார்த்து வளர்த்து வந்தானோ, எந்தக் கட்சியால் தெய்வமாகப் போற்றப்பட்டு வந்தானோ அந்தக் கட்சி, இப்பொழுது இவனை நிராகரித்து விட்டது. இவனுடைய மனச் சாட்சியானது, புகழுக்கும் செல்வாக்குக்கும் விடை கொடுத்து விட்டது.
புதிய பத்திரிகை தொடங்குதல்
இப்பொழுது என்ன செய்வது? மனச்சோர்வு கொண்டு செயலற்று இருப்பதா? அது மீளா நரகமன்றோ? கர்ம வீரர் களுக்கு அஃது அழகாகுமோ? தொழிற் கட்சியினின்று விலகிக் கொண்டான். ‘அவந்தி! பத்திரிகையின் ஆசிரிய பதவியையும் ராஜீநாமாசெய்தான். உடனே 1914ம் வருஷம் நவம்பர் மாதம் பதின்மூன்றாந் தேதி இத்தாலிய சமூகம் என்ற ஒரு பத்தி ரிகையைத் தொடங்கினான். பத்திரிகையின் மூலமாகவே தன் னிடமிருந்து விட்டுப்போன பொதுஜனாபிமானத்தை மீண்டும் பெற முடியும் என்பதை இவன் நன்கு உணர்ந்திருந்தான்.
இவ்வளவு சீக்கிரத்தில் - சமூவாதக் கட்சியினரால் புறக்கணிக்கப் பட்ட பதினெட்டு நாட்களுக்குள் புதியதொரு பத்திரிகையை இவன் எவ்வாறு தொடங்கினான்? இதற்குப் பணமேது? பிரெஞ்சுக்காரரிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு இங்ஙனம் கட்சித் துரோகம் செய்திருப்பதாகக் கூறினார் சிலர்; பத்திரிகை உலகத்து மன்னன் என்றழைக்கப் பெற்ற லார்ட் நார்த்கிளிப் என்ற ஆங்கிலேயர் இவனுக்குப் பணமுதவி, யுத்தப் பிரசாரம் செய்யச் சொல்லி யிருப்பதாகச் சொற்றனர் வேறு சிலர். இவற்றினால் பெனிடோ சிறிதும் மனஞ் சலிக்கவில்லை. இவன், ‘அவந்தி! பத்திரிகையி லிருந்து ராஜீநாமா செய்தபோது, இவனுடனிருந்த உதவி ஆசிரியர் களில் சிலரும், வேறு சில உத்தியோகதர்களும் ராஜீநாமா செய்தனர். இவனிடத்தில் அபிமானங் கொண்ட வியாபாரிகள், நிரந்தரமாக விளம்பரங்கள் கொடுத்து வருவதாக ஒப்பந்தம் எழுதிக்கொடுத்தார்கள். இந்த ஆதரவுகளைக் கொண்டே, இவன் இந்தப் புதிய பத்திரிகையைத் தொடங்கினான். பத்திரிகையின் முதல் நாள் தலையங்கத்திலேயே யுத்த முழக்கம் செய்யத் தொடங்கினான். யுத்தத்திலே சேருமாறு இத்தாலிய இளைஞர்களை அறைகூவி அழைத்தான். அறிவுக்கு இப்பொழுது அவகாசமில்லை யென்றும், வேண்டுவது இதயமே யென்றும் சங்கநாதம் செய்தான். இவனுக்கென்று இளைஞர் கட்சி யொன்று சேர்ந்தது. இதுவே பிற்காலத்து பாசிட் கட்சிக்கு வித்தாக இருந்ததென்று கூறலாம். பெனிடோ, யுத்தத்தை ஆதரித்துப் பத்திரிகைகளில் எழுதியதோடு அமையாமல், ஊர்கள்தோறும் சென்று பிரசாரமும் செய்தான். 1915ம் வருஷம் ஏப்ரல் மாதம் பத்தாந் தேதி ரோமாபுரியில் யுத்தத்தை ஆதரித்து அதி தீவிரமாகப் பேசியதற்காக இவன் கைது செய்யப்பெற்று பத்து நாட்களுக்குப் பின்னர் விடுதலை யடைந்தான்.
இத்தலியின் யுத்த முனைப்பைக் கண்டு, ஆதிரிய அரசாங்கம், இத்தலியின் வடபாகத்தில் தனது ஆதிக்கத்தில் வைத்துக் கொண்டிருந்த டிரண்டினோ பிரதேசத்தை இத்தலிக்கே விட்டுக் கொடுப்பதாகக் கூறியது. இதனால் இத்தலி அமைதி யடைந்து யுத்தத்தில் சேராது என ஆதிரியரும் ஜர்மானியரும் எதிர்பார்த்தனர். கியோலிட்டியைப் பிரதம மந்திரியாகக் கொண்ட அரசாங்கம் இந்தச்சூழ்ச்சிக்கு இசைந்து விடுமோ வென்று சிலர் அஞ்சினர். ஆனால் எதிர்ப்பு பலமாயிருந்தது. 1916ம் வருஷம் மேமாதம் இருபத்து நான்காந் தேதி, இத்தலி, நேசக்கட்சியாருடன் சேர்வதாகவும் ஆதிரியா - ஹங்கேரி மீது போர் தொடுப்பதாகவும் தீர்மானித்தது.
ரோமாபுரி வீதிகளில் யுத்த வாத்தியங்கள் முழங்கின; படைகள் அணிவகுத்துச் சென்றன.
அன்று பெனிடோ முஸோலினி, இத்தாலிய சமூகம் என்ற தனது பத்திரிகையில் பின்வருமாறு எழுதினான்:-
இன்று படையெடுக்கும்படி இத்தலி அழைக்கப்பட்டிருக்கிறது. இனி, அனைவரும் இத்தாலியர்களே எஃகோடு எஃகு மிடையும் இந்நாள், நம்மிடமிருந்து வாழ்க இத்தலி என்ற ஒரு முழக்கமே எழுகிறது. நமக்குத் தாய்நாடு உண்டு என்பதை இப்பொழுது உணர்வதைப் போல் எப்பொழுதும் உணர்ந்ததில்லை. இத்தலி, ஒரு சரித்திர புருஷன் என்று இது போழ்து நாம் உணர்வது போல் எப்பொழுதும் உணர்ந்ததில்லை. இத்தலிக்கும் சக்தி உண்டு, அது வாழ்ந்து கொண்டிருக்கிறது, அஃது அமரத் தன்மையுடையது என்பதை இப்பொழுதே நாம் உணர்கிறோம்.
இது காலை, எங்கள் தாயான இத்தலியே! அச்சமின்றி, துக்கமின்றி, எங்களுடைமையெல்லாமும் - எங்கள் வாழ்வையும் மரணத்தையும் - உனக்கு அர்ப்பணம் செய்கிறோம்.
யுத்த சேவை
இங்ஙனம் பத்திரிகையில் வீரமாக எழுதிக்கொண்டிருந்த தோடு பெனிடோ அமையவில்லை. இவனும் யுத்த களத்திற்குப் புறப்பட்டான். பதினோராவது பெர்சாகிளீரி ரெஜிமெண்டில் ஒரு சாதாரண போர் வீரனாகப்போய்ச் சேர்ந்தான். இந்த ரெஜிமெண்டில் உள்ளவர்களுக்கு, இத்தாலிய சமூகம் என்ற பத்திரிகையின் ஆசிரியர், தங்களுடன் சேர்ந்து யுத்தம் செய்கிறார் என்று தெரியாது. இவன், போர் வீரனுக்கு வகுக்கப்பட்டுள்ள அன்றாடக் கடமைகளை ஒழுங்காகச் செய்து வந்தான். பொறுப்பு வாய்ந்த வேலை, கஷ்டமான வேலை, ஆபத்தான வேலை - எல்லாவற்றிற்கும் பெனிடோ முன்னணியில் நின்றான். இவன் உழைப்பில் சலிப்பே காட்டியது கிடையாது. இவனுடன் சேர்ந்து போர் புரிந்த வீரர்கள் இவனிடத்தில் பயபக்தியுடன் நடந்து கொண்டார்கள். இவன் நமது தலைவனா யிருந்தால் நன்றாயிருக்குமே என்ற எண்ணம் பலருக்கு உண்டானது. இவனுடைய வீரத்தைப் பாராட்டிப் பலர் சன்மானங்கள் அனுப்பினர். இவனுடைய ராணுவ மேலதிகாரிகளும், அறிக்கை களில் இவனைப் பாராட்டி எழுதினார்கள். ஒரு சமயம், யுத்த களத்தில் சாப்பாட்டு வேளை. இவனுக்குக் குழம்பு பரிமாறப் பட்டது. அதில் எலி ஒன்று செத்துக் கிடந்தது. அதை வெளி யிலே தூக்கி எறிந்து விட்டு, குழம்பை உட்கொண்டான். எவருக் கும் இதைக்கூறவில்லை. கூறினால் அநாவசியமான கலவரம் உண்டாகுமல்லவா?
பூமியிலே ஆங்காங்குத் தோண்டப்பெற்ற சுரங்கங்களி லிருந்து கொண்டே பெனிடோ யுத்த காலத்தின் பெரும் பாகத்தைக் கழித்தான். இத்தகைய சுரங்கங்களொன்றில் 1917ம் வருஷம் பிப்ரவரி மாதம் இருபத்து மூன்றாந் தேதி, சத்து ருக்களின் குண்டொன்று வெடிக்க, இவன் படுகாயமடைந்தான். உடனே மூர்ச்சையானான். ராணுவ ஆபத்திரிக்குச் சிகிச்சைக்கு எடுத்துச் செல்லப்பட்டான். இவன் தேகத்தில் நாற்பத்து நான்கு இடங்களில் குண்டுகள் பாய்ந்திருந்தன. இதற்காக இருபத்தேழு ஆபரேஷன்கள் செய்யப் பெற்றன. ஆபரேஷன் செய்யும் போதோ, பின்னாடி காயங்களை ஆற்றும் போதோ, இவன் சிறிது கூட முகத்தில் வருத்தத்தைக் காட்டிக் கொள்ளவில்லை வைத்தியர்களுடனும் நர் களுடனும் வேடிக்கையாகவே பேசிக் கொண்டிருந்தான். இத்தலியின் சுதந்திரத்திற்காக என்னுடைய ரத்தமும் சிந்தப்பட்டதே! என்று கூறி அகமகிழ்ந்தான்.
இச்சமயத்தில், இத்தாலிய மன்னர், ராணுவ ஆபத்தி ரியைப் பார்வையிட வந்தார். பெனிடோவைப் பார்த்து இங்ஙனம் அசையாமல் படுத்துக் கொண்டிருப்பது மிகவும் துன்பமாயிருக்குமே என்று கனிவோடு கூறினார். இத்தலியின் வருங்காலத்துப் பிரதம மந்திரியை இத்தாலிய மன்னர் சந்தித்தது இதுவே முதல் தடவை!
பெனிடோ, ராணுவ ஆபத்திரியில் நாற்பத்திரண்டு நாட்கள் படுத்துக் கொண்டிருந்தான். பிறகு சிறிது நடமாடத் தொடங்கினான். இந்த நிலையில் தேகத்திற்கு அதிக தொந்திரவு கொடுக்கக்கூடாதென்று வைத்தியர்கள் எச்சரிக்கை செய்தார்கள்.
நான் சாக மாட்டேன். ஏனென்றால் நான் சாகப் போவதில்லை. வைத்தியர்கள் எல்லோரும் சேர்ந்து கோபத்தினால் வெடித்தாலும் சரி; நான் சாகமாட்டேன். நான் உயிரோடு இருக்க மாட்டேன் என்று வைத்திய சாதிரம் கூறலாம். ஆனால் அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை
என்று பெனிடோ பதில் கூறினான். கடைசியில், யுத்தத் திற்கு மீண்டும் செல்லக்கூடாத நிலையில் மிலான் நகரம் வந்து சேர்ந்தான்.
யுத்தத்தில் இத்தலியின் வெற்றி
1917-ம் வருஷம் மத்தியில் ருஷ்யாவில் ஜார் ஆட்சி வீழ்ச்சியுற்றது. போல்ஷ் வெக்கர் ஆட்சி தலை தூக்கியது. யுத்தத்தை நிறுத்திச் சமாதானம் பேச வேண்டுமென்று ருஷ்யாவில் எழுந்த உணர்ச்சியானது இத்தலியிலும் பரவியது. போர் முனையில் இத்தாலிய வீரர்கள் சோர்வு காட்டினார்கள். இரண்டு வருஷ யுத்தத்தினால் சலிப்புக் கொண்டார்கள். இத்தலியில் பொருளாதார நெருக்கடி அதிகமாகிக் கொண்டு வந்தது. காபோரெட்டோ என்ற இடத்தில் இத்தாலியச் சேனை யானது பெருந்தோல்வியடைந்தது. ஆயிரக்கணக்கான பேர் மாண்டனர். இந்தத் தோல்விக்கு இத்தலியின் சேனாதிபதியான தளபதி காடோர்னா என்பவரே காரணர் என்று ஜனங்கள் குறை கூறினார்கள். இந்த நிலையில் இத்தலியின் கௌரவத்தைக் காப்பாற்ற இருவரே முன் வந்தனர். அவரில் ஒருவர், இத்தாலிய மன்னராகிய விக்டர் இமானுவல்; மற்றொருவர் பெனிடோ முஸோலினி. முன்னவர், இத்தாலியர்களுக்கு வீராவேசம் உண்டாகும்படி ஓர் அறிக்கை வெளியிட்டார். பின்னவன் இத்தாலிய சமூகம் என்ற தனது பத்திரிகையின் வாயிலாக ஜனங்களுக்கு உற்சாக மூட்டினான். பெனிடோவின் வீரவாசகங் கள், யுத்த களத்திலே தயங்கி நின்ற இத்தாலியப் போர் வீரர் களுக்குப் புத்துயிரளித்தன. 1918ம் வருஷத்தில் பெரும் பாகம், பெனிடோ, இத்தலி முழுவதும் சுற்றுப் பிரயாணஞ் செய்து ஜனங்களின் சோர்வை நீக்கினான். இத்தாலிய வீரர்கள் முன் போல் சமர் முறுக்கினார்கள்.
1918-ம் வருஷம் டிசம்பர் மாதம் நான்காந் தேதி! புனிதமான நாள்! இத்தாலியர்களுக்கு வெற்றி! ஆதிரியச் சேனையின் தோல்வி! இத்தலியின் முக்கிய வீதிகளில் ஆனந்தக் கண்ணீர் பெருகியோடியது. குடிமக்களின் அகக்கண் முன்னர், கடவுளின் அருள் புலனாயது. கோயில்களில் விளக்குகள் ஏற்றி வைக்கப் பெற்றன.
இந்த வெற்றிக்கு, இந்த மகிழ்ச்சிக்குக் காரணர் யார்? மூன்று பேருடைய பெயர்களே எதிரொலி செய்தன. இத்தாலிய மன்னர் இமானுவல், பிரதம மந்திரி சென்யோர் ஆர்லாந்தோ, சேனாதிபதியான தளபதி டியா. இம்மூவரே, இத்தலிக்குப் புதுவாழ்வு நல்கியவர்கள் என்று ஜனங்களால் கொண்டாடப் பெற்றார்கள். இம்மூவரே, இத்தலியின் பிற்கால வாழ்வுக்கு வழிகாட்டும் திறம்படைத்தவர் என்றும் ஜனங்கள் நம்பினார்கள். இத்தலியின் பிற்கால வாழ்வு! அஃது எங்கே இருக்கிறது? யார் அகத்திலே அது குடிகொண்டிருக்கிறது? நாமடைந்த வெற்றியே, நமது பிற்கால வாழ்வுக்கு வழிகாட்டிவிடும் என்று ஜனங்கள் கண் மூடித்தனமாக நம்பினார்கள். வெற்றியே ஒரு லட்சியம் என்று அவர்கள் கருதி விட்டார்கள். வாழ்வுக்கு அஃது ஒரு சாதனம் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.
வெற்றிக்குப்பிறகு
இந்தச் சந்தோஷ ஆரவாரத்தில், பெனிடோவின் பெயர் மறைந்து போய்விட்டது! பத்திரிகையின் மாஜி ஆசிரியர், இத்தாலிய சமூகத்தின் தற்கால ஆசிரியர், ஜனங் களின் மறதியிலே கலந்து விட்டாரோ என்று பெனிடோவின் நண்பர்கள் கவன்றார்கள். ஆனால் பெனிடோவின் எண்ண மெல்லாம், லட்சியமெல்லாம் இத்தலியின் வருங்கால வாழ்க்கை யிலே ஒருமித்திருந்தது.
ஐரோப்பிய யுத்தத்தில் இத்தலி, ஐந்து லட்சம் பேரை பலிகொடுத்தது. இதற்குச்சரியான பரிசு கிடைக்கவேண்டாமா? சென்யோர் ஆர்லாந்தோ, பிரதம மந்திரியாயிருக்கும்போது தகுந்த சன்மானம் பெறாமல் விடுவாரா? இத்தலியின் வடக் கெல்லை, பிரென்னர் (Brenner) வரை நீடிக்கப்பெறல் வேண்டும். அட்ரியாடிக் கடலின் கிழக்குப் பக்கத்திலிருக்கிற ப்யூம் (Fiume) பிரதேசமும், டால்மேஷியா (Dalmatia) இத்தலியின் ஆதிக்கத் திற்குள்ளாக வேண்டும். ஆப்ரிக்கா முதலிய வெளிநாடுகளில் ஜர்மனிக்குச் சொந்தமான பிரதேசங்களில் சில, இத்தலிக்குக் கொடுக்கப்பட வேண்டும். இவையாவும் ஜனங்களின் மனோ ராஜ்யங்கள்!
இத்தலிக்குப் புதிய சகாப்தம் ஆரம்பமாகப்போகிறது! வியாபாரமும் கைத்தொழிலும் பெருகப் போகின்றன! யுத்த களத்திற்குச் சென்று திரும்பி வந்த வீரர்களுக்கு நல்ல ஊதியம் கிடைக்கப்போகிறது! சுக வாழ்க்கை இனி நடத்தலாம்! இவை ஜனங்களின் மனதில் எழுந்த ஆகாயக் கோட்டைகள்!!
அமெரிக்காவின் தலைவர் வில்ஸன் வந்து விட்டார்! அவருடன் எத்தனை நிபுணர்கள்! எவ்வளவு ததாவேஜுகள்! உலகத்தில் சமாதானத்தை நிலைநிறுத்த பதினான்கு பாயிண்டுகள்! இங்கிலாந்தின் பிரதம மந்திரி லாயிட் ஜார்ஜ், பிரான்ஸின் பிரதம மந்திரி க்ளெமென்ஷோ, இத்தாலிய பிரதம மந்திரி ஆர்லாந்தோ இவர்கள் அனைவரும் வில்ஸனுடன் சேர்ந்து, ஐரோப்பிய பூகோள படத்தை எவ்வாறு திருத்தி யமைப்பது என்பதைப்பற்றி யோசிக்கப் போகிறார்கள்! இத்தலி ஏன் வீணில் கவலையுற வேண்டும்? இவை இத்தாலியப் பொது மக்களின் பகற்கனவுகள்!!
இந்த ஆகாயக் கோட்டைகள் எவ்வளவு உயரமாகக் கட்டப்பெற்றனவோ அவ்வளவு வேகமாக இடிந்து வீழ்ந்தன. ஆழ்ந்த பகற்கனவுகள், சிறு பிள்ளைகள் விளையாடும் ரப்பர் பலூன் களைப் போல் வெடித்து விட்டன. வில்ஸன் வந்தார்! இத்தலிக்கும் விஜயஞ் செய்தார்! ரோம், டூரின், ஜினோவா முதலிய பெரிய நகரங்களில் இவருக்கு ஆரவாரத்துடன் வரவேற்பு! ஆனால் இத்தாலியர் கண்ட பயனென்ன?
வார்ஸேலில் சமாதான மகாநாடு கூடியது. வில்ஸனின் சுய நிர்ணய உரிமைப்படி ப்யூம் பிரதேசமும் டால்மேஷியாவும், புதிதாக சிருஷ்டிக்கப்பெற்ற யூகோலோவியா நாட்டைச் சேர்ந்தன. டால்மேஷியா, இத்தலிக்கே சேர்ந்ததென்று செய்யப் பட்ட பழைய உடன்படிக்கைள் வெறும் காகிதங்களாயின. மர்னா கிரீஸுடன் சேர்க்கப்பெற்றது. ஜர்மனியைச் சேர்ந் திருந்த குடியேற்ற நாடுகளை பிரான்ஸும், கிரேட் பிரிட்டனும் பங்கிட்டுக்கொண்டன. இத்தலி, வெற்றியடைந்ததற்குச் சரியான பயனை அடையவில்லை. இதற்குக் காரணங்கள் பல. சமாதான மகாநாட்டில் இத்தலியின் கட்சியை எடுத்துச் சொல்ல, தகுந்த பிரதிநிதி இல்லை. பிரதிநிதியாக இருந்த ஆர்லாந்தோவுக்கு பிரெஞ்சு பாஷை அதிகமாகத் தெரியாது. வேல்ஸின் ஜால வித்தைக்காரரான லாயிட் ஜார்ஜ், புலி கிளெமென்ஷோ இவர்களுடைய ராஜதந்திரத்திற்கு முன்னர் சாதாரண ஒரு வக்கீல் தொழில் புரிந்து வந்த ஆர்லாந்தோவின் சாமர்த்தியம் என்ன செய்யும்? மற்றும், இத்தலியின் ஒற்றுமையின்மையும், அதன் ஆசாபங்கத்திற்கு ஒரு முக்கிய காரணம். கிரெட் பிரிட்ட னிலும், பிரான்சிலும் பல திறப்பட்ட அரசியல்வாதிகளும், தங்கள் நாட்டுக்கு நன்மை தேடும் விஷயத்தில் ஒன்றுபட்டிருந்தனர். ஆனால் இத்தலிக்குள் எத்தனை கட்சிகள்! எத்துணை பிணக்குகள்! இத்தாலியர், தங்களுடைய தேசீய தேவைகளைத் தாங்களே நிர்ணயித்துக் கொள்ளாமல், வில்ஸனிடத்திலும் அயல்நாட்டு ராஜதந்திரிகளிடமும் அதிக நம்பிக்கை வைத்து ஏமாற்றமடைந்தார்கள்!
இப்பொழுதே ஜனங்கள் கண் விழித்துப் பார்க்கத் தலைப்பட்டார்கள். சமாதானம் ஏற்பட்ட பிறகு தங்களின் உண்மை நிலை அவர்களுக்குப் புலப்பட்டது. நாட்டில் பண மில்லை; விவசாயம் சீர்குலைந்திருந்தது. யுத்த முனையிலிருந்து திரும்பிவந்த போர்வீரர்களுக்குத் தங்களைப் புறக்கணித்து விட்டு எங்கு வேலை கொடுத்துவிடப் போகிறார்களோ? அல்லது தங்கள் கூலி விகிதம் குறையுமோவென்று தொழிற் சாலைகளில் வேலை செய்த தொழிலாளர்கள் அஞ்சினார்கள். திரும்பி வந்த போர் வீரர்கள், வேலையகப்படாமல் திண்டாடி னார்கள். யுத்த களத்தில் தினந்தோறும் உயிரைப் பணயம் வைத்துப் போராடிய வீரர்கள், இப்பொழுது மறுநாள் ஆகாரத் திற்கு வழியின்றித் தவித்து நின்றார்கள். போர் முனையில் காயமடைந்தவர்கள், வீதிகளிலே பிச்சையெடுக்கத் தொடங்கி னார்கள். ராணுவத்தில் உத்தியோகதர்களாக வேலை பார்த்த வர்கள் பூட் துடைத்து வயிறு பிழைக்க ஆரம்பித்தார்கள். இந்த நிலையில், என்ன செய்வதென்று தெரியாமல் அரசாங்கம் தவித்துக் கொண்டிருந்தது.
முஸோலினி எங்கே?
தேசத்திற்கு வழிகாட்டக் கூடியவன் பெனிடோ முஸோலினியே என்று இப்பொழுது ஜனங்கள் உணர ஆரம்பித்தார்கள். இத்தாலிய சமூகம் பத்திரிகையில் இவன் எழுதிவந்த கட்டுரைகள், ஜனங்களுக்கு உண்மை நிலையைப் புலப்படுத்தின.
யுத்தத்திலிருந்து திரும்பி வருவோர் விஷயத்தில் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டுமென்பதைப் பற்றி ஒரு திட்டம் தயாரித்துக் கொள்ளுமாறு அரசாங்கத்தை மூன்று வருஷமாக வற்புறுத்தி வந்திருக் கிறோம். சமூகத்தைத்திருத்தி யமைக்க வேண்டியதன் அவசியத்தை அடிக்கடி எடுத்துக் காட்டியிருக்கிறோம். இப்பொழுது சேனைகள் கலைக்கப்பட்டுவிட்டன. அவர்களுக்கு நல்வரவேற்பளிப்பதிலேயே நாம் திருப்தியடைந்து விடுவதா?
