சதி-சுலோசனா
நாடகங்கள்
Backஉ
சதி-சுலோசனா
ஒரு தமிழ் நாடகம்
ராவ்பஹதூர் ப. சம்பந்த முதலியார், பி.ஏ., பி.எல்.,
அவர்களால் இயற்றப்பட்டது.
இந்நூலாசிரியரால் இயற்றப்பட்ட மற்றத் தமிழ் நூல்கள்:-
லீலாவதி-சுலோசனை, சாரங்கதரன், மகபதி, காதலர் கண்கள், நற்குல தெய்வம்,
மனோஹரன், ஊர்வசியின் சாபம், இடைச்சுவர் இருபுறமும், என்ன நேர்ந்திடினும்,
விஜயரங்கம், கள்வர் தலைவன், தாசிப்பெண், மெய்க்காதல், பொன் விலங்குகள்,
சிம்ஹனநாதன், விரும்பிய விதமே, சிறுத்தொண்டர், காலவரிஷி, ரஜபுத்ரவீரன்,
உண்மையான சகோதரன், ரத்னாவளி, புஷ்பவல்லி, கீதமஞ்சரி, உத்தமபத்தினி,
அமலாதித்யன், சபாபதி முதற்பாகம், பொங்கல் பண்டிகை அல்லது சபாபதி
இரண்டாம் பாகம், ஓர் ஒத்திகை அல்லது சபாபதி மூன்றாம் பாகம், சபாபதி நான்காம்
பாகம், வள்ளிமணம், பேயல்ல பெண் மணியே, புத்த அவதாரம், விச்சுவின் மனைவி,
வேதாள உலகம், மனைவியால் மீண்டவன், சந்திரஹரி, சுபத்திரார்ஜுனா,
கொடையாளி கர்ணன், சஹதேவன் சூழ்ச்சி, நோக்கத்தின் குறிப்பு, இரண்டு
ஆத்மாக்கள், சர்ஜன் ஜெனரல் விதித்த மருந்து, மாளவிகாக்னிமித்ரம், விபரீதமான
முடிவு, சுல்தான்பேட்டை சப் அசிஸ்டென்ட் மாஜிஸ்டிரேட், சகுந்தலை, கானப்பன்
கள்ளத்தனம், விக்ரமோர்வசி, முற்பற் செய்யின் பிற்பகல் விளையும், நாடகமேடை
நினைவுகள் முதற்பாகம், நாடகமேடை நினைவுகள் இரண்டாம் பாகம், நாடகத் தமிழ்,
யயாதி,பிராம்மணனும்-சூத்திரனும், வாணீபுர வணிகன், இரண்டு நண்பர்கள்,
சத்ருஜித், ஹரிசந்திரன், மார்கண்டேயர், கண்டு பிடித்தல், கோனேரி அரசகுமரன்,
சந்தையிற் கூட்டம், குறமகள், வைகுண்ட வைத்தியர், முதலியன.
-----------------
முதற் பதிப்பு
-----------------
சென்னை 'பியர்லெஸ்' அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது.
----------
காபிரைட்] 1935 [விலை 2-00
-----------------------------------------------------------
INSCRIBED
TO
THE BELOVED MEMORY
OF
MY PARENTS
P. VIJIARANGA MUDALIAR
AND
P. MANICKAVELU AMMAL
and
MY FRIEND
C. RANGAVADIVELU
-----------------------------------------------------------
PREFACE
The main portion of this drama, as it is printed, formed the prose-scenario of the Tamil Talkie entitled "Sati-Sulochana" which I directed some time back at Calcutta. The great success which attended it, probably made my actor friends ask me to print it as a Tamil Drama. I promised to comply with their request and hence this Drama, in its present form. It contains about 40 songs; hence I would class it as an Opera.
Now that Tamil Talkies have become so very popular, this may also be useful for budding scenario-writers to a certain extent as a model.
I have to warn all Societies and Companies desirous of staging this (or any other drama by me) that they have to pay the usual royalty and obtain my permission before staging same; otherwise they make themselves liable to be prosecuted under the Copyright Act before a Magistrate's Court.
"PAMMAL LODGE" THE AUTHOR
G.T. MADRAS. 1st Jan. 1935.
--------------------------
சதி-சுலோசனா
நாடக பாத்திரங்கள்.
ஸ்ரீ ராமர் | ... தசரதருடைய மூத்த குமாரர் |
லட்சுமணர் | ... ஸ்ரீ ராமர் தம்பி |
ராவணன் | ... லங்காபதி |
இந்திரஜித் | ... ராவணன் குமாரன் |
ஆதிசேஷன் | ... நாகலோகத்தரசன் |
விபீஷணர் | ... ராவணன் தம்பி |
சுக்ரீவன் | ... வானர வீரர்கள் |
அங்கதன் | ... வானர வீரர்கள் |
அனுமான் | ... வானர வீரர்கள் |
ஜாம்பவா | ... கரடிகளுக்குத் தலைவர் |
நாரதர் | ... தேவரிஷி |
சீதை | ... ஸ்ரீ ராமர் மனைவி |
மந்தோதரி | ... ராவணன் மனைவி |
சுலோசனா | ... ஆதிசேஷன் புத்திரி | இந்திரஜித்தின் மனைவி |
திரிசடை | ... விபீஷணர் புதல்வி |
ராட்சச சைனியங்கள், வானர சைனியங்கள், யாசகப் பிராம்மணர்,
தோழிகள், வேலையாட்கள் முதலியோர்.
------------
கதை நடந்த இடம் - நாகலோகத்திலும், லங்கையிலும்.
-----------------------
சதி - சுலோசனா
முதல் அங்கம் -- முதற் காட்சி
சுலோசனை, இதர நாககன்னியர்களுடன் நந்தவனத்தில் விளையாடிக்
கொண்டிருக்கிறாள், சிலர் ஜலக்கீரீடை செய்கின்றனர். சிலர் புஷ்பம் பறிக்கின்றனர்.
சிலர் ஒருவரை ஒருவர் புஷ்பச் செண்டினால் அடிக்கின்றனர். சிலர் பாடுகின்றனர்.
சிலர் ஆடுகின்றனர்.
சு. [பாடுகிறாள்.]
ராகம் - இந்துஸ்தான் காபி. தாளம் - ரூபகம்.
பல்லவி.
பாதாதி கேசம் முதல் இன்பம் தந்திடும்
பார்புகழ் வசந்த காலமே - தீதிலாத (பாதாதி)
அனுபல்லவி.
தீதான வண்டுகள் தித்திப்பை யுண்டிடும்
தேவர் துதிக்கும் மலர்களும் - மணம் நிறைந்த (பாதாதி)
சரணம்.
மாசற்ற ஞானிகள் மனதைக் கவர்ந்திடும்
மாண்பெற்ற மகரந்தமே - கோதிலாத (பா)
ஆகாயத்தில் புஷ்பக விமானத்தில் இந்திரஜித் தோன்றுகிறான். விமானம் நின்று விடுகிறது.
இ. [விமானத்திலிருந்த வண்ணம்.] என்ன விந்தை? புஷ்பக விமானம் இங்கு
நிற்பானேன் என் உத்தரவின்றி? திக்விஜயம் செய்து கொண்டு திரும்புங்கால்
என் விமானத்தைத் தடை செய்யவல்ல தைரியசாலியார்? [நான்கு புறமும் பார்த்து]
ஒரு வைரியையும் காணோம்! இந்த விமானம் சுயேச்சையாய் நின்றிருக்க
வேண்டும் - காரணம் என்ன? – என்ன சுகந்தம் வீசுகின்றது கீழிருந்து! கீழிருப்பது
நாகலோகத்தின் நந்தவனமன்றோ-அங்குள்ள மலர்களின் சுகந்தமே என்
மனதினைக் கவர்கிறது!-ஓ! இப்பொழுது தெரிகிறது. இப்புஷ்பங்களின்
வாசனையினால் இப்புஷ்பக விமானம் ஆக்கிரஷிக்கப்பட்டு நின்றது போலும்!-
என்ன அழகிய நந்தவனம்!- என்ன கானம்!- நாக கன்னிகைகள் என்ன
ரமணீயமாகப் பாடுகிறார்கள்! இங்கு விமானத்திலிருந்து இழிந்து கொஞ்ச நேரம்
அவர்களது கானத்தையும் விளையாட்டையும் கண்ணுற்றுப் பிறகு செல்வோம்.
[விமானம் இழிகிறது.]
காட்சி முடிகிறது.
முதல் அங்கம் -- இரண்டாம் காட்சி
இடம் - நாகலோக நந்தவனம்.
காலம் - சாயங்காலம்.
ஒரு வாவிக்கரையில் பளிங்குக்கல்லின் மீது உட்கார்ந்து சுலோசனை ஒரு தோழியுடன்
பேசிக்கொண்டிருக்கிறாள். இந்திரஜித் மற்றொரு பக்கம் வந்து இவர்கள் பேச்சை
ஒட்டிக் கேட்கிறான்.
சு. நம்முடைய தந்தையை ஜெயிக்கவல்ல வீரன் மஹா புருஷனாயிருக்க வேண்டும்.
தோ. அதற்குச் சந்தேகமென்ன? வீரத்திற்குத் தகுந்த குணமும், குணத்திற் கேற்ற
வனப்பும் உடையவராயிருக்கின்றார்.
சு. உம்!- என்ன இருந்தாலும் ராட்க்ஷசன் தானே!
தோ. அப்படிச் சொல்லாதீர்கள் அம்மணி; ராட்க்ஷசனாக வந்துதித்த போதிலும்,
நான் விசாரித்தறிந்த வரையில் அவருடைய தந்தையினிடத்துள்ள துர்க்குணம்
இவரிடம் ஒன்றுமில்லை.
சு. சந்தோஷம்.
தோ. ராஜகுமாரி! இன்னொரு விஷயம் கேட்டீர்களா?--அவருக்கு இன்னும் விவாக
மாகவில்லையாம்.
சு. ஏனடி? இதையேன் என்னிடம் சொல்லுகிறாய்?
தோ. நான் கேட்டறிந்ததை உமக்குத் தெரிவித்தேன்-இதில் என்ன தவறு? இதற்கு
நீ என் மீது கோபியாதே அம்மா-- உம்!--அம்மஹா புருஷனைக் கணவனாகப்
பெறும் பாக்கியம் யாருக்கு கிடைக்கப் போகிறதோ?
சு. ஏன்? நீதான் அவரைக் கலியாணம் பண்ணிக் கொள்ளேன்!
தோ. அந்த பாக்கியம் எனக்குக் கிட்டாதம்மா!
சு. பிறகு யாருக்குக் கிட்டும்?
தோ. ஒருவேளை உன்னைப்போன்ற புண்ணிய சாலிகளுக்குக் கிட்டினாலும் கிட்டும்?
சு. ஏனடி! என்னைப்பரிகாசமா செய்கிறாய்!
[தோழி சிரித்துக்கொண்டு ஓட, சுலோசனை அவளைப் பின் தொடர்கிறாள்.
இந்திரஜித் மறைவிட மிருந்து வெளி வருகிறான்.
இ. என்னுடைய திக்விஜயத்தில் திரிலோகங்களிலும் எத்தனையோ அழகிய
மங்கையரைப் பார்த்திருக்கிறேன். இத்தனை அழகிய குணவதியை இது
வரையில் கண்டதேயில்லை நான். ககனம் ககனாபராம், சாகரம் சாகரோபமம்
என்று சொல்வது போல் இவளுக்கு இவளையே யீடாகக் கூறவேண்டும்!--
(சமான ரஹித என்ற மெட்டு.)
மஹா அழகிமிய மதிமுகவதனி அதிரமணி (ம)
(என்மனங் கவரும்) (ம)
சுகாவதி, ஸ்ரீமதி, யுவதி, கலாநிதி சாரதை புகழும் (ம)
சம்ப்ரமமிகு சுந்தரி நரமங்கையர் தொழும் உம்பர் குமரி
அம்போருக விழியாள் உயர்மின்போல் எதிர் உலவுகிற.(ம)
அதோ அவள் இங்கு தனியாக மறுபடியும் வருகிறாள்.
இங்கு என்ன செய்கிறாளோ மறைந்து இன்னும் பார்ப்போம்
[மறைந்து கொள்கிறான்]
சுலோசனை மறுபடி வருகிறாள்
சு. என் தகப்பனாரை ஜெயித்தாரெனக் கேட்டபோது இவர்மீது எனக்கு முதலில்
கோபம் பிறந்தபோதிலும், இவரது குணாதிசயங்களைப்பற்றி என் தோழி
கூறியதை யெல்லாம் கேட்கக் கேட்க, என் மனம் இவரையே நாடுகின்றது!
-- என்ன ஆச்சரியம்! இவரைப்பாராமுன் இவர் மீது நான் ஏன் இப்படி காதல்
கொண்டேன்!
[பளிங்குக் கல்லின் மீது உட்காருகிறான்.]
உம்! [பெருமூச் செறிந்து] இவரைக் கணவனாகப் பெறும் பாக்கியம் எந்தப்
புண்ணியவதிக்குக் கிடைக்குமோ?
இந்திரஜித் திடீரென்று அவள் முன் தோன்றுகிறான்.
இ. நங்காய்! உன்னை யன்றி இத்திரிலோகங்களிலும் வேறு யாருக்குக் கிடைக்கும்!
சு. [திடுக்கிட்டெழுந்து] ஹா!--ஐயா! தாங்கள் யாரோ தெரிய வில்லை! இந்த
நந்தவனத்தில் ஆடவர் யாரும் வரக் கூடாதே. நீர் எப்படி வந்தீர்? இதன்
காவலாளர் உம்மை எப்படி உள்ளே விட்டார்கள்?
இ. அக் காவலாளிகள் மீது கோபியாதே. நான் ஆகாய மார்க்கமாய் என் விமானத்தின்
மீது இங்கு வந்து இறங்கினேன்! --பெண்ணே! சற்று முன்பாக உன் தோழியுடன்
யாரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தாயோ அப்புருஷன் நான்தான் - இந்திரஜித்.
சு. [நாணத்தால் தலை வணங்கி] ஆ!- ஐயா! நாங்கள் பேசிக் கொண்டிருந்ததை
யெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தீர்களா என்ன!
இ. ஆம்! அத்யந்த சந்தோஷத்துடன் உன் வாயினின்றும் வந்த ஒவ்வொரு
அமிர்த வாக்கையும் பருகிக் கொண்டிருந்தேன். பெண்ணே, உன் உள்ளத்தையறிந்த
பிறகு, என்னை மணப்பாய் என்று உன்னைக் கேட்க, எனக்கு தைரியம் கொடுக்கிறது.
சு. ஆயினும் - லங்கேஸ்வர குமாரா! நீரோ எங்கள் குலவைரி! அன்றியும்
இப்பொழுதுதான் என் தகப்பனாரையும் ஜெயித்திருக்கிறீர் - உம்மை நான்
மணப்பது நியாயமா?
இ. கண்மணி! உனக்கு அந்த சங்கை வேண்டாம். உன் தகப்பனாரை மாத்திரமன்று,
இந்த இரேழ் புவனங்களையும் வென்ற என்னை, உனது இரு கண்களால் நீ
ஜெயித்து விட்டாய்!- நான் உனக்குத் தோல்வியடைந்ததாக ஒப்புக் கொள்ளுகிறேன்.
இனி என்னை மணக்க உனக்கென்ன தடை?
சு. ஐயா - நான் என்ன சொல்வது?- என் மனதையோ நீர் அறிந்து விட்டீர் –
ஆயினும் நான் சுதந்திரமற்றவள் - என் தந்தைக்கு உட்பட்டவள்!
ராகம் - பியாக். தாளம் - ஆதி.
தந்தை தாய் சம்மதம் தனை தவிர்ப்பேனோ
தையலென் தருமத்தை தள்ளிடுவேனோ
வந்திடுமிலங்கை மன்னனே அவரை
வந்து கேட்டுக்கொள்ளும் ஐயா. (த)
எங்கள் குலம் வேறு உங்கள் குலம் வேறு
இருவர்க்கும் பொருந்திய தியற்கை இம்மணமே
வந்திடுமிலங்கை மன்னனே தந்தையை
வந்தித்து கேட்டுக் கொள்ளும் என் ஐயா. (த)
ஆகவே அவரிடம் சென்று என்னைக் கன்னிகாதானமாகப் பெறும். இதுவே
எங்கள் குலத்திற்கு அடுத்த மார்க்கம்.-
இ. ஆனால்- எங்கள் குலத்திற் கடுத்த மார்க்கம், பலாத்காரமாய் மணப்பதாம்!
இதற்கு ராட்க்ஷசம் என்ற பெயர் வைத்திருக்கின்றனர்-
(இந்துஸ்தான் மெட்டு)
பல்லவி.
நானோ அச்சிறு நாகராஜனை
நயந்து கொள்ளுவேன்
அனுபல்லவி.
வானோரும் அவர் சேனா சமூகமும்
வந்து வணங்கிப் பணிந்திடவே செயும். (நானோ)
சரணம்.
எட்டுத் திக்கையும் வெற்றி கொள்ளுமோர்
இந்திரஜித்தென்றெனையறியாயோ
இஷ்டமில்லையெனில் தூக்குவேன் உனை
எங்கள் பழக்கம் தெரியாயோ. (நானோ)
நான் சீக்கிரம் லங்கைக்குப் போக வேண்டியிருக்கிறது- தாமதிக்க முடியாது –
பெண்ணே! நீயாக என்னுடன் விமானம் ஏறி வருகின்றாயா?- அல்லது நான்
பலாத்காரமாய் உன்னைத் தூக்கிக் கொண்டு போகவா?
சு. ஐயோ! இதை என் தந்தை அறிந்தால் பிரமாதம் விளையுமே!
இ. பார்த்துக் கொள்வோம் பிறகு - அந்த பிரமாதத்தை!-
[அவளை பலாத்காரமாய்த் தூக்கிக்கொண்டு,
விமானத்தில் ஆகாயத்திற் புறப்படுகிறான்.]
விமானம் புறப்படும் பொழுது சுலோசனையின் தோழியர்கள் ஓடி வருகின்ற்னர்.
சு. தோழிகாள்! தோழிகாள்! இந்திரஜித் என்னை பலாத்காரமாய்க் கொண்டு
போவதாக என் தந்தையிடம் தெரிவியுங்கள்! தெரிவியுங்கள்!
[விமானம் ஆகாயத்தில் மறைகிறது, தோழியர்கள் பிரமித்து நிற்கின்றனர்.]
காட்சி முடிகிறது.
முதல் அங்கம் -- மூன்றாம் காட்சி.
இடம்--ஆதிசேஷன் கொலுமண்டபம்.
காலம் -- இரவு.
ஆதிசேஷன் சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார். மந்திரி முதலானோர்
புடைசூழ்ந்து நிற்கின்றனர்.
மந். மஹாராஜா! யுத்தமென்றால் தோல்வியும் ஜெயமும் மாறி மாறி வருவது சகஜம்தான்.
இதற்காகத்தாம் கவலைப்படலாகாது--இந்த சங்கீதக் கேளிக்கையைக் கொஞ்சம்
கவனியுங்கள்.
அப்சர ஸ்திரீகள் நடனம் செய்கிறார்கள்.
[உள்ளே கூக்குரல்] மஹாராஜா! மஹாராஜா! சுலோசனையை ராட்க்ஷசன்
தூக்கிக்கொண்டு போய் விட்டான்! தூக்கிக் கொண்டு போய் விட்டான்!
ஆ. மந்திரி! நிறுத்து கேளிக்கையை!
மந். ஆட்டத்தை நிறுத்துங்கள்!
ஆ. என்ன கூக்குரல் அது?
சுலோசனையின் தோழியர் அலங்கோலமாய் வந்து அரசன் பாதத்தில் விழுகின்றனர்.
தோ. மஹாராஜா! நாங்கள் என்ன சொல்லப் போகிறோம்! உங்கள் குமாரத்தியை
ஒரு அரக்கன் எடுத்துக்கொண்டு போய் விட்டான்! அப்படியே தூக்கிக்கொண்டு
போய் விட்டான்! [அழுகின்றனர்.]
ஆ. யார் அப்படிச் செய்த துஷ்டன்?
[கோபத்துடன் எழுந்திருக்கிறார்.]
தோ. இராவணன் புதல்வன் இந்திரஜித்.
ஆ. எப்படி எடுத்துச் சென்றான் என் கண்ணுக் கொப்பான புதல்வியை?
தோ. ஆகாயத்தில் விமானத்தில் வைத்துச் சென்றான்.
ஆ. ஆஹா! அப்படியா செய்தான் அப்பாதகன்! முன்பு அவனுடன் யுத்தம் செய்த
பொழுது, என்ன காரணத்தினாலோ, அவனை வெல்ல என்மனம் துணியாமற்
போயிற்று. என்னை வென்றது மன்றி எனக்கு இத்துரோகமும் செய்தானா!
இட்சணம்போய் நானே அவனைக் கொன்று என் பெண்ணை மீட்டு வருகிறேன்!
[புறப்படுகிறார்.]
ஓர் ராட்க்ஷசன் வருகிறான்.
ரா. மஹாராஜா, இந்திரஜித் இந்த நிருபத்தை தம்மிடம் கொடுக்கச் சொன்னார். [கொடுக்கிறான்.]
ஆ. [அதைப் படித்துப் பார்த்து] என்னை அவமானம் செய்ததுமன்றி, என்னைத்
தன் மணத்திற்கும் அழைத்திருகின்றானா! இதோ க்ஷணத்தில் சென்று அதைத்
தடுத்து அவனைக் கொன்று, என் மகளை மீட்டு வருகிறேன்!
[விரைந்து செல்லப் பார்க்கிறார்.]
நாரதர் தோன்றுகிறார்.
நா. ஆதிசேஷா!- எங்கே மிகவும் அவசரமாய்ப் புறப்படுகிறாய்?
ஆ. ஸ்வாமி! என்மகள் சுலோசனையை இந்திரஜித் அபகரித்துச் சென்றான்!
அவனைக் கொல்லப் போகிறேன்.
நா. ஆதிசேஷா! பிரம்மதேவன் அவனுக்கு கொடுத்திருக்கும் வரத்தை மறந்து
போனாயா என்ன?
ஆ. முனிசிரேஷ்டரே! அதை மறந்தேன்!- இப்பொழுது நான் என்ன செய்வது?
தாங்கள் தான் அருளவேண்டும்.
ராஹம்-பிலஹரி. தாளம்-ஆதி.
பல்லவி.
என்ன நான் செய்வேனையா-நாரதரே
எண்ணறியாத துக்கம் என்னையே வாட்டுவதால் (என்)
அனுபல்லவி.
கன்னி சுலோசனாவின் கதி என்ன ஆகிடுமோ
சின்ன வயதினிலே சீர்கெட நேர்ந்ததனால் (என்)
சரணம்.
முன்னம் பழியகற்றி முடித்து அவனுடலை
சின்னா பின்னம தாக்கி ஜெயிக்காவிட்டால் மனது
பன்னரும் குழப்பத்தில் பதைத்து நிற்கும் காண்பீரே
பன்னி நான் கேட்பதற்கு பதிலுரைப்பீர் நீரே. (என்)
நா. ஆதிசேஷா! உன்னைப் போன்ற புத்திசாலிக்கு நான் சொல்ல வேண்டியதில்லை;
நீயே யோசித்துப்பார்-உனக்குத் தெரியும். [மறைகிறார்.]
ஆ. ஆம்-[யோசித்து தனக்குள்] இதுவே நல்ல யோசனை. நாம் உருமாறிப் போவோம்
லங்கைக்கு!- போங்கள் நீங்கள் எல்லாம்.
[சபையோர் விடைபெற்றுச் செல்கின்றனர்.]
காட்சி முடிகிறது.
இரண்டாம் அங்கம் - முதற் காட்சி.
காலம்--பகல்
இடம்: -லங்கையில் இந்திரஜித்தின் மாளிகை இந்திரஜித் மணக்கோலத்துடன்
கொலுவிருக்கிறான். பரிவாரங்கள் புடை சூழ்ந்திருக்கின்றனர். அநேக
யாசகர்கள் தாங்கள் வேண்டிய பசுக்கள், குதிரைகள், பாத்திரங்கள், முதலியன
தானமாக வாங்கிக்கொண்டு போகின்றனர்.
இ. இன்னும் யாராவது இச்சாதானம் பெற விரும்புவோர் இருக்கிறார்களா?
ஆதிசேஷன் வயோதிகனாக வருகிறார்.
ஆ. மஹாப்பிரபு! நான் ஒருவனிருக்கிறேன். வயோதிகனான படியால் மற்றவர்களை
யெல்லாம் தள்ளிக்கொண்டு முன்னால் வர முடியவில்லை.
இ. வயோதிகரே! என்ன வேண்டுமுமக்கு?
ஆ. நான் வேண்டுவது--
இ. என்ன தயங்குகிறீர்? கேளும் என்ன வேண்டுமென்றாலும்.
ராகம்--இந்துஸ்தானி. தாளம்--ஆதி.
பல்லவி.
வானவரும் புகழ் மா பெரியோரே
மனதில் விரும்பியதை வழுத்திடுவீரே (வான)
தொகையறா
யாவர் நீர் உமது நேசம் யாது
துணையாரு மின்றி வந்தீர்
தேவையான பொருள் யாவை
என்னை நீர் தேடி இங்கடைந்தீர்
தெரிசனத்தில் மிக மஹத்வ மிலகிடு. (வான)
ஆ. இல்லை- நான் கேட்பதைத் தம்மால் கொடுக்க முடியுமோ என்று -- யோசிக்கிறேன்.
இ. அஷ்டத்திக்குகளிலும் சென்று அனைவரையும் ஜெயித்த எனக்கு, ஒரு கிழப்
பிராமணன் வேண்டுவதைக் கொடுக்க முடியாதா? - பேஷ் ! நீர் மிகுந்த புத்திசாலி!
ஆ. அப்படித்தான் அனைவரும் சொல்லுகின்றனர். ஆனால் -
விருத்தம் – தன்யாசி
காலத்தின் கூற்றினாலே கவலையே மிகுந்த இந்த
கோலமே கொண்டுநானும் குவலயம் சுற்றிவாரேன்
ஞாலத்தில் ஆதரிக்கும் நண்புடை உற்றாரில்லை
சீலமே மிகுந்த ஐயா (உமது) சீர்பெற்றஉயிரைத் தாரும்.
-ஆனால் உமது உயிரைத்தானமாகத் தாரும்.
இ. என்ன கேட்டீர்?
ஆ. உமது உயிரை-தானமாக!
இ. உம்! [ஒருவாறு நகைத்து] கொடுத்தேன்! கொடுத்தேன்! கொடுத்தேன்! - நான்
கொடுத்தாயிற்று-கொண்டுபோக உமக்குச் சக்தி இருந்தால் கொண்டுபோம்
இப்பொழுதே! ஆயினும் ஒன்று. பிரம்மா தேவனிடம் நான் ஒருவரம்
பெற்றிருக்கிறேன், அதன்படி நீர் செய்ய முடியுமானால் செய்யும்.
விருத்தம்-மோகனம்.
அந்தமலர் அயனளித்த அரியவாம் ஒன்றுண்டு
அதனைச் சொல்வேன்
எந்தனது ஆவிபெற இந்த்ரிய நிக்ரஹம் செய்து
ஈரேழாண்டு
சிந்தையிலும் ஊண் உரக்க மில்லாது தன் மகளை
எனக்குச் சீராய்த்
தந்தவனே சண்டைசெய்து தனிப்போரில்
உயிர்கொள்ளத் தக்கோனாமே.
ஈரேழ் பதினான்கு வருடங்கள் இந்திரிய நிக்கிரஹம் செய்து உலகினில்
ஊணுரக்கமின்றி உயிர் வாழ்ந்தவனாகி, தன்மைகளை எனக்குத்தந்த மாமனே,
தனி வெம் போரில் எதிர் நின்று என்னைக் கொள்ளத்தக்கவன், என்பது
ஞாபக மிருக்கட்டும்!
ஆ. மகாப பிரபுவின் சித்தப்படியே ஆகுக
[இந்திரஜித் அந்தப்புரம் செல்கின்றான்; பரிவாரங்கள் கலை கின்றனர்.]
[பிராம்மண உருவம் மறைந்து ஆதிசேடன் உருவுடன்] பிரமன் கொடுத்த வரத்தை
நானே ஈடேற்ற வேண்டுமேன்பது பரந்தாமன் திருவுள்ளம் போலும். சரி!
புருஷோத்தமர் ராமாவதாரம் செய்யும் பொழுது நான் அவரது தம்பியாக
அவதரிக்க வேண்டும். [மறைகிறார்.]
sp; காட்சி முடிகிறது.
இரண்டாம் அங்கம் - இரண்டாம் காட்சி.
இடம்-சுலோசனை அந்தப்புரம் சுலோசனை மலர்மாலை
தொடுத்துக்கொண்டு இருக்கிறாள்.
காலம் - பகல்
சு. ராகம் - ஸரஸ்வதிமனோகரி தாளம் - தேஸாதி.
பல்லவி.
சந்த்ர காந்த நாதா சாம் ராஜ்யனே
சுந்தராங்கதன் - சுர ராஜனே (சந்)
அநுபல்லவி.
மந்தகாசமாய் வந்தகீர்த்தமான்
விந்தையானமா மண்டலீகனே (சந்)
சரணம்
மெத்த புஜபல பராக்ரம் கெம்பீரன்
வித்தகம் பரவும் சுத்த வீரனே
சத்வ சாஸ்த்ரார்ஜ்ஜித பாக்யனே
சமாதான பேத தண்ட சாதுர்யனே (சந்)
இந்திரஜித் வருகிறான்.
சு. நாதா, சீக்கிரம் வருவதாகச் சொல்லிப் போனீரே, ஏது இந்நேரமாயது?
இ. பெண்மணி, ஆஸ்தான மண்டபத்தில் கொஞ்சம் வேலை யாயிருந்தேன்.
சு. என்ன வேலையென்று நான் கேட்கலாமோ?
இ. நான் இச்சாதானம் கொடுத்துக் கொண்டிருந்தேன்.
சு. இச்சாதான மென்றால்?
இ. யாசிப்பவர்கள் இச்சிப்பதை யெல்லாம் கொடுக்கும் தானமாம்.
சு. அப்படியா! மிகவும் சந்தோஷம். ஆனால் நான் ஒன்று இச்சிக்கிறேன்
அதைக் கொடுக்கிறீர்களா?
இ. என்னிடத்தில் உள்ள - எனக்குச் சொந்தமானதை - எதையேனும் கேள் தருகிறேன்.
சு. ஆனால் சரி.
(வாங்கி தரவேணும் கதராடை என்ற மெட்டு)
பல்லவி.
வரமேநீர் தருவீரே - மணவாளரே நான் கோரும் (வரமே)
அநுபல்லவி.
பரமாதர் தனைத் தீண்டல் குறையாகுமென வேண்டல்
பலத்திற்கடுத்த நலத்தைத் தொடுக்கும்
குலத்திற்கேற்ற வளத்தைக் கொடுக்கும் (வரமே)
சரணம்.
எப்பிறப்பும் எங்கணுமே எனைவிடா திருந்துவாழ
ஏங்கிக் கேட்கும் வரத்தை தா\தர** மேதாங்கி
நிற்கும் பாங்கிக் களிப்பீர் (வரமே)
இ. [நகைத்து] கண்ணே, வேறென்னவோ கேட்கப்போகிறாய் என்றிருந்தேன்;
மிகவும் சந்தோஷம்! அப்படியே ஆகட்டும்.
ராகம் - ப்யாக். தாளம் - ரூபகம்.
பல்லவி.
கொடுத்தேன் நீ கோரும் வரத்தை
கௌமளமாமயிலே மானே (கொ)
அனுபல்லவி.
அடுத்தாய் அன்புடனே நீயே
ஆதரவே புரியும் உனக்கே. (கொ)
தொகையறா.
எத்தனை பிறப்பிலும் என்னையே பிரியா
திருக்கவே வேண்டுமெனவே
இன்பம் நிறைந்த உன் வாய்மொழி போலவே
இசைந்து தந்தேன் பெறுவாயே
எடுப்பு.
பரமாதர் தனையே தீண்டல்
பாவ மாகுமென நீ வேண்டியபடி (கொ)
காட்சி முடிகிறது.
மூன்றாம் அங்கம் - முதற் காட்சி
இடம் - இலங்கை
காலம் - பகல்
வானர சைனியங்கள் ஸ்ரீராமர், லட்சுமணர், விபீஷணர், அனுமான், ஜாம்பவான்,
அங்கதன், முதலியோருடன் லங்கைக் கோட்டையை நோக்கிச் செல்கின்றனர்.
ராட்க்ஷச சைனியங்கள் எதிர்க்கொண்டு போகின்றன. துரத்தில் இரு சைனியங்களுக்கும்
பெரும் யுத்தம் நடக்கிறது.
காட்சி முடிகிறது.
இடம் - அசோகவனம்.
காலம் - இரவு.
சீதை வருத்த முற்றிருக்க திரிசடை பக்கத்திலிருந்து அவளைத் தேற்றுகிறாள்.
தி. ராகம் - சகானா. தாளம் - சாபு
பல்லவி.
ஏதுக்கு வருந்துராய் - அம்மா
ஏதுக்கு வருந்துராய் - சும்மா (ஏது)
அனுபல்லவி.
கேதப்படாதே தெய்வம் - பொது என்பதழிந்ததோ
கிணறு தப்பி என்ன துரவிலே விழுந்ததோ. (ஏது)
சரணம்.
ஓயவே பெரும்பேயும் நாயும் தின்ன
உருளுது பார் இவன் தலை மண்டை
உரத்த ராமனை அரக்கர் கெலிக்கும்போது
உள்ளங்கையிலே முடிக்கிறேன் பார்
ஒன்பது கொண்டை (ஏது)
திரி. அம்மா, சீதாதேவி, இனி உனக்கு நற்காலம் வந்து விட்டது. நேற்று நடந்த
கோரமான யுத்தத்தில் ஸ்ரீராமபிரான் என் பெரியப்பாவைத் தோற்கடித்து
நிராயுதனாக நிற்கச் செய்து "இன்று போய் நாளைவா" என்று சொல்லி
யனுப்பினாராம். அப்படிப்பட்ட மஹா உத்தம புருஷனை இந்த ராவணனால்
ஜெயிக்க முடியுமோ - இனி வருந்துத லொழி.
சீ. திரிஜடா! உன் மொழியால்தான் நான் ஜீவித்து வருகிறேன். தினம் இவ்வாறு
வந்து எனக்கு நற் செய்தி சொல்லிக் கொண்டிருப்பாயாக!
காட்சி முடிகிறது.
மூன்றாம் அங்கம் - இரண்டாம் காட்சி.
இடம் - சுலோசனையின் பள்ளி அறை.
காலம் - நள்ளிருள்
இந்திரஜித் படுத்துறங்கிக் கொண்டிருகிறான்.
சுலோசனை பக்கத்தில் உறங்குபவள் கனவு கண்டு பயந்து திடீரென்று எழுந்திருக்கிறாள்.
சு. ஆ! ஆ! நாதா! நாதா! - நான் கோரமான கனவு ஒன்று கண்டேன் - என் மனம்
அதனால் தத்தளிக்கிறது. எழுந்திருந்து கலங்குகின்ற என் மனதைத் தேற்றும்
உமது கனிவாய் மொழிகளால்!
இ. [கண் விழித்து] கண்மணி! கனவுதானே! இதற்கு நீ இவ்வாறு பயப்படலாமா?
என்ன கனவு கண்டாய் சொல்.
சு. ஐயோ! அதை என் வாயாற் சொல்லவும் நாஎழவில்லையே! யுத்த களத்தில் உமது
கால்வேறு, கரம்வேறு, சிரம்வேறு, உடல் வேறாக, நீர் வெட்டுண்டிருப்பதை நான்
கண்டதாகக் கனவில் தோன்றியது! கனவாயிருந்த போதிலும் அதை நினைத்தாலும்
என் நெஞ்சம் பகீர் என்கிறது! இது ஒரு வேளை இனி வரப்போகிறதைக்
குறிக்கிறதோ என என் நெஞ்சம் பதைக்கிறது.
இ. கண்மணி! இதையெல்லாம் பற்றி நீ கவலைப்படாதே கனவுகளில் என்ன இருக்கிறது?
இனி கவலை யின்றிக் கண் உறங்கு.
காட்சி முடிகிறது.
மூன்றாம் அங்கம் - மூன்றாம் காட்சி.
இடம்:- அதே யிடம்
காலம்:- அதிகாலை.
காலையில் வாத்ய கோஷத்தினால் உறங்கிக்கொண்டிருக்கும்
சுலோசனையும் இந்திரஜித்தும் எழுப்பப் படுகிறார்கள்.
சு. நாதா - என்மனம் இன்று கலங்கி நிற்கிறது - இரவு கண்ட கனவினால். இன்று
யுத்தத்திற்கு - நீர் செல்லாதீர் - இந்த வரம் எனக்குத் தரவேண்டும்.
இ. பெண்மணி! அப்படியே ஆகட்டும். இன்று என் தகப்பனார் என்னை
ஏவினாலன்றி நான் யுத்தத்திற்குச் செல்லேன்
[உட்காருகிறார்கள்.]
ஒரு தோழி வருகிறாள்.
தோ. இளையமகாராஜா! - பெரியமகாராஜாவிடமிருந்து அவசரமாக ஒரு தூதன்,
அவர் உம்மை உடனே அழைத்து வரும்படி கட்டளை யிட்டதாக
வந்திருக்கிறான் கடை வாயிலில்.
இ. [ஒருவகையாகச் சிரித்து] சரி!- நான் புறப்பட வேண்டியதுதான்.
[எழுந்திருக்கிறான்.]
சு. [அவனைத் தடுத்து] நாதா! வேண்டாம்! வேண்டாம்! யுத்தத்திற்குச் செல்லாதீர்.
தர்க்கம் - ராகம் - அடாணா. தாளம் - ஆதி.
என்னை விட்டு ஏகுதல் அழகோ மன்னா
சொன்ன சொல்லை முற்றும் மறந்தீரோ
சுந்தரானந்தரே இந்த வேளை தன்னில் (என்னை)
ஜீவாதார சிற்பமே கற்பகமே
காவாய் என்னை கருணைக்கடலே
கற்கண்டே தேனே கவலை தீராதே (என்னை)
இ. மானே தேனே வாடாதே நீ தானே
நானே இன்று சேனையுடன் சென்று
வானரப்படை வென்று வருவேன் தீரன் என்று
(மானே)
காந்தாமணி கல்யாணி கண்மணி
சாந்தமாக தைர்யவிடை
ஈந்தால் நானும் சென்று
இன்பமாய் வரல் நன்று (மானே)
சு. நாதா! பிதுர்வாக்ய பரிபாலனத்திற்காக நாடு நகரை யெல்லாம் விட்டு
காட்டுக்குச் சென்ற அப்பரம புருஷனை உம்மால் ஒருகாலும் வெல்ல முடியாது!
இ. கண்மணி! உன் வாக்கினாலேயே நான் செய்யவேண்டிய கடமையை எனக்குப்
போதித்து விட்டாய்! அப்பரம புருஷன் பிதுர்வாக்ய பரிபாலனத்தையே
முதன்மையாகக் கொண்டால் - நானும் அதன்படியே எனது தகப்பனாருடைய
கட்டளையை நிறைவேற்ற வேண்டாமா? அவர் என்னை இன்று யுத்தத்திற்குப்
போகச்சொன்னால் நான் போக வேண்டியவனே.
சு. நாதா! ஆனால் - தங்கள் இஷ்டம்!
[இந்திரஜித் புறப்படுகிறான்.]
காட்சி முடிகிறது.
மூன்றாம் அங்கம் - நான்காம் காட்சி.
இடம் - ராவணன் அந்தப்புரம்
காலம் - காலை.
ராவணன் துக்கித்தவண்ன மிருக்கிறான்.
ம. [அவனைத் தேற்றிக் கொண்டிருக்கிறாள்] பிராணநாதா, இனியாவது அந்த
சீதை யென்னும் தீயை லங்கையை விட்ட கற்றி, ஸ்ரீராமரிடம் சேர்த்திடுமே!
ரா. புத்தியற்றவளே! பேசாமல் இரு! என் உயிர் உள்ளளவும் அப்படிச் செய்யேன்.
இதோ இந்திரஜித் வருகிறான். அவனைக்கொண்டு இந்த ராம லட்சுமணர்களாகிய
மானிடப் பூச்சிகளை நசுக்குகிறேன்!
இந்திரஜித் வருகிறான்.
இ. அப்பா, நமஸ்காரம், அம்மா நமஸ்காரம். என்னை யழைத்தீர்களாமே.
ரா. கண்ணே! இந்திரஜித்! வாராய்! மதியுடைய மைந்தனே ஆபத்காலத்தில்
மந்திரியாகிறான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே துக்க சாகரத்தில்
மூழ்கியிருக்கும் எனக்குக் கரை யேறும் மார்க்கம் நீதான் ஒன்று சொல்ல வேண்டும்.
இ. பிதா! இவ்வாபத்தினின்றும் தப்ப ஒரு சுலபமான மார்க்கம் இருக்கிறது.
உத்திரவானால் சொல்கிறேன்.
ரா. சொல் மைந்தா!
இ. அப்பா! நமது குலத்தையும் பலத்தையும் ஒருங்கே அழித்திட சீதை உருவெடுத்து
வந்திருக்கும் அக்னியை அப்படியே கொண்டு போய் அந்த ராகவனிடம் சேர்த்து
விட்டால், இந்த நமது கஷ்டமெல்லாம்-
ரா. [கோப மூண்டு] அடே! திரிலோககண்டகனாகிய ராவணனுக்குப் பிறந்த
பிள்ளையாகத் தோன்றவில்லை நீ! என் பிள்ளையல்ல நீ! உன்னைக் கொன்று
முதலில், பிறகு அம்மானிடப் பதர்களை இட்சணம் அழிக்கிறேன்!
[வாளெடுத்துப் போகிறான்.]
ம. [அவனைத் தடுத்து] நாதா! நமது அருமை மைந்தனாயிற்றே!
(ஒரு நாளும் மறவேன் என்ற மெட்டு.)
மணமேவுங் குணவானே
மைந்தன் மேல் ஏன் கோபம் (மண)
தன்சூரத் தன்மை வாய்ந்த லங்கைக் கதிபதியே
தனயனைச் சிதைக்க லாகுமா இது தகுமா. (மண)
ரா. அருமை மைந்தனா! அப்படி யிருந்தால் என் சொற்படி நடக்க மாட்டானா?
இ. அப்பா! கோபியாதீர்! - உமது சொற்படி என்ன செய்யவேண்டும்? சொல்லும்
செய்கிறேன், உமக்குக் கோபம் வேண்டாம்.
ரா/ ஆனால் உடனே சென்று இந்த ராம லட்சுமணர்களைக் கொன்றுவா.
இ. சரி! - உமதாக்கினைப்படி பிரயத்னப்படுகிறேன். அவர்களையாவது வென்று
வருகிறேன், இல்லாவிட்டால் நானாவது அவர்களால் மடிகிறேன்.
[போகிறான்.]
காட்சி முடிகிறது.
மூன்றாம் அங்கம் - ஐந்தாம் காட்சி.
இடம் - யுத்தகளம். காலம் - பகல்.
வானரசைனியங்களுக்கும் ராட்சத சைனியங்களுக்கும் பெரும் யுத்தம் நடக்கிறது.
லக்ஷ்மணர் இந்திரஜித்துடன் போர் புரிகின்றனர். ஸ்ரீராமர் ஒரு பக்கமாக நின்று
இவர்கள் யுத்தத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். விபீஷணர் லட்சுமணர்
பக்கத்திலிருந்து அவருக்கு உற்சாக முண்டாக்கிக் கொண்டிருக்கிறார்.
வி. லட்சுமணரே! இந்திரஜித் அஹோ அக்னியாஸ்திரம் விடுகிறான் - நீர்
உடனே வருணாஸ்திரம் விட்டு அதனை அதமாக்கும்.
[லட்சுமணர் அப்படியே செய்கின்றனர்.]
அதோ! அவன் இடியாஸ்திரத்தை விடுகிறான். இந்திராஸ்திரத்தினால்
அதை அடக்கும். [லட்சுமணர் அப்படியே செய்கிறார்.]
அதோபாரும்! அவன் நாகாஸ்திரம் தொடுக்கிறான். அதற்கு வைரியாகிய
கருடாஸ்திரத்தைத் தொடும்.
[லட்சுமணர் அப்படியே தொடுக்கின்றனர். விபீஷனர் ஒரு புறம் போகிறார்.]
இ. ஆஹா! மானிடப் பூச்சிகளே! இதோ நான் பிரம்மாஸ்திரத்தைத் தொடுக்கிறேன்.
வல்லமை யுள்ளவர்களானால் அதைத் தடுத்துக்கொள்ளுங்கள் பார்க்கலாம்.
[பிரம்மாஸ்திரத்தைப் பிரயோகிக்கிறான். ராம லட்சுமணர்கள் உட்பட
அங்கிருக்கும் வானர சைனியங்கள் மூர்ச்சையாகின்றனர்.]
சுக்கிரீவன் அங்கதன் மற்றொரு புறமிருந்து ஓடி வந்து ராம லட்சுமணர்களைத்
தாங்கி துக்கப்படுகின்றனர். அநுமார் ஓடி வந்து ராமர் பாதத்தில் விழுந்து புலம்புகிறார்.
அ. ஹா! ராமப்பிரபு! ராமப்பிரபு ! - ஸ்ரீராமா! ஸ்ரீராமா!
விபீஷணர் ஓடி வருகிறார்.
வி. ஆஹா! ஒரு க்ஷணம் நான் விலகியிருக்க என்ன பிரமாதம் நேர்ந்து விட்டது!-
[ராம லட்சுமணர்களை நெருங்கி] ஒ! இந்திரஜித் தொடுத்த பிரம்மாஸ்திரத்தில்
மூர்ச்சை யாயிருக்க வேண்டும்!- அனுமந்தா! எல்லாம் உணர்ந்த நீயே என்ன
இப்படி துக்கிக்கிறாய் ! ஸ்ரீராம லட்சுமணர்கள் பிரம்மா கொடுத்த அஸ்திரத்திற்குச்
செய்யவேண்டிய மரியாதையின் பொருட்டு மூர்ச்சையாய் இருக்கின்றார்களே
ஒழிய அவர்கள் மடியவில்லை. அவர்கள் மறுபடியும் பிரக்ஞையே அடையச்
செய்யும் வழி உன் யத்தினத்திலிருக்கிறது. நீ உடனே இமையமலைக்குப் போய்,
கைலாச பர்வதத்தினிடையில் சஞ்சீவியிருக்கிறது அதைக் கொண்டுவா.
உன்னாலன்றி இதைச் செய்யத்தக்கவர் வேறொருவர் இல்லை. உடனே புறப்படு.
அனு. இதோ புறப்பட்டு விட்டேன். [போகிறான்.]
காட்சி முடிகிறது
மூன்றாம் அங்கம் - ஆறாம் காட்சி
இடம் - கைலாசம்.
காலம் - சாயுங்காலம்.
அனு. இதுதான் விபீஷணர் குறித்தமலை. இதில் எவை சஞ்சீவி மூலிகைகள் என்று
அறியேனே, இதற்கென்ன செய்வது? இந்த மலையை அப்படியே தூக்கிகொண்டு
போகிறேன். [தூக்குகிறார்.]
காட்சி முடிகிறது.
மூன்றாம் அங்கம் - ஏழாம் காட்சி.
இடம்-யுத்தகளம். காலம்-இரவு.
அனு. இதோ சஞ்சீவிமலையைக் கொண்டுவந்தேன்.
(அதன் காற்றினால் மடிந்தவர்கள் எழுகின்றனர். ஸ்ரீராம லட்சுமணர்களும் எழுகின்றனர்.)
ல. ஹா! விட்டேனாபார் இனி உன்னை இந்திரஜித்!-எங்கே அவனைக்காணோம்?
ஸ்ரீ. அப்பா! லட்சுமணா! அவன் விட்ட பிரம்மாஸ்திரத்தினால் நாம் மூர்ச்சை யானோம்.
அனுமான் கொணர்ந்த சஞ்சீவியினால் அம்மூர்ச்சை தெளிந்தோம்.
(அனுமான் முதலிய வானரங்கள் ராமலட்சுமணர்கள் உயிர்பெற்றதைக் கண்டு
அவர்களைச் சூழ்ந்து சந்தோஷத்துடன் ஆடிப் பாடுகின்றனர்.)
வான. ராகம்-செஞ்சுருட்டி. தாளம்-ஆதி.
சண்டகிரணகுலமண்டனராம் ஸ்ரீமத் தசரத நந்தனராம்
கௌசல்யா சுகவர்த்தனராம் விஸ்வாமித்ரப் பிரியதர ராம்
கோரதாடகா காதக ராம் மாரீசாதி நிபாதக ராம்
கௌசிக மகசம் ரக்ஷக ராம் ஸ்ரீமதஹல்யோத் தாரக ராம்
சீதார்ப்பிதவர மாலிக ராம் க்ருதவை வாஹிக கௌதுக ராம்
ராம ராம ஜெய ராஜாராம் ராம ராம ஜெய சீதாராம்.
வி. நமது சந்தோஷத்திற் கறிகுறியாகவும் நாம் எல்லாம் உயிர் பெற்றதை நமது
சத்துருக்கள் அறியும் பொருட்டும், உங்களில் பலசாலிகள் எல்லாம் கொள்ளிக்
கட்டைகளைக் கையிற் கொண்டு, லங்கைக்குள் புகுந்து ராவணாலயத்தைக்
கொளுத்துவீர்களாக!
(வானரங்கள் அப்படியே செய்யப் புறப்படு கின்றனர்.)
காட்சி முடிகிறது.
நான்காம் அங்கம் - முதற் காட்சி.
இடம்-சுலோசனையின் அந்தப்புறத்தில் பூஜாக்கிரஹம்.
காலம் - காலை.
சுலோசனை தேவியின் விக்ரகத்தை ஆராதிக்கிறாள்.
சு. நமஸ்தே இந்துராணி பூரணி
இமயவர் செல்வி நீயே
நிலமகளே பூஜித்தேன் (ந)
பலம் நிறைந்தென் பர்த்தா இன்று
பண்புடன் ஜெயிக்கவேண்டும். (ந)
சு. (பூஜித்துவிட்டு கற்பூரத்தை ஏற்றுகிறாள். அச்சமயம் இந்திரஜித் பின்புறம் வந்து
அவள் கண்களை மூடுகிறான்-கரத்திலிருந்த கற்பூரத்தட்டு தவறி விழுந்து
கற்பூரம் அவிந்து போகிறது.)
யார் அது! - ஆ! நாதா! என்ன காரியம் செய்தீர்!
இ. (பிகடி எனும் ஹிந்துஸ்தானி மெட்டு.)
அன்பே என் ஆசை மாதே
அறியாமல் நேர்ந்ததீதே
முன்பே உணர்ந்தேன் இலையே
பூஜா முகத்தின் நிலையே.
சு. தொகையறா.
அம்பிகை பூஜைதனில் தீபமெடுத்து
ஆராதிக்கும் வேளையில்
அபசகுனமாகவே, கைநழுவி விட்டதால்
அச்சம் எனக்கு மிகவே.
(பல்லவி - பின் எடுப்பு.)
வம்பாய் விளைந்த சண்டை
மாதால் தெரிந்து கொண்டேன்
சிந்தாகுலம் அடைந்தேன் நீர்
செல்ல வேண்டாம் இன்றே.
இ. தொகையறா.
ஊழைக் கடக்குமோர் உத்தமன் காலத்தில்
உண்டென்று சொல்வதழழோ
உண்மையாய் தந்தையின் சொற்படி இன்று யுத்தத்திற்கு
உடனே நான் ஏகவேண்டும்.
(பல்லவி - பின் எடுப்பு)
கண்ணே கலங்கவேண்டாம்
கஷ்டம் நம்மையே தீண்டா
மின்னார் துதிக்க சான்றாய்
விளம்பில் குறை தோன்றாய். (அன்பே)
இ. பெண்மணி! நான் அறியாமல் செய்த பிழையை மன்னிப்பாய்! நீ பூஜை
செய்து கொண்டிருப்பது அறிந்தவன் அல்ல நான்.
சு. பிராணபதி! என் உள்ளம் நடுங்குகிறது. நீர் இன்று நடக்கப்போகின்ற
யுத்தத்தில் ஜெயம் பெறவேண்டுமென்று நான் லோகமாதாவைப் பிரார்த்தித்துக்
கொண்டிருந்தேன். இச்சமயம் இவ்வபசகுனம் நேரவேண்டுமா? நான் என்
செய்வேன்! [துக்கிக்கிறாள்.]
இ. நானும் இது இனிநேரிடப் போகிற ஏதோ தீங்கைக்குறிக்கிற தென
நினைக்கிறேன். ஆயினும் கண்மணி சுத்த வீரனாகிய நான் இதற்கெல்லாம்
அஞ்சலாகாது. பெண்மணி! இன்றைத்தினம் எப்படியாவது ராம லட்சுமணர்களைக்
கொன்று வரவேண்டுமென்று பிதா எனக்கு ஆக்ஞாபித்திருக்கிறார்-
சு. ஐயோ-அதைக் கேள்விப்பட்டேனே! அது முதல் அனலிற்பட்ட புழுவைப்போல்
என் மனம் துடிக்கிறதே, அந்தோ! அவர்களை வெல்லும் சக்தி அவனியில்
ஆருக்குத்தான் உண்டு! நீர் அறியீரா? இந்த வீண் பிரயத்தனத்தில் உமது
உயிரை நீர் மாய்த்துக் கொள்வதோ?
[துக்கிக்கிறாள்.]
இ. கண்ணே! சுலோசனா! நீ இவ்வாறு துக்கித்து என் மனதைக் கலக்காதே! என்
தகப்பனுக்கு மைந்தனாகப் பிறந்த என் கடமையை நான் நிறைவேற்ற வேண்டும்!
நான் இன்று எப்படியும் யுத்தத்திற்கு போய் ஜெயித்தாவது திரும்ப வேண்டும்,
அல்லது மடிந்தாவது சுவர்க்கம் புகவேண்டும். ஆகவே கண்களில் நீர்ததும்பாமல்
எனக்கு விடை கொடுத்தனுப்பு. உன் பாதிவ்ரத்யம் எனக்கு என்ன நேர்ந்த
போதிலும் நற்கதி யளிக்கும்!
சு. ஐயோ! என் பாதிவ்ரத்யம் உம்மை எப்படி காக்கும்! அந்த சீதா தேவியின்
பாதிவ்ரத்யம் உம்முடைய குலத்தையெல்லாம் அழிக்கக் காத்திருக்க!
இ. சரி! அவைகளை யெல்லாம் பற்றி இப்பொழுது யோசிக்கக் காலமில்லை;
நேரமாகிறது. எனக்கு சீக்கிரம் விடை கொடுத்தனுப்பு.
சு. நாதா! போம் சீக்கிரம்! நான் இனி தடுக்கலாகாது!-நாதா! ஒருகால் யுத்தத்தில்
உங்களுக்கு ஏதாவது கெடுதி நேரிடுமாயின் எனக்கு எப்படி தெரிகிறது?
இ. கண்மணி! இன்றை யுத்தத்தில் நான் அபஜயப்பட்டு இறக்கும்படி நேரிட்டால்
கணயைப் பிடித்த என் வலது கரமானது உன் கண்முன் வந்து விழும்-இதுவே
உனக்கு அடையாளம்.
விருத்தம்----காம்போதி.
யாராலும் சொல்வதற்கரிய என் ஆவி அவியுங்காலம்
போராடும் சமயம் புவிமீது வந்து பொருந்திற்றென்றால்
சீரான கற்புள்ளமாதே உன் சிங்காரமடியின் மீது
நேராக என்கைக் குறியாக வந்து நேர்ந்திடுமே.
எது நேர்ந்தபோதிலும் நாமிருவரும் சீக்கிரம் ஒருங்கு சேர்வோம் என்று
எனக்குள் ஏதோ ஒன்று சொல்கிறது. அஞ்சாதே.
சு. பிராணநாதா! உமது வாக்கு பலிக்குமாக!
[ வெளியில் யுத்தபேரிகை முழங்குகிறது. இந்திரஜித்விரைந்து செல்கிறான்.]
காட்சி முடிகிறது
நான்காம் அங்கம் - இரண்டாவது காட்சி.
இடம்--யுத்தகளம்,.
காலம்--பகல்.
இரு சைனியங்களுக்கும் கோரமான யுத்தம் நடக்கிறது.
இ. இ. இவ்வாறு ராமலட்சுமணர்களுடன் நேராக யுத்தஞ் செய்துகொண்டிருந்தால்,
நம்மால் இவரகளை ஜெயிக்கமுடியாது. இவர்களுக்கு ஏதேனும் பெரும்
துக்கமுண்டாக்கி மெய் மறந்திருக்கச் செய்து, பிறகு இவர்களை வெல்ல வேண்டும்.
----லங்கைக்குப் போவோம். [மறைகிறான்.]
காட்சி முடிகிறது.
நான்காம் அங்கம் - மூன்றாம் காட்சி.
இடம் - லங்கை. காலம் - பகல்.
இந்திரஜித் மாயா சீதையை ரதத்தின்மீது ஏற்றிக்கொண்டு வருகிறான்.
சுலோசனை ஓடி வந்து அவனைத் தடுக்கிறாள்.
சு. பிராணநாதா!
ஐயோ பெண்பாவம் ஆகாதாகாது (ஐ)
மாதர்களிற் சிறந்த மாதரசி தன்னை
மன்னா நீர்வதைப்ப தாகாதாகாது. (ஐ)
இதென்ன சாகசம்! என்னைத் தீண்டிய கரத்தினால் மற்றொரு ஸ்திரீயைத்
தாங்கள் தீண்டுவது தர்மமா? அதுவும் உத்தம பத்தினியாகிய சீதாதேவியைத்
தாம் தொடலாகுமோ? எங்கே கொண்டு போகிறீர்கள் தேவியை?
இ. யுத்த களத்திற்கு - இவள் தலையைச் சேதிப்பதற்காக!
சு. ஐயோ! சுத்தவீரராகிய தாங்கள் ஸ்திரீ ஹத்தி செய்யலாகுமோ? அதைவிட
என்னை முன்பு கொன்று செல்லுங்கள்.
[பாதத்தில் வீழ்கிறாள்.]
இ. கண்மணி! எழுந்திரு இதென்ன சாகசம்! நான் உண்மையில் பெண்
கொலைக்கு உட்படுவேனென்று எண்ணினாயா?
(நாகூர்ஜானேவாலே என்ற மெட்டு)
உண்மையாக நானோர்
பெண்னைக் கொல்லுவேனோ
வண்ணமேனி - மானே
வானோர் பழிக்க நானே. (2)
தொகையறா.
மாயா வினோதமே வாழ்க்கை முழுதும்
கொண்ட வம்சத்திலுதித்த என்னை
மற்றவர் உணராது போயினும் நீயுமென்
வழிமறித்து இங்கு நின்றாய்.
பாட்டு.
உன்னை யன்றி வேறு
பெண்ணைத் தீண்டுவேனோ - இவ்
வெண்ண மேனோ கொண்டாய் - மனம்
ஏங்கியே நிற்கின்றாய். (2)
இந்த சீதை யார் என்று பார்!
[மாயாசீதை ராட்க்ஷசனாக மாறுகிறான்.]
சுலோசனா, இனி நீ அந்தப்புறம்போ.
[ராட்க்ஷசன் மறுபடியும் சீதையாக மாறுகிறான்.
இந்திரஜித் அவளை ரதத்தில் அழைத்துக்கொண்டு போகிறான்.]
காட்சி முடிகிறது.
நான்காம் அங்கம் - நான்காம் காட்சி.
இடம் - யுத்த களம் தூரத்தில் யுத்தம் நடக்கிறது.
காலம் - பகல்.
இ. [மாயா சீதை கேசத்தைப் பிடித்திழுத்து வந்து] நட துஷ்டையே! வாயைத்
திறவாதே! சுரர்களை ஆட்டுவிக்கும் அசுர வீரனாகிய இந்திரஜித் என்னும்
இந்த தீரன் முன் கேவலம் குரங்குகளை ஆட்டுவிக்கும் குரங்காட்டி உன் பர்த்தா
அந்த ராமனுடைய பராக்கிரமம் எம்மாத்திரம்!
சீ. ராமா! ராமா! - லட்சுமணா! லட்சுமணா!
இ. ராகம் - அடாணா. தாளம் - ஆதி.
பத்திரமுனை இத்தரை மீது சித்திரவதை செய்குவேன்டி
பார்க்குள் மூர்க்கி தீர்க்கம் நீ (ப)
தைத்ய குலத்துக் கெல்லாம் சைத்தியகனை யெனு மிந்திர
சித்தன் முன் வந்து தானந்த சத்ரு ராமனென்ன செய்வான் (ப)
இதோ! உன்னைத்தலைவேறு முண்டம் வேறாக்குகிறேன்.
[திரும்பிப் பார்த்து] ஆஹா! அந்தப் பெரிய குரங்கு என்னைப்
பார்த்துப் பீதியடைந்து பற்களை இளித்திளித்துத் தவிக்கிறது.
நாட்டமுடன் பல கோஷ்டத்துடன் மந்தி
கூட்டங்களைக் கொண்டு வாட்ட நினைத்திடும்
தாஷ்டிவீர னானெ வனானாலும் நாட்டில வனைவிடாது
ஒட்டி உன் சிரத்தை வெட்டி வீழ்த்து வேனிச் சமயம் மட்டி {ப}
அடே வானரமே! இவளை இவ்வாளினால் வெட்டி விடுகிறேன்!
[மாயா சீதையின் தலையை வெட்டிவிட்டுத் தலையைக் கீழே எறிந்து விட்டு
போய்விடுகிறான்.]
அனுமான் முதலியோர் ஓடிவந்து அத்தலையை பார்க்கின்றனர்.
அனு. [வருந்தி] ஆஹா! மகாபாபி! சீதாதேவியைக் கொன்றானே! இனி என்ன
இருக்கிறது? நாம் எல்லாம் எடுத்துக் கொண்ட இவ்வளவு கஷ்டமும் வீணாணதே!
பல்லவி.
அன்னை சீதா பிராட்டித்தாயே ஜெகத்தாயே உயிர் நீயே
துறந்தாயே இந்தநாயேன் (அ)
அனுபல்லவி.
என்ன செய்வேன் மாருதி புவிமீதே இறைவன் ராமருக்கென்
சொல்வேனே இவன்தான் தெரியானே இனி நானேஅனுமானே -- (அ)
சரணம்
மாயாவி இந்திரசித்தன் வர்மித்து லோகமாதா கழுத்தை ரெண்டாய்
வெட்டினானே மாட்டி சாவான் தட்டினானே கெட்டுப் போவானே. (அ)
எப்படியும் ஸ்ரீராமபிரானிடம் இதைத்தெரிவிக்க வேண்டும். ஐயோ! இந்த
சேதியை அவரிடம் சொல்லத்தானோ நான் இன்னும் இந்த உடலைச்
சுமந்திருக்கிறேன்! - அடா! விஷப் புழுவே! பெண் கொலை புரிந்த பேயனே,
நொடிப் பொழுதில் நீ அடையும் கெதியைக் கேட்டு உன் அப்பன் பத்துச்
தலைப்பூச்சி அவதிப்பட செய்கிறேன்! பொறு கொஞ்சம் பதறாதே!
[விரைந்து போகிறார்.]
காட்சி முடிகிறது.
நான்காம் அங்கம் - ஐந்தாம் காட்சி.
இடம் - ராமரதுபாசறை காலம் - சாயங்காலம்.
ராம லக்ஷ்மணர் வீற்றிருக்க.
அனு. [ஓடிவந்து விழுந்து] ஐயனே! சண்டாள இந்திரஜித் அன்னை யாரைச் சித்ரவதை
செய்து கொன்று விட்டான்! மஹாபாபி!
[துக்கிக்கிறான்]
ஸ்ரீ. ஹா! கண்மணி! சீதா! நீ உயிர் துறந்தாயோ!
[மூர்ச்சிக்கிறார்.]
ல. அன்னையே! சீதாதேவி! உம்முடைய ஆவி துறந்தீரோ!
[மூர்ச்சை யாகிறார்]
விபீஷணர் வருகிறார்.
அனு. ஐயனே! இதோ விபீஷணர் வருகிறார்.
[ஸ்ரீராமரை மெல்ல எழுப்புகிறார்.]
ஸ்ரீ. அப்பா! விபீஷணா! உனது தமையன் தசமுகன் தனையன் இந்திரஜித்,
எனதாசைக் கண்மணி ஜானகியை வாள் கொண்டு வெட்டி வீழ்த்தினானாமே !
[துக்கிக்கிறார்.]
வி. யார் சொன்னது?
அனு. ஐயோ! அதை நான் கண்ணாரக்கண்டேன் கண்டும் இன்னும்
உயிருடனிருக்கிறேனே!
வி. மாருதியாரே! சகலமும் உணர்ந்த தாமே இவ்வாறு மனங்கலங்குதல் கூடுமோ?-
ஐயனே! ரகுகுலதிலகமே! இந்த மாயாவிகளின் சூது இன்னும் தங்களுக்குத்
தெரியாமலிருக்கிறதே! அக்கினிக்குச் சமானமாகும் அப்பிராட்டி யாரைத்
தீண்டலும் அன்னியனால் ஆகக் கூடிய காரியமா? இது இந்திரஜித்தின் சூதாகும்.
இனி நடக்கும் யுத்தத்திலாகிலும் ஜெயமடையலாமென்கிற நோக்கத்துடன்
நிகும்பிலையாக மியற்ற, இந்தக் கபடச் செய்கையால் தங்கள் யாவரையும்
மயக்கிப் போயிருக்கிறான். ஐயனே! தாமதிப்பீர்களாயின் அந்த யாக
குண்டத்திலிருந்து வெளிவரும் ரதம் புரவி அஸ்திர சாஸ்திரங்கள் கிடைத்துவிடும்,
பிறகு அவனை ஜெயிப்பது மும்மூர்த்திகளுக்கும் அசாத்தியம். உடனே
லட்சுமணரை என்னுடன் அனுப்பும்-
ராகம் - மோகனம். தாளம் - ஆதி.
பல்லவி.
எதிரியைத் துலைத்திட இளையவரை யனுப்பும்
ஏனின்னும் தாமதம் எம்பெருமானே. (எ)
அனுபல்லவி.
அதிபல நிகும்பிலை யாகம் அழிக்கவல்ல
சதி செய்யும் இந்திரஜித்தன் தன்னோடு மற்றுமுள்ள. (எ)
அவன்யாக மியற்றுமிடம் அழைத்துச் சென்று அதை அழித்து வருகிறோம்.
ஸ்ரீ. ஆயின் லட்சுமணா! உடனே போய் ஜெயித்துவா!
ல. இதோ புறப்பட்டு விட்டேன்.
அனு. இதோ புறப்பட்டு விட்டோம்.
ஸ்ரீ. விபீஷணரே, என் ஜானகியைத் திரும்பவும் காணும் பாக்கியம் எனக்குக் கிட்டுமா?
வி. ஐயனே! தேவியாருக்கு ஒரு குறையுமில்லை. இது சத்தியம்.
கவலை யற்றிருங்கள்.
[ஸ்ரீராமர் தவிர மற்றவர்கள் போகின்றனர்.]
காட்சி முடிகிறது.
நான்காம் அங்கம் - ஆறாம் காட்சி.
இடம் - நிகும்பிலையைச் சார்ந்த வெளி நிலம்.
காலம் - நள்ளிரவு.
இந்திரஜித் நிகும்பிலையில் யாகம் செய்கிறான்.
விபீஷணர், லட்சுமணர் அனுமான் முதலியோரை அழைத்துக்
கொண்டு வருகின்றனர்.
வி. லட்சுமணரே! அதோ புகை வருகிறதே அவ்விடம் தான் இந்திரஜித் யாகம்
செய்கிறான் - சந்தடி செய்யாமல் வாருங்கள்.
அனு. வானரவீரர்களே! இங்கு எல்லாம் இருட்டாய் இருக்கிறது. நான் முன்பு
செல்கிறேன். நீங்கள் என் வாலைப் பிடித்துக்கொண்டு வாருங்கள்.
[வானரங்கள் அப்படியே செய்கின்றன. லட்சுமணர் தக்க அஸ்திரங்களால் முட்கோட்டை,
அக்னிக் கோட்டை முதலியவைகளை அதமாக்குகிறார். கடைசியாக லட்சுமணாதியர்
நிகும்பிலையை அணுகுகின்றனர். அனுமார் அங்கிருக்கும் விருட்சத்தின் மீது ஏறி
ஹோமகுண்டத்தினின்றும் கிளம்பும் ரதத்தின் மீது குதித்து அதைக் கீழே
அமுக்கி விடுகிறார்.]
அனு. அடே! பேடி! திருட்டுத்தனமாய் இங்கு வந்திருக்கிறாயா! வா யுத்தத்திற்கு!
ராகம் - அடாணா. தாளம் - ரூபகம்.
பல்லவி.
இந்திரஜித்தே உன்தன்
தந்திர வித்தை களெல்லாம்
ஏண்டா புறப்படடா (இ)
அனுபல்லவி.
உன்தன் நிகும்பிலையில் ஒளித்து செய்கிறார் பூசை
ஒளிக்கும் ஆடவனுக்கு முகத்தில் ஏண்டா மீசை (இ)
சரணம்.
முந்த என் தாயைப்போல ஒருத்தியைக் கொன்றாயே
முடுக்காய் அயோத்தியில் நடக்கிறேன் என்றாயே
பந்தல் அளந்தவனே நீயும் சென்றாயே
பாதாளம் வென்றாயே. (இ)
அந்த ராவணனுக்கு வந்த லஜ்ஜைக் கிதோ
அங்கத்தை கொண்டுபோய் ஆற்றிலே அலம்பொணாதோ
வந்து நாணிக்கொள்ள பஞ்சமோ கயிறு
வாணாள் கழிக்கவேணுமோ சரணல்லவோ வயிறு {இ}
இ. அந்தோ! இனி என்ன செய்வது? யாகம் அழிந்ததே!
ல. இந்திரஜித்! நீ நிராயுதனாயிருக்கிறாய்; இப்பொழுது உன்னைக் கொல்லுவது
சுத்த வீரனுக்கழகல்ல - உன் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு வா யுத்தத்திற்கு!
ராகம் - காபி. தாளம் - ஆதி.
பல்லவி.
பேடியான ராட்க்ஷசப் பயலெ
இனி ஓடாதே - முடமிகு (பே)
அனுபல்லவி.
கோடி காகமாகினாலுங் கல்லெதிர்
கூடி நின்று வாழ்வதுண்டோ உலகினில் (பே)
சரணம்.
பூதலத்தில் பேர்மிகுந்த ராமனின்
புஜபலத்தை நீ யறியாயோ
போர் தொடுக்க நேர் நடக்க மறைகிற (பே)
இ. இதோ க்ஷணத்தில் வந்தேன் - பொறு! [போகிறான்.]
காட்சி முடிகிறது.
ஐந்தாம் அங்கம் - முதற் காட்சி.
இடம் - யுத்தகளம். காலம் - காலை.
இந்திரஜித்தும் லட்சுமணரும் எதிர்த்து நிற்கின்றனர்.
இ. அடே! லட்சுமணா! முன்பு இரண்டுமுறை என்னிடம் யுத்தம் செய்து
தோல்வி யடைந்ததை மறந்தனையா? இம்முறை உன்னைச் சும்மாவிடப்
போகிறதில்லை. உன்னைக் கொன்றே தீர்க்கிறேன். [பாணம் தொடுக்கிறான்.]
ல. ராட்சாதமா! முன் பெல்லாம் பேடியைப் போல் மறைந்துகூட யுத்தம் செய்தனை.
ஆண் பிள்ளையானால் என் கண்ணெதிரில் நின்று இம்முறை போர் புரியாய்!
யார் ஜெயிக்கிறார்களோ பார்ப்போம்.
[கோரயுத்தம் நடக்கிறது. இந்திரஜித்தின் ரதம் உடைபடுகிறது,
கவசம் உடைக்கப்படுகிறது, வில் முறிபடுகிறது.]
வி. லட்சுமணரே! இதுதான் சமயம் - இந்திரஜித் சலித்திருக்கிறான்,
இப்பொழுதே அவனைக் கொல்லும்.
ல. அப்படியே! [தனுசில் பாணத்தைத் தொடுத்து]
பாணமே! தசரத குமாரனான ஸ்ரீ ராமன் தர்மஸ்வரூபியும்
சத்ய சந்தனுமும், பௌரஷத்தில் நிகரற்றவனுமாயின்
இந்த இந்திரஜித்தை நீ வதை செய்வாயாக!
விருத்தம் - கானடா.
பக்தி யென்னிடமே கொண்ட பாணமே யுண்மையானால்
சத்திய சந்தனாம் ஸ்ரீராமனே யாகுமானால்
நத்திய ராக்ஷஸர்கள் நாயகனான இந்திரஜித்தனின் சிரசை
இத்தினம் சீக்கிரம் கொண்டு வாராய்.
[அப்பாணத்தினால் முதலில் பாணத்துடன் கூடிய இந்திரஜித்தின் வலக்கை
துண்டிக்கப்பட்டு, ஆகாய மார்க்கமாய்ச் செல்கிறது. பிறகு சிரம் துண்டிக்கப்பட்டு,
ஆகாய மார்க்கமாய் மற்றொரு புறம் செல்கிறது. இந்திரஜித்தின் உடல் கீழே
விழுகிறது; வானரங்கள் ஜெய கோஷம் செய்கின்றன.]
காட்சி முடிகிறது.
ஐந்தாம் அங்கம் - இரண்டாம் காட்சி.
இடம் - சுலோசனையின் அந்தப் புரத்தில் பூஜாக்கிரகம்.
சுலோசனை கௌரி பூஜை செய்கிறாள்.
சு. விருத்தம் - ஹரிகாம்போதி.
அன்னையே அடியவள்யான் அன்புடன் அடிபணிந்து
உன்னையே வேண்டி இப்போ உருகியே வணங்குகின்றேன்
என்னையே ஆளும் எந்தன் இறைவன் மேகனாதன்
தன்னையே ஜெயத்துடன் –
[அவளது ஸ்தோத்திரத்தின் மத்தியில் இந்திரஜித்தின் வெட்டுண்டகரம்
அவளது மடியில்விழுகிறது.]
சு. ஹா! என்ன இது? - ஓ! பிராணநாதரின் கரம்!- ஹா!
[மூர்ச்சையாகிறாள், சற்று பொறுத்து மூர்ச்சை தெளிந்து எழுந்து பிரலாபிக்கிறாள்.]
விருத்தம் - முராரி.
எந்தனை மணந்த நாதா என்னுயிர்த் துணையே
சந்ததம் உபசரித்து தழுவியக் கரமீதானோ
பந்தன மொழியகன்று பாலித்த கரமிதானோ
இந்த நற்கரத்தை நான் இப்படிக் காணலாச்சே!
நாதா! நாதா! அன்று கண்ட கனவு இன்று நினை வாயிற்றே! என்னைப் பாணிக்
கிரஹணம் செய்து என் கழுத்தில் மாங்கல்யத்தைக் கட்டிய உமது கரமானது
உமது உரமின்றித் தனித்திருக்கக் கண்டும், பாபி நான் பாரினில் உயிர்
வாழ்கின்றேனே - பிராணநாதா! என்னைத்தனியே ஏங்க விட்டுத் தாம்
மாத்திரம் உம்பருலகம் தனித்துச் செல்லலாமோ? இதோ அடியாள் அங்கு
உமக்கு சுஸ்ருஷை செய்ய வருகிறேன். உமது கரத்திற் பிடித்த பாணமே
என்னாவியை உம்மிடம் சேர்க்க உதவட்டும்!
[அதைப் பற்றப் பார்க்கிறாள், அச்சமயம் இந்திரஜித்தின் கரம் தானாக
அங்கு பெருகியிருக்கும் ரத்தத்தில் விரலைத் தோய்த்து ஏதோ எழுதுகிறது.]
ஹா! இதென்ன ஆச்சரியம்! என்னவோ இக்கரம் எழுதுகிறதே!
[எழுதுகிறதைப் படிக்கிறாள்.]
"பதிவிரதா சிரோமணி! நான் யுத்தத்தில் மாண்டதற்காக மனங்கலங்காதே!
பிரமன் விதித்தபடியும், அவர் வரம் கொடுத்த படியும், என் மாமனார் கரத்தால்
நான் உயிர் மாண்டேன். நான் செய்த பாபங்களெல்லாம் பரிஹரிக்கப்பட்டுப்
பரிசுத்தனானேன். இனி நீ, உத்தம சதிகள் தங்கள் பதியிறந்தக் கால், எப்படி
அவர்களை அடைய வேண்டுமோ, அம் மார்க்கமாய் என்னிடம் வந்து சேர்வாய்."
சந்தோஷம்! என்ன மூடத்தனமாய் நீர் மடிந்ததாகத் துக்கப் பட்டேன் - என் வரையில்
நீர் உயிருடன் தானிருக்கிறீர். அதற்கு இதைவிட வேறு அத்தாட்சி என்ன வேண்டும்?
இனி நான் துக்கப் படுவானேன்! என் பிராணநாதரைச் சீக்கிரம் அடையப் போகிறேன்
என்று சந்தோஷப் பட வேண்டும். எனது மாமியார், மாமனார் உத்திரவைப் பெற்று,
என் நாதரது ஸ்தூல சரீரம் இருக்கு மிடம் சென்று என் கடமையை நிறைவேற்ற
வேண்டும்.
[கரத்துடன் புறப்படுகிறாள்.]
காட்சி முடிகிறது.
ஐந்தாம் அங்கம் - மூன்றாம் காட்சி.
இடம்-மந்தோதரி அந்தப்புரம்.
மந்தோதரி சயனத்தின் மீது துக்கித்தவண்ண மிருக்கிறாள்.
ம. ராகம்-அஸாவேரி. :அளமு-த்ரிபுடை.
பல்லவி.
மகனே மடிந்தனையோ-மகிதலத்தில் (ம)
அநுபல்லவி.
அகமகி ழிலங்கா புரக்காவலனே
ஆதிக்கமே பெற்ற சோதித் தவங்கிடந்த (ம)
சரணம்.
இந்திரனைச் சிறை பிடித்த இந்திரஜித்தே
எந்தனை மறந்தனையோ இது விதியோ
ஏது செய்வேனினி மாதுநான்தானே (ம)
குமாரா! குமாரா! உனக்கும் இக்கதி வாய்க்க வேண்டுமா? - உன் தந்தையின்
குற்றத்திற்காக நீ யிறக்கவேண்டுமா? கண்ணே!-கண்மணி! (தேம்பி அழுகிறாள்.)
சுலோசனை விருகிறாள்.
சு. மாமி! மாமி!
ம. (அவளைக் கட்டியணைத்து) சுலோசனா! உத்தம பத்தினியாகிய உனக்கும்
இக்கதிவாய்க்க வேண்டுமா?
சு. மாமி! மனம் கலங்காதீர்கள். அவரவர்கள் விதிப்படி நடக்கிறது; அதையாரால்
மாற்ற முடியும்?-மாமி, எனக்கு உத்தரவளியும்.
ம. ஐயோ! எங்கே போகப் போகிறாய்?
சு. பதியைப் பிரிந்த சதிகள் செல்லவேண்டிய மார்க்கம் போகப் போகிறேன்.
ம. ஹா! உடன்கட்டை யேறப் போகிறாயோ? உன் உடையைக் கண்டவுடனே
சந்தேகப்பட்டேன்!
சு. ஆம் - தெய்வாதீனத்தால் அவரது கரம் மாத்திரம் எனக்குக் கிடைத்திருக்கிறது.
அதைச் சிவிகையில் வைத்துக் கொண்டு வந்திருக்கிறேன்; அவரது உடலை
நான் பெற வேண்டும்.
ம. ஆயின் நான் உன்னைத்தடை செய்யலாகாது! உன் மாமனாரிடம் போய்
அதை பெறுவதெப்படி என்று கண்டறிந்து உன் கடமையைச் செய்வாய் உத்தமியே!
[சுலோசனையை அழைத்துக்கொண்டு தன் வீட்டின்கதவுவரைக்கும் வழி விடுகிறாள்.]
காட்சி முடிவடைகிறது.
ஐந்தாம் அங்கம் - நான்காம் காட்சி.
இடம் - லங்கையில் ராவணனது சயனக்கிருகம்.
காலம் - சாயங்காலம்.
ராவணன் படுக்கையில் படுத்துப் புரண்டழுது கொண்டிருக்கிறான்.
ரா. மேகநாதா! இந்திரஜித்! நீ மடிந்த பின்னர் எனக்கென்ன வாழ்விருக்கிறது!
நாளை நானே யுத்தத்திற்குப் புறப்பட்டுப் போய், உன்னைக் கொன்ற
லட்சுமணனையும், ராமனையும் கொல்கிறேன்! இல்லாவிட்டால் அவர்களால்
கொல்லப் பட்டு நான் மடிகிறேன்! - என்ன சப்தம் அது?
[பலகணி வழியாகப் பார்த்து]
யாரோ ஒரு ஸ்திரீ சிவிகை யேறி இங்கு வருகிறாள் - ஓ! சீதை! சீதை!-
இந்திரஜித் இறந்திருக்கமாட்டான்! நமது பகைவர் லட்சுமணன் மாண்டதை
இந்திரஜித் மாண்டதாகப் பொய் வதந்தி கற்பித்திருக்கவேண்டும் – ராம
லட்சுமணர்கள் மடிந்திருக்கவேண்டும்; அது தான் சீதை, இனி வேறு கதியில்லை
யென்று நம்மிடம் வருகிறாள் - யார் அங்கே?
[ராட்க்ஷச வேலையாட்கள் வருகிறார்கள்]
எனது அலங்கார வஸ்துக்களை யெல்லாம் கொண்டு வாருங்கள்.
[அவர்கள் அங்ஙனம் செய்ய, சரிகை வஸ்திரம் முதலியவைகளால் அலங்கரித்துக்
கொண்டு கந்தகலீபம் தரித்து, புஷ்பமாலை சூட்டிக் கொள்கிறான்.]
சிவிகை விட்டிறங்கி சுலோசனை வருகிறாள்.
ஹா! சீதை! சீதை! [அருகில் நெருங்க சுலோசனை என்று அறிகிறான்.]
சு. மாமா, நமஸ்காரம்.
ரா. சுலோசனா! - இதென்ன சந்தோஷக் கோலத்துடன் வந்திருக்கிறாய்?
சு. ஆம், எனக்கு இரண்டாம் விவாகம் நடக்கப்போகிறது.
விருத்தம் - பியாகடை.
மன்னிய மாமா இந்த மானில வாழ்வுவேண்டேன்
உன்னிய எனது நாதன் உயிர் துறந்திட்டாரவர்தன்
சென்னியை வாங்கித் தந்தால் செந்தணல் வளர்த்தி நானோ
தன்னுடன் கட்டையேரி ஜன்மசாபல்ய மாவேன்.
மடிந்த என் பிராண்நாதருடைய உடலுடன் அக்னிப் பிரவேசமாகப் போகிறேன்.
அதற்காக அவரது உடலை அடையும் படியான மார்க்கம் தாங்கள் எனக்குச்
சொல்ல வேண்டும்.
ரா. ஹா!- சுலோசனா, என்னைக் கேட்பதில் பிரயோஜனமில்லை- ரணகளம்
சென்று உன் சிற்றப்பன் விபீஷணனைக் கேட்டுப் பார்.
சு. உத்தரவுப்படியே.
[நமஸ்கரித்துப்போகிறாள், ராவணன் துக்கத்துடன் மஞ்சத்தில் சாய்கிறான்.]
காட்சி முடிவடைகிறது.
ஐந்தாம் அங்கம் - ஐந்தாம் காட்சி.
இடம் - ஸ்ரீராமர் பாசறை.
காலம் - சூர்யாஸ்தமனம்.
ஸ்ரீராமர் வானரங்கள் புடைசூழ நிற்கின்றனர். இந்திரஜித்தின் தலை ராமர்
பாதத்தில் வந்து விழுகிறது. ராமர் அதைத் தடவிக் கொடுக்கிறார்.
லட்சுமணர் விரைந்து வருகிறார்.
ல. அண்ணா! கொன்றேன் அப்பாபி இந்திரஜித்தை!- அண்ணா என்ன இது?
நமது ஜன்மத்துவேஷியின் தலையைப் பரிவுடன் பார்த்து, அதனைத்
தடவிக் கொடுக்கிறீர்களே!-
ஸ்ரீ. அப்பா! முன்பு நீஜெயம் பெற்றதற்காக என் ஆசியைப் பெறுவாய்!
[அவனைக்கட்டி உச்சி முகர்கிறார்.]
பிறகு நீ கேட்ட கேள்விக்கு பதிலைப் பெறுவாய், லக்ஷ்மணா, குலத்தால்
மட்டும் இவன் நமக்குப் பகைவனல்லாது, மனோவாக்கு காய மென்னும்
திரிகரணங்களால் நமதன்பனே இவனென்பதை நீ சீக்கிரம் அறிவாய்.
அனுமான் ஓடிவருகிறார்.
அனு. ஐயனே! அதோ தேவியார் தம்மை நாடி வருகிறார்கள்! தன் மகன்
மடிந்த செய்தியைக் கேட்ட ராவணன், அவர்களைச் சிறையினின்றும்
விடுத்துத் தம்மிடம் அனுப்பியிருக்கிறான் போலும்.
ஸ்ரீ. மாருதி, அப்பா அவசரப்படாதே. அப்படி யிருக்காதென்று எண்ணுகிறேன்.
உன் மனக்கலக்கம் இவ்வாறு நினைக்கச் செய்கிறது - உற்றுப்பார் யார்
வருவதென்று.
அனு. [உற்றுப் பார்த்து] ஐயனே! இதென்ன மாயமோ ஒன்றும் தெரிய வில்லை.
இவர்கள் சீதாதேவியல்ல! இப்பொழுது இவ்விடம் நாடி வரும் நங்கை நான்
முன் பின் பார்த்திரா உருவமாக் காணப்படுகிறது. இதோ நெருங்கி வந்து
விட்டார்கள் - யாராயிருக்கலாம்?
சுலோசனை வந்து ஸ்ரீராமர் பாதத்தில் விழுகிறாள்.
சு. ராகம் - கல்யாணி. தாளம் - ஆதி.
பல்லவி.
தசரதசுதா தயவு செய்குவீர். (த)
அனுபல்லவி.
விசனமுறுமா தெனக்குனையல்லால்
வேறுதுணையார் பாரிலினிமேல். (த)
சரணம்.
எனது மணவாளனது தலையை
இனிதுடனளித்திட வணங்கினேன்
புனித மதுவே புருடனுடனே
போகவாழ்வகன்று சாகத்துணிகுறேன். (த)
ஸ்ரீ. ராகம் - பைரவி.
தன்னையே துணையாய்க் கொண்டு தனித்தவாளகி வந்தென்
முன்னதாய்த் துணிந்து தோற்ற முனைந்தவள் நீ யாரம்மா
உன்னையே வாட்டி நிற்க உற்றதாம் பிழைகள் என்ன
என்னையே கோரிவந்ததென்ன நீ விளங்க சொல்லு.
சு. ஸ்ரீராம மூர்த்தி! அடியாள் சுலோசனை-லட்சுமணரால்
சற்று முன் கொல்லப்பட்ட இந்திரஜித்தின் மனைவி - தயா
பரா! கிருபாகரா! புண்ய மூர்த்தியாகிய தங்களுடைய
பராக்கிரமும் மகிமையுமறியாத என் மாமனார் துர்ப்போதனை
யால் மயங்கி, என் பதி இம் மஹாபாபியைக் கைவிட்டு
போனபின், இத்தௌர்ப்பாக்கியசாலி, இனி இவ்வுலகில்
உயிர் வைத்திருப்பது சரி யன்று. உத்தம பத்தினிக்கு இது
லக்ஷண மாகாது. நான் உடன்கட்டை யேற வேண்டுமாத
லால் அவரது உடலையும், அவர் சிரசையும் எனக்கருளுவது
டன், அடியாளும், என் நாயகருடன் நற்கதியடையும்படி
கிருபை புரியவேண்டுகிறேன்.
-------------------------
ஸ்ரீ. தம்பி லட்சுமணா, இந்த ஸ்திரீ சொன்னதைக் கேட்டாய் அல்லவா? இந்திரஜித்தின்
தலையை இவளுக்குக் கொடுக்கலாமா?
ல. அண்ணா! இவ்வாறு சொல்வதற்காக என்னை மன்னியும்.
ராகம் - தோடி. தாளம் - மிஸ்ரம்.
பல்லவி.
ஏனிந்த தயவு கொண்டீர்
ஸ்ரீராமசந்திரா நீர் (ஏ)
அனுபல்லவி.
தேனிறை மொழி புகன்று
சிரசைக் கவர வந்தாள் (ஏ)
சரணம்.
காலம் செய்த ராட்சசன் மனைவியாமிவள்
சந்தேகமேனோ அண்ணா தீனசரண்யா
காலமதில் நாமடைந்த கஷ்டம் கொஞ்சமோ வேண்டாம்
சந்தேகமேனோ அண்ணா (ஏ)
உமது மதி கலங்கியிருக்கிறதா என்ன? ராட்க்ஷசர்கள்
பெரிய மாயாவிகள். எவ்வளவோ கஷ்டப்பட்டு நான்
அவனைக் கொன்றிருக்க, அவனது தலையை மறுபடியும் இவ
ளிடம் கொடுத்தால், அதை உடலுடன் சேர்த்து மறுபடி
யும் அவனை உயிர்ப்பிப்பாளானால் நமது கதி என்னவாவது!
- வேண்டாம்!
ஸ்ரீ. வாயுகுமாரா, உன் அபிப்பிராய மென்ன?
அனு. ஒருகாலும் கொடுக்கவே கூடாது.
ஸ்ரீ. அங்கதா, நீ என்ன சொல்கிறாய்?
அங். ஐயனே, எனக்கும் அப்படியே தோன்றுகிறது.
ஸ்ரீ. விபீஷணா, உன் அபிப்பிராயம்?
வி. ரகுகுலதிலகமே! நீர் அறியாதது ஒன்று மில்லை; ஆயினும்-
விருத்தம்-சங்கராபரணம்.
சத்ருவா யிருந்திட்டாலும்
சமர்க்களத்திறப்பனாயின்
அத்தரைக் கணமேனும் தன்
அநுதாபம் காட்டவேண்டும்
மித்ரு பேதங் களில்லா
மேலவாதுணித்த சென்னிதன்
பத்தினிக் காத்தளிக்க
பரமனே நியாயம் தானே.
என் அபிப்பிராயம், இம்மாது கேட்கிறபடி கொடுக்கலா மென்பதேயாம்.
இந்திரஜித் சுபாவத்தில் கெட்டவனன்று, அவனது தகப்பனுடைய
துர்ப்போதனையினால் மதி மயங்கினவன். அன்றியும் எப்படிப்பட்ட
சத்ருவாயிருந்தாலும் இறந்தபின் அவனது தகனக்கிரியை நாம்
கிரமப்படி நடத்த வேண்டும்.
ஸ்ரீ. ஜாம்பவரே, உமது அபிப்பிராயம்?
ஜா. எனக்கும் விபீஷணர் கூறிய படியே தோன்றுகிறது.
ல. என்ன அண்ணா! இப்படி இவர்களை யெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்!
ஒருகாலும் தாம் அப்படிச் செய்யலாகாது!
ஸ்ரீ. வானர வீரர்களே, நீங்கள் ஒரு புறம் போயிருங்கள்.
(லட்சுமணர் சுலோசனா தவிர மற்றவர்கள் ஒரு புறமாய்ப் போகின்றனர்.)
(தனி) இப்பொழுது என் தம்பியாயிருக்கும் லட்சுமணன் பூர்வ ஜன்மத்தில்
ஆதிசேஷனா நிருந்தவன், இச் சமயம் அவனுடைய புத்ரியாயிருக்கும் இந்த
சுலோசனா யாரென்று அவனுக்குத் தெரியாது-இப்பொழுது என் தம்பிக்குப்
பூர்வ வாசனை கொடுத்து சற்று பாரக்கலாம்.
(லட்சுமணர் மார்பைத் தடவ)
ல. (சுலோசனையைப் பார்த்து) ஹா! கண்மணி! வத்ஸே! உனக்கா இக்கதி நேர்ந்த்து!
(ராமரை நோக்கி) ஸ்ரீராமா! என் புத்திரி விதவைநாக நான் கண்டு சகிக்க
முடியாது. உடனே அவள் புருஷனை எழுப்பித் தராவிடில் எனதுயிரைப்
போக்கிக் கொள்வேன். இது சத்தியம்.
ஸ்ரீ. அப்பா பொறு, பதராதே.
ல. நான் பொறுக்கமாட்டேன். என் புத்திரி விதவையாக நான் கண்டு சகிக்க
மாட்டேன். எழுப்பித் தருகிறீரா, மாட்டீரா? இல்லா விட்டால் என் உயிரை
இட்சணம் போக்கிக் கொள்வேன். (கத்தியை உருவுகிறார்)
ஸ்ரீ. (மறுபடி லட்சுமணர் மார்பைத் தடவிக் கொடுக்கிறார்) லட்சுமணா,
இப்பொழுது பார் இவள் யாரென்று.
ல. ஹா! இவள் யார்?-ராக்ஷஸி!
தில்லானா.
விரைவுடனேகுவாய் - வீண்பசப்பினால்
மயக்க வந்தன்னை (வி)
குறையுடற்கு வுயிர் கொடுக்க ராக்ஷச
குலம் வளர்க்க தலையெடுக்க யெண்ணினை
தசமுகர்க்கு யெமனெனத் திரியுமெமைத்
தந்திரமாய் வென்றிட நினைந்தனை. (வி)
இந்தச் சண்டாளனா இன்னும் உயிர் பெற்றெழவேண்டும்!
அந்த தசமுகனை ஒழித்து என் மதனியாரை நான் அழைத்
துவர எண்ணி இருக்கும் நேரம் நீ யாரடி, இங்கு வந்து
பசப்புவது? போ துஷ்டை! நில்லாதே இங்கு!
ஸ்ரீ. தம்பி லட்சுமணா, கோபத்தை அடக்கு; பெண்பால், அதிலும் மஹா பதிவிரதை!
இவள் இச்சைப்படி இவளது நாயகனது தலையை இவளிடம் கொடுத்து
இவள் உடன்கட்டையேறி நற்கதி யடையச் செய்வோம்.
ல. ஆம் அண்ணா, இவள் பதிவிரதை யென்பது நமக்கு எப் படித்தெரிவது?
ஸ்ரீ. காட்டுகிறேன்பார்- அம்மா, நீதான் இந்திஜித் மனைவி என்பது எங்களிக்கு
எப்படித் தெரிவது? இந்திரஜித்தின் சிரத்திற்குறியவள் நீ தான் என்று எப்படி
நாங்கள் அறிவது? நீ இந்திரஜித்தின் சிரத்திற்குரியவள் என்று எங்களுக்கு
மெய்ப்பிக்க வேண்டும் நீ.
சு. அப்படியே ஆகட்டும். என்பதியாகிய இந்திரஜித்தின் சொல் தவறாத சதி
நானேயாகில்-என் பர்த்தாவின் சிரசு என் முன் வரவேண்டும்.
(சிரம் அப்படியே வருகிறது-அதற்கு சுலோசனை நமஸ்கரிக்கிறாள்.)
ஸ்ரீ. லட்சுமாணா! இப்பொழுது என்ன சொல்லுகிறாய்?
ல. அண்ணா! இன்னும் எனக்கு சந்தேகமாயிருக்கிறது.
ஸ்ரீ. அம்மா, உன் சொற்படி நீ உத்தம பத்தினியாயின், இந்த சிரசு தன் வாய் திறந்து
கல கல வேன்று நகைக்கச் செய்.
சு. விருத்தம் - கேதாரம்.
பாரினிற் பெண்களுக்கு பர்த்தாவே தெய்வமல்லால்
ஆரிருந்தென்ன பின்னாலாவதொன்றுண்டோ இங்கே
கோரினோர் மதிக்க நானா கோதிலா சதியெ யானால்
தீரமாய் நகைக்க வேண்டும் தேவி என் முன்னே நாதா!
(சிரம் சிரிக்கிறது.)
ஸ்ரீ. அம்மா, உன்பர்த்தாவின் சிரத்தைக்கேள், நீ இப்பொழுது என்ன செய்ய
வேண்டு மென்று.
சு. நாதா, ஸ்ரீராமபிரான் கேள்விக்கு தாம் விடையளிக்க வேண்டுகிறேன்.
இ. (இந்திஜித்தின் சிரம் பேசுகிறது) ஸ்ரீராமா! இவள் தான் என் தர்ம பத்தினி!
பிறவியால் எனக்குண்டான ராட்சஷ சுபாவ மெல்லாம் இவள் சேர்க்கையால்
விட்டொழித்தேன். உமது பாதம் அடைந்த என் சிரத்தை இவளுக்கு நீர்
தானமாக அளித்திடும். இவள் என்னுடலுடன் உடன்கட்டை யேறி,
நாங்களிருவரும் உத்தம பதவியை யடைந்திட ஆசிர்வதியும்.
ஸ்ரீ. அம்மா, இந்த சிரம் இனி உன்னுடையதே. உடனே தீ வளர்த்த
ஆக்கினையிடுகிறேன். உனது நாதனுடைய உடலும் ரணகளத்திலிருந்து
கொண்டு வரப்படும். உன் நாதனது உடலையும் சிரத்தையும் சிதையில்
வைத்து, நீயும் அக்கினிப் பிரவேசமாவாய்!-உனக்கு என் சம்பூர்ண
ஆசீர்வாதத்தை அளித்தேன்!
(சுலோசனை தன் கணவன் சிரத்தை வாங்கிக் கொண்டு, ஸ்ரீராம லட்சுமணர்களை
வணங்கிப் போகிறாள்,)
காட்சி முடிகிறது.
ஐந்தாம் அங்கம் - ஆறாவது காட்சி.
இடம் - லங்கையில் ஓர் கானகம்.
காலம் - இரவு.
சுலோசனை சாஷ்டத்திலமைந்திருக்கிற இந்திரஜித்தின் உடலை மும் முறை வலம் வருகிறாள்.
சு. (பாடுகிறாள்)
ராகம் - குறிஞ்சி. தாளம் - ஆதி.
பல்லவி.
மணவாளா என்தாருயிரே-நீர்
மாண்டபின் நான் உயிர் வாழ்ந்திடுவேனோ. (மண)
அநுபல்லவி.
கணமேனுமினிப் பாரில் கழித்திடுவேனொ
காதலா உமைநான் பிரிவேனோ. (மண)
(சாஷ்டத்தில் ஏறுகிறாள். சுலோசனையும் இந்திரஜித்தும்
சூட்சும உடலில் தெய்வலோக விமானமேறி
வைகுண்டம் செல்கின்றனர். மேலிருந்து
மகாவிஷ்ணு ஆசிகூறி, தம்பாலழைக்கின்றார்.)
காட்சி முடிகிறது.
நாடகம் முற்றியது.
கருத்துகள்
கருத்துரையிடுக