ஸன் யாட் ஸென்
வரலாறு
Back
ஸன் யாட் ஸென்
வெ. சாமிநாத சர்மா
ஸன் யாட் ஸென்
1. ஸன் யாட் ஸென்
1. காப்புரிமை அறிவிப்பு
2. நன்றி
3. மூலநூற்குறிப்பு
4. அணிந்துரை
5. வெ. சாமிநாத சர்மாவின் சாதனைகள்
6. பதிப்புரை
7. நுழையுமுன்…
8. சன் யாட் சென்
9. பிரசுராலயத்தின் வார்த்தை
10.வாசகர்களுக்கு
11.இந்நூலில் யார் யார்,
2. பிள்ளை மனம்
3. ஊருக்குப் புறத்தில்
4. வைத்தியத் துறையில்
5. மன மலர்ச்சி
6. முதற் புரட்சி
7. நாடு விட்டு நாடு
8. அடைபடலும் விடுபடலும்
9. முடிவுக்கருகில் முடியாட்சி
10.மீண்டும் புரட்சி
11.நாடோடி வாழ்க்கை
12.தீவிரப் பிரசாரம்
13.கட்சியின் தோற்றம்
14.உயிர் கொடுத்த தியாகிகள்
15.வெற்றி வருமுன்னே
16.அரச பீடத்தின் அலறல்
17.தலைமை துறந்ததன் விளைவு
18.குடும்ப வாழ்ககை
19.துரோகத்தினின்று தப்பிய விந்தை
20.கோமிண்ட்டாங் காங்கிர
21.சொல்லாற்றல் மிக்க தலைவன்
22.ஒற்றுமைக்கு முயற்சி
23.குடியரசின் தந்தை
1. வாழ்க்கைச் சுவடுகள்
2. கணியம் அறக்கட்டளை
நன்றி
இந்நூல் படைப்பாக்க பொது உரிமையின் கீழ் வெளியாவதற்கு பொருளாதார ஆதரவு வழங்கிய ரொறன்ரோ இசுகார்புரோ பல்கலைக்கழக நூலகம், கனடா (UNIVERSITY OF TORONTO SCARBOROUGH LIBRARY, CANADA) விற்கு நன்றி
மூலநூற்குறிப்பு
நூற்பெயர் : ஸன் யாட் ஸென்
தொகுப்பு : வெ. சாமிநாத சர்மா நூல்திரட்டு - 7
ஆசிரியர் : வெ. சாமிநாத சர்மா
பதிப்பாளர் : இ. இனியன்
முதல் பதிப்பு : 2005
தாள் : 16 கி வெள்ளைத் தாள்
அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 10.5 புள்ளி
பக்கம் : 16 + 360 = 376
நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்)
விலை : உருபா. 235/-
படிகள் : 500
நூலாக்கம் : பாவாணர் கணினி, தி.நகர், சென்னை - 17.
அட்டை வடிவமைப்பு : இ. இனியன்
அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர், ஆயிரம் விளக்கு, சென்னை - 6.
வெளியீடு : வளவன் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே 24339030
அணிந்துரை
எழுத்திடைச் செழித்தச் செம்மல் வெ. சாமிநாத சர்மா (1895-1978) அவர்கள் தன்னுடைய எழுத்துப் பணியை எதிர்காலம் மறக்காது எனும் நம்பிக்கையை தமது நாள் குறிப்பு ஒன்றில் (17.9.960) பின் வருமாறு பதிவு செய்துள்ளார்.
ஆங்கிலக் கணக்குப்படி இன்று என்னுடைய 66வது பிறந்த நாள். வாழ்க்கைப் பாதையில் அறுபத்தைந்தாவது மைல் கல்லைக் கடந்து விட்டேன். என்ன சாதித்துவிட்டேன்? அதைச் சொல்ல எனக்கு சந்ததிகள் இல்லை. ஆனால் வருங்காலத் தமிழுலகம் ஏதாவது சொல்லுமென்று நினைக்கிறேன்.
அவருடைய எழுத்துப் பணியோகத்திற்கு உறுதுணையாக வாழ்க்கைத் துணைவியாக, விளங்கிய மங்களம் அம்மையார், மகப் பேறு - சந்ததி - இல்லாததை ஒரு குறையாகக் கருதாமல் சாமிநாத சர்மாவின் நூல்களே குழந்தைகள் எனும் கருத்தை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குழந்தைகள்தாம் - நூல்கள்தாம் - எங்களுக்குப் பிற்காலத்தில் எங்கள் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும்
இறுதிக் காலத்தில் தம்முடைய நூல்கள், கையெழுத்துப் படிகள் அனைத்தையும் வெளியிடும் உரிமையை எனக்கு வழங்கிய சமயத்தில் அவருடைய நூல்கள் அனைத்தையும் பொருள்வாரி யாகப் பிரித்துப் பல தொகுதிகளாக வெளிவரும் காலம் கைகூடும் என்று உணர்ச்சிப் பெருக்கில் கூறினேன். அதைக் கேட்டு அவர் புன்னகை பூத்தார்.
ஆமாம் வெ. சாமிநாத சர்மாவின் நூல்கள் தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி ஆட்சி காலத்தில் கி.பி. 2000த்தில் நாட்டுடைமை யாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பல பதிப்பகங்கள் போட்டி போட்டுக் கொண்டு அவருடைய நூல்கள் பலவற்றை மறுவெளியீடுகளாகக் கொண்டு வந்துக் கொண்டிருக் கின்றன.
இவற்றிற்கெல்லாம் மணிமகுடம் வைப்பது போன்று, வளவன் பதிப்பகம் சாமிசாத சர்மா அவர்களுடைய நூல்கள் அனைத்தையும் பல தொகுதிகளாக வெளியிடுகின்றது.
83 ஆண்டுகால வாழ்க்கையில் சாமிநாத சர்மாவின் இலக்கிய வாழ்க்கை 64 ஆண்டுகாலமாகும். அவருடைய 78 நூல்கள் அவருடைய இலக்கிய வாழ்க்கையின் சுடர் மணிகளாக ஒளிவீசிக் கொண்டிருக் கின்றன.
அண்மைக் காலமாகத் தமிழ்ப் பேரறிஞர்கள் தன்னே நூல்கள் அனைத்தையும் பல தொகுதிகளாக வெளியிட்டு தன்னேரில்லாத சாதனைகள் படைத்து வருகின்றது தமிழ்மண் பதிப்பகம்.
காலத்தேவைக்கேற்றத் தமிழ்த்தொண்டாற்றி வரும் வளவன் பதிப்பகம் சாமிநாதசர்மாவின் நூல்களனைத்தையும் தொகுத்து வெளியிடும் அரிய முயற்சியைத் தமிழர்கள் வரவேற்று வெற்றி யடையச் செய்ய வேண்டும், செய்வார்கள் என்று உறுதியாக நம்புகின்றேன்.
இராமகிருஷ்ணபுரம், 2வது தெரு, மேற்குமாம்பலம், சென்னை - 600 033.
பெ.சு. மணி
வெ. சாமிநாத சர்மாவின் சாதனைகள்
தமிழ் மொழியின் உரைநடை நூல்களின் வளம் பெருகத் தொடங்கியக் காலக்கட்டத்தில், தரமான உயர்ந்த நூல்களை எழுதியும், மொழிபெயர்த்தும் வெளியிட்டதன் மூலம், தமிழ்ப் பணியாற்றிய பெருமக்கள் பலர். இன்றும், என்றும் நாம் நன்றியுடன் நினைவு கூறவேண்டியவர்களில் பெரும் பங்காற்றியச் சிறப்புக்கு உரியவர், திரு. வெ. சாமிநாத சர்மா அவர்கள். சர்மாஜி என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என போற்றப்பட்டவர். அவருடன் குரு-சீடர் உறவுப் பிணைப் போடு பணியாற்றியவர்! சுதந்திரமான எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்டதால் அரசுப் பணியை உதறிவிட்டு, இதழியல் துறையைத் தேர்ந்தெடுத்தவர். 1895ஆம் ஆண்டில் பிறந்த சர்மாஜி தனது பதினேழாவது அகவையில் எழுதத் தொடங்கி, பத்தொன்பதாவது அகவையிலேயே தனது முதல் நூலை (கௌரீமணி) வெளியிட்டார். மூன்று ஆண்டுகள் திரு. வி. க. நடத்திய தேச பக்தன் நாளேட்டிலும், பன்னிரெண்டு ஆண்டுகள் நவசக்தி கிழமை இதழிலும், இரண்டாண்டுகள் சுயராஜ்யா நாளேட்டிலும் உதவியாசிரியராகப் பணியாற்றினார். சென்னை தமிழ் எழுத்தாளர் சங்க வெளியீடான பாரதியில் ஓராண்டு ஆசிரியராக இருந்தார். திரு. ஏ.கே. செட்டியார் அயல் நாடு சென்றிருந்தபோது அவரது குமரி மலர் மாத இதழுக்கு ஆசிரியராய்ப் பொறுப்பேற்றிருந்த பெருமையும் இவருக்கு உண்டு.
தமிழ்த் தென்றல் திரு. வி. க. மகாகவி பாரதியார், பரலி சு. நெல்லையப்பர், வீர விளக்கு வ. வே. சு. ஐயர், தியாகச் செம்மல் சுப்பிரமணிய சிவா, அக்ரஹாரத்து அதிசய மனிதர் வ. ரா. பேராசிரியர் கல்கி, உலகம் சுற்றிய தமிழர் திரு. ஏ.கே. செட்டியார் முதலான தமிழ் கூறும் நல்லுலக மேதைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் சர்மாஜி. இவரது இல்லற வாழ்க்கை இலட்சியப் பிடிப்பாலும், தமிழ்ப்பணியாலும் சிறப்பு பெற்றது. தம்பதியர் இருவருமே அண்ணல் காந்தியின் பக்தர்கள். தனது அனைத்து எழுத்துலகப் பணிகளிலும் உறுதுணையாக நின்று, ஊக்கமளித்து, தோழமைக் காத்து, அன்பு செலுத்திய மனையாள் மங்களம் அம்மையாருடன் 1914ஆம் ஆண்டு முதல் 42 ஆண்டுகள் இல்லறத்தை நல்லறமாக்கி நிறைவு கண்டவர் சர்மாஜி. இத்தகைய பாக்கியம் பெற்ற எழுத்தாளர்கள் ஒரு சிலரே! தம்மிருவரின் ஒத்துழைப்பால் தோன்றிய நூல்களையே தங்கள் குழந்தைகளாக எண்ணி மகிழ்ந்தனர் அந்த ஆதர்ச தம்பதியர். ஆங்கிலம், தமிழ், வட மொழி, தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஆறு மொழிகளை அறிந்திருந்தவர் அம்மையார். தனக்கு உற்றத் துணையாயிருந்த மனையாள் உயிர் நீத்தது சர்மாஜியைத் துயரக் கடலில் ஆழ்த்தியது. தனது ஆற்றாமையை தன் நண்பருக்கு எழுதிய கடிதங்கள் வாயிலாக வெளிப்படுத்தினார். இவைதான் பின்னர் அவள் பிரிவு என்று நூலாக்கம் பெற்றது.
இரங்கூனுக்குச் சென்ற சர்மாஜி 1937 இல் ஜோதி மாத இதழை தொடங்கினார். பத்திரிகை உலகிற்கு ஒரு புதிய வெளிச்சமாக அமைந்தது ஜோதி. பிற்காலத்தில் பிரபலமான எழுத்தாளர்களில் பலரும் ஜோதியில் தங்கள் எழுத்தாற்றலை வெளிப்படுத்தியவர்கள்தாம். புதுமைப் பித்தனின் விபரீத ஆசை முதலான கதைகள் ஜோதியில் வெளிவந்தவையே! இலட்சியப் பிடிப்போடு ஒரு முன் மாதிரி பத்திரிகையாக விளங்கிய ஜோதியில் வருணன், சரித்திரக்காரன், மௌத்கல்யன், தேவதேவன், வ.பார்த்த சாரதி முதலான பல புனைப் பெயர்களில் பல துறைகளைத் தொட்டு எழுதியவர் சர்மாஜி. இரண்டாம் உலகப் போரில் இரங்கூனில் பெய்த குண்டு மழைக்கு நடுவிலும் ஜோதி அணையாமல் தொடர்ந்து சுடர்விட்டது குறிப்பிடத்தக்கது.
போர்க் காலத்தில் குடும்பத்தோடு அவர் மேற்கொண்ட பர்மா நடைப் பயணம் துன்பங்கள் நிறைந்தது. தனது உடமைகளில் எழுது பொருட்களையே முதன்மையாகக் கருதினார். குண்டு மழையால் திகிலும், பரபரப்பும் சூழ்ந்திருந்த போது பாதுகாப்புக் குழிகளில் முடங்க வேண்டிய தருணத்திலும் தன் தமிழ்ப் பணியை மறந்தார் இல்லை. உயிருக்கு உத்திரவாதமற்ற சூழலில், உயிர் போவதற்குள் தான் மேற்கொண்டிருந்த மொழிபெயர்ப்புப் பணியை முடித்தே ஆகவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பாதுகாப்புக் குழியில் இருந்தபடி மொழிபெயர்த்து எழுதி முடிக்கப்பட்டதுதான் பிளாட்டோவின் அரசியல் என்ற உலகம் போற்றும் நூல்.
சர்மாவின் நூல்களை வெளியிடுவதற்காகவே இரங்கூனில் தோற்று விக்கப்பட்ட பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம், பின்னர் புதுக்கோட்டைக்கு மாற்றப்பட்டது. வரலாறு என்பது உண்மை களை மட்டுமே தாங்கி நிற்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தவர் சர்மாஜி. உலகத் தலைவர்கள், இராஜதந்திரிகள், புரட்சி வீரர்கள், தீர்க்கதரிசிகள்; அறிவியல் அறிஞர்கள் முதலானோரின் வாழ்க்கை வரலாற்றையும், அவர்தம் சாதனைகளையும் உள்ளது உள்ளபடி, மிகச் சரியானபடி தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர். இன்றளவும் இச்சிறப்பில் இவருக்கு இணை இவரே என்பது மிகையல்ல! ஆங்கில மொழி அறியாத அல்லது ஆங்கிலத்தில் போதிய பரிச்சயம் இல்லாத தமிழர்களுக்கு உலக நாடுகளின் அரசியல், தத்துவங்கள், வரலாறு தொடர்பான ஆங்கில நூல்களை எளிய, அழகுத் தமிழில் மொழிபெயர்த்து அளித்தார். மொழி பெயர்ப்புகள் நீங்கலாக மற்ற நூல்களை எழுதும் போதும் தனது விமர்சனங்களையும், அபிப்பிராயங்களையும், கற்பனை களையும் ஒருபோதும் கலந்து எழுதியவரல்ல! இப்பண்பே அவரது நூல்களின் மிகச் சிறந்த அம்சமாகும்.
சர்மாவின் மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழ் மக்களிடையே மிகவும் புகழ்ப் பெற்றவை. சாதாரன வாசகனுக்கும் புரியக் கூடியவை. மூல நூலின் வளத்தைக் குறைக்காதவை. ஆக்கியோன் உணர்த்த நினைத்ததை சற்றும் பிசகாமல் உள்ளடக்கி, மொழியின் லாவகத்தோடு சுவைக் குன்றாமல் பெயர்த்துத் தரப்பட்டவை. ‘பிளாட்டோவின் அரசியல்’, ‘ராஜதந்திர யுத்தகளப் பிரசங்கங்கள்’, ரூஸ்ஸோவின் ‘சமுதாய ஒப்பந்தம்’, மாஜினியின் ‘மனிதன் கடமை’, இங்கர்சாலின் ‘மானிட சாதியின் சுதந்திரம்’, சன்யாட்சென்னின் ‘சுதந்திரத்தின் தேவைகள் யாவை? முதலான நூல்களைப் படித்தவர்களுக்கு இது நன்கு விளங்கும்.
காரல் மார்க் வாழ்க்கை வரலாறு பற்றி அநேக நூல்கள் இதுவரை வெளிவந்திருந்தாலும், முதன் முதலாக மிக விரிவாக எழுதப்பட்டதும், மிகச் சிறப்பானதென்று எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டதும் சர்மாஜியினுடையதே!