போர் முனையிலிருந்து திரும்பி வந்த வீரன் வேலைக்காகத் திரிகிறான்; எங்கும் கிடைக்கவில்லை. அவன் கையில் பணமில்லை; சம்பாதிக்க வழியுமில்லை. ஆதிரியர்களுக்கும் ஜர்மானியர்களுக்கும் விரோதமாகத் துப்பாக்கி பிடித்த கைகள் இப்பொழுது தருமஞ் செய்யுமாறு நீட்டுகின்றன. இங்ஙனம் தருமம் செய்வதும் தருமம் வாங்குவதும் தற்போதைய தேவையைத் தீர்த்து வைக்கலாம். ஆனால் இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதெப்படி? தங்களுடைய நாட்டுக்காக உயிரைக் கொடுக்கச் சித்தமாயிருந்தவர்கள், இப்பொழுது உயிர் வாழ வழி தெரியாமல் திகைக்கிறார்கள்.
இங்ஙனம் பலபட, பெனிடோ, தன் பத்திரிகையில் எழுதினான். அரசாங்கத்தார் செவி சாய்க்கவில்லை. வேலை யில்லாத் திண்டாட்டம் வரவர வளர்ந்து வந்ததது. பெனிடோ முஸோலினியே நம்மைப் பாதுகாக்க வல்லவன் என்று கருதி, ஏழை ஜனங்கள், இவனுடைய பத்திரிகாலயத்திற்கு வந்து கூடினார்கள். எத்தனை பேருக்கு இவன் பணங் கொடுப்பான்? எத்தனை பேருடைய சாப்பாட்டுக்குச் சீட்டுக் கொடுத் தனுப்பு வான்? இவன் மனம் விசாலமானது. ஆனால் அதற்குத் தகுந்த படி கை நீள முடியவில்லை.
பத்திரிகாலயத்தின் பணம் குறைய ஆரம்பித்தது. நிருவாகதர்கள், இனி எவருக்கும் பணம் கொடுக்க முடியா தென்று கூறிவிட்டார்கள். பசிக் கொடுமையைத் தீர்த்துக் கொள்ள, மழையிலும் சேற்றிலும் வரிசை வரிசையாக நிற்கும் ஜனக் கூட்டத்தைக் கண்டு முஸோலினியின் மனம் உருகியது. உயிருள்ளவர்களை விற்க முடியாது: யுத்த களத்தில் உயிர் விட்டவர்களை காட்டிக் கொடுக்கக் கூடாது என்று தன் பத்திரிகையில் கதறினான்.
XI பாசிட் கட்சித் தோற்றம்
ஒரு புதிய வழி
1919-ம் வருஷத் தொடக்கத்தில் இத்தலியெங்கணும் பொதுவுடைமை இயக்கம் பரவியது. ஜனங்கள், தங்கள் பசிப்பிணியைப் போக்கவல்லது இந்த இயக்கமே என்று கருதினார்கள். ஆங்காங்குப் பொதுக்கூட்டங்கள் கூட்டி, யுத்தம் ஆரம்பித்தவர்களையும் சமாதானம் செய்துகொண்டவர் களையும் தூஷிக்கத் தலைப்பட்டார்கள். லெனின் நீடூழி வாழ்க என்ற முழக்கம் எங்கும் கேட்டது. பலர் தங்களுடைய சட்டையில் சிவப்புப் புஷ்பங்களைச் சொருகிக்கொண்டு வெளிக் கிளம்பினர். 1919-ம் வருஷம் பிப்ரவரி மாதம் பதினெட்டாந்தேதி, மிலான் நகரத்தில் பதினாயிரம் பேர் கொண்ட ஒரு பெரிய ஊர்வலம் நடைபெற்றது. ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் பெரிய சிவப்புக் கொடிகள் தாங்கி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். சுமார் மூன்று மணி நேரத்திற்கதிகமாக நடைபெற்ற இந்த ஊர்வலத்தில், அரசாங்கத் துருப்புகளோ போலீஸாரோ தலையிடவில்லை. அரசாங்கத் தாரின் பலஹீனத்தை ஜனங்கள் நன்கு உணர்ந்துகொண் டார்கள். இதனால் அமைதியின்மை அதிகமாகிவிட்டது. வீதிகளில் செல்லும் பணக்காரர்கள், முதலாளிகள், ராணுவ உத்தியோகதர் முதலியோர் பகிரங்கமாகப் பரிகசிக்கப்பட்ட னர். அவர்கள் மீது பலாத்காரமும் உபயோகிக்கப்பட்டது. தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் முதலாளிகளின் ஆதிக்கத்தில் வெறுப்புக் கொண்டவர்களாய் அற்ப காரணங்களுக்காக வேலை நிறுத்தம் செய்து தொந்திரவு விளைவித்தனர்.
பெனிடோ முஸோலினி இந்தச் சம்பவங்களைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தான்; பொதுவுடைமை இயக்கத்தை வளரவிடக் கூடாதென்று தீர்மானித்தான். அது மனிதனுடைய தனிச் சக்தியை நசுக்கிவிடுகிறதென்று தெளிவாக எடுத்துரைத் தான். மற்றும், பொதுவுடைமை இயக்கத்தின் முக்கிய கொள்கை யாகிற தொழில் உற்பத்தி தாபனங்களைத் தேசீயமய மாக்குதல் என்பது முடிவில் ஒரு வித முதலாளித்துவமாகவே முடிகிறதென்று தர்க்கரீதியாக எடுத்துரைத்தான். அப்படி யானால், இத்தலியில் எந்த விதமான ஆட்சி முறையை நிலை நிறுத்துவது? ஜனநாயக ஆட்சி முறையையா? ஒரு காலு மில்லை. ஜனநாயகம் என்பது என்ன? வெறும் எண்ணிக்கை தானே. பெரும்பான்மையோர் ஆதிக்கம் வகித்து எக்காரியத்தை வேண்டு மானாலும் செய்யலாம். ஜனநாயகத்தில் அறிவுக்கும், முன் யோசனைக்கும், தயாரிப்புக்கும் இடமேது? எனவே, பெனிடோ, பார்லிமெண்டரி தாபனங்களை அடியோடு வெறுத்து வந்தான். பார்லிமெண்டுகள், பேசும் இயந்திரங்கள் என்று அடிக்கடி கூறுவான். எனவே இந்த இத்தலியின் பிற்கால நல்வாழ்வுக்கு ஒரு புதிய வழி கண்டுபிடித்தான். அதுவே பாசிட் வழி.
முதற் கூட்டம்
1919-ம் வருஷம் மார்ச் மாதம் இருபத்து மூன்றாந் தேதி! புண்ணிய நாள்! இத்தலியின் புதிய சரித்திரம் அன்று தினத்தி லிருந்தே தொடங்குகிறது. மிலான் நகரத்திற்கு வெளியே, சிதிலமாகிக் கிடந்த ஒரு பழைய கட்டிடம். அதில் அன்று ஒரு கூட்டம் நடைபெற்றது. மிக ரகசியமாகக் கூடிய இக்கூட்டத்தில் நாற்பத்தைந்து பேர் ஆஜராயிருந்தனர். இவர் அனைவரும், யுத்தகளத்தில் போர் புரிந்து திரும்பிய வீரர்கள். பெனிடோ முஸோலினி கூட்டத்திற்குத் தலைமை வகித்தான். இதுவே பாசிட் கட்சியின் தோற்றம். கூட்டத்தலைவர், தமது முகவுரை யில் ஐரோப்பிய யுத்தம் முடிவு பெற்ற பிறகு, பொதுவாக ஐரோப்பாவிலும் சிறப்பாக இத்தலியிலும் நடைபெற்ற சம்பவங்களைச் சுருக்கமாக, ஆனால் அழகாக எடுத்துக் கூறினார். இத்தலியின் வெற்றிக்குக் காரணராயிருந்த போர் வீரர்கள் தங்களுடைய வாழ்க்கையை நடத்த முடியாமல் எப்படி தவிக்கிறார்கள் என்பதைப்பற்றியும், இதுகுறித்து ஆலோசனை செய்யச் சில சங்கங்கள் ஏற்கெனவே தோன்றியிருந்த போதிலும் தகுந்த தலைவரின்றி ஒரு காரியத்தையும் செய்ய முடியா தென்றும் விளக்கிச் சொன்னார்.
ரோம ஏகாதிபத்தியம் செல்வாக்குடனிருந்த காலை மாஜிட் ரேட்டுகள் செல்லும்போது, அவர்களது அதிகாரத்தைத் தெரிவிப்பதற் காக, அவர்களுக்கு முன்னால் லிக்டர்கள் என்ற உத்தியோகதர்கள் தடியேந்திச் செல்வார்கள். இவற்றிற்கு பாச (Fasces) என்று இத்தாலிய பாஷையில் பெயர். இந்தக் கழிகள் தனித் தனியாக இருந்தால் எளிதில் முறித்து விடலாம். ஆனால் இவற்றை ஒன்று சேர்த்துக் கட்டி விட்டால், முறிக்க எவராலும் ஆகாது. அதுபோல், இன்று நாம் தொடங்கும் இச்சங்கத்தில் சேர்ந்த அனைவரும் பிரிக்க முடியாத ஓர் ஒற்றுமைக்குட் பட்டிருப்போமானால் நம்மை அழிக்க எவராலும் இயலாது. இந்த உறுதியைத் தெரிவிக்கும் அடையாளமாக இந்தச் சங்கத்திற்கு - இந்தக் கட்டுப்பாட்டுக்கு - பாசியோ1 என்று பெயரிடுவோமாக.
இவ்வாறு, பெனிடோ, முகவுரையாகக் கூறி, தேசமனைத் திலும் இத்தகைய சங்கங்கள் காணவேண்டுமென்றும், இதன் கொள்களை எங்கணும் பிரசாரஞ் செய்ய வேண்டுமென்றும் தீர்மானங் கொண்டு வந்தான். இதனை அனைவரும் ஏகமனதாக அங்கீகரித்தனர். பாசிட் கட்சியின் கொள்கைகள் என்ன? அவை மூன்று.
1. மார்ச் மாதம் இருபத்து மூன்றாந் தேதி கூடிய மகாநாடு, இத்தலியின் மேன்மைக்காகவும், உலகசுதந்திரத்திற்காகவும் போர்புரிந்து இறந்து போன வீரர்களின் ஞாபகத்திற்கும், காய மடைந்தவர்களுக்கும், அங்கஹீனர்களாகப் போனவர்களுக்கும் வணக்கஞ் செலுத்துகிறது. இத்தாலிய வீரர்கள் சங்கம் (பாசிட் கட்சி) தொடர்ந்து நடத்தப் போகிற, சமூக புனருத்தாரண வேலையில் ஈடுபடுவதாகத் தெரிவிப்பவர் களுக்கும் இம் மகா நாடு வணக்கஞ் செலுத்துகிறது.
2. மார்ச் மாதம் இருபத்து மூன்றாந் தேதி கூடிய மகாநாடு, பிறநாடுகளின் ஏகாதிபத்தியக் கொள்கைக்கு இத்தலி ஒரு கருவியாக உபயோகிக்கப் பெறுமானால் அதையும், மற்ற நாடுகளுக்கு விரோதமாக ஏகாதிபத்தியக் கொள்கைகளை இத்தலி உபயோகிக்கு மானால் அதையும் எதிர்ப்பதாகத் தெரிவிக்கிறது. சர்வதேச சங்கத்தில் சேரும் ஒவ்வோர் அங்கத் தினருடைய பூரண தேசீய வளர்ச்சியையும் அங்கீகரிப்பதாகிற மேற்படி சங்கத்தின் அடிப்படையான உத்தேசத்தை இம் மகாநாடு அங்கீகரிக்கிறது. ஆல்ப் மலை விஷயமாகவும் அட்ரியாடிக் கடல் விஷயமாகவும் இத்தலியின் உரிமைகள் அங்கீரிக்கப் பெறுவதோடு, ப்யூம் பிரதேசமும் டால்மேஷியா பிரதேசமும் இத்தலியுடன் சேர்க்கப்பெற வேண்டுமென்றும் இம்மகாநாடு வலியுறுத்துகிறது.
3. மார்ச் மாதம் இருபத்துமூன்றாந் தேதி கூடிய மகாநாடு, அடுத்துவரும் இத்தாலிய பார்லிமெண்ட் தேர்தலில், எந்த விஷயத்திலும் நடு நிலைமை வகிப்பதாகிற கொள்கை யுடைய அபேட்சகர்களை, எல்லா வழிகளிலும் எதிர்க்கவேண்டு மென்று பாசிடுகளுக்குத் தெரிவிக்கிறது.
தீர்மானரூபமாக, பாசிட் கட்சியின் இம்மூன்று கொள்கை களையும் வகுத்த பெனிடோவின் அரசியல் ஞானத்தை வியந்து பாராட்டா தாரில்லை. முதல் தீர்மானம், எல்லாரையும், அவர்கள் செல்வர்களாக, வறியர்களாக, முதியோராக, இளைஞ ராக யுத்த சேவை என்ற தியாகத்தினால் ஒன்றுபட்ட அனை வரையும் பாசிட் கட்சியில் சேருமாறு அறை கூவியழைக்கிறது. இரண்டாவது தீர்மானம், சமூகவாதக் கட்சியினரையும், தேசீயக் கட்சியினரையும் பிறரையும் இக்கட்சியில் சேருமாறு தூண்டுகிறது. மற்றும் இத்தலியின் தேசீய வளர்ச்சி, எந்தத் துறையில் செல்லும் என்பதைச் சூசிப்பிக்கிறது. மூன்றாவது தீர்மானம், பாசிட் கட்சியார் உடனே செய்யவேண்டிய வேலையென்னவென்பதை அறுதியிட்டுக் கூறுகிறது. இந்தக் கொள்கைகளை நிறைவேற்ற என்ன விதமான முறைகளை வேண்டுமானாலும் கையாளலாம் என்பதை முதலிலிருந்தே பெனிடோ பகிரங்கமாகத் தெரிவித்து வந்தான். நமது கட்சி ராணுவ அமைப்பைப் போன்றதாகவே இருக்க வேண்டும்; ஏனெனில், யுத்தத்தைப் போன்றதொரு தீமையே நம்மெதிர் நிற்கிறது என்று பெனிடோ கூறி வந்தான். நாம் போராட்டத் திற்குத் தயாராய் இருக்க வேண்டும். அந்தப் போராட்டம், இப்பொழுதுள்ள சக்தியற்ற, கோழைத்தனமான அரசாங்கத் தோடு மட்டும் இராது; பொதுவுடமைக் கட்சியாரோடும் நடைபெறும் என்ற வாக்கியங்கள் அடங்கிய பெனிடோவின் அறிக்கையில், பாசிட் கட்சியின் பிற்கால நிருவாக ஆதிக்கத்தின் தோற்றம் புலனாயிற்று.
முதல் பாசிட் கட்சியின் கூட்டத்தில் பிரசன்னமா யிருந்த நாற்பத்தைந்து பேரையும் இன்னாரென்று பெனிடோ விவரமாகத் தெரிந்துகொள்ளவில்லை. ஒவ்வொருவரிடத்தும் உறுதி ஒன்றுமட்டும் இருக்கிறதாவென்பதைத் தனது கூரிய பார்வையால் - தெரிந்து கொண்டான். பாசிட் கட்சியைத் சேர்ந்தவர் அனைவரும் கறுப்புச் சட்டை அணிய வேண்டு மென்று தீர்மானித்தான். இதனாலேயே, பாசிட் கட்சியின ருக்குப் பிற்காலத்தில் கறுப்புச் சட்டையினர் என்று பெயர் வழங்கியது. கூட்டம் கலைந்தது. கலையுந்தறுவாயில் பதிலுக்குப் பதில் செய்யுங்கள்; உயிருக்கு உயிர்; தடைக்குத் தடை என்று அனைவருக்கும் உபதேசித்தான் பெனிடோ.
நாட்டின் சீர்கேடு
இதற்குப் பிறகு, பெனிடோவின் பத்திரிகாலயத்தில், பாசிட் கட்சியைச் சேர்ந்தவர் அடிக்கடி கூடி, தங்களுடைய வேலைத் திட்டத்தைப்பற்றி யோசித்து வந்தார்கள். ஆனால் நாட்டின் பல பாகங்களிலும் பொதுவுடைமை இயக்கமானது க்ஷயரோகத்தைப் போல் வெகு சீக்கிரமாகப் பரவி வந்தது. எங்கும் வேலை நிறுத்தம்! எங்கும் கலகம்! ரொட்டி விலை உயர்ந்தது! நாணய மாற்று விகிதம் குறைந்தது! இத்தலியின் பொதுஜன அமைதி சீரழிந்தது. இனியும் சும்மாயிருப்பதோ பாசிட் கட்சியினர்? அரசாங்கத்தார் எவ்வித நடவடிக்கையும் எடுத்துக் கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக பொதுவுடைமைக் கட்சியினரைச் சமாதானப்படுத்த முயன்றனர். அக்கட்சியினரில் சிலர், முன்னர் அரசியல் காரணங்களுக்காகச் சிறை வைக்கப்பட்டிருந்தவர், விடுதலை செய்யப் பட்டனர். உத்தியோக உடை தரித்துச் சென்ற போலீஸார் முதலியோர் வீதிகளில் பொது வுடமைக் கட்சியினரால் துன்புறுத்துப்பட்டனர். இதற்காக, உத்தியோக உடைதரித்து வீதிகளில் பகிரங்கமாகச் செல்ல வேண்டாமென்று உத்தியோகதர்களுக்கு உத்திரவு பிறந்தது!
1919-ம் வருஷம் ஏப்ரல் மாதம் பதினைந்தாந் தேதி மிலானில் முப்பதினாயிரம் பேர்கொண்ட பொதுவுடமைக் கட்சி ஊர்வலம் ஒன்று, மிக்கபயங்கரமான தோற்றத்துடன் அகப்பட்டதை யெல்லாம் அழித்துக் கொண்டு வந்தது. இச் சமயத்தில் போலீஸார் இருந்த இடம் தெரியவில்லை. பாசிட் கட்சியைத் சேர்ந்த ஒரு சில நூறுபேர், பெனிடோ முஸோலினி யின் தலைமையில் இப்பெருங் கூட்டத்தை எளிதில் கலைத்து விட்டனர். பிறகு, பாசிட் படையினர் - இனி இவரைப் படை யினர் என்றழைப்பதே பொருத்தமாயிருக்குமல்லவா? சமூக வாதக் கட்சியின் பத்திரிகையான ‘அவந்தி! காரியாலயத்திற்குச் சென்று அங்கு வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர் அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு, கட்டிடத்தைக் கொளுத்தினர். யந்திரங்களை சுக்குநூறாக்கினர். எந்தப் பத்திரிகைக்குத் தான் ஆசிரியனாக இருந்து திறம்பட நடத்தி னானோ அதே பத்திரிகையின் காரியா லயத்தைத் தீக்கிரையாக்க பெனிடோ சிறிதும் மனங்கூசவில்லை. லட்சியத்திற்கு இடை யூறாக எது இருந்தாலும் - அஃது எவ்வளவு விலை உயர்ந்ததா யிருந்தாலும் - விலக்க வேண்டியதுதானே!
இந்தக் காரியத்தை முடித்துக்கொண்டு பாசிட் படை யினர் நேரே இத்தாலிய சமூகம் பத்திரிகாலயத்திற்கு வந்து சேர்ந்தனர். இந்தச் செய்தியானது, இத்தலி முழுவதும் பரவியது. பாசிட் கட்சியினால்தான் நலம் விளையும் என்று ஜனங்கள் நம்பலாயினர். இஃது இக்கட்சியின் பிரசாரத்திற்கு மிக அநுகூலமாயிருந்தது, பெனிடோ, தனது பிரசாரத்தைத் தீவிரமாக நடத்திக் கொண்டு வந்தான்.
இச்சமயத்தில், எதிர்பாராத ஒரு சம்பவம் நடைபெற்றது. டி அனன்ஸியோ என்ற தேசீயக் கவிஞர், சிலரைச் சேர்த்துக் கொண்டு ப்யூம் பிரதேசத்தைக் கைப்பற்றிக் கொண்டுவிட்டார் என்று பெனிடோவுக்குச் செய்தி கிடைத்தது இது நடந்தது 1919-ம் வருஷம் செப்டம்பர் மாதம் பன்னிரண்டாந் தேதி. வார்சேல் உடன்படிக்கையில் இது சர்வதேச சங்கத்தைச் சேர்ந்ததொரு பிரதேசமாகக் கருதப்பட வேண்டுமென்று இருந்தது. ஆனால் டி அனன்ஸியோ, இதைக்கைப்பற்றிக் கொண்டதும், அங்குப் பாதுகாவலுக்கு வைக்கப்பட்டிருந்த சர்வதேசப்படைகள் மருண்டு ஓடின. டி. அனன்ஸியோ பெரிய தேசீயவாதி. சர்வம் இத்தலி மயம் என்ற கொள்கையுடையவர். இவர் ப்யூம் பிரதேசத்தைத் கைப்பற்றிக் கொண்டுவிட்டதனால், தேசீய வாதிகளுக்கு நாட்டில் அதிக செல்வாக்கு ஏற்பட்டுவிடுமோ வென்றும், இதனால் பாசிட் கட்சியின் வளர்ச்சி குன்றுமோ என்றும் பெனிடோ சிந்தித்தான். ஆனால் இதற்காகக் கவலை கொள்ளவில்லை. இந்தச் சம்பவத்தைத் தனது கட்சிக்குச் சாதகமாக உபயோகித்துக் கொள்ளத்தீர்மானித்தான். டி அனன்ஸி யோவைப் பாராட்டித் தனது பத்திரிகையில் எழுதினான். ப்யூம் பிரதேசத்தைக் கைப்பற்றியதானது, இத்தாலியரின் தேசீய உணர்ச்சியைக் கிளப்பிவிடுவதற்குப் பெரிதும் துணை புரிந்த தாகக் கருதினான். இதனால் பொதுவுடைமைக் கட்சியின் பலம் குறையுமென்று எண்ணினான். ப்யூம்நிதி என்று ஒரு நிதி ஏற்படுத்திப் பணம் வசூலித்தான். அரசாங்கத்தார், இது விஷயத் தில் இதுகாறும் சும்மாயிருந்ததைப் பற்றிப் பலமாகத் தாக்கியும், அரசாங்கத்தாரால் இயலாத காரியத்தை டி அனன்ஸியோ செய்து முடித்து விட்டதைப் பாராட்டியும் எழுதினான் ஆனால் இதனோடு நின்றுகொண்டு, ஜனங்களிடையே சென்று கிளர்ச்சி செய்யத் தீர்மானித்தான். அரசாங்கத்தாரின் அடக்கு முறை ஒரு புறம்; பொதுவுடைமைக் கட்சியின் வெறுப்பு வேறொரு பக்கம்; ப்யூம் பிரதேச ஆக்ரமிப்பால் எழுந்த தேசீய வாதத்தின் போட்டி பிறிதொருபால். இந்த நிலையில், பொது ஜனங்களிடையே பாசிட் கட்சியின் செல்வாக்கை அதிகரிக்கத் தீவிரமாகப் பிரசாரஞ் செய்வதென்று தீர்மானித்ததோடு, அடுத்து வரும் தேர்தலில் பாசிட் கட்சியினரையும் அபேட்சகர்களாக நிறுத்த வேண்டுமென்று உறுதி கொண்டான்.
அக்டோபர் மாதம் ஒன்பதாந் தேதி பிளாரன் நகரத்தில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் பெனிடோ பேசினான். இவன் பேச்சைக்கேட்டுப் பொதுவுடைமைவாதிகள் கூட்டத்தைக் கலைக்கத் துணியவில்லை. ஆனால் இவனைக் கொலை செய்ய முயன்றார்கள் என்று சொல்லப்படுகிறது. பெனிடோ, கூட்டம் முடிந்தபிறகு ஒரு ஹோட்டலில் உணவு கொள்ளச்சென்றான். பொதுவுடைமைக்கட்சியைச் சேர்ந்த சிலர், சந்தேகிக்கத்தக்க வண்ணம் ஹோட்டலுக்குள் உலவுவதாக, ஹோட்டல் வேலை யாள் ஒருவன் இவனிடம் ரகசியமாகத் தெரிவித்தான். இதைக் கேட்டு, பெனிடோ சிறிதுகூட கலக்க முறாமல் தனது சட்டைப் பையிலிருந்த கைத்துப்பாக்கியை எடுத்து மேஜைமீது வைத்து விட்டு அமைதியாக உணவு கொண்டான். புயற்காற்றிலே அமைதி காணும் அருமையை இவன் நன்கு பயின்றிருந்தான்.
தோல்வியும் பொதுவுடமையும்
1919-ம் வருஷம் நவம்பர் மாதம் இருபதாந் தேதி இத்தாலிய பார்லிமெண்ட் தேர்தல்கள் நடைபெற்றன. பாசிட் கட்சி யினர் அடியோடு முறியடிக்கப்பட்டனர். பொதுவுடமைக் கட்சிக்காரர்களே, பெரும்பான்மையோராகப் பார்லிமெண்டிற் புகுந்தனர். பார்லிமெண்ட் மண்டபத்திலும் சிவப்புக் கொடி பறந்தது!
