நவதந்திரக் கதைகள்
சிறுகதைகள்
Backநவதந்திரக் கதைகள்
மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
உள்ளடக்கம்
வேதாரண்யம் என்ற ஊரில் விவேக சாஸ்திரி என்றொரு பிராமணன் இருந்தார். அவருக்கு மூன்று பிள்ளைகள்.
அந்த மூன்று பிள்ளைகளையும், மனைவியையும் வைத்துக் காப்பாற்றுவதற்குப் போதுமான நன்செய் நிலம் அவருக்கு இருந்தது.
ஆனால் பிள்ளைகள், மூவருக்கும் விவாகமாய்த் தலைக்கு ஓரிரண்டு குழந்தைகளும் பிறக்கவே, குடும்பம் மிகப் பெரிதாகிவிட்டது. ஆதலால், அவருடைய முதுமைப் பிராயத்தில் ஜீவனத்துக்கு சிரமமுண்டாய் விட்டது.
பிள்ளைகளுக்கு ஸம்ஸ்க்ருதப் படிப்புச் சொல்லி வைத்து ஒருவனை வேதாந்த
சாஸ்திரத்திலும், மற்றொருவனை வியாகரணத்திலும், மூன்றாமவனைத் தர்க்க சாஸ்திரத்திலும் தேர்ச்சியோங்கும்படி செய்து வைத்திருந்தார்.
கால நிலைமையால், அந்த வித்தைகள் வயிற்றுப் பிழைப்புக்குப் பயன்படவில்லை. பிறரிடம் பிச்சை கேட்க சம்மதமில்லாத மானமுள்ள குடும்பத்தாராதலால், அரைவயிற்றுக்கு ஆகாரம் செய்து கொண்டு கஷ்டத்திலிருந்தார்கள். இப்படியிருக்கையில், ஒரு நாள் விவேக சாஸ்திரி தமது கையில் தாதுவைப் பார்த்து இன்னும் ஒரு வருஷத்துக்கு மேலே தம்மால் ஜீவிக்க முடியாதென்று தெரிந்தவராகித் தம்முடைய மக்களை அழைத்துப் பின்வருமாறு சொல்லலானார்: -
வாரீர், மக்களே, நான் சொல்லப் போவதை சாவதானமாகக் கேளுங்கள். என்னுடைய ஜீவன் இவ்வுலகத்திலே இன்னும் ஒரு வருஷத்துக்கு மேலே நில்லாது. நான் உங்களுக்கு அதிகச் செல்வம் வைத்து விட்டுப்போக வழியில்லாமற் போய்விட்டது.
விதிவசமாக ஏற்பட்ட மதிமயக்கத்தால், உங்களுக்கு லௌகிக லாபங்கள் உண்டாகக்கூடிய வித்தைகள் கற்றுக் கொடுக்கத் தவறிவிட்டேன். உங்களுக்கோ குடும்ப பாரம் ஏற்கனவே மிகுதியாய் விட்டது; இன்னும் காலம் போகப் போக இதனிலும் அதிகப்படக்கூடும். நீங்கள் எப்படி இந்தச் சுமையைப் பொறுக்கப் போகிறீர்களென்பதை நினைக்கும்போது எனக்குக் கவலையுண்டாகிறது. ஆயினும், லௌகிக தந்திரங்களை நீங்கள் தெரிந்து கொள்ளும் பொருட்டுச் சில கதைகள் சொல்லி விட்டுப் போகிறேன். தினந்தோறும் விளக்கு வைத்தவுடனே என்னிடம் சிறிது நேரம் கதை கேட்க வாருங்கள். எனது காலத்துக்குப் பிறகு உங்களுக்கு இந்தக் கதைகள் பயன்படும்? என்றார்.
அப்படியே, பிள்ளைகள் சரியென்று அங்கீகாரம் செய்து கொண்டனர்.
பிள்ளைகளிலே மூத்தவன் பெயர் வாசு தேவன்; இரண்டாமவன் பெயர் காளிதாஸன்; மூன்றாவது பிள்ளைக்கு ஆஞ்சநேயன் என்று பெயர்.
--------
1. முதற் பகுதி
அன்று மாலை மூன்று பிள்ளைகளும் சந்தி ஜபங்களை முடித்துக்கொண்டு, பிதாவிடம் வந்து நமஸ்காரம் செய்து விட்டுக் "கதை" கேட்க வந்திருக்கிறோம் என்றார்கள்.
விவேக சாஸ்திரி தம் பிள்ளைகளை அன்புடன் உட்காரச் சொல்லி "குழந்தைகளே! நமது குலதேவதையாகிய காசி-விசாலாக்ஷியை ஸ்மரித்துக் கொள்ளுங்கள்" என்றார்.
அப்படியே மூவரும் கண்ணை மூடிக் கொண்டு சிறிது நேரம் தியானம் செய்து முடித்தார்கள். பிறகு பிதா கதை சொல்லத் தொடங்கினார்:
"கேளீர், மக்களே! ஒரு காரியம் தொடங்கும்போது அதன் பயன் இன்னதென்று நிச்சயமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அந்தப் பயன் நமக்கு வேண்டியதுதானா என்பதையும் ஆராய்ந்து செய்யவேண்டும். பயன்படாத காரியத்திலே உழைப்பவன் சங்கீதம் படிக்க போன கழுதை போலே தொல்லைப்படுவான்? என்றார்.
"அதெப்படி?" என்று பிள்ளைகள் கேட்டார்கள்.
காலநிலைமையால், அந்த வித்தைகள் வயிற்றுப் பிழைப்புக்குப் பயன்படவில்லை. பிறரிடம் பிச்சை கேட்க ஸம்மதமில்லாத மானமுள்ள குடும்பத்தா ராதலால், அரை வயிற்றுக்கு ஆஹாரம் செய்து கொண்டு கஷ்ட்த்தில் இருந்தார்கள்.
இப்படி இருக்கையில், ஒரு நாள் விவேக சாஸ்திரி தமது கையில் தாதுவைப் பார்த்து இன்னும் ஒரு வருஷத்திக்கு மேலே தம்மால் ஜீவிக்க முடியா தென்று தெரிந்தவராகி, தம்முடைய மக்களை அழைத்து பின்வருமாறு சொல்ல்லானார்:
“வாரீர், மக்களே, நான் சொல்லப்போவதை ஸாவதானமாக்க் கேளுங்கள்.
என்னுடைய ஜீவன் இவ் வுலகத்திலே இன்னும் ஒரு வருஷத்துக்கு மேலே நில்லாது. நான் உங்களுக்கு அதிகச் செல்வம் வைத்து விட்டுப்போக வழியில்லாமற் போய்விட்ட்து. விதிவசமாக ஏற்பட்ட மதிமயக்கத்தால், உங்களுக்கு லௌகிக லாபங்கள் உண்டாக்கக்கூடிய வித்தைகள் கற்றுக் கொடுக்கத் தவறிவிட்டேன். உங்களுக்கோ குடும்ப பாரம் ஏற்கனவே மிகுதியாய் விட்ட்து. இன்னும் காலம் போகப் போக இதனிலும் அதிகப்படக் கூடும். நீங்கள் எப்படி இந்தச் சுமையைப் பொறுக்கப் போகிறீர்க ளென்பதை நினைக்கும்போது எனக்குக் கவலை யுண்டாகிறது.
எனிலும், லௌகிக தந்திரங்களை நீங்கள் தெரிந்து கொள்ளும் பொருட்டுச் சில கதைகள் சொல்லிவிட்டு போகிறேன். தின்ந்தோறும் விளக்கு வைத்தவுடனே என்னிடம் சிறிது நேரம் கதை கேட்க வாருங்கள். எனது காலத்துக்குப் பிறகு உங்களுக்கு இந்தக் கதைகள் பயன்படும்” என்றார்.
------------
பிதா சொல்லுகிறார்:-
பொதிய மலைக் காட்டிலே, ரஸிக சிரோமணி என்றொரு கழுதையிருந்தது. அது புல்லாந் தரைகளிலே மேய்ந்து நன்றாகக் கொழுப்படைந்து வருகையில் வசந்த காலத்தில், ஒருநாள் மாலை, ஒரு மாமரத்தின் பக்கமாகப் போகும் போது, கிளையின்மேல் மதுகண்டிகை என்றதோர் குயில் பாடிக் கொண்டிருந்தது. அதை ரஸிக சிரோமணி சிறிது நேரம் நின்று கேட்டது. குயிலின் பாட்டு மனோகரமாக இருந்தது.
அந்தப் பாட்டிலே கழுதை மயங்கிப்போய் மதுகண்டிகையை நோக்கிச் சொல்லுகிறது: - "பெண்ணே, உன்பாட்டு எனக்குப் பரவச முண்டாக்குகிறது. ஆகா! சங்கீதத்தின் இன்பமே இன்பம்! உனது குரல் சன்னமானது. நமக்குக் கனத்த சாரீரம். உனக்குள்ள பயிற்சியும் திறமையும் நமக்கிருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். காட்டிலுள்ள மிருகங்களெல்லாம் கேட்டு வியப்படையும். சிங்க ராஜா நம்மை சமஸ்தானத்து வித்வானாக நியமனம் செய்வார். "இந்தக் காட்டிலுள்ள புல்லாந்தரைகளிலே ரஸிக சிரோமணி ஒருவன்தான் மேயலாம். மற்ற எந்த மிருகமும் மேயக் கூடாது? என்று கட்டளை பிறப்பித்துவிடுவார். பிறகு நமக்கு யாதொரு வேலையு மேற்படாது. நமது நிலைமை மிகவும் கொண்டாட்டமாய் விடும்."
இவ்வாறு ரஸிக சிரோமணி மேன்மேலும் சொல்லிக் கொண்டு போவதைக் கேட்டுக் குயில் சிரிப்புடன்:- "கேளாய், ரஸிகமாமா, உனக்கு இந்தத் தொழில் வரமாட்டாது. வீணாக மனோராஜ்யம் பண்ணுவதிலே பயனிலை" என்றது.

கழுதைக்குக் கோபமுண்டாய்விட்டது. கழுதை சொல்லுகிறது:-
"செல்வமும், அழகும், கல்வியும், வலிமையும் ஜந்துக்களுக்கு அதிக கர்வத்தை உண்டாக்குகின்றன. தன்னைக் காட்டிலும் இந்த நிமிஷம் ஒரு விஷயத்திலே தணிந்திருப்பவன் எப்போதும் தணிவாகவே யிருப்பானென்று மூடன் நினைக்கிறான். எந்தத் தொழிலும் யாருக்கும் வரும். வருந்தினால் வாராத தொன்றுமில்லை. பார்ப்பாரப் பிள்ளைக்கு வியாபாரத் தொழில் வாராதென்று சொல்லி நகைத்த செட்டி அவமானமடைந்த கதை உனக்குத் தெரியாதோ?"
"அதென்ன கதை?" என்று மதுகண்டிகை கேட்டது.
----------
அப்போது ரஸிக சிரோமணி சொல்லுகிறது:-
கேளாய், கர்வம் பிடித்த மதுகண்டிகை யென்ற குயிற் பெண்ணே! பல வருஷங்களின் முன்பு மதுரை மாசி வீதி மளிகை மாணிக்கஞ் செட்டி என்றொருவனிருந்தான். அவனுடைய தந்தை மளிகை வியாபாரஞ் செய்து கடன்பட்டு வீடு வாசலையிழந்து ஏழ்மையிலே இறந்து போனான். பின்பு மாணிக்கஞ் செட்டியின் தாய் கடலை சுண்டலும், தோசையும் விற்றுச் செட்டாகக் குடித்தனம் பண்ணித் தன் பிள்ளையை வளர்த்து வந்தாள். மாணிக்கஞ் செட்டிக்குப் பத்து வயதானவுடன் அவனை ஒரு பெரிய வியாபாரி தனது கடையிலே மாதம் அரை ரூபாய் சம்பளத்துக்கு வைத்துக் கொண்டான். இவன் தாயாரிடத்திலிருந்து செட்டு, கருத்து முதலிய நல்ல குணங்களைப் பயின்றவனாதலால், பெரிய வியாபாரிக்கும் இவன் மேலே தயவும் நம்பிக்கையும் உண்டாயின.
பெரிய வியாபாரிக்குப் பிள்ளையில்லை. ஒரே பெண். அவள் பெயர் மரகதவல்லி. நாளடைவில் மாணிக்கஞ் செட்டியை வியாபாரி தன் கடையில் பங்காளியாகச் செய்து கொண்டான். தன் மகளை இவனுக்கே விவாகம் செய்து வைத்தான். அவன் இறந்த பிறகு உடைமையெல்லாம் மருமகனுக்கே வந்துவிட்டது. மதுரை மாசி வீதி மளிகைக் கடை மாணிக்கஞ் செட்டி என்று பிரக்யாதி ஏற்பட்டு விட்டது. இந்த மாணிக்கஞ் செட்டியினிடம், பதினாறு வயதுள்ள மானி அய்யன் என்ற பார்ப்பாரப் பிள்ளை ஒருவன் வந்தான்.
"ஐயரே, என்ன வேண்டும்?" என்று செட்டி கேட்டான்.
"தங்களுடைய கடையிலே எனக்கொரு வேலை போட்டுக் கொடுக்க வேண்டும்" என்று சிறுவன் சொன்னான்.
"உனக்கென்ன தெரியும்?"
"எனக்கு எண்சுவடி முழுதும் நான்றாகத் தெரியும். கணக்குப் பதிவு தெரியும். கூடிய வரை எழுதப் படிக்கத் தெரியும்.?
இதைக் கேட்டவுடனே செட்டி நகைத்தான்.
"பார்ப்பாரப் பிள்ளைகள் வந்தால் அவர்களுக்கு ஒரு விஷயம் தெரியாதென்று சொல்லும் வழக்கமே கிடையாது. எதுவும் தெரியும். ஐயரே, போய் வாரும். இவ்வளவு தெரிந்த பிள்ளைகள் நம்மிடம் வேலைக்கு வேண்டாம்? என்று சொன்னான்.
"சரி? என்று மானி அய்யன் வெளியிற் போனான்.
"இங்கே வருக ஐயரே" என்று மாணிக்கஞ் செட்டி திரும்பவும் அவனைக் கூப்பிட்டான். சிறுவன் திரும்பி வந்தான்.
"ஐயரே! நீர் முந்திச் சித்திரை வீதியில் முருகச் செட்டியார் கடையில் இருக்க
வில்லையா?" என்று செட்டி கேட்டான்.
மானி :- "ஆம்" என்றான்.
செட்டி: "அங்கிருந்து ஏன் வெளியேறி விட்டீர்?"
: "எனக்கும் முருகச் செட்டியாருக்கும் குணம் ஒத்து வரவில்லை."
செட்டி: "அதென்ன விஷயம் காணும்?"
மானி : "நம்முடைய குணம் அவருக்குப் பிடிக்கவில்லை. அவருடைய குணம் எனக்குப் பிடிக்கவில்லை. அவ்வளவு தான்."
செட்டி :- "அதுதான் என்ன விஷயம்?" என்று கேட்டேன்.
மானி : "அதை இவ்விடத்தில் விளங்கச் சொல்வதில் பிரயோஜனம் இல்லை."
செட்டி : "ஏன்? குற்றம் உம்முடையதுதானோ?"
மானி - "என்மேல் ஒரு குற்றமும் இல்லை. ஒருநாள் என்னைக் கடையில் வைத்துவிட்டு வெளியே போனார். அவருடைய மகனும் அன்று கடைக்கு வரவில்லை. கடையில் என்னைத் தவிர வேறு யாருமே கிடையாது. இப்படியிருக்கையில், சங்குத் தேவன் என்ற மறவன் வந்து, "செட்டியார் எங்கள் வீட்டிலேயிருக்கிறார். ஐந்து துலாம் சர்க்கரை வாங்கிக்கொண்டு வரச்சொன்னார். அவருடைய சொந்தச் செலவுக்கு வேண்டுமாம். தனது பற்றென்று எழுதச் சொன்னார்" என்றான்.
"அந்தச் சங்குத்தேவன் அந்தச் செட்டியாருடன், உயிருக்குயிரான சிநேகம் என்பதும் எனக்குத் தெரியும். நான் எப்படிக் கொடுக்காமலிருப்பது "செட்டியாரிடம் நேரிலே போய் கேட்டுக் கொண்டு செய்யலாமென்றால், கடையை யாரிடம் ஒப்புவித்து விட்டுப் போவது? மறவனிடம் ஒப்புவித்து விட்டு வரலாமென்றாலோ ஐந்து துலாம் சர்க்கரைக்கு நம்பக் கூடாத மனிதனிடம் கடையை விட்டு விட்டு வரலாமா? நான் சர்க்கரையைக் கொடுத்து விட்டேன்.
"செட்டியார் வந்தார். "சங்குத்தேவனுக்குச் சர்க்கரை கொடுத்தாயா? , என்று கேட்டார். ஆமென்றேன். "எவ்வளவு கொடுத்தாய்? என்றார். 'ஐந்து துலா' மென்றேன். 'யாருடைய உத்தரவின் மேலே கொடுத்தாய்" என்றார். 'உங்களுடைய உத்தரவின் மேலே' என்றேன். 'நான் எப்போது உன்னிடம் உத்தரவு கொடுத்தேன்' என்றார். 'சங்குத்தேவனிடம் உத்தரவு கொடுத்ததாக அவன் சொன்னா' னென்றேன். 'அவன் சொன்னால் உனக்குப் புத்தி எங்கே போச்சுது' என்றார்.
”எனக்குக் கொஞ்சம் கோபம் வந்துவிட்டது. என் புத்தியைப் பற்றிப் பேச்சில்லை. உம்முடைய சிநேகிதன்தானே அவன்? பொய் சொல்லமாட்டானென்று நினைத்துக் கொடுத்து விட்டேன். குற்றமாக இருந்தால் என்மேல் பற்று எழுதிவிடலாம்?” என்று சொன்னேன்.
”முருகச் செட்டிக்கு என் மேலே நெடுநாளாகக் கோபம். சிதம்பரத்திலிருந்து வந்திருக்கும் அவருடைய மைத்துனனை என்னுடைய ஸ்தானத்துக்கு வைத்து விட வேண்டுமென்று அவருக்கு வீட்டிலே போதனை ஏறிவிட்டது. என்னை வெளியே போகச் சொல்வதற்கு என்ன உபாயம் செய்யலாமென்று பல நாளாக யோசனை செய்து வந்தார். இதனால் நான் மரியாதையாகச் சொல்லிய வார்த்தையை அவர் அதிகப் பிரசங்கித்தனமென்று பாராட்டி "ஐயரே! நாளை முதல் வேறு கடையிலே வேலை பார்த்துக்கொள்ளும். இன்று மாலை வீட்டுக்குப் போகும்போது சம்பளம் கணக்குத் தீர்த்து வாங்கிக்கொண்டு போகலாம்? என்று சொன்னார். நான் சரியென்று விலகிவிட்டேன். இவ்வளவுதான் நடந்த சங்கதி.?
அப்போது மாணிக்கஞ் செட்டி கேட்கிறான்:-
"உம்முடைய பெயரென்ன?"
மானி : "என்னுடைய பெயர் மானி அய்யன்."
செட்டி :"உமது பிதாவின் பெயரென்ன?"
மானி : "அவர் பெயர் சீதாராமையர்."
செட்டி : "அவர் உயிரோடிருக்கிறாரா?"
மானி : "இல்லை; இறந்து போய்விட்டார்"
செட்டி : "வீட்டிலே தாயார் இருக்கிறார்களா?"
மானி: "ஆம்." செட்டி - "இன்னும் எத்தனை பேருண்டு, குடும்பத்திலே?"
மானி : "வேறு யாரும் கிடையாது. எனக்குக்கூடக் கலியாணம் ஆகவில்லை."
இதைக் கேட்டு செட்டி நகைத்தான்.
"ஏன் ஐயரே! கலியாணம் ஆகவில்லையென்று வருத்தந்தானோ? பார்ப்பாரப் பிள்ளைகளுக்கு வயிற்றுச் சோறு தேடு முன்பாகவே பெண்டாட்டி பிள்ளைகள் இல்லாவிட்டால் சுகப்படாது. குடும்பத்தை முதலாவது பெரிதாகச் செய்து வைத்துக் கொண்டால் பிறகு பிச்சை யெடுப்பது சுலபம். ஆள் கூட்டம் அதிகமாகத் திரட்டிக்கொண்டு மேளதாளத்துடன் பிச்சைக்குப் போகலாம்" என்றான்.
மானி :"செட்டியாரே! எனக்கு விவாகத்திற்குப் பணவுதவி செய்யும்படி உங்களிடம் யாசகத்துக்கு வரவில்லை. வேலை செய்தால் சம்பளமுண்டோ என்று கேட்க வந்தேன். இல்லை யென்றீர்கள். நான் திரும்பிப் போனேன். போனவனை மறுபடியும் அழைத்துப் புண்படுத்த வேண்டாம்."
செட்டி : "எத்தனை வயதிலே விவாகஞ் செய்து கொள்வீர்?"
மானி : "அதைப்பற்றி நான் இப்போது யோசிக்கவில்லை."
செட்டி : "உம்முடைய தாயார் யோசிக்கவில்லையா?"
மானி :"எனக்குத் தெரியாது."
செட்டி : "கலியாண விஷயத்திலே தாயார் வார்த்தை தானே கேட்பீர்?"
மானி : "நிச்சயமில்லை."
செட்டி - "பின், என்ன செய்வீர்?"
மானி - "நான் குடும்ப சம்ரக்ஷணைக்கு முயற்சி வேண்டி அலைகிறேன். தாங்கள் சம்பத்திலிருக்கிறீர்கள். உங்களுக்கு சந்தோஷமாக வார்த்தை சொல்லிக் கொண்டிருக்க நேரமிருக்கிறது. என்னைப் பகவான் அந்த நிலையில் வைக்கவில்லை."
செட்டி : "ஐயரே! வீட்டுக்குப் போகவேண்டுமா? அவசரமா? இன்று போஜனச் செலவுகளுக்கு ஒன்றும் வேண்டாமோ?" என்றான்.
இதைக் கேட்டவுடன் மானிக்குக் கோபமுண்டாய்விட்டது.
மானி அய்யன் சொல்லுகிறான்: -
"செட்டியாரே, மீனாக்ஷியம்மையின் கிருபையால் நமது வீட்டிலே, இன்னும் அநேக மாதங்களுக்கு வேண்டிய உணவு சேர்த்திருக்கிறேன். என்னுடைய தாயார் பேருக்குக் கொஞ்சம் நிலமும் உண்டு. இவ்விடத்தில் நமது முயற்சி நிறைவேற வழியில்லா விட்டால் வேறிடத்துக்குப் போகலாமே, இங்கிருந்து வீண் வார்த்தை சொல்வது நியாயமில்லையென்ற கருத்தின்மேல் நான் அவசரப்பட்டேன், அதைத் தவிர வேறொன்றுமில்லை.
"இப்போது, தாங்கள் கேள்வி கேட்டு வரும் மாதிரியைப் பார்க்கும்போது, இன்னும் சற்று நேரம் இங்கிருந்து தங்களுக்குச் சில விஷயங்கள் சொல்லிவிட்டுப் போகலாமென்ற எண்ண முண்டாகிறது. நம்மூர் வியாபாரிகள் விஷயமாக, எனக்குள்ள சில கருத்துக்களைத் தங்களைப்போன்ற மனிதரிடம் சொல்லித் தீர்த்தாலொழிய என் மனம் ஆறுதலடைய மாட்டாது. வேலைக்குக் கேட்க வந்த இடத்திலே அதிகப் பேச்சு வைத்துக் கொள்ளக்கூடாதென்று நினைத்தேன். தாங்கள் தொளைத்துத் தொளைத்துக் கேட்பதைப் பார்த்தால், தங்களுக்கு இப்போது உல்லாச நேரம் போலே தோன்றுகிறது. ஆகையால் உங்களிடமே சொல்லலாமென்று தீர்மானம் செய்கிறேன்."
அதற்கு மாணிக்கஞ் செட்டி : "சொல்லும் ஐயரே, மனதுக்குள் வைத்துக் கொண்டு குமைய வேண்டாம். பணம் தேடி வைத்தவர்களைத் தேடத் திறமில்லாதவர் எப்படிக் கெல்லாம் சீர்திருத்த உத்தேசங் கொண்டிருக்கிறார்களென்பதைக் கண்டுபிடிப்பதிலே எனக்கும் ருசியுண்டு. சொல்லும், உம்முடைய கொள்கைகளைக் கேட்போம்" என்றான்.
மானி அய்யன் : "வடக்கு தேசத்திலிருந்து சில வியாபாரிகள் இங்கே அடிக்கடி வருகிறார்கள். அவர்களுடன் நான் கொஞ்சம் வழக்கப்பட்டிருக்கிறேன். அவர்களுக்குள்ள வியாபாரத் திறமையும் புத்தி நுட்பமும் நம்மூர் வியாபாரிகளிட-மில்லை. இது முதலாவது சொல்ல வேண்டிய விஷயம். இவ்விடத்து வியாபாரிகளிடம் இருக்கிற கருவத்துக்குத் தகுந்தபடி புத்திசாலித்தனமில்லை. இனி, இரண்டாவது விஷயம் சொல்லுகிறேன். க்ஷேமத்துடனும் செழிப்புடனும் ஊர் இருந்தாலொழிய வியாபாரம் செழிக்காது. வியாபாரத்துக்கு மகிமை வரவேண்டுமானால் ஊருக்கே ஒரு மகிமை வரவேண்டும். இந்த விஷயம் இதுவரை தங்களிடம் எவனும் சொல்லியிருக்க மாட்டான்."
மாணிக்கஞ் செட்டி : "எனக்கே தெரியும். இந்த ரகஸ்யம் யாரும் சொல்ல வேண்டியதில்லை. சரி, மேலே கதையை நடத்தும்."
மானி அய்யன் : "கதையில்லை, செட்டியாரே, காரியம். இனி மூன்றாவது விஷயம் யாதெனில் இந்த வியாபாரிகளுக்குக் குமாஸ்தாக்களிடம் சரியாக வேலை வாங்கத் தெரியவில்லை. ஏனென்றால், முதற் காரணம், சம்பளம் நேரே கொடுக்க மனம் வருவதில்லை. ஒரு மனிதனால் நாம் லாபமடைய விரும்பினால் அவனுக்கு வயிறு நிறையச் சோறு போட வேண்டும். வெளியிலிருந்து வரும் புத்திசாலியைக் காட்டிலும் குடும்பத்தைச் சேர்ந்த மூடனே விசேஷமென்று நினைக்கக்கூடாது. மூடனிடம் உன்னுடைய காரியத்தை ஒப்புவித்தால் அவன் அதைக் குட்டிச்சுவராக்கிப் போடுவான். தவிரவும், முகஸ்துதி செய்பவனையும், பொய் நடிப்புக் காட்டு -வோனையும், தலையிலே வைத்து, சாமர்த்திய முள்ளவனையும், யோக்கியனையும் கீழே போடக் கூடாது. ஒரு நாளில் இத்தனை நாழிகைதான் வேலையுண்டு என்ற கட்டுப்பாடிருக்கவேண்டும். அதிக நேரம் வேலை வாங்குவதும், நினைத்த பொழுதெல்லாம் ஆள்விட்டு அழைப்பதும் குற்றம். இன்னும் சொல்லவா?"
மாணிக்கஞ் செட்டி : "ஐயரே, கொஞ்சம் இலேசாக அடக்கும். குமாஸ்தாக்களிடமுள்ள குற்றத்தைச் சொன்னால், உமக்கு விஷயம் பூராவாகத் தெரியும். குமாஸ்தாக்களிடம் நாணயமில்லை. பணக்கார பிள்ளைகள் வெளியே ஒரு கடையில் சிறிய சம்பளம் வாங்கி வேலை பழகப் போவது கௌவரக் குறைவென்ற மூட எண்ணத்தால் கிடைப்பதில்லை. வருவோனெல்லாம் கோவணாண்டி; பணப் பொறுப்பையும் காரியப் பொறுப்பையும் அவர்களிடம் அதிகமாக ஒப்புவிக்க இடமில்லை. அவர்களுக்குக் குற்றேவல் செய்து தயவு சம்பாதிப்பதிலே தான் உற்சாக முண்டாகிறது. உழைப்பிலும் கருத்திலும் உற்சாகமில்லை. எப்படியிருந்தாலும், ஏழைக்கு ஏழைப் புத்திதானே ஏற்படுங்காணும்? நமது பந்துவாக இருந்தால் மூடனானாலும் அதிக வஞ்சனை பண்ணமாட்டானென்று நினைக்கலாம்."
மானி அய்யன் : "அதுதான் நினைக்கக் கூடாது. 'உடன் பிறந்தார் சுற்றத்தா-ரென்றிருக்க வேண்டா; உடன் பிறந்தே கொல்லும் வியாதி' என்ற வசனம் கேட்டதில்லையோ?"
மாணிக்கஞ் செட்டி : "தெரியுங்காணும்! ஆகவே இரண்டும் கஷ்டமாகிறது. மடத்தாண்டி கையிலே பணத்தைக் கொடுப்பது புத்திசாலித்தனமா? ஊரான் கெடுத்துக் கெடுவதைக் காட்டிலும் நம்மவனால் கெடுவோமே!?
மானி : "செட்டியாரே, கெடவா வியாபாரம் பண்ணுகிறோம். ஜீவிக்க வியாபாரம் செய்கிறோம். ஓரிடத்திலே தக்க காரியஸ்தன் கிடைக்காவிட்டால் மற்றோரிடத்திலிருந்து தருவித்துக் கொள்ள வேண்டும். எந்தக் கணக்குக்கும் ஒரு தீர்வையுண்டு; எந்தச் சிக்கலுக்கும் அவிழ்ப்புண்டு."
இவ்வாறு மானி அய்யன் சொல்லியதைக் கேட்டு, மாணிக்கஞ் செட்டி சிறிது நேரம் யோசனை செய்யலானான்,
மாணிக்கஞ் செட்டி யோசிக்கிறான்:-
"பார்ப்பான் கெட்டிக்காரன். நாம் எடுத்திருக்கும் ஆலோசனைக்கு இவனை உதவியாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் நமது நோக்கத்தை இவன் தெரிந்து கொள்ளக் கூடாது. தெய்வம் விட்டது வழி. ஒரு கை பார்ப்போம்."
இப்படி யோசித்து மாணிக்கஞ் செட்டி சொன்னான்:-
"ஐயரே, ஒரு மூன்று மாசத்துக்கு உம்மை ஒரு சோதனைக்காகக் கடையிலே அமர்த்திக் கொள்ளுகிறேன். மூன்று மாசத்துக் கப்பால் என் மனதுக்குப் பிடித்தால் வேலை உறுதிதான். பிடிக்காவிட்டால், விலகிக் கொள்ள வேண்டும். முதல் மூன்று மாசத்துக்குச் சம்பளம் கிடையாது. உம், சம்மதமா?"
பார்ப்பாரப் பிள்ளை தன் மனதுக்குள்ளேயே "அட லோபிப் பயலே" என்று வைது கொண்டான்; சொல்லுகிறான்:- "செட்டியாரே, மூன்று மாசம் வேலை பார்க்கிறேன். பிறகு திருப்தியானால் வேலை உறுதி, இல்லாவிட்டால் அவசியமில்லை. அது உங்களுடைய இஷ்டம்போலே. ஆனால் உழைக்கிற நாள் சம்பளம் கையிலே கொடுத்து விடவேண்டும். சம்மதமா?" என்றான்.
"என்ன ஐயரே, விறைப்பிலே கேட்கிறீரே?" என்றான் செட்டி.
"சாதாரணமாகத் தான் கேட்டேன்" என்றான் பார்ப்பான்.
செட்டி சொல்லுகிறான்: - ஐயரே, போய் ஒரு வாரங் கழித்துத் திரும்பி வாரும். அப்போது அவசியமானால் சொல்லுகிறேன்."
அதற்குப் பார்ப்பான்: "செட்டியாரே, அவசியமாக இருந்தால் தாங்கள் சொல்லியனுப்ப
வேண்டும். நானாக வர சௌகர்யப்படாது" என்றான். செட்டி கடகடவென்று நகைத்தான். பிறகு சொல்லுகிறான்: "ஐயரே, கொஞ்சம் இலேசாக அடக்கும். நமக்குப் பார்ப்பார் கிடைப்பது கஷ்டமில்லை காணும். உமக்குச் செட்டி கிடைப்பது கஷ்டம்" என்றான்.
"ஐயரே, போய் வாரும்" என்று செட்டி சொன்னான். இவன் சரியென்று வீட்டுக்கு வந்துவிட்டான்.
நாள் இரண்டாயின. மாணிக்கஞ் செட்டிக்கு ஒரு பெரிய சங்கடம் வந்து சேர்ந்தது. அவனுக்கு ஒரு மைத்துனன். அந்த மைத்துனன் பெயர் தட்டிக் கொண்டான் செட்டி. இவனை மாணிக்கஞ் செட்டி தனது காரியஸ்தனாகத் தஞ்சாவூரிலே வைத்திருந்தான். தஞ்சாவூரில் மாணிக்கஞ் செட்டிக்கு ஒரு கடையும் கொஞ்சம் கொடுக்கல் வாங்கலும் உண்டு.
தட்டிக் கொண்டான் செட்டி நஷ்டக் கணக்குக் காட்டுவதிலே புலி. ஒரே அடியாகப் பெரிய தொகையை அழுத்திக்கொண்டு கணக்குக் காட்டிவிட்டான். அந்த நஷ்டக் கணக்கு மாணிக்கஞ் செட்டிக்கு வந்தது. ஓலையை விரித்து வாசித்துப் பார்த்தான். வயிறு பகீரென்றது.
"கெடுத்தானே பாவி! கெடுத்துப் போட்டானே! இனி என்ன செய்யப் போகிறோம்" என்று மிகவும் துன்பப்பட்டான்.
ஆனாலும், ஒருவாறு மனதைத் தேற்றிக்கொண்டு மேலே நடக்க வேண்டிய காரியத்தைப் பார்ப்போமென்று சொல்லி, "இப்போது தஞ்சாவூருக்கு அனுப்ப ஒரு தகுதியான மனுஷன் வேண்டுமே. யாரை அனுப்புவோம்" என்று யோசித்தான்.
மானி அய்யருடைய ஞாபகம் வந்தது. "அவனைக் கூப்பிடுவோம்"? என்று தீர்மானம் செய்துகொண்டு ஒரு ஆள் அனுப்பினான். மானி அய்யன் வந்து சேர்ந்தான்.
வாரும், அய்யரே" என்றான் செட்டி.
"தங்களுடைய உத்தரவுக்குக் காத்துக் கொண்டிருக்கிறேன்" என்று மானி அய்யன் வணக்கத்துடன் சொன்னான்.
"பார்ப்பான் கெட்டிக்காரன்" என்று செட்டி தன் மனதிலே நினைத்துக் கொண்டான்.
ரஸிக சிரோமணி என்னும் கழுதை சொல்லிற்று:
"மேற்படி மாணிக்கஞ் செட்டி பார்ப்பானை நகைத்தது போல் நீயும் என்னை இப்போது நகைக்கிறாய், பின்னிட்டு என்னை நீயே மெச்சுவாய்."
அதற்குக் குயில் சொல்லிற்று: -
"ரஸிக மாமா, உனக்குச் சங்கீதமும் வராது. கதை சொல்லவும் தெரியவில்லை" என்றது.
கழுதைக்குக் கோபம் வந்துவிட்டது. "எனக்கா வராது? எனக்கா? என்னையா சொல்லுகிறாய்? என்னைத்தானா?" என்றது.
"ஆம், ஆம், ஆம், ஆம்? என்று குயில் நான்கு தரம் சொல்லிற்று.
"உனக்கு இத்தனை மதமா?" என்றது கழுதை.
"அட, உண்மையைச் சொல்லக் கூடாதா?" என்றது குயில்.
"சொல்லக்கூடாது" என்றது கழுதை. "சொல்லலாம்? என்றது குயில்.
"நீ அந்த மரத்திலிருந்து கொஞ்சம் இறங்கிக் கீழே வா" என்றது கழுதை.
"நீ தான் தயவுசெய்து இங்கே கொம்பின்மேலே ஏறி வா" என்று சொல்லிக் குயில் நகைத்தது.
கழுதை மகா கோபத்துடன் அங்கிருந்து புறப்பட்டது.
குயில்: "மாமா, மாமா, கோபித்துக் கொண்டு போகாதே. இங்கே வா. ஒரு பேச்சுக் கேள்" என்று கூப்பிட்டது.
கழுதை திரும்பி வந்தது.
குயில் கேட்கிறது : "அந்த மாணிக்கஞ் செட்டிக் கதையை எடுத்தாயே, அதை முழுதும் சொல்லவேண்டாமா?"
கழுதை: "உனக்குத் தெரியவேண்டிய அளவு சொல்லியாய் விட்டது. மிச்சம் உனக்குத் தெரியவேண்டிய அவசியமில்லை" என்றது.
குயில் : "பாதிக் கதையிலே நிறுத்தினால் அடுத்த ஜன்மம் பேயாகப் பிறப்பாய். சங்கீதம் இதைவிட இன்னும் துர்லபமாகப் போய்விடும்" என்றது.
அப்போது கழுதை பயந்து போய், "பாதிக் கதையிலே நிறுத்தினால் பேய்ப் பிறவியா? உண்மைதானா?" என்று கேட்டது. கழுதைக்கு மறு ஜன்ம நம்பிக்கை மிகவும் தீவிரம்.
குயில் சொல்லிற்று : "ஆமாம். உண்மைதான். எங்கள் தாத்தா சொன்னார்."
குயிலுடைய தாத்தா சொன்னால் உண்மையாகத்தான் இருக்குமென்று கழுதைக்குச் சரியான நம்பிக்கை ஏற்பட்டது.
"அப்படியானால் கதை முழுதையும் சொல்லி விடலாமா?" என்று கழுதை கேட்டது.
"சொல்லு. அதற்கு நடுவிலே நான் ஒரு சின்னக் கதை சொல்லி முடித்துவிடுகிறேன்."
"உன் கதைக்குப் பெயரென்ன?" என் று கழுதை கேட்டது.
குயில் - "ரோஜாப் பூக்கதை?
"சொல், சொல்? என்று கழுதை துரிதப்படுத்திற்று.
குயில் சொல்லலாயிற்று.
-----------
மதுகண்டிகை என்ற குயில் சொல்லுகிறது:-
பழைய காலத்திலே, வஞ்சி நகரத்தில், ஒரு தோட்டத்து வேலியிலே, ஒரு பாம்பு தனது பெண் குட்டியுடன் வாசம் செய்தது. அந்தக் குட்டி மிகவும் அழகாக இருந்ததனால் அதற்கு "ரோஜாப்பூ" என்று பெயர்.
ஒருநாள் இரவிலே தாய்ப்பாம்பும், குட்டியும் புதரிலிருந்து வெளிப்பட்டுக் காற்று வாங்கிக்கொண்டிருக்கையில், குட்டி தாயை நோக்கிக் கேட்கிறது:
"அம்மா! நம்மை எல்லாரும் ஏன் பகைக்கிறார்கள்? நம்மை வீதியிலே எந்த மனிதன் கண்டாலும் கல்லால் எறிகிறானே, காரணமென்ன?"
தாய் சொல்லுகிறது:- "குழந்தாய், நமது ஜாதிக்குப் பல்லிலே விஷம். நாம் யாரையேனும் கடித்தால் உடனே இறந்துபோய் விடுவார்கள். இதனால் நம்மிடத்திலே எல்லாருக்கும் பய முண்டாகிறது. பயத்திலிருந்து பகையேற்படும். அதுதான் காரணம்.?
இங்ஙனம் தாய்ப் பாம்பும் குட்டியும் வார்த்தை சொல்லிக் கொண்டிருக்கையில் பக்கத்திலே ஒரு முனிவர் நடந்து சென்றார். அவர் இந்தப் பாம்புகளைப் பார்த்துப் பயப்படவில்லை. ஒதுங்கவில்லை. திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. அவர் பாட்டிலே போனார். இதைப் பார்த்து ரோஜாப் பூ மிகவும் ஆச்சரியப்பட்டுத் தனது தாயிடம் கேட்கிறது:-
"ஏனம்மா, இவர் மாத்திரம் பயப்படாமல் போகிறாரே, அதென்ன?"
தாய் சொல்லுகிறது:- "இவர் சித்தர். நாம் கடித்தால் சாகமாட்டார். இவருக்குிலே பயமில்லை. ஆகையால் பகையில்லை. இவர் பெரிய ஞானி. இவர் வரங் கொடுத்தாலும் பலிக்கும்; சாப மிட்டாலும் பலிக்கும்."
இவ்வாறு தாய் சொல்லியதைக் கேட்டவுடனே குட்டி சிறிது நேரம் ஏதோ யோசனை செய்து பார்த்துப் பிறகு "அம்மா, இவர் எங்கே குடியிருக்கிறார்?" என்று கேட்டது.
"அதோ தெரிகிறது பார், தூரத்திலே ஒரு கிராமம். அதற்குக் கிழக்கே ஒரு சுனையும் பக்கத்திலே ஒரு தோப்பும் இருக்கின்றன. அந்தத் தோப்பிலே இவர் குடியிருக்கிறார்" என்று தாய் சொல்லிற்று.
சில நாளுக்கப்பால் இந்தப் ரோஜாப் பூ என்ற பாம்புக் குட்டி தனியே முனிவர் இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தது. அவர் ஒரு மரத்தடியிலே உட்கார்ந்திருந்தார். காலிலே போய் விழுந்தது. "என்ன வேண்டும்?" என்று கேட்டார்.
"ஒரு வரம்? என்றது.
"என்ன வரம்?" என்று கேட்டார்.
"நான் நினைத்தபோது மிகவும் அழகான ஒரு மனிதப் பெண்ணாக மாறவேண்டும்" என்று பாம்புக் குட்டி சொல்லிற்று.
"எதன் பொருட்டு?" என்றார்.
"இந்த ஜன்மத்தை எல்லாரும் பகைக்கிறார்கள். ராஜகுமாரர் பார்த்தாலும் பிரியப்படத்தக்க ரூபம் எனக்கு வேண்டும்" என்றது.
பாம்பின் நோக்கத்தைத் தெரிந்துகொண்டு முனிவர் சொல்லுகிறார்: "சரி, உனக்கு அப்படியே நினைத்தபோது மனுஷரூபம் வரும்; ஆனால் எவனிடத்தில் வார்த்தை சொல்லும்போது உனக்குப் பயமேற்படுகிறதோ அவனுடன் அதிக நேரம் தங்கக்கூடாது. தங்கினால் அவனாலே உனக்கு மரணம் நேரிடும்" என்று விடை கொடுத்தனுப்பினார்.
பின்னொரு நாள் இரவில் ரோஜாப் பூ மனிதப் பெண் வேஷந்தரித்துக் கொண்டு, வஞ்சி ராஜாவின் அரண்மனையைச் சார்ந்த சோலையிலே ராஜகுமாரன் விளையாடும் நிலா முற்றத்துக்கருகே போய் நின்று கொண்டிருந்தது. அங்கு ராஜகுமாரன் வந்தான். இந்தப் பெண்ணை நோக்கி இவள் அழகை வியந்து "நீ யார்?" என்று கேட்டான்.
"சிங்கள ராஜன் மகள்? என்று ரோஜாப் பூ சொன்னாள். ராஜகுமாரன் திகைத்துப் போய் "என்னது! சிங்கள ராஜ்யமா? இந்த நேரத்திலே இங்குத் தனியே எப்படி வந்தாய்? யாருடன் வந்தாய்?" என்றான்.
அதற்கு ரோஜாப் பூ: "எனக்கொரு முனிவர் ஒரு மந்திரங் கற்றுக் கொடுத்திருக்கிறார். அதைக்கொண்டு நினைத்த வேளையில் நினைத்த இடத்திற்கு வான்வழியாகப் பறந்து செல்வது வழக்கம். இந்த வழியே பறந்து வருகையில் நிலா வொளில் இந்தச் சோலையும் நிலாமுற்றமும் கண்ணைக் கவர்ந்தன. இங்கு சற்றே நின்று பார்த்துவிட்டுப் போவோமென்று வந்தேன்" என்றாள்.
இதற்குள் ராஜகுமாரன் இவளுடைய அழகிலே மோகித்துப் போய் "உன்னைப் பார்த்தால் தேவ ரம்பை அல்லது நாக கன்னிகை போலே தோன்றுகிறது" என்றான். "நாக கன்னிகை" என்ற வார்த்தையைக் கேட்டவுடனே ரோஜாவிற்கு உடம்பெல்லாம் படபடவென்று நடுக்கங் கண்டது.
"ஏன் பயப்படுகிறாய்?" என்று ராஜகுமாரன் கேட்டான்.
ரோஜாவுக்கு முனிவர் சொன்ன வார்த்தை ஞாபகம் வந்தது. இனி இங்கே நின்றால் அபாயம் நேரிடுமென்று பயந்து மிக வேகத்தில் ஓடி மறைந்து போய்விட்டது பாம்புக்குட்டி.
பின்னொரு நாள், மாலை வேளையில் மரஞ்செடியில்லாத பொட்டல் வெளியிலே காட்டுப் பாதைக்குச் சமீபத்தில் ஆழ்ந்த கிணறொன்றின் அருகேயுள்ள புதரில் ரோஜாப் பூ தனியாக இருக்கும்போது, அவ்வழியே யௌவனமும் அழகுமுடைய ஒரு புரோகிதப் பிராமணன் போய்க் கொண்டிருந்தான். தூரத்தில் வரும்போதே அவனைக் கண்டு ரோஜாப் பூ பெண் வடிவமாக மாறி நின்றது. பார்ப்பான் பார்த்தான். நடுக்காடு; தனியிடம்; மாலை நேரம்; இவளழகோ சொல்லி முடியாது. "இவள் யாரடா இவள்?" என்று யோசனையுடன் சற்றே நின்றான்.
ரோஜாப் பூ அவனைக் கூப்பிட்டு, "ஐயரே, தாகம் பொறுக்க முடியவில்லை. கிணற்றில் இறங்கப் பயமாக இருக்கிறது. நீர் இறங்கி உமது கையிலுள்ள செம்பிலே சிறிது தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தால் புண்ணியமுண்டு" என்றாள்.
பார்ப்பான் சந்தோஷத்துடன் கிணற்றிலே இறங்கப் போனான். தண்ணீருக்கு மேலே
ஒரு நீர்பாம்பு தென்பட்டது. உடனே அவன் ரோஜாவை நோக்கித் திரும்பி, "ஆகா! பாம்பைப் பார்த்தாயோ?" என்றான்.
ரோஜாவுக்கு உடம்பெல்லாம் வெயர்த்துப் போய்க் கையும் காலும் நடுங்கலாயின.
"ஏன் நடுங்குகிறாய்?" என்று பார்ப்பான் கேட்டான். ரோஜாப் பூ அங்கிருந்து விரைவாக மறைந்தோடி விட்டது. இவ்விதமாக ரோஜாப் பூ யாரை மயக்கி வசப்படுத்திக் கொள்ள விரும்பினாலும் ஒரு பயம் நேரிட்டுக் கொண்டேயிருந்தது. கடைசியாக அவளுக்கு (அந்தப் பாம்புப் பெண்ணுக்கு) "கர்த்தப ஸ்வாமிகள்" என்றொரு ஸந்நியாசி வசப்பட்டான்.
இவ்வாறு மதுகண்டிகை என்னு குயில் சொல்லி வருகையில் ரஸிக சிரோமணி, "அந்த ஸந்நியாசி யார்?" என்று கேட்டது.
------------
குயில் சொல்லுகிறது:-
"கேளாய் ரஸிக மாமா, கங்காதீரத்தில் ராமநகரம் என்ற ஊரில் ஒரு வண்ணான் வீட்டிலே 'பக்திவிஸ்தாரன்' என்றொரு கழுதை இருந்தது. தாய் சொன்ன வார்த்தையும் தட்டாது. யார் சொன்ன வார்த்தையும் தட்டாது. சிறு பிள்ளைகள் கல்லெறிந்தால் கனைத்துக் கொண்டு ஓட வேண்டாமோ? அதுகூடச் செய்யாது பொறுமையே அவதாரம் செய்தாற்போன்ற கழுதை.
இந்தக் கழுதை ஒருநாள் நதிக்கரையிலே புல் மேய்ந்து கொண்டிருக்கையிலே பக்கத்திலிருந்த ஒரு மரத்தின்மேல் இரண்டு காக்கைகள் பின் வருமாறு சம்பாஷணை செய்து கொண்டிருந்தன. அந்த வார்த்தைகளையெல்லாம் கழுதை கவனத்துடன் கேட்டது.
ஒரு காகம் சொல்லுகிறது:- "பிரயாகையில், கங்கையும், யமுனையும் வந்து சேரும் இடத்தில் ஒருவன் போய் விழுந்து பிராணனை விடும்போது அடுத்த ஜன்மத்தில் என்ன பிறவி வேண்டுமென்று நினைத்துக் கொள்ளுகிறானோ, அதே பிறவி அவனுக்கு நிச்சயமாகக் கிடைக்கும். இந்த விஷயம் உனக்கு இதுவரை கேள்வியுண்டா?"
இதற்கு இரண்டாங் காகம்:- "உனக்கு யார் சொன்னார்கள்?" என்று கேட்டது..
முதற் காகம்: "இன்னார் சொன்னார்களென்பதை உன்னிடம் சொல்லக்கூடாது. அது ரகஸ்யம். ஆனால் உண்மைதான், எனக்கு நிச்சயமாகத் தெரியும்."
இரண்டாங் காகம்: "உன்னிடம் சொல்லியது யார்?" என்று மறுபடியும் வற்புறுத்திக் கேட்டது.
முதற் காகம்: "அட நம்பிக்கையில்லாத ஜந்துவே! உனக்கு நல்ல கதி ஒரு நாளும் ஏற்படாது! யார் சொன்னதென்றா கேட்கிறாய்? என்னுடைய குரு சொன்னார். அவரைப் போன்ற ஞானி பிரம்ம லோகத்திலே கூடக் கிடையாது. ஒரு காலத்தில் பிரமதேவனுக்குப் படைப்புத் தொழில் சம்பந்தமாக ஒரு சந்தேகமேற்பட்டது. உடனே பிரம்மா நாரதரை அனுப்பி என் குருவை அழைத்து வரச் சொல்லித் தமது சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்டார்."
இந்த வார்த்தையைக் கேட்டவுடனே இரண்டாங் காகம் கலகலவென்று சிரித்து, அங்கிருந்து பறந்தோடிப் போய்விட்டது. சம்பாஷணை முழுதையும் மிகுந்த சிரத்தையுடன் கேட்டுக்கொண்டிருந்த கழுதை உடனே அவ்விடத்திலிருந்து புறப்பட்டு, இராப்பகலாக நடந்து "திரிவேணி சங்கமம்" (அதாவது, பிரயாகையில் கங்கையும் யமுனையும் கூடுமிடம்) வந்து சேர்ந்தது.
அந்த இடத்திலே போய்க் கழுதை பின்வருமாறு நினைத்துக் கொண்டு முழுகிப் பிராணனை விட்டது: "இந்த வடதேசத்திலே எனக்கு சந்தோஷமில்லை. அடுத்த ஜன்மம் தென்னாட்டிலே பிறக்க வேண்டும். ஒரு விதமான குடும்பத் தொல்லையு-மில்லாமல், எல்லா இடங்களிலும் இஷ்டப்படி ஸஞ்சாரம் செய்துகொண்டு, எல்லா ஜனங்களும் இனாமாகப் போடும் போஜனத்தைத் தின்றுகொண்டு, சந்தோஷத்துடன் வாழும் ஒரு மனித ஸந்நியாஸியாகப் பிறக்க வேண்டும். ஆனால் இந்தக் கழுதைப் புத்தி மாறாதபடி இருக்க வேண்டும். வெளிக்கு ஸந்நியாஸி போலிருந்து எல்லாரும் உபசாரங்கள் செய்தபோதிலும், என் மனதிற்குள்ளே 'நாம் கழுதை' யென்ற ஞாபகம் நிலைபெற்றிருக்க வேண்டும்."
இவ்விதமான தியானத்துடன் இறந்துபோன கழுதை மறு ஜன்மத்திலே தென்னாட்டிலே ஒரு ஊரில் ஒரு நல்ல குடும்பத்திலே ஆண் குழந்தையாகப் பிறந்து வளர்ந்தது. தாய் தந்தையர் இந்தப் பிள்ளைக்கு "முத்துசாமி" என்று பெயர் வைத்தார்கள். முத்துசாமி மனத்திலே தான் கழுதையென்ற ஞாபகம் பரிபூர்ணமாக இருந்தது.
பூர்வ ஜன்மத்தைப்பற்றி வேறு யாதொரு நினைவுமில்லை ஆனாலும், தான் மற்ற மனிதர்களைப் போலில்லையென்பதும், உள்ளுக்குள்ளே கழுதையென்பதும் அவன் சித்தத்தைவிட்டு நீங்கவில்லை.
பதினாறு வயதாகு முன்பாகவே இவன் ஸந்நியாஸியாகி காவி வஸ்திரம் தரித்துக்கொண்டு ஊரூராகப் பிச்சை வாங்கியுண்ணும் துறையிலே இறங்கிவிட்டான். முத்துசாமி என்ற பெயரைத் துறந்து கர்த்தப ஸ்வாமிகள் என்று பெயர் வைத்துக் கொண்டான். கர்த்தபமென்றால் ஸம்ஸ்க்ருத பாஷையில் கழுதைக்குப் பெயர்.
இவனுக்குத் தமிழ், ஸம்ஸ்க்ருதம் இரண்டு பாஷையும் தெரியும். வயிரவர் உபாஸனையுண்டு. உலகத்திலுள்ள பாஷைகளெல்லாம் ஸம்ஸ்க்கிருதத்திலிருந்து வந்ததாகவும், அது தமிழிலிருந்து முளைத்ததாகவும் ருஜூப்படுத்தி ஒரு புஸ்தக மெழுதினான். இப்போது பரத கண்டத்திலே நாலாயிரம் ஜாதிகளாகக் குறைந்து போய்விட்டது நியாயமில்லை யென்றும், ஆதியிலே நாற்பதினாயிரம் ஜாதிப் பிரிவுகள் இருந்தன வென்றும், அந்த ஏற்பாட்டை மறுபடி ஸ்தாபனம் செய்ய வேண்டுமென்றும், ருஜூப்படுத்தி மற்றொரு நூல் செய்யுளாக எழுதினான்.
நிகண்டைப் பார்த்து அதிலுள்ள தெய்வப் பெயர்களை யெல்லாம் ஒன்று சேர்த்து, இவையெல்லாம் தன்னுடைய இஷ்ட தேவதையாகிய வயிரவ மூர்த்தியின் திரு நாமங்களென்று சொல்லி ஒரு நாமாவளி ஏற்படுத்தினான்.
பூணூல் போடும்வரை, பிராமணப் பிள்ளை சூத்திரனாகவேயிருப்பதால், அவன் பார்க்க மற்ற பந்துக்கள் ஆகாரம் பண்ணுவது கொடிய அநாசாரமென்று ஒரு கக்ஷி கொண்டு வந்தான். பூணூல் போடாத பிராமணக் குழந்தைக்குத் தாய் பால் கொடுக்கும்படி நேரிட்டால், பின்பு ஸ்நானஞ் செய்யாமல் வீட்டுப் பாத்திரங்களைத் தொடக்கூடாது. அப்படித் தொட்டால் அவள் ரௌரவாதி நரகங்களுக்குப் போவதுடன், அந்தக் குடும்ப முழுமைக்கும் அதோ கதி நேரிடுமென்று ஸ்தாபனம் செய்தான்.
இவனுக்கு வேண்டிய மட்டும் சிஷ்யர்கள் சேர்ந்து விட்டார்கள். பணமும் சேர்ந்தது. ஒரு மடம் கட்டினான். "நாற்பதினாயிர-ஜாதிபேத-பூர்வ திராவிட-வயிரவ-கர்த்தப-பிராமண-சிசு- பஹிஷ்கார-மஹா-மடம்" என்று அந்த மடத்துக்குப் பெயர் வைத்தான். இந்த மடத்துக்கு ரோஜாப் பூ என்ற பாம்புப் பெண் வந்து சேர்ந்தாள்.
----------
தென்னாட்டிலே சாலிவாடி புரத்தில் கர்த்தப ஸ்வாமி மடங்கட்டித் தனது சீடர்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கையில் அங்கே ரோஜா என்ற பாம்புப் பெண் வந்தாள். எலுமிச்சம் பழத்தைப் போலே நிறம்; மானைப்போலே விழி; பூர்ண சந்திரன்போலே முகம்; உடம்பிலே லாவகமும், கட்டும், பெண் புலியைப் போலே.
ஒரு நாள் மாலை நேரம்; சாமியார் பகற் சோறு தின்று, அந்த சிரமத்தினால் நாலைந்து மணி நேரம் தூங்கி விழித்த பிறகு, அந்த ஆயாஸம் தீரும்பொருட்டு நாலைந்து தோசைகளைத் தின்று, அரைப்படி பாலைக் குடித்துவிட்டு, வாயிலே வாஸனைப் பாக்குப் போட்டு மென்று கொண்டு இரண்டு சீடர்களிடம் பிரசங்கம் செய்து கொண்டிருக்கிறார்.
சாமியார் சொல்லுகிறார்:-
"கேளீர், சீடரே,
'ஜன்மநா ஜாயதே சூத்ர;
கர்மணா ஜாயதே த்விஜ;"
பிறக்கும்போது சூத்திரன்; பூணூல் போட்ட பிறகு தான் பிராமணன். இந்த விதிக்கு விலக்கே கிடையாது. உபநயனம் செய்த பிறகுதான் பிராமணப் பிள்ளைக்குப் பிராமணத்துவம் உண்டாகிறது. இதில் சந்தேகமில்லை. உபநயனம் செய்யும்வரை அவனுக்கு எச்சில், தீண்டல் ஒன்றுமேயில்லை. சண்டாளனைப் போல் வளருகிறான். அப்படிப்பட்ட குழந்தையை அவனுடைய தாயார் தீண்டி விட்டுப் பிறகு ஸ்நானம் செய்யாமல், மடைப் பள்ளியைத் தொட்டுச் சமையல் செய்தால், அந்த அன்னம் ஸ்வாமி நைவேத்தியத்துக்கு உதவாது. அவ்விதமான அன்னத்தை ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்வோர் குளிக்கப் போய்ச் சேறு பூசிக் கொள்வது போலே, பூஜை பண்ணப் போய்ப் பாவத்தைத் தேடிக் கொள்ளுகிறார்கள்." என்றிவ்வாறு, பல நியாயங்களைக் காட்டிச் சாமியார் தான் எடுத்த கக்ஷியை ஸ்தாபனம் செய்து கொண்டிருந்தார்.
சீடர்கள் மிகவும் பக்தி சிரத்தையுடன் தலையை அசைத்தசைத்துக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இந்தத் தருணத்திலே பாம்புப் பெண் வந்து சாமியாருக்கு நமஸ்காரம் பண்ணினாள்.
"உட்காரம்மா" என்று சாமியார் மெதுவான குரலிலே சொன்னார். உட்கார்ந்தாள்.
"நீ யார்?" என்று சாமியார் கேட்டார்.
பாம்புப் பெண் சொல்லுகிறாள்: "தாமரைப் பூ சேற்றிலே பிறக்கிறது. வண்டு காட்டிலே பிறக்கிறது. தாமரையைத் தேடி வண்டு வருகிறது. நான் சிங்கள தேசத்து ராஜன் மகள். பரத கண்டத்திலே, பற்பல இடங்களில் யாத்திரை செய்து கொண்டு, இந்த நகரத்துக்கு வந்து சேர்ந்தேன். அம்மன் சன்னிதித் தெருவிலே இறங்கியிருக்கிறேன். இந்த ஊரில் தாங்கள் பெரிய பக்திமானென்றும், யோகி யென்றும், ஞானி யென்றும் கேள்விப்பட்டேன். தங்களிடம் வந்து ஆத்மா கடைத்தேறும் படியான மந்திரோபதேசம் பெற்றுக் கொண்டு போகலாமென்ற கருத்துடன் வந்தேன்" என்றாள்.
சாமியாருக்கு உச்சந் தலையிலே பூமாரி பொழிந்தது போல், உடம்பெல்லாம் புளகமாய்விட்டது. சிங்கள தேசத்து ராஜன் மகள் சீடப் பெண்ணாக வந்தால் யாருக்குத்தான் ஆனந்தமேற்படாது?
"இப்போதே மந்திரோபதேசம் பண்ணட்டுமா?" என்று சாமியார் கேட்டார். அவசரம் வாரிக் கொண்டு போகிறது அவருக்கு!
அதற்கு ரோஜா சொல்லுகிறாள்; "நல்ல நாள், நல்ல லக்னம் பார்த்துச் செய்ய
வேண்டும். மேலும், குருவுக்குப் பாதகாணிக்கை வைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்; நாள் பார்த்துச் சொல்லுங்கள்" என்றாள்.
சாமியாருடைய சந்தோஷம் கரை கடந்து விட்டது. சாமியார் சோதிடம் பார்க்கிறார்:-
"இன்றைக்கு என்ன கிழமை? ஞாயிற்றுக் கிழமை. நாளைக்குத் திங்கட்கிழமை, ஸோமவாரம், நல்ல நாள். காலையிலே ஏழரை மணி முதல் ஒன்பது மணி வரைக்கும் ராகுகாலம்; அது முடிந்தவுடனே நல்ல லக்னம் வருகிறது. செவ்வாய் மிதுன ராசியிலே பிரவேசிக்கிறான். அவனைக் குரு பார்க்கிறான். அப்போது மந்திரம் கூறுவதற்குப் பொருத்தமான வேளை. 'சுபயோக-சுபகரண-ஏவங்குண-விசேஷண-விசிஷ்டாயாம்' என்று சாஸ்திரம் முறையிடுகிறது. நம்முடைய மந்திரமோ வைரவ மந்திரம். எல்லாவிதமான தேவநாமங்களும் வைரவ நாமத்துக்குள் அடங்குமென்பதற்குச் சூடாமணி நிகண்டிலே தக்க ஆதாரமிருக்கிறது. 'முத்தனே, குமாரன்' பிள்ளை என்று நிகண்டுக்காரர் சொல்லுகிறார். இந்த மந்திரோபதேசம் பெற்றவருக்கு இந்த ஜன்மத்திலே முக்தி" என்று சாமியார் சொல்லி நிறுத்தினார்.
ரோஜா ஒரு புன்சிரிப்புக் காட்டினாள். சாமியாருடைய ஆனந்தம் ஏறக்குறைய ஜன்னி நிலையிலே வந்து நின்றது.
சாமியார் பின்னும் சொல்லுகிறார்: "கேளாய், சிங்கள தேசத்து ராஜகுமாரியே; உன் பெயரென்ன? ரோஜாவா? ஆ ஹா ஹா! குலத்துக்கும் ரூபத்துக்கும் பொருத்தமான பெயர். கேளாய், ரோஜாவே, ஜன்மங்கள் கோடானு கோடி.
மேற்படி பாட்டைச் சாமியார் தனது பெயருக்கும் இயல்புக்கும் பொருந்திய குரலிலே பாடிக் காட்டினார்.
இந்தப் பாட்டிலே 'பாம்பு' என்ற சொல் வந்தது. இருந்தாலும், ரோஜாவுக்குப் பயமுண்டாகவில்லை. இவன் முழுமூட னென்பது அவளுக்கு ஆரம்ப முதலாகவே தெரிந்து விட்டது. 'என்றாலும் குற்றமில்லை. நாம் இவனை விடக் கூடாது. இதுவரை எத்தனையோ மனிதர் கை தவறிப் போய்விட்டார்கள்; இந்த மடத்தை நாம் இஷ்டப்படி ஆளலாம். இதுதான் சரியான புள்ளி' என்று பாம்புப்பெண் உறுதி செய்து கொண்டாள்.
சாமியார் சொல்லுகிறார் :- "கேளாய், ரோஜாப் பெண்ணே! சிங்களராஜன் கண்ணே! ஜன்மங்கள் எண்ணத்தொலையாது - ஆற்று மணலைப் போலே; வானத்திலுள்ள நக்ஷத்திரங்களைப் போலே. 'புனரபி ஜனனம், புனரபி மரணம்' என்று சங்கராசாரியர் சொல்லுகிறார். இந்த ஜன்மங்களிலே மனித ஜன்மம் சிறந்தது. கடல் சூழ்ந்த இந்த நிலவுலகத்திலே இத்தனை மேலான நரஜன்மத்தை எடுத்துத் தக்க குருவைத் தேடியடைந்து மோக்ஷத்துக்குப் போகும் உபாயத்தைத் தெரிந்து கொள்ளாதவர்கள் மறுபடி தாய் வயிற்றிலே பிறந்து பத்து மாதமிருந்து துயரப்பட்டு, மண்ணிலே பிறந்து பலவகைத் துன்பங்களை அனுபவிக்கிறார்கள். உனக்குத் தெரியாத விஷயமொன்று-மில்லை. நம்முடைய வைரவ மந்திரம் உனக்குக் கிடைக்கப் போகிறது. நீ பெரிய பாக்கியசாலி" என்றார்.
கதையைச் சுருக்கி விடுகிறேன்.
மறுநாள் காலையிலே பாம்புப் பெண் ஒரு நாகரத்தினத்தைக் கொண்டு வந்து சாமியார்
காலிலே காணிக்கையாக வைத்து மந்திரோபதேசம் பெற்றுக் கொண்டாள். சில தினங்களிலே சாமியார் இவள் சொல்லியபடி யெல்லாம் கூத்தாடுகிற நிலைமைக்கு வந்துவிட்டார், என்று மதுகண்டிகை என்னும் குயில் ரஸிக சிரோமணியிடம் சொல்லிற்று.
குயில் சொல்லுகிறது:-
"கர்த்தப ஸ்வாமி யென்பவன் பாம்புப் பெண்ணுடைய வஞ்சனையில் அகப்பட்டுக் கொண்டான். அதனால் அவனுக்கு மிகுந்த பழியுண்டாயிற்று. ஊரார் அவனை மடத்திலிருந்து துரத்தினார்கள். பிறகு பாம்புப் பெண்ணும் அவனைப் பிரிந்து சென்றுவிட்டாள். அதன் பின், அவ்விருவரும் உலக வாழ்க்கையிலே பலவகைத் துன்பங்களுக்கு இரையாகி முடிந்தனர்" என்றது.
அப்போது, ரஸிகசிரோமணி, "இக் கதையை எதன் பொருட்டாகச் சொன்னாய்?" என்று கேட்டது.
குயில் - "உங்கள் ஜாதிக்கே பிறர் வார்த்தையை எளிதாக நம்பி மதிமோசம் போவது வழக்க மென்பதைக் காட்டும் பொருட்டாகச் சொன்னேன். ஆனால் நீ அப்படியில்லை. நீ கழுதையாக இருந்தாலும் புத்திசாலிதான்; நியாயத்தைச் சொன்னால் கட்டுப்படுகிறாய். தஞ்சாவூர் தட்டிக்கொண்டான் செட்டி கதையை மேலே சொல்லு" என்று வேண்டிற்று.
---------
ரஸிகசிரோமணி:- "முன் கதையை எந்த இடத்தில் நிறுத்தினேன்? பளிச்சென்று ஞாபகம் வரவில்லை. உனக்கு ஞாபக மிருந்தால் அடியெடுத்துக் கொடு" என்று கேட்டது.
குயில் அடியெடுத்துக் கொடுக்கிறது:- "தட்டிக்கொண்டான் செட்டி தஞ்சாவூரிலே மதுரை மாணிக்கஞ் செட்டி என்பவனுடைய குமாஸ்தாவாக இருக்கையில் யஜமானுடைய பணத்தில் பெருந் தொகையை அழுத்திக் கொண்டு கள்ளக் கணக்கனுப்பினான். தனக்கு நேரிட்ட அநியாய நஷ்டத்திலிருந்து ஒருவாறு தப்பவேண்டுமென்று யோசனை செய்து மதுரை மாணிக்கஞ்செட்டி மானி அய்யன் என்ற பிராமணனை வரவழைத்துத் தஞ்சாவூருக்குப் போகும்படி சொல்லுகிறான். அந்த இடத்தில் உன் கதையை நிறுத்தினாய். மேலே நடத்து" என்றது.
ரஸிகசிரோமணி பின்வருமாறு கதை சொல்லலாயிற்று.
அந்த மாணிக்கஞ் செட்டி சொல்லுகிறான்:- "ஐயரே, நீர் உடனே புறப்பட்டுத் தஞ்சாவூருக்குப் போக வேண்டும். அங்கே தட்டிக் கொண்டான் செட்டி வீடெங்கே என்று கேட்டால் யாவரும் சொல்லுவார்கள். நடுத்தெருவிலே கிழக்கோரத்து வீடு. அவனிடத்தில் எப்படியேனும் சிநேகம் செய்து கொண்டு, அவன் வீட்டில் நெருங்கிப் பழக வேண்டும். நமக்கு அவன் கள்ளக் கணக்கு அனுப்பியிருக்கிறான். என்றாலும், தனது சொந்த உபயோகத்தைக் கருதி நியாயமான கணக்கு அவசியம் எழுதி வைத்திருக்க வேண்டும். அந்தக் கணக்குச் சுவடியை என்ன தந்திரம் பண்ணியேனும் இங்கே கொண்டு வந்து விடவேண்டும்."
இதைக் கேட்டு மானி அய்யன்: "சரி; யோசிக்க வேண்டியதில்லை, நான் காரியத்தை முடித்துக் கொண்டு வருகிறேன்" என்றான். பிறகு அவன் மாணிக்கஞ் செட்டியினிடம் தன் செலவுகளுக்கு வேண்டிய பணத்தை வாங்கிக் கொண்டு தஞ்சாவூருக்கு வந்தான், தலையை மொட்டையடித்தான். காவி வேஷ்டியும் கட்டிக் கொண்டான். செட்டியின் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தான்.
பிற்பகல் வேளை, செட்டி ஏதோ பக்ஷணம் தின்று தாக சாந்தி செய்துகொண்டு வெற்றிலை சுவைக்கிறான். "நாராயணா" "நாராயணா" என்ற உச்சாடணத்துடன் ஸந்நியாசி அவன் முன்னே போய் உட்கார்ந்து, கண்ணை மூடிக்கொண்டு ஸமாதியிலே ஆழ்ந்து விட்டான். பத்து நிமிஷம் கழிந்த பிறகு கண்ணைத் திறந்தான். அப்போது தட்டிக்கொண்டான் செட்டி அவன் காலிலே ஸாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்து, "சாமிகளுக்கு எவ்விடம்? அடியேன் சிறு குடிலுக்கு எழுந்தருளியதன் நோக்க மென்ன?" என்றான்.
ஸந்நியாசி சொல்லுகிறான்:- "வீடு நமக்குத் திருவாலங்காடு. விமலர் தந்த ஓடு நமக்குண்டு. வற்றாத பாத்திரம்" என்றார் பட்டினத்தடிகள். எல்லா வூரும் நம்முடைய வூர், எல்லா நாடும் நம்முடைய நாடு. இந்த உலகம் வெறும் நாம ரூபங்களைத் தவிர வேறொன்றுமில்லை. அந்த நாமரூபங்களெல்லாம் பொய். பூர்வாசிரமத்தில் மயிலாப்பூரிலே பிறந்து வளர்ந்தோம். குருகிருபையால் இந்த ஆசிரமம் கிடைத்தது. இந்த ஊருக்கு வந்ததில், ஸாதுக்களிடத்திலே தங்களுக்கு மிகவும் அபிமானமென்று கேள்விப்பட்டோம். வெறுமே தங்களைப் பார்த்து விட்டுப் போகலாமென்று வந்தோம். தங்களால் நமக்கு ஆகவேண்டிய காரியம் ஒன்றுமேயில்லை. நம்மால் தங்களுக்கு ஏதேனும் அனுகூலம் கிடைக்க வேண்டுமென்ற கருத்திருந்தால் தெரிவிக்கலாம்" என்றான்.
செட்டி சிறிது நேரம் யோசித்த பிறகு:- "சாமிகளுக்கு ஆரூடம் வருமோ?" என்றான்.
ஸந்நியாசி புன்சிரிப்புடன்:- "ஏதோ சொற்பம் வரும்" என்றான்.
தட்டிக்கொண்டான் செட்டி சொல்லுகிறான்:- "நான் அவசரத்தைக் கருதி ஒரு காரியம் செய்தேன். கெட்ட காரியமென்று உறுதியாகச் சொல்ல முடியாது. கிளியை அடித்தால் பாவம், ஓநாயை அடித்தால் பாவமா? ஒருவாறு நான் செய்தது நல்ல காரியந்தான். அதிலிருந்து எனக்கேதேனும் தீங்கு வரக் கூடுமோ என்ற பயமுண்டாகிறது இந்த விஷயத்தில் பின்வரும் விளைவைச் சாமிகள் அரூடத்தினால் கண்டு சொல்ல வேண்டும்" என்று பணிவு காட்டினான்.
ஸந்நியாசி மறுபடி கண்ணை மூடிச் சில நிமிஷங்கள் வாயை முணுமுணுத்தான்.
பிறகு சொல்லுகிறான்:- "மாமாவுக்கு நஷ்டம் வருகிறது. த.கொ.வுக்கு லாபம் வருகிறது" என்றான்.
செட்டி இதைக் கேட்டு ஆச்சரியத்துடன் மதுரை மாணிக்கஞ் செட்டிக்கு நஷ்டமென்றும், தட்டிக்கொண்டான் செட்டிக்கு லாபமென்றும் ஆரூடம் சொல்வதாகத் தெரிந்து கொண்டு, இந்தச் சாமியாரை நான்றாகப் பரீக்ஷிக்க வேண்டுமென்ற கருத்துடன், "சாமிகளே, அவ்விடத்தில் உத்தரவு செய்வது எனக்கு நேரே அர்த்தமாகவில்லை. விளங்கச் சொல்லவேண்டும்" என்று கேட்டான்.
அதற்கு ஸந்நியாசி: "செட்டியாரே, ஆரூடம் நாம் சொல்வதில்லை. நமக்குப் பிரம்ம வித்தையொன்றுதான் தெரியும். மற்றதெல்லாம் வீண் வித்தை, நம்முடைய நாக்கில் இருந்து கொண்டு ஒரு யக்ஷிணி தேவதை இந்த ஆரூடம் சொல்லுகிறாள். அதன் குறிப்புப்பொருளை நாம் கவனிப்பதே கிடையாது. கவனித்தாலும், சில சமயங்களில் அர்த்தமாகும். சில சமயங்களில் அர்த்தமாகாது. கேட்பவர் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி அர்த்தம் கண்டு பிடித்துக் கொள்ள வேண்டும்" என்றான்.
செட்டி தனது ரகஸ்யத்தைச் சாமியார்கூடத் தெரிந்து கொள்ளாதபடி, அவ்வளவு நயமாகத் தனக்கு அனுகூலம் சொல்லிய யக்ஷிணி தெய்வத்தினிடம் மிகுந்த நம்பிக்கை கொண்டவனாய் ஆனந்த பரவசனாய் விட்டான். சாமியாரிடத்திலும் அவனுக்குச் சொல்ல முடியாத மதிப்புண்டாயிற்று.
ஒரு தட்டு நிறைய பலவிதமான பழங்களும், காய்ச்சின பாலும் கொண்டு வரும்படி
செய்து சாமியார் முன்னாலே வைத்து, "திருவமுது செய்தருள வேண்டும்" என்றான்.
ஸந்நியாஸி ஒரு வாழைப்பழத்திலே பாதியைத் தின்று, அரைக் கிண்ணம் பாலைக் குடித்துவிட்டு 'போதும்' என்று சொல்லிவிட்டான்.
அப்போது செட்டி ஸந்நியாசியை நோக்கி, "ஏதேனும், மடத்துக் கைங்கரியமானாலும், கோயில் திருப்பணியானாலும், சுவாமிகள் என்ன கட்டளையிட்டபோதிலும் என்னாலியன்ற பொருளுதவி செய்யக் காத்திருக்கிறேன்" என்றான்.
சாமியார் தலையை அசைத்து, - "பிரம்மமே ஸத்தியம், ஜகத் மித்யை; மடமேது, கோயிலேது? பரமாத்மா கட்டை விரலளவாக ஹிருதயத்திலுள்ள குகையில் விளங்குகிறான், எல்லாம் நமக்குள்ளேதானிருக்கிறது. உம்மால் நமக்கு எவ்விதமான பொருளுதவியும் வேண்டியதில்லை" என்றான்.
இப்படி இருக்கையில், ஒரு வேலையாள் வந்து, "கரும்பனூர்க் காத்தவராயக் கவிராயர் வந்திருக்கிறார். எஜமானைப் பார்க்க வேண்டுமென்று சொல்லுகிறார்" என்று செட்டியிடம் தெரிவித்தான்.
செட்டி சாமியாரை நோக்கி "வரச் சொல்லட்டுமா?" என்று கேட்டான்.
சந்நியாசி : "ஆக்ஷேபமென்ன?" என்றான்.
"வரச் சொல்லு" என்று செட்டி உத்தரவு கொடுத்தான்.
தட்டிக்கொண்டான் செட்டியும், ஆரூட ஸ்வாமிகளும் கரும்பனூர்க் காத்தவராயக் கவிராயரும், மூன்று பேருமாக சம்பாஷிக்கலானார்கள்:-
க.கா.க: "ஸ்வாமிகளுக்கு எவ்விடம்?"
ஆ.ஸ். : "சந்நியாசிக்கு இடமேது. வீடேது?"
த.கொ.செ. : "ஞானத்தினுடைய கடல், உபாஸனையே திருவடிவம், பக்திக் கோயில். ஸ்வாமிகளுக்கு இறந்தகாலம், நிகழ்காலம், வருங்காலம் மூன்றுந் தெரியும்."
க.கா.க: "இலக்கணத்தின் கருத்தே அது."
ஆ.ஸ்: "உண்மையான துறவி ஒருநாள் தங்கிய இடத்தில் மறுநாள் தங்கலாகாது. ஒரு முறை புசித்த வீட்டில் மறுமுறை புசிக்கலாகாது. பிரம்மம் ஒருமை. உலகம் பன்மை."
த.கொ.செ. : "பிரம்மம் ஒருமை, பிரம்மங்கள் பன்மை என்று உத்தரவாக வேணும்."
ஆ.ஸ். ; "அது இலக்கணப்படி. நான் வேதாந்த அர்த்தம் சொல்லுகிறேன்."
த.கொ.செ: "சரிதான், சரிதான். மேலே உத்தரவாகட்டும்."
ஆ.ஸ். : "மழைநாளில் மாத்திரம் ஸந்நியாசி ஒரே இடத்தில் தங்கலாம். ஆகாசமே மேற்கூரை; பூமி கட்டில், மெத்தை. வெளியில் பனியெல்லாம் சந்தனம், பனிநீர். கவிராயரே கவனிக்கிறீர்களா?"
க.கா.க : "சன்னிதானத்தின் மீது ஒரு ஆசுகவி இயற்றுகிறேன், இயற்றி யாயிற்று, இதோ உரைக்கிறேன்."
--------------
ஆ.ஸ். : "ஹரி நாமத்தை உரைத்தீர்கள். ஆனந்தம். ஆனந்தம்."
த.கொ.செ. : "சந்தேகமென்ன? தெய்வபக்தி தானே மனுஷனுக்கு முக்கியமாக இருக்கவேண்டும்."
ஆ.ஸ். : "இந்த ஆசு கவியைக் கவிராயர் இந்த சரீரத்தை நோக்கிச் சொன்னார். ஆனாலும் நமக்குள்ளே விளங்கும் பரமாத்மா கேட்டு மகிழ்வடைந்தான்."
இப்படிப் பலவிதமாக நெடுநேரம் பேசிக்கொண்டிருந்த பிறகு, கவிராயர் மற்றொரு சமயம் வருகிறேன் என்று சொல்லி எழுந்து போய்விட்டார். போகும் போது கவிராயர் மனதில் இந்தச் சாமியார் திருடன் என்று சொல்லிக்கொண்டு போனார். கவிராயர் போனவுடன் ஸந்நியாசி சொல்லுகிறான்:-
"இந்தக் கவிராயருக்குக் கர்வம் அதிகம்போல தோன்றுகிறது."
த.கொ.செ.: "சந்நிதானத்தின் மீது ஆசு கவி பாடியிருந்தும் இப்படிச் சொல்லுகிற முகாந்தரமென்ன?"
ஆ.ஸ்.: "நம்மிடத்தில் அவருக்கு பக்தி ஏற்பட்டது மெய்தான்; ஆனாலும் கர்வி. கர்வியை நம்பக்கூடாது. கபடியை நம்பினாலும் நம்பலாம், கர்வியை நம்பக்கூடாது."
த.கொ.செ.: "கபடியை எப்படி நம்புவது?"
ஆ.ஸ். : "நாம் இருவரும் பரஸ்பரம் நம்புகிறோம். நாம் கபடிகளில்லை."
த.கொ.செ. : "ஆக்ஷேப மென்ன? கர்வியைத்தான் நம்பக்கூடாது. சந்நிதானத்தில் உரைப்பதே உண்மை."
ஆ.ஸ். : "தத்ஸ விதுர் வரேண்யம்."
த.தொ.செ. : "அதன் பொருள் அடியேனுக்கு விளங்கச் சொல்ல வேண்டும்."
ஆ.ஸ்.: "இது ஸந்தியாவந்தன மந்திரம். அதன் பொருளை இதர ஜாதியாருக்குச் சொல்லக் கூடாது. நான் என் மனதுக்குச் சொல்லிக் கொண்டேன்" என்றான்.
பிறகு ஸந்நியாஸி, "நான் போய் வருகிறேன்" என்று சொல்லி எழுந்தான். தட்டிக்கொண்டான் செட்டி மிகவும் பரிவுடன், "இன்றும் நாளைக்கும் மாத்திரம் அடியேன் குடிலில் எழுந்தருளியிருந்து விட்டுப் போக வேண்டும்" என்று வேண்டினான். சிறிது நேரம் அதைக் குறித்துத் தர்க்கம் நடந்தது. கடைசியாக ஸந்நியாஸி அரை மனது போலே ஒப்புக்கொண்டான். செட்டி வீட்டுப் பக்கத்தில் ஒரு தோட்டம். அந்தத் தோட்டத்தில் ரமணீயமான குடிசை. அங்கு சாமியார் குடியேறினான். போஜனம் மாத்திரம் கோயிலிலிருந்து கொண்டு வரும்படி செட்டி திட்டஞ் செய்தான். ஸந்நியாசி பரிசாரகனிடம் 'எனக்குப் புளியோதரை பிடிக்காது' என்று ஒரு வார்த்தை மாத்திரம் சொன்னான்.
சாமியாருக்குப் பகல், இரவு போஜனம் பின்வருமாறு செட்டியும் பரிசாரகனுமாகப் பேசித் தீர்மானம் செய்து கொண்டார்கள்:-
காலையில் மூன்றாம் நாழிகை – வெண்-பொங்கல், தயிர்வடை, நெய்த் தோசை, பால்.
நடுப்பகல் -பஞ்சபஹ்ய பரமானத்துடன் அன்னம்.
பிற்பகல் - பழங்கள், பால்.
இரவு - நடுப்பகல் போல்; ஆனால் அன்னத்திற்குப் பதில் தோசை.
இரண்டு நாள் கழிந்தவுடன் செட்டி இன்னும் இரண்டு நாள் இருக்கச் சொன்னான். பிறகு இன்னும் இரண்டு நாள் இருக்கச் சொன்னான். இப்படியாகப் பல தினங்களாயின.
மதுரை மாணிக்கஞ் செட்டி "தட்டிக்கொண்டானிடம் மானி அய்யனை அனுப்பினோமே, ஓரோலைகூட வரவில்லையே? என்ன செய்கிறானோ தெரியவில்லையே" என்று யோசிக்கலானான்.
ஒரு நாள் மாலையில் தட்டிக்கொண்டான் செட்டியும் ஆருட ஸ்வாமியும் பேசிக்
கொள்ளுகிறார்கள்.
செட்டி கேட்டான்: "ஆனைக்கொரு காலம் வந்தால், பூனைக்கொரு காலம் வருமென்ற பழமொழியின் அர்த்தமென்ன?"
ஆரூடஸ்வாமி சொல்லுகிறான்: கஜவதனம்; ஆனை யென்பது விநாயகரைக் குறித்தாலும் குறிக்கலாம். அப்போது பூனைக்கிடமில்லை. பூனை இல்லையா? எலி வாகனமோ. இல்லையோ? அந்த எலிக்கு விரோதம் ஒரு பூனை இராதோ? அந்தப் பிள்ளையார் வீட்டு எலிக்கு ஒரு காலம் வந்தால் மேற்படி பூனைக்கு ஒரு காலம் வராதோ? இப்படியும் ஒரு அர்த்தம் சொல்லலாம். வேதாந்தமாகவும் பொருள் சொல்லலாம்; 'ஆனையாவது மதம். பூனையாவது விவேகம். மதத்தின் காலம் போனால் விவேகத்தின் பெருமை விளங்கும்' என்பது ஞானார்த்தம்.
இங்ஙனம் ஆரூடஸ்வாமி சொல்வதைக் கேட்டுத் தட்டிக் கொண்டான் செட்டி கேட்டான்: "மதமென்றால் சைவம், வைஷ்ணவம், அப்படியா?"
உடனே ஆரூடஸ்வாமி: "ஹூம்! ஹூம்! ஹூம்! அப்படியில்லை. காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத்ஸர்யம் என்ற ஆறும் உட்பகை. இதிலே, ஐந்தாவதாகிய மதம். அதாவது கர்வம். மதம் பிடித்துப் போய் நடக்கிற குணம். அது தீர்ந்த பிறகுதான் விவேக மேற்படும்."
செட்டி கேட்டான்:- "ஸ்வாமிகளே, என்னிடம் ஒரு கணக்குப் புஸ்தகம் இருக்கிறது. இருந்தது - நேற்று மாலையில் இருந்தது. இன்று பகல் பார்த்தேன்; காணவில்லை. அந்த விஷயம் வெளியே தெரியக்கூடாது. பகிரங்கமாகத் தேடக்கூடிய புஸ்தகமில்லை. இன்னார் எடுத்தனரென்று தெரியவில்லை. ஸ்வாமிதான் உத்தரவாக வேண்டும்" என்றான்.
அப்போது ஆரூடஸ்வாமி: என்னை யக்ஷிணி திருவாரூருக்குக் கூப்பிடுகிறது. நான் இன்றிரவு புறப்பட்டுப்போய் நாளை மாலையில் அங்கிருந்து திரும்புவேன். வந்த பிறகு சொல்லுவேன்" என்றான்.
செட்டி : "தெய்வமே துணை" என்றான்.
சாமியார் : "குருவுந் துணை" என்றார்.
செட்டி : "எனக்கு நான்மை கிடைக்குமா?"
சாமி: "கிடைக்கும்." செட்டி - "என் துக்கம் தீருமா?"
சாமி : "தீரும்."
செட்டி: "கணக்கு என் கைக்குத் திரும்பி வந்தால் நான் எந்தத் தருமத்துக்கும் அவ்விடத்தில் கட்டுப்பட்டிருப்பேன்."
சாமி : "செட்டியாரே, செட்டியாரே, நமக்கு நீ எவ்விதமான தர்மமும் செய்ய வேண்டாம். உம்முடைய கடமையை நேரே கவனித்தால் அதுவே போதும்."
செட்டி : "என் கடமை யாது?"
சாமி : இப்போது ஒரு ஸூத்ரம் மாதிரியாகச் சொல்லி விட்டுப் போகிறேன். திருவாரூருக்குப் போய் திரும்பி வந்தவுடனே அதை விளக்கிச் சொல்லுகிறேன். அதற்கு முந்தி உமக்கே பொருள் விளங்கினாலும் விளங்கிப் போகும் அந்த ஸூத்ரம் எப்படி என்றால்:- "ம யே ம ஏ" . இவ்வளவுதான். இது கிரந்தம். எழுதி வைத்துக்கொள்ளும்."
செட்டி அப்படியே ஒரு ஓலை நறுக்கில் எழுதி வைத்துக்கொண்டான்.
இரண்டு வாரங்களுக் கப்பால் தஞ்சாவூர்த் தட்டிக் கொண்டான் செட்டிக்குப் பின்வருமாறு ஒரு காகிதம் வந்தது.
மதுரையில் ஆரூட ஸ்வாமி தஞ்சை த.கொ. செட்டியாருக்கு ஆசீர்வாதம்.
நான் தங்களிடம் சொல்லிய ஸூத்திரத்துக்குத் தாத்பர்யம் என்னவென்றால்,
"மற்றவனை யேமாற்றியவனை
மற்றவன் ஏமாற்றுவான்"
ரஸிக சிரோமணி என்ற கழுதை சொல்லுகிறது: "தட்டிக்கொண்டான் செட்டி மதுரை மாணிக்கஞ் செட்டியின் காலிலே போய் விழுந்து தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்டான். நஷ்டத் தொகையில் பாதி பெற்றுக் கொண்டு மாணிக்கஞ் செட்டி தனது மைத்துனனை மன்னித்து விட்டான். அவனுடைய இடத்தில் தனது தஞ்சாவூர் காரியஸ்தனாக மானி அய்யனையே நியமனம் செய்தான். ஆரம்பத்தில் மானி அய்யனை உபயோக மில்லாதவனென்றெண்ணி நகத்தது மடமை யென்பதை மாணிக்கஞ் செட்டி தெரிந்துகொண்டு தனக்குப் பார்ப்பான் செய்த உபகாரத்தையும் அவனுடைய திறமையையும் வியந்து அவனுக்குப் பலவிதமான ஸன்மானங்கள் செய்தான். அது போலவே, ஓ, கருவம் பிடித்த மதுகண்டிகை யென்ற குயிற் பெண்ணே, நீ இப்போது என்னை நகைக்கிறாய். இன்னும் சிறிது காலத்துக்கப்பால் என்னுடைய திறமையைக் கண்டு நீயே ஆச்சரியப்படுவாய்" என்றது.
அதுகேட்டு மதுகண்டிகை சொல்லலாயிற்று:- "கேளாய், ரஸிகமாமா, நீயோ தீராத பிடிவாதக்காரனாக இருக்கிறாய். அலையைக் கட்டலாம்; காற்றை நிறுத்தலாம்; மனவுறுதிக் கொண்ட தீரனுடைய தீர்மானத்தை யாவராலும் தடுக்க முடியாது. உன்னிடமிருக்கும் இந்த மனவுறுதியைக் கண்டு உன்மேல் எனக்கு நட்புண்டாகிறது. அது நிற்க, இப்போது நான் உனக்கொரு ரகஸ்யம் சொல்லுகிறேன். அதை சாவதானமாகக் கேள். மலையடிவாரத்திலுள்ள மந்தபுரம் என்ற கிராமத்தில் அரச மரத்தடியிலே ஒரு பிள்ளையார் கோயில் இருக்கிறது. நாள்தோறும் காலையொருமுறை மாலையொருமுறை அந்தக் கோயிலுக்குப் போய்த் தலையில் மூன்று குட்டுக் குட்டிக் கொள். மூன்று தோப்புக்கரணம் போடு. 'பிள்ளையாரே, பிள்ளையாரே, எனக்குச் சங்கீத ஞானம் வேண்டும்' என்று கூவு. பாட்டு தானே வரும். இதற்கு யாதொரு குருவும் வேண்டியதில்லை" என்றது.
"உண்மைதானா?" என்று கழுதை சற்றே ஐயத்துடன் கேட்டது.
அதற்குக் குயில் சொல்லுகிறது: "எனக்கு இந்த மாதிரி தான் சங்கீதம் வந்தது. எல்லாக் குயில்களுக்கும் இப்படித் தான். எங்கள் ஜாதியாருக்கு மாத்திரந்தான் இந்த ரகஸ்யம் தெரியும். இதுவரை இதர ஜாதியாரிடம் சொல்லியதில்லை. நான் உன்னிடமுள்ள அன்பினாலே சொன்னேன்" என்றது.
சரியென்று சொல்லி ரஸிக சிரோமணி துள்ளிக் குதித்துக் கொண்டு போய், மறுநாள் பொழுது விடிந்தவுடனே மந்தபுரத்துப் பிள்ளையார் கோவிலுக்கு முன்னே வந்து நின்று கொண்டு, குயில் சொன்ன கிரியைகளெல்லாம் முடித்துத் தன்னுடைய பாஷையில் பாட்டு வர மேண்டுமென்று கூவத் தொடங்கிற்று. உடனே கோயிலில் வந்து பிரதக்ஷிணம் முதலியன செய்துகொண்டிருந்த அடியார்கள் இந்த இரைச்சலைப் பொறுக்க மாட்டாமல் கழுதையைக் கல்லாலெறிந்து காலையொடித்துத் துரத்திவிட்டார்கள். ஆதலால், தனக்கு இயற்கையில் கிடைக்கக் கூடாத பொருளை விரும்பி எவனும் வீணாசை கொள்ளலாகாதென்று விவேக சாஸ்திரி தனது மக்களிடம் கதை சொன்னார்.
அப்போது காளிதாஸன் என்ற பிள்ளை கேட்கிறான்: "கழுதைக்குத் துன்பம் நேரிடவேண்டுமென்ற கெட்ட எண்ணத்துடன் போதனை செய்த குயிலுக்கு ஒரு தண்டனையுமில்லையா?" என.
ஆஞ்சனேயன் என்ற மற்றொரு மகன் : "அப்பா, அந்தக் கழுதை ஸ்வாமியை வந்து கும்பிட்டதே; அதற்குத் தீங்கு வரலாமோ?" என்று கேட்டான்.
அதற்கு விவேக சாஸ்திரி சொல்லுகிறார்: "தெய்வபக்திக்கு நல்ல பயனுண்டு. ஆனால் அதனுடன் விவேகம் சேர்ந்திருக்க வேண்டும். விவேகமில்லாதவனுடைய தெய்வபக்திக்கு உறுதி கிடையாது. தெய்வத்தினிடம் ஒருவன் வரங்கேட்கப் போகையிலே முதலாவது விவேகம் கேட்கவேண்டும். விவேகமே இந்த உலகத்தில் எல்லாவிதமான செல்வங்களுக்கும் ஆரம்பம். விவேகமில்லாதவன் குருடன். விவேகத்துடன் சேர்ந்த தெய்வபக்தியே உண்மையானது. அவ்விதமான தெய்வ பக்தியினால் ஒருவன் எடுத்த காரியத்தில் ஜயமடையலாம். இதைக் குறித்து ஒரு கதை சொல்லுகிறேன்" என்றார்.
"அந்தக் கதைக்குப் பெயரென்ன?" என்று பிள்ளைகள் கேட்டார்கள்.
"காட்டுக் கோயில்" என்று விவேக சாஸ்திரி சொன்னார்.
அப்போது காளிதாஸன்: "அப்பா, நான் கேட்டது சொல்லவில்லையே?" என்றான்.
ஆஞ்சனேயன்: "விவேகமில்லாதவன் தெய்வபக்தி செய்தால், அதனால் அவனுக்குத் தீமைதான் விளையுமா?" என்று மறுபடி கேட்டான்.
அதற்கு விவேக சாஸ்திரி சொல்லுகிறார்: "இதுவரை சொன்ன பகுதி 'பயனறிதல்' எனப்படும். இனிமேலே சொல்லப் போகிற பகுதிக்கு 'நம்பிக்கை' என்று பெயர். உங்களுடைய வினாவிற்கு விடை கதை மூலமாகச் சொல்லாமல் நேரே சொல்லி விடுகிறேன். மூடனுக்குச் சங்கட முண்டாக்கி வேடிக்கை பார்ப்பவன் பாவி. அவனுக்கு இந்த ஜன்மத்தில் பலவிதமான தீங்குகள் விளையும். விவேகமில்லாதவன் கூட தெய்வபக்தி செய்வதனால் அவனுக்கு நன்மை ஏற்படாமல் போய்விடாது. ஆரம்பத்திலே பலவித இடையூறுகளுண்டாய், அவற்றிலிருந்து கடைசியாக விவேகம் உண்டாகும், பிறகு தெய்வபக்தி மேன்மையான பயன்களைத் தரும்" என்றார்.
-------------
இரண்டாம் பகுதி - நம்பிக்கை
விவேக சாஸ்திரி தமது மக்களை நோக்கிச் சொல்லுகிறார்:-
முன்னொரு காலத்தில் பொன்னங்காடு என்ற பெருங்காட்டில் வீரவர்மன் என்றொரு சிங்கம் அரசு செலுத்திக் கொண்டு வருகையில், அதனிடத்துக்கு விகாரன் என்ற புறத்து நரியொன்று வந்து வணக்கம் செய்தது. "நீ யார்? உனக்கென்ன வேண்டும்?" என்று வீரவர்மன் கேட்டது.
அப்போது நரி சொல்லுகிறது:- "என் பெயர் விகாரன். வடக்கே நெடுந்தூரத்திலுள்ள பேய்க்காடு என்ற வனத்தில் அரசு செலுத்தும் தண்டிராஜன் என்ற சிங்கத்திடம் என் பிதா மந்திரியாக இருந்தார். அவர் காலஞ் சென்ற பிறகு, அந்த ஸ்தானத்தில் என்னை வைக்காமல், அவ்வரசன் தனது குணத்துக்கிணங்கியபடி கண்டகன் என்ற பெயர் கொண்ட கிழ ஓநாயை மந்திரியாகச் செய்து என்னைப் புறக்கணித்து விட்டான். 'மதியாதார் தலை வாசல் மிதிக்க வேண்டாம்' என்று வசனமிருப்பதால் நான் அந்த ராஜ்யத்தை விட்டுப் பல தேசங்களில் ஸஞ்சாரம் செய்து வருகையிலே, ஸந்நிதானத்தின் வீரச் செயல்களையும் தர்மகுணங்களையும் கேள்விப்பட்டு, 'ஆஹா! வேலை செய்தால் இப்படிப்பட்ட சிங்கத்தினிடமன்றோ செய்யவேண்டும், என்ற ஆவல் கொண்டவனாய், ஸந்நிதானத்தைத் தரிசனம் செய்து நம்முடைய பிறப்பைப் பயனுடையதாகச் செய்து கொள்ளவேண்டுமென்ற நோக்கத்துடன் இங்கு வந்தேன். தம்மைக் கண்ட மாத்திரத்தில் எனது கலி நீங்கிவிட்டது" என்று சொல்லிற்று.
இதைக் கேட்டுச் சிங்கம் புன்னகை கொண்டு, சிறிது நேரம் யோசனை செய்துவிட்டு, "சரி, நீ நம்முடைய அரண்மனையில் சேவகம் செய்து கொண்டிரு" என்றாக்கினை செய்தது.
மறுநாட் காலையில் வீரவர்மனிடம் அதன் கிழ மந்திரியாகிய தந்திரசேனன் என்ற நரி வந்து சொல்லலாயிற்று:
"அரசனே, நேற்றுத் தம்மிடம் விகாரன் என்ற பேய்க்காட்டு நரி வந்து பேசியதாகவும் அவனைத் தாம் அரண்மனை வேலையில் நியமித்துக்கொண்டதாகவும் கேள்விப்பட்டேன். என்னிடம் ஆலோசனை செய்யாமல் தாம் இந்தக் காரியம் செய்தது பற்றி நான் வருத்தப்படுகிறேன். ராஜ்ய நீதியில் சிறந்த ஞானமுடைய தாம் புறத்து நரியை, தன்னரசன் காரியத்தை நடத்தத் திறமையில்லாமலோ துரோகத்தாலோ வெளிப்பட்டு வந்திருக்கும் நரியை முன் சரித்திரந் தெரியாத நரியை, இத்தனை அவசரப்பட்டு நம்பின செய்கையை நினைக்கும்போது, எனக்கு ஆச்சரியமுண்டாகிறது" என்றது.
இதைக் கேட்ட வீரவர்மன் நகைத்து 'நீர் சாஸ்திரத்தை நம்பிச் சொல்லுகிறீர். நான் தெய்வத்தை நம்பிச் செய்தேன்' என்றது.
அப்போது தந்திரசேனன் என்கிற கிழ நரி சொல்லுகிறது: "எவன் சாஸ்திரத்தை நம்புகிறானோ' அவனே தெய்வத்தை நம்புகிறான். உலகத்தின் அனுபவமே தெய்வத்தின் வாக்கு. அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டது சரியான சாஸ்திரம். நான் லோகானுபவத்தை ஆதாரமாகக் கொண்டு சொல்லுகிறேன். இது தெய்வத்தால் ஏற்பட்டதேயன்றி வேறில்லை. ஆதலால் நான் சாஸ்திரத்தை நம்புவதாகவும், தாம் தெய்வத்தை நம்புவதாகவும், பேதப்படுத்திச் சொல்வதின் பொருள் எனக்கு விளங்கவில்லை" என்றது.
சிங்கம் மறுமொழியே சொல்லவில்லை. சிறிது நேரம் சும்மா காத்திருந்துவிட்டு, "மௌனம் ஸர்வார்த்த ஸாதகம்" என்றெண்ணிக் கிழ நரி விடை பெற்றுச் சென்றது.
அப்போது சிங்கம் விகாரன் என்ற பேய்க்காட்டு நரியைத் தன் முன்னே அழைப்பித்துப் பின்வருமாறு கேட்டது:
"விகாரா, தண்டிராஜன் உனது பிதாவின் ஸ்தானத்தில் உன்னை நியமிக்காமல், கண்டகனை நியமித்த காரணமென்ன? உன்னிடமிருந்த பிழையென்ன?"
நரி சொல்லுகிறது: "என்பிரானே, நான் யாதொரு குற்றமும் செய்யவில்லை. ஒரு வேளை என் வயதுக் குறையை எண்ணிச் செய்திருக்கலாம். மந்திரித் தொழிலுக்குக் கிழவனே தகுதியென்று மதியில்லாத ராஜாக்கள் நினைக்கிறார்கள். மேலும்,
அப்போது சிங்கம் "உங்களுடைய தண்டிராஜனுக்கும் எனக்கும் பகையென்பதை நீ அறிவாயா?" என்று கேட்டது.
"அறிவேன்" என்று நரி சொல்லிற்று.
"தன்னரசனைக் கைவிட்டுப் பகையரசனைச் சார்ந்து வாழவிரும்பும் மந்திரிக்குப் பெயர் தெரியுமா?" என்று வீரவர்மன் கேட்டது.
"அவன் பெயர் துரோகி" என்று விகாரன் சொல்லிற்று. சிங்கம் நகைத்தது.
"உன்னுடைய குலதெய்வத்தின் பெயரென்ன?" என்று சிங்கம் கேட்டது.
"காட்டுக் கோயில் மாகாளி" என்று நரி சொல்லிற்று. சிங்கத்தின் உடம்பில் நடுக்கமுண்டாயிற்று.
உடனே 'ஹா' என்று கத்திச் சிங்கம் தனது கையை உயர்த்திக்கொண்டு சொல்லுகிறது: "மூட நரியே! எது நேர்ந்தாலும் உன்னைக் கொல்லக் கூடாதென்று நேற்றே என் மனதில் தீர்மானம் செய்து கொண்டபடியால், இப்போது உன்னைக் கொல்லாமல் விடுகிறேன். என்னிடம் நீ பொய் சொல்லுகிறாயா? சொல் உண்மையை. உனது குல தெய்வத்தின் பெயரென்ன?" என்று உறுமிக் கேட்டது.
விகாரனென்ற நரி நடுங்கிப் போய்ப் பின்வருமாறு சொல்லலாயிற்று.
நரி சொல்லுகிறது:- "ஐயனே, என்னுடைய பூர்வ குல தெய்வம் அதாவது என்னுடைய முன்னோரும் நேற்று வரை நானும் கும்பிட்டு வந்த தெய்வம் வேறு. அதன் பெயர் பேய் நாகன். அந்த தெய்வமே எங்கள் பேய்காட்டுக் காவல் நடத்தி வருகிறது. பேய்க்காட்டரசனாகிய தண்டிராஜனுக்கும் அவனுடைய குடிகள் எல்லோருக்கும் அதுவே குலதெய்வம். பரம்பரை வழக்கத்தால் எனது பிறப்பு முதல் நேற்று தங்களுடைய சந்நிதானத்தைத் தரிசனம் பண்ணும் வரை நானும் பேய் நாகனையே குலதெய்வமாகக் கொண்டாடினேன். தண்டிராஜனுடன் மனஸ்தாபப்பட்டு வெளியேறின கால முதலாக யாதொரு சரணுமில்லாமல் அலைந்து எனக்கு நேற்று இவ்விடத்து சந்நிதானத்தில் அபயங்கொடுத்தவுடனே, எனக்குச் சந்நிதானமே அரசனும், குருவும், தெய்வமும் ஆகிவிட்டபடியால், இவ்விடத்துக்கு குலதெய்வத்தின் பெயர் காட்டுக் கோயில் மாகாளி என்பதைத் தெரிந்து கொண்டு, அந்த மகா சக்தியையே எனக்கும் குலதெய்வமாக வரித்துக்கொண்டேன்" என்றது.
இதைக்கேட்டு 'வீரவர்மன்' காடு குலுங்கும்படி கோப நகை நகைத்துச் சொல்லுகிறது:-
"இன்னும் பொய் சொல்லுகிறாய். உன்னை மீளவும் க்ஷமிக்கிறேன். நேற்று உன்னைப் பார்த்தவுடனே கொல்ல நினைத்தேன். நீ சரணமென்று காலில் விழுந்தபடியால் துரோகியொருவன் வஞ்சகமாக அடைக்கலம் புகுந்தாலும் அவனைக் கொல்லாமல் விடுவது வீரருக்கு லக்ஷணமென்று நினைத்து உன்னைக் கொல்வதில்லை யென்று மனதில் நிர்ணயம் செய்து கொண்டேன். ஒரு வார்த்தை சொல்லுகிறேன் கேள். நீ நம்மிடம் உளவு பார்க்க வந்த ஒற்றன். அந்த முழு மூடனாகிய தண்டிராஜன் உன்னை இங்கே அனுப்பியிருக்கிறான். நான் இஷ்டப்படும் வரையில் இனி அவனுடைய முகத்தை நீ பார்க்கப் போவதில்லை. உன்னை நம்முடைய அரண்மனையில் வைத்துக் கொள்ளுவேன். ஆனால் என்னுடைய அனுமதியின்றி நீ பொன்னங் காட்டை விட்டு வெளியேறக்கூடாது. அப்படி வெளியேற முயன்றால் உன்னுடைய நான்கு கால்களையும் வெட்டிவிடச் செய்வேன், தெரிகிறதா?"
விகாரன்:- "ஐயனே, என் விஷயமாக சந்நிதானத்தினிடம் யாரோ பொய்க் கதை சொல்லியிருப்பதாகத் தெரிகிறது. பொறாமையினாலே செய்திருக்கிறார்கள். எனக்கும் தண்டிராஜனுக்கும் விரோதமென்பதைத் தாங்கள் பேய்க் காட்டுக்கு ஆளனுப்பி விசாரித்துவிட்டு வரும்படி செய்யலாம். அங்கே யாரிடம் கேட்டாலும் சொல்லுவார்கள். இது பொய் வார்த்தையில்லை. காரணம் நேற்றே தெரிவிக்க வில்லையா? என்னுடைய பிதா வகித்த மந்திரி ஸ்தானத்தை அவன் எனக்குக் கொடுக்காமல் அந்த ஓநாய்க்குக் கொடுத்தான். அதிலிருந்து விரோதம். என்னை ஒன்றும் செய்யவேண்டாம். எனக்குத் தாங்களே குரு, தாங்களே பிதா, தாங்களே தெய்வம். தங்களைத் தவிர எனக்கு இப்போது வேறு கதியில்லை" என்றது.
அதற்கு வீரவர்மன்:- "சரி, இனிமேல் பொய் சொன்னால் அவசியம் கண்ணிரண்டையும் பிடுங்கி விடுவேன் சொல்லு, அந்த தண்டிராஜனிடம் சைனியங்கள் எவ்வளவிருக்-கின்றன?"
விகாரன்:- "ராஜாதி ராஜனே, நான் அந்தக் காட்டில் எவ்விதமான அதிகாரமும்
வகிக்கப்பெறவில்லை. சைனிய உளவுகள் எனக்கெப்படித் தெரியும்?"
இதைக் கேட்டவுடனே சிங்கம் "யாரடா அங்கே சேவகன்?" என்று கர்ஜனை செய்தது. உடனே ஒரு ஓநாய் ஓடி வந்து பணிந்து நின்றது. அதை நோக்கி வீரவர்மன் "ஸேனாபதியை உடனே அழைத்துவா என்று ஆக்கினை செய்தது. "உத்தரவுப்படி" என்று சொல்லி ஓநாய் வணங்கிச் சென்றது.
பிறகு வீரவர்மன் நரியை நோக்கிச் சொல்லுகிறது: "விகாரா, நமது ஸேனாபதியாகிய அக்னிகோபன் இன்னும் ஐந்து நிமிஷங்களுக்குள் இங்கே வந்து விடுவான். அவன் வருமுன்பு நான் கேட்கிற கேள்விகளுக்கு நீ தவறாமல் உண்மை சொல்லக் கடவாய். இதோ என் முகத்தைப் பார்" என்றது.
நரி குடல் நடுங்கிப் போய்ச் சிங்கத்தின் முகத்தைச் சற்றே நிமிர்ந்து பார்த்தது. இன்மேல் இந்தச் சிங்கத்தினிடம் பொய் சொன்னால் உயிர் மிஞ்சாதென்று நரிக்கு நல்ல நிச்சயம் ஏற்பட்டு விட்டது.
பிறகு நரி சொல்லுகிறது: "ஸ்வாமி, நான் சொல்லுகிற கணக்குத் தவறினாலும் தவறக் கூடும். எனக்குத் தெரிந்தவரையில் உண்மை சொல்லி விடுகிறேன். எனக்கு எவ்வித தண்டனையும் விதிக்க வேண்டாம். எனக்கு உங்களுடைய பாதமே துணை" - என்றது.
வீரவர்மன்: "பேய்க்காட்டு சைனியம் எவ்வளவு? உடனே சொல்லு. உண்மை சொல்லு."
விகாரன்: "புலிப்படை முந்நூறு, கரடி இருநூறு, காண்டா மிருகம் நூறு, ஓநாய் ஆயிரம், ஆனைப் படை ஆயிரம், நரிப்படை நாலாயிரம்."
வீரவர்மன்: "உளவு பார்த்து வரும் காக்கைகள் எத்தனை?"
விகா: "இருநூற்றைம்பது."
வீர: - "சுமை தூக்கும் ஒட்டகை எத்தனை? கழுதை எத்தனை?"
விகா: "ஒட்டகை எண்ணூறு. கழுதை பதினாயிரம்."
வீரா: "எத்தனை நாள் உணவு சேகரித்து வைத்திருக்கிறான்?"
விகா: "ஞாபகமில்லை."
வீரா: "கண் பத்திரம்."
விகா: சத்தியம் சொல்லுகிறேன்; ஞாபகமில்லை."
இவ்வாறு பேசிக்கொண்டிருக்கையில் ஸேனாபதியாகிய அக்கோபன் என்ற வேங்கைப்புலி வந்து கும்பிட்டு நின்றது.
"வருக" என்றது சிங்கம்.
அப்போது விகாரன் என்ற நரி தன் மனதுக்குள்ளே யோசனை பண்ணிக்கொள்ளுகிறது:
"ஹூம்! இந்தச் சிங்கராஜன் மகா வீரனாகவும், மகா கோபியாகவும் இருந்தாலும் நாம் நினைத்தபடி அத்தனை புத்திசாலியில்லை. நம்மை எதிரியின் ஒற்றனென்று தெரிந்து கொண்ட பிறகும் நம்மை வைத்துக்கொண்டு சேனாபதியிடம் யுத்த விசாரணை செய்யப்போகிறான். ஏதேனும், ஒரு யதிர்ச்சா வசத்தால் இவனுடைய காவலிலிருந்து நாம் தப்பியோடும்படி நேரிட்டால், பிறகு இவனுடைய யுத்த மர்மங்களை நாம் தண்டிராஜனிடம் சொல்லக் கூடுமென்பதை இவன் யோசிக்கவில்லை. இவனுக்குத் தீர்க்காலோசனை போதாது."
இங்ஙனம், நரி பலவாறு சிந்தனை செய்யுமிடையே, வாயிற்காப்பனாகிய ஓநாய் ஓடிவந்து "மகாராஜா, புரோகிதர் வந்திருக்கிறார்" என்றது.
"உள்ளே வரச்சொல்லு" என்று வீரவர்மன் கட்டளையிட்டது.
அப்பால், அங்கிரன் என்ற பெயர்கொண்டதும், வீரவர்மனுடைய குலத்துக்குப்
பரம்பரையாகப் புரோகிதஞ் செய்யும் வமிசத்தில் பிறந்ததும், பெரிய மதி வலிமை கொண்டதுமாகிய கிழப்பருந்து பறந்து வந்து சிங்கத்தின் முன்னே வீற்றிருந்தது.
சிங்கம் எழுந்து வணங்கிற்று.
சிறிது நேரம் உபசார வார்த்தைகள் சொல்லிக் கொண்ட பிறகு புரோகிதப் பருந்து சிங்கத்தை நோக்கி: "அந்த நரிதான் பேய்க்காட்டு விகாரனோ?" என்று கேட்டது.
சிங்கம் `ஆம்' என்றது.
நரி திருடன் போலே விழித்தது.
அப்போது சிங்கம் சொல்லுகிறது:- "ஸ்வாமி, இந்த நரியை நான் நயத்தாலும் பயத்தாலும் எனது பக்கம் சேரும்படி சொல்லிவிட்டேன். இவன் தண்டிராஜனிட மிருந்த அன்பை நீக்கி என்னாளாகி விட்டான். இவனை நான் இப்போது நம்முடைய மந்திரி சபையில் இருக்க இடங்கொடுத்ததினாலேயே நான் இவனிடம் பரிபூர்ண நம்பிக்கை கொண்டிருக்கிறேனென்பதைத் தாங்கள் தெரிந்து கொள்ளலாம். இவனுடைய பழைய நினைப்பை மறந்து இப்போது தண்டிராஜனுடைய உளவுகளை நமக்குத் தெரிவிக்கும் தொழிலில் அமர்ந்திருக்கிறான். அதனாலே தான் நமது சபையில் இவனைச் சேர்க்கும்படியாகிறது" என்றது.
பருந்து புன்னகை செய்தது. ஒன்றும் சொல்லவில்லை.
அப்போது சிங்கம் கேட்கிறது: "ஸ்வாமி, ஒருவன் எதிர்பார்க்காத காரியத்தில் எதிர் பார்க்காதபடி ஆச்சரியமான வெற்றியடைய வேண்டுமானால் அதற்கு வழியென்ன?" என்றது.
அப்போது அங்கிரன் என்ற புரோகிதப் பருந்து சொல்லுகிறது: "அரசனே, மந்திரி சபையில் எதிர்பார்க்காத கேள்வி கேட்டாய். உனக்கு நான் மறுமொழி சொல்ல வேண்டுமானால், அதற்கு நீண்ட கதை சொல்லும்படி நேரிடும். மந்திராலோசனை சபையில் முக்கியமான காரியத்தை விட்டுப் புரோகிதனிடம் கதை கேட்க வேண்டுமென்ற சித்தம் உனக்குண்டானால் நான் சொல்வதில் ஆக்ஷேபமில்லை. நேரம் அதிகப்படும். அதுகொண்டு என்னிடம் கோபம் வரக்கூடாது" என்றது. அப்போது சிங்கம் ஒரு துளி சிரிப்போடு சொல்லுகிறது: - "மந்திர சபை பின்னாலேயே தள்ளி வைத்துக் கொண்டோம். இப்போது கதை நடக்குக" என்றது. உடனே, புரோகிதனாகிய அங்கிரன் என்ற பருந்து சொல்லுகிறது.
-------------
கேளாய் ராஜகேஸரியாகிய வீரவர்மனே, முன்னொரு காலத்தில் மதுரையிலே விக்கிரம பாண்டியன் அரசு செலுத்தியபோது காலாட்படையிலே திண்ணன் என்றொரு மறவன் இருந்தான்.
அவன் ஒரு நாள் மாலையில் அரண்மனைப் பக்கமாக நடந்து போகையில் உச்சி மாடத்தின் மேலே பாண்டியன் மகளாகிய தர்மலக்ஷ்மி என்ற பெண் பந்தாடிக் கொண்டிருந்ததைக் கண்டு மிகவும் காதல் கொண்டவனாய் அவளை மணம் செய்துகொள்ள வேண்டுமென்று விரும்பினான்.
அப்பால் அவன் ஒரு சோதிட சாஸ்திரியினிடம் போய், "ஒருவன் ராஜாவின் மகளை மணம் செய்துகொள்ள விரும்பினால் அதற்கு எவ்விதமான பூஜை நடத்த வேண்டும்?" என்று கேட்டான்.
"நீ யார்? உனக்கென்ன தொழில்?" என்று சோதிடன் கேட்டான்.
"நான் காலாட்படை மறவன். என் பெயர் திண்ணன்" என்று இவன் சொன்னான்.
இதைக் கேட்டவுடன் சோதிடன் “என்னிடம் கேட்காதே, ஓடிப்போ” என்று சொல்லித் துரத்திவிட்டான்.
பிறகு திண்ணன் மீனாக்ஷியம்மன் கோயிலில் பூஜைசெய்யும் குருக்கள் ஒருவரிடம் போய்க் கேட்டான். அந்தக் குருக்களென்ன செய்தார்? "அப்பா! நீ இன்னும் ஒரு வருஷம் கழிந்த பிறகு என்னிடம் வந்து இதைக் கேள். அப்போது மறுமொழி சொல்லுகிறேன். அதுவரை சொல்ல முடியாது" என்று போக்குச் சொல்லி அனுப்பி விட்டார்.
பிறகு திண்ணன் ஒரு மந்திரவாதியிடம் போய்க் கேட்டான். அந்த மந்திரவாதி
சொல்லுகிறான்: - "தம்பி, பதினாறு பொன் கொண்டுவந்து கொடு. நான் ஒரு பூஜை நடத்தி முடித்து உன்னுடைய மனோரதம் நிறைவேறும்படி செய்விக்கிறேன்" என்றான்.
திண்ணன் திரும்பிப் போய்விட்டான். அவனிடம் பதினாறு வெள்ளிக் காசுகூடக் கிடையாது. அவன் ஏழைப்பிள்ளை.
இதன் பிறகு 'யாரைப் போய்க் கேட்கலா'மென்று யோசனை செய்து பார்த்தான். "நேரே, ராஜாவின் மகளையே கேட்டு விட்டாலென்ன?" என்று அவன் புத்தியில் ஒரு யோசனை யேற்பட்டது. "சரி. அப்படியே செய்வோம்" என்று தீர்மானம் பண்ணிக் கொண்டான்.
அவனுக்குப் பக்கத்து வீட்டிலிருந்த ஒரு பூவாணிச்சியின் மகள் நாள்தோறும் அரண்மனைக்கு மாலை கட்டிக் கொண்டு கொடுத்து வருவது வழக்கம். அந்தப் பெண் திண்ணனுக்கு நெடுநாளாகப் பழக்கமுண்டு. இவன் என்ன சொன்ன போதிலும் அந்தப் பெண் கேட்பாள். ஆதலால், இவன் ஒரு சிறிய நறுக்கோலையில்,
"மன்னன் மகளே, காலாள் மறவன்
என்ன செய்தால், உன்னைப் பெறலாம்?"
என்ற வாக்கியத்தை எழுதி, அந்த நறுக்கோலையை மிகவும் அழகானதொரு பூமாலைக்குள் நுழைத்து வைத்து, அந்தப் பூவாணிச்சிப் பெண்ணிடம் கொடுத்து "நீ இதை அரசன் மகள் முன்னாலே கொண்டு போய் ஒரு தரம் உதறி விட்டு மாலையை அவளிடம் கொடு" என்று சொல்லியனுப்பினான். அவளும் அப்படியே பூமாலையைக் கொண்டு ராஜகுமாரியின் முன்னே ஒரு தரம் உதறிய பின்பு, அதைக் கொடுத்துவிட்டுத் திரும்பி வீடு வந்து சேர்ந்தாள்.
ராஜகுமாரி அந்த நறுக்கோலை கீழே விழுந்து கிடப்பதைக் கண்டு அதையெடுத்து வாசித்தாள்:-
"மன்னன் மகளே, காலாள் மறவன்
என்ன செய்தால் உன்னைப் பெறலாம்?"
அங்கிரன் என்ற புரோகிதப் பருந்து சொல்லுகிறது: கேளாய் வீரவர்ம ராஜனே, அந்தப் பூவாணிச்சிப் பெண் மாலையை உதறினபோது நறுக்கோலை கீழே விழுவதை ராஜகுமாரி பார்த்தாள். பூவாணிச்சிப் பெண் அரண்மனையிலிருந்து தன் வீட்டுக்குத் திரும்பிப் போனவுடனே திண்ணன் அவளைக் கண்டு "ராஜகுமாரியிடம் மாலையைக் கொடுத்தாயா?" என்று கேட்டான். ஆமென்றாள். "உதறினாயா?" என்று கேட்டான். "செய்தேன்" என்றாள். சரியென்று சொல்லிப் போய் விட்டான்.
மறுநாட் காலையில் பூவாணிச்சிப் பெண் வழக்கம் போலே அரண்மனைக்கு மாலை கொண்டு போனாள்.
அப்போது ராஜகுமாரி அந்தப் பெண்ணிடம் ஒரு நறுக்கோலையைக் கொடுத்து "நேற்று உன்னிடம் மாலை கொண்டு தந்த காலாள் மறவனிடம் இதைக் கொண்டு கொடு" என்றாள்.
பூவாணிச்சிப் பெண் திகைத்துப் போய்விட்டாள். "பயப்படாதே; கொண்டுபோ" என்று ராஜகுமாரி சொன்னாள். பூவாணிச்சிப்பெண் நறுக்கோலையைக் கொண்டு திண்ணனிடம் கொடுத்தாள். அவன் வாசித்துப் பார்த்தான். அதிலே "தெய்வமுண்டு" என்றெழுதி யிருந்தது. பின்னொரு நாள் திண்ணன் தனியேயிருந்து யோசிக்கிறான்: -
"இந்த அரசன் மகள் நம்மைப் பரிகாஸம் பண்ணமாட்டாள். ஏதோ நல்ல வழிதான் காட்டியிருக்கிறாள். தெய்வத்தை நம்பினால் பயன் கிடைக்குமென்று சொல்லுகிறாள். சரி. அப்படியே நம்புவோம்......அந்தக் காலத்தில் தெய்வம் தவம் பண்ணுவோருக்கு நேரே வந்து வரம் கொடுத்ததென்று சொல்லுகிறார்கள். இந்த நாளில் அப்படி நடப்பதைக் காணோம்......அடா போ! பழைய காலமேது? புதிய காலமேது? தெய்வம் எந்தக் காலத்திலும் உண்டு. தெய்வத்தைக் குறித்துத் தவம் பண்ணுவோம். வழி கிடைக்கும்" என்று சொல்லி ஒரு காட்டுக்குப் போய், அங்கே காய்கனிகளைத் தின்று சுனை நீரைக் குடித்துக் கொண்டு தியானத்திலே நாள் கடத்தினான்.
அந்தக் காட்டில் இவனுக்கும் ஒரு வேடனுக்கும் பழக்கமுண்டாயிற்று. அந்த வேடன் இவனுடைய தவப்பெருமையையும் இவன் முகவொளியையும் கண்டு, இவனிடம் மிகுந்த பிரியங் கொண்டவனாய் இவனுக்கு மிகவும் சுவையுடைய தேனும் கிழங்குகளும் கொண்டு கொடுப்பான். இவன் வேடனுக்கு தெய்வபக்தி யேற்படுத்தினான்.
ஒருநாள் அந்த வேடன் இவனிடம் ஒரு மூலிகை கொண்டு கொடுத்து, "இது மிகவும் ரகஸ்யமான மூலிகை. இதைப் பத்திரமாக வைத்துக்கொள்ளு. ஒருவனுடம்பில் எத்தனை பெரிய புண் இருந்தாலும், இந்த மூலிகையில் தினையளவு அரைத்துப் பூசினால், புண் இரண்டு ஜாமத்துக்குள் ஆறிப் போய் விடும்" என்றான். அதை இவன் பத்திரமாக வைத்துக் கொண்டான்.
திண்ணன் குடியிருந்த பர்ண சாலைக்கருகே ஒரு பாம்புப் புற்றிருந்தது. அதில் கிழ நாகம் ஒன்று வசித்தது. அதை ஒரு நாள் வேடன் கண்டு கொல்லப் போனான். அப்போது திண்ணன்:- "ஐயோ பாவம்! கிழப்பாம்பு அதைக் கொல்லாதே. அது நெடு நாளாக இங்கிருக்கிறது. என்னை ஒன்றும் செய்வதில்லை. அதன் வழிக்கு போகாதே" என்று சொல்லித் தடுத்து விட்டான்.
பின்னொரு நாள் அந்தப் பாம்பு தனியே செத்துக் கிடந்தது. அந்தப் பாம்பு சாகும்போது கக்கினதோ வேறென்ன விநோதமோ - அந்தப் பாம்புக்கருகே ஒரு பெரிய ரத்தினம் கிடந்தது. அதை நாகரத்தின மென்று திண்ணன் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டான்; அன்றிரவிலே திண்ணன் ஒரு கனவு கண்டான். அதில் அவனுடைய இஷ்ட தேவதையாகிய மீனாக்ஷியம்மை தோன்றி, "உனது தவத்தால் மகிழ்ந்து உனக்கு நாகரத்தினம் கொடுத்தேன். இதைக் கொண்டு போய் சௌக்யமாக வாழ்ந்துகொண்டிரு" என்றாள்.
திண்ணன் அந்தக் கனவை நம்பவில்லை. "நம்முடைய நினைவினாலேயே இந்தக் கனவுண்டாயிருக்கிறது. தெய்வமாக இருந்தால், ராஜகுமாரி வேண்டுமென்று தவஞ்செய்ய வந்தவனிடம் நாகரத்தினத்தைக் கொடுத்து வீட்டுக்குப் போகச் சொல்லுமா? செய்யாது. ஆதலால் இந்தக் கனவு தெய்வச் செய்கையன்று, நம்முடைய மனதின் செய்கை" என்று தீர்மானம் செய்து, அந்தக் காட்டிலேயே எப்போதும்போல தவஞ் செய்து கொண்டிருந்தான்.
பிறகொரு நாள், அந்தக் காட்டில் விக்கிரம பாண்டியன் வேட்டைக்கு வந்தான். அவன் திண்ணனைக் கண்டு "நீர் யார்? இந்த வனத்தில் எத்தனைக் காலமாகத் தவம் செய்கிறீர்?" என்று கேட்டான்.
அப்போது திண்ணன் சொல்லுகிறான்: "நான் பாண்டிய நாட்டு மறவன். என் பெயர் திண்ணன். இங்குப் பல வருஷங்களாகத் தவஞ்செய்கிறேன், காலக் கணக்கு மறந்துபோய் விட்டது" என்றான்.
"என்னைத் தெரியுமா? நான் பாண்டிய நாட்டரசன்" என்று பாண்டியன் சொன்னான்.
"தெரியும்" என்று திண்ணன் சொன்னான்.
அரசன் இந்த மறவனுடைய அழகையும், ஒளியையும் கண்டு வியந்து: "இந்த இளமைப் பிராயத்தில் இவ்வனத்திலே என்ன கருத்துடன் தவம் செய்கிறீர்?" என்று கேட்டான்.
"மதுரை யரசன் மகளை மணம் செய்யவேண்டித் தவம் செய்கிறேன்" என்று திண்ணன் சொன்னான்.
அரசன் திகைப்படைந்து போய், "எங்ஙனம் கைகூடும்! அம்மவோ" என்றான்.
"மீனாக்ஷி கேட்ட வரம் கொடுப்பாள்" என்று திண்ணன் சொன்னான்.
"மன்னன் மகளுக்கு நீ என்ன பரிசம் கொடுப்பாய்?" என்று பாண்டியன் கேட்டான்.
"புண்ணைத் தீர்க்க மூலிகையும், மண்ணைச் சேர்க்க நாகரத்தினமும் கொடுப்பேன்" என்று திண்ணன் சொன்னான்.
அரசன் அவ்விரண்டையும் காட்டும்படி சொன்னான். திண்ணன் காட்டினான். வேட்டையிலே புண்பட்ட மானுக்கு அந்த மூலைகையை அரைத்துப் பூசினார்கள். உடனே புண்தீர்ந்து விட்டது.
இந்தத் திண்ணனுடைய தவப்பெருமையும், அதனாலே கைகூடிய தெய்வ அருளும் அவன் முதத்திலும், விழியிலும் சொல்லிலும், செய்கையிலும் விளங்குவது கண்டு பாண்டியன் மனமகிழ்ச்சியுடன், அவனுக்கே தனது மகளை மணஞ்செய்து கொடுத்தான். ஆதலால், எதிர்பார்க்க முடியாத பயன் உலகத்தார் கண்டு வியக்கும்வண்ணமாக ஒருவனுக்குக் கைகூடவேண்டுமானால் அதற்குத் தெய்வ பக்தியே உபாயம்" என்று பருந்து சொல்லிற்று.
அப்போது அந்த சபையிலே சேனாபதி அக்நிகோபன் மகனாகிய ரணகுமாரன் என்ற இளம்புலியும், தந்திரசேனன் மகன் உபாய வஜ்ரன் என்ற நரியும், வேறு பல புலி, நரிகளும், தம்முடன் உடம்பு முழுதும் புண்பட்டு இரத்தம் ஒழுகிக் கொண்டிருந்த சிங்கமொன்றை இழுத்துக்கொண்டு ராஜசபையில் உத்தரவு பெற்றுக்கொண்டு வந்து வணங்கி நின்றன.
அந்தப் புண்பட்ட, கைதிச் சிங்கம் யாரென்றால், அது தான் பேய்க்காட் டரசனாகிய தண்டிராஜன்!
இந்த ஆச்சரிய விளைவைக் கண்டு வீரவர்மன் புன்னகை செய்தது. விகாரன் என்ற பேய்க்காட்டு நரி மூர்ச்சை போட்டு விழுந்தது. புரோகிதர். சேனாபதிகள் வீரவர்மனை வாழ்த்தி அவனுடைய சத்துரு இத்தனை நாளாகக் கைதிப்பட்டு வந்த மகிழ்ச்சியை விழியினாலே தெரிவித்தன.
------------
அப்போது வீரவர்மன் ரணகுமாரனையும் அவன் தந்தையாகிய சேனாபதி அக்நிகோபனையும் நோக்கி மிகவும் மகிழ்ச்சி பாராட்டி ரணகுமாரனுக்குப் பதவியும் பட்டமும் மேம்படச் செய்தது. பிறகு உபாயவஜ்ரனை நோக்கிப் "பிள்ளாய்; இனிமேல் நீயும் நமது சபையில் ஒரு மந்திரியாகக் கடவாய்" என்றது.
அங்கு மேலெல்லாம் இரத்தமொழுக, ஒரு கண்ணிலும் இரத்தம் வழியத் தலைகவிழ்ந்து நின்ற தண்டி ராஜனுக்கு உபசார வார்த்தைகள் சொல்லி, உள்ளே அனுப்பி ராஜவைத்தியர் மூலமாகச் சிகிச்சை செய்விக்கும்படி ராஜாக்கினை பிறந்தது.
அப்பால் வீரவர்மன்: "உபாயவஜ்ரா, நீ புறப்பட்டது முதல், தண்டி ராஜனுடன் நமது சபை முன்பு தோன்றிய காலம் வரை நடந்த விருத்தாந்தங்களையெல்லாம் ஒன்று விடாதபடி சொல்லு" என்றது.
உபாயவஜ்ரன் ராஜ சபையில் விஞ்ஞாபனம் செய்கிறது: "சக்திவேல் ராஜேசுவரா! பொன்னங்காட்டிலிருந்து புறப்பட்டு நாகமலைக்குப் போகும்வரை விசேஷமொன்றும் நடக்கவில்லை. அங்கு காசுக் குகையில் ரணகுமாரர் தமது பரிவாரங்களுடன் இருப்பதைக் கண்டேன். ராஜாக்கினை இப்படியென்று தெரிவித்தேன். அவர் தமக்கும் அவ்விதமாகவே உத்தரவு கிடைத்திருப்பதாகச் சொல்லி வழித்துணைக்கு யார் யார் வேண்டுமென்று கேட்டார். குடிலப்பன் என்ற குள்ள நரியையும், விளக்கண்ணன் என்ற வேட்டை நாயையும், தொளைச்சாண்டி என்ற மூஞ்சூற்றையும், கிழக்கரியன் என்ற காக்கையையும் அழைத்துக் கொண்டு போனேன்."
----------
அப்போது வீரவர்மன் தனது சபையில் வந்து நின்ற மேற்படி நால்வரையும் கடைக்கண்ணால் நோக்கிப் புன்னகை செய்தது.
உபாயவஜ்ரன் சொல்லுகிறது:- நான் அந்த நால்வரையும் கொண்டுபோய், ஓரிடத்திலே நிறுத்திக் கொண்டு, "விளக்கண்ணா, தொளைச்சாண்டி, குடிலப்பா, கிழக்கரியா, நீங்கள் நாலு பேரும் சிஷ்யராகவும், நான் குருவாகவும் வேஷம் போட்டுக் கொள்ள வேண்டும்" என்றேன். அந்தப்படி வேஷம் தரித்துக் கொண்டோம். கோவிந்த நாம சங்கீர்த்தனக் கூட்டமாகப் புறப்பட்டோம். பொது எல்லையில் நாக நதியில் ஸ்நானம் பண்ணி சந்தியா வந்தனாதிகளை முடித்துக் கொண்டோம். 'கோவிந்த நாம சங்கீர்த்தனம்!' என்று நான் கத்துவேன்.
"கோவிந்தா! கோவிந்தா!" என்று சிஷ்யர் நால்வரும் கத்துவார்கள். கையிலே ஆளுக்கொரு தம்பூர், கோவிந்த நாம சங்கீர்த்தனம் பண்ணிக் கொண்டே எதிரி யெல்லைக்குள் பிரவேசித்தோம். நாகமலையில், குடியன் கோயிலுக்குப் பக்கத்திலே வேதிகை கட்டிக் கரடிச்சாத்தான் ஹோமம் வளர்க்கும் யாக சாலைக்குப் போய்ச் சேர்ந்தோம். பகல் முழுதும் நாங்கள் கோவிந்த நாமத்தை விடவேயில்லை. கிழக்கரியனுக்குத் தொண்டை கட்டிவிட்டது. எங்களைக் கண்டவுடனே கரடிச்சாத்தான் 'வாருங்கள் வாருங்கள்' என்று உபசாரம் சொல்லிப் பக்கத்திலிருந்த யாக கோஷ்டியாரிடம் அடியேனைக் காட்டி "இவர் பெரிய பாகவதர். துளஸீதாஸ், கபீர்தாஸ் அவர்களுடைய காலத்துக்குப் பிறகு இவரைப் போலே பக்தர் யாரும் கிடையாது" என்று சொல்லிற்று.
மாலையில் யாக கோஷ்டி கலைந்து விட்டது.
-------------
உபாயவஜ்ரன் தெரிவித்துக் கொள்ளுகிறது:-
பிறகு நள்ளிரவில், காரிருள் நேரத்திலே நானும் கரடிச்சாத்தானுமாக நாகமலையிலுள்ள சூனியக் குகையில் போய் இருந்து கொண்டு ஆலோசனை செய்யலானோம். எடுத்தவுடனே சாத்தான் தக்ஷிணை விஷயம் பேசினான். கையிலே கொண்டு போயிருந்த வஸ்துவை அவன் மடியில் வைத்தேன். அதை உடனே ஒரு பொந்துக்குள்ளே சென்று நுழைத்து வைத்துவிட்டு என்னிடம் திரும்பி வந்தான். பிறகு கொஞ்சம் பிணங்கத் தொடங்கினான். "துஷ்ட நிக்ரஹத்திலே கூட ஒரு வைப்பு வரம்பிருக்க வேண்டும். ஸ்வாமித் துரோகம் செய்யலாகாது. வீட்டுமனும், துரோணனும் உள்ளத்தில் பாண்டவரை உகந்தாலும், உயிரைத் துரியோதனனுக்காக இழந்தனர். ஆதலால் தண்டி ராஜனுடைய சரீரத்துக்கு ஹானி வராதபடி என்னாலாகவேண்டிய உதவியைக் கேட்டால் நான் செய்வேன்" என்றான்.
"தண்டிராஜனை எங்கள் நாகமலையிலுள்ள காசுக் குகையிலே கொண்டு சேர்ப்பிக்க வேண்டும்" என்றேன்.
"சீச்சீ! கோழைகளா!" என்றான்.
வாளை உருவினேன்.
கும்பிட்டு மன்னிக்கும்படி கேட்டான். பிறகு "அந்தக் காரியம் செய்யமாட்டேன்" என்று உறுதியாகச் சொல்லிவிட்டான்.
"ஹோமத்துக்கு வருவானா?" என்று கேட்டேன்.
"வருவான்" என்றான்.
"உடன் வரும் படை எத்தனை?" என்று கேட்டேன்.
"பரிவாரமாகப் பத்துப் பன்னிரண்டு புலி நாய்கள் வரும். படை வராது" என்றான்.
"என்னுடன் சிநேகப்படுத்தி வைப்பாயா?" என்று கேட்டேன்.
"செய்கிறேன்" என்றான்.
"கோள் வார்த்தை ஏதேனும் தண்டிராஜன் செவியில் எட்டுவதாக இருந்தால் உனக்கு உயிர்ச் சேதம் நேரிடும்" என்றேன்.
'தக்ஷிணை, தக்ஷிணை'யென்று முணுமுணுத்தான்.
"நானும் தண்டிராஜனும் தனியிடத்தே பேசும்படி நீ செய்வித்தவுடன் உனக்குத் தந்ததில் மும்மடங்கு தரப்படும்" என்றேன்.
இங்ஙனம் பேசிக் கொண்டிருக்கையிலே திடீரென்று ஏதோ யோசனை பண்ணி என்னை மூச்சைப் பிடித்துக் கொல்லத் தொடங்கினான்.
நான் அவனுடைய அடி வயிற்றிலே எனது பிடிவாளை மூன்றங்குல ஆழம் அழுத்தினேன். கோவென்று கூவிக் கைகளை நெகிழ்த்துக் கொண்டான். நானும் வாளை உருவிக் கொண்டேன்.
உடனே மண்ணைப் பிறாண்டி வயிற்றிலே திணித்து இரத்த மொழுகாதபடி அடைத்துக் கொண்டு, என்னிடம் திரும்பி வந்து, "இதென்ன தம்பி? முத்தமிட வந்தால் அடி வயிற்றில் வாளைக் கொண்டு குத்தினீரே? நியாயமா?" என்று கேட்டான்.
"கை தெரியாமல் பட்டுவிட்டது. மூன்று லக்ஷத்து முப்பது தரம் மன்னித்துக் கொள்ளவேண்டும்" என்றேன்.
அன்றிரவு மந்திராலோசனையை இவ்வளவுடன் நிறுத்திக் கொண்டு குடியன் கோயிலுக்கருகே கரடிச் சாத்தானுடைய யாக சாலைக்குத் திரும்பி வந்து சேர்ந்தோம். மறுநாள் பொழுது விடிந்தது.
சக்திவேல்! வீரவர்ம ராஜனே, நானும் அந்தக் கரடிச் சாத்தானும் சூனியக் குகையில்
வாய்ச் சண்டை கைச்சண்டையாகிப் பிறகு சமாதானப்பட்டு அன்றிரவு அங்கிருந்து வெளிப்பட்டுக் குடியன் கோயிலுக்கருகே கரடிச் சாத்தான் வளர்க்கும் ஹோமசாலைக்குத் திரும்பி வந்து, கொஞ்சம் நித்திரை செய்தோம். மறுநாள் பொழுது விடிந்தது. தண்டிராஜன் தனது சைனியத்துடன் நாகமலைப் பாகத்துக்கு வந்துவிட்டான். கரடிச் சாத்தானைத் தனது கூடாரத்துக்குத் தருவித்தான். இவனும் அவனும் சம்பாஷணை செய்து கொண்டிருக்கையிலே என்னை அழைப்பித்தார்கள். நான் அங்கே போகுமுன்பு ரணகுமாரனிடம் சொல்ல வேண்டிய விஷயங்களைச் சொல்லித் திடப்படுத்தி விட்டுத் தண்டிராஜன் முன்னே சென்றேன். கரடிச் சாத்தானிடம் ஒரு மோதிரத்தைக் காண்பித்தேன். அவன் தனக்கு தாகவிடாய் தீர்த்துவர வேண்டுமென்று முகாந்திரம் சொல்லி வெளியே போனான். நானும் தண்டிராஜனும் தனியே இருந்தோம். நமஸ்காரம் பண்ணினேன்.
"யார் நீ?" என்று கேட்டான். "விகாரனுடைய குமாரன், என் பெயர் உபாய வஜ்ரன். விகார மாமா சொன்னார். அவர் உத்திரவின்படி இங்கு வந்தேன்."
"நாகமலையில் காசுக்குகையில், தங்கக்காசு மகரிஷி என்ற சித்தர் இருக்கிறார். அவர் கல்லைப் பொன்னாக்குவார். அவரிடத்தில் பொன் வாங்கிக்கொண்டு போக வீரவர்மன் வருவான். மேல்படி தங்கக் காசு மகரிஷியை விகார மாமா நம்முடைய கக்ஷிக்கு அனுகூலம் ஆகச் செய்து விட்டார். அவர் வீரவர்மனை மதுவிலே மயக்கி வைப்பார். அவன் களியுண்டிருப்பான். அந்த க்ஷணத்தில் நாம் அங்கே யிருக்க வேண்டும். வீரவர்மனைப் பிடித்துக் கட்டி வந்து விடலாம். இதுவெல்லாம் விகார மாமா சொல்லிக் கொடுத்த ஏற்பாடுகள், சொன்னேன்.” அவன் நம்பவில்லை. யாரையெல்லாமோ கலந்து பேசினான். கரடிச் சாத்தானைக் கலந்து வார்த்தை சொன்னான்.
பிறகு மாலையில் என்னை மறுபடி அழைப்பித்து உன்னிடம் எனக்கு நம்பிக்கை பிறக்கவில்லை என்று சொன்னான். நான் அவர்கள் குலத்து மூலமந்திரத்தை உச்சரித்தேன். உடனே பகவான் கிருஷ்ணனை ஸ்மரித்து அந்தப் பாவத்தை நீக்கிக் கொண்டேன். நம்முடைய மகா சக்தி மந்திரத்தை அதன் பின் ஸ்மரித்தேன். அவனுக்கு நம்பிக்கை பிறந்து அவனுடன் ஐந்து பேரைச் சேர்த்துக் கொண்டு காசுக் குகைக்கு வந்தான். அங்கு ரணகுமாரன் ஒருவனே ஐந்து பேரையும் அடித்துத் துரத்திவிட்டு தண்டிராஜனையும் குண்டுக் கட்டாகக் கட்டிப் பிடித்துக்கொண்டு வந்தான்" என்றது.
"இங்ஙனம் உபாயவஜ்ரன் என்ற நரியின் வார்த்தையைக் கேட்டு மிகவும் மெச்சிச் சிங்கம் தனது சபையைக் கலைத்து விட்டது. பிறகு சிறிது காலத்துக்கப்பால் மறுபடி சண்டை தொடங்கிற்று" என்று விவேக சாஸ்திரி தன் மக்களிடம் சொல்லி வரும்போது, "தண்டிராஜனைப் பிடித்துக் கைதியாக்கின பிறகு சண்டை எப்படி நடக்கும்?" என்று அவருடைய மூன்றாவது குமாரனாகிய ஆஞ்சனேயன் கேட்டான்.
அப்போது விவேக சாஸ்திரி சொல்லுகிறார்:-
தண்டி பிடிபட்டான் என்ற செய்தி தெரிந்த உடனே பேய்க் காட்டில் ராஜ்யப் புரட்சி உண்டாகிக் குடியரசு நாட்டுக்குக் கரடிச் சாத்தானைத் தலைவனாக நியமித்தார்கள். சகோதரத்வம், சமத்வம், சுதந்திரம் என்ற மூன்றையும் தந்திரமாகக் கரடிச்சாத்தான் ஊர்தோறும் பறையறைவித்தான். இந்தச் செய்தி தெரிந்த வீரவர்மன் தனது படையை அனுப்பிக் கரடிச் சாத்தானைப் பிடித்து வரும்படி செய்தான். கரடியின் வாலை யறுத்து வேறொரு காட்டுக்குத் துரத்திவிட்டான். தண்டியின் தம்பியாகிய உத்தண்டியைக் குடியரசின் தலைவனாக நியமனம் செய்தான். தண்டியைப் பொன்னங்காட்டுக் கோட்டையிலே கைதியாக வைத்துக் கொண்டான்.
பொன்னங்காட்டில் ஒரு நரிக் கூனி உண்டு. அவள் பெயர் நரிச்சி நல்ல தங்கை. அந்த நரிச்சி நல்லதங்கையானவள் வீரவர்மன் சிறு குழந்தையாக இருந்த காலத்தில் அரண்மனையில் ஏவல் செய்து கொண்டிருந்தாள். அப்போது ஒரு நாள் வீரவர்மன் விளையாட்டாகக் கல் வீசிக்கொண்டு இருக்கையிலே, ஒரு கல் நரிச்சி நல்லதங்கையினுடைய முதுகில் வந்து விழுந்து விட்டது. நல்ல தங்கையின் முதுகு அதுமுதல் ஒடிந்துபோய் அவளுக்குக் கூனிச்சி நல்லதங்கை என்ற பெயர் உண்டாயிற்று. ஆஹா! இப்படி இவளை முதுகை ஒடித்து அலங்கோலமாகச் செய்தோமே என்ற பச்சாதாபத்தால் வீரவர்மன் அவளிடம் மிதமிஞ்சின தயை செலுத்தினான். 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம்.' அவள் எவ்விதமான குற்றங்கள் செய்த போதிலும், நீதிப்படி தண்டிக்காமல் அரைத் தண்டனை, கால் தண்டனையாக விட்டு வந்தான். அவள் இவனை க்ஷமிக்கவேயில்லை. இவனுக்குத் தீங்கு செய்வதையே விரதமாகக் கொண்டு வந்தாள். அவள் பெரிய தந்திரி. வீரவர்மனுக்குக் கெடுதி சூழ்ந்து கொண்டே காலத்தைக் கருதிக் காத்துக் கொண்டிருந்தாள். காலமும் அனுகூலமாக வாய்ந்தது.
பேய்க்காட்டு நாயகனாகிய உத்தண்டி தனது தமையன் ஸ்தானத்தில் தானே அரசனென்று சொல்லி வீரவர்மன் மீது போர் தொடுத்தான். ராஜ்யத்தை இத்தனை சுலபமாக இழந்த தண்டி மூடனைக் குடிகள் வெறுத்து உத்தண்டியை அரசனாகக் கொண்டு பேய்க்காட்டை அவமதிப்புக் கிடமாகச் செய்த வீரவர்மனையும் தண்டிக்கும் பொருட்டு உத்தண்டி தொடுத்த போரில் மிகவும் மகிழ்ச்சி கொண்டாடினர்.
இத்தருணத்தில் கூனிச்சி நல்லதங்கை ரகஸ்யமாக விகாரனிடத்திலும்,
தண்டிராஜனிடத்திலும் கலந்து தனித்தனியாக சம்பாஷணைகள் செய்து கொண்டு, பொன்னங் காட்டுக் கோட்டை, கொத்தளம், படை பரிவாரங்களைக் குறித்துத் தனக்குத் தெரிந்த ரகஸ்யங்களைச் சொல்லி உத்தண்டிக்கு உதவி செய்யும் பொருட்டாகப் பேய்க்காட்டுக்குச் சென்றாள். இங்ஙனம் விவேக சாஸ்திரி தம்முடைய மக்களுக்குக் கதை சொல்லி வருகையிலே ஆஞ்சனேயன் கேட்கிறான்:-
"பக்திமான் பிழைகளும் செய்வானோ?"
விவேக: "மனதறிந்து செய்யமாட்டான். கர்ம வசத்தால் பிழைகள் ஏற்படலாம்."
ஆஞ்ச: "கர்மம் பக்தியை மீறிச் செல்லுமோ?"
"விவேக: "பக்தி பரிபூரணமான பக்குவம் பெறும் வரையில், கர்மத் தொடர் மனிதனை விடாது. பழஞ்செய்கை பயன் விளைவிப்பதை அழிக்க வேண்டுமானால், பக்தியாகிய கனல் அறிவாகிய வேதிகையிலே புகையில்லாதபடி எரிய வேண்டும். அந்த நிலைமையை வீரவர்மன் பெறவில்லை."
ஆஞ்ச: "கூனியினுடைய மனம் வீரவர்மனைக் கண்டு ஏன் இளகவில்லை?"
"சாக்ஷாத் பகவான் ராமாவதாரம் செய்து பூமியில் விளங்கினான். அந்தக் கூனி மனம் அவனிடம் அன்புறவில்லை; மகிமையைக் கண்ட மாத்திரையில் எல்லாருடைய நெஞ்சும் வசமாய் விட்டது. சூரியனைக் கண்டவுடன் குருவிகள் பாடிக்கொண்டு வெளியே பறக்கும்; ஆந்தைகள் இருட்டுக்குள்ளே நுழையும், எல்லா மனிதரையும் வசப்படுத்தக்கூடிய தெய்வ பக்தி இதுவரை மனுஷ்ய ஜாதியில் காணப்படவில்லை. இனி மேல் தோன்றக் கூடும்" என்று விவேக சாஸ்திரி சொன்னார்.
விவேக சாஸ்திரி சொல்லுகிறார்: "கேளீர், மக்களே, முன்பு நரிச்சி நல்லதங்கை என்பவள் வீரவர்மனிடம் இருந்து ஓடிப்போய்ப் பேய்க்காட்டில் உத்தண்டி ராஜனைச் சரண் புகுந்தாள். அவனிடம் அந்த நரிச்சி பொன்னங்காட்டு ராஜ்யத்தின் சேனாபலம், மந்திரி பலம், பொருள் வலி முதலிய ரகஸ்யங்களை யெல்லாம் தெரிவித்தாள். அப்போது இரண்டு ராஜ்யங்களுக்கும் யுத்தம் தொடங்கி விட்டது. அந்த யுத்தத்தில் வீரவர்மன் பக்கத்தில் இருந்த சைந்யங்கள் பின்வருமாறு:-
புலிப்படை ஆயிரம், கரடிப்படை ஆயிரம், ஓநாய் ஆயிரம், யானை ஆயிரம், ஒட்டகை ஆயிரம், சுமை தூக்குகிற கழுதை பதினாயிரம், உளவு பார்க்கிற காக்கை இரண்டாயிரம், மேலும் பாம்புப்படை பதினாயிரம், கழுகுப்படை மூவாயிரம், பருந்துப் படை பதினாயிரம்.
எதிர்ப்பக்கத்தில் (உத்தண்டி பக்கத்தில்) இந்த சைனியத்திலே எட்டிலொரு பங்குகூடக் கிடையாது.
எனவே முதல் இரண்டு ஸ்தலங்களில் உத்தண்டியின் படைகள் முறியடிக்கப்பட்டன. உத்தண்டி மிகவும் விசனத்துடன் தனது மாளிகையில் உட்கார்ந்து யோசனை பண்ணிக் கொண்டிருக்கிறான். அப்போது நரிச்சி நல்லதங்கையை அழைத்து யோசனை கேட்போம் என்ற எண்ணங்கொண்டவனாய் அவளைக் கூட்டிவரச் செய்தான். அவ்விருவரும் சம்பாஷணை செய்கிறார்கள்.
உத்தண்டி சொல்லுகிறான்: - "நீ உளவுகள் சொல்லியும், நமது சேனாபதி திறமை யில்லாமையால் இரண்டு ஸ்தலங்களில் வந்து படைகள் தோற்று விட்டன. என்ன செய்வோமென்பது தெரியவில்லை. நான் உன்னையே நம்பியிருக்கிறேன். என்னுடைய சைந்யம் வீரவர்மனுடைய சைந்யத்தில் எட்டில் ஒரு பங்குகூட இல்லையென்பது தெரிந்தும் உன்னுடைய வலிமையையும் நம்பி நான் இந்தப் போரில் மூண்டேன். இத்தருணத்தில் நாம் வெற்றி பெறுவதற்கான வழிகள் நீதான் சொல்லவேண்டும்" என்றான்.
அப்போது நரிச்சி நல்லதங்கை சொல்லுகிறாள்: - "ராஜாதி ராஜனே, உத்தண்டி பூபாலனே, சத்ரு சிங்க மண்டல விநாசக ஜய கண்டனே, கேளாய்; நானோ ஸ்திரீ. அதிலும் தங்களைப் போன்ற சிங்கக் குலமில்லை.நரிக் குலம். முதுகு புண்பட்டவளாய்த் தங்களிடம் சரணமென்று வந்தேன். எனக்குத் தெரிந்தவரை பொன்னங்காட்டு சைந்யம் படை முதலிய உளவுகளெல்லாம் சொன்னேன். தங்களுடைய சைந்யம் அளவில் சிறிதாக இருந்தபோதிலும் தந்திரத்தால் வீரவர்மனுடைய படைகளை வென்று விடலாமென்று தாங்களும் தங்களுடைய முக்கிய மந்திரி, பிரதானிகளும் சேனாபதிகளும் இருந்து யோசனை செய்து முடித்தீர்கள். இப்போது என்னிடம் யோசனை கேட்கிறீர்கள்! நான் எப்படிச் சொல்வேன்? மேலும், ஒரு வேளை நான் யுக்தி சொல்லி அதனால் நீங்கள் ஜயிப்பதாக வைத்துக் கொண்ட போதிலும், பிறகு என்ன கைம்மாறு தருவீர்கள்? அதைச் சொன்னால் நான் எனக்குத் தெரிந்தவரை யோசனை சொல்லுகிறேன். ஜயத்துக்கு நான் பொறுப்பில்லை. ஒரு வேளை நான் சொல்லும் யோசனையால் வெற்றி கை கூடினால் எனக்கு நீர் என்ன பிரதியுபகாரம் செய்வீர்? அதைத் தெரிவித்தால், பிறகு நான் என்னால் கூடிய யோசனை சொல்லுகிறேன்" என்றது.
அப்போது உத்தண்டி சொல்லுகிறது: "நீ எது கேட்டாலும் கொடுப்பேன்" என்றது.
அப்போது நரிச்சி நல்லதங்கை: "ஹே, உத்தண்டி ராஜனே, நான் சொல்லும் யோசனையால், உனக்கு வெற்றி கிடைத்தால், நீ என்னை மணம் செய்து கொண்டு உன்னுடைய பட்டது ராணியாக்குவாயா?" என்று கேட்டது.
இதுகேட்டு உத்தண்டி கோபத்துடன், "சீச்சீ மூட நரியே, நீ வீட்டில் ஏவல் தொழில் செய்தவள். கூனிச்சி, கிழவி. நாமோ ராஜகுலம். நல்ல யௌவன தசையில் இருக்கிறோம். நம்முடைய அந்தப்புரத்தில் இருக்கும் சிங்கச்சியோ கடம்ப வனத்து ராஜனாகிய மகாகீர்த்தியுடைய குண்டோதரன் மகள் காமாக்ஷியென்று பூமண்டலமெங்கும் கீர்த்தி வாய்ந்தவள். அவளைப்போல் அழகும் கல்வியுமுடைய பெண் சிங்கச் சாதியில் எங்குமே கிடையாது. இதையெல்லாம் உணர்ந்தவளாகிய நீ என்னிடம் என்ன மூடவார்த்தை சொன்னாய்? உளறாதே. நீ பெண்ணாகையால் விட்டேன். ஆணாக இருந்து இப்படி வார்த்தை சொன்னால் இதற்குள் தலையை வெட்டிப் போட்டிருப்பேன்" என்று சொல்லிக் கர்ஜனை புரிந்தது.
அப்போது நரிச்சி நல்லதங்கை சொல்லுகிறாள்: "கேளாய் உத்தண்டி ராஜனே, எனக்கு உன்னை மணம் செய்து கொள்ள வேண்டுமென்ற உட்கருத்து கிடையாது. சும்மா, உன்னைச் சோதனை போடுவதற்காகப் பேசிய வார்த்தையே யன்றி வேறொன்றுமில்லை. சிங்கச் சாதிப் பெண்களுக்குள்ளே அழகில் மாத்திரமேயல்லாது கல்வியிலும் சிறந்தவளாகிய காமாட்சி தேவி (சிங்க ராணி)யை மனையாளாகக் கொண்ட நீ இப்படிப்பட்ட ஆபத்து நேரத்தில் அவளிடம் யோசனை கேட்காமல், கேவலம் ஒரு கிழ நரிச்சியிடம் கேட்க வந்தாயே, அது பிழை என்பதை உனக்குத் தெரிவிக்கும் பொருட்டாக அந்த வார்த்தை சொன்னேன்.
உன்னை மணம் செய்து கொள்ள வேண்டும் என்ற சிந்தனை எனக்குக் கனவிலே கூடக் கிடையாது. உன்னைக் கேலிபண்ணி உன்னுடைய ராணி காமாட்சியை நீ இந்த யுத்த பயத்தினால் மறந்திருக்கும் செய்தியை நினைப்பு மூட்டி உன்னை அவளிடம் யோசனை கேட்கும்படி தூண்டிவிடும் பொருட்டாக அந்த வார்த்தை சொன்னேனேறொயல்லாது வேன்றுமில்லை.
ஆனாலும் உன் வார்த்தைகளில் இருந்த சில அசம்பாவிதங்களை நீக்க விரும்புகிறேன். நரி ஜாதி ஸ்திரீயை சிங்க ஜாதி புருஷன் மணம் செய்வது கூடாதென்றா சொல்லுகிறாய்? ரிஷி மூலம், நதி மூலம் விசாரணை செய்யக் கூடாதென்று கேள்விப்பட்டிருக்கிறாயா? மேற்குல ரிஷிகள் கீழ்க்குல ஸ்திரீகளை மணந்து பல ரிஷி வம்சங்கள் மங்கியிருக்கின்றன. பகவான் ஸ்ரீமந் நாராயணன், அகண்டாதீதன், சூக்ஷ்மாத்மா, புருஷோத்தமன், உலகத்துக்கு மூதாதை. அவனே ஸ்ரீவில்லிபுத்தூர் பட்டர் மகளையும், டில்லி பாதுஷா மகளையும் மணஞ் செய்து கொண்டு ஸ்ரீரங்கத்தில் துயில்கிறான். ஹே, உத்தண்டி ராஜனே, ஜாதி பேதமா கற்பிக்கிறாய்? சிங்கம் மேல் ஜாதியென்றும், நரி கீழ் ஜாதியென்றும் நீ நினைக்கிறாயா? அப்படித்தான் அந்த மூடனாகிய வீரவர்மன் நினைத்தான். அது நிற்க.
"ஹே, உத்தண்டி ராஜனே, வயதில் மூத்த பெண்ணை இளைய பிள்ளை மணம் செய்து கொள்ளத் தகாதென்று சொன்னாய்! அது மகா மூடத்தனமான வார்த்தை! புதிதாக வருகிற ஒவ்வொரு இந்திரனுக்கும் ஆதிமுதல் பழைய இந்திராணிதான் மாறாமல் இருந்து வருகிறாள். கூனிச்சி என்று சொல்லி என்னை நகைத்தாய். உடம்புக்கா பிரேமை செய்கிறோம். அரசனே, உயிருக்கு அன்பு செலுத்துகிறோம். இதுவெல்லாம் நீ அறியாத விஷயம். இது நிற்க.
"உத்தண்டி ராஜனே, இவ்வளவுக்கு மேலும் உனக்கு வெற்றி பெற உபாயங் கற்றுக் கொடுத்தால் நீ எனக்கு வேறே என்ன கைம்மாறு தருவாய்?" என்று கேட்டது.
அப்போது உத்தண்டி ராஜன் சொல்லுகிறது:- "நீ விவாகத்தைத் தவிர வேறென்ன தானம் கேட்டபோதிலும் கொடுப்பேன்" என்றது.
அதற்கு நரிச்சி நல்லதங்கை சொல்லுகிறது - "நீ முதல் தடவையும் இப்படித்தான் எது கேட்டாலும் கொடுப்பேன்" என்றாய். பிறகு வாக்குத் தவறினாய். நீ மறுபடியும் வாக்குத் தவறலாம் என்ற சந்தேகம் எனக்கு ஜனிக்கிறது" என்றது.
அப்போது உத்தண்டி "பயப்படாதே! வேறென்ன கேட்டாலும் தருகிறேன்," என்றது.
"உன்னுடைய ராஜ்யத்தில் பாதி கொடுப்பாயா?" என்று நரிச்சி நல்லதங்கை கேட்டாள்.
உத்தண்டியும் இதைக் கேட்டு மனவருத்தமடைந்தான். ராஜ்யத்தில் பாதி கொடுக்க அவனுக்குப் பெரும்பாலும் சம்மதமில்லை. ஆனாலும் என்ன செய்யலாம்? தனது சேனாபதிபதிகள் இனியேனும் போரில் வெல்வார்களென்ற நம்பிக்கை அவனுக்குக் கிடையாது. எப்படியேனும் நரிச்சி நல்லதங்கை ஒரு வழி கண்டுபிடித்துச் சொல்வாளென்றும் அதனால் தனக்கு வெற்றியேற்படலாமென்றும், அவனுக்கு நம்பிக்கையிருந்தது. மேலும் இரண்டாம் முறை வாக்குத் தவற வெட்கப்பட்டான். ஆதலால் அவளிடம் "நீ சொல்லுகிற உபாயத்தை அனுசரித்து அதனால் எனக்கு வெற்றி கிடைத்தால் உனக்குக் கட்டாயம் என் ராஜ்யத்தில் பாதி தருவே"னென்று வாக்குக் கொடுத்தான்.
அப்போது நரிச்சி சொல்லுகிறாள்:-
"கொலம்பஸ் கோழி முட்டையை உடைத்துக் காட்டின மாதிரி வந்து சேரும்" என்றாள்.
"அதென்ன வர்த்தமானம்?" என்று உத்தண்டி என்ற சிங்கராஜன் கர்ஜனை செய்தது.
நல்ல தங்கை சொல்லுகிறாள்: "ஒரு கோழி முட்டையை - அடபோ, கொலம்பஸ் என்கிற பூகோளப் பேர்வழியும் அவனோடு சுமார் முப்பத்தேழு சிநேகிதர்களும் ஒரு நாள் போஜனம் செய்து கொண்டிருந்தார்களாம். அப்போது கொலம்பஸ் கேட்டான்: - "இங்கே யாராவது ஒரு கோழி முட்டையை மேஜையின் மேல் யாதொரு ஆதாரமுமில்லாமல், அசைவில்லாமல் நட்டமாக நிறுத்தி வைக்கக் கூடுமா? நான் செய்வேன். வேறு யார் செய்வார்?" என்றான்.
அப்போது கொலம்பஸ் உடன் இருந்த நண்பர் பலவிதங்களில் முயற்சி பண்ணியும் கோழி முட்டையை மேஜை மேல் ஆதாரமில்லாமல் நட்டமாக நிறுத்தச் சாத்தியப்படவில்லை. கடைசியாக அவர்களெல்லாம் தோல்வியை ஒப்புக்-கொண்டார்கள்.
அப்போது கொலம்பஸ் எழுந்து நின்றான். கோழி முட்டையைக் கையில் எடுத்தான். ஒரு ஓரத்தைச் சீவிவிட்டு, மேஜைமேல் நட்டமாக நிறுத்திவிட்டான். நண்பர்களிலே பலர் அவனுடைய சமத்காரத்தைப் பார்த்து ஆச்சர்யப்பட்டார்கள்.
ஆனால் சில மூடர்கள் மாத்திரம் 'ஓகோ இதென்ன ஏமாற்றுகிற மாதிரி. கோழி முட்டையில் ஓரத்தைத் துளிகூட உடைக்காமல் நிறுத்தவேண்டுமாக்கும் என்று நாங்கள் நினைத்திருந்தோம். உடைத்து நிறுத்தலாம் என்று முதலிலேயே சொல்லியிருந்தால் நாங்கள் அப்போதே செய்திருக்கமாட்டோமா?' என்று சொல்லி முணுமுணுத்தார்களாம்" என்று நரிச்சி சொன்னாள்.
"இவ்வளவுதானா?" என்று உத்தண்டி கேட்டான்.
"ஆமாம், இவ்வளவுதான்" என்று நரிச்சி சொன்னாள்.
அப்போது உத்தண்டி சொல்லுகிறான்:- "அப்படியானால் கொலம்பஸ் சுத்த அயோக்யன்! அவனுடைய கெட்டிக்காரத்தனத்தைப் பார்த்து ஆச்சர்யப் பட்ட சிநேகிதர்கள் பரம மூடர்கள்" என்றான்.
அதற்கு நரிச்சி நல்லதங்கை சொல்லுகிறாள்: "அந்த மாதிரிதான் எனக்கும் சொல்லிப் பாதி ராஜ்யம் கொடுப்பதாக வாக்களித்ததை அழித்துப் போடுவாயோ?" என்றாள்.
உத்தண்டி ராஜன்:- "மாட்டேன்! நீ யோசனை சொல்லு. அது எத்தனை சாமான்யமாகப் பின்பு புலப்பட்ட போதிலும் அதனால் வெற்றி கிடைப்பது மெய்யானால் உன்னிடம் நன்றி மறக்காமல் உனக்குப் பாதி ராஜ்யம் கொடுத்து விடுவேன்" என்றது.
அப்போது நரிச்சி நல்லதங்கை சொல்லுகிறாள்: "உத்தண்டி மகாராஜனே, தங்களுடைய மாமனார் குண்டோதர ராஜனுக்கு ஒரு கடிதம் எழுதிக் கொடுங்கள். அதில் வேறொன்றும் எழுதக்கூடாது. ஆபத்து சமயம். சைந்யம் வேண்டும். நரிச்சி நல்லதங்கையை நம்பு என்று மூன்று வரி மாத்திரம் எழுதினால் போதும். இப்போதே எழுதிக்கொடு. நான் அப்பால் சைந்யம் கொண்டு வந்து வீரவர்மனுடைய மமதையையும், அகங்காரத்தையும் தொலைக்கிறேன். உன் பெயரை, சிங்க சரித்திரத்தில் எக்காலத்திலும் அழியாமல் நிறுத்தி வைக்கிறேன்" என்றாள்.
அப்படியே உத்தண்டி ஓலை எழுதி நரிச்சி கையிலே கொடுத்தான். அதை வாகிக் கொண்டு கூனிச்சியாகிய நரிச்சி நல்லதங்கை பல்லக்குப் பரிவாரங்களுடன் உத்தண்டி ராஜனுடைய ஸ்தானாதிபதி என்ற பதவியில் மாமனார் குண்டோதர ராயசிங்க மகா சிங்கருடைய ராஜதானிக்கு வந்து சேர்ந்தாள்.
இது நிற்க.
பேய்க்காட்டில் உத்தண்டி தன் மனைவியாகிய சிங்கச்சி காமாக்ஷியினிடம் போய் நடந்த வர்த்தமானத்தையெல்லாம் சொன்னான். அவள் மிகவும் கோபத்துடன்:- "என்னுடைய பிதாவிடமிருந்து சைந்ய பலம் தருவிக்க வேண்டுமானால், அதற்கு என் அனுமதியில்லாமல் நரிச்சி நல்லதங்கையை அனுப்பினால் நடந்துவிடுமென்று நீ நினைக்கிறாயா?" என்றாள்.
அப்போது உத்தண்டி சொல்லுகிறான்:- "உனக்கு ராஜ நீதியே தெரியவில்லை; காமாக்ஷி, ராஜ்ய அவசரத்தைக் கருதி இரண்டாம் பேரிடம் சொல்லாமல் எத்தனையோ காரியம் செய்ய நேரிடும்" என்றான்.
"ராஜ்ய அவசரத்தைக் கருதிச் சரியான மந்திராலோசனையில்லாமல் எடுத்த காரியங்கள் எல்லாவற்றிலும் தோற்றுப்போவதே வாடிக்கையாக நீங்கள் நடத்தி வருகிறீர்கள்" என்று காமாக்ஷி சொன்னாள்.
"ஆபத்து சமயத்திலே ஏசிக் காட்டுவது பாவிகளான ஸ்திரீகளுடைய வழக்கம்!" என்று உத்தண்டி சொன்னான்.
"நாலு சாஸ்திரம் படிக்கப்போன பிராமணப் பிள்ளையின் கதை தெரியுமா?" என்று சிங்கச்சி காமாக்ஷி கேட்டாள்.
"நான் ஆபத்தான நிலைமையில் இருக்கும்போது நீ கதை சொல்ல வருகிறாயா! அதென்ன?" என்று உத்தண்டி கர்ஜனை புரிந்தான்.
"வீரவர்மன் தன்னுடைய பத்தினியிடத்தில் தேவதா விசுவாசம் வைத்திருப்பதாகவும் அவளை எப்போதும் சிடுசிடுப்பதே கிடையாதென்றும், தனது பிரதான ராஜ்யகாரியங்களில் எதையும் தனது பத்தினியாகிய மாகாளியிடம் கேட்காமல் செய்வதில்லையென்றும், முன் அந்த சமஸ்தானத்திலிருந்து வந்த கரடி ஸந்நியாசி ஒருவர் சொன்னாரே; ஞாபகமிருக்கிறதா?" என்று காமாக்ஷி கேட்டாள்.
"நான் சங்கடக் குழியில் விழுந்து வெளியேற வழி யறியாமல் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கையில் நீ சத்துருவின் புகழ்ச்சியை என் செவியில் பேசுகிறாயே உனக்குத் தகுமா?" என்று உத்தண்டி வினவினான்.
"ஸ்திரீகளை அவமரியாதை பண்ணுவோர் மனிதரில் மிருகங்கள் என்று சண்டி நீதி சொல்லுகிறதே, அது ஞாபக முண்டா?" என்று காமாக்ஷி கேட்டாள்.
"நான் இப்போது எவ்விதமாகவும் அவமதிப்புச் செய்யவில்லை" என்றான் உத்தண்டி.
"என்னிடம் ஒரு வார்த்தைக்கூடக் கேளாமல் நீ என்பிதாவுக்கு சைந்யம் வேண்டுமென்ற பிரார்த்தனை அனுப்பினாயே! அது என்னை அவமதித்ததாக மாட்டாதா?" என்றாள் காமாக்ஷி.
"அது போனால் போகிறது. இனிமேல் நடக்க வேண்டிய காரியத்தைப் பேசுவோம்" என்று உத்தண்டி சொன்னான்.
"மேல் நடக்க வேண்டிய காரியம் யாதோ?" என்று சிங்கச்சி கேட்டது.
அப்போது உத்தண்டி சொல்லுகிறான்:- "மேல் நடக்க வேண்டியது யுத்தம். மேல் நடக்க வேண்டியது, ஜயம்!"
"போர் எந்த இடங்களில் தோற்றது? போர் தோற்ற சேனாபதிகளின் பெயர் என்ன?" என்று சிங்கச்சி கேட்டது.
"நாகமலையிலே தோற்றோம். வெள்ளை வாய்க்கால் கரையிலே தோற்றோம். நாகமலையில் தோற்ற சேனாபதி கரடி வேலப்பன், வெள்ளை வாய்க்கால் கரையிலே தோற்றவன் புலி பொன்னம்பலம்" என்று உத்தண்டி சொன்னான்.
"அந்த வேலப்பனையும், பொன்னம்பலத்தையும் நாளை சூரியோதயமாய் ஒரு ஜாமத்துக்கு முன்பு சுட்டுக் கொன்று விடவேண்டும்." என்று சிங்கச்சி காமாக்ஷி சொன்னாள்.
உத்தண்டி: "சாத்தியப்படாது" என்றான்.
அவள் "ஏன்?" என்றாள்.
அவன்: "அவ்விருவரும் பெரிய வம்சத்துப் பிள்ளைகள். அவர்களுக்குத் தீங்கு செய்தால் தேசத்துப் பிரபுக்கள் நமக்கு விரோதமாகத் திரும்புவார்கள்" என்றான்.
அவள்; " இப்போது இந்த தேசத்தில் உமக்கு அனுகூலமாக எத்தனை பிரபுக்கள் இருக்கிறார்கள்?" என்று கேட்டாள்.
அப்போது உத்தண்டி: "என் நாட்டிலுள்ள பிரபுக்கள் அத்தனை பேரும் எனக்கு வேண்டியவர்களே. எதிர்க்கட்சி யாருமே கிடையாது!" என்றான்.
"நாளைப் பொழுது விடிந்து ஒரு ஜாமத்துக்கு முன்பு வேலப்பனையும், பொன்னம்பலத்தையும் சுட்டுக் கொன்று விடவேண்டும். அது செய்தால், மேலே ஜயத்துக்குரிய உபாயங்கள் நான் சொல்லுகிறேன்" என்று காமாக்ஷி சொன்னாள்.
"நான் ஒரு போதும் அதற்கு இணங்க மாட்டேன்" என்றான் உத்தண்டி.
அப்போது உத்தண்டி என்ற சிங்க ராஜனிடம் பத்தினியாகிய சிங்கச்சி காமாக்ஷி சொல்லுகிறது: "ஸ்திரீகளை அவமதிப்புச் செய்வோன் ஆண்மக்களுக்குள்ளே முதல் வீரனாக விளங்க மாட்டான். பெண்ணைத் தாழ்வாக நினைப்பது அநாகரிக ஜாதியாருடைய முதல் லக்ஷணம்.
நீ என் வார்த்தையைத் தட்டுகிறாய்; உனக்குச் சண்டை ஜயிக்காது. நீ என்னை எப்போதும் அலட்சியம் பண்ணுகிறாய்.
எனது பிதா உனக்குத் துணைப்படைகள் என்னையறியாமல் அனுப்பும்படி செய்ய முடியுமென்று நினைத்தது உன் ஆலோசனைக் குறைவைக் காட்டுகிறது. உன்னை அழிய விடுவதில் எனக்குச் சம்மதமில்லை.
நீயோ மதிக் குறைவினாலும், மூட மந்திரிகளின் உபதேசத்தாலும், மகா வீரனாகிய வீரவர்மனைப் பகைத்துக் கொண்டாய். என்னிடத்தில் மந்திராலோசனை கேட்கமாட்டாய்; நரிச்சி நல்லதங்கையிடம் கேட்பாய்! அந்தக் கூனற் கிழவிக்கு மாலையிடச் சம்மதப்படவில்லையே! நீ அந்த மட்டில் புத்திசாலிதான்! அவளுக்குப் பாதி யரசு கொடுப்பதாகச் சொல்லி விட்டாய்? உன்னுடைய புத்திக் கூர்மையை என்னவென்று சொல்வேன்?" என்றது.
இது கேட்டு உத்தண்டி சொல்லுகிறான்: "ஆகா! நான் நரிச்சி நல்லதங்கையிடம் ரகஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்ததை உனக்கு யார் சொன்னார்கள்? உன்னுடைய தூண்டுதலின் மேலேதான் அவள் என்னிடம் அப்படிக் கேட்டாளோ?"
காமாக்ஷி: “இல்லை, நீ யன்றோ அவளைக் கூப்பிட்டனுப்பி வார்த்தை சொன்னாய்! நீ இப்படி அழைப்பித்துக் கேட்பாய் என்ற விஷயம் எனக்கு முன்னமே தெரிந்திருந்தா லன்றோ நான் தூண்டி விட்டிருக்கக் கூடுமென்று சொல்லலாம்!”
உத்தண்டி: "பின்னே, உனக்கெப்படித் தெரிந்தது? நான் முந்தியே முதல் நினைத்தேன்; என்னுடைய ஒற்றர்களை யெல்லாம் நீ வசப்படுத்தி வைத்திருக்கிறாய், எனக்குத் தெரியாமல் நீ வேறு தனியாகப் பல ஒற்றர்களை வைத்திருக்கிறாய்.
என் மந்திரிகளிலும் சேனாபதிகளிலும் பெரும்பாலோர் எனக்கு அஞ்சுவதைக் காட்டிலும் அதிகமாக உனக்கு அஞ்சி நடக்கிறார்கள். எனக்குத் தெரியாத ஒரு ரஹஸ்ய சங்கத்துக்கு நீ தலைவி யென்று தோன்றுகிறது. உன்னை வஞ்சனை செய்யவேண்டு-மென்ற எண்ணம் எனக்குக் கிடையாது.
ஆனால், என்னுடைய ராஜ்யத்தில் என் வார்த்தைக்கு யாதொரு மதிப்பில்லாமலும் எல்லாக் காரியங்களுக்கும் உன் இஷ்டப்படியாகவும் இருப்பது எனக்கு ஸம்மதமில்லை" என்றான்.
அப்போது சிங்கச்சி காமாக்ஷி சொல்லுகிறாள்:
“ஓஹோ! என்னிடத்தில் இவ்வளவு பயத்தை மனதில் வைத்துக்கொண்டு, என்னை லஷ்யமும் பண்ணாமல் நீ இருப்பது ஒரு ஆச்சர்யந்தான்; எனக்கு விரோதிகளான வேலப்பனையும், பொன்னம்பலத்தையும் ஸேனாபதிகளாக நியமித்தாய், எனக்கு வேண்டிய ஸேனாபதிகளை விலக்கினாய்; போர் தோற்றது. இன்னமும் என்னை அவமதிக்கிறாய். என்னுடைய யோசனை கேட்டபடியால் உனக்கு இந்த ராஜ்யம் கிடைத்தது. பட்டங் கட்டின மறுநாளே நீ நன்றி கெட்டவன் என்பதை நான் கண்டுகொண்டேன்” என்றாள்.
உத்தண்டி: "உன்னை நான் அவமதிக்கவில்லையே" என்றான்.
"அரை நாழிகைக்கு முன்புகூட என்னைத் துரும்புக்கு ஸமானமாக எண்ணி நடத்தினை யன்றோ?" என்றாள் சிங்கச்சி.
"என்ன செய்தேன்?" என்று சொல்லி உத்தண்டி கர்ஜனை புரிந்தான்.
“நான் ஒரு கதை சொல்லத் தொடங்கினேன், உனக்கு நல்லறிவு புகட்டும் பொருட்டாக. அதைக் கேட்கக்கூட உனக்குப் பொறுமை யில்லை. என்னைச் சள்ளென்று விழுந்தாய், என்னைக் கண்டால் உனக்கு முகத்தில் கடுகு வெடிக்கிறது. என் வார்த்தை கேட்டால் உனக்குக் காதில் நாராசம் காய்ச்சிவிட்டதுபோல ஆய்விடுகிறது" என்றாள் சிங்கச்சி.
"அதென்னவோ கதை என்றாயே! பெயர் மறந்து போச்சு! ஹாம்! ஹாம்! பிராமணப் பிள்ளை நாலு சாஸ்த்ரம் படித்த கதை! அதைச் சொல்லு, கேட்கிறேன்” என்றான் உத்தண்டி.
----------
சிங்கச்சி காமாக்ஷி சொல்லுகிறாள்:-
"கேளாய் ராஜனே, புருஷனுக்கு ஸ்திரீ உடம்பில் பாதி. நீ என்னை வெறுத்த போதிலும் எனக்கு உன்னைத் தவிர வேறு புகல் கிடையாது. நீ என்னிடம் வைத்திருந்த அன்பையெல்லாம் மறந்து விட்டாலும் என் நெஞ்சு உன்மீதுள்ள அன்பை மறக்கவில்லை. இன்னொரு சிங்கியென்றால் நீ செய்துவரும் அவகாரியத்துக்கு உன்னை முகங்கொண்டு பார்க்கமாட்டாள். நான் ஐயோ பாவமென்று உன்னை க்ஷமிக்கிறேன். ஆயினும், நான் இப்போது கதை சொல்ல ஆரம்பித்தால் நீ பொறுமையுடன் கேட்கமாட்டாய் என்ற சந்தேகம் எனக்கு உண்டாகிறபடியால் இப்போது சொல்ல வேண்டாமென்று யோசிக்கிறேன்" என்றாள்.
உத்தண்டி 'பொறுமையுடன் கேட்கிறேன்" என்று சத்தியம் பண்ணினான்.
பிறகு சிங்கச்சி பின் வரும் கதையை உரைக்கலாயிற்று:
"ஓர் ஊரிலே ஒரு பிராமணப் பாட்டியிருந்தாள். அவளுக்கொரு பிள்ளையுண்டு. அந்தப் பிள்ளை வீட்டில் யாதொரு வேலையும் செய்யாமல் மூன்று வேளையும் தண்டச்சோறு தின்பதும் ஊர் சுற்றுவதுமாக இருந்தான். அந்தப் பாட்டி தோசை, இட்லி, முறுக்கு, கடலைச் சுண்டல் வியாபாரம் பண்ணி அதில் வரும் லாபத்தால், குடும்ப ஸம்ரக்ஷணை செய்து கொண்டிருந்தாள்.
அவன் நாளுக்கு நாள் அதிக சோம்பேறியாய் நேரத்தை நாசம் பண்ணிக் கொண்டிருந்தான்.
அப்போது பாட்டி ஒரு நாள் அவனைக் கூப்பிட்டு:-"அடா மகனே, ஒரு தொழிலும் செய்யாமல் சும்மா தின்று கொழுத்துக் கொண்டு எத்தனை நாள் இப்படி என் கழுத்தை அறுக்கலாமென்று யோசனை பண்ணுகிறாய்? நான் உயிரோடிருக்கும் வரை எப்படியாவது பாடுபட்டு உன் வயிற்றை நிரப்புவேன். எனக்குப் பிற்காலம் நீ எப்படி ஜீவிப்பாய்? நான் சாகு முன்னே உனக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைத்துவிட்டுச் சாகலாமென்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். அதற்காகத்தான் பக்கத்துத் தெருச் செட்டியாரிடம் மாசம் ஒரு ரூபாய் சீட்டுப் போட்டுக் கொண்டு வருகிறேன். நீ அந்தப் பெண்டாட்டியை எப்படி வைத்துக் காப்பாற்றுவாய்? சீ, நாயே, ஓடிப்போ, எங்கேனும் வடதேசத்துக்குப் போய் நாலு சாஸ்திரம் படித்துக் கொண்டுவா" என்றாள்.
அந்தப் பையனுக்கு சாஸ்திரம் என்றால் இன்ன பதார்த்தம் என்ற விஷயமே தெரியாது. ஆனாலும் அவன் மனதில் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்ற தாகம் இருந்தது. ஆதலால் பெண்டாட்டியைக் காப்பாற்ற சாஸ்திரம் படிக்க வேண்டுமென்று தாயார் சொல்லியதைக் கேட்டவுடன் அவனுக்குச் சாஸ்திரப் பயிற்சியில் விசேஷமான ஆவல் மூண்டது. அன்று பகல் சாப்பிட்டவுடனே தாயாரிடம் சொல்லிக் கொள்ளாமல் ஊரிலிருந்து புறப்பட்டு வடதிசை நோக்கிச் சென்றான். போகும் வழியிலே ஒரு பனைமரம் நின்றது.
"எங்கே போகிறாய் அப்பா?" என்று இந்தப் பிள்ளையை நோக்கி அந்தப் பனைமரம் கேட்டது. "நான் சாஸ்திரம் படிக்கப் போகிறேன்" என்றான்.
அப்போது அந்தப் பனைமரம் சொல்லுகிறது:- "ஓ ஹோ ஹோ; சாஸ்திரமா படிக்கப் போகிறாய்? அப்படியானால் நான் ஒரு சாஸ்திரம் கற்றுக் கொடுக்கிறேன், தெரிந்துகொள்" என்றது. பிராமணப் பிள்ளை உடம்பட்டான்.
அப்போது பனைமரம் "நெட்டைப் பனைமரம் நிற்குமாம் போலே போலே" என்ற வாக்கியத்தைச் சொல்லிற்று. இந்த வாக்கியத்தைப் பையன் திரும்பத் திரும்பத் தன் மனதுக்குள் உருப்போட்டுக் கொண்டே போனான்.
அங்கே ஒரு பெருச்சாளி வந்தது. அந்தப் பெருச்சாளி இவனை நோக்கி, "அடா பார்ப்பாரப் பிள்ளாய், எங்கே போகிறாய்?" என்று கேட்டது. "சாஸ்திரம் படிக்கப் போகிறேன்" என்று இவன் சொன்னான். "அப்படியானால் நான் ஒரு சாஸ்திரம் சொல்லுகிறேன், படித்துக் கொள்" என்று பெருச்சாளி கூறிற்று. பையன் உடம்பட்டான்.
"பெருச்சாளி மண்ணைத் தோண்டுமாம் போலே போலே" என்ற சாஸ்திரத்தை அந்தப் பெருச்சாளி சொல்லிக் கொடுத்தது. இவன் மேற்படி இரண்டு சாஸ்திரங்களையும் வாயில் உருப் போட்டுக்கொண்டே நடந்து சென்றான்.
வழியில் ஒரு குளம் இருந்தது. அதில் இறங்கி ஜலம் குடிக்கப்போனான். நடுக் குளத்தில் ஒரு கோரைப் புல் நின்றது. அது இவனை நோக்கி: - "ஐயரே, எங்கிருந்து வந்தாய்? எந்த ஊருக்குப் போகிறாய்?" என்று கேட்டது. இவன் தன்னுடைய விருத்தாந்தங்களைச் சொல்லி, "சாஸ்திரம் படிக்கப் போகிறேன்" என்றான். "அப்படியானால் நான் ஒரு சாஸ்திரம் கற்பிக்கிறேன். படித்துக் கொள்" என்று கோரை சொல்லிற்று. பிராமணப் பிள்ளை உடம்பட்டான்.
"நடுக்குளத்திலே கோரை கிடந்து விழிக்குமாம் போலே போலே" என்ற வாக்கியத்தை அது கற்றுக் கொடுத்தது. இவன் மூன்று வாக்கியங்களையும் பாராமல் சொல்லிக் கொண்டு பின்னும் நடந்து சென்றான். அங்கே ஒரு நரி வந்து அவனை நோக்கி:- "எங்கே போகிறாய்? என்ன சங்கதி?" என்று விசாரணை பண்ணிற்று. இவன் "சாஸ்திரம் படிக்கப் போகிறேன்" என்றான்.
"ஓகோ! சாஸ்திரம் படிக்கவா போகிறாய்! நல்லது, உனக்கு நான் சாஸ்திரம் கற்றுக் கொடுக்கிறேன். தெரிந்து கொள்" என்று நரி சொல்லிற்று. இவன் உடம்பட்டான்.
"ஆளைக் கண்டால் நரி வாலைக் குழைத்துக் கொண்டோடுமாம் போலே போலே" என்ற வாக்கியத்தை நரி போதித்தது.
இவன் "ஆஹா! புறப்பட்ட தினத்திலே நமக்கு நாலு சாஸ்திரமும் தெரிந்து போய் விட்டதே, என்ன அதிர்ஷ்டமப்பா, நமக்கு; இந்த நான்கு சாஸ்திரத்தையும் மறக்காமல் வீட்டில் தாயாரிடம் போய்சொன்னால் அவள் நமக்குக் கல்யாணம் செய்து கொள்ள அனுமதி கொடுப்பாள்" என்று சந்தோஷப்பட்டுக் கொண்டே தன் ஊரை நோக்கிச் சென்றான்.
போகும் வழியில் இரவாகி விட்டது. ஊர் நெடுந்தூரத்துக்கப்பால் இருந்தபடியால் இடையே இருந்த ஒரு கிராமத்தில் அவ்விரவு தங்கி, மறுநாட் காலையில் அங்கிருந்து புறப்படலாமென்று நினைத்து, அங்கு ஒரு வீட்டு வாசல் திண்ணையிலே போய்ப் படுத்துக் கொண்டான். விடிய ஒரு ஜாமம் ஆனபோது, இவன், கண்ணை விழித்துக் கொண்டு, தான் படித்த நாலு வாக்கியங்களையும் பாடம் பண்ண ஆரம்பித்தான். அப்போது அந்த வீட்டின் கொல்லைப்புரத்தில் கள்ளர் வந்து கன்னம் வைத்துக் கொண்டிருந்தார்கள். இவன் சத்தம் போட்டுச் சந்தை சொல்லிக் கொண்டிருந்தான்.
முதலாவது: 'நெட்டைப் பனைமரம் நிற்குமாம் போலே போலே' என்றான்.
இவன் கூவின சத்தத்தைத் திருடர் கேட்டு "ஓஹோ! நாம் இங்கு நிற்பதைக் கண்டு வீட்டிலுள்ளோரை எழுப்பும் பொருட்டாக எவனோ இப்படிக் கூவுகிறான்" என்றெண்ணிப் பயந்தார்கள்.
அந்தச் சமயத்தில் இவன்: "பெருச்சாளி மண்ணைத் தோண்டுமாம் போலே போலே" என்று கூவினான்.
இதைக் கேட்டுத் திருடர்: "அடே! நாம் கன்னம் வைக்கிறதைக் சுண்டுதான் இவன் இப்படிக் கூவுகிறான்" என்று கை கால் நடுங்கத் தொடங்கினார்கள்.
அப்போது இவன்: "நடுக்குளத்திலே கோரை கிடந்து விழிக்குமாம் போலே போலே" என்ற தனது மூன்றாம் சாஸ்திரத்தை ஓதினான்.
கள்ளர்: "அடா, நாம் அவசியம் ஓடிப்போக வேண்டும். நாம் இங்கே திகைப்புடன் விழித்துக்கொண்டு நிற்கிறோமென்பதை அந்த மனிதன் சயிக்கினையாகச் சொல்லுகிறான்" என்று பேசிக்கொண்டு சிலர் ஓடத் தொடங்கினர். இதற்குள் திருடருடைய சத்தம் இவன் காதிலும் படவே, "கொல்லைப் புறத்தில் ஏதோ பலர் காலடிச் சத்தமும், முணுமுணுக்கிற சத்தமும் கேட்கிறது. என்னவோ தெரியவில்லை. ஒரு வேளை திருடராக இருந்தாலும் இருக்கலாம். எதற்கும் போய்ப் பார்ப்போம்" என்று யோசனை பண்ணிக்கொண்டு வந்தான். வரும்போதே தனது சாஸ்திரப் பாடத்தை மறக்காமல், "ஆளைக் கண்டால் நரி வாலைக் குழைத்துக் கொண்டோடுமாம் போலே போலே" என்று கூவிக்கொண்டே வந்தான்.
திருடர் தாங்கள் வேறோரிடத்திலிருந்து திருடிக்கொண்டு வந்த நகைப் பெட்டிகளையும், பணப் பெட்டிகளையும் கீழே போட்டு விட்டு ஓடிப்போயினர். இவன் பிறகு வீட்டிலுள்ளாரை எழுப்பி அந்தப் பெட்டிகளைக் காட்டினான்.
வீட்டிலுள்ளார் 'நடந்த விஷயமென்ன?' என்று விசாரித்தார்கள். இவன் நடந்த விஷயத்தைச் சொன்னான். அப்போது வீட்டார் இவனாலேயன்றோ திருடர் கன்னம் வைத்துத் தமது வீட்டுப் பொருளைக் கொள்ளையிடாமலும், தமதுடம்பிற்குத் தீங்கு செய்யாமலும் ஓடினார்கள் என்ற நன்றியுணர்ச்சியால் அந்த நகைப் பெட்டிகளையும் பணப் பெட்டிகளையும் இவனுக்கே கொடுத்துவிட்டார்கள்.
இவன் அந்தத் திரவியத்தையெல்லாம் தாயாரிடம் கொண்டு கொடுத்து:- "எனக்குக் கல்யாணம் பண்ணி வை அம்மா" என்றான்.
அவள் இவனை நோக்கி: "மகனே உனக்கு இந்த நிதியெல்லாம் எங்கே கிடைத்தது?" என்று கேட்டாள். இவன் நடந்த விவரங்களையெல்லாம் கூறினான். தாய் மிகவும் மகிழ்ச்சி கொண்டு, அவனுக்கு ஒரு பெரிய பிரபுவின் மகளைக் கல்யாணம் செய்வித்தாள். பிறகு எல்லாரும் சௌக்கியமாக நெடுங்காலம் வாழ்ந்து கொண்டிருந்தனர்." என்று சிங்கச்சி காமாக்ஷி கதை சொன்னாள்.
அப்போது உத்தண்டி: "இந்தக்கதையை என்ன நோக்கத்துடன் சொன்னாய்?" என்று கேட்டான்.
"உன் மனதிலிருந்த ஆயாசத்தை மாற்றி உனக்கு ஆறுதல் உண்டாக்கும் பொருட்டாகக் கதை சொன்னேன், வேறு நோக்கம் ஒன்றுமில்லை" என்றாள்.
"பார்த்தாயா! நாம் சண்டை தோற்று மானத்தையும் தேசத்தையும் பிராணனையும் சத்துருவிடமிருந்து காப்பாற்ற வேண்டுமே, அதற்கென்ன வழி செய்யலாமென்று கலங்கிக் கொண்டிருக்கிறோம். அந்தச் சமயத்தில் இவள் நம்மிடம் குழந்தைக் கதை பேசுகிறாள்! பார்த்தாயா! பெருச்சாளியாம், கோரையாம், பனைமரமாம், நரியாம்! என்ன பச்சைக் குழந்தை வார்த்தை!" என்று சொல்லி மிகவும் கோபத்துடன் உத்தண்டி அப்போது ஒரே பாய்ச்சலாக மனைவியின் மீது பாய்ந்து தன் நகங்களை அவளுடைய கழுத்தில் அழுத்தினான்.
சிங்கக் காமாக்ஷி லாவகத்தால் கழுத்தை திமிறிக்கொண்டு தன் கழுத்திலிருந்து இரத்தம் பொழிவதைக் கண்டு கோபத்துடன் தன் முன் வலக்காலால் உத்தண்டியின் முகத்தில் ஓங்கி அடித்தது.
உத்தண்டி பெருஞ்சினத்துடன் கண்ணில் தீப்பொறி பறக்க, மீசை துடிக்க, ஹா! என்று கர்ஜனை புரிந்து "அடி பேயே, உன்னை இந்தக் கணத்திலே கொன்று போடுகிறேன் பார்!" என்று சொல்லித் தன் மனைவியின் கழுத்தைக் கடித்து இரத்தம் குடிக்கலாயிற்று. காமாக்ஷி உத்தண்டியின் காலைப் பல்லினால் கவ்வி இரத்தத்தை உறிஞ்சத் தொடங்கிற்று. அப்போது சண்டையில் உண்டான சப்தத்தைக் கேட்டு காமாக்ஷியின் பாங்கிச் சிங்கங்கள் சில அங்கோடி வந்தன. அவற்றைக் கண்டு உத்தண்டியும் காமாக்ஷியும் வெட்டுப் பற்களை மீட்டுக் கொண்டன. உத்தண்டி அந்தப்புரத்தை விட்டு வெளியே சென்றான்.
பேய்க்காட்டு விஷயம் இப்படி இருக்க, உத்தண்டியிடமிருந்து அவனுடைய மாமனாராகிய குண்டோதர ராஜன் அரசு செலுத்தும் கடம்பவனத்துக்குத் தூது சென்ற நரிச்சி நல்லதங்கை எப்படியானாள் என்பதைக் கவனிப்போம்.
நரிச்சி கடம்ப வனத்திற்குப் போன போது தன் பல்லக்கு பரிவாரங்களுடன் நேரே குண்டோதரராய சிங்க மகாசிங்கருடைய மாளிகையில் போய் இறங்காமல் ஏதோ மனதுக்குள் ஒரு தந்திரத்தை எண்ணித் தனக்கு முந்திய நட்புடையவளாகிய விருத்திமதி என்ற எருமைச்சியின் வீட்டிலே போய் இறங்கினாள்.
விருத்திமதி பொன்னங்காட்டரமனைக்கு முன்னொரு முறை சென்றிருந்த போது அவளுக்கு வீரவர்மராஜன் பலவிதமான பரிசுகள் கொடுத்துத் தனது ராஜ பதவியைக் கருதாமல் மிகவும் அன்பான வார்த்தைகள் கூறி விடுத்ததை அந்த எருமைச்சி தன் வாழ்நாளில் மிகப் பெரிய விசேஷ மென்றெண்ணி வீரவர்மனிடம் பேரன்பு பூண்டவளாய் எப்போதும் அவனையே ஸ்மரித்துக் கொண்டிருந்தாள். எனவே நரிச்சி நல்ல தங்கை வந்தவுடன் எருமைச்சி விருத்திமதி அவளிடம் "வீரவர்மனும் அவனுடைய ராணி மாகாளியும் குழந்தைகளும் க்ஷேமந்தானா?" என்று விசாரித்தாள்.
அப்போது நரிச்சி நல்லதங்கை தான் வீரவர்மனிடமிருந்து பிரிந்து அவனுக்குத் துரோகியாய் உத்தண்டி ராஜாவிடம் வேலை பார்ப்பதாகத் தெரிந்தால் எருமைச்சி தன்னைத் துரத்திவிடுவாள் என்று யோசித்து "ஆம், எல்லாரும் க்ஷேமந்தான்" என்றாள்.
"நீ இப்போது நேரே பொன்னங்காட்டிலிருந்து தான் வருகிறாயா?" என்று விருத்திமதி கேட்டாள்.
நல்லதங்கை: "அன்று; நான் பேய்க்காட்டிலிருந்து வருகிறேன்" என்றாள்.
விருத்திமதி: "அங்கே எதற்காகப் போயிருந்தாய்?" என்றாள்.
நல்லதங்கை: "பேய்க்காட்டுக்கும் பொன்னங்காட்டுக்கும் சண்டையென்று நீ கேள்வியுற்றிருக்கக் கூடும். அந்தயுத்தம் நடப்பதை எப்படியேனும் தடுக்க வேண்டுமென்று கருதி, என்னை மாகாளி ராணி (வீரவர்மன் பத்தினி) சில செய்தி சொல்லிப் பேய்க்காட்டு ராணியாகிய காமாக்ஷியிடம் அனுப்பினாள். வந்த இடத்தில் காமாக்ஷி உங்கள் நாட்டரசனாகிய தன் பிதாவிடம் ஒரு ரகஸ்யமான செய்தி சொல்லி வரும்பொருட்டாக என்னை இங்கே அனுப்பினாள்" என்றதும்,
"என்ன ரகஸ்யம்?" என்று விருத்திமதி கேட்டாள்.
நல்லதங்கை: "காரியம் நிறைவேறு முன்னே அதை மிகவும் பிராண சிநேகிதராக இருப்போரிடத்திலேகூட அனாவசியமாகச் சொல்லக் கூடாது. சொன்னால் காரியம் கெட்டுப் போகும். ஆதலால் பொறு, நிறைவேறினபின் சொல்லுகிறேன்" என்று வாக்களித்தாள். நல்லதென்று சொல்லி விருத்திமதி தன்வீட்டுக்கு விருந்தாக வந்த நரிச்சிக்கு ராஜோபசாரங்கள் செய்தாள். பரிவாரங்களுக்கும் யதேஷ்டமாக ஆகாரம் கொடுத்தாள்.
பிறகு சாயங்காலமானவுடன் நரிச்சி நல்லதங்கை விருத்திமதியை நோக்கி "இப்போதெல்லாம் நீ அடிக்கடி அரண்மனைக்குப் போய் வருவதுண்டோ?" என்று கேட்டாள்.
விருத்திமதி ஆமென்றாள்.
"உங்கள் குண்டோதர சிங்கனுக்கு நான்கு மனைவிகள் உண்டன்றோ?" என்று நரிச்சி கேட்டாள்.
விருத்திமதி தலையசைத்தாள்.
"பட்டத்து ராணியின் பெயர் யாது?" என்று நரிச்சி கேட்டாள்.
"பட்டத்து ராணி பெயர் சுவர்ணாம்பா" என்று சொன்னாள்.
"பேய்க்காட்டு காமாக்ஷி தனது தாயின் பெயர் மீனாக்ஷி என்று சொன்னாளே" என்றாள் நரிச்சி.
அதற்கு விருத்திமதி: "ஆமாம். அந்த மீனாக்ஷி மூன்றாவது ராணி. பட்டத்து ராணியைக் காட்டிலும் மீனாக்ஷியினிடத்திலே தான் குண்டோதரராய சிங்க மகாசிங்கருக்கு அதிகப் பிரியம்" என்றாள்.
நரிச்சி நல்லதங்கை: "உனக்கு எந்த ராணியுடனே அதிக சிநேகம்?" என்று கேட்டாள்.
"பட்டத்து ராணியுடன்" என்று விருத்திமதி சொன்னாள்.
"உனக்கும் மீனாக்ஷிக்கும் பேச்சுண்டோ இல்லையோ?" என்று நரிச்சி கேட்டாள்.
விருத்திமதி: "பேச்சு வார்த்தை இல்லாமலென்ன? அதெல்லாம் உண்டு. போனால் வா என்று கூப்பிடுவாள். மஞ்சள் குங்குமமும் கொடுப்பாள். ஆனால் சுவர்ணாம்பா என்னிடம் தன்னுடைய அந்தரங்கங்களையெல்லாம் சொல்லுவது போலே மீனாக்ஷி சொல்ல மாட்டாள்" என்றாள்.
அப்போது நரிச்சி நல்லதங்கை: "அந்த மீனாக்ஷிக்கு அந்தரங்கமான சிநேகம் யார்?" என்று கேட்டாள்.
விருத்திமதி: "மல்லிச்சி மாணிக்கவல்லிக்கும் மீனாக்ஷிக்கும் உடம்பு இரண்டு, ஆனால் உயிர் ஒன்று" என்றாள்.
இப்படி இவ்விருவரும் சம்பாஷணை செய்து கொண்டிருக்கையில் திடீரென்று குண்டோதர ராய சிங்க மகாசிங்கருடைய சிப்பாய்கள் வந்து நரிச்சி நல்லதங்கையைக் கைது பண்ணி விலங்கு போட்டுக் கொண்டு போய்ச் சிறைப்படுத்தி விட்டனர். விலங்கு பூட்டும்பொழுது நரிச்சி கோவென்றழுதாள். விருத்திமதி "நல்லதங்காய், நீ பயப்படாதே. ஏதோ தவறுதலாக இவர்கள் வேலை செய்கிறார்கள் என்று தோன்றுகிறது. நான் போய் சுவர்ணாம்பாவிடம் சொல்லி உடனே உன்னை மீட்கிறேன்" என்று சொல்லி அரண்மனைக்குப் போனாள்.
-------------
கதம்ப வனத்தில் மூன்றுலகம் புகழும்படி அரசு செலுத்திய வீராதிவீர குண்டோதரராய சிங்க மகாசிங்கனுடைய அரண்மனை அந்தப்புரத்தில், அவனுடைய பட்டத்து ராணியாகிய சுவர்ணாம்பா தனியே உட்கார்ந்திருந்தாள். சிங்க ஜாதிக்குள்ளே இவள் தன் போலே அழகும், கல்வியும் பராக்கிரமமும் உடையவள் வேறில்லை யென்று தன் மனதுக்குள்ளே நினைத்திருந்தாள். இவளுக்கு அந்தக்காட்டில் வசித்த மிருகங்களனைத்திலும் அதிக அந்தரங்கமான சிநேகம் யாரிடத்திலேன்றால், விருத்திமதியென்ற எருமைச்சியினிடத்திலேயாம்.
அந்த விருத்திமதி வெயர்க்க வெயர்க்க ஓடியே வந்து சிங்கச்சி சுவர்ணா தேவியின் காலில் விழுந்தாள்.
"என்ன விஷயம்?" என்று சிங்கச்சி கேட்டாள்.
அப்போது விருத்திமதி சொல்லுகிறாள்:- "மகாராணியே, கேள். இன்று காலை என் வீட்டுக்குப் பொன்னங்காட்டிலிருந்து என் தோழியாகிய நரிச்சி நல்லதங்கை வந்தாள். அவளை என் வீட்டுக்குள் புகுந்து இந்த ராஜ்யத்தின் சிப்பாய்கள் கைது பண்ணிக் கொண்டு போயினர். ஏதோ தவறுதலாகவே இந்தக் காரியம் நடந்துவிட்டதென்று நினைக்கிறேன். யாரோ அவள்மீது குண்டோதர மகாசிங்கனிடம் குற்றம் சார்த்திப் பேசியிருக்கிறார்கள். அதனால் அவளுக்கு இந்தக் கதி நேரிட்டுவிட்டது.
"ஐயோ! நான் என்ன செய்வேன்? என்னுடைய உயிர்த் தோழியாயிற்றே! நான் இந்த அரண்மனைக்கு எத்தனையோ காலமாக உண்மையுடன் உழைத்து வருகிறேனே; என் வீட்டுக்கு வந்த தோழிக்குச் செய்யப்பட்ட அவமானம் எனக்கே செய்யப்பட்டது போலாகுமன்றோ?
மேலும் அவள் பொன்னங்காட்டு வீரவர்ம ராஜனைக் குழந்தைப் பருவ முதலாக வளர்த்த செவிலித்தாய். அந்தவீரவர்மன் இவளைத் தாய்க்குச் சமானமாக ஆதரித்து வருகிறான். இவளைப் பிடித்துக் குண்டோதர சிங்கர் அடைத்து வைத்திருக்கிறார் என்ற செய்தி கேட்டால், அவன் உடனே கதம்பவனத்தின்மீது படையெடுத்து வருவான். அவன் படையெடுத்து வருவான். அவன் படையெடுத்து வந்தால் அவனை எதிர்த்துப் போர் செய்ய நமது சைந்நியத்தால் முடியாது. நமது ராஜ்யம் அழிந்து போய்விடும். ஐயோ! வீரவர்மனை எதிர்த்தபடியாலே தண்டிராஜன் பட்ட பாடும், அவன் தம்பி உத்தண்டி இப்போது படுகிற பாடும் தெரியாதா?
மகாராணியே நீயும் நானும் இணைபிரியாமல் இரண்டு பக்ஷிகள் ஒரு கூட்டில் வாழும் முறைமையாலே, இருவரும் அன்பாகிய கூட்டில் வாழ்ந்து பல வருஷங்களாக ஒன்றுகூடி இருக்கிறோம். சூரியனுக்கும் குளப்பூவுக்கும் சிநேகமுண்டாகும்போது அவ்விரண்டுக்கும் சமானத் தன்மை உண்டாகிறது. மேலும் கீழும் அன்பினால் சமத்துவத்தை அடைகின்றன. உன்னைப் போல குலத்திலும், நலத்திலும், மகிமையிலும் சிறந்த சிங்கச்சிமார் எத்தனையோ பேர் உலகத்தில் இருக்கக்கூடும். உனக்கு அவர்கள் எல்லோரையும்விட என் மேலே அதிக அன்பு உண்டாயிருக்கிறது. நான் கீழ்க் குலத்திலே பிறந்தாலும். எப்போதும் என் கண்களில் பதுமை போலே உன்னை வைத்துக் கொண்டு போற்றுவதனால் நான் மகிமை பெற்று உன்னுடைய அன்புக்குப் பாத்திரமானேன்.
எனக்கு மகத்தான கஷ்டம் நேரிட்டிருக்கும்போது. நீ சகித்திருப்பது நியாயமன்று. எனக்கு நீயே துணை, நீயே தோழி, நீயே தாய், தந்தை, நீயே தெய்வம், எனக்கு உன்னைத் தவிர இந்த உலகத்தில் வேறு கதி கிடையாது. நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும்" என்று சொல்லிக் கோவென்றலறி அழுதாள்.
அப்போது சிங்கச்சி சுவர்ணாதேவி அவளைச் சமாதானப்படுத்திவிட்டு உடனே பக்கத்திலிருந்த பாங்கி ஒருத்தியைக் கூவி:- 'பெண்ணே, நீ போய் ராயசிங்கரை நான் அழைத்துவரச் சொன்னதாகச் சொல்லு. உடனே கூட்டிவா" என்றது.
சாயங்காலம் பொழுது புகுந்துவிட்டது. சிங்க குண்டொதரன் தனது ராஜதானியாகிய கதம்ப நகரத்திற்கு சமீபத்தில் ஓடும் நர்மதா நதியில் சாயங்கால ஸ்நானம் செய்து முடித்துவிட்டு சந்தியா வந்தனம் பண்ணிக் கொண்டிருந்தான். அந்த சமயத்தில் பாங்கி போய் காலிலே விழுந்தாள்.
"என்ன சங்கதி?" என்று கேட்டான்.
"பெரிய ஆபத்தாம், இன்னதென்று எனக்குத் தெரியாது. சுவர்ணாதேவி தேவரீரை உடனே அழைத்து வரும்படி கட்டளையிட்டார்" என்றது.
பயந்து, நடுங்கிப் போய் குண்டோதர சிங்க மகாசிங்கன் சந்தியாவந்தனத்தைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, அப்படியே ஓடி அந்தப்புரத்துக்குள் வந்தது. அங்கு வந்து பார்த்தால் விஷயம் ஒன்றையும் காணவில்லை. மூன்று ஆசனங்கள் போட்டிருந்தன. எருமைச்சி விருத்திமதி ஒன்றின் மேலே வீற்றிருந்தாள். மகாராணி சுவர்ணாதேவி ஒன்றில் வீற்றிருந்தாள். மற்றொன்று வெறுமே இருந்தது.
"என்ன விஷயம்?" என்று கேட்டுக் கொண்டே குண்டொதரன் அந்தப்புரத்திற்குள் புகுந்தான். இவனைக் கண்டவுடன் விருத்திமதியும் சுவர்ணாவும் தம் ஆசனங்களிலிருந்தெழுந்து நின்றனர். "என்ன விஷயம், என்ன விஷயம்?" என்று குண்டோதரன் நெரித்துக் கேட்டான்.
"விருத்திமதியிடம் கேளுங்கள். அவள் சொல்லுவாள்" என்று சுவர்ணா சொன்னாள்.
"ஓஹோ பெரிய விபத்து ஒன்றும் இல்லை, அந்த நரிச்சி விஷயம்தான். அவளை விடுவிக்கச் சொல்லி இந்த எருமைச்சி கேட்க வந்திருக்கிறாள். நாம் மடத்தனமாக அளவுக்கு மிஞ்சி மனம் பதற இடம் கொடுத்துவிட்டோம். இருந்தாலும் நம்முடைய பயத்தை வெளியே காண்பிக்கக்கூடாது" என்று மனதில் நினைத்துக் கொண்டு மீசைகளைத் திருகி விட்டு, லேசான ராஜநடை நடந்துபோய் மூன்றாம் ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டு குண்டொதரன் தொண்டையைக் கனைத்து நேராக்கிக் கொண்டு விருத்திமதியை நோக்கி "என்ன விஷயம்?" என்றான்.
அப்போது விருத்திமதி சொல்லுகிறாள்:- "ராஜேச்வரா, தங்களுடைய ராஜ்யத்திற்குப் பெரிய விபத்து நேரிட்டிருக்கிறது. தங்கள்மீது வீரவர்மன் படையெடுத்து வரப்போகிறான். இவ்வளவு காலம் இந்த ராஜ்யத்தில் சமாதானமிருந்தது. இப்போது பாழ்த்த யுத்தம் இங்கு வந்து பிரவேசிக்கப் போகிறது. ஐயோ, நாங்கள் என்ன செய்வோம்? குடிகளை எல்லாம் சுவர்ணாதேவி தன்னுடைய பெற்ற குழந்தைகளுக்குச் சமானமாக நினைப்பவளாயிற்றே! அவளுடைய பழக்கத்தால் எனக்கு இந்த ராஜ்யத்தினிடம் அருமையான பக்தி உண்டாய்விட்டதே! என் உயிருக்கு மாத்திரம் தீங்கு வருவதாக இருந்தால் நான் அதைப் பொருட்டாக நினைக்கமாட்டேனே! ராஜ்ய முழுமைக்கும் ஹானி வருகிறதே!
ஆஹா! என் செய்வேன்? எத்தனை சுமங்கலிகள் தாலி யறுப்பார்கள்! எத்தனை
தாய்மார் பிள்ளையற்றுப் போவார்கள்! எத்தனை குழந்தைகள் தந்தையற்றுப் போகும்! எத்தனை தாய்மார் பிள்ளைகளைச் சாகக் கொடுத்து எங்கும் தீராத துக்கத்துக்காளாய், பரத்திலும் புத் என்ற நரகத்திலும் விழும்படியாகும்!
ஐயோ, புத்திரர்களில்லாத பிதாக்கள், புத் என்ற நரகத்துக்குப் போவார்களென்று சாஸ்திரங்கள் திண்ணம் கூறுகின்றனவே! உமது புத்திரர்களே போரில் மடியும்படி நேர்ந்தாலும் நேரிடக்கூடுமே! அப்போது நீர் எப்படியெல்லாம் கஷ்டப்படுவீரோ, அறிகிலேன். தேவரீருடைய பிராணனுக்கே ஆபத்தல்லவா? நாங்கள் என்ன செய்வோம்? இனி நான் சுவர்ணாதேவியின் முகத்தில் எப்படி விழிப்பேன்?" என்று சொல்லிக் 'கோ' வென்று விம்மி விம்மி அழுதாள்.
குண்டோதர ராயன்:- "ஏன் அந்த வீரவர்மன் நம்மீது படையெடுத்து வரப்போகிறான்? அதை முதலாவது சொல்லு" என்று உறுமினான்.
அப்போது விருத்திமதி;- "தங்களுடைய சிப்பாய்கள் வீரவர்மனுடைய தாய்க்குச் சமானமான செவிலித்தாயைப் பிடித்துச் சிறைப்படுத்தி விட்டார்கள்! இந்த விஷயம் அவன் கேட்டால், க்ஷணம் கூட பொறுக்கமாட்டான். யுத்தம் வருவது நிச்சயம்" என்று சொன்னாள்.
இது கேட்ட குண்டோதர சிங்க மகா சிங்கராயன் "எனது சிப்பாய்களால் கைதி செய்யப்பட்ட வீரவர்மனுடைய செவிலித்தாயின் நாமம் யாது?" என்று வினவினான்.
"நரிச்சி நல்ல தங்கையம்மன்" என்று விருத்திமதி சொன்னாள்.
இதைக் கேட்ட குண்டோதர சிங்கராய மகாசிங்கன் கடகட கட கடகட கட வென்று சிரிக்க ஆரம்பித்தான்.
-------------
கதைக்குள்ளே கதை சொல்கிற பான்மையில் அமைந்தவை இந்த நவதந்திரக் கதைகள். பஞ்ச தந்திரக் கதைகளைப் போன்ற கதைப் போக்குக் கொண்டது என்றும் கொள்ளலாம்.
தொடராக முதன் முதலாகச் சுதேச மித்திரன் பத்திரிகையில் 10-8-1916ஆம் தேதியிட்ட இதழில் பிரசுரமாகத் தொடங்கியது. இடைக்கிடையே சில சமயங்களில் கதைத் தொடர் பிரசுரமாகாமல் இருந்ததும் உண்டு. கதைத் தொடர் நிறைவு பெறவில்லை;
26-2-1918ஆம் தேதிய இதழோடு நின்று விடுகின்றது.
இந்தக் கதைகள் 1928 ஆம் வருஷம் பாரதி பிரசுராலயத்தாரால் நூலாக்கம் செய்யப்பட்டன,
பற்பல பதிப்பாளர்கள் இந்தக் கதை நூலைப் பிரசுரம் செய்திருந்த நிலையில், 1989 ஆம் ஆண்டு சென்னை பாலாஜி புத்தகக் கம்பெனியாரும் பாரதி பிரசுராலயம் பதிப்பித்திருந்த நூலை ஆதாரமாகக் கொண்டு மறு பிரசுரம் செய்திருந்தனர்.
மறு பதிப்பின் பிரதி "தினமணி” பத்திரிகைக்கு விமர்சனத்திற்காக அனுப்பப்பட்டிருந்தது.
நூலைப் பற்றிய மதிப்புரையைத் 'தினமணி' அலுவலகம் மூத்த எழுத்தாளர் - விமர்சகர் - க. நா. சு. என்று தமிழ் இலக்கிய வட்டாரத்தில் மதிப்புடன் அழைக்கப்பெற்ற திரு. க. நா. சுப்பிரமணியம் அவர்களிடமிருந்து பெற்றுப் பிரசுரம் செய்திருந்தது.
ஆனால், மதிப்புரை வெளியான சமயம் க.நா.சு. அவர்கள் உயிரோடு இல்லை . அதனால், "க.நா.சு. வின் கடைசி விமர்சனம்” என்று தலைப்பிட்டு நூலுக்கான மதிப்புரையை 9-9-1989இல் வெளியீடு செய்திருந்தது.
நூலைப் பற்றிப் பொருத்தம் கருதி கநாசு. அவர்களின் மதிப்புரை இங்கே பதிப்பிக்கப்படுகிறது.
--------------------
-
முன்னுரை
1. முதற் பகுதி
பயனறிதல் - சங்கீதம் படிக்கப்போன கழுதையின் கதை - மாணிக்கஞ் செட்டி மானி அய்யனை நகைத்தது - ரோஜாப் பூ என்ற பாம்பின் கதை - கர்த்தப ஸ்வாமிகள் என்ற ஆண்டி கதை - கர்த்தப ஸ்வாமியைப் பாம்புப் பெண் வசப்படுத்தியது - த.கொ. செட்டி கதை - வெண்பா
2. இரண்டாம் பகுதி - நம்பிக்கை
காட்டுக்கோயிலின் கதை - திண்ணன் என்ற மறவன் கதை - உபாயவஜ்ரன் என்ற நரியின் திறமை - கோவிந்த நாம சங்கீர்த்தனக் கூட்டம் - சூனியக் குகையில் மந்திராலோசனை - உபாயவஜ்ரன் என்ற நரியின் திறமைகள் - பிராமணப் பிள்ளை நாலு சாஸ்திரம் படித்துக்கொண்டு வந்த கதை - கதம்ப வனத்தில் நடந்த செய்திகள்
----------
நவதந்திரக் கதைகள் – முன்னுரை
அந்த மூன்று பிள்ளைகளையும், மனைவியையும் வைத்துக் காப்பாற்றுவதற்குப் போதுமான நன்செய் நிலம் அவருக்கு இருந்தது.
ஆனால் பிள்ளைகள், மூவருக்கும் விவாகமாய்த் தலைக்கு ஓரிரண்டு குழந்தைகளும் பிறக்கவே, குடும்பம் மிகப் பெரிதாகிவிட்டது. ஆதலால், அவருடைய முதுமைப் பிராயத்தில் ஜீவனத்துக்கு சிரமமுண்டாய் விட்டது.
பிள்ளைகளுக்கு ஸம்ஸ்க்ருதப் படிப்புச் சொல்லி வைத்து ஒருவனை வேதாந்த
சாஸ்திரத்திலும், மற்றொருவனை வியாகரணத்திலும், மூன்றாமவனைத் தர்க்க சாஸ்திரத்திலும் தேர்ச்சியோங்கும்படி செய்து வைத்திருந்தார்.
கால நிலைமையால், அந்த வித்தைகள் வயிற்றுப் பிழைப்புக்குப் பயன்படவில்லை. பிறரிடம் பிச்சை கேட்க சம்மதமில்லாத மானமுள்ள குடும்பத்தாராதலால், அரைவயிற்றுக்கு ஆகாரம் செய்து கொண்டு கஷ்டத்திலிருந்தார்கள். இப்படியிருக்கையில், ஒரு நாள் விவேக சாஸ்திரி தமது கையில் தாதுவைப் பார்த்து இன்னும் ஒரு வருஷத்துக்கு மேலே தம்மால் ஜீவிக்க முடியாதென்று தெரிந்தவராகித் தம்முடைய மக்களை அழைத்துப் பின்வருமாறு சொல்லலானார்: -
வாரீர், மக்களே, நான் சொல்லப் போவதை சாவதானமாகக் கேளுங்கள். என்னுடைய ஜீவன் இவ்வுலகத்திலே இன்னும் ஒரு வருஷத்துக்கு மேலே நில்லாது. நான் உங்களுக்கு அதிகச் செல்வம் வைத்து விட்டுப்போக வழியில்லாமற் போய்விட்டது.
விதிவசமாக ஏற்பட்ட மதிமயக்கத்தால், உங்களுக்கு லௌகிக லாபங்கள் உண்டாகக்கூடிய வித்தைகள் கற்றுக் கொடுக்கத் தவறிவிட்டேன். உங்களுக்கோ குடும்ப பாரம் ஏற்கனவே மிகுதியாய் விட்டது; இன்னும் காலம் போகப் போக இதனிலும் அதிகப்படக்கூடும். நீங்கள் எப்படி இந்தச் சுமையைப் பொறுக்கப் போகிறீர்களென்பதை நினைக்கும்போது எனக்குக் கவலையுண்டாகிறது. ஆயினும், லௌகிக தந்திரங்களை நீங்கள் தெரிந்து கொள்ளும் பொருட்டுச் சில கதைகள் சொல்லி விட்டுப் போகிறேன். தினந்தோறும் விளக்கு வைத்தவுடனே என்னிடம் சிறிது நேரம் கதை கேட்க வாருங்கள். எனது காலத்துக்குப் பிறகு உங்களுக்கு இந்தக் கதைகள் பயன்படும்? என்றார்.
அப்படியே, பிள்ளைகள் சரியென்று அங்கீகாரம் செய்து கொண்டனர்.
பிள்ளைகளிலே மூத்தவன் பெயர் வாசு தேவன்; இரண்டாமவன் பெயர் காளிதாஸன்; மூன்றாவது பிள்ளைக்கு ஆஞ்சநேயன் என்று பெயர்.
--------
1. முதற் பகுதி
பயனறிதல்
விவேக சாஸ்திரி தம் பிள்ளைகளை அன்புடன் உட்காரச் சொல்லி "குழந்தைகளே! நமது குலதேவதையாகிய காசி-விசாலாக்ஷியை ஸ்மரித்துக் கொள்ளுங்கள்" என்றார்.
அப்படியே மூவரும் கண்ணை மூடிக் கொண்டு சிறிது நேரம் தியானம் செய்து முடித்தார்கள். பிறகு பிதா கதை சொல்லத் தொடங்கினார்:
"கேளீர், மக்களே! ஒரு காரியம் தொடங்கும்போது அதன் பயன் இன்னதென்று நிச்சயமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அந்தப் பயன் நமக்கு வேண்டியதுதானா என்பதையும் ஆராய்ந்து செய்யவேண்டும். பயன்படாத காரியத்திலே உழைப்பவன் சங்கீதம் படிக்க போன கழுதை போலே தொல்லைப்படுவான்? என்றார்.
"அதெப்படி?" என்று பிள்ளைகள் கேட்டார்கள்.
காலநிலைமையால், அந்த வித்தைகள் வயிற்றுப் பிழைப்புக்குப் பயன்படவில்லை. பிறரிடம் பிச்சை கேட்க ஸம்மதமில்லாத மானமுள்ள குடும்பத்தா ராதலால், அரை வயிற்றுக்கு ஆஹாரம் செய்து கொண்டு கஷ்ட்த்தில் இருந்தார்கள்.
இப்படி இருக்கையில், ஒரு நாள் விவேக சாஸ்திரி தமது கையில் தாதுவைப் பார்த்து இன்னும் ஒரு வருஷத்திக்கு மேலே தம்மால் ஜீவிக்க முடியா தென்று தெரிந்தவராகி, தம்முடைய மக்களை அழைத்து பின்வருமாறு சொல்ல்லானார்:
“வாரீர், மக்களே, நான் சொல்லப்போவதை ஸாவதானமாக்க் கேளுங்கள்.
என்னுடைய ஜீவன் இவ் வுலகத்திலே இன்னும் ஒரு வருஷத்துக்கு மேலே நில்லாது. நான் உங்களுக்கு அதிகச் செல்வம் வைத்து விட்டுப்போக வழியில்லாமற் போய்விட்ட்து. விதிவசமாக ஏற்பட்ட மதிமயக்கத்தால், உங்களுக்கு லௌகிக லாபங்கள் உண்டாக்கக்கூடிய வித்தைகள் கற்றுக் கொடுக்கத் தவறிவிட்டேன். உங்களுக்கோ குடும்ப பாரம் ஏற்கனவே மிகுதியாய் விட்ட்து. இன்னும் காலம் போகப் போக இதனிலும் அதிகப்படக் கூடும். நீங்கள் எப்படி இந்தச் சுமையைப் பொறுக்கப் போகிறீர்க ளென்பதை நினைக்கும்போது எனக்குக் கவலை யுண்டாகிறது.
எனிலும், லௌகிக தந்திரங்களை நீங்கள் தெரிந்து கொள்ளும் பொருட்டுச் சில கதைகள் சொல்லிவிட்டு போகிறேன். தின்ந்தோறும் விளக்கு வைத்தவுடனே என்னிடம் சிறிது நேரம் கதை கேட்க வாருங்கள். எனது காலத்துக்குப் பிறகு உங்களுக்கு இந்தக் கதைகள் பயன்படும்” என்றார்.
------------
சங்கீதம் படிக்கப்போன கழுதையின் கதை
பொதிய மலைக் காட்டிலே, ரஸிக சிரோமணி என்றொரு கழுதையிருந்தது. அது புல்லாந் தரைகளிலே மேய்ந்து நன்றாகக் கொழுப்படைந்து வருகையில் வசந்த காலத்தில், ஒருநாள் மாலை, ஒரு மாமரத்தின் பக்கமாகப் போகும் போது, கிளையின்மேல் மதுகண்டிகை என்றதோர் குயில் பாடிக் கொண்டிருந்தது. அதை ரஸிக சிரோமணி சிறிது நேரம் நின்று கேட்டது. குயிலின் பாட்டு மனோகரமாக இருந்தது.
அந்தப் பாட்டிலே கழுதை மயங்கிப்போய் மதுகண்டிகையை நோக்கிச் சொல்லுகிறது: - "பெண்ணே, உன்பாட்டு எனக்குப் பரவச முண்டாக்குகிறது. ஆகா! சங்கீதத்தின் இன்பமே இன்பம்! உனது குரல் சன்னமானது. நமக்குக் கனத்த சாரீரம். உனக்குள்ள பயிற்சியும் திறமையும் நமக்கிருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். காட்டிலுள்ள மிருகங்களெல்லாம் கேட்டு வியப்படையும். சிங்க ராஜா நம்மை சமஸ்தானத்து வித்வானாக நியமனம் செய்வார். "இந்தக் காட்டிலுள்ள புல்லாந்தரைகளிலே ரஸிக சிரோமணி ஒருவன்தான் மேயலாம். மற்ற எந்த மிருகமும் மேயக் கூடாது? என்று கட்டளை பிறப்பித்துவிடுவார். பிறகு நமக்கு யாதொரு வேலையு மேற்படாது. நமது நிலைமை மிகவும் கொண்டாட்டமாய் விடும்."
இவ்வாறு ரஸிக சிரோமணி மேன்மேலும் சொல்லிக் கொண்டு போவதைக் கேட்டுக் குயில் சிரிப்புடன்:- "கேளாய், ரஸிகமாமா, உனக்கு இந்தத் தொழில் வரமாட்டாது. வீணாக மனோராஜ்யம் பண்ணுவதிலே பயனிலை" என்றது.
இவ்வாறு ரஸிக சிரோமணி மேன்மேலும் சொல்லிக் கொண்டு போவதைக் கேட்டுக் குயில் சிரிப்புடன்:- "கேளாய், ரஸிகமாமா, உனக்கு இந்தத் தொழில் வரமாட்டாது. வீணாக மனோராஜ்யம் பண்ணுவதிலே பயனிலை" என்றது.
கழுதைக்குக் கோபமுண்டாய்விட்டது. கழுதை சொல்லுகிறது:-
"செல்வமும், அழகும், கல்வியும், வலிமையும் ஜந்துக்களுக்கு அதிக கர்வத்தை உண்டாக்குகின்றன. தன்னைக் காட்டிலும் இந்த நிமிஷம் ஒரு விஷயத்திலே தணிந்திருப்பவன் எப்போதும் தணிவாகவே யிருப்பானென்று மூடன் நினைக்கிறான். எந்தத் தொழிலும் யாருக்கும் வரும். வருந்தினால் வாராத தொன்றுமில்லை. பார்ப்பாரப் பிள்ளைக்கு வியாபாரத் தொழில் வாராதென்று சொல்லி நகைத்த செட்டி அவமானமடைந்த கதை உனக்குத் தெரியாதோ?"
"அதென்ன கதை?" என்று மதுகண்டிகை கேட்டது.
----------
மாணிக்கஞ் செட்டி மானி அய்யனை நகைத்தது
கேளாய், கர்வம் பிடித்த மதுகண்டிகை யென்ற குயிற் பெண்ணே! பல வருஷங்களின் முன்பு மதுரை மாசி வீதி மளிகை மாணிக்கஞ் செட்டி என்றொருவனிருந்தான். அவனுடைய தந்தை மளிகை வியாபாரஞ் செய்து கடன்பட்டு வீடு வாசலையிழந்து ஏழ்மையிலே இறந்து போனான். பின்பு மாணிக்கஞ் செட்டியின் தாய் கடலை சுண்டலும், தோசையும் விற்றுச் செட்டாகக் குடித்தனம் பண்ணித் தன் பிள்ளையை வளர்த்து வந்தாள். மாணிக்கஞ் செட்டிக்குப் பத்து வயதானவுடன் அவனை ஒரு பெரிய வியாபாரி தனது கடையிலே மாதம் அரை ரூபாய் சம்பளத்துக்கு வைத்துக் கொண்டான். இவன் தாயாரிடத்திலிருந்து செட்டு, கருத்து முதலிய நல்ல குணங்களைப் பயின்றவனாதலால், பெரிய வியாபாரிக்கும் இவன் மேலே தயவும் நம்பிக்கையும் உண்டாயின.
பெரிய வியாபாரிக்குப் பிள்ளையில்லை. ஒரே பெண். அவள் பெயர் மரகதவல்லி. நாளடைவில் மாணிக்கஞ் செட்டியை வியாபாரி தன் கடையில் பங்காளியாகச் செய்து கொண்டான். தன் மகளை இவனுக்கே விவாகம் செய்து வைத்தான். அவன் இறந்த பிறகு உடைமையெல்லாம் மருமகனுக்கே வந்துவிட்டது. மதுரை மாசி வீதி மளிகைக் கடை மாணிக்கஞ் செட்டி என்று பிரக்யாதி ஏற்பட்டு விட்டது. இந்த மாணிக்கஞ் செட்டியினிடம், பதினாறு வயதுள்ள மானி அய்யன் என்ற பார்ப்பாரப் பிள்ளை ஒருவன் வந்தான்.
"ஐயரே, என்ன வேண்டும்?" என்று செட்டி கேட்டான்.
"தங்களுடைய கடையிலே எனக்கொரு வேலை போட்டுக் கொடுக்க வேண்டும்" என்று சிறுவன் சொன்னான்.
"உனக்கென்ன தெரியும்?"
"எனக்கு எண்சுவடி முழுதும் நான்றாகத் தெரியும். கணக்குப் பதிவு தெரியும். கூடிய வரை எழுதப் படிக்கத் தெரியும்.?
இதைக் கேட்டவுடனே செட்டி நகைத்தான்.
"பார்ப்பாரப் பிள்ளைகள் வந்தால் அவர்களுக்கு ஒரு விஷயம் தெரியாதென்று சொல்லும் வழக்கமே கிடையாது. எதுவும் தெரியும். ஐயரே, போய் வாரும். இவ்வளவு தெரிந்த பிள்ளைகள் நம்மிடம் வேலைக்கு வேண்டாம்? என்று சொன்னான்.
"சரி? என்று மானி அய்யன் வெளியிற் போனான்.
"இங்கே வருக ஐயரே" என்று மாணிக்கஞ் செட்டி திரும்பவும் அவனைக் கூப்பிட்டான். சிறுவன் திரும்பி வந்தான்.
"ஐயரே! நீர் முந்திச் சித்திரை வீதியில் முருகச் செட்டியார் கடையில் இருக்க
வில்லையா?" என்று செட்டி கேட்டான்.
மானி :- "ஆம்" என்றான்.
செட்டி: "அங்கிருந்து ஏன் வெளியேறி விட்டீர்?"
: "எனக்கும் முருகச் செட்டியாருக்கும் குணம் ஒத்து வரவில்லை."
செட்டி: "அதென்ன விஷயம் காணும்?"
மானி : "நம்முடைய குணம் அவருக்குப் பிடிக்கவில்லை. அவருடைய குணம் எனக்குப் பிடிக்கவில்லை. அவ்வளவு தான்."
செட்டி :- "அதுதான் என்ன விஷயம்?" என்று கேட்டேன்.
மானி : "அதை இவ்விடத்தில் விளங்கச் சொல்வதில் பிரயோஜனம் இல்லை."
செட்டி : "ஏன்? குற்றம் உம்முடையதுதானோ?"
மானி - "என்மேல் ஒரு குற்றமும் இல்லை. ஒருநாள் என்னைக் கடையில் வைத்துவிட்டு வெளியே போனார். அவருடைய மகனும் அன்று கடைக்கு வரவில்லை. கடையில் என்னைத் தவிர வேறு யாருமே கிடையாது. இப்படியிருக்கையில், சங்குத் தேவன் என்ற மறவன் வந்து, "செட்டியார் எங்கள் வீட்டிலேயிருக்கிறார். ஐந்து துலாம் சர்க்கரை வாங்கிக்கொண்டு வரச்சொன்னார். அவருடைய சொந்தச் செலவுக்கு வேண்டுமாம். தனது பற்றென்று எழுதச் சொன்னார்" என்றான்.
"அந்தச் சங்குத்தேவன் அந்தச் செட்டியாருடன், உயிருக்குயிரான சிநேகம் என்பதும் எனக்குத் தெரியும். நான் எப்படிக் கொடுக்காமலிருப்பது "செட்டியாரிடம் நேரிலே போய் கேட்டுக் கொண்டு செய்யலாமென்றால், கடையை யாரிடம் ஒப்புவித்து விட்டுப் போவது? மறவனிடம் ஒப்புவித்து விட்டு வரலாமென்றாலோ ஐந்து துலாம் சர்க்கரைக்கு நம்பக் கூடாத மனிதனிடம் கடையை விட்டு விட்டு வரலாமா? நான் சர்க்கரையைக் கொடுத்து விட்டேன்.
"செட்டியார் வந்தார். "சங்குத்தேவனுக்குச் சர்க்கரை கொடுத்தாயா? , என்று கேட்டார். ஆமென்றேன். "எவ்வளவு கொடுத்தாய்? என்றார். 'ஐந்து துலா' மென்றேன். 'யாருடைய உத்தரவின் மேலே கொடுத்தாய்" என்றார். 'உங்களுடைய உத்தரவின் மேலே' என்றேன். 'நான் எப்போது உன்னிடம் உத்தரவு கொடுத்தேன்' என்றார். 'சங்குத்தேவனிடம் உத்தரவு கொடுத்ததாக அவன் சொன்னா' னென்றேன். 'அவன் சொன்னால் உனக்குப் புத்தி எங்கே போச்சுது' என்றார்.
”எனக்குக் கொஞ்சம் கோபம் வந்துவிட்டது. என் புத்தியைப் பற்றிப் பேச்சில்லை. உம்முடைய சிநேகிதன்தானே அவன்? பொய் சொல்லமாட்டானென்று நினைத்துக் கொடுத்து விட்டேன். குற்றமாக இருந்தால் என்மேல் பற்று எழுதிவிடலாம்?” என்று சொன்னேன்.
”முருகச் செட்டிக்கு என் மேலே நெடுநாளாகக் கோபம். சிதம்பரத்திலிருந்து வந்திருக்கும் அவருடைய மைத்துனனை என்னுடைய ஸ்தானத்துக்கு வைத்து விட வேண்டுமென்று அவருக்கு வீட்டிலே போதனை ஏறிவிட்டது. என்னை வெளியே போகச் சொல்வதற்கு என்ன உபாயம் செய்யலாமென்று பல நாளாக யோசனை செய்து வந்தார். இதனால் நான் மரியாதையாகச் சொல்லிய வார்த்தையை அவர் அதிகப் பிரசங்கித்தனமென்று பாராட்டி "ஐயரே! நாளை முதல் வேறு கடையிலே வேலை பார்த்துக்கொள்ளும். இன்று மாலை வீட்டுக்குப் போகும்போது சம்பளம் கணக்குத் தீர்த்து வாங்கிக்கொண்டு போகலாம்? என்று சொன்னார். நான் சரியென்று விலகிவிட்டேன். இவ்வளவுதான் நடந்த சங்கதி.?
அப்போது மாணிக்கஞ் செட்டி கேட்கிறான்:-
"உம்முடைய பெயரென்ன?"
மானி : "என்னுடைய பெயர் மானி அய்யன்."
செட்டி :"உமது பிதாவின் பெயரென்ன?"
மானி : "அவர் பெயர் சீதாராமையர்."
செட்டி : "அவர் உயிரோடிருக்கிறாரா?"
மானி : "இல்லை; இறந்து போய்விட்டார்"
செட்டி : "வீட்டிலே தாயார் இருக்கிறார்களா?"
மானி: "ஆம்." செட்டி - "இன்னும் எத்தனை பேருண்டு, குடும்பத்திலே?"
மானி : "வேறு யாரும் கிடையாது. எனக்குக்கூடக் கலியாணம் ஆகவில்லை."
இதைக் கேட்டு செட்டி நகைத்தான்.
"ஏன் ஐயரே! கலியாணம் ஆகவில்லையென்று வருத்தந்தானோ? பார்ப்பாரப் பிள்ளைகளுக்கு வயிற்றுச் சோறு தேடு முன்பாகவே பெண்டாட்டி பிள்ளைகள் இல்லாவிட்டால் சுகப்படாது. குடும்பத்தை முதலாவது பெரிதாகச் செய்து வைத்துக் கொண்டால் பிறகு பிச்சை யெடுப்பது சுலபம். ஆள் கூட்டம் அதிகமாகத் திரட்டிக்கொண்டு மேளதாளத்துடன் பிச்சைக்குப் போகலாம்" என்றான்.
மானி :"செட்டியாரே! எனக்கு விவாகத்திற்குப் பணவுதவி செய்யும்படி உங்களிடம் யாசகத்துக்கு வரவில்லை. வேலை செய்தால் சம்பளமுண்டோ என்று கேட்க வந்தேன். இல்லை யென்றீர்கள். நான் திரும்பிப் போனேன். போனவனை மறுபடியும் அழைத்துப் புண்படுத்த வேண்டாம்."
செட்டி : "எத்தனை வயதிலே விவாகஞ் செய்து கொள்வீர்?"
மானி : "அதைப்பற்றி நான் இப்போது யோசிக்கவில்லை."
செட்டி : "உம்முடைய தாயார் யோசிக்கவில்லையா?"
மானி :"எனக்குத் தெரியாது."
செட்டி : "கலியாண விஷயத்திலே தாயார் வார்த்தை தானே கேட்பீர்?"
மானி : "நிச்சயமில்லை."
செட்டி - "பின், என்ன செய்வீர்?"
மானி - "நான் குடும்ப சம்ரக்ஷணைக்கு முயற்சி வேண்டி அலைகிறேன். தாங்கள் சம்பத்திலிருக்கிறீர்கள். உங்களுக்கு சந்தோஷமாக வார்த்தை சொல்லிக் கொண்டிருக்க நேரமிருக்கிறது. என்னைப் பகவான் அந்த நிலையில் வைக்கவில்லை."
செட்டி : "ஐயரே! வீட்டுக்குப் போகவேண்டுமா? அவசரமா? இன்று போஜனச் செலவுகளுக்கு ஒன்றும் வேண்டாமோ?" என்றான்.
இதைக் கேட்டவுடன் மானிக்குக் கோபமுண்டாய்விட்டது.
மானி அய்யன் சொல்லுகிறான்: -
"செட்டியாரே, மீனாக்ஷியம்மையின் கிருபையால் நமது வீட்டிலே, இன்னும் அநேக மாதங்களுக்கு வேண்டிய உணவு சேர்த்திருக்கிறேன். என்னுடைய தாயார் பேருக்குக் கொஞ்சம் நிலமும் உண்டு. இவ்விடத்தில் நமது முயற்சி நிறைவேற வழியில்லா விட்டால் வேறிடத்துக்குப் போகலாமே, இங்கிருந்து வீண் வார்த்தை சொல்வது நியாயமில்லையென்ற கருத்தின்மேல் நான் அவசரப்பட்டேன், அதைத் தவிர வேறொன்றுமில்லை.
"இப்போது, தாங்கள் கேள்வி கேட்டு வரும் மாதிரியைப் பார்க்கும்போது, இன்னும் சற்று நேரம் இங்கிருந்து தங்களுக்குச் சில விஷயங்கள் சொல்லிவிட்டுப் போகலாமென்ற எண்ண முண்டாகிறது. நம்மூர் வியாபாரிகள் விஷயமாக, எனக்குள்ள சில கருத்துக்களைத் தங்களைப்போன்ற மனிதரிடம் சொல்லித் தீர்த்தாலொழிய என் மனம் ஆறுதலடைய மாட்டாது. வேலைக்குக் கேட்க வந்த இடத்திலே அதிகப் பேச்சு வைத்துக் கொள்ளக்கூடாதென்று நினைத்தேன். தாங்கள் தொளைத்துத் தொளைத்துக் கேட்பதைப் பார்த்தால், தங்களுக்கு இப்போது உல்லாச நேரம் போலே தோன்றுகிறது. ஆகையால் உங்களிடமே சொல்லலாமென்று தீர்மானம் செய்கிறேன்."
அதற்கு மாணிக்கஞ் செட்டி : "சொல்லும் ஐயரே, மனதுக்குள் வைத்துக் கொண்டு குமைய வேண்டாம். பணம் தேடி வைத்தவர்களைத் தேடத் திறமில்லாதவர் எப்படிக் கெல்லாம் சீர்திருத்த உத்தேசங் கொண்டிருக்கிறார்களென்பதைக் கண்டுபிடிப்பதிலே எனக்கும் ருசியுண்டு. சொல்லும், உம்முடைய கொள்கைகளைக் கேட்போம்" என்றான்.
மானி அய்யன் : "வடக்கு தேசத்திலிருந்து சில வியாபாரிகள் இங்கே அடிக்கடி வருகிறார்கள். அவர்களுடன் நான் கொஞ்சம் வழக்கப்பட்டிருக்கிறேன். அவர்களுக்குள்ள வியாபாரத் திறமையும் புத்தி நுட்பமும் நம்மூர் வியாபாரிகளிட-மில்லை. இது முதலாவது சொல்ல வேண்டிய விஷயம். இவ்விடத்து வியாபாரிகளிடம் இருக்கிற கருவத்துக்குத் தகுந்தபடி புத்திசாலித்தனமில்லை. இனி, இரண்டாவது விஷயம் சொல்லுகிறேன். க்ஷேமத்துடனும் செழிப்புடனும் ஊர் இருந்தாலொழிய வியாபாரம் செழிக்காது. வியாபாரத்துக்கு மகிமை வரவேண்டுமானால் ஊருக்கே ஒரு மகிமை வரவேண்டும். இந்த விஷயம் இதுவரை தங்களிடம் எவனும் சொல்லியிருக்க மாட்டான்."
மாணிக்கஞ் செட்டி : "எனக்கே தெரியும். இந்த ரகஸ்யம் யாரும் சொல்ல வேண்டியதில்லை. சரி, மேலே கதையை நடத்தும்."
மானி அய்யன் : "கதையில்லை, செட்டியாரே, காரியம். இனி மூன்றாவது விஷயம் யாதெனில் இந்த வியாபாரிகளுக்குக் குமாஸ்தாக்களிடம் சரியாக வேலை வாங்கத் தெரியவில்லை. ஏனென்றால், முதற் காரணம், சம்பளம் நேரே கொடுக்க மனம் வருவதில்லை. ஒரு மனிதனால் நாம் லாபமடைய விரும்பினால் அவனுக்கு வயிறு நிறையச் சோறு போட வேண்டும். வெளியிலிருந்து வரும் புத்திசாலியைக் காட்டிலும் குடும்பத்தைச் சேர்ந்த மூடனே விசேஷமென்று நினைக்கக்கூடாது. மூடனிடம் உன்னுடைய காரியத்தை ஒப்புவித்தால் அவன் அதைக் குட்டிச்சுவராக்கிப் போடுவான். தவிரவும், முகஸ்துதி செய்பவனையும், பொய் நடிப்புக் காட்டு -வோனையும், தலையிலே வைத்து, சாமர்த்திய முள்ளவனையும், யோக்கியனையும் கீழே போடக் கூடாது. ஒரு நாளில் இத்தனை நாழிகைதான் வேலையுண்டு என்ற கட்டுப்பாடிருக்கவேண்டும். அதிக நேரம் வேலை வாங்குவதும், நினைத்த பொழுதெல்லாம் ஆள்விட்டு அழைப்பதும் குற்றம். இன்னும் சொல்லவா?"
மாணிக்கஞ் செட்டி : "ஐயரே, கொஞ்சம் இலேசாக அடக்கும். குமாஸ்தாக்களிடமுள்ள குற்றத்தைச் சொன்னால், உமக்கு விஷயம் பூராவாகத் தெரியும். குமாஸ்தாக்களிடம் நாணயமில்லை. பணக்கார பிள்ளைகள் வெளியே ஒரு கடையில் சிறிய சம்பளம் வாங்கி வேலை பழகப் போவது கௌவரக் குறைவென்ற மூட எண்ணத்தால் கிடைப்பதில்லை. வருவோனெல்லாம் கோவணாண்டி; பணப் பொறுப்பையும் காரியப் பொறுப்பையும் அவர்களிடம் அதிகமாக ஒப்புவிக்க இடமில்லை. அவர்களுக்குக் குற்றேவல் செய்து தயவு சம்பாதிப்பதிலே தான் உற்சாக முண்டாகிறது. உழைப்பிலும் கருத்திலும் உற்சாகமில்லை. எப்படியிருந்தாலும், ஏழைக்கு ஏழைப் புத்திதானே ஏற்படுங்காணும்? நமது பந்துவாக இருந்தால் மூடனானாலும் அதிக வஞ்சனை பண்ணமாட்டானென்று நினைக்கலாம்."
மானி அய்யன் : "அதுதான் நினைக்கக் கூடாது. 'உடன் பிறந்தார் சுற்றத்தா-ரென்றிருக்க வேண்டா; உடன் பிறந்தே கொல்லும் வியாதி' என்ற வசனம் கேட்டதில்லையோ?"
மாணிக்கஞ் செட்டி : "தெரியுங்காணும்! ஆகவே இரண்டும் கஷ்டமாகிறது. மடத்தாண்டி கையிலே பணத்தைக் கொடுப்பது புத்திசாலித்தனமா? ஊரான் கெடுத்துக் கெடுவதைக் காட்டிலும் நம்மவனால் கெடுவோமே!?
மானி : "செட்டியாரே, கெடவா வியாபாரம் பண்ணுகிறோம். ஜீவிக்க வியாபாரம் செய்கிறோம். ஓரிடத்திலே தக்க காரியஸ்தன் கிடைக்காவிட்டால் மற்றோரிடத்திலிருந்து தருவித்துக் கொள்ள வேண்டும். எந்தக் கணக்குக்கும் ஒரு தீர்வையுண்டு; எந்தச் சிக்கலுக்கும் அவிழ்ப்புண்டு."
இவ்வாறு மானி அய்யன் சொல்லியதைக் கேட்டு, மாணிக்கஞ் செட்டி சிறிது நேரம் யோசனை செய்யலானான்,
மாணிக்கஞ் செட்டி யோசிக்கிறான்:-
"பார்ப்பான் கெட்டிக்காரன். நாம் எடுத்திருக்கும் ஆலோசனைக்கு இவனை உதவியாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் நமது நோக்கத்தை இவன் தெரிந்து கொள்ளக் கூடாது. தெய்வம் விட்டது வழி. ஒரு கை பார்ப்போம்."
இப்படி யோசித்து மாணிக்கஞ் செட்டி சொன்னான்:-
"ஐயரே, ஒரு மூன்று மாசத்துக்கு உம்மை ஒரு சோதனைக்காகக் கடையிலே அமர்த்திக் கொள்ளுகிறேன். மூன்று மாசத்துக் கப்பால் என் மனதுக்குப் பிடித்தால் வேலை உறுதிதான். பிடிக்காவிட்டால், விலகிக் கொள்ள வேண்டும். முதல் மூன்று மாசத்துக்குச் சம்பளம் கிடையாது. உம், சம்மதமா?"
பார்ப்பாரப் பிள்ளை தன் மனதுக்குள்ளேயே "அட லோபிப் பயலே" என்று வைது கொண்டான்; சொல்லுகிறான்:- "செட்டியாரே, மூன்று மாசம் வேலை பார்க்கிறேன். பிறகு திருப்தியானால் வேலை உறுதி, இல்லாவிட்டால் அவசியமில்லை. அது உங்களுடைய இஷ்டம்போலே. ஆனால் உழைக்கிற நாள் சம்பளம் கையிலே கொடுத்து விடவேண்டும். சம்மதமா?" என்றான்.
"என்ன ஐயரே, விறைப்பிலே கேட்கிறீரே?" என்றான் செட்டி.
"சாதாரணமாகத் தான் கேட்டேன்" என்றான் பார்ப்பான்.
செட்டி சொல்லுகிறான்: - ஐயரே, போய் ஒரு வாரங் கழித்துத் திரும்பி வாரும். அப்போது அவசியமானால் சொல்லுகிறேன்."
அதற்குப் பார்ப்பான்: "செட்டியாரே, அவசியமாக இருந்தால் தாங்கள் சொல்லியனுப்ப
வேண்டும். நானாக வர சௌகர்யப்படாது" என்றான். செட்டி கடகடவென்று நகைத்தான். பிறகு சொல்லுகிறான்: "ஐயரே, கொஞ்சம் இலேசாக அடக்கும். நமக்குப் பார்ப்பார் கிடைப்பது கஷ்டமில்லை காணும். உமக்குச் செட்டி கிடைப்பது கஷ்டம்" என்றான்.
"ஐயரே, போய் வாரும்" என்று செட்டி சொன்னான். இவன் சரியென்று வீட்டுக்கு வந்துவிட்டான்.
நாள் இரண்டாயின. மாணிக்கஞ் செட்டிக்கு ஒரு பெரிய சங்கடம் வந்து சேர்ந்தது. அவனுக்கு ஒரு மைத்துனன். அந்த மைத்துனன் பெயர் தட்டிக் கொண்டான் செட்டி. இவனை மாணிக்கஞ் செட்டி தனது காரியஸ்தனாகத் தஞ்சாவூரிலே வைத்திருந்தான். தஞ்சாவூரில் மாணிக்கஞ் செட்டிக்கு ஒரு கடையும் கொஞ்சம் கொடுக்கல் வாங்கலும் உண்டு.
தட்டிக் கொண்டான் செட்டி நஷ்டக் கணக்குக் காட்டுவதிலே புலி. ஒரே அடியாகப் பெரிய தொகையை அழுத்திக்கொண்டு கணக்குக் காட்டிவிட்டான். அந்த நஷ்டக் கணக்கு மாணிக்கஞ் செட்டிக்கு வந்தது. ஓலையை விரித்து வாசித்துப் பார்த்தான். வயிறு பகீரென்றது.
"கெடுத்தானே பாவி! கெடுத்துப் போட்டானே! இனி என்ன செய்யப் போகிறோம்" என்று மிகவும் துன்பப்பட்டான்.
ஆனாலும், ஒருவாறு மனதைத் தேற்றிக்கொண்டு மேலே நடக்க வேண்டிய காரியத்தைப் பார்ப்போமென்று சொல்லி, "இப்போது தஞ்சாவூருக்கு அனுப்ப ஒரு தகுதியான மனுஷன் வேண்டுமே. யாரை அனுப்புவோம்" என்று யோசித்தான்.
மானி அய்யருடைய ஞாபகம் வந்தது. "அவனைக் கூப்பிடுவோம்"? என்று தீர்மானம் செய்துகொண்டு ஒரு ஆள் அனுப்பினான். மானி அய்யன் வந்து சேர்ந்தான்.
வாரும், அய்யரே" என்றான் செட்டி.
"தங்களுடைய உத்தரவுக்குக் காத்துக் கொண்டிருக்கிறேன்" என்று மானி அய்யன் வணக்கத்துடன் சொன்னான்.
"பார்ப்பான் கெட்டிக்காரன்" என்று செட்டி தன் மனதிலே நினைத்துக் கொண்டான்.
ரஸிக சிரோமணி என்னும் கழுதை சொல்லிற்று:
"மேற்படி மாணிக்கஞ் செட்டி பார்ப்பானை நகைத்தது போல் நீயும் என்னை இப்போது நகைக்கிறாய், பின்னிட்டு என்னை நீயே மெச்சுவாய்."
அதற்குக் குயில் சொல்லிற்று: -
"ரஸிக மாமா, உனக்குச் சங்கீதமும் வராது. கதை சொல்லவும் தெரியவில்லை" என்றது.
கழுதைக்குக் கோபம் வந்துவிட்டது. "எனக்கா வராது? எனக்கா? என்னையா சொல்லுகிறாய்? என்னைத்தானா?" என்றது.
"ஆம், ஆம், ஆம், ஆம்? என்று குயில் நான்கு தரம் சொல்லிற்று.
"உனக்கு இத்தனை மதமா?" என்றது கழுதை.
"அட, உண்மையைச் சொல்லக் கூடாதா?" என்றது குயில்.
"சொல்லக்கூடாது" என்றது கழுதை. "சொல்லலாம்? என்றது குயில்.
"நீ அந்த மரத்திலிருந்து கொஞ்சம் இறங்கிக் கீழே வா" என்றது கழுதை.
"நீ தான் தயவுசெய்து இங்கே கொம்பின்மேலே ஏறி வா" என்று சொல்லிக் குயில் நகைத்தது.
கழுதை மகா கோபத்துடன் அங்கிருந்து புறப்பட்டது.
குயில்: "மாமா, மாமா, கோபித்துக் கொண்டு போகாதே. இங்கே வா. ஒரு பேச்சுக் கேள்" என்று கூப்பிட்டது.
கழுதை திரும்பி வந்தது.
குயில் கேட்கிறது : "அந்த மாணிக்கஞ் செட்டிக் கதையை எடுத்தாயே, அதை முழுதும் சொல்லவேண்டாமா?"
கழுதை: "உனக்குத் தெரியவேண்டிய அளவு சொல்லியாய் விட்டது. மிச்சம் உனக்குத் தெரியவேண்டிய அவசியமில்லை" என்றது.
குயில் : "பாதிக் கதையிலே நிறுத்தினால் அடுத்த ஜன்மம் பேயாகப் பிறப்பாய். சங்கீதம் இதைவிட இன்னும் துர்லபமாகப் போய்விடும்" என்றது.
அப்போது கழுதை பயந்து போய், "பாதிக் கதையிலே நிறுத்தினால் பேய்ப் பிறவியா? உண்மைதானா?" என்று கேட்டது. கழுதைக்கு மறு ஜன்ம நம்பிக்கை மிகவும் தீவிரம்.
குயில் சொல்லிற்று : "ஆமாம். உண்மைதான். எங்கள் தாத்தா சொன்னார்."
குயிலுடைய தாத்தா சொன்னால் உண்மையாகத்தான் இருக்குமென்று கழுதைக்குச் சரியான நம்பிக்கை ஏற்பட்டது.
"அப்படியானால் கதை முழுதையும் சொல்லி விடலாமா?" என்று கழுதை கேட்டது.
"சொல்லு. அதற்கு நடுவிலே நான் ஒரு சின்னக் கதை சொல்லி முடித்துவிடுகிறேன்."
"உன் கதைக்குப் பெயரென்ன?" என் று கழுதை கேட்டது.
குயில் - "ரோஜாப் பூக்கதை?
"சொல், சொல்? என்று கழுதை துரிதப்படுத்திற்று.
குயில் சொல்லலாயிற்று.
-----------
ரோஜாப்பூ என்ற பாம்பின் கதை
பழைய காலத்திலே, வஞ்சி நகரத்தில், ஒரு தோட்டத்து வேலியிலே, ஒரு பாம்பு தனது பெண் குட்டியுடன் வாசம் செய்தது. அந்தக் குட்டி மிகவும் அழகாக இருந்ததனால் அதற்கு "ரோஜாப்பூ" என்று பெயர்.
ஒருநாள் இரவிலே தாய்ப்பாம்பும், குட்டியும் புதரிலிருந்து வெளிப்பட்டுக் காற்று வாங்கிக்கொண்டிருக்கையில், குட்டி தாயை நோக்கிக் கேட்கிறது:
"அம்மா! நம்மை எல்லாரும் ஏன் பகைக்கிறார்கள்? நம்மை வீதியிலே எந்த மனிதன் கண்டாலும் கல்லால் எறிகிறானே, காரணமென்ன?"
தாய் சொல்லுகிறது:- "குழந்தாய், நமது ஜாதிக்குப் பல்லிலே விஷம். நாம் யாரையேனும் கடித்தால் உடனே இறந்துபோய் விடுவார்கள். இதனால் நம்மிடத்திலே எல்லாருக்கும் பய முண்டாகிறது. பயத்திலிருந்து பகையேற்படும். அதுதான் காரணம்.?
இங்ஙனம் தாய்ப் பாம்பும் குட்டியும் வார்த்தை சொல்லிக் கொண்டிருக்கையில் பக்கத்திலே ஒரு முனிவர் நடந்து சென்றார். அவர் இந்தப் பாம்புகளைப் பார்த்துப் பயப்படவில்லை. ஒதுங்கவில்லை. திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. அவர் பாட்டிலே போனார். இதைப் பார்த்து ரோஜாப் பூ மிகவும் ஆச்சரியப்பட்டுத் தனது தாயிடம் கேட்கிறது:-
"ஏனம்மா, இவர் மாத்திரம் பயப்படாமல் போகிறாரே, அதென்ன?"
தாய் சொல்லுகிறது:- "இவர் சித்தர். நாம் கடித்தால் சாகமாட்டார். இவருக்குிலே பயமில்லை. ஆகையால் பகையில்லை. இவர் பெரிய ஞானி. இவர் வரங் கொடுத்தாலும் பலிக்கும்; சாப மிட்டாலும் பலிக்கும்."
இவ்வாறு தாய் சொல்லியதைக் கேட்டவுடனே குட்டி சிறிது நேரம் ஏதோ யோசனை செய்து பார்த்துப் பிறகு "அம்மா, இவர் எங்கே குடியிருக்கிறார்?" என்று கேட்டது.
"அதோ தெரிகிறது பார், தூரத்திலே ஒரு கிராமம். அதற்குக் கிழக்கே ஒரு சுனையும் பக்கத்திலே ஒரு தோப்பும் இருக்கின்றன. அந்தத் தோப்பிலே இவர் குடியிருக்கிறார்" என்று தாய் சொல்லிற்று.
சில நாளுக்கப்பால் இந்தப் ரோஜாப் பூ என்ற பாம்புக் குட்டி தனியே முனிவர் இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தது. அவர் ஒரு மரத்தடியிலே உட்கார்ந்திருந்தார். காலிலே போய் விழுந்தது. "என்ன வேண்டும்?" என்று கேட்டார்.
"ஒரு வரம்? என்றது.
"என்ன வரம்?" என்று கேட்டார்.
"நான் நினைத்தபோது மிகவும் அழகான ஒரு மனிதப் பெண்ணாக மாறவேண்டும்" என்று பாம்புக் குட்டி சொல்லிற்று.
"எதன் பொருட்டு?" என்றார்.
"இந்த ஜன்மத்தை எல்லாரும் பகைக்கிறார்கள். ராஜகுமாரர் பார்த்தாலும் பிரியப்படத்தக்க ரூபம் எனக்கு வேண்டும்" என்றது.
பாம்பின் நோக்கத்தைத் தெரிந்துகொண்டு முனிவர் சொல்லுகிறார்: "சரி, உனக்கு அப்படியே நினைத்தபோது மனுஷரூபம் வரும்; ஆனால் எவனிடத்தில் வார்த்தை சொல்லும்போது உனக்குப் பயமேற்படுகிறதோ அவனுடன் அதிக நேரம் தங்கக்கூடாது. தங்கினால் அவனாலே உனக்கு மரணம் நேரிடும்" என்று விடை கொடுத்தனுப்பினார்.
பின்னொரு நாள் இரவில் ரோஜாப் பூ மனிதப் பெண் வேஷந்தரித்துக் கொண்டு, வஞ்சி ராஜாவின் அரண்மனையைச் சார்ந்த சோலையிலே ராஜகுமாரன் விளையாடும் நிலா முற்றத்துக்கருகே போய் நின்று கொண்டிருந்தது. அங்கு ராஜகுமாரன் வந்தான். இந்தப் பெண்ணை நோக்கி இவள் அழகை வியந்து "நீ யார்?" என்று கேட்டான்.
"சிங்கள ராஜன் மகள்? என்று ரோஜாப் பூ சொன்னாள். ராஜகுமாரன் திகைத்துப் போய் "என்னது! சிங்கள ராஜ்யமா? இந்த நேரத்திலே இங்குத் தனியே எப்படி வந்தாய்? யாருடன் வந்தாய்?" என்றான்.
அதற்கு ரோஜாப் பூ: "எனக்கொரு முனிவர் ஒரு மந்திரங் கற்றுக் கொடுத்திருக்கிறார். அதைக்கொண்டு நினைத்த வேளையில் நினைத்த இடத்திற்கு வான்வழியாகப் பறந்து செல்வது வழக்கம். இந்த வழியே பறந்து வருகையில் நிலா வொளில் இந்தச் சோலையும் நிலாமுற்றமும் கண்ணைக் கவர்ந்தன. இங்கு சற்றே நின்று பார்த்துவிட்டுப் போவோமென்று வந்தேன்" என்றாள்.
இதற்குள் ராஜகுமாரன் இவளுடைய அழகிலே மோகித்துப் போய் "உன்னைப் பார்த்தால் தேவ ரம்பை அல்லது நாக கன்னிகை போலே தோன்றுகிறது" என்றான். "நாக கன்னிகை" என்ற வார்த்தையைக் கேட்டவுடனே ரோஜாவிற்கு உடம்பெல்லாம் படபடவென்று நடுக்கங் கண்டது.
"ஏன் பயப்படுகிறாய்?" என்று ராஜகுமாரன் கேட்டான்.
ரோஜாவுக்கு முனிவர் சொன்ன வார்த்தை ஞாபகம் வந்தது. இனி இங்கே நின்றால் அபாயம் நேரிடுமென்று பயந்து மிக வேகத்தில் ஓடி மறைந்து போய்விட்டது பாம்புக்குட்டி.
பின்னொரு நாள், மாலை வேளையில் மரஞ்செடியில்லாத பொட்டல் வெளியிலே காட்டுப் பாதைக்குச் சமீபத்தில் ஆழ்ந்த கிணறொன்றின் அருகேயுள்ள புதரில் ரோஜாப் பூ தனியாக இருக்கும்போது, அவ்வழியே யௌவனமும் அழகுமுடைய ஒரு புரோகிதப் பிராமணன் போய்க் கொண்டிருந்தான். தூரத்தில் வரும்போதே அவனைக் கண்டு ரோஜாப் பூ பெண் வடிவமாக மாறி நின்றது. பார்ப்பான் பார்த்தான். நடுக்காடு; தனியிடம்; மாலை நேரம்; இவளழகோ சொல்லி முடியாது. "இவள் யாரடா இவள்?" என்று யோசனையுடன் சற்றே நின்றான்.
ரோஜாப் பூ அவனைக் கூப்பிட்டு, "ஐயரே, தாகம் பொறுக்க முடியவில்லை. கிணற்றில் இறங்கப் பயமாக இருக்கிறது. நீர் இறங்கி உமது கையிலுள்ள செம்பிலே சிறிது தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தால் புண்ணியமுண்டு" என்றாள்.
பார்ப்பான் சந்தோஷத்துடன் கிணற்றிலே இறங்கப் போனான். தண்ணீருக்கு மேலே
ஒரு நீர்பாம்பு தென்பட்டது. உடனே அவன் ரோஜாவை நோக்கித் திரும்பி, "ஆகா! பாம்பைப் பார்த்தாயோ?" என்றான்.
ரோஜாவுக்கு உடம்பெல்லாம் வெயர்த்துப் போய்க் கையும் காலும் நடுங்கலாயின.
"ஏன் நடுங்குகிறாய்?" என்று பார்ப்பான் கேட்டான். ரோஜாப் பூ அங்கிருந்து விரைவாக மறைந்தோடி விட்டது. இவ்விதமாக ரோஜாப் பூ யாரை மயக்கி வசப்படுத்திக் கொள்ள விரும்பினாலும் ஒரு பயம் நேரிட்டுக் கொண்டேயிருந்தது. கடைசியாக அவளுக்கு (அந்தப் பாம்புப் பெண்ணுக்கு) "கர்த்தப ஸ்வாமிகள்" என்றொரு ஸந்நியாசி வசப்பட்டான்.
இவ்வாறு மதுகண்டிகை என்னு குயில் சொல்லி வருகையில் ரஸிக சிரோமணி, "அந்த ஸந்நியாசி யார்?" என்று கேட்டது.
------------
கர்த்தப ஸ்வாமிகள் என்ற ஆண்டி கதை
"கேளாய் ரஸிக மாமா, கங்காதீரத்தில் ராமநகரம் என்ற ஊரில் ஒரு வண்ணான் வீட்டிலே 'பக்திவிஸ்தாரன்' என்றொரு கழுதை இருந்தது. தாய் சொன்ன வார்த்தையும் தட்டாது. யார் சொன்ன வார்த்தையும் தட்டாது. சிறு பிள்ளைகள் கல்லெறிந்தால் கனைத்துக் கொண்டு ஓட வேண்டாமோ? அதுகூடச் செய்யாது பொறுமையே அவதாரம் செய்தாற்போன்ற கழுதை.
இந்தக் கழுதை ஒருநாள் நதிக்கரையிலே புல் மேய்ந்து கொண்டிருக்கையிலே பக்கத்திலிருந்த ஒரு மரத்தின்மேல் இரண்டு காக்கைகள் பின் வருமாறு சம்பாஷணை செய்து கொண்டிருந்தன. அந்த வார்த்தைகளையெல்லாம் கழுதை கவனத்துடன் கேட்டது.
ஒரு காகம் சொல்லுகிறது:- "பிரயாகையில், கங்கையும், யமுனையும் வந்து சேரும் இடத்தில் ஒருவன் போய் விழுந்து பிராணனை விடும்போது அடுத்த ஜன்மத்தில் என்ன பிறவி வேண்டுமென்று நினைத்துக் கொள்ளுகிறானோ, அதே பிறவி அவனுக்கு நிச்சயமாகக் கிடைக்கும். இந்த விஷயம் உனக்கு இதுவரை கேள்வியுண்டா?"
இதற்கு இரண்டாங் காகம்:- "உனக்கு யார் சொன்னார்கள்?" என்று கேட்டது..
முதற் காகம்: "இன்னார் சொன்னார்களென்பதை உன்னிடம் சொல்லக்கூடாது. அது ரகஸ்யம். ஆனால் உண்மைதான், எனக்கு நிச்சயமாகத் தெரியும்."
இரண்டாங் காகம்: "உன்னிடம் சொல்லியது யார்?" என்று மறுபடியும் வற்புறுத்திக் கேட்டது.
முதற் காகம்: "அட நம்பிக்கையில்லாத ஜந்துவே! உனக்கு நல்ல கதி ஒரு நாளும் ஏற்படாது! யார் சொன்னதென்றா கேட்கிறாய்? என்னுடைய குரு சொன்னார். அவரைப் போன்ற ஞானி பிரம்ம லோகத்திலே கூடக் கிடையாது. ஒரு காலத்தில் பிரமதேவனுக்குப் படைப்புத் தொழில் சம்பந்தமாக ஒரு சந்தேகமேற்பட்டது. உடனே பிரம்மா நாரதரை அனுப்பி என் குருவை அழைத்து வரச் சொல்லித் தமது சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்டார்."
இந்த வார்த்தையைக் கேட்டவுடனே இரண்டாங் காகம் கலகலவென்று சிரித்து, அங்கிருந்து பறந்தோடிப் போய்விட்டது. சம்பாஷணை முழுதையும் மிகுந்த சிரத்தையுடன் கேட்டுக்கொண்டிருந்த கழுதை உடனே அவ்விடத்திலிருந்து புறப்பட்டு, இராப்பகலாக நடந்து "திரிவேணி சங்கமம்" (அதாவது, பிரயாகையில் கங்கையும் யமுனையும் கூடுமிடம்) வந்து சேர்ந்தது.
அந்த இடத்திலே போய்க் கழுதை பின்வருமாறு நினைத்துக் கொண்டு முழுகிப் பிராணனை விட்டது: "இந்த வடதேசத்திலே எனக்கு சந்தோஷமில்லை. அடுத்த ஜன்மம் தென்னாட்டிலே பிறக்க வேண்டும். ஒரு விதமான குடும்பத் தொல்லையு-மில்லாமல், எல்லா இடங்களிலும் இஷ்டப்படி ஸஞ்சாரம் செய்துகொண்டு, எல்லா ஜனங்களும் இனாமாகப் போடும் போஜனத்தைத் தின்றுகொண்டு, சந்தோஷத்துடன் வாழும் ஒரு மனித ஸந்நியாஸியாகப் பிறக்க வேண்டும். ஆனால் இந்தக் கழுதைப் புத்தி மாறாதபடி இருக்க வேண்டும். வெளிக்கு ஸந்நியாஸி போலிருந்து எல்லாரும் உபசாரங்கள் செய்தபோதிலும், என் மனதிற்குள்ளே 'நாம் கழுதை' யென்ற ஞாபகம் நிலைபெற்றிருக்க வேண்டும்."
இவ்விதமான தியானத்துடன் இறந்துபோன கழுதை மறு ஜன்மத்திலே தென்னாட்டிலே ஒரு ஊரில் ஒரு நல்ல குடும்பத்திலே ஆண் குழந்தையாகப் பிறந்து வளர்ந்தது. தாய் தந்தையர் இந்தப் பிள்ளைக்கு "முத்துசாமி" என்று பெயர் வைத்தார்கள். முத்துசாமி மனத்திலே தான் கழுதையென்ற ஞாபகம் பரிபூர்ணமாக இருந்தது.
பூர்வ ஜன்மத்தைப்பற்றி வேறு யாதொரு நினைவுமில்லை ஆனாலும், தான் மற்ற மனிதர்களைப் போலில்லையென்பதும், உள்ளுக்குள்ளே கழுதையென்பதும் அவன் சித்தத்தைவிட்டு நீங்கவில்லை.
பதினாறு வயதாகு முன்பாகவே இவன் ஸந்நியாஸியாகி காவி வஸ்திரம் தரித்துக்கொண்டு ஊரூராகப் பிச்சை வாங்கியுண்ணும் துறையிலே இறங்கிவிட்டான். முத்துசாமி என்ற பெயரைத் துறந்து கர்த்தப ஸ்வாமிகள் என்று பெயர் வைத்துக் கொண்டான். கர்த்தபமென்றால் ஸம்ஸ்க்ருத பாஷையில் கழுதைக்குப் பெயர்.
இவனுக்குத் தமிழ், ஸம்ஸ்க்ருதம் இரண்டு பாஷையும் தெரியும். வயிரவர் உபாஸனையுண்டு. உலகத்திலுள்ள பாஷைகளெல்லாம் ஸம்ஸ்க்கிருதத்திலிருந்து வந்ததாகவும், அது தமிழிலிருந்து முளைத்ததாகவும் ருஜூப்படுத்தி ஒரு புஸ்தக மெழுதினான். இப்போது பரத கண்டத்திலே நாலாயிரம் ஜாதிகளாகக் குறைந்து போய்விட்டது நியாயமில்லை யென்றும், ஆதியிலே நாற்பதினாயிரம் ஜாதிப் பிரிவுகள் இருந்தன வென்றும், அந்த ஏற்பாட்டை மறுபடி ஸ்தாபனம் செய்ய வேண்டுமென்றும், ருஜூப்படுத்தி மற்றொரு நூல் செய்யுளாக எழுதினான்.
நிகண்டைப் பார்த்து அதிலுள்ள தெய்வப் பெயர்களை யெல்லாம் ஒன்று சேர்த்து, இவையெல்லாம் தன்னுடைய இஷ்ட தேவதையாகிய வயிரவ மூர்த்தியின் திரு நாமங்களென்று சொல்லி ஒரு நாமாவளி ஏற்படுத்தினான்.
பூணூல் போடும்வரை, பிராமணப் பிள்ளை சூத்திரனாகவேயிருப்பதால், அவன் பார்க்க மற்ற பந்துக்கள் ஆகாரம் பண்ணுவது கொடிய அநாசாரமென்று ஒரு கக்ஷி கொண்டு வந்தான். பூணூல் போடாத பிராமணக் குழந்தைக்குத் தாய் பால் கொடுக்கும்படி நேரிட்டால், பின்பு ஸ்நானஞ் செய்யாமல் வீட்டுப் பாத்திரங்களைத் தொடக்கூடாது. அப்படித் தொட்டால் அவள் ரௌரவாதி நரகங்களுக்குப் போவதுடன், அந்தக் குடும்ப முழுமைக்கும் அதோ கதி நேரிடுமென்று ஸ்தாபனம் செய்தான்.
இவனுக்கு வேண்டிய மட்டும் சிஷ்யர்கள் சேர்ந்து விட்டார்கள். பணமும் சேர்ந்தது. ஒரு மடம் கட்டினான். "நாற்பதினாயிர-ஜாதிபேத-பூர்வ திராவிட-வயிரவ-கர்த்தப-பிராமண-சிசு- பஹிஷ்கார-மஹா-மடம்" என்று அந்த மடத்துக்குப் பெயர் வைத்தான். இந்த மடத்துக்கு ரோஜாப் பூ என்ற பாம்புப் பெண் வந்து சேர்ந்தாள்.
----------
கர்த்தப ஸ்வாமியைப் பாம்புப் பெண் வசப்படுத்தியது
ஒரு நாள் மாலை நேரம்; சாமியார் பகற் சோறு தின்று, அந்த சிரமத்தினால் நாலைந்து மணி நேரம் தூங்கி விழித்த பிறகு, அந்த ஆயாஸம் தீரும்பொருட்டு நாலைந்து தோசைகளைத் தின்று, அரைப்படி பாலைக் குடித்துவிட்டு, வாயிலே வாஸனைப் பாக்குப் போட்டு மென்று கொண்டு இரண்டு சீடர்களிடம் பிரசங்கம் செய்து கொண்டிருக்கிறார்.
சாமியார் சொல்லுகிறார்:-
"கேளீர், சீடரே,
'ஜன்மநா ஜாயதே சூத்ர;
கர்மணா ஜாயதே த்விஜ;"
பிறக்கும்போது சூத்திரன்; பூணூல் போட்ட பிறகு தான் பிராமணன். இந்த விதிக்கு விலக்கே கிடையாது. உபநயனம் செய்த பிறகுதான் பிராமணப் பிள்ளைக்குப் பிராமணத்துவம் உண்டாகிறது. இதில் சந்தேகமில்லை. உபநயனம் செய்யும்வரை அவனுக்கு எச்சில், தீண்டல் ஒன்றுமேயில்லை. சண்டாளனைப் போல் வளருகிறான். அப்படிப்பட்ட குழந்தையை அவனுடைய தாயார் தீண்டி விட்டுப் பிறகு ஸ்நானம் செய்யாமல், மடைப் பள்ளியைத் தொட்டுச் சமையல் செய்தால், அந்த அன்னம் ஸ்வாமி நைவேத்தியத்துக்கு உதவாது. அவ்விதமான அன்னத்தை ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்வோர் குளிக்கப் போய்ச் சேறு பூசிக் கொள்வது போலே, பூஜை பண்ணப் போய்ப் பாவத்தைத் தேடிக் கொள்ளுகிறார்கள்." என்றிவ்வாறு, பல நியாயங்களைக் காட்டிச் சாமியார் தான் எடுத்த கக்ஷியை ஸ்தாபனம் செய்து கொண்டிருந்தார்.
சீடர்கள் மிகவும் பக்தி சிரத்தையுடன் தலையை அசைத்தசைத்துக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இந்தத் தருணத்திலே பாம்புப் பெண் வந்து சாமியாருக்கு நமஸ்காரம் பண்ணினாள்.
"உட்காரம்மா" என்று சாமியார் மெதுவான குரலிலே சொன்னார். உட்கார்ந்தாள்.
"நீ யார்?" என்று சாமியார் கேட்டார்.
பாம்புப் பெண் சொல்லுகிறாள்: "தாமரைப் பூ சேற்றிலே பிறக்கிறது. வண்டு காட்டிலே பிறக்கிறது. தாமரையைத் தேடி வண்டு வருகிறது. நான் சிங்கள தேசத்து ராஜன் மகள். பரத கண்டத்திலே, பற்பல இடங்களில் யாத்திரை செய்து கொண்டு, இந்த நகரத்துக்கு வந்து சேர்ந்தேன். அம்மன் சன்னிதித் தெருவிலே இறங்கியிருக்கிறேன். இந்த ஊரில் தாங்கள் பெரிய பக்திமானென்றும், யோகி யென்றும், ஞானி யென்றும் கேள்விப்பட்டேன். தங்களிடம் வந்து ஆத்மா கடைத்தேறும் படியான மந்திரோபதேசம் பெற்றுக் கொண்டு போகலாமென்ற கருத்துடன் வந்தேன்" என்றாள்.
சாமியாருக்கு உச்சந் தலையிலே பூமாரி பொழிந்தது போல், உடம்பெல்லாம் புளகமாய்விட்டது. சிங்கள தேசத்து ராஜன் மகள் சீடப் பெண்ணாக வந்தால் யாருக்குத்தான் ஆனந்தமேற்படாது?
"இப்போதே மந்திரோபதேசம் பண்ணட்டுமா?" என்று சாமியார் கேட்டார். அவசரம் வாரிக் கொண்டு போகிறது அவருக்கு!
அதற்கு ரோஜா சொல்லுகிறாள்; "நல்ல நாள், நல்ல லக்னம் பார்த்துச் செய்ய
வேண்டும். மேலும், குருவுக்குப் பாதகாணிக்கை வைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்; நாள் பார்த்துச் சொல்லுங்கள்" என்றாள்.
சாமியாருடைய சந்தோஷம் கரை கடந்து விட்டது. சாமியார் சோதிடம் பார்க்கிறார்:-
"இன்றைக்கு என்ன கிழமை? ஞாயிற்றுக் கிழமை. நாளைக்குத் திங்கட்கிழமை, ஸோமவாரம், நல்ல நாள். காலையிலே ஏழரை மணி முதல் ஒன்பது மணி வரைக்கும் ராகுகாலம்; அது முடிந்தவுடனே நல்ல லக்னம் வருகிறது. செவ்வாய் மிதுன ராசியிலே பிரவேசிக்கிறான். அவனைக் குரு பார்க்கிறான். அப்போது மந்திரம் கூறுவதற்குப் பொருத்தமான வேளை. 'சுபயோக-சுபகரண-ஏவங்குண-விசேஷண-விசிஷ்டாயாம்' என்று சாஸ்திரம் முறையிடுகிறது. நம்முடைய மந்திரமோ வைரவ மந்திரம். எல்லாவிதமான தேவநாமங்களும் வைரவ நாமத்துக்குள் அடங்குமென்பதற்குச் சூடாமணி நிகண்டிலே தக்க ஆதாரமிருக்கிறது. 'முத்தனே, குமாரன்' பிள்ளை என்று நிகண்டுக்காரர் சொல்லுகிறார். இந்த மந்திரோபதேசம் பெற்றவருக்கு இந்த ஜன்மத்திலே முக்தி" என்று சாமியார் சொல்லி நிறுத்தினார்.
ரோஜா ஒரு புன்சிரிப்புக் காட்டினாள். சாமியாருடைய ஆனந்தம் ஏறக்குறைய ஜன்னி நிலையிலே வந்து நின்றது.
சாமியார் பின்னும் சொல்லுகிறார்: "கேளாய், சிங்கள தேசத்து ராஜகுமாரியே; உன் பெயரென்ன? ரோஜாவா? ஆ ஹா ஹா! குலத்துக்கும் ரூபத்துக்கும் பொருத்தமான பெயர். கேளாய், ரோஜாவே, ஜன்மங்கள் கோடானு கோடி.
-
'புல்லாகிப் பூடாய்ப் புழுவாய், மரமாகிப்
பல்விருக்க மாகிப் பறவையாய் பாம்பாகிக்
கல்லாய், மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்
செல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன், எம்பொருமான்'
மேற்படி பாட்டைச் சாமியார் தனது பெயருக்கும் இயல்புக்கும் பொருந்திய குரலிலே பாடிக் காட்டினார்.
இந்தப் பாட்டிலே 'பாம்பு' என்ற சொல் வந்தது. இருந்தாலும், ரோஜாவுக்குப் பயமுண்டாகவில்லை. இவன் முழுமூட னென்பது அவளுக்கு ஆரம்ப முதலாகவே தெரிந்து விட்டது. 'என்றாலும் குற்றமில்லை. நாம் இவனை விடக் கூடாது. இதுவரை எத்தனையோ மனிதர் கை தவறிப் போய்விட்டார்கள்; இந்த மடத்தை நாம் இஷ்டப்படி ஆளலாம். இதுதான் சரியான புள்ளி' என்று பாம்புப்பெண் உறுதி செய்து கொண்டாள்.
சாமியார் சொல்லுகிறார் :- "கேளாய், ரோஜாப் பெண்ணே! சிங்களராஜன் கண்ணே! ஜன்மங்கள் எண்ணத்தொலையாது - ஆற்று மணலைப் போலே; வானத்திலுள்ள நக்ஷத்திரங்களைப் போலே. 'புனரபி ஜனனம், புனரபி மரணம்' என்று சங்கராசாரியர் சொல்லுகிறார். இந்த ஜன்மங்களிலே மனித ஜன்மம் சிறந்தது. கடல் சூழ்ந்த இந்த நிலவுலகத்திலே இத்தனை மேலான நரஜன்மத்தை எடுத்துத் தக்க குருவைத் தேடியடைந்து மோக்ஷத்துக்குப் போகும் உபாயத்தைத் தெரிந்து கொள்ளாதவர்கள் மறுபடி தாய் வயிற்றிலே பிறந்து பத்து மாதமிருந்து துயரப்பட்டு, மண்ணிலே பிறந்து பலவகைத் துன்பங்களை அனுபவிக்கிறார்கள். உனக்குத் தெரியாத விஷயமொன்று-மில்லை. நம்முடைய வைரவ மந்திரம் உனக்குக் கிடைக்கப் போகிறது. நீ பெரிய பாக்கியசாலி" என்றார்.
கதையைச் சுருக்கி விடுகிறேன்.
மறுநாள் காலையிலே பாம்புப் பெண் ஒரு நாகரத்தினத்தைக் கொண்டு வந்து சாமியார்
காலிலே காணிக்கையாக வைத்து மந்திரோபதேசம் பெற்றுக் கொண்டாள். சில தினங்களிலே சாமியார் இவள் சொல்லியபடி யெல்லாம் கூத்தாடுகிற நிலைமைக்கு வந்துவிட்டார், என்று மதுகண்டிகை என்னும் குயில் ரஸிக சிரோமணியிடம் சொல்லிற்று.
குயில் சொல்லுகிறது:-
"கர்த்தப ஸ்வாமி யென்பவன் பாம்புப் பெண்ணுடைய வஞ்சனையில் அகப்பட்டுக் கொண்டான். அதனால் அவனுக்கு மிகுந்த பழியுண்டாயிற்று. ஊரார் அவனை மடத்திலிருந்து துரத்தினார்கள். பிறகு பாம்புப் பெண்ணும் அவனைப் பிரிந்து சென்றுவிட்டாள். அதன் பின், அவ்விருவரும் உலக வாழ்க்கையிலே பலவகைத் துன்பங்களுக்கு இரையாகி முடிந்தனர்" என்றது.
அப்போது, ரஸிகசிரோமணி, "இக் கதையை எதன் பொருட்டாகச் சொன்னாய்?" என்று கேட்டது.
குயில் - "உங்கள் ஜாதிக்கே பிறர் வார்த்தையை எளிதாக நம்பி மதிமோசம் போவது வழக்க மென்பதைக் காட்டும் பொருட்டாகச் சொன்னேன். ஆனால் நீ அப்படியில்லை. நீ கழுதையாக இருந்தாலும் புத்திசாலிதான்; நியாயத்தைச் சொன்னால் கட்டுப்படுகிறாய். தஞ்சாவூர் தட்டிக்கொண்டான் செட்டி கதையை மேலே சொல்லு" என்று வேண்டிற்று.
---------
த.கொ. செட்டி கதை
குயில் அடியெடுத்துக் கொடுக்கிறது:- "தட்டிக்கொண்டான் செட்டி தஞ்சாவூரிலே மதுரை மாணிக்கஞ் செட்டி என்பவனுடைய குமாஸ்தாவாக இருக்கையில் யஜமானுடைய பணத்தில் பெருந் தொகையை அழுத்திக் கொண்டு கள்ளக் கணக்கனுப்பினான். தனக்கு நேரிட்ட அநியாய நஷ்டத்திலிருந்து ஒருவாறு தப்பவேண்டுமென்று யோசனை செய்து மதுரை மாணிக்கஞ்செட்டி மானி அய்யன் என்ற பிராமணனை வரவழைத்துத் தஞ்சாவூருக்குப் போகும்படி சொல்லுகிறான். அந்த இடத்தில் உன் கதையை நிறுத்தினாய். மேலே நடத்து" என்றது.
ரஸிகசிரோமணி பின்வருமாறு கதை சொல்லலாயிற்று.
அந்த மாணிக்கஞ் செட்டி சொல்லுகிறான்:- "ஐயரே, நீர் உடனே புறப்பட்டுத் தஞ்சாவூருக்குப் போக வேண்டும். அங்கே தட்டிக் கொண்டான் செட்டி வீடெங்கே என்று கேட்டால் யாவரும் சொல்லுவார்கள். நடுத்தெருவிலே கிழக்கோரத்து வீடு. அவனிடத்தில் எப்படியேனும் சிநேகம் செய்து கொண்டு, அவன் வீட்டில் நெருங்கிப் பழக வேண்டும். நமக்கு அவன் கள்ளக் கணக்கு அனுப்பியிருக்கிறான். என்றாலும், தனது சொந்த உபயோகத்தைக் கருதி நியாயமான கணக்கு அவசியம் எழுதி வைத்திருக்க வேண்டும். அந்தக் கணக்குச் சுவடியை என்ன தந்திரம் பண்ணியேனும் இங்கே கொண்டு வந்து விடவேண்டும்."
இதைக் கேட்டு மானி அய்யன்: "சரி; யோசிக்க வேண்டியதில்லை, நான் காரியத்தை முடித்துக் கொண்டு வருகிறேன்" என்றான். பிறகு அவன் மாணிக்கஞ் செட்டியினிடம் தன் செலவுகளுக்கு வேண்டிய பணத்தை வாங்கிக் கொண்டு தஞ்சாவூருக்கு வந்தான், தலையை மொட்டையடித்தான். காவி வேஷ்டியும் கட்டிக் கொண்டான். செட்டியின் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தான்.
பிற்பகல் வேளை, செட்டி ஏதோ பக்ஷணம் தின்று தாக சாந்தி செய்துகொண்டு வெற்றிலை சுவைக்கிறான். "நாராயணா" "நாராயணா" என்ற உச்சாடணத்துடன் ஸந்நியாசி அவன் முன்னே போய் உட்கார்ந்து, கண்ணை மூடிக்கொண்டு ஸமாதியிலே ஆழ்ந்து விட்டான். பத்து நிமிஷம் கழிந்த பிறகு கண்ணைத் திறந்தான். அப்போது தட்டிக்கொண்டான் செட்டி அவன் காலிலே ஸாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்து, "சாமிகளுக்கு எவ்விடம்? அடியேன் சிறு குடிலுக்கு எழுந்தருளியதன் நோக்க மென்ன?" என்றான்.
ஸந்நியாசி சொல்லுகிறான்:- "வீடு நமக்குத் திருவாலங்காடு. விமலர் தந்த ஓடு நமக்குண்டு. வற்றாத பாத்திரம்" என்றார் பட்டினத்தடிகள். எல்லா வூரும் நம்முடைய வூர், எல்லா நாடும் நம்முடைய நாடு. இந்த உலகம் வெறும் நாம ரூபங்களைத் தவிர வேறொன்றுமில்லை. அந்த நாமரூபங்களெல்லாம் பொய். பூர்வாசிரமத்தில் மயிலாப்பூரிலே பிறந்து வளர்ந்தோம். குருகிருபையால் இந்த ஆசிரமம் கிடைத்தது. இந்த ஊருக்கு வந்ததில், ஸாதுக்களிடத்திலே தங்களுக்கு மிகவும் அபிமானமென்று கேள்விப்பட்டோம். வெறுமே தங்களைப் பார்த்து விட்டுப் போகலாமென்று வந்தோம். தங்களால் நமக்கு ஆகவேண்டிய காரியம் ஒன்றுமேயில்லை. நம்மால் தங்களுக்கு ஏதேனும் அனுகூலம் கிடைக்க வேண்டுமென்ற கருத்திருந்தால் தெரிவிக்கலாம்" என்றான்.
செட்டி சிறிது நேரம் யோசித்த பிறகு:- "சாமிகளுக்கு ஆரூடம் வருமோ?" என்றான்.
ஸந்நியாசி புன்சிரிப்புடன்:- "ஏதோ சொற்பம் வரும்" என்றான்.
தட்டிக்கொண்டான் செட்டி சொல்லுகிறான்:- "நான் அவசரத்தைக் கருதி ஒரு காரியம் செய்தேன். கெட்ட காரியமென்று உறுதியாகச் சொல்ல முடியாது. கிளியை அடித்தால் பாவம், ஓநாயை அடித்தால் பாவமா? ஒருவாறு நான் செய்தது நல்ல காரியந்தான். அதிலிருந்து எனக்கேதேனும் தீங்கு வரக் கூடுமோ என்ற பயமுண்டாகிறது இந்த விஷயத்தில் பின்வரும் விளைவைச் சாமிகள் அரூடத்தினால் கண்டு சொல்ல வேண்டும்" என்று பணிவு காட்டினான்.
ஸந்நியாசி மறுபடி கண்ணை மூடிச் சில நிமிஷங்கள் வாயை முணுமுணுத்தான்.
பிறகு சொல்லுகிறான்:- "மாமாவுக்கு நஷ்டம் வருகிறது. த.கொ.வுக்கு லாபம் வருகிறது" என்றான்.
செட்டி இதைக் கேட்டு ஆச்சரியத்துடன் மதுரை மாணிக்கஞ் செட்டிக்கு நஷ்டமென்றும், தட்டிக்கொண்டான் செட்டிக்கு லாபமென்றும் ஆரூடம் சொல்வதாகத் தெரிந்து கொண்டு, இந்தச் சாமியாரை நான்றாகப் பரீக்ஷிக்க வேண்டுமென்ற கருத்துடன், "சாமிகளே, அவ்விடத்தில் உத்தரவு செய்வது எனக்கு நேரே அர்த்தமாகவில்லை. விளங்கச் சொல்லவேண்டும்" என்று கேட்டான்.
அதற்கு ஸந்நியாசி: "செட்டியாரே, ஆரூடம் நாம் சொல்வதில்லை. நமக்குப் பிரம்ம வித்தையொன்றுதான் தெரியும். மற்றதெல்லாம் வீண் வித்தை, நம்முடைய நாக்கில் இருந்து கொண்டு ஒரு யக்ஷிணி தேவதை இந்த ஆரூடம் சொல்லுகிறாள். அதன் குறிப்புப்பொருளை நாம் கவனிப்பதே கிடையாது. கவனித்தாலும், சில சமயங்களில் அர்த்தமாகும். சில சமயங்களில் அர்த்தமாகாது. கேட்பவர் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி அர்த்தம் கண்டு பிடித்துக் கொள்ள வேண்டும்" என்றான்.
செட்டி தனது ரகஸ்யத்தைச் சாமியார்கூடத் தெரிந்து கொள்ளாதபடி, அவ்வளவு நயமாகத் தனக்கு அனுகூலம் சொல்லிய யக்ஷிணி தெய்வத்தினிடம் மிகுந்த நம்பிக்கை கொண்டவனாய் ஆனந்த பரவசனாய் விட்டான். சாமியாரிடத்திலும் அவனுக்குச் சொல்ல முடியாத மதிப்புண்டாயிற்று.
ஒரு தட்டு நிறைய பலவிதமான பழங்களும், காய்ச்சின பாலும் கொண்டு வரும்படி
செய்து சாமியார் முன்னாலே வைத்து, "திருவமுது செய்தருள வேண்டும்" என்றான்.
ஸந்நியாஸி ஒரு வாழைப்பழத்திலே பாதியைத் தின்று, அரைக் கிண்ணம் பாலைக் குடித்துவிட்டு 'போதும்' என்று சொல்லிவிட்டான்.
அப்போது செட்டி ஸந்நியாசியை நோக்கி, "ஏதேனும், மடத்துக் கைங்கரியமானாலும், கோயில் திருப்பணியானாலும், சுவாமிகள் என்ன கட்டளையிட்டபோதிலும் என்னாலியன்ற பொருளுதவி செய்யக் காத்திருக்கிறேன்" என்றான்.
சாமியார் தலையை அசைத்து, - "பிரம்மமே ஸத்தியம், ஜகத் மித்யை; மடமேது, கோயிலேது? பரமாத்மா கட்டை விரலளவாக ஹிருதயத்திலுள்ள குகையில் விளங்குகிறான், எல்லாம் நமக்குள்ளேதானிருக்கிறது. உம்மால் நமக்கு எவ்விதமான பொருளுதவியும் வேண்டியதில்லை" என்றான்.
இப்படி இருக்கையில், ஒரு வேலையாள் வந்து, "கரும்பனூர்க் காத்தவராயக் கவிராயர் வந்திருக்கிறார். எஜமானைப் பார்க்க வேண்டுமென்று சொல்லுகிறார்" என்று செட்டியிடம் தெரிவித்தான்.
செட்டி சாமியாரை நோக்கி "வரச் சொல்லட்டுமா?" என்று கேட்டான்.
சந்நியாசி : "ஆக்ஷேபமென்ன?" என்றான்.
"வரச் சொல்லு" என்று செட்டி உத்தரவு கொடுத்தான்.
தட்டிக்கொண்டான் செட்டியும், ஆரூட ஸ்வாமிகளும் கரும்பனூர்க் காத்தவராயக் கவிராயரும், மூன்று பேருமாக சம்பாஷிக்கலானார்கள்:-
க.கா.க: "ஸ்வாமிகளுக்கு எவ்விடம்?"
ஆ.ஸ். : "சந்நியாசிக்கு இடமேது. வீடேது?"
த.கொ.செ. : "ஞானத்தினுடைய கடல், உபாஸனையே திருவடிவம், பக்திக் கோயில். ஸ்வாமிகளுக்கு இறந்தகாலம், நிகழ்காலம், வருங்காலம் மூன்றுந் தெரியும்."
க.கா.க: "இலக்கணத்தின் கருத்தே அது."
ஆ.ஸ்: "உண்மையான துறவி ஒருநாள் தங்கிய இடத்தில் மறுநாள் தங்கலாகாது. ஒரு முறை புசித்த வீட்டில் மறுமுறை புசிக்கலாகாது. பிரம்மம் ஒருமை. உலகம் பன்மை."
த.கொ.செ. : "பிரம்மம் ஒருமை, பிரம்மங்கள் பன்மை என்று உத்தரவாக வேணும்."
ஆ.ஸ். ; "அது இலக்கணப்படி. நான் வேதாந்த அர்த்தம் சொல்லுகிறேன்."
த.கொ.செ: "சரிதான், சரிதான். மேலே உத்தரவாகட்டும்."
ஆ.ஸ். : "மழைநாளில் மாத்திரம் ஸந்நியாசி ஒரே இடத்தில் தங்கலாம். ஆகாசமே மேற்கூரை; பூமி கட்டில், மெத்தை. வெளியில் பனியெல்லாம் சந்தனம், பனிநீர். கவிராயரே கவனிக்கிறீர்களா?"
க.கா.க : "சன்னிதானத்தின் மீது ஒரு ஆசுகவி இயற்றுகிறேன், இயற்றி யாயிற்று, இதோ உரைக்கிறேன்."
--------------
வெண்பா
-
"உலகைத் துறந்தீர் உருவைத் துறந்தீர்,
மலையைப் பிளந்துவிட வல்லீர் - இலகுபுகழ்
ஞானம் தவம் கல்வி நான்குந் துறக்கிலீர்,
ஆனந்த மையாஹரீ."
ஆ.ஸ். : "ஹரி நாமத்தை உரைத்தீர்கள். ஆனந்தம். ஆனந்தம்."
த.கொ.செ. : "சந்தேகமென்ன? தெய்வபக்தி தானே மனுஷனுக்கு முக்கியமாக இருக்கவேண்டும்."
ஆ.ஸ். : "இந்த ஆசு கவியைக் கவிராயர் இந்த சரீரத்தை நோக்கிச் சொன்னார். ஆனாலும் நமக்குள்ளே விளங்கும் பரமாத்மா கேட்டு மகிழ்வடைந்தான்."
இப்படிப் பலவிதமாக நெடுநேரம் பேசிக்கொண்டிருந்த பிறகு, கவிராயர் மற்றொரு சமயம் வருகிறேன் என்று சொல்லி எழுந்து போய்விட்டார். போகும் போது கவிராயர் மனதில் இந்தச் சாமியார் திருடன் என்று சொல்லிக்கொண்டு போனார். கவிராயர் போனவுடன் ஸந்நியாசி சொல்லுகிறான்:-
"இந்தக் கவிராயருக்குக் கர்வம் அதிகம்போல தோன்றுகிறது."
த.கொ.செ.: "சந்நிதானத்தின் மீது ஆசு கவி பாடியிருந்தும் இப்படிச் சொல்லுகிற முகாந்தரமென்ன?"
ஆ.ஸ்.: "நம்மிடத்தில் அவருக்கு பக்தி ஏற்பட்டது மெய்தான்; ஆனாலும் கர்வி. கர்வியை நம்பக்கூடாது. கபடியை நம்பினாலும் நம்பலாம், கர்வியை நம்பக்கூடாது."
த.கொ.செ.: "கபடியை எப்படி நம்புவது?"
ஆ.ஸ். : "நாம் இருவரும் பரஸ்பரம் நம்புகிறோம். நாம் கபடிகளில்லை."
த.கொ.செ. : "ஆக்ஷேப மென்ன? கர்வியைத்தான் நம்பக்கூடாது. சந்நிதானத்தில் உரைப்பதே உண்மை."
ஆ.ஸ். : "தத்ஸ விதுர் வரேண்யம்."
த.தொ.செ. : "அதன் பொருள் அடியேனுக்கு விளங்கச் சொல்ல வேண்டும்."
ஆ.ஸ்.: "இது ஸந்தியாவந்தன மந்திரம். அதன் பொருளை இதர ஜாதியாருக்குச் சொல்லக் கூடாது. நான் என் மனதுக்குச் சொல்லிக் கொண்டேன்" என்றான்.
பிறகு ஸந்நியாஸி, "நான் போய் வருகிறேன்" என்று சொல்லி எழுந்தான். தட்டிக்கொண்டான் செட்டி மிகவும் பரிவுடன், "இன்றும் நாளைக்கும் மாத்திரம் அடியேன் குடிலில் எழுந்தருளியிருந்து விட்டுப் போக வேண்டும்" என்று வேண்டினான். சிறிது நேரம் அதைக் குறித்துத் தர்க்கம் நடந்தது. கடைசியாக ஸந்நியாஸி அரை மனது போலே ஒப்புக்கொண்டான். செட்டி வீட்டுப் பக்கத்தில் ஒரு தோட்டம். அந்தத் தோட்டத்தில் ரமணீயமான குடிசை. அங்கு சாமியார் குடியேறினான். போஜனம் மாத்திரம் கோயிலிலிருந்து கொண்டு வரும்படி செட்டி திட்டஞ் செய்தான். ஸந்நியாசி பரிசாரகனிடம் 'எனக்குப் புளியோதரை பிடிக்காது' என்று ஒரு வார்த்தை மாத்திரம் சொன்னான்.
சாமியாருக்குப் பகல், இரவு போஜனம் பின்வருமாறு செட்டியும் பரிசாரகனுமாகப் பேசித் தீர்மானம் செய்து கொண்டார்கள்:-
காலையில் மூன்றாம் நாழிகை – வெண்-பொங்கல், தயிர்வடை, நெய்த் தோசை, பால்.
நடுப்பகல் -பஞ்சபஹ்ய பரமானத்துடன் அன்னம்.
பிற்பகல் - பழங்கள், பால்.
இரவு - நடுப்பகல் போல்; ஆனால் அன்னத்திற்குப் பதில் தோசை.
இரண்டு நாள் கழிந்தவுடன் செட்டி இன்னும் இரண்டு நாள் இருக்கச் சொன்னான். பிறகு இன்னும் இரண்டு நாள் இருக்கச் சொன்னான். இப்படியாகப் பல தினங்களாயின.
மதுரை மாணிக்கஞ் செட்டி "தட்டிக்கொண்டானிடம் மானி அய்யனை அனுப்பினோமே, ஓரோலைகூட வரவில்லையே? என்ன செய்கிறானோ தெரியவில்லையே" என்று யோசிக்கலானான்.
ஒரு நாள் மாலையில் தட்டிக்கொண்டான் செட்டியும் ஆருட ஸ்வாமியும் பேசிக்
கொள்ளுகிறார்கள்.
செட்டி கேட்டான்: "ஆனைக்கொரு காலம் வந்தால், பூனைக்கொரு காலம் வருமென்ற பழமொழியின் அர்த்தமென்ன?"
ஆரூடஸ்வாமி சொல்லுகிறான்: கஜவதனம்; ஆனை யென்பது விநாயகரைக் குறித்தாலும் குறிக்கலாம். அப்போது பூனைக்கிடமில்லை. பூனை இல்லையா? எலி வாகனமோ. இல்லையோ? அந்த எலிக்கு விரோதம் ஒரு பூனை இராதோ? அந்தப் பிள்ளையார் வீட்டு எலிக்கு ஒரு காலம் வந்தால் மேற்படி பூனைக்கு ஒரு காலம் வராதோ? இப்படியும் ஒரு அர்த்தம் சொல்லலாம். வேதாந்தமாகவும் பொருள் சொல்லலாம்; 'ஆனையாவது மதம். பூனையாவது விவேகம். மதத்தின் காலம் போனால் விவேகத்தின் பெருமை விளங்கும்' என்பது ஞானார்த்தம்.
இங்ஙனம் ஆரூடஸ்வாமி சொல்வதைக் கேட்டுத் தட்டிக் கொண்டான் செட்டி கேட்டான்: "மதமென்றால் சைவம், வைஷ்ணவம், அப்படியா?"
உடனே ஆரூடஸ்வாமி: "ஹூம்! ஹூம்! ஹூம்! அப்படியில்லை. காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத்ஸர்யம் என்ற ஆறும் உட்பகை. இதிலே, ஐந்தாவதாகிய மதம். அதாவது கர்வம். மதம் பிடித்துப் போய் நடக்கிற குணம். அது தீர்ந்த பிறகுதான் விவேக மேற்படும்."
செட்டி கேட்டான்:- "ஸ்வாமிகளே, என்னிடம் ஒரு கணக்குப் புஸ்தகம் இருக்கிறது. இருந்தது - நேற்று மாலையில் இருந்தது. இன்று பகல் பார்த்தேன்; காணவில்லை. அந்த விஷயம் வெளியே தெரியக்கூடாது. பகிரங்கமாகத் தேடக்கூடிய புஸ்தகமில்லை. இன்னார் எடுத்தனரென்று தெரியவில்லை. ஸ்வாமிதான் உத்தரவாக வேண்டும்" என்றான்.
அப்போது ஆரூடஸ்வாமி: என்னை யக்ஷிணி திருவாரூருக்குக் கூப்பிடுகிறது. நான் இன்றிரவு புறப்பட்டுப்போய் நாளை மாலையில் அங்கிருந்து திரும்புவேன். வந்த பிறகு சொல்லுவேன்" என்றான்.
செட்டி : "தெய்வமே துணை" என்றான்.
சாமியார் : "குருவுந் துணை" என்றார்.
செட்டி : "எனக்கு நான்மை கிடைக்குமா?"
சாமி: "கிடைக்கும்." செட்டி - "என் துக்கம் தீருமா?"
சாமி : "தீரும்."
செட்டி: "கணக்கு என் கைக்குத் திரும்பி வந்தால் நான் எந்தத் தருமத்துக்கும் அவ்விடத்தில் கட்டுப்பட்டிருப்பேன்."
சாமி : "செட்டியாரே, செட்டியாரே, நமக்கு நீ எவ்விதமான தர்மமும் செய்ய வேண்டாம். உம்முடைய கடமையை நேரே கவனித்தால் அதுவே போதும்."
செட்டி : "என் கடமை யாது?"
சாமி : இப்போது ஒரு ஸூத்ரம் மாதிரியாகச் சொல்லி விட்டுப் போகிறேன். திருவாரூருக்குப் போய் திரும்பி வந்தவுடனே அதை விளக்கிச் சொல்லுகிறேன். அதற்கு முந்தி உமக்கே பொருள் விளங்கினாலும் விளங்கிப் போகும் அந்த ஸூத்ரம் எப்படி என்றால்:- "ம யே ம ஏ" . இவ்வளவுதான். இது கிரந்தம். எழுதி வைத்துக்கொள்ளும்."
செட்டி அப்படியே ஒரு ஓலை நறுக்கில் எழுதி வைத்துக்கொண்டான்.
இரண்டு வாரங்களுக் கப்பால் தஞ்சாவூர்த் தட்டிக் கொண்டான் செட்டிக்குப் பின்வருமாறு ஒரு காகிதம் வந்தது.
மதுரையில் ஆரூட ஸ்வாமி தஞ்சை த.கொ. செட்டியாருக்கு ஆசீர்வாதம்.
நான் தங்களிடம் சொல்லிய ஸூத்திரத்துக்குத் தாத்பர்யம் என்னவென்றால்,
"மற்றவனை யேமாற்றியவனை
மற்றவன் ஏமாற்றுவான்"
ரஸிக சிரோமணி என்ற கழுதை சொல்லுகிறது: "தட்டிக்கொண்டான் செட்டி மதுரை மாணிக்கஞ் செட்டியின் காலிலே போய் விழுந்து தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்டான். நஷ்டத் தொகையில் பாதி பெற்றுக் கொண்டு மாணிக்கஞ் செட்டி தனது மைத்துனனை மன்னித்து விட்டான். அவனுடைய இடத்தில் தனது தஞ்சாவூர் காரியஸ்தனாக மானி அய்யனையே நியமனம் செய்தான். ஆரம்பத்தில் மானி அய்யனை உபயோக மில்லாதவனென்றெண்ணி நகத்தது மடமை யென்பதை மாணிக்கஞ் செட்டி தெரிந்துகொண்டு தனக்குப் பார்ப்பான் செய்த உபகாரத்தையும் அவனுடைய திறமையையும் வியந்து அவனுக்குப் பலவிதமான ஸன்மானங்கள் செய்தான். அது போலவே, ஓ, கருவம் பிடித்த மதுகண்டிகை யென்ற குயிற் பெண்ணே, நீ இப்போது என்னை நகைக்கிறாய். இன்னும் சிறிது காலத்துக்கப்பால் என்னுடைய திறமையைக் கண்டு நீயே ஆச்சரியப்படுவாய்" என்றது.
அதுகேட்டு மதுகண்டிகை சொல்லலாயிற்று:- "கேளாய், ரஸிகமாமா, நீயோ தீராத பிடிவாதக்காரனாக இருக்கிறாய். அலையைக் கட்டலாம்; காற்றை நிறுத்தலாம்; மனவுறுதிக் கொண்ட தீரனுடைய தீர்மானத்தை யாவராலும் தடுக்க முடியாது. உன்னிடமிருக்கும் இந்த மனவுறுதியைக் கண்டு உன்மேல் எனக்கு நட்புண்டாகிறது. அது நிற்க, இப்போது நான் உனக்கொரு ரகஸ்யம் சொல்லுகிறேன். அதை சாவதானமாகக் கேள். மலையடிவாரத்திலுள்ள மந்தபுரம் என்ற கிராமத்தில் அரச மரத்தடியிலே ஒரு பிள்ளையார் கோயில் இருக்கிறது. நாள்தோறும் காலையொருமுறை மாலையொருமுறை அந்தக் கோயிலுக்குப் போய்த் தலையில் மூன்று குட்டுக் குட்டிக் கொள். மூன்று தோப்புக்கரணம் போடு. 'பிள்ளையாரே, பிள்ளையாரே, எனக்குச் சங்கீத ஞானம் வேண்டும்' என்று கூவு. பாட்டு தானே வரும். இதற்கு யாதொரு குருவும் வேண்டியதில்லை" என்றது.
"உண்மைதானா?" என்று கழுதை சற்றே ஐயத்துடன் கேட்டது.
அதற்குக் குயில் சொல்லுகிறது: "எனக்கு இந்த மாதிரி தான் சங்கீதம் வந்தது. எல்லாக் குயில்களுக்கும் இப்படித் தான். எங்கள் ஜாதியாருக்கு மாத்திரந்தான் இந்த ரகஸ்யம் தெரியும். இதுவரை இதர ஜாதியாரிடம் சொல்லியதில்லை. நான் உன்னிடமுள்ள அன்பினாலே சொன்னேன்" என்றது.
சரியென்று சொல்லி ரஸிக சிரோமணி துள்ளிக் குதித்துக் கொண்டு போய், மறுநாள் பொழுது விடிந்தவுடனே மந்தபுரத்துப் பிள்ளையார் கோவிலுக்கு முன்னே வந்து நின்று கொண்டு, குயில் சொன்ன கிரியைகளெல்லாம் முடித்துத் தன்னுடைய பாஷையில் பாட்டு வர மேண்டுமென்று கூவத் தொடங்கிற்று. உடனே கோயிலில் வந்து பிரதக்ஷிணம் முதலியன செய்துகொண்டிருந்த அடியார்கள் இந்த இரைச்சலைப் பொறுக்க மாட்டாமல் கழுதையைக் கல்லாலெறிந்து காலையொடித்துத் துரத்திவிட்டார்கள். ஆதலால், தனக்கு இயற்கையில் கிடைக்கக் கூடாத பொருளை விரும்பி எவனும் வீணாசை கொள்ளலாகாதென்று விவேக சாஸ்திரி தனது மக்களிடம் கதை சொன்னார்.
அப்போது காளிதாஸன் என்ற பிள்ளை கேட்கிறான்: "கழுதைக்குத் துன்பம் நேரிடவேண்டுமென்ற கெட்ட எண்ணத்துடன் போதனை செய்த குயிலுக்கு ஒரு தண்டனையுமில்லையா?" என.
ஆஞ்சனேயன் என்ற மற்றொரு மகன் : "அப்பா, அந்தக் கழுதை ஸ்வாமியை வந்து கும்பிட்டதே; அதற்குத் தீங்கு வரலாமோ?" என்று கேட்டான்.
அதற்கு விவேக சாஸ்திரி சொல்லுகிறார்: "தெய்வபக்திக்கு நல்ல பயனுண்டு. ஆனால் அதனுடன் விவேகம் சேர்ந்திருக்க வேண்டும். விவேகமில்லாதவனுடைய தெய்வபக்திக்கு உறுதி கிடையாது. தெய்வத்தினிடம் ஒருவன் வரங்கேட்கப் போகையிலே முதலாவது விவேகம் கேட்கவேண்டும். விவேகமே இந்த உலகத்தில் எல்லாவிதமான செல்வங்களுக்கும் ஆரம்பம். விவேகமில்லாதவன் குருடன். விவேகத்துடன் சேர்ந்த தெய்வபக்தியே உண்மையானது. அவ்விதமான தெய்வ பக்தியினால் ஒருவன் எடுத்த காரியத்தில் ஜயமடையலாம். இதைக் குறித்து ஒரு கதை சொல்லுகிறேன்" என்றார்.
"அந்தக் கதைக்குப் பெயரென்ன?" என்று பிள்ளைகள் கேட்டார்கள்.
"காட்டுக் கோயில்" என்று விவேக சாஸ்திரி சொன்னார்.
அப்போது காளிதாஸன்: "அப்பா, நான் கேட்டது சொல்லவில்லையே?" என்றான்.
ஆஞ்சனேயன்: "விவேகமில்லாதவன் தெய்வபக்தி செய்தால், அதனால் அவனுக்குத் தீமைதான் விளையுமா?" என்று மறுபடி கேட்டான்.
அதற்கு விவேக சாஸ்திரி சொல்லுகிறார்: "இதுவரை சொன்ன பகுதி 'பயனறிதல்' எனப்படும். இனிமேலே சொல்லப் போகிற பகுதிக்கு 'நம்பிக்கை' என்று பெயர். உங்களுடைய வினாவிற்கு விடை கதை மூலமாகச் சொல்லாமல் நேரே சொல்லி விடுகிறேன். மூடனுக்குச் சங்கட முண்டாக்கி வேடிக்கை பார்ப்பவன் பாவி. அவனுக்கு இந்த ஜன்மத்தில் பலவிதமான தீங்குகள் விளையும். விவேகமில்லாதவன் கூட தெய்வபக்தி செய்வதனால் அவனுக்கு நன்மை ஏற்படாமல் போய்விடாது. ஆரம்பத்திலே பலவித இடையூறுகளுண்டாய், அவற்றிலிருந்து கடைசியாக விவேகம் உண்டாகும், பிறகு தெய்வபக்தி மேன்மையான பயன்களைத் தரும்" என்றார்.
-------------
இரண்டாம் பகுதி - நம்பிக்கை
காட்டுக்கோயிலின் கதை
முன்னொரு காலத்தில் பொன்னங்காடு என்ற பெருங்காட்டில் வீரவர்மன் என்றொரு சிங்கம் அரசு செலுத்திக் கொண்டு வருகையில், அதனிடத்துக்கு விகாரன் என்ற புறத்து நரியொன்று வந்து வணக்கம் செய்தது. "நீ யார்? உனக்கென்ன வேண்டும்?" என்று வீரவர்மன் கேட்டது.
அப்போது நரி சொல்லுகிறது:- "என் பெயர் விகாரன். வடக்கே நெடுந்தூரத்திலுள்ள பேய்க்காடு என்ற வனத்தில் அரசு செலுத்தும் தண்டிராஜன் என்ற சிங்கத்திடம் என் பிதா மந்திரியாக இருந்தார். அவர் காலஞ் சென்ற பிறகு, அந்த ஸ்தானத்தில் என்னை வைக்காமல், அவ்வரசன் தனது குணத்துக்கிணங்கியபடி கண்டகன் என்ற பெயர் கொண்ட கிழ ஓநாயை மந்திரியாகச் செய்து என்னைப் புறக்கணித்து விட்டான். 'மதியாதார் தலை வாசல் மிதிக்க வேண்டாம்' என்று வசனமிருப்பதால் நான் அந்த ராஜ்யத்தை விட்டுப் பல தேசங்களில் ஸஞ்சாரம் செய்து வருகையிலே, ஸந்நிதானத்தின் வீரச் செயல்களையும் தர்மகுணங்களையும் கேள்விப்பட்டு, 'ஆஹா! வேலை செய்தால் இப்படிப்பட்ட சிங்கத்தினிடமன்றோ செய்யவேண்டும், என்ற ஆவல் கொண்டவனாய், ஸந்நிதானத்தைத் தரிசனம் செய்து நம்முடைய பிறப்பைப் பயனுடையதாகச் செய்து கொள்ளவேண்டுமென்ற நோக்கத்துடன் இங்கு வந்தேன். தம்மைக் கண்ட மாத்திரத்தில் எனது கலி நீங்கிவிட்டது" என்று சொல்லிற்று.
இதைக் கேட்டுச் சிங்கம் புன்னகை கொண்டு, சிறிது நேரம் யோசனை செய்துவிட்டு, "சரி, நீ நம்முடைய அரண்மனையில் சேவகம் செய்து கொண்டிரு" என்றாக்கினை செய்தது.
மறுநாட் காலையில் வீரவர்மனிடம் அதன் கிழ மந்திரியாகிய தந்திரசேனன் என்ற நரி வந்து சொல்லலாயிற்று:
"அரசனே, நேற்றுத் தம்மிடம் விகாரன் என்ற பேய்க்காட்டு நரி வந்து பேசியதாகவும் அவனைத் தாம் அரண்மனை வேலையில் நியமித்துக்கொண்டதாகவும் கேள்விப்பட்டேன். என்னிடம் ஆலோசனை செய்யாமல் தாம் இந்தக் காரியம் செய்தது பற்றி நான் வருத்தப்படுகிறேன். ராஜ்ய நீதியில் சிறந்த ஞானமுடைய தாம் புறத்து நரியை, தன்னரசன் காரியத்தை நடத்தத் திறமையில்லாமலோ துரோகத்தாலோ வெளிப்பட்டு வந்திருக்கும் நரியை முன் சரித்திரந் தெரியாத நரியை, இத்தனை அவசரப்பட்டு நம்பின செய்கையை நினைக்கும்போது, எனக்கு ஆச்சரியமுண்டாகிறது" என்றது.
இதைக் கேட்ட வீரவர்மன் நகைத்து 'நீர் சாஸ்திரத்தை நம்பிச் சொல்லுகிறீர். நான் தெய்வத்தை நம்பிச் செய்தேன்' என்றது.
அப்போது தந்திரசேனன் என்கிற கிழ நரி சொல்லுகிறது: "எவன் சாஸ்திரத்தை நம்புகிறானோ' அவனே தெய்வத்தை நம்புகிறான். உலகத்தின் அனுபவமே தெய்வத்தின் வாக்கு. அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டது சரியான சாஸ்திரம். நான் லோகானுபவத்தை ஆதாரமாகக் கொண்டு சொல்லுகிறேன். இது தெய்வத்தால் ஏற்பட்டதேயன்றி வேறில்லை. ஆதலால் நான் சாஸ்திரத்தை நம்புவதாகவும், தாம் தெய்வத்தை நம்புவதாகவும், பேதப்படுத்திச் சொல்வதின் பொருள் எனக்கு விளங்கவில்லை" என்றது.
சிங்கம் மறுமொழியே சொல்லவில்லை. சிறிது நேரம் சும்மா காத்திருந்துவிட்டு, "மௌனம் ஸர்வார்த்த ஸாதகம்" என்றெண்ணிக் கிழ நரி விடை பெற்றுச் சென்றது.
அப்போது சிங்கம் விகாரன் என்ற பேய்க்காட்டு நரியைத் தன் முன்னே அழைப்பித்துப் பின்வருமாறு கேட்டது:
"விகாரா, தண்டிராஜன் உனது பிதாவின் ஸ்தானத்தில் உன்னை நியமிக்காமல், கண்டகனை நியமித்த காரணமென்ன? உன்னிடமிருந்த பிழையென்ன?"
நரி சொல்லுகிறது: "என்பிரானே, நான் யாதொரு குற்றமும் செய்யவில்லை. ஒரு வேளை என் வயதுக் குறையை எண்ணிச் செய்திருக்கலாம். மந்திரித் தொழிலுக்குக் கிழவனே தகுதியென்று மதியில்லாத ராஜாக்கள் நினைக்கிறார்கள். மேலும்,
-
"நற்றா மரைக் கயத்தில் நல்லன்னம் சேர்ந்தாற்போற்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர், முதுகாட்டிற்
காக்கை யுகக்கும் பிணம்"
அப்போது சிங்கம் "உங்களுடைய தண்டிராஜனுக்கும் எனக்கும் பகையென்பதை நீ அறிவாயா?" என்று கேட்டது.
"அறிவேன்" என்று நரி சொல்லிற்று.
"தன்னரசனைக் கைவிட்டுப் பகையரசனைச் சார்ந்து வாழவிரும்பும் மந்திரிக்குப் பெயர் தெரியுமா?" என்று வீரவர்மன் கேட்டது.
"அவன் பெயர் துரோகி" என்று விகாரன் சொல்லிற்று. சிங்கம் நகைத்தது.
"உன்னுடைய குலதெய்வத்தின் பெயரென்ன?" என்று சிங்கம் கேட்டது.
"காட்டுக் கோயில் மாகாளி" என்று நரி சொல்லிற்று. சிங்கத்தின் உடம்பில் நடுக்கமுண்டாயிற்று.
உடனே 'ஹா' என்று கத்திச் சிங்கம் தனது கையை உயர்த்திக்கொண்டு சொல்லுகிறது: "மூட நரியே! எது நேர்ந்தாலும் உன்னைக் கொல்லக் கூடாதென்று நேற்றே என் மனதில் தீர்மானம் செய்து கொண்டபடியால், இப்போது உன்னைக் கொல்லாமல் விடுகிறேன். என்னிடம் நீ பொய் சொல்லுகிறாயா? சொல் உண்மையை. உனது குல தெய்வத்தின் பெயரென்ன?" என்று உறுமிக் கேட்டது.
விகாரனென்ற நரி நடுங்கிப் போய்ப் பின்வருமாறு சொல்லலாயிற்று.
நரி சொல்லுகிறது:- "ஐயனே, என்னுடைய பூர்வ குல தெய்வம் அதாவது என்னுடைய முன்னோரும் நேற்று வரை நானும் கும்பிட்டு வந்த தெய்வம் வேறு. அதன் பெயர் பேய் நாகன். அந்த தெய்வமே எங்கள் பேய்காட்டுக் காவல் நடத்தி வருகிறது. பேய்க்காட்டரசனாகிய தண்டிராஜனுக்கும் அவனுடைய குடிகள் எல்லோருக்கும் அதுவே குலதெய்வம். பரம்பரை வழக்கத்தால் எனது பிறப்பு முதல் நேற்று தங்களுடைய சந்நிதானத்தைத் தரிசனம் பண்ணும் வரை நானும் பேய் நாகனையே குலதெய்வமாகக் கொண்டாடினேன். தண்டிராஜனுடன் மனஸ்தாபப்பட்டு வெளியேறின கால முதலாக யாதொரு சரணுமில்லாமல் அலைந்து எனக்கு நேற்று இவ்விடத்து சந்நிதானத்தில் அபயங்கொடுத்தவுடனே, எனக்குச் சந்நிதானமே அரசனும், குருவும், தெய்வமும் ஆகிவிட்டபடியால், இவ்விடத்துக்கு குலதெய்வத்தின் பெயர் காட்டுக் கோயில் மாகாளி என்பதைத் தெரிந்து கொண்டு, அந்த மகா சக்தியையே எனக்கும் குலதெய்வமாக வரித்துக்கொண்டேன்" என்றது.
இதைக்கேட்டு 'வீரவர்மன்' காடு குலுங்கும்படி கோப நகை நகைத்துச் சொல்லுகிறது:-
"இன்னும் பொய் சொல்லுகிறாய். உன்னை மீளவும் க்ஷமிக்கிறேன். நேற்று உன்னைப் பார்த்தவுடனே கொல்ல நினைத்தேன். நீ சரணமென்று காலில் விழுந்தபடியால் துரோகியொருவன் வஞ்சகமாக அடைக்கலம் புகுந்தாலும் அவனைக் கொல்லாமல் விடுவது வீரருக்கு லக்ஷணமென்று நினைத்து உன்னைக் கொல்வதில்லை யென்று மனதில் நிர்ணயம் செய்து கொண்டேன். ஒரு வார்த்தை சொல்லுகிறேன் கேள். நீ நம்மிடம் உளவு பார்க்க வந்த ஒற்றன். அந்த முழு மூடனாகிய தண்டிராஜன் உன்னை இங்கே அனுப்பியிருக்கிறான். நான் இஷ்டப்படும் வரையில் இனி அவனுடைய முகத்தை நீ பார்க்கப் போவதில்லை. உன்னை நம்முடைய அரண்மனையில் வைத்துக் கொள்ளுவேன். ஆனால் என்னுடைய அனுமதியின்றி நீ பொன்னங் காட்டை விட்டு வெளியேறக்கூடாது. அப்படி வெளியேற முயன்றால் உன்னுடைய நான்கு கால்களையும் வெட்டிவிடச் செய்வேன், தெரிகிறதா?"
விகாரன்:- "ஐயனே, என் விஷயமாக சந்நிதானத்தினிடம் யாரோ பொய்க் கதை சொல்லியிருப்பதாகத் தெரிகிறது. பொறாமையினாலே செய்திருக்கிறார்கள். எனக்கும் தண்டிராஜனுக்கும் விரோதமென்பதைத் தாங்கள் பேய்க் காட்டுக்கு ஆளனுப்பி விசாரித்துவிட்டு வரும்படி செய்யலாம். அங்கே யாரிடம் கேட்டாலும் சொல்லுவார்கள். இது பொய் வார்த்தையில்லை. காரணம் நேற்றே தெரிவிக்க வில்லையா? என்னுடைய பிதா வகித்த மந்திரி ஸ்தானத்தை அவன் எனக்குக் கொடுக்காமல் அந்த ஓநாய்க்குக் கொடுத்தான். அதிலிருந்து விரோதம். என்னை ஒன்றும் செய்யவேண்டாம். எனக்குத் தாங்களே குரு, தாங்களே பிதா, தாங்களே தெய்வம். தங்களைத் தவிர எனக்கு இப்போது வேறு கதியில்லை" என்றது.
அதற்கு வீரவர்மன்:- "சரி, இனிமேல் பொய் சொன்னால் அவசியம் கண்ணிரண்டையும் பிடுங்கி விடுவேன் சொல்லு, அந்த தண்டிராஜனிடம் சைனியங்கள் எவ்வளவிருக்-கின்றன?"
விகாரன்:- "ராஜாதி ராஜனே, நான் அந்தக் காட்டில் எவ்விதமான அதிகாரமும்
வகிக்கப்பெறவில்லை. சைனிய உளவுகள் எனக்கெப்படித் தெரியும்?"
இதைக் கேட்டவுடனே சிங்கம் "யாரடா அங்கே சேவகன்?" என்று கர்ஜனை செய்தது. உடனே ஒரு ஓநாய் ஓடி வந்து பணிந்து நின்றது. அதை நோக்கி வீரவர்மன் "ஸேனாபதியை உடனே அழைத்துவா என்று ஆக்கினை செய்தது. "உத்தரவுப்படி" என்று சொல்லி ஓநாய் வணங்கிச் சென்றது.
பிறகு வீரவர்மன் நரியை நோக்கிச் சொல்லுகிறது: "விகாரா, நமது ஸேனாபதியாகிய அக்னிகோபன் இன்னும் ஐந்து நிமிஷங்களுக்குள் இங்கே வந்து விடுவான். அவன் வருமுன்பு நான் கேட்கிற கேள்விகளுக்கு நீ தவறாமல் உண்மை சொல்லக் கடவாய். இதோ என் முகத்தைப் பார்" என்றது.
நரி குடல் நடுங்கிப் போய்ச் சிங்கத்தின் முகத்தைச் சற்றே நிமிர்ந்து பார்த்தது. இன்மேல் இந்தச் சிங்கத்தினிடம் பொய் சொன்னால் உயிர் மிஞ்சாதென்று நரிக்கு நல்ல நிச்சயம் ஏற்பட்டு விட்டது.
பிறகு நரி சொல்லுகிறது: "ஸ்வாமி, நான் சொல்லுகிற கணக்குத் தவறினாலும் தவறக் கூடும். எனக்குத் தெரிந்தவரையில் உண்மை சொல்லி விடுகிறேன். எனக்கு எவ்வித தண்டனையும் விதிக்க வேண்டாம். எனக்கு உங்களுடைய பாதமே துணை" - என்றது.
வீரவர்மன்: "பேய்க்காட்டு சைனியம் எவ்வளவு? உடனே சொல்லு. உண்மை சொல்லு."
விகாரன்: "புலிப்படை முந்நூறு, கரடி இருநூறு, காண்டா மிருகம் நூறு, ஓநாய் ஆயிரம், ஆனைப் படை ஆயிரம், நரிப்படை நாலாயிரம்."
வீரவர்மன்: "உளவு பார்த்து வரும் காக்கைகள் எத்தனை?"
விகா: "இருநூற்றைம்பது."
வீர: - "சுமை தூக்கும் ஒட்டகை எத்தனை? கழுதை எத்தனை?"
விகா: "ஒட்டகை எண்ணூறு. கழுதை பதினாயிரம்."
வீரா: "எத்தனை நாள் உணவு சேகரித்து வைத்திருக்கிறான்?"
விகா: "ஞாபகமில்லை."
வீரா: "கண் பத்திரம்."
விகா: சத்தியம் சொல்லுகிறேன்; ஞாபகமில்லை."
இவ்வாறு பேசிக்கொண்டிருக்கையில் ஸேனாபதியாகிய அக்கோபன் என்ற வேங்கைப்புலி வந்து கும்பிட்டு நின்றது.
"வருக" என்றது சிங்கம்.
அப்போது விகாரன் என்ற நரி தன் மனதுக்குள்ளே யோசனை பண்ணிக்கொள்ளுகிறது:
"ஹூம்! இந்தச் சிங்கராஜன் மகா வீரனாகவும், மகா கோபியாகவும் இருந்தாலும் நாம் நினைத்தபடி அத்தனை புத்திசாலியில்லை. நம்மை எதிரியின் ஒற்றனென்று தெரிந்து கொண்ட பிறகும் நம்மை வைத்துக்கொண்டு சேனாபதியிடம் யுத்த விசாரணை செய்யப்போகிறான். ஏதேனும், ஒரு யதிர்ச்சா வசத்தால் இவனுடைய காவலிலிருந்து நாம் தப்பியோடும்படி நேரிட்டால், பிறகு இவனுடைய யுத்த மர்மங்களை நாம் தண்டிராஜனிடம் சொல்லக் கூடுமென்பதை இவன் யோசிக்கவில்லை. இவனுக்குத் தீர்க்காலோசனை போதாது."
இங்ஙனம், நரி பலவாறு சிந்தனை செய்யுமிடையே, வாயிற்காப்பனாகிய ஓநாய் ஓடிவந்து "மகாராஜா, புரோகிதர் வந்திருக்கிறார்" என்றது.
"உள்ளே வரச்சொல்லு" என்று வீரவர்மன் கட்டளையிட்டது.
அப்பால், அங்கிரன் என்ற பெயர்கொண்டதும், வீரவர்மனுடைய குலத்துக்குப்
பரம்பரையாகப் புரோகிதஞ் செய்யும் வமிசத்தில் பிறந்ததும், பெரிய மதி வலிமை கொண்டதுமாகிய கிழப்பருந்து பறந்து வந்து சிங்கத்தின் முன்னே வீற்றிருந்தது.
சிங்கம் எழுந்து வணங்கிற்று.
சிறிது நேரம் உபசார வார்த்தைகள் சொல்லிக் கொண்ட பிறகு புரோகிதப் பருந்து சிங்கத்தை நோக்கி: "அந்த நரிதான் பேய்க்காட்டு விகாரனோ?" என்று கேட்டது.
சிங்கம் `ஆம்' என்றது.
நரி திருடன் போலே விழித்தது.
அப்போது சிங்கம் சொல்லுகிறது:- "ஸ்வாமி, இந்த நரியை நான் நயத்தாலும் பயத்தாலும் எனது பக்கம் சேரும்படி சொல்லிவிட்டேன். இவன் தண்டிராஜனிட மிருந்த அன்பை நீக்கி என்னாளாகி விட்டான். இவனை நான் இப்போது நம்முடைய மந்திரி சபையில் இருக்க இடங்கொடுத்ததினாலேயே நான் இவனிடம் பரிபூர்ண நம்பிக்கை கொண்டிருக்கிறேனென்பதைத் தாங்கள் தெரிந்து கொள்ளலாம். இவனுடைய பழைய நினைப்பை மறந்து இப்போது தண்டிராஜனுடைய உளவுகளை நமக்குத் தெரிவிக்கும் தொழிலில் அமர்ந்திருக்கிறான். அதனாலே தான் நமது சபையில் இவனைச் சேர்க்கும்படியாகிறது" என்றது.
பருந்து புன்னகை செய்தது. ஒன்றும் சொல்லவில்லை.
அப்போது சிங்கம் கேட்கிறது: "ஸ்வாமி, ஒருவன் எதிர்பார்க்காத காரியத்தில் எதிர் பார்க்காதபடி ஆச்சரியமான வெற்றியடைய வேண்டுமானால் அதற்கு வழியென்ன?" என்றது.
அப்போது அங்கிரன் என்ற புரோகிதப் பருந்து சொல்லுகிறது: "அரசனே, மந்திரி சபையில் எதிர்பார்க்காத கேள்வி கேட்டாய். உனக்கு நான் மறுமொழி சொல்ல வேண்டுமானால், அதற்கு நீண்ட கதை சொல்லும்படி நேரிடும். மந்திராலோசனை சபையில் முக்கியமான காரியத்தை விட்டுப் புரோகிதனிடம் கதை கேட்க வேண்டுமென்ற சித்தம் உனக்குண்டானால் நான் சொல்வதில் ஆக்ஷேபமில்லை. நேரம் அதிகப்படும். அதுகொண்டு என்னிடம் கோபம் வரக்கூடாது" என்றது. அப்போது சிங்கம் ஒரு துளி சிரிப்போடு சொல்லுகிறது: - "மந்திர சபை பின்னாலேயே தள்ளி வைத்துக் கொண்டோம். இப்போது கதை நடக்குக" என்றது. உடனே, புரோகிதனாகிய அங்கிரன் என்ற பருந்து சொல்லுகிறது.
-------------
திண்ணன் என்ற மறவன் கதை
அவன் ஒரு நாள் மாலையில் அரண்மனைப் பக்கமாக நடந்து போகையில் உச்சி மாடத்தின் மேலே பாண்டியன் மகளாகிய தர்மலக்ஷ்மி என்ற பெண் பந்தாடிக் கொண்டிருந்ததைக் கண்டு மிகவும் காதல் கொண்டவனாய் அவளை மணம் செய்துகொள்ள வேண்டுமென்று விரும்பினான்.
அப்பால் அவன் ஒரு சோதிட சாஸ்திரியினிடம் போய், "ஒருவன் ராஜாவின் மகளை மணம் செய்துகொள்ள விரும்பினால் அதற்கு எவ்விதமான பூஜை நடத்த வேண்டும்?" என்று கேட்டான்.
"நீ யார்? உனக்கென்ன தொழில்?" என்று சோதிடன் கேட்டான்.
"நான் காலாட்படை மறவன். என் பெயர் திண்ணன்" என்று இவன் சொன்னான்.
இதைக் கேட்டவுடன் சோதிடன் “என்னிடம் கேட்காதே, ஓடிப்போ” என்று சொல்லித் துரத்திவிட்டான்.
பிறகு திண்ணன் மீனாக்ஷியம்மன் கோயிலில் பூஜைசெய்யும் குருக்கள் ஒருவரிடம் போய்க் கேட்டான். அந்தக் குருக்களென்ன செய்தார்? "அப்பா! நீ இன்னும் ஒரு வருஷம் கழிந்த பிறகு என்னிடம் வந்து இதைக் கேள். அப்போது மறுமொழி சொல்லுகிறேன். அதுவரை சொல்ல முடியாது" என்று போக்குச் சொல்லி அனுப்பி விட்டார்.
பிறகு திண்ணன் ஒரு மந்திரவாதியிடம் போய்க் கேட்டான். அந்த மந்திரவாதி
சொல்லுகிறான்: - "தம்பி, பதினாறு பொன் கொண்டுவந்து கொடு. நான் ஒரு பூஜை நடத்தி முடித்து உன்னுடைய மனோரதம் நிறைவேறும்படி செய்விக்கிறேன்" என்றான்.
திண்ணன் திரும்பிப் போய்விட்டான். அவனிடம் பதினாறு வெள்ளிக் காசுகூடக் கிடையாது. அவன் ஏழைப்பிள்ளை.
இதன் பிறகு 'யாரைப் போய்க் கேட்கலா'மென்று யோசனை செய்து பார்த்தான். "நேரே, ராஜாவின் மகளையே கேட்டு விட்டாலென்ன?" என்று அவன் புத்தியில் ஒரு யோசனை யேற்பட்டது. "சரி. அப்படியே செய்வோம்" என்று தீர்மானம் பண்ணிக் கொண்டான்.
அவனுக்குப் பக்கத்து வீட்டிலிருந்த ஒரு பூவாணிச்சியின் மகள் நாள்தோறும் அரண்மனைக்கு மாலை கட்டிக் கொண்டு கொடுத்து வருவது வழக்கம். அந்தப் பெண் திண்ணனுக்கு நெடுநாளாகப் பழக்கமுண்டு. இவன் என்ன சொன்ன போதிலும் அந்தப் பெண் கேட்பாள். ஆதலால், இவன் ஒரு சிறிய நறுக்கோலையில்,
"மன்னன் மகளே, காலாள் மறவன்
என்ன செய்தால், உன்னைப் பெறலாம்?"
என்ற வாக்கியத்தை எழுதி, அந்த நறுக்கோலையை மிகவும் அழகானதொரு பூமாலைக்குள் நுழைத்து வைத்து, அந்தப் பூவாணிச்சிப் பெண்ணிடம் கொடுத்து "நீ இதை அரசன் மகள் முன்னாலே கொண்டு போய் ஒரு தரம் உதறி விட்டு மாலையை அவளிடம் கொடு" என்று சொல்லியனுப்பினான். அவளும் அப்படியே பூமாலையைக் கொண்டு ராஜகுமாரியின் முன்னே ஒரு தரம் உதறிய பின்பு, அதைக் கொடுத்துவிட்டுத் திரும்பி வீடு வந்து சேர்ந்தாள்.
ராஜகுமாரி அந்த நறுக்கோலை கீழே விழுந்து கிடப்பதைக் கண்டு அதையெடுத்து வாசித்தாள்:-
"மன்னன் மகளே, காலாள் மறவன்
என்ன செய்தால் உன்னைப் பெறலாம்?"
அங்கிரன் என்ற புரோகிதப் பருந்து சொல்லுகிறது: கேளாய் வீரவர்ம ராஜனே, அந்தப் பூவாணிச்சிப் பெண் மாலையை உதறினபோது நறுக்கோலை கீழே விழுவதை ராஜகுமாரி பார்த்தாள். பூவாணிச்சிப் பெண் அரண்மனையிலிருந்து தன் வீட்டுக்குத் திரும்பிப் போனவுடனே திண்ணன் அவளைக் கண்டு "ராஜகுமாரியிடம் மாலையைக் கொடுத்தாயா?" என்று கேட்டான். ஆமென்றாள். "உதறினாயா?" என்று கேட்டான். "செய்தேன்" என்றாள். சரியென்று சொல்லிப் போய் விட்டான்.
மறுநாட் காலையில் பூவாணிச்சிப் பெண் வழக்கம் போலே அரண்மனைக்கு மாலை கொண்டு போனாள்.
அப்போது ராஜகுமாரி அந்தப் பெண்ணிடம் ஒரு நறுக்கோலையைக் கொடுத்து "நேற்று உன்னிடம் மாலை கொண்டு தந்த காலாள் மறவனிடம் இதைக் கொண்டு கொடு" என்றாள்.
பூவாணிச்சிப் பெண் திகைத்துப் போய்விட்டாள். "பயப்படாதே; கொண்டுபோ" என்று ராஜகுமாரி சொன்னாள். பூவாணிச்சிப்பெண் நறுக்கோலையைக் கொண்டு திண்ணனிடம் கொடுத்தாள். அவன் வாசித்துப் பார்த்தான். அதிலே "தெய்வமுண்டு" என்றெழுதி யிருந்தது. பின்னொரு நாள் திண்ணன் தனியேயிருந்து யோசிக்கிறான்: -
"இந்த அரசன் மகள் நம்மைப் பரிகாஸம் பண்ணமாட்டாள். ஏதோ நல்ல வழிதான் காட்டியிருக்கிறாள். தெய்வத்தை நம்பினால் பயன் கிடைக்குமென்று சொல்லுகிறாள். சரி. அப்படியே நம்புவோம்......அந்தக் காலத்தில் தெய்வம் தவம் பண்ணுவோருக்கு நேரே வந்து வரம் கொடுத்ததென்று சொல்லுகிறார்கள். இந்த நாளில் அப்படி நடப்பதைக் காணோம்......அடா போ! பழைய காலமேது? புதிய காலமேது? தெய்வம் எந்தக் காலத்திலும் உண்டு. தெய்வத்தைக் குறித்துத் தவம் பண்ணுவோம். வழி கிடைக்கும்" என்று சொல்லி ஒரு காட்டுக்குப் போய், அங்கே காய்கனிகளைத் தின்று சுனை நீரைக் குடித்துக் கொண்டு தியானத்திலே நாள் கடத்தினான்.
அந்தக் காட்டில் இவனுக்கும் ஒரு வேடனுக்கும் பழக்கமுண்டாயிற்று. அந்த வேடன் இவனுடைய தவப்பெருமையையும் இவன் முகவொளியையும் கண்டு, இவனிடம் மிகுந்த பிரியங் கொண்டவனாய் இவனுக்கு மிகவும் சுவையுடைய தேனும் கிழங்குகளும் கொண்டு கொடுப்பான். இவன் வேடனுக்கு தெய்வபக்தி யேற்படுத்தினான்.
ஒருநாள் அந்த வேடன் இவனிடம் ஒரு மூலிகை கொண்டு கொடுத்து, "இது மிகவும் ரகஸ்யமான மூலிகை. இதைப் பத்திரமாக வைத்துக்கொள்ளு. ஒருவனுடம்பில் எத்தனை பெரிய புண் இருந்தாலும், இந்த மூலிகையில் தினையளவு அரைத்துப் பூசினால், புண் இரண்டு ஜாமத்துக்குள் ஆறிப் போய் விடும்" என்றான். அதை இவன் பத்திரமாக வைத்துக் கொண்டான்.
திண்ணன் குடியிருந்த பர்ண சாலைக்கருகே ஒரு பாம்புப் புற்றிருந்தது. அதில் கிழ நாகம் ஒன்று வசித்தது. அதை ஒரு நாள் வேடன் கண்டு கொல்லப் போனான். அப்போது திண்ணன்:- "ஐயோ பாவம்! கிழப்பாம்பு அதைக் கொல்லாதே. அது நெடு நாளாக இங்கிருக்கிறது. என்னை ஒன்றும் செய்வதில்லை. அதன் வழிக்கு போகாதே" என்று சொல்லித் தடுத்து விட்டான்.
பின்னொரு நாள் அந்தப் பாம்பு தனியே செத்துக் கிடந்தது. அந்தப் பாம்பு சாகும்போது கக்கினதோ வேறென்ன விநோதமோ - அந்தப் பாம்புக்கருகே ஒரு பெரிய ரத்தினம் கிடந்தது. அதை நாகரத்தின மென்று திண்ணன் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டான்; அன்றிரவிலே திண்ணன் ஒரு கனவு கண்டான். அதில் அவனுடைய இஷ்ட தேவதையாகிய மீனாக்ஷியம்மை தோன்றி, "உனது தவத்தால் மகிழ்ந்து உனக்கு நாகரத்தினம் கொடுத்தேன். இதைக் கொண்டு போய் சௌக்யமாக வாழ்ந்துகொண்டிரு" என்றாள்.
திண்ணன் அந்தக் கனவை நம்பவில்லை. "நம்முடைய நினைவினாலேயே இந்தக் கனவுண்டாயிருக்கிறது. தெய்வமாக இருந்தால், ராஜகுமாரி வேண்டுமென்று தவஞ்செய்ய வந்தவனிடம் நாகரத்தினத்தைக் கொடுத்து வீட்டுக்குப் போகச் சொல்லுமா? செய்யாது. ஆதலால் இந்தக் கனவு தெய்வச் செய்கையன்று, நம்முடைய மனதின் செய்கை" என்று தீர்மானம் செய்து, அந்தக் காட்டிலேயே எப்போதும்போல தவஞ் செய்து கொண்டிருந்தான்.
பிறகொரு நாள், அந்தக் காட்டில் விக்கிரம பாண்டியன் வேட்டைக்கு வந்தான். அவன் திண்ணனைக் கண்டு "நீர் யார்? இந்த வனத்தில் எத்தனைக் காலமாகத் தவம் செய்கிறீர்?" என்று கேட்டான்.
அப்போது திண்ணன் சொல்லுகிறான்: "நான் பாண்டிய நாட்டு மறவன். என் பெயர் திண்ணன். இங்குப் பல வருஷங்களாகத் தவஞ்செய்கிறேன், காலக் கணக்கு மறந்துபோய் விட்டது" என்றான்.
"என்னைத் தெரியுமா? நான் பாண்டிய நாட்டரசன்" என்று பாண்டியன் சொன்னான்.
"தெரியும்" என்று திண்ணன் சொன்னான்.
அரசன் இந்த மறவனுடைய அழகையும், ஒளியையும் கண்டு வியந்து: "இந்த இளமைப் பிராயத்தில் இவ்வனத்திலே என்ன கருத்துடன் தவம் செய்கிறீர்?" என்று கேட்டான்.
"மதுரை யரசன் மகளை மணம் செய்யவேண்டித் தவம் செய்கிறேன்" என்று திண்ணன் சொன்னான்.
அரசன் திகைப்படைந்து போய், "எங்ஙனம் கைகூடும்! அம்மவோ" என்றான்.
"மீனாக்ஷி கேட்ட வரம் கொடுப்பாள்" என்று திண்ணன் சொன்னான்.
"மன்னன் மகளுக்கு நீ என்ன பரிசம் கொடுப்பாய்?" என்று பாண்டியன் கேட்டான்.
"புண்ணைத் தீர்க்க மூலிகையும், மண்ணைச் சேர்க்க நாகரத்தினமும் கொடுப்பேன்" என்று திண்ணன் சொன்னான்.
அரசன் அவ்விரண்டையும் காட்டும்படி சொன்னான். திண்ணன் காட்டினான். வேட்டையிலே புண்பட்ட மானுக்கு அந்த மூலைகையை அரைத்துப் பூசினார்கள். உடனே புண்தீர்ந்து விட்டது.
இந்தத் திண்ணனுடைய தவப்பெருமையும், அதனாலே கைகூடிய தெய்வ அருளும் அவன் முதத்திலும், விழியிலும் சொல்லிலும், செய்கையிலும் விளங்குவது கண்டு பாண்டியன் மனமகிழ்ச்சியுடன், அவனுக்கே தனது மகளை மணஞ்செய்து கொடுத்தான். ஆதலால், எதிர்பார்க்க முடியாத பயன் உலகத்தார் கண்டு வியக்கும்வண்ணமாக ஒருவனுக்குக் கைகூடவேண்டுமானால் அதற்குத் தெய்வ பக்தியே உபாயம்" என்று பருந்து சொல்லிற்று.
அப்போது அந்த சபையிலே சேனாபதி அக்நிகோபன் மகனாகிய ரணகுமாரன் என்ற இளம்புலியும், தந்திரசேனன் மகன் உபாய வஜ்ரன் என்ற நரியும், வேறு பல புலி, நரிகளும், தம்முடன் உடம்பு முழுதும் புண்பட்டு இரத்தம் ஒழுகிக் கொண்டிருந்த சிங்கமொன்றை இழுத்துக்கொண்டு ராஜசபையில் உத்தரவு பெற்றுக்கொண்டு வந்து வணங்கி நின்றன.
அந்தப் புண்பட்ட, கைதிச் சிங்கம் யாரென்றால், அது தான் பேய்க்காட் டரசனாகிய தண்டிராஜன்!
இந்த ஆச்சரிய விளைவைக் கண்டு வீரவர்மன் புன்னகை செய்தது. விகாரன் என்ற பேய்க்காட்டு நரி மூர்ச்சை போட்டு விழுந்தது. புரோகிதர். சேனாபதிகள் வீரவர்மனை வாழ்த்தி அவனுடைய சத்துரு இத்தனை நாளாகக் கைதிப்பட்டு வந்த மகிழ்ச்சியை விழியினாலே தெரிவித்தன.
------------
உபாயவஜ்ரன் என்ற நரியின் திறமை
அங்கு மேலெல்லாம் இரத்தமொழுக, ஒரு கண்ணிலும் இரத்தம் வழியத் தலைகவிழ்ந்து நின்ற தண்டி ராஜனுக்கு உபசார வார்த்தைகள் சொல்லி, உள்ளே அனுப்பி ராஜவைத்தியர் மூலமாகச் சிகிச்சை செய்விக்கும்படி ராஜாக்கினை பிறந்தது.
அப்பால் வீரவர்மன்: "உபாயவஜ்ரா, நீ புறப்பட்டது முதல், தண்டி ராஜனுடன் நமது சபை முன்பு தோன்றிய காலம் வரை நடந்த விருத்தாந்தங்களையெல்லாம் ஒன்று விடாதபடி சொல்லு" என்றது.
உபாயவஜ்ரன் ராஜ சபையில் விஞ்ஞாபனம் செய்கிறது: "சக்திவேல் ராஜேசுவரா! பொன்னங்காட்டிலிருந்து புறப்பட்டு நாகமலைக்குப் போகும்வரை விசேஷமொன்றும் நடக்கவில்லை. அங்கு காசுக் குகையில் ரணகுமாரர் தமது பரிவாரங்களுடன் இருப்பதைக் கண்டேன். ராஜாக்கினை இப்படியென்று தெரிவித்தேன். அவர் தமக்கும் அவ்விதமாகவே உத்தரவு கிடைத்திருப்பதாகச் சொல்லி வழித்துணைக்கு யார் யார் வேண்டுமென்று கேட்டார். குடிலப்பன் என்ற குள்ள நரியையும், விளக்கண்ணன் என்ற வேட்டை நாயையும், தொளைச்சாண்டி என்ற மூஞ்சூற்றையும், கிழக்கரியன் என்ற காக்கையையும் அழைத்துக் கொண்டு போனேன்."
----------
கோவிந்த நாம சங்கீர்த்தனைக் கூட்டம்
உபாயவஜ்ரன் சொல்லுகிறது:- நான் அந்த நால்வரையும் கொண்டுபோய், ஓரிடத்திலே நிறுத்திக் கொண்டு, "விளக்கண்ணா, தொளைச்சாண்டி, குடிலப்பா, கிழக்கரியா, நீங்கள் நாலு பேரும் சிஷ்யராகவும், நான் குருவாகவும் வேஷம் போட்டுக் கொள்ள வேண்டும்" என்றேன். அந்தப்படி வேஷம் தரித்துக் கொண்டோம். கோவிந்த நாம சங்கீர்த்தனக் கூட்டமாகப் புறப்பட்டோம். பொது எல்லையில் நாக நதியில் ஸ்நானம் பண்ணி சந்தியா வந்தனாதிகளை முடித்துக் கொண்டோம். 'கோவிந்த நாம சங்கீர்த்தனம்!' என்று நான் கத்துவேன்.
"கோவிந்தா! கோவிந்தா!" என்று சிஷ்யர் நால்வரும் கத்துவார்கள். கையிலே ஆளுக்கொரு தம்பூர், கோவிந்த நாம சங்கீர்த்தனம் பண்ணிக் கொண்டே எதிரி யெல்லைக்குள் பிரவேசித்தோம். நாகமலையில், குடியன் கோயிலுக்குப் பக்கத்திலே வேதிகை கட்டிக் கரடிச்சாத்தான் ஹோமம் வளர்க்கும் யாக சாலைக்குப் போய்ச் சேர்ந்தோம். பகல் முழுதும் நாங்கள் கோவிந்த நாமத்தை விடவேயில்லை. கிழக்கரியனுக்குத் தொண்டை கட்டிவிட்டது. எங்களைக் கண்டவுடனே கரடிச்சாத்தான் 'வாருங்கள் வாருங்கள்' என்று உபசாரம் சொல்லிப் பக்கத்திலிருந்த யாக கோஷ்டியாரிடம் அடியேனைக் காட்டி "இவர் பெரிய பாகவதர். துளஸீதாஸ், கபீர்தாஸ் அவர்களுடைய காலத்துக்குப் பிறகு இவரைப் போலே பக்தர் யாரும் கிடையாது" என்று சொல்லிற்று.
மாலையில் யாக கோஷ்டி கலைந்து விட்டது.
-------------
சூனியக் குகையில் மந்திராலோசனை
பிறகு நள்ளிரவில், காரிருள் நேரத்திலே நானும் கரடிச்சாத்தானுமாக நாகமலையிலுள்ள சூனியக் குகையில் போய் இருந்து கொண்டு ஆலோசனை செய்யலானோம். எடுத்தவுடனே சாத்தான் தக்ஷிணை விஷயம் பேசினான். கையிலே கொண்டு போயிருந்த வஸ்துவை அவன் மடியில் வைத்தேன். அதை உடனே ஒரு பொந்துக்குள்ளே சென்று நுழைத்து வைத்துவிட்டு என்னிடம் திரும்பி வந்தான். பிறகு கொஞ்சம் பிணங்கத் தொடங்கினான். "துஷ்ட நிக்ரஹத்திலே கூட ஒரு வைப்பு வரம்பிருக்க வேண்டும். ஸ்வாமித் துரோகம் செய்யலாகாது. வீட்டுமனும், துரோணனும் உள்ளத்தில் பாண்டவரை உகந்தாலும், உயிரைத் துரியோதனனுக்காக இழந்தனர். ஆதலால் தண்டி ராஜனுடைய சரீரத்துக்கு ஹானி வராதபடி என்னாலாகவேண்டிய உதவியைக் கேட்டால் நான் செய்வேன்" என்றான்.
"தண்டிராஜனை எங்கள் நாகமலையிலுள்ள காசுக் குகையிலே கொண்டு சேர்ப்பிக்க வேண்டும்" என்றேன்.
"சீச்சீ! கோழைகளா!" என்றான்.
வாளை உருவினேன்.
கும்பிட்டு மன்னிக்கும்படி கேட்டான். பிறகு "அந்தக் காரியம் செய்யமாட்டேன்" என்று உறுதியாகச் சொல்லிவிட்டான்.
"ஹோமத்துக்கு வருவானா?" என்று கேட்டேன்.
"வருவான்" என்றான்.
"உடன் வரும் படை எத்தனை?" என்று கேட்டேன்.
"பரிவாரமாகப் பத்துப் பன்னிரண்டு புலி நாய்கள் வரும். படை வராது" என்றான்.
"என்னுடன் சிநேகப்படுத்தி வைப்பாயா?" என்று கேட்டேன்.
"செய்கிறேன்" என்றான்.
"கோள் வார்த்தை ஏதேனும் தண்டிராஜன் செவியில் எட்டுவதாக இருந்தால் உனக்கு உயிர்ச் சேதம் நேரிடும்" என்றேன்.
'தக்ஷிணை, தக்ஷிணை'யென்று முணுமுணுத்தான்.
"நானும் தண்டிராஜனும் தனியிடத்தே பேசும்படி நீ செய்வித்தவுடன் உனக்குத் தந்ததில் மும்மடங்கு தரப்படும்" என்றேன்.
இங்ஙனம் பேசிக் கொண்டிருக்கையிலே திடீரென்று ஏதோ யோசனை பண்ணி என்னை மூச்சைப் பிடித்துக் கொல்லத் தொடங்கினான்.
நான் அவனுடைய அடி வயிற்றிலே எனது பிடிவாளை மூன்றங்குல ஆழம் அழுத்தினேன். கோவென்று கூவிக் கைகளை நெகிழ்த்துக் கொண்டான். நானும் வாளை உருவிக் கொண்டேன்.
உடனே மண்ணைப் பிறாண்டி வயிற்றிலே திணித்து இரத்த மொழுகாதபடி அடைத்துக் கொண்டு, என்னிடம் திரும்பி வந்து, "இதென்ன தம்பி? முத்தமிட வந்தால் அடி வயிற்றில் வாளைக் கொண்டு குத்தினீரே? நியாயமா?" என்று கேட்டான்.
"கை தெரியாமல் பட்டுவிட்டது. மூன்று லக்ஷத்து முப்பது தரம் மன்னித்துக் கொள்ளவேண்டும்" என்றேன்.
அன்றிரவு மந்திராலோசனையை இவ்வளவுடன் நிறுத்திக் கொண்டு குடியன் கோயிலுக்கருகே கரடிச் சாத்தானுடைய யாக சாலைக்குத் திரும்பி வந்து சேர்ந்தோம். மறுநாள் பொழுது விடிந்தது.
சக்திவேல்! வீரவர்ம ராஜனே, நானும் அந்தக் கரடிச் சாத்தானும் சூனியக் குகையில்
வாய்ச் சண்டை கைச்சண்டையாகிப் பிறகு சமாதானப்பட்டு அன்றிரவு அங்கிருந்து வெளிப்பட்டுக் குடியன் கோயிலுக்கருகே கரடிச் சாத்தான் வளர்க்கும் ஹோமசாலைக்குத் திரும்பி வந்து, கொஞ்சம் நித்திரை செய்தோம். மறுநாள் பொழுது விடிந்தது. தண்டிராஜன் தனது சைனியத்துடன் நாகமலைப் பாகத்துக்கு வந்துவிட்டான். கரடிச் சாத்தானைத் தனது கூடாரத்துக்குத் தருவித்தான். இவனும் அவனும் சம்பாஷணை செய்து கொண்டிருக்கையிலே என்னை அழைப்பித்தார்கள். நான் அங்கே போகுமுன்பு ரணகுமாரனிடம் சொல்ல வேண்டிய விஷயங்களைச் சொல்லித் திடப்படுத்தி விட்டுத் தண்டிராஜன் முன்னே சென்றேன். கரடிச் சாத்தானிடம் ஒரு மோதிரத்தைக் காண்பித்தேன். அவன் தனக்கு தாகவிடாய் தீர்த்துவர வேண்டுமென்று முகாந்திரம் சொல்லி வெளியே போனான். நானும் தண்டிராஜனும் தனியே இருந்தோம். நமஸ்காரம் பண்ணினேன்.
"யார் நீ?" என்று கேட்டான். "விகாரனுடைய குமாரன், என் பெயர் உபாய வஜ்ரன். விகார மாமா சொன்னார். அவர் உத்திரவின்படி இங்கு வந்தேன்."
"நாகமலையில் காசுக்குகையில், தங்கக்காசு மகரிஷி என்ற சித்தர் இருக்கிறார். அவர் கல்லைப் பொன்னாக்குவார். அவரிடத்தில் பொன் வாங்கிக்கொண்டு போக வீரவர்மன் வருவான். மேல்படி தங்கக் காசு மகரிஷியை விகார மாமா நம்முடைய கக்ஷிக்கு அனுகூலம் ஆகச் செய்து விட்டார். அவர் வீரவர்மனை மதுவிலே மயக்கி வைப்பார். அவன் களியுண்டிருப்பான். அந்த க்ஷணத்தில் நாம் அங்கே யிருக்க வேண்டும். வீரவர்மனைப் பிடித்துக் கட்டி வந்து விடலாம். இதுவெல்லாம் விகார மாமா சொல்லிக் கொடுத்த ஏற்பாடுகள், சொன்னேன்.” அவன் நம்பவில்லை. யாரையெல்லாமோ கலந்து பேசினான். கரடிச் சாத்தானைக் கலந்து வார்த்தை சொன்னான்.
பிறகு மாலையில் என்னை மறுபடி அழைப்பித்து உன்னிடம் எனக்கு நம்பிக்கை பிறக்கவில்லை என்று சொன்னான். நான் அவர்கள் குலத்து மூலமந்திரத்தை உச்சரித்தேன். உடனே பகவான் கிருஷ்ணனை ஸ்மரித்து அந்தப் பாவத்தை நீக்கிக் கொண்டேன். நம்முடைய மகா சக்தி மந்திரத்தை அதன் பின் ஸ்மரித்தேன். அவனுக்கு நம்பிக்கை பிறந்து அவனுடன் ஐந்து பேரைச் சேர்த்துக் கொண்டு காசுக் குகைக்கு வந்தான். அங்கு ரணகுமாரன் ஒருவனே ஐந்து பேரையும் அடித்துத் துரத்திவிட்டு தண்டிராஜனையும் குண்டுக் கட்டாகக் கட்டிப் பிடித்துக்கொண்டு வந்தான்" என்றது.
"இங்ஙனம் உபாயவஜ்ரன் என்ற நரியின் வார்த்தையைக் கேட்டு மிகவும் மெச்சிச் சிங்கம் தனது சபையைக் கலைத்து விட்டது. பிறகு சிறிது காலத்துக்கப்பால் மறுபடி சண்டை தொடங்கிற்று" என்று விவேக சாஸ்திரி தன் மக்களிடம் சொல்லி வரும்போது, "தண்டிராஜனைப் பிடித்துக் கைதியாக்கின பிறகு சண்டை எப்படி நடக்கும்?" என்று அவருடைய மூன்றாவது குமாரனாகிய ஆஞ்சனேயன் கேட்டான்.
அப்போது விவேக சாஸ்திரி சொல்லுகிறார்:-
தண்டி பிடிபட்டான் என்ற செய்தி தெரிந்த உடனே பேய்க் காட்டில் ராஜ்யப் புரட்சி உண்டாகிக் குடியரசு நாட்டுக்குக் கரடிச் சாத்தானைத் தலைவனாக நியமித்தார்கள். சகோதரத்வம், சமத்வம், சுதந்திரம் என்ற மூன்றையும் தந்திரமாகக் கரடிச்சாத்தான் ஊர்தோறும் பறையறைவித்தான். இந்தச் செய்தி தெரிந்த வீரவர்மன் தனது படையை அனுப்பிக் கரடிச் சாத்தானைப் பிடித்து வரும்படி செய்தான். கரடியின் வாலை யறுத்து வேறொரு காட்டுக்குத் துரத்திவிட்டான். தண்டியின் தம்பியாகிய உத்தண்டியைக் குடியரசின் தலைவனாக நியமனம் செய்தான். தண்டியைப் பொன்னங்காட்டுக் கோட்டையிலே கைதியாக வைத்துக் கொண்டான்.
பொன்னங்காட்டில் ஒரு நரிக் கூனி உண்டு. அவள் பெயர் நரிச்சி நல்ல தங்கை. அந்த நரிச்சி நல்லதங்கையானவள் வீரவர்மன் சிறு குழந்தையாக இருந்த காலத்தில் அரண்மனையில் ஏவல் செய்து கொண்டிருந்தாள். அப்போது ஒரு நாள் வீரவர்மன் விளையாட்டாகக் கல் வீசிக்கொண்டு இருக்கையிலே, ஒரு கல் நரிச்சி நல்லதங்கையினுடைய முதுகில் வந்து விழுந்து விட்டது. நல்ல தங்கையின் முதுகு அதுமுதல் ஒடிந்துபோய் அவளுக்குக் கூனிச்சி நல்லதங்கை என்ற பெயர் உண்டாயிற்று. ஆஹா! இப்படி இவளை முதுகை ஒடித்து அலங்கோலமாகச் செய்தோமே என்ற பச்சாதாபத்தால் வீரவர்மன் அவளிடம் மிதமிஞ்சின தயை செலுத்தினான். 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம்.' அவள் எவ்விதமான குற்றங்கள் செய்த போதிலும், நீதிப்படி தண்டிக்காமல் அரைத் தண்டனை, கால் தண்டனையாக விட்டு வந்தான். அவள் இவனை க்ஷமிக்கவேயில்லை. இவனுக்குத் தீங்கு செய்வதையே விரதமாகக் கொண்டு வந்தாள். அவள் பெரிய தந்திரி. வீரவர்மனுக்குக் கெடுதி சூழ்ந்து கொண்டே காலத்தைக் கருதிக் காத்துக் கொண்டிருந்தாள். காலமும் அனுகூலமாக வாய்ந்தது.
பேய்க்காட்டு நாயகனாகிய உத்தண்டி தனது தமையன் ஸ்தானத்தில் தானே அரசனென்று சொல்லி வீரவர்மன் மீது போர் தொடுத்தான். ராஜ்யத்தை இத்தனை சுலபமாக இழந்த தண்டி மூடனைக் குடிகள் வெறுத்து உத்தண்டியை அரசனாகக் கொண்டு பேய்க்காட்டை அவமதிப்புக் கிடமாகச் செய்த வீரவர்மனையும் தண்டிக்கும் பொருட்டு உத்தண்டி தொடுத்த போரில் மிகவும் மகிழ்ச்சி கொண்டாடினர்.
இத்தருணத்தில் கூனிச்சி நல்லதங்கை ரகஸ்யமாக விகாரனிடத்திலும்,
தண்டிராஜனிடத்திலும் கலந்து தனித்தனியாக சம்பாஷணைகள் செய்து கொண்டு, பொன்னங் காட்டுக் கோட்டை, கொத்தளம், படை பரிவாரங்களைக் குறித்துத் தனக்குத் தெரிந்த ரகஸ்யங்களைச் சொல்லி உத்தண்டிக்கு உதவி செய்யும் பொருட்டாகப் பேய்க்காட்டுக்குச் சென்றாள். இங்ஙனம் விவேக சாஸ்திரி தம்முடைய மக்களுக்குக் கதை சொல்லி வருகையிலே ஆஞ்சனேயன் கேட்கிறான்:-
"பக்திமான் பிழைகளும் செய்வானோ?"
விவேக: "மனதறிந்து செய்யமாட்டான். கர்ம வசத்தால் பிழைகள் ஏற்படலாம்."
ஆஞ்ச: "கர்மம் பக்தியை மீறிச் செல்லுமோ?"
"விவேக: "பக்தி பரிபூரணமான பக்குவம் பெறும் வரையில், கர்மத் தொடர் மனிதனை விடாது. பழஞ்செய்கை பயன் விளைவிப்பதை அழிக்க வேண்டுமானால், பக்தியாகிய கனல் அறிவாகிய வேதிகையிலே புகையில்லாதபடி எரிய வேண்டும். அந்த நிலைமையை வீரவர்மன் பெறவில்லை."
ஆஞ்ச: "கூனியினுடைய மனம் வீரவர்மனைக் கண்டு ஏன் இளகவில்லை?"
"சாக்ஷாத் பகவான் ராமாவதாரம் செய்து பூமியில் விளங்கினான். அந்தக் கூனி மனம் அவனிடம் அன்புறவில்லை; மகிமையைக் கண்ட மாத்திரையில் எல்லாருடைய நெஞ்சும் வசமாய் விட்டது. சூரியனைக் கண்டவுடன் குருவிகள் பாடிக்கொண்டு வெளியே பறக்கும்; ஆந்தைகள் இருட்டுக்குள்ளே நுழையும், எல்லா மனிதரையும் வசப்படுத்தக்கூடிய தெய்வ பக்தி இதுவரை மனுஷ்ய ஜாதியில் காணப்படவில்லை. இனி மேல் தோன்றக் கூடும்" என்று விவேக சாஸ்திரி சொன்னார்.
விவேக சாஸ்திரி சொல்லுகிறார்: "கேளீர், மக்களே, முன்பு நரிச்சி நல்லதங்கை என்பவள் வீரவர்மனிடம் இருந்து ஓடிப்போய்ப் பேய்க்காட்டில் உத்தண்டி ராஜனைச் சரண் புகுந்தாள். அவனிடம் அந்த நரிச்சி பொன்னங்காட்டு ராஜ்யத்தின் சேனாபலம், மந்திரி பலம், பொருள் வலி முதலிய ரகஸ்யங்களை யெல்லாம் தெரிவித்தாள். அப்போது இரண்டு ராஜ்யங்களுக்கும் யுத்தம் தொடங்கி விட்டது. அந்த யுத்தத்தில் வீரவர்மன் பக்கத்தில் இருந்த சைந்யங்கள் பின்வருமாறு:-
புலிப்படை ஆயிரம், கரடிப்படை ஆயிரம், ஓநாய் ஆயிரம், யானை ஆயிரம், ஒட்டகை ஆயிரம், சுமை தூக்குகிற கழுதை பதினாயிரம், உளவு பார்க்கிற காக்கை இரண்டாயிரம், மேலும் பாம்புப்படை பதினாயிரம், கழுகுப்படை மூவாயிரம், பருந்துப் படை பதினாயிரம்.
எதிர்ப்பக்கத்தில் (உத்தண்டி பக்கத்தில்) இந்த சைனியத்திலே எட்டிலொரு பங்குகூடக் கிடையாது.
எனவே முதல் இரண்டு ஸ்தலங்களில் உத்தண்டியின் படைகள் முறியடிக்கப்பட்டன. உத்தண்டி மிகவும் விசனத்துடன் தனது மாளிகையில் உட்கார்ந்து யோசனை பண்ணிக் கொண்டிருக்கிறான். அப்போது நரிச்சி நல்லதங்கையை அழைத்து யோசனை கேட்போம் என்ற எண்ணங்கொண்டவனாய் அவளைக் கூட்டிவரச் செய்தான். அவ்விருவரும் சம்பாஷணை செய்கிறார்கள்.
உத்தண்டி சொல்லுகிறான்: - "நீ உளவுகள் சொல்லியும், நமது சேனாபதி திறமை யில்லாமையால் இரண்டு ஸ்தலங்களில் வந்து படைகள் தோற்று விட்டன. என்ன செய்வோமென்பது தெரியவில்லை. நான் உன்னையே நம்பியிருக்கிறேன். என்னுடைய சைந்யம் வீரவர்மனுடைய சைந்யத்தில் எட்டில் ஒரு பங்குகூட இல்லையென்பது தெரிந்தும் உன்னுடைய வலிமையையும் நம்பி நான் இந்தப் போரில் மூண்டேன். இத்தருணத்தில் நாம் வெற்றி பெறுவதற்கான வழிகள் நீதான் சொல்லவேண்டும்" என்றான்.
அப்போது நரிச்சி நல்லதங்கை சொல்லுகிறாள்: - "ராஜாதி ராஜனே, உத்தண்டி பூபாலனே, சத்ரு சிங்க மண்டல விநாசக ஜய கண்டனே, கேளாய்; நானோ ஸ்திரீ. அதிலும் தங்களைப் போன்ற சிங்கக் குலமில்லை.நரிக் குலம். முதுகு புண்பட்டவளாய்த் தங்களிடம் சரணமென்று வந்தேன். எனக்குத் தெரிந்தவரை பொன்னங்காட்டு சைந்யம் படை முதலிய உளவுகளெல்லாம் சொன்னேன். தங்களுடைய சைந்யம் அளவில் சிறிதாக இருந்தபோதிலும் தந்திரத்தால் வீரவர்மனுடைய படைகளை வென்று விடலாமென்று தாங்களும் தங்களுடைய முக்கிய மந்திரி, பிரதானிகளும் சேனாபதிகளும் இருந்து யோசனை செய்து முடித்தீர்கள். இப்போது என்னிடம் யோசனை கேட்கிறீர்கள்! நான் எப்படிச் சொல்வேன்? மேலும், ஒரு வேளை நான் யுக்தி சொல்லி அதனால் நீங்கள் ஜயிப்பதாக வைத்துக் கொண்ட போதிலும், பிறகு என்ன கைம்மாறு தருவீர்கள்? அதைச் சொன்னால் நான் எனக்குத் தெரிந்தவரை யோசனை சொல்லுகிறேன். ஜயத்துக்கு நான் பொறுப்பில்லை. ஒரு வேளை நான் சொல்லும் யோசனையால் வெற்றி கை கூடினால் எனக்கு நீர் என்ன பிரதியுபகாரம் செய்வீர்? அதைத் தெரிவித்தால், பிறகு நான் என்னால் கூடிய யோசனை சொல்லுகிறேன்" என்றது.
அப்போது உத்தண்டி சொல்லுகிறது: "நீ எது கேட்டாலும் கொடுப்பேன்" என்றது.
அப்போது நரிச்சி நல்லதங்கை: "ஹே, உத்தண்டி ராஜனே, நான் சொல்லும் யோசனையால், உனக்கு வெற்றி கிடைத்தால், நீ என்னை மணம் செய்து கொண்டு உன்னுடைய பட்டது ராணியாக்குவாயா?" என்று கேட்டது.
இதுகேட்டு உத்தண்டி கோபத்துடன், "சீச்சீ மூட நரியே, நீ வீட்டில் ஏவல் தொழில் செய்தவள். கூனிச்சி, கிழவி. நாமோ ராஜகுலம். நல்ல யௌவன தசையில் இருக்கிறோம். நம்முடைய அந்தப்புரத்தில் இருக்கும் சிங்கச்சியோ கடம்ப வனத்து ராஜனாகிய மகாகீர்த்தியுடைய குண்டோதரன் மகள் காமாக்ஷியென்று பூமண்டலமெங்கும் கீர்த்தி வாய்ந்தவள். அவளைப்போல் அழகும் கல்வியுமுடைய பெண் சிங்கச் சாதியில் எங்குமே கிடையாது. இதையெல்லாம் உணர்ந்தவளாகிய நீ என்னிடம் என்ன மூடவார்த்தை சொன்னாய்? உளறாதே. நீ பெண்ணாகையால் விட்டேன். ஆணாக இருந்து இப்படி வார்த்தை சொன்னால் இதற்குள் தலையை வெட்டிப் போட்டிருப்பேன்" என்று சொல்லிக் கர்ஜனை புரிந்தது.
அப்போது நரிச்சி நல்லதங்கை சொல்லுகிறாள்: "கேளாய் உத்தண்டி ராஜனே, எனக்கு உன்னை மணம் செய்து கொள்ள வேண்டுமென்ற உட்கருத்து கிடையாது. சும்மா, உன்னைச் சோதனை போடுவதற்காகப் பேசிய வார்த்தையே யன்றி வேறொன்றுமில்லை. சிங்கச் சாதிப் பெண்களுக்குள்ளே அழகில் மாத்திரமேயல்லாது கல்வியிலும் சிறந்தவளாகிய காமாட்சி தேவி (சிங்க ராணி)யை மனையாளாகக் கொண்ட நீ இப்படிப்பட்ட ஆபத்து நேரத்தில் அவளிடம் யோசனை கேட்காமல், கேவலம் ஒரு கிழ நரிச்சியிடம் கேட்க வந்தாயே, அது பிழை என்பதை உனக்குத் தெரிவிக்கும் பொருட்டாக அந்த வார்த்தை சொன்னேன்.
உன்னை மணம் செய்து கொள்ள வேண்டும் என்ற சிந்தனை எனக்குக் கனவிலே கூடக் கிடையாது. உன்னைக் கேலிபண்ணி உன்னுடைய ராணி காமாட்சியை நீ இந்த யுத்த பயத்தினால் மறந்திருக்கும் செய்தியை நினைப்பு மூட்டி உன்னை அவளிடம் யோசனை கேட்கும்படி தூண்டிவிடும் பொருட்டாக அந்த வார்த்தை சொன்னேனேறொயல்லாது வேன்றுமில்லை.
ஆனாலும் உன் வார்த்தைகளில் இருந்த சில அசம்பாவிதங்களை நீக்க விரும்புகிறேன். நரி ஜாதி ஸ்திரீயை சிங்க ஜாதி புருஷன் மணம் செய்வது கூடாதென்றா சொல்லுகிறாய்? ரிஷி மூலம், நதி மூலம் விசாரணை செய்யக் கூடாதென்று கேள்விப்பட்டிருக்கிறாயா? மேற்குல ரிஷிகள் கீழ்க்குல ஸ்திரீகளை மணந்து பல ரிஷி வம்சங்கள் மங்கியிருக்கின்றன. பகவான் ஸ்ரீமந் நாராயணன், அகண்டாதீதன், சூக்ஷ்மாத்மா, புருஷோத்தமன், உலகத்துக்கு மூதாதை. அவனே ஸ்ரீவில்லிபுத்தூர் பட்டர் மகளையும், டில்லி பாதுஷா மகளையும் மணஞ் செய்து கொண்டு ஸ்ரீரங்கத்தில் துயில்கிறான். ஹே, உத்தண்டி ராஜனே, ஜாதி பேதமா கற்பிக்கிறாய்? சிங்கம் மேல் ஜாதியென்றும், நரி கீழ் ஜாதியென்றும் நீ நினைக்கிறாயா? அப்படித்தான் அந்த மூடனாகிய வீரவர்மன் நினைத்தான். அது நிற்க.
"ஹே, உத்தண்டி ராஜனே, வயதில் மூத்த பெண்ணை இளைய பிள்ளை மணம் செய்து கொள்ளத் தகாதென்று சொன்னாய்! அது மகா மூடத்தனமான வார்த்தை! புதிதாக வருகிற ஒவ்வொரு இந்திரனுக்கும் ஆதிமுதல் பழைய இந்திராணிதான் மாறாமல் இருந்து வருகிறாள். கூனிச்சி என்று சொல்லி என்னை நகைத்தாய். உடம்புக்கா பிரேமை செய்கிறோம். அரசனே, உயிருக்கு அன்பு செலுத்துகிறோம். இதுவெல்லாம் நீ அறியாத விஷயம். இது நிற்க.
"உத்தண்டி ராஜனே, இவ்வளவுக்கு மேலும் உனக்கு வெற்றி பெற உபாயங் கற்றுக் கொடுத்தால் நீ எனக்கு வேறே என்ன கைம்மாறு தருவாய்?" என்று கேட்டது.
அப்போது உத்தண்டி ராஜன் சொல்லுகிறது:- "நீ விவாகத்தைத் தவிர வேறென்ன தானம் கேட்டபோதிலும் கொடுப்பேன்" என்றது.
அதற்கு நரிச்சி நல்லதங்கை சொல்லுகிறது - "நீ முதல் தடவையும் இப்படித்தான் எது கேட்டாலும் கொடுப்பேன்" என்றாய். பிறகு வாக்குத் தவறினாய். நீ மறுபடியும் வாக்குத் தவறலாம் என்ற சந்தேகம் எனக்கு ஜனிக்கிறது" என்றது.
அப்போது உத்தண்டி "பயப்படாதே! வேறென்ன கேட்டாலும் தருகிறேன்," என்றது.
"உன்னுடைய ராஜ்யத்தில் பாதி கொடுப்பாயா?" என்று நரிச்சி நல்லதங்கை கேட்டாள்.
உத்தண்டியும் இதைக் கேட்டு மனவருத்தமடைந்தான். ராஜ்யத்தில் பாதி கொடுக்க அவனுக்குப் பெரும்பாலும் சம்மதமில்லை. ஆனாலும் என்ன செய்யலாம்? தனது சேனாபதிபதிகள் இனியேனும் போரில் வெல்வார்களென்ற நம்பிக்கை அவனுக்குக் கிடையாது. எப்படியேனும் நரிச்சி நல்லதங்கை ஒரு வழி கண்டுபிடித்துச் சொல்வாளென்றும் அதனால் தனக்கு வெற்றியேற்படலாமென்றும், அவனுக்கு நம்பிக்கையிருந்தது. மேலும் இரண்டாம் முறை வாக்குத் தவற வெட்கப்பட்டான். ஆதலால் அவளிடம் "நீ சொல்லுகிற உபாயத்தை அனுசரித்து அதனால் எனக்கு வெற்றி கிடைத்தால் உனக்குக் கட்டாயம் என் ராஜ்யத்தில் பாதி தருவே"னென்று வாக்குக் கொடுத்தான்.
அப்போது நரிச்சி சொல்லுகிறாள்:-
"கொலம்பஸ் கோழி முட்டையை உடைத்துக் காட்டின மாதிரி வந்து சேரும்" என்றாள்.
"அதென்ன வர்த்தமானம்?" என்று உத்தண்டி என்ற சிங்கராஜன் கர்ஜனை செய்தது.
நல்ல தங்கை சொல்லுகிறாள்: "ஒரு கோழி முட்டையை - அடபோ, கொலம்பஸ் என்கிற பூகோளப் பேர்வழியும் அவனோடு சுமார் முப்பத்தேழு சிநேகிதர்களும் ஒரு நாள் போஜனம் செய்து கொண்டிருந்தார்களாம். அப்போது கொலம்பஸ் கேட்டான்: - "இங்கே யாராவது ஒரு கோழி முட்டையை மேஜையின் மேல் யாதொரு ஆதாரமுமில்லாமல், அசைவில்லாமல் நட்டமாக நிறுத்தி வைக்கக் கூடுமா? நான் செய்வேன். வேறு யார் செய்வார்?" என்றான்.
அப்போது கொலம்பஸ் உடன் இருந்த நண்பர் பலவிதங்களில் முயற்சி பண்ணியும் கோழி முட்டையை மேஜை மேல் ஆதாரமில்லாமல் நட்டமாக நிறுத்தச் சாத்தியப்படவில்லை. கடைசியாக அவர்களெல்லாம் தோல்வியை ஒப்புக்-கொண்டார்கள்.
அப்போது கொலம்பஸ் எழுந்து நின்றான். கோழி முட்டையைக் கையில் எடுத்தான். ஒரு ஓரத்தைச் சீவிவிட்டு, மேஜைமேல் நட்டமாக நிறுத்திவிட்டான். நண்பர்களிலே பலர் அவனுடைய சமத்காரத்தைப் பார்த்து ஆச்சர்யப்பட்டார்கள்.
ஆனால் சில மூடர்கள் மாத்திரம் 'ஓகோ இதென்ன ஏமாற்றுகிற மாதிரி. கோழி முட்டையில் ஓரத்தைத் துளிகூட உடைக்காமல் நிறுத்தவேண்டுமாக்கும் என்று நாங்கள் நினைத்திருந்தோம். உடைத்து நிறுத்தலாம் என்று முதலிலேயே சொல்லியிருந்தால் நாங்கள் அப்போதே செய்திருக்கமாட்டோமா?' என்று சொல்லி முணுமுணுத்தார்களாம்" என்று நரிச்சி சொன்னாள்.
"இவ்வளவுதானா?" என்று உத்தண்டி கேட்டான்.
"ஆமாம், இவ்வளவுதான்" என்று நரிச்சி சொன்னாள்.
அப்போது உத்தண்டி சொல்லுகிறான்:- "அப்படியானால் கொலம்பஸ் சுத்த அயோக்யன்! அவனுடைய கெட்டிக்காரத்தனத்தைப் பார்த்து ஆச்சர்யப் பட்ட சிநேகிதர்கள் பரம மூடர்கள்" என்றான்.
அதற்கு நரிச்சி நல்லதங்கை சொல்லுகிறாள்: "அந்த மாதிரிதான் எனக்கும் சொல்லிப் பாதி ராஜ்யம் கொடுப்பதாக வாக்களித்ததை அழித்துப் போடுவாயோ?" என்றாள்.
உத்தண்டி ராஜன்:- "மாட்டேன்! நீ யோசனை சொல்லு. அது எத்தனை சாமான்யமாகப் பின்பு புலப்பட்ட போதிலும் அதனால் வெற்றி கிடைப்பது மெய்யானால் உன்னிடம் நன்றி மறக்காமல் உனக்குப் பாதி ராஜ்யம் கொடுத்து விடுவேன்" என்றது.
அப்போது நரிச்சி நல்லதங்கை சொல்லுகிறாள்: "உத்தண்டி மகாராஜனே, தங்களுடைய மாமனார் குண்டோதர ராஜனுக்கு ஒரு கடிதம் எழுதிக் கொடுங்கள். அதில் வேறொன்றும் எழுதக்கூடாது. ஆபத்து சமயம். சைந்யம் வேண்டும். நரிச்சி நல்லதங்கையை நம்பு என்று மூன்று வரி மாத்திரம் எழுதினால் போதும். இப்போதே எழுதிக்கொடு. நான் அப்பால் சைந்யம் கொண்டு வந்து வீரவர்மனுடைய மமதையையும், அகங்காரத்தையும் தொலைக்கிறேன். உன் பெயரை, சிங்க சரித்திரத்தில் எக்காலத்திலும் அழியாமல் நிறுத்தி வைக்கிறேன்" என்றாள்.
அப்படியே உத்தண்டி ஓலை எழுதி நரிச்சி கையிலே கொடுத்தான். அதை வாகிக் கொண்டு கூனிச்சியாகிய நரிச்சி நல்லதங்கை பல்லக்குப் பரிவாரங்களுடன் உத்தண்டி ராஜனுடைய ஸ்தானாதிபதி என்ற பதவியில் மாமனார் குண்டோதர ராயசிங்க மகா சிங்கருடைய ராஜதானிக்கு வந்து சேர்ந்தாள்.
இது நிற்க.
பேய்க்காட்டில் உத்தண்டி தன் மனைவியாகிய சிங்கச்சி காமாக்ஷியினிடம் போய் நடந்த வர்த்தமானத்தையெல்லாம் சொன்னான். அவள் மிகவும் கோபத்துடன்:- "என்னுடைய பிதாவிடமிருந்து சைந்ய பலம் தருவிக்க வேண்டுமானால், அதற்கு என் அனுமதியில்லாமல் நரிச்சி நல்லதங்கையை அனுப்பினால் நடந்துவிடுமென்று நீ நினைக்கிறாயா?" என்றாள்.
அப்போது உத்தண்டி சொல்லுகிறான்:- "உனக்கு ராஜ நீதியே தெரியவில்லை; காமாக்ஷி, ராஜ்ய அவசரத்தைக் கருதி இரண்டாம் பேரிடம் சொல்லாமல் எத்தனையோ காரியம் செய்ய நேரிடும்" என்றான்.
"ராஜ்ய அவசரத்தைக் கருதிச் சரியான மந்திராலோசனையில்லாமல் எடுத்த காரியங்கள் எல்லாவற்றிலும் தோற்றுப்போவதே வாடிக்கையாக நீங்கள் நடத்தி வருகிறீர்கள்" என்று காமாக்ஷி சொன்னாள்.
"ஆபத்து சமயத்திலே ஏசிக் காட்டுவது பாவிகளான ஸ்திரீகளுடைய வழக்கம்!" என்று உத்தண்டி சொன்னான்.
"நாலு சாஸ்திரம் படிக்கப்போன பிராமணப் பிள்ளையின் கதை தெரியுமா?" என்று சிங்கச்சி காமாக்ஷி கேட்டாள்.
"நான் ஆபத்தான நிலைமையில் இருக்கும்போது நீ கதை சொல்ல வருகிறாயா! அதென்ன?" என்று உத்தண்டி கர்ஜனை புரிந்தான்.
"வீரவர்மன் தன்னுடைய பத்தினியிடத்தில் தேவதா விசுவாசம் வைத்திருப்பதாகவும் அவளை எப்போதும் சிடுசிடுப்பதே கிடையாதென்றும், தனது பிரதான ராஜ்யகாரியங்களில் எதையும் தனது பத்தினியாகிய மாகாளியிடம் கேட்காமல் செய்வதில்லையென்றும், முன் அந்த சமஸ்தானத்திலிருந்து வந்த கரடி ஸந்நியாசி ஒருவர் சொன்னாரே; ஞாபகமிருக்கிறதா?" என்று காமாக்ஷி கேட்டாள்.
"நான் சங்கடக் குழியில் விழுந்து வெளியேற வழி யறியாமல் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கையில் நீ சத்துருவின் புகழ்ச்சியை என் செவியில் பேசுகிறாயே உனக்குத் தகுமா?" என்று உத்தண்டி வினவினான்.
"ஸ்திரீகளை அவமரியாதை பண்ணுவோர் மனிதரில் மிருகங்கள் என்று சண்டி நீதி சொல்லுகிறதே, அது ஞாபக முண்டா?" என்று காமாக்ஷி கேட்டாள்.
"நான் இப்போது எவ்விதமாகவும் அவமதிப்புச் செய்யவில்லை" என்றான் உத்தண்டி.
"என்னிடம் ஒரு வார்த்தைக்கூடக் கேளாமல் நீ என்பிதாவுக்கு சைந்யம் வேண்டுமென்ற பிரார்த்தனை அனுப்பினாயே! அது என்னை அவமதித்ததாக மாட்டாதா?" என்றாள் காமாக்ஷி.
"அது போனால் போகிறது. இனிமேல் நடக்க வேண்டிய காரியத்தைப் பேசுவோம்" என்று உத்தண்டி சொன்னான்.
"மேல் நடக்க வேண்டிய காரியம் யாதோ?" என்று சிங்கச்சி கேட்டது.
அப்போது உத்தண்டி சொல்லுகிறான்:- "மேல் நடக்க வேண்டியது யுத்தம். மேல் நடக்க வேண்டியது, ஜயம்!"
"போர் எந்த இடங்களில் தோற்றது? போர் தோற்ற சேனாபதிகளின் பெயர் என்ன?" என்று சிங்கச்சி கேட்டது.
"நாகமலையிலே தோற்றோம். வெள்ளை வாய்க்கால் கரையிலே தோற்றோம். நாகமலையில் தோற்ற சேனாபதி கரடி வேலப்பன், வெள்ளை வாய்க்கால் கரையிலே தோற்றவன் புலி பொன்னம்பலம்" என்று உத்தண்டி சொன்னான்.
"அந்த வேலப்பனையும், பொன்னம்பலத்தையும் நாளை சூரியோதயமாய் ஒரு ஜாமத்துக்கு முன்பு சுட்டுக் கொன்று விடவேண்டும்." என்று சிங்கச்சி காமாக்ஷி சொன்னாள்.
உத்தண்டி: "சாத்தியப்படாது" என்றான்.
அவள் "ஏன்?" என்றாள்.
அவன்: "அவ்விருவரும் பெரிய வம்சத்துப் பிள்ளைகள். அவர்களுக்குத் தீங்கு செய்தால் தேசத்துப் பிரபுக்கள் நமக்கு விரோதமாகத் திரும்புவார்கள்" என்றான்.
அவள்; " இப்போது இந்த தேசத்தில் உமக்கு அனுகூலமாக எத்தனை பிரபுக்கள் இருக்கிறார்கள்?" என்று கேட்டாள்.
அப்போது உத்தண்டி: "என் நாட்டிலுள்ள பிரபுக்கள் அத்தனை பேரும் எனக்கு வேண்டியவர்களே. எதிர்க்கட்சி யாருமே கிடையாது!" என்றான்.
"நாளைப் பொழுது விடிந்து ஒரு ஜாமத்துக்கு முன்பு வேலப்பனையும், பொன்னம்பலத்தையும் சுட்டுக் கொன்று விடவேண்டும். அது செய்தால், மேலே ஜயத்துக்குரிய உபாயங்கள் நான் சொல்லுகிறேன்" என்று காமாக்ஷி சொன்னாள்.
"நான் ஒரு போதும் அதற்கு இணங்க மாட்டேன்" என்றான் உத்தண்டி.
அப்போது உத்தண்டி என்ற சிங்க ராஜனிடம் பத்தினியாகிய சிங்கச்சி காமாக்ஷி சொல்லுகிறது: "ஸ்திரீகளை அவமதிப்புச் செய்வோன் ஆண்மக்களுக்குள்ளே முதல் வீரனாக விளங்க மாட்டான். பெண்ணைத் தாழ்வாக நினைப்பது அநாகரிக ஜாதியாருடைய முதல் லக்ஷணம்.
நீ என் வார்த்தையைத் தட்டுகிறாய்; உனக்குச் சண்டை ஜயிக்காது. நீ என்னை எப்போதும் அலட்சியம் பண்ணுகிறாய்.
எனது பிதா உனக்குத் துணைப்படைகள் என்னையறியாமல் அனுப்பும்படி செய்ய முடியுமென்று நினைத்தது உன் ஆலோசனைக் குறைவைக் காட்டுகிறது. உன்னை அழிய விடுவதில் எனக்குச் சம்மதமில்லை.
நீயோ மதிக் குறைவினாலும், மூட மந்திரிகளின் உபதேசத்தாலும், மகா வீரனாகிய வீரவர்மனைப் பகைத்துக் கொண்டாய். என்னிடத்தில் மந்திராலோசனை கேட்கமாட்டாய்; நரிச்சி நல்லதங்கையிடம் கேட்பாய்! அந்தக் கூனற் கிழவிக்கு மாலையிடச் சம்மதப்படவில்லையே! நீ அந்த மட்டில் புத்திசாலிதான்! அவளுக்குப் பாதி யரசு கொடுப்பதாகச் சொல்லி விட்டாய்? உன்னுடைய புத்திக் கூர்மையை என்னவென்று சொல்வேன்?" என்றது.
இது கேட்டு உத்தண்டி சொல்லுகிறான்: "ஆகா! நான் நரிச்சி நல்லதங்கையிடம் ரகஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்ததை உனக்கு யார் சொன்னார்கள்? உன்னுடைய தூண்டுதலின் மேலேதான் அவள் என்னிடம் அப்படிக் கேட்டாளோ?"
காமாக்ஷி: “இல்லை, நீ யன்றோ அவளைக் கூப்பிட்டனுப்பி வார்த்தை சொன்னாய்! நீ இப்படி அழைப்பித்துக் கேட்பாய் என்ற விஷயம் எனக்கு முன்னமே தெரிந்திருந்தா லன்றோ நான் தூண்டி விட்டிருக்கக் கூடுமென்று சொல்லலாம்!”
உத்தண்டி: "பின்னே, உனக்கெப்படித் தெரிந்தது? நான் முந்தியே முதல் நினைத்தேன்; என்னுடைய ஒற்றர்களை யெல்லாம் நீ வசப்படுத்தி வைத்திருக்கிறாய், எனக்குத் தெரியாமல் நீ வேறு தனியாகப் பல ஒற்றர்களை வைத்திருக்கிறாய்.
என் மந்திரிகளிலும் சேனாபதிகளிலும் பெரும்பாலோர் எனக்கு அஞ்சுவதைக் காட்டிலும் அதிகமாக உனக்கு அஞ்சி நடக்கிறார்கள். எனக்குத் தெரியாத ஒரு ரஹஸ்ய சங்கத்துக்கு நீ தலைவி யென்று தோன்றுகிறது. உன்னை வஞ்சனை செய்யவேண்டு-மென்ற எண்ணம் எனக்குக் கிடையாது.
ஆனால், என்னுடைய ராஜ்யத்தில் என் வார்த்தைக்கு யாதொரு மதிப்பில்லாமலும் எல்லாக் காரியங்களுக்கும் உன் இஷ்டப்படியாகவும் இருப்பது எனக்கு ஸம்மதமில்லை" என்றான்.
அப்போது சிங்கச்சி காமாக்ஷி சொல்லுகிறாள்:
“ஓஹோ! என்னிடத்தில் இவ்வளவு பயத்தை மனதில் வைத்துக்கொண்டு, என்னை லஷ்யமும் பண்ணாமல் நீ இருப்பது ஒரு ஆச்சர்யந்தான்; எனக்கு விரோதிகளான வேலப்பனையும், பொன்னம்பலத்தையும் ஸேனாபதிகளாக நியமித்தாய், எனக்கு வேண்டிய ஸேனாபதிகளை விலக்கினாய்; போர் தோற்றது. இன்னமும் என்னை அவமதிக்கிறாய். என்னுடைய யோசனை கேட்டபடியால் உனக்கு இந்த ராஜ்யம் கிடைத்தது. பட்டங் கட்டின மறுநாளே நீ நன்றி கெட்டவன் என்பதை நான் கண்டுகொண்டேன்” என்றாள்.
உத்தண்டி: "உன்னை நான் அவமதிக்கவில்லையே" என்றான்.
"அரை நாழிகைக்கு முன்புகூட என்னைத் துரும்புக்கு ஸமானமாக எண்ணி நடத்தினை யன்றோ?" என்றாள் சிங்கச்சி.
"என்ன செய்தேன்?" என்று சொல்லி உத்தண்டி கர்ஜனை புரிந்தான்.
“நான் ஒரு கதை சொல்லத் தொடங்கினேன், உனக்கு நல்லறிவு புகட்டும் பொருட்டாக. அதைக் கேட்கக்கூட உனக்குப் பொறுமை யில்லை. என்னைச் சள்ளென்று விழுந்தாய், என்னைக் கண்டால் உனக்கு முகத்தில் கடுகு வெடிக்கிறது. என் வார்த்தை கேட்டால் உனக்குக் காதில் நாராசம் காய்ச்சிவிட்டதுபோல ஆய்விடுகிறது" என்றாள் சிங்கச்சி.
"அதென்னவோ கதை என்றாயே! பெயர் மறந்து போச்சு! ஹாம்! ஹாம்! பிராமணப் பிள்ளை நாலு சாஸ்த்ரம் படித்த கதை! அதைச் சொல்லு, கேட்கிறேன்” என்றான் உத்தண்டி.
----------
பிராமணப் பிள்ளை நாலு சாஸ்திரம் படித்துக்கொண்டு வந்த கதை
"கேளாய் ராஜனே, புருஷனுக்கு ஸ்திரீ உடம்பில் பாதி. நீ என்னை வெறுத்த போதிலும் எனக்கு உன்னைத் தவிர வேறு புகல் கிடையாது. நீ என்னிடம் வைத்திருந்த அன்பையெல்லாம் மறந்து விட்டாலும் என் நெஞ்சு உன்மீதுள்ள அன்பை மறக்கவில்லை. இன்னொரு சிங்கியென்றால் நீ செய்துவரும் அவகாரியத்துக்கு உன்னை முகங்கொண்டு பார்க்கமாட்டாள். நான் ஐயோ பாவமென்று உன்னை க்ஷமிக்கிறேன். ஆயினும், நான் இப்போது கதை சொல்ல ஆரம்பித்தால் நீ பொறுமையுடன் கேட்கமாட்டாய் என்ற சந்தேகம் எனக்கு உண்டாகிறபடியால் இப்போது சொல்ல வேண்டாமென்று யோசிக்கிறேன்" என்றாள்.
உத்தண்டி 'பொறுமையுடன் கேட்கிறேன்" என்று சத்தியம் பண்ணினான்.
பிறகு சிங்கச்சி பின் வரும் கதையை உரைக்கலாயிற்று:
"ஓர் ஊரிலே ஒரு பிராமணப் பாட்டியிருந்தாள். அவளுக்கொரு பிள்ளையுண்டு. அந்தப் பிள்ளை வீட்டில் யாதொரு வேலையும் செய்யாமல் மூன்று வேளையும் தண்டச்சோறு தின்பதும் ஊர் சுற்றுவதுமாக இருந்தான். அந்தப் பாட்டி தோசை, இட்லி, முறுக்கு, கடலைச் சுண்டல் வியாபாரம் பண்ணி அதில் வரும் லாபத்தால், குடும்ப ஸம்ரக்ஷணை செய்து கொண்டிருந்தாள்.
அவன் நாளுக்கு நாள் அதிக சோம்பேறியாய் நேரத்தை நாசம் பண்ணிக் கொண்டிருந்தான்.
அப்போது பாட்டி ஒரு நாள் அவனைக் கூப்பிட்டு:-"அடா மகனே, ஒரு தொழிலும் செய்யாமல் சும்மா தின்று கொழுத்துக் கொண்டு எத்தனை நாள் இப்படி என் கழுத்தை அறுக்கலாமென்று யோசனை பண்ணுகிறாய்? நான் உயிரோடிருக்கும் வரை எப்படியாவது பாடுபட்டு உன் வயிற்றை நிரப்புவேன். எனக்குப் பிற்காலம் நீ எப்படி ஜீவிப்பாய்? நான் சாகு முன்னே உனக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைத்துவிட்டுச் சாகலாமென்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். அதற்காகத்தான் பக்கத்துத் தெருச் செட்டியாரிடம் மாசம் ஒரு ரூபாய் சீட்டுப் போட்டுக் கொண்டு வருகிறேன். நீ அந்தப் பெண்டாட்டியை எப்படி வைத்துக் காப்பாற்றுவாய்? சீ, நாயே, ஓடிப்போ, எங்கேனும் வடதேசத்துக்குப் போய் நாலு சாஸ்திரம் படித்துக் கொண்டுவா" என்றாள்.
அந்தப் பையனுக்கு சாஸ்திரம் என்றால் இன்ன பதார்த்தம் என்ற விஷயமே தெரியாது. ஆனாலும் அவன் மனதில் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்ற தாகம் இருந்தது. ஆதலால் பெண்டாட்டியைக் காப்பாற்ற சாஸ்திரம் படிக்க வேண்டுமென்று தாயார் சொல்லியதைக் கேட்டவுடன் அவனுக்குச் சாஸ்திரப் பயிற்சியில் விசேஷமான ஆவல் மூண்டது. அன்று பகல் சாப்பிட்டவுடனே தாயாரிடம் சொல்லிக் கொள்ளாமல் ஊரிலிருந்து புறப்பட்டு வடதிசை நோக்கிச் சென்றான். போகும் வழியிலே ஒரு பனைமரம் நின்றது.
"எங்கே போகிறாய் அப்பா?" என்று இந்தப் பிள்ளையை நோக்கி அந்தப் பனைமரம் கேட்டது. "நான் சாஸ்திரம் படிக்கப் போகிறேன்" என்றான்.
அப்போது அந்தப் பனைமரம் சொல்லுகிறது:- "ஓ ஹோ ஹோ; சாஸ்திரமா படிக்கப் போகிறாய்? அப்படியானால் நான் ஒரு சாஸ்திரம் கற்றுக் கொடுக்கிறேன், தெரிந்துகொள்" என்றது. பிராமணப் பிள்ளை உடம்பட்டான்.
அப்போது பனைமரம் "நெட்டைப் பனைமரம் நிற்குமாம் போலே போலே" என்ற வாக்கியத்தைச் சொல்லிற்று. இந்த வாக்கியத்தைப் பையன் திரும்பத் திரும்பத் தன் மனதுக்குள் உருப்போட்டுக் கொண்டே போனான்.
அங்கே ஒரு பெருச்சாளி வந்தது. அந்தப் பெருச்சாளி இவனை நோக்கி, "அடா பார்ப்பாரப் பிள்ளாய், எங்கே போகிறாய்?" என்று கேட்டது. "சாஸ்திரம் படிக்கப் போகிறேன்" என்று இவன் சொன்னான். "அப்படியானால் நான் ஒரு சாஸ்திரம் சொல்லுகிறேன், படித்துக் கொள்" என்று பெருச்சாளி கூறிற்று. பையன் உடம்பட்டான்.
"பெருச்சாளி மண்ணைத் தோண்டுமாம் போலே போலே" என்ற சாஸ்திரத்தை அந்தப் பெருச்சாளி சொல்லிக் கொடுத்தது. இவன் மேற்படி இரண்டு சாஸ்திரங்களையும் வாயில் உருப் போட்டுக்கொண்டே நடந்து சென்றான்.
வழியில் ஒரு குளம் இருந்தது. அதில் இறங்கி ஜலம் குடிக்கப்போனான். நடுக் குளத்தில் ஒரு கோரைப் புல் நின்றது. அது இவனை நோக்கி: - "ஐயரே, எங்கிருந்து வந்தாய்? எந்த ஊருக்குப் போகிறாய்?" என்று கேட்டது. இவன் தன்னுடைய விருத்தாந்தங்களைச் சொல்லி, "சாஸ்திரம் படிக்கப் போகிறேன்" என்றான். "அப்படியானால் நான் ஒரு சாஸ்திரம் கற்பிக்கிறேன். படித்துக் கொள்" என்று கோரை சொல்லிற்று. பிராமணப் பிள்ளை உடம்பட்டான்.
"நடுக்குளத்திலே கோரை கிடந்து விழிக்குமாம் போலே போலே" என்ற வாக்கியத்தை அது கற்றுக் கொடுத்தது. இவன் மூன்று வாக்கியங்களையும் பாராமல் சொல்லிக் கொண்டு பின்னும் நடந்து சென்றான். அங்கே ஒரு நரி வந்து அவனை நோக்கி:- "எங்கே போகிறாய்? என்ன சங்கதி?" என்று விசாரணை பண்ணிற்று. இவன் "சாஸ்திரம் படிக்கப் போகிறேன்" என்றான்.
"ஓகோ! சாஸ்திரம் படிக்கவா போகிறாய்! நல்லது, உனக்கு நான் சாஸ்திரம் கற்றுக் கொடுக்கிறேன். தெரிந்து கொள்" என்று நரி சொல்லிற்று. இவன் உடம்பட்டான்.
"ஆளைக் கண்டால் நரி வாலைக் குழைத்துக் கொண்டோடுமாம் போலே போலே" என்ற வாக்கியத்தை நரி போதித்தது.
இவன் "ஆஹா! புறப்பட்ட தினத்திலே நமக்கு நாலு சாஸ்திரமும் தெரிந்து போய் விட்டதே, என்ன அதிர்ஷ்டமப்பா, நமக்கு; இந்த நான்கு சாஸ்திரத்தையும் மறக்காமல் வீட்டில் தாயாரிடம் போய்சொன்னால் அவள் நமக்குக் கல்யாணம் செய்து கொள்ள அனுமதி கொடுப்பாள்" என்று சந்தோஷப்பட்டுக் கொண்டே தன் ஊரை நோக்கிச் சென்றான்.
போகும் வழியில் இரவாகி விட்டது. ஊர் நெடுந்தூரத்துக்கப்பால் இருந்தபடியால் இடையே இருந்த ஒரு கிராமத்தில் அவ்விரவு தங்கி, மறுநாட் காலையில் அங்கிருந்து புறப்படலாமென்று நினைத்து, அங்கு ஒரு வீட்டு வாசல் திண்ணையிலே போய்ப் படுத்துக் கொண்டான். விடிய ஒரு ஜாமம் ஆனபோது, இவன், கண்ணை விழித்துக் கொண்டு, தான் படித்த நாலு வாக்கியங்களையும் பாடம் பண்ண ஆரம்பித்தான். அப்போது அந்த வீட்டின் கொல்லைப்புரத்தில் கள்ளர் வந்து கன்னம் வைத்துக் கொண்டிருந்தார்கள். இவன் சத்தம் போட்டுச் சந்தை சொல்லிக் கொண்டிருந்தான்.
முதலாவது: 'நெட்டைப் பனைமரம் நிற்குமாம் போலே போலே' என்றான்.
இவன் கூவின சத்தத்தைத் திருடர் கேட்டு "ஓஹோ! நாம் இங்கு நிற்பதைக் கண்டு வீட்டிலுள்ளோரை எழுப்பும் பொருட்டாக எவனோ இப்படிக் கூவுகிறான்" என்றெண்ணிப் பயந்தார்கள்.
அந்தச் சமயத்தில் இவன்: "பெருச்சாளி மண்ணைத் தோண்டுமாம் போலே போலே" என்று கூவினான்.
இதைக் கேட்டுத் திருடர்: "அடே! நாம் கன்னம் வைக்கிறதைக் சுண்டுதான் இவன் இப்படிக் கூவுகிறான்" என்று கை கால் நடுங்கத் தொடங்கினார்கள்.
அப்போது இவன்: "நடுக்குளத்திலே கோரை கிடந்து விழிக்குமாம் போலே போலே" என்ற தனது மூன்றாம் சாஸ்திரத்தை ஓதினான்.
கள்ளர்: "அடா, நாம் அவசியம் ஓடிப்போக வேண்டும். நாம் இங்கே திகைப்புடன் விழித்துக்கொண்டு நிற்கிறோமென்பதை அந்த மனிதன் சயிக்கினையாகச் சொல்லுகிறான்" என்று பேசிக்கொண்டு சிலர் ஓடத் தொடங்கினர். இதற்குள் திருடருடைய சத்தம் இவன் காதிலும் படவே, "கொல்லைப் புறத்தில் ஏதோ பலர் காலடிச் சத்தமும், முணுமுணுக்கிற சத்தமும் கேட்கிறது. என்னவோ தெரியவில்லை. ஒரு வேளை திருடராக இருந்தாலும் இருக்கலாம். எதற்கும் போய்ப் பார்ப்போம்" என்று யோசனை பண்ணிக்கொண்டு வந்தான். வரும்போதே தனது சாஸ்திரப் பாடத்தை மறக்காமல், "ஆளைக் கண்டால் நரி வாலைக் குழைத்துக் கொண்டோடுமாம் போலே போலே" என்று கூவிக்கொண்டே வந்தான்.
திருடர் தாங்கள் வேறோரிடத்திலிருந்து திருடிக்கொண்டு வந்த நகைப் பெட்டிகளையும், பணப் பெட்டிகளையும் கீழே போட்டு விட்டு ஓடிப்போயினர். இவன் பிறகு வீட்டிலுள்ளாரை எழுப்பி அந்தப் பெட்டிகளைக் காட்டினான்.
வீட்டிலுள்ளார் 'நடந்த விஷயமென்ன?' என்று விசாரித்தார்கள். இவன் நடந்த விஷயத்தைச் சொன்னான். அப்போது வீட்டார் இவனாலேயன்றோ திருடர் கன்னம் வைத்துத் தமது வீட்டுப் பொருளைக் கொள்ளையிடாமலும், தமதுடம்பிற்குத் தீங்கு செய்யாமலும் ஓடினார்கள் என்ற நன்றியுணர்ச்சியால் அந்த நகைப் பெட்டிகளையும் பணப் பெட்டிகளையும் இவனுக்கே கொடுத்துவிட்டார்கள்.
இவன் அந்தத் திரவியத்தையெல்லாம் தாயாரிடம் கொண்டு கொடுத்து:- "எனக்குக் கல்யாணம் பண்ணி வை அம்மா" என்றான்.
அவள் இவனை நோக்கி: "மகனே உனக்கு இந்த நிதியெல்லாம் எங்கே கிடைத்தது?" என்று கேட்டாள். இவன் நடந்த விவரங்களையெல்லாம் கூறினான். தாய் மிகவும் மகிழ்ச்சி கொண்டு, அவனுக்கு ஒரு பெரிய பிரபுவின் மகளைக் கல்யாணம் செய்வித்தாள். பிறகு எல்லாரும் சௌக்கியமாக நெடுங்காலம் வாழ்ந்து கொண்டிருந்தனர்." என்று சிங்கச்சி காமாக்ஷி கதை சொன்னாள்.
அப்போது உத்தண்டி: "இந்தக்கதையை என்ன நோக்கத்துடன் சொன்னாய்?" என்று கேட்டான்.
"உன் மனதிலிருந்த ஆயாசத்தை மாற்றி உனக்கு ஆறுதல் உண்டாக்கும் பொருட்டாகக் கதை சொன்னேன், வேறு நோக்கம் ஒன்றுமில்லை" என்றாள்.
"பார்த்தாயா! நாம் சண்டை தோற்று மானத்தையும் தேசத்தையும் பிராணனையும் சத்துருவிடமிருந்து காப்பாற்ற வேண்டுமே, அதற்கென்ன வழி செய்யலாமென்று கலங்கிக் கொண்டிருக்கிறோம். அந்தச் சமயத்தில் இவள் நம்மிடம் குழந்தைக் கதை பேசுகிறாள்! பார்த்தாயா! பெருச்சாளியாம், கோரையாம், பனைமரமாம், நரியாம்! என்ன பச்சைக் குழந்தை வார்த்தை!" என்று சொல்லி மிகவும் கோபத்துடன் உத்தண்டி அப்போது ஒரே பாய்ச்சலாக மனைவியின் மீது பாய்ந்து தன் நகங்களை அவளுடைய கழுத்தில் அழுத்தினான்.
சிங்கக் காமாக்ஷி லாவகத்தால் கழுத்தை திமிறிக்கொண்டு தன் கழுத்திலிருந்து இரத்தம் பொழிவதைக் கண்டு கோபத்துடன் தன் முன் வலக்காலால் உத்தண்டியின் முகத்தில் ஓங்கி அடித்தது.
உத்தண்டி பெருஞ்சினத்துடன் கண்ணில் தீப்பொறி பறக்க, மீசை துடிக்க, ஹா! என்று கர்ஜனை புரிந்து "அடி பேயே, உன்னை இந்தக் கணத்திலே கொன்று போடுகிறேன் பார்!" என்று சொல்லித் தன் மனைவியின் கழுத்தைக் கடித்து இரத்தம் குடிக்கலாயிற்று. காமாக்ஷி உத்தண்டியின் காலைப் பல்லினால் கவ்வி இரத்தத்தை உறிஞ்சத் தொடங்கிற்று. அப்போது சண்டையில் உண்டான சப்தத்தைக் கேட்டு காமாக்ஷியின் பாங்கிச் சிங்கங்கள் சில அங்கோடி வந்தன. அவற்றைக் கண்டு உத்தண்டியும் காமாக்ஷியும் வெட்டுப் பற்களை மீட்டுக் கொண்டன. உத்தண்டி அந்தப்புரத்தை விட்டு வெளியே சென்றான்.
பேய்க்காட்டு விஷயம் இப்படி இருக்க, உத்தண்டியிடமிருந்து அவனுடைய மாமனாராகிய குண்டோதர ராஜன் அரசு செலுத்தும் கடம்பவனத்துக்குத் தூது சென்ற நரிச்சி நல்லதங்கை எப்படியானாள் என்பதைக் கவனிப்போம்.
நரிச்சி கடம்ப வனத்திற்குப் போன போது தன் பல்லக்கு பரிவாரங்களுடன் நேரே குண்டோதரராய சிங்க மகாசிங்கருடைய மாளிகையில் போய் இறங்காமல் ஏதோ மனதுக்குள் ஒரு தந்திரத்தை எண்ணித் தனக்கு முந்திய நட்புடையவளாகிய விருத்திமதி என்ற எருமைச்சியின் வீட்டிலே போய் இறங்கினாள்.
விருத்திமதி பொன்னங்காட்டரமனைக்கு முன்னொரு முறை சென்றிருந்த போது அவளுக்கு வீரவர்மராஜன் பலவிதமான பரிசுகள் கொடுத்துத் தனது ராஜ பதவியைக் கருதாமல் மிகவும் அன்பான வார்த்தைகள் கூறி விடுத்ததை அந்த எருமைச்சி தன் வாழ்நாளில் மிகப் பெரிய விசேஷ மென்றெண்ணி வீரவர்மனிடம் பேரன்பு பூண்டவளாய் எப்போதும் அவனையே ஸ்மரித்துக் கொண்டிருந்தாள். எனவே நரிச்சி நல்ல தங்கை வந்தவுடன் எருமைச்சி விருத்திமதி அவளிடம் "வீரவர்மனும் அவனுடைய ராணி மாகாளியும் குழந்தைகளும் க்ஷேமந்தானா?" என்று விசாரித்தாள்.
அப்போது நரிச்சி நல்லதங்கை தான் வீரவர்மனிடமிருந்து பிரிந்து அவனுக்குத் துரோகியாய் உத்தண்டி ராஜாவிடம் வேலை பார்ப்பதாகத் தெரிந்தால் எருமைச்சி தன்னைத் துரத்திவிடுவாள் என்று யோசித்து "ஆம், எல்லாரும் க்ஷேமந்தான்" என்றாள்.
"நீ இப்போது நேரே பொன்னங்காட்டிலிருந்து தான் வருகிறாயா?" என்று விருத்திமதி கேட்டாள்.
நல்லதங்கை: "அன்று; நான் பேய்க்காட்டிலிருந்து வருகிறேன்" என்றாள்.
விருத்திமதி: "அங்கே எதற்காகப் போயிருந்தாய்?" என்றாள்.
நல்லதங்கை: "பேய்க்காட்டுக்கும் பொன்னங்காட்டுக்கும் சண்டையென்று நீ கேள்வியுற்றிருக்கக் கூடும். அந்தயுத்தம் நடப்பதை எப்படியேனும் தடுக்க வேண்டுமென்று கருதி, என்னை மாகாளி ராணி (வீரவர்மன் பத்தினி) சில செய்தி சொல்லிப் பேய்க்காட்டு ராணியாகிய காமாக்ஷியிடம் அனுப்பினாள். வந்த இடத்தில் காமாக்ஷி உங்கள் நாட்டரசனாகிய தன் பிதாவிடம் ஒரு ரகஸ்யமான செய்தி சொல்லி வரும்பொருட்டாக என்னை இங்கே அனுப்பினாள்" என்றதும்,
"என்ன ரகஸ்யம்?" என்று விருத்திமதி கேட்டாள்.
நல்லதங்கை: "காரியம் நிறைவேறு முன்னே அதை மிகவும் பிராண சிநேகிதராக இருப்போரிடத்திலேகூட அனாவசியமாகச் சொல்லக் கூடாது. சொன்னால் காரியம் கெட்டுப் போகும். ஆதலால் பொறு, நிறைவேறினபின் சொல்லுகிறேன்" என்று வாக்களித்தாள். நல்லதென்று சொல்லி விருத்திமதி தன்வீட்டுக்கு விருந்தாக வந்த நரிச்சிக்கு ராஜோபசாரங்கள் செய்தாள். பரிவாரங்களுக்கும் யதேஷ்டமாக ஆகாரம் கொடுத்தாள்.
பிறகு சாயங்காலமானவுடன் நரிச்சி நல்லதங்கை விருத்திமதியை நோக்கி "இப்போதெல்லாம் நீ அடிக்கடி அரண்மனைக்குப் போய் வருவதுண்டோ?" என்று கேட்டாள்.
விருத்திமதி ஆமென்றாள்.
"உங்கள் குண்டோதர சிங்கனுக்கு நான்கு மனைவிகள் உண்டன்றோ?" என்று நரிச்சி கேட்டாள்.
விருத்திமதி தலையசைத்தாள்.
"பட்டத்து ராணியின் பெயர் யாது?" என்று நரிச்சி கேட்டாள்.
"பட்டத்து ராணி பெயர் சுவர்ணாம்பா" என்று சொன்னாள்.
"பேய்க்காட்டு காமாக்ஷி தனது தாயின் பெயர் மீனாக்ஷி என்று சொன்னாளே" என்றாள் நரிச்சி.
அதற்கு விருத்திமதி: "ஆமாம். அந்த மீனாக்ஷி மூன்றாவது ராணி. பட்டத்து ராணியைக் காட்டிலும் மீனாக்ஷியினிடத்திலே தான் குண்டோதரராய சிங்க மகாசிங்கருக்கு அதிகப் பிரியம்" என்றாள்.
நரிச்சி நல்லதங்கை: "உனக்கு எந்த ராணியுடனே அதிக சிநேகம்?" என்று கேட்டாள்.
"பட்டத்து ராணியுடன்" என்று விருத்திமதி சொன்னாள்.
"உனக்கும் மீனாக்ஷிக்கும் பேச்சுண்டோ இல்லையோ?" என்று நரிச்சி கேட்டாள்.
விருத்திமதி: "பேச்சு வார்த்தை இல்லாமலென்ன? அதெல்லாம் உண்டு. போனால் வா என்று கூப்பிடுவாள். மஞ்சள் குங்குமமும் கொடுப்பாள். ஆனால் சுவர்ணாம்பா என்னிடம் தன்னுடைய அந்தரங்கங்களையெல்லாம் சொல்லுவது போலே மீனாக்ஷி சொல்ல மாட்டாள்" என்றாள்.
அப்போது நரிச்சி நல்லதங்கை: "அந்த மீனாக்ஷிக்கு அந்தரங்கமான சிநேகம் யார்?" என்று கேட்டாள்.
விருத்திமதி: "மல்லிச்சி மாணிக்கவல்லிக்கும் மீனாக்ஷிக்கும் உடம்பு இரண்டு, ஆனால் உயிர் ஒன்று" என்றாள்.
இப்படி இவ்விருவரும் சம்பாஷணை செய்து கொண்டிருக்கையில் திடீரென்று குண்டோதர ராய சிங்க மகாசிங்கருடைய சிப்பாய்கள் வந்து நரிச்சி நல்லதங்கையைக் கைது பண்ணி விலங்கு போட்டுக் கொண்டு போய்ச் சிறைப்படுத்தி விட்டனர். விலங்கு பூட்டும்பொழுது நரிச்சி கோவென்றழுதாள். விருத்திமதி "நல்லதங்காய், நீ பயப்படாதே. ஏதோ தவறுதலாக இவர்கள் வேலை செய்கிறார்கள் என்று தோன்றுகிறது. நான் போய் சுவர்ணாம்பாவிடம் சொல்லி உடனே உன்னை மீட்கிறேன்" என்று சொல்லி அரண்மனைக்குப் போனாள்.
-------------
கதம்ப வனத்தில் நடந்த செய்திகள்
அந்த விருத்திமதி வெயர்க்க வெயர்க்க ஓடியே வந்து சிங்கச்சி சுவர்ணா தேவியின் காலில் விழுந்தாள்.
"என்ன விஷயம்?" என்று சிங்கச்சி கேட்டாள்.
அப்போது விருத்திமதி சொல்லுகிறாள்:- "மகாராணியே, கேள். இன்று காலை என் வீட்டுக்குப் பொன்னங்காட்டிலிருந்து என் தோழியாகிய நரிச்சி நல்லதங்கை வந்தாள். அவளை என் வீட்டுக்குள் புகுந்து இந்த ராஜ்யத்தின் சிப்பாய்கள் கைது பண்ணிக் கொண்டு போயினர். ஏதோ தவறுதலாகவே இந்தக் காரியம் நடந்துவிட்டதென்று நினைக்கிறேன். யாரோ அவள்மீது குண்டோதர மகாசிங்கனிடம் குற்றம் சார்த்திப் பேசியிருக்கிறார்கள். அதனால் அவளுக்கு இந்தக் கதி நேரிட்டுவிட்டது.
"ஐயோ! நான் என்ன செய்வேன்? என்னுடைய உயிர்த் தோழியாயிற்றே! நான் இந்த அரண்மனைக்கு எத்தனையோ காலமாக உண்மையுடன் உழைத்து வருகிறேனே; என் வீட்டுக்கு வந்த தோழிக்குச் செய்யப்பட்ட அவமானம் எனக்கே செய்யப்பட்டது போலாகுமன்றோ?
மேலும் அவள் பொன்னங்காட்டு வீரவர்ம ராஜனைக் குழந்தைப் பருவ முதலாக வளர்த்த செவிலித்தாய். அந்தவீரவர்மன் இவளைத் தாய்க்குச் சமானமாக ஆதரித்து வருகிறான். இவளைப் பிடித்துக் குண்டோதர சிங்கர் அடைத்து வைத்திருக்கிறார் என்ற செய்தி கேட்டால், அவன் உடனே கதம்பவனத்தின்மீது படையெடுத்து வருவான். அவன் படையெடுத்து வருவான். அவன் படையெடுத்து வந்தால் அவனை எதிர்த்துப் போர் செய்ய நமது சைந்நியத்தால் முடியாது. நமது ராஜ்யம் அழிந்து போய்விடும். ஐயோ! வீரவர்மனை எதிர்த்தபடியாலே தண்டிராஜன் பட்ட பாடும், அவன் தம்பி உத்தண்டி இப்போது படுகிற பாடும் தெரியாதா?
மகாராணியே நீயும் நானும் இணைபிரியாமல் இரண்டு பக்ஷிகள் ஒரு கூட்டில் வாழும் முறைமையாலே, இருவரும் அன்பாகிய கூட்டில் வாழ்ந்து பல வருஷங்களாக ஒன்றுகூடி இருக்கிறோம். சூரியனுக்கும் குளப்பூவுக்கும் சிநேகமுண்டாகும்போது அவ்விரண்டுக்கும் சமானத் தன்மை உண்டாகிறது. மேலும் கீழும் அன்பினால் சமத்துவத்தை அடைகின்றன. உன்னைப் போல குலத்திலும், நலத்திலும், மகிமையிலும் சிறந்த சிங்கச்சிமார் எத்தனையோ பேர் உலகத்தில் இருக்கக்கூடும். உனக்கு அவர்கள் எல்லோரையும்விட என் மேலே அதிக அன்பு உண்டாயிருக்கிறது. நான் கீழ்க் குலத்திலே பிறந்தாலும். எப்போதும் என் கண்களில் பதுமை போலே உன்னை வைத்துக் கொண்டு போற்றுவதனால் நான் மகிமை பெற்று உன்னுடைய அன்புக்குப் பாத்திரமானேன்.
எனக்கு மகத்தான கஷ்டம் நேரிட்டிருக்கும்போது. நீ சகித்திருப்பது நியாயமன்று. எனக்கு நீயே துணை, நீயே தோழி, நீயே தாய், தந்தை, நீயே தெய்வம், எனக்கு உன்னைத் தவிர இந்த உலகத்தில் வேறு கதி கிடையாது. நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும்" என்று சொல்லிக் கோவென்றலறி அழுதாள்.
அப்போது சிங்கச்சி சுவர்ணாதேவி அவளைச் சமாதானப்படுத்திவிட்டு உடனே பக்கத்திலிருந்த பாங்கி ஒருத்தியைக் கூவி:- 'பெண்ணே, நீ போய் ராயசிங்கரை நான் அழைத்துவரச் சொன்னதாகச் சொல்லு. உடனே கூட்டிவா" என்றது.
சாயங்காலம் பொழுது புகுந்துவிட்டது. சிங்க குண்டொதரன் தனது ராஜதானியாகிய கதம்ப நகரத்திற்கு சமீபத்தில் ஓடும் நர்மதா நதியில் சாயங்கால ஸ்நானம் செய்து முடித்துவிட்டு சந்தியா வந்தனம் பண்ணிக் கொண்டிருந்தான். அந்த சமயத்தில் பாங்கி போய் காலிலே விழுந்தாள்.
"என்ன சங்கதி?" என்று கேட்டான்.
"பெரிய ஆபத்தாம், இன்னதென்று எனக்குத் தெரியாது. சுவர்ணாதேவி தேவரீரை உடனே அழைத்து வரும்படி கட்டளையிட்டார்" என்றது.
பயந்து, நடுங்கிப் போய் குண்டோதர சிங்க மகாசிங்கன் சந்தியாவந்தனத்தைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, அப்படியே ஓடி அந்தப்புரத்துக்குள் வந்தது. அங்கு வந்து பார்த்தால் விஷயம் ஒன்றையும் காணவில்லை. மூன்று ஆசனங்கள் போட்டிருந்தன. எருமைச்சி விருத்திமதி ஒன்றின் மேலே வீற்றிருந்தாள். மகாராணி சுவர்ணாதேவி ஒன்றில் வீற்றிருந்தாள். மற்றொன்று வெறுமே இருந்தது.
"என்ன விஷயம்?" என்று கேட்டுக் கொண்டே குண்டொதரன் அந்தப்புரத்திற்குள் புகுந்தான். இவனைக் கண்டவுடன் விருத்திமதியும் சுவர்ணாவும் தம் ஆசனங்களிலிருந்தெழுந்து நின்றனர். "என்ன விஷயம், என்ன விஷயம்?" என்று குண்டோதரன் நெரித்துக் கேட்டான்.
"விருத்திமதியிடம் கேளுங்கள். அவள் சொல்லுவாள்" என்று சுவர்ணா சொன்னாள்.
"ஓஹோ பெரிய விபத்து ஒன்றும் இல்லை, அந்த நரிச்சி விஷயம்தான். அவளை விடுவிக்கச் சொல்லி இந்த எருமைச்சி கேட்க வந்திருக்கிறாள். நாம் மடத்தனமாக அளவுக்கு மிஞ்சி மனம் பதற இடம் கொடுத்துவிட்டோம். இருந்தாலும் நம்முடைய பயத்தை வெளியே காண்பிக்கக்கூடாது" என்று மனதில் நினைத்துக் கொண்டு மீசைகளைத் திருகி விட்டு, லேசான ராஜநடை நடந்துபோய் மூன்றாம் ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டு குண்டொதரன் தொண்டையைக் கனைத்து நேராக்கிக் கொண்டு விருத்திமதியை நோக்கி "என்ன விஷயம்?" என்றான்.
அப்போது விருத்திமதி சொல்லுகிறாள்:- "ராஜேச்வரா, தங்களுடைய ராஜ்யத்திற்குப் பெரிய விபத்து நேரிட்டிருக்கிறது. தங்கள்மீது வீரவர்மன் படையெடுத்து வரப்போகிறான். இவ்வளவு காலம் இந்த ராஜ்யத்தில் சமாதானமிருந்தது. இப்போது பாழ்த்த யுத்தம் இங்கு வந்து பிரவேசிக்கப் போகிறது. ஐயோ, நாங்கள் என்ன செய்வோம்? குடிகளை எல்லாம் சுவர்ணாதேவி தன்னுடைய பெற்ற குழந்தைகளுக்குச் சமானமாக நினைப்பவளாயிற்றே! அவளுடைய பழக்கத்தால் எனக்கு இந்த ராஜ்யத்தினிடம் அருமையான பக்தி உண்டாய்விட்டதே! என் உயிருக்கு மாத்திரம் தீங்கு வருவதாக இருந்தால் நான் அதைப் பொருட்டாக நினைக்கமாட்டேனே! ராஜ்ய முழுமைக்கும் ஹானி வருகிறதே!
ஆஹா! என் செய்வேன்? எத்தனை சுமங்கலிகள் தாலி யறுப்பார்கள்! எத்தனை
தாய்மார் பிள்ளையற்றுப் போவார்கள்! எத்தனை குழந்தைகள் தந்தையற்றுப் போகும்! எத்தனை தாய்மார் பிள்ளைகளைச் சாகக் கொடுத்து எங்கும் தீராத துக்கத்துக்காளாய், பரத்திலும் புத் என்ற நரகத்திலும் விழும்படியாகும்!
ஐயோ, புத்திரர்களில்லாத பிதாக்கள், புத் என்ற நரகத்துக்குப் போவார்களென்று சாஸ்திரங்கள் திண்ணம் கூறுகின்றனவே! உமது புத்திரர்களே போரில் மடியும்படி நேர்ந்தாலும் நேரிடக்கூடுமே! அப்போது நீர் எப்படியெல்லாம் கஷ்டப்படுவீரோ, அறிகிலேன். தேவரீருடைய பிராணனுக்கே ஆபத்தல்லவா? நாங்கள் என்ன செய்வோம்? இனி நான் சுவர்ணாதேவியின் முகத்தில் எப்படி விழிப்பேன்?" என்று சொல்லிக் 'கோ' வென்று விம்மி விம்மி அழுதாள்.
குண்டோதர ராயன்:- "ஏன் அந்த வீரவர்மன் நம்மீது படையெடுத்து வரப்போகிறான்? அதை முதலாவது சொல்லு" என்று உறுமினான்.
அப்போது விருத்திமதி;- "தங்களுடைய சிப்பாய்கள் வீரவர்மனுடைய தாய்க்குச் சமானமான செவிலித்தாயைப் பிடித்துச் சிறைப்படுத்தி விட்டார்கள்! இந்த விஷயம் அவன் கேட்டால், க்ஷணம் கூட பொறுக்கமாட்டான். யுத்தம் வருவது நிச்சயம்" என்று சொன்னாள்.
இது கேட்ட குண்டோதர சிங்க மகா சிங்கராயன் "எனது சிப்பாய்களால் கைதி செய்யப்பட்ட வீரவர்மனுடைய செவிலித்தாயின் நாமம் யாது?" என்று வினவினான்.
"நரிச்சி நல்ல தங்கையம்மன்" என்று விருத்திமதி சொன்னாள்.
இதைக் கேட்ட குண்டோதர சிங்கராய மகாசிங்கன் கடகட கட கடகட கட வென்று சிரிக்க ஆரம்பித்தான்.
-------------
படிப்பவர்களுக்குச் சில செய்திகள்
கதைக்குள்ளே கதை சொல்கிற பான்மையில் அமைந்தவை இந்த நவதந்திரக் கதைகள். பஞ்ச தந்திரக் கதைகளைப் போன்ற கதைப் போக்குக் கொண்டது என்றும் கொள்ளலாம்.
தொடராக முதன் முதலாகச் சுதேச மித்திரன் பத்திரிகையில் 10-8-1916ஆம் தேதியிட்ட இதழில் பிரசுரமாகத் தொடங்கியது. இடைக்கிடையே சில சமயங்களில் கதைத் தொடர் பிரசுரமாகாமல் இருந்ததும் உண்டு. கதைத் தொடர் நிறைவு பெறவில்லை;
26-2-1918ஆம் தேதிய இதழோடு நின்று விடுகின்றது.
இந்தக் கதைகள் 1928 ஆம் வருஷம் பாரதி பிரசுராலயத்தாரால் நூலாக்கம் செய்யப்பட்டன,
பற்பல பதிப்பாளர்கள் இந்தக் கதை நூலைப் பிரசுரம் செய்திருந்த நிலையில், 1989 ஆம் ஆண்டு சென்னை பாலாஜி புத்தகக் கம்பெனியாரும் பாரதி பிரசுராலயம் பதிப்பித்திருந்த நூலை ஆதாரமாகக் கொண்டு மறு பிரசுரம் செய்திருந்தனர்.
மறு பதிப்பின் பிரதி "தினமணி” பத்திரிகைக்கு விமர்சனத்திற்காக அனுப்பப்பட்டிருந்தது.
நூலைப் பற்றிய மதிப்புரையைத் 'தினமணி' அலுவலகம் மூத்த எழுத்தாளர் - விமர்சகர் - க. நா. சு. என்று தமிழ் இலக்கிய வட்டாரத்தில் மதிப்புடன் அழைக்கப்பெற்ற திரு. க. நா. சுப்பிரமணியம் அவர்களிடமிருந்து பெற்றுப் பிரசுரம் செய்திருந்தது.
ஆனால், மதிப்புரை வெளியான சமயம் க.நா.சு. அவர்கள் உயிரோடு இல்லை . அதனால், "க.நா.சு. வின் கடைசி விமர்சனம்” என்று தலைப்பிட்டு நூலுக்கான மதிப்புரையை 9-9-1989இல் வெளியீடு செய்திருந்தது.
நூலைப் பற்றிப் பொருத்தம் கருதி கநாசு. அவர்களின் மதிப்புரை இங்கே பதிப்பிக்கப்படுகிறது.
--------------------
கருத்துகள்
கருத்துரையிடுக