எழுபதுக்கும் மேற்பட்ட மணி மணியான நூல்களை சர்மாஜி எழுதினார். ‘The Essentials of Gandhism’ என்ற ஆங்கில நூலும் அவற்றில் அடங்கும். நாடகங்கள் எழுதுவதில் அவருக்கிருந்த ஆர்வத்தையும், ஆற்றலையும் அவர் எழுதிய லெட்சுமிகாந்தன், உத்தியோகம், பாணபுரத்து வீரன், அபிமன்யு ஆகிய நாடக நூல்கள் வெளிப்படுத்துகின்றன.
எண்பத்தி மூன்று வயது வரை வாழ்ந்து, தமிழ்ப் பணியாற்றி மறைந்த சர்மாஜியின் நூல்களை இன்றைய தலைமுறையினர் படித்தறிந்து கொள்வது அவசியம். ஏற்கனவே படித்து அனுபவித்த வர்கள் தங்கள் அனுபவத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இவற்றிற்கு ஏதுவாக வளவன் பதிப்பகம் மீண்டும் அவற்றை பதிப்பித்துத் தனக்குப் பெருமை சேர்த்துக் கொள்ளும் வகையில் தமிழ்ப் பணியாற்றியுள்ளது போற்று தலுக்கு உரியது. இதன் பொருட்டு திரு. கோ. இளவழகன் அவர்களுக்கும், அவர்தம் மகன் இனியனுக்கும் நாம், தமிழர் என்ற வகையில் நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளோம். பதிப்புத் துறையில் வரலாறு படைத்து வரும் கோ. இளவழகன் வரலாற்றறிஞர் சர்மாவின் நூல்களை வெளியிடுவது பொருத்தமே!
6, பழனியப்பா நகர், திருகோகர்ணம் அஞ்சல், ஞானாலயா பி. கிருஷ்ணமூர்த்தி, புதுக்கோட்டை - 622 002.
டோரதி கிருஷ்ணமூர்த்தி
பதிப்புரை
‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும்; கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்! என்ற தமிழ்ப்பெரும் பாவலர் பாரதியின் கட்டளைக்கேற்ப உலகெங்கும் கொட்டிக் கிடந்த அறிவுச் செல்வங்களைத் தாய்மொழியாம் தமிழுக்கு கொண்டு வந்து சேர்த்த பெருமையர் சாமிநாத சர்மா. பல்துறை அறிஞர்; பன்முகப் பார்வையர்; தமிழக மறுமலர்ச்சி சிந்தனையாளர்களில் ஒருவர்; தமிழ் கூறும் நல்லுலகம் புதியதோர் கருத்துக்களம் காண உழைத்தவர்; தமிழுக்கு உலக சாளரங்களைத் திறந்து காட்டிய வரலாற்று அறிஞர்; இவர் ஆற்றிய பணி வரலாற்று ஏடுகளில் பொன்னெழுத்துகளால் பதியத்தக்கது.
தம்மை உயர் தகுதி உடையவர்களாக்கிக் கொண்ட மாந்தர்களைத் தான் வரலாற்று ஆசிரியர்கள் உலகுக்கு வரலாறாக வடித்துத் தந்துள்ளனர். மக்களின் மகிழ்ச்சிக்காக உழைத்த உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை, நூல் தொகுப்பாகத் தமிழ் இளம் தலை முறைக்கும், எதிர்வரும் தலைமுறைக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காகத் தந்துள்ளோம். தமிழ்க் குமுகாயம் வலிமையும், கட்டமைப்பும் மிக்கப் பேரினமாக வளர வேண்டும்; வாழவேண்டும் என்ற உணர்வோடு இந்நூல் தொகுப்புகளை உங்கள் கைகளில் தந்துள்ளோம்.
சாதிப்பித்தும், சமயப்பித்தும், கட்சிப்பித்தும் தலைக்கேறி தமிழ்க் குமுகாயத்தைத் தலைநிமிரா வண்ணம் சீரழித்து வருகிறது. மொழி இன நாட்டுணர்வு குன்றிக் குலைந்து வருகிறது. இச்சீரழிவில் இருந்து தமிழர்களை மீட்டெடுக்க வேண்டும். இழிவான செயல் களில் இளம் தலைமுறையினர் நாட்டம் கொள்ளாத நிலையை உருவாக்குவதற்கும், மேன்மை தரும் பண்புகளை வளர்த்தெடுப்ப தற்கும், அதிகாரப் பற்றற்ற - செல்வம் சேர்க்க வேண்டுமென்ற அவாவற்ற - செயல்திறமையைக் குறிக் கோளாகக் கொண்ட - பகுத் தறிவுச் சிந்தனையை அறிவியல் கண்கொண்டு வளர்த்தெடுக்கும் உணர்வோடு இந்நூல்களைத் தமிழர் களின் கைகளில் போர்க் கருவிகளாகக் கொடுத்துள்ளோம்.
தன் மதிப்பும், கடமையும், ஒழுங்கும், ஒழுக்கமும், தன்னல மின்றி தமிழர் நலன் காக்கும் தன்மையும், வளரும் இளந்தலை முறைக்கு வேண்டும். இளமைப் பழக்கம் வாழ்நாள் முழுவதும் உதவும். விடாமுயற்சி வெற்றி தரும்; உழைத்துக் கொண்டே இருப்ப வர்கள் எந்தச் செயலிலும் வெற்றி பெறமுடியும் எனும் நல்லுரை களை இளம் தலைமுறை தம் நெஞ்சில் கொள்ள வேண்டும் என்ற மனஉணர்வோடு இந்நூல் தொகுதிகள் வெளியிடப்படுகிறது.
சர்மா தாம் எழுதிய நூல்களின் வழியாக மக்களிடம் பேசியவர். மக்கள் இவரின் நூல்களைப் படிக்கும் போது அந்த நூல்களின் கதைத்தலைவனோடு நெருங்கி இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியவர். இவரின் உரைநடை நீரோட்டம் போன்றது. தமிழ் உரைநடைக்குப் புத்துயிர் ஊட்டிப் புதுவாழ்வு அளித்தவர். வேம்பாகக் கசக்கும் வரலாற்று உண்மைகளை சர்க்கரைப் பொங்கலாக தமிழ் குமுகாயத்திற்குத் தந்தவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என்று போற்றப்பட்ட இவரின் நூல்கள் தமிழ்க் குமுகாயத்திற்கு வலிவும், பொலிவும் சேர்க்கும் என்ற தளராத உணர்வோடு தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம்.
முன்னோர்கள் சேர்த்து வைத்த அறிவுச் செல்வங்களைத் தேடித் தேடி எடுத்து நூல் திரட்டுகளாக ஒரு சேர வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தொகுப்பு நூல் பதிப்பகம் என்பதை நிலை நிறுத்தி வருகிறோம். சாமிநாத சர்மா 78 நூல்களை எழுதியுள்ளார். இதில் தலைவர்கள், அறிவியல் அறிஞர்களின் வரலாற்று இலக்கி யங்கள் 26 ஆகும். இதனை 9 நூல் திரட்டுகளாக வெளியிடுகிறோம். ஏனைய நூல்களையும் மிக விரைவில் தமிழ் கூறும் உலகுக்கு வழங்க உள்ளோம்.
தமிழர்கள் பொதுவாழ்வில் நாட்டம் கொள்ள வேண்டும்; உலக அரசியல் அறிவைப் பெறவேண்டும் என்னும் பெருவிருப்பால் இந்நூல் களைக் கண்டெடுத்து நூல்திரட்டுகளாக உங்கள் முன் தந்துள்ளோம். வடமொழியின் ஆளுமை மேலோங்கி இருந்த காலத்தில் இவரின் தமிழ் உரைநடை வெளிவந்த காலமாகும். அந்தக் காலப் பேச்சு வழக்கையே மொழிநடையின் போக்காக அமைத்துக் கொண்டு நூலினை உருவாக்கியுள்ளார். மரபு கருதி உரை நடை யிலும், மொழிநடையிலும், மேலட்டைத் தலைப்பிலும் மாற்றம் செய்யாது நூலை அப்படியே வெளியிட்டுள்ளோம்.
அடிமை உணர்வையும், அலட்சியப் போக்கையும் தூக்கி யெறிந்து உலக அரங்கில் தமிழினம் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இவ்வரலாற்று இலக்கியங்கள் கலங்கரை விளக்காக அமையும் என்று நம்புகிறோம். தலைவர்களின் வரலாற்று இலக்கியங்களைப் படியுங்கள். அவர்களின் வாழ்வை நெஞ்சில் நிறுத்துங்கள். தமிழின மேன்மைக்கும், வளமைக்கும் தம் பங்களிப்பைச் செய்ய முன் வாருங்கள். நூலாக்கத்திற்கு உதவிய அனைவருக்கும் எம் நன்றி உணர்வை தனிப்பக்கத்தில் குறித்துள்ளோம்.
பதிப்பாளர்
நுழையுமுன்…
காரல் மார்க்ஸ்
இங்கிலாந்துப் பெரியார்-பெர்ட்ரண்ட் ரசல் பார்வையில் . . .
- மார்க்சுக்கு, செருமனி ஒரு திட்டத்தை வகுக்கக் கூடிய ஆற்றலை அளித்தது; பிரான்சு அவனை ஒரு புரட்சியாள னாக்கியது; இங்கிலாந்து அவனை ஓர் அறிஞனாகச் செய்தது.
பொதுவுடமைக் கொள்கையின் சிற்பி
- பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய உரத்த சிந்தனை யாளர்களுள் ஒப்பற்றவர்.
- மார்க்சியம் என்னும் மாபெரும் மெய்யியல் கோட் பாட்டை உலகுக்கு ஒளி விளக்காய் தந்த பொதுவுடமைக் கொள்கையின் சிற்பி காரல் மார்க்ஸ்
- வறுமையின் கொடுமையிலும் வாட்ட முறாது வாழ் வாங்கு வாழ்ந்தவனின் செம்மாந்த வரலாறு.
- ஆராய்ச்சி விளக்கைக் கையில் ஏந்திக் கொண்டு அறிவுச் சுரங்கத்தின் ஆழத்திற்கு சென்று அறியாமை இருளில் அமிழ்ந்து கிடந்தவர்களைக் கைதூக்கி விட்டவனின் வரலாறு.
- உலகெங்கும் உள்ள தொழிலாளர் குமுகாயத்திற்குக் கலங்கரை விளக்கமாக,அவர்களின் ஒளிமயமான எதிர் காலத்துக்கு அரிய திட்டம் தீட்டித்தந்தவனின் தெவிட் டாத வரலாறு.
- மதம் மக்களுக்கு அபினி என்று உலகுக்கு உரக்கக் குரல் கொடுத்தவனின் உயர்ந்த வரலாறு.
- மக்களோடு மக்களாக வாழ்ந்து மக்களுக்காகச் சிந்தித்த மாந்தநேய பண்பாள னின் வரலாறு.
ஜென்னி மார்க்சு
- ஜென்னி மார்க்சு செல்வச் செழிப்புள்ள கோமகனின் மகள். பெண்குல அழகோவிமாய்த் திகழ்ந்தவள். மாமேதை மார்க்சை கைபிடிக்கும் முன்னர் வறுமை என்னவென்று தெரியாமல் வாழ்ந்தவள். கைபிடித்த பின்னர் பசியும், பட்டினியும் தொடர்கதையாய் அவள் வாழ்வை அலைக் கழித்த போதும், பேரிடரும் புயல்களும், துன்பத் தொல்லைகளும், கடினமான போராட்டங்களும் உருக் குலைத்த போதிலும் கணவனுக்கு உற்ற துணையாய் உடன் நின்று உரமூட்டிய பெண்குல விளக்கைப் படியுங்கள்.
- வறுமைப் புயல் வாட்டிய பொழுதும், கடன், வட்டி போன்றவை சூறாவளியாக சுழன்றடித்த போதும், பெற்றெடுத்தப் பிள்ளைகள் பலவற்றை வறுமைக்கும் நோய்க்கும் வாரிக்கொடுக்க நேர்ந்த போதும், அடுக் கடுக்காய் துன்பங்கள் வந்து அனலிலிட்ட புழுவாய்த் துடிக்க நேர்ந்த போதும், நிலைகுலையா நெஞ்சுடன் காரல் மார்க்சும் - ஜென்னியும் தங்களுக்குள் காட்டிய பாசமும், நேசமும் படிப்பார் உள்ளத்தை உறைய வைக்கும் வாழ்வியல் சுவடுகளைப் படியுங்கள்.
வாழ்வியல் பதிவுகள்
- ஈகம் செய்யச் சித்தமாய் இரு; உலக நன்மைக்காக உன் நலத்தை துறந்துவிடு என்னும் வரிகள் இந்நூலைப் படிப்பார்க்கு உணர்வூட்டும் உயிரூட்டும் வாழ்வியல் பதிவுகள்.
- மக்களுக்குத் தொண்டு செய்வதைத் தன் வாழ்வியல் கடமையாகக் கொண்டால் உலக வாழ்வு என்பது ஒருவனுக்கு, சுமையாக இராது என்பதை இவன் வரலாற்று தழும்புகள் உணர்த்தும்.
- இவன் கடமைக்கு இலக்கணம் கண்டவன் -தொண்டுக்கு இலக்கணம் வகுத்தவன். கொண்ட கொள்கைக்கும், ஒழுக்கத் திற்கும், நெஞ்சுறுதிக்கும் மலைவிளக்கானவன்.
- வகுப்புப் பிரிவினைகள் இல்லாத குமுகாய அமைப்பே மாந்த இனவிடிவிற்கு வழிவகுக்கும் என்று கூறியவனின் செம்மாந்த வரலாறு.
- பரந்து விரிந்து கொண்டே போகும் மார்க் வரலாறு மக்களின் வரலாறு - உழைக்கும் தோழர்களுக்கு வழிகாட்டும் வரலாறு. அந்த உலகத்தலைவனின் வரலாற்றை சர்மாவின் எழுதுகோல் அழியா மை கொண்டு அருமையாய் வரைகிறது. வாருங்கள். நூலுக்குள் போவோம்.
ஸன் யாட் ஸென்
- முடியரசை மூழ்கடித்து சீனக் குடியரசு அமைத்தவன். தன் மக்களின் நல்வாழ்விற்காக நாள்தோறும் மெய் வருத்தம் பாராது, உலகஅரங்கில் சீனாவின் பெருமையைத் தூக்கி நிறுத்தியவன்.
- இவன் சீனமக்களின் வறுமையிலும், வாழ்விலும் முழுப் பங்கு கொண்டு உழைத்தவன். மேன்மைக்கு வழிகோலி யவன்.
- புரட்சி ஒரு குறிப்பிட்ட வகுப்பினரோ, பிரிவினரோ தரும் ஆதர வால் பெறப்படுவதில்லை என்பதும், குமுகாயத்தின் அனைத்துப் பிரிவினரின் குறிப்பாக பாமரமக்களின் ஒத்துழைப் பின்றி புரட்சியை வென்றெடுக்க முடியாது என்பதும் இந்நூல் நமக்கு உணர்த்தும் உண்மைகள்.
- இவன் பிற்போக்குக் கூடாரங்களின் நிலமாய் இருந்த சீனப் பெருநிலத்தில் முற்போக்கு விதை விதைத்து அதைப் பயிராக்கி அறுவடை செய்தவன்.
- சீனக்குடியரசைக் கட்டி அமைத்த இவன், முடியாட்சிக் காலத்தில் வெளிப்பகையோடும், குடியாட்சிக் காலத்தில் உட்பகையோடும் போராடி வாழ்ந்தவன். இன்னும் எத்தனை? எத்தனையோ? உள்ளம் உறுத்தும் செய்திகள். நூலினுள் நுழையுங்கள்; அவன் வாழ்வை எண்ணுங்கள்.
- எளிய வாழ்வும், உயர்ந்த நோக்கமும், பரந்துபட்ட அறிவும், திறந்த உள்ளமும், களங்கமில்லாத நெஞ்சும் கொண்ட இவன் நாட்டின் ஒற்றுமைக்காகவும், நன்மைக் காகவும் தன்னைத் தேடிவந்த பதவிகளையும் துறந்த அரசியல் துறவி.
- பெருமைக்கும், விடா முயற்சிக்கும், மன உறுதிக்கும், அசையாத நம்பிக்கைக்கும் நிலைக்களனாக இருந்தவனின் வரலாறும், சீனப் பெருமண்ணின் வரலாறும் பின்னிப் பிணைந்த நூல் இது.
- தந்தை தாய் பேண், மூத்தோர் சொல் கேள், தாய்மொழிக் கல்வியின் மேன்மை, பணம் நிலையற்றது, புகழ் நிலையுள்ளது என்னும் பொன்னான மெய்யுரைகள் இந் நூலினுள் காணுங்கள்.