பெனிடோ பெரிதும் ஏமாற்றமடைந்தான். இவன் இச் சமயம் பலராலும் பரிகசிக்கப்பட்டான். இவன் உயிருக்கு ஆபத்து நேரிடுமோ வென்றும் இவன் நண்பர்கள் அஞ்சினார் கள். தேர்தல் நடைபெற்ற இரண்டாவது நாள், பெனிடோ, தனது பத்திரிகாலயத்தில் நண்பர்களுடன் இனிச் செய்ய வேண்டிய வேலையைப்பற்றி ஆலோசித்துக் கொண்டிருந்தான். தேர்தலில் இவன் தோல்வியுற்றதைச் சாதகமாகக் கொண்டு, அரசாங்கத்தார் இவனைக் கைது செய்யத் தீர்மானித்தனர். இச் செய்தியை நண்பர்கள் இவனுக்கு முன் கூட்டியே தெரிவித்து எங்காவது ஓடி ஒளிந்து கொள்ளும்படி கூறினார்கள். இதைக் கேட்டு இவன் சிரித்து, நான் எங்கிருக்கிறேனென்று அவர் களுக்குத் தெரியும். அவர்கள் வந்து என்னைக் கைது செய்யப் பட்டும் நான் ஓடிப்போகேன் என்று சொன்னான். இதைச் சொல்லி முடிக்கு முன்னர், போலீ கமிஷனர் வந்து அரெட் வாரண்டைக் காண்பித்தார். பத்திரிகாலயம் பரிசோதனை செய்யப் பெற்றது. பெனிடோவும், வேறு சிலரும் கைதியாக்கப் பட்டனர். பெனிடோவின் மீது பல குற்றங்கள் சுமத்தப்பட்டன. ப்யூம் பிரதேசம் கைப்பற்றிக் கொள்ளப்பட்டதை ஆதரித்து எழுதியது, அரசாங்கத்தின்மீது ஆயுதப் போர் தொடுத்ததாகு மென்று குற்றப்பத்திரிகை கூறியது. மறுநாள் இத்தாலிய சமூகம் பத்திரிகை, இத்தலிக்கு வெற்றியை வாங்கித் தந்த குற்றத் திற்காக பெனிடோ முஸோலினி சிறையிலே தள்ளப்பட்டார் என்ற பெரிய தலைப்புடன் வெளி வந்தது.
பெனிடோவின் அரசியல் விரோதிகளும், அரசாங்கத்தின் இந்தச் செயலைக் கண்டு துடித்தனர். அப்பொழுது அரசாங்கத் தின் பிரதம மந்திரியாக இருந்த சென்யோர் நிட்டி பார்த்தார்; பெரிய புயல் எழுமோ என்று அஞ்சினார். மறுநாள் பெனிடோ விடுதலை செய்யப்பட்டான்! இந்த விடுதலை இவனுக்கு ஓய்வு அளிக்கவில்லை. ஓய்வு கொள்ள இப்பொழுது எங்கே அவகாசம்?
பொதுவுடமைக் கட்சிக்காரர்கள், பார்லிமெண்டில் பெரும்பான்மை யோராக வந்தபிறகு நாட்டில் தொழில் நடை பெறுவதே கஷ்டமாகி விட்டது. தபாற்காரர்கள், ரெயில்வே தொழிலாளர்கள், இரும்புத் தொழிற் சாலைகளில் வேலை செய்வோர் முதலிய பலவகைத் தொழிலாளர் களும் வேலை நிறுத்தம் செய்தனர். மற்றும், சில இடங்களில், தொழிலாளர்கள், முதலாளிகளை வெளியேற்றிவிட்டு, தொழிற்சாலை களை ஆக்ரமித்துக்கொண்டனர். இவற்றினால் பொருள் உற்பத்தி மட்டுப்பட்டது. வியாபாரிகள், சாமான்களைத் தங்கள் இஷ்டம் போல் விலை வைத்து விற்றார்கள். கொலைகளும் களவுகளும் நடைபெற்றன. பாசிட் கட்சியை ஆதரித்துப் பேசியவர்கள் பொதுவுடமைக் கட்சியினரால் தூற்றப்பட்டதோடு சில இடங்களில் கொலையும் செய்யப்பட்டார்கள்.
பெனிடோ, இந்தக் கோரக் காட்சிகளை எத்தனை நாள் பொறுத்துக் கொண்டிருப்பான்? பாசிட் கட்சியார், என்ன செய்வதென்று தெரியாமல், பெனிடோவை நோக்கி நின்றனர். இச்சமயத்தில், பெனிடோ, தன் பத்திரிகைத் தலையங்கமொன் றில் பின்வருமாறு குறிப்பிட்டான்:-
இல்லை; நாம் விட்டுக் கொடுக்கப் போவதில்லை. பலாத்காரத் திற்குப் பதில் பலாத்காரந்தான். இந்தப் பதிலை நாம் சிறிதும் தயங்காமல் அளிப்போம். இத்தாலிய சமூகத்தோடு நாம் போராடவில்லை. ஏனென்றால், இத்தாலிய சமூகத்தினரும் இந்த மூடத்தனமான பொதுவுடைமைக் கிளர்ச்சியினரும் ஒன்றுபட்டவரல்லர் என்பதை நாம் உணர்வோம். யுத்தத்தை வெற்றிகரமாக நடத்தியர்வகளே இத்தாலிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள். நமக்கு ஒரே ஒரு கடமைதான் உண்டு. யுத்தத்திற்குப் பிறகு ஜன சமூகத்திடையே கிளம்பிய சமூக ஊழல்களைத் தெரிந்து கொண்டு, பொய்யான, அடைய முடியாத லட்சியங்களைப் பொது ஜனங்களுக்குக் காட்டி ஏமாற்றுகிற கலகக்காரர்களைத் தோற்கடிப்பதே நமது கடமையாகும்.
இவனுடைய நண்பர்கள், நாட்டில் ஒரு பெரிய புரட்சியைக் கிளப்பி, பொதுவுடமைக்காரர்களை அழிக்க வேண்டுமென்று யோசனை கூறினார்கள். புரட்சி என்பது அவ்வளவு லேசான காரியமல்ல என்று இவன் கருதினான். புரட்சி என்பது ஒரு வரம்போடு கூடியதாய் இருக்க வேண்டுமென்றும், பொது ஜனங்கள் செயலில் கொணரக்கூடிய அம்சங்கள் அதில் இருக்க வேண்டுமென்றும், நாச வேலையைச் செய்வ தோடு அது நின்று விடலாகாதென்றும், நிர்மாண திட்டங்கள் பல அதில் கலந் திருக்க வேண்டுமென்றும் இவன் கூறுவான்.
புரட்சி என்பது, விரும்பும்போது திறக்கக்கூடிய மாயப் பொட்டணம் அன்று. அதை நான் என் ஜேபியில் வைத்துக் கொண்டிருக்கவில்லை. ராணுவத்தின் துணை கொண்டுதான் புரட்சியின் பயனை அடைய முடியும். ஜனங்களுடைய பெரும்பான்மையான ஆதரவு இருந்தால் தான் அது வெற்றியடையும்.
புரட்சியைப்பற்றி முஸோலினியின் அபிப்பிராயம் இது. இதனாலேயே நாட்டில் பெரிய மாறுதலை உண்டாக்க முடியு மென்று இவன் நம்பினான். ஆனால் அதிவாரமில்லாத கட்டிடம் விழுந்து விடுமன்றோ? ஆதலின் தேசத்தைத் தயாரிப் பதே தனது முதற் கடமை யெனக்கொண்டான்.
அரசாங்கத்தாரின் செயலற்ற நிலையில், பாசிட் படை யினருக்கும் பொதுவுடைமைக் கட்சியினருக்கும் அடிக்கடி போராட்டங்கள் நிகழலாயின. இவை ஒரு புறம் நடைபெற்றுக் கொண்டிருக்க, பெனிடோ தனது பெரிய மோட்டார் வண்டி யில் நாடெங்கும் சுற்றித் திரிந்து பிரசாரஞ் செய்தான். மணிக்கு எழுபத்தைந்து மைல் வீதம் தானே வேகமாக வண்டியைச் செலுத்திச் சென்றான். ஏன் இவ்வளவு வேகமாகச் செல்ல வேண்டுமென்று யாராவது கேட்டால், மனித சமூகமானது எவ்வளவு துரிதமாக முன்னேறி வருகிறது? இந்த வேகத்திலே கலந்துகொள்ள முடியாதவர்களுக்கு ஆபத்து தான். கோழைகள், பயங்கொள்ளிகள் ஆகிய இவர்களுடைய ஆட்சியெல்லாம் வெகு சீக்கிரத்தில் முடிந்து விடும் என்று விடையிறுப்பான். இவனுடைய பிரசாரத்தின் பயனாக பாசிட் கட்சியில் பலர் சேர்ந்தனர். முப்பதினாயிரம் பேர் கொண்ட பாசிட் படை யானது மிலான் நகரத்தில் அணி வகுத்து நின்றது. படைக்கு முன்னால், ரோம ஏகாதிபத்தியத்தின் கழுகுக் கொடியானது பறந்தது. சிலர் கையில் துப்பாக்கி; சிலர் கையில் ரப்பர் தடி. அணி வகுத்து நின்ற இப்படையை, கட்சித் தலைவனாகிய பெனிடோ முஸோலினி பார்வையிட்டு மகிழ்ந்தான்.
பொதுவுடைமைக் கட்சியினரும் சும்மாயிருக்கவில்லை. 1919-ம் வருஷம் நவம்பர் மாதம், பொலோக்னா நகரத்திலுள்ள பொதுவுடமைக் காரர்கள், அம்மாதம் இருபத்து நான்காந் தேதி ஸோவியத் குடியரசை அவ்வூரில் நிலைநாட்டுவதென்று தீர்மானித்தார்கள். இதற்கு விரோத மாயிருந்த தேசீயவாதி களையும், பாசிடுகளையும் பகிரங்கமாகக் கொலை செய்தனர்.
இதைக் கேட்ட பெனிடோ மனங் கொதித்தான். பதிலுக்குப் பதில் செய்வதைத் தவிர வேறு வழியில்லையென்று தீர்மானித் தான். இதன் பயனாக பாசிட் படையினர் கலகத்திற்குக் கிளம்பினர். ஆங்காங்குச் சில சேதங்களையும் விளைவித்தனர்.
உட்கலகமும் செல்வாக்கும்
இச்சமயத்தில் ப்யூம் பிரதேசத்தை ஆக்ரமித்துக் கொண்ட இத்தாலியர்களுக்குள் உட்கலகம் ஏற்பட்டது. இதன் விளை வாக, டி அனன்ஸியோவும், அவரைச் சேர்ந்தவர்களும் ப்யூம் பிரதேசத்தை விட்டு வந்தனர். அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்த ஒரு கட்சியார் வசம் அது சிக்கிக்கொண்டது. இதையே காரணமாகக் கொண்டு, ஒரு புரட்சியைக் கிளப்ப வேண்டு மென்று பெனிடோவுக்குச் சிலர் கூறினர். புரட்சிக்கு இன்னும் காலம் வரவில்லையென்று பெனிடோ பதிலிறுத்தான்.
1921-ம் வருஷம் மே மாதம் பதினாறாந் தேதி மீண்டும் பார்லி மெண்டு தேர்தல்கள் நடைபெற்றன. முன் தேர்தலில் வெற்றியடைந்த சமூகவாதக்கட்சியினர் பலர் இப்பொழுது தோல்வியடைந்தனர். பாசிட் கட்சியினர், எதிர்பார்த்ததை விட அதிகமான தானங்களைக் கைப்பற்றினர். முப்பத்து மூன்று பாசிடுகள் பார்லிமெண்ட் அங்கத்தினர்களானார்கள். பெனிடோ, மிலான் தொகுதியின் பிரதிநிதியாகத் தேர்ந் தெடுக்கப்பட்டான். ஆனால், இவன் இதில் திருப்தியடைய வில்லை. அரசாங்க நிருவாகம் பூராவும் தன் கையில் வரவேண்டு மென்று விரும்பினான்.
1920-ம் வருஷம் முதல் 1922-ம் வருஷம் வரை, சுமார் இரண்டு வருஷ காலம், இத்தலியில் உள்நாட்டுக் குழப்பங்கள் நடைபெற்றுக் கொண்டுவந்தன. அமைதியற்று இருந் தனர். இதிலிருந்து முஸோலினியே வழிகாட்ட வேண்டுமென்று எதிர்பார்த்தார்கள். இவன் செல்வாக்கும் அதிகமாகியது. பாசிட் படையும் பெருகியது. தன் கட்சியின் பலத்தை நன்குணர்ந்துகொண்ட பெனிடோ, இச்சமயத்தில் சமூகவாதக் கட்சியினருடன் ஒருவித சமாதான ஒப்பந்தம் செய்து கொண் டான். பொதுவுடமைக் கட்சியினருக்கும் பாசிட் கட்சியினருக் கும் அடிக்கடி ஏற்பட்ட சச்சரவுகளின் பயனாகத் துன்பப்படுவது பொது ஜனங்களே. இந்த நிலையில் பாசிட் கட்சியை, வெறும் நாசவேலைக்கு மட்டும் ஏற்பட்ட கட்சியென்று பொது ஜனங்கள் எண்ணிவிடக் கூடாதென்று இவன் கருதினான். மற்றும் தன் கட்சியினருடைய கவனத்தையும், ஊக்கத்தையும் பலாத்காரத்திலேயே திருப்பி விட்டோமானால் பின்னர், இவர்களின் துணைகொண்டு உருப்படியான வேலைகளைச் செய்ய முடியாதென்பதும் இவனுக்குக் தெரிந்தது. இந்தக் காரணங்களுக்காவே இவன் சமூகவாதக் கட்சியினரோடு ஒப்பந்தம் செய்து கொண்டான். இவன் நோக்கமெல்லாம் பொது ஜனங்கள் அமைதி பெற வேண்டுமென்பதுதான்.
XII பாசிட் கட்சி வளர்ச்சி
புதிய பத்திரிகை
இத்தாலிய சமூகம் பத்திரிகையின் காரியாலயம் இது காறும் ஒரு சிறிய கட்டிடத்திலேயே இருந்தது. இப்பொழுது 1922-ம் வருஷத்தில் - இது வேறு ஒரு பெரிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. பாசிட் கட்சியின் தலைமைக் காரியாலமும் இங்கே நிறுவப்பட்டது. பத்திரிகாலயம் சீர்திருத்தி அமைக்கப் பட்டது. பத்திரிகாலயத்திற்குரித்தான துண்டுக் காகிதங்கள், கையெழுத்துப் பிரதிகள், அகராதி வகையராக்கள் முதலியவை ஒழுங்காக அந்தந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் முன்னைவிட அதிகமாகக் காரியாலயத்தின் மூலை முடுக்கு களில் வெடிகுண்டுகள், கைத்துப்பாக்கிகள் முதலிய சேர்த்து வைக்கப் பட்டன. நுழைவாயிலில் ஆயுதந்தரித்த பாசிட் படையினர் காவல் நின்றார்கள். பத்திரிகையின் செல்வாக்கு உச்சநிலையையடைந்தது.
இத்தாலிய சமூகம் என்ற தினசரிப் பத்திரிகையோடு ஹேரார்கி1 என்ற ஒரு வாரப் பத்திரிகையை இவன் ஆரம்பித் தான். பாசிட் கட்சியினர் இச்சமயம் அரசாங்க நிருவாகத்தை ஏற்றுக்கொண்டால், எங்ஙனம் நடத்துவர் என்பதை இவன் இதில் வருமாறு சூசிப்பித்து வந்தான்.
தெய்வீக ஆட்சி என்றால் என்ன? பொறுப்பு, கடமை, ஒழுங்கு ஆகிய இவைதான். ஆயிரக்கணக்கான ஆட்சி முறைகள் தோன்றி, வாழ்ந்து, வீழ்ந்து, மறைந்துபோனதைச் சரித்திரம் குறிப்பிட்டு வைத்திருக்கிறது புதிய ஆட்சியில், பழைய ஆட்சியி லிருந்த நல்ல அமிசங்களையெல்லாம் எடுத்துப் புகுத்தி மேலுறச் செய்ய வேண்டும். பழைய சம்பிரதாயங்களிலே புதிய நாற்றை நடவேண்டும். புதிய உலகத்தின் வழியை, இந்த விதமாகவே நாம் தயார் செய்ய முடியும். பழமைக்கும் புதுமைக்கும் இந்த விதமாகவே நாம் பாலம் அமைக்க முடியும்.
சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் ஆகிய மூன்று உயரிய தத்துவங்களுக்கு எதிரே, பொறுப்பு, கடமை, ஒழுங்கு என்ற மூன்றும் எவ்வளவு கம்பீரமாக, உறுதியாக, ஆனால் பணிவாக நிற்கின்றன! இவை மூன்றின் உருவமாக, பெனிடோ முஸோலினி இத்தாலியர் உள்ளத்தில் குடிகொண்டான்.
நேபில் கூட்டம்
1922-ம் வருஷம் ஆகட் மாதக் கடைசியில் பொது வுடமைக் கட்சியினர், கடைசி எதிர்ப்பாக ஒரு பொதுவேலை நிறுத்தத்திற்கு ஏற்பாடுசெய்தனர். இதைக் கேட்ட பொது ஜனங்கள் நடுங்கிப்போனார்கள். வேலை நிறுத்தம் தொடங் கியது. இச்சமயத்தில் பாசிட் கட்சியினர் வேலைநிறுத்தஞ் செய்த பொதுவுடமைக்காரரோடு போராடவில்லை. அதற்கு மாறாக வேலைநிறுத்தஞ் செய்யப்பெற்ற தொழில் தாபனங் களில் தாங்கள் புகுந்து வேலையைத் தொடர்ந்து நடத்த ஆரம்பித்தனர். பொது ஜனங்கள் பெருமூச்சு விட்டார்கள்; பாசிட் படையினர் மீது பூரண நம்பிக்கை கொண்டார்கள். இதனால் தேசீயக் கட்சியினரும் பாசிட் கட்சியில் சேர்ந்தனர். பெனிடோ பொது ஜனங்களின் இந்த நம்பிக்கையை ஆதார மாகக்கொண்டு ஆங்காங்குச் சுற்றுப் பிரயாணஞ் செய்து பாசிட் படையினரைத் தயார் செய்தான். 1922-ம் வருஷம் அக்டோபர் மாதம் 24-ந் தேதி நேபில் நகரத்திற்கு பெனிடோ விஜயஞ்செய்தான். அப்பொழுது வெசூவிய எரிமலையின் அடிவாரத்தில் நாற்பதினாயிரம் கறுப்புச்சட்டையினர் அணி வகுத்து நின்று, பெனிடோவுக்கு வணக்கஞ் செய்தார்கள். அப்பொழுது பெனிடோ எரிமலையைப்போல் சில வார்த்தை களை வீசினான்:-
இன்று இங்குக் கூடியுள்ள இந்தப் பெரிய கூட்டத்தையே இத்தலியின் கண்கள் நோக்கிக் கொண்டிருக்கின்றன. ஐரோப்பிய யுத்தத்திற்குப் பிறகு, பாசிட் கட்சியைப்போல் வேறெந்தக் கட்சியும் உலகத்தாரின் கவனத்தை ஈர்க்கவில்லையென்று கூறுவது மிகையாகாது. அரசியல், தொழில், ராணுவம், மதம் ஆகிய யாவும் இந்தக் கட்சியில் அடங்கியிருக்கின்றன. நவீன இத்தாலியரின் தேவை, நம்பிக்கை, லட்சியம் யாவும் இந்தப் படையில் சேர்ந்திருக்கின்றன. தேசீயத்திற்கும், சர்வதேச சக்திகளுக்கும் இடையே அகப்பட்டுத் தத்தளித்துக் கொண் டிருந்த அரசாங்கத்தை, நடுநிலையினின்று விலகிக் கொள்ளுமாறு வற்புறுத்தினோம். அரசாங்கத்தினுடையவும், தனி மனிதர்களுடையவும் பொருளாதார நிலைமையைச் சரிப்படுத்துமாறு பன்முறை வேண்டினோம். பாசிட் கட்சியினருக்கு ஐந்து மந்திரிப் பதவிகள் கொடுக்குமாறும், இத்தாலியர்கள் வெளிநாடு செல்வதைப் பற்றிப் பரிசீலனை செய்ய ஓர் அரசாங்கக் கமிட்டியைத் தோற்றுவிக்க வேண்டுமென்றும் கேட்டோம். இவற்றிற்கு அரசாங்கம் அளித்த பதில் நகைப்புக்கிடமாயிருக்கிறது. பெயரளவில், மந்திரிச்சபையில் நமக்கு ஒரு தாபனம் கொடுப்பதாகச் சொல்கிறார்கள்; அல்லது ஒரு தாழ்ந்த பதவியை ஏற்றுக்கொண்டு திருப்தியடையுமாறு கூறுகிறார்கள். இவற்றிற் கெல்லாம் நமது கடைசி பதில் என்ன? பலாத்காரம்.
பாசிட் படையினர் பெரிதும் உற்சாகங்கொண்டனர். பாசிட் கட்சியின் நிருவாக சபை, அந்தரங்கமாகக் கூடி, பெனிடோவைச் சர்வாதிகாரியக நியமித்தது. பெனிடோ, ஒரு நாளைக் குறிப்பிட்டு, இத்தலியிலுள்ள எல்லா பாசிட் படையினரும் ஒரே சமயத்தில் புரட்சி செய்ய வேண்டுமென்று உத்திரவிட்டான். புரட்சிக் கூட்டத்தினரின் திட்டத்தையும் இவன் பின்வருமாறு வகுத்தான்:-
1. பெரிய நகரங்களிலுள்ள பொது தாபனங்களைக் கைப் பற்றிக்கொள்ளுதல்.
2. சாண்டாமாரினெல்லா, பாலிக்னோ, டிவோலி, வல் சூர்னோ ஆகிய நகரங்களில் பாசிட் படையினரை ஒருங்கே திரட்டிவைப்பது.
3. அதிகாரத்தைத் தங்கள் வசம் ஒப்புவிக்குமாறு அரசருக்கு அறிக்கை அனுப்புதல்.
4. திடீரென்று ரோமாபுரியைத் தாக்குதல். அதிகாரத்தையும் மந்திரிப்பதவிகளையும் கைப்பற்றிக்கொள்ளல். இது சம்பந்தமாக ஏதேனும் போர் நிகழ்ந்தால், பாசிட் படையினர் பாலிக்னோவுக்குத் திரும்பி வந்துவிடுதல்.
5. இத்தலியின் மத்திய பாகமாகவுள்ள ஒரு நகரத்தில் பாசிட் அரசாங்கத்தை தாபித்தல். பாசிட் படை யினர் ஒருமுகப்பட்டு ரோமாபுரியின் மீது படை யெடுத்தல்.
இச்சமயத்தில் இத்தலியின் பிரதம மந்திரியாயிருந்தவர்கள் சென்யோர் டாக்டார் என்பார். இவருக்கும், இவருடைய அரசாங்கத் திற்கும் பெனிடோவின் திட்டங்கள் ஒன்றுமே தெரியாது. பாசிட் கட்சியின் பிரதிநிதியாக, பெனிடோ முஸோலினிக்கு ஏதேனும் ஒரு சிறிய மந்திரிப் பதவியைக் கொடுத்துவிட்டால் போதும் என்று இவர்கள் மனப்பால் குடித்துக்கொண்டிருந்தார்கள்.
1922-ம் வருஷம் அக்டோபர் மாதம் இருபத்தெட்டாந் தேதி, பாசிட் படையினர் வெற்றி காணவேண்டிய திரு நாளென்று குறிப்பிடப் பட்டிருந்தது. எங்கும் பரபரப்பு! ஆனால் பெனிடோ வின் முகத்தில் எவ்வளவு அமைதி! இருபத்தேழாந் தேதி மாலை மிலான் நகரத்தில், பெனிடோ, ஒரு நாடகக் கொட்டகையில், முன் வரிசையில் அமர்ந்து நாடகத்தைப் பார்த்துக் கொண் டிருந்தான். இத்தலியின் நாளைய பிரதம மந்திரி முன்னர், நாம் நடிக்கிறோமென்று நடிகர்களுக்குத் தெரியாது. ஜனங்களோடு சேர்ந்து பெனிடோவும் அவ்வப்பொழுது நாடக சந்தர்ப்பங் களையொட்டி கைதட்டினான்; தலையசைத்தான்; உரக்கச் சிரித்தான். ஆனால் இவன் உள்ளத்திலே, உரக்க சிரிப்பின் அடியிலே, மேகம் மின்னியது; இடி இடித்தது; புயல்காற்று அடித்தது. பாதி நாடகத்திலே எழுந்து போய் விட்டான்.
சுற்றறிக்கையும் சுறுசுறுப்பும்
இத்தாலிய சமூகம் பத்திரிகாலயம் பலமாகப் பந்தோ பது செய்யப்பட்டது. சுற்றிலும் முள்வேலி போடப்பட்டது. காவலாளிகள் நிமிர்ந்து நின்றார்கள். காரியாலயத்திற்குள்ளே பலர் கூடி குசுகுசுவென்று பேசிக்கொண்டிருந்தார்கள்.
பாசிட் படையின் நிருவாக சபையினர், பின்வரும் அறிக்கையை ஆங்காங்குள்ள பாசிட் படைத் தலைவர் களுக்கு அனுப்பிவிட்டார்கள்:-
கறுப்புச்சட்டையினரே!
தீர்மானிக்க வேண்டிய மணி அடித்து விட்டது. நான்கு ஆண்டு களுக்கு முன்னர், இதே நாளில், நமது தேசீயப் படையானது முன்னேறிச் சென்று வெற்றி கண்டது. இன்று, கறுப்புச்சட்டைப் படையினர், மற்றொரு வெற்றிகாண ரோமாபுரியை நோக்கிச் செல்கிறார்கள்.
இன்று பாசிட் படை திரண்டு விட்டது. பாசியோவின் ராணுவச் சட்டம், அதன் எல்லாக் கடுமைகளுடன் அமுலுக்கு வந்துவிட்டது.
தேசீயப்பாதுகாப்பின் பணயப்பொருளெனக் கருதப்படும் ராணுவம், இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளாது, விட்டோரியோ வெனிடோ என்ற இடத்தில் வெற்றி கொண்ட ராணுவத்தினிடம் தங்களுக்குள்ள மதிப்பை, பாசிட் நிருவாக சபையினர் இச்சமயத்தில் தெரிவித்துக் கொள்கின்றனர். பாசிட் படையினரின் இந்தப் படையெடுப்பானது, பொது ஜன அமைதியைக் காக்கும் உத்தியோகதர்களை நோக்கியன்று; சென்ற நான்கு வருஷமாக, இத்தலிக்கு ஓர் ஒழுங்கான அரசாங்கத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்குச் சக்தியில்லாத - திறமையற்ற - அவமதிக்கக்கூடிய அரசியல் கூட்டத்தை நோக்கியே இது தொடங்கப் பட்டிருக்கிறது.
தொழிலாளிகள், பொருள் உற்பத்திக்குக் காரணமாகவுள்ள மத்திய வகுப்பார் முதலியோருக்கு, இச்சமயத்தில் உறுதி கூறுவது என்னவென் றால், பாசிட் நிருவாக சபையினர், தேசத்தில் அமைதியை நிலை நிறுத்தவே முன்னிற்கின்றனர் என்பதேயாகும். தேசத்தின் செல்வ, பொருளாதார நிலையைச் சீர்படுத்தி அபிவிருத்திக்குக் கொண்டுவர பாசிட் நிருவாக சபையினர் முற்படுவர். பாசிட் கட்சியினரின் வெற்றியைக் கண்டு தொழிலாளர்கள் எவ்விதத்திலும் அச்சப்பட வேண்டியதில்லை. அவர்களுடைய நியாயமான உரிமைகள் எப்பொழுதும் காக்கப்பெறும். ஆயுதமில்லாத நமது சத்துருக்களிடத்தில் நாம் தாராள மனப்பான்மை காட்டுவோம்; கருணை செலுத்துவோம். ஆனால் அவர்கள் நம்மை எதிர்த்தால், மிகக் கொடுமையாக அவர்களிடம் நடந்து கொள்வோம்.
சுயேச்சையாக வளர வொட்டாதபடி, தேசீய வாழ்வு என்கிற உடலைச்சுற்றிப் பிணிக்கப்பட்டிருக்கும் சிக்கலான கயிற்றைத் துணித் தெறிய, இன்று பாசியோ, தனது வாளை உருவிக் கொண்டு நிற்கிறது.
நமது தேசத்தைக் காப்பாற்ற வேண்டும், அதனைச் சக்தி பொருந்தியதாகச் செய்ய வேண்டும் என்ற ஒரு நோக்கத்துடனேயே நாம் ஆயுதந்தாங்குகிறோம் என்பதற்குச் சர்வ சக்தி வாய்ந்த கடவுளும், யுத்த களத்தில் இறந்து போன ஐந்து லட்சம் பேருடைய ஆன்மாக்களுமே சாட்சி!
இருபத்தேழாந் தேதி இரவு, பாசிட் கட்சியினர், இத்தலியின் வடபாகத்திலுள்ள ரெயில்வே பாதைகள், மிலான், ஜினோவா, கிரேமோனா முதலிய முக்கிய நகரங்களிலுள்ள ரெயில்வே டேஷன்கள், தபாலாபீசுகள் டெலிபோன் சாலைகள் அகிய எல்லாப் பொது தாபனங்களையும் கைப் பற்றிக்கொண்டு விட்டார்கள்.
நாடகத்தின் மத்தியில் பெனிடோ முஸோலினி எங்கு எழுந்து சென்றான் என்பது இப்பொழுது தெரிகிறதல்லவா?
இருபத்தெட்டாந்தேதி காலை, ரோமாபுரியில் பாசிட் கட்சியினர் பொது தாபனங்களைக் கைப்பற்றிக்கொண்ட செய்தி பரவியது! மந்திரிச் சபையினர் வாயில் விரல் வைத்து நின்றனர்; அரசரின் அரண்மனைக்கு அடிக்கடி ஓடினர்; தங்களுக்குள்ளேயே கலந்து பேசினர். முஸோலினிக்கும் பாசிட் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் ஒரு சில மந்திரிப் பதவிகளை அளித்து விடுவதாகச் சமாதானம் பேசலாமா என்று யோசித்தனர். அதிகார ஆசை யாரை விட்டது என்று தங்களுக் குள்ளேயே கேட்டுக் கொண்டனர்.
பகல் பன்னிரண்டு மணி அடித்தது. மந்திரிச் சபையின் காரியாலயத்தில் டெலி போன் சப்தம் கேட்ட வண்ணமாயிருந்தது. இத்தலி யின் மத்திய பாகத்திலுள்ள அன்கோனா, பெருகியா, சீனா, பிளாரன், பைஸா, அர்ரெஸோ முதலிய முக்கிய நகரங்களை பாசி டுகள் கைப்பற்றிக்கொண்டு விட்டனர்! இத்தலியின் தெற்குப் பாகமும் பாசி டுகள் வசமாயது! ரோமாபுரியைச் சுற்றி பாசிட் படைகள்! ரோம் நகரம் ஒன்று தான் பாக்கி! இந்தமாதிரியான செய்திகள் ஒன்றன் பின்னொன்றாக டெலிபோனில் வந்து கொண்டிருந்தன.
இனி என்ன செய்வது? உடனே, இத்தலி முழுவதும் ராணுவச் சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வருமாறு பிரதம மந்திரியான பாக்டர், அரசருக்கு யோசனை கூறினார். அரசர் அதற்கு மறுத்துவிட்டார். குடி தழீ இக்கோலோச்சுமா நில மன்னனாய் இமானுயுவல் மன்னர் இச்சமயம் விளங்கினார். ராணுவச் சட்டத்தை அமுலுக்குக் கொண்டுவந்தால் நாட்டில் உட்கலகங்கள் உண்டாகும் என்பதை இவர் நன்கு உணர்ந் திருந்தார்.
முஸோலினி - பிரதம மந்திரி
முஸோலினி எங்கே? மிலானில் தனது பத்திரிகாலயத்தில் வழக்கம்போல் பத்திரிகை வேலையில் ஈடுபட்டிருந்தான். சிறிதுகூட மனஅமைதி குலையவில்லை. ஆனால் பாசிட் படையினர், ரோமாபுரியை நோக்கி அணிவகுத்துச் சென்று கொண்டிருக்கின்றனர்.
இருபத்தெட்டாந் தேதி மாலை ஐந்து மணி. முஸோலினி பத்திரிகாலயத்திலுள்ள தனது அறையில் பல வெளிநாட்டுப் பத்திரிகைகளின் மிலான் நிருபரான கியுலியோ பாரெல்லா என்பாருடன் பேசிக்கொண்டிருந்தான். இவன் மேஜைமீதிருந்த டெலிபோன் மணியடித்தது. கையிலே ரிசீவரை எடுத்துக் காதுக்கருகாமையில் வைத்துக்கொண்டான்.
ஹல்லோ! ஆமாம், முஸோலினிதான் இங்கே பேசுவது…. என்ன? சக்ரவர்த்தி என்னோடு பேச விரும்புகிறாரா?…………….. மந்திரிச் சபையை அமைக்குமாறு உத்தியோக முறையில் எனக்கு உத்தரவு கிடைத்தால் நான் ரோமுக்கு வர விரும்புகிறேன். இல்லையேல் பாசிட் படைக்குத் தலைவனாக அங்கு வருவேன்.
டெலிபோனில் யார் பேசியது? ரோமாபுரியிருந்து முஸோலினியின் ஆப்த நண்பர் ஒருவர் பேசினார்.
பத்திரிகை நிருபர் இந்தச் சம்பாஷணையைக் கேட்டுக்
கொண்டிருந்தார். முஸோலினி, பிரதம மந்திரியாகப்போவது நிச்சயமென்று ஊகித்து, உடனே இவனைப் பார்த்து எக்ஸலென்சி அவர்களே என்று அழைத்தார்.
நிருபர் : நாளை நீங்கள் மந்திரிச் சபையை அமைப்பீர்கள் என்று நம்புகிறேன். அப்படியானால் மந்திரிச் சபை எப்படி இருக்கும்? பாசிட் கட்சியினர் மட்டும் அதில் சேர்ந்திருப் பார்களா?
முஸோலினி: இல்லை. அநுபவம் வாய்ந்த அரசியல் வாதிகள் சிலரையும் சேர்த்துக்கொள்ள உத்தேசம். அப்படி முடியாவிட்டால், அடியோடு மாற்றியமைக்க வேண்டியது தான். அப்பொழுது பிரதம மந்திரி முதல் வாயிற்காப்போன் வரையில் எல்லாம் பாசிட் மயமாகவே இருக்கும்.
பாசிட் படையினர் ரோமாபுரியை நோக்கி இன்னும் சென்று கொண்டிருக்கின்றனர்!
அக்டோபர் மாதம் 29ந் தேதி! மீண்டும் முஸோலினியின் மேஜை மீதிருந்த டெலிபோன் மணியடித்தது. சக்ரவர்த்தியின் மெய்க் காப்பாளரான தளபதி சிட்டாடினி பேசினார்.
ஹல்லோ! நான்தான் முஸோலினி………………… நிரம்ப வந்தனம் ……………… இந்த உத்தியோக உத்திரவைத் தந்திமூலமாக எனக்கு உறுதிப்படுத்தவேண்டும். அது கிடைத்தவுடனே நேரே ரோமாபுரிக்கு வருகிறேன். அதை எதிர்பார்க்கலாமா? ……….. நிரம்பசரி ………….. வந்தனம்.
ஆசனத்தை விட்டு எழுந்தான். யார்? இத்தலியின் பிரதம மந்திரி! உடனே இத்தாலிய சமூகம் விசேஷ அநுபந்தம் வெளியாயிற்று. முஸோலினி - இத்தலியின் பிரதம மந்திரி! இதுவே அநுபந்தத்தின் தலைப்பு. அரை மணி நேரத்திற் கெல்லாம் தந்தி கிடைத்தது.
சக்ரவர்த்தி உடனே ரோமாபுரிக்கு வருமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறார். புதிய மந்திரிச் சபையை அமைக்கும் வேலையை உங்களிடம் ஒப்புவிக்க விரும்புகிறார். (ஒப்பம்) ஜெனரல் சிட்டாடினி.
பத்திரிகாலயத்திற்கருகாமையில் கூடியிருந்த பாசிட் படையினர் இச் செய்தி கேட்டு ரோமாபுரிக்கு என்று சந்தோஷ ஆரவாரஞ் செய்தார்கள். முஸோலினி மௌனமாகத் தந்தியைப் படித்துவிட்டு அதைப் பக்கத்திலிருந்த நண்பர்களிடம் கொடுத் தான். ஒரு நண்பர் கேட்டார்: முஸோலினி! இப்பொழுது நீ என்ன நினைக்கிறாய்?
முஸோலினியின் முகம் வெளுத்தது. கண்களில் நீர் ததும்பியது. என் தகப்பனாரை நினைத்துக் கொண்டிருக் கிறேன் என்று தழதழத்துக் கூறினான்.
இரவு எட்டு மணி. மிலான் ரெயில்வே டேஷனில் சொல்லமுடியாத ஜனக் கூட்டம். ரோமாபுரி செல்வதற்காக முஸோலினி டேஷனுக்கு வந்து சேர்ந்தான்.
கூட்டத்தினர் சந்தோஷ ஆரவாஞ் செய்தனர். புஷ்பங் களை வாரி இறைத்தனர். முஸோலினி ஏதேனும் இரண்டு வார்த்தைகள் சொல்ல வேண்டும் என்று இரைந்தனர். என்ன பேசுவது? எதைப்பற்றிப் பேசுவது?
நாளை முதல் இத்தலிக்கு ஒரு மந்திரிச் சபை மட்டுமிராது; உண்மையான ஓர் அரசாங்கமும் இருக்கும்.
இவ்வளவே முஸோலினி பேசினான். பிறகு டேஷன் மாடர் வந்து தமது வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டார். முஸோலினி அவரோடு கைகுலுக்கினான்.
குறிப்பிட்டபடி சரியாக எட்டு மணிக்கு வண்டி கிளம்ப வேண்டும். இன்று முதல் எல்லாம் மிக ஒழுங்காக நடைபெற வேண்டும் என்றான் டேஷன்மாடரிடம் முஸோலினி.
வண்டியும் புறப்பட்டது. முஸோலினியுடன் முன் சொன்ன மிலான் பத்திரிகை நிருபரும் புறப்பட்டார்.
நீங்கள் பிரதம மந்திரியானதைக் கேட்டு உங்கள் மனைவி என்ன கூறினாள்? அவளிடம் விடைபெற்று வரும் போது என்ன சொன்னாள்? என்று துணிவுடன் கேட்டார் நிருபர்.
அவள் ஒன்றும் பேசவில்லை. மௌனமாக என்னை ஆலிங்கனம் செய்து கொண்டாள். சீக்கிரம் திரும்பி வந்து விடுங்கள் என்று மட்டும் கூறினாள் என்றான் முஸோலினி.
அக்டோபர் மாதம் 30ந் தேதி காலை 10-42 மணிக்கு, இத்தலியின் பிரதம மந்திரியை ஏற்றிக்கொண்டு வந்த ரெயில் வண்டி, ரோமாபுரி டேஷனை அடைந்தது. வழி நெடுக உபசாரம்! சந்தோஷ ஆரவாரம்! டேஷனில் வாழ்க இத்தலி என்ற முழக்கம்! முஸோலினி டேஷனிலிருந்து நேரே பாசிட் கட்சித் தலைமைக் காரியாலயமாகிய சேவாய் ஹோட்டலுக்குச் சென்று, அங்கிருந்து நேரே சக்ரவர்த்தியின் பேட்டிக்குச் சென்றான். சுமார் ஒருமணி நேரம் சக்ரவர்த்தி அவர்களோடு கலந்து பேசிவிட்டு, சரியாகப் பன்னிரண்டே கால் மணிக்குத் தனது ஹோட்டல் வாயிலில் நின்று கொண்டிருந்தான். அடிக்கடி சந்தோஷ ஆரவாரம். உள்ளிருந்த முஸோலினி மேற் பலகணியில் வந்துநின்று கொண்டு ஜனங்களுக்கு வணக்கம் செலுத்திவிட்டுப் பின்வருமாறு பேசினான்:
பாசிடுகளே! ரோமர்களே! பாசிட் இயக்கம் வெற்றியடைந்து விட்டது. புதிய மந்திரிச் சபையை அமைக்க நான் ரோமாபுரிக்கு வந்திருக் கிறேன். இன்னும் சில மணி நேரத்திற்குள் நிலையானதோர் அரசாங் கத்தைக் காண்பீர்கள்.
பிறகு முஸோலினி உள்ளே சென்று ஐந்துமணி நேரம் அவசரமான வேலைகளையெல்லாம் கவனித்தான். இதுகாறும் பிரதம மந்திரியாக இருந்த சென்யோர் பாக்டாவுக்குக் காவலாக இருக்கும்படி சில உண்மையான பாசிடுகளை நிறுத்தி வைத்தான்; தேசத்தின் முக்கியமான இடங்களுக்குச் சில உத்தயோகதர்களை அனுப்பினான்; எதிர்க்கட்சிப் பத்திரிகை களின் காரியாலயங்களின் மீது கண்வைத்துக்கொண்டிருக்கு மாறு சிலரை நியமித்தான். உத்தியோகதர்களுக்கு இன்னின்ன காரியங் களைச் செய்ய வேண்டுமென்று விவரமாக உத்திரவுகள் விடுத்தான். மாலை ஐந்து மணிக்குப் புதிய மந்திரிச் சபை ஏற்பாடாகிவிட்டது. இந்தப் புதிய சபை மன்னரின் அங்கீகாரம் பெற்றுவிட்டது. மாலை ஏழு மணிக்குப் புதிய மந்திரிகள் தங்கள் பதவிகளை ஏற்றுக்கொண்டார்கள்! இவற்றை யாராவது நம்புவார்களா? ஆனால் எல்லாவற்றையும் முஸோலினி ஒரு சில மணி நேரத்தில் செய்து முடித்தான்.
பின்னர் ரோமாபுரிக்கு நாலா பக்கங்களிலிருந்தும் வந்திருந்த பாசிட் படையின் தளபதிகள் முஸோலினியைப் பேட்டி காண வந்தார்கள். ஐம்பத்திரண்டாயிரம் பாசிடுகள் ரோமாபுரிக்கு வந்திருப்பதாக இவர்கள் மூலம் முஸோலினி தெரிந்து கொண்டான். இவர்கள் ஒரே இடத்தில் தங்குவதால் ஆபத்து ஏற்படக்கூடுமென்று கருதி, இவர்களை உடனே கலைத்து அந்தந்த ஊர்களுக்கு அனுப்பிவிட வேண்டுமென்று தீர்மானித்தான். எனவே ரெயில்வே அதிகாரியைக் கூப் பிட்டனுப்பினான். அவர் வந்து வந்தனம் செய்து நின்றார்.
இப்பொழுது மணி எட்டு. நாளை இரவு எட்டு மணிக்குள் ரோமாபுரியிலுள்ள ஐம்பத்திரண்டாயிரம் பாசிட் படையினரையும் அவரவர் ஊருக்கு ரெயிலேற்றி அனுப்பிவிட ஏற்பாடு செய்யவேண்டும்.
அது முடியாதே. யுத்த காலத்தில் கூட இங்ஙனம் செய்வது கஷ்டம். குறைந்தது மூன்று நாட்களாவது வேண்டும்.
இருபத்து நான்கு மணி நேரம் என்று சொன்னேன். முடியாது என்ற சொல்லே எனக்குத் தெரியாது. என் உத்திரவுபடி நடக்கவேண்டும்.
முஸோலினி இங்ஙனம் அதிகார தோரணையில் முதலில் கூறிவிட்டுப் பிறகு சிறிது புன்சிரிப்புடன் இதோ பாருங்கள், இதை நன்றாக நீங்கள் சமாளிக்கலாம். எப்படியாவது சமாளித்தே ஆகவேண்டும். நல்ல வேலை செய்தவர்களை எப்படி சன் மானிப்பதென்று அரசாங்கத்திற்குத் தெரியும் என்றான்.
இந்த உத்திரவுக்கு எப்படி கீழ்ப்படியாதிருக்க முடியும்? உடனே, ரோம் டேஷனிலிருந்து அறுபது வண்டிகள் ஒன்றன் பின்னொன்றாய், பாசிட் துருப்புகளை ஏற்றிக்கொண்டு பல இடங்களுக்கும் சென்றன. பாசிட் படையினர் தங்கள் வெற்றிக் கொண்டாட்டத்தை ரோமாபுரியில் குறைந்தது ஒரு வார காலமாவது இருந்து கொண்டாடி வேடிக்கையாகக் காலங் கழிக்கலாம் என்று எண்ணினார்கள். ஆனால் தலைவரின் உத்திரவு பெரிய ஏமாற்றத்தைத் தந்து விட்டது.
இரவு பதினொன்றரை மணி அடித்தது. அருகாமை யிலிருந்த புதிய மந்திரிகளைப் பார்த்த கனவான்களே! மந்திரிச்சபையின் முதற் கூட்டம் ஆரம்பிக்கலாமா? என்றான் முஸோலினி. பாசிட் அரசாங்கம் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது.
சித்திரக்காரனைப் போல
இந்தச் சமயத்தில், முஸோலினியின் மனப்பான்மை எப்படி யிருந்ததென்பதை, இவனுக்கும் எமில் லட்விக் என்ற ஒரு ஜர்மன் அறிஞருக்கும் 1932ம் வருஷத்தில் நடைபெற்ற சம்பாஷணை மூலமாகத் தெரிந்து கொள்ளலாம்:
எமில் லட்விக்: (பாசிட் படையின் தலைவராக) நீங்கள் ரோமாபுரிக்கு வந்தபோது எவ்விதமான எதிர்ப்பும் இல்லா திருந்ததற்குக் காரணம் என்ன? 1928ம் வருஷம் நவம்பர் மாதம் ஒன்பதாந் தேதி ஜர்மனியில் நடைபெற்றதைப் போலவன்றோ இஃது இருக்கிறது!
முஸோலினி: அதே காரணந்தான்; உயிரற்ற ஆட்சி முறை!
எ. ல: நகரமானது முற்றுகையிடப்பட்டதாகக் கருதி அது சம்பந்தமாக இத்தாலிய மன்னர் ஓர் அவசரச் சட்டம் பிறப்பித்துக் கையெழுத்தும் போட்டுவிட்டதாகச் சொல்லு கிறார்களே?
முஸோ: மந்திரிகள் அப்படிதான் தீர்மானித்திருந்
தார்கள். ஆனால் அரசர் இருமுறை வற்புறுத்தப்பட்டும் கையெழுத்திட மறுத்துவிட்டார்.
எ. ல: அரசர் அவசரச் சட்டத்தில் கையெழுத்திட்டு அரசாங்கப் படைகள் உங்களை எதிர்த்து நின்றிருந்தால் அப்பொழுதும் நீங்கள் வெற்றியடைந்திருப்பீர்களா?
முஸோ: போ என்ற கணவாய்ப் பிரதேசம் எங்கள் வசத்திலிருந்தது. இந்த இடத்திலேயே இத்தலியின் தலைவிதி எப்பொழுதும் நிர்ணயிக்கப்பட்டு வந்திருக்கிறது.
எ. ல: நீங்கள் ஒரு யுத்த வீரரல்லவா? அப்படியிருக்க, கர்மதல மாகிற ரோமாபுரியை விடுத்து, ஏன் மிகத் தொலைவி லேயே இருந்தீர்கள்?
முஸோ: நான் மிலான் நகரத்தில் படைத் தலைமை பூண்டிருந் தேன்.
எ.லா: அரசாங்க நிருவாகத்தை ஏற்றுக் கொள்ளுமாறு சக்ரவர்த்தியிடமிருந்து உங்களுக்குத் தந்தி கிடைத்தபோது நீங்கள் ஆச்சரியப்பட்டீர்களா? அல்லது அதை எதிர்பார்த்தீர் களா?
முஸோ: எதிர்பார்த்திருந்தேன்.
எ. ல: ரோமாபுரி நோக்கி நீங்கள் சென்றபோது தனது வேலையைத் தொடங்கும் ஒரு சித்திரக்காரனைப் போலிருந்தீர் களா? அல்லது குறித்த ஒரு காரியத்தை நிறைவேற்றுவதற்கு அனுப்பப்ட்ட ஒரு தீர்க்கதரிசியைப்போலிருந்தீர்களா?
முஸோ: சித்திரக்காரனைப் போலிருந்தேன்.
XIII பாசிட் ஆட்சி
ஆரம்ப வேலை
பிரதம மந்திரிப் பதவியை ஏற்றுக் கொண்ட சில மாதங்கள் வரை, முஸோலினி இரவும் பகலுமாக உழைத்தான். ஓய்வென்பதே இவனுக்குத் தெரியாது. முதல் இரண்டு மாதத்தில் முப்பத்திரண்டு தடவை மந்திரிச் சபையின் கூட்டங்கள் கூடின. ஒவ்வொரு கூட்டமும் ஐந்து மணி அல்லது ஆறு மணிநேரம் நடைபெறும். ஒவ்வொரு கூட்டத்திற்கும் முஸோலினியே தலைமை வகித்துக் காரியங்களை நடத்தினான். அதிகமான உழைப்பினால் தேகத்திற்கு ஏதேனும் உபாதி ஏற்படப் போகிறதேயென்று பெனிடோவின் நண்பர்கள் கூறுவார்கள். அதைப்பற்றிப் பாதகமில்லை. இப்பொழுது வேலை செய்தால் தான் செய்தது. மரணத்தறுவாயிலிருக்கும் ஒரு நோயாளிக்கு ஆபரேஷன் செய்யும் வைத்தியர்களாக இப்பொழுது நாம் இருக்கிறோம். வைத்தியன் களைத்துப் போனாலென்ன? ஆபரேஷன் நடக்க வேண்டியது முக்கிய மல்லவா? நான் இன்றிரவு சாவதாயிருந்தால் ஒரு நிமிஷங்கூட ஓய்வு எடுத்துக் கொள்ளக் கூடாது என்பான். முஸோலினி, தான் மட்டும் கஷ்டப்பட்டு வேலை செய்வதோடு நிற்கவில்லை. நிருவாக மேலதிகாரிகள் அனைவரும் வேலை செய்கிறார்களா வென்பதையும் கவனித்து வந்தான். அதிகாரத்தை ஏற்றுக் கொண்டதும், முதலில், ஆபீ நேரத்திற்குப் பின்னாடி வரு வோரும் முன்னாடி போவோரும் தண்டனைக்குள்ளாவார்கள் என்று சுற்றறிக்கை விடுத்தான். அரசாங்க உத்தியோகதர்கள் பொதுஜன ஊழியர்கள் என்பதை வலியுறுத்தினான். எனவே, அரசாங்கக் காரியாலயங்களில் ஒரு புதிய சகாப்தம் ஆரம்பமாயிற்று.
