கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்
வரலாறு
Back
கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்
பாலூர் கண்ணப்ப முதலியார்
வித்துவான் பாலூர் கண்ணப்ப முதலியார், B.O.L.
தமிழ்த்துறைத் தலைவர், புதுக் கல்லூரி,சென்னை.
எடுகேஷனல் பப்ளிஷிங் கம்பனி
நுங்கம்பாக்கம் சென்னை-34
முதற் பதிப்பு-1957 திருத்திய பதிப்பு ஏப்ரல் 1968 திருத்திய பதிப்பு ஜூன் 1968. 10.9 கிலோ கிராம் வெள்ளைத் தாளில் அச்சிடப்பட்டது. Approved by the Madras Text Book Committee for Class use Vide page 8 of Fort St. George Gazette, dated 24-4-68. எடுகேஷனல் பப்ளிஷிங் கம்பெனி நுங்கம்பாக்கம் சென்னை-34 விலை ரூ. 1
* * *
ஜங்கர் பவரி பிரஸ், சென்னை-1
முன்னுரை
‘கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்’ என்னும் இந்நூல் மாணவர்கள் பழங்காலச் செய்திகளை உணர்ந்து இன்புறும் வண்ணம் உயர்நிலப் பள்ளித் துணைப்பாட நூல்களுக்கு என அரசாங்கத்தார் குறிப்பிட்டுள்ள முறைப்படி எழுதப் பெற்றதாகும். வெறும் செய்திகளை மட்டும் குறிப்பிடாமல் இடையிடையே இலக்கியச் சுவைப்பட இந்நூல் எழுதப்பட்டுள்ளமை அதனை ஒரு முறை கண்ணுறுவோர்க்கு நன்கு விளங்கும். அங்ஙனமே அயல்நாட்டுச் செய்திகளுடன் ஆங்காங்கு நம் தமிழ் நாட்டின் பழக்க வழக்கங்களும் குறிப்பிடப்பட்டி குத்தல் இந்நூலின் தனிச் சிறப்பாகும்.
பழைய பழக்க வழக்கங்களை உணர்ந்து போற்றுதல் நம் கடமையாகும். அவை இளமாணவர் உள்ளங்களில் பதியுமானல் அத்தகைய மாணவர், தம் பிற்காலத்தில் நம் முன்னேர்களைப் போன்று பெருமை பெறுவர் என்பதை உளங்கொண்டே இந்நூல் எழுதப் பெற்றது. இதனைத் துணைப்பாட நூலாகத் தங்கள் பள்ளிகளில் அமைத்து மேலும் என்னை இத்துறையில் ஊக்குமாறு பெரிதும் வேண்டிக் கொள்கிறேன்.
ஆசிரியர்.
பொருளடக்கம்
1. கிரேக்க மரபினரின் பொது வாழ்வு
2. அரசியல் அமைப்புக்கள்
3. ஸ்பார்ட்டர்களின் வாழ்க்கை
4. ஏதென்ஸ் நகரின் முன்னேற்றம்
5. குடியரசு ஆட்சி
6. பழக்க வழக்கங்கள்
7. மாதர்கள் நிலை
8. எதினிய நகர அடிமைகளின் வாழ்வு
9. தொழிலும் வாணிகமும்
10. பொழுது போக்கு
11. சமய வாழ்வு
12. கல்வி நிலை
13. இறுவாய்
பயிற்சி வினாக்கள்
தோற்றுவாய்
1. கிரேக்க மரபினரின் பொது வாழ்வு
திருவளர்ந்தோங்கும் இந்நிலவுலகில் பல்வேறு நாடுகள் தோற்றம் அளிக்கின்றன. அவற்றுள் ஒன்று கிரீஸ் நாடாகும். அஃது எல்லாப் படியாலும் சிறந்து விளங்குகிறது ; காலத்தால் முந்தியது; கலையால் தலைசிறந்தது. இந்நாடு தமிழ் நாட்டோடு போட்டி இடவும் வல்லது ; இலக்கிய வளத்திலும் நாகரிக வாழ்விலும் ஒப்புயர்வற்றது. ஆகவே, அந்நாட்டு ஒழுகலாற்றை ஒருவாறு உணரவேண்டியது நம்மனோர் கடனாகும். ‘அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே வைகுந்தம்’ என்று எண்ணுவதுபோல் நம் நாட்டுப் பெருமையும் சிறப்பும் மட்டும் அறிந்திருப்பதில் பயனில்லை. பிற நாட்டு வரலாற்றையும் நன்குணர்ந்து. பின் இரண்டினையும் சீர்தூக்கிக் காண்பதே அறிவுடைமையாகும். ஆகவே, கிரேக்க நாட்டு வரலாற்றைத் துணையாகக் கொண்டு, அதனை ஈண்டு அறிவோமாக.
அக்கேயர்கள் கிரீஸ் நகர் வருகை
கிருஸ்துப் பெருமான் பிறப்பதற்குப் பதின் மூன்று நூற்றாண்டுகட்கு முன், அஃதாவது ஏறக் குறைய மூவாயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன் கிரேக்க மொழியைப் பேசும் மரபினரான அக்கேயர்கள் (Achaeans) கிழக்கு ஐரோப்பாக் கண்டத் தினின்றும் கிரீஸ் நகரம் வந்து குடியேறினர். இவர்கள் குடிபுகுமுன் உள்நாட்டுக் குடிகளான பண்டைய கிரீஸ் நகர மக்கள், மிகவும் உயர்வான நிலையில் நாகரிகம் வாய்ந்தவர்களாக இருந்தனர். அவர்கள் அந்நிலையில் இருந்தனர் என்பதை, அவர்கள் அமைத்திருந்த அழகிய அரண்மனைகளும், அவற்றில் அமைந்திருந்த திண்மைமிக்க சுவர்களும், கோட்டை கொத்தளங்களும், நன்கு சான்று கூற வல்லனவாக இருந்தன. இன்னோரன்ன இயல்பு வாய்ந்த கட்டட அமைப்பினைக் கண்ட அக்கேயர்கள் கிரீஸ் நகரிலேயே தாம் வாழ உறுதிகொண்டு, அதற்கு ஆவன அமைத்துக் கொண்டனர். நல் வாழ்வுக்கு இது நல்லிடம் என்று கண்ட இடங்களில், மக்கள் குடியேறி வசிக்க விரும்புவது இயற்கை தானே! ஒரு நாட்டின் பண்டைய ஒழுகலாற்றை அறிதற்குப் பண்டைய ஓவியங்களும் கல்வெட்டுக்களுமே உற்ற துணையாவன என்பது வரலாற்றூசிரியர் துணிபாகும். நம் தமிழ்நாட்டுப் பழங்கால நாகரிகத்தினையுணர்வதும் இவற்றால் தான் என்பதையும் ஈண்டு நினைவுபடுத்திக்கொள்ளுதல் வேண்டும். இவர்கள் எம்முறையில் அங்கு வாழ்வதற்கான வளங்களையும், நலன்களையும் ஏற்படுத்திக் கொண்டனர் என்பதை அவர்களது கல் ஒவியங்களாலும், கல் வெட்டுக்களாலும் தெள்ளத் தெளிய அறிந்துகொள்ளலாம். அக்கேயர்களின் குண நலன்கள்
அக்கேயர்கள் சிறிதும் சோம்பி இராதவர் ; எப்பொழுதும் சுறுசுறுப்பாய் உள்ளவர்; ‘திரை கடலோடியும் திரவியம் தேடு’ என்னும் பழமொழிக்கிணங்கக் கலம் ஏறிக் கடற்பயணம் புரிபவர் ; புது நாடு கண்டு வீரதீரச் செயல்களை வெளிப்படுத்த வேண்டுமென்னும் உணர்ச்சிமிக்கவர்; எவ்வாறேனும் வெளி நாடுகளுக்குச்சென்று வாணிகம் செய்து பொருட்குவை திரட்டித் தம் நாட்டை வளப்படுத்த வேண்டுமென்னும் சீரிய நோக்கினர்.
செல்வம் ஈட்டுதற்குரிய பல்வேறு வழிகளில் வாணிகமும் ஒன்று. அவ்வாணிகத்தைக் கடல் கடந்து நடத்திப் பொருள் ஈட்டுதல் நம் தமிழரது மரபும் ஆகும். சாதுவன் என்பவன் நம் நாட்டு வணிகன். அவன் தன் முன்னோர் பொருள்களை இழந்தான்; இழந்த பொருள்களை மீண்டும் ஈட்ட விழைந்தான். அதன் பொருட்டுக் கலம் ஏறிக் கடல் கடந்து சென்றான் என்னும் வரலாற்றை மணிமேகலை என்னும் மாண்புறு நூல்
“வங்கம் போகும் வணிகர் தம்முடன்
தங்கா வேட்கையில் தானும் செல்வழி”
என்று குறிப்பிடுகிறது.
இவ்வாறே புனிதவதியாரின் கொழுநனான பரமதத்தனும் பொருளீட்ட மரக்கலம் ஏறி மாக் கடல் கடந்து சென்றான் என்பதை அருண்மொழித் தேவரும் அறிவிக்கின்றார். இவ்வாறே அக்கேயர்களின் வீரதீரச்செயல்கள்யாவும் அறிஞர்களால் பாடப்பட்டுப் பதிவு செய்யப்பட்டன. நம் தமிழ்நாட்டுப் பண்டை வரலாற்றையும் நாகரிகப் பண்பையும் அறிதற்கு எங்ஙனம் நம் சங்க இலக்கியங்களும் மற்றும் பல இடைக்கால நூல்களும் பயன்படுகின்றனவோ, அங்ஙனமே இவர்களின் உண்மை வரலாறுகளே அறிதற்கு அப்பாடல்கள் பெருந்துணை செய்கின்றன. இவர்கள் வெளிநாடு சென்று பெற்ற வெற்றிகளில் மிகவும் இன்றியமையாததாகக் குறிக்கப்படுவது டிராய் (Troy) நகரத்து மக்களோடு போரிட்டு வெற்றி கொண்டதே ஆகும். இந்நிகழ்ச்சி இலக்கியத்தில் ஆணித்தரமாக அழுந்திய வரலாறாகும்.
போர் வீரர்
அக்கேயர்கள் சோம்பேறிகளல்லர்; சுறு சுறுப்புடையவர்கள் என்பது முன்னர்க் குறிக்கப்பட்டது. இத்தகையவர், சிறந்த போர் வீரர்களாய் விளங்கியிருப்பர் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஆகவே, இவர்கள் பெரிய வீரர்களேயாவர். இவர்கள் போரிட்ட முறையை அறிந்தால், அது மிகவும் வியக்கத்தக்கதாய் இருக்கும். வில்போர் இவர்களிடையே உண்டு. இதனோடு கற்களே எதிரிகளின் மீது எறியவும் பயின்றிருந்தனர். இது பண்டைப் போர் முறைகளில் ஒன்று என்பதைச் சிலப்பதிகார ஆசிரியர் மதுரை மாநகர் மதிற்சுவர்ப் பொறிகளைக் குறிப்பிடுகையின் “கல்லுமிழ் கவணும்” என்று குறித்திருக்கிறார். நாம் அதை இங்குக் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டியதாகும். அக்கேயர்கள் வில்லையும் கல்லையும் தம் படைகளாகப் பயன்படுத்தி வந்தவர்களாயினும், இவர்கள் மிகவும் விரும்பிக் கொண்ட ஆயுதம் ஈட்டியாகும். இவர்கள் எதிரிகள் எய்யும் படைகள் தம்மீது படா வண்ணம் இருக்கப் போருடைதரித்து இருந்தனர். இது மெய்க் கவசம் எனப்படும். இவர்கள் தலையில் நல்ல உலோகத்தாலான தொப்பியை அணிந்திருந்தனர். இவர்கள் மார்பில் தோலாலேனும், உலோகத்தாலேனும் செய்யப்பட்ட உடையைத் தற்காப்புக்காக அணிந்திருந்தனர். கால்களிலும் உலோகத்தாலாகிய கால் பாதுகாப்புக்குரியமேசோடு போன்ற காலணியைக் கொண்டிருந்தனர். எருதின் தோலாலாகிய நல்ல வேலைப்பாட்டுடன் கூடிய கேடயத்தைத் தம் கையகத்துக் கொண்டிருந்தனர். இன்னோரன்ன கனம் மிக்க உடைகளையும் படைகளையும் ஒரு வீரன் தாங்கில்செல்ல வேண்டியிருந்ததால்தான், நடந்து செல்ல இயலாதவனாய்த் தேர் மீது இவர்ந்தேசெல்ல வேண்டியவனாய் இருந்தான் என்பது தெரிய வருகிறது. நம் நாட்டு வீரரும் தேரூர்ந்தன்றே செருச் செய்தனர்? மறத்தினும் அறமே காட்டும் மாண்பு அக்கேய வீரர்பால் அமைந்த ஒரு சீரிய பண்பாகும். பலர் கூடி ஒருவரை அடக்கும் குணம் இவர்கள்பால் இல்லை. ஒருவரை ஒருவர் ஒறுக்கும் குணமே ஓங்கி இருந்தது. இதுவும் தமிழ்நாட்டு இயல்புகளில் ஒன்றாகும்; ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போரிடும் முறையைக் கொண்டே அவர் திறன் கூறும் பண்பு அக்காலத்தில் இவர்களிடையே இருந்தது. பொதுமக்கட்குப் போரில் அதிகப் பொறுப்பு கிடையாது. அவர்கள் கொண்டிருந்த படைவலியும் மிகக் குறைவானதே. அவர்களால் மும்முரமான போரில் முன் நின்று போர் செய்ய இயலாது.
பொதுமக்களுக்குப் போரின்றி அமைதி நிலவிய போது, எதிலும் சிறந்த பங்குகொள்ளும் பேறு கிடையாது. அக்கேய மரபினருள் எவன் போர்ப் படையை நடத்திச் சென்றவனோ, அவனே தலைவன் என்னும் தகுதிக்குரியவன் ஆவான். அவன் போர்ப் படையைத் திறம்பட நடத்திச் செல்லும் வாய்ப்புப் பெற்றதோடு நில்லாமல், தம் மரபினர் நல்வாழ்வு கருதித் தம் மரபுக்குரிய கடவுளர்கட்கும் பலியிட்டு, அவர்கள் மனங்குளிரச் செய்யும் பொறுப்பையும் பெற்று விளங்கினான் தன் மரபினர்க்கு இடையே ஏதேனும் மனக் கலக்கம் ஏற்பட்டாலும் அதனைத் தீர்த்துவைக்கும் கடனும் இவனைச் சார்ந்ததேயாகும்.
பொது மக்கள் வாழ்க்கை
அக்கேயர்களின் வாழ்க்கை வரலாற்றை இன்னமும் தெள்ளத் தெளிய உணரவேண்டினால் ஹோமர் எழுதிய பாடல்களைக் கொண்டு நன்கு அறியலாம். அவையே “இலியட்டும் ஒடிசியும்” (Illiad, Odyssey) ஆகும்.
இவர்கள் நன்கு உண்ணும் இயல்பினர்; ‘எல்லாம் வயிற்றுப் பெருமான் பொருட்டு’ என்னும் குணத்தினர். இது மக்கட்கு இயல்புதானே! பசி எடுப்பின் பாடுபட முடியுமா? அது மிகக் கொடியது. அது செய்யும் செயல்கள் இன்ன என்பதை மணிமேகலை கீழ் வருமாறு கூறுகிறது.
ஒருவனுடைய நற்குடிப் பிறப்பும், சிறப்பும், கல்வியும் பயனின்றிப் போகும். வெட்கம் அழியும். அழகு சிதையும் என்பதாம்.
இதனால், இவர்கள் உணவில் பெருவிருப்புக் கொண்டதில் வியப்பில்லை. அடிக்கடி விருந்துணவு அயில்வர். மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி என்பன இவர்கள் விருந்திற்கு மிகவும் வேண்டற்பாலன. திராட்சைச் சாறான நல்ல விலையுயர்ந்த மதுவகையும் அவ்விருந்தில் இடம் பெறும். பணியாளர்கள் விருந்தினர்க்கு வேண்டியவற்றை அவ்வப்போது படைத்த வண்ணமாய் இருப்பர். விருந்தில் பல பெருமக்கள் கலந்து கொண்டு-உடனிருந்து உண்பர். விருந்து இன்பமாக நடக்கையில் செவிக்கு இன்பம் அளிக்க இசையும் நடந்தவண்ணம் இருக்கும். நடிப்புக்கு அவ்விருந்து இடங்கொடுத்தது. ஆட்டம் ஆடுவதற்கெனவே தளங்கள் சில தயாரிக்கப்பட்டிருக்கும். நடிகர்கள் பாடல்களின் மூலம் பந்தாட்டம் ஆடி அபிநயம் புரிவர்.
உடற் பயிற்சிக்கெனச் சில பயிற்சிகளில் இவர்கள் கைதேர்ந்திருந்தனர். மற்போர், ஓட்டம், குத்துச் சண்டை, குதித்தல், கனமுள்ள பந்தினை எறிதல் முதலியன அவர்கட்கு உகந்தவிளையாட்டுக்களாகும்.
உறைவிடம்
அக்கேய மாதர்கள் உறைவதற்கெனத் தனி இடங்கள் இல்லங்கட்குள் இருந்தன. ஆனால், விருந்து முதலிய சிறப்புகள் நடைபெறும் காலங்களில், வேறுபாடின்றிப் பெண்மக்கள் ஆண்மக்களிடையே அமர்ந்து விருந்தினை அயர்வர். அந்நாட்டு மாதர்கள் வெறும் அடுப்பூதிகளாக இன்றி, முழு உரிமை உடையவர்களாய் இருந்தது மிகமிக வியக்கத்தக்கதாகும். பகட்டான வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் ஈடுபட்டிருந்தாலும் மரியாதைப் பண்பில் சிறிதும் குறையாது வாழ்ந்ததுதான், மிகமிக இன்றியமையாத சமூக இயல்புகளில் ஒன்றாகும். இவர்கள்பால் அச்சமும் நாணமும் அமைந்திருந்தன. இளைஞர்கள் முதியவர்களைக் கண்டால் எழுந்து நின்று பணிவு காட்டுவர். “யான் கண்டனை யர் என் இளையர்” என்னும் பிசிராந்தையார் பாடல் இவர்கட்குப் பொருந்தும். அக்கேயர் வெளிநாட்டு மக்களிடத்தும், புதியராக வந்தவர்களிடத்தும், அன்பும் இரக்கமும் காட்டி வந்தனர்; பொறுமைக்கோர் உறைவிடமாகவும் விளங்கினர். இவர்கள் வாழ்வு இயற்கைக்கு இயைந்த வாழ்வு ஆகும்.
அக்கேயர்கள் வாழ்ந்த அரண்மனைகளின் அமைப்பு எளிமையானதென்றே சாற்றலாம். இவர்கள் சேர்ந்து வாழும் இடம் அரண்மனையில் அமைக்கப்பட்ட ஒரு பெரிய கூடமாகும். இதற்கு இடையே ஒரு சமையல் அறை அமைக்கப்பட்டிருக்கும். கூடம் நான்கு தூண்களின் ஆதரவில் நிலைத்திருக் கும். ஆண்மக்கள் கூடத்தில் துயில்கொள்வர். பெண்பாலார் தனித்த அறையில் கண் அயர்வர். அரண்மனைக்குப் புறத்தே தாழ்வாரமும் பரந்த வெளிகளும் அமைக்கப்பட்டிருக்கும். இவ்விடங்கள் பணியாளர்களும் விருந்தினர்களும் துயில்கொள்ளப் பயன்படும். குளிப்பதற்கென்று தனித்த அறைகளும் உண்டு. இவர்கள் தூய்மையை விரும்பும் நேயர்கள். ஆதலின், தம் இல்லங்களையும் அரண்மனைளையும் நன்முறையில் அலங்கரித்து வைப்பர். அரண்மனையில் வெள்ளி, வெண்கலத்தாலான உருவங்களும், சுவர்களில் கற்சிலைகளும், தீட்டப்பட்ட ஒவியங்களும் நிறைந்து அழகுக்கு அழகு செய்து வந்தன. இதனால், கிரேக்கர்கள் ஒவியத்திலும் சிற்பத்திலும் தனியா வேட்கையுள்ளவர் என்பது அறிய வருகின்றது. இவ்வாறு தீட்டப்பட்ட செய்திகளை நம் தமிழ் நூல்களில் பார்க்கக் காணலாம். கிரேக்கர்கள் பயன்படுத்தி வந்த உலோகப் பொருள்கள் செம்பொன்னும், வெண்பொன்னுமே என்றாலும், வெண்கலமே அவர்கள் பெரிதும் விரும்பும் உலோகமாகும். இரும்பு அவ்வளவாக அவர்களால் பயன்படுத்தப்படவில்லை.
தொழில்கள்
கிரேக்கர்கள், வாழ்வு பெரிதும் போர் புரிவதில் ஈடுபாடுடையதானாலும், இவர்கள் உழவுத்தொழிலையும் சிறப்புடையதாகவே கருதி ஆகவேண்டும்? உழுதுண்டு வாழும் வாழ்விற்கு ஒப்பானது ஒன்றுமில்லை அல்லவா?
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்”
என்னும் வாக்கியம் எந்நாட்டவர்க்கும் பொதுவன்றோ ? இவர்கள் உழுத பயனால் தானியங்களையும் திராட்சைப் பழங்களையும், ஒலிவக் கொட்டைகளையும் பெற்றனர். ஒலிவக் கொட்டைகளை நசுக்கி அவற்றின் மூலம் எண்ணெய் எடுத்தனர். அந்த எண்ணெய் இருவகையில் இவர்கட்குப் பயன்பட்டது. இஃது உணவுப் பொருள்களைச் சமைப்பதற்கு எண்ணெய்க்குப் பதிலாக உபயோகப்பட்டது. இதனோடு ஆடைகளை வெளுக்கச் சவுக்காரத்திற்குப் பதிலாகவும் பயன்பட்டது. நிலங்களை உழுவதற்குக் கோவேறு கழுதைகளும் எருதுகளும் துணைபுரிந்தன. நிலங்களுக்கு உரியவர்களே அறுவடை செய்வதற்கு இயலாதவராயின் அவர்களின் பொருட்டுக் கூலியாட்களை அமர்த்தி அறுவடை செய்து வந்தனர். அவ்வழக்கம் நாம் கொண்டுள்ள உழுதுண்ணல், உழுவித்துண்ணல் என்னும் பழக்கங்களை நினைவுபடுத்துவதேயாகும். நிலங்களை உழுது பயன் கொள்வதோடு நில்லாமல், அக்கேயர்கள் ஆடு, மாடு,பன்றி முதலான விலங்கினங்களையும் வளர்த்து அவற்றின் பயனையும் அடைந்து வந்தனர். இம்மூவின விலங்குகளில் மாடுகளே இவர்கள் பெரிதும் மதித்துவந்த செல்வமாகும். மாடுகளைச் சிறந்த செல்வமாக மதிக்கும் வழக்கம், தொன்று தொட்ட வழக்கமாகும். இவ்வாழ்க்கைகளை எல்லாம் பார்க்கையில், நம் தமிழரது மருதநில வாழ்வும், முல்லை. நில வாழ்வும் நினைவுக்கு வருகின்றன. நம் தமிழ் நாட்டவரும் மாடுகளையே செல்வமாகப் பெரிதும் மதித்து வந்திருக்கின்றனர். மாடு என்னும் சொல்லுக்குப் பொன் என்னும் பொருளையும் தந்திருக்கின்றனர். இதனைக்
“கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை."
என்னும் வள்ளுவர் வாக்காலும்,
‘எத்தாயர் எத்தந்தை, எச்சுற்றத்தார் எம்மாடு’
என்னும் அப்பர் பெருமானர் அருள்மொழியாலும் நன்கு அறியலாம்.
பண்டம் மாற்றும் பழக்கம் பண்டைய அக்கேயரிடையே இருந்ததாலும் எண்ண இடம் உண்டு. நாணயங்கள் நடைமுறையில் வருவதற்குமுன் இவ்வழக்கமே எந்நாட்டிலும் கைக்கொள்ளப்பட்டது என்னலாம். முத்திரையிட்ட உலோக நாணயம் நடைமுறையில் வழங்க வசதி குறைந்த காலங்களில் இன்றியமையாத பொருள்களின் பொருட்டு மாடுகளே ஈடுகாட்டப்பட்டன. இவ்வமயத்தில் மற்ரறொரு செய்தியைக் கூறப்புகின் நாம் வியக்காமல் இருக்க இயலாது. அக்கேயர் தம் மகளை மணம்முடிக்க விரும்பினால், சில எருமைகளை அம்மகளுக்கு ஈடு தந்தால், மாப்பிள்ளை வீட்டார்க்கு மணமுடிக்க முன் வருவார்களாம். நம் நாட்டில் கொல்லேறு தழுவுவார்க்குத் தம் குலக்கொழுந்தைக் கொடுத்தனர். இவர்கள் கொல்லேறு கொடுப்பவர்க்குத் தம் குலக் கொடியையும் கொடுத்து வந்தனர். இரண்டிற்கு மிடையில் எருதுகள் பொதுப்பொருளாக நிலவுவதை நாம் நினைவில் கொள்ள வேண்டியதாகும்.
எந்த நாட்டிலும் எல்லாரும் செல்வர்களாய்ச் சிறக்க வாழ்ந்தனர் என்று சொல்ல முடியாது. செல்வர்கட்கு இடையில் வறியவரும் இருக்கத்தான் இருப்பர். கம்பர் முதலான புலவர் பெருமக்கள்
‘கொள்வார் இலாமையால் கொடுப்பாரும் இல்லை ;
வன்மை இல்லையோர் வறுமை இன்மையால்’
என்று கூறிய கூற்றுக்கள் யாவும், அவர்கள் புலவர் உலகில், காணும் கனவும், கற்பனையுமேயன்றி வேறல்ல.
அக்கேயர்கட்கு இடையில் ஏழை எளியவர்களும் வாழ்ந்தனர் எனக்கொள்க. இவர்கள் வயிறு வளர்க்க “ வேலையின்றிப் பன்னாள் பாடுறுவதும் உண்டு. இரந்துண்டு வாழ்வோரும் எண்ணிலர் இருந்தனர். ஏழை எளியவர்கள் அடிமை வாணிகக் குழுவினரால் தூக்கிச்செல்லப்பட்டு, அடிமைகளாக விற்கப்படுதலும் உண்டு. இவ்வடிமைகள் பலவித இடையூறுகட்கு உட்பட்டே ஆகவேண்டும். மழையிலும் குளிரிலும் வீடுவாசலின்றி வாழவேண்டியதும், செல்வர்களின் கொடுமைகட்குக் கீழ்ப்பட்டே வாழவேண்டியதும் இவர்கள் விதியாகும்.
சமயக் கொள்கை
கிரீஸ் நாட்டுப் பழங்குடிகள் தங்கள் வழிபடு கடவுளர், பாதாள உலகத்தில் இருப்பதாக எண்ணி
வணங்கி வந்தனர். அத்தேவதைகள் கெட்ட தேவதைகளாகக் கருதப்பட்டு வந்தன. அத்தேவதைகளின் உள்ளம் குளிர்வதற்காக விலங்கினங்களைப் பலியிட்டு வந்தனர். சிற்சில வேளைகளில் மக்களையும் பலி கொடுப்பதுண்டு. இவர்கள் வழிபட்ட தேவதைகளில் மினோடார் (Minotaur) என்பதும் ஒன்று. இது ஒரு பாதி எருமை வடிவமும், மற்றெரு பாதி மனித வடிவமும் கொண்டது. இஃது இளவயதுடைய ஆண் பெண் மக்களை உண்டே வாழ்வதாக இவர்கள் கருதிவந்தனர். இந்தக்கொடிய பழக்கத்தை அக்கேயர்கள் கிரீஸ் தேசத்துப் பழங்குடி மக்களிடமிருந்து கைக்கொண்டனர் எனலாம். ஏனெனில் அகமெம்னன் (Agamemon) தம்மகளான இப்ஹிஜினியா (Iphigenia) என்பவளே இத்தெய்வத்திற்குப் பலி கொடுத்த பிறகே டிராய் தேசத்தவரோடு போர் தொடுக்கச் சென்றதனால் இஃது அறியப்படுகிறது. ஆனால், இந்தப் பழக்க வழக்கங்கள் யாவும், நாளடைவில் மறைந்துகொண்டும் மாறிக் கொண்டும் வந்தன. “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல காலவகையினுனே” என்பது இயற்கை விதி அல்லவா? இதானல்தெய்வம் தனக்கென ஓர் உருவம், ஒரு பேரும் ஒன்றும் இல்லாத ஒரு தனிப் பொருள் என்பதும், மக்களது உள்ளக்கிடக்கைக் கேற்பக் குறிகளை பெற்று, அன்பர்களது வேண்டுகோளை நிறைவேற். றும் என்பதும் புல்குகின்றன அன்றே ! இதானல் தான் நம் முன்னோர் இறைவனது உண்மைத் தன்மையைக் கூறும்போது, "இந்நிறத்தவன் :இவ்வண்ணத் தன் ; இவன் இறைவன்
என்றெழுதிக் காட்டொனதே"
என்றும்
‘ஒரு நாமம் ஒருருவம் ஒன்றும் இல்லார்க்கு
ஆயிரம் திருநாமம்பாடி’
என்றும் கூறுகின்றனர். இவர்கள் வணங்கிய தெய்வங்கள் விலங்கு வடிவங்களிலிருந்த நிலையினின்றும். நீங்கி, மக்கள் வடிவில் உருவங் கொள்ளலாயின. கொடுமைக் குணங்கள் போய் அன்புக் குணங்கள் அமையப் பெற்றனவாய் மாறின. இதனால் தான் அம்முன்னோர் தெய்வங்கள் ஒவ்வொன்றும் தத்தமக்கென ஒவ்வொரு திறனைப் பெற்று விளங்கின என்று கூறுகின்றனர். அக்கேயர் வழிபட்ட தெய்வங்கள் ஒலிம்பஸ் மலையில் வாழ்ந்து வந்தனவாகக் கருதினர். அக்கடவுளரில் சீயஸ் (Zeus) என்பது வானத்திற்குரிய கடவுளாகும். இஃது ஒலிம்பஸ் மலையைத் தன் இருக்கையாகக் கொண்டு ஆண்டு வந்தது. எதினா என்னும் பெரிய கடவுள் தொழிற் கலைக்குரியதாய் விளங்கியது. இதன் வடிவு ஏதன்ஸ் (Athens) நகரில் உள்ளது. அப்போலோவின் (Apollo) உருவம். டெல்பி (Delpi) யில் உள்ளது. இக்கடவுள் வன்மைக் குரிய தெய்வமாக விளங்கியது. போருக்குரிய கடவுளாக ஏரஸ் (Ares) திகழ்ந்தது. இந்தத் தேவதைகளை வழிபடுவோர் மக்களைப் பலியிடுவதைத் தவிர்த்து மாக்களைப் பலியிடும் வழக்கத்தில் ஈடுபட்டனர்.
2. அரசியல் அமைப்புக்கள்
தலைநகர்த் தோற்றம்
ஒரு நாட்டின் அரசியல் முறையையும், மக்கள் அதில் ஈடுபட்டுள்ள நிலையையும் அந்நாடு அமைந்துள்ள இயற்கை அமைப்பினின்று அறுதியிட்டு உறுதியாகக் கூறலாம். இவ்விதிக்குப் பழங்கால மக்களான கிரேக்கர்கள் விலக்கானவர்களல்லர். கிரீஸ் தேசம் பெரிதும் மலைகள் நிறைந்த பிரதேசமாகும். அம்மலைகளில் அன்னாசி மரங்கள், ஒக்ஸ் மரங்கள் அடர்ந்திருந்தன. சரிவுகள் யாவும் அடர்ந்த காடுகள் நிறைந்தனவாகக் காணப்பட்டன. மலைகளுக்கிடையில் பெரிய பெரிய செழிப்பான பள்ளத்தாக்குகளும் இருந்தன. இந்தப் பள்ளத்தாக்குகளில்தான் வடதிசையினின்றும் வந்த கிரேக்கர்கள் முதல் வந்து தங்கினர். அதன்பின் சில நூற்றாண்டுகள்வரை மலர்களும் கனிகளும் நிறைந்த கிராமங்களில் வாழ்ந்து வரலாயினர். இவர்கள் வாழ்ந்த கிராமங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பின்றிச் சேய்மையில் இருந்தன. இவர்கள் ஒருவர்க்கொருவர் சேய்மையில் உறைந்தார்களானாலும், சமயம், சடங்குகள், வாணிபத்தொடர்புகள், அரசியல் தொடர்புகளில் எதிரிகளை எதிர்க்கும் காலங்கள் ஆகிய நேரங்களில் மட்டும் யாவரும் ஒன்று பட்டுப் பொது முறையில் செயற்பாலனவற்றைச் செய்து கொண்டனர்.
“பொன்னுந் துகிரும் முத்தும் மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்
இடைபடச் சேய ஆயினும் தொடைபுணர்ந்து
அருவிலை நன்கலம் அமைக்கும் கால
ஒருவழித் தோன்றியாங்கு என்றும்
சான்றோர் சான்றோர் பாலர் ஆப”
அஃதாவது பொன்னும், பவழமும், முத்தும், மணியும் தாம் தாம் பிறந்த இடம் வெவ்வேறாயினும் மாலையாகச் செய்யும் இடத்து, அவை ஒன்று படுவது போல அறிஞர் பிறப்பகம் வெவ்வேறாயினும் சமயம் வந்தபோது ஒன்றாவர் அன்றே ! கிரேக்கர் சிறு சிறு இனத்தவரை ஆதரித்து அவர் கட்கு ஆவன செய்யும் உள்ளுர்த் தலைவனைப் போன்று ஒரு சிலர் கூடித் தம் அரசியல் முறைகளை அமைதியுறக் கண்காணித்தற்கு ஒரு தலைநகரை மலையின் உச்சியிலே நிறுவிக்கொண்டனர். இந்தத் தலைநகரே பாலிஸ் (Polis) என்று பெயர் பெற்றது. இதன் ஆதரவில் வாழ்ந்த மக்களின் தொகுப்பும் நகரும் சிடி ஸ்டேட் (City State) என்று அழைக்கப்பட்டன.
உள்ளுர்க் கலகம் ஏற்பட்ட காரணம் (Civil War)
உலகிலேயே இந்த சிடி ஸ்டேட் முறை மிகவும் புதுமை வாய்ந்தது. இம்முறை இக்காலத்து மாகாணப் பிரிவு போன்றது எனலாம். பெரிதும் அரசாங்கங்களில் வாழ்ந்த மக்கள் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அடங்கி வாழவேண்டிய கடமையுடையவராய்க் காணப்பட்டனர். ஆனால் கிரீஸ் நகர சிடி ஸ்டேட் மக்கள், தொகையால் சிறியவர்களாக இருந்தார்களானாலும், தம் அரசனின் கொள்ளைகளையும் கொடுமைகளையும் அறிந்தால், அவற்றைப் பொறுக்க இயலாதவர்களாய்க் கண்டிக்கும் பொறுப் பும் கடமையும் வாய்ந்தவர்களாய் இருந்தனர். தவறு கண்ட விடத்துத் திருத்தம் செய்வது நன்மை தரத்தக்க தன்றோ ?
இவர்கள் நாடு அரசப்பண்பின் அமைதி குலைவதாயிற்று. தற்பெருமை இழந்து தவிக்கலாயிற்று. ஒவ்வொரு சிடி ஸ்டேட்டும், அரசன் தன் மதிப்பை இழந்ததனால்தான், தானே தன் அரசியற் செயல்கள் நடத்தும் பொறுப்பை மேற்கொள்ளலாயிற்று. இதுவரை சிடி ஸ்டேட் மக்கள் பொது முறையில் சுதந்திர உணர்ச்சியோடு வாழ்ந்து வந்தவர்களாய் இருந்தது பற்றித் தம்தம் நாட்டுப் பற்றில் தனி சிறந்தவர்களாய் விளங்கினர். இவர்கள் சட்டத்திற்கு மாறாக நடவாமல், அதற்கு அடங்கியும் நடந்து வந்தாலும், தங்கள் தலைநகரான பாலிஸை மிகவும் நேசிக்கத் தொடங்கினாலும் தலைமை நகரினின்றும் தமக்குத் தடையுத்தரவு வருவதை மட்டும் தம் இறப்பினும் இன்னாததாக எண்ணினர். இதனால் உள்ளூர்க் கலகம் உளதாயிற்று. மேலும் ஒற்றுமை குலைக்கப்பட்டது. இவ்வாறான, குழப்பத்தால் புதியதும், இதுகாறும் இருந்ததினும், சிறந்ததுமான ஆட்சி முறையொன்றை நிலைநாட்ட வாய்ப்பு உண்டாயிற்று. ‘கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்’ என்பது அனுபவமொழி அன்றோ ! நாட்டுப் பற்று ஏற்பட்டதும் தம் சிடி ஸ்டேட் முறைக்கு ஏதேனும் தீங்கு ஏற்படுவதாயின், அதன் பொருட்டுத் தம் உயிரையும்விட மக்கள் முன் நின்றனர். என்னே அவர்கட்கு நாட்டின் மீது இருந்த பற்று ! இஃதன்றோ உண்மை நாட்டுப்பற்று ! கி. மு. ஏழாம் நூற்றாண்டின் இறுதிக்குள் சிடி ஸ்டேட்டுகள் கிரீஸ் நகரில் மட்டும் தோன்றியதோடன்றி ஏகியன் தீவுகளிலும் (Aegean Islands) மேற்குக் கரையிலும், ஏஷிய மைனரிலும் (Asia Minor) தோன்றி நிலவலாயின. இதனால் சிடி ஸ்டேட்டுகள் பெருகினாற்போல், மக்கள்தொகையும் வளரலாயிற்று. கிரேக்கர்கள் எங்கு எங்குச் சென்றார்களோ, அங்கு அங்கெல்லாம் சிடி ஸ்டேட்டுகள், நிறுவப்பட்டன. அவ்வாறு தோன்றிய இடங்கள் சிசிலி (Sicily), இத்தாலி (Italy) முதலான பல இடங்களாகும். ஆனால், இவ்வாறு இவ்விடங்களில் தோன்றிய சிடி ஸ்டேட்டுகள் யாவும் முதல் முதல் தோன்றிய சிடி ஸ்டேட்டுகளுக்குக் கீழ்ப்பட்டவையல்ல. அவைத் தனிச் சுதந்தரம் பெற்றவையாகும். இவைகள் தமக்குள் தம் அரசியல் முறைகளைக் கண்காணித்து வந்தன.
இவ்வாறு பல்வேறு இடங்களில் பல்வேறு சிடி ஸ்டேட்டுகள் தோன்றிய காரணங்களால் அரசியல் முறையில் ஒரு நல்ல மாறுதல் ஏற்பட்டது. இருந்தாலும் உடனே அரசனுக்குக் கீழ்படிந்து நடக்க வேண்டுமென்ற எண்ணங் கொள்ளாமல், தம் ஆட்சியைத் தாமே நடத்தி வந்தனர். அவ்வாறு தம் ஆட்சியைத்தாமே புரிந்து வந்த மக்கள் பெரும்பாலோர் நிலபுலனுடைய உழவர்களே யாவர். இவர்கள் கையிலேதான் அரசியல் முறை அமைந்திருந்தது. வேள் ஆளர் என்பவர் பண்ணையை (நிலத்தை) ஆள்பவர்தாம். ஏழை மக்களுக்கு இவ்வரசியல் முறையில் இடம் இல்லாமற் போகவில்லை. ஆனால், இவர்கள் பெற்று வந்த உரிமை சிறிதே ஆகும். இவ்வாறு மக்களால் அமைக்கப்பட்ட அரசியல் பெருவாரியான மக்களால் தோற்றுவிக்கப்பட்ட குடியாட்சியாகும். அஃதாவது இது காறும் ஒருவர் தலைவராக இருந்து அரசன் என்னும் பெயரால் ஆண்டு வந்த ஆட்சி முறைக்கு அரசியலில் மாறும் நிலை ஏற்பட்டது. கோனாட்சி நீங்கிக் குடியாட்சி நிலைக்கு நகர் வந்துற்ற காரணத்தால் மக்கள் எல்லாத்துறையிலும், சம உரிமையைக்கேட்க முன் வரலாயினர். ‘காற்றுள்ள போதே துாற்றிக் கொள்ள’ வேண்டுமல்லவா ?
3. ஸ்பார்ட்டர்களின் வாழ்க்கை
இயற்கை அழகு
அக்கேய மக்களால் தோற்றுவிக்கப்பட்ட சிடி ஸ்டேட்டுகளில் வளமான நகர் ஸ்பார்ட்டா (Sparta) வாகும். இந்நகர் லேசிடமன் (Lacedae mon) பள்ளத்தாக்கில் அழகு நகரமாக விளங்கியது. இந்நகரின் ஆழகுக்கு அழகு செய்வனபோல் இரோடஸ் (Eurotas) ஆறும் ஏனைய ஆறுகளும் பாய்ந்து சிறப்பளித்தன. ‘ஆறில்லாத ஊருக்கு அழகு பாழ்’ என்பதும் நம் நாட்டுப் பழமொழி அன்றோ ! இவ்விடத்தை டோரியர்கள் (Dorians) தம் வசமாக்கிக் கொண்டு, ஸ்பார்ட்டாவில் ஏற்கனவே வசித்து வந்த உள்குடி மக்களைத் தமக்குக் கீழ்ப்படியச் செய்து நிலபுலங்களை உழுமாறு வற்புறுத்தி வந்தனர். வலியார் மெலியாரை அடர்த்து ஒறுப்பது உலக இயற்கைகளில் ஒன்று. டோரியர்களின் மக்கள் தொகை சிறியதாகும். ஆகவே, உள்ளுர் ஸ்பார்ட்டாவின் பூர்விகக் குடிகளிடத்தில் அச்சங் கொண்டே வாழ்ந்தனர்.
உழுதொழிலையே மேற்கொண்ட கூலி உழவர்களுக்கிடையே கி. மு. 7 ஆம் நூற்றாண்டில் ஒரு குழப்பம் தோன்றியது. அக்குழப்பத்தை ஸ்பார்ட்டா மக்கள் அடக்கி ஒடுக்கினர். இதனால் தங்கட்குத் தீங்கு நேரும் என்று மனதில் அச்சங் கொண்ட ஸ்பார்ட்டா நாட்டு மக்கள் தங்கள் வாழ்வைச் சிறிது மாற்றி அமைப்பதற்காகவும், உள்ளுர் வாசிகள் எதிர்த்தால் அவ்வெதிர்ப்பைச் சமாளிக்கவுமான வழி வகைகளைக் கோலுவதற்குத் தீர்மானித்தனர். வருங்கால நாட்டை நன்னிலைக்குக் கொண்டு வரும் பொறுப்பு இவர்களைச் சார்ந்தது. ஆதலின், அவ்விளைஞர்களை வளர்க்கும் முறையில், முதல் முதல் சிந்தை செலுத்துவாராயினர்.
பிள்ளை வளர்ப்பு
குழந்தைகளின் வளர்ப்பில் சில முறைகள் கையாளப்பட்டன. குழந்தை பிறந்ததும், அது வன்மை வாய்ந்ததா, மென்மை வாய்ந்ததா என்பது குடும்பப் பெரியோர்களால் தீர்மானிக்கப்பட்டுவந்தது. திருக்காளத்திவேடவர் தலைவனான நாகனும் தன் பிள்ளையைப் பெரியவர் கையில் கொடுத்து, அவர்கள் தூக்கிப் பார்த்துக் கனமான பிள்ளை என்று அறிந்தே திண்ணன் என்று பெயரிட்டதாக நாமும் அறிந்தோம். மெலிந்து காணப்பட்டால் அதனை வளர்ப்பதில் பயனில்லை எனக் கருதி, மலையில் ஒர் இடத்திலிட்டு, அது தானே அழுது சாகுமாறு செய்துவிடுவர். இது கொடுமையே! அதே குழந்தை நல்ல உடல் பலம் வாய்ந்ததாக இருப்பதை அறிந் தால், அது பின்னல் ஒரு சிறந்த வீரனுக விளங்க வல்லது என்பதை உணர்ந்து ஏழாண்டுகள் தாயின் வளர்ப்பில் விட்டு வைப்பர். ஸ்பார்ட்டர் தேய மாதர் கள்நல்ல உடற்கட்டும் உயரமும் படைத்தவர்கள். கிரீஸ் தேசத்தில் வேறு இடங்களில் வாழும் மாதர்களே விட ஸ்பார்ட்டா தேசத்தில் வாழும் பெண்கள் சுதந்திரம் பெற்று விளங்கியவர்கள்.
அவர்கள் தாம் ஈன்ற மக்களுக்கு வீரமும், தீரச் செயலும் உடன் ஊட்டித் தம் மக்களை நன்முறையில் வளர்த்து விடுவதில் கண்ணும் கருத்தும் வாய்ந்தவர்கள். ஈன்று புறந்தருதல் என். தலைக் கடனே’ என்றன்றே நம் தமிழ் நாட்டு வீரப் பெண் மணி ஒருத்தியும் உரைத்திருக்கின்றனள் ! இம் முறையில் ஏழாண்டுகள் வரை உயரமும் உள்ளக் கிளர்ச்சியும் அமைய வளர்க்கப்பட்ட குழந்தையை இவ்வேழாண்டுகட்குப் பிறகு, குருகுல வாசத்தின் பாருட்டுக் குருகுலப் பள்ளியில் கல்வி கற்க விட்டு வைப்பர். அங்கு இச்சிறுவனது கல்வி முன்னேற்றத்தைப் பற்றிய கலையை ஒரு முதியவர் மேற்கொண்டு கல்வி கற்பித்து வருவார். இவ்விளைஞர் கம் கிராமப் பள்ளிக்கூடத்துச் சட்டாம்பிள்ளைப் போன்றவர்.
பள்ளிக்கூடப்பிள்ளைகள் பயிற்சி பெற்ற விதம்
இந்தக் குருகுலப் பள்ளியில் இடப்பட்ட பிள்ளைகள் நாளுக்கு நாள்வயதிலும், கல்வியிலும் முதிர்ந்து வருவார் ஆதலின், அவர்கள் தம்மினும் இளைய பிள்ளைகளைக் கண்காணிக்கும் பொறுப்பை ஏற்று நடத்துபவர் ஆவர். ஒருவரே எல்லாவற்றையும் செய்யவேண்டும் என்று எதிர்பாராமல், அவரவர்கள் செய்யக்கூடியதை ‘இயல்வது கரவேல்’ என்னும் முதுமொழிக்கிணங்கப் பங்கிட்டுக் கொண்டு செய்தால் ஒவ்வொரு துறையிலும் யாவரும் முன்னேறுவர் அன்றோ ! உணவு கொள்ளுங்கால் எல்லாரும் ஒன்று சேர்ந்து உணவு கொள்வர். இன்னார் முன்னும், அதன்பின் இன்னார் பின்னும் உண்ணல் வேண்டுமென்னும் குறுகிய நோக்கம் அவர்கள்பால் இல்லை. அப்பள்ளியை நடத்துபவர்பாலும் இக்குறுகிய நோக்கம் இல்லை. இப்பழக்கம் ஒற்றுமை உணர்ச்சியை உண்டு பண்ணுவதற்குக் கையாளப் பட்டதாகும். இங்குப் பயிலும் பிள்ளைகள் பால் ஒரு தீக்குணம் மட்டும் இருந்து வந்தது. நெல்லுக்கு உமி உண்டு; நீர்க்கு நுரையுண்டு ; புல்லிதழ் பூவிற்கும் உண்டு அல்லவா ? உணவு இல்லாத பொழுது அடுத்த வயல்களில் வளர்ந்துள்ள தானியங்களைத் திருடிக் கொணர்ந்து தம் வயிற்றை நிரப்பி வந்தனர். தம் வயிற்றுக்குத் துரோகம் செய்யக்கூடாது என்பது இவர்கள் இயல்புபோலும்! இப்பிள்ளைகளுக்கு வறுமையையும் செம்மையாகக் கொண்டு நடக்கவேண்டும் என்னும் பயிற்சியும் அளிக்கப்பட்டு வந்தது. காலில் மிதியடி இல்லாதப்போது வெறுங்காலில் நடக்கவும், ஒரே உடை இருப்பினும் அதைக்கொண்டு மண் அமைதி அடையவும், பஞ்சனேயின்றிப் புல்லணையில் படுத்து உறங்கவும், பயிற்றுவிக்கப்பட்டனர். இப்பள்ளிச் சிறார்கள் இரோடஸ் ஆற்றில் நீந்திப் பழகினர். ஓட்டம், மற்போர், எறிபந்து முதலியன ஆடித் தம் உடல் உரத்தைப் பெருக்கிக் கொண்டனர். இவர்கட்குப் பரதமும் இடையிடையே பயிற்றுவிக்கப்பட்டது. இவர்கள் தமக்குள்ளேயே இருதொகுதிகளாகப் பிரிந்து விளையாட்டுக்களை ஏற்படுத்தி விரோத உணர்ச்சியற்று விளையாட்டு உணர்ச்சி கொண்டு விளையாடி வந்தனர்.
இங்ஙனமாக உடல் உரத்தின் பொருட்டுப் பெரிதும் இவர்கள் பயிற்றுவிக்கப்பட்டனரே அன்றி உள்ளப் பயிற்சியாகிய எழுதுதல், படித்தல் ஆகிய பயிற்சியில் குறையுடையவராகவே காணப்பட்டனர். ஆனால், மனனம் செய்யும் பழக்கம் கையாளப்பட்டு வந்தது. நாட்டுச் சட்டங்கள், ஹோமர் முதலான புலவர் பெருமக்களின் பாடல்கள் மனப்பாடத்திற்கு உரியனவாக விளங்கின. பொதுமக்களிடையே சொற்பொழிவு ஆற்றும் கலைமட்டும் பழகுதற்குச் சிறிதும் இடம்கொடுத்திலர். இவர்கள் சுருங்கிய அளவில் பேச மட்டும் பழக்கப்படுத்தப்பட்டனர்.
இத்தகைய பயிற்சி காரணத்தால் ஸ்பார்ட்டா மக்கள் இலக்கிய அறிவில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போயிற்று எனலாம். இவர்கள் பெற்ற பயிற்சிகள் எல்லாம் நாட்டுக்குரிய நல்ல போர் வீரர் ஆதற்கேற்ற பயிற்சியாகவே இருந்தன.
பிள்ளைக்குப் பதினெட்டு வயது வந்ததும், அவன் இரகசியக் கூட்டம் என்று அமைக்கப்பட்ட ஒரு கூட்டத்தில் பயிற்சி பெறும் நிலையைப் பெறுகிறான். அக்கூட்டம் கிரிப்டியா (Crypteia) என்று கூறப்படும். இங்கு இரண்டு ஆண்டு பயிற்சிபெற வேண்டும். இந்த இரண்டாண்டில் கூலி உழவர்களோடு மறைமுகமாகப் பழகிவர ஏற்பாடு செய்வர். இவ்வாறு பழகியே இரண்டாயிரம் கூலி உழவர்களைத் தம் வசமாக்கினர் என்பது அறிய வருகிறது. இக்கூட்டத்தின் நோக்கத்தை ஒரு சிலரே அறிவர். இதுவே அவ்விரகசியக் கூட்டம் செய்து வந்த பணியாகும்.
பெரியவரானதும் பெற்ற பயிற்சி
இவர்கள் பள்ளியில் பயிற்றுவிக்கப்பட்டு வந்த காலத்தில் பெற்ற ஒழுங்கு நடத்தை, மனிதராக மாறியகாலத்திலும், தொடர்ந்து நற்பயன் அளித்தது. உணவு கொள்ளும் முறை எவ்வாறு ஒன்றாக நடந்து வந்ததோ, அவ்வாறே உடற்பயிற்சியும் முறையாக எல்லாருக்கும் ஒன்றாகவே நடந்துவந்தது. இதனால் இவர்கட்கிடையே தோழமைப் பண்பு ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஊடுருவி வளர்ந்து வந்தது. ஸ்பார்ட்டா மக்களின் உடையும் உணவும்
இவர்களின் உடைகளும் உணவுகளும் எளியனவாகவே இருந்து வந்தன. ஓர் உடை தரித்தே உலவ வேண்டியிருந்ததால், ஆடை அழுக்குப் படிந்ததாய் இருந்தது. உணவு சுவையின்றி இருந்தது. இவர்கள் பாடுபட்டுப் பணத்தைச் சேர்த்து வைக்கவேண்டும் என்னும் எண்ணம் இல்லாதவர்கள், கூடுவிட்டு இங்கு ஆவி தான் போனபின் அப்பணத்தை யார் அனுபவிப்பவர் என்பது அவர் நினைவு. வாணிகத் தொழிலையும், இவர்கள் மேற்கொள்ள விரும்பவில்லை. அதனைத் தம் தலைநகர்க்கு வெளியே வாழ்ந்த ஒரு சிறு கூட்டத்தினர்க்கு விட்டுக் கொடுத்தனர். இவர்கள் கையாண்டுவந்த நாணயங்கள் இரும்பால் ஆனவையாகும். செல்வத்தை எவ்வகையிலேனும் தேடிக்குவித்துச் செல்வச் செருக்குடன் திரிந்தால் அச்செல்வம் இல்லாதவர் செல்வரைக் கண்டபோது பகையும் பொறுமையும் கொள்கின்றனர். செல்வர்களும் ஏழைகளை அடக்கி ஆள முற்படுகின்றனர். ஆகவே, தேவைக்கு மேல் செல்வம் இல்லாதது நல்லதன்றே! ஆகையினால், இவர்கள் செல்வத்தைச் சேகரித்து வைக்க எண்ணாததால் என்றும் நாட்டினிடத்துப் பற்றும், நியாயமும் கொண்ட உணர்ச்சியுடையவராய் இருக்க வாய்ப்பு உண்டாயிற்று. ஆகவே, இவர்களது ஒழுங்கு நடத்தை இவ்வாறு சிறந்த முறையில் இருந்தது. எந்நாட்டு மக்களும் இவர்களுடைய தலைவர்கள் எவ்வாறு நடந்து கொள்ளுகிறார்கள் என்பதை அறியத்தக்க ஒற்றர்களையும் வைத்து உளவு அறிந்து வந்தனர். இவர்கள் நாட்டிற்குள் இருக்கின்ற காலங்களில் சட்டங்களுக்கு அடங்கியும், நீதிநெறி கடவாதவர் களாயும் நடந்து கொண்டனர். இவர்கள் பெற்ற ஒழுங்கு நடத்தை இவர்கள் சிறந்த போர் வீரர்கள் என்பதை நிலைநிறுத்திக் காட்டியது.
போர் முறை
ஹோமர் காலத்தில் ஒருவருக்கொருவர் தனித்து நேர்முகமாக இருந்து போரிட்டனர். ஆனால், இந்தத் தனிப்போர் முறை மாறிப் படைகள் என்னும் பெயரால், பலரும் ஒன்று சேர்ந்த தொகுதிகள் இரு புறங்களிலும் நின்று எதிர்த்துப் போரிடும் முறை பழக்கத்திற்கு வந்தது. ஆனால், எய்யும் போர்க் கருவிகளில் யாதொரு மாறுபாடும் ஏற்பட்டிலது. தலை கை கால்களில் அணிய வேண்டிய போர் உடைகளைத் தரித்தே இருந்தனர். ஆனால், பண்டை முறையில் இருந்த ஈட்டி போன்ற படைக் கருவி மேலும் சிறிது மாறுபாடுற்று, மாவீரர் பயன்படுத்தத்தக்க ஆறடி நிளமுள்ள ஈட்டியாகப் பயன்படுத்தப்பட்டுவந்தது. வீரர்கள் அணியணியாக நிறுத்திப் பழக்கப்பட்டு வந்தனர். போர் வீரர்கள் தம்மைக் காத்துக் கொள்ளவும், எதிரிகளைத் துரத்திப் போரிடவும் இருந்தமையால், தம்மால் சுமக்க வொண்ணாக் கருவிகளைத் தாங்கி இருந்தனர். இதனால், இவர்கள் நிலத்திலிருந்தே போர் புரிய வேண்டியது இன்றியமையாததாயிற்று.
இந்நிலையில் மலைச் சரிவில் இருந்து போர் புரிய நேர்ந்ததால், அவ்வளவு கனமுள்ள பொருளைச் சுமத்தல் இன்றி எளிதான இலேசான வில்லும் நாணும் மட்டும் ஏந்தியிருக்க வேண்டிய வராயினர். இவர்கள் காலாட் படையினராக இருந்தனரே அன்றிக் குதிரைவீரர் என்னும் நிலைமை எய்த அறியாதிருந்தனர். குதிரை வீரராயின் அதன் மீது இருந்து போர் புரிவதற்கு தன் முறையில், பயின்றிருக்கவேண்டுமன்றோ? கிரேக்கர்கள் தம்போர் முறையைப் பண்டைத் தம் முன்னோர் எம்முறையில் மேற்கொண்டு வந்தனரோ, அம்முறையிலேயே நடத்தி வந்தனர். இது பரம்பரைக் குணமாக இவர்களிடம் அமைந்திருந்தது என்றாலும், இம்முறை சிற்சில சமயங் களில், எதிரிகளை அழிக்கும் பொருட்டுச் சிறிது மாற்றப்பட்டது; தம் பொது விதியினின்றும் விலகிப் போரிடவும் நேர்ந்தது. இவர்கள் நகர்ப் புறங்களின் சுவர்களுக்குப் புறத்தே மறைந்து நின்று எதிர்ப்பது பொதுவான வழக்கமாகும். பகைவர்களின் அரண்களைத் தகர்த்தற்குத் தீப் பொறி ஊடுருவிகள் பயன்படுத்தப்பட்டன. நாடு நகரங்களை எரிகொளுவச் சிற்சில பொறிகள் உபயோகப் படுத்தப்பட்டன. சிற்சில இடங்களில் கோட்டை அரண்கள் கடத்தற்கருமையாக இருந் தால், அவற்றைத் தாண்டி உள்செல்ல, மண் மேடுகள் அரணைச்சுற்றி ஆக்கப்பட்டன. சிற்சில இடங்களில் எதிரிகளை உள்ளே வரவொட்டா திருக்கப் பள்ளங்கள் எடுக்கப்பட்டன. மற்றும் சிற்சில இடங்களில் பெரியபெரிய மதில்கள் எழுப்பப் பட்டு எதிரிகள் வெளியிடங்களில் யாதோர் உதவி யும் பெருவகையில் தடைகள் செய்யப்பட்டன.
ஸ்பாட்டர்கள் போர், தொடர்ந்து நீ ண் ட நாளைக்கு நடைபெருது. இவர்கிள் பெரிதும் உழவுத் தொழிலில் ஈடுபட்டவர். ஆதலின், இவர்களது போர், மாரிக் காலத்தில் நடப்பது அரிதாகும். கோடைக்கும் மாரிக்கும் இடைப்பட்ட காலத்தில் தான் போருக்கும் கிளிம்புவர். அப்போரும் விரை வில் முடிவதாய் இருக்கும். ‘உண்டி முதற்றே உணவின் பிண்டம்’, அன்னம் ஒடுங்கில் அனைத்தும் ஒடுங்கும்’ ஆதலின் எதிரிகள் ஒருவரை ஒருவர் எதிர்க்கும்போது முதலில் பயிர் பச்சைகளை அழிக்க முனைந்து நிற்பர்.
கிரேக்கர் இனத்தில் ஸ்பார்ட்டர்களே, நன்கு பழகிய போர் வீரர்களைத் தனித்து வைத்திருந்தனர். போர் வீரர்கள் சாகுபடிகளைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டியவர்களல்லர். இவர்கள் ஏனைய தொழில் புரியும் குழுவினர்களினும், சீரியராக எண்ணப்பட்டு வந்தனர். இத்தகைய போர் வீரர் கூட்டத்தான், பாரசீக தேசத்து மன்னன் எக்ஸர் 6r36mo6io (King Xerxes of Persia) கிரேக்க நாட்டின் மீது’. கி. மு. 80இல் படையெடுத்தபோது எதிர்த்து எதிரிகளை அடக்கி வெற்றி கொண்டதாகும். கிரேக்கர்களுக்குத் துணையாயிருந்து இந்த ஸ்பாட்டர் போர்ப் படையேயாகும். எதினியர்கள் பெர்ஷியாவின் கடற்படைச் சாலமிஸ் (Stait of Salamis) என்னும் குறுகிய கடல் நீர் வழியில் தோற்கடித்தனர். பாரசீக மன்னனுல் விடுத்துச் செல்லப்பட்ட பட்டாளத்தைப் பொயோஷியாவில் (Boeotia) இந்த ஸ்பார்ட்டர்கள்தான் ஓடச் செய்து முறியடித்தனர். இன்னேரன்ன வெற்றி ஸ்பாட்டர்களுக்கு ஒப்புயர் வற்ற வெற்றியாகும். ஏனெனில், அதுகாறும் பாரசீகர்கள் தம்மை வெல்லக் கூடியவர்கள் எவரும் இலர் என்னும் இறுமாப்புக் கொண்டிருந்தனர். அவர்கள் தோல்வி ஸ்பார்ட்டர்களுக்குச் சீரிய வெற்றிக் கறி குறி ஆயிற்று.
4. ஏதென்ஸ் நகரின் முன்னேற்றம்
ஸ்பார்ட்டா நகர், வெற்றிக்குமேல் வெற்றி பெற்று வந்தது. இந்த வெற்றி வேகம் ஏதென்ஸ் நகர மக்களைப் பல்வேறு வழிகளில் இசையால் திசை போகும் அளவுக்கு உயர்த்தி வந்தது. உழவுத் தொழிலில் முதன் முதலில் ஈடுபட்டு வந்த இவர்கள் கைத்தொழில் வளர்ச்சியிலும் கருத்தைச் செலுத்தி வந்தனர். இவர்கள் மேற்கொண்ட கைத்தொழில் மட்பாண்டம் செய்தல், சிறந்ததாக எண்ணப்பட்டு வந்தது. தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட வெண்தாதுப் பொருள்கள், வன்மை மிக்க போர்க்கப்பல் செய்யப்பயன்பட்டன. இதனால் செய்யப்பட்ட போர்க்கலனே பாரசிகர்களின் கடற்படையை முறியடித்தற்குத் துணையாக இருந்தது. கைத்தொழில் நாளுக்கு நாள் வளர்ந்து நன்னிலை அடையவே, வாணிபத்துறையில் உள்ள மக்கள் பெருநிலக்கிழவர்களுடன், எல்லாப் படியாலும், ஒப்பான தகுதி பெறும் உரிமையோடு நின்றனர். இந்த முறையில் ஏதென்ஸ் நகரில் குடியரசு வளர்ந்து வருவதாயிற்று.
எதினியர்கள் தாம் விடுதலே பெற்றமைக்கும், பாரசீகர்களை வென்று வெற்றி கொண்டமைக்கும், பெரிதும் மகிழ்வும் பெருமையும் கொண்டனர். இதனால். தம் அரசாட்சியை .இன்னமும் பரவச் செய்ய எண்ணங்கொண்டனர். ஏகியன் கடற்கரை ஒரமாக உள்ள சில சில தீவுகளும், பட்டினங்களும் பாரசீகர்களின் ஆளுகையின்கீழ் இருந்தன. இந்த ஆளுகையினின்றும் அவற்றை மீட்பதற்கு முயன்றனர். மேற்கூறிய தீவுவாசிகளும், பட்டினவாசிகளும் ஏதேன்ஸ் மக்களை உதவுமாறு வேண்டினர். இவ்வேண்டுகோளுக் கிணங்கிய ஏதென்ஸ் மக்கள் டிலோஸ் (Dleos) என்னும் தலைநகரில், தீவுகளில், பட்டினங்களில் வாழ்பவர்களுக்கெல்லாம் நலன் பல புரியும் கழகம் ஒன்றை நிறுவினர். ஒருவர் செய்யும் காரியத்திலும் பலர் கூடி அக்காரியத்தைப் புரிதல் நல்லமுறையாகும். இதன்பொருட்டே கழகம், சங்கம், மன்றம் முதலியன தோன்றலாயின. இஃது ஒவ்வொரு துறைக்கும் அமைந்து பல நலனை ஆற்றலாம் அன்றோ? இக்காலத்திலும் சங்கங்களை அமைத்து நலனை அடைந்து வருதல் கண்கூடன்றோ? மேற்சொல்லப்பட்ட அத்தகைய சங்கமொன்றை இம்மக்களுக்கு நிறுவித்தந்தனர். அது டெலியன் லீக் (Delian League) என்று அழைக்கப்பட்டது. பிறகு எதினியர்கள் பாரசீகரிட மிருந்து ஏகியன் கடற்கரை ஓரமாக இருந்த தீவுகளையும் பட்டினங்களையும் கைப்பற்றி, அவை சுதந்திர நாடுகளாகத் துவங்கும் நிலைக்குக் கொணர்ந்தனர். இதனால் எதினியர்கள், டைவர்ஸ் கிரிக் (Diverse Greek) பட்டினங்கள், தீவுகள் ஆகிய இவற்றிற்குத் தாமே தலைவர் என்னும் தகைமையையும் அடைந்தனர். இதனுல் டிலோஸ் தலைநகரில் இருந்த கழகத்தின் நதிய8னத்தும், கி.மு. 456-ஆம். எதினியர்களின் கைக்கு உரியதாயிற்று.
இன்னோரன்ன ஏற்பாடுகளுக் கெல்லாம், காரணர்களாய் இருந்தவர் பெரிகில்ஸ் (Pericles) எனப் பெயரினர் ஆவர். இவரே சிறந்த தலைவர் ஆயினர். இவர் வன்மையிலும் நன்னடைத்தையிலும் ஒரு சிறுதும் பின்வாங்கியவர் அல்லர்; ஆட்சித் திறத்திலும் தலைசிறந்தவர். ஆதலின், ஆட்சி முறையை அறிந்த மக்களும் இவர் ஒவ்வோர் ஆண்டும் தேர்தல் முறையில் நிற்கையில் தலைவராக இவரையே தேர்ந்தெடுக்கலாயினர். இவ்வாறாக முப்பதாண்டாகத் தொடர்ந்து இவர் தேர்ந்தெடுக்கப் பட்டாரென்றால், இவருக்கிருந்த திறமையையும், பொதுமக்கள் ஆதரவையும், என்னென்று இயம்பு வது! இத்தகைய பொது மக்களது ஆதரவு பெற்ற அரசராலேயோ, தலைவராலேயோதான் நாடும் நகரமும் முன்னேற முடியும். நாடு மன்னனைத் தான் உயிராகக் கொண்டது.
நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்
என்பதுதான் யாவரும் அறிந்த உண்மை. இந்த முறைக்கு இணங்கப் பெரிகில்ஸ் இருந்தது பாராட்டற்குரிய தாகும். இவர் தலைமை வகித்திருந்த காலங்களில் தம் ஆட்சியின் கீழிருந்த குடிமக்களின் முன்னேற்றத்தைக் குறித்துப் பெரிதும் பாடுபட்டனர். இவர் காலத்தில் வாணிபம் செழித்தோங்கியது. நாட்டின் செல்வமும் நனிமிக வளர்ந்தது. குடி மக்கள் தொகுதியும் செறிந்தது. வெளி நாட்டவர் பலரும் இங்கு இருக்க விழைந்து குடியேறின்ர். பெரிகில்ஸ் கலைச் செல்வம் வளர வழி வகைகளைக் கோலினர். கோயில்கள் பல கட்டப்பட்டன. அக் கோயில்கள் யாவும் ஒவியமும், சிற்பமும் மலிந்து விளங்கின.
புலவர் பெருமக்கள் புரவலர்களால் புரக்கப்பட்டனர். வரலாற்று அறிஞர்களும், கல் தச்சர்களும், தத்துவஞானிகளும் பெரிதும் ஆதரிக்கப்பட்டனர். பெரிகில்ஸ் தலைவர்க்குத் தம் நாடே ஏனைய நாடு களுக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டும் என்பது வேணவா; இந்த முறையில் ஏதென்ஸ் நகரம் ஆட்சித் திறத்திலும் கலாசாரத்திலும் முன்னேற்ற முற்றுச் சிறந்து விளங்கியது.
6. குடியரசு ஆட்சி
அரசியற் செய்திகள் :
நாம் இந்தக் காலத்தில் காணும் அரசியல் நடைமுறைக்கு முற்றிலும் மாறாக உள்ளது. எதினிய மக்களின் அரசியல் முறை. இக்காலத்து நகர மாந்தர் அரசியல் துறையில் கலந்து பணியாற்றுகின்றனர் என்றால் நாட்டு நலத்துக்காகப் பாடுபடுவதற்கு மிகுதியாகத் தம் கடனை ஆற்றாது, தேர்தல் காலகளில் தம் வாக்கை யாருக்குப் போடுவது என்பதைப் பற்றி சிந்தனைகளில் இருப்பதும், சட்டசபையில் நடந்த விவாதங்களைப் பற்றி பத்திரிகைகளிலிருந்து படித்து அறிந்துகொள்வதுமே அன்றி வேறன்று. ஆனால், ஏதன்ஸ் நகரில் உள்ள வயது வந்தவர்கள் யாவரும், சட்டசபையில் சென்று வாக்களிக்கும் உரிமையும், உணர்ச்சியும் பெற்றிருந்தனர். ஏதென்ஸ் நகர மக்கள் வாக்குக் கொடுத்தலின் (Voting) மதிப்பை நன்கு அறிந்திருந்தனர்; அதனை வீணாகப் பயன்படுத்திலர். வாக்களிக்கும் உரிடிை அடிமைகட்கும், வெளிநாட்டினின்றும் இங்குக் குடி யேறியவர்கட்கும் மட்டும் கிடையாது. சட்டசபையில்தான் நாட்டுக்கு வேண்டிய நலன்கள் யாவும் ஆராயப்பட்டன. சட்டசபை ஏதென்ஸ் நகரவாசி கள் பலரும் கூடிய கூட்டமாகக் காணப்படும். சேய்மையில் வாழ்வோர் சட்டசபை நிகழ்ச்சிகளைக் காணும் வாய்ப்புப் பெறாதவர் ஆவர். அதற்குக் காரணம் அவர்கள் வரக்கூடாமையே. ஆனால், வராது நின்று விட்டால் அவர்களைச் சும்மா விடவும் மாட்டார்கள். அவர்களைத் தண்டனைக்கு உட்படுத்துவர்.
சட்டசபைக்குரிய இடம்
சட்டசபை நைஸ் (Pnys) என்னும் மலையடி வாரத்தில் சூரிய உதயத்திற்குப் பிறகு வெட்ட வெளிகளில் கூடும். இக்காலத்தைப் போலக் கட்டடத்திற்குள் கூடும் வழக்கம் அக்காலத்தில் இல்லை. சபை தொடங்கு முன் கடவுள் வணக்கம் நிகழும். ஒரு கரிய பன்றியையும் பலியிட்டுத் தொடங்குவர்.
இதனை நாம் உற்று நோக்கும்பொழுது எதையும் முதலில் கடவுளைத் தொழுது தொடங்க வேண்டுமென்னும் சீரிய கொள்கை கொண்டிருந்தனர் கிரேக்க இனத்தினர் என்பது தெரிகிறது. இது தொன்று தொட்ட வழக்கமாகும். நாமும், நம்முன்னோர்கள் எதைத் தொடங்கினாலும், எந்த நூலைத் தொடங்கினாலும் கடவுள் வணக்கம் கூறித் தொடங்கியதை இன்றும் அவர்கள் யாத்த நூலாலும் வரலாறுகளாலும் அறிகின்றோமல்லவா? இந்த வழக்கத்தால்தானே நாம் இப்பொழுதும், கடிதம் எழுதுவதாய் இருந்தாலும் முதலில் ‘உ’ என்னும் பிள்ளை 2ாரி சுழியை எழுதிக் கடி தந்தைத் தொடங்குகின் இரும். கிரேக்கர் கடவுள் வணக்கம் கூறிப் பலியிட்டுத் தொடங்கிய கொள்கை நற்கொள்கை யாகும். பன்றியைக் கொன்று பலியிட்டதைப்பற்றி நாம் விவாதிக்கவேண்டா. நம் நாட்டிலும் சிற்சில துட்ட தேவதைகட்கு ஆடு கோழிகளைப் பலியிட்டு வந்துள்ளனர். இப்பொழுதும் இதை நடத்தி வருகின்றனர். இது பழக்கத்தின் பாற்பட்டது; பழக்கம். கொடியது. பாறையினும் கோழி சீக்குமன்றோ?
பூமியதிர்ச்சியோ மழைப் பொழிவோ உண்டாகும் குறிகள் காணின், சட்டசபையில் வாதிக்க வேண்டியவற்றை வாதிக்கப் பல நாள் தள்ளிப் போடுவர். பின்பு கால வசதி நன்கு அமைந்த நாளொன்றில், தூதுவரை அனுப்பிப் பேச வேண்டியவரைப் பேசுவதற்காக அழைத்து வரச் செய்து மீண்டும் கூட்டத்தைக் கூட்டுவர். பொதுமக்களே யன்றி, அரசாங்க அலுவலாளர்களும் இதில் கலந்து கொண்டு, தம் பணியை ஆற்றுவர். கூட்டத்தில் கூச்சல் ஒன்றும் இருத்தல் கூடாது. சட்டசபுை உறுப்பினராய்வுக் குழுவினர் ஐந்நூற்றுவர் ஆவர். இவ்வளவு பெயரும் தம் தம் இருக்கைகளில் அமர்ந்திருப்பர். பேச வேண்டியவர்கள் அழைத்தபோது அவர் அங்குப் பேசுவ்தற்கு ஏற்ப்டுத்துப்பட்ட மேடையில் ஏறித் தம் கருத்தை அறிவிப்பர். பேசப்படும் பேச்சைக் கூட்டத்தினர் உற்றுக் கவனித்து கேட்பர். அப் பேச்சு நல்ல முறையில் கேட்க கேட்கச் சுவையுடையதாய் இருப்பின், சபையேர் கைதட்டுதலின் மூலம் தம் மகிழ்ச்சியை உணர்த்துவர்; இன்றேல், கூட்டத்தினிடையே சிறு குழப்பு உண்டுபண்ணுவர். நன்கு தட்டுத் தடையின்றி பேசவல்லவர் தாம் நற்பெயர் எடுக்க இயலும். பேசு கால் வெறும் மனப்பாடம் செய்து ஒப்புவிப்பவர் போன்று பேசுதல் கூடாது. பேசுகையில் உடல் அசைவு, கையசைவு முதலான உறுப்பு அசைவுடன் பேச்சின் பொருள் வெளிப்படுமாறு பேச வேண்டும். இவ்வாறு பேசி நற்பெயர் எடுத்தவர் கிளியான் (Cleon) என்பவர் ஒருவரே. அவர் பேச்சும் உணர்ச்சியும், பொருட்செறிவும் கொண்டதாக இருந்ததால், மக்கள் அதனைப் பெரிதும் வரவேற்றனர். ஒரு சமயம் ஏதென்ஸ் நகரமும், ஸ்பார்ட்டா நகரமும் போரிடத் தொடங்கியபோது யார் தலைவர் பதவி ஏற்று வெற்றி காணுவதற்குரியவர் என்பதைப் பற்றிய விவாதம் ஏற்படக் கிளியான் தாமே தலைமை பூண்டு வெற்றிக்கொண்டு வருவதாகத் தம்மைத் தாமே புகழ்ந்து பேசினார்.
அவர் வார்த்தையில் நம்பிக்கை கொண்ட நகர மாந்தர் உடனே அப்பொழுது புடைத் தலைவராக இருந்த ஜெனரல் நிஸ்யாஸ் (General Nicias) என்பவரை அப்பதவியினின்றும் வெளியேற்றச் செய்யுமாறு வற்புறுத்திக் கிளியானையே போர்த் தலைவராக நின்று போரில் வெற்றி காணுமாறு விழைந்தனர். அவ்வாறே, கிளியான் அப்பதவியேற்று வெற்றி பெற்றுத் திரும்பினர். இவ்வெற்றி ஏதோ எதிர்பாராத நிலையில் ஏற்பட்டது எனலாம். இது ‘காக்கை ஏறப் பனம்பழம் விழுந்தது’ என்பது போன்றது. இவ்வாறு பேச்சினால் மிரட்டிப் பொதுமக்கள் மனத்தை மாற்றினால், மிக மிக இன்றியமையாத செயல்களிலும், இப்பேச்சு மயக்கம் புகுந்து, நாட்டின் நலனுக்கே கேடு பயக்க வல்லதாகவும் அமைதல் உண்டு. சொல்லால் முழக்கிளுல் சுகம் ஏற்படாது. சொல்லியவண்ணம் செய்ய முன்வர வேண்டும்.
இதுகாறும் கூறிவந்த செயல்களிலிருந்து ஏதென்ஸ் நகர மக்கள் அரசியல் காரியங்களில் தாமே தேரே கலந்துகொண்டு, தம் கருத்துக்களே அறிவிக்கும் பொறுப்புப் பெற்றவர்களாய்த் திகழ்ந்தனர் என்பதை அறிந்தோம். இத்தகைய பொறுப்பு வாய்ந்தவர்கள் யாதோர் ஊதியமும் ஏற்காது, தம் கடமையை நடத்தி வந்தனர். எல்லாரும் இந்த வாய்ப்புப் பெறவேண்டும் என்பதற்காக ஆண்டுக் கொருமுறை தேர்தல் நடத்தி வந்தனர். ஒரே குடிமகன் அரசியல் முன்னேற்றத்திற்கும் பாடுபடக் கூடியவன் என்பது உண்மையாளுல், அவனே பல் வேறு பொறுப்புக்களை மேற்கொண்டு, நாட்டுக்கு உழைக்க வாய்ப்பு இருந்தது. ஒராண்டு முடிவுற்ற தும் தன் கடமை முடிந்து விட்டது என்று கூறு வதற்கு இல்லை; தொடர்ந்து தன் பணியை-கடனை ஆற்றலாம்.
அங்குப்பல சிறிய உள் பிரிவுகள் இருந்தன அவற்றுள் ஒன்றினில், நாட்டுக்கு நலம் புரிய, வேண்டும் என்னும் உணர்ச்சி மிக்க குடிமகன் கற்கவேண்டிய வற்றைக் கற்றுப் பயிற்சி பெற்று அரசாங்க ஆய்வுக் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப் படலாம். அந்தக் குழுவில் ஐந்நூறு உறுப்பினர் உண்டு. அவர்கள் அப்போதைக் கப்போது நாட்டுக்கு ஆவனபற்றி ஆராய்ச்சி செய்து முடிவுகட்டுவர். இதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் குழுவில் தம் கருத்தை அறிவிப்பதற்கு முன் நன்கு சிந்தித்து ஆயத்தம் செய்து கொண்டிருப்பர். சாதாரண உறுப்பினனாகச் சேர்ந்தவன் நாளடைவில் செயற்குழு உறுப்பினனாக மாறிச் சபைக்குத் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பும் பெறக் கூடியவனாவான். இந்தத் தலைமைப் பதவியை எல்லோரும் முறையாகப் பெறுவர். இதிலிருந்து அரசியல் நிர்வாகத்தில் சிறிய பணியை ஏற்றவர் நாளடைவில் பெரிய பதவி பெறும் வாய்ப்பு இருந்தது என்பதை நாம் உணர்கிறோம்.
சிலர் ஜெனரல் என்னும் தலைமைப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பல பொறுப்புக்களை மேற்கொள்வர். நாட்டுப் பொருளாதாரத்தொடர்புடைய செயல்கள் அனைத்தும் இவர்கள்கையில்தான் இருக்கும். போர்க் காலங்களில் இவருக்கென ஒருதனிப் படையும் கொடுக்கப்படும். ஒவ்வொரு கொன்சிலர் ஆகிய உறுப்பினர்களின் வேலை இன்ன என்பதையும், பல்வேறு பொறுப்புக்களை ஆற்றவேண்டு மென்பதையும் உணர்த்தி, ஒழுங்காக அரசியல் நிர்வாகத்தை, நடத்திவருவர். ஆனால், ஜெனரல் பதவி வகிப்பவர் பொறுப்புக்கள் மட்டும் பொது மக்களின் தேர்தல்படி ஏற்றுநடத்தப்படும். ஆகவே இந்த ஜெனரல் பதவிக்கு வருபவர் பலரை அறிந்த வராகவும் தம் மதிப்பை நன்கு பலர் அறியச் செய்த வராகவும் இருக்கவேண்டும்.
அரசியல் நிர்வாகத்தை நடத்துவதற்குச் செல்வரிகளும் முன் வரலாம். கடைகளைக் கண்காணிக்கும் தொழிலையும் கப்பல் துறைமுகங்களைக் கவனிக் கும் வேலையையும், மற்றும் பல பணிகளையும் சாதாரண நாட்டுப் பொதுமக்களுள் சிலர் மேற்கொண்டு ஆற்றி வந்தனர். ஏதென்ஸ் நகரில் வரி என்பது திட்டமாகக் குடிமக்களை வருத்திப் பெறத்தக்க நிலையில் இல்லை. நாட்டுக்கு வரும் வருமானம் துறைமுகச் சுங்கம், குற்றவாளிகள் கட்டும் தண்டனைப் பொருள், வெள்ளிச் சுரங்கத்தின் மூலம் கிடைக்கும் வருவாய், நேச நாடுகள் கட்டும் கப்பம் ஆகிய இவைகளே அன்றி வேறு இல்லை.
நாட்டுக்கு விசேட காலங்களில் நாடகங்களை நடத்துவதற்கு வேண்டிய மேடை முதலியவற்றை அமைக்க வேண்டுமானாலும், இவற்றின் பொருட்டு அரசாங்கம் கவலை கொள்ள வேண்டுவதில்லை. அக் காலங்களில் செல்வர்கள் முன்வந்து அவற்றிற் ஆவன செய்து செல்வத்தை ஈந்து பூர்த்தி செய்வர் இத்தகைய நாடு அன்றோ, எத்துறையிலும் மேம்பாடு உறும். எல்லாம் அரசாங்கமே செய்யவேண்டு மென்று எதிர்பார்த்தால் நடக்கக் கூடிய காரியமாகுமா? அப்படி எதிர்நோக்கின் குடிமக்களை வருத்தி வரிப்பணம் பெற்றுத்தானே அது நடத்த முன்வரும் ? ஆகவே, எந்நாட்டிலும் நாட்டு நலனுக்காகச் செல்வக் குடியினர் முன்வந்து அதற்குரிய செலவை ஏற்றல் சாலச் சிறந்த பண்பாடாகுயம். ஏதென்ஸ் நகரச் செல்வர் மனமுவந்து பொது நலனுக்குச் செலவு செய்து வந்ததைப் பாராட்டியே ஆகவேண்டும்.
“செல்வத்துப் பயனே ஈதல்,
துய்ப்பேம் எனினே தப்புந பலவே”
என்பது அச் செல்வர் இயல்பு போலும் !
சட்ட முறைகள்
எதினிய மக்கள், தங்கள் மக்கள் இனத்துள் ஒருவர் போலீஸ்காரனாக இருந்துகொண்டு தம் இனத்தவரை அடக்கி ஆள்வதை அறவே வெறுத்தனர். அதற்காகச் சிதியன் மரபைச் சேர்ந்த வில் வீரரை அழைத்து, அவர்களைக்கொண்டு நாட்டில் குழப்பம் நேராதிருக்கப் பார்த்து வந்தனர். நீதித் தலத்தில் ஆட்சி முறையிலும், குற்றத்திற்கு ஆளானவர்களைத் தண்டித்தற்காகச் சிரமம் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். சமுதாயத்தில், திருட்டு, கொலை, நம்பிக்கை மோசம் முதலான கொடுமைகளை ஒருவர் செய்தால் அவற்றின் பொருட்டு அரசியலார் அதற்காக முன்வந்து தீர்ப்புத் தண்டனை கொடுக்க முன் வர மாட்டார். அவற்றைப் பொதுமக்களே தமக்குள் கூடித் தண்டிக்க வேண்டிய முறையில் குற்றத்திற்குரியவரைத் தண்டித்து வந்தனர். இந்த முறைகள் நம் நாட்டுப் பஞ்சாயத்து முறை போன்றவை என்னலாம். இதற்குச் சான்று காண விழைவார், ஆளுடைய நம்பிகள் வழக்கு திருவெண்ணெய் நல்லூர் வேதம் வல்லாரில் மிக்கார் விளங்கும் பேரவை முன் தீர்க்ப்பட்டதைத் தொண்டர் புராணத்திலும், கணபதியின் தங்கை, தன் வழக்கை மதுரை அறத் தவசிஃனர்முன் உரையாடித் தீர்த்துக் கொண்டதைத் திருவிளையாடற் புராணத்திலும் காணலாம்.
அக்காலங்களில் வயதாலும் அனுபவத்தாலும் முதிர்ந்த பெரியவர்கள் சிலர் கூடிக் கொலைக்குற்றம் திருட்டுப் போன்ற குற்றம் முதலியவற்றிற்குரிய தண்டனைகளையும் வேறு வேறாக விதித்து வந்தனர்.
குற்றவாளியைத் திடுமெனக் கூப்பிட்டோ, அழைத்து வரவோ செய்யமாட்டார்கள். இன்ன நாளில் குற்றம் விசாரிக்கப்படும் என்று முன்னதாகக் கடிதம் விடுத்து அறிவிப்பர். அந்த நாளில் வாதி, பிரதிவாதி ஆகிய இருதிறத்தவர்களும் நடுவர் முன்வந்து சேரவேண்டும். அது போது விசாரணை நடக்கும். இருதிறத்தார் வாக்கு மூலங்கள் விசாரிக்கப்பட்டு, அவற்றுள் இன்றியமையாதனவற்றை யெல்லாம் பதிவு செய்து, ஒரு பெட்டகத்தில் வைத்து அரண் செய்வர். அடிமைகள் சாட்சி கூற அழைக்கப்படுவர். ஒரு வழக்கைத் தீர்க்க வேண்டின் அதற்கு ஆட்சி, ஆவணம், காட்சி என்னும் முத்திறத்தாலும் ஆய்ந்தே தீர்ப்புக் கூறப்பட்டது. இம்முறை கையாளப்பட்டு வந்தது என்பதைச் சுந்தரர் வரலாறும் நமக்கு அறிவிக்கின்றதன்றோ ! நீதிமன்றத்தினர் அடிமைகளை அழைப்பர். அவர்கள் உண்மை கூறாதிருப்பரேல் அடித்து உண்மையை வெளிப்படுத்துவர். கீழ் மக்கள் வருத்தினாலன்றிப் பயன்படுவரோ ? வள்ளுவரும்
'சொல்லப் பயன்படுவர் சான்றோர் : கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்'
என்று அன்றே கூறியுள்ளார்.
தீர்ப்புக் கூறுவதற்கு முன் பல வழிகளில் கேட்க வேண்டிய கேள்விகள் கேட்கப்படும். நீதிபதி தமக்குத் துணையாக ஜூரிகள் சிலரைக கொண்டு தீர்ப்புக் கூறுவர். ஜூரிகள் கூறும் தீர்மானமே வழக்கிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஜூரர்களுக்குச் சிறு தொகை, அவர்கள் வந்து போவதற்குரிய செலவின் பொருட்டுத் தரப்பட்டது.
அக்காலத்தில் ஏதென்ஸ் நகரத்தில் ஜூரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட முறை வெகு விந்தையானது. வழக்கு நடக்கும்போது மக்கள் கூடி வேடிக்கை பார்த்தல் இன்றும் அன்றுமுள்ள பழக்கமாகும். அப்படிக் கூடி வேடிக்கை பார்ப்பவர்களுள் சிலரையே திடுமென ஜூரிகளாக அமர்த்தி தம் கருத்தைக் கூறுமாறு ஏற்பாடு செய்வர். இதனால் வழக்கில் ஈடுபட்டவர்களுக்கு யார் ஜூரர்களாக வருவர் என்பதை முன்னதாக அறிந்து கொள்வதற்கு வழிபோகிறது. முன்னதாக இன்னார் தாம் ஜூரர்களாக வருவர் என்பதை அறிந்தால் தீர்ப்பு நீதி முறையில் கூறப்பட்டதாகக் கருத முடியாது. ஏனென்றால் ஜூரர்களை அறிந்து, அவர்களுக்குக் கைக்கூலி ஈந்து, தீர்ப்பைத் தம்பக்கம் நல்லமுறையில் தீர்த்துக்கொள்வர் என்பதை ஒழிக்கவே, இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டதாகும். இது நல்ல ஏற்பாடே. இந்த நீதி முறை பாராட்டுதற்குரியதே. ஜூரர்களாக வருவதற்கு எவரும் விரும்பினர். இவ்விருப்பம் தமக்குக் கொடுக்கப்படும் சிறு தொகைக்காக அன்று. இருதிறத்தார் வாக்கு மூலங்களைக் கேட்டு இன்புறுவதற்காகவே ஆகும். நீதி மன்றம் ஓர் அழகிய கட்டடத்தில் அமைந்த தன்று. வழக்குகள் ஒரு வெட்ட வெளியில் நடத்தப்படும். ஜூரர்கள் அமர்வதற்கு விசிப்பலகைகள் இடப்பட்டிருக்கும். மேடை ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கும். அதில் ஏறித்தான் பேசுபவர் பேசவேண்டும். இந்த உயர்நீதி மன்றத்தில்தான் முன் விசாரணை செய்து பெட்டகத்தில் எழுதிக் காப்பிடப்பட்ட விசாரணைக் குறிப்பை வாசித்து, உண்மை காணச் சிந்திப்பர். எல்லா வினாவிடைகளும் முன்னதாகவே விசாரிக்கப்பட்டுச் சாரமானவை தொகுத்து எழுதப்பட்டு விட்டமையால் இந்த வெட்டவெளி நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை என்பது பெரிதும் நடவாது. மேலும் இக்காலத்தைப் போலத் தனி முறையில் சட்டம் பயின்ற பட்டதாரிகள் அக்காலத்தில் இலர். ஆதலின், வழக்கிற்குரியவர் தம் தம் கருத்தைத் தாமே கூறவேண்டியவராயிருந்தனர்.
இது நல்ல முறைதான். தாமே கூறினால் தான் தம் கருத்தைத் தட்டுத் தடையின்றிக் கூற இயலும் இதற்குக் காரணம் தாய் மொழியில் அரசியல் அலுவல்கள் அனைத்தும் நடத்தப்பட்டதனால் என்க. பொதுமக்கள் தங்கள் கருத்தைத் தடையின்றிக் கூறத் தாய் மொழி ஏற்றதாய் இருந்தது. அவ்வாறின்றி இக்காலத்தில் வேற்று மொழியில் நடத்தப் படுதலின், வழக்கறிஞர் உதவி இன்றியமையாததாய் விட்டது.
பேச இயலாதவர்கள் தாம் கூறவேண்டிய அனைத்தையும் நன்கு எழுதப் பழகிய ஒருவரிடம் கூறி, எழுதி வாசிக்க இடம் அளித்திருந்தனர். இக் காலத்திலும் பேரறிஞர்கள் தாம் கூற விரும்பும் பொருளை எழுதி வாசித்தலைக் கண்கூடாகக் காணலாம். வழக்குத் தொடுத்தவரும் வழக்கிற்குரியவரும் தம் தம் வழக்கை வெல்லுவதற்கு வேண்டிய குறிப்புக்களைக் குறித்துக் கொண்டு பேசுவர். தம் பக்கம் வழக்கைத் தீர்த்துக் கொள்ளவும் ஜூரர்களுக்குத் தம்பால் இரக்கம் ஏற்படவும் தாம் பிள்ளை குட்டிக்காரர் என்பதையும் கூறிக் குழந்தைகளையும் ஜூரர்களுக்குக் காட்டுவர். என்னதான் காட்டினாலும், கூறினாலும் ஜூரர்கள் இரு திறத்தார் வாக்கையும் கேட்டு, யார் உத்தமர் என்பதை அறிந்து, அதற்கேற்ற தீர்ப்பே கூறிவந்தனர். ஏதென்ஸ் நகரத்தார் நீதி நெறியில் தவறாது தலைசிறந்து விளங்கினர் என்பதில் சிறிதும் ஐயமில்லை. நம் தமிழ் நாடும் நீதி நெறியினின்றும் தவறாது நடந்து வந்தது என்பது பொற்கைப் பாண்டியன் தன் கையைக் குறைத்துக் கொண்டதன் மூலமும், நெடுஞ்செழியன் கண்ணகி கூறிய உண்மையைக் கேட்டு உயிர் நீத்ததையும், மனுச்சோழன் தன் மகனைத் தேர்க்காலில் வைத்துக் கொன்றதையும் கொண்டு உணரலாம்.
சமன் செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந் தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி’,
என்பது பொய்யா மொழியன்றோ ?
ஜூரர்கள் பலராக இருந்தமையால், அவரவர்கள் கருத்தும் மாறுபடும். அதனால் வாக்கெடுத்து அதன் மூலம் தீர்ப்புக் கூறி வந்தனர். ஜூரர்கள் கையில் பலகறை போன்ற ஒரு பொருளைக் கொடுத்திருப்பர். அதனை இரு சாடிகளில் ஒன்றில் இட வேண்டும். அச் சாடிகளுள் ஒன்று குற்றம் என்பதையும் மற்றென்று குற்றமின்று என்பதையும் காட்டவல்லன. அவற்றில் இடப்பட்ட பலகறைகளை எடுத்து எண்ணிக்கையில் எது விஞ்சுகின்றதோ, அந்த முறையில் தீர்ப்புக் கூறப்பட்டது. குற்றத்திற்கேற்ப நாணய அபராதம், நாடுகடத்தல், தூக்கு, வாக்குரிமை இழத்தல் போன்ற தண்டனைகளை விதித்து வந்தனர். சிறையில் அடைக்கும் வழக்கம் ஏதென்ஸ் நகரில் இல்லை. அதற்குரிய இடம் ஏதென்ஸ் நகரில் இன்மையே ஆகும். ஏதென்ஸ் நகரத்துக்குத் தண்டனை ஒரு விசித்திரமானது. தூக்குக்குரியவனை ஓர் இடத்தில் அடைத்து வைத்திருப்பர். அவனுக்கு, தான் எப்போது தூக்கில் இடப்படுவான் என்பது தெரியாது. திடீரென ஒரு நஞ்சுப் பொருளைக் குடிக்க் ஈவர். அதைக் குடித்தவுடன் கைகால்கள் மடங்கிக் குற்றவாளி இறந்து போவான்.
கடற்படை
ஏதென்ஸ் நகர மக்கள் கடற்போரில் தலை சிறந்தவர் என்பதை அறிவோம். அவர்கள் எங்ஙனம் தம் கட்ற்போருக்குரிய கப்பலை அமைத்துக் கொண்டனர் என்பதை அறிவது மிகவும் இன்பமானதாக இருக்கும். கப்பல் நீளமாக இருக்கும். அதில் பாய்மரமும், அதில் இணைக்கப்பட்ட ஆடையும் அமைந்திருக்கும். அஃது இயங்க வேண்டுமனால், காற்றின் உதவி பெரும்பாலும் மிக மிக இன்றிமையாததாக இருந்தது. துடுப்பைக் கொண்டு தள்ளுவர். இவ்வேலையை மேற்கொள்ளுபவர் ஏழை மக்களாகவோ அடிமை ஆட்களாகவோ இருப்பர். இவர்கள் கப்பற்றலைவன் கூறும் கட்டளைப்படி கப்பலை நடத்திச் செல்வர். இவர்கள் கப்பலை நடத்துகையில் தம் களைப்புத் தீரப் பாடிக் கொண்டே நடத்துவர். நம் நாட்டிலும் ஏற்றம் இறைப்பவர், வண்டி இழுப்பவர் பாடிக் கொண்டே பணி புரிவதைக் கவனிக்கலாம்.
எதினியர்கள் கப்பல் போரில் தனிப்பட்ட நுண்ணறிவும் நற்பயிற்சியும் பெற்றிருந்ததால், இதில் அவர்கள் தலை சிறந்து விளங்கினர்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
எதினிய மக்கள் இந்தக் கடற்போரில் தம் எதிரிகளிருக்குமிடத்தை அணுகித் தம் வன்மை தோன்ற கப்பலின் மேல்தட்டினின்றே போர் புரிவர். இந்தத் தருணத்தில் எதிரிகளுக்குப் பெருவாரியாக அழிவை உண்டு பண்ணுவர். எதினியர் தம் எதிரி பலக் குறைவுடையவன் என்பதை அறிந்தால், தம் கப்பலைச் சுற்றிச் சுற்றிச்செலுத்தி, அவர்கள் பதுங்கி ஓடி மறைதற்கும் வகையறியாதிருக்கச் செய்து விடுவர். ஓடுகிற நாயைக் கண்டால் துரத்துகிற நாய்க்கு இளக்காரம் தானே ? இந்தத் தந்திரத்தால்தான் பிலோபோனெஷியன் (Pelo Ponnesians) கப்பல்களை மடக்கி, அவற்றில் உள்ளவர்கள் இன்னது செய்வதென அறியாது திகைக்கிச் செய்து, காற்றின் வேகத்தால் அவை சிதறடிக்கப்பட்ட நிலைக்குக் கொணர்ந்தனர் என்பதையும் அறிகிறோம்.
கடற் போருக்குப், புறப்படுமுன் தன் வழிபடு தெய்வங்கட்கு வழிபாடுகளை நடத்துவர். அது போது எதினிய மக்கள் கடற்கரையில் திரளாகக் கூடுவர். கூடி மாலுமிகள் புறப்பட்டுச் செல்லும் காட்சியில் ஈடுபடுவர். முதலில் தோல்வியே அடைந்தனர். இத்தோல்வியே ஏதென்ஸ் மக்களின் வீழ்ச்சிக்குக் காரணமாகும்.
எதினிய மக்கள் கடற்படையிலும் போரிலும் தலை சிறந்து விளங்கியதற்குக் காரணங்கள் பல. அவற்றுள் ஒன்று கடலில் செலுத்தும் கலத்தை அமைக்கும் நுண்ணறிவாளர்களை இவர்கள் கொண்டிருந்ததேயாகும்.
போர் வீரனின் கடமைகள்
ஏதென்ஸ் நகரவாசிக்கு இருக்கும் பொறுப்புக்கள் பலவற்றுள் படைஞருள் ஒருவனால் இருக்கும் பொழுது நடந்துகொள்ளும் பொறுப்பு அதிகமாகும். இஃது இன்றியமையாததுமாகும். உள்நாட்டுப்போர்கள் அடிக்கடி நிகழ்வதுண்டு. கி. மு. ஐந்தாம் நூற்றாண்டின் முடிவில் ஏதென்ஸ் நகர மக்கள் ஸ்பார்ட்டர்களோடு நீண்ட போரினை மேற்கொண்டனர்.
ஒவ்வோர் ஏதென்ஸ் நகரவாசியும் தன் பதினெட்டாம் ஆண்டில் ஒரு படையில் சேர்ந்து, இரண்டாண்டுகள் பயிற்சி பெறவேண்டும். இதில் சேருமுன் தன் நீதி, தவறா நிலைமையையும், தைரியத்தையும் குறித்துச் சத்தியம் செய்யவேண்டும். இஃது இப்போது சாரண இயக்கத்தில் சேருபவர் செய்யும் சத்தியம் போன்றது. இதிலிருந்து ஒவ்வொரு மக்களும் நீதிக்கும் சத்தியத்திற்கும் பயந்து நடக்க வேண்டுமென்பது தெரிகின்றது. இப் பயிற்சி பெற்ற இரண்டாண்டிற்குப் பிறகு ஒரு படைக் குழுவில் கலந்து கொண்டு பணி புரியவேண்டும். இப் பயிற்சி பெற்றவர் எப்பொழுதும் சண்டைக்குச் செல்ல ஆயத்தமாக இருக்க வேண்டும் ஒவ்வொருவரும் அறுபது வயது வரை போருக்குச் செல்லக்கடமைப்பட்டவர். இங்கு ஒரு செய்தியைக் குறிப்பிட்டால் வியக்காமல் இருக்க முடியாது. அஃதாவது போருக்குச் செல்பவர் தாமே ஆயுதங்களையும் உணவு வசதிகளையும் தயாரித்துக் கொண்டு போவதாகும். அடிக்கடி போர் நிகழ்ந்ததால் பல எதினிய மக்கள் உயிர் இமுக்கவும் நேர்ந்தது. ஒரே ஆண்டில் பல எதினிய மக்கள் போரின் நிமித்தம் உயிரிழந்திருக்கிறார்கள்.
தரைப்படை
நிலப் போரில் அத்துணைச் சீரிய பெருமை படைத்தவர் அல்லர் ஏதென்ஸ் நகரமக்கள். அவர் நல்ல அரண் படைத்தவர். மேலும் அவர்கள் கடற் போரில் நிகரற்று இருந்தமையால், பகைவர்கட்கு அஞ்சவேண்டு மென்னும் நியதி ஒன்றும் இல்லாதவராய் இலங்கினர். பிலோபோனேஷியன் சண்டையில்கூட எல்லா எதினியக் குடிமக்களும் சண்டைக் குப்பயந்து வெளியூர்களுக்குச் செல்லாமல் உள்ளுரிலேயே மறைந்து தம்முயிரைப் பலவாறு காப்பாற்றிக் கொண்டனர். இதனால் ஸ்பார்ட்டா படைவீரர்கள் விளநிலங்களையும் படைகளையுமட்டும் அழிக்கலாயினர். ஏதென்ஸ் நகரத்தவர் ஆட்சித்திறனே கடற் போர்த்திறமையில் அடங்கியிருந்தமையால் கடற் போர்க்கலத்தை நன்கு அமைப்பதிலும் கடற் போர் வீரரை நன்கு பயிற்றுவிப்பதிலும், கண்ணுங் கருத்துமாய் இருந்தனர் எனலாம்.
6. பழக்க வழக்கங்கள்
ஒரு நாட்டு மக்களின் நடையுடை பாவனைகளும் வாழ்க்கையும் அந்நாட்டின் தட்பவெப்ப நிலையைப் பொறுத்தவையாகும். ஏதென்ஸ் நகரின் ஒரு பகுதி அட்டிக்கா (Attica) என்பது. இது வெம்மை மிகுந்த நாடாதலின், இந்நிலப் பரப்பை வறண்ட பிரதேசம் எனவும் கூறலாம். ஆனால், மாரிக் காலத்தில் மழையும் மிகுதி. கோடைக்காலத்திலும் சிற்சில சமயங்களில் பலத்த மழையுண்டு. எனினும் பகற்போது வெம்மை மிகுந்து காணப்படும். வானம் மாசு மறு இன்றி விளங்கும். காலை நேரத்திலும் பரிதி தன் வெம்மை ஒளியை வீசி விளங்குவான். இங்கு இயற்கை அழகு இயம்பவொண்ணா நிலையில் திகழும். பறவைகளின் ஒலி காதைத் துளைக்கும். மாலை நேரத்தில் பரிதியங் கடவுள் தன் பொன் மயமான கதிர்களை வீசிக் கொண்டு விளங்கும் தோற்றம் காணக்கவினுடையதாக இருக்கும். ‘உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறன்றோ’ அவன் ?
உடைகள்
ஏதென்ஸ் நகர மக்கள் உடுத்திய உடைகள் கோடைக்காலம், மாரிக்காலம் ஆகிய இருகாலங்கட்கும் ஒத்துவரக் கூடியனவாக இருந்தன. இவர்கள் நீண்ட அங்கியை அணிந்திருந்தனர். நாம் பொத்தானை மார்புப் பக்கம் பிணித்துக் கொள்கிறோம். ஆனால் அவர்கள் தோள்பக்கம் முடியிட்டுக்கொள்வர். இவ்வாடை அணிதலின் தோற்றத்தை இப்போது நம் மனக்கண்ணுக்குக் கொணர விரும்பினால், பாதிரிமார்கள் அணிந்திருக்கும் தோற்றத்தை நம் நினைவிற்குக் கொணரின் நன்கு அறிந்துகொள்ளலாம். மாதர்களின் உடையும் நீண்ட அங்கியே ஆகும். என்றாலும், மாதர் அங்கி நீண்டும், ஆண்கள் அங்கி சிறிது குறைந்தும், முழங்கால் அளவுக்குத் தொங்கக் கூடியதாகவும் இருக்கும். குளிர் காலத்தில் வெம்மை தரும் பொருட்டு அங்கிக்கு மேல் ஒரு மேற் சட்டையை அணிந்து கொள்வர். அது சிறிது கனத்த ஆடையாக இருக்கும். இதைக் கோடை காலத்திலும் மேற்சட்டையாக அணிந்து கொள்வர். இதனால் யாதொரு துன்பமும் கொள்ளமாட்டார்கள். தொழிலாளிகள் தம் தொழில் முறைக்கேற்ற ஆடைகளை அணிந்து கொள்வர். மிதியடி அணிந்துகொள்ளும் வழக்கம் அவர்களிடையே இருந்தது. அம்மிதியடிகள் பல்வேறு திறத்தனவாக இருந்தன. தலையணியாகிய தொப்பியை அவர்கள் வெளியூர்ப் பயணமாகச் சென்ற பொழுதுதான் அணிந்து வந்தனர். கிரேக்கர்கள் தம் உடலை மறைத்து ஆடையால் மூடிக்கொண்டுதான் இருக்க வேண்டும் என்னும் கட்டிாயமுடையவர்களல்லர். அவர்கள் தம் உடலில் சட்டையின்றி இருக்கச் சிறிதும் கவலைப் படுவதில்லை. இப்படிப்பட்டவர்கள் விளையாட்டிலும் உடற்பயிற்சி செய்யுங் காலத்திலும் எப்படி இருந்திருப்பர் என்று கூறவும் வேண்டுமோ? அக் காலங்களில் தம் ஆடைகளை அகற்றி விடுவர்.
வீட்டமைப்பு
இவர்கள் அமைத்துக்கொண்ட இல்லங்கள் நாட்டுத் தட்ப வெப்பத்திற்கு இயைந்தனவாக இருந்தன. பழைய முறையில் கட்டப்பட்ட வீடுகளில் ஒரு சமையல் அறை, தாழ்வாரம் இல்லாத புறக்கடை உடையதாய் இருக்கும். போதுமான இடவசதி இல்லாத இடங்களில் வீட்டின் இடையில் பரந்த வெளியை அமைத்துக் கொண்டனர். இவ்வாறு அமைத்துக் கொண்டதனால் நல்ல ஒளியும், வளியும் தாராளமாக உலவ இடம் பெற்றிருக்கும். பரந்த முற்றங்களை அடுத்த தாழ்வாரங்கள் தூண்களால் தாங்கப்பட்டிருக்கும். இவ்வாறு அமைத்த வீடுகள் கோடையிலும், மாரியிலும், வாழ்வதற்கு வசதியுள்ளவனவாக இருந்தன. சிற்சில சமயங்களில் விருந்துணவு உண்ணுதற்கெனத் தனி முறையில் அமைக்கப்பட்ட அறைகளும் உண்டு. இங்குச் சமைக்கப்பட்ட உணவைக் கொணர்ந்து பரிமாறி உண்பர். மற்றும் வீட்டு அலுவல்களைப் பேசி ஒரு முடிவுக்கு வருவதற்கும் இவ்வறைகள் பயன்பட்டு வந்தன. பள்ளியறைகள் வீட்டின் நடுப்பகுதியிலிருக்கும். மாதர்கள் நடமாடுவதற்கு வீட்டின் புறக்கடையில் தனித்தனி அறைகள் அமைக்கப் பட்டிருக்கும். இவை நாம் கூறும் அந்தப்புரம் போன்றவை. வீட்டைச் சுற்றித் தெருவரையில் புறச்சுவர் உண்டு. இது சூளையிடாத கற்களால் ஆக்கப்பட்டிருக்கும். இதனால், கள்வர்கள் சுவரைத் துளைத்து உட்புகுந்து களவாட வசதியாக இருந்தது.
கி. பி. 1ஆம் நூற்றாண்டுக் கிரேக்க மக்கள்; எளிய வாழ்வு வாழ்ந்து வந்தனர். உடலிற்கான வசதிகளைக் கவனிப்பதில் அவ்வளவு கருத்துடையவர்கள் அல்லர். மழைக் காலங்களில் வெம்மை தரும் பொருட்டுத் தீச்சட்டிகளை மட்டும் மூட்டிக் கொள்வர். குளிப்பதற்கெனப் பொது நீர் நிலயங்கள் உண்டு. அங்குக் குளித்து வந்தனர். வீட்டு முகப்புக்கு முன் திரைச்சில தொங்கிக்கொண்டிருக்கும். கீழே சமுக்காளங்கள் விரிக்கப்பட்டிரா. மரச் சாமான்களும் மிகுதியாக இரா. “ஸ்டுல்’, ‘பெஞ்சு’ ஆகிய சாதாரண மரச்சாமான்களே உண்டு. கழிநீர் போதற்குக் கால்வாய்கள் இன்மையால் குப்ன்பகள் தெருவில் நிறைந்து சாலைகள் புழுதி மிகுந்து காணப் படும். இதனால் இவர்களைச் சுகாதாதாரக் குறை அடையவர்கள் என்று கூசாமல் கூறிவிடலாம்.
நம்மவர்கள் இந்த விஷயத்தில் விஞ்சியவர்கள். கழிநீர் செல்லுதற்குக் கரந்து படை (underground drainage) என்ற ஒன்றை அமைத்திருந்தனர். இது கருங்கல்லால் மூடப்பட்டிருந்தது. இந்நீர் கடைசி யில் அகழியில் சென்று விழுந்துவிடும். இது விழு தற்கு அமைந்த உறுப்பு யானைத் துதிக்கை போன்றது என்று உவமையால் புலப்படுத்தியுள்ளனர் நம் முன்னோர்.
தினசரிச் செயல்கள்
கிரேக்கர்களின் நாட்டின் தட்ப வெப்பங்கள் வெளியிடங்களில் வாழவேண்டிய இன்றியமையா நிலையை இயற்கையில் கொண்டுவந்தன. ஆதலின் எத்தக் கிரேக்கன் வெளியில் எவருடனும் பழகாமல் வீட்டிற்குள்ளேயே அடைபட்டு இருக்கிருனோ, அவன் எவராலும் மதிக்கப்படுவதில்லை. வெளியில் ஒருவர்க்கொருவர் நெருங்கிப் பழகியதால் தமக்குள் சகோதர நேய ஒருமைப்பாடுடையவராய் வாழ்ந்தனர். ஏதென்ஸ், நகரம், மக்கள் தெருக்கம் மிகுதியாகக் கொண்டிருந்ததனால், ஒருவரை ஒருவர் அறிந்து வாழ்வதற்கு வாய்ப்புள்ளதாகவும் இருந்தது. பல்வேறு இனத்து மக்கள் ஒன்று கூடி இனத்துக்கு இனம் தம் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளாமல் ஒரே முறையைக் கையாண்டனர்; செல்வக் குடியில் பிறந்த இளைஞர்கள் தம் முடியை நீளத்தொங்கவிட்டுக்கொண்டு பரிகள்மீது ஊர்ந்து செல்வர். கிரேக்கர்கள் சிலம்பக் கூடங்களிலும், மற்றும் பல பொது இடங்களிலும் அடிக்கடி கூடுவர். அக் காலங்களில் நன்கு ஒருவரோடு ஒருவர் உரையாடுவர். இவர்கள் பேச்சு வெறும் வாய்ப்பேச்சளவில் இராது. உடனுக்குடன் கைச் சைகை, முகச் சைகை முதலான அங்க அசைவுகள் கலந்தனவாகவே இருக்கும். இஃது இவர்கட்குப் பரம்பரையாக் அமைந்த ஒரு பண்பாகும். இவர்கள் சோம்பலை அறவே வெறுத்தவர் என்றும், சுறுசுறுப்பாகவே இருக்க விரும்புபவர். பேசிக்கொண்டிருக்கும்போது உலவிக்கொண்டே இருப்பர். உலவுவதில் இவர்கட்குப் பெரு விருப்பம் உண்டு. பத்து மைல் நடந்தாலும் சோர்வு தட்டாது என்பது இவர்கள் கொள்கை. கிராம வாழ்க்கையைப் பெரிதும் விரும்புவர். அதன் இயற்கை எழிலே இதற்குக் காரணமாகும். ஆவணங்களே இவர்கள் விரும்பி நடமாடும் இடங்கள். அங்குத் தோன்றும் இரைச்சலும், சுறுசுறுப்பும் இவர்கட்கு ஊக்கமும் உற்சாகமும் ஊட்டுவனவாகும். ஆவணங்கள் நகரின் நடுப்பகுதியில் இருக்கும். இக்கடைகள் நிறைந்த இடங்களில்தான் பெரிய பெரிய கட்டடங்களைக் காணலாம். இங்குத் தான் சிறு சிறு கடைகள் நிறைந்து காணப்படும். பல்வேறு இடங்களில் இருப்பவர்களும் இங்கு வந்து தம் சரக்குகளை விற்றுப் பணமாக்கிச் செல்வர். பணம் வட்டிக்குக் கொடுத்து வாங்கும் சவுக்கார்களும் இங்குத்தான் வருவர். இந்த இடமே அரசியல், தத்துவம் முதலிய பொருள்களைப் பற்றி ஒருவருக்கொருவர் உரையாடற்குரியது.
‘வைகறைத் துயிலெழு’ என்னும் தமிழ்நாட்டுப் பழக்கம் எதினிய மக்கள் பாலும் இருந்தது. எழுந்ததும் கால உணவை முடித்துக் கொள்வர். காலையில் எழுந்ததும் குளித்து முழுகிக் கடவுளைத் தொழுதல், அதன் பின் உண்ணல் என்பது இவர்பால் கட்டாயம். இல்லைபோலும் இவர்களது காலை உணவு ஒரு துண்டு ரொட்டி ஆகும். அதனைத் திராட்சைச் சாற்றில் தோய்த்து உண்பர். பிறகு வெளியே புறப்பட்டுச் சந்தைக்குச் செல்வர். இடைவழியில் நண்பர்களைச் சந்தித்து உரையாடுவதும் உண்டு. வெளியே செல்பவர் பெரும்பாலும், கையில் ஒரு கழியுடன் புறப்படுவர். கழி இருத்தலின் இன்றிய மையாமையை நாமும் நன்கு உணர்ந்திருக்கிறோம்.
இவர்களோடு இவர்களிடம் வேலைசெய்யும் இரண்டோர் அடிமைகள் தொடர்ந்துவருவதுண்டு. தெருவில் நடக்கையில் நன்கு கம்பீர்த்தோடு நடப்பர். சுறுசுறுப்பின்றிச் சோம்பி நடத்தலை இவர்கள் வெறுத்தனர். ஏறுபோல் பீடு நடை இவர்பால் இருந்தது. தினமும் முடி திருத்தும் அகத்திற்குச் செல்லாதிரார். அங்குச் சென்று தம் முடியைக் கோதிக் கொள்வர். புழுதி நிறைந்த ஏதென்ஸ் நகரில் வாழ்ந்தவர் கண்களில் தூசி படிவதால் அடிக்கடி கண்ணோய் உற்று வந்தனர். அந்நோயைத் தீர்த்து வைப்பதிலும் அந்நாட்டு நாவிதர்கள் நல்ல பழக்கம் பெற்றிருந்தனர். மருத்துவம் செய்தல் நாவிதர் மரபுக்குப் பரம்பரை பழக்கம் போலும்! நம் நாட்டிலும் பண்டைக் காலத்தில் நாவிதர்களே மருத்துவம் செய்ததுண்டு. முடிதிருத்தகம் ஊர் வம்பு அளப்பதற்கு உகந்த இடமாய் இருந்தது. இங்குச் செல்பவர் மூலமுடுக்குச் செய்திகளை அறிந்துகொள்வர். எதினிய மக்கட்கும், சிசிலி மக்கட்கும் நடந்த போரட்டத்தில் எதினிய மக்கள் வென்ற செய்தி முதல் முதல் முடிதிருத்தகத்தினின்றே வெளி வந்தது.
சந்தைக்கு வந்தவர்கள் காலை ஒன்பது மணிக்கெல்லாம் வாங்க வேண்டியவற்றை வாங்கிவிடுவர். வாங்கியவற்றை வீட்டிற்கு தம்முடன் வந்த அடிமை ஆளிடம் கொடுத்து அனுப்பி விடுவர். இதன் பின் கொடுக்கல் வாங்கல் இருந்தால் அவற்றைச் சவுக்காரிடம் முடித்துக்கொள்வர். பகற்போதில் தம் வீட்டிற்குச் சென்றுதான் உணவு கொள்ள வேண்டும் என்பதில்லை. இவர்கள் காலையில் வெளியில் கிளம்பியதும் கையில் கட்டுணவு கொண்டே புறப்படுவர். கட்டுச் சாதம் கொண்டுபோதல் எந்நாட்டவர்க்கும் உரிய பழக்கம் போலும் நம்மவர் இதனை ஆற்றுணா என்று தம் இலக்கியத்தில் குறிப்பிட்டுள்ளனர். அதனைப் பகல் வேளையில் உண்டு விடுவர். “உண்டஇளைப்புத் தொண்டர்க்கு முண்டு” என்னும் முதுமொழிக்கிணங்கப் பகலில் சிறிது வசதி ஏற்பட்ட இடத்தில் உறங்குவர். ஆனால் வாகடநூல் பகலுறக்கத்தை மறுக்கின்றது. “பகலுறக்கம் செய்யார் நோயின்மை வேண்டுவார்” என்பது விதி. மாலையானதும் உடற்பயிற்சி புரிவர்; பயிற்சிக்குப் பிறகு நீராடுவர். ஆனால், நீராடுவதற்கு அடிமைகளைக் கொண்டு தம் யாக்கைக்கு எண்ணெய் தேய்க்கச் செய்வர். எண்ணெய் தேய்த்துச் சிறிது நேரங்கழித்து ஓர் உலோகக் கருவியால் அழுக்கு உள்பட எண்ணெயை வழித்து எடுத்து விடுவர். நம் போன்று எண்ணெய் நீக்கச் சிகைக்காயையோ அன்றி வேறு எதையோ தேய்த்துக் குளிக்கும் பழக்கம் இவர்கள்பால் இல்லை. எண்ணய் வழித்து எடுக்கப்பட்டபின் நீரில் குளிப்பர். இக்குளியலும் மேலிருந்து சிறு சல்லிகள் மூலம் வரும் குளிர் நீரில் ஆகும். இஃது உடற்கு இன்பமாக இருக்கும். வெந்நீரில் மூழ்கும் பழக்கம் கி.மு. 3ஆம் நூற்றாண்டுவரை பழக்கத்தில் வந்திலது.
வெந்நீர்க் குளியலைப் பற்றி நாமும் சிறிது விழிப்பாக இருத்தல் நல்லது. இளைஞர்களும் காளைகளும் தண்ணீரில்தான் மூழ்குதல் வேண்டும். தண்ணீர் தான் நரம்புகளுக்கு உரமூட்டுவது. வெந்நீரை நோயாளிர், வயது முதிர்ந்தோர் பயன்படுத்த வேண்டும். “சனி நீராடு” என்பதற்குச் சனிக்கிழமை தோறும் வெந்நீரில் குளி என்பது ஒரு பொருளாக இருப்பினும், ஊறிவருகின்ற கிணற்று நீரிலோ, கீர் வீழ்ச்சி நீரிலோ ஆற்று நீரிலோ நீராடு என்பது பொருளாகும். ஆகவே குளிப்பதற்குத் தண்ணிரே சாலச் சிறந்தது என்பதை உணர்க.
உணவு முறை
பகல் உணவே சிறப்புடைய உணவாக ஏதென்ஸ் நகர மக்கள் கருதினர். அதுவும் பகலில் காலங் கடந்து உண்ணப்படும். தம்மோடு உடனிருந்து உண்ணுதற்குத் தம்மை ஒத்த ஆண்களை விருந்தினராக அழைக்கப்பட்டனர். மாதரீகள் ஆண்களோடு உடனிருந்து உண்ணும் வழக்கம் இவர்கள்பால் இலது. இதுவும் நாம் உணவு முறையைக் கொள்ளும் முறையை ஒத்தது என்னலாம். உணவு கொள்கையில் காலில் மிதியடி அணியார்.
இது நம்மவரது தொன்றுதொட்ட பழக்கம் அன்றோ? உணவுக்கு முன் கை கால் சுத்தம் செய்து தானே நாம் உண்கிறோம். ‘கூழானுலும் குளித்துக் குடி’ என்பது இது பற்றியே. அவர்கள் பாதங்கள் அடிமைகளால் சுத்தம் செய்யப்படும். தலையில் மலர் அணியப்படும். உணவு முக்காலியிலோ நாற்காலியிலோ வைத்துப் பறிமாறப்படும். இந்த முறையும் நம் பண்டைக் காலத்துக் கையாண்ட முறையாகும்.
கிரேக்கர் இறைச்சியை அவ்வளவாக விரும்புவர் அல்லர். ஆனால், தெய்வத்தின் பெயரால் பன்றியோ ஆடோ பலியிடப்பட்டால் அதனை மட்டும் விரும்பி உண்பர். இது யாகத்தில் பலியான இறைச்சியை வடவர் உண்பது போன்ற முறையாகும். கூழ் அல்லது கஞ்சி உணவே அவர்கட்கு விருப்பமான உணவாகும். இறைச்சி உண்ணாதார் என்றதனால் தூய உணவினர் என்பதில்லை. முட்டை, உலர்த்தி, உப்புச் சேர்த்துப் பக்குவப்படுத்தப்பட்ட மீன், பால் கச்டி ஆகிய இவற்றை விருப்பமாக உண்டு வந்ததனர். தொழிலாளிகள் பார்லி உணவைச் சோறு போலவும், கஞ்சி போலவும் சமைத்து உணவாகக் கொள்வர். எதினியவர்கள் காரம் மிகுந்த பொருள்களை மிகுதியும் உண்ணவும் விரும்பினர்.
ஒலிவ எண்ணெய் வெண்ணெய்க்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. தேனையும் உணவுக்கு இனிமையூட்டச் சேர்த்து வந்தனர். சிற்சில நேரங்களில், அஃதாவது விசேட காலங்களில் சிறப்பு உணவுகள் தயாரிக்கப்படும். பால், முட்டை, மா, பாற்கட்டி, தேன் ஆகிய இவற்றால் ஆம்லட் என்னும் உணவுப் பொருளைச் செய்து வந்தனர். ஆனால் ஏழைகட்கு இன்னோரன்ன கறிவகைகள் செய்யவோ உண்ணவோ வாய்ப்பு இராது.
பண்டைக் காலத்தில் கத்தியோ முள் கரண்டியோ உணவின்போது உபயோகப்படுத்தப்பட வில்லை. கைகளையே உண்பதற்குப் பயன்படுத்தி வந்தனர். சிற்சில வேளைகளில் மாவினால் செய்யப்பட்ட கரண்டிகளைப் பயன்படுத்தியதும் உண்டு. அவற்றை உபயோகித்த பிறகு எறிந்து விடுவர். உணவிற்குப் பிறகு உண்டபோது கழிக்கப்பட்ட பொருள்களை அடிமைகள் எடுத்து எறிந்துவிட்டுச் சுத்தமாக அந்த இடத்தைக் கூட்டி எடுப்பர். உணவின் பின் பழம் சாப்பிடுவர். நாமும் முப்பழத்துடன் சாப்பிடும் பழக்கமுடையவர்களன்றோ? முப்பழமொடு பால் அன்னம் என்பது தம் நாட்டுத் தொடர் மொழி விருந்தினர்க்கு இனிய பருப்பு, அத்தி கேக், மிட்டாய் ஆகிய இவைகளை ஈந்து மகிழ்வர். திராட்சைச் சாற்றையும் கொடுப்பர். வெறும் திராட்சைச் சாற்றைப் பருகாமல் அதனோடு தண்ணீர் கலந்தே பருகுவர். இவ்வளவு தண்ணீரதான் கலக்க வேண்டும் என்பதை விருந்தில் கலந்து கொண்டவர்களுள் ஒருவரைத் தலைவராக நியமித்து, அவர் கூறிய அளவுக்கு அந்நீரைக் கலப்பர். பொதுவாக எவ்வளவு திராட்சைச் சாறு இருக்கிறதோ, அதற்கு இரண்டு மடங்கு நீரைக் கலந்து வந்தனர். இவ்வாறு கலக்கும் தொழில் அடிமை ஆட்களால் நடைபெறும். இதன்பின் குவளைகளில் ஊற்றப்பட்டு இந்த மது யாவர்க்கும் அளிக்கப்படும். கிரேக்கர் இந்த மதுவைத் தாம் இன்பமாகவும் சுறுசுறுப்பாகவும் தம்மை மறந்தும் இருப்பதற்காக அருந்துவர். அடிமைச் சிறுவர்களும் சிறுமியர்களும், இந்நேரங்களில் ஆடல் பாடல்களை நிகழ்த்தி விருந்தினர்க்கு இன்பமூட்டுவர். விருந்திற்குப் பிறகு நிகழ்ந்ததைச் சேரர் பெருமான் சுந்தரர்க்கு இட்ட விருந்தில் நாம் காண்கிறோம்.
“பாடல் ஆடல் இன்னியங்கள் பயிறல் முதலாப் பண்ணையினில்
நீடும் இனிய வினோதங்கள் நெருங்கு காலந் தொறும் நிகழ’,
என்று பெரிய புராணம் புகழ்கிறது.
இன்பமாக உரையாடுபவர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவர். இன்றியமையாத செய்திகளைப்பற்றிய விவாதங்களுக்கும் இதுவே இடமாகவும் அமையும். இந்தத் தருணத்தில்தான் அழகு, அன்பு என்னும் பொருள்பற்றிய ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்ந்ததாக அவர்கள் நூலால் அறிகிறோம். விருந்தினர் ஆடற்கேற்பப் பாடுவர்; விடு கவிகள் புனைவர்; சிற்சில விளையாட்டுகளை ஆடுவர். பிளேட்டோ (Plato) எழுதியுள்ள விருந்தைப்பற்றி நாம் வாசித்தால் மிகுதியாக மது வகைகள் இருந்தனவாகவும். இதனால் எல்லாரும் தம்மை மறந்து ஆழ்ந்த உறக்கத்தில் அழுந்தியதாகவும், இந்த விருந்தில் சாக்ரடீஸ் (Socrates), அரிஸ்டோபானிஸ் (Aristophanes) அகோதன் (Agothon) ஆகிய மூவர் மட்டும் உறங்கிலர் என்பதும் அறியலாம்.
சாக்ரடிஸ் உறங்காமைக்குக் காரணம் அவர் முனைய இருவரோடு, ‘துன்பியல்’ ‘இன்பியல்’ ஆகிய இவற்றை ஒரு நூலில் முடிந்துக் காட்டுவது ஆசிரியரின் ஒப்புயர்வற்ற அறிவின் திறத்தைப் பொறுத்திருத்தலின் இருவரின் அறிவும் ஒன்றே அன்றி முன்றினும் மற்றென்று விஞ்சியது அன்று’ என்பதைப் பற்றி நீண்ட விவாதம் நடத்தியதேயாகும். அரிஸ்டோபானிஸ், அகோதன் ஆகிய இருவரும் குடிமயக்கத்தில் மிகுதியும் அழுந்தி இருந்ததனால் சாக்ரடிஸ் சொன்னவற்றை அப்படியே ஏற்றுக் கொண்டனர். பிறகு இருவரும் உறங்கிவிட்டனர். பிறரு சாக்ரடிஸ் அந்த இடத்தில் இராமல் புறப்பட்டுப் போய்க்கொண்டே இருந்தார். இம்மாதிரியான வாய்ப்புக்கள் அடிக்கடி நிகழ்வதில்லை. கிரேக்கர் மதுவை ஒரு பழக்கமாக வைத்துக்கொண்டிருக்கவில்லை. சில நேரங்களில் சிறிது உற்சாகமாக இருக்கவே பயன்படுத்திவந்தனர்.
7. மாதர்கள் நிலை
ஏதென்ஸ் நகர மக்கள் பல்வேறு தொழிலில் ஈடுபட்டிருந்தனர் என்றாலும் அவர்கள்க்குப் போதுமான ஓய்வு நேரங்கள் இருந்தன. அந்நேரங்களைக் கேளிக்கைகளிலும் விளையாட்டுகளிலும் கழித்தனர் உழவர்கட்கு ஆண்டு முழுவதும் வேலை இராது என்பதை எவரும் அறிவர். அவர்கள் தமக்கு நிலம் பணி இல்லாதபோது, வேறு பணியில் ஈடுபட்டு இன்புற்றிருந்தனர். மாலுமிகள் மாரிக்காலத்தில் மாக்கடல் வழியே மரக்கலங்களைச் செலுத்தமாட்டார்கள். அக்காலங்களை இன்பமாக ஓய்வு எடுத்துக்கொண்டு கழித்து வந்தனர். ஏனெனில் கடல் பெரிதும் மாரிக் காலத்தில் கொந்தளிப்புடன் துலங்கும். கைத்தொழிலாளிகளும் கடைக்காரர்களும் பிறர்க்குக் கைகட்டி விடைகூறும் நிலையினர் அல்லர். ஆதலின், அவர்களின் இன்பப் பொழுது போக்கைப் பற்றி இயம்ப வேண்டா. இந் நிலையில் மாதர்களின் நிலையைப் பற்றிச் சிறிது கவனிப்போம்.
பொதுவாகக் கூறுமிடத்து ஏதென்ஸ் நகர் ஆண் மக்கள் வீட்டைப்பற்றிய பொறுப்பே அறியாதவர் என்னலாம். ஏனெனில் ஏதென்ஸ் நகர மாதரிகள் மனைவி என்னும் சொல்லுக்குரிய பொருட் பொருத்தமுற வீட்டு வேலைகளைத் தாமே கவனித்து வந்தனர். மனைக்கு விளக்கம் மடவாள்தானே ! செல்வர்கள் இல்லங்களில் அடிமை ஆட்கள் ஆவணி ஆற்றிவந்தனர்.
மாதர்கள் பணி
கி. மு. ஐந்தாம் நூற்றாண்டில் ஏதென்ஸ் நக மாதர்கள், ஊழியம் செய்து ஓய்வு பெற்றவர் போல் வீட்டிலேயே அடைபட்ட நிலையினராய் இருந்தனர். ஆண் மக்கள் கலந்து கொள்ளும் எத்தகைய பொது திகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் வாய்ப்புப் பெறாதவராய் விளங்கினர்.
“சிறை காக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை”
என்னும் கொள்கையைச் சிறிதும் சிந்தித்திலர். தம் வீட்டிற்க்கு விருந்தினராக வந்தவர் ஆண்களாயின் அவர்களைப் பாராமல் தமக்கென அமைந்த அறைகளில் கரந்து உறைவர். விருந்துக்கு உகந்தவைகளை வேலையாட்கள் செய்து வைப்பர். வீதியில் இம் மாதர்கள் உலாவச் சென்றபோது இவர்களுக்குக் காவலாக அடிமைகள் உடன் வந்து கொண்டிருப்பர். பெண்கள் உரிமை இவர்கள் நாட்டில் இல்லை போலும் !
இளைய சிறுமி, தாயின் பாதுகாப்பில் வளர்க்கப்பட்டு வருவாள். தாய் அச் சிறுமிக்கு வீட்டு வேலைகளைச் செம்மையுறச் செய்யும் பழக்கத்தை ஊட்டி வருவாள். ஸ்பார்ட்டன் நகரச் சிறுமியர் விளையாட்டில் பங்கு கொள்வது போல் ஏதென்ஸ் நகரச் சிறுமியர் பங்கு கொள்வதில்லை. இப்பெண்களைக் காண வேண்டுமானால் மலர்க் கூடைகள் ஏந்திச் செல்லும் போதும், நீர்க்குடங்களைத் தாங்கிப் போகும் போது மட்டும் காணலாம். ஏதென்ஸ் நகரப் பெண்கள் மணமின்றி வாழ்வு நடத்துவது பெரிய இழுக்காக இவர்கள் இடையே கருதப்பட்டது. திருமணம் பெற்றோர் விருப்பத்திற்கிணங்க முடிவு பெறும். திருமணத்தின் போது மணமகளின் நண்பர்களாகிய நங்கைமார்கள் வெகுமதிகள் பல தருவர்.
மணவாட்டியை மண்ணுறுத்தும் செயலனைத்தையும் மாபெரும் முதியவள் கவனித்து வந்தனள் ஏதென்ஸ் நகர மாதர்கள் தம்மைப் பிறர் புகழ்வதையோ, வேடிக்கையாகப் பேசுவதையோ சிறிதும் விரும்பாதவர். இக்காலத்துக் காளைகளும், களிமயில்களும் குறிப்பிட்ட இடத்தில் சந்தித்து உரையாடுவது போல் ஏதென்ஸ் நகர வாலிபர் சிறுவர் சிறுமியர் யாண்டும் தனித்துக் கூடும் வழக்கம் பெறாதவர்கள். திருமணம் பெற்றோரின் முடிவுக்கு இணங்க இசைவு பெற்றதாக இருந்தாலும் மணமகள் விரும்பும் சீதனங்களை மணமகன் ஈந்தே மணக்க வேண்டியவனாய் இருந்தான். திருமணம், மணமக்கள் இல்லத்திலேயே அதற்கென அமைந்த திருமண மேடையில் நடைபெறும். அப்போது வந்தனை வழிபாடுகளை நடத்துவர். இவை முடிந்ததும் மணமக்கள் தம் உற்றார் உறவினருடன் அமர்ந்து சிறிது சிற்றுண்டி கொள்வர். அவ்வுண்டியில் சிறந்த உணவாக இருப்பது எள் அடையாகும்: இன்னோரன்ன மகிழ்வுக்குரிய நேரங்களிலும் கூட ஆண்களும் பெண்களும் தனித்திருந்தே எல்லாச் சடங்குகளையும் முடிப்பர். இது பெண்களின் அச்சம், நாணம் முதலிய நற்குணங்களைக் காட்டுவதாகும். மணமான மாலைப்பொழுதில் தம்பதிகளை ஊர்வலமாகப் பிள்ளை வீட்டிற்கு அழைத்துச் செல்வர். இதனால் திருமணம் பெண் வீட்டில் நடப்பது என்பதும் அறியக் கிடைக்கிறது. ஊர்வலத்தில் கேளும் கிளையும் ஆகக் கிளர்ந்து வருவர். இளஞ் சிறுமியர்.
“முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டான்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யாளுள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்
தன்னை மறந்தாள் தன்னுமம் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தானே”
என்ற கருத்தடங்கிய பாடலைப் போன்ற பாடலைப் பாடி வருவர். அஃதாவது இதுகாறும் தாய் வீட்டில் வளர்ந்த பெண் தனக்கென வாய்ந்த கணவனோடு வாழ உற்றார் உறவினரைப் பிரிந்து செல்கிறாள் என்பதாம்.
மணமகளுக்குரிய சொத்து சுதந்திரங்கள் எல்லாம் மணமகனுக்குரியனவாகிவிடும். மணமான மகள் கணவன் பொறுப்பிலும், மணமாகி விதவையான மகள் தாய் தந்தையர், அண்ணன்மார் பொறுப்பிலும் இருக்க வேண்டியது இவர்கள் மரபாகும். பெண்கள் வீட்டிலிருந்தபோது சோம்பலோடு காலங் கழிக்கமாட்டார்கள். பின்னல், நெசவு போன்ற பணிகளில் ஈடுபட்டிருந்தனர். தம் கணவன் ஆடைகளைத் தூயனவாக்கி நன்கு மடித்தும் வைப்பர். வீட்டு வேலைகளைச் சரிவரக் கவனிப்பதில் ஏதென்ஸ் நகர மாதர் தலை சிறந்தவர் என்னலாம். இப்பெண்கள் தம்மை அலங்கரித்துக் கொள்வதெல்லாம், பிறர் கண்டு மகிழ்வதற்கின்றித் தம் கணவர் கண்டு களிப்பதற்காகவேயாகும். இந்த ஒப்பனையை மாஸ்க் காலத்தில்தான் மகிழ்ச்சியுடன் செய்துகொள்வர். ஏனெனில், கணவன் தன் வேலைகளை முடித்துக் கொண்டு வீடு திரும்புகையில் தம் மனைவிமார் இன்பமாக ஒப்பனை செய்து கொண்டிருப்பதைக் காணின், அவர்கள் அன்றடைந்த சோர்வு அனைத்தும் நீங்கப்பெறுவர். நம் நாட்டுப் பண்டைத் தமிழ்ப் பெண்களும், கணவன் பொருட்டே அலங்காரம் செய்திருந்தனர்.
இதுகாறும் கூறப்பட்டு வந்த எதினிய மாதர்களின் நிலைகளினால் அவர்கள் அடக்கி ஒடுக்கப் பட்டனரோ என்று கருதவேண்டா. அவர்கட்குரிய பெருமையும் நன்மதிப்பும் சிறிதும் குறைந்தனவாகக் கருதப்படவில்லை. சதிபதிகளுக்குள்ள காதல் அன்பு நாளடைவில் நன்கு முதிர்ந்து கனிந்து காணப்படும். அக்காதலன்பு ஒரு குறிக்கோளுடனேதான் இருந்து வந்தது. கணவன்மார் தம் மனைவியர் வீட்டு வேலைகளில் யாதொரு சிறு தவறு ஏற்பட்டாலும், அது குறித்து முகஞ்சுளிக்கும் தன்மை பெறாதவர். அவர்கள் அந்த அந்த இல்லக்கிழத்தியார் உடல் வன்மைக்கேற்ப மாறாது செய்து வந்ததைப் பாராட்டியே வந்தனர். எதினிய மாதர்களும் வரம்பு மீறி நடந்து கொள்ளமாட்டார்கள். ஒவ்வொரு மாதம் தான் பெருந்தன்மை வாய்ந்த நல் வாழ்வு நடத்த வேண்டுமென்னும் கொள்கையையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தனள். இம் மாதர்கள் வீட்டளவில் தம் கடமைகளை ஒழுங்காகவே செய்து வந்தனர் என்னலாம். தம் கணவன்மார்களுக்கு அவ்வப்போது யோசனை கூறுவதும் நல்வழி காட்டுவதும் கணவன்மார் மகிழ நடந்து கொள்வதும் ஆன பொறுப்பை இவர்கள் ஏற்றுத் தாம் ஆண்களிலும் இத்துறையில் விஞ்சிவிடுபவர்கள் என்பதைக் காட்டியது நாம் பாராட்டத் தக்கதன்றோ !
9. எதினிய நகர அடிமைகளின் வாழ்வு
ஏதென்ஸ் நகரில் காணப்பட்ட வெளிநாட்டு மக்கள் தொகுதி அதிகமாகும். அவர்கள் வெளி நாடுகளான திரேஸ் (Thrace) ஆசியா முனை (Asia minor), லெவண்டு (Levant) முதலான பல்வேறு நாடுகளிலிருந்து தூக்கிக் கொண்டு வரப்பட்டவர்களும், போரில் வென்று அடிமைகளாக்கிக் கொண்டு வரப்பட்டவர்களும், விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகளும் ஆவர். ஆனால், இம் மக்கள் தொகுதியில் மிகுதியாக உள்ளவர் விலக்குப் பணி வாங்கப்பட்ட அடிமைகளே ஆவர். அடிமை வாழ்வு அங்குப் பழக்கத்திலே அமைந்து விட்டது. அடிமைப்படுவோரும் ஒப்புக்கொண்டு அமைத்துக் கொண்ட பழக்கமாகும். அடிமை வாழ்வு தக்கதா அன்றா என்பதைப் பற்றி அவர்கள் சிந்தித்ததும் இல்லை. ஆனால், நாமார்க்கும் குடியல்லோம் என்பது தமிழரது தனிப்பண்பாகும். அரிஸ்டாடில் போன்ற பெரிய பெரிய மெய்ஞ்ஞானிகளும் அடிமைகளை வைத்துக்கொண்டு வேலை வாங்கி வந்ததாகத் தெரிகிறது. இவ்வடிமைகள் அரசியல் முறையில் உரிமை அற்றவராய், நாகரிக வாழ்வு எய்தப் பெருதவராய் வாழ்ந்தனர். கிரேக்கர் மற்றொரு கிரேக்கருக்கு அடிமைப்படுதல் மட்டும் அவர்கள் வெறுத்தனர். சுந்தரர் தம்மை அடிமை கொள்ள வந்த வேதியரை நோக்கி, ‘ஆசில் அந்தணர்கள் வேறோர் அந்தணர்க் கடிமை ஆதல் பேச இன்று உன்னைக் கேட்டோம்’ என்று கூறியது இப்பொழுது நம் நினைவிற்கு வருகிறது. இதனால் தம் இனத்தவர் ஒருவர்க்கொருவர் அடிமைப்படுதலை எக்காலத்திலும் விரும்பிலர் என்பது புலனாகிறது. அடிமைகளுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை மிகக் கொடூரமானது. அடிமைகள் எப்போதேனும் சாட்சி சொல்ல நேர்ந்தால் அச்சாட்சியில் உண்மை வெளிவரும் வரையில் அவர்கள் பெரிதும் துன்புறுத்தப்பட்டனர்.
பல அடிமைகள் கொடுமைகள் அனுபவித்தாலும், அவர்களையும் காக்கச் சில சட்டதிட்டங்களும் ஏதென்ஸ் நகரில் இருந்தன. உடையில் அடிமைக்கும் அடிமையில்லாத குடிமகனுக்கும் வேறுபாடு இராது. இருவரும் தெருவில் செல்லும்போது, யார் அடிமை என்று தீர்மானிக்க முடியாது. எந்த அடிமையும் தூக்குத் தண்டனை பெறமாட்டான். அவனுக்குச் சிறைவாசம் மட்டும் கிடைக்கும். ஏதென்ஸ் நகரில் பிரம்பால் அடித்துத் தண்டிக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. அதனை ஓர் அடிமை பெற நேர்ந்தால் ஐம்பது அடிக்குமேல் இருத்தல் கூடாது என்னும் சட்டமும் அவர்கள் கொண்டிருந்தனர். அடிமைகள் எனப்படுவோர் உடையும் உணவும் பெறுபவரே அன்றி ஊதியம் பெறுபவரல்லர். ஆனால் சிற்சில அடிமை ஆட்கள் தம் மனம் வஞ்சியாது உண்மையாகப் பணிபுரியின், அதனைப் பாராட்டி ஊதியம் அளித்தலும் ஏதென்ஸ் நகரத்தில் இருந்து வந்தது.
வீட்டில் வேலை செய்யும் அடிமைகள் அடிமைகளாகக் கருதப்படாமல் குடும்பத்தில் சேர்ந்த ஒருவராகவே கருதப்பட்டனர். வீட்டு வேலை யாவற்றையும் அவர்கள் கையில் ஒப்படைப்பதும் உண்டு கடைகளில் வேலை புரியும் அடிமைகள் தமக்குக் கிடைக்கும் ஓய்வு நேரங்களில், வேறு இடங்களிலும் சென்று வேலை செய்து வருவாய் பெற ஏதென்ஸ் நகரினர் இடங் கொடுத்திருந்தனர். இவ்வாறுவேலை செய்து தேடிய பொருளைச் சேமித்து வைத்துத் தம்மை எவ்வளவு விலை கொடுத்து வாங்கினரோ, அந்தத் தொகையை முதலாளிக்குச் செலுத்தி விடுதலை பெற இவர்களுக்கு வசதி இருந்தது; சிற் சில இடங்களில் அடிமைகள் பல்லாண்டு உழைத்து நற்பெயர் எடுத்தால் அவர்களிடமிருந்து யாதொரு பணமும் பெறாமல் விடுதலை செய்தலும் உண்டு. இவ்வாறு விடுதலை பெற்ற அடிமைகள் ஏதென்ஸ் நகரை விட்டுப் போய் விடவேண்டுமென்னும் நியதியும் இல்லை. அவர்கள் அவ்வூரிலேயே இருந்து கொண்டு, அவ்வூர் வாசிகள் பெறக்கூடிய உரிமை, வசதி, இன்பம் ஆகியயாவும் பெற்று மகிழ்வாக வாழ வசதி அளித்திருந்தனர். இவர்களுள் விடுதலை பெற்ற ஓர் அடிமை, ஏதென்ஸ் நகரில் பிறந்த சவுக்கார் போல, அதாவது பணம் வட்டிக்குக் கொடுத்து உதவுபவனாகவும் இருந்ததாக அவர்கள் வாழ்க்கைச் சரித்திரம் ஒன்றால் அறிகிறோம்.
துன்புத்தை அநுபவித்த அடிமைகளும் ஏதென்ஸ் நகரில் இருந்தனர்; அவ்வடிமைகள் நிலச் சுரங்கங்களில் வேலை செய்பவராவர். அவர்கள் ஆழத்தில் ஆடையின்றிச் செல்ல வேண்டும். கையில் விளக்கைக் கொண்டு அச் சுரங்கங்களில் வெள்ளி கிடைக்கக் கூடிய மண்ணையும் இடத்தையும் தேடவேண்டும். சுரங்கத்தில் செய்யும் வேலைக்கு நேரம் என்பது இல்லை. இரவும் பகலும் வேலைதான் ஆனால், அடிமைகள் மட்டும் அவ்வப்போது மாறி மாறி வேலை செய்ய வேண்டும். ஓர் அடிமை செய்ய வேண்டிய வேலை நேரம் பத்துமணியாகும். இவ்வாறு இந்தச் சுரங்கங்களில் பணிபுரியும் அடிமை நிலைதான் வருந்தத்தக்கது. இவர்கள் இங்கு வேலை செய்வதினும் இறப்பதே மேல் என்று கூட எண்ணும்படி இருக்கும். இவ்வாறு இவர்கள் கஷ்டப்பட்டதனால்தான் இவர்களில்பல்லோர் பிலோபோனேசியன் (Pelopponnesian) சண்டையிலும் சேர்ந்து உயிர்விடத் துணிந்தனர். சுரங்க அடிமைகளின் வாழ்வு இவ்வாறு இருந்தது என்பது தான் வருந்த வேண்டியிருக்கிறது, அக்காலத்தில் ஆபிரகாம்லிங்கன் போன்ற அடிமை வாழ்வை அகற்ற முன்வரும் அன்பர்கள் ஏதென்ஸ் நகரில் தோன்றியிலர் போலும்!
9. தொழிலும் வாணிகமும்
செல்வர் இன்பம் அடைய வறியர் உழைக்க வேண்டியது அன்றும், இன்றும், என்றும் உள்ள ஒரு கொள்கை போலும்! ஆதலின், ஏதென்ஸ் நகரில் இருந்த செல்வர்கள் தம் வாழ்நாளை உழைப்பின்றி இன்பமாகக் கழித்து வந்தனர் எனலாம். ஏதென்ஸ் நகர மக்களில் பலர் வறியராகவே இருந்தனர். அவர்கள் தம் தினசரி வாழ்வு நடத்த உழைத்தே தீர வேண்டியவராயினர். ஏதென்ஸ் நகரில் வாணிகத்திற்கும் இயந்திரக் கைத்தொழிற்கும் வளர்ச்சி இருந்தது என்றாலும், அந்நகர மக்களில் பலர் உழவுத் தொழிலேயே மேற்கொண்டு உழைத்து வந்தனர். ஒவ்வொரு நகர வாசியும், சிறு நிலமேனும் தனக்குச் சொந்தமாகக்கொண்டு அதனை உழுது பயிரிட்டு உண்டுவந்தனர். ஏதென்ஸ் நகர மண் வளம் விளைவுக்கு அத்துணைப் பொருத்தமான தன்று. ஆதலின் அவர்கள் உழைப்பில் முழுப்பங்கு இலாபம் அடைய இயலாமல், மூன்றில் ஒரு பங்கு அடைந்துவந்தனர். அவர்கள் உழுத பயிரை ஏப்ரல், மே, சூன் மாதங்களில் அறுவடை செய்து வந்தனர். அவர்கள் பயிரிட்ட முறையும் தானியம் பெற்ற முறையும் நம் நாட்டு முறைக்கிணங்கவே இருந்தன. நெற்களத்தில் நெல்லரியைப் பரப்பி, அவற்றின் மீது எருதுகளை விட்டுத் தெழிக்கச் செய்தனர். முறத்தைக்கொண்டு பதர் வேறு, நெல் வேறு பிரியத் துாற்றி வந்தனர்.
நெற்கதிர்களைப் பயிரிட்டு வந்ததுபோல், ஒலிவ மரங்களை வைத்து வளர்த்து வந்தனர். இந்த மரங்களை பயனளிக்கப் பதினான்கு ஆண்டுகள் ஆகும். இவற்றினின்று பொரி பழங்களைப் பறித்தும், அவற்றினின்றும் எண்ணெய் எடுத்தும் வந்தனர். இவர்கள் எண்ணெய் எடுத்த விதம், இக் காலத்தில் பெரிய கட்டடம் கட்டுவதற்காகச் சுண்ணும்பும் நீரும் மணலும் கலக்க ஒரு வட்டம் அமைத்து, அவ் வட்டத்தின் இடையே சுற்றிலும் பள்ளம் செய்து, பெரிய வட்டமான கல் சுழன்று வரும்படி செய்து, சுண்ணம்பைக் கலப்பது போலாம். நாம் இக்காலத்தில் செக்கில் ஆட்டி எண்ணெய் எடுப்பது போன்றதன்று திராட்சையும் இவர்கள் பயிரிட்டு வந்த பொருளாகும். இதிலிருந்து திராட்சைச் சாறு எடுத்து வந்தனர். இன்னோரன்ன தொழில்களே யன்றி, ஆடு, மாடுகளை மேய்த்து வயிறு வளர்த்த ஆயர்களும், மலைகளில், காடுகளில் மரங்களைக் கொளுத்தித் தீக்கிரையாக்கி விற்று வாழ்வு நடத்தியவர்களும் இம் மக்களிடையே இருந்தனர். நாம் நகரத்திலிருந்து, கொண்டு நாட்டுப்புற வாசிகளைச் சிறிது வேருகக் கருதுவது போல, ஏதென்ஸ் நகரவாசிகளும் கிராம வாசிகளைச் சிறிது அசட்டையாகவே பார்த்து வந்தனர். நகர வாசிகளின் நவீன நாகரிகச் செருக்கே இதற்குக் காரணம் ஆகும்.
ஒரு நாட்டின் தொழிலும் வாணிகமும் சரிவர நடக்க வேண்டுமானால், செலாவணி செம்மையாக இருத்தல் வேண்டும். இச்செலாவணி பண்ட மாற்றாகவோ நாணயமாகவோ அமையலாம். முன்னாளில் செலாவணி எம்முறையில் இருந்தது என்பதை அறிவது ஒர் ஆர்வமுடைய செயலாகும். ஸ்பார்ட்டா நகரில் உலோகப் பொருள்கள் கட்டி கட்டியாகச் செலாவ்ணிப் பொருளாக இருந்து வந்தன. நாள் ஆக ஆக இந்தக் கட்டியான உலோகத்தின்மீது இந்தக் கட்டிக்கு இவ்வளவு நிறை உண்டு என்பதை உணர்த்தத் தக்க முத்திரை பொறிக்கப்பட்டது.
அட்டிக்கா நகரத்து நாணயங்கள் வெள்ளியால் இயன்றவை. அவற்றின் ஒருபுறம் அதினா (Athena) தலையும், மற்றொரு புறத்தில் கிழஆந்தையின் வடிவும் அமைந்தனவாக இருந்தன. பாரசீகர்கள் (Persians) கையாண்ட பொன் நாணயமாகிய டாரிக்ஸ் (Darics) என்பன ஏதென்ஸ் நகரில் புழங் கிக் கொண்டிருந்தன. இவைகள் யாவும் நடை முறையில் இருந்த பிறகு நான்காம் நூற்றாண்டின் இறுதியில்தான் கிரீஸ் நகரில் பொன் நாணயங்கள் அச்சடிக்கப்பட்டன. அக்காலத்தில் ஒரு ஷில்லிங்குக்குச் சமமான டிரச்சிமா (Drachma) என்னும் நாணயம்தான் நிரந்தரமான நாணயமாகும். சிறு சிறு வெள்ளி நாணயங்கள் ஒபல்ஸ் (Obols) என்று குறிக்கப்பட்டிருந்தன.
நாட்டுப் புறங்களில் வாழும் மக்கள் ஒபல் நாணயங்களை வாயில் அடக்கிக் கொண்டு இருப்பர். இந்தப் புழக்கம் இந்தியாவிலும் சிற்சில இழிவினர் பாலுண்டு. ஏதென்ஸ் நகர மக்கள் இறந்தாலும் சிற்சில இடங்களில் இறந்தவர் வாயிலும் இந்நாணயத்தை வைத்துச் சுடுகாட்டிற்குக் கொண்டு செல்வர். இவ்வாறு செய்வதன் நோக்கம், இறந்த வர்ஸ்டைக்ஸ் (Styx) நதியைத் கடக்க வேண்டி இருத்தலின், இதனக் கடத்தி அடுத்த கரையில் சேர்க்கும் ஒடக்காரனுக்குக் கட்டணம் கொடுப்பதற்காகும் என்னும் அவர்களின் எண்ணமாம். இஃது ஒரு கற்பனையே. அவ்வோடக்காரனைச் சாரோன் (Charon) என்பர். ஒரு தொழிலாளி நாள் ஒன்றுக்கு மூன்று ஒபல் நாணயங்களையோ அரை டிரச்சிமாவையோ கூலியாகப் பெற்று வந்தான். அந்நாள் ஜூரிகளின் செலவுக்காகக் கொடுக்கப்பட்டதும் இந்த அளவான தொகையே ஆகும். பொதுவாக ஒரு தொழிலாளியின் தினசரிக் கூலி ஒரு டிரச்சிமா வாகும். நல்ல புத்திக் கூர்மையுள்ள தொழிலாளி பின் சாதாரணத் தினசரி ஊதியம் இரண்டரை டிரச்சிமாவாகும். பொதுவாக ஆசிரியர்கள் ஆண் டுக்கு எழுபது பவுன் ஊதியமாகப் பெற்று வந்தனர். ஓர் அடிமை நான்கு பவுன் முதல் நாற்பது பவுன் வரை மதிக்கப்படுவான் ; அஃதாவது விற்கப்படுவான்
எவன் ஒருவன் ஐம்பது டேலண்டுகள் அஃதாவது ஆயிரத்து இருநூறு பவுன் வைத்திருக்கிறானோ அவனைத் தனவான் என்று கருதி வந்தனர். அந்நாளில் வட்டிக்குப் பணம் கொடுக்கும் நிலையே பெரிய நிலையாகக் கருதப்பட்டது. இவ்வாறு கொடுக்கும் சவுக்கார்கள் ஆண்டுக்கு வட்டி மூலம், 1,000 பவுன் சம்பாதித்து வந்தனர். 100க்கு 12வீதம் ஆண்டுக்கொரு முறை வட்டி விதித்து வந்தனர்.
வாணிகம் தடையின்றி நடைபெற வேண்டி இருந்தமையின், ஏதென்ஸ் நகரில் வெளிநாட்டு நாணய மாற்றங்களும் தடையின்றி நடைமுறையில் இருந்து வந்தன. இந்த முறை பெரிதும் கடல் வாணிகம் செய்வோர்க்கே பயன்பட்டது. இது வெளி நாட்டினின்றும் ஏதென்ஸ் நகரில் குடியேறியவர்களுக்கும் அளிக்கப்பட்டஉரிமையாக இருந்தபையினால், அவர்களே அந் நாணய மாற்றத்தைக் கவனித்து வந்தனர்.
கிரேக்கர்கள் பிறநாடு சென்று மீள்வதில் பெரு விருப்புடையவர்கள். பிறநாடு சென்று ஆண்டிருந்த நடை உடைபாவனைகளைக் கண்டறிந்தவர்களாயினும் தம்மினும் நாகரிகத்தில் குறைந்தவர்களைக் கண்டு வெறுத்து வந்தனர். அவர்களோடு உறவாடச் சிறிதும் விரும்பிலர். அவர்களிடையே திருமணம் செய்து கொள்ளவும், பழக்க வழக்கங் களையும் நடையுடை பாவ8னகளையும் கைக்கொள்ளவும் விரும்பிலர். இசையால் திசை போய வரலாற்றுப் பேராசிரியர்களான ஹெரோடோடஸ் (Horedotus) ஈஜீப்த் (Egypt), மெஸப்பட்டோமியா (Mesopatamia) ஆகிய இடங்களுக்குச் சென்று பார்வையிட்டுள்ளனர். இன்னாரென வெளிநாடு செல்லும் விருப்பினர்களின் உருவச்சிலை ஒன்று ஈஜிப்துக்குத் தெற்கில் காணப்பட்டது. இதிலிருந்து கிரேக்கர்கள் வெளிநாட்டுப் பயண விருப்பினர் என்பதை வெளிப்படுத்தினர். ஏதென்ஸ் நகர வாணிகர்கள் நீண்டதுாரம் எல்லாம் பயணம் செய்தனர். இதன் மூலம்தான் வாணிகத்தைப் பெருக்கிப் பொருள் ஈட்டினர். இவ்வாறு பயணம் செய்து கருங்கடலின்று தானியங்களைத் தம் நாட்டிற்குக் கொணர்ந்தனர். இவ்வாறே லெவண்டினின்றும் (Lavant) வாசனைப் பொருள்களைக் கொணர்ந்தனர். தம் கைத்தொழில் வன்மையால் செய்த மண் பாத்திரங்களைக் கினியா (Guinea), தென் இதாலி (South Italy), சிசிலி (Sicily) முதலிய இடங்களில் விற்று வந்தனர். இந்த வியாபாரம் நீண்டநாள் நடந்து வந்தது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடலில் பயணம் செய்வது என்றால் கடுமையானது என்று கூற வேண்டியதில்லை. அக்காலம் மாலுமிகளுக்குத் தம் கலங்களைத் திசையறிந்து செலுத்துதற்குத் திசையறி கருவி இல்லாத காலமாகும். இவர்கள் பெரும்பாலும் காற்று, மழை இல்லாத காலத்தில் கடற் பயணத்தைத் தொடங்குவர். இவர்கட்கு இரவில் திசையறிவித்து வந்த கருவிகள் விண்மீன்களே யன்றி வேறில்லை. மாலுமிகள் தம் மரக்கலங்களை நடுக்கடலில் உந்தார். கூடுமான வரையில் கரை ஒரங்களிலேயே செலுத்தி வந்தனர். இராக்காலங்களில் தாரகைகளும் திசையறிவிக்க இயலாமல் இருந்தால், இவர்கள் யாதேனும் ஒரு தீவிலாகிலும், கரை ஓரத்திலாகிலும் தம் கலத்தை நிறுத்திக் கொள்வர். ஏதோ சிற்சில சமயங்களில்தான் இவர் பெருங்காற்றோடு போராட வேண்டியிருந்தது. பெரும்பாலும் இவர்களின் கடற்செலவு இவர்கட்குக் கழி பேரின்பமாக இருந்தது.
மாலுமிகள் தம் கடற்செலவில் பாறைகளையும் பெருங்காற்றையும் கடந்து செல்ல வேண்டிய துன்பங்கள் ஒருபுறமிருக்க, இவர்கள் கடற்கொள்ளைக்காரர்களேயும் தப்பிப் போவதுதான் இவர்கட்குப் பெருந்துன்பமாகும். சிற்சில வாணிகர் தம் சரக்குகளைக் கப்பலில் ஏற்றிச் செல்லும்பொழுது, கப்பல்கள் கடலில் மறைந்து கிடக்கும் பாறைகளில் மோதி சிதறி வாய்ப்புண்டாதலின், இவர்கள் தம் சரக்குகளை இன்ஷுர் செய்து வந்தனர்.
நாம் இக்காலத்தில் காணும் அவ்வளவு வசதியான சாலைகள் அக்காலத்தில் இல்லை; புழுதி நிறைந்தனவாகவும், கரடு முரடானவைகளாகவும் இருந்தன. இதனால் வண்டிகளும் மற்றும் சில ஊர்திகளும் வேகமாகச் செல்ல வசதி இல்லாமல் இருந்தது. ஆகவே, வண்டிகளில் செல்வதினும் நடையை மேற்கொள்வதே நலமாக இருந்தது. சாதாரணமாகக் கோவேறு கழுதைகளும், குதிரைகளும் ஊர்தியாகவே உபயோகிக்கப்பட்டன. சிவிகைகள் மாதர்
களுக்குப் பயன்பட்டன. இவற்றை அடிமைகள் சுமந்து செல்வர்.
நம் நாட்டுப் புனிதவதியாரும் பல்லக்கில் சென்றனர் என்பதைப் பெரிய புராணத்தால் நாம் அறியலாம்.
கிரேக்கர் அடுத்துள்ள ஊர்களுக்குச் சென்று மீளுதலில் மிக விருப்பமுடையவர். இவர்கட்கு மிகவும் விருப்பமான பயணத்துக்குரிய இடமாகக் கருதப்பட்ட ஒலிம்பியா (Olympia) அல்லது காரின்த் (Corinth) போன்ற இடங்களில் இவர்கள் சென்று தங்குதற்கான தனிப்பட்ட விடுதிகள் எங்கும் கட்டப்பட்டு இருந்தன. ஏனைய இடங்கட்கு இவர்கள் செல்லின், பொது விடுதிகளில் தங்கி வந்தன்ர்.
இந்த விடுதிகள் யாத்திரிகர்களிடமிருந்து அதிகக் கட்டணத்தை வாங்கி வந்தனவேனும், அதற்கேற்ற வசதிகளைச் செய்து கொடுத்தில. யாத்திரிகர்கள் இத்தகைய விடுதிகளில் தங்கிப்படுக்க வசதியற்று மூட்டுப் பூச்சிகளால் துன்பப்பட்ட நிலையை அரிஸ்டோபென்ஸ் (Aristophanes) தாம் எழுதிய ஒரு நாடகத்தில் நன்கு தெரிவித்துள்ளார். ‘டிண்டி பத்'தின் தொந்தரவு தொன்று தொட்டது போலும்!
பல்வேறு கிரீஸ் நகர மக்கள் மேற்கொண்ட தொழில்களில், அரசியல் சார்புடைய தொழில்கள் பெரிதும், சாதாரணப் பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்டன. இவர்களிடையே வழக்கறிஞர்களோ குருக்கள்மார்களோ இலர். குறிப்பிட்ட வேலைகளைப் புரிந்து தொண்டாற்றுதற்கு மக்களிடையே, ஒருவரைக் குருவாகத் தேர்ந்தெடுத்து வந்தனர். இவ் வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட குருக்களும், நிரந்தரமாக அந்தப் பதவியையும் பெற்றிருந்தவர் அல்லர். குறிப்பிட்ட காலம் கழிந்ததும், வேறொருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார்.
இந்த முறை நம் நாட்டிலும் கையாளப்பட்டு வந்தால் பிறப்பால் உயர்வு தாழ்வு கருதும் மனப் பான்மை நீங்கிச் சகோதர நேயமும் ஒருமைப்பாடும் நிலவும்.
கிரேக்க நாட்டில் குறிசொல்பவர்கள், சோதிடர்கள், பாடகர்கள், மருத்துவர்கள் ஆகிய தொழிலோர் இல்லாமல் இல்லை. மருத்துவர்கள் தம் மருத்துவ அறிவை, ஈஜிப்த் நகரினின்று பெற்றனர் என்பது ஊகிக்கப்படுகிறது. இந் நாட்டினர் பழைய நம்பிக் கையில் பெரிதும் நாட்டமுற்றிருந்தனர். இந் நம்பிக் கையின் மூலம் நோயையும் போக்கி வந்தனர். இவர் கள் அஸ்லியின்ஸ் (Asclepins) என்னும் பெயரால் ஒரு தெய்வத்தை வணங்கி வந்தனர். இத்தெய்வம் நோயைப் போக்கும் ஒரு தெய்வமாகும். ஆகவே நோய் கண்டவர்களை இத்தெய்வ உருவம் அமைக்கப்பட்டுள்ள ஆலயத்தில் படுக்க வைத்து வந்தனர்.
இவ்வாறு படுக்கவைக்கப்பட்ட நோயாளியை அத்தெய்வம் பாம்பு வடிவில் இரவில் தோன்றி நோயுள்ள பாகங்களைத் தன் நாவால் நக்கி, நோயை போக்கிவிடுமாம். இதனால் கிரேக்க நாட்டு மருத்துவர், மருந்துகளைக் கையாளாமல் இல்லை. இவர்கள் வேர், மூலிகைகள், மேற் பூச்சு, பசை, களிம்பு முதலானவற்றைக் கொண்டு கையாண்டு வந்தனர்.
அறுப்பு முறையில் நோய் நீக்கும் முறையும் நடைமுறையில் இருந்தது. ஆனால், அதுவும் திருந்திய முறையில் செய்யப்பட்டது என்று கூறுவதற்கில்லை அறுப்பு முறைச் சிகிச்சையும் பண்டும் இன்றுமுள்ள சிகிச்சை முறை போலும் ! இன்றேல்.
‘வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல் நோயாளன் போல்’
என்று குலசேகரரும்,
கருவியிட்டாற்றுவார் புண்வைத்து மூடார் பொதிந்து
என்று குமரகுருபரரும் கூறுவரோ ?
உடற் கூற்றை நன்கு கவனித்து இன்னின்ன பாகங்கள் இவ்விம் முறையில் அமைந்துள்ளன என்பதை இறந்த ஓர் உடலைச் சோதித்து, அறிவதற்கான வாய்ப்பு அந்நாட்டில் இல்லை. ஏனெனில் இறந்த உடலை சுட்டெரித்து வந்தனர். அலெக்சாண்டர் கீழ்த்திசை நாடுகளைக் கைப்பற்றி வெற்றி கொண்ட பின்னரே ஈஜிப்த் தேசத்தில் உடல் உறுப்புக்களை ஆய்ந்து பார்க்கும் முறை நடைமுறையில் கையாளப்பட்டது என்னலாம்.
கைத்தொழில்கள் பெரிதும் ஏதென்ஸ் நகரில் பரவி இருந்தன. கிரேக்க நாட்டில் நகர்ப் புறங்களில் களிப்பு மண் நிரம்ப உண்டு. இம்மண் பாத்திரங்கள் செய்யப் பெரிதும் பயன்பட்டது. இதனால் குயவர் பணி பெரிதும் அந்நாளில் பயனுடைய பணியாக இருந்தது எனலாம். இப்பணியின் மூலமே குடி நீர்க் குவளைகள், சட்டிகள், ஜாடிகள், மற்றும் குடும்பத்திற்கு வேண்டிய சாமான்கள் செய்யப்பட்டன. இந்தப் பொருட்கள் அப்படியே பயன்படுத்தப்படா மல் இவற்றின் மீது சித்திரங்களும் தீட்டப்பட்டு அழகு செய்யப்பட்டன. இவ்வாறு தீட்டப்பட்ட சித்திரங்கள், புராண காலத் தொடர்புடையனவாகவும், மக்கள் வாழ்வுகளே நன்கு தெரிவிப்பனவாகும் இருக்கும்.
சிற்பக்கலை கிரேக்க நாட்டில் தலைசிறந்து விளங்கியது. பெரிய பெரிய வாயில்களின் வளைவுகள் மிகவும் அற்புதமாக இருக்கும். கோயில்களிலும், சிற்பங்கள் அமைந்திருந்தன. ஆனால், அவை சாதாரணமானவை. மூலத்தான உருவம் நீண்ட சதுரமான இடத்தில் அமைத்திருக்கும். மேற்கூரை பெரிய பெரிய தூண்களால் தாங்கப்பட்டிருக்கும்.
இதன் கைத்திறன் மிகமிக வியக்கத்தக்கதாகும். ஆலயக் கட்டட அமைப்பு கவினுடையதாக இருந்ததோடு அல்லாமல் ஆலயத்தில் இரு முனைகளில் இருக்கும் தெய்வங்களின் சிலேகள் வேலைப் பாடு அமைந்த உருவங்களாக உள்ளன. இத்தகைய சிற்பங்களின் அமைப்பை நம் தென்னாட்டுக் கோயில்களிலும் சிறக்கக் காணலாம். காண விழைவோர் சித்தன்ன வாசல், மகாபலிபுரம், தஞ்சை, திருவிடைமருதுார், ஆவுடையார் கோயில் முதலான இடங்கட்குச் சென்று கண்டு களிப்பாராக. கோயிலின் புறச்சுவர்களும் ஓவியச் சிற்பங்களால் பொலிவுற்று இருந்தன.
நம் நாட்டில் வீடுகளும் சித்திரம் தீட்டப்பெற்றனவாகச் சிறந்து விளங்கின. இவ்வாறு எழுதப்பட்ட மாடங்கள் பல இருத்தன என்பது பரிபாடல் முதலான சங்கத்துச் சான்றோர் நூல்களில் பரக்கக் காணலாம். அண்மையில் இருந்த மாயூரம் திரு. வேதநாயகம் பிள்ளை அவர்களும், தம் நீதி நூலில் வீடுகள் சித்திரங்களால் பொலிவுற்றதை நயம்படப் பாடியுள்ளார்.
சிற்சில தெய்வங்களின் உருவம் செம்பினாலும் சலவைக் கல்லாலும் இயன்றவையாய் இருந்தன, இவை ஆலயங்களிலே அன்றித் தனித்தனி இடங்களில் இருக்கும் நிலையைப் பெற்றிருந்தன. எக்ரோ போலிஸுக்கு (Acropolis) அருகிலிருக்கும் எதினி (Athene) என்னும் பெரிய தெய்வத்தின் உருவம் செம்பினால் இயன்றது. இதனை அமைக்கும் பொறுப்பு சிற்பத்தில் சிறந்த பியிடியஸ் (Pheidias) என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், இவருடைய முழுத்திறன் அதே உருவம் பொன்னாலும் தந்தத்தாலும் செய்யப்பட்ட ஒன்றில் மிகுதியும் காட்டப்பட்டது எனலாம். இன்னாரன்ன சிற்பிகளால் அமைக்கப்பட்ட சிற்ப ஒவியங்களின் கலைநுட்பம் பின்னால் வந்த கிரேக்கர்களுக்குத் துணைபுரிந்ததாகத் தெரிகிறது. இதிலிருந்து கிரேக்கர்களின் சிற்பக்கலையின் மேம்பட்ட அறிவு நுட்பத்தை நன்கு மதிப்பிடலாம். உடல் உறுப்புக்களே நன்கு கவனித்துச் செயற்கை அமைப்பிலும், இயற்கை அமைப்பைக் கொண்டு வரும் திறன் படைத்திருந்தனர் எனலாம்.
ஏதென்ஸ் நகரமக்கள் இச்சிற்பக் கலையைப் பிறர் கண்டு பாராட்டுவதற்காக மட்டும் செம்மையாகச் செய்யாமல் தாமே அதில் ஒர் ஊக்கமும், உணர்ச்சியும், கொண்டு தாமே வியக்கும் வண்ணம், செம்மையுறச் செய்தனர் என்பதை அறியலாம். இப்படிப்பட்ட எண்ணமே ஒவ்வொருவருக்கும் அமைதல் வேண்டும். பிறரை மகிழ்விக்க வேண்டுவதற்காக இதனை இயற்றுகிறேன் என்று கருதாமல் இப்படி இயற்றுவது எனக்கே நலனாக இருக்கிறது என்று எண்ணி இயற்றுதல் வேண்டும். இப்படிச் செய்யப்படும் செயல்கள் எவராலும் எக்காலத்திலும் பாராட்டப்படும் என்பதில் ஐயமில்லை.
ஏதென்ஸ் நகரின் சாலைகள் புழுதி படிந்திருக்கும் என்று முன்பே கூறப்பட்டது. ஆங்குக் கழிநீர்களை அவ்வப்போது அகற்றுவதற்குரிய முறை அக்காலத்தில் இல்லை. இது சுகாதாரம் பாதிக்கப்படவும் மக்கள் நோய்வாய்ப்படவும் ஏதுவாயிற்று. வீடுகள் எளிய தோற்றம் அளித்தன. இவ்வீட்டு இளஞ்சிறுவர்கள் புழுதியில் படிந்து விளையாடி வந்தனர். பிள்ளைகளையன்றிப் பெரியவர்களும், மாசுபடிந்த மேனியராய் விளங்கினர். இரவலர்கட்கோ குறைவில்லை. இவர்கள் தெருவெங்கும் நிறைந்திருந்தனர். இவர்கள் நோய்வாய்ப்பட்டவர்களாதலின், அந்நோயின் காரணமாக உருமாறிக் காணப்பட்டனர். புழுதிகளுக்கும், அழகற்ற தோற்றங்கட்கும் இடையே மேகத்திடையே மின்ஒளி தோன்றுவது போன்று தூய்மைக் கோலமும், தெய்வச் சிலைகளும் மக்கள் உருவங்களும், கவிஞர் தோற்றமும் காட்சியளித்துக் கொண்டிருந்தன. வானளாவிய கோபுரங்கள் எல்லாருடைய மனங்களையும் கவர்ந்து கொண்டு விளங்கின. சேய்மையில் இருந்து வருவோரை “எம்மைக் காண ஈண்டு வருக வருக” என்று அழைப்பன போன்று நிலவும் இவற்றை நெடுந்தூரத்திலிருந்து வீடு திரும்பும் மாலுமிகள் கண்டபோது, அவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நாம் புற நகரை அண்டிவிட்டோம் என்பதே அவர்கள் மகிழ்வுக்குக் காரணம். ஈண்டுக் கூறப்பட்ட அமைப்புக்களோடு நம் நாட்டு அமைப்பையும் ஒப்பிட்டு இவ்விரண்டு நாடுகளின் அமைப்புத் தன்மையை நன்கு அறிந்து கொள்ளலாம். கடலில் சென்று கலத்தில் வீடு திரும்புபவரோ, அன்றி நெடுந்தொலைவிலிருந்து வருபவரோ, இன்ன இடத்தில் ஊர் இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்காகவே நம்மவர், கோபுரங்களையும், உயரிய மாடங்களையும் அமைத்து இரவில் விளக்கேற்றி வைத்தனர். இதன் விளக்கத்தைப் பத்துப் பாட்டு முதலான பனுவல்களில் பரக்கக் காணலாம்.
10. பொழுதுபோக்கு
“உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்பது திருமூலர் வாக்கு. இந்த வாக்கின் உண்மையை அறிந்தவர் போன்றவர் ஏதென்ஸ் நகரவாசிகள். பொதுவாக ஒவ்வோர் ஏதென்ஸ் நகரத்தவனும் உடற்பயிற்சி செய்வதற்கோ மற்றும் உடற்பயிற்சிக்கான விளையாட்டுக்களில் ஈடுபடுவதற்கோ மிகவும் அவா உள்ளவனாய் இருந்தான். கிரேக்கர் உழைத்ததனால், அன்று பெறவேண்டிய கூலியைக் கூடவிரும்பாமல், பயிற்சி செய்வதிலேயே விருப்பமுடையவராய் இருந்தாரெனில், அவர் உடற்பயிற்சியின் மீது கொண்ட விருப்பத்தை விளக்க வேண்டுவதில்லை யன்றோ! வயது முதிர்ந்தவர்களும் ஏதேனும் ஒரு பயிற்சியை மேற்கொண்டுதான் இருந்தனர். அவர்கள் கோழிச் சண்டை விளையாட்டை மேற்கொள்வர். இவ்விளையாட்டில் நம்மவரும் பெரு விருப்புடையர். இதனைக் கோழியையும் யானையையும் சண்டையிட விட்டு,கோழி வென்றதற்கு அறிகுறியாகக் கோழியூர் என்ற ஒன்றை அமைத்துக் கொண்டனர் என்பதனால் நன்கு அறியலாம்.
செல்வர்கள் குதிரைகளை வளர்த்துப் பந்தயம் விட்டு வந்தனர். இவை யாவும் நமக்குரிய பயிற்சியும் ஆகும். சுந்தரரும், ‘காற்றனைய பரிமாவும் கடி தருள வேண்டும்’ என்று இறைவனைக் கேட்கின்றனர். இதனால் குதிரை மீதிவர்ந்து குலவவேண்டுமென்பது, அவர் குறிக்கோளாகுமென்பது தெரிய வருகிறதன்றோ?
இளைஞர்கள் நாம் ஆடும் கண்ணும்பூச்சி ஆட்டம் போன்ற ஆட்டத்தில் பழகி வந்தனர். இதனை அவர்கள் பிரான்ஸி பிளை (Bronze Fly) என்று குறிப்பிடுவர். பந்தாட்டங்களும் அவர்கள் ஆடிய ஆட்டமாகும். அவற்றுள் ஒன்று வளைகழிப் பந்தாட்டம் என்பர். அதாவது ஹாக்கி ஆட்டம். சாதாரண நடனமும் இவர்கள் கொண்ட பயிற்சியில் ஒன்று. அப்போது பந்துகளையும் பயன்படுத்தினர். நடனம் கிரேக்கர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட ஆட்டமாகும். இதில் கலந்து கொண்டவர்களுக்கிடையே நட்புரிமையும் நல்வாழ்வும் உடன்வளர்கின்றனவாக அவர்கள் கருதினர். தனித் தனியே தம் தம் ஆற்றலைக் காட்டத்தக்க பயிற்சிகளும் இவர்கள் பால் அமைந்திருந்தன. பயிற்சிகளை நன்கு பயில்வதற் கெனத்தனித்தனி வெளி இடங்கள் இருந்தன. இவ்விடங்களேயன்றிச் சிலம்பக் கூடங்கள் மரங்கள் அடர்ந்தவையாய், இயற்கை மறைவு பெற்றுக் குளிக்கவும், உடுக்கவும், தகுந்த வசதி பெற்றனவாக விளங்கின. பயிற்சியில் கலந்துகொள்பவர் திகம்பரர் போல இருந்து எண்ணெய் தேய்த்துக் கொள்வர். இவ்விடங்களில் ஒட்டம், குதித்தல், நிறைப்பொருள்கள் வீசி எறிதல் முதலான பயிற்சிகள் நடைபெறும். உயரக் குதித்தல் (High Jump) இவர்கட்குப் பழக்கமில்லை. நீளக்குதித்தலில் மட்டும் (Long lump) இவர்கட்குப் பயிற்சி இருந்து வந்தது. ஓடிவந்து தாண்டுதல் நம் நாட்டில் நடக்கும் பயிற்சி. ஆனால், ஏதென்ஸ் நகரப் பயிற்சியாளர்கள் நீளத் தாண்டுதலில் பங்கு கொண்டால், ஒடி வந்து தாண்டாமல், நிறையுள்ள பொருள்களைக் கையில்கொண்டு குதிக்கையில் தமக்குப் பின்னால் எறிந்துவிட்டுத் தாண்டுவர். இப்படிச் செய்வதால் தாமதமின்றிக் குதிக்கும் பயிற்சி ஏற்படுகிறதாம். யார் நீண்ட தொலைவில் இந்நிறைப் பொருள்களை எறிகின்றனரோ அவர்களே வெற்றி கொண்டவர் என்பது தீர்மானிக்கப்படும். குத்துச் சண்டையும் (Boxing) மற்போரும் பயிற்சிகளில் இடம் பெற்றிருந்தன. குத்துச் சண்டை நடைபெறுகையில், காதுவரை மூடிக் கொள்ளக்கூடிய தொப்பியும் கைகளுக்குத் தோல் உறையும் அணியப்படும். மற்போரைப் பற்றி நாம் ஒன்றும் கூறவேண்டுவதில்லை. இக்கால முறையையே அக்காலத்திலும் கைக்கொண்டனர். இந்தப் பயிற்சியின் ஒரு தனிச்சிறப்பு யாதெனில், ஒரே சமயத்தில் மற்போரும் குத்துச் சண்டையும் நடப்பதுதான். இக்காலத்தில் குத்துச் சண்டைக்கென ஒவ்வியவர் குத்துச் சண்டைதான் புரியவேண்டும். ஆனால், அக்கால ஏதென்ஸ் நகர மக்கள் இருவர் குத்துச் சண்டைக்கென இறங்கினாலும், அவர்களே மற்போரும் புரியலாம். அஃது அதில் கலந்து கொண்டவருடைய மனத்தைப் பொறுத்ததாகும். இதனால் இவ்விரு பயிற்சிகளிலும் நன்கு தேர்ந்தவர்களே இதில் ஈடுபட வேண்டும் என்பது புலனாகிறது. ஆனால் இப்பயிற்சியில் கலந்து கொண்டவர் கடித்தல் கூடாது; கண்களில் அடித்தல் கூடாது. இவையே நிபந்தனைகள். இவ்விரு பயிற்சி பெற்றவர் தம் வல்லமையைக் காட்ட இறங்கிய போது இருவரில் ஒருவர் இறத்தலும் உண்டு. ‘விளையாட்டு வினையாயிற்று’ என்பது ஒரு பழமொழி தானே !
ஒலிம்பியாவில் ஐந்தாண்டுகளுக்கொரு முறை நடைபெறும் விளையாட்டு மிகவும் முக்கியமானதாகும். இந்த இடம் வன்மைக்குரிய தெய்வமான ஸீயஸ் (Zeus) கோயில் கொண்டுள்ள இடமாகும். இங்கு எல்லா இடங்களிலும் உள்ள விளயாட்டில் நற்பயிற்சி பெற்றவர்கள் யாவரும் வந்து சேர்வர்; சேர்ந்து போட்டியில் கலந்து கொள்வர். இக்காலத்திலும் இந்த ஒலிம்பியா என்னும் இடத்தில் குறி கூறுவர், யாசகர் முதலியோர் கூட்டம் கூட்டமாகக் கூடுவர். கலைஞரும், ஞானியரும் தம் அறிவைக் காட்டுமிடம் இதுவே ஆகும். இங்கு நடக்கும் விளையாட்டுக்கள் தெய்வக் குறிப்பையும் காட்டுவனவாகும். இந்த விளையாட்டுப் பந்தயங்கள் நடக்கை யில் பகைகொண்டு நாடுகள் போர் தொடுத்திருந்தாலும் அதனை நிறுத்தியே ஆகவேண்டும். விளேயாட்டுக்கள் முடிந்ததும் போரைத் தொடங்க வேண்டும். இதனால் விளையாட்டு இங்கு முதன்மை பெற்றிருந்தது என்பது புலனாகிறது.
விளையாட்டுத் தொடங்கப்பெறும் முதல் நாள் ஸீயஸ் (Zeus) தெய்வத்திற்குப் பலிகொடுத்த பிறகே தொடங்கப் பெறும். இரண்டாவது நாள் சிறு சிறு விளையாட்டுக்கள் நடைபெறும். மூன்றாவது நாள் உணர்ச்சி ததும்பக்கூடிய விளையாட்டுக்களான ஒட்டப் பந்தயம், குத்தும் மல்லும் கலந்த பந்தயங்கள் நடைபெறும். நான்காவது நாளில் தீப்பந்தாட்டம், மற்போர், நீளத்தாண்டுதல், நிறைப்பந்தெறிதல் முதலான விளையாட்டுக்கள் நடைபெறும். இந்தப் பந்தயங்களில் யார் மிகுதியாக ஈடுபட்டு மிகுந்த எண்ணிக்கைகளைப் பெறுகிறார்களோ, அவர்களே வெற்றிக் கொண்டவர்கள் என்று முடிவு கூறப்படும். இந்தப் பந்தயத் திருவிழாவின் இறுதி நாள், தேர்ப்பந்தயம், குதிரைப் பந்தயம், நடைப் பந்தயம் ஆகிய இவற்றோடு முடிவுறும். பந்தயங்கள் முடிந்து வெற்றி பெற்றவர்களுக்கு நண்பர்களும் ஏனையவர்களும் தம் பாராட்டுக்கு அறிகுறியாக மலர் மாலைகளை அளித்து மகிழ்வார்கள். வெற்றிக்கு அறிகுறியாக விலை மதிப்புக்குரிய யாதொரு பெரும் பரிசும் அளிக்கப்படவில்லை. வெற்றி பெற்றவர்கள் தம் நகர மக்களால் புகழப்படுகின்ற புகழ்ப் பரிசுகளை மட்டும் என்றும் பெற்றவர் ஆவர். ஆனால், வெற்றியாளர்கட்கு ஒரு நன்மை மட்டும் உண்டு. வெற்றி பெற்றவர் தம் ஆயுள்
முன்நாள் வரை உணவுக்கு வருந்தாதிருக்க, உணவு அளிக்கும் முறையும் இருந்து வந்தது. வெற்றி கொண்டவன் ஒரு சிறந்த வீரன் என்றும், பாராட்டிற்கு உரியவன் என்றும் கருதப்பட்டான். தெய்வமாகவும் வெற்றியாளர்களை மதித்தனர். இம்முறையில் சிறப்பிக்கப்படும் அர்ச்சுனன், மதுரை வீரன் முதலியவர் நம் நாட்டு வீரர் ஆவர். பல பந்தயங்களில் வெற்றி காண்பவர் பின் ஒரு பந்தயத்தில் ஈடுபட அதனை நன்கு பயிற்சி செய்து வந்தனர். இதனால், பல பந்தயங்களில் வெற்றி பெறுதலாகிய பெருமை நாளுக்கு நாள் குறைந்து தனித்தனிப் பந்தயங்களில் வெற்றி பெறுதலே சிறப்பாகக் கருதப்பட்டது. வெற்றி பெற்றவர் சில உருவிலும், கலை உருவிலும் நிரந்தரமாகப் பெருமை பெறும் முறையில், சிற்பிகளாலும், புலவர்களாலும், சிறப்பிக்கப்பட்டனர். இதுவே வீரர் வழிபாடு என்னலாம். இந்த வழிபாடு தமிழர்க்குரிய ஒரு தனிப் பழக்கமாகும். இதன் விரிவைப் புறநானூற்றில் பர்க்கக் காணலாம்.
கிரேக்கர் தம் இலக்கியமும் நாடகமும் ஆங்கிலப் பெருமக்களால் பெரிதும் பாராட்டப்பட்டனவாகும். ஆங்கிலேயர்கள் கூறும், செய்யுள் நாடகம் துன்பி usb (tragedy) @oriouso (comedy), utiliu obful இக்கலைகளுக்கெல்லாம் மூலம் கிரேக்க மொழி என்பதில் ஐயமில்லை. கிரேக்கர் தம் விசேட தினங்களில் விருந்துகள் நடத்துகையில் இன்பமாகப் பொழுது போக்குவதற்குப் பல விளையாட்டுக்களை நடத்துவதில் பெரு விருப்பமுடையவர்கள். இதில் ஒரு தனிப்பயிற்சியும் வாய்ந்தவர்கள் என்னலாம். திரு விழாக்களின் போது புராண சம்பந்தமான நாடகங்களை நடத்துவர்.
இவர்கட்கு அமைந்த நாடகமேடை ஒரு வட்டமான மேடையாகும். பின்னல் கூடாரம் அமைத்து அதில் நடிகர்கள் தங்கித் தயாராகிக் கொண்டிருப்பர். கூடாரத்தின் மேல் பல விதமான வர்ணங்கள் தீட்டியவையாக இருக்கும். திரை (சீன்) மாற்றம் என்பது கிடையாது. எல்லா நடிப்புக்களும் ஒர் இடத்தில்தான் நடக்க வேண்டும். அப்படி ஏதேனும் நாடகத்தில் இடம் மாறிப் பேசவேண்டிய இடங்கள் நேரின், வர்ணம் தீட்டப்பட்ட இருபக்கங்களில் உள்ள திரைகளை மட்டும் மாற்றிவிடுவர். இதிலிருந்து அடுத்த காட்சி வேறு ஓர் இடத்துக் காட்சியாகும் என்பதை அறிந்துக் கொள்ள வேண்டும்.
பார்ப்பவர் வட்டமாக அமர்ந்திருப்பர். கிரேக்க நாடகங்களில் ஒருவரே பல பாத்திரங்களாக நடிப்பர். ஆகவே, ஒரு நாடகத்தை நடத்த இருவர் மூவர் இருத்தலே போதுமானது. நடிப்பு வேறுபடும் போது உடையும் வேறுபடும்.
பார்ப்பவர் உணர்ச்சி வேகத்தைப் பாராட்டுவரே அன்றிக் கதையின் உண்மை பொய்மையைப் பற்றிக் கவலைக் கொள்ளமாட்டார். இதனை உணர்ந்தே மக்களின் உள்ளக்கிடக்கைக்கு ஏற்ற முறையில் கிரேக்க நாடக ஆசிரியர்கள், சிறந்த கருத்துக்களைத் தாம், புராணக் கதைகளில் நல்ல மொழியில் நாடகமாக எழுதிக்காட்டலாயினர்.
நாடகத்தில் நடிப்பவர் தம் திறமையினால் ஒரு வனது சீற்றம், பகைமை, பொருமை, வெறுப்பு ஆகிய இவற்றை நடிப்பில் உணர்த்திக் காட்டுவர். இந்த மெய்ப்பாராட்டினால் நிகழப் போவது இன்னது என்பதை அறிந்து கொள்ளலாம் அன்றோ? நாடகங்கள் பெரும்பாலும் விடியற்காலத்திலிருந்து தொடங்கப் பெறும். இது முற்பகல் வரை நடக்கும். நாடகத்தில் கூட்டுப் பாடலில் கலந்து கொள்பவர் கட்குச் செலவாகும் தொகையைச் செல்வக்குடி மக்கள் ஏற்க முன்வருவர். நாடகங்களைக் காண்பதற்குச் சேய்மையினின்றும் வருவர். நாடகம் பார்ப்பதற்குரிய கட்டணம் சாதாரணமாக இருக்கும். இதனால் பொருள் ஈட்டும் கொள்கையுடன் நாடகம் நடத்தப் பெறாமல் கலை வளர்ச்சிக்காக இது நடத்தப்பட்டது என்பதை நாம் நன்கு அறியலாம்.
கொட்டகை கூட்டம் மிகுந்து பின்னால் வருபவர்க்கு இடம் இன்றித் துன்புறும் நிலையில் நிறைந்துவிடும்.
நாடகத்தைப் பற்றியோ நடிகனைப் பற்றியோ தங்கள் கருத்தை அறிவிக்க ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்து அவரைக் கூறுமாறு செய்வர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் கூறும் கருத்துக்கள் எவரும் ஒப்புக் கொள்ளக் கூடிய நிலையில் இருக்கும். இவர்கள் ஒவ்வொன்றையும் ஊன்றிக் கவனித்துத் தம் கருத்தைக் கூறுவர்.
11. சமய வாழ்வு
பண்டைக் காலத்துக் கிரேக்கர்களின் வழிபடு தெய்வங்கள் அவர்களாலேயே அமைத்துக் கொள்ளப்பட்டவை. சமயம் என்னும் சொல் அவர்கட்கு மிகமிக ஏற்புடைத்தான சொல்லாகும். செய்து கொள்ளுதல் என்பதுதானே சமயம் என்பதன் வேர்ப்பொருள். அவர்கள் தெய்வங்கள் யாவும், அவர்களின் செல்வ நிலைக்கும் அழகிய தோற்றங்களுக்கும் உட்பட்ட எழுச்சிகளாகும். சுவையாகப் பல்வேறு கதைகள் தெய்வங்கள் ஈடுபட்டு நடத்தினவாக அவர்களால் புனையப்பட்டன.
கிரேக்கர்கள் போற்றும் தெய்வங்களில் ஸீயஸ் (Zeus) என்னும் பெயரிதே சிறந்ததாகும். நாம் கருதும் மன்மதனை இதற்கு ஒப்பிடலாம். அவர் பருகும் திராட்சைச் சாற்றிற்கும் உரிய கடவுளாகப் பேக்கஸ் (Bacchus) என்னும் தெய்வத்தைக்கொண்டிருந்தனர் இதனோடு நம் மதுரை வீரனை இணைத்து நாம் கருதலாம்.
சகுனம், கனா முதலிய கொள்கைகளில் கிரேக்கர்கள் பெரிதும் நம்பிக்கையுடையவர்கள். சகுனம் பார்ப்பதிலும் கனவின் பலனைக் கருதுவதிலும் நம் பண்டைய தமிழரும் பின்வாங்கியவரல்லர். சகுனத்தை விரிச்சி என்று கூறி வந்தனர். இவ்வாறே நம்மவர் கனாவின் பயனை நன்குணர்ந்தவர் என்பதைச் சிலப்பதிகாரத்துக் கனத்திறம் உறைத்த காதையாலும் தெளிய உணரலாம்; சீவக சிந்தாமணியில் விசயை கண்ட கனவின் மூலமும் அறியலாம்.
அவர்கள் தொடங்கும் புதிய தொழிலில் ஏதேனும் முதலில் சகுனத்தடை ஏற்பட்டால் அதனால் தீங்கே விளையும் என்று தீர்மானித்திருந்தனர். மாந்திரிகத்திலும் அவர்களுக்குப் பெரிதும் நம்பிக்கை உண்டு. அவர்கள் சகுனத்தில் ஆழ்ந்த கருத்துடையவர்கள் என்பதை எதினியர்களின் போர்க் கப்பல் சிசிலியோடு போர் புரியப் புறப்பட ஆயத்தமாய் இருக்கையில், அன்று இரவு அவர்களின் தெய்வ உருவங்கள் யாவும் முகத்தைத் திருப்பிக் கொண்டிருப்பதாகக் கனவு கண்டதனால், தீங்கு நிகழும் என்று எண்ணிப் பயணத்தை நிறுத்திக் கொண்டதனை இன்றும் நன்கு அறியலாம்.
தம் மீது மருள் ஏறப் பெற்றவர்கள் ஏதேனும் கூறினால் அதனை அப்படியே நம்பி அதன்படி நடக்கும் தன்மை கிரேக்கர்பால் குடிகொண்டிருந்தது. எந்தக் கிரேக்கனும்தான் திராட்சைச் சாற்றைப் பருகுவதற்கு முன் சிறிது நிலத்தில் ஊற்றிய பிறகே தான் உட்கொள்வான். இவ்வாறு செய்வது தன் தெய்வத்திற்கு முன் கொடுத்துப் பின் தான் உட்கொள்வது என்னும் கருத்தினலாகும்.
இந்த முறை நம் இந்தியப் பொதுவாழ்விலும் இருப்பதைக் கவனிக்கலாம். நீரைப் பருகும்போது சிறிது பூமியில் கொட்டுகிறோம், உணவு கொள்ளும் போது ஒரு பிடி சோற்றை இலையில் பிடித்து வைக்கிறோம்; அன்றிக் காக்கைக்கும் வைக்கிறோம். அப்போது காக்கைகள் கூட்டமாக வந்து உண்ணுவதைத் தாயுமானவர், ‘காகம் உறவு கலந்துண்ணக் கண்டீர்’ என்றும் பாடிவிட்டார்.
ஹெர்மஸ் (Hermes) நிதிக்குரிய தேவதையாகும். நாம் குபேரன் என்று கூறுவது இதற்குப் பொருத்தமாகும். அதை அன்றித் திருமகளையும் நாம் நினைவுபடுத்திக் கொள்ளலாம். நிரம்பச் செல்வமுடையவரை நாம் குபேரர் சம்பத்தாய் வாழ்கின்றனர் என்றும், இலச்சுமி கடாட்சம் பெற்றவர் என்றும் கூறுகின்றோம்.
மாலுமிகள் பாசிடோன் (Poseldon) என்னும் தேவதையைக் கடற்கடவுளாகக் கருதினர். இது நாம் கூறும் வருணன் போன்ற தெய்வமாகும்.
நாம் ஆடிப் பட்டம் தேடிவிதை என்று கூறி நல்ல நாளில் விதைத்தலோ அறுவடை செய்தலோ நடத்துவது போலக் கிரேக்க உழவர்களும் நல்ல நாளில் விதைத்தலும், அறுவடை செய்வதிலும் கண்ணுங் கருத்துமாய் இருந்து வந்தனர். உழவர்கள் பருவந்தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை முறையாகக் கொண்டனர். நாம் சனிதோறும் நீராடுகிறோமல்லவா?
இவர்களிடையே அப்டுரியா (Apaturia) என்னும் பண்டிகை சிறந்து விளங்கியது. இந்நாளில் குடும்பத்தினர் ஒன்றுகூடிப் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு ஒருவர்க்கொருவர் வெகுமதி கொடுத்துக் கொண்டு நல்விருந்து அயர்வர். இவ்வாறு செய்து குடும்பத்தார் தமக்குள் ஒருவர்க்கொருவர் ஒற்றுமையாய் அன்பு நிலவி வாழ வழிசெய்வர்.
ஹீப்ரு மக்கள் மேற்கொண்ட சமயத்திற்கும், பண்டையக் கிரேக்கர் கைக்கொண்ட சமயக் கொள்கைக்கும், சிறிது வேறுபாடு இருந்து வந்தது. கிரேக் கிரேக்கர் தாம் வழிபடும் தெய்வங்களிடத்துப் பயபக்தி கொண்டு இருந்தனர். கிரேக்கர் வழிபாடு செய்கையில் நின்றுகொண்டு அமைதியாகப் புரிவர். அவர்கள் மண்டியிட்டு வணங்கும் வணக்க முறையை வெறுத்து ஒதுக்கினர். அவர்கள் இறப்பு என்பது தடுக்க முடியுாத ஒர் இயற்கை நிகழ்ச்சி என்று நன்கு உணர்ந்திருந்தனர்.
‘வாழ்வானது மாயம்; இது மாய்ந்து போவது திண்ணம்’ என்னும் நம் கொள்கையே அவர்கள் கொள்கை. ஆகவே, இவ்விறப்பை அமைதியாகவும் வீரத்தோடும் ஏற்றுக்கொள்வதே தக்கது என்பது அவர்கள் துணிவு.
இறந்த உயிர் கீழ் உலகம் செல்லுமென்பதும், அவ்வுலகில் ஊக்கமாகவோ உணர்ச்சியாகவோ இருந்து எதையும் அனுபவிக்க முடியாதென்பதும் அவர்கள் உள்ளக்கிடக்கை. அவர்கள் இறந்த உடலைச் சுட்டெரித்து வந்தனர். பின்பு அவ்வுடற் சாம்பலை ஒரு குவளையில் வைத்து மூடி, நகர்க்கு வெளியே புதைத்து வைப்பர். இவ்வாறு செய்வதன் நோக்கம் இவ்விறந்த உடலினிடத்து இரங்கும் தன்மையாளர் தம் நன்றியை அறிவித்துக் கொள்ளுவதற்குப் படையல் முதலியவற்றை அளிப்பதற்காக ஆகும். இறந்த உயிர் எளிதில் தான் வாழ்ந்த இடத்தை விட்டுச் செல்ல இசையாமல், தான் அனுபவித்த இன்பங்களை விரும்பி எதிர்நோக்கி இருப்பதாகக் கிரேக்கர் கருதி இருந்தனர். ஆதலால் அவ்வுயிர்க்குப் படையலும் விருந்தும் அளித்து வந்தனர். இது நாம் ஆண்டுக்கொருமுறை திவசம் கொடுக்கும் முறையை ஒத்ததாகும். இறந்தவர் ஆண்களாயின் நகைப் பெட்டியுடனும் குழந்தை களாயின் விளையாட்டுப் பொருளுடனும் காட்சி யளிக்கும் முறையில் உருவங்களை வைப்பர்.
இதுவே கல் எடுப்பு என்று நாம் தொன்று தொட்டு மேற்கொள்ளும் முறையாகும்.
ஆனால், நம் கல்லெடுப்பில், உருவத்தோடு இறந்தவர் பீடும் பெருமையும் பொறித்தல் இயல்பு. நோய் வாய்ப்பட்டும் வயது முதிர்ந்தும் இறப்பு ஏற்படுவதினும், போரில் இறப்பதையே கிரேக்கர் பெரிதும் விரும்பினர். இவ்வியல் தமிழரது இயல்புக்கு மிக மிகப் பொருத்த முடையது. கிரேக்கர் இயற்கையையும் வழிபடும் இயல்பினர்.
கிரேக்கர் வந்தனை வழிபாடு இயற்றும்போது சமயக் கொள்கையில் உள்ள மரபுப்படி தீட்சை பெற்றவர்களே வழிபட இடம் பெறுவர். இத்தீட்சை உணவு முறையில் ஏற்பட்டதாகும். கண்டதை உண்போர் வழிபாட்டிற்கு உரியவர் ஆகார். உடற்றுாய்மை, உளத்தூய்மை அவர்களுக்கு இன்றியமையாதவை. இவையும் நம் மதக் கொள்கையைப் போன்றவையே. அவர் வழிபாடு செய்யுங் காலங்களில் தூய வெள்ளிய ஆடையை உடுத்திக் கொள்வர். செல்லும் வழியில் இருள் நிறையில் ஒளி காணத் தம் கையில்வேண்டியபோது ஒளிதரும் கைவிளக்கைக்கொண்டு போவர். வழிபடச் செல்கையில் வாளாசெல்லாது தம் தெய்வங்களைப் பற்றிய அருட்பாடல்களே அகங் குழைய்ப் பாடிச் செல்வர். எல்லா வழிபாட்டிலும் பாடல் வழிபாடே சிறந்தது போலும்!
12. கல்வி நிலை
ஏதென்ஸ் மக்களின் சிறுவர்கள் எழுதவும் படிக்கவும் அறிந்திருக்க வேண்டுமென்பதை அரசாங்கம் எதிர்பார்த்து வந்தது. ஆனால், அதற்கு ஆவன செய்வதற்கு அவ்வளவு முனைந்து பாடுபட்டிலது. ஆண்கள் தாம் படிக்க வேண்டும் என்றும், பெண் கல்வி அத்துணை வேண்டற்பாலதன்று என்றும் எண்ணும் கொள்கையும் இவர்களிடையே நிலைத்திருந்தது. இஃது அவர்களது பிற்போக்கான எண்ணத்தைக் காட்டுகிறது. கல்வி இருபாலார்க்கும் பொதுவானது என்பதைச் சிந்தித்திலர். இதில் நம் தமிழ் நாடு முன்னணியில் இருந்தது. ஆண்களைப் போலவே பெண்களும் ஏற்றந் தாழ்வின்றிக் கல்வி கற்று அறிவுடையராய் இருந்தனர் என்பதைச் சங்க நூல்களிலும், இடைப்பட்ட காலத்து நூல்களிலும் நன்கு காணலாம்.
குடியரசு நாடாக ஏதென்ஸ் இருந்தும், கல்விக்காக இவ்வளவு அசட்டையாக இருந்தது சிறிது வருந்தத்தக்கதுதான். நாளடைவில் ஏதென்ஸ் நகரச் சிறுவர்கள் நாட்டுக் குடிமக்கள் ஆவர் என்பதை அரசியலார் சிறிதும் உணராதிருந்தனர். பெற்றோர்களே தம் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தைக் குறித்துக் கவலைகொள்ள வேண்டியிருந்தது. பிள்ளைகளிடமிருந்து ஆசிரியன்மார் பெற்ற ஊதியம் மிக மிகச் சிறிதே ஆகும். அந்தச் சிறு தொகையை வசூலிப்பதற்கும் கணக்காயர் பெரிதும் வருந்தியே பெறவேண்டிய நிலை இருந்தது. இதனை நோக்கத் தமிழ்நாடு நனி சிறந்ததாகும். தமிழ்நாடு,
“உறுபொருள் கொடுத்தும் கற்றல் நன்றே"
என்று கழறுகிறது; வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டா என்றும் கூறுகிறது. ஏதென்ஸ் நகரச் செல்வக்குடியினர் தம் மக்களைத் தனி ஆசிரியர்களிடம் ஒப்படைத்து, அப்பிள்ளைகளின் கல்வி அபிவிருத்திக்கானவற்றைக் கவனித்துக் கொள்ள ஏற்பாடு செய்திருந்தனர். அவ்வாசிரியர்கள் தம்மால் ஒப்புவிக்கப்பட்ட பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று, பள்ளி முடிகின்ற வரையில் காத்திருந்து மீண்டும் வீட்டிற்கு மிக எச்சரிக்கையுடன் அழைத்து வருவர். இந்த ஆசிரியர்கள் பிள்ளைகளிள் கல்வி முன்னேற்றத்தைக் குறித்து மட்டும் கவலே எடுத்துக் கொள்ளாது, சிறுவர்களின் பெருந்தன்மையான வாழ்விற்கு வேண்டிய வகை களில், அவர்களைப் பயிற்றுவிக்கும் பொறுப்பையும் ஏற்றவராய்த் திகழ்ந்தனர்.
பொதுவாக ஏதென்ஸ் நகரப் பிள்ளேகளின் படிப்பு ஆருவது வயதில் தொடங்கப்பட்டு பதின்காம் வயது வரையில் நீடிப்பதாகும். இந்த வயதிற்குள் இவர்கள் தம் ஆரம்பப் பள்ளிக்கூடப் பாடத்திட்டங்களை நன்கு பயின்றவர் ஆவர். மாணவ வர் இலக்கணப் பள்ளிக்கூடம் என்று அக்காலத்தில் குறிப்பிடப்பட்ட அப்புள்ளியில், அரக்குப் பலகை யில் இருப்பு எழுதுகோலால் எழுதும் பழக்கத்தை மேற்கொண்டு வந்தனர். நம் கிராமப் பள்ளிகளில் முன்பு மணலில் எழுதி வந்தனர் அன்றோ !
அதன்பின் அவர்கள் சொல்வதைத் தவறின்றிப் பலகையில் எழுதும் பயிற்சிபெற்று விடுகின்றார்கள்.
அதற்குப் பிறகு ஹோமர் போன்ற பெருங் கவிஞர்களின் பாடல்களை மனனம் பண்ணும் பயிற்சியில் ஈடுபட்டு விடுகின்றனர். தெரியாத கடினமான பாடற் பொருள்கள், ஆசிரியரால் தெளிவாகவும் மிகுந்த கருத்தோடும் விளக்கப்படும். சிறிது கணிதப் பயிற்சியும் அளிக்கப்பட்டு வந்தது.
எழுத்தோடு எண்ணின்றேல் என்ன பயன் ? எண்ணும் எழுத்தும் மக்கட்குக் கண் போன்றவை அல்லவோ? ‘எண்ணென்ப ஏனை எழுத்தென்ப, இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு’ என்பது பொது மொழி ஆயிற்றே?
இவ்வாறன பொதுக்கல்விப் பயிற்சியைப் பெற்றுக் கொண்டு வருகையில், மற்போர்ப் பயிற்சி அளிக்கும் பயிற்சிக் கூடங்களுக்கு எதினியர்களின் சிறுவர்கள் போகாமல் நிற்பதில்லை. அங்கு உடற்பயிற்சியும் இசை கலந்த நடனமும் பயில்விக்கப்பட்டு வந்தன. இவையே அன்றி அவர்களுக்குப் பல்வேறு உடற்பயிற்சிக்கான விளையாட்டுக்களும் கற்பிக்கப்பட்டு வந்தன. உடற்பயிற்சி ஆசிரியர் தம்பால் பயின்றுவரும் மாணவர்கள் உடற்கட்டில் உரமுடையவராய்த் திகழ வேண்டும் என்னும் ஒரே நோக்கம் கொண்டு, அம்முறையில் அவர்களைப் பயிற்றுவித்து வந்தனர்.
ஏட்டுக் கல்வியிலும், உடற்பயிற்சிக் கல்வியிலும் மாணவர்கள் தம் கருத்தை நன்கு செலுத்திக் கற்றுத் தேர்ச்சி அடைய வேண்டும் என்று அவ்வப் போது பந்தயங்களை வைத்து அவற்றில் நன்கு தேறியவர்களுக்குப் பரிசு வழங்கும் பான்மையும் அந்நாட்டில் இருந்து வந்தது. இதனால் மாணவர்கள் இவ்விரு கல்வியிலும் தம் கருத்தைச் செலுத்தி வர வாய்ப்பு ஏற்பட்டது. ஊக்கமும், உணர்ச்சியும் உடன் தோன்றின.
எளிய குடும்பத்து ஏழைப் பிள்ளைகள் தம் பதினான்காம் வயதிற்குமேல் படிக்கும் பொறுப்பைக் கைவிட்டுத் தம் பெற்றோர் மேற்கொண்டு புரியும் கைத்தொழிலை ஏற்க வேண்டிய நிலையை எய்துகின்றனர். ஆனால், செல்வக் குடியினர் தம் பிள்ளைகளைப் பதினெட்டு வயது வரை பயிலவிட்டு வைத்தனர். அதற்கு மேல் எந்தப் பிள்ளையும், செல்வர் என்றும், வறியர் என்றும் பாகு பாடின்றிப் போர்ப் பயிற்சியில் ஈடுபடவேண்டிய முறை கட்டாயமாக ஏதென்ஸ் நகர மக்களிடையே இருந்தது. இப்போர்ப்பயிற்சியை இரண்டு ஆண்டுகள் அவர்கள் பெறவேண்டும். செல்வச் சிறுவர்கள் பதினான்கு ஆண்டுக்குமேல் பதினெட்டு ஆண்டுவரை பெறும் கல்விப் பயிற்சியானது இசைப் பயிற்சியாகவோ அன்றிச் சித்திரம், ஓவியம் போன்ற நுண்கலைப் பயிற்சியாகவோ இருந்து வந்தது. இந்த ஏதென்ஸ் நகர மக்களின் கல்வி முறை உண்மையில் போற்றற்குரியதும் பாராட்டற்குரியதும் ஆகும்.
ஏதென்ஸ் நகர மக்கள் கையாண்ட நரம்புக் கருவி ஏழு நரம்புடையதாய் இருந்தது. புல்லாங்குழலும் அவர் போற்றி வந்த துளைக்கருவியாகும்.
தமிழர் பெரிதும் கையாண்ட யாழும் குழலும் இவர்கள் மேற்கொண்ட இசைக் கருவிகளை நினைப்பிக்கின்றன. ‘குழல் இனிது யாழ் இனிது என்ப என்று வள்ளுவரும் இவ்விரு கருவிகளையே வியந்து கூறுகிறார்.
ஏதென்ஸ் நகர இளைஞர்கள் தம் ஆரம்பப் படிப்பு முடிந்ததும் போர்ப் பயிற்சி பெறவேண்டும் என்பதை முன்னர் அறிந்தோம். அங்ஙனம் அவர்கள் நான்கு ஆண்டு பெற்ற போர்ப்பயிற்சி அவர்களை மேலும் தம் கல்வியறிவைப் பெருக்குவதற்கு உணர்ச்சியை ஊட்டி வந்தது என்று கூறலாம். இது பொதுத்தொண்டில் ஈடுபட்டு உயர்ந்த உத்தியோகங்களைப் பெற்றுத் தம் இசையை நாடத் தூண்டியது எனலாம். இவ்வாறு கல்வியால் புகழ்பெற விரும்பி நிற்பதை அறிந்து சிசிலியிலும், மற்றும் கிரேக்க நாட்டின் சில பகுதியிலும் உள்ள கல்விமான்கள் ஏதென்ஸ் நகருக்கு வந்து பல்வேறு பொருள்களைக்குறித்து ஆங்காங்குச் சொற்பொழிவு ஆற்றத் தலைப்பட்டனர்.
இதனால் நூலாகிய கருவிக் கொண்டே கல்வியைப் பெருக்கிக் கொள்ள வேண்டுமென்ப தின்றிச் சொற்பொழிவுகளைக் கேட்பதலுைம் அறின்வை விரிவுபடுத்திக் கொள்ளலாம் என்பது பெறப்படுகின்றதன்றோ? நம்மவர்களும் இதன் முற்றிலும் நம்பி இருந்தனர். இன்றேல் பெறப்படுகின்றதன்றோ?பெறப்படுகின்றதன்றோ பெறப்படுகின்றதன்றோ வள்ளுவர் கேள்வி என்ற அதிகாரத்தில்,
‘கற்றில யிைனும் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை’
என்று கூறியிருப்பாரா ?
அவர்கள் ஆற்றிய சொற்கிபாழிவுகள் மக்கள் கடமை, வான நூல், கணிதம், இலக்கியம் என்னும்
பொருள் பற்றியவையாகும். சொல்மாரி பொழிந்தவர்கள் அவ்வக்கலையில் நன்கு தேர்த்து ஐயந்திரிபறக் கற்றவராதலின், கேட்டிார் உள்ளங் கொள்ளும் வகை கூறிக் கேட்டார் பலரையும், இக்கலைகளில் அறிவு நிரம்பப் பெற்றவர்களாக ஆக்கி விட்டனர்.
இதனால், ஏதென்ஸ் நகர மாணவிகள் கலையின் நிமித்தம் கல்லூரியை நாடிக் கற்க வேண்டிய நியதி அற்றவர் ஆயினர். கலை அறிவோடு மிகமிக இன்றியமையாததாகக் கற்பிக்கப்பட்டு வந்த கலை, சொற்பொழிவு ஆற்றும் கலையே ஆகும். மிகுதியாகப் படிப்பதினும் படித்தவற்றைப் பிறர்க்கு எடுத்துக் கூறும் ஆற்றலை இவர்கள் பெரிதும் போற்றி வந்தனர். கற்றவற்றைக் கலைஞர் முன் கழறாதவர் ‘நாறா மலர் அனையர்’ என்றும் அன்றோ வள்ளுவர் வைகின்றார்?
நன்கு பேசுந் திறனுடையவரையே அக்காலப் பொதுமக்கள் விழைந்து நின்றனர். இஃது இயற்கை தான். தமிழ் நாடும் அவர்களையே விரும்பி ஏற்றுக் கொண்டது.
வாழ்க்கையில் வெற்றி காண விழைவோர் பேசுந்திறன் பெறுதல்வேண்டும் என்பது ஏதென்ஸ் நகர மக்கள் விருப்பம்.
இவ்வாறு கொல்மாரி ஆற்றி வந்த சோபிஸ்டுகள் கி. மு. 4 ஆம் நூற்றாண்டில், முறையாகப் பள்ளிக்கூடம் தொடங்க ஆரம்பித்து விட்டனர். அப்பள்ளிகளில் ஒன்று பிளேடா (Pluto) தலைமை யிலும், மற்றென்று அரிஸ்டாடில் (Aristotie) தலைமையிலும் நடந்தவை ஆகும்.
இந்த அளவில் கிரேக்கர் வரலாறு நின்றுவிட்டதாக எண்ணாமல், மேலும், இவர்களைப் பற்றிய வரலாற்றை விரித்த நூல்களைக் கற்று அறியவேண்டுவது நம் கடமை ஆகும்.
13. இறுவாய்
எதினிய நகரத் தலைவராக இருந்த பெரிகில்ஸ் மிகவும் சீரிய நோக்கங் கொண்டவர். இவர் ஏதென்ஸ் நகர மக்களின் நடை உடை பாவனைகளையே ஏனைய கிரேக்க மக்கள் பின்பற்ற வேண்டுமென்று எண்ணங் கொண்டனர்; இதனை நிறைவேற்றியும் வைத்தனர். எதினியவாசி அரசியல் வாதியாகவோ, சொல்மாரி பொழிபவனாகவோ, வீரனாகவோ இருப்பான். தனக்குக் கலை அறிவு, பாடல், ஆடல் பயிற்சி இல்லை என்றாலும், இக்கலைகளைப் பாராட்டாமல் இரான். எப்பொழுதும் சோம்பல் இன்றிச் சுறுசுறுப்பாக வாழவே இவன் விரும்புவான்.
ஏதென்ஸ் நகரவாசிகள் பொலோபோனேஷியப் போரில் (Poloponnesian) வீழ்ச்சியால் துன்புற்றனர். சிசிலியை நோக்கி எதிர்க்கப் புறப்பட்டதும் வெற்றிகரமாக முடியவில்லை. பெர்ஷியாவும், ஸ்பார்ட்டாவும், எகோஸ்போடாமி (Aegospotami) என்னுமிடத்தில் கி. மு. நாலாம் நூற்றாண்டின் முடிவில் கடற் போரில் ஏதென்ஸ் நகரை முறியடித்தன. ஏதென்ஸ் நகர மக்கள் கடற்போரில் தலைசிறந்தவ வர் என்பது பழங்கதையாகப் போய்விட்டது. என்றாலும் ‘கடுகு சிறுதாலும் காரம் போவதில்லை’ என்பதுபோலத் தன் பண்டைய கடற் போர்ச் சிறப்பு அழியாதிருக்கப் பெரிதும் முயன்று வந்தனர்.
மெசிடோன் (Macedon) அரசராகிய பிலிப் (Philip) தம்மிடம் நன்கு பயிற்சி பெற்ற படையினைப் பெற்றிருந்தார். இவர் இன்னும் தம் நாட்டைப் பெற்றிருக்க வேண்டுமென்றும் அவாக் கொண்டிருந்தமையால், அதற்கேற்ற வாய்ப்பை எதிர்நோக்கி இருந்தனர். ஏதென்ஸ் நகரத்திற்கும், தீபஸ் நகரத்திற்கும் நடந்த போரைக் குறித்தும் பிலிப் ஒரு முடிவு அறவேண்டுமென்று கேட்டுக் கொண்டபோது இவ்விரு நகரங்களும், மெசி தோனின் படையையே எதிர்க்க ஆரம்பித்தன. இதன் பலன் தோல்வியே ஆகும்,
ஏதென்ஸ் நகர மக்கட்கு இருந்த உயர்ந்த நாட்டுப் பற்றும், போர்ப் பயிற்சியும் நாளுக்கு நாள் பிற்போக்கு அடைந்தன. பிலிப் மன்னர்க்குப் பிறகு, அவர் குமாரர் அலெக்சாண்டர் பாரசீகப் பேரரசை வென்றார். அதனால் லெவண்டர் (Levent) பட்டின முழுமையும் கிரேக்கர்கள் நாகரிகம் வளர லாயிற்று. இவ்வாறு நாகரிகம் வளர்ந்த பட்டினங்களில், ஈஜிப்த் தேசத்து அலெக்ஸாண்டிரியா முதன்மை பெற்றதாகும். இந்தச் சமயத்தில் தான், நோய்க்கேற்ற மருந்துகளைக் கண்டு பிடிக்கவும் நுண் கலைகளை வளர்க்கவும் மக்கள் அறிவைச் செலுத்தினர்.
நாளடைவில் உரோமா புரியும் (Rome) தன் உச்சநிலையை அடைய ஆரம்பித்தது. தானும் தன் இராச்சியத்தைப் பரப்பிக் கிரேக்கர்களோடு உறவு கொண்டு கலையறிவு, நாகரிகம், உணர்சி முதலியவற்றில் முன்னேறலாயிற்று. இவ்வாறாக உரோமாபுரியின் மக்கள் கிரேக்கரின் முறைகளை அப்படியே பின்பற்றினர் என்னலாம். இதன்பின் ஐரோப்பிய சாம்ராச்சியத்திலும் கிரேக்க நாகரிகம் பரவலாயிற்று. உலகத்தின் மூலமுடுக்குகளில் எல்லாம் இந்தக் கிரேக்க நாகரிகமே பரவலாயிற்று.
பதினாறாம் நூற்றாண்டில் கிரேக்கரின் கலைகளைப் படித்து மறுமலர்ச்சி அறிவைப் பெருக்க மக்கள் பெரிதும் முனைந்து நின்றனர்.
பொதுவாக, இவர்கள் நாம் இக்காலத்தில் வாழும் வாழ்க்கையைவிட நல்ல முறையில் மகிழ்ச்சியோடும் உயர்ந்த எண்ணங்களோடும், சுறுசுறுப்பான உணர்ச்சியுடனும் வாழ்ந்து வந்தனர், என்பதில் ஐயமில்லை. நாமும் நம் பண்டைப் பெருமைகளையுணர்ந்து அம்முறையில் வாழ்ந்து நலனுற முயல்வேனமாக.
* * *
பயிற்சி வினாக்கள்
கீழ்வரும் தலைப்புகளைக் குறித்து இரண்டு பக்க அளவில் கட்டுரைகள் எழுதிப் பழகுக :
1.கிரேக்கர்களின் பொது வாழ்க்கை முறை.
2.கிரேக்கர்கள் அரசியலை அமைத்துக் கொண்ட விதம்.
3.ஸ்பார்ட்டர்களின் வாழ்க்கை முறை.
4.ஏதென்ஸ் நகரச்சிறப்புக்கள்.
5.குடியாட்சி முறை கிரேக்க நாட்டில் அமைந்த விதம்.
6.கிரேக்க மக்களின் பழக்க வழக்கங்கள்.
7.கிரேக்க நாட்டு மாதர்களின் நிலை.
8.அடிமை வாழ்வும் கிரேக்க நாடும்.
9.கிரேக்கர் கைக்கொண்ட தொழிலும் வாணிகமும்.
10.கிரேக்க மக்களின் பொழுது போக்கு வாழ்வு.
11.கிரேக்கர்களின் சமய வாழ்க்கை.
12.கிரேக்க நாட்டுக் கல்வி நிலை.
13.நம் நாட்டிலும் கிரேக்க நாட்டிலும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள்.
* * *
கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள் By
P. கண்ணப்ப முதலியார்,
தமிழ்த்துறைத் தலைவர் புதுக்கல்லூரி, சென்னை
எடுகேஷனல் பப்ளிஷிங் கம்பெனி
நுங்கம்பாக்கம், சென்னை-34,
Rs.1-00
கருத்துகள்
கருத்துரையிடுக