- மக்களோடு மக்களாய்க் கைகோத்துச் சென்று புரட்சியின் தன்மைப் பட்டுப்போகாமல் உரிமைப் போரை முன் னெடுத்துச் சென்று வென்றெடுத்தவன். சீனப் பேரரசு இன்றும் வலிவும், பொலிவும் மிக்க அரசாக உலக அரங்கின் கண்களில் படவைத்தவனின் வரலாறு.
- தன்னம்பிக்கையும், திண்ணிய மனமும், புன்சிரிப்பும் தம்முடைய பண்புகளாகக் கொண்டவனின் வரலாறு. தாய் நிலத்தின் மேன்மைக்காக பாடுபட்ட சன்யாட் சன்னின் வரலாறும், சீனாவின் வரலாறும் பின்னிப் பிணைந்தது. சீனமண்ணின் மேன்மைக்கு விதைப் போட்டவனின் வரலாற்றை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டாமா?
நூலாக்கத்திற்குத் துணை நின்றோர்
_நூல் கொடுத்து உதவியோர்_ _ஞானாலயா_ கிருட்டிணமூர்த்தி வாழ்விணையர், பெ.சு. மணி,
_புலவர்_ கோ. தேவராசன், முனைவர் இராகுலதாசன், முனைவர் இராம குருநாதன், முத்தமிழ்ச் செல்வன் க.மு., ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
_நூல் உருவாக்கம்_ _நூல் வடிவமைப்பு_ செ. சரவணன்
_மேலட்டை வடிவமைப்பு_ இ. இனியன்
_அச்சுக்கோப்பு_ _முனைவர்_ செயக்குமார், மு. கலையரசன், சு. மோகன், குட்வில் செல்வி, கீர்த்தி கிராபிக் பட்டு, விட்டோ பாய்
_மெய்ப்பு_ வே.மு. பொதியவெற்பன், கி. குணத்தொகையன், உலோ. கலையரசி, அ. கோகிலா, கு. பத்மபிரியா, நா. இந்திரா தேவி, இரா. நாகவேணி, சே. சீனிவாசன்
_உதவி_ அரங்க. குமரேசன், வே. தனசேகரன், நா. வெங்கடேசன், மு.ந. இராமசுப்ரமணிய இராசா
_எதிர்மம் (Negative)_ பிராசசு இந்தியா (Process India)
_அச்சு மற்றும் கட்டமைப்பு_ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்
இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . .
சன் யாட் சென்
சன் யாட் சென் (1867-1925) சீனப்புரட்சித் தலைவர். 1894இல் கியூமின் டாங்க் என்ற கட்சியைத் தோற்றுவித்தார். 1911இல் எழுந்த புரட்சியில் மஞ்சு வம்சத்தினரை அரசுக் கட்டிலிலிருந்து இறக்கி னார். சக்ரவர்த்தியைப் பதவி இறக்கும் இயக்கத்தில் மிக முக்கிய பங்கு ஆற்றினார். 1912இல் சீனாவின் இடைக்காலக் குடியரசுத் தலைவரானார். அப்போது சீனாவின் ராணுவப் படைத் தலைவர் யுவான் சிக்காயுக்காகத் தன் பதவியிலிருந்து விலகினார். 1921இல், பிரிக்கப்பட்ட (Breakaway) அரசின் தலைவரானார். பின்னர் நாடு கடத்தப்பட்டு, பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நாடு திரும்பி னார். சீனப் பெருநாட்டை ஒருங்கிணைப்பதற்கு இவர் ஆற்றிய பணிகள் அளவிடற்கரியன. இந்த மாபெரும் மனிதனின் நாட்டுப் பற்றுக்காகவும், குடியாட்சிப் பண்புக்காகவும், சமூக சீர்திருத்தங் களுக்காவும் தேசியவாதிகளாலும், சீனப் பொதுவுடைமைவாதி களாலும் தலைவராக ஏற்றுக்கொள்ளப் பெற்றார்.
பிரசுராலயத்தின் வார்த்தை
மஞ்சூ ஆட்சிக்கும் அந்நியர் சூழ்ச்சிக்கும் கட்டுப்பட்டுக் கிடந்த சீனாவின் புனருத்தாரணத்திற்காக, தன் ஆயுள் முழுவதையும் அர்ப்பணம் செய்த மாவீரன் ஸன் யார் ஸென்; சீனக் குடியரசின் தந்தை என்று இன்று போற்றப்படுகிறான்; என்றும் போற்றப் படுவான்.
ஸன் யாட் ஸென் 1866ஆம் வருஷம் நவம்பர் மாதம் பிறந்து 1925ஆம் வருஷம் மார்ச்சு மாதம் காலமானான் என்று சொல்லி விடுவது சுலபம். ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை இந்த இரண்டு வரிகளில் சொல்லி முடித்து விடலாம். ஆனால் காந்தியைப் போன்ற, வெனினைப் போன்ற, ஸன் யாட் ஸென்னைப் போன்ற மகான்களின் வாழ்க்கையை அப்படிச் சுருக்கமாகச் சொல்லி முடித்துவிட முடியாது. ஏனென்றால் இவர்களுடைய வாழ்க்கை, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. இவர்களுடைய வாழ்க்கையை யொட்டிய நிகழ்ச்சிகளும், இவர்களுடைய நாட்டை யொட்டிய நிகழ்ச்சிகளும் பின்னிக் கிடக்கின்றன; ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் மாதிரி யென்று சொல்லலாம். இவர்களைப் போல் பலர், ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு நாட்டில் தோன்றி மக்களுக்கு நல்வழி காட்டியிருக்கிறார்கள். இவர்களை மகா புருஷர்களென்று பிற்கால உலகம் அழைக்கிறது.
இந்த மகா புருஷர்களை, குறிப்பிட்ட சில காரியங்களைச் செய்து முடிப்பதற்காக, கடவுளால் அனுப்பப்பட்ட தூதர்க ளென்று சொல்ல வேண்டும். இவர்கள் வேலை முடிந்ததும், கடவு ளால் திருப்பி அழைத்துக் கொள்ளப் படுகிறார்கள்.
ஸன் யாட் ஸென்னை, இத்தகைய மகா புருஷர்களில் ஒருவனென்று சீனர்கள் மதிக்கிறார்கள். இவனுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டமும் போராட்டம் நிறைந்ததாக இருந்திருக்கிறது. புரட்சி மேல் புரட்சி; தோல்வி மேல் தோல்வி; ஆயினும் முயற்சி மேல் முயற்சி. இந்த முயற்சிகளூடே எத்தனை ஏமாற்றங்கள்! எத்தனை வஞ்சகங்கள்! எத்தனை மாறுவேடங்கள் பூணவேண்டிய அவசியம் ஏற்பட்டது! எத்தனை தடவை அஞ்ஞசாத வாசம்! மனைவி மக்களைப் பிரிந்து வாழ்ந்த காலந்தான் எவ்வளவு!
ஆனால் ஸன் யாட் ஸென் இவைகளையெல்லாம் பொருட் படுத்த வில்லை; முயற்சியில் சளைக்கவுமில்லை. கடைசியில் வெற்றியே கண்டான். மஞ்சூ ஆட்சியை ஒழித்து, குடியரசை நிலை நாட்டினான்.
இந்த மகா புருஷனின் வாழ்க்கையைக் கோவைப்படுத்தி. ரசமான சம்பவங்கள் விட்டுப்போகாமல் தொகுத்து, புரிந்து கொள்ளச் சிரமப்படும் சீன உச்சரிப்புக்களைக் கேட்டு வாசகர்கள் அலுத்துப் போகாதபடி போதுமான விளக்கங்கள் கொடுத்து, ஒரு துப்பறியும் கதையைப் படிப்பதுபோல் வாசகர்களை இழுத்துச் செல்லும் நல்ல ஓட்டமான நடையில் ஆசிரியர் இந்நூலைச் சித்தரித்திருக்கிறார். தமிழில் ஸன் யாட் ஸென்னின் வாழ்க்கை வரலாறு வெளிவருவது இதுவே முதல் தடவையாகும்.
வாசகர்களுக்கு என்னும் முன்னுரைப் பகுதியை ஊன்றிப் படிக்குமாறு வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
ஸன் யாட் ஸென்னின் இந்த வாழ்க்கை வரலாற்றை யடுத்து, அவனுடைய சொற்பொழிவுகளடங்கிய சுதந்திரத்தின் தேவைகள் யாவை? என்ற நூலும் சீனாவின் வரலாறு என்ற நூலும் பி.ஜோ.பி. வெளியீடுகளாக வெளிவருகின்றன வென்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம்
வாசகர்களுக்கு
புரட்சியென்பது, யாருக்கும் தெரியாமல் யாரும், எதிர்பாராத நிலையில், திடீரென்று தோன்றி, சிறிது காலம் பேயாட்டம் ஆடிவிட்டு, திடீரென்று மறைந்து போகிற ஒரு பூதமல்ல; சரித்திரக் கிரமத்தில் வந்து போகும் ஒரு தேவதை. அஃது, உலுக்கிக் கொடுக்க வேண்டியவர்களை உலுக்கிக் கொடுத்துவிட்டும், உதறித் தள்ள வேண்டியவர்களை உதறித் தள்ளிவிட்டும், அவரவருடைய சுய நிலையையும் சுய தருமத்தையும் உணர்த்திவிட்டும், நின்று நிதான மாகச் சென்று விடுகிறது.
தொலைநோக்கும் தொலைக் கேள்வியுமுடையவர்கள், புரட்சியை ஒரு தேவதையாகவே கருதுகிறார்கள் அவ்விரண்டு மில்லாதவர்கள் அதனை ஒரு பூதமாகவே கருதுகிறார்கள்.
முன்னவர், அதன் வருகையை முன்கூட்டித் தெரிந்து கொண்டு, அதற்குக் காணிக்கை செலுத்தத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள் கின்றனர். அது வந்ததும்,. தங்களாலியன்ற காணிக்கையைத் தயங்காமல் செலுத்திவிடுகின்றனர். செலுத்தியதன் பயனாக இதுகாறும் வாழ்ந்தார் எண்ணிலர்; இனி வாழ்வாரும் எண்ணிலர்.
பின்னவர், அதன் வருகையை, மிதந்து வரும் காற்று தெரி வித்தாலே போதும்; அஞ்சி அஞ்சிச் சாகின்றார்; நெடுங்காலமாகத் தாங்கள் அனுபவித்து வந்த உடைமைகளும் சலுகைகளும் பறி போய்விடுமே என்ற அச்சத்திற்கு அடிமைகி விடுகின்றனர்; அந்த அச்சத்தினால் உந்தப்பட்டு, அதன் வருகையைத் தகைந்து நிற்கின் றனர். ஆனால் அஃது-அந்தப் புரட்சி-இவர்களைப் பின்னே தள்ளி விட்டு முன்னே வந்து விடுகிறது. அப்பொழுது இவர்களுக்கு அஞ்சி அஞ்சிச் சாவதைத் தவிர வேறொன்றும் தெரிவதில்லை. இதுகாறும் இப்படி அஞ்சி அஞ்சிச் செத்தாரும் பலர்; இனிச் சாவாரும் பலர்.
சரித்திரக் கிரமத்தில், ஆதி காலந்தொட்டு நாளதுவரை உலகத்துப் பல நாடுகளிலும் எத்தனை எத்தனையோ விதமான புரட்சிகள் நடைபெற்றிருக்கின்றன. இவற்றினால் மக்கள் எத்தனை எத்தனையோ விதமான அனுபவங்களையும், அனுகூலப் பிரதிகூலங் களையும் அடைந்திருக்கிறார்கள். ஒவ்வொரு புரட்சியும், அந்தந்தக் காலத்துக் கண்ணோட்டத்திற்குப் புதுமையாகவே இருந்து வந்திருக்கிறது.
இப்படி நூற்றாண்டுகள் தோறும் பலதரப்பட்ட புரட்சிகள் நடைபெற்று வந்தபோதிலும், இந்த இருபதாம் நூற்றாண்டு முற்பாதியில் நடைபெற்ற புரட்சிகளனைத்தையும் கூட்டி வைத்து நடுநோக்கோடு பார்ப்போமானால், இவை, ஒருவித தனித்தன்மை வாய்ந்தனவாக இருப்பது புலப்படும். எப்படி?
இந்தப் புரட்சிகள் பலவும், ஏதோ ஒன்றன் நன்மையையோ, யாரோ ஒரு சிலரின் நன்மையையோ நோக்கமாகக் கொள்ளாமல், எல்லா மக்களுடைய நன்மையையும் நோக்கமாகக் கொண்டு நடைபெற்றன. இதனால் மக்களிற் பெரும்பாலோர் இவற்றில் உற்சாகத்துடன் பங்கு கொண்டனர்.
மற்றும் இந்தப் புரட்சிகளுக்கு அவ்வப்பொழுது புதிய புதிய சாதனங்கள் கிடைத்து வந்தபடியால், இவை, இடத்தைக் கடந்து வேகமாகப் பரவின; காலத்தைக் கடந்து சீக்கிரமாக வளர்ந்தன.
தவிர, இந்தப் புரட்சிகளில் பெரும்பாலானவற்றிற்கு, ஒரு மகா யுத்தம் தூண்டு கருவியாயிருந்தது; மற்றொரு மகாயுத்தம் உரமா யமைந்தது.
மேலும் இந்தப் புரட்சிகளின் விளைவாக, நெடுங்காலம் நிலை பெற்றிருந்த ஆட்சி முறைகள், மக்கள் அனுசரித்து வந்த பழக்க வழக்கங்கள், மனித வாழ்க்கையை மதிப்பீடு செய்ய அமைந்திருந்த உரைகற்கள், மதம், கடவுள், சமுதாயம் இவை சம்பந்தமாக நிலவி வந்த நம்பிக்கைகள், இன்ன பலவற்றிலும் பெருமாற்றங்கள் ஏற்பட்டன. எந்த ஒன்றையும் புதியதொரு கோணத்தில் வைத்துப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் மக்களிடையே வளர்ந்து வரத் தொடங்கியது. இந்த ஆவலை நிறைவேற்றி வைக்கக்கூடிய வகையில் வாய்ப்புக்களும் அதிகரிக்கலாயின.
இந்த விளைவுகளுக்குக் காரணம் இவை அடைந்த வெற்றியே. வெற்றி கிட்டியிராவிட்டால் இந்த விளைவுகள் உண்டாயிரா தல்லவா? சரி; இந்த வெற்றிக்குக் காரணம்? இவற்றிற்கு அமைந்த தலைமையே.
தலைமை தாங்கி நின்றோர் பல தரத்தினர்; பல திறத்தினர். பொதுவாக இவர்கள், தன்னலம் பேணாதவர்களாகவும், முயற்சியில் சலிப்புக் காட்டாதவர்களாகவும், உரமான நெஞ்சுடையவர்களாக வும், வெற்றியில் நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருந்தபடியா லும், தங்களுக்குத் தோன்றிய வகையில் ஒரு வித ஒழுங்கு முறையைக் கடைப்பிடித்து வந்தமையாலும் வெற்றியடைந்தனரென்று சொல்ல வேண்டும்.
ஆனால் இவர்களிற் சிலர் - ஆம்; விரல் விட்டு எண்ணக்கூடிய இரண்டு மூன்று பேர்தான்-தாங்கள் அடைந்த வெற்றியை மக்கள் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தாமல், தங்கள் சொந்த முன்னேற்றத் திற்குப் பயன்படுத்திக்கொள்ள முனைந்தமையாலும், அடைந்த வெற்றியில் பணிவு காணாமல் வெறி கொண்டமையாலும், சர்வாதிகார மென்னும் தீக்குழியை நாடிச் சென்று அதில் வீழ்ந்து மடிந்து போயினர். சர்வாதிகாரமானது, எட்ட நின்றாரையே சுட்டுவிடுந் தன்மையது; கிட்ட வந்தாரை விட்டுவிடுமோ?
இங்ஙனம் மடிந்து, மக்களுடைய மறதியின் ஆழத்திலே புதைந்து போய்விட்ட இரண்டு மூன்று பேரைத் தவிர, மற்றத் தலைவர்கள், புரட்சி நடத்தி வெற்றி கண்டதன் விளைவாக, அந்தந்த நாட்டு மக்களின் நினைவிலே என்றும் வாழ்ந்து கொண்டிருக் கின்றனர்.
இந்தத் தலைவர்களுக்குத் தலையாயவர்களெனக் கருதப் படக்கூடிய தகுதி படைத்தவர் மூவரென்று சொல்லலாம். இந்த மூவர் கடைப்பிடித்த கொள்கைகளையும் கையாண்ட முறைகளை யும் ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள்கூட இவர்களுக்குரிய மதிப்பைக் கொடுக்கத் தயங்குவதில்லை. இதனால் இந்த மூவருடைய புகழ், இடத்தின் எல்லையையும் காலத்தின் எல்லையையும் கடந்து நிற்கிறது.
2. ருஷ்யாவின் நிக்கோலாய் லெனின்-1870-1925; 3. இந்தியாவின் மோகனதா கரம்சந்த் காந்தி - 1869 - 1948. இம் மூவரையும் சில நோக்கு நிலைகளில் வைத்துக் காண முற்படுவோம்.
மூவரும் புரட்சி நடத்தி வெற்றி கண்டது, சில வருஷங்கள் முன்னும் பின்னுமா யிருந்தபோதிலும், மூவரையும் ஏறக்குறைய சம காலத்தவ ரென்று சொல்லலாம். இவர்கள் நடத்திய புரட்சிகள், இடத்தாலும் காலத்தாலும் நடைமுறையாலும் வேறுபட்டிருந்த போதிலும், ஒன்றினால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றொன்றில் பிரதி பலிக்காமற் போக வில்லை.
இவர்கள் செயலாற்ற அமைந்த இடங்கள் - சீனாவும் ருஷ்யாவும் இந்தியாவும்-அகன்ற நிலப்பரப்புடைய நாடுகள். இவற்றில் வசிக்கும் மக்களுடைய பேச்சு மொழி முதல் நாகரிக பரம்பரை வரை எல்லாம் வேறு வேறு. அது மட்டுமன்று; ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் வேறு வேறு மதத்தினரும் வேறு வேறு கலாசாரத்தைப் பின்பற்றுகிறவர்களுமான மக்கள் வசித்துக் கொண்டிருந்தார்கள். இத்தகைய பலதரத்து மக்களுக்கு இவர்கள்-இந்த மூவர்-வழிகாட்டிய தலைவர்களாயிருந்தார்கள்; ஆனால் மக்களினின்று பிரிந்து, மக்களினின்று வேறுபட்ட தலைவர்களா யிருந்து வழிகாட்டவில்லை; மக்களோடு மக்களாய் இருந்து வழி காட்டினார்கள்; மக்களோடு கைகோத்துக் கொண்டு வழி நடந்து சென்றார்கள்.
மூவரும், அவரவருடைய தாய் நாட்டின் பழமைக்குப் பெரு மதிப்புக் கொடுத்தார்கள்; அதே சமயத்தில் புதுமையை நம்பிக்கை யோடு வரவேற்றார்கள்.
மூவரும், புரட்சி நடத்தி வெற்றி பெற்றதோடு, தாங்கள் தொடர்ந்த காரியம் முற்றுப் பெற்றுவிட்டதாகக் கருதவில்லை. அதாவது, புரட்சியினால் ஏற்பட்ட வெற்றியை ஆரம்ப நிலையாகத் தான் கொண்டார்கள். முடிந்த நிலை மக்களின் நல்வாழ்வு. ஆனால் அந்த முடிந்த நிலை, முடிவு பெறாத நிலை என்பதை இவர்கள் செவ்வனே உணர்ந்திருந்தார்கள். இதனால், இவர்கள் நடத்திய புரட்சிகள், பொருளாதாரத் துறையினின்று பிரிந்த வெறும் அரசியல் புரட்சியாக இருக்கவில்லை. இரண்டு துறைகளும் இணைந்து நின்ற ஒரு மையத்தைச் சுற்றித்தான் இவர்களுடைய புரட்சிகளும் போராட்டங்களும் நடைபெற்றன.
இந்த மூவரில் ஸன்னையும் லெனினையும் தனியாகப் பிரித்து வைத்துக்கொண்டு, இருவருக்குமிடையில் காணப்பெறும் ஒற்றுமை யான அமிசங்களைப் பற்றிச் சில வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, பிறகு காந்தியைப் பற்றிச் சிறிது பேசுவோம்.
ஸன்னும் லெனினும், வாழ்க்கைப் பாதையில் ஐம்பதாவது மைற் கல்லைக் கடந்தவர்கள்; ஆனால் அறுபதாவது மைற்கல்லை யடையு முன்னர் மூச்சை விட்டவர்கள். இருவரும், முடியாட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்கள்; அதே சமயத்தில், மக்களுக்காக மக்களாட்சியை நிலை நாட்டியவர்கள். ஆனால் அந்த ஆட்சியின் பயனை மக்கள் பூரணமாக அனுபவித்துப் பார்ப்பதற்கு முன்னரே இவர்களுடைய வாழ்க்கை முற்றுப் பெற்றுவிட்டது. இருவரும் லட்சியத்திற்கே முக்கியத்துவம் கொடுத் தார்கள்; ஆனால் அதனை யடையும் மார்க்கத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வில்லை.
பத்தொன்பதாவது நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாவது நூற்றாண்டின் தொடக்கத்திலும் சீனாவிலும், ருஷ்யாவிலும் முறையே வசித்த மக்கள், அதிகார வர்க்கத்திற்கு அஞ்சி அஞ்சித் தினந்தோறும் செத்துப் பிழைத்து வந்தார்கள்; உழைத்து உழைத்து ஊதியத்தை மற்றவர்களுக்குக் கொடுத்து வந்தார்கள். இதனால் இவர்களுடைய வயிறும் வாயும் கட்டுண்டு கிடந்தன. பிற்போக்குச் சக்திகளுக்கு ஏற்கனவே விளைநிலமாயிருந்த இவ்விரு நாடுகளுக்கும் ஐரோப்பிய வல்லரசுகள், அந்தப் பிற்போக்குச் சக்திகள் செழுமை யாக வளர்வதற்குத் தேவையான உரத்தை அவ்வப்பொழுது அளித்து உதவின. இதில் போட்டி வேறே.
இந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில்தான், ஸன்னும் லெனினும், புரட்சி இயக்கங்களைத் தோற்றுவித்து நடத்தினார்கள். இங்ஙனம் தோற்றுவித்து நடத்திய புரட்சிகள், திரும்பத் திரும்ப தோல்வியே யடைந்துவந்தன. ஆயினும் இவர்கள் சலிப்புக் கொள்ள வில்லை; சோர்வு காட்டவில்லை; திரும்பத் திரும்ப புரட்சி முயற்சி களில் ஈடுபடவே செய்தார்கள். இதனால் இருவருக்கும், வாழ்க்கை யின் பெரும் பகுதியை நாடோடி வாழ்க்கையாகவே கழிக்கும்படி நேர்ந்தது. இருவரும் ஒளிந்து ஒளிந்துதான் தங்கள் தாய் நாட்டுக்கு அவ்வப்பொழுது வந்து போனார்களே தவிர, பெரும்பாலும் வெளி நாடுகளிலிருந்து கொண்டே புரட்சி இயக்கங்களை நடத்தி வந்தார்கள். புரட்சிப் பிரசாரத்திற்காக இவர்கள் தொடங்கி நடத்திய பத்திரிகைகள் கூட வெளிநாடுகளிலிருந்துதான் வெளிவரவேண்டி யிருந்தது. இருவருக்கும், உயிர், மயிரிழையில் தப்பிய சந்தர்ப்பங்கள் பல ஏற்பட்டிருக்கின்றன. இந்தச் சந்தர்ப்பங்களில் இவர்களுடைய மனைவிமார்களின் பாதுகாப்பும் ஒத்துழைப்பும் இவர் களுக்குத் துணையாய் நின்றிருக்கின்றன. இருவருக்கும் விசுவாசத் தோடு பின்பற்றக்கூடிய ஒரு கோஷ்டி அமைந்தது. இந்த கோஷ்டியைச் சேர்ந்தவர்களிற் பெரும்பாலோர், மேற்படிப்புக்காக வெளிநாடு களுக்கு - ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குச் சென்று படித்துப் பட்டம் பெற்றுத் திரும்பிய இளைஞர்களாகவே இருந்திருக்கிறார்கள். இவர்கள், தங்கள் தலைவர்களிடம்-ஸன், லெனின் இவர்களிடம்-தங்களுடைய சர்வத்தையும் ஒப்புக் கொடுத்து விட்டார்கள். அவ்விருவருடைய தியாக சக்தியானது, இவர்களைத் தழலிலிட்ட தங்கம் போலாக் கியது.
ஸன்னும் லெனினும், அரசாங்கத்தின் பலாத்கார சக்தியை எதிர்த்து நிற்க, மக்களின் பலாத்கார சக்தியைப் பயன்படுத்தி னார்கள். இதில் சிறிதுகூட தயக்கம் காட்டவில்லை.
இருவருக்கும், ஓயாத உழைப்பின் காரணமாக, வாழ்க்கையின் இறுதிப் பகுதியில் உடல் நலிவு ஏற்பட்டது; ஆனால் அதைப் பொருட் படுத்தாமல் கடைசி மூச்சு இருக்கிறவரை உழைத்தே தீர்த்தார்கள். அந்த உழைப்பிலேதான் இவர்களுக்கு திருப்தி ஏற்பட்டது; அமைதி கிடைத்தது.
தொடங்கிய புரட்சியை வெற்றிகரமான முடிவுக்குக் கொண்டு வந்த விஷயத்தில் ஸன், லெனினுக்கு முன்னோடியாக இருந்திருக்கின்றான். இப்படிச் சொன்னதனால், ஸன்னின் புரட்சி முயற்சிகளை லெனின் அப்படியே பின்பற்றினானென்று கருதிவிடக் கூடாது. இருவருடைய முயற்சிகளும், அவரவருடைய நாட்டு மக்களுக்கு ஏற்பட்டிருந்த பரம்பரையான எண்ணங்கள், அறிவு வளர்ச்சி, மனப்பக்குவம், வாழ்க்கைத் தரம் இவைகளை யொட்டித் தொடங்கப்பட்டு, அவ்வப்பொழுது அமையும் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் தீவிரத்தையோ தணிவையோ முறையே கொண் டிருந்தன. கால அளவில்தான், ஸன்னை, லெனினுக்கு முன்னோடி யென்று சொல்லலாம். 1911ஆம் வருஷம் அக்டோபர் மாதம் சீனாவில் புரட்சி. சரியாக ஆறு வருஷம் கழித்து அதே அக்டோபர் மாதம் - 1917ஆம் வருஷம் அக்டோபர் மாதம் - ருஷ்யாவில் புரட்சி. இந்த இரண்டு புரட்சிகளும் வெற்றியடைந்த காலத்தில் இரண்டு தலைவர்களும்-ஸன்னும்-லெனினும்-புரட்சி தலத்தில், அதாவது தாய்நாட்டில் இருக்கவில்லை; வெளிநாட்டில் இருந்தார்கள்; பிறகே வந்து, புரட்சியில் நேரடியாகப் பங்குகொண்டு வெற்றி கண்டவர் களின் விருப்பத்திற் கிணங்க, தலைமைப் பதவியை ஏற்றுக் கொண் டார்கள்.
ஆனால் இருவரும் புரட்சி முயற்சிக்கு வித்திட்டது ஒரே வருஷத்தில்தான். 1895ஆம் வருஷம் ஸன், முற்போக்குச் சீனர் சங்கத்தைத் தோற்றுவித்தான். அதே வருஷத்தில் லெனின், தொழிலாளி வர்க்கத்தின் விமோசனத்திற்காகப் போராடும் சங்கத்தைத் தொடங்கினான். அதே வருஷத்தில் ஸன், மஞ்சூ அரசாங்க ஆட்களின் கைக்கு அகப்படாமல் தப்பி வெளிநாட்டுக்குச் சென்று விட்டான்; லெனினோ, ஜார் அரசாங்க ஆட்களின் கைக்கு அகப்பட்டுச் சிறை சென்றான்.
ஸன்னின் புரட்சி முயற்சி வேகத்தையடைந்து வெற்றிக் கோட்டை எட்டிப் பிடிப்பதற்கு சீனாவுக்குள் ஏற்பட்ட ஒரு சூழ்நிலை உந்து கருவியாயிருந்தது. ஏறக்குறைய 1908ஆம் வருஷத்தி லிருந்து சீனாவில் வெள்ளப் பாழும் கொடிய பஞ்சமும் ஏற்பட்டு வந்தன. மஞ்சூ அரசாங்கத்தின் பிற்போக்கான முறைகள், மக்களைப் பல அவதிகளுக்குட் படுத்தின. இந்த நிலையில், மக்கள், பொறுமையின் எல்லைக் கோட்டைக் கடந்து வந்து, புரட்சிக் கொடியின்கீழ் ஒன்றுபட்டு நின்றார்கள்; ஸன்னின் தலைமையில் வெற்றி கண்டார்கள்.
லெனினின் புரட்சி முயற்சி வேகமடைந்து வெற்றிக் கோட்டை எட்டிப் பிடிப்பதற்கு, ருஷ்யாவுக்குப் புறத்தே தோன்றி வளர்ந்த ஒரு சூழ்நிலை உந்து கருவியாயிருந்தது. அதுதான் முதல் உலக மகா யுத்தம். 1914ஆம் வருஷம் ஸெர்வியாவில் சிறு பொறி யாகத் தோன்றி, சொற்ப காலத்திற்குள் பெரு நெருப்பாகப் பரவிய இந்தப் பெரும்பேரில் ருஷ்யா இறங்கியிராவிட்டால், அதனால் ருஷ்ய மக்கள் சொல்லொணாத கஷ்டங் களை அனுபவித்திரா விட்டால், லெனினின் புரட்சி முயற்சி, விரைவிலே வெற்றியடையக் கூடிய அளவுக்கு வேகத்தைப் பெற்றிருக்குமா என்ற கேள்வி எழுமானால், அதில் ஆச்சரியமொன்று மில்லை. 1895ஆம் வருஷத்தி லிருந்து சிறுகச் சிறுக அடியெடுத்து வைத்து வந்த புரட்சி சக்தி யானது, 1914ஆம் வருஷத்திற்குப் பிறகு வேக நடைபோட்டு
1917ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வெற்றிக்கோட்டை எட்டிப் பிடித்த வரலாற்றை, ருஷ்யாவின் வரலாற்றில் பரக்கக் காண்கிறோ மல்லவா?
இங்ஙனம் ஸன்னுக்கும் லெனினுக்கும் ஒற்றுமையான அமிசங்கள் பல இருந்ததற்கேற்றாற்போல், இருவருக்கும் நெருங்கிய மன உறவு இருந்தது. இருவரும் நேரில் சந்தித்துப் பழகவில்லை யாயினும், ஒருவரையொருவர் நன்கு அறிந்துகொண்டிருந்தார்கள்; பரபரம் ஒருவர் மீது ஒருவர் மதிப்பு வைத்திருந்தார்கள். இருவரும் மரணமடைந்த சிறிது காலத்திற்குப் பிறகு, இரண்டு நாடுகளும், அரசியல், சமுதாய, பொருளாதார அமைப்புக்களைப் பொறுத்த மட்டில் ஏறக்குறைய ஒரே பார்வையுடையனவாய் கைகோத்து நிற்கும் என்பதைக் குறிப்பாலுணர்த்துவதுபோல், ஸன்-லெனின் உறவு இருந்ததென்று சொல்லலாம்.
இந்தியாவில் நடைபெற்ற புரட்சி, பொதுவாக மற்ற நாடு களில் நடைபெற்ற புரட்சிகளினின்று - சிறப்பாகச் சீனாவிலும் ருஷ்யாவிலும் நடைபெற்ற புரட்சிகளினின்று - வேறுபட்டது. உலகம் கண்டிராத பெரும்பற்றான புரட்சியென்று இதனைச் சொல்ல வேண்டும்.
சீனாவிலும் ருஷ்யாவிலும் நடைபெற்ற புரட்சிகளுக்கு எதிரியாக நின்றது, சுயநாட்டிலேயே பரம்பரையாக நிலவி வந்த முடியாட்சி; அந்த ஆட்சியின் உருவமாக இருந்து குரலாகப் பேசி வந்த அரச வமிசம். இந்தியாவில் நடைபெற்ற புரட்சிக்கோ எதிராக நின்றது ஓர் அந்நிய ஆதிக்கம். வியாபாரத்திலே தோன்றி, தொழிற் பெருக்கத்திலே வளர்ந்து, அதிகார எல்லையிலே வந்து நின்று கொண்டு விட்ட இந்த ஆதிக்கத்தை, எவ்விதத்திலும் துன்புறுத் தாமல், அதே சமயத்தில் சுயமாகத் துன்பத்தை அனுபவித்தாவது அப்புறப்படுத்தி விடுவதை நோக்கமாகக் கொண்டது இந்தப் புரட்சி. இதனால் இது சாத்துவிகப் புரட்சி என்று பெயர் பெற்றது.
இந்தச் சாத்துவிகப் புரட்சி, திடீரென்று வந்த ஓர் ஆவேசத்தி லிருந்தோ, அந்நிய ஆதிக்கத்தின் மீது உண்டான ஓர் ஆத்திரத்தி லிருந்தோ, முன்கூட்டித் திட்டம் வகுத்துக் கொள்ளாத ஓர் அவசர நிலையிலிருந்தோ தோன்றியதல்ல; அந்நிய நாட்டில், அதாவது தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற சத்தியாக்கிரகம் என்னும் சாத்துவிகப் போரினால் ஏற்பட்ட அனுபவத்திலிருந்து தோன்றியது. அதுமட்டுமன்று; அந்நிய ஆதிக்கத்தின் விளைவாக, பாரத சமுதாய உடலிலே புகுந்து பரவி வந்த ஆன்மார்த்தத் துறையின் வரட்சி, பொருளாதாரத் துறையின் சீரழிவு, சொந்தமல்லாத ஒரு நாகரிகத்தின் மீது மோகம், இப்படிப்பட்ட நோய்களை அகற்றி, பாரத நாட்டின் பரம்பரையான தருமத்தையும் நாகரிகத்தையும் நிலைபெறச் செய்ய வேண்டுமென்ற இயற்கையான விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டது.
இத்தகைய புரட்சியைத் துவக்கி, நடத்தி, வெற்றி கண்ட காந்தி, ஆயுத பலத்தைத் துணையாகக் கொள்ளவில்லை; அன்பை யும் அஞ்சாமையையும் துணையாகக் கொண்டிருந்தார். சத்தியமும் அஹிம்சையும் இவருக்கு இரு கவசங்களாயிருந்தன. இவர் எந்த ஆதிக்கத்தை எதிர்த்து நின்றாரோ அந்த ஆதிக்கத்தின் பலவீனமான சந்தர்ப்பத்தை, தாம் வெற்றியடைவதற்குச் சாதகமான சந்தர்ப்பமாக உபயோகித்துக் கொள்ளவில்லை. மற்றும் இவர், லட்சியத்தின் தூய்மையில் எப்படி நம்பிக்கையுடையவராயிருந்தாரோ அப்படியே அந்த லட்சியத்தையடையும் மார்க்கமும் நேரியதாய் இருக்க வேண்டு மென்பதில் உறுதியுடையவராயிருந்தார். தனி மனித னுடைய வாழ்க்கை யிலாகட்டும், சமுதாய வாழ்க்கையிலாகட்டும், அறமே அடிப்படையாக நிலவவேண்டுமென்ற கோட்பாட்டை இவர் எழுத்துப் பிசகாமல் கடைப்பிடித்து வந்தார். இதனால் இவர் வாழ்க்கையே ஓர் உபதேசமாக இருந்தது. எனவே இவர் புரட்சி நடத்திய காலத்திலும், அந்தப் புரட்சி வெற்றியடைந்த போழ்தும், உலகம் பூராவும், புதுமையோ புதுமையென்று வியப்புக்குரல் எழுப்பியதில் வியப்பேதுமில்லை.
ஸன்னும் லெனினும் புரட்சி நடத்தி வெற்றி கண்ட பிறகு அமைந்த குடியரசுக்கு, முறையே தலைமை தாங்கினார்கள். அப்படித் தாங்கியது, பதவி மோகத்தினாலென்று சொல்லமுடியாது; சொல்வது அவர்களுக்கு அபசாரஞ் செய்வதாகும். ஆனால் அவர்கள் பதவி ஏற்க மறுக்கவில்லை. காந்தியோ பதவி ஏற்க மறுத்தேவிட்டார்; அதுமட்டுமன்று; குடியரசு ஏற்பட்ட காலத்தில் நடைபெற்ற கோலாகல விழாவில் கலந்து கொள்ளவும் இசையவில்லை. ஏனென் றால், குடியரசே லட்சியமல்ல வென்பதையும், மக்கள் சுயநிலை யடைந்து நல்வாழ்வு காண்பதற்கு இந்தக் குடியரசு அமைந்தது ஒரு சாதனமே என்பதையும் இவர் நன்கு உணர்ந்திருந்தார். இனியே மக்களின் சக்தியனைத்தையும் ஒன்று திரட்டி, உருப்படியான வேலைகளில் திருப்பவேண்டுமென்று இவர் கருதினார். வேலையின் துவக்கத்திலேயே மகிழ்ச்சி வெறியில் ஈடுபடலாகாது என்பதைக் குறிப்பாலுணர்த்துவதுபோலவே குடியரசு ஆரம்ப விழாவில் இவர் கலந்து கொள்ளாமலிருந்தது இருந்தது.
ஸன் 1912ஆம் வருஷம் ஜனவரி மாதம் குடியரசுத்
தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்டானாயினும், அதனைச் சொற்ப காலத்திற்குள், நாட்டின் நலன் கருதித் துறந்து விட்டான். நாலைந்து வருஷங்களுக்குப் பிறகு அதாவது யுவான் ஷி காயின் மரணத்திற்குப் பிறகு, தெற்குப் பகுதியில் அமைந்த அரசாங்கத் திற்குத் தலைவனாகத் தெரிந்தெடுக்கப்பட்டு, அந்தப் பதவியை தன்னுடைய கடைசி காலம் வரை வகித்துவந்தானென்றாலும், பதவியில் இன்பம் நுகர்ந்தானென்றோ, பெருமையடைந்தா னென்றோ சொல்ல முடியாது. 1912ஆம் வருஷம் தன் பதவியைத் துறந்த பிறகு, பொது வாழ்வினின்று ஒதுங்கி விடாமல் நாட்டின் புனர் நிர்மாண வேலையில் எப்பொழுதும் போல் உற்சாகத்துடன் இறங்கினான். இன்னும் சொல்லப் போனால், முடியாட்சிக்கு விரோத மாகப் புரட்சி நடத்திய காலத்தில் இவனுக்கேற்பட்ட அனுப வங்களைக் காட்டிலும், குடியரசு அமைந்த பிறகு இவனுக்கேற்பட்ட அனுபவங்கள் சிறிது கசப்பாகவே இருந்தன. முடியாட்சி காலத்தில் இவன் வெளிப் பகைமையோடு போராடவேண்டியிருந்தது; குடியரசு காலத்தில் உட்பகைமையோடு போராடவேண்டியிருந்தது. ஆக, இவனுடைய வாழ்க்கை போராட்ட மயந்தான் என்றாலும் கடைசி மூச்சு இருக்கிறவரை, உடற்சோர்வு, மனச்சலிப்பு ஆகிய எதையும் பொருட்படுத்தாமல், மக்களின் நல்வாழ்வு என்ற குறிக் கோளை நோக்கியே நடந்தான்.
லெனினும், பதவிக்காகப் பதவியை வகித்து வரவில்லை. நாட்டு நலனுக்காகப் பயன்படுத்தக்கூடிய ஒரு கருவியாகவே பதவியைக் கருதினான். அப்படியே அதைப் பயன்படுத்தினான். நாட்டு நலனையும், கட்சியின் கட்டுக்கோப்பையும் குலைக்கின்ற முறையில் எத்தகைய சிறு முளை தோன்றினும், அதனைத் தோற்று வித்தவர் யாராயிருப்பினும், அந்த முளையைக் கிள்ளி எறிவதிலோ, தோற்றுவித்தவரைத் தலை தூக்கவொட்டாதபடி செய்வதிலோ சிறிதுகூட தயைகாட்டவில்லை; தாட்சண்யம் பாராட்டவில்லை. ஸன்னோ, இந்த மாதிரியான சந்தர்ப்பங் களில் இரக்க உணர்ச்சிக்கு வசப்பட்டு விட்டான். தன்னம்பிக்கையுடைய வனாதலின் யாரையும் சுலபமாக நம்பினான்; விரோதம் பாராட்டியவர் களையும் மன்னித் தான்; ஆபத்து ஏற்பட்ட காலங்களில் இவனுடைய திண்ணிய மனமும் அதனைக் கவிந்துகொண்டிருந்த புன்சிரிப்பும் இவனை விட்டு அகலவேயில்லை. இந்த மாதிரியான சில அமிசங்களில் லெனினுக்கும் காந்திக்கும் நடுவில் இவன் நிற்கிறானென்று சொல்ல லாம். லெனினைப் போல் அவ்வளவு தொலை நோக்குடையதாக இவனுடைய அரசியல் பார்வை இருக்கவில்லை. காந்தியைப் போல் இன்னா செய்தார்க்கும் இனியவே செய்கின்ற உயர்ந்த நிலையையும் இவன் அடையவில்லை. அப்படி அடையவில்லையாயினும், அந்த உயர்ந்த நிலை, இவனுடைய அகக்கண்ணுக்கு லேசாகவாவது தென் பட்டுக் கொண்டிருந்திருக்க வேண்டுமென்பதில் ஐயமில்லை.
இதனாலேயே, வெறும் அரசியல் கண்கொண்டு மட்டும் பார்க்கிறவர்கள், லெனின் அடைந்த வெற்றியைப் போல் ஸன் அடையவில்லையென்று சொல்கிறார்கள். 1912 ஆம் வருஷம் ஜனவரி மாதம் குடியரசு ஏற்பட்ட பிறகு, இவன் இருந்த நிலையில், அரசியல் வெற்றி ஒன்றிலேயே நாட்டங் கொண்ட ஓர் அரசியல்வாதி இருந்திருப் பானானால், யுவான் ஷி காய்க்குப் பிரசிடெண்ட் பதவியை விட்டுக் கொடுத்திருப்பானா என்பது சந்தேகமே; விட்டுக் கொடுத்திருக்க மாட்டானென்று துணிந்து சொல்லலாம். இப்படி விட்டுக் கொடுத்தது இவனுடைய - ஸன்னுடைய - தியாக உணர்ச் சிக்கும் மனிதத் தன்மைக்கும் சிறந்த எடுத்துக் காட்டுக்களாக இருக்க லாம். ஆனால் இதனால் - இப்படி விட்டுக் கொடுத்ததனால் - ஏற் பட்ட விளைவுகளை நோக்குகிறபோது, இந்தத் தியாக உணர்ச்சியும் மனிதத் தன்மையும் இந்தச் சந்தர்ப்பத்தில் செயல்படுத்தப்பட வேண்டுமா என்று அரசியல்வாதிகள் கேட்கிறார்கள்.
ஸன்னுக்கும் லெனினுக்கும் ஏற்பட்ட மரணம், அவர் களுடைய நெருங்கிய நண்பர்களால் எதிர்பார்க்கப்பட்டது தான். இயற்கை நியதிப்படி அவர்களுக்கு மரணம் நிகழ்ந்ததென்று சொல்லலாம். அவர்கள் இன்னும் சில ஆண்டுகள் உயிரோடிருந் திருந்தால், சீனாவிலும் ருஷ்யாவிலும் அவர்களுடைய மரணத் திற்குப் பிறகு ஏற்பட்ட உட்பிணக்குகள் ஏற்பட்டிரா வென்றும், இரண்டு நாடுகளும் தீவிர முன்னேற்றத்தைக் கண்டிருக்கு மென்றும் சொல்லலாம். ஆனால் காலதேவனுடைய கருத்து வேறு விதமாக இருந்தது.
காந்தியின் மரணமோ யாராலும் எதிர்பார்க்கப்படாதது; எல்லோரையும் திடுக்கிடச் செய்தது. எந்த தருமத்தைச் சீரழிவி னின்று காப்பாற்றிச் செழுமையாக வளர்க்க இவர் தமது ஆயுள் பூராவையும் செலவழித்தாரோ அந்த தருமத்தைப் பின்பற்றுகிறவ னென்று சொல்லிக் கொண்ட, ஆனால் அந்த தருமத்தைச் சிறிதும் புரிந்து கொள்ளாத ஒருவனுடைய கையினால் இவருடைய ஆயுள் முடிந்தது. அந்த முடிவைக் கண்டு, விசித்திரமான விதி புன்னகை புரிந்ததென்றாலும், தருமம் தலைகுனிந்து அழுதது.
ஸன், லெனின், காந்தி ஆகிய மூவரைப் பற்றிய சுருக்கமான இந்த விமர்சனம் இதனோடு நிற்கட்டும்.
இந்த விமர்சனம், ஸன்யாட்ஸென்னின் வாழ்க்கை வர லாற்றைப் பற்றிக் கூறும் இந்த நூலில், வாசகர்களுக்கு என்னும் இப்பகுதியில் எற்றுக்கு என்று அன்பர்கள் கேட்கலாம். மேலே ஆரம்பத்தில் சொன்னபடி, எந்த மூவருடைய புகழ், இடத்தின் எல்லையையும் காலத்தின் எல்லையையும் கடந்து நிற்கிறதோ அந்த மூவரையும், அந்த மூவரில் ஒருவனுடைய வாழ்க்கையைப் பற்றிக் கூறும் இந்த நூலின் முகப்பில் நிறுத்தி வைத்துக் காட்டவேண்டு மென்பது என் ஆசை. ஏற்கனவே லெனினைப் பற்றியும் காந்தியைப் பற்றியும் நான் எழுதியிருக்கிறேன். ஸன்னின் வாழ்க்கையைப் பற்றித் தனியாக எழுதும் வாய்ப்பு இப்பொழுதே எனக்குக் கிடைத்தது. ஏற்கனவே எழுதப்பட்டிருக்கிற இருவரைப் பற்றி ஒருவாறு அறிந்துகொண்டிருக்கிறவர்கள், இந்த நூலின் நாயகனாகிய மூன்றாமவனைப் பற்றியும் இந்த நூலைப் படித்து ஒருவாறு அறிந்து கொண்டு, மூவரையும் ஒப்பு நோக்குதல் என்னும் நிறுவையில் வைத்து நிதானமாகப் பார்க்க வேண்டும்; பார்க்குமாறு அவர்களைத் தூண்ட வேண்டுமென்ற ஆசையே, இந்த விமர்சனத்தை எழுத என்னைத் தூண்டியது.
இந்த நூலைப் பொறுத்தமட்டில் சில வார்த்தைகள்:
ஸன் யாட் ஸென், இருபதாவது நூற்றாண்டின் முதற் கால் பகுதியின் முடிவில்தான் கண் மூடினான். ஆனால் இந்த நூற்றாண்டின் அரைப் பகுதி முடிவிலேயே, அவன் வாழ்க்கையைப் பற்றிய மாறுபட்ட செய்திகள் பல வழங்கப்பட்டு வருகின்றன. என்ன ஆச்சரியம்! உதாரணமாக, ஸன், இளமையில் கிறிதுவ மதத்தைத் தழுவினானென் பதற்குப் பதிலாக, அவன் தந்தை கிறிதுவனாகி விட்டிருந்தானென்றும், இதனால் ஸன் கிறிதுவனாகவே பிறந்தானென்றும் ஒரு வரலாறு வழங்குகிறது. இன்னொரு வரலாறு, ஸன், இளமையில், கிறிதுவ மதப் பிரசாரம் செய்து வந்த ஒரு பெண்மணியிடம் முதன் முதலாக ஆங்கிலம் கற்றுக்கொண்டானென்று கூறுகிறது.
இந்த மாதிரியான பலதரப்பட்ட செய்திகளை வைத்து ஒப்பு நோக்கி, சீன சரித்திராசிரியர்களால் பெரும்பாலும் அங்கீகரிக்கப் பட்டவைகளைத் தொகுத்து வரிசைப்படுத்தி இந்நூலில் இடம் பெறச் செய்திருக்கிறேன்.
சீன சரித்திரப் பின்னணியில் வைத்துத்தான் ஸன் யாட் ஸென்னின் வாழ்க்கையைப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்தால்தான் அவனுடைய முழு வாழ்க்கையும் தெரியும். அப்படி அவனைப் பார்க்க விரும்புகிறவர்களும் அவன் குரலைக் கேட்க விரும்புகிறவர்களும் இந்த நூலோடு, சீனாவின் வரலாறு, சுதந்திரத்தின் தேவைகள் யாவை? என்ற இரண்டு நூல்களையும் சேர்த்துப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
சீனப் பெயர்களை உச்சரிப்பது சிறிது கடினம். அவையும் ஒரேமாதிரி உச்சரிக்கப்படுவதில்லை. இது தவிர, ஒருவருக்கே பல பெயர்கள் வழங்கப்படுவதுண்டு. எனவே, இந்த நூலில், சீனர்களின் உச்சரிப்பு முறையைப் பின்பற்றாமல், தமிழில் படிக்கிறபோது, கூடியமட்டில் கடின மில்லாதபடி பெயர்களின் உச்சரிப்பு முறையை லேசாக மாற்றியமைத் திருக்கிறேன். இதன் முழுப் பொறுப்பு என்னுடையதே.
சீனப் பெயர்களை எப்படிக் கூட்டிப் பொருள் கொள்ள வேண்டு மென்பது சம்பந்தமான விவரங்களுக்கு சீனாவின் வரலாறு என்ற நூலைப் பார்க்குமாறு அன்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த வாழ்க்கை வரலாற்றைப் படிக்கத் துவங்குவதற்கு முன், அடுத்தாற்போல் (பக்:173இல்) கொடுக்கப்பட்டிருக்கும் யார்? யார்? என்ற பகுதியைப் படித்து, நினைவில் வைத்துக் கொண்டால், படிக்கிறபோது ஓட்டம் தடைப்படாது.
இதுபோன்ற நூல்களை எழுதுமாறு என்னை அவ்வப் பொழுது ஊக்குவித்து வரும் அன்பர்கள் அனைவருக்கும் என் நன்றி.
தியாகராய நகர்,
சென்னை - 17,
5-8-1961.
இந்நூலில் யார் யார்,
சீனர்
ஆமி - ஸன் யாட் - ஸென்னின் தமையன்.
கன்பூஷிய - கி.மு. ஆறாவது நூற்றாண்டின் மத்தியில் அவதரித்த சீன ஞானி.
கான் யூ-வெய் - பிரபல சீர்திருத்தவாதி; ஸன்னின் புரட்சித் திட்டத்தை எதிர்த்து நின்றவன்
குங், எச். எச் - கன்பூஷியஸின் எழுபத்தைந்தாவது தலை முறையைச் சேர்ந்தவன்; பெரும் பணக் காரன்; ஸன்னின் புரட்சி முயற்சிகளுக்குப் பெரிதும் ஆதரவாயிருந்தவன்.
குவாங் ஷு - மஞ்சூ அரச பீடத்தில் பெயரளவுக்குச் சக்ரவர்த்தியாயிருந்தவன்; (1875 - 1908) சீர்திருத்த நோக்கமுடையவன்; ஆனால் ரீஜெண்ட்டாயிருந்த த்ஸுஹ்ஸி என்பவள், இவனது நோக்கம் நிறை வேறாதபடி செய்து விட்டாள்.
சாங் சீ-டுங் - மஞ்சூ அரச பிடத்தினிடம் பக்தி பூண்ட வன்; நிதானப் போக்குடைய சீர்திருத்த வாதி.
சாங்-சௌ - ஸன்னின் மெய்க்காப்பாளன்.
சார்ல ஜோன் ஸுங் - ஸன்னின் புரட்சி முயற்சிகளுக்குப் பெரி தும் ஆதரவளித்தவன்; இவனுக்கு ஏலிங், சிங்லிங், மேலிங் என்ற மூன்று பெண் களும், டி.வி. ஸுங் என்ற ஒரு மகனும் உண்டு. ஏலிங், எச் எச் குங்கையும், சிங் லிங், ஸன்னையும், மே லிங், சியாங் கை ஷேக்கையும் முறையே மணந்து கொண் டார்கள். மகன் டி.வி. ஸுங், அரசாங்கத் தில் உயர் பதவிகள் வகித்தான்.
சியாங் கை-ஷேக் - ஸன்னின் நம்பிக்கையைப் பெற்றவன்; ஸன்னின் மரணத்திற்குப் பிறகு, பொது வுடைமைக் கட்சியினர் மீது விரோதம் பாராட்டியவன்.
செங்-ஷி-லியாங் - ஸன்னோடு வைத்தியம் கற்றவன்; பின்னர் புரட்சிகள் பலவற்றில் பெரும் பங்கு கொண்டவன்.
சென் சியுங்-மிங் - ஸன்னைத் தலைவனாகக் கொண்டிருந்த காண்ட்டன் அரசாங்கத்தில் உயர் பதவி வகித்தவன்; பின்னர் ஸன்னுக்கு விரோத மாக மாறிவிட்டான்.
துவான் சீ - ஜூயி - சீனாவின் வடக்குப் பகுதியில் செல்வாக்கு மிகுந்த தளகர்த்தன்; அரசதந்திரி; முதல் உலக மகாயுத்தத்தில் சீனாவைச் சேரும் படி செய்துவிட்டவன்; இவனுடைய வேண்டு கோளின் பெயரிலேயே, ஸன், தன் கடைசி காலத்தில் நாட்டின் ஒற்றுமை கருதி பீக்கிங்குக்குச் சென்றான்.
த்ஸு ஹ்ஸி - குவாங் ஷு காலத்தில் ரீஜெண்ட்டா யிருந்தவள்; முன்னேற்றத்தை விரும்பாத வள்; அதிகாரப் பித்து பிடித்தவள்; இவள் இயற்பெயர் யெஹோனலா.
பூயி - மஞ்சூ வமிசத்தின் கடைசி சக்ரவர்த்தி (1908-1912); பட்டத்தில் அமர்ந்தபோது இவனுக்கு மூன்று வயது. ஸுவான் டுங் என்பது இவன் பட்டப் பெயர்.
யுவான்-ஷி-காய் - மஞ்சூ ஆட்சியின் கீழ் சேவை செய்தவன்; நாட்டின் ஒற்றுமையைக் கருதி, ஸன், தான் வகித்து வந்த பிரசிடெண்ட் பதவியை இவனுக்கு விட்டுக் கொடுத்தான்; ஆனால் ஸன்னுக்கு விரோதியாகிவிட்டான். சூழ்ச்சி யில் வல்லவன்; பதவிப் பித்தன்.
லியாங் சீ-சௌ - சிறந்த எழுத்தாளன்; ஸன்னோடு சேர்ந்து உழைத்தவன்.
லின் யென் ஸென் - ஸன் வைத்துக் கொண்ட புனை பெயர் களில் ஒன்று.
லீ கியாங் - ஜோ - தீவிரமான புரட்சியாளன்; ஸன்னுக்கு உறுதுணையாயிருந்தவன்; மஞ்சூ அதிகாரிகளால் சிரச்சேதம் செய்யப் பட்டவன்.
லீ யுவான்-ஹுங் - மஞ்சூ அரசாங்கத்தின் கீழ் ராணுவ சேவை செய்தவன்; 1911ஆம் வருஷத்துப் புரட்சி யின் போது, தலைவனாகயிருக்கும்படி கட் டாயப் படுத்திப் பெற்றவன்; யுவான் ஷி-காய்க்குப் பிறகு பீக்கிங் அரசாங்கத் தின் பிரசிடெண்ட் பதவி வகித்தவன்.
லூ ஹா - டுங் - ஸன்னின் பாலிய நண்பன்; 1895ஆம் வருஷம் நடைபெற்ற முதல் புரட்சியின் போது கைதியாக்கப்பட்டுச் சிரச்சேதம் செய்யப்பட்டான்.
லூ ஸு - ஸன்னின் முதல் மனைவி; சிங் லிங் என்பவள் இரண்டாவது மனைவியாகவே வாழ்க்கைப் பட்டாள்.
வாங் சிங்-வெய் - ஸன் நடத்திய புரட்சிகளில் பங்கு கொண் டவன்; அடிக்கடி கட்சி மாறியவன்; பத்திரிகைத் துறையில் பணியாற்றியவன்.
ஸன் போ - ஸன்னின் மூத்த தாரத்து மகன்.
ஸன் வென் - ஸன்னின் மற்றொரு பெயர் சீனர்கள் இந்தப் பெயரிட்டே அழைக்கிறார்கள்.
ஸன் டாவ் - சுவான் - ஸன்னின் தகப்பன்.
ஸன் டை-சியோங் - ஸன்னின் குழந்தைப் பருவப் பெயர்.
ஸுங் சியோ-ஜென் - புரட்சியில் பங்கு கொண்ட முக்கியதர் களில் ஒருவன்; யுவான் ஷி காய் செய்த சதியால் கொலையுண்டான்.
ஹுங் ஸியு-சுவாங் - தைப்பிங் கலகத்திற்கு முதல் வித்திட்ட வன். இந்தக் கலகம் நடைபெற்றது 1850 முதல் 1866 வரை.
ஹுவாங் ஸிங் - புரட்சித் தலைவர்களில் ஒருவன்; ஸன்னின் முயற்சிகளுக்குத் துணை நின்றவன்.
அந்நியர்
அடால்ப் ஜாப்பே - சோவியத் அரசாங்கத்தினால் சீனாவுக்கு அனுப்பப் பெற்ற ஓர் அரச தந்திரி; ஸன், இவனுடைய ஆலோசனையைப் பெரி தும் நாடினானென்பர்.
கர்ஸன், லார்ட் - பிரிட்டிஷ் ராஜதந்திரி: இந்தியாவில் கவர்னர் ஜெனரலாயிருந்தவன்; ஸன், தன்னுடைய நூலொன்றுக்கு இவ னுடைய அறிமுகவுரை வேண்டுமென்று கோரினான். இந்தக் கோரிக்கைக்கு கர்ஸன் இணங்கவில்லை.
காண்ட்லி, டாக்டர் - ஸன்னின் ஆசிரியன்; உற்ற தோழன்; சீனாவின் முன்னேற்ற முயற்சிகளுக்கு ஆதரவு தந்தவன்.
கெர். ஜே. ஜி. - காண்ட்டன் நகரத்தில் ஆபத்திரி யொன்று வைத்து நடத்திய பாதிரி. ஸன்னின் வைத்திய ஆசிரியன்.
கோல் - ஸன், லன்டனில் சீன தானீகனுடைய காரியாலத்தில் அகப்படுத்தப் பட்ட பொழுது அவன் விடுதலைக்குப் பெரிதும் உதவிய ஒரு பணியாள்.
சார்ல ஹாகர் - ஸன், கிறிதுவ மதத்தைத் தழுவிக் கொள் வதற்குக் காரணமாயிருந்தவன்.
சார்ல ஜோன் - ஒரு கப்பற் படைத் தலைவன்; ஸுங்கின் முன்னேற்றத்திற்குக் காரணமாயிருந்தவன்.
பாட்ரிக் மான்ஸன் - ஹாங்காங் நகரத்தில், மேனாட்டு முறை யில் வைத்தியக் கல்லூரி துவக்கியவன்.
பால் லைன் பார்கர் - பிலிப்பைன் தீவில் நீதிபதியாயிருந்தவன்; ஸன்னிடம் பெரிதும் ஈடுபாடுடையவன்.
மக்கார்ட்னி ஹாலிடே - லண்டனில் சீன தானீகனாயிருந்தவன்.
மோரண்ட், ஜார்ஜ் - ஷாங்காய் நகரத்தின் பிரெஞ்சுப் பகுதியில் நீதிபதி அலுவல் பார்த்தவன்; ஸன், மஞ்சூ அதிகாரிகளிடமிருந்து தப்புவதற்குக் காரணமாயிருந்தவன்.
யமாடா - ஸன்னிடம் பக்தி விசுவாசம் பூண்ட ஒரு ஜப்பானியன்; சீனப் புரட்சியில் முதல் பலியான அந்நியன்.
லெனின் - ருஷ்யப் புரட்சியின் தலைவன்; ஸன்னி னால் பெரிதும் மதிக்கப் பெற்றவன்.
ஹோ, ஸ்ரீமதி - ஸன்னை, லண்டனில் காப்பிலிருந்து விடுவித்ததற்கு மேலே சொல்லப் பெற்ற கோல் என்பவனுக்குத் துணை செய்தவள்.
ஹோமார் லீ - அமெரிக்கப் போர் வீரன்; காங் யூ-வெய் என்ற சீர்திருத்தவாதிக்குத் துணையாய் நின்றவன்.
டாலின் - ருஷ்யப் பொதுவுடைமைக் கட்சிக் காரிய தரிசியாகவும், சோவியத் அரசாங்கத்தின் தலைவனாகவும் இருந்தவன்; ஸன்னின் முயற்சிகளுக்கு ஆதரவு தந்தவன்.
“அறிவுடையவர்கள், எப்பொழுதுமே, தாங்கள் அறிவுடையவர் களென்று சொல்லிக் கொள்ள மாட் டார்கள்.”
“நான் ஒரு திறமைசாலி என்று நீ சொல்லிக் கொள்கிறபோது, உனக்குப் பின்னாலேயே உன்னை யறியாமல் பத்து திறமைசாலிகள் நின்று கொண்டிருக் கிறார்களென்பது உன் நினைவிலிருக்கட்டும்.”
-சீன அறிஞர்கள்
பிள்ளை மனம்
தன்னை ஒரு கூலியென்று சொல்லிக்கொள்வதில் பெருமை கண்டான், சீனாவின் புது வாழ்விற்கு அடி கோலிய பெருமகன் - ஸன் யாட்-ஸென்1. இவனது கனிந்த உள்ளத்திலிருந்து கசிந்து வந்த வார்த்தைகளைக் கேளுங்கள்:- நான் ஒரு கூலி; கூலியின் மகன். ஏழைகளோடு பிறந்தேன்; ஏழையாகவே இருக் கிறேன். அன்றாட வாழ்க்கைக்காகப் போராடிக்கொண்டிருக்கும் மக்களிடத்தில்தான் என அநுதாபமெல்லாம் செல்கிறது.
இந்தக் கூலியினுடைய தலைக்கு ஒரு லட்சம் பவுன் மதிப்புப் போட்டது மஞ்சூ அரசாங்கம்; அதாவது இவனை உயிரோடு பிடித்துக் கொண்டு வருகிறவர்களுக்கு ஒரு லட்சம் பவுன் சன்மானம் அளிப்பதாகப் பிரகடனம் செய்தது. ஆனால் இவனைக் காட்டிக் கொடுக்கிற அளவுக்கு, சீன மக்களின் இதயம் அழுகிப்போக வில்லை. அதற்கு மாறாக மஞ்சூ அரசாங்கம் அழுகி விழுந்தறுவாயி லிருந்தது. எப்பொழுது விழப்போகிறதென்று காத்துக்கொண் டிருந்தன ஐரோப்பிய வல்லரசுகள்; தங்களுடைய ஏகாதிபத்தியப் பசியைப் தீர்த்துக்கொள்வதற்குத்தான்!
சுமார் இரண்டரை நூற்றாண்டுகளுக்கு மேலாக (கி.பி. 1644-1911) சீனாவை மஞ்சூ வமிசத்தினர் ஆண்டு வந்தனர். இவர்கள் சீனாவுக்கு அந்நியர்கள். ஆனால் சீன மக்களை அந்நியர்களாக நடத்தி வந்தனர். சொந்த நாட்டில் அந்நியர்கள் போல் நடத்தப்படுவதைச் சீனர்கள் விரும்பவில்லை; உள்ளூரக் குமுறிக் கொண்டிருந்தார்கள். இந்தக் குமுறலை உருப்படுத்தி, புரட்சியாக வெளிக்கொணர்ந்து, மஞ்சூ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி யிட்டுவிட முனைந்தான் ஸன் யாட் ஸென். இவன் தலையை வாங்கிவிட அந்த மஞ்சூ அரசாங்கம் முனைந்ததிலோ, அந்த மஞ்சூ அரசாங்கத்திற்கு இவனைக் காட்டிக் கொடுக்க சீன மக்கள் ஒருப்படாமலிருந்ததிலோ வியப்பேதுமில்லை யல்லவா?
மஞ்சூ ஆட்சியை ஒழிக்கவும் அதன் தானத்தில் குடியரசை நிறுவவும், ஸன் யாட் ஸென் பட்ட பாடுகள் அனந்தம். இவன் ஏற்றுக் கொண்ட சாபங்கள், தரித்த மாறுவேஷங்கள், பூண்ட புனை பெயர்கள், ஓடி ஒளிந்த இடங்கள் எத்தனை! எத்தனை!! பதினோரு தடவை புரட்சி நடத்தினான்1. பத்து தடவை தோல்வி. பதினோ ராவது தடவைதான் - 1911 ஆம் வருஷம் பத்தாவது மாதம் பத்தாந் தேதி நடைபெற்ற புரட்சியில்தான் - வெற்றி கண்டான். 1912 ஆம் வருஷம் ஜனவரி மாதம் முதல் தேதி, சீனாவில் முதன் முதலாகக் குடியரசு தாபிதமாயிற்று. அதன் முதல் தலைவனாக (பிரசிடெண் டாக) தெரிந்தெடுக்கப்பட்டான். சீனக் குடியரசின் தந்தை என்று இன்றளவும் போற்றப்பட்டு வருகிறான்; என்றும் போற்றப்பட்டு வருவான். ஆனால் இவனென்னவோ, தன்னை ஓர் ஏழை மகனென்றே சொல்லிக் கொண்டான். பணியுமாமன்றோ என்றும் பெருமை!
தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்டு ஆறு வாரங்கள் தானாயின. இதற்குள் இவனைச் சூதும் வாதும் சூழ்ந்துகொண்டன. இதனைத் தெரிந்து கொள்ளாமல் இவன், பெருநோக்குடனும், குடியரசின் எதிர்கால நலனை உத்தேசித்தும், யுவான்-ஷி-காய்2 என்பவனுக்குத் தலைமைப் பதவியை விட்டுக் கொடுத்துவிட்டான். இதன் விளைவு என்னவாயிற்றென்று, வாசகர்களே, நினைக்கிறீர்கள்? ஐயோ, நாடெங்கணும் பதவிப் போட்டிகள்! கட்சிப் பிணக்குகள்! சில்லரைப் பூசல்கள்! வெளிநாட்டுப் பகைமையைக் காட்டிலும் உள்நாட்டுப் பகைமை விபரீத பலன்களை அளிக்குமென்பது சரித்திர உண்மையல்லவா?
ஆனால் இதற்காக மனத்தளர்ச்சி யடையவில்லை ஸன் யாட் ஸென். தனது சிந்தனையையும் சக்தியையும், நாட்டைப் புனர் நிர்மாணம் செய்யும் வகையில் செலவழித்தான். அரசியல் புரட்சி நடத்தி, அந்த வேலையை ஒருவாறு முடித்துவிட்டேன். சமுதாய, தொழில், வியாபாரத் துறைகளில் தேசத்தைப் புனர் நிர்மாணம் செய்யும் வகையில் இப்பொழுது எனது சிந்தனையையும் சக்தியை யும் செலவழித்துக் கொண்டிருக்கிறேன் என்று இவனே ஓரிடத்தில் கூறியிருக்கிறான்.
குடியரசுத் தலைமைப் பதவியை விட்டுக் கொடுத்ததிலிருந்து தனது கடைசி மூச்சு இருக்கிறவரை சுமார் பதின்மூன்று வருஷ காலம், இவன் இந்த நிர்மாண வேலையிலேயே பெரும்பாலும் ஈடுபட்டிருந்தானென்று சொல்லவேண்டும். இவனுடைய சிந்தனை, பல சொற்பொழிவுகளாகவும், பத்திரிகைக் கட்டுரைகளாகவும், சில நூல்களாகவும் வெளிப்பட்டது. இவனுடைய சக்தியோ, அப்பொழுது தான் தோன்றிய குடியரசுச் சூரியனை, சர்வாதிகார ஆட்சியாகிய மேகம் கவிந்துகொண்டு விடாதபடி தகைந்து நிற்பதில் செல வழிந்தது. சீனக் குடியரசு காப்பாற்றப்பட்டது. அந்தக் குடியரசு, தான் வாழ்ந்துகொண்டிருக்கிற வரையில் ஸன் யாட் ஸென்னை வாழ்த்திக்கொண்டிருக்குமென்பதில் என்ன சந்தேகம்? இவனுடைய பூதவுடல் - 1925 ஆம் வருஷம் மார்ச்சு மாதம் பன்னிரண்டாந் தேதி - பொன்றிப் போனால்தானென்ன? அப்பொழுதிருந்தே, பொன்றிப் போன அந்தக் கணத்திலிருந்தே புகழுடல் படைத்து விட்டா னல்லவா? ஒரு நாட்டையோ, சமுதாயத்தையோ புதிய உருவம் பெறச் செய்த சிற்பிகளின் பூதவுடலைக்காட்டிலும் புகழுடல்தானே காலங்கடந்து வாழ்ந்துகொண்டிருக்கிறது?
சீனாவின் தெற்குப் பகுதியிலுள்ளது க்வாங்டுங்1 என்ற மாகாணம். இதில் காண்ட்டன்2 என்பது ஒரு பிரசித்திபெற்ற துறை முகப் பட்டினம். இதற்குத் தெற்கே சுமார் முப்பது மைல் தொலைவி லுள்ளது ஸுயிஹெங்3 என்ற ஒரு சிற்றூர். இந்தச் சிற்றூர்தான் ஸன் யாட் ஸென்னைப் பெற்றுக் கொடுத்து, பேரூராகப் புகழ் பெற்றது. பெற்ற தந்தை ஸன் டாவ் சுவான்.4 பிறந்தது 1866 ஆம் வருஷம் நவம்பர் மாதம் பன்னிரண்டாந் தேதி.
சீனாவில், குடும்பத்திற்கு அதிக மரியாதை கொடுப்பது வழக்கம். குடும்பப் பெயரைத்தான் முதலில் வைத்துக்கொள்வார்கள். அதைத் தொடர்ந்து வரும் மற்றப் பெயர்கள் அவ்வப்பொழுது மாறும். அதாவது பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்படுகிறபோது ஒரு பெயர்; விவாக காலத்தில் ஒரு பெயர்; இப்படி வாழக்கையின் முக்கியமான திருப்பங்களின்போது பெயர்களை மாற்றிக் கொள்வார்கள். உதாரணமாக, ஸன் என்பது குடும்பப் பெயர். குழந்தைப் பருவத்தில், ஸன் டை சியோங்5 என்று அழைக்கப் பட்டான். டை சியோங் என்றால் கடவுளின் தொண்டன் என்று அர்த்தம். ஸன் டை சியோங் பெரியவனான பிறகு ஸன் யாட் ஸென் ஆனான். கடைசியில் ஸன் வென்6 என்ற பெயரை ஏற்றுக் கொண்டான். இவை தவிர, புரட்சிகள் நடத்திய காலங்களிலும், அந்நிய நாடுகளில் வசித்த போதும், தன் பெயரை அடிக்கடி மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியத் திற்குட்பட்டான். இங்கே நாம் ஸன் என்ற இரண்டெழுத்துப் பெயராலேயே சுருக்கமாக அழைத்துக்கொண்டு போவோம்.
ஸன்னின் தந்தை, பயிர்த்தொழில் செய்து வந்தான். அதுவும் சொந்தப் பயிரன்று; குத்தகைக்குத் தான். ஆயினும் கிராமத்தில் இவனுக்கு நல்ல மதிப்பு. இதற்குக் காரணம் இவன் எல்லா விஷயங் களிலும் எல்லாரிடத்திலும் நேர்மையாக நடந்து கொண்டு வந்தான்.
இவனுக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவன் பெயர் ஆமி(Ah Mi). இந்த ஆமியினுடைய பதினைந்தாவது வயதில் இரண் டாவது மகனாகிய நமது சரித்திர நாயகன் பிறந்தான்.
ஸுயிஹெங் கிராமம் மண் வளமுடையதன்று. கஷ்டப்பட்டு உழைத்தால்தான் சொற்ப பலனாவது கிட்டும். இப்படிக் காணும் பலன், வருஷம் பூராவுக்கும் குடும்பத்தின் போஷணைக்குப் போது மானதாயிராது. இந்தப் பற்றாக்குறை காரணமாக, ஸன் குடும்பத் தினர், வருஷத்தில் சில மாதங்கள் சிரமப்படுவதுண்டு; இந்த மாதிரி யான சந்தர்ப்பங்களில், வயிறு பிழைக்க வெளியூர் எங்கேனும் செல்லலாமா என்று ஆலோசிப்பதுமுண்டு. ஸன் குடும்பத்தில் மட்டு மல்ல, தென் சீனாவின் பெரும் பகுதிகளில் இதே நிலைமைதான்.
அப்பொழுது, அதாவது பத்தொன்பதாவது நூற்றாண்டின் இடைக்காலத்தில், வட அமெரிக்காவிலும், அதைச் சேர்ந்தாற் போல் பசிபிக் மகா சமுத்திரத்திலுள்ள சில தீவுகளிலும் தொழில் முயற்சிகள் பல நடைபெற்று வந்தன. இவைகளில் கூலிக்கு வேலை செய்ய சீனாவில் ஆட்கள் திரட்டப்பட்டனர். அங்குச் சென்று நன் றாக உழைத்தால் நல்ல கூலி கிடைக்குமென்றும், சில வருஷங்கள் அங்கே உழைத்து, கை நிறையப் பணம் சம்பாதித்துக்கொண்டு தாய்நாடு திரும்பி வந்து சுக ஜீவனம் செய்யலாமென்றும் ஜனங் களுக்குச் சொல்லப்பட்டன. ஆயிரக்கணக்கான சீனர்கள் மேற்படி பிரதேசங்களுக்குச் சென்றனர். சென்றவர்களில் பலர், அங்கேயே நோய் வாய்ப்பட்டும் வேறு பல காரணங்களினாலும் மடிந்து போயினர். சிலர், சில வருஷ காலம் கழித்துத் தாய் நாடு திரும்பி வந்தனர். இவர்கள், தாங்கள் சென்று இருந்த இடங்களைப் பற்றியும் அங்குள்ள வாழ்க்கைத் தரத்தின் உயர்வைப் பற்றியும் விந்தை விந்தையான கதைகளைச் சொன்னார்கள். இவைகளையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஆமி, ஹவாயி1 என்னும் தீவுக்குத் துணிந்து சென்றுவிட்டான். அப்பொழுது ஸன் கைக்குழந்தை.
ஹவாயி தீவுக்குச் சென்ற ஆமி, சுமார் பத்து வருஷ காலம் அங்குள்ள கரும்புத் தோட்டங்களிலும் பிற இடங்களிலும் வேலை செய்து ஓரளவு பணம் சேகரித்துக் கொண்டு ஊர் திரும்பினான். அப்பொழுது ஸன்னுக்குச் சுமார் பதினோரு வயது.
இந்தப் பதினோரு வயதுக்குள், ஸன், சீன முறைப்படி கற்க வேண்டியவற்றைக் கற்றான், என்ன கற்றான்? பழைய கிரந்தங்கள் சிலவற்றை நெட்டுருப் போடுவதுதான். இதுவே சீனாவின் பழைய காலக் கல்வி முறை. ஆனால் ஸன்னுக்கு அர்த்தம் தெரியாமல் இங்ஙனம் நெட்டுருப் போடுவது பிடிக்கவில்லை. ஒரு நாள் ஆசிரியரைப் பார்த்து நீங்கள் எதை என்னிடம் மனப்பாடம் செய்யச் சொல்லுகிறீர்களோ அதில் ஒன்றுகூட எனக்குப் புரிய வில்லை. என்னால் தெரிந்து கொள்ள முடியாததைக் கற்பதில் என்ன பிரயோஜனம்? என்று கேட்டுவிட்டான். என்ன துணிச்சல்? ஆசிரியரை எதிர்த்துப் பேசுகிற மாதிரியல்லவா இது? சீனாவில் பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு அதிக மரியாதை உண்டு; உன் வாத்தியாரின் நிழலின் மீது கூட நடக்காதே என்பது ஒரு பழமொழி, அரியணையில் அமர்ந்திருக்கிற அரசன்கூட, தனக்குச் சொல்லிக் கொடுத்த ஆசிரியரிடம் மிகுந்த பயபக்தியுடன் நடந்துகொள்வான்.
ஸன், இப்படிக் கேட்டதைக் கேட்டு ஆசிரியர் அசந்து போனார். பிரம்பால் ஓர் அடி கொடுத்தார். ஆயினும் ஸன் கேள்விகள் கேட்டுக் கொண்டுதான் வந்தான். இளமையிலிருந்தே இவனுக்குச் சீனாவின் பழைய கல்வி முறையில் அதிருப்தி இருந்து வந்தது. இதனாலேயே பிற்காலத்தில், இந்தப் பழைய கல்வி முறையை மாற்றித் தற்காலத்திற்குப் பொருந்துவதாக அமைக்க வேண்டுமென்று அடிக்கடி சொல்லிவந்தான்.
தவிர, ஸன், சிறு வயதிலிருந்தே, சில பழைய கால வழக்கங் களைக் கண்டித்துப் பேசிவந்தான். சீனாவில் முந்தியெல்லாம், பெண்களின் பாதங்கள் குறுகிச் சிறுத்து இருப்பதுதான் அழகென்று கருதப்பட்டது. இதற்காகக் குழந்தைப் பருவத்தில் இரண்டு பாதங் களையும் இறுகக் கட்டிவிடுவார்கள். வலி பொறுக்க முடியாது. ஆனால் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும், வயதான பிறகு அழகாகத் தோற்றமளிக்க வேண்டுமானால், இந்த வழக்கத்தை அனுசரித்து, ஸன்னின் சகோதரி ஒருத்தியின் பாதங்களைத் தாயார் கட்டுவாள். குழந்தையோ அலறும். இதை ஸன்னால் சகித்துக் கொள்ள முடிவதில்லை. கட்ட வேண்டாமென்று தாயாரிடம் மன்றாடுவான். ஆனால் சிறு பிள்ளையான இவன் வார்த்தையைத் தாயார் கேட்பாளா? தினந்தோறும் சகோதரியின் அழுகைச் சப்தத்தைக் கேட்டு இவன் கண் கலங்குவான். அந்த வயதில் இவனால் வேறென்ன செய்ய முடியும்? இருந்தாலும் இவனுடைய இரக்க சிந்தையை இது நன்கு காட்டுகிறதல்லவா? இந்த அநாகரிகப் பழக்கத்தை அடியோடு ஒழிக்கவேண்டுமென்று இவன் பிற்காலத் தில் முயன்றதற்கு இந்த இரக்க சிந்தையே காரணமாயிருந்தது.
மற்றும் இவனுடைய பிள்ளை மனம், சீன விவசாயிகளின் துன்ப மயமான வாழக்கையைக் கண்டு வருந்தியது. எவ்வளவு உழைத்தாலும், கிடைக்கிற பலன் சொற்பமாக இருந்தது. இந்தச் சொற்பத்தையும் சில சமயங்களில் கொள்ளைக்காரர்கள் கொள்ளை யிட்டுக் கொண்டு போய்விடுவார்கள். அரசாங்க அதிகாரிகளின் அட்டகாசம் வேறே. வரிகள் மூலமாகவும் வேறு வழிகளிலும், விவசாயிகளைக் கசக்கிப் பிழிந்தார்கள். இவையெல்லாம் ஸன்னின் பசிய உள்ளத்தில் பதியாமலிருக்குமா?
இங்ஙனமே இன்னும் சில நிகழ்ச்சிகள் இவன் பசிய உள்ளத்தை நெகிழச் செய்தன. பிறர் துன்பத்தைக் கண்டு சும்மாயிருக்க முடியாத ஒரு மன நிலை இவனுக்கு ஏற்பட்டது. இதுவே காலக்கிரமத்தில் அந்தத் துன்பத்திற்குப் பரிகாரம் தேடித் தரக்கூடிய ஆற்றலையும் அளித்தது.
ஊர் திரும்பி வந்த ஆமி, சிறிது காலம் குடும்பத்துடன் இருந்துவிட்டு, திரும்ப ஹவாயிக்குப் புறப்பட்டான். அங்கே இவன் இருந்த பத்து வருஷ காலத்தில், சொந்தமாகப் பயிர் வைத்து நடத்தக் கூடிய வசதிகளைப் பெற்றுவிட்டான். தனக்கு உதவியாயிருக்க ஓர் ஆளும் தேவை யாயிருந்தது. எனவே, தன் இளைய சகோதரனைத் தன்னோடு அனுப்பும் படி பெற்றோர்களைக் கேட்டான். ஒரு பிள்ளை வெளியூர் போனாலும் மற்றொரு பிள்ளையாவது தங்க ளோடு இருக்க வேண்டாமாவென்று சொல்லி, பெற்றோர்கள் அனுப்ப மறுத்து விட்டார்கள். எனவே, ஆமி, ஹவாயிக்குத் திரும்பச் சென்றுவிட்டான். ஸன்னும், தன் தந்தையுடன் சேர்ந்து பயிர்த் தொழிலைக் கவனிப்பதும், சில நேரங்களில் படிப்பதுமாயிருந்தான்.
ஹவாயிக்குச் சென்ற ஆமி, தன் சகோதரனை எப்படியாவது தன்னிடம் அனுப்பி வைக்குமாறு, பெற்றோர்களுக்கு அடிக்கடி கடிதங்கள் எழுதிவந்தான். இங்கே குடும்ப நிலைமையும் அவ்வளவு திருப்திகர மாயில்லாமலிருந்தது. பார்த்தார்கள் பெற்றோர்கள். வேறு வழியில்லை. ஸன்னை ஹவாயி நோக்கிச் செல்லும் கப்பலில் ஏற்றி விட்டார்கள்.
பதின்மூன்று வயதுச் சிறுவன், முதன் முதலாகக் கப்பலேறு கிறான். முன் பின் தெரியாத ஊருக்குச் செல்கிறான். ஒரு சிறு படுக்கை; ஒரு பிரம்புக் கூடையில் சில துணிகள்; கூட ஆமிக்குப் பெற்றோர்கள் கொடுத்த சில திண்பண்டங்கள். இவைதான் வெளிப் படையாக இவன் எடுத்துச் சென்ற பொருள்கள். வழிக்கு மட்டுமே உதவக்கூடியவை. இவற்றோடு வாழ்க்கை பூராவுக்கும் உதவக்கூடிய, வாழ்க்கையின் மேலான படிக்கு அழைத்துச் செல்லக்கூடிய சில பெருள்களையும் ஸன் எடுத்துச் சென்றான். ஆனால் இவை பிறர் கண்ணுக்குத் தெரியாதவை. இவையே இவனோடு கூடப்பிறந்த இயற்கை அறிவு; புதுமையைக் காணவேண்டு மென்பதில் ஆவல்; எந்நிலையிலும் தளர்ச்சியுறாத தன்னம்பிக்கை; எக்காலத்திலும் கரைந்து போகாத உற்சாகம்; சீனாவின் புராதன கிரந்தங்களில் லேசான பரிச்சயம். இவை, இவன் அகத்தில் ஒளியுண்டாக்கி முகத்தில் பிரதிபலித்தன.
கப்பலில் சென்றபோது, கப்பல் எப்படிச் செல்கிறது, இஞ்சின்கள் எவ்வாறு வேலை செய்கின்றன, யந்திர உதவியினால் எங்ஙனம் பெரிய பெரிய சாமான்கள் மேலே தூக்கப்பட்டும் கீழே இறக்கப்பட்டும் வருகின்றன ஆகியவைகளையெல்லாம் ஸன் கூர்மையாகக் கவனித்து வந்தான். யந்திர உதவியினால் மனிதன் பல காரியங்களைச் சாதிக்கக் கூடுமென்பதை நேரில் ஒருவாறு கண் டான். இப்படிக் கண்டதை, தன் தாய்நாட்டில் செயல்படுத்த வேண்டு மென்ற விருப்பம் இவன் பசிய உள்ளத்தில் எழுந்தது.
ஸன்னை ஏற்றிச் சென்ற கப்பல், நேரே ஹோனோலூலு என்ற ஊரைப் போயடைந்தது. இது, ஹவாயி தீவின் தலைநகரம். இதற் கருகிலுள்ள ஒரு சிறு கிராமத்தில்தான் ஆமி சில நிலங்கள் வாங்கிச் சொந்தப் பயிர் நடத்தி வந்தான். இது தவிர, ஹோனோலூவிலும் சில்லரைச் சாமான்கள் விற்கும் ஒரு கடையையும் வைத்து நடத்தி வந்தான். கடை வியாபாரத்தை வித்தரிக்க வேண்டுமென்று திட்டம் போட்டுக் கொண்டிருந்த நல்ல சமயத்தில்தான் ஸன் போய்ச் சேர்ந்தான். ஆமி, தன் இளையவனை அன்புடன் வரவேற்று, புதிய சூழ்நிலையில் இருப்பதாகிற உணர்ச்சி அவனுக்கு ஏற்படாத படி, வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்தான் என்பதைச் சொல்ல வும் வேண்டுமோ? சென்ற சிறிதுகாலம் வரை, ஸன், தன் சகோதரன் கடையில் உதவியாளாக வேலை செய்தான்.
ஆனால் ஆமிக்கு, தன் சகோதரனை இப்படியே விட்டு வைப் பதில் விருப்பமில்லை. ஆங்கிலக் கல்வி பயிலுவித்து, மேனாட்டுப் பழக்க வழக்கங்களில் பரிச்சயம் செய்துவைக்க வேண்டுமென்று ஆவல் கொண்டான். இப்படிச் செய்தால் தன் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ள ஸன் உதவியாயிருப்பானென்றும் எண்ணி னான். எண்ணியதில் தவறொன்றுமில்லை.
ஹோனோலூலுவில் அயோலானி காலேஜ்(Ayolani College) என்ற ஒரு கிறிதுவக் கல்வி நிலையம் இருந்தது. அங்கேயே இருந்து படிக்கக் கூடிய மாணாக்கர்களே அதில் சேர்த்துக் கொள்ளப்பட் டார்கள். அதாவது, மாணாக்கர்களுக்கு இடவசதி, சாப்பாட்டுவசதி முதலியனவெல்லாம் அங்குச் செய்து தரப்பட்டிருந்தன. போதித்து வந்த ஆசிரியன்மாரில் ஒருவர் தவிர மற்ற எல்லாரும் ஆங்கிலே யர்கள். அந்த ஒருவர் ஸாலோமன் மெஹியூலா (Solomon Meheula) என்ற ஹவாயிக்காரர். தலைமையாசிரியராகப் பணியாற்றியவர் ஹோனோலூலுவின் கிறிதுவத் தலைமைப் பாதிரியார். இவரும், இவரது மனைவியாரும், அயோலானி மாணாக்கர்கள் விஷயத்தில் அதிக சிரத்தை காட்டினார்கள். மாணாக்கர்களுடனிருந்தே உண் பார்கள். காலையிலும் மாலையிலும் நடைபெறும் பிரார்த்தனை களில் மாணாக்கர்களுடன் கலந்து கொள்வார்கள். பாடங்க ளெல்லாம் ஆங்கில மொழியிலேயே போதிக்கப் பட்டன. மாணாக்கர்கள், தங்கள் தாய்மொழியில் பேசக் கூடாதென்ற தடையும் விதிக்கப்பட் டிருந்தது. ஆங்கில மொழியில் நல்ல பயிற்சி ஏற்பட வேண்டுமென்ப தற்காகவே இந்தத் தடை விதி.
இத்தகைய பள்ளிக்கூடத்தில் ஸன்னைக் கொண்டு போய்ச் சேர்த்தான் ஆமி. சேர்ந்த சில நாட்கள் வரை ஸன்னுக்குப் பிரமை பிடித்தாற் போலிருந்தது. ஏனென்றால், உடன் படித்த மாணாக்கர்கள் அனுசரித்த பழக்க வழக்கங்கள், பேசிய பாஷை எல்லாம் இவ னுக்குப் புதுமையாக இருந்தன. ஆனால் எல்லாருடைய அன்பும் இவனுக்குக் கிடைத்தது. வெகு சீக்கிரத்தில் ஆங்கிலத்தைக் கற்றுக் கொண்டான்; சரித்திரம், பூகோளம், கணிதம் முதலிய பாடங்களை ஆங்கிலமொழி மூலமாகவே பயின்றான். இவனுடைய சுறு சுறுப்பையும் விடாமுயற்சியையும் கண்டு, தலைமை ஆசிரியர் இவனிடம் தனி அன்பு கொண்டார்; இவனுடைய வளர்ச்சியில் தனிக் கவனமும் செலுத்தினார்.
ஸன்னுக்கும், ஆசிரியன்மாரின் தன்னலமற்ற சேவையும், அவர்கள் கடைப்பிடித்து வந்த ஒழுங்கு முறைகளும் மிகவும் பிடித்து விட்டன. அவர்கள் கிறிதுவ வேதத்தில் கூறப்பட்டுள்ளபடியே அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தார்கள் என்று பிறிதொரு சமயம் கூறுகின்றான். ஞாயிற்றுக் கிழமைதோறும், எல்லாப் பிள்ளைகளோடும் சேர்ந்து கிறிதுவ தேவாலயத்திற்குச் சென்று, அங்கு நடைபெற்ற பிரார்த்தனைகளில் கலந்துகொண்டான்; செய்யப்பெற்ற உபதேசங்களைச் செவிமடுத்தான்; விவிலிய பாசுரங் களை மேனாட்டு இசை முறைப்படி பாடக் கற்றுக் கொண்டான். தேவாலய இசை கோஷ்டியினர், இவனை, தங்களில் ஒருவனாக அவ்வப்பொழுது சேர்த்துக்கொண்டார்கள். சுருக்கமாக, இந்தக் காலத்தில், ஸன்னின் உள்ளத்தில், கிறிதுவ மதக் கோட்பாடுகள் லேசாகப் படிய ஆரம்பித்தன என்று சொல்ல வேண்டும்.
கல்வி நிலையத்தின் விடுமுறை நாட்களின் போது ஸன், தன் சகோதரன் ஆமியுடன் வந்து வசித்தான். அப்பொழுது ஊர் சுற்றிப் பார்ப்பான். ஹவாயி ஜனங்கள் எவ்வாறு வாழ்க்கை நடத்து கிறார்கள், எப்படி உழைக்கிறார்கள், எவ்வளவு ஊதியம் பெறு கிறார்கள், அரசாங்க நிருவாகம் எங்ஙனம் நடைபெறுகிறது. இப்படிப் பல்வேறு விஷயங் களையும் கவனித்துக் கொள்வான். தனது தாய் நாட்டிலுள்ளதைவிட இங்கு ஜனங்களுடைய வாழக்கைத் தரம் உயர்ந்திருப்பதைக் கண்டு கொண்டான். இதற்குக் காரண மென்னவென்று விசாரிக்கத் தொடங்கியது இவன் மனம்.
வாழ்க்கைத் தரம் உயர்ந்திருந்தாலும், நிற வேற்றுமை அதிக மாகப் பாராட்டப்பட்டது. ஹோனோலூலுவில் வசித்த அமெரிக்கர், ஹவாயி ஜனங்களை, ஹவாயி ஜனங்களைமட்டுமென்ன வெள்ளை நிறத்த வரல்லாதார் அனைவரையும், சீனர்களையும் கூட, இகழ்ச்சிக் கண்ணுடன் பார்த்தார்கள்; வெறுக்கவும் செய்தார்கள். ஒரு நாள் ஸன், ஒரு பாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தான். வழியில் ஓர் அமெரிக்கன் எதிர்ப் பட்டான். முன் பின் பரிச்சயமில்லாத அந்த அமெரிக்கன், எவ்வித காரணமுமில்லாமல் ஸன்னின் மீது எரிந்து விழுந்தான். சீனாக்காரனே என்று கடுகடுப்பாகக் கூறினான். ஸன் திகைத்துப் போனான். இந்த நிறத்துவேஷம் இவனுக்கு ஒரு புதிராகவே இருந்தது. இதற்கு என்ன காரணம்? அமெரிக்கச் சிறுவர் சிறுமிகளிடத்தில் கூடவல்லவோ இந்த நிறத்துவேஷம் ஊறிக் கிடக்கிறது? அயோலானி காலேஜிலும் இதை லேசாகக் கண்டோமல்லவா? இப்படியெல்லாம் இவன் இளமனம் சிந்திக்கத் தொடங்கியது.
விடுமுறை நாட்களில், ஸன், இப்படிச் சில அனுபவங்களைப் பெற்றதோடு கூட. தன் சகோதரன் ஆமியின் வியாபாரத்திற்கும் உதவி செய்து வந்தான். இதனால் வியாபார நுணுக்கங்கள் சில வற்றைக் கற்றுக்கொள்ள இவனுக்கு நல்ல வாய்ப்பு கிட்டியது. ஆமியும், வியாபாரத்தில் கிடைக்கக்கூடிய லாபத்தில் ஒரு பங்கு இவனைச் சேரும்படி ஏற்பாடு செய்தான்.
ஸன், அயோலானி காலேஜில் சேர்ந்து சுமார் நான்கு வருஷ காலம் படித்தான். கற்கக் கூடியவைகளையெல்லாம் சீக்கிரம் சீக்கிர மாகக் கற்றுக்கொண்டு வந்தான். பதினாறாவது வயதில் 1882 ஆம் வருஷம் - காலேஜ் ஆண்டு விழாவின் போது, இலக்கணத்தில் நல்ல தோர்ச்சி யடைந்திருந்ததற்காக இவனுக்கு ஒரு புத்தகப் பரிசும் கிடைத்தது.
அயோலானி காலேஜில் அமைந்திருந்த கிறிதுவச் சூழ்நிலை யில் இவன் மனம் லேசாக ஈடுபட்டு வந்தது. இவனோடு சேர்ந்து படித்த சீனச் சிறுவர்கள், ஞான நானம் பெற்று கிறிதுவர்களாகி விட்டார்கள். தானும் ஒரு கிறிதுவனாக வேண்டுமென்று விரும்பி னான் ஸன். ஆனால் இதற்குக் குடும்பத்திலுள்ள பெரியோர்களின் அனுமதி வேண்டுமல்லவா? சீனாவில் எப்பொழுதுமே குடும்ப மரியாதை என்பது மிக உண்டு. தந்தை தாய்ப் பேண் மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் என்பன போன்ற மூதுரைகள் அன்றாட நடைமுறை அமிசங்களாக விளங்கின. இந்த அடிப்படையின் மீது பிறந்து வளர்ந்த ஸன், தான் கிறிதுவ மதத்தில் சேர விரும்புவ தாகவும், அதற்குச் சம்மதம் கொடுக்க வேண்டுமென்றும் தன் தமையன் ஆமியைக் கேட்டான். அப்பொழுது இவனுக்குப் பதினாறாவது வயது நடந்துகொண்டிருந்தது. காலேஜில் பரிசு பெற்ற வருஷம்.
ஆமி இதைக் கேட்டு திடுக்கிட்டுப் போனான். தம்பி மீது கோபங் கொண்டான். என்ன துணிச்சல்? பரம்பரையாக மூதாதையர்கள் அனுஷ்டித்து வந்த மதத்தைத் துறந்துவிட்டு வேறொரு மதத்தில், அதுவும் சீனாவைப் பல வகையிலும் சுரண்டிவந்த ஐரோப்பியர் களின் மதத்தில், அதாவது கிறிதுவ மதத்தில் சேருவதா? இந்தச் துணிச்சல், சிறுவனான ஸன்னுக்கு எப்படி ஏற்பட்டது? எல்லாம் இந்தக் கிறிதுவப் பள்ளிக் கூடத்தில் சேர்ந்து படித்ததன் வினை தான். படிப்பை நிறுத்தி விடுவதென்று தீர்மானித்தான். உடனே ஊருக்குக் கடிதம் எழுதினான். இதைப் பார்த்த தந்தை வெகுண்டான். எவ்வளவு சீக்கிரத்தில் ஸன்னைத் திருப்பி அனுப்பிவிட முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் அனுப்பி விடுமாறு ஆமிக்குப் பதில் எழுதி னான்; தவிர, ஸன்னுக்குப் பதினாறு வயது முடிந்துவிட்டபடியால், விவாகம் செய்துவைக்க வேண்டுமென்றும் கருதினான். சீனாவில் ஆண்களுக்காகட்டும் பெண்களுக்காகட்டும் சிறு பிராயத்திலேயே விவாகம் செய்து வைத்துவிடுவது வழக்கம். மற்றும், விவாகம் செய்து வைத்துவிட்டால், மகன், வழிக்கு வந்துவிடுவான் என்றும் கருதியது ஸன்னின் தந்தை உள்ளம். அப்படியே அவன் - தந்தை - ஒரு பெண்ணைப் பார்த்து விவாகம் நிச்சயம் செய்துவிட்டான்: மகன் வரவை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.
ஸன்னும், தமையனின் விருப்பப்படியும், தந்தையின் கட்டளைப் படியும் ஹோனோலூலுவிலிருந்து சீனாவுக்குத் திரும்பி விட்டான். திரும்பி வரும்போது அயோலானி காலேஜில் தனக்குப் பரிசாகக் கிடைத்த ஆங்கிலப் புத்தகத்தோடு ