இரண்டு நண்பர்கள்
நாடகங்கள்
Backபம்மல் சம்பந்த முதலியார் எழுதிய
இரண்டு நண்பர்கள் (நாடகம்)
-
Source:
"இரண்டு நண்பர்கள்."
இந்த நவீன நாடகம்
ப. சம்பந்த முதலியார் பி.ஏ.,பி.எல்.,
அவர்களால் இயற்றப்பட்டது.
சென்னை: மினெர்வா அச்சியந்திரசாலையிற்
பதிப்பிக்கப்பட்டது.
All rights reserved.} 1906. {விலை அணா 12.
Printed By
Thompson And Co., At The "Minerva" Press,
33, Broadway, Madras.
----------------
உ
சிவமயம்.
-------------------------
Inscribed
To the Beloved Memory Of
MY PARENTS
To whom I owe all the little good that is in me and mine.
P.S.
-------------------------
PREFACE.
-------------
An English preface to a Tamil drama though rather incongruous has become herein a necessity, for more reasons than one. The more than favourable opinion with which my previously published Tamil dramas have been received both by the play-going critics and the Tamil-reading public, has induced me to think that there is a real demand for other compositions of a similar nature from my humble pen. To prevent any misapprehension, I must state here that the plot of this drama is drawn from my own imagination. This drama was written in 1896, and was staged successfully a number of times, by the Suguna Vilasa SAbha of Madras. I venture to think that in this drama I have done something more than mere character delineation.
A common mistake made by Societies, Amateur and professional, in staging my previously published drama, The Two Sisters, necessitates my giving publicity to the following opinion of mine. I do not think it essential in staging the drama that the whole of it should be put on the stage. Portions here and there, can and might be conveniently cut down, so as to reduce the size of the drama and finish the performance thereof in four hours. Things which are essential to a drama in- trinsically when studied in our library, are not and need not be essential to a performance of the same on the stage. As to what portions are essential for a performance of the drama I would leave the matter entirely in the hands of the Stage Manager and the leading actors.
The Author.
-----------------------------------------------------------
இரண்டு நண்பர்கள்.
இந்நாடகத்தில் வருபவர்கள்.
சுந்தராதித்யன் . . . . . .தஞ்சை அரசன்.
ஜெயதேவன் . . . . . . தஞ்சை அரசைக்கோரும் சுந்தராதித்யன்தாயாதி.
ஸ்வேதகேது . . . . . . பாண்டிய மன்னன்.
தேவரதன் . . . . . . . பதினாயிரவர் எனும் சோழசைன்ய சேனாபதி.
சூரசேனன் . . . . . . . . தஞ்சை அரண்மனை விதூஷகன் வேடம்பூண்ட
வீராந்தன் என்போன்.
நித்யானந்தன் . . . . . .சுந்தராதித்தனை விட்டுப்பிரியா வேலையாள்.
குருநாதன் . . . . . . பைத்தியம் பிடித்த ஓர் ஜோசியன்.
ஜீமுதவாஹனன். . . . . காட்டுமிருகங்களைப் பழக்கும் சூரன்.
சத்தியவதி. . . . . . . . . சுகுமாரன் தங்கை.
மனோரமா. . . . . . . . . ஸ்வேதகேதுவின் பெண்.
கமலினி. . . . . . . . . . .சத்திவதியின் தோழி
கமலினி. . . . . . . . . . மனோரமாவின் தோழி.
மந்திரிகள், சோழ சேர பாண்டிய சைனியங்கள், சேவகர்கள், வேலையாட்கள்,
ஒரு பிச்சைக்காரன், தோழிகள், ரணவீரர்கள்.
கதா நிகழ்ச்சி.---- தஞ்சைநாட்டிலும் மதுரை நாட்டிலும்.
முதல் காட்சி.
இடம்-காவிரிக்கரை யோரமுள்ள நந்தவனத்தில் ஓர் வசந்த மண்டபம்.
காலம்-இரவு.
சுந்தராதித்யன் மேல்மாடியில் உலாவிக்கொண்டிருக்கிறான்.
நித்யாநந்தன் ஒரு புறமாக உறங்கிக்கொண்டிருக்கிறான்.
சு. எனக்கென்ன குறை? உலகில் மாந்தர் உவப்பது புகழும்
செல்வமுமாயின் குன்றாப் புகழும் குறைபடாச் செல்வமும் பெற்ற
எனக்கென்ன குறையிருக்கப்போகிறது? அயல்நாட் டரசரெல்லாம்
அரியினைக்கண்ட அத்தியைப்போல் அடங்க அளவிலா
வீரத்தைப்பெற்றேன்! புவியில் ஆன்றோரும் பொறாமை
கொள்ளக் குற்றமிலாக் கீர்த்தியைப்பெற்றேன்! சிறுவயதில்
எனது கோபத்தையும் பிடிவாதத்தையும் கண்டு அஞ்சி வருந்தின
என் பிரஜைகள் அத்தீயகுணங்களெல்லாம் என்னை
விட்டு அறவேநீங்க இப்பொழுது என்மீது அளவிலா அன்பு
பாராட்டி வருகின்றனர். இச்சன்மார்க்க வழியில் என்னை
நிலைபெறச்செய்து அப்போதைக்கப்போது அஞ்சாது எனக்கு
புத்திபுகட்டும் வல்லமை வாய்ந்த என்னாருயிர் நண்பனானகுமாரனும்
என்னைவிட் டிணைபிரியாதிருக்கிறான். இன் எனக்கென்ன
குறை? ஆசைக்கோ ரளவில்லாவிடினும் அகிலத்தில்
மாந்தர் பெறக்கூடிய எதை விரும்பினும் அதைச்சடுதியில்
பெறத்தளரா ஊக்கமும் எதனாலும் தடைபடா மனோதிடமும்
பெற்றிருக்கின்றேன். புவியிற் கிடைத்தற்கரிய இவைகளையெல்லாம்
பெற்றும் மனதில் இன்னும் குறையுடையனாயின் என்னிலும்
பெருமூடனிலன்! ஆயினும், இந்த உன்னத ஸ்திதியை
நான் அடைந்தும், எனக்கு மனோவருத்த மென்பதில்லாவிடினும்,
மனதில் பூரணமான திருப்தியில்லாதிருக்கின்றது யாது
காரணம்பற்றி? நான் அடைந்த பெரும்பேற்றுக் காதி
காரணமாயிருந்த என்ன ஈன்றோர் இக்காலத்தில் இம்மேன்மையுடன்
நானிருப்பதைக்கண்டு மகிழ்வதற்கில்லையே யென்று
வருந்துகின்றேனோ? அங்ஙனமிராது, என் தாய்தந்தையர்
உலகோர்க்கெல்லாம் அருவாய போதிலும், உருவாய்
எனக்கென் னுள்ளத்தி லிருக்கின்றார்கள். அவர்கள் கண்கள்
காணாததென்னை?-வேறு என்ன காரணமிருக்கப்போகின்றது?
- சீ! நாம் எவ்வளவு கற்றும் கற்றது கணைக்காலாழம். கற்க
நின்றது கடலாழமாகும்! மற்ற மனிதருடைய மன நிலைமையை
அறைநொடியி லறியும்படியான நான், என் மனோஸ்திதியை
அறிய சாத்தியமில்லாதிருக்கின்றேன்! இவ்வளவே மனிதனுடைய
சக்தி!-வேறு ஏதாவதொருவிஷயத்தைப்பற்றி யோசிப்போம்.
இவ்விடத்திற்றோன்றும் காட்சி என்ன அழகாயிருக்கின்றது?
நிசப்தமான இந்நிசியில் நிலவு நீரோடையி னோரத்தில் உறங்குவது
மனதிற்கு என்ன ஆரோக்கியத்தையுண்டுபண்ணுகின்றது!
சந்திரிகையின் பளபளப்பைப்பெற்ற ஜலமானது சிறு கற்களிற்
படிந்து செல்வதினாலுண்டாம் சலசலப்பு நம்மைத் தாலாட்டுதல்
போலிருக்கின்றது. தென்றலில் அசைந்தாடும் தென்னை
மரங்கள் இக்காட்சியை வியந்து ஒன்றோடொன்று
இரகசியமாய்ப் பேசிக்கொள்கின்றனபோற் றோன்றுகின்றன!
இக்காட்சியைக்காணும்பொழுது மனதிற்கு என்ன மட்டற்ற
மகிழ்ச்சியைத்தருகிறது! இதைக்கண்டுநம்முடன் மகிழக்குமாரன்
இல்லாதிருக்கின்றானே இப்பொழுது! சத்தியவதியாவ-
திருப்பாளாயின், மந்தமாருதம்வீசும் இந்த நந்தவனத்தைச்சுற்றிச்
சுகமாய்க் காலங்கழிக்கலாம். ஆ! சத்தியவதி விஷயத்தைக்
குறித்து ஓர் தீர்மானத்திற்குவர எண்ணி இங்கு வந்தவன்
வேறு என்னென்ன யோசித்துக்கொண்டிருந்துவிட்டேன்
இதுவரையில்! ஆம், குமாரனிடம் இன்றைய தினத்திற்குள்
சத்தியவதியைக் குறித்து என் தீர்மானத்தைக் கூற இசைந்தபடி
நான் நிறைவேற்றவேண்டும்; சத்தியவதியை நான் சீக்கிரம்
விவாகஞ்செய்து கொள்வதே முறைமை. அவள் என்மீது
மிகுந்த காதல் கொண்டிருக்கின்றாள் என்பதற்குச் சந்தேகமில்லை,
நற்குணமுடையவள், நற்செய்கையுடையவள், நன்னடக்கை-
யுடையவள், சுய நன்மையை நாடாது எப்பொழுதும்
எக்காலத்திலும் எவ்விஷயத்திலும் எனது நன்மையையே
நாடும்படியான இம்மாது சிரோன்மணியையொத்த வேறு
ஸ்திரீஜாதியை நான் இவ்வுலகிற் காண்பது அசாத்தியம்.
நானும்--அவள்மீது-காதல் கொண்டிருக்கிறேன்--என்பதற்குத்
தடையில்லை. அவளைப் பார்க்கும்பொழுதும், அவளுடைய
நற்குண நற்செய்கைகளைக் குறித்து நான் கருதும்பொழுதும்
எனக்கு மிகுந்த சந்தோஷமுண்டாகின்றது. இதுதான்
காதலாயிருக்கவேண்டும். அன்றியும் நான் சத்தியவதியை
விவாகஞ்செய்துகொண்டால் குமாரனுக்கு மிகவும்
திர்ப்தியாயிருக்குமென்பதற்குச் சந்தேகமில்லை. இது எமது
இணைபிரியா நட்பிற்குப்பூட்டியதோர் தளை போலாகும்—
ஆயினும் என்னிடமே நான் உண்மையை ஒளியாதிருக்க வேண்டின்
நான் இப்படிப்பட்ட ஸ்திரீதான் நமக்குப் பெண்டாகத்தக்கவள்
என்று தீர்மானித்து வைத்திருந்ததற்கு சத்தியவதி பொருந்தி-
யிருக்கவில்லை யென்று நான் ஒப்புக் கொள்ளவேண்டியதுதான்.
நாம் விரும்பும்படியான எல்லா குணங்களும் ஒருங்குசேர்ந்து
ஒரு பெண்வடிவாய் நமக்குக் கிட்டுவது அசாத்தியத்திலும் அசாத்தியம்.
நாம் இதுவரையிற் கண்ட பெண்களுக்குள் சத்தியவதியே
சற்றேறக்குறைய அந்நிலைக்கு வருகின்றாள். சீ! அதிக ஆசை
அதிக நஷ்டம். நமக்குக் கிடைத்த பொருளைக்கொண்டு
நாம் சுகமடைய வேண்டுமேயொழிய கிட்டாத பொருளை
நினைத்து வருந்தியாவதென்? எல்லாவற்றிற்கும் மனதே
காரணம். அதைச் சரிப்படுத்தினால் ஒன்றுமில்லாதவனும்
எல்லாம் பெற்றவன் போல் சுகமடையலாம், இல்லாவிடின்
எல்லாமிருந்தும் ஒன்றுமில்லான் போல் வருத்தமடைய வேண்டியதே.
சீ! நான் இவ்வாறு அலமரல் நியாயமன்று. சத்தியவதியை
சீக்கிரத்தில் விவாகஞ் செய்துகொள்ளத் தீர்மானம் செய்ய
வேண்டியதுதான். அவளோ நான் தன்மீது காதல்கொண்டிருப்பதாக
உண்மையாக எண்ணியிருக்கின்றனள். நான் இப்பொழுது
வேண்டாமென்று வெறுப்பேனாயின் தன்னுயிரை வெறுப்பினும்
வெறுப்பாள், குமாரனுக்கும் மிகுந்த துக்கத்தை விளைப்பேன்.
நம்முடைய நன்மையையே என்றும் நாடும் இவ்விருவர்களையும்
நாம் புண்படுத்துவது தருமமன்று. பிறருடைய நன்மையையே நாடி
எக்காலமும் அவர்களுடைய சுகத்தினாலேயே சுகமடைய
வேண்டுமென்கின்ற கோட்பாடுடைய நான் இவ்விருவருக்கும்
கிஞ்சித்தேனும் துக்கம் விளைப்பது நியாயமன்று. சீ!
நான் சத்தியவதியின்மீது காதல்கொண்டிருக்கின்றேன்;
அவளையே நான் சீக்கிரம் விவாகஞ் செய்துகொள்ளல்வேண்டும்.
நான் என்ன யோசித்துக்கொண்டிருந்தேன் இதுவரையில்!
அவளைப்போன்ற நற்குணமும் ரூபாலாவண்யமுமுடைய
பெண்ணை நான் வேறெங்கு தேடினும்காண்கிலேன்! அவளை
மணப்பேனாயின் இப்பொழுது இன்னதென்று தோற்றாது என்
மனதிலிருக்கும்படியான குறையும் நீங்கிவிடும்.-- ஆ! என்ன
கௌளியான திப்பொழுது தென்றிசையிற் கூறுகின்றது? சீ!
இச்சகுனங்களிலெல்லா மென்னவிருக்கின்றது! இவைகளோ என்
மன உறுதியையும் தீர்மானத்தையும் கலக்கவல்லன? நான்
சத்தியவதியை மணஞ்செய்துகொள்வேனென்றால் மணஞ்செய்து
கொள்வேன்! நான் உயிருடனிருக்கவேண்டும் அது வொன்றே
மற்ற விஷயங்களைப்பற்றி நான் யோசிக்கவேண்டியதில்லை.
சரி! வேறு எதைப்பற்றியாவது யோசிப்போம்.-நித்தியானந்தா!
நித்தியாநந்தன் வருகிறான்.
நி. இதோ கொண்டுவந்தேன்.
(ஹூக்காவைக் கொண்டுவந்து வைக்கிறான். )
சு. என்ன ஆச்சரியம்! நித்தியானந்தா! நான் உன்னை எப்பொழுது
அழைத்தபோதிலும் நான் வாயாற் கூறுமுன் எனக்கு
வேண்டிய பொருளைத் தருகின்றனை. என் மனதிலிருப்பது
உனக்கு எப்படி தெரிகின்றது?
நி. எப்படியோ! [முன்போல் நித்திரை செய்கிறான்.]
சு. நித்திரை போய்விட்டான்!-ஹா! இவ்வுலகில் நான் அநேக
வித ஜன்மங்களைப் பார்த்திருக்கின்றேன். ஆயினும் நித்தியா
நந்தனைப்போல் எங்கும் கண்டதில்லை. எந்நேரமும் நித்திரை
செய்கின்றான்! எந்தநிமிஷத்திற்கு வேண்டுமோ அந்த நிமிஷம்
நித்திரை கொள்ளவும் விள்ளவும் சக்தியைப் பெற்ற நானும்
இவ்வாறு ஓயாது தூங்கல் அசாத்தியம்! இவனுக்கு எங்கிருந்து
தான் வருகின்றதோ? இப்படிப்பட்டவனை சுத்த வீரனென்றால்
நேரில் கண்ட என்னை யன்றி வேறொருவரும் நம்பார்கள்.
இவ்வுலகில் இவனொருவன் மாத்திரம் நான் கூறுமுன் என் னுட்
கருத்தை யறிந்துகொள்ளுகின்றான். குமாரனுக்கும் அத்
துஷ்டன் ஜெயதேவனுக்கும் அசாத்தியமான காரியம் இவ
னுக்கு எளிதாயிருக்கின்றது. நாந் பிறந்தது முதல் என்னை
விட்டுப் பிரியாதிருந்ததினால் இவனுக்கு இச்சக்தியுண்டாயதோ
அல்லது என்னைத்தன்னுயிரினும் அதிகமாகப் பாவித்துவரு
வதினால் உண்டாயதோ அறிகிலேன். மனிதனுடைய புத்திக்குக்
காரண மெட்டாத காரியங்கள் இவ்வுலகில் அநந்தமிருக்கின்றன,
அவைகளிலிதுவொன்றாகும்!--
சுகுமாரன் பின்புறத்திலிருந்து வருகிறான்.
சுகு. சுந்தரா!
சு. குமாரா!
சுகு. என்னயோசித்துக் கொண்டிருக்கின்றாய்?
சு. ஒன்றும் விசேஷமில்லை.
[ஹுக்கா பிடிக்கிறான்.]
சுகு. இந்த இழவை இன்னும் விடமாட்டாயா?
சு. அது உன்னை என்ன செய்கின்றது?
சுகு. எனக்கதைப்பார்ப்பதற்கும் இஷ்டமில்லை; வடக்கே
சென்றிருந்ததற்கு சகலகலைகளுடன் இத்தீய வழக்க
மொன்றையும் கற்றுக்கொண்டு வந்தாயே! எனக்கிஷ்டமில்லை;
அதைவிட உனக்கு வேறு காரணம் வேண்டுமோ இதைவிட?
சு. இந்தக்ஷணம் விட்டேன்! குமாரா இனி சாமளவும் இதைத்
தீண்டுவதில்லை!-- நித்தியானந்தா!
[எழுந்திருந்து மெள்ள ஹுக்காவை எடுத்துக்கொண்டு போகிறான்]
சு. குமாரா! பார்த்தனையா! இவன் நான் கட்டளை யிடுமுன் என்
கருத்தை யறிந்து அந்தப்படி நடந்துவிடுகின்றான்! இதற்குக்
காரணம் கூறமாட்டுவாயா நீ?
சுகு. அதைப்பற்றிப் பன்முறை யோசித்து பயனற்ற வேலையென்று
விடுத்தனன்.நம் சிற்றறவிற்கு எட்டாச் செயல்கள் இவ்
வுலகில் எத்தனையோ கோடியிருக்கின்றன.
சு. சரிதான்,தோழா,உன்னிடம் சத்தியவதியைக்குறித்து முடி
வான வார்த்தை இன்று கூறுவதாக ஏற்றுக்கொண்டேனல்லவா?
சுகு. ஆம்.
சு. குமாரா,என்னைப்பார்! ஏன் முகத்தைத் திருப்பிக் கொள்ளுகின்றாய்?
சத்தியவதியை நான் விவாகம் புரியல் உனக்கிஷ்டந்தானோ?
சுகு. நல்ல கேள்வி.-
சு. நான் வேண்டாமென்றால் உனக்கு வருத்தமுண்டாமோ?
சுகு. சுந்தரா!இதென்ன இவ்வண்ணம் கேட்கிறனை?உனக்குச்
சம்மதியாயின் எனக்கும் சம்மதித்தான்.இல்லாவிடின் எனக்குமில்லை.
சு. நல்ல உத்திரம்!-குமாரா! சத்தியவதியை சீக்கிரம் விவாகஞ்
செய்து கொள்ள வேண்டுமெனத் தீர்மானித்துவிட்டேன்.
சுகு. சுந்தரா,உனக்கு முன்பே யொன்று கூறவேன்டு மென்றிருந்தேன்.
நீ என் பொருட்டுக் குமாரா சத்தியவதியை மணம்புரிய
வேண்டியதில்லை. உண்மையில் உனக்கவள்மீது விருப்ப
மிருக்குமாயின் விவாகஞ் செய்துகொள்;இல்லாவிடின் வேண்டாம்.
சாமளவும் சுகதுக்க மொன்றாய் அனுபவிக்கப்போகின்றவர்கள்
தம்பதிகளே.ஆகையால் அவர்கள் மனமொத்திருந்தாலொழிய
விவாகம் புரியல் நியாயமுமன்று தர்மமுமன்று. உனக்கு
மனப்பூர்வமாக இக்ஷ்டமில்லாவிடின் கூறிவிடு.அதனால்
எனக்குன்மீது சிறிதும் வருத்தமிராது.
சு. குமாரா,அப்படி யொன்று மில்லை.அப்படி ஏதாவதிருந்தால்
அதை உன்னிடம் ஒளிப்பேனோ?அதைப்பற்றி யோசிப்பதற்கே
நான் தனித்திங்குவந்தேன்.நான் சத்தியவதியின்மீது காதல் கொண்
டிருக்கின்றேன், சத்தியவதியும் என்மீது காதல்கொண்
டிருக்கிறாளென்பது நீ அறியாத விஷய மன்று.உனக்கு
இஷ்டமாயின் சீக்கிரத்தில் விவாகத்திற்கு ஏற்பாடு செய்யலாம்.
சுகு. [சிரித்துக்கொண்டு] புத்திசாலி!- எனக்கிஷ்டமில்லை! நன்றாகக்
கேட்டாய்! சுந்தரா, நீயாகத் தீர்மானிக்குமளவும் நான் சத்
தியவதியைக்குறித்துப் புகழ்ந்துரைத்தல் நியாயமல்லவென்று
பேசாதிருந்தேன். தோழா! அவளையொத்த நற்குணமுடைய
பெண்ணை இவ்வுலகில் நீ வேறெங்குங் காணமாட்டாய். பே
தையாயினும் பிறருடைய நன்மையே பெரிதெனக் கருதும்
பெறற்கரிய குணம் அவளிடம் குடிகொண்டிருக்கின்றது; அவ
ளது களங்கமற்ற மனதிற்கு ஒருகாலும் வருத்தமென்பது
சிறிதுமின்றி நீ சுகமாய் எந்நாளும் வாழ்வாயாக!
சு. அப்படியே யிருக்கவேண்டுமென்று நானும் கோருகின்றேன்-
குமாரா! அதோ எரிநட்சத்திரத்தைப்பார்!
சுகு. ஏதோ? நான் பார்ப்பதன் முன் மறைந்து விட்டது சுந்தரா,
இன்றிரவு என்ன ரமணீயமா யிருக்கின்றது கண்டனையா?
ஐயோ, இன்று பூரணசந்திரனாயிருந்தால் இன்னும் எவ்வள
வழகாயிருக்கும்?
சு. எனக்கென்னவோ இதுவே மிகவும் அழகாய்த் தோற்றுகின்
றது. பாதிமதியைக் காண்டலினால் எனக்குண்டாகும் சந்தோ
ஷம் முழுமதியைக் காணுமிடத்து எனக்கில்லை. என்னகாரணம்
பற்றி என்று என்னால் கூறமுடியாது.
சுகு. சரி! இதற்குக் காரணமும் வேண்டுமோ? உலகில் ஒருவன்
விருப்பு மற்றொருவனுக்கு வெறுப்பாயிருக்கலாம்; இது சகஜம்.
உலகில் எல்லோருக்கும் விருப்பும் வெறுப்புமொன்றாயின், உலக
மே யிராது!
சு. குமாரா! இந்நிசியில் நிலாக்காய எங்கணும் நிசப்தமாயிருப்ப
தற்கு சற்று தூரத்திலிருந்து யாராவது நல்ல திவ்வியமான
சாரீரத்துடன் பாடினால் அதைக்கேட்க என்ன ஆனந்தமாயிருக்
கும்!
[சற்று தூரத்திலிருந்து பாடப்பட்ட மதுரமான பாட்டைக் கேட்கிறார்கள்.]
குமாரா! சத்தியவதி!
சுகு. ஆம்!
சு. உற்றுக்கேள்! என்ன ரமணீயமாய்ப் பாடுகின்றாள்! நான் விரும்
பியதைக் கேட்டுப் பாடுகின்றதுபோ லல்லவோவிருக்கின்றது!
என்னபாடுகின்றாள்?
சுகு. தன் காதலனைப்பிரிந்த ஓர் நாயகி அவன் வாராமையைக்கருதி
வருந்திப் பாடும்படியான பாடல்போலிருக்கின்றது.
சு. ஆம்--தோழா! சத்தியவதியின் மெல்லிய விரலினால் தடவப்
பெற்ற வீணை நரம்புகளின் ஒலியும் அவளது கந்தரத்தினின்றெ
ழும் மிருதுவான சங்கீதமும் எவ்வளவு அழகாய் கலந்து நிற்
கின்றன கேட்டனையா? மனத்துக்கினிய இத்தகைய சங்கீதத்
தைக்கேட்டு மனமுருகா மனிதனுமுளனோ இவ்வுலகில்? அப்
படிப்பட்டவ னொருவ னிருப்பானாயின் அவனை மனிதருயிரை
யுண்ணவந்த மறலியெனக் கருதவேண்டும்.--வா, நாம் சத்திய
வதி யிருக்குமிடம் போவோம்.
[இருவரும் மாடியினின்றும் வருகிறார்கள்.]
சத்தியவதி ஓர் கொடிவீட்டினின்றும் பாட்டை நிறுத்திவிட்டு
வெளியில் வருகிறாள்.
சுகு. சத்தியவதி! நீ இன்று பிறந்ததின மல்லவா?
ச. ஆம், அண்ணா.
சுகு. ஆகவே உனக்குப் பரிசளிக்க வேண்டு மென்று சிறந்த
பொருளொன்று கொண்டுவந்திருக்கிறேன். என்ன சொல்லுகின்றாய்?
ச. மிகவும் சந்தோஷம்.
சுகு. அதென்ன? இன்னதென் றறிவதன்முன்னர் சந்தோஷ மெனக்
கூறிவிட்டாயே?
ச. நீர் எனக்குக் கொடுக்கும் பொருள் சந்தோஷத்தைத்
தருவதாயன்றி இருக்குமா?
சுகு. ஆனால் பெற்றுக்கொள்.
[சுந்தராதித்யன் கரத்தை அவள் கரத்தின்பேரில் வைக்க,
அவன் முழந்தாளிட்டு அதை முத்தமிடுகின்றான்.]
சந்தோஷந்தானா?
ச. அவருக்கு--சந்தோஷமானால்--எனக்கும் மிகவும் சந்தோஷந்தான்.
சு. சத்தியவதி! என்னைக் கேட்கவும் வேண்டுமோ? நான் உனது
காதலைப் பெறத்தக்கவனல்லேன். ஆயினும் தெய்வாதீனத்தாற்
பெற்றேன்! நான் பெற்றபாக்கியமே பாக்கியம்!
ச. நான் பெற்றதே பெரும்பாக்கியம்.
சுகு. அதெப்படி யாயினுமாகுக, நான் பெற்றபாக்கியம் நீங்களிருவரும்
பெறவில்லை யென்று தோற்றுகின்ற தெனக்கு!
சு. அப்படியே ஒவ்வொருவரும் தான் பெற்றதே பெரும்பாக்கியமெனக்கருதுக!
சுகு. சுந்தரா! சத்தியவதி! - எனக்கிப்பொழுதிருக்கு மகிழ்ச்சி
எப்பொழுதுமிருக்குமாயின் நான் புவியிற் பிறந்த பயனைப்பெற்றவனாவேன்;
இன்னும் என்மனதில் ஒரு கோரிக்கை தான் இருக்கின்றது.
நீங்களிருவரும் நீடுழிகாலம் சுகமாய் ஒரு குறையுமின்றி
வாழ்வீர்களாக!
சு. என்னுயிரிருக்கு மளவும் சந்தேக மென்ன வதற்கு?
நித்யானந்தன் கீழே இறங்கி வருகிறான்.
சு. நித்யானந்தா, என்ன விசேஷம்?
நி. பதினைந்து நாழிகை - நீராழிமண்டபம் - ஓடத்திற் போகவேண்டும்.
சு. ஓகோ! ஞாபக மிருக்கின்றது. நீ தவறுவாயோ என்று பார்த்தேன்;
காலம் தவறினும் தவறும், நீ ஏது தவறுவது, குமாரா
நாமெல்லோரும் அங்குபோவோம் வருகின்றாயா?
சுகு. நீங்களிருவரும் முன்பு அங்கு செல்லுங்கள், நான் சற்று
பொறுத்து வருகின்றேன்.
[நித்யானந்தன், சுந்தராதித்யன், சத்யவதி போகிறார்கள்.]
சுகு. இன்றே என்மனம் பூரண உவகை யேற்றது! சத்தியவதிக்கு
இனி யென்னகுறை? அவளது ஒப்புயர்வற்ற சத்குணத்திற்கேற்ற
கணவன் என்னுயிர் நண்பனே ஆயது என்பாக்கிய வசந்தான்!
சுந்தரன் இனி அவளது நன்மையையே நாடி தன் கண்ணின்
கருமணி யெனப்பாவித்து வருவான் என்பதற்க்குக்கிஞ்சித்தேனும்
தடையில்லை. சிலகாலத்திற்கு முன் அவனிடமிருந்த
கோபமும் பிடிவாதமும் ஏறக்குறைய அறவே நீங்கியது
சத்தியவதியின் நற்றவத்தின் பயனே யெனக்கருதவேண்டும்.
எல்லாம் என் மனப்படி சுகமாய் முடிந்தது.
ஜெயதேவன் வருகின்றான்.
சுகு. ஜெயதேவா?
ஜெ: ஆம். அரசே ஏது தாமும் என்னைப்போல் நித்திரையை நீத்து
நிலவை வியக்க இங்கு வந்திருக்கின்றாற் போல தோற்றுகின்றது.
இங்கிருந்து தோற்றும்படியான காட்சி எவ்வளவு அழகாயிருக்கின்றது
கண்டீரோ?
சுகு. ஆம், என் மனமகிழ்ச்சிக்கு ஒத்ததாகவே யிருக்கின்றது. ஜெயதேவா!
சுந்தராதித்யனுக்கும் சத்தியவதிக்கும் சீக்கிரம் விவாகம் நடந்தேறும்.
ஜெ. மிகவும் சந்தோஷம். எனக்கு முன்பே இப்படித்தான் நடக்குமென்று
தெரியுமே!
சுகு. எப்படி தெரியும்?
ஜெ. இதென்ன கேள்வி! இதுயாருக்குத்தான் தெரியாது? நாட்டிலுள்ள
பிரஜைகளெல்லாம் இப்படித்தான் நடக்கவேண்டு மென்று
திரைராஜசிம்மர் உஜ்ஜினியிலிருந்து திரும்பி வந்தது
முதல் பேசிக்கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் எண்ணப்படி
முடிந்தது எனக்கு மிகவும் சந்தோஷம். எப்பொழுது விவாக
முகூர்த்தம்?
சுகு. இன்னும் தினம் குறிக்கவில்லை. நாளையதினந்தான் நமது
அரண்மனைப் புரோகிதரை வரவழைத்து சுபதினம் குறிக்கச்
சொல்ல வேண்டும். -
நித்யாநந்தன் வருகிறான்.
நி. சுந்தராதித்யர் அழைத்துவரச் சொன்னார்.
சுகு. இதோ வருகின்றேன் போ.
நி. உடனே அழைத்து வரச்சொன்னார்.
சுகு. இதோ வந்துவிட்டேன்.
நி. உடனே வரச் சொன்னார்.
சுகு. சற்று பொறு இதோ -
[நித்யாநந்தன் அவனை அப்படியே தூக்கிகொள்ளப் போகின்றான்.]
இல்லை! இல்லை! இதோ வந்துவிட்டேன். ஜெயதேவா,
இன்னொருவேளை உன்னுடன் பேசுகின்றேன். இவன் விடமாட்டான்
என்னை! [நித்யாநந்தன் போகின்றான்.]
ஜெ. வயிறு பற்றியெரியும்பொழுது வேடிக்கை யொன்றா? உம் - சீ!
காரியங்களெல்லாம் நாம் எண்ணியதற்கு விரைவாக நடந்தேறி
வருகின்றாற்போலிருக்கின்றது. இனி நாம் உறங்கலாகாது. சீ!
நாம் இந்த ஐந்துவருடங்களாக எண்ணிய எண்ணங்களெல்லாம்
அடியோடு வியர்த்தமாகும்போலிருக்கின்றதே! நான்
எவ்வளவோ முயன்றும் முன்பே இவர்கள் ஒற்றுமையைப் பிரிப்பது
அசாத்தியமாயிருந்தது. இப்போழுதிவர்களுக்கு இந்த
பந்துத்வ மொன்று முண்டாய்விட்டால் இவர்களைப் பிரிப்பதெவன்?
சுந்தராதித்யா! சுந்தராதித்யா! என் பெரு முயற்சிகளை
எல்லாம் வியர்த்தமாக்கி, என் கோரிக்கைகளையெல்லாம்
பாழாக்கி, என் பெருமையையெல்லாம் போக்கி, என்னாவியையழிக்க,
எனக்கென்று இப்புவியில் எங்கிருந்து தோன்றினையோ?
நான் என்ன பிரயத்தனஞ் செய்தபோதிலும் குறுக்காக
வந்தழிக்கின்றாயே? நான் சுகுமாரனை என் கைவசப்படுத்தி,
சத்தியவதியை மணந்து என் மூதாதையர் ஆண்டுவந்த இவ்வரசைக்
கைப்பற்றவேண்டுமென் றிருந்தேனே என் பேரறிவைக்
கொண்டு! சுகுமாரனிடம் என்ஜபம் செல்லாவண்ணம் செய்துவிட்டாய்.
என்னிடம் மூன்று வருடமாக எவ்வளவோ அன்யோன்யமாய்
இருந்த அவன் நீ உஜ்ஜியினிலிருந்து திரும்பிவந்தவுடன்
என்னிடமிருந்த அனுராகமெல்லாம் போய் உன்மீது
பதின்மடங்கு அதிகமாக அனுராகங்கொண்டு இணைபிரியாதவனானான்.
இது உன் செயலென்பதற்குச் சந்தேகமென்னை?
சுகுமாரன் இன்னும் என்னை அத்யந்த நண்பனென்றே பாவிக்கின்றான்!
இந்த நட்பென்னத்திற்கெனக்கு? எனக்குப் பிரயோஜனப்படாத
நட்பு ஒரு நட்பா? போதாக்குறைக்கு சத்தியவதியும்
உன்மீது காதல் கொண்டுவிட்டாளாம். நீ அவளை விவாகம்
செய்துகொள்ளப்போகின்றாய்! தீர்ந்தது! நான் என்ன செய்வது?
வெறுங்கை வீணனாய் வெயிலில் நின்று உன் சுகத்தைக்
கண்டு கண்குளிர்ந்திருப்பதோ? அக்கதிக்குத்தான் வந்துவிட்டேன்.
சீ! என் ஒப்புயர்வில்லா புத்தியும் யுக்தியும் எதற்காயது?
தெய்வத்திற்குத் தர்மமென்பதில்லை. நான் சுந்தராதித்யனை
விட எதில் கீழ்மைப்பட்டவனாய் விட்டேன்? அவனுக்கிருக்கும்
புத்தி எனக்கில்லையோ? அவனைவிட நான் தாளாண்மையிலும்
தளரா ஊக்கத்திலும் குன்றிவிட்டேனோ? அவனிடத்திருக்கும்
நற்குணங்களெல்லாம் மென்னிடம்மிருக்கின்றன; ஆயினும்
பிறந்ததுமுதல் அவன் வரவர உன்னதபதவியை யடைந்து
வர நான் வரவர க்ஷிணதிசையை யடைவானேன்? இதென்ன
நியாயம்? இஃதென்ன தர்மம்? அவனும் ஆடவன் தான், நானும்
ஆடவன் தான்! என்னுயிரும் அவனதுயிரும் ஒன்றே! அப்படிக்கிருக்க
புவியிற் பிறக்கும்பொழுதே எல்லோருடைய மனதையும்
கவரும்படியாகச் சுந்தரனென்னும் பெயருக்கொப்பச்
சுந்தரவடிவுடன் உதித்தான். என்னையோ கண்டவர் நகைக்கும்
வண்ணம் விகாரரூபத்துடன் சிருஷ்டித்தது! அந்நாள் முதல்
இந்நாள் வரையில் அவன் எக்காரியம் தொடங்கினும் அவன்
முயற்சியின்றியே அனுகூலப்பட்டுக் கொண்டு வருகின்றது.
எனக்கோ நான் எதை ஆரம்பித்தபோதிலும் இல்லா இடையூறுகளும்
உண்டாகின்றன! நான் வருந்தி யழைத்தும் வாராத
ஸ்ரீதேவி இவனிடம் சென்று தன்னைப் பெற்றுக்கொள்ளும்படித்
தானாகப் பணிகின்றாளே! - இவனை நான் வெல்வதெப்படி? -
வெல்லவேண்டின் கொல்லவேண்டும்! இவனுயிரிருக்குமளவும்
என் காரியம் கொஞ்சமேனும் சித்திக்கப் போகின்றதில்லை.
அதை நான் நன்றாகக் கண்டேன். இந்த யமனை
வெல்வதெப்படி? நேர்வழியில் ஜெயிப்பதென்றாலோ அசாத்தியமான
காரியமாயிருக்கின்றது. இவன் ஒருவனே போதாதென்று
வனைத் தம்முயிர்போற் காக்கப் பதினாயிரவர் ஏற்பட்டிருக்கின்றனர்!
போதாக்குறைக்கு அந்த யமகண்டன் நித்யானந்தன்
இடைவிடாது எங்கு சென்றபோதிலும் கூப்பிடுதூரத்திலிருந்து
பாதுகாத்துவருகின்றான். சூட்சிசெய்து இவனைக்
கொல்லவென்றாலோ அதுவும் அசாத்தியமாயிருக்கின்றது.
நான் சூட்சிசெய்ய ஆரம்பஞ்செய்யு முன்னரே அதைக்கண்டு
கொள்ளுகின்றான்! இவன் மனதை யறிய எனக் காறு
தினம் பிடித்தால் அரைநொடியில் என் மனத்தை யறிந்துகொள்ளுகின்றானே!
இவன் கண்ணெதிரிற் செல்வதென்றாலும்
எனக்குப் பயமாயிருக்கின்றது. இவன் கண்களை நான்
என்னென்றுரைப்பேன்! அவைகளுக்கிருக்கும் சக்தி இன்னதென்று
என்னால் அறியமுடியவில்லை. செவ்வரி படர்ந்து நீண்டு
விசாலமாகிய அக்கண்களைக்கொண்டே இவன் எல்லோரையும்
வென்று வருகின்றான். அவனது நேத்திரங்கள் எனது நேத்திரங்களை
சந்திக்கும்போதெல்லாம் என் உடம்பில் ஓர்வித சிலிர்
சிலிர்ப்புண்டாகின்றது. அவ்வண்ணம் நோக்கும்பொழுதெல்லாம்
என்னுள்ளத்தில் மிகவும் அந்தரங்கமாயிருக்கும் விஷயங்களையெல்லாம்
நன்றாய் ஆராய்ந்தறிவதுபோலல்லவோ இருக்கின்றது.
இப்படி அறிந்துகொள்ளுகின்றானே யென்று என்
கண்களைத் திருப்பிவிடலாமென்றாலோ, நாகமானது
தனக்கிரையாகிய சிறு பட்சியைத் தன் கண்களைக்கொண்டு எப்படி
அசைவற்றிருக்கச் செய்துவிடுகின்றதோ அங்ஙனம் என்னையும்
வைத்த கண் மாறாவண்ணமாய் ஸ்தம்பித்துவிடச்செய்கின்றான்.
அச்சமயத்தில் இவன் கேட்கும் கேள்விகளுக்கு என்னையு மறியாதபடி
உண்மையைக் கூறவேண்டிவருகின்றது! இதென்ன
சக்தி! இதென்ன சக்தி! இச்சக்தியைப்பெற்ற இவனை நான்
எப்படி வெல்லப்போகின்றேன்! வீண் எண்ணம்! வீண் எண்ணம்!
ஐயோ! இவ்வளவு சக்தியைப்பெற்றும் ஐந்து வருடங்களுக்கு
முன்பிவனுக்கிருந்த கோபமும் பிடிவாதமும், இப்பொழுது
அணுவளவேனு மிருக்குமாயின் அரைநொடியில் வெல்லும்
வகையை யறிவேன்! சுகுமாரன் போதனையினால் சூரியன்
முன் பனிபோல் சிலநாளைக்குள் எல்லோரும் ஆச்சரியப்படும்படி
இவனை விட்டு அவைகள் நீங்கவேண்டுமா?- அவனுக்கு
அசாத்தியமென்பதில்லை! ஈசனையே ஏவல் கொள்ளவேண்டினும்
அவனுக்கு அதற்கேற்ற மன உறுதியும் ஊக்கமும் உண்டு. சீ!
இவனது குணத்தை நான் மெச்சவேண்டும்! ஐயோ! இவன்
எனக்கெதிரிடையாக அல்லாது எனக்குதவியாயிருப்பானாயின்
இம்மூவுலகங்களுக்கும் அதிபதியாய் அரை க்ஷணத்திலாய்
விடுவேன்! சுந்தராதித்யா! சுகுமாரனிடம் அந்யோந்யமாயிருப்பதுபோல்
என்னிடம் அந்யோந்யமா யிருக்கலாகாதா? இனத்துடன்
இனஞ் சேரும்! ஆயினும் நான் பிறவியினால் தீயகுணமுள்ளவனாயிற்றே!
நம்மிருவருக்கும் அவ்வளவாகக் குணபேதமில்லை.
உனக்கோ மேலும் மேலும் உலகம் நன்மைபயக்க நீ
அக்குணங்களை யெல்லாம் சத்வழியில் உபயோகித்து நல்லவனானாய்!
நானோ மேலும் மேலும் கெடுதியே என்னை வந்தடைய
என் குணங்களையெல்லாம் தீயவழியில் உபயோகிக்க
வேண்டியவனா யிருக்கின்றேன்! இதுஎன் தவறோ? என்னைப்
படைத்த ஈசன்தவறாகும்! அவன் பாரம்! எனக்கிவ்வளவு சக்தியையும்
புத்தியையும் யுக்தியையும் கொடுத்து மூலையில்
உறங்கிக்கொண்டிரு என்றால் எப்படியிருப்பது? அவைகளுக்கு
ஏதாவது ஒரு உபயோகம் வேண்டுமே! நல்வழியில் உபயோகிக்க
ஈசன் வழி காண்பிக்காவிட்டால் கெட்ட வழியிலாவது
உபயோகிக்கவேண்டி வருகின்றது! என்மீது குற்றமென்ன?-
சரி, இவைகளை யெல்லாம் பற்றி இப்பொழுது யோசித்துப்
பயனென்ன? ஒருகாரியத்தைச் செய்யவேண்டுமென்று
தீர்மானித்த பிறகு பின்வாங்குவதா? நான் என தெண்ணத்தையாவது
முடிக்கவேண்டும், என்னுயிரையாவது முடிக்கவேண்டும்.
இரண்டிலொன்று! எது நிறைவேறினும் எனக்கு
சந்தோஷந்தான். சீ! வருவதுவரட்டும். சுந்தராதித்யனுக்கு
அசாத்திய மென்பதில்லை யெனின் எனக்குமாத்திரம் ஏன்
இருக்கவேண்டும்? ஜெயித்தால் ஜெயம்! மறித்தால் மரணம்!
இப்பொழுது யோசித்தால் எனக்கொருவழியும் புலப்படாது.
நன்றாய் உறங்கிவிட்டு நாளை காலை யெழுந்து யோசிக்க வேண்டும்.
இறக்கத் துணிந்தவன் எதற்கு மஞ்சுவானேன்! -
சுந்தராதித்யா! சுந்தராதித்யா!- [போகிறான்]
இரண்டாம் காட்சி.
இடம்-சுகுமாரன் அரண்மனையில் தர்பார்.
காலம்-காலை.
சுந்தராதித்யனும், சுகுமாரனும் ஒரே சிங்காதனத்தில் வீற்றிருக்க,
மந்திரி ஜயதேவன், முதலியோர் இருபக்கமும் உட்கார்ந்திருக்க
சூரசேனன், தேவரதன், நித்யானந்தன் முதலியோர் சுந்தரன் பக்கலில்
நிற்கிறார்கள்.
சுகு. மந்திரி சேனாபதி முதலிய சபையோர்களே! இன்றைய
தினம் தெய்வகடாட்சத்தால் உங்களது செவியையும் மனதையும்
சந்தோஷிக்கச் செய்யும்படியான ஓர் சுபவிஷயத்தை உமக்குக்
கூறவல்லவனாயிருக்கின்றேன். மண்ணுலகில் குற்றமில்லாக்
கீர்த்தியை நிலை பெறச்செய்து சில காலத்திற்கு முன்
விண்ணுலகிற்கு சென்ற ஆநந்தராஜனுடைய குமாரர், சோழநாட்டின்
புகழ் உலகெலாம் பரவச்செய்தவள்ளல், தஞ்சைமாநகர்க்கரசர்,
சுந்தராதித்ய திரைராஜசிம்மர், ஆகிய இதோ இச்சபை
பெருமையடைய இங்கு என்னருகில் வீற்றிருக்கும் என்னாருயிர்
நண்பர் என் தங்கையாகிய சௌபாக்கியவதி சத்தியவதியின்
மீது காதல் கொண்டுவரிக்க, என் தங்கையை அவருக்கு
விவாகஞ்செய்து கொடுக்க நான் சம்மதித்தேன். நமதரண்மனை
புரோகிதர் குறித்தவண்ணம் இந்த வைகாசிமாதம் இருபதாம்
தேதி ஆதிவாரம் விவாக முகூர்த்தத்தை முடிக்கத்
தீர்மானித்திருக்கின்றது. இது உங்களுக்கெல்லாம் சம்மதிதானா?
எல்லோரும். மிகவும் சந்தோஷம்! மிகவும் சந்தோஷம்! சம்மதிதான்!
சம்மதிதான் !
சுகு. இச்சுபகாரியம் உங்களுக்கும் சம்மதிதான் என்று கேட்க நான்
ஆநந்த பரவசனானேன். மந்திரி! விவாகபத்திரிகை அனுப்ப
வேண்டிய அரசர்க்கெல்லாம் சீக்கிரம் அனுப்பிவிட்டு, நாடெங்கும்
அச்சுபதினத்தை மகோற்சவமாகக் கொண்டாடும்படியாகப்
பறைசாற்றி வைப்பாயாக. இன்னும் இதற்கு வேண்டிய
ஏற்பாடுகளையெல்லாம் செய்வதற்கு உடனே ஆரம்பஞ் செய்வாய்.
ம. மகாராஜா! மிகவும் சந்தோஷத்துடன் ஆரம்பஞ் செய்து விட்டேன்.
இனி இத்தேசத்திற் கென்னகுறை? இது நாங்கள்
செய்த பூர்வ புன்னியவசமேயாம்.
சூ. மகாராஜா! மந்திரி அவர்களுக்கு மாங்கல்ய சூத்திரம் தவறாது
செய்யும் படியாக உத்தரவளிக்கவேண்டியது. ஒரு வேலை
விவாக சம்பிரமத்தில் அதைச்சித்தஞ் செய்ய மறந்து விட்டால்!
[ குருநாதன் வருகிறான்.]
அடடா! வந்தாரா இவர்! சரியான சமயத்திற்குத்தான் வந்தீர்;
வாரு மிப்படி.
கு. மகாராஜாக்கள் அவர்களுடைய சரி - சந்நிதானங்களுக்கு
நமஸ்காரங்கள்
சு. யார் இது? பயித்தியகாரனைப்போல் தோற்றுகின்றான்.
சுகு. ஆம். பயித்தியக்காரந்தான். -
சூ: மகாராஜா, அவ்வளவு எளிதிற் கூறலாகாது, நான்
கூறுகின்றேன். இவர்பெயர் "காஞ்சிபுரம் கனக தப்பட்டை டமார
கிண்ணர வண்ணர, ஆதி சைவ அதி வினோத, அட்டகாச
அதிமோச,இதிகாச புராண சங்கீத - சற்று பொறும் - பீதாம்பர,
அதிமதுர, மாமதுர, கவிராய, பாஷ்ய, ஹரஸ்ய, ஜோஸ்ய, சரி
விடாத குருநாதர்"?
கு. சரி, நம்முடைய பட்டங்களில் ஒன்றைவிட்டு விட்டாய். வயித்திய
குருநாதர் என்று சரி - கூறியிருக்கவேண்டும்.
சூ. இவ்வளவுதானே, ஒன்றுக்கு நான்காய் கூறிவிடுகின்றேன்
வயித்திய, தயித்திய, சயித்திய, பயித்திய குருநாதர் இப்பொழுது
சரிதானா, இன்னும் ஏதாவது விட்டு விட்டேனோ?
கு. சரி, அப்படி விட்டு விட்டதாகத் தோற்றவில்லை. பிறகு ஜோசியம்
பார்த்து தான் சரி - கூறவேண்டும்.
சூ. நிரம்ப சரி. மகாராஜா இவருடைய விர்த்தாந்தம் தமக்குத்
தெரியாதே; சற்றனுக்கிரகிக்க வேண்டும். இவர் ஒரு சங்கீத
வித்வானுடைய குமாரர். முதலில் சந்கீதங்கற்க ஆரம்பித்தார்
பிறகு சங்கீதம் ஒன்று மாத்திரம் போதா தென்று சாஹித்யம்
செய்யவேண்டி கவிராயராக முயன்றார், அதிலும் திர்ப்தியடையாமல்
வயித்திய சாஸ்திரத்தைக் கற்க ஆரம்பித்தார்,
உடனே வயித்தியத்திற்கு ஜோசியம் அதி அவஸ்யமென்று
அதையும் கற்கத்தொடங்கினார். இவைகளை யெல்லாம் ஒன்றாய்க்
கற்க ஆரம்பிக்கவே முடிவில் இக்கதிக்கு இவரைக் கொண்டு
வந்து விட்டது!
கு. இருந்தாலுமென்ன? முயற்சி பயன்படாமற் போமோ? திரு
வள்ளுவர் கூறியபடி சரி- "தெய்வத்தாலாகாதெனினும்-சரி-
சூ. அன்னையும்-
கு. சரி, அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
சூ. சரி! நிரம்ப சரி உம்முடைய கல்வியே கல்வி!
கு. இதென்ன? முற்று முணர்ந்தவரில்லை முழுவதூஉம்
கற்றனமென்று களியற்க-சரி-
சூ. தொல்லுலகில்-
கு. சரி- தொல்லுலகில் நல்லா ரொருவர் உளரேல் அவர்
பொருட்டெல்லாருக்கும் பெய்யும் மழை.
சூ. பார்த்தீர்களா! மகாராஜா! இப்படிப்பட்ட சகலகலைகளையும்
கற்றவர்க்கு அரண்மனையில் ஏதாவது உத்தியோகம் கொடுக்க
வேண்டும் மகாராஜா.
தே. மகாராஜா! அப்படி யொன்றும் செய்யலாகாது. இவர்தான்
போனவருடம், நேற்றையதினம் காலஞ்சென்ற நமதுபதினாயிரவருள்
ஒருவனாகிய விஸ்வத்சேனனுடைய வயோதிகரான தந்தை
மிகவும் நோயாய்க்கிடந்தபொழுது ஜோசியம்பார்த்து 10
நாழிகைக்கெல்லாம் இறப்பாரென்று கூறிவிட்டு அவ்விதம்இறவாமையைக்
கண்டு தன் சொற்படி நடக்கவேண்டு மென்று ஏதோ
ஒரு விஷத்தைக் கொடுத்து கொன்றுவிட்டார். அதிகாரிகள்
பயித்தியக்காரன் என்று ஒன்றும் செய்யாது விட்டனர்.
இப்படிப்பட்ட மனிதன் நமதரண்மனை அருகிலிருப்பது நியாயமன்று.
கு. சரி மகாராஜா! அங்கே ஒரு மனு. விஸ்வத்சேனனுடைய
தகப்பனாருக்கு சரி அக்காலத்தில் எட்டாம் வீட்டில் சனியும்
ஒன்பதாம் வீட்டில் ராகுவும் இருந்தார்கள் அதற்குப்பலன், சரி உடனே
மரணம்! நான் இன்னும் 10 நாழிகையென்று கெடுவைத்தேன்;
அதற்குள் இறவாவிட்டால், சரி, யார்தவறு? சரி, ஜோஸ்யம்
தப்பிப்போவதா? ஆகவே சரி, உடனே மருந்து கொடுத்து
சாஸ்திரத்தை சரி, மெய்ப்பித்துவிட்டேன்!
சூ. சரி, சரி, எல்லாம் சரிதான், மகாராஜா! இந்த நியாயத்ததிற்கு
உத்திரம் யார் கூறுவது? தாங்கள்தான் கூறவேண்டும்.
சு. அதிருக்கட்டும். தேவாதா! விஸ்வத் சேனனுடைய குமாரன்
பதினாயிரவருள் தன் தகப்பனுக்குப் பதிலாகச் சேரவிரும்பியதற்கு
இசைந்தேனே, அவன் இன்றைய தினம் என்னை
இங்குவந்து கண்டு பிரமாணம் செய்து போவதாகக் கூறினானே.
ஏன் இன்னும் வரவில்லை?
தே. ஏதோ-அசந்தர்ப்பமா யிருக்கவேண்டும்.
சு. அசந்தர்ப்பம்! அசந்தர்ப்பம் என்றால் அர்த்த மென்ன?-
ஆயினும் அவனது பிதாவின் நிமித்தம் அவன் மீது கோபம்
கொள்ள எனக்கிஷ்டமில்லை. இன்றையதினம் சாயுங்காலத்திற்குள்
என்னை வந்து காணவேண்டுமென்று சொல்.
தே. ஆக்கினை.
சு. சரி குருநாதரே, இப்பொழுதே திங்கே வந்தது?
கு. மகாராஜா! காலையில் எழுந்தவுடன் சரி, ஒரு ஆருடம் பார்த்தேன்
சரி, இங்கு ராஜ சபைக்குச் சென்றால் நல்லதென்று தோற்றியது,
சரி, உடனே புறப்பட்டு சரி வந்து விட்டேன்.
சு. ஆனால் இப்பொழு தென்ன வேண்டு மென்கிறீர்?
கு. மகாராஜா! சரி அரண்மனையில், ஏதாவது சரி, உத்தியோகம்
ஏற்பாடு செய்து விட்டால் சரி நலமாயிருக்கும், என்னுடைய
பெருமையை நான் எடுத்துக்கூறலாகாது. "யாகாவாராயினும்
நாகாக்க, காவாக்கால்"-சரி-
சூ. யாரே அழகுக்கு-
கு. சரி-"யாரே அழகுக் கழகுசெய்வார்" என்று கூறியிருக்கின்றது
சூ. நிரம்ப சரி! எனக்கும் அவருக்கும் தான் சரி.
சு. ஆம் உண்மைதான். சூரசேனா இவருக்கு மூன்று வேளையும்
அரண்மனையினின்றும் போஜனம் கொடுக்கச் செய்து இவர்
ஒருவருக்கும் மருந்து கொடுக்காமலும் ஜோஸ்யம் கூறாமலுமிருக்கும்படி
நீ பார்த்துக்கொள். குருநாதரே! அது தான்
உமக்குத்தக்கவேலை.
கு. சரி மகாராஜா!
சூ. நிரம்பசரி! மகாராஜா!
சேவகன் வருகிறான்.
சே. பராக் மகாராஜா! பராக் மகாராஜா! சிங்களத்தீவிலிருந்து
ஜீமுதவாஹனன் என்பவனொருவன் ஓர் சிம்மத்தைப்
பழக்கியிருப்பதாகவும் ராஜசபையில் தன் சாகசத்தைக் காண்பித்துப்
பரிசு பெற்றுப்போக வந்திருப்பதாகவும் கூறி உள்ளே வர சமயம்
பார்த்து கடைவாயிலில் நிற்கின்றான்; மகாராஜாக்களின்
ஆக்கினை?
சுகு. அப்படியா? என்ன ஆச்சரியம்! கொடிய சிங்கத்தைப்பழக்குவதாவது!
நாம் பார்க்க வேண்டும் உடனே உள்ளே வரச்சொல்லவா
சுந்தராதித்யா?
சு. சுகுமாரா வேண்டாம். நாளையதினம் பார்ப்போம் இவ்வினோதத்தை.
இன்றைக்கு வேண்டாம், சபை கூடி நெடுநேரமாயது.
சுகு. சுந்தரா! என் வேண்டுகோளைத் தட்டாதே. எனக்குடனே
பார்க்கவேண்டுமென்று மிகவும் விருப்பமாயிருக்கின்றது.
சு. நாளையதினம் பார்க்கலாகாதா?
சுகு. சுந்தரா! பிடிவாதமாய்க் கூறாதே! வரச்சொல்லவா?
சு. சரி, உனக்கப்படி இஷ்டமிருக்குமாயின் வரச்சொல்.
சுகு. சேவகா! அழைத்துவா சபைக்கு உடனே.
ஜெ. அரசே, சபையில் வரவழைப்பது அவ்வளவாக உத்தமமாகத்
தோற்றவில்லை. இதற்கு வேறு பிரத்தியேகமாக இடம் ஏற்பாடு
செய்திருந்தால் நலமாயிருக்கும்.
சு. ஜெயதேவா, அப்படி ஏதாவது அபாயமிருக்குமென்று
நினைக்கின்றாயோ?
ஜெ. அபாயமொன்று மிராது, ஆயினும்-
[ஜீமுதவாஹனன் வருகிறான். சேவகர்கள் ஆண்சிங்கம் ஒன்று
அடைக்கப்பட்ட இருப்புக் கூட்டை சபையில் இழுத்துக்கொண்டு
வருகிறார்கள்]
ஜீ. ராஜாதிராஜர்களே! பராக்! நான் சிங்களதீபவாசி. என் பெயர்
ஜீமுதவாஹனன். பதினான்கு வருடமாக இதோ
இக்கூட்டிலிருக்கும்படியான அரியேற்றினைப்பழக்கிவந்தேன்.
இப்பொழுது தான் இதில் தேர்ச்சிபெற்றேன். தங்களையொத்த
மகாராஜர்களுடைய சபைக்குச்சென்று என் சாகசத்தைக்காட்டி
தக்க பரிசு பெற்றுப் போகலாமென்று ஆசைகொண்டு முதல் முதலில்
சந்நிதானத்திற்கு வந்தேன். உத்திரவானால் உடனே என்
சாமர்த்தியத்தைக்காட்ட ஆரம்பஞ் செய்கிறேன்.
சுகு. (தலையை அசைக்கிறான்)
[ஜீமுதவாஹனன் கூட்டிற்குள் பிரவேசித்து சிங்கத்துடம்
சிலம்பம் பழகி சற்றுநேரம் பொறுத்து வெளியில் வருகிறான்.
சுகுமாரனும் சுந்தராதித்யனும் அவனுக்குப் பரிசளிக்கின்றனர்.]
சுகு. சபாஷ்! சபாஷ்! ஜீமுதவாஹனா! இக்கொடிய மிருகத்தை
எப்படி பழக்கினை?
ஜீ. எப்படியென்று என்னால் கூறமுடியாது மகாராஜா; எவ்வளவு
பழக்கியும் நித்தியகண்டம் பூரணாயுசு தான் எனக்கு!
ஜெ: சே! அவ்வளவு கஷ்டமா?
ஜீ: கஷ்டமா என்றா கேட்கின்றீர்கள்? இதோ எனது பட்டுக்கச்சையைக்
கூண்டில் எறிந்தேன். யாரையாவது இக்கூண்டில்
நுழைந்து இதை எடுத்துக்கொண்டு உயிருடன் மீண்டு வரச்
சொல்லுங்கள் பார்க்கலாம். யாராகவிருந்தாலும் சரி. இந்தச்
சபையில் எந்த சுத்தவீரனானாலும் சரி! - இவ்வளவு பெரியசபையில்
எந்த சுத்தவீரனும் இதைச் செய்யாத்துணியானா? -
ஒருவனுமில்லையா? - இவ்வளவு தானா?
ஜெ: ஜீமுதவாஹனா! அப்படி கூறாதே. மகாராஜா முதலிய சுத்த
வீரர்கள் நிறைந்த சபையில் அவ்வண்ணம் கூறுவது தவறு.
மகாராஜாவே யிருக்கின்றார். திரைராஜசிம்மர் என்று பட்டப்பெயர்
பெற்ற அவருக்கு இந்த ஒரு அற்பசிங்கத்தினிடம்
செல்வது அசாத்தியமோ? அப்படிப்பட்ட பெரிய வீரர்களுக்குக்
கேவலம் இதில் மனதிராது அவ்வளவுதான், ஒருவருமில்லை
யென்று கூறிவிடாதே.
சுகு. சீ! இது ஒரு வீரத்வமா கொடிய மிருகத்தின்வாயி லகப்படுவது!
ஜெ. தேவாதா, நீ போய் பார்க்கின்றதுதானே! இவனது இறுமாப்பை
அடக்க வல்லமை இல்லையா உனக்கு? இவ்வளவுதானா
உன் வீரம்?
[தேவநாதன் எழுந்திருக்கிறான்.]
சு. தேவாதா, நில். ஜெயதேவா, தேவாதனை ஏளனஞ்செய்தனையே,
அவன் போய் அதை எடுத்துக்கொண்டு வந்தால் என்ன தருகின்றாய்?
ஜெ. இதை செய்யும்படியான சுத்தவீரனுக்கு வேண்டியது
மொன்றிருக்கின்றதோ? அவன் தன் இஷ்டமெல்லாம் நிறைவேற்ற
அவனுக்குச் சக்தியிராதோ?
சு. ஆனால் பிறகு அவன் இஷ்டப்படி செய்யலாமா?
ஜெ. தடையென்ன? அப்படிப்பட்டவனைத் தடுக்க வல்லார் யார்?
ஜீ. மகாராஜா, இவர் இறந்தால் பிறகு நான் உத்திரவாதியல்ல.
சு. ஒருவேளை, உயிருடன் திரும்பிவந்தால்?
சுகு. சுந்தரா! இதென்ன விளையாட்டு? தேவாதனைக் கூண்டிற்குள்
செல்லாதிருக்கும்படி தடுப்பாய்!
ஜீ. உயிருடன் திரும்பிவந்தால் நான் அவருக் கடிமையாகின்றேன்.
சு. நித்யானந்தா!
[சரேலென்று கூட்டிற்குள் பிரவேசித்துக்கச்சையை வெளியில்
எடுத்துக்கொண்டு வந்துவிடுகிறான். நித்யானந்தன் மெல்லப்போய்
ஜெயதேவன் பின்பாக நிற்கிறான், சபையோரெல்லாம் ஆச்சர்யத்தால்
ஸ்தம்பித்து நிற்கின்றனர்.]
எல்லோரும்: ஆ! ஆ! இதென்ன! மகாராஜா! இதென்ன!
சுகு. சுந்தரா! - [சுந்தராதித்யனைக் கட்டியணைத்துக்கொள்ளுகிறான்.]
சு. இதைச் செய்பவன் பிறகு தன் எண்ணப்படி செய்யலாமென்றாயல்லவா?
இதுதான் என திஷ்டம்!
[கச்சையை ஜெயதேவன் முகத்தின்மீது வீசி எறிகிறான்.]
ஜெ. மகாராஜா, மிகவும் சந்தோஷம். உம்மையன்றி இக்காரியம்
செய்ய வேறெவராலாகும்? இதற்கறிகுறியாக நான்
இவ்வஸ்திரத்தை என்னிடம் வைத்துக்கொள்ளுகின்றேன்.
தே. அரசே! தம்மை யொப்பார் யார் இப்புவியில்? சுந்தராதித்ய திரை
ராஜ சிம்மருடைய புகழ் உலகெங்கும் விளங்கி் அவரது பகைவர்
சிங்கத்தினைக்கண்ட யானையைப்போல் அழிந்துபோவாராக!
ஜெய, விஜயீபவ!
எல்லோரும் ஜெய விஜயீபவ!
[சந்தடியில் ஜெயதேவன் மெல்ல வெளியிற் போய்விடுகிறான்.]
சுகு. சுந்தரா! இப்படி வந்துட்கார்! கெட்டிக்காரன்! வா
சொல்லுகின்றேன்--மறந்தனையோ?
சு. ஆம்.மறந்தேன் குமாரா! மன்னிப்பாய்! இதோ வந்து
விட்டேன். நித்யானந்தா!
[ஜீமுதவாஹனன் கைகளைக் கட்டி வெளியில்
இழுத்துக் கொண்டு போகிறான்].
சுகு. மந்திரி, சபை கலையலாம் சீக்கிரம். [சபை கலைகிறது] சுந்தரா!
நீ சிங்கத்தின் வாயினின்றும் தப்பிவந்தனையேயென்று
சந்தோஷப்படுவதோ அல்லது மறுபடியும் கோபத்திற் காளானாயே
யென்று துக்கப்படுவதோ என்று சந்தேகமாயிருக்கின்றது.
சு. என் மீது தவறுதான் மன்னிப்பாய். சிங்கத்தின் வாயினின்றும்
தப்பியது ஒரு ஆச்சரியமன்று. அது என்னைத் தீண்டியுமிராது.
சுகு. ஐயோ! சுந்தரா! சுந்தரா! இவ்வளவு சக்தியைப்பெற்றும் என்ன
பயன்? உலக முழுவதையும் ஒருவன் வென்றும் தன் கோபத்தை
வெல்ல அவனால் முடியாவிட்டால் என்ன பிரயோஜனம்?
நீ எனக்கு வாக்களித்திருந்ததை மறந்தனையே?
சு. ஆம் உண்மைதான். இம்முறை மன்னிப்பாய். இனி நான்
தவறமாட்டேன்.
சுகு. அன்றியும் இவ்வற்ப புகழைக் கருதி உனதுயிரை
இடர்ப்படுத்துவாயா? இன்னும் உனக்கு சிறுபிராயத்துக் குணம்
போகவில்லையே. 'உடன் பிறந்தது உடலழியுமளவும்' என்பது
உண்மைதான். க்ஷத்திரியர்களாகிய நாம் நமது மானத்தைக்
காப்பதின் பொருட்டாவது அல்லது சத்விஷயங்களின் பொருட்டாவது
உயிரைவிடச் சித்தமாயிருக்கவேண்டியதே. ஆயினும்
கேவல மிந்தப் புகழைக்கருதியா உயிர் துணியும்படி கூறியிருக்கின்றது?
என்ன காரணமாக இதைச் செய்யத் துணிந்தாய்?
காரணமின்றி நீ எதையுஞ் செய்பவ னல்லவே.
சு. குமாரா, நான் சொல்வதைக்கேள். இந்த ஜெயதேவன்தான்
இதற்கெல்லாம் காரணம்; அதன் மீதே என்னையு மறியாதபடி
எனக் கவன்மீது கோபம் வந்தது.
சுகு. ஜெயதேவனா?
சு. ஆம். கேள் சொல்லுகின்றேன். இன்றையதினம் சபைக்கு
வந்தவுடன் ஒரு முறை எல்லோரையும் நான் பார்த்தபொழுது
ஜெயதேவனுடைய முகம் மாத்திரம் வேறுபட்டிருந்தது.
அவன் மனதில் ஏதோ யோசிக்கின்றானென நிச்சயித்துவிட்டேன்.
பிறகு வழக்கத்துக்கு விரோதமாய், எங்கு பேசினால்
என்னை நேரில் காணவேண்டி வருகின்றதோவென்று, பேசாதிருந்தான்.
சேவகன் இந்த ஜீமுதவாஹனன் வந்திருக்கின்றான்
என்று கூறினவுடன் நான் ஜெயதேவனது முகத்தை நோக்க
அவனுடன் ஏதோ சம்பந்தப்பட்டிருக்கிறானென்று தோன்றிவிட்டது.
அச்சிங்களவன் அவ்வாறு அட்டகாசஞ் செய்ததும்
இவன் ஏவலினாற்றா னென்பதற்குச் சிறிதும் ஐயமில்லை. பிறகு
என்னையும் தூண்டிவிட்டு தேவாதனையும் பரிகாசஞ்செய்யவே,
பொறுக்காது இவனைத் தண்டிக்கவேண்டுமென்றே கூட்டிற்குட்
சென்றேன்.
சுகு. ஆம் ஆம் புலப்படுகின்றது. ஆயினும் ஜெயதேவன் வேடிக்கைக்குச்
செய்திருக்கலாகாதா?
சு. வேடிக்கைக்கா! சுகுமாரா ஜெயதேவனை இன்னும் நன்றாயறிந்திலை.
சுகு. அவன் ஏன் உனக்குத் தீங்கிழைக்க எண்ணவேண்டும்? நீ
எப்பொழுதும் பிறர்மீது சந்தேகங் கொள்ளுகின்றாய்.
சு. உனக்கிப்பொழுது கூறினால் தெரியாது. காலம் சீக்கிரம் வரும்.
சுகுமாரா இந்த ஜெயதேவனை நம்பாதே! அவன் எப்படியும்
சீக்கிரம் நமக்குத் தீங்கிழைக்கப்போகின்றான். இப்போழுதே
சொன்னேன்.
சுகு. ஜெயதேவனா?
[ நித்தியாநந்தன் வருகிறான்]
நி. சத்தியவதிதேவி மூர்ச்சையா யிருக்கிறார்கள்.
சுகு. சத்தியவதியா?
நி. ஆம், நடந்த விஷயத்தைக் கேட்டு.
சு. வா நாம் போவோம் சீக்கிரம், சத்தியவதியிடம்.
சுகு. ஆம், ஆம், உன்வேலையின் பயனைப்பார்த்தனையா?
[எல்லோரும் போகிறார்கள்.]
-----------------------------
மூன்றாம் காட்சி.
இடம் - அரண்மனையருகில் காவிரியைச் சார்ந்த ஓர் தென்னஞ்சோலை.
காலம் - மாலை
சூரசேனன் வருகிறான்.
சூ. என்சபதம் நிறைவேறுங்கால மெப்பொழுது வருமோ? காலஞ்
செல்லச் செல்ல என்மன உறுதியுங் குறைந்துகொண்டே
வருகின்றது. எத்தனை நாள்தான் இப்படிக் கழிப்பேன் நான்?
என் சுயவேலையைவிட்டு அரண்மனை விதூஷகனாய் மாறு
வேடம் பூண்டு இன்னும் எத்தனை வருடங் கழிக்கவேண்டு மென்று
என்தலையில் எழுதியிருக்கின்றதோ? எப்படியாவது நான்
தேடும் பொருளைப் பெறுவேன் என்கிற நிச்சயம் ஒன்றிருக்குமாயின்
எப்படியிருந்தபோதிலும் பெரிதல்ல, அந்தநிச்சயத்தையுங்
காணோம். சீ! என்ன கஷ்டம்! இதைவிட எல்லாவற்றையும்
விட்டுவிட்டுப் பேசாமல் இருந்துவிடலாமா என்று
தோன்றுகின்றது. இன்னும் ஒரு முறை பார்ப்போம்.இந்த
குருநாதனிடமிருந்து ஏதாவது அறிந்தால் முயல்வோம்; இல்லாவிடின்
சுவாமியின் பாடென்று சும்ம இருந்து விடுவதே சரி. இந்த
குருநாதன்தான் அவளுக்கு மருந்து கொடுத்த பழய வயித்தியன்
என்று தோன்றுகின்றது, எப்படி நிச்சயமாய் அறிவது?
உருவில்பேதமிருக்கிறது; ஸ்ரீமுகியைக் கேட்பதிற்பயனில்லை.
ஹா! - இவனும் பயித்தியக்காரனானான். நாம் எண்ணிய
துண்மையாயினும் இவனிடமிருந்து நாம் என்ன
அறியப்போகின்றோம்!-
குருநாதன் வருகிறான்.
கு. எட்டாவது வீட்டிலே குரு - ஒன்பதாவது சனியோ சரி.
பிடித்ததா! -
சூ. வாருமையா குருநாதரே, உமக்காக நான் எத்தனை காலம்
காத்திருப்பது? அப்பொழுதே வருகின்றேன் என்றீரே.
கு. ஜோஸ்யம் பார்த்தேன், சற்றுப் பொறுத்துபோ என்றிருந்தது;
சரி-உடனே நின்றுவிட்டேன்.
சூ. சரி, இப்படி உட்காரும்; உம்மைச் சில விஷயங்கள் கேட்க
வேண்டும். சொல்லுகின்றீரா?
கு. ஜோஸ்யமா?
சூ. ஆம். ஜோஸ்யந்தான்.
கு. ஒரு ஆரூடம் பார்க்கின்றேன்.
சூ. சே! ஆரூடமும் நீரோடமும்! உட்காருமையா. உம்- உங்களுக்குக்
கொஞ்ச காலத்துக்கு முன்னே-திருச்சினாப்பள்ளியிலே
ஜீவகன் என்றொருவரிருந்தாரே தெரியுமா?
கு. [எழுந்திருந்து] என்ன? யார்?
சூ. ஜீவகன் என்று ஒரு வயித்தியரையா? உட்காரும்.
கு. அப்பா! அதை நம்மைக் கேட்காதே-இப்போழுதே சொன்னேன்!-
வரும்!வரும்!வரும்!-இப்போழுதே சொன்னேன்!
சூ. என்னவரும்? உட்காருங்களையா! என்ன உடம்பு?
கு. அதெல்லா மொன்று மில்லை, நம்மைக் கேளாதே; அப்புறம்
வந்து விடும்!
சூ. என்னையா இது, வயித்திய ஜீவகனைத்தெரியுமா என்றால்-
கு. ஐ ஐ யோ! வரும்! வரும்! வரும்! சொல்லுகிறேன்! சொல்லுகிறேன்!
[ஓடிப்போகப்பார்க்கிறான்.]
சூ. [அவனைப்பிடித்துநிறுத்தி] இதென்னடா பிராரத்வமாயிருக்கிறது!
பயித்தியம்! இப்படி வாருமையா.
கு. அப்பா! இப்பொழுதே சொன்னேன், அதை மாத்திரம் நம்மைக்
கேட்காதே! வந்துவிடும் பிறகு! கேட்காதே! கேட்காதே!
வந்துவிடும்!
சூ. கேட்கவில்லை. உட்காருமையா! என்னபேரிழவு!-இந்தப்பயித்தியத்தைக்
கட்டிக்கொண்டு அழவேண்டியதா யிருக்கின்றதே!
கு. அப்பர்! -வேறு எதையாவது கேள்.
சூ. எதைக்கேட் டழுவ தும்மிடம்? அதுபோனாற் போகின்றது-
ஸ்ரீமுகி, என்றொருத்தி, காளிங்கனுடைய தங்கை-
கு. ஐஐயோ! மறுபடியும் அதையே! வருது! வருது! வருது!
ஐஐயோ! வருது! வருது!
சூ. எங்கையா ஓடுகின்றீர்? என்ன வருகிறது? ஸ்ரீமுகியைத் தெரியுமா
உமக்கு?-
கு. ஐஐயோ! என்னைக்கேளாதே! கேளாதே! விட்டுவிடு! விட்டுவிடு!
வருது! வருது! வேண்டாம்! வேண்டாம்!
சூ. ஓகோ! சந்தேகமில்லை! அப்படியா சமாசாரம்! அந்த ஸ்ரீமுகியினுடைய
கற்பையழித்துச் சென்றவன் யாரென்று-
கு. ஐஐயோ! வந்துவிட்டது! வந்துவிட்டது! வந்துவிட்டது!
[ஓடிப்போகிறான்]
சூ. சரி! சரி! [பின்துடர்ந்து போய்ப் பிடித்திழுத்துக் கொண்டு வருகிறான்]
உம்மை விடேன். உமக்குத் தெரிந்த விஷயத்தை யெல்லாம்
ஆதியோடந்தமாகக் கூறினாலொழிய விடேன். நீர் தான்
ஜீவகன் என்பதற்குச் சந்தேகமில்லை. உண்மையைக் கூறுகின்றீரா
என்ன?
கு. ஐஐயோ! பூட்டுது! பூட்டுது! பூட்டுது!
சூ. என்ன போய்விட்டது?- என்னடா பயித்தியம்!
கு. உயிர் பூட்டுது! பூட்டுது! பூட்டுது! நான் அல்ல! நான் அல்ல!
நான் அல்ல! எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
[கீழே விழுந்துவிடுகிறான்]
சூ. சரி! சந்தேகமில்லை!-உம்-பயமுறுத்தினால் ஒன்று மாகாது.
சாந்தத்திலேயே மெல்ல அறியவேண்டும் இவனிடமிருந்து,
இத்தனை காலம் காத்ததற்கு இப்பொழுதுதான் வழி
புலப்படுகின்றது. ஐயா! குருநாதரே! வாரும் போவோம்
நாம். அதோ ராஜஸ்திரீகள் வருகின்றார்கள்; நாமிங்கினி
இருப்பது நியாயமன்று.
கு. அப்பா! அதை யெல்லாம் நம்மை யொன்றும் கேளாதே!
சூ. சே! கேட்பேனா! விளையாடினேன் வாரும்.-நம்மைப்பிடித்த
சனி இதனுடன் விட்டதா, வாரும். [போகிறார்கள்.]
மற்றொரு புறமாக சத்தியவதி, கமலினியுடன் வருகிறாள்.
க. அம்மா! இத்தனை நேரம் புஷ்பம் பறிக்கச் சோலை யெங்கும்
சுற்றியதால் களைத்திருக்கின்றீர். எனக்கும் இளைப்பாயிருக்கின்றது.
இந்த பளிங்காசனத்தின்மீது சற்றுட்கார்ந்து இளைப்பாறிச்
செல்வோம்.
ச. ஆம், அப்படியே செய்வோம்.
க. அம்மா, முகம் என்ன வியர்க்கின்றது! இதோ துடைக்கின்றேன்.
இப்படி சற்று சயனித்துக்கொள்ளுங்கள் என்மடி
மீது. சற்று காற்றெழ விசிறுகின்றேன்.
ச. ஆ! கமலினி! இவ்வாற்றில் நீர் நிரம்பி ஓடுதல்
எவ்வளவழகாயிருக்கின்றது! கண்ணிற்கு என்ன குளிர்ச்சியாயிருக்கின்றது!
க. ஆம் அம்மணி. சூரியனு மஸ்தமித்துவிட்டான், ஆகாயத்தைப்
பாருங்கள். ஆங்காங்கு சில நட்சத்திரங்கள் தம் தலைவனாகிய
சந்திரன் ஏன் இன்னும் வரவில்லை யென்று ஆச்சரியத்துடன்
கண் கொட்டுவதுபோல் பிரகாசிக்கின்றன!-அம்மா! என்ன
ஜலத்தை உற்றுப்பார்த்தவண்ணமாய் ஒருவாறிருக்கின்றீர்கள்?
ஏன் உமது முகம் இதோ இருக்கும் தாமரையைப்போல்
குவிந்திருக்கின்றது?-ஆ! நான் என்ன ஒன்று மறியாதவள்போலக்
கேட்கின்றேனே; இந்த சமயத்தில் நான் அருகிலிருந்தால்
சந்தோஷமாயிருக்குமா உமக்கு?
ச. என்ன விளையாடுகின்றாய்?
க. ஒன்றுமில்லை, அந்தக் குவிந்த தாமரை எப்பொழுது மலரும்?
ச. சூரியன் வந்தால் மலரும்.
க. சரிதான் அவ்வண்ணமே உமது முகவாட்டம் உம்முடைய
காதலன் வந்தாலல்லோ நீங்கும்!
ச. கமலினி! என்பிராணநாதர் என்னிடம் இன்று சாயங்காலம்
வருவதாகக் கூறினார்.-மறந்தேன் பார்த்தாயா? என்னை
அரண்மனையிற் காணோமென்று தேடுவாரே?
பின்புறமாக சுந்தராதித்யன் மெல்லவந்து கமலினியின்
கரத்திலிருந்து விசிறியை வாங்கி தான் சத்தியவதிக்கு விசிறுகிறான்.
க. தேடட்டுமே! உம்மைபார்க்க வேண்டுமென்று விருப்பமிருந்தால்
இங்குவரட்டுமவர்; நீர் மிகவும் இளைப்படைந்திருக்கின்றீர்,
இப்பொழுது புறப்படுவது நியாயமன்று; இன்னும் கொஞ்ச
நேரம் இளைப்பாறிவிட்டுப் போகலாம்.
[சுந்தராதித்யன் சைகை செய்ய கமலினி மெல்லப் போய்விடுகிறாள்]
ச. மெல்லவிசுறு, கமலினி, அது நியாய மன்று. அவருக்கு நான்
கஷ்டம் கொடுக்கலாகாது. அவர் என்னைத் தேடிவருவது
நியாயமன்று; நானன்றோ அவருக்குச் சிரமமில்லாதபடி
அவரிருக்குமிடம் செல்லவேண்டும். என்கையைவிடு நான்-
[திரும்பிப்பார்த்து சுந்தராதித்யனைக் கண்டு] பிராணநாதா!
[எழுந்திருக்கிறாள்]
சு. கண்ணே! உட்கார். உனக்கு மாத்திரம் நான் சிரமம்
கொடுக்கலாமோ? நானே இங்கு வந்துவிட்டேன்.
ச. பிராணநாதா! நீரா எனக்கு விசிறிக்கொண்டிருந்தீர்? என்
தோழி என்னை ஏமாற்றிச் சென்றாளே! உமக்கு நான்
அறியாது இவ்வளவு கஷ்டம் கொடுத்ததற்காக மன்னிக்கவேண்டும்.
சு. இதென்னகஷ்டம்! கரும்பு தின்னுவது கஷ்டமோ, அதற்கொரு
கூலியும் வேண்டுமோ? உட்காரிப்படி.
ச. பிராணநாதா-நீர் அரண்மனைக்குப் போக வேண்டுமோ?
சு. இல்லை இல்லை. அரண்மனையி லிருப்பதைவிட இங்கு மிகவும்
சுகமாயிருக்கின்றது. இவ்வாற்றிற்கும் காற்றிற்கும்
சமானமான தங்கென்ன இருக்கின்றது? உனக்கரண்மனைக்குப் போக
வேண்டு மென்று விருப்பமிருந்தால் போகலாம் நாமிருவரும்.
ச. இல்லை இல்லை. உமக்கெது இஷ்டமோ அதுவே எனக்கு
மிஷ்டம். இருண்டுவிட்டதே யென்று கேட்டேன்.
சு. சந்திரன் எனதருகிலிருக்கும்பொழுது எனக்கென்ன இருள்?
ச. பிராணநாதா, எங்கே சந்திரன்? இன்னும் புறப்படவில்லையே.
சு. உனக்குத் தெரியாவிட்டாலும் எனக்குத் தெரிகின்றது.
ச. எதோ?
சு. இதோ! [முகத்தை முத்தமிட்டு]-கண்ணே! இச்சமயத்தில்
என்செவி இன்பமடைய உனதினிய குரலைக்கொண்டு ஏதாவது
பாடுவாய்!
ச. பிராணநாதா, இஷ்டப்படி. உமக்கென்ன பாட்டு வேண்டும்?
சு. ஏதாவது உனக்கிஷ்டமானதைப் பாடு. (சத்தியவதி பாடுகிறாள்)
நான் பெற்ற சுகமே சுகம்! இச்சுகமே சுகம்! (அரண்மனை யுத்த
பேரிகை அதிக விரைவாக அடிக்கப்படுகின்றது) சத்தியவதி! பொறு!
இதென்ன இச்சமயத்தில் நமது யுத்த பேரிகை முழங்குகின்றது?
என்னவோ விசேஷம் தெரியவில்லை!
சுகுமாரன் விரைந்து வருகிறான், அவனுக்குப்
பின்பாகத் தன் தேகமுழுதும் ரத்தம் படிந்த
ஓர் ரணவீரன் வருகிறான்.
சு. என்ன! சுகுமாரா! சேரன் பாண்டிய நாட்டின்மீது
படையெடுத்துவிட்டானோ?
சுகு. ஆம்! படையெடுத்து பசுமலை யருகில் பாண்டியனை முறியடித்து
திருப்பரங்குன்றத்தில் பாண்டியனை முற்றுகையிட்டிருக்கின்றானாம்.
ஸ்வேதகேது எப்படியாவது நம்மைத் தனக்குத் துணையாக
வரும்படி வேண்டியிருக்கின்றான். நாம் இத்தட்சணம்
உதவினாலன்றி தன் அரசு அடியுடன் அழியவேண்டியதுதான்
என்று எழுதியிருக்கின்றான். இத்தூதன் பரங்குன்றிலிருந்து
பகைவர் கூட்டத்தி லஞ்சாது பிரவேசித்து தப்பி இந்நிருபத்தைக்
கொண்டுவந்திருக்கின்றான்-
சு. வல்லப சேரனுடைய செருக்கைக் கருக்கவேண்டும்! குமாரஇா!
என்ன சொல்லுகின்றாய்?
சுகு. என்ன சொல்வது? உனது பிதா பாண்டியனுக்கு எப்பொழுதும்
நம்மை உதவும்படி கட்டளையிட்டிருப்பதை மறந்தனையா
என்ன? நாம் நமது சைனியங்களுடன் புறப்படவேண்டியது
தான்-
சு. நான் மறக்கவில்லை! இத்தட்சணம் புறப்படவேண்டும் குமாரா
நிச்சயந்தானே?-
சுகு.ஆம் நிச்சயந்தான்.-
சு. சரி-நித்யானந்தா!
நித்யாநந்தன் வருகிறான்.
நி. ஏன்?
சு. நித்யானந்தா! நீ உடனே சென்று தேவரதனை நான்-
தேவரதன் வருகிறான்.
தே. அரசே! இதோ நான் வந்துவிட்டேன்.-
சு. தேவரதா! மெச்சினேன் உன்னை. வல்லபன் பாண்டியன்மீது
படையெடுத்துவிட்டான் நாம் முன்னமே எண்ணியபடி,
முறியடிக்கப்பட்ட பாண்டியன் நமதுதவியை நாடியிருக்கின்றான்.
உடனே அவனுக்குதவியாகச் சென்று இவ்வல்லபன் வல்லமையை
யறியவேண்டும்.-
தே. சந்தோஷம்.
சு. இன்னும் அரை நாழிகைக்கெல்லாம் நமது பதினாயிரவர்
ஆயுதபாணிகளாய் அரண்மனை யெதிரில் வந்து சேரும்படி நான்
கட்டளையிட்டதாக-
தே. அரசே! என்னை மன்னிக்கவேண்டும். ஆராய்ச்சிமணியின்மூலமாய்
இவ்விஷயத்தைக் கேள்விப்பட்டவுடன் நீர் இம்மாதிரியாகக்
கட்டளையிடுவீரென்று நம்பி உடனே நமது பதினாயிரவரைச்
சேரும்படி ஆக்கியாபித்துவிட்டேன், இப்பொழுதே அநேகர்
வந்து கூடிவிட்டனர்.
சு. தேவரதா! தேவரதா! மெச்சினேன். உனனை ஒத்தவரது
உதவியெனக்கு இருக்குமளவும் எனக்கென்ன குறை? என்னை
ஜெயிப்பவர் யார்?
தே. இன்னும் என்ன ஆக்கினை?
சு. உம்- சேரனது சேனைகள் 66,500-சரி-சேனாதிபதியிடம்
சுகுமாரனும், நானும் கட்டளையிட்டதாகக் கூறி நாளையதினம்
காலை சூரிய உதயத்தின்முன் 12,000 படை பாண்டிய நாட்டை
நோக்கிப் புறப்படச் சித்தஞ்செய்யும்படி சொல். உடனே செல்.
தே. இதோ புறப்பட்டுவிட்டேன். [போகிறான்]
சு. குமாரா! நான் சத்தியவதிக்குத் தேறுதல் சொல்லுகின்றேன்.
நீ உடனே சென்று, பதினாயிரவருள் ஒருவனிடம் காவிரிப்பூம்பட்டினத்திற்கு
ஒரு நிருபம் அனுப்பி வீராந்தகனை 12,000
சைனியத்துடன் இன்றைக்கு மூன்றாம்நாள்-மதுரையண்டையில்
மொட்டையாகருகில் நம்மை வந்து கூடும்படியாக நான்
கட்டளையிட்டதாகச் சொல். புறப்படு உடனே. இதோ இத்சேவகனை
அழைத்துச் சென்று அவனது காயங்களுக்கெல்லாம்
எண்ணெயிட்டு இவனுக்கு வேண்டிய உணவு ஔஷதத்தைக்
கொடுத்துக் காப்பாற்றச்சொல்.
சுகு. அம்மா! நீ அதைரியப்படாதே. சுந்தராதித்யன் சீக்கிரம்
ஜெயத்துடன் ஒரு குறையுமின்றித் திரும்பிவருவான்.
சந்தோஷமாய் விடைகொடுத்து அனுப்பு. நான் வருகின்றேன்.
[ரணவீரனை யழைத்துக்கொண்டு போகிறான்.]
சு. கண்ணே! சத்தியவதி! நீ மிகவும் தைரியசாலியென்றல்லவோ
நினைத்தேன். இதற்கெல்லாம் நீ வருத்தப்படலாமோ?
க்ஷத்திரியர்களுடைய வாழ்வும் உயிரும் இவ்வளவுதான்! ஆயினும்
நான் சீக்கிரத்தில் ஒரு குறையுமின்றி வெற்றிபெற்று
மீள்வேனென்று நினைக்கின்றேன்.
ச. பிராணநாதா! யுத்தத்திற்கு நீர் சென்றிருக்கும்பொழுது
உம்மைப்பிரிந்து நான் எப்படி தனியாக இருப்பேன் இங்கு? என்னையும்
உம்முடன் அழைத்துச்செல்லுமே! [துக்கப்படுகிறாள்]
சு. கண்ணே! என்ன உன்னையும் அறியாதவள்போல் உறைக்கின்றாய்!
யுத்தம் என்றால் இலேசா? சில தினங்கள் வெயிலின்
கொடுமையைக் கருதாது காடு மலைகளையெல்லாம் கடந்து
செல்லவேண்டிவரும்! நதிகள் குறுக்கு நேர்ந்தால் மழை பனியென்றும்
கருதாது நீந்திச் செல்லவேண்டிவரும்! சில தினங்கள்
உறக்கமின்றி பறக்கவேண்டி வரும்! சில தினங்கள்
ஊணின்றி உலரவேண்டிவரும்! சில தினங்கள் கை ஓயாது பகைவரைத்
துண்டித்தவண்ணமா யிருக்கவேண்டிவரும்! இன்னும் இப்படிப்பட்ட
கஷ்டங்களையெல்லாம் கருதும்பொழுது, என்போலியர்க்கே யுத்தமென்றால்
பயத்தைத் தரும்படியானதென்றால் சுகஜீவியாகிய உன்னையொத்த
பேதையர்க் கடுக்குமோ யுத்தசைனியத்துடன் செல்லல்! வேண்டாம்.
என் சொற்படி இங்குதான் இரு. நான் சீக்கிரம் ஜெயித்துத் திரும்பி வருவேன்.-
ச. பிராணநாதா! உமது வார்த்தைக்குக் குறுக்குண்டோ? அப்படியே ஆகட்டும் -
பிராணநாதா! என் வலது தோள் துடிக்கின்றதே!
சு. கண்ணே! இச்சகுனங்களிலெல்லாம் ஒன்றுமில்லை. வா நாம் போவோம்
அரண்மனைக்கு.
[போகிறார்கள்]
ஜெயதேவன் விரைந்து வருகிறான்.
ஜெ. சரி! ஒன்று நிச்சயம், சத்தியவதியின் விவாகம் குறித்த தினத்தில்
நிறைவேறாது. பிறகு பார்த்துக்கொள்வோம்! வல்லபன் நான்
எழுதியவண்ணம் இன்னும் இரண்டுதினம் பொறுத்திருக்கலாகாதா!
இதற்குள் அவசரம் அவனுக்கு! தீர்ந்தது. இனி அதைப்பற்றி யோசிப்பானேன்.
நானும் சைனியத்துடன் புறப்படுவதே சரி. சூரசேனனுக்கு ஏதாவது முடிவு
செய்யவேண்டும். ஆயினும் அவனுக்கே நான் யார் என்று தெரியாதே; -
எப்படியிருந்தபோதிலும் நான் இவர்கள் மீது ஒரு
கண்ணுடையவனாயிருக்கவேண்டும். சீ! இத்தனை வருடமாக நான் மறந்து
ஆயுமென்றிருந்த விஷயம் மறுபடியும் இந்த சமயத்தில் முளைக்கவேண்டுமா?
பார்ப்போம் - [போகிறான்]
------------------
முதல் காட்சி.
இடம் - ஓர்பாசறை. காலம் - காலை
யுத்தபேரிகைகள் முழுங்க, சோழ சைனியங்களுடன் சுந்தராதித்யன்
சுகுமாரன், ஜெயதேவன். சூரசேனன், தேவரதன், முதலியோர்
வருகின்றனர். சைனியங்கள் சுந்தராதித்யனைச் சூழ்ந்து நிற்கின்றன.
சு. கடல் சூழ்ந்த உலகெங்கும் சோழநாட்டின் புகழை விளங்கச்செய்த
சுத்தவீரர்களே! பாரெங்கும் ஜெயப்பிரதாபம் பழியிலாது
அழியாவண்ணம் நாட்டிய பகைவர் காணா முதுகினையுடைய
பதினாயிரவரே! ஜெயப்பிரதாபதேவாத ஜெயதேவ விஸ்வத்சேன
அதிவீரர்களே! சுகுமாரராஜனே! நான் நவிலுவதைச் சற்று செவி
சாய்த்துக் கேண்மின்! இப்பொழுதோ வல்லமையில்லா வல்லபன்,
கருணையின்றிக்காரணமின்றி கருத்தின்றிக் கவலையின்றி
வயோதிகரான ஸ்வேதகேது பாண்டியன்மீது படையெடுத்திருக்கின்றான்.
மெலிந்தார்குதவுதலே நம்மையொத்த சுத்தவீரர்களுக்கு
மேன்மையாதலின் ஸ்வேதகேது ராஜனுக்குப் படைத்துணையாகி
இந்த வல்லபன் செருக்கைக்கருக்க நாம்யுத்தசன்னதராய்ப்
புறப்பட்டிருகின்றோம். அதள விதள சுதள ரசாதள
தலாதள மகாதள பாதாளமெனு மேழுலகம் கிடுகிடுத்து நடுநடுங்கி
சிலிர் சிலிர்த்து ஸ்தம்பிக்கச்செய்து, அரைக்ஷணத்தில்
நிர்தூளியாக்கவல்ல வீர அதிவீர மகாவீர, சமரத அர்த்தாத அதிரத
சௌர்யவான்களாகிய தம்மையொத்தவர்களுக்கு நான் என்ன
தைரியம் சொல்லவேண்டும்? ஆயினும் உம்முடைய அனுமதியின்
மீது ஒருவார்த்தை கூறுகின்றேன். கண்ணெட்டியதூரம் கடல்
போல் கரைந்து நிற்கும் இச்சைனியத்தின் கண் எவனுக்காவது
இப்பொழுது நடக்கப்போகின்ற யுத்தத்தில் ஒருவேளை இறக்க
வேண்டிவரினும் வருமேயன்று கிஞ்சித்தேனும் வருத்தமிருக்குமாயின்
அவன் இந்தட்சணம் இச்சைனியத்தை விட்டு தன்
வீட்டுக்குப்போகலாம். அப்படிப்பட்டவனுக்கு நான் மனப்பூர்வமாய்
உத்திரவளிக்கின்றேன். எவனொருவன் உடலபிமானம்
உறவபிமானம் உலகபிமானம் உயிரபிமானம் என்கிறஎல்லாவபிமானங்களையும்
நீத்து தேசாபிமானத்தையும் மனாபிமானத்தையும்
வீராபிமானத்தையுமே மேன்மையாகக்கொண்டு, ஜெயித்தால்
செழிப்பாய புகழ்! இறந்தால் ஈறிலாச்சுவர்க்கம்! என்று
உறுதியாய் நம்பி, தன் மானத்தின் பொருட்டும், தன் வீரத்தின்
பொருட்டும் தன் உறவினர் பொருட்டும், தன் நாட்டின் பொருட்டும்,
தன் அரசரின் பொருட்டும்,முடிவில் தன் ஈசன்
பொருட்டும் யுத்தம் புரிகிறோம் என்று ஊக்கமுள்ள மனத்தினனாய்,
தளராத்தாளாண்மையனாய், மடியில்லா மாட்சிமையனாய்,
முடிவில்லா ஊக்கத்தனாய், இப்பொழுது நடக்கப்போகின்ற யுத்தத்தை
மேற்கொள்ள விருப்பமுற்றானோ அவன், என்னுடன்
வரட்டும். இன்னொரு வார்த்தை; உங்களைப்போலவே, தங்களுயிரையும்
இந்த யுத்தத்தில் விடுவதற்குச் சித்தமாயிருக்கின்றனர்
சுகுமார சுந்தராதித்யர்கள் என்று உறுதியாய் நம்புங்கள்.
வீரர்களே! அதோ ஆற்றிற்கப்புறம் இருக்கின்றனர் நமபகைவர்,
இனி காலதாமதம் செய்யலாகாது. நமது மீசையை முறுக்கி
வல்லபன்செருக்கைக்கருக்கி உலகெலாம் புகழைப்பெருக்கி,
பகைவரை உருக்கச்செல்வோம்! மரி*த்தால்சுவர்க்கம்!
ஜெயித்தால் ஜெயம்! சுத்தவீரர்களே! பதினாயிரவரே! தேவரத
ஜெயதேவ விஸ்வத்சேன ஜெயப்பிரதாபத்தலைவர்களே! சுகுமார
ராஜனே! ஈசனருளால் நாம் பகைவரை ஜெயிப்போமாக!
(சைனியங்கள் ஜெயகோஷம் செய்கின்றன.) ஸ்வேதகேதுராஜனைக்
காப்பாற்றுவோமாக! (சைனியங்கள் ஜெயகோஷம் செய்கின்றன.)
சோழநாட்டின் மகிமை உலகெங்கும் பரவுமாக! [ சைனியங்கள்
ஜெயகோஷம் செய்கின்றன.] நம்முடைய மனைவிமக்கள் பொருட்டும்
நம்முடைய உற்றார் உறவினர் பொருட்டும் நம்முடைய
தேசத்தின் பொருட்டும் நம்முடைய அரசின் பொருட்டும் நம்முடைய
வீரதீரத்தின் பொருட்டும் நம்முடைய தர்மத்தின் பொருட்டும்
யுத்தத்திற்குச் செல்கின்றபடியால் நம்மை சுவாமிகாப்பாற்றுவாராக! ஜெய!
{எல்லோரும் ஜெயகோஷத்துடன் போகிறார்கள்]
------------------------
இரண்டாம் காட்சி.
இடம்: திருப்பரங்குன்றம் கோட்டைமதில். காலம் - சாயுங்காலம்.
மனோரமா ஆண் உடையில் கொத்தளத்தின்மீது தோற்றுகிறாள்.
ம. ஐயோ! இவ்வளவு உயர்ந்த மதிற் சுவரினின்றும் கீழே நாம்
எப்படி இறங்குவது? அசாத்தியம்! ஆடவருடைய உடையைப்
பூண்டால் அவரது மனோதிடமும் வந்துவிடுமோ? ஈசனே! ஈசனே!
பெண்ணாய்ப் பிறப்பதின் கஷ்டம் இதுதான். ஐயோ! நான்
பகைவர் கையில் எப்படியும் அகப்படவேண்டியதுதான்!
இன்றையதினம் கழிவதற்குமுன் எப்படியும் அவர்கள் கோட்டைகுட்
பிரவேசித்து விடுவார்கள். இனி எட்டுநாளாக ஊணுறக்கமின்றி
வருந்தும் நமது சிறுபடையால் அவர்களைத் தடுப்பது
கடினம். சரி! அப்படி மிஞ்சிவிட்டால் பகைவர் கையிற் படுவதைவிட
நமதுயிர் விடுவதே நிச்சயம். இப்படியும் இருக்க
வேண்டுமா என்கதி! பிதாவின் கதியும் என்னவாயிற்றோ
தெரியவில்லை. மதுரையையும் முற்றுகையிட்டிருக்கிறார்கள்.
வயோதிகராகிய அவரால் என்னமுடியப்போகின்றது? அவரும்
இறந்து நானும் இறக்கவேண்டியதுதான்! (ஒருபுறம் தூரத்தில் யுத்த
முழக்க முண்டாகிறது.) ஆ! இதென்ன கிழக்குபுறம் யுத்தகோஷ்டம்
முழங்குகின்றது. ஆ! ஏதோ சைனியங்கள் அப்புறமிருந்து
கோட்டையை நோக்கி வருகின்றன! நமது பகைவரோ
துணைவரோ? - வேறு உடை உடுத்திருக்கின்றனர்! - துணைவர்
தான்! துணைவர்தான்! - அதோ சேர சைனியங்கள் அவர்களை
எதிர்க்கச் செல்கின்றனர்! சந்தேகமில்லை! சந்தேகமில்லை!
ஐயோ, இன்னும் அரை க்ஷணத்தில் இருதிறத்தாரும் கைகலக்கப்
போகின்றனரே! ஐயோ! எத்தனை பெயர்மாளப்போகின்றனர்
இன்னும் அரை நொடியில்! ஈசனேஈசனே! இதையும்
நான் கண்டு சகிக்கவேண்டுமோ! (இரண்டு புறமும் தூரத்தில்
யுத்த முழக்க முண்டாகிறது.) ஐயோ! யுத்தம் எப்படி நடக்கின்றதென்று
நான் பார்க்கவேண்டும்! ஐயோ! எனக்கொன்றும் தெரியவில்லையே!
இருதிறத்தாரும் பொழியும் சரமாறியானது என்
கண்ணிற்கொன்றும் புலப்படாவண்ணம் மறைக்கின்றதே!-
அதோ ஓடுகின்றார்கள்! ஓடுகின்றார்கள்! -துறத்துகின்றார்கள்!
துறத்துகின்றார்கள்! சேர சேனை ஓடுகின்றது! நமதே ஜெயம்
நமதே ஜெயம்! ஈசனே! ஈசனே! -அதோமீனக்கொடிதெரிகின்றது!
நமக்குதவியாக வருபவர்கள் சோழநாட்டாரா யிருக்க
வேண்டும்! ஈசனே! ஈசனே! அவர்களுக்கே ஜெயம் கொடுப்பாயாக!-
சந்தேகமில்லை! சந்தேகமில்லை! அதோ சோழ சைனியத்தின்
தூசி முனையில் வரும்படியான சுத்தவீரன் முன்னிற்கமாட்டாமல்
எப்பக்கமும் சேரர்கள் ஓடுகின்றனர் ஓடுகின்றனர்!
இம்மகாபுருஷனது வீரமே வீரம்! இவர் யாரோ தெரியவில்லை?
அவர் ஒருவர் முன்பாக நிற்கவாற்றாமல் சேர சைனியமானது
யுகாந்தத்திலெழும் காற்றின்முன் சரகெனப் பறக்கின்றதே!
வஜ்ஜிரகவசம் பூண்ட திடகாத்திர மேனியுடன் யானைக்கூட்டத்திற்
பாயும் அரியேறெனத் தாவிவரும் இவரைப்
பார்க்கப்பார்க்க எனக்கு என்னமனோஉற்சாகங்கொடுக்கின்றது!
இவரைவிட்டு என் கண்களை மாற்றமுடியவில்லையே! ஈசனே!
ஈசனே! இவருக்கு ஒரு அபாயமும் நேராது ஜெயங்கொடுத்து
விரைவில் என்னை வந்து காப்பாற்றும்படி செய்வாயாக!
இதோ வருகின்றார்! வருகின்றார்! பகைவரைத் துறத்திக்கொண்டு!
இதோ வந்துவிட்டார்! வந்துவிட்டார்! (அருகாமையில்
இரண்டு புறமும் யுத்த கோஷ்ட முண்டாகிறது) ஐயோ!
இதென்ன இப்புறம் சப்தம்? ஆ! சோழசைனியங்கள் நமதுகோட்டைக்குட்
பிரவேசிக்குமுன் சேரர்கள் நம்மைக் கைப்பற்றிவிடுவார்களே!
இதோ வந்துவிட்டார்கள்! வந்துவிட்டார்கள்! ஐயோ!
கோட்டையின் கீழ்வாயில் பூட்டப்பட்டிருக்கின்றதே!
[சேர சைனியங்களைத் துரத்திக்கொண்டு சுந்தராதித்யன்
தனியாய் வருகிறான் சற்றப்புறம் நித்தியாநந்தன் சூரசேனன்
பதினாயிரவர் முதலியோர் ஜெயகோஷத்துடன்
வருகிறார்கள்.]
ம. மகாபுருஷா! மகாபுருஷா! என்னைக்காப்பாற்றும்.
சேரசைனியங்கள் இதோ வந்துவிட்டன வந்துவிட்டன!
சு.அதுயார்? ஐயோபாவம்! தனியாயகப்பட்டான்! - அஞ்சாதே!
இதோ வந்துவிட்டேன்! நித்யானந்தா! நான் போகின்றேன்.
நீங்கள் இக்கதவைப் பெயர்த்துக் கொண்டு வந்து சேருங்கள்!
[மதிலின் மீது தாவி ஏறி மனோரமாவின்பக்கலிற் போகிறான்.]
சேரப்பஞ்சைகளே! ஒருசிறுபிள்ளையை எதிர்க்க இத்தனை
பெயரா? வாருங்கள் சொல்லுகின்றேன்!
[எதிர்த்து வரும் சேர வீரர்களை செந்தூக்காய்த்தூக்கி
அகழில் போடுகிறான். மனோரமா அவன் கரத்தில்
மூர்ச்சையாக அவளணிந்திருந்த தலைக்கவசம் விழவே,
பெண்ணென வறிகிறான்.]
ஆ! நித்யாநந்தா! சீக்கிரம் சீக்கிரம்!
[நித்யாநந்தன் கதவை பெயர்த்துக் கொண்டு கோட்டைக்குள்
சோழ சைனியத்துடன் பிரவேசிக்கிறான். சூரசேனனும் விரைந்தோடி
வருகிறான். குழப்பத்தில் கறுப்புக் கவசமணிந்த ஜெயதேவன்
பதுங்கி வந்து சுந்தராதித்யன் முதுகில் வெட்ட தவறி
அவன் இடது தோளின் மீது காயம் படுகின்றது. ஜெயதேவன்
கரந்து மறைகின்றான்.]
சூ. பேடி! பேடி! அகப்பட்டாய் நீ!
[ஜெயதேவனைப் பின் துடர்கின்றான்.]
நி. ரத்தம்!--போம், பார்த்துக்கொள்ளுகிறேன்.
சு. நித்யாநந்தா! இங்கு தான் நில்! இதோ வந்துவிட்டேன்.
[மனோரமாவைத் தூக்கிக்கொண்டு கீழே இறங்கி வந்து.]
படைகளே! அஞ்சாதீர் அதோ தேவரதனும் வந்துவிட்டான்.
அவன் ஜெயபேரிகை முழங்குகின்றது! [போகிறான்.]
[சோழ சைன்யங்கள் ஜெய விஜயீபவ! என்று ஆரவாரித்துக்கொண்டு
கோட்டையின் மீது ஏறுகின்றனர்.]
நி. சேரப்பஞ்சைகளே வாருங்கள்! வாருங்கள்! ஸ்நாநம்
செய்விக்கின்றேன்!
[சேரவீரர்களைத் தூக்கி அகழில்
எறிகின்றான் ஒருவன்பின் ஒருவனாக.]
சோழசைனியங்கள்.
ஜெயம் ஜெயம் தேவரதர் அதோ வருகின்றார்!
தேவரதன் பதினாயிரவருடன் வருகிறான்.
தே. நித்யாநந்தா! மகாராஜா எங்கே?
நி. பாசறையில்.
தே. என்ன! ஏதாவது காயம் பட்டதா என்ன?
நி. பின்புறம்--கள்வன் குத்தினான்--கொஞ்சம் பட்டது.
தே. பிறகு ஏன் பாசறைக்குச் சென்றார்?
நி. உம்!-- ஆண் உடையிலிருந்த பெண்ணைத் தூக்கிக்கொண்டு
போனார்.--சத்!
தே. சரி! ராஜகுமாரத்தியாயிருக்கவேண்டும்! சந்தோஷம். சேவகர்களே!
ஜெயம் நம்முடையதாய் விட்டது! திரைராஜ சிம்மருடைய
கீர்த்தி உலகெங்கும் பரவி நிலை பெற்றிருக்குமாக!
[சைனியங்கள் ஜெயகோஷம் செய்கின்றன.]
சோழநாட்டின் மகிமை உலகெங்கும் பரவுமாக! [ஜெய
கோஷம்.] நமது பகைவரெல்லாம் அதமாவாராக! [ஜெய
கோஷம்.] நன்றாய் இருட்டிப் போவதன் முன் ஒருவன்
அம்மதிலின் மீதேறி நம்முடைய வெற்றிக்கொடியை நாட்டட்டும். பிறகு
எல்லோரும் பாசறைக்கு வந்து சேருங்கள். இரவு காவல்
கார்க்க வேண்டிய முறையை அப்புறம் கூறுகின்றேன். நான்
ராஜசிம்மரிடம் போய் வருகின்றேன். ஜாக்கிரதை! [போகிறான்.]
[கொடியை நாட்டிவிட்டு சைனியங்கள் ஆரவாரத்துடன்
போகின்றனர். நித்யாநந்தன் மாத்திரம் நிற்கிறான். இருட்டிப்
போகின்றது.]
சூரசேனன், காயம்பட்ட கையுடன் மெல்ல வருகிறான்.
சூ. சரி. எங்கேயோ மாண்டிருக்க வேண்டும். இந்த பயித்தியத்தை
யுத்தத்திற்கு யார் வரச் சொன்னது? அப்பொழுதே வேண்டாமென்றேன்.
இந்த ஜெய தேவரல்லவோ வேடிக்கைக் கென்று
அழைத்துக் கொண்டு வந்து விட்டார். இந்த இருட்டில் எங்கென்று
தேடுவது? [ரணகளத்தில் தேடுகின்றான்.]
நி. [மதிலின் மீதிருந்து.] யார் அது?
சூ. நித்யானந்தா !
நி. ஆம். நீ யார்?
சூ. சூரசேனன்.
நி. என்ன செய்கின்றாய்?
சூ. இந்த பயித்தியம் குருநாதரைத் தேடுகின்றேன். நீ எங்கேயாவது
பார்த்தாயா?
நி. அங்குதான் கிடக்கின்றான் பார்.
கு. ஐயோ பாபம்! - நீ என்ன செய்கின்றாய் அங்கே?
நி. அப்பம் தின்றுகொண்டிருக்கின்றேன்.
சூ. என்ன, அப்பமா?
நி. ஆம். பசிக்கின்றது.
சூ. இங்கே யிருப்பானேன்? பாசறைக்குச்சென்று நன்றாய்ப்
புசித்துறங்குகின்றது தானே!
நி. இருக்கச்சொன்னார்.
சூ. யார்? மகாராஜாவா?
நி. ஆம்.
சூ. சரி! ஆனால் உன்னை யானைகட்டியிழுத்தாலும் நீ நகரமாட்டாய் -
இந்த பயித்தியத்தின் உடலையாவது பார்த்து விட்டுப் போவோம்.
[தேடுகிறான்] ஆ! இதோ கிடக்கின்றான்! ஐயோபாபம்!
நீயும் படுகளத்திற்கு வரவேண்டுமா? சரி! யார் விதி யாரைவிட்டது!
கு. [பிணக்குவியலிலிருந்து.] சரி! ஒருவரையும் விடவில்லை.
சூ. ஆ! யார் பேசினது? குருநாதரே! உயிருடன் இருக்கின்றீரா?
கு. இல்லை இல்லையப்பா! இறந்து விட்டேன்! சரி -
சூ. இதிலும் பயித்தியமா? எழுந்திருமையா! எங்கேயாவது காயம்
பட்டிருக்கின்றதா? - இதோ இரத்தம் பெருகுகின்றதே!
கு. நான் இறந்துவிட்டேனே!
சூ. சீ! விளையாடாதீர்; இறந்து விட்டேன் என்று கூவிக்கொண்டு
இதோ உயிருடன் இருக்கின்றீரே!
கு. உயிருடன் இல்லையப்பா, எங்கே உயிர்? நான் இறந்து
போகவில்லை யென்று - சரி - என்னமாய்த் தெரியும்?
சூ. இதென்னடா சனியாயிருக்கின்றது! சற்று எழுந்திருமையா
இந்த ரணத்தைக் கட்டுகின்றேன்.
கு. நான் உயிரோடிருக்கின்றேன் என்று சரி - ரூபித்தால்
எழுந்திருக்கின்றேன்?
சூ. இதோ ரூபிக்கின்றேன் [காலில் நன்றாய்க் கிள்ளுகின்றான்.]
இப்பொழுதாவது உயிருடன் இருக்கின்றதாகப் புலப்படுகின்றதா?
கு. சரி! கொஞ்சம் தெரிகிறது, இன்னும் சரியாக ஜோஸ்யம்
பார்த்தால் தெரியும்! [கணக்குப் பார்க்கின்றான்.]
சூ. [காயத்தைக் கட்டி.] என்ன ஆச்சரியம்! இந்தகாயமும், மகாராஜாவுக்கும்
எனக்கும் பட்டிருப்பதைப் போலவே பின்புறமாகப்
பட்டிருக்கின்றது! அதே ஆயுதத்தால் உண்டானவடுவைப்
போலிருக்கின்றது. எங்களிருவரையும் பின்புறமாக இருந்து
குத்தின துஷ்டனே இதையும் செய்திருக்கவேண்டும். சீ!
அவனை நமது கையினின்றும் தப்பவிட்டோமே? அவன்
இன்னா னென்றாவது அறியாமற் போனோம். கறுப்புக்
கவசமணிந்து முகத்தை மூடியிருந்தான்!
நி. யார் அங்கே? வளவளவென்று பேசி என் நித்திரையைக்
கெடுப்பது?
சூ. இல்லையப்பா! நீ கோபித்துக் கொள்ளாதே. மகாராஜாவுக்குக்
கோபம் வந்தாலும் பெரிதல்ல உனக்கு கோபம் வந்தால் தீர்ந்தது!
இதோ நாங்கள் போய்விட்டோம்! வாருமையா குருநாதரே!
கு. ஐயோ பாபம்! எத்தனை பெயர் செத்துகிடக்கின்றனர்! சரி
'ஆண்டாண்டு தோறு மழுது புரண்டாலும் மாண்டோர் வருவரோ
மாநிலத்தீர்'! - ஆதலால்.
சூ. ஓதாமல்.
கு. 'ஓதாமல் ஒருநாளுமிருக்கவேண்டாம்!' என்று சொல்லியிருக்கின்றார்கள்
பெரியோர்கள். சரி சரி! - நாம் என்ன செய்யலாம்?
சூ. வீட்டுக்குப் போகலாம்! வாரும் [இருவரும் போகிறார்கள்.]
சுந்தராதித்யன் மற்றொருபுறமாகத் தேடிக்கொண்டுவருகிறான்.
சு. சீ! இந்த கருக்கிருட்டில் அம்மோதிரத்தை எங்கென்று தேடிக்
கண்டுபிடிக்க போகின்றோம்? - களம் என்ன சந்தடியற்றிருக்கின்றது!
சற்று முன்பாக யுத்தபேரிகை முதலியவற்றின் கோஷமும்,
ஜெயசங்கத்தின் முழக்கமும், எக்காளத்தின் ஒலியும், வெற்றி
வீரருடைய ஆரவாரிப்பும், இறப்பவர்களின் கூக்குரலும் எல்லாம்
ஒருங்கு சேர்ந்து கடலொலியென ஒலித்த இப்போர்க்களம்
இப்பொழுது என்ன நிசப்தமாயிருக்கின்றது! இறந்து
கிடக்கும் இச்சேவகர்களெல்லாம் இரவில் உறங்குகின்றாற் போல்
இருக்கின்றது! ஐயோ! ஆங்காங்கு கும்பல் கும்பலாய் இறந்து
கிடக்கும் இவ்வளவு வீரர்களும் இன்றையதினம் காலை
இப்பொழுது நானிருப்பதைப்போல் உயிருடன் இருந்தவர்கள்
தானே! இப்பொழு தென்னவாயிருக்கின்றனர்? அவர்களது
கோரிக்கைகளும், வீரமும், அட்டகாசமும் எல்லாம் எங்கே
போயது? என்னவாயது? ஈதாகும் உலகவாழ்வு! - நாம் இதைப்
பற்றி வருத்தப்படுவானேன்! உலகத்தியல்பிது! நானிவர்களுக்காக
இப்பொழுது வருந்துவது போல காலம்வரின் எனக்காக
மற்றவர் வருந்தப்போகின்றனர்! சீ! என்ன உலகம்! என்ன
வாழ்வு! என்ன மாந்தர்! - உம் - நமது வேலையை நாம்
பார்ப்போம். - சுண்டு விரலிலணியும் மோதிரம் இப்பொழுது என்
கண்ணிற்கு எங்கென்று புலப்படும்? என்ன மதியீனன்! ராஜகுமாரி
கேட்டதற்கு எப்படியாவது அதைக் கொண்டுவந்து
கொடுப்பதாகக் கூறிவிட்டுவந்தேனே அவள் இப்பொழுது
போகவேண்டாமென்று தடுத்ததையும் கேளாமல்! - யார்
குறட்டைவிட்டு தூங்குவதிங்கு? நித்யானந்தா?
நி. ஆம்.
சு. இங்கென்ன செய்கின்றாய்?
நி. தூங்கிக்கொண்டிருக்கின்றேன்.
சு. இங்கு யார் உன்னை உறங்கச்சொன்னது?
நி. இங்கே யிருக்கும்படி கட்டளையிட்டீர்கள்.
சு. கெட்டிக்காரன்! இப்படி வா! நித்யானந்தா நீதான் சரியான ஆள்.
இங்கே ஒருமொதிரம் விழுந்துகிடக்கவேண்டும் அதைத்தேடிப்பார்.
நி. வெள்ளைக்கல் மோதிரமா?
சு. ஆம் ஆம்! அதைப் பார்த்தாயா?
நி. மூலையில் படுக்கப் போகும் பொழுது முதுகில் உறுத்தியது.
எடுத்து மூலையில் எறிந்தேன்.
சு. கெட்டிக்காரன். எதோ? [மோதிரத்தை கண்டெடுக்கிறான்.]
அம்மட்டும் கிடைத்ததே!
நி. நான் வருவதா இருப்பதா?
சு. வாவா! [இருவரும் போகிறார்கள்.]
-----------------
மூன்றாம் காட்சி.
இடம்:- மதுரை அரண்மனை நந்தன வனத்தில் ஒர்மண்டபம்.
காலம் - பகல்.
சுந்தராதித்யன் ஓர் ஊஞ்சலின் மீது உறங்கிகொண்டிருக்கிறான்.
நித்யாநந்தன் அதன் கீழேபடுத் துறங்குகிறான்.
மனோரமா கமலினியுடன் மருந்து முதலியன வெடுத்துக்கொண்டுவருகிறாள்.
ம. தோழி, எங்கிருப்பதாகக் கூறினாய்?
க. அதோ! அம்மஞ்சத்தின் மீது படுத்திருக்கின்றார்; உறங்குகின்றாற்
போலிருக்கின்றது.
ம. ஐயோ! இங்கு வெளியிலிருப்பது நல்லதல்லவே, குளிர்ந்தகாற்று
காயத்தின்மீது படலாகாதே! எழுப்புவோமா?
க. ஆம். எழுப்பும், புதிய ஔஷதமிடும் காலமும் நெருங்கி விட்டது.
ம. எப்படி எழுப்புவதிவரை?
க. இதோ நித்யானந்தர் படுத்திருக்கின்றார் அவரை எழுப்பி ராஜாவை
எழுப்பச் சொல்லவா?
ம. வேண்டாம். சற்று பொறுப்போம். அவராக நித்திரை நீங்கி
எழுந்திருக்கட்டும். நாம் ஏன் அதைக் கலைக்கவேண்டும்?
அலுப்படைந்த உடம்பின் இளைப்பை நித்திரையைப் போல் எதுவும்
தீர்க்காது.
க. அப்படியே செய்வோம்.
ம. தோழி, நமக்கு வேண்டிய பொருட்களை யெல்லாம் நம்முடன்
கொண்டுவந்தோமா ஏதாவது மறந்து விட்டோமாபார்?-பனி
நீர் எங்கே?
க. அம்மணி, அதைக் கொண்டுவர மறந்தேன். உம்முடைய அறையில்
வைத்து விட்டு வந்தேன். இதோ போய் சீக்கிரம் எடுத்துக்
கொண்டு வருகின்றேன். [போகிறாள்]
ம. நாழிகை கழித்து வந்தாலும் எனக்கிஷ்டந்தான்!-அயர்ந்து நித்திரை
செய்கின்றார்! என் பாக்யமே பாக்யம்! கொஞ்சகாலத்திற்கு
முன் நம்மீது படையெடுத்து வந்ததற்காகச் சேரனைப்பழித்தேன்.
சீ! அது தவறு. அவனை நான் துதிக்க வேண்டும்.
அவனாலன்றோ நான் இம்மகா புருஷனைக் காணும்படி நேரிட்டது
இவரைப் பற்றி நான் முன்பே கேள்விப்பட்டிருக்கின்றேன்.
ஆயினும், நேரிற்காணும்படி நேரிட்டது இதனாலல்லவா! ஆ!
நான் உலகில் கிடைக்காதெனக் கருதியபொருளைக் கிடைக்கப்
பெற்றேன்! அநங்கனை வென்ற அழகும், வஜெயனை வென்ற வீரமும்,
சேடனை வென்ற சிறந்த புத்தியும், இவ்வாறு, மற்றெந்த
ஆடவனிடம் ஒருங்கு கூடியிருக்கப் போகின்றது? நான்
இப்படிப்பட்ட புருஷன் வாய்த்தா லொழிய விவாகம் புரிவதில்லை
யென்றிருந்ததற்கு நான் எண்ணியதினும் பதின் மடங்கதிகமான
தேஜசும், சௌரியமும், விவேகமும் வாய்ந்தசீமான் கிடைத்தது
என் பூர்வ புண்ணியவசமன்றோ? சீ! இவரையே நான்
விவாகம் செய்து கொள்ள வேண்டும்! இவரே எனக்குத்தக்க
கணவன்! இவரது குணமுதலியவற்றை நன்றாயறியாமுன்னமே,
இவரை அன்று யுத்த களத்தில் துலை தூரத்தில் கண்ட தட்சணமே
என் மனதைக்கவர்ந்தனர். அப்பொழுது நானிவர்மீது
கொண்டகாதல், இவருடைய குணமுதலியவற்றை நான் நன்றாய்
அறிந்தபின் மேலும் மேலும் விர்த்தியாகியே வருகின்றது!
மனமே! அதைரியப்படாதே! இவரையே மணம் புரிவாய், இல்லாவிடின்
எவரையும் மணம் புரியாய்! -
கமலினி பனிநீர்க்குவளையை எடுத்துக் கொண்டுவருகிறாள்.
க. அம்ம! இதோ கொண்டு வந்து விட்டேன். தேடிக் கண்டு
பிடிக்க சற்று நேரமாயது மன்னிக்கவேண்டும்.
ம. சரிதான். இன்னும் எழுந்திருக்கவில்லையே! நாம் என்ன செய்வது?
க. நேரமாய் விட்டதே! பதினைந்து நாழிகை இராதா இப்பொழுது?
நி. [எழுந்திருந்து .] நித்திரைகலைய வேண்டும், பதினைந்து நாழிகை
ஆயது.
சு. [விழித்து.] ஆம். இதோ எழுந்து விட்டேன் - ராஜகுமாரி! எனக்காக
கார்த்துக் கொண்டிருந்தாற் போலிருக்கின்றதே! மன்னிக்க வேண்டும்.
உட்காருவாய்! - நித்யாநந்தா! [நித்யாநந்தன் போகிறான்.]
ம. ராஜகுமாரா! உம்மை முன்பே கேட்க வேண்டு மென்றிருந்தேன்.
இந்த ஆள் எப்படி நீர் வாய்திறந்து கூறுமுன் உமது
பணிவிடைகளை யெல்லாம் செய்து வருகின்றான்?
சு. ஹா ஹா! - என்கண்களை நோக்கும் பொழுதே என் மனக்கருத்தை
யறிகின்றான் அவன்!
ம. அந்த சக்தி எனக்கு மிருக்கு மாயின்! -
சு. இருக்கு மாயின் என்ன?
ம. ஒன்று மில்லை. எவ்வளவு சந்தோஷ முள்ளவளாயிருப்பேன்
என்று கூறவந்தேன்! தோழி, நேரமாய்விட்டது. ஔஷத
முதலியவற்றை அருகிற் கொண்டுவா? திரைராஜ சிம்மரே!
இன்றையதினம் ரணத்தை சீக்கிரத்தில் ஆற்றும் படியான புதிய
ஔஷத மொன்று கொண்டு வந்திருக்கின்றேன்-
சு. என்ன, ஆகாயத்தாமரை பஸ்பமோ?
ம. அது எப்படி தெரிந்தது?
சு. பார்க்கும் பொழுதே தெரியாதோ?
ம. ராஜ குமாரா, உமக்கிவ்வுலகில் தெரியாத தென்று ஒன்றில்லை
போலிருக்கின்றதே! எதையும் நான் கூறுமுன் அறிந்து
விடுகின்றீர்!-இதோ சற்று இப்படி உமது கரத்தைக் கொடும்.
[காயத்தைக் கட்டுகின்றாள்]
சு. ராஜகுமாரி! இப்படிப்பட்ட வயித்தியன் எனக்குதவுவ தானால்
நான் தினம் யுத்தத்தில் காயம் பெற சுவாமி அனுக்கிரகிப்பராக!
ம. அம்மாதிரியாகத்தான் நானும் சற்று முன்பாக நினைத்தேன்.
உம்மை யொத்த மகாபுருஷன் வந்து காப்பாற்றுவ தானால்
தினமொரு சேரன் வந்து எம்மை முற்றுகை போடலாகாதாவென்று!
சு. ராஜகுமாரி, தாமரையனைய உன்கரமானது இக்கஷ்டமான
தொழிலைச் செய்யும்படி சிருஷ்டிக்கப்பட்டதன்று. அதையேன்
வருத்துகின்றாய்? அதோ சிவப்புற்றது பார்! உனக்கேன்
இவ்வளவு கஷ்டம்? நான் கட்டிக் கொள்ளுகின்றேன்,
இல்லாவிடின் அதோ நிற்கும் உன் தோழியைக்கட்டச்சொல்.
ம. ராஜ சிம்மரே, என்னையன்றி வேறொரு ஸ்தீரீயையும் உம்மைத்
தீண்ட விடமாட்டேன்- உம்-ராஜ குமாரா, உம்மை நான்
சாதாரணமாக எப்பெயரிட்டழைப்ப தென்று எனக்கு
சந்தேகமாயிருக்கின்றது, திரைராஜ சிம்ம ரென்றழைப்பதா? அல்லது
சாதாரணமாக ராஜ குமாரா என்றழைப்பதா? எப்படி அழைப்பது?
சு. உனக் கெப்படி இஷ்டமோ அப்படி அழை.
ம. என்னிஷ்டப்படியா அழைக்கச் சொல்லுகின்றீர்?
சு. ஆம்.
ம. என்னிஷ்டப்படி அழைப்பதா?
சு. அழை.
ம. நன்றாய் யோசித்துக் கூறும். பிறகு உமக்கு கஷ்டமாய் முடியப்
போகின்றது.
சு. நன்றாய் யோசித்தே கூறினேன். என்ன வென்று அழைக்க
உனக்கிஷ்டம்?
ம. சொல்லவா?
சு. சொல்.
ம. இப்பொழுது சொல்லமாட்டேன்.
சு. பிறகு எப்பொழுது சொல்லுவாய்?
ம. உம்-காலம் வரும் பொழுது சொல்லுவேன்.-
அதிருக்கட்டும்-
சு. அதிருக்கட்டும். உன்னை நான் எப்படியழைப்பது?
ம. என்னையா? என்னிஷ்டப்படி அழைக்கவேண்டும்!
சு. உன்னிஷ்டப்படியா! இதென்ன நியாயம்? உன்னிஷ்டப்படி
என்னை நீ அழைத்தால் என்னிஷ்டப்படி நான் உன்னை அழைக்க
வேண்டாமா?
ம. உம் உம்! என்னிஷ்டப்படித்தான் அழைக்க வேண்டும். இது
தான் கா-பெண்களுடைய நியாயம்!
சு. சரி! அப்படித்தானிருக்கட்டும். உன்னிஷ்டமென்ன?
ம. அதையும் கூற மாட்டேன். எல்லாவிஷயங்களையும் அறிய
வல்லமையுடைய உமக்கு இது தெரியாவிட்டால் நான் கூறமாட்டேன்.-
இவ்விளையாட்டெல்லாம் போனாற் போகட்டும். எப்பொழுது
நீர் உமது தேசத்துக்குப் போகப் போகின்றீர்?
சு. நீ எப்பொழுது போகச் சொல்லுகின்றாய்?
ம. என்னைக் கேளாதீர்.
சு. ஏன்?
ம. என்னைக் கேட்டால்-எப்பொழுதும் இங்கேயே-உம். இதென்ன
நியாயம் ராஜகுமாரா! நான் உம்மைக் கேட்டால் என்னை
நீர் திருப்பிக் கேட்கின்றீரே? நான் கேட்பதற்கு முதலில்
பதில் சொல்லும், பிறகு சொல்லுகின்றேன்.-
சு. நாளையதினம் காலை புறப்பட்டுப் போக உத்தேசித்திருக்கின்றேன்-
ம. ராஜகுமாரா! அப்படி யொருகாலும் செய்யலாகாது-
இன்னும் உமது ரணம் ஆறவேயில்லை. இதற்குள் புறப்படுவதாவது?
நான் ஒருகாலும் உத்தரவளிக்க மாட்டேன்.
சு. இல்லை- ராஜகுமாரி நான் கட்டாயமாய்ப் போக வேண்டும்.
ம. எப்படி போகின்றீரோ பார்க்கலாம். இதோ பிதா வருகின்றார்
அவருடன் சொல்லுகின்றேன்-
ஸ்வேதகேது, சுகுமாரன், ஜெயதேவன், சூரசேனன், குருநாதன்,
தேவரதன், வேலையாட்கள் வருகிறார்கள்.
ஸ். ராஜசிம்மரே! எழுந்திருக்க வேண்டாம், எழுந்திருக்க வேண்டாம்.
நீர் இந்த மரியாதைகளை யெல்லாம் இப்பொழுது பார்க்க
வேண்டாம்.உமது காயம் எப்படி யிருக்கின்றது? சுவஸ்தமாயிருக்கின்றதா?
சு. மகாராஜா, கேட்கவும் வேண்டுமா? உமது புத்தியிற் சிறந்த
புத்திரி வயித்தியஞ் செய்ய ஆராதகாயமும் உண்டோ? சற்றேறக்குறைய
எல்லாம் ஆறிவிட்டது.
ம. இல்லை, இல்லை, அண்ணா! இப்பொழுது தான் ஆறிவருகின்றது.
இன்னும் நன்றாய் சுவஸ்தமாக ஒருவாரம் பிடிக்கும். இதற்குள்ளாக
இவர் தமது நாட்டிற்குச் செல்லவேண்டுமாம் நாளையதினம் காலை.
ஸ். அதெப்படி செல்லலாம்? நன்றாய் சுவஸ்தமான பிறகு தான்
போக வேண்டும்.
ம. அதைத்தான் நானும் கூறினேன், நீர் இப்பொழுது போக
விடையளிக்காதீர்.
சு. மகாராஜா! என்னை மன்னிக்கவேண்டும். நான் ஒரு முக்கியமான
விஷயமாய் நாளையதினம் காலை ஊருக்குப் போக வேண்டும்.
ஸ். என்ன முக்கியமான விஷயமாயிருந்தாலும் நான் விடை
தரமாட்டேன். பிறகு என்னை அயல் நாட்டரச ரெல்லாம்
இகழ்ச்சியாக வல்லவோ மதிப்பார்கள். நீர் எனக்கு செய்த
பேருதவிக்குத்தக்க கைம்மாறு செய்யாமல் அனுப்பிவிடுவது
நியாயமன்று.
ஜெ. ஆம் ஆம் உண்மையே!
ம. அன்றியும் நம் பொருட்டு இந்த காயம் இவருக்குப் பட்டமையால்
அதை சுவஸ்தப்படுத்தி யனுப்புவது நமது கடனாகும்.
சு. இல்லை-நான் போகவேண்டும்.
ஜெ. என்ன அவ்வளவு முக்கியமான காரணம்?
சுகு. ஆம் சுந்தரா! இப்பொழுது சீக்கிரத்திற் போக வேண்டிய
அவசியம் ஒன்றும் இல்லையே! இவர்கள் இவ்வளவு மன்றாடிக்
கேட்கும் பொழுது நாம் போவது சரியன்று. இன்னும் சில
தினங்கள் இங்கிருந்து பிறகு செல்வோம்; என் வார்த்தையைத்
தடுக்காதே.
சு. சரி!-குமாரா உனக்கு மிஷ்டமானால் பிறகு நான் என்ன சொல்வது?
சூ. இவ்வளவு கஷ்டமென்ன? போகலாமா வேண்டாமா வென்று
நம்முடைய ஜோஸ்யரைக் கேட்டால் சொல்லிவிடுகின்றார்.
என்னையா சொல்லுகின்றீர் போகலாமா போகலாகாதா?
கு. போகக்கூடாது.
சூ. ஏன்?
கு. சரி, நாளையதினம் வாரசூலை!
சூ. ஓகோ!
கு. அதல்லாமல் கிர்த்திகை!
சூ. உம்!-
கு. அதல்லாமல் சரி-காலை ராகு காலம்-அதல்லாமல்-
சூ. அறஞ்செய-
கு. அறஞ்செய விரும்பு!
சூ. அப்புறம்?
கு. ஆறுவது சினம், இயல்வது கரவேல், ஈவது விலக்கேல்,
இன்னும் இப்படி போகுது!
சூ. இன்னும் நிரம்பதூரம் போகுது தாங்கள் அதனுடன் நிறுத்தும்.
ஐயா குருநாதரே! உம்முடைய மகிமையே மகிமை! இத்தனை
பெயருக்கும் அரைநொடியில் நகைப்புண்டாக்கினீரே!
கு. நம்முடையசெயலா? சரி-"என் செயலாவது யாதொன்று
மில்லையினித் தெய்வமே உன்செயலே யென்றுணரப் பெற்றேன்
இந்த"-
சூ. சரியாகச் சொல்லுங்கள்-சபை நடுவே.
கு. சரி, "சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டாதவன் மரம்."
சூ. சரி! நிரம்பசரி!
சு. போதும் விளையாட்டு, சூரசேனா! உன்னை தைரியசாலியென
முன்பே நான் அறிந்தும் இந்த யுத்தத்தில் உன்னிடம்
விளங்கிய அவ்வளவு வீரம் இருக்குமென்று எண்ணவில்லை.
சூரசேனா! மெச்சினேன், இன்றுமுதல் என் பதினாயிரவருள்
ஒருவனாவாய் நீ.
சூ. மிகவும் சந்தோஷம் மகாராஜா!
சு. தேவரதா!
தே. அரசே!
சு. சூரசேனனை நமது பதினாயிரவருள் ஒருவனாக்கிவிடு-யுத்தத்தில்
எத்தனை பெயர் மாண்டனர்? கணக்கிட்டனையா?
தே. ஆம், அரசே! எனக்குக் கூறவும் நா தழவில்லை. இக்கொடிய
போரில் எழுநூற்று ஐம்பத்துமூன்று பெயர் மாண்டனர் நமது
பதினாயிரவருள்!
ம. ஐயோ பாவம்! ஐயோ பாவம்! என்பொருட்டு அத்தனை பெயர்
மாண்டனரே!
தே. ஐயனே! சூர்யாஸ்தமனத்துக்குள் வடக்கு கோபுரவாயிலுட்
பிரவேசிக்கவேண்டுமென்று தாம் கூறிச்சென்றபின்
அவ்விடத்திலேயே அகழில் ஐந்நூற்று முப்பத்திரண்டு பெயர்
தமதுயிரை விடுத்தனர். ஆயினும் அவர்கள் வீரசுவர்ககமடைந்தனர்
என்பதற்குத் தடையில்லை. எல்லோரும் மார்பிற்
காயத்துடனேயே மடிந்தனர்.
சு. தேவரதா! இறந்த இந்த எழுநூற்று ஐம்பத்துமூன்று பெயருடைய
குடும்பங்களுக்கும் குடும்பம் ஒன்றுக்கு எழுநூற்று ஐம்பத்துமூன்று
பொன் தரும்படியாக நான் கட்டளை யிட்டேனென்று
மந்திரியிடம் கூறு.
தே. அப்படியே அரசே!
ம. ஐயோ பாவம்! இவ்வீரர்களெல்லாம் நம்பொருட்டு மடிந்தமையால்
அக்குடும்பம் ஒவ்வொன்றிற்கும் இருநூற்று நாற்பத்தேழு
பொன் தரும்படியாக உத்திரவளியும் அண்ணா.
ஸ். அப்படியே செய்கின்றேன்.
தே. அம்மணி! எமது பதினாயிரவர்பொருட்டு உமது
தயாளகுணத்திற்காக வந்தனம் செய்கின்றேன்.
சு. தேவரதா! பதினாயிரவருள் ஆயிரம் பெயரை மாத்திரம் இங்கு
நிறுத்திவிட்டு, மிகுதியான பெயரையும் மற்றுமுள்ள படைகளையும்
அழைத்துக்கொண்டு நீ விரைவில் தஞ்சையைப் போயடைவாய்.
நாங்கள் அங்கு திரும்பிவர சில தினங்கள் பிடிக்கும்
அதுவரையில் நீதான் ராஜ்யத்தைப் பார்த்துக்கொள்ளவேண்டும்.
சுகுமாரா--
சுகு. சரிதான், என்னைக் கேட்பானேன்?
தே. ஆக்கினை. அரசே! நான் வருகின்றேன். அரசே நான் வருகின்
றேன், மகாராஜா! உத்திரவு. அம்மணி உத்திரவு. [போகிறான்.]
ஸ். ராஜசிம்மரே, இவ்வுலகில் ஒருவன் எல்லாம் பெற்றபோதிலும்
தன் கட்டளைக்குக் குறுக்கொன்றும் கூறாமல் கட்டளையை
நிறைவேற்றும் பரிவாரத்தைப் பெறுதல் அசாத்தியம்; தாம்
அதையும் பெற்றீர்! தமது அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம்!--
ஜெ. கேட்பானேன்!--
நித்யாநந்தன் வருகிறான்.
நி. மத்தியான போஜன காலமாய்விட்டது.
ஸ்: ராஜசிம்மரே! இவன் ஏன் எப்பொழுதும் தலையைத் திருப்பிக்
கொண்டு பேசுகின்றான் உம்மிடம்?
சு. அப்படியல்ல. இவன் ஸ்திரீகளைப் பார்ப்பதில்லையென்று
பிரதிக்ஞை செய்திருக்கிறான். அதன்படி யாராவது ஸ்திரீகள்
அருகில் இருந்தால் முகத்தை திருப்பிக்கொண்டு பேசுவான்.
நி. போஜன காலமாய்விட்டது!
சு. ஆயின் நாம் எல்லோரும் எழுந்திருக்கவேண்டியதுதான்
இல்லாவிட்டால் மூன்றாம்முறைக்கும் பேசாதிருந்தால் அப்படியே
என்னைத் தூக்கிக்கொண்டு போய்விடுவான் -
ம. அப்படியா?
சு. இதோ பார்.
நி. காலமாய்விட்டது!
சு. நான் வரவில்லை இப்பொழுது! (நித்யாநந்தன் சுந்தராதித்யனை
அப்படியே தூக்கப்போகிறான்) நித்யாநந்தா! பொறு! பொறு!
இதோ வந்துவிட்டேன்! - பார்த்தீர்களா!
சுகு. யாராவது பிடித்துச்செல்லுங்கள் சுந்தராதித்யனை. சுந்தரா,
நான் பிறகு வருகின்றேன் எனக்கிப்பொழுது பசிக்கவில்லை.
மனோரமா, வருகின்றாயா? பூந்தோட்டத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு
வருவோம்.
ம. சுகுமாரராஜனே, என்னை மன்னிக்கவேண்டும். எனக்
கரண்மனையில் சற்று வேலையிருக்கின்றது அன்றியும் மிகவும்
பசிக்கின்றது.
ஸ். சுகுமாரராஜனே, நான் வருகின்றேன். நாம் இருவரும்
போவோம்.
சுகு. அப்படியே. [இருவரும் போகிறார்கள்]
[சுந்தராதித்யன் ஒருபுறம் நித்யாநந்தனால் தாங்கப்பட்டு
போகிறான். மனோரமா அவனுக்கு மற்றொரு பக்கமாகப்
போகிறாள்.]
சூ. சீக்கிரம் ஜோஸ்யம் பார்த்து சொல்லுங்கள். இப்படி போகலாமா
நாம், அல்லது இப்படி போகலாமா?
கு. இப்படி! இப்படி! [இரண்டு பக்கமும் காட்டுகிறான்.]
சூ. ஆ! வாரும் ஆனால் குறுக்கே போகலாம்!
[அவனுடன் போகிறான்.]
ஜெ. சரி! இப்பொழுதுதான் நமக்கு குரு பார்வை திரும்பியது!
எதற்கும் அடங்காச் சிங்கம் ஒரு அற்ப பெண்ணின்கண்
வலையிலகப்பட்டதே! அவளும் இந்த சுந்தரன்மீது காதல்
கொண்டிருக்கின்றாள்! சந்தேகமில்லை. முகத்தை பார்க்கும்பொழுதே
தெரியாதா? ஒருவரையொருவர் மாறி மாறி உற்றுப்பார்த்த
வண்ணமா யிருப்பார்களா! - சீ! என்ன காதல்! - காதல்!
பெயரைப்பார்! - அதிருக்கட்டும். சுகுமாரனும் அவ்விடத்தில் கொஞ்சம்
இசசை வைத்திருக்கின்றாற் போலிருக்கின்றது - சரி! தீர்ந்தது
இவர்கள் இணைபிரியா நட்பு! அதன் திறத்தை விரைவில்
அறிகின்றேன்! சுந்தோப சுந்தரர்களே பிரிக்கப்பட்டார்களாம்,
இந்த சந்தர சுகுமாரர்கள் பிரிக்கப்படாமற் போகின்றார்களா
பார்ப்போம்! - போதாக்குறைக்கு சத்தியவதி நடுவில் ஒருத்தி
இருக்கின்றாள். நலமே! நலமே! இனி நமதெண்ணம்
நிறைவேறுங்காலம் நெருங்கிவிட்டது! - இப்பொழுது சுகுமாரனிடம்
நான் சென்று அவனை மெல்லப் பரிசோதித்துத்
தூண்டிவிடவேண்டும். ஜெயதேவா! ஜெயதேவா! ஜெயதேவன்
என்றெனக்குச் சரியாகவே பெயரிட்டிருக்கின்றனர்! [போகிறான்.]
----------------------
நான்காம் காட்சி.
இடம் - அரண்மனையில் ஓர் அறை.
காலம் - மாலை.
சு. ஐயோ! என் மனதில் இதுவரையில் நான் இன்னதென்றறியாதிருந்த
குறையை அறிந்தேன் இன்றே! அறிந்தேன் இன்றே!
அறிந்தென்ன பயன்? அறியாதிருப்பேனாயின் நலமாயிருக்குமே!
அறிவு துன்பம் பயப்பதாயின் அறியாமையே நலமாம்!
ஆ! சேரன் பாண்டியநாட்டின்மீது படையெடுத்து வரவேண்டுமா?
நான் இங்கு அதன்பொருட்டு வரவேண்டுமா? மனோரமாவைக்
காணவேண்டுமா? அவள்மீது காதல்கொள்ள வேண்டுமா?-
ஆம் ஆம்! உள்ளதை உள்ளத்திடத்தே நான் மறைத்தலிற்
பயனென்ன? ஈதாகும் காதல் ஈதாகும் காதல்! நான்
சத்தியவதியின்மீது கொண்டிருந்தது காதலன்று காதலன்று!
காதலின் மகிமையை இப்பொழுதே அறிந்தேன்! ஒருவராலும்
வெல்லமுடியாதென்னை என நான் கருதியிருந்ததற்கு
இக்காதலால் வெல்லப்பட்டேனே நான்! எப்படித் திருப்பினும்
திரும்பும்படியான என் மனதை இக்காதலின் வலையினின்றும்
மீறிக்கொள்ள சக்தியில்லாதிருக்கின்றேனே! காதலே! காதலே!
உன் மகிமையே மகிமை! எவரையும் உடன்படுத்துகின்றாய்
நீ! உன்னை வெல்ல வல்லவர் யார்?-சரி! தீர்ந்தது. இந்த
மனோரமாவின்மீது நான் காதல்கொண்டுவிட்டேன். இனி என்
உயிர் உடலைவிட்டு நீங்கும்பொழுதன்றோ இக்காதல் என்
மனதைவிட் டகலப்போகின்றது! சீ! இவ்வுலகில்
அசாத்தியமென்பதில்லையென்று ஒருவன் சுந்தராதித்யனானாலும், தீர்மானம்
செய்யலாகாது!-சரி! இவைகளையெல்லாம்பற்றி யோசிப்பானேன்?
இனி செய்யவேண்டியதைப்பற்றி யோசிப்போம்-
நான் என்னசெய்வ திப்பொழுது? என் கடமையோ ஒருபக்கம்
என் மனதை உந்துகின்றது, காதலோ மற்றொருபக்கம் உந்துகின்றது!
கடமைக்கும் காதலுக்கும் நடுவிலகப்பட்டுக் கலங்கலானேனே!
சத்தியவதி, மனோரமா!-மனோரமா, சத்தியவதி!
எல்லாம் ஒன்றுதான்-ஒருவழியையும் காணேன்! ஐயோ!
இந்த மனோரமா அற்ப குணமுடையவளாய் அவலட்சணமுடையவளாய்ப்
பிறந்திருக்கலாகாதா? சீ! பழி ஒருபக்கம் பாவம்
ஒருபக்கமா? என்மனதை வெறுப்பதை விட்டு ஒரு குற்றமுமறியாத
அப்பெண்மணியை நோவானேன்? ஐயோ பாவம்!
இவை யொன்று மறியாத பேதை என்மீது காதல்
கொண்டிருக்கின்றாள்! நான் அதை அப்பொழுதே அறிந்தேன்.
அறிந்தும் பாவியேன் அதனுடன் அடக்கிவிடாது இது நம்மை
என்ன செய்யப்போகின்றதென்று வினோதமாகப் பாவித்துவிட்டேன்.
வேடிக்கையாக ஆரம்பித்து, விபரீதமாகி, முடிவில்
வினையாய் வாய்ந்தது! இனி நான் என்ன செய்வது?-- நான்
எனக்காக வருத்தப்படவில்லை இப்பொழுது. என்னைப் பூரணமாய்
நம்பியிருக்கும் இப்பெண்மணியை வெறுப்பேனாயின்
அவள் இளமனம் என்ன வருந்தும்! ஐயோ! இவள் ஏன்
என் மீது காதல் கொண்டாள்? தன் காதலை வெளியிட நாணி
குறிப்பாய் என்னிடம் எவ்வளவோ கூறிவருகின்றாள், நான்
பாதகன் இவைகளுக்கெல்லாம் இவ்வளவு தூரம் இடம்
கொடுத்துவிட்டு இப்பொழுது அவளைக் கைவிடுவேனாயின்
அவள் கதி என்னவாகும்! நான் என் பெற்றோருக்கு வாக்களித்த
வண்ணம் ஒரு பெண்ணையே மணஞ்செய்து கொள்ள
வேண்டியதாயிருக்கின்றது. சத்தியவதியை மணந்தாலோ
மனோரமா ஆவி அழிவாள்! என் ஆவியும் போம், உண்மையை
ஒளிப்பானேன்! பிறகு சுகமென்ப தெனக்கேது என் காதலியை
விட்டுப் பிரிவேனாயின்? மனோரமாவை மணந்தாலோ
சத்தியவதி அந்த க்ஷணம் உயிர் விடுவாள், என்னுயிர் நண்பனான
சுகுமாரனும் என்னை வெறுப்பான். வெறுக்கமாட்டானோ
பிறகு? அவன் தங்கையை விவாகஞ் செய்துகொள்வதாக
வாக்களித்து தினமும் குறித்த பிறகு, மாட்டேன்
என்று கூறி சத்தியவதியின் மனதைப் புண்படுத்தினால்
அவன் மனமெப்படியிருக்கும்? எவ்வளவு நற்குணம் வாய்ந்தவனாயினும்
மனிதன் மனிதனேயாம். சீ! இது தவறு. என்
சுகமெல்லாம் அழிந்தாலும் அழியட்டும், என் ஆவி போயினும்
போக, சத்தியவதிக்கும் சுகுமாரனுக்கும் நான் வாக்களித்ததைக்
காப்பாற்றவேண்டும். சத்தியவதியையே நான் விவாகம்
செய்து கொள்ளவேண்டும். இந்த மனோரமாவின் மீது
கொண்ட காதல் தவறு, இதை இதனுடன் அடக்கிவிடவேண்டும்!
சுந்தரா! உன் கடைமையைச்செய்! அஞ்சாதே!--மனோரமா வரும்
சமயம் ஆயது நாம் நமதெண்ணத்தைக் கூறி நம்
மீது அவள் கொண்ட காதலை மாற்றிவிடவேண்டும். இன்னும்
அது விர்த்தியாக இடங் கொடுப்பது நியாய மன்று. ஐயோ
பாவம்! எவ்வளவு சீக்கிரத்தில் அவள் அறிகின்றாளோ அவ்வளவும்
அவளுக்கு நன்மையே! ஐயோ! இந்த மங்கையர்க்கரசியின்
மனதைப் புண்படுத்த வேண்டி வந்ததே! என்னிலும்
பாதகன் இவ்வுலகிலுளனோ? சிறந்த புத்திசாலி! சிறந்த ரூபவதி!
சற்று இளம்பிராயத்து வேடிக்கை குணம் பொருந்திய வளாயினும்
சத்தியவதி யிடமிருக்கும் நற்குணமெல்லாம் இவளிடமும்
குடி கொண்டிருக்கின்றன. மேலுக்கு வித்தியாசமாகத்
தோன்றப்பட்டாலும் மொத்தத்தில் இவர்களிருவரிடமும்
ஆராய்ந்துள்ளே நோக்கின் சற்றேறக்குறைய ஒரேவித நற்குணங்கள்
அமைந்திருக்கின்றன! மனோரமா! சத்தியவதி! உங்களிருவருள்
ஒருத்தியே இவ்வுலகில் உதித்திருக்க லாகாதா? வீண் எண்ணம்!
என்ன மூடபுத்தி! மறுபடியும் யோசிக்க வாரம்பித்து விட்டேன்!
இது தவறு, இவ்விஷயங்களிலெல்லாம் யோசனை மனதைக்கலைக்கும்.
சத்தியவதியையே நான் மணம்புரிய வேண்டும் - என்னுயிர்
போனாலும் சரி - அதோவருகின்றாள் - ஈசனே!
மனோரமா வருகிறாள்.
ம. நான் குறித்த காலஞ் சிறிதும் தப்பாமல் வந்து விட்டேன்
பார்த்தீரா? ராஜகுமாரா - என்ன முகம் ஒருவாறிருக்கின்றது?
ச. ஒன்று மில்லை.
ம. இல்லை, ஏதோ விசேஷ மிருக்க வேண்டும். இல்லாவிடின் இது
வரையில் இல்லாத முகவாட்டம் உமக்கிப்பொழுது இருப்பானேன்?
இதுவரையில் சாதாரணமாக நான் வரும் பொழுதெல்லாம்
முகமலர்ச்சியுடன் எதிர்கொண்டழைப்பீரே இன்றேன்
ஒருவாறாய் சும்மா உட்கார்ந்து கொண்டிருக்கின்றீர்? என்ன
விசேஷம்? சொல்லும்.
சு. நான் என்ன சொல்லுவது? ஒன்றும் விசேஷமில்லையே!
ம. ஒன்றும் விசேஷ மில்லாவிட்டாலும், நான் உம்மைக்காண
இங்கு வந்திருக்கின்றேன் என்கிற விசேஷமாவதில்லையா?
அதாவது உமக்குச் சந்தோஷத்தை தரலாகாதா? ராஜகுமாரா!
தம்மை நான் காணவருகின்றேன் என்று எனக்கிருந்த
பெருமகிழ்ச்சியும் உம்மை இந்தஸ்திதியில் இருப்பதைப்பார்த்தவுடன்
குறைந்து வருகின்றது. உம்முடைய மனதில் ஏதோ நினைத்து
வருந்துகின்றீர்? என்ன, என்னிடம் கூறலாகாதா? ஒளிப்பதிற்
பயனில்லை. உம்முடைய முகத்தைப் பார்க்கும் பொழுதே
தெரிகின்றதே! நித்யாநந்தனுடைய சக்தியை நானும்
கொஞ்சம் பெற்றேன், உமது கண்களை நோக்கும் பொழுதே
உமது மனதையும் சற்றறிகின்றேன் நான்.
சு. அப்படி ஒன்றும் முக்கியமான விஷயம் இல்லை.
ம. இல்லை ஏதோ இருக்கின்றது. இல்லாவிட்டால் சாதாரணமாக
நான் வந்தால், நான் வாயைத்திறந்து ஒரு வார்த்தை கூறுமுன்
நூறுவார்த்தை கூறும்படியான தாம், நான் இங்கு வந்து இத்தனை
காலமாகியும் எவ்வளவோ கேட்டும் வாய்திறவாதிருக்கின்றீரே,
இதிலேயே தெரியவில்லையா?
சு. என்ன தெரிகின்றது?
ம. உமது மனதில் ஏதோ சிந்திக்கின்றீர் என்று! உண்மையை
விரைவில் கூறும். என் மீது ஏதாவது கோபமா? நான் ஏதாவது
தவறு செய்தேனா? என்ன சொல்லுகின்றீர்? - என்ன
நான் கேட்பதற்கு பதில் கூறாதிருக்கின்றீர்? ராஜகுமாரா என்
வார்த்தையை நம்பும்; மனப்பூர்வமாய் நான் உமக்கொருதீங்கும்
நினைத்ததாகவும் எனக்கு கியாபகமில்லை, அப்படி ஏதாவது
நான் அறியாது தவறு செய்திருந்தால் என்னை மன்னியும்.
இன்னும் நான் என்ன சொல்லக்கூடும்? ஐயோ! நான் உமக்கு
வருத்தமுண்டாக்கும் காரியத்தை கனவிலும் நினையேனே. என்
மனதையறியீர் இன்னும்! - ராஜகுமாரா நான் என்ன
தவறிழைத்தேன் என்றாவது கூறும் இல்லாவிட்டால்
ஒன்றுமில்லை யென்றாவது கூறும்.
சு. ராஜகுமாரி! இதென்ன பேதமை? உன் மீது ஒரு
குற்றமுமில்லை.
ம. பிறகு யார் மீது குற்றம்? ராஜகுமாரா! இது உமக்கு நியாயமாகத்
தோன்றுகின்றதா? நான் இவ்வளவு மன்றாடிக்கேட்டும்
பதில் கூறாது இன்னும் அந்த முகவாட்டத்துடனேயே
இருக்கின்றீர்! இவ்வாறு நீர் இருத்தல் எனக்கு எவ்வளவு
மனவருத்தம் உண்டு பண்ணுகின்றதென்று சற்றும் யோசிக்க
மாட்டேன் என்கிறீர். கொஞ்சம் யோசித்தாலும் இவ்வாறு இருக்க
மாட்டீர் - இவ்வாறு உம்மால் தண்டிக்கப்படுவதற்கு நான்
என்ன குற்றஞ் செய்தேன்? -
சு. ஐயோ! உன்மீதொன்றும் குற்றமில்லை. என் மீது குற்றம்.-
ம. சரி இப்பொழுதறிந்தேன். ராஜகுமாரா முன்பே என்னிடம்
ஒரு வார்த்தை கூறியிருக்கலாகாதா? உமக்கிவ்வளவு கஷ்டம்
கொடுத்திருக்க மாட்டேனே! நான் இங்கிருப்பது உமக்கிஷ்டமில்லை.
என்னிடம் பேச உமக்கு மனமில்லை. ராஜகுமாரா!
இதோ நான் போய் வருகின்றேன். எனக்கெவ்வளவு
மனவருத்தமுண்டாயினும் உமக்கென்ன, நீர் சந்தோஷமாய் இரும்.
[போகப் புறப்படுகிறாள்.]
சு. ஐயோ! என்மன நிலமை உனக்குச் சற்றும் தெரியாது. தெரிந்தால்
இவ்வாறுறைக்கமாட்டாய்! உன்மீது எனக்குச் சிறிதும்
கோபமில்லை.-மனோரமா! இப்படிவா. உட்கார்.
ம. ஆ! இவ்வளவு காலம் பிடித்ததா உமது கல்மனம்
திரும்புவதற்கு! இப்பொழுது பார்த்தால் தான் சுந்தராதித்யரைப்
போல் இருக்கின்றீர், இதுவரையில் நீர் உருமாறி இருந்தீர்-
ராஜகுமாரா! நீர் இப்பொழுது கூறியது கியாபக மிருக்கட்டும்
மறந்து போகாதீர்.
சு. நான் என்ன கூறினேன்?
ம. இதற்குள் மறந்துவிட்டீரா? என்னை என் பெயரிட்டழைத்தீரே!
இத்தனை காலம் பிடித்ததே! இனி எப்பொழுதும் என்
பெயரிட்டழைத்தாலொழிய நான் உம்முடன் பேசமாட்டேன்.
சு. ராஜகுமாரி!-
ம. ராஜகுமாரி மறுபடியும் வந்ததா? நான் உமக்கு ராஜகுமாரியன்று!-
சு. [தனக்குள்] நான் மனோரமா என்றழைத்தேனா?
ம. ஆம் அழைத்தீர் அதில் என்ன தவறு! என்பிதாபெயரிட்டழைக்கின்றார்.
சுகுமாரராஜன், ஜெயதேவர் முதலியோரும்
பெயரிட்டழைக்கின்றனரே நீர் அழைத்தாற்றான் தவறோ?-
சரி, மறுபடியும் முகத்தைச் சுளிக்க வாரம்பித்தீரா? ஆனால்
நான் மறுபடியும் போகப் புறப்பட வேண்டியதுதான்!-
[எழுந்திருக்கிறாள்]
சு. மனோ--ராஜகுமாரி உட்கார். சற்று நான் சொல்வதைக்கேள்.
ம. மாட்டேன். இதோ நான் போகின்றேன். என்னை என்
பெயரிட்டழைக்கின்றீரா என்ன?
சு. விதியே! விதியே!--மனோரமா! உட்கார்.
ம. அப்பா! எவ்வளவு கஷ்டத்துடன் வருகின்றது அப்பெயர்
உமது வாயை விட்டு! உம்-- அது போனாற் போகட்டும்--
இப்பொழுதாவது சொல்லும். ஏன் ஒருவாறு இருக்கின்றீர்
இன்றையதினம்?
சு. அதையே ஏன் கேட்டுக் கொண்டிருக்கின்றாய்? வேறு ஏதாவது
பேசுவோம்.
ம. இல்லை இல்லை. அதை நான் முன்பு அறிய வேண்டும்.
உடம்பேதாவது அசௌக்கியமா?
சு. உடம்பொன்றும் அசௌக்கியமில்லை?
ம. இல்லாவிடின் மனசு அசௌக்கியமா? உமக்கென்ன குறை?
எதைவிரும்பினும் பெற வல்லமையுடைய உமக்கென்ன
மனக்குறை?
சு. மனோரமா! என் மனம் ஏதோ சஞ்சலப்பட்டிருக்கின்றது
ம. காரணமின்றி அவ்வாறிராது; யாரிடத்திற்சொல்ல வருகின்றீர்?
சு. அது போனாற் போகட்டும். வேறு விஷயம் பேச
ஒன்றுமில்லையா?
ம. ஆனால் வாரும். ஏதாவது வினோதமாகக் காலம் கழிப்போம்.
சதுரங்கம் ஆடுவோம் வருகின்றீரா? நீர் எத்தனையோ வீரர்களை
ஜெயித்திருக்கின்றீரே என்னை ஜெயிக்கிறீராபார்ப்போம்
எப்படிப்பட்ட வீரனாலும் ஒரு பெண்ணை ஜெயித்தல் அசாத்தியம்--
சு. உண்மைதான்! உண்மைதான்!-- ஆயினும் எனக்கிப்பொழுது
அதன் மீது மனஞ்செல்லவில்லை.
ம. ஆனால் சஞ்சலத்தைப் போக்கச் சங்கீதத்தினும் பெரிதொன்றில்லை;
நான் பாடுகின்றேன் கேட்கின்றீரா?
சு. இப்பொழுதுனக்கேன் அந்த கஷ்டம்?
ம. அப்படியேன் சொல்லுகின்றீர்? உண்மையைக்கூறும். உன்
அவலட்சணமான குரலைக் கேட்பதற்கு எனக்கிஷ்ட மில்லை
யென்று சொல்லுகின்றது தானே! ஆம், நான் பாடினால்
உமக்கிஷ்டமாயிருக்குமா?
சு. ஐயோ! மனோரமா! அப்படியொன்று மில்லை; பாடுவாய்
கேட்கின்றேன்.
ம. [தம்பூரை மீட்டிப்பாடுகின்றாள்; சுந்தராதித்யன் இடையில்
பெருமூச்செறிய திடீரென்று பாட்டை நிறுத்திவிட்டு] ராஜகுமாரா! நான்
முன்னமே சொன்னேனே! என் பாட்டைக்கேட்க உமக்கிஷ்டமிருக்காதென்று!
சு. அப்படி யொன்று மில்லையே?
ம. பிறகு ஏன் பெருமூச்சுவிட்டீர்?
சு. உன் சங்கீதம் நன்றாயில்லை யென்றல்லவே! நான் சொல்வதை
நம்பு. இன்னும் எனது செவி சற்றின்பமடையப் பாடுவாய்.
ம. [பாட்டைப் பாடி முடிக்கின்றாள்]
ச. நல்லது! நல்லது! மனோரமா! மிகவும் நன்றாயிருக்கின்றது.
இதுவரையில் இவ்வாறு உருக்கத்துடன் நீ என்றும் பாடியதில்லை!
ம. எப்படியாவது உமது மனம் சந்தோஷமடைந்தாற் போதுமெனக்கு.
சந்தோஷந்தானா?
சு. கேட்கவும் வேண்டுமா?
ம. எனக் கென்னபரிசு கொடுக்கின்றீர் ஆனால்?
சு. பரிசா? என்ன வேண்டு முனக்கு?
ம. எனக்கு வேண்டியதைக் கொடுக்க உம்மால் ஆகுமோ என்னவோ?
சு. என்ன! என்னாலாகாத காரியமும் ஒன்றுண்டோ?
ம. ஆனால் இப்பொழுது நீர் கூறியது கியாபக மிருக்கட்டும்.
பிறகு கேட்கின்றேன் எனக்கு வேண்டியதை; இப்பொழுது
கேட்க விருப்பமில்லை. ஆயினும் நான் விரும்பியதைக்
கொடுப்பீரோ மாட்டீரோ என்று சந்தேகமாயிருக்கின்றது. எதோ
பார்ப்போம் முதலில் நீர் அணிந்திருக்கும் அம்மோதிரத்தைக்
கொடும்.
சு. இம்மோதிரமா?-இதை நான் நெடுநாளாய் அணிந்திருக்கின்றேன்-
என்-தகப்பனார் கொடுத்தது-
ம. சரி, ஒரு சிறிய மோதிரத்தைக் கொடுக்க யோசிப்பவர் நான்
விரும்பிய பொருளை எப்படிக் கொடுக்கப் போகின்றீரோ?
என்னை கேட்டால் நான் உடனே என் மோதிரத்தைக் கொடுத்திருப்பேன்.
வேண்டுமா?-
சு. மனோரமா! அப்படியல்ல-ஆயினும்-
ம. இப்படிக் கொடுமே, நான் பார்த்துவிட்டுத் தருகின்றேன்.
அதுவும் செய்யலாகாதா?
சு. இதோ பார்![மோதிரத்தைக்கொடுத்து] மனோரமா! இது
விலையுயர்ந்ததன்று. உனக்கு இதைக் கொடுப்பது நியாயமன்று
இதினும் நூறுமடங்கு விலையுயர்ந்த மோதிரம் நான் தருகின்றேன்.
ம. அதிருக்கட்டும். ராஜகுமாரா! இதோ பாரும் இம்மோதிரம்
என் சுண்டுவிரலுக்குச் சரியாக இருக்கின்றது. எனக்கென்றே
செய்தது போலிருக்கின்றதே! என்விரலில் என்ன அழகாயிருக்கின்றது
பாரும்- உமக்கு என் விரலை விட்டு இதைக் கழற்றிக்
கொள்ளமனம் இருக்கின்றதா? அப்படி வேண்டுமானால் எடுத்துக்
கொள்ளும்.-
சு. ஈசனே! ஈசனே!-
ம. அப்படி உமக்கு விரலில் மோதிரமில்லாது அரை வினாடியும்
கழிக்க இஷ்டமில்லையாயின் இதோ இம்மோதிரத்தை அணிந்து
கொண்டிரும். [தன்மோதிர மொன்றைக் கொடுக்கிறாள்]
சு. (அம்மோதிரத்தைப் பார்த்து) ஹா!
ம. ஆ! நான் என்ன புத்தியற்றவள்! என்னுடைய அற்பமோதிரத்தைத்
தாம் அணிவது தமது அந்தஸ்திற்கு ஏற்றதல்ல வென்பதை
யோசியாமற் போனேனே!
சு. [விரலிலதை யணிந்து] ஈசனே!
ம. ராஜகுமாரா! உம்முடைய மனதில் ஏதோ இருக்கின்றது. ஏன்
ஒளிக்கின்றீர்? இனியாவது என்னிடம் கூறலாகாதா? என் மனதில்
ஏதாவது இருந்தால் நீர் கேளா முன் நான் உமக்குக் கூறியிருப்பேன்.
சு. மனோரமா! உன்னிடத்திற் கூறுவதிற் பயனில்லை.
ம. அதெப்படி உமக்குத் தெரியும்? கூறும் நான் சொல்லுகின்றேன்.
உம்முடைய மனம் தான் என்ன கல்லோ?
சு. மனோரமா! என்னைக் கேளாதே இவ்விஷயத்தைப்பற்றி
மாத்திரம்; நான் உன்னை வேண்டிக்கொள்ளுகிறேன்.
ம. அப்படியே கேட்கவில்லை. ஆனால் நீரிப்படியிருப்பதற்கு
காரணம் நான் கூறுகின்றேன், நான் சரியாகக் கூறினால் ஆம்
என்று ஒப்புக்கொள்ளுகின்றீரா?
சு. எதோ சொல் பார்ப்போம்.
ம. நான் கேட்டதற்கு பதில் கூறும் சொல்லுகின்றேன்.
சு. அப்படியே ஆகட்டும்.
ம. உண்மைதானே?
சு. உண்மைதான். மனோரமா! நான் ஒரு முறை கூறினால்
மறுமுறை கூற வேண்டியதில்லை.
ம. [தன் முகத்தைத் திருப்பிக்கொண்டு] நீர்--காதல் கொண்டிருக்கிறீர்!
சு ஹா! [பெருமூச்செறிந்து பிறகு நகைக்கின்றான்.]
ம. நான் கூறியது சரிதானா?
சு. உம்!
ம. சரியானால் கூறுகின்றேன் என்றீரே?
சு. சரியல்லாவிட்டால்?
ம. இல்லையென்று சொல்லும்.
சு. உனக் கெப்படி தெரியும் அது?
ம. நீர் உண்மையா அல்லவா சொல்லும் முன்பு.
சு. உண்மைதான்--ஆயினும்--
ம. உண்மைதானே?
சு. உண்மைதான்.
ம. பார்த்தீரா நான் கண்டு பிடித்துவிட்டேன்!
சு. எப்படி கண்டு பிடித்தாய்?
ம. எப்படியோ கண்டு பிடித்தேன். அதை நான் உமக்குக்
கூறுவானேன்? ராஜகுமாரா! இதற்குத் தாம் வருத்தப்படுவானேன்?
சு. வருத்தப்படுவானேன் என்றா கேட்கின்றாய்?
ம. ஆம்.
சு. நான் காதல் கொண்ட பெண்ணைப் பெறுவது அசாத்தியமானால்?
ம. அசாத்தியமாவது? உமக்கெதுவும் அசாத்தியமில்லை யென்று
முன்பே நான் பலமுறை கூறியிருக்கின்றேனே!
சு. மனோரமா! மனோரமா! உனக்கொன்றும் தெரியாது அசாத்தியம்!
அசாத்தியம்!--
ம. ராஜகுமாரா! ஒன்றும் அசாத்திய மில்லை. இவ்வளவு தூரம்
சொன்னவர் மற்றதையும் சொல்லிவிடும்-- நான் கேட்பது தவறு
ஆயினும் கேட்கின்றேன். நீர் யார்மீது காதல் கொண்டிருக்கின்றீர்?
அப்பெண்ணின் பெயரைக் கூறும். எப்படியும் அவள்
உம்மை மணஞ்செய்து கொள்ளும்படியாக நான் செய்விக்கின்றேன்
பாரும். எப்படிப்பட்ட கஷ்டமாயிருந்தாலும் நான்
அதை நிவர்த்திக்கின்றேன். என் யுக்தியைப்பாரும் நீர் சொல்லும்.
சு. நான் உனக்குச் சொல்வதிற் சிறிதாயினும் பிரயோஜன மிருந்தாற்
கூறுவேன், சிறிதும் பயனில்லையே.
ம. உமக்கெப்படித் தெரியுமது? அதுதான் உமக்குத் தெரியாதென்கின்றேனே!
நீர் காதல் கொண்டிருக்கும் பாக்கியவதியின்
பெயரை மாத்திரம் கூறிவிடும் நான் பிறகு எல்லாவற்றையும்
சரிப்படுத்தி விடுகின்றேன். யார் அப்பெண்மணி? எந்த தேசத்து
ராஜகுமாரி? பெயரைச் சொல்லமாட்டீரா? நான் என்ன,
பொறாமைப்படப் போகின்றேன் என்றஞ்சுகிறீரா என்ன? -
பெயரைச் சொல்லாவிட்டால் போனாற் போகின்றது,
எப்படியிருப்பாளவள்? என்ன வயதிருக்கும்? என் வயதிருக்குமா?
ரூபவதியோ-- அல்லது என்னைப்போல்-- அவலட்சண முடையவளோ?
என்ன உயரமிருப்பாள்? ஏதாவது அடையாளங்களாவது கூறுமே -
சு. விதியே! விதியே! -
ம. ராஜகுமாரா! உம்மைப்போன்ற கடினசித்த முடயவரை நான்
இவ்வுலகில் எங்கும் கண்டதில்லை.
சு. அப்படியே இருக்கட்டும்.
ம. சரிதான், [ஒரு புறமாய்ப்போய் முகத்தைத் திருப்பிக்கொண்டு
உட்காருகிறாள்.]
சு. மனோரமா!
ம. ஏன்!
சு. என்ன முகம் ஒருவாறாய் திடீரென்று அங்குபோய் உட்கார்ந்தாய்?
ம. ஒன்றுமில்லை.
சு. என்னிடம் கூறமாட்டாயா?
ம. கூறிப்பயனில்லை.
சு. நான் ஏதாவது குற்றம் செய்தேனா? என்மீது கோபமோ?
ம. எனக்கும்மீது கோபமேன்? அப்படி யொன்று மில்லை.
சு. பிறகு என்ன?
ம. அது தான் கூறி பிரயோஜன மில்லை யென்றேனே, உம்மாலாகாது
என்மன சஞ்சலத்தை போக்க.
சு. - பிறகு உன்னிஷ்டம்!
ம. இப்பொழுதுமக்கு எவ்வளவு வருத்த மாயிருக்கின்றது!
அப்படித்தான் பிறருக்கு மிருக்கு மென்று தான் ஏன் யோசிக்கலாகாது?
ஆயினும் உமக்கிருக்கும் கடினசித்த மெனக்கில்லை.
ராஜகுமாரா! நான் ஏன் ஒருவாறாய் இருக்கின்றேன் சொல்லவா?
நான் - காதல் கொண்டிருக்கின்றேன். காதல் கொண்டிருந்தால்
வருத்தப்படுவானேன் என்று கேட்பீரோ? நான் காதல்
கொண்ட புருஷனைப் பெறுவது அசாத்தியம். ஏன் அசாத்தியம்
என்று கேட்பீரோ? நான் காதல் கொண்டிருக்கும் புருஷன்
பதினாயிரம் சுத்த வீரர்களுடன் தான் தனியாய் நின்று
போர் புரிந்து வெல்லவல்லவாராயினும் உலகில் ஒன்று
அறியாததில்லை யென்னும் சக்தி வாய்ந்தவராயினும், தான் காதல்
கொண்டிருக்கும் பெண்ணைக் கண்ணெடுத்துப் பார்த்து "நான்
உன்மீது காதல் கொண்டிருக்கின்றேன்" என்று கூற
சக்தியில்லாதவர். என்தலைவிதி! நான் என்ன செய்வது?
சு. ஐயோ! [பெருமூச்செறிகிறான்]
ம. ராஜகுமாரா! அவர் யார் என்றறிய உமக்கு விருப்ப மில்லையோ?
சு. யார்?
ம. உண்மையில் அறிய இஷ்டமிருந்தால் சொல்லும் சொல்லுகின்றேன்.
சு. சொல்.
ம. [அருகில்வந்து] சொன்னால் என்ன தருகின்றீர் எனக்கு? உம்-
உமக்கேன் அந்த கஷ்டம்? நீர் ஒன்றும் எனக்குத் தரவேண்டியதில்லை.-
நான் கொடுப்பதையாவது பெற்றுக் கொள்ளுகின்றீரா?
சு. சரிதான்.
ம. சொல்லவோ அவர் பெயரை?
சு. சொல்.
ம. உம்! என்கணவருடைய பெயரை நான் சொல்லலாமா?
சு. உனக்கின்னும் விவாகமாகவில்லையே?
ம. விவாகமாகாவிட்டால் என்ன? எப்பொழுது நான் அவர் மீது
காதல்கொண்டு விட்டேனோ அப்பொழுதே அவர் எனக்குப்
பதியானார் அவர்.
சு. அவர் ஒருவேளை உன்னை விவாகஞ் செய்துகொள்ளாவிட்டால்?
உன் மீதவருக்குக் காதல் இல்லாவிட்டால்?
ம. இல்லாவிட்டாலுமென்ன? என்மனம் அதன் நிமித்தம் மாறுமோ
அல்லது என்னெண்ணம் மாறுமோ? ஒருகாலு மாறாது.
சு. ஒருவேளை அவர் வேறுஸ்திரீயை மணம் செய்துகொண்டால்?
ம. வேறு ஸ்திரீயை-மணஞ் செய்துகொண்டாலா?
சு. ஆம்.
ம. அப்பொழுது மென்ன?
சு. ஆம் அப்பொழுதென்ன செய்வாய்?
ம. அந்த க்ஷணம் இறந்து சுவர்க்கம் சென்று அவர் என்பதியாக
அங்கு வருமளவும் எதிர்பார்த்திருப்பேன்.
சு. மனோரமா! மனோரமா!-
ம. என்ன பிரா- என்ன ராஜகுமாரா?
சு. ஒன்றுமில்லை.
ம. உமக்கு என்காதலன்-யார் என்றறிய-விருப்ப மில்லாவிடின்
இல்லை யென்று சொல்லி விடும். நான் சொல்லவில்லை.
சு. இல்லை இல்லை சொல்.
ம. நான் அவர் பெயரைச் சொல்லமாட்டேன். அவர் படத்தைக்
காண்பிக்கிறேன்.
சு. எதோ?
ம. இதோ-[ஒரு கைக்கண்ணாடியை அவன் கையில் கொடுக்கிறாள்]
சு. இதென்ன வெறுங் கண்ணாடியைக் கொடுத்தாயே?
ம. அதில் இருக்கின்றது என் காதலருடைய படம்.
சு. எதோ?
ம. பாரும் தெரியும்.
சு. மனோரமா! [திரும்பிப் பார்க்க, மனோரமா அவனை முத்தமிட்டுச்
சரேலென்று வெளியே போகிறாள்]-சுந்தராதித்யா! சுந்தராதித்யா!
உன்சுகமெல்லாம் இன்றுடன் ஒழிந்ததே! ஒழிந்ததே!
இனி நிமிஷமேனும் நிம்மதி என்பது நின்மனதிற்குக்
கிட்டப்போகின்றதா?-சீ! என்னைப்போன்ற பாக்கியசாலிகளு
மிவ்வுலகிலுண்டோ என நான் இறுமாந்திருந்ததற்கு
இப்பொழுதென்னை யொத்த துர்ப்பாக்கியர்களும்
கிடைப்பரோ என்றேங்கி நிற்கவேண்டியதாயிற்றே!-நான்
காதல் கொண்டிருக்கின்றேன் என்று கூறவும்
சக்தியற்றவனாயிருக்கின்றேனே!-ஐயோ பாபம்! மனோரமா என்ன
வெளிப்படையாகத் தனக்கென்மீது இருக்கும் காதலைக்
கூறினாள்! நான் ஏதாவது பதில் கூறுவேன் என்று ஆவலுடன்
எதிர்பார்த்த அவள் மனங்குளிர ஒரு வார்த்தையும்
கூறமனோதிடனற்றவ னானேனே! ஐயோ! முடிவில் என்ன
புத்திசாதுர்யமாகத்தன் காதலன் நான்தானென வெளியிட்டுச்
சென்றாள்! என் மனதிற் கிசைந்த மனோரமா! உன்னுடன்
மகிழ நான் கொடுத்துவையாப் பாவியாயிருக்கின்றேனே!
மனோரமா! மனோரமா! - ஆ! என்னைத் தன் கனிவாயால் என்ன
காதலுடன் என்ன ஆவலுடன் என்ன விநயத்துடன் என்ன
நாணத்துடன் முத்த மிட்டுச் சென்றாள்! அதைநான் எந்த
ஜன்மத்தில் மறக்கப்போகின்றேன்? ஐயோ, நான் ஏன் பிறந்தேன்?
ஏன் பிறந்தேன்? இம்மாது சிரோன்மணியின் காதலைப் பெற்றும்
இவளை மணம்புரிய அசக்தனாயிருக்கின்றேனே! - ஆ!
சத்தியவதி! சத்தியவதி! - சீ! எப்படி யிருந்தபோதிலும்
மனிதன் மனிதனே! நாம் ஒன்றை நினைக்க அது ஒழிந்திட்டு
மற்றொன்றாகின்றது! இக்காதலை இதனுடன் அடக்கிவிட
வேண்டும், மனோரமாவும் என்மீது கொண்ட காதலை மறக்கச்
செய்ய வேண்டு மென்று சற்று முன்பாகத் தீர்மானித்திருந்த
நான், இப்பொழுது முன்னிருந்ததை விட பதின்மடங்கு இக்காதலை
விர்த்தி செய்து விட்டேனே யொழிய வேறொன்றில்லை!
சத்தியவதி! சத்தியவதி! உன்கதி இப்படியு மாயிற்றா! நான்
உன்னை விவாகஞ் செய்து கொண்ட போதிலும் என்னால் நீ
சுகமடையப் போகின்றதில்லை! ஐயோ! நான் உன்னை எப்படி
மணம் புரிவேன் இப்பொழுது? வேறொரு பெண் மீது
உண்மையான காதல் கொண்டிருக்க உன்மனம் தான் ஒப்புமோ
உன்னை நான் விவாகஞ் செய்து கொள்ள? ஐயோ! இவ்விஷயங்களை
யெல்லாம் நீ அறிவாயாயின் நீ என்னை வெறுக்காத
போதிலும் உன் மனம் மாறுவாய்! உன்மனதைப் புண்படுத்த
வேண்டிய காலமும் வாய்த்ததல்லவா! சிறு வயதில் நாம்
ஒருங்கு விளையாடும் பொழுது நீ என்னை வேடிக்கை யாகப்
புருஷன் எனவும் நான் உன்னை என் பெண்சாதி எனவும் கூறி
வந்த வண்ணமே நாம் வயதடைந்தும் நிறைவேறிற்றே என்று
சந்தோஷித்தோமே! அதவ்வளவும் என்னவாயிற் றிப்பொழுது?
சீ! சுந்தராதித்யா! என்ன யோசித்துக்கொண்டிருந்தாய்
இது வரையில்? என்ன யோசித்துக் கொண்டிருந்தாய் இது
வரையில்? அப்படியா சமாசாரம்! சீ! நீ சத்தியவதியைத்
தான் மணம்புரிய வேண்டும்! சே! என்ன என் மனதை அது
சென்றவழியெல்லாம் விட்டிருந்தேன் இது வரையில்! மனோரமாவை
நான் மணப்பதாவது! மறக்கவேண்டும், மறக்கவேண்டும்,
மறக்கவேண்டும்! அடியுடன் மறக்கவேண்டுமவ்வெண்ணத்தை!--
ஐயோ! அவளை நான் மணம் புரியாது சத்தியவதியை
மணப்பேனாயின் மனோரமா அவள் கூறிய வண்ணம்
மறிக்கப்போகின்றாள்! இவளை மணந்தால் அவள் இறப்பாள்!
அவளை மணந்தால் இவள் இறப்பாள்-- ஐயோ! இந்த தர்மசங்கடத்திற்கு
நான் என்ன செய்வேன்? நான் இறந்தால் இருவருமிறப்பார்கள்! தீர்ந்தது!--
பின்புறமாக சுகுமாரன் வருகிறான்.
சுகு. சுந்தரா!
சு. குமாரா--
சுகு. சுந்தரா! நான் முன்பே கேட்க சற்று யோசித்தேன். என்ன
ஒருவாறிருக்கின்றாய் இரண்டு தினங்களாக? என்ன இக்கட்டு
வந்தபோதிலும் முகவாட்ட மில்லாதிருந்த நீ இப்பொழுது
ஒன்று மில்லாதிருக்கும் பொழுது வாட்டங் கொண்டிருப்பானேன்?
சு. ஒன்றும் விசேஷமில்லை--சீ! என்ன புத்தி-!-குமாரா
எனக்கிங்கிருப்பதிஷ்டமில்லை. உடனே நாம் புறப்பட்டு நமது
பட்டணம் போவோம்!
சுகு. சீ சீ! உனக்கென்ன பயித்தியம் பிடித்திருக்கின்றதா என்ன?
வேளைக் கொருவார்த்தையா? நேற்றையதினம்தான் மகாராஜாவிடம்
வருகிற புதன்கிழமை போகின்றோமெனக் கூறினோம்!
இப்பொழுது புறப்படுவதாவது? நான் இன்னும் இரண்டு தினம்
அதிகமாக இங்கிருந்து செல்லலாகாதா யெனக் கேட்கலாமென்றல்லவோ
வந்தேன்!--
சு. பிறகு?--
சுகு. சுந்தரா! என்னமோ விசேஷமுன்னிடம் இருக்கின்றது. சில
தினங்களாக நீ சரியாக உண்பது மில்லை, உறங்குவது மில்லை
உனக்குரிய வேலைகளையும் வழக்கப்படிச் சரியாகப் பார்ப்பதில்லை;
எந்நேரமும் வெறும் ஆகாயத்தை உற்றுப்பார்த்த வண்ணமாய்
எதையோ பற்றி யோசித்துக்கொண்டிருக்கின்றாய்? என்ன
விசேஷம்? என்னிடம் ஒளியாதே.
சு. குமாரா! என் மனம் ஒருவாறிருக்கின்றது. அதற்குக் காரணம்
கேளாதே இப்பொழுது, பிறகு சொல்லுகின்றேன். வேறு
ஏதாவது பேசுவோம்.
சுகு. அப்படியே பேசுவோம். எதைப்பற்றி பேசுவது?--ஆ! சுந்தரா,
இந்த மனோரமாவைப்பற்றி என்ன நினைக்கின்றாய்?
சு. யாரைப்பற்றி?
சுகு. மனோரமாவைப்பற்றி, சுந்தரா! உடம் பொன்றும் உனக்கு
அசௌக்கிய மில்லையே?
சு. இல்லை இல்லை.--
சுகு. அவள் குணத்தைப்பற்றி என்ன நினைக்கின்றாய்?
சு. ஏன்? நற்குணமுடையவள் தான். என்னையேன் கேட்கின்றாய்?
சுகு. இல்லை கேட்டேன்.
சு. நீ என்ன நினைக்கின்றாய்?
சுகு. சுந்தரா! நீ தான் உன்மனதிலிருப்பதை எனக்குக் கூறாவிட்டாலும்
நானும் அப்படிச் செய்தல் சரியன்று. சுந்தரா! நான்
இங்கு வந்தது முதல் இப்பெண்மணியை ஆராய்ந்து வந்தேன்.
மிகவும் புத்திசாலியாகவும் நற்குணமுடையவளாகவும்
தோற்றப்படுகின்றாள்! என்னையு மறியாதபடி இவள் மீது நான் காதல்
கொண்டுவி்ட்டேன். அவளும் என் மீது காதல் கொண்டிருக்கின்றாளென்று
நினைக்கின்றேன். இன்னும் சிலதினங்கள் பொறுத்து
அவள் பிதாவை எனக்கு மனோரமாவை கடிமணம் புரியக்
கேட்கப்போகின்றேன். அதன் பொருட்டே நான் சற்று
முன்பாக இன்னும் சிலதினங்கள் அதிகமாக இங்கிருந்து
போகலாகாதா என்று யோசித்ததாகக் கூறியது. உன்னிஷ்டமென்ன?
நீ என்ன சொல்லுகின்றாய்?
சு. நானா?-- அவள் உன் மீது காதல் கொண்டிருக்கின்றாளென
எப்படித் தெரியுமுனக்கு?
சுகு. அவள் முகத்தைப்பார்க்கும் பொழுது எனக்கப்படி
தோன்றுகின்றது. நீ என்ன சொல்லுகின்றாய்?
சு. நான் என்ன சொல்வது? அப்படியாயின் - மிகவும்
சந்தோஷந்தான் -
சுகு. சுந்தரா! நாமிருவரும் ஒன்றாய்ப் பிறந்து வளர்ந்து இவ்வளவு
அந்யோந்யமாயிருப்பதற்கு நமக்கிருவருக்கும் ஏககாலத்திலேயே
விவாகமாகவேண்டும். நீ சத்தியவதியை மணம் புரியும்
தினமே நானும் இந்த மனோரமாவை மணம் புரிந்தால் என்ன
சந்தோஷமாயிருக்கும் நம்மிருவருக்கும்! -
சு. குமாரா! அப்படியே! அப்படியே! நான் சத்தியவதியை மணம்
புரியும் தினமே நீயும் இந்த ராஜகுமாரியை மணம் புரிவாய்!
இது சத்தியம்!
சுகு. சுந்தரா! எங்கே போகின்றாய்?
சு. குமாரா! எனக்குக் கொஞ்சம் முக்கியமான வேலையிருக்கின்றது.
இதோ வந்துவிட்டேன். [விரைந்து போகிறான்.]
ஜெயதேவன் மற்றொருபுறமாக வருகிறான்.
சுகு. ஜெயதேவா, இப்பொழுது, சுந்தராதித்யன் கூறிச் சென்றது
உன் செவியில் விழுந்ததோ?
ஜெ. ஆம், நான் வரும் பொழுது கேட்டது.
சுகு. இப்பொழுதாவது நீ இதுவரையில் என்னிடம் கூறிய தெல்லாம்
பொய்யென ஒப்புகொள்ளுகின்றாயா?
ஜெ. இன்னும் உமக்கு விவாகமாகவில்லை; அதுவரையில் ஒப்புக்
கொள்ளமாட்டேன்.
சுகு. சுந்தரனோ மனோரமாவின் மீது காதல் கொண்டிருக்கின்றானென
நினைக்கின்றாய்?
ஜெ. நினைப்பானேன்?
சுகு. சீ! இனியாவது என் சொல்லைநம்பு, அவன் சத்தியவதியின் மீது
காதல் கொண்டிருக்கின்றான்; அவளை யன்றி ஒரு ஸ்திரியை
மணம் புரியான், கண்ணெடுத்தும் பாரான், அதற்கென்ன தான்
காப்பாற்றிய பெண் தனக்குபசரணை செய்தால் அசௌக்கிய
மாயிருக்கும்பொழுது, எல்லோரும் அன்புபாராட்டுவார்களன்றோ?
அவ்வளவே! அப்படி யேதாவதிருந்தால் அவன் என்னிடம்
கூறியிருப்பான். நான் அவள் மீது காதல் கொண்டிருப்பதாகக்
கூறின பிறகாவது சொல்லியிருக்க மாட்டானா? எமது
அந்யோந்யத்தை நீ அறியாய், நாங்கள் ஒருவருக்கொருவர் ஒன்றையும்
ஒளியோம்.
ஜெ. சற்றுமுன்பாக ஏன் ஒருவாறு இருக்கின்றாயென நீர் கேட்டதற்கு
அவர்பதில் ஒன்றும் கூறவில்லையே?
சுகு. காரணமில்லாவிட்டால் என்ன கூறுவது? எல்லோருக்கும் சுபாவம்தான்
ஒவ்வொரு வேளையில் காரணமின்றி ஒருவாறிருப்பது.
இதுவரையில் இப்படியிருந்ததில்லை உண்மையே, ஆயினும்
என்ன காரணமிருக்கப் போகின்றது? இருந்தால்
கூறியிருப்பான் என்னிடம்.
ஜெ. அக்காரணத்தை சீக்கிரம் காண்பிக்கிறேன்! வாரும் நாம்
ராஜகுமாரியிடம் போவோம்! (போகிறார்கள்.)
------------------------
ஐந்தாம் காட்சி.
இடம்-மதுரையில் அரண்மனையைச் சார்ந்த நந்தவனம்.
காலம்-மாலை. மனோரமா மஞ்சத்தின் மீது படுத்துறங்குகின்றாள்.
சுந்தராதித்யன் மெல்ல வருகின்றான்.
சு. சீ! என்ன காலதாமதஞ் செய்துவிட்டேன்! காலங் கழியக்
கழிய என் மனோதிடமும் தீர்மானமும் பலங்குன்றியே வருகின்றது!
இன்னும் கொஞ்சம் தாமதித்தால் அடியுடன்
அழியும்-எங்கே மனோரமா? இங்குதான் என்னை எதிர்பார்த்திருப்பதாகக்
குறித்தாள். அதோ உறங்குகின்றாள்! எழுப்புவோமா?
தானாக எழுந்திருக்கட்டும்-ஆ! மனோரமா! மனோரமா!-
ஐயோ! இப்பெண்மணியிடம் அவள் என்மீது அழி
யாக்காதல் கொண்டிருக்கின்றாளென நான் உறுதியாயறிந்தும்,
இக்காதலை மறந்து வேறொருபுருஷனை நீ மணம் புரிவாய்
என்று என் வாய்திறந்து நான் எப்படிக் கூறப்போகின்றேன்!
கண்ணே! கண்ணே! என்னை உன் காதலன் என நினையாதே
உன்னாவியழிக்க வந்த பாதகன் என நினைப்பாய். ஐயோ!
இப்பாதகன் மீது ஏன் காதல் கொண்டனை? -இனி நான்
தாமதிக்கலாகாது. இன்னும் சற்று நேரம் இம்மங்கையர்க்கரசியின்
மதிவதனத்தை நோக்குவேனாயின் எனக்கிப்பொழுது
இருக்கும் சிறிது மனோதிடமும் போய் என் தீர்மானங்கள்
எல்லாம் பறந்தோடிப்போம். எழுப்பவேண்டும்-ஐயோ!
எழுப்புமுன் இன்னும் ஒருமுறை என் பாவிக்கண்கள் புனிதமாம்படி
உனது ரூபலாவண்யத்தைச் சற்று பார்க்கிறேன் பார்க்கின்றேன்!
உனது சௌந்தரியத்தின் தேஜசும் குணத்தின்
பெருமையும் இத்தன்மையதென இதுவரையில் நான் நன்றாய்
அறிந்தவனல்லன், இப்பொழுதே அறிகின்றேன் அறிகின்றேன்!
உலகில் ஒருவன் ஒரு பொருளை இழக்கப்போகும் சமயத்திற்தான்
அதன் பெருமையையும் குணத்தையு நன்றாயறிகின்றான்.
எழுப்புவதா? ஐயோ! எழுப்பு வேனாயின்! சுந்தரா! சுந்தரா!
சுந்தரா! உன்கதி யிப்படியும் இருக்கவேண்டுமா? எழுப்பு முன்
என் காதலியின்-என்காதலி! இன்னும் எத்தனை வினாடிக்கு?
மனோரமாவின்-கோவைக்கனியைக் கரித்த அதரத்தினிற்கு
ஒருமுறை முத்தமிடுகின்றேன். இது நியாயமோ? சீ! நியாயமாயிருந்தாலும்
சரி அநியாயமாயிருந்தாலும் சரி! ஒருமுறை முத்தமிடுகின்றேன்.
மறுபடியும் எனக்குக் கிட்டப் போகின்றதோ?
பாவி நான் ஜன்மமெடுத்ததற்கு ஒருமுறையாவது இச்சுகத்தையனுபவித்து
என் ஜன்மம் சபலமாகட்டும்! (முத்தமிடுகின்றான்)
ஐயோ! நான் இந்தட்சணம் இறந்துபோகலாகாதா! இறந்துபோகலாகாதா!
ஈசனே! ஈசனே! நீர் இருப்பது மெய்யானால் இட்சணம்
இப்பாவியைக் கொன்றுவிடும்! இனி நான் உயிர்வாழந்தென்னபயன்?
ஐயோ நான் முத்தமிடாதிருக்கலாகாதா? இப்பொழுது
என் மனதை ஆயிரமடங்கு அதிகமாக உந்துகின்றதே!
என் செய்வேன்! என் செய்வேன்! என் கண்ணே! என்
கண்மணியே! என் கண்ணின் கருமணியே! என்காதற்கிளியே!
என் கருத்திற்கிசைந்த மானே! என் மனதைக்கவருந்தேனே!
என்னாருயிர்ப்பிழம்பே! என் இன்னுயிர்க்கற்பகமே! என்
உயிரினுக்குயிரான உயிரே! மனோரமா! மனோரமா! உன்னை இன்னும்
ஒருமுறை முத்தமிடுகின்றேன் இதே கடைசிமுறை! இதே
கடைசிமுறை! (முத்தமிடுகிறான், மனோரமா எழுந்திருக்கிறாள்.)
ம. பிராணநாதா! எப்பொழுது வந்தீர்? நெடுநாழியாக என்பொருட்டு
இங்கு காத்துக்கொண்டிருந்தாற்போலிருக்கிறதே; என்னை
மன்னிக்கவேண்டும். உமதுவரவை எதிர்பார்த்து நேடுநேரமாயும்
நீர் வாராமையால் அப்படியே உறங்கிவிட்டேன். ஏன் நிற்கின்றீர்?
உட்காரும்.
க. மனோரமா-இப்பொழுது சற்றுமுன்பாக-என்னை அழைத்த
வண்ணம் இனி மறுபடியும் அழைக்காதே.
ம. பிராணநாதா, என்ன மறுபடியும் பழயகுருடி கதவைத்திறவடி
என்று ஆரம்பித்தீரே; என்பேதை மனதை நீர் இதுவரையில்
பரிசோதித்ததெல்லாம் போதாதோ? இனியாவது நாம்
சந்தோஷமாய்க் காலம் கழிக்கலாகாதா? ஐயோ! மறுபடியும்
உமது முகத்தைச் சுளித்துக்கொள்ளுகின்றீரே; இது என்மனதை
எவ்வளவு வருத்துகின்றதென்று உமக்குத் தெரியவில்லையே.
இன்னும் வேண்டாம், பிராணநாதா, சந்தோஷமாய்
என்னை ஒருமுறை பாரு மிப்படி.
சு. மனோரமா-இதென்ன இதுவரையில் அழைக்காத மாதிரியாய்
இன்றைக்கு- புதிய மாதிரியாய் அழைக்கின்றாய்?
ம. ஐயோ! இன்னும் பழயகதையில் தானிருக்கின்றீரே!
பிராணநாதா, இன்னும் என்னிடம் உமக்கு லஜ்ஜை யென்ன? நீர் என்
மீது காதல் கொண்டிருப்பதாக என்னிடம் கூறவேண்டியதில்லை
நான் அதை அப்பொழுதே அறிந்துகொண்டேன்.
சு. நான் உன்மீது காதல்கொண்டிருப்பதாகக் கூறவில்லையே! யார்
கூறியது?
ம. நீர் வாய்திறந்து கூறவும் வேண்டுமா? உமது கண்களை
நோக்கும்பொழுதே அதை நான் அறியமாட்டேனோ? வேறு
அத்தாட்சியும் வேண்டுமோ? அப்படி உமக்கு வேண்டுமானால்
அதையும் தருகின்றேன்.
சு. வேறு அத்தாட்சியாவது? மனோரமா நீ என்னவோ தவறான
எண்ணங்கொண்டிருக்கின்றாய்-நான் உன்மீது காதல்கொண்டில்லை.
ம. என்ன? என்ன? ஏன் பொய்யுரைக்கின்றீர் பிராணநாதா, இது
ஒரு வேடிக்கையா உமக்கு?
சு. வேறு அத்தாட்சியிருப்பதாகக் கூறினாயே, என்ன அத்தாட்சி?
ம. அந்த அத்தாட்சியைக் கொடுத்தால் அப்பொழுதாவது
ஒப்புக்கொள்ளுகின்றீரா?
சு. என்ன சொல்?
ம. இதென்ன பாரும். (ஒரு நிருபத்தை வெளியில் எடுக்கிறாள்)
சு. மனோரமா! இதெப்படி உனக்குக் கிடைத்தது? இதை இரண்டு
தினமாகக் காணோமென்று தேடிக்கொண்டிருந்தேனே!
ம. ஆ! நீர் எழுதியதுதானே இது? நன்றாக அகப்பட்டீர்! இனி
அல்லவென்றாலும் நான் ஒப்புக்கொள்ளுவேனா? இனியென்ன
சொல்லுகின்றீர்?
சு. அதைக்கொடு இப்படி.
ம. கொடுத்தால் என்ன தருகின்றீர்?
சு. கொடு இப்படி. (வாங்கி கிழித்தெறியப்பார்க்கிறான்)
ம. பிராணநாதா! பொறும் பொறும்! ஏன் அதைக் கிழிக்கின்றீர்?
வேண்டுமென்றால் அதில் என்ன எழுதியிருக்கின்றதென்று
பார்த்துவிட்டு பிறகு கிழித்துவிடும்.
சு. சுந்தரா சுந்தரா!-மனோரமா-இதை யொன்றும் நம்பாதே
நான் எழுதிய தவ்வளவும் பொய்.
ம. பிராணநாதா! உமது அழகியவாயால் என்னிடம் நீர் இதைப்பற்றி
பொய்யுரைத்தல் நியாயமன்று.
சு. மனோரமா-நான் சொல்வதைக் கேள் இதை நம்பாதே, நான்
உன்மீது காதல் கொள்ளவில்லை.
ம. என்ன என்ன? என்னைப் பார்த்து சொல்லும் இன்னொரு முறை.
சு. நான் உன்மீது காதல்கொள்ளவில்லை!-ஆகவே –
ம. பொறும் பொறும்! ஏன் முகத்தை அப்படித் திருப்பிக் கொள்ளுகின்றீர்?
பிராணநாதா,நான் சத்தியமாகக் கேட்கின்றேன்,என்
முகத்தை ஏறெடுத்துப்பார்த்து உன்மீது உண்மையில் நான்
காதல்கொள்ளவில்லை என்று கூறிவிடும்,உம்மை நான் பிறகு
ஒரு தொந்திரவும் செய்யவில்லை. வேடிக்கைக்கன்றி நீர் ஒருகாலும்
பொய்யுரைக்கமாட்டீர் எனக்குத் தெரியும்.எதோ சொல்லும்?
எதோ என்னைப்பாரும், பிராணநாதா, என்மீது உமக்குச்
சிறிதும் காதல் இல்லையே?உண்மைதானா சத்தியந்தானா?
சு. மனோராமா,நான் உன்மீது காதல்கொண்டிருப்பது உண்மையே-
ம. உண்மைதானே? உண்மைதானே?
சு. உண்மைதான்-ஆயினும்-
ம. அப்பா! பிராணநாதா! அவ்வளவு போதுமெனக்கு;உமது வாயால்
நீர் என்மீது உண்மையாகக் காதல்கொண்டிருப்பதாக நீர்கூற
என் செவியாற நான் கேட்டபின் எனக்கு வேறென்ன வேண்டும்?
இனி இப்புவியில் நான் பெறவேண்டிய பேறுவேறொன்றில்லை,
நான் இந்தட்சணம் இறந்தாலும் சம்மதம்தான். பிராணநாதா,
இனி எனக்கென்ன வேண்டுமென்றாலும் கட்டளையிடும் செய்கின்றேன்.
சு. ஆனால் என்னைப் பிராணநாதா என்றழைக்காதே இனி.
ம. என்ன பிராணநாதா! உம்மைப் பிராணநாதா என்றழைக்கலாகாதென்றா
கட்டளையிட்டீர் பிராணநாதா? அது ஏன் பிராணநாதா
அப்படி? பிராணநாதா! சொல்லும் பிராணநாதா! போம்
பிராணநாதா!நான் கேட்பதற்குப் பதில்கூறாதிருக்கின்றீர்
பிராணநாதா!
சு. மனோராமா! இதுதானோ என்சொற்படி நடப்பது நீ?
ம. பிராணநாதா,இது உமக்கு நியாயமாகத் தோன்றுகிறதாயென்று
நீரே யோசித்துப்பாரும்; நீர் மாத்திரம் உம திஷ்டப்படி
கண்ணே யென்றும் கண்மணியே யென்றும் அழைக்கலாம்
நான் மாத்திரம் உம்மைப் பிராணநாதா என்றழைக்கலாகாதோ?
சு. என்ன? நான் எங்கு உன்னை அவ்வண்ணம் அழைத்தேன்?
ம. பிராணநாதா! வேண்டாம் வேண்டாம் ஒரு பொய்யுரைத்தது
போதும். சற்றுமுன்பாக நான் உறங்கிக்கொண்டிருந்தபொழுது
அழைத்தீரா இல்லையா?
சு. அது உனக்கெப்படி தெரிந்தது? நீ விழித்திருந்தாயோ?
ம. பிராணநாதா! என்னை மன்னிக்கவேண்டும் நான் தூங்கிக்கொண்டிருந்தது
உண்மைதான் நீர் வந்து முத்தமிட்டவுடன் விழித்துக்கொண்டேன்.
ஆயினும் இன்னும் நீர் என்ன செய்கின்றீரெனக்
கண்டறிய உறங்குகின்றாற் போலிருந்தேன்.
சு. மனோரமா, இது நியாயமா? முன்பென்ன வென்றால் என் நிருபத்தை
யெடுத்து வைத்துக்கொண்டிருந்தாய், இப்பொழுது
உறங்குகின்றாற்போல் பாசாங்குசெய்தாய், இது உன்னையொத்த
பெண்களுக்கழகோ?
ம. பிராணநாதா, நான்தான் தவறு என்று ஒப்புக்கொண்டேனே;
என்னை மன்னியும் பிராணநாதா, உம்மீதுள்ள காதலினாலேயேயன்றோ
நான் இவைகளை யெல்லாம் செய்தது? ஆகவே நீர்
அதை மன்னியாவிட்டால் வேறு யார் மன்னிக்கப்போகின்றனர்?
அன்றியும் நான் உறங்குகின்றாற்போல் பாசாங்கு
செய்யாவிட்டால் என்னை அவ்விதமாக அழைத்து மறுபடியும்
முத்தமிட்டிருப்பீரா?
சு. போனது போகட்டும்! மனோரமா! நான் உனக்கு ஒரு
கட்டளையிடப்போகின்றேன் அதன்படி நடக்கின்றாயா மாட்டாயா?
ம. பிராணநாதா யென்று நான் உம்மை அழைக்கலாகாது என்று
மாத்திரம் கட்டளை யிடாதீர், வேறு எந்தகட்டளையாவது இடும்
செய்கின்றேன்.
சு. வீண்வார்த்தை!- மனோரமா! நான் சொல்வதை கவனமாய்க்
கேள். நான் உன்மீது காதல்கொண்டிருக்கின்றேன் என்பது
உண்மையே, ஆயினும் ஒரு காரணம் பற்றி நான் உன்னை
விவாகஞ் செய்துகொள்ள முடியாது. அக்காரணத்தை இன்னதென்று
நீ அறிய விரும்பாதே! தெரிந்தாலும் உன்னால் நிவர்த்திக்க முடியாது,
ஆகவே என்கதி இப்படியிருக்க, நீ வீணில்
என்மீது காதல்கொண்டு பயனென்ன? இக்காதலை அடக்கி
விடு அடியுடன் ஒழித்துவிடு. இதனாலொன்றும் நீ பயனடையப்
போகின்றதில்லை.
ம. பிறகு? இன்னும் உமக்கிஷ்டமானதையெல்லாம் சொல்லும்-
அப்புறம்?
சு. நான் பரிகாசம் பண்ணுகின்றேனென எண்ணவேண்டாம்,
உண்மையில் நான் உன்னை விவாகஞ் செய்துகொள்ள முடியாது.
ஆகவே என்னை மறந்துவிட்டு வேறு தக்க புருஷனை நீ மணம்புரிவாய்.
என்னைக் கேட்கும் பட்சத்தில் சுகுமாரராஜனை மணம்புரியும்படி
கூறுவேன். சுகுமாரராஜன் சிறந்த புத்திசாலி, நற்குண
நற்செய்கையுடையவன், பிறர் நன்மையை நாடுதலே அவனது
சுபாவம், பரிசுத்தமான மனதுடையவன், அவனைப்பார்க்கிலும்
சிறந்த புருஷன் உனக்கிவ்வுலகில் கிடைப்பது அசாத்தியம்.
அன்றியும் அவன் உன்மீது காதல்கொண்டிருக்கின்றான், அப்படிப்பட்ட
மகாபுருஷனை விட்டு, என்மீது நீ காதல்கொண்டு பயனென்ன?
நான் புத்தியற்றவன், தீயகுணமுடையவன், சுய நன்மையையே
நாடுபவன், அழுக்கு மனதுடையவன், என்மீதிற் காதல்
கொண்டென்ன பயன்? அன்றியும் நான் உன்னை விவாகஞ்
செய்துகொள்ள முடியாது.
ம. தீர்ந்ததா? இன்னும் ஏதாவது இருக்கின்றதா? நீர் உமதெண்ணத்தை
கூறிவிட்டீரா? நான் என தெண்ணத்தைக் கூறுகின்றேன்.
எனக்கு நீர் கூறிய அந்த நற்குணமெல்லாம் அமைந்த
புருஷன் வேண்டாம், நீர் கூறியபடி புத்தியற்றவரும் தீயகுணமுடையவரும்
சுயநன்மையே நாடுபவரும் அழுக்கு மனதுடையவருமான
புருஷனே வேண்டும்; அன்றியும் என்னைத்தான் விவாகஞ்
செய்துகொள்ளமுடியாது என்று சொல்பவரையே நான்
விவாகஞ் செய்துகொள்ளவேண்டும்.
சு. ஈசனே! ஈசனே! -மனோரமா, இப்படி வேறுயாராவது நல்லதை
விட்டு தீயதைத்தேடுபவருமுளரோ இவ்வுலகில்?
ம. இவ்வுலகில் தான் காதல் கொண்டிருக்கும்பெண்ணை, அவள்
தன்மீது காதல்கொண்டிருக்கிறாளென வறிந்தும், வேறொரு
புருஷனை விவாகஞ்செய்துகொள் என்று சொல்பவரும் வேறு
உளரோ? அதைமாத்திரம் ஏன் யோசிக்லாகாது?
சு. மனோரமா, நான்சொல்வதைக் கேள் சுகுமாரனை நீ வெறுத்தால்
அவனுக்கு மிகவும் வருத்தமுண்டாகும் என்று ஏன்யோசிக்கமாட்டேன்
என்கின்றாய்?
ம. நீர் என்மீது காதல் கொண்டிருப்பதாகக் கூறிவிட்டு பிறகுவெறுத்தால்
எனக்கு எவ்வளவு மனவருத்தமுண்டாம் என்று
ஏன் யோசிக்கமாட்டேன் என்கின்றீர்?
சு. ஐயோ! நீ மறுத்தால் சுகுமாரன் உயிர் விடுவான் பிறகு அந்த
பாபம் உன்னைத்துடரும்!
ம. நீர்மறுத்தால் நான் உயிர்விடுவேன் பிறகு அந்த பாபம்
உம்மைத்தான் துடரும்! ஸ்ரீஹத்தி எதினும் பெரிது!-
சு. சரி-உன்னிடத்தில் நியாயம் பேசுவதிற் பயனில்லை. மனோரமா,
நான் உன்னை வஞவாகஞ்செய்துகொள்வது அசாத்தியம், பிறகு
உன்னிஷ்டம். (எழுந்திருக்கின்றான்)
ம. (தடுத்து) பிராணநாதா! இன்னொருமுறை உமது வாயால்
அச்சொற்களைக் கூறாதீர் அவைகள் என் இருதயத்தைப்
பிளக்கின்றனவே!
சு. முடியாதென்று நான் கூறிவிட்டேன்! பிறகு உன்னிஷ்டம்.
ம. (அவன் காலில் வீழ்ந்து) பிராணநாதா பிராணநாதா! இது உமக்கு
தர்மமா? நியாயமா? இது உமக்கடுக்குமா? உமக்கென்மீது
காதல் இல்லையாயின் அவ்வாறு கூறுவது நியாயமாம்; என்மீது
காதல்கொண்டிருப்பதாக நீரே சற்று முன் கூறினீர்! அப்படி
கூறிவிட்டு என்னை மறுத்தல் நீதியோ? எல்லாமறிந்த உமக்கு
நான் என்ன கூறக்கூடும்? பிராணநாதா! என்னை விவாகஞ்
செய்துகொள்ள உமக்கென்ன தடை? உமக் கசாத்தியம் என்றும்
ஒன்றுண்டோ? அத்தடையை நீர் நீக்கிக்கொள்ளலாகாதோ?
அதை யின்னதென்று கூறும் என்னுயிரையாவது
கொடுத்து நிவர்த்திக்கின்றேன். பிராணநாதா! உம்மீதே காதல்
கொண்டிருக்கும் என் பேதை மனதை இவ்வாறு வருத்தல்
நியாயமா? உமக்குச் சிறிதும் கருணை என்பதில்லையோ?
பச்சாத்தாபமில்லையோ? நான் உத்தமகுலத் துதித்த ராஜகுமாரியா
யினும் உம்மீதுள்ள காதலால் என் நாணம் அச்சம் மடம்
பயிர்ப்பென்னும் நான்கையும்விட்டு இங்ஙனம் உமது பாதத்தில்
வீழ்ந்து இரந்து வேண்டுகின்றேனே! பிராணநாதா பிராணநாதா!
சு. மனோராமா-நீ என்மீது காதல்கொண்டிருப்பது உண்மையானால்-
என்மீதுகொண்ட காதலை மறந்துவிடு-என் சொற்படி நட.
ம. சரி!(எழுந்திருந்து)ராஜகுமாரா நான் உம்மை ஒருவரம் கேட்கின்றேன்
கொடுக்கின்றீரா?
சு. உன்னை விவாகஞ் செய்துகொள்ளும்படி மாத்திரம் கேளாதே
வேறெதையும்கேள் தருகின்றேன்! என்னுயிரைக்கேள்
தருகின்றேன் சந்தோஷமாய்!
ம. உமதுயிர் எனக்கெதற்கு? என்னுயிரை எடுத்துக்கொள்ளும்.
சு. என்ன?
ம. என்னைக் கொன்றுவிடும்-அதுதான் நான் கேட்பது.
சு. மனோரமா! உனக்கென்ன பயித்தியம் பிடித்திருக்கின்றதோ
ம. எனக்கா? இருக்கலாம்.நீர் உமது வார்த்தையைக் காப்பாற்றும்,
இனி நான் இவ்வுலகில் இருக்கவேண்டிய நிமித்தியமில்லை.
என்ன சொல்லுகின்றீர்? என்னை விவாகம்தான் புரியேனென்கின்றீர்
என்னைக் கொல்லவும்மாட்டீரோ?
சு. மனோராமா! இதென்ன ஆச்சரியம்! நானோ உன்னை என்கையால்
கொல்வது? எனக்காயிரம் ஜன்மங்களில் நரகம் சம்பவித்தாலுஞ்
சரி உன்னைக்கொல்லேன்! என் சொற்படி கேள்.-
ம. சரி, ஆனால் நான் போய்வருகின்றேன் விடையளியும்-நீர்
சுகமாய் நீடூழிகாலம் வாழ்வீராக!
சு. மனோராமா! எங்கே போகின்றாய்?
ம. அது ஏன் உமக்கு? நான் செல்லவேண்டிய இடத்திற்குச் செல்கின்றேன்.
சு. உனதுயிரை மாய்த்துக்கொள்ளப் போகின்றாயோ?
ம. நான் அப்பொழுதே கூறினேனே, நீர்தான் என்னை மணம்புரியேன்
என்றீர், பிறகு நான் உயிர்வாழ்வானேன்?
சு. மனோரமா, நான் கடைசிமுறை சொல்லுகின்றேன் என்
சொற்படிகேள்.
ம. பிராணநாதா, நான் கடைசிமுறை சொல்லுகின்றேன் என்னை
மணம்புரியும்.
சு. ஐயோ! அது அசாத்தியம் அசாத்தியம்!
ம. சரிதான் -நான் வருகின்றேன். (போகப்பார்க்கிறாள்)
சு. மனோரமா! உனது தீர்மானத்தை மாற்றமாட்டாயா?
ம. நீர் என்னை மணம்புரியமாட்டீரா?
சு. ஈசனே! ஜகதீசா! என்னை இக்கோலமும் காண்பாயா?
ம. பிராணநாதா! ஏன் என்பொருட்டு வருந்துகின்றீர்? நான்
வருகின்றேன் விடையளியும். இதுவரையில் உமக்கு நான் செய்த
குற்றங்களையெல்லாம் மன்னியும். நான் உமக்கு எவ்வளவோ
மனவருத்த முண்டாக்கியிருப்பேன் மன்னியும் அதனையும். நீர் சுகமாய்
வேறுயாரையாவது மணந்து நெடுநாள் உலகில் வாழ்ந்திரும்.
ஆயினும் ஒன்று கூறுகின்றேன், இப்புவியில் என்னிலும்
அழகிகளை அனேகம் பெயரைப் பார்ப்பினும் பார்ப்பீர், புத்திசாலிகளைப்
பார்ப்பினும் பார்ப்பீர், ஆயினும் என்னை விட உம்மீது
உண்மையான காதல்கொண்ட பெண்ணை மாத்திரம்
உமதுயிருள்ளளவும் காணமாட்டீர் இது சத்தியம்! நான் போய்வருகின்றேன்-
பிராணநாதா! என்னைப்பற்றி நீர் எப்பொழுதாவது சந்தோஷமாயிருக்கும்
காலத்தில் நமக்கு மனோரமாவென்று ஒரு
முதல் மனைவியிருந்தாளென நினையும்! நான் வருகின்றேன்.
(கொஞ்சதூரம் போகிறாள்)
சு. மனோரமா!
ம. பிராணநாதா! (ஒருவரை யொருவர் கட்டி முத்தமிடுகின்றனர்.)
சு. மனோரமா! மனோரமா! உன்னையே நான் மணம்புரிவேன்!
உன்னையே மணம்புரிவேன்!
ம. மூர்ச்சையாயினார்!-ஐயோ!
சு. (தெளிந்து) கண்ணே! கண்ணே! உனது காதலின் திறத்தை இது
வரையிற் சரியாக அறியாமற்போனேன்! அறியாமற்போனேன்!
ம. அது போனாற்போகட்டும் போன சமாசாரத்தைப்பற்றி இப்பொழுது
யோசிப்பானேன்? வேறு ஏதாவது பேசுவோம்; இனியாவது
நான் உம்மைப் பிராணநாதா என்றழைக்கலாமா பிராணநாதா?
சு. கண்ணே! சுகமாயழை உன்னையன்றி வேறுயார் அப்பெயரிட்டு
என்னை அழைக்கத்தக்கவர்?
ம. அப்பா! இத்தனைகாலம் பிடித்ததா? (முத்தமிடுகிறாள்)
சுகுமாரன் வருகின்றான். கொஞ்ச தூரத்திற்கப்பால்
ஜெயதேவன் வருகிறான். மனோரமா எழுந்திருந்து
ஒருபுறமாய்த் தலைகுனிந்து நிற்கிறாள்.
சுகு. சுந்தரா!-நீ மனோரமாவின் மீது காதல் கொண்டிருக்கும் விஷயம்
முன்னமே ஏன் என்னிடம் சொல்லவில்லை? நாணப்பட்டனையோ?
என்னிடம் கூற வெட்கப்படுவானேன்? அல்லது எனக்கேதாவது
மனவருத்த மிருக்குமென்று எண்ணினையோ? சுந்தரா!
என்னை நீ இன்னும் நன்றாயறிந்திலை; நான் ஏன் வருத்தப்படவேண்டும்?
இவ்விஷயம் எனக்குச் சந்தோஷத்தை யன்றோ
தருகின்றது! மனோரமாவும் உன்மீதே காதல்கொண்டிருக்கின்றாள்
போலிருக்கின்றது. மிகவும் சந்தோஷம்! நீங்களிருவரும்
நீடூழிகாலம் சுகமாய் தம்பதிகளாக வாழ்வீர்களாக! சுந்தரா,
என்ன இன்னும் ஒருவாறு நிற்கின்றாய்? நான் மனப்பூர்வமாகச்
சொல்லுகின்றேன், எனக்கு மிகவும் சந்தோஷமாயிருக்கின்றது;
நான் எப்பொழுதாவது உன்னிடம் பொய்யுரைத்திருக்கின்றேனா?
உனக்கு வரும் சுபம் எனக்கு வந்தாற்போலத்தான்.
சு. (முழந்தாளிட்டி அவன் கைக்குமுத்தமிட்டு) குமாரா! குமாரா!
உன்னையொத்த உத்தமரை நான் உலகில் எங்கு காணப்போகின்றேன்?
நான் உனது நண்பனாயிருக்கத் தக்கவனல்லேன்!
சுகு. சீ! எழுந்திரு! முட்டாள்! உன் புத்தி உனக்கிப்பொழுது
சுவாதீனமாயில்லை, பிறகு உன்னிடம் நான் எல்லாம் பேசுகின்றேன்.
அதோபார் பாவம்! உன்வரவை எதிர்பார்த்து நிற்கின்றாள் போ!
சந்தோஷமாயிரு, இந்த முகத்துடன் அவளிடம் போகாதே!
சந்தோஷமாய்ப்போ.
சு. ஈசனே! ஈசனே!
(மனோரமாவிடம்போக, இருவரும்வெளியே போகிறார்கள்)
சுகு. ஆ! இவர்களிருவரையும் ஈசன் ஒருவருக்காக மற்றொருவரைச்
சிருஷ்டித்தான் போலும்! புத்தியிலும் நற்குணத்திலும் அழகிலும்
இவர்களையொத்த ஸ்திரீ புருஷர்களை நாம் எங்கு காணப்போகின்றோம்!
நெடுநாள் சுகமாய் வாழ்வார்களாக! என் நண்பனுக்கிந்த
பேறுகிடைத்ததே! நான் செய்த பாக்கியமே பாக்கியம்!
ஜெ. (அவன் அருகிற்போய்) குமாரராஜனே! இப்பொழுது என்ன
சொல்லுகின்றீர்?
சுகு. ஜெயதேவா! நீ கூறியதுண்மைதான்; நான் உன்னை
மறுத்ததற்காக மன்னிப்பாய்.
ஜெ. அது போனாற்போகின்றது இப்பொழுதென்ன செய்ய
உத்தேசிக்கின்றீர் நீர்?
சுகு. ஏன்? உடனே போய் ஸ்வேதகேது ராஜனிடம் கூறி
விவாகத்திற்கு முயற்சிசெய்யச் சொல்லவேண்டியதுதான்.
ஜெ. உமக்கு இவ்விவாகம் சம்மதிதானே? சந்தோஷந்தானே?
சுகு. சந்தேகமென்ன? என்னையன்றியாருக்கு இவ்விவாகம் அதிக
சந்தோஷத்தைக் கொடுக்கப்போகின்றது? நீ கேட்பது எனக்கு
அர்த்தமாகவில்லை.
ஜெ. இல்லை, மனோரமாவின் மீது தாமும் காதல்கொண்டிருந்தீரே
என்று யோசித்தேன் வேறொன்றுமில்லை.
சுகு. இருந்தாலென்ன? முதலில், சற்று ஒரு வினாடி,
ஏதோமாதிரியாகத்தானிருந்தது உடனே என்மனதைத் திருப்பி
விட்டேன். மனோரமா சுந்தரன் மீது மிகவும் காதல்கொண்டிருக்கின்றாள்
என்பதற்குத் தடையில்லை அப்படியிருக்க நான் அவள்
மீது காதல்கொண்டென்ன பயன்? அதை அந்தக்ஷணமே மறந்தேன்,
சுந்தரனே அவளுக்குத் தக்க கணவன். அவள் அவனையே
வரித்தது எனக்கு அடக்ககூடாத மனவெழுச்சியைத்
தருகின்றது.
ஜெ. ஆம்-சத்தியவதிக்கு மாத்திரம்தான்-
சுகு. ஆ! ஆ! பார்த்தாயா! ஜெயதேவா! இதுவரையில் என்னென்னவோ
யோசித்துக்கொண்டிருந்து விட்டேன் சத்தியவதியைப்
பற்றி மறந்தேன்!-அவள்கதி என்னவாவது? அவள் சுந்தரன்
மீது மிகுந்தகாதல் கொண்டிருக்கின்றாள் அவனையன்றி
வேறெப்புருஷனையும் மணம்புரிவதில்லை யென்று பிரதிக்ஞை
செய்திருக்கின்றாள் விவாகத்திற்கும் நாள் குறிக்கப்பட்டிருக்கின்றது!
இதென்ன கஷ்டம்?
ஜெ. ஆம் அதைத்தான் நானும் கேட்கலாமென்று வாயெடுத்தேன்,
இவ்வளவுதூரம் நடந்தபிறகு சுந்தராதித்யர் மனோரமாவை
மணந்தால் சத்தியவதிக்கு மனவருத்த மெவ்வளவிருக்கும்?
தன்னுயிரைமாய்ப்பினும் மாய்ப்பாள்; உன்னையேவிவாகம்
புரிகின்றேனெனக் கூறிவிட்டபிறகு வேறொருபெண்ணை
விவாகஞ்செய்து கொள்ளலாமா? அதுவும் மண நாளும்
குறிக்கப்பட்டிருக்கின்றது. இது நியாயமா? தாமே யோசித்துப்பாரும்.
சுகு. நியாயம் அல்ல-வாஸ்தவமே-ஆயினும் நாம் என்ன செய்யக்கூடும்?
சுந்தரனுக்கு சத்தியவதியின்மீதுள்ள காதல் குறைந்து
மனோரமாவின் மீதே காதல்கொண்டால், அவனை நாம் சத்தியவதியை
மணம்புரியும்படி நிர்ப்பந்திப் பதிற்பயனென்ன? அவனுக்கும்
சுகமிராது; தன்மீது காதலில்லாக் கணவனை வரிக்கும்
அவளுக்குத் தான் என்ன சுகம்? அவனுக்கு மனதிலாதிருக்கும்பொழுது
சுந்தரனை நாம் கேட்பதும் தவறு- அவள் வந்த
கதி!- நாம் என்ன செய்யலாம்? சத்தியவதியைக் குறித்து
நினைக்கும்பொழுது எனக்கு மிகவும் வருத்தமாகத் தானிருக்கின்றது-
ஆயினும் நான் என்ன செய்வது?
ஜெ. சத்தியவதிக்கு விஷயங்களிப்படி யிருக்கின்றன என்றாவது
தெரிவிக்க வேண்டாமா? நம்மை மணம்புரிய சுந்தராதித்யர் வருகின்றார்
வருகின்றார் என்றவள் எதிர்பார்த்திருத்தல் நலமா
இனி?
சுகு. அது கூடாது உண்மையே! நான் சுந்தரனிடம் சென்று கலந்து
பேசி என்னசெய்யவேண்டுமோ பார்க்கின்றேன்-ஐயோபாவம்!
இதைக் கேள்விப்படுவாளாயின் சத்தியவதி உயிர்விடுனும் விடுவாள்!
நாம் என்ன செய்யலாம்? (போகிறான்)
ஜெ. இதுதான்சரி! இப்படி நாம் நினைக்கும் வண்ணமே மற்றெல்லா
விஷயங்களும் நடந்தேறிவந்தால் எவ்வளவு சுலபமாயிருக்கும்!
மனோராமாவின் வலையிலகப்பட்ட சுந்தரன் சத்தியவதியை
இனித்திரும்பியும் பார்க்கப்போன்றதில்லை; இலேசானவளா
இந்தமாயக்கள்ளி! நானே அவள் மோகவலையில் அகப்படப்பார்த்தேனே!-
குமாரன் தன் தங்கையின்மீது எவ்வளவோ அன்பு
படைத்தவனாயினும் சத்தியவதியை மணம்புரிய சுந்தரனை
நிர்ப்பந்திக்கமாட்டான், ஆகவே எப்படியாவது சத்தியவதிக்கு
எல்லா விஷயங்களையும் கூறி, அவள் மனத்தைத் தேற்றிவருகின்றேன்
என்று தஞ்சைக்கு நான் சென்று, சத்தியவதியின்
மனதைக்கலைத்து அவளைக்கொண்டு குமாரனைத்தூண்டி, இவர்களிருவர்
நட்பையும் கலைக்கவேண்டும்.அது முடிந்தால் எல்லாம்
முடிந்ததுதான்;அன்றியும் இந்த போக்கைக்கொண்டு சத்தியவதியை
நாம் விவாகம்செய்யும் விதத்தைத் தேடவேண்டும்-சரி!
சுந்தரா! உன்னை இனி க்ஷணத்தில் வெல்கின்றேன்! மனோராமா
என்னும் வலையாற் கட்டுண்ட உன்னால் என்ன முடியுமினி?
என்ன சக்திவாய்ந்தும் இதனால் அவனுக்கு அவைகளெல்லாம்
பயன்படமாற்போகின்றன அல்லவா? அதற்காகத்தான்
பெரியோர் 'மோகத்தைமுனி' என்றார்கள். ஜெயதேவா! இனி
உனக்கு பயமேயில்லை. சந்தோக்ஷமாய் வேலையை நடத்து! (போகிறான்.)
--------------
முதல் காட்சி.
இடம்-சத்தியவதியின் அந்தப்புரம்.
காலம்-மாலை.
சத்தியவதி மஞ்சத்தின்மீது சாய்ந்திருக்க கமலினி மெல்ல விசிறிக்
கொண்டிருக்கிறாள்.
க. அம்மா! நாங்கள் என்ன சொன்னாலும் உமது செவிக்கேறவில்லை.
ஊணுறக்கமின்றி மூன்று தினங்களாக உலர்ந்து வருகின்றீர்கள்.
இன்னுமிரண்டு தினமிப்படி யிருப்பீராயின் உமதுயிருக்கு
ஆனிதான். இப்படித்தாம் வருந்துவதிற் பயனென்ன?
வருத்தப்படுவதினால் ஏதாவது பிரயோஜனமுண்டானால் எவ்வளவு
வேண்டுமென்றாலும் வருந்தலாம். அதொன்றையும்
காணோம். அம்மணி, தாம் இப்படி இருத்தல் நியாயமன்று.
இப்பொழுதே சொன்னேன். இப்படியே இருந்தால் சீக்கிரம்
பயித்தியம் பிடித்திறக்கவேண்டியதுதான்!
ச. அப்படி சீக்கிரம் இறந்தால் எவ்வளவு சந்தோஷமுள்ளவளாயிருப்பேன்!
க. இறக்கவேண்டுமென்றா இச்சையிருக்கின்றது? அப்படிவிருப்பமாயின்
இவ்வளவு கஷ்டப்பட்டிறப்பானேன? சாதற்கு இதை
விட அநேகம் சுலபமான மார்க்கங்களிருக்கின்றனவே!
ச. இன்னும் ஒரு முறை பார்ப்பேனாயின்-சந்தோஷமாய் இறப்பேன்!
க. யாரை? சுந்தராதித்யரையா? அம்மணி! இந்த பயித்தியம் இன்னும்
உம்மை விடவில்லையா? அவரைத்தாம் பார்ப்பதில் என்ன
பிரயோஜனம் இனிமேல்? அவர் மறுபடியும் இங்கு திரும்பி
வரப்போகின்றனரோ? அங்கும் இங்கும் அசையாதபடித் தன்
மோக வலையிற் கட்டிவிட்டனளே அவரை அந்த மனோரமா.
ச. தோழி! அம்மாது சிரோமணியை நீ யேன் வெறுக்கின்றாய்?
அவள்மீது என்ன தவறு? ஐயோபாபம்! எனது பெயரையும்
அவள் கேட்டிருக்கின்றனளோ என்னவோ? அவளை வீணில்
தூஷியாதே.
க. ஆம் உண்மைதான். அவள் என்ன செய்வாள் பாபம்? மதுரமான
மாங்கனியை அருந்தவேண்டுமென்று எல்லோருக்கும் தான்
இச்சையாயிருக்கும். இவரையல்லவோ நோகவேண்டும்.
இவருக்கெங்கே போயது புத்தி?
ச. அவரையும் தூஷிக்காதே! அவர்தான் என்ன செய்வார் பாவம்?
அந்த மனோரமா சிறந்த ரூபவதியும் நற்குணமுடையவளுமாயிருப்பாள்.
ஆகவே, என்னைவிட்டு அவள்மீது காதல்கொண்டது
நியாயந்தானே?
க. என்ன நியாயமோ, நீர்தான் மெச்சவேண்டும். உம்மைப்பார்க்கிலும்
ரூபத்திலும் குணத்திலும் சிறந்த பெண்ணை அவர் மூவுலகிலும்
தேடிக்கண்டுபிடிக்கட்டும். அதெல்லாமிருக்கட்டும் அம்மணி,
உம்மை விவாகஞ் செய்துகொள்வதாகக் கூறிவிட்டு எல்லாம்
சித்தமானபின் வேறொரு பெண்மீது காதல்கொள்வதாவது?
அது என்ன காதலோ? அக்காதல் எனக்குத் தெரியாதம்மா!
இவ்வளவு அறிவுள்ளவராயிருந்தும் இந்த நியாயம்
அவருக்குத் தெரியாமற்போனதென்ன? ஸ்திரீகளால் எப்படிப்பட்ட
ஆடவருடைய புத்தியும் சபலித்துப்போம் என்பதுண்மைதான்.
ஆயினும் அம்மணி, அவர்தான் உமக்கு வாக்களித்துச்
சென்றாரே. சரியான க்ஷத்திரியராயின் அதன்படி உம்மையே
மணம் புரியும்படி கேட்கின்றதுதானே நீர்?
ச. சீ! அப்படி நான் என்னுயிர் போனாலும் கேட்கமாட்டேன்.
அவருக்கே இருக்கவேண்டியது, இல்லாவிடின் நான் நிர்ப்பந்திப்பதிற்
பயனென்ன? இல்லை அதன்படி அவர் இசைந்தாலும்
என்ன பிரயோஜனம்? அவருக்குத்தான் சந்தோஷமாயிருக்குமோ?
எனக்குத்தான் திருப்தியாயிருக்குமோ? வீணில் அந்த
மனோரமாவும் வருத்தப்படுவாள்; இப்பொழுதாவது அவர்களிருவருமாவது
சுகமாயிருக்கின்றார்கள், என்னை மணந்தால் எல்லோருக்கும்
துக்கம்தான். என்கதி என்னவானாலு மாகின்றது.
என் பிராணநாதர் எங்கிருந்தாலும் சுகமாயிருந்தாற்போதுமெனக்கு!
க. ஏது அம்மணி இன்னும் அவர் உமக்குப் பிராணநாதர்
தானோ?
ச. ஆம், நான் சாமளவும் எனக்குப் பிராணநாதர் தான். அவர்
என் மீதுள்ள காதல் குன்றினாலென்ன? எனக்கவர் மீதுள்ள
காதல் அணுவளவேனும் குன்றுமோ? கனவிலும் குன்றுமென
நினையாதே !
க. உம்மையொத்த ஸ்திரீகளை நான் இவ்வுலகில் இதுவரையிற்
கண்டதில்லை யம்மணி! இன்னும் இவ்வளவு தூரமாயும்
அவரைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கின்றீர்களே!
உமக்கு அவரையன்றி இவ்வுலகில் நல்ல புருஷன்
ஒருவருமில்லையோ?
ச. ஆம், அவரையன்றி எனக்கிவ்வுலகில் வேறு புருஷனே யில்லை.
க. சரி! பிறகு உமதிஷ்டம்? நம்மாலானதைக் கூறிப்பார்க்கலாம்
அப்புறம் என்ன செய்வது கேளாவிட்டால்?
ச. அது போனாற்போகின்றது. தோழி, மதுரையிலிருந்து
எனக்கேதாவது நிருபம் வந்திருக்கின்றதா பார்.
க. சரி! இதனுடன் நூறுமுறையாயிற்று, நான் போய் இல்லையென்று
வந்து. அப்படிப்பட்ட முக்கியமான நிருபம் என்ன அம்மணி
அது? உமது பிராணநாதர் ஏதாவது எழுதுவார் என்று
எதிர்பார்க்கின்றீரோ?
ச. தோழி என்னைக் கடிந்துகொள்ளாதே. உனக்கு நான் கொடுக்குந்
தொந்திரவை மன்னிப்பாய். இன்னும் கொஞ்ச காலம்
தானே உனக்குக் கஷ்டம் கொடுக்கப்போகின்றேன்.
க. இதோ போய்ப்பார்த்து வருகின்றேன் - இல்லையென்று.
[போகிறாள்.]
ச. ஏன், இன்னும் பதில் ஒன்றும் வரவில்லை? ஒரு வேலை என்நிருபம்
போய்ச் சேரவில்லையோ? அப்படியிராது. எப்படியும் பதிலாவது
சீக்கிரம் வரும் அவராவது வருவார். ஐயோ! நான்
அவரை ஒரு முறை கண்ணாரக்காண்பேனாயின் சந்தோஷமாய்
உயிர் விடுவேன்! -
கமலினி வருகிறாள்.
க. அம்மணி, நான் முன்பே கூறியபடி நிருபம் ஒன்றும் வரவில்லை.
ஜெயதேவர் உம்மை அவசியம் சீக்கிரம் பார்க்கவேண்டுமென்று
கூறி இப்பொழுது வரலாகுமோ என்று கேட்டு வரச்சொன்னார்.
வெளியிற் காத்திருக்கிறார்.
ச. ஜெயதேவரா? - இப்போழுதென்னைப் பார்க்கவேண்டிய நிமித்தியம்
என்ன? - வரச்சொல். [கமலினி போகிறாள்.] இந்த ஜெயதேவர்
என்னவோ எண்ணங்கொண்டிருக்கின்றார், இதனை நான்
அறியவேண்டும். இந்த இரண்டு மூன்று தினங்களாக என்
மனதைக் கலைத்து நான் பிராணநாதர் மீது கோபங்கொள்ளும்படி
எவ்வளவோ கூறிவந்தார். ஏதோ அவர்மீதில் கெட்ட
எண்ணங்கொண்டிருகின்றாற் போலிருக்கின்றது. அப்படியாயின்
அதை நான் எப்படியும் சீக்கிரம் அறியவேண்டும். -
ஜெயதேவன் வருகிறான்.
ஜெ. ராஜகுமாரி! நமதெண்ணம் நிறைவேறுங் காலம் நெருங்கிவிட்டது!
ச. என்ன?
ஜெ. வருகின்றது சிங்கம் கண்ணியருகில்!
ச. என்ன?
ஜெ. சுந்தராதித்யர் சீக்கிரம் இங்கு வரப்போகின்றார். உம்மைப்
பார்த்து மன்னிப்புக் கேட்டுவருவதாகச் சுகுமாரரிடம் கூறிவிட்டு
நேற்றையதினம் ஒருவருமறியாதபடி மதுரையை விட்டுப்
புறப்பட்டுவிட்டாராம். இன்னும் கொஞ்சநேரத்திற் கெல்லாம்
இங்கு வருவாரென்பதற்க்குத் தடையில்லை . நான்
இவைகளையெல்லாம் என தந்தரங்க ஆட்களைக்கொண்டு அறிந்தேன்.
ச. அப்படியா? சந்தோஷம். அப்பா! -
ஜெ. ஏன் உனக்கு சந்தோஷமாயிருக்கின்றதோ?- ஆம் ஆம்!
மறந்தேன்! நமக்குக் கெடுதிசெய்தவர்கள் மீது பழிவாங்குவதினும்
சந்தோஷகரமான திவ்வுலகில் ஒன்றுளதோ? உண்மை
தான் உண்மைதான்! உனக்குச் செய்ததெல்லாம் போதாதென்று
நேரிற்கண்டு உனது துக்கத்தைத் தூண்டிவிடவும் வேண்டுமென்று
வருகின்றாற்போலிருக்கின்றது. மன்னிப்புக் கேட்பதாவது?
நன்றாய் உதைப்பது, பிறகு மன்னிப்பு கேட்டுவிடுவது! -
அதிருக்கட்டும் ராஜகுமாரி, இப்பொழுது நாம் என்ன
செய்யவேண்டும் என்று தோற்றுகின்றதுனக்கு?
ச. என்ன செய்வது?
ஜெ. என்ன செய்வதாவது? தக்க மரியாதை செய்யவேண்டியது தான்!
ச. அப்படியே - செய்வோம்.
ஜெ. சந்தேகமில்லாமல்! அவர் செய்தததற்கு அவ்வளவாவது பதில்
செய்யவேண்டாமா? அவர் எண்ணப்படி அந்த மனோரமாவை
எப்படி விவாகம் செய்துகொள்ளுகின்றாரோ பார்ப்போம்; அவர்
மறுபடியும் மதுரைக்கெப்படி போகின்றாறோ பார்ப்போம்.
ச. அதைத்தடுக்க--நம்மால் எப்படி முடியும்?
ஜெ. என்ன, ஒன்று மறியாதவள்போல் பேசுகின்றாய்? நாளைய
தினம் காலை உயிருடன் இருந்தாலல்லவோ, பிறகு மதுரைக்குப்
போய் மனோரமாவை விவாகம் செய்துகொள்வது?
ச. உம்--தக்க ஏற்பாடுகளெல்லாம் செய்துவிட்டீரா?
ஜெ. எல்லாம் செய்துவிட்டேன். ஆயினும் உனது உதவியும் கொஞ்சம்
வேண்டியிருக்கின்றது. அவர் வந்தபிறகு எப்படியாவது
நீதான் பேசி பொற்றூண் மண்டபத்தில் இன்றிரவு நித்திரை
பண்ணும்படி செய்யவேண்டும். பிறகு பதினைந்து நாழிகைக்கு--
நடக்கவேண்டியது நடந்துவிடுகின்றது.
ச. எத்தனை நாழிகைக்கு?
ஜெ. பதினைந்து நாழிகைக்கு. என் ஆட்களுக்கு காலம் தெரியும்.
ச. ஒருவேளை அவர்கள் தவறினால்?
ஜெ. தவறினாலும் பெரிதன்று, நமது பட்டணத்தைச் சுற்றிலும்
ஆட்களை வைத்திருக்கின்றேன், அவர்கள் கையினின்றும்
எப்படியும் தப்பமாட்டார் இங்கு தப்பினாலும்.
ச. இன்னுமவர் வரவில்லையே--எப்பொழுது வருவார்?
ஜெ. இதோ வரும் சமயமாயிற்று, ஆகவே நான் இங்கிருக்கலாகாது.
நான் கூறியது ஞாபகமிருக்கட்டும். எப்படியாவதவர் அந்த
மண்டபத்தில் படுத்தின்றிரவு நித்திரை செய்யும்படி நீதான்
செய்யவேண்டும். இதுதான் நமக்குப் பழிவாங்க நல்லசமயம்
இது தவறினால் வேறுகிட்டாது. அதுவும் தானாக வந்து
அகப்பட்டுக் கொள்ளுகின்றார். ஜாக்கிரதை! அவர் இதைப்பற்றி
ஏதாவது அறிந்துவிடப்போகின்றார். பிறகு உன்னுயிருக்கே
தீமைதான். நான்பிறகு வந்து காண்கின்றேன் வரும் சமயமாயிற்று.
[போகிறான்.]
ச. சரி! இத்துஷ்டப்பாதகன் இவ்வாறுதான் ஏதோ எண்ணங்
கொண்டிருக்கவேண்டு மென்று முன்பே நான் நினைத்தவண்ணமே
ஆயிற்று. இவனுக்கு நானும் ஏதோ உடன்பட்டிருக்கின்றேன்
என்றெண்ணியிருக்கின்றான். இது எனக்கு நலமேயாயிற்று.
இப்பொழுது நான் என்ன செய்வது? அவர் வந்தவுடன்
எல்லாம் அவரிடம் சொல்லிவிடவா? அதிற்பிரயோஜனமில்லை.
அவரைக்கண்டால் வெளியிற் காவலிருக்கும்
அத்துஷ்டனது சேவகர்கள் எப்படியும் கொன்றுவிடுவார்கள்.
உருமாறிச் செல்லும்படி செய்யவேண்டும். -- ஆ! இது தான் நல்ல
யோசனை! நான் வீணில் இறப்பதிற் பயனென்ன? என்பிராணநாதரது
உயிரைக்காப்பாற்றுவதில் உயிரை விடுவதே சரி! அதைவிட
எனக்கு வேறு சந்தோஷ மென்ன! இனி அவருக்கு நான்
இப்புவியில் சுகங் கொடுப்பது இது ஒரு மார்க்கந்தானிருக்கின்றது.
ஆம்! ஆம்! சுவாமி எப்படியும் என் மீது
கருணையுள்ளவராகத்தானிருக்கின்றார்! -
கமலினி மறுபடியும் வருகிறாள்.
க. அம்மா! சுந்தராதித்யர் உம்மைக்கான வருகின்றார்! -
ச. சரிதான் நீ போ! [கமலினி போகிறாள்.]
சுந்தராதித்யன் தலைகுனிந்தவண்ணம் மெல்ல வருகிறான்.
ச. ராஜகுமாரா - வாரும் - உட்காரும் - உட்காரும்.
சு. ஹா! (ஓர் ஆசனத்திலுட்கார்ந்து கண்ணீர் விடுகிறான்.)
ச. ஏன் வருத்தபடுகின்றீர்? எனக்காக தாம் வருந்தவேண்டியதில்லை.
நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். அவரவர்கள்
செய்த பூர்வபுண்யவசம். நீர் என்னைக் குறித்துச் சிறிதும்
வருத்தப்பட வேண்டியதில்லை. இதைக்கூறவே உம்மை நான்
வரவழைத்தேன். நீர் எனக்கு வாக்களித் திருந்ததினின்றும்
விடுவித்தேன் உம்மை. நீர் இனிமனத்தில் ஒரு குறையுமின்றி
அந்த - பெண்மணியை - மணந்து சுகமாய் வாழ்ந்திரும் நீடூழி
காலம். உம்முடைய மனதில் என்னைப்பற்றி ஒரு குறையும்
வைக்கவேண்டாம். தாம் அப்பெண்மணியின் மீது காதல்
கொண்டிருக்கும்பொழுது என்னை விவாகஞ் செய்துகொள்ளும்படி
நிர்ப்பந்திப்பதிற் பயனென்ன? நீர் வாக்களித்துவிட்டோமே
யென்று ஒரு வேளை விரும்பினாலும் நான் அதற்கிசைவது
நியாயமன்று. எல்லோருக்கும் வருத்தம் தான் அதனால்.
எப்படியிருந்தபோதிலும் நீர் சுகமாய் இருந்தாற்போது மெனக்கு.
மனோரமா-மிகவும் நற்குணமும் சௌந்தரியமும் உடையவளென்று
கேள்விப்பட்டேன் மிகவும் சந்தோஷம். என்னைக்
குறித்து ஒன்றும் வருந்தாமல் அப்பெண்மணியைச் சீக்கிரம்
மணந்து இனி தாம் சுகமாய் வாழலா மென்று நான் நேரில்
விடையளிப்பதற்கே உம்மை நான் வரவழைத்தேன்.
சு. (அவள் காலில் விழுந்து) சத்தியவதி! சத்தியவதி! என்னை
மன்னிப்பாய்! மன்னிப்பாய்!-
ச. ராஜகுமாரா! எழுந்திரும் எழுந்திரும்! தாம் என்பாதத்தில்
வீழ்வது நியாய மன்று. எழுந்திரும், உம்மை மனப்பூர்வமாக
நான் மன்னித்தேன். நான் எப்பொழுதாவது உம்மிடம் உள்ளத்தில்
ஒன்றுவைத்து வேறொன்றை மொழிந்திருக்கின்றேனா?
உம்மை மன்னித்துவிட்டேன். இனி நீர் சுகமாய் அப்பெண்மணியை
மணந்து நீடூழிகாலம் தம்பதிகளாக வாழ்வீராக.
சு. சத்தியவதி! உன்மகிமை யறியாது நான் மதிமோசம் போனேன்
இது வரையில். உனக்கென்ன வேண்டு மென்றாலும்
கேள் தருகின்றேன். என்னுயிரைக்கேள் தருகின்றேன். உன்னை
விவாகஞ் செய்துகொள்ளும்படி கேட்டாலும் அப்படியே செய்கின்றேன்-
ச. ராஜகுமாரா! நீர் வேறொரு பெண்ணின் மீது காதல் கொண்டிருக்கும்
பொழுது, உமது சுகத்தையெல்லாம் அழித்து என்னை
மணம்புரியும்படி நான் என துயிர் உள்ளளவும் கேட்கமாட்டேன்.
என்னை அவ்வளவு ஈனமாக எண்ணிவிடாதீர். ஆயினும்
உம்மை நான் வேண்டிக்கொள்வ தொன்றுண்டு. அதன்படி
இத்தட்சணமே செய்கின்றீரா?
சு. என்னுயிரைக்கேள் தருகின்றேன்!-
ச. அப்படியொன்றுமில்லை. இன்னும் நீடாண்டு நீர் சுகமாய் வாழும்.
ஆயினும் நான் உமக்கிடப்போகின்ற கட்டளைக்குக் குறுக்
கே ஒரு வார்த்தையும் சொல்லலாகாது, ஒரு காரணமும்
கேட்கலாகாது. ராஜகுமாரா அப்படிசெய்வீரா?- என்மீது தாம்
ஒருகால் பிரியம்வைத்திருந்ததின் பொருட்டும் நாம்இருவரும்
சிறுவயது முதல் ஒன்றாய்வளர்ந்ததின் பொருட்டும் தாம் எனது
வேண்டு கோளுக்கிசையும்படி நான்கேட்டுக் கொள்ளுகின்றேன்.
சு. சத்தியவதி! இன்னதென்று சொல், என்தாய் தந்தையர்மீதாணை
அப்படியே செய்கின்றேன் இட்சணம்!
ச. ஆனால் இட்சணம் புறப்பட்டு உமது அரண்மனைக்கு ஒருவருமறியாதபடி
சுரங்கத்தின் வழியாகப் போய் சிலகாலத்திற்கு
முன் நீர் நகரபரிசோதனைக்காக ஆண்டியைப்போல் வேடந்தரிப்பீரே
அதனைத் தரித்து விரைவில் வாருமிங்கே, பிறகு
செய்யவேண்டியதை அப்புறம் கூறுகின்றேன். இப்பொழுது
காரணமொன்றும் கேளாதீர், காலம் வரும்பொழுதறிவீர்.
சு. அப்படியே! இதோ வந்துவிட்டேன். (போகிறான்)
ச. பிராணநாதா! பிராணநாதா! உம்மை மறுபடியும் இந்த உடையில்
நான் எப்பொழுது காணப்போகின்றேன்!-சீ! நாம் இப்பொழுது
வருந்திக்கொண்டிருக்கக் காலமில்லை, சீக்கிரம் நாம்
எழுதவேண்டிய நிருபத்தை எழுதிவிட வேண்டும். (விரைவில்
ஒரு நிருபம் வரைகிறாள்) ஆ! இப்பொழுது என்ம னம் என்ன
சந்தோஷமடைந்திருக்கின்றது! நான் பிறந்ததின் பயனை இன்றே
பெறப்போகின்றேன்! சீக்கிரம் வந்துவிடுவார்.
சுந்தராதித்யன் ஆண்டி வேடத்துடன் மறுபடியும் வருகிறான்.
ச. வாரும். இதோ இந்நிருபத்தைப்பத்திரமாய் வைத்துக்கொள்ளும்.
பிராணநாதா! உமக்கிப்பொழுது ஒரு கட்டளையிடப் போகின்றேன்
அதற்காக மன்னிக்கவேண்டும்-ஏன் திடுக்கிட்டீர்? நான்
பிராணநாதா என்றும்மை அழைக்கலாகாதோ? நீர் என்மீதுள்ள
காதல் குன்றின போதிலும் எனக்கும்மீதுள்ள காதல்
குன்றவில்லை யென்றறியும். ஆயினும் பயப்படவேண்டாம் உம்மை
நான் மணம் புரியும்படி கேட்கவில்லை. நான் சாவுமளவும்
நீர்தான் என் பிராணநாதர் என்று கூறவந்தேன். அதிருக்கட்டும்
காலதாமதஞ் செய்யலாகாது. நான் சொல்லுகின்றபடி குறுக்
கே சொல்லாமலும் காரணங் கேளாமலும் செய்கின்றீரா?
சு. சொல்.
ச. நீர் உடனே என்னிடம் விடைபெற்று அரண்மனையை விட்டு
ஒருவருமறியாதபடி மதுரையை நோக்கிப் புறப்படவேண்டும்.
ஒன்றும் கேளாதீர் என்னை இப்பொழுது; இந்நிருபத்தைப்பார்த்தால்
பிறகு எல்லாம் விளங்குமுமக்கு. ஆயினும் ஒன்று
கேட்டுக்கொள்ளுகின்றேன். உமது காதலின் மீதாணைப்படி இதை
நீர் மதுரைபோய்ச் சேருமளவும் பிரித்துப் பாராதீர்.
சு. ஐயோ!-
ச. உம்-அப்படிவேண்டாம். இன்றிரவு பதினைந்து நாழிகையானவுடன்
எங்கிருந்தபோதிலும் பிரித்துப்பாரும்.
சு. அப்படியே.
ச. சரி-நேரமாகின்றது-சீக்கிரம் விடைபெற்றுக்கொள்ளும்.
சு. ஐயோ! (தேம்பியழுகிறான்)
ச. பிராணநாதா! ஏன் வருந்துகின்றீர்? என்னைக்குறித்து
விசனப்படவேண்டாம். இப்பொழுதெனக்கு ஒரு விசனமுமில்லை,
சந்தோஷமாயிருக்கின்றேன்.
சு. ஈசனே! ஈசனே! -சத்தியவதி! எனக்கு விடையளிப்பாய்
என்று கேட்கவும் நாயெழவில்லையே!
ச. வருந்தாதீர்! சுகமாய்ப்போய் வாரும். நான் உம்மை மறுபடியும்
எங்குகாணவேண்டுமோ அங்கு மிகவும் சந்தோஷமாய்க் காண்பேன்.
சு. சத்தியவதி! உலகில் உன்னையொத்த உத்தமிகளை நான் எங்கு
காணப்போகின்றேன்? எனதன்னையுடன் உலகில் உத்தமிகள்
நசித்தனர் என்றெண்ணியிருந்தேன். இப்பொழுதுதான் அவ்வெண்ணம்
தவறான தென்று கண்டேன். உத்தமியே! நான்
உனக்குச் செய்த பிழைகளை யெல்லாம் மன்னிப்பாய் மன்னிப்பாய்!
ச. பிராணநாதா! நான் அப்பொழுதே கூறிவிட்டேனே! நான்
உமக்கேதாவது தெரிந்தும் தெரியாமலும் பிழையிழைத்திருந்தால்
மன்னியும்.
சு. அப்படியே! அப்படியே! நீயாவது பிழைப்பதாவது!
ச. ஆம்-நேரமாகின்றது நீர் புறப்படும்-பிராணநாதா, முடிவில்
ஒரு வேண்டுகோள்-அந்த மனோரமாவையே மணம் புரிந்து
அவள் மீதென்றும் காதல்குன்றாது வாழ்வதாக வாக்களியும்.
வேறெப்பெண்ணின் மீதும் தாம் காதல் கொள்ளலாகாது.
சு. அப்படியே! அப்படியே! (அவள் கரத்தினைப்பற்றி) சத்தியவதி!
நான் விடை பெற்றுக் கொள்ளுகின்றேன்! விடைபெற்று
கொள்ளுகின்றேன்!
ச. சுகமாய்ப்போய் வாரும்-நீர் மிகவும் சுகமாயிருக்கும்பொழுது
என் ஞாபகம் தமக்குக் கொஞ்சமிருக்கட்டும்.
சு. உன்னை என்றும் மறவேன்! எனதுயிர் உள்ளளவும் மறவேன்!
(கைக்கு முத்தமிடுகிறான்)
ச. பிராணநாதா!-
சு. கண்ணே! (கட்டி யணைத்து முத்தமிட்டுச் சரேலென்று
உதறிக்கொண்டு பித்தம் பிடித்தவன்போல் வெளியில் ஓடுகிறான்)
ச. ஆ! என்னைப்போன்ற பாக்கியவதிகளும் இம்மூவுலகத்தில்
உளரோ? என்பிராணநாதர் என்னைத்தன் கனிவாயால் கண்ணே
என்றழைத்து காதலுடன் முத்தமிடப்பெற்றேன். அவர் உயிரைக்
காப்பாற்றும் பொருட்டு என்னுயிரைப் போக்கப் போகின்றேன்.
பிறகு சுவர்க்கம் சென்று என்றும் இணைபிரியாதங்கு
என்பிராணநாதருடன் வாழ அவர்வரவை எதிர்பார்த்திருக்கப்
போகின்றேன்! சீ! நான்செய்த பாக்கியமே பாக்கியம்! என்
மனம் இப்பொழுது என்ன சந்தோஷமாயிருக்கின்றது! என்னுடல்
பூரிப்படைந்திருக்கின்றது!-இனி நான் தாமதிக்கலாகாது.
மேல் நடக்கவேண்டிய காரியத்திற்கு ஆயத்தம் செய்யவேண்டும்
விரைவில். இவ்வுலகில் நான் ஒருத்தியே பாக்கியசாலி!
பாக்கியசாலி! (போகிறாள்)
---------------
இரண்டாம் காட்சி.
இடம் - பொற்றூண் மண்டபம். காலம் - நள்ளிருள்.
சத்தியவதி சுந்தராதித்யன் உடையில் வருகிறாள்.
ச. ஆ! நான் நாணத்தையெல்லாம் விட்டு, இந்த ஆண்
உடையையணியும்படி நேரிட்டதே! ஆயினும் இதனால் எனக்கு மனவருத்த
மொன்றுமில்லை. என் பிராணநாதரின் பொருட்டுதானே
இதைச்செய்தேன்! அவர்பொருட்டு நான் என்னசெய்தாலும்
எனக்கு சந்தோஷமே யொழிய வேறில்லை. அன்றியும் அவர்
அணிந்த உடை யென்மேனியிற் படுவது எனக்கு ஓர் இன்பத்தையே
தருகின்றது! இனி நான் தாமசம் செய்யலாகாது!
காலம் நெருங்கிவிட்டது! - நான் இம்மண் மீதில் இருக்கவேண்டிய
காலம் ஆய்விட்டதோ, நான் இறக்கவேண்டியகாலம்
நெருங்கிவிட்டதோ? சிறுவயதில் நான் இறப்பதென்றால்
என்னவோவென்று மிகவும் பயந்திருந்தேன், இப்பொழுது இன்னும்சிறிது
பொழுதுக்கெல்லாம் நான் உயிர் விடப்போகின்றேன் என
அறிந்தும் எனக்கு ஒருபயத்தையும் காணோம்! ஆயினும் இக்கொலை
பாதகர்கள் எப்படி கொல்லப் போகின்றனரோ எனவே
வருத்தமாயிருக்கின்றது. ஒருவேளை குத்திக் கொல்லுவார்களோ?
அல்லது தலையைச் சேதிப்பார்களோ? அல்லது - சீ! இவைகளை
யெல்லாம் பற்றி இப்பொழுது யோசித்தால் என்மனம் கலங்கும்;
யோசியாதிருத்தலே நலம். இதோ இருக்கும்படியான
ஔஷதத்தை நான் உட்கொண்ட உடனே மூர்ச்சையாகப் போகின்றேன்,
பிறகு நான் சுவர்க்கத்திலேயே விழிக்கப்போகின்றேன்.
கேவலம் மண்ணாகிய இவ்வுடல் பிறகு என்னவாயின் என்ன?
அம்மட்டும் நல்லயுக்தி செய்தோம். இல்லாவிடின் கஷ்டமாய்
முடிந்திருக்கும். எனக்கிவ்வளவுயுக்தி யெங்கிருந்து வந்ததென்று
எனக்கே யோசிக்குமிடத்து ஆச்சரிய மாயிருக்கின்றது. வேளைக்கு
எல்லாம் வரும்! இல்லாவிடின் எல்லாம்வல்ல இந்த
ஜெயதேவனையே ஏமாற்றும்படியான சக்தி எனக்கெங்கிருந்து வந்தது!
பதினைந்து நாழிகையாம் சமயமாயிற்று. கொலையாளிகள்
வந்துவிடப்போகின்றார்கள். [சயனித்து.] காலம் நெருங்கிவிட்டது.
அம்மட்டும் நமது தாய் தந்தையர் நமக்கு முன் இறந்தது
நலமாயிற்று. அவர்களிப்பொழுது இருந்திருப்பாராயின், நான்
இறந்ததைக் காண்பாராயின் என்ன வருந்துவார்கள்! - ஐயோ!
அண்ணன் சுகுமாரன் வருந்துவான்! இதைக்கேள்விப்பட்டவுடன்
அவனுக்குத் தேறுதல் சொல்லும்படி என்பிராணநாதருக்கு
எழுதியிருக்கின்றேனல்லவா? என்ன தேறுதல் சொன்ன
போதிலும் உடன் பிறந்த பந்தம் விடாது. என்பிராணநாதரோ
என்னை மறக்கமாட்டார். இப்பொழுதாவது நான் அவர் மீது
கொண்டிருக்கும் காதலின் திறத்தையறிவார். நான் அவர்
பொருட்டு என்னுயிரை விடுகின்றேன். மனோரமா இதைவிட
அவருக்கென்ன செய்யப்போகின்றாள் பார்ப்போம்.
நேரமாய்விட்டது நேரமாய்விட்டது! ஈசனை தியானித்தவண்ணம்
உறங்கிவிடவேண்டும். ஈசனே! ஜகதீசா! இதோ நான் என்பிராணநாதர்
பொருட்டு உயிர் விடுகின்றேன். எப்படியாவது இப்புவியில்
அவரைத்தீமை யணுகாதபடி காத்து அவரை என்னுடன்
சுவர்க்கத்திலே சேர்ப்பீர்! பிராணநாதா! பிராணநாதா!! -
[மருந்தைப்புசித்து மயக்கமாய் விழுகிறாள்.]
------------------
மூன்றாம் அங்கம்.
------------
மூன்றாம் காட்சி.
இடம் - பொற்றூண் மண்டபம். காலம் - நடுநிசி
சத்தியவதி கொலையாளிகளால் கொல்லப்பட்டு படுக்கை மீது கிடக்கிறாள்.
சுந்தராதித்யன் தலைவீரிகோலமாய் அதிகவேகத்துடன்
அறைக்குட் பிரவேசிக்கின்றான்.
சு. சத்தியவதி! சத்தியவதி! [தீபத்தையேற்றி சத்தியவதியின் உடலைப்
பார்த்து, ஸ்தம்பித்தவனாய் அப்படியே கீழேவிழுகிறான். பிறகு சற்று
பொறுத்து எழுந்திருக்கின்றான்.] நான்தான் கொன்றேன்! நான்தான்
கொன்றேன் சத்தியவதியை! சந்தேகமில்லை என்பொருட்டே
இறந்தாள்! நான் தான் கொன்றேன்! என்ன என்புத்தி
சுவாதீனமில்லாதிருக்கின்றதே! என் தலையில் ஏதோ பளுவாயிருக்கின்றது!
ஏன் என்னால் அழமுடியவில்லை? பேசவுமுடியவில்லை?
எனக்கு என்ன பயித்தியம் பிடிக்கும்போலிருக்கின்றதே! சீ
நமது மனதைச் சுவாதீனப் படுத்தவேண்டும்-இப்பொழுது
நான் என்ன செய்வது? இறப்பதா சத்தியவதியுடன்? நானே
கொன்றேன்-இறக்கலாகாது, பழிவாங்கவேண்டும் முன்பு!-
இல்லாவிடின் -ஜெயதேவன்!-அதிருக்கட்டும் என்ன என்மனம்
இப்படி சபலிக்கின்றது?-நான் இங்கிருக்கலாகாது! விடைபெற்றுப்
போவோம். சத்தியவதி, நான் போய் வருகின்றேன்!-
ஓ! இறந்துவிட்டாயோ?-நான்தானே கொன்றேன்?-நான்
முன்பு பழிவாங்கிவிட்டு பிறகு இறந்து உன்னிடம் வருகின்றேன்-சீ!
நமது மனதை ஒருவழி நிறுத்தவேண்டும் இல்லாவிடின்
பயித்தியம் பிடித்துப்போம்! (பிரேதத்திற்கு முத்தமிடுகிறான்)
சீ! கொன்றபாதகன் முத்த மிடுவதாவது! ஆயினும்
நீ என்னை மன்னித்தாய்! (கைக்கு முத்தமிட்டு விரலிலிருந்த
மோதிரத்தை எடுத்துக்கொண்டு) சத்தியவதி! சத்தியவதி!-
(விளக்கை யவித்துவிட்டு வெளியில்
வெறி பிடித்தவன்போல் ஓடுகிறான்)
சற்று பொறுத்து ஜெயதேவன் மற்றொருபுறமாக மெல்ல வருகிறான்.
ஜெ. சுந்தராதித்ய ராஜனே! சுந்தராதித்ய ராஜனே! உம்மிடம் ஒரு
முக்கியமான விஷயம் கூறவேண்டும் எழுந்திரும், சற்று எழுந்திரும்,
உமது நித்திரையைக் கலைப்பதற்காக மன்னிக்கவேண்டும்-
என்னபதில் ஒன்றையும் காணோம்! அறை இருள் சூழ்ந்திருக்கின்றது
விளக்கை யேற்றுவோம்! சப்தமொன்றையும்
காணோம்! (சத்தியவதி அருகிற்சென்று) சரி! இனி சந்தேகம்
வேண்டியதில்லை! ஜெயதேவா! நீ சுகமாய் வாழலாம் இனி.
ஒழிந்தான் உன் ஜன்மத்துவேஷி சுந்தரன்! அப்பா! இனி நான்
கவலையற்றுறங்குவேன்! இனி எனது எண்ணங்களெல்லாம்
கைகூடினாற் போலத்தான்!-சுந்தரா! இப்பொழுதென்ன
சொல்லுகின்றாய்? இப்பொழுது எங்கேபோயது உன்புத்தியும்,
யுக்தியும், புகழும், வீரமும், கர்வமும், வல்லமையும்,
எண்ணங்களும் எல்லாம்? இனியாவது ஒப்புக்கொள்ளுவாயா உன்னைவிட
நான் மேலானவன் என்று? உன்வணங்காமுடி இனியாவது
வணங்குமா எனக்கு? (முடியைக் காலால் உதைத்துத் தள்ள அது
கீழேவிழ சத்தியவதி யெனக் காண்கிறான்.) ஆ! இதென்ன!-
சத்தியவதி! நன்றாய்ப்பார்ப்போம்! சந்தேகமில்லை, ஐயோ! தப்பினான்
சுந்தரன்! சத்தியவதி நம்மை ஏமாற்றி உண்மை யெல்லாம்
அறிந்து அவனைக் காப்பாற்றும்பொருட்டு தன்னுயிரை
விடுத்திருக்கின்றாள்! ஐயோ! என்ன மதிமோசம் போனோம்!
இன்னொருமுறை பார்ப்போம், சந்தேகமில்லை சத்தியவதிதான்!
அவனதுடையை யணிந்திருக்கின்றாள்! கொலையாளிகள் இவளை
சுந்தரனென வெண்ணிக் கொன்று சென்றிருக்கின்றனர்! தீர்ந்தது
நமது வேலை! ஜெயதேவா! ஜெயதேவா! அழிந்தாய் அழிந்தாய்
நீ! ஆ! என்ன மதிமோசம் போனேன்! அதிருக்கட்டும்
இந்த சத்யவதியின் குணத்தை என்னென்றுசொல்வது? அவன்
மனோராமாவை மணம்புரியப் போகின்றானென அறிந்தும் அவன்
பொருட்டு தன்னுயிரைக்கொடுத்து அவனைக் கப்பாற்றியிருக்கின்றாளே!
இப்படி நமக்கொருவரும் அகப்படமாட்டேன் என்கிறார்களே!
ஐயோ! நான் எல்லாம் தீர்ந்துவிட்டது என எண்ணி
இறுமாந்திருக்கும் சமயத்தில் எல்லாம் அடியுடன் அழிந்ததே!
தீர்ந்தது! இனி நான் என்ன செய்வது?- இறப்பதா நானும்
சத்தியவதியுடன்? சீ! பயித்தியக்காரர்கள் இறப்பார்கள்!
மூடபுத்தி! உயிருள்ளளவும் தைரியத்தைக் கைவிடலாகாது!
இப்பொழுதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை- சத்தியவதி
சுந்தரனைக் கொன்றாள் என்று கூறுவதற்குப்பதிலாக சுந்தரன்
சத்தியவதியைக் கொன்றான் என மாற்றிவிட வேண்டியதொன்றே!
இன்னும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை.சுந்தரன் நமது பட்டணத்து
எல்லையைத் தாண்டிப்போயிருக்க மாட்டான். இன்னும்
நமது ஆட்களிடம் எப்படியாவது தேடிக் கண்டுபிடிக்கும்படி
உடனே உத்திரவளிக்கவேண்டும்.ஒருவேளை மாறுவேடம்
பூண்டு சென்றிருப்பான். ஒரு க்ஷணமும் நான் வியர்த்தமாக்கலாகாது.
வருவது வரட்டும்! நானாவது அதைரியப்படுவதாவது! (விரைந்து போகிறான்.)
---------------
நான்காம் காட்சி.
இடம் - காவிரிப்பட்டினச் சமுத்திரக்கரையோரம்.
காலம் - காலை
சுந்தராதித்யன் வருகிறான்.
சு. சீ! என்ன மூடயோசனை பண்ணிய வண்ணமிருந்தோம் இந்த
இரண்டு தினங்களாக! ஈசன் நமக்களித்த உயிரை காலம் வருமுன்
விடுவது பேதமையாகும். ஏதும் சக்தியற்றவனன்றோ
அவ்வாறு வெறுத்து உயிர்விடுதல் வேண்டும்? அன்றியும்
நான் இப்பொழுது இறப்பேனாயின் சத்தியவதியின் மரணத்திற்குக்
காரணமாயிருந்த அப்பாதகன் ஜெயதேவன் பழிவாங்கப்படாது
இருமாந்தல்லவோ செல்வான். சீ! எது எப்படி
இருந்தபோதிலும் மனோரமாவின் பொருட்டும், சுகுமாரன்
பொருட்டுமாவது நான் உயிர்வாழவேண்டும். ஐயோ பாவம்!
நானிறப்பேனாயின் ஒரு பாபமுமறியாத மனோரமாவும் உயிர்
விடுவாள். சத்தியவதியின் மரணம் ஒன்றுபோது மெனதுயிர்க்கு!
இன்னொன்றும் வேண்டுமோ? வேண்டாம் வேண்டாம்!
ஆ! நான் எங்கேயோகாணோமென்று இந்த இரண்டு மூன்று
தினங்களாக மனோரமா என்ன வருந்தியிருப்பாள் பாபம்!
நான் சீக்கிரம் திரும்பி மதுரைக்குப் போகவேண்டும். ஆயினும்
தங்கையைப் பறிகொடுத்த அந்த சுகுமாரனை எப்படி
பார்ப்பது என்று நாணமாயிருக்கின்றது. மிகவும்
வருத்தப்பட்டிருப்பான். சீ! நாம் அருகிலிருந்து அவனுக்குத்
தேறுதல் கூறாது வாளா கழித்தோமே நாட்களை! சே! இவ்விரண்டு
தினங்களும் சத்தியவதியைக்குறித்து வருந்திக்கொண்டிருந்ததில்
எனக்கொன்றும் தோன்றாமற்போயது. இறந்துபோக
நிச்சயத்திருந்தவனுக்கு என்ன தோற்றப்போகின்றது? உண்மை
தான் - போனதுபோகட்டும் இனிநான் பழையபடி
சுந்தராதித்யனாகவேண்டும். இப்பொழுது நான் என்ன செய்வது?
மதுரைக்குப்போய் மனோரமாவைக் கண்டு, சுகுமாரனுக்கு
தேறுதல்கூறி பிறகு ஜெயதேவனைத் தக்கபடி தண்டிக்கவேண்டும்-
ஆ! எங்கே போயது என்புத்தி? சீ சீ சீ! ஜெயதேவன்
இந்த இரண்டு தினங்களும் சும்மாகவா இருந்திருப்பான்?
இவ்வளவு தூரம் நாமேயறியாதபடி யுக்தி செய்தவன், எப்படியும்
இப்படி தெய்வாதீனத்தால் நடந்துவிட்டபிறகு,
சத்தியவதியை நான்தான் கொன்றதாகவல்லவோ எல்லோருமறியும்படி
செய்திருப்பான்! சரி! நான் இரண்டு நாளாய்
ஒருவர் கண்ணிலும் படாவண்ணம் இங்கிருந்தது அவனுக்கு
மிகவும் உபயோகப்பட்டிருக்கும். கொலைசெய்த நெஞ்சமுடையவன்
அஞ்சி ஒளித்திருக்கின்றானென எல்லோரும் நம்பும்படிச்
செய்திருப்பான். என் பகைவனாயினும் அவன் சிறந்த புத்தி
கூர்மையுடையவன் என்று நான் ஒப்புக்கொள்ளவேண்டியதே!
ஐயோ! இச்சிறந்த யுக்தியையும் புத்தியையும் நல்ல
வழியில் உபயோகிக்கக் கற்கலாகாதா? அதிருக்கட்டும் நான்
வீணில் காலங்கழித்தது போதும்; இப்பொழுது நம்மீதவன்
பழிபோட அவனுக்கு சங்கதிகள் மிகவும் பக்குவமாயே
அமைந்திருக்கின்றன என்பதற்குத் தடையில்லை. இந்த
சந்தர்ப்பத்தையும் அவன் நழுகவிட்டிருக்கமாட்டான். எப்படியிருப்பினும்
மனோரமாவும் சுகுமாரனும் அவ்வாறு கொஞ்சமேனும்
எண்ணியிருக்க மாட்டார்கள். ஆயினும் இவன் போதனையினால்
எது எப்படியாயிருக்கின்றதோ இதுவரையில்! சீ! இவன்
சன்மார்க்க வழியிற் றிரும்புவனல்லன் என்று அப்பொழுதே
நான் கொன்று விட்டிருப்பேன். இந்த சுகுமாரன் வேண்டினானே
என விட்டுவிட்டேன். மனிதன் எவ்வளவு பலசாலியானபோதிலும்
உலகத்திற்கு அஞ்சி யொடுங்கவேண்டிவருகின்றது.
இந்த ஜெயதேவனுக்கு நான் பயந்துவிட்டேனா? அதொன்றுமில்லை.
கூடிய சீக்கிரம் இவனை அடியுடன் அடக்கவேண்டியது
தான். மதுரைக்குப் போவோம் உடனே- இவ்வுடையுடன்
போவதா மனோரமா வெதிரில்?-யாரோ மூவர் இவ்வழிநோக்கி
வருகின்றனர்? நித்யானந்தன், தேவரதன்,
சூரசேனன்! இவர்கள்பேசிக்கொண் டிங்கு வருவானேன்?
கேட்போம் மறைந்திருந்து, ஏதோவிசேஷம் இருக்கவேண்டும்.
(மறைந்துகொள்ளுகிறான்)
தேவரதன், சூரசேனன், நித்யாநந்தன் வருகிறார்கள்.
சூ. பிறகு முடிவில் நாம் என்ன செய்வது?
நி. அவர்களை யெல்லாம் கொன்றுவிட வேண்டும்.
சூ. சற்று பொறுமையா நீர்! கொன்றுவிடவேண்டுமென்று
வாயால் கூறிவிட்டால் ஆய்விட்டதா? முதலில் இவரை-
சுந்தராதித்யரைக் கண்டுபிடிக்கவேண்டுமே.
நி. ஆம் கண்டுபிடிக்கவேண்டும்.
சூ. எப்படி கண்டுபிடிப்பது? அதல்லவோ கஷ்டமாய் முடிந்தது!
அவர் எங்கேயோகாணோமே! ஒருவேளை இந்த ஜெயதேவன்
அவருக்கும் எங்காவது வழிவைத்து விட்டானோ என்னவோ?
அப்படியிராது. ஆயினும் அவர் காணாதிருப்பானேன்? இந்த
ஜெயதேவன்தான் சத்தியவதியைக் கொன்றிருக்கவேண்டும்
சந்தேகமில்லை. ஆயினும் எப்படியோ, ஒருவேளை-
நி. சத்தியவதியை சுந்தராதித்யர் கொன்றார் என்று எவன்
கூறினபோதிலும் அவன் தலையை வெட்டியெறிவேன்!
சூ. அடடா! நான் ஒரு யோசனைக்குச் சொன்னேனையா!
ஜெயதேவன் கூறினால் அதை நான் நம்பிவிட்டேனா என்ன?
நி. எதற்கும் கூறலாகாது என்னெதிரில்!
தே. அதிருக்கட்டுமையா, நமக்குள் ஒருவருடன் ஒருவர்
சச்சரவிட்டுக் கொண்டிருப்பதற்கா இங்குவந்தோம்? இப்பொழுது நாம்
என்ன செய்வது யோசிப்போமையா. நமது பக்க மிருப்பவரெல்லாம்
நாம் மூவர்தான் பதினாயிரவரோ ஜெயதேவனுக்குடன்படாவிட்டாலும்,
சுந்தராதித்யரைக் காணாமையால், இன்ன
செய்வதென்றறியாது திகைத்து நிற்கின்றனர். நான்தான் அவர்களுக்கென்ன
சொல்லக்கூடும்? ஐயோ சுந்தராதித்யர் வெளிவந்து
ஒரு வார்த்தை கூறினாலும் போதும், இந்த ஜெயதேவனுக்கு
இவ்வளவு பலமிப்பொழுது இருந்தும் ஒருகை பார்த்துவிடலாம்.
சுகுமாரராஜனாவது நமதுபக்க மிருந்தாலும் பெரிதல்ல;
அவரும் எப்படியோ அந்த ஜெயதேவன் பேச்சைக்கேட்டு-
சு. (திடீரென்று அவர்கள் முன்வந்து) என்ன! என்ன! சுகுமாரனா?
மூவரும். சுந்தராதித்யர்!
சு. தேவரதா!என்ன கூறினாய்?சுகுமாரனா ஜெயதேவன்
வார்த்தையைக்கேட்டு நடக்கின்றானென்றாய்? நீங்கள்
பேசியதையெல்லாம் கேட்டறிந்தேன்; இதைமாத்திரம் சொல் எனக்கு.
தே. ஆம்.
சு. சுகுமாரன்? சுகுமாரன்?
தே. ஆம்.
சு. உன் மீதாணைப்படி?
தே. ஆம்.
சு. சூரசேனா?நித்யாநந்தா?
இருவரும் ஆம்.
சு. ஆம்!தேவரதா!நான் மதுரையைவிட்டுப் புறப்பட்டதன்
பின் நடந்த விருத்தாந்தங்களை யெல்லாம் சுருக்கமாயும்
முக்கியமான விஷயங்களில் ஒன்றும் விடாமலும் கூறு.
தே. மறுநாள் ஜெயதேவர் மிகுந்த அவசரத்துடன் மதுரைக்குவந்து
ஒருவரிடமும் ஒன்றுங்கூறாது சுகுமார ராஜனைத் திடிரென்று
அழைத்துச்சென்றார் தஞ்சைக்கு. பிறகு அங்கு என்ன நடந்ததோ
அறியோம். மறுநாள் தேசமெங்கும் நீர் மனோரமாவை
மணக்கவேண்டி சத்தியவதியைக் கொன்றுவிட்டதாகவும்,
அதன்பொருட்டு எங்கேயோ மறைந்து திரிகின்றதாகவும், உம்மைக்
கண்டுபிடித்து உமது தலையைக்கொண்டு வருபவர்களுக்கு
லட்சம் பொன்னும் உறையூர் அரசில் பாதியும் கொடுப்பதாகவும்
பறைசாற்றப்பட்டது; இது யார் உத்தரவின் மீது என்று நாங்கள்
மெல்ல விசாரிக்க ஜெயதேவருடைய தெனக்கண்டறிந்தோம்;
ஆயினும் பறையென்னவோ சுகுமாரரின்பேரில்தான் சாற்றப்பட்டது.
சு. சுகுமாரன் எங்கு இருக்கின்றான் இப்பொழுது?
தே. மதுரையிற்றான் இருக்கின்றார்போலும். நான் அவரைக்காண
வேண்டுமென்று எவ்வளவோ பிரயத்தனப்பட்டேன்; தங்கையிறந்த
துக்கத்தினால் சில காலம்வரையில் ஒருவரையும் பார்க்கமாட்டாரென்று
ஜெயதேவர் தடுத்துவிட்டார். எல்லாம் அவரிட்டது
சட்டமாயிருக்கின்றது மதுரையிலும் தஞ்சையிலும் இப்பொழுது.
சு. மனோரமாவைப்பற்றி என்ன சமாசாரம்?
தே: அதைக்கூற மறந்தேன்! மனோரமாதான் உம்மைச் சத்தியவதியைக்
கொல்ல ஏவிவிட்டதாகக்கூறி அந்த ராஜகுமாரியையும்
ஸ்வேதகேது ராஜனையும் சிறையிலிட்டிருக்கின்றனர் ஜெயதேவர்.
சு. ஆ! மதுரை நாட்டார் சும்மா இருந்தார்களா?
தே: அவர்கள் என்ன செய்வார்கள் பாபம்! உமது தலைகாணாதிருக்கவே
முறியடிக்கப்பட்ட சேரசைனியங்களெல்லாம் இதுதான்
சமயமென்று ஜெயதேவரைக் கூடிவிட்டனர், பாண்டிய
சைனியங்களெல்லாம் தலைவன் இன்றி இன்னது செய்வதென்றறியாது
திகைத்து நிற்கின்றன!
சு. நமது சைனியங்கள் எப்படி யிருக்கின்றன?
தே: பெரும்பாலும் சுகுமார ராஜன் பக்கமே இருக்கின்றன.
சு. ஜெயதேவன் பட்சமா? - சுகுமாரன் பட்சமா?
தே: எல்லாம் ஒன்றுதானே எப்படிகூறினாலென்ன?
சு. அதிருக்கட்டும் பதினாயிறவர் செய்தியென்ன?
தே: ஜெயதேவர் பதினாயிரவரைத் தன் பக்கம் சேரும்படி எவ்வளவோ
கெஞ்சியும், உருட்டியும் பார்த்தார். அதற்கெல்லாம்
அவர்கள் உடன்படாவிட்டாலும் உம்மைக்காணாது அவர்கள்
இன்ன செய்வதென்றறியாது கலங்கிநிற்கின்றனர். ஜெயதேவரை
அடக்கவேண்டுமென்று நான் அவர்களுக்கு எவ்வளவோ
கூறியும் முதலில் உம்மைக்கண்டுபிடிக்க வேண்டுமென்று
ஒரேபிடிவாதமாய் இருக்கின்றனர். எது எப்படியிருக்குமோவென்று
யுத்தசன்னத்தராய் இக்காவிரிப்பட்டினத்தில் பாசறையில்
தங்கியிருக்கின்றனர். அம்மட்டும் தெய்வாதீனத்தால் நாங்கள்
உம்மைக் கண்டுபிடித்தோம். இனி பாசறைக்குத்தாம்
வரவேண்டியதுதான் பிறகு உமது கட்டளை எல்லாம்.
நி. ஜெயதேவனைக் கொல்லவேண்டும்.
சு. நித்யாநந்தா! அஞ்சாதே அப்படியே செய்வோம் சீக்கிரத்தில்,
சூரசேனா! உன்னை நான் மறவேன் ஆபத்காலத்திலும் நன்றி
மறவாதிருந்தாய்! உன் குணத்தை முற்றிலும் இன்றேயறிந்தேன்!
தேவரதா! உன்னை நான் புகழவேண்டுமோ?
தே. வேண்டியதில்லை. நீர் உடனே பாசறைக்குவாரும்; இன்னும் ஓர்
தினத்தில் இந்த ஜெயதேவரது வல்லமையை நான் அறிகிறேன்!
இனி எனக்கொருபயமுமில்லை.
சு. சூரசேனா! உன் மனதில் இப்பொழுதென்ன யோசித்திருக்கிறாய்யெனத்
தெரியும். இம்மோதிரம் யாருடையது தெரியுமல்லவா?
சூ. ஆம். சத்தியவது தேவியுடையது.
சு. இது என்கையில் எப்படிவந்தது? சத்தியவதியை நான் கொன்றுதானே
இருக்கவேண்டும்?
சூ. நான் நம்பமாட்டேன்.
நி. சத்தியவதியை நீர் கொன்றதாக யாராவது என்னெதிரில் கூறினால்
அவர்கள் தலையை வெட்டியெறிவேன்!
சு. ஆஹா! - நானே கூறினால்?
நி. உமது தலையை வெட்டியெறிவேன்!
சு. கெட்டிக்காரன்! தேவரதா! சூரசேனா! நித்யாநந்தா! உங்கள்
மூவருக்கும் நான் ஒரு சமாசாரம் கூறவேண்டிய தென்கடமை.
என்னைப்பாருங்கள். என் தாய்தந்தையர் மீதாணைப்படி
சத்தியவதியைக் கொன்றவன் நான் அன்று! அவ்வளவே உமக்கு நான்
இப்பொழுது கூறக்கூடும்; பிறகு காலம் வரும்பொழுது மற்ற
விஷயங்களை யறிவீர்.
தே: இதை எங்களுக்குக் கூறவேண்டுமோ?
சு. அப்படியல்ல உங்களுக்கு மனதில் எங்கு ஸ்ரீஹத்தி
செய்தவனுக்குதவுகின்றோமோ வென்று, கிஞ்சித்தேனும்
சந்தேகமிருக்கப்போகின்ற தெனக்கூறினேன் மற்றொன்றுமில்லை.
சூ. ஐயனே! நான் அவ்வாறுதான் சற்று முன்பாக சந்தேகித்தேன்
என்னை மன்னிக்கவேண்டும்.
சு. இப்பொழுது சந்தேகிக்கின்றாயோ?
சூ. இல்லை இல்லை, என்னுயிர் மீதாணைப்படி இல்லை!
சு. சூரசேனா, எழுந்திரு உன்னை நான் அறிய அறிய உன்னிடம்
அதிக நற்குணத்தையே கண்டுவருகின்றேன்.
தே. வாரும் நேரமாகின்றது பாசறைக்குப்போவோம். உம்மைக்கண்டவுடன்
மாரிகாலத்துச் சூரியனைக் கண்டதுபோல் பதினாயிரவரும்
மிகவும் சந்தோஷப்படுவார்கள். வாரும், நாளையதினம்
இந்நேரத்திற்கு ஜெயதேவரும் சுகுமாரராஜனும் எங்கிருக்கின்றார்களோ
பார்க்கவேண்டும்.
சு. தேவரதா! சுகுமாரன்மீது நீ வீணில் சந்தேகங்கொண்டிருக்கின்றாய்.
அவனை அறியாய் நீ! இதில் ஜெயதேவனது சூது
ஏதோ இருக்கின்றது. அவன் ஒருகாலும் என்மீது வந்திருக்கிற
இந்த அவதூறை நம்பியிருக்கமாட்டான். இது கொஞ்சம்
யோசிக்கவேண்டிய விஷயம். வாருங்கள் நாம் போவோம்.
நி. முதலில் இவ்வாடையைக் களைந்துவிட்டு வேறு பூணவேண்டும்.
சு. அப்படியே செய்கிறேன், வா நித்யாநந்தா. (போகிறார்கள்)
----------------
முதல் காட்சி.
இடம்- திண்டுகல் அருகில் ஓர்பாசறை.
காலம்-பகல்.
சுகு. ஜெயதேவா! சுந்தரன் இவ்வாறு பதில் அனுப்பியிருப்பான்
என்று நீ நம்புகின்றாயா? ஒருவேளை பதில் கொண்டு வந்த
சேவகன் பொய்யுரைத்திருந்தால்?
ஜெ. ஐயனே, மரணகாயப்பட்டு இன்னும் சிறிது பொழுதில் இறக்கப்
போகின்றவன் ஏன் பொய்யுரைக்கவேண்டும் நம்மிடம்?
சுகு. சுந்தரனுக்குப் பயித்தியந்தான் பிடித்திருக்கவேண்டும்.
ஜெ. ஆம் அப்படித்தான் இருக்கவேண்டு மென்று நான் முன்னமே
நினைத்தேன்! இல்லாவிடின் சுத்தவீரனாகிய அவர், தூதனாக
சமாதான நிருபம் கொண்டுவந்தவனை, தர்மசாஸ்திரங்கள்
கூறுவதை யெல்லாம் மறந்து, மரண காயப்படுத்தி அனுப்பியதுமன்றி,
தன் பழய சிநேகத்தை யெல்லாம் விட்டு, உம்மையிறந்தபின்
தான் பார்ப்பதாகச்சேதி சொல்லியனுப்புவாரோ? ஐயனே!
ஸ்ரீ ஹத்தி செய்பவர்களுக்குச் சம்பவிக்கும் கதிகளில் இது
ஒன்றென பெரியோர் இயம்பக் கேட்டிருக்கின்றேன் நான்.
சுகு. சுந்தரா! சுந்தரா! -ஜெயதேவா, யுத்தஞ் செய்வது தானோ
இனி? வேறு வழியில்லையோ?
ஜெ. இருந்தாற் சொல்லும், எனக்கு வேறுவழி யொன்றும் புலப்படவில்லை.
நம்மாலியன்றளவு சமாதானமாகப் பார்த்தோம். எதற்குமவர்
உடன்படாவிட்டால் இனியார் குற்றம்? அதுவும் பழி
அவர் மீதிருக்கிறது.
சுகு. ஜெயதேவா! உன்மீதாணைப்படி சொல்; யுத்தத்திற்குப் போதல்
தவிர வேறு மார்க்க மொன்று மில்லையா?
ஜெ. என்மீதாணைப்படி வேறு வழியில்லை. சுகுமாரரே, இந்தயுத்தத்தைத்
தவிர்க்க வேண்டுமென்று நான் எவ்வளவு பிரயாசையெடுத்துக்
கொண்டேன் என்று உமக்கே தெரியும்.
சுகு. சுந்தரன் முன்னின்று யுத்தம் புரிய ஆரம்பித்தால் அவனை வெல்ல
யாரால் முடியும்?
ஜெ. பழய சுந்தரர் என்று இப்பொழுது நம்பாதீர். பயித்தியம் பிடித்திருக்கின்ற
அவரால் இப்பொழுது என்னமுடியும்? நீர் ஒன்றும்
அஞ்சவேண்டாம்.
சுகு. நாம் ஜெயிப்போம் என்று நான் நினைக்கவில்லை-எது
எப்படியிருந்தபோதிலும், ஜெயதேவா, தெய்வாதீனத்தால் சுந்தரன்
நமது சைனியங்கள் கையிலகப்படின் அவனுக்கு ஒரு தீங்கும்
இழைக்கலாகாது என்று கட்டளையிட்டாயா?
ஜெ. ஆம், அவரை எப்படியாவது அப்படியே பிடித்துவரவேண்டுமென்று
கட்டளையிட்டிருக்கின்றேன். என்ன நேர்ந்தபோதிலும்
அவருடைய ரோமத்திற்கும் சிறிது ஆனி நேரிடாவண்ணம்
பார்த்துக்கொள்ளும்படி உத்திரவு செய்திருக்கின்றேன். சுகுமாரரே,
உமது நற்குணத்தை நான் என்னென்று வியப்பேன்! உமது
சிரத்தைக் கொண்டு வருபவனுக்கு லட்சம் பொன் தருவதாக
அவர் பறை சாற்றியிருக்க, அவர் பொருட்டு தாம் இன்னும்
எவ்வளவு பரிவுடையவராய் அவருயிரைக்காப்பாற்ற முயலுகின்றீர்?
ஒருவேளை நீர் யுத்த்தில் அகப்பட்டால் அவர் சேவகர்கள்
உம்மை விடுவார்களென்று நினைக்கின்றீரோ?
சுகு. கொன்றுவிடட்டும். அப்படி யிறந்தாலும் பெரிதல்ல, நான்
இப்பொழுது இருக்கும் மனநிலையினின்றும் தப்பி--ஜெயதேவா,
உன்னையொன்று வேண்டிக் கேட்டுக்கொள்ளுகின்றேன்
செய்கின்றாயா? நீ மிகுந்த புத்திசாலி,உன்னாலாகாத தொன்றுமில்லை.
ஜெ. என்ன சொல்லும்?
சுகு. ஜெயதேவா, நாளையதினம் யுத்தம் ஆரம்பிக்கு முன்பாக நான்
சுந்தரனை நேரில் ஒருமுறை காணும்படி ஏதாவது யத்தனம்
செய்வாயா? அப்படிச் செய்வையாகில் இந்த யுத்தம் எல்லாவற்றையும்
நான் நிறுத்திவிடுகின்றேன், இதை மாத்திரம் எப்படியாவது
செய், என் அரசில் பாதி தருகிறேன்.
ஜெ. ஐயனே! உமக்கு நான் இன்னும் என்ன சொல்லப்போகின்றேன்?
உலகில் அசாத்தியமான காரியத்தைக் கேட்டால் என்ன
சொல்வது? என்னுயிரைக்கேளும் தருகின்றேன் இது அசாத்தியம்.
சுகு. நானாகப்போய்ப் பார்க்கின்றதா?
ஜெ. ஐயையோ! இதென்ன மூடத்தனம்! உமது தலையைக்கண்டவுடன்
அவரது சேவகர்கள் வெட்டிக் கொண்டுபோய் விடுவார்களே!
நீர் எப்படி அவரது பாசறைக்குப் போகப் போகின்றீர்?
வேண்டாம் நான் சொல்வதைக் கேளும். இந்தத் தேவரதன்
சூரசேனன் பதினாயிரவர் இவர்களெல்லாம் அவருக்குதவியாக
இருக்கின்றவரையில் அவர் நாம் கூறும்படியான எதற்கும்
உடன்படமாட்டார். இந்தயுத்தத்தில் நாம் இவர்களை யெல்லாம்
அடக்கி விடுவோமாயின் பலம் குன்றியபின் சிங்கமும் நாயின்
சினேகத்தைத் தேடுமென்று வழிக்குவந்து விடுவார், பிறகு தானாக
உம்மிடம் வந்து மன்னிப்புக் கேட்பார், தான் செய்த தெல்லாம்
தவறென்று ஒப்புக்கொண்டு, நான் சொன்னேனே
பாரும்.
சுகு. சுந்தரா! சுந்தரா! இப்படியும் வருமென்று நான்கனவிலும்
நினைத்தவனல்லவே!-ஜெயதேவா, இதெல்லாம் நினைவுதானே
கனவல்லவே?
ஜெ. ஐயனே! மிகவும் மனத்தளர்வடைந்திருக்கின்றீர்; இப்பொழுது
உடனே சென்று உமதந்தரங்கமான அறையில் உறங்கும்
சற்று. மிகவும் ஜாக்கிரதையாக உம்மைக்காக்கும் பொருட்டு
சேவகர்களை நியமித்திருக்கின்றேன் அங்கு. ஒன்றும் அஞ்சாதீர்.-
சேவகா! ஜாக்கிரதையாக அழைத்துச்செல். (ஒரு சேவகன்
வந்து சுகுமாரனை அழைத்துச் செல்கிறான்.)- ஐயோ
பாவம்! சுகுமாரா! உன் வருத்தமெல்லாம் சீக்கிரம் ஒழிவாய்
நீ மிகுந்த நற்குணமுடையவன், ஆகவே இப்பாழ் உலகில்
இருக்கத்தக்கவனல்லன், சுவர்க்கமே உனக்குத்தக்க இருப்பிடம்,
சீக்கிரம் அங்கு செல்வாய்!-சரி இதுவரையிலும் நமது சூதெல்லாம்
சரிப்பட்டே வந்தது. இனி யென்ன செய்வதென்று யோசிப்போம்.
எல்லாம் சரிதான்- சுந்தரன் சைனியங்கள் எவ்வளவு
என்று நாம் நன்றாயறிவதற்கில்லையே. தெய்வாதீனத்தால்
நமது கையில் அகப்பட்ட இந்த சூரனேனும் எவ்வளவு பயமுறுத்தியும்
ஒன்றும் சொல்கின்றானில்லை-ஜெயிப்பதாக சுகுமாரனிடம்
விரைவிற் கூறிவிட்டபோதிலும், இவ்வளவு உபபலம்
எனக்கிருந்தும் அந்த சிங்கத்துடன் போர்புரிவ தென்றால்
பாதி பிராணனுடன்தான் ஆரம்பிக்கவேண்டி வருகின்றது.
அவனது படைகளை எப்படி அமைத்திருக்கின்றானென
அறிந்தாலும் நலம், அதுவும் ஒன்றும் தெரியவில்லை.-
[நான்கு சேவகர்கள் சூரசேனனையும் குருநாதனையும்
இருப்புச்சங்கிலிகளால் கட்டியவண்ணம் அழைத்து வருகின்றனர்.]
சே. ஜெயதேவராஜனே! தாம் ஆக்கியாபித்தபடி நாங்கள் நால்வருமாக
எவ்வளவோ வதைத்துப் பார்த்தோம் உயிர் ஒன்றைதான்
மிகுத்தினோம் ஆயினும் இப்பாதகன் வாயைத்திறக்கமாட்டேன்
என்கிறான்.
கு. நான் ஜோஸ்யம் பார்த்தேன்! வாயைத்திறக்க மாட்டார்,
விட்டுவிடவேண்டியதுதான்.
ஜெ. சூரசேனா! ஆயின் உன்னைக் கொல்லும்படி கட்டளையிட
வேண்டியது தான்.--உன்னைக்கடைசிமுறை கேட்கின்றேன்.
உன்உயிரை யேன் வீணில் போக்கிக்கொள்ளுகின்றாய்? உன்னை
இவ்வூருக்குச் சிற்றரசனாக்குகின்றேன், கூறிவிடு சுந்தரன்
படைத்தொகை யென்ன? அவைகளை அவன் நாளையதினம் யுத்தத்திற்கு
எவ்வாறமைத்திருக்கின்றான்? சொல்லிவிடு. உன்னுயிர் விட
இஷ்டமோ? அல்லது--
கு. ஆமாம் அரசே! சனி எட்டாவது வீட்டிலாயிற்றே!
சூ. என்னிஷ்டத்தைக் கூறவா?
கு. கூறாதேயும்! குருபதினோராம் வீட்டிலிருக்கின்றார்.
ஜெ. ஸ்!--நீசொல், அதன்படி செய்கின்றேன் நான் கேட்டதை
மாத்திரம் கூறிவிடு உனக்கென்ன வேண்டுமென்றாலும் நான்
தருகின்றேன். குருநாதா! நீ பேசாமலிரு.
கு. அல்ல ஐயா! புதன் மூன்றாம் வீட்டிலிருந்தால் நான் என்ன
செய்வது?
சூ. உன்னைக் கொல்லவேண்டும்!
கு. கேட்டீர்களா? உங்களுக்கு எட்டாவது வீட்டிலே சனி!
ஜெ. என்னையா?-- ஆஹா!--கொல்வது தானே?
கு. கொன்றுவிடுங்கள், ஜோஸ்யம் தப்புமா?
சூ. நான் கொல்லாவிட்டாலும் உன்னைக்கொல்ல பதினாயிரம் பெயர்
காத்துக்கொண்டிருக்கின்றார்கள் பயப்படாதே!
கு. அவர் ஏன் பயப்படுகின்றார்? ஜன்மத்திலே ராகு சாகவேண்டியது
தானே, பயப்படுவானேன்?
ஜெ. குருநாதா! பேசாமலிரு நீ. ஏன்? உங்களுடைய
சுந்தராதித்யதிரைராஜ சிம்மர் இல்லையோ?
கு. அவருக்கு ஜோஸ்யம் தெரியுமா?
சூ. அவர் பேடியாகிய உன்னைக் கொல்லமாட்டார்.
கு. அவருக்கு ஜோஸ்யம் தெரியாது ஆனால்.
ஜெ. சரி! ஆனால் நீ சீக்கிரம் இறக்க வேண்டியதுதான்.
கு. இல்லை! எப்படி சொல்லுங்கள்--ஜன்மத்தில் குரபவாயிற்றே
இவருக்கு; இவர் எப்படி சாவது?
சூ. சந்தோஷம்! ஆனால் உடனே கொன்று விடும்படி கட்டளையிடு
பாபி; இன்னும் வதைத்துக்கொல்லாதே.
கு. நீங்கள் பயப்படாதீர்களையா! புதன் மூன்று--
ஜெ. சூரசேனா! கேவலம் அந்த சுந்தராதித்யன் பொருட்டு நீயேன்
உயிர் இழக்கவேண்டும்.?
சூ. உன்னுடன் இருந்து அரசாளுவதைவிட அவர் பொருட்டு
உயிர்விடுவது மேலாகும்!
கு. புதன் ஐந்திலிருந்தால் இன்னும் மேலாகும்.
ஜெ. அப்படி அவன் என்ன உங்களுக்கு வாரிக்கொடுத்து விடுவது?
கு. ஆமாமையா குரு கொடுக்கிறார், சுக்கிரன் பதினொன்று--
சூ. கொடுக்கவேண்டுமோ? அவர் குணமொன்றே போதும்.
கு. சனி ஐந்திலிருந்தாலும் போதும்.
ஜெ. சத்தியவதியைக் கொன்ற குணம்! அவன் குணத்தைக்
கேட்பானேன்!
சூ. சீ! பேசாதே! சத்தியவதியைக் கொன்றவன் நீதான்; நான்
சத்தியஞ் செய்வேன்! போதும் பாபி! அவரது பெயரை நீ
வாயால் உச்சரிக்கவும் தக்கவனல்லன். உன் குணமெங்கே அவர்
குணமெங்கே! இதிலொன்றில் தெரியவில்லையா? இங்கிருந்து
நிருபம் கொண்டுவந்த தூதனை, அந்நிருபத்தில் தன்னை
எவ்வளவோ தூஷித்திருந்த போதிலும், தூதனாயிற்றே யென்று
எவ்வளவோ மரியாதை செய்து, அந்தட்சணமே கொன்று
விடவேண்டுமென்று ஆரவாரித்தத் தன் படைகளைத் தடுத்து
தானே அவனுக்குத் துணையாய் எல்லைவரையிற் கொண்டுவந்து
விட்டார் அந்த சீமான்! நீயோ சுகுமாரராஜனுக்கு அவர் எழுதிய
நிருபத்தைப் பிரித்துப் பார்த்துவிட்டு, அதைக் கொண்டு வந்த
தூதனாகிய என்னை தர்மசாஸ்திரத்தையும் பாராது வதைத்துக்
கொல்கின்றாய! இன்னும் என்ன பேதம் வேண்டும்? சீ!
நீ ஒரு க்ஷத்திரியனா?--
கு. உங்கள் நட்சத்திரமென்ன சொல்லுங்கள் சொல்லிவிடுகின்றேன்
க்ஷத்திரயனா அல்லவா என்று.
ஜெ. உம்! உன்னை இதற்குள் கொன்று விடலாகாது! இன்னும்
வதைத்துக்கொல்லவேண்டும். அடே! இவனை அந்த மேற்குச்
சிறையில் அடைத்து வையுங்கள். இதோ நான் வருகின்றேன.
சூ. ஜெயதேவா! நீ இறக்கும்பொழுது என்னை நினைத்துக்கொள்!
(சேவகர்கள் அவனை அழைத்துச் செல்கின்றனர்.)
ஜெ. இவனுக்கு இவ்வளவு மன உறுதி எப்படி வந்தது?
கு. சுக்கிர திசையங்கே!
ஜெ. குருநாதா! போ! (குருநாதன் போகிறான்.) அந்த சுந்தரனிடம்
செல்பவர்களுக்கெல்லாம் அவன் தன்னிடமுள்ள உறுதியைப்
புகட்டிவிடுகின்றான். இப்படிப்பட்ட பதினாயிரம் பெயர் உதவியைப்பெற்ற
அத்துஷ்டனை நான் எத்தனைகோடி சைனியம்
பெற்றாலும் எப்படி ஜெயிக்கப்போகிறேன்!- நாளையதினம்
எல்லாம் தெரிந்துவிடுகின்றது. இப்பொழுது நாம் போய் நமது
சைனியங்களை யெல்லாம் சீக்கிரம் எச்சரித்து விட்டு நாளை
காலை யுத்தசன்னதமாகும்படி சொல்லவேண்டும். இப்பொழுது
தான் எல்லோரும் அலுத்துப் போஜனம் செய்து
கொண்டிருக்கின்றார்கள்போலிருக்கின்றது. நாமும் போய் சீக்கிரம்
போஜனம் முடித்துக்கொள்ளவேண்டும்.
ஒரு படைவீரன் ஓடி வருகிறான்.
ப. எதிரிகள் வந்துவிட்டார்கள்! எதிரிகள் வந்து விட்டார்கள்!
அதோ வந்துவிட்டார்கள்! (வெளியில் யுத்த கோஷம்)
ஜெ. ஆ! ஆ! அப்படியா!
(விரைந்து படைவீரனுடன் வெளியிற் போகிறான்.)
--------------
இரண்டாம் காட்சி.
இடம்: மதுரை அருகில் யுத்தகளம்.
காலம்: சாயங்காலம்.
ஜெயதேவன் சைனியங்கள் நான்கு புறமும் ஓடுகின்றன.
ஒருபுறமாக தேவரதன் பதினாயிரவருட் சிலருடன் ஜெயகோஷத்துடன்
வருகிறான்; மற்றொருபுறமாக சுந்தராதித்யன் சில
சோழ சைனியங்களுடன் வருகிறான்.
தே. ஜெய! ஜெய! மகாராஜா! ஜெயித்துவிட்டோம்! ஜெயித்துவிட்டோம்!
ஜெயதேவரது சைனியங்கள் அடியுடன் முறியடிக்கப்பட்டு
எங்கும் ஓடுகின்றன.
சு. அதிருக்கட்டும். சுகுமாரன் எங்கே? யாராவது பார்த்தீர்களா?
தே. அவர் எங்கேயோகாணோம். ஜெயதேவப்பாதகனையும் காணோம்
இரண்டு பெயரும் எங்கேயோ ஓடிப்போய் விட்டாற்போலிருக்கின்றது.
சு. தேவரதா! அவர்களை எப்படியாவது நாம் தேடிக் கண்டுபிடிக்க
வேண்டும் விரைவில்! தேவரதா! சேவகர்களே! ஞாபக மிருக்கட்டும்
சுகுமாரனுடைய மேனியில் ஒரு ரோமத்திற்கு ஆனி
நேரிட்ட போதிலும் நானிறந்தபடியென்று எண்ணுங்கள். எப்படியாவது
தேடிக் கண்டுபிடிக்கவேண்டும். அப்படிக் கண்டுபிடித்து
அவனைத் தீங்கின்றி என்னிடம் கொண்டுவருபவனுக்கு
லட்சம்பொன் தருவேன். எங்கும் சுற்றிப் பாருங்கள்.
(தேவரதன் சில சைனியங்களுடன் போகிறான்)
சுகுமாரன் சாதாரண போர்வீரனுடையில்
பதினாயிரவருட்சிலரால் துரத்தப்பட்டு ஓடி வருகிறான்.
சுகு. ஐயோ! இனித் தப்பவழியில்லை! நான்கு புறமும் சூழ்ந்தனரே!
(சுந்தரா! சுந்தரா! என்று கூவிய வண்ணம் காயப்பட்டுக் கீழேவிழுகிறான்.)
சு. இதோ வந்துவிட்டேன்! குமாரா! (தன் போர்வீரர்களை
அடித்துத்தள்ளி) நில்லுங்கள்! நில்லுங்கள்! (சுகுமாரன் வீழ்ந்து
கிடக்கும் இடம்போய்) குமாரா! குமாரா! (அவனை வாரி எடுத்து)
கழுதைகளே! நான் அவ்வளவு கூறியும் சுகுமாரனைக்
கொல்லப்பார்த்தீர்களே! ஐயோ மூர்ச்சையானான்! அப்படியே
அசையாது சுகுமாரனைத் தோள்மீது எடுத்துப் பாசறைக்கு வாருங்கள்!
தேவரதன் ஓடி வருகிறான்.
தே. ஐயனே! பட்டணத்தில் மனோரமாவை அடைத்திருக்கும்
சிறைக்குத் தீயிட்டுவிட்டு எங்கேயோ ஓடிப்போய்விட்டான்
ஜெயதேவன்! அதோ தீ பற்றி யெறிகின்றது! இன்னும் அரை
நாழிகையிற் சாம்பலாக வேண்டியதுதான் எல்லாம்! நாம்
எப்படிப்போய்க் காப்பாற்றப்போகின்றோம்?
சு. ஆ! ஆ!-தேவரதா! சுகுமாரனைப் பாசறைக் கப்படியே
எடுத்துச்செல்-நித்யாநந்தா! வா என் பின்பாக! மனோரமா!
மனோரமா!
(விரைந்தோடுகிறான்; நித்யானந்தன் பின் துடர்கிறான்
தேவரதன், படைவீரர் சுகுமாரனை எடுத்துச் செல்கின்றனர்)
-----------------
மூன்றாம் காட்சி.
இடம்: சிறைச்சாலை. காலம்: இரவு.
மனோரமா இரும்புச் சங்கிலிகளால் கட்டப்பட்டு அழுத வண்ணம்
நிற்கிறாள்.
ம. -ஐயோ! நான்எதற்கென்றழுவேன்? என் பிதாவின் விதியைக்
குறித்தழுவேனோ? என் பாழுங் கதியைக் குறித்தழுவேனோ?
என் பிராணநாதரின் சதியைக் குறித்தழுவேனோ?
என் பதியைக்குறித்தழுவேனோ? இப்படி ஒன்றின்மேலொன்றாய்
எல்லாம் ஏககாலத்தில் வந்து நேரவேண்டுமா? அன்றியும்
இந்த ஒவ்வொரு விஷயத்திலும் ஏதோ சூது நடந்திருக்கின்றதெனத்
தோன்றுகின்றதெனக்கு; பிதா வயோதிகர் தான், ஆயினும்
அவர் ஒரு காரணமுமின்றி திடீரென்று இறக்கவேண்டிய
காரணமென்ன? அம்மட்டும் அவர் இறந்ததே நலம், இல்லாவிடின்
தன்னரசையும் என்னையும் தன திருகண்ணெனப் பாவித்திருந்தவர்
அரசும் போய், நானும, இக்கதிக்காளானதைக் கண்டிருப்பாராயின்
என்னமனம் வருந்தியிருப்பார்! ஐயோ! என்னை
இச்சிறையி லடைத்த பாதகர்கள் இறந்து கிடக்கும் என் பிதாவின்
சவத்தருகில் அழுதுகொண்டிருந்ததையும் கருதாது ஈவு
இரக்கமின்றி என்னை இங்கு கொணர்ந்து அடைத்துச் சென்றனரே!
சுகுமாரராஜன் நம்மைச் சிறையிலிடும்படி இவ்வாறு
கட்டளையிட்டிருப்பாரோ? அவர் மிகுந்த நற்குணமுடையவராயிற்றே,
என் பிராணநாதரும் அவரைப்பற்றி புகழ்ந்துபேசியிருக்கின்றார்.
தான் என்மீது காதல் கொண்டிருந்தும், தன் நேயனும் நானும்
ஒருவர்மீதொருவர் காதல் கொண்டிருப்பதையறிந்தவுடன்
முகமலர்ச்சியுடன் எம்மைத் தம்பதிகளாக நெடுநாள்
வாழும்படி ஆசீர்வாதம் செய்த புண்ணிய புருஷன் இவ்வாறு
தகப்பனைப் பறிகொடுத்த என்னைச், சிறையிலிடக்
கட்டளையிட்டருப்பாரா? ஒருவேளை நானவர்மீது காதல்
கொள்ளாததன்பொருட்டு பொறாமைகொண்டு என்னை வருத்த
எண்ணினரோ? அல்லது-ஐயோ! அதை நினைக்கவும் என்னெஞ்சம்
தடுமாறுகின்றதே!-ஒருவேளை ஜெயதேவர் நேற்றையதினம்
இங்கு நம்மிடம்வந்து கூறியபடி தன் தங்கை யிறந்ததின்பொருட்டு
என்மீது கோபங்கொண்டு இவ்வாறு என்னைச்
சிறையிலிட்டு என்பதியையும் அரசையும் கைக்கொண்டனரோ?
ஐயோ! இதைப்பற்றி நினைத்தால் எங்கு எனக்குப்
பயித்தியம் பிடித்துப்போகின்றதோ என்று இந்த இரண்டுதினங்களாக
நான் இதைப்பற்றி கருதாதிருப்பதற்கு எவ்வளவோ
முயன்றும் என்மனதைவிட்டு இவ்விஷயம் அகலமாட்டேனெனகின்றதே!
வேறு எதைநினைக்க வாரம்பித்தாலும் இதுவே
சீக்கிரம் கியாபகத்திற்கு வந்துவிடுகின்றது!-சீ! நாம் வீணில்
வருத்தப்படாது, இதைக்குறித்து சற்று தீர்க்காலோசனை
செய்துபார்க்கவேண்டும். நமது பிராணநாதர் சுகுமார
ராஜனுடைய தங்கையாகிய சத்தியவதியின்மீது காதல்
கொண்டிருந்து அவளை, விவாகஞ்செய்து கொள்ளத்
தீர்மானித்திருந்தது உண்மை யாயிருந்திருக்குமா? இருக்கலாம்.
என்னிடம் தான் காதல் கொண்டிருந்தும் என்னை விவாகஞ்
செய்துகொள்வது அசாத்தியமெனக் கூறியது அந்த சத்தியவதிக்கு
வாக்களித்திருந்ததின் பொருட்டாயிருக்கலாம். ஆயினும்
நம்மைக் கண்டபின் நம்மீதே அவர் உண்மையான காதல்
கொண்டார் என்பதற்குச் சந்தேகமில்லை. எதை நான்
அறியாவிட்டாலும் அதை நான் நன்றாய் அறிவேன். ஆயினும்
சத்தியவதியை அதன்பொருட்டுக் கொல்வானேன்? -
ஐயோ! என் பிராணநாதர் ஒருகாலும் அவ்வாறு செய்திருக்கமாட்டார்!
நற்குணமே உருவெடுத்த அவரோ ஸ்ரீஹத்திக்குடன்படுவார்!
அதுவும் உறங்கும் பொழுது கொல்வாரோ? ஒருகாலுமிராது ஒருகாலுமிராது!-
ஆயினும்-ஆயினும்-ஐயோ! நினைக்கவும் எந்நெஞ்சம் பகீர்
என்கின்றதே! -ஆயினும் ஜெயதேவர் கூறியபடி அந்த சத்தியவதிக்கு
வாக்களித்திருந்ததினின்றும் தப்பித்துக்கொள்ள
அம்மாதை ஒருவேளை -ஈசனே! ஈசனே! அப்படியிராது
இராது!-சத்தியவதியின்மீது தாம் முன்பு காதல்கொண்டிருந்ததும்
அப்பெண்ணைத் தாம் விவாகம்செய்துகொள்ள வாக்களித்திருந்த
விஷயமும் இதையெல்லாம்பற்றி நமக்கு ஒருவார்த்தையும்
அவர் கூறவில்லையே! அன்றியும் திடீரென்று அன்றையதினம்
என்னிடமும் கூறாது மதுரையை விட்டுச்சென்றனர்!
இவ்விஷயங்களையெல்லாம் நோக்குமிடத்து சந்தேகத்திற்கிடங்-
கொடுக்கின்றனவே! சந்தேகத்திற்கிடங்கொடுக்கின்றனவே!-
சீ! மனோரமா! நீ யேன் புத்தியற்றவளைப்போல்
வீணில் சந்தேகங்கொண்டு துக்கிக்கின்றாய்! இது தவறு!-
ஆம் சந்தேகமில்லை உத்தம புருஷனான அவரோ உடன்படுவார்
பெண்கொலைக்கு? ஒருகாலும் உடன்படார். இதில் ஏதோ
சூதிருக்கின்றது! ஜெயதேவன் ஏதோ பொய்யுரைத்திருக்க
வேண்டும் என்னிடம். என் பிராணநாதரை நேரிற்கண்டு கேட்டால்
எல்லாம் விளங்கக்கூறிவிடுவார் என்பதற்குத் தடையில்லை.
என்ன மதியில்லாதவள் நான்! வீணில் அவர்மீது
சந்தேகங்கொண்டேன், பிராணநாதா! பிராணநாதா!
மன்னியும்!-ஐயோ இச்சிறையினின்றும் நான் எப்பொழுது
வெளியிற் போகப்போகின்றேன்? ஐயோ! நான் எப்பொழுது
என் பிராணநாதரை என் கண்ணாரக் காணப்போகின்றேன்?
ஆ! இச்சிறையிலிருந்தாலும் என் பிராணநாதர் என்னுடன் இருப்பாராயின்
நான் எவ்வளவு சந்தோஷ முள்ளவளாயிருப்பேன்!
ஒருமுறை பார்த்தால் போதுமவரை. நான் பார்ப்பேனாயின்
என்னை இப்பொழுது வாட்டும் சந்தேகங்களெல்லாம் நீங்கிவிடும்.
நேரிற்கேட்டால் என்னிடம் பொய்யுரையாது எல்லாம்
விளங்கச் சொல்லிவிடுவார்-ஜெயதேவர் கூறியபடி அந்த
சத்தியவதியின் மோதிரமும் அவர் கரத்தில் இருக்கின்றதோ
இல்லையோ என்று அறிந்துகொள்வேன்-ஐயோ! அவர்
சத்தியவதியைக் கொன்றிருக்கமாட்டார் கொன்றிருக்கமாட்டார்!
ஆ! என் பிராணநாதரை எப்பொழுது காணப்போகின்றேனோ!
எப்பொழுது என் மனதைவாட்டும் சந்தேகமெல்லாம் நீங்க
அவருடன் சந்தோஷமா யிருக்கப்போகின்றேனோ!- ஐயோ!
இச்சிறைச்சாலையினின்றும் தப்பி வெளியிற்செல்ல ஒருமார்க்கமும்
புலப்படாதிருக்கின்றதே! எத்தனை காலம் நான்
இதில் கழிக்கவேண்டுமென்று என்தலையில் எழுதியிருக்கின்றதோ!
ஐயோ! இப்பாதகர்கள் என் ராஜ்யத்தை எடுத்துக்கொள்வதை
யார் வேண்டாமென்றது? என்னை வெளியில்விட்டு
என் பிராணநாதரைப் பார்க்கும்படிச் செய்தாற் போதுமேயெனக்கு!
ஆ! இன்னும் இரண்டு நாள் அவரைப்பாராது இச்சிறையிலேயே
அடைபட்டிருக்கவேண்டி வந்தால் என் உயிர்
போகவேண்டியதுதான்!- பிராணநாதா! பிராணநாதா!
நான் இங்கு வருந்தியழுகின்றேனே! நீர் எங்கிருக்கின்றீரோ
இப்பொழுது? இங்குவந்தென்னை இச்சிறையினின்றும்
விடுவிக்க லாகாதா?-ஐயோ! இதென்ன கூச்சல்? ஆ!
தென்புறமாக தீ பற்றி வருகின்றதே! சீக்கிரத்தில் அத்தீ
இச்சிறைச்சாலையையும் தகித்துவிடுமே! ஆ! நான் என்ன
செய்யப்போகின்றேன்! என்ன செய்யப்போகின்றேன்!
நானிங்கேயே இறக்கவேண்டியதுதானோ! இதோ தீயானது
விரைவில் பற்றி வருகின்றது! வருகின்றது! பிராணநாதா!
பிராணநாதா! நான் உம்மை ஒருமுறையேனும் காணாது இப்படியே
இறக்கவேண்டி வந்ததே! வந்ததே! இதோ தீபற்றிவிட்டது
இச்சிறையையும்! பற்றிவிட்டது! பிராணநாதா! பிராணநாதா!
நான் இறக்கின்றேன்! இறக்கின்றேன்! உம்மை நான்
மறுபடியும் எந்த ஜன்மத்தில் காணப்போகின்றேனோ!
பிராணநாதா! பிராணநாதா! (கீழேவிழுகிறாள்)
சுந்தராதித்யன் விரைந்து வருகிறான்.
சு. மனோரமா! மனோரமா! எங்கிருக்கின்றாய்! எங்கிருக்கின்றாய்!
இதோ வந்துவிட்டேன்!
ம. பிராணநாதா! பிராணநாதா! (மூர்ச்சையாகிறாள், சுந்தராதித்யன்
அப்படியே அவளைத் தூக்கிச்செல்கின்றான்)
-----------------
நான்காம் காட்சி.
இடம்: அந்தப்புறம்.
காலம்: இரவு.
மனோரமா வருகிறாள்.
ம. இனி வருந்தியாவதென்ன? நான் இந்த உயர் குலத்திற்
பிறந்ததற்கு என் கடமைப்படி செய்யவேண்டும். இனியோசிக்க
வேண்டியதொன்றுமில்லை. யோசிக்கவேண்டியதெல்லாம்
யோசித்தாயிற்று. வந்தவுடன் கூறிவிடவேண்டும், பிறகு-பிறகென்ன?
இறக்கவேண்டியதுதான். நாம் வந்தவழி!-ஐயோ! நான்
அந்த தீ பற்றிய சிறையிலேயே அப்படியே மடிந்துபோயிருக்கலாகாதா?
அப்படியிறக்கும்படி நேரிட்டிருக்குமாயின் இவைகளையெல்லாம்
ஒன்றுமறியாது சந்தோஷமாய் இறந்திருப்பேனே!
நான் கொடுத்துவைக்கவில்லை. இக்கஷ்டங்களையெல்லாம்
அனுபவித்திறக்கவேண்டுமென்று என் தலையில் எழுதியிருந்தது
போலும் ஈசனே! ஈசனே! என் கடமைப்படி நான்
நடக்க மன உறுதியைத் தந்தருளும். இதோ வருகின்றார்.
சுந்தராதித்யன் வருகிறான்.
சு. சுகுமாரன் இன்னும் மூர்ச்சை தெளியவில்லை.
ம. சற்றுதூரத்தில் நில்லும்! என்னைத்தீண்டாதீர்! உம்மீதாணை
என்னருகில் நெருங்காதீர்!-
சு. மனோரமா!-
ம. ராஜகுமாரா!-
சு. ராஜகுமாரா!-
ம. ஆம். ராஜகுமாரா, இனி தாம் என் பெயரிட்டென்னை அழைக்க
வேண்டாம். நான் ஆணையிட்டுவிட்டேன். நீர்
க்ஷத்திரியகுலத்துதித்தவரானால் என்சொல்லை மீறி நடக்கமாட்டீர்.
சு. இதென்ன?-
ம. நான் உம்மை முதலில்சிலகேள்விகள் கேட்கவேண்டும். அதற்கு
பதில் கூறும் முன்பு, பிறகு மற்று விஷயங்களையெல்லாம்
யோசிக்கலாம். என்னிடத்திற் பொய்யுரைப்பதிற் பயனில்லை. நான்
எல்லா உண்மையும் அறிவேன்-அந்த மோதிரம் யாருடையது
உம்முடைய விரலில் வரவேண்டிய காரணம் என்ன?-என்ன
சும்மாயிருக்கின்றீர் பதில் கூறாமல்! வெட்கமாயிருக்கின்றதோ?
அப்பொழுதெங்கேபோயது அது? செய்யத்துணிந்தமனம்
சொல்லத்துணியவில்லையோ?
சு. பொறு! பொறு! அவசரப்படாதே!-
ம. நான் பொறுத்ததெல்லாம் போதும் இனிநான் பொறுக்கவேண்டிய
நிமித்தியமில்லை. ராஜகுமாரா! தமது குணமறியாது மோசம்போனேன்!
தாம் சிலகாலத்திற்கு முன் என்னை விவாகம்புரிய
முடியாது அதற்கு தடையொன் றிருக்கின்றதெல்லவோ கூறினீர்.
அத்தடையைத்தாம் நீக்கிவிட்டதாக எண்ணியிருக்கின்றாற்-
போலிருக்கின்ற திப்பொழுது, உமக்கிருந்த தடையெனக்கு
நேர்ந்ததிப்பொழுது, உம்மை நான் விவாகஞ் செய்துகொள்ள
முடியாது! நீர் என்னை முற்றிலும் மறந்துவிடும். மறந்துவிட்டு
உமக்குத் தக்கபெண்ணை மணம் புரியும் இனிமேல்-
சு. ஐயோ! ஐயோ!-எனக்குப்பயித்தியம் பிடிக்கின்றது!-
அவசரப்படாதே! அவசரப்படாதே! உனக்கொன்றும் தெரியாது-
நான் சொல்வதைக்கேள்!-இதைச்சற்றுபார் முன்பு-
ம. நான் அதைப்பார்க்கமாட்டேன்.
சு. ஐயோ! என்மீதில் கோபம்கொள்ளாதே! -அவசரப்பட்டொன்றும்
செய்யாதே!-என்னை மன்னிப்பாய்!-கண்ணே!
இதைச்சற்றுப்பார்! (நிருபத்தைக் கொடுக்கிறான்)
ம. (அதை இரண்டாகக் கிழித்தெறிந்து) மன்னிப்பதாவது! யார்
மன்னிப்பைத் தாம் கேட்கவேண்டுமோ அங்குசென்று கேளும்! நான்
உம்மை மன்னிக்கவேண்டிய நிமித்தியமில்லை. வேண்டுமென்றால்
எனக்கு நீர் இழைத்த பிழைகளையெல்லாம் மன்னிக்கிறேன்.
அவ்வளவே நான் செய்யக்கூடும். இன்னும் எதிரிலிருந்து என்
கோபத்தையும் துக்கத்தையும் அதிகமாக்காதீர்! நீர் விடை
பெற்றுக்கொள்ளும்.
சு. ஐயோ!...இதைப்பார்!...இதைப்பார் சற்று!...
ம. நான் பார்க்கமாட்டேன்! பார்ப்பதிலும் பிரயோசனமில்லை.
நான் உம்மை என்ன மன்னித்தபோதிலும் உம்மை மணம்
புரிவேன் என்று மாத்திரம் இனி கனவிலும் எண்ண
வேண்டாம். ஸ்வேதுகேது ராஜனுடைய பெண் தன்
நாடுநகரெல்லாம் இழந்து என்ன ஈன ஸ்திதிக்குவந்தபோதிலும்
ஸ்ரீஹத்திசெய்யத்துணிந்த ஓர் ஆடவனை அவன் எப்படிப்பட்ட
மகாபுருஷனாயினும் தன்னுயிருள்ளளவும் மணம் புரியாள் என்று
உறுதியாய் நம்பும்- நேரமாகின்றது விடைபெற்றுக்கொள்ளும்
இனி பிரயோஜனமில்லை நான் கூறிவிட்டேன். கிழக்கிலுதிக்கும்
சூரியன் வடக்கிலுதித்தாலு முதிப்பான் என் தீர்மானம்மாறாது
- நீர் என்னை இக்கோலங் கண்டதற்காக சுவாமி யும்மை
மன்னிப்பாராக!-அதோ! உமது விரலிலிருக்கும்படியான
என் மோதிரத்தைக் கொடுத்துப்போம். அது உமது விரலிலிருக்கதக்கதல்ல.
சு. நான்-கொடுக்க-மாட்டேன்.
ம. வேண்டாம் சத்தியவதி தேவியைக் கொன்றதற்கறி குறியாக
அந்த மோதிரத்தையணிவதுபோல என்னாவிக்கும் உலை-
வைத்ததற்கறிகுறியாக இதையும் நீரே அணிந்திரும்-
இதோ! இதையும் எடுத்துக்கொள்ளும். இது என் விரலில்
இருப்பது தகுதியல்ல (அவனெதிரில் எறிந்து) ராஜகுமாரா!
நீர் செய்ததற்கெல்லாம் சுவாமி உம்மை மன்னிப்பாராக!
நான் விடைபெற்றுக் கொள்ளுகிறேன்! என்னை மறந்துவிடும்
கனவிலும் நினைக்க வேண்டாம். என்னை மறுபடியும் பார்க்கவும்
முயலவேண்டாம். இறந்தபின் வேண்டுமென்றால்பாரும்.
இதோ நானும் சத்தியவதி தேவியாகிய என் தங்கைசென்ற
இடம் செல்லப்போகின்றேன்! நான் உம்மை இப்பொழுது
மன்னித்தபடி சுவாமி யும்மை மன்னிப்பாராக! (போகிறாள்)
சு. நான் உயிரோடு இருக்கின்றேன்!-இல்லை? -உயிரோடு
இருக்கின்றேன்!-கனவுகாணவில்லை!-இல்லை!-நான் -
சுந்தராதித்யன் தானே!-மனோரமா அல்லவா இப்பொழுதிங்கிருந்தது?-
ஆம்! ஆம்!-ஆம்!- மனோரமா! என்மீது இவ்வாறு
சந்தேகங்கொள்வதாவது?-நான் சத்தியவதியைக் கொன்றதாக
நினைத்தனளே!-எனக்குப் பயித்தியம் பிடிக்கவில்லை! இல்லை! சீ!
நான் என் மனதை சுவாதீனப் படுத்தவேண்டும்-இல்லாவிட்டால்
பயித்தியம் பிடித்துப்போம்-இப்பொழுதில்லையே!-
என்ன எண்ணினாள்? -நான் சத்தியவதியைக் கொன்றேன்?-
இந்த மோதிரம்!-யாருடையது!-நான்தான் சத்தியவதியைக்
கொன்றேன்!-கேட்பானேன்?-சந்தேகமில்லை!-சந்தேகமில்லை!-
இப்பொழுது -மனோரமாவையும் கொல்கின்றேன்!
கொன்றுவிட்டேன்!-இறந்தபிறகே காண்பேன்! இம்மோதிரத்தையும்
அணிகின்றேன்! கொன்றேன்! கொன்றேன்!
பாபி இருவர்களையும் கொன்றேன்! கொன்றேன்!
(வெறிகொண்டோடுகிறான்)
மனோரமா மறுபடியும் வருகிறாள்.
ம. சீ! எப்படியிருந்தபோதிலும் கடைசி முறையாயிற்றே
யென்றாயினும் நல்வார்த்தை கூறாது அனுப்பிவிட்டோமே! ஐயோ!
ஸ்ரீ ஹத்திக் குடன்பட்டதும் என்பொருட்டல்லவா? ஆய்விட்டது!
இனி யோசிப்பானேன்? சீக்கிரம் இறப்பதற்குச் சித்தஞ்
செய்யவேண்டும்--இதென்ன நிருபம்--இதைப் படித்துப் பார்க்கும்படி
அவ்வளவு மன்றாடி யேன் கேட்டார்? என்ன பார்ப்போம்--
சுந்தராதித்ய திரை ராஜ சிம்மருக்கு--என்ன இவருக்கு
யாரோ எழுதியதாக இருக்கின்றதே! யார் எழுதியது பார்ப்போமா?
இதில் தவறில்லை அவரே பார்க்கும்படி நம்மைக் கேட்டாரே!
(படித்துப் பார்க்கிறாள்.) இப்படிக்கு--சத்தியவதி!--சத்தியவதி
தேவி எழுதியது! படித்துப் பார்ப்போம் ஆ!--ஆ!--
என்ன மதிமோசம் போனோம்!--நன்றாய்ப் பார்க்கின்றேன்!
நன்றாய்ப் பார்க்கின்றேன்!--சந்தேகமில்லை!--
ஐயோ! உண்மை இப்படியாயிருந்தது!--பிராணநாதா!
பிராணநாதா! பிராணநாதா!--
[மூர்ச்சையாகிறாள்.]
-------------------------------
ஐந்தாம் காட்சி.
இடம்-அரண்மனையின் ஓர் பக்கம்.
காலம்-மாலை.
சூரசேனனும் தேவரதனும் வருகிறார்கள்.
சூ. ஆனால் ஜெயதேவர் இறந்து விட்டார் என்றா கூறுகின்றீர்?
தே. ஆம் சந்தேகமில்லை பாபி ஒழிந்தான்.
சூ. அவ்வளவு சுலபமாகக் கூறி விடாதீர். எனக்கென்னமோ சந்தேகமா
-யிருக்கின்றது.
தே. சந்தேகமென்ன இன்னும்? நான் தான் கண்ணாரக் கண்டேனே
இன்னும் சந்தேகமென்ன? மற்றவர்களைக்கொல்ல அப்பாதகன்
மூட்டிய தீ அவனையே எறித்தது. அவனது உடல் கவசம் முதலியன
வெல்லாம் அப்படியே உருகிக் கிடந்ததைக் கண்டேனே!--
சூ. வேறு யாருடையதாகவாவ திருக்க லாகாதா?
தே. இல்லை இல்லை எனக்கு நன்றாய்த் தெரியுமே!
கு. சரி! என்ன சண்டை? நான் ஜோஸ்யம் பார்த்து யார் சரியென்று
சொல்லி விடுகின்றேன். சரி, என்ன சமாசாரம் சொல்லுங்கள்.
தே. ஒன்றுமில்லை, ஜெயதேவன் இறந்தானெனக் கூறினால்
நம்பமாட்டேன் என்கிறார் இவர்.
கு. இறந்தாரா ஜெயதேவர்? இறந்தாரா? இறந்தாரா?
தே. ஆமாம், நான் என் இருகண்களாற் கண்டேன்.
கு. சரி! சரி! சரி! இறந்தானா என் தங்கையைக்கெடுத்த பாதகன்?
தே. யார் இறந்தது?
சூ. அவர் என்னவோ உளறுகின்றார் பயித்தியத்தில், அதையேன்
கேட்கின்றீர்?-அதிருக்கட்டும், இப்பொழுது நம்முடைய
சுந்தராதித்யருடைய கதி என்னவாயிற்றோ? அவரை எப்படி
ஐயா நாம் தேடிக் கண்டு பிடிப்பது?
தே. அதைத்தான் கூற வந்தேன் முன்பு உன்னிடம். நான்
மாறுவேடம் பூண்டு ஆங்காங்கு சென்று தேடிப்பார்க்கப் போகின்றேன்.
என்ன சொல்லுகின்றாய் நீ?
சூ. ஆம் அப்படிச் செய்தலே நலம். எப்பொழுது புறப்படப்போகின்றீர்?
தே. உடனே புறப்படப் போகின்றேன். உன்னிடம் கூறிவிட்டுப்
போகவே வந்தேன், எனக்கு விடையளிப்பாய்.
சூ. ஆம். உடனே புறப்படும். நீர் போகும் காரியத்தில் ஜெயம்
பெற்று வருவீராக!
தே. நித்யாநந்தர் எங்கே? அவரிடமும் சொல்லிவிட்டுப் போகவேண்டும்.
சூ. பிரயோஜனமில்லை. அதோ படுத்துறங்குகின்றார் பாரும்.
சுந்தராதித்யர் காணாமற்போனது முதல் அவர் ஒருவரிடமும்
பேசுவதில்லை. எந்நேரமும் தூங்கியவண்ணமா யிருக்கின்றார்.
அவருக்கு நித்ராநந்தர் என்று பெயர் வைத்திருந்தால் நன்றாயிருக்கும்.
இப்பொழுதவருக் கிரண்டே வேலை. உறங்குகின்றது
உண்பது, உண்பது உறங்குகின்றது; அவ்வளவே.
தே. எழுப்பிப் பார்க்கின்றேன். [நித்யானந்தனை எழுப்ப அவன்
எழுந்திருந்து இவர்கள் முகத்தை உற்றுப்பார்த்துவிட்டு மறுபடியும்
பேசாமல் படுத்துக்கொள்கிறான்.]
தே. ஐயா! சற்று எழுந்திருமையா சொல்கின்றேன்.
நி. நான் உறங்குகின்றேன் - எழுந்திருக்கமாட்டேன்- இன்னும்
போஜனத்துக்குக் காலமாகவில்லை.
சூ. சரி! நான் சொன்னால் கேட்டீரா!
தே. ஆம் பிரயோஜனமில்லை. எனக்கு நேரமாகின்றது நான்
வருகின்றேன். (போகிறான்)
சூ. அப்பொழுதே நினைத்தேன்! அப்பொழுதே நினைத்தேன்!
ஐயோ! கொஞ்சம் முன்பு கூறியிருக்கலாகாதா இந்த பயித்தியமிதை?-
ஏ! பயித்தியமே! என்ன பார்த்துக் கொண்டிருக்கின்றாய்?
கு. சரி! ஜோஸ்யம் தப்பாது! இந்த வருஷம் அந்த பாபி இறக்க
வேண்டுமென்று அப்பொழுதே ஜோஸ்யம் சொன்னேன்.
சரி! தீர்ந்தது!- ஸ்ரீமுகி பழி வாங்கப்பட்டாள்!
சூ. ஐயோ! இந்த இழவை அப்பொழுதே சொல்லியிருக்கக் கூடாதா?
கு. சொன்னால் என்னை அந்த பாபி உடனே கொன்று விட்டிருப்பானே!
என் ஜாதகத்தில் நான் எண்பத்தேழாவது வயதில்
இறப்பேன் என்றெழுதி யிருக்கின்றதே!
நி. (எழுந்து) யார் அது என் தூக்கத்தைக் கெடுக்கின்றது?
கு. நானல்ல! நானல்ல!
[ஓடிப்போகிறான். நிதயானந்தன் மறுபடியும் தூங்குகிறான்.]
சூ. நான் முதல் முதல் ஜெயதேவனைக் கண்டவுடனே எனக்கு
இவன் தான் நாம் தேடும்படியான ஆள் என்று தோற்றியது.
ஐயோ! நான் அப்பொழுதே பழிவாங்காமற் போனேனே! என்
கையாற் கொல்லப்படாமல் அவனிறப்பதா! இவ்வளவு தூரம்
முயன்றும் என்சபதம் வீண்போவதா?- ஆயினும் அப்பாதகன்
இன்னும் மண்மீதிற்றான் இருக்கின்றானென எனக்குள் ஏதோ
ஒன்று சொல்கின்றது. அவன் தானாகத் தீயில் வீழ்ந்திறப்பவனா?
பயங்காளி! ஒருகாலும் தற்கொலை புரியான். உயிரோடிருப்பானாயின்!-
நேற்றைய தினம் நம்மைக்கண்டு கரந்தொளிந்தவனாயிருக்குமா?
அவனை இன்னுமொருமுறை நான் உயிரோடு காண்பேனாயின்?-
திரைராஜ சிம்மருடைய கதி இப்படியாக வேண்டுமா!
எப்படிப்பட்டவர்க்கும் உலகில் ஒரு காலத்தில் க்ஷீணதிசை
சம்பவிக்கின்றதல்லவா? சீ! நாம் எப்படியாவது அவரைத்
தேடிக் கண்டுபிடிக்கவேண்டும். அவர் நமக்காக பட்ட
பாட்டிற்கு நாம் இவ்வளவாவது பிரதி செய்யவேண்டும்.
(போகிறான்.)
எதிர் புறமாக மனோரமாவும் சுகுமாரனும் வருகிறார்கள்.
ம. சுகுமார ராஜனே! நீர் என்ன கூறியும் பயனில்லை. அவரைக்
கொன்றபாபி நான் சீக்கிரம் இறத்தலே தகுதி. நான் இத்தனை
காலம் தாமதித்ததே தவறு.
சுகு. அம்மா, சுந்தராதித்யர் ஒருகாலும் தற்கொலை புரியமாட்டார்.
அவர் தனது தந்தை தாயாரிடம் அவ்வாறு வாக்களித்திருக்ககின்றார்.
அதனின்றும் தவறமாட்டார், என் சொல்லை நம்பும்.
ம. எப்படியிருந்தபோதிலும் நிரபராதியாகிய அவரை இக்கோலங்
கண்ட பாபியாகிய நான் மண்மீதிருத்தல் நல்லதல்ல. நான்
நாளையதினம் காலை இறக்கத் தீர்மானித்துவிட்டேன்.
சுகு. அம்மா, அது நியாயமல்ல நான் சொல்வதைக் கேளும்.
தேசமுழுதும் பறை சாற்றும்படி கட்டளையிட்டிருக்கின்றேன்.
எங்கெங்கும் பதினாயிரவர் உருமாறித் தேடுகின்றனர். எப்படியாவது
அவர் எவர் கையிலாவது அகப்படாமற் போகமாட்டார்.
ம. நான் நம்பவில்லை. அவர் இந்நேரம் உயிர் விட்டிருப்பார்
இப்பாபி யிருக்கும் புவியில் தானுமிருப்பது நலமல்லவென்று!-
சுகுமார ராஜனே! என்னைத் தொந்திரவு செய்யாதீர். நான் எப்படியும்
நாளைய தினம் காலை இறக்கவேண்டும்.
சுகு. அம்மா! ஆனால் நான் ஒன்று சொல்லுகின்றேன் கேளும்.
எனக்கு விடையளியும். நானும் போய்த் தேடிப் பார்க்கின்றேன்.
இன்னும் எட்டு தினங்களுக்குள் அவரை நான் உம்மிடம் கொண்டுவந்து
சேர்க்காவிட்டால் நீர் உமதிஷ்டப்படிச்செய்யும். இதற்காவது
இசையும். பிடிவாதம் செய்யாதீர்.- என்ன சொல்லுகின்றீர்கள்?
நி. [எழுந்து] போஜனம் கொள்ளக் காலமாய்விட்டது.
ம. நித்யாநந்தா! நித்யாநந்தா! என் பிராணநாதரைப் பற்றி-
ஏதாவது உனக்குத் தெரியுமா?
நி. உயிரோடிருக்கின்றார் - வருகின்றேன் என்று சொல்லிவிட்டுப்
போனார் - வருவார்.
சுகு. எங்கே போனார்? எங்கே போனார் தெரியுமா உனக்கு?
நி. தெரியாது - எல்லாம் வருவார்! [போகிறான்]
சுகு. அம்மா, இப்பொழுதாவது என்ன சொல்லுகின்றாய்?
ம. ஆம் அப்படியே ஆகட்டும். நீர் கூறியபடி எட்டு நாள் பார்க்கின்றேன்
இன்னும். அதற்குள் என் பிராணநாதரை நான் காணாவிட்டால்
உயிர் விடுவேன். இது சத்தியம்! [போகிறார்கள்.]
-------------------------------------
முதல் காட்சி.
இடம் - சமய நல்லூரில் ஓர் வீதி.
காலம் - மாலை.
சுகுமாரனும் சூரசேனனும் மாறுவேடம் பூண்டு வருகின்றனர்.
சூ. இந்த ஊருக்குத்தான் நேற்றையதினம் வந்ததாக வழியில்
கேள்விப்பட்டேன். அடையாளங்க ளெல்லாம் சரியாகத்தான்
இருக்கின்றன. ஆயினும் இருக்கின்றதைப்பார்த்தால் புத்தி ஏதோ
மாறுபட்டிருக்கின்றாற்போலிருக்கின்றது. ஒருவருடனும் பேசாது
ஓர் வித பார்வையுடன் எந்நேரம் திரிந்தவண்ணமாய்
இருக்கின்றாராம்-
சுகு. சரி! அப்பொழுதே நினைத்தேன்! அப்பொழுதே நினைத்தேன்!
சூ. பார்ப்போம். நாம் என்ன செய்யலாம்? அப்படி யிருக்காதென்று
கோருவோம். சீக்கிரம் கண்டு பிடிக்கவேண்டும். வாரும்
ஊரைச்சுற்றிப் பார்ப்போம். [போகிறார்கள்.]
மற்றொருபுறமாக குருநாதனும் ஒரு பிச்சைக்காரனும் வருகிறார்கள்.
பி. ஐயா! - பரதேசி ஐயா! - ஒரு காசு கொடுங்கையா! -
காதடைச்சிகினு போகுதையா! - தர்மம் தலைகாக்குமையா!
[ஒரு பாட்டு பாடுகிறான்.]
கு. ஏ! நீயார்?
பி. நான் பரதேசி ஐயா!
கு. சரி, எந்த ஊர்?
பி. பக்கத்துப்பட்டிக்காடையா! - ஒரு காசு கொடுங்கையா!
கு. சரி, உன் பெயரென்ன?
பி. இருளப்பனையா-
கு. உன் தகப்பனார் பெயர்?
பி. இதெல்லாம் என்னாத்துக்கு கேக்கரைங்க ஐயா? ஒரு காசு
கொடுங்கையா -
கு. சத்! பாத்திர மறிந்து பிச்சையிடவேண்டும். சரி, உன்சமாசார
மெல்லாமறியாமல் எப்படி கொடுப்பது? உன் பாட்டனார் பெயர்?
பி. தெரியாதையா. -
கு. போனால் போகிறது. உன்வயதென்ன?
பி. அதுவும் தெரியாதையா-
கு. சீ! - நீ பிறந்தநட்சத்திரமாவது சொல். சரி, என்னலக்கினம்?
என்னராசி? என்னதினம்? என்னபட்சம்?
பி. இதெல்லாம் எனக்கென்ன தெரியுமையா? காதடைச்சிகினு
போகுதையா! -
கு. சீ! இதெல்லாம் தெரியாமல் உனக்குக் கொடுக்கலாகாது.
பிறகு உன் ஜாதகம் எப்படியிருக்குமோ? அதைப்பார்த்தல்லவோ
சரி, ஜோசியம் கணித்து உனக்கு கொடுத்தால் தர்மமாகுமா
இல்லையா என்று யோசித்துக் கொடுக்கவேண்டும். போ!-
பி. ஐயா! இத்தனைபேர் போரைங்களே தர்மவான் ஒருத்தருமில்லையா!
ஆத்துமா எல்லோருக்கும் ஒண்ணுதானுங்களே! ஒரு
காசு கொடுக்கமாட்டீங்களா? [ஒரு பாட்டு பாடுகிறான்.]
சுந்தராதித்யன் தலைவிரி கோலமாய் வருகிறான்.
பி. (அவனிடம் போய்) ஐயா! - உங்களை பார்த்தா தான்
புண்ணியவானைப்போல் தோணுது. கையேபார்த்தா கொடுக்கிற
கையாட்டமிருக்குது. ஐயா! ஒரு காசு கொடுங்களே! ரொம்ப
கேக்கலே! ஒரு ஆத்மாவே காப்பாத்துங்களே! செத்துப்போரேனே!
(சுந்தரன் அவனுக்கு ஒரு பொன்னைத் தருகிறான்) ஐயா!
பொன்னு! பொன்னு! எனக்கா? எனக்கா? -
சு. ஆமாம்.
பி. பொன்னு! பொன்னு! பொன்னு! - ஐயோ! மார் அடைக்குது!
அடைக்குது!
[கிழேவிழுந்து மாள்கிறான். சுந்தராதித்யன் அவனருகிற் போய்
சற்று நேரம் அசைவற்று நின்று பிறகு பித்த வெறியால் சிரித்து
அவனது கப்பரையையும் தடியையும் எடுத்துக்கொண்டு
அவனைப்போல் பாடுகிறான்.]
சுகுமாரனும் சூரசேனனும் மறுபடியும் முன்போல வருகிறார்கள்.
இருவரும். அதோ! அதோ சந்தேகமில்லை!
சுகு. சுந்தரா!
சு. வாஸ்தவம்! - சொல்லியிருக்கவேணும்!
சூ. மகாராஜா! எங்களைத்தெரியவில்லையா உமக்கு?
சு. ஒரு ஊரிலே ஒரு ராஜா இருந்தானாம் - ஹா! ஹா!
சூ. ஐயா! உங்களுக்கு நிஜமாக எங்களைத்தெரியவில்லையா? அல்லது -
நான் சூரசேனன் இதோ சுகுமார ராஜன்! எங்களை
நன்றாய்ப்பாரும் இப்படித்திரும்பி.
சு. மதுரைப்பட்டணம் தெரியுமா? - மதுரைப்பட்டண வீதியிலே
மண - சுகமாய் வாழும்! - தங்கைசென்ற இடம் - ஹா! ஹா!
சுகு. ஐயோ! சுந்தரா! சுந்தரா! உனக்கு இக்கதியும் வாய்க்கவேண்டுமா!
உன்னை இக்கோலத்திலும் நான் காணவேண்டி வந்ததே!
சு. ஊரிலே இருக்கக்கூடாது! - நீங்கள் சொல்லுங்களையா -
செத்துப்போகலாமா? - சீ! கொன்றுவிடலாம்! அல்லவா! - எத்தனை
பெயரை? - என் பெயரென்ன? வேடிக்கை! - உலகம் பலவிதமா?
ஒரு விதமா? - ஒருதரம் இரண்டுதரம் மூன்றுதரம்!
சூ. ஐயா! உங்களுடைய பெயரென்ன? நீங்கள்யார்?
சு. மூன்று பெயர் - அதோ மூன்றாவது! - எல்லாம் கணக்கு -
எண்ணுமெழுத்தும் - கண்ணெனத்தகும் படித்தேன்! படித்தேன்!
சூ. ஐயா! எங்களுடன் வருகின்றீர்களா தாம் கொஞ்சம்?
சு. என்னை கொன்று விடுகின்றீர்களா? கொன்று விடுகின்றீர்களா?
கொன்று விடுங்கள் வருகின்றேன் - உன்னை மன்னித்தேன்!
மனப்பூர்வமாக மன்னித்தேன் - ஆ! மதுரைப்பட்டண வீதியிலே! -
சுகு. சூரசேனா! பயித்தியம் முதிர்ந்துவிட்டது! இனி திரும்புவது
அசாத்தியம் - ஆயினும் எப்படியாவது இனி இவரை நாம்
விடலாகாது, நம்முடன் அழைத்துச்செல்ல வகைதேடு - ஈசனே!
ஈசனே!
சு. ஈசன் இல்லை ஐயா! - இருந்தால் இப்படியிருப்பேனா நான்! -
நான் போய் தேடிப்பார்கின்றேன்.
சூ. எங்கே ஐயா போகின்றீர்கள்? நானும் வரவா?
சு. உங்களுக்கு பயித்தியம் பிடித்துப்போயிருக்கின்றதா?
சூ. ஆமாம்! ஆமாம்!
சு. எத்தனை பெயரைக் கொன்றீர்கள் நீங்கள்?
சூ. ஓ! ஆயிரம் பெயரிருக்கும்.
சு. ஆனால் நாம் இருவரும் செத்துப்போய் விடலாமல்லவா?
வாருங்கள். [போகிறான்.]
சுகு. சூரசேனா! நாமும் பயித்தியம் பிடித்தவர்போல் அவருடன்
சென்றால் தான் பயன்படும். வேறு வழியில்லை. அப்படியே
நாம் அருகில் இருந்து கொண்டு பிறகு செய்யவேண்டியதைப்
பார்க்கவேண்டும்.
சூ. ஆமாம். வேறுவழியில்லை.
[பின் தொடர்கிறார்கள்.]
----------------
இரண்டாம் காட்சி.
இடம்:- மதுரை அரண்மனையிலோர் அறை.
காலம் - பகல்.
மனோரமாவும் சுகுமாரனும் வருகிறார்கள்.
ம. நீர் ஒன்றும் அஞ்சவேண்டாம். எல்லாவற்றையும் கூறிவிடும்.
இனி என்மனோதிடம் குறையாது.
சுகு. ஒன்றுமில்லை, அவருடைய புத்தி ஏதோ சிறிது
சபலப்பட்டிருக்கின்றது - நம்முடைய கியாபகமேயில்லை -
ம. ஏன் ஒளிக்கின்றீர்? பயித்தியம் பிடித்திருக்கின்றது என்று
கூறிவிடும்.
சுகு. உம் - ஒருமாதிரியாகத்தானிருக்கின்றார் - ஆயினும் நாம்
அதைரியப்படவேண்டியதில்லை - சீக்கிரத்தில் மாறிவிடுமென்றே
நினைக்கின்றேன்.
ம. ஈசனே! ஈசனே! -
சுகு. அம்மா! வருத்தப்படவேண்டாம். எதற்கும் சுவாமியிருக்கின்றார்.
நான் நமது நாட்டு சிறந்த வைத்தியர்களை விசாரித்ததில்,
அவர்கள் அவருக்கு பூர்வ கியாபகம் ஏதாவது வருமாயின்
பிறகு தக்க ஔஷதத்தைக் கொடுத்து மாற்றிவிடலாமென்று
கூறுகின்றார்கள். நாங்கள் எவ்வளவோ முயன்று பார்த்தும்
பூர்வ கியாபகம் அவருக்குச் சிறிதும் வராமலிருக்கின்றது.
ஆயினும் நீங்கள் பேசிப்பார்த்தால் அவருக்கு எப்படியும் மனம்
திரும்பு மெனத்தோன்றுகின்றது. மெல்ல மெல்லப் பேசிப்
பார்க்கவேண்டும். சிறிது கியாபகமிருந்தபோதிலும் போதும்.
ஏதாவது ஒரு விஷயத்தில் முன்புபோல் எண்ணும் சக்திவருமாயின்
பிறகு நாம் பயப்படவேண்டியதில்லை
ம. உங்களால் ஆகாதது என்னால் ஆகப்போகின்றதோ? என்னை
அவர் கண்ணெடுத்தும் பார்க்கப்போகின்றாரோ?
சுகு. அப்படி பார்த்தவுடன் வெறுப்பாராயின் பூர்வகியாபகம்
வந்துவிட்டதல்லவா? அதுவும் நலமே. பிறகு நாம் சரிப்படுத்திவிடலாம் -
அவர் வரும் சமயமாயிற்று; ஏதாவது போக்குச்
சொல்லி மெல்ல இங்கு அழைத்துவரும்படி சூரசேனனுக்குக்
கட்டளையிட்டிருக்கின்றேன். தாம் மிகவும் மனோதைரியமாய்
இருக்கவேண்டும். பார்த்தவுடன் தாம் வருந்தி ஏதாவது
துக்கபடலாகாது. இப்பொழுது கொஞ்சம் உருவமே
மாறியிருக்கின்றது. அதோவருகின்றார்.
ம. எதோ? எதோ? [வீதியில் பார்த்து.] அதுவா? - அவரா? என் -..
சுகு. ஆம். மனோதிடத்தைக் கைவிடாதீர்.
ம. நீர் ஏதோ தவறாக எண்ணியிருக்கின்றீர். அவர் உருவே
இல்லையே! - ஐயோ!
சுகு. சந்தேகமில்லை உற்றுப்பாரும் -
ம. ஆம் ஆம்! அவர்குரல்தான்! ஈசனே! ஈசனே! - என் பாவிக்
கண்ணால் நான் எப்படிக் காண்பேன்!
சுகு. அம்மா, தைரியமாயிரும் தைரியமாயிரும்.
சுந்தராதித்யனும் சூரசேனனும் பாடிக்கொண்டு வருகிறார்கள்.
ம. ஆ! பிராணநாதா! பிராணநாதா!
சுகு. அம்மா, மனதை திடப்படுத்திக்கொள்ளும்; இதுதான் சமயம்
நாங்கள் பக்கத்தறையிற் போயிருக்கின்றோம். தாம் மெல்ல
சாந்தமாய் அவருக்குப் பூர்வகியாபக மேதாவது வரும்படி
பேசிப்பாரும்.
சூ. ஐயா! இங்குதானிருக்கவேண்டும் நான் மறுபடியும்
வருகிறவரையில், பிறகு பிச்சை யெடுப்போம்.
சு. இல்லை! இல்லை. - வருகிறேன் நானும்.
சூ. உம்! - பிச்சைக்காரனிடம் அழைத்துக்கொண்டு போய் விடுவேன்.
சு. இல்லை! இல்லை! - இருக்கிறேன்! இருக்கிறேன்.
சூ. ஆம்! - உட்காரு மப்படிப்போய்.
[சுகுமாரனும் சூரசேனனும் போகிறார்கள்.]
சு. போகக்கூடாது! - தப்பிதம்தானே! - ஹா! ஹா!
ராஜாவாயிருந்தானாம்! - உம் -
ம. பிராணநாதா!-
சு. மதுரைக்கு வழிபோகுதா? - பிச்சைக்காரன் வருவான் வழியில்!
ம. பிராணநாதா! பிராணநாதா! என்னை உமக்குத்தெரியவில்லையா?
ஐயோ! என்னைத்திரும்பிப்பாரும், இப்படி கொஞ்சம் பாருமே.
சு. இராத்திரி என்ன நாழிகை?
ம. ஐயோ! பிராணநாதா! பிராணநாதா! உம்மைக்கொடும் பாவி
இக்கோலத்திற் கண்டும் உயிர்வாழ்ந்திருக்கின்றேனே!
பிராணநாதா! உமக்கு என்னைச்சிறிதும் கியாபகமில்லையோ? அல்லது
நம்மை இக்கோலங்கண்ட பாபியைக் கண்ணெடுத்தும் பார்க்க
லாகாதென்று இவ்வாறிருக்கின்றீரோ? பிராணநாதா! நான்
பாபிசெய்ததெல்லாம் தவறு, தவறு! நிரபராதியாகிய உம்மீது
சந்தேகங்கொண்டு உம்மை வைதனுப்பினேன்! ஐயோ!
அந்நிருபத்தைநீர் என்னவேண்டியும் அப்பொழுதுபாராது உம்மை
இக்கதிக்குக்கொண்டு வந்துவிட்டேன்! பிராணநாதா! பிராணநாதா!
என்னை மன்னியும்! என்னை மன்னியும்! ஐயோ! உம்முடைய
மனோரமா இவ்வளவு வேண்டிக்கேட்கும்போழுது நீர்
மனமிரங்கலாகாதா?
சு. யார்? யார்? யார்?
ம. ஐயோ! என்னை உமக்கின்னும் தெரியவில்லையா! நான்
உம்முடைய மனோரமாவாயிற்றே! உமது சொந்த மனோரமாவாயிற்றே!
உமது காதலியாகிய மனோரமாவாயிற்றே!
சு. மனோ - ரமா? -
ம. ஆம் ஆம் ஆம் ! -
சு. ம - னோ - ரமா இறந்துவிட்டாள்!
ம. ஐயோ! இதோ இருக்கின்றேனே! இதோ இருக்கின்றேனே பாபி!
சு. மனோரமாவை - கொன்றுவிட்டேன் நான்!
ம. ஐயோ! இல்லையே! - இல்லையே! நான்தான் உம்மை
இக்கோலங்கண்டேனே! பிராணநாதா! பிராணநாதா! என்னை
மன்னிக்க மாட்டீரா இன்னும்!
சு. பொழுதுவிடிந்தால் - சுகமாய்வாழும் - நம்பலாம் - ஏன்
நம்பக்கூடாது? - வாத்தியார் - பிள்ளைகள் - பதம் என்றால் -
ஹா! ஹா!
ம. ஐயோ! ஈசனே! ஜகதீசா! - பிராணநாதா! உமக்கு பழையகியாபகம்
சிறிது மில்லையா? நீர் இன்னாரென்றாவது கியாபகமில்லையா?
பிராணநாதா! நீர் சுந்தராதித்யராயிற்றே! நான்
மனோரமாவாயிற்றே! என்னை திருப்பரங்குன்றில் கோட்டையினின்றும்
காப்பாற்றினீரே! பிறகு உமது காயத்தை நான் ஆற்றினேனே!
நாம் இருவரும் ஒருவர்மீதொருவர் காதல்கொண்டோமே!
பிராணநாதா! என்னையே விவாகம் செய்துகொள்வதாக
சத்தியம்செய்து கொடுத்தீரே! ஒன்றும் கியாபகமில்லையா?
சு. கனவு! - பொன்மண்டபத்தில் தூங்கக்கூடாது! - ஏன் முன்பே
போகவில்லை? - தவறுதான், தவறுதான்.
ம. பிராணநாதா! பிராணநாதா! என்னைப் பாருமே இப்படி. நான்
மோதிர மொன்று கொடுத்தேனே அதாவது கியாபக மிருக்கின்றதா?
அது -
சு. இல்லை! - இல்லை! என்கையில் இல்லை! - நான் கொன்றேன் -
அறிகுறியாக அணிகின்றேன்! - எடுத்துக்கொள்ளாதே -
வேண்டிக் கொள்ளுகின்றேன். -
ம. அதாவது கியாபகமிருக்கின்றதா? அதாவது கியாபகமிருக்கின்றதா? -
எதோ காட்டும் கையைப் பார்ப்போம் - சற்று காட்டும்.
சு. நான் காட்ட மாட்டேன்! நான் காட்ட மாட்டேன்! என்னைக்
கொன்று விடுங்கள் கொன்று விடுங்கள்! கொடுக்கமாட்டேன்
கொடுக்கமாட்டேன்!
ம. இப்படி காட்டும் நான் எடுத்துக்கொள்ளவில்லை.
சு. ஐயோ! மாட்டேன் மாட்டேன் நான் செத்துப்போய் விடுகின்றேன்.
செத்துபோய்விடுகின்றேன்!
ம. இப்பொழுது கையைக்காட்டாவிட்டால் பிச்சைகாரனிடம்
அழைத்துக்கொண்டு போய்விடுவேன்!
சு. ஐயோ! வேண்டாம்! வேண்டாம்!
ம. இல்லாவிட்டால் இப்படிவாரும். உட்காரும் கையைக்காட்டும்
மோதிரத்தைக்காட்டுகின்றீரா என்ன? இப்பொழுது பிச்சைக்காரனை
அழைத்துக்கொண்டுவரவா?
சு. வேண்டாம்! - வேண்டாம்! - இதோ காட்டுகின்றேன் -
எடுத்துக்கொள்ள மாட்டீர்களே!
ம. இல்லை காட்டும். அப்பா! இதாவது தெரிந்தால் போதும்!
சு. ஒருவரிடமும் கூறவேண்டாம்!
[மெல்ல விரலைத்திறந்து மோதிரங்களைக் காட்டுகிறான்.]
ம. பிராணநாதா! இதுயாருடையது?
சு. ஐ ஐயோ! கேட்கவேண்டாம்! கேட்கவேண்டாம்! பயித்தியம்
பிடித்துப்போகும். சொல்லமாட்டேன்! - சொல்லமாட்டேன்!
ம. ஆனால் இதோ போய் பிச்சைகாரனை அழைத்து வருகின்றேன்.
சு. ஐஐயோ! வேண்டிக்கொள்ளுகின்றேன் வேண்டாம் வேண்டாம்!
ம. பிறகு சொல்லும் யாருடையது?
சு. பிச்சைகாரன் இல்லையே? -
ம. இல்லை.
சு. ஆணைப்படி?
ம. இல்லை. யாருடையதிந்த மோதிரம்?
சு. தெரியவில்லை - மறந்து - கியாபகம் -
ம. கூப்பிடவா?
சு. வேண்டாம் வேண்டாம் - கியாபகம் வருகின்றது வருகின்றது!
- யாருடையது? - யாருடையது? - சொல்லமாட்டீர்கள்? -
சத்தியவதி! நான்தான் கொன்றேன் - சுந்தரா! பழிவாங்கு!
பழிவாங்கு! - நம்பினாள்! யார்? - பெயரென்ன? -
ம. ஆமாம் பெயரென்ன? பெயரென்ன?
சு. சொல்லமாட்டேன்! - நான் செத்துப்போய் விடுகிறேன்! -
ம. நான் பிச்சைக்காரனை அழைத்துக்கொண்டு வந்துவிடுகிறேன்.
சு. இல்லை! இல்லை! இல்லை! சொல்லுகிறேன்--ம-னோ-ர-மா!--
இரண்டு பெயரையும்--கொன்றுவிட்டேன்--அறிகுறியாக
அணிகின்றேன்--நம்பினாள்! நம்பினாள்!--
ம. ஐயோ! பிராணநாதா! நான் நம்பவில்லையே நம்பவில்லையே!
அப்பொழுது மதிமோசம் போனேனே! பிறகு அந்நிருபத்தைப்
பார்த்தவுடன் எல்லாம் வெளியாயிற்றே!
சு. யார்?--நிருபமேது!--பார்க்கமாட்டேன்--பயனில்லை-
பாடத்தெரியுமா?-- (பாடுகிறான்.) மதுரைப்பட்டண வீதியிலே
மணவாளனு நானுமாய்ப் போகையிலே--
ம. ஐயோ! மறுபடியும் பழயபடித் திரும்பிவிட்டதே மனம்!
இனியென்ன செய்வது?--பிராணநாதா! நாமிருவரும் ஒன்றாய்ப்
பாடுவோமே ஒரு பாட்டு அதாவது கியாபகமிருக்கின்றதா?--
ஈசனே! இதுதான் என்கடைசி பிரயத்தனம்-
[முன்னாளில் தான் சுந்தராதித்யனுடன் பாடிய ஓர் பாட்டின்
இரண்டடியைப் பாட சுந்தராதித்யன் மற்ற இரண்டடிகளையும்
குளறிப்பாடி மயக்கமாகி கீழே விழுந்து மூர்ச்சையாகிறான்].
ம. ஆ! பிராணநாதா! பிராணநாதா!
சுகுமாரனும் சூரசேனனும் ஓடிவருகிறார்கள்.
இருவரும். என்ன! எனன!--
ம. இறந்துவிட்டாரோ? இறந்துவிட்டாரோ?
சூ. இல்லை! இல்லை! மூர்ச்சையாயிருக்கின்றார்.
அஞ்சவேண்டாம் என்ன சமாசாரம்?
ம. நான் என்னென்னவோ கூறியும் பழயகியாபகம் வரவில்லை.
முடிவில் நாங்களிருவரும் முன்பு ஒன்றாய்ப்பாடிய பாட்டை
அதாவது கியாபகமிருக்கின்றதா என்றறியப் பாடினேன்--
சுகு. ஆம் ஆம்--பிறகு?
ம. உடனே எழுந்திருந்து மற்ற இரண்டடியும் உரக்கக்கூவி
அப்படியே கீழே விழுந்துவிட்டார்!
சுகு. அம்மா! மிகவும் சந்தோஷம் தாம் இனி வருந்தவேண்டியதேயில்லை.
எப்பொழுது அப்பாட்டின் இரண்டடியும் பாடினாரோ அப்பொழுதே
அவருக்குப் பூர்வகியாபகம் சிறிது உதித்திருக்க வேண்டும்.
இனி நாம் பயப்படவேண்டியதில்லை. மூர்ச்சையாயிருக்கின்றார்.
வேறொன்றுமில்லை. அதுவே பூர்வகியாபகம் வந்ததற்கொரு அறிகுறி.
இனி நமது அரண்மனை வயித்தியர்கள் சொன்னபடி ஔஷதம் கொடுத்து
பழைய ஸ்திதிக்குக் கொண்டுவந்து விடலாம்.
நித்தியாநந்தன் வருகிறான்.
நி. தூங்குகின்றார்-ஒருவரும் எழுப்பக்கூடாது.
சூ. உண்மைதான் அம்மணி! இப்பொழுதே அந்த ஔஷதத்தைக்
கொடுத்துவிட்டால் நலம். பிறகு மூர்ச்சை தெளிந்தால் உட்கொள்வது
கடினமாயிருப்பினும் இருக்கலாம். அப்படியே பக்கத்தறைக்கு
எடுத்துச் செல்வோம்.
சுகு. ஆம் ஆம்-நித்தியாநந்தா! அந்தபக்கம் பிடிப்பாய்!-
(சுந்தராதித்யனை எடுத்துச் செல்கின்றனர்.
மனோரமா கண்ணீருடன் பின் துடர்கிறாள்.)
---------------------------------------------------------
மூன்றாம் காட்சி.
இடம்:- மனோரமாவின் அறை.
காலம்:- மாலை.
சுந்தராதித்யன் மஞ்சத்தின் மீதுறங்க, அவன் பக்கத்தில்
மனோரமா உட்கார்ந்திருக்கிறாள்.
ம. ஈசனே! எப்படியாவது என் பிராணநாதரை பழையஸ்திதியில்
எனக்கு விரைவில் அளியும். பிறகு நான் அந்தக்ஷணம்
இறந்தாலும் பெரிதல்ல. நான் இந்த ஜன்மத்திலும் மற்ற
ஜன்மங்களிலும் செய்த பிழை களுக்கெல்லாம் வேறு எவ்விதத்திலாவது தண்டியும்.
இவ்விஷயத்தில் மாத்திரம் மன்னித்தருளும். என்பிராணநாதர்
இப்பொழுது மூர்ச்சை தெளிந்தெழுந்திருக்கும்பொழுது பழைய
ஸ்திதியில் எழுந்திராவிட்டால் என்னுயிரை உடனே போக்கிக்
கொள்ளுவேன். இது சத்தியம்! எல்லாம் உமது அருள்-வயித்தியர்கள்
குறித்தகாலம் நெருங்கிவிட்டது. இவ்வறையை முன்புபோலச் சிறிதும்
மாறாமல் ஜோடித்திருக்கின்றோமா? ஏதாவது தவறியிருக்கப் போகின்றது!-
ஒன்று மில்லை எல்லாம் அப்பொழுதிருந்த- வண்ணமே யிருக்கின்றது.
உண்மையெல்லாம் கூறி என்னை மன்னிக்கும்படி நான் எழுதிவைத்த
நிருபம் ஒன்றுதான் புதிதாயிருக்கின்றது. எப்படியும் அதை எழுந்தவுடன்
பார்ப்பார். இதைப்பார்த்த பிறகே நாம் இவர் எதிரில் வரவேண்டும்.
காலமாய் விட்டது நாம் மறைந்திருக்கவேண்டும். பிராணநாதா!-
அயர்ந்து நித்திரை செய்யும் முகம் போல இருக்கின்றது!
யாதும் ஈசன் செயல் நம்மாலென்ன இருக்கின்றது?
நாழிகையாய் விட்டது!
ஈசனே! ஈசனே!-பிராணநாதா! நீர் பழைய பிரக்ஞையுடன்
எழுந்திருப்பீராக!
(பின்புறமாய்ப் போய் மறைந்து கொள்கிறாள்.
சுந்தராதித்யன் விழித்தெழுகிறான்.)
சு. நெடுநேரம் உறங்கிவிட்டேன்! என்ன கனவு!-யார் அது?
(எதிரிலிருக்கும் கண்ணாடியில் தன்னுருவைக்கண்டு)
சுந்தராதித்யா!- நான் என்ன கனவு காண்கின்றேனா என்ன?-
இல்லை! இல்லை! எல்லாம் உண்மையாயிருக்குமா? -
மனோரமா!-மனோரமாவின் கையெழுத்து!-
(மனோரமாவின் நிருபத்தை எடுத்துப்பார்க்கிறான். அந்த சமயம்
மனோரமா அவன் பின்பாகவந்து அவனை முத்தமிடுகிறாள்.)
சு. (அவளைக்கட்டியணைத்து) ஈசனே! ஈசனே!-மனோரமா!
இது கனவல்லவே? கண்ணே! காதலி-நான் உன்னைக்காணப் பெற்றேனே!...
மாறுவேடன்பூண்ட ஜெயதேவன் விரைந்தோடி வருகிறான்.
ஜெ. காதகா! நான் உன்னைக்காணப் பெற்றேனே!
(தன் உடைவாளை சுந்தரன் கழுத்தின்மீது வீச, அதைத் தடுக்கும்பொருட்டு
குறுக்காகவந்த மனோரமாவின் கழுத்தில் அது பட, அவள்
மரணகாயத்துடன் கீழே வீழ்கிறாள்.)
ம. பிராணநாதா! நீர் தப்பி-பிழையும்!
சூரசேனன் விரைந்தோடி வருகிறான்.
சூ! பாதகா! அகப்பட்டாய் என் கையில்! ஸ்ரீமுகியை நினைத்துக் கொள்!
(ஜெய தேவனை வெட்டுகின்றான்.)
ஜெ. ஆ! என்-சபதம்-முடிந்தது. (மறிக்கின்றான்.)
சு. இதென்ன? இதுவும் கனவா? - அல்லது என் பயித்தியமா?
ம. இல்லை இல்லை! நினைவு தான்!- பிராண நாதா!
என் பிராணன் போகிறது! என்னை உமது மனப்பூர்வமாக
மன்னித்ததாகக் கூறும்!
சு. கண்ணே! கண்ணே! அப்படியே! அப்படியே! நீயல்லவோ
என்னை மன்னிக்கவேண்டும்.
சூ. ஐயோ! ஒரு க்ஷணம்! முன்னதாக வராமற் போனேனே!
ம. பிராணநாதா! சந்தோஷமாய்ச் சாகிறேன் நான்! -
உம் பொருட்டு என் உயிரை விடுகிறேன்-
என் தங்கை சத்தியவதியைப் போல்! -என்னை எந்த ஜன்மத்திலும்
விட்டுப் பிரிவதில்லை என்று சத்தியம் செய்யும்! -விரைவில்!
சு. அப்படியே! கண்ணே! சத்தியம்! சத்தியம்!
ம. பிராணநாதா! - ஒரு முத்தம்.
(சுந்தராதித்யன் முத்தமிடுகின்றான்.)
நான் சந்தோஷமாய் - போய் வருகிறேன்! பிராண-
(மறிக்கின்றாள்.)
சு. சரி! ஈசன் ஒருவர் இருக்கின்றார்- சந்தேகமில்லை!-
சூரசேனா! நீ-
சூ. ஐயனே! இனி என் நிஜமான பெயரை வெளியிடலாம்-
நான் வீராந்தன்.
சு. நீ ஸ்ரீ முகியின் தமயனோ?
சூ. ஆம். இது வரையில் என் தங்கையைக் கெடுத்த பாதகனைக்
கொல்ல வேண்டுமென்று மாறுவேடம் பூண்டு இங்ஙனம்
கஷ்டப்பட்டதற்கு இன்றையதினம் தான் என் சபதம் நிறைவேறிற்று.
ஜெயதேவன் தான் அப்பாதகன் என்று முன்பே அறிந்தும்
பன்முறை தப்பினான் என் கரத்தினின்றும். இன்று தான் அகப்பட்டான் -
என் சபதமும் நிறைவேறியது - ஆயினும் அரைக்ஷணம் முன்புவந்திருப்பேனாயின்!
சு. வீராந்தா! என்விதி! நீ என்ன செய்வாய் பாபம்! - வீராந்தா!
ஒன்றும் பேசாது உடனே போய் சுகுமாரனை அழைத்துவா.
எனக்கு மறுபடியும் பித்தம் பிடிக்கும் போலிருக்கின்றது! -
போ உடனே!
[சூரசேனன் போகிறான்.]
சு. ஹா! ஹா! இதுதானோ முடிவு? - வேறு வழியில்லை! -
சுகுமாரன் வந்தால் தடுப்பான்! அவன் வருமுன் முடித்துவிட வேண்டும்! -
ஐயோ நானாகச் செய்தல் தவறாயிற்றே! - யாரிதைச் செய்யவல்லார்? -
நித்யாநந்தா! நித்யாநந்தா! நித்யாநந்தா! -
நித்யாநந்தன் ஓடிவருகிறான்.
நி. - நினைத்தேன்.
சு. நித்யாநந்தா! - இப்படிவா! - வெட்டு இவ்விடத்தில் விரைவில்!
நி. மாட்டேன்! -
சு. என்ன சொன்னாய்? - நித்யாநந்தா! நான் உன் மீது கோபம்
கொள்வது தவறு! ஐயோ பாவம்! - நான் சொல்வதைக்கேள்.
உனக்கு நான் மரிப்பது இஷ்டமா அல்லது மறுபடியும்
பயித்தியகாரனாவது இஷ்டமா? - வெட்டு இங்கே!
நி. சரி! [சுந்தரன் தொடையில் வாளால் வெட்ட, ரத்தம்பெருகுகின்றது.]
நி. எனக்கு உத்திரவு கொடுங்கள்.
சு. நித்யாநந்தா! வேண்டாம் நான் சொல்வதைக்கேள்!
நி. மாட்டேன்! மன்னியும் -
சுகுமாரன் விரைந்தோடி வருகிறான். சூரசேனன், தேவரதன் பின்னால் வருகிறார்கள்.
சுகு. சுந்தரா! சுந்தரா!
நி. நான் முன்பு போகிறேன்!
[ தன் வாளின்மீது பாய்ந்து மடிகிறான்.]
சுகு. இதென்ன? நித்யாநந்தா! பொறு! பொறு!
சு. சுகுமாரா! இப்படிவா! அவனைத்தடுக்க உன்னால் ஆகாது!
வா இப்படி விரைவில்.
சுகு. ஐயோ! சுந்தரா! நீயும்! -
சு. குமாரா! கோபித்துக் கொள்ளாதே என்மீது! என் உத்திரவின் மீது
நித்யாநந்தன் எனக்குதவினான்! இனி நான் இந்த ஜன்மத்துடன்
இருந்தென்னபயன்? குமாரா! - இனி கொஞ்சம் நேரம்தானிருக்கின்றது.
இன்னும் அருகில்வா! - சூரசேனா! தேவரதா!
கொஞ்சம் ஒருபுறமாய் இருங்கள்.
சுகு. சுந்தரா! சுந்தரா!
சு. அழாதே! நான் சந்தோஷமாய்ச் சாகின்றேன். அதற்காக நீ
சந்தோஷமல்லவோ படவேண்டும்! மறுபடியும் பித்தம்பிடித்துத்திரிய
விரும்புவாயா நீ? - காலம் நெருங்கிவிட்டது - நான் உன்னைச்
சிலகேள்விகள் கேட்கவேண்டும் - விரைவில் பதில் உரை -
எனக்கேன் இந்த கதிநேர்ந்தது?
சுகு. - ஊழ்வினை!
சு. ஆம் ஆம்! - என் பாபங்களெல்லாம் பரிஹரிக்கப்பட்டனவா? -
இனிவரும் ஜன்மத்திலாவது சுகமாய் வாழ்வேனா?
சுகு. ஈசனுக்குத்தான் - தெரியும் அது!
சு. குமாரா! நமது சிநேகத்தின் - முடிவு இது தானா?
சுகு. அன்று! அன்று! -
சு. உன்னை நான் மறுபடியும் காண்பேனா?
சுகு. - காண்பாய்!
சு. எந்த ஜன்மத்தில்? - எப்பொழுது? - எப்படி?
சுகு. அது - என்னால் - கூறமுடியாது.
சு. உன்னைக்காண்பேன் - என்பதில் சந்தேகமில்லையே?
சுகு. இல்லை - அணுவளவும் இல்லை!
சு. சந்தோஷம்! இனி மனதில் ஒன்று மின்றி மரிப்பேன்! -
தேவரதா! வீராந்தா! இப்படி வாருங்கள். உலக மென்னும்
அரங்கத்தில் இந்த வேடத்தில் நான் ஆடவேண்டிய ஆட்டம்
ஆடி ஆய்விட்டது! நான் விடை பெற்றுக்கொள்ளுகிறேன்!
சுகமாய் வாழுங்கள்! பதினாயிரவருக்கு ஜெயமுண்டாகுமாக!
குமாரா - என்னை மனோரமாவின் பக்கத்தில் வளர்த்துங்கள்!
[அப்படியே செய்கின்றனர்.]
குமாரா! ஏன்வருந்துகின்றாய்? சந்தோஷமல்லவோ படவேண்டும் நீ!
இதுதான் நியாயம்! - இதுதான் சுகம்! - வருந்தாதே! -
மனோரமாவின் கரத்தை என் கரத்தில்வை! ஆம் அப்படித்தான் -
இது யாருடையகரம் இந்தக்கையில்? - சத்தியவதி! ஆம் ஆம்!
மெல்ல அழைத்துப்போங்கள்! சத்தியவதி! மனோரமா! - சுகுமாரா! -
சீக்கிரம்வா! - நித்யாநந்தன் அழைக்கிறான் அதோ! -
சுகு. சுந்தரா - அஞ்சாதே - நானும் வருகின்றேன் - சீக்கிரத்தில்.
சு. ஆம் ஆம்! -
[மரிக்கின்றான்.]
சுகு. ஈசனே! - ஈசனே! எல்லாம் உன் அருள்!
--------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக