வசந்தம்
கவிதைகள்
Backவசந்தம்
நட்சத்திரன் செவ்விந்தியன்
-------------------------------------------------------------
VASANTHAM '91
(A collection of Poems)
by NADCHATHTHIRAN CHEVVINTHIYAN
First Edition April 1994
Type Setting Shyamala Navaratnam
Design&Layout K. Navam
Cover Picture Kay Hassan
Copy Right Author
Price Cdn$ 2.00
Second Publication of
Nankavathu Parumanam
1565 Jane Street
P.O. Box 34515
Toronto, Ontario
Canada M9N 1RO
நான்காவது பரிமாணம் வெளியீடு - 2
-------------------------------------------------------------
இந்நூல்
வசந்தா அன்ராக்கும்
சின்ன நராக்கும்
அத்துடன்
செ. யோகராசாவுக்கும்
-------------------------------------------------------------
வசந்தம் '91
வெறுமைக்குத் திரும்புதல் 5
மீட்சி 6
நகரத் தனிமை 7
பிரிந்து போனவர்கள் 8
குறை மாதங்கள் 10
அமுங்கிப் போன மாலை 11
உயிர்த்தெழுதல் 12
இந்த வசந்தம் 14
கடக்கப்படாத எல்லை 15
பிரிவுத் துயர் 17
நகரம் 18
வேனிலிலிருந்து கூதல்வரை 19
மைம்மல் 20
மந்துபத்தின நாட்கள் 22
காடு 23
ஷெல் குத்துதல் 24
இரத்மலானை - ஜனவரி 26
கொக்கட்டிச்சோலை 27
எப்போதாவது ஒருநாள் 28
Nostalgia 31
வேட்டைக்காரன் 32
--------------------------------------------------------------------------
வெறுமைக்குத் திரும்புதல்
என் முன்னாலேயே
வழுவிப்போகும் நேரங்களைப் பற்றித்தான்
சித்திரை வைகாசி கெட்ட வெய்யிலைப்பற்றி
தவறவிட்ட சந்தர்ப்பங்களைப் பற்றி
தடுக்கமுடியாமல்
அவை சீறிக்கொண்டு உள்ளிடுகின்றன.
ஒன்றும் செய்யாமல்
காலம் தொடர்ந்து போவதாய் நான் கவலைப்படுகிறேன்.
புத்தகங்கள் கிடையாதநேரம்
அதிகமாகின்றன.
புறப்படுகிறபோது
ஏற்பாடுகள் முடிந்து வீதிக்கு இறங்குகிறபோது
இலையுதிர்ந்த நுணாவின் தனிமையிலிருந்து
கொஞ்சம் இலை துளிர்க்கிறது.
நாட்கள் இப்படியாகிவிட்டன. இனி
ஒரு கருச்சிவந்த நிலக்கரி ரயில்
அது தன்பாட்டுக்கு
தண்டவாளங்களையும் இழுத்துக் கொண்டு போகிறது.
ஒருமணி வெய்யில்
இழுத்திழுத்து அடிக்கப்படும் கடகடப்பு.
- 1991
----------------------------------------------------------------------
மீட்சி
இரவில் பெய்த மழைக்கு
காலையில் தாவாரத்தில் சிந்திக்கொண்டிருப்பதைப்போல
மெதுவான இடிமுழக்கங்களுடன்
கொஞ்சமாகவும் தூறிக்கொண்டிருப்பதைப்போல
ஆனால் இருள்கின்ற நேரத்தில்
நான் படுத்திருக்கிறேன்.
இரவில் தாங்கள் நனைந்ததற்காக
மழைக்குப் பிறகு மாலையில் காகங்கள் கரைகின்றன
இந்த நாள் எனக்கு நெருடுகிறது
எனது கிராமத்து ஊருக்குப் போகவும் முடியாது
இந்த நனையலில் தடம் பதிக்கவும் முடியாது.
ஒழுங்கைகளில்
எனது மழைக்கால நினைவுகள்
நீந்திக்கொண்டும் வதைபட்டுக்கொண்டும்
மணலில் சுடச்சுட நனைந்துகொண்டும்
நிறையத் துக்கங்களையும்
நனைந்து வழிந்து சந்தோஷிக்க முடிகிறது.
