இன்னொன்றைப் பற்றி
கவிதைகள்
Backஇன்னொன்றைப் பற்றி
சி. சிவசேகரம்
தேசிய கலை இலக்கியப் பேரவை
------------------------------------------------------------------------------
பதிப்புரை
தேசியகலை இலக்கியப் பேரவையால் இதுவரையில் 28 கவிதை நூல்கள் வெளியிட்டுள்ளோம். இவற்றில் கவிஞர் சி.சிவசேகரத்தின் கவிதை நூல்கள் “செப்பனிடப்பட்ட படிமங்கள்”, "தேவி எழுந்தாள்", “ஏகலைவ பூமி”, “நதிக்கரை மூங்கில்”, “வடலி” ஆகிய ஐந்தாகும். இக்கவிதை நூல் அவரது ஆறாவது கவிதை நூலாகும்.
கவிஞர் சி.சிவசேகரத்தின் கவிதைகள் ஈழத் தமிழர் சமூகத்தில் மட்டுமன்றி தமிழிலக்கியப் பரப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பில் இனம், மதம், பிரதேசம், பால் எல்லைக்குள் உட்பட்டும் அவ்வெல்லைகளைத் தாண்டியும் வர்க்க ஒளியில் உண்மையைத் தேடும் ஆற்றல் பெற்ற இவரது கவிதைகள் சமகாலத் தமிழிலக்கியவுலகில் சமூக அசைவுக்கு உந்துவிசை கொடுப்பனவாக அமைகின்றன.
கவிதைகளின் உள்ளடக்கத்தில் மட்டுமன்றி வடிவ மாற்றங்களிலும் புதிய பரிமாணங்களைத் தொடுவதனை இவரது கவிதைகளைத் தொடர்ந்து படிப்போர் உணர முடியும். கருத்து நுணுக்கங்களினு}டாக கவித்துவச் சிறப்பை வாசகர்களுடன் பரிமாறும் ஆற்றலை இவரது கவிதைகளில் நாம் கண்டு தேறலாம்.
எமது பேரவையூடாக இவரது நூல்களைத் தொடர்ந்து வெளியிடுவதைப் பெரும் பணியாகவே கருதுகின்றோம்.
கணனி வடிவமைத்த சோபனா, சிந்தியா ஆகியோருக்கும் இந்நூலை அச்சிட்டு வழங்கிய கௌரி அச்சகத்தினருக்கும் திரு.எஸ்.இராஜரட்ணம் அவர்களுக்கும் எமது நன்றிகள்.
என்றும் போல இப்போதும் விமர்சனங்களை மனமார வரவேற்கிறோம்.
தேசியகலை இலக்கியப் பேரவை
இல. 44, 3-ம் மாடி
கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத்தொகுதி
கொழும்பு - 11
தொலைபேசி : 335844.
---------------------------------------------------------------------
இன்னொன்றைப் பற்றி
இத் தொகுதியில் வடலிக்குப் பின்பு, இவ்வாண்டின் முற்பகுதிவரை எழுதிய கவிதைகளிற் பெரும்பாலானவை உள்ளன. இவற்றுட் சிலவற்றை விளங்கிக் கொள்வதற்கு உலக நிகழ்வுகள் பற்றிய அறிவு தேவை. எனினும் எல்லா விடயங்கள் பற்றியும் குறிப்புக்கள் தருவது எவ்வளவு பயனுள்ளது என்று தெரியவில்லை. சில கவிதைகள் எந் நிகழ்வுகள் பற்றியன என்றும் எந்த முக்கிய நிகழ்வுகளைக் குறிப்பிடுகின்றன என்றும் இம் முன்னுரையிலேயே குறிப்பிடுவது போதுமென்று நினைக்கிறேன்.
முதலாவதாக உள்ள “தொலைவும் ரசிப்பும்” புதிய மலையகம் சஞ்சிகைக்காக எழுதப்பட்டது. இறுதியாக உள்ள “வாகனங்கள்: ஒரு தீக் கனவு” என்பதும் அதே சஞ்சிகையில் இனி வரவுள்ள ஒரு இதழுக்கானது.
“சட்டமும் சமுதாயமும்” நுகேகொட பகுதியில் சென்ற ஆண்டு நிகழ்ந்த ஒரு விபத்தின் பின்பு நேர்ந்த வன்முறை பற்றியது. “மக்கள் உண்மையிலேயே சட்டத்தைத் தம் கையில் எடுத்துக் கொள்வார்களேயானால் எவ்வளவு நன்றாயிருக்கும்;” என்பது சட்டத்தை மக்கள் கையில் எடுப்பது என்பதை ஒருவர் எவ்வாறு விளங்கிக் கொள்கிறார் என்றதிலேயே தங்கியுள்ளது. “மாவனல்லையில் ஒரு உரையாடல்” மூன்றாண்டுகள் முன்னம் மாவனல்லையில் முஸ்லிம்கட்கு எதிராக நடந்த வன்முறை பற்றியது. அதிலும் அரசாங்கத்தின் அசமந்தமான போக்கே கவனிப்பிற்குள்ளாகிறது. “வெலிக்கடைக்குப் பின் 18ம் ஆண்டு” பிந்துனுவௌவில் இரண்டு ஆண்டுகட்கு முன்னம் ‘பயங்கரவாத சந்தேக நபர்கள்’ படுகொலை செய்யப்பட்டது பற்றியது. பத்திரிகையாளர் நிமலராஜனின் கொலையும் அக் கால கட்டத்திலேயே நடந்தது. இவையும் குற்றச்செயல்களும் அரசாங்கங்களும் பற்றிய கேள்விகளையே எழுப்புவன. இந் நான்கும் ‘புதிய பூமி’யில் வெளியானவை.
“கடத்தல் பற்றிய ஒரு உரையாடல்” பயங்கரவாதம் பற்றிக் குற்றஞ்சாட்டுவோர் அரச பயங்கரவாதத்தைக் கவனிப்பதில்லை என்பதைச் சுட்டுவதேயன்றிக் குறிப்பிட்ட எந்தவொரு விமானக் கடத்தலும் பற்றியதல்ல. இது போன்று புதிய பூமியில் வெளியான “முன்னை இட்ட தீ” தலைப்புக்கு நண்பர் குழந்தை ம. சண்முகலிங்கம் என்னைக் கண்டிக்க மாட்டாரென நினைக்கிறேன். இது செப்தெம்பர் 11 என்ற தலைப்பில் யாத்ராவில் ஒரு சில வேறுபாடுகளுடன் வெளிவந்தது. இக்கவிதையில் 2001 செப்தெம்பர் 11 நிகழ்வின் சில அம்சங்கள் தொடப்பட்டுள்ளன. இதில் அமெரிக்காவின் ஆசிகளுடன் ஒடுக்கப்படும் பலஸ்தீன மக்களது மனக்குமுறலை விளங்கிக் கொள்ள முயன்றுள்ளேன். அமெரிக்காவிற்கு நடந்ததையிட்டு உலகம் முழுவதும் அதிர்ச்சி அடைந்த அதேவேளை அமெரிக்கா ஈராக்கில் தொடர்ச்சியாக நடத்தி வந்த குண்டு வீச்சுப் பற்றி உலகம் அறியாமலிருப்பதையும் அங்கு குறிப்பிட வேண்டியிருந்தது.
இந் நிகழ்வு பற்றிய விரிவான ஒரு விசாரணையாக “அமெரிக்காவைக் கடவுள் ஆசீர்வதிப்பாராக” எழுதப்பட்டது. இத் தலைப்பு வழமையாக அமெரிக்க அரசியற் தலைவர்கள் தமது அரசியல் உரைகளின் முடிவில் கூறுகிற ஒரு வாழ்த்துரையாகும். அதிற் குறிப்பிடப்பட்ட அமெரிக்க ஆக்கிரமிப்புக்களும் அப்பாவி மக்களுக்கு எதிரான குண்டு வீச்சுக்களும் படுகொலைகளும் கடந்த 55 வருட வரலாற்றில் அமெரிக்கக் கொடுமைகளின் ஒரு சிறு பின்னமே. சதாம் ஹூஸேன் குர்திய மக்கள் மீது நச்சு வாயுக் குண்டு பிரயோகித்தது பற்றிக் குற்றஞ்சாட்டுகிற அமெரிக்க பிரித்தானிய ஆட்சியாளரது அறிவுடனும் ஆசியுடனுமே குர்திய மக்கள் 1980களில் அவ்வாறு கொடுமைக்காளானார்கள் என்பதையும் பதினெட்டு ஆண்டுகள் முன்பு இந்தியாவின் மத்தியப் பிரதேசத் தலை நகரமான போபாலில் யூனியன் காபைடு தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயு ஒழுக்கால் ஏற்பட்ட உயிரிழப்புக்கட்கும் பிற பாதிப்புக்கட்கும் இன்னமும் சரியான நட்டஈடு வழங்கப்படவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். 1956ல் ஈரானில் ஜனநாயக முறையில்
தெரிந்தெடுக்கப்பட்ட மொசாடெக், 1960ல் சுதந்திரமான கொங்கோவின் முதலாவது பிரதமரான பற்றிஸ் லுமும்பா, 1970ல் தென்அமெரிக்காவின் சிலே (சிலி)யில் தெரிவு செய்யப்பட்ட யென்டே ஆகியோர் அமெரிக்கச் சதியால் கொலை செய்யப்பட்ட ஒரு சிலரே. பெருவாரியான இளைய தலைமுறையினர் கொரியாவின் தலைவர் கிம் இல் ஸுங் பற்றியும் வியற்னாமின் ஹோ சி மின் பற்றியும் அறியாமல் இருக்கக் கூடியளவுக்கு இன்று நமது உலக அறிவு சுருங்கி வருகிறது. லிடீpயாவின் புடாஃபி பற்றி மட்டுமல்லாமல் சதாம் ஹூஸேன் பற்றியும் பின் லாடன் பற்றியுங் கூட அதிகம் தெரியாத ஒரு தமிழ் இளைஞர் கூட்டம் இருக்கிறது என்பதை நம்புவது முதலிற் கடினமாகவே இருந்தது. மேற்குறிப்பி;ட்ட நீண்ட கவிதை, மூன்றாவது மனிதன் சஞ்சிகையிற் சென்ற ஆண்டின் முற்பகுதியிற் பிரசுரமானது.