பாசிட் கட்சியின் தலைவன் என்ற முறையில், முஸோ லினி, அரசாங்க நிருவாகத்தை ஏற்றுக்கொண்ட போதிலும், மந்திரிச் சபையில் பாசிடுகளை மட்டும் நியமனம் செய்ய வில்லை. ஆற்றலும் அநுபவம் நிறைந்த பிறரையும் சேர்த்துக் கொண்டான். இதனால் மற்றக் கட்சியினரின் எதிர்ப்புக் குறைந்தது. ருஷ்யாவில், சோவியத் ஆட்சி ஏற்பட்டபோது, பழைய ஆட்சி முறையை அடியோடு தகர்த்தெறிந்து விட்டு, அதன் மீது புதிய முறையை நிர்மாணித்தனர். ஆனால் முஸோலினி அங்ஙனம் செய்யவில்லை. பழமையில் புதுமையைப் புகுத்தி னான் என்று கூறவேண்டும். சீர்குலைந்து போயிருந்த இத்தலி யின் தேசீய வாழ்வை ஒழுங்குபடுத்திப் புதிய உயிரை அளிப்ப தற்குச் சில கடுமையானஆனால் சட்ட திட்டங்களுக்குட்பட்டமுறைகளைக் கையாண்டானே தவிர, இத்தலியின் பழைய பார்லிமெண்டரி ஆட்சி முறையயோ அல்லது அரச பரம்பரை யின் கௌரவத்தையோ சீர்குலைக்கவில்லை.
தேர்தல் முறை
இத்தலியில் கோனாட்சி முறை நிலவியது. அரசருக்கு அங்கமாக செனெட் என்றும் சேம்பர் என்றும் இரண்டு சபைகள் உண்டு. செனெட்டில் 385 அங்கத்தினர்கள். சேம்பரில் 536அங்கத்தினர்கள். முன்னவர் அரசரால், மந்திரிச் சபையின் ஆலோசனையின் பேரில் தெரிந்தெடுக்கப்பெறும் ஜீவிய அங்கத்தினர்கள். அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், தேசத்திற்காகப் பாடுபட்ட பிரபலதர்களும் இதில் அடங்கி யிருப்பார்கள். இங்ஙனம் தெரிந்தெடுக்கப்பெறுவோர் நாற்பது வயதுக்கு மேற்பட்ட வராகவே இருக்கவேண்டும். பின்னவர் ஜனங்களால் தெரிந்தெடுக்கப் பெறுபவர்கள். இச்சபைகளை முஸோலினி, எவ்விதத்திலும் மாற்றி யமைக்கவில்லை. ஆனால், சேம்பருக்குப் பிரதிநிதிகள் தெரிந்தெடுத் தனுப்பும் முறையை மட்டும் மாற்றினான். பாசிட் கிராண்ட் கவுன்சில் என்று ஒரு சபையை அமைத்தான். இதில் அநுபவம் வாய்ந்த பலர் அங்கத்தினராக நியமிக்கப்பெற்றனர். பொருள் உற்பத்தி செய்வோர் பதின்மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனர். இந்தப்பிரிவுகளின் பிரதிநிதிகள் அடங்கிய ஜாபிதா ஒன்று இந்த பாசிட் கிராண்ட் கவுன்சிலுக்கு அனுப்பப் பெற்றது. இந்தக் கவுன்சிலானது, மேற்படி ஜாபிதாவிலிருந்து சிலரைப் பொறுக்கி யெடுத்து, பிரதிநிதித்துவம் பெறாத தொகுதிகளுக்காக வேறு சிலரையும் சேர்த்து மொத்த ஜாபிதாவை அப்படியே
வாக்காளர் முன்னிலைப்படுத்த வேண்டும். வாக்காளர்கள், இந்த அங்கத்தினர்களை அப்படியே மொத்தமாகத் தெரிந் தெடுக்க வேண்டும்; அல்லது மொத்தமாக நிராகரிக்க வேண்டும்; சிலருக்கு மட்டும் வாக்குக்கொடுத்துவிட்டுச் சும்மாயிருக்க முடியாது. பார்லிமெண்டில் ஒரு கட்சியார்மட்டும் பெரும் பான்மையான ஆதிக்கம் வகிப்பதற்கு இடங்கொடுக்கக் கூடா தென்பதற்காகவே முஸோலினி இந்த ஏற்பாடு செய்தான். மற்றும் தொழிலாளிகளை நசுக்கி முதலாளிகள் ஆதிக்கம் பெறவோ, அல்லது முதலாளிகளை வருத்தித் தொழிலாளர்கள் ஆதிக்கம் பெறவோ இந்த முறையில் சாத்தியமில்லை. தேசத்தின் பொருளாதார அபிவிருத்தியானது அரசாங்கத்தின் வசத்தில் இருக்க வேண்டுமென்பதே இம் முறையின் நோக்கம்.
மனிதன் சுயமாக வளர்ச்சியடையவேண்டும்; ஆனால் அந்த வளர்ச்சியானது, தேச அரசாங்கத்தின் பொது நன்மைகாக உபயோகிக்கப் பெறல் வேண்டும். அரசாங்கமானது, பிரஜை களின் நன்மைக்காகவே இயங்குதல் வேண்டும். இதுவே பாசிட் கொள்கையின் அடிப்படையான தத்துவம். இந்தக் குறிக்கோளைக் கொண்டே முஸோலினி நிருவாக முறைகளை அமைத்து வந்தான்
முதற் பேச்சு
முஸோலினி, தான் கண்ட வெற்றியில் தன்னை மறந்து விடவில்லை. எல்லாரையும் புறக்கணித்துவிட்டு தன்னிஷ்டம் போல் ஒரே நாளில் தேசத்தை மாற்றியமைத்துவிட வேண்டு மென்று விரும்பவு மில்லை. இவன் ஆழ்ந்த ராஜதந்திரியாகை யால், தான் அரசாங்கத் தலைமைப் பதவியை ஏற்றுக்கொண் டது, சட்டபூர்வமாக பார்லி மெண்டினால் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்றும், இதன் மூலமாகத் தேசத்தாரின் சம்மதத்தை யும் பெற்றதாகுமென்றும் கருதினான். அங்ஙனமே, இத்தாலிய பார்லிமெண்டை (சேம்பர்)யும் செனெட் சபையையும் 1922ம் வருஷம் நவம்பர் மாதம் இருபத்திரண்டாந் தேதி கூட்டுவித் தான். அப்பொழுது இவன் நிகழ்த்திய சொற்பொழிவில் முக்கியமான சில பாகங்கள் வருமாறு:
நான் இப்பொழுது பிரதம மந்திரியாகி விட்ட பிறகு, உங்களுடைய வேலைத் திட்டம் என்ன என்று பலரும் என்னைக் கேட்கிறார்கள். இப்பொழுது இத்தலிக்கு வேலைத்திட்டங்கள் தேவையில்லை. வேலைத் திட்டங்களை நிறைவேற்ற மனிதர்களே தேவை. இத்தாலிய வாழ்வின் ஒவ்வோர் அமிசமும் காகித அளவிலே பரிசீலனை செய்யப் பட்டிருக் கிறது. ஆனால் இவற்றை நடைமுறைச் சம்பவங்களாகக் கொண்டு வருவதற்குரிய மனப்பான்மைதான் தேவை. இந்த மனப்பான்மையின் பிரதிநிதியாக, இந்த உறுதியின் பிரதிபிம்பமாகத் தற்போதைய (பாசிட்) அரசாங்கம் இருக்கிறது
இத்தலியின் அந்நிய நாட்டுக் கொள்கையானது, இனி அதன் கௌரவத்தையும் தேசத்தின் நன்மைகளையும் தழுவியதாகவே இருக்கும். வெறும் நட்புக்காக, ஒரு தேசத்திற்கு உதவி செய்வதோ, அதன்கொள்கைகளை ஆதரிப்பதோ கூடாது. சர்வதேச சம்பந்தங்களில், இத்தலிக்கு ஒரு முக்கியமான பாகம் இருந்து வந்திருக்கிறது. இனி இந்த அமிசம் அதிகமாகக் கவனிக்கப்பட வேண்டும். நம்மைப் பெருமைப் படுத்திக்கொள்ள வேண்டுமென்று நாம் விரும்பவில்லை. ஆனால் நம்மையே நாம் சிறுமைப்படுத்திக் கொள்ளவும் சம்மதிக்கமாட்டோம். நம்மிடமிருந்து நட்புரிமையை நமக்கும் நல்கவேண்டும். பாசிட் இத்தலி யானது சமாதான உடன்படிக்கைகளைக் கிழித்து எறிந்து விடவிரும்ப வில்லை. ஆனால், தனது நேசதேசத்தாரை கண் மூடித்தனமாகப் பின்பற்றவும் விரும்பவில்லை.
நமது உள்நாட்டுக் கொள்கைகளை மூன்று சொற்களில் விளக்கி விடலாம். செல்வம்வேலைஒழுங்கு. பண விஷயம் மிகக் கடினமானது. நமது வரவு செலவு நிலைமையைக் கூடிய விரைவில் சரிப்படுத்த வேண்டும். முதலாளிகளுக்கோ, தொழிலாளிகளுக்கோ நாம் அதிகமான உரிமைகளைக் கொடுக்கப் போவதில்லை. ஏனெனில், தேசீயச் செல்வ அபிவிருத்திக்கு இரு தரத்தாருடைய நலன்களும் ஒன்று படுத்தப்பெற வேண்டும். தொழிலாளர் நம்மைக் கண்டு அஞ்ச வேண்டுவதில்லை. இத்தலியிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று குடியேறும் ஒவ்வோர் இத்தாலியனும், தான் ஓர் இத்தாலியப் பிரஜை என்று உணர வேண்டும். இத்தகையோருடைய நலன்களைப் பாதுகாப்பதற்காக நமது பிரதிநிதிகள் வெளிநாடுகளுக்கு அனுப்பப் பெறுவார்கள். உள்நாட்டுக் குழப்பம் எதையும் நாம் சகிக்க மாட்டோம். ஒவ்வொரு பிரஜையும் சட்டத்தைக் கௌரவப்படுத்த வேண்டும். பொதுவாக மதத்திற்கு-சிறப்பாக இத்தாலிய சமூகத்தின் மதமாகிய கத்தோலிக்க மதத்திற்கு நமது பூரணப் பாது காப்பையும் அளிப்போம். அரசாங்க அதிகாரத்தை எதிர்த்து நிற்பவர்கள் கடுமையான தண்டனைக்குள்ளாவார்கள். தேசமும் அரசாங்கமும் இப்பொழுது ஏகோபித்துச் செய்ய வேண்டிய வேலை ஒன்றுளது. விபரீத நிகழ்ச்சிகளால் தொந்திரவு படுத்தப் பெறாமல் வேலை செய்யவும், பொருள்களை உற்பத்தி செய்யவும் நான்கு கோடி இத்தாலியர்கள் விரும்புகிறார்கள் என்ற உண்மையை உணர்வதே அவ்வேலையாகும்.
பாசிட் அரசாங்கமானது, ஐக்கியப் போலீ படை யொன்றை நிர்மாணித்திருக்கிறது. இந்தப் படை, தயை தாட்சண்ய மின்றி, நாட்டின் அமைதியைப் பாதுகாக்கும். ராணுவமும் கடற்படையும் ஒழுங்காக நிர்மாணிக்கப் பெற்று தேசத்தின் மூல பலச் சேனையாக இருக்கும்.
கனவான்களே! இந்தப் பேச்சிலிருந்து அரசாங்கத்தின் வேலைத் திட்டத்தை நீங்கள் தெரிந்து கொண்டிருக்கலாம். முடியும் வரை, இந்தப் பார்லிமெண்டை எதிர்த்துக் கொண்டு ஆட்சி புரிய மாட்டேன். ஆனால் இந்தச் சபையின் ஜீவிய காலமானது, அதிகமாக இரண்டு வருஷத்திற்கு மேலிராது; ஒரு கால் இரண்டு நாளாகவும் இருக்கலாம் என்பதைச் சபையினர் உணர வேண்டும். நான்(நிருவாகத்தின்) பூரணப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள விரும்புவதால், எனக்குச் சர்வாதிகாரம் அளிக்கப்பட வேண்டுமென்று கேட்கிறேன்.
இதே தோரணையில் இவன் செனெட் சபை என்கிற மேல் சபையிலும் பேசினான்:
சட்ட வரம்பு மீறிச் செல்ல நான் உத்தேசிக்கவில்லை. ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ள அரசியல் திட்டத்தை மீறவும் நான் விரும்பவில்லை. புதிதாக ஒன்றைப்புகுத்தவும் நான் இஷ்டப்படவில்லை. ஆனால் தேசத்தின் ஒழுங்கு முறையானது வெறும் சொல்லலங்காரமாக இருக்கக் கூடாதென்று உத்தேசிக்கிறேன் சட்டங்கள், கூர்மை மழுங்கிப்போன ஆயுதங்களாக இருக்கக் கூடாதென்று விரும்புகிறேன். சுதந்திரமானது, இஷ்டப்படி நடக்கும் உரிமையாக உபயோகிக்கப்படக்கூடாதென்று வற்புறுத்துகிறேன்.
அரசாங்கம் நீங்கள் பார்க்கிறபடி, அரசு செய்கிறது. அஃது எல்லோருக்காகவும் அரசு செய்கிறது. எல்லோருக்கு மேலாகவும் அரசு செய்கிறது. அவசியமானால் எல்லோருக்கு எதிராகவும் அரசு செய்யும். அரசாங்கமானது, எல்லோருடைய நலனையும் நாடுவதால் அஃது எல்லோருக்காவும் அரசு செய்கிறது. ஜன சமூகத்தின் ஒரு பகுதியார். அவர்கள் போர்ஷ்வாக்களாகட்டும் சாதாரண பாமர ஜனங்களாகட்டும் தங்கள் சுயநலத்தைப் பொது நலத்துக்குக் குறுக்கே வைக்கமுற்படுவார் களானால் அரசாங்கம் எல்லோருக்கு எதிராகவும் அரசு செய்யும்.
தனது நாவன்மையாலும், ஒரு விஷயத்தைப்பற்றி வளைத்து வளைத்துப் பேசாமல், நேராகக் கேட்போர் இதயத்தில் பாயுமாறு பேசும் திறமையாலும், முஸோலினி இரண்டு சபைகளையும் தன் வசப்படுத்திக் கொண்டான்.
சீர்திருத்தங்கள்
சர்வாதிகாரம் பெற்றுக்கொண்ட பிறகு, முஸோலினி பல சீர்திருத்தச் சட்டங்களை அமுலுக்குக் கொண்டு வந்தான். பாசிட் கட்சியில் சேர்ந்த படைவீரர் அனைவரையும் தேசீய ராணுவத்தில் புகுத்தி, அரசாங்க பொக்கிஷத்திலிருந்து சம்பளம் பெறும்படி செய்தான். இதனால் தேசத்தின் ராணுவ பலம் பெருகியதோடு பாசிட் கட்சியில் சேர்ந்தவர்களுக்கு ஒழுங்கான ஜீவனோபாயமும் ஏற்பட்டது. எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்களையும் இந்த ராணுவத்தில் ஐக்கியப் படுத்திக் கொண்டது இவனது பெருந்தகைமையைக் காட்டுகிறது.
அடுத்தபடி, மிகக் கேவலமான நிலையிலிருந்த அரசாங்க பொக்கிஷத்தைச் சீர்படுத்தினான். யுத்த காலத் திலும் அதற்குப் பின்னரும், வரவைக்காட்டிலும் செலவு ஏறிக்கொண்டு வந்ததால் தேசியக் கடன் அதிகமா யிருந்தது. இதற்காக அரசாங் கத்தார் புதிய வரிகளை மேலும் மேலும் போட்டுக் கொண்டு வந்தனர். ஜனங் கள் பொருளாதார நெருக் கடியால் சாதாரண வரி களையும் கட்ட முடியாதவர் களாயிருந்தார்கள். இதனால் புதிய வரிகள் போடப் போட, வருமானம் குறைந்து கொண்டே வந்தது. உதாரண மாக 1921ம் வருஷத்தில் 17,350 லட்சம் லைருக்கு இருந்த மொத்த வருமானம், 1922ம் வருஷத்தில் 9,670 லட்சம் லைருக்கு இறங்கி விட்டது. வரி விதிக்கும் முறையிலும் ஒரு வித ஒழுங்கு இல்லாம லிருந்தது. 1922ம் வருஷத்தில் பத்துவிதமான வருமான வரிகள் இருந்தன; ஐம்பது விதமான சாதாரண வரிகள் விதிக்கப் பெற்றன. இவை தவிர தல தாபனங்கள், சுங்க வரிகள் விதிக்கத் தலைப்பட்டன. முஸோலினி, ஆல்பர்டோ-டி-டெபானி என்ற தனது பொக்கிஷ மந்திரியின் துணை கொண்டு அரசாங்கத்தின் பொக்கிஷ நிலைமையை மிகக் கடுமையாகவும் ஆனால் வேகமாகவும் சீர்திருத்தியமைத்தான். இதன் பயனாக, சுமார் இரண்டு மாத காலத்திற்குள் ஜனங் களுக்குத் தொந்திரவு ஏற்படாமல் அரசாங்கத்திற்கு அதிக வருமானம் கிடைக்கத் தொடங்கியது. வரி செலுத்துவோர் இருபது லட்சம் பேர் அதிகப்பட்டனர். இதனுடன் சிக்கன முறைகளும் அனுஷ்டிக்கப்பட்டன. பல உத்தியோகங்கள் எடுபட்டன. இதன் மூலமாக அரசாங்க பொக்கிஷத்தில் மிச்சம் ஏற்பட்டது.
வேலையில்லாத் திண்டாட்டம் என்ற பயங்கர நோய் நாட்டைப் பீடித்துக்கொண்டிருந்தது. இதற்காகப் பல புதிய தொழில்கள் ஆரம்பிக்கப் பட்டன; விளைவின்றிக்கிடந்த சதுப்பு நிலங்கள் சாகுபடிக்கு உபயோக முள்ளனவாக்கப் பெற்றன. இவற்றினால் உற்பத்தி அதிகமாயிற்று; தொழில்கள் பெருகின; வியாபாரம் விருத்தியடைந்தது.
தல தாபனங்களில் பொய்யும், சூதும், லஞ்சமும் மலிந்துகிடந்தன. இவையனைத்தையும் முஸோலினி சீர்திருத்தி னான். தல தாபனங்களையெல்லாம் மாற்றியமைத்தான்.
தொழிலாளர் பிரச்னையை முஸோலினி மிக அழகாகத் தீர்த்து வைத்தானென்று சொல்லவேண்டும். தொழிலாளர் களின் வேலை நேரம், சம்பள விகிதம் முதலியவை பற்றி 1919-ம் வருஷம் பாசிட் கட்சியார் வகுத்த திட்டம் வருமாறு:- (1) தினம் எட்டு மணி நேரம் வேலை; (2) குறைந்த கூலி விகிதத்தைச் சட்ட மூலமாக நிர்ணயித்தல்; (3) கைத்தொழிற் தாபனங் களின் நிருவாகத்தில் தொழிலாளர் பிரதிநிதிகள் பங்கெடுத்துக் கொள்ள உரிமையளித்தல்; (4) திறமையுடைய தொழிலாளர் தாபனங்களிடத்தில், பொது தாபனங்களின் நிருவாகத்தை ஒப்படைத்தல்; (5) போக்குவரவு சாதனங்களை ஒழுங்கு படுத்தல்; (6) நோய்வாய்ப்பட்ட தொழிலாளர்களுக்கு வசதி செய்து கொடுத்தல்; (7) வயதானவர்களுக்கு இன்ஷ்யூரன் முதலியன.
இந்தத் திட்டத்தை முஸோலினி, தான் நிருவாகத்தை ஏற்றுக்கொண்ட பிறகு, சட்டங்கள் மூலமாக அமுலுக்குக் கொண்டு வந்தான். இதனால் வேலைநிறுத்தங்கள் குறைந்தன; தொழிலாளர்கள் நிம்மதியாக வேலை செய்தனர். 1921-ம் வருஷத்தில் மட்டும் 1,134 வேலைநிறுத்தங்கள் ஏற்பட்டன; இதில் கலந்துகொண்டோர் 72,362 பேர். இதை நினைத்துப் பார்த்தால், முஸோலினியின் சீர்திருத்த அவசியம் நன்கு புலனாகும்.
முஸோலினி, கல்வி முறையையும் ஒழுங்குபடுத்தினான். முதலாவது, பள்ளிக்கூடங்களில் மதக் கல்வி புகட்ட வேண்டு மென்று உத்திரவிட்டான். ஆரம்பக் கல்வி முதல் சர்வகலா சாலைப்படிப்பு வரையில் எல்லாவற்றையும் மாற்றியமைத்தான். கல்வி நிலையங் களின் மூலமாக இத்தலியின் வருங்கால சந்ததியினர் உடல் கட்டுடையவர்களாகவும் தேசீய உணர்ச்சி பெற்றவர்களாகவும் இருக்க வேண்டுமென்பதே முஸோலினி யின் கோரிக்கை. மூலை முடுக்களிலெல்லாம் பள்ளிக் கூடங்கள் ஏற்படுத்தினான். புதக சாலைகள் பல நிறுவினான்.
இங்ஙனம் பல சீர்திருத்தங்கள் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டன. முஸோலினி, நிருவாக கடிவாளத்தைப் பிடித்துக் கொண்ட இரண்டு வருஷகாலத்திற்குள் 1900 புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன வென்றால் இவனுடைய மகத்தான உழைப்பை ஒருவாறு தெரிந்து கொள்ளலாம். ஆனால் முஸோலினி என்ன கூறினான்? இன்னும் நாம் ஒன்றுமே செய்து முடிக்கவில்லை. புதிய காரியங்கள் ஒன்றையும் செய்ய வில்லை. பாக்கியாக நின்றுபோன வேலைகளை ஒருவாறு செய்து முடித்தால்தான் புதிய வேலைகளைச் செய்ய முடியும். முஸோலினி, இதே லட்சியத்தைக் கொண்டுதான் வேலை செய்து கொண்டு வந்தான்; வருகிறான்.
கார்பியு தீவின் ஆக்ரமிப்பு
1923-ம் வருஷம் ஆகட் மாதம் கிரீதேசமும் அல்பேனியா தேசமும் சந்திக்கும் எல்லைப்புறத்தில் ஓர் இத்தாலிய அதிகாரி கொலை செய்யப்பட்டார். கிரேக்கர்களே இந்தக் கொலைக்குக் காரணர்களென்று தெரிய வந்தது. இதற்குப் பரிகாரம் இருபத்துநான்கு மணி நேரத்தில் செய்துவர வேண்டுமென்று முஸோலினி, கிரேக்க அதிகாரிகளுக்குத் தெரிவித்தான். கிரேக்க துருப்புகள், இத்தாலியக் கொடியை வணங்க வேண்டு மென்பதும், கொலையாளிகள் தூக்கிலிடப் பட வேண்டு மென்பதும், கொலை செய்யப்பட்டவருடைய குடும்பத்திற்கு நஷ்டஈடு செய்து தரவேண்டுமென்பதும் இவன் பரிகார முறைகள். கிரேக்க அரசாங்கம் இதற்குச் சரியாகப் பதிலளிக்கவில்லை. எனவே ஆகட் மாதம் இருபத்தெட்டாந் தேதி, கிரீ தேசத்திற்குச் சொந்தமான கார்பியு (ஊடிசகர) தீவை இத்தாலிய கப்பற்படையானது கைப்பற்றிக் கொண்டது. கிரேக்கர்கள், எதிர்ப்புக் கொடாமல் சரணடைந்தார்கள். இந்தப் படையெடுப்பின்போது, கப்பற்படைத் தலைவரிடம் முஸோலினி என்ன கூறினான்?
உங்களுக்கு எழுபது மணி நேர அவகாசம் கொடுக் கிறேன். அதற்குள் கார்பியு தீவு முழுவதையும் ஆக்ரமித்துக் கொள்ளவேண்டும் முடியாதே முடியத்தான் வேண்டும்.
அன்றிரவு முழுவதும், முஸோலினி, தனது காரியாலயத்தி லேயே உட்கார்ந்திருந்து அவ்வப்போது கிடைக்கும் தந்திச் செய்திகள் மூலம் நிலைமையைக் கவனித்தான். கார்பியு தீவு பிடிபட்டது என்று தெரிந்த பிறகே வேறு வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினான்.
அந்நிய நாட்டுக் கொள்கை
முஸோலினி, அதிகாரத்தை ஏற்றுக்கொண்டதும் அந்நிய நாடுகளுக்கும் இத்தாலிக்கும் உள்ள தொடர்பைப் பரிசீலனை செய்ய ஆரம்பித்தான். முதல் இரண்டு வருஷகாலம் இவனே அந்நிய நாட்டு மந்திரியாகவும் இருந்தான். எனவே இத்தலியின் அந்நிய நாட்டுக் கொள்கைக்கு முஸோலினியே காரணம் என்று சொல்லுதல் மிகையாகாது. ஐரோப்பிய யுத்தத்தில் வெற்றி கொண்ட நாடுகளில் இத்தலியும் ஒன்று. ஆனால் வெற்றி விருந்தில், இத்தலிக்குச் சில துண்டு துணுக்குகளே கிடைத்தன. 1915-ம் வருஷம் ஏப்ரல் மாதம் இருபத்தாறாந் தேதி கிரேட் பிரிட்டன், பிரான், இத்தலி, ருஷ்யா ஆகிய நான்கு நாடு களுக்குள்ளும் ஏற்பட்ட ரகசிய ஒப்பந்தத்தின்படி, யுத்தத்தில் வெற்றி கிடைக்குமானால் இத்தலிக்கு, டிரெண்டினோ, ஆல்டோ அடிகே, டிரடே, இதிரியா, கொரிஸியா கிராடிகா முதலிய ஆதிரியப் பிரதேசங்களும், செர்ஸோ, லூஸின் என்ற தீவுகளும், பிளாங்கா முனைவரையிலுள்ள டால்மேஷியா பிரதேசமும், வாலோனா, டோடாகானீ முதலிய இடங்களும், சின்ன ஆசியாவில் ஒரு பாகமும் கிடைக்க வேண்டும். மற்றும், ஆப்ரிக்கா கண்டத்தில் ஜர்மனிக்குச் சொந்த மான நாடுகளை கிரேட்பிரிட்டனும் பிரான்ஸூம் பகிர்ந்து கொண்டால், அதில் ஓரளவு இத்தாலிக்குக் கொடுக்க வேண்டு மென்றும் ஒரு நிபந்தனை காணப்பட்டது. பிறகு, 1917-ம் வருஷத்தில், ருஷ்யாவைத் தவிர்த்த மேற்படி மூன்று நாடுகளுக் குள்ளும் நடைபெற்ற உடன்படிக்கைப்படி, இத்தலிக்கு மர்னா பிரதேசத்தையும் கொடுப்பதென்று தீர்மானிக்கப் பட்டது. ஆனால் இவை நடைமுறையில் சரியாகக் கொணரப்படவில்லை என்ற குறை இத்தலிக்கு இருந்து வந்தது.1 இதை நீக்கிக் கொள் வதிலேயே முஸோலினியின் அந்நிய நாட்டுக் கொள்கை ஒன்றி நின்றது என்று கூறலாம். ஐரோப்பிய யுத்த காலத்தில் நிறை வேற்றப்பட்ட உடன்படிக்கைகள் கௌரவிக்கப்பட வேண்டு மாயினும், அவற்றை ஆதாரமாகக் கொண்டு ஒரு தேசத்தின் வளர்ச்சியை மற்றொரு நாடு கெடுக்க முயலுமாயின், அதை முஸோலினி விரும்பவில்லை. இத்தாலிய பார்லிமெண்டில் செய்த ஒரு பிரசங்கத்தில் இதை இவன் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டினான்.
உடன்படிக்கைகள் சாசுவதமானவையல்ல; மாற்றக் கூடாதவை யல்ல. சரித்திரத்தில் வரும் சில அத்தியாங்களே இவை. இவற்றையே முடிவுரையாகக் கொண்டு விடக் கூடாது.
இந்த வார்த்தைகள் பேசப்பட்டபோது, இதன் உட் பொருளை ஐரோப்பிய ராஜதந்திரிகள் கவனிக்கவில்லையாயி னும், பின்னர் நடைபெற்ற சம்பவங்கள் இச்சொற்களின் பொருளை விளக்கின. முஸோலினி ஆதிக்கம் ஏற்றுக்கொண்ட பிறகு, ஐரோப்பிய வல்லரசுகளின் ஆலோசனைக் கூட்டங்களில் இத்தலிக்கு ஒரு கௌரவ தானம் அளிக்கப்பட்டது. இத்தலி யோடு ஐரோப்பிய நாடுகள் பல, தனித்தனியாகவும் சில சமயங் களில் சேர்ந்தும் உடன்படிக்கைகள் பல செய்து கொண்டன. முக்கியமாக கிரேட்பிரிட்டனுக்கும் இத்தலிக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.1 இத்தலிக்கு இங்கிலாந்து பலவித சலுகை களைக் காட்டியது. அல்பேனியாவில் இத்தலிக்குத் தேவையான எண்ணெய், நிலக்கரி முதலிய கிடைக்குமென்ற காரணத்திற்காக 1926-ம் வருஷத்தில், அந்நாட்டுடன் முஸோலினி ஓர் உடன் படிக்கை செய்து கொண்டான். பால்கன் தீபகற்பப்பிரதேசத் திலும் மத்தியதரைக் கடலிலும் இத்தலியின் செல்வாக்கு பெருகியது. பாசிட் கட்சியினர், 1922-ம் வருஷம் அரசாங்க நிர்வாகத்தை ஏற்றுக் கொண்ட பிறகு, சுமார் ஆறு அல்லது ஏழு வருஷங்களுக்குள் உலக வல்லரசுகளில் ஒன்றாக இத்தலி மதிக்கப்பட்டதற்கு முஸோலினியின் உறுதியும் தன்மதிப்புமே காரணங்கள் என்று கூறலாம். 1927-ம் வருஷம் மே மாதம் இருபத் தேழாந் தேதி, இத்தாலிய பார்லிமெண்டில் முஸோலினி நிகழ்த்திய ஒரு சொற்பொழிவில் 1935ம் வருஷத்திலிருந்து 1940ம் வருஷத்திற்குள் ஐரோப்பிய சரித்திரத்தில் பல முக்கியமான சம்பவங்கள் நடைபெறுக் கூடுமென்றும், எந்த நிமிஷமானாலும் ஐம்பது லட்சம்பேர் ஆயுதபாணிகளாக நிற்க இத்தலி தயாரித்துக் கொள்ள வேண்டுமென்றும், எனவே இத்தாலிய ராணுவத்தை ஒழுங்குற அமைப்பதில் அதிக முனைப்புக் காட்ட வேண்டுமென்றும் குறிப்பிட்டான்.
1935ம் வருஷம் செப்டம்பர் மாதம் பதினேழாந் தேதி மாடின் என்ற பிரெஞ்சு பத்திரிகை நிருபருக்குப் பேட்டி கொடுத்துப் பேசியபோது, முஸோலினி, இத்தலியின் அந்நிய நாட்டுக் கொள்கையைப் பின்வருமாறு சுருக்கமாகக் கூறினான்:
சமாதானத்தில் விருப்பங் கொண்டுள்ள இத்தலி, சமாதானத் தையே விரும்புகிறது. ஆனால் நியாயத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் சமாதானத்தையே விரும்புகிறது. நியாயமான வழி யென்று எது தோன்றுகிறதோ அந்த வழியிலும், தனது தேவைகளை உத்தேசித்தும் இத்தலி செல்லும். எந்த ஐரோப்பிய தேசத்திற்கும் விரோ தமாக இத்தலி நடவடிக்கை எடுத்துக் கொள்ளாது. ஆனால் இத்தலிக்கு விரோதமாக ஏதேனும் நடவடிக்கை நடக்குமானால், விளைவது யுத்தமே. இத்தலி, யுத்தத்தை விரும்பவில்லை. ஆனால் அதற்காக அஞ்சவுமில்லை.
போப்பரசருடன் சமரஸம்
கத்தோலிக்க மத குருவான போப்பரசருக்கும், இத்தாலிய அரசியல்வாதிகளுக்கும் பல வருஷங்களாக இருந்த பிணக்கை 1929-ம் வருஷம் பிப்ரவரி மாதம் பதினோராந் தேதி செய்து கொள்ளப்பட்ட ஓர் உடன்படிக்கை மூலமாக முஸோலினி தீர்த்து வைத்தான். இதனால் உலகத்திலுள்ள கத்தோலிக்க ருடைய நன் மதிப்பையும் விசுவாசத்தையும் பெற்றான்.
முஸோலினியின் அரசியல் நிருவாகத்தை இத்தாலியர் மனப்பூர்வமாக ஆதரிக்கிறார்களா? இந்த நிருவாகத்தினால் ஜனங்கள் அவர்கள் கோரிய நன்மைகளை அடைந்தார்களா? இதைப் பற்றித் தீர்மானிக்க இத்தாலிய ஜனங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் அளிக்கப்பெற்றது. 1929-ம் வருஷம் மார்ச்மாதம் இருபத்து நான்காந்தேதி பொதுஜன வாக்கு எடுக்கப்பெற்றது. நூற்றுக்கு 92 பேர் முஸோலினியின் கொள்கைகளை ஆதரித்து வாக்குக் கொடுத்தனர். பாசிட் கிராண்ட் கவுன்சிலினால் தயாரிக்கப் பெற்ற பார்லிமெண்ட் அங்கத்தினர் ஜாபிதாவைப் பெரும் பாலோர் அப்படியே அங்கீகரித்தனர். இதனால், முஸோலினி ஜனங்களின் பூரண சம்மதம் பெற்றே தேசத்தின் தலைவனாக விளங்கி வருகிறான். முஸோலினியைச் சர்வாதிகாரி என்று சிலர் கூறுகின்றனர். இஃதொரு விதத்தில் உண்மையேயாயினும் பெயின், கிரீ, ருஷ்யா முதலிய தேசங்களில் தோன்றிய சர்வாதிகாரிகளுக்கும் இவனுக்கும் அதிக வேற்றுமையுண்டு.
XIV முஸோலினி - கர்மவீரன்
மாறுபட்ட சுபாவங்கள்
முஸோலினியிடத்தில் மாறுபட்ட சுபாவங்கள் பல இருப் பதைக் கண்டு சிலர் ஆச்சரியப்படல் கூடும். வாள் கொண்டு போர் புரியும் கையினால் பிடில் வாசிப்பான். 1பொதுக் கூட்டங் களில் போர் மிடுக்குடன் பேசும் இவன் குழந்தைகளோடு கொஞ்சி விளையாடுவான். இவனுடைய செவிகள் பீரங்கிச் சப்தத்தைச் சலிப்பின்றிக் கேட்டுக் கொண்டிருக்கும்; ஆனால் உள்ளமானது காவிய இன்பத்திலே திளைத்துக் கொண் டிருக்கும். இவன் சிங்கக் குட்டியை வளர்த்து வந்தான்; ஆனால் பரம தெய்வபக்தியுள்ளவன். வருவதை முன்னறிந்து வினை யாற்றும் திறம் படைத்த இவன் எப்பொழுதுமே இளமையோ டிருக்க வேண்டுமென்று ஆவல் கொள்வான். இதற்காக அடிக்கடி குதிரை சவாரி செய்வான்.
முஸோலினி சுமார் ஐந்தேமுக்கால் அடி உயரமுள்ளவன். அதற்குத் தகுந்த பருமனுடையவன். இவனுடைய தேக அங்கம் ஒவ்வொன்றும் கடைந்தெடுத்தாற்போல் அமைந்திருக்கும். விசாலமான நெற்றி; நீண்ட கண்கள்; கூரிய மூக்கு; சிரிப்பிலே கம்பீரம் தரும் உதடுகள். இவற்றைக்கண்டு எவனும் இவனிடத் தில் ஈடுபடாமலிருக்க முடியாது. நெற்றியிலே காணப்பெறும் கோடுகள், வறுமைத்தீயிலே புடம் போடப்பட்டவன் இவன் என்பதை உறுதிப்படுத்தும். இத்தாலிய கிராம வாசிகளுக்கு இயற்கையாயமைந்துள்ள தன்னம்பிக்கை, தன் மதிப்பு, உழைப் பிலே இன்பம், இயற்கை வாழ்க்கையிலே ஈடுபாடு முதலியன யாவும், கிராமவாசியாகவே பிறந்து, கிராமவாசியாகவே வளர்ந்து, கிராமவாசிகளின் நாகரித்திற்காகவே உழைக்கும் முஸோலினியிடம் குடி கொண்டிருக்கின்றன. முஸோலினி எல்லாரிடத்திலும் அன்பாகப் பேசுவான்; ஆனால் எவரும் இவனிடம் நெருங்கிப் பேசத் துணிவு கொள்ள மாட்டார்கள். இவன் தன் அன்பைக் காட்டப் பலரையும் முத்தமிடுவான்; ஆனால் எவரிடத்தும் நெருங்கிப் பழகமாட்டான்.
முஸோலினியிடத்தில் அபாரமான வசீகர சக்தியுண்டு. இவனைப் பார்த்தவர்கள் இவனிடத்தில் மரியாதை செலுத்தத் தவறமாட்டார்கள். இவனோடு சிறிது நேரம் சம்பாஷித்தவர்கள் இவன் கொள்கைகளில் ஈடுபட்டு விடுவார்கள். இவனுடன் வாதப் போர் புரியச் செல்வோர் எளிதில் தங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டுவிடுவார்கள். தன்னிடத்தில் எவரும் மரியாதை யாக நடந்துகொள்ள வேண்டுமென்று இவன் எதிர்பார்ப்பது கிடையாது. ஆனால் இவன் உத்திரவுக்குக் கீழ்படியாமலிருக்க எவனுக்கும் துணிவு வராது. இதற்காக இவன் எவரையும் கண்டபடி அதிகாரஞ் செலுத்தவும் மாட்டான்.
வாழ்க்கையின் லட்சியம்
மனித வாழ்க்கையானது, பிறர்க்குப் பயன்படுவதாயிருக்க வேண்டுமென்ற ஒரு பெரிய லட்சியத்தைக் கொண்டே முஸோலினி வாழ்க்கையை நடத்தி வந்திருக்கிறான். இங்ஙனம் பிறர் நலன் நாடிச் செய்யுங் காரியங்களை, இவன் தன் கடமை யாகக் கருதிச் செய்தானே தவிர, புகழையோ வேறு சுயநலத் தையோ நாடிச் செய்யவில்லை. இவனுக்கு எப்பொழுதுமே தனது பெயரை விளம்பரப்படுத்திக் கொள்வதில் விருப்பம் இருப்பதில்லை. ஒரு சமயம் இத்தாலிய தினசரிப் பத்திரிகை யொன்றில், முஸோலினியின் குணாதிசயங்களை வருணித்துச் சில கட்டுரைகள் வெளிவரத் தொடங்கின. ஆனால் இவை வெளியாவதை முஸோலினி விரும்பாமல் நிறுத்திவிட்டான். என்னைப் பற்றி நானே சரியாகத் தெரிந்து கொள்ளாதிருக்கும் போது, பிறர் என்னை அளவிடுதல் எங்ஙனம் முடியும்? என்று இவன் கூறினான்.
இவன் தன்னுடைய வாழ்க்கையின் லட்சியம் நிறை வேறுவதற்காகப் பிரதம மந்திரிப் பதவியை, ஒரு சாதனமாக உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறானே தவிர, பிரதம மந்திரிப் பதவியே வாழ்க்கையின் லட்சியம் என்று கருதவில்லை. இவன் இத்தலிக்குச் செய்துள்ள பல நன்மைகளை முன்னிட்டு, இவனுக்குச் சில உயர்ந்த பட்டங்கள் வழங்க முயற்சி செய்யப் பட்டது. ஆனால் இவன் இவற்றையெல்லாம் கண்டிப்பாக மறுத்து விட்டான் நாம் நிர்வாணமாகவே நமது லட்சியத்தை யடைய வேண்டும். இந்தக் கௌரவங்களெல்லாம் பெற்றுக் கொள்ளக்கூடிய அளவு நான் என்ன காரியங்கள் சாதித்து விட்டேன்? இவற்றைப் பெறுவதற்கு நான் இன்னும் சிலகாலம் காத்துக் கொண்டிருக்கலாம். இப்பொழுது என்னுடைய ஆசையெல்லாம் வேலை செய்ய வேண்டுமென்பதே என்று அடக்கமாகக் கூறினான்.
அதிகாரச் செருக்கு என்பது இவனிடம் அணுவளவும் கிடையாது. தனது அதிகார உதவி கொண்டு, தேசத்திற்கு நன்மையளிக்கக்கூடிய ஆக்கவேலைகள் பல செய்ய வேண்டு மென்பதே இவன் ஆவல். மற்றும் தான் சர்வாதிகாரி என்ற தோரணையில், பிறரிடத்தில் காணப்பெறும் அரிய குணங் களைப் போற்றாமலிருக்க மாட்டான். அவரவருடைய திறமைக் குத்தக்கபடி சன்மானிப்பதில் இவன் நிபுணன்.
முஸோலினி களியாட்டங்களில் அதிகமாகக் கலந்து கொள்ள மாட்டான். இதனால், இவன் சிடுசிடுவென்று எவருட னும் பழகாமல் தனிமையாகவே இருப்பான் என்றும், எண்ணி விடக்கூடாது. யாருடன் எந்தெந்த அளவோடு பழக்கம் வைத்துக் கொள்ள வேண்டுமோ அந்தந்த அளவோடு நின்று பழகுவான். ஆயினும் இவனிடம் நகைச்சுவை நிரம்ப உண்டு. அப்படி நகைச்சுவை ததும்பப் பேசுவதிலும் ஒரு கம்பீரமும் உறுதியும் காணப்படும்.
அமைதி காணும் ஆற்றல்
முஸோலினி, மத ஆராய்ச்சியும் தத்துவ ஞானமும் நிரம்பப் பெற்றவனாதலால், பெரும் கலக்கத்திலும் அமைதி காணும் ஆற்றலை அதிகமாகப் பெற்றிருந்தான். இவன் பிரதம மந்திரியான பிறகு, இவனைக் கொலை செய்ய நான்குமுறை முயற்சிகள் செய்யப்பட்டன. இந்த நான்கு முறையும், இவன் உயிரானது, மயிரிழையில் தப்பியது. ஆயினும் ஒவ்வொரு சமயத்திலும் இவன் காட்டிய மனஉறுதியானது எல்லாருக்கும் வியப்பை உண்டு பண்ணியது. முதல் தடவை இவனை நோக்கிச் சுடப்பட்ட குண்டானது, குறி தவறிவிட்டது, இரண்டாமுறை, குண்டானது மூக்கிலே உராய்ந்து சென்றுவிட்டது. மூன்றாந் தரம், குண்டானது, இவன் ஏறி வந்த மோட்டார் வண்டியின் கண்ணாடிக் கதவுகளை உடைத்துக் கொண்டு சென்று விட்டது. நான்காவது சமயம், இவன் இருதயத்தை நோக்கிச் சுடப்பட்ட குண்டானது, இவன் மேற்சட்டையில் தொங்க விட்டுக் கொண்டிருந்த யுத்தப் பதக்கத்திலே பட்டுத் தெறித்து விட்டது. சூழ்ந்திருந்த அனைவரும், இவன் மார்பிலே குண்டு பட்டு இறந்து விட்டானென்றே கருதினார்கள். ஆனால் இவன் சிறிது கூட அச்சக் குறியை முகத்திலே காட்டிக் கொள்ளாமல், மேலே செல்லுங்கள் என்றான். ஆபத்தாக வாழ் என்ற சொற் றொடரிலே இவனுக்கு நம்பிக்கை உண்டு. இவனுடைய வாழ்க்கையும் அப்படியே இருந்தது. தவிர, இவன் ஆபத்திலே இன்பத்தையும் காண்பான். துன்பம் வந்து விட்டதேயென்று இவன் சிறிதும் முகஞ் சுளிக்க மாட்டான். அதற்கு மாறாக, தனது மனோதைரியத்தை அதிகமாகக் காட்டுவான். யுத்த களத்தில் இவன் படுகாயமடைந்து ஆபத்திரிக்குக் கொண்டு வரப்பட்ட காலை ஆபரேஷன் செய்வதற்காக வைத்தியர்கள் தங்களைத் தயார் செய்து கொண்டு இவனுக்குக் குளோரோபாரம் கொடுக்கப் போனார்கள். தனக்குக் குளோரோபாரம் கொடுக்க வேண்டாமென்றும், தன் மனமானது, இந்தத் தேக உபாதிகளை யெல்லாம் கடந்து நிற்கிறதென்றும் இவன் கூறினான். மற்றும் இவன் ஆபத்திரியில் படுத்துக்கொண்டிருந்த காலத்து, தனது உடல் வலிகளையெல்லாம் மறந்து, சுவை நிரம்பிய காவியங் களை மனமொன்றிப் படித்துக் கொண்டிருப்பான். ஒரு சமயம், மிலான் நகரத்தில பொதுவுடைமைக் கட்சிக்காரர்கள் பாசிட் கட்சியினருக்கு விரோதமாகக் கலகம் விளைவித்து, குண்டு களைப் பலர் மீதும் எறிந்து கொண்டிருந்தனர். முஸோலினி, குண்டு பட்டு இறந்து விட்டதாக வதந்தி எழுந்தது. ஆனால் அச்சமயத்தில் இவன், தனது பத்திரிகாலயத்தில் அமைதியாக உட்கார்ந்து ஒரு நாடகம் எழுதிக்கொண்டிருந்தான். இதன் பெயர் கனவான்களே! ஆரம்பமாகிறது என்பதாகும். இவனிடம் இந்த மன ஒருமைப்பாடு இருந்ததனாலேயே, இவன் எந்த வேலையைக் கையிலெடுத்துக் கொண்ட போதிலும் அதில் மனப்பூர்வமாக ஈடுபடும் சக்தி அமைந்திருந்தது. எடுத்த காரியத்தை முடித்த பிறகே வேறொரு வேலையைச் செய்யத் தொடங்கினான். தவிர எப்பொழுது வேலை செய்ய வேண்டும், எப்பொழுது ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டு மென்பதை இவன் நன்கு உணர்ந்திருந்தான். இவன் விரும்பும்போது தூங்கு வான். ஒரு நாள் முழுவதும் வேலை செய்து விட்டு, அரைமணி நேரம் தூங்கி எழுந்தானாகில் இவன் களைப்பெல்லாம் நீங்கி விடும். தூங்குவதற்குப் படுத்துக் கொண்டால் உடனே அயர்ந்து நித்திரைபுரிவான். எந்த நேரத்தில் எழுந்திருக்க வேண்டுமென்று சங்கற்பித்துக் கொண்டு படுக்கிறானோ அதே நேரத்தில் கண்டிப் பாக எழுந்துவிடுவான். இதனாலேயே, எந்த வேலையையும் காலாகாலத்தில் செய்து முடிக்க வேண்டுமென்று பிறரையும் தூண்டி வந்தான். இவன் அநாவசியமான வேலைகளில் மனதைச் செலுத்துவது கிடையாது.
மன அமைதி இவனுக்கு நிரம்பியிருந்ததனாலேயே இவன் பெருங்கூட்டத்திலும் தனிமை இன்பத்தை அநுபவிக்கும் ஆற்றல் பெற்றிருந்தான். இது சம்பந்தமாக இவனுக்கும் எமில் லட்விக் என்ற ஜர்மானிய ஆசிரியருக்கும் நடைபெற்ற சம்பாஷணையின் ஒரு பாகத்தை இங்கு எடுத்துக்காட்டுவது பொருத்தமாயிருக்கும்.
லட்விக் : தனிமை உங்களுக்குப் பிடித்தமாயிருந்தால், பல்வேறு பட்டவர்களுடன் தினந்தோறும் பழகுவது உங்களுக்கு வெறுப்பாக இல்லையா?
முஸோலினி : இல்லவே இல்லை. அவர்கள் என்ன சொல்கிறார்களோ அந்த அளவோடுதான் அவர்களை நான் பார்க்கிறேன். எனது உட்சக்தியோடு அவர்களை நான் கலக்க விடுவதில்லை. இங்கேயுள்ள இந்த மேஜை, இதன் மீதுள்ள காகிதங்கள் இவற்றினால் என் மனம் எப்படி சலனமடைவ தில்லையோ, அது போல் இவர்களைக் கண்டாலும் எம்மனம் சலனப்படுவதில்லை. இவர்கள் மத்தியிலே எனது தனிமையைக் காப்பாற்றிக் கொள்கிறேன்.
ஓய்வின்றி உழைப்பு
முஸோலினிக்கு ஓய்வென்பது தெரியாது. ஒரு வேலையி லிருந்து மற்றொரு வேலைக்குச் செல்வதில்தான் இவன் ஓய்வு காண்பான். இவன் தினசரிப் பத்திரிகை ஆசிரியராக இருந்த போது, அன்றாடம் பத்திரிகைக்குத் தலையங்கங்கள் எழுவ தோடு பத்திரிகை சம்பந்தப்பட்ட பிறவிஷயங்களையும் கவனிப் பான். தினந்தோறும் காலையில் கத்திச் சண்டை பழகுவான். பிறகு மோட்டார் பந்தயத்தில் வெற்றிபெற வேண்டு மென்பதற் காக மோட்டாரை வேகமாக ஓட்டிப் பழகிக் கொள்வான். அதற்குப் பின்னர், ஆகாயவிமானம் ஓட்டவும் அதைப் பலவகை யாகச் செலுத்தவும் பயில்வான். இவையெல்லாம்போக, பாசிட் இயக்கத்தின் தலைவன் என்ற முறையில் அக்கட்சி வேலைகளையும் கவனிப்பான். பொதுக் கூட்டங்களில் பேசுவான். இவனால் ஒருகணமும் சும்மாயிருக்க முடியாது. சும்மாயிருப்பது மரணத்திற்குச் சமானம் என்று இவன் நண்பர் களிடத்தில் கூறுவது வழக்கம். பிற்காலத்திலும் தான் ஓய்வு எடுத்துக் கொள்ளப்போவதில்லையென்று இவன் கண்டிப்பாகக்கூறியிருக்கிறான். ஒரு சமயம், எமில் லட்விக், என்பார், இவனைப் பின் வருமாறு கேட்டார்:-
லட்விக் : நீங்கள் பெரிய எழுத்தாளர்; சங்கீதமும் நன்கு பழகியிருக்கிறீர்கள் எனவே, இப்பொழுது ஈடுபட்டிருக்கும் அரசியல் நிருவாகத்திலிருந்து விடுதலை பெற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் மேற்கண்ட துறைகளில் ஏதேனும் ஒன்றில் திரும்புவீர்களா?
முஸோலினி : கற்பனை உலகத்திற்கு நான் எப் பொழுதும் செல்லமாட்டேன். நான் மேனாட்டாரில் மேனாட்டான். முதலில் செயல், பேச்சல்ல என்பதொன்றே எனக்குத் தெரியும்.
லட்விக் : அப்படியானால் இப்பொழுதுள்ள ஜோலிகளி லிருந்து விடுதலைபெற்று நிம்மதிகொள்ள நீங்கள் உண்மையில் விரும்பவில்லையா?
முஸோலினி : இல்லை
இப்படி ஓய்வின்றி இவன் பல திறப்பட்ட வேலைகளைச் செய்தபோதிலும், அந்தந்த வேலையையும் ஒழுங்காகவும் எவ் விதக் குறைபாடின்றியும் செய்வான். பத்திரிகையில் தான் எழுதிய தலையங்கங்களைப் பற்றியோ வேறு கட்டுரைகளைப் பற்றியோ பிற்பாடு ஏதேனும் சந்தேகந் தோன்றினால் அதனைத் திருத்தியமைப்பதற்கு உடனே பத்திரிகாலயத்திற்கு நள்ளிரவா யிருந்தாலும் வந்து அதைச் சீர்படுத்திச் செல்வான். இந்த ஒழுங்கை இவன் பிறரிடமிருந்தும் எதிர் பார்த்தான்.
இவன் பிரதம மந்திப் பதவியை ஏற்றுக்கொண்ட பிறகு காரியாலயச் சிப்பந்திகளுக்கு விடுத்த சுற்றறிக்கையொன்றில் பின்வரும் வாக்கியங்கள் காணப்பெற்றன:-
உத்தியோகதர்கள் காரியாலயத்திற்குள் வந்து சேர்வதற்கு முன்னாடி அதைவிட்டுப் போகக் கூடாது.
இவன் பத்திரிகாசிரியனாக இருந்தபோது, இவன் அறையின் முன் பக்கத்தில் பின்வரும் வாக்கியங்கள் அடங்கிய போர்ட் தொங்கவிடப் பட்டிருக்கும்:-
என்னைப் பார்க்க வருகிறவர்கள் என்னைக் கௌரவப்படுத்து கிறார்கள்; என்னைப் பார்க்க வராதவர்கள் எனக்கு மகிழ்ச்சி யளிக் கிறார்கள்.
இவன் பத்திரிகாலயத்தில், எல்லாம் ஒழுங்காக இருக்க வேண்டு மென்று எதிர்பார்ப்பான். தானும் இந்த ஒழுங்கு தவறிச் சிறிதுகூட நடக்க மாட்டான். தனி வாழ்க்கையிலாக, பொது வாழ்விலாக, மனிதன் ஒழுங்குக்குக் கட்டுப்படாமற் போனால் அவன் முயற்சிகள் வெற்றி யடையாவென்பது முஸோலினியின் உறுதியான நம்பிக்கை. இவன் இதைப் பலவிடங்களிலும் வற்புறுத்திப் பேசியிருக்கிறான். இங்ஙனமே ஒவ்வொருவனும் அவனவன் கடமையைச் செய்ய வேண்டுமென்று முஸோலினி எதிர்பார்ப்பான்.
பாசிட் வீரனுக்கு அவனுடைய கடமை ஒன்று தான் தெரியும். அவனுடைய உரிமையெல்லாம் அவன் கடமையைச் செய்வதே; அதில் இன்பங் காண்பதே.
பாசிட் படையினர், ஒழுங்குடன் தங்கள் கடமையைச் செய்து வருமாறு வற்புறுத்தும்போது அடிக்கடி தெய்வீக மாட்சியைப் புகுத்திப் பேசுவான்.
பாசிட் படையினுடைய ராணுவ உடுப்பானது, தேசத்திற்கு ஆண்டகைமையை அளிக்கக் கூடிய அடையாளமாகவும், தேசத்தின் தலை விதியை ஏற்று நடத்தக்கூடிய சக்தி வாய்ந்த ஒரு பரம்பரைக்கு அதிவாரம் போடக்கூடியதாகவும் இருக்க வேண்டும். தெய்வீகத் தொடர்பினால் எழுந்த ஒரு சக்தி பெற்று, அசைக்க முடியாத நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டு, வளைந்து கொடாத மனோ உறுதியால் ஆக்கம் பெற்று, அவ்வப்பொழுது கிடைக்கும் சந்தர்ப்பங் களைத் தங்களுக்குச் சாதகமாக உபயோகித்துக் கொள்ளும் குணத்தைப் புறக்கணித்து, எச்சரிக்கைகளையெல்லாம் கோழைத்தனத்தின் சின்னங் களாகக் கருதி, தங்களுடைய நம்பிக்கைக்காக எந்த விதமான தியாகத்தையும் ஏற்றுக் கொள்வதாக உறுதி பூண்டு, நமக்கெல்லாம் தாயாக இருக்கப்பட்டவளுக்குத் தொண்டு செய்யவும், அவளுக்கு உதவவும், அவளைத் தூய்மைப்படுத்தவும் நாம் அனுப்பப் பட்டிருக் கிறோம் என்பதை மனதார உணர்ந்து பாசிட் படையானது தொண்டு செய்யும்.
முஸோலினி ஒழுங்காகச் செய்யும் காரியத்தை வேக மாகவும் செய்து முடிப்பான். இவன், நிருவாகத்தை ஏற்றுக் கொண்ட ஒரு வருஷத்திற்குள், விவசாயிகளுக்கு நன்மை தரக் கூடிய பல சட்டங்களை நிறைவேற்றினான். இத்தலிக்கு வேண்டிய தானிய வகைகளுக்கு அதுவே விளைவித்துக் கொள்ள வேண்டுமென்றும் இதனால் விவசாயிகள் பெரும் பாலோருக்கு நலனுண்டாகுமென்றும் கருதினான். உடனே செயலிலும் அதை முடித்துவைத்தான். ஒரு வருஷத்திற்குள் மூவாயிரம் மோட்டார் கலப்பைகள் நிலங்களை உழுது கொண்டிருந்தன. கோதுமையை அதிகமாக விளைவித்துக் காட்டுவதற்குப்பதினாயிரம் மாதிரிப் பண்ணைகள் ஏற்படுத்தப் பெற்றன. முந்நூறு விவசாயப் பள்ளிக்கூடங்கள் ஆங்காங்கு அமைக்கப்பெற்றன. தானியங்களை அதிகமாக உற்பத்தி செய்யும்படி துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும் சுவரொட்டி விளம்பரங்கள் மூலமாகவும், பிரசங்கங்களினாலும் பிரசாரம் நடத்த ஏற்பாடு செய்யப் பெற்றது. செய்வன திருந்தச்செய் என்பதில் முஸோலினிக்கு அதிக நம்பிக்கை உண்டு.
1922-ம் ஆண்டு நவம்பர் மாதம் லாசேனில் ஐரோப்பிய அரசியல் நிலை சம்பந்தமாக ஆலோசிக்க, பிரிட்டன், பிரான், இத்தலி முதலிய நாடுகளின் பிரதிநிதிகள் ஒன்று கூடினார்கள். பிரிட்டனின் பிரதிநிதியாக லார்ட்கர்ஸனும் அவருடன் லேடிகர்ஸனும் வந்திருந்தார்கள். இத்தலியின் பிரதிநிதியாக முஸோலினி சென்றிருந்தான். அப்பொழுது இவனுக்கு இங்கிலீஷ் பாஷையில் அதிக பழக்கம் கிடையாது. மகாநாடு முடிந்து லேடிகர்ஸனிடம் விடைபெறுகையில் இன்று நான் ஆங்கில பாஷையில் உங்களுக்கு ஒரு கடிதம் எழுத முடியாது. ஆனால் இன்னும் ஒரு மாதத்திற்குள் ஒரு கடிதம் எழுதுவதாக உறுதி கூறுகிறேன் என்று முஸோலினி சொன்னான். இதனை ஓர் அரசியல்வாதியின் வெற்றுரை யென்றே பலரும் கருதினார். ஆனால் நான்காவது வாரத்துக் கடைசியில், லேடி கர்ஸனுக்கு ஆங்கிலத்தில் எழுதப்பெற்ற முஸோலினியின் கடித மொன்று கிடைத்தது. பிரதம மந்திரிப் பதவியை ஏற்றுக்கொண்ட பிறகு ஏற்பட்ட பல வேலைகளுக்கிடையே, இவன் தனது ஆங்கில அறிவை அதிகப்படுத்திக்கொள்ள அவகாசம் பெற்றான்!
முஸோலினி பெரிய படிப்பாளி. பல நூல்களைப் படித்து இன்புறுவதிலே இவனுக்கு அதிக ஆவல். தவிர, இவனே பல நூல்களையும் எழுதியிருக்கிறான். அரசியற் போராட்டத்தி னிடையே, வியப்புறு சம்பவங்கள் நிரம்பிய நூல்கள் பல எழுத இவனுக்கு எங்ஙனம் அவகாசம் கிடைத்ததென்று யாரும் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. அதற்குக் காரணம் இவனது மன ஒருமைப்பாடேயாகும். இவன் பல நாவல்கள் எழுதியிருக்கிறான். தவிர, நாடகக் கலையில் இவனுக்கு அதிக விருப்பம். வெளிச்சமற்ற விளக்கு கனவான்களே! ஆரம்பமா கிறது வேலை என்பன இவனுடைய நாடகங்கள் சிலவற்றின் தலைப்புப் பெயர்கள். இவன் படிப்பதோடும் எழுதுவதோடும் நிற்பதில்லை. படித்தனவற்றுள் சாரமானவற்றைத் தனியாக ஒரு புத்தகத்தில் குறித்துக்கொள்வான்.
முஸோலினி பத்திரிகாசிரியனாக இருந்து பழக்கமாகை யால் தன்னுடைய அபரிமிதமான வேலைகளுக்கிடையே நாள்தவறாமல் பொதுவாக எல்லா முக்கியப் பத்திரிகை களையும் சிறப்பாகத் தனது எதிர்க்கட்சிப் பத்திரிகைகளையும் படிப்பான். இவனைப் பலவிதமாகச் சித்திரித்துக்காட்டி வெளிவரும் படங்களையெல்லாம் கத்தரித்துத் தனிப்புத்தக மொன்றில் சேகரித்துவைத்துக் கொள்வான்.
தன்னலத் தியாகம்
முஸோலினி தனக்கென்று எவ்வித விசேஷ உரிமை யையோ அல்லது சௌகரியத்தையோ எப்பொதும் விரும்பியது கிடையாது. 1920-ம் வருஷம் இத்தாலிய சமூகம் என்ற இவனுடைய பத்திரிகையின் காரியாலயமானது, வேறொரு விசாலமான கட்டிடத்திற்கு மாற்றப் பெற்ற போது, இவனுடைய ஆசிரிய அறையில் ஒரு சாய்வுநாற்காலி போடப்பட்டது. இதை இவன் வந்து பார்த்து எடுத்து விடுங்கள் இதனை. சாய்வு நாற் காலிகளும் மிதியடி (லிப்பர்)களுமே மனிதனுக்கு அழிவைத் தேடிக் தருகின்றன. உடனே இதனை, இந்த ஜன்னல்களுக்கு வெளியே எறிந்துவிடுங்கள் என்று உரக்கக் கத்தினான்.
இத்தாலிய சமூகம் பத்திரிகையின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவனும், பாசிட் கட்சியில் ஒரு முக்கிய அங்கத்தினனு மான நிகோலோ பான்செர்வெஸி என்பான் 1924-ம் வருஷம் மார்ச் மாதம் பாரிஸில் கொலை செய்யப்பட்டான். இவனுடைய பிரேத ஊர்வலம் ரோமாபுரியில் நடைபெற்றது. அப்பொழுது மூன்று லட்சம் ஜனங்களுக்கு அதிகமாகக் கூடியிருந்தார்கள். பாதி ஊர்வலத்தின்போது நல்ல மழை பிடித்துக்கொண்டது. ஊர்வலத்தின் முன்னணியிலிருந்த முஸோலினிக்குச் சிலர் குடை பிடித்தனர். வேண்டா மென்று இவன் மறுத்துவிட்டான். எல்லாரும் மழையில் நனையும்போது எனக்கு மட்டும் பாதுகாப்பு ஏன் என்று இவன் கோபித்துக்கொண்டான். ஊர்வல முழுதும் மழையிலேயே நனைந்துவந்த இவன், மயானத் தில் உருக்கமானதொரு பிரசங்கம் செய்துவிட்டு, உடனே தனது இருப்பிடத்திற்குச் சென்றான். தான் பிரதம மந்திரியாயிருப்ப தொன்றைக் கொண்டு தனக்கு எவ்வித விசேஷ சலுகையும் காட்டக்கூடாதென்பது இவன் விருப்பம்.
தனக்கென்று எவ்வித விசேஷ சௌகரியமும் கூடாதென்ற கொள்ளையுடைய முஸோலினி, தனக்கென்று எப்பொருளை யும் விரும்பி உபயோகிக்கமாட்டான். இவன் பிரதம மந்திரியான பிறகு உலகத்தின் நானாபக்கங்களிலிருந்தும் பலவிதமான சன்மானப் பொருள்கள் இவனுக்குக் கிடைத்திருக்கின்றன. இவை யாவும் இவன் காரியாலயத்திலுள்ள ஒரு தனி ஹாலில் வைக்கப்பெற்றுள்ளன. இவற்றின்மீது இவன் எவ்வித கவனமும் செலுத்துவதே கிடையாது. அதற்கு மாறாகச் சிலவற்றை அநாதைப் பிள்ளைகளின் உபயோகத் திற்காகவும், வேறு சிலவற்றை ஆபத்திரிகளிலுள்ள நோயாளிகளின் கண்களுக்கு விருந்தளிக்குமாறும் அனுப்பிவிடுவான். இவனுக்குக் கிடைத் திருக்கும் பரிசுப் பொருள்களைப் பார்த்தால் இத்தாலியர்கள் இவனிடத்தில் எவ்வளவு பக்தி கொண்டிருக்கிறார்கள் என்பது புலனாகும். ஒரு சமயம் முஸோலினி, ரெயிலில் பிராயணம் செய்து கொண்டிருந்தான். இவனுடன் வேறொரு பிரபுவும் பிரயாணம் செய்துகொண்டிருந்தான். முஸோலினியின் தோற்பெட்டியொன்றின் மேற்புறத்தில் பளிச்சென்று ஒரு பிரகாசம் தெரிந்தது. இஃதென்ன வென்று பிரபு குனிந்து பார்த்தான். கழுத்துப் பட்டையை இறுக்கிப் பிடித்துக் கொள்ளும் ஊசி! இதில் நீல வைரக்கல் ஒன்று பதிப்பிக்கப்பெற் றிருந்தது ! முஸோலினிக்கு அளிக்கப்பெற்ற சன்மானப் பொருள் களில் இஃதொன்று. தலைவ! இதை இவ்வளவு அலட்சிய மாகப் பெட்டியின் மேற்புறத்தில் மாட்டியிருக் கிறீர்களே; மிகவும் விலையுயர்ந்த பொருளன்றோ இது! என்றான் பிரபு. அப்படியா! இதை நான் பார்த்ததுகூட இல்லை. இதை யார் அனுப்பினார்களென்றும் தெரியாது என்றான் முஸோலினி.
உலகத்திலேயுள்ள சர்வாதிகாரிகள் தங்கள் தற்காப்புக் கென்று பல மெய்க்காவலரை வைத்துக் கொள்வதுண்டு முஸோலினிக்குச் சுமார் முந்நூறு காவலர் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இவன் இதற்காகச் சிறிதும் கவலைப்படுவதில்லை. எப்பொழுதும் இவனுக்குக் கட்டுப்பா டென்பதே பிடிக்காது. அப்படியிருக்கப் பலரும் தனனைச் சூழ்ந்து எப்பொழுதும் காவல் செய்வதை இவன் எங்ஙனம் விரும்புவான்?
நாவன்மை
முஸோலினியின் நாவன்மை போற்றக்குரியது. எதிர்க் கட்சியினரைத் தாக்கும்போது அழகாகவும் கண்ணியமாகவும் தாக்குவான். இவன் பேசும்போது இவன் முகத் தோற்றங்களும் அடிக்கடி மாறும். மற்றும் கேட்போர் இருதயத்தில் பதியுமாறு இவன் பேசுவான். உலக ராஜதந்திரிகளில் இவன் ஒருவனே, ராஜதந்திர பாஷையில் பேசாமல் நேராக ஆணி அடித்தாற் போல் பேசுபவன் என்ற ஓர் ஆங்கிலேய அறிஞர் கூறுகிறார். இவன் அவ்வப்பொழுது பேசிய பேச்சுக் களிலிருந்து சிலவற்றை மட்டும் அகழ்ந்தெடுத்து கீழே தருகிறோம்:-
ஒருவன் மாற்றத்திற்குத் தக்கபடி தன் மனோபாவத்தைச் சரிப்படுத்திக் கொள்ள வேண்டுவது அவசியமாகும். ஒருவன் குடிசையி லிருந்து அரண்மனைக்குச் செல்லலாம். ஆனால் அவன் அரண்மனையி லிருந்து குடிசைக்குத் திரும்பவும் தயாராக இருக்க வேண்டும்.
வேலை செய்து கொண்டே வாழ வேண்டும்; யுத்தம் செய்து கொண்டே மரிக்க வேண்டும்.
எது விஷயத்திலும் நான் திருப்தியடைவதில்லை. ஆத்ம திருப்தி யடையும் சமூகத்திற்கு ஆபத்துதான்.
நான் முன்னே சென்றால் பின்னே வாருங்கள்; நான் பணிந்தால் என்னைக் கொல்லுங்கள்; நான் இறந்தால் என்னைப் பழி தீருங்கள்.
நேற்று என்பது கழிந்த பொருள்; இன்று என்பது இருக்கும் பொருள்.
பழமையே ஒரு லட்சியம் என்று கருதி விடக்கூடாது. அது, முன்னேற்றம் என்று நாம் கூறுகிற ஒரு சங்கிலியின் பிணைப் பழமையைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பது பின்னுக்குப் போவதாகும். அதற்கு மாறாக நாம் முன்னோக்கிச் சென்று அபிவிருத்தி செய்து கொள்ளவேண்டும்; நம்மை உயர்த்திக் கொள்ளவேண்டும்.
நடக்கும் கிராமபோன் இயந்திரமாக என் மூளையை நான் உபயோகிக்க விரும்பவில்லை.
என்னை இன்னும் நீங்கள் நேசிப்பதனாலேயே என் மீது துவேஷங் காட்டி வருகிறீர்கள்.
சத்துருக்களுக்குப் புறமுதுகு காட்டி ஓடுகிறவனுக்கு எவ்வித கருணையும் காட்டக் கூடாது. அதே மாதிரி போர் முழக்கம் செய்து கொண்டிருக்கும் ஒரு சமூகத்தின் முதுகில் தாக்க முயல்கிறவனுக்கும் கருணை காட்டக்கூடாது.
நாளை வெற்றிக்கு இன்றைய ஒழுங்குவேண்டும்.
குளிரையும் பசியையும் பொறுத்துக் கொள்வோம். இவை யுத்தத்தின் விளைவுகள். ஆனால் அவமானத்தை மட்டும் சகியோம்.
புகழ் நிறைந்த நமது இளமையை, துயர் நிறைந்த முதுமைக்குப் பலி கொடுத்தோம்.
விதி என்னும் கடவுள் தனது பொற்சம்மட்டியினால் மௌனக் கோயிலின் கதவுகளைத் தட்டி, இறந்து போனவர்களையெல்லாம் அழைத்துப் புத்துயிர் கொடுப்பதாக அழைக்கும் சமயமிது.
சகோதரர்களே! உங்களை நான் அதிகமாக நேசிக்கிறேன். அதனாலேயே, நீங்கள் அசுத்தமாயிருக்கிறீர்களென்றும், உங்களைச் சுத்தப் படுத்திக்கொள்ள வேண்டுமென்றும், உங்களிடத்தில் அறியாமை குடிகொண்டிருக்கிறதென்றும், அதனைக் களைய, கல்வி ஞானம் பெறவேண்டுமென்றும் கூறுகிறேன்.
மனிதர்களைப் பற்றி என்ன கவலை? அவர்கள் மறைந்து விடுகிறார்கள். அவர்களுடைய எண்ணங்களே நிலைத்து நிற்கின்றன.
பழமையை நாம் மறுக்க விரும்பவில்லை. அப்படி மறுப்பது நம்மையே மறுப்பதாகும். நாம் நிகழ்காலத்தைக் கடந்து விட்டோம். இதற்காக, எதிர்காலத்தின் தொடர்பையும் நாம் அறுத்துக் கொள்ள விரும்பவில்லை. ஏனெனில், நமது நிகழ்காலமும், நமக்கு முன்னாடி சென்றவர்களுக்கு எதிர் காலமாக இருந்ததல்லவா?
அரசாங்கம் என்பது என்ன? தேசத்தின் சட்ட ரீதியான அவதார மன்றோ?
சரித்திரமானது கோழைகளுக்குச் சொந்தமானதல்ல; வீரர் களுக்குச் சொந்தமானது. அது சோம்பேறிகளுக்காக இருப்பதில்லை. கர்மவீரர் களுக்காகவே இருக்கிறது. சரித்திரத்தை, யார் தங்களுடைய மனோதிடத்தால் வளைக்கிறார்களோ அவர்களுக்கே அஃது உரிமைப் படுகிறது.
தேசாபிமானம் என்பது ஓர் உணர்ச்சி மாத்திரமே. அதனோடு தியாகம் சேர்ந்தால்தான் அது நற்குணமாகிறது.
இளமை அழகுள்ளது. சந்தடி நிறைந்த இந்த விசாலமான உலகத்தை அது தெளிவுறக் காணக்கூடும். மரணத்தையும் எதிர்த்து நிற்கும் அஞ்சாத நெஞ்சம் அதற்குண்டு.
இளைஞர்களே! நீங்கள் வாழ்க்கையின் உதயம்; நாட்டின் நம்பிக்கை; நாளைய சேனாபலம்.
உங்கள் மலைகளைக் கண்டு பெருமை கொள்ளுங்கள். மலை வாழ்க்கையைக் காதலியுங்கள். பெரிய நகரங்கள் என்று சொல்லப் பெறும் இடங்களில் உலவ வேண்டுமென்ற ஆசையினால் தூண்டப் படாதீர்கள். நகரங்களில் மனிதர்கள், கற்களாலும் சிமெண்டினாலும் கட்டப் பெற்ற குகைகளில், போதிய காற்றும் வெளிச்சமும் இடமும் இன்றித் துன்ப வாழ்க்கையை நடத்துகிறார்கள்.
சுதந்திரம் என்பது நன்கொடையல்ல; அஃது ஒரு வெற்றி. அது சமத்துவமல்ல; அஃது உரிமை.
கடமையின்றி உரிமை யில்லை.
நம்பிக்கைகளும் பழக்கங்களும்
நிகழ்காலத்திலேயே வாழவேண்டுமென்று முஸோலினி வற்புறுத்தி வந்தானாயினும், இறந்த காலப் பொருள்கள் சம்பந்தமாகச் சில ஆச்சரியமான நம்பிக்கைகளைக் கொண் டிருந் தான். இவன் பிரதமமந்திரியான பிறகு ஒருநாள், லண்டன் டைம் பத்திரிகையைப் படித்துக் கொண்டிருந்தான். ஆங்கிலேய சிலாசாஸன பரிசோதகர் சிலரால் தோண்டி யெடுக்கப் பெற்ற எகிப்திய புராதனச் சின்னங்களின் படங்களும், தோண்டுயெடுத்தவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தி னருக்கும் ஏற்பட்ட இடையூறுகளும் அதில் விவரமாக வெளி யிடப் பட்டிருந்தன. எதைக் கண்டும் அஞ்சாத முஸோலினிக்கு, இச்செய்தி சிறிது பீதியை உண்டுபண்ணியது. சமீப காலத்தில் இவனுக்குச் சன்மானமாக அளிக்கப்பெற்றதும், பகிரங்க மானதோர் இடத்தில் வைக்கப்பெற்றிருந்ததுமான ஓர் எகிப்திய உருவச்சிலையை உடனே பெயர்த்து ஒதுக்கமான தோரிடத்தில் வைத்து விடுமாறு உத்திர விட்டான்!
முஸோலினிக்கு, நிரம்பப் பருமனாயுள்ளவர்களைக் கண்டால் பிடிக்காது. கனசரீரிகள் அனைவரும் கோழைகள் என்பான். நாமெல்லாரும் கோழைகள் தான்; ஆனால் நாம் கனமில்லாத கோழைகள். இதனின்று கடவுள் நம்மைக் காப்பா ராக என்று வேடிக்கையாகக் கூறுவான். தாடியிடத்தில் இவனுக்கு வெறுப்பு அதிகம். ஆழ்ந்த ஹம்பக் குகளை மறைக்கும் முகமூடி என்று தாடிக்கு வியாக்கியானஞ் செய் வான். உலகத்திலே முன்னேற்ற மடையாதன வெல்லாம், அநுபவ சாத்திய மில்லாதன வெல்லாம் ஒன்று திரண்டு தாடி களாக உருக்கொண்டு உலவுகின்றன என்று நகைச்சுவை ததும்ப நவில்வான்.
முஸோலினிக்குத் தான் பிறந்த கிராமத்திடம் அதிக விசுவாசம் உண்டு. பிரேதாப்பியோ நகர சபையினர், இவனுக்கு முதன் முதலில், ஒரு வேலை கொடுக்கமறுத்து விட்டார்கள். ஆனால் அதே பிரேதாப்பியோ ஜனங்கள் இப்பொழுது எங்கள் முஸோலினி என்று பெருமை கொண்டாடுகிறார்கள். முஸோலினி பிரதம மந்திரியான பிறகு, பிரேதாப்பியோ வாசிகளின் தலை, சில அங்குல உயரம் வளர்ந்திருக்கிறது என்று ஓர் ஆசிரியர் வேடிக்கையாக வருணித்திருக்கிறார். பிரேதாப் பியோ வாசிகள், இப்பொழுது, முஸோலினி பிறந்த இடத்தில் ஒரு பெரிய மாளிகையைக் கட்டி அதை இவனுக்கு நன்கொடை யாக அளித்திருக்கிறார்கள். முஸோலினி, தனது ஓய்வு காலத்தைத் தனது கிராமத்தில் கழிக்கவே விருப்பங் கொள் வான். உண்மையான தேசபக்தனுக்கன்றோ கிராம பக்தியின் பெருமை தெரியும்?
முஸோலினி சீட்டாட்டத்தில் பெரிய நிபுணன். முக்கியமான பிரிட்ஜ் என்ற ஆட்டத்தில் இவனை வெல்லுதல் மிகக் கடினம். ஆனால் இதற்காக இவன் காலத்தை வீணாக்க மாட்டான். மற்றும் சீட்டுக்கட்டுகளை வைத்துக் கொண்டு ஜாலவித்தைகள் காட்டுவதில் இவனுக்குச் சந்தோஷம்.
முஸோலினி, எதையும் வீணாகச் செலவழிக்க மாட்டான். ஒரு பக்கத்தில் எழுதப்பட்டு, உபயோகமற்றவை என்று தள்ளப்பெற்ற காகிதங்களை ஒழுங்குபடுத்தி அவற்றின் மற்றொரு பக்கத்திலும் குறிப்புகள் எழுதுவான்.
முஸோலினியின் காரியாலத்திற்கு பலாஸோ - டி - வெனிஸியா என்ற பெயர். இது, ரோம் நகரத்திற்கு மத்தியி லுள்ள ஒரு விசாலமான சதுக்கத்தில், காபிடோலைன் குன்றின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது. மஞ்சட் காவிக்கற்களால் கட்டப்பெற்ற இக்கட்டிடம் ஒரு புராதன கோட்டை மாதிரி இருக்கிறது. பதினேழாவது நூற்றாண்டில், போப்பரசர்களால் அதிக பணச்செலவில் கட்டப்பெற்ற இக்கட்டிடத்தில், பல போப்புகளும், மன்னர்களும், பெரிய தலைவர்களும் வசித்து வந்திருக்கிறார்கள். இக்கட்டிடத்தின் வாயிற் கதவுகள் எப் பொழுதும் திறக்கப்பட்டே இருக்கும். இரவும் பகலும் போர் வீரர்கள் இங்குக்காவல் புரிந்து வருகிறார்கள். உள்ளே செல் கிறவர்கள் அநுமதிபெற்றே செல்லவேண்டும். அப்படி சென்றால், பெரியதொரு புத்தகசாலையையும் வாசக சாலையை யும் சந்திக்கலாம். அமைதியாக இருந்து ஆராய்ச்சி செய்வதற்கு இங்கு எல்லாவிதமான வசதிகளும் அமைக்கப்பட்டிருக் கின்றன. இதற்கு மேல்மாடியிலேயே, முஸோலினியின் காரியாலயம் இருக்கிறது. இவன் இங்குத் தினந்தோறும் பத்துமணிநேரம் தங்கி வேலை செய்கிறான். இவன் வேலை செய்யும் அறை யானது, அறுபது அடி நீளமும் நாற்பது அடி அகலமும் நாற்பது அடி உயரமும் உள்ளது. இதன் ஒரு பக்கத்தில் முஸோலினி உட்கார்ந்து வேலை செய்வதற்குப் பன்னிரண்டு அடி நீளமுள்ள ஒரு மேஜையும் இரண்டு நாற்காலிகளும் அமைக்கப்பட் டிருக்கின்றன. பக்கத்தில், எழுந்து நின்று படிப்பதற்குச் சௌகரியமாயிருக்கும் பொருட்டு உயரமான ஒரு சாய்வு மேஜை இருக்கிறது. இதன் மீது ஐரோப்பாவின் பூகோள படம் எப்பொழுதும் விரிக்கப்பட்டிருக்கும். இவனுக்குப் பின்னால், அன்றாட உபயோகத்திற்கு வேண்டிய சில புதகங்களுடன் ஒரு மேஜையும் மூன்று டெலிபோன்களும் இருக்கும். இவன் வேலை செய்யும் மேஜையானது, மிக ஒழுங்காக வைக்கப்பட்டிருக்கும். அன்றாட வேலைகளை அன்றாடம் இவன் செய்து முடித்துவிடுவ தால், இவன் மேஜையில் அதிகமான ததாவேஜுகளோ, வேறு காகிதங்களோ காணப்படமாட்டா. இவனைப் பேட்டி காண யாராவது வந்தால் எழுந்து புன்சிரிப்புடன் அவர்களை வரவேற்பான். யாருடனாவது பேசும்போது, இவன் ஒரு பென்சிலை இரண்டு விரல்களுக்கு நடுவே வைத்துக் கொண்டும், அல்லது இரண்டு கைகளுக்கும் இடையே வைத்து உருட்டிக் கொண்டுமிருப்பான். சில சமயங்களில், பென்சிலால் ஏதேனும் கிறுக்கிக் கொண்டே பேசுவான். ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு வேலை செய்வதால், அடிக்கடி நாற்காலியில் அசைந்து கொடுத்துக் கொண்டிருப்பான். வேலை யினிடையே ஏதேனும் சோர்வு எற்பட்டால், ஒரு மோட்டார் சைக்கிளில், யாரையாவது ஒருவரை ஏற்றி வைத்துக்கொண்டு, மிக வேகமாகத் தொலை தூரம் சென்று திரும்புவான்.
முஸோலினி, தனது கீழுத்தியோகதர்களிடத்தில் எங்ஙனம் நடந்து கொள்வான்? அவர்களுக்குள்ளேயே சச்சரவோ அபிப்பிராய வேற்றுமையோ ஏற்பட்டால் எப்படி தீர்ப்பளிப்பான்? இது சம்பந்தமாக முஸோலினியையும் எமில் லட்விக்கையும் பேசவிடுவோம்:-
லட்விக் : உங்களுடைய உத்தியோகதர்களில் ஒருவர் மற்றொருவர் மீது சந்தேகப்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? உத்தியோகதர்கள் விசுவாசத்துடன் நடந்து கொள்கிறார் களா இல்லையாவென்பதை எப்படி நிர்ணயிப்பீர்கள்? நீங்கள் பிறரால் ஏமாற்றப்படாமல் இருக்க என்ன செய்வீர்கள்? புதிதாக நியமிக்கப் பெற்ற உத்தியோகதர்களுடைய அந்தரங்க நோக்கம் எப்படி இருக்கிறதென்றும் எவ்வாறு கண்டு பிடிப்பீர்கள்?
முஸோலினி : இதோ இருக்கின்றன பார்த்தீர்களா இரண்டு நாற்காலிகள்; இவை யிரண்டிலும் சச்சரவு செய்யும் இரண்டு உத்தியோகதர்களையும் வரவழைத்து உட்கார வைப்பேன். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்த வண்ணம் சமதூரத்திலிருந்துகொண்டு தங்களுடைய கட்சியை எடுத்துச் சொல்லச்செய்வேன். யார் மீதாவது சந்தேகந் தோன்றினால் அவரை வரவழைத்து என் முன்னர் இருத்தித் தமது கட்சியை எடுத்துச்சொல்லச் செய்வேன். பெரிய விஷயங் களாயிருந்தால் எழுதித் தரும்படி கேட்பேன். உத்தியோகதர்களுடைய அந்தரங்க வாழ்க்கை, கையெழுத்து, முகத்தோற்றம் இவற்றை யெல்லாம் கவனித்து அவர்கள் நம்பிக்கையுள்ளவர்களா இல்லாதவர்களா வென்பதைத் தீர்மானிப்பேன். இம்மாதிரி யான விஷயங்களில் நான் பொறுமையாக இருந்து நியாயஞ் செய்வேன். புதிதாக யாரேனும் உத்தியோகத்திற்கு வந்தால், அவர் எனக்கு எவ்விதத்தில் உதவியா யிருக்க முடியுமென்பதைப் பற்றிக் கேளாமல் என்னிடத்திலிருந்து என்ன நன்மைகளை எதிர்பார்க்கிறார் என்று கேட்பேன்.
முஸோலினி தனது வாழ்க்கையின் முற்பாகத்தை நினைத்துச் சில சமயங்களில் துக்கமும், சில சமயங்களில் பெருமையும் அடைவதுண்டு.
லட்விக் : உங்களுடைய வாழ்க்கையில் எந்தச் சம்ப வத்தைக் குறித்து நீங்கள் அதிகமாகப் பெருமை கொள்கிறீர்கள்?
முஸோலினி : நான் போர்வீரனாயிருந்தது குறித்துப் பெருமைகொள்கிறேன். எனது பொறுமையும் சக்தியும் வெளிப் பட்ட காலமல்லவா அது? இவை இரண்டும் இருந்தால்தான் ஒரு மனிதன் பீரங்கிக்கு எதிர் நிற்க முடியும்.
லட்விக் : உங்களுடைய இளமையில், உங்கள் சுய உணர்ச்சி அடிக்கடி புண்படுத்தப்பட்டதல்லவா?
முஸோலினி : உண்ணும் விஷயத்தில் கூட, பள்ளிக் கூடத்தில், பிள்ளைகளாகிய எங்களை மூன்று பிரிவாகப் பிரித்து உண்பித்தனர். நான் எப்பொழுதும் மூன்றாவது பிரிவிலேயே - அதாவது பரம ஏழைப் பிள்ளைகளுடனேயே - உட்கார வேண்டியிருந்தது. எங்களுக்குக் கொடுக்கப்பெற்ற ரொட்டித் துண்டுகளில் எறும்புகள் இருந்தன வென்பதைக் குறித்து இப்பொழுது நான் வருத்தப்படவில்லை. ஆனால் இளஞ் சிறுவர்களைப் பாலிய முதற்கொண்டே பிரித்துவைத்த முறை இப்பொழுதும் என் மனதில் உறுத்திக் கொண்டிருக்கிறது.
எங்கள் தலைவன்
அற்ப எண்ணங்களோ அல்லது சிறுமைச் செயல்களோ முஸோலினிக்கு எப்பொழுதும் பிடிப்பதில்லை. இதனால் இவன் தனது லட்சியத்தை உயர்த்தியே வைத்துக்கொண்டிருந் தான். நாம் மனப்பூர்வமாக உழைக்கும்போது நாம் கோருவது ஏன் உயர்ந்த லட்சியமாக இருக்கக்கூடாது என்பது இவன் கேள்வி.
‘mtªâ! பத்திரிகையிலிருந்து இவன் விடுதலை செய்து கொண்ட போது, இவனுக்குச் சேரவேண்டியிருந்த சம்பள பாக்கியையும், போன தொகையையும் வேண்டாமென்று மறுத்துவிட்டது ஈண்டுக் குறிப்பிடத் தக்கது.
முஸோலினியின் குடும்பம் மிகவும் அமைதியுடையது. இவன் மனைவி ராகேல் அம்மையார் ஆடம்பர மற்றவள். வீண் ஆரவாரத்திலீடுபடாதவள். ஒற்றுமையுள்ள முஸோலினி தம்பதிகளுக்கு இரண்டு குமாரர்களும் ஒரு குமாரத்தியும் இருக்கிறார்கள். குமாரத்தி கவுண்ட்சியானோ என்ற ஒரு பிரபு குமாரனுக்கு மணஞ் செய்துகொடுக்கப்பெற்றிருக்கிறாள். மூத்த மகனாகிய விட்டோரியோவும் இளையவனாகிய ப்ரூனோவும் சிறந்த போர் வீரர்களாகப் பழக்கப்பெற்றிருக்கிறார்கள். மரணமோ புகழோ அடைய வேண்டிய பிள்ளைகள் என்ற முறையிலே இவர்கள் வளர்க்கப்பட்டார்கள். முஸோலினியின் இரண்டு குமாரர்களும் மருமகப் பிள்ளையும் இத்தாலிய ஆகாயவிமானப்படையில் சேர்ந்து உழைத்து வருகிறார்கள்.
இத்தலியின் அரசாங்க நிருவாகத்தை முஸோலினி ஏற்றுக்கொண்ட பிறகு, இத்தலியின் அபிப்பிராயத்தை உலக வல்லரசுகள் மதிக்கத் தொடங்கியிருக்கின்றன. தன் மதிப்புள்ள ஒரு தேசத்தையே பிறநாடுகள் கௌரவமாக நடத்தும் என்று முஸோலினி அடிக்கடி கூறுவது வழக்கம். இத்தலிக்கு இந்த தன் மதிப்பை உண்டாக்கி வைத்தவன் யார்? இத்தாலியர்களால் எங்கள் தலைவன் (இல் ட்யூ) என்று போற்றப்படும் முஸோலினியே. இத்தலியின் இதிகாச நாயகர் வரிசையில் இவனுக்கு ஒரு கௌரவமான தானம் உண்டு என்பதை யாரே மறுக்கவல்லவர்?
பின்னிணைப்பு - 1
இத்தலியின் அமைப்பு
நிலப்பரப்பு : சுமார் 119,703 சதுர மைல் விதீரணமுள்ள இத்தலி தீபகற்பத்தின் குறுக்கே, தெற்கு வடக்காக அபினைன் மலைத்தொடர் ஊடுருவிச் செல்கிறது. இதன் உயர்ந்த சிகரம் 9,580 அடி உள்ள மாண்டி கார்னோ என்பது. இந்த மலைத் தொடர்ச்சிக்கு இரு மருங்கிலும் நிலம் சரிந்து செல்கிறது.
சீதோஷ்ணம் : சமமானது. தேக ஆரோக்கியத்திற்கு ஏற்றது. உலகத்தின் பல பாகங்களிலிருந்தும் பலர் வந்து சிறிது காலம் சுக மாகத் தங்கிச்செல்வதற்கு ஏற்ற வசதியுடையது, தீப கற்பத்தின் தெற்குப் பாகம் மட்டும், வருஷத்தில் சில காலம் உஷ்ணமாயிருக்கும்.
வேளாண்மை : நிலங்களில் நூற்றுக்கு 91 பங்கு சாகுபடி செய்யப்படுகின்றது. சுமார் 120 லட்சம் ஏகராக் களில் திராட்சைப் பழம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவற்றிலிருந்து வருஷத்தில் சராசரி பதினாயிரம் லட்சம் காலன் ஒயின் உற்பத்தி செய்யப்படுகிறது. சுமார் 110 லட்சம் ஏகராக்களில் கோதுமை சாகுபடி யாகிறது. தவிர, பீன், ஓட், உருளைக்கிழங்கு, பார்லி, நெல் முதலியனவும் விளைவிக்கப்படு கின்றன. அபினைன் மலைச் சரிவில் ஏராளமான மரங்கள் உற்பத்தியாகி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
உலோகப் பொருள்கள் : சிஸிலித்தீவில் ஏராளமாகக் கந்தகம் உண்டாகின்றது. ஈயம், இரும்பு, செம்பு, துத்தநாகம், சலவைக்கற்கள் முதலியவைகளும் உண்டாகின்றன.
கைத்தொழில்கள் : பட்டுத் தொழில் அதிகம். யந்திர வகைகள், துணிகள், சரிகைதினுசுகள், தோற் சாமான்கள், ரப்பர், மரச் சாமான்கள், பழங்கள், ஒயின், மோட்டார் வண்டிகள் முதலியவை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
அரசாங்க அமைப்பு : கோனாட்சி. அரசருக்கு, ராஜாங்க நிருவாகத்தில் துணை செய்ய, செனெட் என்றும் சேம்பர் என்றும் இரண்டு சபைகள் உண்டு. 21 வயதுக்கு மேற்பட்ட அரசு குடும்பத்தினரும், மந்திரிச் சபையின் சிபார்சின் பேரில் மன்னரால் நியமிக்கப்பெற்ற நாற்பது வயதுக்கு மேற்பட்டவர் களும் செனெட் சபையில் ஜீவிய அங்கத்தினர்களா யிருப்பார்கள். சேம்பருக்கு ஐந்து வருஷத்திற்கொரு முறை தேர்தல் நடைபெறும். இதில் முப்பது வயதுக்கு மேற்பட்டவரே அபேட்சகராக நிற்கலாம். அரசாங்க நிருவாகம் பதினைந்து இலாகாக்களாகப் பிரிக்கப்பட்ட மந்திரிச்சபையின் கீழ் நடை பெறுகிறது.
தற்போதுள்ள அரசர் : மூன்றாவது விக்டர் இமானுவல். இவர் பிறந்தது 11-11-1869; மணந்தது 24.10.1896; பட்டத்திற்கு வந்தது 29.7.1900.
பட்டத்திளவரசர் : ஹம்பர்ட். இவருக்கு பீட்மாண்ட் இளவரசர் என்ற பட்டப்பெயருண்டு. இவர் பிறந்தது 15-9-1904; மணந்தது (பெல்ஜியம் அரச குமரியை) 8-1-1930.
மந்திரிச் சபை : முஸோலினி அரசாங்க நிருவாகத்தை ஏற்றுக் கொண்ட பிறகு, மந்திரிச்சபை ஆறு முறை திருத்தியமைக்கப் பட்டிருக் கிறது. முஸோலினி பிரதம மந்திரியாயிருப்பதோடு அந்நிய நாட்டு மந்திரி, உள்நாட்டு மந்திரி, யுத்த மந்திரி, கடற்படை மந்திரி, ஆகாயப்படை மந்திரி, தல தாபனங்கள் மந்திரி ஆகிய மந்திரிப் பதவிகளையும் வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய நகரங்கள் : ரோம் (ஜனத்தொகை 947,598) மிலான் (712,844) நேபில் (757,251) ஜினோவா (345,000) டூரின் (608,412) பலார்மோ (217,735) வெனி (162,695) ட்ரீடே (228,583) பொலோக்னா (199,000).
இத்தலிக்குச் சொந்தமான குடியேற்ற நாடுகள்
லிபியா : ஆப்ரிக்கா கண்டத்தின் வடக்கே இருக்கிறது. 1912-ம் வருஷம் இத்தலியின் ஆதிக்கத்துக்குட் பட்டது. மொத்த விதீரணம் 810,000 சதுர மைல்; ஜனத்தொகை - 1,000,000. தலை நகரம் - டிரிபோலி. இது பெரிய துறைமுகம். 1926-ம் வருஷம் ஏப்ரல் மாதம் முஸோலினி டிரிபோலிக்கு விஜயஞ் செய்தான்.
எரீட்ரா : இது செங்கடலுக்கு ஓரமாக உள்ளது. இதன் விதீரணம் 64,000 சதுர மைல்; ஜனத்தொகை - 640,000. தலை நகரம் - அமாரா. மஸோவா என்பது முக்கிய துறைமுகப் பட்டினம்.
இத்தாலிய சோமாலிலான்ட் : ஏடன் வளைகுடாவையும் இந்து மஹா சமுத்திரத்தையும் தழுவினாற் போல் அபிசீனியாவுக்குக் கிழக்கே உள்ளது. இதன் விதீரணம் 220,000 சதுர மைல். ஜனத்தொகை 900,000 தலைநகரம் - மோகாடிஷோ.
ஏஜியன் தீவுகள்: பால்கன் பிரதேசத்திலுள்ள பன்னி ரண்டு சிறிய தீவுகள். 1912-ம் வருஷம் இத்தலியின் நிருவாகத்திற்குட்பட்டன. ரோட் என்பது இவற்றின் நிருவாக தலைமை தானமாக விளங்கு கிறது. இவற்றின் மொத்த ஜனத்தொகை 100,000
ஜாரா பிரதேசம் : டால் மேஷிய பிரதேசத்தைச்சேர்ந்த ஒரு பழைய ராஜ்யம். 1923-ம் வருஷத்திலிருந்து இஃது இத்தலியின் சுவாதீனத்தி லிருந்து வருகிறது. மொத்த விதீரணம் 42 சதுரமைல்; ஜனத்தொகை 20,000.
பாண்டலேரியா தீவு : சிஸிலி தீவுக்கடுத்தாற்போல் மத்தியதரைக் கடலில் உள்ளது. இதன் விதீரணம் 31 சதுர மைல். ஜனத்தொகை 10,000
பெலாஜியன் தீவுகள் : மூன்று தீவுகள் அடங்கியது. விதீரணம் 8 சதுரமைல்; ஜனத்தொகை 3,000.
சாஸெனோ தீவு : விதீரணம் 2 சதுரமைல். இது கப்பற்படை தங்கும் இடம்.
டின்ட்ஸின் : இது சீனாவிலுள் போஹாய் நதிக்கரையில் உள்ள ஒரு சிறு பிரதேசம். 1902-ம் வருஷம் இத்தலி இதனை சுவாதீனமாக்கிக் கொண்டது. இதன் விதீரணம் 20 சதுர மைல். ஜனத்தொகை 10,000.
பின்னிணைப்பு - 2
சில முக்கிய சம்பவங்கள்
1883. முஸோலினியின் பிறப்பு.
1898. முஸோலினி சலேஷ்யப் பாதிரிகள் பள்ளிக்கூடத்தினின்று விலகியது.
1902. முஸோலினி, பிழைப்பு நிமித்தம் விட்ஜர்லாந்துக்குச் சென்றது.
1904. முஸோலினி ராணுவத்தில் சேர்ந்தது.
1905. முஸோலினியின் தாயார் இறந்து போனது.
1910. முஸோலினி வகுப்புப்போர் என்ற பத்திரிகையைத் தொடங்கியது.
1911. லிபியாமீது இத்தலியின் படையெடுப்பு. முஸோலினிக்கு ஒரு வருஷ சிறை வாசத் தண்டனை.
1912. முஸோலினியின் தகப்பனார் கால மானது.
1914. இத்தலியில் பொது வுடமைக் கட்சி யினரின் ஆர்ப் பாட்டம்.
1914. முஸோலினி இத்தாலிய சமூகம் என்ற பத்திரிகையைத் தொடங்குதல்.
1916. ஐரோப்பிய யுத்தத்தில் இத்தலி தலையிடவேண்டு மென்று வற்புறுத்தியதற்காக முஸோலினி கைது செய்யப்பட்டது. இத்தலி, நேசக் கட்சியாருடன் கலந்துகொண்டது.
1917. முஸோலினி, யுத்த களத்தில் காயமடைந்தது.
1919. மிலான் நகரத்தில் பாசிட் கட்சியின் ஆரம்பம். பாசிட் கட்சியினரும் பொதுவுடமைக் கட்சி யினரும்சச்சர விட்டுக்கொண்டது. ப்யூம் பிரதேசத்தை டிஅனன்ஸியோ ஆக்ரமித்துக் கொண்டது.
1921. பார்லிமெண்ட்தேர்தலில், முஸோலினி உள்பட பாசிட் கட்சியினர் வெற்றியடைந்தது.
1922. பாசிட் கட்சித் தலைவன் என்ற முறையில் முஸோலினி, இத்தலியின் பிரதம மந்திரியானது.
1923. ஜார்ஜ் மன்னர், இத்தலிக்கு விஜயஞ் செய்த போது,முஸோலினிக்கு ஜி.ஸி.பி. பட்டம் வழங்கியது. இத்தாலியர்கள் கார்பியு தீவைக் கைப்பற்றிக் கொண்டது.
1924. முஸோலினிக்கு ஆர்டர் அப் அனன்ஸியேடோ பட்டம் அளிக்கப் பெற்றது. ப்யூம் பிரதேசம் இத்தலி யுடன் சேர்க்கப் பெற்றது.
1926. முஸோலினி மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ய முயற்சிகள்.
1929. இத்தாலிய அரசாங்கத்திற்கும் போப்பரசருக்கும் சமரஸ உடன்படிக்கை.
1933. பிரிட்டிஷ் பிரதம மந்திரி ராம்ஸே மாக்டோனால்டும், முஸோலினியும் ரோமாபுரியில் சந்தித்தது. முஸோலினி, வேறு சில மந்திரிப் பதவிகளையும் ஏற்றுக்கொண்டது.
1934. இத்தலி, ஆதிரியா, ஹங்கேரி ஆகிய மூன்று நாடுகளும் ஒப்பந்தம் செய்து கொண்டது.
1935. அபிசீனியாமீது இத்தலி போர் தொடங்கியது.
பின்னிணைப்பு - 3
பொது
இத்தலியின் நாணய வகைகள் : செண்டிமி என்றும் லைர் என்றும் வழங்கப்படுகின்றன. நூறு செண் டிமி கொண்டது ஒரு லைர். 10,20,50,100 லைர்கள் மதிப்புடைய தங்க நாணயங்களும், 5,10,20 லைர்கள் 20,50 செண்டிமி மதிப்புடைய வெள்ளி நாணயங் களும் வழக்கில் இருக்கின்றன. ஒரு லைரின் மதிப்பு ஏறக்குறைய அரை ரூபாய். இஃது, அவ்வப் பொழுதுள்ள உலகப் பொருளாதார நிலைக்குத் தகுந்தமாதிரி ஏறவும் இறங்கவும் செய்யும்.
இத்தலியின் தேசீயக்கொடி : பச்சை, வெண்மை, சிவப்பு, ஆகிய மூன்று வர்ணங்களையும் உடையது. வெண்மையில் கோடரியும் கம்புகள் அடங்கிய கட்டும் இருக்கும்.
SIGNOR : சென்யோர் (அல்லது செஞ்ஞோர்) என்று உச்சரிக்கப்படவேண்டிய இம்மொழிக்கு ஸ்ரீமான் அல்லது ஐயா என்பது பொருள். சென்யோரா என்பது பெண்பால்.
கருத்துகள்
கருத்துரையிடுக