- 1991
----------------------------------------------------------
நகரத்தனிமை
ஊரில் இல்லாத
கொடிய தனிமையினை
இப்போது நான் உணருகிறேன்
நண்பர்களுக்காக அல்லது ஒருவருக்காகவேனும்
அவர்களைக் காணுவேன் என்று
பயணம் செய்தேன். மாலை வெய்யிலில் நடந்து திரிந்தேன்.
ஒருவரையும் காணாது
அந்த வெய்யிலும் போனபிறகு
தனித்த துயரத்தோடு
இன்றைய கொத்துரொட்டியையும் பிளேதீயையும் விழுங்கினேன்.
காலில் வியர்த்தது
ரௌசரோடு நடக்கக் கஷ்டமாய் இருந்தது
கடற்கரை ஒழுங்கைக்குள் தள்ளாடித் தள்ளாடி
அறைக்குள் போனேன்
-1991
-----------------------------------------------------------------
பிரிந்து போனவர்கள்
1
நமக்கான காலம்
போய்விட்டதைப்போலுள்ளது
யுத்தம் வந்து
ஊர்களுக்குள் நதிகளையும் சிற்றாறுகளையும் புகவிட்டு
வாரியடித்துக்கொண்டு போயிருக்கிறது.
2
போன ஆண்டிலும் முன்பனிக்காலத்தில்
யுத்தம் வந்து போனது
கடந்த காலத்திற்காக
பத்தாம் வகுப்பு பள்ளிக்கூடத்திற்காக
அறுவடைசெய்த
வயல்வெளிகளுக்காக
அது ஏங்கவைக்கவில்லை.
3
நான்
இனி நெடுகலும் தனித்துத்தான் போனேன்
வயல்காட்டு எல்லைப் பூவரச மரங்களுக்கு
தெரியும்
நிலம் இருண்ட பிறகு
கருங்கல் துருத்தும் தார் றோட்டில்
உழவு முடிந்த கடா மாடுகளைச்
சாய்த்துக் கொண்டு போனான் ஒருதன்
தனித்த பட்டமரத்தில்
அது மேலும் வாழ விரும்பி
இறப்புக்காக முதிய அனுபவங்களுடன் நின்ற
பட்ட மரத்தில்
கொட்டுக்காகம் உச்சிக் கிளையில் வந்திருந்தது
ஒன்றாய்ச் சேர்ந்த துயரங்களுடன்
இயக்கத்துக்குப் போனவர்களில்
ஆனையிறவிலும் மணலாற்றிலும் செத்துப்போக
நான் மட்டும்
ஒரு வலிய சாவுக்காகக் காத்திருக்கிறேன்.
-1991.
---------------------------------------------------------------------
குறை மாதங்கள்
புழுதி படர்ந்த அலைச்சலுக்குப் பிறகு
மெல்லிரவில் வீட்டுக்கு வந்தேன்
கிளம்பிப் போனபோது
எங்கே போகிற குழப்பமும் வீதியில் காற்றுக்கெதிரான ஓட்டமும்
ஊத்தைச் சாரமும் இருந்தது
காற்றும் தள்ளியது
சேட்டோடு அலாதுபட்டு
புதைந்து புதைந்து உழக்கினாலும் காற்று சரித்தது.
காற்றில் பழுதான வீதி
எவ்வளவு தூரம் சைக்கிள் ஓடுவது
ஓடிக்கொண்டிருந்தாலும் அது கிடைக்குமா?
ஓடிக்கொண்டிருப்பதில் நிம்மதியா
ஏதோ இக்குட்டையில் கிடந்து கிடந்து ஊறுகிறேன்.
சுழன்று அடித்த காற்று
பெரும் புழுதியை
கண்ணுள் சுழற்றிச் சுழற்றி அடித்தது
நம்பிக்கையின்றி நெடுந்தூரம் சைக்கிள் உழக்கினேன்
எத்தனை நாட்களும் பகலும் மாலையும்
இவ்விடத்துக்கு உழக்கி உழக்கினாலும் அவனில்லை.
இங்கால்
கடல் அரித்து அரித்து ஏறுகிறது
மண்ணும் கல்லும் சொரிய
பாதங்களையும் நனைக்கும் நாள் நெருங்குகிறது
சுருங்கின இரவில் தினமும் நித்திரை கொள்கிறேன்.
சொல்கிறதைச் செய்கிற
பரா ஆமிக்காரர்களைப் போல இப்போது மௌனமாகிவிட்டேன்.
