சீனாவின் வரலாறு
வரலாறு
Back
சீனாவின் வரலாறு
வெ. சாமிநாத சர்மா
1. சீனாவின் வரலாறு
1. மின்னூல் உரிமம்
2. மூலநூற்குறிப்பு
3. சர்மாவின் பொன்னுரைகள்…….
4. பதிப்புரை
5. நுழையுமுன்…
6. வாசகர்களுக்கு
2. நாட்டு அமைப்பும் மக்கள் பண்பும்
3. ஆதி காலத்தில்
4. மன்னராட்சித் தொடக்கம்
5. நன்னெறி காட்டிய ஞானியர்
6. எழும்பிய சுவரும் எரிந்த நூல்களும்
7. ஹான் வமிசம்
8. இருட்டில் வெளிச்சம்
9. தாங் வமிசம்
10. ஸுங் வமிசம்
11. மங்கோலியர் ஆட்சி
12. மிங் வமிசம்
13. மஞ்சூ வமிசம்
14. அடங்கிவந்த ஐரோப்பியர்
15. பணிய மறுத்த பிரிட்டன்
16. அபினியைத் திணித்து அடக்க முயற்சி
17. அந்நியர் புகுதல் என்ன நீதி?
18. ஜப்பான் விழித்துக் கொள்கிறது
19. கலகம் செய்து கண்ட பயன்
20. ருஷ்ய- ஜப்பானிய யுத்தம்
21. குடியரசின் உதயம்
22. தொடக்கத்திலேயே கிரகணம்
23. முதல் உலகப் போரும் இளைஞர் இயக்கமும்
24. இருவகை அரசாங்கங்கள்
25. பொதுவுடைமையினரின் நடைப்பயணம்
26. மஞ்சூரியாவில் ஜப்பான்
27. பிடிபட்ட தலைவனை விடுவித்த வீரம்
28. சீன - ஜப்பானிய யுத்தம்
29. மக்கள் குடியரசு
30. சீன இலக்கியம்
31. சீனாவும் இந்தியாவும்
1. அனுபந்தம்-1
2. அனுபந்தம்-2
3. அனுபந்தம் - 3
4. கணியம் அறக்கட்டளை
சீனாவின் வரலாறு
வெ. சாமிநாத சர்மா
மூலநூற்குறிப்பு
நூற்பெயர் : சீனாவின் வரலாறு
தொகுப்பு : வெ. சாமிநாத சர்மா நூல்திரட்டு - 19
ஆசிரியர் : வெ. சாமிநாத சர்மா
பதிப்பாளர் : இ. இனியன்
முதல் பதிப்பு : 2006
தாள் : 16 கி வெள்ளைத் தாள்
அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 10.5 புள்ளி
பக்கம் : 24 + 352 = 376
நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்)
விலை : உருபா. 240/-
படிகள் : 1000
நூலாக்கம் : பாவாணர் கணினி, தி.நகர், சென்னை - 17.
அட்டை வடிவமைப்பு : இ. இனியன்
அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர், இராயப்பேட்டை, சென்னை - 14.
வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017., தொ.பே. 2433 9030
சர்மாவின் பொன்னுரைகள்…….
- மாந்தப்பண்பின் குன்றில் உயர்ந்து நில். ஒழுக்கத்தையும் தன்னம்பிக்கையையும் கைவிடாதே.
- பிறரிடம் நம்பிக்கையுடனும்; நாணயத்துடனும் நடந்து கொள். அது உன்னை உயர்த்தும்.
- உழைத்துக் கொண்டேயிரு; ஓய்வு கொள்ளாதே;உயர்வு உன்னைத் தேடி வரும்.
- பொய் தவிர்; மெய் உன்னைத் தழுவட்டும்; பெண்மையைப் போற்றி வாழ்.
- மொழியின்றி நாடில்லை; மொழிப் பற்றில்லாதவன்,நாட்டுப்பற்றில்லாதவன். தாய்மொழியைப் புறந்தள்ளி அயல்மொழியைப் போற்றுவதைத் தவிர்.
- தாய்மொழியின் சொல்லழகிலும் பொருளழகிலும் ஈடுபட்டு உன் அறிவை விரிவு செய். பெற்ற தாய்மொழியறிவின் விரிவைக் கொண்டு உன் தாய் மண்ணின் உயர்வுக்குச் செயல்படு.
- உயர் எண்ணங்கள் உயர்ந்த வாழ்க்கைக்கு அடித்தளம் முயற்சி- ஊக்கம் - ஒழுக்கம் - கல்வி இவை உன் வாழ்வை உலகில் உயர்த்தும் என்பதை உணர்ந்து நட.
- ஈட்டிய பொருளை அனைவருக்கும் பகிர்ந்தளித்து வாழக் கற்றுக்கொள். உதவா வாழ்க்கை உயிரற்ற வாழ்க்கை.
- கடமையைச் செய்; தடைகளைத் தகர்த்தெறி; விருப்பு-வெறுப்புகளை வென்று வாழ முற்படு.
- ஒழுக்கமும் கல்வியும் இணைந்து வாழ முற்படு; ஒழுக்கத்திற்கு உயர்வு கொடு.
- எந்தச் செயலைச் செய்தாலும் முடிக்கும் வரை உறுதி கொள். தோல்வியைக் கண்டு துவளாதே;
- உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் ஒரே நிலையில் வாழக் கற்றுக்கொள்.
- நாட்டுக்குத் தொண்டு செய்வது தரிசுநிலத்தில் சாகுபடி செய்வது; கண்ணிழந்தவர்களுக்குக் கண் கொடுப்பது.
- விழித்துக் கொண்டிருக்கும் இனத்திற்குத்தான் விடுதலை வாழ்வு நெருங்கிவரும். விடுதலை என்பது கோழைகளுக்கல்ல; அஞ்சா நெஞ்சினருக்குத்தான்.
சீனா
சில செய்திகள்……
- ஒரு இனத்தின் விடுதலை உணர்ச்சி மக்களோடு மக்களாக இரண்டறக் கலக்குமானால் அந்த விடுதலை உணர்ச்சியை எந்த வல்லாதிக்க அரசுகளாலும் அடக்க முடியாது என்பதைக் கண்களுக்குக் கண்ணாடி போல் காட்டும் சீனாவின் வரலாறு.
- உலகில் வாழ்விழந்து நிற்கும் இனங்களுக்கும், வாழத்துடிக்கும் இனங்களுக்கும் பாடமாக அமைந்த இனத்தின் வரலாறு.
- மக்களுக்காக மக்களே முன்னெடுக்கும் புரட்சியே நிலைத்து நிற்கக் கூடியது என்பதை உலகுக்கு காட்டும் உண்மை வரலாறு.
- மக்களின் பலத்தை மக்கள் மொழியில் பேசி விடுதலை உணர்வை உயிர்ப்பு நிறைந்த வேகத்தோடு உலக வல்லரசுகளின் பலத்துக்கு இணையாக வளர்த்தெடுத்த நாட்டின் வீரவரலாறு.
- பள்ளியுண்டு படிப்புண்டு என்றிருந்த சீன மாணவர்கள் படிப்பைத் தூக்கியெறிந்து விட்டு படையில் சேர்ந்து புரட்சி மாளிகையைக் கட்டியமைத்த வரலாறு.
- குமுகாயச் சீரழிவுகளின் இருப்பிடமாக இருந்த பிற்போக்குக் கூடாரத்திலிருந்து, முற்போக்கு எண்ணங்கொண்ட இளஞ்சீனர்கள் செயல் செய்யப் புறப்பட்டு மெய்ப்பித்துக் காட்டிய சீனா வின் வரலாறு.
- பழமையும் - புதுமையும் இணைந்த சீனப் பேரினத்தை உலக வல்லரசுகளின் நடுவில் தலை நிமிர்ந்து நடக்க வைத்த இளையர் இயக்கத்தின் வீரவரலாறு.
- உயிர்த்துடிப்பும், உன்னத வாழ்வும் வாழ்ந்து, உழைப்புக்கு உயர்வு தந்து உலகத்துக்கு முன்னோடியாக வாழும் பழம்பெரும் இனத்தின் வரலாறு.
- பழம் பெருமை பேசிப்பயனில்லை; விழிப்புடனிருக்கும் இனத்துக்குத்தான் வாழ்வுண்டு என்பதை உணர்த்தும் மூத்த இனத்தின் வரலாறு.
- வல்லாதிக்க நாடுகளின் கையாட்டிப் பொம்மையாக இருந்த சீன முடியரசுக்கு எதிராக, மக்களுக்கு அரசியல் அறிவை ஊட்டி குடியரசு மாளிகையை எழுப்பிய சீனப் பெருநிலம் எழுந்த வரலாறு.
- துரத்திவரும் பீரங்கிப் படைகளையும், வான்படைகளையும் துச்சமெனமதித்து இலட்சியப் பயணத்தில் ஒருமித்தக் குரலுடன் கைகோர்த்து நின்று வீரப்போர் புரிந்த இனத்தின் வரலாறு.
- ஒரு நாட்டின் விடியலுக்கு நூலறிவும் - உடல் வலிவும் தேவை என்பதை உணர்ந்து, கல்வி அறிவோடு புத்துணர்ச்சியைக் குழைத்து ஊட்டிய புதுமலர்ச்சி இயக்கத் (இளஞ்சீனரியக்கம்) தின் வரலாறு.
- அகவாழ்விலும் புறவாழ்விலும் பழம்பெருமைமிக்க சீன நாகரிகம் சிதைவுற்றபோது அதன் மறு வாழ்வுக்கு வழியமைத்து புத்தெழுச்சி ஊட்டிய சீனாவின் வரலாறு.
- கல்வி, அச்சு, தாள், பீங்கான், பட்டு, வெடிமருந்து, காந்தஊசி, போன்றவற்றை உருவாக்கி உலக நாகரிகத்துக்கு முன்னோடியாகத் திகழ்ந்த சீனாவின்வரலாறு.
- ஒரு இனம் தன் உரிமைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்கு சொல்லொணாத் துன்பங்களை நீந்தித்தான் ஆகவேண்டும் என்பதை உணர்த்தும் வரலாறு.
- ஆண்ட இனத்துக்கும் (மஞ்சு இனம்) ஆளப்பட்ட சீன இனத்துக்கும் ஏற்பட்ட மோதல்களும், பழமை படிந்த தனது நாட்டின் மீது புதுமை எண்ணங்கள் மூலம் அரசியல் பால் புகட்டிய சன்யாட்சென் மாபெரும் தலைவனாகவும், தந்தையாகவும் போற்றப்பட்ட வரலாறு.
- இனப்பற்றும் - மொழிப்பற்றும் - நாட்டுப் பற்றும் - தியாக உணர்வும் - சீலவாழ்க்கையும் நிரம்பியவர்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்களாக இருப்பினும், அரும்பெரும் செயலைச் செய்ய முடியும் என்பதை உலகுக்குக் காட்டும் வரலாறு.
- பல்வேறு அடிமை ஒப்பந்தங்களால் பிரிட்டன், பிரான்சு, செருமனி, உருசியா, அமெரிக்கா, சப்பான் ஆகிய வல்லாட்சிச் சுரண்டல் நாடுகள் சீனப்
பேரினத்தை சீரழித்தநிலையில் அவ்வினம் விழித்தெழுந்து நாட்டை மீட்டெடுத்த வரலாறு.
- நாட்டில் நல்லவர்களும் உண்டு. தீயவர்களும் உண்டு. கெட்டவர்களை ஓங்க விடாமல், நல்லவர்களை உயரச் செய்வதற்காக எழுதப் பட்ட நாட்டு வரலாறு.
பதிப்புரை
‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும்; கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்! என்ற இந்திய தேசியப் பெருங் கவிஞன் பாரதியின் உணர்வுகளை நெஞ்சில் தாங்கி உலகெங்கும் கொட்டிக் கிடந்த அறிவுச் செல்வங் களைத் தாய்மொழியாம் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்த பெருமையர் சாமிநாத சர்மா. பல்துறை அறிஞர்; பன்முகப் பார்வையர்; தமிழக மறுமலர்ச்சிச் சிந்தனையாளர்களில் ஒருவர்; தமிழ் கூறும் நல்லுலகம் புதியதோர் கருத்துக்களம் காண உழைத்தவர்; தமிழுக்கு உலகச் சாளரங்களைத் திறந்து காட்டிய வரலாற்றறிஞர்.
அவர் காலத்தில் நிகழ்ந்த உலக நிகழ்வுகளை தமிழர் களுக்குப் படம் பிடித்துக் காட்டியவர். அரசியல் கருத்துகளின் மூலம் புத்துணர்ச்சியும் விடுதலை உணர்ச்சியும் ஊட்டி வீறு கொள்ளச் செய்தவர். உலக அரசியல் சிந்தனைகளைத் தமிழில் தந்து தமிழிலேயே சிந்திக்கும் ஆற்றலுக்கு வழிகாட்டியவர். தாம் வாழ்ந்த காலத்து மக்களின் பேச்சு வழக்கையே மொழிநடையாகவும், உத்தியாகவும்கொண்டு நல்ல கருத்தோட்டங் களுக்கு இனிய தமிழில் புதிய பொலிவை ஏற்படுத்தியவர்.
தமிழ் மக்களுக்கு விடுதலை உணர்வையும்; தேசிய உணர்வையும்; சமுதாய உணர்வையும் ஊட்டும் வகையில் அரும்பணி ஆற்றியவர். தமிழ்ப்பண்பாட்டின் சிறப்புக்களைப் போற்றியவர்; பொருளற்ற பழக்க வழக்கங்களைச் சாடியவர். தமிழ் மட்டுமே தெரிந்த தமிழர்களும் உலகளாவிய அரசியல் பார்வையைப் பெறுவதற்கு வழி அமைத்தவர். மேலை நாட்டறிஞர்களின் தத்துவச் சிந்தனைகளை எளிய இனிய தமிழில் தந்தவர். வரலாற்று அறிவோடு தமிழ்மொழி உணர்வை வளர்த்தவர். அரசியல் தத்துவத்தை அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ்நாட்டுத் தலைவர்களுக்குக் கற்றுத் தந்தவர். தமிழகத்தின் விழிப்பிற்கு உழைத்த முன்னோடிகளில் ஒருவர்.
கல்வியில் வளர்ந்தால்தான் தமிழர்கள் உலகில் உயர்ந்து நிற்க முடியும் என்பதை தம் நூல்களில் வாயிலாக உணர்த்தியவர். நன்மையும் தீமையும் இருவேறுநிலைகள்; தீமையை ஓங்கவிடாமல் நன்மையை ஒங்கச் செய்வதே மக்களின் கடமையென்று கூறியவர்.
சாதிப்பித்தும், சமயப்பித்தும், கட்சிப்பித்தும் தலைக்கேறி தமிழ்க் குமுகாயத்தைத் தலைநிமிரா வண்ணம் சீரழித்து வருகின்றன. மொழி இன நாட்டுணர்வு குன்றிக் குலைந்து வருகிறது. இச்சீரழிவில் இருந்து தமிழர்களை மீட்டெடுக்க வேண்டும். இழிவான செயல்களில் இளம் தலைமுறையினர் நாட்டம் கொள்ளாத நிலையை உருவாக்குவதற்கும், மேன்மை தரும் பண்புகளை வளர்த்தெடுப்பதற்கும், அதிகாரப் பற்றற்ற - செல்வம் சேர்க்க வேண்டுமென்ற அவாவற்ற - செயல் திறமையைக் குறிக்கோளாகக் கொண்ட - பகுத்தறிவுச் சிந்தனையை அறிவியல் கண்கொண்டு வளர்த்தெடுக்கும் உணர்வோடு இந்நூல்களைத் தந்துள்ளோம்.
தன் மதிப்பும், கடமையும், ஒழுங்கும், ஒழுக்கமும், தன்னல மின்றி தமிழர் நலன் காக்கும் தன்மையும், வளரும் இளந்தலை முறைக்கு வேண்டும். இளமைப் பழக்கம் வாழ்நாள் முழுவதும் உதவும். விடாமுயற்சி வெற்றி தரும்; உழைத்துக் கொண்டே இருப்பவர்கள் எந்தச் செயலிலும் வெற்றி பெறமுடியும் எனும் நல்லுரைகளை இளம் தலைமுறை தம் நெஞ்சில் கொள்ள வேண்டும் என்ற மனஉணர்வோடு இந்நூல் தொகுதிகள் வெளியிடப்படுகின்றன.
சர்மா தாம் எழுதிய நூல்களின் வழியாக மக்களிடம் பேசியவர். இவர் நூல்களைப் படிப்பவர்களுக்கு அந்தந்த நூல்களின் விழுமங் களோடு நெருக்கம் ஏற்படுவது உறுதி. இவரின் உரைநடை நீரோட்டம் போன்றது. தமிழ் உரைநடைக்குப் புத்துயிர் ஊட்டிப் புதுவாழ்வு அளித்தவர். வேம்பாகக் கசக்கும் வரலாற்று உண்மைகளை சர்க்கரைப் பொங்கலாக தமிழ்க் குமுகாயத்திற்குத் தந்தவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என்று போற்றப்பட்ட இவரின் நூல்கள் தமிழ்க் குமுகாயத்திற்கு வலிவும், பொலிவும் சேர்க்கும் என்ற தளராத உணர்வோடு தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம்.
முன்னோர்கள் சேர்த்து வைத்த அறிவுச் செல்வங்களைத் தேடித் தேடி எடுத்து நூல் திரட்டுகளாக ஒரு சேர வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தொகுப்பு நூல் பதிப்பகம் என்பதை நிலை நிறுத்தி வருகிறோம். சாமிநாத சர்மா 78 நூல்களை எழுதியுள்ளார். இதில் நாட்டு வரலாற்று நூல்கள் 12 இப்பன்னிரண்டையும் 8 நூல் திரட்டுகளில் அடக்கி வெளியிடுகிறோம். 29 நூல்கள் 11 நூல் திரட்டுகளாக மிக விரைவில் தமிழ் கூறும் உலகுக்கு வழங்க உள்ளோம்.
இவரின் தமிழ் நூல்கள் வெளிவந்த காலம் வடமொழி ஆளுமை ஒங்கியிருந்த காலமாகும். அந்தக் காலப் பேச்சு வழக்கையே மொழி நடையின் போக்காக அமைத்துக் கொண்டு நூலினை உருவாக்கியுள்ளார். மரபு கருதி உரை நடையிலும், மொழி நடையிலும், நூல் தலைப்பிலும் எந்த மாற்றமும் செய்யாது நூலை அப்படியே வெளியிட்டுள்ளோம்.
தமிழ் இளம் தலைமுறைக்கும், எதிர்வரும் தலைமுறைக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காக சர்மாவின் நூல்களைப் படைக்கருவிகளாகத் தந்துள்ளோம். தமிழ்க் குமுகாயம் வலிமையும், கட்டமைப்பும் மிக்கப் பேரினமாக வளர வேண்டும்; வாழவேண்டும் என்ற உணர்வோடு இந்நூல் தொகுப்புகளை உங்கள் கைகளில் கொடுத்துள்ளோம்.
நாட்டு வரலாற்றுத் தொகுதிகளுக்கு தக்க நுழைவுரை வழங்கி பெருமைப்படுத்தியவர் ஐயா. பி. இராமநாதன் அவர்கள். இப்பெருந்தகை எம் தமிழ்ப்பணிக்கு பெரிதும் உதவியாக இருந்து வருகிறார். அவருக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் உரித்தாக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற இந்தியத் தேசியப் பெருங்கவிஞன் பாரதியின் குரலும், ஒற்றுமையுடன் தமிழர் எல்லாம் ஒன்று பட்டால் எவ்வெதிர்ப்பும் ஒழிந்து போகும், என்ற தமிழ்த்தேசியப் பெருங்கவிஞன் பாரதிதாசனில் குரலும் தமிழர்களின் காதுகளில் ஓங்கி ஒலிக்கட்டும். உணர்வுகள் ஊற்றாகப் பெருகி நல்ல செயல்களுக்கு வழிகோலட்டும்.
பதிப்பாளர்
நுழையுமுன்…
சீனா
சீனாவில் 1.10.1949 இல் மாசேதுங் தலைமையில் பொதுவுடைமை ஆட்சி நிறுவப்பட்டது. அதற்கு முந்தைய சீனவரலாற்றில் முக்கியமான மைல்கற்கள் சில வருமாறு
கி.மு. 1500 - 1000 ஷாங் (SHANG) பரம்பரை ஆட்சி. இன்றைய சீனப் படவெழுத்தின் முன்னோடி உருவாயிற்று.
கி.மு. 1000-221 சௌ (CHOU) பரம்பரை ஆட்சி. கன்பூசிய, லாவோட்செ காலம். கி.மு. 6 ஆம் நூற்றாண்டு.
கி.மு. 221-207 சீன் (CHIN) பரம்பரை ஆட்சி; சீனப் பெருஞ்
சுவர் கட்டப்பட்டது. சீனப் பேரரசர் ஷி ஹுவாங் எல்லாப் புத்தகங்களையும் கொளுத்திவிட ஆணையிட்டார்.
202- கி.பி. 200 ஹான் (HAN) பரம்பரை ஆட்சி
கி.பி 200-618 பல்வேறு பரம்பரைகள்
கி.பி. 618-907 டாங் (TANG) பரம்பரை. சீனவரலாற்றின் பொற்காலம் மரப்பலகையில் எழுத்துக்களைச் செதுக்கி அச்சிடும் முறை உருவாகியது (Wood block Printing)
கி.பி. 907-1368 யுவான் (YUAN) (மங்கோலியர்) பரம்பரை.
கி.பி. 1368-1644 மிங் (MUNG) பரம்பரை.
கி.பி. 1644-1911 மஞ்சூரியரான் சீஇங் CH’ING பரம்பரைஆட்சி.
கி.பி. 1800 சீனாவில் ஹாங்காங், மகாவோ இரண்டு ஊர்களில் மட்டுமே வெள்ளைக் கொள்ளையர்கள்
கி.பி. 1840- 1842 முதல் அபினிப்போர் (சீனர் சமுதாயத்தை ஒட்டு மொத்தமாக நாசமாக்கிய அபினியை (OPIUM) சீனாவிற்குள் இறக்குமதி செய்து விற்க உரிமை உண்டு என்று ஆங்கிலேயர் வலியுறுத்தி வென்ற போர்).
கி.பி. 1858 இரண்டாவது அபினிப்போர்.
கி.பி. 1851-1863 தைப்பிங் கலகம் தென்சீனாவில் ஏழைகள் தொடங்கியது; ஹங்சியு சுவான் தலைமையில்; பின்னாள் இயக்கங்களுக்கு முன்னோடி.
கி.பி. 1860-1908 பேரரசி ட்சூ ஹ்சி (TZU HSI) ஆட்சி.
கி.பி. 1842,1858,1875,1901 சீனாவைச் சுரண்ட அந் நாட்டின் மீது வெள்ளையர் திணித்த பல்வேறு ஒப்பந்தங்களின் (நாங்கிங் - போக்; டியென்ட்சின், செபூ, பாக்சர் ஒப்பந்தங்கள்) வெள்ளையர் நாடுகள் சீன வெள்ளரிப்பழத்தை பங்குபோட்டு விழுங்குவது carving the Chinese melon’ என்ற நூறாண்டுச் சதியில் இவை பல்வேறு நிலைகளாகும்.
கி.பி. 1894 - 1895 சீனா - சப்பான் போர்: ஷி மோனோசெகி உடன்படிக்கை (சீனக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த கொரியா தனிநாடு ஆக்கப்பட்டது. பார்மோசா தீவு சப்பானுக்கு.
கி.பி. 1900 பாக்சர் (BOXER) கலகத்தை வட சீனாவில் - ரகசிய கழகங்கள் (Righteous harmonius fists) நேர்மையுணர்வு கொண்ட முஷ்டிகள்) நடத்தின - பேரரசியின் மறைமுக ஆதரவுடன்.
கி.பி. 1908 ட்சூ ஹ்சிபேரரசி சாவு; சிறுவன் ஹ்சுவான் துங்(பூ-யி) Hsuan t’ung (Pu - Yi) பேரரசன் ஆனான்.
கி.பி. 1911 சீனப்புரட்சி சன்யாட்சென் தலைமையில். பின்னர் இவர் தளபதி யுவான்ஷி காய் (YUAN SHI KAI) இடம் ஆட்சியை ஒப்படைத்தார்.
கி.பி. 1915 சப்பான் சீனாவுக்கு விடுத்த 21 அக்கிரமமான கோரிக்கைகள்.
கி.பி. 1917 சப்பானுக்கும் மஞ்சூரியாவில் உரிமை தரும் லான்சிங் (அமெரிக்கா) - இஷி (சப்பான்) ஒப்பந்தம்.
கி.பி. 1917-1928 சீனாவெங்கும் சிறு சிறு தளபதிகள் ஆட்சி (rule of War Lords).
கி.பி. 1928-49 கோமிண்டாங் (ஷியாங்காய் ஷேக்) ஆட்சி.
கி.பி. 1937-1945 சப்பான் - சீனாபோர் (1939 ல் இரண்டாம் உலகப்போருடன் இணைந்துவிட்டது.
கி.பி. 1934- 1935 மாசேதுங் (1893-1976) நீண்ட பயணம் Long march
கி.பி. 1945-1949 சீனாவில் உள் நாட்டுப்போர்; உருசிய உதவியுடன் பொதுவுடைமையர் வெற்றி.
பி. இராமநாதன்
நூலாக்கத்திற்குத் துணை நின்றோர்
_நூல் கொடுத்து உதவியோர்_ _ஞானாலயா_ கிருட்டிணமூர்த்தி வாழ்விணையர், பெ.சு. மணி,
_புலவர்_ கோ. தேவராசன், முனைவர் இராகுலதாசன், முனைவர் இராம குருநாதன், முத்தமிழ்ச் செல்வன் க.மு., ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
_நூல் உருவாக்கம்_ _நூல் வடிவமைப்பு_ செ. சரவணன்
_மேலட்டை வடிவமைப்பு_ இ. இனியன்
_அச்சுக்கோப்பு_ _முனைவர்_ செயக்குமார், மு. கலையரசன், சு. மோகன், குட்வில் செல்வி, கீர்த்தி கிராபிக் பட்டு, விட்டோபாய்
_மெய்ப்பு_ _முனைவர்_ செயக்குமார், வே.மு. பொதியவெற்பன், கி. குணத்தொகையன், உலோ. கலையரசி, அ. கோகிலா, கு. பத்மப்பிரியா, நா. இந்திராதேவி, இரா. நாகவேணி, சே. சீனிவாசன்
_உதவி_ அரங்க. குமரேசன், வே. தனசேகரன், நா. வெங்கடேசன், மு.ந. இராமசுப்ரமணிய இராசா
_எதிர்மம் (Negative)_ பிராசசு இந்தியா (Process India)
_அச்சு மற்றும் கட்டமைப்பு_ வெங்கடேசுவரா மறுதோன்றி அச்சகம் (Venkateswara Offset Printers)
இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . .
வாசகர்களுக்கு
சீனாவின் சரித்திரம், நீளமானது. அதன் நாகரிகம், ஆழமானது. இரண்டிலும் ஈடுபட்டு வியந்து பேசியிருக்கிற மேலை நாட்டு அறிஞர் பலர். வால்ட்டேர் என்ற பிரெஞ்சு பண்டிதன், சீன சமுதாயம், சென்ற நாலாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, அதனுடைய சட்ட திட்டங்களிலும், பழக்க வழக்கங்களிலும், பேச்சு மொழிகளிலும், அணியும் உடை மாதிரிகளிலுங் கூட எவ்விதமான மாறுதலையும் அடையாமல் ஒரே படித்தாய் இயங்கி வருகிறது என்று கூறுகிறான். சமுதாய ஒப்பந்தத்தின் ஆசிரியனாகிய ரூஸோவுடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்த டிடெரோ என்ற மற்றொரு பிரெஞ்சுப் புலவன், பழமை, கலை, விவேகம், ஞான பரிபக்குவம், விவகார சாமர்த்தியம், தத்துவ சாதிரத்தில் ருசி, இப்படிப் பலவகையிலும் சீனர்கள், மற்ற ஆசியாக்காரர்களை விட மேலானவர்களாயிருக்கிறார்கள். அது மட்டுமன்று; மிகவும் முன்னேற்ற மடைந்துள்ள ஐரோப்பிய இனத்தவரோடும் இந்த விஷயங்களில் போட்டி போடக் கூடியவர்களாயிருக்கிறார்கள் என்று சொல்லுகிறான். கெய்ஸர்லிங் என்ற ஜெர்மானிய அறிஞன், உலகனைத்திற்கும் பொதுவான தொரு பண்பாட்டை சீனா படைத்துக்கொடுத்திருக்கிறது. பெரிய மனிதர்களென்று சொல்லப் பெறும் சீனர் பலரும், பண்பாட்டில் நம்மவர்களை (ஐரோப்பியர்களை)க் காட்டிலும் மேலானவர்களாகவே இருக்கின்றனர். பண்பாடுள்ள ஒரு சீனன், மற்றவர்களிடம் காட்டும் மரியாதை எவ்வளவு நிறைவுடையதாயிருக்கிறது! எல்லா மனிதர்களைக் காட்டிலும், சீனன்தான் மிகத் தெளிந்த அறிவுடையவன் என்று சொல்லலாம் என்று பகர்கிறான். பெர்ட்ராண்ட் ரஸல் என்ற ஆங்கில மேதை சீனர்கள், ஒருவிதமான வாழ்க்கைப் போக்கைக் கண்டு பிடித்து நூற்றாண்டுகள் கணக்கில் அனுஷ்டித்து வருகிறார்கள். அதனை உலக மக்கள் பின்பற்றுவார்களானால், உலகனைத்தும் சந்தோஷமாயிருக்கும் என்று உரைத்திருப்பது, சந்தோஷத்திற்கு வழி தேடிக் கொண்டிருப்பவர் களை உற்சாகப் படுத்துவதாயிருக்கிறது.
இவர்களைப் போல் இன்னும் சில அறிஞர்களும் பேசியிருக் கிறார்கள். இவர்களுடைய இந்தப் புகழ் மொழிகள், சீனாவைப் பொறுத்த மட்டில் சரிதான்; சீனாவுக்குரியவைதான். இவைகளைக் கொண்டு சீனர்கள் பெருமையடைவார்களானால் அது நியாயமே. இந்தப் புகழ் மொழிகள் அவர்கள் நினைவில் ஊற, ஊற அதே விகிதாசாரத்திற்கு, அவர்கள் நாட்டைச் சுரண்டியும் சீரழித்தும் வந்த சக்திகள், அந்த நினைவிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்குமல்லவா?
ஆனால் இந்த அறிஞர்கள், சீனாவை, பிற நாடுகளுடன் ஒப்பிட்டுக் காட்டியிருப்பதை எல்லா நாட்டவரும் அப்படியே ஏற்றுக் கொள்வார் களாவென்பது சந்தேகமே. யார் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளா விட்டாலும், பாரத நாட்டார் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஏனென்றால், சீனர்களுக்கு எந்தெந்தப் பண்புகள் சொந்தமானவையென்று இந்த அறிஞர்கள் கூறுகிறார்களோ, அந்தப் பண்புகள் யாவும் பாரத மக்களுக்கும் சொந்தந்தானே? பரம்பரையாக வந்து கொண்டிருக்கும் சொத்துக்கள் தானே? இந்த உண்மை, மேலே சொல்லப் பெற்ற அறிஞர்களுக்குத் தெரியாமலிராது. சீனாவின் சரித்திரத்திலும் நாகரிகத் திலும் தங்களுக்குள்ள ஈடுபாட்டைப் புலப்படுத்திக் கொள்கின்ற முறையில் இப்படிப் பேசியிருக்கிறார்களே தவிர, பிற நாடுகளின் சரித்திரத்தையோ, நாகரிகத்தையோ, மறந்தோ, தெரியாமலோ பேசியிருக்கிறார்களென்று சொல்ல முடியாது; கொள்ளவும் கூடாது. இஃது இருக்கட்டும்.
சீனாவின் நீண்டகால சரித்திரத்திலிருந்து, புதிதாகச் சுதந்திரம் பெற்ற நாடுகளும், சுதந்திர வாழ்விலே தலை கனத்துப் போயிருக்கிற நாடுகளும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் பல உண்டு. ஒரு சில வற்றை மட்டும் இங்குக் குறிப்பிட்டுக காட்டுதல் நல்லதென்று தோன்றுகின்றது.
ஏதோ ஒரு விதமான ஆதிக்க சக்தி நம்மை ஆட்கொள்ள முற்படுமானால், அதனை, நமது சொந்த பலத்தைக் கொண்டே எதிர்த்துப் போராடி அப்புறப் படுத்த வேண்டுமே தவிர, வேறொரு சக்தியின், அதாவது நமக்கு எல்லா விதத்திலும் அந்நியமாயுள்ள சக்தியின் துணையை நாடுதல் சரியன்று; சரியன்று என்பது மட்டுமில்லை; நமக்குப் பேராபத்து. எந்தச் சக்தியின் துணையை நாடுகின்றோமோ அந்தச் சக்தி, தன்னை நாடிவரும் நம்மைக் கைலாகு கொடுத்து வரவேற்கும்; நமது நிலைமைக்கு இரங்குவதாகத் தெரிவித்து, நமக்கு வேண்டிய உதவிகளைச் செய்யக் காத்துக் கிடப்பதாகத் தெரிவிக்கும்; நம்மை ஆட்கொள்ள முற்பட்டிருக்கும் ஆதிக்க சக்தியை அப்புறப்படுத்தி விடுவதோடு மட்டுமல்ல, அழித்து ஒழித்து விடுவதாகவும் உறுதி கூறும். இந்தப் பசப்பு வார்த்தைகளில் நாம் மயங்கிப் போய், அதனை நம்மிடத்திற்கு அழைப்போம். அதுவும் உற்சாகத்தோடு வந்து, நம்முடைய பலத்தையே துணையாகக் கொண்டு நம்மை ஆட்படுத்த வந்த ஆதிக்க சக்தியை அழித்து ஒழித்து விடும். பிறகு? அதுவே, நமது குரல்வளையைப் பிடித்து விடும். நம்முடைய இடமும் நாமும் அதன் ஆதிக்கத்திற்குட்பட வேண்டியதுதான். நம்முடையதென்று சொல்லிக் கொள்ளக் கூடிய எதுவும் இராது. ஸுங் வமிச ஆட்சி முற்றுப் பெற்றதற்கும் மங்கோலியர் ஆட்சி ஏற்பட்டதற்கும் காரணமாயிருந்த நிகழ்ச்சிகளை வாசகர்கள் படித்துச் சிந்திக்க வேண்டும்.
இதே பிரகாரம், உள்நாட்டில் ஏற்படும் கலகங்களையோ குழப்பங்களையோ சமாளிக்க, வெளிநாட்டின் படை உதவியையோ பண உதவியையோ கோரக்கூடாது. அதனால் வெளிநாட்டுக்கு, நம்முடைய பலவீனம் புலப்பட்டு விடுவதோடு, நம்முடைய தன்மதிப்புக்கும் பங்கம் ஏற்படும். அதுமட்டுமன்று; உள் நாட்டிலும் நமது செல்வாக்கு குன்றும். நாம் செலுத்தும் ஆணைகள் செல்லுபடியாகாமற் போகும். பொதுவாக, உள்நாட்டின் அரசியல் வாழ்வில் புரைசல்கள் பல ஏற்பட்டு விடும். அதிகாரவெறி பிடித்த த்ஸுஹ்ஸியின் ஆட்சியையும், யுவான் ஷிகாயின் சொற்பகால நிருவாகத்தையும் அன்பர்கள் விமர்சனம் செய்து பார்த்தல் நல்லது.
நீண்டகாலமாக ஏதோ ஒருவித ஆதிக்கத்துக்கு அடிமைப்பட்டிருந்த ஒரு நாடு, அந்த ஆதிக்கத்திலிருந்து விடுதலைபெற, பலாத்காரத்தின் துணைகொண்டு புரட்சி நடத்தி, வெற்றி பெற்றுச் சுதந்திரமடைந்து விடுகிறது. அடைந்த தறுவாயிலேயே உள்நாட்டுச் சண்டைக்கு இரையாகி விடுகிறது. இதன் காரணத்தை அறிந்து கொள்ள அவசியம்.
அடிமைப்பட்டிருந்த காலத்தில், எல்லோருக்கும், அடிமைத்தனத்தி லிருந்து விடுதலை பெறவேண்டுமென்ற ஒருமையுணர்ச்சி இருந்தது. இந்த உணர்ச்சி, சகோதரத்துவத்தையும் தியாக சக்தியையும் வளர்த்துக் கொடுத்தது. இந்த வளர்ச்சியில், பரபர பொறாமை, பகைமை முதலிய யாவும் மறைந்து ஒடுங்கியிருந்தன. விடுதலை ஒன்றே குறிக்கோளாயிருந்தது. விடுதலை யடைந்து, சுதந்திரம் பெற்ற பிறகு, ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. விடுதலைக்காகப் போராடிய, தியாகங்கள் பல செய்த பலருள், ஒரு சிலருக்கே ஆட்சி பீடத்தில் அமரும் வாய்ப்பு கிட்டுகிறது. கிட்டாதவர்கள், தங்களுக்கும் அந்த ஆட்சி பீடத்தில் அமரும் உரிமையும் தகுதியும் உண்டென்று கருதுகிறார்கள். இந்தக் கருத்துக் கொண்டவர்கள், ஏரோ ஒரு காரணத்தைக் காட்டி, தனிக் கட்சியினராகப் பிரிகிறார்கள். ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருக்கிறவர்களும் அவர்களைச் சார்ந்திருக்கிறவர்களும் வேறு கட்சியினராகிறார்கள். பிரிவினை உணர்ச்சி லேசாகத் தலைகாட்ட ஆரம்பிக்கிறது. விடுதலைக்காகப் போராடி வந்த காலத்தில் மறைந்து ஒடுங்கியிருந்த பொறாமை, பகைமை முதலியவை காலக்கிரமத்தில் வெளியே வந்து தலைவிரித்தாடத் தொடங்குகின்றன. விளைவு என்ன? உள்நாட்டுச் சண்டை. பலாத்கார சக்தியின் துணைகொண்டு விடுதலை யடைந்தவர்கள், அந்த விடுதலையின் பயனை அனுபவிப்பதற்கும் பலாத்கார சக்தியின் துணையையே நாட வேண்டியவர்களாகி விடுகிறார்கள்.
உள்நாட்டுச் சண்டைக்கு இன்னொரு காரணத்தையும் கூறலாம். விடுதலைக்குமுன், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் எல்லோரும் அல்லது பெரும்பாலோர், லட்சியவாதிகளாயிருக்கிறார்கள். விடுதலை என்ற லட்சியம் ஒன்றே இவர்களை ஒன்றுபட்டிருக்கும்படி செய்கிறது. விடுதலைக்குப்பிறகு, லட்சியவாதிகளாயிருந்த சிலர் ஆட்சி பீடத்தில் அமர்ந்ததும் பிரத்தியட்சவாதிகளாகி விடுகிறார்கள். அப்படி ஆகவேண்டியது அவசியமாகிறது. எந்த ஒன்றிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டியவர்களாகிறார்கள். இல்லாவிட்டால் நிருவாக இயந்திரம் ஒழுங்காக இயங்காது. இவர்களைத் தவிர்த்த மற்றவர்களோ, லட்சியவாதிகளாகவே இருந்து கொண்டு எந்த ஒன்றிலும் தீவிரத்தையோ வேகத்தையோ எதிர்பார்க்கிறார்கள். எதிர்பார்க்கிற அளவுக்கு நிருவாக யந்திரத்தை இயக்குவோர் செல்லாவிட்டால் அவர்கள் மீது ஆத்திரப்படுகிறார்கள். அவர்களுடைய லட்சியம், பிரத்தியட்சத்தில் கரைந்து விட்டதாகக் கருதி, அவர்களுடைய ஒவ்வொரு செயலிலும் சந்தேகங் கொள் கிறார்கள்; பதவிமோகம் பிடித்தவர்களென்று அவர்கள் மீது குற்றஞ்சாட்டுகிறார்கள். இங்ஙனம் சந்தேகங் கொள்ளுதலும், குற்றஞ்சாட்டுதலும், காலக்கிரமத்தில் உள்நாட்டுச் சண்டைக்கு வித்துக்களா யமைந்து விடுகின்றன.
ஜார் ஆட்சியிலிருந்து ருஷ்யாவும், பிரிட்டிஷ் ஆதிக்கத்தினின்று ஐர்லாந்தும, மஞ்சூ ஆட்சியிலிருந்து சீனாவும் முறையே விடுதலை பெற்ற பிறகு, அந்த நாடுகளில் விளைந்த உள்நாட்டுச் சண்டைகளை, இந்தச் சந்தர்ப்பத்தில் அன்பர்கள் நினைத்துப் பார்க்கலாம்.
எந்த நாட்டில் ஆட்சி பீடத்திலமர்ந்திருக்கிறவர்கள், அவர்கள் பரம்பரை பாத்தியதை யுடையவர்களாயிருந்தாலுஞ்சரி, ஜனப் பிரதிநிதிகளாயிருந்தாலுஞ்சரி, ஜனசக்தி யென்ப தொன்றுண்டு என்பதை உணராமலும், உணர்ந்தாலும், தங்களுடைய படைபலத்தையும் பணபலத்தையும், ஏகதேசமாக வெளி நாட்டாருடைய உதவியையும் அதிகமாக நம்பி அதனை, அந்த ஜனசக்தியை வெறும் பிண்டமாகக் கருதி அலட்சியப் படுத்திவிட்டும் அல்லது அடியோடு புறக்கணித்து விட்டும் அரசாங்கக் கப்பலைச் செலுத்தி வருகிறார்களோ, அந்த நாட்டில், அந்த ஜனசக்தியானது, காலம் பார்த்து, தனக்கு மூச்சு உண்டு, அசைவு உண்டு, துடிப்பு உண்டு என்று நிரூபித்துக் காட்ட முயலும். இந்த முயற்சி, ஆரம்பத்தில் அற்பமானதாகத் தோன்றலாம்; மந்தகதி யுடையது போல் தோற்றமளிக்கலாம். ஏனென்றால், அது-ஜனசக்தி- இடம், பொருள், ஏவலை அனுசரித்தே மூச்சுவிடும்; அசைந்து கொடுக்கும். தவிர, அது பொறுமையுடையது; நிதானமாகச் செல்லுந் தன்மையது; நிதானமாகச் செல்லுந் தன்மையதானாலும், நிரந்தரமான விளைவுகளை உண்டு பண்ணக் கூடிய ஆற்றல் வாய்ந்தது. அதனுடைய இந்த லட்சணங்களை, ஆட்சி பீடத்திலமர்ந்திருக்கிறவர்கள் தெரிந்து கொள்ளாமல் அதனை அலட்சியப் படுத்தவோ, புறக்கணிக்கவோ செய்வார்களானால், அல்லது அற்பமாகத் தோற்றமளிக்கும் அதன் ஆரம்ப முயற்சியை முளையிலேயே கிள்ளிவிட்டால் முளைக்காது என்று கருதி, தகையும் முயற்சியில் ஈடுபடுவார்களானால், அதன் - அந்த ஜன சக்தியின் - மூச்சு, பேச்சாக ஒலிக்கும்; அசைவு, கிளர்ச்சியாகப் பரிணமிக்கும்; துடிப்பு,புரட்சியாகக் கோலந் தாங்கம். இந்த நிலையிலும் ஆட்சி பீடித்திலமர்ந்திருக்கிறவர்கள், அதன் பேச்சைச் செவிகொடுத்து கேளாமற் போனால், கிளர்ச்சியையும் புரட்சியையும் கண்ணெடுத்துப் பார்க்க மறுத்தால், அப்புறம் என்ன? அந்த ஆட்சி பீடத்திலமர்ந்திருக்கிறவர்களும், அந்த ஆட்சி பீடமும் ஜனசக்தியின் கோபத்தீயினுக்கு இரையாக வேண்டியதுதான். இங்ஙனம் இரை கொள்ளும் ஆற்றல், அதற்கு உண்டென்பதை ஆட்சி பீடத்திலமர்ந்திருக்கிறவர்கள் எப்பொழுதும் நினைவில் கொண்டிருக்க வேண்டும்.
சீனாவில், மன்னராட்சி முறை, ஏறத்தாழ நாலாயிரம் வருஷ ஆயுள் பலமுடையதாயிருந்தது. ஆயினும் அதன் ஆயுளுக்கு முடிவு ஏற்பட்டுவிட்டது. ஏன்? இந்த நூலுக்குள் நுழைந்து பார்த்தால், காரணங்களைக் காணலாம். ரீஜெண்ட் சக்கரவர்த்தினியாக ஆண்ட த்ஸுஹ்ஸி, காங் யு வெய், லியாங் சீ சௌ, ஸன் யாட்ஸென் போன்றவர்களின் நிருவாக சீர்திருத்தம் சம்பந்தமான யோசனைகளுக்குச் செவி கொடுத்திருப்பாளானால், தான் செவி கொடாது போனாலும், குவாங் ஷு மன்னனின் சீர்திருத்த சம்பந்தமான உத்தரவுகளுக்குத் தடை போடாதிருந்திருப்பாளானால், மன்னராட்சி முறை, இன்னும் சிறிது காலம் உயிர் வைத்துக் கொண்டிருக்கலாமோ என்னவோ?
மன்னராட்சி மறைந்து, குடியரசு ஏற்பட்ட பிறகாவது, ஆட்சி பீடத்திலமர்த்தப்பட்ட யுவான் ஷிகாய், ஜனசக்தியின் பிரதிநிதியாக விளங்கிய ஸன்யாட் ஸென்னை, ராஜ்ய விவகாரங்களில் அணைத்துக் கொண்டுபோயிருப்பானாகில், அல்லது ஸன் யாட்ஸென், தனக்களிக்கப் பட்ட பிரசிடெண்ட் பதவியை, யுவான் ஷிகாய்க்கு விட்டுக் கொடாதிருந் திருப்பானாகில், உள் நாட்டுச் சண்டை ஏற்படா திருந்திருக்கலாம்; ஒரு கால் ஏற்பட்டிருந்தாலும், உக்கிரத்துடனும், நீடித்தும் நடைபெறாமல் சீக்கிரத்தில் அடங்கிப் போயிருக்கலாம். ஆனால் தனி மனிதன் போல் ஒருநாடும், விதிவழியேதான் செல்ல வேண்டியிருக்கிறது.
ஒருநாடு, புராதனப் பெருமையுடையதாயிருக்கலாம்; நீண்ட கால சரித்திரத்தையும், வேண்டிய அளவுக்கு நாகரிகப் பண்புகளையும் கொண்டிருக்கலாம். ஆனால், அது, தன் பழைய பெருமையிலே எப்பொழுதும் திளைத்துக் கொண்டும், தன்னுடைய நாகரிகப் பண்புகளைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டும் இருக்கக் கூடாது இருந்தால் தேக்கநிலை ஏற்படும். அப்பொழுது தூக்கம்தான் வரும். அந்தத் தூக்க நிலையில், அதனை, எந்த ஓர் அந்நிய சக்தியும் வந்து, தன் ஆதிக்கத்திற்குள் பிணித்து விடும். பிணிபட்ட பிறகு விடுவித்துக் கொள்வது கஷ்டம். அசாதாரணமான முயற்சிகள் தேவைப்படும். இவைகளினின்று தன்னைப் பாதுகாத்துக் கொள்ள விரும்பும் எந்த ஒரு நாடும், தன்னுடைய பழைய சரித்திரத்திலிருந்து, புதிய புதிய பாடங்களைக் கற்றுக்கொண்டு வரவேண்டும்; காலத்திற்கேற்றவாறு, தனது நாகரிகப் பண்புகளைப் புதுப்பித்துக் கொண்டும் ஒழுங்கு படுத்திக் கொண்டும் வரவேண்டும். இவற்றிற்கு மேலாக உலகத்தோடு ஒட்டி வாழத் தெரிந்து கொள்ள வேண்டும். தெரிந்து கொள்ளாவிட்டால் அடிமைப்படவோ அழிந்துபடவோ வேண்டியதுதான். இந்தப் பாடத்தைச் சீனாவின் வரலாறு போதிக்கிறது. பழமையிலே பெருமை இருக்கிறது, தனிமையிலே இனிமை இருக்கிறது என்று சீனா சொல்லிக் கொண்டு வந்ததனால்தான்,அஃது, அந்நிய சக்திகளுக்கு இரையாகி வருகிறதென்று, சரிந்துவந்த மஞ்சூ ஆட்சிக்குப் பரிந்து பேசியவனும், ஆனால் சீர்திருத்த வாதியாக இருந்தவனுமான சாங் சீ டுங் என்பவன் பத்தொன்பதாவது நூற்றாண்டின் கடைசியில் எச்சரிக்கை செய்திருக்கிறான். ஆகவே, சீனாவின் வரலாறு, அந்த நாட்டைப் பொறுத்த வரலாறாக மட்டும் இல்லாமல், போராடிப் பெற்ற தனது தனித்துவத்தை இழந்து விடாமலும், அடைந்த சுதந்திரத்தைத் துருப்பிடிக்க விடாமலும் பாதுகாத்துக் கொள்ளவிழையும் எந்த ஒரு நாடும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடபுத்தகமாகவும் இருக்கிறதென்று சொல்லாம்.
இனி இந்த நூலைப் பற்றிச் சில வார்த்தைகள். நான் எந்த நூலை எழுதப் புகுந்தாலும் அப்பொழுது எந்தவிதமான அரசியல் கண்ணாடியையும் அணிந்து கொள்வதில்லை யென்ற என்வழக்கத்தை, இதுவரை என் எழுத்துக்களைப் படித்து வந்திருக்கிற அன்பர்கள் ஒருவாறு தெரிந்து கொண்டிருப்பார்களென்று நம்புகிறேன். அந்த வழக்கத்திற்கு ஆட்பட்டே இந்த நூலையும் எழுதியிருக்கிறேன். தவிர, எந்த ஒன்றைப் பற்றியோ, யாரொருவரைப் பற்றியோ நான் எழுதப் புகுந்தாலும், அந்த ஒன்றையோ, ஒருவரையோ எனது நோக்கு நிலைக்கு இழுத்துக் கொண்டு வந்து நிறுத்திக் காண்பதிலோ காட்டுவதிலோ நான் பெருமையடை வதில்லை. அந்த ஒன்றை அந்த ஒருவரை, அந்த ஒன்றின் அந்த ஒருவரின் நோக்கு நிலையில் இருத்தி வைத்துக் காண்பதிலும் காட்டுவதிலுமே நான் திருப்தியடைகிறேன். அப்படிக் காண்கிறபோது, அந்த ஒன்றினிடம், ஒருவரிடம் ஈடுபாடு உண்டாகிறது. அந்த ஒருவரை, நிஜவடிவத்தில் காண முடியும்? காட்டவும் முடியும்? காண்கிறபோதும், காட்டுகிற போதும், உணர்ச்சி, ஓரளவாவது உண்டாகத்தான் செய்கிறது. உணர்ச்சி என்பது என்? ஈடுபாட்டின் மேல்படி அப்படியே ஈடுபாடு என்பது உணர்ச்சியின் முதல்படி. ஒன்றின்றி மற்றொன்றில்லை. ஆகவே, ஒரு நூலாசிரியனுக்கு உணர்ச்சி, ஓரளவு இன்றியமையாததாகவே இருக்கிறது. ஆனால் அவன், அந்த உணர்ச்சியில், எதைப் பற்றி அல்லது யாரைப் பற்றி எழுதுகிறானோ அதை அல்லது அவரை மறந்துவிடக்கூடாது; சிதைவு படுத்தவும் கூடாது. இது விஷயத்தில் ஒரு நூலாசிரியன் மிகவும் எச்சரிக்கையுடனிருக்க வேண்டும். அப்படியிருந்து கொண்டு இந்த நூலை எழுதியிருக்கிறேன். எதற்காக இவ்வளவு தூரம் கூற முன்வந்தேனென்றால், வரலாற்று நூல்களை எழுதும் ஓர் ஆசிரியன், உணர்ச்சி வசப்படத் தேவையில்லை யென்று சிலர் கருதுவார்களானால், அந்தக் கருத்து எனக்கு உடன்பாடில்லை யென்பதைத் தெரிவித்துக் கொள்வதற்குத்தான்.
இந்த நூல், ஏற்கனவே நான் எழுதி 1944-ஆம் வருஷம் வெளியான புதிய சீனாவா என்று சிலர் கேட்கலாம். இது, பழைய சீனாவைப் பற்றிய புதிய நூல்; சீனாவின் ஆரம்ப கால வரலாற்றில் தொடங்கி, அங்கு ஆண்ட அரச வமிசங்கள், அந்நியர்களின் சுரண்டலுக்கு அஃது ஆட்பட்ட விதம், ஆக்கிரமிப்புச் சக்திகளினால் அதற்கேற்பட்ட அவதிகள், அந்த அவதிகளிலிருந்து மீள அது கையாண்ட முறைகள் ஆகியவைகளைத் தொட்டுக் கொண்டு கடைசியில் 1949-ஆம் வருஷம் அக்டோபர் மாதம் முதலில் அங்கு மக்கள் குடியரசு தாபிதமானதில் வந்து முடிகிறது. எனவே இதற்கு சீனாவின் வரலாறு என்று புதுப்பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
சீனாவில் 1912-ஆம் வருஷம் ஸன் யாட்ஸென் தலைமையில் குடியரசு ஏற்பட்ட பிறகும், சிறப்பாக 1949-ஆம் வருஷம் மக்கள் குடியரசு தாபிதமான பிறகும், மக்கள் தொன்றுதொட்டு அனுஷ்டித்து வந்த சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள் ஆகிய பலவற்றிலும் அநேக மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவைகளைப் பற்றி உரிய இடங்களில் பொருத்தமான அளவுக்குப் பிரதாபித்திருக்கிறேன். அன்று எப்படி இருந்ததென்பதைப் பற்றிப் படிக்கிறபோது, இன்று எப்படி இருக்கிறதென்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் லேசாகவேனும் வாசகர்கள் மனத்தில் உதிக்குமல்லவா? அந்த ஆவலை லேசாகவேனும் பூர்த்தி செய்ய வேண்டியது ஓர் ஆசிரியனுடைய கடமை யென்பதை நான் மறந்துவிடவில்லை.
1912-ஆம் வருஷம் ஏற்பட்ட குடியரசை வெறுங் குடியரசு என்றும், 1919-ஆம் வருஷம் அமைந்த குடியரசை மக்கள் குடியரசு என்றும் வேறுபடுத்திச் சொல்லியிருக்கிறேன். இரண்டுக்கும் வேறுபாடுகள் பல உண்டல்லவா?
சீனப் பெயர்களை உச்சரிப்பது சிறிது கடினம், அவையும் பலவிதமாக உச்சரிக்கப்படுகின்றன. தவிர, ஒரே பெயரைப் பலர் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள்; ஒருவருக்கே இரண்டு மூன்று பெயர்கள் உள்ளன. இவைகளையெல்லாம் கூடிய மட்டில் தமிழ்ச் செவிக்கு விரசம் ஏற்படாமல் அமைத்திருக்கிறேன். அமைத்திருக்கும் பொறுப்பு என்னுடையதே.
இந்த நூலும், இதனோடு சேர்த்துப் படிக்க வேண்டிய ஸன்யாட்ஸென்-வாழ்க்கை வரலாறு என்ற நூலும் சுதந்திரத்தின் தேவைகள் யாவை? என்ற நூலும் விரைவில் வெளிவரவேண்டுமென்று, என் உடன் பிறந்த முறையில் பழகுகின்றவரும், பிரபஞ்ச ஜோதி பிரசுராலயத்தின் உரிமையாளருமான ஸ்ரீஅரு.சொக்கலிங்கம் அவர்கள் ஆவல் காட்டி என்னை ஊக்குவித்து வந்தது எனக்குப் பெரிதும் உற்சாகமாயிருந்தது.
நூலைப் படித்து முடித்த பிறகு, வாசகர்களுக்கு என்னும் இப்பகுதியையும் அனுபந்தங்களையும் ஒருமுறை படித்துப் பார்க்குமாறு அன்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த நூலைப் படிக்கத் தொடங்குமுன் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய சில குறிப்புகள்
1. முக்கியமான சில சீன வார்த்தைகளையும் அவற்றின் பொருளையும் தெரிந்து கொள்வது நல்லது.
டுங்-கிழக்கு; ஸி-மேற்கு; பீ-வடக்கு; நான்-தெற்கு; சுங்-மத்தியில்; ஷான் அல்லது லிங்-மலை அல்லது மலைத்தொடர்; ஹோ அல்லது கியாங்-ஆறு; ஹ்யூ-ஏரி; ஹை-கடல்; கிங்-தலை நகரம். இந்தச் சொற்களை வைத்துக்கொண்டு சில பெயர்களைப் பதம் பிரித்துப் பார்த்தால் அவற்றின் பொருள் நன்றாக விளங்கும்.
சில மாகாணங்களின் பெயர்:
ஹோ-பே… ஹோப்பே-நதிக்கு வடக்கு; அதாவது மஞ்சள்நதிக்கு வடக்கிலுள்ள் பிரதேசம்.
ஹோ- நான்…. ஹோனான்-நதிக்குத் தெற்கு; அதாவது மஞ்சள் நதிக்குத் தெற்கிலுள்ளபிரதேசம்.
ஹ்யூ- பே… ஹ்யூப்பே-ஏரிக்கு வடக்கு; அதாவது டுங்டிங் ஏரிக்கு வடக்கிலுள்ள பிரதேசம்.
ஹ்யூ-நான்.. ஹ்யூனான்-ஏரிக்குத் தெற்கு; அதாவது மேற்படிடுங் டிங்ஏரிக்குத்தெற்கிலுள்ளபிரதேசம்.
ஷான்-ஸி… ஷான்ஸி-மலைக்கு மேற்கேயுள்ள பிரதேசம்.
நான்-கிங் … நான்கிங்-தெற்குத் தலைநகரம்.
பீ-கிங் … பீக்கிங்- வடக்குத் தலைநகரம்.
நான்-லிங் … நான் லிங்-தெற்கு மலைத்தொடர்.
ஸி-கியாங் … ஸிக்கியாங்-மேற்கு நதி.
டுங்-ஹை … டுங்ஹை-கிழக்குக் கடல்……… இப்படி இப்படி.
2. பெரும்பாலும் சீனர்களுடைய பெயர்கள் மூன்று தனித்தனி வார்த்தைகளாக இருக்கும். யுவான்-ஷி-காய்; ஸன்-யாட்-ஸென்; சியாங்-கை-ஷேக் முதலியன. இவற்றில் முதலாவது குடும்பப் பெயர்; இரண்டாவது தலைமுறைப் பெயர்; மூன்றாவது சொந்தப் பெயர். இந்நூலைப் படிக்கிறபோது இடையிடையே முதற்பெயர் மட்டும் வரும். உதாரணமாக யுவான் ஷி காய் - யுவான் என்றும், ஸன் யாட்ஸென் - ஸன் என்றும்… இப்படி வரும்.
3. கிறிதுவுக்கு முந்திய காலத்தைக் குறிப்பிடுகிற போது மட்டும் கி.மு.என்று குறிக்கப்பட்டிருக்கும். அப்படிக் குறிக்கப் பெறாத வருஷங்களையெல்லாம் கிறிதுவுக்குப்பிந்தி, அதாவது கி.பி. வருஷங்களென்று கொள்க.
4. ஓர் அரசனுடைய பெயரைச் சொல்லி ஆண்ட காலம் என்று குறிக்கப்பட்டிருக்கும். அப்படிக் குறிக்கப் பெறாமல், பெயருக்குப் பக்கத்தில் வருஷங்கள் மட்டும் போட்டிருந்தால் வாழ்ந்த காலம் அதாவது பிறந்த - இறந்த வருஷங்களென்று கொள்க.
நாட்டு அமைப்பும் மக்கள் பண்பும்
உலகத்தில் மிகப் பெரிய கண்டம் ஆசியா. அதில் மிகப் பெரிய நாடு சீனா; நிலப்பரப்பில் மட்டுமல்ல; ஜனத்தொகையில் கூட. மற்றும், சலியாது ஓடும் நீண்ட ஆறுகளையும், அசையாது நிற்கும் உயர்ந்த மலைத் தொடர்களையும், தீவிரமான தட்ப வெப்ப நிலை மைகளையும், உலகத்துப் பேரதிசயங்கள் சிலவற்றையும், சீனாவில் பார்க்கலாம். சீனாவுக்குச் சொந்தமான தீவுகள் மட்டும் சுமார் மூவா யிரத்துக்கு மேல் இருக்கின்றன என்று சொன்னால் யாருக்குமே ஒருவித பிரமிப்பு உண்டாகும்.
அதைக்காட்டிலும் பிரமிப்பை உண்டுபண்ணக் கூடியது அதன் பழமை. காலத்தினால் உரு மாறாமலும் முதுமை அடையாமலும், என்றும் ஜீவகளையோடு இருக்கக்கூடிய வண்ணம் நாகரிகத்தைப் பேணி வளர்த்துக் காப்பாற்றி வருகின்ற நாடுகள் உலகத்திலேயே இரண்டுதான். ஒன்று இந்தியா; மற்றொன்று சீனா.
சீன நாகரிகத்தின் பழமையை ஒரு கால எல்லைக்குட்படுத்திக் கணித்துச் சொல்ல முடியாது. அவ்வளவு ஆழ்ந்த பழமையுடையது. கிரீஸும் ரோமாபுரியும், பாபிலோனியாவும் பாரசீகமும், அஸிரி யாவும் இரேலும் நாகரிக பாதையில் தவழ்ந்து செல்ல முயன்று கொண்டிருந்த போது, சீனா அந்தப் பாதையில் தலை நிமிர்ந்து நடந்து சென்று கொண்டிருந்தது.
சரித்திர பரம்பரையில்தான் சீனா எவ்வளவு பழமை வாய்ந்தது. ஆதி காலத்திலிருந்து ஒழுங்கான சரித்திரங்கள் அங்கு எழுதப்பட்டு வந்திருக்கின்றன. உலகத்திலேயே மிகப் பழமையான சரித்திர ஏடுகளைச் சீனாவில் காணலாம். அவ்வப்பொழுது நடைபெற்ற நிகழ்ச்சிகளை வருஷ வாரியாக, சிலவற்றைக் கிழமை வாரியாகக்கூட அறிந்து கொள்வதற்கு அனுகூலமாக இந்தச் சரித்திர ஏடுகள் இருந்து வந்தி ருக்கின்றன சரித்திராசிரியர்களுக்கு அரசாங்கத்தின் ஆதரவு கிடைத்துக் கொண்டிருந்தது.
தற்கால சரித்திராசிரியர் சிலர், சீனாவில் நடைபெற்ற சரித்திர நிகழ்ச்சிகள் பலவற்றை கி.மு. 841 -ஆம் வருஷத்திலிருந்துதான் வரிசைக் கிரமமாக நிர்ணயித்துச் சொல்ல முடிகிறதென்றும், அதற்கு முந்தி நடைபெற்ற நிகழ்ச்சிகளின் காலத்தை உத்தேசமாகத் தான் சொல்ல முடிகிறதென்றும் அபிப்பிராயப்படுகிறார்கள். இவர்களுடைய அபிப்பிராயத்தை அப்படியே ஏற்றுக் கொண்டாலும், கி. மு. ஒன்ப தாவது நூற்றாண்டுக்கு முந்திய நிகழ்ச்சிகளை, சில வருஷங்கள் முன்னது பின்னதாகவாவது வைத்துச் சொல்ல முடியும் என்பது தெளிவாகிற தல்லவா? ஒரு சிலவருஷங்களில் வித்தியாசம் இருக்கலாம்; நிகழ்ச்சிகளின் வரிசைக் கிரமத்திலோ, காலக்கிரமத்திலோ வித்தியாசம் காண முடியாது.
இங்ஙனம் பல துறைகளிலும் பழமை வாய்ந்த சீனாவுக்குள் நிதானமாகச் சென்று சில விவரங்களைத் தெரிந்து கொள்ள முற் படுவோம். அதற்கு முன் ஒரு வார்த்தை….!
சீனா என்பது அந்நியர்கள் அழைக்கிற பெயர். சீனர்கள் தங்கள் நாட்டை இந்தப் பெயரிட்டு அழைப்பதில்லை; சுங்-ஹுவா அல்லது சுங்-குவோ என்று தற்பெருமையோடு அழைக்கிறார்கள். பெரும்பாலும் இரண்டு பெயர்களையும் சேர்த்தே, அதாவது சுங்-ஹுவாமின்-குவோ 1 என்று அழைக்கிறார்கள் சுங் என்றால் மத்தி யிலுள்ள, ஹுவா என்றால் புஷ்பம் அல்லது புகழ் நிறைந்த வாழ்வை யுடைய, குவோ என்றால் நாடு. பூமியின் மத்தியிலுள்ள புஷ்பம் போன்ற அல்லது புகழ் நிறைந்த நாடு என்று பொருள். அதாவது, இயற்கையோடு உறவு பூண்டு நல்வாழ்வு நடத்துவதற்கேற்ற இடம் என்று சொல்லலாம். யாருக்கும் தங்கள் தாய்நாட்டைப் பற்றி ஒரு பெருமை இருப்பது சகஜம்.
இப்பொழுது சீனாவின் வடமேற்கிலுள்ள கான்ஸு, ஷென்ஸி 2 என்ற இரண்டு மாகாணங்களும் சேர்ந்த ஒரு பிரதேசத்தை ஒரு காலத்தில் சௌ3 என்ற ஒரு வமிசத்தினர் ஆண்டு வந்தனர். இந்தப் பிரதேசத்திற்கு அப்பொழுது சின் என்று பெயர். மேற்படி வமிசத்தினர், தங்கள் புயவலியால், சுற்றுப் புறமுள்ள பிரதேசங்களைத் தங்கள் சுவாதீனப் படுத்திக் கொண்டனர்; அனைத்தையும் சேர்த்து சின் 4 என்ற பெயரால் அழைத்தனர். நாளாவட்டத்தில் இந்தப் பெயரானது மருவி சீனாவென்று அந்நியர்களால் அழைக்கப்பட்டது. வெகுகாலமாக இந்தச் சீனா என்ற பெயரே நிலவி வருகிறது. நமது ராமாயணம், பாரதம் போன்ற இதிகாசங்களிலும், சங்க நூல்களிலும் சீனம் என்றும் சீனர் என்றும் வழங்கப்படுகின்றன.
சீனாவின் எல்லைகளாகக் கிழக்கே பசிபிக் மகா சமுத்திரமும் கொரியாவும், தெற்கே தென் சீனக்கடலும் தாய்லாந்தும் பர்மாவும், மேற்கே திபேத்தும் நேபாளமும் பூட்டானும் இந்தியாவும் ஆப் கனிதானமும், வடக்கே ருஷ்யாவும் மங்கோலியாவும் முறையே அமைந்திருக்கின்றன.
உலகத்து மிகப் பெரிய நாடுகளின் வரிசையில் சீனா மூன்றாவது தானத்தை வகிக்கிறது. உலகத்தின் மொத்த விதீரணத்தில் பதினைந்தில் ஒரு பாகம் சீனாவாயிருக்கிறது. இதன் விதீரணம் சுமார் 9, 600, 000 சதுர கிலோ மீட்டர்; (உத்தேசமாக 6, 000, 000 சதுர மைல்). வடக்கு தெற்காக நீளம் சுமார் 5, 500 கிலோ மீட்டர்; (ஏறக்குறைய 3, 450 மைல்), கிழக்கு மேற்காக நீளம் சுமார் 5, 000 கிலோ மீட்டர்; (ஏறக்குறைய 3, 150 மைல்). எல்லைப்புறத்தின் சுற்றளவு 26, 000 கிலோ மீட்டருக்கு (ஏறக்குறைய 16, 250 மைலுக்கு) அதிகமாயுள்ளது. இந்த எல்லைப் புறத்தைச் சுற்றிப் பார்த்து வர ஒருவன் ஆசைப்பட்டு தினசரி 24 கிலோ மீட்டர் (சுமார் 15 மைல்) விகிதம் விடாது நடப்பானாகில், முற்றும் முடிக்கச் சுமார் மூன்று வருஷ காலம் பிடிக்கும்.
உலகத்து மொத்த ஜனத்தொகையில் சீனாவின் தானம், நான்காவதுக்கும் ஐந்தாவதுக்கும் நடுவில் இருக்கிறது. அதாவது உலகத்தின் ஜனத்தொகை சுமார் 295 கோடி. இதில் சீனாவின் ஜனத் தொகை, அறுபது கோடி. உலக மக்களில், நூற்றுக்கு ஏறக்குறைய இருபது பேர் சீனர்களாக இருக்கிறார்கள். ஜனப்பெருக்கத்தில் சீனா வெகு வேகமாக முன்னேறிக் கொண்டு வருகிறதென்பது இங்கு நினைவு கொள்ளத்தக்கது. 1
பூகோள சாதிரிகள், சீனாவை, வடக்கு சீனா வென்றும், தெற்கு சீனாவென்றும், மத்திய சீனாவென்றும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள். சீதோஷ்ண திதி, மண்வளம், பொருளுற்பத்தி, ஜனங்கள் வாழ்கிற விதம் முதலிய யாவும் இந்த மூன்று பிரிவுகளில் வெவ்வேறு விதமாக இருக்கின்றன. ஒவ்வொன்றையும் ஒவ்வொரு நாடு என்று கூறுதல் பொருந்தும்.
வடக்கு சீனா, பட்டணங்கள் குறைந்த, கிராமங்கள் நிறைந்த களி மண் பூமி. புன்செய் தானியங்களின் விளைவு அதிகம். நிலக்கரி, இரும்பு முதலிய சுரங்கப் பொருள்கள் ஏராளமாகக் கிடைக்கின்றன.
தெற்கு சீனா, பெரும்பாலும் மலைப்பாங்கான பிரதேசம். ஆனால் கடற்கரை யோரமாகவுள்ள இடங்களிலும், மலைக் கணவாய்களிலும் அதிமான நெல் விளைவு உண்டு. வருஷத்தில் மூன்று போகம் கூடச் சில இடங்களில் சாகுபடி செய்கிறார்கள். மலைச் சரிவுகளில் தேயிலை, காப்பி முதலியவை உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தத் தெற்கு சீனாவில் சிறிய நகரங்களும் துறைமுகப்பட்டினங்களும் அதிகம். ஜனங்களும் நெருங்கி வசிக்கிறார்கள் பலவகைப்பட்ட பாஷைகள் பேசுவோரையும், பல வகைப்பட்ட பழக்க வழக்கங்களுடையோரையும் இங்கே காணலாம்.
மத்திய சீனா, நீர்வளமும் நிலவளமும் நிறைந்த பிரதேசம். இவ் விரண்டுமுடைய இடத்தில் குடிவளம் ஓங்கி இருக்கிற தென்பதைச் சொல்லவும் வேண்டுமோ? உலகத்திலேயே அதிகமான உணவுப் பொருள்கள் உற்பத்தியாவது இங்கேதான். நெல் முதல் பருத்தி வரையில், கோதுமை முதல் தேயிலை வரையில் இங்கே விளைகின்றன. இந்த விளைவுக்கு அனுகூலமாகவே சீதோஷ்ண நிலையும் சமமாக இருக்கிறது. இவை யெல்லாம் சேர்ந்த இடத்தில், பல வகைப்பட்ட தொழில் பானங்கள் நிறைந்திருக்கின்றன. வியாபாரம் நன்றாக நடக்கிறது. வர்த்தகர்கள் அதிமாயிருக்கிறார்கள். பணப் புழக்கத்திற்குக் குறைவே யில்லை. சீனாவின் மொத்த ஜனத் தொகையில் ஏறக்குறைய பாதி ஜனத்தொகை இந்த மத்திய சீனாவில் தான் இருக்கிறது. அப்படியே சீனாவின் மொத்த வியாபாரத்தில் ஏறக்குறைய பாதி இங்கேதான் நடைபெறுகிறது. மத்திய சீனாவி லுள்ள ஷாங்காய் நகரம்1 சர்வ சீனாவுக்கும், வியாபாரத்தைப் பொறுத்த மட்டில் தலைவாசல் மாதிரி இருக்கிறது.
தட்ப வெப்ப நிலைமைகளில் தான் எவ்வளவு வித்தியாசம் சீனாவில்! ஒரே காலத்தில் வடக்குப் பகுதியில் பனி உறைந்து கிடக்கும்; குளிர் நடுக்கி எடுத்து விடும். தெற்குப் பகுதியில் வெயில் கொளுத்தும்; மூச்சிலே கூட அனல் வாடை வீசும். சில பகுதிகளில், தட்ப வெப்ப நிலைமை சமமாயிருக்கும்; எந்தத் தீவிரத்துக்கும் போகாது.
பொழுது மாற்றத்திலும் இந்த வித்தியாசத்தைக் காணலாம். சிறப்பாக, சீனாவின் வடக்குப் பகுதியில்தான் இந்த வித்தியாசம் அதிகமாகக் காணப்படுகிறது. வடகிழக்கில் ஹைலுங்கியாங்2 என்ற பிரதேசம் இருக்கிறதல்லவா? அங்குள்ள ஒரு விவசாயியோ, தொழி லாளியோ, காலை நேரத்தில், தான் செய்யவேண்டிய வேலைகளை ஒருவாறு முடித்துக் கொண்டு, பகலுணவு கொள்ளத் தயாராயி ருப்பான். அதே சமயத்தில் வட மேற்கிலுள்ள ஸிங்கியாங் - உய்குர்3 பிரதேசத்தில் காலை ஏழு மணி ஆகியிருக்கும். வேலை நேரமே தொடங்கியிராது. மேற்படி பிரதேசங்களுக்கிடையில் சுமார் நான்கு மணி நேரத்திற்கு அதிகமான வித்தியாசம் இருக்கிறது.
உலகத்து நீண்ட நதிகளுள் இரண்டு சீனாவில் ஓடுகின்றன. ஒன்று யாங்க்ட்ஸீகியாங்;4 மற்றொன்று ஹோயாங்கோ.5 யாங்க்ட் ஸீகியாங்தான் சீனாவிலேயே மிகவும் நீண்ட நதி. பெரிய நதி என்றே இதற்குப் பெயர் கொடுத்திருக்கிறார்கள் சீனர்கள். தென் பகுதி சீனா வளம்பெற்றிருப்பதற்கு இந்த நதியே முக்கிய காரண மாயிருக்கிறது. இதன் நீளம், சீனர்கள் கொடுக்கும் கணக்குப்படி 5, 500 கிலோ மீட்டர்; (ஏறக்குறைய 3, 400 மைல்), ஹோயாங்கோ நதியைச் சீனாவின் துக்கக் கண்ணீர் என்று சீனர்கள் அழைக்கிறார்கள். ஏனென்றால், இதில் அடிக்கடி வெள்ளம் வந்து பயிர்களையும் ஆற் றோரமாக வசிக்கும் ஜனங்களின் வீடுவாசல்களையும் அழித்து விடுகிறது. மற்றும் இதன் போக்கில் அடிக்கடி மாற்றங்கள் ஏற் படுகின்றன. இதனால் விவசாயிகளுக்கு அதிக கஷ்டம் உண்டாகிறது. சென்ற மூவாயிர வருஷ காலத்திற்குள் இந்த நதியில் ஆயிரத்தைந் நூறு தடவை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதன் போக்கு ஒன்பது தடவை விபரீத மாற்ற மடைந்திருக்கிறது. இந்த ஹோயாங்கோ நதிக்கு மஞ்சள் நதி என்றும் பெயர். மஞ்சள் நிறமுடைய வண்டல் படிவதால் இந்தப் பெயர் வந்தது. இந்த நதியின் நீளம், சீனர்கள் கொடுக்கும் கணக்குப் படி 4, 845 கிலோ மீட்டர்; (ஏறக்குறைய 3, 000 மைல்). இந்த இரண்டு நதிகளைத் தவிர, நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் செல்லுகின்ற நீண்ட நதிகள் பல இருக்கின்றன. உப நதிகளுக்கும் கிளை நதிகளுக்கும் குறைவேயில்லை. பெரும்பாலான நதிகள், கப்பல் போக்குவரத்துக்குத் தகுதியுடையனவாயிருக்கின்றன. பலவற்றிலிருந்து மின்சார சக்தியும் உற்பத்தி செய்யப்படுகிறது. சீனாவின் உள்நாட்டு வியாபாரத்தின் பெரும் பகுதி இவற்றின் மூலமாக நடைபெறுகிறது. ஜனங்களுடைய விவசாய ஜீவனத்திற்கு இவை பெரிதும் துணை செய்கின்றன. இந்தியாவைப் போலவே சீனாவும் ஒரு விவசாய நாடு; நூற்றுக்குச் சுமார் எழுபத்தைந்து பேர் விவ சாயத்தையே முக்கிய ஜீவனோபாயமாகக் கொண்டிருக் கிறார்கள். இருந்தாலும் தொழில் முயற்சிகளுக்குக் குறைவில்லை. சிறப்பாக, இருபதாவது நூற்றாண்டு பிற்பாதியின் ஆரம்பத்தி லிருந்து கனரகத் தொழில்கள் பல ஏற்பட்டிருக்கின்றன. இவற்றில் ஆயிரக்கணக்கான மக்கள் வேலை செய்கிறார்கள்.
இருபதாவது நூற்றாண்டின் முற்பகுதி வரையில் சீனாவில், விசேஷப் பிரதேசங்களென்ற பெயரால் மூன்றுவகையான பிரதேசங்கள் இருந்தன. இவற்றைப் பற்றி இங்குக் குறிப்பிட வேண்டியது அவசிய மாகும். ஏனென்றால், மேற்படி முற்பகுதிக் காலம் வரையில், அந்நிய வல்லரசுகள், சீனாவை எப்படி எப்படி யெல்லாம் சீர்குலைத்துத் தங்கள் ஆதிக்கத்தை ஊன்றிக் கொள்ள முயன்றன வென்பதைப் பற்றிப் பின்னாடி வாசகர்கள் விவரமாகத் தெரிந்து கொள்வதற்கு இஃது அனு கூலமாயிருக்கும்.
மூன்றுவகை விசேஷப் பிரதேசங்களாவன: - (1) சர்வதேச துறைமுப் பட்டினங்கள். (2) அந்நியர்கள் சலுகை பெற்று வாழ்ந்த பிரதேசங்கள். (3) குத்தகைக்கு விடப் பெற்ற பிரதேசங்கள்.1
இவற்றில் சர்வதேச துறைமுப் பட்டினங்கள் என்பவை பெரும் பாலும் சமுத்திரக்கரையோரமாகவுள்ளன; சில, ஆற்று மார்க்கத் திலும் இருக்கின்றன. இங்கு அந்நிய நாட்டார் பலரும் தாராளமாக வியாபாரஞ் செய்யலாம். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரங்களில் இங்கே அந்நியர் களுக்கு எவ்வித நிர்ப்பந்தங்களும் இல்லை. சீனாவுக்கும் மற்ற வல்லரசு களுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தங்களின் விளை வாகவே இவை தோன்றின என்பது ஐதிகம். அதாவது சீனர்களே மனமொப்பி, அந்நியர்களுக்கு, இந்தத் துறைமுகங்களில் வியாபாரஞ் செய்ய இடங்கொடுத்தார்களாம். ஆனால் உண்மையில் சீனர்கள், இந்தத் துறைமுகப் பட்டினங்களை அனுமதித்தது, தங்களுடைய ராஜ்ய அந்ததுக்குக் குறைவென்றே கருதினார்கள். பத்தொன்பதாவது நூற்றாண்டில் சீன அரசாங்கம் பலவீனப்பட்டுக் கிடக்கையில், அந்தப் பலவீனத்தைப் பயன் படுத்திக் கொண்டு அந்நிய வல்லரசுகள் இந்தத் துறைமுகங்களைப் பெற்றன. இவற்றால் சீனாவின் பொருளா தார வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. சீனாவிலேயே முக்கிய வியாபார தலங்களென்று கருப்படக் கூடியவை சுமார் நூறு இருக்கும். இவற்றில் ஏறக்குறைய எழுபதுக்குமேல் இந்த மாதிரியான துறைமுகங்களாகவே இருந்தன.
அந்நியர்கள் சலுகை பெற்று வாழ்ந்த பிரதேசங்களென்று சொன்னோமே இவைகளுக்கு கன்ஸெஷன்கள்1 என்று பெயர். இவை பெரும்பாலும் துறைமுகப்பட்டினங்களிலேயே இருந்தன. இங்கே வசித்த அந்நியர்கள், சீன அரசாங்கத்தின் ஆதிக்கத்துக்குட்பட்டவர் களல்லர். சீன அரசாங்கத்தின் சட்ட திட்டங்கள் இங்கே செல்லு படியாகா. எந்தப் பிரதேசத்தில் எந்த நாட்டார் வசித்தனரோ அந்த நாட்டாரே அந்தப் பிரதேசத்தின் நீதி நிருவாகங்களைக் கவனித்துக் கொண்டனர். சில சில துறைமுகப்பட்டினங்களில் இந்த மாதிரியான கன்ஸெஷன்கள் சுமார் இருபது வரையில்கூட இருந்தன.
குத்தகைப் பிரதேசங்களென்பவை, துப்பாக்கி முனையைக் காட்டிப் பயமுறுத்தி, அந்நிய வல்லரசுகள் சீன அரசாங்கத் திடமிருந்து குத்தகையாகப் பெற்ற இடங்கள். குத்தகைப் பிரதேசங் களென்று பெயரே தவிர, எந்த நாட்டார் குத்தகையாகப் பெற்றார்களோ அந்த நாட்டாருடைய ஆதிக்கமே இங்கு நிலவியது. பெரும்பாலான பிரதேசங்கள் தொண்ணூற் றொன்பது வருஷ குத்தகைக்கு விடப் பட்டிருந்தன. இந்தக் குத்தகைக் காலம் முடிந்த பிறகும்கூட சில பிரதேசங்கள், திரும்ப சீனாவிடம் வந்து சேராமலிருந்தன.
மேலே சொன்ன மூன்று வகையான பிரதேசங்களில், ஒரு சமுதாயத்தைச் சீரழிக்கக்கூடிய தீமைகள் என்னென்ன உண்டோ அவை யாவும் அடைக்கலம் பெற்றிருந்தன. சுருக்கமாகச் சொல்லு மிடத்து, இவை சீனாவின் சுயமதிப்பைப் பாதிக்கக்கூடியனவாக இருந்தன. ஆனால் 1912-ஆம் வருஷம் குடியரசு ஏற்பட்ட பிறகு, சிறப் பாக 1937-ஆம் வருஷம் சீன - ஜப்பானிய யுத்தம் ஏற்பட்ட பிறகு, பலாத் காரத்தின் மீது அக்கிரமமாக நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட அநேக ஒப்பந்தங்களை சீனா நிராகரித்தது; கன்ஸெஷன் பிரதேசங்களில் அந்நியர்கள் அனுபவித்து வந்த விசேஷ சலுகைகளை ரத்து செய்தது.
சீனாவில், ஜனங்களுடைய வழிபாட்டுக்குரிய மலைக் கோயில்கள் பல இருக்கின்றன. ஷாண்டுங்1 மாகாணத்தில் டை ஷான்2 என்றொரு மலை இருக்கிறது. இது தரை மட்டத்திற்கு மேல் 5, 100 அடி உயர முடையது. உச்சியை யடைய ஒழுங்கான படிகள் இருக்கின்றன. கிறிது சகத்திற்கு வெகு காலம் முந்தியிருந்தே, இந்த மலையின் மீது ஏறி இறங்குவது ஒரு புனிதமான செயலாகக் கருதப் பட்டு வந்திருக்கிறது. இந்தப் புனிதமான செயலில் ஈடுபட்டுப் புகழடைந்த சக்ரவர்த்திகளும் ஞானிகளும் எத்தனையோ பேர். இந்த மலையின்மீது பௌத்த கோயில்கள் சில இருக்கின்றன.
ஷான்ஸி3 மாகாணத்தில் வூ டை ஷான்4 என்றொரு மலை; கடல் மட்டத்திற்கு மேல் 5,600 அடி உயரமுடையது. இதன்மீது ஐந்து சிகரங்கள் இருக்கின்றன. இவை சராசரி 12,540 அடி உயர முடையவை. ஏறிச் செல்வதற்கு அழகான படிகள் கட்டப்பட்டி ருக்கின்றன. புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள், இதனைப் புனிதம் பெற்ற மலையாகக் கருதுகிறார்கள்.
இவைபோல் இன்னும் சில புண்ணிய மலைகள் சீனாவில் இருக்கின்றன. இவை சிலவற்றின்மீது எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பெற்ற கோயில்கள் பல உள்ளன. உதாரண மாக, ஹோனான்5 மாகாணத்தில் ஸுங்ஷான்6 என்ற புனித மலை மீது ஒரு கோயில் இருக்கிறது. இது 523 - ஆம் வருஷத்தில் கட்டப் பெற்றதாகச் சொல்லப் படுகிறது. இதற்கு முந்தி இது பெரிய அரண்மனையாக இருந்ததாகவும் அதுவே கோயிலாக திருத்தி யமைக்கப்பட்டதாகவும் சரித்திராசிரியர்கள் கருதுகிறார்கள். இந்தக் கோயிலின் மீது, வட்டவடிவத்தில் பல அடுக்குகளைக் கொண்ட கோபுரம் மாதிரியான ஒரு கட்டடம் எழுப்பப் பட்டிருக்கிறது.
பீக்கிங்7 நகரத்திற்கருகில் பதின்மூன்றாவது நூற்றாண்டில் கட்டப்பெற்ற பாலி சுவான் கோயில்,8 ஷாண்டுங் மாகாணத்தில் ஆறாவது நூற்றாண்டில் கட்டப் பெற்றதும், நான்கு திசைகளிலும் நுழை வாயில் களைக் கொண்டதுமான ஸுமென் டா கோயில்,9 இவைபோல் இன்னும் பல கோயில்கள் பிரசித்திபெற்றவை.
இந்தியாவில் எல்லோரா, அஜந்தா1 முதலிய இடங்களிலுள்ளது போல் சீனாவில் அநேக குகைக் கோயில்கள் இருக்கின்றன. பெரிய மலைகளைக் குடைந்து, மண்டபங்கள் நிர்மாணித்து, அவற்றுள் புத்தர் பிரானின் பலவித உருவங்களைச் செதுக்கியிருக்கிறார்கள். இந்தக் குகைக் கோயில்களில் மிகப் பிரசித்தமானது ஷான்ஸி மாகாணத்திலுள்ள குகைளின் தொகுப்பு. இந்தத் தொகுப்பில் இருபத்தோரு குகைக் கோயில்கள் அடங்கி யிருக்கின்றன. இவை ஐந்தாவது நூற்றாண்டில் நிர்மாணிக்கப் பட்டன. இந்த வேலை முடிய நாற்பது வருஷ காலம் பிடித்தது. இவற்றுள் ஒன்றில், ஒரு பெரும் பாறையைச் செதுக்கி, எழுபதடி உயரமுள்ள புத்தர் சிலையாகச் செய்திருக்கிறார்கள். இன்னொரு குகையில், சுவரோடு சுவராய் ஆயிரம் புத்தர் உருவங்களைச் செதுக்கியிருக்கிறார்கள். இதற்கு ஆயிரம் புத்தர்களின் கோயில்2 என்று பெயர். இந்தக் குகைக் கோயில்களில் சில, காலத்தினால் உருக்குலைந்து போயிருக்கின்றன வென்றாலும், பெரும்பாலானவை, உருமாறாமல் சிற்பக் கலைஞர்களின் கண்களுக்கு விருந்தளித்துக் கொண்டிருக்கின்றன.
சீனாவில் முடியாட்சி நிலவிய காலத்தில், சிற்றரசர்களும் பேரரசர்களும், தங்கள் வாசத்திற்கென்றும், அரசாங்க அலுவல்களைக் கவனிப்பதற்கென்றும், ஆங்காங்குக் கட்டி வைத்துப்போன கட்டடங்கள் எத்தனை! எத்தனை! தலைநகரமான பீக்கிங்கில் மட்டும் சக்ரவர்த்திகளின் உபயோகத்திற்கென்று பெரியதோர் அரண்மனை இருந்தது.3 இதைச் சுற்றி வேறுபல அரண்மனைகள் இருந்தன. ஒவ் வொர் அரண்மனையும் ஒரு சிறு நகரமென்று சொல்லலாம். ஒவ் வொன்றிலும் எத்தனை நிலா முற்றங்கள்! எத்தனை பூந்தோட்டங்கள்! எத்தனை வாவிகள்! எத்தனை மண்டபங்கள்! ஒவ்வொர் அரண் மனைக்கும் ஒவ்வொரு பெயர்கொடுக்கப் பட்டிருந்தது. ஒன்றின் பெயர் மேலான நல்லுறவு மண்டபம். இதனை ஒரு வண்ணக் களஞ்சியம் என்று சொல்லலாம். இன்னொன்று வானுலகத்துக் கோயில். முந்தி யெல்லாம் சக்ரவர்த்திகள் ராஜ்யத்தின் நன்மையை முன்னிட்டு, வருஷத்தில் மூன்று தடவை, பலவித சடங்குகளைச் செய்வது வழக்கம். இவைகளுக்காக இக்கோயில் பயன்படுத்தப் பெற்றது.
பீக்கிங்குக்கு அருகில் கோடைகால அரண்மனை யொன் றுண்டு. இதைச் சுற்றிப் பெரிய பூந்தோட்டம். இதில் பலவகை வண்ண மலர்கள் பூத்துக் கிடக்கும்; பல ஜாதிப் பட்சிகள் வந்து கூடும். பட்டத்தரசிகள் இவற்றைக் கண்டும் கேட்டும் களித்துக் கொண்டிருப்பதற்கென்று, அரண்மனையின் ஒரு பகுதியில் மண்டபமொன்றுண்டு. இந்த ஒன்றைப் பார்த்தாலே, சீன சக்ர வர்த்திகளும் அவர்கள் பரிவாரத்தினரும் எத்தகைய சுகபோக வாழ்க்கையை நடத்தி வந்தார்களென்பது ஒருவாறு புலனாகும்.
பீக்கிங்குக்கு வடகிழக்கேயுள்ள ஜிஹோல் என்ற இடத்தில் சக்ரவர்த்திகளின் கோடைகால வாசத்திற்கென்று 1703-ஆம் வருஷம் ஓர் அரண்மனை கட்டப்பட்டது, இது பத்துக்கணக்கான மண்ட பங்களையும் ஆயிரக்கணக்கான அறைகளையும் கொண்டது. இதனைச் சுற்றி அடர்த்தியான காடு இருந்தது. இந்தக் காட்டில் தான் சக்ரவர்த்திகள் வேட்டையாடுவது வழக்கம்.
ஏழாவது நூற்றாண்டில் இந்தியாவுக்கு யாத்திரையாக வந்து போன ஹ்யூன்த் ஸாங்குக்கு,2 ஷென்ஸி மாகாணத்திலுள்ள ஸியான்3 என்ற ஊரில் 669-ஆம் வருஷம் எழுப்பப் பெற்று நாளது வரை ஜாக்கிரதையுடன் காப்பாற்றப்பட்டு வருகிற ஞாபகச் சின்னம் பார்க்கத் தகுந்த இடங்களில் ஒன்றாகும். இந்த ஞாபகச் சின்னத்தின் ஒரு பகுதியில் ஹ்யூன்த்ஸாங் வாழ்ந்ததும் இறந்ததும் இங்குதான். இவன் ஏழாவது நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து ஒரு பெரிய நாகரிகத்தைச் சீனாவுக்குக் கொண்டு வந்தான். இப்படிக் கொண்டு வரப்பட்ட நாகரிகத்தின் செல்வாக்கு சீனப் பண்பாட்டின் மீதும் நாகரிகத்தின் மீதும் வெகுவாகப் படிந்தது என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன.
கியாங்ஸு4 மாகாணத்திலுள்ள நான்கிங்5 நகரத்தைச் சேர்ந்தாற் போல ஒரு சிறு குன்றின் மீது, சீனக் குடியரசின் தந்தை என்று போற்றப் பட்டு வரும் டாக்டர் ஸன்யாட் ஸென்னுக்கு ஒரு ஞாபகச் சின்னம் எழுப்பப்பட்டிருக்கிறது. சலவைக் கற்களினாலும் நீல நிறப் பீங்கான் ஓடுகளாலும் அமைக்கப் பட்டிருக்கும் இந்தக் கட்டடத்தின் மையத்தில் டாக்டர் ஸன்னின் உருவச் சிலை, படுத்துறங்கும் பாணியில் வைக்கப் பட்டிருக்கிறது.சீனாவில் பார்க்க வேண்டிய இடங்களில் இந்த ஞாபகச் சின்னமும் ஒன்றாகும்.
உலகத்துத் தொன்மையான மொழிகளுள் சீன மொழியும் ஒன்று.1 ஆரம்ப காலத்தில், சீனர்கள் ஒரு பொருளைக் குறிப்பிட வேண்டு மானாலுஞ் சரி, ஒரு கருத்தைத் தெரிவிக்க வேண்டு மானாலுஞ்சரி, அந்தப் பொருளைப் போன்ற உருவத்தையோ, அந்தக் கருத்துக்குப் பொருத்தமான உருவத்தையோ வரைந்து காட்டி வந்தார்கள். உதாரண மாக, பட்சிபறக்கிறது என்ற கருத்தைத் தெரிவிக்க, இரண்டு சிறகுகளை விரித்துக் கொண்டுள்ள பட்சி போன்ற உருவத்தை வரைவார்கள். இப்படியே பல பொருள்களையும் பல கருத்துக்களையும் சித்திரங்கள் மூலமாகவே எழுதிக் காட்டி வந்தார்கள். நாளா வட்டத்தில் இந்தச் சித்திர எழுத்துக்கள், வரை யறுக்கப்பட்ட சில கோடுகளையும் வளைவுகளையும் கொண்ட எழுத்துக்களாக உருக்கொண்டன. இதனால் ஒரு பொருளைக் குறிப்பிடவோ, ஒரு கருத்தைத் தெரிவிக்கவோ ஓர் எழுத்தே போது மானதாயிருந்தது. ஆனால் எத்தனை பொருள்கள் உண்டோ, எத்தனை கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டுமோ அத்தனை எழுத்துக்களும் தேவைப்பட்டன. இப்படித் தேவைப்பட்ட எழுத்துக்கள் சுமார் நாற்பதினாயிர மென்பர். இருந்தாலும் இவற்றிற்கு மூல எழுத்துக் களாக அமைந்துள்ளவை சுமார் அறுநூறு மட்டுமே. இந்த அறுநூறு மூல எழுத்துக்களோடு பொருளுக்கும் கருத்துக்கும் ஏற்ற வகையில் குறிகள் பல சேர்கிறபோது நாற்பதினாயிரம் தனித்தனி எழுத்துக்களாகக் கணிக்கப்படுகின்றன. அச்சு வசதிகள் ஏற்பட்ட பிறகு, இவை எண்ணிக்கையில் வர வரக் குறைந்து, சுலபமாக எழுதுவதற்கேற்ற முறையில் மாறுதல் பெற்றன.
சீனப் புத்தகமொன்றை எடுத்துப் பார்த்தால், ஒவ்வோர் எழுத்தும் தனித்தனியாக இருக்கும்; ஒன்றோடொன்று இணைந் திராது. இந்தத் தனித்தனி எழுத்துக்களை ஒன்றின் கீழ் ஒன்றாக, அதாவது பத்தி பத்தியாக எழுத வேண்டும். தவிர, வலப் பக்கத்தின் மேலே தொடங்கி, பத்தி பத்தியாக எழுதி, கடைசியில் இடப் பக்கத்தின் கீழே கொண்டு வந்து முடிக்க வேண்டும். எழுதுங்கருவியாக மெல்லிய தூரிகையே பெரும் பாலும் உபயோகிக்கப்படும்.
சீனமொழியில் ஒரு சொல்லைச் சொல்கிறபோது குரலின் ஏற்ற இறக்கத்திற்குத் தகுந்தாற் போலவும், உச்சரிப்புடன் அழுத்தம் லேசுக்குத் தகுந்தாற்போலவும், அந்தச் சொல்லின் பொருள் வேறு படும். இந்த உச்சரிப்பு முறைகளும் ஒரு பிரதேசத்திற்கு ஒரு பிரதேசம் வித்தியாசப் படும். இந்த வித்தியாசம் காரணமாக, சீனமொழி ஒன்றா யினும் அதன் உட்பிரிவுகள் பல என்று சொல்வதுண்டு. இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், சீனமொழியின் வரிவடிவம், சீனா முழுவதற்கும் ஒரே படித்தாய் அமைந்திருக்கிறது; ஒலி வடிவத்தில் தான் வேற்றுமைகள் ஏற்பட்டிருக்கின்றன.
சீன சமுதாயத்தின் மீது ஆழ்ந்த முத்திரையிட்டிருக்கிற மதங்கள் மூன்று எனச் சொல்லலாம். செல்வாக்குப் பெற்றிருக்கின்ற வரிசையில் ஒன்று, கன்பூஷிய மதம்;2 இன்னொன்று, லாவோத்ஸே மதம்; இதனை டாவோயிஸம்3 என்றழைப்பர்; மற்றொன்று, புத்த மதம். இவற்றுள் புத்தமதம், இந்தியாவிலிருந்து சென்றதைப் பற்றியும், இது படிப்படியாகச் சீனாவில் செல்வாக்குப் பெற்றதைப் பற்றியும் அதிகம் சொல்லத் தேவையில்லை.4 இதில் மஹாயானம், ஹீனயானம் என்றுள்ள இரண்டு பிரிவுகளில், மஹாயானப் பிரிவைச் சேர்ந்த வர்களின் எண்ணிக்கைதான் அதிகம்.
கன்பூஷிய மதமும் லாவோத்ஸே மதமும், ஹிந்து மதம், புத்த மதம், கிறிதுவ மதம் போன்ற மதங்களென்று சொல்ல முடியாது. கன்பூஷிய5 என்ற ஞானியும் லாவோத்ஸே6 என்ற ஞானியும், கிறிது சகத்திற்குச் சில நூற்றாண்டுகள் முந்தித் தோன்றி, மனி தனையும் சமுதாயத்தையும் நல்வழிப்படுத்துவதற்காகச் சில தத்துவங் களையும் சில கோட்பாடுகளையும் வகுத்து விட்டுப் போனார்கள்.7 அந்தந்தத் தத்துவங்களில் நம்பிக்கை கொண்டவர்களும் கோட்பாடு களைப் பின் பற்றியவர்களும், காலக்கிரமத்தில் ஒரு தனி மதத்தின ராகக் கொள்ளப்பட்டார்கள். அவர்களுடைய ஆசார நியமங்களும், அவர்கள் அனுசரித்த சட்ட திட்டங்களும் தனிப்பட்டனவாயின. சிறப்பாக, கன்பூஷிய மதமானது, அரசியல், சமுதாயம், குடும்பம், இப்படிப் பல துறைகளையும் தழுவியதாய் இருக்கிறதென்று சொல்லலாம்.
இந்த மூன்று மதங்களைத் தவிர, இலாமிய, கிறிதுவ மதங்களும் சீனாவில் பரவியிருக்கின்றன. சீனர்களில் படித்த வகுப் பினரிடையே கிறிதுவ மதத்தின் செல்வாக்கு, பத்தொன்பதாவது நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து சிறிது வேகமாக வளர்ந்து வந்தி ருக்கிறது. இந்த மதங்களைத் தவிர, பண்டைக் கால வழக்கத்தை யொட்டி இயற்கைச் சக்திகளையும் சில ஜீவப் பிராணிகளையும் தெய்வ நிலையிலே வைத்து வழிபடுகின்ற கூட்டத்தினரும் ஆங்காங்கு இருக்கின்றனர். ஆனால் எல்லாச் சீனர்களும், எவ்விதப் பாகுபாடுமின்றி, யாளி போன்ற ஒருவகைப் பிராணியைப் பயபக்தியுடன் வழிபடு கிறார்கள்.
சீனர்கள், அதாவது கன்பூஷியம், லாவோத்ஸம், பௌத்தம் ஆகிய மதங்களைப் பின் பற்றுகின்ற சீனர்கள் - சீனாவின் ஜனத் தொகையில் இவர்களுடைய எண்ணிக்கைதான் அதிகம் - இறந்து போன தங்கள் மூதாதையர்களிடம் அதிக பக்தி செலுத்துகிறவர்கள். சிறப்பாக, கன்பூஷிய மதத்தைச் சேர்ந்தவர்களிடத்திலும் லாவோத்ஸே மதத்தைச் சேர்ந்தவர் களிடத்திலும் இந்தப் பக்தி அதிகமாகக் காணப்படுகிறது. இறந்து போனவர் களைத் தெய்வ மாகக் கருதி வழிபடுவதை இந்தச் சீனர்களுடைய வீடுகளில் சர்வசாதாரணமாகப் பார்க்கலாம். இந்த வழிபாட்டுக் கென்று ஒவ்வொரு வீட்டிலும் ஒரு தனியிடம் ஒதுக்கப் பட்டிருக்கும். அங்கு, அகலத்தைக் காட்டிலும் நீளம் அதிகமாயுள்ள சிறு சிறு பலகைகள் சுவரில் மாட்டப் பட்டிருக்கும். இந்தப் பலகைகளில், இறந்து போனவர்களுடைய பெயர் முதலிய விவரங்கள் பொறிக்கப் பட்டிருக்கும். அவர்களுடைய உருவப்படங்கள் இருந்தால் அவையும் வைக்கப்படுவதுண்டு. இவைகளுக்கு முன்னர், குடும்பத்தைச் சேர்ந்த சிறியவர் பெரியவர் அனைவரும், மூதாதையர்களின் நல்லாசிகோரி மண்டியிட்டு வணங்குவார்கள். வண்ணக்காகிதங்களையோ, ஊது வர்த்தி போன்ற வாசனைத் திரவியங்களைக் கொண்டோ தூபங் காட்டுவார்கள். விசேஷ நாட்களில் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைப்பார்கள்; ஆகார வகைகளை நிவேதனம் செய்வார்கள். இப்படி யெல்லாம் மூதாதையர்களைத் திருப்தி செய்வித்தால்தான் அவர்கள் நல்லாசி வழங்கி, இந்த நிலவுலகில் குடும்பத்தினரை நன்றாக வாழ வைப்பார்களென்ற நம்பிக்கை கொண்டவர்கள் இந்தச் சீனர்கள்.
தவிர இவர்கள் சடங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக் கிறவர்கள். பிறப்பு முதல் மரணம் வரை எத்தனையோ விதமான சடங்கு களை வரையறுத்து வைத்திருக்கிறார்கள். இவற்றிற்கு விதி முறைகள் உண்டு. இவற்றுள் மரணச் சடங்கைச் சிறப்பாகச் சொல்ல வேண்டும். விவாகச் சடங்கைக் காட்டிலும் மரணச் சடங்கை அதிக ஆடம்பரத்துடன் செய்வார்கள். ஏனென்றால் இறந்துபோனவர்கள் திருப்தியாகச் செல்ல வேண்டுமல்லவா? அப்பொழுதுதானே, உயிரோ டிருக்கிற அவருடைய சந்ததியாருக்கு அவர்கள் நல்லாசி வழங்கு வார்கள்?
சாதாரணமாக ஒருவர் இறந்துவிட்டால், அவர் சடலத்தை உடனே அடக்கம் செய்ய மாட்டார்கள்; இறந்து போனவருடைய செல்வத்தையும் செல்வாக்கையும் பொறுத்து, நாள் கணக்கிலோ, மாதக் கணக்கிலோ, சில சந்தர்ப்பங்களில் பத்து வருஷங்கள் கூட பதன்படுத்தி வைத்திருந்து, பிறகு ஒரு நாள் அடக்கம் செய்வார்கள். இப்படிப் பதன்படுத்தி வைப்பதில் சீனர்கள் கைதேர்ந்தவர்கள். பத்து வருஷங்களுக்குப் பிறகுகூட, பதன் படுத்தியிருக்கிற உடல், மரண காலத்தில் எப்படியிருந்ததோ அப்படியே இருக்கும். இன்னும் சொல்லப்போனால், இறந்து போனவர், இறந்து போனவராகத் தெரியாது; தூங்கிக் கொண்டிருக்கிறவர் மாதிரி தெரியும். இதற்காக, வெளிநாட்டார்கள் கூட, முக்கியமானவர்களுடைய சடலங் களைச் சீனாவுக்கு எடுத்துவந்து பதன் செய்வித்து எடுத்துக் கொண்டு போவார்கள்.
இங்ஙனம் சடலம் பதன்படுத்தி வைக்கப்பட்டதும், உற்றாரும் ஊராரும் வந்து உறவினரைத் துக்கம் விசாரிப்பார்கள். நாட்கணக்கில் இப்படி வந்துகொண்டிருப்பார்கள். வருகிறவர் களுக்கு விருந்துகள் நடைபெறும். ஒரு திருவிழாவாகவே இருக்கும். அடக்கம் செய்ய வேண்டிய நாள் வந்ததும், பல்லக்குமாதிரி ஒன்றைத் தயாரித்து அதன்மீது அலங்கரிக்கப்பட்ட சடலத்தை வைப்பார்கள். அதனை, இறந்து போனவருடைய அந்ததுக்குத் தக்கபடி இருபத்து நான்கு பேரோ முப்பத்தாறு பேரோ தூக்கிச் செல்ல, பெரியதோர் ஊர்வலம் தொடங்கும். ஊர்வலத்தோடு பல வகைவாத்தியங்கள் முழங்கிக் கொண்டு செல்லும். முன்னால், இறந்து போனவரின் வழிபாட்டுக் குரியனவாயிருந்த தெய்வங் களின் உருவங்கள், அவர் வகித்த பட்டம் பதவி முதலியவை பொறித்த கொடிகள், அவருக்குப் பிடித்தமாயி ருந்த சில பொருள்கள் இப்படிப் பலவும் எடுத்துச் செல்லப்படும். பேய் பிசாசுகள் எவையும் நெருங்க வொட்டாதபடி, பட்டாசு முதலிய வெடிகளை வெடிக்க விட்டுக் கொண்டு செல்வார்கள். பின்னால், துக்கம் கொண்டாடு கிறவர்களில் முக்கிய மானவர்களான பிள்ளைகளும் பெண்களும், நார்ப்பட்டு போன்ற தொருவகையான உடையை அணிந்துகொண்டு தலைகுனிந்த வண்ணம் செல்வார்கள். அடக்கம் செய்யப்படுகிற போது, இறந்து போனவருடைய நல் லாசியை, கூடியிருக்கிற எல்லோரும் கோருவார்கள். இந்தப் பிரேத ஊர்வலம், அடக்கம் ஆகியவையெல்லாம், இறந்துபோனவருடைய அந்ததுக்குத் தகுந்தபடி, ஆடம்பரத்தில் கூடுதல் குறைச்சல் இருக்கும்.
சீனர்களிற் பலர், குறிப்பாக அதிக கல்வி வாசனையில்லாத விவசாயிகள் போன்றவர்கள், பேய் பிசாசுகளிலும் துர்த் தெய்வங் களிலும் நம்பிக்கையுடையவர்கள். இவை, தங்களையோ, தங்கள் இருப்பிடத்தை யோ நெருங்காதபடியிருக்க, மாலை நேரங்களில் இருப்பிடத்திற்கு முன் பக்கம் காகிதங்களைக் கொளுத்திப் போடுவார்கள்; தெருப்பக்கச் சுவர்களில் வண்ணக் காகிதங்களை ஒட்டி வைப்பார்கள்.
பணம் படைத்தவர்களிற் சிலர், தங்கள் கை நகங்களைச் சிறிது நீளமாக வளர்த்து வைத்திருப்பார்கள். ஏனென்றால், கை நகம் அழுக்குப்பட வேலை செய்வது கௌரவக் குறைவாம். தாங்களோ, அழுக்குப்பட வேலை செய்ய வேண்டிய அவசியத்திற்குட்படா தவர்கள்; சுக ஜீவனம் நடத்துகிறவர்கள்; அப்படி நடத்துகிறவர் களென்று காட்டிக் கொள்வதற்காக நகங்களைச் சிறிது நீளமாக வளர்த்து வைத்திருப்பார்கள்.
இன்னும் சில பணக்காரர்கள், விலையுயர்ந்த ஒருவகைப் பச்சைக் கல்லினால் தயாரிக்கப்பட்ட காப்பை ஒரு கையில் அணிந்து கொண்டிருப்பார்கள்.
பொதுவாகச் சீனர்கள், குடும்பப் பற்று மிகவுடையவர்கள். குடும்ப ஒற்றுமையையும் கௌரவத்தையும் காப்பாற்ற வேண்டு மென்பதில் முனைந்து நிற்பவர்கள். பெற்றோர்களிடம் மரியாதையாக நடந்து கொள்ளுதல், முன்னோர்களின் பழக்க வழக்கங்களை ஒழுங் காக அனுசரித்தல் ஆகிய இந்த இரண்டு தன்மைகளையும் பிரதி யொரு சீன குடும்பத்திலும் காணலாம்..
மூன்று அல்லது நான்கு தலை முறையினர் ஒன்றாகச் சேர்ந்து வாழ்வதைச் சர்வ சாதாரண நியதியாகக் கருதுகிறவர்கள் சீனர்கள். ஒரு குடும்பத்தில், குறைந்தபட்சம் பத்துப் பேராவது இருப்பர். நூற்றுக் கணக்கான பேர்களடங்கிய குடும்பங்கள் பல. இத்தகைய பெரிய குடும்பத்தினர், தனித்த ஒரு சமுதாயம்போலவே வாழ்க்கையை நடத்து வார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னே, சீனப் பத்திரிகைகளில் ஒரு பண்டிதனுடைய புகைப்படம் வெளியாகி யிருந்தது. படித்த பண்டிதன் என்பதற்காக இவன் புகைப்படம் வெளியாகவில்லை; பெரிய குடும்பதன் என்பதற்காகவே வெளியாயிற்று. லீ சிங் யுன் 1 என்ற இந்தப் புலவன், 1660-ஆம் வருஷம் பிறந்தான்; இரு நூற்றைம்பத்தெட்டு வயது வரை வாழ்ந்தான். பதினான்கு தடவை விவாகம் செய்துகொண்டான். இவனுக்கு மொத்தம் நூற்றெண்பது குழந்தைகள். இத்தனை குழந்தைகளோடும் இவன் ஏக குடும்பமாக வசித்து வந்தான். இதற்காகவே இவன் கௌர விக்கப்பட்டான்.
ஷாங்காய் நகரத்தில் ஒரு குடும்பத்தினரின் வரலாற்றைக் கேளுங்கள். இந்தக் குடும்பத்தில் சுமார் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இருந்தார்கள். இவர்கள், தங்கள் குடும்பத்தை ஒரு ராஜ்ய நிருவாகம் போலவே நடத்திவந்தனர். இவர்களுக்குள்ளேயே போலீ சிப்பந்தி களென்ன, பத்திரிகையென்ன முதலிய எல்லாம் இருந்தன; சட்டசபைக் கூட்டங்கள் மாதிரி அடிக்கடி குடும்ப நிருவாகக் கூட்டங்கள் நடைபெற்று வந்தன. இங்ஙனம் பல குடும்பங்களைச் சீனாவிலே காணலாம். தவிர, குடும்பம் ஏக குடும்பமாக இருந்த போதிலும், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பிரதியொரு நபருக்கும், அவரவருடைய அறிவுக்கும் உழைப்புச் சக்திக்கும் தகுந்தபடி ஆண் பெண் அனைவருக்கும், கடமைகள் உண்டு; உரிமைகளும் உண்டு.
சீனாவில் பெண்கள், வீட்டுக்குள்ளேயே அடைத்து வைக்கப் பட்டு அடிமைகளைப் போல் நடத்தப்படுகிறார்கள் என்று, சீனாவை நன்கு அறிந்து கொண்டிருப்பதாகக் கருதிக் கொண்டி ருக்கும் மேனாட்டு அறிஞர் சிலர் கூறுகின்றனர். இஃது உண்மை யல்ல வென்று சீனர்கள் மறுக்கின்றனர். குடும்பப் பொறுப்பு அனைத்தையும் பெண் மக்களிடம் ஒப்படைத்துவிட்டு, ஆண் மக்கள், வெளி விவகாரங்களைக் கவனிப்பதுவே, சீனாவில் தொன்று தொட்டு அனுஷ்டிக்கப்படும் வழக்கமாயிருந்து வருகிறது. யி - சிங்1 என்ற புராதன சீன கிரந்தமொன்று பெண்களின் நியாயமான தானம் குடும்பத்திற்குள்ளே; ஆண்களின் நியாயமான தானம் குடும்பத்திற்கு வெளியே என்று கூறுகிறது. ஒரு சீன அறிஞன் சொல்லுகிறான்: - சீனாவில் ஒரு குடும்பத்தின் தலைமை அதிகாரி யாயிருக்கப்பட்டவள் மனைவி. அவள் செலுத்தும் அதிகாரம் உண்மையிலேயே அதிகமானது; விடுதலையடைந்துள்ள மேலை நாட்டுப் பெண்கள் செலுத்தும் அதிகாரத்தைக் காட்டிலும் அதிக மானது. வீட்டில் மனைவியினுடைய சொல்லுக்குக் கட்டுப் பட்டேகணவன் நடக்கிறான். சீனாவில் நாங்களெல்லோரும் மனைவியின் சொல்லைக் கேட்கிற புருஷர்கள் தான். வெளியிலே வீரச் சிங்கங்கள் மாதிரி நடந்து கொள்கிற அநேக புருஷர்கள், வீட்டுக்குள்ளே வந்ததும் ஆட்டுக் குட்டிகளாக மாறிவிடுகிறார்கள். யுத்த களத்தில் லட்சம் பேரை நடத்திச் செல்வது சுலபமான காரியம்; ஆனால் வீட்டில்ஒரு மனைவியைக் கட்டியாள்வது மகா கடினம் என்பது சீனப் பழமொழி.
இவ்வளவெல்லாம் இருந்தாலும், சமுதாய வாழ்வைப் பொறுத்த மட்டில்பெண்கள் சிறிது தாழ்வாகவே கருதப்பட்டு வந்திருக்கிறார்கள். ஆனால் 1912 - ஆம் வருஷம் குடியரசு ஏற்பட்ட பிறகு இந்த நிலைமை அடியோடு மாறியிருக்கிறது. முன்போல், பெண்களின் கால்கள் இரும்பு பூட்சுகளினால்நெருக்கப்பட்டுக் குறுக்கப்படுவதில்லை. சட்டத்தின் முன்னர் ஆண்களும் பெண்களும் சமமாகவே கருதப்படுகிறார்கள். உயர் தரக் கல்வி பயிலவும் அரசியல் விவகாரங்களில் கலந்துகொள்ளவும் அனுமதிக்கப்படுகிறார்கள். இப்பொழுது அநேக பெண்கள், அரசாங்க உத்தியோகதர் களாயி ருக்கிறார்கள்; ராணுவ சேவையில் ஈடுபட்டிருக் கிறார்கள்.
சீனர்கள், புராதன காலந்தொட்டே அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கிறார்கள். சமுதாயத்தை எந்த வகையாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள் என்பதைக் கொண்டே இதனை நாம் நன்கு தெரிந்துகொள்ளலாம். முதலில் அறிஞர்கள்; இரண்டாவது விவசாயிகள்; மூன்றாவது தொழிலாளர்கள்; நான்காவது வியாபாரிகள். சீன சரித்திரத்தின் ஆழத்தை நாம் சிறிது தோண்டிப் பார்த்தோமானால், பிரதியொரு சீன அரசனும், ஏதோ ஒரு வகையில் அறிஞனாக இருந்திருக்கிறான்; அல்லது அறிஞர்களை ஆதரித்து வந்திருக்கிறான். கி. பி. ஆறாவது நூற்றாண்டில் ஆண்ட ஸூயி அரச வமிசத்தினர் வசத்தில் சுமார் 3, 70, 000 நூல்கள் இருந்தன. 1005-ஆம் வருஷத்தில், ஸூங் வமிசத்தினர் ஆண்ட போது, ஆயிரம் பகுதிகளைக் கொண்ட ஒரு பேரகராதி தயாரிக்கப்பட்டது. யுங்க் லோ1 என்ற மன்னன், 22,877 நூல்களைச் சேகரித்து வைத்தான். இதே மாதிரி பல உதாரணங்களைச் சொல்லிக் கொண்டு போகலாம்.
சீனர்கள், படிப்புக்கு எவ்வளவு புனிதத் தன்மை கொடுத் திருக்கிறார்கள் என்பதற்கு ஒரு சிறிய உதாரணம். அவர்கள் எந்த ஒரு துண்டுக் காகிதத்தையும், அதில் ஏதேனும் எழுதப் பட்டிருந்தால், அதனை அலட்சியமாக வீசி எறிய மாட்டார்கள்; அதனை அசுத்தப் படுத்தக் கூட மாட்டார்கள்; ஜாக்கிரதையாக அந்தத் துண்டுக் காகிதங் களை யெல்லாம் ஒன்று சேர்த்து ஒரு பள்ளிக்கூடத்திற்கோ அல்லது கோயிலுக்கோ கொண்டுபோய் பயபக்தியோடு எரிப்பார்கள். பொது வாகவே சீன சமுதாயத்தில் படித்தவர்களுக்கு அதிகமான மதிப்பு உண்டு. பொன்னையும் மணியையும்விட ஞானத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது, உலகத்திலேயே சீன ஜாதி ஒன்றுதான் என்று பெர்ட்ராண்ட் ரஸல் என்ற அறிஞன் கூறுகிறான்.
சீனர்கள், பொதுவாக அமைதியை விரும்புகிறவர்கள்; அதாவது சமாதானப் பிரியர்கள்; போர்க் குத்தை வெறுக் கிறவர்கள். நல்ல இரும்பை ஆணியாகச் செய்கிறோமா? இல்லையே? அப்படியே நல்ல மனிதர்களைப் போர்ச் சேவகர் களாக்கலாமா? கூடாது என்பது சீனாவில் சர்வ சாதாரணமாக வழங்குகிற ஒரு பழ மொழி. மேலே சொல்லப்பட்ட நால்வகைச் சமுதாயப் பிரி வினைகள் எதிலும் போர்ச் சேவகர்கள் சேர்க்கப் படவில்லை யென்பது குறிப்பிடத்தக்கது. பிழைப்புக்கு வேறு வழியில்லா தவர்கள்தான் ராணுவத்தில் சேருகிறார்கள் என்பது சீனர்களின் சாதாரண நம்பிக்கை.
சீனர்களிடம் காணப்படுகிற இன்னும் சில விசேஷ குணங்கள் என்னவென்றால், சகிப்புத் தன்மை, விடா முயற்சி, செயலின் பயனைப் பற்றிக் கவலைப் படாதிருத்தல், இயற்கை வாழ்விலே இன்பம் துய்க்கும் ஆற்றல், கிடைத்ததைக் கொண்டு திருப்தி யடைதல், சூழ்நிலைக்குத் தக்கபடி, அதாவது கால தேச வர்த்த மானங்களை யொட்டி நடந்துகொள்ளுதல், லௌகிக வாழ்க்கை யையும் பாரமார்த்திக வாழ்க்கையையும் சமமாக நோக்குதல் முதலியனவாம்.
ஆதி காலத்தில்
பழமையின் பிரதிநிதியாயிருந்து பேசும் தகுதி வாய்ந்த சீனா, காலத்தினால் அரிக்கப்படாமலும், அந்நியப்படையெடுப்புக் களினால் சீர்குலைந்து போகாமலும், தன்னிச்சையாக, யாருக்கும் தலை தாழ்த்தாமல் நூற்றாண்டுகள் கணக்கில் வாழ்ந்து வந்தது. பிற்காலத்தில், புதுமையின் பிரதிநிதிகளென்று சொல்லிக்கொண்டு வந்த மேற்கித்திய வல்லரசுகள் அதனை அழிக்கப் பார்த்தன. முடியவில்லை. அது மீண்டும் மீண்டும் தலை தூக்கி நின்றது. அழித்தும் அழிபடாத தேசம் சீனா. அதன் தனிப்பெருமை இது.
இங்ஙனம் அழித்தும் அழிபடாத தேசமாயிருப்பதற்கு அதனுடைய சரித்திரமே சிறந்த சாட்சியாயிருக்கிறது. அதன் சரித்திரம், ஆழங் காண முடியாத ஒரு சுரங்கம். எப்படி ஒரு சுரங்கத்தில் மண்ணும் பொன்னும் கலந்திருக்குமோ அதைப்போல் சீன சரித்திரச் சுரங்கத்தில், தங்கக் குணம் படைத்த மன்னர்கள், மன்பதைகளைத் தங்கள் மக்கள் போல் பரிபாலித்து வந்திருக்கிறார்கள்; மண்ணைச் சுரண்டுவது போல் பிரஜைகளைச் சுரண்டி வந்த அரசர்களும் அதிகாரஞ் செலுத்தி வந்திருக்கிறார்கள். அமைதியான வாழ்க்கையும் ஆரவாரமான புரட்சியும் அதில் மாறி மாறி ஏற்பட்டி ருக்கின்றன. தெய்வ பக்தி, தேச பக்தி, ராஜ பக்தி என்ற மூன்று வித பக்திகளும் அதில் சங்கமமாகியிருக்கின்றன. இப்படிப்பட்ட சரித்திரச் சுரங்கத்தில் நாம் சிறிது இறங்கிப் பார்ப்போம்.
மற்ற நாடுகளைப் போல் சீனாவிலும் அதன் புராதனத்தைப் பற்றி வழங்கப் பெறும் புராணக் கதைகள் பல. இவற்றின்படி, ஆரம்பத்தில் எங்கும் ஒரே தண்ணீர்மயமாயிருந்தது. நாளா வட்டத்தில் இஃது ஒரு பெரும் பாறையாக இறுகியது. இதனை பான் கூ 1 என்ற ஒருவன், பதினெட்டாயிர வருஷகாலம் பொறுமையாகச் செதுக்கி, சிறிதும் பெரிதுமான பல துண்டங்களாக்கினான். இந்தத் துண்டங்களே பூமியாகவும் சந்திர சூரியர்களாகவும் நட்சத்திரங் களாகவுமாயின. இது நிகழ்ந்தது கி.மு. 22,29,000-ஆம் வருஷமென்பர்.
பான் கூ, படைப்புத் தொழிலோடு நின்றுவிடவில்லை. தினந் தோறும் ஆறடி விகிதம் வளர்ந்து வரலானான். சொற்ப காலத் திற்குள், இவன் படைத்த உலகம் பூராவும் இவனே யாகிவிட்டான். இவன் தலையிலிருந்து பல மலைகள் உருக் கொண்டன. இவன் விடுத்த மூச்சு, காற்றாகவும் மேகங்களாகவும் பரிணமித்தன; எடுத்த குரல் இடியாக உறுமியது; இவன் தேகத்து ரத்த நாளங்கள், பல்வேறு ஆறுகளாக ஓடின; உரோமங்கள், புற்களும் மரங்களுமாக வளர்ந்தன; பற்களும் எலும்புகளும் பலவகைப்பட்ட உலோகங் களாயின. இவன் உடலிலிருந்து வழிந்த வியர்வை, மழையாகப் பொழிந்தது. இவன் உடம்பின் மீது ஊர்ந்து கொண்டிருந்த சிறு சிறு பூச்சிகள் மனித உருவங்களாயின. பூலோகத்தில் மனிதர்கள் தோன்றிய வரலாறு இதுதான்.
பான் கூவின் படைப்புத் தொழிலுக்கு உதவியாக, பறக்கும் பாம்பு ஒன்றும், ஒரு பறவையும், ஓர் ஆமையும் இருந்தன என்பது ஐதிகம். பறக்கும் பாம்பு என்பது, யாளி என்று சொல்லுகிறார்களே அந்த வகையைச் சேர்ந்ததாக இருக்கலாமோ என்று தோன்றுகிறது.1 இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துப் பேசுவார்கள் சீனர்கள். ஒட்டகத்தின் தலை; அதில் இரண்டு மான்கொம்புகள்; ராட்சதக் கண்கள்; பாம்புக்கழுத்து; புலியின் பாதங்கள்; கழுகின் நகங்கள்; நீண்ட மூக்கின்கீழ் தாடி; அடர்த்தியான மயிருடைய வால்; மயிர் நிறைந்த கால்கள்; உடம்பு பூராவும் பொன்னிறமான செதிள்கள்; இவ்வகையாகத் தோற்றமளிக்கும் இந்த விசித்திர உருவம், தன் வாயில் எப்பொழுதும் வெண்முத்துக்களை அடக்கிவைத்துக் கொண்டு, அவ்வப்பொழுது, மனிதர்களின் உபயோகத்திற்காகப் பூமியின் மீது உதிர்க்கிறது. நவரத்தினங்கள் மீதும், பொன், வெள்ளி முதலிய விலை மதிப்புடைய உலோகங்கள் மீதும் இதற்கு விருப்பம் அதிகம்; ஆனால் இரும்பை மட்டும் வெறுக்கும். மேலே சொன்ன அங்க அமைப்புக்களில் சில சில மாற்றங்களைக் கொண்ட இந்தமாதிரியான உருவங்கள் பல உண்டென்பதும், இவை ஏரி, சமுத்திரம் போன்ற நீர் நிலைகளில் வசித்துக் கொண்டு அவ்வப்பொழுது மழையைத் தருவித்துக் கொடுக்கின்றன வென்பதும் சீனர்களின் நம்பிக்கை. இந்தப் பயங்கர உருவம், சில சமயங்களில், சூரியனை விழுங்கப் பார்க்கிற தென்றும், அப்பொழுதுதான் சூரிய கிரகணம் ஏற்படுகிறதென்றும் கூறுவார்கள். சுருக்கமாக இதனை ஒரு தெய்வமென்று கருதி வழிபடு வார்கள், சீனர்கள்.
சீனாவில் ஆண்ட அத்தனை அரசர்களும் இந்தத் தெய்வத்தின் திருவருளைப் பெற்றவர்களென்பது ஐதிகம். இவர்கள் அமர்ந்த அரசுக்கட்டில், இந்தத் தெய்வத்தின் பெயராலேயே அழைக்கப் பட்டது. யுத்தமோ, புரட்சியோ ஏற்பட்டால், அரசன் இந்தத் தெய்வத்தைச் சரிவர வழிபடாததுதான் காரணமென்று மக்கள் கருதினார்கள். 1912- ஆம் வருஷம் குடியரசு ஏற்பட்ட வரையில், சீனாவின் தேசீயக்கொடி, யாளியைப் போன்ற இந்த உருவம் பொறிக்கப்பட்டதாகவே இருந்தது. பிறகு இதற்கு மதிப்புப் போய் விட்டது.
பான் கூ, பூமியையும் அதில் மனிதர்களையும் படைத்துப் பல ஆண்டுகளாயின. மிருகங்களைப் போலவே மனிதர்களும் வாழ்ந்து வந்தார்கள். இவர்களை நாகரிகப்படுத்துவதும் ஒழுங்கான ஆளுகைக்குட் படுத்துவதும் அவசியமாயின. எனவே தெய்வ அமிசம் பொருந்திய மன்னர்கள்1 பலர் ஒருவருக்குப்பின் ஒருவராகத் தோன்றினார்கள். ஒவ்வொருவரும் பதினெட்டாயிரம் வருஷம் வீதம் ஆண்டார்களாம். ஆனால் இவர்கள் சாதித்த காரியங்கள் யாவை என்பது சொல்லப் படவில்லை.
இவர்களுக்குப் பிறகு ஸூயி ஜென்2 என்ற ஒரு மன்னன் நமக்கு அறிமுகப் படுத்தப் படுகிறான். இவன்தான் நெருப்பைக் கண்டு பிடித்துக் கொடுத்தானென்று கூறுவர். இவன் காலத்திலிருந்து தான், ஜனங்கள், உணவுப் பொருள்களை நெருப்பில் வேக வைத்துச் சாப்பிடத் தெரிந்து கொண்டார்கள். ஸூயி ஜென்னுக்குப் பிறகு பூ ஸி.3 இவன் கி.மு. 2852-ஆம் வருஷம் முதல் 2737-ஆம் வருஷம் வரையில் ஆண்டானென்பர். இவன் காலத்தில், வலைகள் வீசி மீன்கள் பிடிக்க வும், சில மிருகங்களை வீட்டில் வைத்துப் பழக்கவும், சங்கீதம் பயிலவும், எழுதவும், ஆணும் பெண்ணும் விவாகம் செய்து கொண்டு வாழவும் ஜனங்கள் கற்றுக் கொண்டார்கள்.
பூ ஸிக்குப் பிறகு ஷென் நுங்.4 இவனது ஆட்சிக் காலம்கி. மு.2737 முதல் 2697- ஆம் வருஷம் வரை. இவன் காலத்தில் தான் ஜனங்கள் விவசாயம் செய்யக் கற்றுக் கொண்டார்கள். நோய்களைக் குணப்படுத்தக் கூடிய மூலிகைகள் பல உபயோகத்திற்குக் கொண்டு வரப்பட்டன. வைத்தியத் தொழிலின் மூல புருஷனாக இவனைக் கொண்டாடுகிறார்கள் சீனர்கள். இப்பொழுது கூட, சீனாவிலுள்ள மருந்துக்கடைகள் பலவற்றிலும் இவன் உருவம் வைக்கப்பட்டு அதற்கு வழிபாடு நடைபெறுவதைச் சர்வசாதாரணமாகப் பார்க்கலாம்.
ஷென் நுங்குக்குப் பிறகு ஹுவாங் தீ.5 இவன் பதினாறாவது வயதில் அரச பதவியேற்றான். கி. மு. 2697 முதல் 2597- ஆம் வருஷம் வரை, சரியாக நூறு வருஷகாலம் திறம்பட ஆட்சி நடத்தினா னென்பர். இவனுக்கு மஞ்சள் சக்ரவர்த்தி என்ற ஒரு பெயருண்டு. மஞ்சள் நதி யை யொட்டினாற் போன்றிருந்த பிரதேசத்தில் இவன் ஆட்சி நடைபெற்று வந்ததாகலின், இந்தப் பெயரிட்டு அழைக்கப் பட்டான் போலும். சீன நாகரிகத்தின் பிதாமகன் யாரென்று கேட்டால் இவனையே சுட்டிக்காட்டுவார்கள் சீனர்கள். ஏனென்றால், நாகரிக வாழ்க்கைக்குரிய சாதனங்களென்று இப்பொழுது நாம் எவை எவைகளைக் கருதுகிறோமோ அவைகளிற் பல, இவனால் அல்லது இவன் காலத்தில் கண்டு பிடிக்கப்பட்டதாக ஐதிகம். இவன், தன் ராஜ்யத்தைப் பல மாகாணங்களாகப் பிரித்து ஒவ்வொரு மாகாணத் திற்கும் ஒவ்வோர்அதிகாரியை நியமித்து, கடைசியில் எல்லா மாகாணங்களையும் ஒரு மத்திய அரசாங்கத்தின் நிருவாகத்திற்குட் படுத்தினான். ஒழுங்கானதோர் அரசாங்க அமைப்பு இவன் காலத் திலேயே ஏற்பட்டதென்று சொல்ல வேண்டும். தவிர இவன், நிலங்களை அளவை செய்தான்; கோயில்கள், அரண்மனைகள் முதலியன கட்டு வித்தான்; வண்டியும் படகும், வில்லும் அம்பும், மரப் பாத்திரமும் மட் பாண்டமும் புழக்கத்தில் வரும்படி செய்தான். மற்றும், நாளுங் கிழமையும் தெரிவிக்கின்ற காலண்டர் என்ன, நாணயச் செலாவணி என்ன, அலங்காரமான உடைகளென்ன, திசையறிகருவி என்ன, இவை பலவும் இவன் காலத்தில் தோன்றியவையே. இன்னும் இவன், ஒவ்வொரு காலத்திலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளைக் கோவையாகத் தொகுத்து எழுதிவர, சரித்திராசிரியர்களைத் தன் அரசவையில் அமர்த்திக் கொண்டான். அதாவது ஆதானக் கவிஞர்கள் என்கிற மாதிரி, ஆ தானச் சரித்திராசிரியர்கள் இவன் காலத்தில் ஏற் பட்டார்கள். முதன் முதலாக இவன் செய்த இந்த ஏற்பாட்டைப் பிற்காலத்து அரசர்கள் முறையாகப் பின் பற்றினார்கள்; ஒழுங்கான சரித்திர நூல்கள் பல வெளிவரலாயின.
சீனா, பட்டுத் தொழிலுக்குப் பிரசித்திபெற்றதென்பது எல்லா ருக்கும் தெரிந்த விஷயம். ஹுவாங் தீ மன்னனுடைய மனைவி ஸூ லிங்1 என்பவள்தான், முதன் முதலாகப் பட்டுப் பூச்சியிலிருந்து நூலெடுத்து அதனை ஆடையாக நெய்து உடுத்திக் கொள்ள முடியுமென்று கண்டு பிடித்தவள். இவள் காலத்திற்குப் பிறகு பட்டு உற்பத்தித்தொழில் சீனாவில் வெகுவேகமாக முன்னேறியது.
ஹுவாங் தீ மன்னனுக்குப் பிறகு சுமார் இருநூற்று நாற்பது வருஷகாலம் ஒரே குழப்பம். எந்த விதத்திலும் யோக்கியதையில் லாதவர்கள் அரசர்களென்று பெயர் சூட்டிக்கொண்டு ஆண்டார்கள். கடைசியாக, டீ ஷி 2 என்ற ஒருவனுடைய கொடுங்கோலாட்சி தொடங் கியது. ஜனங்களால் இதைச் சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை. கலகம் செய்து இவனைத் தொலைத்து விட்டு யௌ 3 என்ற ஒருவனை அரச பீடத்தில் அமர்த்தினார்கள்.
இந்த யௌ மன்னனும் இவனுக்குப்பிறகு வந்த ஷுன்4 என்ற மன்னனும் சீல புருஷர்கள்; பண்பாடு தெரிந்தவர்கள். இவை களுக்காகச் சீனர்களால் இன்றளவும் போற்றப்பட்டு வருகிறார்கள்.
யௌ என்பவன், கி. மு. 2356 முதல் 2255- ஆம் வருஷம் வரை சுமார் நூறு வருஷகாலம் ஆண்டானென்பர். இவன் எளிய வாழ்க் கையை நடத்தி வந்தான். அத்தாணி மண்டபத்தில் அமைச்சர் களுடன் இருந்து அரசாங்க அலுவல்களைக் கவனிக்கிற நேரம் போக மற்ற நேரங்களில் சாதாரண ஒரு குடியானவனுடைய உடை யிலேயே இருந்தான். குளிர்காலத்தில் மான்தோலால் தன் உடம்பை மூடிக்கொள்வான். ஓர் அரசனுக்குரிய அணிகளால் தன்னை அலங் கரித்துக்கொள்ளமாட்டான். ஒரு சிறிய கூரை வீட்டிலேயே தன் பெரும் பொழுதைக் கழிப்பான். மண்கலயத்தில்தான் உணவு கொள்வான்.
எளிய வாழ்க்கையுடையவனாக இருந்தது போலவே இவன் காட்சிக்கெளியவனாகவும் இருந்தான். பிரஜைகளின் குறைநிறை களை நேரில் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டு மென்பதில் அதிக சிரத்தை காட்டினான். இவன் வாசதலத்திற்கு முன்னர் ஒரு பலகையும் ஒரு முரசும் எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கும். தன் குறை நிறைகளை மன்னனுடைய கவனத்திற்குக் கொண்டுவர விரும்பும் எந்த ஒரு பிரஜையும், அந்தக் குறை நிறைகளை மேற்படி பலகையில் எழுதி வைத்துவிட்டுப் போகலாம். மன்னன் உடனுக் குடன் கவனித்து ஆவன செய்வான். மன்னனை நேரில் கண்டு தன் குறைநிறைகளைத் தெரிவிக்க வேண்டுமென்று ஒரு பிரஜை விரும்பு வானாகில் அவன் மேற்படி முரசை1 ஒலிக்கச் செய்யவேண்டும். அதைக் கேட்டதும் அரசன், அந்தப் பிரஜையை வரவழைத்து விசாரித்து, அவனுக்கு என்னசெய்ய வேண்டுமோ அதைச் செய்வான்.
யௌவுக்கு அடுத்தபடியாக ஷுன். இவன் ஆட்சிக் காலம் கி. மு. 2255 முதல் 2205-ஆம் வருஷம் வரை. இவனுக்கு எத்தனை விதமான மந்திரிகள் இருந்தார்களென்பதைப் பாருங்கள். (1) மரா மத்திலாகா மந்திரி (2) விவசாய மந்திரி (3) காட்டிலாகா மந்திரி (4) கல்வி மந்திரி (5) குற்ற இலாகா மந்திரி (6) தேவாலயங்களைப் பரிபாலிக்கும் மந்திரி (7) சங்கீத மந்திரி (8) போக்கு வரத்து மந்திரி (9) இவர்களெல்லோருக்கும் மேலாகப் பிரதம மந்திரி ஆகிய இத்தனை பேர் இருந்தார்கள். சங்கீத மந்திரிக்கு ஷுன் இட்டிருந்த கட்டளையைக் கேளுங்கள்: - மந்திரி, உமது போதனை எப்படி இருக்க வேண்டுமென்றால், பிள்ளைகள், சத்தியமாக, ஆனால் சாந்தமாக நடந்துகொள்ளவேண்டும்; அடக்கமாக, ஆனால் பெருந்தன்மை யோடு நடந்து கொள்ள வேண்டும்; பலமுள்ளவராக, ஆனால் கடினமில்லாதவராக இருக்க வேண்டும்; சுறுசுறுப்பாக, ஆனால் கர்வங் கொள்ளாமல் காரியங்களைச் செய்ய வேண்டும். சங்கீதத்தின் மூலமாக எல்லாரையும், எல்லாப் பொருள்களையும் ஐக்கியப் படுத்திவிடலா மல்லவா?
இந்த ஷுன் மன்னன் காலத்தில் யாங்க்ட் ஸீகியாங், ஹோயாங்கோ ஆகிய பேராறுகளிலும் வேறு சில சிற்றாறுகளிலும் அடிக்கடி வெள்ளப் பெருக்கேற்பட்டு ஏராளமான சேதம் உண்டாகி வந்தது. இதற்கு ஒரு பரிகாரம் காணத் தீர்மானித்தான் ஷுன். இவனுடைய நம்பிக்கைக் குரியவனாகவும், கொடுத்த வேலையைத் திறம்படச் செய்து முடிக்கும் ஆற்றல் வாய்ந்த வனாகவும் அரசாங் கத்து உயர்தர உத்தியோகதன் ஒருவன் இருந்தான். யூ1 என்று பெயர்; பெரிய இஞ்சினீர். வெள்ளத்தைத் தடுத்து நிறுத்திப் பயன் படக் கூடிய முறையில் திருப்பி விடுமாறும், இது சம்பந்தமாகச் செய்யும் எந்த ஏற்பாடும் நிரந்தரமான ஏற்பாடாயிருக்க வேண்டு மென்றும் இந்த இஞ்சினீர் யூ வுக்கு உத்தரவிட்டான் ஷுன். உடனே யூ இந்த நற்பணியில் ஈடுபட்டான். ஆங்காங்கு அணைகள் கட்டினான்; புதிய கால்வாய்கள் தோண்டினான்; பழைய கால் வாய்களை ஆழமாக் கினான். யூ ஒன்பது ஆறுகளின் வெள்ளப்பெருக்குக்கு ஒழுங்கான போக்குக் காட்ட ஒன்பது மலைகளைக் குடைந்தான்; ஒன்பது ஏரிகள் கட்டினான் என்று ஒரு சீன வரலாறு கூறுகிறது.2 யூ தோன்றி யிராவிட்டால், நாங்களெல்லாரும் வெள்ளத்தில் மீன்களாக நீந்திக் கொண்டிருப்போம் என்று சீனர்கள் கூறுவார்கள்.
தான் மேற்கொண்ட பணியைச் செய்து முடிக்க, யூ, பதின் மூன்று வருஷகாலம் ஓயாமல் உழைத்தான் என்பர். ஒரு சமயம் இவன், வேலைகளை மேற்பார்வை செய்ய ஓரிடத்திலிருந்து மற்றோரிடத் திற்குப் போய்க் கொண்டிருந்தான். தன் வீட்டு வாசல் வழியாகவே போக வேண்டியிருந்தது. அப்பொழுது இவன் மனைவி பிரசவ வேதனைப் பட்டுக்கொண்டிருந்தாள், குழந்தையும் பிறந்தது; அதன் அழு குரலும் கேட்டது. ஆயினும் இவன் வீட்டிற்குள் நுழையவில்லை; நேரே வேலை மீது சென்று விட்டான். ஜனங்களுடைய க்ஷேமந்தான் இவனுக்குப் பெரிதாகப்பட்டது; தன் சந்தோஷத்தை இவன் பெரிதாகக் கருதவில்லை.
ஷுன் மன்னன், இந்த யூவையே, தனக்குப் பின்னாடி அரசனாக இருந்து ஆளும்படி நியமித்தான். இவனுடைய ஆட்சி கி. மு. 2205 முதல் 2197- ஆம் வருஷம் வரை எட்டு வருஷகாலம் நடைபெற்றது. இந்தக் காலத்தில் உணவுப் பொருள்களின் உற்பத்தி, ஒன்றுக்கு இரண்டு மடங்காக அதிகரித்தது. ஜனங்களுடைய வாழ்க்கைத் தரம் உயர்ந்து காணப்பட்டது. யூவை பிற்காலத்தவர் ஒரு தெய்வமாகக் கொண்டாடத் தலைப்பட்டார்கள்.
இந்த யூ மன்னனுடைய காலத்தில், அரிசியிலிருந்து சாராயம் காய்ச்சுகின்ற முறை கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக அரச னுடைய பாராட்டுதலைப் பெற விரும்பிய சிலர், சாராயத்தின் ஒரு சிறு அளவை ஒரு குப்பியில் நிரப்பி மன்னன் முன்வைத்தனர்; இதனைப் பற்றிய முழுத் தகவல்களையும் தெரிவித்தனர். அனைத்தையும் கேட்டுக் கொண்டே அரசன் - யூ - ஆத்திரத்துடன் குப்பியைக் கீழே போட்டு உடைத்துவிட்டான். உடனே, இந்தச் சாராயம் புழக்கத் திற்குக் கொண்டுவரப்படுமானால் ராஜ்யம் சீரழிந்துவிடுவது நிச்சயம் என்று கூறினான். இவனுடைய இந்த வாக்கு பிற்காலத்தில் பலிக்காமற் போகவில்லை. இஃதொரு பக்க மிருக்கட்டும்
யௌ, ஷுன், யூ ஆகிய இந்த மன்னர்கள் உண்மையிலேயே இருந்தார்களாவென்பது சந்தேகமென்றும், பிற்காலத்தில், அதாவது கி. மு. ஆறாவது நூற்றாண்டுக்குப் பிறகு தோன்றிய கன்பூஷிய, மென்ஷிய போன்ற மகான்கள் சிலருடைய கற்பனையிலிருந்து இவர்கள் பிறந் திருக்க வேண்டுமென்றும் தற்கால ஆராய்ச்சியாளர் சிலர் கருதுகின்றனர். இந்த மகான்கள் வாழ்ந்த காலத்தில், சிற்றரசர் பலரின் கொடுங் கோலாட்சியும் மக்களின் இழி நிலையும் கலந்து உறவாடின. இந்த நிலையிலிருந்து அரசர்களையும் மக்களையும் மீட்டு நல்வழியில் திருப்ப வேண்டுமென்ற நன்னோக்கத்துடன், ஒரு காலத்தில் இந்த நாட்டில் - சீனாவில் எத்தகைய சீல புருஷர்கள் மன்னர்களாயிருந்து வந்திருக் கிறார்கள், இவர்கள் காலத்தில் நாடு பூராவும் எவ்வளவு சுபிட்சமாயிருந்து வந்திருக்கிறது, பாருங்கள் என்று சொல்லிக் காட்டுகின்ற முறையில், யௌ, ஷுன், யூ போன்ற மன்னர்களை உதாரண புருஷர்களாக இந்த மகான்கள் சிருஷ்டித் திருக்கக் கூடுமென்றும், ஏனென்றால், புதை பொருளாராய்ச்சி மூலமாகக் கிடைக்கிற தகவல்களையும் வேறு சில ஆதாரங்களையும் இணைத்து வைத்துப் பார்க்கிற போது, அந்தப் பார்வையில், யூ மன்னனுக்குப் பிந்தி வந்த அரசவமிசங்கள் ஒருவாறு தென்படு கின்றனவே தவிர, முந்தியிருந்தவர்கள் தென்படவில்லை யென்றும் இந்த ஆராய்ச்சியாளர்கள் முடிவு கட்டுகின்றனர். இவர் களுடைய ஆராய்ச்சி எப்படி வேண்டுமானாலும் இருந்து போகட்டும். யௌ, ஷுன், யூ போன்ற மன்னர்களைச் சீனர்கள், பக்தி விசுவாசத்துடன் வெகு காலமாகப் போற்றி வருகிறார்களென்பதை யாரும் மறுக்க முடியாது.
மன்னராட்சித் தொடக்கம்
யூ மன்னன் காலம் வரையில், ஆட்சி நடத்தும் ஓர் அரசன் தன், கடைசி காலத்தில், தனக்குப் பின்னாடி தகுதியுள்ள ஒருவனை நியமித்து, இதற்கு ஜனங்களுடைய சம்மதத்தைப் பெறுவது வழக்கமாயிருந்து வந்தது. இந்த வழக்கத்தை யொட்டியே யௌவும், ஷுன்னும், யூவும் முறையே அரசர்களானார்கள். யூவும், தனக்குப் பின்னாடி, தன்னுடைய மந்திரிகளில் ஒருவனாயிருந்த போ யீ1 என்பவனை அரசனாக இருக்கும்படி நியமித்தான்.
ஆனால் ஜனங்கள் இந்த நியமனத்தை அங்கீகரிக்கவில்லை. யூவின் மகன் சீ2 என்பவனே அரசனாக இருக்க வேண்டுமென்று கூறினார்கள். யூவும் இதற்கு ஒப்புக்கொண்டு சீயை அரசனாக்கினான். வமிச பரம்பரையாக வந்த மன்னராட்சி முறை ஆரம்பமாயிற்று.
யூ மன்னனிடமிருந்து தொடங்கிய இந்த மன்னராட்சி முறை, 1912-ஆம் வருஷம்வரை, சுமார் நாலாயிர வருஷகாலம் சீனாவில் நிலவி வந்தது. உலகத்தில் சீனாவைத் தவிர வேறெந்த நாட்டிலும் இவ்வளவு நீண்ட காலம் மன்னராட்சி முறை நிலவியது கிடையாது.
யூ மன்னனிடமிருந்து ஆரம்பித்த அரச வமிசத்திற்கு ஷியா வமிசம்3 என்று பெயர். ஷியா என்றால் நாகரிகமுடைய என்று அர்த்தம்.
இந்த ஷியா வமிசத்தைச் சேர்ந்த மன்னர்கள் மொத்தம் பதினேழு பேர். இவர்கள் அத்தனை பேரும், ஏதோ ஒரு வகையில் தாங்கள் அமர்ந்த சிங்காதனத்திற்குக் களங்கத்தை உண்டு பண்ணி விட்டு மாண்டார்கள். இவர்களில் கடைசி அரசனாகிய சீஹ்கூயை4 சுமார் ஐம்பத்திரண்டு வருஷகாலம் ஆண்டான். மிகக் கொடியன். இவனுக்கேற்ற ஒரு ராட்சஸி மனைவியாக வாய்த்தாள். இருவரும் சேர்ந்து கொண்டு ஜனங்களைப் பலவித இம்சைகளுக்குட்படுத்தினர். ராஜ்யத்தில் பஞ்சமும் பிணியும் மலிந்தன. ஜனங்கள் நலிந்து போனார்கள். ஓ சூரியனே, நீ சாசுவதமாக அதமித்து விட மாட்டாயா? நாங்கள் செத்துப் போனால்தான் இந்த அரசன் செத்துப் போவானென்றால், நாங்கள் செத்துப்போகத் தயாராயி ருக்கிறோம். எப்படியும் இவன் தொலைந்தால் போதும் என்று சாபமிட்டார்கள். எங்கும் அராஜகம் தாண்டவமாடியது. டாங்5 என்ற ஒரு சிற்றரசன் கலகத்திற்குக் கிளம்பினான். சீஹ்கூயையைத் தொலைத்தான். ஷியா வமிசம் முற்றுப் பெற்றது. 439 வருஷகால வாழ்வு! (கி. மு. 2205 முதல் 1766-ஆம் வருஷம் வரை).
சீஹ் மன்னனைத் தொலைத்த டாங், தானே சிங்காதனம் ஏறினான். இவன் ஷாங்1 என்ற ஜாதியைச் சேர்ந்தவன். இந்த ஷாங்கர்கள் யானைகளைக் கட்டி உழுது பயிர் செய்தார்கள்! மிருகங்களின் வால்களைக் கத்தரித்து அவைகளைப் பதன்படுத்தி எழுதுகோல்களாக உபயோகித்துக் கொண்டார்கள்! நிரம்ப முரடர்கள். இந்த ஜாதியைச் சேர்ந்தவன் தான் டாங். இதனால் இவன் வமிசாவளிக்கு ஷாங் வமிசாவளி என்ற பெயர் வந்தது. இந்த வமிசாவளியில் மொத்தம் இருபத்தெட்டு மன்னர்கள் 644 வருஷகாலம் (கி. மு. 1766 - 1122 ) ஆண்டார்கள். இவர்களில் கடைசி அரசனாகிய சௌ ஹ்ஸின்2 என்பவன், ஷியா வமிசத்தைச் சேர்ந்த சீஹ் கூயைப் போலவே மிகக் கொடி யனாயிருந்தான். ராஜ்யத்தில் கலகம் கிளம்பியது. சௌ3 என்ற ஒரு ஜாதியைச் சேர்ந்த வூ வாங் 4 என்பவன், இதற்குத் தலைமை பூண்டான். சௌ ஹ்ஸின் மன்னன் வீழ்ந்து பட்டான். ஷாங் வமிசம் முற்றுப் பெற்றது.
சீனர்கள், உணவு உட்கொள்ளப் பெரும்பாலும் இரண்டு குச்சிகளை உபயோகிப்பார்கள். பணம் படைத்த சிலர், தந்தத் தினாலேயே இந்தக் குச்சிகளைச் செய்து வைத்துக் கொள்வார்கள். இவைகளுக்குச் சீன பாஷையில் க்வைத்ஸே5 என்று பெயர். இவைகளை உபயோகிக்கிற பழக்கம் மேற்படி சீஹ் கூயை மன்னன் காலத்திலேயே ஏற்பட்டது. இஃதிருக்கட்டும்.
சௌ ஹ்ஸின் மன்னனை வீழ்த்திய வூ வாங் கி. மு. 1122- ஆம் வருஷம் சிங்காதனம் ஏறினான். இவனுடைய வமிசாவளிக்கு சௌ வமிசாவளி என்று பெயர். இந்த வமிசத்தைச்சேர்ந்த அரசர்கள் மொத்தம் முப்பதேழுபேர்; சுமார் 900 வருஷகாலம் (கி. மு. 1122-221) ஆண்டார்கள்.6 சீன சரித்திரத்திலேயே இந்த வமிசத்தினர்தான் நீண்ட காலம் பீடத்தில் அமர்ந்திருந்தவர்கள்.
சௌ வமிசத்தினர் ஆண்ட காலம், சீன சரித்திரத்தில் தங்க மான காலம். எத்தனை ஞான சூரியர்கள் அவதரித்தார்கள்! எத்தனை கலை நிபுணர்கள் தோன்றினார்கள்! நாகரிகத் துறைகள் பலவும் எவ்வளவு செழுமையுற்றிருந்தன! இவைகளையெல்லாம் பற்றிப் பிந்திய அத்தியாயங்களில் சுருக்கமாகச் சொல்லிக் காட்டுவோம்.
சீனாவில் ப்யூடலிஸம்1 என்கிற நிலச்சுவான்தார் ஆட்சி முறை ஏற்பட்டது இந்த சௌ வமிசத்தினர் காலத்தில்தான், ராஜ்ய மானது ஒன்பது மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு மாகாணமும் பல பகுதிகளாக, அதாவது ஜில்லாக்கள் மாதிரி பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு பிரபு நியமிக்கப் பட்டான். இங்ஙனம் நியமிக்கப்பட்ட பிரபுக்கள் ஐந்து தரத்தின ராகப் பிரிக்கப்பட்டிருந்தார்கள். அவரவர்களுக்கென்று பகுத்துக் கொடுக்கப்பட்ட பூமி விதீரணத்தைப் பொறுத்து இந்தப் பிரிவினைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
1. சுமார் 265 சதுரகிலோ மீட்டர்விதீரணமுடைய பூமியை யுடையவன் -குங்
2. சுமார் 213 சதுரகிலோ மீட்டர்விதீரணமுடைய பூமியை யுடையவன் - ஹௌ
3. சுமார் 160 சதுரகிலோ மீட்டர்விதீரணமுடைய பூமியை யுடையவன் - போ
4. சுமார் 107 சதுரகிலோ மீட்டர்விதீரணமுடைய பூமியை யுடையவன் - தூ
5. சுமார் 53 சதுரகிலோ மீட்டர்விதீரணமுடைய பூமியை யுடையவன் - நான்2
இவர்களனைவருக்கும் சேர்த்துத் தொகுப்பான பெயர் சூ- ஹௌ. இவர்களுக்குப் பூரணப் பொறுப்பாட்சி கொடுக்கப் பட்டிருந்தது. ஆனால் வருஷத்திற்கொரு முறை சக்ரவர்த்தியின் சந் நிதானத்திற்கு வந்து, தங்களுடைய நிருவாகம் எப்படி நடைபெறு கிறதென்பதைப் பற்றித் தெரிவித்து, ஒரு தொகையைக் கப்பமாகக் கட்டவேண்டும். தவிர, சக்ரவர்த்திக்குத் தேவைப் படுகிறபோது ராணுவ உதவி செய்ய இவர்கள் கடமைப்பட்டவர்கள். சக்ரவர்த் தியும் ஐந்து வருஷத்திற்கொருமுறை, ராஜ்யம் முழுவதையும் சுற்றிப் பார்த்து வந்தான். அரசனுடைய பரிசோதனை தவிர, பரிசோத கர்கள் என்றே தனியான உத்தியோகதர்கள் நியமிக்கப்பட்டிருந் தார்கள். அரசன், தனது சுற்றுப் பிரயாணத்தின் போது, ஆங்காங் குள்ள அறிஞர்களையும் வயதானவர்களையும் வரவழைத்து, ராஜ்ய நிருவாகத்தைப் பற்றி அவர்களுடைய ஆலோசனைகளைக் கேட்பான்; ஒவ்வொரு பகுதியிலும் என்னென்ன பொருள்கள் உற்பத்தி செய்யப் படுகின்றன வென்று விசாரித்து அவைகளுக்குக் கிராக்கி உண்டாகு மாறு செய்வான்; ஜனங்களைக் கூப்பிட்டு நாட்டிலே வழங்கும் பாடல்களைப் பாடச்சொல்லிக் கேட்பான். இந்த மாதிரியான வகைகளிலே, அரசர்கள் ஜனங்களுடன் நேரான தொடர்பு வைத்துக் கொண்டிருந்தார்கள், மூவாயிரம் வருஷங்களுக்கு முன்னே சீனாவில்.
மேற்படி நிலச்சுவான்தார் முறையில், விவசாயிகளின் நன்மையை முன்னிட்டு ஒருவித பொதுவுடைமை முறையும் கலந்திருந்தது. இதற்கு சிங்ட்டீன் என்று பெயர். நிலங்கள் யாவும் தேசீயப்பொதுச் சொத் தாக்கப்பட்டது. பின்னர், அவரவருடைய தேவைக்குத் தகுந்தபடி நிலங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டன. இருபது வயதுக்கு மேல் அறுபது வயது வரையில் யாரும் இந்த நிலத்தில் உழுது பயிரிட்டுச் சாப்பிடலாம். பின்னர் தக்க வாரிசு இல்லாமற்போனால் நிலத்தை அரசாங்கத்திற்குத் திருப்பிக் கொடுத்து விட வேண்டும். அரசாங்க நிலமென்று ஒரு பகுதி ஒதுக்கி வைக்கப்பட்டது. இதனைப் பிரதி யொரு குடியானவனும் முறை போட்டுக் கொண்டு உழுது பயிரிட வேண்டும். இதிலிருந்து கிடைக்கிற மகசூல், அரசாங்கத்தைச் சேர்ந்தது. இதுவே அரசாங்கத்திற்கு ஜனங்கள் செலுத்து கிற தீர்வை. உதாரணமாக ஒரு சதுரலீ,1 ஒன்பது பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டு எட்டு குடும்பங் களுக்கு வினியோகிக்கப்பட்டது. ஒன்பதாவது பகுதி அரசாங்கச் சொத்து. இதனை இந்த எட்டுக் குடும்பத்தினரும் மாறி மாறிப் பயிரிட்டு. கிடைக்கிற தானியத்தை அரசாங்கத்திற்குத் தீர்வை யாகச் செலுத்த வேண்டும். இந்த முறையினால், சக்தியுள்ளவர்கள், உழைத்துப் பிழைப்பதற்குச் சந்தர்ப்பங்கள் இருந்தன; வேலை கிடைக்கவில்லை, அல்லது பயிரிட்டுச் சாப்பிட நிலமில்லை யென்று சொல்லி யாரும் சும்மா உட்கார்ந்திருக்கவில்லை. எல்லோரும் உழைத்தார்கள். ஏராளமான பொருள்கள் உற்பத்தியாயின. ராஜ்யம் சுபிட்சமாயிருந்தது.
அறுபது வயதுக்கு மேற்பட்ட ஆண் பெண் அனைவரையும், அரசாங்கத்தார் தங்கள் செலவில் காப்பாற்றி வந்தனர். மற்றும் தேக பலமில்லாதவர், அங்கவீனர். நோயாளிகள் முதலியோர், அரசாங்கத் தாருடைய பராமரிப்பிலேயே வாழ்ந்து வந்தனர்.
விவசாயம் தவிர வேறு பல கைத் தொழில்களும் செழுமை யுற்றிருந்தன; வியாபாரமும் அபிவிருத்தி அடைந்திருந்தது. மர வேலை செய்வோரில் மட்டும் ஏழு பிரிவினர் இருந்தனர் என்றும், இங்ஙனமே பல தொழில் நிபுணர்கள் இருந்தார் களென்றும் ஒரு வரலாறு கூறுகிறது. மட்பாண்டங்களில் சித்திரங்கள் வரையும் தொழில் இந்த சௌ ஆட்சியின் போது மிகவும் முன்னேறியிருந்தது. வியாபாரமும் கைத் தொழில்களும் அபிவிருத்தியடைந்திருந்த காரணத்தினால் புதிய புதிய நகரங்கள் அநேகம் தோன்றின. போக்குவரத்து சாதனங்கள் அதிகமாயின. நாடக மேடைகளென்ன, இலக்கியச் சபைகளென்ன, வியாபாரச் சங்கங்களென்ன, இங்ஙனம் பல படித்தான துறைகளிலும் ஒருவித உயிர்த் துடிப்பு இருந்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த உன்னத வாழ்வு நீடித்த காலம் நிலைத்திருக்கவில்லை; நான்கு நூற்றாண்டுகளுக்குப் பிறகு அசைய ஆரம்பித்துவிட்டது.
நிலச் சுவான்தார் ஆட்சி முறையிலே மத்திய அரசாங்கத்திற்கு அதாவது சக்ரவர்த்திக்கு - எவ்வளவு பாதுகாப்பு இருந்ததோ அவ்வளவு ஆபத்தும் இருந்தது. நிலச் சுவான்தார்கள் ஐந்து தரத்தின ராகப் பிரிக்கப் பட்டிருந்தனரல்லவா? அந்தது வித்தியாசம் ஏற்படுத்தப்பட்ட காரணத் தினால் இவர்களுக்குள் பரபரம் பொறாமை உண்டாயிற்று. பொறாமை பகைமையில் கொண்டு விட்டது. இந்தப் பகைமை எங்கே போய்த் தாக்கும்? சக்ரவர்த்தியின் சிங்காதனத்தைத் தானே? அந்தச் சிங்கா தனத்தில் அமர்ந்திருக் கிறவன் வலுவுள்ளவனாயிருக்கிறவரையில் அஃது ஆட்டங் கொடாதுதான். ஆனால் ஒரு பலவீனனோ அல்லது ஒரு கொடுங் கோலனோ அதில் அமர்ந்திருந்தால், சுற்றுப் புறமுள்ள சிற்றரசர்கள் தங்கள் பகைமையைப் பகிரங்கமாக வெளிக் கொணர்வார்கள் அல்லவா?
சௌ வமிச ஆட்சி தொடங்கிச் சுமார் 250 வருஷ காலம், திறமையான மன்னர்கள் வரிசைக் கிரமமாக ஆண்டு வந்தார்கள். பிறகு லீ1 என்ற ஓர் அரசன் பட்டமேற்றான். அணு அளவும் மனிதப் பண்பு இல்லாதவன். இதனால் நாட்டில் அதிருப்தி வளர்ந்தது. சிற்றரசர்கள் கப்பஞ் செலுத்த மறுத்து விட்டார்கள். விரோத உணர்ச்சி தலை தூக்கி நின்றது. லீ மன்னன் பயந்து போய், நாட்டை விட்டு ஓடி விட்டான். இப்படி இவன் ஓடியது கி. மு. 841-ஆம் வருஷம். இந்த வருஷத்திலிருந்துதான் சீன சரித்திரத்தின் பல நிகழ்ச்சிகளையும் நிர்ணயமாகச் சொல்ல முடிகிறதென்று தற்கால சரித்திராசிரியர்கள் கருதுகிறார்கள்.2
லீ மன்னன் ஓடிப்போன பிறகு சுமார் அறுபது வருஷ காலம் ஏதோ ஒருவிதமாக ராஜ்ய விவகாரங்கள் நடைபெற்று வந்தன. பிறகு யூ2 என்பவன் சிங்காதனத்தில் அமர்ந்தான். இவன் சௌ வமிசத்தின் பன்னிரண்டாவது மன்னன். தேய்பிறை வாழ்வு ஆரம்பித்துவிட்டது.
இந்த யூ மன்னனுக்கு ஓர் அழகிய வைப்பாட்டி இருந்தாள். அவள் மீது அரசன் அதிகமான மோகம் வைத்திருந்தான். அவளுக்கு விநோதமான ஓர் ஆசையுண்டு. பட்டுத்துணிகளைக் கிழித்தால் ஒரு வித ஓசை உண்டாகுமே அந்த ஓசையை எப்பொழுதும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டுமென்பது அவள் ஆசை! இதற்காக அரசன், பட்டுத் துணிகளை வரவழைத்து, அவள் கேட்கும்படியாகக் கிழிக்கச் செய்வான்! பட்டு உற்பத்தி எவ்வளவு அதிமாயிருந்தால் இந்த மாதிரி ஓர் அரசன் செய்வான் என்பதை ஊகித்துப் பாருங்கள்.
இங்ஙனம் அரசன் அவளைச் சந்தோஷிப்பிக்க முயன்றாலும் அவள் முகத்தில் சிரிப்பென்பது வருவதே கிடையாது. அவள் சிரிக்காமலிருந்தது மன்னனுக்கு அழுகையாயிருந்தது. இதற்காக ஒரு யுக்தி செய்தான். ராஜ்யத்திற்கு எதேனும் ஆபத்து ஏற்பட்டு, சிற்றரசர்கள் தங்கள் சேனை சகிதம் திரண்டு வரவேண்டுமென்றால், அரண்மனையிலிருந்து ஒரு பெரிய வெளிச்சத்தைக் காட்டுவது வழக்கம். இந்த வெளிச்சத்தை ஒரு நாள் காட்டும்படி யூ மன்னன் ஏற்பாடு செய்தான். சிற்றரசர்கள் பலரும் படை திரட்டிக் கொண்டு ஓடி வந்தார்கள். வந்து பார்த்து வெறும் வேடிக்கைக்காக இப்படிச் செய்யப்பட்டதென்று தெரிந்து திகைத்துப் போனார்கள். இவர்கள் திகைத்து நிற்பதைக் கண்டு அவள்- அந்த வைப்பாட்டி - கொல் லென்று உரக்கச் சிரித்து விட்டாள். வந்திருந்தவர் களுக்கு அவமான மாகப் போய்விட்டது.
பின்னர் ஒருமுறை நிஜமாகவே மேற்குப் பக்கத்திலிருந்து ஒரு முரட்டு ஜாதியார் படையெடுத்து வந்தனர். அரண்மனையில் வெளிச்சம் உண்டு பண்ணப்பட்டது. ஆனால் உதவிக்குச் சிற்ற ரசர்கள் யாரும் வர வில்லை. பகைவர்கள் தலைநகருக்கு வந்து அரசண் மனைக்குள் நுழைந்தனர். அரசன் கொலையுண்டான். அந்த அழகியைத் தூக்கிக் கொண்டு போய் விட்டார்கள். ஓர் அழகியின் சிரிப்பு, ராஜ்யத்திற்கு நெருப்பாகிவிட்டது என்பது ஒரு சீனப் பாட்டு. இந்தச் சம்பவம் நடந்தது கி. மு. 771- ஆம் வருஷத்தில்.
இதற்குப் பிறகு வந்த அரசர்கள், வெறும் அலங்கார பொம்மை களாகவே கொலு வீற்றிருந்தார்கள். இதனால் ராஜ்யத்தின் கட்டுக் கோப்பு தளர ஆரம்பித்தது. உள் நாட்டுக் குழப்பங்கள் தோன்றின. இந்தக் குழப்பங்கள் வர வர அதிகரித்துக் கொண்டு வந்தன. ஜனங்களுக்கு மன நிம்மதி என்பது இல்லாமலே போய்விட்டது; உலக வாழ்விலே ஒரு விரக்தி கூட ஏற்பட்டுவிட்டது. சுமார் ஐந்நூற்றைம்பது வருஷகாலம் இந்தக் குழப்ப நிலைமை இருந்தது.
ராஜ்யத்தின் கட்டுக் கோப்பு தளர்ந்து வந்ததன் விளைவாக, அதுகாறும் ஒருவாறு கப்பஞ் செலுத்தி வந்த சிற்றரசர்கள், தனித் தனி ராஜ்யத்தினராகப் பிரிந்துவிட்டார்கள். ஒவ்வொரு சிற்றரசனும் தனக் குத்தானே பெரியவன் என்று நினைத்துக் கொண்டு தான் வகுத்துக் கொண்ட ராஜ்யத்தை தன்னிஷ்டம் போல் ஆண்டு வந்தான். இந்த ராஜ்யங்களிலே ஒன்றாயிருந்தது சின் பிரதேசம். இதனை ஆண்டு வந்தவன், மற்ற அரசர்களைக் காட்டிலும் வல்லமை படைத்தவனா யிருந்தான். இவன், தன்னைச் சுற்றியுள்ள அரசர்களை ஒவ்வொரு வராகத் தனக்கு அடி பணியும்படி செய்து விட்டான். கடைசியில் கி. மு. 221- ஆம் வருஷம், சௌ வமிசத்துக் கடைசி மன்னனை வெற்றி கொண்டான். சுமார் 900 வருஷ காலம் சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்த சௌ வமிச விளக்கு அணைந்து விட்டது.
வெற்றி கொண்ட சின் மன்னன், சர்வ சீனாவுக்கும் தானே சக்ரவர்த்தி என்று முடிசூட்டிக் கொண்டான். (கி. மு. 221), இவன் பெயர் சின் ஷி ஹுவாங் தீ.1 ஹ்வாங் தீ என்றால் சீன பாஷையில் தெய்விகச் சக்ரவர்த்தி என்று அர்த்தம். இவனிடமிருந்து சின் வமிச2 ஆட்சி தொடங்கியது.
நன்னெறி காட்டிய ஞானியர்
விரக்தியிலிருந்து ஞானமும், ஏக்கத்திலிருந்து முயற்சியும், திகைப்பிலிருந்து வீரமும் உண்டாவது இயல்பு. மனிதர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் இதனை நாம் நன்றாகப் பார்க்கிறோம். ஒரு தேசத்திற்கும் இது பொருந்தும். சௌ வமிச ஆட்சியின் பிற்பகுதி குழப்பமாயிருந்ததல்லவா? இந்தக் காலத்தை சீன சரித்திரத்தின் குழப்ப காலம் என்றே சரித்திரக்காரர் கூறுவர். ஆனால் இந்தக் குழப் பத்தில் தெளிவும் காணப்பட்டது. குழப்பங்கள் அடிக்கடி உண்டான காரணத்தினால் ஜனங்களுக்கு வாழ்க்கையிலேயே ஒரு கசப்பு ஏற்பட்டது. அவர்களுடைய மனம் ஞான மார்க்கத்தில் சென்றது. இந்த வழியைக் காட்டினவர்கள்தான் லாவோத்ஸேயும் கன்பூஷியஸும். இவ்விருவரையும் பற்றிச் சொல்லாவிட்டால் சீன சரித்திரம் பூர்த்தி யாகாது.
சீனாவைப் பற்றி அதிகமாகத் தெரியாத வெளிநாட்டாருக்குக் கூட கன்பூஷியஸின் பெயர் நன்றாகத் தெரியும். ஏனென்றால் இவனு டைய பெயர் உலகப் பிரசித்தியாகிவிட்டது. ஆனால் கன்பூஷி யஸைக் காட்டிலும் லாவோத்ஸே தான் மூத்தவன். இருவரும் ஏறக் குறைய சமகாலத்தவர்.
சீனாவின் தெற்குப் பாகத்திலுள்ள சூ1 என்ற மாகாணத்தில் ஏறக்குறைய கி. மு. 604-ஆம் வருஷம் லாவோத்ஸே பிறந்தான். அப் பொழுது சௌ வமிசத்து அரசர்கள், லோயாங்2 என்ற ஊரைத் தலைநகர மாக்கிக் கொண்டு ஆண்டு வந்தார்கள். லாவோத்ஸே, கொஞ்சம் வயது வந்ததும் மேற்படி ஊருக்குச் சென்று அங்கிருந்த ஒரு புத்தகசாலையில் உத்தியோகதனாக அமர்ந்தான். அமைதியாக இருந்து படிப்பதற்கும் ஆராய்ச்சி செய்வதற்கும் நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. இப்படி அநேக வருஷங்கள் கழிந்தன. சௌ வமிசத் திற்கு முடிவு காலம் சமீபித்து விட்டதென்று இவனுக்குச் சூட்சும மாகத் தெரிந்தது. எனவே அந்த ராஜ்யத்திற்குள் இருக்க விரும்பவில்லை. வெளியே புறப்பட்டுவிட்டான். வழியில் இவனை ஓர் அரசாங்க அதிகாரி சந்தித்து ஐயா பெரியவரே! எங்களெல்லோரையும் நல்வழிப்படுத்தும் பொருட்டு ஏதேனும் ஒரு நூல் எழுதக்கூடாதா? என்று கேட்டான். அதற்கு லாவோத்ஸே ஆகட்டுமென்று சொல்லி, சிறிய நூலொன்று எழுதினான். இவனால் உலத்திற்கு அளிக்கப்பட்ட பெரிய நன்கொடை இது.
இவன் கூறிய நல்வழிக்கு டாவோ1 என்று பெயர். அதாவது, எல்லாவற்றிற்கும் மூலாதாரமாயிருக்கப்பட்ட பரம்பொருளை அடையும் மார்க்கம் என்று ஒருவாறு கூறலாம். அந்தப் பரம் பொருளை அறிந்து அதன்படி வாழ்க்கையை நடத்துகிறவன் சன் மார்க்கத்தில் செல்கிறான் என்பது இவன் கோட்பாடு. பரம்பொரு ளுண்மையை இவன் பின்வருமாறு வருணிக்கிறான்:-
அஃது எவ்வளவு மகத்தானது! அதனைக் காண முடியாது; கேட்க முடியாது. அதற்குப் பெயருமில்லை. எவ்வளவு மௌனமா யிருக்கிறது அது! அதற்கு உருவமில்லை. ஆனால் அஃது எங்கும் வியாபித்திருக்கிறது. எல்லாப் பொருள்களும் அதனையே தங்கள் உயிராகக் கொண்டிருக் கின்றன. அவைகளை அது மறுப்பதில்லை. எல்லா உயிர்களையும் அது நேசிக்கிறது. போஷிக்கிறது. ஆனால் எதனையும் தன்னுடையதென்று சொந்தமாக்கிக் கொள்வதில்லை. எல்லாப் பொருள்களும் எல்லா உயிர்களும் அதனிடத்திலிருந்து தோன்றுகின்றன; அதனிடத்திலேயே போய் ஒடுங்குகின்றன. ஆனால் அஃது எதனையும் எஜமானனாக இருந்து ஆள்வதில்லை. அதற்குப் பெயர் சொல்ல முடியாது. ஆனால் எப்பொருளையும் அது மாற்ற முடியும்; பூரணத்துவம் பெறச் செய்ய முடியும்.
இந்தப் பரம்பொருளுண்மையை அறிந்து கொண்டு அதன் படி எவன் வாழ்க்கையை நடத்துகிறானோ அவனுக்குப் பகை மையில்லை; போராட்டமில்லை. அவன் உலகச் சுழலிலே அகப்பட்டுக் கொள்ள மாட்டான்; சும்மாயிருப்பதிலே சுகத்தைக் காண்பான். சடங்குகளைச் செய்வதன் மூலமாகக் கடவுள் நெறியில் செல்ல முடியாது. இயற்கை யோடியைந்த வாழ்விலேதான் உண்மையான இன்பம் இருக்கிறது.-இந்த மாதிரியான கொள்கைகளையே லாவோத்ஸே வலியுறுத்துகிறான். இவனுடைய உபதேசங்களில் சிலவற்றைக் கேளுங்கள்.
கருவிகளிலே போர்க்கருவிகள் வெற்றியைத் தருகின்றன என்றாலும் அவைகளை நாம் கொண்டாடுகிறோமா? இல்லை. யுத்தத்தில் வெற்றியடைந்து விட்டோம் என்று மகிழ்ச்சியடைகிறவன், அநேகம் பேரைக் கொன்றதிலே மகிழ்ச்சியடைகிறவனாகிறான். கொலையிலே மகிழ்கிறவன், ராஜ்யத்தை சாசுவதமாக ஆள முடியாது.
கருணையோடுள்ளவன்தான் பலசாலி.
கடினமாகவும் முரட்டுத்தனமாகவுமுள்ள பொருள்கள் மரண ராஜ்யத்தைச் சேர்ந்தவை; மென்மையாகவும் பலவீன மாகவுமுள்ள பொருள்களே வாழ்ந்து கொண்டிருப்பவை.
“சன்மார்க்கம் என்பது, வில்லை வளைப்பதுபோல, அஃது உயர்ந்தவர்களைத் தாழ்த்துகிறது.; தாழ்ந்தவர்களை உயர்த்துகிறது.
சன்மார்க்கம் என்பது ஞானபாட்டை. ஆனால் ஜனங்கள் சந்து பொந்துகளிலே நுழைந்து போகத்தான் பார்க்கிறார்கள்.
வடக்கு சீனாவில் லூ1 என்பது ஒரு பிரதேசம். இப்பொழுது ஷாண்டுங் மாகாணத்திலுள்ள சேபூ2 என்ற நகரந்தான் இது. இங்கே சுமார் இரண்டாயிரத்தைந்நூறு வருஷங்களுக்கு முன்னே- இந்தியாவில் ஏறக்குறைய புத்தர்பிரான் வாழ்ந்த காலத்திலே - பரம் பரையான போர் வீரர் குடும்பமொன்று வாழ்ந்து வந்தது. குங்3 என்பவன் இந்தக் குடும்பத்திற்கு எஜமானனாயிருந்தான். இவனுக்கு ஒன்பது பெண்கள். ஆண் சந்ததி இல்லையேயென்று குங்கும் அவன் மனைவியும் வருத்தப்பட்டார்கள்; தெய்வத்தை நோக்கிப் பிரார்த் தனை செய்தார்கள். இந்தப் பிரார்த்தனையின் பயனாக கி.மு. 551-ஆம் வருஷம் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. இதுவே பிற்காலத்தில் கன்பூஷிய என்ற பெயரால் பிரசித்தியடைந்தது.
கன்பூஷியஸூக்கு மூன்று வயது. தகப்பன் இறந்துவிட்டான். குடும்பத்தைக் காப்பாற்றுவார் யாருமில்லை. எனவே மிகவும் ஏழ்மை நிலையையடைந்து விட்டது. ஆனால் பாலிய கன்பூஷியஸூக்கு இது நல்ல பாடமாயிருந்தது. தன்னம்பிக்கையும் விடா முயற்சியு முடைய வனானான். அநேக சிரமங்கள் பட்டு குடும்பத்தைக் காப்பாற்றி வந்தான். பத்தொன்பதாவது வயதில் விவாகம் செய்து கொண்டு ஓர் உத்தியோகத்தில் போய்ச் சேர்ந்தான். என்ன உத்தியோகம்? தானியக் களஞ்சியங்களை மேற்பார்வை செய்வது. இதில் இவன் நல்ல பெய ரெடுத்ததனால், தோட்டங்கள், கால் நடைகள் முதலியவைகளை மேற்பார்வை செய்யும் உத்தியோ கதனாக நியமிக்கப்பட்டான். இந்த உத்தியோகத்திலிருக்கிற போழ்து, இவன், ராஜ்யத்தின் குழப்ப நிலைமையை நேரில் காண முடிந்தது. ஜனங்கள் பலவித கஷ்டங் களுக்குட்பட்டார்கள். பணக்காரர்களும், அதிகார பலம் படைத் தவர்களும் ராஜ்யத்தின் சட்டதிட்டங்களைச் சிறிது கூடப் பொருட் படுத்தாமல் தங்களிஷ்டப்படி காரியங்கள் செய்து வந்தார்கள். பணபலமோ அதிகார பலமோ இல்லாதவர்கள், எப்போதுமே ஒருவித கவலையுடனேயே வாழ்ந்து வந்தார்கள். ஒழுங்கான வாழ்வு நடத்துவ தென்பது அரிதாகி விட்டது. இவைகளையெல்லாம் கன்பூஷிய நேரில் பார்த்தான்; பரிகாரம் தேடுவது தனது கடமையெனக் கொண்டான். ஒரு சிறிய பள்ளிக்கூடம் ஆரம்பித்தான். அப்பொழுது இவனுக்கு வயது இருபத்திரண்டு.
பள்ளிக்கூடத்தில் வந்து சேர்ந்த இளைஞர்களுக்கு இவன், ஒழுங்கு, ஒழுக்கம் முதலியவற்றைக் கற்பித்தான். அநேக குடும்பத்தினர், இவன் படிப்புச் சொல்லிக் கொடுக்கிற மாதிரியைப் பாராட்டி, தங்கள் பிள்ளைகளை இந்தப் பள்ளிக்கூடத்தில் கொண்டுவந்து சேர்ப்பித்தனர். ஆனால் கன்பூஷிய, பணக்காரக் குடும்பத்துப் பிள்ளைகளிடமிருந்து மட்டுமே கட்டணம் வாங்கினான்; ஏழைப் பிள்ளைகளுக்கு இலவசமாகவே பாடஞ் சொல்லிக் கொடுத்தான். இங்ஙனம் பள்ளிக்கூடத்தை நடத்தி வந்ததோடு, தன் உத்தி யோகத்தையும் ஒழுங்காகச் செய்து வந்தான்; நிருவாக ஊழல்களைக் களைந்து, ஜனங்களுக்கு நன்மைகளை உண்டு பண்ணினான். இதனால் இவனுடைய பெயர் பிரசித்தமாயிற்று.
இப்படி இருக்கையில் லூ ராஜ்யத்தில் ஒரு பெரிய கலகம் உண்டாயிற்று. அரசன் உயிர் தப்பி ஓட வேண்டியதாயிற்று. அவன், பக்கத்திலிருந்த த்ஸி 1என்ற ராஜ்யத்தில் போய் அடைக்கலம் புகுந்தான். கன்பூஷிய பெரிய ராஜவிசுவாசி. எனவே தானும் அரசனுடன் மேற் படி த்ஸி ராஜ்யத்திற்குச் சென்றான். அங்கே இவனுக்கு உத்தியோகம் கொடுப்பதாகச் சொன்னார்கள். ஆனால்அந்த ராஜ்யத்து அரசன், தன்னை கண்ணியமாக நடத்தமாட்டானென்பதைத் தெரிந்து கொண்டு, உத்தியோகத்தை மறுத்துவிட்டு, திரும்பவும் தனது லூ ராஜ்யத்திற்கே வந்துவிட்டான். வந்து, பழைய மாதிரி தன் பள்ளிக் கூடத்தைத் தொடங்கி நடத்தினான். நூற்றுக்கணக்கான மாணாக் கர்கள் இவனுடைய பள்ளிக்கூடத்தில் வந்து சேர்ந்தார்கள். சுமார் பதினைந்து வருஷகாலம் இப்படி நடந்து வந்தது.
இதற்குள் ராஜ்யத்தில் மாறுதல் ஏற்பட்டது. புதிய அரசன் ஒருவன் சிங்காதனத்திலமர்ந்தான். அவன், கன்பூஷியஸின் நியாய புத்தியை நன்கு அறிந்திருந்தவன். எனவே இவனை, ராஜ்யத்தின் பிரதம நீதிபதியாக நியமித்தான். அப்பொழுது இவனுக்கு வயது ஐம்பத்திரண்டு. இந்த உத்தியோகத்தை இவன் திறம்படச் செய்து வந்தானாதலின், வெகு சீக்கிரத்தில், அரசன், இவனைப் பிரதம மந்திரியாக நியமித்தான்.
பிரதம மந்திரி கன்பூஷியஸின் நிருவாகத்தின் கீழ், லூ ராஜ்யம், மற்ற ராஜ்யங்களுக்கு ஒரு முன்மாதிரியாயிருந்தது. சுமார் இரண்டா யிர வருஷங்களுக்குப் பின்னாடி உலகத்து நாகரிக ராஜ்யங்கள் என்னென்ன சீர்திருத்த முறைகளைக் கையாண்டனவோ அவை களையெல்லாம், கன்பூஷிய ஒரு தீர்க்கதரிசி போலிருந்து, தனது லூ ராஜ்யத்தில் செய்தான். சாமான்களின் விலைவாசிகளை ஒரு கட்டுப் பாட்டுக்குட்படுத்தினான்; அவரவர்களுடைய தேகபலத் திற்கும் அறிவுத்திறமைக்கும் தகுந்தபடி உத்தியோகங்கள் கொடுத்தான்; உணவுப் பரீட்சை செய்து அவரவருடைய உழைப்புக்குத் தகுந்தபடி ஆகார வகைகளை நிர்ணயித்து யாவருக்கும் சுலபமாகக் கிடைக்கு மாறு செய்தான்; பணக்காரர்கள், ஏழைகளைச் சுரண்டாதபடி தடுத்தான்; ஏழையென்றும் பணக்காரனென்றும் வித்தியாசம் பாராட்டாமல் எல்லோருக்கும் ஒரே மாதிரி நீதி வழங்கினான்.
இவையெல்லாம் நல்ல சீர்திருத்தங்கள் தான். ஆனால் பணக் காரர்களும் பெரிய நிலப்பிரபுக்களும் இந்தச் சீர்திருத்தங்களை விரும்பவில்லை. ஏனென்றால் அவர்களுடைய ஏகபோக உரிமைக்கு இவை பெரிய தடையாக இருந்தன. எனவே, பக்கத்து த்ஸி ராஜ்ய அரசனோடு சேர்ந்து கொண்டு, கன்பூஷியஸூக்கு விரோதமாகச் சூழ்ச்சி செய்தார்கள். இந்தச் சூழ்ச்சிகளின் விளைவாக கன்பூஷிய பிரதம மந்திரிப் பதவியிலிருந்து விலக்கப்பட்டுவிட்டான். சுமார் நான்கு வருஷத்தோடு இவன் உத்தியோகம் முடிந்துவிட்டது. இனி, இந்த ராஜ்யத்தில் இருக்கக்கூடாதென்று சொல்லி, நாட்டைவிட்டு வெளியேறி விட்டான்.
இவனுடன் இவனுடைய சிஷ்யர் பலரும் பின் தொடர்ந் தார்கள். கன்பூஷியஸூம், தன் சிஷ்யர்களுடன் பல இடங்களிலும் சுற்றித் திரிந்தான். தனது சேவையை எந்த அரசனேனும் ஏற்றுக் கொள்வானா வென்று பார்த்தான். ஏற்றுக்கொள்வார் யாருமில்லை. இஃது எதைக் காட்டுகிறதென்றால், தேசமெங்கணும் நியாயத் திற்கும் தருமத்திற்கும் மதிப்பில்லையென்பதையே காட்டுகிறது; தேசம், அவ்வளவு ஓழுங்கற்ற நிலைமையிலிருந்ததென்பதையே நிரூபிக்கிறது. கன்பூஷிய, இங்ஙனம் சுமார் பதின்மூன்று வருஷ காலம் வீணாகச் சுற்றித்திரிந்து விட்டுக் கடைசியில் லூ ராஜ்யத் திற்கே திரும்பி வந்து சேர்ந்தான். அப்பொழுது இவனுக்கு வயது அறுபத்தொன்பது. இதற்குப் பிறகு சுமார் நான்கு வருஷகாலம் தனது சிஷ்யர்களுக்கு உபதேசங்கள் செய்துகொண்டிருந்து, எழுபத்து மூன்றாவது வயதில் கண் மூடிக்கொண்டு விட்டான்.
உலகக் கண்கொண்டு பார்க்கிறபோது, கன்பூஷியஸின் வாழ்வு, வெற்றிகரமான வாழ்வு என்று சொல்ல முடியாது. அவன் காலத்தில் அவனை யாரும் சரியாகத் தெரிந்து கொள்ளவில்லை. ஆனால் பிற்காலத்தில் அவனுடைய உபதேசங்கள்தான், சீனசமுதாய வாழ்க்கைக்கு அதிவாரமா யமைந்தன. அவனுடைய நூல்களைப் படிப்பது தான் உண்மையான படிப்பு என்று கருதப்பட்டது. அதைப் படித்துப் பரீட்சையில் தேறியவர்களே அரசாங்க உத்தியோகத்திற்கு நியமிக்கப் பட்டார்கள். ஒருவனைப் பார்த்து இவன் ஒரு பெரிய மனிதன் அல்லது கனவான் என்று சொன்னால், அவன் கன்பூஷி யஸின் கிரந்தங்களை நன்றாகப் படித்தறிந்தவன் என்பதுவே அர்த்தம்.
சீன சமுதாய வாழ்க்கையில் கன்பூஷிய சிரஞ்சீவியாக வாழ் வதன் ரகசியமென்ன? அவன் புதிய மதமொன்றையும் தாபிக்க வில்லை; புதிய தத்துவமெதனையும் கண்டு பிடிக்கவில்லை. ஆனால் அவன், மனித சுபாவங்களை நன்றாக அறிந்தவன். மனிதவாழ்க்கை, பண்பட நடைபெறுவதற்குச் சில முறைகளைச் சொன்னான். இந்த முறைகளைப் பரிசோதனை செய்து பார்க்கிறபோது, அனுபவத்திற்கு ஏற்றதாக இருந்தன. எனவே, ஜனங்கள் அவனுடைய உபதேசங்களின் படி தங்களுடைய அன்றாட வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். இப்படி அமைத்துக் கொண்டவர்கள், கன்பூஷிய மதத்தினர் என்று சம்பிரதாயமாக அழைக்கப்பட்டார்கள்.1 சக்ரவர்த்திகள் பலரும், கன்பூஷிய மதத்தைப் பின்பற்றுகிறவர்களென்று சொல்லிக் கொள் வதில் பெருமை கண்டார்கள். அவன் பிறந்த ஊராகிய கூ பூவில் அவனுக்கென்று கி.மு.251-ஆம் வருஷம் ஒரு கோயில் கட்டப் பெற்றது. இங்ஙனமே நாடெங்கணும் அவனுக்கென்று பல கோயில்கள் எழும்பின. ஜனங்கள் அவனைக் கடவுள் அமிசமாகக் கருதி வழி பட்டு வந்தார்களென்பது இதனின்று புலனாகும்.
கன்பூஷிய ஒரு சிந்தனையாளன்; உபதேசகன்; தீர்க்க தரிசி யல்ல. காணாத கடவுளைப் பற்றி அவன் ஒன்றுஞ் சொல்லவில்லை. கண்முன்னே நடமாடும் மனிதர்களுக்குத் தொண்டு செய்யாமல், காணாத பொருளுக்கு எப்படித் தொண்டு செய்ய முடியும்.? என்பது அவன் கேள்வி. உலகத்திலே பிறந்துவிட்டு உலக விவகாரங்களிலே ஈடுபடாமல், உலகத்தைவிட்டு ஓடி விடுவதில் அர்த்தமென்ன இருக்கிறது? என்று அவன் கேட்டான். இப்படி அவன் உலக ரீதியாக உபதேசிக்க வேண்டியது அந்தக் காலத்தில் அவசியமாயிருந்தது. ஏனென்றால் அவனுடைய காலத்தில், தேச முழுமையிலும அரசனுக்கும் குடிகளுக்குமுள்ள சம்பந்தம், உற்றார் உறவினர்களுக்குள்ள சம்பந்தம் முதலியவை யெல்லாம் வரன் முறையின்றி ஒரே குழப்பமா யிருந்தன. இதனாலேயே கன்பூஷிய, மனித வாழ்க்கைக்குத் தேவையான பல அமிசங்களைப் பற்றியும் கூறினான். கல்வி முறை, அரசியல் முறை, சடங்குகளைச் செய்யு முறை, கலைகளை வளர்க்கு முறை முதலிய பலவற்றைப் பற்றியும் அவன் திட்டங்கள் வகுத்திருக்கிறான்.
லாவோத்ஸேயின் உபதேசங்களுக்கும் கன்பூஷியஸின் உப தேசங்களுக்கும் நேர்மாறான வித்தியாசங்கள் உண்டு. லாவோத்ஸே, உலகத்தைத் துறந்து வாழச் சொன்னான். கன்பூஷிய, உலகத்திலிருந்து வாழச் சொன்னான். கன்பூஷியஸூக்கு, லாவோத்ஸே யினிடத்தில் மதிப்பு உண்டு. வயதிலே மூத்தவனல்லவா? அறிவிலுந்தானென்ன? ஒரு சமயம் கன்பூஷிய, சுற்றுப் பிராயணஞ் செய்து கொண்டிருந்த போது, லாவோத்ஸேயைச் சந்தித்தான். அப்பொழுது இருவரும் நடத்திய சம்பாஷணைகள் மிகவும் சுவையுள்ளவை. இவை நூல் வடிவாக்கப் பட்டிருக்கின்றன. மேற்படி சந்திப்பின் போது, புராதன காலத்திலிருந்து அனுஷ்டிக்கப்பட்டு வருகிற சடங்குகளைப்பற்றி உங்களுடைய அபிப்பிராயம் என்ன? என்று கன்பூஷிய, லாவோத்ஸேயைக் கேட்டான். இந்தச் சடங்குகளை யார் ஆரம் பித்தார்களோ அவர்களுடைய எலும்புகளெல்லாம் மண்ணோடு மண்ணாகி விட்டன. எஞ்சியிருப்பன அவர்களுடைய வார்த்தைகள். இந்தப் போலி விவகாரங்களை யெல்லாம் விட்டு விடுங்கள். அவை களினால் எவ்வித பிரயோஜனமுமில்லை. இதுதான் என்னுடைய உபதேசத்தின் சாரம் என்று லாவோத்ஸே கூறினான். இருவருக்கு முள்ள வேற்றுமையை இதனின்று தெரிந்து கொள்ளலாம்.
இருவரும் ஒவ்வொரு நோக்கத்தைக் கொண்டு ஒவ்வொரு விதமாக உபதேசம் செய்தார்கள். ஆனால் பிற்காலத்தில் இவை திரித்துக் கையாளப்பட்டன. இதனால் நேர்மாறான பலனே ஏற்பட்டது. லாவோத்ஸேயின் உபதேசங்கள், உலகவாழ்வைப்பற்றிய ஒரு வித அசிரத்தையை ஜனங்களிடத்திலே உண்டுபண்ணிவிட்டன. கன்பூஷியஸின் உபதேசங்களின் விளைவாக ஜனங்கள், சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அன்றாடக் கடமைகளை மறந்து விட்டார்கள். சமுதாயப் பொதுவான விஷயங்களில் சிரத்தை குறைந்தது. அடிமை மனப்பான்மை வளர்ந்தது. உலகத்திலே அவதரித்த பல மகான்களுடைய உபதேசங்களும், ஏறக்குறைய இந்த மாதிரியான மாறுபட்ட பின்விளை வுகளை உண்டு பண்ணியிருக் கின்றன. இஃதொரு சாபம் போலும்!
லாவோத்ஸே, கன்பூஷிய ஆகிய இவ்விருவரையும் தவிர, சௌ வமிச ஆட்சிக் காலத்தில் இன்னும் சில மகான்கள் தோன்றி னார்கள். மோத்ஸே 1என்ற ஒருவன் - இவன், கன்பூஷியஸின் காலத்திற்குச் சிறிது பிற்பட்டவன். கன்பூஷியஸின் உபதேசங் களுக்கும் இவனு டைய உபதேசங்களுக்கும் அநேக அமிசங்களில் வித்தியாசம் உண்டு. பிரதி யொரு மனிதனும், தனது பெற்றோர்களிடத்திலும் குடும்பத் தினரிடத் திலும் அதிக விசுவாசத்துடன் நடந்துகொள்ள வேண்டு மென்று கன்பூஷிய கூறினான். குடும்பத்தினரிடத்தில் மட்டு மென்ன, உலகத்திலுள்ள எல்லா மக்களிடத்திலும் ஒரே மாதிரியான விசுவாசம் வைக்க வேண்டுமென்று மோத்ஸே கூறினான். உன்னைப் போலவே உனது நண்பர்களையும் நடத்து; உனது பெற்றோர்களிடத்தில் நீ எப்படி விசுவாசத்துடன் நடந்து கொள்வாயோ அப்படியே மற்றவர்களுடைய பெற்றோர்களிடத்திலும் நீ விசுவாசமாக நடந்து கொள். “ஒரு மனிதன் பட்டினியாயிருந்தால் அவனுக்குச் சோறுபோடு; அவன் குளிரோடு அவஸ்தைப்பட்டால் போர்வையைக்கொடு.; நோயாயிருந்தால் சிகிச்சை செய்; செத்துப்போனால் குழி தோண்டிப் புதைத்துவிடு. இவை மோத்ஸேயின் உபதேசங்கள்.
கன்பூஷிய, சடங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துப் பேசிவந்தான். மோத்ஸே சடங்குகளிலே காலத்தையும் பணத்தையும் செலவழிப்பதைக் கண்டித்து வந்தான். ஓர் அரசன், சடங்குகளைச் செய்வதன் மூலம் தனது பிரஜைகளுக்கு நன்மையைச் செய்வதாகக் கருதுவானாகில் அவன் அதைவிட ஒரே நாளில் எல்லா ஜனங்களையும் கட்டாரியால் குத்திக் கொன்றுவிடுவதே நல்லது. ஏனென்றால் அவர்களுடைய துன்பகரமான வாழ்க்கை நீடித்துக் கொண்டி ராதல்லவா? என்பது மோத்ஸே கேள்வி.
சங்கீதம், மனிதனுடைய மனத்தைத் தூய்மைப் படுத்தி, அவன் நல்வழிப்படுவதற்குத் துணை செய்கிறதென்று கன்பூஷிய சொல்லி வந்தான். மோத்ஸே சங்கீதத்தைக் கண்டித்து வந்தான் நீரின் மீது செல்வதற்குப் படகுகள் தேவை; தரைமீது செல்வதற்கு வண்டிகள் தேவை. சங்கீதம் எதற்குத் தேவை? ஜனங்கள் பட்டினி கிடக்கிறார்கள்; குளிரினால் அவதைப் படுகிறார்கள். வேலை செய்து அலுத்துப் போயிருக்கிறவர் களூக்கு ஓய்வு கிடைப்பதில்லை. இப்படிப் பட்டவர்களுக்குச் சங்கீதத் தினால் ஏதேனும் சகாயம் செய்ய முடியுமா? அல்லது வலியார் மெலியாரைத் தாக்கினாலும், அந்நியர் படையெடுத்து வந்தாலும், கள்ளர்கள் திருடிக் கொண்டிருந்தாலும், குழல் ஊதியோ அல்லது வேறு வாத்தியங்கள் வாசித்தோ இவைகளை யெல்லாம் தடுத்துவிடமுடியுமா? என்று கேட்டான் மோத்ஸே. பொதுவாக, வாழ்க்கைக்கு எவை உபயோக மில்லையோ அவை யெல்லாம் தேவையில்லை யென்பது மோத்ஸேயின் கருத்து.
இங்ஙனம் இவன் ஒரு பிரயோஜனவாதியாக இருந்த போதிலும், சமாதானவாதி; யுத்தத்தை அடியோடு வெறுத்து வந்தான். 1914-ஆம் வருஷத்து ஐரோப்பிய யுத்தத்திற்குப் பிறகல்லவோ, மேலைநாட்டறிஞர் சிலர், ஆயுதப் பரிகரணத்தைப் பற்றிப் பேசத்தொடங்கினார்கள்? ஆனால் இரண்டாயிரத்தைந்நூறு வருஷங்களுக்கு முன்னாடியே மோத்ஸே, சீனாவில் ஆயுதப் பரிகரணத்தைப்பற்றிப் பிரசாரம் செய்து வந்தான்! வெற்றியே தோல்வியென்பதை இவன் அழகாக நிரூபிக்கிறான். கேளுங்கள்:- யுத்தத்தில், வில்லும் கொடியும் கவசமும் மற்ற ஆயுதங் களும் எல்லாம் சுக்கு நூறாகவிடுகின்றன; அல்லது அழிந்துபடுகின்றன. எருதுகளும் குதிரைகளும் யுத்தகளத்திற்குப் போகிறபோது கொழுத்துப் பருத்துப் போகின்றன; திரும்பி வருகிறபோது இளைத்துச் சிறுத்து வருகின்றன; அல்லது திரும்பிவருவதே கிடையாது. வேகமாக முன்னேறிச் செல்வதனாலேயோ அல்லது பின்னடைவதனாலேயோ அல்லது வியாதிகளினாலேயோ அல்லது கொலைகளினாலேயோ படை முழுவதும் நாசமாகப் போய் விடுகிறது. கடைசியில், யுத்தத்தினால் ஏற்படுகிற நஷ்டம், அதனுடைய லாபம் இவ்வள வென்பதைத் தெரியாமல் செய்துவிடுகிறது.
பிற்காலத்தில் சீனாவில் பிரசாரம் செய்யவந்த கிறிதுவப் பாதிரிமார்கள், மோத்ஸேயினுடைய உபதேசங்களுக்கும் யேசு நாதருடைய உபதேசங்களுக்கும் அநேக ஒற்றுமைகள் இருக்கின்றன வென்று எடுத்துக் காட்டினார்கள். இதில் ஆச்சரியமொன்று மில்லை. ஏனென்றால் இருவரும் உலக சகோதரத்துவத்தைப் பற்றிப் பேசினார்கள்; சமாதானத்தை உபதேசித்தார்கள்; அனுபவ வாழ்க்கைக்கு ஒட்டிய நீதிகளையே போதித்தார்கள்.
மென்ஷிய 1 என்ற மற்றொரு ஞானி. இவன், கன்பூஷிய இறந்த சுமார் நூறு வருஷங் கழித்துப் பிறந்தான். இவனுடைய காலத்திலும் ராஜ்யம் அல்லோலகல்லோலமாயிருந்தது. இவன், கன்பூஷியஸின் உபதேசங்களை அனுசரித்து நாடு முழுவதிலும் சுற்றிப் பிரசாரஞ் செய்துவந்தான். அநேக சிற்றரசர்களின் ஆதான மண்டபங்களுக்குச் சென்று, அரச நீதி இன்னபடி இயங்குதல் வேண்டு மென்று உபதேசித்தான். ஆனால் ஏற்பட்ட பலன் ஒன்றுமில்லை. இவன் கி. மு. 289- ஆம் வருஷம் இறந்துபோனான்.
இப்படிப்பட்ட மகான்கள் தோன்றி நல்லுபதேசங்களைச் செய்து வந்ததனால், ஜனங்கள், சௌ வமிச முடிவைப்பற்றி வருந்தவில்லை.
எழும்பிய சுவரும் எரிந்த நூல்களும்
ஹுவாங் தீ, சக்ரவர்த்தியாக முடிசூட்டிக்கொண்டான் என்று ஒருவாக்கியத்தில் மேலே சொல்லிவிட்டோம். ஆனால் இதற்காக இவன் எத்தனை பேருடைய கண்ணீரையும் செந்நீரையும் கடக்க வேண்டி யிருந்தது தெரியுமா? சுமார் பதினைந்து லட்சம்பேர் யமபுரத்திற்குச் சென்ற பிறகுதான், இவன் சௌ வமிச சிங்காதனத்தை அடைய முடிந்தது; இத்தனை பேருடைய உயிர்த்துடிப்பின் மீதுதான் இவனுடைய ஆசனம் திரப்பட்டது. ஆனால் இவன், அதற்காகச் சிறிதுகூடக் கவலைப் படவில்லை. ஏனென்றால், தனது மனச் சாட்சியை அப்புறப்படுத்தி வைத்துவிட்டல்லவோ இவன் இந்தக் காரியத்தில் இறங்கினான்.?
ஹுவாங் தீ, சந்திர சூரியர்கள் உள்ளவரையில் தனது வமிசத்தினர், சீனாவை ஆண்டுகொண்டிருக்க வேண்டும் என்று கருதினான். ஆனால் இவனுடைய அடுத்த தலைமுறையிலேயே சின் வமிசக்கொடி அற்றுவிட்டது. சின் வமிச ஆட்சி என்று சொல்லக் கூடிய தெல்லாம் மொத்தம் பதினைந்து வருஷந்தான்! இவன், தான் ஒரு சிருஷ்டிகர்த்தனாக இருக்கவேண்டுமென்று விரும்பினான்; ஆனால் சம்ஹார கர்த்தனாகவும் ஆகிவிட்டான். இவன், ஆக்கியதும் சாசுவதமாயிருக்கிறது; அழித்ததும் சாசுவதமாயிருக்கிறது. சீன சரித்திரத்தில் இவனுடைய பெயர் கறைபட்ட பெயர்தான்; ஆனால் நிரந்தரமான பெயர். உலகத்தினர், சீனாவை என்றென்றும் நினைத்துக் கொண்டிருக்கும்படியாகச் செய்துவிட்டுப் போனான் இவன்.
சௌ ஆட்சியின்போது, நிலச்சுவான்தார் ஆதிக்கம் இருந்த தல்லவா? இந்த நிலச்சுவான்தார்கள், தங்கள் தங்கள் அதிகார எல்லைக்குள் படைபலத்தைப் பெருக்கிக் கொண்டு அடிக்கடி ஒரு வரோடொருவர் போரிட்டு வந்தனர். ராஜ்யத்தில் எப்பொழுதும் குழப்பம் இருந்துகொண்டிருந்தது. ஏதேனும் ஒரு வகையில் அமைதியுண்டாகாதா வென்று ஜனங்கள் ஏங்கி நின்றார்கள். ஹுவாங் தீ, இந்த நிலச்சுவான்தார் ஆதிக்க முறையை ஒழித்து விட்டான். ராஜ்யத்தை முப்பத்தாறு மாகாணங்களாகப் பிரித்து ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒவ்வோர் அதிகாரியை நியமித்தான். இவர்களெல்லாரும் இவனுக்குக் கீழ்ப்பட்ட வர்களே. சர்வ அதிகாரங்களையும் இவன் தன்னிடமே வைத்துக் கொண்டான். இந்த முறையினால், ஜனங்கள் எதிர் பார்த்த அமைதி, நாட்டில் உண்டாயிற்று. ஆனால் இவன் சர்வாதிகாரியானான்; ஜனங்களுக்கு எவ்வித உரிமையு மில்லாமற் செய்துவிட்டான். அப்பொழுதைய நிலையில், ஜனங்கள், உரிமையைப்பற்றிக் கவலைப் படவில்லை; அமைதியைத்தான் விரும்பினார்கள்.
இங்ஙனம் உள் நாட்டில் அமைதி ஏற்பட்டதே யானாலும், வெளிச் சத்துருக்கள் இல்லாமற்போகவில்லை. தார்த்தாரியர் களுடைய உபத்திரவம் அப்பொழுது மிகவும் அதிகமாயிருந்தது. சௌ வமிச ஆட்சியின் கடைசி காலத்தில் ராஜ்யத்தில் ஏற்பட்டிருந்த அமைதி யின்மையை ஆதாரமாகக் கொண்டு இந்தத் தார்த் தாரியர்கள், வடக்கே யிருந்து திடீர் திடீரென்று சமுத்திர அலை போல் வந்து, சூறையாடி விட்டுப் போனார்கள். ஹுவாங் தீ பட்டத்திற்கு வந்த பிறகு, ஒரு பெரியபடையை வடக்குப் பக்கம் அனுப்பி இவர்களை விரட்டியடிக்குமாறு செய்தான். ஆனால் நிரந்தரமாக இவர்களை வரவொட்டாதபடி செய்யமுடியவில்லை. ஒரு காவல்காரனை நிறுத்தி வைத்து ஓ வெள்ளமே! நீ இனி வராதே யென்று சொல்லித்தடுத்தால், அந்த வெள்ளம் வராமலிருக்குமா? எனவே ஹுவாங்தீ ஒரு யுக்தி செய்தான். சீனாவின் வடக்கெல்லை முழுமைக்கும் ஒரு நீண்ட சுவர் எழுப்பத் தீர்மானித்தான். இதுதான், இன்றளவும் உலகத்தினரால் வியந்து பாராட்டப்படுகிற, உலகத்து ஏழு அதிசயங்களுள் ஒன்றான சீனப் பெருஞ்சுவர். இதன் நீளம் சுமார் 2, 560 கிலோமீட்டர் (1,600 மைல்). இதனைக் கட்டி முடிக்கச் சுமார் மூன்று லட்சம்பேர் வேலை செய்தனர். சிறைப்பட்ட கைதிகளும் அரசனுடைய வெறுப்புக்கு ஆளானவர்களும் ,இந்த வேலையைச் செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டனர். இந்தச் சுவர் கட்டி முடிக்கப் பலவருஷங்கள் பிடித்தன. இதற்காக ஜனங்கள் பல தொந்தரவுகளுக்காளாயினர். ஆனால் ஹுவாங் தீ இவைகளைப் பொருட்படுத்தவில்லை. தார்த்தாரியர்களைத் தற்காலிகமாகவாவது நிறுத்திவிட்டோமே யென்று இவன் திருப்தி யடைந்தான். இந்தப் பெருஞ்சுவரிலுள்ள தளவாட சாமான்களைக் கொண்டு, உலகத்தைச் சுற்றி எட்டு அடி உயரமும் மூன்று அடி அகலமுமுள்ள ஒரு சுவர் எழுப்பலாமென்று அறிஞர்கள் கணக்கிடுகிறார்கள். இந்தப் பெருஞ்சுவர் தவிர, ஹுவாங் தீ, ராஜ்யத்தின் பலபாகங்களையும் இணைக்கக்கூடிய மாதிரி அகன்ற பாதைகள் போட்டான்; கால் வாய்கள் வெட்டினான்; பாலங்கள் கட்டினான்.
ஹுவாங் தீ, தான் சக்கரவர்த்தியாகப் பட்டந்தரித்துக் கொண்ட ஏறக்குறைய எட்டாவது வருஷம் அதாவது கி. மு. 213- ஆம் வருஷம்- ஹீன்யாங் 1 என்ற தனது ராஜதானியில் பெரிய விருந்தொன்று நடத்தினான். இதற்கு ராஜ்யத்தின் பல பாகங் களிலிருந்து அநேகர் வந்திருந்தனர். சக்ரவர்த்தியைப் பாராட்டிப் பலர் பேசினர். ஹுவாங் தீயும், இந்தப் பாராட்டுதல்களுக்கெல்லாம் தான் உரியவன் என்கிற மாதிரியாகப் பேச்சுகளைக் கேட்டுக் கொண்டிருந்தான். இவனைப் புகழ்ந்து பேசிய சிலர், பழைய மன்னர்களையும் இவனையும் ஒப்பிட்டுப் பேசினர்; அவர்களுடைய வழியைப் பின்பற்றி நடந்து கொள்ள வேண்டுமென்று இடித்துக் கூறினர். இவனுடைய மந்திரிகளில் ஒருவன், தன் எஜமானனைத் திருப்தி செய்யும் பொருட்டுப் பின்வருமாறு கூறினான்.:- இவர்கள் புகழ்ந்து பேசுகிற அளவுக்குப் பழைய மன்னர்கள் அவ்வளவு புத்தி சாலிகளாயிருக்க வில்லை. சக்ரவர்த்தியாகிய தாங்கள்தான் சரியான படி ராஜ்யபாரம் நடத்துகிறீர்கள். ராஜ்யம் இப்பொழுது எவ்வளவு அமைதியா யிருக்கிறது பாருங்கள்! இ.வர்கள் பழைய கிரந்தங்களைப் படித்துவிட்டு , முந்தியகாலம் மாதிரி இப்பொழுது வருமா என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்; அதே தோரணையில் தங்களுடைய ஆட்சியைக் குறை கூறுகிறார்கள். எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. பழைய கிரந்தங்களை யெல்லாம் எரித்து விடவேண்டும்; பழமையைப் பாராட்டிப் பேசுகிறவர்களையும், நிகழ்காலத்தைக் குறை கூறு கிறவர்களையும் மரண தண்டனைக்குட்படுத்திவிடவேண்டும்.
ஹுவாங் தீக்கு இந்த யோசனை நிரம்பப் பிடித்தது. ஏற்கனவே இவனுக்கு, தானே எல்லாவற்றையும் சிருஷ்டித்ததாக இருக்க வேண்டுமென்ற விருப்பம் இருந்ததல்லவா? எனவே, சின் வமிச வரலாறுகள், வைத்திய நூல்கள், மந்திரசாதிரங்கள், விவசாய சம்பந்தமான கிரந்தங்கள் ஆகிய இவற்றைத் தவிர்த்து மற்றப் பழைய புதகங்கள் அனைத்தையும் தலைநகருக்குக் கொணர்ந்து பகிரங்கமாக எரிக்குமாறு உத்தரவுசெய்தான். அப்படிப் பழைய கிரந்தங்களைத் தலைநகருக்குக் கொணர முப்பது நாட்கள் தவணை கொடுத்தான். கொணராதவர்கள் முகத்தில் சூடு போட்டு, வடக்கே அப்பொழுது கட்டப்பெற்று வந்த சுவர் வேலைக்கு அனுப்பப் பெற்றனர். சிலர் சில நூல்களை ஒளித்துவைத்தனர்; பலர், நூல்களை எரிக்கச் சம்மதியாமல் உயிரைக் கொடுத்தனர். ஆயினும் ஆயிரக் கணக்கான நூல்கள் தீக்கிரையாயின; நாட்கள் கணக்காக இந்தத் தீ எரிந்தது.
ஹுவாங் தீ, ஆடம்பரப்பிரியன்; பகட்டான காரியங்களைச் செய்து புகழ்பெற வேண்டுமென்பதில் ஆசையுள்ளவன். சிற்றர சர்களை வென்று சக்ரவர்த்தியாக முடிசூட்டிக் கொண்ட பொழுது, ராஜ்யத்தின் பல பாகங்களிலுமிருந்த எல்லா ஆயுதங்களையும் கொணரச் செய்து உருக்கி, மணிகளாகவும் உருவச்சிலைகளாகவும் நிர்மாணித்தான். ஜனங்களை எவ்வளவு அழகாக நிராயுத பாணி களாக்கி விட்டான் பாருங்கள்! தான் வெற்றிகொண்ட ஒவ்வொரு ராஜ்யத்தின் அடையாளமாகவும் ஒவ்வோர் அரண்மனை கட்டு வித்தான். தலை நகருக்குச் சமீபத்தில், அரசனுடைய உபயோகத் திற்கென்று ஓர் உத்தியான வனமும், அதன் நடுவில் ஓர் அழகான அரண்மனையும் நிர்மாணித்தான். இந்த அரண்மனையைக் கட்டு வதற்கு, சிறைப்பட்டிருந்த சுமார் ஏழு லட்சம் கைதிகள் வேலை செய்தார் களாம்! ராஜதானியைச் சுற்றிச் சுமார் எழுபது மைல் விதீரணத்திற்குள் சுமார் இருநூற்றெழுபதுஅரண்மனைகள் கட்டப் பெற்றனவென்று சொன்னால், இவனுடைய ஆடம்பர வாழ்வுக்கு வேறு என்ன அத்தாட்சிவேண்டும்?
புராதன கிரந்தங்களை எரிக்கிற ஒரு கைங்கரியத்திலே ஹுவாங் தீ ஈடுபட்ட பிறகு இவனுடைய மனத்தை ஒரு பீதி பிடித்துக் கொண்டு விட்டது. அநேகரைக் கொன்ற பாவம் தன்னைச் சூழ்ந்துகொண்டிருப்பதாக இவன் மருண்டான்; மரணபயத்தினால் வேதனையடைந்தான்: எனவே, சாகாமலிருக்க ஏதேனும் மூலிகைகள் அகப்படுமாவென்று தேடிப்பார்க்க பல இடங்களுக்கும் ஆட்களை அனுப்பினான். சென்ற ஆட்கள் திரும்பிவரவேயில்லை. இவர்கள் ஜப்பானுக்குச் சென்றார்களென்றும் அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார்களென்றும் சொல்லப்படுகின்றன. இவர்கள்தான், இன்றைய ஜப்பானியர்களின் மூதாதையர்கள் என்று சீனர்கள் சொல்லிக் கொள்கிறார்கள்.
ஹுவாங் தீக்குச் சாகாமூலிகை அகப்படவேயில்லை. கடைசி காலம் நெருங்கியது. தன்னைச் சுற்றியுள்ளவர்மீது சந்தேகப்பட்டான். எவரைப் பார்த்தாலும் இவனுக்கு ஒரு வெறுப்பு ஏற்பட்டது.; தன் சொந்த மகனைக்கூட வெறுத்தான். இந்த வெறுப்பு, வேதனை, அச்சம் முதலியவைகளிடையே மூழ்கினவனாய் கி.மு. 210-ஆம் வருஷம் இறந்து போனான்.
இவனுக்குப் பிறகு இவனுடைய இரண்டாவது மகன் எர் ஷி என்பவன் பட்டத்திற்கு வந்தான். இவன் ஓர் அறிவீனன். தகப்பனுடைய தீய குணங்களெல்லாம் உருவெடுத்தாற் போன்றிருந்தான். இப்படிப் பட்டவன் சிங்காதனத்தில் நீடித்து அமர்ந்திருக்க முடியுமா? இவனுக்கு விரோதமாகப் பலர் கலகத்திற்குக் கிளம்பினர். சீன சரித்திரத்தில் இது வழக்கமான சம்பவம். ஒரு வமிசாவளியின் ஆட்சி முற்றுப் பெறு வதற்கும் மற்றொரு வமிசாவளியின் ஆட்சி தொடங்குவதற்கும் மத்தியில் புரட்சிகள் நிகழ்வதைச் சீன சரித்திரத்தில் தொடர்ந்து கண்டு வருகிறோம். எர் ஷி கி. மு.206-ஆம் வருஷம் கொலையுண்டான். இவனுக்குப் பிறகு ஹூ வாங் தீ யின் பேரப்பிள்ளை ஒருவன் சிங்கா தனத்தில் அமர்த்தப்பட்டான். உடனே அதிலிருந்து அப்புறப் படுத்தவும் பட்டான். அப்புறப்படுத்தியவன், கலகத் தலைவர்களில் ஒருவனாகிய லியு பாங் என்பவன். 1 சிரஞ்சீவியாக வாழ விரும்பிய சின் வமிசம் மூன்றாவது தலை முறையிலேயே மறைந்து விட்டது.
ஹான் வமிசம்
சின் வமிசத்துக் கடைசி மன்னனை அப்புறப்படுத்திவிட்டுப் பட்டத்திற்கு வந்த லியு பாங் ஒரு சாதாரண குடியானவன். இவன் தலைமுறையிலிருந்து ஹான் வமிச1 ஆட்சிதொடங்குகிறது. இந்த வமிசத்தினர் கி. மு. 206 ஆம் வருஷம் முதல் கி.பி.220-ஆம் வருஷம் வரை சுமார் நானூறு வருஷத்திற்குமேல் சர்வ சீனாவையும் சேர்த்து ஆண்டு வந்தனர். இந்த வமிசத்தைச் சேர்ந்த மன்னர் மொத்தம் இருபத்தாறு பேர்.
ஹான் வமிசம், சீன சரித்திரத்திலேயே மிகவும் பிரசித்தமானது; சீனர்களுடைய அன்றாட வாழ்க்கையிலும், சமுதாய தாபனங் களிலும் சாசுவதமான சில அடையாளங்களைச் செய்துவிட்டு மறைந்தது. இந்த வமிசத்தைப் பற்றிச் சீனர்கள் பெருமையாகப் பேசிக்கொள்வார்கள். தங்களை ஹான் வமிசத்துப் பிள்ளைகள் என்று சொல்லிக் கொள்வதில் தான் இவர்களுக்குத் திருப்தி. தாங்கள் தனி அந்ததுடைய ஒரு ஜாதியாராக, அதாவது நாகரிகமுள்ள ஒரு சமுதாயத்தினராக அழைக்கப் பட்டதெல்லாம் இந்த ஹான் வமிச காலத்திலிருந்துதான் என்று இவர்கள் சொல்லுகிறார்கள்.
ஹான் வமிச தாபகனான லியு பாங், சாதாரண ஜனங்களின் துணை பெற்றுப் புரட்சி செய்து சின் வமிச சிங்காதனத்தைக் கைப் பற்றிக் கொண்டான். உலகத்திலேயே முதன் முதலாக நடைபெற்ற, வெற்றி கரமாக முடிந்த ஜனப்புரட்சி இதுதான் என்று சீன சரித்திரக் காரர்கள் கூறுகிறார்கள். இவன், பழையபடி நிலச்சுவான்தார் ஆதிக்க முறையைச் சில மாற்றங்களுடன் புதுப்பித்தான்; ராஜ்யத்தின் தலைநகரத்தை சாங்கான்2 என்ற ஊருக்கு மாற்றினான். சாங்கான் என்றால் சாந்தி நகரம் என்று அர்த்தம். விவசாயியல்லவா? தனது ராஜ்யத்தில் என்றும் சாந்தி நிலவ வேண்டுமென்பதே இவன் கோரிக்கையாயிருந்தது. இவனுக்குப் பின் வந்த சில அரசர்கள், ஜனங்களுக்கு நன்மை செய்வதையே லட்சிய மாகக் கொண்டு ஆட்சி புரிந்தார்கள். நிலவரியை ரத்து செய்தார்கள்; பழைய மன்னர் சிலர் வகுத்த சில அநீதியான சட்டங்களை அகற்றி விட்டார்கள்; மற்றும் தங்களுடைய சொந்த வாழ்க்கையிலும் ஆடம்பரமற்று இருந்தார்கள்.
வென்3 என்ற ஓர் அரசன். அரண்மனையின் ஒரு பாகம் மிகவும் சிதிலமாகிக்கிடந்தது. அதனை அப்புறப்படுத்திவிட்டு அதன் இடத்தில் புதிய கட்டடம் ஒன்றைக் கட்ட வேண்டுமென்று மந்திரிகள் கூறினார்கள். இதற்கு எவ்வளவு செலவு பிடிக்கும்? என்று கேட்டான் அரசன். நூறு பொற்காசுகள் என்று பதில் வந்தது. நூறு பொற்காசுகளா? பத்து ஏழைக் குடும்பங்களல்லவோ இதில் பிழைக்கும்? ஜனங்களுடைய பணத்தை எடுத்து என் சொந்த சுகத்திற்குச் செலவழிப்பதா? வேண்டவே வேண்டாம் என்று சொல்லி விட்டான்.
ஒரு சரித்திராசிரியன் இந்தக் காலத்து நிலையைப் பின் வருமாறு வருணிக்கிறான்:- அரசாங்கத்திற்கும் தனிப்பட்ட வர்களுக்கும் சொந்தமான தானியக் களஞ்சியங்கள் யாவும் நிரம்பி யிருந்தன. அப்படியே பொக்கிஷங்களும் நிரம்பியிருந்தன. நாணயங்கள் பாசி படிந்து விடக்கூடிய மாதிரியாகவும், தானியங்கள் கெட்டுப் போய்விடக்கூடிய மாதிரியாகவும் அவ்வளவு அதிக மாயிருந்தன. ஏழை ஜனங்கள்கூட குதிரைகள் வைத்துக் கொண்டிருந்தார்கள். வயல் வரப்புகளின்மீது ஆடு மாடுகள் கும்பல் கும்பலாகச் சென்றன. பொதுஜன நடமாட்டமுள்ள இடங்களில், பழைய வழக்கம் மாதிரி, எருதின் மீதோ எருமையின் மீதோ யாராவது ஏறிக்கொண்டுவந்தால், அவனைப் பார்த்து எல்லோரும் பரம தரித்திரன் போலிருக்கிற தென்று ஏசுவார்கள். குதிரை வைத்துக்கொள்வது தான் பெரிய மனிதனுக்கு அடையாளமாகக் கருதப்பட்டது. சாதாரண கிராம வாசி, நல்ல அரிசியோடு, நிறையக் கறிகாய்களையும் சேர்த்துச் சாப் பிட்டான். சுமார் எழுபது வருஷ காலம் சீனமக்கள் இங்ஙனம் சௌக்கியமாக வாழ்ந்தார்கள்.
சுமார் எழுபது வருஷ1சுபிட்சமான வாழ்வுக்குப் பிறகு வூ டீ2 என்ற ஓர் அரசன் பட்டத்திற்கு வந்தான். சுமார் ஐம்பது வருஷத்திற்கு அதிகமாக இவன் ஆண்டான்.
இந்த வூ டீ மன்னனுடைய ஆட்சியையும் நல்லாட்சி என்றே சொல்ல வேண்டும். பொதுவாக ராஜ்யத்தில் சுபிட்சம் குறையா மலிருந்தது. இவன் பொருளாதாரத் துறையில் சில புதிய பரி சோதனை களைச் செய்யத் தொடங்கினான். அதாவது, நீருக்கும் நிலத்துக்கும் அடியிலுள்ள பொருள்களைத் தனிப்பட்ட நபர்கள் சுரண்டுவதினின்றும் தடுத்து அனைத்தையும் தேசீய சொத்தாக் கினான். இரும்பு, உப்பு, மதுவகைகள் ஆகியவைகளின் உற்பத்தியையும் விநியோகத்தையும் அரசாங்கமே செய்ய வேண்டுமென்று ஏற்பாடு செய்தான். வியாபாரிகள், கொள்ளை லாபம் சம்பாதிப்பதற்காக, சரக்குகளை மொத்தமாக வாங்கி, தேக்கி வைத்துக் கொண்டு, பிறகு அதிக விலைக்கு விற்று வருவதைத் தடுக்கவும், விலைவாசிகள் திடீர் திடீரென்று ஏறுவதும் இறங்குவது மாயிருப்பதை ஒரு கட்டுப்பாட்டுக் குட்படுத்தவும், போக்கு வரத்துச் சாதனங்களைத் தேசீயமய மாக்கினான். நாணயச் செலாவணியை ஒரு நிலைக்குக் கொண்டு வந்தான். தேவைக்கு மிஞ்சின உணவுப் பொருள் களைச் சேமித்து வைக்க ஆங்காங்குக் கிடங்குகள் கட்டினான். இங்ஙனம் சேமித்து வைக்கப்பட்ட பொருள்கள், மழையின்மையாலோ, அதிக மழை யினாலோ வேளாண்மை குறைந்துபோகும் சந்தர்ப்பங்களில் உப யோகப்பட வேண்டுமென்பது இவன் திட்டம். மற்றும் இவன், ராஜ்யத்தி லுள்ள பிரஜைகள் ஒவ்வொருவரும், தங்கள் வருமானக் கணக்கை அரசாங்கத்தினிடம் ஒழுங்காகச் சமர்ப்பித்து, வருஷவாரி நூற்றுக்கு ஐந்து சதவிகிதம் வருமான வரி செலுத்த வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்தான். இன்னும் நாணயப் புழக்கத்தை அதிகப் படுத்தினான்; பொது நல வேலைகள் பலவற்றைத் தொடங்கினான் பாலங்கள் கட்டுவித்தான்; கால்வாய்கள் தோண்டச் செய்தான்.
இவைகளினால், நாட்டில் வியாபாரமும் அதிகப்பட்டது; உற்பத்தியான சரக்குகளின் தரமும் மதிப்பும் உயர்ந்தன.; வெளி நாடுகளுக்குப் பெருவாரியான பொருள்கள் ஏற்றுமதி செய்யப் பட்டன; அரசாங்கத்தின் வருமானம் அதிகரித்தது. ராஜ்யத்தின் தலை நகரம், ஜனப் பெருக்கத்தோடும் செல்வச் செழுமையோடும் பிரகாசித்தது. இதே விகிதாசாரத்திற்கு மக்களிடையே கல்வி யறிவு பெருகியது. புலமைக்குப் பெரு மதிப்பு ஏற்பட்டது. பல துறைகளில் புதிய புதிய நூல்கள் வெளியாயின. கல்விமான்களின் உபயோகத் திற்கென்று தலைநகரில் அரசாங்கப் புத்தகசாலை யொன்று நிறுவப்பட்டுச் சிறந்த முறையில் பணியாற்றி வந்தது. இதில், புராதன கிரந்தங்கள் என்று சொல்லக்கூடிய வகையில் 3,123 நூல்களும், கவிதை வகையில் 1,318 நூல்களும், தத்துவ சாதிர சம்பந்தமாக 2,705 நூல்களும், கணிதத்துறையில் 2,568 நூல்களும், வைத்திய சாதிர சம்பந்தமாக 868 நூல்களும், யுத்தத்தைப் பற்றி 790 நூல்களும் இருந்தனவென்று ஒரு கணக்கு கூறுகிறது. மற்றும், அரசாங்கத்தால் நடத்தப்பட்டுவந்த பரீட்சையில் தேறியவர்களே, அரசாங்க உத்தி யோகதர்களாக நியமனம் பெற்றார்கள். இவர்களுக்கு நல்ல முறையில் பூர்வாங்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.
தவிர, இந்த வூ டீ மன்னன், ராஜ்யத்தின் எல்லையை விசாலப் படுத்தினான். வடக்கே மங்கோலியா, மேற்கே துருக்கி தானம், தெற்கே அன்னாம் முதலிய நாடுகளெல்லாம் சீன ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டன. வூ டீ மன்னன் காலத்தில்தான் சீனாவுக்கும் இந்தியா வுக்கும் தொடர்பு ஏற்படத் தொடங்கியது.
ஆனால் வூ டீ மன்னனுடைய கடைசி காலத்தில், ராஜ்யத்தின் கட்டுக்கோப்பு தளர ஆரம்பித்தது. இவனுடைய தேசீய மய திட்டங் களுக்குப் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. வியாபாரிகள், வரி செலுத்த மறுத்து விட்டார்கள். இந்த நிலையில், சிறு சிறு கலகங்கள் ஆங்காங்கு ஏற்பட்டன. வூ டீ மன்னனும் இறந்துவிட்டான். சொல்ல வேண்டுமா ராஜ்யத்தின் அவலநிலையைப் பற்றி? அந்தப்புரச் சூழ்ச்சிகள் அதிகமாயின. அரசாங்க உத்தியோக தர்களிடமிருந்து நேர்மையானது அகன்றுவிட்டது. ராஜ்யத்தின் செல்வமெல்லாம் குன்றிவிட்டது. விவசாயிகள், விமோசனம் கிடைக்குமாவென்று ஏங்கி நின்றார்கள். வூ டீ மன்னன் இறந்ததற்குப் பிறகு, சுமார் எண்பத்தைந்து வருஷ காலம் இந்தச் சீர்கெட்ட நிலை இருந்தது.
பிறகு வாங் மாங் 1 என்ற ஒருவன் பட்டமேற்றான். இவனும் வூ டீயைப்போல் ஒரு சீர்திருத்தவாதி. நல்ல படிப்பாளியுங்கூட. எளிய வாழ்க்கையையே நடத்தி வந்தான். இவன் பழைய மாதிரி பொருளாதார சம்பந்தமான சில சீர்திருத்தங்களை அமுலுக்குக் கொண்டு வந்தான். ஆனால் இந்தச் சீர்திருத்தங்களினால் பாதிக்கப் பட்ட நிலச்சுவான்தார்கள் முதலியோர், இவனுக்கு விரோதமாகக் கிளம்பினார்கள்; சாதாரண மக்களைக் கலகத்திற்குத் தூண்டி விட்டார்கள். போதாக் குறைக்கு, ராஜ்யத்தின் வடக்குப் பகுதியின் மீது அந்நியர்கள் படையெடுத்து வரலானார்கள். இனி என்ன? வாங் மாங் சிங்காதனத்திலிருந்து இறங்கி விட்டான்; விரைவில் இறந்தும் விட்டான்.
இவனுக்குப் பிறகு குவாங் வூ2என்பவன் 25-ஆம் வருஷம் சிங்காதனத்தில் அமர்ந்தான். இவன் கன்பூஷிய கிரந்தங்களில் நல்ல தேர்ச்சி பெற்றவன். இவன் காலத்தில் முந்தி மாதிரி, கல்விக்குச் சிறப்பு அளிக்கப்பட்டது. நாட்டின் பல பாகங்களிலிருந்து புலவர்களும் கவிஞர்களும் வரவழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள். ஒரு சர்வ கலாசாலை தாபிக்கப்பட்டது. இதுதான் சீனாவில் முதன் முதலாக ஏற்பட்ட சர்வகலாசாலை. இது தவிர ஆங்காங்குக் கல்விச் சாலைகள் பல தாபிக்கப்பட்டன.
குவாங் வூக்குப் பின்னர் வந்த அரசர்கள், வெளிப்பகட்டிலே ஈடுபட்டுவிட்டார்கள். இதனால் தங்களுடைய வமிசத்திற்கும், ராஜ்யத்திற்கும் அழிவு தேடிக்கொண்டார்கள். அரசாங்கத்துச் சாதாரண சிப்பந்திகள் கூட பட்டுடையென்ன, பொன்னா பரண மென்ன இப்படியெல்லாம் தங்களை அலங்கரித்துக் கொண்டார்கள். ஓர் அரசன், பொற்பாத்திரங்களையே எப்பொழுதும் உபயோகித்து வந்தான். இவனுடைய அரண்மனையில் சதா ஓசை உண்டாகிக் கொண்டிருக்கு மாம்.ஏன்? பொற்கம்மியர்கள் ஓயாமல் வேலை செய்துகொண்டிருப் பார்கள்! அரசனுடைய அரண் மனையில் என்ன, புயற்காற்றடிக்காமலே எப்பொழுதும் இடி இடித்துக் கொண்டிருக்கிறதே யென்று ஜனங்கள் சாதாரணமாகச் சொல்லிக் கொள்வார்கள்.
சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், ஹான் வமிச ஆட்சியின் முற்பகுதி ஏற்றமாக இருந்தது; பிற்பகுதி இறங்கு முகத்தில் சென்றது. ஆனாலும் ஒரு தொகுப்பாகப் பார்க்கிறபோது, இந்த ஆட்சி அநேக அமிசங்களில் சிறப்புடையதாகவே இருந்த தென்று சொல்லவேண்டும். எப்படியென்றால், இந்தக் காலத்தில் தான் சீனாவுக்கும் வெளிநாடு களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டாயிற்று; ஒரு துறையிலே மட்டுமல்ல, பல துறைகளிலும். சீனாவின் செல்வச் செழிப்பு, அரசர்களின் ஆடம்பர வாழ்க்கை முதலியன, அந்நிய நாட்டாரின் கவனத்தை ஈர்த்தன. அநேகர், விதவிதமான காணிக்கைகளை எடுத்துக்கொண்டு சீன மன்னர் சபைக்கு வந்தனர். மத்திய ஆசியப் பிரதேசங்களிலிருந்து ஒரு ஜாதியார், குதிரை ஈரல்கல் என்ற ஒரு விநோதமான பொருளைக் காணிக்கை யாகக்கொண்டு வந்தனர். இதனை உட்கொண்டால் ஒரு வருஷத்திற்குப் பசி, தாகம் முதலியன ஒன்றும் எடுக்காதாம்! நரைத்துப் போன மயிர் கறுப்பாகிவிடுமாம்! இந்த மாதிரி பல ஆச்சரியமான பொருள்கள் சீனாவில் வந்து குவிந்தன. சீனர்களும், வெளிநாடுகள் பலவற்றிற்கு யாத்திரையாகவும், அரசாங்கத்தின் பிரதி நிதிகளாகவும் செல்லத் தொடங்கினார்கள்.இவர்களில் குறிப்பிடத் தக்கவன் சாங் சீன்1 என்பவன். வூ டீ மன்னன் இந்தியாவுடன் தொடர்பு கொள்ள விழைந்ததற்கு இந்த சாங் சீன்தான் காரணமாயிருந்தான். இவனைப் பற்றிப் பின்னர்த் தெரிந்துகொள்வோம்.
பொதுவாக ஹான் வமிச காலத்தில் சீனாவுக்கும் பிற நாடுகளுக்கும் அதிகமான தொடர்பு ஏற்பட ஆரம்பித்ததென்று சொல்லலாம். இந்த வெளிநாட்டுத் தொடர்பையொட்டி உள் நாட்டிலும் அநேக அனுகூலங்கள் ஏற்பட்டன.; புதிய புதிய பொருள்களைக் கண்டுபிடிக்கிற முயற்சியில் ஜனங்கள் அதிகமாக ஈடுபட்டார்கள்.
போக்கு வரத்துக்குச் சாதகமாகப் புதிய புதிய பாதைகள் போடப்பட்டன; புதிய கால்வாய்களும் தோண்டப்பட்டன. பாதை நெடுக, பிரயாணிகள் தங்குவதற்கென்று மூன்று மைலுக்கொன்று விகிதம் சத்திரங்கள் கட்டப்பட்டன. இந்தச் சத்திரங்களில் வியாபாரிகள் தங்கள் சரக்குகளை நிர்ப்பயமாகப் போட்டுவைத்துக் கொள்வதற்கு பந்தோபதான இடங்கள் இருந்தன. கால் நடைகளுக்கு வேண்டிய தீவனமும் வைத்திருந் தார்கள். இங்ஙனம் சகல விதமான வசதிகளும் பிரயாணிகளுக்குச் செய்து தரப்பட்டன.
இந்தச் சத்திரங்கள் தவிர, மூன்றுஅல்லது மூன்றரை மைலுக்கு ஒன்று விழுக்காடு தபாலாபீசுகள் இருந்தன. ஒரு தபாலாபீசிலிருந்து மற்றொரு தபாலாபீசுக்குக் குதிரைகள் மீது தபால்களை ஏற்றிக் கொண்டு சென்றார்கள். இந்தத் தபாலாபீசுகளிலும் பிரயாணிகள் தங்குவதற்கென்று வசதிகள் செய்து தரப்பட்டிருந்தன.
இன்னும் இந்த ஹான் வமிச காலத்தில், பீங்கான் கண்டு பிடிக்கப்பட்டு, அதிலிருந்து அநேக பொருள்கள் தயார் செய்யப் பட்டன. இவற்றின் மீது அநேக சித்திரங்கள் வரைந்தார்கள். வெளிநாட்டார், இவைகளைக் கண்டு ஆச்சரியப்பட்டு ஏராளமாக விலைக்கு வாங்கிச் சென்றனர். கி.பி.முதலாவது நூற்றாண்டில் காகிதம் செய்கின்ற முறை கண்டுபிடிக்கப்பட்டது. உலகத்திலேயே முதன் முதலாகக் காகிதத்தை உற்பத்தி செய்து அதில் எழுதத் தொடங்கியவர்களும், அதன் மீது அச்சடித்து புத்தக உருவமாகக் கொணர்ந்தவர்களும் சீனர்களேயாவர். எழுதுவதும் அச்சடிப்பதும் சுலபமாகிவிட்டபடியால் புதிய புதிய நூல்கள் வெளிவரத் தொடங்கின. இந்தக் காலத்தில்தான், தொடர்ச்சியான சீன சரித்திரம் எழுதப் பெற்றது. கவிஞர்களும் ஓவியர்களும், தங்கள் இதயத்தைத் திறந்து விட்டார்கள். இவர்களுடைய கற்பனையிலிருந்து எழுந்த படைப்புகள், இன்றளவும் புத்துணர்ச்சி கொடுத்துக் கொண்டிருக் கின்றன. பொதுவாக ஹான் வமிச காலத்தில் சீனாவின் கலை வாழ்வு உரமிடப்பெற்று வளர்ந்தது.
குட்டி வாடகை மோட்டார் வண்டிகள் (பேபி டாக்ஸிகள்)1 இப்பொழுது நகரங்களில் ஓடுகின்றன வல்லவா! இவை மாதிரி சீனாவில் ஹான் வமிச ஆட்சிக் காலத்தின் பிற்பகுதியில் ஓடிக் கொண்டிருந் தனவென்று சொன்னால் நேயர்கள் சிலருக்கு ஆச்சரியமாயிருக்கலாம். நவீன வண்டிகளில், சென்ற தூரத்தையும் அதற்குரிய கட்டணத்தையும் காட்டும் யந்திரம் 1 ஒன்று பொருத்தப் பட்டிருப்பதுபோல, சீன வாடகை வண்டிகளில் ஒருவகை யந்திரம் பொருத்தப்பட்டிருந்தது. வண்டி புறப்பட்டு கால் மைல் தூரம் சென்றதும், இந்த யந்திரம், தம்பட்டத் திலிருந்து வரும் ஓசையைப் போன்றதோர் ஓசையை எழுப்பும். இப்படி ஒவ்வொரு கால் மைலுக்கும் இந்த ஓசை வந்துகொண்டிருக்கும். பத்து கால் மைல்கள் ஆனதும் இந்த யந்திரத்திலிருந்து மணியோசையொன்று கேட்கும். இந்த ஓசைகளைக் கொண்டு, வண்டி சென்ற தூரத்தைக் கணக்கிட்டு, கட்டணம் வசூலிக்கப்படும்.
மற்றும், இந்த ஹான் வமிசத்தின் பிற்பகுதியில், இந்தியா விலிருந்து புத்த மதம் சீனாவுக்குள் பிரவேசித்து நன்றாக வேரூன்றத் தொடங்கியது.
இருட்டில் வெளிச்சம்
பகலை அடுத்து இரவு வருவதுபோல், ஹான் வமிச ஆட்சிக்குப் பிறகு, சுமார் நானூறு வருஷகாலம் சீனா முழுவதும் ஒரே குழப்பமா யிருந்தது. இந்தக் காலத்தில், வடக்கு சீனா என்றும், தெற்கு சீனா என்றும், மேற்கு சீனா என்றும் முப்பெரும் பிரிவுகள் ஏற்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் குட்டி குட்டி ராஜ்யங்கள். வடக்கு சீனாவில் மட்டும் பதினாறு குட்டி ராஜ்யங்கள் இருந்தன என்றால் வேறு சொல்ல வேண்டுமா? ஒவ்வொரு ராஜ்யத்திலும் ஒவ்வொரு சிற்றரசன் சுயேச்சையாக ஆண்டு வந்தான். இந்தச் சிற்றரசர்கள் இடைவிடாமல் சச்சரவிட்டுக் கொண்டிருந் தார்கள். இங்ஙனம் தேசமானது பலபடச் சிதறுண்டு கிடந்ததால், வடக்கிலிருந்து தார்த்தாரியர்கள் சுலபமாகப் படையெடுத்து வந்தார்கள்; சில பகுதிகளை ஆக்கிரமித்தும் கொண்டார்கள். ஆனால் நீடித்து ஆதிக்கம் வகிக்க அவர்களால் முடியவில்லை. அவர்களுடைய கவனம் ஐரோப்பா பக்கம் சென்றதால், சீனாவின் சில பகுதிகளை ஆக்கிரமித்துக்கொண்டு பிறகு கைவிட்டு விட வேண்டியதாயிற்று. சீனாவிலேயே தங்கிவிட்ட தார்த்தாரியர்கள், நாளாவட்டத்தில், சீன நாகரிகத்திலும் கலாசாரத்திலும் ஈடுபட்டு, சீனர்களோடு சீனர்களாகிவிட்டார்கள்.
இந்த நானூறு வருஷகாலத்தில் ராஜ்யப் பிரிவினைகளும் அரசியல் குழப்பங்களும் ஏற்பட்டு வந்த போதிலும், சர்வ சீனாவையும் புத்த மதம் ஐக்கியப்படுத்திக் கொண்டு வந்தது. புத்த மதம் சீனாவில் தீவிரமாகப் பரவியது இந்தக் குழப்பமான காலத்தில்தான். அநேக சிற்றரசர்கள் பௌத்த பிட்சுக்களானார்கள். ஞானிகள் அரசாண்டதை இந்தக் காலத்தில் காணலாம். தெற்கு சீனாவில் லியாங்1 என்ற பிரதேசத்தை ஆண்டு வந்த வூ2 என்ற ஒரு மன்னன் மகா பண்டிதன். அநேக பௌத்த கிரந்தங்களுக்கு உரை எழுதியிருக்கிறான். சிறந்த பக்தன். புத்தர் எப்படி ஒரு துறவியாக வாழ்ந்தாரோ அப்படியே தானும் வாழவேண்டுமென்று தீர்மானித்து அதன்படியே வாழ்ந்து வந்தான். தினம் ஒரு வேளை ஆகாரம். இறைச்சி, வெள்ளைப்பூண்டு முதலியவைகளைத் தொடமாட்டான். தன் ராஜ்யத்தில் மிருக பலி கூடாதென்று தடுத்துவிட்டான். குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கக் கூடாதென்று உத்தரவிட்டான்.1 இவனைப்போல இன்னும் பலர் தோன்றி புத்த மதம் பரவுவதற்குத் துணை புரிந்தார்கள். தவிர, புத்த மதத்தைப்பற்றி நேரில் அறிந்து வரவேண்டுமென்ற ஆவலினால் உந்தப்பட்டு, அநேகர், இந்தியாவுக்கு யாத்திரையாகச் சென்று வரலானார்கள். இவர்களில் குறிப்பிடத் தக்கவன் பாஹியான்2 என்பவன் இவனைப் பற்றி இந்திய சரித்திர மாணாக்கர்கள் நன்கு அறிவர்.
இந்த நானூறு வருஷ குழப்பமான காலத்தின் பிற்பகுதியில் யாங் சீன்3 என்ற ஒருவன், பரபரம் போரிட்டுக் கொண்டிருந்த சிற்றரசர் பலரை அடக்கி ஒடுக்கிவிட்டு, 589-ஆம் வருஷம், சக்ர வர்த்தி என்று பிரகடனம் செய்துகொண்டான்; செய்து கொண்டதும், தன் பெயரை வென் டீ4 என்று மாற்றி வைத்துக் கொண்டான்; தன் வமிசத்தினர் ஸூயி வமிசத்தினர்5 என்று அழைக்கப்படவேண்டு மென்று கட்டளையிட்டான்.
இவன், தன் ஆளுகைக்குட்பட்டிருந்த பிரதேசம் பூராவுக்கும் ஜனகணிதம் எடுக்கச் செய்தான். சில்லரைப் போராட்டங்கள் ஒருவாறு தணிந்திருந்தன. மக்கள் விவசாயத்தில் கவனஞ் செலுத்த முற்பட்டார்கள். ராஜ்யத்தின் பொருள் வளம் அதிகரிக்க ஆரம்பித்தது.
இந்த நிலையில் வென் டீ மன்னன் இறந்து போக அவன் மகன் யாங் டீ6 என்பவன் பட்டத்திற்கு வந்தான். இவன் ராஜ்யத்தின் பொருள் வளத்தைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பி, பெரிய பெரிய கட்டடங்கள் கட்டவும், ஏற்கனவே சௌ வமிச ஆட்சி காலத்தில் கி. மு. 540-ஆம் வருஷம் , ஹூவாய்7 நதியையும் யாங்க் ட்ஸீகியாங் நதியையும் இணைக்கக் கூடிய விதமாகத் தோண்டப்பட்டிருந்த கால்வாயை, தெற்கே ஹாங்சௌ8 நகரம் வரையில் நீட்டித் தோண்டிக் கொண்டு போகவும் திட்டமிட்டான். கட்டட வேலைகளுக்காக ஆயிரக்கணக்கான பேர் அமர்த்தப்பட்டனர். இவர்கள் பெற்ற கூலி மிகக் குறைவு; செய்த வேலை மிக அதிகம். இதனால் இறந்து போனவர் எண்ணிலர். நெடுஞ்சாலைகள் பலவற்றின் ஓரங்களில் வரிசையாகப் பிணங்கள் கிடந்தன என்று ஒரு வரலாறு கூறுகிறது.
கால்வாய் தோண்டும் வேலை 610-ஆம் வருஷம் தொடங்கப் பட்டது. சுமார் இருபது லட்சம் பேர் இதில் வேலை செய்யும்படி கட்டாயப் படுத்தப்பட்டனர். போதுமான ஆண் வேலையாட்கள் அகப்படாத இடங்களில் பெண்கள் வேலை செய்யும்படி நிர்ப் பந்திக்கப்பட்டனர். ஹாங்சௌ நகரம் வரையில் கால்வாய் தோண்டி முடிந்தது. இதற்குள், வேலை செய்தவர்களில் பாதிப்பேருக்கு மேற்பட்டவர்களுடைய உயிரும் முடிந்தது.
கால்வாய் வேலை முடிந்ததும் இதன் வழியாக ஹாங்சௌ நகரம் வரையில் உல்லாசப் பிரயாணஞ் செய்ய ஆசை கொண்டான் யாங் டீ. ஆயிரக்கணக்கில் சிறிதும் பெரிதுமான படகுகள் பின் தொடர இவன், நன்கு அலங்கரிக்கப்பட்ட ஒரு பெரிய படகில் புறப்பட்டான். இந்தப் படகு வரிசையைச் செலுத்திக் கொண்டு போக எண்பதினாயிரம் பேர் நியமிக்கப் பட்டனர். சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் நீளம் இந்தப் படகு வரிசை இருந்ததென்று சொல்லப் படுகிறது. படகுகளைச் செலுத்திக்கொண்டு போனவர்களுக்கும் அரச பரிவாரத்தினருக்கும், கால்வாய் ஓரமாகவுள்ள கிராமங்களில் வசிக்கும் ஜனங்கள் இலவசமாக உணவு வழங்க வேண்டுமென்று உத்தரவு பிறந்தது. கிராமவாசிகள் திண்டாடிப் போனார்கள். அரச பரிவாரத்தினரோ, வழங்கப்பட்ட உணவில், தாங்கள் உட்கொண்டது போக, மிகுந்துபோனவற்றைக் கால்வாயிலே எறிந்து வேடிக்கை பார்த்தார்கள்!
இந்தக் கால்வாய் வேலையைத் தவிர, யாங் டீ, சீனப் பெருஞ் சுவரைப் பழுது பார்க்கவும். மலைப் பாதைகள் பல போடவும் லட்சக் கணக்கான பேரை கட்டாய வேலைக்கமர்த்தினான். இந்த வேலையில் ஈடுபட்டு உயிரிழந்தவர் எத்தனையோ பேர்.
போதாக்குறைக்கு யாங் டீ, அண்டை அயலிலுள்ள நாடுகளின் மீது ஆதிக்கஞ் செலுத்த ஆசை கொண்டு பெரிய பெரிய படைகளை அனுப்பினான். குறிப்பாக, கொரியா1 மீது இவன் நாட்டம் சென்றது. நான்கு தடவை படையெடுத்தான். விளைந்த பயன்? தோல்வி; லட்சக்கணக்கில் உயிர்ச்சேதம்.
இவை பலவற்றின் காரணமாக, அரசாங்கத்தின் பொக்கிஷம் சீக்கிரம் சீக்கிரமாகக் காலியாகி வந்தது. மக்களின் உழைப்புச் சக்தி, கட்டடம் கட்டுதல், கால்வாய் தோண்டுதல் முதலிய பல துறைகளில் செலவழிந்து வந்ததால், விவசாய உற்பத்தி சீர்குலைந்துவிட்டது. பஞ்சமும் பிணியும் மக்களை வாட்டியெடுக்கத் தொடங்கின. இப்படி யிருந்தும் யாங் டீ, அரசாங்க பொக்கிஷத்தை நிரப்ப வேண்டி, ஜனங்கள், பத்து வருஷ வரியை முன்கூட்டி ஒரே மொத்தமாகச் செலுத்திவிட வேண்டுமென்று உத்தரவிட்டான். கேட்க வேண்டுமா நாட்டின் அவல நிலைக்கு? ஜனங்களின் அதிருப்திக்கு? இவனுடைய படைத்தலைவர்களே இவனுக்கு விரோதமாகக் கிளம்பிவிட்டனர்.
இவர்களில் முக்கியமான ஒருவன் லீ யுவான்1 என்பவன். இவன், வடமேற்கு எல்லைப் புறத்தில் கலகம் விளைவித்துக் கொண்டிருந்த ஒரு ஜாதியாரை அடக்கிவிட யாங் டீயினால் அனுப்பப்பட்டான். இவனால் அந்த ஜாதியாரை அடக்க முடியவில்லை. ஆனால் அவர்களுக்குப் பணிந்து போகவும் இவன் விரும்பவில்லை. எனவே அந்த ஜாதியாரைத் தன்னோடு சேர்த்துக் கொண்டு யாங் டீக்கு விரோதமாக ஒரு பெரும் படையுடன் ஹோயாங்கோ நதியைக் கடந்து வந்து சாங்கான் நகரத்தைக் கைப்பற்றிக் கொண்டான். சிறிது காலத்திற்குப் பிறகு, தானே அரசனென்று பிரகடனப்படுத்திக் கொள்ள விரும்பினான். இதனை இவனைச் சேர்ந்தவர்கள் ஆட் சேபித்தார்கள்.இவனுக்குப் போட்டியாகப் பதினோரு பேர் கிளம்பினர். அனைவரையும், தன் மகன் லீ ஷீ மின்2 என்பவனுடைய துணை கொண்டு அடக்கிவிட்டான். வடக்கு சீனாவின் பெரும் பகுதி இவன் ஆதிக்கத்திற் குட்பட்டது. 618-ஆம் வருஷம், சர்வ சீனாவுக்கும் தானே சக்ரவர்த்தி யென்று பிரகடனம் செய்துகொண்டான்.
இந்த 618-ஆம் வருஷத்திலேயே, தெற்குப் பகுதியில் வசித்துக் கொண்டிருந்த யாங் டீ, அவனுடைய படைத்தலைவர் களில் ஒருவனால் கொல்லப்பட்டுவிட்டான். அவனோடு ஸூயி வமிசமும் முற்றப் பெற்று விட்டது. இந்த வமிசத்தின் வாழ்வெல்லாம் சுமார் முப்பது வருஷத்திற்குக் குறைவுதான்.
லீ யுவான், சக்ரவர்த்தியாகப் பிரகடனஞ் செய்து கொண்டதும், தன் பெயரை காவோ த்ஸு3 என்று மாற்றிக் கொண்டான்; தன் வமிசத்திற்கு தாங் வமிசம்4 என்று பெயர் கொடுத்தான். ஆனால் இவன் நீண்டகாலம் அரச பீடத்தில் அமர்ந்திருக்கவில்லை. இவனுக்கும் இவனுடைய நெருங்கிய உறவினர்களுக்கும் பிணக்கு ஏற்பட்டது. இந்த உறவினரில் சிலர், இவன் மகன் லீ ஷீ மின்னுக்கு விரோதமாகச் சூழ்ச்சி செய்ய முற்பட்டனர். லீ ஷீ மின் மிகத் திறமைசாலி; தனக்கு விரோதமாகச் சூழ்ச்சி செய்தவர்களைச் சுலபமாக ஆனால் கடுமையாக அடக்கிவிட்டான். இதற்குச் சுமார் பத்து வருஷ காலம் பிடித்தது.
லீ யுவானும், 627-ஆம் வருஷம் தன் மகன் லீ ஷீ மின்னை அரச பீடத்தில் அமரும்படி செய்துவிட்டு, ஆளும் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டான்.
தாங் வமிசம்
சுமார் நானூறு வருஷகாலம் தொடர்ந்து நடைபெற்ற பிணக்கு களினாலும் பூசல்களினாலும், ஜனங்கள் சலித்துப்போய், நிலையான தொரு வல்லரசு ஏற்படாதா என்று ஏங்கி நின்றார்கள். இந்த ஏக்கத்தி லிருந்து பிறந்ததே தாங் வமிசம். இந்த வமிசம் 289 வருஷகாலம் நிலைத்து நின்றது. (618 மதல் 907- ஆம் வருஷம் வரை). இருபத்து மூன்று மன்னர்கள் ஆண்டார்கள்.
தாங் வமிச ஆட்சியின் முதல் பத்து வருஷகாலம் எவ்வித நிலவரமும் இல்லாதிருந்தது. முந்தின அத்தியாயத்தின் கடைசியில் சொன்னபடி, இந்த வமிசத்தினருக்குள்ளேயே பிணக்குகள் ஏற்பட்டு ஒருவரையொருவர் வீழ்த்திவிடுகின்ற முயற்சிகள் நடைபெற்றன. இந்த முயற்சிகளையெல்லாம் தோல்வியுறும்படி செய்துவிட்ட லீ ஷீ மின், தை த்ஸுங் 1என்ற பட்டப் பெயர் சூட்டிக் கொண்டு அரச பீடத்தில் அமர்ந்தான். காவோ த்ஸு என்ற பட்டப்பெயர் தரித்துக் கொண்ட லீ யுவான், தாங் வமிச தாபகனாக இருந்த போதிலும், இந்த தை த்ஸுங்கையே, இந்த வமிசத்தின் - தாங் வமிசத்தின் - முதல் மன்னனாகக் குறிப்பிடுகிறது சீன சரித்திரம். ஒழுங்கான ஆட்சி இவன் காலத்தில் தொடங்கியதால் இப்படிக் கூறுகிறது போலும், மற்றும், மகா அலெக்ஸாந்தர்2 என்பது போல் மகா தை த்ஸுங் என்று அழைத்து இவனைப் பெருமைப்படுத்துகிறது.
தை த்ஸுங் பட்டத்திற்கு வந்தபோது இருபத்தோரு வயது. பட்டத்திற்கு வந்த சிறிது காலத்திற்குள் இவன், தன் வாழ்க்கைப் போக்கையே மாற்றிக்கொண்டுவிட்டான். ஓர் அரசனுக்குரிய ஆடம்பரங் களையெல்லாம் துறந்துவிட்டான். இவனுக்குப் பணி விடை செய்யவும் அவ்வப்பொழுது இன்பமூட்டவும் அழகான மூவாயிரம் பெண்கள் அரண்மனைச் சேவையில் இருந்தனர். அத்தனை பேரையும் வெளியே அனுப்பிவிட்டான்.
நாட்டில், களவு முதலிய குற்றஞ் செய்து வருகிறவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டுமென்று, மந்திரிகள், சில சமயங்களில் இவனுக்கு ஆலோசனை கூறுவார்கள். அதற்கு இவன் கடுமையான தண்டணைகள் விதிப்பானேன்? அரண்மனைச் செலவு வகைகளையும், மக்கள் செலுத்தும் வரி விகிதங்களையும் குறைத்து, நிருவாகத்தை நடத்த நேர்மையான உத்தியோகதர்களை நியமித்துவிட்டால், நாட்டில் களவு முதலிய குற்றங்கள் தாமே ஒழிந்து போய்விடும் என்று பதில் சொல்லுவான்.
ஒரு நாள் இவன் தலைநகரமாகிய சாங்கானிலுள்ள சிறைச் சாலைக்குச் சென்றான். அங்கு மரண தண்டனை விதிக்கப் பெற்றிருந்த இருநூற்றுத் தொண்ணூறு கைதிகளைக் கண்டான். அவர்களைப் பார்த்து உங்கள் அனைவரையும் வெளியில் அனுப்பி வைக்கிறேன். உங்கள் நில புலங்களைக் கவனித்து விட்டு வாருங்கள். ஆனால் இன்று மாலைக்குள் சிறைச்சாலைக்கு வந்து சேர்ந்துவிடவேண்டும் என்று சொன்னான். அவர்களும் இதற்கு ஒப்புக்கொண்டு வெளியே சென்று மாலைக்குள் திரும்பி வந்துவிட்டார்கள். இதை யறிந்ததும், தை த்ஸுங் பெருமகிழ்ச்சி கொண்டு, அனைவரையும் விடுதலை செய்தான்.
இனி, தனக்குப் பின்னாடி அரச பீடத்தில் அமரும் எந்த ஓர் அரசனும், யாருக்காவது மரண தண்டனை விதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதற்கு முன்னாடி மூன்று நாள் உண்ணா விரதம் அனுஷ்டிக்க வேண்டு மென்று பொது விதி யொன்று வகுத்து வைத்தான்.
மற்றும் இந்த தை த்ஸுங், தலை நகரத்தை அழகுபடுத்தி வைப்பதில் அதிக அக்கரை செலுத்தினான். வெளிநாடுகளிலிருந்து பலர் வந்து, இந்தத் தலைநகரத்தில் சிறிது காலம் தங்கிப் போவதில் பெருமை கண்டார்கள். இவன் காலத்தில், இந்தியாவிலிருந்து பௌத்த பிட்சுக்கள் பலர் சீனாவுக்கு வந்து புத்த மதத்தைப் பரப்பு வதில் அக்கரை காட்டினார்கள். அப்படியே, சீனாவிலிருந்து, புத்த மதத்தைச் சேர்ந்த பலர், அந்த மதத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்பி, இந்தியாவுக்கு யாத்திரையாகச் சென்றார்கள். இந்த யாத்திரிகர்களில் ஒருவன், இந்திய சரித்திர மாணாக்கர்கள் நன்கறிந்த ஹ்யூன் த்ஸாங்1 என்பவன். இவனைப் பிறிதோர் அத் தியாயத்தில் சந்திப்போம்.
ஜாரதுஷ்ட்ர (பார்சி) மதத்தைச் சேர்ந்தவர்களும், கிறிதுவ மதத்தைச் சேர்ந்தவர்களுமான பலர், தங்கள் தங்கள் மதத்தைப் பற்றிப் பிரசாரஞ் செய்ய, தை த்ஸுங் காலத்தில் சீனாவுக்கு வந்தார்கள். இவர்களுக்கு நல்வரவு அளித்து, வேண்டிய சௌகரியங்களைச் செய்து கொடுத்தான் தை த்ஸுங். இவர்கள், தங்கள் வழிபாட்டுக்கென்று கோயில்கள் கட்டிக் கொண்டார்கள். இவைகளுக்கு வரி விலக்கு அளித்தான்.
மற்றும் இவன், அடிக்கடி பண்டித சபைகள் கூட்டி, நாட்டின் பல பாகங்களிலிருந்து அறிஞர்களை வரவழைத்துத் தர்க்க வாதங்கள் நடத்தச் செய்தான். அரசாங்க நிருவாகத்தில் காணப் பெற்ற அநேக குறைகளை நீக்கி ஒழுங்குபடுத்தினான். அரசாங்கம் நடத்திவந்த பரீட்சைகளில் தேறியவர்கள்தான், அரசாங்க உத்தியோகதர்களாக வர முடியுமென்று ஏற்கனவே இருந்த ஏற்பாட்டை ஒழுங்குபடுத்தினான். இதனால், பணத்தினால் செல்வாக்குப் பெற்று முன்னுக்கு வரலா மென்பது போய், அறிவுத் திறமையினால் முன்னுக்கு வர முடியும் என்று ஏற்பட்டது.
தை த்ஸுங் காலத்தில், சீனாவின் பொருட் செல்வமும் கல்விச் செல்வமும் வளம் பெற்று, மேனாட்டாருக்குப் பிரமிப்பை யூட்டு வதாயிருந்தன. அரிசி, நவதானியங்கள், லவங்கம், ஏலக்காய் முதலிய வாசனைச் சரக்குகள், பட்டு, இப்படிப் பல பொருள்கள் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்தப் பொருள்களை ஏற்றிக்கொண்டு, சீனக் கப்பல்கள். இந்திய மகாசமுத்திரம், பாரசீக வளைகுடா முதலியவை வழியாகத் தொலை தூரங்களுக்குச் சென்றன.
உள் நாட்டிலோ, ஜனங்கள் போக வாழ்க்கையை நடத்தினார் களென்று சொல்ல வேண்டும். பெரும்பாலோர் விசாலமான வீடுகளைக் கட்டிக்கொண்டு, ஆடம்பரப் பொருள்களுக்கு மத்தியில் வசித்தார்கள். உணவுப் பொருள்கள், யாருக்கும் எங்கும் ஏராளமாகக் கிடைத்தன. உடை அலங்காரத்தைப் பற்றி என்ன சொல்வது? ஐரோப்பாவில் பட்டுத் துணி களை எடைக்கு எடை பொன் கொடுத்து வாங்க வேண்டிய நிலை இருந்த போழ்து, சீனாவில், பட்டு சர்வ சாதாரண உடையாயிருந்து வந்தது. ஜனங் களில் ஏறக்குறைய பாதிப் பேருக்குமேல் பட்டையே அன்றாட உடை யாகக் கொண்டிருந்தனர். தலைநகருக்கருகில் ஓர் ஊரில், பட்டு உற்பத்தி செய்யும் தொழிற் சாலைகள் பல இருந்தன. இவற்றில் ஒரு லட்சம் பேர் வேலை செய்தனர். நவரத்தினங்கள் சர்வ சாதாரண புழக்கத்தில் இருந்தன. பணக்கார வீடுகளில் கேளிக்கை விருந்துகள் அடிக்கடி நடை பெற்றன.
இங்ஙனம் ராஜ்யமானது பலவகையிலும் செழுமையுற்று வளர்வதற்குக் காரணமாகவும், மனிதப் பண்புக்கு உறைவிடமாகவும் இருந்த தை த்ஸுங் 650-ஆம் வருஷம் இறந்துவிட்டதும், மக்கள் கண்ணீர் விட்டுக் கதறினார்களென்று சீன சரித்திரம் கூறுமானால், அதற்காக நாம் ஆச்சரியப்படத் தேவையில்லை. மக்கள் அடைந்த துயரம் எல்லை மீறிச் சென்றது. இவன் ஆதானத்திற்கு வந்திருந்த அந்நிய நாட்டுத் தூதர்கள், தங்களுடைய தேகத்திலிருந்து ஒரு சிறு அளவு ரத்தத்தை எடுத்து, இவன் சடலத்தின் மீது தெளித்து, இவனிடம் தங்களுக்கிருந்த மதிப்பைத் தெரிவித்துக் கொண்டார்கள்.
தை த்ஸுங்க்குப் பிறகு அவன் மகன் காவோ த்ஸுங்1 பட்டத் திற்கு வந்தான் இவன், கொரியாவை, சீனாவின் ஆதிக்கத்துக்குட் படுத்தினான்; மேற்குப் பக்கத்திலிருந்து படையெடுத்து வந்த துருக் கியர்களைத் தோல்வியுறச் செய்தான். வேறு விசேஷமாக எதுவும் இவன் ஆட்சியில் நடைபெறவில்லை. ஆனால் இருந்ததைக் கட்டிக் காப்பாற்றி வந்தான் என்ற அளவுக்கு இவனுக்குப் பெருமை கொடுக்க வேண்டும்.
காவோ த்ஸுங்குக்குப் பிறகு அவன் மனைவி வூ ஹௌ2 என்பவள், பலாத்காரமாகச் சிங்காதனத்தைக் கைப்பற்றிக்கொண்டு சுமார் இருபது வருஷம் ஆண்டாள். இவள் காலத்திலும் ராஜ்யம் செழுமை குன்றாமலிருந்தது.
வூ ஹௌவுக்குப் பிறகு, பட்டத்துரிமை பற்றிச் சுமார் எட்டு வருஷ காலம் சச்சரவுகள் இருந்துவந்தன. கடைசியில் ஷூவான் த்ஸுங் என்பவன், மிங் ஹுவாங்3 என்ற பட்டப் பெயருடன் அரசு கட்டிலில் அமர்ந்தான். அமர்ந்ததும், இவனிடம் குடி கொண்டிருந்த முரண்பட்ட சுபாவங்கள் பல வெளிவரத் தொடங்கின. கவிதைகள் புனைவதில் மகிழ்ச்சி கண்ட இவன், தொலை தூரங்களுக்குப் படை யெடுத்துச் செல்வதில் விருப்பங் காட்டினான். துருக்கி, பாரசீகம், சாமர்கண்ட்4 முதலிய ராஜ்யங்களைத் தனக்குக் கப்பஞ்செலுத்தும் படி செய்தான். உள்நாட்டில், கொலைக் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கக் கூடாததென்று உத்தரவிட்டான். சிறைச்சாலை நிருவாகத்திலும் நீதி நிருவாகத்திலும் அநேக சீர்திருத்தங்கள் செய்தான். ஆனால் மிகக் கடுமையான முறையில் வரிகள் பல விதித்தான். இவனுக்கு நாட்டியம், சங்கீதம், சிற்பம் முதலிய கலைகளில் ஓரளவு பயிற்சியுண்டு. இவைகளைப் பயிலுவிக்க ஒரு கலாசாலை தாபித்தான். தானே சில சமயங்களில் சிலருக்குப் பயிற்சி அளித்தான். இது தவிர, புலவர் கழகமொன்று நிறுவினான். இதற்கு ஹான்லின் கழகம்5 என்று பெயர். பென்சில்களின் (எழுது கோல்களின்) காடு என்று இதற்குப் பொருள் கூறுவர். இது 754-ஆம் வருஷம் நிறுவப்பட்டது. நாட்டிலுள்ள தலை சிறந்த புலவர்களே இதில் அங்கத்தினர்களாகச் சேர்த்துக் கொள்ளப் பட்டார்கள். அரசனுடைய மேற்பார்வையில் மூன்று வருஷத்திற் கொரு தரம் அரண்மனையில் ஒரு பரீட்சை நடைபெற்றது. இதில் நன்றாகத் தேறியவர்களில், அதாவது உடல்வன்மை, நாவன்மை, எழுத்து வன்மை, அரசாங்க நிருவாகத்தைப் பற்றிய அறிவுடைமை ஆகிய இந்த நான்கு தகுதிகளை அதிகமாகப் பெற்றிருக்கிறவர்களில் ஆறு பேர் மட்டும் மேற்படி கழகத்தில் அங்கத்தினர்களாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். இந்தக் கழகத்தை ஓர் ஆராய்ச்சிக் கூடமென்று சுருக்கமாகச் சொல்லலாம். இதன் அங்கத்தினர்கள், பல துறை ஆராய்ச்சிகள் நடத்தி, அநேக நூல்களை வெளியிட்டார்கள்.
இந்த ஹான்லின் கழகத்தை நிறுவிய ஒரு காரணத்தினால், மிங் ஹுவாங், சீன சரித்திரத்தில் நிலையானதோர் இடம் பெற்று விட்டான். ஏனென்றால், உலக இலக்கியங்களின் முன் வரிசையில் வைத்து எண்ணப்படக்கூடிய எத்தனையோ நூல்கள், எத்தனையோ துறைகளில் வெளிவருவதற்கு இந்தக் கழகம் ஓரளவு ஊக்கம் தருவதாகவும் வழி காட்டிக் கொடுப்பதாகவும் இருந்தது..
மிங் ஹுவாங், ஆட்சியின் ஆரம்ப காலத்தில் எளிய வாழ்க்கையைக் கடைப்பிடித்தான். தன்னைச் சூழ்ந்திருந்தவர் களையும் கடைப்பிடிக்கச் செய்தான். அரண்மனை திரீகள் நகைகள் அணியக் கூடாதென்றும், பட்டாடைகளையும், பூ வேலை செய்த உடைகளையும் உபயோகிக்கக் கூடாதென்றும் உத்தரவிட்டான். தலைநகரத்திற்கு அருகிலிருந்த பட்டுத் தொழிற்சாலைகளை மூடச் செய்தான். தன்னைச் சுற்றியுள்ள யாவும், தன்னைச் சார்ந்த யாவரும் எளிய தோற்றத்தில் இருக்க வேண்டுமென்பது இவன் நோக்கமாயிருந்தது ஆனால், தனது ஆட்சியின் பிற்பகுதியில் போக வாழ்க்கையில் ஈடுபட்டுவிட்டான்; ஆடம்பரத்திற்கு மத்தியில் அமுங்கிக்கிடந்தானென்று சொல்லலாம். கடைசியில் ஒரு பெண்ணின் மோகனச் சிரிப்புக்காக, தனது அரச பதவியையே இழந்து விட்டான்.
அந்தப் பெண்ணின் பெயர் யாங் குவை-பை.1 அவளைச் சந்திக்கிற போது, இவனுக்கு அறுபது வயது. அவளுக்கு இருபத்தேழு வயது. மகா சாகஸக்காரி; துணிச்சல் நிறைந்தவள். மன்னனுடைய, அதாவது மிங் ஹுவாங்கினுடைய ஒரு மகனின் வைப்பாட்டியாக அரண் மனைக்குள் புகுந்தாள். புகுந்த சிறிது காலத்திற்குள் மன்னனையே வசப்படுத்திக் கொண்டுவிட்டாள். மன்னனும் அவள் மோகத்தில் ஈடுபட்டு, ராஜ்ய விவகாரங்களில் அக்கரை செலுத்துவதை நிறுத்திக் கொண்டு, போக விஷயங்களில் தன்னைப் பறி கொடுத்துவிட்டான். அவளும் சாமர்த்தியமாக தன் உறவினர்களை ஒருவர் பின்னொரு வராக அரசாங்க உயர் பதவிகளில் அமர்த்தச் செய்தாள். தன் சகோதரன் யாங் குவோ-சுங்1 என்பவனிடம் ராஜ்ய நிருவாகப் பொறுப்பனைத்தும் வந்து சேரும்படி சூழ்ச்சி செய்து வெற்றி யடைந்தாள். அந்தச் சகோதரனோ பரம அயோக்கியன். கேட்க வேண்டுமா ராஜ்யம் சீரழிவதற்கு? அதிருப்தி மேகம் எங்கணும் பரவ ஆரம்பித்தது.
இந்த நிலையில், மிங் ஹுவாங்கின் ஆதானிகர்களில் ஒருவனான ஆன் லூ-ஷான்2 என்ற தார்த்தாரியன், யாங் குவை -பை மீது காதல் கொண்டான்; அதே சமயத்தில் அரசனுடைய நல் லெண்ணத்தையும் சம்பாதித்துக் கொண்டான். அரசனும் அவனை நம்பி வடபகுதியிலுள்ள ஒரு மாகாணத்தின் அதிகாரியாக நியமித்து, கூடவே ஒரு பெரும் படைக்குத் தலைவனாகவு மாக்கினான்.
நன்றி கெட்ட அந்த ஆன் லூ ஷானும் சிறிது காலங் கழித்து, தானே சக்ரவர்த்தியென்று அறிவிப்புச் செய்து விட்டு, தலைநகரத்தின் மீது - சாங்கான் மீது படையெடுத்து வந்தான். என்ன செய்வான் மிங் ஹுவாங்? தன் காதலி யாங் குவை-பையுடனும் அவள் சகோதரன் யாங் குவோ-சுங்குடனும், அவர்களுடைய உற்றார் உறவினர்களுடனும், ஒரு சிறுபடையைத் துணையாகக் கொண்டு, தலைநகரத்திலிருந்து தப்பிச் சென்றான். சென்று கொண்டிருக்கும் போது வழியில், இவனுக்குத் துணையாக வந்த படையினர், இவனை ஆட்டி வைத்துக் கொண்டிருந்த யாங் குவை-பை, யாங் குவோ-சுங் முதலியவர்கள் மீது தங்களுக்கிருந்த ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டனர். அனைவரையும் சிரச்சேதஞ் செய்துவிட்டனர். இவன்-மிங் ஹுவாங்- மட்டும், தான் இனி அரச பீடத்தில் அமர்வதில்லையென்று வாக்குக் கொடுத்து விட்டு , உயிர் தப்பித்துக் கொண்டான்.
தலை நகரத்தின் மீது படையெடுத்து வந்த ஆன் லூ-ஷான், அமைதியை நிலைநாட்டுவதற்குப் பதிலாக, பயங்கரச் செயல்களில் ஈடுபட்டான். கொலை, கொள்ளை எல்லாம் நடைபெற்றன. உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கிலிருக்குமென்று ஒரு வரலாறு கூறுகிறது.
கடைசியில் ஆன் லூ ஷான் கதியாதாயிற்று தெரியுமா? அவன் மகனாலேயே கொல்லப்பட்டு விட்டான். அந்த மகனை அவனுடைய படைத்தலைவன் கொன்று விட்டான். இங்ஙனம் தலைநகரம் ஒரு கொலைக்களமாகி விட்டது. தாங் வமிசத்தின் அதமன வாழ்வும் ஆரம்பித்துவிட்டது.
இதற்குப் பிறகு சுமார் நூற்றைம்பது வருஷகாலம், தாங் வமிசத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு அரச பீடத்தில் அமர்ந்திருந்தார்கள் சிலர். இவர்களை, உண்மையில் ஆண்ட அரசர்கள் என்று சொல்ல முடியாது. இவர்களுடைய திறமையின்மையால், நாட்டின் பல பகுதிகளிலும், படைபலங் கொண்ட சிலர், தங்களை அரசர்களென்று சொல்லிக் கொண்டு சுயேச்சைக் கொடி நாட்டத் தொடங்கினார்கள். இவர்களுக்கு மக்கள் ஓரளவு ஆதரவும் அளித்தார்கள். தாங் வமிசத்தின் கடைசி மன்னன் காலத்தில் ராஜ்யத்தின் கட்டுக் கோப்பு அடியோடு தளர்ந்துவிட்டது. சுயேச்சைக் கொடி தூக்கியவர்களில் திறமையான சிலர், ஏதோ ஒரு வமிசத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு ஒரு சில வருஷ காலம் ஆண்டு விட்டு மறைந்து போனார்கள். இங்ஙனம் 907 முதல் 960-ஆம் வருஷம்வரை சுமார் ஐம்பது வருஷ காலத்தில் பத்து மன்னர்களைக் கொண்ட ஐந்து வமிசத்தினரின் ஆட்சி, ஒன்றுக்குப் பின்னொன்றாக நடைபெற்றது. இந்தச் சுமார் ஐம்பது வருஷ காலத்தை ஐந்து சிற்றரசு களின் ஆட்சிக் காலம்1 என்று சீன வரலாறு அழைக்கிறது. இந்தக் காலத்திற்குப் பிறகு ஆண்ட வமிசத்தைப் பற்றிக் கூறுவதற்கு முன், தாங் வமிச ஆட்சிக் காலத்தில், சீனாவின் சமுதாய வாழ்க்கை, இலக்கிய வளம், அந்நிய நாடுகளுடன் கொண்டிருந்த தொடர்பு முதலியவை குறித்துச் சில வார்த்தைகள் சொல்ல விழைகிறோம்.
தேயிலையைப் பற்றி ஏற்கனவே சீனர்கள் ஒருவாறு தெரிந்து கொண்டிருந்தார்களாயினும், அதனைத் தினசரி பானமாக உப யோகிக்கத் தொடங்கியது தாங் வமிச ஆட்சிக் காலத்தில்தான். எட்டாவது நூற்றாண்டின் இடைக்காலத்திலிருந்து தேத் தண்ணீர் பருகுவதென்பது இன்றியமையாததாகவும் நாகரிகப் பழக்கமாகவும் ஆகிவிட்டது. இதனை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ள விரும்பி, மேற்படி நூற்றாண்டின் கடைசியிலிருந்து, தேயிலை உற்பத்தியின் மீது வரி விதித்தது.
தேநீர் பருகுவதற்கு உபயோகிக்கப்பட்ட பீங்கான் சாமான் களின் தரமும் உயர்ந்தது. சித்திரம் தீட்டப்பெற்ற வண்ண வண்ணக் கோப்பைகளுக்கும் தட்டுகளுக்கும் அதிக கிராக்கி ஏற்பட்டது. இவைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஓவியக் கலையும் வளமுற வளர்ந்தது. பட்டுத் துணிகளிலும் பருத்தித் துணிகளிலும் தீட்டப்பெற்ற பலவித வண்ண ஓவியங்கள், அந்தக் காலத்தில் சீனாவுக்கு வந்த வெளி நாட்டார் பலருடைய வியப்பையும் மதிப்பையும் பெற்றன. இந்தக் காலத்தில் மட்டும், அதாவது தாங் வமிச ஆட்சி காலத்தில் மட்டும், இரு நூற்றிருபது ஓவிய நிபுணர்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்களென்று ஒரு கணக்குக் கூறுகிறது. இவர்களிற் தலைசிறந்தவனாகக் கருதப் படுகிறவன் வூடாவ்-த்ஸு2 என்பவன். இயற்கைக் காட்சிகளையும், புத்தமத சம்பந்தமான உருவங்களையும் வரைவதில், இவனுக்கு நிகர் யாருமில்லையென்று சொல்லப்படுகிறது.
ஓவியக் கலையைப் போல், இலக்கியத் துறையும் தாங் ஆட்சிக் காலத்தில் வளமையுற்றிருந்தது. நூற்றுக்கணக்கான கவிஞர்கள் தோன்றி ஆயிரக்கணக்கான கவிதைகள் இயற்றினார்கள். பலதுறை நூல்கள் வெளியாயின. தாங் காலத்தில் மட்டும் இயற்றப்பட்ட கவிதை களனைத்தையும் தொகுத்து வெளியிடவேண்டுமென்ற எண்ணம், பதினெட்டாவது நூற்றாண்டில் ஆண்ட மஞ்சூ அரசர் சிலருக்கு உண்டா யிற்று; தொகுக்குமாறு ஆதானப் புலவர்களுக்கு உத்தரவிட்டார்கள். தொகுத்து முடிக்கிறபோது, இரண்டாயிரத்து முந்நூறு கவிஞர்கள், நாற்பத்தெட்டாயிரத்துத் தொள்ளாயிரம் கவிதைகள் இயற்றியிருக் கிறதாக ஒரு கணக்குத் தெரிந்தது. இந்தக் கவிதைகளை முப்பது புத்தகங் களாக வெளியிட்டார்கள். இவ்வள வென்ன, தாங் ஆட்சிக் காலத்தில் அரசாங்க நூல் நிலையம் ஒன்று மட்டும், ஐம்பத்து நாலாயிரம் நூல் களைக் கொண்டிருந்ததென்று சொன்னால், இந்தக் காலத்து இலக்கியச் செழுமைக்கு வேறென்ன அத்தாட்சி வேண்டும்?
இந்தக் காலத்துக் கவிஞர் திருக்கூட்டத்தில், தலை சிறந்த வர்களாகக் கருதப்படுகிறவர் இருவர். ஒருவன் லீ போ;1 மற்றொருவன் தூ பூ.2 இவர்களுடைய படைப்புக்கள், இன்றளவும் சீன இலக்கியப் பூங்காவில் மணம் வீசிக்கொண்டிருக்கின்றன. பிந்திய தோர் அத்தியாயத்தில் , இந்த மணத்தில் சிறிது நுகர்வோம்.
தாங் காலத்தில், சீனாவின் செல்வச் செழுமையும், இலக்கிய வளமும், உலகத்துப் பல நாடுகளின் கவனத்தைக் கவர்ந்தன; சீன நாகரிகத்தின் மீது ஒரு மோகம் ஏற்பட்டது. இந்த மோகத்தில் அதிகமாக ஈடுபட்டது அருகிலிருந்த ஜப்பான். இலக்கியம், கலை, அரசியல், உடை, உணவு, இப்படி எல்லாவற்றிலும் சீனாவைப் பின் பற்றியது; நாரா3 என்னும் பெயருள்ள தன் தலைநகரத்தை, தாங் அரசாங்கத்தின் தலைநகரான சாங்கான் மாதிரி புனர் நிர்மாணம் செய்து கொண்டது!
ஐரோப்பாவிலும் சீனாவைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டு மென்ற ஆவல் அதிகரித்தது. மன்னர் பலர், தங்கள் தூதர்களை இங்கு அனுப்பினார்கள்; வெறுங்கையோடு அனுப்பவில்லை; பலவித காணிக்கைகளோடு அனுப்பினார்கள். பொதுவாக, சீன மன்னர்களோடு நட்புக் கொள்வதில் பெருமை கண்டார்கள் ஐரோப்பிய மன்னர்கள்.
இன்னும், பாரசீகத்திலிருந்தும், துருக்கியிலிருந்தும் தூது கோஷ்டிகள் பல அவ்வப்பொழுது, சீன அரசவைக்கு வந்து, காணிக்கைகள் செலுத்தியும், பிரதிமரியாதைகள் பெற்றும் சென்றன. ஒரு சமயம், துருக்கியிலிருந்து வந்த தூதுகோஷ்டியொன்று, தன் நாட்டில் ஒரு கோயிலைக் கட்ட திட்டம் போட்டுத் தருமாறு, சீன அரசவையிலிருந்த கட்டட நிபுணர்களைக் கேட்டது; அந்த நிபுணர்களும் அப்படியே திட்டம் போட்டுக் கொடுத்தார்கள். பாரசீகம், படையுதவி கேட்டது; உடனே பெற்றுக்கொண்டது.
இங்ஙனம் பிறநாடுகளிலிருந்து அரசாங்க தூதர்கள் மட்டு மல்ல, வியாபாரிகள், மதப் பிரசாரகர்கள், இப்படிப் பல வகை யினரும் சீனாவுக்கு வந்து அநேக விஷயங்களைத் தெரிந்துகொண்டு திரும்பிப் போனார்கள். இன்னும், பிற நாடுகளில் அரசியல் காரண மாகவோ மதம் காரண மாகவோ துன்புறுத்தப் பட்டவர்கள், சீனாவில் வந்து தஞ்சம் புகுந்து ஆறுதல் பெற்றார்கள்.
தாங் காலத்தில், புத்த மதம் சீனாவில் வெகு தீவிரமாகப் பரவியது. புத்தமத சம்பிரதாயங்களைக் கடைப்பிடிப்பதில் சீனர்கள் அதிக ஆவல் காட்டினர். புத்த மடாலயங்கள் பல ஏற்பட்டன. இந்த மதத்தில் பற்றுக் கொண்டவர்கள், தங்களுடைய பெருவாரியான நிலபுலங்களை இவை களுக்கு எழுதி வைத்தார்கள். பிட்சுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இவ்வளவுக்கும் காரணம், அரச வமிசத்தினர், புத்த மதத்திற்குக் காட்டிய ஆதரவுதான்.
ஆனால் லாவோத்ஸே, கன்பூஷிய போன்ற சீன ஞானிகளின் கோட்பாடுகளை வெகு காலமாகப் பின்பற்றி வந்தவர்கள், சீனாவுக்குள் புதிதாக வந்து நுழைந்த புத்த மதத்திற்கு, அரச வமிசத்தினர், இவ்வளவு அதிகமாக ஆதரவு காட்டுவதை விரும்பவில்லை; வெறுக்கவும் செய்தார்கள். வெறுப்பு ஆத்திரமாக மாறியது. 845-ஆம் வருஷம் ஒரு பெருங்கலகம் ஏற்பட்டது. புத்த மதத்தைச் சேர்ந்த நாலாயிரத்து அறுநூறு கோயில்களும், நாலாயிரம் புத்த விஹாரங்களும் அழிக்கப் பட்டன; பிட்சுக் களாகவும், பிட்சுணிகளாகவும் இருந்த சுமார் இரண்டு லட்சத்து அறுபதினாயிரம் பேர் முந்தி அவர்கள் என்ன விதமான வாழ்க்கையை நடத்தி வந்தார்களோ அந்த வாழ்க்கைக்குச் செல்லும் படி செய்யப் பட்டனர். பௌத்த மடங்களுக்குச் சொந்தமா யிருந்த லட்சக்கணக்கான ஏகராக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வளவு செய்தும் சீனாவி லிருந்து புத்தமதத்தை அப்புறப்படுத்தி விட முடியவில்லை. அது சிற்சில மாறுதல்களையடைந்து, முந்திக் காட்டிலும் வேகமாகப் பரவியது.
புத்த மதம் இங்ஙனம் கடுமையான பரிசோதனைக்குட் பட்டதன் விளைவாக ஒரு பெரிய நன்மையும் ஏற்பட்டது. அச்சுத் தொழில் ஆக்கம் பெற ஆரம்பித்தது. ஏற்கனவே 770-ஆம் வருஷம் அச்சிடப்படுகின்ற முறை கண்டுபிடிக்கப்பட்டு மெதுமெதுவாகப் பரவி வந்தபோதிலும், 845-ஆம் வருஷம் ஏற்பட்ட கலவரத்திற்குப் பிறகு, அச்சுத் தொழிலுக்கு ஒரு புது வாழ்வு ஏற்பட்டதென்று சொல்லவேண்டும். புத்தமத கிரந்தங்களை அச்சிட்டு வழங்க வேண்டிய அவசியத்தை உணர்ந்த புத்தமதப் பிரசாரகர்கள், அச்சுத் தொழில் வளர்வதற்கு உதவியாயிருந்தார்கள்.
இப்பொழுது குடிசைத் தொழில் என்று சொல்கிறோமே அந்த வகையான தொழில்கள், தாங் காலத்தில் வெகுவாக அபிவிருத்தி யடைந் திருந்தன. கிராமங்களில் வசித்த ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு தொழிற்சாலையாக இருந்தது பெரிய நகரங்களில் இந்தத் தொழிற் சாலைகளில் உற்பத்தியான பொருள்களை விற்பதற்கென்று தனித்தனி கடைவீதிகள் இருந்தன; வெளிநாடுகளுக்கும் இவை ஏற்றுமதி செய்யப்பட்டன.
தாங் காலத்தில் , சில தீமைகளும் சீன சமுதாய வாழ்க்கையில் இடம்பெற்றன. மிதமிஞ்சிய செல்வம் காரணமாக, ஆடம்பர வாழ்க்கையை மேற்கொள்வது பலருக்குச் சுலபமாயிருந்தது. பணம் படைத்தவர்கள் சீட்டாட்டம், சூதாட்டம், குதிரைப் பந்தயம் முதலியவை களில் பெரும் பொழுதைக் கழித்தனர். இன்னும் சிலர், விலை மாதரோடு இன்பம் நுகர்ந்தனர். மித மிஞ்சிய குடிப் பழக்கத்திற்குப் பலர் இரையாயினர். பெண்களின் பாதங்களை இறுக்கிக் கட்டுவதென்னும் வழக்கம் இந்தக் காலத்தில் தான் தொடங்கியது.
பொதுவாகப் பார்க்கிறபோது, தாங் வமிச ஆட்சி, சீன நாகரிகத்தின் உச்சியை எட்டிப் பிடித்ததென்று சொல்லலாம். ஒரு மேனாட்டு அறிஞன் கூறுகிறான்; தாங் ஆட்சிக் காலத்தில், சீனா, நாகரிகத்தின் முன்னணியில் நின்றதென்பதில் சந்தேகமில்லை. உலகத்திலேயே சீன சாம்ராஜ்யம் ஒன்றுதான் அதிக சக்தி வாய்ந்ததாகவும், அதிக விஷயஞான முடைய தாகவும், பல துறை களிலும் அபிவிருத்தியடைந்ததாகவும், திறமையான ஆளுகைக் குட்பட்டிருப்பதாகவும் காணப்பட்டது.
ஸுங் வமிசம்
தாங் வமிசத்திற்குப் பிறகு, சுமார் ஐம்பது வருஷகாலம் ஐந்து வமிசங்களின் ஆட்சி நடைபெற்ற தென்று சொன்னோமல்லவா, இதற்குப் பிறகு ஸுங் வமிச1 ஆட்சி தொடங்கியது. 960 முதல்1279-ஆம் வருஷம் வரை முந்நூற்றுப் பத்தொன்பது வருஷகாலம், முப்பத்தாறு மன்னர்கள் இந்த வமிசத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு ஆண்டார்கள்.
இந்த வமிசத்தினர், முதலில் சுமார் நூற்றறுபத்தேழு வருஷ காலம், அதாவது 960 முதல் 1127-ஆம் வருஷம் வரை, வடக்கிலுள்ள கைபெங்2 என்ற ஊரைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டார்கள். இதற்குப் பிறகு அங்கிருந்துகொண்டு ஆளமுடியாத நிலை இவர்களுக்கு ஏற்பட்டது. எனவே தெற்கு நோக்கி வந்து ஹாங்சௌ என்ற ஊரைத் தலைநகரமாகக் கொண்டு சுமார் நூற்று ஐம்பத் திரண்டு வருஷம் அதாவது 1279-ம் வருஷம் வரை ஆண்டார்கள். இதனால் இவர்களுடைய ஆட்சியை, வடக்கு ஸுங் வமிசத்தின் ஆட்சி யென்றும், தெற்கு ஸுங் வமிசத்தின் ஆட்சி என்றும் இரண்டு பிரிவாகப் பிரித்துப் பேசுவதுண்டு. எங்கிருந்து ஆண்டபோதிலும், ஆண்டவர் அனைவரும் ஒரே வமிசத்தின ராதலால், இவர்களுடைய ஆட்சியை மொத்தமாக ஸுங் வமிச ஆட்சி என்றே இங்குச் சொல்லிக் கொண்டு போவோம்.
இந்த ஸுங் வமிசத்தின் முதல் அரசன் சாவோ குவாங்-யின்3 என்பவன். இவன் அரச பதவிக்கு வந்ததே ஒரு விநோதம். தாங் வமிசத்திற்குப் பிறகு ஐந்து வமிசங்களின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் எங்கணும் அமைதிகுலைந்திருந்தது. குட்டி அரசர்கள் பலர் தோன்றினார்கள். குட்டிக் கலகங்கள் பல கிளம்பின. இந்த சாவோ குவாங்-யின் ஒரு சிற்றரசனுடைய சேவையில் அமர்ந்திருந்தான். வடக்குப் பகுதியில் தோன்றிய ஒரு கலகத்தை அடக்க, இவனை, அந்தச் சிற்றரசன் ஒரு சிறு படையுடன் அனுப்பினான். இவன் படையினருக்கும் கலகப் படையினருக்கும் சில நாட்கள் வரை போர் நடைபெற்றது. வெற்றி தோல்வி யாருக் கென்று தெரியாத நிலையில், ஒரு நாள் இவனுடைய படையின் ஒரு பகுதித் தலைவன், இவனிடம் வந்து, ஆகாயத்தில் மற்றொரு சூரியன் உதித்திருப்பதாகவும், அதைத் தான் பார்த்ததாகவும், இதன் சூசகம் என்னவென்றால், மற்றொரு சக்ரவர்த்தி தோன்றி சர்வ சீனாவையும் ஆள்வான் என்றும் தெரிவித்தான். உடனே போர் வீரர் அனைவரும் ஒன்று சேர்ந்து, சாவோ குவாங் யின்னுக்கு அரச உடை அணிவித்துக் குதிரை மேலேற்றி ஊர்வலமாக அழைத்து வந்தார்கள்; அரச மரியாதைகளைச் செலுத்தினார்கள்; வாழ்க எமது மன்னன் என்று வாழ்த்தினார்கள். மறுநாள் புதிய அரசனைத் தலைவனாகக் கொண்டு, கலகத்தை அடக்குவதற்காக அனுப்பப்பட்ட படையானது தலைநகரத் திற்கு ஆரவாரத்தோடு திரும்பி வந்து கொண்டிருந்தது. இதைப்பார்த்தான் அந்தச் சிற்றரசன். பயந்து போய் ஊரை விட்டு ஓடிவிட்டான். சாவோ குவாங்-யின் தை த்ஸூ 1 என்ற புதிய பட்டப் பெயரைத் தரித்துக்கொண்டு சர்வ சீனாவுக்கும் சக்ரவர்த்தியானான். இவன் வழிவந்தவர்கள் ஸுங் வமிசத்தினர் என்று அழைக்கப் பட்டார்கள்.
எதிர்பாராதவிதமாகக் கிடைத்த அரச பதவி எதிர்பாராத விதமாகத் தன் கைநழுவிப்போய்விடுமோ என்ற அச்சம் ஆரம்பத் திலேயே தை த்ஸுவுக்கு உண்டாயிற்று. எனவே தனக்கு எதிர்ப்பு இல்லாமற் செய்து கொள்ள வேண்டியது தனது முதற் கடமை யென்று கருதினான். இதற்காக கண்ணியமான ஒரு முறையைக் கையாண்டான். தன்னை அரசனாக்கிய படைத் தலைவர்கள் அனைவருக்கும் ஒருநாள் அரண்மனையில் விருந்தொன்று நடத்தினான். எல்லோரும் விருந்துண்டு மகிழ்ச்சிக் கடலிலே மிதந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது தை த்ஸு அனைவரையும் பார்த்து இரவு நேரத்தில் என்னால் நிம்மதியாகத் தூங்க முடிவதில்லை என்றான். ‘என்ன காரணமோ? என்று கவலையோடு கேட்டார்கள் படைத் தலைவர்கள். காரணமா? உங்களில் யாருக்கு என் பதவியைக் கைப்பற்ற வேண்டுமென்ற ஆசையில்லை? என்று கேட்டான் அரசன். எல்லோரும் துணுக் குற்றார்கள்; தலை குனிந்து வணக்கம் செய்து விட்டு அரசர் பெருமான் இப்படிக் கேட்கலாமா? கடவுளின் ஆணை இன்னதென்று தெளிவாகத் தெரிந்துவிட்டதே. இனி யாராவது தங்களுக்குத் துரோகம் நினைப்பார்களா? என்று சொன்னார்கள். இதற்கு அரசன், உங்களுடைய ராஜ விசுவாசத்தை நான் சிறிதும் சந்தேகிக்கவில்லை. ஆனால் நான் எதிர்பாரா திருக்கையில் என்னை எப்படி அரசனாக்கி, முந்தி ஆண்டு கொண்டிருந்த அரசனை அப்புறப்படுத்தி விடும்படி செய்தீர்களோ அப்படியே, உங்களில் யாராவது ஒருவர் திடீரென்று ஒரு நாள் அரச பீடத்தில் அமர்த்தப் பட்டால், அவர் என்னை அப்புறப்படுத்தி விடுவா ரல்லவா? என்று கேட்டான். இதற்கு அவர்கள் இப்படி எங்கள்மீது சந்தேசப் படுவதை நாங்கள் பலமாக ஆட்சேபிக்கிறோம். எங்களில் யாருக்கும் அவ்வளவு திறமையில்லை. இனி நீங்கள் சொல்கிறபடி நடக்கிறோம் என்றார்கள். அப்படியானால் ஒன்று சொல்கிறேன்; கேளுங்கள். மனிதனுடைய ஆயுளோ மிகக் குறைவு. சந்தோஷம் என்பது என்ன? போதுமான பணத்தையும், வாழ்க்கையை அனுபவிப்பதற்கான சாதனங்களையும் பெற்றிருப்பதுதான். இப்படிப் பெற்று அனுப விக்கிற சந்தோஷத்தையும் மற்ற நலன்களையும் நம்முடைய பின் சந்ததியார்களுக்கு வைத்துவிட்டுப் போகவேண்டும். ஆகவே இப்பொழுது நீங்கள் வகிக்கும் ராணுவ அதிகாரத்தைத் துறந்து விட்டு, வெளியூர்களுக்குச் சென்று விடுங்கள். அங்கே உங்களுக்குத் தேவையான அளவு நல்ல நிலங்களைத் தெரிந்தெடுத்துக் கொள்ளுங்கள்; ஆனந்தமாக வசிப்பதற்குத் தகுதியுள்ள பெரிய மாளிகைகளை அங்குக் கட்டிக் கொள்ளுங்கள்; மிகுதியுள்ள உங்கள் வாழ்நாளை அங்கே சந்தோஷ மாகவும் நிம்மதியாகவும் கழித்துவிடலாம்; படைத் தலைவராயிருந்து எப்பொழுதும் ஆபத்திலும் நிச்சயமற்ற நிலைமையிலும் வாழ்ந்து கொண்டிருப்பதைக்காட்டிலும், நான் சொல்லும் இந்த வாழ்க்கை மேலானதல்லவா? அப்படி நீங்கள் வாழத் தொடங்கி விட்டீர்களானால், அரசனுக்கும் மந்திரிகளுக்கும், அதாவது எனக்கும் உங்களுக்கும் மத்தியில் எந்தவிதமான சந் தேகமும் இருந்துகொண்டிராது. நம்முடைய குடும்பங்களை விவாகத்தின் மூலமாக இணைத்துக் கொள்வோம். ஆள்கிறவனாகிய நானும் ஆளப்படுகிறவர்களாகிய நீங்களும் ஒன்றுபட்ட மனத்தின ராகி சௌஜன்யத்துடனும் மன அமைதியுடனும் வாழ்ந்து கொண்டி ருக்கலாம் என்றான் தை த்ஸு. மறுநாளே எல்லாப் படைத்தலை வர்களும், உடம்பு சரியில்லை என்பது போன்ற சில கற்பனையான காரணங்களைச் சொல்லி, தங்கள் ராஜீநாமாவை அரசனிடம் சமர்ப் பித்துவிட்டு வெளியூர்களுக்குச் சென்று விட்டார்கள். தை த்ஸுவும் இவர்களுக்கு வேண்டிய அளவு நிலங்கள்முதலிய பலவித சௌ கரியங்களைச் செய்து கொடுத்து, கௌரவமான சில உத்தி யோகங் களையும் வழங்கினான்.
இங்ஙனம் தன் அரச பதவியை திரப்படுத்திக் கொண்டதை த்ஸு மன்னன், சுமார் பதினாறு வருஷகாலம் ஆண்டான்.
பொதுவாக ஸுங் வமிசத்தவரின் ஆட்சியைக் கொந்தளிப்பு நிறைந்த ஆட்சியென்றே சொல்லவேண்டும். எப்பொழுதும் ஏதோ ஒரு விதமான போராட்டம் இருந்துகொண்டே யிருந்தது. ஆனால் இதற்கு ஈடு செய்வதுபோல், ராஜ்யத்தின் கலை வளமும் தொழில் வளமும் அதிகரித்துக் கொண்டு வந்தன.
ஸுங் வமிச ஆட்சியின் ஆரம்ப காலத்தில் வடக்கிலிருந்து கித்தானியர்1 என்ற ஒருவகை முரட்டு ஜாதியார் படையெடுத்து வந்தனர். அவர்களுக்கும் ஸுங் படையினருக்கும் அடிக்கடி போர்கள் நடைபெற்றன. இரு சாராருக்கும் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி ஏற்பட்டு வந்தன. ஆயினும் கித்தானியரோடு சமாதானமாகவே போக விரும்பினர் ஸுங் ஆட்சியினர். எனவே வருஷந்தோறும் ஒரு லட்சம் அவுன் வெள்ளியும், இரண்டு லட்சம் கஜம் பட்டுத் துணியும் அவர்களுக்குக் கப்பம் செலுத்தி வருவதாக ஒப்புக் கொண்டு அவர்களுடைய படையெடுப்பினின்று தங்களைப் பாது காத்துக் கொண்டனர். இது நிகழ்ந்தது 1004-ஆம் வருஷம்.
கித்தானியர் இங்ஙனம் கப்பம் பெற்று வருகிறார்களென்று தெரிந்ததும், தங்கூட்டர் 1 என்ற மற்றொரு வகை முரட்டு ஜாதியினர் படையெடுத்து வரலாயினர். இவர்களுக்கும், வருஷந்தோறும் இரண்டரை லட்சம் அவுன் வெள்ளியும், இரண்டரை லட்சம் கஜம் பட்டுத் துணியும், ஒரு லட்சம் வீசை தேயிலையும் கப்பம் செலுத்தி வருவதாக ஒப்புக்கொண்டனர் ஸுங் ஆட்சியினர். ஆனால் சீன சரித்திரம், கப்பம் என்ற சொல்லை உபயோகியாமல், சன்மானம் என்றும் நன்கொடை யென்றும் சொல்லிக் கொண்டுபோகிறது. எப்படி இருந்தாலென்ன? அரசாங்கத்தின் பொக்கிஷம் வருஷத்திற்கு வருஷம் கரைந்து வந்தது. இது ராஜ்யத்தின் பொருளாதார நிலையைப் பாதிக்காமலிருக்குமா?
விலைவாசிகள் ஏறிக்கொண்டே போயின. அரசாங்கம், வரியைக் கூட்டிக்கொண்டே வந்தது. நிலப்பிரபுக்கள் வரி செலுத்துவதினின்று எப்படியோ தப்பித்துக்கொண்டு வந்தார்கள். ஏழை விவசாயிகள் வரிச்சுமையைத் தாங்க முடியாமல் திணறினார்கள். இவர்கள் உற்பத்தி செய்த பொருள்களைப் பணக்காரர்கள், குறைந்த விலைக்கு வாங்கி, சிறிது காலம் பதுக்கி வைத்திருந்து, பிறகு அதிக விலைக்கு இவர்களுக்கே திருப்பி விற்றார்கள். பசிக் கொடுமையினால் இவர்களும் அதிக விலை கொடுத்தே வாங்க வேண்டியவர்களானார்கள், மற்றும் செல்வமும் செல்வாக்குமுள்ள நிலச்சுவான்தார்கள், ஏழைகளின் நிலங்களைப் பறித்துத் தங்களுடையதாக்கிக் கொண்டார்கள். விவசாயிகள், அதிக வட்டிக்குக் கடன் வாங்கி ஜீவனம் நடத்துவதும்,பிறகு அந்தக் கடனுக்காகத் தங்கள் நிலங்களைப் பறிகொடுப்பது மாயுமிருந்தார்கள். எந்த வகையிலேனும் ஒரு பரிகாரம் ஏற்படாதாவென்று ஜனங்கள் ஏங்கி நின்றார்கள். இந்த நிலைமையில் ஓர் அறிஞன் தோன்றினான். இவன் பெயர் வாங் ஆன்-ஷி2.
வாங் ஆன்-ஷி, பெரிய கல்விமான்; பொருளாதார நிபுணன் ; சீர்திருத்தவாதி; ராஜதந்திரி. சிறு பிராயத்திலேயே , அரசாங்கம் நடத்தி வந்த பரீட்சைகளில் தேறி, படிப்படியாக உத்தியோக உயர்வுபெற்று வந்தான்; கடைசியில் 1068 முதல் 1076-ஆம் வருஷம் வரை, பிரதம மந்திரிப் பதவியை வகித்தான்.
அரசாங்க நிருவாக விஷயத்தில் இந்த வாங் ஆன்-ஷி கையாண்ட சீர்திருத்த முறைகளை இப்பொழுது பார்த்தால் கூட, அவை தற்கால அரசியல் முறைகளோடு எவ்வளவு ஒட்டியிருக்கின்றனவென்பது நன்கு புலப்படும். இருபதாவது நூற்றாண்டிலே போற்றப்பட வேண்டிய ஒரு சிறந்த ராஜதந்திரியாகவே இவன் நமது மதிப்பில் இடம் பெறுகிறான்.
இப்பொழுது சட்டசபைக் கூட்டங்களில், வரவு செலவுத் திட்டத்தைப் பற்றி அடிக்கடி கேள்விப்படுகிறோம். உத்தேச வருமானம் இவ்வளவு, உத்தேச செலவு இவ்வளவு, நிகர வருமானம் இவ்வளவு, நிகர செலவு இவ்வளவு என்று நிதி மந்திரிகள் திட்ட மிட்டுக் காட்டுகிறார்களல்லவா, இந்த முறையையும், சில முறைகளையும் ஜனங்களுக்கு அனுகூலமா யிருக்கக் கூடிய இன்னும் சில முறைகளையும் அமுலுக்குக் கொண்டு வரச் செய்தான் வாங் ஆன்-ஷி.
1. ராஜ்யத்தின் வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதற் கென்று ஒரு கமிஷன் நியமித்தான். இந்தக் கமிஷன் தயாரிக்கிற திட்டப்படியே ராஜ்யத்தின் வரவு செலவுகள் நடைபெற வேண்டு மென்று கண்டிப்பான விதி ஏற்படுத்தினான். இதனால் செல வினங்களிலே நூற்றுக்கு நாற்பது விகிதம் மிச்சம் ஏற்பட்டது.
2. விவசாயிகளுக்கு, நாற்று நடவு காலத்திலே அரசாங்க பொக்கிஷத்திலிருந்து கடன் கொடுத்து, திரும்ப சாகுபடி காலத்திலே அதை, நூற்றுக்கு இருபது விழுக்காடு வட்டியுடன் செலுத்தி விடுமாறு ஏற்பாடு செய்தான். இதனால் விவசாயிகள், இதுகாறும் தரிசாகப் போட்டிருந்த நிலங்களைச் சாகுபடிக்கு லாயக்குள்ளதாகக் கொணர்ந் தார்கள். தேசத்தின் பொருளுற்பத்தி அதிகமாயிற்று; அரசாங்கத்தின் வருமானமும் அதிகப்பட்டது.
3. நில சர்வே செய்து ஒவ்வொருவருக்கும் இவ்வளவு இவ்வளவு விதீரணமுள்ள பூமி இருக்கிறதென்று ததாவேஜூ களிலே பதிவு செய்யும்படி ஏற்பாடு செய்தான். இதன் பிரகாரமே வரி விதிக்கப்பட்டது.
4. கட்டாயச் சேவகம் என்பதை ரத்து செய்து விட்டான். அதாவது, இன்னின்னார். தேச நன்மைக்காகவுள்ள வேலைகளைக் கட்டாயமாகச் செய்யவேண்டுமென்ற ஒரு விதி முன்னர் இருந்தது. இப்பொழுது அது ரத்து செய்யப்பட்டுவிட்டது. அதற்குப் பதில் அவர்கள் - கட்டாய வேலை களினின்று விலக்கப்பட்டவர்கள்- குறிப்பிட்ட ஒரு தொகையை வருஷந் தோறும் அரசாங்கத்திற்குச் செலுத்திவர வேண்டுமென்று நிர்ணயிக்கப் பட்டது.
5. ஒரு குடும்பத்திற்கு இத்தனை பெயர் விகிதம் என்று பொறுக்கி யெடுத்து ஜனங்களுக்கு ராணுவப் பயிற்சி அளித்தான்; இவர்களையே தேசப் பாதுகாப்பாளர்களாக ஏற்படுத்தினான். இதனால் ஜனங்களுக்குத் தற்காத்துக் கொள்ளுஞ் சக்தி உண்டாயிற்று.
இந்த மாதிரியான சீர்திருத்தங்களை வாங் ஆன்- ஷி செய்ய முற்பட்டானே யானாலும், நாட்டிலுள்ள ஏகபோக உரிமைக்காரர், இவைகளை அனுஷ்டானத்திற்குக் கொண்டுவராதபடி எல்லாவித முட்டுக்கட்டைகளையும் போட்டனர்; அரசாங்க உத்தியோக தர்களும் இந்தச் சீர்திருத்தங்களுக்கு விரோத மாயிருந்தனர்; வாங் ஆன்-ஷிக்கு விரோதமான கிளர்ச்சிகளைத் தூண்டிவிட்டனர். கடைசியில் வாங் ஆன்-ஷி சக்ரவர்த்தியின் விசுவாசத்தை இழந்து, தனது பிரதம மந்திரிப் பதவியை ராஜீநாமா செய்துவிட்டான். இதற்குப் பிறகு, தேசம் , வரவர க்ஷீணதசை அடைந்து வந்ததென்றே சொல்லவேண்டும்.
போதாக்குறைக்கு அரச பீடத்தில் அமர்ந்திருந்தவர்களும் திறமைசாலிகளா விருக்கவில்லை. கித்தானியரும் தங்கூட்டரும் மேலும் மேலும் நெருக்கிக் கொண்டிருந்தனர். இவர்களுக்கு வருஷந் தோறும் கப்பஞ்செலுத்தி வருவது முடியாததாயிற்று. யாருடனா வது கூட்டுச் சேர்ந்து கொண்டு, இந்தக் கித்தானியரையும் தங் கூட்டரையும் தொலைத்துவிட வேண்டுமென்று, அப்பொழுது ஸுங் அரச பீடத்தில் அமர்ந்திருந்த ஹுயி த்ஸுங்1 தீர்மானித்து, வடகிழக்குப் பகுதியில் தனி ராஜ்யமொன்றை தாபித்துக் கொண்டு ஆண்டு வந்த கின்2 என்ற ஒருவகை ஜாதியாரின் உதவியை நாடினான். இந்த ஜாதியார், முரட்டுச் சுபாவமுடையவர்கள்; தார்த்தாரிய இனத்தைச் சேர்ந்தவர்கள். என்ன நிபந்தனையின் மீது உதவி செய்ய வேண்டுமென்று ஸுங் மன்னனைக் கேட்டார்கள். அவனும், கித்தானியரையும் தங்கூட்டரையும் விரட்டி விட்டு, அவர்கள், தன்னிடமிருந்து பறித்துக்கொண்டுவிட்ட பிரதேசத்தை தன் வசத்தில் ஒப்புவித்துவிட்டால், அதற்குப் பிரதியாக, மேற்படி கித்தானியருக்கும், தங்கூட்டருக்கும் செலுத்தி வந்த கப்பத்தை இவர்களுக்கு - கின்களுக்கு - செலுத்தி வருவதாகக் கூறினான். இதற்கு ஒப்புக் கொண்டார்கள் கின்கள். அப்படியே கித்தானியரையும் தங் கூட்டரையும் விரட்டி விட்டார்கள். ஆனால் அவர்கள் சுவாதீனத்தி லிருந்த பிரதேசத்தை ஸுங் மன்னனுக்குத் திருப்பிக் கொடாமல், தங்கள் சுவாதீனத்திலேயே வைத்துக்கொண்டார்கள். அதோடு நில்லாமல், ஸுங் ராஜ்யத்தின் தலைநகரமான கை பெங் மீதே படை யெடுத்து வரலானார்கள். சொல்லவேண்டுமா தலைநகரம் பட்ட பாட்டை? ஆயினும் ஸுங் படையினர் தைரியமாக எதிர்த்து நின்றார்கள். இந்தப் பலத்த எதிர்ப்பைத் தாக்குப்பிடிக்க முடியாமல் கின்களும் திரும்பிப் போய் விட்டார்கள். ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு, பெரும் படையுடன் திரும்பி வந்தார்கள். இந்தத் தடவை ஸுங் படைகளால் சமாளிக்க முடியவில்லை. தலை நகரமும் அதைச் சுற்றியிருந்த பிரதேசமும் கின்கள் வசமாயின; மன்னனையும் அவன் குடும்பத்தாரையும் சிறைப்படுத்திவிட்டார்கள். ஸுங் வமிசம் முற்றுப்பெற்று விடுமோ என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் முற்றுப் பெறவில்லை.
ஹுயி த்ஸுங்கின் குமாரர்களில் ஒருவனான காவோ த்ஸுங் 1 என்பவன் கின்களின் கைக்கு அகப்படாமல் எப்படியோ தப்பியவனாய், அரச பரிவாரத்தைச் சேர்ந்த சிலரையும், படைவீரர்கள் சிலரையும் அழைத்துக் கொண்டு, தெற்குப் பகுதிக்குச் சென்றான்; சென்று, ஹாங் சௌ என்ற ஊரைத் தலைநகரமாக்கிக் கொண்டு ராஜ்யபாரம் செய்யத் தொடங்கினான். தொடங்கியது 1127-ஆம் வருஷம் . இந்த வருஷத்தி லிருந்து 1279-ஆம் வருஷம் வரை, தெற்குப் பகுதியில் ஸுங் வமிசத் தினரின் ஆட்சி நடைபெற்று வந்தது. இதனையே தெற்கு ஸுங் வமிச ஆட்சியென்று சீன சரித்திரம் அழைக்கிறது.
ஸுங் வமிசத்தினர் தெற்குப் பகுதிக்குச் சென்று விட்ட பிறகு, கின்கள், வடக்குப் பகுதியை ஆண்டு வந்தார்கள். பெயரளவுக்குத் தான் ஆண்டு வந்தார்களென்று சொல்ல வேண்டும். ஏனென்றால், இவர்களுக்கு எதிர்ப்புக் காட்டியவண்ணமிருந்தார்கள் சீனர்கள். இந்த எதிர்ப்புக்களை கின்கள் ஒருவாறு சமாளித்துக் கொண்டு வந்தார்களாயினும், சீனர் களுடைய நாகரிகம், கலாசாரம் முதலிய வைகளில் பெரிதும் ஈடுபட்டு விட்டார்கள்; சீன மொழியின் வரிவடி வத்தையும் இலக்கியத்தையும் அப்படியே ஏற்றுக் கொண்டார்கள். சுருக்கமாக, கின்கள், சீனர்களாகி விட்டார் களென்று சொல்லலாம்.
கின்கள், வடக்குப் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டதோடு நில்லாமல். ஸுங் வமிசத்தினரின் ஆளுகைக்குட்பட்டிருந்த தெற்குப் பிரதேசங்கள் சிலவற்றின் மீதும் அடிக்கடி படையெடுத்து வந்தார்கள். அங்கும் இவர்களுக்கு எதிர்ப்புதான். ஆக , சுமார் நூற்றைம்பது வருஷ காலம், கின்களுக்கும் சீனர்களுக்கும் ஓயாத போராட்டம் நடை பெற்று வந்தது. கடைசியில் இருதரப்பினரும் பலவீனமடைந்து விட்டார்கள்; சலிப்பும் கொண்டார்கள். இந்தச் சலிப்பு, இரு சாரா ரையும் சமாதானமாகப் போகச் செய்திருந்தால், சீன சரித்திரத்தின் போக்கு சிறிது மாறியிருக்கும். ஆனால் சீனர்கள் இதற்கு இடங் கொடுக்கவில்லை. பழைய மாதிரி தவறு செய்தார்கள். கித்தானி யரையும் தங்கூட்டரையும் விரட்டியடிக்க முந்தி எப்படி கின்களின் உதவியை நாடினார்களோ, அப்படியே இப்பொழுது, கின்களை விரட்டி யடிக்க மங்கோலியரின்2 உதவியை நாடினார்கள். கடைசியில் என்ன கண்டார்கள்? கின்களின் ஆதிக்கத்திற்குட்பட நேரிட்டது போய் மங்கோலியரின் ஆதிக்கத்திற்குட்படும்படி நேரிட்டது!
இந்த ஆதிக்கத்தைப் பற்றிப் பின்னர்ப் பேசுவோம். அதற்கு முன், ஸுங் வமிச ஆட்சி நடை பெற்ற காலத்தில், தொழில் துறை, இலக்கியத் துறை முதலியவை எப்படி இருந்தனவென்பது பற்றிச் சிறிது தெரிந்து கொள்வோம்.
இந்த ஆட்சிக் காலத்தில், தரிசாகக் கிடந்த நிலப்பகுதிகள்பல, பயிரிடுவதற்குத் தகுதியுடையனவாகச் செய்யப்பட்டன. இதற்காக, நீர்ப்பாசன வசதிகள் அதிகரிக்கப்பட்டன. வீணாகப் போகக்கூடிய மழை நீரையும் ஆற்று நீரையும் ஆங்காங்குத் தடுத்துத் தேக்கிவைத்து. பிறகு உரிய காலத்தில் விவசாயத்திற்குப் பயன்படுத்த, நீர்த் தேக் கங்கள் (கண்மாய்கள் அல்லது ஏரிகள்) சில ஏற்கனவே இருந்தன ஸுங் ஆட்சியில் இவற்றின் எண்ணிக்கை அதிகரித்தது. உதாரண மாக, தாங் ஆட்சியில் தொண்ணூற்றொன்று நீர்த் தேக்கங்கள் இருந்தன. ஸுங் ஆட்சியில் இவற்றின் எண்ணிக்கை, நானூற்றுத் தொண்ணூற்றாறாக அதிகரித்தது.
மற்றும், கீழ்மட்டத்திலிருக்கும் தண்ணீரை மேல் மட்டத் திற்குக் கொண்டுவரக் கூடிய யந்திரங்கள், நில அளவைக்குரிய கருவிகள் முதலியன கண்டு பிடிக்கப்பட்டு உபயோகத்திற்குக் கொண்டு வரப்பட்டன. புதிய புதிய பாலங்கள் கட்டப்பெற்றன. கப்பல் கட்டுந் தொழிலில் அதிக முன்னேற்றம் காணப்பட்டது. சமுத்திரத்தில் வேகமாகச் செல்லக்கூடிய பெரிய கப்பல்கள் பல கட்டப்பெற்றன. இவற்றில் முதல் முதலாகத் திசையறி கருவிகள் பொருத்தப் பட்டன. இப்படிப் பொருத்தப்பட்ட பிறகு, சீனாவுக்கும், தெற்குப் பகுதியி லுள்ள தீவுகளுக்கும் இந்தியாவுக்கும் கப்பல் போக்குவரத்து அதிக மாயிற்று. சீனாவுக்கு வந்துபோன பாரசீக வியாபாரிகளும் அராபிய வியாபாரிகளும் சீனக் கப்பல்களையே அதிகமாக உபயோகித் தார்கள்.
வெடி மருந்து, வெடி குண்டு, விஷப் புகையைக் கக்கும் கருவி, பீரங்கிக் குண்டு, இப்படிப்பட்ட போர்க்கருவிகள் பலவும் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டது இந்த ஸுங் காலத்தில்தான்.
இன்னும் இந்த ஸுங் காலத்தில், சிற்பக் கலையும் ஓவியக் கலையும் உலகத்தாரின் கவனத்தை ஈர்க்கக் கூடிய அளவுக்கு விருத்தி யடைந்தன. பீங்கான் சாமான்களும், மட்பாண்டங்களும் அற்புத மான ஓவியங்களினால் அழகுப்படுத்தப் பெற்று வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி யாயின. இவற்றில் பல இப்பொழுதும் மேனாட்டுப் பொருட்காட்சி சாலைகளில் சிறப்பான இடம் பெற்றிருக்கின்றன.
அச்சுக் கலை செழுமையடைந்தது. நூல்கள் பல வெளியாயின. ஒரு துறையிலா? இரண்டு துறைகளிலா? பல துறைகளில். வைத்தியக் களஞ்சியம் என்ற ஒரு நூல் வெளிவந்தது . பன்னிரண்டு சிறந்த வைத்தியர்கள் சேர்ந்து அநேக ஆராய்ச்சிகள் செய்து இதனை வெளியிட்டார்கள். இதுபோல, வைத்திய சாதிர சம்பந்தமான நூல்கள் பல வெளியாயின. ஆங்காங்கு வைத்தியக் கல்லூரிகள் பல நிறுவப்பட்டன. இந்தக் கல்லூரிகளில், திரீகள் பலர் படித்துத் தேர்ச்சிபெற்று கண்ணியமான முறையில் தொழில் நடத்தி வந்தார்கள். தாவர சாதிரம், பிராணி சாதிரம், கணித சாதிரம் இவை பற்றிய ஆராய்ச்சி நூல்கள் பல வெளியாயின. சிறப்பாக, கணித சாதிர ஆராய்ச்சி, அதிலும் பீஜ கணித சம்பந்தமான ஆராய்ச்சி அதிக முக்கியத்துவம் பெற்றது. அதுவரையில் சீனா கண்டிராத கணித மேதையர் பலர், இந்த ஸுங் காலத்தில்தான் வாழ்ந்து வந்தார்கள். வரலாற்று நூல்கள், பூகோள சாதிர சம்பந்தமான நூல்கள், பிரயாண நூல்கள் எழுதியவர்கள், தாங்கள் ஆங்காங்குக் கண்டவை களைச் சீனாவின் முன்னேற்றத்திற்கு எந்தெந்த வகையில் பயன் படுத்தலாமென்ற நோக்குடனேயே எழுதினார்கள். இந்தப் பலதுறை நூல்களும் பெரும்பாலும் உரைநடையிலேயே அமைந்திருந்தன. பொதுவாகவே, சீன மொழியில் உரைநடைக்கு ஒரு திருப்பம் ஏற்பட்டது இந்த ஸுங் ஆட்சி காலத்தில்தான். கவிதைகளுக்குக் கேட்க வேண்டுமா? இவற்றில் பல, அந்நிய ஆதிக்கத்தினால் ஏற்படக் கூடிய விபரீத விளைவுகளை விவரிப்பனவாகவும், மக்களின் நாட்டுப் பற்றை வளர்த்துக் கொடுப்பனவாகவும் அமைந்திருந்தன. இவற்றைப் படைத்துக் கொடுத்த கவிஞர்கள் பெரிதும் மதிக்கப்பட்டார்கள்.
இவைபோக, தொகுப்பு நூல்கள் பல வெளியாயின. ஸூமா குவாங் 1 என்ற ஓர் அறிஞனுடைய முயற்சியால், சரித்திரத் தொகுப்பு நூல் ஒன்று வெளிவந்தது. தவிர, ஆரம்ப காலத்திலிருந்து பத்தாவது நூற்றாண்டுவரை வாழ்ந்த அறிஞர் பெருமக்கள் அவ்வப்பொழுது வழங்கிய அறிவுரைகள் பலவற்றை விஷயவாரியாகத் தொகுத்து, சரியாக ஆயிரம் அத்தியாயங்களில் ஒரு நூலை வெளியிட்டனர் அறிஞர் சிலரைக் கொண்ட ஒரு குழுவினர். இந்தத் தொகுப்பு நூல், இப்பொழுதுகூட, அறிஞர்களுக்குப் பெரிதும் பயன்பட்டு வருகிறது. இன்னும், பூகோள சாதிரம் சம்பந்தமான சகல விஷயங்களையும் இருநூறு அத்தியாயங் களில் கொண்ட ஒரு நூல் வெளிவந்தது. ஆக, ஸுங் காலத்தில், பல துறைக் கலைக்களஞ்சியங்கள் வெளியாயின என்று சொல்லலாம்.
பெரிய நகரங்களில், சங்கீதக் கச்சேரிகளுக்கென்றும் நாடகங் களுக்கென்றும் தனித்தனிக் கொட்டகைகள் இருந்தன. ஊர் தோறும் சுற்றி நாடகங்கள் நடித்துவந்த நாடகக் குழுக்கள் பல மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இவை தவிர, ஜனங் களுடைய பொழுது போக்குக்காகவும் அறிவு வளர்ச்சிக்காகவும் கதைகள் சொல்வதைத் தொழிலாகக் கொண்டவர் பலர் இருந்தனர். இவர்களுக்கு ஜனங்கள் நல்ல மதிப்புக் கொடுத்தார்கள்; மனமுவந்து பணமும் கொடுத்தார்கள்.
பொதுவாக, ஸுங் காலத்தில், சீனாவின் கலை வாழ்வு, பிறநாட்டாரும் பிரமிக்கக்கூடிய அளவுக்கு உயர்ந்திருந்தது.
மங்கோலியர் ஆட்சி
மங்கோலியர்கள், சீனாவுக்கு வடக்கேயுள்ள மேட்டுப் பாங்கான பிரதேசத்தில் நாடோடி வாழ்க்கை நடத்தி வந்தவர்கள். இவர்களுடைய செல்வ மெல்லாம் ஆடுமாடுகளும் குதிரைகளுமே. மாட்டிறைச்சியும், பசும்பாலும், ஆட்டுப்பாலும் இவர்களுடைய ஆகாரப் பொருள்களில் முக்கியமானவை. மிகவும் முரடர்கள்; ராட்சத பலமுடையவர்கள்; எதற்கும் அஞ்சாதவர்கள்; ஆனால் ஒழுங்குக்குக் கட்டுப்பட்டவர்கள்; கட்டுப்பாடாக வாழவேண்டுமென்பதில் உறுதி பூண்டவர்கள். எவ னொருவன், தன் நண்பர்களிடமிருந்தும் உறவினர்களிடமிருந்தும் பிரிந்து போகிறானோ அவன் சத்துருக்களுக்கு இரையாவான் என்பது இவர்களிடையே வழங்கப்பட்டு வந்த ஒரு பழமொழி. ஆயினும் இவர்கள் பல பிரிவினராக, தனித்தனி இடங்களில் வசித்து வந்தார்கள். இருந்தாலும், தங்களனைவருக்கும் தலைவனாக ஒருவனையே ஏற்றுக் கொண்டிருந்தார்கள்.
பதின்மூன்றாவது நூற்றாண்டின் தொடக்கத்தில் இவர்களுக்குத் தலைவனாயிருந்தவன் டெமுஜின்1 என்பவன். பதின்மூன்றாவது வயதிலேயே இந்தத் தலைமைப் பதவி இவனுக்குக் கிடைத்தது. சிறுவயதிலேயே பல சாகசச் செயல்களைச் செய்து காட்டி, எல் லோரையும் கட்டியாளக் கூடிய தகுதி, தனக் கிருக்கிறதென்று புலப்படுத் தினான். மங்கோலியர்கள், தனித்தனிப் பிரிவினராக வாழ்ந்து கொண்டிருப்பதை இவன் விரும்பவில்லை; எல்லோரையும் ஒன்று கூட்ட ஏற்பாடு செய்தான். இவனே தங்கள் தலைவன் என்று தீர்மானித்து, கான் என்ற பட்டத்தையும் இவனுக்கு வழங் கினார்கள். அப்பொழுதிருந்து இவன் பெயர் ஜெங்கிதான் என்று மாறியது. இதற்கு மன்னாதி மன்னன் என்று பொருள் சொல்லலாம்.
பட்டமேற்றதும் இவன், தன் ஆதிக்கத்தைப் பெருக்க விரும்பி, பல திசைகளிலும் படையெடுத்துச் சென்றான். ஏற்பட்ட எதிர்ப்புக்களைக் கடுமையாக அடக்கி வெற்றி கண்டான். எங்கும் அழிவுதான்; உயிர்ச் சேதந்தான்; பெரிய பெரிய நகரங்கள் தரையோடு தரையாக்கப்பட்டன. என்னுடைய குதிரைப் படைகள், தங்கு தடை யின்றி தாராளமாக இப்பொழுது செல்லக்கூடும் என்று இவன் பெருமையோடு பேசுவானாம்!
இவன்- ஜெங்கிகான்-1211- ஆம் வருஷம் சீனாவின் வடபகுதி மீது படையெடுத்தான். அப்பொழுது இந்தப் பகுதி கின்களின் ஆக் கிரமிப்புக் குட்பட்டிருந்தது என்றாலும் இவர்கள்-கின்கள்-மிகவும் பலவீனமடைந் திருந்தார்கள். இதனால் இவர்களை வெற்றி கொள்வது மங்கோலியர் களுக்குச் சுலபமாயிருந்தது: வட சீனாவின் பெரும் பகுதியைத் தங்கள் சுவாதீனத்திற்குட்படுத்திக் கொண்டார்கள். ஆனால் அதில் திருப்தியடைய வில்லை; தெற்கு சீனாவின் மீதும் ஆதிக்கம் செலுத்த ஆசை கொண்டார்கள். இந்த நிலையில் 1227-ஆம் வருஷம் ஜெங்கிகான் இறந்து விட்டான்.
கின்கள், வடக்குப் பகுதியில் பலவீனமடைந்திருந்தார் களாயினும், தெற்கே ஸுங் வமிசத்தினரின் ஆட்சிக்குட்பட்டிருந்த பகுதியின் மீது அடிக்கடி படையெடுத்துத் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இந்தத் தொந்தரவுகளிலிருந்து மீளும் பொருட்டு, ஸுங் ஆட்சியினர், ஏற்கனவே சொன்னபடி, மங்கோலியர்களின் உதவியை நாடினார்கள். முந்தி, கித்தானி யரையும் தங்கூட்டரையும் விரட்டி விட்டால், அவர் களுக்குச் செலுத்தி வந்த கப்பத்தைக் கின்களுக்குச் செலுத்தி வருவதாக ஏற்பாடு செய்து கொண்டார் களல்லவா, அதுபோல், இப்பொழுது, கின்களை விரட்டி விட்டால் அவர்களுக்குச் செலுத்தி வந்த கப்பத்தை மங்கோலியர் களுக்குச் செலுத்தி வருவதாக ஏற்பாடு செய்து கொண்டார்கள். கின்களைப் போல் இவர்கள் - மங்கோலியர்கள் - நிலைத்திருக்க மாட்டார் களென்றும், கப்பம் பெறுவதோடு திருப்தி யடைந்து தங்கள் நாட்டுக்குத் திரும்பிப் போய் விடுவார்களென்றும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அப்படி நடக்க வில்லை. கின்களைப் போலவே, மங்கோலி யர்களும், சீனாவில் நிலைத்து ஆதிக்கஞ் செலுத்த வேண்டு மென்ப திலேயே முனைந்தார்கள்!
செய்து கொண்ட ஏற்பாட்டின்படி, ஸுங்குகளும் மங்கோலி யர்களும் சேர்ந்து கொண்டு கின்களை விரட்டி விட்டனர். 1234-ஆம் வருஷத்தோடு சீனாவில் கின்களின் ஆதிக்கம் முற்றுப் பெற்றது.
இதற்குப் பிறகு, மங்கோலியர்கள், ஸுங் ஆட்சிக்குட்பட்ட பிரதேசங் களைத் தங்கள் வசத்திற் குட்படுத்திக் கொள்ள முனைந் தார்கள். ஸுங் ஆட்சியினர் பலத்த எதிர்ப்புக் காட்டினர். சுமார் நாற்பது வருஷத்திற் கதிகமாக இருதரப்பினருக்கும் இடை விடாத போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தின் பிற்பகுதிக் காலத்தில் மங்கோலி யர்களுக்குத் தலைவனாயிருந்தவன் குப்ளாய்கான்1 என்பவன். இவன் ஜெங்கிகானின் பேரன். 1259-ஆம் வருஷம் பட்டத்திற்கு வந்தான். சீனா முழுவதையும் மங்கோலியர்களின் ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்த பெருமை இவனுடையதே. இவன், தற்போது பீக்கிங் நகரம் இருக்கிறதல்லவா, ஏறக்குறைய அதே இடத்தில், தன் தலைநகரத்தை தாபித்துக் கொண்டு, அதற்கு கான்பலீக்1 அதாவது பெருமை சால் கானின் நகரம் என்று பெயர் கொடுத்தான்.
இந்த நகரத்தைத் தலைமை தானமாக அமைத்துக் கொண்டு, குப்ளாய்கான், தனது பெரும் படையை ஸுங்குகளின் ஆதிக்கத்திற்குட் பட்டிருந்த பிரதேசங்களை ஆக்கிரமித்துக் கொள்ள அனுப்பினான். மங்கோலியர்களின் படைபலத்திற்கு ஏற்றங் கொடுத்தது அவர்களுடைய குதிரைப்படை ஒவ்வொரு போர் வீரனும், நான்கு குதிரைகளை வைத்துச் சமாளிக்கக் கூடியவன். வெகுதூரம் செல்வதில் குதிரைகள் சளைத்தாலும் அவன் சளைக்க மாட்டான். செல்லும் வழியில் ஆகாரம் கிடைக்காமற் போனால் அதற்காக ஏங்கி நிற்க மாட்டான். தான் ஏறி வந்த குதிரையை நிறுத்தி அதன் உடம்பில் ஏதேனும் ஒரு பாகத்தில், தன்னிடமிருக்கும் கூர்மையான ஆயுதங் களில் ஒன்றால் குத்தி, அதிலிருந்து பீறிட்டு வரும் ரத்தத்தை வாய் வைத்து உறிஞ்சிக் குடித்து வயிற்றை நிரப்பிக் கொண்டு மேல் நோக்கிச் செல்வான்.
இத்தகைய குதிரை வீரர்களை அதிகம் பேராகக் கொண்ட மங்கோலியப் படைக்கு முன்னே, ஸுங்குகளின் காலாட்படை என்ன செய்ய முடியும்? ஸுங்குகள், காலாட்படை பலத்தையே பெரிதும் நம்பிக் கொண்டிருந்தவர்கள். இருந்தாலும் இவர்கள், மங்கோலியர் களுக்கு எளிதில் விட்டுக் கொடுத்துவிடவில்லை. ஒவ்வோர் ஊரிலும் ஒவ்வோர் அடியாகவே விட்டுக் கொடுத்து வந்தனர். இந்தக் காலத்தில் இவர்கள் காட்டிய வீரமும், உறுதிப்பாடும், அந்நிய ஆட்சிக்கு இடங் கொடுக்கக் கூடாதென்ப தற்காக இவர்கள் செய்த மகத்தான தியாகமும், சீன சரித்திரத்தில் மட்டுமல்ல, உலக சரித்திரத்திலேயே இடம் பெற்றுப் பிரகாசித்துக் கொண்டிருக்கும்.
கடைசியில் மங்கோலியர்கள், 1276-ஆம் வருஷம், தெற்குப் பகுதியில் ஸுங்குகளின் தலைநகரமாயிருந்த ஹாங்சௌ நகரத்தைக் கைப்பற்றிக் கொள்ளத் துணிந்து, அதனை முற்றுகையிட்டார்கள். அப்பொழுது அங்கு அரசபீடத்தில் அமர்த்தப்பட்டிருந்தவன் குங் தீ2 என்ற இளைஞன். அவனையும் அவன் தாயாரையும், முற்றுகை தொடங்கிய சொற்பகாலத்திற்குள் எப்படியோ அகப்படுத்தி கான் பலீக்குக்குக் கடத்தி விட்டார்கள். இவர்களை அனுப்பி விட்ட பிறகு, தலைநகரம் தங்களுக்கு எளிதில் அடி பணிந்து விடுமென்று எதிர் பார்த்தார்கள்.ஆனால் அப்படி நடைபெறவில்லை. ஸுங்குகளின் எதிர்ப்பு பலமாயிருந்தது. அவர் களுடைய படைத் தலைவர்களா யிருந்த லீ டிங் சி என்பவனும், சியாங் த்ஸை3 என்பவனும் சேர்ந்து, நகர மக்களை ஒன்று படுத்தி உற்சாக மூட்டி, முற்றுகையைச் சமாளித்து வந்தார்கள்.
கான்பலீக்கிலிருந்த குப்ளாய்கானுக்கு இது தெரிந்தது. தன் வசப்பட்டிருக்கும் குங் தீயையும் அவன் தாயாரையும் கொண்டு, மங்கோலியப் படைக்கு உடனே அடிபணிந்து விடுமாறு மேற்படி இரண்டு படைத் தலைவர்களுக்கும் ஒரு கடிதம் எழுதச் செய்து, அதை ஹாங்சௌவுக்கு அனுப்புவித்தான். அப்படியே கடிதமும் அங்குப் போய்ச் சேர்ந்தது. அதை, படைத் தலைவர்களில் ஒருவனாகிய சியாங் த்ஸை என்பவன் பார்த்தான். தன்னுடைய சக்ரவர்த்தியும் அவன் தாயாரும் சேர்ந்து எழுதியிருந்த கடிதம்! என்ன எழுதியிருந்தது அதில்? மங்கோலியப் படைக்கு அடிபணிந்து விடுமாறு உத்தரவு! ஆத்திரங் கொண்டான். சக்ரவர்த்திக்காக அல்ல; தாய்நாடு அடிமைத்தனத்திற் குட்படாதிருக்க வேண்டு மென்பதற்காகவே நகரத்தைப் பாதுகாத்து வருகிறோம் என்று சொல்லிக்கொண்டே அந்தக் கடிதத்தைக் கிழித்து நெருப்பிலே போடச் செய்தான். ஆயினும் என்ன? இவனுடைய தாய் நாட்டுப் பற்றும், முற்றுகைக் காலத்தில் இவன் காட்டிய வீரமும், இவனுக்கும் இவன் படையினருக்கும் வெற்றி வாங்கித்தரவில்லை. ஹாங்சௌ நகரம் மங்கோலியர்கள் வசப்பட்டு விட்டது.
நகரம் மங்கோலியர்களுக்கு வசப்பட்டுவிட்டாலும், ஸுங் படைவீரர்களில் பெரும்பாலோர், மங்கோலியர்களுக்குத் தலை வணங்க மறுத்து, நகரத்தினின்று வெளியேறிவிட்டார்கள். மங் கோலியர்களும் இவர்களை விடவில்லை; துரத்திக்கொண்டு சென்றார்கள். ஸுங் படையினரும் ஆங்காங்கு எதிர்த்துப் போராடிக் கொண்டே பின்வாங்கி வந்தார்கள்.
இப்படிப் பின்வாங்கிய ஒரு பகுதிப் படைக்குத் தலைவனாயி ருந்தான் வென் டீன்-ஸியாங்1 என்ற ஒருவன். இவன் சுத்த வீரன் மட்டுமல்ல; சிறந்த கவிஞன். இவன் ஒவ்வோர் ஊராகப் போராடிப் போராடி மங்கோலியர்களுக்கு விட்டுக்கொடுத்து வந்து கடைசியில் குவாங்டுங்2 பிரதேசத்தை அடைந்தான். அங்குப் போராடிக் கொண்டிருக்கையில், எதிர்பாராதவிதமாக மங்கோலியர்களிடம் அகப்பட்டுக் கொண்டுவிட்டான். அவர்களும் உடனே இவனைத் தக்க காவலுடன் கான்பலீக்குக்கு அனுப்பி விட்டார்கள். அங்குச் சுமார் மூன்று வருஷகாலம் சிறையில் உழன்று கொண்டிருந்தான். குப்ளாய்கான் அடிக்கடி இவனுக்குத் தூது விடுத்து, பணிந்து போகு மாறும், மங்கோலிய ஆதிக்கத்தை அங்கீகரித்துக் கொள்ளுமாறும் வற்புறுத்தி வந்தான். இவன் இசையவே இல்லை. தன் சிறை வாசத்தைப் பற்றி எழுதுகிறான்: -
சிறையிலுள்ள என் அறைக்கு வெளிச்சம் வராது; இருளடர்ந்த என் தனிமைக்குத் துணையாயிருக்க, மூச்சு விடு கிற அளவு நல்ல காற்று அங்கு வருவதில்லை. மூடுபனிக்கும் தரை ஈரத்திற்கும் நான் இரையாகி வந்தேன். அந்த நிலையில் நான் இறந்து போய்விட வேண்டுமென்று பல தடவை எண்ணியதுண்டு. ஆனால் இறந்து போகவில்லை. சுமார் இரண்டு வருஷ காலம், நோய் என்னைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அதற்கு நான் ஆட்படவில்லை. அறையின் ஈரத்தரை எனக்குச் சொர்க்கமாகவே இருந்தது. நான் துரதிருஷ்டசாலியா யிருந்தபோதிலும், அந்தத் துரதிருஷ்ட சக்தியினால், என்னிடமிருந்த ஒன்றை மட்டும் - தேச பக்தியை மட்டும்- பறித்துக் கொண்டு போக முடிய வில்லை. எனவே என் தலைக்கு மேலாக மிதந்து சென்று கொண்டிருந்த வெண் மேகங்களைப் பார்த்துக் கொண்டும், ஆகாயத்தைப்போல் எல்லைகடந்த என் துயரத்தை மனத்தில் அடக்கிக் கொண்டும், உறுதியாக இருந்தேன்.
சுமார் மூன்று வருஷகாலம் இப்படிச் சிறையில் கழிந்த பிறகு, ஒரு நாள் குப்ளாய்கான் இவனைத் தன் முன்னர் வரவழைத்தான். இவன் வந்து நின்றதும் குப்ளாய்கான், உனக்கு என்னதான் வேண்டும்? என்று இவனைக் கேட்டான். இவனும் உடனே ஸுங் சக்ர வர்த்தியின் திருக்கருணை யினால், நான் அவருடைய மந்திரியாகச் சேவை செய்தேன். இரண்டு எஜமானர்களுக்கு நான் சேவை செய்ய முடியாது. ஆகவே நான் வேண்டுவது மரணம் என்று நிதானமாகக் கூறினான். குப்ளாய்கானும் இந்த வேண்டுதலுக்கு இசைந்துவிட்டான். காவலர்களும் இவனைச் சிரச்சேதஞ் செய்ய அழைத்துப் போனார்கள். போன இடத்தில், தெற்குப் பக்கமாகத் தலை குனிந்து நின்றான். ஏன்? தெற்குப் பகுதியில் தானே இவனுடைய ஸுங் சக்ர வர்த்தி ஆண்டு கொண்டிருக்கிறான்? அப்படித்தான் இவன் நினைப்பு. அந்த நினைப்பில், உயிர் போவதற்கு முன்னர் தன் சக்ரவர்த்தியிடம் விடை பெற்றுக் கொள்ளக் கருதினான். தெற்குப் பக்கமாகத் தலை வணங்கி நின்றான். காவலன் கத்தி இவன் கழுத்தில் விழுந்தது. இவனுடைய தேச பக்தியும் ராஜ பக்தியும் இவன் ஆவியோடு சென்றன; சென்று சீன சரித்திரத்தில் நிரந்தர இடம் பெற்றன;
தேசபக்தனும் கவிஞனுமான இந்த வென் டீன் ஸியாங்கின் கதை இப்படி இருக்கட்டும். இவனைப் போல் ஸுங் அரச பீடத் திடம் அதிக விசுவாசம் கொண்ட வேறு இருவர் இருந்தனர். ஒருவன், சாங் ஷி சீ;1 இன்னொருவன், லூ ஷ்யு பூ. மந்திரிப் பதவியையும் படைத் தலைமைப் பதவியையும் திறம்பட வகித்து வந்தார்கள். மங்கோலி யர்கள் ஹாங்சௌ நகரத்தை முற்றுகையிட்டுத் தாக்கி வந்த காலத்தில், இவர்கள் தங்கள் படைபலத்தைக் கொண்டு முற்று கையை எதிர்த்து நின்றார்கள். ஆனால் மங்கோலியர்களின் தாக்குதல் தீவிரமடைய அடைய இவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இனியும் எதிர்த்து நிற்பதில் பயனில்லை யென்று கண்டார்கள்.
அப்பொழுது ஹாங்சௌ நகரத்தில், ஸுங் வமிசத்தின் கடைசி வாரிசுகளாக இருவர் இருந்தனர். இவர்கள், கான் பலீக்குக்குக் கடத்திச் செல்லப்பட்ட குங் தீ மன்னரின் இளைய சகோதரர்கள்; சிறு குழந்தைகள். இவர்கள் மங்கோலியர்கள் வசம் சிக்கிக் கொண்டு விட்டால் ஸுங் வமிசமே அற்றுப் போகுமல்லவா? எனவே இவர்களைக் காப்பாற்ற வேண்டியது தங்கள் புனிதமான கடமையென்று உறுதி பூண்டார்கள், ராஜவிசுவாசிகளான மேற்படி சாங் ஷி சீயும் லூ ஷ்யு பூவும். இந்த உறுதியுடன் சிறுவர் இருவரையும் கூட்டிக் கொண்டு தங்கள் குடும்பத் தினருடனும் படை வீரர்களுடனும் தெற்குப் பக்க மாகப் பின்வாங்கிச் சென்றார்கள். சென்றது தெரிந்ததும் மங் கோலியர்கள் சும்மாயிருப்பார் களா? இவர்களைத் துரத்திச் சென்றார்கள். இவர்களும் அகப்பட்டுக் கொள்ளாமல் ஊர் ஊராகக் கடந்து போய்க்கொண்டிருந்தார்கள். போகும் வழியில், அரச குமாரர்களில் மூத்தவனைச் சக்ரவர்த்தியாகப் பிரகடனம் செய்து, அவனை முன்னிட்டுக் கொண்டு சென்றார்கள். குவாங்டுங் பிரதேச எல்லையை யடைந்ததும், மங்கோலியர்கள் சமீப தூரத்தில் வந்து கொண்டிருப்பதாகத் தெரிந்தது. என்ன செய்வது? கப்பலேறிக் கடலில் முடிந்த தூரம் செல்வதென்று தீர்மானித்து ஒரு கப்பலைப் பிடித்து அதில் அரச குமாரர்களுடனும் முக்கியமான சிலருடனும் ஏறிக் கொண்டார்கள். கப்பலும் வேகமாகச் சென்று கொண்டி ருந்தது. ஆனால் துரதிருஷ்ட மானது, மங்கோலியர்களைக் காட்டிலும் வேகமாக இவர்களைத் துரத்தி வந்தது. கப்பல், அருகிலுள்ள ஒரு தீவுப் பக்கம் சென்று கொண்டிருக்கையில், பாறையோ ஏதோ ஒன்றின் மீது மோதி உடைந்து போய்விட்டது. இந்த அதிர்ச்சியில், சக்ரவர்த்தியாகப் பிரகடனம் செய்யப் பட்டிருந்த சிறுவன் இறந்து போனான். இதற்குப் பிறகு என்ன செய்வது? இதைப் பற்றி சாங் ஷி சீ யும் லூ ஷ்யு பூவும் யோசித்துக் கொண்டிருக்கவில்லை; மனத் தளர்ச்சியடைய வில்லை. எப்படியோ கரை சேர்ந்தார்கள். இறந்து போனவன் தம்பியைச் சக்ரவர்த்தியாகப் பிரகடனம் செய்தார்கள். இவனை அழைத்துக் கொண்டு தெற்குப் பக்கம் வெகுதூரம் சென்று கடைசியில் காண்ட்டன்1 துறைமுகத்தை யடைந்தார்கள். ஆயினும் என்ன? இங்கும் மங்கோலியர்கள் இவர்களை நோக்கி வேகமாக வந்து கொண்டிருப்பது தெரிந்தது. இனி தப்பிச் செல்ல வழியில்லை. கொந்தளிக்கும் கடலில் அடைக்கலம் புகத் தீர்மானித்தார்கள். அப்படியே லூ ஷ்யு பூ, சக்ரவர்த்தியாக்கப் பட்டிருந்த சிறுவனை முதுகில் தூக்கிப் போட்டுக் கொண்டான். தன் சகாவான சாங் ஷி சீ யுடன் கைகோத்துக் கொண்டான். இருவரும் முதலில் தங்கள் குடும்பத் தினரைக் கடலில் இறங்கும்படி செய்து விட்டு, பிறகு தாங்களும் இறங்கி விட்டார்கள். கடலரசி, இவர்களைத் தன் அலைகளால் அணைத் தெடுத்து, தன் ஆழத்திற்கு அழைத்துக் கொண்டு போய் விட்டாள். இது நடைபெற்றது 1279-ஆம் வருஷம்.
இந்த இரண்டு படைத் தலைவர்களைப் பின்பற்றி வந்த போர் வீரர்கள், மங்கோலியர்களுக்கு அடிபணிய விரும்பாமல், தங்கள் தலைவர்களுக்கு முந்தியே கடலுக்குத் தங்களைப் பலி கொடுத்துக் கொண்டார்கள். சுமார் ஒரு லட்சம் பேருடைய சவங்கள் கடலில் மிதந்து கொண்டிருந்ததாக ஒரு வரலாறு கூறுகிறது.
குப்ளாய் கானுக்கு இந்தத் தகவல் தெரிந்தது. மிதந்து கொண்டிருந்த சவங்களை மேலேயெடுத்து ராணுவ மரியாதையுடன் புதைக்கச் செய்தான்; தான் ஒரு வீரன் என்பதை இதன் மூலம் புலப்படுத்திக் கொண்டான்.
மேலே சொல்லப்பெற்ற வீரத்தியாகிகளின் மரணத்தோடு - 1279-ஆம் வருஷத்தோடு - ஸுங் வமிச ஆட்சி முற்றுப் பெற்றது. 1280-ஆம் வருஷம் குப்ளாய்கான், சர்வசீனாவுக்கும் சக்ரவர்த்தியாக முடிசூட்டிக் கொண்டான். தன்னுடைய மங்கோலிய வமிசத்திற்கு யுவான் வம்சம்1 என்று பெயர் கொடுத்தான். அதாவது தூய்மையான வமிசம் என்று அர்த்தம். யுவான் வமிசம் என்றே சீன சரித்திரம் சொல்லிக் கொண்டு போகிறது. இந்த வமிசத்தின் ஆட்சி சுமார் தொண்ணூறு வருஷகாலம் நடைபெற்றது.
குப்ளாய்கான், ஆதிக்க ஆசை பிடித்தவன். பட்டமேற்ற காலத்திலிருந்தே இந்த ஆசை இவனை அரித்துக் கொண்டு வந்தது. இதற்குத் தகுந்தாற் போல், சீனாவில் ஸுங் வமிச ஆட்சியை எதிர்த்து நடத்தி வந்த போராட்டங்களிலும் படிப்படியாக வெற்றி கண்டு வந்தான். இங்ஙனம் வெற்றி கண்டு வரும் நிலையில், ஜப்பான் மீது தன் ஆதிக்கப் பார்வையைச் செலுத்தினான்.
இவன் பட்டத்திற்கு வருவதற்குச் சுமார் இருபத்தெட்டு ஆண்டு களுக்கு முந்தியே - 1231-ஆம் ஆண்டு-கொரியா தீபகற்பம் மங்கோலியர் களின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. இந்தக் கொரியாவை அடித்தளமாக அமைத்துக்கொண்டு, ஜப்பான் மீது படையெடுப்ப தென்று திட்டமிட்டான். இதற்காக, கொரியர்களையும் சீனர் களையும் பெரும்பாலோராகக் கொண்டு ஒரு பெரிய கப்பற் படையைத் திரட்டினான். முந்நூறு கப்பல்கள்; இவற்றில் பதினை யாயிரம் போர் வீரர்கள், இவர்களுக்குத் தளகர்த்தர்களாக, கடற்போரில் போதிய அனுபவமில்லாத மங்கோலியர் சிலர் நிய மிக்கப்பட்டனர். இந்தக் கப்பற் படை ஜப்பானை நோக்கிச் சென்றது. இதனை ஜப்பானியர்கள் சுலபமாக முறியடித்துவிட்டனர். இதற்காகச் சளைக்காமல் மறுபடியும் முந்தியதைக் காட்டிலும் பெரிய தொரு கப்பற்படையைத் தயாரித்து அனுப்பினான் குப்ளாய்கான். மறுபடி தோல்வியே கிடைத்தது. ஜப்பானியர்கள் இந்தப் போரில் அகப் பட்ட கொரியர்களையும் சீனர்களையும் ஒன்றுஞ் செய்யாமல் விட்டு விட்டார்களென்றும், மங்கோலியர்களை மட்டும் கொன்று விட்டார் களென்றும், ஒரு வரலாறு கூறுகிறது. இன்னொரு வரலாற்றின்படி - கொரியர், சீனர், மங்கோலியர் உள்பட சுமார் முப்பதினாயிரம் பேர் சிறைப்படுத்தப்ப ட்டனர். இவர்களில் மூன்று பேர் மட்டும் சீனாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். எப்படியோ 1274-ஆம் வருஷத்திலிருந்து 1281-ஆம் வருஷம் வரை சுமார் ஏழு வருஷகாலம் தொடர்ந்து நடைபெற்ற இந்தக் கடற்போர்களில் மங் கோலியர்களுக்குப் பெருஞ்சேதம் ஏற்பட்டது; ஜப்பானியர்களை வெற்றி கொள்ள முடியவில்லை.
சீனாவுக்குத் தென்கிழக்குப் பக்கத்திலுள்ளதும் பிற்காலத்தில் கொச்சின்- சீனா1 என்று அழைக்கப்பட்டதுமான பிரதேசத்தை நோக்கி ஒரு படையை அனுப்பினான் குப்ளாய்கான். நஷ்டமே ஏற்பட்டது. பிறகு பர்மா 2 மீதும் திபேத்து3 மீதும் கண்ணோட்டம் செலுத்தினான். ஓரளவு வெற்றி கிடைத்தது. திபேத்தின் மீது வெற்றி கொண்டானாயினும், திபேத்தியர்கள் அனுஷ்டித்து வந்த புத்தமதச் சடங்குகளிலும் கலாசாரங்களிலும் இவன் அதிகமாக ஈடுபாடு கொண்டான். இவற்றைச் சீனாவில் புகுத்த முயன்றான். ஆனால் நீடித்த பயன் விளையவில்லை.
பிறகு குப்ளாய்கான், இந்தியாவின் தெற்குப் பகுதி, ஆப்பிரிக் காவின் கிழக்குப் பகுதி, மடகாகர் தீவு4 முதலிய பிரதேசங்களின் மீது தன் ஆதிக்க வலையை வீச விரும்பிச் சில தூதுகோஷ்டிகளை இந்தப் பிரதேசங் களுக்கு அனுப்பினான். ஆனால் இந்தப் பிரதேசங்கள், இவன் ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து, சன்மானமாகச் சில பொருள் களைக் கொடுத்து, தூது கோஷ்டிகளைத் திருப்பி அனுப்பிவிட்டன.
கடைசியாக, குப்ளாய்கான், 1293-ஆம் வருஷம் ஜாவா1 தீவுக்கு ஒரு தூது கோஷ்டியை அனுப்பி அங்கு ஆண்டு வந்த ஹிந்து மன்னர்களிடம், தன்னுடைய ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டு, ஒழுங்காகக் கப்பஞ்செலுத்தி வருமாறு சொல்லச் செய்தான். ஆனால் இந்தத் தூதுகோஷ்டி அவமானப் பட்டுத் திரும்பி வந்தது. இதனால் கோபங்கொண்டு ஒரு பெரிய கப்பற் படையைத் தயாரித்து ஜாவா தீவை நோக்கி அனுப்பினான். இந்தப் படைக்கு முதலில் லேசான வெற்றி; பிறகு கடுமையான தோல்வி. இதுவே இவனுடைய கடைசி படையெடுப்பாக இருந்தது. இவனுடைய ஆயுளும் அடுத்த வருஷம், 1294-ஆம் வருஷம் முடிந்தது.
பொதுவாகப் பார்க்கிறபோது, குப்ளாய்கானின் பதினைந்து வருஷகால ஆட்சியில் நன்மையும் தீமையும் கலந்திருந்தன என்றே சொல்லவேண்டும். இவன் சீன மக்களின் மீது ஆதிக்கஞ் செலுத்த விரும்பினானென்றாலும், சீனாவின் பழைமையான நாகரிகத் திற்கும், பரம்பரையாக வந்து கொண்டிருந்த கலாசாரங்களென்ன, தரும நியாயங்களென்ன முதலியவைகளுக்கும் பெரு மதிப்புக் கொடுத்தான்; உண்மையில் இவைகளுக்கு ஆட்பட்டு விட்டா னென்றே சொல்லலாம். இவன் காலத்தில் சீன இலக்கியம் வளம் பெற்றது. இதற்கு முன் இல்லாத வகையில் நவீனங்களும் நாடகங்களும் தோன்றலாயின. கல்வி நிலையங்களுக்கு அதிகமாக மானியங்கள் வழங்கப்பட்டன. பல புலவர்களை ஒன்று கூட்டி வைக்கின்ற முறையில் கலைக்கழகம் ஒன்று நிறுவப்பட்டது. மூப்படைந்துவிட்ட புலவர்கள், அரசாங்கப் பொக்கிஷத்தி லிருந்து ஒழுங்காக உதவி பெற்று வந்தார்கள். இவர்கள் மட்டுமல்ல, நாதியற்றவர்கள், அங்கப் பழுது டையவர்கள் ஆகியோரும் உதவி பெற்று வந்தார்கள். நாளும் கிழமையும் குறிக்கின்ற காலண்டர் திருத்தியமைக்கப் பட்டது. எல்லா மதத்தினரும் ஒரே மாதிரியாகக் கணிக்கப்பட்டும் கௌரவிக்கப் பெற்றும் வந்தார்கள். ஆயினும், மக்களைச் சன்மார்க்கத்தில் அழைத்துச் செல்லவல்லது கிறிதுவமதமே என்பது இவன் கருத்தா யிருந்ததென்று சொல்லப்படுகிறது.
இவனுடைய ஆட்சியின் கடைசி காலத்தில், அப்பொழுது போப் பாண்டவராயிருந்த நான்காவது நிக்கோலாஸின்1 ஆணைப்படி ஜான் கார்வினோ2 என்ற ஒரு பாதிரி சீனாவுக்கு வந்தான்; சுமார் நாற் பத்திரண்டு வருஷ காலம் சீனாவில் தங்கி கிறிதுவ மதப் பிரசாரம் செய்தான்; விவிலியத்தை (புதிய ஆகமம்) மங்கோலிய மொழி யிலாக்கித் தந்தான். இவன் போதனையின் விளைவாகச் சுமார் முப்பதினாயிரம் பேர் கிறிதுவர்களானார்கள்.
மற்றும் இவன்- குப்ளாய்கான்-முந்தி யாங் டீ மன்னன் தோண்டி விட்ட கால்வாயை1 இன்னும் ஆழமாகவும் நீளமாகவும் தோண்டச் செய்து இதன் மூலம் தெற்குப் பகுதியிலிருந்து கான்பலீக் நகரத்திற்கு ஒழுங்காக அரிசி கிடைத்துக் கொண்டிருக்கும் வண்ணம் ஏற்பாடு செய்தான். பெரிய கால்வாய்2 என்று அழைக்கப்படும் இந்தக் கால்வாய், உலகத்திலுள்ள நீண்ட கால்வாய்களுக்குள் ஒன்றாக இன்றளவும் கருதப்படுகிறது. ஹோப்பை,3, ஷாண்டுங், கியாங்ஸி, சேகியாங்4 ஆகிய நான்கு மாகாணங்களூடே செல்லும் இந்தக் கால்வாயின் நீளம் சுமார் 1,800 கிலோ மீட்டர் (1,125 மைல்). ஆசியாவிலுள்ள அதிசயங்களுள் இஃது ஒன்று.
புயற்காற்று, வெள்ளப் பெருக்கு, பூச்சி புழுக்களின் படை யெடுப்பு இவைகளினால் பயிர்களுக்கு நஷ்டமுண்டாகுமல்லவா, இந்த மாதிரியான காலங்களில் மக்களுக்குத் தேவையான தானியங்கள் கிடைக்கும் பொருட்டு, குப்ளாய்கான், ஆங்காங்குத் தானியக் களஞ் சியங்கள் கட்டச் செய்தான். இவற்றில் ஏராளமான தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. தவிர, இதற்கு முன் இல்லாத வகையில், தபால் போக்குவரத்து வசதிகளை அதிகரிக்கச் செய்தான். இதற்காக இரண்டு லட்சம் குதிரைகள் அமர்த்தப்பட்டிருந்தன. நெடுஞ் சாலைகளைச் செப்பனிட்டு ஒழுங்காக வைத்திருக்குமாறு அதிகாரி களுக்கு உத்தர விட்டான். இவற்றினிடையே, பிரயாணிகள் தங்கிச் செல்வதற்காக, சத்திரங்கள் கட்டச் செய்தான். இவற்றில் பிரயாணி களுக்கு எல்லா வசதிகளும் செய்து தரப்பட்டன.
இன்னும் இவன் விருப்பத்திற்கிசைய கான்பலீக் தலைநகரத்தில் தான் எத்தனை விதம் விதமான மாளிகைகள் எழும்பின! இது காரணமாக, சிற்பக் கலை செழுமையடைந்தது. அழகுத் தெய்வம் இந்த நகரத்தில் வந்து குடியமர்ந்திருப்பதாகப் பலரும் கருதினர். நகரத்தின் அழகைக் காண வெளி நாடுகளிலிருந்து ஏராளமானபேர் வந்து போயினர்.
குப்ளாய்கான் காலத்தில்தான், பிரசித்திபெற்ற இத்தாலிய யாத்திரிகனான மார்க்கோ போலோ5 என்பவன் சீனாவுக்கு வந்தான். இவனோடு இவன் தகப்பனும், தகப்பனின் சகோதரன் ஒருவனும் சுமார் பதினேழு வருஷ காலம் குப்ளாய்கான் சேவையில் அமர்ந் திருந்தனர். சிறப்பாக, மார்க்கோ போலோவினிடத்தில் குப்ளாய்கான் அதிக நம்பிக்கையும் விசுவாசமும் வைத்திருந்தான். இது காரணமாக இவனிடம் பல பொறுப்பான காரியங்களை ஒப்படைத்தான். இவனும், இந்த நம்பிக்கைக்குக் களங்கம் உண்டு பண்ணாமல் நடந்து கொண்டான். இவன் இந்தியாவிலும் யாத்திரை செய்தான். இந்தியா, சீனா, இன்னும் இவன் பார்த்த இடங்கள் முதலியவை பற்றி இவன் பெரிய யாத்திரை நூலொன்று எழுதியிருக்கிறான். இதில் குப்ளாய் கானின் ஆடம்பர வாழ்க்கை, சீனாவின் செல்வச் செழுமை முதலியவை பற்றி விரிவாகக் குறிப் பிட்டிருக்கிறான். இவனுடைய இந்த யாத்திரை நூல், பிற்காலத்தில் கீழ் நாட்டிற்கு அநேக ஐரோப் பியர்கள் வருவதற்கு வழிகாட்டியாயிருந்தது.
குப்ளாய்கானின் அரசவைக்கு வெளிநாட்டார் பலர், சிறப்பாக ஐரோப்பாவின் பல்வேறு ராஜ்யங்களின் பிரதிநிதிகள் பலர் வந்து தங்கினர்; தக்க முறையில் கௌரவிக்கவும் பெற்றனர். இதே பிரகாரம், திறமை வாய்ந்த மங்கோலியர் பலர், குப்ளாய்கானின் பிரதிநிதி களாக ஐரோப்பாவிலுள்ள அரசவைகளுக்குச் சென்று தங்கி மதிப்பும் பெற்றனர். சீனாவின் பல துறை வளமை பற்றி வெளிநாட்டு அரசவை களில் பெரிதும் புகழ்ந்து பேசப்பட்டது.
ஆனால் சீனமக்கள், இந்த வளமை கண்டு திருப்தி கொள்ள வில்லை. என்ன இருந்தாலும் மங்கோலியர் ஆட்சி அந்நியர் ஆட்சி தானே? இதைச் சீனர்கள் வெகுவாக உணர்ந்தார்கள். அடிமைத்தனம் அளிக்கும் அறுசுவை உண்டியைக் காட்டிலும் சுதந்திரம் நல்கும் பட்டினிக்கே சிறப்புக் கொடுத்தார்கள். இந்த உணர்ச்சியை இவர்கள் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தி யிருக்கிறார்கள்.
இதற்குத் தகுந்தாற் போல், குப்ளாய்கான், மங்கோலியர்களுக்கே அரசாங்கத்து உயர்தரப் பதவிகள் பலவும் கிடைக்கும்படி செய்தான். மங்கோலியர் பலர், பெரிய நிலச்சுவான்தார்களாவதற்கு அநேக அனுகூலங்கள் செய்து தரப்பட்டன. இவர்களின் கீழ் சீனவிவ சாயிகள் பலவித அல்லல்களுக்குள்ளாயினர். அரசாங்கத்தின் ஆடம் பரச் செலவு களைச் சரிக்கட்டுவதற்கு, குடி மக்கள் செலுத்தி வந்த வரிவிகிதங்கள் உயர்த்தப்பட்டன. முக்கியமான ஊர்களில், சட்டத் தையும் ஒழுங்ககையும் நிலைநாட்ட மங்கோலியத் துருப்புக்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஓரளவு ராணுவ ஆட்சியே நடை பெற்று வந்ததென்று சொல்லலாம்.
நீதியைக் கோருகிற விஷயத்திலே கூட, மங்கோலியர்கள் வேறாகவும் சீனர்கள் வேறாகவும் நடத்தப்பட்டார்கள். மங்கோலி யர்கள் பெரிய குற்றஞ் செய்தால் குறைந்த தண்டனை! சீனர்கள் சிறிய குற்றஞ் செய்தால் அதிக தண்டனை! சீனர்கள் , குதிரைகள் வைத்துக்கொள்ளக் கூடாது; ஆயுதங்களை வைத்துக் கொள்ளக் கூடாது.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக, மங்கோலியர்களுக்கும் சீனர்களுக்கும் ரத்தக் கலப்பு ஏற்பட்டுவந்தது. இது சீனர்களை மிகவும் உறுத்தியது. ஆயினும் என்ன செய்வார்கள்? ஒன்றுஞ் செய்ய இயலாமல், மங்கோலிய ஆட்சியை அகற்றுவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
குப்ளாய்கான், ஏற்கனவே சொன்னபடி 1294-ஆம் வருஷம் இறந்துவிட்டான். இவனுக்குப்பின் வந்த யுவான் வமிச (மங்கோலிய வமிச) அரசர்கள், போர்த்திறம் படைத்தவர்களாகவோ, ராஜ்ய நிருவாகத்தில் அக்கரையுடையவர்களாகவோ இருக்கவில்லை; வெறும் அலங்கார பொம்மைகளாக அரச பீடத்தில் அமர்ந்திருந் தார்கள். குப்ளாய்கான், எந்த ஆடம்பரத்தோடு வாழ்ந்துவிட்டுப் போனானோ அந்த ஆடம்பர வாழ்க்கையை மட்டும் அப்படியே பின்பற்றி வந்தார்கள்.
இவர்களிலே கடைசி மன்னனாகிய ஸூன் தீ1 என்பவன் ஒரு பலவீனன்; சிற்றின்ப வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தான். அந்தப் புரவாசிகள்தான் ராஜ்யத்தை ஆண்டார்களென்று சொல்ல வேண்டும். பிறகு என்ன? மங்கோலிய வமிசம் முற்றுப் பெறுவதற் கான அறிகுறிகள் தோன்றிவிட்டன. எங்குப் பார்த்தாலும் ரகசியச் சங்கங்கள்! அந்நிய ஆதிக்கத்தை ஒழிக்கச் சூழ்ச்சிகள்! மற்ற விஷயங்களில் முதன்மை தானம் வகிப்பது போல, ரகசியச் சங்கங்கள் தாபித்தும் சூழ்ச்சிகள் செய்தும் அந்நிய ஆதிக்கத்தை ஒழித்து விட்டதிலுங்கூட சீனா முதன்மை தானம் வகிக்கிறது.
பதினான்காவது நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றிய இந்த ரகசிய தாபனங்கள் நாடு முழுவதும் ஏற்பட்டன. அந்நிய ஆதிக்கத்திற்கு விரோதமாக ஒரு தேசீய இயக்கமே உருப்பெற்ற தென்று சொல்ல வேண்டும். இந்த ரகசியச் சங்கங்களை தாபித் தவர்களில் ஒரு சாரார், மதப் போர்வையைப் போர்த்திக் கொண்டு தங்கள் வேலைகளைச்செய்து வந்தார்கள். இவர்கள் வெண் தாமரைச் சங்கம் என்ற பெயரால் ஓர் அமைப்பை ஏற்படுத்திக் கொண்டனர். தீயவர்களை ஒடுக்கி நல்லவர் களைக் காப்பாற்றும் பொருட்டு புத்த பிரான் பூலோகத்தில் மறுபடியும் அவதரிக்கப் போகிறா ரென்றும், அப்பொழுதுள்ள அரசியல் சமுதாய அமைப்புக் களெல்லாம் அடியோடு மாறிவிடப் போகின்றனவென்றும் இவர்கள் பிரசாரஞ் செய்து வந்தார்கள். எங்கும் இவர்களுக்கு அதிகமான ஆதரவு கிடைத்தது. எந்த நிமிஷத்திலும் கலகம் நிகழக்கூடிய நிலைமை ஏற்பட்டது. கலகப் படைகளும் திரண்டன.
சூ யுவான்-சாங்1 என்ற ஒருவன் - இவன் ஒரு விவசாயியின் மகன். கொடுங்கோலாதிக்கத்தினால் விளைகிற பசி நோயையும் வறுமைப் பிணியையும் நேராக அனுபவித்தவன்; நன்றாக அனுப வித்தவன். இவன், மேற்படி கலகப் படைகளையெல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு மங்கோலிய ஆதிக்கத்தை எதிர்த்தான். மத்திய சீனா முழுவதும் இவன் வசமாயிற்று. நான்கிங்கைத் தலைநகரமாகக் கொண்டு புதிய அரசாங்க
மொன்றை தாபித்துக் கொண்டான். இந்தப் புதிய பலத்தை ஆதாரமாக வைத்துக் கொண்டு, கான்பலீக் (பீக்கிங்) நகரத்தின் மீது படையெடுத்தான். ஸுன் தீ என்ன செய் வான்? தனது துர்மந்திரிகளோடும் அந்தப்புர அழகியர் களோடும், தனது பாரம்பரிய வாசதலமாகிய மங்கோலியப் பாலைவனத்திற்கு ஓடிவிட்டான். இவனோடு, சீனாவில் மங்கோலிய வமிச ஆட்சி அதமித்துவிட்டது. சூ யுவான் சாங் 1368-ஆம் வருஷம், தானே சர்வ சீனாவுக்கும் சக்ரவர்த்தியென்று முடி சூட்டிக் கொண்டான்.
மிங் வமிசம்
சூ யுவான்-சங் காலத்திலிருந்து மிங் வமிச1 ஆட்சி தொடங்கு கிறது. இவன், முடி சூட்டிக்கொண்டதும், தை த்ஸு2 என்று தன் பட்டப் பெயராக வைத்துக் கொண்டான். அப்படியே, தன் வமிசத் திற்கும் மிங் வமிசம் என்று பெயரிட்டான். மிங் என்றால் பிரகாச மான என்று அர்த்தம்.
இந்த மிங் வமிசத்தின் ஆட்சி காலம் இரு நூற்றெழுபத்தாறு வருஷம். (1368-1644).. மொத்தம் பதினேழு மன்னர்கள், இந்த வமிசத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டு ஆண்டார்கள்.
இந்த வமிசத்தினரிடமிருந்து ஜனங்கள் அதிகமான நன்மையை எதிர்பார்த்தார்கள். அந்நிய ஆதிக்கத்தினால் அவதிப்பட்டுக் கிடந்த வர்களல்லவா? இதனால் அதிக ஆவல் இருந்தது. ஆனால் இந்த வமிசமும், மற்ற வமிசங்களைப்போல் ஆரம்பத்தில் பிரகாசமாகத் தொடங்கி, பிறகு வரவர ஒளி மங்கி மறைந்து விட்டது.
தை த்ஸு மன்னன் அரசபீடத்தில் அமர்ந்திருந்த வரையில், தேசத்தில் கட்டுப்பாடும் ஒழுங்கும் இருந்தன. பிறகு வந்த அரசர்கள் வழக்கம்போல் சுகபோக வாழ்க்கையிலே ஈடுபட்டுச் சீரழிந்து போனார்கள். மூன்றாவது தலைமுறைக் காலத்திலேயே வடக்கிலுள்ள சில சிற்றரசர்கள் கலகத்திற்குக் கிளம்பிவிட்டார்கள். இவர்கள் ஒருவிதமாக அடக்கப்பட்டார்களென்றாலும், நான்கிங்கிலே கொலுவீற்றிருந்த மிங் வமிச சக்ரவர்த்தி என்ற பதவிக்கிருந்த மதிப்பு போய்விட்டது. இதனால் மூன்றாவது சக்ரவர்த்தியாக முடிசூட்டிக் கொண்ட செங் த்ஸு3 என்பவன், தனது ராஜதானியை , நான்கிங்கி லிருந்து பழைய மாதிரி பீக்கிங்குக்கு மாற்றிக் கொண்டு விட்டான். அது முதற்கொண்டு 1926-ஆம் வருஷம் வரை, சுமார் அறு நூறு வருஷ காலம் கடைசி காலத்தில் பெயரளவிற் கேனும், பீக்கிங்கே, சீனாவின் தலைநகரமாக இருந்து வந்தது. எந்த ஊரை ராஜதானியாக்கிக் கொண்டாலென்ன? முதுகெலும்பு பலவீனப்பட்டு விட்டால் உடலின் மற்றப் பாகங்கள் யாவும் தாமாகவே பலவீனப்பட்டு விடுமல்லவா?
மிங் வமிச ஆட்சியின் கடைசி காலத்தில், இயற்கையென்றும், அழகு என்றும், கவிதை இன்பம் என்றும் பேசிக்கொண்டிருந்த புலவர்கள்கூட அரசியலில் சிரத்தை காட்டத் தொடங்கினார்கள்; அரசாங்கத்திற்கு விரோதமான சங்கமொன்றை அமைத்துக் கொண்டு, சொல்லாலும் எழுத்தாலும் அரசாங்கத்தைத் தாக்கி வந்தார்கள். அரசியலின் உண்மை யான லட்சணமென்ன, நோக்க மென்ன, என்பவைகளைக் குறித்து அநேக நூல்கள் வெளியாயின. பலவீனப்பட்டுக் கிடந்த அரசாங்கமோ, தனக்கு விரோதமாகப் பேசியும் எழுதியும் வந்த புலவர் களைச் சிறைக்குள்ளே தள்ளியது; தூக்குமேடையிலே ஏற்றியது; ஆனால் தனது சவக் குழியையும் தானே தோண்டிக் கொண்டது! புலவர்களுக்கு ஜனங்களின் ஆதரவு இருந்தது. அரசாங்கத்திற்கு அந்தப்புரத்தைக் காவல் செய்யும் பேடிகளின் ஆதரவு இருந்தது!
அரசாங்கம் இப்படி உட்புறத்தில் அழுகிக்கொண்டு வருகையில், தேச முழுவதிலும் என்றுமில்லாத ஒரு பஞ்சம் ஏற்பட்டது. ஜனங்கள், புல் வேரையும், மரப் பட்டையையும் தின்று ஜீவித்து வந்தார்கள்; அநேக இடங்களில் மண்ணைக்கூடத் தின்றார்கள்! இப்படியிருந்தும், அரசாங்க மானது, கொஞ்சங்கூடக் கருணை யில்லாமல், ஜனங்களிடமிருந்து வரி வசூலித்துத் தன் ஆடம்பர வாழ்க்கையை நடத்தி வந்தது! இதனால் ஜனங்களிலே அநேகர், கொள்ளைக் கூட்டத்தினராக மாறி வயிற்றுப் பிழைப்பு நடத்தி வந்தார்கள். இந்தக் கொள்ளைக்கூட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தன. நாடு முழுவதும் ஒரே அல்லோல கல்லோல மாயிருந்தது.
இந்தச் சமயத்தில், ஜப்பானியர்கள். சீன ஆதிபத்தியத்திற் குட் பட்டிருந்த கொரியாவின்மீது படையெடுத்து வந்து தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் தவிர வடகிழக்கிலுள்ள மஞ்சூரியாவி லிருந்து1 மஞ்சூரியர்கள், சீனாவின் எல்லைப் புறத்தி லிருந்து கொண்டு சூறையாடியும், ஜனங்களுக்குப் பல விதமான இம்சைகளைச் செய்துகொண்டும் வந்தார்கள். அதுமட்டுமல்ல, பயிற்சி பெற்ற ஒரு பெரும் படையைத் திரட்டிக் கொண்டு பீக்கிங் நகரத்தை நோக்கிப் புறப்பட்டு வந்துகொண்டு மிருந்தார்கள். இவர்களை எதிர்த்துப் போராடு வதற்காக, தளபதி வூ2 என்ப வனுடைய தலைமையில் மிங் அரசாங்கத்துப் பெரும்படை யொன்று வடக்கே சென்றது. இதனுடைய விளைவு என்னவாயிற்றென்றால், பீக்கிங் நகரம் போதிய பந்தோபதில்லாமற் போய்விட்டது.
இதுதான் தருணமென்று, ராஜ்யத்தின் பலபாகங்களிலும் அட்டூழியங்கள் புரிந்துகொண்டுவந்த கொள்ளைக் கூட்டத்தினர் பலரும் லீ3 என்பவனுடைய தலைமையில் ஒன்றுதிரண்டு பீக்கிங் நகருக்குள் நுழைந்தனர்; உயிர்ச் சேதமும் பொருட்சேதமும் விளைவித்தனர். பார்த்தான் மிங் அரசன்; என்ன செய்வதென்று தெரியவில்லை. தனக்கு ஆலோசனை சொல்லியும் தன்னைப் பாதுகாத்தும் வந்த பேடிகளுக்கு ஆயுதங்களைக் கொடுத்து , கலகக் காரர்களை விரட்டியடிக்குமாறு கூறினான். நடக்கிற காரியமா இது? கலகக்காரர்கள் வெகு வேகமாக முன்னேறி வந்து அரண் மனைக்குள்ளேயே நுழைந்துவிட்டனர். அரசன் அருகி லிருந்த மலைக்கு ஓடிவிட்டான். அங்கிருந்து பார்த்தான் நகரத்தை. எங்கும் ஒரே நெருப்புப் பற்றி எரிகிறது! இதனைக் காணச் சகியாதவனாய் ஒரு மரத்திலே தூக்குப்போட்டுக் கொண்டு இறந்துவிட்டான். கலகத் தலைவனாகிய லீ, தானே சக்ரவர்த்தி என்று பிரகடனம் செய்து கொண்டான். அப்படிச் செய்து கொண்ட தோடல்லாமல், அரண்மனையில் அப்பொழுது இருந்தவளும், மகா அழகியும், வடக்கே மஞ்சூக்களை எதிர்த்துப் போராடச் சென்றிருந்த வூவின் காதலியுமான ஒருத்தியைக் கள்ளத்தனமாக அபகரித்து, தன்னுடைய படைத் தலைவன் ஒருவனிடம் கொடுத்தான். இப்படி அவன் செய்த போது மிகவும் அலட்சிய மாகவே செய்திருக்கவேண்டும். ஆனால் இதன் பின் விளைவுகளை அவன் ஊகித்திருக்கக்கூட முடியாது.
வடக்கே சென்றிருந்த வூவுக்கு, இந்தச் செய்திகள் யாவும் எட்டின. ஆத்திரம் கொண்டான். இந்த ஆத்திரத்தின் முன்னணியில் எப்படியாவது லீ யைத் தொலைத்து விட வேண்டுமென்ற ஒரே எண்ணந்தான் நின்றது. ஆனால் தன் ஒருவனாலேயே இந்த எண்ணத்தை நிறைவேற்ற முடியாதென்பதையும் தெரிந்து கொண்டிருந்தான். இதனால், இந்த ஆத்திர மிகுதியினால், தான் யாரை எதிர்த்துப் போராடச் சென்றானோ அவர் களுடைய, சத்துருக்களான மஞ்சூக்களினுடைய உதவியை நாடினான்; தன்னோடு பீக்கிங் நகரத்திற்கு வந்து கலகக் காரர்களைத் துரத்திவிடுமாறு கூறினான். மஞ்சூக்கள், இந்த மாதிரியான அழைப்பை எதிர்பார்க்கவே இல்லை. இந்தச் சந்தர்ப்பத்தை விட்டு விடுவார்களா? உடனே வூவை வழி காட்டியாகக் கொண்டு பெரும் படையுடன் பீக்கிங் நகரத்தை நோக்கி வந்தார்கள்; அதிக எதிர்ப் பில்லாமல் நகரத்தைக் கைப்பற்றிக் கொண்டார்கள்.; கலகத் தலை வனாகிய லீயை விரட்டி விட்டு, தங்கள் தலைவனைச் சிங்காதனத்தி லேற்றினார்கள். வூ நினைத்தது ஒன்று; நடந்தது ஒன்று. மஞ்சூக்கள், இவனை - வூவை - ஒரு மாகாண அதிகாரியாக நியமித்து மரியாதையாக அப்புறப்படுத்திவிட்டார்கள்! மஞ்சூ வமிசம் தோன்றியது.
மிங் வமிசத்து இருநூற்று எழுபத்தாறு வருஷ ஆட்சியை அதிகமாகச் சிறப்பித்துச் சொல்லமுடியாது. ஆனால், சீனாவின் எதிர்கால வாழ்வுக்கு, இந்த ஆட்சியின் போது அடிகோலப் பட்டதென்று சொல்ல வேண்டும். இதனால், சீனா நன்மைகளையும் அடைந்திருக்கிறது, தீமை களுக்கும் உட்பட்டிருக்கிறதென்று சொன்னால் அது வேறு விஷயம். ஆனால் மிங் ஆட்சி, சீனாவின் சரித்திரப் போக்கை வேறொரு வழியில் திருப்பிவிட்டதற்குக் காரணமா யிருந்ததென்பதை யாரும் மறுக்க முடியாது.
மிங் ஆட்சியின் போது, ஏற்கனவே சீனாவுக்கும் அந்நிய நாடு களுக்கும் இருந்த தொடர்பானது வலுப்பட்டது. சீனர்கள் புதியமாதிரியான கப்பல்களைத் தயாரித்து உபயோகிப்பதிலே நிபுணர் களானார்கள். இந்தக் கப்பல்களின் மூலம் சென்று தென்கடற் பிரதேசங்கள் பலவற்றிலே குடியேறினார்கள். இங்ஙனம் சீனர்கள் அதிகமாக வெளிநாடுகளுக்குச் செல்ல முற்பட்டதால், வெளிநாட்டார் பலரும் சீனாவுடன் தொடர்பு வைத்துக்கொள்ள விழைந்தார்கள். சிறப்பாக ஐரோப்பியர்கள், அப்பொழுது தான் புதிது புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்டு வந்த விஞ்ஞான உண்மை களைச் சீனாவுக்குக் கொண்டு வந்தார்கள். இப்படிக் கொண்டுவந்தவர்கள் பெரும்பாலும் கிறிதுவப் பாதிரிமார்கள். இவர்களைத் தொடர்ந் தாற்போல் தான் பிற்காலத்தில் ஐரோப்பிய வியாபாரிகளும், இந்த வியாபாரிகளைப் பாதுகாக்கப் போர் வீரர்களும் வரிசைக் கிரமமாக வந்தார்கள். சுருக்கமாகச் சொல்வோமானால், ஐரோப்பிய வல்லரசுகளின் ஏகாதிபத்தியப் பசி, சீனாவைப் பொறுத்தமட்டில், இந்த மிங் ஆட்சியிலேயே ஆரம்பமாயிற்று. ஐரோப்பிய வல்லரசு களுக்கு மட்டுமல்ல, அண்டையிலுள்ள ஜப்பானுக்குக் கூட ஏகாதி பத்தியப் பார்வை உண்டானது, இந்த மிங் ஆட்சியின் போதுதான்.
மஞ்சூ வமிசம்
மிங் வமிசத்திற்குப் பிறகு மஞ்சூ வமிசம். இதற்கு சிங் வமிசம்1 என்றும் பெயர். அப்பழுக்கில்லாத வமிசம் என்று அர்த்தம். பத்து மன்னர்கள், இரு நூற்றறுபத்தேழு, வருஷகாலம் (1644-1911) இந்த வமிசத்தின் பெயரால் ஆண்டார்கள். இவர்களுடைய காலத்தில் சீனா, உன்னதமான வாழ்வையும் கண்டது; ஆழமான பள்ளத்திலும் இறங்கியது. இந்த மஞ்சூ வமிசாவளிக்கு வேறெந்தப் பெருமை உண்டோ இல்லையோ, நூற்றுக்கணக்கான வருஷங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வந்த முடியரசு முறைக்கு முற்றுப்புள்ளி யிட்டுவிட்ட பெருமை இதற்கு உண்டு.
மஞ்சூக்கள், லீ என்கிற கலகத் தலைவனைத் தொலைத்து விட்டு பீக்கிங் நகரத்தைக் கைப்பற்றிக் கொண்டார்களல்லவா? இதன் மூலமாக வட சீனாவின் பெரும் பகுதி இவர்களுடைய ஆதிபத்தியத்திற்குட்பட்டது. ஆனால் மிங் வமிசத்தைச் சேர்ந்த சிலர், தெற்கு சீனாவிலிருந்து கொண்டு மஞ்சூக்களின் ஆதிக்கத்தை எதிர்த்து வந்தார்கள். சிறிது காலம் நடைபெற்ற போராட்டத்திற்குப் பிறகு இந்த எதிர்ப்பு குலைந்து விட்டது. மஞ்சூக்களின் கை ஓங்கி நின்றது. எனவே இவர்களின் தலைவன் ஷுன் சி2 என்ற பெயருடன் சர்வ சீனாவுக்கும் சக்ரவர்த்தியானான். இவனைத் தான் மஞ்சூ வமிசத்தின் முதல் சக்ரவர்த்தியென்று சொல்லவேண்டும்.
சீனர்கள் , அந்நியர்களாகிய மஞ்சூக்களின் ஆதிக்கத்தை வேண்டா வெறுப்புடனேயே ஏற்றுக் கொண்டார்கள். அப்படி ஏற்றுக் கொள்வதைத் தவிர இவர்களுக்கு அப்பொழுது வேறு வழியில்லை. இந்த ஆட்சியின் ஆரம்பத்திலேயே இதன் மீது ஜனங்களுக்கு ஒரு வித வெறுப்பு இருந்ததென்பதற்கு ஒரு சிறிய உதாரணம்:
1644-ஆம் வருஷம் மஞ்சூ ஆட்சி தொடங்கியது. அப்பொழுது லின் எர்ஹ் த்ஸு3 என்னும் பிரபல ராஜ தந்திரியொருவன் பீக்கிங்கில் தற்கொலை செய்து கொண்டான். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர், ஷாண்டுங் மாகாணத்தி லுள்ள ஓர் ஊரில் வசித்துக் கொண்டிருந்த தன் குடும்பத்தினருக்கு ஒரு கடிதம் எழுதிவைத்து விட்டுப் போனான். அதில், மஞ்சூ வமிசம் ஆட்சியிலிருக்கிற வரையில், தன் குடும்பத்தினர் யாரும் அந்த ஊரை விட்டு வெளியே வரவேண்டாமென்று கண்டிருந்தான். அங்ஙனமே இவனுடைய சந்ததியார், சுமார் இருநூற்றைம்பது வருஷ காலம் வரை, அந்த ஊரை விட்டு வெளியில் வராமலேயே இருந்தனர். 1911-ஆம் வருஷம் மஞ்சூ ஆட்சி விழுந்து விட்ட பிறகு, இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மேற்படி ஊருக்கு வெளியே, தங்களுடைய மூதாதையர்களுக்காக அதுகாறும் கட்டப் படாமல் இருந்த சுமார் முந்நூறு சமாதிகளைக் கட்ட தங்களுடைய பிதிரார் ஜித வீட்டை விற்றார்கள்.
மஞ்சூ மன்னர்களில் இரண்டு மூன்று பேரைத் தவிர மற்றவர்கள், தாங்கள் ஆளுஞ் சாதியார் என்ற எண்ணத்துடனேயே ஆண்டு வந்தார்கள். ஆளப்படுஞ்சாதியினராகிய சீனர்களைத் தேவையான அளவுக்கு உபயோகித்துக்கொண்டு, மற்ற விஷயங்களில் அலட்சியமாகவே நடத்திவந்தனர். மற்றும், சீனர்களுடைய மனத்தில் நாம் அந்நியர்களால் ஆளப்பட்டு வருகிறோம் என்ற எண்ணம் சதா உறுத்திக்கொண்டிருக்கும் படியான சில காரியங்களையும் செய்தனர். ஒரே ஓர் உதாரணம்:
1912-ஆம் வருஷம்வரை, சீனர்கள், தங்கள் தலையின் முன் பாகத்தை க்ஷவரம் செய்துகொண்டு, பின் பாகத்திலுள்ள குடுமியை நீண்ட பின்னலாகப் பின்னித் தொங்க விட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த வழக்கம் மஞ்சூ ஆட்சியின் ஆரம்பத்தில் ஏற்பட்டது. சீனர்கள், தாங்களாகவே வலிய மனம் விரும்பி இந்த வழக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆள்வோரால் கட்டாயப் படுத்தப்பட்டனர். அது தான் இதிலுள்ள விசேஷம். சீனர்கள், தங்கள் தலை மயிரைப் பின்னிச் சுருட்டிக் கொண்டைபோட்டுக் கொள்வது வழக்கம். மங்கோலியர்கள் வந்ததும், சீனர்கள் தங்களுக்கு அடிமைப்பட்டவர்கள் என்பதைக் காட்டும் பொருட்டு அவர்களுடைய தலை மயிரை இரண்டு பின்னல் களாகப் பின்னித் தொங்கவிட்டுக்கொள்ள வேண்டுமென்று உத்தர விட்டனர். மங்கோலிய ஆட்சி முடிந்து மிங் ஆட்சி ஏற்பட்டதும், சீனர்கள் பழையமாதிரி கொண்டை போட்டுக் கொண்டார்கள். மிங் ஆட்சி சீனர்களுடைய ஆட்சியாக இருந்ததே இதற்குக் காரணம். மிங் ஆட்சிக்குப் பிறகு மஞ்சூ ஆட்சி தொடங்கியதும், முதல் சக்ரவர்த்தியான ஷுன் சி சீனர்களெல்லோரும் ஆளப்படுவதன் அறிகுறியாகத் தங்கள் தலை மயிரை (மங்கோலியர் காலத்தி லிருந்ததைப் போல் இரட்டைப் பின்னலாக இல்லாமல்) ஒற்றைப் பின்னலாகப் பின்னித் தொங்கவிட்டுக் கொள்ள வேண்டு மென்றும், அப்படிச் செய்ய மறுக்கிறவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்படுமென்றும் ஓர் உத்தரவு பிறப்பித்தான். சீனர்கள் சுலபமாக இந்த உத்தரவை ஏற்றுக்கொள்ளவில்லை; தாங்கள் அடிமைகளென்று பிரித்துக் காட்டுகிற, தங்கள் மனிதத் தன்மையிலே ஒரு நிரந்தர களங்கத்தை ஏற்படுத்துகிற இந்த உத்தரவை எதிர்த்தார்கள். எதற்கும் அடங்கிப் போகும் சுபாவ முடைய விவசாயிகள் கூட இந்த உத்தரவுக்குக் கீழ்ப்படிய மறுத்துவிட்டார்கள். எங்கும் கலகம் உண்டாயிற்று. மஞ்சூக்கள், ஆளுஞ்சாதியார் என்ற அகம்பாவத்தினால், மேற்படி உத்தரவைக் கட்டாயம் அமுலுக்குக் கொண்டுவர வேண்டு மென்று முனைந்து நின்றனர். சீனர்களைப் பார்த்து உங்களுக்கு தலை வேண்டுமா, தலை மயிர்வேண்டுமா? என்று கேட்டனர். சீனர்களோ மிக உறுதியாக எங்களுக்கு தலைமயிர்தான் வேண்டும்; தலை போனால் போகிறது என்று கூறினார்கள். அவ்வளவுதான். அரசாங்க உத்தரவு கண்டிப்பான முறையில் அனுஷ்டானத்திற்குக் கொண்டு வரப் பட்டது. தலை மயிருக்காக எத்தனை பேர் தங்களுடைய தலையைக் கொடுத்தார்கள்? அநேக இடங்களுக்கு அரசாங்கத்தார், இந்த உத்தரவை அமுலுக்குக் கொண்டுவர, பெரும்படைகளை அனுப்ப வேண்டியிருந்தது. ஜனங்களும் பலவகை ஆயுதங்கள் தாங்கிக் கொண்டு அரசாங்கப் படைகளுடன் போராடினார்கள். சியாடிங்1 என்பது ஒரு சிறிய நகரம். இந்த நகரவாசிகள் புதிய உத்தரவுக்குக் கீழ்ப்படிய மறுத்துவிட்டார்கள். அரசாங்கப்படைகள் வந்து நகரத்தை முற்றுகையிட்டன. எண்பது நாள் வரை முற்றுகையைச் சமாளித்து நின்றார்கள் நகர வாசிகள். கடைசியில் முடியாமல் போய் சரணடைந்து விட்டார்கள். விளைவு என்ன? சுமார் ஒன்றே முக்கால் லட்சம்பேர் அரசாங்கத் துருப்புக்களால் கொலை யுண்டார்கள்! இதற்குப் பிறகு நாட்டின் பல பகுதியினரும் அரசாங்க உத்தரவுக்குக் கீழ்ப்படிந்துவிட்டனர். எங்கும் நீண்ட பின்னல்கள் காட்சியளித்தன. இங்ஙனம் மஞ்சூ வமிசத்தினர், தங்களுடைய ஆதிக்க விதையை ரத்தச் சேற்றிலேதான் ஊன்ற வேண்டியதாயிற்று.
ஷுன் சிவுக்குப் பிறகு வந்த மன்னர்களிலே பிரசித்தமானவர் இரண்டுபேர். ஒருவன் காங் ஹ்ஸி;2 மற்றொருவன் சின் லுங்.3 இருவர் காலத்திலும் சீனாவின் கிரகம் உச்சத்தையடைந்தது. ஆனால் அதே சமயத்தில், அந்நியர்கள், சீனாவைச் சுரண்டுவதற்கு அதிவாரம் போட்டுக்கொண்டார்கள்.
ஷுன் சிவுக்கு மூன்று பிள்ளைகள். காங் ஹ்ஸி கடைசி மகன். ஷூன் சி மரணப் படுக்கையில் கிடக்கிறபோது, தனக்குப் பின்னால் பட்டத்திற்கு வரத் தகுதியுடையவர் யார் என்பதைப் பற்றி மூன்று பிள்ளைகளையும் வரவழைத்து ஆலோசனை கேட்டான். மூத்த மகன், செங்கோலைப் பிடிக்கும் சக்தி தனக்கில்லையென்று பஷ்ட மாகச் சொல்லிவிட்டான். இரண்டாவது மகன், மௌனமாயி ருந்தான். மூன்றாவது மகனாகிய காங் ஹ்ஸி, அரச பதவிக்குத்தான் தகுதி யுடையவனென்று உணர்வதாகத் தெரிவித் தான். அப்பொழுது இவனுக்கு வயது எட்டு. ஷூன் சி இறந்ததும் இவனே முடி சூட்டப்பட்டான். தன்னம்பிக்கை யுடையவர்கள் நிச்சயமாக வெற்றியடைகிறார்கள் என்பது எவ்வளவு உண்மை!
காங் ஹ்ஸி சிறுவனாயிருந்தபடியால், சுமார் ஐந்தாறு வருஷகாலம், ராஜ்ய நிருவாகம், சில பெரியோர்களின் மேற்பார்வையில் இருந்து வந்தது. அப்படியிருந்து வந்த காலத்தில் இவன் - காங்-ஹ்ஸி- அரசியல் நுட்பங்கள் பலவற்றை நன்கு தெரிந்துகொண்டு விட்டான். பின்னர் தானே நேரில் ராஜ்ய நிருவாகத்தை ஏற்றுக் கொண்டான். அப்பொழுது இவனுக்கு வயது பதினான்கு.
காங் ஹ்ஸி, சிறு பிராயத்திலிருந்தே நல்ல அறிஞனாக வளர்ந்து வந்தான். வயதாக ஆக, சீனாவின் புராதன கிரந்தங்களில் நல்ல பயிற்சி பெற்றான்; இலக்கிய நுட்பங்கள் பலவற்றை உணர்ந்து ரசித்தான். கன்பூஷிய வகுத்து வைத்துப்போன கோட்பாடுகளில் அதிக ஈடுபாடு கொண்டான். புலவர் பலரை ஆதரித்தான். சிறந்த புலவர்களைக் கொண்டு, சுமார் நாற்பத்து நாலாயிரம் வார்த்தைகளைக் கொண்ட சீன மொழி அகராதி ஒன்றைத் தயாரிக்கச் செய்தான்.
வெளிநாடுகளிலிருந்து வந்த கிறுதுவப் பாதிரிமார்களை காங் ஹ்ஸி கௌரவமாக நடத்தினான்; அவர்களிடமிருந்து லத்தீன் மொழியைக் கற்றுக்கொண்டான்; விஞ்ஞான சாதிர சம்பந்தமாக அநேக புதிய விஷயங்களைத் தெரிந்துகொண்டான்; அந்தப் பாதிரிமார்களைக் கொண்டு, தனது பிரஜைகளுக்கும் தெரிவிக்கச் செய்தான்.
அப்பொழுது ருஷ்யாவை ஆண்டுவந்த மகா பீட்டர் மன்னன்,1 தனது பிரதிநிதிகளிற் சிலரை, சீன சக்ரவர்த்தி, தன் சந்நி தானத்தில் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்று அனுமதி கோரினான். காங் ஹ்ஸியும் அனுமதி கொடுத்து, ருஷ்யப் பிரதிநிதிகளை அன்புடன் வரவேற்று உபசரித்தான். இந்தக் காலத்தில் ருஷ்யாவுக் கும் சீனாவுக்கும் எல்லை வகுக்கப்பட்டது. ருஷ்யா விலிருந்து அநேக பாதிரிமார்கள் சீனாவுக்கு வந்து மதப் பிரசாரம் செய்தார்கள்; அநேக ருஷ்ய மாணாக்கர்கள் பீக்கிங் சர்வகலா சாலையில் பயின்றார்கள். இங்ஙனமே சீனாவிலிருந்தும் அநேகர் ருஷ்யாவுக்குச் சென்று பல புதிய விஷயங்களைக் கற்றுக் கொண்டு சீனாவுக்குத் திரும்பி வந்து அந்தப் புதிய அறிவைப் பரப்பினார்கள்.
மற்றும் காங் ஹ்ஸி, ஜனங்கள், தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டு மென்று வலியுறுத்தினான். இதற்காகப் பதினாறு நியதிகளைக் கொண்ட ஓர் அறிக்கையைத் தயாரித்து ஆங்காங்குப் பிரகடனம் செய்வித்தான்.
ராஜ்ய நிருவாக விஷயத்தில் காங் ஹ்ஸி அதிக அக்கரை செலுத்தினான். அவ்வப்பொழுது நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று ஜனங்களின் குறை நிறைகளை நேரில் தெரிந்து வந்தான்; குறைகளை உடனுக்குடன் கவனித்துப் பரிகாரம் தேடிக் கொடுத்தான்.
ஒருநாள் இவன் வேட்டை நிமித்தம் குதிரை மீது சென்று கொண்டிருந்தபோது, ஒரு குடியானவன் பாதையோரமாக உட்கார்ந்து அழுது கொண்டிருப்பதைப் பார்த்தான். உடனே குதிரையினின்று இறங்கி என்ன சமாசாரம் என்று விசாரித்தான். அந்தக் குடியான வனுக்கு இவன் அரசனென்று தெரியாது. அவன் சொன்னான்: - ஐயா, எனக்குப் பிதிரார்ஜித மாகக் கொஞ்சம் நிலம் இருந்தது. அதில் நானும் என் மகனும் சேர்ந்து உழைத்து எங்கள் ஜீவனத்தை ஒருவாறு நடத்தி வந்தோம். ஆனால் எங்களுடைய ஜில்லா அதிகாரி, எனது நிலம் பண்பட்டிருக்கிறதென்று சொல்லி அதனைத் தமது உபயோகத்திற்கு எடுத்துகொண்டு விட்டார். எனது மகனைக் கூட என்னிடமிருந்து பிரித்து தமது வேலைக்காரனாக அமர்த்திக் கொண்டு விட்டார். அப்படியா? என்னோடு குதிரை மீது ஏறிக் கொண்டுவா; அதிகாரியிடம் போவோம்; உனது நிலத்தை உனக்கு நான் திருப்பி வாங்கித் தருகிறேன். என்றான் அரசன். இவன் யாரோ ஒரு பெரிய மனிதன் என்று நினைத்து விவசாயியும் இவனைப் பின் தொடர்ந்தான். இருவரும் அதிகாரியின் வீட்டுக்குப் போனார்கள். காங் ஹ்ஸி, தான் எங்கே சென்றாலும் தன்னுடன் சிலஅரச அடை யாளங்களை எடுத்துச் செல்வது வழக்கம். அந்த அடையாளங்களை மேற்படி அதிகாரிக்குக் காட்டி, தான் சக்ரவர்த்தியென்பதை அவனுக்கு நிரூபித்துக் காட்டிவிட்டு, பிறகு குடியானவனுடைய நில விஷயமென்னவென்று கேட்டான். அதிகாரி, பயந்துபோய் தான் செய்தது பிழையென்று மன்னிப்புக் கேட்டான். ஆனால் அரசன், அவனை உத்தியோகத்தினின்று விலக்கிச் சிரச்சேதமும் செய்து விட்டான்; குடியானவனுக்கு அவன் நிலத்தைத் திருப்பிக் கொடுக்கச் செய்தான். இந்த மாதிரி சில கடுமையான முறைகளை அனுஷ்டித்து காங் ஹ்ஸி அரசாங்க நிருவாகத்தில் ஊழல்களைக் களைந்தான்; ஒழுக்கத்தைப் புகுத்தினான்.
இங்ஙனம் இவன் கண்டிப்பாக நிருவாகம் நடத்தி வந்ததைச் சிலர் விரும்பவில்லை. ராஜ்யத்தின் எல்லைப் புறங்களில், கலகங்கள் கிளம்பின. காங் ஹ்ஸி, இவைகளை, தானே நேரில் சென்று அடக்கினான். இவன் காலத்தில் மஞ்சூரியா, மங்கோலியா1, போர்மோஸா2 தீவு முதலிய நாடுகள் சீனாவின் ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டு ஒழுங்காகக் கப்பங்கட்டி வந்தன.
மஞ்சூ ஆட்சி தொடங்குவதற்குச் சிறிது முந்தியும், பிறகும், வியாபார நோக்கத்துடன் ஐரோப்பிய நாட்டார் பலர், ஒருவர் பின்னொருவராகச் சீனாவுக்குள் நுழைந்து வந்தனர். காங் ஹ்ஸி காலத்தில் இவர்களுடைய வருகை அதிகரிக்கத் தலைப்பட்டது. இவர் களுடைய விபரீதமான தன்னலப் போக்கும் பெருகி வந்தது. இந்தப் போக்கை காங் ஹ்ஸி தெரிந்து கொள்ளாமலில்லை. என்றாலும் கிறிதுவப் பாதிரிமார்களுடன் கொண்டிருந்த தொடர்பு காரணமாகவோ என்னவோ இவர்கள் விஷயத்தில் தலையிடாம லிருந்தான்; சகிப்புத் தன்மையைக் காட்டிவந்தானென்றும் சொல்ல வேண்டும். ஆனால் இவர்கள்-இந்த ஐரோப்பிய நாட்டார் -வருகையினால், சீனாவுக்கு ஒரு நாளில்லா விட்டால் ஒருநாள் ஆபத்து உண்டாகுமென்பதை இவன் நன்கு உணர்ந்திருந்தான் இதனால்தான் தன் கடைசிகாலத்தில் இன்னும் சில நூற்றாண்டுகளில், கடல் கடந்து வரும் இந்த மேனாட்டாருடன் சீனா பகைமை கொண்டு அதன் விளைவாகச் சேதமடையுமென்று அஞ்சு வதற்குக் காரணம் இருக்கிறது என்று எச்சரிக்கைச் சொல்லாகச் சொல்லிவிட்டுப் போனான். இந்த எச்சரிக்கைச் சொல், இவனுடைய பேரன் தலைமுறையிலேயே உண்மை யான சொல்லாகி விட்டது. இதைப் பிந்திய அத்தியாயங்களில் பார்ப்போம்.
காங் ஹ்ஸி சுமார் அறுபது வருஷம் ஆண்டுவிட்டு 1722-ஆம் வருஷம் கண் மூடிக் கொண்டான்..
மற்றொரு பிரசித்திபெற்ற மன்னன் சின் லுங். இவன் காங் ஹ்ஸியின் பேரன். இவன் காலத்தில் சீனாவின் எல்லை இன்னும் அதிகமாக விரிந்தது. அன்னாம்1, பர்மா, நேபாளம்2, பூட்டான்3, திபேத்து ஆகிய நாடுகள் சீனாவின் ஆதிபத்தியத்தை ஏற்றுக் கொண்டன. ஆனால் அதே சமயத்தில் ஐரோப்பிய நாட்டார் சீனாவுக்குள் பலவந்தமாக நுழைந்து வியாபார ஆதிக்கம் பெற முனைந்தனர்.
சின் லுங் பட்டமேற்றதும்,முதன் முதலாக, காங் ஹ்ஸி பிரகடனம் செய்த பதினாறு நியதிகளைக் கொண்ட அறிக்கையை இன்னும் சிறிது விரிவாக எழுதச் செய்து, புத்தகமாக அச்சிட்டு நாடெங்கணும் வழங்கும்படி செய்தான். இதற்குப் பிறகு சுமார் இருநூறு வருஷ காலம் இந்தப் புத்தகம் ஒவ்வோர் ஊரிலும் பிரதி மாதமும் முதல் தேதியன்றும் பதினைந்தாந் தேதியன்றும் படிக்கப் பட்டு வந்தது; இதனை அடிப்படையாகக் கொண்டு சொற் பொழிவுகள் நிகழ்த்தப்பட்டு வந்தன.
இந்தப் புத்தகத்திலிருந்து சில வாசகங்கள்:-
கருணை நிறைந்த எனது பாட்டனார், அறுபத்தோரு வருஷ காலம் இந்த சாம்ராஜ்யத்தை ஆண்டார். அவர், தமது மூதாதை யர்களிடம் அதிக பக்தி செலுத்தி வந்தார். ஆகவே ஒவ்வொருவரும் மூதாதையர்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்ய வேண்டுமென்றும், அவர்கள் விஷயத்தில் பணிவாக நடந்துகொள்ள வேண்டுமென்றும் கூறிவந்தார். அவருடைய பதினாறு நியதிகளைக் கொண்ட புனிதமான அறிக்கையில், இந்த இரண்டுமே முதலில் வைத்துப் பேசப் பட்டிருக்கின்றன.
பெற்றோர்களுக்குச் செய்யவேண்டிய கடமை என்பது, மனிதனிடத்தில் இயற்கையாக அமைந்திருக்கும் ஒரு சுபாவ மாகும். இந்தச் சுபாவந்தான், மனிதனுடைய மேலான பண்பு களுக்கெல்லாம் மூலாதாரமாயிருக்கிறது.
எனது குழந்தைகள் போன்ற பிரஜைகளே, உங்களுக்கு உங்கள் பெற்றோர்கள் விஷயத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று தெரியாமலிருக்கலாம். அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் பாசத்தைப் பற்றி மட்டும் சிறிது சிந்தித்துப் பாருங்கள். பெற்றோர்களிடம் நாம் விசுவாசமா யிருக்க வேண்டுமா, வேண்டாமா என்பது அப்பொழுது தெரியும்.
நீங்கள் கைக் குழந்தையாயிருந்தபோது, உங்களுக்குப் பசி எடுத்ததல்லலவா? அப்பொழுது, உங்களுக்குப் வேண்டிய ஆகாரத்தை உங்களால் சாப்பிட முடிந்ததா? இல்லையே, உங்கள் பெற்றோர்கள் உங்கள் முகத்தைப் பார்த்து, உங்கள் அழுகுரலைக்கேட்டு, உங்களுக்கு ஆகாரம் கொடுத்தார்கள். நீங்கள் சிரித்தபொழுது அவர்கள் மகிழ்ச்சி யடைந்தார்கள், நீங்கள் அழுதபொழுது அவர்கள் வருத்தப்பட்டார்கள். நீங்கள் குறுநடை நடந்த பொழுது அவர்கள் ஒவ்வோர் அடியாக உங்களைப் பின்தொடர்ந்தார்கள்.
சிறிது யோசித்துப் பாருங்கள்; நீங்கள் பிறந்த பொழுது உடம்பின் மீது ஒன்றுமில்லாமலேயே பிறந்தீர்கள். ஒரு சிறு பட்டு இழையோ, பருத்தி நூலோ உங்களுடன் கொண்டு வரவில்லை. இதுவரையில் நீங்கள் உண்ணுகின்ற உணவும், உடுத்துகின்ற உடையும் உங்கள் பெற்றோர்களுடைய அன்பினாலேயே கிடைத்து வந்திருக்கின்றன. இந்த அன்புக்கு நீங்கள் ஈடு செய்ய முடியுமா? இந்த அன்பை உங்களால் உணர முடியாவிட்டாலும், உங்கள் குழந்தைகளிடத்தில் நீங்கள் எவ்வளவு அன்பு செலுத்தி வருகிறீர்களென்பதைச் சிறிது யோசித்துப் பாருங்கள். அப்பொழுது உங்கள் பெற்றோர்கள், உங்கள் மீது வைத்த அன்பை நீங்கள் உணர முடியும். நம் குழந்தைகளை நாம் வளர்த்து வருகிறபொழுது தான் நம் பெற்றோர்கள் நம்மீது வைத்த அன்பு நமக்குப் புலனாகின்றது என்று பெரியோர்கள் சொல்லிப் போந்தது எவ்வளவு உண்மை! எனவே பெற்றோர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யுங்கள்.
உங்கள் பெற்றோர்களுக்குச் செய்யவேண்டிய கடமை களைச் செய்துகொண்டும், சகோதரர்களிடத்தில் மரியாதை யாக நடந்து கொண்டும் வருவீர்களானால், நல்ல பிரஜை களாக நடந்து கொள்வீர்கள்; போர் வீரர்களாகப் பணி யாற்ற வேண்டி வருகிற பொழுது, சிறந்த தேச பக்தர்களாகத் திகழ்வீர்கள்.
காங் ஹ்ஸியைப் போலவே சின் லுங்கும் ஒரு சிறந்த புலவன்; கவிதைகள் பல இயற்றியிருக்கிறான். இவன் இயற்றிய கவிதைகளின் எண்ணிக்கை முப்பத்து நாலாயிரம் என்பர். இவற்றுள் ஒன்று தேயிலைப் பானத்தைப் பற்றியது. இதன் மொழிபெயர்ப்பை வால்ட்டேர்1 என்ற கீர்த்திவாய்ந்த பிரெஞ்சுப் புலவன் பார்த்து விட்டு, சின் லுங்குக்குத் தன் பாராட்டுதலைத் தெரிவித்தான்.
சின் லுங் சிறந்த புலவனாயிருந்தபடியால், புலவர்களை ஆதரித்துப் பெருமைப் படுத்தினான்; கலைவளர்ச்சிக்குப் பாடு பட்டான். இவன் ஆதரவு பெற்று, சீன பாஷையில் பேரகராதியொன்று தயாரிக்கப்பட்டது. இன்றளவும் இதுதான் மற்ற அகராதிகளுக்கும் மற்ற நூல்களுக்கும் முன் மாதிரியாயிருக்கிறது. புதிய நூல்கள் பல தோன்றுவதற்கும் இவன் துணை செய்தான்.
இவன் பட்டமேற்பதற்கு முந்தி, மஞ்சூ ஆதிக்கத்தைக் கண்டித்துச் சில நூல்கள் வெளியாகியிருந்தன. அவைகளை யெல்லாம் சேகரித்து நெருப்பிலிடச் செய்தானென்று ஒரு வரலாறு கூறுகிறது.
சின் லுங் சுமார் அறுபது வருஷகாலம் ஆண்டு விட்டு, 1795-ஆம் வருஷம் இறந்துபோனான்.
சின் லுங்குக்குப் பிறகு வந்த மன்னர்கள், பழைய பெருமையின் நிழலிலே வாழ்ந்துவிட்டு மறைந்து போனார்கள். ராஜ்ய சக்தி மெது மெதுவாகப் பலவீனப் பட்டுக்கொண்டு வருவதை இவர்களால் உணரக் கூட முடியவில்லை. அந்நியர்களுடைய ஆதிக்க சக்தி கொஞ்சம் கொஞ்ச மாக, சீனாவை நெருக்கிக் கொண்டு வருவதை இவர்களால் தடுக்க முடியவில்லை. ஜனங்களிடத்தில் அதிருப்தி புகைந்து கொண்டிருந்தது; சில இடங்களில் கலக நெருப்புக்களும் கிளம்பின. இப்படிப் பட்ட கலகங்களிலே ஒன்றுதான் சரித்திரப் பிரசித்தி பெற்ற தைப்பிங் கலகம்.
இந்த தைப்பிங் கலகம் 1850-ஆம் வருஷம் உண்டாயிற்று. அப்பொழுது மஞ்சூ அரசாங்கமானது, ஐரோப்பிய வல்லரசுகளுடன் போர்க்களத்திலேயாகட்டும், ராஜதந்திர மேடையிலேயாகட்டும் சரிச மானமாக நின்று சமாளிக்க முடியாமல் ஒரு தோல்விக்குப்பின் மற்றொரு தோல்வியாக, ஓர் அவமானத்திற்குப்பின் மற்றோர் அவமானமாக அடைந்துகொண்டு வந்தது. இதனால் ஜனங்களுக்கு அரசாங்கத்தின் மீது அதிக நம்பிக்கையில்லாமற் போயிற்று. சீன மக்களாகிய நாங்கள் எங்கள் அதிகாரிகளுக்குப் பயப்படுகிறோம். ஆனால் எங்கள் அதிகாரிகளோ, கடல் கடந்து வந்திருக்கும் (அந்நியப்) பேய்களுக்குப் பயப்படுகிறார்கள். என்று ஜனங்கள் தெருவிலே பாடிக்கொண்டுசெல்வது சர்வ சகஜமான காட்சியாயி ருந்தது. பொதுவாக அந்நியர்கள் மீது ஜனங்களுக்கு இருந்த இந்தத் துவேஷத்தைச் சிலர் உபயோகித்துக் கொண்டனர். இதன் விளைவே தைப்பிங் கலகம். இதற்கு மூல காரணமாகவும் தூண்டுதல் போலவும் இருந்தது கிறிதுவப்பாதிரிமார்களின் பிரசாரம். இந்தப் பிரசாரத்தின் செல்வாக்கு பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக் காலத்தில் சீனா முழுவதிலும் பரவியிருந்தது.
ஹுங் ஸியு சுவான்2 என்ற ஒருவன், பாதிரிமார்களின் பிரசாரத்திலே பெரிதும் ஈடுபட்டிருந்தான். இவன் சாதாரண ஒரு விவசாய குடும்பத்திலே பிறந்தவனானாலும் நிரம்ப வாசாலக முடையவன்; ஜனங்களுடைய உணர்ச்சியைக் கிளப்பி விட்டு அவர் களைத் தன்பக்கம் இழுத்துக் கொள்ளும் வசீகர சக்தியுடையவன். இவன் பைபிளை நன்றாகப் படித்து அதனை ஜனங்களுக்கு, அவர்கள் புரிந்துகொள்கிற பாஷையிலே போதித்து வந்தான். இப்படியிருக்கையில் ஒரு நாள் இவனுக்கு ஆவேசம் வந்தது. சிறிது நேரம் மூர்ச்சையாகி விட்டதுபோல் கிடந்தான். பிறகு தெளிந் தெழுந்து, தான் கிறிதுவர்களின் கடவுளை நேரில் கண்டதாகவும், அவர், ஜனங்கள் விக்கிரகாராதனை செய்வதை நிறுத்திவிட்டுத் தம்மை தொழாவிட்டால் உலகத்திற்கே பெரிய நாசம் ஏற்படக்உ கூடுமென்று எச்சரிக்கை செய்ததாகவும் பிரகடனம் செய்தான். தவிர, யேசுநாதர் கடவுளின் மூத்த குமாரரென்றும், தான் இளைய குமார னென்றும், பூலோகத்தில் தம்முடைய ராஜ்யத்தை தாபிப்பதற் காகவே கடவுள் தன்னை அனுப்பியிருக்கிறாரென்றும் கூறினான். கடவுள் கட்சி என்ற ஒரு கட்சியை ஏற்படுத்திக்கொண்டு அதற்குத் தலைவனானான். ஜனங்கள் இவன் வார்த்தைகளை நம்பினார்கள். இவனுக்கு ஆள்பலம் சேர்ந்தது. இந்தப் பலத்தை வைத்துக்கொண்டு இவன், சீனாவின் தென் பாகத்திலுள்ள க்வாங்ஸி மாகாணத்தி லிருக்கும் ஒரு சிறிய ஊரில் தன்னுடைய ராஜ்யத்தை தாபித்தான்; இதற்கு தைப்பிங் தீன் குவோ1 என்று பெயர் கொடுத்தான்; தன்னை இந்த ராஜ்யத்திற்கு அரசன் என்று அழைத்துக் கொண்டான். பூலோகத்தில் கடவுள் ராஜ்யம் தாபிதமாயிற்று! தைப்பிங் என்றால் அமைதியென்று அர்த்தம். சாசுவதமான அமைதியை நிலை நாட்டு வதே இந்த ராஜ்யத்தின் நோக்கம். இவன் பதவியேற்றுக் கொண்டதும் முதன் முதலாக வெளியிட்ட சில அறிக்கைகளிலிருந்து இவனுடைய நோக்கம் இன்னதென்று தெளிவாயிற்று.
சர்வ வல்லமையுள்ள கடவுள், தமது புனிதமான ஆக்ஞையை எனக்கு இட்டிருக்கிறார். எனது பரமபிதாவாகிய அவரும், எனது மூத்த சகோதரராகிய யேசுநாதரும், நான் பூலோகத்தில் அவதரித்து, சர்வ சாம்ராஜ்யத்திற்கும் உண்மையான அரசனாக இருந்து ஆண்டு வர வேண்டுமென்று உத்தரவு செய்திருக்கிறார்கள். மஞ்சூக்களை அடியோடு அழித்துவிட்டு, உண்மையான அரசன் என்ற முறையில் ஏகாதி பத்தியத்தை வீகரித்துக் கொள்ளவேண்டுமென்றும் எனக்கு தேவாக்கினை பிறந்திருக்கிறது.
மஞ்சூ அரசாங்கத்தின் மீது ஏற்கனவே ஜனங்களுக்கு அதிக அதிருப்தி இருந்தபடியால், அந்த அதிருப்தியிலேயே இந்த இயக்கம் வெகுவிரைவாக வளர்ந்தது. கட்சிக் கொடியின் கீழ் பெரும் படை யொன்றும் திரண்டது. இந்தப் படை பலத்தைக் கொண்டு ஹூங் ஒவ்வொரு பிரதேசமாகக் கைப்பற்றிக் கொள்ளத் தொடங்கினான். சுமார் மூன்று வருஷத்திற்குள் பதினைந்து மாகாணங்கள்-தெற்கு சீனாவும் மத்திய சீனாவின் பெரும்பகுதியும்-இவனுடைய ஆதிக்கத் துக்குட்பட்டு விட்டன. கடவுள் ராஜ்யத்திற்கு நான்கிங் தலை நகரமாயமைந்தது. இங்கிருந்து ஹூங், உத்தரவுக்குமேல் உத்தர வாகப் பிறப்பித்துக்கொண்டு வந்தான். சீன சம்பிரதாயங்களை அனுசரித்து, அரசாங்க நிருவாகமானது புதிய முறையில் மாற்றிய மைக்கப்பட்டது. அபினி தின்பது, மதுபானஞ் செய்வது, விபசாரம் செய்வது இவையெல்லாம் கடுந்தண்ட னைக்குரிய குற்றங்களாகக் கருதப்பட்டன. பெண்கள், தங்கள் கால்களைக் குறுக்கிக் கொள்ளக் கூடாதென்றும், ஆண்கள் தங்கள் தலை மயிரை பின்னலாகத் தொங்கவிட்டுக் கொள்ளக்கூடாதென்றும் உத்தரவுகள் பிறந்தன, ஆண்களைப் போலவே பெண்களுக்கும் எல்லா விஷயங்களிலும் சம உரிமையுண்டென்பது அங்கீகரிக்கப்பட்டது. இந்த உத்தரவு களை யெல்லாம் கண்ட ஜனங்கள், தங்களுக்கு நிச்சயம் விடுதலை கிடைத்து விட்டதாகவே கருதினார்கள். உண்மையில் தைப்பிங் கலகம் ஒருவித விடுதலை இயக்கந்தான். அவன்-ஹூங்-சுதந்திரம், சமத்துவம் என்ற யுத்த முழக்கத்துடன், தேசத்தின் அரசியலைச் சீர்திருத்தவும், பொருளாதார, சமுதாய அமைப்பை புனர் நிர்மாணஞ் செய்யவும் முயன்றான். என்று ஓர் அறிஞன் கூறுகிறான்.
ஆரம்பத்தில் இந்த இயக்கத்தை மஞ்சூ அரசாங்கத்தார் அலட்சியமாகவே கருதி வந்தனர். சில இடங்களில் இந்த இயக்கத்தை அடக்குவதற்காக அனுப்பப்பட்ட அரசாங்கப் படைகள் தோல்வி யுற்றுக் கூடத் திரும்பிவந்தன. இதனால், மஞ்சூ அரசாங்கத்தில் நிருவாக ஊழல் எவ்வளவு இருந்ததென்பது நன்கு புலப்படும். தவிர, இந்தச்சமயத்தில் சீனாவில் தங்களுடைய ஆதிக்கத்தை ஊர்ஜிதம் செய்து கொள்ளவேண்டி போட்டா போட்டி போட்டுக் கொண்டி ருந்த ஐரோப்பிய வல்லரசுகள், ஒரு புறத்தில் கலக இயக்கத்திற்குச் சலுகை காட்டியும் மற்றொரு புறத்தில் மஞ்சூ அரசாங்கத்தோடு பேரம் பேசியும் வந்தன. கலகத்தின் ஆரம்ப காலத்தில் வல்லரசுகள் இப்படி இரண்டு பக்கத்துக்கும் நல்ல முறையில் நடந்துகொண்டு வந்தபோதிலும், பின்னர், சிறிது காலம் நடுநிலைமை வகித்துக் கொண்டிருந்துவிட்டு, தைப்பிங்குகளால் தங்களுடைய வியாபார உரிமைகளுக்குப் பாதகம் ஏற்படக் கூடுமென்று தெரிந்ததும், இவர்களை அடக்கிப்போட மஞ்சூ அரசாங்கத்திற்குத் துணை புரிந்தன. மஞ்சூ அரசாங்கத்திடமிருந்து அநேக சாதகங்களை யடைவதற்கு இப்படித் துணை செய்வதும் வல்லரசுகளுக்கு அவசியமாயிருந்தது.
அந்நியர்களுடைய இந்தத் துணையுடன் மஞ்சூ அரசாங்க மானது, தைப்பிங் படைகளை, அவை ஆக்கிரமித்துக் கொண்டி ருந்த பிரதேசங்களிலிருந்து விரட்டியடித்தது. 1864-ஆம் வருஷம் நான்கிங் நகரம் திரும்பவும் கைப்பற்றிக் கொள்ளப்பட்டது. இதிலிருந்து ஜனங்களுடைய ஆதரவும் இந்த இயக்கத்திற்கு வரவரக்குறைந்துகொண்டு வந்தது. பின்னர் க்ஷீணதசையடைய வேண்டியதுதானே? இயக்கத்தின் தலைவன், தேவ குமாரனான ஹூங், அதே வருஷம் விஷமுண்டு இறந்துவிட்டான். இதற்குப் பிறகு இரண்டு வருஷமாயிற்று, இந்த இயக்கத்தை அடியோடு அடக்கு வதற்கு. ஏனென்றால், தைப்பிங்குகள் தங்களுடைய தெய்விக ஆட்சிக் காலத்தில் சுமார் அறுநூறு நகரங்களைக் கைப்பற்றிக் கொண்டு ஆதிக்கஞ்செலுத்தி வந்தார்கள். இவைகளை ஒவ்வொன் றாக மீட்டு, அரசாங்கத்திற்கு எதிர்ப்பில்லாமற் செய்ய இரண்டு வருஷ காலம் பிடித்தது. 1866-ஆம் வருஷத்தோடு கடவுள் ராஜ்யம் அதமித்துவிட்டது.
இந்த தைப்பிங் இயக்கமானது, சீன சமுதாய வாழ்வில் ஒரு பெரிய கலக்கத்தை உண்டுபண்ணி விட்டது. சுமார் இரண்டு கோடி ஜனங்கள், இந்த இயக்கத்தின் விளைவாக, யமலோக யாத்திரை சென்றார்கள். இது தவிர, பொருட்சேதம் ஏராளம். இந்த இயக்கத் தினால் மஞ்சூ அரசாங்கத்தின் பலவீனம் நன்றாகப் புலப்பட்டது. இந்தப் பலவீனம், ஐரோப்பிய வல்லரசுகளின் ஏகாதிபத்திய ஆசையை வளர்த்தது. இந்த ஆசைத் தீயிலிருந்து உடன் படிக்கைகள் என்ற பெயரால் எத்தனை தளைகள் உருப்பெற்று சீனாவைச் சுற்றிக் கொண்டன! சீனர்களுடைய அறிவை மயக்க என்னென்ன சூழ்ச்சிகள் செய்யப்பட்டன.! இவை யெல்லாம் கறை படிந்த கதை. இந்தக் கறை படியப்படிய மஞ்சூ அரசாங்கமும் அழுகிக்கொண்டு வந்தது. அழுகிப் போன உடலில் புரைப்புண்கள் உண்டாவது போல ராஜ்ய மெங்கணும் ரகசிய இயக்கங் களும் பகிரங்கக் கலகங்களும் தோன்றின இப்படிப்பட்ட கலகங்களிலே ஒன்றுதான் மேலை நாட்டாரால் பிரமாதப்படுத்திச் சொல்லப்படுகிற பாக்ஸர் கலகம்.1 இந்தக் கலகத் திற்கு நெய்வார்த்து வளர்த்து, அதே சமயத்தில் மஞ்சூ அரசாங்க விருட்சத்தின் அடிவேரில் வெந்நீரை ஊற்றி, அந்த விருட்சத்தை அடியோடு வீழ்த்தியவள் ஒரு பெண்! ஆம், பெண்ணுருவந்தான்!
யெஹோனலா2 என்ற இயற்பெயருடைய இவள், ஷீன் பெங்3 என்ற மன்னன் ஆண்டு கொண்டிருக்கையில், அவனுடைய வைப் பாட்டியாக அரண்மனையின் அந்தப்புரத்திற்குள் வந்து நுழைந்தவள். வெகு சீக்கிரத்தில், அரசனை தன் அழகினால் வசப்படுத்திக் கொண்டாள்; பிறகு சொற்ப காலத்திற்குள், தன் அபார சாமர்த் தியத்தினால் ராஜ்யாதி காரமனைத்தையும் தன் வசப்படுத்திக் கொண்டுவிட்டாள். சுமார் நாற்பத்தேழு வருஷகாலம் இவளுடைய சர்வாதிகாரமே நிலவியது. இவள், அரண்மனைக்குள் புகுந்த பொழுது, ஷீன் பெங் மன்னனுக்குச் சொந்த மனைவியும் சுமார் ஆறுவயதுள்ள ஒரு மகனும் இருந்தார்கள். அந்த மகனிடம் இவள் - யெஹோனலா - தாயன்பு செலுத்தினாள்; தாயாகவே நடந்து கொண்டாள்.
ஷீன் பெங் மன்னன் 1861-ஆம் வருஷம் ஆகட் மாதம் இறந்து போனான். அடுத்தபடி பட்டத்திற்குரியவன், அவனுடைய ஆறுவயது மகன். ஆனால் அவனுக்கு வயதாகவில்லை. எனவே, யெஹோனலா, அந்தச் சிறுவனுடைய சொந்தத் தாயாரும் தானும் கூட்டு ரீஜெண்ட் களாயிருந்து ராஜ்ய விவகாரங்களை நடத்தி வருவதென்று ஏற்பாடு செய்து அதன் பிரகாரம் ஒரு பிரகடனத்தையும் வெளியிடச் செய்தாள். அதே சமயத்தில் தன் பெயரைத் த்ஸு ஹ்ஸி1 என்று மாற்றி வைத்துக்கொண்டாள். இதுதான் இவளுடைய பட்டப் பெயர். இந்தப் பெயராலேயே, இவள் பின்னர் அழைக்கப் பட்டு வந்தாள். முதிய புத்தர்1 என்றும் இவளை அழைப்பதுண்டு.
ஷீன் பெங்கின் சொந்த மனைவி, கூட்டு ரீஜெண்ட்டா யிருந்த போதிலும், ராஜ்ய விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கியே இருந்தாள். இதனால் த்ஸு ஹ்ஸிக்கு, எல்லா அதிகாரங்களையும் தானே செலுத்திக் கொண்டு போகக்கூடிய நல்ல வாய்ப்பு கிட்டியது. விட்டுவிடுவாளா? அதிகார ஆசை, எப்பொழுதுமே வளர்ந்து கொண்டு போகும் தன்மையுடையதல்லவா? ஆனால் சிறிது காலம் வரை, தனக்கு அதிகார ஆசை ஏதும் இல்லையென்கிற மாதிரி நடித்து வந்தாள்.
இப்படியிருக்கையில், ஷீன் பெங்கின் மகனுக்குப் பட்ட மேற்பதற்குரிய வயது வந்தது. அவனை, 1873-ஆம் வருஷம் டுங் சீ2 என்ற பட்டப் பெயர் கொடுத்து அரசு கட்டிலில் அமர்வித்தாள் த்ஸு ஹ்ஸி. அவனுக்கு விவாகத்தையும் செய்து வைத்தாள். வாழ்க்கைப் பட்ட பெண் ஆ லூ டே.
நாட்டு மக்களின் நல்லெண்ணத்தைச் சம்பாதித்துக் கொள்வதற் காகவே த்ஸு ஹ்ஸி, டுங் சீயை அரசபீடத்தில் அமர்வித்தாள். அதே சமயத்தில், அதிகார கடிவாளம், தன் கை நழுவிப் போய்விடாதபடி பார்த்துக் கொண்டாள். இதற்காக, டுங் சீயின் கவனத்தைச் சிற்றின்ப விஷயங்களில் திருப்பி விட்டாள். அவனும் அரச தன்மைகளை அடியோடு இழந்தவனாய், கீழ்மக்களோடு உறவு கொண்டாடி வந்தான். சொற்ப காலத்திற்குள் அவன் உடல் நலமும் குன்றிக் கொண்டு வந்தது. போதாக் குறைக்கு அம்மையும் வார்த்தது. பட்டமேற்ற இரண்டாவது வருஷத்திலேயே அவன் ஆயுளும் முடிந்தது (1875). அப்பொழுது ஆ லூ டே கர்ப்பவதி.
அடுத்தாற்போல் ஆ லூ டே அல்லது அவளுக்குப் பிறக்க விருக்கும் குழந்தை பட்டத்திற்கு வரவேண்டும். ஆனால் த்ஸு ஹ்ஸி, இதற்கு இடங்கொடுக்கவில்லை. தன்னுடைய சகோதரி ஒருத்தியின் நான்கு வயது ஆண் குழந்தையைப் பட்டத்திற்குரியவனாக்கினாள். அந்தக் குழந்தை, அரசு கட்டிலில் அமர்வதற்குரிய வயதையடையும் வரையில் தானே ரீஜெண்ட்டாயிருந்து ஆண்டுவரலாமல்லவா? அப்படியே ஆண்டும் வந்தாள்.
அந்தக் குழந்தையைப் பட்டத்திற்குரியவனாக்கிய அதே வருஷத்தில் - 1875-ஆம் வருஷத்தில்- ஆ லூ டேயும் இறந்துவிட்டாள். அவளோடு அவள் வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்துவிட்ட தென்பதைச் சொல்லவேண்டுமோ? ஆ லூ டே இறந்துபோனதற்கு த்ஸு ஹ்ஸிதான் காரணமென்று எல்லோரும் சொல்லிக் கொண்டார்கள்.
பிள்ளைப் பருவத்தில் பட்டத்திற்குரியவனாக்கப்பட்டவன், பத்தொன்பதாவது வயதில்- 1889-ஆம் வருஷம் - ஆளுந்தகுதி பெற்று அரியணையில் அமர்ந்தான். இவனது பட்டப் பெயர் குவாங் ஷூ.1 த்ஸு ஹ்ஸி, ராஜ்ய நிருவாகப் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டு, பீக்கிங் நகரத்திற்கு வெளிப் புறத்திலுள்ள ஓரிடத்தில் தனியாக வசித்துவரத் தொடங்கினாள். ஆனால் இவளுடைய அதிகார ஆசையானது, இவளை ஓய்வெடுத்துக் கொள்ளவிடவில்லை. குவாங் ஷூ மன்னனை, அவன் இஷ்டத்திற்கு ஆளவிடாமல், தன் இஷ்டத்திற்கு ஆளும்படி செய்து வந்தாள்,. அவனும் சுயமாக ஏதும் செய்யமுடியா மல், இவள் ஆட்டு வித்தபடி ஆடிவரவேண்டிய நிர்ப்பந்தத்திற் குட்பட்டிருந்தான். இப்படிச் சுமார் ஒன்பது வருஷகாலம் கழிந்தது.
இந்தக் காலத்தில் குவாங் ஷூ வின் மனம் மெது மெதுவாக மாறி வந்தது. முன்னேற்றகரமான கருத்துக்களைக் கொண்ட நூல் களைப் படித்துவந்தான். சீர்திருத்தவாதிகளான சிலருடைய தொடர்பும் இவனுக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக, ராஜ்ய நிருவாகத்தில் அநேக மாற்றங் களைச் செய்ய விரும்பினான்; தன் விருப்பத்தைச் செயல்படுத்தவும் துணிந்தான். 1898-ஆம் வருஷம், ராஜ்ய நிருவாக சம்பந்தமான அநேக சீர்திருத்த உத்தரவுகளை ஒன்றன்பின் ஒன்றாய்ப் பிறப்பித்து வந்தான். த்ஸு ஹ்ஸியைக் கலந்துகொள்ளாமல் இப்படிச் செய்தான். என்ன துணிச்சல்?
இதே சமயத்தில், த்ஸு ஹ்ஸிக்கு விரோதமாகச் சில சூழ்ச்சிகள் நடைபெற்றன. இவளைக் கொன்று தீர்த்துவிடுவதென்று சிலர் கங்கணம் கட்டிக் கொண்டார்கள். இவைகளை ஒருவாறு உணர்ந்து கொண்டாள் த்ஸு ஹ்ஸி. கூடவே, குவாங் ஷூவின் சீர்திருத்த உத்தரவுகள் நடைமுறைக்கு வராதபடி செய்யத் தீர்மானித்தாள். எனவே, தனக்கு விரோதமாக நடைபெற்றுவரும் சூழ்ச்சியில், குவாங் ஷூ சம்பந்தப் பட்டிருப்பதாகச் சொல்லி, அவனைத் தனியாக ஓரிடத்தில் சிறைமாதிரி வைத்து விட்டாள்; தனக்கு விரோதமாகச் செய்யப்பட்ட சூழ்ச்சிகளையும் பயனற்றுப் போகும்படி செய்து விட்டாள்.
தனியே வைக்கப்பட்ட குவாங்ஷூ, சுமார் பத்து வருஷத்திற்குப் பிறகு 1908-ஆம் வருஷம் நவம்பர் மாதம் பதினான்காந் தேதி, தனிமையிலேயே இறந்துவிட்டான். இவன் இறந்தது விடுபடாத ஒரு புதிர். ஆனால் மறு நாளே (15- 11- 1908) த்ஸு ஹ்ஸியும், தனது அரண்மனையில் இறந்து கிடந்தாள். அப்பொழுது இவளுக்கு வயது எழுபத்து மூன்று.
த்ஸு ஹ்ஸி, மகா பிடிவாதக்காரி; தான் என்ற அகம்பாவம் படைத்தவள்; புதுமையை விரும்பாதவள். அவர்களுடைய துவேஷத்திற்கும் ஆளானாள். தனது கடைசி மூச்சு இருக்கிறவரை சிறிதுகூட உடல் சோர்வோ, மனத் தளர்ச்சியோ அடையாமல் அரச காரியங்களைக் கவனித்து வந்தாள். இவள் மூன்று தடவை, அதாவது 1862முதல் 1873 வரையிலும் , 1875 முதல் 1889 வரையிலும், 1898 முத 1908 வரையிலும் ரீஜெண்ட்டா யிருந்தாளென்று சம்பிரதாயமாகச் சொல்வதுண்டு. ஆனால் ரீஜெண்ட்டாயில்லாதிருந்த காலத்திலும், மேலே சொன்னபடி மொத்தம் சுமார் நாற்பத்தேழு வருஷகாலம், இவள் இஷ்டப்படியே ராஜ்ய விவகாரங்கள் நடைபெற்று வந்தன.
த்ஸு ஹ்ஸி தான் இறந்து போவதற்கு முந்தின நாள், அதாவது குவாங் ஷூ இறந்து போன அன்று, பூ யி1 என்ற மூன்று வயதுடைய ஓர் அரசிளங்குமரனை வரவழைத்து, அவனுக்குச் சக்ரவர்த்திப் பட்டம் சூட்டி அவனுடைய தகப்பனை ரீஜெண்ட்டாக நியமித்தாள். பூ யி, உடனே ஷூவான் டுங்2 என்ற பட்டப் பெயருடன் சிங்கா தனத்தில் அமர்த்தப் பட்டான். ஆனால் இவன் ஆளவேயில்லை. 1912-ஆம் வருஷத் தொடக்கத்தில் குடியரசு ஏற்பட்டதும் சம்பிரதாய மாக முடி துறந்து விட்டான். த்ஸு ஹ்ஸி யுடன் மஞ்சூ வமிச ஆட்சி முடிந்துவிட்டதென்று சொல்ல வேண்டும்.3
பொதுவாகச் சுமார் முந்நூறு வருஷத்து மஞ்சூ ஆட்சியானது அந்தக் காலத்தவருடைய மதிப்புப்படி சிறப்புடையதாக இருந்த தென்றே சொல்லவேண்டும். உள் நாட்டில் ஏதோ ஒருவிதமான அமைதி இருந்தது; எல்லைப்புறங்களில் அதிகமான பாதுகாப்பு இருந்தது. ஜனங்களுடைய வாழ்க்கை அந்தது உயர்ந்து வந்தது. நகரங்களில் பணக்கார வகுப்பினர் அதிகப்பட்டு வந்தனர். இவர்கள் மூலமாகக் கலையழகு நிரம்பிய பொருள் களுக்கும் ஆடம்பர வதுக்களுக்கும் அதிக கிராக்கி உண்டாயிற்று. குடியானவர் களுடைய வாழ்க்கை எப்பொழுதும் போல் ஒரே விதமாக இருந்தது. இவர்களுடைய வாசதலங்கள் ஏறக்குறைய பொந்துகள் மாதிரி இருந்தன. பணக்காரர்களுடைய வீடுகளோ ஆடம்பரமாகவும், காற்று வாட்டமுள்ளதாகவும் சித்திர வேலைப்பாடுகள் நிறைந்த தாகவும் இருந்தன…. பணக்காரர்கள் பகட்டான பட்டாடைகளை உடுத்திக்கொண்டு போனார்கள். படித்தவர்கள், தங்கள் கை நகங்களை வளர்த்துக் கொண்டு, கைப்பட வேலை செய்வதில் தங்கள் வெறுப்பைக் காட்டிக் கொண்டார்கள். பெண்கள், பட்டா டைகளை அணிந்துகொண்டும், காகிதத்தினால் செய்யப் பட்ட பூக்களினாலும் நகைளினாலும் தங்களை அலங்கரித்துக் கொண்டும் போனார்கள்.. ஜனங்களுடைய முக்கியமான ஆகாரம் அரிசி. இதனோடு இன்னும் சில மாமிச வகைகளைச் சேர்த்துச் சாப் பிட்டார்கள்.. கலை, இலக்கியம் முதலியன வளர்ந்தன. பெரிய புத்தக சாலைகள் பல திறக்கப்பட்டன.
அடங்கிவந்த ஐரோப்பியர்
சீனாவுக்கு வந்த ஐரோப்பியர்களை, தரை வழியாக வந்தவ ரென்றும் கடல் வழியாக வந்தவரென்றும் இரு வகையினராகப் பிரிக்கலாம். ஐரோப்பிய வல்லரசுகளுக்கு நாடுபிடிக்க வேண்டிய ஆசையும் அவசியமும் ஏற்பட்டு, அவை காரணமாக பதினைந்தாவது நூற்றாண்டில் கொலம்ப, கிழக்குப் பக்கமுள்ள நாடுகளைக் கண்டுபிடிப்பதாகப் புறப்பட்டு மேற்குப் பக்கமாகப் போனானல்லவா! அதற்குப் பின்னர், சீனாவை நோக்கி வந்த ஐரோப்பியர்கள் கடல் மார்க்கத்தையே உபயோகித்தார்கள். அதுவரை-அதாவது பதினைந் தாவது நூற்றாண்டுவரை - ஐரோப்பியர்கள் மத்திய ஆசியப் பிரதேசங்களின் வழியாகவே சீனாவுக்கு வந்து கொண்டிருந்தார்கள். இப்படி வந்தவர்களில் பெரும்பாலோர் வியாபாரிகள்; சிறுபான்மை யோர் கிறிதுவப் பாதிரிமார்கள். இவர்கள் நடை பிரயாணி களாகவே வரவேண்டியிருந்ததனால், ஆங்காங்குத் தங்கி அந்தந்த நாட்டு மக்களோடு பழகவும், அவர்களுடைய கலாசாரங்களை அறிந்து கொள்ளவும் சந்தர்ப்பம் பெற்றார்கள். சரக்குப் பிடிக்கிற இடத்தில் வியாபாரிகள் நாணயமாகவும், மதத்தைப் பிரசாரம் செய்கிற இடத்தில் பாதிரிமார்கள் மரியாதையாகவும் முறையே நடந்து கொண்டார்கள். இவர்கள் பொருள்களையாகட்டும் அறிவையா கட்டும், மரியாதையாகக் கொடுத்து மரியாதையாக வாங்கத் தெரிந்து கொண்டிருந்தார்கள். இதனால் சென்ற இடமெல்லாம் இவர்களுக்குச் சிறப்பு ஏற்பட்டது. அந்தந்த நாட்டு அரசர்களும் இவர்களை ஆதரித் தார்கள். சீனாவிலும் இவர்களுக்கு இந்த ஆதரவு குறையாமலே இருந்தது. குப்ளாய்கான், மார்க்கோ போலோவை பதினேழு வருஷகாலம் தன் சேவையில் அமர்த்திக் கொண்டிருந் தானல்லவா? மஞ்சூ வமிசத்தின் முதல் மன்னனாகிய ஷூன் சி, ஆடம் ஷால்1 என்ற ஜெர்மானிய வான சாதிரியைக் கொண்டு புதிய பஞ்சாங்க மொன்றைக் கணிக்கச் செய்தான்; அவனையே தனது நட்சத்திர ஆபீசுக்குப் பொறுப்புள்ள அதிகாரியாகவும் நியமித்தான். காங் ஹ்ஸி மன்னன் , பெர்டினாந்து வெர்பீட்2 என்ற பெல்ஜிய பண்டி தனிடம். விஞ்ஞான சாதிரமும் கணித சாதிரமும் கற்றுக் கொண்டான். இவனுடைய உத்தரவின் பேரில் மேற்படி வெர்பீட் என்பவனும் பிரைர்ட்3 என்ற பெயின் தேசத்து விஞ்ஞான பண்டிதனும் சேர்ந்து, பீக்கிங் நகரத்தில் பெரிய தூரதிருஷ்டிக் கண்ணாடியை நிர்மாணம் செய்தார்கள். காங் ஹ்ஸி மன்னன், தனது ராஜ்யத்தில் சுற்றுப் பிரயாணம் செய்கிறபோது இந்த இரண்டு வான நூற்புலவர்களையும்-இருவரும் பாதிரிமார்கள்தான்- கூடவே அழைத்துக் கொண்டு போவான். இவர்களைக் கொண்டு சீனா முழுவதையும் சர்வே செய்வித்தான். இதன் விளைவாக ரேகாம்ச, அட்சாம்சங்களோடு கூடிய சீனாவின் பூகோள படம் (மாப்) ஒன்று தயாரிக்கப்பட்டது. இதுதான் சீனாவின் பிற்காலத்துப் பூகோள படங்களுக் கெல்லாம் மூலாதாரமாயிருந்தது.
மாட்டியோ ரிக்கி1 என்ற இத்தாலியப் பாதிரி ஒருவன். இவன், ரோமாபுரியில் கணித சாதிரமும் வான சாதிரமும் பயின்றவன்; பல பாஷா விற்பன்னன். இவன் (போர்த்துகேசியர் வசமிருந்த) மாக்கோ2 தீவுக்கு 1582-ஆம் வருஷம் வந்தான். அடுத்த வருஷம் இவனும் ருக்கேரிய3 என்ற பாதிரியும், காண்ட்டன் நகரத்திற் கருகிலுள்ள சாவோசிங்4 என்ற இடத்தில் வசிக்க அனுமதிக்கப் பட்டனர். இவர்கள் முதலில் கிறிதுவமதப் பிரசாரம் செய்யாமல், பௌத்த சந்நியாசிகள் மாதிரி உடை தரித்துக் கொண்டு, சீன பண்டி தர்களுடையவும் அதிகாரிகளுடையவும் நட்பைப் பெற்றார்கள்; பெற்றுக்கொண்ட பிறகே மெதுவாகக் கிறிதுவமதப் பிரசாரத்தை நுழைத்தார்கள். இந்தப் புதிய தந்திரம் சுலபமாக வெற்றி பெற்றது. சிறிது காலங்கழித்து ரிக்கி பாதிரி, சந்நியாசி உடைக்குப் பதில் பண்டித உடையைத் தரித்துக் கொண்டான். இதனால் இவனுடைய அந்தது உயர்ந்தது. கடைசியில் 1601-ஆம் வருஷம் பீக்கிங் நகரத் திலேயே வசிக்கவும் பிரசாரம் செய்யவும் அனுமதிக்கப் பட்டான். அரசாங்கத்தார் இவனுக்கு, வசிக்க ஒரு வீடும் செலவுத் தொகையும் கொடுத்து வந்தனர். இவனுடைய கணீரென்ற குரலும், புராதன சீன கிரந்தங்களிலே இருந்த பயிற்சியும் விஞ்ஞான, இயந்திர சாதிரங்களின் அறிவும், எல்லா வற்றிற்கும் மேலாக அனைவரிடத் திலும் மரியாதை தெரிந்து பழகுகிற சாமர்த்தியமும், இவை யாவும் சேர்ந்து, பீக்கிங் கில் வசித்துக் கொண்டிருந்த பிரமுகர்களுக்கு ஒரு பிரமிப்பை உண்டுபண்ணின. ஹான்லின் கலைக் கழகத்தைச் சேர்ந்த5 இரண்டு அங்கத்தினர்களும் ஓர் அரசிளங்குமரனும், இவனுடைய பிரசாரத் தின் பயனாகக் கிறிதுவர்களானார்கள்.
இன்னும் பல வழிகளிலும் இந்தக் கிறிதுவப் பாதிரி மார்கள் சீன மன்னர்களுக்கும் சீன அரசாங்கத்திற்கும் உதவி செய்து கொண்டிருந் தார்கள். ஒன்று, வைத்தியத் துறையில் பாதிரிமார் பலர் சிறந்த வைத்திய நிபுணர்களாயிருந்தார்கள். புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்ட வைத்திய முறைகளை இவர்கள் கையாண்டார்கள். மற்றொன்று, ராஜதந்திர விவகாரங்களில்… உடன்படிக்கைகள் முதலியவற்றை லத்தீன் பாஷையில் சாமர்த்தியமாக எழுத இவர் களுக்குத் தெரிந்திருந்ததனால், சீனாவுக்கும் ருஷ்யாவுக்கும் மத்திய தர்களாயிருந்து சமரஸம் செய்துவைக்க இவர்களால் முடிந்தது. கடைசியாக, இந்தப் பாதிரிமார்கள், பீரங்கிகளைத் தயார்செய்து கொடுப்பதில் நிபுணர்களாயிருந்தார்கள். கட்சிப் பிரதி கட்சிகள் பாராமல் எல்லோருக்கும் இந்தப் பீரங்கிகளைத் தயார் செய்து கொடுத்தார்கள். இங்ஙனம் கிறிதுவ மதப்பிரச்சாரகர்கள் பீரங்கிகள் செய்து கொடுப்பதில் தலைசிறந்தவர்களாயிருந்தார் களென்பது சிறிது ஆச்சரியமாயிருக்கலாம். ஆனால் பத்தொன்ப தாவது நூற்றாண்டுப் பாதிரிமார்கள், தங்கள் பிரசாரத்திற்குப் பீரங்கிகளின் துணையை நாடியது போல் பதினேழாம் நூற்றாண்டுப் பாதிரிமார்கள் நாடவில்லை.
கடல் மார்க்கமாக வந்தவர்களில் முதன்மையானவர் போர்த்துகேசியர் (1514). பின்னர் பெயின்காரர் (1575), ஹாலந் துக்காரர் (1604), ஆங்கிலேயர் (1637), பிரெஞ்சுக்காரர் (1660), அமெரிக்கர் (1784); ஆக இப்படி ஒருவர்பின் ஒருவராக வந்தனர். ருஷ்யாவுக்கும் சீனாவுக்கும் ஏற்கனவே தரை மார்க்கமாக 1567-ஆம் வருஷத்திலிருந்து தொடர்பு இருந்துவந்தது. இவர்கள் தவிர, இத்தாலியர், ஜெர்மானியர், பெல்ஜியர், தென்னமெரிக்கர் முதலிய பலரும் அவ்வப்பொழுது ஏகதேசமாகச் சீனாவுடன் வியாபாரத் தொடர்பு வைத்துக் கொண்டிருந்தார்கள்.
இங்ஙனம் கடல் மார்க்கமாக வந்த மேனாட்டாருக்கு ஒரே ஒரு நோக்கந்தான் இருந்தது. அதுதான் கொள்ளை கொள்ளையாக வியாபாரம் செய்யவேண்டுமென்பது. பதினாறாவது நூற்றாண்டில் சீனாவுக்கு வந்த போர்த்துகேசியர் மிகவும் வெட்கக்கேடான முறை யில் நடந்து கொண்டார்கள். அவர்கள் எல்லாச் சட்டங்களையும் மீறினார்கள்; ஜனங் களுடைய கோபத்தைக் கிளப்பி விட்டார்கள். சீன அதிகாரிகளின் உத்தரவுக்குக் கீழ்ப்படிய மறுத்தார்கள். ஒரு சமயம் ஒரு சீனன் தங்களை ஏமாற்றிவிட்டான் என்று சொல்லி, அடுத்தாற்போலிருந்த ஒரு கிராமத்திற்கு ஆயுதபாணிகளாகத் தங்களிலே சிலரை அனுப்பி, கொள்ளை யடிக்கச் செய்தார்கள்; அங்கிருந்த சில திரீகளையும் இளம் பெண்களையும் தூக்கிக் கொண்டு வரச்செய்தார்கள். இப்படிப்பட்ட காரியங்களினால் அவர்கள், ஜனங்களுடைய கோபத்திற்காளானார்கள். இதன் விளைவாகச் சுமார் எண்ணூறு போர்த்து கேசியர்கள் கொலை செய்யப்பட்டார்கள்; அவர்களுடைய கப்பல்களில் சுமார் முப்பத் தைந்து எரிக்கப்பட்டன.
இந்தக் காலத்திலிருந்தே சீனாவில் அந்நியர்கள் மீது துவேஷம் துளிர்க்கத் தொடங்கிவிட்டது. அந்நியர்களைக் கூடியமட்டில் வரவொட்டாமல் தடுப்பது, அல்லது அவர்களை ஓரிடத்தில் ஒதுக்கி வைப்பது என்று சீனர்கள் தீர்மானித்தார்கள். இதே சமயத்தில் அந்நிய நாகரிகத்திற்கும் கலைகளுக்கும்-சிறப்பாக ஐரோப்பிய நாகரிகத்திற்கும் கலைகளுக்கும் - விரோதமாகத் தங்கள் மனக்கதவையும் பூட்டிக்கொண்டு விட்டார்கள். இங்ஙனம் தங்கள் வியாபாரக் கதவையும் மனக் கதவையும் பூட்டிக்கொண்டு விடுவது சீனர்களுக்குச் சாத்தியமாகவே இருந்தது. ஏனென்றால், சீனாவில், மனிதனுடைய அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான எல்லாப் பொருள்களும் உற்பத்தியாயின. அவர்களுடைய வாழ்க்கையோ இயற்கையோடியைந்த வாழ்க்கை. செயற்கை இயந்திரங் களின் உதவியில்லாமலே அழகான அநேக பொருள்களை அவர்கள் தயாரித்துக் கொண்டார்கள். வெளி நாடுகளிலிருந்து சாமான்கள் வந்துதான் பிழைப்பு நடக்கவேண்டுமென்ற அவசியமே அவர்களுக்கு உண்டாகவில்லை. அவர்களுடைய நாகரிகமோ, லௌகிகத்தையும் பாரமார்த்திகத்தையும் இணைத்துச் செல்லும் தன்மையது. ஐரோப்பியரால் கொண்டு புகுத்தப்பட்ட விஞ்ஞான சாதிரத்தின் துணை பெற்று அவர்களுடைய வாழ்க்கை பண்படவேண்டிய நிலையில் இல்லை. முதன் முதலாக வெடிமருந்தைக் கண்டுபிடித்த வர்கள் சீனர் களேயானாலும் அவர்கள், அதைத் திருவிழாக் காலங் களிலேதான் உபயோகப்படுத்தினார்களே தவிர, சத்துருக்களைக் கொல்வதற்காக அல்லவென்ற ஒரு விஷயத்தைக் கொண்டே அவர்களுடைய நாகரிகம் எவ்வளவு பண்பாடடைந்திருந்ததென்பதை நாம் சொல்லவேண்டிய தில்லை. விஞ்ஞான சாதிரமென்றும், இயந்திரப் பயிற்சியென்றும் மேனாட்டார் பெருமையடித்துக் கொள்ளலாம்; ஆனால் இவை யெல்லா வற்றையும் விட மேலான தரும சாதிரத்திலும், மனித வாழ்க்கையின் லட்சியமென்ன என்பதைக் கண்டு தெளிகிற பயிற்சியிலும் சீனர்கள் சிறந்தவர்களா யிருந்தார்கள்.
இத்தகைய பொருட் பெருக்கும் கலைப்பண்பும் நிறைந்த சீனா, ஐரோப்பாவிடமிருந்து ஒன்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஐரோப்பா, சீனாவை எதிர்பார்க்கவேண்டியிருந்தது. ஏனெனில் பதினெட்டாம் நூற்றாண்டுத் தொடக்கத்திலிருந்தே அங்கு இயந்திரப் பொருள்களின் உற்பத்தி அதிகமாகிக் கொண்டு வந்தது. இந்த அதிகப் பொருள்களுக்கு வெளிநாடுகளில் மார்க்கெட்டுகள் தேடவேண்டியது அவசியமாயிருந்தது. அதிகமான வி தீரணமும் ஜனத்தொகையுமுடைய இந்தியாவிலும் சீனாவிலும் சாமான்களை ஏன் கொண்டு திணிக்கக் கூடாது, அப்படித் திணிப்பதற்கு அவசிய மான அதிகார பலத்தை ஏன் பெறக்கூடாது என்று தொழில் முதலாளிகள் கேட்டார்கள். இது தவிர, சீனாவில் அபரிமிதமாக உண்டாகும் பட்டும் தேயிலையும், அப்பொழுது வெகு வேகமாக வளர்ந்து கொண்டுவந்த முதலாளி வர்க்கத்தின் பகட்டான வாழ்க்கைக்குத் தேவையாயிருந்தது. இவைகளை வரவழைத்து விற்றவர்களுக்கு ஏராளமான லாபம் கிடைத்துவந்தது. உதாரண மாக 1691-ஆம் வருஷத்தில் கீழை நாட்டிலிருந்து கொண்டுவரப் பட்ட சுமார் நாலாயிரம் ரூபாய் பெறுமான பட்டு ஏறக்குறைய பன்னிரண்டாயிரம் ரூபாய்க்கு விற்றது. இங்ஙனமே தேயிலை வியாபாரத்திலும் நல்ல லாபம் கிடைத்தது. சீனாவிலிருந்து 1769-ஆம் வருஷத்திலிருந்து 1772-ஆம் வருஷம்வரையில் சுமார் நான்கு வருஷகாலத்தில் காண்ட்டன் துறைமுகத்திலிருந்து மட்டும் இங்கிலீஷ் கப்பல்களின் மூலமாக 1,06,19,900 பவுண்டுகளும், மற்ற பிரெஞ்சு, டச்சு முதலிய நாட்டுக் கப்பல்களின் மூலமாக 1,23,79,000 பவுண்டு களுமாகத் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது. அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் தேயிலை ஒரு பவுண்ட், ஐந்து பவுன் முதல் பத்து பவுன்வரை விற்கப்பட்டது! இத்தகைய காரணங்களினால் பலாத் காரத்தை உபயோகித்தாவது, சீனாவின் வியாபாரக் கதவையும் மனக் கதவையும் திறக்கவேண்டியது ஐரோப்பாவுக்கு அவசியமா யிருந்தது.
போர்த்துகேசியர் முதலான ஐரோப்பியர், எப்பொழுது கடல்மார்க்கமாக வந்து சீனாவுக்குள் நுழைந்தனரோ அப்பொழு திருந்தே சீனாவின் அமைதியான வாழ்க்கைக்கும் பொருளாதார சுதந்திரத்திற்கும் ஆபத்து ஆரம்பித்து விட்டதென்று சொல்லலாம். 1514-ஆம் வருஷம் போர்த்துகேசியர் முதன் முதலாகச் சீனாவின் கடலோரப் பிரதேசங்களில் நுழைந்தார்களே அதுமுதல் பதி னெட்டாவது நூற்றாண்டின் கடைசி வரை, ஐரோப்பிய நாட்டார் பலரும் தரைப்பக்கமாகவும், கடற்பக்க மாகவும் சீனாவைச் சுற்றிக் கொண்டனர். இப்படிச் சுற்றிக் கொண்டதோடல்லாமல் மெது மெதுவாக நெருக்கிக்கொண்டும் வந்தனர். பதினெட்டாவது நூற்றாண்டின் கடைசியில் பார்க்கிறபோது, சீனாவின் நிலைமை எப்படி இருந்ததென்றால், மதிற் சுவர்களுடைய ஒருநகரம் முற்றுகை யிடப்பட்டிருக்கிறமாதிரி இருந்தது. வெளியே முற்றுகை யிட்டிருந்தவர்கள், சுவர்களை இடித்துக்கொண்டு உள்ளே நுழையக் கூடிய பலசாலிகளாயில்லை; உள்ளேயிருக் கிறவர்கள், முற்றுகை யிட்டிருக் கிறவர்களை விரட்டியடிக்கத் தீவிரமான முயற்சியும் எடுத்துக்கொள்ள வில்லை. நகரத்தின் மத்தியில் தேவகுமாரன் (அரசன்) மிகக் கம்பீரமாகவும், ஆடம்பரத்தோடும் ஆண்டு கொண் டிருந்தான்; தனக்குச் சமதையான வேறு அரசர்கள் உலகத்திலே இருக்கிறார்கள் என்பதை அங்கீகரிக்க மறுத்துவிட்டான். பீக்கிங் நகரத்திற்கு வந்த ஐரோப்பியப் பிரதிநிதிகளோ, இவனுடைய இந்த உரிமையை - அதாவது தனக்குச் சமதையான அரசர்கள் உலகத்திலே இல்லையென்று சொல்லிக் கொள்வதை - ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார்கள். இதனால், ஐரோப்பிய வல்லரசுகள் தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்ட ஒரு பரபரத் தொடர்புக்குப் புறம்பான தாகவே சீனா இருந்தது. ஐரோப்பியர் ஏதோ சில இடங்களில் அநேக நிர்ப்பந்தங்களுடன் வியாபாரஞ் செய்ய அனுமதிக்கப்பட்டி ருந்தனர்; பரபர உடன்படிக்கையின் பேரிலல்ல; உத்தியோகப் பற்றற்ற முறையில். அதாவது, அரசாங்க அதிகாரிகளின் தயவைப் பொறுத்தே இந்த வியாபாரம் நடைபெற்றுவந்தது.
போர்த்துகேசியரும் பெயின்காரரும் முதலாவதாக வந்தார் களாயினும் அவர்களுடைய வியாபாரம் அவ்வளவு பிரபலமடைய வில்லை. ஏகாதிபத்தியப் பின் பலம் அவர்களுக்கு இருந்தால் தானே? பின்னாடி வந்த ஆங்கிலேயர், அமெரிக்கர் ஆகிய இருவருடைய வியாபாரமும், செல்வாக்கும் விறுவிறென்று வளர்ந்தன. இவைகளை யொட்டினாற்போலவே ருஷ்யர், பிரெஞ்சுக்காரர், ஜெர்மானியர் முதலாயினோருடைய வியாபாரம் நடைபெற்றதென்று சொல்ல வேண்டும். ஆனால் இவர்க ளெல்லோரைக் காட்டிலும் பிரிட்டனுக் குத்தான், சீனாவில், தன் வியாபாரத்தைப் பெருக்கிக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஓர் ஆசிரியன் கூறுகிறான்:-
சிறப்பாக இங்கிலாந்து, மற்ற நாடுகளைக் காட்டிலும் அதிக பொருளுற்பத்தி சக்தியுடையதாக இருந்தது. அங்கு வேலையில்லாத வருடைய எண்ணிக்கை அதிகமாயிற்று; புதிய மார்க்கெட்டுகள் தேவை என்ற கூக்குரல் வலுத்தது. இங்கிலாந்தைப் பொறுத்த மட்டில் சீன வியாபாரமானது, வெளிநாடுகளிலிருந்து பணம் திரட்டிக் கொண்டுவர வேண்டுமென்பதற்காக அல்லாமல், உள் நாட்டில் வேலை யில்லாதவர் களுக்கு வேலை தேடிக் கொடுக்க வேண்டு மென்ற நோக்க முடையதாயிருந்தது.
சீனாவுக்கும் பிரிட்டனுக்கும் எந்தவகையில் வியாபாரத் தொடர்பு ஏற்பட்டது என்பதைப் பற்றிச் சொல்வதற்கு முன்னர், பொதுவாக ஐரோப்பியர்கள் சீனாவில் எந்த விதமாக வியாபாரஞ் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தார்களென்பதைப் பற்றிச் சுருக்க மாகக் கூறுவோம்.
வியாபார நிமித்தம் வந்த ஐரோப்பியர்களை, அழையா வீட்டுக்குள் நுழைந்த சம்பந்திகளாகவே சீனர்கள் கருதினார்கள். மற்றும் ஆரம்பத்தில் வந்த சில வியாபாரிகள், முரட்டுத்தனமாகவும் சீன அரசாங்கத்தைச் சிறிதுகூட மதியாமலும் நடந்து கொண்டார்கள். இதனால் இவர்களுடைய வியாபாரத்திற்குச் சில கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப் பெற்றன. காண்ட்டன் துறைமுகத் திற்குத்தான் ஐரோப்பியர்கள், தங்கள் சரக்குக் கப்பல்களைக் கொண்டுவரலாம். கப்பல்களும் இஷ்டப்படி வரவோ போகவோ கூடாது. ஆற்றங்கரை யோரமாகச் சில கட்டடங்கள் இருக்கும்.1 இந்தக் கட்டடங்களுக்கு ஹாங்குகள் என்று பெயர். அதாவது கிடங்கு (கிட்டங்கி, குதாம்பு) என்று அர்த்தம். இந்த ஹாங்குகளில் ஐரோப்பிய வியாபாரிகள், தங்கள் சரக்குகளைக் கொண்டு இறக்குவார்கள்; மொத்தமாகச் சீன வியாபாரிகளுக்கு விற்பார்கள். இப்படி எல்லா வியாபாரிகளுக்கும் விற்கக்கூடாது. சீன அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்ற குறிப்பிட்ட சில வியாபாரி களுக்கு மட்டுமே விற்கவேண்டும். இந்த வியாபாரி களுக்கு ஹாங்கு வியாபாரிகள் என்று பெயர். (இந்த வியாபாரிகள், நாளாவட்டத்தில், தங்களை ஒரு சங்கமாக அமைத்துக் கொண்டார்கள்) இந்த ஹாங்கு வியாபாரிகளிடமே சரக்குகளை விற்க வேண்டும்; தேவையான சரக்குகளை வாங்கிக்கொள்ள வேண்டும். இவர்கள் மூலமாகவே அரசாங்க அதிகாரிகளுக்குத் தங்கள் குறைநிறைகளைச் சொல்லிக் கொள்ளவேண்டும். காண்ட்டன் நகரத்துக்குள் நுழைந்து ஜனங்களுடன் பழகவோ, வேறு விதமான தொடர்புகள் வைத்துக் கொள்ளவோ கூடாது. இவர்களுடைய -இந்த ஐரோப்பியர்களுடைய - சரக்குகள் பத்திரமாயிருப்பதற்கும், இவர்களுடைய உயிருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாமலிருப்பதற்கும், இவர்களுடைய நன்னடத்தைக்கும் மேற்சொன்ன ஹாங்கு வியாபாரிகளே பொறுப் பாக்கப்பட்டிருந்தார்கள்.
அந்நிய வியாபாரிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த நிபந்தனை களில் முக்கியமானவற்றை, சீன அரசாங்கத்தார் அவ்வப்பொழுது விடுத்துவந்த உத்தரவுகளின் வாயிலாகவே இங்கு வரிசைப்படுத்திக் காட்ட விரும்புகிறோம்.
1. அந்நியர்களுடைய யுத்தக் கப்பல்கள், துறைமுகத் திற்குள் வரக்கூடாது; துறைமுகத்திற்கு வெளியே இருக்க வேண்டும்.
2. சரக்குகளைக் கொண்டுவைத்திருக்கிற கிடங்கு களுக்கு திரீகளை அழைத்துக்கொண்டு வரக்கூடாது. இங்ஙனமே பீரங்கி, ஈட்டி முதலிய ஆயுதங்களெவற்றையும் கொண்டுவரக்கூடாது.
3. ஹாங்கு வியாபாரிகள், அந்நியர்களுக்குக் கடன் பட்டவர்களா யிருக்கக்கூடாது; அதாவது அந்நியர்களிட மிருந்து கடன் வாங்கக் கூடாது.
4. அந்நிய வியாபாரிகள், சீனர்களை வேலையாட் களாக அமர்த்திக் கொள்ளக்கூடாது.
5. அந்நியர்கள் டோலிகளில் ஏறிக்கொண்டு செல்லக் கூடாது. (நடந்தே செல்ல வேண்டும். சீனர்கள், தூக்குவோராக வும் அந்நியர்கள் தூக்கப்படுவோராகவும் இருக்கக்கூடா தென்பதே இந்த விதியின் நோக்கம் போலும்.)
6. (காண்ட்டன்) நதியில் அந்நியர்கள், வேடிக்கைக் காகப் படகுகள் விட்டுக்கொண்டு செல்லக்கூடாது. மாதத்தில் மூன்று நாட்கள் மட்டுமே (அதாவது 8, 18, 28-ஆம் தேதிகளில்) ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பூந்தோட்டத்திற்குச் சிறு சிறு கூட்டத்தினராகச் சென்று உலாவலாம். அப்படிச் செல்கிற போது, கூட ஒரு துவிபாஷியை, அழைத்துச் செல்லவேண்டும். இந்தத் துவிபாஷியே, மேற்படி கூட்டத்தினர் ஏதேனும் தாறுமாறாக நடந்துகொண்டால் அதற்குப் பொறுப்பாளி.
7. அந்நியர்கள், எந்த விதமான மகஜர்களும் எழுதி (சீன அதிகாரிகளிடம்) சமர்ப்பிக்கக் கூடாது. ஏதேனும் தெரி வித்துக் கொள்ளவேண்டி யிருந்தால், ஹாங்கு வியாபாரிகள் மூலமாகவே தெரிவித்துக் கொள்ளவேண்டும்.
8. அந்நிய வியாபாரிகள், தங்கள் சரக்குகளுடன் ஹாங்கு வியாபாரிகளின் கிடங்குகளில் வசித்துக்கொண்டி ருக்கிறபோது, ஹாங்கு வியாபாரி களுக்குக் கட்டுப்படு நடக்கவேண்டும்; அவர்கள் மூலமாகவே சரக்குகளை வாங்க வேண்டும். (மோசக்கார சீனர்களின் வலையில் விழாதபடி அந்நியர்களைக் காப்பாற்றவே இந்த விதி ஏற்படுத்தப்பட்ட தென்று சொல்லப்பட்டது.)
9. வியாபார காலங்களைத் தவிர மற்றக் காலங்களில் அந்நியர்கள் காண்ட்டன் நகரத்தில் வசிக்கக்கூடாது. சரக்கு களை விற்றுவிட்டு, தேவையான சரக்குகளை வாங்கிக் கப்பல் களில் ஏற்றிக்கொண்டதும் உடனே அவரவர்கள் ஊருக்குச் சென்றுவிடவேண்டும்; அல்லது மாக்கோ தீவுக்குச் சென்று விட வேண்டும். (வியாபாரக் கப்பல்கள் துறைமுகத்திற்கு வரு வதாயிருந்தாலும் துறைமுகத்திலிருந்து புறப்படுவதாயி ருந்தாலும், சுங்க வரியாக ஒரு தொகை செலுத்த வேண்டும். புறப்படுகிறபோது, பிரதியொரு கப்பலுக்கும் சுமார் ஆயிரத் தைந்நூறு ரூபாய் சுங்கவரியாக வசூலிக்கப்பட்டது.)
காண்ட்டனில் நடைபெற்று வந்த அந்நியர்களுடைய வியா பாரத்தைக் கவனிப்பதற்கென்று தனியாக ஒரு சீன அதிகாரி நியமிக்கப் பட்டிருந்தான். இவனுக்கு ஹோப்போ1 என்று பெயர். இவன் சக்ரவர்த்தியின் நேரான பிரதிநிதி. ராஜ்யத்திற்கு அதிகமான வருமானத்தைச் சம்பாதித்துக் கொடுப்பது இவனுடைய திறமையைப் பொறுத்திருந்தது. அந்நிய வியாபாரிகள் இவனுடைய தயவுக்கு எப் பொழுதும் காத்துக் கொண்டிருந்தார்கள். இவனுடைய கருணை விரிய விரிய இவனுடைய பணப்பையும் விரிந்தது. இவனுடைய உத்தியோக காலம் மூன்று வருஷந்தான். ஆனால் இந்தச் சொற்பக் காலத்திற்குள் இவன் ஏராளமாகச் சம்பாதித்தான். இந்தச் சம் பாத்தியத்தில் ஒரு பகுதி, பீக்கிங்கிலுள்ள சக்ரவர்த்திக்கும் சென்றது. இதனால்தான் சக்ரவர்த்தி யினால் நேராக நியமிக்கப்பட்டான் போலும்! அது மட்டுமன்று; இவன் மஞ்சூ ஜாதியினனாகவும் இருந் தான். சீன ஜாதியினரை இந்த உத்தியோகத்திற்கு நியமிப்பதில்லை.
பணிய மறுத்த பிரிட்டன்
சீன அதிகாரிகள் விதிக்கும் நிர்ப்பந்தங்களுக்குட்பட்டும் அவர்கள் தயவை அனுசரித்தும் வியாபாரமும் நடத்துவதை அந்நியர்கள் விரும்ப வில்லை. அடிக்கடி இவர்களுக்கும் சீன அதிகாரிகளுக்கும் மனதாபங்கள் ஏற்பட்டுக்கொண்டு வந்தன. இந்த விஷயத்தில் அந்நியர்கள் ஒரு கட்சியினர் போலவே நடந்துவந்தனர். ஆரம்பத்தில் சிறிது காலத் திற்காவது அந்நியர் களுக்குள் இந்த ஒற்றுமை நிலவிவந்தது. சீன அதிகாரிகளோடு நடத்துகிற இந்தப் போராட்டங்களுக்கெல்லாம் முதலில் நின்றவர் பிரிட்டிஷார். ஏற்கனவே சொல்லப்பட்ட காரணங்களுக்காக இவர்கள் முதலில் நிற்க வேண்டியது அவசியமாயிருந்தது. இவர்கள்-பிரிட்டிஷார் -சீன அரசாங்கத்தோடும் நேரான வியாபார ஒப்பந்தம் செய்து கொண்டு அதன் மூலமாகத் தங்கள் வியாபாரத்தைப் பெருக்கவும் , ஊர்ஜிதம் செய்து கொள்ளவும் முயன்றனர்.
1715-ஆம் வருஷம், பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியார். சீனாவில் தங்களுடைய வியாபாரத்தைத் தொடர்ந்தாற்போல் நடத்திக்கொண்டு வரவேண்டுமென்பதற்காக, காண்ட்டன் துறை முகப்பட்டினத்தில் சாசுவதமான ஒரு தாபனத்தை நிறுவத் தீர்மானித்தனர். இதற்காக மேலே சொன்ன ஹோப்போ என்ற அதிகாரியுடன் ஒப்பந்தம் செய்துகொண்டனர். இந்த ஒப்பந்தம் காகிதத்தளவோடுதான் நின்றதே தவிர, அனுஷ்டானத்தில் கொண்டு வரப்படுவதற்குச் சீன அதிகாரிகள் எல்லாவித இடைஞ்சல் களையும் செய்து வந்ததாக ஆங்கிலேய வியாபாரிகள் கூறினார்கள். மேலே சொல்லப்பட்ட நிர்ப்பந்தங்களுக்கிடையே சில வருஷ காலம் வியா பாரம் நடைபெற்று வந்தது. இந்த நிர்ப்பந்தங்களை விலக்க வேண்டு மென்றும், இன்னும் சில வியாபார உரிமைகளை அளிக்க வேண்டு மென்றும் சீன அரசாங்கத்தினிடம் அதிகமாக வற்புறுத்திக் கேட்க கிழக்கிந்தியக் கம்பெனியார் விரும்பவில்லை. ஏனென்றால், சீன அரசாங்கம் கோபங்கொண்டு, அந்நிய வியாபாரமே வேண்டா மென்று தடுத்து விட்டால் என்ன செய்வதென்று அஞ்சினர். கொள்ளை லாபம் கிடைக்கிற போது ஏன் நிர்ப்பந்தங்களுக் குட்படமாட்டார்கள்! ஆயினும் நிர்ப்பந்தங்களை எதிர்த்தே போராடி வந்தார்கள்.
கடைசியில், பிரிட்டிஷ் அரசாங்கத்தைத் தூண்டி, அரசாங்க தோரணையில் ஒரு தூதுகோஷ்டியை நேரே சீன சக்ரவர்த்திக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர் இந்தக் கிழக்கிந்தியக் கம்பெனியார். வியாபாரச் சலுகைகள் பெற வேண்டுமென்பதே இவர்களின் நோக்கம். அப்பொழுது இங்கிலாந்தில் மூன்றாவது ஜார்ஜ் மன்னன்1 ஆண்டுகொண்டிருந்தான். இவன், பிரிட்டிஷாருக்குச் சில வியாபார உரிமைகள் கோரி சீன சக்ரவர்த்திக்கு ஒரு கடிதம் எழுதினான். இந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு, லார்ட் மெக்கார்ட்னி2 என்ப வனுடைய தலைமையில் சுமார் நூறு பேரடங்கிய ஒரு தூது கோஷ்டி, மூன்று கப்பல்களில் 26-9-1792-ல் இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு 5-8-1793-ல் பீக்கிங் நகரத்திற்கு நுழை வாயில் போலிருகிற டீண்ட்ஸின்3 துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது. என்ன ஆடம்பரம்! சீன மன்னனை மயக்க எத்தனை பரிசில்கள்! தூதுகோஷ்டியில் ராணுவ நிபுணர்களென்ன, வைத்தியர்களென்ன, விஞ்ஞான சாதிரி களென்ன, சங்கீதவித்வான்களென்ன, இப்படிப் பலதிறப் பட்ட வரும் இருந்தனர். இவர்கள் கொண்டுவந்த சன்மானப் பொருள்களை சிறியகடிகாரம்முதல்பெரியவில்வண்டிவரையில்,சின்னஞ்சிறுபீரங்கிகள்உள்படஅநேகவிதமானபொருள்களை- அரச சந்நிதானத்திற்கு எடுத்துச் செல்ல, தொண்ணூறு பெருவண்டிகளும், நாற்பதுகை வண்டி களும், இருநூறு குதிரைகளும், மூவாயிரம் கூலிகளும் தேவையா யிருந்தன.!
சீன அரசாங்க அதிகாரிகளும் மிகுந்த ஆடம்பரத்துடன் இந்தத் தூதுகோஷ்டியை வரவேற்றார்கள். பரபர மரியாதைப் பேச்சுக்களென்ன, அறுசுவை விருந்துகளென்ன, ஒன்றுக்கும் குறைவில்லை. டீண்ட்ஸினி லிருந்து பீக்கிங்குக்கு ஆற்று மார்க்க மாகச் செல்ல வேண்டும். இரு கரைகளிலும் வழிநெடுக அலங் காரங்கள்! பிரகாசமான விளக்குகள்! இவைகளுக்கு நடுவே, மெக்கார்ட்னி கோஷ்டியை அரச சந்நிதானத்திற்கு அழைத்துக் கொண்டு போனார்கள் சீன அதிகாரிகள். இப்படி உபசரித்தார் களே தவிர, முக்கியமான மூன்று விஷயங்களில் மட்டும் உறுதியாக இருந்தார்கள். அதாவது (1) வியாபார விஷயத்தில் எவ்வித விசேஷ சலுகைகளும் கொடுத்துவிடக் கூடாதென்பது; (2) சக்ரவர்த்திக்குக் கப்பங்கட்டும் ஒரு சிற்றரசனின் பிரதிநிதியாகவே மெக்கார்ட்னி யைக் கருதவேண்டுமென்பது; (3) சக்ரவர்த்தி முன்னர் மண்டியிட்டு வணங்க வேண்டுமென்பது. மெக்கார்ட்னியை அழைத்துக் கொண்டு போன படகின்மீது, இங்கிலாந்திலிருந்து கப்பஞ்செலுத்த வந்திருக்கும் தூதர் என்ற வாக்கியம் பொறித்த கொடி நுடங்கிக் கொண்டிருந்தது. மெக்கார்ட்னிக்கு இது தெரியும். ஆனால் கண்டு கொள்ளாதவன் போலிருந்துவிட்டான். காரியம் ஆக வேண்டு மல்லவா?
தூதுகோஷ்டி பீக்கிங் நகரம் அடைந்தது. சக்ரவர்த்திக்கு வணக்கஞ் செலுத்துகிற விஷயத்தைப் பற்றிப் பேச்சுவர்த்தைகள் எழுந்தன. சீன அதிகாரிகள் கெளடெள1 செய்யவேண்டுமென்று சொன்னார்கள். இந்த கெளடெள என்பது மன்னனின் திரு முன்னர் மண்டியிட்டு வணங்குகிற முறைக்குப் பெயர். நூற்றாண்டுகள் கணக் காகச் சீனர்கள் இந்தச் சம்பிரதாயத்தை அனுஷ்டித்து வருகின்றனர். கெளடெள என்ற சொற்றொடருக்கு மூன்றுமுறை மண்டி யிடுதல், ஒன்பது முறை தரையிலே நெற்றிபடும்படி முட்டுதல் என்று அர்த்தம். அதாவது, முதலில் இரண்டு முழங்கால்களையும் மடித்து மண்டியிட்டுக் கொள்ளவேண்டும். பிறகு முதுகு வளையக் குனிந்து பூமியிலே நெற்றி படும்படி மூன்று தடவை வணங்க வேண்டும். இப்படி மூன்று தரம் மண்டியிட வேண்டும்; ஒவ்வொரு மண்டிக்கும் மூன்று வணக்கங்கள் விகிதம் ஒன்பது வணக்கங்கள் செலுத்த வேண்டும். மேலான அரசனுக்குக் கீழான பிரஜைகள் காட்கிற ராஜ பக்திக்கு அடையாளமாகவே இந்த வணக்க முறை அனுஷ்டிக்கப் பட்டுவந்தது. இதற்கு முன்னர் வந்த பிறநாட்டுத் தூதர்களும், கிறிதுவப் பாதிரிமார்களும் இந்த கெளடெள முறைப்படியே வணக்கம் செலுத்திவந்திருக்கிறார்கள். ஆனால் மெக்கார்ட்னி இப்படிச் செய்ய மனமொப்பவில்லை. சீன சக்ரவர்த்திக்குச் சமதை யான அந்ததுள்ள பிரிட்டிஷ் மன்னனின் பிரதிநிதியாகத் தான் வந்திருப்ப தாகவும், அந்த மன்னனுடைய கௌரவத்திற்குக் குறைவு வராமல் நடந்து கொள்வது தனது கடமையென்றும் கூறினான். சீனப் பிரதிநிதிகள், நயத்தாலும் பயத்தாலும் தங்கள் கட்சியை வற்புறுத்தினார்கள். மெக்கார்ட்னி இணங்கிக் கொடுக்கவில்லை. கடைசியில் இருசாராரும் ஒரு சமரஸத்திற்கு வந்தார்கள். சீன அரசாங்கத்தின் உயர்தர உத்தியோகதன் ஒருவன், மூன்றாவது ஜார்ஜ் மன்னனுடைய உருவப் படமொன்றுக்கு முதலில் வணக்கஞ் செலுத்துவதென்றும், பின்னர் மெக்கார்ட்னி, தனது அரசனுக்கு எப்படி ஒரு முழந்தாளை மட்டும் மண்டியிட்டுக்கொண்டு வணக்கஞ் செலுத்துவானோ அப்படியே சீன அரசனுக்கும் வணக்கஞ் செலுத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டன.
இனி, அரசனைப் பேட்டி காணவேண்டும். சின் லுங் மன்னன்-இவனே அப்பொழுது ஆண்டுகொண்டிருந்தவன்-வடகிழக்கே யுள்ள ஜிஹோல்2 நகரத்தில் முகாம் போட்டிருந்தான். மெக்கார்ட்னி கோஷ்டியினர் அங்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அரசன் இவர்களை அன்போடு வரவேற்றான்; இனிய மொழிகள் புகன்றான். மெக்கார்ட்னி, ஜார்ஜ் மன்னனிடமிருந்து, தான் கொண்டுவந்த கடிதத்தை அழகான ஒரு பேழையிலே வைத்துச் சமர்ப்பித்தான்; தான் கொண்டுவந்துள்ள பரிசுகளைப் பற்றியும் கூறினான். அரசன் பதிலுக்குச் சில உபசார வார்த்தைகள் சொல்லி, மெக்கார்ட்னி கோஷ்டியை அனுப்பிவிட்டான். சின் லுங் சிறந்த ராஜதந்திரி. சில நாட்கள் கழித்து பீக்கிங் நகரத்திற்குத் திரும்பி வந்தான். தனக்கு வந்திருக்கும் பரிசுகளை யெல்லாம் பார்த்துக் களிப்படைந்தான். இதற்குள் பிரிட்டிஷ் மன்னனுடைய கடிதத்திற்குப் பதில் கடிதம் தயாரிக்கப்பட்டுவிட்டது. இதனை மிகவும் மரியாதையோடு மெக்கார்ட்னியிடம் கொடுக்கும்படி செய்தான் சின் லுங். தவிர, சீனாவில் கிடைக்கக்கூடிய அரியபொருள்கள் பல, பிரிட்டிஷ் மன்னனுக்கு, பதில் மரியாதையாக அனுப்பப்பட்டன. தூது கோஷ்டியைச் சேர்ந்த ஒவ்வொரு வருக்கும் தனித்தனியாகப் பரிசுகள் அளிக்கப்பட்டன. விருந்துகளுக்குக் குறைவேயில்லை. தாங்கள் வந்த காரியம் பலித்துவிட்டதாகச் சந்தோஷப்பட்டுக்கொண்டு மெக்கார்ட்னி கோஷ்டியினர், சின் லுங் மன்னன் கொடுத்த கடிதத்துடன் இங்கிலாந்து திரும்பினர்.
இந்தக் கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது?
ஓ அரசனே! அநேக கடல்களுக்கப்பால் தொலை தூரத் திலுள்ள ஒரு நாட்டில் நீர் வசிக்கிறீர். இருந்தாலும் எங்களுடைய நாகரிகத்தின் நலன்களை ஓரளவு அடைய வேண்டுமென்று ஆசைப்பட்டு எமக்கு கடிதம் எழுதி அதை ஒரு தூதுகோஷ்டியினர் மூலம் அனுப்பியிருக்கிறீர். அவர்களும் உமது கடிதத்தை மரியாதையாகக் கொண்டு வந்து எம்மிடம் சேர்ப்பித்தார்கள். எம்மிடத்திலே உமக்கிருக்கிற பக்தி விசுவாசத்திற் கறிகுறியாக உமது நாட்டுப் பொருள்களைக் காணிக்கையாக அனுப்பி யிருக்கிறீர்.
எமது வமிசத்தின் சிறந்த குணங்கள் பூலோகத்திலுள்ள எல்லா நாடுகளுக்கும் எட்டியிருக்கின்றன. எல்லா நாட்டு மன்னர்களும் தரை வழியாகவும் கடல் வழியாகவும் தங்கள் தங்களுடைய காணிக்கைப் பொருள்களை அனுப்பியி ருக்கிறார்கள். எம்மிடத்தில் எல்லாப் பொருள் களும் இருக் கின்றன. நூதனமான விலையுயர்ந்த பொருள்களிலே நமக்கு விருப்பம் கிடையாது. உமது நாட்டுப் பொருள்கள் நமக்குத் தேவை யில்லை. மிகுந்த பக்தி சிரத்தையோடு அனுப்பி யிருக்கிறீரே என்பதற்காகத்தான் உமது காணிக்கைப் பொருள்களை ஏற்றுக் கொண்டோம்.
உமது கடிதத்தைப் படித்துப் பார்த்தோம். அதில் உமது அடக்கம் நன்கு புலனாகிறது. உமது பிரதிநிதிக்கு அதிக சலுகை காட்டினோம்; உபசரித்தோம்; அநேக பரிசில்களும் கொடுத் தோம். உமக்கும் ஓ அரசனே! அநேக அரிய பொருள்களை சன்மானமாக அனுப்பியுள்ளோம். அவை களுக்கு ஒரு பட்டியல் இதனுடன் இணைத்திருக்கிறது. அவைகளை மரியாதை யுடன் ஏற்றுக் கொள்வீராக.!
எமது தெய்விக சந்நிதானத்தில் உமது பிரதிநிதியாக ஒருவர் வசிப்பதற்கு அனுமதியளிக்க வேண்டுமென்று கோரியிருக்கிறீர். அதற்கு நாம் அங்கீகாரம் கொடுக்க முடியாது. பீக்கிங் நகரத்தில் வசிக்கும் எந்த ஓர் ஐரோப்பியரும் சீனாவுக்கு வெளியே செல்லவோ, தமது தேசத்திற்குக் கடிதங்கள் எழுதவோ கூடாது. ஆதலின், உமது பிரதிநிதி யொருவரை இங்கே அனுப்புவதால் நீர் அடையக்கூடிய லாபம் ஒன்று மில்லை. மற்றும், உம்மைப்போல் பல ஜாதியினர் ஐரோப்பா வில் வசிக்கிறார்கள். அவர்களெல்லோரும் எமது சந்நிதானத் திற்கு வரவேண்டுமென்று கோரினால் நாம் எப்படி அனுமதி யளிக்க முடியும்? நீவிர் கேட்கிறபடி செய்யவேண்டு மென் பதற்காக, எமது வமிசத்தின் பழக்கவழக்கங் களையெல்லாம் மாற்றிக் கொள்ள முடியுமா என்ன?
காண்ட்டனைத் தவிர வேறு சில துறைமுகங்களிலும் வியாபாரம் செய்ய நாம் அனுமதியளிக்கவேண்டு மென்பது உமது பிரதிநிதியின் கோரிக்கை. மற்றத் துறைமுகங்களில் ஹாங்குகளும் இல்லை; துவிபாஷிகளும் இல்லை. ஆகையால் உமது அநாகரிக வியாபாரிகள் அங்கெல்லாம் வியாபாரஞ் செய்ய முடியாது. இதுவரையிலாகட்டும், இனியாகட்டும், உமது வேண்டுகோள் மறுக்கப்படுகிறது. காண்ட்டனில் மட்டுமே உமது வியாபாரத்தை நடத்தச் செய்யலாம்.
உமது வியாபாரிகள், பீக்கிங் நகரத்தில் சரக்குகள் பிடித்து வைத்துக்கொண்டு வியாபாரம் செய்வதென்பதும் முடியாத காரியம். உலகத்தின் நானா பக்கங்களையும் ஒன்று கூட்டுகிற மைய தானமாக எமது ராஜதானி இருக்கிறது. அதன் சட்டங்கள் மிகக் கண்டிப்பானவை. அந்நியர் வியா பாரஞ் செய்ய இங்கே இதுவரையில் அனுமதிக்கப் பட்டதில்லை. ஆகையால் இந்த வேண்டுகோளும் நிராகரிக்கப்படுகிறது.
இங்கே சீனாவில் உமது மதத்தைப் பிரசாரஞ் செய்ய உமது பிரதிநிதி அனுமதி கோருகிறார். சரித்திர ஆரம்ப காலத் திலிருந்து, அறிஞர்களான அரசர்களும் முனிவர்களும் சிறந்த தொரு மதத்தை எமக்கு அளித்து விட்டுப் போயிருக்கிறார்கள். லட்சக்கணக்கான எம்முடைய பிரஜைகள் இதனை அனுஷ் டித்து வருகிறார்கள். எமக்கு அந்நியருடைய போதனை எதுவும் தேவையில்லை. ஆகையால் உமது வேண்டுகோள் நியாய மற்றது.
நாகரிகத்தின் நலன்களையடைய வேண்டுமென்று கோரி எமக்குக் காணிக்கைகள் கொண்டு வரும் எல்லாத் தூது கோஷ்டிகளிடமும் நாம் அன்பு காட்டி வந்திருக்கிறோம். தூரத்தில் வசிக்கும் ஓ அரசனே ! மற்ற நாட்டினரைக் காட்டி லும் உம்மிடத்தில் நாம் அதிகமான அன்பு காட்டியிருக் கிறோம். ஆனால் உமது கோரிக்கைகள், எமது வமிசப் பழக்க வழக்கங்களுக்கு முரணாயிருக்கின்றன. உமது கோரிக்கை களுக்கு அங்கீகாரம் கொடுப்பதனால் எவ்வித நன்மையும் உண்டாகாது. இதனாலேயே உமது கோரிக்கைகளுக்கு விவர மான பதில் அளித்திருக் கிறோம். எனவே எமது மனோ நிலையை அறிந்துகொண்டு, நாம் கூறிய புத்திமதிகளை அனு சரித்து எப்பொழுதும் நடந்து கொள்வீராயின், நித்தியமான சாந்தியை அனுபவித்துக் கொண்டிருக்கலாம்.
பிரிட்டிஷ் அரசாங்கத்தார், மெக்கார்ட்னி கோஷ்டியை அனுப்பு வித்ததன் நோக்கங்கள் ஒன்று கூட நிறைவேறவில்லை. காண்ட்டனில் வியாபாரஞ் செய்வதற்கு ஏற்பட்டிருந்த நிர்ப்பந்தங் களைத் தளர்த்தி விட வேண்டுமென்று கேட்டனர். இதற்காக ஒரு யுத்தம் நடைபெறுகிற வரையில் இந்த நிர்ப்பந்தங்கள் இருந்து கொண்டேயிருந்தன. காண்ட்டனைத் தவிர, டீண்ட்ஸின், நிங்க்போ, சூஸான்1 முதலிய சில இடங்களில் வியாபாரஞ் செய்ய அனுமதி வேண்டுமென்று கேட்டனர்; மறுக்கப்பட்டது. தூதுகோஷ்டியை அனுப்பியதனால் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு ஒரு விதமான சாதகமும் உண்டாகவில்லை. தூது கோஷ்டியினர் அதிக மரியாதை யோடு வரவேற்கப்பட்டனர்; அதிக ஆடம்பரமாக உபசரிக்கப் பட்டனர்; அதிக ஜாக்கிரதையுடன் பாதுகாவல் செய்யப்பட்டனர்; அதிக வினயத்தோடு வழியனுப்பப்பட்டனர். எல்லாம் அதிகந்தான். ஆனால் காரியத்தில்-?
பிரிட்டிஷ் அரசாங்கத்தார் மறுபடியும் விடாப்பிடியாக, வியா பார உரிமைகள் கோரி, லார்ட் ஆம்ஹெர்ட்2 என்பவனுடைய தலைமையில் 1816-ஆம் வருஷம் ஒரு பிரதிநிதி கோஷ்டியை அனுப்பினர். அந்நியர்கள், காண்ட்டன் துறை முகத்தில்தான் வந் திறங்கவேண்டும்; மற்றத் துறைமுகங்களில் இறங்கக் கூடாது; சீன அரசாங்கத்தார் அனுஷ்டித்து வந்த பொது விதி இது. ஏகதேசமாக இதற்கு விலக்குச் செய்து வந்தனர். ஆம்ஹெர்ட் கோஷ்டியினர், காண்ட்டன் துறைமுகத்தில் வந்திறங்காமல், மெக்கார்ட்னி காட்டிய வழியைப் பின்பற்றி டீண்ட்ஸினில் வந்திறங்கினர். இதை ஒரு வியாஜமாக வைத்துக் கொண்டும், இன்னும் சில போலிக் காரணங்களைச் சொல்லியும் சீன அதிகாரிகள், ஆம்ஹெர்ட் கோஷ்டியைத் திருப்பி அனுப்பிவிட்டார்கள். சக்ரவர்த்தியை (அப் பொழுது சியா சிங்1 என்பவன் சக்ரவர்த்தியாயிருந்தான்.) பார்ப் பதற்குக் கூட இடங்கொடுக்கவில்லை. இந்தக் காலத்திலிருந்தே பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கும் சீன அரசாங்கத்திற்கும், மன தாபங்கள் துவங்கிவிட்டனவென்று சொல்லவேண்டும்.
காண்ட்டன் நகரத்தின் மூலமாகச் சீனாவில் நடைபெற்று வந்த பிரிட்டிஷ் வியாபாரத்தின் சர்வ உரிமைகளையும் இதுகாறும் கிழக்கிந்தியக் கம்பெனியாரே அனுபவித்து வந்தனர். இது காரண மாக, காண்ட்டன் நகரத்தில் வசிக்கும் பிரிட்டிஷ் பிரஜைகளின் நடவடிக்கை களனைத்திற்கும் கம்பெனியாரே பொறுப்பாளிகளாயி ருந்தார்கள். இவர்கள், தங்களுடைய வியாபாரத்திற்கு எவ்வித இடை யூறும் ஏற்பட்டு விடக்கூடாதே யென்பதற்காக,சீன அதிகாரிகள் அவ்வப்பொழுது பிறப்பித்த உத்தரவுகள், விதித்த நிர்ப்பந்தங்கள் முதலிய அனைத்திற்கும் விரும்பியோ விரும்பாமலோ கட்டுப்பட்டு நடந்துவந்தனர். பிரிட்டிஷ் அரசாங்கமும் வேறு வழியின்றி இதற்குச் சம்மதம் காட்டி வந்தது. 1833-ஆம் வருஷம், பிரிட்டிஷ் பார்லி மெண்ட்டில், கிழகிந்தியக் கம்பெனியாரின் மேற்படி வியாபார உரிமையை ரத்து செய்துவிட்டதாக ஒரு சட்டம் நிறைவேற்றப் பட்டது. இதற்குப் பிறகு, காண்ட்டன் நகரத்தில், பிரிட்டிஷா ருடைய வியாபார நலன்களைக் கவனிப்பதற்கென்று கம்பெனியின் பிரதிநிதி இருப்பது போய், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நேர்முகமான பிரதிநிதியே நியமிக்கப்பட வேண்டியதாயிற்று. லார்ட் நேப்பியர்2 என்பவன், இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டு மாக்கோ வழியாகச் சில உத்தியோகதர்களுடன் (25-7-1834) காண்ட்டன் வந்து சேர்ந்தான். கம்பெனி உத்தியோகதர்களைச் சீன அரசாங்கம் எந்த அந்ததிலே வைத்து நடத்திவந்ததோ அந்த அந்ததிலே- அதாவது தாழ்வான அந்ததிலே-தான் நடத்தப்பட இவன் விரும்பவில்லை. அந்நியர்கள் ஹாங்கு வியாபாரிகள் மூலமாக அரசாங்கத்துடன் சம்பந்தம் வைத்துக்கொள்ள வேண்டு மென்றல்லவோ இருந்தது? அதை இவன் எதிர்த்து, சீன அரசாங்கத்திற்கும் தனக்கும் நேர்முக மான தொடர்பு இருக்க வேண்டுமென்று வற்புறுத்தினான் சீன அதிகாரிகள் இதனைக் கண்டிப்பாக மறுத்து விட்டனர். அந்நியர்களைத் தங்களுக்குச் சமதையானவர்களென்று கருத இவர்கள் விரும்பவில்லை. லார்ட் நேப்பியரை, மாக்கோ தீவுக்குத் திரும்பிச் சென்றுவிடுமாறு உத்தர விட்டனர். இவன் சம்மதிக்க வில்லை. பிரிட்டிஷ் வியாபாரத்தைப் பகிஷ்கரித்தனர் சீன அதிகாரிகள். பிரிட்டிஷார், இரண்டொரு போர்க் கப்பல்களைத் துறைமுகத்தில் கொணர்ந்து நிறுத்திப் பயமுறுத்திப் பார்த்தனர். விபரீதமே விளையும் போலிருந்தது. பேசாமல் பின்வாங்கிக் கொண்டனர். லார்ட் நேப்பியர், தனது பரி வாரங்களுடன் மாக்கோ தீவுக்குத் திரும்பி விட்டான். அங்கேயே (11-10-1834) இறந்தும் போய் விட்டான்.
எனவே பிரிட்டிஷ் அரசாங்கத்தாருக்கு மூன்று விதமான வழிகள்தான் இருந்தன. ஒன்று சீன அதிகாரிகள் அவ்வப்பொழுது விதிக்கிற நிர்ப்பந்தங்களுக்குட்பட்டு வியாபாரத்தை நடத்திக் கொண்டு போவது; அல்லது அடியோடு வியாபாரத்தை நிறுத்தி விடுவது; அல்லது பலாத்காரத்தை உபயோகித்து சீன அரசாங்கத்தை வழிக்குக் கொண்டுவருவது. இந்தக் கடைசி வழியைத்தான் பின்பற்றினர் பிரிட்டிஷார். இதில் வெற்றியும் பெற்றனர் என்று சொல்ல வேண்டும். ஆனால் இந்த வெற்றியிலே அபினிக் கறை படிந்திருந்தது.
அபினியைத் திணித்து அடக்க முயற்சி
பத்தொன்பதாவது நூற்றாண்டு ஆரம்பித்தது. சீனாவின் இறங்குமுக வாழ்வும் ஆரம்பித்துவிட்டது. உள்நாட்டுக் கலகங்கள் கிளம்பி, தைப்பிங் புரட்சியிலே கொண்டுவிட்டன. இந்தப் பெரும் புரட்சியை மஞ்சூ அரசாங்கம் அடக்கிவிட்டது உண்மைதான். ஆனால் இதன் காரணமாக அது மிகவும் பலவீனமடைந்துவிட்டது. ஐரோப்பிய வியாபாரிகளின் நெருக்குதல்கள் வேறே. இவைகளுக்கு மத்தியிலே அபினி வந்து நுழைந்தது. இல்லை, இல்லை; அபினி கொண்டு வந்து திணிக்கப்பட்டது. ஐரோப்பியர்-சிறப்பாகப் பிரிட்டிஷார்-சீனாவைத் தங்களுக்கிணங்கும்படி செய்வதற்கு நேரடியாக ஆயுத பலத்தை உபயோகித்திருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. ஏனென்றால் சீனாவின் சக்தியிலே அவர் களுக்கு அப்பொழுது-பத்தொன்பதாவது நூற்றாண்டு வரை-ஒருபிரமை இருந்தது. இதனாலேயே முதன் முறையாக, சாம, தான உபாயங்களைக் கையாண்டனர். இவற்றில் அதிக பலன் காணாமற் போகவே, பேத உபாயத்தைப் பிரயோகித்தனர். இதுவும் சரியான பலனைக் கொடாமற் போகவேதான், கடைசி பட்சமாக தண்டோ பாயத்தைக் கையாண்டனர். பலன் கிடைத்தது. பேத உபாயத்தின் ஓர் அமிசந்தான் அபினித் திணிப்பு. எதிரியின் புத்தியிலே ஒரு பேதத்தை உண்டு பண்ணுவதற்கு அபினியைவிடச் சிறந்த சாதனம் என்ன இருக்கிறது?
இந்த மாயப் பிசாசத்தின் சண்ட தாண்டவத்தைப் பற்றிக் கூறுவதற்கு முன்னர், ஒரு முக்கியமான விஷயத்தை விளக்கிவிட விரும்புகிறோம். சீனர்கள், பரம்பரையாக அபினிப் பழக்க முடை யவர்கள் என்ற ஒரு கட்டுக் கதையை மேனாட்டார் கட்டிவிட்டனர். இதற்குச் சிறிதுகூட ஆதாரம் இல்லை. பைத்தியம் என்று ஒரு நாய்க்குப் பெயர் கட்டிவிட்டு, பிறகு அதன்மீது கல்லெறிந்தால், எறிகிறவனை யாரும் குறைகூற மாட்டார் களல்லவா? அதைப் போல்தான், சீனர்களுக்கு அபினிப் பிரியர்கள் என்ற பட்டம் கட்டி விடப்பட்டது.
சீனாவுக்கு, அபினி அந்நிய வது. சீனாவின் அறநூல்கள், லாகிரி வதுக்களை உபயோகிக்கக் கூடாதென்று கண்டிப்பாகக் கூறுகின்றன. சீன மன்னர்பலர், சுருட்டு முதலியனவற்றைக்கூடப் பிடிக்கக் கூடாதென்று அதிகார தோரணையில் உத்தரவு விடுத்திருக் கிறார்கள். 1729-ஆம் வருஷம் யுங் செங்1 என்ற மன்னன், புகைப்பதற் கான அபினியை விற்பனை செய்யக் கூடாதென்றும், அபினி தின்று மயங்கிக் கிடப்பதற்கு இடங்கொடுக்கிற தாபனங்கள் நடைபெறக் கூடாதென்றும், இவை களுக்கெல்லாம் கடுமையான தண்டனை விதிக்கப்படுமென்றும் குறிப்பிட்டு அபினித் தடைச் சட்டமொன்று அமுலுக்குக்கொண்டு வந்தான். இந்த உத்தரவுகளுக்கு ஜனங்கள் கீழ்ப்படிந்து நடந்தார்களா இல்லையா வென்பது வேறுகேள்வி. இப்பொழுது கூட சீனர்களில் பெரும்பாலோர் சுருட்டுப் பிடிக் கிறார்கள். இதற்காக அவர்களுடைய மதமோ, அரசாங்கச் சட்டமோ இந்த வழக்கத்தை அங்கீகரிக்கிறது என்பது அர்த்தமா என்ன? மருந்துக்காக ஓரளவு இந்த அபினி உபயோகிக்கப்பட்டு வந்ததென்பது வாதவம். சீன வைத்திய கிரந்தங்களில் இதனை மருந்தாக எப்படி உபயோகிக்க வேண்டும், எந்த அளவுக்கு உப யோகிக்க வேண்டுமென்ற விவரங்களும் கூறப்பட்டிருக்கின்றன. ஆனால் இதனைச் சீனர்கள் ஒரு பழக்கமாகக் கொள்ளவில்லை; அந்நியர்களால் பழக்கப்படுத்தப்பட்டனர்.
சீனாவில் முதன் முதலாக அபினியைக் கொண்டு புகுத்தியவர் போர்த்துகேசியர். பிறகு டச்சுக்காரர், ஆங்கிலேயர், பிரெஞ்சுக் காரர், அமெரிக்கர் முதலிய எல்லாரும் தங்களுக்குக் கிடைத்த அபினியைக் கொண்டுவந்து திணித்தனர். அமெரிக்கர், துருக்கியி லிருந்து இந்தச் சரக்கை வாங்கிக்கொண்டு வந்து சீனாவில் விற்றனர்! எவ்வளவு லாபம் கிடைத்திருக்கும் என்பதை நாம் ஊகித்துக் கொள்ளலாமல்லவா? ஆனால், இதனால் சீனர்களுக்கு எவ்வளவு தீமையை உண்டு பண்ணினார்கள் என்பதை இந்த அந்நியர் யாரும் கருதவேயில்லை.
இப்படி அந்நியர் பலரும் கொண்டுவந்து வியாபாரம் செய்த போதிலும், மொத்தம் சீனாவில் வருஷமொன்றுக்குச் சுமார் இருநூறு பெட்டி2 அபினியே செலவழிந்து வந்தது. இது 1729-ஆம் வருஷத்துக் கணக்கு, இதற்குப் பிறகு ஒவ்வொரு வருஷமும் அபினி இறக்குமதி, கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்பட்டுக் கொண்டு வந்தது. 1780-ஆம் வருஷம் வரையில் இப்படிப் பல நாட்டாரும் சீனாவில் அபினியை இறக்குமதி செய்துகொண்டு வந்தனர். இந்த இறக்குமதியின் பெரும்பாகம் இந்தியாவிலிருந்தே வந்தது. ஆனால், இந்தியாவிலுள்ள பல நாட்டுக் கம்பபெனிகளின் ஏஜெண்டுகளுக் குள்ளும், இந்த வியாபார விஷயத்தைப் பற்றி அடிக்கடி சச்சரவுகள் நடைபெற்றுவந்தன. எனவே,மேற்படி 1780-ஆம் வருஷத்தில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியார், வங்காளம், பீஹார், ஒரிஸா ஆகிய மூன்று மாகாணங்களிலும் உற்பத்தியாகிற அபினியின் வியாபார உரிமைகளனைத்தையும் தாங்களே எடுத்துக் கொண்டு விட்டனர். இதற்குப் பிறகு பிரிட்டிஷ் வியாபாரிகள் சீனாவில் காட்டின சுறுசுறுப்பு இருக்கிறதே அது வியக்கத்தக்கது. நூற்றுக் கணக்கிலே இறக்குமதியாகிக் கொண்டிருந்த பெட்டிகள் ஆயிரக் கணக்குக்கு அதிகப்பட்டன. 1790-ஆம் வருஷத்தில் மொத்தம் 4,054 பெட்டிகள் இறக்குமதியாயின வென்று ஓர் அறிக்கை கூறுகிறது. ஒரு பெட்டியின் விலை சுமார் ஆயிரத்தைந் நூறு ரூபாய். வெள்ளி நாணயங்களினாலேயே இந்தப் பணம் கொடுக்கப்பட வேண்டுமென்ற ஏற்பாடு இருந்தது. இதனால் பிரதி வருஷமும் சீனாவிலிருந்து ஏராளமான வெள்ளி வெளியேறி வந்தது! இதற்குப் பிரதியாக சீனா பெற்றது என்ன? போதை வது!
காண்ட்டன் நகரம் ஒன்றே அப்பொழுது அந்நிய வியாபாரிகளின் இறங்குதுறையாக இருந்தபடியால் மேற்படி நகரத்தில் இந்த அபினிப் பழக்கம் தொத்து நோய் மாதிரி விரைவில் பரவியது. தங்கள் நாட்டின் நலனை நாடும் சீனர்கள் இதைக் கண்டு திகிலடைந்தார்கள். காண்ட்டன் மாகாண அதிகாரி, ஏற்கனவே யுள்ள அபினித் தடைச் சட்டத்தை இன்னும் கண்டிப்பாக அமுலுக்குக் கொண்டு வரும்படி சக்ரவர்த்திக்கு விண்ணப்பஞ் செய்து கொண்டான். இதன் பேரில் 1796-ஆம் வருஷம், மேற்படி சட்டம், இன்னும் கடுமையான தண்டனைகளுடன் புதுப்பிக்கப் பட்டது. தண்டனைகளை ஏற்றுக் கொண்டும் அநேகர் இந்த அபினிப் பழக்கத்திற்கு இரையாகியிருந் தார்கள்; இவர்களுடைய எண்ணிக்கை குறையவில்லை. எனவே 1800-ஆம் வருஷம் சியா சிங் மன்னன், இனி வெளிநாடுகளி லிருந்து அபினி இறக்குமதி செய்யப்படக் கூடாதென்றும், உள்நாட்டில் கஞ்சாச் செடியைப் பயிரிடக் கூடாதென்றும் ஒரு சட்டம் பிறப்பித்தான். இதுகாறும் மற்றப் பொருள்களைப்போல் அபினியும் காண்ட்டன் துறைமுகத்தில் பகிரங்கமாக வந்து இறங்கிக் கொண்டிருந்தது. இந்தச் சட்டத்திற்குப் பிறகு பகிரங்க இறக்குமதி நின்றது; ரகசியமாக வர ஆரம்பித்தது. கிழக்கிந்தியக் கம்பெனியார்,நேரடியாக இந்த வியாபாரத்தில் தலையிடாமல் தனிப்பட்ட வியாபாரிகளுக்கு லைசென் கொடுத்து வந்தனர்! மற்றச் சரக்குகளோடு அபினி யையும் ஏற்றிக்கொண்டு வருகிற கப்பல், துறைமுகத்திற்கு வெளி யிலேயே ஓரிடத்தில் நின்றுவிடும். அபினியை மட்டும் அந்த இடத்தில் இறக்கி விடுவார்கள். மற்றச் சரக்குகளோடு கப்பல், துறைமுகத்திற்கு வந்து வழக்கம்போல் சரக்குகளை இறக்கிவிட்டு மாற்றுச் சரக்குகளை ஏற்றிக்கொண்டுபோகும். துறைமுகத்திற்கு வெளியே இறக்கப்பட்ட அபினியை, இராக்காலங்களில், துறை முகக் காவலர்களுக்குத் தெரிந்தும் தெரியாமலும் சிறிய படகு களில் கரைக்குக் கொண்டுவந்து, சீன வியாபாரிகளுக்கு ரொக்கத்திற்கு விற்றுவிடுவார்கள். எப்படியோ அபினி வியாபாரம் வெகு மும் முரமாக நடைபெற்று வந்தது. கொண்டுவந்த அந்நிய வியாபாரிகளும், கள்ளத்தனமாக விற்பனை செய்துவந்த சீன வியாபாரிகளும் கொழுத்த பணம் சம்பாதித்துக் கொண்டிருந் தார்கள். இவர்களுக்கு நடுவே அரசாங்க உத்தியோகதர்களுக்கு லஞ்சத்தின் மூலமாகக் கிடைத்துக் கொண்டிருந்த தொகையோ ஏராளம். கள்ளச் சரக் கல்லவா? கிராக்கியும் அதிகப்பட்டு வந்தது. விலையும் விஷம்போல் ஏறியது. சீனர்கள் மதிமயங்கிப் போனார்கள். அபினிப் பிரியர்களின் எண்ணிக்கை அதிகமாயிற்று. சட்டத்தில் கூறப்பட்ட நூறு கசை யடி, மூன்று வருஷக் கடுங்காவல் முதலிய தண்டனைகளை அனுப விக்க இவர்கள் தயாராயிருந்தார்களே தவிர, அபினிப் பழக்கத்தை விட்டுவிடத் தயாராயில்லை. இப்படிப் பட்டவர்கள் இருக்கிறபோது அபினியில் வியாபார மந்தம் ஏற்படுமா என்ன? பிரதி வருஷமும் இறக்குமதி அதிகப்பட்டுவந்தது. 1821-ஆம் வருஷத்திலிருந்து 1828-ஆம் வருஷம் வரையில் சராசரி வருஷ மொன்றுக்கு 9,708 பெட்டிகள் இறக்குமதியாகிக்கொண்டு வந்தன. 1828-1835-ஆம் வருஷங்களில்சராசரி வருஷமொன்றுக்கு 18,712 பெட்டிகளாக அதிகப்பட்டது; 1835-1839-ஆம் வருஷங்களில் வருஷமொன்றுக்குச் சராசரி 30,000 பெட்டிகள்!
இங்ஙனம் இந்தத் தீமை வரவர அதிகரித்துக் கொண்டு வந்ததால் விவசாயிகள் வறியர்களானார்கள். சீனாவில் நில வரியை வெள்ளி நாணயத்தின் மூலமாகவே செலுத்த வேண்டுமென்ற விதி இருந்தது. வெள்ளி நாணயத்தின் மதிப்போ வரவர உயர்ந்தது. ஏனென்றால் அந்நிய நாட்டு வியாபாரிகள் அபினியைக் கொடுத்து விட்டு வெள்ளி நாணயங் களையல்லவோ அள்ளிக் கொண்டு போனார்கள்? இதனால் அரசாங்கத்தின் நிலவரி வருமானம் குறைந்து கொண்டு வந்தது. ஒரு சிலர், பணக்காரர்களானார்கள்; பலர், பொருளாதார பலத்திலும் தேக பலத்திலும் மனோ பலத்திலும் குன்றிக்கொண்டு வந்தார்கள். இவை களைப் பார்த்த அரசாங்க அதிகாரிகள் சிலருக்கு மனக் கொதிப்பு உண்டாயிற்று. அரசாங்க மந்திரிகளிலே ஒருவன், இந்த அபினி வியாபாரத்தை கட்டோடு ஒழித்துத் தொலைக்க வேண்டுமென்று சக்ரவர்த்திக்கு ஒரு மகஜர் சமர்ப்பித்தான். இதில், அபினிப் பழக்கமுடையவர்களுக்கு ஒரு வருஷ தவணை கொடுத்து அதற்குள் அந்தக் கொடிய பழக்கத்தை விட்டுவிட வேண்டு மென்றும், அதற்குப் பிறகும் பிடிவாதமாய்க் கையாண்டு வருகிறவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டு மென்றும், இந்த மாதிரியான சில பரிகார முறைகளைக் குறிப்பிட்டி ருந்தான். அப்பொழுது சக்ரவர்த்தியாயிருந்தவன் டாவோ குவாங்1 என்பவன். தனது ராஜ்யத்தில் ஒழுங்கையும் ஒழுக்கத்தையும் நிலைநாட்ட வேண்டுமென்று ஆசைகொண்டவன். ஆனால் இவன் ஆட்சிக் காலத்தில்தான் ராஜ்யத்தில் ஒழுங்கு குலைந்தது! ஒழுக்கம் குறைந்தது! இவன் என்ன செய்வான் பாவம்! அந்நியர்களின் சூழ்ச்சிகள், இவனுடைய அதிகாரிகளிற் சிலருடைய மனத்தை, உணர்ச்சியற்ற மரம்போலாக்கி விட்டிருந்தன. ஏதோ ஏகதேசமாக ஓரிரண்டு அதிகாரி களுக்கும் சக்ரவர்த்திக்கும் மட்டுமே, தேசத்தி லிருந்து அபினியைத் தொலைக்க வேண்டுமென்ற எண்ணம் உள்ளூர இருந்தது.
மேலே சொன்ன மகஜரை, சக்ரவர்த்தி அங்கீகரித்து எல்லா மாகாண அதிகாரிகளுக்கும் அனுப்பினான். லின்த்ஸே ஹ்ஸூ1 என்ற ஒரு மாகாண அதிகாரி - இவன் மனச்சாட்சி படைத்தவன்; இரண்டொரு மாகாணங்களுக்குத் தலைமை அதிகாரியாயிருந்து திறமைசாலியென்று பெயர் பெற்றிருந்தான். இவனைச் சக்ரவர்த்தி, தனது விசேஷ அதிகாரியாகத் தெரிந்தெடுத்து காண்ட்டன் நகரத்திற்கு அனுப்பினான். இவன் 1839-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் பத்தாந்தேதி காண்ட்டன் நகரம் வந்து சேர்ந்தான். வந்து ஒரு வாரம் வரையில், உள்ள நிலைமையைப் பரிசீலனை செய்தான்; என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ள வேண்டுமென்பதற்கு ஒரு திட்டம் வகுத்துக்கொண்டான். காண்ட்டன் துறைமுகத்தில் அரண்கள் பல கட்டச் செய்தான்; துருப்புக்களைக் கொண்டு நிறுத்தினான்; யுத்த தளவாடங்கள் பலவற்றையும் சேகரித்து வைத்துக்கொண்டான். பொதுவாக அந்நிய வியாபாரிகள் பலாத்கார எதிர்ப்புக் காட்டினால் அதனைச் சமாளிக்க என்னென்ன ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டுமோ அவையனைத்தையும் செய்து கொண்டான். உடனே, 18-3-1839 தேதியிட்டு அந்நிய வியாபாரிகள் அனைவருக்கும் ஒரு தாக்கீது விடுத்தான். இதில், அந்நியர்களுக்கு எவ்வளவோ சலுகைகள் காட்டி வியாபாரம் செய்ய அனுமதிக்கப் பட்டு வந்ததென்றும், ஆனால் அவர்கள் இந்த அனுமதியை துர்உபயோகப் படுத்துகிறார்களென்றும், சீனா விலிருந்து தேயிலை யையும் பட்டையும் பெற்றுக்கொண்டு அவை களுக்குப் பதிலாக விஷத்திற்குச் சமமான அபினியைக் கொண்டுவந்து திணிக்கிறார் களென்றும், இந்த அபினி இறக்குமதி, ஏற்கனவே தடை செய்யப்பட்டி ருந்தும் இதனைக் கள்ளத்தனமாகக் கொண்டு புகுத்துவது கொஞ்சங் கூட நியாயமில்லையென்றும், இதனை இன்னமும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதென்றும், இந்த உத்தரவு பிறந்த மூன்று நாட்களுக்குள் எல்லா அந்நிய வியாபாரிகளும் தங்கள் தங்கள் வசத்தி லிருக்கும் அபினியைத் தன்னிடம் கொண்டுவந்து ஒப்படைத்துவிட வேண்டுமென்றும் கண்டிருந்தான். இதற்கு அந்நிய வியாபாரிகள் உடனே இணங்க வில்லை; ஏதேதோ சாக்குப் போக்குகள் சொல்லிப் பார்த்தார்கள்; காலங்கடத்தினார்கள். இவர்களுக்கு முதல்வனா யிருந்து எதிர்ப்புக் காட்டியவன் பிரிட்டிஷ் தானீகன்.ஏனென்றால் பிரிட்டிஷ் வியாபாரி களுடைய சரக்குதான் அதிகமாயிருந்தது. லின்னினுடைய உத்தரவு பிரிட்டிஷாரையே அதிகமாகப் பாதித்தது. அப்பொழுது பிரிட்டிஷ் தானீகனாயிருந்த காப்டன் எல்லியட்1 என்பவன், லின்னினுடைய உத்தரவுக்கு இணங்க முடியாதென்றும் அப்படி இணங்கு வதானால் அந்நிய வியாபாரிகளுக்கு நஷ்ட முண்டாகுமென்றும், ஏதேதோ சமாதானங்களை கூறிப் பதில் விடுத்தான். ஆனால் லின், இவைகளுக் கெல்லாம் இணங்குகிறவனா யில்லை. அந்நிய வியாபாரிகள் வசித்துக் கொண்டிருந்த பிரதேசத்தைச் சுற்றி முற்றுகைபோடுகிற மாதிரி சீனக் காவற்படைகளைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டான். அந்நியர் யாரும் தங்களிருப்பிடத்தை விட்டு வெளியே போக முடியவில்லை. காவல் கைதிகள் மாதிரி ஆகி விட்டார்கள். உணவுப் பொருள்கள் வரமுடிய வில்லை; தண்ணீரில்லை; வேலைக்காரர்களில்லை. பார்த்தான் எல்லியட். வேறு வழியில்லை, 28-3-1839-ல் பிரிட்டிஷாருக்குச் சொந்தமான 20,283 அபினிப் பெட்டிகளை லின் வசம் ஒப்புவித்துவிட்டான். இதே பிரகாரம் மற்ற நாட்டு வியாபாரிகளும், தங்கள் தங்களிடமிருந்த சொற்பச் சரக்கையும் ஒப்புக்கொடுத்து விட்டார்கள். பிரிட்டிஷார் பறி கொடுத்த அபினியின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் என்று அப்பொழுது கணக்கிடப் பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட இந்த அபினியைக் கொண்டு லின், தனது நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல பாடங் கற்பிக்கத் தீர்மானித்தான். கடலோரமாக வசிக்கிறவர்களல்லவோ கள்ள அபினி இறக்குமதியா வதற்குத் துணை செய்கிறார்கள்? எனவே இந்த அபினி அனைத்தையும் கடற்கரை யோரமாகவுள்ள ஓரிடத்திற்குக் கொண்டு போகச் செய்தான். சுமார் நூற்றைம்பது சதுர அடி சுற்றளவுள்ள இரண்டு பெரிய பள்ளங்கள் தோண்டி அதில் உப்பு நீர் நிரப்பச் செய்தான். அந்த நீரில் அபினியைத் துண்டு துண்டாக்கிப் போட்டு சுண்ணாம்பையும் கலந்துவிடச் செய்தான். இந்தக் கலப்பினால் தண்ணீர் கொதித்து அபினியைக் கரைத்தது. இந்த இரண்டு பள்ளங்களிலிருந்து, சமுத் திரத்திலே சென்று சேரும்படியாகக் குழாய்கள் போடப்பட்டன. இந்தக் குழாய்கள் வழியாக அபினித் தண்ணீரானது சமுத்திரத்திலே போய்ச் சேர்ந்தது. துளி அபினிகூட தங்கியிருக்கக் கூடாதென்பதற் காக, பள்ளங்களில் சுத்த ஜலத்தைவிட்டுக் கழுவி சமுத்திரத்திலே கொண்டு சேர்ப்பித்து விட்டார்கள். இந்தக் காட்சியைக் காணத் திரள் திரளாக ஜனங்கள் வந்தார்கள். அபினியைப் பற்றி அரசாங்கத்தார் என்ன அபிப்பிராயம் கொண்டிருக்கின்றனர் என்பது அவர்கள் மனத்தில் நன்கு பதிந்திருக்குமென்று லின் கருதினான்.
இதற்குப் பிறகு, அந்நியர் யாரும் இனி அபினியைக் கொண்டு வந்து வியாபாரம் செய்யக்கூடாதென்றும், அப்படிக் கொண்டு வரு கிறவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்படுமென்றும், அபினியைத் தவிர்த்து மற்றச் சரக்குகளை வழக்கம்போல் கொண்டு வந்து வியா பாரஞ் செய்யலாமென்றும் லின் ஒரு பிரகடனத்தை வெளியிட்டான். ஆனால், ஒரு நிர்ப்பந்தத்திற்குட்படுத்திக் கொண்டு வியாபாரம் செய்வதை பிரிட்டிஷார் விரும்பவில்லை. இதனால் மற்றச் சரக்கு களின் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் கொஞ்சம் மந்தமாகியது. சீன அதிகாரிகள் இதை எதிர்பார்க்கவில்லை.
இஃது இப்படி இருக்கையில், 1839-ஆம் வருஷம் ஜூலை மாதம் ஹாங்காங்1 துறைமுகத்திற்கு ஒரு பிரிட்டிஷ் கப்பல் வந்து நங்கூரம் பாய்ச்சியது. இதன் மாலுமிகள் சிலர், கரைக்கு வந்து ஊர் சுற்றுகையில், இவர்களுக்கும் சில சீனர்களுக்கும் கைகலந்த சண்டை உண்டாயிற்று. பார்க்கப் போனால் குடிவெறியினால் ஏற்பட்ட சண்டை இது. இதில் ஒரு சீனன் இறந்து போய்விட்டான். இவன் மரணத் திற்குக் காரணமாயிருந்த மாலுமிகளை உடனே தங்களிடத்தில் ஒப்புக் கொடுக்க வேண்டுமென்று சீன அரசாங்க அதிகாரிகள், பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு ஒரு தாக்கீது விடுத்தார்கள். ஆனால், இறந்துபோன சீனனுடைய குடும்பத்திற்குத் தாங்கள் நஷ்டஈடு கொடுத்து விட்டதாகவும், மாலுமிகளை ஒப்புக் கொடுக்க முடியா தென்றும் பிரிட்டிஷ் அதிகாரிகள் தெரிவித்து விட்டார்கள். இதைப் பார்த்து லின்னுக்குக் கோபம் உண்டாயிற்று. இனி பிரிட்டிஷ் வியாபாரக் கப்பல் எதுவும் காண்ட்டன் துறைமுகத் திற்குள் வரக்கூடாதென்றும், சீனர் யாரும் பிரிட்டிஷாரோடு வியாபாரம் செய்யக்கூடாதென்றும் 1840-ஆம் வருஷத் தொடக் கத்தில் ஓர் ஆணை பிறப்பித்தான். பிரிட்டிஷார் ஆத்திர மடைந்தனர். மாக்கோ தீவைத் தங்குமிட மாகக் கொண்டு அங்கிருந்து, வேற்று நாட்டார் மூலம் வியாபாரம் நடத்த முயன்றனர். பயனடையவில்லை. பலாத்காரத்தை உபயோகிப் பதைத் தவிர வேறு வழியில்லையென்ற முடிவுக்கு வந்தனர். 1840-ஆம் வருஷம் ஜூன் மாதக் கடைசியில் , ஐந்நூற்று நாற்பது பீரங்கி களையும் ஆயிரக் கணக்கான துருப்புக்களையும் தாங்கிக் கொண்டு பதினாறு யுத்தக் கப்பல்கள் மாக்கோ தீவு ஓரத்தில் வந்து நின்றன. அதாவது காண்ட்டன் துறைமுகம், வெளிப் போக்குவரத்தின்றி அடைக்கப் பட்டுவிட்டது. இதற்குப் பிரதியாக, சீன அதிகாரிகள், பிரிட்டிஷ் கப்பல்கள் எங்கே காணப்பட்டாலும் அவை நாச மாக்கப்பட வேண்டுமென்றும், பிரிட்டிஷ் போர்வீரர்களும் கண்ட விடத்தில் கைதியாக்கப்படுவார் களென்றும், இந்த நாசவேலையைச் செய்கிற வர்களுக்கு இனாம் அளிக்கப்படுமென்றும் பிரகடனங்கள் விடுத்தனர். இதன் தாத்பரியம் என்ன? பிரிட்டிஷாருக்கும் சீனர் களுக்கும் யுத்தம் தொடங்கிவிட்டது. இதுவே முதல் அபினி யுத்தம்.
பிரிட்டிஷ் போர்க்கப்பல்கள், முதலில் காண்ட்டன் துறை முகத்தின் தெற்குப் பாகத்தைத் தாக்கின. ஆனால் லின், ஏற்கனவே இங்குச் செய்திருந்த பந்தோபது பலமாயிருந்தது. எனவே, இவை வடக்கு நோக்கி சென்று யாங்க்ட்ஸீகியாங் நதியின் முகத்துவாரத் திலுள்ள கோட்டை கொத்தளங்களைத் தாக்கின. எதிர்ப்புக் காட்டிய சீனப்படைகள் பின் வாங்கின. பிரிட்டிஷார், முகத்து வாரத்திற் கருகிலுள்ள சில சிறிய தீவு களையும், நகரங்களையும் கைப் பற்றிக்கொண்டனர். இதைக் கேட்டு, பீக்கிங் நகரத்து அரண்மனைச் சுவர்களுக்குள் அமைதியாகக் கொலு வீற்றிருந்த மஞ்சூ சக்ரவர்த்தியும் அவனுடைய அமைச்சர்களும் நடுங்கிப் போய்விட்டார்கள். தங்களுடைய தெய்வவிக ராஜ்யத்தின் சக்தி இப்படி அநாகரிக அந்நியர் முன்னால் குன்றிவருவதற்குக் காரணம் என்ன வென்று யோசித்தார்கள். யாராவது ஒருவனை, தங்களுடைய காரணத்திற்குப் பலிகொடுக்க வேண்டுமல்லவா? எவன் அந்நியர் களின் அகம் பாவத்தைக் குலைத்துச் சீனர்களின் சுயமரியாதையைக் காப் பாற்றினானோ அவனுடைய-அந்த லின் என்பவனுடைய - ராஜ தந்திர மற்ற நடவடிக்கைகளே, சீன ஏகாதிபத்தியத்தின் கௌரவ குறைவுக்குக் காரணம் என்று தீர்மானித்தார்கள். எனவே அவனை வேலையினின்று விலக்கிவிட்டு, அவனுடைய தானத்தில் சீ ஷான்1 என்ற ஒரு மஞ்சூ ஜாதியினனை நியமித்து, பிரிட்டிஷாரோடு சமாதானம் பேசுமாறு அனுப்பினார்கள்.
சமாதானம் பேசவே வந்தவனல்லவா சீ ஷான்? இதனைப் பிரிட்டிஷார் முன்னாடியே தெரிந்துகொள்ளவேண்டுமென்று தீர்மானித்து, இவன், காண்ட்டன் துறைமுகத்தில் பந்தோபதிற் காக லின் கட்டிவைத்துப் போயிருந்த அரண்கள், மற்றப் பாதுகாப்பு தலங்கள் முதலிய அனைத்தையும் தகர்த்துத் தரைமட்டமாக்கி விட்டான். பின்னர் பிரிட்டிஷாருக்குச் சமாதான தூது விடுத்தான். யுத்தம் நிற்கவில்லை; அது நடந்து கொண்டிருந்தது. பிரிட்டிஷ் அதிகாரிகள், உடனே சமாதான தூதுக்குப் பதில் அனுப்பினர். ஹாங்காங் தீவை பிரிட்டிஷாருக்குக் கொடுத்துவிட வேண்டும்; காண்ட்டன் துறைமுகத்தில் எவ்வித நிர்ப்பந்தமும் இல்லாமல் வியா பாரம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்; பிரிட்டிஷா ருடைய அபினியைப் பறிமுதல் செய்ததற்காக அறுபது லட்சம் சீன டாலர் நஷ்ட ஈடாகக் கொடுக்கவேண்டும்; இந்த நிபந்தனைகள் நிறை வேற்றப்பட்டால்தான் யுத்த நிறுத்தம் ஏற்படும் என்று இந்தப் பதில் கூறியது. எப்படியாவது சமாதானஞ் செய்துகொள்ள வேண்டு மென்ற ஒரே நோக்கத்துடனிருந்த சீ ஷான், பீக்கிங்கிலுள்ள தலைமை அரசாங்கத்தின் அங்கீகாரத்தைப் பெறாமலே, மேற்படி நிபந்தனை களுக்குச் சம்மதம் கொடுத்துவிட்டான். யுத்தம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதற்குள் இந்தச் சமாதான நிபந்தனைகள் பீக்கிங் குக்குத்தெரிவிக்கப்பட்டன. ஆனால் தலைமை அரசாங்கம் இவைகளை ஏற்றுக் கொள்ள முடியா தென்று சொல்லி சீ ஷானுடைய நட வடிக்கையைக் கண்டித்தது. மறுபடியும் யுத்தம் மும்முரமாகத் துவங்கிவிட்டது. லின்னின் பாதுகாப்பு தலங்கள் ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டபடியால் பிரிட்டிஷ் படைகள் சுலபமாக முன்னேற முடிந்தது. இவர்கள் கையில் சீனர்களுடைய சுமார் ஐந்நூறு பீரங்கிகள் சிக்கின. இதற்குப் பிறகு பிரிட்டிஷார் காண்ட்டன், அமாய்1, ஷாங்காய் முதலிய பல துறைமுகப் பட்டினங்களைக் கைப் பற்றிக் கொண்டனர். சீனர்களுக்கு உயிர்ச் சேதமும் பொருட் சேதமும் ஏராளம். யாங்க்ட்ஸீகியாங் நதிக்குள்ளேயே பிரிட்டிஷ் கப்பல்கள் பீரங்கிகளை முழங்கிக்கொண்டு நுழைந்துவிட்டன. நான்கிங் நகரத்திற்கு ஆபத்து ஏற்படும் போலிருந்தது. பீக்கிங் அரசாங்கம் பயந்துபோய் சமாதானம் கோரியது. இந்தக் கோரிக்கை யின் பலன்தான் 1842-ஆம் வருஷம் ஆகட் மாதம் 29-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட நான்கிங் உடன்படிக்கை.2 நவீன ராஜதந்திர உலகத்தில், முதன் முதலாக நிறைவேற்றப்பட்ட ஏற்றத்தாழ்வான உடன்படிக்கை இதுதான் என்று நடுநிலைமையிலுள்ள அறிஞர்கள் கூறுகிறார்கள்.
இந்த உடன்படிக்கையின் மூலம், சீனா, தன்னுடைய பிற்கால வாழ்வையே பிறருக்கு எழுதிக் கொடுத்துவிட்டது; தன்னுடைய அரசியல் சுதந்திரத்தையும் பொருளாதார சுதந்திரத்தையும் அந் நியர்கள் நிர்ணயிப்பதற்கு இடங்கொடுத்துவிட்டது. இதன் ஷரத்துக் களைப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும். ஷரத்துக்களின் முக்கியமான அமிசங்கள் வருமாறு:-
1. பறிமுதல் செய்யப்பட்ட அபினிக்கும், யுத்தச் செலவு முதலிய வைகளுக்குமாக ,சீன அரசாங்கம் இருநூற்றுப்பத்து லட்சம் டாலர் நஷ்டஈடு செலுத்த வேண்டும். இந்தத் தொகையை, மூன்றரை வருஷத் தவணைக்குள் வெள்ளி நாணயங்களாகவே கொடுக்கவேண்டும்
2. ஹாங்காங் தீவு, பிரிட்டிஷ் அரசாங்கத்திற்குச் சாசுவத மாகக் கொடுக்கப்பட்டது.
3. காண்ட்டன், அமாய், பூச்சௌ,3 நிங்க்போ, ஷாங்காய் ஆகிய ஐந்து துறைமுகப்பட்டினங்களில் பிரிட்டிஷார், பகிரங்க மார்க் கெட்டில் வியாபாரம் செய்யலாம்; மற்ற அந்நிய நாட்டு வியாபாரிகள் தங்களுடைய வாசதலங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம். அந்நிய வியாபாரிகள் சீன ஹாங்குகள் மூலமாகவே தங்கள் வியாபாரத்தை நடத்த வேண்டு மென்றிருந்த ஏற்பாடு ரத்து செய்யப்பட்டது
4. ஏற்றுமதி,இறக்குமதியாகிற பொருள்களில் இன் னின்ன பொருள்களுக்கு இவ்வளவு இவ்வளவு வரி விதிக்கப் படவேண்டும் என்று ஒரு திட்டம் வகுக்கப்பட்டு அதன் பிரகாரமே வியாபாரம் நடைபெறவேண்டும். ஓர் ஒப்பந்தத் தின் மூலம் இந்தச் சுங்க வரித் திட்டம் ஊர்ஜிதம் செய்யப் பெறவேண்டும். வரி விகிதங்களில் ஏதேனும் மாற்றஞ்செய்ய வேண்டுமானால், அதற்குப் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் முன் சம்மதம் வேண்டும்; இல்லாவிட்டால் எவ்வித மாற்றமும் செய்யக்கூடாது.
5. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பிரதிநிதிகளைச் சீன அரசாங்கத்தார், சம அந்ததிலேயே வைத்து நடத்துவர். இரண்டு நாட்டுப் பிரதிநிதிகளும் சம அந்ததிலுள்ளவர் களாகவே தங்கள் விவகாரங்களை நடத்துவார்கள்.
இப்படிப் பொதுவான சில அமிசங்கள் மட்டுமே இந்த நான்கிங் உடன்படிக்கையில் காணப்பட்டன. இவற்றை அனுஷ்டானத் திற்குக் கொண்டு வருகிறபோது என்னென்ன புதிய அனுபவங்கள் அல்லது சங்கடங்கள் ஏற்படுகின்றனவோ அவற்றை அவ்வப் பொழுதைய சூழ்நிலையை அனுசரித்துத் தனித்தனி உப-ஒப்பந்தங் களின் மூலமாகச் சமாளித்துக் கொள்ளலாமென்று இருதரப் பினரும் ஒப்புக்கொண்டனர். இதையொட்டி அடுத்த வருஷம் வேறோர் ஒப்பந்தம் நிறைவேற்றிக் கொள்ளப்பட்டது. இதற்கு போக் ஒப்பந்தம்1 என்று பெயர். இதில் ஒரு ஷரத்தின் மூலம் வியாபார விதிகள், சுங்கவரி விகிதங்கள் முதலியன நிர்ணயிக்கப்பட்டன. மற் றொரு பிரிவின் மூலம் விசேஷப் பிரதேச உரிமை2 என்று அரசியல் பரிபாஷையில் வழங்கப்படுகிற ஒரு விநோதமான உரிமை சிருஷ்டிக் கப்பட்டது. இதுதான் நான்கிங் ஒப்பந்தத்தின் பின் விளைவுகளிலே மிக முக்கியமானது. இந்த போக் ஒப்பந்தத்தில் இது பொதுப் படையாகக் கூறப்பட்டதேயானாலும், பின்னாடி நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட உப ஒப்பந்தங்களில் இது லேசாக விரிவடைந்து , சீன அரசாங்க நிருவாகத்தில் அநேக கேடுகளை உண்டுபண்ணக் கூடிய சக்தி பொருந்தியதாகிவிட்டது. இந்த உரிமையின் சாரம் என்னவென்றால், வியாபாரத்திற்கென்று திறந்துவிடப்பட்ட துறை முகப் பட்டினங்களில் வசிக்கும் பிரிட்டிஷ் பிரஜைகள், சீன அரசாங்கத்தின் எல்லைக்குள் வசித்துக் கொண்டிருக்கிறவர்களா யிருந்தாலும், பிரிட்டிஷ் சட்ட திட்டங்களுக்குட்பட்டவர்களே; சீன சட்ட திட்டங்களுக் குட்பட்ட வர்களல்லர். இவர்கள் குற்றஞ் செய்துவிட்டால், பிரிட்டிஷ் சட்டப்படி பிரிட்டிஷ் நீதிபதிகளே விசாரணை செய்து தண்டிக்க வேண்டும்.1 இந்த ஒரு ஷரத்துக்கு ஒப்புக் கொண்டு கையெழுத்திட்டுவிட்டதன் காரணமாகப் பின்னாடி என்ன விபரீத பலன்கள் உண்டாகக் கூடுமென்பதை அப்பொழுதைய சீன அதிகாரிகள் உணரவேயில்லை. அந்நியர்கள்-அதாவது பிரிட்டி ஷார் - மேற்சொன்ன ஐந்து துறைமுகப் பட்டினங்களோடு மட்டும் தங்களுடைய விவகாரங்களை வரையறுத்துக் கொண்டிருப்பார் களென்றும், இவர்களோடு அடிக்கடி தகராறு செய்து கொள்ள மாலிருப்பதற்கு, இவர்களுடைய விவகாரங்களை இவர்களே கவனித்துக் கொள்ளும்படி தனியாக விட்டுவிடுவதே நல்லதென்றும் கருதினார்கள். ஆனால் இதுகருவேப்பிலைக்காரன் கதையாக முடிந்தது. மேற்படி துறைமுகப் பிரதேசங்களல்லாத மற்ற சீன அரசாங்க நிருவாகத் திற்குட்பட்ட பிரதேசங்களில் குற்றஞ்செய்து விடுகிற பிரிட்டிஷ் பிரஜை கூட இந்த உரிமையின் கீழ் தஞ்சம் புகுந்து கொள்ள முடிந்தது.
சீனாவில் எங்கு ஓர் அந்நியன் சென்றாலும் அவனுடன் இந்த விசேஷப் பிரதேச உரிமையும் கூடவே சென்றது. தேசத்தின் பொது வான சட்டத்திற்கு அவன் புறம்பானவனாகிவிட்டான். அக்கிரமஞ் செய்கிற அந்நியனுக்கு, சீனா ஒரு சொர்க்கலோகம் மாதிரியாகி விட்டது. ஏனென்றால் அவன், சீனச் சட்டத்தையோ, தனது நாட்டுச் சட்டத்தையோ அலட்சியப்படுத்திவிட்டு, தன் அக்கிரமத் தொழில்களை நடத்திக் கொண்டிருக்க முடிந்தது.
இந்த விசேஷப் பிரதேச உரிமை யோடு மற்றொரு விநோதமான உரிமையையும் அந்நியர்கள் சீன அரசாங்கத்திடமிருந்து பறித்துக் கொண்டார்கள். அதாவது ஓர் அந்நிய அரசாங்கத்திற்கு ஏதேனும் விசேஷ சலுகை காட்டப்பட்டால் அது மற்ற எல்லா நாடுகளுக்கும், அவை கேட்டாலும் சரி, கேளாம லிருந்தாலும் சரி, விரும்பினாலும் சரி, விரும்பா விட்டாலும் சரி முறையே காட்டப்படவேண்டும். இத னுடைய பலன் என்னவாயிற் றென்றால் சீனாவிடமிருந்து ஏதேனும் சாதகங்கள் பெற வேண்டுமானால் எல்லா அந்நிய வல்லரசுகளும் ஒன்று சேர்ந்து கொண்டன. தங்களுடைய நடவடிக்கைகளின் மூலம் ஏதேனும் பாதகம் உண்டாகுமென்று தெரிந்தால், அவை தனித் தனி யாக ஒதுங்கிக் கொண்டன. ஓர் ஆசிரியன் கூறுகிறமாதிரி, இந்தச் சலுகையானது, ஒன்று சேர்ந்து சீனாவை நெருக்குவதற்கும், ஆனால் தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதற்கும் வல்லரசுகளுக்கு உதவியாயிருந்தது.
இந்தச் சலுகையை அனுசரித்து, பிந்திய வருஷங்களில், மேனாட்டு வல்லரசுகள் ஒவ்வொன்றும், தங்கள் தங்கள் பிரதிநிதிகள் மூலம், மேலே சொன்ன விசேஷப் பிரதேச உரிமை களென்ன, வியாபாரச் சலுகை களென்ன, எல்லாம் கோரின. சீன அரசாங்கமும் இவை ஒவ்வொன்றுக்கும் இணங்கிக் கொடுக்க வேண்டியதாயிற்று. அமெரிக்கர் (3-7-1844) பிரான் (24-10-1844) நார்வே - வீடன் (20-3-1847)- இப்படி ஒன்றன்பின்னொன்றாக நீட்டிய உடன் படிக்கைக் காகிதத்தில் அது கையெழுத்திட்டது. சீன அரசாங்கத்தின் அதிகார எல்லைக்குட்பட்டு மாக்கோ தீவில் வியாபாரஞ் செய்து வந்த போர்த்துகேசியர் கூட, மேற்படி மாக்கோ தீவில் சீனர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லையென்று சொன்னார்கள்! ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்குச் சுலபந்தானே?
அந்நியர் புகுதல் என்ன நீதி?
அபினி காரணமாகச் சண்டை உண்டாகி நான்கிங் ஒப்பந்தத்தில் வந்து முடிந்தது. ஆனால் அபினி வியாபார மென்னவோ குறையவில்லை. இந்த நான்கிங் ஒப்பந்தத்திலோ, இதை யனுசரித்துப் பின்னர் நிறைவேற்றப்பட்ட உப ஒப்பந்தங்களிலோ, இந்த அபினி விஷயத்தைப் பற்றி அந்நிய நாட்டுப் பிரதிநிதிகள் ஒன்றுமே குறிப்பிடாமல் மௌமா யிருந்து விட்டனர். சட்டத்தின் மூலமாக அபினி இறக்குமதி தடை செய்யப்பட்டிருக்கிற தென்று நினைத்துக் கொண்டு சீன அரசாங்கத்துப் பிரதிநிதிகளும் சும்மாயிருந்து விட்டனர். ஆனால், நான்கிங் ஒப்பந்தத்திற்குப் பிறகு அந்நியர்கள், அதிக துணிச்சலோடு கள்ளத்தனமாக அபினியை இறக்குமதி செய்து வந்தனர். ஏனென்றால் விசேஷப் பிரதேச உரிமை யின் கீழ் இப்பொழுது தப்பித்துக் கொள்ளலாமல்லவா? 1840-ஆம் வருஷத்திற்கும் 1858-ஆம் வருஷத்திற்கும் மத்தியில் அபினி இறக்குமதியானது ஒன்றுக்கு மூன்று மடங்கு அதிகரித்து விட்டது. இதற்குப் பெரிதும் துணையாயிருந்தார்கள் அந்நியர்கள்.
பத்தொன்பதாவது நூற்றாண்டின் மத்தியில் தென்னமெரிக்கா முதலிய பிரதேசங்களில், ஐரோப்பியர் பலர் சென்று தோட்டப் பயிர் முதலாயின செய்து வந்தார்கள். இவர்களுக்குக் குறைந்த செலவில் அதிகமான ஆட்கள் தேவையாயிருந்தது. இதற்காக, சீனாவிலிருந்து ஏராளமான கூலியாட்களை ஐரோப்பிய வியாபாரிகள் சிலர், தங்களுடைய கப்பல்களில் ஏற்றிக் கொண்டுபோய், அங்கே அமெரிக்காவில், இவர் களைக் கூட்டங்கூட்டமாகத் தோட்ட முதலாளிகளுக்கு விற்றுக் கொழுத்த லாபஞ் சம்பாதித்தார்கள். தரகர்களின் ஆசைவார்த்தைகளை நம்பிக் கப்பலேறிச் சென்ற இந்தக் கூலிகள், கப்பல் பிரயாண காலத்திலும், சென்ற பிறகு தோட்டங்களிலும் அனுபவித்த கஷ்டங்களோ சொல்லி முடியாது. உதாரணமாக 1847-ஆம் வருஷத்திற்கும் 1857-ஆம் வருஷத் திற்கும் மத்தியில் ஹாங்காங் துறைமுகத்திலிருந்து க்யூபா தீவுக்கு1 மட்டும் ஏற்றுமதி செய்யப்பட்ட 23,928 கூலிகளில் சுமார் 3,000 பேர், கப்பல் பிரயாணத்தின் போதே இறந்து போய்விட்டனர். தன்னுடைய பிரஜை களை, அவர்களுடைய வறிய நிலையை ஆதாரமாகக் கொண்டு, அந்நியர்கள் துர் உபயோகப்படுத்தி வருவது சீன அரசாங்கத்தின் மனத்தில் உறுத்திக் கொண்டேயிருந்தது.
சீனாவின் தெற்குக் கடலோரங்களில் கொள்ளைக் கூட்டத்தினர் மலிந்திருந்தனர். இவர்கள் வருகிற, போகிற சிறிய கப்பல்களை வழி மறித்துக் கொள்ளையடித்து அதிகமான சேதத்தை உண்டு பண்ணி வந்தனர். சீனக் கப்பல் வியாபாரிகளுக்கு இது பெரிய தொந்தரவா யிருந்தது. இவர்களுக்குப் போர்த்துகேசியர் முதலாய அந்நியர்கள், தங்களுடைய ஆயுத பலத்தின் மூலம் பாதுகாப்புக் கொடுத்து, அதற் கென்று ஒரு கட்டணம் வசூலித்துக் கொண்டு வந்தார்கள். சீனக் கப்பல் வியாபாரமானது, இந்த அந்நியர்களின் தயவைப் பொறுத்த விஷயமாகி விட்டது. இவர்கள் இஷ்டப்படி கட்டணம் வசூலித்துக் கொள்ளை லாபம் சம்பாதித்தார்கள். கடல் கொள்ளைக்காரர்களை விரட்டியடிக்காமல் அவர்களுக்கு ஆதரவு காட்டுவது போலவே இவர்களுடைய செயல் இருந்தது. சீன வியாபாரிகளின் மனம் புண்படாமலிருக்குமா?
இவையெல்லாம் சேர்ந்து அந்நியர்கள் மீது ஒரு வெறுப்பை வளர்த்தது. வேண்டாத விருந்தினனாக வந்து காலையும் ஊன்றிக் கொண்டுவிட்ட அந்நியனை எவ்வளவு தூரம் ஒதுக்கிவைக்க வேண்டுமோ அவ்வளவு தூரத்தில் ஒதுக்கிவைப்பதே நல்லதென்று சீனப் பொது ஜனங்கள் கருதினார்கள். சீன அரசாங்க அதிகாரிகளோ, உடன்படிக்கைகள் நிறைவேற்றப்பட்டாலென்ன, அவற்றில் கையெ ழுத்திட்டாலென்ன, அவைகளின் ஷரத்துக்களை அப்படியே அனுஷ்டிக்க வேண்டுமென்பது என்ன கட்டாயம் என்கிற மனப் போக்கில் இருந்தனர். ஆனால் அந்நியர் களோ, நான்கிங் உடன் படிக்கை ஷரத்துக்களை இன்னும் நன்றாக வலுப் படுத்திக் கொண்டு, சீனாவிலேயே சாசுவதமான உரிமைகளைப் பெற வேண்டு மென்பதில் முனைந்திருந்தனர். உடன்படிக்கைகளை அனுஷ்டானத் திற்குக் கொண்டு வருகிறபோதுதான் அவைகளின் குறை நிறைகள் தெரியும் என்ற ஒரு முகாந்தரத்தை வைத்துக் கொண்டு, உடன் படிக்கை ஷரத்துக்கள் சரியாக நிறைவேற்றப்படவில்லையென்றும், சீன அரசாங்கத்தார் தங்களைச் சம அந்ததிலே வைத்து நடத்த வில்லை யென்றும், தங்களுடைய உரிமைகளையும் சலுகைகளையும் அனுபவிக்கிற விஷயத்தில் அநேக நிர்ப்பந்தங்களை உண்டு பண்ணி வருகிறார்களென்றும், ஏதேதோ புகார்களைக் கிளப்பிவிட்டுக் கொண்யிருந்தார்கள். இதற்கேற்றாற்போல் நான்கிங் ஒப்பந்தப் படி, காண்ட்டன் துறைமுகப்பட்டினம் இவர்களுடைய வியாபாரத் திற்குத் திறந்து விடப்பட வேண்டுமல்லவா, அது திறக்கப் படவில்லை. காண்ட்டன் வாசிகளின் எதிர்ப்பு இதற்கு முக்கிய காரணமாயிருந்தது. பிரிட்டிஷ் தானீகன், தன் பரிவார சகிதம் துறை முகத்திற்குள் நுழைய முயன்று முடியாமல் திரும்பிவிட்டான். தங்களுடைய சுய மரியாதைக்குப் பங்கம் ஏற்பட்டுவிட்டதாகப் பிரிட்டிஷார் கருதினர். நான்கிங் உடன்படிக்கையை அனுஷ்டானத் திற்குக் கொண்டு வருகிற விஷயத்தில் சீன அரசாங்கம் தவறிவிட்ட தாக அதன் மீது குறை கூறினர். 1844-ஆம் வருஷம் அமெரிக்காவும் பிரான்ஸும், சீனாவுடன் செய்து கொண்ட உடன்படிக்கைகளில்1 பன்னிரண்டு வருஷங்களுக்குப் பிறகு இவை - இந்த உடன் படிக்கைகள் - திரும்பவும் பரிசீலனை செய்யப்பட வேண்டுமென்று ஒரு விதி சேர்க்கப்பட்டிருந்தது. ஒரு தேசத்தாருக்கு அளிக்கப்பட்ட சலுகை, மற்ற தேசத்தாருக்கும் முறையே அளிக்கப்பட வேண்டு மென்ற நியதிப்படி2 தங்களுடைய உடன்படிக்கையும் இதேமாதிரி பரிசீலனை செய்யப்பட வேண்டுமென்று பிரிட்டிஷார் வற்புறுத்திக் கொண்டேயிருந்தனர்.
இங்ஙனம் இருதரப்பார் மனத்திலும் துவேஷம் புகைந்து கொண்டேயிருந்தது. இது நெருப்பாகப் பற்றுவதற்கு ஒரு சிறு பொறியே தேவையாயிருந்தது. இப்படிப்பட்ட சிறுபொறிகள் பிரான்ஸுக்கும் பிரிட்டனுக்கும் முறையே அகப்பட்டன.
நான்கிங் உடன்படிக்கைக்குப் பிறகு பொதுவாகவே அந்நியர்கள், சீன அதிகாரிகளை மதிக்காமலும் சீன சட்டதிட்டங்களைப் பொருட் படுத்தாமலும் நடந்து வந்தார்கள். அந்நியர்கள், தங்கள் விவகாரங் களைத் துறைமுகப் பிரதேசங்கள் அளவோடு வரையறுத்துக் கொள்ள வேண்டு மென்றல்லவோ மேற்படி நான்கிங் ஒப்பந்தம் கூறியது? இதைமீறி ஒரு பிரெஞ்சுப் பாதிரி, உட்பிரதேசங்களிலே சென்று பிரசாரம் செய்யத் தொடங்கினான். அப்பொழுது தைப்பிங் கலகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிற காலம். பாதிரிமார்களுக்கும் இந்தக் கலகத்திற்கும் சம்பந்தம் உண்டு என்ற எண்ணம் சில சீன அதி காரிகளுக்கு இருந்த தல்லவா? எப்படியோ, சீனாவின் துரதிருஷ்ட வசமாக, இந்தப் பிரெஞ்சுப் பாதிரி சீன அதிகாரியொருவனால் விசாரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டு விட்டான். அந்நியர்களின் விசேஷப் பிரதேச உரிமைக்குப் பங்கம் ஏற்பட்டுவிட்டதென்ற கூக்குரலைக் கிளப்பிக்கொண்டு, பிரான், சீனாவைப் பழிவாங்கத் தீர்மானித்தது.
இதேமாதிரி பிரிட்டிஷாருக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. கள்ளச் சரக்குகளை ஏற்றிக்கொண்டு வருவதற்கு அனுகூலமா யிருக்கும் பொருட்டு, சில சீன வியாபாரிகள், தங்கள் கப்பல்களை பிரிட்டிஷாருக்குச் சொந்தமான ஹாங்காங் தீவில் பதிவு செய்து கொண்டும் அவற்றின் மீது பிரிட்டிஷ் கொடியைப் பறக்க விட்டுக் கொண்டும், துறைமுகங்களில் நுழைந்து தங்கள் சரக்குகளை இறக்குமதி செய்துவிட்டுப் போய்க் கொண்டிருந்தனர். இப்படிப் பட்ட ஆரோ1 என்ற கப்பலொன்று (8-10-1856) காண்ட்டன் துறை முகத்தினருகே வந்துகொண்டிருந்தது. இதில் கள்ளச்சரக்கும் சில கடற்கொள்ளைக்காரர்களும் இருப்பதாகத் துறைமுக அதிகாரிகள் சந்தேகித்து இதனைப் பரிசோதனை செய்தனர்; மாலுமிகளிற் சிலரைக் கைதியாக்கினர்; கப்பலின் மீது பறந்துகொண்டிருந்த பிரிட்டிஷ் கொடியைக் கீழே இறக்கிவிட்டனர். இது பிரிட்டிஷ் அதிகாரிகளுக்குக் கோபத்தை உண்டுபண்ணியது. கைது செய்யப் பட்டவரை உடனே தங்களிடம் ஒப்படைக்கவேண்டுமென்றும், கொடியை இறக்கியதற்காக உத்தியோக முறையில் மன்னிப்புக் கேட்கவேண்டுமென்றும் காண்ட்டன் மாகாண அதிகாரிக்கு ஒரு தாக்கீது விடுத்தனர். அவன் சரியான பதில் சொல்ல வில்லையென்ற காரணத்தைச் சொல்லிக் கொண்டு பொதுவாக காண்ட்டன் நகரத்தின் மீது -சிறப்பாக மேற்படி மாகாண அதிகாரியின் மாளிகைமீது - தங்கள் கப்பல் பீரங்கிகளைத் திருப்பினர்.
பிரிட்டிஷாரின் இந்தப் போர் முழக்கத்தைக் கேட்ட காண்ட்டன் வாசிகளுக்கு ஆத்திரமுண்டாயிற்று கலகம் கிளம்பியது. கலகக்காரர் களிற் சிலர், அந்நியர்களுடைய வியாபார தலங்களைத் தீக்கிரையாக் கினர்; இன்னும் பல சேதங்களை விளைவித்தனர். இதற்குப் பதிலாக பிரிட்டிஷ் படையினர், சீனர்களுடைய வாசதலங்களை அக்கினிக்கு அர்ப்பணஞ் செய்தனர். சீனர்களால் சேதமாக்கப்பட்ட பொருள்களில் பிரெஞ்சுக்காரருடையதும் சேர்ந்திருந்தது. இதற்குப் பரிகாரம் பெறு வதாகிற முகாந்தரத்தை வைத்துக் கொண்டு, பிரெஞ்சுக் கப்பற் படை யொன்று காண்ட்டன் துறைமுகத்தை நண்ணியது. கடைசியில் இரண்டு தேசத்துப்படைகளும் வெற்றி முழக்கஞ்செய்துகொண்டு காண்ட்டன் நகரத்திற்குள் (5-1-1858) பிரவேசித்தன. காண்ட்டன் வாசிகள் காட்டிய எதிர்ப்பு பயனில்லாமற் போயிற்று. அந்நியப் படைகளின் வரவு குறித்து அசிரத்மையாயிருந்த மாகாண அதிகாரி, அந்த அந்நியர்களாலேயே கைது செய்யப்பட்டு கல்கத்தாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விட்டான்.
பிரெஞ்சுப் பாதிரியின் கொலை, ஆரோ சம்பவம் ஆகிய இரண்டும், சீன அரசாங்கத்திற்குப் புத்தி புகட்டுவதற்கு நல்ல காரணங்களாக அகப்பட்டன. இதற்குள் நான்கிங் உடன் படிக்கை யைப் புனராலோசனை செய்து சரியான முறையில் ஒப்பந்தம் செய்து கொள்ளவும், இதற்காக பீக்கிங் அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தைகள் நடத்தவும், இங்கிலாந்தி லிருந்து லார்ட் எல்ஜினை1 தலைவனாகக் கொண்ட ஒரு பிரிட்டிஷ் தூது கோஷ்டியும் பிரான் ஸிலிருந்து ஒரு பிரெஞ்சு தூதுகோஷ்டியும் முறையே காண்ட்டன் நகரத்திற்கு வந்து சேர்ந்தன. ஏற்கனவே இந்த நகரம் பிரிட்டிஷ்-பிரெஞ்சுப் படைகளின் வசத்தில் இருந்தது. எவ்வளவு முன்னேற் பாடு! பிரிட்டிஷ்-பிரெஞ்சு பிரதிநிதிகளோடு அமெரிக்காவின் பிரதிநிதியும், ருஷ்யாவின் பிரதிநிதியும் சேர்ந்து கொண்டு, நான்கிங் உடன்படிக்கையைப் பரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தை வற்புறுத்தி பீக்கிங் அரசாங்கத்திற்கு ஒரு தாக்கீது விடுத்தனர். இது விஷயத்தில் தாங்கள் நால்வரும் ஒரேவித அபிப்பிராயமுடையவர் களாயிருப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால் பீக்கிங் அதிகார வர்க்கத்தினரோ, காண்ட்டன் மாகாண அதிகாரியோடு சமரஸப் பேச்சுக்கள் நடத்துமாறு திருப்பிப் பதில் சொல்லிவிட்டனர். நேசக் கட்சியினர் - அதாவது பிரிட்டிஷ் -பிரெஞ்சு - அமெரிக்க-ருஷ்யப் பிரதிநிதிகள்-இதைப் பொருட்படுத்தாமல் வடக்கு நோக்கிச் சென்று, யாங்க்ட்ஸீ நதியின் முகத்துவாரத்தை அடைந்தனர். இந்தப் பகுதியின் அதிகாரி இவர்களோடு சமரஸம் பேசத் துவங்கினான். இவனுக்குச் சமரஸம் பேச அதிகாரமில்லையென்று சொல்லிக் கொண்டு, நேசக் கட்யினர், டீண்ட்ஸின் நகரத்திற்குத் தாங்கள் செல்ல விரும்புவதாகவும், (ஏனென்றால் இங்கிருந்துதான் பீக்கிங் குக்குப் போகவேண்டும்.) இடையில் தங்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாதிருக்கும் பொருட்டு, வழியில் தக்கூ1 என்ற துறை முகத்தி லிருக்கும் கோட்டை கொத்தளங் களைத் தங்கள் வசம் ஒப்புவிக்க வேண்டுமென்றும் கேட்டனர். இது மறுக்கப்பட்டது. உடனே அதனைத் தாக்கித் தங்கள் வசப்படுத்திக் கொண்டு மேலும் சென்று டீண்ட்ஸின் நகரத்தை அடைந்தனர். இது தெரிந்த பீக்கிங் அரசாங்கம், சமரஸம் பேச இரண்டு பிரதிநிதிகளை அனுப்பியது. சமரஸப் பேச்சுக்கள் பேசி ஒருவாறு சமாதானம் ஏற்பட்டது. ஒவ்வோர் அரசாங்கத்தாரும் (13-6-1858-ல் ருஷ்யாவும், 18-6-1858-ல் அமெரிக் காவும், 26-6-1858-ல் பிரிட்டனும் 27-6-1858-ல் பிரான்ஸூம் முறையே) சீனாவுடன் தனித்தனியான ஆனால் ஒரே மாதிரியான ஒப்பந்தம் செய்து கொண்டனர். இதற்குத்தான் டீண்ட்ஸின் ஒப்பந்தம் என்று பெயர்.2. இதன் முக்கிய அமிசங்கள் வருமாறு:-
1. அந்நிய நாட்டு தானீகர்கள், பீக்கிங் நகரத்தில் நிரந்தரமாக வசிப்பவர்கள் ஆகிய இவர்களைத் தனக்குச் சமதையான அந்ததுடையவர் களாக நடத்துவதோடு இவர்களுக்குப் போதிய பாதுகாப்பும் அளிப்பதாகச் சீன அரசாங்கம் உறுதி கூறுகிறது.
2. கிறிதுவ தர்மத்தை உபதேசிக்கிறவர்களுக்கும் அந்த மதத்தை அனுஷ்டிப்பவர்களுக்கும் போதிய பாதுகாப்பு அளிப்பதாகவும், அவர்களுடைய விவகாரங்களில் தலையிடு வதில்லை யென்றும் சீன அரசாங்கம் உறுதி கூறுகிறது.
3. அந்நிய நாட்டுப் பிரஜைகள், வியாபார நிமித்த மாகவோ வேறு காரணமாகவோ உள்நாட்டில் எங்கு வேண்டு மானாலும், தக்க அனுமதிச் சீட்டுடன் செல்லலாம். அவர்கள் யாராவது குற்றஞ் செய்தால் அவர்களை அவர்களுடைய நாட்டு தானீகர் வசம் ஒப்புவிப்பதாகச் சீன அரசாங்கம் உறுதி கூறுகிறது.
4. யாங்க்ட்ஸீ நதியின் மூலமாக அந்நியர்கள் தங்கள் கப்பல்களைச் செலுத்திக்கொண்டு வியாபாரம் செய்யலாம். இன்னும் சில துறைமுகப்பட்டினங்களில் அந்நியர்கள் தாராளமாக வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
5. சீன அதிகார எல்லைக்குள் குற்றஞ் செய்கிற அந் நியப் பிரஜைகள், அந்தந்த நாட்டுச் சட்டப்படி தண்டிக்கப் பட வேண்டுமென்ற விசேஷப் பிரதேச உரிமையென்பது இன்னும் விரிவு செய்யப்பட்டது.
6. ஒரு தேசத்திற்குக் காட்டப்படுகிற சலுகைகள், மற்றத் தேசங் களுக்கு முறையாக உண்டு என்ற பிரிவும், சுங்கவரி விகிதங்களைத் தேவையானபோது பரிசீலனை செய்கிற பிரிவும் இந்த ஒப்பந்தங்களில் இருந்தன.
இந்த டீண்ட்ஸின் ஒப்பந்தத்தின் விசேஷம் என்னவென்றால், அபினி வியாபாரம் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டதுதான். இதற்கு முக்கிய காரணர்களாயிருந்தவர் பிரிட்டிஷார். 133 பவுண்டு அபினிக்கு 45 சீன டாலர் விகிதம் (அப்பொழுதைய மதிப்புப்படி சுமார் 70 ரூபாய்) இறக்குமதித் தீர்வை விதிக்கப்பட வேண்டுமென்று நிர்ணயிக்கப்பட்டது. இதற்குப் பிரிட்டிஷார் என்ன சமாதானம் கூறினரென்றால், சீன அரசாங்கம் அபினி இறக்குமதியைத் தடை செய்திருந்தபோதிலும் அது கள்ளத்தனமாக வந்து கொண்டிருக்கிறது; வரவர அதிகப்பட்டும் வந்திருக்கிறது. அப்படியிருக்க, பிரிட்டிஷ் அதிகாரிகளும் சீன அரசாங்கத்தோடு சேர்ந்துகொண்டு, அபினி இறக்குமதி கூடாது என்ற சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது? ஆகையால் அதனைப் பகிரங்கமாகவே இறக்குமதி செய்ய அனுமதித்து, அதற்கு ஒரு வரியையும் விதித்தால், அதன் விலை உயரும். அதிக விலை கொடுத்து வாங்கி உபயோகிப்பவர் குறைந்துவிடுவர். இதே சமயத்தில் அரசாங்கத்திற்கு நிரந்தரமாக வருமானமும் கிடைத்துக் கொண்டிருக்கும். ஆக, சீன அரசாங்கத்தின் நன்மையை முன் னிட்டுத்தான், இந்த அபினி இறக்குமதியைச் சட்டரீதியாக அங்கீகரிக்க ஏற்பாடு செய்தனர் பிரிட்டிஷார்! சீன அரசாங்கத்தினரும் வேறு வழியின்றி, இந்த நன்மையை ஏற்றுக் கொண்டனர். இது முதற் கொண்டு, வெளி நாட்டிலிருந்து அபினி இறக்குமதியாகி வந்ததோடு, வெளி நாட்டுச் சரக்குக்குப் பதில் சுதேசி சரக்கையே உபயோகிக்கலாமென்ற முறையில் சீனாவிலும் கஞ்சாச்செடி பயிராகத் தொடங்கியது! இதற்குப் பிறகு சுமார் ஐம்பது வருஷ காலம், எவ்விதத் தங்கு தடையுமின்றி, இந்த வியாபாரத்தைப் பிரிட்டிஷார் உற்சாகத் தோடு நடத்தி வந்தனர். 1906-ஆம் வருஷம், இந்த அபினி இறக்குமதி நிறுத்தப்பட வேண்டுமென்று கிளர்ச்சி ஏற்பட்ட காலத்தில் ஒரு கணக்கு எடுத்துப் பார்க்கிறபோது, ஜனத் தொகையில் சுமார் நான்கில் ஒரு பங்கினர் அபினிப் பழக்கத்திற்கு இரையாகியிருந்தார்கள்! எந்தச் சரக்கை வேண்டாமென்று சீன அரசாங்கம் மனப் பூர்வமாக வெறுத்து, அதற்காகக் கடுமையான நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டதோ அந்தச் சரக்கை-அபினியை- அதன் மீது மிகுந்த ராஜதந்திரத்துடன் திணித்து விட்டதுதான் இந்த டீண்ட்ஸின் ஒப்பந்தத்திற்குச் சிகரம் போன்றது!
டீண்ட்ஸின் ஒப்பந்தம் கையெழுத்திடப்பெற்றது. ஆனால் இது பீக்கிங்கில் ஊர்ஜிதம் பெறவேண்டியிருந்தது. இதற்காக , ருஷ்யப் பிரதிநிதி மட்டும் முன் கூட்டியே தரை மார்க்கமாக பீக்கிங் குக்குச் சென்று தன் காரியத்தை முடித்துக் கொண்டு விட்டான். மற்ற மூன்று நாட்டுப் பிரதிநிதிகளும், தங்கள் தங்கள் போர்க்கப்பல் களில் ஆற்று மார்க்கமாகவே செல்வதென்று தீர்மானித்தார்கள். இதற்குச் சீன அதிகாரிகள் சம்மதப்பட வில்லை. வேறு வழியாக பீக்கிங்குக்குச் செல்லுமாறு கூறினர். இது காரணமாக இருதரப் பாருக்கும் சண்டை நடைபெற்றது. சீனர்கள் வெற்றியடைந்தனர். நேசக் கட்சியினர்-ஷாங்காய்க்குத் திரும்பிவந்து அங்கு இன்னும் அதிக படைகளைச் சேர்த்துக் கொண்டு மீண்டும் டீண்ட்ஸின் வழியாக பீக்கிங்குக்குச் சென்றனர்; நகரத்தையும் கைப்பற்றிக் கொண்டனர். சீனப்படைகள் இவர்களை எதிர்க்க முடியாமல் பின்வாங்கின. இப்படிப் பின்வாங்குகிறபோது பிரிட்டிஷ் தூதனாகச் சென்ற லார்ட் எல்ஜினின் அந்தரங்கக் காரியதரிசி உள்பட அந்நியர் சிலரைக் கைதியாக்கிக் கொண்டு சென்றன. இவர்கள் கொடுமையாக நடத்தப் பட்டார் களென்பதைக் காரணமாக வைத்துக் கொண்டு லார்ட் எல்ஜின், பீக்கிங்குக்கு ஐந்து மைல் இப்பாலுள்ள சக்ரவர்த்தியின் கோடைக்கால அரண்மனையைச் சுட்டெரித்துவிடும்படி உத்தர விட்டான். பிரிட்டிஷ்-பிரெஞ்சுப் படைகள், நகரத்தை வேறு கொள்ளையிடத் துவங்கிவிட்டன. சக்ரவர்த்தி, தன் குடும்பத்துடன் வடக்கிழக்கே யுள்ள ஜிஹோல் மாகாணத்திற்கு ஓடிவிட்டான். சீன அரசாங்கம் எந்தவிதமான நிபந்தனை களுக்கும் இணங்கத் தயாரா யிருந்தது. இந்த நிலைமையில் இரு சாராருக்கும்-அதாவது சீன அரசாங்கத்தாருக்கும் நேசக் கட்சியினருக்கும்-மத்தியதம் செய்து வைப்பதாக ருஷ்ய அரசாங்கத்தின் பிரதிநிதி முன்வந்தான். என்ன அக்கரை!
கடைசியில் சமாதான ஒப்பந்தம் 24-10-1860-ல் பிரிட்ட னுடனும், மறுநாள் பிரான்ஸூடனும் நிறைவேறியது. இதற்கே பீக்கிங் ஒப்பந்தம்1 என்று பெயர். இதன்படி
1. ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட டீண்ட்ஸின் ஒப் பந்தம் ஊர்ஜிதம் செய்யப்பட்டது.
2. ஹாங்காங்குக்கு எதிரேயுள்ள கௌலூன்2 தீபகற்பம், பிரிட்டிஷாருக்குக் குத்தகைப் பிரதேசமாகப் போய்ச் சேர்ந்தது.
3. டீண்ட்ஸின் உடன்படிக்கையில் குறிப்பிடப்பெற்ற துறைமுகப் பட்டினங்களோடு டீண்ட்ஸினையும் சேர்த்து மொத்தம் பதினோரு துறைமுகங்கள் பிரிட்டிஷ்-பிரெஞ்சு வியாபாரத்திற்குத் திறக்கப் பெற்றன.
4. பிரிட்டிஷ்-பிரெஞ்சு வியாபாரிகள் கொண்டுவரும் சரக்குகளுக்கு விதிக்கப்பட்டுவந்த இறக்குமதித் தீர்வை குறைக்கப் பெற்றது.
5. சீனர்கள், அந்நியர்களுடைய சேவையில் அமரக் கூடாதென்று இதுகாறும் தடுக்கப்பட்டிருந்தனர். இந்தத் தடை ரத்து செய்யப்பட்டு, சீனர்கள் அந்நியர்களின் கீழ் வேலை பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.
6. சீனக்கூலிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டு வந்ததைச் சீன அரசாங்கம் 1857-ஆம் வருஷத்திற்குப் பிறகு தடுத்திருந்தது. அந்தத் தடையை நீக்கி, கூலி ஏற்றுமதி சட்ட ரீதியாக அனுமதிக்கப் பட்டது.
7. பிரிட்டிஷாருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் மஞ்சூ அரசாங்கம் நஷ்ட ஈடாக ஒரு தொகை கொடுக்க வேண்டு மென்று நிர்ணயிக்கப்பட்டது.
8. கிறிதுவப் பாதிரிமார்கள், தங்களுடைய தேவா லயங்கள் முதலியவைகளுக்காக நிலம் சொத்து முதலியன வாங்கிக் கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டார்கள்.
இந்த பீக்கிங் ஒப்பந்தத்திற்கு ருஷ்யாவின் பிரதிநிதி மத்தியதம் செய்து வைத்தானல்லவா? அவன் தன் மத்தியதத் திற்குக் கூலி விரும்பினான்! யாரிடமிருந்து? அதிக சாதகங்கள் பெற்ற நேசக் கட்சி யாரிடமிருந்தல்ல; நீட்டிய காகிதத்திலே கையெழுத்துப் போடுகின்ற நிலைமைக்கு வந்திருந்த சீன அரசாங்கத்திடமிருந்து! இவனுடைய உருட்டல் மிரட்டல் பேரில், உஸூரி1 நதிக்குக் கிழக்கேயுள்ள பிரதேசமும் ஆமூர் மாகாணமும் 2 ருஷ்யாவுக்கு (1861-ஆம் வருஷம் நவம்பர் மாதம்) அளிக்கப்பட்டது. இந்த வருஷத்தில் தான் வ்ளாடிவாடாக்3 நகரம் காணப்பட்டது.
டீண்ட்ஸின்-பீக்கிங் ஒப்பந்தங்களுக்குப் பிறகு, பொதுவாக அந்நிய வல்லரசுகளுக்கு, சீன ராஜதந்திர மேடையில் எந்த ஒரு சிறிய சம்பவத்தையும் மிகைப்படுத்திக் காட்டினால் அதிலிருந்து அதிகமான சாதகங்களை யடையக்கூடும் என்ற தைரியம் ஏற்பட்டுவிட்டது. இவைகளுக்கனுகூலமாகவே அவ்வப்பொழுது சிறுசிறு சம்பவங் களும் நடைபெற்றுக் கொண்டு வந்தன.
அந்நியர்களுடைய ஆக்கிரமிப்புக்கு முன்னணிப் படையினர் போல் சென்ற கிறிதுவப் பாதிரிமார்கள், மேற்படி ஒப்பந்தங்களி லுள்ள ஷரத்துக் களை தங்களுக்குப் பாதுகாப்பு அரண்களாக வைத்துக்கொண்டு, சீனாவின் உட்பிரதேசங்களில் நுழைந்து முன்னைக் காட்டிலும் அதிதீவிரமாகக் கிறிதுவ மதத்தைப் பிரசாரம் செய்துவந்தார்கள். இவர்களுடைய பிரசாரத்தில், சுருக்க மாகச் சொல்லவேண்டுமானால், தன் முனைப்பு இருந்தது. சீனர்களைத் தாழ்வாகப் பேசியும் நடத்தியும் வந்தார்கள். தாங்கள் மேலான நாகரி கத்தின் பிரதிநிதிகளென்றும், சீனர்களை நாகரிகப் படுத்துவதற் காகவே தாங்கள் வந்திருப்பதாகவும் இவர்கள் பேசி வந்தார்கள். இவர்கள், பலவந்தமாக ஜனங்களைக் கிறிதுவ மதத்தில் சேர்த்து வருகிறார்களென்ற எண்ணம் சீனர்களின் மனத்தில் உண்டாகி விட்டது. ஏற்கனவே அந்நியர்கள் மீது ஒருவிதமான துவேஷம் இருந்துகொண்டு வந்ததல்லவா? இவையெல்லாம் திரண்டு டீண்ட் ஸின் நகரத்தில் 1870-ஆம் வருஷம் ஒரு கலகமாக உருப்பெற்று , பின்னர் சீனாவின் பல பாகங்களுக்கும் பரவியது. கிறிதுவப் பாதிரிமார்களின் சொத்துக்களுக்கு அநேக இடங்களில் சேதம் உண்டாயிற்று; அந்நியரிற் சிலர் உயிரிழந்தனர். ஆனால் குற்றவாளி களாகக் கருதப்பட்ட சீனர் பலர், மரண தண்டனையடைந்தனர். பிரிட்டிஷ்-பிரெஞ்சு அதிகாரிகள் இதில் திருப்தியடையவில்லை. சீன அரசாங்கத்தை, நஷ்டஈடு கொடுக்க வேண்டுமென்று வற்பு றுத்தினர். பிரெஞ்சு தானீகன் காரியாலயத்துச் சிப்பந்திகள் சிலருடைய முரட்டுத்தனமான நடவடிக்கைகள் காரணமாகவே இந்தக் கலகம் முதலில் ஆரம்பித்ததென்றாலும், சீன அரசாங்கத் திடமிருந்து மன்னிப்பு, நஷ்டஈடு முதலியன கேட்கிற விஷயத்தில் எல்லா ஐரோப்பிய அரசாங்கப் பிரதிநிதிகளும் ஒன்று சேர்ந்து கொண்டனர். சுமார் பத்து லட்சம் ரூபாய் நஷ்டஈடாகக் கொடுத்து, மன்னிப்பும் கேட்டுக் கொண்டது சீன அரசாங்கம். இந்தத் தொகையைக் கொண்டு பிரெஞ்சுக்காரர்கள், சீனர்களை வஞ்சம் தீர்ப்பதுபோல, எந்தெந்த தலங்களை அவர்கள் புனிதமாகக் கருதிக்கொண்டிருந்தார்களோ அந்தந்த தலங்களில் கிறிதுவக் கோயில்களைக் கட்டினர்!
ஆனால் பிரெஞ்சுக்காரரோ, மற்ற அந்நியரோ இந்த மன்னிப்பு, நஷ்டஈடு முதலியவைகளோடு திருப்தியடையவில்லை. சீனாவின் கொழுப்பை அடக்கவேண்டுமென்ற தோரணையில்தான் பேசிவந்தனர். தங்களுடைய உரிமைகளை இன்னும் அதிகமாக வலுப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும், இதுகாறுமுள்ள ஒப்பந்தங்களின் ஷரத்துக்களை மாற்றியமைக்க வேண்டுமென்றும் கூச்சல்போட்டு வந்தனர். ஒரு பிரெஞ்சுக்காரன் கூறினான்: பல வானே நியாயவான் என்கிற வாசகத்தைச் சீனா விஷயத்தில் மிகவும் கண்டிப்பாக அனுஷ்டிக்கவேண்டும். அப்படிச் செய்ய முடியவில்லை யென்றால், மூட்டைமுடிச்சுக்களுடன் ஊருக்குத் திரும்பி விடுவோம். ஓர் ஆங்கிலேயன் சொன்னான்: பாதிரிமார்களை முன்னணிப் படையாகக் கொண்டுள்ள அந்நியர்களுக்கு விரோதமாகச் சீனர்கள் தொடர்ந்து நடத்திவரும் சண்டைக்குச் சரியான தண்டனை பெறாமல் லேசாகத் தப்பித்துக் கொண்டார்கள். 1870-ஆம் வருஷத்தில் பிரெஞ்சு ஸதானீகன், சீனர்கள் கொடுத்த குற்றவாளிகளின் தலைகள், நஷ்டஈட்டுத் தொகை ஆகியவைகளை மறுத்துவிட்டு , யாங்க்ட்ஸீ நதியின் முகத்துவாரத்திற்கு பிரெஞ்சுக் கப்பற்படை வருகிறவரையில் காத்திருந்தால், எந்த இடத்தில் கலகம் நடை பெற்றதோ அந்த இடத்தைச் சுட்டெரித்துத் தரைமட்டமாக்கி, பிரெஞ்சுக்காரர் வசிப்பதற்கான கன்ஸெஷன் பிரதேசத்திற்கென்று பறிமுதல் செய்திருந்தால், இந்த மாதிரி மற்றொரு கலகம் ஏற்பட்டி ராது என்பது ஓர் அமெரிக்கனுடைய அபிப்பிராயம்.
பிரிட்டிஷார் சம்பந்தப்பட்ட மற்றொரு சம்பவம், 1875-ஆம் வருஷம் நடைபெற்றது. அப்பொழுது, பர்மாவின் வட பிரதேசம் பிரிட்டிஷாரின் ஆதீனத்துக்குட்பட்டிருந்தது. இதனால் பிரிட்டிஷார், தங்களுடைய எல்லையை, சீனாவின் மேற்கிலுள்ள யுன்னான்1 மாகாணம் வரையில் தள்ளிப் போட்டனர். தள்ளிப் போட்ட தோடல்லாமல், புதிய எல்லைப் பிரதேசத்தைப் பரிசீலனை செய்து பார்க்க ஒரு பிரதிநிதி கோஷ்டியை அனுப்பினர். இதற்கு உதவியாக, பீக்கிங் நகரத்திலிருந்து அனுப்பப் பெற்ற ரேமண்ட் மார்கேரி2 என்ற ஒரு துவிபாஷியும் சில சீன ஆட்களும் இருந்தார்கள். இவர்கள் யுன்னான் மாகாணத்தில் வந்து கொண்டிருக்கையில் அங்கு யாரோ சில சீனர்கள், இந்த மார்கேரியையும் இவனுடைய ஆட்களையும் கொலைசெய்து விட்டார்கள். இது போது மல்லவா சீன அரசாங்கத்தை மிரட்டி இன்னும் சில உரிமைகளைப் பறிப்பதற்கு? மார்கேரி கொலைக்குப் பரிகாரம் தேடிக் கொடுக்கும்படி பீக்கிங்கிலுள்ள பிரிட்டிஷ் தானீகன், சீன அரசாங்கத்திற்குத் தாக்கீது விடுத்தான். சுமார் ஒன்றரை வருஷ காலம் இது சம்பந்தமாகப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. கடைசியில் 13-9-1876-ல் ஷாண்டுங் மாகாணத்தி லுள்ள சேபூ என்ற இடத்தில் ஓர் ஒப்பந்தம் நிறைவேறியது. இதற்கே சேபூ ஒப்பந்தம் 1 என்று பெயர். இதன் சாரம் வருமாறு:-
1. பர்மாவுக்கும் யுன்னானுக்கும் சரியான முறையில் வியாபாரம் நடைபெறுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். இந்தியாவி லிருந்து மற்றொரு பிரதிநிதி கோஷ்டி யுன்னானனுக்கு வருவதற்கும் இன்னும் ஐந்து வருஷம் யுன்னானில் பிரிட்டிஷ் உத்தியோகதர்கள் தங்கியிருப்ப தற்கும் சீன அரசாங்கம் சம்மதிக்கிறது.
2. கொலை செய்யப்பட்டவர்களுக்கு நஷ்டஈடாகவும், தூதுகோஷ்டி சம்பந்தமான மற்றச் செலவுகளுக்காகவும் சுமார் பத்து லட்சம் ரூபாய் சீன அரசாங்கம் கொடுக்க வேண்டும்.
3. பிரிட்டிஷ் அரசாங்கத்தினிடம் மன்னிப்புக் கோரி ஒரு கடிதத்தை, சீனப் பிரதிநிதி கோஷ்டியொன்று லண்ட னுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
4. அந்நிய அரசாங்கத்துப் பிரதிநிதிகளை எப்படி வரவேற்று மரியாதையாக நடத்த வேண்டுமென்பது குறித்துச் சில ஒழுங்கு முறைகள் வகுக்கப்படவேண்டும்.
5. அந்நியர்களுடைய வியாபாரத்திற்கென்று இன்னும் புதிதாக நான்கு துறைமுகங்கள் திறந்துவிடப்பட வேண்டும். இவை தவிர, யாங்க்ட்ஸீ ஆற்று மார்க்கத்தில் அந்நியர் களுடைய வியாபாரக் கப்பல்கள் தங்கிச் செல்வதற்கென்று ஆறு துறைமுகங்களில் இடங்கொடுக்க வேண்டும்.
இந்த சேபூ ஒப்பந்தத்திற்குப் பின்னர், மற்ற ஐரோப்பிய வல்லரசுகளிற் சில, சீனாவைப் பல மூலைகளிலிருந்தும் நெருக்கி லாபடைந்தன. சீனாவின் வடமேற்கெல்லையில் தோன்றிய ஒரு கலகத்தை அடக்குவதாகச் சொல்லிக்கொண்டு, ருஷ்யா, அந்தப் பிரதேசத்தை ஆக்கிரமித்துக் கொண்டது; தனக்கு நஷ்டஈடாக ஒரு பெருந்தொகை கொடுத்தாலன்றி, தான் அந்த இடத்தை விட்டு நகர முடியாது என்று கூறியது. கடைசியில் சீனா நஷ்ட ஈடாக ஒரு பெருந் தொகையையும், எல்லைப்புறத்தில் வியாபாரம் நடை பெறுவதற்கான சில சலுகைகளையும் கொடுத்து (1881) ருஷ்யாவைத் திருப்தி செய் வித்தது. சீனாவின் ஆதிக்கத்துக் குட்பட்டிருந்த அன்னாம் பிரதேசத்தை பிரான் ஆக்கிரமித்துக் கொண்டு விட்டது. (1884)
சீனாவின் இந்தக் காலத்து நிலையை (1883) லீ ஹுங் சாங்1 என்ற சீனப் பிரபலதன் பின்வருமாறு வருணிக்கிறான்:-
சீனாவுக்கு நண்பர்கள் என்று சொல்லக் கூடியவர் யாருமே இல்லை. ருஷ்யா, வடக்கேயிருந்துகொண்டு அதனை நெருக்கி வந்தது. அதன் ஆதிக்கத்துக்குட்பட்ட வாட்டோவின் மீது ஜெர்மனி படையெடுத்து வந்தது. ஜப்பான், லூச்சூ தீவுகளைச் சுவாதீனப்படுத்திக் கொண்டு விட்டது. இங்கிலாந்து, ஹாங்காங்கைத் தன் பிடியிலே வைத்துக்கொண்டு,அதன் மூலமாகச் சீன மக்களுக்கு வறுமையை யும் அழிவையும் தேடித்தருகிற அபினியைத் திணித்து வந்தது. சீன ஏகாதிபத்தியத்தைத் துண்டு துணுக்குகளாக்கிவிட பிரான், ஒரு பெரும்படையை அனுப்பியது. அமெரிக்கா, தன்னுடைய நாட் டெல்லையில் சீன மக்களுக்கு உரிமையில்லையென்று ஒரு சட்டம் பிறப்பித்தது.
இங்ஙனம் சீனாவின் பலவீனத்தை உபயோகித்துக் கொள்கிற முறையில், அந்நியர்கள், அநீதமான உடன்படிக்கைகளை நிறை வேற்றிக் கொண்டு, பெருவாரியான தொகைகளை நஷ்ட ஈடாக வசூலித்துக் கொண்டு, இவைகளுக்குப் பிற்காலத்தில் எவ்வளவு நொண்டிச் சமாதானங்கள் சொல்லி வந்தார்களாயினும்2 இவைகளின் மூலமாகச் சீனர்களின் துவேஷத்தைச் சம்பாதித்துக் கொண்டு விட்டார்கள்; இதன் பிற்காலத் தோற்றந்தான் பாக்ஸர் கலகம்.
ஜப்பான் விழித்துக் கொள்கிறது
ஜப்பானுக்கு நிப்பன்1 என்ற ஒரு பெயருண்டு. சீனர்கள் வைத்த பெயர்தான் இது. நிப்பன் என்றால் உதய சூரியன் என்று அர்த்தம். சீனாவுக்குக் கிழக்கே ஜப்பான் இருக்கிறபடியால், காலைச்சூரியன் இந்தத் தீவிலிருந்தே உதிப்பதுபோல முற்காலத்துச் சீனர்களுக்குத் தோன்றியது. இதனாலேயே சூரியன் உதிக்கிற நாடு என்று பொருள் பட நிப்பன் என்ற பெயரால், தங்களுக்குக் கிழக்கேயுள்ள தீவுத் தொகுதியை அழைத்தனர்.
கி.பி. பதின்மூன்றாவது நூற்றாண்டுவரை, சீனாவுக்கும் ஜப்பானுக்கும் அடிக்கடி தொடர்புகள் இருந்து கொண்டிருந்தன. யுத்த களத்திலும் சந்தித்தன; கலைக் கோயிலிலும் கலந்து கை தொழுதன. பதின்மூன்றாவது நூற்றாண்டில் சீனாவை ஆண்டுவந்த மங்கோலிய மன்னனான குப்ளாய்கான், ஜப்பானையும் தன்னுடைய ஏகாதிபத்தியத் தோடு சேர்த்துக் கொள்ள முயன்றான். ஆனால் வெற்றிபெறவில்லை. இதற்குப் பிறகு சீனாவுக்கும் ஜப்பானுக்கும் அதிகமான தொடர்புகள் இருக்கவில்லை. ஜப்பானியக் கடற் கொள்ளைக்காரர்கள் அவ்வப்பொழுது சீனக் கடலோரப் பிரதேசங் களுக்கு வந்து கொள்ளையடிப்பதும், அவர்களைச் சீன அதிகாரிகள் விரட்டியடிப்பதும் வழக்கமாக நடைபெற்று வந்தன. பின்னர் பதினாறாவது நூற்றாண்டின் பிற்பகுதியில் ஜப்பானில் பிரதம மந்திரியாயிருந்த ஹிதெயோஷி2 என்பவன், உலகத்தையெல்லாம் வெற்றி கொள்ள வேண்டுமென்ற பேராசை கொண்டு, சீனாவின் மீது தன் பார்வையைச் செலுத்தினான். இதற்கு முதலில் கொரியாவைச் சுவாதீனப் படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாயிருந்தது. ஏனென்றால் அப்பொழுது கொரியா, சீனாவின் ஆதிக்கத்துக்குட் பட்டிருந்தது. மற்றும், காலை ஊன்றிக்கொண்டு, சீனாவின் மீது பாய்வதற்கு அ`ஃதொரு சிறந்த படிக்கல் மாதிரியாகவும் இருந்தது. இந்த நோக்கத்துடன் 1592- ஆம் வருஷம், இரண்டு லட்சம் பேரைக் கொண்ட ஒரு பெரும் படையை கொரியாவுக்கு அனுப்பினான். அப்பொழுது சீனாவில் மிங் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலம். ஹிதெயோஷியின் படைகளை எதிர்க்க, சீனாவிலிருந்து ஏராளமான துருப்புக்கள் கொரியாவுக்குச் சென்றன. ஆக இரண்டு நாடுகளுக்கும் மத்தியில் கொரியா யுத்த பூமியாகியது. பிற்காலத்திலே கூட இந்தத் தர்ம சங்கடமான நிலைமையில்தான் கொரியா அடிக்கடி அகப்பட்டுக் கொண்டு தத்தளித்து வந்திருக்கிறது. உலகத்தில் சில நாடுகளுக்கு இந்த மாதிரியான விதியேலபிக்கிறது போலும்! ஐரோப்பாவில் பெல்ஜியத்தைப்போல் ஆசியாவில் கொரியா. ஹிதெ யோஷியின் படையெடுப்பு கோரிய பலனைக் கொடுக்கவில்லை. அவனே 1598-ஆம் வருஷம் இறந்துவிட்டான். கொரியா, கஷ்டப் பட்டதும் நஷ்டப்பட்டதுமே மிச்சம். ஆனால் ஹிதெயோஷியின் இந்தப் படையெடுப்பானது, சீனர்களுக்கும் கொரியர்களுக்கு முள்ள நட்பை வலுப்படுத்தியது.
இந்த ஹிதெயோஷியின் காலத்தில் ஜப்பானுடைய வெளி நாட்டுச் சம்பந்தத்திலும் ஒரு மாற்றம் ஏற்பட்டது. சீனாவில் கிறி துவப் பாதிரிமார்கள் எப்பொழுது நுழைந்தார்களோ ஏறக்குறைய அதே காலத்தில் ஜப்பானுக்குள்ளும் நுழைந்து பிரசாரம் செய்து வந்தார்கள். இவர்களுக்கு முதலில் ஜப்பானியர்கள் எதிர்ப்புக் காட்ட வில்லை; ஆதரவே கொடுத்து வந்தார்கள். ஆனால் இந்தப் பாதிரிமார்கள் வரவர ஜப்பானின் உள்நாட்டு அரசியல் விவகாரங் களிலே தலையிட ஆரம்பித்தார்கள்; தாங்கள் எந்த நாட்டின் பிரதி நிதியாக வந்திருக் கிறார்களோ அந்த நாட்டின் ஏகாதிபத்திய ஆசைக்கு ஜப்பானை இரையாக்க அடிகோலிக்கொண்டு வந்தார்கள். பார்த்தான் ஹிதெயோஷி. இந்த ஆபத்தை முளையிலேயே கிள்ளி விடவேண்டுமென்று தீர்மானித்து, பாதிரிமார்களை நாட்டை விட்டு வெளியேற்றிவிட்டான்; இவர்களால் மதமாற்றப்பட்ட ஜப்பானியர்களுக்கு அதிக சங்கடங்களை உண்டு பண்ணினான். இவனுக்குப் பின்னால் அதிகாரபதவிக்கு வந்தவனும், ஜப்பானியக் கிறிதுவர்களை அநேக தொந்தரவுகளுக் குட்படுத்தினான். 1637-ஆம் வருஷம் ஒரு பெரிய கலகமே கிளம்பிவிட்டது. ஆபத்தை வருவித்துக் கொண்டு பிறகு அதைச் சமாளிக்க முயலுவானேன் என்று நினைத்து, இந்த ஆபத்தையே வரவொட்டாதபடி தடுத்து விடுவதென்று ஜப்பான் தீர்மானித்தது. அந்நியர் யாரையும் தனது எல்லைக்குள் வரவொட்டாமல் தடுத்துவிட்டது. இதற்குப் பிறகு உலக ஆசைகளைத் துறந்த ஒரு துறவி, வாயிற் கதவைத் தாழ்ப்பாளிட்டுக் கொண்டு மடத்துக்குள்ளே சென்றுவிடுவது போல், தன்னை உள்ளுக்கு இழுத்துக் கொண்டுவிட்டது. சுமார் இருநூறு வருஷ காலம் இப்படித் தனிப்பட்ட வாழ்க்கையை நடத்திக் கொண்டு அதில் திருப்தியடைந்திருந்தது. அரசனுக்கும் குடிகளுக்கும் சம்பந்த மில்லாத ஓர் ஆட்சிமுறை இந்தக் காலத்தில் இங்கே நடந்துவந்தது. படைபலமுடைய ஒரு சில நிலச்சுவான் தார்களின் வசத்திலேயே அரசாங்க நிருவாகம் இருந்தது. இவர்களெல்லோருக்கும் மேற்பட்டவன் ஷோகுன்1. ஷோகுன் என்பது பட்டப் பெயர். மாபெருந் தலைவன் என்பதே இதன் பொருள். அரசர்கள், பரம்பரை பாத்தியதை கொண்டாடிக் கொண்டு ஆண்டு வந்ததைப் போல், இந்த ஷோகுன்களும் பரம்பரை உரிமையுடன் நிருவாகத்தை நடத்தி வந்தார்கள். இவர்கள் இட்டதே சட்டம். பொதுவாக ராணுவ தோரணையிலேயே அரசாங்க நிருவாகம் நடைபெற்றுக் கொண்டு வந்ததென்று சொல்ல வேண்டும்.
1853-ஆம் வருஷம் ஜூலை மாதம் எட்டாந் தேதி. உலகத்திலே இனி, தான் ஒதுங்கி வாழ்ந்துகொண்டிருக்க முடியாது என்ற உணர்வு ஜப்பானுக்கு உண்டாகும்படியான ஒரு சம்பவம் நடை பெற்றது. அன்று மாத்யு கால்ப்ரெயித் பெர்ரி2 என்ற அமெரிக்கக் கடற்படைத் தலைவனொருவன், நான்கு யுத்தக் கப்பல்கள் சகிதம் டோக்கியோ3 அருகில் வந்து பீரங்கி முழக்கம் செய்தான். அதன் மூலம் தன் வருகையைத் தெரிவித்துவிட்டு கரையிலே இறங்கி அரசாங்கத் தலைவர்களைப் பார்க்க வேண்டுமென்று அதிகார தோரணையிலே கேட்டான். அப்படியே அதிகாரிகளைப் பார்த்து அமெரிக்க மாலுமிகளிற் சிலரை ஜப்பானியர்கள் கொடுமைப்படுத் தினார்களென்று குறைகூறி, இதற்குப் பரிகாரம் தேடுகிற முறையில், ஜப்பானில் தனக்கு வேண்டிய சாமான்களை வாங்கவும் விற்கவும் உரிமை வேண்டுமென்றும், இதைப் பற்றிச் சக்ரவர்த்தி யோசித்து அடுத்த வருஷத்திற்குள் பதில் சொல்லவேண்டுமென்றும் கூறிவிட்டுப் போய்விட்டான். ஜப்பானியர்கள் பயந்துபோனார்கள். ஆழங்காண முடியாத சமுத்திரத்தில், தானே இயங்கிக் கொண்டு வந்த கப்பல், பூதமோ பிசாசோ என்று அஞ்சினார்கள். தனது நாட்டிற்குப் புதி தாக வந்திருக்கும் இந்த ஆபத்தை எப்படியாவது நீக்க வேண்டு மென்று, சக்ரவர்த்தி, கடவுளை நோக்கிப் பிரார்த்தனைகள் பல செய்தான். கடவுள் கண்திறக்கவில்லை. ஆனால் சொன்னபடி அடுத்த வருஷமே தளபதி பெர்ரி, இன்னும் அதிகமான படை பலத்துடன் வந்துவிட்டான். இனி என்ன செய்வது,? அமெரிக்கா விரும்பியபடி சில துறைமுகப் பட்டினங்களை அதற்குத் திறந்துவிட்டது ஜப்பான்.
அமெரிக்காவுக்குப் பிறகு பிரிட்டன், ருஷ்யா, பிரான், ஹாலந்து, ஜெர்மனி, விட்ஜர்லாந்து, இத்தாலி, பெல்ஜியம், ஆதிரியா - ஹங்கேரி, பெயின், டென்மார்க், நார்வே-வீடன், போர்த்துகல். முதலிய நாடுகள் வரிசைக் கிரமமாகப் புகுந்து, ஒப்பந்தத் துறைமுகங்களென்ன, விசேஷப் பிரதேச உரிமைகளென்ன, வியாபாரச் சலுகைகளென்ன, இப்படி எல்லாவற்றையும் முறையே பெற்றன. சீனாவில் என்னென்ன காட்சிகள் நடித்துக் காட்டப்பட்டனவோ அந்தக் காட்சிகள் யாவும் இங்கே ஜப்பானிலும் நடித்துக் காட்டப் பட்டன. ஆனால் சீனர்களைப் போல் ஜப்பானியர்கள் இந்தக் காட்சிகளைச் சும்மா கை கட்டிக் கொண்டு பார்த்து வரவில்லை. இவர்களுடைய இருதயத்திலே ஒரு பெரிய புரட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. புதிய நிலைமைக்குத் தகுந்தபடி தங்களை மாற்றிக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தார்கள்.. தங்கள் அரசாங்க அமைப்பைப் புதிய முறையில் சீர்திருத்தி அமைத்துக் கொண்டார்கள். ஷோகுன்களின் செல்வாக்கு போய்விட்டது. சக்ர வர்த்தியினிடமே சர்வ அதிகாரங்களும் ஒப்படைக்கப்பட்டு அவன் மூலமாகவே ராஜ்ய விவகாரங்கள் நடைபெற வேண்டுமென்று நிர்ணயிக்கப்பட்டது. இந்தக் காலத்தில் சக்ரவர்த்தியாயிருந்தவன் மெய்ஜி1 என்பவன். இவன் 1867-ஆம் வருஷம் பட்டத்திற்கு வந்தான். இவன் காலத்திலிருந்தே ஜப்பானின் புதிய வாழ்வு தொடங்குகிறது. மெய்ஜி சகாப்தம் என்று பிரசித்திப்படுத்திச் சொல்லக்கூடிய அளவுக்கு இவன் காலத்தில் ஜப்பான் முன்னேற்றமடைந்தது. மேனாட்டாரைப் பின்பற்றி, தொழில் தாபனங்கள் தோன்றின; இவற்றிலிருந்து உற்பத்தியாகும் பொருள்கள் மேனாட்டுப் பொருள்களுக்குப் போட்டியாக வெளி நாடுகளில் கொண்டு திணிக்கப்பட்டன. கூடவே அதன் ஏகாதிபத்திய ஆசையும் வளர்ந்தது. யுத்த மு தீப்புகள் செய்து கொள்ளப்பட்டன. சுமார் ஒரு தலைமுறைக் குள்ளாகவே, யுத்தகளத்திலே, வியாபாரத்துறையிலே, ராஜதந்திர மேடையிலே, இப்படி எல்லாவற்றிலும் ஐரோப்பிய வல்லரசு களுக்குச் சமதையான தானத்தில் நின்றுகொண்டு அவைகளோடு போட்டிபோட ஆரம்பித்துவிட்டது ஜப்பான். இந்தச் சக்தியை இதற்குத் தேடிக் கொடுத்தவர் இருவர். ஒருவன் யமகாட்டா;2 மற்றொருவன் ஈட்டோ.3 முன்னவன், ஜப்பானின் ராணுவ பலத்திற்கு அடிகோலியவன்; பின்னவன், இதன் அரசியல் வாழ்வைப் பண் படுத்திக் கொடுத்தவன். இவ்விருவரும் ஜப்பானின் நவயுக சிருஷ்டி கர்த்தர்கள்; மெய்ஜி அரசனுக்குப் பக்கபலமாயிருந்தவர்கள்.
மெய்ஜி சகாப்தத்தின் ஆரம்பத்தில்-அதாவது ஏறக்குறைய 1868-ம் வருஷத்தில்-ஜப்பான் என்று சொன்னால், நான்கு முக்கிய தீவுகள் அடங்கியதுதான். ஹோன்ஷூ அல்லது ஹோண்டோ, கியூஷூ, ஷிக்கோக்கு, ஹொக்கைடோ ஆகிய இவையும்,4 இவைகளோடு ஒட்டினாற்போலுள்ள சில சில்லரைத் தீவுகளும் சேர்ந்து மொத்தம் சுமார் 2,48,000 சதுர கிலோமீட்டர் (15,500 சதுர மைல்) வி தீரணமுள்ள பிரதேசம்.
சீனாவுக்குக் கிழக்கேயுள்ள கடல் பிரதேசத்தில் அநேக சில்லரைத் தீவுகள் இருப்பதைப் பூகோள படத்தில் பார்க்கலாம். இவற்றில் ஒரு தொகுதிக்கு லூச்சூ1 தீவுத் தொகுதியென்று பெயர். சுமார் ஐம்பத்தைந்து சிறிய தீவுகள் சேர்ந்த இந்தத் தொகுதியின் மீது அநேக நூற்றாண்டுகளாகச் சீனாவும் ஜப்பானும் மாறி மாறி ஆதிக்கஞ் செலுத்தி வந்தன. இந்தத் தீவுவாசிகள், இரண்டு நாடு களுக்கும் கப்பஞ்செலுத்தி வந்தார்கள். இதைப் போலவே,மேற்படி தீவுத் தொகுதிக்குத் தென்மேற்கே போர்மோஸா என்பது ஒரு தீவு. இது சீனாவின் ஆதிபத்தியத்திற்குட்பட்டிருந்தது; ஆனால் சம்பிரதாயமான ஆதிபத்தியந்தான். 1871-ஆம் வருஷம், லூச்சூ தீவு வாசிகளில் சுமார் அறுபது பேர், போர்மோஸா தீவு ஓரமாகக் கப்பலில் சென்று கொண்டிருந்தபோது, தற்செயலாகக் கப்பல் கரைதட்டி விட்டது. மேற்படி அறுபது பேரும், கரை சேர்ந்ததும், அந்தத் தீவுவாசிகளிற் சிலர் இவர்களைக் கொன்றுவிட்டார்கள். இந்தச் சம்பவத்தை ஜப்பான் ஒரு வியாஜமாக வைத்துக்கொண்டு, போர் மோஸா தீவின் தெற்குப் பாகத்தை ஆக்கிரமித்துக் கொண்டது; இப்படி ஆக்கிரமித்துக் கொண்ட தோடல்லாமல், மேற்படி சம்பவத் திற்குப் பரிகாரம் தேடித் தரும்படி சீனாவைக் கேட்டது!
போர்மோஸா தீவு சீன ஆதிக்கத்துக்குட்பட்டதல்லவா? அதன் ஜனங்களின் நடவடிக்கைக்கு அதுதானே பொறுப்பு? லூச்சூ தீவு வாசிகள் தன்னுடைய பிரஜைகள்: இவர்கள் கொலையுண்டது, தன்னுடைய ஆதிக்கத்திற்கு ஊறு ஏற்பட்டமாதிரி. இந்தமாதிரி முறையில் ஜப்பான் வாதம் செய்தது. ஐரோப்பிய வல்லரசுகளின் நெருக்குதல்களினால் அப்பொழுது பிரமையடைந்திருந்த சீனா, ஜப்பானின் இந்தக் கன்னி ராஜதந்திரப் பேச்சுக்களுக்கு வெகு எளிதில் இணங்கிவிட்டது. எப்படியோ, லூச்சூ தீவுகள், ஜப்பானு டைய பரிபூரண ஆதிக்கத்துக்கு வந்துவிட்டன; போர்மோஸா தீவில் நடைபெற்ற சம்பவத்திற்கு ஒரு பெரிய தொகை அதற்கு நஷ்ட ஈடாகக் கிடைத்தது. இந்த ஷரத்துக்களைக் கொண்டு ஓர் ஒப்பந்தத் தில் (1871) இரண்டு நாடுகளும் கையெழுத்திட்டன. இதுதான் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் முதன் முதலாக ஏற்பட்ட ஒப்பந்தம்.
சீனா இப்படி விட்டுக்கொடுத்தது, ஜப்பானுடைய ஏகாதி பத்திய ஆசையைத் தூண்டிவிட்டதுபோலாயிற்று. கொரியாவின் மீது அதன் பார்வை சென்றது. கொரியா, பெயரளவுக்குச் சீன ஆதிபத்தியத் திற்குட்பட்டிருந்ததே யாயினும், சுய அரசுடைய தாகவே இருந்தது. ஜப்பானுக்கும் இதற்கும் அடிக்கடி வியாபாரத் தொடர் புகள் இருந்து கொண்டிருந்தன. சில சமயங்களில் இந்தத் தொடர் புகள் அற்றும் போயிருந்தன. இப்படியிருக்கையில், ஜப்பானில் 1867-ஆம் வருஷம் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. இதற்குச் சில ஆண்டுகள் கழித்து ஜப்பானிய அரசாங்கம் கொரியாவுக்கு ஒரு தூதுகோஷ்டியை அனுப்பி, தன்னோடு சிநேக ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டு மென்று கோரியது. ஆனால் கொரியா, இந்தக் கோஷ்டியைச் சரியானபடி வரவேற்கவில்லை. ஜப்பான் மேனாட்டு நாகரிகத்தை அப்படியே பின்பற்றியிருக்கிறதென்றும், இதனால் அதனோடு சம்பந்தம் வைத்துக் கொள்ள முடியாதென்றும் கூறி மேற்படி தூது கோஷ்டியைத் திருப்பி அனுப்பிவிட்டது. இதற்குப் பிறகு மூன்றுமுறை தூதுகோஷ்டிகள் அனுப்பப்பெற்று, சரியானபடி வரவேற்கப்படாமல் திரும்பிவந்துவிட்டன. ஜப்பானுக்கு இஃது ஆத்திரத்தை உண்டு பண்ணியது.
மேலே சொன்ன 1871-ஆம் வருஷத்து சீன-ஜப்பானிய ஒப்பந்தம் ஊர்ஜிதம் செய்யப்படுவதற்காக இரண்டு நாட்டுப் பிரதிநிதிகளும் சிறிது காலத்திற்குப் பிறகு ஒன்று சந்தித்தபோது, கொரியாவின் நடத்தைக்குச் சீனா என்ன சமாதானம் சொல்லுகிற தென்று ஜப்பானியப் பிரதிநிதிகள் கேட்டார்கள். கொரியா, தனக்குக் கப்பங் கட்டுகிற ஒரு தேசமாயிருந்த போதிலும், அதனு டைய உள்நாட்டு விவகாரங்களில்தான் தலையிட முடியாதென்றும், அந்நிய வல்லரசுகளுடன் யுத்தம் தொடுக்கவோ சமாதானம் செய்யவோ அதற்குப் பூரண உரிமையுண்டென்றும் சீனப் பிரதிநிதிகள் பதில் கூறினார்கள். இப்படிக் கூறியது, ஜப்பானுக்கு நல்லதாயிற்று. தன்னுடன் நேரான சம்பந்தம் வைத்துக் கொள்ள வேண்டுமென்று மறுபடியும் கொரியாவைக் கேட்டது. கொரியாவும் இதற்கு முதலில் சம்மதம் தெரிவித்தது. ஆனால் ஜப்பானிலிருந்து ஒரு தூது கோஷ்டி வந்ததும் அதனை வரவேற்க மறுத்துவிட்டது. இதனோடு, பரி சோதனை பார்க்கிறதாக ஒரு காரணத்தைச் சொல்லிக் கொண்டு கொரியாவினுடைய முக்கிய நதியின் முகத்துவாரத்தை நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு ஜப்பானிய யுத்தக் கப்பலின் மீது பீரங்கிப் பிரயோகம் செய்தது. இந்த ஜப்பானிய யுத்தக் கப்பல் ஏன் கொரியா வுக்கு வந்தது? இந்தக் கேள்வியைக் கேட்க கொரியர்களுக்கு அவகாசங் கொடுக்க வில்லை ஜப்பானியர். சில துருப்புக்களோடு இறங்கி, கரை யோரமாக இருந்த சில கோட்டை கொத்தளங்களை நாசமாக்கிவிட்டுத் திரும்பினர். திரும்புகிறபோது, அந்நிய நாடுகளுடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமென்றும், இதைப் பற்றித் தீர்க்காலோசனை செய்யுமாறும், மறுபடியும் ஒரு தூது கோஷ்டியை அனுப்புவதாகவும் எச்சரிக்கை செய்துவிட்டுப் போயினர். அமெரிக்கர், தங்களிடம் காட்டிய வித்தையை, ஜப்பானியர், கொரியர்களிடம் திருப்பிக் காட்டினர்!
ஜப்பான் செய்துவிட்டுப்போன எச்சரிக்கையைப் பற்றி, சீனாவின் ஆலோசனையைக் கேட்டது கொரியா. ஜப்பானுக்கு இணங்கிப் போவதுதான் நல்லதென்று சீனா கூறியது. சொன்னபடி அடுத்த வருஷமே, சில யுத்தக் கப்பல்களுடனும், சுமார் எண்ணூறு போர் வீரர்களுடனும், ஜப்பான் வந்தது, இதன் விளைவு என்ன? ஜப்பானிய -கொரிய சிநேக ஒப்பந்தம் (26-2-1876) - இதன்படி கொரியா, ஜப்பானைப்போல் சர்வ சுதந்திரமுள்ள ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்டது. இரண்டு நாடுகளும் சம நிலையில் இருந்து கொண்டு தொடர்புகள் வைத்துக்கொள்ள வேண்டு மென்று தீர்மானிக்கப்பட்டது. ஜப்பானுடைய வியாபாரத்திற்கென்று சில துறைமுகப்பட்டினங்கள் திறந்துவிடப்பட்டன. ஜப்பானுக்கு விசேஷப் பிரதேச உரிமை அளிக்கப்பட்டது. கொரியாவில் அபினியை இறக்குமதி செய்வதில்லையென்றும் ஒப்புக் கொள்ளப் பட்டது. இந்த ஷரத்துக்களிலே, கொரியாவின் சுதந்திரத்தை ஜப்பான் அங்கீகரித்ததுதான் மிகவும் முக்கியமானது. ஏனென்றால், ஒரு சில வருஷங்களுக்குப் பின்னாடி இந்த ஷரத்தைக் கொண்டே சீனாவைத் தாக்க முற்பட்டது ஜப்பான்!
ஜப்பான் இங்ஙனம் சிநேக ஒப்பந்தம் செய்து கொண்டதைப் பார்த்த ஐரோப்பிய வல்லரசுகள் ஒன்றன்பின்னொன்றாக- (அமெரிக்கா-1882; பிரிட்டன்- 1882; ஜெர்மனி-1883; இத்தாலி-1884; பிரான்-1886)- கொரியாவுடன் அதற்கு ஒரு சுதந்திரநாடு என்ற அந்தது கொடுத்து -சிநேக ஒப்பந்தங்கள் செய்து கொண்டன. எல்லாம் வியாபாரச் சுரண்டலுக்குத்தான்!
அந்நியநாடுகளுடன் கொரியா எப்பொழுது சம்பந்தம் வைத்துக் கொள்ளத் தொடங்கியதோ அப்பொழுதிருந்தே அங்கு உள்நாட்டுச் சண்டைகள் கிளம்பிவிட்டன. சீன ஆதிக்கத்தை அங்கீகரிக்கிற கட்சி யென்றும், ஜப்பானிய ஆதிக்கத்தை வரவேற்கிற கட்சியென்றும், இரண்டு முக்கிய கட்சிகள் தோன்றி, நாட்டைப் பலவித அல்லல்களுக்குட்படுத்தின. இரண்டு கட்சியினரும் சீனாவின் துணையையும் ஜப்பானின் துணையையும் முறையே நாடினர். இரண்டு நாடுகளும் துருப்புக்களை அனுப்பின. கொரியா, தன் ஆதிக்கத் திற்குட்பட்ட நாடு என்ற நினைப்பிலேயே சீனா, துருப்புக்களை அனுப்பியது. மற்ற வல்லரசுகள், அதனுடைய தனித்துவத்தை அங்கீ கரித்துக் கொண்டிருப்பதைப்பற்றி சீனா லட்சியம் செய்யவில்லை; கவலைப்படவுமில்லை.
கொரியாவைக் காப்பாற்றச் சென்ற சீன-ஜப்பானியத் துருப்புகள், தங்களுக்குள்ளேயே சண்டை போட்டுக் கொள்ளும் படியான நிலைமை ஏற்பட்டது. சீனத்துருப்புகள், ஜப்பானியத் துருப்புக்களுக்கு அதிக சேதத்தை உண்டுபண்ணி கடற்கரைக்கு விரட்டிவிட்டன. உடனே ஜப்பான், இதற்குப் பரிகாரம் தேடிக் கொள்ளும் பொருட்டு, இரண்டு தூதுகோஷ்டிகளை, ஒன்று கொரியாவுக்கும், மற்றொன்று சீனாவுக்குமாக அனுப்பியது. கொரியாவுக்குச் சென்ற தூதுகோஷ்டி, வழக்கமான நஷ்டஈடு, மன்னிப்பு முதலியவைகளைப் பெற்றுக் கொண்டு திரும்பிவிட்டது. சீனாவுக்குச் சென்ற பிரதிநிதி கோஷ்டியின் தலைவன் முந்திச் சொல்லப்பட்ட ஈட்டோ1 என்பவன், மகா ராஜதந்திர நிபுணன். சீனாவின் சார்பில் லீ ஹூங்க் சாங்.2 இருவரும், சாமர்த்தியமான பல பேச்சு வார்த்தைகளுக்குப் பின்னர், ஒருவித ஒப்பந்தத்திற்கு வந்தனர். இதற்கு டீண்ட்ஸின் ஒப்பந்தம் (1885) என்று பெயர்.3 இந்த ஒப் பந்தத்தில், கொரியாவின் சுதந்திரத்தை, சீனாவைக் கொண்டு அங்கீ கரிக்கச் செய்ய ஈட்டோ எவ்வளவோ பிரயத்தனப்பட்டான். ஆனால் லீ ஹூங்க் சாங், உடன்படிக்கை மூலம் இதனை ஊர்ஜிதம் செய்ய விரும்பவில்லை. ஈட்டோவும் இதைப் பற்றி அதிகமாக வற்புறுத் தாமல் விட்டுவிட்டான். ஒப்பந்தத்தின் மற்ற ஷரத்துக்கள் எபடி, இரண்டு நாடுகளும் தங்கள் தங்கள் துருப்புக்களை கொரியா விலிருந்து வாப வாங்கிக் கொள்வதாக ஒப்புக் கொண்டன. அப்படி கொரியாவில் மறுபடியும் தொந்தரவுகள் ஏற்பட்டு துருப்புக் களை அனுப்பவேண்டிய அவசியம் ஏற்படுமானால், ஒன்றுக் கொன்று முன்கூட்டியே தெரிவித்துவிட்டு அனுப்புவதென்று தீர்மானித்துக் கொண்டன
இந்த டீண்ட்ஸின் ஒப்பந்தத்திற்குப் பிறகு, லீ ஹுங் சாங் சும்மாயிருக்கவில்லை. கொரியா விஷயத்தில் என்று மில்லாத ஒரு சிரத்தை காட்டத் தொடங்கினான். இன்னும் அது, சீனாவின் ஆதிக்கத்துக் குட்பட்டிருக்கிறதென்பதைக் காட்டிக்கொள்ள வேண்டுமல்லவா? இதற்காக யுவான் ஷி காய்4 என்பவனை தானீ கனாகத் தெரிந்தெடுத்து கொரியாவுக்கு அனுப்பினான். கொரிய அரசாங்கத்திற்கு அவ்வப்பொழுது ஆலோசனைகள் சொல்லி, அதனை ஒழுங்கான பாதையில் செலுத்திக் கொண்டு போவது யுவானின் கடமையென்று சொல்லப்பட்டது. ஆனால் இந்த யுவானோ, சூழ்ச்சிகள் பல செய்து, கொரியாவுக்கும் மற்ற அந்நிய நாடுகளுக் கும் இருந்த தொடர்பில் ஒரு கசப்பை உண்டுபண்ணிவிட்டான். அந்நிய நாடுகளின் செல்வாக்கு இல்லாமற் செய்துவிட்டால், கொரியா எப்பொழுதும் சீனாவுக்கு அடங்கிக்கிடக்கும் என்பது இவன் எண்ணம். இதற்காக, கொரியாவுக்கு நன்மைகள் செய்து காட்டுகிற மாதிரி, சீனப் பணத்தைக்கொண்டு தந்திப் போக்குவரத்துக்கள் ஏற்படுத்தினான். இன்னும் சில காரியங்களையும் செய்தான். சுமார் ஏழு வருஷ காலத்தில் (1885-1892) சாப்பிடுவதற்குப் பக்குவமாயுள்ள ஆகாரம் மாதிரி கொரியாவை ஆக்கிவிட்டான்.
இவையனைத்தையும் ஜப்பான் சும்மா பார்த்துக் கொண்டி ருந்தது; ஆனால் மனம் புழுங்கிக்கொண்டுதான் இருந்தது. ஏதேனும் ஒரு காரணம் வேண்டுமல்லலவா பகிரங்கமாக யுத்த கோஷம் செய்வதற்கு? அப்படிப்பட்ட காரணமும் ஒன்று அகப்பட்டது. 1893-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் கொரியாவில் அந்நியர்களுக்கு விரோதமான ஒரு கலகம் ஏற்பட்டது. அதனை அடக்க, படை உதவி செய்யவேண்டுமென்று ஒரு முறைக்கு இருமுறை, கொரிய அரசாங்கம் சீனாவைக் கேட்டது. உடனே சீனா (6-6-1894-ல்) ஆயிரத்தைந்நூறு பேர் கொண்ட ஒரு படையை அனுப்பிவிட்டு, டீண்ட்ஸின் ஒப்பந்தப்படி இந்தத் தகவலை ஜப்பானுக்குத் தெரிவித்தது. ஜப்பான் சும்மாயிருக் குமா? யுவான் ஷி காயின் திருவிளையாடல்களைக் கவனித்துக் கொண்டிருந்த தல்லவா? உடனே தானும் ஒரு படையை, கொரியாவின் தலைநகரான சிவோலுக்கு அனுப்பியது. ஒரு நாட்டை உதவிக்குக் கூப்பிட்டால், இரண்டு நாடுகள் வலிய உதவிசெய்ய முன்வருவதைப் பார்த்த கொரிய அரசாங்கம் பிரமித்துப் போய்விட்டது. சீனாவை வாப வாங்கிக் கொள்ளுமாறு கூறியது. முதலில் ஜப்பான் வாப வாங்கிக்கொள்ளட்டும் என்று அது கூறியது. ஜப்பானைக் கேட்டால், முதலில் வந்த சீனாதான் முதலில் வாப வாங்கிக் கொள்ள வேண்டுமென்று சொல்லியது. இரண்டு நாட்டுப் பிரதிநிதிகளும் சேர்ந்து கொரியாவில் என்னென்ன சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமென்று யோசனை சொல்லட்டும் என்று ஜப்பான் ஒரு சமரஸ பேச்சை விடுத்தது. இதற்கு சீனா இணங்கவில்லை. கொரியாவின் உள்நாட்டு விஷயங்களில் தான் தலையிட விரும்ப வில்லையென்று தட்டிக் கழித்தது. பிறகு இரண்டு நாடுகளுக்கும் மனதாபங்கள் முற்றிப் போராக (1894 ஜூலை) மூண்டது. கொரியா, சுதந்திர நாடா அல்லது சீனாவின் ஆதிக்கத்துக்குட்பட்டதாவென்பது தான் பிரச் சினை. இதைத் தீர்க்க, சீனாவும் ஜப்பானும் சண்டை போட்டன. சண்டை துவங்கின மறுமாதமே, ஜப்பான், கொரியா வுடன் தனித்து பரபர சிநேக ஒப்பந்தம் செய்துகொண்டது, சீனாவின் வலையில் அது மறுபடியும் சிக்கிக்கொள்ளாமலிருப்பதற்காக.
சீனா, இந்த யுத்தத்திற்குத் தயாராக இல்லை. ஜப்பான் இப்படி வந்து தாக்கும் என்று எதிர்பார்க்கவுமில்லை. யுத்தம் துவங்கின இரண்டொரு மாதங்களுக்குள், சீனப் படைகளை ஒன்றுகூட இல்லாமல் கொரியாவி லிருந்து விரட்டியடித்துவிட்டது ஜப்பான். கடல் மூலமாகத் தாக்க வந்த சீனாவின் நான்கு யுத்தக் கப்பல்களை ஜப்பான் மூழ்கடித்துவிட்டது. இதனால் கொரிய விரிகுடாவின் ஆதிக்கம் ஜப்பானுக்கு ஏற்பட்டது. இதன் மூலம் லியோடுங் தீபகற்பத்தின்1 தெற்கிலுள்ள போர்ட் ஆர்தர்2 துறைமுகத்தைக் கைப்பற்றிக் கொண்டது. இதற்குப் பிறகு வெகு துரிதமாக சீனாவின் உட்பிரதேசத்தில் முன்னேறிச் செல்ல முடிந்தது. 1895-ஆம் வருஷம் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஷாண்டுங் மாகாணத்தின் வடக்கே யுள்ள வைஹைவை1 துறைமுகம் முதலிய சில இடங்கள் ஜப்பா னுடைய சுவாதீனத்திற்கு வந்துவிட்டன. வழக்கம் போல பீக்கிங் அரண்மனையில் பரபரப்பு; பயம்; பணிந்து போவதைத் தவிர வேறு வழியில்லையென்ற நிர்க்கதியான நிலைமை. ஐரோப்பிய வல்லரசு களின் உதவியை நாடியது சீனா. அந்த வல்லரசுகளும் மத்தியதம் செய்து வைப்பதாக ஜப்பானுக்குக் கூறின. ஆனால் ஜப்பானோ, சீனாவுடன், தான் நேரில் சமரஸம் பேசிக்கொள்வதாகக் கூறி விட்டது. கடைசியில் சீனா பணிந்து போயிற்று. யுத்தம் நின்றது. சமரஸப் பேச்சுக்கள் துவங்கின. இந்தப் பேச்சுக்களை ஐரோப்பிய வல்லரசுகள், ஒருபுறம் சந்தோஷத் தோடும் மற்றொருபுறம் கவலையோடும் கவனித்துக் கொண்டிருந்தன. சமரஸப் பேச்சுக்களின் விளைவாக, இன்னும் சில துறைமுகங்கள் வியாபாரத்திற்குத் திறக்கப்படுமென் பதற்காகச் சந்தோஷம். ஆனால், இதே சமயத்தில் ஜப்பானுடைய செல்வாக்கு அதிகமாக ஓங்கிவிடப் போகிறதே என்பதைப்பற்றிக் கவலை. இந்தச் சமரஸப் பேச்சுக்கள் சம்பந்தமாக மற்றொரு ருசிகர மான விஷயம் என்னவென்றால், சீனாவின் கட்சியில் ஆலோசகர் களாக அமர்ந்திருந்தவர்களும் அமெரிக்கர்கள் தான்; ஜப்பானின் கட்சியில் ஆலோசகர்களாக அமர்ந்தவர்களும் அமெரிக்கர்கள்தான்.
சமரஸப் பேச்சுக்கள் முடிந்து, கடைசியில் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் ஒப்பந்தம் நிறைவேறியது. இதற்கு ஷிமோனோஸெகி ஒப்பந்தம்2 (17-4-1895) என்று பெயர். இதன்முக்கிய அமிசங்கள் வருமாறு;-
1. கொரியாவின் சுதந்திரத்தைச் சீனா அங்கீகரிக்கிறது.
2. சீனாவின் தென்கிழக்கிலுள்ள போர்மோஸா தீவு, பெகா டோரெ தீவுத் தொகுதி3 ஆகியவைகளையும், தெற்கு மஞ்சூரியாவிலுள்ள லியோடுங் தீபகற்பத்தையும் (போர்ட் ஆர்தர் துறைமுகம் உள்பட) ஜப்பானுக்குக் கொடுத்து விட சீனா சம்மதிக்கிறது.
3. யுத்த நஷ்ட ஈடாக, சுமார் இருபதுகோடி ரூபாயை, நூற்றுக்கு ஐந்து விகிதம் வட்டியுடன் ஏழு வருஷத்திற்குள் சீனா கொடுக்க வேண்டியது.
4. ஜப்பானியர்களின் வியாபாரத்திற்கும் வாசத்திற்கு மாக நான்கு துறைமுகப்பட்டினங்கள் திறந்துவிடப்பட வேண்டும். ஒரு தேசத்திற்கு அளிக்கப்பட்ட உரிமை, மற்ற எல்லாத் தேசங்களுக்கும் அளிக்கப் பட்டதாகக் கருதப்படும் என்ற விதிப்படி, இந்தத் துறைமுகங்களில் மற்ற வல்லரசுகளும் வியாபாரம் செய்ய உரிமை பெறுகின்றன. இதே பிரகாரம், புதிதாக ஒரு வியாபார ஒப்பந்தம் ஏற்படுகிறவரையில், மற்றத் தேசங்களுக்கும் அளிக்கப்படுகிற உரிமைகள் ஜப்பானுக்கும் உண்டு.
இந்த ஒப்பந்தம், ஜப்பானுக்குப் பலவிதங்களிலும் வெற்றியே யாகும். ஆனால் இஃது ஐரோப்பிய வல்லரசுகளின் மத்தியில் பெரிய பரபரப்பை உண்டுபண்ணிவிட்டது. இதற்கு முக்கிய காரணம், ஜப்பான், போர்ட் ஆர்தர் துறைமுகத்தில் இடம் பெற்றுக் கொண்டு விட்டதுதான். ருஷ்யா, பிரான், ஜெர்மனி ஆகிய மூன்று நாடுகளும் ஒன்றுசேர்ந்துகொண்டு, ஷிமோனோ ஸெகி ஒப்பந்தம் நிறைவேற்றப் பட்ட ஒரு வார காலத்திற்குள், (23-4-1895) ஜப்பானுக்குப் புத்தி சொல் கிற முறையில் ஓர் அறிக்கையை விடுத்தன. லியோடுங் தீபகற்பத்தை ஜப்பான் வீகரித்துக் கொள்ளுமானால், அது சீனாவின் தலைநகர மாகிய பீக்கிங்குக்குப் பெரிய ஆபத்தாக எப்போதும் இருந்து கொண்டிருக்கு மென்றும், மற்றும் கொரியாவின் சுதந்திரத்தைச் சீனா அங்கீகரித்துக் கொண்டதற்கு அர்த்தமே இல்லாமற் போய்விடு மென்றும், எனவே, கீழ்நாட்டின் சமாதானத்தை முன்னிட்டு, சீனாவுக் குரிய பிரதேசத்தை அதனிடமே கொடுத்து விடுவது நல்லதென்றும் இதில் காணப்பட்டிருந்தன. கீழ்நாட்டில் சமாதானம் நிலைத்திருக்க வேண்டு மென்கிற விஷயத்தில், ஐரோப்பிய வல்லரசுகளுக்கு எவ்வளவு சிரத்தை! அழகான பாஷையினால் மூடப் பெற்ற இந்தப்பய முறுத்தல் அறிக்கையின் அர்த்தம் இன்னதென்று ஜப்பான் புரிந்து கொண்டுவிட்டது; யுத்தத்தினால் தனக்கேற் பட்டுள்ள சோர்வையும் உணர்ந்து கொண்டது. எனவே லியோடுங் தீபகற்பத்தையும் போர்ட் ஆர்தர் துறைமுகத்தையும் சீனாவிடம் திருப்பிக் கொடுத்துவிடுவ தாக ஒப்புக் கொண்டு இதற்கு நஷ்ட ஈடாக, இன்னும் பதினைந்து கோடி ரூபாய் அதிகம் கொடுக்க வேண்டுமென்று கேட்டது. அதற் கென்ன ஆட்சேபம்? கொடுக்க வேண்டியது சீனாதானே? அதன் தலைமீது இந்தக் கூடுதல் தொகை திணிக்கப்பட்டது.!
சீனாவுக்கு, அதனுடைய பிரதேசத்தைத் திருப்பிவாங்கிக் கொடுத்துவிட்டனவல்லவா மூன்று நாடுகளும்? இதற்கு எந்த வழியில் தங்களுக்கு நன்றி செலுத்தப் போகிறதென்று சீனாவைக் கேட்டன. கைமேல் பலன் கிடைத்தது. அன்னாம் பிரதேசத்தின் எல்லை, சீனாவின் பக்கம் தள்ளிவந்துவிட்டது. அதாவது சீனாவின் மூன்று பிரதேசங்கள், பிரெஞ்சுக்காரரின் ஆதிக்கத்துக்குப் போய்ச் சேர்ந்தன. யுன்னான், குவாங்ஸி,1 குவாங்டுங் ஆகிய மூன்று மாகாணங்களில், சுரங்கங்கள் முதலியன தோண்டி பலன் அனுபவிக்க பிரெஞ்சு முதலாளிகள் அனுமதிக்கப்பட்டார்கள். அன்னாமிலிருந்து சீனாவுக்கு ரெயில் போட்டுக்கொள்ள பிரான் உரிமை பெற்றது. இவையடங்கிய ஓர் ஒப்பந்தம் (9-5-1895) சீனாவுக்கும் பிரான்ஸூக்கும் ஏற்பட்டது. இங்ஙனம் பிரான்ஸூக்குக் கிடைத்துவிட்டதைப் பார்த்து, மற்ற வல்லரசுகள் ஒவ்வொன்றாக ஒப்பந்தத்தை நீட்டின. சீனா எல்லா வற்றிலும் கையெழுத்திட்டது. சீனா, ஜப்பானுக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டி யிருந்ததல்லவா? இதன் முதல் தவணையைத் தான் கடனாகக் கொடுப்ப தாகவும், நூற்றுக்கு நான்கு விகிதம்வட்டியும், சுங்க வரு மானத்தை அடமானமாகவும் தனக்குக் கொடுத்தால் போதுமென்றும் ருஷ்யா சொல்லி, கடன் பத்திரத்தில் சீனாவிடமிருந்து கையெழுத்து வாங்கிக் கொண்டது. சீனாவுக்கு இப்படிக் கடன் கொடுத்து அதனை நிர்ப்பந்தத் திற்குள்ளாக்கக் கூடாதென்று பிரிட்டனும் ஜெர்மனியும் ஆட்சேபித்தன. ஆனால் அடுத்த வருஷமே (23-8-1896) இரண்டு நாடுகளும் சேர்ந்து, மேற்படி சுங்க வருமானத்தையே இரண்டாவது அடமானமாக வைத்துக் கொண்டு 1, 60,00 000 பவுன் கடன் கொடுத்தன! இதற்குப் பிறகு, சீனாவுக்குப் பணமுடை இருப்ப தாக நினைத்துக்கொண்டு அதற்குப் பலவந்தமாக உதவி செய்கிற விஷயத்தில் ஐரோப்பிய வல்லரசுகளுக்குள் பலத்த போட்டி ஏற் பட்டுவிட்டது. ஒன்றுக் கொன்று தெரியாமல், ஒன்றுக் கொன்று விரோதமாகச் சீனாவுடன் ரகசிய ஒப்பந்தங்கள் செய்து கொண்டன. வட மஞ்சூரியா வழியாக வ்ளாடிவாடாக் நகரத்திற்கு ரெயில் போட்டுக்கொள்ள ருஷ்யா அனுமதி பெற்றது. இதற்குப் பிரதியாக, கொரியா, சீனா, கிழக்கு சைபீரியா ஆகிய பிரதேசங்களுக்கு ஜப்பானால் ஏதேனும் ஆபத்து ஏற்படுமானால் அப்பொழுது சீனாவும் ருஷ்யா வும் பரபரம் உதவி செய்துகொள்ள வேண்டுமென்று இரண்டு நாடுகளும்-ருஷ்யாவும் சீனாவும்-ஜப்பானுக்கு விரோதமாக (3-6-1896) ஒரு ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்த மாதிரியான ரகசிய ஒப்பந்தம் தங்களுக்குள் இல்லையென்று இரண்டு நாடுகளும் 1922-ஆம் வருஷம் வரையில் மறுத்துவந்தன. இதுதான் ஆச்சரியப் படத்தக்க விஷயம். 1896-ஆம் வருஷத்து இந்தச் சீன-ருஷ்ய ரகசிய ஒப்பந்தந்தான், 1904-ஆம் வருஷம் நடைபெற்ற ருஷ்ய - ஜப்பானிய யுத்தத்திற்குக் காரணமா யிருந்தது.
ருஷ்யா இப்படிச் சலுகைமேல் சலுகை பெற்றுக் கொண்டு வருவதைப்பார்த்த ஜெர்மனி சும்மாயிருக்குமா? ஏதோ காரணத்தைக் கற்பித்துக் கொண்டது. இரண்டு ஜெர்மன் பாதிரிமார்கள் கொலை செய்யப்பட்டார்கள். இதற்குப் பரிகாரம் தேடிக் கொள்கிற முறையில் ஒரு தொகையை நஷ்ட ஈடாக வசூலித்துக் கொண்டது. ஷாண்டுங் மாகாணத்தி லுள்ள ஸிங்டோ1 துறைமுகத்தையும், அதைச் சுற்றி யுள்ள கியாசௌ2 பிரதேசத்தையும், தொண்ணூற்றொன்பது வருஷ குத்தகைக்குப் பெற்றது (6-3-1898); ஷாண்டுங் மாகாணத்தில் ரெயில் போடவும் நிலக்கரிச் சுரங்கங்கள் தோண்டவும் உரிமைபெற்றது. ஜெர்மனிக்கு இங்கே செல்வாக்கு ஏற்படுவதை ருஷ்யா விரும்ப வில்லை. எனவே, மறுபடியும் லியோடுங் தீபகற்பத்தையும் போர்ட் ஆர்தர் துறைமுகத்தையும் - ஜப்பானிடமிருந்து பிடுங்கி சீனாவுக்குக் கொடுத்த அதே பிரதேசத்தைத்தான் - இருபத்தைந்து வருஷ குத் தகைக்குப் பெற்றது; (1898) தனது கப்பல்படைகளை வைத்துக் கொள்ள வசதிகள் செய்துகொண்டது.
பிரிட்டன் சும்மாயிருக்குமா? ஹாங்காங்குக்கு எதிரேயுள்ள கௌலூன் தீபகற்பத்தை ஏற்கனவே 1860-ஆம் வருஷம் பெற்றுக் கொண்டிருந்த தல்லவா,1 இதைத் தொடர்ந்தாற் போன்ற சுமார் 600 சதுர கிலோமீட்டர் (375 சதுர மைல்) விதீரணமுள்ள ஒரு பிர தேசத்தைப் பெற்றது. (1898) பிரான் பார்த்தது. 1895-ஆம் வருஷத்தில் தான் பெற்றுக் கொண்ட சலுகைகள் போதாவென்று இதற்குத் தோன்றிவிட்டது. ஹாங்காங்குக்குத் தென்மேற்கிலுள்ள குவாங் சௌ விரிகுடா2வையும் இதிலுள்ள இரண்டு சிறிய தீவுகளையும் தொண்ணூற்றொன்பது வருஷ குத்தகைக்குப் பெற்றது. இங்ஙனம் குத்தகையாகவும் இனாமாகவும் பெற்ற பிரதேசங்கள் போக ஐரோப்பிய வல்லரசுகள், செல்வாக்குப் பிரதேசங்கள் என்று சொல்லி, சீனாவைத் தங்களுக்கள் துண்டு துண்டாகப் பங்கு போட்டுக் கொண்டன. செல்வாக்குப் பிரதேசம் என்றால், எந்தப் பிரதேசம் எந்த வல்லரசுக்குச் செல்வாக்குப் பிரதேசமாக வரையறுத்துக் கொடுக்கப் பட்டிருக்கிறதோ அந்தப் பிரதேசத்தில், சம்பந்தப்பட்ட வல்லரசு, வியா பாரச் சலுகைகளென்ன, லேவாதேவித் தொழில் நடத்துவ தென்ன, தொழிற்சாலைகள், ரெயில்வேக்கள் முதலிய வைகளின் தாபனம், நிருவாகம் முதலியனவென்ன, ஆகிய எல்லா விஷயங்களிலும் முதல் பாத்தியதை கொண்டாட - விசேஷ பாத்தியதை கொண்டாட உரிமை பெற்றிருக்கிறதென்பது அர்த்தம். இதன்படி தெற்கு சீனாவை பிரான் ஸூம், மத்திய சீனாவை பிரிட்டனும், வட கிழக்கு சீனாவை ஜெர் மனியும், மஞ்சூரியாவை ருஷ்யாவும், செல்வாக்குப் பிரதேசங்க ளென்று சொல்லிக் கொண்டு பங்கு போட்டுக் கொண்டன. அமெரிக்கா மட்டும் இந்தப் பங்கு போட்டுக் கொள்ளும் வேலையில் ஈடுபடவில்லை.3
இந்தச் சம்பவங்களையெல்லாம் நாம் தொடர்ச்சியாகப் பார்க்கிற போது ஓர் உண்மை வெளியாகிறது. அதாவது, பத்தொன்பதாவது நூற்றாண்டின் இடைக்காலத்தில், வியாபார நோக்கங்கொண்டு சீனாவுக்குள் புகுந்த ஐரோப்பிய வல்லரசுகள் மெதுமெதுவாக உரிமைகள் பல பெற்று, பத்தொன்பதாவது நூற்றாண்டு முடிகிற தருணத்தில் தங்கள் மூலதனத்தை இங்கே கொண்டுபோட்டு, சாசுவதமான தொழில்களை தாபித்து, சீனாவைத் தங்களுடைய ஆக்கிரமிப்புக்குட்பட்ட நாடாகப் பங்கு போட்டுக்கொள்வதில் முனைந்திருந்தன என்பதுவே அந்த உண்மை.
கலகம் செய்து கண்ட பயன்
கி.பி.பத்தொன்பதாவது நூற்றாண்டின் இடைக்காலத் திலிருந்தே- அதாவது நான்கிங் உடன்படிக்கை நிறைவேற்றப்பட்ட பிறகே 1 - சீன மக்களுக்குத் தங்கள் அரசாங்கத்தின் பலவீனம் நன்கு புலப்பட்டுவிட்டது. நேற்றுப் பிறந்த ஜப்பான் கையில் தோல்வியுற்ற பிறகு கேட்க வேண்டுமா? தன்னம்பிக்கையும் இழந்துவிட்டார்கள். அந்நியநாட்டுப் பொருள்கள் வந்து குவிந்தன. அந்நியநாட்டு முதலாளிகள், தங்கள் மூலதனத்தைக் கொண்டுபோட்டு புதிய புதிய தொழிற்சாலைகள் தொடங்கினார்கள். சுதேசத் தொழில்கள் நசித்துப் போயின. அபினி வியாபாரம் சுறுசுறுப்பாக நடைபெற்றது. ஜனங்கள், அபினி மயக்கத்தில் தங்கள் வறுமையை மறந்திருந்தார்கள். பத்தொன்பதாவது நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பாவும் சீனாவும் எப்படியிருந்தன என்பதை ஒப்பிட்டுப் பேசுகிற ஓர் ஆசிரியன் ஐரோப்பா, நாளொரு வண்ணமாக வாழ்ந்துவந்தது; சீனாவோ, பொழு தொரு பிறப்பாக உயிரைப் பிடித்துக் கொண்டிருந்தது என்று கூறுகிறான்.
மஞ்சூ அரசாங்கமோ, உள்ளநிலையிலேயே திருப்தியடைந் திருந்தது. அதன் அதிகாரிகள், கன்பூஷிய கிரந்தங்களில் மனம் லயித்துப் போனவர்களாய், சீனா, ஓர் அசைக்க முடியாத மலையென்றும், அதனை அந்நியக் காற்று வந்து ஒன்றும் செய்துவிட முடியாதென்றும் சொல்லிக் கொண்டு கனவு உலகத்திலே வாழ்ந்து கொண்டிருந்தார்கள். உலகத்திலுள்ள மற்ற நாடுகளைவிட சீனா ஒன்று தான், இந்த ஐம்பது வருஷகாலமாக மகா முட்டாள் தனத்தோடு கூடியதாய் இருந்து வருகிறது… அதன் அரசாங்க உத்தியோகதர்கள் பலர் கர்விகள்; சோம்பேறிகள்; இந்த ஆபத்தான காலத்தைச் சமாளித்துக் கொண்டு செல்ல, பழைய முறைகளும் சம்பிரதாயங்களுமே போதுமென்ற திருப்தி யோடிருக்கிறார்கள்.. எங்களுடைய உத்தியோகதர்களில் கூர்ந்து பார்க்கிற சக்தியுடைய ஒருவர்கூட இல்லை. வெளிநாடுகளில் சீனாவுக்குச் சரியான பிரதி நிதிகள் இல்லை; உள்நாட்டிலோ சரியான பள்ளிக்கூடங்கள் இல்லை. ஊக்கம் அளிக்கின்ற. உறுதிபயக்கின்ற, குறைகளைப் போக்கி நிறைவுகளைச் செய்கிற எவ்வித சக்தியும் இல்லாமையினால், ஏக்கத்திலும் துக்கத்திலும் மூழ்கி இறந்து போவதைத் தவிர சீனாவுக்கு வேறு வழியில்லை.
ஆனால் இந்தக் காலத்தில், அழிவிலே ஆக்கம் உண்டு, தீமையிலே நன்மையுண்டு என்று சொல்லப்படுவதைப் போல, சீனாவின் எதிர்கால வாழ்வுக்கான சில நம்பிக்கை ரேகைகளும் விடத்தொடங்கின. சீனாவுக்குப் பிரசார நிமித்தம் வந்த கிறிதுவப் பாதிரி மார்களிற் சிலர், மேனாட்டு ஞானத்தையும் கொண்டு புகுத்தினார்கள். மேனாட்டு முறையில் அமைந்த கல்விச் சாலை களென்ன ஆபத்திரிகளென்ன, இப்படிப் பலவகையான தா பனங்களை ஆங்காங்கு நிறுவினார்கள். இவை களின் மூலமாக, ஜனங்கள், தங்கள் பழமையிலுள்ள சிறுமையையும், மேனாட்டுப் புதுமையிலுள்ள பெருமையையும் உணரலானார்கள். அநேக இளைஞர்கள் மேனாடுகளுக்குச் சென்று புதிய முறையில் கல்வி பயின்று வந்தார்கள். இவர்கள், பரம்பரை வழக்கம், சம்பிரதாயம் முதலியவைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, புதிய வழியிலே செல் வதற்குத் துணிவு கொண்டார்கள். பழைய நம்பிக்கைகள் நிறைந்து சோர்வினால் மூடப்பட்டிருந்த சாதாரண ஜனங்களின் உள்ளத்தில் ஒரு புதிய சக்தியை உண்டுபண்ணுவதென்றால் அப்பொழுது லேசாக இருக்க வில்லை. சீர்திருத்தம் என்று வாய்திறந்தால் அதிகாரிகளின் சீறல் வேறே. அரசபீடத்தை இறுகப் பிடித்துக் கொண்டு இஷ்டம் போல் ஆட்டிவைத்துக் கொண்டிருந்த ரீஜெண்ட்டான த்ஸு ஹ்ஸி, பணத்தை, நாட்டின் ராணுவ பலத்தை நவீன முறையில் அமைப் பதற்காகச் செலவழிப்பதற்குப் பதில், பகட்டான அரண்மனை களைக் கட்டுவதில் செலவழித்துக் கொண்டிருந்தான். இல்லா விட்டால், சிறிய ஜப்பானிடம் பெரிய சீனா தோல்வியுற்றிருக்குமா? ஆனால் இந்தத் தோல்வியானது, மேனாட்டுக் கல்வி பயின்ற இளைஞர்களுக்குச் சீர்திருத்தத்தின் அவசியத்தை அதிகமாக உணரும்படி செய்தது.
சீன- ஜப்பானிய யுத்தம் தொடங்குவதற்குச் சிறிது காலத்திற்கு முன்னர், தெற்கு சீனாவிலுள்ள இளைஞர்கள், ஸன் யாட் ஸென்1 என்பவனுடைய தலைமையில், அரசாங்க நிர்வாகத்தில் அநேக சீர்திருத்தங்கள் செய்யவேண்டுமென்று கோரி ஒரு மகஜர் தயாரித்து பீக்கிங் அரசாங்கத்திற்கு அனுப்பினர். இதற்குப் பிறகு, அதாவது ஷிமோனோஸெகி ஒப்பந்தம் நிறைவேறிய பிறகு அதனைக் கண்டிக்கு முகத்தான், காங் யூவெய்2 என்பவன் மற்றொரு மகஜர் தயாரித்து, அதில், ஆயிரக்கணக்கான அறிஞர்களுடைய கையெழுத்து வாங்கி அரச சந்நிதானத்திற்கு அனுப்பினான். இந்த இரண்டு மகஜர்களும், மஞ்சூ அரசாங்கத்தைச் சிறிதுகூட அசைத்துக் கொடுக்கவில்லை.
இந்த இடத்தில், ஸன் யாட் ஸென்னைப் பற்றியும் காங் யூவெய்யைப் பற்றியும் சிறிது தெரிந்து கொள்வோம்.
ஸன் யாட் ஸென், சாதாரண ஒரு விவசாய குடும்பத்தில் 1866-ஆம் வருஷம் பிறந்தவன். இளமையிலிருந்தே இவனுக்குத் தேச பக்தியும் சுதந்திர உணர்ச்சியும் நிரம்பியிருந்தன. ஏறக்குறைய பன்னிரண்டாவது வயதில், இவன், அமெரிக்கா பக்கமுள்ள ஹவாயி1 தீவுக்குச் சென்று, அங்கு ஹோனோலூலு2 என்ற நகரத்தில் கிறிதுவப் பாதிரிமார்கள் நடத்தி வந்த ஒரு பள்ளிக் கூடத்தில் கல்வி பயின்றான். சிறப்பாக ஆங்கில மொழியில் இவனுக்கு நல்ல பரிச்சயம் ஏற்பட்டது. பின்னர் தாய்நாட்டிற்குத் திரும்பிவந்து ஹாங்காங்கிலுள்ள வைத்தியக் கல்லூரியில் சேர்ந்து படித்து 1892-ஆம் வருஷம் டாக்டர் பட்டம் பெற்றான். பெற்றதும் மாக்கோ தீவுக்குச்சென்று வைத்தியத் தொழிலை ஆரம்பித்தான். அப்பொழுதுதான் இவன் அரசியலில் ஈடுபட்டது. 1892-ஆம் வருஷம் மாக்கோவிலேயே சீன புனருத்தாரண சங்கம் என்ற பெயரால் ஒரு சங்கத்தை தாபித்து நடத்திக்கொண்டு வந்தான். இந்தச் சங்கத்தின் கிளை தாபனங்களை, ஹோனோலூலுவில் ஒன்றும், ஹாங்காங்கில் ஒன்றும், அமெரிக்காவில் ஒன்றுமாக முறையே நிறுவி, வெளிநாடுகளிலுள்ள சீனர்களின் உதவியை, சீனாவின் புனருத்தாரணத் திற்காக நாடினான்.
இவன் முதன் முதலாக 9-9-1895-ல் காண்ட்டன் நகரத்தில், மஞ்சூ அரசாங்கத்திற்கு விரோதமாகப் புரட்சி நடத்தினான். ஏனென் றால், காண்ட்டன் வாசிகள்தான், மற்ற ஊர்வாசிகளைக் காட்டிலும், அந்நிய ஆதிக்கத்தின் அவதிகளை அதிகமாக அறிந்தவர்கள். ஆனால் ஸன்னினுடைய இந்த முதல் புரட்சி தோல்வியடைந்து விட்டது. இதற்குப் பிறகு இவன் ஆரம்பித்த சில புரட்சிகள் வெற்றியடையவில்லை. இவை களுக்குப் பின்னரே, இவனுக்கு, ஒழுங்கான திட்டங்களும் அவற்றை நிறைவேற்றுவதற்குக் கட்டுப்பாடான தாபனங்களும் இல்லாமல் எந்தப் புரட்சியும் வெற்றிபெறாதென்ற உண்மை புலப் பட்டது. சீனாவிலும் வெளிநாடுகளிலும், சீன சுதந்திரத்தை லட்சிய மாகக் கொண்ட ரகசியச் சங்கங்கள் பலவற்றை தாபித்தான். இதற்காக உலகத்தின் பல பாகங்களுக்கும் சுற்றுப்பிரயாணஞ் செய்தான். இந்தப் பிரயாணத்தின் போது இவன் ஸான் மின் சூயி3 என்ற ஜனங்களின் மூன்று வாழ்க்கைத் தத்துவங்களைப்பற்றியும், சீன அரசியல் எப்படி இருக்க வேண்டு மென்பதைப் பற்றியும் சில திட்டங்கள் வகுத்துக் கொண்டான். பின்னர் ஜப்பானுக்குப் போந்து அங்கே டோக்கியோ நகரத்தில், சீனப் புரட்சி வாதிகள் பலரையும் ஒன்று கூட்டுவித்து டுங் மெங்ஹூயி1 என்ற ஒரு ரகசிய தாபனத்தை ஏற்படுத்தினான். இதுவே பின்னர் கோமிண்ட்டாங் கட்சியாகப் பரிணமித்தது. 1905-ஆம் வருஷம் இந்தச் சங்கம் தாபித மானதி லிருந்து 1911-ஆம் வருஷம் வரை ஸன் யாட் ஸென் சிறிதும் பெரிது மான சில புரட்சிகளுக்கு ஏற்பாடு செய்து ஒவ்வொன்றிலும் தோல்வி யடைந்து வந்தான். இந்தக் காலத்தில் இவன் உயிருக்கு ஏற்பட்ட ஆபத்துக்கள் எத்தனை? மஞ்சூ அரசாங்கம் இவனை உயிரோடு பிடித்துக்கொண்டு வருவோருக்கு அல்லது இவன் தலையைக் கொண்டு வருவோருக்கு அதிக சன்மானத்தை அளிப்பதாகக்கூடப் பிரகடனப்படுத்தியது. அதுவும் இந்த விஷயத்தில் தோல்வியடைந்து வந்தது. கடைசியில் 1911-ஆம் வருஷத்துப் புரட்சி வெற்றிபெற்றது. குடியரசு தாபிதமாயிற்று. ஆனால் ஆரம்பித்தி லிருந்தே இதற்குப் பல இடையூறுகள் ஏற்பட்டன. இவைகளைச் சமாளிக்க ஸன் அநேக பாடுகள் பட்டான். கடைசியில் 12-3-1925-ல் இறந்து போனான்.
காங் யூ வெய் என்பவன் ஒரு காண்ட்டன் வாசி; 1858-ஆம் வருஷம் பிறந்தவன். இவன் தீவிரமான சீர்திருத்தவாதி; ஆனால் புரட்சிவாதியல்ல. இவன் சீன முறையிலேயே கல்வி பயின்றவனா யினும், ஜப்பானின் வேகமான முன்னேற்றத்தையும், தனது நாட்டின் மந்த கதியையும் ஒப்பிட்டு நோக்கி, இந்த வேற்றுமைக்குக் காரண மென்ன வென்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்யத் தொடங்கினான். வெளி நாடுகளில் நடைபெறுகிற விஷயங்களையும், அவை முன்னுக்கு வந்த வரலாற்றையும் தனது நாட்டு மக்களுக்கு நூல்கள் மூலம் தெரிவித்தான். இவன் முடியரசு வாதி; ஸன் யாட் ஸென் குடியரசு வாதி. காங் யூ வெய், சீனாவின் பழமையை யொட்டினாற்போலவே அதன் முன்னேற்றம் இருக்க வேண்டுமென்று கருதினான். இவனை சீனாவின் நவயுக ஞானி என்று சீனர்கள் போற்றுகிறார்கள்.
ஸன் யாட் ஸென்னும் காங் யூ வெய்யும் அனுப்பிய மகஜர்கள், எவ்விதமான பலனையும் கொடுக்கவில்லையென்று மேலே சொன்னோ மல்லவா? இதற்குப் பிறகு நாட்டில், சீர்திருத்த நோக்கங்கொண்டு அநேக சங்கங்கள் தோன்றின. இவை பலவற்றில் அரசாங்க உயர்தர உத்தியோகதர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். ஆனால் அர சாங்கம் இவைகளையெல்லாம் அடக்குமுறை கொண்டு அடக்கி விட்டது. எனவே இவைகளில் அநேகம் ரகசியச் சங்கங்களாக உருமாறிக்கொண்டு, ஜனங் களின் மத்தியிலே தீவிரமாக வேலை செய்து வந்தன. சீன சரித்திர பரம்பரைக்கும் ரகசியச் சங்கங்களுக்கும் நெருங்கிய தொடர் புண்டல்லவா?
காங் யூ வெய், சீர்திருத்த நோக்கமுடையவனாயிருந்தும், ஸன் யாட் ஸென்னைப் போல் அரசாங்கத்தை விரோதித்துக் கொள்ள வில்லையாதலால், இவனுக்கு பீக்கிங்கில் ஓர் உயர்தர உத்தியோகம் கிடைத்தது. இவன், அப்பொழுது மஞ்சூ அரச பீடத்தில் கொலு வீற்றிருந்த குவாங்ஷூ மன்னனின் நெருங்கிய நண்பனானான். குவாங்ஷூ மன்னனா யிருந்தும் அவனை ஆட்டிவைத்தவள் த்ஸு ஹ்ஸி. தேகபலமும் மனோ பலமுமில்லாத குவாங்ஷூ, சீர்திருத்த நோக்கமுடைய இளைஞர்களால் உற்சாகமூட்டப்பெற்று, அவனுக் குரிய அதிகாரத்தைச் செலுத்துமாறு தூண்டப்பட்டான்.
இங்ஙனம் தூண்டியவர் பெரும்பாலோர் தெற்கு சீனா வாசிகள்; அந்நியர்களோடு நெருங்கிப் பழகி அவர்களுடைய தன்மைகளை நன்கு அறிந்திருந்தவர்கள். இவர்கள் தெற்கித்தியார் என்று அழைக் கப்பட்டார்கள். இவர்களுக்கு விரோதமாக, முதியோர்களெல் லோரும்-அதாவது பழமையே நிலைத்திருக்க வேண்டுமென்ற பிடிவாதமான கொள்கையுடையவரும், அந்நியர்களுள்பட அந்நிய மாயுள்ள எதனையும் வெறுத்துவந்தவரும், ஆனால் அந்நியர்கள் முன்னே அடங்கிப் போகிறவருமான பணக்காரர், உயர்தர உத்தி யோகதர், ஏகபோக உரிமைக்காரர் முதலியோர்-ஒரு கட்சியின ராகச் சேர்ந்து கொண்டனர். இவர்களிற் பெரும்பாலோர் வட மாகாணங்களைச் சேர்ந்தவர்கள். வடக்கித்தியார் என்று அழைக்கப் பட்ட இவர்கள் அரசாங்க ஆதரவு நிழலிலேயே தங்கள் ஆயுட் காலத்தை யெல்லாம் கழித்தவர்கள். இவர்கள் குவாங்ஷூ மன்னனுக்கு விரோதமாக ரீஜெண்ட்டான த்ஸு ஹ்ஸியுடன் சேர்ந்து கொண்டார்கள். எனவே, அரசாங்க அதிகாரக் கோட்டைக்குள்ளேயே முதியவர் அல்லது வடக்கித்தியார் கட்சியென்றும், இளையவர் அல்லது தெற்கித்தியார் கட்சியென்றும் முறையே இரண்டு கட்சிகள் ஏற்பட்டு ஒன்றுக் கொன்று விரோதமாக வேலை செய்து வந்தன.
1898-ஆம் வருஷம் ஜூன் மாதம் குவாங்ஷூ மன்னன், இளைய கட்சியினரால் ஊக்கப்பெற்று, அரசாங்க நிருவாகத்தில் அநேக சீர்திருத்தங்கள் செய்து உத்தரவுகள் மேல் உத்தரவுகளாக விடுத்தான். சர்வகலாசாலை தாபிதம் முதல் தொழிலாளர் நலனைப் பாதுகாப்பது வரையில், கப்பல் கட்டுந் தொழிலை ஆரம்பிப்பது முதல் அலங்கார பதவிகளாயிருந்த சில உத்தியோகங்களை வேண்டாமென்று சொல்வது வரையில் பல விஷயங்கள் இந்த உத்தரவுகளிலே அடங்கியிருந்தன. ஆனால் இந்தச் சீர்திருத்த உத்தரவுகளின் வாழ்வெல்லாம் நூறுநாள் வாழ்வுதான்!
கொரியாவில் ஏற்கனவே விசேஷ தானீகனாயிருந்த சிறந்த ராஜதந்திரியென்று பெயர் வாங்கியவனும், ராணுவ நிபுணனென்று கருதப்பட்டவனுமாகிய யுவான் ஷி காயிடம், ராணுவ நிருவாகச் சீர்திருத்தத்தின் பொறுப்பை, அரசன் ஒப்புவித்தான். சீர்திருத்தக் காரர்கள் இவனிடத்தில் நம்பிக்கை வைத்து, தங்களுடைய அந்த ரங்கத் திட்டங்களிற் சிலவற்றை இவனிடம் தெரிவித்தார்கள் இவற்றிலே ஒன்று, சீர்திருத்தங்களுக்குப் பரம விரோதியாயிருக்கின்ற ரீஜெண்ட்டையும் அவளுடைய முக்கிய ஆலோசகனாகிய ஜூங் லூ1 என்பவனையும் கைது செய்துவிடுவதென்பது. ஏனென்றால் அப்பொழுதுதான் சீர்திருத்தத் திட்டங்களைத் தங்கு தடையின்றி அனுஷ்டானத்திற்குக் கொண்டு வருதல் சாத்தியமாகுமென்று இவர்கள் எண்ணினார்கள். ஜூங் லூ என்பவன், யுவான் ஷி காயின் மேலதிகாரி. இவனிடத்தில் யுவான், சீர்திருத்தக்காரர்களுடைய மேலே சொன்ன யோசனையைத் தெரிவித் தான். இதனுடைய பலன் என்ன? சக்ரவர்த்தியே ரீஜெண்ட்டினால் சிறைப்படுத்தப்பட்டு விட்டான்! அது மட்டுமல்ல, ரீஜெண்ட்டே சக்ரவர்த்திப் பதவியி லிருந்து இனி ராஜ்ய நிருவாகத்தை நடத்துவாள் என்று அறிக்கையும் விடும்படி செய்யப்பட்டான்! பின்னர், ரீஜெண்ட்டின் பெயரால், முன் விடுக்கப்பெற்ற சீர்திருத்த அறிக்கைகளையெல்லாம் ரத்து செய்து, மாற்று அறிக்கைகள் விடுக்கப் பெற்றன; விலக்கப்பட் டிருந்த பழைய உத்தியோகதர்கள் பழையபடி அமர்த்தப் பெற்றார்கள்; சீர்திருத்தக்காரர்கள் மரண தண்டனைக்காளா கியோ, தேசப் பிரஷ்டர் களாகியோ போனார்கள். மீண்டும் ராஜ் யத்தில் பிற் போக்குச் சக்தி தலைவிரித்து ஆட ஆரம்பித்துவிட்டது.
இந்தப் பிற்போக்குச் சக்தியுடன் அந்நியத் துவேஷமும் கலந்து கொண்டது. இதற்கு, பீக்கிங் அரண்மனையிலிருந்து அந்தரங்கமான ஆதரவும் கிடைத்துக் கொண்டிருந்தது. துறைமுகப் பிரதேசங்களில், அந்நிய வியாபாரிகளும் சீனர்களும் அந்நியோந்நியமாய்ப் பழகி வந்தார் களென்றாலும், உட்பிரதேசங்களில், ஏற்கனவே அந்நியர்கள் மீதிருந்த வெறுப்பு வளர்ந்து வந்தது. இந்த வெறுப்பு, சீன அதிகாரி களால் அந்தரங்கமாக ஆதரிக்கப் பட்டும் வந்தது. ஆனால் இதைக் குறித்து ஆச்சரியமே படத் தேவையில்லை. ஏனெனில் அந்நியர்கள் சீனாவைப் பங்குபோட்டுக் கொள்கிற விஷயத்தில், இந்தக் காலத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்ததார்களல்லவா? இதே சமயத்தில், சீனர் களை மயக்கி ஆட்கொள்ள, அபினியைச் சட்டரீதியாகக் கொணர்ந்து திணித்துவந்த தொழிலை வருஷத்திற்கு வருஷம் பெருக்கிக் கொண்டு வந்தார்கள். மேனாட்டு முறையில் தாபிக்கப்பட்ட தொழிற்சாலைகள், ஜனத் தொகையில் ஒரு சிறு பகுதியினருக்கு வேலை கொடுத்து வந்தன வென்றாலும், பெரும்பாலோருடைய பொருளாதாரக் கஷ்டங்கள் அதிகரித்து வந்தன. பாதிரிமார்களின் பிரசாரம் ஆக்கம் பெற்றுவந்தது. இவற்றோடு வெள்ளப் பெருக்கும் பஞ்சப் பாழும் கலந்துகொண்டன. கேட்கவேண்டுமா அந்நியர்மீது துவேஷத்திற்கு? அந்நியர்களை அப்புறப் படுத்த வேண்டுமென்ற நோக்கத்துடன் கட்டுப்பாடான ரகசிய தாபனங்கள் பல தோன்றின. இவைகளிலே ஒன்று ஐஹோ சுவான்1 என்ற தரும-சாந்தி தாபன மல்லர் சங்கம். இந்தச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பாக்ஸர்கள்2 என்று அந்நியர்களால் அழைக்கப்பட்டார்கள். முஷ்டியுத்தம், கத்தி விளையாட்டு முதலியவைகளில் பயிலுவிப்பதே தங்கள் நோக்கம் என்று இவர்கள் சொல்லிக் கொண்டார்கள். இவர்கள் நாடோடி வாழ்க்கை நடத்துகிறவர்களாகவே வெளிக்குக் காணப்பட்டார்கள். ஆனால் இவர்கள், இந்த நாடோடி வாழ்க்கையை மேற் கொண்டதற்குக் காரணம், ஆங்காங்குச் சுலபமாகச் சென்று தங்களுடைய தாபனத்தை நிறுவி அவை மூலமாக அந்நிய துவேஷப் பிரசாரம் செய்ய முடியும் என்பதுதான். இவர்களுக்கு எவ்வித நிர்ணயமான அரசியல் கொள்கையும் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனாலும் இவர்களுடைய இயக்கம் நாடெங்கணும் பரவியது. தங்களிடத்தில் தெய்வ சக்தி வந்து குடிகொண்டிருக்கிற தென்றும், அந்நியர்களுடைய வெடிகுண்டு, பீரங்கி முதலிய எதுவும் தங்களை ஒன்றுஞ் செய்யா தென்றும், அந்நியர்களுடைய கப்பல் களைக் கூட சீனாவுக்குள் வரவொட்டாதபடி தங்கள் மந்திர சக்தி யினால் தடுத்துவிட முடியும் என்றும், இந்த மாதிரியான நம்பிக்கை களைப் பாமர ஜனங்களிடத்தில் உண்டுபண்ணி, அவர்களிட மிருந்து ஆள்பலமும், பொருள் பலமும் சேர்த்துக் கொண்டார்கள். இவர்களுடைய இயக்கம் வலுத்தது, 1900-ஆம் வருஷத்தொடக்கத்தில் பெரிய எரிமலையாக வெடித்தது. இது பாக்ஸர் கலகம்.
சில சில மாகாண அதிகாரிகள், தங்கள் எல்லைக்கு இந்த அந்நியத் துவேஷ இயக்கம் தீவிரமாகப் பரவிவிடாதபடி ஆரம்பத் திலேயே அடக்கிவிட்டாலும், பொதுவாக இதற்கு பீக்கிங் அரசாங்கத் தினுடைய, சிறப்பாக ரீஜெண்ட் சக்கரவர்த்தினியுடைய மறைமுக மான ஆதரவு இருந்து வந்தது. இதனை இவர்கள் - பாக்ஸர்கள் - தெரிந்துகொண்டு விட்டார்கள். கேட்க வேண்டுமா அட்டகாசத் திற்கு? மஞ்சூ அரசாங்கத்தை ஆதரியுங்கள்; அந்நியப் பேய்களை விரட்டுங்கள் என்பது இவர்களுடைய மந்திர வாக்கியமாகி விட்டது. இதைப் பகிரங்மாகவும் கோஷிக்கத் தொடங்கினார்கள். அந்நிய உயிர்களுக்கும் பொருள்களுக்கும் பல இடங்களில் ஏராளமான சேதம் உண்டாயிற்று. கிறிதுவர்களாக மதம் மாறின சீனர் பலர் கொலையுண்டனர். அந்நியப் பேய்கள் கொண்டு வந்து புகுத்திய ரெயில், தந்தி, மின்சாரம், தபால் முதலிய தாபனங்கள் நாசமாக்கப்பட்டன; தீக்கிரையாக்கப்பட்டன.
இந்த ஏராளமான சேதங்களைப் பார்த்து பாக்ஸர்கள் வெற்றிபெற்று வருகிறார்களென்று ரீஜெண்ட் சக்ரவர்த்தினி நினைத்துக்கொண்டு விட்டாள்; பகிரங்கமாகவே இவர்களுக்கு ஆதரவு காட்டினாள். அந்நிய நாட்டு தானீகர்கள் இனிச் சும்மா யிருக்க முடியுமா? தங்கள் தங்கள் நலன்களைப் பாதுகாத்துக் கொள் வதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தார்கள்; உட்பிரதேசங்களில் சிதறிக்கிடந்த அந்நியர் அனைவரையும் ஒன்றுகூட்டி முக்கியமான நகரங்களுக்குக் கொணர்ந்து தகுந்த பந்தோபதில் வைத்தார்கள். இவர்களுக்குப் பாதுகாப்பாக, யாங்க்ட்ஸீ நதியின் முகத்துவாரத்தில் வைக்கப்பட்டிருந்த சில போர்க்கப்பல்களும் நகர்ந்தன. இந்தச் செய்திகள் யாவும் ரீஜெண்ட் சக்ரவர்த்தினிக்குத் தெரிந்தது. இதற் கேற்றாற்போல், ஷாங்காயில் வெளியான ஓர் ஆங்கிலப் பத்திரிகை, பீக்கிங் அரசாங்கத்தையும், ரீஜெண்ட் சக்ரவர்த்தினியையும் பல மாகத் தாக்கி ஒரு தலையங்கம் எழுதியிருந்தது. இது, சக்ரவர்த் தினிக்கும் அவளுடைய பிற்போக்கான ஆலோசகர்களுக்கும் அதிக மான ஆத்திரத்தை உண்டு பண்ணிவிட்டது. மறுநாளே-1900-ஆம் வருஷம் ஜூன் மாதம் இருபதாந்தேதி- பீக்கிங்கிலுள்ள அந்நிய நாட்டு தானீகர் அனைவருக்கும், இருபத்து நான்கு மணி நேரத் திற்குள் பீக்கிங் நகரத்தை விட்டு வெளியேறிவிட வேண்டுமென்று ஓர் உத்தரவு பிறந்தது. அந்நிய தானீகர்கள் ஒன்று சேர்ந்து, இந்த உத்தரவுக்கு இணங்க முடியாதென்று மறுத்துவிட்டார்கள். உடனே அவர்கள் மீது யுத்தந் தொடுத்திருப்பதாக அரண்மனையிலிருந்து மறு உத்தரவு பிறந்தது. அரசாங்கத்து மந்திரிகளை நேரில் கண்டு பேசுவதாகப் புறப்பட்ட ஜெர்மன் தானீகனைப் பட்டப் பகலில் நடு வீதியிலேயே, ஒரு சீனப் போர்வீரன் துப்பாக்கியினால் சுட்டுக் கொன்றான். அந்நியர்கள் வசித்துக் கொண்டிருந்த இடத்தை அரசாங்கப் படைகள் முற்றுகையிட்டன. சுமார் எட்டு வாரகாலம் இந்த முற்றுகை நீடித்தது. இந்த விஷயம் உலகத்தின் பல பாகங் களுக்கும் உடனே தெரிந்துவிட்டது. அந்தந்த நாட்டு அரசாங் கங்களும், தங்கள் தங்கள் பிரஜைகளைக் காப்பாற்றும், பொருட்டுப் படைகளை அனுப்பின. பிரிட்டன், பிரான், ருஷ்யா, ஜெர்மனி, ஜப்பான், அமெரிக்கா, இத்தாலி, ஆதிரியா ஆகிய எட்டு நாட்டுப் படைகளும் பீக்கிங் வந்து முற்றுகையை விடுவித்தன. இப்படி விடுவித்த துருப்புக்களிலே இந்தியத் துருப்புகளும் சேர்ந்திருந்தன என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. முற்றுகையை விடுவிக்க வந்த இந்தப் பெரும்படையை எதிர்த்து நிற்கமுடியாமல் சீனப் படைகள் ஓட்டம் பிடித்தன. ரீஜெண்ட் சக்ரவர்த்தினி, சக்ரவர்த்தியுடனும், முக்கியமான சில பரிவாரங்களுடனும் மாறுவேஷம் தரித்துக் கொண்டு, அரண்மனையை விட்டு, வெளியேறிவிட்டாள். நகரம் ஒரே அல்லோல கல்லோலம். அரசாங்கமே ஓடிப்போய் விட்டால், பிரஜைகளின் கதி என்னவாகு மென்பதை நாம் சொல்லவேண்டிய தில்லையல்லவா? அந்நியத் துருப்புக்கள் நகரத்திற்குள் பிரவே சித்ததும் இஷ்டப்படி சூறையாடி அநேக அக்கிரமங்களைச் செய்தன. பாக்ஸர்களுடைய அட்டூழியத்தைக் காட்டிலும் அந்நியத் துருப்புகளின் அட்டூழியம் மிகவும் அதிகமாயிருந்ததென்பது அப்பொழுது நேரில் பார்த்தவர்களுடைய அபிப்பிராயம். பீக்கிங் தவிர மற்ற இடங்களுக்கும்- அதாவது அந்நியர்கள் எங்கெங்கு சிக்கிக் கொண்டு விட்டார்களோ அங்கெல்லாம்- அந்நியப் படை யினர் அனுப்பப்பட்டனர். சில மாதங்களோடு இந்த பாக்ஸர் கலகம் ஒருவாறு நின்றது.
இந்தக் குற்றத்திற்கு- அதாவது அந்நியர்களுக்கு விரோதமாகக் கலகஞ் செய்ததற்கு- சீனா, தக்க தண்டனை பெற வேண்டுமல்லவா? அந்நியநாட்டுப் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றுகூடி இது சம்பந்தமாக ஆலோசனை செய்தார்கள்; சீன அரசாங்கப் பிரதிநிதிகளோடு பேச்சு வார்த்தைகள் நடத்தினார்கள். சுமார் ஒரு வருஷ காலமாயிற்று இவை முடிவதற்கு. கடைசியில் 7-9-1901-ல் ஓர் ஒப்பந்தம் நிறைவேறியது. இதற்கு பாக்ஸர் ஒப்பந்தம்1 என்று பெயர். இதன் முக்கிய ஷரத்துக்கள் வருமாறு:-
1. ஜெர்மன் தானீகன் ஒருவன் கொல்லப்பட்டு விட்டானல்லவா, அதற்குச் சீன அரசாங்கம் தனது செலவில் ஒரு ஞாபகச் சின்னம் கட்ட வேண்டும்; மன்னிப்புக்கோரி ஜெர்மனிக்கு ஒரு தூது கோஷ்டியை அனுப்பவேண்டும்.
2. கலகத்திற்கு உடந்தையாயிருந்த உத்தியோகதர் களைத் தண்டனைக் குட்படுத்த வேண்டும்.
3. இந்தக் காலத்தில் ஜப்பானிய தானீகன் ஒருவன் கொல்லப் பட்டுவிட்டான். அவன் பொருட்டு நஷ்ட ஈடு, மன்னிப்பு முதலியன கொடுக்கப் பெற வேண்டும்.
4. இரண்டு வருஷ காலத்திற்கோ அல்லது வல்லரசுகள் விதிக்கிற அளவுவரையிலோ, சீனா, வெளி நாடுகளிலிருந்து எந்தவிதமான ஆயுதங்களையும் இறக்குமதி செய்யக்கூடாது.
5. சீனா, எல்லா வல்லரசுகளுக்குமாக மொத்தம் சுமார் நூறு கோடி ரூபாய், நூற்றுக்கு நான்கு விகிதம் வட்டியுடன் சேர்த்து நாற்பது வருஷத் தவணையில் நஷ்ட ஈடாகக் கொடுக்க வேண்டியது. இந்தத் தொகைக்கு அடமானமாக இன்னும் பாக்கியுள்ள சுங்கவருமானம், உப்பள இலாகா வருமானம் முதலியவைகளை வைக்க வேண்டும். (1940-ஆம் வருஷம் வரை இந்தத் தொகை செலுத்தப்பட்டு வந்தது.)
6. பீக்கிங்கில் அந்நிய தானீகர்களின் வாசத்திற் கென்று தனியான இடம் ஒதுக்கப்படவேண்டும். இதற்குக் காவல் செய்ய ஒரு படையும் அனுமதிக்கப்படவேண்டும்.
7. அந்நியப்படைகள் பீக்கிங்குக்குத் தங்கு தடையின்றி வருவதற்கு அனுகூலமாக, (யாங்க்ட்ஸீ முகத்துவாரத்தி லிருந்து) வழியிலுள்ள எல்லாக் கோட்டை கொத்தளங் களையும் இடித்துத் தகர்த்து விடவேண்டும். இந்த வழியில் அந்நியத் துருப்புக்கள் காவல் செய்ய இடம்பெற வேண்டும்.
8. அந்நியர்களுக்கு விரோதமாக ஏதேனும் அட்டூ ழியங்கள் நடைபெறுமானால், அவை கண்டிப்பாக அடக்கப் படும் என்றும், மாகாண அதிகாரிகள் இது விஷயத்தில் எச்சரிக்கையாயிருக்க வேண்டுமென்றும், பீக்கிங் அரசாங்கம் பகிரங்க அறிக்கை வெளியிடவேண்டும்.
9. ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ள வியாபார ஒப் பந்தங்கள் மீண்டும் பரிசீலனை செய்யப்பட வேண்டும்.
இந்த ஒப்பந்த நிறைவேற்றத்தில் ஒரு வேடிக்கையென்ன வென்றால், இதில் இருசாராரும் கையெழுத்திடுவதற்கு முன்னரேயே இதன் ஷரத்துக்களில் பல அமுலுக்கு வரவேண்டுமென்று ஐரோப்பிய வல்லரசுப் பிரதிநிதிகள் வற்புறுத்தியதுதான்.
1900-ஆம் வருஷத்திற்குப் பிறகு யாங்க்ட்ஸீ முகத்துவாரத்தி லிருந்து பீக்கிங் வரையில் வழிமுழுவதும் அந்நியத் துருப்புக்கள் நடமாடாத நாட்களே கிடையாது. பீக்கிங் நகரத்தில் மட்டு மென்ன? அங்கும் இந்த ராணுவக் கோலந்தான். பாக்ஸர் ஒப்பந்தம் நிறைவேறின அடுத்த வருஷம்- 1902-ஆம் வருஷம் ஜனவரி மாதம்-வெளியூருக்கு ஓடிப்போயிருந்த ரீஜெண்ட் சக்ரவர்த்தினி, தனது பரிவாரங்களோடு பீக்கிங் நகரத்திற்குத் திரும்பி வந்தாள். மயானத் திலிருந்து திரும்பி வருகிற ஊர்வலம் மாதிரி இருந்தது இவள் வருகை. ஆம்; மஞ்சூ அரச பரம்பரையின் கௌரவமெல்லாம் புதைக்கப்பட்டோ அல்லது எரிக்கப் பட்டோ போய் விட்ட தல்லவா? எஞ்சியிருப்பது என்ன? சீன ஏகாதிபத்தியம் என்ற பெயர்மட்டுந்தான்; பார்வையில்லாத கண்மாதிரி.
ருஷ்ய- ஜப்பானிய யுத்தம்
பிரான்ஸ், ஜெர்மனி, ருஷ்யா ஆகிய மூன்று ஐரோப்பிய வல்லரசுகளும் சேர்ந்து வற்புறுத்தியதற்கிணங்க, லியோடுங் தீபகற்பத்தையும், போர்ட் ஆர்தர் துறைமுகத்தையும் ஜப்பான் திருப்பிச் சீனாவுக்கே கொடுத்துவிட்டதல்லவா?1 இதற்குப் பிறகு அதனுடைய-அதாவது ஜப்பானுடைய-அரசியல் சிந்தனையில் ஒரு பெரிய மாறுதல் ஏற்பட்டது. ஐரோப்பா வேறே, ஆசியா வேறே என்ற எண்ணம் அதற்குத் தோன்றிவிட்டது. ஐரோப்பிய வல்லரசுகள், தங்களுக்குள் எந்த விதமான பிணக்குகள் இருந்தபோதிலும், போராட்டங்கள் நடத்திக்கொண்ட போதிலும், வேறு கண்டத் தவர், வேறு நிறத்தவர் என்ற பிரச்சினை வருகிறபோது, அவையாவும் ஒன்று சேர்ந்துகொண்டு விடுகின்றன என்ற உண்மையை ஜப்பான் அப்பொழுது உணர்ந்து கொண்டது. பிற்காலத்தில், ஆசியா, ஆசியாக்காரர்களுக்கே என்ற கோஷத்தைக் கிளப்பிக்கொண்டு ஜப்பான் வீறிட்டெழுந்ததற்குக் காரண மென்னவென்று நாம் சிறிது ஆராய்ச்சி செய்து பார்த்தோமானால், ஷிமோனோஸெகி ஒப்பந்தத் திற்குப் பிறகு, ஐரோப்பிய வல்லரசுகள் ஏகோபித்து ஜப்பான் விஷயத்தில் நடந்துகொண்ட மாதிரிதான் என்பது நன்கு தெரியவரும்.
மேலே சொன்ன மூன்று ஐரோப்பிய வல்லரசுகளும் சேர்ந்து சீனாவுக்கு அதனுடைய சொத்தை வாங்கிக் கொடுத்து விட்டன வென்று சொன்னாலும் இதற்கு முக்கிய காரணமாயிருந்தது ருஷ்யா தான். ருஷ்யா சுயநலத்திற்காகவே இப்படிச் செய்தது என்பதை ஜப்பான் வெகு சீக்கிரத்தில் உணர்ந்துகொண்டு விட்டது. ஏனென்றால், மூன்று வருஷங் கழித்து (1898) மேற்படி லியோடுங் தீபகற்பத்தையும் போர்ட் ஆர்தர் துறைமுகத்தையும், இருபத்தைந்து வருஷ குத் தகைக்குச் சீனாவிடமிருந்து ருஷ்யா பெற்றுக் கொண்டதல்லவா?2 இதற்குப் பிறகு, ஜப்பானுக்கு ருஷ்யா மீது ஆத்திரம் வளர்ந்து வந்தது. ருஷ்யாவை என்றைக்காவது ஒருநாள் எதிர்த்துப் போராடவேண்டி யிருக்குமென்பதை அறிந்து அதற்கேற்ற படி தன் பலத்தை விருத்தி செய்து கொண்டு வந்தது.
பாக்ஸர் ஒப்பந்தத்திற்குப் பிறகு, சீனாவின் பலவீனத்தை நன்கு உணர்ந்துகொண்ட ருஷ்யா, தெற்கு மஞ்சூரியாமீது தன் திருஷ் டியைச் செலுத்தியது. அங்கேயே தன்னை ஊன்றிக் கொண்டு விட வேண்டுமென்ற ஆசை இதற்கு இருக்கிறதென்பதை எல்லா வல்லரசு களும் ஒருவாறு ஊகித்துக்கொண்டன. எப்படியென்றால், அப் பொழுதைய ருஷ்யா, ஏகாதிபத்திய ஆசையில் மூழ்கிக் கிடந்தது. அதனுடைய ராஜதந்திரிகளும் முதலாளி வர்க்கத்தினரும் மண்ணையும் பொன்னையும் முறையே பெருக்குவதை லட்சியமாகக் கொண்டு அதற்கான எல்லா முறை களையும் கையாளத் தயாராயிருந்தார்கள். இந்த மாதிரியான முயற்சி களிலே ஒன்றுதான், மஞ்சூரியாவில் ரெயில் போட்டு, அதை நிருவாகம் செய்கிற உரிமையைப் பெற்றது. தவிர, சீனாவும் ருஷ்யாவும், ஜப்பானுக்கு விரோதமாக ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கின்றன வென்பதை ஜப்பானுட்பட எல்லா வல்லரசுகளும் தெரிந்து கொள்ளாமலில்லை. இதனால் ருஷ்யாமீது ஒருவித அவநம்பிக்கை ஜப்பானுக்கு இருந்து கொண்டிருந்தது. இதற்குத் தகுந்தாற்போலவே ருஷ்யாவின் நடவடிக்கைகளும் இருந்தன.
பாக்ஸர் கலகமானது, மஞ்சூரியா முதலிய சீன ஆதிக்கத்துக் குட்பட்ட எல்லாப் பிரதேசங்களிலும் பரவியிருந்ததல்லவா? இதனை அடக்கவும், தங்கள் தங்கள் பொருள்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் ஐரோப்பிய வல்லரசுகள் துருப்புக்களை அனுப்பி யிருந்தன. கலகம் அடங்கி பாகர் ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, மேற்படி வல்லரசுகள் தங்கள் தங்கள் துருப்புக்களை வாப வாங்கிக் கொண்டன. ஆனால் ருஷ்யாமட்டும் ஏதோ சாக்குப்போக்குகள் சொல்லிக்கொண்டு தன் துருப்புக்களை மஞ்சூரியாவிலிருந்து வாப வாங்கிக்கொள்ளாமல் இருந்த தோடு மட்டுமல்ல, புதிய துருப்புக்களை அங்குக் கொண்டுவந்து சேகரித்தது. மஞ்சூரியாவைத் தன் செல்வாக்குப் பிரதேச மாக்கிக்கொள் வதற்கான நிபந்தனை களைக் கோரி, அந்தக் கோரிக்கைக்குச் சீனா இணங்குகிறவரையில் மஞ்சூரியாவிலிருந்து தான் விலகிக்கொள்ள முடியாதென்றும் கூறியது. ருஷ்யாவின் இந்த ஆக்கிரமிப்பு எண்ணம், பொதுவாக ஐரோப்பிய வல்லரசுகளுக்கும், சிறப்பாக ஜப்பானுக்கும் சந்தேகத்தை உண்டுபண்ணியது. ருஷ்யாவின் பிடிவாதத்தை அமெரிக்கா, ஜப்பான் முதலிய நாடுகள் கண்டித்தன.
1894-95-ஆம் வருஷத்துச் சீன-ஜப்பானிய யுத்தத்திற்குப் பிறகு, மஞ்சூரியா விஷயமாகவும் கொரியா விஷயமாகவும் ருஷ்யாவுடன் ஒரு சமரஸத்திற்கு வர ஜப்பான் பல தடவைகளில், குறிப்பாக 1896, 1898, 1901-ஆம் வருஷங்களில் முயன்றது. ஜப்பான் கேட்டதெல்லாம் என்ன வென்றால், மஞ்சூரியாவை ருஷ்யா சுரண்டுகிற விஷயத்தில் தனக்கு எவ்வித ஆட்சேபமுமில்லை; ஆனால், அதே பிரகாரம் தான் கொரியாவைச் சுரண்டுகிற விஷயத்தில் ருஷ்யா ஆட்சேபிக்கக் கூடாது என்பதுதான். ஆனால் ருஷ்யாவோ, கொரியாவிலும் தனக்குச் சுரண்டுகிற உரிமை சாசுவதமாக இருந்துகொண்டிருக்க வேண்டுமென்ற தோரணையில் பேசியது. ருஷ்யா, இப்படி ஏகாதி பத்தியத் திமிர்கொண்டு பேசுவதையும், பாக்ஸர் ஒப்பந்தத்திற்குப் பிறகுகூட தனது துருப்புக்களை மஞ்சூரியாவிலிருந்து வாப வாங்கிக் கொள்ளாமலிருப்பதையும் பார்த்த ஜப்பான், தற்காப்பு நிமித்தம் ஐரோப்பிய வல்லரசுகளில் ஏதேனும் ஒன்றுடனாவது நெருங்கிய நட்புக்கொள்ள வேண்டுமென்று ஆசைப் பட்டது. இதன் விளைவுதான் 1902-ஆம் வருஷத்து ஆங்கிலோ-ஜப்பானிய ஒப்பந்தம்.1 பிரிட்டனோ ஜப்பானோ முறையே சீனாவிலும் கொரியா விலும் தங் களுடைய உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்வதற்காக வேறொரு வல்லரசுகளுடன் போரிட நேரிட்டால், அப்பொழுது ஒன்றுக்காக மற்றொன்று நடுநிலைமை வகிக்க வேண்டுமென்றும், எந்த வல்லர சுடன் போர் தொடுக்கிறதோ அந்த வல்லரசுடன் சேர்ந்துகொள்ளக் கூடாதென்றும் ஒரு வல்லரசுக்குப் பதில் பல வல்லரசுகள் சேர்ந்து போர் தொடுக்குமானால் அப்பொழுது இந்த இரண்டு ஒப்பந்த நாடுகளும் ஒன்று சேர்ந்துகொள்ள வேண்டுமென்றும் இந்த ஒப்பந்தத்தின் ஷரத்துக்கள் கூறின. ருஷ்யாவினுடைய செல்வாக்கு, மஞ்சூரியா வழியாகச் சீனாவில் பரவிவிடக் கூடாதென் பதற்கு ஒரு முன் ஜாக்கிரதை மாதிரியாகவே, பிரிட்டன், ஜப்பானுடன் சேர்ந்து இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இங்ஙனம் மேனாட்டு வல்லரசுகளின் அநுதாபத்தைச் சம்பாதித்துக் கொண்ட பிறகு மீண்டும் ஜப்பான், ருஷ்யாவுக்கு ஓர் அறிக்கை விடுத்தது. கொரியா, ஜப்பானின் சுரண்டல் பிரதேசமாக இருப்பதை ருஷ்யா அங்கீகரிக்கவேண்டும்; அப்படியே, மஞ்சூரியா, ருஷ்யாவின் சுரண்டல் பிரதேசமாக இருப்பதை ஜப்பான் அங்கீ கரிக்கிறது என்கிற பழைய பாடந்தான் இந்த அறிக்கையில் காணப் பட்டிருந்தது. தனது பெருமிதத்தில் திளைத்திருந்த ருஷ்யா, ஜப்பானு டைய இந்த அறிக்கையைப் புறக்கணித்துவிட்டது. இப்படிப் புறக் கணித்து விடுமென்பதை ஒருவாறு ஊகித்துக் கொண்ட ஜப்பானும், யுத்தத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தது. கடைசியில் 1904-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் இரு நாடுகளுக்கும் யுத்தம் மூண்டது. ஒரு பக்கத்தில் ஏகாதிபத்தியச் சிலம்பவித்தையில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்கிற ருஷ்யா; மற்றொரு பக்கத்தில் மேற்படி வித்தையில் கற்றுக்குட்டியென்று சொல்லத்தகுந்த ஜப்பான்! ஆனால் கற்றுக்குட்டிக்கு வெற்றியும், பயில்வானுக்குத் தோல்வியுமே ஏற் பட்டன! இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. ருஷ்யாவுக்குக் கடற் படையிலும் தரைப்படையிலும் ஏராளமான சேதம் உண்டாயிற்று. கடைசியில் சுமார் ஒன்றரை வருஷ யுத்தத்திற்குப் பிறகு ஜப்பானைத் தன் இஷ்டப்படி ஆட்டுவிக்க வேண்டுமென்று நினைத்த ருஷ்யா அந்த ஜப்பான் சொன்ன நிபந்தனைகளுக்கே உடன்படும்படியாக நேரிட்டது. இரண்டு நாடுகளுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் -இதற்கு போர்ட் மவுத் ஒப்பந்தம்1 என்று பெயர்; 5-9-1905-ல் நிறைவேற்றப்பட்டது. -முக்கியஷரத்துக்கள் வருமாறு:-
1. கொரியாவில், அரசியல், ராணுவ, பொருளாதார உரிமைகள் பல ஜப்பானுக்குப் பிரத்தியேகமாக இருக்கின்றன வென்பதை ருஷ்யா அங்கீகரித்துக்கொள்கிறது.
2. லியோடுங் தீபகற்பத்தில் தான் அனுபவித்து வந்த உரிமைகளை ஜப்பானுக்கு மாற்றி விட ருஷ்யா சம்மதிக்கிறது.
3. மஞ்சூரியாவின் தென் பிரதேசத்திலுள்ள ரெயில் வேயும், ஸக்காலின் தீவின்1 தெற்குப் பாகமும் ஜப்பானுக்குச் சேரும்.
4. ருஷ்யாவும் ஜப்பானும் தங்கள் துருப்புக்களை மஞ் சூரியாவிலிருந்து வாப வாங்கிக்கொள்ளச் சம்மதிக்கின்றன.
5. மஞ்சூரியாவில் வர்த்தகம், தொழில் இவைகளின் அபிவிருத்திக்காக, எல்லா நாடுகளுக்கும் பொதுவான நட வடிக்கைகளை சீனா எடுத்துக் கொள்ளுமானால், அதை ருஷ்யாவோ ஜப்பானோ ஆட்சேபிக்கக் கூடாது.
6. மஞ்சூரியாவிலுள்ள ரயில்வேக்களை வியாபாரத் திற்காகவும் வர்த்தகத்திற்காகவும் உபயோகிக்கலாமே தவிர, ராணுவ நோக்கங்களுக்காக உபயோகப்படுத்தக் கூடாது.
ருஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் இந்த யுத்தம் நடைபெற்ற தாயினும் இரண்டு நாட்டெல்லைக்குள்ளும் இது நடைபெற வில்லை; சீன ஆதிக்கத்துக்குட்பட்ட பிரதேசத்திலேயே நடைபெற்றது. ஆனால் சீனா நடுநிலைமை வகித்தது. நடுநிலைமை வகிப்பதைத் தவிர, வேறு வழியில்லை இதற்கு. அவ்வளவு பலவீன மடைந் திருந்தது. ருஷ்ய-ஜப்பானிய யுத்தத்தின் ஒரு முக்கியமான விசேஷம் இது. மற்றொரு விசேஷம் என்னவென்றால், சீன ஆதிக்கத் துக்குட் பட்ட நாடுகளை, அதனுடைய சம்மதமோ, மறைமுகமான ஆதரவோ பெறாமலேயே ருஷ்யாவும் ஜப்பானும் செல்வாக்குப் பிரதேசங் களாகப் பங்கு போட்டுக் கொண்டதுதான். இந்த யுத்தத்திற்குப் பிறகு ஜப்பானுக்கு, ஐரோப்பிய வல்லரசுகளுக்குச் சமதையான ஓர் அந்தது கிடைத்தது. ஐரோப்பிய வல்லரசுகளும் ஜப்பானோடு தோழமை பூண்டு சீனாவைச் சுரண்டுவதில் முனைந்து நின்றன.
ருஷ்யாவுடன் போர்செய்து வெற்றிகொண்ட பிறகு 1905-ஆம் வருஷம் முதல் 1914-ஆம் வருஷத்து முதல் உலக மகாயுத்தம் வரையில் ஜப்பானின் ஏகாதிபத்திய விதரிப்புச் சரித்திரத்தை இந்த அத்தியாயத் திலேயே சுருக்கமாகக் கூறிவிடுவோம். ஏனென்றால் பின்னாடி பல சந்தர்ப்பங்களில் சீனா விஷயத்தில் ஜப்பான் எப்படி நடந்து கொண்ட தென்பதை அறிந்து கொள்வதற்கு, இந்தச் சுமார் பத்து வருஷ காலத்து விதரிப்புச் சரித்திரம் ஒரு முகவுரை போன்றிருக்கிறது.
ருஷ்ய-ஜப்பானிய யுத்தத்திற்குப் பிறகு, ஜப்பானுக்கும், ஐரோப்பிய வல்லரசுகளுக்கும் புது மாதிரியான சம்பந்தங்கள் பல ஏற்பட்டன இந்தச் சம்பந்தங்கள் சீனாவை முன்னிட்டுத்தான்! அதுதான் வேடிக்கை! தங்கள் தங்கள் செல்வாக்குப் பிரதேசங் களுக்கு அடுத்தாற்போலுள்ள சீனப்பிரதேசங்களில் அமைதி குலையாமல் பாதுகாத்துக் கொள்ளும் விஷயத்தில் பரபர உதவி செய்துகொள்ள வேண்டுமென்ற ஷரத்தை முக்கிய அடிப்படை யாகக் கொண்டு ஜப்பானும் பிரிட்டனும், ஜப்பானும் பிரான்ஸூம், முறையே புதிய ஒப்பந்தங்கள் செய்துகொண்டன. இவை தவிர, ருஷ்யாவும் ஜப்பானும், சீனாவுடன் தாங்கள் செய்துகொண்டி ருக்கிற ஒப்பந்தங்களுக்கு எவ்வித ஊறும் நேராவண்ணம் பகிரங்க மாகவும் ரகசியமாகவும் பல ஒப்பந்தங்கள் செய்து கொண்டன. அதிக பகைமை, நெருங்கிய நட்பை உண்டு பண்ணியது. எல்லாம் சீனாவைச் சுரண்டுவதற்குத்தான்! கொரியாவையும், மஞ்சூரி யாவையும், மங்கோலியாவையும்1 தங்கள் தங்கள் செல்வாக்குப் பிரதேசங்களாக திரப்படுத்திக் கொள்ளவேண்டுமென்றும், இதற்கு விரோதமாக வேறு வல்லரசு ஏதேனும் நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளுமானால், அப்பொழுது தங்கள் தங்கள் உரிமை களைப் பாதுகாத்துக் கொள்ள, தாங்கள் இருவரும் ஒன்று சேர்ந்து போராடவேண்டு மென்றும் ருஷ்யாவும் ஜப்பானும் பலவிதமான ரகசிய ஒப்பந்தங்கள் செய்து கொண்டன. 1907-ஆம் வருஷத்தி லிருந்து 1916-ஆம் வருஷம் ஜூலை மாதம் வரை, இந்த மாதிரியான பல ரகசிய ஒப்பந்தங்களின் மூலமாகவே ருஷ்யாவும் ஜப்பானும் தங்கள் சிநேகத்தை வளர்த்து வந்தன.
மேனாட்டு வல்லரசுகளுக்குச் சமதையான அந்ததும் அவைகளின் ஆதரவும் தனக்கு இருக்கிறதென்ற தைரியம் வந்து விட்டது ஜப்பானுக்கு. இதற்குப்பிறகு கொரியாவை மெது மெது வாகத் தன்னுடைய சுவாதீனத்திற்குக் கொண்டுவந்து விட்டது. ருஷ்யாவோடு யுத்தம் முடிந்ததும், 1905-ஆம் வருஷம், கொரியாவின் அந்நிய நாட்டு விவகாரங் களை, ஜப்பான், தானே நேரில் ஏற்றுக் கொண்டு இதற்காக ஒரு தனி அதிகாரியை கொரியாவில் நிரந்திர மாக நியமித்தது. இந்த அதிகாரியே, இரண்டு வருஷங்கழித்து, கொரியாவின் சர்வாதிகாரி யானான். இந்தச் சர்வாதிகாரப் பதவியை வகித்துவந்த ஈட்டோ என்பவன் 1909-ஆம் வருஷம் கொலை செய்யப்பட்டுவிட்டான். இந்தக் காலத்தில் கொரியாவில் அந்நிய ஆதிக்கத்துக்கு விரோதமான கிளர்ச்சிகள் வலுத்திருந்தன. இவை களை அடக்குவதற்காக ஜப்பானியர் கையாண்ட முறைகளோ, ஏகாதி பத்தியவாதிகள் சர்வசாதாரணமாக அனுஷ்டிக்கிற முறைகளுக்குச் சிறிதுகூடக் குறைந்தனவாயில்லை. கொரியர்களுக்குத் தேசீய உணர்ச்சி இல்லாமற் செய்ய என்னென்ன செய்யலாமோ அவை யெல்லாம்செய்யப்பட்டனவென்று சுருக்கமாகச் சொல்லிவிடலாம். கடைசியில் மேற்படி ஈட்டோ கொலை செய்யப்பட்டதையே காரணமாக வைத்துக்கொண்டு 1910-ஆம் வருஷம் ஆகட் மாதம் 29-ஆம் தேதி, கொரியா, ஜப்பானிய ஏகாதி பத்தியத்தோடு சேர்த்துக் கொள்ளப்பட்டு விட்டது. கொரியாவின் தனித்துவத்திற்கு முற்றுப் புள்ளி இடப் பெற்றுவிட்டது.
கொரியாவில் இங்ஙனம் தன்னை ஊன்றிக் கொண்டுவிட்ட ஜப்பான், பிறகு மஞ்சூரியா விஷயத்தில் சிரத்தை காட்ட ஆரம்பித்தது. புதிய புதிய ரெயில்வேக்கள் போட சீனாவிடமிருந்து சலுகைகள் பெற்றுக் கொண்டது. தன்னுடைய மூலதனத்தைக் கொண்டுவந்து போட ஏதேனும் ஒரு காரணம் வேண்டுமல்லவா? இதைப் பார்த்து, பிரிட்டன், பிரான், ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய மேனாட்டு வல்லரசுகள், மஞ்சூரியாவில் தொழில் அபிவிருத்தியும் வியாபார அபிவிருத்தியும் செய்ய வேண்டியது அவசியமென்று சீனாவைத் தூண்டி, அதற்காகத் தாங்கள் நால்வரும் சேர்ந்து கடன் கொடுப்ப தாகக் கூறின. தாங்களும் இந்தக் கடன் கொடுத்து உதவுகிற தொண்டிலே ஏன் சேரக்கூடாதென்று ருஷ்யாவும் ஜப்பானும் கேட்டுக்கொண்டு, அப்படியே-சீனாவில் முடியரசின் வீழ்ச்சிக்குப் பிறகு-மேற்படி நான்கு வல்லரசுகளுடனும் சேர்ந்து கொண்டும் கடன் கொடுத்து உதவின. இப்படி வலிய உதவி பெறுகிற துர்ப்பாக்கிய நிலைமை பத்தொன்பதாவது நூற்றாண்டின் இடைக் காலத்திலிருந்தே சீனாவுக்கு இருந்து வந்தது.
குடியரசின் உதயம்
ருஷ்ய-ஜப்பானிய யுத்தத்தில், ஜப்பான் வெற்றி பெற்றது சீன சமுதாயத்தில் ஒரு பெரிய அதிர்ச்சியை உண்டுபண்ணியது. நேற்றுத் தோன்றிய ஜப்பான், ஒரு பெரிய ஐரோப்பிய வல்லரசாகிய ருஷ்யாவை வெகு சுலபமாகத் தோற்கடித்துவிட்டதென்று சொன்னால் அதற்குக் காரணம் என்னவென்று சீனர்கள் யோசிக்கத் தொடங்கினார்கள். சிறப்பாக மேனாடுகளுக்குச் சென்று திரும்பிய இளைஞர்கள் மத்தியில் இந்த யோசனை வலுத்தது. முணு முணுக்கவும் ஆரம்பித்தார்கள். மகா சாமர்த்தியசாலியான ரீஜெண்ட் சக்ரவர்த்தினி இதனையறிந்து, சில சீர்திருத்தங்களை வழங்க முன் வந்தான். பாக்ஸர் ஒப்பந்தத்தில் எப்பொழுது சீன அரசாங்கப் பிரதிநிதிகள் கையெழுத்திடும்படியாக நேரிட்டதோ அப்பொழுதே மஞ்சூ அரசபீடத்தின் ஆணிவேர் அறுந்துவிட்ட தென்பதை இவள் தெரிந்துகொண்டிருந்தாள். ஆயினும் கடைசி பிரயத்தனமாக, சில சீர்திருத்தங்களைக் கொண்டு அந்தப் பீடத்திற்கு முட்டுக்கொடுத்து அதனைக் காப்பாற்றப் பார்த்தாள். பழமையான தனது நாட்டின் மீது புதுமையான எண்ணங்கள் படிந்து வருவதை தான் பெரிதும் வரவேற்பதாகப் பிரகடனப்படுத்தினாள். மேனாட்டு முறையில் கல்வி போதிக்கும் கலாசாலைகளை நிறுவச் செய்தாள். ஜனங்களுக்கு அரசியலில் பங்கு இருக்க வேண்டுமென்று சொல்லி, மாகாண சட்டசபை களென்ன, சர்வ சீனாவுக்கும் பொதுவான மத்திய சட்டசபை என்ன முதலிய மேனாட்டு அரசியல் சம்பிரதாயங் களைக் கொண்டு புகுத்தினாள். ஆனால் ஜனங்களுக்குத் தீடீரென்று அரசியல் ஞானம் உதயமாகிவிடாதல்லவா? இதற்காக, படிப்படியாக அவர்களுக்கு அரசியலறிவை ஊட்ட வேண்டுமென்று ஒன்பது வருஷ திட்டமொன்று வகுத்தாள். ஆயிரக்கணக்கான வருஷங்களாக அரசியல் கடலிலேயே திளைத்துக் கொண்டிருக்கிற சீனர்களுக்கு, அந்நிய ஜாதியைச் சேர்ந்த ஒரு திரீ-அவள் ரீஜெண்ட் சக்ரவர்த்தினியாயி ருந்தாலென்ன? - அரசியல் பாலைப் புகட்ட முன்வந்தாளென்று சொன்னால், அஃது, அதிகார சக்தியின் துணிச்சலே தவிர வேறொன்று மில்லை. அதிகார சக்தியானது, தன்னை ஊர்ஜிதம் செய்து கொள்ளும் பொருட்டு, எப்பொழுதுமே தன்னுடைய ஆதிக்கத்திற் குட்பட்டிருக் கிறவர்களை ஞான சூனியர்களாகவே வைத்துப் பார்க்கிறது. இந்த அரசியல் திருத்தங்களோடு, சில சமுதாயச் சீர்திருத்தங் களையும் செய்யமுன் வந்தாள் த்ஸு ஹ்ஸி. ஆளுஞ்சாதியினராகிய மஞ்சூக் களுக்கும் ஆளப்படுஞ் சாதியினராகிய சீனர்களுக்கும் விவாக சம்பந்தங்கள் கூடாவென்று முன்னர் தடுக்கப்பட்டிருந்தது. இந்தத் தடையை நீக்கி, இதன் மூலமாகச் சீனர்களின் நல்லெண்ணத்தைச் சம்பாதித்துக் கொள்ளப் பார்த்தாள். இந்த மாதிரியான சில சில்லரைச் சீர்திருத்தங்களைக் கொடுத்துவிட்டால், ஜனங்கள் சாந்தமடைந்து போவார் களென்பது இவள் கருத்து. ஆனால் பாவம், இதில் ஏமாற்ற மடைந்தாள். அதோடுகூட, இவளே இந்தச் சீர்திருத்தங்கள் அனுஷ்டானத் திற்குக் கொண்டுவரப்படுகிற தருணத்தில் 1908-ஆம் வருஷம் நவம்பர் மாதம் இறந்து விட்டாள். இவள் இறப்பதற்குமுந்திய தினமே, பெயரளவுக்குச் சக்ரவர்த்தியா யிருந்த குவாங்ஷூவும் இறந்து விட்டான்.1
இவர்களுக்குப் பின்னால் அரசபீடத்திற்குப் பாதுகாவ லர்களா யமைந்தவர்கள் பலவீனர்களாகவும், கால வேகத்தோடு ஒட்டிப்போக முடியாதவர்களாகவும் இருந்தார்கள். இவர்கள், பழைய மாதிரி சீர்திருத்த அறிக்கைகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளி யிட்டு வந்தார்களாயினும், அப்படி வெளியிடுவதோடு தங்கள் காரியம் முடிந்துவிட்டதாகக் கருதினார்கள். தேசத்தின் சக்திகளை ஒருமுகப் படுத்தி ஒழுங்காகக் கொண்டு செலுத்தக்கூடிய தலைவன் மத்திய அரசாங்கத்தில் யாரு மில்லை. வலுவுள்ள ராஜ தந்திரியென்று கருதப் பட்ட யுவான் ஷிகாயும், அரசபீடத்தின் பிரதிநிதிக்கும் அவனுக்கும் ஏற்பட்ட பிணக்குக் காரணமாக அரசியல் வாழ்வினின்று ஒதுங்கியி ருந்தான். பொதுவாக ரீஜெண்ட் சக்ரவர்த்தினி இறந்த பிறகு, பீக்கிங் அரசாங்கம் நிருவாகத்தில் ஒரு வித குழப்ப நிலைமையே இருந்து வந்தது. இது தேசத்திலும் பிரதிபலிக்கு மல்லவா?
மஞ்சூ அரச வமிசத்தினர், ஒரு சிலரைத் தவிர்த்து, பெரும்பாலும் பலாத்காரத்தின் துணைகொண்டே ஆட்சி முறையை நடத்தி வந்தார்கள். பலாத்காரம் பலாத்காரத்தைத் தூண்டி விடுமென்பது ஒருபுறமிருக்க, அந்த பலாத்கார சக்தி ஓங்கி நிற்கிற வரையில் தான், அதற்கு ஜனங்கள் அடங்கியிருப்பார்கள். அது தாழ்ந்துவிடுகிறபோது, ஜன சக்தியின் கை ஓங்கி விடுவது சரித்திர உண்மையல்லவா? இருப தாவது நூற்றாண்டுத் தொடக்கத்திலிருந்து, சிறப்பாக பாக்ஸர் ஒப் பந்தத்திற்குப் பிறகு, மஞ்சூ அரசாங்கம் கலையிழந்த சந்திரன் போலாகிவிட்டதை ஜனங்கள் நன்கு தெரிந்து கொண்டு விட்டார்கள். அரசாங்கத்தின் மீது ஓர் அலட்சிய புத்தி ஏற்பட்டுவிட்டது.
மஞ்சூ வமிசத்தினரின் கடைசி தலைமுறையினருக்குப் பலாத்கார சக்தியின் துணைக்கொண்டு ஆளமுடியாமற் போன போதிலும், ஜனங்களுடைய அன்பைச் சம்பாதித்துக் கொண்டு ஆளவும் தெரிய வில்லை. ஆளுஞ்சாதியினராகிய மஞ்சூக்களை ஒரு விதமாகவும், ஆளப் படுஞ் சாதியினராகிய சீனர்களை வேறு விதமாகவும் நடத்தி வந்தனர். அரசாங்க உத்தியோகதர்களை நிய மிக்கிற விஷயத்திலாகட்டும், சட்டசபைக்கு அங்கத்தினர்களைத் தெரிந் தெடுக்கிற விஷயத்திலாகட்டும் பாரபட்சமாகவே நடந்து வந்தனர். உதாரணமாக, புதிய சீர்திருத்தத்தின் பெயரால் 1911-ஆம் வருஷம் பன்னிருவர் அடங்கிய ஒரு மந்திரி சபை அமைந்தது. அதில் எண்மர் மஞ்சூக்கள்; நால்வரே சீனர். எந்த நாட்டில் ஆளுஞ்சாதியினர், ஆளப்படுஞ் சாதியினரைத் தங்களுக்குச் சமதையாக நடத்தாமல் ஏற்றத் தாழ்வாக நடத்துகிறார்களோ, அந்த நாட்டில் ஆளுஞ் சாதியினர் மீது எப்பொழுதும் அதிருப்தி இருந்து கொண்டிருக்கும்.
மற்றும் ஓர் அரசாங்கம், எப்பொழுது பலவீனப்பட்டு விடு கிறதோ அப்பொழுது அதன் உத்தியோகதர்களும் ஒழுக்கவீனர் களாகிவிடு கிறார்கள்; ஜனங்களைச் சுரண்ட முற்படுகிறார்கள். ஜனங்கள், இந்தச் சுரண்டுதலுக்கு மௌனமாக உட்படுகிறார் களாயினும், அவர்களுடைய உள்ளத்தில் அரசாங்கத்தின் மீது ஒருவித துவேஷம் உண்டாகி வளர்கிறது. இருபதாவது நூற்றாண்டின் ஆரம்ப தசையில் சீனா, இந்த திதியிலேதான் இருந்தது.
தைப்பிங் கலக காலத்திலிருந்தே சீனாவில், மஞ்சூ ஆட்சிக்கு விரோதமாகப் பல ரகசியச் சங்கங்கள் தோன்றி வேலைசெய்து வந்தன என்பது நேயர்கள் அறிந்த விஷயம். இவை பெரும்பாலும் உள் நாட்டிலேயே இருந்து வேலை செய்துவந்தன. ஆனால் பத் தொன்பதாவது நூற்றாண்டின் பிற்பகுதியில் சீனாவிலிருந்து இளைஞர் பலர், அந்நிய நாடுகளுக்குக் கல்வி பயிலச் சென்ற பிறகு, இந்த ரகசிய தாபனங்கள் வெளிநாடுகளிலும் பரவின. ஐரோப்பிய வல்லரசுகளின் பிடிப்பினின்றும், அந்த வல்லரசுகளின் கைக் கருவி யாயிருக்கும் மஞ்சூ ஆட்சியினின்றும் சீனாவை விடுதலை செய்ய வேண்டுமென்ற உணர்ச்சி வெளிநாடுகளில் பரவியிருந்த சீன இளைஞர்களின் மனத்தில் நன்றாகப் பதிந்தது. இந்த உணர்ச்சியை ஆதாரமாக வைத்துக் கொண்டுதான் ஸன் யாட் ஸென், உலகத்தின் பல பாகங்களிலும் சுற்றித் திரித்துவிட்டுக் கடைசியில் 1905-ஆம் வருஷம் டோக்கியோ நகரத்தில் டுங் மெங் ஹுயி என்ற ஒரு சங்கத்தை தாபித்தான். அப்பொழுது இவனுக்குப் பக்கபலமாக நின்றவர்கள் மொத்தம் பதினைந்துபேர்; தாய் நாட்டின் விடுதலைக்கு எல்லாத் தியாகங்களையும் செய்யத் சித்தமானவர்கள். இவர்கள் தான் சீனப்புரட்சிக்கு வித்திட்டவர்கள்.
மேற்படி டுங் மெங் ஹுயி சங்கத்தின் கிளை தாபனங்கள், சீனாவின் பலபாகங்களிலும் ஏற்பட்டன. இந்த தாபனங்களை வலுப்படுத்தியவர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்து திரும்பிவந்த இளைஞர்கள்.1 இவர்களுக்கு ஜனங்களுடைய அதிருப்தி உணர்ச்சியை வளர்க்கக்கூடிய சக்தி இருந்தது. இவர்களுடைய உபதேசங்களை அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடிய மனோ நிலையில் ஜனங்களும் இருந்தார்கள் அப்பொழுது, 1908-ஆம் வருஷத்திற்குப் பிறகு. ஏன் என்று கேட்கிறீர்களா?
(அ) 1910-11-ஆம் வருஷத்தில் மத்திய சீனாவில், யாங்க்ட்ஸீ நதியில் ஒருபெரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதன் பயனாகப் பயிர்கள் அழிந்தன. லட்சக்கணக்கான பேர் வீடுவாசலிழந்து தவிக்க லானார்கள். பெரிய பஞ்சம் ஏற்பட்டது. சுமார் முப்பது லட்சம் ஜனங்கள் இந்தப் பஞ்சத்திற்கு இரையானார்கள். உயிரிழந்தவர்கள் போக உயிர் பிழைத்தவர்கள் போதிய ஆகாரம் கிடைக்காமலும் வேலையில்லாமலும் திண்டாடினார்கள். இருக்கப் பட்ட நிலையி லிருந்து வேறு நிலைக்குச் செல்ல எதுவும் செய்வதற்கு இவர்கள் தயாராயிருந்தார்கள்.
(ஆ) பஞ்சத்தினால் இப்படி ஏராளமான ஜனங்கள் மாண்டு போன போதிலுங்கூட, மொத்தத்தில் சீனாவின் ஜனத் தொகை அதிகப்பட்டே வந்தது.2 இந்த ஜனப் பெருக்கத்திற்குத் தகுந்தபடி உணவுப்பொருள்களின் உற்பத்தி அதிகப்படவில்லை. நியாயமான விலை கொடுத்து ஆகாரப் பொருள்களை வாங்குவது ஜனங்களுக்கு மிகவும் கடினமாகி விட்டது. இதனால், தங்கள் கஷ்டங்களை மறப் பதற்கு என்ன வழி என்று அவர்கள் மனம் தேடிக்கொண்டிருந்தது.
(இ) வெள்ளப்பெருக்கு, உணவுப்பொருள் பஞ்சம், இவைகளுக்கு மேலாக, அரசாங்கத்தின் வரிவிகிதமும் வருஷத்திற்கு வருஷம் ஏறிக்கொண்டே வந்தது. ஷிமோனோ ஸெகி ஒப்பந்தம், பாக்ஸர் ஒப்பந்தம் முதலியவைகளில் கண்ட நஷ்ட ஈட்டுத்தொகை, புதிய சீர்திருத்தங்களை அனுஷ்டானத்திற்குக் கொண்டு வருவ தற்கான செலவு வகைகள் முதலியவைகளை அரசாங்கத்தார் எப்படிச் சமாளிப்பார்? புதிய வரிகளை விதித்துத்தானே சமாளிக்க வேண்டும்? அரசாங்கத்தின் மீது ஜனங்களுக்கு அதிருப்தி ஏற் பட்டதில் என்ன ஆச்சரியம்?
(ஈ) படிப்படியாக ஜனங்களுக்கு அரசியல் அறிவு புகட்டுவ தென்கிற மேலே சொன்ன ஒன்பது வருஷத்து அரசியல் திட்டப் பிரகாரம், 1909-ஆம் வருஷம் மாகாணங்கள் தோறும் சட்டசபைகள் ஏற்பட்டன. இவைகளுக்கு மத்திய அரசாங்கத்தின் -அதாவது பீக்கிங் அரசாங்கத்தின் –நடவடிக்கை களில் தலையிடுவதற்கோ, மாகாண அரசாங்கத்தின் நிருவாகத்தை நடத்து விப்பதற்கோ அதிகாரமில்லை யானாலும், இவை சிறந்த பேச்சு மண்டபங்களாகத் திகழ்ந்தன. இவற்றின் அங்கத்தினர்கள் தங்களுடைய பேச்சுரிமையைத் தாராள மாக உபயோகித்து, அரசாங்கத்தைப் பலபடக் கண்டித்தார்கள்; அரசாங்கத்தின்மீது ஜனங்கள் கொண்டுள்ள அருவருப்பை நன்கு எடுத்துக் காட்டினார்கள். இவர்களுடைய செல்வாக்கு நாளுக்குநாள் வளர்ந்தது. மாகாண நிருவாகம் முழுவதும் கூடிய சீக்கிரத்தில் இவர்கள் சுவாதீனத்திற்கு வந்து விடக்கூடிய நிலைமை ஏற்பட்டது. ஜனங் களுடைய மனத்தைப் புரட்சிப் பாதையிலே செல்லவிடக் கூடா தென்பதற் காக அரசாங்கத்தார் இந்த மாகாணச் சட்டசபைகளை ஏற்படுத்தினார்கள். ஆனால் இவை, புரட்சியின் வருகையைத் துரிதப்படுத்தின!
(உ) ஜனங்களை அரசியல் முன்னேற்றத்திற்குப் பக்குவப் படுத்திவிடுவதோடு, தேசத்தின் பொருளாதாரத்தையும் அபிவிருத்தி செய்யவேண்டுமென்ற நோக்கத்துடன் அரசாங்கத்தார் சில புதிய திட்டங்களை அனுஷ்டானத்திற்குக் கொண்டுவரத் தீர்மானித்தனர். இவை களில் ஒன்று, பல மாகாணங்களையும் இணைக்கக்கூடிய மாதிரி புதிய ரெயில் பாதைகளைஅரசாங்கத்தாரே போட வேண்டு மென்பது. போக்கு வரத்து வசதிகள் அதிகமானால் வியாபாரம் செழிக்குமல்லவா? பாக்ஸர் கலகத்திற்கு முந்திவரை, புதிய ரெயில் கம்பெனிகளின் தாபிதமும் அவைகளின் நிருவாகமும் ஏறக்குறைய அந்நியர் வசத்திலேயே இருந்தன. தேசமுழுவதிலும் அந்நியர் களுடைய செல்வாக்கு தீவிரமாகப் பரவுவதற்கு இவை பெரிய துணைக் கருவிகளாயிருந்தன. இங்ஙனம் அந்நியர்களின் செல்வாக்கும் ஆதிக்கமும் வளர்ந்து வந்ததே, பாக்ஸர் கலகத்திற்கு முக்கிய காரண மாயிருந்தது. இந்தக் கலகத்திற்குப் பிறகு, இனிப் புதிதாகப் போடுகிற ரெயில் பாதைகள் யாவும் தங்களுடைய சுவாதீனத்திலேயே இருக்க வேண்டுமென்று (மஞ்சூ) அரசாங் கத்தினர் தீர்மானித்தனர். இந்தத் தீர்மானத்தின்படி எந்தெந்த மாகாணங்களில் புதிய ரெயில் பாதைகள் போடப்படுகின்றனவோ அந்தந்த மாகாண வாசிகளிடமிருந்தே கடனாகப் பணம் பெற்று வேலையைத் தொடங்கினர். ஆங்காங்கு வேலைகள் நடைபெற்றுக் கொண்டுவந்தன. இந்தத் தருணத்தில் அந்நிய நாட்டு முதலாளிகள், மேற்படி ரெயில் பாதைகளைத் தாங்கள் போட்டுக் கொடுப்பதாகவும், இதற்கான பணத்தைச் செலவழிக்கத் தாங்கள் தயாராயிருப்பதாகவும், எனவே புதிய ரெயில் பாதைகளைப் போடும் உரிமைகளைத் தங்களுக்கே கொடுத்துவிட வேண்டுமென்றும் பீக்கிங் அரசாங்கத்தை நெருக்கினார்கள். பீக்கிங் அரசாங்கமோ, மாகாண முதலாளிகள் கொடுத்திருக்கிற கடன் தொகையையும் அதுகாரணமாக அவர்களுக்கிருக்கிற உரிமைகளையும் அலட்சியப் படுத்திவிட்டு, பிரிட்டன், பிரான், ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நான்கு வல்லரசுகளின் முதலாளிகளடங்கிய ஒரு கூட்டு தாபனத்திற்கு ரெயில் பாதைகள் சம்பந்தமான உரிமை களைக் கொடுத்துவிட்டது. தங்களுடைய உரிமைகளை இப்படி அந்நியர்களுக்கு விற்று விட்டதைக் கண்ட மாகாண முதலாளிகள் ஆத்திரங்கொண்டார்கள்; கிளர்ச்சி செய்தார்கள். மேற்குப் பக்கத்திலுள்ள ஷெக்குவான்1 மாகாணத்தில் இந்தக் கிளர்ச்சி வலுத்தது, ஒத்துழையா இயக்கமாகப் பரிணமித்தது. கடைகள் மூடப்பட்டன; தொழிலாளர்கள் வேலை நிறுத்தஞ் செய்தார்கள்; மாணாக்கர்கள் பள்ளிக்கூடங்களுக்குச் செல்லாமல் நின்று விட்டார்கள்; விவசாயிகள் வரி கொடுக்கமாட்டோமென்று சொன்னார்கள். இதைக் கண்டு பீக்கிங் அரசாங்கம் சும்மாயிருக் குமா? அடக்கு முறையை உபயோகித்து இயக்கத்தை நசுக்கிவிட்டது. ஆனால் ஷெக்குவான் மாகாணத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவம் மற்ற மாகாணங்களிலும் உடனே எதிரொலி கொடுத்தது.
(ஊ) தேசத்தின் பல பாகங்களிலும் மஞ்சூ அரசாங்கத்தின்மீது பொதுவாக ஏற்பட்டிருந்த அதிருப்தியானது ராணுவத்திலும் பரவியது. புதிய சீர்திருத்தத்தின் கீழ் ஏற்படுத்தப்பெற்ற சீனப் படைகளை அரசாங்கம் தனது பாதுகாப்புக்கென்று நம்ப முடியவில்லை. மஞ்சூ ஜாதியினர் மட்டும் அடங்கிய படைகளே ராஜ்யத்தின் பாதுகாப்புச் சேனையாக நின்றது. இதைமட்டும் நம்பிக்கொண்டு ஓர் அரசாங்கம் எவ்வளவு காலம்தான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்க முடியும்?
டுங் மெங் ஹுயி சங்கத்தைச் சேர்ந்த-அதாவது ஸன் யாட் ஸென்னைப் பின்பற்றிய - புரட்சி இயக்கம் வளம் பெறுவதற்கு இந்தச் சம்பவங்கள் சிறந்த உரங்களாயிருந்தன. இந்தக் காலத்தில் ஸன் யாட் ஸென் வெளிநாடுகளில் சுற்றுப் பிரயாணம் செய்து, புரட்சிக்கு நிதி திரட்டியும் ஆதரவு தேடியும் வந்தான். இவனுடைய தூண்டு தலினாலும் மறைமுகமான தலைமையிலும் சீனாவில் மஞ்சூ ஆதிக்கத்துக்கு விரோதமாக அவ்வப்பொழுது புரட்சிகள் நடை பெற்றுத் தோல்வி யடைந்தனவென்பதை ஏற்கனவே கூறியுள்ளோம். தோல்வியினால் சோர்வு கொள்வது புரட்சிவாதிகளின் சுபாவமல்ல. முடியாட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த புரட்சி நடைபெறுவதற்குச் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர்கூட, - சரியான தேதியைச் சொல்லவேண்டு மானால் 1911-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் இருபத் தொன்பதாந் தேதி-ஸன் யாட்ஸென் கோஷ்டியினர், காண்ட்டன் நகரத்தில் ஒரு புரட்சியை நடத்தி எழுபத்திரண்டு இளைஞர்களைப் பலிகொடுத்தனர். இவர்களுடைய பிரேத அடக்க தலம், இப் பொழுதுகூட சீனமக்களுக்கு யாத்திரை தலமாக விளங்குகிறது. இப்படி எழுபத்திரண்டு பேரை பலிகொடுத்து விட்டோமே என்று அவர்கள் தங்கள் முயற்சியில் சிறிதேனும் தளர்ச்சி காட்டினார்களா? இல்லவே இல்லை. அதி சீக்கிரத்தில் மற்றொரு புரட்சிக்குத் தயாரானார்கள்.
இப்படி ஊக்கத்தோடு வேலை செய்துவந்தபோதிலும் இவர்கள் ஒரு காரியக் கிரமத்தை வகுத்துக் கொள்ளவில்லை. ருஷ்யப் புரட்சி வாதி களைப்போல அல்லது ஐரிஷ் புரட்சிவாதிகளைப் போல ஒரு நாளைக் குறிப்பிட்டு, அந்த நாளில் எல்லா இடங்களிலும் புரட்சியைத் தொடங்க வேண்டுமென்கிற திட்டங்களையும் ஏற்படுத்திக் கொள்ள வில்லை. அகமாத்தாக ஏற்பட்ட ஒரு சம்பவம் இவர்களைப் புரட்சியிலே இழுத்து விட்டுவிட்டது. அதற்குப் பிறகே இவர்கள் புரட்சி சக்திகளையெல்லாம் ஒன்று திரட்டினர்; ஒழுங்குபடுத்தினர்.
மற்றும், எந்தத் துறைமுகப் பிரதேசங்கள்-அதாவது அந்நிய நாட்டார் உரிமையோடு வசிப்பதற்கென்று தனித்தனியாக அமைத்துக்கொண்ட கன்ஸெஷன்கள்- சீன சமுதாயத்தை அழிக்கக் கூடிய சக்திகளுக் கெல்லாம் இடங் கொடுத்தனவோ, அந்தத் துறைமுகப் பிரதேசங்களே, மஞ்சூ அரசாங்கத்தை அழிப்பதற்காக ஏற்பட்ட புரட்சி சக்திகளுக்கும் இடங்கொடுத்தன. புரட்சிவாதிகள், அந்நிய நாட்டாருடைய கன்ஸெஷன் பிரதேசங்களில்தான், சீன அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு அகப்படாமல் கூடிய வரையில் தாராளமாக வேலை செய்ய முடிந்தது. இதற்குமுன் தோல்வி யடைந்துபோன புரட்சிகளில் பல, அந்நியர் களுடைய இந்த உரிமை தலங்களிலேயே நடைபெற்றிருக்கின்றன. கடைசிப் புரட்சியும் ஒரு கன்ஸெஷன் பிரதேசத்திலேயே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மத்திய சீனாவில் யாங்க்ட்ஸீ நதிக்கரையின் மீது ஹாங்க்கோ1 என்ற ஒரு பெரிய பட்டினம் உண்டு. இஃது அந்நியர்கள் உரிமையோடு வசிப்பதற்கென்று ஏற்பட்ட ஒப்பந்தத் துறை முகங்களிலே ஒன்று. இங்கு ருஷ்யர்கள் வசிக்கும் கன்ஸெஷன் பகுதியில் ஒரு சிறிய வீடு. 1911-ஆம் வருஷம் அக்டோபர் மாதம் பத்தாந்தேதி. பகல் நேரம். திடீரென்று இந்த வீட்டிலிருந்து ஒரு வெடிகுண்டு சப்தம் கேட்டது. என்னவென்று ஜனங்கள் பரபரப்புடன் விசாரித்துக் கொண்டி ருக்கையில் போலீஸார் வந்து வீட்டைப் பரிசோதனை செய்தனர். ஒரு புரட்சிக் கூட்டத்தின் தலைமைக் காரியாலயம் இது! இங்கே வெடிகுண்டுகள் தயார் செய்யப்பட்டு வந்தன! இந்த இடத்தை மேலும் போலீஸார் பரிசோதித்துப் பார்க்கையில் அவர்கள் கைக்குப் புரட்சி வாதிகளின் விலாசம் முதலியன அடங்கிய சில ததாவேஜுகள் அகப்பட்டன. அவ்வளவுதான். ஓரிரண்டு மணி நேரத்திற்குள் சில புரட்சிவாதிகள் கைது செய்யப்பட்டுத் தலை வாங்கப் பட்டனர். இந்தச் செய்தி, ஆற்றுக்குத் தென்கரையிலுள்ள வூசங்1 நகரத்திற்குப் பரவியது. இது சீனர்கள் வசிக்கும் இடம். இங்கே நகரக் காவலுக்கென்று சுமார் மூவாயிரம் பேரடங்கிய ஒரு சீனப்படை வைக்கப்பட்டிருந்தது. இந்தப் படையினருக்கு மேற்படி செய்தி எட்டியது. இவர்கள் ராணுவத்தைச் சேர்ந்தவர்களா யிருந்தாலும் சீனர்கள்தானே? தவிர, இவர்கள் மத்தியில், ஏற்கனவே புரட்சி எண்ணங்கள் புகுந்திருந்தன. தங்கள் சகோதரர்கள்-தாய்நாட்டுக்கு விடுதலை தேடித்தர வேண்டுமென்ற புனித நோக்கத் துடன் உழைத்துவந்த இளைஞர்கள்-அநியாயமாகக் கொலை செய்யப்பட்டார்களென்று கேள்விப் பட்டதும், இந்தப் படையினர் அப்படியே கலகத்திற்குக் கிளம்பினர். புரட்சி ஆரம்பித்துவிட்டது!
அன்று மாலை எங்குப் பார்த்தாலும் நெருப்பு! துப்பாக்கிச் சப்தம்! துருப்புகளின் நடமாட்டம் ! அரசாங்கத் துருப்புகளே அர சாங்கத்திற்கு விரோதமாகக் கிளம்பிவிட்டன என்று சொன்னால் கேட்கவேண்டுமா ஜனங்களிடத்திலே பரபரப்புக்கு? அரசாங்கக் காரியாலயங்கள், உயர்தர உத்தியோகதர்களின் வாசதலங்கள் முதலியன ஒன்றன்பின்னொன்றாகத் தாக்கப்பட்டன. மாகாண அதிகாரியும், ராணுவத்தின் பிரதம தளகர்த்தனும் உயிர்தப்பினால் போதுமென்று ஓடிவிட்டார்கள். கலகப் படைக்கோ அரசாங்கத் திற்கோ சரியான தலைவனில்லை. பார்த்தார்கள் கலகக்காரர்கள். லீ யுவான் ஹுங்2 என்ற ஒரு முக்கிய ராணுவ அதிகாரியின் வீட்டுக்குச் சென்றார்கள். அப்பொழுது நல்ல நிசி நேரம். பரம சாதுவான அவன் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான். எழுப்பினார்கள் அவனை. தங் களுடைய தலைவனாயிருக்கும்படி கூறினார்கள்! அவனும் வேறு வழியின்றித் தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்டான். கால வேகத்தை அனுசரித்துப் போகிற சாமர்த்தியம் அவனுக்கு இருந்தது. இதனால், முடியரசின் கீழ் எவ்வளவு பக்தி விசுவாசத்துடன் சேவை செய்து வந்தானோ அவ்வளவு பக்தி விசுவாசத்துடன் குடியரசின் கீழும் சேவை செய்ய முன்வந்தான்.
லீ யுவான் ஹுங், தலைமை ஏற்ற சில மணி நேரத்திற்குள் கலகப் படையினை ஒழுங்கு படுத்திக்கொண்டு ஹாங்க்கோ, வூசங், ஹான்யாங் ஆகிய மூன்று நகரங்களிலுமுள்ள3 முக்கியமான இடங் களையெல்லாம் தன் சுவாதீனப்படுத்திக்கொண்டான். சில சில இடங்களில் எதிர்ப்புக்கள் இருந்தன. அவைகளைச் சுலபமாக அடக்கினான். தேசத்தின் நன்மைக் காகவே புரட்சி ஏற்பட்டிருக்கிற தென்பதை ஜனங்கள் உணரும்படி செய்தான்.
வூசங்கில் புரட்சி ஆரம்பித்துவிட்டதென்ற செய்தி காட்டுத்தீ போல் நாலா பக்கங்களிலும் பரவியது. சுமார் ஜம்பது நாட்களுக்குள் பதினான்கு மாகாணங்களில் புரட்சிக்கொடி பறந்தது! மஞ்சூ அரசாங்கத்தின் அதிகாரம் இப்படி மாயமாய் மறைந்துவிடுமென்று ஜனங்கள் எதிர்பார்க்கவில்லை. அந்தந்த மாகாணத்திலுள்ள மஞ்சூ அதிகாரிகள் தங்கள் பொறுப்பைச் சிறிது கூட உணராமல் புரட்சியின் வருகையைக் கண்டு ஓடிவிட்டார்கள்; ஓடாதவர்கள் விரட்டப் பட்டார்கள். ஆங்காங்குப் புரட்சி அரசாங்கங்கள் அமைந்தன. அரசாங்கத் துருப்புகள் புரட்சித் துருப்புகளாக மாறின. இந்தத் துருப்புகளைக் கொண்டும் பொதுஜனத் தொண்டர் படைகளைக் கொண்டும் மேற்படி புரட்சி அரசாங்கங்கள் பொதுஜன அமைதியைக் காத்து வந்தன. இந்தப் புரட்சிக் காற்று பீக்கிங் நகரத்திலேகூட வீச ஆரம்பித்தது. மஞ்சூ அரசாங்கம் பீதியடைந்து, புரட்சியை ஒடுக்க முற்பட்டது. இது நிற்க.
வூசங்கிலே தொடங்கிய புரட்சியானது பல இடங்களில் பரவியபோதிலும், ஆங்காங்குப் புரட்சி அரசாங்கங்கள் அமைந்த போதிலும், ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமலே விவகாரங்கள் நடைபெற்று வந்தன. வூசங்கிலுள்ளவர்கள், தாங்கள்தான் புரட்சியின் பிரதிநிதிகளென்றும், தாங்களே புரட்சியின் சார்பாகப் பேசத் தகுதி யுடையவர்களென்றும் கூறினார்கள். இப்படியே ஒவ்வொரு மாகாணத் தவரும் உரிமை கொண்டாடினார்கள். சிறப்பாக ஷாங்காயில் புரட்சி செய்தவர்கள், இது விஷயத்தில் சிறிது உரக்கவே தங்கள் உரிமையை வலியுறுத்தினார்கள். இவர்கள் அத்தனை பேரும் காண்ட்டன் வாசிகள்; பரம்பரையாகச் சுதந்திர உணர்ச்சியிலே வளர்ந்தவர்கள். வூசங் வாசிகளிடத்தில் புரட்சியின் நிருவாகத்தை ஒப்படைத்துவிட்டால் எங்கே, நல்ல தருணத்தில் பீக்கிங் அரசாங் கத்துடன் சமரஸத்திற்கு வந்து புரட்சியைச் சீர்குலைத்து விடுவார் களோ என்ற பயம் இவர்களுக்கு இருந்தது. இதை மனத்தில் வைத்துக்கொண்டு இவர்கள், ஷாங்காயில் புரட்சி அரசாங்கத்தை தாபித்ததும், அதன் பெயரால், அந்நிய வல்லரசுகளின் ஆதரவைக் கோரி ஓர் அறிக்கை விடுத்தார்கள்! என்ன வேடிக்கை! உள்ளேயி ருக்கும் வியாதியைப் போக்கிக் கொள்ள, வெளியிலிருந்து பல வியாதிகளை வரவழைத்து உடலுக்குள்ளே திணித்துக் கொள்வது போல இருந்தது இது. இந்த இரண்டு சாராருக்கும் ஏற்பட்ட இந்தப் பிணக்கு வரவர முற்றிக்கொண்டு வந்தது. ஆனால், நல்ல வேளை யாகக் கடைசி சமயத்தில் வூசங் புரட்சிக் கட்சியின் தலைவனாக லீ யுவான் ஹுங் ஷாங்காய் கட்சிக்கு விட்டுக்கொடுத்துவிட்டான். புரட்சியை ஆரம்பித்தவன் லீ யுவான் ஹுங். ஆனால் புரட்சியின் சார்பாகப் பேசும் அதிகாரத்தை மற்றொருவருக்கு விட்டுக் கொடுத்தான். இஃது இவனுடைய சிறந்த தியாக புத்தியையே காட்டுகிறது. இவன் இப்படிச் செய்திராவிட்டால், குடியரசு தாபிக்கப்பட்டதற்குப் பிறகு தொடங்கிய உள்நாட்டுக் கலகம் அதற்கு முந்தியே தொடங்கியிருக்கும்; சீனாவின் சரித்திரப் போக்கும் வேறு விதமாகத் திரும்பியிருக்கும்.
மஞ்சூ அரசாங்கம் பீதியடைந்து, புரட்சியை ஒடுக்க முற்பட்ட தல்லவா? ஒடுக்கி விடுவதென்றால் லேசான காரியமா? சரியான தலைவன் வேண்டாமா? இதற்காக, தன்னோடு பிணங்கிக் கொண்டு ஒதுங்கியிருந்த யுவான் ஷி காயைத் திரும்பவும் வர வழைத்து, ராணுவத்தின் பிரதம சேனாதிபதியாக நியமித்தது. ஏனென்றால், யுவானுடைய பெயர்தான் சீனர்களுக்கு நன்றாகத் தெரிந்த பெயர். ராஜ தந்திரத்திலும் போர்த்திறத்திலும் சிறந்தவன் என்று பெயரெடுத்திருந்தான். எனவே, இவனுடைய தலைமையை உபயோகித்துக் கொண்டு புரட்சியை ஒடுக்கிவிடலாமென்று பார்த்தது. ஆனால், தன்னுடைய ஒடுக்கத்திற்கு இவன் ஒரு முக்கிய காரணனா யிருப்பான் என்று அதற்குத் தெரிய வில்லை.
யுவான் ஷி காய், ஒரு பெரும்படையுடன் பீக்கிங்கிலிருந்து புறப்பட்டான். இவனுடைய கைதேர்ந்த படைக்கு முன்னே, அனுபவ மில்லாத புரட்சிப் படைகள் எம்மாத்திரம்? போர்க் களத்தில் வெறும் உற்சாகம் மட்டும் இருந்தால் போதுமா? ஹாங்க்கோ நகரம் வீழ்ந்தது; எரிக்கப்பட்டுச் சாம்பலாகியது. இதற்குப்பிறகு இன்னும் சில இடங்களிலும் புரட்சிப் படைகள் தோல்வியடைந்தன. ஆனால் யுவான் இந்தத் தோல்விகளைத் தனக்கு வெற்றியாக உபயோகித்துக் கொள்ள வில்லை. வேண்டுமென்றே போரை நீடித்துக் கொண்டு போனான். இதன் மூலமாக மஞ்சூ அரசாங்கத்தையும் புரட்சி வாதிகளையும் தன் விருப்பத்திற் கிணங்கும்படி செய்யலாமென்பது இவன் நோக்கம். இவனுடைய விருப்பம் என்ன? தானே சர்வாதிகாரியாயிருந்து சர்வ சீனாவையும் தன் பிடிக்குள் வைத்துக் கொண்டிருக்க வேண்டு மென்பதுதான்.
இந்தச் சந்தர்ப்பத்தில், புரட்சியிலே ஈடுபட்டிருந்த பல மாகாணப் பிரதிநிதிகளும் லீ யுவான் ஹுங்கின் முயற்சியின் பேரில் நான்கிங் நகரத்தில் ஒன்று கூடித் தங்களை ஒரு தேசீய சபையாக அமைத்துக் கொண்டார்கள். பின்னர் இந்தச் சபையினர், குடியரசு முறையைத் தழுவிய ஒரு தற்காலிக அரசாங்கத்தை தாபித்து அதற்கு ஸன் யாட்ஸென்னைத் தற்காலிக பிரசிடெண்டாகத் தேர்ந்தெடுத்தார்கள். புரட்சியின் தந்தை யல்லவா ஸன் யாட் ஸென்? அப்பொழுது இவன் அமெரிக்காவில் சுற்றுப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். சீனாவில் புரட்சி தொடங்கிவிட்ட தென்று கேள்வியுற்றதும் திரும்பித் தாய்நாட்டிற்கு வந்து சேர்ந்தான். தான் கண்ட கனவு, நனவானது குறித்து மனம் பூரித்தான். தனக்களிக்கப்பட்ட பிரசிடெண்ட் பதவியை, தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு பொறுப்பாக ஏற்றுக்கொண்டான். பீக்கிங்கிலேயுள்ள முடியரசுக்குப் போட்டியாக நான்கிங்கில் 1912-ஆம் வருஷம் ஜனவரி மாதம் முதல் தேதி குடியரசு தாபிக்கப்பட்டது. தற்காலிகமாக ஒரு மந்திரி சபையும் அமைந்தது. குடியரசு ராஜ்யத்தின் அரசியல் திட்டத்தை நிர்ணயிக்கச் சீக்கிரத்தில் அரசியல் நிர்ணய சபை யொன்று கூட்ட வேண்டுமென்று தீர்மானிக்கப் பட்டது.
இந்தச் சந்தர்ப்பத்தில், யுவான் ஷி காயிடமிருந்து ஸன் யாட் ஸென்னுக்கு ஒரு தந்தி வந்தது. அதில், தான் குடியரசு முறையை ஆதரிப்பதாகவும், நான்கிங் அரசாங்கத்தோடு ஒத்துழைக்கத் தயாரென்றும் யுவான் ஷி காய் தெரிவித்திருந்தான். இதற்குத் தகுந்தாற்போல் ஸன் யாட் ஸென்னும், பணபலமும் படைபலமும் அதிகமாக உடைய யுவான் ஷி காய்க்கு பிரசிடெண்ட் பதவியைக் கொடுத்து, அவனைத் தன் கட்சிக்கு இழுத்துக் கொண்டு விட்டால், தேசத்தில் குடியரசுக்கு எதிர்ப்பே இல்லாமற் போகுமென்றும், முடியரசு தானாகவே விழுந்துவிடுமென்றும் எண்ணினான். எனவே, மஞ்சூ ஆட்சியை ஒழிப்பதற்கும் குடியரசு லட்சியத்தை ஏற்றுக் கொள்வதற்கும் யுவான் சம்மதிப்பானாகில், தான் பிரசிடெண்ட் பதவியைத் துறந்து விடுவதாகவும், அந்தப் பதவியை அவனுக்கு அளிக்க ஏற்பாடு செய்வதாகவும் இவன் - ஸன் யாட் ஸென்-பதில் தெரிவித்தான்.
யுவான் ஷி காய் சிறந்த ராஜதந்திரியென்றாலும் அதற்கு மேலாக அதிகார ஆசைப்பட்டவன். அவனுடைய பதவி மோகத்துக்கு முன்னே, லட்சியம், கொள்கை முதலியனவெல்லாம் வலுவிழந்து நின்றன. பிரசிடெண்ட் பதவியை ஏற்றுக் கொண்டால் சர்வ சீனாவுக்கும் தான் சர்வாதிகாரியாக இருந்து ஆண்டு கொண்டி ருக்கலாமென்று கருதினான். முடியரசுக்கு முடிவு கட்டிவிடுவதாகவும், குடியரசு லட்சியத்தை ஏற்றுக் கொள்வதாகவும், ஸன் யாட் ஸென்னுக்கு வாக்குக் கொடுத்தான். உடனே அரச பீடத்தில் பொம்மையாகக் கொலுவீற்றிருந்த பூ யி மன்னனுக்கு ஓர் அறிக்கை விடுத்தான். அதில் சீன மக்கள் குடியரசையே விரும்புகிறார் களென்றும், ஜனங்களுடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்வதே அரசனுடைய கடமையென்றும், ஆதலின் முற்காலத்து மன்னர்களைப் போல் வலிய முடி துறந்துவிடுதல் சாலச் சிறந்ததென்றும் குறிப் பிட்டிருந்தான். இப்படிப் பகிரங்கமாக அறிக்கை விடுத்துவிட்டு, அந்தரங்கமாக அதிகாரத்தையெல்லாம் தனக்கே மாற்றிவிடுமாறும் ஏற்பாடு செய்துகொண்டான். பூ யி மன்னன் 1912-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் பன்னிரண்டாந் தேதி முடிதுறந்தான். முடிதுறந்த பிறகு இவன், ஓர் அந்நிய நாட்டு அரசனுக்கு என்ன மரியாதை யுண்டோ அந்த மரியாதையுடன் நடத்தப்பட வேண்டுமென்றும், வருஷந்தோறும் இவனுக்குச் செலவுத் தொகையாக நாற்பது லட்சம் டாலர் கொடுத்துவர வேண்டுமென்றும், ஏற்கனவேயுள்ள அரச பரிவாரங்கள், அரசவிருதுகள் முதலியவைகளை இவன் வைத்துக் கொள்ளலாமென்றும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மஞ்சூ அரச பரம்பரை பரிபூரணமாக அதமித்துவிட்டது.
பூ யி மன்னன், முடிதுறந்துவிட்டுப் போகிற தருணத்தில் யுவானு டைய தூண்டுதலின் பேரில், யுவான் ஷி காய் சர்வ அதிகாரங்களுடன் ஒரு தற்காலிகக் குடியரசு அரசாங்கத்தை அமைத்து, குடியரசுச் சேனையுடன் அதாவது புரட்சிவாதிகளுடன் கலந்து ராஜ்யத்திற்கு அமைதியையும் க்ஷேமத்தையும் உண்டுபண்ணட்டும் என்று ஓர் அதிகாரப் பத்திரத்தைப் பிரகடன ரூபமாகக் கொடுத்துவிட்டுப் போனான். இதை ஸன் யாட் ஸென் ஆட்சேபித்தான். மஞ்சூ அரசனால் அளிக்கப்பட்ட அதிகாரத்தைக் கொண்டு, யாரும் குடியரசு அரசாங் கத்தை தாபிக்க முடியா தென்றும், அப்படி யாராவது தாபிக்க முற்பட்டால் அதனால் அதிக தொந்தரவுகளே உண்டாகுமென்றும் கூறினான். யுவான், பிரகடனத்தி லுள்ள வாசகத்தைப் பொருட்படுத்த வேண்டா மென்றும், தான் அதன்படி நடக்கப் போவதில்லை யென்றும் சமாதானம் கூறினான். இதனை ஸன் ஒப்புக்கொண்டான். யுவானுடைய மன ஆழத்தை இவன் அப்பொழுது அறியவில்லை.
ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தபடி புதிய அரசியல் திட்டத்தை நிர்ணயிக்க நான்கிங் நகரத்தில் அரசியல் நிர்ணய சபை கூடியது. ஜனங்களுக்காக ஜனங்களுடைய ஆட்சியே இனி சீனாவில் நடைபெறு மென்பதையும், எல்லா ஜனங்களும் சம உரிமை உடையவர் களென்பதையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு தற்காலிக அரசியல் திட்டத்தை அது நிறைவேற்றியது. ஸன் யாட் ஸென், சம்பிரதாயமாகத் தனது பிரசிடெண்ட் பதவியை ராஜீநாமா செய்தான். அவனுடைய விருப்பப்படி மேற்படி அரசியல் நிர்ணய சபை. யுவான் ஷி காயை, சீனக் குடியரசின் முதல் பிரசிடெண்டாகத் தெரிந்தெடுத்தது. இஃதொரு சமரஸ ஏற்பாடுதான். அரசியல் நிர்ணய சபையிலிருந்த பெரும்பாலோர் தெற்கு மாகாணங்களைச் சேர்ந்த வர்கள். இவர்கள்தான் புரட்சியில் அதிகமாக ஈடுபட்டு அதனை வெற்றிக்குக் கொணர்ந்தவர்கள்; குடியரசு லட்சியத்தில் உறுதியுடை யவர்கள். இவர்கள் யுவான் ஷி காயைப் பூரணமாக நம்பவில்லை. யுவான் ஷி காயின் பலமெல்லாம் வடக்கே. குடியரசு லட்சியத்தில் பரிபூரண நம்பிக்கை வைத்து இவன் பிரசிடெண்ட் பதவியை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த அவநம்பிக்கை, பிரசிடெண்ட் தேர்தல் நடைபெற்ற உடனேயே வெளிப்பட்டது. குடியரசுவாதிகள், சீனக் குடியரசின் தலைநகரமாக இனி நான்கிங்கே இருக்க வேண்டு மென்றும், யுவான், தனது பிரசிடெண்ட் பதவியை நான்கிங் நகரத்திலேயே ஏற்றுக் கொள்ளவேண்டுமென்றும் வற்புறுத்தினார்கள். இதை யுவான் அவ்வளவாக விரும்பவில்லை. பெரும்பாலோருடைய விருப்பத்தைச் சாமர்த்தியமாகப் புறக்கணித்துவிட்டு, 1912-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் பத்தாந்தேதி பீக்கிங் நகரத்திலேயே, தனது புதிய பதவியை ஆடம்பரத்துடன் ஏற்றுக்கொண்டான். தெற்கு மாகாணவாசிகளுக்கு இது மனக்கசப்பாகவே இருந்தது. இந்தக் காலத்திலிருந்து, சீன அரசியல் வாழ்வைக் களங்கப் படுத்திய வடக்கித்தியார் என்றும் தெற்கித்தியார் என்றும் பிரிவினைகள் வலுப்பெற ஆரம்பித்தன. யுவான் ஷி காய் பிரசிடெண்ட் பதவியை ஏற்றுக் கொண்ட மறுநாள் (11-3-1912) தற்காலிக அரசியல் திட்டம் அனுஷ்டானத்திற்கு வந்தது. குடியரசு உதயமாயிற்று.
தொடக்கத்திலேயே கிரகணம்
யுவான் ஷி காய் பிரசிடெண்ட் பதவியை ஏற்றுக் கொண்டதும் தன் சுயரூபத்தை வெளிப்படுத்தினான். அதிகாரம் கைக்கு வந்த பிறகு அரசியல் வாதிகள் எப்படி மாறிவிடுகிறார்கள் என்பதற்கு யுவான் ஒரு நல்ல உதாரணம். நான்கிங் சபையினால் நிறைவேற்றப்பட்ட தற்காலிக அரசியல் திட்டப்படி பார்லி மெண்டைக் கூட்டுவதும், இந்தப் பார்லிமெண்டைக் கொண்டு, குடியரசின் நிரந்தரமான அரசியல் திட்டத்தை நிர்ணயிப்பதும் அவசியமாயின. இந்தச் சம்பிரதாயங்களைக் கொஞ்சங் கூட வழுவாமல் யுவான் செய்வித்தான். பார்லிமெண்டுக்குத் தேர்தல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
இந்தச் சமயத்தில் ஸன் யாட் ஸென், தன்னுடைய டுங் மெங் ஹுயி கட்சியை வலுப்படுத்தி, குடியரசு நோக்கத்தை ஆதரிக்கிற மற்றக் கட்சிகளையும் அதில் ஐக்கியப்படுத்தினான். இதுவே பின்னர் சில மாற்றங்களுடன் கோமிண்ட்டாங் கட்சியாயிற்று.1 இந்தக் கட்சியினர் இதுகாறும் ரகசியமாக வேலைசெய்து வந்தனர். குடியரசு ஏற்பட்ட பிறகு இவர்கள் பகிரங்கமாக அரசியல் விவகாரங்களில் கலந்து கொண்டார்கள். இந்தக் கட்சியில் பெரும்பாலோர் தெற் கித்தியார்.
இந்தக் கட்சிக்குப் போட்டியாகவும், தனக்குப் பக்கபலமாகவும் இருக்க, யுவான் ஷி காய், முன்னேற்றக் கட்சி2 என்ற பெயருடன் ஒரு கட்சியை ஏற்படுத்தி அதற்கு ஆதரவு காட்டி வந்தான். இந்தக்கட்சி, வடக்கித்தியாரையே பெரும்பான்மை யோராகக் கொண்டிருந்தது. வட மாகாண வாசிகளான நிலச் சுவான்தார்கள், ராணுவ தளகர்த் தர்கள், மஞ்சூ ஆட்சியின் கீழ் உடம்பு நோகாமல் உத்தியோகம் பார்த்து ஏராளமான ஊதியம் சம்பாதித்தவர்கள் முதலியோரே இதில் அங்கத்தினர்கள். இவர்கள் சமுதாயத்திலேயோ அரசியலி லேயோ எவ்வித மாற்றத்தையும் விரும்பாதவர்கள்; உள்ள நிலைமை யில் திருப்தியடைகிறவர்கள். இந்த இரண்டு பிரிவுகளையும் நாம் தூலமாகத் தெரிந்து கொள்வது, சீனாவின் உள்நாட்டுச் சண்டை களைத் தெரிந்து கொள்வதற்குத் திறவுகோல் மாதிரி.
புதிய பார்லிமெண்டில் கோமிண்ட்டாங் கட்சியினர் அதிகமான தானங்களைக் கைப்பற்றினர். இது யுவானுக்குப் பிடிக்குமா? தன்னிஷ்டப் படி அரசாங்கத்தை நடத்திக்கொண்டு போக முடியா தென்பதை நன்கு உணர்ந்தான். இதற்குத் தகுந்தபடி, பார்லிமெண்ட் கூடியதும், நிரந்தரமான அரசியல் திட்டத்தைப் பற்றிய பிரச்னை வாதத்திற்கு வந்தது. பிரசிடெண்டினுடைய அதிகாரம் வரையறுக்கப்படவேண்டுமென்றும், பார்லிமெண்டின் சம்மதத்தைப் பெற்றுத்தான் எந்தவிதமான சட்டமும் அமுலுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென்றும் பெரும்பாலோரான அங்கத் தினர்கள் வற்புறுத்தினார்கள். பார்த்தான் யுவான். எதிர்க் கட்சி யினரைப் பலாத்காரத்தினால் அடக்கிவிடுவதென்று தீர்மானித்தான். பல கொலைகள் நடைபெற்றன. எங்கும் ஒரு பயங்கரத்தை உண்டு பண்ணினான். கடைசியில் ( 1913-ஆம் வருஷம் மத்தியில்) கோமிண்ட் டாங் கட்சியைச் சட்டவிரோதமான கட்சியென்று சொல்லி அதனைக் கலைத்துவிட்டான். இதன் மூலம் தனக்கு எதிர்ப்பே இல்லாமற் செய்துகொண்டு, பிறகு தன்னிஷ்டம்போல் நிரு வாகத்தை நடத்துவதற்கு அனுகூலமாக அரசியல் திட்டத்தை மாற்றிக் கொண்டுவிட்டான். அரசாங்கச் செலவினங்களுக்காக ஐரோப்பிய வல்லரசுகளிடமிருந்து கடன் வாங்கி, அதைத் தன் ராணுவ முதீபுக்காகச் செலவழித்தான். ஐரோப்பிய வல்லரசுகளும், இவனுடைய அரசாங்கந்தான் நியாயமான அரசாங்கமென்று அங்கீகரித்து இவனுக்குக் கடன்கொடுக்கத் தயங்க வில்லை. அப்படி கடன் கொடுப்பதிலும் போட்டாபோட்டி வேறே!
யுவான் ஷி காயின் இந்தச் சுயேச்சாதிகாரத்தைக் கண்டித்து காண்ட்டன், நான்கிங், ஷாங்காய் முதலிய பிரதேசங்களில் 1913-ஆம் வருஷம் ஜூலை மாதம் மத்தியில் ஸன் யாட் ஸென்னுடைய தூண்டுதலின் பேரில் ஒரு புரட்சி நடைபெற்றது. ஆனால் யுவானின் படை பலம் இதனை உடனே அடக்கிவிட்டது. ஸன் யாட் ஸென், ஜப்பானுக்குத் தப்பியோடி விட்டான். அங்கே சென்று டோக்கியோ நகரத்தில் கோமிண்ட் டாங் கட்சியைப் புதுப்பித்து, மறுபடியும் சீனாவில் ஒரு புரட்சியை நடத்தி யுவானை அப்புறப்படுத்தி விடுவதற்கு ஏற்பாடு செய்துகொண்டிருந்தான்.
இந்தப் புரட்சியையே காரணமாக வைத்துக் கொண்டு, யுவான், பார்லிமெண்டைக் கலைத்து, புதிய அரசியல் திட்டத் தையும் ரத்து செய்துவிட்டு, சர்வாதிகாரியாக ஆண்டு வந்தான்.
யுவானுடைய இந்தச் சர்வாதிகார ஆட்சியை அந்நிய வல்லரசுகள் ஆதரித்தே வந்தன. ஜப்பான் ஒரு புறத்தில் ஸன் யாட் ஸென்னுக்குத் தஞ்சம் கொடுத்துவிட்டு, மற்றொரு புறத்தில் யுவான் ஷி காயின் முதுகைத் தடவிக் கொடுத்துக் கொண்டு வந்தது. இந்த ஆதரவின் மத்தியில் யுவானின் அதிகார ஆசையும் வளர்ந்தது. தான் ஏன் பரம்பரை உரிமையோடு கூடிய சக்ரவர்த்தியாகப் பட்டஞ் சூட்டிக் கொள்ளக்கூடாது என்ற எண்ணம் இவனுக்கு உண்டா யிற்று. இந்த எண்ணத்திற்கு அனுசரணையாக டாக்டர் பிராங் குட்நௌ 1 என்ற ஓர் அமெரிக்கன், சீனா, குடியரசுக்குத் தகுதியடைய வில்லையென்றும், அங்கு முடியரசுதான் நீடித்து நிலைக்க முடியு மென்றும் சொல்லி ஓர் அரசியல் திட்டத்தை வகுத்து யுவானிடம் சமர்ப்பித்தான். இந்தத் திட்டத்தை ஆதரிக்கிற முறையில் பல கட்சிகள், சங்கங்கள் தோன்றின. முடியரசை ஆதரித்து பலத்த பிரசாரம் நடைபெற்றது.
இப்படி நடைபெற்றுக் கொண்டிருக்கிற தருணத்தில் ஐரோப்பிய மகாயுத்தம் தொடங்கியது. 1914-ஆம் வருஷம் ஆகட் மாதம் நான்காவது வாரம் ஜப்பான், சீனாவிலுள்ள ஷாண்டுங் மாகாணத்தில் ஜெர்மனிக்கு குத்தகையாக விடப்பட்டிருந்த துறைமுகப் பிரதேசங்கள் முதலிய வற்றைத் தன் சுவாதீனப்படுத்திக் கொண்டுவிட்டது. யுவானால் இதனைத் தடுக்க முடியவில்லை. இதற்குப் பிறகு 1915-ஆம் வருஷம் ஜனவரி மாதம், சீனாவின் சுய உரிமைகளைப் பாதிக்கக் கூடிய மாதிரி இருபத்தோரு கோரிக்கைகள் அடங்கிய ஒரு தாக்கீதை ஜப்பான் சமர்ப்பித்தது.2 இவைகளில் பலவற்றைச் சீனாவின் சார்பாக யுவான் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. இவைகளை யொட்டி சீனாவுக்கும் ஜப்பானுக்கும் பலவித ஒப்பந்தங்கள் ஏற்பட்டன. இந்த ஒப்பந்தங்களையும் ஜப்பானின் ஆக்கிரமிப்பை யும் கண்டித்து சீனாவில் பலத்த கிளர்ச்சிகள் நடைபெற்றன.
இந்தக் கிளர்ச்சிகளை யுவான் மிகுந்த சாமர்த்தியத்துடன் தனக்குச் சாதகமாக உபயோகித்துக் கொண்டான். தன்னிடத்தில் சர்வாதிகாரம் இருக்கும் பட்சத்தில் ஜப்பானுடைய இந்த ஆக்கிரமிப்புச் செயலை, தான் தடுக்கமுடியுமென்கிற மாதிரியான பிரசாரங்கள் நடை பெறச் செய்வித்தான். கடைசியில் பொது ஜனங்களுடைய கோரிக்கை களுக்கு, தான் இணங்குவதாகக் காட்டிக்கொண்டு, 1915-ஆம் வருஷம் டிசம்பர் மாதம், சர்வ சீனாவுக்கும் தானே சக்ரவர்த்தியாக முடி சூட்டிக்கொள்ளத் தீர்மானித்தான். இதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்றன. இவைகளை யறிந்து, தொலை தூரத்தில் தென்மேற்கி லுள்ள யுன்னான் மாகாண வாசிகள் கலகத்திற்குக் கிளம்பினார்கள். இந்தக் கலகம் தெற்கிலுள்ள மற்ற மாகாணங்களுக்கும் பரவியது. தன்னுடைய எண்ணம் ஈடேறாது என்று யுவானுக்கு நிச்சயமாகத் தெரிந்துவிட்டது. கலகத்தை அடக்குவதற்கென்று சில படைகளை அனுப்பினான். அவை தோல்வி யுற்றுத் திரும்பி வந்துவிட்டன. இவனிடம் விசுவாசம் காட்டிவந்த சில ராணுவத் தலைவர்கள், இவனைக் கைவிட்டுவிட்டுத் தங்கள் படைகளுடன் சேர்ந்து விட்டார்கள். யுவானுக்கு ஆத்திரம் பொங்கியது. இந்த ஆத்திரத்தில் தனது ஆசை நாயகியைக்கூடக் கொலை செய்துவிட்டான். கடைசியில் மன முடைந்துபோய் 1916-ஆம் வருஷம் ஜூன் மாதம் ஆறாந்தேதி இறந்து போனான்.
யுவான் ஷி காய்க்குப் பிறகு பீக்கிங் அரசாங்கத்தின் பிரசி டெண்ட் பதவியை வகித்தவன் லீ யுவான் ஹுங். 1911-ஆம் வருஷம் அக்டோபர் மாதம் வூசங்கில் புரட்சி ஏற்பட்டபோது இவன் தலைவனாகத் தெரிந்தெடுக்கப்பட்டான் என்பது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கும். இவன் ஒரு ஜனநாயகவாதி. பதவி ஏற்றுக் கொண்டதும் யுவானால் கலைக்கப்பட்ட பார்லி மெண்டைக் கூட்டுவித்தான்; தற்காலிகக் குடியரசுத்திட்டத்தை மறுபடியும் அமுலுக்குக் கொண்டு வந்தான். தேசத்திற்கு விமோசனம் ஏற்படும் போலிருந்தது. ஆனால் இவனைச் சுற்றியிருந்த மந்திரிக்கூட்டம் இவனுடைய எண்ணத்தை ஈடேற விடாமல் செய்து வந்தது. மந்திரி களுக்குள் பொறாமை, பிணக்கு எல்லாம் தலைவிரித்தாடின. இந்தக் காலத்தில் பிரதம மந்திரியாயிருந்தவன் துவான் சீ ஜுயி1 என்பவன். இவன் 1917-ஆம் வருஷத் தொடக்கத்திலிருந்து சுமார் மூன்று வருஷ காலம் பீக்கிங் அரசாங்கத்தை ஆட்டிவைத்தான் என்று சொல்லலாம். இவன், பார்லிமெண்டில் ஒரு கட்சிக்குத் தலைவன். இந்தக் கட்சி பலத்தைக் கொண்டு இவன் தன் செல்வத்தையும் செல்வாக்கையும் பெருக்கிக்கொள்ளப் பார்த்தான்; அந்நிய வல்லரசுகளின் கைக் கருவியாகி விட்டான். ஐரோப்பிய யுத்தத்தில், ஆரம்ப காலத்தி லிருந்து நடுநிலைமை வகித்துவந்த சீனா, 1917-ஆம் வருஷம் ஆகட் மாதம் மேற்படி யுத்தத்தில் பிரவேசிப்பதற்கு அந்நிய வல்லரசுகளின் நெருக்குதல் ஒரு முக்கிய காரணமாயிருந்த போதிலும், இந்த துவானுடைய சூழ்ச்சியும் அந்தக் காரணத்திற்குத் துணை செய்தது. எந்த ஓர் அந்நிய வல்லரசின் மீது யுத்தந் தொடுப்பதாயிருந்தாலும் பார்லிமெண்டின் சம்மதம் வேண்டுமென்பது சட்டம். பார்லி மெண்டின் அங்கத்தினர் பெரும்பாலோர் சீனாவை யுத்தத்தில் இழுத்து விடச் சம்மதப்படவில்லை. எனவே, துவான், பார்லி மெண்டைக் கலைக்கச் செய்தான். சீனா, ஜெர்மனிமீது யுத்தந்தொடுத் திருப்பதாக பீக்கிங் அரசாங்கம் பிரகடனம்செய்தது. கலைக்கப் பட்டுப்போன பார்லிமெண்டின் அங்கத்தினர்கள்-அதாவது யுத்தத்திற்கு விரோத மாயிருந்தவர்கள்-தெற்கே வந்து காண்ட்டன் நகரத்தில் ஒரு விசேஷ பார்லிமெண்ட் அமைத்துக் கொண்டார்கள். இவர்கள், அப்பொழுது ஜப்பானி லிருந்து திரும்பி வந்துவிட்டிருந்த ஸன் யாட் ஸென்னைத் தலைவனாகத் தெரிந்தெடுத்து, தேசத்தின் சர்வ அதிகாரங்களுக்கும் மூலமாயிருப்பது தங்களுடைய பார்லிமெண்டே என்று பிரகடனம் செய்தார்கள். இது நிற்க.
துவான் பிரதம மந்திரியாயிருக்கையிலேயே அவனைத் தனக்குச் சாதகமாக உபயோகித்துக் கொள்ளத் தீர்மானித்தது ஜப்பான். ஷாண்டுங் மாகாணத்தில், ஜெர்மனி, (1914-ஆம் வருஷம் ஐரோப்பிய) யுத்தத்திற்கு முன்னர் அனுபவித்து வந்த ரெயில்வே சம்பந்தமான உரிமைகளை யெல்லாம் ஜப்பானுக்குச் சீன அரசாங்கம் சந்தோஷத்துடன் கொடுக்கச் சம்மதிக்கிறது என்னும் வாசகங்கள் அடங்கிய ஒரு ரகசிய ஒப்பந்தத்தை 1918-ஆம் வருஷம் செப்டம்பர் மாதம்-அதாவது சீனா, ஐரோப்பிய யுத்தத்தில் பிரவேசித்த மறு வருஷம்-இவனுடன் செய்து கொண்டது. அதற்குப் பதிலாக இவனுக்கு ஏராளமான தொகையைக் கடனாகக் கொடுத்தது. சீனா தானே வலிய மனப்பூர்வமாக மேற்படி ஷாண்டுங் மாகாண ரெயில்வே சம்பந்தமான உரிமைகளைத் தன்னிடம் ஒப்படைத் திருப்பதாகப் பின்னாடி பாரி சமாதான மகாநாட்டில்1 ஜப்பான் வாதஞ் செய் வதற்கு அனுகூலமாக அமைந்தது, இந்த ரகசிய ஒப்பந்தம். அப்படியே வாதஞ் செய்தனர் ஜப்பானிய பிரதிநிதிகள் மேற்படி மகாநாட்டில். இந்த வாதந்தான் செல்லுபடியாயிற்று. ஷாண்டுங் மாகாண சம்பந்த மான ரெயில்வே உரிமைகள் ஜப்பான், சீனாவைக் கட்டாயப் படுத்தி வாங்கிக் கொண்டதென்று சீனப்பிரதிநிதிகள் வாதஞ் செய்தபோது, மேற்படி ரகசிய ஒப்பந்தத்தைச் சுட்டிக் காட்டி, சந்தோஷமாகக் கொடுத்த உரிமையைக் கட்டாயப்படுத்தி வாங்கிக் கொண்டதாக எப்படிச் சொல்லமுடியுமென்று நேச வல்லரசுப் பிரதிநிதிகள் கையை விரித்து விட்டார்கள்.!
துவானுடைய இந்தத் துரோகம் பல விரோதிகளை இவனுக்குச் சம்பாதித்துக் கொடுத்தது. இவனுக்கு விரோதமாக வூ பை பூ2 என்பவன் கிளம்பினான். துவான் படைகளுக்கும் வூ பை பூ படைகளுக்கும் பல போர்கள் நடைபெற்றன. கடைசியில் 1920-ஆம் வருஷம் துவான் முறியடிக்கப்பட்டான். இவனுடைய செல்வாக்கு மங்கியது. இவனுக்குப் பிறகு பீக்கிங்கில் ஆதிக்கம் வகித்தவர் யாரும் இவனைவிட சிரேஷ்ட மான வரல்லர்; எல்லோரும் பலாத்காரத்தின் துணையொன்றையே நம்பினவர்கள். வூ பை பூவுக்கு விரோதமாக சாங்க் ஸோ லின் 3 கிளம்பினான்; தோல்வி யடைந்தான். மறுபடியும் இருவருக்கும் 1924-ஆம் வருஷத்தில் சண்டை. ஆக, யுவான் ஷி காயின் மரணத்திற்குப் பிறகு 1926-ஆம் வருஷம் வரையில் பீக்கிங்கில் அரசாங்க லட்சணங்களோடு கூடிய ஓர் அரசாங்கம் இருந்ததென்று சொல்லமுடியாது. இதனுடைய அதிகாரம் அரண்மனைச் சுவர்களுக்கு அப்பால் செல்லவில்லை. அரண்மனைக் காவலர்களைக் கட்டுப் படுத்தக் கூடிய அதிகார சக்திகூட இந்த அரசாங்கத்தின் பிரசி டெண்டுக்கு இல்லையென்று ஒரு மேனாட்டு ஆசிரியன் பரிகாச தோரணையில் கூறுகிறான். இருந்தாலும் இந்த அரசாங்கத்துக்குத் தான்- இந்த அரசாங்கச் சாயலுக்குத்தான்- அந்நிய வல்லரசுகள் மரியாதை செலுத்திவந்தன. தங்களுடைய சுரண்டும் உரிமை களுக்குப் பாதகம் ஏற்படா வண்ணமிருக்க இப்படிச் செய்து கொண்டிருப்பது இவைகளுக்கு அவசியமாயிருந்தது.
வலுவுள்ள மத்திய அரசாங்கம் இல்லாத காரணத்தினால் இந்தப் பத்து வருஷ காலமும் (1916-1926) நாட்டில் ஒரே குழப்பம். யுவான் உயிரோடிருந்த வரையில் ஒருவாறு அடங்கியிருந்த ராணுவத் தலைவர்கள், அவனுடைய மரணத்திற்குப் பிறகு, தங்கள் படைகளுடன் ஆங்காங்குக் கிளம்பி ஊரைச் சூறையிட ஆரம்பித் தார்கள். ஒவ்வொரு வருக்கும், சர்வ சீனாவின் சர்வாதி காரியாக-ஏன்? மஞ்சூ அரச பரம்பரையின் வாரிசாகக்கூட-வந்துவிட வேண்டு மென்ற ஆசை. இந்த ஆசையினால் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டார்கள்; ஜனங்களைப் பலவித இம்சைகளுக் குட்படுத்தினார்கள்; அவர்களிட மிருந்து அநீதமாக வரிகளை வசூ லித்துத் தங்களை அண்டியிருக்கும் போர்ச் சேவகர்களுக்கு அள்ளிக் கொடுத்ததோடு, தாங்களும் குடியிலும் கூத்திலுமாகச் செல வழித்தார்கள். மிகுதிப்படுகிற அற்ப சொற்ப பணத்தை, அந்நிய நாட்டு முதலாளிகள் நடத்தும் பாங்கியில் சேமித்து வைத்தார்கள்! இதுதான் வேடிக்கையான அமிசம். ஓர் ஆசிரியன் கூறுகிறான்:- காண்ட்டன், ஹாங்க்சௌ, ஷெக்குவான், முக்டென்1 முதலிய பிரதேசங்களிலும் இவைகளுக்கு நடுவிலுள்ள பிரதேசங்களிலும் சுயேச்சை அரசாங்கங்கள் அடிக்கடி தோன்றின. இவைகளுக்குக் காரணமாயுள்ள ராணுவத் தலைவர்கள், சிற்றரசர்கள் மாதிரி நகரத் திற்கு நகரம் தூதர்களை அனுப்பிக்கொண்டிருந்தார்கள். சூழ்ச்சி, லஞ்சம், விவாக சம்பந்தம், யுத்தம் இவைகளின் மூலமாகத்தான் இந்தக் காலத்து அரசியல் விவகாரங்கள் நடைபெற்றன. தேசத்தைப் புனர்நிர்மாணம் செய்வதற்கான சந்தர்ப்பங்கள் பல ஏற்பட்டும் அவை கை நழுவ விடப்பெற்றன; தேசத்தின் செல்வம் வீணாக்கப் பட்டது; இளைஞர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் ஏங்கி நின்றார்கள்
யுவான் ஷி காயினுடைய சுயேச்சாதிகாரத்தின் விளைவாக ஸன் யாட் ஸென் ஜப்பானுக்குத் தப்பிச் சென்று அங்கே கோமிண்ட் டாங் கட்சியைப் புனர் நிர்மாணஞ் செய்து கொண்டிருந் தானல்லவா? இவனுடைய தூண்டுதலின் பேரில்தான், யுவான் ஷி காய், சர்வ சீனாவுக்கும் சக்ரவர்த்தியாக முடிசூட்டுக்கொள்வதற்கு விரோதமாக யுன்னான் மாகாணத்தில் கலகக் கொடி தூக்கப்பட்ட தாகச் சொல்லப் பட்டது. எப்படியோ புரட்சி நெருப்பு அணை யாமல் பாதுகாத்து வந்தான் ஸன்.
யுவானுடைய மரணத்திற்குப் பிறகு இவன் சீனாவுக்குத் திரும்பிவந்தான். வந்த சில மாதங்கள் கழித்து காண்ட்டன் நகரத்தில் கூடியிருந்த விசேஷ பார்லிமெண்ட் அங்கத்தினர்கள், இவனைத் தங்கள் தலைவனாகத் தெரிந்தெடுத்தார்கள். பின்னர் இவனுடைய தலைமையில் ஒரு தேசீய அரசாங்கம் அமைந்தது. ராணுவ தோரணையில் அமைக்கப் பட்ட இந்த அரசாங்கத்தைப் புரட்சி அரசாங்கமென்று சொல்வர். ஏனென்றால், புரட்சியின் நோக்கம் நிறைவேறுவதற்காக இந்த அரசாங்கம் பாடுபட்டு வந்தது. சுருக்கமாக, பீக்கிங் அரசாங்கம் பிற்போக்குச் சக்திகளின் பிரதிநிதியாகவும், இந்த காண்ட்டன் அரசாங்கம் முற்போக்குச் சக்திகளின் பிரதிநிதி யாகவும் ஒரே சமயத்தில் இரண்டு அரசாங்கங்களாக இயங்கிக் கொண்டு வந்தன. 1917-ஆம் வருஷம் ஆகட் மாதம் சீனாவின் பெயரால் பீக்கிங் அரசாங்கம், ஐரோப்பிய யுத்தத்தில் பிரவேசித்தது. அதே சீனாவின் பெயரால் காண்ட்டன் அரசாங்கம் இதை ஆட்சே பித்தது. இந்தப் பிந்திய அரசாங்கம் புறக்கணிக்க முடியாத ஒரு சக்தியாக வளர்ந்து வந்தது. இதற்கு அத்தாட்சி என்னவென்றால், ஐரோப்பிய யுத்தத்தின் முடிவுக்குப் பிறகு கூடிய சமாதான மகா நாட்டிற்கு இந்த காண்ட்டன் அரசாங்கத்திலிருந்து பிரதிநிதிகள் சென்றதுதான்.
ஸன் யாட் ஸென் மேற்படி புரட்சி அரசாங்கத்தை அவ்வப் பொழுது புனர் நிர்மாணஞ் செய்தும் கட்டுப்பாட்டுக்குட் படுத்தியும் வந்ததோடு கோமிண்ட்டாங் கட்சியையும் கூடவே வலுப்படுத்திக் கொண்டு வந்தான்.
பாரி சமாதான மகாநாட்டில் சீனா ஏமாற்றமடைந்தது. இது சீன இளைஞர்களின் மத்தியில் ஒரு பெரிய கிளர்ச்சியை உண்டு பண்ணியது. 1919-ஆம் வருஷம் மே மாதம் முதல் வாரத்தில் தொடங்கிய இந்த இளைஞர் கிளர்ச்சியானது 1 வார்சேல் சமாதான ஒப்பந்தத்தில் சீனப் பிரதிநிதிகளைக் கையெழுத்திட வொட்டாமல் செய்தது. இவைகளுக் கெல்லாம் மூலகாரணமாயிருந்தது கோமிண்ட்டாங் கட்சி. இந்தக் கட்சி, பெயரளவுக்கு இளைஞர் கட்சியாக இருந்த போதிலும் இதுகாறும் இதில் முதியவர்களே அங்கத்தினர்களா யிருந்து வந்தார்கள். மேற்படி கிளர்ச்சிக்குப் பிறகு இளைஞர்கள் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளப் பட்டார்கள். இவர்கள் மூலமாக தேசத்தில் ஒரு புது மலர்ச்சி இயக்கம் ஏற்பட்டது
அப்பொழுது ருஷ்யாவின் செல்வாக்கு, சீன இளைஞர் சமுதாயத்தின் மீது வெகுவேகமாகப் படிந்து வந்தது. ஏட்டளவிலே இருந்த கார்ல் மார்க்ஸின்1 சமதர்ம சித்தாந்தம், லெனினுடைய 2 தலைமையின் கீழ் அங்கே நடைமுறையில் கொணரப் பெற்று வெற்றி கரமாக இயங்கிக்கொண்டு வருவதைப் பார்த்து உலகமே பிரமித்துப் போய் நின்ற காலம் அது. ஸன் யாட் ஸென்னைப் பொறுத்தமட்டில், சீன சமுதாயத் திற்குச் சமதர்ம சித்தாந்தம் ஏற்றதல்லவென்ற கொள்கை தான் இருந்துவந்தது. ஆனாலும் அந்தச் சமதர்ம இயக்கமானது, ஜார் ஆட்சிக்குப் பிறகு ருஷ்ய சமுதாயத்தில் உண்டுபண்ணியிருக்கிற மாறுதல்களையும் அடைந்திருக்கிற வெற்றிகளையும் பார்த்து அதை அதிசயித்துப் பாராட்டினான். 1918-ஆம் வருஷக் கடைசியில், ருஷ்யப் புரட்சி வெற்றிகர மான முடிவுக்கு வந்தவுடனேயே லெனினைப் பாராட்டிஸன் ஒரு தந்தி கொடுத்தான். இங்ஙனம் பாராட்டியவன் ஸன் ஒருவன் மட்டுமாக இருக்கவில்லை. புது மலர்ச்சி இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர் பலரும் ருஷ்யாவின் மீது கவனஞ் செலுத்தினார்கள். அநேகர் ருஷ்யாவுக்கு நேரே சென்று அங்குப் பொதுவுடைமை இயக்கம் எப்படி வேலை செய்து கொண்டு வருகிறதென்பதைத் தெரிந்து கொண்டு சீனாவுக்குத் திரும்பி வந்தார்கள். இதன் பயனாக அநேக பொதுவுடைமை ஆராய்ச்சிக் கழகங்கள் தோன்றின. 1920-ஆம் வருஷம் சீனப் பொதுவுடைமைக் கட்சியொன்று நிறுவப்பட்டது3 அப்பொழுது இதில் ஐந்நூறு அல்லது அறுநூறு அங்கத்தினர்களுக்கு மேல் இல்லை.
ருஷ்யாவில் சோவியத் அரசாங்கம் ஏற்பட்டுச் சிறிது நிலை பெற்றதும் (1919-20-ஆம் வருஷம்) அது, தனக்கு இனி நாடு பிடிக்கிற ஆசையில்லையென்றும், சீனாவில் இதுகாறும் ருஷ்யாவின் ஆதிக்கத்துக்குட்பட்டிருந்த பிரதேசங்களையெல்லாம் சீனாவுக்கே திருப்பிக் கொடுத்து விடுவதாகவும், விசேஷப் பிரதேச உரிமைகள் ஒப்பந்தத் துறைமுக உரிமைகள் முதலியவற்றையெல்லாம் துறந்து விடுவதாகவும், சமத்துவமுறையில் இருநாடுகளுக்கும் வியாபாரத் தொடர்புஇருக்கவேண்டுமென்று கோருவதாகவும் சீனாவுக்குத் தெரிவித்தது. சீனா விஷயமாக பாரி சமாதான மகாநாட்டில் மேற்கு ஐரோப்பிய வல்லரசுகள் நடந்து கொண்டதற்கும் இப்பொழுது சோவியத் ருஷ்யா நடந்துகொள்வதற்கும் உள்ள வித்தியாசத்தைச் சீனப் பொது மக்கள் நன்கு தெரிந்து கொண்டார்கள். பீக்கிங் அரசாங்கத்திற்கும், சோவியத் ருஷ்யாவுக்கும் சமரஸம் ஏற்படாதபடி இடையிலே வல்லரசுகள் சில சூழ்ச்சிகளைச் செய்தன. அவற்றின் விவரம் இங்குத் தேவையில்லை. பொதுவாக, சோவியத் ருஷ்யாவின் கொள்கைகளுக்குச் சீன இளைஞர்கள் அதிகமான ஆதரவு காட்டத் தொடங்கினார்கள். இளைஞர்களின் ஆவல்களுக்குப் பிரதிநிதிபோலிருந்த காண்ட்டன் அரசாங்கத்திற்கும் ருஷ்ய சோவியத் அரசாங்கத்திற்கும் வரவர நட்பு வளர்ந்தது. இந்த நட்பை வலியுறுத்தி 1923-ஆம் வருஷம் இரண்டு அரசாங்கங்களும் சேர்ந்து ஓர் அறிக்கை வெளியிட்டன. போரோடின்,1 காலென்2 என்ற இரண்டு ருஷ்ய அறிஞர்கள், காண்ட்டன் அரசாங்கத்திற்கு ஆலோச கர்களாக வந்து சேர்ந்தார்கள். முன்னவன் பிரசார நிபுணன்; சீனர்களின் அரசியல் அறிவை எப்படி அபிவிருத்தி செய்யவேண்டு மென்பதைப் பற்றி ஸன் யாட் ஸென்னுக்குச் சில திட்டங்கள் வகுத்துக்கொடுத்தான். பின்னவன் ராணுவ நிபுணன். இவனுடைய ஏற்பாட்டின் பேரில் ஹுவாங்பூ3 என்ற இடத்தில் 1924-ஆம் வருஷம் மே மாதம் ஒரு ராணுவக்கழகம் தாபிக்கப்பட்டது. சியாங் கை ஷேக்4 என்பவனை இந்தக்கழகத்தின் பிரதம அதிகாரியாக நியமித்தான் ஸன் யாட் ஸென்.
இதே பிரகாரம், சீன மக்களுக்கு அரசியல் அறிவையும் பொது அறிவையும் ஊட்டுவதற்குத் தகுதியுடைய பிரசாரகர்களைத் தயாரிப்பதற்கென்று ஒரு கழகத்தை போரோடின் ஏற்பாடு செய்தான். இதன் விளைவுதான் குவாங்டுங் தேசீய சர்வகலாசாலை. மற்றும், இந்த போரோடின்னுடைய தூண்டுதலின்பேரில், ஸன் யாட் ஸென், தனது புரட்சிக் கொள்கைகளை ஒழுங்கு படுத்திப் பிரசங்கங்கள் வாயிலாக வெளியிட்டான். இவையே ஸான் மின் சூயி என்ற பிரசித்தியான பெயரால் நூல் வடிவாகப் பரிணமித்தன. ஸன், ஏற்கனவே இந்தக் கொள்கைகளை ஒரு திட்டமாக வகுத்து வைத் திருந்தானாயினும், இவை ஒரு சிலருக்கே தெரிந்திருந்தன. இவை, அனைவருக்கும் நன்றாகத் தெரியவேண்டு மென்பதற் காகவே போரோடின் இந்த ஏற்பாடு செய்தான்.
ஸான் மின் சூயி என்பது, சீன அரசியல் வாதிகளுக்கு ஒரு வேத புத்தகம். சீனப் பள்ளிக்கூடங்களிலே படிக்கிற ஒவ்வொரு மாணாக் கனும் இதன் முக்கிய அமிசங்களை மனப்பாடமாக ஒப்புவிப்பான். ஸான் மின் சூயி என்றால் ஜனங்களுடைய மூன்று கொள்கைகள் என்று அர்த்தம் கூறலாம். (1) தேசீயம் (2) ஜனநாயகம் (3) வாழ்க்கைத் தத்துவம் என்பவை தான் இந்த மூன்று கொள்கைகள்.
இந்த மூன்று கொள்கைகளும் நடைமுறையில் வர வேண்டு மானால், அதாவது புதிய சீன நிர்மாணமாக வேண்டுமானால், மூன்று விதமான படிகளைக் கடக்க வேண்டியது அவசியமென்பதை இதே சமயத்தில் ஸன் யாட் ஸென் வலியுறுத்தினான். முதல் படி என்ன வென்றால், புதிதாகத் தயாரிக்கப்படுகிற ராணுவத்தின் துணைகொண்டு, தேசத்தின் ஒற்றுமைக்கு விரோதமான சக்திகளை யெல்லாம் அழிக்க வேண்டும் என்பது. இரண்டாவது படி, பயிற்சி பெற்ற பிரசாரகர்களைக் கொண்டு, கோமிண்ட்டாங் கட்சியின் லட்சியத்தை ஜனங்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களுக்கு அரசியல் அறிவைப் புகட்ட வேண்டுமென்பது. இந்த இரண்டு படிகளின் காலத்திலும் ஜனங்களுக்காக அரசாங்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கும். மூன்றாவது படியின் கீழ், ஜனங்கள் பூரண அரசியல் அறிவு பெற்றவர்களாகவும், தங்களுடைய விவகாரங் களைத் தாங்களே கவனித்துக்கொள்ளுகிற சக்தியுடையவர் களாகவும் ஆகி விடுகிறார்கள். அப்பொழுது ஜனங்களுடைய அரசாங்கம் நடைபெறு வதற்குச் சாத்தியமாகிறது. ஜனங்களுக்காக ஜனங் களுடைய ஆட்சி நடைபெறுவதுதானே குடியரசு என்பது.
இங்ஙனம் படிகளை வகுத்ததோடு ஸன் யாட் ஸென் நிற்க வில்லை. முதலாவதாக, புரட்சி சக்திகளையெல்லாம் மறுபடியும் ஒன்று திரட்டினான். இந்தக் காலத்தில் பொதுவுடைமைவாதிகள் பலரும் கோமிண்ட்டாங் கட்சியில் அங்கத்தினர்களாகச் சேர்த்துக் கொள்ளப் பட்டார்கள். கட்சியின் கோட்பாடுகள், விதிகள் முதலியன ராணுவ தோரணையில் திருத்தியமைக்கப்பட்டன. ஸன் யாட் ஸென், சர்வாதிகார முடைய கட்சித் தலைவனாக நியமிக்கப் பட்டான். இதனை அனுசரித்து காண்ட்டன் தேசீய அரசாங்கமும் ராணுவ ஒழுங்குக்குட்படுத்தப் பெற்றது. ஒழுங்குபடுத்தப்பெற்ற இந்த அரசாங்கத்திற்கு ஸன் யாட் ஸென்னே பிரசிடெண்டாகத் தெரிந்தெடுக்கப்பெற்றான். இந்த அரசாங்கத்தில் சில பொது வுடைமைவாதிகளுக்கும் இடம் கொடுக்கப்பட்டது. இவைகளுக் கெல்லாம் காரணம், போரோடின்னுடைய செல்வாக்குக்கு ஸன் ஆட் பட்டிருந்ததுதான் என்று சிலர் கூறுகின்றனர். இஃது எப்படியிருந்த போதிலும், பொதுவுடைமைச் சாயல் படிந்த இந்தப் புதிய தேசீய அரசாங்கத்தை, காண்ட்டனிலுள்ள முதலாளிகள் எதிர்த்துநின்றார்கள். இதன் மூலமாக ஒரு குழப்பம் ஏற்படும் போலிருந்தது. அப்பொழுது ஸன் உடல் நோயினால் வேறே அவதைப்பட்டுக் கொண்டிருந்தான். இருந்தாலும் அதனை லட்சியஞ் செய்யாமல், குழப்பம் ஏற்படாதபடி தடுத்தான். கூடவே வட மாகாணங்களில் அட்டூழியம் செய்துவருகிற ராணுவதள கர்த்தர்கள் மீது படையெடுப்பதற்கும், பீக்கிங் நகரத்தில் அரசாங்க மென்று சொல்லிக்கொண்டு வருகிற பலவீனமான தாபனத்தை அப்புறப்படுத்திவிட்டு, அதன் தானத்தில் சர்வ சீனாவுக்கும் பொது வான ஒரு மத்திய அரசாங்கத்தை தாபிப்பதற்கும் வேண்டிய பலமான ஏற்பாடுகளைச் செய்துவந்தான். 1924-ஆம் வருஷத்தில் நடைபெற்ற சம்பவங்கள் இவை.
இந்தச் சமயத்தில், வடக்கில் பரபரம் சண்டை போட்டுக் கொண்டு வந்த ராணுவத் தலைவர்கள் சிலர், பீக்கிங் நகரத்தில், என்றும்போல சாசுவதமான ஓர் அரசாங்கத்தை தாபிக்கவேண்டு மென்று ஆவல் காட்டினார்கள்; இது விஷயமாகக் கலந்தாலோசிப் பதற்கு ஸன்னை பீக்கிங் நகரத்திற்கு வருமாறு அழைத்தார்கள். எப்படியாவது தேசத்தில் ஒற்றுமை நிலவி, ஒரே அரசாங்கம் ஏற்பட வேண்டுமென்று ஆவல் கொண்டிருந்த ஸன், இந்த அழைப்பிற் கிணங்கி காண்ட்டனிலிருந்து ஜப்பான் வழியாக பீக்கிங்குக்குச் சென்றான். ஆனால் சீன மக்களின் துரதிருஷ்டவசமாக அங்குச் சென்று பேச்சு வார்த்தைகள் தொடங்கு வதற்கு முன்பு, 1925-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் பன்னிரண்டாந் தேதி மரணத்தைத் தழுவிக் கொண்டுவிட்டான். சீனா முழுவதும் துக்கக் கண்ணீர் வடித்தது.
யுவான் ஷி காயின் மரணத்திலிருந்து ஸன் யாட் ஸென் மரணம்வரை சுமார் பத்து வருஷ காலம் சீனாவின் அரசியல் வாழ்வில் அநேக கறைகள் படிந்துவிட்டபோதிலும், அதன் எதிர்கால வாழ்க்கையில் ஜனங்களுக்கு ஒருவித நம்பிக்கை ஏற்பட்டுவந்தது. புதிய எண்ணங்கள், புதிய சக்திகள் முதலியன சீனாவுக்குள் பிர வேசித்தன. தொழில், கலை, இலக்கியம் முதலிய எல்லாத் துறை களிலும் அநேக மாற்றங்கள் உண்டாயின. ஜனங்களுக்குப் புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவல் அதிகரித்தது. சிறப்பாக இளைஞர்கள், தேச விவகாரங்களில் அதிக பங்கெடுத்துக் கொண்டார்கள். இவ்வளவுக்கும் முக்கிய தூண்டுதலாயிருந்தது 1914-ஆம் வருஷத்து ஐரோப்பிய மகாயுத்தம். இந்த யுத்தத்தில் சீனா தலையிட்டது, நம்பிக்கை வைத்தது, கடைசியில் ஏமாற்றமடைந்தது முதலியவற்றை அடுத்த அத்தியாயத்தில் கவனிப்போம்.
முதல் உலகப் போரும் இளைஞர் இயக்கமும்
சீனக் குடியரசு ஏற்பட்ட முதல் பத்து வருஷகாலம், முந்திய அத்தியாயத்தில் சொன்னபடி மிகச் சங்கடமான காலம். இந்தக் காலத்தில் தான் ஐரோப்பிய மகாயுத்தம் தொடங்கி, நடைபெற்று, முடிந்துவிட்டது. இந்த யுத்தத்திற்கும் சீனவுக்கும் எவ்வித சம் பந்தமும் இல்லை. ஆனால் இதில் சீனா இழுத்துவிடப்பெற்றது. சீனா இந்த யுத்தத்தில் கலந்து கொள்ளக்கூடாதென்று ஆரம்பத்தில் ஜப்பான் ஆட்சேபித்தது. ஆனால் அதுவே, பின்னாடி, சீனாவை, யுத்தத் தீயிலே தள்ளுவதற்குத் துணை செய்தது. இந்தக் காலத்திலும், இதற்குப் பின்னர் வார்சேல் சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப் பெற்ற போதும், ஐரோப்பிய வல்லரசுகளும் ஜப்பானும் சீனா விஷயத்தில் நடந்துகொண்ட மாதிரி இருக்கிறதே அது மகா கேவலம். வேறெந்த பாஷையில் இதைச் சொல்வது?
1914-ஆம் வருஷம் ஆகடு மாதம் முதல் வாரம் ஐரோப்பிய மகாயுத்தம் மூண்டது. நான்காவது வாரம் ஜப்பான், ஜெர்மனியின் மீது யுத்தந் தொடுத்திருப்பதாக அறிக்கை வெளியிட்டுவிட்டு, சீனாவில் ஜெர்மனிக்குக் குத்தகையாக விடப்பட்டிருந்த பிரதேசங் களைக் கைப்பற்றிக் கொண்டது.1 தலையிலேயடித்தால், காலிலே கட்டை விரல் நகம் பெயர்ந்த கதையாக இருக்கிறதே இது என்று நேயர்கள் கேட்கலாம். ஆம், அப்படித்தான் இருக்கிறது. ஆனால் ஏகாதிபத்திய வெறியானது, சந்தர்ப்பத்திற்காகக் காத்துக் கொண்டி ருப்பது மட்டுமில்லை, சந்தர்ப்பத்தைத் தேடிக் கொண்டும் செல்கிறது என்ற உண்மையை நாம் உணர்ந்து கொண்டுவிட்டால், ஜப்பா னுடைய இந்தச் செயல் நமக்கு ஆச்சரியமாகவே தோன்றாது. இதைச் சிறிது விதரித்துச் சொல்ல ஆசைப்படுகிறோம்.
1911-ஆம் வருஷம் புதுப்பிக்கப்பட்ட ஆங்கிலோ-ஜப்பானிய ஒப்பந்தப்படி, உபய கட்சியினருள் யாராவது ஒருவருடைய ராஜ்ய உரிமைகள் எதிர்பாராத விதமாகத் தாக்கப்பட்டு, அந்த உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டுச் சண்டையில் இறங்கும்படி நேரிட்டால், அப்பொழுது பரபரம் இரு சாராரும் உதவிசெய்து கொள்ள வேண்டும்; பரபர சம்மதத்தின்பேரிலேயே இருவரும் சேர்ந்து எதிரியுடன் சமாதானம் செய்துகொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தத்தை ஜப்பான், 1914-ஆம் வருஷ யுத்தத்தின்போது தனக்கு அனுகூலமாக உபயோகித்துக் கொண்டது. ஜெர்மனியினால் தாக் கப்பட்டுவிட்ட பிரிட்டனுக்குத் தான் உதவிசெய்ய முன் வந்திருப்ப தாகச் சொல்லிக்கொண்டது. ஆனால் பிரிட்டன் இதை அவ்வள வாக விரும்பவில்லை. ஜப்பானுடைய உதவி தனக்கு இந்தச் சமயத்தில் தேவையில்லை என்று சொல்லவும் பிரிட்டனுக்குத் தைரியம் வர வில்லை. ஆகட் மாதம் நான்காந்தேதி பிரிட்டன், ஜெர்மனியின் மீது யுத்தந் தொடுத்திருப்பதாகப் பிரகடனஞ் செய்ததல்லவா? எட்டாந்தேதி, ஜப்பானிய யுத்தக் கப்பல்கள் ஸிங்டோ1 துறை முகத்தில் வந்து நின்றுகொண்டன. பத்தாந்தேதி, தன்னுடைய உதவியைக் கோரும்படி ஜப்பான், பிரிட்டனுக்கு யோசனை கூறியது. தன்னுடைய உதவியை எதிர்பார்க்க, மேற்படி 1911-ஆம் வருஷ ஒப்பந்தப்படி பிரிட்டன் கடமைப்பட்டிருக்கிறதென்கிற மாதிரி யாகவே இந்த யோசனையின் வாசகம் இருந்தது. ஆனால் வலிந்து வருகிற இந்த உதவியினால் உண்டாகக்கூடிய பலாபலன்களை பிரிட்டன் நன்றாகத் தெரிந்துகொண்டிருந்தது. சீனாவிலிருந்த பிரிட்டிஷாரும் ஜப்பானுடைய இந்த உதவியை விரும்பவில்லை. எனவே, பிரிட்டன், ஜப்பானின் யோசனைக்கு ஒன்றும் பதில் சொல்லாமல் சும்மாயிருந்துவிட்டது. ஆனால், ஜப்பான் இதற்காகச் சும்மாயிருக்கவில்லை. தன்னுடைய சொந்தப் பொறுப்பில் (1914) ஆகட் மாதம் பதினைந்தாந்தேதி, ஜெர்மனிக்கு ஒரு தாக்கீது விடுத்தது. அதில், ஜெர்மனி, ஷாண்டுங் மாகாணத்தில் குத்தகை யாகப் பெற்ற உரிமைகளையெல்லாம் தன்னிடத்தில், செப்டம்பர் மாதம் பதினைந்தாந் தேதிக்குள் ஒப்படைத்துவிடவேண்டு மென்றும், சீனாவின் பிரதேசங்களைச் சீனாவிடம் திருப்பிக் கொடுத்துவிட வேண்டுமென்பதற்காகவே தான் இப்படிக் கேட்ப தாகவும், ஒரு வாரத்திற்குள் இந்தத் தாக்கீதுக்குப் பதில் சொல்ல வேண்டுமென்றும் கண்டிருந்தது. ஒரு வாரம் வரையில் ஜெர்மனி யிடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. ஆகவே இருபத்து மூன்றாந்தேதி, ஜெர்மனியின் மீது தான் யுத்தந் தொடுத்திருப்பதாக ஜப்பான் பிரகடனஞ் செய்தது. ஜப்பான் இப்படிப் போரில் இறங்கியது புதிய நாடுகளை ஆக்கிரமித்துக் கொள்ளவேண்டு மென்ற ஆசையினாலல்ல வென்றும், கீழ்நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காகவேயென்றும், அப்பொழுது ஜப்பானின் பிரதம மந்திரியாயிருந்த ஒக்கூமா1 உலகத்திற்குப் பகிரங்கப் படுத்தினான்.
இதற்குப் பிறகு ஜப்பானியப் படைகள், கியாசௌ பிரதேசத்தை ஆக்கிரமித்துக்கொண்டன. இப்படி ஆக்கிரமித்துக் கொள்கிற போது, சீன ஆதிக்கத்திற்குட்பட்ட பிரதேசங்களைக் கடந்து செல்லவேண்டியிருந்தது. சீனாவோ, இந்த ஐரோப்பிய யுத்தத்தில் அப்பொழுது கலக்கவேயில்லை. யுத்தம் ஆரம்பித்தவுடனேயே, தான் நடுநிலைமை வகிப்பதாகத் தெரிவித்துக் கொண்டுவிட்டது. எனவே தன்னுடைய அதிகார எல்லைக்குள் ஜப்பானியப் படைகள் யுத்த சன்னாகத்துடன் பிரவேசிப்பது, அத்துமீறிய செயலாகுமென்று ஆட்சேபித்தது. ஆனால் ஜப்பான் இதை லட்சியம் செய்யவில்லை. வேறு வழியின்றி சீனா, யுத்ததலம் என்று ஒரு பிரதேசத்தை வரை யறுத்து அதற்குள்ளேயே ஜப்பான் தன்னுடைய காரியங்களைச் செய்து கொள்ளவேண்டுமென்று ஏற்பாடு செய்தது. சீனா, தன்னு டைய திருப்திக்காகத் தானே செய்து கொண்ட ஏற்பாடுதான் இது.
ஜப்பானியர்கள், ஷாண்டுங் மாகாணத்தில் ஜெர்மானியர் களால் நடத்தப்பட்டுவந்த ரெயில்வேக்களென்ன, சுரங்கங்களென்ன, வியாபாரங் களென்ன முதலிய அனைத்தையும் தங்கள் சுவாதீனப் படுத்திக் கொண்டார்கள்; ஸிங்டோ துறைமுகத்தைக் கைப்பற்றிக் கொண்டு, அங்கே ஒரு ஜப்பானிய கவர்னர் ஜெனரலை நியமித்தார்கள்; தங்களுடைய நலன்களையும் உரிமைகளையும் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு நிரந்தரமான ஒரு ராணுவத்தையும் வைத்துக் கொண்டுவிட்டார்கள். சுருக்கமாக, ஷாண்டுங் மாகாணத்தில் ஜெர்மானியர் அனுபவித்துவந்த உரிகைள் யாவும் ஜப்பானியரிடம் போய்ச் சேர்ந்தன.
இதற்கு அந்நிய நாட்டு மந்திரி கூறிய சமாதானம் என்ன தெரியுமா? ஜப்பான், கியாசௌ பிரதேசத்தைச் சீனாவிடம் திருப்பிக் கொடுப்பதாகச் சொன்ன வாக்கு இனி செல்லுபடியாகாதென்றும், ஏனென்றால் ஜெர்மனி, தான் எதிர்பார்த்தபடி சமாதான முறையில் மேற்படி பிரதேசத்தைத் தன்னிடம் கொடுக்கவில்லையென்றும், அப்படிக் கொடாததினால், அதிக பணத்தையும் ஆட்களையும் செலவிட்டே, தான் அதை ஆக்கிரமித்துக் கொள்ளவேண்டியிருந்ததென்றும், இதனால் புதிய நிலைமை ஏற்பட்டுவிட்டபடியால் பழைய வாக்கு செல்லாதென்றும் வாய் கூசாமல் சமாதானம் கூறப்பட்டது.
ஷாண்டுங் மாகாணத்தில் ஜெர்மானியர்களுக்கு எவ்வித செல்வாக்கும் இல்லாதபடி செய்துவிட்டு, ஜப்பானே பூரணப் பொறுப்பையும் வகித்துக்கொண்டுவிட்டபடியால், தான், முன்னர் யுத்ததலமாக வகுத்த எல்லையை இப்பொழுது ரத்து செய்து விட்டதாகவும், கியாசௌ பிரதேசம் தவிர, ஷாண்டுங் மாகாணத்தின் மற்றப் பிரதேசங்கள் யாவும் முன்போல் தனது நடுநிலைமைக் கொள்கைக்கு உட்பட்டதாகக் கருதப்படுமென்றும் சீன அரசாங்கம், 1915-ஆம் வருஷம் ஜனவரி மாதம் ஏழாந்தேதி ஜப்பானிய அரசாங் கத்துக்குத் தெரிவித்தது. அப்பொழுது சீனக் குடியரசு அரசாங்கத்தின் தலைவனா யிருந்தவன் யுவான் ஷி காய் என்பதை வாசகர்களுக்கு ஞாபகப்படுத்தி விட்டு மேலே செல்கிறோம்.
சீனா, இப்படித் தெரிவித்தது ஜப்பானுக்கு அதிக கோபத்தை உண்டுபண்ணிவிட்டது; தனக்கு விரோதமாக எடுத்துக்கொண்ட நடவடிக்கையாகவே இதனைக் கருதியது! அடுத்த வாரமே - அதாவது ஜனவரி மாதம் பதினைந்தாந் தேதி-இருபத்தோரு கோரிக்கைகள் அடங்கிய ஒரு தாக்கீதை சீனாவுக்கு விடுத்தது.
இந்தக் தாக்கீதை இந்தச் சந்தர்ப்பம் பார்த்து ஜப்பான் விடுத்ததற்கு இரண்டு காரணங்களுண்டு. ஒன்று, சீனாவில், குடியரசு, குழந்தைப் பருவத்திலேயே இருக்கிறது; அதனைக் கொன்று விடுவதற்கு முயற்சிகள் வேறே அங்கு நடைபெறுகின்றன. உள்நாட்டுக் கலகங்களினாலும் போட்டாபோட்டிகளினாலும் பல வீனப்பட்டுக் கிடக்கிற சீனாவை இந்தச் சந்தர்ப்பத்திலே உருட்டி மிரட்டினால் தான், அதனைத் தனது சுரண்டும் பிரதேசமாக உபயோகித்துக் கொள்ளலாம் என்பது. மற்றொன்று, சீனாவில் பலவித உரிமைகளையும் சலுகைகளையும் பெற்று அதனைச் சுரண்டி வந்த ஐரோப்பிய வல்லரசுகள் இப்பொழுது கோரமான போரிலே ஈடுபட்டிருக்கின்றன; அவற்றின் கவனமெல்லாம் சீனாவினின்று திரும்பியிருக்கிறது; இந்தச் சமயத்தில் சீனாவைத் தனக்கிஷ்டமானபடி ஆட்டுவித்து ஆட்படுத்திக் கொள்ள வேண்டுமென்பது.
இந்த இருபத்தோரு கோரிக்கைகளின் சாரந்தான் என்ன?
1. யுத்தத்திற்கு முன் ஷாண்டுங் மாகாணத்தில் ஜெர்மனி அனுபவித்து வந்த உரிமைகளைப் பற்றி இனி-அதாவது யுத்தம் முடிந்த பிறகு-ஜெர்மனியும் ஜப்பானும் எந்தவிதமான ஒப்பந்தத் திற்கு வந்தாலும் அதை அப்படியே அங்கீகரிப்பதாகவும், ஷாண்டுங் மாகாணத்தைச் சேர்ந்த எந்தத் துறைமுகப் பிரதேசத்தையும் வேறு வல்லரசுகளுக்குப் பராதீனப் படுத்துவதில்லை யென்றும், ரெயில்வே சம்பந்தமாகவும் வியாபார சம்பந்தமாகவும் ஜப்பானுக்குச் சில விசேஷ உரிமைகளை அளிப்பதாகவும் சீனா, முன் கூட்டியே வாக்குறுதி கொடுக்கவேண்டும்.
2. தெற்கு மஞ்சூரியாவிலும் கிழக்கு மங்கோலியாவிலும் ஏற்கனவே ஜப்பான் அனுபவித்துவந்த உரிமைகளை இன்னும் விசாலித்துக் கொடுக்கவேண்டும். அதாவது இன்னும் அதிகமான துறைமுகங்களை ஜப்பானுடைய வியாபாரத்திற்குத் திறந்துவிட வேண்டும்; புதிய ரெயில்கள் போட்டுக்கொள்ள உரிமை கொடுக்க வேண்டும். தெற்கு மஞ்சூரியாவில் ஜப்பானியப் பிரஜைகள், நிரந்தர மாக வசிக்கவும் வியாபாரஞ் செய்யவும் சுரங்கங்கள் தோண்டவும் உரிமை பெறவேண்டும். மேற்படி மஞ்சூரியா, மங்கோலிய பிரதேசங் களில் ஜப்பானைக் கலக்காமல் சீனா எந்தவிதமான அரசியல், பொருளாதார, ராணுவ ஆலோசகர்களையும் நியமிக்கக்கூடாது. வேறு மூன்றாவது வல்லரசுப் பிரஜைகள் யாருக்கும் இந்தப் பிரதேசங்களில் ரெயில் போடுதல் முதலிய உரிமைகளைக் கொடுக்கக்கூடாது.
3. மத்திய சீனாவிலுள்ள முக்கியமான இரண்டு இரும்புக் கம்பெனிகளில் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் உள்ள உரிமைகள் இன்னின்னவையென்று நிர்ணயிக்ககப்படவேண்டும்.
4. சீனா, தனது ராஜ்யக் கட்டு குலையாமலிருக்க, வேறு எந்த ஒரு வல்லரசுக்கும் துறைமுகத்தை அல்லது தீவை அல்லது வேறு எதனையும் குத்தகையாகவோ வேறு விதமாகவோ கொடுக்கக் கூடாது.
5. சீனா, தனது ராஜ்ய நிருவாக விஷயத்தில் ஜப்பானிய நிபுணர்களை ஆலோசகர்களாக நியமித்துக் கொள்ளவேண்டு மென்றும், முக்கியமான சில இடங்களில் போலீ நிருவாகத்தைச் சீனர்களும் ஜப்பானியர்களும் சேர்ந்து நடத்த வேண்டுமென்றும், யுத்த தளவாடங்கள் வாங்குகிற விஷயத்திலும் புதிய ரெயில்கள் போடுகிற விஷயத்திலும் தனக்கு அதிக சலுகைகள் காட்டப்பட வேண்டுமென்றும் ஜப்பான் விரும்புகிறது.
இந்தக் கோரிக்கைகளை ஜப்பான், சம்பிரதாயப்படி சீன அந்நிய நாட்டு மந்திரிக்கு அனுப்பாமல் நேரே பிரசிடெண்ட் யுவான் ஷி காய்க்கே அனுப்பியது. அனுப்பியதோடு, இந்தக் கோரிக்கைகளைப் பற்றிப் பேச்சுமூச்சுவிடக் கூடாதென்றும், ஒரு சமரஸ ஒப்பந்தம் ஏற்படுகிற வரையில் இவை ரகசியமாகவே வைத் திருக்கப்படவேண்டுமென்றும் ஆணையிட்டது! யுவான், தனக்கு விரோதியென்பது ஜப்பானுக்கு நன்றாகத் தெரியும். இதனாலேயே அவனை இப்படி அச்சுறுத்தித் தன்வசப்படுத்த முயன்றது. ஆனால் இவை ரகசியமாகவே இருக்கமுடியுமா? மெள்ளமெள்ள அமெரிக்காவுக்குத் தெரிந்தது; சீனாவில் எந்த ஒரு வல்லரசும் விசேஷ உரிமைகளோ சலுகைகளோ பெறக்கூடா தென்றும், எல்லா வல்லரசுகளும் ஒரேமாதிரி உரிமைகளுடனேயே வியாபாரஞ் செய்ய வேண்டுமென்றும், ஏற்கனவே 1899-ஆம் வருஷம் அமெரிக்கா வகுத்த ஒரு முறைக்கு மற்ற வல்லரசுகள் உடன்பட்டிருக் கின்றன வென்பதை ஜப்பானுக்கு ஞாபகமூட்டுவதாகவும், இப்பொழுது அதை மீறி ஜப்பான், சீனாவிடம் தனியாக ஒப்பந்தம் செய்து கொண்டு விசேஷ சலுகைகள் பெறப்பார்ப்பது கூடாதென்றும் எச்சரிக்கை செய்தது. இதற்குப் பிறகு ஜப்பான், தனது ஆசையைச் சிறிது அடக்கிக் கொண்டு, மேற்படி இருபத்தோரு கோரிக்கைகள் சம்பந்தமாகச் சீனாவுடன் பேரம் பேசுகையில், கொஞ்சம் விட்டுக் கொடுக்கிற மனப்பான்கையைக் காட்டியது. ஆனால் பிரிட்டனோ தனக்கு ஒன்றுமே தெரியாதென்று கண்ணை இறுக மூடிக்கொண்டி ருந்தது. இதை வார்சேல் சமாதான மகாநாட்டின்போது கவனிப்போம்.
இந்த இருபத்தோரு கோரிக்கைகள் சம்பந்தமாக இரண்டு நாடுகளும் - சீனாவும் ஜப்பானும்- சமரஸப் பேச்சுகள் நடத்திக் கடைசியில் 1915-ஆம் வருஷம் மே மாதம் இருபத்தைந்தாந்தேதி பலவகையான உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டன. இந்த உடன்படிக்கைகளின் மூலம், ஜப்பான் தன்னுடைய கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றிக் கொண்டது. ஓர் உடன் படிக்கையின் மூலம், ஷாண்டுங் மாகாண சம்பந்தமாக ஜெர்மனி யுடன் தான் செய்துகொள்ளப்போகிற ஒப்பந்தத்திற்குச் சீனாவின் சம்மதத்தை முன்கூட்டியே பெற்றுக் கொண்டது; மேற்படி மாகாணத்தில் இன்னும் சில துறைமுகங்களைத் தனது வியா பாரத்திற்கென்று திறந்துவிட்டுக் கொண்டது; வேறு எந்த வல்லரசுக்கும் எந்தத் துறைமுகத்தையும் திறந்து விடுவதில்லை யென்று சீனாவிடமிருந்து உறுதி வாங்கிக் கொண்டது; இவைகளுக் கெல்லாம் பிரதியாக, யுத்தம் முடிந்தபிறகு சில நிபந்தனைகளுடன் கியாசௌ பிரதேசத்தைச் சீனாவுக்குத் திருப்பிக்கொடுத்து விடுவ தாகக் கூறியது. மற்றோர் உடன்படிக்கையின் மூலம், லியோடுங் தீபகற்பம், தெற்கு மஞ்சூரியாவின் சில ரெயில்வேக்கள் முதலிய வற்றை தொண்ணுற் றொன்பது வருஷ குத்தகைக்குப் பெற்றது; தெற்கு மஞ்சூரியாவில் ஜப்பானியர்கள் நிரந்தரமாக வசிக்கவும் வியாபாரஞ் செய்யவும் உரிமை பெற்றது. அந்நியர்களை ஆலோசகர் களாக அமர்த்திக்கொள் வதில்லையென்றும், அந்நியக் கம்பெனி களுக்கு ரெயில் போட்டுக் கொள்கிற உரிமை கொடுப்பதில்லை யென்றும், தெற்கு மஞ்சூரியா முதலிய பிரதேசங்களில் ஏதேனும் அபிவிருத்தித் திட்டங்களை அமுலுக்குக் கொண்டு வருவதாயி ருந்தால் அதற்கு அந்நிய வல்லரசுகளிடமிருந்து கடன் வாங்குவ தில்லை யென்றும் சீனாவிடமிருந்து உறுதிமொழி வாங்கிக் கொண்டது.
ஐரோப்பிய யுத்தம் தொடங்கின காலத்திலேயே சீனாவைத் தன்னுடைய ஆதிக்கத்திற் குட்படுத்திக் கொள்ள இந்த ஐரோப்பிய யுத்தத்தை ஒரு சாதனமாக உபயோகித்துக் கொள்ளப் போகிறது ஜப்பான் என்று யுவான் ஷி காய் கூறினான். அடுத்த வருஷமே இது நிஜமாகி விட்டது. யுவான் ஷி காயே இதற்குச் சாட்சியாயிருக்கும்படி நேரிட்டது.
ஜப்பான், மேற்படி ஒப்பந்தங்களின் மூலம் சீனாவில் தன் காலை நன்றாக ஊன்றிக்கொண்டுவிட்ட பிறகு, தனது ராணுவ முதீபுக்களை அதிகரித்து வந்ததோடு, ஐரோப்பிய வல்லரசுகளுடன் பேரம் பேசத் தொடங்கியது. 1917-ஆம் வருஷ ஆரம்பம். ஐரோப்பிய யுத்தரங்கத்தில் நேசக் கட்சியாருடைய கை சளைத்துக்கொண்டு வந்தது. ஜெர்மனி, நீர்மூழ்கிக்கப்பல்களின் மூலம் நேசக்கட்சி யாருக்கு ஏராளமான சேதத்தை உண்டுபண்ணிக்கொண்டிருந்தது. இதனைச் சமாளிப்பதற்காக ஜப்பானின் கப்பற்படை உதவியை நாடினர் நேகக்கட்சியார். ஜப்பானும் ஒப்புக் கொண்டது. ஆனால் இதற்குப் பிரதியாக, ஜெர்மனியிடமிருந்து பறித்துத் தற்காலிகமாகத் தான் அனுபவித்து வரும் ஷாண்டுங் மாகாண சம்பந்தமான உரிமைகளென்ன, பூமத்திய ரேகைக்கு வடக்கேயுள்ள தீவுகளென்ன, இவைகளையெல்லாம் தனக்கே சாசுவதமாக ஒப்புக் கொடுத்து விட வேண்டுமென்ற கோரிக்கையை, யுத்தகளத்திற்குப்பிறகு கூடும் சமாதான மகாநாட்டில் தான் கிளத்தினால், அதனை நேசக்கட்சியார் ஆதரிக்கவேண்டு மென்று ஜப்பான் கோரியது. இதற்கு நேசக்கட்சி யாரும் - அதாவது பிரிட்டனும் பிரான்ஸும் -இணங்கினர். அதே சமயத்தில், பூமத்திய ரேகைக்குத் தெற்கே ஜெர்மானிய ஆதிக்கத்துக் குட்பட்டிருந்த தீவுகளைத் தான் சுவாதீனப்படுத்திக்கொள்வதை ஆதரிக்க வேண்டு மென்று பிரிட்டனும், நடுநிலைமையாயுள்ள சீனாவை யுத்தத்திலே நேசக்கட்சியின் பக்கம் சேருமாறு தூண்டத் துணைசெய்ய வேண்டு மென்று பிரான்ஸும் முறையே ஜப்பானைக் கேட்டன. இவையனைத் திற்கும் ஜப்பான், சரி, சரியென்று தலை யசைத்தது. இவைகளையொட்டி 1917-ஆம் வருஷம் பிப்ரவரி, மார்ச்சு மாதங்களில் ரகசியமான பலவித ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன. இங்ஙனமே இத்தலியும் அமெரிக்காவும் தனித்தனியே ஜப்பானுடன் ஒப்பந்தங்கள் செய்து கொண்டன. சீனாவில் தனக்குச் சில விசேஷ உரிமைகளுண்டு என்பதை இப்படி முன்னெச்சரிக்கையாக திரப்படுத்திக்கொண்டுதான் ஜப்பான் பின்னாடி பாரி சமாதான மகாநாட்டில் வந்து உட்கார்ந்து கொண்டது. இஃது இப்படியிருக்க, முதலில் நடுநிலைமை வகித்த சீனா பின்னர் எப்படி யுத்தத்திலே பிரவேசித்ததென்பதைக் கவனிப்போம்.
யுத்த ஆரம்ப காலத்திலேயே சீனாவை யுத்தத்திலே இழுத்து விட ஐரோப்பிய வல்லரசுகள் முயன்றன. ஆனால் ஜப்பான் இந்த முயற்சியை எதிர்த்து வந்தது. சீனா யுத்தத்தில் பிரவேசித்து மற்ற வல்லரசுகளுடன் சம அந்தது பெற்றுவிடுமானால், பின்னாடி அந்த வல்லரசுகள் ஆதரவு அதற்குக் கிடைத்துவிடுமென்றும், இதனால் தன்னிஷ்டப்படி சீனாவைச் சுரண்டுவது அசாத்தியமாகி விடுமென்றும் ஜப்பான் கருதியது. உதாரணமாக 1915-ஆம் வருஷம் நவம்பர் மாதம், டோக்கியோ நகரத்திலிருந்த பிரிட்டிஷ்- பிரெஞ்சு-ருஷ்ய தானீகர்கள் ஒன்றுகூடி, சீனா, நேசக்கட்சியுடன் சேர்ந்து கொள்ள வேண்டுமென்று தாங்கள் செய்கிற பிரயத்தனத்தில் ஜப்பானும் சேர்ந்து கொள்ள வேண்டுமென்று ஜப்பானிய அரசாங்கத்திற்கு ஒரு கோரிக்கை விடுத்தார்கள். அதற்கு ஜப்பானிய அரசாங்கத்தின் சார்பாக வைகவுண்ட் இஷி 1 என்பவன் பின்வருமாறு பதில் கூறினான்:- சீனாவில் நடைபெறுகிற நடவடிக்கைகள் யாவும் தனக்கு முக்கியமானவையென்று ஜப்பான் கருதுகிறது. அங்கு நம் முடைய பிடியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருப்பது அவசிய மாகும். யுத்தத்திலே கலந்துகொள்ளக்கூடிய மாதிரி திறமையுள்ள ஒரு ராணுவம் அங்கே-சீனாவில்-ஏற்படுவதை ஜப்பான் சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியாது; அப்படியே நாற்பது கோடி (சீன) மக்களின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஒரு விடுதலை ஏற்படுமானால் அதனையும் மனச்சஞ்சலமின்றி நாம் கவனித்து கொண்டிருக்க முடியாது. ஜப்பான் இப்படி எதிர்ப்புக் காட்டவே, நேசக் கட்சியினர், சீனாவை யுத்தத்தில் இழுத்துவிடும் முயற்சியி லிருந்து ஒதுங்கிவிட்டனர். 1917-ஆம் வருஷம் ஆகட் மாதம்வரை சீனா, தனது நடுநிலைமைக் கொள்கையை ஒழுங்காக அனுசரித்து வந்தது. தானே தனித்து யுத்தத்திலே பிரவேசித்து, கிடைத்த மட்டில் லாபம் சம்பாதிக்கிற துணிச்சலோ மனமோ இதற்கு இல்லை. சேர்ந்தாற்போல் இதனுடைய பொக்கிஷமும் வறண்டு கிடந்தது
1917-ஆம் வருஷத் தொடக்கத்தில், அமெரிக்கா, யுத்தத்தில் நேச நாடுகள் பக்கம் சேர்ந்து கொண்டது. இதற்குப் பிறகு அது, தன்னைப் போல் இதுகாறும் நடுநிலைமை வகித்துவந்த எல்லா நாடுகளையும் யுத்தத்தில் இறங்குமாறு தூண்டியது. சீனாவும் இந்தத் தூண்டு தலுக்குட்பட்டது. அப்பொழுது சீனாவில், அமெரிக்காவின் செல்வாக்கு அதிகம். இதை ஆதாரமாகக் கொண்டு அஃது - அமெரிக்கா - ஜெர்மனியின் சப்மரீன் அட்டூழியங்களைக் கண்டித்து அதற்கு - ஜெர்மனிக்கு-ஓர் எச்சரிக்கை விடுக்கும்படி சீனாவை வற்புறுத்தியது. இதன்படி சீனா 1917-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் ஒன்பதாந் தேதி, ஜெர்மனிக்கு ஓர் எச்சரிக்கைக் கடிதம் விடுத்தது. பதில் இல்லை. பின்னர் மார்ச் மாதம் பதினான்காந் தேதி அதன் தொடர்பை அறுத்துக் கொண்டுவிட்டது. இப்படி அறுத்துக் கொண்டு விட்டால் மட்டும் போதுமா? யுத்தம் தொடுத்திருப்பதாக அறிக்கைவிட வேண்டாமா? இந்த அறிக்கை விடுக்கும்படி சீனாவைத் தூண்டுவதற்கு வல்லரசுகள் சுமார் ஐந்து மாத காலம் நயத்தையும் பயத்தையும் உபயோகிக்க வேண்டியதாயிற்று. சீனா வின் மூலப் பொருள்களும் கூலியாட்களும் நேச நாட்டினருக்கு அவசியமாகவும் அவசரமாகவும் தேவையாயிருந்தன. சீனாவோ, இவைகளையெல்லாம் கொடுத்து, தானும் யுத்தத்தில் இறங்குவதாயி ருந்தால் தனக்கு என்ன சாதகம் கிடைக்கப்போகிறதென்று கேட்டது. சீனா இப்படித் தங்களுடைய நெருக்கடியில் பேரம் பேசுவதை நேச வல்லரசுகளின் ராஜதந்திரிகள் விரும்பவில்லை. ஆனால் இப்படிக் கேட்பதில் நியாயமிருக்கிறதென்பதை இவர்களால் மறுக்கவும் முடியவில்லை. என்றாலும் முன்னாடி உதவி செய்; பின்னாடி உனக்கு நியாயம் தேடித் தருகிறோம் என்கிற தோரணை யிலே இவர்கள் பேசினார்கள். இவர்களுக்கு அனுசரணையாகச் சீனாவிலேயே, யுத்தத்திலே சேரவேண்டுமென்றும் சேரவேண்டா மென்றும் இரண்டு கட்சிகள் தோன்றிவிட்டன. ஜப்பானும் இந்தச் சந்தர்ப்பம் பார்த்து சீனா யுத்தத்தில் பிரவேசிப்பதைப்பற்றித் தனக்கு ஆட்சேபமில்லை யென்று சங்கேதமாகத் தெரிவித்தது. அதுதான், தனக்குக் கிடைக்கவேண்டிய உரிமைகளையெல்லாம் ஏற்கனவே ஒப்பந்தங்கள் மூலம் வல்லரசுகளிடமிருந்து பெற்றுக்கொண்டு விட்டதே? மற்றும், சீனாவை யுத்தத்திலே இறங்க விட்டுவிட்டு, அங்கே உள்நாட்டுச் சச்சரவுகளைக் கிளப்பிவிட அஃது உத்தேசித்ததென்று சொல்லப்படுகிறது. எப்படியோ நேசக் கட்சியினருடைய ராஜதந்திரம் வென்றது. 1917-ஆம் வருஷம் ஆகட் மாதம் பதினான்காந் தேதி சீனா, நேசக் கட்சியின் சார்பாக யுத்தத்தில் பிரவேசித்தது. இதன் பயனாக, நேசக் கட்சியினருக்குச் சீனாவிலிருந்து அதிகமான யுத்த மூலப் பொருள்களும் கூலியாட்களும் கிடைத்தனர். மற்றும், சீனா நடு நிலைமை வகித்த காலத்தில் அதன் துறைமுகங்களில் தஞ்சம் புகுந்திருந்த கப்பல்கள் யாவும் இப்பொழுது நேசக் கட்சியாருடைய உபயோகத்திற்கு வந்தன. நேசக் கட்சியினரும், சீனா, யுத்தத்திலே சேர்ந்ததற்குச் சன்மானம் கொடுப்பதுபோல். பாக்ஸர் ஒப்பந்தத்தின் பயனாக ஏற்பட்ட வியாபார வரி விகிதங்களில் சில மாற்றங்கள் ஏற்படுத்திக் கொடுத்தனர்; ஒப்பந்தத் துறைமுகங்களில் ஜெர்மானி யர்களும் ஆதிரியர்களும் வசித்து வந்த பிரதேசங்களின் நிரு வாகத்தைச் சீன அரசாங்கத்தின் வசமே திருப்பி ஒப்புவித்தனர். இவை யாவும், சீனா யுத்தத்தில் பிரவேசித்தவுடன் ஏற்பட்ட விளைவுகள்.
யுத்தம் நடைபெற்று நேசக்கட்சியினர் பக்கம் வெற்றி ஏற்பட்டது. 1919-ஆம் வருஷ ஆரம்பத்தில் பாரிஸில் சமாதான மகாநாடு கூடியது. இந்த மகாநாடு கூடுகிற காலத்தில் சீனாவில், வடக்கே பீக்கிங்கில் ஓர் அரசாங்கமும், தெற்கே காண்ட்டனில் மற்றோர் அரசாங்கமுமாக நடை பெற்றுக் கொண்டு வந்தன என்பதை நேயர்களும் ஞாபகப் படுத்திக் கொள்ளவேண்டும். மற்றும், பீக்கிங் அரசாங்கம் ஜப்பானின் கைக் கருவியாக இருந்த தென்பதையும், காண்ட்டன் அரசாங்கம் ஜப்பானுக்கு விரோதியாக இருந்ததென்பதையும் இங்கே நாம் மறந்து விடக்கூடாது. இப்படி இரண்டும் முரண்பட்ட கொள்கையுடைன வாயிருந்தாலும் சமாதான மகாநாட்டிற்குச் சீனாவிலிருந்து பிரதிநிதி களை அனுப்புகிற விஷயத்தில் ஏதோ ஒருவித சமரஸ ஏற்பாடு செய்து கொண்டு, இரண்டு அரசாங்கங்களும் சேர்ந்தாற்போல் ஒரு பிரதிநிதி கோஷ்டியைத் தெரிந்தெடுத்தனுப்பின. இந்தக் கோஷ்டியினர் கூடிய வரையில் ஒற்றுமையுடனும் தைரியமாகவும் சீனாவின் உரிமை களுக்காகப் பாடுபட்டனர் என்று சொல்லவேண்டும்.
சமாதான மகாநாட்டில் சீனா எதிர்பார்த்ததெல்லாம் வெறும் நியாயத்தைத்தான். ஆனால் அதுமட்டும் அதற்குக் கிடைக்கவில்லை. ஷாண்டுங் மாகாண சம்பந்தமான உரிமைகள், கியாசௌ பிரதேசம் முதலியனவெல்லாம் தனக்கே திரும்பச் சேரவேண்டுமென்று சீனா கூறியது. ஜெர்மனிக்கு விரோதமாக எப்பொழுது தான் யுத்தந் தொடுத்ததோ, அப்பொழுதே, அதனுடன் சமாதானமாயிருந்த காலத்தில் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் யாவும் ரத்தாகிவிட்டதாகத்தானே அர்த்தம்? எனவே மேற்படி ஷாண்டுங் மாகாண சம்பந்தமாக ஜெர்மனியுடன் செய்து கொண்ட பழைய ஒப்பந்தங்கள் யாவும் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகக் கருதிக்கொண்டு, மேற்படி உரிமைகளையும் பிரதேசத்தையும் தன்னிடம் ஒப்படைக்கவேண்டியதே நியாயம் என்றெல்லாம் வாதம்செய்தது. கேட்பார் யார்? மேற்படி ஷாண்டுங் மாகாண சம்பந்தமாக, யுவான் ஷி காயுடன் 1915-ஆம் வருஷம் மே மாதம் இருபத்தைந்தாந் தேதி1 தான் செய்து கொண்ட ஒப்பந்தங்கள், 1917-ஆம் வருஷம் பிப்ரவரி-மார்ச்சு மாதங்களில் தனக்கும் ஐரோப்பிய வல்லரசுகளுக்கும் ஏற்பட்டிருக்கிற ரகசிய ஒப்பந்தங்கள், 1918-ஆம் வருஷம் செப்டம்பர் மாதம், பீக்கிங் அரசாங்கத்தின் பிரதம மந்திரி துவான் சீ ஜூயியுடன் செய்துகொண்ட ஒப்பந்தம்2 முதலியவைகளை யெல்லாம் ஜப்பான் எடுத்துக்காட்டி, தனது உரிமைகளை வற்புறுத்தியது. இந்தச் சந்தர்ப்பத்தில், லாயிட் ஜார்ஜ்3, ஜப்பானின் இருபத்தோரு கோரிக்கைகளைப் பற்றி இதுவரையில் தான் கேள்விப்படவே இல்லையென்று வியப்புக்காட்டிக் கூறினான்!
மகாநாடு ஒருவாறு முடிந்தது. சமாதான ஒப்பந்தம் தயாரிக்கப் பெற்றது. ஷாண்டுங் மாகாணத்தில் ஜெர்மனி முன்னர் அனுபவித்து வந்த உரிமைகள் யாவற்றையும் பறித்து ஜப்பானுக்குக் கொடுத்து விடுவதென்று ஐரோப்பிய வல்லரசுகள் தீர்மானித்து விட்டிருந்தன. இனி யார் அதைத் தடுக்கமுடியும்? ஜெர்மனி, தனது மேற்படி உரிகைளை (தன்னிச்சையாக?) ஜப்பானுக்கு விட்டுக் கொடுக்கிற தென்றும், அவைகளை இனி ஜப்பான் அனுபவித்து வருவதென்றும்1 சமாதான ஒப்பந்தத்தில் சில ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டன. யுத்தத்தில் பிரவே சித்ததற்காக, சீனாவுக்கு ஏதோ சில அனுகூலங்கள் செய்ததாக இருக்க வேண்டுமல்லவா? (1) பாக்ஸர் ஒப்பந்தப் பிரகாரம் ஜெர் மனிக்கு சீனா செலுத்தவேண்டிய நஷ்ட ஈட்டுத் தொகை முதலியன தள்ளுபடி செய்யப்பட்டன; (2) சீனாவில் ஜெர்மன் அரசாங்கத் திற்குச் சொந்தமாயிருந்த பொதுச் சொத்துக்கள் யாவும் சீனா விடமே திருப்பி ஒப்படைக்கப்பட்டன; (3) ஜெர்மானியப் பிரஜை களையும் ஜெர்மானியக் கப்பல்களையும், யுத்தம் நடைபெறுகிற வரையில் சீனாவில் பிடித்து வைத்திருந்த தல்லவா. அதனால் ஏற்படக்கூடிய பொறுப்புக்களினின்றும் சீனா விலக்கப்பட்டு விட்டது; (4) குப்ளாய்கான் காலத்தில் பீக்கிங் நகரத்தில் தாபிக்கப் பட்ட வான சாதிர ஆராய்ச்சி சம்பந்தமான கருவிகளை, பாக்ஸர் கலகத்திற்குப் பிறகு, ஜெர்மானியர்கள், தங்கள் நாட்டுக்கு எடுத்துக் கொண்டு போயிருந்தார்கள்; அதை இப்பொழுது சீனாவுக்குத் திருப்பிக் கொடுத்துவிடவேண்டும். வார்சேல் சமாதான ஒப்பந்தத் தினால் உலகத்திற்கு ஏதேனும் ஒரு நன்மை ஏற்பட்டிருக்கிற தென்றால். அஃது, இந்த வான சாதிர ஆராய்ச்சி சம்பந்தமான கருவிகளைச் சீனாவுக்குத் திருப்பிக்கொடுத்துவிட வேண்டுமென்று சொன்னது தான் என்று பெர்ட்ராண்ட் ரஸல்2 என்ற அறிஞன் கூறுகிறான்.
சீனா சம்பந்தப்பட்ட இந்த மாதிரியான ஷரத்துக்களடங்கிய சமாதான ஒப்பந்தத்தைச் சீனப் பிரதிநிதிகள் முன் நீட்டினார்கள், மகாநாட்டின் சூத்திரதாரிகளான லாயிட் ஜார்ஜும் கிள மென்ஸோவும்3. ஷாண்டுங் மாகாண சம்பந்தமான உரிமைகளைப் பற்றிச் சீனப் பிரதிநிதிகள் மறுபடியும் மறுபடியும் வற்புறுத்தி னார்கள். ஜப்பானுடன் நேராகப் பேசிக்கொள்ளுங்கள் என்று வாய் மொழியாகப் பதில் வந்தது. சீனாவை யுத்தத்திலே இழுத்துவிட்டு, அதன் உரிகைகளுக்குப் பங்கம் ஏற்படாமல் பாதுகாப்பதாகச் சொன்ன அமெரிக்காவின் பிரசிடெண்ட் வில்ஸனோ4 மௌனஞ் சாதித்து விட்டான். தன்னுடைய சர்வ தேச சங்க மணல்கோட்டை எங்கே இடிந்து விழுந்துவிடப் போகிறதோ என்ற கவலை அவனுக்கு. ஏனென்றால், சீனாவில் தாங்கள் கோரும் உரிமைகள் அங்கீகரிக்கப் படாவிட்டால், சர்வ தேச சங்கத்தில் தாங்கள் சேர்ந்து கொள்ளப் போவதில்லையென்று க்ஷணத்திற்கு க்ஷணம் பயமுறுத்திக் கொண்டி ருந்தார்கள் ஜப்பானியப் பிரதிநிதிகள். கடைசியில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்படியான நிலைமை வந்தது. ஷாண்டுங் மாகாண சம்பந்தமான ஷரத்தைத் தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைக் கண்டு, ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாகச் சீனப் பிரதிநிதிகள் கூறினார்கள். அந்த மாதிரி ஒரு நிபந்தனையைப் போட்டுக் கொண்டு கையெழுத்திட நேச வல்லரசுப் பிரதிநிதிகள் இடங் கொடுப்பார்களா? அதுவும் வெற்றி வெறிமுற்றியிருக்கிற தருணத்தில்? ஜெர்மானியர் பணிந்திருக்கிற சமயத்தில்? எவ்வித நிபந்தனையு மின்றி, பரிபூரண சம்மதம் தெரிவித்துக் கையெழுத்துப்போட சீனப் பிரதிநிதிகள் மறுத்துவிட்டார்கள். வார்சேல் ஒப்பந்தம் சீனப் பிரதிநிதிகளின் கையெழுத்தில்லாமலே சமாதான தேவதையின் சந்நிதானத்தில் வைக்கப் பட்டது. சீனப் பிரதிநிதிகளுக்கு இந்தத் தைரியத்தையும் தன்மதிப்பு உணர்ச்சியையும் ஊட்டியவர்கள் சீனாவின் இளைஞர்கள்! பள்ளிக் கூடத்திலே படிக்கிற மாணாக்கர்கள்!
சமாதான மகாநாட்டில் சீனப் பிரதிநிதிகளின் கோரிக்கைகள் மறுக்கப்பட்டுவிட்டன என்ற செய்தி 1919-ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் முப்பதாந்தேதி சீனாவுக்கு எட்டியது. வல்லான் வகுத்ததே வாய்க்காலாகி விட்டதே; நியாயம் என்பது ஒன்றில்லையா? என்று கேட்டுக்கொண்டு சீன இளைஞர்கள் சினந்தெழுந்தார்கள். இவர்களுடைய கோபம் பீக்கிங் அரசாங்கத்தின்மீது திரும்பியது. ஏனென்றால் இந்த அரசாங்கந்தான் ஜப்பானின் கையாட்டிப் பொம்மையாக இருந்துவந்திருக்கிறதென்றும், இப்பொழுது சமாதான மகாநாட்டில் ஐரோப்பிய வல்லரசுகள் செய்கிற எந்த முடிவுக்கும் தலையசைக்கக் காத்துக்கொண்டிருக்கிற தென்றும் இவர்களுக்குத் தெரியும். எந்த இடத்திலே பிற்போக்குச் சக்தி வேரூன்றிக் கொண்டிருக்கிறதோ அந்த இடத்திலிருந்துதான் முற்போக்கான சக்திகள் கிளம்பும் என்ற சரித்திர உண்மைக் கிணங்க பீக்கிங் நகரத்திலுள்ள இளைஞர்கள்தான் முதன் முதலாகக் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தார்கள்.
1919-ஆம் வருஷம் மே மாதம் நான்காந்தேதி, பீக்கிங் நகரத்திலுள்ள சர்வகலாசாலை மாணாக்கர்களில் சுமார் மூவாயிரம் பேரடங்கிய பொதுக் கூட்டமொன்று நடைபெற்றது. அதில், சீனா, அலட்சியப் படுத்தப் பட்டதைப் பற்றிக் கண்டித்து ஒரு தீர்மானம் நிறைவேறியது. இளைஞர் களுக்கு ஒரே உற்சாகம். இந்த உற்சாக மேலீட்டால் இவர்கள் ஒன்று திரண்டு, பீக்கிங் அரசாங்கத்து மந்திரிகளில் சிலருடைய வாசதலங் களுக்கு ஊர்வலமாகச் சென்று உள்ளே புகுந்து அங்கிருந்த தட்டுமுட்டுச் சாமான்களையெல்லாம் தவிடுபொடியாக்கினார்கள். ஒரு மந்திரியின் மாளிகை நெருப்புக் கிரையாயிற்று. ஜப்பானுக்குச் சீனாவை பந்தகப்படுத்தி விடுகிற கைங்கரியத்தைச் செய்து வந்த ஒரு மந்திரி, நன்றாகத் தாக்கப்பட்டு விட்டான். நகரத்தில் ஒரே அமளிகுமளி. எந்த அரசாங்கந் தான் இதைச் சும்மா பார்த்துக் கொண்டிருக்கும்? அஃது எவ்வளவு பலவீனமுள்ள அரசாங்கமாகத்தான் இருக்கட்டுமே? கலகத்திற்குக் காரணர்களென்று கருதப்பட்ட இளைஞர் சிலரைக் கைது செய்தது. இது பீக்கிங் வாசிகளின் ஆத்திரத்தைக் கிளப்பியது.
இந்த ஆத்திரம் நாடெங்கணும் பரவியது. மாணாக்கர்கள், பள்ளிக் கூடங்களிலிருந்து வெளியே வந்து விட்டார்கள். தொழி லாளர்கள், வேலைக்குச் செல்ல மறுத்துவிட்டார்கள். வியாபாரிகள், தங்கள் கடை களை மூடிவிட்டார்கள். ஜப்பானியச் சரக்குகளை, எல்லா ஜனங் களும் சேர்ந்து பகிஷ்கரித்தார்கள்; பகிஷ்கரித்ததோடு மட்டு மல்லாமல், அகப்பட்ட ஜப்பானியச் சாமான்களைத் தீக்கிரையாக் கினார்கள்; ஜப்பானியச் சரக்குகளை வைத்து வியாபாரஞ் செய்கிற சீனர்களைத் தேசத் துரோகிகளென்று கூறி அவமானப்படுத்தினார்கள். ஜப்பானியச் சரக்குகளின் இறக்குமதி குறைந்து விட்டது. எங்குப் பார்த்தாலும் கலகங்களும் குழப்பங்களும் அதிகரித்தன. சமுதாய வாழ்வு சீர்குலைந்து விட்டது. இந்த நிலையில், ரெயில்வே தொழிலாளர்கள். தாங்களும் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக பீக்கிங் அரசாங்கத் திற்கு அறிவித்தார்கள். இந்த அறிவிப்புக்கு அது பயந்துவிட்டது. பணிய வேண்டியதைத் தவிர வேறு வழியென்ன? இதுகாறும் ஜப்பானுக்கு உடந்தையாயிருந்த மந்திரிசபை ராஜீநாமா செய்துவிட்டது. புதிதாக அமைந்த மந்திரிசபையானது, சமாதான மகாநாட்டுக்குச் சென்றிருந்த சீனப்பிரதிநிகளை, சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டா மென்று உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கிணங்கியே சீனப் பிரதிநிதிகள், சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டார்கள். இப்படி இவர்கள் மறுத்து, சீனாவின் தன் மதிப்பைக் காப்பாற்றியதற்குக் காரணமாயிருந்த இந்த மாணாக்கர்களின் கிளர்ச்சி மே மாதத்து நாலாந்தேதி இயக்கம்1 என்ற பெயருடன் சீன தேசீய சரித்திரத்தில் புனிதமான ஓர் இடம் பெற்றிருக்கிறது.
சமாதான ஒப்பந்தத்தில் சீனப் பிரதிநிதிகள் கையெழுத்திட மறுத்துவிட்டது தங்களுக்கு ஒரு வெற்றியென்று கொண்டு இளைஞர்கள் திருப்தியடைந்துவிடவில்லை; தங்களிடத்தில் எத்தகைய மகத்தான சக்தி இருக்கிறதென்பதைத் தெரிந்துகொள் வதற்குரிய ஒரு சந்தர்ப்பமாகவே இதனைக் கருதினார்கள்; இந்த சந்தர்ப்பத்தைத் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டார்கள். இது விஷயத்தில் இவர்கள் தீர்க்கதரிசிகள் போலவே நடந்துகொண்டார் களென்று சொல்லவேண்டும்.
இதுவரையில் இளைஞர்கள், தங்கள் பள்ளிக்கூடமுண்டு பாடப் புத்தங்களுண்டு என்ற அளவோடுதான் இருந்தார்கள்; இந்த அளவுக்குட் பட்டே உலகத்தைப் பார்த்தார்கள். சமாதான ஒப்பந்தத் திற்கு விரோதமான மேற்படி கிளர்ச்சியில் ஈடுபட்ட காலத்தில்தான், கிராம விவசாயிகள், நகரத் தொழிலாளர்கள் முதலிய சமுதாயத்தின் பலதரத்தினரோடும் பழகுகிற சந்தர்ப்பம் இவர்களுக்கு ஏற்பட்டது. விரிந்த உலகம் இவர்கள் அகக் கண்முன்னே காட்சியளித்தது. ஜனசக்தியின் மகத்துவத்தை உணர்ந்தார்கள். ஆனால் இந்த ஜனசக்தி வெறும் பிண்டமாக வல்லவோ கிடக்கிறது? இதனை ஜீவன் நிறைந்த ஒரு சக்தியாகத் துடிதுடிக்கச் செய்ய வேண்டாமா? அப்படிச் செய்வதற்கு முதல்படியாக, பொதுஜனங்களுக்குப் புதிய முறையில் கல்வியறிவைப் புகட்டுவது அவசியம். எனவே இளைஞர்கள் மேற்படி கிளர்ச்சி ஓய்ந்த பிறகு, இந்தத் தொண்டிலே இறங்கினார்கள். முடியரசிலிருந்து குடியரசுக்கு மாறிவிட்ட தனாலேயே சீனாவுக்குக் கதிமோட்சம் ஏற்பட்டுவிடாதென்றும், காலவேகத்தோடு ஒட்டிப் போனால்தான் உலக வல்லரசுகளிலே ஒன்றாக வாழமுடியு மென்றும் ஜனங்களுக்கு எடுத்துக் காட்டுவது இவர்களுடைய தொண்டின் முக்கிய அமிசமாயிருந்தது. இதற்காக ஜனங்களுக்குப் புரிகிற பாஷை யிலே அவர்களுக்குத் தேவையான விஷயங்களைக் கொடுத்தார்கள். இலக்கியத்தில் ஒரு புது மலர்ச்சி ஏற்பட்டது. மேனாட்டு அறிஞர் களான டால்டாய், பைரன், ஷெல்லி, மார்க், குரோபோட்கின்1 முதலியோருடைய நூல்களெல்லாம் மொழிபெயர்த்து வெளியிடப் பெற்றன. நாடகம், ஓவியம், காவியம் முதலிய துறைகளிலும் புது மலர்ச்சியின் வாசனை வீசியது. புதுப்புது கவிஞர்கள் தோன்றி , தங்கள் கவிதைகளின் மூலம் ஜனங்களுக்கு அறிவையும் உணர்ச்சியையும் குழைத்து ஊட்டினார்கள்.
சில இளைஞர்கள், படித்த படிப்பு போதுமென்று புத்தங்களை யெல்லாம் கட்டிப் போட்டுவிட்டு, தேசீய ராணுவத்தில் சேர்ந்து கொண்டார்கள். ஒரு தேசத்தின் விமோசனத்திற்கு நூலறிவு மட்டும் துணை செய்யாது, தேக பலமும் அவசியமென்பதை இவர்கள் உணர்ந்தே இப்படிச் செய்தார்கள்.
இன்னுஞ் சில இளைஞர்கள், சென்ற அத்தியாயத்தில் கூறியபடி ருஷ்யாவுக்குச் சென்று திரும்பி வந்து, சீனாவில் பொது வுடைமை இயக்கம் பரவுவதற்குக் காரணர்களாயிருந்தார்கள்.
இந்தப் புதுமலர்ச்சி இயக்கத்தின்போது இளைஞர்கள் செய்த சேவையை ஓர் அறிஞன் பின்வருமாறு வருணிக்கிறான்:-
இளைஞர்கள் முதலில் தேசத்தைக் கிளப்பி விட்டார்கள்; வார்சேல் ஒப்பந்தத்தில் (சீனப்பிரதிநிதிகள்) கையெழுத்திடாத படி தடுத்தார்கள்; ஜப்பானியச் சரக்குகளை பகிஷ்கரிக்கற விஷயத்தில் வியாபாரிகளுக்குத் துணையாக நின்றார்கள். இவையெல்லாம் நிறைவேறின பிறகு, இவர்கள், தங்களை விடக் குறைவான கல்வியறிவு பெற்றிருக்கிற சகோதர சகோதரிகளுக்கு விழிப்பை உண்டுபண்ணுகிற விஷயத்திலே தங்கள் சக்திகளைத் திருப்பினார்கள். உதாரணமாக, உள்நாட்டு வெளிநாட்டு விவகாரங்கள் ஜனங்களுக்கு நன்றாகப் புரிகிற மாதிரி நூல்கள் பல வெளியிட்டார்கள்; பிரசங்கங்கள் செய்தார்கள்; தங்களுடைய சொந்தப் பணத்தைப்போட்டு ஆங்காங்கு இலவசப் பள்ளிக்கூடங்கள் தாபித்தார்கள்; தாங்களே கல்வியும் போதித்தார்கள். இவர்களுடைய இந்த அற்புதமான தியாகத்தின் பயனாகச் சுமார் ஐம்பதினாயிரம் குழந்தைகள் கல்வி அறிவு பெற்றருக்கின்றன.
பொதுவாக இந்தப் புதுமலர்ச்சி இயக்கமானது, பொது அறிவை, பொதுஜனங்களுக்கு பொதுவான பாஷையில் வழங்கியது. சீனாவில் எத்தனையோ புரட்சிகள் உண்டாயிருந்தபோதிலும், அவை, இந்தப் புது மலர்ச்சி இயக்கத்தின் பரிணாமமாக ஏற்பட்ட எண்ணப்புரட்சிக்கு ஈடாகா என்பதே அறிஞர்களின் அபிப்பிராயம்.
பாரி சமாதான மகாநாட்டில் சீனாவைக் கைவிட்டு விட்டதல்லவா அமெரிக்கா? இதற்குப் பிரயாச்சித்தம் செய்து கொள்கிற மாதிரியாக 1921-ஆம் வருஷம் நவம்பர் மாதம் பதினோ ராந்தேதி வாஷிங்க்டன் நகரத்தில்1 ஒரு மகாநாட்டைக் கூட்டியது. வல்லரசுகளின் கடற்படை பலத்தைக் குறைத்து அதன்மூலம் உலகத்தில் இனி யுத்தங்கள் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டே இந்த மகாநாடு கூட்டப்படுகிறதென்று காரணம் சொல்லப்பட்டது. ஆனால் இந்த ஒரு காரணத்திற்காகவே மகாநாடு கூட்டப்பட வில்லை. பசிபிக் பிரதேசத்தில் ஜப்பானுக்கு அதிக செல்வாக்கு ஏற் பட்டுக் கொண்டு வருவதை அமெரிக்கா அவ்வளவாக விரும்ப வில்லை. அப்படி வளர்ந்துவருவது, தன்னைக் கட்டாயம் பாதிக்கு மென்றும், அடுத்து ஒரு யுத்தம் ஏற்படுமானால் அது நிச்சயமாக பசிபிக் பிரதேசத்தில்தான் நடைபெறுமென்றும், அப்பொழுது, பலவீனப் பட்டுக்கிடக்கிற சீனா, யுத்த பூமியாகக் கூடுமென்றும் அது நன்றாக உணர்ந்திருந்தது. அந்த நெருக்கடி ஏற்படுவதற்குமுன்னர், பசிபிக் பிரதேசத்தில் சிரத்தையுள்ள வல்லரசுகள் கலந்து பேசி ஒருவித சமரஸ ஏற்பாட்டுக்கு வருவது நல்லதென்றும், சீனாவை ஒரு தேசத்தின் தனிப்பட்ட சுரண்டலுக்கு விடாமல் தடுத்து, அங்கு எல்லாரும் சென்று ஒரே மாதிரியான முறையில் வியாபாரஞ் செய்ய வேண்டு மென்ற தனது நீண்டகாலக் கொள்கையை மீண்டும் வலியுறுத்திக் காட்டவேண்டு மானால், அதற்கு முதற்படியாகச் சீனாவின் பரி பூரண சுதந்திரத்தை, வல்லரசுகளைக் கொண்டு அங்கீகரிக்கச் செய்ய வேண்டுமென்றும், இப்படிச் செய்வதன் மூலம் பொதுவாக உலகத் திலே-சிறப்பாகக் கீழ்நாட்டில் - மற்றொரு கோர யுத்தம் உண்டா காமல் தடுப்பது சாத்திய மாகுமென்றும் அஃது -அமெரிக்கா-கருதியது. இதன் விளைவுதான் மேற்படி வாஷிங்க்டன் மகாநாடு.
இந்த மகாநாட்டுக்கு வருமாறு பசிபிக் பிரதேசத்தில் சம்பந்தப் பட்டிருந்த பிரிட்டன், பிரான் இத்தலி, ஹாலந்து, போர்த்துகல், பெல்ஜியம், சீனா, ஜப்பான் ஆகிய எல்லா நாடுகளுக்கும் அழைப்பு அனுப்பப்பெற்றது. ஆனால் சோவியத் ருஷ்யா மட்டும் அழைக்கப் படவில்லை. ருஷ்யாவைப்பற்றி அந்தக் காலத்தில் மேற்கித்திய வல்லரசுகள் எந்தவிதமான மனப்பான்மை கொண்டிருந்தன என்பதற்கு இஃதொரு சிறந்த உதாரணம்.
வாஷிங்க்டன் மகாநாடு கூடப்போகிறது, அதில் சீனாவின் உரிமைகள் சம்பந்தமான பிரச்சினைகள் வாதத்திற்கு வரப்போகின்றன என்று தெரிந்ததும், ஜப்பான் ஷாண்டுங் மாகாண சம்பந்தமாகச் சீனாவுடன் நேரே சமரஸம் பேசி ஒருவித முடிவுக்கு வரப்பார்த்தது. வல்லரசுகளின் முன்னிலையில் தன்னுடைய ராஜதந்திர சாயம் வெளுத்துவிடப் போகிறதேயென்ற கவலை இதற்கு. அமெரிக்கா வின் அநுதாபமெல்லாம் சீனாவின் பக்கம் இருக்கிறதென்றும், தன் பக்கம் இல்லையென்றும், இதற்குத் தெரியும். சீனாவிலும் தனக்கு விரோதமான எண்ணம் வளர்ந்து வருவதை இஃது உணர்ந்திருந்தது. இதனால்தான் தனித்த முறையில் ஒரு தினுசாக சமரஸம் செய்து கொண்டுவிட முயன்றது. ஆனால் சீனா இதற்கு இணங்கவில்லை. ஷாண்டுங் மாகாண சம்பந்தமான உரிமைகளை எவ்வித நிபந்தனை யுமின்றி ஜப்பான் விட்டுக்கொடுத்து விடவேண்டுமென்ற ஒரே உறுதி யுடனிருந்தது. சீனாவுக்குச் சுயமரியாதை உணர்ச்சி ஏற்பட்டுவிட்ட தென்பதற்கு இஃதொரு நல்ல அறிகுறி.!
வாஷிங்க்டன் மகாநாடு, வல்லரசுகளின் கடற்படை பலத்தை எந்த விகிதாசாரப்படி நிர்ணயித்தது, அதன் மூலமாக மற்றொரு யுத்தம் ஏற்படாமல் எந்த அளவுக்குத் தடுத்தது என்ற விஷயங்களைப் பற்றிய ஆராய்ச்சி இங்குத் தேவையில்லை. சீனாவைப் பொறுத்த மட்டில் என்ன நடவடிக்கைகள் எடுத்துக் கொண்ட தென்பதைப் பற்றி மட்டும் இங்குக் கவனிப்போம்.
1. அமெரிக்காவும் பிரிட்டனும் சேர்ந்து செய்த மத்திய தத்தின்பேரில், கியாசௌ பிரதேசத்தையும் ஷாண்டுங் மாகாண ரெயில்வே சம்பந்தமான உரிமைகள் முதலிய வற்றையும் சீனாவுக்கே திருப்பிக் கொடுத்துவிட ஜப்பான் சம்மதித்தது. இதற்கு ஈடாக சீனா சுமார் மூன்று கோடி ரூபாயைப் பதினைந்து வருஷத் தவனையில் ஜப் பானுக்குக் கொடுக்கவேண்டுமென்றும், இந்தத் தொகையை ஜப்பானிட மிருந்தே கடனாகப் பெற்றுக்கொள்ள வேண்டு மென்றும் தீர்மானிக்கப் பட்டன. மேற்படி பிரதேசத்தில், தான் எவ்வித விசேஷ பாத்தியதைகளையும் கொண்டாடுவதில்லை யென்று ஜப்பான் உறுதி கூறியது.- 4-2-உ 1922 சீனாவுக்கும் ஜப்பானுக்கும் ஏற்பட்ட தனி ஒப்பந்தம்.
2. பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான், பிரான், இத்தலி, ஹாலந்து, பெல்ஜியம், போர்த்துகல், சீனா ஆகிய ஒன்பது வல்லரசுகளும் சேர்ந்து, சீனாவின் பரிபூரண ராஜ்ய உரிமையை அங்கீகரிப்பதாகவும், அது, தன்னிஷ்டப்படி தன் ராஜ்யத்தை ஒழுங்குபடுத்திக் கொள்ளவோ, அரசாங்கத்தை அமைத்துக் கொள்ளவோ உரிமை யுடைய தென்றும், அங்கு இனி எந்த வல்லரசும் விசேஷ சலுகைகள் பெற்று வியாபாரம் செய்யக் கூடாதென்றும், அங்குள்ள உள்நாட்டு நிலைமைகளை உபயோகித்து எந்த வல்லரசும் எந்த விதமான சாதகத்தையும் அடைய முயற்சி செய்யக் கூடாதென்றும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டன. இதற்கே ஒன்பது வல்லரசுகளின் ஒப்பந்தம் என்று பெயர். இது 6-2-1922ல் கையெழுத்திடப் பெற்றது.1
3. இனி ஏதேனும் யுத்தம் ஏற்படுகிற போழ்து சீனா, நடுநிலைமை வகிக்கவேண்டுமென்று விரும்பினால் அதனு டைய இந்த உரிமையை மற்ற வல்லரசுகள் கௌரவிப்பதாக ஒப்புக்கொண்டன.
4. சீனாவில் நடைபெறும் நீதி இலாகா விவகார முறைகளைப் பரிசீலனை செய்ய ஒரு கமிஷனை நியமிக்க வேண்டுமென்று மகாநாடு தீர்மானித்தது.
5. சீன ஆதிக்க எல்லைக்குள் இதுகாறும் இருந்த அந்நிய தபாலாபீ களை யெல்லாம் எடுத்துவிடுவதென்று தீர்மானிக்கப் பட்டது.
6. அந்நியர்களுடைய நிருவாகத்திலிருந்த ரேடியோ நிலையங்கள், சீன அரசாங்கத்தின் நிருவாகத்திற்கு மாற்றப்பட வேண்டு மென்று தீர்மானிக்கப்பட்டது.
7. பீக்கிங் அரசாங்கம், அவசியமென்று கருதினால், அந்நிய வல்லரசுகள், சீன எல்லைக்குள் வைத்திருக்கும் தங்கள் துருப்புகளை வாப வாங்கிக்கொண்டு விடவேண்டும்.
8. சீனாவில் இதுகாறும் அனுஷ்டானத்தில் இருந்து வந்த சுங்கவரி முறைகளிலே சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.
ஆக வாஷிங்க்டன் மகாநாட்டினால் சீனா அடைந்த நன்மை களெல்லாம் எதிர்மறையான நன்மைகளே. அதாவது இதற்கு முந்தி நடைபெற்ற மகாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தங்களின் விளைவாக, அது, தன் பிரதேசங்களையும் உரிமைகளையும் இழந்ததைப் போல், இந்த மகாநாட்டில் ஒன்றும் இழக்கவில்லை. சாதகங்கள் பெறாவிட்டாலும் பாதகமடைய வில்லையே, அதற் காக சீனா சந்தோஷப் பட்டுக்கொள்ள வேண்டாமா? இப்படித்தான் வல்லரசுகள் கருதின. மேலே எடுத்துக்காட்டப்பெற்ற மாதிரி, சில சில்லரை நிர்ப்பந்தங்கள் தளர்த்திவிடப்பட்டனவென்று சொன்னாலும், பொதுவாக , சீனாவின் மீது தாங்கள் வைத்திருந்த இரும்புப் பிடியை வல்லரசுகள் சிறிதுகூட அசைத்துக் கொடுக்க விரும்பவில்லை. வாஷிங்க்டன் மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைச் செயல்படுத்தும் விஷயத்தில் எவ்வளவு அலட்சியமாயிருந்தன, எவ்வளவு அசிரத்தை காட்டின என்பவைகளைக் கொண்டே இந்த வல்லரசுகள், சீனா சம்பந்தமாக எந்த மனப்பான்மையுடனிருந்தன என்பது நன்கு புலனாகும். சீனாவின் பிரதேசங்களைச் சீனாவிடம் திருப்பிக் கொடுக்கவோ, அங்கே தாங்கள் அனுபவித்து வந்த சலுகை களை விட்டுக் கொடுக்கவோ வல்லரசுகளுக்கு லேசிலே மனம் வரவில்லை. இதற்காக, சீனா மறுபடியும் ஒரு பெரிய கிளர்ச்சியை நடத்த வேண்டியிருந்தது. இதைப் பின்னர்க் கவனிப்போம்.
இருவகை அரசாங்கங்கள்
ஏகாதிபத்திய சக்திக்கு எதிர்ப்பாகவும், அந்தச் சக்தியின் விளையாட்டுப் பொம்மையாக இருக்கும் பீக்கிங் அரசாங்கத்திற்கு விரோதமாகவும் உள்ள தேசீய சக்திகளையெல்லாம் ஒன்று திரட்டி உருவப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்துடன் ஸன் யாட் ஸென், 1924-ஆம் வருஷம், பொதுவுடைமை வாதிகளை, அவர்களுடைய தனிப்பட்ட முறையில் கோமிண்ட்டாங் கட்சியில் சேர்த்துக் கொண்டான். ஆனால், தங்களுடைய பொதுவுடைமைக் கட்சியைக் கலைத்துவிடவில்லை. அதனைத் தனிப்பட வளர்த்தே வந்தார்கள். அதன் அங்கத்தினர் எண்ணிக்கையும் வர வர அதிகப்பட்டுக் கொண்டு வந்தது.
ஆனால், பொதுவுடைமை வாதிகளை கோமிண்ட்டாங் கட்சியில் சேர்த்துக்கொண்டது, அந்தக் கட்சியிலேயே சிலருக்கு, அதாவது பழமையிலேயே ஊறிப்போயிருந்தவர்களுக்குப் பிடிக்க வில்லை. அப்பொழுதே-ஆரம்பத்திலேயே-பலவித ஆட்சேபங் களைக் கிளப்பினார்கள். ஆனால், ஸன் இவைகளைப் பொருட் படுத்தவில்லை. புதிய சீனாவை நிர்மாணம் செய்வதற்கு தான் வகுத்திருந்த மூன்று படிகளில் முதல் இரண்டு படிகளைக் கடக்க வேண்டுமானால், அதாவது தேசத்திற்கு விரோதமாயுள்ள உள்நாட்டு வெளிநாட்டுச் சத்துருக்களை அடக்கி ஒடுக்கி ஜனங்களுக்கு அரசியல் அறிவைப் புகட்ட வேண்டுமானால், அஃது ஒரே ஒரு கட்சியின் மூலமாகத்தான் முடியு மென்று ஆட்சேபித்தவர்களுக்குச் சமாதானம் கூறினான். ஆட்சேபித்தவர் களும் எதிர்த்துப்பேச முடியாமல் அடங்கி விட்டார்கள். அப்பொழுது அடங்கிவிட்டார்களாயினும் உள்ளுக் குள்ளே மட்டும் பொறாமை புகைந்து கொண்டிருந்தது.
பொதுவுடைமைவாதிகள், கோமிண்ட்டாங் கட்சியில் சேர்ந்து கொண்டு எப்பொழுதும்போல், பாமரர்களென்று புறக்கணிக்கப் பட்டு வந்த ஜன சமுதாயத்தின் பெரும்பாலோருக்கு அரசியலறிவைப் புகட்டினார்கள்; தன்மதிப்பு உணர்ச்சியை ஊட்டினார்கள். தொழிலாளர் சங்கங்களென்ன, விவசாயிகள் சங்கங்களென்ன இப்படிப்பட்ட தாபனங்கள் ஆங்காங்குத் தோன்றின. தொழி லாளர், விவசாயிகள் முதலியோருடைய நலன்களைக் கவனிப்பதற் கென்று கோமிண்ட்டாங் கட்சியிலேயே ஒரு தனி இலாகா தாபிக்கப்பட்டது. பொதுவாக, கோமிண்ட்டாங் கட்சியில் பொதுவுடைமை வாதிகளின் செல்வாக்கு வளர்ந்து வந்தது. இந்தச் செல்வாக்கைக் கண்டு, ஏகபோக உரிமைச் சக்திகள் வெருண்டன; தங்களுடைய அதிவாரம் அசைக்கப்படுவதாக உணர்ந்தன. இந்த நிலைமையில்தான் ஸன் யாட் ஸென் இறந்து போனான்.
அவனுடைய மரணத்திற்குப் பிறகு, கோமிண்ட்டாங் கட்சியில், அதுகாறும் அடங்கிக்கிடந்த தனிப்பட்டவர்களின் பொறாமைகள், பூசல்கள் முதலியன தலைகாட்டின. பதவிப் போட்டி ஏற்பட்டது. பொது வுடைமையா, அந்நியர்களின் பலமுக ஆதிக்கத்தினின்று விடுதலையா, எதற்கு முதன்மை தானம் கொடுத்து வேலை செய்ய வேண்டும், பொதுவுடைமை வாதி களுக்கும், கோமிண்ட்டாங் கட்சிக்கும் இனி எந்த விதமான தொடர்பு இருக்கவேண்டும் என்பனபோன்ற பிரச்சினைகள் கிளம்பின. இவையெல்லாம் சேர்ந்து எங்கே கட்சியின் ஒற்றுமையைக் குலைத்துவிடுமோ, திரண்டுவந்த தேசீய சக்திகள் எங்கே சிதறிப்போகுமோ என்று கட்சியிலே முக்கிய தராயிருந்த சிலர் - தேசபக்தர்கள்- அஞ்சிக்கொண்டிருந்தார்கள் ஆனால் நல்ல வேளையாக ஷாங்காய் நகரத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம், கட்சியின் உட்பிணக்குகளைத் தள்ளி வைத்தது; தேசத்தின் கவனத்தை, அந்நிய ஆதிக்கத்திற்கு விரோதமாகத் திருப்பியது.
மேற்படி ஷாங்காய் நகரத்தில் 1925-ஆம் வருஷம் மே மாதம் முப்பதாந்தேதி - அதாவது ஸன் யாட் ஸென் இறந்த சுமார் எழுபது நாட்களுக்குள் -சில ஜப்பானிய முதலாளிகளுக்குச் சொந்தமான ஒரு பஞ்சு ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த சீனத் தொழி லாளர்கள், தங்களுடைய வேலை நேரம், கூலி விகிதம் இவைகள் சம்பந்தமாகச் சில குறைகளை, எண்மர் அடங்கிய ஒரு பிரதிநிதி கோஷ்டி மூலம் மேற்படி ஆலையின் முதலாளிகளுக்குத் தெரிவித்துக் கொண்டார்கள். என்ன துணிச்சல் இவர்களுக்கு? ஆலை மானே ஜருக்குக் கோபம் வந்துவிட்டது. தன் கைத்துப்பாக்கியை எடுத்து, பிரதிநிதி கோஷ்டியின் தலைவனைச் சுட்டுக் கொன்று விட்டான்; மற்ற ஏழு பேரையும் உடனே கைது செய்யுமாறு பிரிட்டிஷ் போலீஸைக் கூப்பிட்டான். அவர்களும் அப்படியே வந்து கைது செய்து விட்டார்கள். இது, மற்றத் தொழிலாளர்களுக்கு ஆத்திரத்தை உண்டு பண்ணியது. கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டு மென்று கோரி ஒரு பெரிய ஊர்வலம் நடத்தினார்கள். ஊர்வலத்தில் பொது ஜனங்களும் மாணாக்கர்களும் கலந்திருந் தார்கள். பிரிட்டிஷ் கன்ஸெஷன்- பிரிட்டிஷார் வசிக்கும் பகுதி-வழியாக ஊர்வலம் சென்றது. பிரிட்டிஷ் போலீஸார் இதன்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். ஏழு பேர் இறந்து போனார்கள்.
இந்தச் செய்தி சீனாவின் பல பாகங்களுக்கும் பரவியது. அந்நியர்களுக்கு விரோதமாக எங்கும் கிளர்ச்சி நடைபெற ஆரம்பித்து விட்டது. ஹாங்காங் தீவில் அந்நிய முதலாளிகளின் தாபனங்களில் கூலிவேலை செய்து கொண்டிருந்த சுமார் ஒரு லட்சம் சீனர்கள் மேற்படி தீவிலிருந்து வெளியேறி காண்ட்டன் நகரத்திற்குச் சென்று விட்டார்கள். காண்ட்டனிலோ வேலை நிறுத்தம், அந்நியச் சாமான் பகிஷ்காரம் முதலியன மும்முரமாக நடை பெற்றன. வல்லரசுகளுக்குக் கோபம் வந்துவிட்டது. சீனர்களுக்குப் பாடங்கற்பிக்க வேண்டுமென்று தீர்மானித்தன. பிரிட்டிஷ், பிரெஞ்சு, போர்த்துகேசிய, ஜப்பானிய யுத்தக் கப்பல்கள் காண்ட்டன் துறை முகத்திற்குள் பிரவேசித்து நங்கூரம் பாய்ச்சிக்கொண்டு, கிளர்ச்சிக் காரர்களென்று கருதப்பட்டவர்கள் மீது தங்கள் பீரங்கிகளைத் திருப்பின. ஏராளமான உயிர்ச்சேதம் உண்டாயிற்று. இது சீனர்களுக்கு இன்னும் அதிக ஆத்திரத்தை உண்டு பண்ணியது. இந்த ஆத்திரம் குறிப்பாக பிரிட்டிஷார்மீது திரும்பியது. பிரிட்டிஷ் சாமான் பகிஷ்கார இயக்கம் வலுத்தது. பிரிட்டிஷ் தொழிற் சாலைகளில் வேலை செய்யச் சீனர்கள் மறுத்துவிட்டார்கள். பிரிட்டிஷ் பிரஜைகளுக்கும் சீனர்களுக்கும் அடிக்கடி கைகலந்த சண்டைகள் சுமார் இரண்டு வருஷ காலம்வரை நடைபெற்றுக் கொண்டு வந்தன.
இந்தக் காலத்தில் அந்நியர்களுடைய மதம், சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள் முதலிய எல்லாவற்றின் மீதும் சீனர்களுக்கு ஒரு விரோத உணர்ச்சி ஏற்பட்டுவிட்டது. கிறிதுவப் பாதிரிமார்கள் நடத்தி வந்த பள்ளிக் கூடங்களிலிருந்து சீன மாணாக்கர்கள் கும்பல் கும்பலாக வெளியே வரத் தொடங்கினார்கள். ஊர்வலங்களுக்கும் கூட்டங்களுக்கும் கணக்கு வழக்கேயில்லை. ஏற்றத்தாழ்வான ஒப்பந்தங்கள் ஒழிக, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் வீழ்க, பாசிட்டுகள் அழிக என்பன போன்ற சுவரொட்டி விளம்பரங்கள் எங்கணும் காட்சி யளித்தன. தங்கள் சொந்த நாட்டிலே தங்களுக்கு உரிமை இல்லாம லிருக்க, அந்நியர்களுக்கு மட்டும் விசேஷ உரிமைகள் ஏன், விசேஷ சலுகைகள் ஏன் என்று சர்வ சீனர்களும் சேர்ந்து ஒரு குரலால் கேட்டார்கள். அந்நியர் என்றால் அலட்சியம்; அந்நியச் சாமான் என்றால் அருவருப்பு; பொதுவாக அந்நியப் போர்வை போர்த்திக் கொண்டுள்ள எதன் மீதும் ஓர் அவமதிப்பு. பாக்ஸர் கலகத்தின்போது கூட இவ்வளவு துவேஷம் அந்நியர்மீது ஏற்படவில்லையென்று, இந்தக் காலத்துச் சம்பவங்களுக்குச் சாட்சியாயிருந்த ஓர் அறிஞன் கூறுகிறான். பாக்ஸர் கலகம் அந்நிய ஆதிக்கத்திற்கு விரோதமாக எழுந்தது; 1925-26-ஆம் வருஷத்து இயக்கமோ அந்நிய நாகரிகத்திற்கே விரோத மாகத் தோன்றியது. முன்னதில் அந்நியர்களுடைய உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டது; பின்னதில் அந்நியர்களுடைய வியாபாரத்திற்கு நஷ்டம் உண்டாயிற்று.
இங்ஙனம் ஒரு புறத்தில் அந்நியர்களுக்கு விரோதமான இயக்கம் நடைபெற்றுக்கொண்டு வந்தபோதிலும், இஃது எதிர் மறையான பலனைக் கொடாமலிருக்க மற்றொரு புறத்தில் தேசீய உணர்ச்சி வளர்ந்தும், வலுத்தும் வந்தது. இதற்குத் துணையாகவே, இறந்துபோன ஸன் யாட் ஸென் மீது ஜனங்களின் கவனம் திருப்பப் பட்டது. உயிரோடிருந்த வரையில் அவனைத் தலைவனாகப் பின் பற்றினார்கள் தெற்கு மாகாணவாசிகள். இறந்த பிறகு அவனைத் தெய்வமாகக் கொண்டாட ஆரம்பித்தார்கள் சர்வ சீனர்களும். அவனுடைய பேச்சுக்கள், எழுத்துக்கள் எல்லாம் சேர்ந்து ஸன் யாட் ஸீயம் என்ற தேசீய மதமாக உருக் கொண்டது. வீடுதோறும் அவனுடைய உருவப்படங்கள்! சதுக்கந்தோறும் அவனுடைய உருவச் சிலைகள்! பள்ளிக்கூட மாணாக்கர்கள் அவனுடைய உப தேசங்களை மனப்பாடஞ் செய்தார்கள்! அவன் கடைசி காலத்தில் எழுதி வைத்துப்போன உயிலுக்கு 1 அவனுடைய சீடர்கள் போற்றி பாடினார்கள். இப்படியெல்லாம் செய்வது,அவன் இருந்த காலத்தில் திரண்டுவந்த தேசீய சக்திகள், அவன் இறந்த பிறகு சிதறிப்போகாமல் பாதுகாப்பதற்கு அவசியமாயிருந்தது.
இங்ஙனம் கோமிண்ட்டாங் கட்சியின் கவனமும் தேச மக்களின் கவனமும் வெளிவிவகாரங்களில் சென்று விட்டபடியால், கட்சிக்குள்ளே புகைந்து கொண்டிருந்த பொறாமைகள், பூசல்கள் எல்லாம், தற்காலிகமாக வேனும் தலைகாட்டாமலிருந்தன. தேசத்தின் அபிலாஷைகளைப் பிரதிபிலித்துக் காட்டுகிற கட்சி கோமிண்ட்டாங் கட்சி ஒன்றுதான் என்ற எண்ணம் பொது ஜனங் களிடத்தில் பரவியிருந்தது. பொதுவுடைமை வாதிகள் இந்த எண்ணத்தை உறுதிப்படுத்திக்கொண்டு வந்தார்கள்.
இவைகளுக்கு மத்தியில், காண்ட்டன் நகரத்தில் ஏற்கனவே ராணுவ ஒழுங்குக்குட்பட்டு நடைபெற்று வந்த தேசீய அரசாங்கம், ஸன் யாட் ஸென் மரணத்திற்குப் பிறகு சம்பிரதாயமான குடியரசு முறையில் திருத்தி அமைக்கப்பட்டது. ஸன் யாட் ஸென்னின் முக்கிய சீடர்களில் ஒருவனும் சிறந்த நாவலனுமான வாங் சிங் வெய் என்பவன் இதற்குத் தலைவனாகத் தெரிந்தெடுக்கப்பட்டான் (1-6-1925). இவனை வாசகர்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்வது அவசியம்.
ஸன் யாட் ஸென் இறந்து போவதற்கு முன்னர், வட மாகாணங்களில் அட்டூழியம் புரிந்து கொண்டு வந்த ராணுவப் பிரபுக்களை ஒழித்து, பீக்கிங் நகரத்தில் பழைய மாதிரி சர்வ சீனாவுக்கும் பொதுவான ஒரு மத்திய அரசாங்கத்தை தாபிப் பதற்கு வேண்டிய ஒரு திட்டத்தை வகுத்திருந்தானல்லவா? இந்தத் திட்டத்தை நிறைவேற்றி வைப்பதற்காக மேற்படி தேசீய அரசாங்கத் தினால் ஒரு மகாநாடு கூட்டப்பெற்றது. இந்த மகாநாட்டில், வட மாகாணங்களின் மீது படையெடுத்துச் சென்று வெற்றி காணும் பொறுப்பு சியாங் கை ஷேக்கிடம் ஒப்படைக்கப்பட்டது. அதாவது, சியாங் கை ஷேக், தேசீய ராணுவத்தின் சேனாதி பதியாக நிய மிக்கப்பட்டான். இது காறும் இவன் வாம்போவா ராணுவக் கழகத்தின் மேலதிகாரியாக மட்டும் இருந்தான். இப்பொழுது, தேசத்தின் ஆவலை நிறைவேற்றி வைக்கும் புனிதமான பொறுப்புடைய தலை வனானான். இந்தக் காலத்திலிருந்து இவனுடைய கிரகம், சீன அரசியல் வானில் உச்சி நோக்கி ஏற ஆரம்பித்தது. இந்த சியாங் கை ஷேக் யார்?
சீனாவின் கிழக்கே கடலோரமாகவுள்ள பெங் ஹுவா என்ற ஒரு சிறிய ஊரில் 1887-ஆம் வருஷம் சியாங் கை ஷேக் பிறந்தான். இவனுடைய தகப்பனார் ஒரு சில்லரை வியாபாரி; தாயார் உழைக் கிற சக்தியும் உலக ஞானமும் நிறைந்தவள். தனது ஒன்பது வயதி லேயே தந்தையைப் பறிகொடுத்த சியாங், தாயாரின் போஷணை யிலே வளர்ந்தான். அவள், மகனைப் பள்ளிக் கூடத்திற்கு அனுப்பி யும், வீட்டிலே நல்ல போதனைகளைச் செய்தும் ஒழுங்காக வளர்த்து வந்தாள். தனது வாழ்க்கை பண்பட அமைவதற்குத் தன் தாயாரே முக்கிய காரணம் என்று சியாங் பல தடவைகளில் கூறியிருக்கிறான்.
பாக்ஸர் கலகத்திற்குப் பிறகு, யுவான் ஷி காயின் மேற்பார்வை யில் நவீன சாதனங்களுடன் கூடிய ராணுவப் பயிற்சிக் கழகங்கள் சீனாவின் பல பாகங்களிலும் தாபிக்கப்பட்டன. இவற்றிலே ஒன்று பாவோடிங்1 என்ற ஊரில் தாபிக்கப்பட்டிருந்த ராணுவப் பயிற்சிப் பள்ளிக்கூடம். இதில் போய்ச் சேர்ந்துகொண்டான் சியாங் தனது பதினெட்டாவது வயதில். இங்கு .இவனுக்கு யுவான் ஷி காயின் தொடர்பு ஏற்பட்டது. அவனுடைய சூழ்ச்சித் திறன், அதிகார தோரணை முதலியவற்றையெல்லாம் இவன் நன்றாகக் கற்றுக் கொண்டான். பின்னர் 1907-ஆம் வருஷத்திலிருந்து 1910-ஆம் வருஷம் வரை ஜப்பானுக்குச் சென்று அங்கே நவீன யுத்த தந்திரங்களை யெல்லாம் நன்கு பயின்றான். ஜப்பானில் இருந்த காலத்தில் இவன், ஸன் யாட் ஸென் முயற்சியின்பேரில் தாபிக்கப்பட்ட டுங் மெங் ஹுயி சங்கத்தில் சேர்ந்தான்.
1911-ஆம் வருஷம் சீனாவில் புரட்சி தொடங்கியதும், ஜப்பானி லிருந்து திரும்பிவந்து புரட்சி சைனியத்தில் சேர்ந்துகொண்டு, யுவான் ஷி காயினால் அனுப்பப்பெற்ற மஞ்சூ அரசாங்கப் படை களோடு பல இடங்களில் போரிட்டான். இதற்குப் பின்னர் 1913-ஆம் வருஷம் ஜூலை மாதம் ஷாங்காய் நகரத்திற்குச் சென்று அங்கே அப்பொழுதிருந்த ஸன் யாட் ஸென்னின் அந்தரங்கக் காரியதரிசி களில் ஒருவனானான். அது முதற்கொண்டு 1923-ஆம் வருஷம் வரை இவனுடைய பொது வாழ்க்கை, ஸன் யாட் ஸென்னுடைய வாழ்க்கையோடு ஒட்டியே சென்றது. ஸன்னுடன் சீனாவின் பல மாகாணங்களுக்கும் சுற்றுப் பிரயாணஞ் செய்தான். ஜனங்களின் அரசியலறிவு, பொருளாதார வாழ்க்கை முதலியவைகளையெல்லாம் ஒருவாறு கணித்துக்கொண்டான். ஸன்னுக்கு இவனிடத்தில் அத்தியந்த விசுவாசம். இவனைத் தன் மகன்போலவும், முக்கிய சீடர்களிலே ஒருவனாகவும் நடத்தி வந்தான். அவனுடைய கடைசி காலத்தில் அவன் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய மாதிரி சில சூழ்ச்சிகள் நடைபெற்றன. அபொழுதெல்லாம் சியாங் அவனுக்குப் பக்கபலமாயிருந்து காப்பாற்றியிருக்கிறான்.1
1924-ஆம் வருஷம் காண்ட்டன் அரசாங்கத்திற்கும் ருஷ்ய சோவியத் அரசாங்கத்திற்கும் நட்பு ஏற்பட்டு, போதனை செய்வதற்கு அறிஞர் களையும் பயிற்சி பெறுவதற்கு இளைஞர்களையும் பரபரம் ஒன்றுக் கொன்று அனுப்பிக்கொண்டபோது, ஸன் யாட் ஸென், சியாங்கை ருஷ்யாவுக்கு அனுப்பி, அங்கே ட்ரோட்கி2 என்ற நிபுணன், எப்படி எப்படிச் செம்படையை அமைத்திருக்கின்றான், அஃது அநேகவிதமான எதிர்ப்புக் களை எப்படிச் சமாளித்து வருகிறது, பொதுவுடைமைக் கட்சியின் ராணுவ சம்பந்தமான கொள்கை யென்ன முதலியவையெல்லாம் அறிந்து கொண்டு வருமாறு செய்தான். இப்படி இவன் சென்றது, இவனுடைய வாழ்க்கையின் முக்கியமான திருப்பங்களிலே ஒன்று, போரோடின், காலென் என்ற ருஷ்ய அறிஞர்கள், காண்ட்டன் அரசாங்கத்திற்கு ஆலோசகர் களாக வந்தபோது, சீனப் படைத் தலைவர்களில் சியாங் ஒருவன் தான், ருஷ்யச் செம்படையின் அமைப்பு விவரங்களையெல்லாம் அறிந்தவனாயிருந்தான். இதனாலேயே இவன் வாம்போவாவில் (1924-ஆம் வருஷம் மே மாதம்) தாபிக்கப்பட்ட ராணுவக் கழகத்திற்குப் பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டான்.3
1925-ஆம் வருஷத் தொடக்கத்தில், கோமிண்ட்டாங் கட்சியில் பொதுவுடைமை வாதிகளின் செல்வாக்கு வளர்ந்து வருவதைக் கண்டு, காண்ட்டனுக்குத் தெற்குப் பிரதேசங்களிலுள்ள சில நிலப் பிரபுக்கள் வெருண்டு கலகத்திற்குக் கிளம்பினார்கள். சியாங், வாம்போவா கழகத்தில் தன்கீழ் பயின்றுகொண்டிருந்த ராணுவ இளைஞர்கள் துணைக்கொண்டு கலகத்தை அடக்கிவிட்டான். இளைஞர் சமுதாயத்தின் மத்தியிலே, சிறப்பாகப் பொதுவுடைமை வாதிகளின் மத்தியிலே இவனுடைய செல்வாக்கு விருத்தியடைந்தது. வாம்போவா கழகத்திற்குத் தலைவனாகத் தெரிந்தெடுக்கப்பட்ட மறு வருஷம், கோமிண்ட்டாங் கட்சியின் நிருவாக சபையில் ஓர் அங்கத்தினனாகத் தெரிந்தெடுக்கப் பட்டான். கட்சியின் முக்கிய தர்களிலே ஒருவனானான். ராணுவ சம்பந்தமான விஷயங்களில் இவனுடைய யோசனைக்குத்தான் கட்சியினர் மதிப்புக் கொடுத்தனர். சீனாவின் அரசியல் சரித்திரத்தில் எத்தனையோ பேர் அதிகாரத்தைக் கைப்பற்ற முயன்றிருக்கிறார்கள். ஆனால் யாருக்கு ராணுவத்தின் பின்பலம் இருக்கிறதோ அவர்கள்தான் வெற்றியடைந்திருக் கிறார்கள். இந்த நியதிக்குப் புறம் பாகவில்லை சியாங் கை ஷேக். ஸன் யாட் ஸென்னுக்குப் பிறகு, போட்டியில்லாத தலைவனாக சியாங் கை ஷேக் ஏற்றுக்கொள்ளப்பட்டானென்றால், அதற்கு முக்கியமான காரணம் இவனுடைய ராணுவ பலந்தான்.
பொதுவுடைமை வாதிகளின் மத்தியில் இவனுடைய செல்வாக்கு விருத்தியடைந்துகொண்டு வந்தது என்று மேலே சொன்னோமல்லவா? இந்தச் செல்வாக்கை இவன், தன் தலைமைப் பதவிக்குச் சாதகமாக எவ்வளவு தூரம் உபயோகித்துக்கொள்ள வேண்டுமோ அவ்வளவு தூரம் உபயோகித்துக் கொண்டுவிட்டு, பின்னர், அந்தத் தலைமைப் பதவியில் தான் எவ்வித சகாயமுமில்லாமல் நன்றாக ஊன்றிக் கொண்டுவிட முடியும் என்று தெரிந்ததும், அந்தச் செல்வாக்கையே - பொதுவுடைமை வாதிகளையேகூட அப்புறப்படுத்திவிடத் துணிந்தான். பொது வுடைமைக் குதிரையின்மீது ஏறிக்கொண்டு தலைமை தானத்தை அடைந்த பிறகு, அந்தக் குதிரையையே குழி தோண்டிப் புதைக்க ஆரம்பித்தான் என்பதே சியாங் கைப் பற்றிப் பொதுவுடைமைவாதிகள் கொண்ட அபிப்பிராயம்.
வட மாகாணங்களின் மீது படையெடுத்துச் செல்லும் பொருட்டு சியாங் கை ஷேக் பிரதம சேனாதிபதியாக நியமிக்கப் பட்டானல்லவா? அப்படித் தெரிந்தெடுக்கப்பட்டது, மகாநாட்டினர் தாங்களே மனமொப்பிச் செய்த காரியமல்ல. திரைமறைவில் நடைபெற்ற பல சூழ்ச்சிகளுக்குப் பிறகுதான் என்று பொது வுடைமை வாதிகள் கூறுகிறார்கள். ஸன் யாட் ஸென் உயிரோடி ருந்தபோதே வட மாகாணங்களின் மீது படையெடுத்துச் செல்ல வேண்டுமென்ற அவனுடைய திட்டத்தை போரோடின்னும் அவனுடைய பொதுவுடைமை சகாக்களும் எதிர்த்து வந்தார்கள். பொதுவுடைமைக் கொள்கையை நாடு முழுவதிலும் பரப்புவது முதன்மையான வேலையென்று இவர்கள் கூறினார்கள். ஆனால் பொதுவுடைமைவாதிகளைக் கோமிண்ட்டாங் கட்சியில் சேர்த்துக் கொள்ளக் கூடாதென்று முதலிலிருந்து ஆட்சேபித்து வந்தவர்கள்- இவர்கள் தங்களை தேசீயவாதிகளென்று அழைத்துக் கொண்டார்கள்- உள்நாட்டு விரோதங்களை முதலில் அகற்ற வேண்டுமென்றும், வட மாகாணங்களின் மீது ஒரு பெரும் படையை அனுப்ப வேண்டியது அவசியமென்றும் வற்புறுத்தி வந்தார்கள். கோமிண்ட்டாங் கட்சிக்குள் இந்தக் கருத்து வேற்றுமைகள் இருந்த போதிலும் ஸன் உயிரோடிருந்தவரையில் இவை தலைகாட்டவில்லை; இறந்த பிறகு தலை தூக்கின. வாம்போவா ராணுவக் கழகத்தின் பின்பலத்தைப் பெற்றிருந்த சியாங் கே ஷேக், தேசீயவாதிகளின் கட்சியை ஆதரித்தான். அந்தப் படையெடுப்புக்குத் தான் தலைமை வகித்து நடத்தி, அதன் மூலமாகப் பெயரும் புகழும் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணம் இவனுக்கு இருந்ததோ என்னவோ தெரியாது. இவன் இப்படித் தேசீயவாதிகளின் கட்சியை ஆதரித்தபோதிலும், போரோடின் கட்சியின் அபிப்பிராயத்திற்கே- அதாவது வட மாகாணங்களின் மீது படையெடுத்துச் செல்லக்கூடா தென்ற அபிப்பிராயத்திற்கே - அதிக செல்வாக்கு இருந்தது. எனவே சியாங், தனது கட்சியைச் சாதித்துக் கொள்ள ரகசியச் சூழ்ச்சி செய்ய வேண்டியது அவசியமாயிற்று. போரோடின்,காண்ட்டன் நகரத் தைவிட்டு வெளியே சென்றி ருக்கையில், (அதாவது அவன் இல்லாத சமயம் பார்த்து) 1926-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் இருபதாந்தேதி யன்று, சியாங் கை ஷேக் சில ருஷ்யர்களையும் பல பொதுவுடைமை வாதிகளையும் கைது செய்தான். பின்னர் வேலை நிறுத்தம், பிரிட்டிஷ் பகிஷ்காரம் ஆகியவை சம்பந்தமாக காண்ட்டனுக்கும் ஹாங்காங்குக்கும் ஏற்பட்டிருந்த தகராறுகளைத் தீர்த்து வைக்கும் முயற்சியிலே ஈடுபட்டிருந்தான். பொதுவுடைமை வாதிகள் பலர் தலைமறை வாகச் சென்று விட்டார்கள். இன்னும் சிலர் கட்சியினின்றே விலகிக் கொண்டுவிட்டார்கள். பொதுவுடைமை விரோதிகளுக்கு எக்களிப்பு; போரோடின், காண்ட்டனுக்குத் திரும்பி வந்தால் என்ன ஆகப்போகிறதென்ற வியப்பு பலருக்கு. அவன் திரும்பி வருவானென்றே பொதுவுடைமை வாதிகள் நம்பியிருந்தார்கள்.
மே மாதம் ஐந்தாந்தேதி அவன் திரும்பியே வந்து விட்டான். சியாங்கும் போரோடின்னும் ஒரு சமரஸ ஏற்பாட்டுக்கு வந்தார்கள். வட மாகாணப்படையெடுப்புக்கு ருஷ்யர்கள் ஆதரவு கொடுப்ப தாகக் கூறினார்கள். பொதுவுடைமை வாதிகளை விடுதலை செய்து அவர்கள் பழைய மாதிரி தானங்களை வகிப்பதற்கு சியாங் சம்மதித்தான். பிறகு போரோடின்னும் சியாங் கை ஷேக்கும் பரபர அவநம்பிக்கையுடையவர்களாகவே இருந்தார்கள்.
உள்ளுக்குள்ளே நடைபெற்ற இந்தச் சமரஸ ஏற்பாட்டுக்குப் பிறகுதான், சியாங், தேசீய அரசாங்கத்தினால் கூட்டப்பெற்ற மகாநாட்டில் பிரதம சேனாதிபதியாக நியமிக்கப்பட்டான். 1 , இந்த நியமனத்திலிருந்தே சீனாவின் இரண்டாவது புரட்சி தொடங்கிய தென்று சொல்ல வேண்டும். இந்தப் புரட்சியின் நோக்கம் இருவகைப்பட்டதென்று மேற்படி மகாநாட்டிலேயே வரையறுக் கப்பட்டது. ஒன்று, அந்நிய ஏகாதிபத்திய சக்திகளின் பிடியினின்று சீனாவை விடுதலை செய்து சுதந்திர அரசை நிலைநாட்டப் போராடு வது; மற்றொன்று, ராணுவப் பிரபுக்கள், அதிகார வர்க்கத்தினர், முதலாளிகள் முதலியோருடைய செல்வாக்கை அழித்துவிடுவது.
இந்த நோக்கங்களை நிறைவேற்றி வைப்பதற்காக சியாங், வாம் போவா ராணுவக் கழகத்தில் தன் கீழ் பயிற்சி பெற்ற இளைஞர்களை உதவி தளகர்த்தர்களாகக்கொண்டு ஒரு பெரிய தேசீய ராணுவத் துடன் 1926-ஆம் வருஷம் ஜூன் மாதம் வடக்கு நோக்கிப் புறப் பட்டான். இவர்களுக்கு முன்னால், பிரசாரக் கூட்டம் ஒன்று ஜனங்களை மேற்படி ராணுவப் பிரபுக்கள், முதலாளி வர்க்கத்தினர் முதலியோருக்கு விரோதமாகத் தூண்டிவிட்டுக்கொண்டு சென்றது. இதன் பயனாக, தேசீய ராணுவத்திற்கு அதிக எதிர்ப்பு இல்லாமற் போய்விட்டது. இந்தப் பிரசார வேலையில் பொதுவுடைமை வாதிகள் தான் அதிக ஊக்கத்துடன் ஈடுபட்டார் களென்பதைக் குறிப்பிட வேண்டும்.
சியாங்கின் தேசீயப் படையானது சில மாதங்களுக்குள், குவாங்டுங்2 மாகாணத்திற்கு வடக்கேயுள்ள ஹ்யூனா, கியாங்க்ஸி ஆகிய இரண்டு மாகாணங்களைக் கைப்பற்றிக்கொண்டு மேலே ஹ்யூப்பே3 மாகாணத்தில் நுழைகையில், மத்திய சீனாவில் அப் பொழுது அதிக செல்வாக்குப் பெற்றிருந்த வூ பை பூ என்ற ராணுவப் பிரபுவின் படைகள், இவன் முன்னேற்றத்தைத் தடுத்து நின்றன. இருவருடைய படைகளுக்கும் சுமார் நான்கு நாட்கள் வரை மும்முரமான யுத்தம் நடைபெற்றது. வூ பை பூவின் படைகள் அப்படியே அழிந்துபட்டன. 1926-ஆம் வருஷம் அக்டோபர் மாதம்- அதாவது படையெடுப்பு தொடங்கிய நான்கு மாதங்களுக்குள் -ஹாங்க்கோ நகரம் சியாங்கின் சுவாதீனமாயிற்று. இந்த நகரம், மத்திய சீனாவின் முக்கிய பட்டினம் 1911-ஆம் வருஷத்துப் புரட்சி இங்குதான் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டது. இங்கும் இத னோடு ஒட்டினாற்போலுள்ள வூசங், ஹான்யாங் என்ற நகரங் களிலும் விசேஷமான தொழிற்சாலைகள் இருந்தன. லட்சக்கணக் கான தொழிலாளர்கள் இங்கே வசித்து வந்தார்கள். இந்தப் பிரதேசத்தை சியாங் கைப்பற்றிக்கொண்டது, காண்ட்டன் அரசாங் கத்தில் அப்பொழுது அதிக செல்வாக்குப் பெற்றிருந்த பொது வுடைமை வாதிகளுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பமாயிற்று. ஏனென்றால், தங்களுடைய பொதுவுடைமைக் கொள்கையைச் சுலபமாகப் பரப்புவதற்கு ஹாங்க்கோ நகரமும் அதைச் சுற்றியுள்ள பிரதேசங்களும் ஏற்ற இடங்களல்லவா? மற்றும், தேசீய அரசாங்கத்தின் எல்லை விதரித்துக் கொண்டுபோக விதரித்துக் கொண்டுபோக, அதற்குத் தகுந்தாற்போல், அரசாங்கத்தின் தலைநகரமும் மையமான ஓர் இடத்திற்குச் செல்லுதல் நல்லதல்லவா? இந்த மாதிரியான உத்தேசங்களைக் கொண்டுபோலும் வாங் சிங் வெய் தலைமையின் கீழ் இயங்கிக் கொண்டு வந்த தேசீய அரசாங்கமானது, தனது தலை நகரத்தைக் காண்ட்டனிலிருந்து ஹாங்க்கோவுக்கு 1926-ஆம் வருஷம் நவம்பர் மாதம் - அதாவது சியாங்கின் சுவாதீனத்திற்கு மேற்படி நகரம் வந்த மறு மாதம் -மாற்றிக் கொண்டது. இதற்கு இனி வூஹான் அரசாங்கம் என்று பெயர்.
இப்படி வூஹானுக்கு அரசாங்கம் வந்துவிட்ட பிறகு, இந்த அரசாங்கத்தின் ஆதீனத்துக்குட்பட்ட பிரதேசங்களில், பொதுவு டைமை வாதிகள் தங்கள் கொள்கையைத் தீவிரமாகப் பிசாரம் செய்யலானார்கள். இந்தப் பிரசாரம் வூஹான் அரசாங்கத்தின் பெயராலேயே நடைபெற்றது. நிலச்சுவான்தார்களென்ன, தொழில் முதலாளிகளென்ன இவர்களுக்கு விரோதமான இயக்கம் கொப் பளித்து எழுந்தது. ஏற்கனவே அந்நியர்கள்மீது துவேஷம் பரவியி ருந்ததல்லவா? இவை இரண்டும் சேர்ந்துகொண்டன. எங்குப் பார்த்தாலும் வேலை நிறுத்தங்கள், முதலாளிகளுக்கு விரோதமான பலாத்காரச் செயல்கள் இப்படியாக ஆரம்பித்துவிட்டன. இவற்றோடு முன்னே சொன்ன கிறிதுவர்களுக்கு விரோதமான இயக்கமும் சேர்ந்துகொண்டது. ஒருவித பயங்கர ஆட்சி நடைபெற்றதென்று சொல்லவேண்டும். ஜனங்களுக்கு மனநிம்மதி யில்லாமற் போய் விட்டது. கோமிண்ட்டாங் கட்சியினரால் தங்களுக்கு விமோசனம் கிடைக்கப்போகிறதென்று கருதி அவர்களுக்கு மரியாதை செலுத்தி வந்த பாமர ஜனங்கள், இப்பொழுது அதே கோமிண்ட்டாங் கட்சி யினரைக் கண்டு பயப்படலானார்கள். அந்நியப் பிரஜைகளும் சீன முதலாளிகளும், ஹாங்க்கோ போன்ற முக்கியமான துறைமுகப் பட்டினங்களி லிருந்து சென்று ஷாங்காயில் அடைக்கலம் புகுந்து கொண்டார்கள். வூஹான் அரசாங்கத்தைக் கண்டு ஒரு திகைப்பு, ஒரு பயம் எல்லோருக்கும் ஏற்பட்டுவிட்டது. இந்த நிலையில், பிரிட்டன், தன்னுடைய வியாபாரம் கட்டோடு நின்று போகாமலிருக்க வூஹான் அரசாங்கத்துடன் சமரஸம் பேசியது. இந்தச் சமரஸப் பேச்சுக்களின் பயனாக 1927-ஆம் வருஷம் மார்ச்சு மாதம், ஹாங்க்கோ, கியுகியாங்1 என்ற இரண்டு ஒப்பந்தத் துறைமுகப்பட்டி னங்களில் தன்னுடைய அனுபவத்திலிருந்த கன்ஸெஷன்களைச் சீனாவுக்கே திருப்பிக் கொடுத்துவிட பிரிட்டன் சம்மதித்தது. இதற்குப் பிறகுதான் மற்ற வல்லரசுகளுக்கு, தங்கள் தங்களுடைய விசேஷ உரிமைகளை விட்டுக்கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் உண்டாயிற்று; அவசியமும் நேரிட்டது. இதைப் பின்னர் கவனிப்போம்.
பிரிட்டன், இந்த கன்ஸெஷன்களைத் திருப்பிக் கொடுத்துப் பணிந்துபோனது வூஹான் அரசாங்கத்திற்குப் பெரிய வெற்றி. அதன் அங்கத்தினர்களுக்குத் தலை கால் தெரியவில்லை. இந்த உற்சாக மேலீட்டால் பொதுவுடைமை வாதிகளாயுள்ளவர்கள் நிதானந் தவறி நடந்துகொள்ள ஆரம்பித்தார்களென்று சொல்லப்படுகிறது. பணக்காரர்கள், முதலாளிகள் முதலியோருக்கு விரோதமான பிரசாரம் முன்னைவிட மும்முரமாகியது. போரோடின், ஒரு சர்வாதிகாரி போலவே காரியங்களை நடத்திவந்தான். இவனுக்கும் சியாங் கை ஷேக்குக்கும் ஏற்கனவே இருந்த பரபர அவநம்பிக்கையானது, சியாங்கை நன்றாக உபயோகித்துக் கொண்டாய்விட்டது; இனி அவன் எதற்கு என்ற கேள்வியாகப் பரிணமித்தது. இவையெல்லாம் வூஹான் அரசாங்கத்தின் நிதானதர்களா யுள்ள அங்கத்தினர்களுக்குப் பிடிக்கவில்லை. விளைவு என்ன? அரசாங்கத்திற்குள்ளேயே இரண்டு கட்சிகள் தோன்றி விட்டன. இஃது இப்படி இருக்கட்டும்.
சியாங் கை ஷேக், ஏற்கனவே தான் போட்ட திட்டப்படி தனது தேசீயப் படையுடன் வட கிழக்கிலுள்ள ஷாங்காயை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். ஏனென்றால் இந்த நகரந்தான் அந்நிய ஆதிக்கத்திற்கு ஆணிவேர் போலவும், சீன முதலாளிகள், தங்கள் பணத்தையும் சொத்தையும் பத்திரமாகப் போட்டு வைப்பதற்குரிய இரும்புப் பெட்டி போலவும் இருந்தது. இந்த நகரத்தைச் சுவாதீனப் படுத்திக்கொண்டு விட்டால், மத்திய சீனாவின் பெரும் பகுதியைச் சுவாதீனப்படுத்திக் கொண்டது போலத்தான். இந்தக் காரணங் களினாலேயே சியாங், ஷாங்காயை நோக்கிச்சென்று அந்த நகரத்தை 1927-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் இருபதாந்தேதி கைப்பற்றிக் கொண்டான்; இருபத்துநான்காந்தேதி நான்கிங் நகரமும் இவன் சுவாதீனத்திற்கு வந்தது. இந்த இடத்தில் தன்னுடைய தலைமையில் தனியாக ஓர் அரசாங்கத்தை தாபித்துக் கொண்டான்.1 இப்படி இவன் நான்கிங்கில் வூஹான் அரசாங்கத்திற்கு விரோதமாக வேறோர் அரசாங்கத்தை தாபித்துக் கொண்டதற்குத் தூண்டுகோலாகவும் துணையாகவும் இருந்தவர்கள் ஷாங்காய் நகரத்துச் சீன முதலாளிகள் என்று சொல்லப்படுகிறது. இவர்கள், பொதுவுடைமை வாதிகளின் அட்டூழியத்தை அடக்கி, நாட்டில் ஒழுங்கையும் சமாதானத்தையும் நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தை முன்னிட்டு, சியாங்குக்குச் சுமார் நாலரைக் கோடி ரூபாய் கொடுத்து உதவினார்களென்றும், இந்தப் பலத்தைக் கொண்டுதான் சியாங், ஸன் யாட் ஸென்னின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதாகக் காரணத்தைச் சொல்லிக் கொண்டு நான்கிங்கில் ஓர் அரசாங்கத்தை தாபித்தானென்றும் ஒரு வரலாறு கூறுகிறது.
இன்னொரு வரலாறு கூறுவதாவது:-
1927-ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் ஷாங்காயிலுள்ள சீன பாங்கர்களும் தொழில் முதலாளிகளும் அந்நிய பாங்கர்களுடைய உதவியின் பேரில், சியாங்கை ஷேக்குக்கு இருநூற்றைம்பது லட்சம் டாலர் ஆரம்பக் கடனாகக் கொடுப்பதாகவும், இதற்குப் பிரதியாக அவன், தொழிலாளர் சங்கங்களென்ன, விவசாயிகள் சங்கங்க ளென்ன இவைகளை நிராயுதபாணி களாகக் குலைத்து, கோமிண்ட்டாங்கி லிருந்து பொது வுடைமைவாதிகளை அப்புறப்படுத்தி, வூஹான் அரசாங் கத்திற்கு விரோதமாக நான்கிங்கில் ஓர் அரசாங்கத்தை தாபிக்க வேண்டுமென்றும் அப்படி தாபிப்பதாயி ருந்தால்தான் மேற்படி கடன் தொகை கொடுக்கப்படும் என்றும் கூறினார்கள்.
சியாங் கை ஷேக் தன் கடைசி முடிவைச் செய்வதற்கு முந்தின இரவு, தன் அறையில் அப்படியும் இப்படியுமாக உலவிக்கொண்டிருந் தானென்று சிலர் சொல்லுகின்றனர். அவனுக்கு முன்னால் இரண்டு வழிகள் இருந்தன. ஒன்று, புரட்சி. அது நிச்சயமாக வெற்றியடையும். ஆனால் அதன் முடிவில் அதிகாரம் ஜனங்கள் கைக்குப் போய்ச் சேரும். மற்றொன்று, முதலாளிகளுக்கு அதிகாரம் கிட்டுகிற வழி. அந்த வழியில் சென்றால், தான் சர்வாதிகாரியாக வரலாம். சியாங் கை ஷேக், பிந்திய வழியையே தேர்ந்தெடுத்தான். 1927-ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் பதினோராந்தேதி பயங்கர ஆட்சி தொடங்கியது.
எப்படியோ, 1927-ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் தொடங்கிச் சில காலம் வரையில் சீனாவில், வூஹான் அரசாங்கமென்றும், நான்கிங் அரசாங்க மென்றும் இரண்டுபட்ட தேசீய அரசாங்கங்கள் நடைபெற்று வந்தன. இவை தவிர, ஆங்காங்கு ராணுவப் பிரபுக்களி னுடைய ஆதிக்கத்தின் கீழ் நடைபெற்று வந்த மாகாண அரசாங் கங்கள் வேறே.
சியாங், ஷாங்காயையும் நான்கிங்கையும் சுவாதீனப்படுத்திக் கொள்வதற்கு முன்னாடியிருந்தே அந்த இரு நகரங்களிலும் பொது வுடைமை வாதிகளின் பிரசாரம் அதிகமாயிருந்தது. என்றையதினம் நான்கிங் நகரம் சியாங்கின் வசப்பட்டதோ அன்றையதினமே பொது வுடைமை வாதிகளின் செல்வாக்குக் குட்பட்டிருந்த ராணுவத்தின் ஒரு பகுதி, மேற்படி நகரத்திலுள்ள அந்நியர்களின் தாபனங்கள் பல வற்றையும் சூறையாடியது. அந்நியர் சிலர் மாண்டனர். பலருக்குக் காயம். இதனைத் தடுப்பதாகக் காரணம் சொல்லிக் கொண்டு, பிரிட்டிஷ், அமெரிக்க யுத்தக் கப்பல்கள் துறைமுகத்திற்குள் வந்து நகரத்தை நோக்கிப் பீரங்கிப் பிரயோகம் செய்தன. இவைகளுக்கெல்லாம் காரணர்கள் பொதுவுடைமை வாதிகளல்லவா? மற்றும் தான் வடக்கு நோக்கிப் படையெடுத்து முன்னேறிச் சென்று கொண்டிருக்கையில், பொது வுடைமைவாதிகள், தேசீய அரசாங்கத்தை காண்ட்டனி லிருந்து வூஹானுக்கு மாற்றி விட்டார்களல்லவா என்றெல்லாம் சிந்திக்கத் தொடங்கினான் சியாங். நான்கிங்கில் அரசாங்கத்தை தாபித்துக் கொண்டதும், இவனுடைய சிந்தனை, பொது வுடைமை வாதிகளின் மீது ஆத்திரமாகத் திரும்பியது. அவ்வளவு தான். இவனுடைய ஆதிக்கத்திற்குட்பட்டிருந்த பிரதேசங் களில் கடுமையான அடக்கு முறை ஆரம்பித்து விட்டது. பொதுவுடைமை வாதிகள் படுகொலை செய்யப்பட்டார்கள். பொதுவுடைமை இயக்கத்தில் சம்பந்தப் பட்டிருப்பது,மரண தண்டனைக்குரிய ஒரு குற்ற மென்று நான்கிங் அரசாங்கம் ஒரு சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வந்தது. சோவியத் ருஷ்யாவில் செம்படைகளுக்கு விரோதமாக வெண்படை களின் பயங்கர ஆட்சி எப்படி நடை பெற்றதோ ஏறக் குறைய அதைப்போல் வூஹான் அரசாங்கத்துப் பொதுவுடைமை வாதிகளின் பயங்கர ஆட்சியை அடக்கி ஒடுக்க, நான்கிங் அரசாங்கத்தின் பெயரால் சியாங் மற்றொரு பயங்கர ஆட்சியை நடத்தினானென்பர்.
சியாங், இங்ஙனம் நான்கிங்கில் ஒரு போட்டி அரசாங்கத்தை தாபித்துக் கொண்டு, பொதுவுடைமை வாதிகளை ஒடுக்கி வருவதைக் கண்ட வூஹான் அரசாங்கம், அவனை-சியாங்கை-கோமிண்ட்டாங் கட்சியிலிருந்து விலக்கிவிட்டது. ஆனால் அந்தக் கட்சிக்குள்ளேயே, ஏற்கனவே படிந்து கொண்டுவந்த மனக்கசப்பு இப்பொழுது வெளியே தோன்ற ஆரம்பித்தது. பொதுவுடைமை வாதிகள் அதி தீவிரமாகச் செல்கிறார்களென்று ஒரு சாரார் அபிப் பிராயப்பட்டனர். அரசாங்கத்தின் தலைவனாக வாங் சிங் வெய்யும் அவனுடைய சகாக்களும் ஒரு பிரிவினராகவும், போரோடின்னின் செல்வாக்கிலே ஈடுபட்டிருந்த பொதுவுடைமை வாதிகள் வேறொரு பிரிவினராகவும் பிரிந்தார்கள். இதற்கு அடிப்படையான காரணம் என்னவென்றால், முன்னவர்-வாங் சிங் வெய் கட்சியினர்-பணமும் நிலமும் உடைய பெரியதனக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மேனாட்டுக் கல்வி பயின்றதன் பயனாக இவர்களுக்குப் பொது வுடைமைக் கொள்கையில் அநுதாபம் இருந்தது. ஆனால் புரட்சி கரமான சீர்திருத்தங்களைக் கொண்டுவந்து புகுத்தி சமுதாயத்திலே ஒருவித மாற்றத்தை உண்டு பண்ண இவர்கள் விரும்பவில்லை சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், இவர்கள் நகரங்களிலே இருந்துகொண்டு நாகரிகமாக ஏழை மக்களுக்குத் தொண்டு செய்வதிலே திருப்தி அடைந்தார்கள். பின்னவரோ-பொது வுடைமை வாதிகள்-ருஷ்யப் புரட்சியின் வெற்றியிலே மயங்கிப் போனவர்கள்; பொதுவுடைமைச் சமுதாயத்தைச் சீனாவிலே தாபித்துவிட வேண்டுமென்ற நோக்கங் கொண்டவர்கள்; விவசாய சீர்திருத்தத்திலே முனைந்தவர்கள். இவர்களிற் பெரும்பாலோர், மேனாட்டு அரசியல், சமுதாய சம்பிரதாயங்களை நன்கு அறிந்தவர் களாயிருந்தாலும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்; வாழ்க்கை யின் கஷ்ட நிஷ்டூரங்களை ஓரளவு அனுபவித்தவர்கள். இந்த இரு சாராருக்கும் மத்தியில் பரபர சந்தேகங்களும் சூழ்ச்சிகளும் வளர்ந்தன. கடைசியில் வாங் சிங் வெய் கட்சியினர், வூஹான் அர சாங்கத்தின் பெயரால், பொதுவுடைமை வாதிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டனர். இதனால் பலர், அடுத்தாற் போன்றிருந்த கியாங்க்ஸி மாகாணத்திற்குத் தப்பியோடினர். போரோடின்னும் அவனுடைய ருஷ்ய சகாக்களும் கோமிண்ட் டாங் கட்சியிலிருந்து விலக்கப்பட்டு, துருக்கிதானத்தின் மூலம் ருஷ்யாவுக்குத் தப்பிச் சென்றனர்.
இங்ஙனம் பொதுவுடைமை வாதிகளின் மீது நடவடிக்கை எடுத்துக்கொண்டதோடுகூட, வூஹான் அரசாங்கமானது, சோவியத் ருஷ்யாவின் தொடர்பையும் அறுத்துக் கொண்டுவிட்டது. இனி கோமிண்ட்டாங் கட்சிக்குள் வலதுசாரியென்றும் இடது சாரி யென்றும், அல்லது பொதுவுடைமை வாதிகளென்றும் தேசீயவாதி களென்றும் கட்சிப் பிரிவினைகள், கொள்கை வேற்றுமைகள் இருக்க வேண்டிய தில்லையல்லவா? எல்லோரும் தேசீயவாதிகள்தானே? எனவே, வாங் சிங் வெய்யை தலைவனாகக் கொண்ட வூஹான் அரசாங்கத்திற்கும், நான்கிங் அரசாங்கத்திற்கும் சமரஸம் ஏற்பட்டது. இந்தச் சமரஸ ஏற்பாட்டில் யாருக்கும் எந்தவிதமான மனக்கர கரப்பும் இருக்கக்கூடாதென்பதற்காக சியாங் நல்லெண்ணமுடைய சில நண்பர்களின் யோசனையின் பேரில் நான்கிங் அரசாங்கத்துத் தலைமைப் பதவியினின்றும், பிரதம சேனாதிபதிப் பதவியினின்றும் விலகிக் கொண்டு 1927-ஆம் வருஷம் ஆகட் மாதம் ஜப்பானுக்குச் சென்றுவிட்டான். அடுத்த மாதம் - செப்டம்பர்-நான்கிங்கில் ஐக்கியப் பட்டதோர் அரசாங்கம் தாபிக்கப்பட்டது.
நான்கிங்கில் ஐக்கியப்பட்ட தேசீய அரசாங்கம் தாபிக்கப் பட்ட சில மாதங்களுக்குள், சியாங்கின் சேவை அதற்குத் தேவையா யிருந்தது. எனவே அவன் திரும்பவும் வரவழைக்கப்பட்டு 1928-ஆம் வருஷம் ஜனவரி மாதம், பழைய மாதிரி பிரதம சேனாதிபதியாக நியமிக்கப்பட்டான். நியமிக்கப்பட்டவுடன், சியாங், தனது பெருஞ் சேனையுடன் வடக்கு நோக்கிச் சென்று அநேக வெற்றிகளைக் கண்டான்; எதிரிட்ட ராணுவப் பிரபுக்கள் பலர் தொலைந்தனர். ஆனால் பீக்கிங் நகரம் மட்டும் சிறிது காலம் எதிர்ப்புக் காட்டியது. இதற்கு முக்கிய காரணம் ஜப்பானின் சூழ்ச்சிதான். சியாங்கின் தேசீயப் படையானது, பீக்கிங்கை நோக்கி வருமானால், ஷாண்டுங் மாகாணத்திலும் மஞ்சூரியாவிலும் தான் அனுபவித்துவரும் சலுகைகளுக்கு ஆபத்து ஏற்படக்கூடுமென்று அஞ்சி, அஃது ஒரு படையை சியாங்குக்கு விரோதமாக அனுப்பியது. பீக்கிங்குக்குத் தெற்கே இரண்டு படைகளும் சந்தித்தன. சியாங்கின் படை, சிறிது தெற்குப் பக்கமாகப் பின்வாங்கிக்கொள்ளும்படி நேரிட்டது. இந்தக் காலத்தில் பீக்கிங் நகரம், ஏற்கனவே மஞ்சூரியாவைத் தன் செல்வாக் குக்குட்படுத்திக் கொண்டிருந்த சாங்க் ஸோ லின்1 என்ற ராணுவப் பிரபுவின் வசம் இருந்தது. இவன் ஜப்பானின் நண்பன். இவனை நம்பியே, ஜப்பான், தனது படையை பீக்கிங் நோக்கியனுப்பியது. ஆனால் இந்த சாங் ஸோ லின், நல்ல சமயம் பார்த்து, ஜப்பானின் நட்பைப் புறக்கணித்து விட்டு, தனது படையுடன் வடக்கே மஞ்சூரி யாவுக்குப் போய்விட்டான். ஆனால் அப்படிப் போய்க்கொண்டி ருக்கிறபோது இவன் ஏறிச் சென்ற ரெயில் வண்டியானது, வெடி மருந்ததினால் நொறுங்கிப் போய்விட்டது. இதற்கு ஜப்பானின் சூழ்ச்சிதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இவனுக்குப்பிறகு இவனுடைய மகனான சாங் ஸுயே லியாங்2 என்பவன், ஜப்பானின் பயமுறுத்தல்களையெல்லாம் பொருட்படுத்தாமல், நான்கிங் அரசாங்கத்துடன் ஒரு சிநேக ஒப்பந்தம் செய்துகொண்டான். இதற்குப் பிறகு பீக்கிங் நகரம் சுலபமாக சியாங்கின் வசப்பட்டு விட்டது. சாங் ஸுயே லியாங்கின் ஆதீனத்திற்குட்பட்ட மஞ்சூரி யாவில் சீனக் குடியரசின் கொடி பறந்தது. 1928-ஆம் வருஷம் ஜூலை மாதத்திற்குள் இவையெல்லாம் முடிந்துவிட்டன. சியாங்குக்கோ முன்னைக்காட்டிலும் இப்பொழுது அதிகமான செல்வாக்கு ஏற் பட்டதென்பதைச் சொல்லவேண்டு வதில்லை. 1928-ஆம் வருஷம் அக்டோபர் மாதம் பத்தாந்தேதி, புரட்சி விழா வன்று1 நான்கிங் தேசீய அரசாங்கத்தின் தலைவனாகத் தெரிந்தெடுக்கப் பட்டான்.
இந்த நான்கிங் அரசாங்கத்தில் தொழிலாளர் பிரதிநிதி களுக்கோ, விவசாயிகளின் பிரதிநிதிகளுக்கோ இடங்கொடுக்கப்பட வில்லை. ஆனால் இவர்கள்தான் சியாங்கின் வெற்றிகளுக்கெல்லாம் முக்கிய காரணர்களாயிருந்தவர்கள்; ஷாங்காய் முதலாளிகளல்ல. ஆனால் முதலாளிகளும், நிலப்பிரபுக்களும், ராணுவத் தலைவர்களுமே இந்த நான்கிங் அரசாங்கத்தில் அதிக இடம் பெற்றார்கள். இந்த நான்கிங் அரசாங்கத்திற்கும், 1911-ஆம் வருஷத்துப் புரட்சிக்குப் பிறகு பீக்கிங்கில் ஏற்பட்ட பொம்மை அரசாங்கத்திற்கும் என்ன வித்தியாச மென்றால், பிந்தியது ராணுவப் பிரபுக்களினுடையதும், அந்நிய வல்லரசுகளி னுடையதும் ஆடற் கருவியாக இருந்தது. நான்கிங் அரசாங்கமோ, சீனாவின் புதிய, பழைய பணக்காரக் கூட்டத்தி னுடையதும், தொழில் முதலாளிகள், வியாபாரிகள், ராணுவத் தலைவர்கள் முதலி யோருடையவும் பிரதிநிதியாக இருந்தது. இவர்கள் எப்படியோ ஒருவகையில், இந்த நான்கிங் அரசாங்கத் திலும், கோமிண்ட்டாங் கட்சியிலும், ராணுவத்திலும், உயர்தர உத்தியோகங்களிலும் பிரதிநிதித்துவம் பெற்றிருந்தார்கள். அர சாங்க முழுவதும் அந்நிய வல்லரசுகளின் நெருக்கலுக்குச் சுலபமாக இணங்கக்கூடியதாயிருந்தது.
பொதுவுடைமையினரின் நடைப்பயணம்
வூஹான் அரசாங்கத்தின் கைக்கு அகப்படாமல் பொது வுடைமை வாதிகள் பலர், கியாங்க்ஸி மாகாணத்திற்குத் தப்பிச் சென்றார்களென்று முன்னே சொன்னோமல்லவா? இவர்களோடு நான்கிங் அரசாங்கத்தின் பயங்கரமான அடக்கு முறைக்கு ஆட் படாமல், பல இடங்களிலிருந்து தப்பிவந்த பொதுவுடைமை வாதிகள் பலரும் சேர்ந்து கொண்டார்கள். இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மேற்படி கியாங்க்ஸி மாகாணத்தில் பழைய மாதிரி தங்கள் பொதுவுடைமைக் கட்சியை ஒழுங்குபெற அமைத்துக் கொண்டார்கள்; சோவியத் முறையில் ஒரு செம்படையைத் தயாரித்துக்கொண்டார்கள். இந்தச் செம்படையைச் சேர்ந்த வர்களிலேயே சிலர், ஒளிவுமறைவாயிருந்து, சத்துருக்கள் தென்படு கிறபோது அவர்களைத் திடீர் திடீரென்று தாக்கிவிட்டுத் திரும்ப ஓடி ஒளிந்துகொள்கிற முறையில் பயிற்சி அளிக்கப்பட்டார்கள். இந்தப் போர் முறைக்கு கொரில்லாப் போர் முறை1 என்று பெயர். இந்த முறையில் பயிற்சி பெற்றவர்களைக் கொண்ட ஒரு தனிப் படை காலக்கிரமத்தில் அமைக்கப்பட்டது.
பொதுவாகச் செம்படையைச் சேர்ந்தவர்களுக்கு ராணுவப் பயிற்சியோடு உலக விவகாரங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளக் கூடிய கல்விப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. இதனால் இந்தப் படையைச் சேர்ந்தவர்கள், சிறந்த போர் வீரர்களாகவும் திறமை யான பிரசாரர் களாகவும் அமைந்தார்கள். இவர்களைக் கொண்டு கியாங்க்ஸி மாகாணத்தின் பல பாகங்களிலும் பொதுவுடைமைக் கொள்கையைப் பரப்பியதோடு, 1931-ஆம் வருஷம் ஒரு சீன சோவியத் குடியரசு அரசாங்கத்தையும் தாபித்துக் கொண்டார்கள், பொதுவுடைமைக் கட்சித் தலைவர்கள். கியாங்ஸி மாகாணத்தின் தென்கிழக்கு எல்லையிலுள்ள ஜூயிசின்2 என்ற ஊர், இந்த அரசாங் கத்தின் தலைநகரமா யமைந்தது. இப்படி அமைத்துக் கொண்டது வரையில் இவர்கள் மீது நான்கிங் அரசாங்கம் அதிகமாகக் கவனஞ் செலுத்தவில்லை. வட மாகாணங்களில், ராணுவப் பிரபுக்களால் அவ்வப்பொழுது ஏற்பட்டுக் கொண்டுவந்த இடைஞ்சல்களைச் சமாளிப்பதிலும், தனது நிருவாகத்தைச் சீர்திருத்தி ஒழுங்குபடுத்து வதிலுமே அதனுடைய கவனமெல்லாம் திரும்பி யிருந்தது. ஏதோ ஏகதேசமாகச் சில படைகளை இந்தப் பொதுவுடைமை வாதிகளுக்கு விரோதமாக அனுப்புவதும் பிறகு வாப வாங்கிக்கொள்வது மாகவே இருந்தது. இதனால் பொது வுடைமை வாதிகள், தங்கள் கொள்கைகளை அனுஷ்டானத்திற்குக் கொண்டு வருகிற விஷயத்தில் அதிகமான எதிர்ப்பைப் பெறாமலி ருந்தார்கள். இந்தக் காலத்தில் இவர்கள் கிராமங்கள் தோறும் சென்று செய்த அற்புதமான வேலையும், அதன் பயனாகச் சீன சமுதாயத்தின் வாழ்க்கையிலேற் பட்ட மாறுதல்களும் ஒரு கட்டுக்கதை மாதிரியாகவே இருக்கின்றது. 1927-ஆம் வருஷத்தி லிருந்து 1937-ஆம் வருஷம் சீன-ஜப்பானிய யுத்தம் தொடங்கியவரை சுமார் பத்து வருஷ காலம், சீனாவில் பொதுவுடைமை வாதிகள் பட்ட கஷ்டங்கள், செய்த சேவைகள், வெற்றி கண்ட போர்கள் முதலியவற்றைப்பற்றி விதரித்துத் தனியாக ஒரு சரித்திரமே எழுத வேண்டும். இந்தச் சரித்திரம் நிச்சயம் தியாகிகளின் சரித்திரமாக இருக்கும்.
ராணுவ முறையிலும் பிரசார முறையிலும் பயிற்சி பெற்ற பொதுவுடைமை வாதிகள், கிராமங்களிலே சென்று விவசாயிகளுக்கு, அவர்களுடைய நிலையென்ன, அவர்கள் எப்படிச் சுரண்டப் படுகிறார்கள், அவர்கள் சுரண்டப்படாமலிருக்கத் தாங்கள் - பொது வுடைமை வாதிகள் - காட்டுகிற வழியென்ன, செய்யப்போகிற ஏற்பாடுகளென்ன ஆகிய இவைகளைப்பற்றி விதரித்துச் சொல்லி வந்தார்கள். ஏழைக் குடியானவர்கள், வறுமையிலே உழன்று கொண்டிருக்கிற விவசாயிகள் ஆகியோர் இவர்களுக்கு நல்வரவு கூறி, இவர்களை ஆதரித்ததோடு மட்டுமல்லாமல் பின்பற்றவும் செய்தார்கள். இங்ஙனம் சமுதாயத்தின் கீழப்படியிலுள்ளவர் களுடைய பேராதரவைப் பெற்றுக் கொண்டு கியாங்க்ஸி மாகாணத் திலேயே தங்கியிருந்தது, சீன சோவியத் அரசாங்கம் 1934-ஆம் வருஷம் வரையில்.
இந்தக் காலத்தில், இது- சோவியத் அரசாங்கம்- தனது ராணுவ பலத்தை ஒன்றுக்கு நான்காகப் பெருக்கிக்கொண்டது. இந்த ராணு வத்தில் சேர்ந்தவர்கள் யார்? வாழ்க்கையின் கரடுமுரடான பாதைகளை நன்கு அறிந்த விவசாயிகள்! பொதுவுடமைவாதிகளை அடக்கி ஒடுக்க அவ்வப்பொழுது நான்கிங் அரசாங்கத்தினால் அனுப்பப் பெற்ற படைகளிலிருந்து தப்பி வந்தவர்கள்! ஆக இந்தச் சீனச் செம்படையினர் கூலிக்கு மாரடிக்கிறவர்களல்லர்; தேசபக்தியும், தியாக உணர்ச்சியும், சீலவாழ்க்கையும் நிரம்பிய வீரர்கள். இதனால் இவர்கள், எண்ணிக்கையில் குறைந்தவர்களாயிருந்தும், நவீன யுத்த சாதனங்கள் எதனையும் பெறமாலிருந்தும், நான்கிங் அரசாங்கத் துருப்புகளின் கைக்கு அகப்படாமலேயே அநேக அரிய பெரிய காரியங்களைச் சாதித்துக் கொண்டு வந்தார்கள். இவர்களை நான்கு பக்கத்திலுமாகச் சூழ்ந்து கொண்டு அப்படியே கூட்டுக்குள் அகப் படுத்தினாற்போல் அகப்படுத்தி நசுக்கிவிட நான்கிங் அரசாங்கம் பல தடவைகளில் முயற்சி செய்தபோது, இவர்கள் கடல் தொடர்பே இல்லாத கியாங்க்ஸி மாகாணத்திலிருந்து வாட்டோ, அமாய்1 முதலிய துறைமுகங்களின் மூலம் வெளியுலகத் துடன் சகஜமான தொடர்பு வைத்துக்கொண்டிருந்தார்கள். இவர்களை வழிமறிக்க அனுப்பப்பெற்ற நான்கிங் துருப்புகள், அநேக சமயங்களில் இவர்களுக்கு வழிகாட்டின! இவர்களுக்குத் தேவையான ஆயுதங் களையும் கொண்டு கொடுத்தன! சில சந்தர்ப்பங்களில், நான்கிங் துருப்பு களுக்கே அகப்படாமல் இந்தச் செம்படையினர் தப்பித்து ஓட வேண்டி யிருக்கும். அப்பொழுது வழியிலுள்ள கிராமவாசிகள் இவர்களை ஒளித்து வைத்துக் காப்பாற்றுவார்கள். ஒளிவுமறைவாயிருந்து சண்டை செய்வதிலே இந்தச் செம்படை யினரில் பலர் தேர்ச்சி பெற்றவர் களாதலின், தாங்கள் அதிகமான சேதத்திற்கு ஆட்படாமல் எதிரிகளுக்கு மிகுதியான சேதத்தை உண்டு பண்ணிக்கொண்டுவர இவர்களால் முடிந்தது. பொதுவாக இவர்கள் ஜனங்களோடு ஜனங்களாக இருந்து, ஜனங்களுடைய அன்பையும் ஆதரவையும் பெற்று, ஏகபோக உரிமைச் சக்திகளை எதிர்த்துப் போராடிக் கொண்டே பொதுவுடைமைக் கட்சியை வளர்த்து வந்தார்கள்; பொதுவுடைமை அரசாங்கத்தைத் திறம்பட நடத்தி வந்தார்கள்.
1928- ஆம் வருஷம் கியாங்க்ஸி மாகாணத்தில் முதன் முதலாக இந்தச் சீனச் செம்படை துவக்கப்பட்டபோது இதில் மொத்தம் சுமார் பதினாயிரம் போர் வீரர்களே இருந்தார்கள்; ஆனால் 1930-ஆம் வருஷம் சுமார் முப்பதினாயிரம் பேராகவும் 1934-ஆம் வருஷம் ஒரு லட்சத்து இருபதினாயிரம் பேராகவும் அதிகப்பட்டனர். கியாங்க்ஸி மாகாணத்தில் 1931-ஆம் வருஷம் சோவியத் குடியரசு தாபிக்கப்பட்ட போது, பத்தொன்பது ஜில்லாக்கள் இதன் நிருவாகத்திற்குகுட்பட்டிருந்தன. பொதுவுடைமைக் கட்சி, சட்ட விரோதமான கட்சியென்று தடுக்கப் பட்டிருந்தபோதிலும், இவர்கள்- இந்தப் பொதுவுடைமை வாதிகள்-மறைமுகமாக இருந்துகொண்டு நகரங்களில் தொழிலாளர்கள் சங்கங் களையும், கிராமங்களில் விவசாய தாபனங்களையும் விடாமல் நடத்திக்கொண்டு வந்தார்கள். தொழிலாளர் தினமென்று சொல்லப்படுகிற மே தினக் கொண்டாட் டத்தைக் கூட கொண்டாடி வந்தார்கள். நாளுக்கு நாள் தங்கள் சோவியத் ஆட்சியை பல மாகாணங்களுக்கும் விதரித்துக் கொண்டு சென்றார்கள். கிழக்கேயுள்ள பூக்கியென்2 மாகாணத்தி லிருந்து வடமேற்கேயுள்ள ஹோனான், ஷென்ஸி, ஷெக்குவான் ஆகிய மாகாணங்கள் வரை, பல இடங்களிலும் இவர்கள் அவ்வப் பொழுது சோவியத் அரசாங்கங்களை ஏற்படுத்தி, சமதர்ம விளக்கு அணையாத படிக்குப் பாதுகாத்து வந்தார்கள்.
முதலாளித்துவத்திற்கும் அந்நிய ஆதிக்கத்திற்கும் விரோதமாக உள்நாட்டிலேயே வளர்ந்து கொண்டு வரும் இந்த ஜனசக்தியை-பொதுவுடைமை இயக்கத்தை-சீன சோவியத் அரசாங்கத்தை -அடியோடு அழித்துவிட பகீரதப் பிரயத்தனங்கள் செய்தான் சியாங். இந்த கைங்கரியத்தில் இவனுக்கு ஐரோப்பிய வல்லரசுகள் துணை செய்தன; புதிய புதிய யுத்த தந்திரங்களைக் கற்றுக் கொடுத்தன.
கியாங்க்ஸி செம்படைக்கு விரோதமாக சியாங் கை ஷேக், 1930-ஆம் வருஷத்திலிருந்து 1934-ஆம் வருஷத்திற்குள், ஏறக்குறைய நான்கு வருஷ காலத்தில் ஆறு தரம் படையெடுத்தான்; இந்தப் படை யெடுப்புக்களிலே ஆறு லட்சம் துருப்புகளை உபயோகித்தான். ஆகாய விமானங்கள், யந்திர பீரங்கிகள், டாங்கிகள் முதலிய நவீன யுத்தக்கருவிகள் பலவும் இந்தப் படையெடுப்புக்களின் போது கையாளப்பட்டன. ஆயினும் இவனால் வெற்றிகாணமுடியவில்லை. செம்படைகளின் கொரில்லாப் போர்த் தந்திரங்களுக்கு முன்னால் இவனுடைய நவீன நாகரிக யுத்த தந்திரங்கள் செல்லுபடியாக வில்லை. எனவே 1934-ஆம் வருஷம் அக்டோபர் மாதம், கியாங்க்ஸி மாகாணத்தையே சுற்றி வளைத்துக்கொள்ளும்படி தன் படை களுக்கு உத்தரவிட்டான். செம்படையினருக்கு ஆயுதம், ஆகாரம் முதலிய எதுவுமே செல்லாதபடி தடுத்து விட்டான். பட்டினி போட்டு அவர்களைச் சரணடையும்படி செய்ய வேண்டுமென்பது இவன் நோக்கம்.
ஆனால் செம்படையினர் சரணடயவில்லை; சியாங்கை ஷேக் கட்டிய மனிதக் கோட்டைக்குள்ளும் அகப்பட்டுக் கொள்ளவில்லை. 1934-ஆம் வருஷம் நவம்பர் மாதம் கியாங்க்ஸி மாகாணத்திலிருந்து கால்நடையாக வெளியேறி விட்டார்கள். சுமார் நான்கு வருஷகாலம் ஒரு கட்டுக்கோப்பாக அமைந்து வந்த அரசாங்கம்-பொது வுடைமை அரசாங்கம்-திடீரென்று கலைந்து, தனது பரிவாரங் களோடும் சகலவிதமான தளவாடங்களோடும் கால்நடையாகப் புறப்பட்டு விட்டதென்று சொன்னால், அப்படிப் புறப்பட்டவர்களுக்கு எவ்வளவு மனஉறுதி இருக்க வேண்டும்? எதிரியின் கையில் சிக்கிக் கொள்ளக் கூடாதென்ற ஒரு சங்கற்பத்துடன் கிளம்பின இவர்களை, அந்த எதிரியின் படைகள் துரத்திக் கொண்டே வந்தன. அந்தப் படை களுக்கு அகப்படாமல் இந்தச் செம்படையினர் சுமார் ஆறாயிரம் மைல் தூரம் நடைப் பிரயாணமாகச் சென்றனர். எந்த நிமிஷத்திலும் ஆபத்து! எந்த இடத்திலும் ஆபத்து! வழியிலே கடக்க வேண்டிய மலைகள் எத்தனை! இவைகளுக்கு நடுவே உடற்சோர்வும் உள்ளச் சோர்வும் அடைந்து மடிந்தவர் எத்தனை பேர்? ஆனாலும் செம்படையினர் இந்த இடையூறுகளையெல்லாம் பொருட்படுத்தாமல் சுமார் ஒரு வருஷகாலம் வரை நடந்து சென்று கடைசியில், இனியும் நான்கிங் துருப்புகளால் துரத்திக்கொண்டு வரமுடியாது, அவர்கள் கைக்கு நாமும் அகப்பட மாட்டோம் என்று நிச்சயமாகத் தெரிந்ததும், வடமேற்கேயுள்ள ஷென்ஸி மாகாணத்தில் பிரவேசித்து, அங்கு யேனான்2 என்ற ஊரைத் தலைநகரமாகக் கொண்டு 1935-ஆம் வருஷம் அக்டோபர் மாதம் பழைய மாதிரி பொதுவுடைமை அரசாங்கத்தை தாபித்துக் கொண்டனர். இப்படி ஒரு வருஷ காலத்தில் சகல முதீபுக் களோடும் 9,600 கிலோமீட்டர் (6,000மைல்) நடந்து யேனானில் சென்று மீண்டும் தங்களை தாபித்துக்கொண்டது பெரிதல்ல; இவர்கள், நடை வழியில் கிராமங்கள் தோறும் தங்கள் பொது வுடைமைக் கொள்கையை இடைவிடாமல் பிரசாரஞ் செய்து, ஜனங்களுடைய வாழ்க்கையிலே ஒரு புதிய ஜீவசக்தியைப் புகுத்திக் கொண்டு வந்ததிருக்கிறதே அதுதான் பெரிது; மகா அற்புதம்.
செம்படையினர் இந்த 9,600 கிலோ மீட்டர்களையும் நடந்தே கடந்தனர் என்று சொன்னால், வாடிய முகமும், சூனிய மனமும் உடைய தனி மனிதர் பலர் கையை வீசிக் கொண்டோ அல்லது கோலை ஊன்றிக் கொண்டோ சென்றனர் என்பது அர்த்தமல்ல. அநேக ஆபத்துக்களின் நடுவே ஆயிரக்கணக்கான, இல்லை இல்லை, லட்சக்கணக்கான தியாகிகள் அடங்கிய ஒரு ஜன சமுதாயமே திரண்டு சென்றது என்பதுதான் அர்த்தம். அரசுக்குரிய அங்கங் களென்ன, ஒரு சமுதாயத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய தொழிற்சாலைகளென்ன, தாக்குதலுக்கும் தற்காப்புக் குமான படைகளென்ன, மனிதனுடைய மேலான உணர்ச்சிகளை வளர்க்கிற கலைக்கழகங்கள், நாடகசாலைகள் என்ன ஆகிய இவையாவும் இந்த நடை சமுதாயத்தில் அடங்கியிருந்தன. முன்னே உயர்ந்த மலைகள் அல்லது ஆழ்ந்த பள்ளத்தாக்குகள் அல்லது அகன்ற நதிகள்; பின்னே பீரங்கிகள் முழக்கிக் கொண்டு துரத்துகிற நான்கிங் அரசாங்கப் படைகள்; மேலே குறி பார்த்துக் குண்டுபோட வட்ட மிடும் ஆகாய விமானங்கள்; இவைகளுக்கு மத்தியில், சூட்சுமமாயுள்ள ஜன சக்தியின் தூல வடிவமான இந்தச் செம்படையினர், ஆண் பெண் வித்தியாசமின்றி, படித்தவன் பாமரன் என்ற வேற்றுமையில்லாமல், ஏழை பணக்காரன் என்ற பாகுபாடற்று, ஒரே மனம், ஒரே உணர்ச்சி, ஒரே லட்சியமுடைய வர்களாய், ஒரே குரலில் -
"எழுக! அடிமைகளாயிருக்க விரும்பாதவர்
அனைவரும் எழுக!
நமது சதையும் ரத்தமும் சேர்ந்து ஒருபெருஞ்
(சீன) சுவர் எழுப்பும்"
என்று ஆரம்பிக்கிற நடைபயிலும் கீதத்தைப் பாடிக் கொண்டு சென்ற காட்சி, சீன இதிகாசத்திலேயே ஒரு புனிதமான படலம்; சமதர்ம சித்தாந்தத்திற்கே ஒரு வெற்றி.
இந்தப் பொதுவுடைமை வாதிகள் என்னென்ன வேலைகளைச் செய்தனர், இவர்களுடைய அரசாங்கம் எந்த மாதிரி இயங்கிக் கொண்டு வந்தது என்பவைகளைப் பற்றிச் சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம். இந்தச் சீன சோவியத் அரசாங்கம், தொழிலாளர், விவசாயிகள், செம்படையினர் ஆகிய இவர்களுடைய குடியரசு அரசாங்கம். இவர் களுடைய அதிகாரத்தின் பிரதிநிதியாக இருந்தே இஃது இயங்குகிறது. இவர்களுடைய அதிகாரம் செல்லுபடி யானதாக இருக்க வேண்டு மென்பதற்காக, சமுதாயத்தி லுள்ள உழைப்பாளிகள் அனைவருக்கும் ஓட்டுரிமை உண்டு. நிலச்சுவான் தார்களும் தொழில் முதலாளிகளும் உழைப்பாளி களல்லராதலால் அவர்களுக்கு ஓட்டுரிமை இல்லை. எல்லா ஜாதியினருக்கும்-மங்கோலியர், திபேத்தியர், கொரியர் முதலிய சீனாவில் வசிக்கும் சகல ஜாதியினருக்கும்-சுய நிர்ணய உரிமை உண்டு. பேச்சுரிமை, சங்கமாகக் கூடும் உரிமை, மத உரிமை முதலிய எல்லா உரிமைகளும் எல்லாப் பிரஜைகளுக்கும் உண்டு. ஆண்களுக்குப் சமமாகப் பெண்களுக்கு எல்லா உரிமைகளும் உண்டு. எல்லாப் பிரஜைகளுக்கும், அரசாங்கத்திடமிருந்து கல்விபெற உரிமையுண்டு. இந்தப் பொதுவுடைமை அரசாங்கத்தின் நோக்கம், ஏகாதிபத்தியத்தின் தளையிலிருந்து சீனாவை விடுதலை செய்வது, சீனாவின் பரிபூரண சுதந்திரத்தை நாடுவது, ஏற்றத் தாழ்வான உடன்படிக்கைகள், கன்ஸெஷன்கள், விசேஷப் பிரதேச உரிமைகள், சீனாவில் அந்நிய வல்லரசுகள் தங்கள் துருப்புகளை வைத்துக் கொள்வதற்கான உரிமை ஆகிய இவைகளையெல்லாம் ரத்துசெய்வது முதலியனவாம். அந்நிய நாட்டு முதலாளிகள், இந்தச் சீன சோவியத் அரசாங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு இணங்கி நடக்கச் சம்மதிப்பார்களானால், அவர்களுடைய தொழில் தாபனங்களுக்குப் புதிய குத்தகைச் சீட்டெழுதிக் கொண்டு அனுமதி அளிக்கப் படும். நிலப் பிரபுக்கள், ராணுவ தளகர்த்தர்கள் முதலியோருடைய பெருவாரியான நிலங்களைப் பறிமுதல் செய்து, நிலமில்லாத ஏழை விவசாயிகளுக்குப் பகிர்ந்து கொடுக்கப்படும். இந்த நிலப்பங்கீடு ஒரே மாதிரியில்லாமல் அவரவருடைய குடும்பத்தேவை, உழைப்புச் சக்தி, நிலத்தின் தரம் இவைகளை அனுசரித்தே இருக்கும். தொழிலாளர் வேலை நேரம் எட்டு மணியாக இருக்கும். ஆபத்தான தொழில்களில் குறை வான வேலை நேரம் அனுமதிக்கப்படும். பதினான்கு வயதுக்கு மேற் பட்டவர்தான் எந்தத் தொழிற் தாபனத்திலும் தொழிலாளி யாகச் சேர்த்துக் கொள்ளப்படலாம். மற்றபடி இன்ஷ்யூரன் திட்டம், நோயாகப் போனால் ரஜா, பெண்களுக்குப் பிரசவ ரஜா முதலிய தொழிலாளர் சம்பந்தப் பட்ட உரிமைகள் யாவும் சட்ட பூர்வமாக அங்கீகரிக்கப்பெறும். ஜீவாதாரமான தொழில்கள் யாவும் தேசீய மயமாக்கப்பெறும். ஆனால் சொந்த முறையில் நடத்தப் பெறுகிற தொழில் தாபனங்களுக்குச் சில நிபந்தனைகளுடன் அனுமதி யளிக்கப்படும். கூட்டுறவு தாபனங்களுக்கு அதிக ஆதரவு கொடுக் கப்படும். தேசீய பாங்கி ஒன்று தாபிக்கப்பெறும். லேவாதேவித் தொழில் ரத்து செய்யப்பெறும். பலவகைப்பட்ட வரிகள் நீக்கப் பட்டு அவரவருடைய பொருளாதார நிலைக்குத் தகுந்தபடி தரவாரி யாக ஒரே வரி விதிக்கப்பெறும். இவைதான் சீன சோவியத் அரசாங் கத்துச் சட்டதிட்டங்களின் சுருக்கம்.
இந்தச் சட்டத்திட்டங்கள் ஏட்டிலே பார்க்கும் அளவோடு திருப்தியடையவில்லை பொதுவுடைமை வாதிகள். கியாங்க்ஸி மாகாணத்தில் தங்களுடைய நிருவாகத்தை அமைத்துக் கொண்டதும், இவைகளை வரிசைக் கிரமமாக அனுஷ்டானத்திற்குக் கொண்டு வருவதில் அதிக சிரத்தை காட்டினார்கள். நிலச் சுவான்தார்கள் பெருவாரியான நிலங்களுக்கு அனுபவபாத்தியதை கொண்டாடிக் கொண்டு வந்ததை ரத்து செய்து அவர்களுடைய நிலங்களை, நிலமில்லாத விவசாயிகளுக்கு அவர்களுடைய தேவையை அனு சரித்தும் தரவாரியாகவும் பிரித்துக் கொடுத்தார்கள். பணக்காரர்கள் தேவைக்கதிக மாக வைத்திருந்த பணத்தையெல்லாம் பறிமுதல் செய்து, தங்களுடைய அரசாங்கச் செலவுக்கு உபயோகித்துக் கொண்டார்கள். இதனால், விவசாயிகளை, முதலிற் சிறிது காலம் நில வரி கட்ட வேண்டாமென்று சொல்லி விட்டார்கள். அவர்களுக்கு இது சந் தோஷந்தானே? இந்த அரசாங்கத்தின் மீது விசுவாச முடையவர்களாயி ருப்பார்களல்லவா? பின்னர்ச் சிறிது காலங்கழித்து, குடியானவர்கள், தங்கள் நெல் மகசூலில் நூற்றுக்கு ஐந்து முதல் பதினைந்து சதம் வரை நெல்லாகவே கொடுத்து விட வேண்டுமென்று சொல்லப்பட்டார்கள். செம்படைச் செலவுக்காகப் பிரதியொரு ஜில்லாவிலும் ஒரு பகுதி விளை நிலம் ஒதுக்கி வைக்கப்பட்டது. கட்டாயச் சேவை முறையை அனுஷ்டித்து இதிலிருந்து மகசூல் எடுக்கப்பட்டது. இவைபோன்ற விவசாய சம்பந்தமான சீர்திருந்தங்கள் பல அமுலுக்குக் கொண்டு வரப் பட்டன.
பொதுவுடைமைவாதிகள், ஜனங்களின் கல்வியறிவைப் பெருக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் பல. விவசாயிகளுக்குக் கல்வி ஞானத்தைக் கொடாமலிருக்கிறவரை அவர்கள் சாதிரீய முறையில் விவசாயஞ்செய்து, அதிக பொருள்களை உற்பத்தி செய்ய முடியா தென்பதைப் பொதுவுடைமைவாதிகள் தெரிந்து கொண்டு அதற்கேற்றபடி கல்வித் திட்டத்தை வகுத்தார்கள். இந்தத் திட்டத் தின்படி இளைஞர் களுக்கும் வயதானவர்களுக்கும் அவரவர் களுடைய நிலைமைக்கும், பக்குவத்திற்கும் தகுந்தபடி கல்வி போதிக்கப்பட்டது. பாட்டுகள், பிரசங்கங்கள், நாடகங்கள் ஆகிய இவைகளின் மூலமாக ஜனங்களுக்குச் சமுதாய அறிவும் உலக ஞானமும் புகட்டப்பட்டன. சுருக்கமாக, சமதர்மம் என்பது ஒரு கட்சியல்ல, ஒரு கொள்கையல்ல, அஃதொரு புதிய வாழ்க்கை யென்று ஜனங்கள் மனத்தில் நன்கு பதியும்படியாக இந்தக் கல்வி முறை இருந்தது. வாழ்க்கையில், ஒழுங்கிற்கும் ஒழுக்கத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
இந்தப் பொதுவுடைமை இயக்கத்தைத் திறம்பட வளர்த்தவர் பலருள், வெளியுலகத்திற்கு நன்கு அறிமுகமானவர்கள் மூவர். 1. மா த்ஸே துங்; 1 2. சௌ என் லாய்; 2 3. சூ தேஹ். 3
இம் மூவரும் அரசியல் சாதிர நிபுணர்கள். சிறப்பாக, பொது வுடைமைச் சித்தாந்தத்தின் நுட்பதிட்பங்களைச் சாதாரண மக்களுக்குப் புரிகின்ற முறையில் விளக்கிச் சொல்வதில் வல்லவர்கள், பொதுவுடைமையினரின் நீண்ட நடைப்பயணத்தை வெற்றிகரமான முடிவுக்குக் கொண்டு வந்த பெருமை இவர்களையே சாரும்.
இந்த நடைப் பயண காலத்தில் இவர்களுடைய மனைவிமார்கள் இவர்களுடன் பெரிதும் ஒத்துழைத்தார்கள். இவர்கள் காட்டிய மன உறுதியையும் செய்த தியாகங்களையும் சீனர்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.
மா த்ஸே துங்குக்கு முதலாவதாக வாழ்க்கைப்பட்டவள் ஒரு குடியானவப்பெண். அநேக ஆண்டுகள், செம்படையின் ஒரு பகுதிக்குத் தலைவியாயிருந்து அரிய சேவை செய்தவள். பெரும் பாலும் ராணுவ உடையையே தரித்துக் கொண்டிருந்தாள். பல போராட்டங்களில் கலந்து வெற்றி கண்டவள். அது மட்டுமல்ல; சிறந்த தாதியாயிருந்து நற்பணிகள் பல புரிந்தவள். காயமடைந்தவர்களில் எத்தனையோ பேருக்கு இவள் சிகிச்சை செய்திருக்கிறாள்; எத்தனையோ பேரைத் தனது தோளின்மீது தூக்கிக்கொண்டு போய் ராணுவ ஆபத்திரியில் கொண்டு விட்டிருக்கிறாள். செம்படையினரின் மேலே சொன்ன நீண்ட பிரயாண ஆரம்பத்தின் போது, இவள் தேகத்தின் இருபது இடங்களில் குண்டுத் துணுக்கு பட்ட காயங்கள் இருந்தன. இவற்றில் எட்டு காயங்கள் மிகவும் கடுமையானவை. போதாக் குறைக்கு, கர்ப்பம். இந்த நிலையில்தான் இவள் மேற்படி பிரயாணத்தில் கலந்து கொண்டாள். வழியில் பிரசவமாயிற்று. குழந்தையை ஒரு குடியானவன் வீட்டில் விட்டுவிட்டு, மேலே தொடர்ந்து பிர யாணத்தைச் செய்தாள்.
சௌ என் லாயின் மனைவி, விவாகத்திற்கு முன்னர் ஒரு பள்ளிக்கூட ஆசிரியையாக இருந்தாள். பின்னர்ச் செம்படையில் சேர்ந்து கொண்டாள். இந்தச் செம்படையினர் 1934-ஆம் வருஷம் கியாங்க்ஸி மாகாணத்திலிருந்து நீண்ட பிரயாணம் தொடங்கிய போது இவள் நோய்வாய்ப் பட்டுக் கிடந்தாள். க்ஷயரோகம். இதனால் மேற்படி பிரயாணத்தின் முதல் நான்கு மாத காலம் டோலியில் வைத்துத் தூக்கியே செல்லப்பட்டாள். ஆனால் பின்னர், பிறருக்குத்தான் சுமையாயிருக்கக் கூடாதென்று சொல்லி நடந்தே வழி கடந்தாள். இவளுடைய பிரயாண அனுபவத்தை இவளே கூறட்டும்: - நாங்கள் ஓர் ஊரில் தங்கி எங்கள் மூட்டை முடிச்சுக்களை இறக்கியவுடன், அவ்வூர்ப் பெண்களை ஒன்று சேர்த்து ஒரு கூட்டம் போட்டு, ஜப்பானியர்கள் நாட்டின் மீது படை யெடுத்து வருகிறார்களென்றும், அவர்களை எதிர்த்துப் போராட, செம்படை யானது வடமேற்கு நோக்கிச் செல்லுகிறதென்றும் எல்லோருக்கும் எடுத்துச் சொல்வோம். அங்குள்ள பிறரைச் சுரண்டி வாழும் பெரிய மனிதர்களைக் கைது செய்வித்து, அவர்களுடைய குற்றங்களை விசாரிக்கச் செய்வோம். எங்கள் படையிலே காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை செய்வதுதான் எங்களுக்கு மிகவும் கடினமாயிருந்தது. காயமடைந்தவர்களைத் தூக்கிக் கொண்டு வருவோர், மற்றப் படையினருடன் தொடர்ந்து வர முடிவதில்லை. கியாங்க்ஸியை விட்டு நாங்கள் புறப்பட்டபோது, தூக்கிவரும் படையுடனேயே புறப்பட்டோம் ஆனால் க்வைசௌ பிரதேசம் வந்ததும், கூலியாட்களை அமர்த்திக் கொள்ள வேண்டியதா யிருந்தது. அவர்களோ இடையிடையே சொல்லிக் கொள்ளாமல் ஓடிவிட்டனர். எனவே, படையைச் சேர்ந்த பெண்களே, காயமடைந்த வர்களைத் தூக்கிச்செல்ல வேண்டியதாயிற்று. இது மிகவும் கஷ்ட மாகவே இருந்தது. தவிர, எங்கள் படையில் பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் சுமார் நூறு இருந்தன. இவைகள் நடந்தே வந்தன; ஆம், தங்களுடைய சாமான்களைத் தாங்களே தூக்கிக்கொண்டு! மற்றும், வழி நெடுக நாங்கள் நடத்திக்கொண்டு வந்த நாடகங்கள், கோஷ்டி கானங்கள் முதலியவற்றில் இந்தக் குழந்தைகள் கலந்து கொண்டன.
இவளுடைய உள்ளத்தில் உற்சாகம் ததும்பிக்கிடந்தது. இந்த உற்சாகத்தினாலேயே இவள் தனது க்ஷய நோயைப் போக்கிக் கொண்டு விட்டாள். தனது நீண்ட பிரயாணத்தின்போது இவள் பல தடவைகளில் ஆகாரம் கிடைக்காமையால் பட்டினி கிடந்திருக் கிறாள். கேளுங்கள் இவள் சொல்வதை:- வெறும் புல் நிறைந்த பிரதேசங்களில் நாங்கள் செல்லுகிறபோது, பத்து பன்னிரண்டு நாட்களுக்கு மேலாகச் சேர்ந்தாற்போல் எங்களுக்குப் புல்லைத் தவிர வேறு ஆகாரம் கிடைக்காது. க்வைசௌ பிரதேசத்தில் நிலங் களிலிருந்து கொஞ்சம் நெல் கிடைத்தது. ஆனால் நாங்கள் கொண்டு வந்த சமையல் பாத்திரங்களைக் கள்ளர்கள் கொள்ளை கொண்டு போய்விட்டார்கள். ஆகையால் அகப்பட்ட நெல்லைக் குத்தி சமையல் செய்து சாப்பிட முடியவில்லை. ஆம், நாங்கள் பல தடவை பட்டினி கிடந்திருக்கிறோம். இந்தப் பட்டினியிலும் நீங்கள் சந்தோஷமா யிருந்ததன் ரகசியமென்ன? எங்களுடைய வருங்காலம் பிரகாசமா யிருந்தது. அதிலே நாங்கள் நம்பிக்கை கொண்டிருந்தோம். நாங்கள் போகிற வழி சரியான வழியென்று எங்களுக்கு நிச்சயமாகத் தெரிந்திருந்தது. எல்லா இடையூறுகளையும் சமாளித்துக் கொண்டு விடுவோம் என்ற தைரியமும் எங்களுக்கு இருந்தது.
சூதேஹ் மனைவி, பரம ஏழைக் குடும்பத்திலே பிறந்தவள். ஒரு நிலப் பிரபுவின் வீட்டில் அடிமைத் தொழில் செய்து கொண்டி ருந்தாள். 1927-ஆம் வருஷம் அவ் வீட்டிலிருந்து தப்பியோடி வந்து செம்படையில் சேர்ந்து கொண்டாள். அப்பொழுது இவளுக்கு வயது பதினான்கு. யுத்த முறைகளை நன்றாகப் பயின்றாள். பொது வுடைமைவாதிகளை அடக்க, அப்பொழுதைய அரசாங்கம் எடுத்துக் கொண்ட பல நடவடிக்கைகளை இவள் எதிர்த்துப் போராடி வெற்றி கண்டிருக்கிறாள். சூதேஹ்யை இவள் விவாகம் செய்து கொண்டது 1928-ஆம் வருஷத்தில். செம்படையில் சேர்ந்து கொண்டபோது இவளுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆனால் 1939-ஆம் வருஷம்-இருபத்தாறாவது வயதில்-யேனான் ராணுவ சர்வகலா சாலையில் அரசியல் சாதிர போதகாசிரியப் பட்டம் பெற்றாள்.!
மஞ்சூரியாவில் ஜப்பான்
சியாங் கை ஷேக்கினுடைய சர்வாதிகாரத்தின் கீழ் அமைந்த நான்கிங் அரசாங்கம், பொது ஜனங்களின் குறை நிறைகளை அப்படியே பிரதிபலித்துக் காட்டுகிற அரசாங்கமாக இல்லை யென்பது உண்மை. அதனுடைய அதிகாரம் மத்திய சீனாவில்தான் அதிகமாகச் செல்லுபடி யாகிக் கொண்டு வந்ததே தவிர, வடக்கிலும் தெற்கிலும் அவ்வளவாகச் செல்லுபடியாகவில்லை யென்பது வாதவம். ஆனால் அதற்கு, சீனா முழுவதையும் ஒரு கொடியின் கீழ் ஐக்கியப்படுத்தி விட வேண்டும் என்ற ஆவல், இதற்கான வகையில் பல சீர்திருத்தங்களை அனுஷ்டானத் திற்குக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் இருந்ததென்பதை யாரும் ஒப்புக் கொள்ள வேண்டும்; இதற்கான முயற்சிகளிலே ஈடுபட்டது என்பதை அங்கீகரிக்க வேண்டும். தவிர அதன் பொறுப்பு மகத்தானது; எப்படிப்பட்டவரையும் திகைக்கச் செய்யக்கூடியது. இந்தத் திகைப்பான நிலைமையில்தான் சியாங், ஐரோப்பிய நிபுணர் பலரையும் வரவழைத்து, தனது அரசாங்கத்திற்கு ஆலோசகர்களாக அமர்த்திக்கொண்டான்; ரெயில், ரோடு முதலிய போக்கு வரத்துக் களை விருத்தி செய்யத் திட்டங்கள் போட்டான்; புதிய தொழிற் சாலைகள் அமைக்க ஏற்பாடு செய்தான். ஆனால் துரதிருஷ்ட வசமாக இவையெல்லாம், அரசாங்கத்தின் ராணுவ பலத்தை அதிகப்படுத்திக் கொள்கிற மாதிரியாகவே இருந்தன.
இப்படி ஒரு புறம் சீர்திருத்தங்களை அமுலுக்குக் கொண்டு வருகிற முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டு, மற்றொரு புறத்தில் பொது வுடைமை வாதிகளை அடக்கி ஒடுக்கும் முயற்சியிலே ஈடுபட்டி ருந்தான் சியாங். ஆனால் இந்த அடக்கு முறையில் இவன் வெற்றி பெறவில்லை. இதனால் இவனுடைய செல்வாக்குக்கு ஓரளவு ஊனம் ஏற்பட்டது. மற்றும், நான்கிங் அரசாங்கத்திற்குள்ளேயே இவனுடைய சகபாடிகளிற் சிலர் இவன் மீது பொறாமை கொண்டு இவனை அப்புறப் படுத்திவிடப் பார்த்தனர். உதாரணமாக, வாங் சிங் வெய் என்பவன், ஒரு சிலரைச் சேர்த்துக்கொண்டு சியாங் கை ஷேக்குக்கு விரோதமான ஓர் இயக்கத்தை ஆரம்பித்தான். இவ னோடு, வடக்கேயிருந்த சில ராணுவப் பிரபுக்களும் சேர்ந்து கொண்டனர். இது காரணமாக, வடக்கே, நான்கிங் அரசாங்கத்திற்கு விரோதமாக ஒரு கலகம் கிளம்பியது. இதே பிரகாரம் தெற்கேயுள்ள குவாங்க்ஸி, குவாங்டுங் மாகாணங்களில் எப்பொழுதுமே கோமிண்ட்டாங் கட்சியின் மீது அதிருப்தி கொண்டிருந்த நிலப் பிரபுக்கள், ராணுவ தளகர்த்தர்கள் முதலியோர், தேசீய அரசாங்கம், காண்ட்டனிலிருந்து நான்கிங்குக்குச் சென்றுவிட்ட பிறகு, அதன் அதிகார நிழல், தொலை தூரத்திலுள்ள தங்கள் மீது படியா தென்பதையே வியாஜமாக வைத்துக் கொண்டு, மேற்படி அரசாங் கத்திற்கு விரோதமாக அடிக்கடி தொந்தரவு கொடுத்துக் கொண்டி ருந்தனர். இவைகளையெல்லாம் சியாங் அடக்கி விட்டானாயினும், இவன், தன்னுடைய கவனத்தையும் சக்தியையும் பல முகங்களில் சிதறிவிட வேண்டியதாயிற்று. போதாக் குறைக்கு, 1931-ஆம் வருஷம் ஹோயாங்கோ நதியிலும், யாங்க்ட்ஸீ கியாங் நதியிலும் என்று மில்லாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு லட்சக்கணக்கான குடும் பங்கள் நாசமாகப் போய்விட்டன. வெள்ளம் வடிந்த பிறகு பட்டினி யால் மாண்டவர்கள் லட்சக்கணக்கான பேர். இந்த கஷ்ட நிவாரண வேலையில் வேறே நான்கிங் அரசாங்கம் ஈடுபட்டிருந்தது.
சீனாவில் ஏற்பட்ட இந்த உட்கலகங்கள், கட்சிச் சண்டைகள், வெள்ளப் பாழ் முதலியன யாவும் ஜப்பானுக்கு நல்ல சந்தர்ப்பங் களாயின; தன்னுடைய ஏகாதிபத்தியச் சிறகை விரிக்கத் தொடங்கியது. ஏற்கனவே இதற்கு, சியாங் கை ஷேக்கினுடைய ராணுவம், பீக்கிங் நகரத்தைக் கைப்பற்றிக்கொண்டு விட்டதைப் பற்றியும், சாங் ஸுயே லியாங், நான்கிங் அரசாங்கத்தோடு சமரஸம் செய்துகொண்டு மஞ்சூரியா முழுவதிலும் சீனதேசியக் கொடியைப் பறக்கவிட்டதைப் பற்றியும் ஆத்திரம் இருந்து கொண்டிருந்தது. இதற்குப் பிறகு, பலாத்காரத்தை உபயோகித்தாவது மஞ்சூரியாவைத் தன்னுடைய சுவாதீனத்திற்குட்படுத்தி விடுவதென்று தீர்மானித்து, அதற்கான முதீபுக்களையும் செய்துகொண்டு வந்தது. இதற்கு முன்னரேயே மஞ்சூரியாவில், ஜப்பான், சில விசேஷ உரிமை களை அனுபவித்துக் கொண்டு வந்ததல்லவா? இந்த அனுபவ பாத்தி யதையை வைத்துக் கொண்டு அது, மஞ்சூரியாவில் தனது முதீபுக்களைச் சுலபமாகச் செய்து கொண்டது.
மஞ்சூரியாவின் மீது ஜப்பானுக்கு ஏன் கண் விழுந்த தென்ப தற்குச் சில காரணங்களுண்டு. முதலாவது, மஞ்சூரியாவில், தொழில பிவிருத்திக்குத் தேவையான மூலப்பொருள்கள் ஏராளமாக உண்டு; விவசாயத்திற்குத் தகுதியுள்ள நிலங்களும் ஏராளம். சீனாவில் கிடைக்கக் கூடிய மொத்த இரும்பில் நூற்றுக்கு எண்பத்தைந்து சதவிகிதம் இங்கே கிடைக்கிறது; நிலக்கரிக்கோ சொல்லத் தேவை யில்லை. 1931-32-ல் ஜப்பான், மஞ்சூரியாவை ஆக்கிரமித்துக் கொண்ட பிறகு, அதனுடைய சுவாதீனத்திற்கு எட்டுக் கோடி ஏகரா விவசாய நிலங்களும், அறுபது லட்சம் டன் நிலக்கரியும், நாற்பது கோடி டன் இரும்பும், கோடிக் கணக்கான டன் நிறையுள்ள மரங்களும், ஏராளமான தங்கமும் வந்தன வென்றால், அதனுடைய செழிப்பைச் சொல்லவும் வேண்டுமோ? இப்படிப் பட்ட செழிப்புள்ள பிர தேசத்தைத் தனது களஞ்சியமாகவும் மார்க்கெட்டாகவும் உபயோகித்துக் கொள்ள ஜப்பான் தீர்மானித்தது. இரண்டாவதாக ஜப்பானுடைய ஆதிக்கத்துக் குட்பட்டு விட்ட கொரியாவுக்கும், ருஷ்யாவின் தென்கிழக்கு எல்லைக்கும் மத்தியில் மஞ்சூரியா இருந்தது. சீனாவில் பொதுவுடைமை வாதிகளின் செல்வாக்கு வர வர வளர்ந்து கொண்டு வந்ததால், இந்தச் செல்வாக்கைத் தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பாக எண்ணிக் கொண்டு, ருஷ்யா, தென் கிழக்கே இறங்கி வருமானால், அது, ஜப்பானுக்கு ஆபத்தல்லவா? அதற்காக மஞ்சூரி யாவைத் தன்னுடைய ஆக்கிரமிப்புக்குட்படுத்திக்கொண்டு விட்டால், ருஷ்யாவின் படையெடுப்பை அங்கேயே – மஞ்சூரியா விலேயே - தடுத்து விடலாமென்று ஜப்பான் கருதியது. மூன்றாவதாக, ஏற்கனவே ஜப்பான், மஞ்சூரியாவில், தான் அனுபவித்துக்கொண்டு வருகிற விசேஷ உரிமைகள் சம்பந்தமாக ஏராளமான பணத்தை அங்கே இறைத் திருந்தது; அநேக உயிர்களை பலிகொடுத்திருந்தது. இவைகளை யெல்லாம் வீணாக்கிவிட ஜப்பான் விரும்பவில்லை. நான்காவதாக இதுகாறும். மஞ்சூரியா, பெயரளவுக்குச் சீன ஆதிக்கத்துக்குட் பட்டிருந்ததே யாயினும், அங்கு ஜப்பானிய அரசாங்கத்தின் ஆலோ சனைகளை அவ்வப்பொழுது கேட்டு அதன் பிரகாரம் நடந்து வந்த சீன அதிகாரிகளே அநேகமாக இருந்து வந்தனர். இப்பொழுதோ, சாங் ஸுயே லியாங், நான்கிங் அரசாங்கத்தோடு ஐக்கியமாகிவிட்டான். நான்கிங் அரசாங்கம், ஜப்பானிய ஆக்கிரமிப்பு எண்ணத்திற்கு விரோதமாயிருக்கிற தென்பது தெரிந்த விஷயம். ஆகையால், இனியும் தாமதித்தால், மஞ்சூரியாவில் நான்கிங் அரசாங்கத்தின் செல்வாக்கு அதிகரித்துக் கொண்டு போகும். அப்படி அதிகரித்துக்கொண்டு போகாமலிருப்பதற்குள் அதனை-மஞ்சூரியாவை- தன் ஆதீனத்திற்குட் படுத்திக் கொண்டுவிட வேண்டுமென்று ஜப்பான் தீர்மானித்தது.
இந்தத் தீர்மானத்தை அனுசரித்தே ஜப்பான், 1928-ஆம் வருஷத்திலிருந்து 1931-ஆம் வருஷம் வரை, மஞ்சூரியாவை ஆக்கிர மித்துக் கொள்வதற்காக ரகசியமாகவும் பகிரங்கமாகவும் அநேக முதீபுக்களைச் செய்துக்கொண்டு வந்தது. ஜப்பானிலிருந்து பலர் மஞ்சூரியாவில் வந்து குடியேறி ஜனங்களுடைய ஒழுக்கத்தைக் கெடுக்கக்கூடிய வியாபாரங்களில் இறங்கினார்கள். ஜப்பானிய உளவாளிகள் பலர் நாடெங்கணும் சுற்றித் திரிந்து, ஜனங்களுக்குத் துரோக எண்ணத்தை உண்டுபண்ணி வந்தார்கள். சுருக்கமாக, தேசத்தின் அகவாழ்விலும் புறவாழ்விலும் அநேக மாசுக்களைப் படியச் செய்தார்கள். இப்படிப் படியச் செய்துகொண்டே ஒரு நல்ல சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது ஜப்பான். அந்தச் சந்தர்ப்பந்தான் மேலே சொன்ன பிரகாரம் 1931-ஆம் வருஷத்தில் ஏற்பட்டது.
எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் உபயோகித்துக் கொள்ள ஒரு காரணம் வேண்டுமல்லவா? அந்தக் காரணத்தையும் ஜப்பான் உண்டுபண்ணிக் கொண்டது. 1931-ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் பதினெட்டாந் தேதி இரவு முக்டென் நகரத்திற்கு அருகில் ஜப்பானியருக்குச் சொந்தமான தெற்கு மஞ்சூரியா ரெயில்வேயின் பாலம் ஒன்று உடைந்துவிட்டது. சாங் ஸுயே லியாங்கின் படை வீரர்கள்தான், வெடிமருந்து வைத்து இந்தப் பாலத்தை உடைத்தி ருக்கின்றனர் என்று ஜப்பானியர் கூறிக்கொண்டு, உடனே மேற்படி லியாங்கின் துருப்புகள் தங்கியிருந்த இடத்தை அன்றிரவே தாக்கி நாசப்படுத்திவிட்டனர்; முக்டென் நகரத்தையும் கைப்பற்றிக் கொண்டனர். மிகுந்த முன்னேற்பாட்டுடனேயே ஜப்பானியர் இந்த மாதிரி செய்தனர் என்று சொல்லப்படுகிறது. இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த ஓர் ஆசிரியன் பின்வருமாறு கூறுகிறான்:- இந்த (பாலம் உடைந்து போகிற) சம்பவத்திற்கு முந்திய தினம் பக்கத்து ஊர்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜப்பானியத் துருப்புகளுக்கு, மறுநாள் செப்டம்பர் மாதம் பதினெட்டாந் தேதி பிற்பகல் மூன்று மணிக்குச் சரியாக முக்டென் நகரத்தை நோக்கிச் செல்ல வேண்டு மென்று உத்தரவு கிடைத்தது. பாலம் உடைந்து போவதற்கு ஏழு மணி நேரத்திற்கு முன்னாடியே, எந்த இடத்தில் பாலம் உடைந்ததோ அந்த இடத்திற்கு ஜப்பானியத் துருப்புகள் புறப்பட்டன. மறுநாள் பத்தொன்பதாந்தேதி விடியற்காலை நான்கு மணிக்கெல்லாம் முக் டென் நகர முழுவதிலும் ஜப்பானியருடைய சுவரொட்டி விளம்பரங்கள் காணப்பட்டன. இந்த விளம்பரத்தில் மஞ்சூரிய அரசாங்கத்தை பலமாகக் கண்டித்து, ஜப்பானிய ரெயில்வேயைத் தாக்குமாறு அது தான் உத்தரவிட்ட தென்று எழுதப்பட்டிருந்தது. ஜனங்கள் அமைதி யாயிருக்க வேண்டுமென்று சொல்லப்பட்டார்கள். சம்பவம் நடை பெற்ற ஆறு மணி நேரத்திற்குள், உண்மையை விசாரித்து, அறிக்கைகள், விளம்பரங்கள் தயாரித்து வெளியிடுதல், மனித யத்தனத்தினால் முடியாத காரியம்.
முக்டெனுக்கு அருகில் சீன ஆகாய விமான நிலையம் ஒன்று இருந்தது. இதுவும் இதில் வைக்கப்பட்டிருந்த விமானங்களும், எவ்வித எதிர்ப்புமில்லாமல் ஜப்பானியர் வசம் போய்ச் சேர்ந்தன. மறுநாளே- செப்டம்பர் மாதம் பத்தொன்பதாந் தேதிக்குள்ளாகவே - சுமார் பதினெட்டு நகரங்கள் ஜப்பானியர் வசப்பட்டனவென்று சொன்னால் அவர்கள் எவ்வளவு முன்னேற்பாடு செய்திருக்க வேண்டு மென்பதை நாம் சுலபமாகத் தெரிந்துகொள்ளலாமல்லவா? அடுத்த ஒரு பதினைந்து தினங்களுக்குள், மஞ்சூரியாவின் தெற்கு மாகாணங்களாகிய லியோனிங்கும், கீரினும் ஜப்பானியர் வசம் போய்ச் சேர்ந்தன.
ஜப்பானின் இந்த வரம்பு மீறிய செயலுக்கு எதிராக நான்கிங் அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் எடுத்துக்கொள்ளவில்லை. அதற்கு மாறாக சாங் ஸுயே லியாங்குக்கு, அவனுடைய படைகளுடன் பெருஞ்சுவருக்குத் தெற்கே பின்வாங்கிக்கொண்டு விடுமாறு உத்தரவிட்டது. இப்படி உத்தரவிட்டுவிட்டு, சர்வ தேச சங்கத்திற்கு விண்ணப்பித்துக்கொண்டது. சர்வ தேச சங்கத்தில் அங்கத்தினரா யுள்ள ஒரு வல்லரசுக்கும் மற்றொரு வல்லரசுக்கும் தகராறு ஏற்படு மானால், அதை அந்தச் சர்வதேச சங்கத்தின் மூலமாகவே சமரஸ முறையில் தீர்த்துக்கொள்ள வேண்டுமென்கிற நியாயமான விதியை அனுசரித்து சீனா விண்ணப்பஞ் செய்து கொண்டது. ஜப்பானுடன் நேருக்கு நேர் சண்டை போட்டுக் கொள்ள வேண்டாமென்றும், சர்வதேச சங்கத்திற்கு விண்ணப் பித்துக் கொள்ளுமாறு நான்கிங் அரசாங்கத்திற்கு - ஆம், சியாங் கை ஷேக்குக்குத்தான்-ஆலோசனை கூறியவர்கள் ஐரோப்பிய வல்லர சுகளின் பிரதிநிதிகள்!
சர்வதேச சங்கமோ தயங்கியது. அதனுடைய முக்கிய அங்கத் தினர்கள்-அதாவது பிரிட்டிஷ் , பிரெஞ்சுப் பிரதிநிதிகள்-ஜப்பானோடு மனதாபப்பட்டுக்கொள்ள விரும்பவில்லை. மஞ்சூரியாவை ஆக்கிரமித்து கொள்ள வேண்டுமென்பது தனது நோக்கமில்லை யென்று ஜப்பான் தனது பிரதிநிதிகள் மூலம் சொல்லிக்கொண்டி ருந்தது. ஆனால் அதே சமயத்தில் அதனுடைய படைகள், மஞ் சூரியாவின் பல பாகங்களையும் கைப்பற்றிக் கொண்டுவந்தது. சீனாவோ சர்வதேச சங்கம் நியாயமான தீர்ப்பையே செய்யும் என்று நம்பிக்கொண்டிருந்தது.
சர்வதேச சங்கம் இப்படித் தயங்கிக்கொண்டிருக்கிறபோது, சீனாவுக்கு நியாயந் தேடிக்கொடுப்பதற்காக, பிரிட்டன் தன்னுடைய கடற்படையை அனுப்பச் சம்மதிக்குமானால், தானும் தன்னுடைய கடற்படையை உடனே அனுப்புவதற்குத் தயார் என்று அமெரிக்கா கூறியது. ஆனால் பிரிட்டனோ இதற்குச் சம்மதிக்கவில்லை. சர்வதேச சங்கக் கூட்டங்களுக்கிடையிலே இந்த மாதிரியான வழவழத்த பேச்சுக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், ஜப்பானியப் பிரதி நிதிகள் யோசனையின்பேரில் மஞ்சூரியா விஷயமாக மத்தியதம் செய்து வைக்கும் பொருட்டு ஒரு சர்வதேசக் கமிஷனை நியமிப்ப தென்ற தீர்மானம் நிறைவேறியது. லார்ட்லிட்டன்2 என்ற ஒரு பிரிட்டிஷ் பிரபு இந்தக் கமிஷனுக்குத் தலைவனாகத் தேர்ந் தெடுக்கப்பட்டான்.
இந்த மத்தியதக் கமிஷன் கடல்காற்று வாங்கிக்கொண்டு மெதுவாக 1932-ஆம் வருஷம் மே மாதம், கிரீன் மாகாணத்திலுள்ள ஹார்பின்3 என்ற துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது. இந்தக் கமிஷன் வருவதற்குள், ஜப்பான், பாக்கியுள்ள ஹைலுங்கியாங் என்ற வடக்கு மாகாணத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டது. அதனோடு நிற்கவில்லை; தன்னுடைய மேற்பார்வையில் ஒவ்வொரு மாகாணத் திலும் பொம்மை அரசாங்கங்களை தாபித்துக்கொண்டிருந்தது.
லிட்டன் கமிஷன் வந்தது; விசாரித்தது; சென்றது. இப்படித்தான் சுருக்கமாகச் சொல்லிவிடவேண்டும், ஏனென்றால் இதனுடைய தீர்ப்பு. அழுதவன் கண்ணைத் துடைக்கிற தீர்ப்பாகவே இருந்தது. ஆனால் ஜப்பானுக்கு இதுகூடப் பொறுக்கவில்லை. சிறிது காலங் கழித்து, சர்வதேச சங்கத்திலிருந்தே விலகிக் கொண்டுவிட்டது. இனி அந்தச் சங்கத்தினுடைய தீர்ப்போ, யோசனையோ எதுவுமே தன்னைக் கட்டுப்படுத்தாதென்ற தைரியத்துடன் ஜப்பான், தனது ஏகாதிபத்தியக் கால்களை நீட்டி வைக்க ஆரம்பித்தது. இதற்குப் பிறகு சர்வதேச சங்கத்திற்கு மதிப்பே போய்விட்டது. வல்லரசுகள் தங்கள் நாட்டாசையைப் பூர்த்தி செய்துகொள்ள பலாத்காரத்தை உபயோகிக்கத் தொடங்கின இத்தலி. எத்தியோப்பியாவின் மீது அக்கிரமமாகப் படை யெடுத்தது, பெயின் குழப்பம் முதலியவை களெல்லாம், ஜப்பானின் மஞ்சூரிய ஆக்கிரமிப்புக்குப் பிறகு பிறந்த பலாத்காரக் குழந்தைகளே. ஆனால் இது வேறு கதை. ஜப்பானின் திருவிளையாடலை நோக்குவோம்.
சர்வதேச சங்கக் கூட்டத்தில், சீனாவுக்கும் ஜப்பானுக்கும் மத்தியதம் செய்து வைக்கிற பாவனையில் பிரசங்கங்கள் நடை பெற்றுக் கொண்டிருக்கிறபோது, 1932-ஆம் வருஷம் ஜனவரி மாதம், ஷாங்காய் நகரத்தில் ஜப்பான், தனது பலாத்கார சக்தியைக் காட்டியது. இதற்குக் காரணமென்னவென்றால், ஜப்பானின் மஞ்சூரிய ஆக்கிர மிப்பைப் பற்றியும், இது விஷயத்தில் சீன அரசாங்கம் எவ்வித கண்டிப்பான நடவடிக்கையையும் எடுத்துக்கொள்ளாமல் சர்வதேச சங்கத்தின் தீர்ப்புக்குக் காத்திருப்பதைப் பற்றியும் சீனர்களுக்கு அதிக ஆத்திரம் உண்டாயிற்று . ஜப்பானியச் சாமான்கள் பகிஷ்கரிக்கப் பட்டன. ஜப்பானியர் களுக்குச் சாமான்களை விற்க மறுத்து விட்டார்கள் கடைக் காரர்கள். ஜப்பானியக் கம்பெனிகளோடு பணப்புழக்கம் வைத்துக்கொள்ள முடியாதென்று சீன பாங்கி முதலாளிகள் கூறினார்கள். இளைஞர் கூட்டம் பலத்த கிளர்ச்சி செய்து வந்தது. சீனாவின் பல பாகங்களிலும் இந்த மாதிரி ஜப்பானுக்கு விரோதமான இயக்கம் நடைபெற்றுக்கொண்டு வந்ததாயினும், ஷாங்காய் நகரத்தில்தான் இது வெகு மும்முரமா யிருந்தது.
இங்கு, மேலே சொன்ன ஜனவரி மாதம் ஒரு நாள் சில சீனர்களும் ஜப்பானியர்களும் ஏதோ பேச்சு வாக்கில் சண்டை போட்டுக் கொண்டார்கள். இந்த வாய்ச்சண்டை கைச்சண்டையாக முற்றி விட்டது. தங்களுடைய சரக்குகள் விற்பனையாகவில்லை, பகிஷ் கரிக்கப்படு கின்றன என்ற ஆத்திரம் ஜப்பானியர்களுக்கு இருந்த தல்லவா? அதற்கு இப்பொழுது பழி தீர்த்துக் கொண்டுவிடத் தீர்மானித்தனர். பெரும் ஜப்பானியக் கூட்டமொன்று, சீனர்கள் சிலர் சேர்ந்து நடத்தி வந்த ஒரு சுதேசத் தொழிற்சாலையைத் தாக்கித் தவிடு பொடியாக்கியது. இந்தத் தொழிற்சாலையில் உற்பத்தியான சாமான்கள்தான், ஜப்பானியச் சாமான்களுக்குப் போட்டியாக மார்க்கெட்டிலே வந்து இடம் பெற்றிருந்தன. மேற்படி தொழிற் சாலை நாசமாக்கப்பட்டதையே காரணமாகக் கொண்டு, ஜப்பான் தன்னுடைய யுத்தக்கப்பல்கள் சிலவற்றை ஷாங்காய்க்கு அனுப்பியது. இந்தக் கப்பல்களோ, தங்கள் பீரங்கிகளை, சீனாவின் பிரபல புதகசாலைகள் சிலவற்றின் மீது திருப்பி, நூற்றாண்டுகள் கணக்காகப் பாதுகாக்கப்பட்டு வந்த அநேக நூல்களையும் கை யெழுத்துப் பிரதிகளையும் நாசமாக்கின. இதனோடு ஜப்பான் திருப்தியடையவில்லை. தன்னுடைய படைகளைக் கொண்டு வந்திறக்கி ஷாங்காய் நகரத்தையே கைப்பற்றிக் கொண்டுவிடப் போவதாகப் பயமுறுத்தியது. அப்படியே சில படைகளும் வந்திறங்கின. நான்கிங் அரசாங்கம் இதனைத்தடுக்க எவ்வித ஏற்பாடும் செய்யாமல், சர்வ தேச சங்கத்தின் இருப்பிடத்தை நோக்கிக் கும்பிடு போட்டுக் கொண்டிருந்தது.
ஆனால் ஷாங்காயில் அப்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டி ருந்த சீனப்படையானது, நான்கிங் அரசாங்கம் அதனை பின் வாங்கிக்கொண்டு விடுமாறு உத்தரவிட்டிருந்த போதிலும் அதனைப் பொருட்படுத்தாமல், அந்த உத்தரவைப் புறக்கணித்து விட்டு, ஜப்பானியப் படைகளை எதிர்த்துப் போராடியது. இரண்டு படை களுக்கும் சிறிது காலம் போராட்டம் நடைபெற்றது. ஆனால், சீனாவோ, ஜப்பானோ இந்தப் போராட்டத்தைப் பெரிய யுத்த மாக்கித் தங்கள் பரபர பலத்தை பரீட்சை செய்து பார்க்க விரும்ப வில்லை. பிரிட்டிஷ் பிரதிநிதி யொருவனுடைய மத்தியதத்தின் பேரில் இரண்டு அரசாங்கங்களும் யுத்தஞ் செய்வதை நிறுத்திக் கொண்டன. ஜப்பான் தன் படைகளை வாப வாங்கிக் கொண்டது. இதற்கு முக்கிய காரணம், தனது கவனமனைத்தையும் வடக்கே மஞ்சூரியா பக்கம் செலுத்தி, ஏற்கனவே அடைந்த வெற்றிகளை நன்றாக ஊர்ஜிதம் செய்து கொள்ள வேண்டுமென்பதுதான்.
இதற்காக மஞ்சூரியாவின் மூன்று மாகாணங்களையும்-அதாவது ஹைலுங்கியாங், கிரீன், லியோனிங் என்ற மூன்று மாகாணங்களையும்-ஒன்று சேர்த்து அதற்கு மஞ்சூகோ1 என்ற புதுப் பெயர் கொடுத்தது ஜப்பான். இந்த மஞ்சூகோவாசிகள் சுதந்திர மாயிருக்க விரும்புவதாகவும், அந்த விருப்பத்தைத் தான் பூர்த்தி செய்து வைப்பதாகவும் வெளியுலகத்திற்குக் காட்டிக் கொண்டது. சீனாவில் கடைசியாக ஆண்ட மஞ்சூ அரச பரம்பரையின் கடைசி வாரிசாக இருந்து முடிதுறக்கும்படி செய்யப்பட்ட பூயி என்பவனை1 இந்த மஞ்சூகோ அரசாங்கத்தின் தலைவனாக்கியது. (1932-ஆம் வருஷம்) இரண்டு வருஷங் கழித்து அவனுக்கு காங் தேஹ்2 என்ற பட்டப்பெயர் கொடுத்துச் சக்ரவர்த்தியாக்கியது.
இங்ஙனம் தனது கையாட்டிப் பொம்மையாக ஓர் அரசாங் கத்தை தாபித்துக்கொண்டு, பிறகு ஜப்பான், தனது ஆசைப் பார்வையைச் சீனாவின் மீது திருப்பியது. சீனப்பெருஞ் சுவருக்கு வடக்கிலும் லியோனிங் மாகாணத்திற்கு மேற்கிலுமாக உள்ளது ஜிஹோல் என்ற மாகாணம். பெயரளவிலேனும் இது நான்கிங் அரசாங்கத்தின் ஆதீனத்திற்குட் பட்டிருந்தது. இதன் மாகாண அதிகாரி-கவர்னர்-ஒரு கோழை. தனது தாய் நாட்டுக்காக எல்லாத் தியாகங்களையும் செய்யச் சித்தமாயிருப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தான். ஆனால், ஜப்பானியப் படைகள் ஏதோ ஒரு வியாஜத்தை வைத்துக்கொண்டு ஜிஹோல் மாகாணத்தை நோக்கி வருகையில், (1932-ஆம் வருஷம் ஜூலை மாதம்) இவன், உயிருக்குப் பயந்து, தனது பெண்டு பிள்ளைகளுடனும் ஏராளமான பணத்துடனும் தப்பியோடி விட்டான். ஜப்பானியர் அதிக சிரமப்படாமல் இந்த மாகாண முழுவதையும் கைப்பற்றிக் கொண்டனர். 1933-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் இந்த மாகாணம், மஞ்சூகோ ராஜ்யத்துடன் ஐக்கியப் படுத்தப் பெற்றது. இதே சமயத்தில்தான் (1933-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் இருபத்தேழாந் தேதி) ஜப்பான் சர்வதேச சங்கத்திலிருந்து தான் விலகிக்கொண்டுவிட்டதாகப் பிரகடனம் செய்தது.
ஜிஹோல் மாகாணம் தங்கள் கைக்கு வந்த பிறகு ஜப்பானி யருடைய ஆசை வளர்ந்ததே தவிர குறையவில்லை. ஆசையே இப்படித் தானே? ஜப்பானியப்படைகள், ஜிஹோல் மாகாண எல்லையி லிருந்து தாண்டி வந்து அடுத்தாற்போல் தெற்கேயுள்ள ஹோப்பை3 மாகாணத் திற்குள் பிரவேசித்து, பெருஞ்சுவரைக் கடப்பதற்காக நிர்மாணிக்கப் பட்டிருந்த முக்கியமான நுழைவாயில்களைக் கைப் பற்றிக்கொண்டு விட்டன. ஜிஹோல் மாகாணத்திற்குச் சீனத் துருப்புகளால் ஆபத்து ஏற்படாமல் தடுக்கும் பொருட்டே தாங்கள் இந்தப் பெருஞ்சுவரின் முக்கியமான அரண்களைச் சுவாதீனப் படுத்திக் கொண்டிருப்பதாக ஜப்பானியர் சமாதானங் கூறினர். ஆனால் உண்மையென்ன வென்றால், ஜிஹோல் மாகாண ஆக்கிர மிப்பின் போது நான்கிங் அரசாங்கம் , ஜப்பானைத் தீவிரமாக எதிர்த்துப் போராடாமல் அதற்குக் கொஞ்சங் கொஞ்சமாக விட்டுக்கொடுத்து வந்தது; ஜப்பானோடு சமரஸமாகப் போக வேண்டுமென்ற எண்ணமே இதற்கு வலுத்திருந்தது. இருந்தாலும், பெருஞ்சுவர்ப் பாதுகாவலுக்கென்றும் மாகாணப் பாதுகாவலுக்கென்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சீனப்படைகள், ஜப்பானியப் படைகளைப் பலமாக எதிர்த்தன. மும்முரமான சண்டை நடைபெற்றது. 1933-ஆம் வருஷம் மே மாதம் முதல் வாரத்தில், ஜப்பானியப் படைகள், பீக்கிங் நகரத்திற்குப் பதினான்கு மைல் தொலைவில் வந்துவிட்டன. பார்த்தது நான்கிங் அரசாங்கம்; ஜப்பானோடு இணங்கிப் போகத் தீர்மானித்தது. மே மாதம் முப்பத்தோராந் தேதி சீனாவுக்கும் ஜப்பானுக்கும் ஒரு யுத்த நிறுத்த ஒப்பந்தம் - இதற்கு டங்க்கூ ஒப்பந்தம்1 என்று பெயர் -ஏற்பட்டது. இதன்படி சுமார் ஐயாயிரம் சதுர மைல் விதீரணமுள்ள பிரதேசம் ஜப்பானுடைய சுவாதீனத் திற்குட்பட்டது. அதாவது பீக்கிங் நகரத்திற்குக் கிழக்கே சிறிது தூரம் வரை ஜப்பானியருடைய ஆதிக்கம் பரவி வந்தது என்று சொல்லலாம்.
ஜப்பான் இப்படி ஒரு பக்கத்தில் டங்க்கூ ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டது; மற்றொரு பக்கமாக வட சீனாவில் உட்கலகங் களைக் கிளப்பிவிட்டுக் கொண்டிருந்தது. சாஹார், ஸுயியுவான், ஷான்ஸி,2 ஹோப்பை, ஷாண்டுங் ஆகிய இந்த ஐந்து மாகாணங்களும் சீனாவின் வட பாகத்தில் இருக்கின்றன. இந்த ஐந்து மாகாணங்களையும் ஒன்று சேர்த்துப் பார்த்தால் சீனாவின் மொத்த விதீரணத்தில் பத்தில் ஒரு பாகம் இருக்கும். இதில் ஸுயியுவான், சாஹார் என்ற இரண்டு மாகாணங்களில் சில இடங்களில் தவிர, மற்றவை யாவும் ஏராளமான பொருள்கள் உற்பத்தி யாகக் கூடிய செழிப்பான பூமி. நெல், கோதுமை முதலிய உணவு தானியங்கள் இங்கே அதிகமாக உற்பத்தியாகின்றன. பருத்தியும் கம்பள மயிரும் நிறையக் கிடைக்கும். நிலக்கரி, இரும்பு இவை இரண்டுக்கும் மற்ற உலோகப் பொருள்களுக்கும் இந்த வட மாகாணங்கள் பிரசித்தி பெற்றவை. சீன அரசாங்கத்திற்குக் கிடைக்கிற மொத்த உப்புவரி, சுங்கவரி வருமானத்தில், நான்கில் ஒரு பங்கு, இந்த ஐந்து மாகாணங்களில் உற்பத்தியாகிற உப்பினின்றும், பொருள்களை ஏற்றுமதி செய்வதினின்றுமே கிடைக்கிறது என்று சொன்னால் இவற்றின் செழிப்பை நாம் ஒருவாறு தெரிந்துகொள்ளலாமல்லவா? ஓர் ஆசிரியன் கூறுகிற மாதிரி மஞ்சூரியாவும், இந்த ஐந்து வட மாகாணங் களுமின்றி, சீனா ஒரு பெரிய வல்லரசாக இருந்திருக்க முடியாது.
இவ்வளவு செழுமையுள்ள பிரதேசத்தில் ஒரு பகுதியை-மஞ்சூரியாவை - கபளீகரித்துக் கொண்டுவிட்ட ஜப்பான், மிகுதியையும் விழுங்கிவிட வேண்டுமென்று ஆசைப்பட்டதில் என்ன ஆச்சரியம்? இதற்காக அது கையாண்ட முறைகள் அனந்தம். ஆனால் எதிர் பார்த்தபடி அதற்குச் சுலபமாகவும் சீக்கிரமாகவும் பலன் கிட்ட வில்லை. ஏனென்றால் சீனாவில் தேசீய உணர்ச்சி வலுத்துவிட்டது. பணத்துக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு நாட்டைக் காட்டிக் கொடுத்த ராணுவப் பிரபுக்களின் காலம் மலையேறிவிட்டது. புரட்சி சகாப்தத்தில் பிறந்து வளர்ந்த இளைஞர்கள், அந்நியர்களுக்கு ஓர் அங்குல நிலத்தைக்கூட விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று உறுதியாக நின்றார்கள். பொதுவுடைமை வாதி களுடைய பிரசாரத்தின் பயனாகக் கிராமவாசிகளுக்கு ஒரு தன்மதிப்பு உணர்ச்சி ஏற்பட்டி ருந்தது. ஜனங்களைப் பொறுத்தமட்டில் அவர் களுடைய இருதயம், எத்தனையோ அவதைகள் பட்டிருந்தும், அழுகாம லிருந்தது. ஆனால் அவர்கள் அரசாங்க பலமில்லாமல் என்ன செய்வார்கள்?
வாங் சிங் வெய் என்பவன் இந்தக் காலத்தில் (1933 முதல் 1935 நவம்பர் வரை) நான்கிங் அரசாங்கத்தின் பிரதம மந்திரியாகவும் அந்நிய நாட்டு மந்திரியாகவும் இருந்தான் இவன் ஸன் யாட் ஸென்னின் சிஷ்ய பரம்பரையைச் சேர்ந்தவனாயிருந்தும், தேசீயப் போர்வை போர்த்திக் கொண்டிருந்த போதிலும், சீன அரசாங்கத்தில் தனது சகபாடிகளா யிருக் கிறவர்களோடு அடிக்கடி பிணங்கிக் கொள்வதிலும், அதே சமயத்தில் ஜப்பானுக்கு இணங்கிக் கொடுப் பதிலும் கெட்டிக்காரனாயிருந்தான். இவனும், சியாங் கை ஷேக் முதலிய தலைவர்களும், ஜப்பானுக்குக் கோபம் உண்டாகாதபடி நடந்து கொள்வதில்தான் அதிக சிரத்தை காட்டினர். இதனால் என்ன நிலைமை ஏற்பட்ட தென்றால், சீனப் பொது ஜனங்களின் எதிர்ப்பைச் சமாளித்துக் கொண்டு ஜப்பானும், அதிவேக மாகச் சீனாவுக்குள் பிரவேசித்து ஆக்கிரமிப்புச் செய்ய முடியவில்லை; சீன அரசாங்கமும், தன்னுடைய ஜனங்களுக்கிருக்கும் தேசீய உணர்ச்சிக்குப் பயந்து, ஜப்பான் கேட்டதையெல்லாம் கொடுத்துவிடாமல் அற்ப சொற்பமாக எதிர்ப்புக்காட்டி வந்தது. முன்னுக்கும் பின்னுக்கு மாய்ப் போய் வந்து கடைசியில் நின்ற நிலைக்கே வருகின்ற ஒரு தேக்க நிலையே சுமார் நான்கு வருஷகாலம் - 1933-ஆம் வருஷத்தி லிருந்து 1937-ஆம் வருஷம் வரை -இருந்ததென்று சொல்லவேண்டும். ஆனால் இந்தக் தேக்க நிலையிலுங்கூட ஜப்பான்தான் அதிக சாதகமடைந்தது. எப்படி யென்று பார்ப்போம்.
மேலே சொன்ன சீனாவின் வட மாகாணங்கள் ஐந்தையும் நான்கிங் அரசாங்க ஆதிக்கத்தினின்று பிரித்து மஞ்சூகோவுடன் சேர்த்துவிட வேண்டுமென்ற நோக்கம் ஜப்பானுக்கு. அப்படிச் சேர்த்துவிட்டு அங்கே தன்னுடைய ஆதிக்கம் ஊர்ஜிதப்பட்டு விடுமானால், வடக்கே ருஷ்யாவுக்கும் தெற்கே சீனாவுக்கும் மத்தியில் தான் இருந்து கொண்டு, ருஷ்யாவின் பொதுவுடைமைச் செல்வாக்கு ஆசியாவின் மீது படியாமல் பார்த்துக் கொள்ளலாமல்லவா! அப்படிப் படியாமல் பார்த்துக் கொள் வதிலேயே தனது ஏகாதி பத்திய விதரிப்பு இருக்கிற தென்பதை ஜப்பான் நன்கு உணர்ந்தி ருந்தது. மேலே சொன்ன ஐந்து மாகாணங்களையும் நான்கிங் அரசாங்க ஆதிக்கத்தினின்று பிரிக்க ஜப்பான் சில சூழ்ச்சிகளைச் செய்தது.
1935-ஆம் வருஷம் செப்டம்பர் மாதம், மஞ்சூரியாவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஜப்பானிய ராணுவத்தின் பிரதம தளகர்த்தர்களாயிருந்த தளபதி தாடா என்பவனும், தளபதி தாய்ஹாரா என்பவனும்1 சேர்ந்து கொண்டு மேற்படி ஐந்து மாகாண கவர்னர் களோடும் தனியாகப் பேச்சு வார்த்தைகள் நடத் தினார்கள்; வட சீனாவில் இவர்களுக்கென்று சுதந்திரமாக ஓர் அரசாங்கத்தை ஏற்படுத்திக் கொடுப்பதாக ஆசை காட்டினார்கள். ஆனால் இந்த முயற்சி பலிக்க வில்லை. சியாங் கை ஷேக்கினுடைய தலையீட்டின் பேரில் இந்த ஐந்து மாகாண கவர்னர்களும் ஜப்பானிய அதிகாரிகளோடு பேச்சு வார்த்தைகள் நடத்துவதை நிறுத்திக் கொண்டுவிட்டார்கள். ஆனால் ஜப்பான் இதற்காகச் சளைக்க வில்லை. 1935-ஆம் வருஷம் நவம்பர் மாதம் பீக்கிங் நகரத்திற்குக் கிழக்கே, ஹோப்பை மாகாணத்தின் ஒரு பகுதியில் ஒரு சுதந்திர அரசாங்கத்தை தாபித்து, யின் ஜூ கெங்2 என்ற ஒரு துரோகியை இதன் அரசனாக நியமித்தது. இந்தக் கிழக்கு ஹோப்பை சுதந்திர ராஜ்யத்தின் மூலம், அபினி முதலிய போதை வதுக்களையும், பட்டு, சர்க்கரை முதலிய பொருள்களையும் கள்ளத்தனமாகச் சீனாவுக்குள் கொண்டு வந்து திணித்தது. சீனாவுக்குள் வரும் ஜப்பானியச் சரக்குகளுக்கு இறக்குமதித் தீர்வை விதிப்பது வழக்கம். அப்படியே பல வருஷங்களாக அனுஷ்டிக்கப்பட்டு வந்தது. ஆனால் ஜப்பான் இதனை இப்பொழுது லட்சியம் செய்யவில்லை. இந்தக் கள்ள வியாபாரத்தினால், சீனாவின் சுங்கவரி வருமானம் வரவரக் குறைந்து கொண்டே வந்தது.3 1937-ஆம் வருஷம் ஜூலை மாதம் சீன-ஜப்பானிய யுத்தம் ஆரம்பிக்கிற வரையில் இந்தக் கள்ள வியா பாரத்தை ஜப்பான் விடவேயில்லை. இந்தக் கள்ளவியாபாரத்தைக் கண்டுபிடிப்பதற்காகவும், தடுப்பதற்காகவும் அனுப்பப் பெற்ற சீன அதிகாரிகள் பலர், ஜப்பானியர்களால் கொலை செய்யப்பட்டார் களென்று சொல்லப்படுகிறது.
இங்ஙனம் கிழக்கு ஹோப்பை சுதந்திர ராஜ்யத்தை தா பித்து விட்டதோடு நிற்கவில்லை ஜப்பான். ஹோப்பை மாகாணத்தின் மற்றப் பகுதியிலும், வடக்கேயுள்ள சாஹார் மாகாணத்திலும் சில துரோகிகளைத் தூண்டிவிட்டு, 1935-ஆம் வருஷம் டிசம்பர் மாதம் மூன்றாவது வாரம், ஒரு சுதந்திர ராஜ்யத்தை தாபிக்கும்படி செய்தது. முதலில் தான் உத்தேசித்தபடி ஐந்து வடமாகாணங் களையும் ஒன்று சேர்த்து விழுங்கி விடுதல் சாத்தியமில்லை என்று தெரிந்த பின்னரே ஜப்பான், இந்த மாதிரி சிறுசிறு கரையான் ராஜ்ய ங்களை தாபிக்கச் செய்து, எல்லைப் புறச் சண்டைகளைக் கிளப்பிவிட்டுக் கொண்டிருந்தது. எல்லைப்புறச் சண்டைகளைக் காரணமாகக் காட்டிப் போர் முழக்கம் செய்வது நவீன யுத்த தந்திரங்களில் ஒன்று. ஜப்பான் இந்த யுத்த நகரத்தில் கைதேர்ந் திருந்தது. எல்லைப்புறச் சம்பவங்களைக் காரணமாக வைத்துக் கொண்டு, 1935-ஆம் வருஷத்தில் மட்டும் ஜப்பான், சாஹார், ஸுயியுவான் மாகாணங்களில், மங்கோலிய எல்லைப்புறமாகவுள்ள ஆறு ஜில்லாக்களைத் தன் வசப்படுத்திக் கொண்டது.
ஜப்பான் இப்படி வட மாகாணங்களில் சீனாவுக்கு விரோதமான சக்திகளை வளர்த்துக் கொண்டு வந்ததோடு, தெற்கு மாகாணங்களிலும் தனது திருஷ்டியைச் செலுத்தியது. தெற்கேயுள்ள குவாங்க்ஸி, குவாங்டுங் என்ற இரண்டு மாகாணங்களில் எப்பொழுதுமே -ஸன் யாட் ஸென் உயிரோடிருந்த காலத்திலிருந்தே-தேசீய இயக்கத்திற்கு விரோத மான சக்திகள் இருந்து கொண்டிருந்தன வல்லவா? இவை அடிக்கடி தலைதூக்குவதும் பிறகு அடக்கப்படுவதுமாக இருந்தன வென்பது வாசகர்களுடைய ஞாபகத்தில் இருக்கும். இந்த இரண்டு மாகாணங்களின் ராணுவத் தலைவர்கள், ஜப்பானியர்களுடைய தூண்டுதலின் பேரிலும், ஆதரவின்பேரிலும் 1936-ஆம் வருஷம் ஜூன் மாதம் நான்கிங் அரசாங்கத்திற்கு விரோதமாகக் கிளம்பினார்கள். இவர்களில் குவாங்க்ஸி ராணுவத் தலைவன், சியாங் கை ஷேக் மீது கொண்ட ஆத்திரத்தினால் அவனுக்கு விரோதமாகப் படை யெடுத்துச் சென்றான். இதற்குச் சுயநலம் காரணமல்ல. 1930-ஆம் வருஷத்திலிருந்து, ஜப்பானுக்கு இந்த சியாங் கை ஷேக் விட்டுக் கொடுத்துக்கொண்டு வருகிறானே, அதனை எதிர்த்துப் போராட வல்லவோ வேண்டும், அப்படிப் போராடாமல் தயங்கிக் கொண்டி ருக்கும் இவனைத் தண்டிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டு தான், தேசபக்தி மேலீட்டால்தான், இந்த குவாங்க்ஸி தலைவன் சியாங் கை ஷேக் குக்கு விரோதமாக ஆயுதம் தூக்கினான்! தேசத்தில் ஜப்பானுக்கு விரோதமான உணர்ச்சியும், தயங்கித் தவித்த நான்கிங் அரசாங்கத்தின் மீது அதிருப்தியும் எவ்வளவு வலுத்திருந்தன என்பதற்கு இது நல்ல உதாரணம். கடைசியில் நான்கிங் அரசாங் கத்திற்கு விரோதமாக அனுப்பப் பட்ட இந்த இரண்டு மாகாணப் படைகளும், நான்கிங் அரசாங்கத்திற்கே தங்கள் விசுவாசத்தைத் தெரிவித்துக் கொண்டன. இவைகளுக்கு ஜப்பான் உதவியிருந்த யுத்த தளவாடங்கள், நான்கிங் அரசாங்கத்திற்கே உதவியாயின.
தெற்கு சீனாவில் தன்னுடைய சூழ்ச்சி பலிக்காமற்போகுமோ என்று சந்தேகம் ஏற்பட்டவுடன் ஜப்பான், மறுபடியும் வடக்குப் பக்கம் தன் கவனத்தைத் திருப்பியது. வடகிழக்கு மாகாணங்களில் ஏற்கனவே இது சிலமுயற்சிகளைச் செய்து அதிக பலனைக் காண முடியவில்லை யல்லவா? கிழக்கு ஹோப்பையிலும், சாஹார் மாகாணத்தின் ஒரு பகுதியிலும் ஏதோ சிறு சிறு ராஜ்யங்களை தாபிப்பதோடு இது திருப்தியடை வேண்டியதாயிருந்தது. இதனால் இந்தத் தடவை வடமேற்கு மாகாணங்களில் தனது ராஜ தந்திரச் சரடுகளைவிட ஆரம்பித்தது. சீனாவின் மேற்குப்பாகத்தில், திபேத்துக்கு வடக்கே, மங்கோலியாவுக்குத் தெற்கே ஸிங்கியாங், சிங்ஹாய், கான்ஸு என்ற மூன்று மாகாணங்களுண்டு. இந்த மூன்று மாகாணங்களையும் சேர்த்து, தனது ஆதிக்கத்தின்கீழ் ஒரு மங் கோலிய ராஜ்யத்தை தாபித்து, அதனை, தனது ஆசிய விதரிப்புக்கு ஒரு படியாக உபயோகித்துக் கொள்ளக் கருதியது. இந்தக் கருத்துடன் தேஹ்2 என்ற ஒரு மங்கோலிய ராணுவப் பிரபுவைத் தனது கை யாளாக அமர்த்திக்கொண்டது. அவனை மங்கோலிய சக்ரவர்த்தி யாக்குவதாக ஆசை வார்த்தைகள் கூறியது. ஏற்கனவே, சீன அரசாங்கத்தின் மீது அவனுக்குக் கொஞ்சம் அதிருப்தி இருந்தது. இந்த அதிருப்தியை ஜப்பான் வளர்த்தது. அவனுக்குப் படை பலம் கொடுத்து, ஸுயியுவான், சாஹார் மாகாணங்களின்மீது படை யெடுக்கச் செய்தது.
இந்தப் படையெடுப்புக்கு நான்கிங் அரசாங்கம் எந்தவிதமான எதிர்ப்பையும் காட்டக்கூடா தென்பதற்காக, அதனோடு சமரஸம் பேசிக் கொண்டிருக்குமாறு தன்னுடைய பிரதிநிதிகளிற் சிலரை அனுப்பியது ஜப்பான். சமரஸமாவது என்ன? ஒன்று, சீனா, பொருளாதாரத் துறையில் ஜப்பானோடு ஒத்துழைக்க வேண்டும்; அதாவது ஜப்பானியச் சரக்குகளுக்கு சீனா தனது மார்க்கெட்டைத் திறந்துவிட வேண்டும். மற்றொன்று, சீனாவில் வளர்ந்து வரும் பொதுவுடைமைக் கொள்ளை நோயை அழித்து ஒழிக்க வேண்டும்.3 இந்த இரண்டுக்கும் சீனா சம்மதிக்குமானால் அதற்கு ஜப்பானால் எந்தவிதமான தொந்தரவும் இராது. சீனாவின் அமைதி, ஜப்பானின் தயவைப்பொறுத்திருக்கிற தென்பதுதான் இதனுடைய தாத்பரியம். சீனாவும் இந்தச் சமரஸப் பேச்சுக்கு ஒரு மதிப்புவைத்து இதில் ஈடுபட்டது. இஃது இப்படி இருக்கட்டும்.
ஸுயியுவான், சாஹார் மாகாணங்களின் மீது தொடங்கிய படையெடுப்பு, ஜப்பான் எதிர்பார்த்தபடி அவ்வளவு வெற்றிகரமாக இல்லை. நான்கிங் அரசாங்கம், தனது வடக்கித்தியப் படைகளுக்கு, தற்காப்பிலேயே இருந்து கொள்ளுமாறு உத்தரவிட்டிருந்த போதிலும், அவை தங்களைத் தாக்க வந்த மேற்படி மங்கோலியப் படைகளைத் திருப்பித் தாக்கிப் பல இடங்களில் முதுகு காட்டும் படி விரட்டி விட்டன; சத்துருக்களின் வசப்பட்டுப் போன சில இடங்களைத் திரும்பவும் கைப்பற்றிக் கொண்டன. 1936-ஆம் வருஷம் நவம்பர் மாதம் இந்த நிலைமை இருந்தது. ஜப்பான், இந்த நிலைமையை எதிர்பார்க்கவே இல்லை. ஜப்பானுக்கு விரோதமான கூக்குரல் சீனாவில் வலுக்க ஆரம்பித்தது. அதன் பரம்பரையான பொறுமைக் குணத்திற்கு ஜப்பானின் ஆக்கிரமிப்பு முறை முற்றுப் புள்ளி வைத்தது.
பிடிபட்ட தலைவனை விடுவித்த வீரம்
ஜப்பானுடைய ஆக்கிரமிப்பைக் கொஞ்சங்கூட எதிர்த்துப் போராடாமல் அதற்கு லேசுலேசாக இடம் விட்டுக்கொண்டு வந்தது நான்கிங் அரசாங்கம். இதனால் சீனர்களுடைய தன்மதிப்பு உணர்ச்சிக்குப் பங்கம் ஏற்பட்டு வருவது ஒருபுறமிருக்க, சீனாவின் வியாபாரத்திற்கும் அதிக பாதகம் உண்டாயிற்று. முன் அத்தி யாயத்தில் கூறியபடி வடக்குப் பக்கத்திலிருந்து கள்ளத்தன மாக ஜப்பானியச் சரக்குகள் ஏராளமாக வந்து நுழைந்து கொண்டிருந்த படியால், சீன வியாபாரிகளுக்குப் பெரு நஷ்டம் ஏற்பட்டு வந்தது. எனவே லாபத்திலே குறியாயுள்ள வியாபாரிகள் முதல், தேசத்தின் விடுதலையில் குறியாயுள்ள பள்ளிக்கூட மாணாக்கர்கள் வரை ஏறக்குறைய எல்லோரும் நான்கிங் அரசாங்கத்தின் மீது அதிருப்தி காட்டினர். இந்த அதிருப்தி காரணமாக இளைஞர் பலர் பொது வுடைமைக் கட்சியில் போய்ச் சேர்ந்து கொண்டனர். ஏனென்றால் அந்தக் கட்சிதான் அந்நிய ஆதிக்கத்தின், ஜப்பானிய ஆக்கிரமிப்பின் பரம விரோதியா யிருந்தது.
ஜப்பானை எதிர்த்துப் போராடக்கூடிய நிலைமையில் நாடு தயாராக இல்லை யென்பது நான்கிங் அரசாங்கத்தின் கட்சி, நாம் பலவீனர் களாயிருக்கிறோம், நாமாக வலிய சண்டைக்குப் போகக் கூடாது என்று சியாங்கை ஷேக் அடிக்கடி சொல்லிக் கொண்டு வந்தான். இப்படி ஜப்பானை எதிர்த்து நிற்பதற்கு இவன் தயக்கங் காட்டினானே தவிர, பொதுவுடைமை வாதிகளை நிர் மூலமாக்கி விட வேண்டுமென்கிற தொண்டில் அதிக உற்சாகங் காட்டினான். ஜப்பானுக்கு இணங்கிப் போக வேண்டுமென்கிற விஷயத்திலும், பொதுவுடைமைக்கட்சியைப் படுசூரண மாக்கிவிட வேண்டு மென்கிற விஷயத்திலும் ஐரோப்பிய வல்லரசினர், சியாங்கை ஷேக்குக்கு உடந்தையாயிருந்தனர்; இதே சமயத்தில் ஜப்பானின் ஆக்கிரமிப்பு முறையைச் சில சமயங்களில் மறைமுகமாக ஆதரித்தும் வந்தனர். மஞ்சூரியா விஷயமாகச் சர்வதேச சங்கக் கூட்டங்களில் நடைபெற்ற வாதப் பிரதிவாதங்களைக் கவனித்தாலே இந்த உண்மை புலனாகும். முன்னே கிரேட் பிரிட்டன் என்ன செய்து கொண்டிருந்ததோ அதையே இப்பொழுது ஜப்பான் செய்து கொண்டு வருகிறது. ஜப்பானுக்குத் தன்னை விதரித்துக் கொள்ள வேண்டியது அவசியமாயிருக்கிறது. இப்பொழுது தொந்தரவு என்னவென்றால், எந்தச் சரித்திர பரம்பரையின் சக்திகள் நம்மை இந்தியாவுக்குள் அழைத்துச் சென்றனவோ, இப்பொழுது ஜப்பானை மஞ்சூரியாவுக்குள் அழைத்துச் செல்கின்றனவோ, அவைகளுக்குச் சர்வதேச சங்க சட்டதிட்டங்களில் போதுமான அளவு இடங் கொடுக்கப்படவில்லை. என்று பிரிட்டனின் அந்நிய நாட்டு மந்திரி யாயிருந்த ஸர் ஜான் ஸைமன்1 கூறினான். 1934-ஆம் வருஷம், அதாவது ஜப்பான் வட சீனாவில் தன் ஏகாதிபத்திய வலையை வீசிக்கொண்டி ருந்தபோது, பிரிட்டிஷ் தொழில் முதலாளிகள் சங்கத்தார், மஞ்சூ கோவுக்கு, தங்களுடைய நல்லெண்ணத்தைத் தெரிவிப் பதற்காக ஒரு தூது கோஷ்டியை அனுப்பினர். பிரிட்டிஷ் முதலாளி களுக்கு இப்படித் திடீரென்று மஞ்சூகோவின் மீது நல்லெண்ணம் ஏற்படு வானேன்? இதன் மர்மம் என்னவென்பது சீனர்களுக்குத் தெரியாதா? தவிர, சீனாவின் ஆதீனத்திற் குட்பட்டிருந்த மஞ்சூரியாவை ஜப்பான் விழுங்கி விட்டபோது, சீனாவின் பரிபூரண சுதந்திரத்தைப் பாது காப்பதாக வாஷிங்டன் மகாநாட்டில் ஒப்பந்தம் செய்துகொண்ட ஒன்பது வல்லரசுகள் என்ன செய்தன?2 சும்மா பார்த்துக்கொண்டி ருந்தன வென்பதைச் சீனர்கள் இவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட்டார்களா?
இப்படிப்பட்ட வல்லரசுகளின் பேச்சை இன்னமும் நம்பிக் கொண்டு , ஜப்பானை எதிர்த்துப் போராடாமல் இருக்கிற நான்கிங் அரசாங்கத்தின் மீது ஜனங்கள் அதிருப்தி காட்டியதில் என்ன ஆச்சரியம்? இந்த அதிருப்தி, ஜப்பானின் மஞ்சூரிய ஆக்கிரமிப்புக்குப் பிறகு வரவர அதிகரித்துக் கொண்டு வந்தது. 1934-ஆம் வருஷம் ஆகட மாதம், ஸன் யாட் ஸென்னுடைய மனைவி சிங் லிங்கின் 3 தலைமையில் பிரபல சீனர் பலர் ஒன்று சேர்ந்து, ஜப்பானுக்கு இது வரையில் விட்டுக் கொடுத்தது போதும்; இனியும் விட்டுக் கொடுக்கக் கூடாது. ஜப்பானுக்கு விரோதமாயுள்ள எல்லாத் தேசீய சக்தி களையும் ஒன்று திரட்டி இந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக நிறுத்த வேண்டும் என்று நான்கிங் அரசாங்கத்திற்கு விண்ணப்பஞ் செய்து கொண்டனர். தேசீய கச்திகளை ஒன்று திரட்டுவதென்றால், பொது வுடைமை வாதிகளின் மீது தொடுத்திருக்கிற போரை நிறுத்த வேண்டுமல்லவா? இந்தப் போரை நிறுத்த வேண்டுமென்ற இயக்க மும் வலுத்தது. சீனர்கள், சீனர்களையே கொல்லக்கூடாது என்ற கூக்குரல் எழுந்தது. 1919-ஆம் வருஷம் தோன்றி வளர்ந்து வந்த இளைஞர் இயக்கமானது, இந்தக் காலத்தில் அற்புதமான வேலை செய்தது. கூட்டங்கள் போட்டும் ஊர்வலங்கள் நடத்தியும் ஜனங் களுடைய ஆத்திரத்தைக் கிளப்பி விட்டார்கள் இளைஞர்கள். எத்தியோப் பியாவை1 ஐரோப்பிய வல்லரசுகள் எப்படிக் கைவிட்டு விட்டன பாருங்கள்; எவ்வித நவீன யுத்த தளவாடங்களின் உதவியும் இல்லாமல் அஃது எப்படித் தனியாக நின்று இத்தலியை எதிர்த்துப் போராடி வருகிறதென்பதை நோக்குங்கள் என்றெல்லாம் சொல்லி ஜனங்களை ஊக்கப்படுத்தினார்கள். ராணுவத்தினரும் போலீஸாரும் இவர்களுக்கு அநுதாபம் காட்டினார்கள். ஜனங்களுடைய ஆத்திரம் பொங்கி வர ஆரம்பித்தது. 1935-ஆம் வருஷம் நவம்பர் மாதம், நான்கிங் அரசாங்கத்தின் பிரதம மந்திரியாகவும் அந்நியநாட்டு மந்திரியாகவும் இருந்த வாங் சிங் வெய், துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டுக் காயமடைந்தான். இவன் ஜப்பானுக்கு ஆதர வாயிருக்கிறானென்பதுதான் இதற்குக் காரணம். இவனுக்குப் பிறகு, சியாங்கை ஷேக்கே, தனது பிரதம சேனாதிபதி பதவியோடு பிரதம மந்திரிப் பதவியையும் ஏற்றுக்கொண்டான்.
ஜனங்களுடைய ஆத்திரம் இப்படிப் பலாத்காரத்தில் திரும்பி விட்டதென்பதைத் தெரிந்துகொண்ட பிறகுகூட, நான்கிங் அரசாங்கம், அடக்கு முறையில், தான் வைத்திருந்த நம்பிக்கையை இழக்கவில்லை. முன்னைக்காட்டிலும் இன்னும் தீவிரமாக அடக்கு முறையைப் பிர யோகித்தது. பொதுவுடைமை வாதிகளை அடக்கு வதற்கு இன்னும் அதிக மான ஏற்பாடுகளைச் செய்தது. ஆனால் இதே சமயத்தில் ஜப்பானோடு சமரஸம் பேசுவதில், அதனுடைய ஆக்கிரமிப்புக்கு இணங்கிக் கொடுப்பதில் சிறிதுகூடச் சலிப்புக்காட்டவில்லை. உதாரணமாக, 1936- ஆம் வருஷத்தில் மட்டும், நான்கிங் அரசாங் கத்திற்கும் ஜப்பானிய அதிகாரிகளுக்கும் சுமார் ஏழு தடவை சமரஸப் பேச்சு நடைபெற்றிருக்கிறது. இப்படி ஒரு புறம் சமரஸம் பேசிக்கொண்டுதான், ஜப்பானியர்கள் மற்றொருபுறம் வட மாகாணங்களில் தங்கள் காலை ஊன்றிக் கொண்டு வந்தார்கள்.
இஃது இப்படியிருக்க, ஆரம்பத்திலிருந்தே ஜப்பானிய ஆக்கிரமிப்பை ஒரு கட்டுப்பாடாக இருந்து எதிர்த்து நின்றவர்கள் பொதுவுடமை வாதிகள். இவர்கள், ஜப்பானை எதிர்த்துப் போராடு வதாயிருந்தால், தாங்கள் நான்கிங் அரசாங்கத்தோடு ஒத்துழைக்கத் தயார் என்று பல தடவை தெரிவித்திருக்கிறார்கள்; நான்கிங் அரசாங்கம், தங்கள் மீது காட்டிவரும் ஆத்திரத்தை ஜப்பான் மீது திருப்புமாறு பலமுறை விண்ணப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். சீனர்களே, சீனர்களைக் கொல்லாதீர்கள் என்ற கோஷத்தை முதன் முதலாகக் கிளப்பியவர்கள் இவர்கள்தான். ஆனால் நான்கிங் அரசாங்கம், இவைகளுக்குப் பிரதியாக இவர்களைக் கொள்ளைக் கூட்டமென்று சொல்லி இவர்களை வேட்டையாடுவதில்தான் அதிக சுறுசுறுப்புக் காட்டிவந்தது. இந்த வேட்டையில், இரு தரப்பிலும், 1927-ஆம் வருஷத்திலிருந்து 1937-ஆம் வருஷம் வரை சுமார் பத்து வருஷத்தில் லட்சக்கணக்கான உயிர்கள் பலியிடப்பெற்றன; கோடிக் கணக்கான பணம் வீணாகச் செலவழிக்கப்பட்டது.1 பொது வுடைமை வாதிகளோ, தங்களுக்கு விரோதமாக இப்படி நான்கிங் அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டு வருவதைப் பொருட் படுத்தாமல், வடமேற்கில் தாங்கள் தாபித்திருந்த பொது வுடைமை அரசாங்கத்தை வலுப்படுத்திக் கொண்டும், அதன் அதிகார எல்லையை விதரித்துக் கொண்டும் வந்தார்கள். சமு தாயத்தின் கீழ்ப்படியில் உழன்றுகொண்டிருக்கிறவர்களுடைய ஆதரவு இவர்களுக்கு அதிகமாகக் கிடைத்து வந்தது. இவர் களுடைய ஆதரவைப் பெற்று இந்தப் பொதுவுடைமை அரசாங்க மானது, வடமாகாணங்களில் ஜப்பானியர்களுடைய செல்வாக்கு அதிகமாக ஓங்கவிடாமல் தகைந்து வந்தது. முன்னே சொல்லப் பட்ட ஸுயியுவான் முதலிய மாகாணங்களில் ஜப்பான், தான் எதிர் பார்த்தபடி சுலபமாக வெற்றிகாண முடியாமற் போனதற்குப் பொது வுடைமை வாதிகள் காட்டிய எதிர்ப்புதான் முக்கிய காரணம்.
இந்த நிலைமையில் 1936-ஆம் வருஷக் கடைசியில் சீனாவே திடுக்கிட்டுப் போகும்படியான ஒரு சம்பவம் நடைபெற்றது. மஞ்சூரியா ஜப்பானிய ஆக்கிரமிப்புக்குட்பட்டு விட்டபிறகு அங்கி ருந்த சாங் ஸுயே லியாங், தனது படைகளுடன், நான்கிங் அரசாங் கத்தின் உத்தரவுக்கிணங்க பெருஞ் சுவருக்குத் தெற்கே பின்வாங்கிக் கொண்டுவிட்டானல்லவா?2 அதற்குப் பிறகு இவனுடைய படைகள், சீனாவின் வடகிழக்கு மாகாணங்களின் பாதுகாவலுக்கென்று பீக்கிங் நகரத்திற்குத் தெற்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்தப் படையினரிற் பெரும்பாலோர் மஞ்சூரியாவையே தங்கள் தாய் நாடாகக் கொண்டவர்கள். இவர்களுடைய நில புலங்கள், வீடுவாசல்கள் எல்லாம் அங்கேதான் இருந்தன. அவை யாவும் இப்பொழுது ஜப்பானியருடைய பேராசைக்கு இரையாகி விட்டன வல்லவா? இதனால் இவர்கள், அப்பொழுதிருந்தே ஜப் பானியரைப் பழிவாங்க ஆவல் கொண்டிருந்தார்கள்; அவர்களை எதிர்த்துப் போராடி முறியடித்து விரட்டிவிடவேண்டுமென்று துடித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் நான்கிங் அரசாங்கம் இவர்களைப் பின்வாங்கிக்கொண்டு விடுமாறல்லவோ உத்தரவிட்டு விட்டது? இது முதற்கொண்டு, இவர்கள், ஜப்பானி யரை எதிர்த்துப் போராடத் தங்களுக்குச் சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லையே என்பதற்காக நான்கிங் அரசாங்கத்தின் மீது ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இவர்களுடைய ஆத்திரத்தை அதிகரிக்கிற மாதிரியாகவே ஜப்பானுடைய ஆக்கிரமிப்பும் வரவர அதிகரித்துக் கொண்டுவந்தது; நான்கிங் அரசாங்கமும் இந்த ஆக்கிரமிப்பைச் சகித்துக்கொண்டு வந்தது.
இப்படி ஆத்திரத்தில் துடித்துக் கொண்டிருந்த இந்தப் படைகளுக்கு, 1936-ஆம் வருஷக் கடைசியில் நான்கிங் அரசாங்கம், வடமேற்கிலுள்ள கான்ஸு மாகாணத்தில் செல்வாக்கடைந்து வருகிற பொதுவுடைமை வாதிகள் மீது படையெடுத்துச் செல்லு மாறு உத்தரவிட்டது. இந்தப் படையினருடைய விருப்பத்திற்கு நேர் மாறாக இருந்தது இந்த உத்தரவு. இருந்தாலும் உத்தரவுக்குக் கீழ்ப் படிய வேண்டுமல்லவா? எனவே சாங் ஸுயே லியாங்கின் தலைமை யின் கீழ் இவர்கள் மேற்கு நோக்கிச் சென்று ஸியான் என்ற ஊரைத் தலைமைப்படை தலமாக ஏற்படுத்திக் கொண்டு, மேல் நடத்த வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றித் திட்டம் போட்டுக்கொண்டி ருந்தனர். கான்ஸு மாகாணம் இவர்களுக்கு அந்நிய நாடு மாதிரி. அங்குப் பொதுவுடைமைவாதிகள் செய்து கொண்டிருந்த பந் தோபதோ மிக அதிகம். இந்த நிலையில் இரு சாராருக்கும் சில தொடர்புகள் ஏற்பட்டன. இந்தத் தொடர்பின் மூலமாக, நான்கிங் அரசாங்கம் கருதுகிறபடி, பொதுவுடைமைவாதிகள் கொள்ளைக் கூட்டத்தினரல்லர், அரசியல் நுட்பங்களை நன்கு உணர்ந்தவர்கள், தேச நலத்தையே பிரதானமாகக் கருதுகிறவர்கள் என்று தெரிந்து கொண்டனர் சாங் ஸுயே லியாங் படையினர். பொதுவுடைமைத் தத்துவத்தில் இவர்கள் மனம் ஈடுபட்டது. இருசாராரும் சண்டை போட்டுக் கொள்வதற்குப் பதில் அரசியல் உண்மைகளைப் பரிமாறிக் கொண்டனர்! உள்நாட்டுச் சண்டையினால் அனுகூலமடை கிறவர்கள் அந்நியர்கள்; துன்பமும் துயரமும் அனுபவிக்கிறவர்கள் நாட்டு மக்கள். பெயின் குழப்பத்தினால்1 உண்டான பலன் என்ன? அசைக்க முடியாத இந்த உண்மையை நான்கிங் அரசாங்கம் இன்னமும் உணராமலிருப்பது குறித்து, இருசாராரும் ஆச்சரியப் பட்டனர். ஆரம்பத்தில் சிறிது காலம் வரை, அதாவது ஜப்பானின் மஞ்சூரிய ஆக்கிரமிப்பு வரை பொதுவுடைமை வாதிகள் கோமிண்ட் டாங் கட்சியினர் மீது சிறிது வெறுப்புக்காட்டி வந்தார்களாயினும், பின்னர் இந்த வெறுப்பெல்லாம் திரண்டு ஜப்பான் மீது திரும்பியது. ஜப்பானை, சீனாவினின்றும் அப்புறப்படுத்தி விடவேண்டு மென்ற ஒரே நோக்கந்தான் இவர்களுடைய பிரசாரத்தின் முன்னணியில் நின்றது. ஆனால் நான்கிங் அரசாங்கமோ, இந்தப் பிரசாரத்தைத் துணையாக வைத்துக்கொண்டு, ஜப்பானின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடாமல், ஐரோப்பிய வல்லரசு களின் சுயநல யோசனைகளுக் கெல்லாம் காது கொடுத்துக்கொண்டு, தன்னுடைய குரோதத்தைப் பொதுவுடைமை வாதிகள்மீது காட்டிவந்தது. பொதுவுடைமை வாதிகள் ஜப்பான்மீது எந்த அளவுக்குத் துவேஷங் கொண்டிருந்தார் களோ அந்த அளவுக்கு நான்கிங் அரசாங்கம் பொதுவுடைமை வாதிகள் மீது துவேஷங் கொண்டிருந்தது. ஆனால் இதே அளவுக்கு நான்கிங் அரசாங்கத்திமீது பொதுவுடைமை வாதிகளுக்குத் துவேஷம் இருந்ததா வென்பது சந்தேகம். இவர்களுக்கு, நான்கிங் அரசாங்கம் தங்கள்மீது காட்டிவரும் வன்மத்தை ஜப்பான் மீது திருப்ப மாட்டேனென்கிறதே என்ற வருத்தம் இருந்ததே தவிர, நான்கிங் அரசாங்கத்தையோ, அல்லது அதனை ஆதரித்து வரும் கோஷ் டியையோ அடியோடு நிர்மூலமாக்கி விட்டுத் தாங்கள் அதிகார பதவியைக் கைப்பற்றிக்கொண்டு தனியரசு செலுத்த வேண்டுமென்ற நோக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. ஜப்பானை எதிர்த்துப் போராடுகிற விஷயத்தில் இவர்கள்- பொதுவுடைமை வாதிகள்-நான்கிங் அரசாங்கத் துடன் ஒத்துழைக்க எந்த நிமிஷத்திலும் தயாரா யிருந்தார்கள்; அப்படித் தயாராயிருப்பதாகப் பல முறை தெரிவித்துக் கொண்டார்கள். ஆனால் நான்கிங் அரசாங்கந்தான் இந்த ஒத் துழைப்பை மறுத்து வந்தது.
பொதுவுடமைவாதிகளும், அவர்களுக்கு விரோதமாக அனுப்பப்பெற்ற சாங் ஸுயே லியாங்கின் படையினரும் இப்படிக் கட்டித் தழுவிக்கொண்டு பரபர க்ஷேமலாபங்களை விசாரித்துக் கொண்டிருப் பார்களென்று நான்கிங் அரசாங்கம் எதிர்பார்க்க வில்லை. சாங் ஸுயே லியாங்கிடமிருந்து எவ்வித தகவலும் சரியாகக் கிடைக்கவில்லையே, அவனுடைய படைகள் எவ்வித முன்னேற்றத் தையும் அடைந்ததாகத் தெரியவில்லையே, இதற்கு என்ன காரணம் என்று அது கவலைப்பட்டுக் கொண்டிருந்தது. பிரதம சேனாபதி என்ற முறையில் சியாங் கை ஷேக், தானே நேரில் போர் முனைக்குச் சென்று உள்ள நிலைமையைத் தெரிந்து கொண்டுவர வேண்டு மென்று தீர்மானித்தான். அப்படியே சில ராணுவ தளகர்த்தர் களுடன் 1936-ஆம் வருஷம் டிசம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில், சாங் ஸுயே லியாங்கின் தலைமை தானமாகிய ஸியானுக்குச் சென்றான். ஏற்கனவே இந்தப் பகுதிகளுக்கு, சமாதானத்தை நிலை நாட்டுவதற்கான படையென்ற பெயராலும் கொள்ளைக் கூட்டத் தினரை அடக்கும் படையென்ற பெயராலும், சிறந்த தளகர்த்தர் களின் தலைமையில் சில படைகள் அனுப்பப்பட்டிருந்தன. எல்லாம் பொது வுடைமை வாதிகளை அழித்து ஒழிப்பதற்குத்தான்! இந்தப் படைகளும் அப்பொழுது ஸியானில் முகாம் போட்டிருந்தன.
ஸியானுக்கு வந்த சியாங், படைத் தலைவர்களைக் கண்டு பேசினான். எல்லோரும் ஒருமுகமாக ஜப்பானை எதிர்த்துப் போராட வேண்டுமென்ற விருப்பத்தையே தெரிவித்தார்கள்; பொது வுடைமை வாதிகளை எதிர்த்துப் போராட மறுத்தார்கள். ஆனால் சியாங், தன்னுடைய உத்தரவுப்படி நடக்கவேண்டுமென்று வற்புறுத் தினான். இருதரப்பினருக்கும் வாக்கு வாதம் நடைபெற்றது. சியாங்கோ பிடிவாதங் காட்டினான். இவனை எப்படியாவது தங்கள் வழிக்குத் திருப்ப வேண்டுமென்று தீர்மானித்த படைத்தலைவர்கள், தங்கள் படை வீரர்களுடைய ஏகமனதான அபிப்பிராயத்தைத் துணையாகக் கொண்டு, சியாங்கை, அவனுடைய பரிவார சகிதம் சிறைப்படுத்தி விட்டார்கள்; சிறையிலே வைத்துக்கொண்டு, தங்களுடைய சில கோரிக்கைகளுக்கு இணங்குமாறு சியாங்கைக் கேட்டார்கள். இந்தக் கோரிக்கைகள் என்ன? ஒன்று, பொதுவுடைமை வாதிகளோடு சமரஸமாகப் போவது; இரண்டு, நான்கிங் அரசாங் கத்தைச் சர்வ கட்சியினரும் அடங்கிய விதமாகப் புனர் நிர்மாணம் செய்வது; மூன்று ஜப்பானிய ஆக்கிரமிப்பை எதிர்த்து நிற்பது; நான்கு ஜனங்களுக்குப் பேச்சுரிமை, எழுத்துரிமை முதலியன அளிப்பது; ஐந்து, அரசியல் கைதிகளை விடுதலை செய்வது; ஆறு, சீனாவின் சுதந்திரத்தை ஆதரிக்கிற நாடுகளுடன் சிநேக ஒப்பந்தங்கள் செய்து கொள்வது முதலியன. இந்தக் கோரிக்கைகளை சாங் ஸுயே லியாங்கே கிளத்தினான். தன்னை இப்படிச் சிறைப்படுத்தி வைத்துக்கொண்டு, இந்த மாதிரியான கோரிக்கைகளுக்கு இணங்குமாறு சொல்வது சட்டத்திற்கும் நீதிக்கும் விரோதமென்று சொல்லி, சியாங் கண்டிப்பாக மறுத்துவிட்டான். தன் உயிருக்கு ஆபத்தேற் படக்கூடுமென்பது தெரிந்தும் இவன் அதை லட்சியஞ் செய்யவில்லை.
சியாங், பிடிவாதங் காட்டுவதைக் குறித்து படைத் தலைவர் களுக்குள் அபிப்பிராய வேற்றுமைகள் உண்டாயின. நீண்ட கால மாகவே சியாங்கினிடம் விரோதம் பாராட்டியவர்கள் சிலர் இருந் தார்கள். இவர்களிற் சிலர், சியாங்கைக் கொன்றுவிட வேண்டு மென்று சொன்னார்கள். மற்றவர்கள், கூடாதென்றார்கள். கடைசியில் இருசாராரும் சேர்ந்து பொதுவுடைமை வாதிகளின் ஆலோசனை யைக் கேட்டார்கள். அவர்கள் சியாங்கை உடனே விடுதலை செய்ய வேண்டுமென்றும், வேறு எந்தவிதமான நடவடிக்கை எடுத்துக் கொண்டாலும், அது நாட்டிலே பிளவை உண்டு பண்ணி, ஜப்பானிய ஆக்கிரமிப்புக்குத் துணைசெய்வதாகு மென்றும் கூறினார்கள். தங்களை அடியோடு ஒழித்துவிட வேண்டு மென்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிற, அதற்காகவே ஸியானுக்கு வந்திருக்கிற சியாங்கை, அவன் தங்கள் வசப்பட்டுக் கிடக்கிற காலத்திலும் அவனைப் பழி வாங்க விரும்பவில்லை பொதுவுடைமை வாதிகள்! அப்படிச் செய்வது, தேச நன்மைக்கு விரோத மென்பதை அவர்கள் நன்கு தெரிந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடைய இந்தப் பெருந்தகைமை, சியாங் கை ஷேக் காட்டிய மனோ தைரியத்தைக் காட்டிலும் ஒருபடி உயர்ந்ததாகவே இருந்ததென்று சொல்ல வேண்டும்.
சியாங் சிறைப்படுத்தப்பட்டுவிட்ட செய்தி நான்கிங்குக்கு எட்டியது. அரசாங்க அதிகாரிகளுக்குள் சிலர், ஜப்பானின் அந்தரங்க பக்தர்கள்; சியாங்கின் உயிர் போனாலும் போகட்டும், ஸியான் நகரத்தை ஆகாயப் படையினால் தாக்கித் தரையோடு தரையாக்கி விட வேண்டுமென்று உரக்கக் கத்தினார்கள். அவ்வளவு ஆத்திரம் இவர்களுக்குப் பொது வுடைமை வாதிகள் மீது! சியாங்கை விடுதலை செய்ய வேண்டுமென்று சொன்ன பொதுவுடமை வாதிகள் மீது! ஆனால் நல்ல வேளையாக இவர்களுடைய யோசனை, செயலில் வராமல் நின்றுவிட்டது. சியாங்கை விடுதலை செய்து கொண்டுவர, அவனுடைய மனைவியும், மைத்துனனாகிய டி. வி. ஸுங்கும் (அரசாங்க மந்திரிகளில் ஒருவன்) ஆகாய விமானத்தின் மூலம் ஸியானுக்குச் சென்றார்கள். அப்படியே டிசம்பர் மாதம் இருபத்தைந்தாந்தேதி விடுதலை செய்து கொண்டு நான்கிங் வந்து சேர்ந்தார்கள்.
ஸியான் சம்பவம், தேசத்தின் எண்ணப்போக்கையே மாற்றி விட்டது. பொதுவுடைமை வாதிகள் பெருந்தன்மையாக நடந்து கொண்டது, அவர்களிடத்திலே சிலருக்கிருந்த துவேஷத்தை அகற்றி விட்டது. அப்படியே சியாங் காட்டிய மனோ உறுதி, அவனுடைய தலைமையில் எல்லோருக்கும் ஒரு நம்பிக்கையை உண்டுபண்ணியது. நான்கிங் அரசாங்கமும் பொதுவுடைமை வாதிகளும் ஒற்றுமைப் பட்டுப்போக வேண்டுமென்ற கூக்குரல் எங்குப் பார்த்தாலும் எழும் பியது; ஒற்றுமைக் கூட்டங்களும் ஊர்வலங்களும் நடைபெற்றன; தீர்மானங்களுக்கு மேல் தீர்மானங்களாக நான்கிங் அரசாங்கக் காரியாலயத்தில் வந்து குவிந்தன.
இந்த நிலைமையில் 1937-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் கோமிண்ட்டாங் கட்சியின் நிருவாக சபைக் கூட்டம் கூடியது. இந்தக் கூட்டத்திற்குப் பொதுவுடைமைக் கட்சியினர், தேசம் ஒற்று மைப்பட்டுச் செல்வதற்கான சில கோரிக்கைகளை அனுப்பியி ருந்தனர். இவை யென்னவென்றால், பொதுவுடைமை இயக்கத்தின் மீது தொடுக்கப் பட்டிருக்கும் யுத்தத்தை நிறுத்த வேண்டும்; ஜப்பானிய ஆக்கிரமிப்பை ஆயுத பலங்கொண்டு எதிர்க்கவேண்டும்; பேச்சுரிமை, கூட்டங்கூடும் உரிமை முதலிய ஜீவாதாரமான உரிமைகள் எல்லோருக்கும் வழங்கப்பட வேண்டும்; அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும்; தேசீய புனருத்தாரணத்திற்காக ஒரு மகாநாடு கூட்டி, ஜனங்களுடைய வாழ்க்கை அந்ததை உயர்த்தக் கூடிய மாதிரியான திட்டங்களை வகுக்க வேண்டும் - முதலியனவே யாம். இதே பிரகாரம், கோமிண்ட்டாங் கட்சியில் இதுகாறும் மித வாதம் பேசி வந்த தலைவர்களும் ஒற்றுமைப் படுவதற்கான முயற்சி களைச் செய்தார்கள். ஆனால் இந்தக் கூட்டத்தில் பொதுவுடைமைக் கட்சியைக் கண்டனம் செய்கிற மாதிரியான ஒரு தீர்மானமே நிறை வேற்றப்பட்டது.1 ஆனாலும் பொதுவுடைமைவாதிகள், ஒற்றுமைக் கான முயற்சிகளைச் செய்வதில் சிறிதுகூடச் சலிப்புக் காட்ட வில்லை. இவர்களுடைய பிரதிநிதி கோஷ்டியொன்று சியாங் கை ஷேக்கை நேரில் பேட்டி கண்டு, ஒற்றுமைக்கான காரியங்களைச் செய்யுமாறு வேண்டிக்கொண்டது; இந்த ஒற்றுமைக்காக எந்தெந்த அமிசங்களில் தாங்கள் இணங்கிப் போக முடியும் என்பவை களையும் தெரிவித்தது. அதாவது, செம்படையை தேசீய ராணுவத்தில் ஐக்கியப்படுத்திக் கொள்வதற்கும், இதுவரை தங்களுடைய ஆதீனத் திற்குட்பட்டிருக்கிற சோவியத் பிரதேசத்தை நான்கிங் அரசாங்க நிருவாகத்திற்குட்பட்ட எல்லைப்புறத்து விசேஷ மாகாணமாக அமைத்துக் கொள்வதற்கும் சம்மதித்தது. இந்த எல்லைப் புறத்து விசேஷ மாகாணத்தில், ஜப்பானுக்கு ஆதரவு காட்டுகிற நிலச்சுவான் தார்களுடைய நிலங்களைப் பறிமுதல் செய்யாமலிருப்பதற்கும், இதுகாறும் நிலச்சுவான்தார்களுக்கு மறுக்கப்பட்டு வந்த ஓட்டு ரிமையை இனி அவர்களுக்கு வழங்கு வதற்கும் ஒப்புக் கொண்டது. இந்த மாதிரி பொதுவுடைமைவாதிகள் தங்களுடைய முறைகளிற் சிலவற்றை தேச ஒற்றுமைக்காக விட்டுக் கொடுக்க முன்வந்தது, கோமிண்ட்டாங் கட்சியிலும் நான்கிங் அரசாங்கத்திலும் இவர் களுக்கு எதிராக இருந்த கட்சியின் பலத்தைக் குறைத்துவிட்டது.
எனவே நான்கிங் அரசாங்கம், பொதுவுடைமை வாதிகளின் இந்த விட்டுக் கொடுக்கிற தன்மைக்குப் பிரதியாக ஒன்றுஞ் செய்யாமல் சும்மாயிருக்க முடியுமா? ஜப்பானுக்கு ஆதரவாக இருந்த உயர்தர அதிகாரிகளை ஒருவர் பின் ஒருவராக விலக்கியது; கொள்ளைக் கூட்டத்தினரை அடக்குவதற்கென்று அனுப்பப் பெற்ற படையை- அதாவது பொதுவுடைமை வாதிகளுக்கு விரோதமாக அனுப்பப் பெற்ற படையை-கலைத்துவிட்டது; பொதுவுடைமையினரின் ஆதிக்கத்திலிருந்த வட மேற்கு மாகாணங்களுக்கு யாரும் போகக் கூடாதென்று பிறப்பித் திருந்த தடை உத்தரவை ரத்து செய்து விட்டது.
இதே பிரகாரம் கோமிண்ட்டாங் கட்சியும், பொதுவுடைமைக் கட்சியோடு இணங்கிப் போகத் தயாராயிருந்தது. சென்ற பத்து வருஷ காலமாக தேசத்தை அலங்கோலப்படுத்தி வந்த உள் நாட்டுச் சண்டை, ஜப்பானுக்கு எவ்வளவு தூரம் ஆக்கங் கொடுத்திருக்கிற தென்பதை இக்கட்சியிலுள்ளவர்கள் இப்பொழுது நன்கு உணர ஆரம்பித்தார்கள். மேலும், ஜப்பானின் ஏகாதிபத்திய எண்ணங்கள் இவர்களுக்கு இப்பொழுதே ஒருவாறு புலப்படலாயின.
இப்படிச் சீனா ஒற்றுமைப்பட்டுக்கொண்டு வருவதை ஜப்பானால் சும்மா பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. எப்படிப் பார்த்துக் கொண்டிருக்க முடியும்? அதனுடைய ஏகாதி பத்திய ஆசைக்கு இந்த ஒற்றுமை பெரிய இடையூறல்லவா? மேலும் நான்கிங் அரசாங்கம், 1937-ஆம் வருஷத் தொடக்கத்தில், தனது முக்கிய மந்திரிகளில் ஒருவனான டாக்டர் எச். எச். குங் என்பவனை அந்நிய நாடுகளுக்கு அனுப்பி, யுத்த தளவாடங்களும், கடனாகப் பணமும் பெறுவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தது; இதே சமயத்தில் உள்நாட்டில் ராணுவத் தற்காப்பு ஏற்பாடுகள் சில வற்றையும் செய்து வந்தது.
பார்த்தது ஜப்பான்; இனியும் தாமதிக்கக் கூடாதென்று தீர்மானித்தது. சீனா நன்றாக ஒற்றுமைப்படுவதற்கு முன்னர், அது தன்னை நன்றாகப் பலப்படுத்திக் கொள்வதற்கு முன்னர், அதனைத் தாக்கி வீழ்த்திவிட சங்கற்பம் செய்துகொண்டது. இப்படிச் சங்கற்பம் செய்துகொண்டுதான் 1937-ஆம் வருஷம் ஜூலை மாதம் ஏழாந்தேதி சீனாவை வலுச் சண்டைக்கிழுத்தது.
இந்தச் சண்டையினால் சீனாவின் ஒற்றுமை உரம் பெற்றதே தவிர தளர்ச்சியடையவில்லை. பொதுவுடைமைக் கட்சிக்கும் கோமிண்ட்டாங் கட்சிக்கும் சமரஸம் ஏற்பட்டது. ஜப்பானை எதிர்த்துப் போராடி வெற்றி காண்கிற விஷயத்திலும், புதிய சீனாவை நிர்மாணம் செய்கிற விஷயத்திலும் இருகட்சியினரும் ஒன்று சேர்ந்து வேலை செய்வதாகப் பிரதிக்ஞை செய்துகொண்டனர். இப்படியே நான்கிங் அரசாங்கமும், பொதுவுடைமைக் கட்சியினர் ஏற்கனவே கிளத்தியிருந்த சமரஸக் கோரிக்கைகளுக்குத் தனது சம்மதத்தைத் தெரிவித்தது. அதாவது சோவியத் செம்படை எட்டாவது படையென்று பெயர் கொடுக்கப் பெற்றது. கொரில்லாப் போர் முறையில் பயிற்சி பெற்றவர்களை மட்டும் கொண்ட ஒரு தனிப் படை அமைக்கப்பட்டு, இதற்கு நான்காவது படையென்று பெயர் கொடுக்கப்பெற்றது. இந்த இரண்டு படைகளும் தேசீய ராணுவக் கவுன்சில் என்னும் பிரதம ராணுவ தானத்தின் நிருவாகத்திற் குட்படுத்தப்பெற்றன. பொதுவுடமை வாதிகளின் ஆட்சிக்குட் பட்டிருந்த வடமேற்கு மாகாணங்கள், வடமேற்கு எல்லைப்புற விசேஷ நிருவாகப் பிரதேசம் என்ற பெயருடன் நான்கிங் அரசாங்கத்தின் மேற்பார்வைக்குட் படுத்தப்பெற்றன.
இங்கே நாம் ஒரு விஷயத்தைக் குறிப்பிடவேண்டும். என்ன வென்றால், கோமிண்ட்டாங் கட்சிக்கும் பொதுவுடைமைக் கட்சிக்கும் சமரஸம் ஏற்பட்டபோதிலும், இரண்டும் சேர்ந்து ஜப்பானை எதிர்த்துப் போராடி வெற்றி காண உறுதி செய்து கொண்ட போதிலும், எந்தக் கட்சியும் தன்னுடைய தனித்துவத்தை இழந்து விடவில்லை; ஒன்றிலே மற்றொன்று ஐக்கியப்பட்டுப் போகவில்லை. இரண்டு கட்சிகளும் தனித்தனியாக எப்பொழுதும்போல் வேலை செய்து கொண்டிருந்தன. இவற்றின் ஆதீனத்திற்குட்பட்டிருந்த பிர தேசங்களின் நிருவாக அதிகாரங்களும் வரையறுக்கப்பட்டிருந்தன.
நான்கிங் அரசாங்கம், இங்ஙனம் பொதுவுடைமைக் கட்சி யினரின் ஒத்துழைப்பைப் பெற்றதன் மூலம், ஜனங்களின் நல் லெண்ணத்தைச் சம்பாதித்துக்கொண்டது. இதே சமயத்தில், இதுகாறும் சிறையிலே வைக்கப்பட்டிருந்த அரசியல்வாதி களென்ன, தொழிலாளர் தலைவர் களென்ன முதலிய பலரையும் விடுதலை செய்தது; ஜப்பானியருக்கு விரோதமாகப் பிரசாரஞ் செய்யக் கூடாதென்று விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவை ரத்து செய்தது. இந்தக் காரியங்களின் மூலம் தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்ட நான்கிங் அரசாங்கத்திற்கு நாட்டின் நானா பக்கங்களிலிருந்தும், ராணுவப் பிரபுக்கள் முதலாயினோரிட மிருந்தும் ஆதரவு கிடைத்தது. சுருக்கமாக, ஜப்பானிய ஆக்கிர மிப்புக்கு விரோதமாக எல்லாத் தேசீய சக்திகளும் ஒன்று திரண்டன. இந்தத் திரட்சிக்கு ஐக்கிய தேசீய முன்னணி என்று பெயர் கொடுக்கப்பட்டது. இந்த முன்னணியின் முதல் தலைவனாயிருந்தான் சியாங் கை ஷேக்.
சீன ஜப்பானியப் போர் தொடங்கிய பிறகு கூட, நான்கிங் அரசாங்கத்தைச் சேர்ந்த சிலர், ஜப்பானை எதிர்த்துப் போராட வேண்டியது அவசியமா என்ற கேள்வியைக் கேட்டுக்கொண்டி ருந்தனர். ஆனால் இவர்களுடைய கேள்விக்குப் பதில் சொல்வார் யாருமில்லை. ஜப்பானை எதிர்த்துப் போராட வேண்டுமென்ற உறுதி ஜனங்களிடத்தில் ஓங்கி நின்றது. இதுகாறும் எங்கள் குடும்பத்திற்காக வியர்வையைச் சிந்திக்கொண்டிருந்தோம்; இனி நாட்டிற்காக ரத்தத்தைக் கொட்டுவோம். என்று ஜனங்கள் உருத்தெழுந்தார்கள்.
சீன - ஜப்பானிய யுத்தம்
மஞ்சூரியா, ஜப்பானின் ஆக்கிரமிப்புக்குட்பட்ட பிறகு, சீனாவின் வட மாகாணங்களில் எல்லைப்புறச் சம்பவங்களென்ற பெயரால், ஜப்பானியப் படைகளும், சீனப்படைகளும் அடிக்கடி கைகலப்பது வழக்கமாகி விட்டது. இந்த எல்லைப்புறச் சம்பவங் களைச் சிருஷ்டித்து அவை மூலம் சாதகம் தேடிக்கொள்வதில் ஜப்பான் மிகவும் சாமர்த்தியங் காட்டிவந்தது. இப்படிப்பட்ட எல்லைப்புறச் சம்பவம் ஒன்றை 1937-ஆம் வருஷம் மத்தியில் சிருஷ் டிக்க வேண்டியது அதற்கு அவசியமாயிற்று. ஏனென்றால் முந்தின அத்தியாயத்தில் கூறியபடி, சீனா, ஒற்றுமைப் பட்டுக்கொண்டும் பலப்பட்டுக்கொண்டும் வருவது, அதனுடைய ஏகாதிபத்திய நோக்கத்திற்கு முட்டுக்கட்டை மாதிரியல்லவா?
மேற்படி 1937-ஆம் வருஷ மத்தியில் வடக்கே ஹோப்பை மாகாணத்தில், சீனப் பாதுகாப்புப் படையொன்று தளபதி ஸுங் செ யுவான்1 என்பவனுடைய தலைமையில் நிறுத்திவைக்கப்பட்டி ருந்தது. இதன் தலைமை தானம் பீக்கிங். 1933-ஆம் வருஷம் கிழக்கு ஹோப்பை மாகாணத்தில் ஜப்பானியர் முன்னோக்கி வந்தபோது, அவர்களை எதிர்த்து நின்றது இந்தப் படைதான். இந்தப் படை யினரில் பெரும்பாலோர் சம்பளத்திற்குச் சேவகஞ் செய்யும் போர் வீரர்களல்லர்; உண்மையான தேசபக்தர்கள்; தங்களுடைய அர சாங்கம், ஜப்பானியர்களுக்கு விட்டுக் கொடுத்துக் கொண்டு வரு கிறதேயென்று மனக்கொதிப்படைந் திருந்தவர்கள். இவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகே சிறிது காலமாக, ஜப்பானியப் படைகளின் ஒரு பகுதி முகாம் போட்டுக்கொண்டிருந்தது. சீனாவுக் கும் ஜப்பானுக்கும் அவ்வப்பொழுது ஏற்பட்டு வந்திருக்கிற ஒப் பந்தங்களில், ஜப்பான், இப்படிச் சீன அதிகார எல்லைக்குள் தனது துருப்புகளைக் கொண்டுவந்து நிறுத்திக் கொள்ள உரிமை பெற்றி ருக்கிறதென்று ஜப்பானிய ராஜ தந்திரிகள் சாதித்தார்கள். இப்படிச் சொல்வதற்கு ஆதாரமேயில்லை என்று சீனா மறுத்து வந்தது. இஃது எப்படியிருந்தபோதிலும், இரண்டு பக்கத்துப்படையினரும் நட்பு முறையில் நடந்து கொண்டிருந்தால் எவ்வித சங்கடமும் ஏற்பட் டிராது. ஆனால் ஜப்பானியப் போர்வீரர்கள், தங்களுக்கு எட்டினாற் போலிருக்கும் சீனப்படையினரை உதாசீனமாகப் பேசிவந்தார்கள்; சீனர்களா? என்கிற மாதிரியாக அலட்சியப்படுத்தி வந்தார்கள். இவைகளையெல்லாம் சீனர்கள் பொறுமையுடன் சகித்து வந்தார்கள். ஏனென்றால், சீன அதிகாரிகள், பதிலுக்குப் பதில் செய்ய வேண்டாமென்றும், அப்படிச் செய்வது ஜப்பானோடு சமரஸமாகப் போவதற்கு இடை யூறாயிருக்குமென்றும் இவர்களுக்குத் தெரிவித் திருந்தார்கள். இப்படியே மாதங்கள் பல கழிந்தன.
1937-ஆம் வருஷம் ஜூலை மாதம் ஆறாந்தேதியன்று இரவு, பீக்கிங் நகரத்திற்குச் சமீபத்திலுள்ள வான்பிங்1 என்ற இடத்தில் ஜப்பானியத் துருப்புகள் கவாத்து பழகிவிட்டு, மறுநாள் உதயமான வுடன் தங்களுடைய முகாமுக்குத் திரும்பிச் சென்றனர். அப் பொழுது ஆஜர் எடுத்துப்பார்த்ததில் தங்களிலே ஒருவன் காணாமல் போய் விட்டானென்று சொல்லி, அவனை நிச்சயமாகச் சீனர்கள் தான் களவாடிக் கொண்டுபோயிருப்பார்களென்று சாதித்தார்க.ள். சில மணி நேரங்கழித்து இந்தக் காணாமல் போன மனிதன் திரும்பி வந்து ஆஜர் கொடுத்து விட்டான்! ஆனாலும் இரண்டுபக்கத்துச் சைன்னியங் களுக்கும் அடிக்கடி ஏற்பட்டு வருகிற தகராறுகளை நிரந்தரமாகத் தீர்த்துவைக்க, சீனப் பிரதி நிதிகளும் ஜப்பானியப் பிரதிநிதிகளும் அடங்கிய ஒரு மத்தியத கமிட்டியை நியமிக்க வேண்டுமென்று ஜப்பானியர்கள் கோரினார்கள். இதனோடு கூட, சீனத் துருப்புக்கள், வான்பிங் என்ற இடத்தைக் காலி செய்து விட்டுப் பின்னுக்குப் போக வேண்டுமென்று கூறினர். இதற்குச் சீனப்படை யினர் சம்மதிக்கவில்லை. இதையே காரணமாக வைத்துக் கொண்டு ஜப்பானியர்கள், வான்பிங் கிக்குச் செல்லும் வழியில் உள்ள மார்க் கோபோலோ2 வாராவதி அருகில்- இதற்கும் இதைச் சேர்ந்தாற் போல் இருக்கும் கிராமத்திற்கும் லுக்கௌசியோ3 என்று பெயர்-முகாம் போட்டுக்கொண்டிருந்த சீனத் துருப்புகள்மீது 1937-ஆம் வருஷம் ஜூலை மாதம் ஏழாந்தேதி துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள். சீனப்படை யினரும் இதற்குப் பதில் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள். ஜப்பான் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த யுத்தம் ஆரம்பித்துவிட்டது.
ஒரு பெரிய யுத்தம் நடைபெறுவதற்கான எல்லா முன்னேற் பாடுகளையும் செய்துகொண்டே, ஜப்பான், இந்த லுக்கௌசியோ சம்பவத்தைச் சிருஷ்டித்தது. இதனை அகமாத்தாக ஏற்பட்ட ஒரு சம்பவம் என்று சொல்ல முடியாது. இதற்கு ஆதாரம் என்ன வென்றால், ஜூலைமாதம் பதினோராந்தேதி, ஜப்பான், சீனாவி லுள்ள தனது தானீகர்களுக்கு அனுப்பிய ஓர் உத்தரவில், நிலைமை முற்றிவிடுமானால் ஆங்காங்குள்ள ஜப்பானியர்களைப் பத்திரமாக அப்புறப்படுத்துவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து தயாராக வைத்திருக்கவேண்டுமென்று கண்டிருந்தது. அன்றே மேற்படி ஜூலை மாதம் பதினேராந்தேதியன்றே, மஞ்சூரியாவிலிருந்து இரண்டாயிரம் ஜப்பானியத் துருப்புகள் டீண்ட்ஸின் துறைமுகப் பட்டினத்தில் வந்திறங்கின. நவம்பர் மாதக் கடைசிக்குள் சுமார் மூன்று லட்சம் ஜப்பானியத் துருப்புகள் சீன எல்லைக்குள் வந்து முகாம் போட்டுக்கொண்டுவிட்டன.
இப்படி ஒருபக்கம் துருப்புகள் வந்திறங்கிக்கொண்டிருக்க, மற்றொரு பக்கம் ஜப்பானிய ராணுவ தளகர்த்தர்கள் வட சீனாவின் மாகாண அதிகாரிகளோடு சமரஸம் பேசிக்கொண்டிருந்தார்கள். இடையிடையே இரு தரப்புத் துருப்புகளுக்குள்ளும் சில்லரைச் சண்டைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. இந்தக் காலத்தில் ஜப்பான் பெரிய யுத்தம் நடத்துவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் ஒழுங்காகச் செய்து கொண்டது. இதற்காகவே சமரஸப் பேச்சுக் களென்று சொல்லிக் காலங்கடத்தியது. சமரஸமாகப் போக வேண்டுமென்ற எண்ணம் அதற்கு இருந்ததாகத் தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால் டீண்ட்ஸினுக்குப் படைகளைக் கொண்டு வந்து இறக்கியிராதன்றோ?
இந்தச் சமயத்தில் யோமியூரி ஷிம்புன் 1 என்ற ஜப்பானியப் பத்திரிகை பின்வருமாறு எழுதியது:- வடசீனாவின் குழப்ப நிலைமையை ஒரு விதமாகத் தீர்த்துக்கொள்ள இதுதான் நமக்கு நல்ல சந்தர்ப்பம். இது தீரவேண்டுமென்று நாம் பல வருஷங்களாக எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தோம். (சீன அரசாங்க ஆதிக்கத்திற் குட்பட்ட) ஹோப்பை-சாஹார் கவுன்சில், நான்கிங் மத்திய அரசாங்கம் ஆகிய இந்த இரண்டு தடைகளையும் அப்புறப்படுத்தக் கூடிய உறுதி நமக்கு இப்பொழுது இல்லாமற்போனால், கடவுளால் அனுக்கிரகிக்கப்பட்ட இந்தச் சந்தர்ப்பத்தைக் கைநழுவ விடுவோ மானால், விபரீத பலன்கள்தான் உண்டாகும். ஜப்பான் பார்லி மெண்டில் அப்பொழுது பிரதம மந்திரியா யிருந்த கோனோயெ2 சீன-ஜப்பானியப் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான ஒரு பரிகாரம் ஏற்பட வேண்டும். என்று கூறினான் இந்த வாசகங்களின் கருத் தென்ன? இது காறும் ஜப்பான் நயமான முறைகளை உபயோகித்து, சீனாவில் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிக்கொண்டு வந்தது. இனி இந்த முறை பலிக்காது, சீனா விழித்துக் கொண்டு விட்டது என்று தெரிந்ததும், பலாத்காரத்தை உபயோகித்துத்தான் தனது காரியத்தைச் சாதித்துக் கொள்ள வேண்டுமென்று தீர்மானித்தது.
ஜப்பானின் ஏகாதிபத்திய லட்சியம் இன்னதுதான் என்று வகுத்துரைத்த தனகா யாதாதில்1 பின்வரும் வாசகங்கள் காணப் பட்டன:- நமது வியாபார அபிவிருத்தியை மட்டும் நாம் நம்பிக் கொண்டிருந் தோமானால், கடைசியில் நாம் பிரிட்டனாலும், அமெரிக்காவினாலும் தோற்கடிக்கப்பட்டுவிடுவோம். நம்மை மிஞ்சிய பொருளாதார சக்திகள் இருக்கின்றன. இதனால் நாம் அடைகிற லாபம் ஒன்றுமில்லை. இதைவிடப் பெரிய ஆபத்து என்னவென்றால் சீனா என்றைக்காவது ஒருநாள் விழித்துக் கொண்டுவிடும்.
இந்தத் தனகா யாதாதுதான், ஜப்பானின் ஏகாதிபத்தியச் சட்டம். இந்தச் சட்டத்தை அனுசரித்தே அது தனது நடவடிக்கை களை நடத்திக் கொண்டு வந்திருக்கிறதென்பது, 1927-ஆம் வருஷத்தி லிருந்து 1941-ஆம் வருஷம் டிசம்பர் மாதம் பசிபிக் மகா சமுத்திரத்தி லுள்ள பெர்ல்1 துறைமுகத்தைத் தாக்க முற்பட்டது வரை அதனுடைய போக்கைக் கவனித்துக்கொண்டு வந்திருப்பவர்களுக்கு நன்கு புலனாகும். இது நிற்க.
சீனாமீது பெரிய யுத்தந்தொடுத்து அதனை முழங்கால் முறிய அடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஜப்பானுக்கு இருந்ததாயினும், அதற்கான ஏற்பாடுகளை அது நீண்ட நாட்களாகச் செய்துகொண்டு வந்ததாயினும் 1937-ஆம் வருஷம் ஜூலை மாதம் இருபத்தெட்டாந் தேதி தனது படைகளைத் திரட்டிப் பகிரங்கமாக பீக்கிங் நகரம் நோக்கி அனுப்புவதற்கு முன்னால், அது, யுத்ததர்மம் எதனையும் அனுசரிக்க வில்லை; அதாவது போர் தொடுக்கப் போவதாக முன்னாடியே அறிவித்தல், சத்துரு தேசத்தின் தானீகர்களுக்கு விடைகொடுத்து அனுப்புதல் முதலிய எந்தவிதமான சம்பிரதாயங்களையும் அனுஷ்டிக்க வில்லை. குழப்பநிலையிலுள்ள ஒரு பிரதேசத்தில் அமைதியை உண்டு பண்ணுவதாகிற ஒரு காரியத்தையே, தான் செய்வதாகக் கூறிக்கொண்டு ஜப்பான் இந்த யுத்தத்தைத் தொடுத்தது. சீனாவை, சம அந்ததுடைய ராஜ்யமாக அது கருதவேயில்லை.
1937-ஆம் வருஷம் ஜூலை மாதம் இருபத்தெட்டாந்தேதி, ஏற்கனவே திரண்டு தயாராக இருந்த ஜப்பானியப் படைகள் பீக்கிங் நகரத்தைக் கைப்பற்றிக் கொள்ளப் புறப்பட்டன. ஜப்பான் பெரிய யுத்தத்திற்கு அடிகோலுகிறதென்பதை இப்பொழுது நான்கிங் அரசாங்கம் நன்றாகத் தெரிந்துகொண்டுவிட்டது; ஆரம்பத்திலேயே, அதனை எதிர்த்துப் போராடக் கூடிய சக்தி தனக்கு இல்லையென் பதையும் உணர்ந்து கொண்டது. எனவே பீக்கிங்கைத் தலைமை தானமாகக் கொண்டிருந்த தனது வடக்கித்தியப் படைகளுக்கு, பீக்கிங் நகரத்தைக் காலிசெய்துவிட்டு தெற்கு நோக்கிப் பின்வாங்கிக் கொண்டு விடுமாறு உத்தரவிட்டது. இந்தப்படைக்குத் தலைவனாயி ருந்தவன் முன்னே சொன்ன ஸுங் செ யுவான். இவன் முதலில் சிறிது தயங்கினான். ஜப்பான் பக்கம் போய்ச் சேர்ந்துவிடலாமா என்றுகூட யோசித்தான் என்று சொல்லப்படுகிறது. இவனைப் போலவே இன்னும் சில படைத் தலைவர்கள் தயங்கினார்கள். சீன - ஜப் பானியச் சண்டை தொடங்கிய பிறகுகூட நான்கிங் அரசாங்கத் தில் சிலர், ஜப்பானை எதிர்த்துப் போராட வேண்டியது அவசியமா வென்ற கேள்வியைக் கேட்டுகொண்டிருந்தனர் என்று முந்திய அத் தியாயத்தின் கடைசியில் கூறினோமல்லவா? இந்தக் கேள்விதான், மேலே சொன்ன படைத் தலைவர்களின் தயக்கத்திற்குக் காரணம். இதனுடைய பலன் என்ன வாயிற்றென்றால், இவர்கள் கீழிருந்த படைவீரர்கள் ஒரு பக்கம் எஜமான விசுவாசத்தினாலும் மற்றொரு பக்கம் தேசபக்தியினாலும் அலக்கழிக்கப்பட்டு யுத்த சந்நத்தர்களா காமலிருந்து விட்டார்கள். இதனால், ஜப்பானியப் படைவெள்ளத் திற்கு முன்னே இவர்கள் மடமடவென்று பின் வாங்கிக்கொண்டு விட வேண்டியதாயிற்று. சொற்ப காலத்திற்குள், எதிர்பார்த்ததை விட அதிகமான வெற்றிகள் ஜப்பானுக்குக் கிடைத்தன; முக்கிய மான நகரங்கள் அவர்கள் வசம் போய்ச் சேர்ந்தன.
ஜூலை மாதம் இருபத்தொன்பதாந் தேதி இரவு ஸுங் செ யுவான், தனது படைகளுடன் பீக்கிங் நகரத்தைக் காலி செய்து விட்டு, தெற்கே எண்பது மைல் தொலைவிலுள்ள பாவோடிங் என்ற ஊருக்கு வந்து சேர்ந்தான். ஜப்பானியர் அன்றே எவ்வித எதிர்ப்பு மின்றி பீக்கிங் நகரத்தை ஆக்கிரமித்துக் கொண்டனர்.
பீக்கிங் நகரத்தை விடாப் பிடியாகப் பிடித்துக் கொண்டிருந் தால் அதனை அழிக்க முற்படுவர் ஜப்பானியர் என்பது சீனர் களுக்குத் தெரியும். ஆனால் அந்த நகரம் அழிபடுவதற்கு யாரும் விரும்பவில்லை. ஏனென்றால் அது சீனர்களுக்கு மிகவும் புனிதமான ஊர். நூற்றாண்டுகள் கணக்காக அங்கே சீன மன்னர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். தவிர, சீனர்களின் கலைச் செல்வமெல்லாம் அங்கே திரண்டு கிடக்கின்றன. ஞான வீரர்கள், சமுதாயத் தொண்டர்கள், அரசியல் தலைவர்கள் முதலிய பலரும் பிரகாசமடைந்தது அங்கு தான். தவிர, சீனாவின் பல பாகங்களுக்கும் செல்லக்கூடிய ரெயில் பாதைகள், ரோடுகள் எல்லாம் அங்கிருந்து ஆரம்பிக்கின்றன; அங்கே வந்து கூடுகின்றன. யுத்த தந்திரிகளும் ராஜ தந்திரிகளும் தங்கள் திறமையைக் காட்டுவதற்கேற்ற இடம். இதனாலேயே பீக்கிங் யாருடைய சுவாதீனத்திலிருக்கிறதோ அவருடைய சுவா தீனத்திலேயே சர்வ சீனாவும் இருக்கிறது என்று பழமொழி தோன்றியது. இதனால்தான் ஜப்பானியரும் அந்த நகரத்தைக் கைப்பற்றிக்கொள்வது தங்கள் முதல் வெற்றியென்று கருதினார்கள். ஆக இரு பக்கத்தினருடைய கோபத்திற்கும் ஆளாகாமல் பீக்கிங் தப்பியது.
ஜப்பானியர்கள் பீக்கிங்கைச் சுவாதீனப்படுத்திக் கொண்டு விட்ட பிறகு, தங்கள் படைகளை மூன்று பகுதிகளாகப் பிரித்து மேற்கே, தெற்கே, தென்கிழக்கே இப்படியாக அனுப்பினார்கள். எந்தெந்த இடங்களுக்கு ரெயில் சென்றதோ அந்தந்த இடங்களுக்கு இவர்களால் சுலபமாக முன்னேறிச் செல்ல முடிந்தது. சில முக்கிய மான நகரங்கள் இவர்கள் கைவசமாயின. இப்படி வட மாகாணங்களில் ஜப்பானியர்களுடைய தரைப்படை முன்னேறிக் கொண்டிருக்க, ஆகட் மாதம் பதின்மூன்றாந் தேதி அவர்களுடைய கடற்படை ஷாங்காய் நகரத்தைத் தாக்கியது. இங்கே சீனர்கள் சுமார் இரண்டு மாதகாலம் தீவிரமாகப் போராடினார்கள். ஆனால் ஜப்பானி யர்களுடைய ஆயுத பலம், எண்ணிக்கை பலம் இவைகளுக்கு முன்னே இவர்கள் ஒன்றுஞ் செய்ய முடியாமல் பின்வாங்கிக் கொண்டு விட்டார்கள். நவம்பர் மாதம் பதினோராந் தேதி இந்த நகரம் ஜப்பானியர் வசமாயிற்று. இந்த யுத்தத்தில் மட்டும் ஏற்பட்ட உயிர்ச்சேதம் இருதரப்பிலும் லட்சக்கணக்கில். ஷாங்காய் நகரம் விழுந்த அடுத்த மாதம் (டிசம்பர் மாதம் பதின்மூன்றாந் தேதி)சீன அரசாங்கத்தின் தலைநகரமான நான்கிங், ஜப்பானியர் கைவசமா யிற்று. இதற்கு முன்னாடியே சீன அரசாங்கம் முன் ஜாக்கிரதையுடன் தனது தலைநகரத்தை மேற்கே ஹாங்க்கோவுக்கு மாற்றிக்கொண்டு விட்டது.
நான்கிங்கைக் கைப்பற்றிக்கொண்டதும் ஜப்பானியர்கள் ஹாங்க்கோ நகரத்தை நோக்கிச் சென்றார்கள். இவர்களை மேற் கொண்டு முன்னேறவிடாமல் தடுத்து நிறுத்த வேண்டுமென்ற உறுதி யுடன் சீனப் படைகள் இங்கு எதிர்த்து நின்றன. சுமார் பத்து மாத காலம் தீவிரமான போராட்டம் நடைபெற்றது. சீனப் படைகளால் தாக்குப் பிடிக்க முடிய வில்லை. இனி எதிர்த்து நிற்பதில் பயனில்லை யென்று தெரிந்ததும், 1938-ஆம் வருஷம் அக்டோபர் மாதம் இருபத்தைந்தாந் தேதி பின்வாங்கிக் கொண்டுவிட்டன. சீன அரசாங்கமும், தன் தலைநகரத்தை மேற்கே ஷெக்குவான் மாகாணத் திலுள்ள சுங்கிங்1 என்னும் ஊருக்கு மாற்றிக் கொண்டது
ஒரே சமயத்தில் பல திசைகளிலிருந்தும் வந்து தாக்க வேண்டு மென்பது ஜப்பானியரின் யுத்த திட்டம். இதன்படி, வடக்கிலும் மேற்கிலுமாகத் தாக்கியதோடு தெற்கேயிருந்தும் தாக்க ஏற்பாடு செய்தார்கள். தெற்கேயுள்ளவை ஹாங்காங், காண்ட்டன் நகரங்கள். இங்குப் பிரிட்டிஷாருடைய ஆதிக்கம் அதிகம். இந்த நகரங்களைத் தாக்கினால் பிரிட்டிஷாருக்குக் கோபம் உண்டா குமோ யென்று முதலில் யோசித்தார்கள் ஜப்பானியர்கள். ஆனால் 1938-ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் நடைபெற்ற ம்யூனிக் மகா நாட்டில்2 பிரிட்டிஷார் பணிந்து போகும் தன்மையிலேயே இருந்தனர்; யாருடனும் சண்டைக்குப் போகக் கூடாதென்ற மாதிரி யிலேயே இவர்களுடைய பேச்சு வார்த்தைகள் இருந்தன. இதனால் ஜப்பானி யர்களுக்குத் துணிவு ஏற்பட்டது. தெற்குப் பிரதேசத்தில் தாங்கள் படையெடுத்தால் பிரிட்டன் தடுக்காது என்பதை நிச்சய மாகத் தெரிந்துகொண்டனர். தங்கள் கடற்படை சகிதம் வந்து (1938-ஆம் வருஷம் அக்டோபர் மாதம் இருபத்தைந்தாந் தேதி) காண்ட்டனைக் கைப்பற்றிக்கொண்டனர். இவர்கள் எதிர்பார்த்த படி பிரிட்டன், செயலளவில் எவ்வித ஆட்சேபமும் செய்யவில்லை!
இப்படி யுத்தம் தொடங்கின சுமார் பதினைந்து மாதங்களுக் குள், வடக்கேயுள்ள ஹோப்பை, ஷான்ஸி, ஷாண்டுங் முதலிய சில மாகாணங்களும், பீக்கிங், டீண்ட்ஸின், ஷாங்காய், நான்கிங், ஹாங்க்கோ, காண்ட்டன் முதலிய முக்கியமான நகரங்களும் சுலப மாகத் தங்கள் வசமாகிவிட்டதும், ஜப்பானியர், இன்னும் சொற்ப காலத்திற்குள் சீனா முழுவதும் தங்கள் வசப்பட்டுவிடும் என்று கருதினார்கள். ஆனால் சீனர்கள் அவ்வளவு சுலபமாக விட்டுக் கொடுக்கவில்லை. வேண்டு மென்றே, அதாவது தங்களுடைய படை பலம், ஆயுத வசதிகள் முதலியவை களின் வரம்பை அறிந்தே, மேலே சொன்ன மாகாணங்களி லிருந்தும், முக்கிய நகரங்களிலிருந்தும் பின்வாங்கிக்கொண்டனர். சத்துருக்களை உள்பக்கம் இழுத்துக் கொண்டு வந்து பிறகு அவர்கள் திரும்பிப் போகக் கூடாத நிலையில் அவர்களைத் தாக்கி முறியடிக்க வேண்டுமென்பது சீனர்களுடைய நோக்கம். தவிர, எந்தெந்த இடங்களில் ரெயில் வசதிகள் இருந்தனவோ அந்தந்த இடங்களில்தான் ஜப்பானியர்கள் முன்னேறியிருந்தனர். இன்னும், யாங்ட்ஸீ நதிக்கரை யோரமாக வுள்ள சில ஊர்களையும் அவர்கள் கைப்பற்றிக் கொண்டிருந்தனர். அவர்களுக்குக் கப்பற் படைபலம் இருந்ததனால் இது சாத்தியமா யிற்று. இவைகளை யெல்லாம் நன்கு தெரிந்துகொண்டிருந்த சீனர்கள், ரெயில் போக்கு வரத்துள்ள இடங்கள், கடற்கரையிலுள்ள துறைமுகப்பட் டினங்கள், ஆற்றோரப் பிரதேசங்கள், திறந்த வெளிகள் ஆகிய இப்படிப்பட்ட இடங்களில் அதிகமாக எதிர்ப்புக் கொடாமல், ஆனால் முடிந்தமட்டில் ஜப்பானியர்களுக்கு உயிர் நஷ்டமும் பொருள் நஷ்டமும் உண்டுபண்ணிவிட்டுப் பின்வாங்கிக் கொண்டனர்.
ஜப்பானோடு போராடி வெற்றி பெறவேண்டுமானால் மூன்று படிகளைக் கடக்க வேண்டுமென்று ஏற்கனவே பொதுவுடைமை வாதிகள், யுத்த தந்திர திட்டமொன்றை வகுத்து வைத்திருந்தார்கள்.. முதலாவது படி, சத்துருக்களின் முன்னேற்றத்திற்கு இடங்கொடுத்துக் கொண்டே பின் வாங்குதல். அப்படிப் பின்வாங்குகிறபோது, சத் துருக்களுக்கு எந்த விதமான உதவியும் கிடைக்காதபடி செய்து விட்டுப் பின்வாங்க வேண்டும். இந்தப் பின்வாங்குகிற காலத்தில், நமது படைபலத்தை விருத்தி செய்துகொள்ள வேண்டும். இரண்டாவது படி, ஒளிவுமறை வாயிருந்து சத்துருப் படைகளைத் தாக்கி அதிகமான சேதத்தை உண்டுபண்ணுதல். இந்தக் காலத்தில், முன்னேற்றமடைந்த சத்துருக்கள், அவர்கள் கைப்பற்றிக் கொண்ட பிரதேசங்களில் நிலைத்துவிடாதபடி தடுக்க வேண்டும். ஜப்பானியர் களுடைய யந்திரப் படைகளை எதிர்த்துப் போராடுவதற்கு, சீனர்களிடத்தில் சமதையான யந்திரப் படை பலமில்லை. எனவே ஒளிவு மறைவாயிருந்து சண்டை போடுவதன்மூலந்தான் இதனைச் சமாளிக்க வேண்டும். சீனாவின் பூகோள அமைப்பு, இந்த ஒளிவு மறைவுச் சண்டைக்கு மிகவும் ஏற்றதானபடியாலும். இந்தச் சண்டையில், படை வீரர்களல்லாத கிராம விவசாயிகள், ஆண் பெண் முதலிய பலரும் கலந்துகொள்ள முடியுமானதாலும் இந்த இரண்டா வது படி அவசியமெனக் கருதப்பட்டது. தவிர, இந்தக் காலத்தில் ஆயுத பலத்தைக்கொண்டு சத்துருக்களைத் தாக்குவதற்கான ஏற்பாடுகளை யும் செய்துகொள்ளலாம் . மூன்றாவது படி, ஜப்பானியர்களை முன்னோக்கிச் சென்று தாக்குவது , சீனர்கள் இந்தப் படியை அடை வதற்குள், ஜப்பானியர் படையிலும், பொருளாதாரத்திலும் மிகவும் பல வீனப் பட்டுப்போய்விடுவார்கள். அப்பொழுது அவர்கள் சீனர்க ளுடைய தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் அழிந்தொழிவார்கள். இதுவே சீனர்களின் யுத்த தந்திர திட்டம்.
சீனர்களைப் பொறுத்தமட்டில் ஹாங்க்கோ நகரத்தை என்றைய தினம் காலி செய்துவிட்டுப் பின்வாங்கிக் கொண்டார் களோ அன்றைய தினத்தில் - 1938 - ஆம் வருஷம் அக்டோபர் மாதம் இருபத்தைந்தாந் தேதி - முதற்படியைக் கடந்து இரண்டாவது படிக்கு வந்துவிட்டார்கள். 1943-ஆம் வருஷ மத்தியில் மூன்றாவது படியை எட்டிப்பார்க்க ஆரம்பித்தார்கள் என்று ஒருவாறு சொல்லலாம்.
பொதுவாக ஹாங்க்கோ நகர வீழ்ச்சிக்குப் பிறகு ஜப்பானியர் களுடைய முன்னேற்றம் அவ்வளவு துரிதமாயில்லை. இதற்கு முக்கியமான காரணம், சீனர்கள் அனுஷ்டித்த ஒளிவு மறைவா யிருந்து சண்டை போடுகிற கொரில்லாப் போர் முறைதான். ஹோப்பை ஷான்ஸி சாஹர், ஷாண்டுங், கியாங்க்ஸு, தெற்கு ஷான்ஸி, வடக்கு ஹோனான் முதலிய மாகாணங்களில் இந்தக் கொரில்லாப் படையினர் ஜப்பானியர் களுக்கு விளைவித்த சேதம் கொஞ்ச நஞ்சமல்ல. உதாரணமாக இவர்களிலே ஒரு பகுதியினர். ஷாண்டுங் மாகாணம், கியாங்ஸு மாகாணத்தின் வடபாகம் ஆகிய இரண்டு பிரதேசங்களில் மட்டும் 1941-ஆம் வருஷம் ஜூலை மாதத்திலிருந்து 1942-ஆம் வருஷம் ஜூலை மாதம் வரை ஒரு வருஷ காலத்தில் ஜப்பானியர்களோடு இரண்டாயிரத்து நானூறு தடவை சண்டை செய்திருக்கிறார்கள்; இருபத்தையாயிரம் ஜப்பானியப் படை வீரர்களைக் கொன்றிருக்கிறார்கள்.
இந்தக் கொரில்லாப் போர் வீரர்கள், ஜப்பானியர்களுடைய ஆக்கிரமிப்புக்குட்பட்ட பிரதேசங்களில் திடீர் திடீரென்று புகுந்து சத்துருக்களில் பலரைக் கொன்றும் அவர்களுடைய பொருளைக் கொண்டும் போனார்கள்; ரெயில்வே பாலங்களை உடைத்தார்கள்; ரெயில் களைக் கவிழ்த்துவிட்டார்கள்; சத்துருக்களின் படை வீடுகளுக்கு ரகசிய மாகச் சென்று அவர்களுடைய யுத்த தந்திரங் களையெல்லாம் உளவறிந்து கொண்டு வந்து அதே தந்திரங்களைக் கையாண்டு அவர்களைத் திருப்பித் தாக்கினார்கள். இவர்கள் எத்தனையோ தடவை பீக்கிங் நகரத்திற் குள்ளேயே நுழைந்து பல ஜப்பானியர்களைக் கொன்றிருக்கிறார்கள். இவர்களுடைய சாகஸச் செயல்களைத் தனிச் சரித்திரமாகவே எழுதவேண்டும்.
சீனர்களுடைய யுத்த தந்திரம் இப்படியிருக்க, ஜப்பானியர்கள், தாங்கள் ஆரம்பத்தில் ஒரு வருஷ காலத்திற்குள் பெற்ற வெற்றி களோடு ஆக்கிரமித்துக்கொண்ட மாகாணங்களோடு திருப்தியடை யவில்லை. ஆக்கிரமித்துக்கொண்ட பிரதேசங்களை அடித்தளமாக வைத்துக்கொண்டு, சீனாவைப் பல கோணங்களிலிருந்தும் தாக்கி அதனை ஒடுக்கிவிட முயற்சி செய்துவந்தார்கள். 1939-ஆம் வருஷத்தி லிருந்து 1942-ஆம் வருஷம் வரை இந்த மாதிரியான முயற்சிகளில் தான் இவர்கள் ஈடுபட்டார்கள். இந்தக் காலத்தில் இவர்கள் (1941-ஆம் வருஷம் டிசம்பர் மாதம் எட்டாந்தேதி) பிரிட்டனுடனும் அமெரிக்கா வுடனும் போர் தொடுத்து, அது காரணமாகத் தாய்லாந்து, மலேயா, பர்மா, தென்கடல் தீவுகள் முதலிய பல இடங்களுக்கும் தங்கள் படைகளைப் பிரித்து அனுப்பவேண்டியிருந்தும், சீனாவில் தாங்கள் இட்டுக்கொண்ட காலை எடுக்க வில்லை; உண்மையில் எடுக்கவும் முடியவில்லை. மேலே சொன்ன மூன்று வருஷகாலத்தில் இவர்கள் சுமார் பத்து கோணங்களிலிருந்து போர் நடத்தினார்கள். அதாவது ஒரே காலத்தில் பத்து போர் முகங்களில் தொடர்ந்து போர் நடைபெற்றது. ஆகாயப் படை, தரைப்படை, கடற்படை எல்லாம் சேர்ந்து தாக்கின. வெற்றியும் தோல்வியும் மாறி மாறிக் கிடைத்தது. ஆனாலும் ஆரம்பத்தில் ஜப்பானிய ராஜதந்திரிகள் பெரு மிதமாகச் சொல்லிக்கொண்டபடி சீனாவை முழங்கால் முறிய அடிக்க முடியவில்லை.
ஜப்பானியர்கள் இப்படிப் பல கோணங்களிலிருந்து சீனாவைத் தாக்கியதோடு நிற்கவில்லை; தாங்கள் ஆக்கிரமித்துக் கொண்ட பிரதேசங்களில் தங்களை திரப்படுத்திக் கொள்ள, சாம, தான, பேத, தண்டம் என்னும் சதுர்வித உபாயங்களையும் கையாண்டு வந்தார்கள். யுத்த ஆரம்பத்திலிருந்தே இவர்கள் சில துரோகிகளைக் கொண்டு, வெற்றி பெற்ற இடங்களில் பொம்மை அரசாங்கங்களை தாபித்து அவைகளின் மூலம் தங்களுடைய ஆதிக்கத்தை நாசூக்காகத் திணித்து வந்தார்கள். 1937-ஆம் வருஷம் டிசம்பர் மாதம் பதினைந்தாந் தேதி, பீக்கிங் நகரத்தைத் தலைநகரமாகக் கொண்ட சீனக்குடியரசின் தற்காலிக அரசாங்கம் ஒன்று தாபிக்கப்பட்டது. இதற்கு வாங் கே மின்1 என்பவன் தலைவனாக நியமிக்கப்பட்டான். இதே பிரகாரம் 1938-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் இருபத் தெட்டாந் தேதி, நான்கிங் நகரத்தைத் தலைநகராகக் கொண்ட சீனக்குடியரசின் சீர்திருத்த அரசாங்கம் ஒன்று அமைக்கப் பட்டது. இதற்கு லியாங் ஷி2 என்பவன் தலைவன். இவ்விருவரும், பழைய ராணுவப் பிரபுக்களின் வருக்கத்தைச் சேர்ந்தவர்கள்; ஜப்பான் மோகத்தில் ஈடுபட்டவர்கள். வடசீனாவின் நிருவாகத் திற்காக பீக்கிங் அரசாங்கமும், மத்திய சீனாவின் நிருவாகத்திற்காக நான்கிங் அரசாங்கமும் என்று தனித்தனியாக இவை நிறுவப் பட்டன. இவைகளின் மூலம் சீனர்களின் விசுவாசத்தைச் சம்பாதித்துக் கொள்ள முடியும் என்று ஜப்பான் கருதியது. ஆனால் இந்த இரண்டு அரசாங்கங்களும் ஆட்டுவார் ஆடும்பாவையாக இருந்தன. இவற்றின் தலைவர்கள் நீண்ட காலமாகவே துரோகிகளாக இருந்து வந்திருக்கிறார்கள் என்பதைச் சீனர்கள் அறிந்தே இருந்தார்கள். இவர்களுக்கு எந்த விதமான செல்வாக்கும் இல்லாமலிருந்தது. எனவே, இந்த இரண்டு அரசாங்கங்களையும் ஒன்று பிணைத்து, மத்திய அரசாங்கம் என்ற பெயரால் ஓர் அரசாங்கத்தை தாபிக்க ஜப்பான் பகீரதப் பிரயத்தனம் செய்தது; இதற்கென்று ஒரு தலைவனையும் தேடிக் கொண்டிருந்தது. சியாங் கே ஷேக்கின் பரம வைரியும், பழைய ராணுவப் பிரபுக்களில் ஒருவனுமான வூ பை பூ என்பவனை அணுகி தலைமைப் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டது. ஆனால் அவன் தேசத்துரோகியாக இருக்க மறுத்து விட்டான்: சிறிதுகாலங் கழித்து இறந்தும் விட்டான். ஜப்பானியர் இவனை விஷம் வைத்துக் கொன்றதாகச் சொல்லப்படுகிறது.
ஜப்பான் இப்படி ஒருபக்கம் துரோகிகளைத் தேடும் முயற்சி செய்துகொண்டு, மற்றொரு பக்கம், சுங்கிங் அரசாங்கத்திற்குப் பணிந்து விடுமாறு தூது விடுத்தது. நயமும் பயமும் கலந்த இந்தச் சமாதானக் கோரிக்கையை,சுங்கிங் அரசாங்கம், கொஞ்சங்கூட லட்சியஞ் செய்யாமல் நிராகரித்து விட்டது. ஆனால் இந்த அரசாங் கத்தில், முக்கிய அங்கத்தினனாக இருந்த ஒருவனுக்கு மட்டும், ஜப்பானை எதிர்த்துப் போராடுவது வீண் என்ற எண்ணம் இருந்தது. இவன் தான் வாங் சிங் வெய். இவன் கட்சி மாறுவதிலே கை தேர்ந்தவன் என்பது வாசகர்களுக்குத் தெரியுமல்லவா? இவன் சுங்கிங்கிலிருந்து ரகசியமாகத் தப்பிச் சென்று சத்துருக்கள் பக்கம் போய்ச் சேர்ந்து கொண்டு விட்டான். இவனைத் தலைவனாகக் கொண்ட மத்திய அரசாங்கம் ஒன்று, சீனக் குடியரசின் தேசீய அரசாங்கம் என்ற பெயரால் 1940-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் முப்பதாந் தேதி நான்கிங்கில் தாபிக்கப்பட்டது. இதனுடன் முந்தி தாபிக்கப்பட்ட வாங் கே மின் அரசாங்கமும் லியாங் ஷி அரசாங்கமும் ஐக்கியமாயின. வாங் சிங் வெய் அரசாங்கத்திற்கும் ஐப்பானிய அரசாங்கத்திற்கும், சீனாவுக்கும் ஜப்பானுக்கும் எந்தவித அடிப்படையான தொடர்புகள் இருக்க வேண்டுமென்பதைப் பற்றி 1940-ஆம் வருஷம் நவம்பர் மாதம் முப்பதாந் தேதி ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன்படி வாங் சிங் வெய், சீனாவின் பொருளாதார சக்திகளை விருத்தி செய்வதற்கும், பொதுவுடைமை இயக்கத்தைச் சீனாவிலிருந்து ஒழிப்பதற்கும், ஜப்பானியத் துருப்புகள் சீனாவில் தங்கியிருப்பதற்கும் இணங்கினான். இந்த அடிப்படையான தொடர்புகளை நிர்ணயிக்கிற ஒப்பந்தம் நிறைவேறின சுமார் மூன்று வருஷங்கழித்து 1943-ஆம் வருஷம் அக்டோபர் மாதம் முப்பதாந் தேதி மற்றொரு சிநேக ஒப்பந்தம் இரண்டு அரசாங்கங்களுக்கும் நிறைவேறியது. அதாவது, இதன் மூலம் சீனாவின் பரிபூரண சுதந்திர அந்ததை, தான் கௌரவிப்பதாக ஜப்பான் காட்டிக் கொள்ள விரும்பியது.1
ஜப்பானின் கைக்கருவியாக இருக்கிற இந்த வாங் சிங் வெய், பதினைந்து வருடங்களுக்கு முந்தி, பொதுவுடைமை வாதிகளின் ஆதரவைப்பெற்ற வூஹான் அரசாங்கத்திற்குத் தலைவனாயிருந்தான் என்பது வாசகர்களுக்கு நினைவிருக்கும்.
வாங் சிங் வெய் இப்படித் துரோகியாக மாறி விட்டானென்று தெரிந்ததும், இவனும் இவனுடைய சகாக்களிற் சிலரும் கோமிண்ட் டாங் கட்சியிலிருந்து பிரஷ்டம் செய்யப்பட்டனர். நான்கிங்கில் இப்படி ஒரு போட்டி அரசாங்கம், இல்லை, பொம்மை அரசாங்கம் ஏற்பட்டதனால் சுங்கிங் அரசாங்கத்தின் உறுதி குலையவில்லை; இதன் அந்தது குறைய வில்லை. ஐரோப்பிய வல்லரசுகள், குறிப் பாக பிரிட்டனும் அமெரிக்காவும், வாங் சிங் வெய்யின் அரசாங் கத்தை, சீனாவின் நியாயமான அரசாங்கமென்று அங்கீகரிக்க மறுத்து விட்டன.
ஜப்பான் இதற்காகச் சலிப்புக் காட்டவில்லை; சீனா, அதன் சுய அந்ததை அடையப் பார்ப்பதே தன்னுடைய நோக்கமென்று பகிரங்கப்படுத்தி வந்தது. சீனா விஷயத்தில் தனக்கிருக்கும் நல் லெண்ணத்தைக் காட்டிக் கொள்வதற்காக, வாங் சிங் வெய்யின் அரசாங்கம் நான்கிங்கில் தாபிதமானவுடனே, ஜப்பானிய ராணுவத்தின் வசமிருக்கும் சீனர்களுடைய சொத்து சுதந்திரங்களை யெல்லாம், ஜப்பானிய ஆட்சியை ஆதரிக்கும் (அவைகளின்) சொந்தக்காரர்களுக்குத் திருப்பிக் கொடுத்துவிடப்படுமென்று பிரகடனம் செய்தது! இதுகாறும் சீனாவில் தான் அனுபவித்து வந்த விசேஷப் பிரதேச உரிமைகள் முதலிய சகல விதமான உரிமை களையும் விட்டுக் கொடுப்பதாக ஒப்புக் கொண்டது! சீனாவின் பரிபூரண சுதந்திரத்தைத் தான் கௌரவிப்பதற்கு அறிகுறியாகவே இப்படிச் செய்ததாகக் கூறி இதே பிரகாரம் மற்ற வல்லரசுகளும்-அவைகளுக்குச் சீனா விஷயத்தில் நல்லெண்ணம் இருக்கும் பட்சத்தில் - செய்யட்டுமே என்று மார்தட்டிக் கேட்டது.
இப்படி ஒரு பக்கம் சீனாவின் முதுகைத் தட்டிக் கொடுத்து வந்த ஜப்பான், மற்றொருபக்கம் அதன் குரல் வளையைப் பிடித்துக் கொண்டே அதன் மார்பிலும் முதுகிலும் துப்பாக்கி முனையினால் குத்திக் கொண்டிருந்தது. ஜப்பானியர்கள், தாங்கள் ஆக்கிரமித்துக் கொண்ட பிரதேசங்களில், சாதாரண ஜனங்கள் பயப்பட்டுப் போகும்படியாகச் செய்த அட்டூழியங்களுக்குக் கணக்கு வழக்கே யில்லை. ஒரு வரலாறு கூறுகிறது:-
ஷாங்காய் நகரத்திற்கும் நான்கிங் நகரத்திற்கும் நடுவிலுள்ள பிரதேசங்கள் உலகத்திலே செழிப்புள்ள விவசாயப் பிரதேசங் களாகும். இங்கே ஆயிரக்கணக்கான கிராமங்களும் நூற்றுக்கணக் கான நகரங்களும் பரவிக் கிடக்கின்றன. சீனாவிலேயே இந்தப் பிர தேசத்தில்தான் ஜனநெருக்கம் மிக அதிகம். இந்தப் பிரதேசங்களில் சென்ற நான்கு மாத காலமாக (அதாவது யுத்த ஆரம்பத்திலிருந்து நான்கு மாதகாலமாக) ஜப்பானிய ஆகாய விமானங்களிலிருந்து குண்டு களைப் பொழிந்து, வருணிக்க முடியாத சேதத்தை உண்டு பண்ணி யிருக்கிறார்கள். சரித்திரத்திலேயே இதற்கு முன்னர் நடை பெற்றிராது என்று சொல்லும்படியாக, திரள் திரளாக ஜனக் கூட்டம் ஊர்விட்டு ஊர் போய்க் கொண்டிருக்கிறது. சூசௌ என்ற நகரம், ஒரு சமயம் செழிப்புள்ளதாகவும் அழகுள்ளதாகவும் இருந்தது. இதில் இரண்டரை லட்சம் சீனர்கள் வசித்திருந்தார்கள். ஜப்பானியர் இந்த நகரத்தைக் கைப்பற்றிக்கொண்ட போது இதில் ஐந்நூறு சீனர்களே இருந்தார்கள். இதற்கு மேற்கில் இருபது மைல் தூரத்தில் ஊ சீ என்ற ஒரு நகரம் இருக்கிறது. சீனாவின் கைத் தொழில் அபிவிருத்திக்கு இதுதான் மூல தானம். ஆனால் இப் பொழுது இது பாலைவனம் மாதிரி இருக்கிறது. மைல் கணக்கான நிலங்களில் பயிர்கள் காய்ந்துகிடக்கின்றன. அநேக பண்ணைகளும் கிராமங்களும் எரிக்கப்பட்டு சவக்குழிகள் மாதிரி தென்படுகின்றன. சில மாதங்களாக நடைபெறும் யுத்தத்தின் விளைவு இது. இந்த யுத்தத்திற்கு என்ன காரணமென்பதை ஏழை விவசாயிகள் அறிய மாட்டார்கள். ஆனால் அவர்கள் தான் அதிகமாகக் கஷ்டப் படுகிறார்கள். அன்ன ஆகார மில்லாமல், பணமும் உடையுமில்லாமல் பயந்த வண்ணம் மேற்குப்புறமாக ஓடிக்கொண்டிருக்கிறார்களே அவர்களைவிட ஆயிரக்கணக்கில் பிணமாக வீழ்ந்து கிடக் கிறார்களே அவர்கள் மகா புண்ணியசாலிகள் என்று சொல்ல வேண்டும்.
உங்களுடைய வீரத்தைப் பாதிக்கும்படியாக நீங்கள் பலாத் காரத்துடன் நடந்து கொண்டால் உலகம் உங்களை வெறுக்கும் என்று சமாதான காலங்களில் ஜப்பானியப் படையினர் உபதேசிக்கப் பட்டு வந்தார்கள். ஆனால் இவர்கள், சீனாவில், தாங்கள் ஆக்கிர மித்துக்கொண்ட பிரதேசவாசிகளை, இருவர் இருவராக மணிக் கட்டுகளை இரும்புக் கம்பிகளினால் இறுக்கிக் கட்டிச் சுட்டுக் கொன்றார்கள்; துப்பாக்கி முனையினால் குறிபார்த்துக் குத்தும் பயிற்சி பெறுவதற்காக, சிறைப்பட்ட சீனப் போர்வீரர்களின் கண்களைக் கட்டிவிட்டு அவர்களை உபயோகப்படுத்தினார்கள்; பச்சைக்குழந்தை களை ஆகாயத்திலே தூக்கிபோட்டுக் கீழே துப்பாக்கிக் கத்தியை நீட்டினார்கள்; கும்பல் கும்பலாகக் கூடியிருக்கும் நிரபராதிகளான ஜனங்களின் மீது ஆகாய விமானங்களிலிருந்து குண்டுகளைப் பொழிந்தார்கள்; அந்நியர்களுடைய தொழில் தாபனங்களையும் சீனர்களுடைய தொழில் தாபனங்களையும் தீயிட்டுப் பொசுக் கினார்கள். இந்தமாதிரி எத்தனையோ அக்கிரமங்கள். ஜனங்களுக்குத் தங்களிடம் ஒரு பயம் உண்டாகும்படி செய்ய இப்படியெல்லாம் செய்தார்களென்று பொதுவாகச் சொல்லலாம்.
ஜப்பானியர்கள், தாங்கள் ஆக்கிரமித்துக் கொண்ட பிர தேசங்களில் உயிரழிவையும் பொருளழிவையும் உண்டு பண்ணியது கூட அவ்வளவுக் கொடுமையில்லை; சீனர்களின் கலைப் பண்பையே, சீனர்களின் நாகரிக வாழ்க்கையையே அழித்துவிட முயற்சி செய்தார் களே அதுதான் கொடிதினும் கொடிது. எந்த இடத்தை இவர்கள் ஆக்கிரமித்துக் கொண்டபோதிலும், முதலில் பள்ளிக்கூடங்கள், புத்தகாலயங்கள் முதலியவைகளையே அழித்து வந்திருக்கிறார்கள். 1931-ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் மஞ்சூரி யாவில் முக்டென் நகரத்தை ஆக்கிரமித்துக் கொண்டபோது அங்கிருந்த சர்வகலா சாலைக் கட்டடத்தைத் தங்கள் துருப்புகளின் வாசதலமாக ஏற்படுத்திக் கொண்டார்கள். 1937-ஆம் வருஷம் ஜூலை மாதம் டீண்ட்ஸின் துறைமுகப்பட்டினத்தைக் கைப்பற்றிக் கொண்ட போது, அங்கிருந்த நான்கிங் சர்வ கலாசாலையை மண்ணெண்ணெ யிட்டுக் கொளுத்தி விட்டார்கள். இந்த 1937-ஆம் வருஷ யுத்தம் ஆரம்பித்த முதல் நான்கு மாதங்களில் இவர்கள் ஆக்கிரமித்துக் கொண்ட பல ஊர்களிலும் மொத்தம் நூற்று மூன்று கல்வி தாபனங்களை நாசப்படுத்தியிருக்கிறார்கள்; சுமார் ஏழரைக் கோடி ரூபாய் பெறுமானத்துக்கு நஷ்டம் உண்டாக்கியி ருக்கிறார்கள்; இந்த நாசம் காரணமாக, எழுபதினாயிரம் சீன மாணாக்கர்களுக்குப் படிப்பே இல்லாமற் போய்விட்டது.
இங்ஙனம் ஜப்பானியர்கள், சீன இளைஞர் சமுதாயத்தின் மீது தங்கள் கோபத்தைக் காட்டியதன் நோக்கமென்ன? சீனாவில் ஜப்பானியர்களுக்கு விரோதமாக ஏற்பட்ட இயக்கங்களுக் கெல்லாம் மையமாயிருந்தவர்கள் மாணாக்கர்கள். தவிர இவர் களுடைய லட்சியம், ஆவல் முதலியனவெல்லாம் ஜப்பானின் ஆக்கிரமிப்பு எண்ணத்திற்கு நேர் விரோதமாயிருந்தன. ஜப்பான், இவர்கள் மீது சினந்தெழுந்ததில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?
இந்த யுத்தம் தொடங்கிய நான்கு வருஷ காலத்திற்குப் பிறகு சீனாவைப் பொறுத்தமட்டில் தலைநகரம் போய்விட்டது; கடற் கரை யோரமாகவுள்ள பெரும்பாலான துறைமுகப்பட்டி னங்கள், உள்நாட்டில் ஜனநெருக்கமும் தொழில் பெருக்கமும் உள்ள முக்கிய நகரங்கள் ஆகிய இவையெல்லாம் போய்விட்டன. ஆயினும் சீனர்கள் தொடர்ந்து ஜப்பானை எதிர்த்து வந்தார்கள். இவர்களுடைய எதிர்ப்புச் சக்தி குறையவேயில்லை. ஷெக்குவான் மாகாணத் திலுள்ள சுங்கிங்குக்குத் தலைநகரம் மாற்றப்பட்டு விட்டபடியாலும், ஜப்பானிய ஆக்கிரமிப்புக்குட்பட்ட பிரதேசங்களிலிருந்து மேற்கு மாகாணங்களுக்கு, அகதிகள் சென்றபடியாலும், இதுவரை, பண்பாடடையாத இந்தத் தொலை தூர மேற்குப் பிர தேசங்கள் ஜனப்புழக்கத்திற்குத் தகுதியுடை யனவாகச் செய்யப் பட்டன. ஆக்கிரமிப்புப் பிரதேசங்களிலிருந்து வந்த யந்திர வசதிகளைக் கொண்டும் தொழிலாளர்களைக்கொண்டும் இந்த மேற்குப் பிர தேசங்களில் பாதைகளும் ரெயில்களும் போடப்பட்டன; தொழில் தாபனங்கள் நிறுவப்பட்டன. இவைகளின் மூலம் சீனர்கள், அற்ப சொற்பமான தங்களுடைய ராணுவத் தேவைகளைப் பூர்த்திசெய்து கொண்டார்கள். ஆனால் பெருவகையான யுத்த தளவாடங்கள், ஆகாய விமானங்கள், மோட்டார் லாரிகள், பெட்ரோல் முதலியவை களுக்கு அந்நிய நாடுகள் உதவியையே எதிர்பார்க்க வேண்டியதா யிருந்தது. வெளியுலகத்தோடு போக்குவரத்து வைத்துக் கொள்வது, இந்தப் போராட்டத்தின் முக்கிய அமிசமாயிருந்தது. சீனர்களுக்கு எவ்வித சாமான்களும் வெளிநாடுகளிலிருந்து கடல் மார்க்கமாகக் கிடைக்காதபடி ஜப்பானியர்கள் முக்கியமான துறை முகப் பட்டினங்களை யெல்லாம் அடைத்து விட்டார்கள். சீனர்களோ, சில்லரைத் துறைமுகங்கள் மூலம் சாமான்களை வரவழைத்துக் கொள்ள முயற்சி செய்தார்கள். ஜப்பானியர்கள் இந்தோ-சீனாவில் ஆதிக்கம் ஏற்படுத்திக்கொண்ட பிறகு, அதன் மூலம் சீனாவுக்கு வந்துகொண்டிருந்த வழியையும் அடைத்து விட்டார்கள். பர்மாவி லிருந்து வந்துகொண்டிருந்த வழி, சிலகாலம் மூடப்பட்டுப் பின்னர்த் திறக்கப்பட்டது. இதனை ஜப்பானியர்கள் பலமுறை ஆகாயவிமானங்கள் மூலம் தாக்கினார்கள். இருந்தும் இந்தப் பர்மா ரோட்டின் மூலம் ஓரளவு சாமான்கள் கிடைத்துக் கொண்டிருந்தன. ருஷ்யாவிலிருந்து சாமான்கள் வருவதற்கு அனு கூலமாக வட மேற்குப் பாதை செப்பனிடப்பட்டது.
உள்நாட்டு விவகாரங்களைப் பொறுத்தமட்டில், வாங் சிங் வெய்யினுடைய துரோகத்திற்குப் பிறகும், அவன் ஜப்பானியருடைய ஆதரவில் நான்கிங்கில் ஓர் அரசாங்கத்தை தாபித்துக்கொண்ட போதிலும், கோமிண்ட்டாங் கட்சியினருக்கும் பொதுவுடைமைக் கட்சியினருக்கும் பிணக்குகள் இருந்தபோதிலும் சீனாவின் தேசீய ஒற்றுமை குலையாமல் இருந்தது.
இந்தத் தேசீய ஒற்றுமை குலையாமலிருக்கப் பொதுவுடைமை வாதிகள் மிகவும் பாடுபட்டார்கள். இதற்காக சியாங்குக்கு அநேக அமிசங்களில் விட்டுக் கொடுத்தார்கள். ஆனால் சியாங்கோ, பொது வுடைமை வாதிகளின் செல்வாக்கு ஓங்கவிடாமலேயே தகைந்து வந்தான். அவர்களைத் தேவையான அளவுக்குத் தேவை யான காலம் வரை உபயோகித்துக்கொண்டு, பிறகு அவர்களை ஒழித்துக் கட்டிவிட வேண்டுமென்பதில் தொலை நோக்குடைய வனாயிருந்தானென்று சொல்லலாம். இதைப்பற்றிப் பின்னரும் பேசுவோம்.
1941-ஆம் வருஷம் டிசம்பர் மாதம் ஏழாந்தேதி, ஜப்பான், பசிபிக் மகா சமுத்திரத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்துக்குட்பட்ட பெர்ல் துறைமுகத்தைத் திடீரென்று ஆகாய விமானங்களால் தாக்கியது.1 அமெரிக்கா சும்மாயிருக்குமா? மறுநாள் ஜப்பான் மீது யுத்தந் தொடுத் திருப்பதாகப் பிரகடனம் செய்தது. இதைத் தொடர்ந்து அது - அமெரிக்கா-ஜப்பானை எதிர்த்துச் சீனா நடத்தி வரும் போரில் சீனாவுக்கு உதவி செய்யும் என்று சியாங் எதிர் பார்த்தான். இவன் எதிர்பார்த்தபடியே அமெரிக்கா ஏராளமான யுத்த தளவாடங்களைச் சீனாவுக்கு அனுப்பியது; அமெரிக்கத் துருப்புகளும் வந்திறங்கின. இவைகளின் துணை கொண்டு சியாங், தன் முழுக் கவனத்தையும் பலத்தையும் ஜப்பான் மீது திருப்புவான் என்று ஜனங்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் இவன் அப்படிச் செய்யவில்லை ஒரு பக்கத்தில் ஜப்பானை எதிர்த்துப் போராடிக் கொண்டு மற்றொரு பக்கத்தில், தன் பதவியையும் செல்வாக்கையும் திரப்படுத்திக் கொள்ளமுயன்றான்; கூடவே பொதுவுடைமை வாதிகளை அடக்கி ஒடுக்கவும் துணிந்தான்.
துணிந்தவுடனேயே செயலிலும் இறங்கி விட்டான் சியாங். பொதுவுடைமைப் படைகளுக்குப் போதிய யுத்த தளவாடங்கள் கிடைக்காதபடிக்கு மறைமுகமாக அநேக இடைஞ்சல்களை உண்டு பண்ணி வந்தான். தவிர, பொதுவுடைமை வாதிகளைப் பலவித கட்டுப்பாடு களுக்குட் படுத்துவதில் தன் அதிகார பலத்தை உப யோகித்தான். ஆயினும் பொதுவுடைமை வாதிகள் ஜப்பானை எதிர்த்துப் போராடுவதில் சளைக்கவில்லை; சியாங்கின் ஆதிக்கத்துக் குட்பட்டிருக்கும் தேசீய அரசாங்கத்துடன் இணங்கிப்போக வேண்டு மென்ற தங்கள் விருப்பத்தைத் திரும்பத் திரும்பத் தெரிவித்துக் கொள்வதில் சலிப்பும் அடையவில்லை.
1937-ஆம் வருஷம் ஜூலை மாதம் ஏழாந்தேதி சீன-ஜப்பானியச் சண்டை மூண்டதல்லவா, இதற்குப் பிறகு பிரதி வருஷம் ஜூலை மாதம் ஏழாந்தேதி யுத்த தினமாகக் கொண்டாடப் பட்டு வந்தது. இந்த வழக்கத்தை யொட்டி 1943-ஆம் வருஷம் ஜூலை மாதம் ஏழாந்தேதி ஆறாவது யுத்த தினம் கொண்டாடப் பட்டது. அப்பொழுது பொதுவுடைமைக் கட்சியின் சார்பாக வெளியிடப் பெற்ற அறிக்கையின் ஒரு பகுதி வாசகம் வருமாறு:- சீனாவில் ஜனநாயக ஆட்சி நடைபெறவில்லை. ஜனங்கள் அனாவசிய மான தாக்குதல்களுக்கும் நிர்ப்பந்தங்களுக்கும் உட்படுத்தப்பெறுவதால், அவர்களுடைய போரிடுஞ் சக்தி பல இடங்களில் மிகவும் சோர்ந்து கிடக்கிறது. அரசியல் காரணங்களுக்காகப் பிரயோகிக்கப்பட்டு வரும் இந்த அடக்கு முறைகளை நிறுத்திக்கொண்டு அவைகளுக்குப் பதில் அவசியமான சீர்திருத்தங்களை அமுலுக்குக் கொண்டுவராது போனால், ஜனங்கள் யுத்த முயற்சிகளைத் தடைசெய்யக்கூடிய மகத்தான சக்தி யுடையவர்களாகி விடுவார்கள்.
இந்த அறிக்கையை அனுசரித்துப் பொதுவுடைமைக் கட்சியினர், ஜனநாயக ரீதியில் தேசீய அரசாங்கத்தைத் திருத்தி யமைக்க வேண்டு மென்றும், அதில் தாங்கள் உள்பட எல்லாக் கட்சியினருக்கும் இடந்தர வேண்டுமென்றும் வேண்டுகோளுக்கு மேல் வேண்டுகோளாக விடுத்து வந்தார்கள். இது விஷயத்தில் பொதுஜனங்களுடைய ஆதரவையும் பெற்று வந்தார்கள்.
ஆனால் சியாங்கோ, பொதுவுடைமை வாதிகளின் செம் படையும் கொரில்லாப் படையும், தன்னால் நியமனம் செய்யப்படும் ராணுவ உத்தியோகதர்களின் தலைமையில் ஒழுங்குபடுத்தி அமைக்கப்பட வேண்டுமென்றும், பொதுவுடைமை வாதிகளின் படையென்று தனியாக ஒரு படை இருக்கக் கூடாதென்றும், அது தேசீய அரசாங்கத்துப் படையுடன் ஐக்கியமாகி விடவேண்டு மென்றும் கூறினான். இப்படி ஐக்கியப்படுத்தத் தாங்கள் தயா ரென்றும், ஆனால் அந்தத் தேசீய அரசாங்கம் எல்லாக் கட்சியினரை யும் கொண்ட கூட்டு அரசாங்கமாக இருக்கவேண்டுமென்றும், ஆகவே கூட்டு அரசாங்கம் அமைப்பது தான் முதல் வேலையா யிருக்க வேண்டுமென்றும் பொதுவுடைமை வாதிகள் பதில் கூறினார்கள். சியாங், கூட்டு அரசாங்கம் அமைக்க மறுத்து விட்டான். பொதுவுடைமைக் கட்சியினர், தங்கள் படைகளைத் தேசீய அரசாங்கத்துப் படையுடன் ஐக்கியப்படுத்த மறுத்து விட்டனர்.
பொதுவுடைமைக் கட்சியினர், பொதுமக்களுடைய ஆதரவையும் ஒத்துழைப்பையும் நம்பினர். சியாங், அமெரிக்கா அளித்துவந்த ஆயுத உதவியை நம்பினான்.
இங்ஙனம் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடாத நிலைமை 1943-ஆம் வருஷம் பிற்பகுதியிலிருந்து 1944-ஆம் வருஷம் முற்பகுதி வரை இருந்தது. ஜப்பானுக்கு விரோதமான போரும் மந்த கதியி லேயே நடைபெற்றுவந்தது.
சீனாவுக்கு விரோதமாகத் தொடுத்த போர் சுமார் ஏழு வருஷத்திற்கு மேலாகியும், இன்னும் ஆழங்கால் சேற்றில் அகப்பட்டுக்கொண்ட கதையாகவே இருந்து வருவதை, ஜப்பான், 1944-ஆம் வருஷம் பிற்பகுதியில் வெகுவாக உணர ஆரம்பித்தது. யுத்தம் இப்படி நீடித்து வந்ததனால் ஜப்பானில் பொருளாதாரக் கஷ்டங்கள் ஏற்பட்டன. மக்களுடைய பொறுமையும் கடுமையான சோதனைக் குள்ளாகிவந்தது. இந்த நிலையில் அது-ஜப்பான் -தன் முழு பலத்தைக்கொண்டு சீனாவைத் தாக்கி ஒரு முடிவுகண்டு விடுவதென்று தீர்மானித்து, மேற்படி 1944-ஆம் வருஷம் பிற்பகுதியில் சீனாவைப் பல முகங்களிலும் தீவிரமாகத் தாக்கத் தொடங்கியது. இதற்குச் சீனா சளைக்கவில்லை. சிறப்பாகப் பொதுவுடைமைக் கட்சிப் படைகள் மும்முரமாக எதிர்த்துப் போராடின. கோமிண்ட்டாங் கட்சிப் படைகளும் சும்மாயிருக்க வில்லை. ஜப்பானியர் களின் தாக்குதலைக் கூடிய மட்டில் சமாளித்துக் கொண்டு வந்தன. சுமார் எட்டு மாதகாலம் தீவிரமாகப் போர் நடைபெற்றது.
சீனாவுக்கு அமெரிக்காவின் ராணுவ உதவி இருந்த போதிலும் அது-சீனா-இவ்வளவு தீவிரமாகவும் ஒருமுகமாகவும் நின்று போர் புரியுமென்று ஜப்பான் எதிர்பார்க்கவில்லை. அதன் கையும் சளைத்துக் கொண்டு வந்தது. அதன் ஆக்கிரமிப்புக்குட்பட்டிருந்த பிலிப்பைன், மலேயா, பர்மா முதலிய பிரதேசங்கள் அதன் கைநழுவிப் போய்க் கொண்டிருந்தன.
இந்தச் சந்தர்ப்பத்தில் அமெரிக்கா, ஜப்பானின் மேற்குக் கரையோர மாகவுள்ள ஹிரோஷிமா என்ற நகரத்தின் மீது 1945-ஆம் வருஷம் ஆகட் மாதம் ஆறாந்தேதி அணுகுண்டு ஒன்றை வீசியது.. இதையடுத்து ருஷ்யா, 1945-ஆம் வருஷம் ஆகட் மாதம் எட்டாந் தேதி, ஜப்பான் மீது யுத்தந் தொடுத்திருப்பதாகப் பிரகடனஞ் செய்தது; மறுநாளே ஜப்பானின் ஆக்கிரமிப்புக்குட்பட்டிருந்த மஞ்சூரியாமீது படையெடுத்தும் விட்டது; அதே நாளில் 9-8-1945-இல் அமெரிக்கா, ஜப்பானின் மேற்குக்கரை யோரமாகவுள்ள நாகஸாக்கீ2 என்ற நகரத்தை மற்றோர் அணுகுண்டு கொண்டு தாக்கியது. இனிச் சமாளிக்க முடியாதென்று தெரிந்து கொண்டது ஜப்பான். 1945-ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் இரண்டாந்தேதி சரணடைந்து விட்டது. அதே மாதம் பதினைந்தாந்தேதி ஜப்பானின் சக்ரவர்த்தி ஹிரோஹிட்டோ,3 சரணாகதிப் பத்திரத்தில் கையெழுத் திட்டதோடு, ஜப்பானின் ஏகாதிபத்தியச் சிறகும் அற்று வீழ்ந்தது. இந்தச் சிறகை அது-ஜப்பான்- தன் சக்திக்கும் மீறி விரித்ததற்குத் தண்டனையாக 1945-ஆம் வருஷம் செம்படம்பர் மாதம் முதல் 1948-ஆம் வருஷம் டிசம்பர் மாதம் வரை, அமெரிக்காவின் கண்காணிப்புக் குட்பட்டிருந்தது. பிறகு சுமார் எட்டு வருஷங்கழித்து, அநேக முயற்சி களுக்குப் பிறகு ஐக்கிய தேச தாபனத்தில் இடம் பெற்றது.1956-ஆம் வருஷம் டிசம்பர் மாதம் பதினெட்டாந்தேதி ஜப்பான், ஐக்கியதேச தபனத்தின் ஓர் அங்கத்தினர் நாடாயிற்று.
சீன -ஜப்பானிய யுத்தம் தொடங்கியது: 7-7-1937; முடிவுற்றது: 2-9-1945.
மக்கள் குடியரசு
ஜப்பான் சரணடைந்துவிட்டது. இனி அதன் ஆக்கிரமிப்புக் குட்பட்டிருந்த பிரதேசங்களை விடுவிக்க வேண்டும்; அவைகளைப் பழையமாதிரி சீன அரசாங்கத்தின் நிருவாகத்திற்குட்படுத்த வேண்டும்; தவிர, மேற்படி ஆக்கிரமிப்புப் பிரதேசங்களில் தங்கி யிருந்த ஜப்பானியப் படையினரை நிராயுத பாணிகளாக்க வேண்டும்; அவர்களை மேற் கொண்டு என்ன செய்வதென்பதைப் பற்றி ஒரு முடிவு எடுக்கவேண்டும். இவைகளையெல்லாம் செய்வது யார்? தேசீய அரசாங்கத்துப் படையினராகிய கோமிண்ட்டாங் கட்சிப் படையினரா, பொதுவுடைமைக் கட்சிப் படையினரா என்ற கேள்வி எழுந்தது.
வட சீனாவின் பெரும் பகுதியும் மத்திய சீனாவிலும் தென் சீனாவிலும் சில சில பகுதிகளும் பொதுவுடைமைக் கட்சியினரின் செல்வாக்குக்கும் நிருவாகத்திற்கும் உட்பட்டிருந்தன. இந்தப் பகுதிகளில் இவர்கள், சியாங்கின் கடுமையான எதிர்ப்பைப் பொருட் படுத்தாமல் சில ராணுவ தளங்களை அமைத்துக் கொண்டிருந்தார்கள். இந்தப் பகுதிகளில் தங்கியிருக்கும் ஜப்பானியப் படையினரை நிராயுத பாணிகளாக்குவது தங்கள் உரிமையென்றும் பொறுப் பென்றும் இவர்கள் - பொதுவுடைமைக் கட்சியினர் - கூறினார்கள். சியாங் இதை மறுத்தான். பொதுவுடைமைக் கட்சிப் படைகள் தேசீய அரசாங்கத்துப் படைகளுடன், அதாவது கோமிண்ட்டாங் படைகளுடன் ஐக்கியமாகிவிட வேண்டுமென்றும், அப்படிக்கின்றி தனித்தியங்கிக் கொண்டு ஜப்பானியப் படையினரை நிராயுதபாணி களாக்கப் பொதுவுடைமைக் கட்சிப் படையினருக்கு உரிமையில்லை யென்றும் கூறினான். இதற்கு மாறாகப் பொது வுடைமைக் கட்சி யினர், தேசீய அரசாங்கத்தைச் சர்வ கட்சி யினரையும் கொண்ட கூட்டு அரசாங்கமாக முதலில் மாற்றியமைக்க வேண்டுமென்றும், அப்படி மாற்றி அமைத்தாலன்றி, தங்கள் படைகளைத் தேசீய அரசாங்கத்துக்குப் படைகளுடன் ஐக்கியப்படுத்த முடியாதென்றும் கூறினார்கள். சியாங், கூட்டு அரசாங்கம் அமைக்க இணங்க வில்லை. இந்தக் கட்சி, பிரதி கட்சிகள் சில ஆண்டுகளாகவே இருந்து வந்தன வென்பதை, வாசகர்கள் முந்தின அத்தியாயங்களிலிருந்து தெரிந்து கொண்டிருப்பார்கள்.
சியாங், தங்கள் கோரிக்கைக்கு இணங்க மறுக்கவே, பொது வுடைமைக் கட்சியினர், மறுப்புக்கு மறுப்பு என்கிற மாதிரி ஜப்பானியப் படைகளை நிராயுத பாணிகளாக்கும் .உரிமை தங்களுக் குண்டென்பதைச் செயல்படுத்திக் காட்ட உறுதி கொண்டனர். சியாங் சும்மாயிருப்பானா? இந்த உறுதியைக் குலைக்க உறுதிகொண்டான். அவ்வளவுதான். உள்நாட்டுச் சண்டை ஆரம்பித்துவிட்டது. உள்நாட்டுச் சண்டையென்பது, சீனாவின் வெகு நாளைய சாபக்கேடாகவே இருந்து வந்ததிருக்கிறது.
சியாங்குக்கு பொதுவுடைமைக் கட்சியினருடன் சமரஸ மாகப் போக வேண்டுமென்பதிலோ, தேசமுன்னேற்றத்திற்காக அவர்களுடைய ஒத்துழைப்பைப் பெறவேண்டுமென்பதிலோ எப் பொழுதும் விருப்பம் இருந்ததில்லை. அவர்கள் மீது இவனுக்கு உள்ளூர ஒருவித பகைமை உணர்ச்சி இருந்து வந்ததென்றே சொல்லலாம்.
1937-ஆம் வருஷ ஆரம்பத்தில் சீனாவைத் தாக்க, ஜப்பான், தன் முழுபலத்தையும் சேகரித்துக்கொண்டு வருவது தெரிந்ததும், கோமிண்ட்டாங் கட்சியினரும் பொதுவுடைமைக் கட்சியினரும், தேசீய ஐக்கிய முன்னணி என்ற பெயரால் கூட்டணி சேர்ந்தார்க ளல்லவா, இந்தக் கூட்டணிக்கு சியாங், மனப்பூர்வமாக இசைந்தா னென்று சொல்ல முடியாது. ஜப்பான், மஞ்சூரியாவை ஆக்கிர மித்துக் கொள்ள முனைந்த காலத்திலிருந்து அதற்கு -ஜப்பானுக்கு- இவன் லேசுலேசாக விட்டுக் கொடுத்து வந்ததனால், ஜனங்கள் இவனிடத்தில் அதிகமான அதிருப்தி காட்ட ஆரம்பித்தார்கள். நாட்டின் தேசீய சக்திகளையெல்லாம் ஒன்று திரட்டி, பொதுச் சத்துருவாகிய ஜப்பானை எதிர்க்கவேண்டுமென்ற கூக்குரல் நாடெங் கணும் ஒரு முகமாக ஒலிக்கத் தொடங்கியது. இதற்குச் செவிசாய்க்க வேண்டிய அவசியத்துக்குட்பட்டான் சியாங். பொது வுடைமைக் கட்சியினரின் ஒத்துழைப்பைப் பெறுமாறு இவன் கட்சியினரே இவனை நிர்ப்பந் திக்கவும் செய்தார்களென்று சொல்லப்படுகிறது. இந்தக் கூட்டணி ஏற்பட்ட ஆரம்பத்திலிருந்தே இதை எவ்வளவு தூரம் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமோ அவ்வளவு தூரம் பயன் படுத்திக் கொண்டு பிறகு இதனை வெட்டிவிடுவதென்ற எண்ணத் துடனேயே செயலாற்றி வந்தான் சியாங்.
ஜப்பானியத் தாக்குதலின் வேகம், 1938-ஆம் வருஷம் அக்டோபர் மாதம் ஹாங்க்கோ நகர வீழ்ச்சிக்குப் பிறகு சிறிது தணிந்து வந்ததல்லவா. அப்பொழுதிருந்து சியாங், ஜப்பானியர்கள் மீது, தான் நியாயமாகச் செலுத்தவேண்டிய கவனத்தைக் குறைத்துக் கொண்டு, அதற்குப் பதிலாகப் பொதுவுடைமைக் கட்சியின் மீது அதிக கவனம் செலுத்தத் தொடங்கினான். ஜப்பானின் படைபலம் வெகுவாகக் குறைந்து விட்டதென்றும், தன் சக்திக்கு மீறி அது பல பிரதேசங்களை ஆக்கிரமித்துக்கொண்டு விட்டபடியால் இனி அதன் யுத்த வேகம் குறைந்து விடுமென்றும், ஆகவே அதனை எதிர்த்துப் போரிடுவதற்கு அதிக படைபலம் தேவையிராதென்றும், இப்படியெல்லாம் சியாங் கருதி விட்டான். தவிர, ஜப்பானை எப்படியாவது சமாளித்துக் கொண்டுவிடலாம். வளர்ந்து வரும் பொதுவுடைமைக் கட்சியின் செல்வாக்கை இன்னும் ஓங்கவிட்டு வந்தால், அது தனக்கு ஆபத்தாக முடியுமென்று அஞ்சினான். இதனாலே 1939-ஆம் வருஷத் தொடக்கத்திலிருந்து பொது வுடைமைக் கட்சியை அநேக நிர்ப்பந்தங்களுக்குட்படுத்தி வந்தான். அந்தக் கட்சிக்கும் அதன் படைகளுக்கும் சட்டபூர்வமான அந்தது கொடுக்கவில்லை. பொதுவுடைமையினரின் செல்வாக்குக்குட்பட் டிருந்த பிரதேசங்களி லிருந்து அவர்கள் - பொதுவுடைமைக் கட்சி யினர்-வெளியேறாத படியும், அவர்களுடைய செல்வாக்கு பரவாத படியுமிருக்க, அந்தப் பிரதேசங்களைச் சுற்றி வளைத்து, தன்னிடம் விசுவாசங்கொண்ட படைகளில் ஒரு பகுதியைக் காவல் படையாக நிறுத்தச் செய்தான். பொதுவுடைமை வாதிகளுக்கு உணவுப் பொருள்களும் போர்க் கருவிகளும் போதிய அளவு கிடைக்காதபடி தடைவிதித்தான். ஜப்பானியப் படைகளுக்கும் பொதுவுடைமைக் கட்சிப் படை களுக்கும் நேருக்கு நேர் மோதல் ஏற்படாதபடி, அதாவது பொதுவு டைமைக் கட்சிப் படையினர் மட்டும் தனித்து நின்று போர்புரியாத படி பார்த்துக் கொண்டான். அப்படிப் போர் புரிந்து வெற்றியடைந்து விடுவார்களானால் அது தன்னுடைய செல்வாக்கைப் பாதிக்குமென்று கருதினான். சுருக்கமாக, பொது வுடைமைக் கட்சியினரைப் பலவித நிர்ப்பந்தங்களுக்குட்படுத் தினான்.
இங்ஙனம் தங்களை நிர்ப்பந்தங்களுக்குள்ளாக்க வேண்டா மென்றும், தங்கள் மீது காட்டும் வன்மத்தைப் பொதுச் சத்துருவான ஜப்பான் மீது திருப்புமாறும், ஜனநாயக ரீதியில் சர்வ கட்சியினரைக் கொண்ட கூட்டு அரசாங்கத்தை அமைத்து, ஜனங்களுக்கு ஜீவா தாரமான உரிமைகளை வழங்கவேண்டுமென்றும் பொது வுடைமைக் கட்சியினர் சியாங்கைப் பல தடவை கேட்டுக் கொண்டனர்; கோரிக்கைகள் விடுத்தனர்; விண்ணப் பங்கள் அனுப்பினர். சியாங் இவைகளைப் பொருட்படுத்தவே இல்லை; அலட்சியமாகவே இருந்தான். அது மட்டுமல்ல; பொதுவுடைமைக் கட்சியினருக்கு விரோதமாகத் தான் எடுத்து வந்த நடவடிக்கைகளை நாளுக்கு நாள் தீவிரப்படுத்தினான்.
கொரில்லாப் போர் முறையில் பயிற்சி பெற்றவர்களைக் கொண்ட பொதுவுடைமைக் கட்சிப் படையொன்று தனியாக அமைக்கப்பட்டதும் இதற்கு நான்காம் படையென்று பெயர் கொடுக்கப்பட்டதும் வாசகர் களுக்கு நினைவிருக்கும். இந்தப் படையை அமைக்க, பொதுவுடைமைக் கட்சியினர், சியாங்கின் அனுமதிகோரிப் பெற்றிருந்தனர். ஐக்கிய தேசீய முன்னணிக்குத் தலைவனல்லவா இவன்? இவனும் அப்பொழுது அனுமதி கொடுத்தான். இந்தக் கொரில்லாப் படையின் மீது இவனுக்கு நம்பிக்கையில்லை யானாலும், அதற்கு மாறாக இதனைச் சந்தர்ப்பம் பார்த்து ஒழித்துடக் கட்டிவிட வேண்டுமென்ற எண்ணம் இவனுக்கு உள்ளூர இருந்த போதிலும் , ஜப்பானியத் தாக்குதலைச் சமாளிக்க இந்தப் படை இன்றியமையாததென்பதை இவன் உணர்ந்திருந்தான். எனவே, ஐக்கிய தேசீய முன்னணிக்கு எப்படி அவசியத்தை முன்னிட்டு இசைந்தானோ, அதைப்போல் இந்த நான்காம் படை அமைப்புக்கும் அவசியத்தை முன்னிட்டு அனுமதியளித்தான். இந்தப்படை, ஜப்பானியர் களுக்கு எவ்வளவு சேதத்தை உண்டு பண்ணியதென்பதைப் பற்றி வாசகர்களுக்கு நாம் மீண்டும் சொல்லத் தேவையில்லை யல்லவா?
ஜப்பானியத் தாக்குதலின் வேகம் சிறிது தணிந்ததும், சியாங், பொதுவாகப் பொதுவுடைமை வாதிகள் மீது தன் வன்மப் பார்வையைத் திருப்பினானென்றாலும், குறிப்பாக இந்த நான்காம் படைமீது, வன்மத்தோடு குரூரமும் நிறைந்த பார்வையைத் தீவிரமாகச் செலுத்தத் துணிந்தான். ஏனென்றால், 1930-ஆம் வருஷத் திலிருந்து 1934-ஆம் வருஷம் வரை. பொதுவுடைமை வாதிகளுக்கு விரோதமாக இவன் எடுத்துக் கொண்ட ராணுவ நடவடிக்கைகள் பலவற்றையும் தகைந்து நின்றவர்கள், இவனுக்கு வெற்றி கிடைக் காமற் செய்தவர்கள் இந்த கொரில்லாப் போர் வீரர்களே யாவர். இதனால் இவர்கள் மீது அப்பொழுதிருந்தே இவனுக்கு ஆத்திரம் இருந்து வந்தது. இந்த ஆத்திரத்தைச் செயல்படுத்தச் சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருந்தான்.
1940-ஆம் வருஷ மத்தியில், கொரில்லாப் போர் வீரர்களைக் கொண்ட இந்த நான்காம் படையின் ஒரு பகுதி மத்திய கிழக்குச் சீனாவிலுள்ள ஆன்வெய்1 மாகாணத்தின் தென்பகுதியில் தங்கி, ஜப்பானியர்களின் முன்னேற்றத்தைத் தடைசெய்து கொண்டி ருந்தது. இந்தப் படையின் நடவடிக்கைகளைக் கண்காணித்து வர, சியாங், தன்னிடம் விசுவாசமுள்ள ஒரு படையை-இதற்கு நாற்பதாம் பகுதிப் படையென்று பெயர் - நியமித்தான். இதற்குப் பொது வுடைமைக் கட்சியினர் சம்மதப்படவில்லையாயினும் ஆட் சேபிக்க வில்லை. இப்படியிருக்கையில், 1940-ஆம் வருஷம் நவம்பர் மாதம், சியாங் நான்காம் படைப்பகுதி ஆன்வெய் மாகாணத்திலிருந்து கிளம்பி யாங்க்ட்ஸீ நதியின் வடகரைக்குச் சென்று தங்க வேண்டுமென்று உத்தரவிட்டான். திடீரென்று பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை ரத்து செய்யுமாறு பொதுவுடைமைக் கட்சியினர் கோரினர்; மன்றாடினர். பயனில்லை. எனவே உத்தரவுக்கிணங்க, சுமார் ஒன்பதினாயிரம் பேரைக்கொண்ட இந்த நான்காம் படைப்பகுதி, 1941-ஆம் வருஷம் ஜனவரிமாதம் முதல் வாரம் வடக்கு நோக்கிப் புறப்பட்டது. புறப்பட்ட மறுநாள் இந்தப் படைக்கும், இதனைக் கண்காணிக்க வைக்கப்பட்டிருந்த நாற்பதாம் பகுதிப் படையோடு கோமிண்ட்டாங் கட்சிப் படையின் ஒரு பகுதியும் சேர்ந்த ஒரு கூட்டுப் படைக்கும் கைகலப்பு ஏற்பட்டது. சுமார் பத்துநாள் வரை விடாப் பிடி சண்டை. கடைசியில், நான்காம் படைப்பகுதியைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் மட்டும் உயிர் தப்பி வடக்குப் பக்கம் சென்றனர்; மற்றவர் உயிரிழந்தனர். இந்தப் படைப் பகுதியின் தலைவனான யே டிங்1 என்பவன், சியாங் படையினால் கைது செய்யப்பட்டான். இவனுக்கு அடுத்த பதவியிலிருந்த ஸியாங் யிங்2 என்பவன் கொல்லப்பட்டு விட்டான். சியாங்கோ, இந்த நான்காம் படைப்பகுதியைக் கலைத்து விட்டதாக உத்தரவு பிறப்பித்தான்.
சியாங்கின் இந்த விபரீதச் செயலைக் கண்டு, பொது வுடைமைக் கட்சியினர் திகைத்துப் போயினர். ஆனால் இதற்காக, பதில் நடவடிக்கை எடுக்கவில்லை. பொதுச் சத்துருவான ஜப்பானை நாட்டைவிட்டு அப்புறப்படுத்தாதவரை, ஐக்கிய தேசீய முன்னணி யில் பிளவு உண்டுபண்ணக் கூடாதென்ற ஒரே உறுதியுடன் இருந்தனர்.
இங்ஙனம் சியாங், 1939-ஆம் வருஷம் அக்டோபர் மாதத்தி லிருந்து, தங்களுக்கு விரோதமான நடவடிக்கைகள் எடுத்து வருவதைக் கண்டு , பொதுவுடைமைக்கட்சியினர், பலவகையாலும் அதிருப்தி யடைந்திருந்தனர் என்பதில் ஆச்சரியமில்லை. தங்களுடைய இந்த அதிருப்தியை இவர்கள் பல தடவை சியாங்குக்குத் தெரி வித்தும் வந்தனர். 1943-ஆம் வருஷம் ஜூலை மாதம் ஏழாந் தேதி நடைபெற்ற ஆறாவது யுத்த தினக் கொண்டாட்டத்தின்போது வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த அதிருப்தி தெளிவாகத் தெரிவிக்கப்பட்டதல்லவா?1
1939-ஆம் வருஷம் அக்டோபர் மாதத்திலிருந்து நடைபெற்ற நிகழ்ச்சிகளை வரிசைப் படுத்திப் பார்த்தால், ஜப்பான் சரணடைந்த பிறகு ஏற்பட்ட உள்நாட்டுச் சண்டை மேற்படி 1939-ஆம் வருஷம் அக்டோபர் மாதத்திலிருந்தே தொடங்கி விட்டதென்றும், ஆனால் ஜப்பானுக்கு இடங்கொடுக்கிற மாதிரி இது வெளிப்படையாகத் தெரியவில்லையே தவிர, உள்ளுக்குள்ளேயே கொப்பளித்துக் கொண்டிருந்ததென்றும் தெரியவரும்.
ஜப்பான் மீது கொண்ட வெறியினால் உண்டாகக்கூடிய அனுகூலங் களைத் தானும் தன்னைச் சேர்ந்தவர்களும் மட்டுமே அனுபவிக்க வேண்டுமென்று தீர்மானித்திருந்த சியாங், அந்த வெற்றி ஏற்படுவதில் யார் பெரும் பங்கு கொண்டார்களோ, யார் அதிக மான கஷ்ட நஷ்டங்களை அனுபவித்தார்களோ அவர்களை, அந்தப் பொதுவுடைமை வாதிகளை ஒழித்து விட உறுதி கொண்டான். அதிகாரப் பித்துக்கும் நன்றியின்மைக்கும் எவ்வளவு நெருங்கிய உறவு!
பொதுவுடைமைவாதிகளை ஒழித்துவிட சியாங்குக்கு அமெரிக்கா பெரிதும் உதவி செய்தது. உண்மையில் இந்த உதவியை நம்பியே சியாங், ஒழிக்கும் பணியில் ஈடுபட்டானென்பர். இப்படி அமெரிக்கா உதவி செய்வதைப் பொதுவுடைமைவாதிகள் ஆட்சே பித்தார்கள். சீனா, ஜப்பானை எதிர்த்துப் போராடி வந்த காலத்தில் அதற்கு-சீனாவுக்கு- உதவியாகவே அமெரிக்கப் படைகள் வந்தன. இப்பொழுது ஜப்பான் தோல்வியடைந்து விட்டது. இனியும் அமெரிக்கப் படைகள் சீனாவில் தங்கியிருப்பானேன்? சீனாவின் உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதேன்? இப்படி யெல்லாம் பொதுவுடைமைக் கட்சியினர் கேட்டனர்.
இதற்குப் பதிலாக சியாங்கும் கோமிண்ட்டாங் கட்சியினரும், சோவியத் ருஷ்யா, பொதுவுடைமைக்கட்சியினருக்கு உதவி செய்து வருகிறதென்று குறைகூறினார்கள்.
நடுநோக்கோடு பார்த்தால், பொதுவுடைமைக் கட்சியினருக்கு ருஷ்யா உதவி செய்யவில்லையென்பது தெரியவரும். ஜப்பான் மீது ருஷ்யா எப்பொழுது யுத்தந் தொடுத்ததோ அப்பொழுதே, அதே 1945-ஆம் வருஷம் ஆகடு மாதத்திலேயே, சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் ருஷ்யா தலையிடுவதில்லையென்று சியாங்கின் தேசீய அரசாங்கத் திற்கும் சோவியத் அரசாங்கத்திற்கும் ஓர் உடன் படிக்கை ஏற்பட்டது. இந்த உடன்படிக்கைப்படியே சோவியத் அரசாங்கம் நடந்து கொண்டது. இதைப் பற்றிச் சிறிது விவரிப்போம்:
1931-ஆம் வருஷக் கடைசியில், மஞ்சூரியா, ஜப்பானின் ஆக்கிரமிப்புக்குட்பட்டது. 1945-ஆம் வருஷம் ஆகட் மாதம் எட்டாந்தேதி, ஜப்பான் மீது ருஷ்யா யுத்தந்தொடுத்தது; இதை யொட்டி, தன் படைகளை-ருஷ்யப் படைகளை-மஞ்சூரியாவில் கொண்டுவந்து நிறுத்தியது; ஆனால் அரசாங்க நிருவாகப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவில்லை; தன்னோடு தோழமை பூண்ட பொது வுடைமைக் கட்சியினரிடம் ஒப்படைக்கவு மில்லை. பொது வுடைமைக் கட்சியினரென்னவோ இதற்காக முயன்று பார்த்தார்கள். ஆனால் பலிக்கவில்லை. இவர்கள் வசம் ஒப்படைக்க முன் வந்தி ருக்குமானால் அதை-ருஷ்யாவை -யாரும் தடுத்திருக்க முடியாது.
இன்னும் சொல்லப்போனால், சியாங்குக்கே ருஷ்யா இணக்கம் காட்டியது. எப்படியென்றால், தேசீய அரசாங்கத்துப் படைகள், அதாவது கோமிண்ட்டாங் படைகள், மஞ்சூரியாவை அடைகிறவரை, அங்கிருந்து ருஷ்யப்படைகளை வாப பெற்றுக்கொள்ளாதிருக்கு மாறு சியாங், சோவியத் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டிருந்தான். இதன்படியே கோமிண்ட்டாங் படைகள் அங்குச் சென்றடைந்ததும் ருஷ்யப் படைகள் வாபஸாயின. தவிர, 1949-ஆம் வருஷம் அக்டோபர் மாதம் இரண்டாந்தேதி வரை, சியாங்கின் தலைமையில் காண்ட்டன் நகரத்தில் நடைபெற்று வந்த தேசீய அரசாங்கந்தான், சீனாவின் சட்ட ரீதியான அரசாங்கமென்று ருஷ்யா அங்கீகரித்து வந்தது. மேற்படி அக்டோபர் மாதம் இரண்டாந்தேதி பொதுவுடைமைக் கட்சி அரசாங்கம் ஏற்பட்ட பிறகு, அந்த அங்கீகாரத்தை வாப பெற்றுக் கொண்டது.
ஜப்பான் சரணடைந்த பிறகு, அமெரிக்கா, கோமிண்ட்டாங் கட்சியினருக்கும் பொதுவுடைமைக்கட்சியினருக்கும் சமரஸம் செய்து வைக்க முயன்றது. ஏறக்குறைய 1946-ஆம் வருஷம் மு ழுவதும் சமரஸப் பேச்சுக்கள் நடைபெற்றன. இதில் விசேஷமென்ன வென்றால், பொதுவுடைமைக் கட்சி, கோமிண்ட்டாங் கட்சிக்குட் பட்டிருக்க வேண்டுமென்ற ரீதியிலேயே இந்தப் பேச்சு வார்த்தைகள் இருந்தன. இதற்குப் பொதுவுடைமைக் கட்சியினர் சம்மதப் படவில்லை.
மற்றும் சியாங், அமெரிக்காவின் உதவி தனக்கு இருக்கிற தென்ற தைரியத்தில், ஒரு பக்கம் சமரஸப் பேச்சுக்கள் நடத்திக் கொண்டு மற்றொரு பக்கம் பொதுவுடைமைக் கட்சியினருக்கு விரோதமாகக் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வந்தான். இதைக் கண்டு பொதுவுடைமைக் கட்சியினர் மனக்கசப்படைந் தார்கள்.
1947-ஆம் வருஷத் தொடக்கத்தில் சமரஸப் பேச்சுக்கள் நின்று போயின; முறிந்து போயின என்றே சொல்லவேண்டும். எனவே மே மாதத்திலிருந்து இருதரப்பினருக்குமிடையே கடுமையான போர் நடைபெறத் தொடங்கியது. போரில், சியாங்கின் கை எந்த விதத்திலும் சளைத்துப் போகக் கூடாதென்கிற விஷயத்தில் அமெரிக்கா அதிக அக்கரை காட்டியது. இதற்கு முந்தி அக்கரை காட்டி வந்திருக்கிற தென்றாலும் இந்தத் தடவை காட்டிய அக்கரை சிறிது வரம்பு மீறியதாக இருந்ததென்றே சொல்லவேண்டும். ஏனென்றால், பொதுவுடைமை யினருக்கு விரோதமாக, சியாங் தொடர்ந்து நடத்தி வரும் போராட்டங் களில் இதுவே கடைசிப் போராட்டமாயிருக்குமென்றும், இதில் அவன் தோல்வியுற்றால் அவனுடைய அரசியல் வாழ்வு அதமித்துப் போகுமென்றும் அது தெரிந்துகொண்டிருந்தது. அவன் அரசியல் வாழ்வு அதமித்துப் போவது ஒரு பக்கம் இருக்கட்டும்; அவன் தோல்வி யடைந்தால் , சீனாவில் பொதுவுடைமை இயக்கம் மேலும் வலுப்பெற்று விடு மென்று அஃது அஞ்சியது. எனவே அவனுக்கு எல்லா வகையான உதவிகளையும் செய்யத் துணிந்தது. புதிது புதிதாகத் தயாரிக்கப் பட்ட கருவிகளும் ராணுவத்திற்குத் தேவையான பலவகைப் பொருள்களும் அமெரிக்காவிலிருந்து வந்து குவிந்தன. போர்த் தந்திரம் மிக்க அமெரிக்கர் சிலர், சியாங்குக்கு ராணுவ ஆலோசகர் களாக அமர்ந்தனர்; சில பகுதிப் படைகளுக்குத் தலைமை பூண்டனர். இப்படிப் பலவகை யான உதவிகளைப் பெற்று வந்ததன் விளைவாக, போர்த் தொடக்கத் தில், சியாங்குக்கு வெற்றிமேல் வெற்றி கிடைத்து வந்தது. பொதுவுடைமைக் கட்சிப்படையினர் சில விடங்களில் விட்டுக்கொடுக்க வேண்டிய நிலைக்குட் பட்டார்கள்; ஆனால் சில இடங்களில் தங்கள் பலத்தைச் சேகரித்துக் கொண்டு வந்தார்கள். இவர்களுடைய செல்வாக்குக்குட் பட்டிருந்த பிரதேசங்களில் தங்கியிருந்த ஜப்பானியப் படையினரை நிராயுத பாணிகளாக்கிய வகையில், இவர்கள் கைக்கு ஏராளமான ஆயுதங்கள் கிடைத்திருந்தன. இவைகளைத் தக்க சமயத்தில் பயன்படுத்த வேண்டுமென்று கருதியிருந்தார்கள். இப்பொழுது சியாங் படை களுக்கு விரோதமாகப் பயன் படுத்தினார்கள். இப்படிப் பயன் படுத்திய காலத்தில், மாத் ஸே துங், சூ தேஹ் போன்ற தலைவர்கள், படைகளை உற்சாகப் படுத்தி நடத்தி வந்த முறை, சீன சரித்திரத்தில் நிலையான இடம் பெற்றிருக்கும். அமெரிக்கப் படைத் தலைவர்கள், இவர்களுடைய திறமையைக் கண்டு பிரமித்துப் போனார் களென்றால் அதிகம் சொல்லத் தேவையில்லை.
1948-ஆம் வருஷம் பிற்பகுதியிலிருந்து பொதுவுடைமைக் கட்சிப் படையினர் வெற்றி கண்டு வரலாயினர்; சியாங்கின் படைகள் படிப்படியாகத் தோல்வியடைந்து வந்தன. இந்தத் தோல்வியைத் துரிதப்படுத்துகின்ற மாதிரி, சியாங்கின் படையினர் பலர் பொது வுடைமைக் கட்சியினருக்கு விரோதமாகச் சண்டை செய்ய மன மில்லாமல் ஏனோ தானோ என்று சண்டையிட்டார்கள். இன்னும் பலர், பகிரங்கமாகவே பொதுவுடைமைக் கட்சிப் படையில் போய்ச் சேர்ந்து கொண்டார்கள். இனிச் சொல்ல வேண்டுமா? ஆதிக்கப் பிடி தளர்ந்தது. 1949-ஆம் வருஷம் செப்டம்பர் மாதத்திற்குள் ஏறக்குறைய சீனா முழுவதும் பொது வுடைமைக் கட்சியினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
சியாங், தன்னிடம் விசுவாசங் கொண்டிருந்த சில படைகளுடன் டைவான் என்று அழைக்கப்படுகிற போர்மோஸா1 தீவுக்குச் சென்று, அங்குத் தன் ஆட்சியை நிறுவிக் கொண்டான். இங்ஙனம் இவன் செல்வதற்கும், இவன் ஆட்சி இங்கு நிலைபெறு வதற்கும் அமெரிக்கா பெரிதும் துணையாயிருந்தது.
1949- ஆம் வருஷம் அக்டோபர் மாதம் இரண்டாந்தேதி, பொதுவுடைமைக் கட்சியினர், அரசாங்க நிருவாகத்தை ஏற்றுக் கொண்டனர்; சீன மக்களின் குடியரசு1 தாபிக்கப்பட்டது. வெகு காலமாகச் சீனாவின் தலைநகரமாயிருந்து வந்த பீக்கிங், மீண்டும் தலைநகரமாக்கப் பெற்றது. குடியரசின் முதல் தலைவன் மாத் ஸே துங்; முதல் பிரதம மந்திரி சௌ என் லாய்.
சீன இலக்கியம்
சீனர்கள், எப்பொழுதும் திறமையைப் போற்றுகிறவர்கள்; அறிவுக்கு மதிப்புக் கொடுக்கிறவர்கள்; இலக்கியத்தில் இன்பம் நுகர்கிறவர்கள். அறிஞர்கள், சமுதாயத்தில் முதலிடம் பெற்று வந்திருக்கிறார்களென்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? இப்பொழுது அநேக நாடுகளில் அரசாங்க உயர்தர உத்தி யோகதர்களுக்குப் போட்டிப் பரீட்சைகள் நடத்தி அவற்றில் வெற்றி கண்டவர்களே நியமிக்கப்படுகிறார்களல்லவா! இந்த முறை சீனாவில் கிறிது சகத்திற்கு வெகுகாலம் முந்தி யிருந்தே நடை முறையில் இருந்துவந்திருக்கிறது. இதனால் அதிகாரபீடத்தில் இருந்தவர் களில் பெரும்பாலோர், வெறும் அதிகாரிகளாக மட்டு மில்லாமல், அறிவுக்கடலில் திளைத்து விளையாடக்கூடிய ஆற்றல் வாய்ந்தவர் களாகவும் இருந்தார்கள். அரசுக் கட்டிலில் வீற்றிருந்தவர் களில் அநேகர், பெரும் புலவர்களாகவோ, புலவர்களைப் புரக்கும் புரவலர்களாகவோ இருந்திருக்கிறார்கள்.1
புலமைக்குப் பெருமை தந்த நாட்டிலே இலக்கிய வளமைக்குக் கேட்பானேன்? சீன இலக்கிய பரம்பரை வளமை மிக்கது மட்டு மல்ல; மிகப் பழமையானது; அகன்ற பரம்பரையுடையது. அது காணாத, தொடாத துறையே இல்லை. அப்படிக் கண்டதும் தொட்டதும் மேலெழுந்த வாரியாகவா? இல்லவே இல்லை. கவிதைத் துறையைத் தவிர, மற்ற எந்த ஒரு துறையையும், அதன் அடிப்படைக்குச் சென்று கண்டும் தொட்டும் இருக்கிறது. பொது வாகவே, சீன அறிஞர்கள் ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டால், அதனைப் பல கோணங்களில் வைத்து ஆராய்ந்து அறிவதை முக்கிய தருமமாகவும் கருமமாகவும் கொண்டிருந்தார்கள். அப்படி ஆராய்ந்து அறிந்ததை உண்மைக்குப் புறத்தியாகப் போகவிடாமல் நிறுத்தி, உலகினுக்கு அறிவித்தார்கள். எந்த ஒன்றையும் ஊகத்திற்கு விட்டு விடவில்லை; குழப்பிக் காட்டவில்லை.
சீன இலக்கியப் பரம்பரையில், ஆதிகாலத்திலிருந்து நாளது வரை ஒரு தொடர்ச்சி இருந்து வருவதைப் பார்க்கிறோம். அந்நியர் களின் தாக்குதல்கள், உள்நாட்டு அரசியல் குழப்பங்கள், பொருளா தார நெருக்கடிகள், பெரும்வெள்ளம், கடும் பஞ்சம், இவற்றுள் எதனாலும் சீன இலக்கியப்போக்கு தடைப்படவில்லை; ஜீவநதியாக ஓடிக்கொண்டு வந்திருக்கிறது.
சீனாவில் அவ்வப்பொழுது ஆண்டு வந்த அரச வமிசங்களின் காலத்தில் தோன்றிய சில இலக்கியங்கள் பற்றியும், தோற்றுவித்த சில அறிஞர்களைப் பற்றியும் முந்தின அத்தியாயங்களில் லேசாகக் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறோம். என்றாலும் அதில் நமக்குத் திருப்தி உண்டாகவில்லை. ஊற்றிலிருந்து ஓடிவரும் நீரில் ஒரு முறை நீராடினால், மீண்டும் அந்த நீரில் இறங்க வேண்டுமென்ற ஆசை யுண்டாகிறதல்லவா, அதுபோல் நூற்றாண்டுகள் கணக்கில் ஊற்றுப் பெருக்கெடுத்து ஓடி வந்துகொண்டிருக்கிற சீன இலக்கியப் பெருக்கில் மற்றுமொருமுறை நீராட ஆசைப்படுகிறோம்.
சீன இலக்கியத்தை ஒரு தொகுப்பாக வைத்துப் பார்த்தோ மானால், அதில், எண்ணிலடங்காத கவிதைகள் மண்டிக்கிடப்பது முதலில் தென்படுகிறது. அடுத்தாற்போல் சரித்திர நூல்கள்; பின்னர் அகராதிகள் முதலியன; அப்புறம் வானசாதிரம் முதலிய சாதிர வகைகள். கணக்கிலடங்காத சமய நூல்களும் மொழிபெயர்ப்பு நூல்களும் பிறவும் இந்தத் தொகுப்பில் காணக்கிடக்கின்றன.
இந்தப் பலதுறை இலக்கியப் படைப்புக்களும் மனிதனுக்கு நல்வழி இன்னதென்று சுட்டிக்காட்டுவதையே அடிப்படை நோக்க மாகக் கொண்டு அமைந்திருக்கின்றன. மனிதன், எந்த விதமான சூழ் நிலையில் இருந்த போதிலும், அவனுடைய வாழ்க்கை எந்த விதமாக அமைந்திருந்த போதிலும், அவன், தன் எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றிலும், தூய்மை, நேர்மை முதலிய மேலான தன்மைகளைப் புகுத்தி வளர்த்துக் கொண்டு வரவேண்டு மென்ற கருத்து, இந்த இலக்கியப் படைப்புகளில் பலவகையாக ஊடுருவிப் படர்ந் திருப்பதைக் காணலாம். மற்றும் இந்த இலக்கியப் படைப்புக்கள், வேண்டுவார்க்கு வேண்டுவதைக் கொடுக்கும் தன்மையனவாய், அவரவருடைய அறிவுப் பக்குவத்திற்கும் மனப்பக்குவத்திற்கும் தகுந்தாற்போல் அமைந்திருக்கின்றன வென்று சொல்லவேண்டும்.
முதலில், கவிதைக் களஞ்சியத்திற்குள் நுழைந்து மேலோட்ட மாகப் பார்ப்போம். பண்டைக்காலக் கவிதைகளில் காணப்படும் பொதுவான அமிசம் அவற்றின் சுருங்கிய அளவு. அதாவது நூற்றுக் கணக்கான அடிகளைக் கொண்ட நீண்ட கவிதைகள் குறைவு. நான்கு அடிகளுக்கு மேல் பத்து அல்லது பதினைந்து அடிகளுக்குட்பட்ட கவிதைகளே அதிகம். ராமாயணம், பாரதம் போன்ற பேரிதிகாசங் களையோ சிந்தாமணி, சிலப்பதிகாரம் போன்ற பெருங்காப்பியங் களையோ சீனமொழியில் காண்டல் அரிது.
சீனக் கவிஞர்களிடத்தில் காணப்படும் ஒரு விசேஷ மென்ன வென்றால், அவர்கள் எந்த ஒன்றை, கருப்பொருளாக வைத்துக் கவிதைகள் இயற்றுகிறார்களோ அந்த ஒன்றை, படிப்பவர்களுக்கு அறிமுகப்படுத்திவிட்டு நின்று விடுவார்கள்; அதைப் பல கோணங்களில் வைத்து அலசி ஆராய்ந்து காட்டுவதில்லை. காணும் பொறுப்பை, படிப்பவர்களுக்கு விட்டுவிடுவார்கள். படிப்பவர்களைச் சிந்திக்கச் செய்யவேண்டுமென்பது தான் அவர்கள் நோக்கமாக இருந்திருக்கிறது. இதனால், அவர்களுடைய கவிதைகளில் சொன்னதைக் காட்டிலும் சொல்லாததுதான் அதிகமாயிருக்கும். ஒரு சீன அறிஞன் கூறுகிறான்:- பண்டைக் காலத்துச் சீனக் கவிஞர்கள், சொற்களைச் சொல்லி அந்தச் சொற்களுக்கு வெகு தொலைவில், வெகு ஆழத்தில், அந்தச் சொற்களின் பொருள்களை வைத்து, அவற்றைப் பற்றி வாசகர்களைச் சிந்திக்குமாறு செய்வதுதான் கவிதையின் லட்சண மென்று கருதினார்கள்.
சீனக் கவிஞர்கள், பல துறைகளில் பலவிதமான பொருள்களை மையமாக வைத்துப் பாடியிருக்கிறார்களென்றாலும், சிறப்பாக, இயற்கை யோடு, இயற்கைச் சக்திகளோடு உறவு கொண்டாடுவதில் ஏற்படுகின்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில்தான் தங்கள் கவிதா சக்தியை அதிகம் செலவழித்திருக்கிறார்களென்று சொல்ல வேண்டும், அல்லிப் பூவும் அந்திநேரமும், தாழ்வரையும் நீரோடையும், வானவில்லும் கோலமயிலும், மூடும் பனியும் சாடும் காற்றும், இளமை எழிலும் முதுமை நரையும், இப்படிப் பலவும் அவர்களுடைய கவிதைகளில் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றைப் படிக்கிற போதும், நாம் புதுப்புது அனுபவங்களைப் பெறுகிறோம்; இயற்கையின் பூரணப் பொலிவைப் பார்க்கிறோம்.
அடுத்தாற்போல் அவர்களுடைய கவிதைகளில், கருணைச் சுவை முக்கிய இடம் பெற்றிருப்பதைக் காண்கிறோம். எங்கே துயரக் குரல் கேட்கிறதோ, எங்கே உழைத்தால்தான் பிழைப்பு என்கிற நிலை இருக்கிறதோ, எங்கே வறுமை தாண்டவம் செய்கிறதோ அங் கெல்லாம் கவிஞர்களுடைய இதயம் சென்று, கவிதைகளைக் கருணை மழையாகப் பொழிந்திருக்கிறது. இந்தக் கவிதைகள் பல, ஏதோ ஒரு வகையில் தாழ்வுற்றுக் கிடக்கிறவர்களுடைய உணர்ச்சி களைப் பிரதிபலித்துக் காட்டுவனவாயிருக்கின்றன. சிறப்பாகப் பத்தொன்பதாவது நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து பொங்கி வரும் கவிதைகளில் இந்த உணர்ச்சிகள், சிறிது தலைதூக்கியே நிற்கின்றன வென்று சொல்லவேண்டும்.
இங்ஙனம் இயற்கையும் கருணைச் சுவையும் கவிதைகளில் இடம் பெற்றிருக்கின்றன வென்றால், காதல், வீரம் போன்ற மற்றச் சுவைகள் இடம்பெற வில்லையோ என்று கேட்கலாம். அப்படி யில்லை. இடம் பெற்றிருக்கின்றன. அத்தகைய கவிதைகளின் எண்ணிக்கை குறைவு. அவ்வளவுதான். தரத்திலும் குறைவு என்று கருதுவோரும் உண்டு. ஆனால் இருபதாவது நூற்றாண்டில் தோன்றி யுள்ள கவிதைகள் இந்தக் குறையை ஓரளவு அகற்றியிருக்கின்றன என்று சீன அறிஞர் சிலர் கருதுகின்றனர்.
சீனக் கவிஞர்களில் பலர் கற்பனை ஆகாயத்தில் சஞ்சரித்துக் கொண்டிருப்பதில் மட்டும் வல்லவர்களாயிருக்கவில்லை; கர்ம வீரர் களாகவும் இருந்திருக்கிறார்கள். எத்தனை கவிஞர்கள், அந்நிய ஆதிக்கத்திற்குக் கை தூக்கமறுத்து, இருட்டுக்குகைகள் போன்ற சிறைகளில் ஆண்டுகள் கணக்காக உழன்று வந்திருக்கிறார்கள்? தலை வணங்க மறுத்து, கொலைக்களத்தில் ஓங்கி நின்ற வாளுக்குத் தலை நீட்டியிருக்கிறார்கள்? போர்க்களத்தில் புற முதுகு காட்ட மறுத்து, உயிர் விட்ட கவிஞர்களின் எண்ணிக்கையைக் குறைத்துச் சொல்ல முடியுமா? ராஜபக்தியென்றும் தேசபக்தி யென்றும் வேற்றுமை பாராட்டாமல் இரண்டையும் இணைத்துக் கொண்டு, அரசனுடைய கீர்த்திக்கும், நாட்டினுடைய நலனுக்கும் பழுது ஏற்படாமல் ஆலோசனைகள் சொல்லியும் நற்பணிகள் புரிந்தும் வந்த எத்தனை கவிஞர்கள், சரித்திர ஏடுகளில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்கள்? ஒரு விசேஷமென்ன வென்றால், இந்தக் கவிஞர்கள் அத்தனை பேரும், எந்தவிதமான சூழ்நிலையில் இருந்த போதிலும், தங்களுடைய கவிதா சக்தியை இழந்துபோக விடாமல் பாதுகாத்து வந்திருக்கிறார்கள்; தங்களுடைய உணர்ச்சிகளையோ, அனுபவங்களையோ கவிதைகள் வாயிலாக வெளியிட்டு மனநிறைவு பெற்றிருக்கிறார்கள்.
இனி, அமரகவிகளென்று சீனர்கள் போற்றும் ஒரு சிலரைச் சந்திப்போம்:
கி. மு. ஐந்தாவது நூற்றாண்டின் கடைசியில், சீனாவில் சிறு சிறு ராஜ்யங்கள் ஏற்பட்டு ஒன்றோடொன்று போரிட்டுக் கொண்டி ருந்தன. இவற்றுள் ஒன்று சி ராஜ்யம்; இன்னொன்று சின் ராஜ்யம்; மற்றொன்று சூ ராஜ்யம்1 இந்த மூன்றாவது ராஜ்யம், மற்ற இரண்டைக் காட்டிலும் பெரிது; இருந்தாலும் அந்த இரண்டும் இதனை அடிக்கடி அச்சுறுத்திக் கொண்டிருந்தன.
சூ ராஜ்யத்தில், பரம்பரையான பணக்காரக் குடும்பமொன்றில் கி. மு. 340-ஆம் வருஷம் சூ யுவான் 2 என்ற ஒருவன் பிறந்தான். இவன் பிறந்த காலத்தில் சூ ராஜ்யம் பலவீனப்பட்டுக் கிடந்தது. அதை எப்படியாவது வலுப்பெறச் செய்ய வேண்டுமென்ற ஆவல் இவனுக்கு இளமையிலேயே உண்டாயிற்று. இதற்கேற்றாற்போல், இவனுடைய இருபதாவது வயதில் அரசாங்க நிருவாகத்தில் பங்கு கொள்ளும் வாய்ப்பு இவனுக்குக் கிட்டியது. சிறிது காலத்திற்குள் மந்திரிகளில் ஒருவனாக நியமிக்கப்பட்டு, அரசனை அடிக்கடி அணுகி ஆலோசனை சொல்லும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றான்.
ஒரு சமயம், சின் ராஜ்யத்தினால் சூ ராஜ்யத்திற்கு ஆபத்து ஏற்படும் போலிருந்தது. இது தெரிந்த சூ யுவான், அடுத்தாற் போலுள்ள சி ராஜ்யத்துடன் நட்புக் கொள்ள வேண்டுமென்றும், அதே சமயத்தில் உள்நாட்டில் அரசாங்க நிருவாக சம்பந்தமாகச் சில சீர்திருத்தங்கள் செய்யப்படவேண்டுமென்றும், தன் அரசனுக்கு ஆலோசனை கூறினான். அரசவையிலிருந்த சில சுய நலக்காரர்கள், இவனுடைய ஆலோசனையை அரசன் கேட்க வொட்டாதபடி செய்தனர்; அது மட்டுமல்ல; அரசனுக்கும் இவனுக்கும் பகை மையை உண்டுபண்ணி விட்டனர். இதன் விளைவாக இவன் நாடு கடத்தப் பட்டான். நாடு கடத்தப் பட்ட பிறகு இவன், பல இடங்களில் சுற்றித் திரிந்தான்; தன் தாய் நாட்டின் அவல நிலை குறித்து வேதனைப்பட்டான். இந்த வேதனையிலிருந்து அநேக கவிதைகள் பிறந்தன.
இவன், சூ ராஜ்யத்தை விட்டு வெளியேறின சில ஆண்டு களுக்குப் பிறகு, அந்த ராஜ்யம் சின் ராஜ்யத்துப் படைகளால் அழிந்துபட்டது. அதைக் கேள்வியுற்றுப் புலம்பிக் கண்ணீர் வடித்தான்; இனி உயிர்வாழ்தல் உசிதமில்லையென்று தீர்மானித்து மிலோ1 என்ற ஆற்றில் மூழ்கி இறந்து போனான்.
இருபது வருஷத்திற்கு மேலாக, சூ ராஜ்யத்திற்குப் புறத்தியாக இவன் இருந்தபோதிலும், தாய் நாடாகிய சீனாவை விட்டு வெளியேறி எங்கும் செல்ல விரும்பவில்லை; தாய் நாட்டு மண்ணிலும் நீரிலும் புனிதத் தன்மையைக் கண்டான். வாழ்ந்தாலும் அழிந்தாலும் தாய் நாட்டில்தான் என்ற ஒரே சங்கற்பத்துடன் இருந்தான். இவன் இறந்த நாளை, சீனர்கள் ஒரு திருவிழாவாக இப்பொழுதும் கொண்டாடி வருகிறார்கள்.
சூ யுவான், உண்மையான தேச பக்தன்; சிறந்த கவிஞன்; தாய் நாட்டு மக்களிடத்தில் அதிக அன்பு செலுத்தினான்; அவர்களுடைய துயரத்தைக் கண்டு மனமுருகினான். எனது நாட்டு மக்கள், துயரத் தினாலும் அச்சத் தினாலும் தலை குனிந்து கிடப் பதைக் கண்டு நான் பெரு மூச்சு விடுகிறேன்; வழிந்தோடும் என் கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறேன் என்று ஒரு கவிதையில் புலம்புகிறான்.
சூ யுவானுடைய கவிதைகள், சாதாரண ஜனங்கள் புரிந்து கொள்கிறமாதிரி மிகவும் எளிய முறையில் அமைந்திருக்கின்றன. மக்கள், சர்வ சாதாரணமாக உபயோகிக்கும் சொற்களைத் தனது கவிதைகளில் அதிகம் புகுத்தி, அதன் மூலம் உணர்ச்சியை உண்டு பண்ணி, அதை மக்களின் இதயத்திலே பாயவிட்டிருக்கிறான்.
சூ யுவானுடைய கவிதைகளிலிருந்து சில பகுதிகளை, உரைநடையில் இங்குச் சொல்லிக்காட்ட ஆசைப்படுகிறோம்.
எனக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களை நான் பொருட் படுத்த வில்லை. என் அரசனுடைய செங்கோல் விழுந்து விடுமே என்பதற் காகவே அஞ்சினேன். அப்படி விழுந்து விடாதபடி தடுக்க முயன்று, முன்னும் பின்னுமாக ஓடினேன். முற்காலத்து அரசர்கள் சென்ற வழியில் அவனைத் திருப்ப, ஓய்வுகொள்ளாமல் முயன்றேன். ஆனால் அவனோ, எனது நேர்மையை இகழ்ந்து சொல்லிவிட்டான். என்னைப் பற்றிய அவதூறுகளுக்குச் செவி கொடுத்தான். அதனால் என் மீது அவனுக்குக் கோபம் ஏற்பட்டது. நேர்மையாக நடந்து கொள் வதனால் ஏதும் பயனுண்டாகாதென்பது எனக்குத் தெரிந்தது தான். ஆயினும் நான் எதையும் சகித்துக் கொண்டிருந்தேன். ஏனென்றால், என் அரசனைக் கைவிட்டுவிடக் கூடாதல்லவா? அவனுக்காக நான் மிகவும் பாடுபட்டேன். தேவகணங்களே இதற்குச் சாட்சி. என் சொற்படி நடப்பதாகத்தான் அவன் வாக்குக் கொடுத்தான். ஆனால் உடனே அவன் மனம் மாறி விட்டது. மற்றவர்களுடைய ஆலோசனைகளுக்குச் செவி கொடுத்தான். அவனை விட்டுவிலகிப் போனதற்காக நான் வருந்தவில்லை. அவனுடைய ஆளுஞ்சக்தி வீணாகி விட்டதைக் கண்டுதான் வருத்தப்படுகிறேன்.!
அரசனுக்கு நல்வழிகாட்ட வேண்டியவர்கள் அப்படிக் காட்டாமல், தாங்கள் எவைகளையெல்லாம் விரும் பினார்களோ அவைகளை யெல்லாம் ஆசை தீரக் கைப்பற்றிக் கொண்டார்கள். ஆனால் என் மனம் அவைமீது செல்ல வில்லை. சிறிதுகூட இரக்கங் காட்டாத முதுமை என்னை அணுக அணுக, என்னுடைய நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சந்தான் எனக்கு உண்டாகிறது.
அந்த (சூ) ராஜ்யத்தில், என்னுடைய நற்பண்புகள் இகழப்பட்டன. அப்படியிருக்க, சத்துருக்களால் அழிக்கப் பட்டுப்போன அந்த ராஜ்யத்திற்காக நான் ஏன் இரக்கப் படவேண்டும்? உலகம் பரந்ததுதான். ஆனால் (எது நன்மை, எது தீமையென்று பாகுபடுத்திப் பார்க்கக்கூடிய) விவேகத்தை எங்கும் காணமுடியவில்லை. ஆகையால் நான் இந்த (மிலோ) நதியிடம் சரணடைகின்றேன்.
தன்னுடைய நேர்மையும் ராஜபக்தியும் இகழ்ந்துரைக்கப் பட்டதற்காக வருந்தி இவை மாதிரி இன்னும் அநேக கவிதைகளைப் பாடியிருக் கிறான் சூ யுவான்.
வாங் வெய்1 என்ற ஒருவன், சிறந்த கவிஞனாகவும் அதே சமயத்தில் சிறந்த ஓவியனாகவும் திகழ்ந்தான். இவனுடைய கவிதைகள் பேசும் ஓவியங்களாகவும் , ஓவியங்கள் மௌனக் கவிதைகளாகவும் விளங்கின. இவன் காலத்திலிருந்துதான் ஒவ்வொரு கவிதையும் ஒவ்வோர் ஓவியம்; ஒவ்வோர் ஓவியமும் ஒவ்வொரு கவிதை என்ற வாசகம், பேச்சு வழக்கில் வரத்தலைப்பட்டதென்பர். தவிர, இந்த வாங் வெய், தன்னுடைய பல ஓவியங்களின் மீதும் தன்னுடைய கவிதைகளையும் எழுதி வெளியிட்டான். இவன் புத்த மதத்தில் பெரும் பற்றுடையவன்; தன்னுடைய தாயும் மனைவியும் இறந்து விட்ட பிறகு, தான் வசித்துக் கொண்டிருந்த வீட்டை ஒரு பௌத்த மடமாக்கி விட்டான்.
லீ போ2 என்ற ஒருவன், பத்தாவது வயதிலேயே கவிபாடத் தொடங்கினான். பன்னிரண்டாவது வயதில் ஒரு ஞானியாக வாழ விரும்பி, ஒரு மலைக்குச் சென்று, அங்குப் பல வருஷ காலம் வசித்து வந்தான். இதன் விளைவாக, எத்தனை பேர் வந்தாலும் அவர்களை எதிர்த்து நிற்பேன் என்று சொல்லிக்கொள்ளக்கூடிய அளவுக்கு தேகபலம் பெற்றான்; உடலில் ஒரு பொலிவும் ஏற்பட்டது. மலை வாசத்தை முடித்துக்கொண்டு ஊர் ஊராகச் சுற்றித்திரிய ஆரம் பித்தான். ஆங்காங்கு, காதல் மதுவை, கன்னியர் பலரின் இதழ் களிலிருந்து பருகினான். உண்மையான மதுவுண்டு மயங்கிக் கிடந்த நாட்களும் பல. இந்த மயக்கத்திலிருந்துதான் இவனுடைய சிறந்த கவிதைகள் பிறந்தனவென்பர். ஒரு கோப்பை மது அருந்த பல மைல்கள் நடந்து செல்வான். இவனுடைய சம காலத்தவனும் நெருங்கிய தோழனுமான தூ பூ3 என்ற கவிஞன் இவனைப் பற்றி, ஒரு கவிதையில் லீ போவுக்கு ஒரு ஜாடி நிறைய மதுவைக் கொடுத்து விடுங்கள். உடனே நூறு கவிதைகளைப் பாடிவிடுவான் என்று குறிப்பிடுகிறான். லீ போ, கவிதையை விற்று மதுவைப் பெற்றான் என்று கூறுவர் சிலர்.
இவனுடைய கவிதைகளைப் பெரிதும் பாராட்டி வந்த அரசாங்க மந்திரியொருவன், கவிதைகள் இயற்ற இவனுக்கு உற்சாகம் ஏற்படவேண்டுமென்பதற்காக, சில சமயங்களில், தன் வீட்டு நகைகளை விற்றுப் பணமாக்கி, அந்தப் பணத்தைக்கொண்டு மது வாங்கி இவனுக்குக் கொடுத்திருக்கிறானென்றால், இவனுடைய கவிதைகளின் வசீகர சக்தியை என்னென்று சொல்வது?
லீ போவுக்குக் காலாகாலத்தில் முறையாகத் திருமணம் நடைபெற்றது. குழந்தைகளும் பிறந்தன. ஆனால் குடும்பத்தைக் காப்பாற்றப் போதுமான வருமானம் இவனுக்குக் கிடைக்கவில்லை. கிடைத்த சொற்பத்தையும் மதுக்கடையில் செலவழித்துக் கொண்டி ருந்தான். சில வருஷ காலம் பொறுமையோடிருந்து குடும்பத்தை நடத்திப் பார்த்தாள் இவன் மனைவி. முடியவில்லை. இவனைத் தனிமையிலே விட்டுவிட்டு, குழந்தை குட்டிகளோடு வேற்றூருக்குச் சென்று விட்டாள். அவளை நினைத்துக்கொண்டு புலம்புகிறான் ஒரு கவிதையில்:-
அழகியே, நீ என்னுடன் இருந்தபொழுது வீடு நிறைய மலர்களை நிரப்பி வைத்தேன். அழகியே, என்னைவிட்டுப் போய் விட்டாய். சூனியமான படுக்கைப் பலகை மட்டும் கிடக்கிறது. அந்தப் பலகையின் மீது விரிக்கப்பட்டிருந்த சித்திர வேலைப் பாடமைந்த மெத்தை சுருட்டி வைக்கப் பட்டிருக்கிறது. என்னால் தூங்க முடியவில்லை. நீ பிரிந்து சென்று மூன்று வருஷங்களாகி விட்டன. ஆயினும் நீ விட்டுப் போன வாசனை என்னோடு இன்னும் சஞ்சரித்துக் கொண்டி ருக்கிறது. அஃது என்னை எப்பொழுதும் சுற்றிக் கொண்டு தானிருக்கும்போலும். என் அன்பே! நீ எங்கே இருக்கிறாய்? உன்னை நினைத்துப் பெரு மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறேன்
கடைசிக் காலத்தில், லீ போவின் வாழ்க்கை, ஒரே துயரம் நிறைந்ததாய் இருந்தது. சிறிது காலம் சிறையிலே கழித்தான். சிறிது காலம் நாடோடி வாழ்க்கையை நடத்தினான். திரும்ப, தன் சொந்த ஊருக்கு வந்து மூன்று வருஷ காலம் நோய்வாய்ப்பட்டுக் கிடந்தான். கடைசியில் ஒரு நாள் மாலை, மதுவுண்ட மயக்கத்தில், ஆற்றோர மாக நடந்து சென்று கொண்டிருந்த பொழுது, தண்ணீரில் காணப் பட்ட சந்திர பிம்பத்தைத் தழுவிக்கொள்ள முயன்று, அதில் குதித்தான்; அப்படியே முழுகிப் போனான்.
லீ போவின் கவிதா சக்தியை மதிப்பிட்டுக் காட்டும் தற்கால அறிஞனொருவன் கூறுகிறான்:- லீ போ கவிதை உலகத்தில் காணப் பெறும் ஆயிரக் கணக்கான குன்றுகளுக்கு மேற்பட்டு நிற்கும் ஓர் உயர்ந்த மலை; கவிதை வானில் பிரகாசிக்கும் ஒரு சூரியன். இவனுக்கு முன்னால், மற்றக் கவிஞர்கள், விட்டுவிட்டுப் பிரகாசிக்கும் நட் சத்திரங்களே.
லீ போவின் சம காலத்தவன் தூ பூ என்று மேலே சொன்னோம். அது மட்டுமல்ல; இருவரும் கவிதை உலகத்தின் இரட்டையர் என்று சொல்லவேண்டும். இருவரும் சகோதரர்கள் போல் உறவு கொண்டாடினார்கள். ஒன்றாகவே உலவப் போவார்கள்; ஒரே படுக்கையில் படுப்பார்கள்.
தூ பூ முதலில் அரசாங்க உயர்தர உத்தியோகங்களுக்காக நடைபெற்ற போட்டிப் பரீட்சைக்கு உட்கார்ந்தான். வெற்றி பெறவில்லை. ஏன் தெரியுமா? கவிதையைப் பற்றிய கேள்விகளுக்கு இவன் சரியாக விடையளிக்கவில்லை! ஆனால் பிற்காலத்தில், சீனாவின் தலை சிறந்த கவிஞர்களில் ஒருவனாகப் போற்றப் பட்டான்; இன்றளவும் போற்றப்படுகிறான். புதிர் மாதிரி இல்லையா இது?
பரீட்சையில் வெற்றிபெறவில்லையென்பதற்காக, தூ பூ மனச்சோர்வு கொள்ளவில்லை. மேலும் மேலும் கவிதைகள் எழுதிக்கொண்டு வந்தான். இவற்றுள் சில கவிதைகள், அப்பொழுது அரசுக் கட்டிலில் வீற்றிருந்த மிங் ஹுவாங்கின்1 பார்வைக்கு எட்டின. அவன் இவைகளைப் படித்துவிட்டு தூ பூ வை மறுபடியும் அரசாங்கப் போட்டிப் பரீட்சைக்கு உட்கார்ந்து எழுதும்படி செய்தான்; வெற்றி பெறவும் வைத்தான். உடனே இவனுக்கு- தூ பூவுக்கு- அரசாங்க உயர்தர உத்தியோக மொன்று கிடைத்தது. அதிலிருந்து, தன் சொந்தக் கிராமத்தையும் அங்கு வசித்துக் கொண்டிருந்த மனைவி மக்களையும் சிறிது காலம் மறந்துவிட்டு, தலைநகரமாகிய சாங்கானிலேயே வசிக்கத் தொடங்கினான். அங் குள்ள மதுக்கடைகள் இவனுக்கு அடிக்கடி நல்வரவு கூறின. லீ போவுடன் நெருங்கிய உறவு கொண்டிருந்தவனல்லவா?
மிங் ஹுவாங் ஆட்சியின் பிற்பகுதியில் ஆன் லூஷான், தலைநகரத்தின் மீது படையெடுத்து வந்ததன் விளைவாகக் கொள்ளையும் கொலையும் நடைபெற்றபொழுது2 தூ பூ தலை நகரத்தை விட்டு ஓடிவிட்டான். அப்பொழுது இவனுடைய மனைவி மக்கள் இவனுடன் வந்து சேர்ந்திருந்தனர். அவர்களோடு ஊர் ஊராகச் சுற்றித் திரிந்தான். தனக்கும், தன் மனைவி மக்களுக்கும் ஒருவேளைச் சோறு போட்டவர்களுக்கு நன்றி செலுத்துகின்ற முறையில் அவர்களைப் புகழ்ந்து பாடினான். இப்படி ஊர் சுற்றித் திரிந்துகொண்டிருக்கையில், இவனுடைய கவிதைகளில் ஈடுபட்டி ருந்த ஒரு ராணுவப் பிரபு, இவனை யதேச்சையாகச் சந்தித்தான்; நிம்மதியான வாழ்க்கை நடத்துவதற்கான வசதிகளை இவனுக்குச் செய்து கொடுத்தான். இந்தக் காலத்தில் இவன்-தூ பூ-இயற்கைக் காட்சிகளைப் பற்றி அருமையான கவிதைகள் பல பாடி மன அமைதி பெற்றான்.
ஆனால் துரதிருஷ்டம் இவனை விடவில்லை. இவனை ஆதரித்து வந்த அந்த ராணுவப் பிரபு திடீரென்று இறந்துவிட்டான். இனி எங்கே செல்வது? சுற்று முற்றும் கொலைகளும் கொள்ளை களும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. வேறு வழி தெரியவில்லை. மீண்டும் வறுமையிடம் தஞ்சம் புகுந்தான். இந்த நிலையில் மனைவி மக்களும் இவனை வெறுத்தனர். அப்பொழுது, இவன், மனம் நொந்து சில பாடல்களைப் பாடினான். சொற்ப காலத்திற்குள் உள்ளமழிந்து உருக்குலைந்து போனான். நடமாடுஞ் சக்தியைக் கூட இழந்துவிட்டான் இவனது குடிசையின் கூரையை, காற்று பிய்த்துக் கொண்டு போய்விட்டது. இவன் படுக்கையின் கீழ் போட்டுக் கொண்டிருந்த வைக்கோலை, அக்கம் பக்கத்திலிருந்த சிறுவர்கள் எடுத்துக்கொண்டு போய் இவனுக்கு விளையாட்டுக் காட்டினார்கள்.
கடைசி நாட்களில் மதத்தின் மீது இவன் மனம் திரும்பியது. புத்த மதத்தில் ஆறுதல் காண விழைந்தான். உடம்பில் சிறிது தெம்பும் ஏற்பட்டது. பௌத்த மடமொன்றிற்கு யாத்திரை புறப்படத் துணிந்தான். தள்ளாடிக்கொண்டு சிறிது தூரம் சென்றான். வழியில் இவன் கவிதைகளைப் படித்திருந்த ஓர் அரசாங்க உத்தியோகதன், இவனை இன்னானென்று தெரிந்து கொண்டு வரவேற்று விருந் தளித்து உபசரித்தான். வெகு காலமாகப் பசியினால் வாடிக்கிடந்த இவன் வயிறு, அளவுக்கு மீறிய உணவை ஏற்றுக்கொண்டு விட்டது. விருந்து முடிந்ததும், அந்த உத்தியோகதன், இவனை ஒரு கவிதை பாடச் சொன்னான். பாட யத்தனிக்கையில், மயக்கமடைந்து கீழே விழுந்தான். உயிரும் உடலைவிட்டுப் பிரிந்தது. அப்பொழுது இவனுக்கு வயது ஐம்பத்தெட்டுதான்.
லீ போவும் தூ பூவும், தங்களுக்கு ஆதரவு தந்தவர்களைப் பல விதமாகப் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள். ஆனால் அப்படிப் பட்டவர் களின் புகழ் நீடித்து நிற்க வில்லை; பாடிய இவர்களுடைய புகழ்தான் நீடித்துப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. உலக இலக்கியப் பூங்கா வில் உலவுவோர்க்கு இஃது ஒரு புதிராகவோ புதுமையாகவோ இராது.
போ சூயி1 என்ற ஒரு கவிஞன். லீ போவையும் தூ பூ வையும் போலில்லாமல் இவனுடைய வாழ்க்கை, செப்பனிட்ட ஒரு பாதை யாக அமைந்தது. அரசாங்க சேவையில் அமர்ந்து படிப்படியாக உத்தியோக உயர்வு பெற்றான்; ராணுவ இலாகாவின் தலைமைப் பதவியைக்கூட வகித்தான். என்றாலும் கவிதை உள்ளம் படைத்திருந் தான். இதனால் உத்தியோக அலுவல்களுக்கிடையே கவிதைகள் புனைய அவகாசம் எடுத்துக்கொண்டான். தினந்தோறும் இவன் பலரோடு நெருங்கிப் பழக நேரிட்டாலும், தன் மன ஒருமையைக் காப்பாற்றி வந்தான். அந்தச் சக்தி இவனிடம் இருந்தது. இதனால் மன அமைதியுடன் கவிதைச் சோலைக்குள் அவ்வப்பொழுது புகுவது இவனுக்குச் சிரமமாயிருக்க வில்லை. நாலாயிரம் கவிதை களுக்குமேல் இயற்றியிருக்கிறான். இவற்றில் பல அமர முத்திரை பெற்றிருக்கின்றன.
இவன் உயர்தர உத்தியோகம் வகித்திருந்த போதிலும், சாதாரண ஜனங்களோடு நெருங்கிப் பழகுவான்; தன் கவிதைகளை அவர்களுக்குப் படித்துக் காட்டுவான்; அவர்களுக்குப் புரியாத பகுதிகளை விளக்கிச் சொல்வான். இதனால் அவர்களுடைய அன்பையும் மதிப்பையும் பெற்றான். அவர்களிடையே இவன் கவிதைகள் நன்றாகப் பரவின. வீடு, பள்ளிக் கூடம், மடம் முதலிய வற்றின் சுவர்களில் இவனுடைய கவிதைகள் பொறிக்கப்பட்டன. அவை களை ஜனங்கள் சுலபமாக மனப்பாடஞ் செய்து கொண்டார்கள். சாதாரண மக்களிடத்தில் அதிக செல்வாக்குப் பெற்று, இன்றளவும் புகழோடு விளங்கி வருகிறவன் போ சூயி என்று சுருக்கமாகக் கூறலாம்.
உலகத்தில் பொதுவாக, அதிமேதையர்கள், வறுமையோடு போராடிக் கொண்டுதான் வாழ்க்கையை நடத்தியிருக்கிறார்கள். ஏதோ ஓர் இல்லாமைக் குறை அவர்களை வாட்டி வந்திருக்கிறது. சீனக் கவிஞர்களைப் பொறுத்தமட்டில், மிகச் சிலரைத் தவிர பெரும்பாலோர், இந்த நியதிக்குட்பட்டவர்களாகவே இருந்திருக் கிறார்கள். ஸூ டுங் போ1 என்ற ஒரு கவிஞன் , தான் அறிவு பெற்றிருப் பதற்காகவே வருத்தமே படுகிறான்! கூறுகிறான் ஒரு கவிதையில்:-
குடும்பத்தில் ஒரு குழந்தை பிறந்தால் அது புத்தி சாலியாயிருக்க வேண்டுமென்று எல்லோரும் விரும்பு கிறார்கள். நானோ, புத்திசாலித்தனத்தினால் என் வாழ்க்கை முழுவதையும் சின்னா பின்னப்படுத்திக்கொண்டு விட்டேன். ஆனால் ஒரு நம்பிக்கை மட்டும் எனக்கு இருக்கிறது. என் மகன் கல்லாத மூடனாயிருப்பா னென்பதுதான் அந்த நம்பிக்கை. அப்பொழுதுதான் அவன் அரசாங்கத்தில் ஒரு மந்திரியா யிருந்து கொண்டு அமைதியான வாழ்க்கையை நடத்துவான்.
வருத்தமும் சிரிப்பும் கலந்து வெளி வருகின்றன இந்தக் கவிதையில்!
உலகத்து நாடுகள் பல, சரித்திர ஏடுகளில் இடம் பெறக்கூடிய பக்குவத்தையடையாதிருந்த காலத்தில், சீனாவில் சரித்திர நூல்கள் பல வெளிவந்து கொண்டிருந்தன. முதல் அத்தியாயத்திலேயே இதைப் பற்றி லேசாகச் சுட்டிக்காட்டினோமில்லையா? சீன இலக்கி யத்தில், சரித்திரம், மிகவும் கௌரவமான தானத்தைப் பெற்றிருக் கிறது. மற்ற நூல்களைக் காட்டிலும், சரித்திர நூல்களைத்தான் மக்கள் விரும்பிப் படிக்கிறார்கள். மற்ற நாடுகளைவிட சீனாவில் தான் சரித்திராசிரியர்களின் எண்ணிக்கை அதிகம். சீனாவைத் தவிர வேறெந்த நாட்டிலும் அவ்வளவு விரிவாகச் சரித்திரம் எழுதப்பட்ட தில்லை. இப்படி ஒரு மேலை நாட்டு அறிஞன் கூறுகிறான்.
சீன அரசவையில், சரித்திராசிரியனுக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டிருந்தது. அவன், அரசனுடைய அன்றாட அலுவல்கள், ஆசாபாசங்கள் , வெற்றி தோல்விகள் முதலியவைகளைப் பற்றியும், ஏதோ ஒரு வகையில் பிரபலமடைந்திருக்கிறவர்களுடைய வாழ்க்கை விவரங்களைப் பற்றியும் அவ்வப்பொழுது குறித்துக் கொண்டு வந்தான். இப்படி ஒவ்வோர் அரசன் காலத்திலும் குறிக்கப் பட்டுவந்த செய்திகள் பலவும் சேர்ந்து, நாளா வட்டத்தில் ஒரு சரித்திரக் களஞ்சி யமாகவே ஆகிவிட்டது. இவையனைத்தையும் பரிசீலனைசெய்து, கொள்ளவேண்டி யதைக் கொண்டும், தள்ள வேண்டியதைத் தள்ளியும் தொகுத்துப் பல புத்தகங்களாக வெளி யிட மஞ்சூ அரசாங்கம் ஓர் ஏற்பாடு செய்தது. இதன்படி 1747-ஆம் வருஷம் இருநூற்றுப் பத்தொன்பது பெரிய புத்தகங்கள் வெளியாயின.
சீன சரித்திராசிரியர்களில் தலைசிறந்தவனாகக் கருதப்படு கிறவன் ஸூமா சீன்1 என்பவன். பரம்பரையாக ஆதான சோதிடர் களாயிருந்து வந்தவர்களின் குடும்பத்திலே பிறந்த இவன், பத்து வயது பூர்த்தியாவதற்குள் கற்க வேண்டியதில் பெருமளவு கற்றுக் கொண்டு விட்டான். ஆனால் உலகமென்னும் கல்லூரியிலே படிக்க வேண்டாமா? இதற்காக இருபதாவது வயதில் யாத்திரை தொடங் கினான். ராஜ்யம் முழுவதையும் சுற்றிப் பார்த்து அநேக அனுபவங் களைப் பெற்றான். திரும்பி வந்ததும் அரசாங்கத்தில் ஓர் உத்தி யோகம் கிடைத்தது. அப்பொழுது வூ டீ மன்னன் அரசபீடத்தில் அமர்ந்திருந்தான். அவன், தான் புதிதாக வெற்றிகொண்ட சில பிரதேசங்களின் நிலைமையை விசாரித் தறிந்து வரும்படி இவனை- ஸூமாவை - அனுப்பினான். இவனும் அப்படியே விசாரித்து வந்து, அரசனுக்குத் திருப்தி தரும் முறையில் ஓர்அறிக்கை சமர்ப்பித்தான். அரசவையில் இவனுக்கு நல்ல மதிப்பு ஏற்பட்டது.
ஏறக்குறைய இவனுடைய முப்பத்தைந்தாவது வயதில் இவன் தந்தை இறந்து போகவே, அவனுடைய பதவியில் ஆதான சோதிடனாக நியமிக்கப் பெற்றான். பதவி ஏற்றுக்கொண்டதும், பஞ்சாங்கத்தைப் புதிய முறையில் கணிக்கும் பணியில் ஈடுபட்டு அதில் ஓரளவு வெற்றியும் பெற்றான். பிறகு, தன் தகப்பனார் தொடங்கி அரை குறையாக விட்டுப் போயிருந்த சரித்திரத் தொகுப்பு வேலையை-ஹுவாங் தீ என்ற மஞ்சள் சக்ரவர்த்தியின் ஆட்சி காலத்திலிருந்து ஹான் வமிச ஆட்சிவரை2யுள்ள சரித்திர ஏடுகளைப் பரிசீலனை செய்து ஒழுங்காகத் தொகுக்கும் வேலையை-தொடர்ந்து மேற் கொண்டான். கடினமான உழைப்புக்குப் பிறகு வேலையும் முடிந்தது. நூலும் வெளியாயிற்று. இதற்கு ஷி சி3 என்று பெயர். சரித்திர ஏடு களின் தொகுப்பு என்று இதற்கு அர்த்தம். இந்தத் தொகுப்பு நூல், ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. (1) சக்ரவர்த்திகளின் ஆட்சியைப் பற்றிய காலக்கிரமமான சரித்திரம், (2) அரச வமிசங்களின் அட்டவணை, (3) ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் தனித்தனிக் குறிப்பேடுகள், (4) சிற்றரசர்களின் ஆட்சியைப்பற்றிய காலக்கிரமமான சரித்திரம், (5) அந்தந்த ஆட்சி காலத்தில் வாழ்ந்த முக்கியதர்களின் வாழ்க்கை வரலாறுகள். இங்ஙனம் ஐந்து பகுதிகளைக்கொண்ட இந்தத் தொகுப்பு நூலே, பிற்காலத்தில் வந்த சரித்திர நூல்களுக்கெல்லாம் முன் மாதிரியாயிருந்தது.
ஸூமா சீன், ஒரு நிறைகுடம். அறிவுக்குத் தகுந்த அடக்க முடையவன். தன்னுடைய தொகுப்பு நூலை அரசனுடைய பார்வைக்கு அனுப்புகையில், அதனோடு ஒரு கடிதத்தை எழுதி இணைத்து அனுப்பினான். அந்தக் கடிதத்தின் வாசகம் வருமாறு:-
சக்ரவர்த்தியவர்களின் ஊழியனுக்கு1 தேகபலம் குன்றி வருகிறது; கண் பார்வை மங்கலாகிவருகிறது; ஒரு சில பற்களே விழாமல் இருக்கின்றன; அடிக்கடி ஞாபக மறதி ஏற்படுகிறது. அவனுடைய உழைக்கும் சக்தி பூராவும் இந்தத் தொகுப்பு நூல் தயாரிப்பிலே செலவழிந்துவிட்டது. சக்ர வர்த்தியாகிய தாங்கள் என்னுடைய நன்னோக்கத்தை மனத்துட்கொண்டு, இந்த என் முயற்சிக்காக என்னை மன்னிப் பீர்களென்று நம்புகிறேன். தங்களுடைய ஓய்வு நேரத்தில், இந்த நூலின் மீது சிறிது பார்வை செலுத்தவேண்டுகிறேன். அப்படிச் செலுத்துவீர்களாயின், முந்திய அரச வமிசங்களின் வாழ்வு தேய்வுகளிலிருந்து இன்றைய (ஆட்சியின்) வெற்றி தோல்விகளின் ரகசியத்தை நன்கு தெரிந்து கொள்ளலாம். அப்படித் தெரிந்து கொண்டதனால் உண்டாகக்கூடிய அறிவு, ராஜ்யத்தின் நன்மைக்காகப் பயன்படுத்தப்படுமாயின், அப் பொழுதே தங்களுடைய இந்த ஊழியனின் நோக்கமும் ஆசையும் நிறைவேறியதாகும்.
இந்தச் சிறிய கடிதத்தின் மூலம் ஸூமா, ஆதான சோதிடனாக மட்டுமில்லை, சரித்திராசிரியனாக மட்டுமில்லை, அரசனுக்கு, அவனுடைய முன்னோர்கள் சென்ற நெறி இன்னதென்று சொல்லா மல் சுட்டிக் காட்டும் துணைவனாகவும் இருந்தானென்று அறிந்து கொள்கிறோம்.
ஸூமாவுக்கு அடுத்தபடி சிறந்த சரித்திராசிரியனாகக் கருதப் படுகிறவன் ஸூமா குவாங் என்பவன். இவன் பெயரை ஏற்கனவே வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறோம்2 இந்த ஸூமா குவாங், ஒரு சிறந்த ராஜதந்திரி; கவிஞன் கூட. இவன் கி. மு. ஐந்தாவது நூற்றாண்டிலிருந்து கி. பி. பத்தாவது நூற்றாண்டுக் கடைசி வரை சுமார் ஆயிரத்தைந் நூறு வருஷ சரித்திர நிகழ்ச்சிகளைத் தொகுத்து ஒரு நூலாக 1084-ஆம் வருஷம் வெளியிட்டான். இதற்கு த்ஸு சி டுங் சீன்1 என்று பெயர். சரித்திரக் கண்ணாடி என்பது இதன் பொருள். ஒரு கண்ணாடியில் பார்ப்பது போல், பழைய கால நிகழ்ச்சிகளைப் பார்ப்பது அரசாங்க நிருவாகத்தைத் திறம்பட நடத்த உதவியாயி ருக்குமாதலால், இந்த நூலுக்குச் சரித்திரக் கண்ணாடியென்ற பெயர் கொடுக்கப்பட்டதென்று சொல்லப்படுகிறது. இந்த நூலின் நடை நயமாக இருந்தபோதிலும் இதன் அமைப்பு முறை சரியில்லை யென்று சொல்லி சூ ஹ்ஸி2 என்ற அறிஞனுடைய மேற்பார்வையில் புதிய முறையில் பின்னர்ப் பதிப்பிக்கப்பட்டது.
ஸூமா சீனையும் ஸூமா குவாங்கையும் போல் இன்னும் எத்தனையோ அறிஞர்கள் ஒவ்வோர் அரச வமிசாவளியைப் பற்றியோ, ஒவ்வோர் அரசனுடைய ஆட்சியைப் பற்றியோ, தனித்தனிச் சரித்திர நூல்கள் பல எழுதியிருக்கிறார்கள்; இவர்கள், தாங்கள் சொல்ல வேண்டியதை அழகாகச் சொல்லவேண்டுமென்று கருதி எழுத வில்லை; உள்ளதை உள்ளபடி சொல்லவேண்டுமென்பதற்காக எழுதினார்கள். இதன் பொருட்டு, தங்கள் உழைப்புச் சக்தியை யெல்லாம் செலவழித்தார்கள். அவ்வளவென்ன? உண்மையைச் சொல்ல முனைந்த அநேகருக்கு உத்தியோகமே போய் விட்டது; உயிரைப் பறிகொடுத்தவர்களும் உண்டு.
கிறிது சகத்திற்குச் சில நூற்றாண்டுகள் முந்தியே, சீனாவில் அகராதிகள் வெளியாகியிருக்கின்றன. முதன்3முதலாக வெளியான அகராதி எர் ஹ்யா என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. சொல்லி லக்கணத்தைப் பற்றிய ஒரு நூல் பிரசுரமாகியிருக்கிறது. பொதுவாக, சொல்லகராதி, பெயரகராதி போன்ற அகராதி வகைகளுக்கும் பல விஷய மஞ்சரிகளுக்கும் குறைவேயில்லை யென்று கூறலாம்.
மேலை நாடு, அஞ்ஞான இருளில் மூழ்கிக் கிடந்த காலத்தில், சீனா, ஞான மார்க்கத்தைப் பற்றிய அரிய நூல்களை வெளியிட்டு வந்தது. அறிஞர்கள் பலர் தோன்றி தத்துவ விசாரம் செய்து வந்தார்கள்; தாங்கள் கண்ட உண்மைகளை, நூல்களாக வெளியிட, அதிகார பலமோ, பண பலமோ படைத்தவர்களின் ஆதரவைப் பெற்றார்கள். நீதி நூல்கள் கணக்கின்றி வெளிவந்து கொண்டி ருந்தன. லாவோத்ஸே, கன்பூஷிய போன்றவர்களுடைய நூல்களைத் தவிர, வெளியுலகத்திற்கு அறிமுகமாகாத நூற்றுக்கணக்கான அறிஞர்களு டைய நூல்கள் வெளிவந்து, சீன சமுதாய வாழ்வுக்கு ஒருவித திரத் தன்மையைக் கொடுத்தன. இவற்றுள் சில, விஞ்ஞான முன்னேற்றம் என்ற பெயரால் ஏற்படக்கூடிய மேலெழுந்த வாரியான சில அனு கூலங்களில் தனி மனிதனோ சமுதாயமோ மயங்கிப் போகாமல், நிலையான அனுகூலங்களைத் தரக்கூடிய வழியைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று வலியுறுத்திக்கூறத் தவறவில்லை. புத்தமதம் புகுந்து பரவியதையொட்டி, மத சம்பந்தமான ஆராய்ச்சி நூல்களும் மொழிபெயர்ப்பு நூல்களும் நூற்றுக்கணக்கில் வெளிவந்தன.
சீனா ஒரு விவசாய நாடல்லவா? இதனால், விவசாயத் துறையில் ஈடுபட்டிருக்கிறவர்களுக்கு உதவியாயிருக்கக்கூடிய பலவகை நூல்கள், அதாவது , மண்வளத்தின் தராதரத்தை எப்படி அறிவது, மகசூலுக்கு முன் செய்ய வேண்டிய காரியங்கள் யாவை, வெள்ளத் தினாலும் மண் அரிப்பினாலும் கூடிய மட்டில் சேதங்கள் உண்டாகாமல் தடுக்கக்கூடிய வழிமுறைகள் என்னென்ன, அணைகள் கட்டுதல், பாலங்கள் அமைத்தல், கால்வாய்கள் தோண்டுதல் முதலியவை பற்றிய நுணுக்கங்கள் ஆகிய இவையனைத்தையும் விவரிக்கின்ற நூல்கள், பூகோள சாதிர சம்பந்தமான நூல்கள் இப்படிப்பட்டவை, கிறிது சகத்திற்கு முந்தியே வெளிவரத் தலைப்பட்டுவிட்டன.
கணித, சாதிரம், வான சாதிரம், வைத்திய சாதிரம் முதலிய துறைகளில், சீன அறிஞர்கள், கிறிது சகத்திற்கு முந்தியே நல்ல அறிவு பெற்றிருந்தார்கள்; ஆராய்ச்சியும் நடத்தி வந்தார்கள். சில நூல்களும் வெளியாகியிருக்கின்றன. இந்தத் துறைகளில் மேலும் முன்னேற்றம் காண இவர்கள் விழைந்தார்கள். இவர்களுக்குக் கிறிது சகத்தின் ஆரம்ப நூற்றாண்டுகளில், இந்தியாவிலிருந்து சென்ற மேற்படி சாதிரங்களைப் பற்றிய வடமொழி நூல்களும், அவற்றின் சீன மொழிபெயர்ப்பு நூல்களும் மிகவும் உதவியாயிருந்தன. முன்னேற்றம் கண்டார்கள். அநேக உண்மைகள் வெளியாயின.
சாங் த்ஸாங்1 என்ற ஓர் அறிஞன். நூறாவது வயதை எட்டிப் பார்த்துவிட்டு கி.மு. 152-ஆம் வருஷம் இறந்து போனான். இவன், பீஜ கணிதத்தைப் பற்றியும் க்ஷேத்திர கணிதத்தைப் பற்றியும் ஒரு நூலெழுதியிருக்கின்றான். கி. மு. மூன்றாவது நூற்றாண்டில் வாழ்ந்த ஹுவா டோ2 என்பவன், சத்திர வைத்தியத்தைப் பற்றியும், கி.மு. இரண்டாவது நூற்றாண்டில் வாழ்ந்த சாங் சுங் நிங்3 என்பவன், பத்திய முறைகளைப் பற்றியும் பலவகைக் காய்ச்சல்களைப் பற்றியும் முறையே நூல்கள் எழுதியிருக்கிறார்கள். நூற் றாண்டுக் கடைசியில், வாங் ஷுஹோ4 என்பவன், நாடித் துடிப்புக் களைப்பற்றி விரிவான ஆராய்ச்சி நூலொன்று எழுதி வெளியிட்டான். கி. பி. ஆறாவது நூற்றாண்டின் ஆரம்பத்தில், சீன வைத்தியத்தில் உபயோகிக்கப்பெறும் எழுநூற்று முப்பது வகையான மருந்துச் சாமான்களைப் பற்றி ஒரு நூல்வெளியாயிற்று. இதை எழுதியவன் டாவோ ஹுங் சிங்1 என்ற ஒரு பிரபல வைத்தியன். பத்தாயிரம் வகையான காய்ச்சல்களைப்பற்றி ஒரு வைத்திய நூல் கூறியிருக்கிறது. இருபத்து நான்கு விதமான நாடித் துடிப்புக்களைப் பற்றி ஒரு நூல் விவரித்திருக்கிறது.
இவைபோல் இன்னும் பலதுறை நூல்களைப் பற்றியும் பலவகை அறிஞர்களைப் பற்றியும் எவ்வளவோ சொல்லிக்கொண்டு போகலாம். ஆனால் அஃது, இந்த நூலுக்கு நாம் வகுத்துக்கொண்ட வரம்பை மீறிச் சென்றதாகும். எனவே, சீன அறிஞர்களால் காணப் பெறாத, தொடப்பெறாத இலக்கியத் துறையே இல்லை என்று மீண்டும் ஒரு முறை சொன்னால், அது மிகைபடச் சொன்னதாகாது.
சீனாவும் இந்தியாவும்
சீனாவில் ஹான் வமிச ஆட்சி ஆரம்பித்த காலத்திலிருந்து தான், அதாவது கி. மு. இரண்டாவது நூற்றாண்டிலிருந்துதான், அதற்கும் வெளிநாடுகளுக்கும் தொடர்பு ஏற்படத் தொடங்கிய தென்று பொதுவாகச் சொல்வதுண்டு. இந்தியாவைத் தவிர்த்த மற்ற நாடுகளைப் பொறுத்தமட்டில் இப்படிச் சொல்வது சரிதான். ஆனால் கி. மு. இரண்டாவது நூற்றாண்டுக்குச் சிறிது காலம் முந்தி யிருந்தே, சீனாவுக்கும் இந்தியாவுக்கும் தொடர்பு இருந்து வந்திருக் கிறது. நெருங்கிய தொடர்பாயில்லாமல் ஏகதேசமான தொடர் பாயிருந் திருக்கலாம். தொடர்பு இருந்ததென்னவோ நிச்சயம். இதைப் பற்றிப் பின்னர்ப் பேசுவோம்.
இந்தியாவைத் தவிர்த்த மற்ற நாடுகளென்று சொன்னால், சிறப்பாக ஐரோப்பாவையே குறிக்கும். அராபிய நாடுகளும் தொடர்பு கொண்டிருந்தன.
ஹான் வமிசத்தைச் சேர்ந்த வூ டீ என்ற மன்னன் ஆண்டு கொண்டிருந்த பொழுது (கி. மு. 140-87) வடக்குப் பக்கத்திலிருந்து ஹூணர்கள் என்ற ஒரு வகை முரட்டு ஜாதியினர் சீனாவின் மீது அடிக்கடி படையெடுத்து வந்தார்கள். இவர்களைத் தடுத்து நிறுத்த, வூ டீ மன்னன், யுயே சி1 என்ற வேறொரு வகை முரட்டு ஜாதியாரின் உதவியைப் பெறும் பொருட்டு, தகுதியுள்ள ஒரு படைத் தலைவனை மேற்படி ஜாதியாரிடம் தூதனுப்பினான். இந்தத் தூதன்தான் ஏற்கனவே சொல்லப் பெற்ற சாங் சீன்.2
இவன், நூறுபேரைத் தனக்குத் துணைவர்களாக அழைத்துக் கொண்டு வட மேற்கு நோக்கிச் சுமார் மூவாயிரத்திருநூறு கிலோ மீட்டர் (சுமார் இரண்டாயிரம் மைல்) தூரம் நடைப் பயணமாகச் சென்று, பொக்காரா3 என்னும் பிரதேசத்தை அடைந்தான். மேற் கொண்டு செல்லவிருக்கையில், ஹூணர்கள், இவனையும் இவன் துணைவர்களையும் சிறைப்படுத்தி விட்டார்கள். சுமார் பத்து வருஷ காலம் சிறைவாசியாகவே கிடந்தான். பிறகு விடுதலை கிடைத்தது. மேற்கொண்டு பயணம் தொடங்கினான். மறுபடியும் ஹூணர்கள் இவனைப் பிடித்துச் சிறைவைத்து விட்டார்கள். எப்படியோ மீண்டும் விடுதலை பெற்றான். சுமார் மூன்று வருஷங் கழித்து வூ டீ மன்னனிடம் திரும்பிவந்து சேர்ந்தான்.1 இவனுடன் சென்ற நூறு பேரில், இருவர் மட்டுமே இவனுடன் வந்தனர். மற்றவர், வழியில் ஆங்காங்கு இறந்துபோய் விட்டனர்.
சாங் சீன், எந்தக் காரியத்திற்காகச் சென்றானோ அந்தக் காரியம் நிறைவேறவில்லை; யுயே சி ஜாதியாரின் உதவியைப் பெற முடியவில்லை. ஆயினும் இவனுடைய இந்தப் பயணம் சீனாவுக்கும் வெளிநாடுகளுக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்படுவதற்குத் தூண்டு தலாயமைந்தது.
சாங் சீன், இந்த நடைப் பயணத்தின்போது, கிரேக்கர் களுடைய செல்வாக்குக்கு அப்பொழுது உள்பட்டிருந்த பாக்ட்ரியா2 தேசத்தின் தலைநகரத்தில் சிறிது காலம் தங்கினான். அங்குக் கடைத் தெருவில் விசித்திர வேலைப்பாடமைந்த பிரம்புக் கழிகளும், பருத்தித் துணிகளும் நிரம்பியிருந்தன. இவை எங்கிருந்து வருகின்றன வென்று விசாரித்தான். இந்தியாவிலிருந்து என்று சொன்னார்கள். இவைபோல் இன்னும் பல நாட்டுப் பொருள்களும் அங்குக் காணப் பட்டன. பல நாட்டு வியாபாரி களையும் அங்குச் சந்தித்தான் சாங் சீன். மாதிரிக்காக, சில பொருள்களை விலை கொடுத்து வாங்கிக் கொண்டான். சீனா திரும்பியதும், இவைகளை வூ டீ மன்னனுக்குக் காட்டினான். இவைகளைக் கண்டு மன்னன் ஆச்சரியமடைந்தான். இந்தப் பொருள்களை உற்பத்தி செய்கிற நாடுகளுடன் தொடர்பு கொள்ள வேண்டுமென்று தீர்மானித்தான்.
சாங் சீன், சீனாவிலிருந்து புறப்பட்டபோது, தன்னுடன் பட்டுத்துணிகளில் பல ரகங்களை எடுத்துச் சென்றிருந்தான். இவன் தங்கிய இடங்களில் இந்தத் துணிரகங்களைப் பார்த்த அந்நிய நாட்டு வியாபாரிகள், இவைகளை விலை கொடுத்து வாங்கி, தங்கள் நாட்டுக்கு எடுத்துச் சென்றார்கள். இங்ஙனம் பரபரம் பொருள் பரிவர்த்தனையை அடிப்படையாகக் கொண்டே, சீனாவுக்கும் வெளிநாடுகளுக்கும் தொடர்பு ஆரம்பித்தது.
ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்தமட்டில், இந்தப் பொருள் பரிவர்த்தனை, ஏறக்குறைய கி.பி. பதினைந்தாவது நூற்றாண்டு வரையில், தரைவழியாகவே நடைபெற்று வந்தது. வியாபாரிகள், தங்கள் சரக்குகளை ஒட்டகங்கள் மீது ஏற்றிக்கொண்டு, கோபி பாலைவனத்தையும்1 மத்திய ஆசிய நாடுகளையும் கடந்து வருவதும் போவதுமாயிருந்தார்கள். இந்த வழியாகச் சீனாவிலிருந்து பட்டும், தேயிலையும், உலர்ந்த பழவகைகளும், பீங்கான் சாமான்களும், காகிதமும், வெடிமருந்தும் ஐரோப்பாவுக்குச் சென்றன. சீனாவில் தயாரிக்கப்பட்ட சீட்டுக் கட்டுகளுக்கு ஐரோப்பாவில் அதிக கிராக்கி இருந்ததாகத் தெரிகிறது. ஐரோப்பாவிலிருந்து சீனாவுக்கு வந்த பொருள்களில் குறிப்பிடத்தக்கவை, உலர்ந்த திராட்சை, கால் நடைகளுக்குத் தீவனமாக உபயோகப்படும் ஒருவகைப் புல், மனிதர்களின் உணவுப்பொருள்களில் ஒன்றாகிய ஒருவகை வேர்க் கிழங்கு, கண்ணாடிச் சாமான்கள் முதலியவையாகும்.
சீனாவிலிருந்து ஐரோப்பாவுக்கோ, அப்படியே ஐரோப்பா விலிருந்து சீனாவுக்கோ சரக்குகளைக் கொண்டுசேர்க்க, குறைந்த பட்சம் இரண்டு வருஷகாலம் பிடித்ததென்றும், சில சமயங்களில் மூன்று வருஷங்கள் கூட ஆகிவிடுமென்றும் ஒரு வரலாறு கூறுகிறது. தரைவழி யல்லவா? அதிலும் செழிப்புள்ள பூமியா? ஒரு யாத்திரிகன் வருணித்திருக்கிற மாதிரி, இந்த வழியில், முக்கியமாக கோபி பாலை வனத்தைக் கடக்கிறபோது ஆகாயத்தில் ஒரு பறவையைக் கூட காண முடியாது. அப்படியே கீழே அகன்ற மணற்பரப்பில் ஒரு ஜீவஜந்து வையும் பார்க்கமுடியாது. ஏதாவது ஒரு தேய்ந்த பாதை இருக்குமா வென்றால், அதுவும் இராது. முந்திச் சென்றவர்களின் எலும்புக் கூடுகள், வழிநெடுகக் கிடக்கும். அவைகளைக் கொண்டு தான் தடம்பிடித்துச் செல்லவேண்டும்.
இத்தனை விதமான சிரமங்கள் இருந்த போதிலும், வியாபாரம் சுறுசுறுப்பாகவே நடைபெற்று வந்தது. வியாபாரிகள் தங்கின இடங் களெல்லாம், காலக்கிரமத்தில் புதிய புதிய நகரங்களாக அமைந்து, இந்தத் தரை வழி வியாபாரத்தை ஊக்குவித்தன.
கிறிது சகத்திற்கு ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகளுக்கு முந்தி, ஐரோப்பாவில் பிரசித்தியடைந்திருந்த ரோம சாம்ராஜ்யத் திற்குச் சீனாவிலிருந்து பல வகையான பட்டுத்துணிகள் வந்து கொண்டிருந்ததாக ரோம சரித்திராசிரியர்கள் கூறியிருக்கிறார்கள்.
இங்ஙனம் வியாபாரப் போக்குவரத்து, கி. மு. இரண்டாவது நூற்றாண்டு முதல் கி.பி.பதினைந்தாவது நூற்றாண்டு வரை, தரைவழியே பெரும்பாலும் உபயோகிக்கப்பட்டு வந்ததென்றாலும், ஏறக்குறைய கி. பி. இரண்டாவது நூற்றாண்டிலிருந்து கடல் வழியும் காணப்பட்டு, ஏகதேசமாக உபயோகிக்கப்பட்டு வந்தது. இந்தக் கடல்வழிக்குக் காரணமாயிருந்தவர்கள் அராபியர்களும் ரோமர் களுமாவார்கள். இவர்கள்தான் துணிந்து கடலில் கலஞ் செலுத்தி, இந்தியா, தென்கிழக்கு ஆசிய நாடுகள், சீனா முதலிய பிரதேசங் களுக்குச் சென்று பொருள் பரிவர்த்தனை செய்து வந்தார்கள். அந் தந்த நாட்டு அரசாங்கங்களுடன் அரசியல் தொடர்பும் கொண்டார்கள்.
ரோம சாம்ராஜ்யத்தை அறத்தின் வழியே ஆண்டுவந்த மார்க்க அரேலிய1 மன்னனின் தூதர்களென்று சொல்லிக் கொண்டு சில வியாபாரிகள் 166-ஆம் வருஷம் சீனாவுக்கு வந்து போயினர். 226-ஆம் ஆண்டிலும், 284-ஆம் ஆண்டிலும் ரோம சாம்ராஜ்யத்துத் தூதுகோஷ்டிகள் காண்ட்டன் நகரம் போந்து, சிறிதுகாலம் தங்கியிருந்ததாக ஒரு வரலாறு கூறுகிறது. அராபியாவி லிருந்து சில தூதுகோஷ்டிகள் கி. பி. இரண்டாவது நூற்றாண்டில் சீனாவுக்கு வந்துபோயின.இந்தத் தூதுகோஷ்டிகள் பலவும் கடல் வழியையே உபயோகப்படுத்தின. ஆனால் இந்தக் கடல்வழி முக்கியத் துவம் பெற்றது பதினைந்தாவது நூற்றாண்டுக்குப் பிறகு தான். இந்த வழியாக வந்தவர்களைப் பற்றி ஏற்கனவே பத்தாவது அத்தியாயத்தில் சொல்லியிருக்கிறோம்.
இனி சீனாவுக்கும் இந்தியாவுக்கும் ஏற்பட்ட தொடர்பைப் பற்றிப் பேசுவோம். இந்தத் தொடர்பை, வடஇந்தியாவுடன் தொடர்பு என்றும் தென்னிந்தியாவுடன் தொடர்பு என்றும் இரண்டு வகை யாகப் பிரித்துப் பேசவேண்டியிருக்கிறது. ஏனென்றால், வட இந்தியத் தொடர்பு பெரும்பாலும் தரைவழியாகவே ஏற்பட்டது. தென்னிந் தியத் தொடர்பு, பெரும்பாலும் கடல் வழியாகவே ஏற்பட்டது. ஐரோப் பாவுடன் ஏற்பட்ட தொடர்பும் ஏறக்குறைய இப்படித் தானே?
வடஇந்தியாவுடன் தொடர்பு கொள்வதற்கமைந்த தரை வழிகள் ஒன்றுக்கு மேற்பட்டிருந்தன. சிலர், சாங் சீன் சென்ற வழியைப் பின்பற்றி, மத்திய ஆசியாவுக்கும், அங்கிருந்து ஆப்கனி தானம் வழியாக இந்தியாவுக்கும் வந்து, காஷ்மீரம், தற்போதைய மேற்கு பாகிதான் முதலிய பிரதேசங்களுடன் தொடர்பு கொண்டனர். இந்தப் பிரதேசங்களிலிருந்து சீனாவுக்குச் சென்றவர்களுக்கும் இந்த வழியே சுலபமாயிருந்தது. வேறு சிலர், பர்மா, அஸாம் வழியாக இந்தியா போந்து, கிழக்கு வங்காளம், மேற்கு வங்காளம், பீஹார், மத்தியப் பிரதேசம் முதலிய பகுதிகளுடன் தொடர்பு கொண்டனர். தென்மேற்கு சீனாவிலிருந்து வந்தவர்களோ, அதற்கு மேற்படி பகுதி களிலிருந்து சென்றவர்களோ இந்த வழியையே பின்பற்றினர். இன்னும் சிலர், திபேத்து வழியாக இந்தியா வந்து, தற்போதைய உத்தரப் பிரதேசம், ராஜதானம் முதலியவைகளுடன் தொடர்பு கொண்டனர். இந்தப் பிரதேசங்களிலிருந்து சீனாவுக்குச் சென்றவர்களும் இந்த வழியையே பின்பற்றிச் சீனாவின் மேற்குப் பகுதிகளுடன் சுலபமாகத் தொடர்பு கொண்டனர். இவை போல் இன்னும் சில தரை வழிகள் இருந்தன. வந்து போனவர்களெல்லோரும் ஒரே வழியைப் பின்பற்றி னார்களென்று சொல்லமுடியாது. சீதோஷ்ண நிலை, வந்தபோதோ போனபோதோ ஏற்பட்ட அனுபவங்கள் ஆகியவை களை யொட்டி வழிகளை மாற்றிக் கொண்டனர். ஒரு தடவை பிரயாணத் திற்கு வருஷங்கள் பல பிடித்தன. இந்த வழிகளாக வந்தவர்களிலோ, சென்றவர்களிலோ பெரும்பாலோர் வியாபாரிகளாகவும் புத்த மத பிரசாரகர்களாகவும் இருந்தனர். ஏகதேசமாக, அரசாங்க தூது கோஷ்டிகளும் வந்து போயின.
இந்தியாவில் பாடலிபுத்திரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மௌரியப் பேரரசனாகிய அசோகன் (கி.மு. 304-232) புத்த மதத்தைப் பரப்பும் பொருட்டு, பிரசாரகர்கள் பலரை அநேக நாடுகளுக்கு அனுப்பி வந்தான். இவர்களிற் சிலர், சீனாவுக்குச் சென்றனர் என்று கருத ஆதாரமிருக்கிறது. எப்படியென்றால், சீனாவின் சின் வமிசத்து முதல் மன்னனாகிய ஷி ஹு வாங் தீ ஆண்டு கொண்டி ருந்த காலத்தில் (கி.மு. 221-211) தலைநகரமாகிய ஹீன்யாங்குக்கு பதினெட்டு பிட்சுகள் வந்ததாகவும், இவர்கள் தங்களோடு பௌத்த கிரந்தங்களை எடுத்து வந்ததாகவும், இவர்களை அரசன் தெரியாத் தனமாகச் சிறையில் வைத்தானென்றும், ஒரு நாளிரவு பதினாறு அடி உயரமுள்ள தங்க விக்கிரகம் ஒன்று தோன்றி, சிறைச் சாலையைத் திறந்து, இவர்களை விடுதலை செய்வித்ததென்றும் ஒரு வரலாறு சீனாவில் வெகுகாலமாக வழங்கப்பட்டு வருகிறது.
இங்ஙனம் கிறிது சகத்திற்கு முந்தி, சீனாவுக்கும் இந்தியாவுக்கும் மத சம்பந்தமான தொடர்பு இருந்து வந்ததென்றாலும், இஃது ஏற்கனவே சொன்னபடி ஏகதேசமான தொடர்பாகவே இருந்து வந்தது. கிறிது சகம் தொடங்கிய பிறகுதான், இந்த மதத் தொடர்பு அதிகப்பட்டது; வலுப்பெற்றது.
ஹான் வமிசத்தைச் சேர்ந்த மிங் என்ற மன்னன் ஆண்ட காலத்தில்தான் (57-75) சீனாவில் புத்தமதம் வேரூன்றத் தொடங்கிய தென்று சொல்லவேண்டும். இந்த மிங் மன்னன், தெரிந்தெடுத்த பன்னிரண்டு பண்டிதர்களை மேற்குப் பிரதேசங்களுக்கு அனுப்பி, புத்த மதத்தைப் பற்றி நன்றாக அறிந்து கொண்டு வரும்படி உத்தர விட்டான். இவர்கள் இந்தியா போந்து, காசியப மாதங்கர், தர்மா ரணியர் என்ற இரண்டு பிட்சுக்களை அழைத்துக்கொண்டு 67-ஆம் வருஷம், சீனாவின் அப்பொழுதைய தலைநகரமாயிருந்த லோயாங் குக்குத் திரும்பி வந்தனர். பிட்சுக்கள், தங்களோடு சில பௌத்த கிரந்தங்களையும் சில புத்த விக்கிரகங்களையும் கொண்டு வந்தனர். கொண்டு வந்த கிரந்தங்களில் சிலவற்றை, அரசன் விருப்பத்திற் கிணங்க, சீன மொழியில் மொழி பெயர்த்தனர். அதே சமயத்தில் லோயாங்கில் பௌத்த விஹாரம் (கோயில்) ஒன்றும் கட்டப் பெற்றது. இதற்கு வெள்ளைக் குதிரை விஹாரம்1 என்று பெயர். பிட்சுக்கள், கிரந்தங்களையும் விக்கிரகங் களையும் ஒரு வெள்ளைக் குதிரை மீதேற்றிக் கொண்டு வந்ததனால் இந்தப் பெயர் கொடுக்கப் பட்டது. நாளது வரையில் இந்த விஹாரம் பழுதுறாமல் பாதுகாக்கப் பட்டு வருகிறது.
கி. பி. 67-ஆம் ஆண்டு முதல், தொடர்ந்து இந்தியாவிலிருந்து சீனாவுக்குச் சென்ற பௌத்த சந்நியாசிகள் கணக்கிலர். அசோக னுடைய முயற்சியினால் புத்தமதம் எங்கெங்கெல்லாம் பரவி யிருந்ததோ அங்கெல்லாமிருந்தும் பௌத்த சந்நியாசிகள் பலர் சீனாவுக்குச் சென்று புத்த மதத்தைப் பரப்பி இருக்கிறார்கள். இவர்களில் அநேகர், பௌத்த கிரந்தங்களைச் சீன மொழியில் மொழி பெயர்க் கும் தொண்டில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்க ளோடு, புத்த மதத்தில் சேர்ந்து துறவு பூண்ட சீன அறிஞர் பலர் ஒத்துழைத்தி ருக்கிறார்கள்.
குமாரஜீவன் என்ற ஒரு பெரும் புலவன் - இவன், சுமார் மூவாயிரம் சீன அறிஞர்களுடைய ஒத்துழைப்பைப் பெற்று, புத்த மத நூல்கள் பலவற்றைச் சீன மொழியில் மொழிபெயர்த்திருக் கிறான். இவனைப் பின்பற்றி, பரமார்த்தன், தர்மரட்சகன், ஞான குப்தன், தனபாலன், தர்மகுப்தன், இப்படி எத்தனையோ பேருடைய இலக்கியப் பணி, புத்தமதம் தீவிரமாகப் பரவுவதற்கு உதவி புரிந் திருக்கிறது.
இந்தியாவிலிருந்து வந்த பௌத்த சந்நியாசிகளின் அறிவு ஆராய்ச்சித் திறனையும், மதப் பற்றையும், இனிய சுபாவத்தையும் கண்ட சீன அறிஞர் பலருக்கு, புத்த மதத்தின் தாயகமான இந்தியாவை நேரில் சென்று காண வேண்டுமென்றும், இந்தியாவின் கலாசார பரம்பரையைப் பற்றியும், புத்த மதத்தின் நுணுக்கங்களைப் பற்றியும் இன்னும் அதிகமாகத் தெரிந்து கொள்ள வேண்டு மென்றும் ஆவல் உண்டாயிற்று. இதன் விளைவாக இந்தியா போந்தனர் சீன அறிஞர் பலர். இங்ஙனம் வந்து போவதை இவர்கள் ஒரு புனித யாத்திரையாகவே கருதினார்கள். இவர்களில் ஒரு சிலரையேனும் நாம் அறிமுகப் படுத்திக் கொள்ள வேண்டாமா?
முதலாவதாகச் சொல்லப்பட வேண்டியவன் பாஹியான்2 என்பவன். இவன் இந்தியா போந்து, புத்தர் பிரான் பிறந்து, வாழ்ந்து, உபதேசித்த புனித தலங்களையெல்லாம் தரிசித்து வரவேண்டு மென்பதற்காகவும், அதே சமயத்தில் புத்த மதத்தைப் பற்றி இன்னும் விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவும், தன்னோ டொத்த நண்பர் சிலருடன் 389-ஆம் வருஷம் சீனாவிலிருந்து நடைப் பயணமாகப் புறப்பட்டான். புறப்பட்டு, கோபி பாலைவனத்தையும் மத்திய ஆசிய நாடுகளையும் கடந்து இந்தியாவில் காஷ்மீரம் வந்து சேர இவனுக்குச் சுமார் ஆறு வருஷகாலம் பிடித்தது. பிறகு வட இந்தியாவில், பௌத்த தலங்களுக்கு, அதாவது வட மதுரை, அயோத்தியை, சிரா வதி, குசீநகரம், கபிலவாது, கௌசாம்பி, சாரநாத் முதலிய தலங்களுக்கு யாத்திரை செய்தான். அப்பொழுது வட இந்தியாவின் பெரும் பகுதி குப்த மன்னர்களுடைய ஆளுகைக் குட்பட்டிருந்தது. பாஹியான் வந்த காலத்தில் இரண்டாவது சந்திரகுப்தன்1 என்பவன் ஆண்டு வந்தான். (376-414) பாடலிபுத்திரம் தலைநகரமாயிருந்தது.
பாஹியான், பாடலிபுத்திரத்தில் சுமார் மூன்று வருஷகாலம் தங்கி வடமொழி கற்று, அதில் தேர்ச்சியும் பெற்று, பிட்சுக்கள் அனுசரிக்க வேண்டிய ஒழுக்கவிதிகளைத் தெளிவாக எழுதிக் கொண்டான். புத்தமத சம்பந்தமான அநேக வட மொழி நூல்களைச் சேகரித்துக்கொண்டான். ஏறக்குறைய 411- ஆம் வருஷம் வங்காளத் திலுள்ள தாம்ரலிப்தி (தாம்லுக்)2 என்னும் துறைமுகப்பட்டினத் திலிருந்து கப்பலேறி பதினான்கு நாட்களில், நேரே இலங்கை போய்ச் சேர்ந்தான். அங்குச் சுமார் இரண்டு வருஷ காலம் தங்கி புத்த மத கிரந்தங்களில் மேலும் ஆராய்ச்சி நடத்தினான். சில அரிய நூல்களும் அங்கு இவனுக்குக் கிடைத்தன. இவைகளை எடுத்துக் கொண்டு கடல் மார்க்கமாகப் புறப்பட்டான். வழியில் அநேக விதமான இடையூறுகள் ஏற்பட்டன. எல்லாவற்றையும் சமாளித்துக் கொண்டு கடைசியில் 414 - ஆம் வருஷம் சீனா போய்ச் சேர்ந்தான். சேர்ந்ததும், தான் இந்தியாவிலிருந்து கொண்டு வந்த நூல்கள் சிலவற்றைச் சீன மொழியில் மொழி பெயர்த்தான். இவன் இறக்கும் போது எண்பத்தெட்டு வயது.
பாஹியான், தன்னுடைய யாத்திரையைப்பற்றி ஒரு நூல் எழுதியிருக்கிறான். இதிலிருந்து, ஐந்தாம் நூற்றாண்டில், வட இந்தியாவின் நிலைமை பொதுவாக சுபிட்சமாயிருந்ததென்று அறிந்து கொள்கிறோம்.
பாஹியானுக்குப் பிறகு 404-ஆம் வருஷம் சே மாங்1 என்பவன், பதினைந்து பிட்சுக்களுடன் இந்தியாவை நோக்கிப் புறப்பட்டான். வழியில் எத்தனையோ கஷ்ட நஷ்டங்கள், எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு இந்தியா வந்து, புத்தமத கிரந்தங்கள் பலவற்றைச் சேகரித்துக் கொண்டு, ஒரே ஒரு பிட்சுவுடன் மட்டும் 424-ஆம் வருஷம் சீனா போய்ச் சேர்ந்தான். மற்ற பதினான்கு பேரில், சிலர் வரும் போது பாதி வழியிலேயே சீனாவுக்குத் திரும்பிப் போய்விட்டனர்; மற்றவர், பிரயாண அலுப்புத் தாங்க முடியாமல் வழியில் இறந்து விட்டனர்.
சே மாங்கைத் தொடர்ந்து பே யாங்2 என்பவன், இருபத்தைந்து பேருடன் 420-ஆம் வருஷம் சீனாவிலிருந்து புறப்பட்டு, மத்திய ஆசியா வழியாக காஷ்மீரம் வந்து சேர்ந்து, அநேக நூல் களைச் சேகரித்துக் கொண்டு, கடல் வழியாகச் சீனாவுக்குத் திரும்பிச் சென்றான்.
கிறிது சகத்தின் ஆரம்ப காலத்திலிருந்து ஆறாவது நூற்றாண்டு வரை, ஒவ்வொரு நூற்றாண்டிலும், சீனாவுக்கும் இந்தியாவுக்கு மிடையே நூற்றுக்கணக்கான யாத்திரிகர்கள் வந்து போனார்களென் றாலும், இவர்கள் மூலம் இந்தியாவில் தோன்றிய புத்த மதத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவின் வெகுநாளைய கலா சாரத்திற்கும் சீனாவில் அதிக மதிப்பு ஏற்பட்டுவந்ததென்றாலும், ஏழாவது நூற்றாண்டில் தான், இந்த யாத்திரிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆயிரக் கணக்கில் வந்து போனார்கள்; புத்த மதத் திற்கும் இந்திய கலாசாரத் திற்கும் சீனாவில் ஏற்பட்டிருந்த மதிப்பு உச்ச நிலையையடைந்தது.
இதற்குக் காரணம், ஏழாவது நூற்றாண்டில் இந்தியாவும் சீனாவும் அநேக அமிசங்களில் ஒரேமாதிரி யாகச் சிறப்புற்றிருந்தது தான். இந்த நூற்றாண்டுத் தொடக்கத்தில், சீனாவில் தாங் வமிச ஆட்சி தொடங்கியது. நாளுக்கு நாள் இதன் செல்வாக்கு அதிகரித்து வந்தது. எல்லாத் துறைகளிலும் ஒருவித செழுமை காணப்பட்டது. இங்ஙனமே இந்தியாவும், ஏழாவது நூற்றாண்டுத் தொடக்கத்தில், - ஏறக்குறைய வட இந்தியா முழுவதும் ஹர்ஷன் என்ற பேரரசனு டைய ஆட்சிக்குட்பட்டு, - பல துறைகளிலும் செழிப்புற்றிருந்தது. அறிவையும் நட்பையும் வளர்த்துக்கொள்ளவேண்டு மென்ற ஆவல் இருநாடுகளிலும் அதிகரித்துக் காணப்பட்டது. இத்தகைய சூழ் நிலையில், வியாபாரிகள். கலைஞர்கள், புத்த மதத்தில் பற்றுள்ளங் கொண்டவர்கள், இப்படி ஆயிரக்கணக்கான பேர், இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையே வந்து போனார்கள். இந்திய அரசவைகளுக்குச் சீனாவிலிருந்து வந்து போன அரசியல் தூது கோஷ்டிகளின் எண்ணிக்கையும் இந்த ஏழாவது நூற்றாண்டில் அதிகமாயிருந்தது.
இந்த நூற்றாண்டுத் தொடக்கத்தில்தான், இந்திய சரித்திர மாணாக்கர்கள் நன்கு அறிந்த ஹ்யூன் த்ஸாங்1 என்பவன் இந்தி யாவுக்கு வந்துபோனான். இருபதாவது வயதிலேயே துறவு பூண்ட இவன், புத்த மத கிரந்தங்களைப்பற்றி ஆராய்ந்து கொண்டு வருகையில், இந்த கிரந்தங்களின் சீன மொழிபெயர்ப்புக்கள் திருப்தி தரத்தக்கன வாயில்லை யென்று கருதி, இந்தியாவுக்குச் சென்று அறிவு விளக்கம் பெற்றுவரத் தீர்மானித்தான். அப்படியே 629-ஆம் வருஷம் சீனாவி லிருந்து புறப்பட்டு மத்திய ஆசியா வழியாக இந்தியா வந்து, முதல் இரண்டு வருஷ காலம் காஷ்மீரத்திலும், பிறகு சிறிது காலம் மற்ற இடங்களிலும் தங்கி, புத்த மத கிரந்தங்களை ஆராயும் வேலையில் ஈடுபட்டான். அது முடிந்ததும். அப்பொழுது மிகப் பிரசித்தமா யிருந்த நாளந்தை சர்வ கலாசாலையில்2 சுமார் இரண்டு வருஷகாலம் இருந்து, அதன் தலைவனாயிருந்த சீலபத்திரன் என்ற பேரறிஞனிடம் பயிற்சிபெற்றான். பிறகு இந்தியா முழுவதும் சுற்றிப் பார்த்தான். தன்னுடைய யாத்திரையைப் பற்றி எழுதியிருக்கும் நூலில், சுமார் நூற்று முப்பத்தெட்டு ராஜ்யங்களை, தான் பார்த்த தாகக் கூறுகிறான். தான் பார்த்த காட்சிகள், சந்தித்த அறிஞர்கள், அடைந்த அனுபவங்கள், இப்படிப் பல விவரங்களை இவன் இந்த நூலில் சுவைபட விவரித்திருக்கிறான்.
இந்தியாவில் இவன் சுற்றுப்பிராயணஞ் செய்த காலத்தில், அநேக அரசர்கள் இவனை வரவேற்றுக் கௌரவித்திருக்கிறார்கள். இவன் சீனாவுக்குத் திரும்பிச் செல்லும்போது, வழிச் செலவுக்காக, ஹர்ஷ சக்ரவர்த்தி, மூவாயிரம் பொற்காசுகளும் பதினாயிரம் வெள்ளிக் காசுகளும் இவனுக்கு வழங்கியதோடு, இவனால் சேகரிக்கப் பட்ட சுமார் அறுநூற்றைம்பது புத்த மத கிரந்தங்களைப் பாதுகாப் போடு எடுத்துச் செல்வதற்கு வேண்டிய உதவிகளையும் செய்தான்.
ஏறக்குறைய பதினைந்து வருஷ காலம் யாத்திரை செய்து விட்டு கி. பி. 645-ஆம் வருஷம் சீனாவுக்குத் திரும்பிச் சென்றதும், ஹ்யூன் த்ஸாங், இந்தியாவிலிருந்து தான் கொண்டுவந்த நூல்களில் எழுபத்து நான்கு நூல்களைச் சீன மொழியில் மொழி பெயர்த்தான். சுமார் இருபது வருஷ காலம் இந்த மொழி பெயர்ப்புப் பணி யிலேயே செலவிட்டுவிட்டுக் கடைசியில் 664-ஆம் வருஷம் இயற்கை எய்தினான்.
ஹ்யூன் த்ஸாங்குக்குப் பிறகு இந்தியாவுக்கு வந்து போன சீன யாத்திரிகர் பலர். இவர்களில் முக்கியமானவன் இட்ஸிங்3 என்பவன். இவன் கடல்வழியாக வந்து போனான். சுமார் இருபத்து நான்கு வருஷ காலம் யாத்திரை செய்தான். இந்தியாவில் தங்கியிருந்தபோது, ஏறத்தாழ பத்து ஆண்டுகள் வரை நாளந்தை சர்வகலாசாலையில், புத்த மதத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்வதிலும் அந்த மத சம்பந்தமான கிரந்தங்களை நகல் செய்து கொள்வதிலும் கழித்தான். திரும்பும் போது, நானூறு நூல்களை எடுத்துச் சென்றானென்பர். சீனாவுக்குத் திரும்பிச் சென்றதும், இவற்றில் ஐம்பத்தாறு நூல்களைச் சீன மொழியில் மொழிபெயர்த்தான். சம்கிருத-சீன மொழி அகராதி யொன்றைத் தயாரித்தான். தன்னுடைய யாத்திரையைப் பற்றி ஒரு சிறந்த நூலெழுதி வெளியிட்டான். சுமார் முப்பது ராஜ் யங்களில் இவன் யாத்திரை செய்ததாக இந்த நூலிலிருந்து தெரிய வருகிறது. இந்த யாத்திரை நூலைத் தவிர, இந்தியாவுக்கு வந்துபோன அறுபது பௌத்த சந்நியாசிகளின் வாழ்க்கை வரலாறுகளையும் எழுதி யிருக்கிறான்.
இங்ஙனம் கி. பி. ஏழாவது நூற்றாண்டில் அதிகப் படியான சீன அறிஞர்கள் இந்தியாவுக்கு வந்துபோனதைப் போல், அதிகப் படியான இந்திய அறிஞர்களும் சீனாவுக்குச் சென்றிருக்கிறார்கள்; சென்று இலக்கிய சேவை செய்திருக்கிறார்கள்.
பிரபாகர மித்திரன் என்ற ஒரு மகாபண்டிதன் 627-ஆம் வருஷம் சீனா சென்றடைந்து, சீன மன்னனுடைய ஆதரவைப் பெற்று, அநேக பௌத்த நூல்களைச் சீன மொழியில் மொழி பெயர்த்தான். இவனுக்கு உதவி செய்ய, மன்னன், பத்தொன்பது அறிஞர்களை நியமித்துக்கொடுத்தான். இவனைப்போல் இன்னும் பலர் சென்று புகழ்பெற்றனர்.
ஏழாவது நூற்றாண்டைப் போலவே எட்டாவது நூற்றாண் டிலும் இந்தியாவிலிருந்து அநேக அறிஞர்கள் சீனாவுக்குச் சென்று இலக்கியப் புகழடைந்திருக்கிறார்கள். அமோக வஜ்ரன் என்ற ஒரு பண்டிதன் 746-ஆம் வருஷத்திலிருந்து 771-ஆம் வருஷத்திற்குள் எழுபத்தேழு புத்த மத கிரந்தங்களைச் சீன மொழியில் மொழி பெயர்த்துக் கொடுத்தானென்பர். இந்த நூற்றாண்டில் தென்னிந்தி யாவிலிருந்து சென்ற அறிஞர் பலர். இவர்களைப் பிந்திய பக்கங்களில் காண்போம்.
எட்டாவது நூற்றாண்டுக்குப் பிறகு சுமார் இரண்டு நூற்றாண்டுகள் வரை இந்த அறிஞர்களின் போக்குவரத்து சிறிது மந்தமாயிருந்தது. இதற்குக் காரணம், சீனாவில் தாங் வமிச ஆட்சியின் பிற்பகுதியில் சுமார் நூற்றைம்பது வருஷ காலம் அமைதி யின்மை நிலவியிருந்தது தான். புத்த மதத்தின் மீது விரோத உணர்ச்சியும் ஏற்பட்டிருந்தது.
ஸுங் வமிச ஆட்சி (960-1279) தொடங்கிச் சுமார் ஒரு நூற்றாண்டு வரையில் இரண்டு நாடுகளுக்குமிடையே அறிஞர்களின் போக்கு வரத்து அதிகரித்திருந்தது. 972-ஆம் வருஷம் நாற்பத்து நான்கு இந்திய அறிஞர்கள் சீனாவுக்குச் சென்றார்கள். இவர்களில் ஒருவனான தர்மதேவன் என்பான், சீன சக்ரவர்த்தியினால் பெரிதும் கௌரவிக்கப்பெற்றான். இவன் அநேக வடமொழி நூல்களை சீனமொழியிலாக்கித் தந்துவிட்டு 1001-ஆம் வருஷம் சீனாவிலேயே இறந்து போனான்.
மேற்கு இந்தியாவில் ஆண்டுவந்த ஓர் அரச பரம்பரையைச் சேர்ந்த மஞ்சுஸ்ரீ என்பவன், 970-ஆம் வருஷத்திற்குப் பிறகு சீனா சென்று, தன் புலமையினாலும் தவ ஒழுக்கத்தினாலும் பெரும் புகழெய்தினான்.
1036-ஆம் வருஷம் இந்தியாவிலிருந்து ஒன்பது பௌத்த சந் நியாசிகள் சீனா சென்று அரசவைகளில் மரியாதைகள் பெற்றார்கள்.
பத்தாவது நூற்றாண்டின் பிற்பகுதியிலும் பதினோராவது நூற் றாண்டின் முற்பகுதியிலும், சீன அரசவைகளில் நூற்றுக்கணக்கான இந்திய அறிஞர்கள் சன்மானிக்கப் பெற்று வந்தார்களென்று ஒரு சீன வரலாறு கூறுகிறது.
இந்தக் காலத்தில் நூற்றுக்கணக்கான சீன யாத்திரிகர்கள் இந்தியாவுக்கு வந்துபோனார்கள். 964-ஆம் வருஷத்தில் மட்டும் முந்நூறு சீன பிட்சுக்கள் இந்தியாவில் யாத்திரை செய்திருக்கி றார்கள். இவர்கள் பன்னிரண்டு வருஷ காலம் யாத்திரை செய்ததாகத் தெரிகிறது.
966-ஆம் வருஷம் ஸுங் வமிசத்து தை த்ஸு மன்னன், நூற்றைம்பத்தேழு பிட்சுக்களைத் தெரிந்தெடுத்து, இந்தியாவில் புத்தர் பிரானால் புனிதமடைந்த தலங்களுக்கு யாத்திரை செய்து வருமாறு கட்டளையிட்டான். இந்த யாத்திரிகர்களில் சிலர், தாங்கள் சென்ற சில தலங்களில் சாஸனங்கள் பொறித்து வைத்திருக் கிறார்கள்.
இதுகாறும் சொல்லப்பெற்ற சீன அறிஞர் பலரும் வட இந்தியாவோடு தங்கள் யாத்திரையை முடித்துக் கொண்டு திரும்பி விட்டவர்களாகவும், அப்படியே சீனாவுக்குச் சென்ற இந்திய அறிஞர்களில் பெரும்பாலோர் வடஇந்தியாவைச் சேர்ந்தவர் களாகவும் இருந்திருக்கிறார்களென்பது குறிப்பிடத்தக்கது.
இனி, சீனாவுக்கும் தென்னிந்தியாவுக்கும் ஏற்பட்ட தொடர்பைப் பற்றிக் கவனிப்போம். தென்னிந்தியா என்பது தமிழகத்தையே இங்குக் குறிக்கும். இன்றைய தென்னிந்தியாவின் பெரும் பகுதி, அதாவது கிருஷ்ணா நதிக்குத் தெற்கே அராபியக் கடலுக்கும் வங்காளவிரி குடாவுக்குமிடையிலுள்ள பிரதேசம் பூராவும் அன்றைய - கிறிது சகத்திற்குச் சில நூற்றாண்டுகள் முந்தியும் பிந்தியும் - தமிழக மாயிருந்தது. இந்தப் பிரதேசத்திலுள்ள துறை முகப்பட்டினங்களுக்கும் சீனாவுக்குமிடையில்தான் எல்லா விதமான போக்கு வரத்துக்களும் நடைபெற்றன. ஆகையால் நாம் இங்கே, தென்னிந்தியா என்று சொல்லாமல் தமிழகம் என்றே சொல்லிக்கொண்டு போகிறோம்.
வூ டீ மன்னன் (கி. மு. 140-87) வெளிநாடுகளுடன் தொடர்பு கொள்ளத் தீர்மானித்ததற்கு முந்தியே, சீனாவுக்கும் தமிழகத்திற்கும் கடல் வழியாக வியாபாரப் போக்குவரத்து இருந்து வந்தது. வூ டீ மன்னன் காலத்திலிருந்து இந்தப் போக்குவரத்து அதிகரிக்கத் தொடங்கியது. இதற்குக் காரணமாயிருந்தவர்கள் அல்லது முன் னோடிகளாயிருந் தவர்கள் தமிழர்களே என்று நாம் அறிகிறபோது, உண்மையில் நமக்கு மகிழ்ச்சியும் பெருமையும் உண்டாகின்றன.
தமிழர்கள், பெரிய கப்பல்களைக் கட்டிக் கடலில் செலுத்த வல்லவர்களாயிருந்தபடியால், தொலைதூரம் சென்று பொருள் பரிவர்த்தனை செய்துகொண்டு வருவது இவர்களுக்கு எளிதா யிருந்தது. இதனால் இவர்கள், இலங்கை, தென்கிழக்கு ஆசிய நாடுகள் முதலியவற்றின் வழியாகச் சீனாவுக்குச் சென்று பொருள்களைக் கொடுத்தும் வாங்கியும் வந்தார்கள். இவர்களைப் பின்பற்றிச் சீனர்களும் தமிழகத்திற்கு வந்து வியாபாரஞ் செய்யத் துணிந் தார்கள். ஆனால் இந்த வியாபாரத்திற்கு அவர்கள் பெரும்பாலும் தமிழகத்தின ருடைய கப்பல்களையே நம்பவேண்டியிருந்தது. ஏனென்றால், கடலில் செல்லக்கூடிய பெரிய கப்பல்களைக் கட்டிச் செலுத்துந் தொழிலில் அவர்களுக்கு அப்பொழுது அதிக பயிற்சி ஏற்பட்டிருக்க வில்லை; ஆற்று மார்க்கத்தில் செல்லக்கூடிய படகுகளைக் கட்டிச் செலுத்த மட்டும் தெரிந்து கொண்டிருந்தார்கள். கிறிது சகம் ஆரம்பித்த பிறகே பெரிய கப்பல்களைக் கட்டி, கடலில் செலுத்த ஓரளவு திறமை பெற்றார்கள். அது வரையில், தமிழகத்துக் கப்பல்கள் மூலமாகவே தமிழகத்துடன் வியா பார உறவு கொண்டிருந்தார்கள்.
வூ டீ மன்னன் காலத்தில் சீன வியாபார கோஷ்டியொன்று, சில கப்பல்களில்-ஆம், தமிழகத்துக் கப்பல்களில் - பொன்னையும் பட்டையும் நிரப்பிக்கொண்டு தமிழகத்தை நோக்கிப் புறப்பட்டது. சுமார் ஒரு வருஷகால பயணத்திற்குப் பிறகு, சென்னைக்குச் சுமார் ஐம்பது மைல் தொலைவிலுள்ள காஞ்சிபுரத்தை வந்தடைந்தது.1 இந்த நகரத்தை ஹுவாங் சி2 என்று அழைத்தனர் சீனர். அப் பொழுது இது சிறந்த வியாபார தலமாயிருந்தது. முத்து, பவழம், ரத்தின வகைகள் முதலியவை இங்கு அதிகமாகக் கிடைத்தன. தாங்கள் கொண்டுவந்த பொன்னையும் பட்டையும் கொடுத்துவிட்டு மேற்படி ரத்தின வகைகளைப் பெற்றுச் சென்றனர் சீனர்.
கிறிது சகத்தின் ஆரம்ப காலத்தில் வாங் மாங் என்ற மன்னன் காஞ்சிபுரத்தில் அப்பொழுது ஆட்சிபுரிந்த வந்த மன்னனிடம், சிறந்த பரிசுப்பொருள்கள் சிலவற்றுடன் ஒரு தூதுகோஷ்டியை அனுப்பி வைத்து, இதற்குப் பிரதியாக, சீனாவுக்கு ஒரு தூதுகோஷ்டியை அனுப்பித்தர வேண்டுமென்று கேட்டுக் கொண்டான்.
இந்தக் காலத்திலிருந்து, அதாவது கிறிது சகத்தின் ஆரம்ப காலத்திலிருந்து சீன மன்னர்களிடையிலும் சீன வியாபாரிகளிடை யிலும், தமிழகத்துடன் நெருங்கிய தொடர்புகொள்ள வேண்டு மென்ற ஆவல் அதிகரிக்கத் தொடங்கியது. இதன் விளைவாக, வாங் மாங்குக்குப் பிறகு வந்த ஒரு மன்னன், கப்பல் போக்குவரத்துக்குத் தகுதியுடையதாக இந்து மகா சமுத்திரத்தை எந்த அளவுக்குப் பயன்படுத்தலாம், அதன் வழி துறைகளென்ன என்பவைகளைப் பற்றி அறிய ஒரு நிபுணர் கோஷ்டியை அனுப்பி வைத்தான். இந்த நிபுணர் கோஷ்டி ஆராய்ந்து அறிந்ததென்ன வென்பது நமக்குத் தெரியவில்லை.
ஏறக்குறைய நான்காவது நூற்றாண்டிலிருந்து பதின்மூன்றாவது நூற்றாண்டு வரையில், சீனாவுக்கும் தமிழகத்திற்கும் இடைவிடாத வியாபாரப் போக்குவரத்து இருந்துவந்தது. அதனோடு அரசியல், மத, கலாசாரத் தொடர்புகளும் இருந்து வந்தன.1
இந்த நூற்றாண்டுகளில் நடைபெற்ற வியாபாரத்தைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், தமிழகத்தில் பெருவாரி யாகக் கிடைத்த யானைத்தந்தம், பவழம், முத்து முதலியவற்றிற்குச் சீனாவில் அதிக கிராக்கி இருந்து வந்தது. அதுபோலவே சீனாவி லிருந்து வந்த பட்டு, கற்கண்டு, கர்ப்பூரம், வெடிமருந்து, பீங்கான் முதலியவைகளுக்குத் தமிழகத்தில் நல்லவிற்பனை இருந்தது. இந்தச் சீன- தமிழக வியாபாரம், பெரும்பாலும் பண்டமாற்று முறையிலேயே நடைபெற்றது. வியாபாரிகள் கொண்டதற்கும் கொடுத்ததற்கும் ஒழுங்கான கணக்குகள் வைத்துக் கொண்டிருந் தார்கள்.
சீனாவின் தென்கிழக்குத் துறைமுகப் பட்டினங்களில், தமிழகத்துப் பொருள்கள் பெரிய பெரிய கப்பல்களில் வந்து இறங்கிய வண்ண மிருந்தன. இங்ஙனமே தமிழகத்திலும், காயல், நாகை, கொல்லம், கோழிக்கோடு முதலிய துறைமுகப்பட்டினங் களில் சீனாவிலிருந்து அநேக பொருள்கள் வந்து குவிந்தன. மற்றும் இந்தத் துறைமுகப்பட்டினங்களில், சீனாவிலிருந்து வந்த வியா பாரிகள், அரசாங்க தூதர்கள் முதலியோர் வசிப்பதற்கென்று தனிப் பகுதிகள் (பேட்டைகள்) இருந்து வந்தனவென்றும், இதுபோலவே சீனாவின் துறைமுகப்பட்டினங்களிலும் தமிழகத்திலிருந்து வந்தவர் களுக்கென்று தனிப்பகுதிகள் இருந்தனவென்றும் தெரி கின்றன. தவிர, இந்த இரு நாட்டுத் துறைமுகப்பட்டினங்களிலும், தமிழ் மொழியும் சீன மொழியும் தெரிந்தவர் பலர் இருந்தனரென்று அறிகிறோம்.
எட்டாவது நூற்றாண்டின் இடைக்காலத்தில் எழுதப்பட்ட ஒரு சீன நூல், காண்ட்டன் நதியில், இந்தியாவைச் சேர்ந்த பிராமணர்களுக்குச் சொந்தமான வியாபாரக் கப்பல்களும், வேறு பல நாட்டினருடைய வியாபாரக் கப்பல்களும் அதிகமாயிருந்தன வென்றும், காண்ட்டன் நகரத்தில் பிராமணர்களுடைய மூன்று மடாலயங்கள் இருந்தன வென்றும், இவற்றில் பிராமணர் பலர் வசித்து வந்தார்களென்றும் தெரிவிக்கிறது. இங்குப் பிராமணர்க ளென்பது, ஹிந்துக்களைக் குறிப்பதாகவே நாம் கொள்ளவேண்டும். எனவே, இந்தியாவிலிருந்து அல்லது தமிழகத்திலிருந்து அதிக எண்ணிக்கையுள்ள ஹிந்து வியாபாரிகள் வியாபார நிமித்தம் சீனாவுக்குச் சென்றார்களென்றும், அங்குத் தங்கிய காலத்தில், தெய்வ வழிபாட்டுக்காகக் கோயில்கள் பல கட்டிக் கொண்டார்க ளென்றும் நாம் முடிவு கட்டுவோமானால் அது சரித்திர உண்மைக்குப் புறம்பானதாயிராது.
இங்ஙனம் கிறிது சகத்தின் ஆரம்ப காலத்திலிருந்து வியாபார உறவு வளர்ந்து வந்ததைப்போல் அரசியல் ரீதியான உறவும் வளர்ந்து வந்தது. சீன மன்னர்களும் தமிழகத்து மன்னர்களும் பலவகையான பரிசிற் பொருள்களுடன் ஒன்றுக்குப்பின்னொன்றாக தூது கோஷ்டிகளை முறையே அனுப்புவதிலும் பெறுவதிலும் பெருமை கண்டார்கள். இந்தத் தூதுகோஷ்டிகள் மூலம் பரபரம் மதிப்பு வைத்துப் பேசிக்கொண்டார்கள்.
ஆறாவது நூற்றாண்டுத் தொடக்கத்தில், தமிழகத்து மன்னன் ஒருவன், சீன மன்னன் ஒருவனுக்கு ஒரு தூதன் மூலம் அழகான சில குதிரைகளை அனுப்பியதாகவும், இந்தத் தூதன் அந்தச் சீன மன்னனிடம் சென்று, தன்னுடைய நாட்டில் சிங்கம், புலி, காண்டாமிருகம் போன்ற காட்டு மிருகங்கள் உண்டென்றும், பல வகை ரத்தினங்கள், பவழங்கள் முதலியன கிடைக்குமென்றும், வாசனை வீசும் பலவகைச் செடிகொடிகள் வளர்கின்றன என்றும், தேன், மிளகு, இஞ்சி முதலியன ஏராளமாகக் கிடைக்குமென்றும், பூ வேலை செய்த மெல்லிய துணி ரகங்கள் பல தயாரிக்கப் படுகின்றனவென்றும், இப்படியெல்லாம் விவரித்துச் சொன்ன தாகவும் சீன வரலாறுகள் கூறுகின்றன. இவன் சொன்ன விவரங் களைப் பார்க்கிற போது தமிழகத்தின் மேற்குப் பகுதியில் ஆண்ட ஓர் அரசனுடைய பிரதிநிதியாக, அதாவது சேர நாட்டு மன்னன் ஒருவனுடைய பிரதிநிதியாக, இவன் சென்றிருக்கக் கூடுமென்று நாம் ஊகிக்கலாம்.
ஏழாவது நூற்றாண்டின் பிற்பகுதியிலும் எட்டாவது நூற் றாண்டின் முற்பகுதியிலும், காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த பல்லவ மன்னர்களுக்கும் சீன மன்னர்களுக்கு மிடையே நிலவி வந்த நட்புறவு மிகவும் போற்றத் தக்கதாயிருந்தது. 667, 692, 710, 720-ஆம் வருஷங்களில் பல்லவ மன்னர்களால் முறையே அனுப்பப் பெற்ற தூது கோஷ்டிகள் சீனாவுக்குச் சென்று சிறப்புப் பெற்றன.
இங்ஙனமே சோழ மன்னர்கள் ஆண்ட காலத்தில் மூன்று தடவை தூது கோஷ்டிகள் சீனாவுக்குச் சென்று பெருமை பெற்றுத் திரும்பி வந்தன. முதலாவது தூது கோஷ்டி, ராஜ ராஜ சோழன் ஆட்சியின் போது (985-1016) சென்றது; 1015-ஆம் வருஷம் சீன அரசவையை அடைந்தது. இதற்கு ஏறக்குறைய மூன்று வருஷ காலம் பிடித்தது. இதில் சுமார் எட்டு மாத காலம் கப்பல் பிரயாணத்தில் கழிந்தது. இந்தத் தூது கோஷ்டியின் மூலம், ராஜ ராஜ சோழன், இருபத்தோராயிரம் அவுன் முத்துக்கள், அறுபது யானைத்தந் தங்கள், இருபத்து நான்கு வீசை வாசனைத் திரவியங்கள் ஆகியவை களைச் சீன மன்னனுக்குப் பரிசிற் பொருள்களாகக் கொடுத்தனுப் பினான். இவை தவிர, தூது கோஷ்டியின் தலைவன், ஆறாயிரத்து அறுநூறு அவுன் முத்துக்களையும், சுமார் ஆயிரத்து நானூறு வீசை வாசனைத் திரவியங்களையும் தன் சொந்தப் பரிசிலாகக் கொடுத்தான். இரண்டாவது தூதுகோஷ்டி, ராஜேந்திர சோழன் ஆட்சியின் போது (1012-1044) 1033-ஆம் வருஷத்திலும், மூன்றாவது தூது கோஷ்டி, முதலாவது குலோத்துங்க சோழன் ஆட்சியின் போது, (1070-1122) 1077-ஆம் வருஷத்திலும் முறையே சென்றன.
குலோத்துங்கன் காலத்தில் சென்ற மூன்றாவது தூது கோஷ்டியில் எழுபத்திரண்டு பேர் அடங்கியிருந்தனர். இவர்கள், கண்ணாடிச் சாமான்கள், கர்ப்பூரம், பூ வேலை செய்த பட்டாடைகள், தந்த வகைகள், வாசனைத் திரவியங்கள், பன்னீர், வெங்காரம் என்னும் மருந்துச் சாமான், கிராம்பு, இப்படிப் பல வகைப் பொருள்களைக் கொண்டு சென்றனர். இவைகளுக்குப் பிரதியாக, சீன மன்னன் இந்தத் தூதுகோஷ்டியிடம், சுமார் இருபத்தை யாயிரம் ரூபாய்க்கு நாணயங் களாகப் பரிசில் கொடுத்தனுப்பினான்.
பதின்மூன்றாவது நூற்றாண்டின் கடைசிப் பகுதியில், ஏறக் குறைய சீனா முழுவதும் ஆதிக்கஞ்செலுத்தி வந்த குப்ளாய்கான், வெளிநாடுகள் பலவற்றுடன் தொடர்பு கொண்டதைப் போல், தமிழகத்துடனும் தொடர்பு கொண்டான். தமிழகத்தில் அப் பொழுது சோழப் பேரரசின் பெருவாழ்வு மங்கிக் கொண்டு வந்தது; பாண்டியப் பேரரசு புது மெருகுடன் பிரகாசித்து வந்தது. குலசேகர பாண்டியன் (1268-1308) அரசுக் கட்டிலில் வீற்றிருந்தான். இவனிடம் குப்ளாய்கான், அடிக்கடி தூது கோஷ்டிகளை அனுப்பி வந்தான். குலசேகர பாண்டியனும், குப்ளாய்கானிடம் அதிக மதிப்பு வைத்து அடிக்கடி தூது கோஷ்டிகளை அனுப்பி வந்தான்; தன் மீது விரோதம் பாராட்டியவர்களை முறியடிக்க, அவனுடைய -குப்ளாய் கானுடைய - படையுதவியையும் நாடினானென்று சொல்லப்படுகிறது. அப் போது, இன்றைய கேரள ராஜ்யத்தின் பெரும் பகுதி, பாண்டியப் பேரரசின் ஆதிக்கத்திற்குட்பட்டிருந்தது. இதனால், தமிழகத்தின் மேற்குக்கரை யோரமாகவுள்ள கொல்லம், கோழிக் கோடு முதலிய துறைமுகப் பட்டினங்களுக்கும் சீனாவுக்குமிடையே ஒன்றுக்குப் பின்னொன்றாக வியாபார கோஷ்டிகள் பல, சர்வ சாதாரணமாகப் போய் வந்து கொண்டிருந்தன. குப்ளாய்கான், பல நாடுகளிலிருந்து விலை மதிப்புள்ள பலவகைப் பொருள்களைச் சேகரித்துக் காண்பதில் ஆசைகொண்ட வனாயிருந்தபடியால், தமிழகத்தின் மேற்குப் பகுதிகளிலிருந்து விசித்திர மான பறவைகள், மிருகங்கள் உள்பட அநேக பொருள்களைத் தருவித்தான். இன்னும், தமிழகத்துப் பல பகுதிகளிலிருந்தும், ஜால வித்தைக்காரர்கள், வைத்திய நிபுணர்கள், பலதுறைத் தொழில் வல்லுநர், விஞ்ஞான சாதிரிகள், பன்மொழிப் புலவர்கள், போர் வீரர்கள், கப்பல் மாலுமிகள், இப்படிப் பலவகையினரை வரவழைத்து ஆதரவளித் தான். சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், 1280 முதல் 1315-ஆம் வருஷம் வரை, சீனாவுக்கும் தமிழகத்திற்கும் இடைவிடாத போக்குவரத்து இருந்து வந்தது.
குலசேகர பாண்டியனுடைய ஆட்சிக் காலத்தில்தான், மார்க்கோ போலோ1 என்ற இத்தாலிய யாத்திரிகன், குப்ளாய் கானிடம் சேவை செய்துவிட்டு, தன் தாய் நாட்டுக்குத் தமிழகத்தின் வழியாகத் திரும்பிச் செல்கிறபோது, பாண்டிய நாட்டுக்கு வந்தான். இவன், தன் யாத்திரையைப் பற்றி எழுதிவைத்துப் போன குறிப்புக் களிலிருந்து , பதினான்காவது நூற்றாண்டுத் தமிழகத்தின் பொருள் வளம் முதலியவைகளை நாம் ஒருவாறு அறிந்து கொள்கிறோம். இன்னும், ஏற்கனவே சொன்னபடி, தற்போதைய கேரள ராஜ்யத்தின் பெரும் பகுதி, பாண்டியப் பேரரசின் அதிகாரத்திற்குட்பட்டிருந்த தென்பதையும் இந்தப் பகுதியில், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக் கூடிய அளவுக்குப் பலவகைப் பொருள்கள் உற்பத்தியாகி வந்தன வென்பதையும் மார்க்கோபோலோவின் குறிப்புக்கள் உறுதிப் படுத்துகின்றன.
விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஆரம்ப பருவத்தில், முதலாவது புக்கன் என்ற மன்னன், 1374-ஆம் வருஷம் சீனாவுக்கு ஒரு தூது கோஷ்டியை அனுப்பினான். அப்பொழுது சீனாவில் மிங் வமிச ஆட்சி தொடங்கியது. தை த்ஸு மன்னன் ஆண்டு கொண்டிருந்தான். இவனுக்கு, விஜய நகரத்து மன்னன், ஏராளமான பரிசுப் பொருள்களை அனுப்பியதாகவும், இவற்றுள் ஒன்றாக, எந்தவிதமான விஷத்தையும் போக்கவல்ல ஒரு வகைக் கல் இருந்ததென்றும் சொல்லப்படுகின்றன.
பதினான்காவது நூற்றாண்டுக்குப் பிறகு, தமிழகத்து மன்னர் களுக்கும் சீன மன்னர்களுக்குமிடையே தூது கோஷ்டிகள் போய் வருவது குறைந்து விட்டது. வியாபாரிகள் மட்டும் லேசுபாசாகப் பொருள் பரிவர்த்தனை செய்து வந்தார்கள்.
தமிழகமும் சீனாவும் கொண்ட பலவகைத் தொடர்புகளைப் பற்றிய விவரங்கள், சீனாவின் அந்தந்தக் காலத்து அரச வமிசாவளிகளின் வரலாற்று நூல்களில் காணப்படுகின்றன. இவை, தமிழகத்து மன்னர்கள், தங்களுடைய அன்பையும் மரியாதையையும் தெரிவிக் கின்ற முறையில் அனுப்பிவந்த பொருள்களை, சீன சக்ரவர்த்தி களுக்குச் செலுத்தப்பட்ட காணிக்கைகள் என்றே சொல்லிக்கொண்டு போகின்றன. ஆனால் இந்தச் சீன வரலாறுகளே, பல்லவர் காலத்தில் அரசாங்கத்தின் சார்பாகச் சென்ற தூது கோஷ்டியினர், சீன அரசவையில் மிகவும் கௌரவமாக நடத்தப்பட்டனரென்றும், இவர்களுக்கு ராஜாங்க விருந்துகள் பல நடைபெற்றனவென்றும், இவர்கள் தாய் நாட்டுக்குத் திரும்புகிறபோது, மதிப்புள்ள அநேக பொருள்களை அன்பளிப்பாகப் பெற்றார்களென்றும் கூறுகின்றன. சோழர் ஆட்சியின் போது சென்ற தூது கோஷ்டியினர், சீன அரசவையில். வழக்கமான கௌரவத்துடன் உபசரிக்கப்படவில்லை யென்றும், இதற்குக் காரணம், சோழர் ஆட்சியின் அப்பொழுதைய மாட்சிமை பற்றிச் சீன மன்னர்களுக்குத் தெரியாததுதானென்றும் சொல்லப்படு கின்றன. இவையெல்லாம் எப்படி இருந்தபோதிலும், சீனாவில், பொதுவாக இந்தியர்களுடைய, சிறப்பாகத் தமிழர் களுடைய நுண்ணறிவு, தொழில் திறமை, மொழிப் புலமை முதலிய வற்றிற்குப் பெருமதிப்பு இருந்து வந்ததென்பது மறுக்க முடியாத உண்மை.
இன்னொரு விஷயம், பொதுவாக இந்தியாவுக்கும், சிறப் பாகத் தமிழகத்துக்கும் சீனாவுக்குமிடையே, அரசாங்க தோரணை யிலோ, தனிப்பட்ட முறையிலோ போய் வந்து கொண்டிருந்தவர் களிற் பெரும் பாலோர் வியாபார அபிவிருத்தியை முக்கிய நோக்க மாகக் கொண்டிருந்தனர். வியாபாரத்தையொட்டியே வேறுவகை யான தொடர்புகள் ஏற்பட்டன.
இவற்றுள் முதலாவது மதத் தொடர்பு. புத்த மதப் பிரசார நிமித்தம் வட இந்தியாவிலிருந்து பலர் சீனாவுக்குச் சென்றது போல், தமிழகத்திலிருந்தும் பலர் சென்றிருக்கிறார்கள். ஒரு சிலரைப் பற்றி மட்டும் இங்குப் பிரதாபிப்போம்.
காஞ்சிபுரத்தில் ஆண்ட பல்லவ மன்னர்களில் ஒருவனுடைய மகனும், துறவு பூண்டிருந்தவனுமாகிய போதிதர்மன் என்பவன் 520-ஆம் வருஷம், இந்தோனேஷ்யா வழியாகச் சீனாவுக்குச் சென்று, அங்கு அப்பொழுது ஆண்டு கொண்டிருந்த வூ டீ மன்னனுடைய 1 மரியாதையையும் ஆதரவையும் பெற்றான். இவன் சென்றதற்குப் பிறகுதான், சீனாவில் புத்த மதத்திற்கு அதிக பிரபலம் ஏற்பட்ட தென்றும், நற்கதியடைவதற்குத் தியான மார்க்கமே சிறந்ததென்று இவன் போதித்து வந்தானென்றும் சொல்லப்படுகின்றன. மற்றும் இவன், அநேக அற்புதங்களைச் செய்து காட்டியதாகவும், இவன் கொள்கை ஜப்பான் வரை சென்று பரவியதாகவும் சீன வரலாறுகள் இவனைப் புகழ்ந்து கூறுகின்றன. இவன் நூற்றைம்பது வருஷம்வரை வாழ்ந்தானென்பர்.
விநீத ருசி என்ற ஒரு தமிழகத்துப் பிராமணன் 582-ஆம் வருஷம் சீனா போய்ச் சேர்ந்து, அங்கு இரண்டு புத்தமத கிரந்தங்களைச் சீன மொழியில் மொழி பெயர்த்தான்; போதிதர்மனுடைய தியான மார்க்கம் பரவ வேண்டுமென்பதற்காக அதிக முயற்சி எடுத்துக் கொண்டான்.
போதிருசி என்ற ஒரு பண்டிதன் 693-ஆம் வருஷம் சீனாவை அடைந்து, அங்கு அரசனுடைய அன்பையும் ஆதரவையும் பெற்று, அநேக புத்தமத கிரந்தங்களைச் சீன மொழியில் மொழி பெயர்த் தான். புத்த மதத்தின் ஒரு கிளையாகிய மகாயானத்தின் கோட் பாடுகள் சிலவற்றை விவரிக்கும் ரத்னகூடம் என்ற ஒரு நூலை இவன் மொழி பெயர்த்துச் சொல்லிக்கொண்டு போகிறபோது, அதை அரசனே தன் கையால் எழுதி வந்தானென்பர். இதிலிருந்து, இவனுக்கு அரசவையில் இருந்த மதிப்பு ஒருவாறு புலனாகிறது. இவன் நூற்றைம்பத்தாறாவது வயது வரை வாழ்ந்தானென்றும், கடைசி காலத்தில் ஐம்பத்தைந்து நாட்கள் உண்ணாவிரதமிருந்து அமைதி யாக உயிர் துறந்தானென்றும் கூறுவர்.
காஞ்சிபுரத்தில் இரண்டாவது நரசிம்ம வர்மன் என்ற பல்லவ மன்னன் ஆண்ட காலத்தில் (695-722) அவனுடைய நன்மதிப்பைப் பெற்றிருந்த வஜ்ரபோதி என்ற அறிஞன், 720-ஆம் வருஷம் காண்ட்டன் நகரத்தை அடைந்து , அநேக புத்தமத கிரந்தங்களைச் சீன மொழியில் மொழி பெயர்த்துக் கொடுத்தான். இந்தியாவி லிருந்து ஏற்கனவே சென்றிருந்த புத்த மதத் துறவிகள் பலர், இவனுடைய சீடர்களாயினர். இவன் 732-ஆம் வருடம் லோயாங் என்ற நகரத்தில் பூதவுடலை விடுத்தான்
பாரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்த போதிசேனன் என்ற ஒரு தமிழகத்துப் பிராமணன் 733-ஆம் வருஷம் சீனாவையடைந்து, அங்குச் சிறிது காலம் தங்கிவிட்டுப் பிறகு ஜப்பானுக்குச் சென்றான். அங்கு 750-ஆம் வருஷம் பௌத்த மடாலயங்கள் அனைத்திற்கும் தலைவனாகத் தெரிந்தெடுக்கப்பட்டுப் பெருமதிப்புடன் வாழ்ந்து வந்தான்.
இங்ஙனம் தமிழகத்திலிருந்து பலர் சென்றது போல், சீனாவி லிருந்தும் பலர் தமிழகத்திற்கு வந்திருக்கிறார்கள். ஆயினும், இவர்களில் ஒருவனைத் தவிர மற்றவர்களைப் பற்றிய விவரங்கள் அதிகமாகத் தெரியவில்லை. இந்த ஒருவன்தான் ஏற்கனவே சொல்லப் பெற்ற ஹ்யூன் த்ஸாங். இவன், பாஹியானைப்போல், வட இந்தியா வோடு தன் யாத்திரையை முடித்துக்கொண்டுவிடாமல் தமிழகத் திலும் யாத்திரை செய்தான். கலிங்கம், ஆந்திரம், சோழநாடு, பல்லவ ராஜ்யம், பாண்டிய தேசம், கொங்கணம் ஆகிய பகுதிகளைப் பற்றித் தனக்குத் தெரிந்தவற்றை, தன் யாத்திரை நூலில் தெரிவித்திருக்கிறான்.
பல்லவ ராஜ்யத்திற்கு இவன் போந்த போது, முதலாவது நரசிம்மவர்மனுடைய ஆட்சி (630 முதல் 668-ஆம் வருஷம் வரை) நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்தப் பேரரசன்தான், மகாபலி புரத்தை ஒரு சிற்பக்களஞ்சியமாகச் செய்தவன்; அதுமட்டு மன்று; தலைநகரமான காஞ்சிபுரத்தை அறிவிலும் திருவிலும் ஓங்கியிருக்கும் படி செய்தவன்.
ஹ்யூன் த்ஸாங் ஏறக்குறைய 640-ஆம் வருஷம், காஞ்சிபுரம் போந்து, நரசிம்மவர்மனால் கௌரவிக்கப்பெற்றான். தன்னுடைய யாத்திரை நூலில், காஞ்சிபுரத்தைப் பற்றியும், தொண்டை மண்டலத்தைப் பற்றியும் வருணித்திருக்கிறான். காஞ்சிபுரம் அப் பொழுது ஏறக்குறைய ஒன்பதரை சதுர கிலோ மீட்டர் (ஆறு சதுர மைல்) விதீரணமுடையதாக இருந்ததென்றும், அங்குச் சுமார் நூறு பௌத்த மடங்கள் இருந்தனவென்றும் இவற்றில் பதினா யிரத்துக்கு மேற்பட்ட பிட்சுக்கள் வசித்துக்கொண்டிருந்தார் களென்றும், பௌத்த மடங்கள் தவிர, வேறு பல மதத்தினருடைய கோயில்களும் அங்கு இருந்தனவென்றும் இவன் குறிப்பிடுகிறான். மற்றும் இவன், தொண்டை மண்டலத்திலுள்ளவர்கள் அறிவுக்குப் பெருமதிப்புக் கொடுக்கிறார்களென்று தன் நூலில் கூறியிருப்பது தொண்டை நன்னாடு சான்றோருடைத்து என்னும் செம்மொழிக்கு அரண் செய்வதாயிருக்கிறது. பாண்டிய தேசத்தைப் பற்றி இவன் குறிப்பிடுகிற போது, அது, கடல் முத்துக்கள் நிறைந்த ஒரு களஞ்சிய மென்றும், அங்குள்ள மக்கள் வியாபாரத்தில் கைதேர்ந்தவர்களா யிருக்கிறார்களென்றும் தெரிவிக்கிறான்.
ஹ்யூன் த்ஸாங்குக்குப் பிறகு தமிழகத்திற்கு வந்த யாத்திரி கர்கள், ஏற்கனவே சுட்டிக் காட்டியபடி பெயரளவில் மட்டுமே நமக்கு அறிமுகமா கிறார்கள். மிங் யுவான், 1 டாவோ லின்,2 வூ ஹிங்3 இப்படிச் சிலர் வந்து போனார்கள்.
இனி, இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இருந்த வேறு வகையான தொடர்புகள் சிலவற்றைப் பற்றிச் சிறிது கூறுவோம்
வியாபார நிமித்தமாகவும், புத்தமத பிரசார நிமித்தமாகவும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்றவர்கள் மூலமாகச் சீனாவில், இந்தியாவின் கலாச்சாரமும் மெதுமெதுவாகப் புகுந்து பரவியது. பாரத நாட்டில் பன்னெடுங் காலமாக வளர்ந்து வந்த நுண் கலைகள், இலக்கியங்கள், வாழ்க்கை நியதிகள் முதலியவற்றின் சாயல், சீன சமுதாய வாழ்வில் பல துறைகளிலும் படிந்து, புதிய கலைப் படைப்புக்கள் தோன்றுவதற்குக் காரணமாயிருந்தன.
சிற்பக் கலையிலும் ஓவியக்கலையிலும் இந்தியர்கள் கையாண்ட முறைகளைப் பின்பற்றி, சீனாவில் புத்தர் உருவங்கள் பல சமைக்கப் பட்டன; பௌத்த மடங்களில் அநேக வண்ண ஓவியங்கள் தீட்டப் பட்டன. இந்தக் கலைகளில் வல்லுநர்களான இந்தியர் பலர் சீனா வுக்குச் சென்று பெயரும் புகழும் பெற்றார்கள். சீனக்கலைஞர்கள் போற்றும் சாக்கியபுத்தன், புத்தகீர்த்தி, குமாரபோதி முதலியோர் இந்தியாவிலிருந்து சென்ற ஓவியக்கலை நிபுணர்களே.
இந்தியாவின் இசைக் கலைக்குச் சீனாவில் அதிக செல்வாக்கு ஏற்பட்டிருந்தது. 581-ஆம் வருஷம் இசைப் புலவர் பலரைக் கொண்ட ஒரு கோஷ்டி இந்தியாவிலிருந்து சீனாவுக்குச் சென்றது. சீன மன்னர்கள், இந்திய இசை வகைகளில் லயித்துப்போய், இவர்களுக்குப் பேராதரவு தந்தார்கள்.
வெகு காலத்திற்கு முந்தியே இந்தியர்கள் கண்டு தெளிந்து வைத்திருந்த கணித சாதிரம், வான சாதிரம், வைத்திய சாதிரம் முதலியன, சீனாவில் நல்ல செல்வாக்குப் பெற்றன. பஞ்சாங்கங்கள் கணிக்க, சீன மன்னர்கள் அவ்வப்பொழுது நியமித்து வந்த நிபுணர் குழுவில், இந்தியாவிலிருந்து சென்ற வானசாதிரிகள் பலர் இடம் பெற்றனர். இந்தியாவின் நவக்கிரக முறை சீனாவில் பின்பற்றப் பட்டது. வானசாதிரத்தைப் பற்றியும் கணித சாதிரத்தைப் பற்றியும் வடமொழியிலுள்ள நூல்கள் பல சீனமொழியில் மொழி பெயர்க்கப்பட்டன. இங்ஙனமே வைத்திய நூல்கள் பலவும் மொழி பெயர்க்கப்பட்டன. கி. பி. ஐந்தாவது நூற்றாண்டிலிருந்து பதினோ ராவது நூற்றாண்டு வரை, இந்த மொழிபெயர்ப்புப் பணி தீவிரமாக நடை பெற்றது.
நீண்ட ஆயுளை அளிக்கவல்ல காயகல்ப சிகிச்சை பெற, சீன மன்னர் பலர் பெரிதும் விரும்பினர். இதற்காக இந்தியாவிலிருந்து அநேக நிபுணர்கள் வரவழைக்கப்பட்டார்கள். இவர்களில் ஒருவன் பெயர் நாராயணசுவாமி.1 இந்தியாவிலிருந்து அபூர்வ மூலிகைகளைச் சேகரித்துக்கொண்டு வர சீன அரசாங்க உத்தியோகதர் சிலரும் அனுப்பப்பட்டனர்.
இங்ஙனம் பலவகையான தொடர்புகள், சீனாவுக்கும் இந்தியாவுக்குமிடையே நெடுங்காலமாக இருந்து வந்திருக்கின்றன. இவை தொடர்ந்தும் நிலைத்தும் இருக்க வேண்டுமென்பது, எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டுமென்று, நினைக்கின்றவர் களுடைய பெரு விருப்பம்.
அனுபந்தம்-1
சீனாவில் ஆண்ட அரச வமிசங்கள்
ஆதி காலம்: உத்தேசமாக கி. மு. 3000 முதல் கி.மு 2205 வரை
3000 - ஸூயி ஜென்; நெருப்பைக் கண்டுபிடித்தவன்.
2852 - 2737-பூ ஹ்ஸி; சங்கீதம், விவாக முறை முதலியவை களைக் கண்டுபிடித்தவன்.
2737 - 2697-ஷென் - நுங்; விவசாயம், வைத்தியம் முதலியவைகளைக் கண்டுபிடித்தவன்.
2697 - 2597-ஹுவாங் தீ; மஞ்சள் சக்ரவர்த்தி என்று அழைக்கப்படு கிறவன். ஸூலிங்-ஹுவாங் தீயின் மனைவி. பட்டு உற்பத்திக்குக் காரணமாயிருந்தவள்.
2597 - 2356-கொடுங்கோலர் சிலர் ஆண்டனர். ஒரே குழப்பமான காலம்.
2356 - 2255-யௌ; சீலபுருஷன்; சீனர்களால் இன்றளவும் கௌரவிக்கப் பெறுகிறவன்.
2255 - 2205-ஷுன்; குடிகளின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு ஆண்டவன், யெளவைப் போலவே சீனர்களின் நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
பரம்பரை மன்னராட்சித் தொடக்கம்
ஷியாவமிசம்-கி. மு. 2205-1766
2205 - 2197-யூ மன்னன் ஆட்சி.
1818 - 1766-சீஹ் கூயை என்பவனுடைய கொடுங்கோலாட்சி.
ஷாங் வமிசம்-கி. மு. 1766-1122
இந்த வமிசத்தின் பெயரால் மொத்தம் இருபத்தெட்டு மன்னர்கள் ஆண்டார்கள். கடைசி மன்னனாகிய சௌ ஹ்ஸி என்பவனின் கொடுங்கோலாட்சி காரணமாக இந்த வமிசம் முற்றுப் பெற்றது.
சௌ வமிசம்-கி. மு. 1122-221
1122 - 1115-வூ வாங் என்பவன் ஆட்சி.
841 - கொடுங்கோலாட்சி நடத்தி வந்த லீ என்பவன் நாட்டை விட்டு ஓடிப்போனான்.
771 - சௌ வமிசத்துப் பன்னிரண்டாவது அரசனாகிய யூ என்பவன் கொலையுண்டான்.
771 - 221-ஒரே குழப்ப நிலைமை. தான்றோன்றி மன்னர்களின் ஆட்சி.
சின் வமிசம்: கி. மு. 221-206
221 - 210-ஹுவாங் தீ என்ற மன்னன் ஆட்சி. இவன் காலத்தில், உலகத்து ஏழு அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் எழும்பியது; புராதன கிரந்தங்கள் பல எரிக்கப்பட்டன. சர்வ சீனாவுக்கும் சக்ர வர்த்தியென்று முதன்முதலாக முடிசூட்டிக் கொண்டவன் இவன்.
ஹான் வமிசம்: கி. மு. 206-கி. பி. 220
179 - 156-வென் டீ என்பவனின் நல்லாட்சி.
140 - 87-வூ டீ என்பவன் ஆட்சி. இவன் காலத்தில்தான் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் முதன் முதலாக நேர்முகமான தொடர்பு ஏற்பட்டதென்பர்.
கி. பி. 5 - 25 - வாங் மாங் என்பவன் ஆட்சி
சில்லரை வமிசங்கள்: கி. பி. 221-618
502 - 540-பெரும் புலவனாக விளங்கிய வூ என்பவன் ஆட்சி.
589 - வென் டீ என்பவன் சக்ரவர்த்தியாகப் பிரகடனஞ் செய்து கொண்டான்.
தாங் வமிசம் : கி. பி. 618-907
627 - 650-தைத் ஸுங் ஆட்சி. இவனை மகா தைத் ஸுங் என்று அழைப்பர்.
650 - 683-காவோத் ஸுங் ஆட்சி.
683 - 704-காவோ த்ஸுங்கின் மனைவி வூ ஹௌ என்பவள், பலவந்த மாகச் சிங்கானத்தைக் கைப்பற்றி ஆண்டாள்.
703 - 756-மிங் ஹுவாங்கின் ஆட்சி.
ஐந்து சிற்றரசுகள்: கி. பி. 907-960
ஸுங் வமிசம்: கி. பி. 960-1279
960 - 976-தை த்ஸுங் மன்னன் ஆட்சி
1004 - கித்தானியரின் படையெடுப்பும் சமரசமும்.
1005 - தங்கூட்டரின் படையெடுப்பும் சமரசமும்.
1021 - 1085-வாங் ஆன்ஷி என்ற கல்விமான், அரசாங்க நிருவாகத்தில் பல சீர்திருத்தங்கள் செய்தான்.
1101 - 1127-ஹுயி த்ஸுங் என்பவன் ஆண்ட காலம்.
யுவான் (மங்கோலிய) வமிசம்: கி. பி. 1280-1368
1280 - 1294-குப்ளாய்கான்,சர்வ சீனாவுக்கும் சக்ரவர்த்தியாக முடிசூட்டிக் கொண்டு ஆண்டான்.
1366 - மங்கோலியர் ஆட்சிக்கு விரோதமாகச் சீனாவின் பல பகுதிகளிலும் கலகம்.
மிங் வமிசம்: கி. பி. 1368-1644
1368 - 1399-தை த்ஸு மன்னன் ஆட்சி.
1403 - 1425-செங் த்ஸு மன்னன் ஆட்சி.
மஞ்சூ (சிங்) வமிசம் : கி. பி. 1644-1911
1644 - 1662-இந்த வமிசத்தின் முதல்சக்ரவர்த்தியாகிய ஷுன் சி என்பவன் ஆண்ட காலம்.
1662 - 1722-காங் ஹ்ஸி மன்னன் ஆட்சி.
1722 - 1735-யுங் செங் மன்னன் ஆட்சி.
1735 - 1795-சின் லுங் மன்னன் ஆட்சி.
1796 - 1820-சியா சிங் ஆட்சி.
1820 - 1850-டாவோ குவாங் ஆட்சி.
1850 - 1861-ஷீன் பெங் ஆட்சி.
1861 - யெஹோனலா என்பவள், த்ஸுஹ்ஸி என்ற பட்டப்பெயருடன் ரீஜெண்ட் சக்ரவர்த்தியானாள்.
1889 - 1908-குவாங்ஷு என்பவன் பெயரளவுக்குச் சக்ரவர்த்தியாயி ருந்தான்.
1908 - ரீஜெண்ட் சக்ரவர்த்தினி த்ஸு ஹ்ஸியின் மரணம்.
1908 - 1911-பூயி என்ற சிறுவன் ஷுவான் குங் என்ற பட்டப் பெயருடன் சக்ரவர்த்தியாக்கப்பட்டான். இவனுக்காக இவன் தகப்பன் ரீஜெண்ட்டாக இருந்து ஆண்டான்.
1911 - பூயி மன்னனோடு சீனாவில் பரம்பரை மன்னராட்சி முடிவுற்றது.
1912 - குடியரசு ஏற்பட்டது.
1949 - மக்கள் குடியரசு தாபிதம்.
அனுபந்தம்-2
முக்கிய நிகழ்ச்சிகள்
கி.மு. 604-518- லாவோத்ஸே காலம்
551-479 - கன்பூஷிய காலம்.
540 - சௌவமிச ஆட்சியின்போது உலகப் பிரசித்தி பெற்ற பெரிய கால்வாய் (Grand canal) தோண்டப்பட்டது.
450 - மோத்ஸே காலம்.
372-289 - மென்ஷிய காலம்.
340-278 - சூயுவான் என்ற கவிஞன் காலம்.
240 - சீனப் பெருஞ்சுவர் கட்டி முடிந்தது.
145-87 - ஸூம சீன்; சீன சரித்திராசிரியர்களுக்கு வழிகாட்டியாக விளங்கியவன் காலம்.
கி. பி. 67 - புத்தமதம் நன்றாக வேரூன்றத் தொடங்கியது.
404-411 - பாஹியான்; இந்தியாவின் வடபகுதியில் யாத்திரை செய்தான்.
600-664 - ஹ்யூன் த்ஸாங் காலம்.
610 - பெரிய கால்வாய், ஹாங்சௌ நகரம் வரையில் நீடிக்கப்பட்டது.
618 - சீனாவுக்குள் இலாமிய மதம் முதன் முதலாகப் பிர வேசித்தது.
635 - சீனாவுக்குக் கிறிதுவப் பாதிரிமார்கள் முதன் முதலாக வருகை.
650-720 - பல்லவ மன்னர்களால் அநேக தூது கோஷ்டிகள் சீனாவுக்கு அனுப்பப்பெற்றன. தனிப்பட்ட முறையில் அறிஞர் பலர் சென்றனர்.
671-695 - இட்ஸிங் இந்தியாவுக்கு யாத்திரையாக வந்து போனான்.
699-759 - கவிஞனும் ஓவியனுமாகிய வாங்வெய் காலம்.
700-760 - தலைசிறந்த ஓவிய நிபுணன் வூ டாவ் த்ஸு காலம்.
705-762 - அமரகவி லீ போ காலம்.
712-770 - மகாகவி தூ பூ காலம்.
754 - ஹான்லின் கழகம் நிறுவப்பட்டது.
772-846 - அரசாங்க உயர்தர உத்தியோகத்திலிருந்து கொண்டே உயர்தரக் கவிதைகள் பல எழுதிய போ சூயி காலம்.
845 - புத்தமதத்திற்கு விரோதமாகச் சீனாவின் பல பகுதிகளில் கலகம்.
1015-1077 - சோழ மன்னர்களின் சார்பாகச் சில தூது கோஷ்டிகள் சீனாவுக்குச் சென்றன.
1019-1080 - பிரபல சரித்திராசிரியன் ஸூமா குவாங் காலம்.
1036-1101 - பிரபல கவிஞன் ஸு குங்போ காலம்.
1162-1227 - ஜெங்கிகான் காலம்.
1211- - சீனாவின் மீது ஜெங்கிகான் படையெடுப்பு .
1216 - ஜெங்கிகான் பேரன் குப்ளாய்கான் பிறந்தான். இவன் சீனாவில் மங்கோலிய ஆட்சியை நிறுவியவன்
1254-1324 - குப்ளாய்கானின் சேவையில் அமர்ந்திருந்த மார்க்கோ போலோ என்ற இத்தாலிய யாத்திரிகனின் காலம்.
1280-1315 - சீனாவுக்கும் தமிழகத்திற்கும் இடைவிடாத போக்குவரத்து இருந்தது.
1517 - சீனாவுக்குக் கடல் வழியாகப் போர்த்து கேசியர் வருகை.
1575 - பெயின்காரர் வருகை.
1604 - ஹாலந்துக்காரர் வருகை.
1637 - ஆங்கிலேயர் வருகை.
1660 - பிரெஞ்சுக்காரர் வருகை.
1729 - அபினிப் பழக்கம் கூடாதென்ற சீன அரசாங்கத்தின் முதற்பிரகடனம் வெளி யானது.
1784 - சீனாவுக்குக் கடல் வழியாக அமெரிக்கர் வருகை.
1793 - லார்ட் மெக்கார்ட்னி தலைமையில் பிரிட்டிஷ் தூது கோஷ்டி யொன்று சீனாவுக்கு வந்தது.
1796 - அபினிப் பழக்கம் கூடாதென்ற இரண்டா வது பிரகடனம் வெளியானது.
1800 - அபினியை இறக்குமதி செய்யக் கூடாதென்று சீன அரசாங்கம் தடையுத்தரவு பிறப்பித்தது.
1816 - லார்ட் ஆம்ஹெர்ட் தலைமையில் பிரிட்டிஷ் தூது கோஷ்டி வருகை
1834 - லார்ட் நேப்பியர் தலைமையில் பிரிட்டிஷ் வியாபார கோஷ்டி வருகை. தாங்கள் சரியாக நடத்தப்படவில்லை யென்று சொல்லி இந்தக் கோஷ்டியினர், சீனாவுக்குள் செல்லாமல் மாக்கோ தீவுக்குத் திரும்பி விட்டனர்.
1839 - லின் த்ஸே ஹ்ஸு என்ற சீன அதிகாரி, காண்ட்டன் நகரத்திற்குப் பிரிட்டிஷார் கொண்டு வந்திருந்த ஒரு கோடி ரூபாய் பெறுமான அபினியைப் பறி முதல்செய்து நாசஞ் செய்து விட்டான்.
1850-1866 - தைப்பிங் கலகம்.
1861 - சீனாவுக்குச் சொந்தமாக வடக்குப் பகுதி யில் இருந்த சில பிரதேசங்கள், ருஷ்யாவின் ஆதிக்கத்திற்குபட்டன. வ்ளாடிவாடாக் நகரம் அமைந்தது.
1866 - சீனக் குடியரசின் தந்தை என்று போற்றப்படும் ஸன் யாட் ஸென் பிறந்தான். (12-11-1866)
1870 - அந்நியர்களுக்கு விரோதமாக டீண்ட்ஸின் நகரத்தில் கலகம் ஏற்பட்டு, பிறகு பல இடங்களுக்கும் பரவியது.
1871 - லூச்சூ தீவுகள் ஜப்பானின் ஆதிக்கத்துக்குட்பட்டன.
1887 - பெங்ஹுவா என்ற ஊரில் சியாங் கை ஷேக் பிறந்தது.
1893 - மக்கள் குடியரசின் முதல் தலைவன் மாத் ஸே துங் பிறந்தது.
1894 - கொரியா சம்பந்தமாகச் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் போர் மூண்டது.
1898 - மக்கள் குடியரசின் முதல் பிரதம மந்திரி சௌ என் லாய் பிறந்தது.
1900 - பாக்ஸர் கலகம்.
1904 - ஜப்பான், ருஷ்யா மீது யுத்தந் தொடுத்திருப் பதாகப் பிரகடனம் வெளியிட்டது. (8-2-1904)
1905 - மஞ்சூ ஆட்சியிலிருந்து சீனாவை விடுதலை பெறச் செய்ய வேண்டு மென்ற நோக்கத் துடன், ஸன் யாட் ஸென், டுங் மெங் ஹுயி சங்கத்தைத் தோற்றுவித்தான். இதுவே பின்னர் கோமிண்ட்டாங் கட்சியாக வளர்ந்தது.
1911 - மஞ்சூ ஆட்சிக்கு விரோதமாக வூசங் நகரத் தில் புரட்சி. இது 10-10-1911ல் நடைபெற்றது. இது வெற்றிபெற்றதன் விளைவாக சீனாவில் முடியாட்சி மறைந்தது.
1912 - 1-1-1912ல் குடியரசின் தோற்றம். ஸன் யாட் ஸென் முதல் தலைவனாகப் பதவி ஏற்றுக் கொண்டான்.
- மஞ்சூ வமிசத்தின் கடைசி மன்னனாகிய பூ யி முடி துறந்தான். (12-2-1912).
- நாட்டின் ஒற்றுமை கருதி ஸன் யாட் ஸென் பிரசிடெண்ட் பதவியிலிருந்து விலகிக்கொண்டான். அவன் தானத்தில், யுவான் ஷிகாய், தற்காலிக பிரசிடெண்டாகத் தெரிந்தெடுக்கப் பட்டான். (10-3-1912).
1913 - யுவான் ஷிகாய், குடியரசின் பிரசிடெண் டாக ஊர்ஜிதம் செய்யப்பட்டான். (10-10-1913)
1916 - யுவான் ஷிகாயின் மரணம். (6-6-1916)
1917 - ஜெர்மனி மீது யுத்தந் தொடுத்திருப்பதாக, சீனா, பிரகடனம் வெளியிட்டது. (14-8-1917)
1919 - பாரி சமாதான மகாநாட்டில், சீனப் பிரதிநிதிகளின் கோரிக்கைகள் மறுக்கப்பட்டதைக் கண்டித்துச் சீனாவெங் கணும் மாணாக்கர்கள் கிளர்ச்சி செய்தனர். (4-5-1919)
- பாரி சமாதான மகாநாட்டுக்குச் சென்றிருந்த சீனப் பிரதி நிதிகள், வார்சேல் ஒப்பந்தத் தில் கையெழுத்திட மறுத்து விட்டனர். (28-6-1919)
1924 - காண்ட்டன் நகரத்திலுள்ள குவாங் டுங் தேசீய சர்வ கலா சாலையில், ஸன் யாட் ஸென், ஸான் மின் சூயி என்ற தலைப்பில் 24-1-1924 லிருந்து 24-8-1924 வரை இடை விட்டு இடைவிட்டு பதினாறு சொற்பொழிவுகள் நிகழ்த்தினான்.
1925 - ஸன் யாட் ஸென் மரணம். (12-3-1925).
1926 - வூஹான் நகரத்தில் பொதுவுடைமை வாதிகளின் செல்வாக் குக்குட்பட்ட அரசாங்கம் ஏற்பட்டது. (மே மாதம்)
1927 - வூ ஹானில் ஏற்பட்ட அரசாங்கத்திற்கு விரோதமாக, சியாங் கை ஷேக் தலைமையில், நான் கிங் நகரத்தில் தேசீய அரசாங்கம் அமைந்தது. (24-3-1927) இந்தக் காலத்தி லிருந்து, பொதுவுடைமைக் கட்சியினருக்கும் சியாங் கை ஷேக்கைத் தலைவனாகக் கொண்ட கோமிண்ட்டாங் கட்சி யினருக்கும் பிணக்கு ஏற்பட்டு, வரவர முற்றியது.
1928-1934 - பொதுவுடைமைக் கட்சியினரின் செல்வாக்கு வளர்ந்து வந்தது.
- 1934 - ஆம் வருஷம் பொதுவுடைமை யினரின் நடைப் பயணம் தொடங்கியது.-பொதுவாக, சீனாவின் அரசியல் வாழ்வில் ஒரு திரமற்ற நிலை நிலவியிருந்தது.
1936 - சியாங் கை ஷேக் ஜப்பானின் ஆக்கிரமிப்பு முயற்சிகளைத் தகைந்து நிறுத்தாமல் விட்டுக் கொடுத்து வருவதைக் கண்டிக் கின்ற முறையில், அவனைப் பொதுவுடை மைக் கட்சியினர், ஸியான் என்ற ஊரில் சிறைப்படுத்தி, பிறகு விடுதலை செய்தனர். (டிசம்பர் மாதம் மூன்றாவது வாரம்.)
1937-1945 - சீன - ஜப்பானிய யுத்தம்; 6-7-1937-ல் தொடங்கி 2-9-1945 வரை நடைபெற்றது - அமெரிக்கா, ஜப்பானிலுள்ள ஹிரோஷிமா என்ற நகரத்தின் மீது 6-8-1945-ல் ஓர் அணுகுண்டையும், நாகஸாக்கி என்ற நகரத்தின் -8-1945-ல் மற்றோர் அணு குண்டையும் வீசியது.
- ஜப்பான் சரணடைந்தது (2-9-1945).
1945-1949 - சியாங் கை ஷேக்கைச் சேர்ந்தவர்களுக்கும் பொது வுடைமைவாதிகளுக்கும் போராட்டம்.
1949 - சியாங் கை ஷேக் , சில படைகளுடன் போர் மோஸா (டைவான்) தீவுக்குச் சென்று தனி அரசாங்கம் அமைத்துக் கொண்டது. (செப்டம்பர் மாதம்)
- மக்கள் குடியரசு தாபிதம். (2-10-1949).
அனுபந்தம் - 3
சீனாவுக்கும் அந்நிய வல்லரசுகளுக்கும் ஏற்பட்ட முக்கியமான ஒப்பந்தங்கள்
1689 - சீனாவுக்கும் ருஷ்யாவுக்குமிடையே ஆமூர் பிரதேசத்தில் எல்லை வகுக்கின்ற முறையில் ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. இதுவே இரண்டு நாடுகளுக்கும் முதன் முதலாக ஏற்பட்ட ஒப்பந்தம். (27-8-1689)
1842 - நான்கிங் உடன்படிக்கை; அபினி வியாபாரம் காரணமாகச் சீனாவுக்கும் பிரிட்டனுக்கும் ஏற்பட்டது. (29-8-1842).
1843 - போக் ஒப்பந்தம்; மேற்படி நான்கிங் உடன்படிக்கையைத் தொடர்ந்து, வியாபார விதிகள், சுங்க வரிகள் முதலியவற்றை நிர்ணயிக்கின்ற முறையில் சீனாவுக்கும் பிரிட்டனுக்கும் ஏற்பட்டது. (8-10-1843)
1844 - மேற்படி ஒப்பந்தத்தை அனுசரித்து சீனா வுக்கும் அமெரிக்கா வுக்கும் ஒப்பந்தம். (3-7-1844)
1987 - மேற்படி ரீதியில் சீனாவுக்கும் நார்வே - வீடனுக்கும் ஒப்பந்தம் (20-3-1847)
மேற்படி ரீதியில் சீனாவுக்கும் பிரான்ஸுக்கும் ஒப்பந்தம். (24-10-1847).
1858 - டீண்ட்ஸின் ஒப்பந்தம்; வியாபாரம் முதலிய துறைகளில் அந்நியர்களின் செல்வாக்கை அதிகரித்துக் கொடுக்கின்ற முறையில், 13-6-1858-ல் சீனாவுக்கும் ருஷ்யாவுக்கும், 18-6-1858ல் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும், 26-6-1858-ல் சீனாவுக்கும் பிரிட்டனுக்கும், 27-6-1858-ல் சீனாவுக்கும் பிரான்ஸுக்கும் தனித் தனியாக ஒப்பந்தம் ஏற்பட்டது.
1871 - போர்மோஸா தீவில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் விளைவாகச் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. இதுவே இரண்டு நாடுகளுக்கும் முதன் முதலாக ஏற்பட்ட ஒப்பந்தம்
1876 - கொரியாவின் தனித்துவத்தை அங்கீகரிக் கின்ற முறையில், ஜப்பானுக்கும் கொரியா வுக்கும் ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. (26-2-1876).
- சேபூ ஒப்பந்தம்; மார்கேரி என்ற பிரிட்டிஷ் தானிகன் யுன்னான் மாகாணத்தில் கொலை செய்யப்பட்டதன் விளை வாகச் சீனாவுக்கும் பிரிட்டனுக்கும் ஏற்பட்டது. (13-9-1876)
1895 - ஷிமோனோஸெகி ஒப்பந்தம்; கொரியா சம்பந்தமாக சீனாவுக்கும் ஜப்பானுக்கும் ஏற்பட்டது. (17-4-1895)
1901 - பாக்ஸர் ஒப்பந்தம்; பாக்ஸர் கலகத்தின் விளைவாக, சீனாவுக்கும், பிரிட்டன், பிரான், ஜெர்மனி முதலிய வல்லரசு களுக்கும் ஏற்பட்டது. (7-9-1901)
1902 - ஆங்கிலோ-ஜப்பானிய ஒப்பந்தம்; சீனாவில் பிரிட்டனின் உரிமைகளும், கொரியாவில் ஜப்பானின் உரிமைகளும் முறையே பாது காக்கப்பட வேண்டுமென்பதையொட்டி ஏற்பட்டது. (30-1-1902).
1905 - போர்ட்மவுத் ஒப்பந்தம். ருஷ்ய -ஜப்பானிய யுத்தத்தின் விளைவாக ஏற்பட்டது. (5-9-1905)
1915 - ஜப்பானின் இருபத்தோரு கோரிக்கைகள் சம்பந்தமாகச் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. (25-5-1915)
1917 - ஷாண்டுங் தீபகற்பம் சம்பந்தமாக ஜப்பானும் பிரிட்டனும் ஒரு ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டன. (16-2-1917) இதே பிரகாரம், ஜப்பான், பிரான்ஸுடன் ஒரு ரகசிய ஒப்பந்தமும் (1-3-1917) ருஷ்யாவுடன் ஒரு ரகசிய ஒப்பந்தமும் (5-3-1917)செய்து கொண்டது.
1922 - வாஷிங்க்டன் ஒப்பந்தம்; ஷாண்டுங் தீபகற்பம் சம்பந்தமாகச் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் வாஷிங்க்டன் நகரத்தில் ஏற்பட்டது. (4-2-1922).
- ஒன்பது வல்லரசுகள் ஒப்பந்தம்; சீனாவின் சுதந்திரத்தை அங்கீகரிக்கின்ற முறையில் பிரிட்டன், பிரான் முதலிய ஒன்பது வல் லரசுகள் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டன. வாஷிங்க்டன் நகரத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப் பெற்றது. (6-2-1922).
1933 - டங்க்கூ ஒப்பந்தம்; மஞ்சூரியா விஷயமாகச் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் ஏற்பட்டது. (31-5-1933)
இந்நூல் எழுதுவதற்குத் துணையாயிருந்த சில நூல்கள்
1 China-Story of the Nations Series - _Robert K. Douglas_
2 China - _E. H. Parker_
3 The Pageant of Chinese History - _Elizabeth Seeger_
4 A Short History of Chinese Civilization - _Richard Wilhelm_
5 A Short History of Chinese Civilization - _Tsui Chi_
6 China in the Family of Nations - _Henry T. Hodgkin_
7 As the Chinese See Us - _T. G. Selby_
8 Out in China - _Mrs. Archibald Little_
9 The Continent of Asia - _Lional W. Lyde_
10. China Struggles for Unity - _J. M. D. Pringle_
11. Mowrer in China - _Ansel Mowrer_
12. Modern Chinees History - _Political, Economic and Social - Prof. Tan Yun Shan_
13. Chinese Unity - _Shen Shih- Hua_
14. Foreign Notices of South India - _K. A. Nilakanta Sastri_
15. Southern India & China - _V. R. R. Dikshitar_
16. My Country and My People - _Lin Yu-tang_
17. The Chinese People - their Past, Present and Future - _A. S. Elwell-Sutton_
18. The International Relations of the Chinese Empire-3 Vols. - _H. B. Morse_
19. Europe and China - _G. F. Hudson_
20. A History of the Far East in Modern Times - _Harold M. Vinacke_
21. A History of the Modern and Contemporay Far East - _P. H. Clyde_
22. China Awakened - _M. T. z . Tyau_
23. Understanding China - _Harold B. Rattenburg_
24. China Changes - _Gerald Yorke_
25. Affairs of China - _Sir Eric Teichman_
26. The Reconquest of Asia - _O. D. Rasmussen_
27. The Awakening of Asia - _H. M. Hyndman_
28. Manchuria-The Cockpit of Asia - _Col. P.T. Etherton and H. H. Tiltman_
29. The Tinder Box of Asia - _George E. Sokolsky_
30. The Problem of China - _Bertrand Russel_
31. Peasant Life in China - _Hsio T’ung Fei_
32. Village and Town Life in China - _Y. K. Leong and L.K.Tao_
33. The Chinese Revolution - _A. N. Halcombe_
34. Forty years in China - _Sir Mevrick Hewelett_
35. China’s Struggle with the Dictators - _O. M. Green_
36. The Men of the Burma Road - _Chiang Yee_
37. Future of South East Asia - _K. M. Panikkar_
38. Makers of New China - _S. S. Batliwala_
39. The Birth of New China - _Arthur Clegg_
40. China’s Millions - _Anna Louise Strong_
41. People’s War - _I. Epstein_
42. China Fights Back - _Agnes Smedley_
43. Battle Hymn of China - _Agnes Smedley_
44. War Time China as Seen by Westerners
45. War Torn China - _Kamala Devi Chatto padyaya_
46. Crisis in China - _James Bertram_
47 What War Means - _The Japanese Terror in China - H. J. Timperley_
48. The Fight for the Republic of China - _B.L.Putnam Weale_
49. My Experiences in China - _M. N. Roy_
50. A Leaf in the Storm - _Lin Yu-tang_
51. The Japanese New Order in Asia - _Paul Einzig_
52. China and Japan - _R. I. I. A._
53. Interviewing Japan - _A. Moore._
54 Japan’s Gamble in China
55. Japan’s Continental Adventure - _Ching-Chun-Wang_
56. Japan’s Kampf - _Jayadeva_
57. Chinese Handbook - _1937-1943_
58. Why the Fighting in Shanghai
59. China Builds for Democracy - _Nym Wales_
60. The International Development of China - _Sun Yat Sen_
61. China After Five Years of War
62. One World - _Wendell L. Willkie_
63. Chunking Diary - _D.F. Karaka_
64. Stories out of China - _Rewi Alley_
65. Li Sao and other Poems of Chu Yuan
66. Science and Civilization in China Vols. I, II, III, - _Joseph Needham_
67. China and Europe - _Adolf Reichwan_
68. National Movement in China - _Krishnalal Chatterjee_
69. A Short History of the Chinese - _Mary A Nourse_
70. An Outline History of China
71. A Simple Geography of China - _Wang Chun - heng_
72. Our Oriental Heritage - _Will Durant_
73. China - _Lena E. Johnston_
74. The Cheinese - _Winifred Galbraith_
75. China - Her Life and People - _Mildred Cable and Francesca French_
76. China, India and the War - _Part I - Tan yun -Shan_
77. China, Lore, Legend and Lyrics - _Barondes_
78. Tsingtau under three flags -_W. L. Godshall_
79. A Visit to New China - _Saila Kumara Mukherjee_
80. China - Yesterday and Today - _E. T. Williams_
81. China - Survey of World Cultures - _Chang - ti Hu._
கருத்துகள்
கருத்துரையிடுக