“சீகிரிய” சென்ற ஆண்டு சீகிரியவுக்குக் குடும்பத்தோடு போய் வந்தபோது ஏற்பட்ட மனப் பதிவு. இதுவும் “ஒன்றைப் பற்றி மட்டுமே சொல்வது தொடர்பாக” என்ற ஆக்கமும் மூன்றாவது மனிதனில் வந்தவை.
பின் குறிப்பிட்டது, முதலிற் தமிழகத்திலிருந்து வெளி வந்து கொண்டிருந்த புதிய தடம் என்ற ஏட்டுக்காக இன்னொன்றைப் பற்றி என்ற தலைப்பில் எழுதி அனுப்பியது. அனுப்பிப் பல மாதமாகியும் கிடைத்ததாகக் கூடத் தகவல் கிடைக்கவில்லை. அதன் பிரதி ஒன்றை நண்பர் செந்திவேலிடம் பார்வைக்குக் கொடுத்திருந்ததை மறந்து விட்டேன். எனவே நினைவிலிருந்ததை வைத்து மீளவும் எழுதியதை மூன்றாவது மனிதனுக்கு அனுப்பினேன். நண்பர் செந்திவேல் நான் முன்பு அவரிடம் கொடுத்ததைச் சில வாரங்கள் பின்னர் என்னிடம் காட்டி அது பிரசுரத்துக்காகவா என்று கேட்டார். மூன்றாவது மனிதனில் வந்ததற்கும் அதற்குமிடையே உள்ளடக்கத்தில் இருந்த கணிசமான வேறுபாடு கருதி அதைத் தாயகத்தில் வெளியிடுமாறு கேட்டுக் கொண்டேன். இரண்டும் குறுகிய கால இடைவெளியில் அடுத்தடுத்து வெளி வந்தன.
மூன்றாவது மனிதனுக்கு எழுதியதில் ஈழத்து நிகழ்வுகளை உலக நிகழ்வுகளுடன் அடுக்கடுக்காக உறவுபடுத்தியிருந்தேன். தாயகத்தில் வந்ததில் வௌ;வேறு உலக நிகழ்வுகட்கிடையிலான உறவு அடையாளங் காணப்பட்டிருந்தது. ஃபாஸிஸவாதிகள் பற்றியும் நிறவெறி பற்றியும் மொழியுரிமை மறுப்புப் பற்றியுமான குறிப்புக்கள் தமிழ்ச் சமூகங்கள் பற்றிய சுயவிமர்சனமாகவும் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கிறேன்.
“விமர்சகனுக்கான பத்துக் கட்டளைகள்” பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கச் சஞ்சிகையான இளங்கதிருக்காக எழுதப்பட்டது. சஞ்சிகை பல மாதங்களாகியும் வெளி வராத காரணத்தால் அதைத் தாயகத்துக்கு அனுப்பினேன். இளங்கதிர் இந்த வருடமாவது வெளி வர வேண்டும். அதில் இக் கவிதை வராது என்பது என் எதிர்பார்ப்பு.
“விமர்சனம் பற்றி”, “அவர்களது அங்கீகாரம் வேண்டாமல்”, “மயிர்க் கொட்டி” என்பன அழகியலும் திறனாய்வும் பற்றிய தேடல்கள். இவை மூன்றும் தாயகத்தில் வந்தவை. இவற்றுள் இரண்டாவது பாரிஸில் வாழும் நண்பர் வன்னியசிங்கத்தின் தந்தையாரின் இறப்பினை ஒட்டிய நினைவு மலரில் முதலில் வெளியானது.
“சீருடையில் ஒரு பெண்” ஏ.கே. ராமானுஜன் ஆங்கிலத்தில் எழுதிய ஒரு கவிதையின் பாதிப்பையுடையது. ராமானுஜனின் கவிதையின் தமிழாக்கம் தாயகத்திற் பிரசுரமானது. இங்கு என் கவிதையைத் தனியாகவே வெளியிடுவது தகுமென நினைக்கிறேன்.
“அருட்டும் நினைவுகள்” புலம்பெயர்ந்தோர் கவிதைகளிற் பல முறையும் நாம் சந்திக்கும் ஏக்க உணர்வை முன் வைத்து எழுதப்பட்டு அண்மையிற் தாயகத்தில் வெளியானது. சென்ற ஆண்டு முற்பகுதியிற் தாயகத்திற் பிரசுரமான “சுருங்கும் உலகில்” தகவற் தொழில்நுட்பம் பற்றிய நமது மயக்கங்களை முன்வைத்தும் நமது அண்டை அயல் பற்றிய அக்கறையின்மையையும் முன்வைத்தும் எழுதப்பட்டது. “விடைபெறாத வினாக்கள்” தாயகத்தில் வெளியான இன்னொரு ஆக்கம்.
“நினைவழித்தல்” ஞானம் என்ற சிற்றேட்டுக்காக எழுதியது. அது காதற் கவிதை வடிவில் அரசியற் செய்தியை உள்ளடக்கிய ஒரு கவிதையாகும்.
“புலம்பெயர்ந்த பனைகட்கு வாழ்த்து” கொழும்பு நகரின் காலி முகத் திடலில் பனைகள் நடப்பட்ட வேளை மனதில் உதித்தது. “அவற்றுக்குரிய அரசியல்” பாராளுமன்றத் தேர்தற் காலச் சுவரொட்டிகளைப் பார்த்த போது எழுந்த எண்ணப் பதிவு. “உயிர்ப்பு” சென்ற ஆண்டு யாழ்ப்பாணம் சென்ற போது யாழ் நூலகம் அமைந்துள்ள பகுதிக்குப் போன போது மனதில் ஏற்பட்ட வேதனையின் வெளிப்பாடு. இவை மூன்றும் “யாத்ரா” சஞ்சிகையில் வெளி வந்தவை.
“போரால் அழுகிற தாய்க்கு” 1991 பெப்ரவரியில் கேரளத்தில் திரூரில் நடந்த துஞ்சன் (எழுத்தச்சன்) விழாவில் நான் வாசித்த கவிதை அது மலையாளத்தில் மொழி பெயர்த்து வாசிக்கப்பட்டுப் பின்பு அங்கு பிரசுரமானது. இது சிறிது வித்தியாசமான தலைப்பில் யாத்ராவில் வந்தது.
“தொட்டிற் பழக்கம்” கொழும்பில் 1999-2000 அளவில் நடந்த சில காடைத்தனங்களை முன் வைத்து எழுதியது. லண்டனிலிருந்து வந்த “கண்ணில் தெரியுது வானம்” என்ற பத்மநாப ஐயரின் தொகுப்பிற்காக அனுப்பப்பட்டது.
சிலேயின் முன்னாட் கொடுங்கோலன் பினோஷே மீது இரக்கங் காட்டும்படி போப்பாண்டவரின் பிரதிநிதி சிலேயின் புதிய ஆட்சியாளர்கட்கு விடுத்த வேண்டுகோளையொட்டி எழுதியது “மனிதாபிமானத்தின் பேரால்” என்ற தலைப்பில் தமிழகத்து ஏடான புதிய தடத்தில் வந்தது.
-------------------------------------------------------------------------
தொலைவும் ரசிப்பும்
கணணி வழியே கனமான மின்மடல் வந்து
விழுந்தது.
விரித்துப் பார்த்தேன்.
அருவி ஒன்று நுரை பொங்கத் துள்ளிக் குதித்தது;
அந்தி வானம் சூரியனின் செம்மையை அணிந்து மகிழ்ந்தது;
பனி மலைகள் பாதரசமாய் உருகி வழிந்தன்
வனங்கள் வானுயர நிமிர்ந்து நின்றன்
மலர்கள் மரணத்தை மறந்து சிரித்திருந்தன்
வல்லு}றொன்று வான்வெளியை அளந்தது;
அணில்களும் ஆந்தைகளும்
பாலையும் புல்வெளியுமாய்ப்
படங்கள் ஒரு நூறாய் விளைந்தன.
ஒவ்வொரு படத்திலும்
இயற்கையின் அழகின் உன்னதத்தை
வியந்து போற்றும் ஒரு வாசகம்.
கணனி முன் குந்தியிருந்து
படங்களை எனக்கு அனுப்பியவன்
எப்போதாவது ஆறுதலாகத்
தன் அறையின் யன்னல் வழியாக
இரவிலோ பகலிலோ
தன் தலைக்கு மேலிருந்த
வானத்தைப் பார்த்திருப்பானா?
சட்டமும் சமுதாயமும்
சட்டம்
நிபுணர்களதும் நீதவான்களதும் வழக்கறிஞர்களதும்
காவற் துறையினரதும் கைகளில் பத்திரமாகவே உள்ளதால்
கையும் மெய்யுமாக அகப்பட்ட கள்வனால்
சட்ட நுணுக்கங்களின் இடைவெளிகளில் நுழைந்து
தப்பி ஓட இயலுமாகிறது
பட்டப் பகலில் நடுத் தெருவிற் கொலை செய்தவன்
சட்ட நூலேணியிலேறி நழுவ முடிகிறது
குடிவெறியில் காரோட்டிய யம தூதனை
அளவோடு குடி என்று
செல்லமாய்க் கண்டிக்க நீதவானுக்கு முடிகிறது.
சட்டம் இருக்க வேண்டிய இடத்தில்
இருக்க வேண்டியவர்களின் வசம் இருக்கிறது.
அதை வைத்திருக்கிறவர்கள்
இருக்கிறவர்களின் கையில் இருக்கிறார்கள்.
சட்டம் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தும்
உரிய வேலையைச் செய்ய வில்லை என்றெண்ணி
ஒரு பெண்ணை பஸ் மோதிக் கொன்றதற்காகச்
சட்டந் தெரியாதவர்கள்
பஸ்களை நொறுக்கி நீதி வழங்கினார்கள்.
அப்போது
சட்டத்தைக் கவனமாக வைத்திருக்கிறவர்கள்
“மக்கள் சட்டத்தைத் தம் கையிலெடுப்பது
தவறு” என்று கண்டித்தார்கள்.
மக்கள் உண்மையிலேயே சட்டத்தைத் தம் கையில்
எடுத்துக் கொள்வார்களேயானால்,
எவ்வளவு நன்றாக இருக்கும்.
ஒன்றைப் பற்றி மட்டுமே சொல்வது தொடர்பாக
நான் ஒன்றைப்பற்றிப் பேசும்போது
இன்னொன்றைப் பற்றிப் பேசுவதுபோல இருக்கிறது என்கிறாய்.
மெய்தான் -
இந்த நாளில் ஒன்றை விலக்கி இன்னொன்றைக் காணுவது இயலாத காரியந்தான்.
மன்னாரிலிருந்து வெளிக்கிட்ட தற்கொலைப் போராளியின் உடல்
ஜெருசலேம் நகரில் வெடித்துச் சிதறுகிறது.
மட்டக்களப்புக்குப் போகையில் மறிக்கப்படுவோனது அடையாள அட்டை
இஸ்ரேலியப் படையினனிடம் ஒரு
பலஸ்தீனியனால் நீட்டப்படுகின்றன.
திருகோணமலை முற்றவெளியில் பொலிஸ் தேடும் சந்தேக நபர்
ஸ்ரீநகரில் இந்தியப்படையினரால் கொண்டு செல்லப்படுகிறார்.
பினோஷேயின் சிலேயில் காணாமல் போனவர்கள்
சூரியகந்தவவிலும் செம்மணியிலும்
புதையுண்டார்கள்.
கொழும்புச் சோதனைச்சாவடியில் சிக்குண்ட பெண்ணைத்
தமிழகத்துக் காவல் நாய்கள் தடுப்பு மறியலில் கடித்துக் குதறுகின்றன.
வட இலங்கையிலிருந்து விரட்டப்பட்ட இஸ்லாமியன்
அவுஸ்திரேலிய அரசால் அனுமதி
மறுக்கப்படுகிறான்.
எல்லா அகதி முகாம்களையும் சூழுகிற வேலி
ஒரே முட்கம்பிச் சுருளால் ஆக்கப்பட்டிருக்கிறது.
எல்லாச் சிறைக் கூடத்துச் சுவர்களும்
ஒரே சூளையின் அரிகற்களால் எழுப்பப்பட்டுள்ளன.
உலகின் எல்லாத் தடுப்பு முகாங்களிலும்
உள்ளவர்கள்
ஒரே மொழியில்தான் இரவில் அலறுகிறார்கள்.
துருக்கியில் குர்தியனுக்கு மறுக்கப்பட்ட மொழியை
இலங்கையில் தமிழன் இழந்து கொண்டிருக்கிறான்.
யாழ்ப்பாண நூலகத்தைச் சூழ்ந்த தீயிலல்லவா
பாபர் மசூதியை இடித்த கடப்பாரைகள்
வடிக்கப்பட்டன.
சாவகச்சேரியைத் தரைமட்டமாக்கிய குண்டுகள்
புhஸா நகரத்தின் மீது விழுந்து
கொண்டிருக்கின்றன.
கிளிநொச்சியில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள்
டீhமியன் புத்தர் சிலைகளை முடமாக்கிச்
சரிக்கின்றன.
கியூடீh மீதான அமெரிக்க வணிகத்தடை
வன்னிக்கு எரிபொருள் போகாமற் தடுக்கிறது.
புலம்;பெயர்ந்த உயர்சாதித் தமிழனின் முகம்
கூ-க்ளுக்ஸ்-க்ளான் முகமூடிக்குள் ஒளிகிறது.
இலங்கையில் விதிக்கப்படும் செய்தித் தணிக்கை
அமெரிக்காவிலும் செல்லுபடியாகிறது.
காஷ்மீர் விடுதலைப் போராளியின் உயிர்த்தியாகம்
இலங்கைத் தமிழனுக்காக வழங்கப்படுகிறது.
நேபாளத்தின் கெரில்லாப் போராளி
மலையகத் தமிழ்த் தொழிலாளிக்காகப்
போராடுகிறான்.
கொலம்பியாவில் விரிகின்ற விடுதலைப் போர்
இலங்கை விவசாயிகளின் விமோனசத்துக்கானது.
இலங்கைத் தமிழரது இடையறாத போராட்டம்
பலஸ்தீனப் போராளிகட்கு உற்சாகமூட்டுகிறது.
ஒரு நியாயத்தை ஆதரிக்கிற சொற்கள்
இன்னொரு நியாயத்தையும் ஆதரிக்கின்றன.
ஒரு கொடுமையை ஏற்கும் சொற்கள்
எல்லாக் கொடுமைகளையும்
நியாயப்படுத்துகின்றன.
எனவே
நான் எதைப் பற்றிச் சொன்னாலும்
நீ எதைப் பற்றிச் சொன்னாலும்
எல்லாவற்றைப்; பற்றியும் சொன்னது போலத்தான்.
விமர்சகனுக்கான பத்துக் கட்டளைகள்
1 தன்னை இலக்கியச் சிகரமென்று நினைத்துக் கொண்டிருக்கும் குட்டிச்சுவரிடம் இமயம் உள்ள திசையை மறந்தும் சுட்டிக் காட்டாதிருப்பாயாக!
2 விமர்சனப்பாங்கான முன்னுரை கேட்டு வருகிறவரது மனத்தில் இருப்பது விமர்சனப்பாங்கான சொற்கள் தாம் என்று நம்பாதிருப்பாயாக!
3 உண்மைக்குப் பொருந்திவராத எந்தச் சொல்லையும் மனந்துணிந்து பொய்யென்று அடையாளங் காட்டாதிருப்பாயாக!
4 ஒருவருடைய எழுத்தை இன்னொருவர் தன்னுடையதென்று பிரசுரித்தால் அதைக் களவென்று பழியாதிருப்பாயாக!
5 ஒருவரது எழுத்தில் இல்லாத மேன்மைகளை எல்லாரும் சொல்லுகையில் அரசரது புதிய ஆடை பற்றி நினைவூட்டாதிருப்பாயாக!
6 ஒருவரது எழுத்தில் இலக்கணப் பிழைகளைக் கண்டால் அவற்றை மொழிவளர்ச்சிக்கான உயரிய பங்களிப்பு என்று போற்ற இயலாதுவிட்டாலும் குற்றங் கூறாதிருப்பாயாக!
7 பிறழ்வான எந்தவொரு சொற்பிரயோகத்தையும் புதிய வாசிப்பென்று புகழ்வதல்லாமல் பிழையான பாவனை என்னாதிருப்பாயாக!
8 தெளிவீனமான மொழிநடையை உன்னால் விளங்கிக் கொள்ள இயலாதென்று சொல்லி உன்னை அறிவிலி என்று அடையாளங்காட்டாமலிருப்பாயாக!
9 உலகில் எல்லாரும் உனது உண்மையான கருத்துக்களை அறியவே காத்திருப்பதாக எண்ணி ஏறாமல் இருப்பாயாக!
10 பிடிவாதக்காரனென்றும் பிறரை மதியாதவனென்றும் தன்னடக்கமற்றவனென்றும் கர்வி என்றும் கடுமொழி பேசுவோனெனவும் பொறாமை மிக்கவனென்றும் வீண் சர்ச்சைக்காரனென்றும் ஒரு பக்கச் சார்பானவனென்றும் மூடனென்றும் இன்னும் பலவாறும் எவரும் உன்னை அழைப்பதையிட்டு வருந்துமியல்புடையவனாக நீ இருந்தால் -
என்றும்
எதையும்
எவரையும்
எங்கும்
எக்காரணங் கொண்டும்
விமர்சியாதிருப்பாயாக!
(படைப்பாளிகளைப் பாதுகாக்கப் படைக்கப்பட்ட கடவுளின் ஆணையின் பேரில் வரையப்பட்டது.)
விமர்சனம் பற்றி
மாலை வானிடம்
சிவப்பு நிறமொன்று கேட்டேன்.
பல நூறு செந்நிறங்களை என்முன் விரித்தது.
நான் விரும்பும் செந்நிறம்
இதில் இல்லையே என்றேன்.
வருந்தி முகங்கறுத்து இருளிற் புதைந்தது.
காலை வானிடம்
சிவப்பு நிறமொன்று கேட்டேன்.
பல நூறு செந்நிறங்களை என்முன் விரித்தது.
நான் விரும்பும் செந்நிறம்
இதில் இல்லையே என்றேன்.
என்னால்; இயன்றது இவ்வளவே என்று
பொன்னாக முறுவலித்து
ஒளிவெள்ளத்திற் கலந்தது.
அவர்களது அங்கீகாரம் வேண்டாமல்
அதிகாரப் பீடங்களின் விருதுகளையும்
நல்லாசிகளையும்
இரந்து பெற்றவர்கள் சொல்லுகிறார்கள்:
உன் கவிதைகள் பரிசுக்குரியனவல்ல.
நீயும் சான்றோர் மண்டலங்களின்
அங்கீகாரத்துக்குரியனவல்ல.
தூய கலை இலக்கிய அங்கியால்
தம் அரசியலை மூடியவாறு
அழகியல் உபாசகர்கள் சொல்லுகிறார்கள்:
உன் கவிதைகள் காலத்தால்
அழியாதவையல்ல.
அவை உலகத்தரம் கொண்டனவுமல்ல.
தங்களைச் சூழும் வட்டங்களின் எல்லைகளைக் காணத் தலைகுனிந்தும் பார்க்காதவர்கள்
சொல்லுகிறார்கள்:
உன் கவிதைகள் குறுகிய அரசியல் சிந்தனை வட்டத்துக்குரியன.
நீ அதனின்றும் வெளியேற முயல வேண்டும்.
காலத்தால் அழியவொண்ணாக் கலைஞர்களெனத்
தம்மைக் கற்பனை செய்கிறவர்கள் சொல்கிறார்கள்:
நீ என்றுமே கலைஞனல்ல.
கருவிலே திருவில்லாத நீ வெறும் எழுத்தாளன் மட்டுமே.
ஒரு வணிகன் என்னிடம்
ஒளிவுமறைவின்றிச் சொல்கிறான்:
உன் கவிதையை விற்று நீயும் பிழைக்க முடியாது. நானும் பிழைக்க முடியாது.
ஒளிவுமறைவின்றி நானும் சொல்லுகிறேன்:
மேலிடத்து அங்கீகாரமோ பரிசோ பெற வேண்டாது
காலத்தாற் சிதைகினற் காகிதத்தில்
வெய்யிலுக்கு மங்குகிற மை கொண்டு எழுதிய என் கவிதை
உலகத் தரத்தை எட்டும் மொழிக்குப் பெயராமல்
விற்பனைக்கில்லாத என்னுடைய அரசியற் சிந்தனை மீது
உறுதியாகக் காலு}ன்றி நிற்கின்றது.
இன்னுஞ் சொல்லுகிறேன்:
பெருமைமிக்க ஆரவாரங்கட்கு உரியோரின் பார்வைக்கு எட்டாத ஓர் உலகம்
எனக்கு அருகே தெரிகிறதால்,
தூய்மையாளர்களின் சொர்க்கத்தில் இடம் வேண்டாமல்
நான் எழுதும் எளிய வரிகளை வேறு எவரேனும் இவ்வேளை எழுதிக்கொண்டிருக்கலாம்
என நன்கு அறிந்தும்,
என் பாழ்நரகத்துக்குப் போகும் வழியில் எழுதிக்கொண்டிருக்கிறேன்.
நினைவழித்தல்
உன்னை நினைவூட்டிய ஒவ்வொரு தடத்தையும்
கவனமாக அகற்றுகிறேன்
சுவரில் தொங்கிய படத்தையும்
தொங்கவைத்த ஆணியையும் அகற்றி
ஆணி இருந்த துளையையும் அடைக்கிறேன்
உன் கடிதங்களை ஒன்று விடாமல் எரித்து
வைத்திருந்த காகித உறையையும் தூளாக்குகிறேன்
நீ தந்த பரிசுப் பொருட்களைக் குப்பையில் இட்டால்
அவை ஒரு வேளை என்னிடம் மீளலாம் என்று
குழி தோண்டிப் புதைக்கிறேன்
தோட்டத்தில் உன் விரல் தொட்ட ஒவ்வொரு
செடியையும்
வேரோடு களைந்து எறிகிறேன்
நீ ஒழுங்குபடுத்திச் சென்ற என் மேசையை
மீளவும் ஒழுங்கீனமாக்குகிறேன்.
உன்னை நினைவூட்டக் கூடாத ஒவ்வொன்றுமே
உன்னை நினைவூட்டுகின்றனவே!
சீருடையில் ஒரு பெண்
ஒரு தெரு
சீருடையில் ஒரு பெண்
நிமிர்ந்த நடை
கூரிய நோக்கு
குறிதவறா ஒரு துப்பாக்கி:
ஒரு பயங்கரவாதி
அதே தெரு
அதே சீருடை
அதே பெண்
அதே நடை
அதே நோக்கு
அதே துப்பாக்கி:
ஒரு விடுதலைப் போராளி.
விடைபெறாத வினாக்கள்
அடிமைகளிடம் வினாக்களே இருந்தன
ஆண்டோரிடம் விடைகளே இருந்தன
இருந்தும்
எல்லா வினாக்கட்கும் அனுமதி இருக்கவில்லை
அனுமதித்த வினாக்கட்கும் விடைக்கு
உரிமையில்லை
பெறப்பட்ட விடைகளெல்லாம் வினாவுக்கு
உரித்தில்லை
உரிய விடைகளிலும் உண்மை இருந்ததில்லை
இவ்வாறு
நேற்றைய நாள் விடைகட்கு உரியோர்க்கு
உரித்தானது
இன்று
அனுமதித்தும் அல்லாததும் வினாக்கள்
எழுங் காலம்
கிடைக்கும் விடை ஒவ்வொன்றும் கேள்வி பல ஈனும்
விடைகள் முடிந்தாலும் வினாக்கள் முடியாது
இனி வரும் நாள் அத்தனையும் வினாக்கள்
உடையோர்க்கு.
அருட்டும் நினைவுகள்
ஒவ்வொரு காலைப் பொழுதிலும்
தட்டித் துயிலெழுப்ப முயன்று
தோல்வி கண்ட கோவில் மணியும்
தேங்கி நிற்கும் உவர் நீர்மேல்
கிழிந்தாடும் நிழலுக்குக்
காவல் நிற்கும் கிணற்றுக் கட்டும்
விடுமுறை நாட்களின் மதிய வெய்யினிற்
குளிர்ந்த நிழல் விழுத்தும் முற்றத்து வேம்பில்
அறுந்து தொங்கும் கயிற்று ஊஞ்சலும்
அலுக்காமல் ஒரே இடத்தில் அமர்ந்து
நாள் தவறாமல் எச்சமிடும் காகமும்
சிற்றொழுங்கை மழைச் சேறாய்
வேனிற்காலப் புழுதிப் படலமாய்
மாயங் காட்டுஞ் செம்மண்ணும்
முற்றவெளி ஓரத்து மூத்த தனிப் பூவரசின்
மணமற்ற மஞ்சள் மலரும்
மயிர்க் கொட்டிப் படையெடுப்பும்
மண்ணை விட்டு நீங்குகையில்
மறந்து சென்ற காதலும்
இன்னமும்
வரும் போகும் -
அங்கொரு தரையில், இனி மீள்வது இல்லை என்பது உறுதியான பின்பு, காலத்தில் உறைந்து கற்பனைகள் மெருகூட்டும் இளமை நினைவுகளாய், இடையிடையே பெருமூச்சாய்;
இங்கொரு தரையில், கண்முன்னே அழிந்தவை மீளாது என்ற தெளிவுடன், ஊர் மீண்டு ஒரு நாள் மீண்டுந் தொடங்கும் மிடுக்கோடு, போராட்ட உயிர் மூச்சாய்.
சீகிரிய
பார்வையாளரை மலைப்பில் ஆழ்த்திப்
பகைவர் எவரையும் நடுங்கச் செய்யும்
சீகிரிக் குன்றச் சிங்கம் உறுமின்
வானமுகடு பெயர்ந்து உதிரும்.
பாறை பிளந்து முன்காற் பாதம்
வெளியே நீள மீட்ட சிற்பியர்
சிங்கம் எழுமுன் சென்று மறைந்தனர்.
மலையின் முகட்டின் தூர்ந்த மாளிகை
பழங்கதை பேசிச் சோர்ந்து கிடக்கும்.
குத்துப் பாறை வளைவுள் ஒதுங்கி
மலர்கள் தாங்கி நிற்கும் மகளிர்
மினுக்குச் சுவரிற் கவிதை யாகினர்.
பதினை நூறு ஆண்டு கடந்தும்
மலையடிவாரம் அமைந்த தோட்டம்
மனதில் இன்னும் கிளர்வை மூட்டும்.
கல்லின் மீது கட்டிய கோட்டையும்
கல்லுள் உறங்கிக் கிடந்த சிங்கமும்
காலந் தன்னை வென்றும் என்ன -
காசியப்பன் போரினில் வீழ்ந்தான்.
தந்தையைக் கொன்ற சிங்கபாகுவின்
வம்சம் என்று பெருமைகள் சொல்வோர்
தந்தையின் கூற்றுவன் என்று குற்றம்
காசியப்பனில் சுமத்திப் பழிப்பர்.
போரினிற் தோற்றுப் போயினதாலே
காசியப்பன் பெருமை இழந்தான் -
கூலிப்படைகள் துணையுடன் மீண்ட
முகல்லானனும் வென்றது என்ன?
அந்நிய நாட்டுக் கூலிப்படைகளை
இன்னும் இங்கு இரந்து அழைக்கும்
மன்னவர் வழமை மாறுவதென்றோ?
கடத்தல் பற்றிய ஒரு உரையாடல்
விமானக் கடத்தற்காரனிடம் பயணி கேட்கிறான்:-
அதோ அந்த வயோதிபரைப் பார், வீடுசெல்லத் துடிக்கிறார். அதோ அந்தப் பெண்ணைப் பார், அவளுடைய குழந்தை அவளுக்காகக் காத்திருக்கிறது. அதோ அந்த இளைஞனைப் பார், நாளை அவன் வேலையில் நிற்க வேண்டும். இந்த விமானத்தை கடத்தி எங்கள் சிறைக் கூடமாக்கியிருக்கிறாயே, இது என்ன நியாயம்?
பயணியிடம் விமானக் கடத்தற்காரன் கேட்கிறான்:-
அதோ என் நண்பனைப் பார், அவன் செல்லத் துடித்த வீடு இடிக்கப்பட்டு விட்டது. அதோ அந்தப் பெண் போராளியைப் பார், அவளுக்காகக் காத்திருந்த குழந்தை குண்டுவீச்சில் இறந்து விட்டது. அதோ அந்த இளம் போராளியைப் பார், அவன் போய்ச் செய்ய எந்த இடத்திலும் வேலை கிடைக்காது. என் தேசத்தைக் கடத்தி எங்கள் எல்லாரதும் சிறைக் கூடமாக்கியிருக்கிறார்களே, இது என்ன நியாயம்?.
மாவனல்லையில் ஒரு உரையாடல்
மாவனல்லையில் நடந்தது தெரியுமோ?
சொல்லும் படியாய் என்ன நடந்தது!
எரிந்த கடைகள் எத்தனை தெரியுமோ?
எத்தனையாயினும் எல்லாம் திருத்தலாம்!
சூறையாடிய பொருட்களின் அளவு ...
எவ்வளவாயினும் மீளவும் தரலாம்!
சேதமான வீடுகள் எத்தனை ...
சின்ன விஷயம். சரி செய்திடலாம்
பள்ளிவாசல்கள் இடிபட்டனவே ...
புத்தர் சிலைக்குஞ் சேதம் உள்ளதாம்,
எல்லாவற்றையும் மீளக் கட்டலாம்,
இன்னும் பெரியதாய்!
காயம்பட்டோர் தொகை தான் தெரியுமோ?
யாரும் செத்துப் போக வில்லையே!
குற்றவாளிகள் யாரென அறிய ...
நட்ட ஈடுகள் வாங்கித் தரவும்
நான் நீ என்று போட்டியுள்ளது!
குற்றவாளிகள் யாரென ...
குற்றவாளிகள் ஒருவரை ஒருவர்
சுட்டிக்காட்டியவாறாய் உள்ளனர்
குழப்பம் மிகுதி -
விசாரணை வைப்போம்!
விரைவில் இந்த விசாரணை முடிந்து ...
அவசரப்பட்டு ஆவதும் உண்டோ -
ஆறுதலான நீதி விசாரணை,
அறிக்கை, ஆய்வு, ஆறப் போடல் -
ஆத்திரம் எல்லாம் அடங்கிய பின்பு
ஆனவிதமாய் நடைமுறை செய்வோம்!
முடிவில் ஒன்றும் நடவாதென்று ...
முடிவில் ஏதும் நடவாதென்று
முன்பு கூட்டியே சொல்ல முடியுமா!
மாவனல்லையில் என்ன நடந்தது!
முன்னம் நாங்கள் கண்டிராததா,
இந்த நாடு அழிந்து போனதா,
முஸ்லீம் மக்கள் வாழ வில்லையா!
ஒரு நூறாண்டு முன்னம் நாட்டின்
முஸ்லிம்கட்கு எதிராய் நடந்தவை
மீண்டும் நினைவில் மீளுகின்றது ...
பழையதை மீண்டும் கிளறுவதால் தான்
பகைமை இங்கே மூளுகின்றது!
பழையதை யார்தான் கிளறுகிறார்கள் ...
பழைய கதைகள் வேண்டாம் பாரும்,
புதிய வழிகள் உள்ளன.
அதைவிட
மாவனல்லையில் என்ன நடந்தது!
எங்கும் என்றும் நடவாதனவா,
எங்கள் மண்ணில் நிகழாதனவா ...
மாவனல்லையில் நடந்தது?
முன்னம் இங்கு மூண்ட நெருப்பு
இன்னும் இங்கே தொடர்ந்து எரிகுது
சொல்லும் படியாய் புதிதாய் எனினும்
இல்லை, எல்லாம் பழங்கதை எதுவும்
செய்யும்படியாய்ப் புதிதாய் உண்டு
நில்லும் ஐயா, சினந்து பொரிகிறீர் ...
நிற்க நேரம் இல்லை வருகின்றேன்!
நில்லும் ஐயா, நியாயம் பேசுவோம் ...
நிமலராஜனுக்கு ஒரு அஞ்சலி
எங்கோ ஒரு வீடு சூறையாடப்படுகிறது
எங்கோ அச் செய்தி வெளிவருகிறது
எங்கோ ஒரு குடிசை தீக்கிரையாகிறது
எங்கோ அச் செய்தி வெளிவருகிறது
எங்கோ ஒரு மனிதன் கடத்தப்படுகிறான்
எங்கோ அச் செய்தி வெளிவருகிறது
எங்கோ ஒரு பெண் வன்கலவிக்கு ஆளாகிறாள்
எங்கோ அச் செய்தி வெளிவருகிறது
எங்கோ ஊழல்கள், முறைகேடுகள், மோசடிகள், நிகழ்கின்றன
எங்கோ அச் செய்தி வெளிவருகிறது
எங்கோ ஒரு வீடு சூறையாடப்படுகிறது
எங்கோ செய்திகளும் வெளிவருகின்றன
எங்கோ ஒரு செய்தியாளன் கொல்லப்படுகிறான்
எங்கோ அச் செய்தியும் வெளிவருகிறது
செய்திகள் கொடுஞ் செயல்களை நிறுத்த வில்லை - ஆனால்
கொடுஞ் செயல்களால் செய்திகளை நிறுத்த முடிவதில்லை
இன்றைக்கு எழுதி எதுவும் ஆக வில்லை என்பதால்
இனியும் எழுதாமல் எவரும் இருப்பதில்லை
இன்று இல்லாவிடினும் நாளை இல்லாவிடினும் மறுநாள்
என்றோ எல்லாமே மாறித்தான் போகும்
அன்று வரையும் அதற்கு அப்பாலும் - என்றைக்கும்
எழுதும் கரங்கள் ஓயப் போவதில்லை.
உயிர்ப்பு
மாநகர மண்டபத்தின் சிதிலங்களுக்கிடையே
அநாதரவான இரும்புக் கரங்கள் இரண்டு
குறுகி வளைந்து வானை இறைஞ்சும்
பாழுண்ட கோட்டையின் அவலத்தை மூடுவதற்காய்
விரைகின்ற பற்றைகளை முந்துகிற தூக்குமரம்
தயக்கத்துடன் தலையை மேலுயர்த்தும்
வீடிடிந்து வீதியிலே நிற்கும் வெறுஞ் சுவரின்
ஆறாத காயங்கள்
போரின் கதை மொழியும்
பளிங்கென்ன வெள்ளை முறுவலுடன்
ஒன்றும் நிகழாப் பாவனையில்
பாசாங்காய்
நிமிர்ந்துள்ள நூலகமும் சாம்பலிலே
உயிர்த்ததெனின்
தீக் கொண்ட நூலனைத்தும் உயிர்திரும்பல்
எப்போது?
கடல் கடந்த வாசகர்கள் கரை மீள்வதெப்போது?
வெலிக்கடைக்குப் பின் 18ம் ஆண்டு
கூண்டுக் கிளியைக் கொன்றவர் யார்?
யாருமறியாமல் வந்து போன பூனையா?
இரகசியமாய்க் கூண்டுக் கதவைத் திறந்து வைத்தவனா?
கிளியைக் கூண்டிலிட்டுச் சிறகை நறுக்கியவனா?
விசாரணை நடக்கட்டும்!
நீதவான் வருகிறான்
“அமைதி”!
பூனை அவனுடையது
கூண்டுக் கதவைத் திறந்தவன் அவன் கூட்டாளி
கூட்டில் அடைத்துச் சிறகு அரிந்தவன் அவன் உறவினன்
விசாரணை தொடரட்டும்!
தீர்ப்பு வழங்கப்படவுள்ளது
“அமைதி! அமைதி”!
“நீதவானுக்கு மாசு கற்பிக்கும் நோக்குடன்
திட்டமிட்டே கூண்டிற் புகுந்த
கிளியே குற்றவாளி
கிளியைத் தண்டிக்க இயலாததால்
தீர்ப்பை எதிர்ப்பவர்களதை; தண்டிக்கலாம்”
“அமைதி! அமைதி! அமைதி”!
காவலர்களே,
துப்பாக்கிகளால் அனைவரையும் சுட்டு
அமைதியைப் பேணுவீர்களாக!”
அவற்றுக்குரிய அரசியல்
ஒவ்வொரு தெருவிலும்
குறுக்கும் மறுக்குமாய்த் தொங்குகிற
பிளாஸ்ற்றிக் கொடி வரிசையும்
அரசியல்வாதிகளின் படங்களால்
சுவர்களை அசிங்கப்படுத்தும் சுவரொட்டிகளும்
நாலு ஆள் உயரத்தில்
நிமிர்கின்ற கட்டவுட்டுகளும்
முடிவில்
குப்பையோடு குப்பையாகும் -
அவற்றுக்குரிய அரசியல் போல.
ஆனாலும்
அவை அழியும் போதும்
அழுக்கை அதிகமாக்கிக் கான்களை அடைத்துச்
சுற்றாடலை அசுத்தப்படுத்துமே -
அவற்றுக்குரிய அரசியல் போல.
புலம்பெயர்ந்த பனைகளுக்கு வாழ்த்து
உரிமைகள் கேட்டபோது
உறுமினார் மிரட்டிப் பார்த்தார்
ஊர்வலம் சென்றபோது
உறுக்கினார் உதைக்க வந்தார்
இயக்கமாய் இளைஞர் கூடி
எதிர்த்திட முனைந்தபோது
பயங்கரவாதம் என்று
படைகளை அனுப்பிவைத்தார்
போரெனிற் போரே என்றார்
போரினிற் தொடர்ந்து நின்றார்
ஊரினில் இருந்த பேரை
உலகெலாம் அலையச் செய்தார்
அடிமைபோல் அண்டை நாட்டில்
வெள்ளையர் வாழும் மண்ணில்
கொடுமைசேர் அகதி வாழ்வு
கொழும்பிலும் வாய்தததன்றோ
தமிழிலே கருமமாற்றத்
தமிழராய் வாழ இன்னும்
தமிழரேல் தெருவிற் செல்லத்
தங்கிடத் தொழில்கள் செய்யத்
தடைகளே மிகுந்ததாலே
தமிழரும் தமது மண்ணிற்
படைகளும் போரும் நீங்கிப்
போய்க்குடி யேறும் நாளும்
வருகுமோ என்று ஏங்கி
வாடுதல் கண்ட தாலே
அரசினர் கருணைகொண்டு
அரியதோர் வழியும் செய்தார்
உரிமைகள் தம்மை ஈய
ஒருவழி அறியாரேனும்
அரசினர் தமிழர்க்காக
இரங்கியே அவர்கட்காகப்
பனைசில புலம்பெயர்ந்து
வரிசையில் நாட்டுவைத்து
மனதினில் கவலை போக்கும்
மார்க்கமும் கண்டாரன்றோ
கடற்கரை மருங்காய் நல்ல
காலிமுகம் எனும்பேர்
உடையதோர் திடலின் ஓரம்
பனைகளைப் பார்க்குந் தோறும்
ஊரிலே உள்ளோம் என்ற
உணர்விலே தமிழர் ஆழ்ந்து
போரினை மறந்து தங்கள்
மனக்குறை யாவும் நீங்கித்
தலைநகர் தன்னைச் சொந்த
ஊரெனக் கொண்டு மேலும்
பொலிவுடன் கொழும்பு மேவும்
லொட்ஜ்களில் இனிது வாழ்வர்!
தொட்டிற் பழக்கம்
முன்னம்
ஆங்கில வகுப்பு வாத்தியார்
தமிழிற் கதைத்தால் ஏசுவார்,
அடிப்பார், அபராதம் இடுவார்.
தமிழ்க் கதைப் புத்தகம் கையிற் கண்டாற்
பறிமுதல் செய்வார், கிழித்தும் எறிவார்.
ஆனாலும் தமிழிற் தான்
வாய்க்குள் முணுமுணுப்பேன்.
இன்று
சிங்கள வகுப்புவாதியார்
தெருவழியே
தமிழிற் கதைத்தால்
முறைப்பார், முடிந்தால் ஆட்சேர்த்து
அடிக்கவும் முனைவார்;.
கையிற் தமிழ்ச் செய்தித் தாள் கண்டால், ஏசிப்
பறித்துக் கிழிப்பார்.
ஆனாலும் தமிழிற் தான்
வாய்க்குள் முணுமுணுப்பேன்.
போரால் அழுகிற தாய்க்கு
உன் மகன் போரிற் பெருங்காயமுற்றான் -
நீ அழுதாய்.
உன் மகன் போரிற் காணாமற் போனான் -
நீ அழுதாய்.
உன் மகன் எதிரிகளாற் கைப்பற்றப் பட்டான் -
நீ அழுதாய்.
உன் மகன் போரிற் சாவு எய்தினான் -
நீ அழுதாய்.
உன் மகனின் சாவை அரசு ஏற்கவில்லை -
நீ அழுதாய்.
உன் மகனின் சடலத்தைக்
காணக் கிடைக்கவில்லை -
நீ அழுதாய்.
போரின் ஒவ்வொரு நிச்சயமும் நிச்சயமின்மையும்
உன்னை அழவைத்தன.
உன் போன்ற ஒவ்வொரு தாயையும் அழவைத்தன.
என்றாலும்
இன்னுமொரு தாயின் மகன் போருக்குட்
போகிறான்.
உன் கண்ணீர் இம் மண்மேல் மழையாய்ப் பொழிந்தது.
என்றாலும் வெள்ளம் பெருகவில்லை ;
இம் மண்ணின் கொடுமைகள்
அள்ளுண்டு போக வில்லை ;
போரின் அரக்கர்கள் முழுகடிக்கப்படவில்லை ;
போர் தொடர்கிறது; வளர்கிறது.
தாயே, உன் கண்ணீர் இத் தீயை அணைக்காது.
உன் கண்ணீருக்கு அணை கட்டு,
உன் நெஞ்சுக்கு உரமூட்டு,
அங்கே உன் உணர்வுகளை விறகாக்கு,
அற உணர்வுத் தீ மூட்டு.
இறந்த உன் மகன் மீளமாட்டான்.
இருக்கின்ற மைந்தர்கள் மாளாமல் மீள்வதற்கு
உன் நெஞ்சின் தீ கொண்டு போரைப் பொசுக்கப்
பொங்கி எழு, போராடு.
அமெரிக்காவைக் கடவுள் ஆசீர்வதிப்பாராக
மாண்புமிகும் அமெரிக்கச் சனாதிபதி அவர்களே
திடுமென வந்த ஒரு பேரிடி போல
ஒரு விமானம் மோதியதால் அதிர்ந்து
இப்போது எரிகின்ற கோபுரமொன்றுள்
சட்டென மின்சாரம் நின்று போன
அறையொன்றின் உள்ளிருந்து ஒரு
அமெரிக்கக் குடிமகன் பேசுகிறேன்.
நீங்கள் இப்போது இருக்கின்ற திசை
எனக்குத் தெரியாது எனினும்
எல்லாம் வல்ல அமெரிக்க நிறுவனங்கள்
எல்லாத் திசையிலும் செவிகளை உடையன
என்பதாலும்
உங்களிடம் நின்றபடி பேச
என் கால்களில் வலு இல்லாததாலும்
என் இருக்கையில் அமர்ந்தபடி
நான் நோக்குகிற திசையிற் பேசுகிறேன்.
உங்கள் முன் நின்றபடி முகம் நோக்கிப்
பேசாமைக்கு
எந்தவித மரியாதையீனமும் காரணமில்லை என
ஏற்று எனை மன்னித்துக், கருணையுடன்
என் சொற்கட்குச் சற்றே செவி சாயுங்கள்.
மாண்புமிகு சனாதிபதி அவர்களே
இக் கட்டிடத்துள் இவ்வேளை இருள் சூழ்கிறது
என் செவிகளை நிரப்பும் அச்சத்தின் கூக்குரல்களை
இன்னமும் அந்த இடியோசை ஊடுருவி அதிர்கிறது.
ஐம்பத்தாறு ஆண்டுகள் முன்பு
ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும்
அமெரிக்காவின் அணு ஆயுத வல்லமையைப்
பிரகடனம் செய்த வெடி யோசையும்
அதிற் பதிவாகியுள்ளது.
அதன் பின்னர்
கொரியா, வியற்நாம் எனப் பரந்து
நேற்றுவரை பெல்கிறாடில் ஒலித்து
இன்றும் ஈராக்கில் ஒலிக்கிற பேரோசையும்
அதிலே அடங்கியுள்ளது.
என் செவிகளில் நிறைந்துள்ள
அச்சத்தின் குரல்களும் மரண ஓலங்களும்
அமெரிக்காவின் இறைமையின் மேம்பாடு பேண
அமெரிக்காவிடம் தமது இறைமையைப் பறிகொடுத்த
ஒவ்வொரு மண்ணினதும் நெரிக்கப்பட்ட
குரல்வளைகளில்
விளைந்த குரல்களையே எதிரொலிக்கின்றன.
உரிமை மறுக்கப்பட்டுக் கொல்லப்பட்ட
மொழிகளிலும்
கொல்லப்படுகின்ற மொழிகளிலும்
சொல்லாமல் மறிக்கப்பட்ட எண்ணங்கள்
உரக்கப் பேசப்படுகின்றன.
இக்கட்டிடத்தைச் சுற்றி வளைத்து
முற்றுகையிட்டுள்ள தீயின் வெம்மை
மெல்ல மெல்ல அதிகரிக்கிறது.
அதன் ஒவ்வொரு பாகை அதிகரிப்பும்
அமெரிக்காவின் போர்விமானங்கள் வியற்நாமில் வீசிய
நேப்பாம் குண்டுகளின் வெம்மையை அநுபவித்த
வியற்நாமிய விவசாயிக்கு நெருக்கமாக
என்னைக் கொண்டு செல்கின்றன.
என் நாசியுடன் நுழையும் காற்றின் வெம்மையுடன் புகை நெடியும் நச்சு வாயுக்களும்
என் சுவாசப்பைக்குள் இறங்குவதை நான்
உணர்கிறேன்.
அமெரிக்காவின் முழுமையான ஆசிகளுடன்
குர்தியக் கிராமவாசிகட்கு விநியோகிக்கப்பட்ட
நச்சுக்காற்றும்
போபாலில் யூனியன் காபைடின் உபயமாக
ஒரு அதிகாலைப் போதில் முழு நகரமும் முகர்ந்த
இரசாயனப் புகை சேர்ந்த காற்றும்
இப்போது எனக்கும் பகிரப்பட்டுள்ளது.
இருள் இந்த அறையை இப்போது
முற்றாக ஆட்கொண்டுவிட்டது.
இந்த அறையின் சுவர்கள் எங்கே என்று
என்னால் ஊகிக்க மட்டுமே முடிகிறது.
எனினும் என் பார்வை இந்த இருளையும்
கட்டிடத்தின் சுவர்களையும் ஊடறுத்துப் பாய்கிறது.
என் கண்கள் முன் ஒரு அரை நூற்றாண்டின்
வரலாறு விரிகிறது.
அமெரிக்காவின் ஆதிக்கத்தைத் தாங்கி நிற்கின்ற
இராணுவக் கரங்களின் இரத்தக் கறை தெரிகிறது.
இந்தோனீசியாவின் ஐந்து லட்சம் கம்யூனிஸ்ட்
சந்தேக நபர்கள் சிந்திய குருதியும்
வியற்நாம் முதல் டொமினிகன் குடியரசு உட்படப்
பனாமா வரையிலான எத்தனையோ நாடுகளில்
வழிந்தோடிய குருதியும் அங்கே உறைந்துள்ளன.
அது என்னை அச்சுறுத்தவில்லை.
அந்தக் குருதிச் சுவடுகள் நடுவே
தெரிந்த முகங்களும் தெரியாத முகங்களுமாக
எத்தனையோ முகங்கள்
என் கண் முன் நிழலாடுகின்றன.
பணிந்த முகம் ஒவ்வொன்றக்கும்
பயந்த முகம் ஒவ்வொன்றக்கும்
பணிய மறந்த முகங்கள் ஒரு நூறு தெரிகின்றன.
மொஸாடெக், லுமும்பா, அயன்டே...
வஞ்சனையால் வீழ்ந்த ஒவ்வொரு முகத்துக்கும்
வஞ்சனையை வீழத்திய முகங்கள் ஒரு நூறு
என்முன் சிரிக்கின்றன.
மாஓ, கிம் இல் ஸுங், ஹோ சி மின்...
கியூபாவில் கஸ்ற்ரோவைச் சரிக்க முன்னமே
வெனசுவேலாவில் ஒரு ஷவெஸ் நிமிர்கிறார்.
என்றோ தொடங்கிய ஒரு நெடும் படை நடப்பிலே
பலஸ்தீனத்தில் கல்லெறியும் சிறுவன் முதலாக
கொலம்பியாவிலும் பிலிப்பின்ஸிலும்
நோபாளத்திலும்
ஆயுதமேந்திய போராளிகளும்
பணிய மறுக்கிற ஈராக்கியனும் ஆஃப்கானியனும்
ஊர்வலமாக இணைகிறார்கள்.
கடாஃபியும் சதாம் ஹுஸைனும்
ஒஸாமா பின் லாடனும் ஒழிக்கப்படலாம்,
அதனால் பயங்கரவாதம் ஒழிந்து விடாது என்பது
இப்போது விளங்குகிறது.
ஏனெனில் பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்
வேறெங்குமில்லை.
இங்கேதான் உள்ளது.
எனினும் நான் நம்பிக்கை தளரவில்லை, ஏனெனில்
அமெரிக்காவின் விடுதலை உலகின்
விடுதலையுடன்
இன்று பின்னிப்பிணைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோபுரத்தின் சரிவு ஒரு குறியீடாக,
அமெரிக்காவை உலகின் எதிரியாக மாற்றிய
ஒரு பயங்கரவாதத்தின் சரிவாகட்டும்.
சுரண்டல், ஒடுக்குமுறை, போர் என்ற
திரிசூலம் தாங்கிய துர்த்தேவதையின்
அழிவின் தொடக்கமாகட்டும்.
மாண்புமிகு சனாதிபதி அவர்களே
அழியப்போகும் என் உயிரை விட மேலாக
அமெரிக்காவை நான் நேசிக்கிறேன்:
நீங்கள் காக்க விரும்பும் அமெரிக்காவையல்ல,
உங்களிடமிருந்து தன்னைக் காக்கப்போகும்
ஒரு புதிய அமெரிக்காவை,
முழு உலகமும் நேசிக்கப்போகும் ஒரு
அமெரிக்காவை.
கடவுள் அந்த அமெரிக்காவை ஆசீர்வதிப்பாராக!
இன்னொன்றைப் பற்றி
ஒன்றைப் பற்றி நான் சொன்னால், அது
இன்னொன்றைப் பற்றியதாய் இருக்கிறது.
உண்மைதான்.
ஒன்றைத் தவிர்த்து இன்னொன்றைச் சொல்வது
இயலாது.
பினோஷே பற்றி எழுதுகிற போது
சுகார்த்தோ பற்றியும் மாக்கோஸ் பற்றியும்
ஹிற்லர் பற்றியும் எழுதப்படுகிறது.
சிலேயில் காணாமற் போனவன்
இன்னமும் செம்மணியில் புதையுண்டிருக்கிறான்.
மிருசுவில் புதைகுழியும் சூரியகந்தவினதும்
ஒரே கிடங்காகத் தான் தோண்டப்பட்டன.
இன்னும்
யாழ்நூலகத்தை எரித்த நெருப்பில் தான்
பாபர் மசூதியை இடித்த கடப்பாரைகள்
வடிக்கப்பட்டன.
அதே நெருப்பு ஆப்கானிஸ்தானில்
புத்தர் சிலைகளை வெடித்துத் தகர்க்கிறது.
ஷார்ப்வில் படுகொலைச் செய்தி
மிலாய் கிராமத்தின் படுகொலையையும்
ஜாலியன்வாலா பாக் படுகொலையையும்
எனக்குச் சொன்னது.
மாவீரன் பகத் சிங் தொங்கிய கயிற்றில் தானே
கயத்தாற்றில் கட்டப்பொம்மன் தொங்கினான்.
கற்சிலை மடுவில் இருப்பது, தனியே
பண்டார வன்னியனின் நினைவுச் சின்னமா?
இரண்டாம் உலகப் போருக்கு முந்திய ஜேர்மனியில்
யூதர்கட்கான முகாங்கள் எப்போது மூடப்பட்டன?
மலேசியாவிலும் கம்யூனிஸ்ட்டுகட்கான
முகாம்களும்
தென்வியட்நாமின் மாதிரிக் கிராமங்களும்
தமிழகத்தின் அகதி முகாம்களும் எங்கிருந்து தொடங்கின?
உலகம்
ஒரு முட்கம்பி வேலியால் இரண்டாகப்
பிரிக்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்காவில் ஒரு தென்னாபிரிக்கனை
உள்ளே வராதே என்று சொன்ன பலகை,
ஒவ்வொரு தமிழ்க் கோவிலுள்ளும் ஒரு தமிழனை
நுழையாமல் தடுத்தது.
அமெரிக்காவின் கூ க்ளுக்ஸ் க்ளான் கையில்
ஏந்திய தீவட்டிகள் கொண்டு
கீழ் வெண்மணியில் மனிதர்
குடிசைகளுடன் எரிக்கப்பட்டனர்.
மட்டக்களப்புக்குப் போகும் வழியில்
தமிழனிடம் கேட்கப்படுகிற அடையாள அட்டையை
இஸ்ரேலிய சிப்பாயிடம் பலஸ்தீனியன் நீட்டுகிறான்
அயர்லாந்தில் ஆங்கில ஆதிக்கத்தால்
அழிக்கப்பட்ட மொழி
துருக்கியின் ஆதிக்கத்தில் உள்ள
குர்தியனின் மொழியல்லவா.
ஐ.ஆர்.ஏ. தடைசெய்யப்பட்டதாக அறிவிக்க்ப்பட்ட அன்று
குர்தியனதும் தமிழனதும் விடுதலை இயக்கங்கள்
தடைசெய்யப்பட்டு விட்டன.
ஹரி ட்ரூமன் ஹிரோஷிமாவில் எறிவித்ததும்
வின்ஸ்ற்றன் சேச்சில் ட்றெஸ்டெனில் எறிவித்ததும்
இன்றைய டீக்தாத் மீது அல்லவா விழுகின்றன.
வட அயர்லாந்தில் அமைதி காக்கப் போனவர்களே
வட இலங்கையிலும் அமைதி காத்தார்கள்.
“ஒற்றுமைகளில் அதிகம் இல்லை -
வேற்றுமையே முதன்மையானது” என்பவன் அறிவானா,
தென்னிலங்கையின் மானம்பெரிக்கும்
தமிழகத்தின் பத்மினிக்கும் இருந்த வேறுபாடு
மானம்பெரி இறந்ததும்
பத்மினி மணமானவள் என்பதுமே என?
கொடிகளின் நிறங்களும் தேசங்களின் பேர்களும்
தேசிய கீதங்களின் மெட்டுக்களும்
சீருடைகளின் நிறங்களும் வடிவமைப்பும் வேறு.
இந்த வேற்றுமைகள் கொண்டு மறைக்க இயலாத
ஒற்றுமை இருப்பதாலே தான்,
இஸ்ரேல் பற்றி எழுதினால்
சவூதி அராபிய தணிக்கை அதிகாரியும்
குர்திஸ்தான் பற்றி எழுதினால்
இலங்கை அதிகாரியும்
காஷ்மீர் பற்றிச் சொன்னால் பிலிப்பினிய அதிகாரியும்
உள்ளூர்ச் செய்திகள் பற்றிய
தணிக்கை விதிகள் மீறப்படுவதாகச் சினக்கிறார்கள்.
அது சரியானதே.
ஒன்றைப் பற்றி எழுதும் எவனாலும்
வேறொன்றைப் பற்றி எழுதுவதைத் தவிர்க்க முடிகிறதா?
சீனத்துப் பெண்ணின் பாதங்களை இறுகப் பிணித்த
துணி அவிழ்க்கப்பட்டபோது
உடன் கட்டை ஏறிய இந்தியப் பெண்
உயிர்த்தெழுந்து நடந்தாள்.
ஒரு பலஸ்தீனப் பெண் போராளி
முழு அரபுப் பெண்ணினத்தையும் விடுதலை
செய்கிறாள்
ரஷ்யப் புரட்சி முழு ஆசியாவையும் ஆபிரிக்காவையும்
கொலனி ஆட்சியினின்று விடுதலை செய்தது.
கொலம்பியாவின் கெரில்லாப் பேராளியும்
மெக்ஸிகோவின் ஸப்பாட்டிஸ்டும்
பிலிப்பினிய மக்கள் படை வீரனும் ஒருவனே.
மறவாதே, காஷ்மீர் விடுதலைப் போராளி
ஈழத் தமிழனுக்காகத் தான் போராடுகிறான்.
எனவே
எந்த ஒன்றைப் பற்றிப் பேசும் போதும்
இன்னொன்று பற்றியும், ஏன்
எல்லாவற்றைப் பற்றியும் பேச முடிகிறது.
மனிதாபிமானத்தின் பேரால்
“மனிதாபிமானத்தின் பேரால்
அவரைப் போக விடுங்கள்”
போப்பாண்டவரின் பிரதிநிதியின்
உருக்கமான வேண்டுகோள் இது.
மனிதாபிமானத்தின் பேர் வலியது,
அதன் குரலும் வலியது.
எனினும்
அவற்றின் வலிமை
யார் மீதான மனிதாபிமானம் என்பதிலேயே
தங்கியுள்ளது.
அது
வத்திக்கானிலிருந்து பினோஷக்காக ஒலிக்கையில்,
அதற்காகக்
காத்துக் கிடக்கும் செவிப்பறைகளை இதமாக வருடி
அதிகாரத்தின் இரும்பு நெஞ்சை இளக்கவும் கூடும்.
இதே மனிதாபிமானத்தின் குரல்
ஒரு கால் நூற்றாண்டுக் காலத்தின் முன்பே,
அயன்டேயின் படுகொலைக்கு
முன்போ பின்போ கூட ஒலித்திருந்தால்
ஒரு வேளை
மனிதாபிமானத்தின் பேரால்
இன்று
பினோஷேக்காக மன்றாட நேர்ந்திராது.
ஒரு வேளை
பினோஷே யாரென்பதையே சிலே மறந்திருக்கும்
கொல்லப்பட்டோருக்காக ஒலிக்கும் போதை விட
கொலைகாரனுக்காக ஒலிக்கும் போது
மனிதாபிமானத்தின் குரல்
நீண்ட தூரங்களை எட்டுகிறது.
உறைந்த இதயங்களைத் தொடுகிறது.
எனவேதான்
ஆண்டவரின் பிரதிநிதியின் பிரதிநிதியே
மனிதாபிமானத்தின் பேரால் மன்றாடுகிறேன்.
மனிதாபிமானத்தின் பேரால்
இந்தக் கொலைகாரனுக்காக
மன்றாடாதீர் ...
மயிர்க் கொட்டி
இளவேனிற் பருவ முதிர்வில் மலர்கள் விரிந்து மரங்களை மூடுவது போல, மயிர்க்கொட்டிகள் மரமெங்கும் அப்பி மூடிக் கிடக்கின்ற நாட்களும் உண்டு. கிளைகள் வழியே ஊர்ந்தும் இழைகளிற் தொங்கி ஊஞ்சலாடியும் இளந்தளிர்களை விழுங்கிக் கருமுட்டைகளாக எச்சமிட்டும் உலா வருகின்ற மயிர்க்கொட்டிகளின் வாரி விடாத மயிர்க்கற்றை அடர்ந்த மேனி, மலர்களையும் மலர்கள் மீது அமர்ந்து தேனருந்தும் வண்ணத்துப்பூச்சிகளையும் ரசித்துப் பழகியோருக்கு வெறுப்பூட்டும்.
போதாதற்கு, முட்டினால் மயிர் உதிர்த்துச் சருமத்தில் ஒட்டித் தடிப்பேற்றிச் சுணைக்கச் செய்யும் மயிர்க்கொட்டிகள், நிச்சயமாக, மனிதனின் நட்புக்காகப் படைக்கப்பட்டனவல்ல.
பற்பல நிறங்களிலும் அளவுகளிலும் வடிவுகளிலும் அமைந்திருந்தாலும், மயிர்க்கொட்டிகட்காக மலர்கள் விரிவதில்லை; மயிர்க்கொட்டிகளும் மலர்களை நாடுவதில்லை. மட்டுமன்றி, மயிர்க்கொட்டிகள் மனிதரின் அழகியல் பற்றிய அறிவுடன் ஆக்கப்பட்டவையுமல்ல. உறுதியாக, எந்த மயிர்க்கொட்டியும் இன்னொரு மயிர்க்கொட்டியின் நேயத்துக்கும் இனவிருத்திக்கான கவர்ச்சிக்குமாக வடிவமைக்கப்பட்டதல்ல.
எவ்வாறாயினும், நாம் ஏற்றாக வேண்டிய உண்மைகள் உள்ளன: பேராசைக்கார மனிதர் தின்று வனங்கள் அழிவது போல, மயிர்க்கொட்டிகள் தின்று ஒரு மரமும் அழிவதில்லை. அதிலும் முக்கியமாக, மயிர்க்கொட்டிகளின்றி வண்ணத்துப் பூச்சிகளும் இல்லை.
எனவேதான் ஐயா அழகியற்காரரே, கவனமாய்க் கேளும்: மயிர்க்கொட்டியின் அழகியல் வாழ்க்கைப் போராட்டத்தின் அழகியல். தன் இனத்தின் நலன் வேண்டியே மயிர்க்கொட்டி மயிர்க்கொட்டியாக இருக்கிறது.
உமக்குப் போராட்ட இலக்கியமெல்லாம் மயிர்க்கொட்டிகளாகத் தெரிகிறது நியாயந்தான். அதேவேளை, உமது உன்னதங்கள் எல்லாம் உமது தற்காப்புக்கான ஒரு மயிர்ப்போர்வை போல ஒரு போராளிக்குத் தெரிவதும் அதே அளவு நியாயமானதல்ல!
முன்னை இட்ட தீ
முதலாளியத்தின் பெருமிதத்தைக் கூறும்
இரட்டைக் கோபுரங்கள் தீப்பற்றி எரிகின்றன.
வானுற நிமிர்ந்த தூண்கள்
ஒரு அராபிய சாம்சனின் கைகளில்
தூளாக நொருங்குகின்றன.
முழு உலகத்தையும் கைப்பற்ற அமெரிக்கா வகுத்த
ஐங்கோண வியூகத்தின்
ஒரு மூலை தகர்கின்றது.
தீ பரவுகிறது.
மரண ஓலங்களும் வேதனைக் கூச்சல்களும்
புகை மூட்டத்தினு}டு தடுமாறி வெளியேறுகின்றன.
தகவற் தொழில்நுட்பம்
உடனுக்குடன் செய்திகளைப் பரிமாறுகிறது.
அதிர்ச்சி, வேதனை, ஆவேசம், அழுகை, தவிப்பு ...
சிதைவுகளின் நடுவில்
மனிதாபிமானம் தலை நிமிர்கிறது:
அழுத கண்களைத் துடைக்கிறது:
துவண்ட தோள்களைத் தூக்கி நிறுத்துகிறது.
பழிக்குப் பழி என்ற மன நிறைவு:
பழிக்குப் பழி என்ற மன உளைவு.
என்றோ தொடங்கி இன்னமும் முடியாத போர்
இன்னுமொரு முறை பிரகடனமாகிறது.
சிறிய பயங்கரவாதத்தின் மீது பெரிய
பயங்கரவாதத்தின்
புதிய போர்ப் பிரகடனம்
மீசையில் ஒட்டிய மண்ணைப்
பிறர் காணாமற் துடைக்கிறது.
உலகின் இன்னுமொரு மூலையில்
செய்தி ஊடகங்களின் கவனிப்பின்றிக்
குண்டுகள் விழுகின்றன
குழந்தைகள், இளையோர், முதியோர்
பால் வேறுபாடின்றி அழிகின்றனர்
அவர்களது அவலத்தின் குரல்
வானலைகளைத் தொடுவதில்லை.
எங்கள் செவிகளில் விழுவதில்லை.
மரணங்கள் மலிந்த
பாலஸ்தீனத்தின் பிற்பகற் பொழுதொன்றில்
அமெரிக்காவின் அவலம்
குழந்தைகளை, இளையோரை, முதியோரை
வீதிக்கு வரவழைக்கிறது.
மரணங்களால் மரத்த நெஞ்சங்களை
அமெரிக்காவின் அவலம் மகிழ்வூட்டுகிறது.
அமெரிக்காவின் அவலம்
கைதட்டலாக, பாடலாக, இனிப்புப் பண்டமாக
வீதி வழியே பரிமாறப்படுகிறது.
பலஸ்தீனத்தின் பிற்பகற் பொழுதொன்றில்
ஒரு பாலஸ்தீன அராபியன்
மனம் நொந்து அழுகிறான்.
நேற்று இறந்த தனது நண்பனுக்காகவோ
இன்று இறக்கக் கூடிய ஒரு உறவினனுக்காகவோ
நாளை தனக்கு நிகழக் கூடிய
அழிவுக்கு அஞ்சியோ இல்லை.
கோபுரங்களை மோதி அழித்த விமானங்களிலோ
இராணுவச் செயலகத்தை
மோதி உடைத்த விமானத்திலோ
குறைந்தது
குறி தவறி விழுந்த விமானத்திலோ கூடத்
தானொரு சாட்சியாகவேனும் அமர
முடியவில்லையே என்று!
சுருங்கும் உலகில்
நம் நாட்டின் போர்ச் செய்தி மின்காந்த அலையாகி மேலெழும்பிக் கோள் மோதி வீட்டுக்குள் வருகிறது.
குஜராத் நிலநடுக்கம், சுமத்ராவின் எரிமலையின்
கோபம் கொலைவெறிகள் கண்முன்னே தெரிகிறது.
அமெரிக்கத் தேர்தல் இழுபறிகள், ஒலிம்பிக்கின்
ஓட்டம், பெரும் பாய்ச்சல் காண முடிகின்றது.
தென்னகத்துச் சினிநடிகர் லண்டனிலே நேர்காணல்
தமிழரெலாம் வாய்பிளந்து டுபாயில் பார்த்திருப்பார்.
நியூசிலாந்து அண்ணரும் நியூயோர்க்கு மைத்துனரும்
பாரிஸ் வாழ் அக்காவும் தொடர்பறுந்து போகாமல்
தொலைபேசி வழியாக மாதாந்த மாநாடு,
மின்னஞ்சல் தொடர்பாடல் தவறாமற் செய்கின்றார்.
இணையத் தளத்தமர்ந்து காசுபணம் பரிமாறிக்
கடைவரையும் போகாமல் பொருள்வாங்கிப் பெறுகின்றார்.
உலகம் சுருங்கித்தான் வருகிறது.
நான்வாழும் நெடுமாடித் தொடரினிலே முன்வீட்டில்
வாழ்ந்திருந்த முதியவரும் பலகாலம் நோய்ப்பட்டு
இருந்த கதைமுழுதும், இருவாரம் முன்னர் அவர்
இறந்த கதையோடு சாவீட்டு விவரமெலாம்
இன்றைக்குத் தானெனக்கு ஈமெயிலில் சொன்னார்கள்.
உலகம் சுருங்கித்தான் வருகிறது.
வாகனங்கள் : ஒரு தீக் கனவு
வாகனங்கள் பெருகுகின்றன
வீதிகள் விசாலமாகின்றன
நடைபாதைகள் மருங்காக விலகி
வீட்டு மதில்களை விழுத்துகின்றன
தோட்டங்களை மிதிக்கின்றன
கதவுகள், யன்னல்களைத் தட்டுகின்றன
“என் ஊஞ்சலை எங்கே தொங்க விடுவது?” - ஒரு சிறுமி
“நான் எங்கே பந்தை உதைப்பது?” - ஒரு சிறுவன்
“நான் எங்கே சுருட்டுப் புகைத்தபடி உலாவுவது?” - ஒரு கிழவர்
முறைப்பாடுகள் தொடர்கையில்
வாகனங்கள் பெருகுகின்றன
வீதிகள் விசாலமாகின்றன
நடைபாதைகள் மறைகின்றன
வீதிகள் வீட்டுச் சுவர்களை மிரட்டுகின்றன
“நான் எங்கே நடப்பது?” - ஒரு மாணவி
“நான் தெருவை எங்கே கடப்பது?” -
ஒரு அலுவலர்
“நான் எங்கே இரப்பது?” - ஒரு பிச்சைக்காரி
“நாம் எங்கே தொழில் செய்வது?” -
ஒரு செருப்புத் தொழிலாளி
ஒரு விபசாரி,
ஒரு நடைபாதை வியாபாரி
“நான் எங்கே குளிப்பது?”
“நான் எங்கே துணி துவைப்பது?”
“நான் எங்கே மலங் கழிப்பது?”
“நான் எங்கே சமைப்பது?”
“நான் எங்கே பரிமாறுவது?”
“நாம் எங்கே புணர்வது?”
“நான் எங்கே ...” -
ஒரு நடைபாதைக் குடும்பத்தின்
முடிவற்ற கேள்விகள்
வாகனங்கள் பெருகுகின்றன
வீதிகள் விசாலமாகின்றன
வீடுகள் உயர மிதக்கின்றன
இயலாதவை தரைக் கீழ்ப் புதைகின்றன
மனித நடமாற்ற மற்றும்
எங்கேயும் செல்லாமலும்
நகரத்தை நிரப்பி
வீதிகள் விசாலமாகின்றன
வாகனங்கள் விறைத்து நிற்கின்றன.
கருத்துகள்
கருத்துரையிடுக