-1991
-------------------------------------------------------
அமுங்கின மாலை
மாலை வெய்யில் மங்கிக்கொண்டு போகிறது
என்னை இனிய சோகம் தழுவுகிறது
மனிதர்களைத் தொலைத்த வீதிகளில்
இன்றுதான் அறிமுகமான
பெண்களின் பின்னால் சைக்கிளில் செல்கிறேன்
புதர்கள் கப்பிய ஒற்றையடிப்பாதை
முன்னே சைக்கிள் சென்ற தடம் இருக்கிறது
பல ஆண்டுகளுக்கு முன்
நான் தொலைத்த நம்பிக்கையும் முனைப்பும்
மன அமுங்கலும் உருகலும்
இன்று பெற்றேன்
மனிதர்களை இழந்த மௌனமான
சாலையில்
ரயர், ஊரிக்கல்லில் எழுப்பும் ஒலி கேட்கிறது.
-1991
------------------------------------------------------------
உயிர்த்தெழுதல்
இங்கே மீண்டும் புத்துயிர்த்தேன்
இயேசு பிரானைப்போல
சிலுவையில்
கைவிரல்கள் தாங்க ஆணியறைந்து
ரத்தம் கசிந்து கிழிந்து
இந்தக் காலத்தில் இறந்திருக்கத் தேவையில்லை.
நான் இறந்திருந்த நாட்களில்
மப்புக்கொட்டி துக்கும் சொரிந்தது எனக்காக
மழை தகரத்தில் அடித்துக்கொண்டு பெய்து
என் அறையில் சில புத்தகங்களையும் நனைத்து
நிலம் முழுவதும் தண்ணி கசிந்தும் ஓடியது.
சோவியத் ருஷ்ய
நாவல்களைப் படித்துக் கொண்டிருப்பேன்
மரணத்துக்குப் போகும்வழியில்
நித்திரை கொள்ள வைக்கும்
நேரகாலம்
சும்மா போனது துளிர்த்து வருத்தும்
இரவுகளில் வாய்திறந்து ஒரு வார்த்தையேனும் கூடபேச
சோம்பலுற்றுக் கிடந்தேன்
எல்லாம் ஆகிவிட்டது இனி என்ன
என்வாய் முணுமுணுக்கிறது.
எழுதிக்கொண்டிருக்கிற நாவல்
இந்நாட்களில் தொடர்ந்து போகாது
நாவலில்
19ம் நூற்றாண்டு வீதியிலிருந்து
ட்ராம் வண்டிகள் ஓடின சத்தம்
பனிக்கட்டிகள் நொருங்குபடும் ஆறுகள்
இந்த மாதிரியான நதி
வற்றி வரண்டுவிட்டது.
ஒற்றைகளைப் புரட்டுவேன்
இரண்டுவரி எழுதுவேன்
போர்க்காலத்தில் பனிக்காலமும் வந்துவிட்டது
முனைப்பும்
உயிர்கொண்ட குதிரைச் சவாரியும்
எங்கே போயின
இன்று மீண்டும் புத்துயிர்த்தேன்
கொஞ்ச நேரம்
பின்னேரம் 2 ஆட்டம் Chess விளையாடினேன்
தார்றோட்டும் தெரியாமல்
இருண்ட பிறகு
இயக்கத்துக்குப் போன நண்பர்களைத் தெரிந்து கொண்டு
திரும்பினேன்.
-1991
---------------------------------------------------------------
இந்த வசந்தம்
அன்றைக்கு மாலை
நானும் ரூபனும் கடலுக்குச் சென்றோம்
அவன் வீடு ப்க்கும்
குறுக்கு வழியில் அவனைச் சந்தித்தேன்
யுத்தம் நடந்துகொண்டிருக்கிற காலம்
வீதியை விட்டு மணலுக்குள் புகுந்து
எருக்கலையருகில்
கடலைப்பார்த்திருந்தோம்
கனத்த உப்பங்காற்று வீசுகிறது
என் முகமெல்லாம்
நெஞ்சுரப்பான மசமசப்பூட்டுகிறது.
சோதினை நடக்கவில்லை
ஒரு பருவகாலம் முழுவதுமே Mood குழம்பிக்கொண்டிருக்கிறது
கன நண்பர்கள் இயக்கத்துக்குப் போய்விட்டார்கள்
அவர்களின் போகுதலின் முன்
இந்தக் கடற்கரையில் இப்போ நாங்கள் முகருகின்ற சோகத்தை
முகர்ந்துகொண்டுதான் போனார்கள்
பரந்த கடலில் நமது சோகம் ஒரு அலையேனும் ஆகாவிட்டாலும்
இப்படிச் சொல்லச் சிரமமாயிருந்தாலும்
'யுத்தத்தில் நாங்கள் வெல்லத்தானே வேணும்'
மனச்சாட்சி உறுத்துகிறது
அலைமுறியும் கடற்காற்றில்
பருத்த மணல்கள் கால்களில் விழுகிறது.
- 1991
----------------------------------------------------------
கடக்கப்படாத எல்லை
நம்பிக்கை குலைகிறது
ஒரு காலத்தில் அப்படியொரு காட்டுப்பாதை
இருதது எனச் சொல்கிறார்கள்
ஒரு மாதத்திற்கு முன்னால் கடந்தவர்களும் இருக்கிறார்கள்
செக்கரில். தோல்வியில்
வீட்டு நினைவுகள் துழாவுகின்றன
எல்லாவற்றையும் எழுத முடிகிறதா என்ன
இன்றைய காலை விழிப்பில்
அதிகமாய் அமுங்கிப் போனேன்
இருபது நாட்களாக இங்கு தங்கியிருந்தேன்
ஒரு ஒற்றையடிப் பாதையைத் தானும்
கண்டடையவில்லை
ஊருக்குத் திரும்பி என்னத்தைச் சொல்வேன்
அங்கே எனக்கு
கல்லறை கட்டி எழுதியும் விட்டிருப்பார்கள்
இந்நாளில் அதில் பட்டி மரங்களும் மண்டி
பாசி பிடித்தும்
எழுத்துக்கள் அழிந்து சிதிலமடைந்தும்...
"காட்டு வழியாய் எல்லையைக் கடந்தவன்;
இந்நேரம் தூரதேசத்தில்
படித்துக் கொண்டிருப்பான்;
கெட்டிக்காரன்; இனி தேசத்துரோகி"
இன்னமும்
ஆபத்தான எல்லையைப் பற்றியே
இரவில் கவலைப்படுகிறேன்
மிதிவெடிகளுக்கும்
ஆட்காட்டிக் குருவிகளின் சிடுசிடுப்புக்களுக்காகவும்
தேசத்துரோகிகளுக்கு விழும் அடிகளுக்காகவும்
என் ஜீவனே இரவில் பயப்படுகிறது
பகலில்,
ஒரு பீடி இழுக்கிறதைப் போல
எல்லாம் செய்யலாம் போலுள்ளது
எல்லையோரக் காடுகளில்
கரிகொண்டு,
ப்ல்துலக்கி நாள் கழிகிறது
சாவும் போரும் நகர்கிறது
- 1991
-----------------------------------------------------------
பிரிவுத்துயர்
கொள்ளப்படாமலே போன
நித்திரைத் துயருடன் இப்போது படுத்திருக்கிறேன்
தூரதேசப் பயணங்களின் பின்னால்
நான் பிரிந்துபோவது உறுதியாகிவிட்டது
வேற்று வீட்டுத் தலையணைக்குப் பிறகு
வீணி வடித்துச் சக்குப் பிடித்துக் காய்ந்த மணத்திலும்
க்சங்கி ஊத்தையாகிப் போன பெற்சீற்றிலும்
பிரிவுத் துயரில்
கொஞ்சிக் கரைந்து கொண்டிருக்கிறேன்
இனியான, நித்திரைக்குப்பின் முழிப்பில்
ஒரு சரிக்கட்டின
காற்று வீசாத காகம் கரையாத சோகம் அப்பியறைந்த அமைதியில்
சாரத்தோடும்,
நிம்மதியோடும்
புறப்பட்டுவிடலாம்.
- 1991
--------------------------------------------------------------------
நகரம்
நகருக்குள் எனக்குப் பீலிசம் வந்தது
கிஞ்சித்தும் பச்சை மரங்கள் இல்லாத
பாதையோரங்களில்
சிவப்பு நீலம் மஞ்சள் கனலும் கடைகளில்
கவிதை நசிந்து உருகி ஆவியாகிப் போயிற்று
அது நடந்து கனகாலம்
எஞ்சியுள்ளவைகள்
மழைநாட்களில் வழிந்தோடும் குறுக்கொழுங்கைகள்.
கடல் பின்னுக்கு இருக்கிறது
(ஒருநாளும் வரக் கிடைக்கவில்லை)
- 1991
--------------------------------------------------------
வேனிலிலிருந்து கூதல்வரை
பருவகாலங்கள்
ஒழுங்காய் வருதல்கண்டு
இப்போ நினைவுகொள்ள முடிவதில்லை
சந்த ஏற்றத்துடன்
முன்னைய பருவகாலங்கள்
ஏக்கம் தருகின்றன
ஓராண்டுக்கு முன்
அதற்கும் ஓராண்டுக்கு முன்
ஏப்பிரில் காலத்து வெய்யில்
கருகத்தொடங்கிய புல்
இறங்கிச் சென்றது கிணற்று நீர்மட்டம்
இன்றுடன்
பன்னிரண்டு மாதமும் அதற்குக் கூடவும்
வீணாகிப் போய்விட்டன
கடும் வெய்யிலில் காற்று அசையவில்லை
அங்கிருக்கப் போவது இனிய தனிமை அல்ல.
- 1991
----------------------------------------------------------------
மைம்மல்
ரியூசன் முடிந்தது
கொஞ்ச நேரத்துக்குக் கதைத்தோம்
Exam - அது நடக்குமா இல்லையா
கோரமாய் அனல் தெறித்தன மதில்கள்
எதிர்நின்று தொடராகக் கதைக்கிறோம்
முகங்களை அடுத்து நேராய்
மைம்மல் வீதி
நிறம் என்னால் சொல்ல முடியவில்லை
பிரச்சினைகள் பலதும் கலந்த மைம்மல்
எல்லாவற்றையும்
விலக்கிக்கொண்டு முன்செல்லலாம் என நினைத்தோம்
வியர்வை உழல்கிற முகங்களில் மனிதர்கள்
ஏன் கவலை கொண்டார்கள் என நினைத்தோம்
கண் உட்சென்ற மனிதர்களும்
சொக்குக் குழிந்த மனிதர்களும்
குத்துமயிர்கள் அருவருக்கும் தாடைகளும்
இப்போது எல்லாம் புரிகிறது
பிரச்சினைகளில் மைம்மல் நிம்மதி தருகிறது
இனி எங்கள் முகங்களிலும் சொரியப் போகும் வியர்வை
மைம்மல் காற்றும் அமைதியும் குளிரச் செய்யும்
மைம்மல் ஏதாவது சொல்கிறது
நிம்மதி, திருப்தி, ஓடுதல், நீந்துதல்
கொஞ்ச நேரத்துக்குப் பிறகு
இருள் சங்கமம் ஆகிறது
- 1991
----------------------------------------------------------------------
மந்து பத்தின நாட்கள்
இந்த வீதியால் சென்றால்
மந்துக்காடுகளுக்குச் செல்லலாம்
திரும்பிப்போனால்
திரும்பி ஊருக்குப் போகிறதைப் பற்றி யோசிக்கவே முடியாது.
இன்றைய சூரியனும் அஸ்தமிக்கிறது
செம்மஞ்சள் சூரியன்
கல் மிதக்கும் தார் வீதியின் பின்
அடியில் மறைகிறது
நேற்று அது
பட்ட மரங்களும்
தூரத்தில் கருநீலமும் அடித்த காட்டில் மறைந்தது
காலையிலிருந்து கழுவாத என்முகத்தில்
அதன் செம்மை கவிந்தது
வீதியால்
பள்ளமான ஒழுங்கைக்குள் இறங்கிப்போய்
கொஞ்ச நேரம் விளக்கில் இருப்பேன்
பிறகு சொற்பமாகச் சாப்பிட்டிவிடுப் படுப்பேன்
- 1991
--------------------------------------------------------------------------
காடு
நடுக்காட்டுக் கோவிலிலிருந்து
பறை அழைத்தது
ஆடுகுத்துகிற மீசைக்காரக் கறுவல்
தன்முகம் சோகத்தோடு நீண்டு அடிக்கிறான்
பறை ஓய்வுக்குப் பின்னாலும்
நெடுநேரம் அவன் முகத்திலிருந்து
கடந்தகாலம் துயரத்துடன் இசைந்தது
இனி அனைத்தையும் கழுவிக் கொண்டுபோக
சத்தமில்லாத மழை
நீண்ட நேரம் அமர்ந்தமர்ந்து தூறியது
மருதமரங்கள், காயா, வஞ்சூரன், பனிச்சமரங்கள், கொய்யா
இவற்றில் வெண்மை படிந்தது
பழங்காலக் காவில் மணியும்
சனங்களுக்காகவும் கனகாலம் இருந்த தனிமைக்காகவும்
சிணுங்கியது
தோளிலிருந்து பறையை இறக்கி
கொஞ்சம் புக்கைக்காக பறையன் இருந்துவிட்டு
பறையை எடுத்துக்கொண்டு குனிந்து போனான்
கிறவல் பாதையில்
மண்ணில் புதைந்து வந்தேன் நான்
இக்கங்குல்காலத்தில்
ஈனஸ்வரத்தில் பூனை அழுகிறமாதிரி
மயில்கள் அகவுகின்றன.
- 1991
----------------------------------------------------------------------
ஷெல் குத்துதல்
இரவில் தானே எல்லாம் களைகட்டுகிறது
இன்று பகலில்
ஷெல் பட்டிறந்த குடும்பத்தை
சவப் பெட்டிகளில் காவிச்சென்றோம்
எனக்கு அழுகை வரவில்லை
இரவில் தானே எல்லாம் களைகட்டுகிறது
மேசையில் இருந்தால் ஷெல் கூவும் பயம்
ஆண்டவரே!
இன்றுதான் உம்மை வேண்டுகிறேன்
என்று தோப்புக்கரணம் போட்டேன்
பாயில் கிடந்தேன். நித்திரை வரவில்லை.
எல்லா
இராக்கால நேரமும்
எழும்பி எழும்பி
ஆண்டவரே என்று தோப்புக்கரணம் போட்டேன்.
வயல்வெளி முருகன் கோயிலுக்கு
50 சதம் நினைத்தேன்
போர்வையைப் போர்த்திக்கொண்டு
போர்வை இழுபட இழுபட
பயத்தோடு திரிந்தேன்
முற்றத்தில் வெகுநேரம்
ஒரு ஷெல் குத்தும் சத்தத்தை எதிர்பார்த்துக்கொண்டு
அலைந்தேன்
சிதறிப்போன அந்த உடல்கள் வந்து போகின்றன
மாலை முகம் கழுவும் போது
சவங்களின் விதைகளும் யோனிமடல்களும்
நள்ளிரவில் சவங்கள் என்முன்
எழுந்து நின்றன
கால்கள் இல்லாது குறியில் தாங்கி நடந்தன
தன் துயரத்தையும் வேதனையையும்
வாய்திறந்து காட்டியது
ரத்தத்தைப் பற்றி நீ கனவு காண்கிறாய் என்றது
பகலுக்கு என்ன தெரியும்.
- 1991
---------------------------------------------------------------
இரத்மலானை - ஜனவரி
வழி தவறிப்போன
ஆளைத் தவறவிட்ட
அலைச்சலோடும் வெறுப்போடும் வந்தேன்
சதுக்கம் மாறியும்
தண்டவாளத்திலும் கால்களை வைப்பதில் தடுமாறினேன்
தூங்குகிற கையிலிருக்கிற
ஒரு துண்டு பாணுக்காக
இரவில்
சிங்கள வீட்டுவாசலில் நாய்
(ஒருபோதும் குலைக்காத -எலும்பு தெரிகிற)
பார்த்துவிட்டது
மற்ற கறுப்பு நாயை
பையைக் கிட்டவந்து முகர்ந்துவிட அனுமதித்தது
ஒரு துண்டு எறிந்தேன்
பாணை அது மணந்ததை
என்னைப் பார்ப்பதை
கொஞ்ச நேரம் பார்த்தேன்.
- 1992
------------------------------------------------------------
கொக்கட்டிச் சோலை 166+
இன்றைய தலைப்புச் செய்தி
166+ தமிழர் கொக்கட்டிச் சோலையில்
அகோரக் கொலை
என்னை ஒன்றுமே செய்யவில்லை.
நாளைக்கும் பரீட்சை நடக்கும்
இன்றிரவுக்கு நான் படிப்பேன்
எத்தனை மோசமான காரியம் நடந்து விட்டது
மனம் விக்கிக் கரைந்திருக்க வேண்டும்
அந்த நேரம் எந்தப் பின் கதவைப் பற்றிச்
சிந்தித்திருப்பீர்கள்...
உங்கள் வீட்டில் இப்படி நடந்தாலும்
வெய்யிலில் நிழலில் நின்றாலும்
அனல் வீசும் உங்கள் தெருவில்
நாய்ப்பீ கரைந்து ஓடும் மழை நாளில்
உங்கள் தெருவில் இப்படி நடந்தால்
எந்தப் பின் கதவு திறந்திருக்கிறது?
அந்தப் பெரிய ஆண்களும்
சிரிக்கிறதைப் போல விக்கி விக்கி அழுதார்கள்...
மார்பு மயிரிலும் கள்ளு மண்டி வெண் கறுப்பு மீசையிலும்
கண்ணீர் படிய அழுதார்கள்...
- 1992
------------------------------------------------------------
எப்போதாவது ஒருநாள்
1
அறையில்
நான் மட்டும் தனித்து
மைம்மலைக் கலைத்து
லைற் போட்டிருக்கிற நாட்களில்
காட்டு ஊரின் வீதிகளில் நடக்கிறேன்
கல்லொழுங்கை, மதகுகள்
அலம்பல், வெற்று மாட்டுவண்டில்கள்
ஆட்டிக்கொண்டு போகும்
சிமியா
தார் றோட்டிலிருந்து இறங்கிவந்து
கொஞ்சம் கொஞ்சமாக குரங்குகளைப் பார்த்துக் கடத்தல்
பிஞ்சில் சப்பிக் கெடுத்த கொய்யாமரங்கள்
உழுதுபோட்டிருக்கிற வயல் -
அதற்கூடாக ஒற்றையடிப்பாதை வளைந்து போகும்
வீதியோரத்தில் பட்ட தென்னம் வட்டுக்கள்
வயல்பாலத்தில் வளர்ந்திருகிற அலரி. பக்கத்தில்
மணல் பாதை புதைந்து ஓங்குகிறது
கார்காலத்தில் ஆறு ஓடும்
கிளுவையும் ஈச்சையும்தான்
எனக்குப் பெயர் தெரிந்த மரங்கள்
2
நடந்து வருகிற கிழவன்
'கொப்பவைப் போல'
'கனகாலத்துக்குப் பிறகு'
சொல்லிக்கொண்டு போகிறான்
பாதையை மறித்துக்கொண்டு நிற்கும்
ஒரு ஊர்மாடு
உதிரி உதிரியாய்
பெருமணல் முற்றத்தில் வீடுகள்
3
இங்கிருந்து நினைத்துக்கொண்டு
நான்போக
அங்கிருந்த எல்லா சனங்களும்
செத்தோ காணமலோ போயிருக்கிறார்கள்
மணல் கொதிக்கும் நேரங்களிலும்
சில செக்கலிலும்
முன்னொரு காலத்தில் நான் அங்கிருந்தபோது
இப்படியிருக்கும்
கழட்டிச் சரித்து வைத்திருந்த நுகத்தடி
ஒரு பட்டிமாட்டில்
பால் எடுக்க கன்றைத் தனியே கட்டியுள்ளனர்.
வாஞ்சையோடு பார்க்கிறது பசு
செம்பு தனித்துக் கிடக்கிறது
பனையேறுகிற நேரத்தில் இன்னும் அவனைக்
காணவில்லை
முட்டி கொள்ளாது வெடிக்காதா
என்னைச் சந்தோசப்படுத்த
யாரும் ஒழித்த மாதிரி தெரியவில்லை
செத்தோ காணாமலோ போயிருக்கிறார்கள்
4
அழக்கூட முடியாமல் நான் நடக்கிறேன்
- 1992
------------------------------------------------------------
Nostalgia
ஒரு மாரிப்பனிக்கால
விடியலில் நான் எழும்புகிறேன்
அப்படியொரு, யாழ்ப்பாணத்தில் படுத்த நினைவு
முருங்கைமர இலைகளும் பூக்களும்
கிளைகளுக்குத் தாவுகிற அணில்களும்
புல் நுனிகளில் பனித்துளி
நான் இரைச்சல் சத்தம்வர புல்லில் சலம் அடித்தேன்
ச்சா ச்சா ச்தோ
அது என்ன காலமப்பா
வீடுமுழுக்க பூவரசமரம் நிற்கிறது
எங்கள் வீட்டுப் பின்பக்கத்துக் குளம்
இப்போது அது ஒரு நதி
செத்துப்போன அப்பா. வெளிநாடுகளில் இருக்கிற மாமாக்கள்
எல்லாம் நதியில் ஒருக்கா படகோட்டிவிட்டு
வந்து இறங்குகிறார்கள்
நதியோரம் நமது வீடு
படகுகூட ஒரு பூவரசில் கட்டி வருகிறார்கள்
வெய்யில் ஏறுகிறது; அவர்கள் தங்களுக்குள்
கனக்கக் கதைத்து கள்ளுக் குடித்தார்கள்
பறந்துவிட்ட வசந்த காலங்கள்
நிலாமுன்றில் கால்கழுவி
ஒழுங்கையால் போன சைக்கிளையும் மனிதனையும் பார்த்து
பனங்காய் விழுகிற சத்தம் கேட்டு
துயிலுக்குப் போனோம்
- 1993
------------------------------------------------------------
வேட்டைக்காரன்
நகர கட்டட கொத்தளங்களுக்குள்ளும்
இரவில் நான் கண்டேன்
வேட்டைக்காரனின் பட்டி மூன்று நட்சத்திரங்கள்
நாங்கள் வானத்தைப் பார்த்து
வெள்ளிகளை அனுபவித்து எவ்வளவு காலம்
நான் எங்கள் வீட்டில் நிற்கிறேன்
இப்போது எனக்கு அது ஒரு கோட்டை
அமாவாசை அண்டிவரும் இரவில்
வேலிகளையும் மதில்களையும் வானம் வளைத்துத் தொடும்
இராச்சாப்பாட்டுக்குப் பிறகு
வானத்தைப் பார்த்து உலாவுவேன்
அன்ரி சொல்லுவா
அதிக நட்சத்திரங்களைக் காண்கிற நாட்களில்
கனவில் இனிய நண்பர்கள் பலர் வருவர்
எரிவெள்ளி விழும் வாழைக்குள் தங்கம் விளையும்
வைகறையில் நாங்கள் எழும்பி
முகம் கழுவ முத்தத்துக்கு இறங்க
துருவக் கரடியும் அருந்ததியும்
நித்திரை அசதி தீர்க்கும்
எல்லாம் காலம்தானே
அங்கலாய்த்து எழுதவைக்கிறது இங்கு
- 1993
------------------------------------------------------------
நட்சத்திரன் செவ்விந்தியன் என்ற புனைபெயரில் 'சரிநிகர்' பத்திரிகையூடாகத் தமிழிலக்கியத்துக்குள் புதுக்காற்றாக வந்திருப்பவர். அருணோதயன். வயது 20. இப்போதுதான் கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர வகுப்பில் இருப்பவர்.
90களின் ஈழக்கவிதைக்கு வளம் சேர்க்கும் நட்சத்திரனின் கவிதைகளில் உணர்வின் படிமங்களும் சிந்தனையின் படிமங்களும் யுத்தகால வாழ்வின் யதார்த்தத்தோடு பின்னிப் பிணைந்துள்ளன. பல கவிதைகள், புகழ்பெற்ற ஒல்லாந்து Still Life ஓவியங்கள் போல உறைந்துபோன வாழ்க்கைக் கோலங்களைச் சித்திரிக்கின்றன.
எல்லோருக்கும் தெரிந்த நாளாந்தத் துண்டு துண்டு வாழ்க்கை அனுபவங்களையும் நிகழ்ச்சிகளையும் கவிஞர் கோர்க்கிறபோது கிடைக்கிற அனுபவம் வித்தியாசமானது. தனிமை, துயர், இழப்பு, அலுப்பு, சலிப்பு, கடந்த காலம் எல்லாம் இயற்கையின் பின்னணியில் வரையப்படுகிறது.
ஜூன் மாதம் 1990 இற்குப் பின்னான இரண்டாவது ஈழப்போரின் விளைவுகளின் இன்னொரு வகையான கவிதைச் சித்திரிப்பு இது.
- வெளியீட்டாளர்.
------------------------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக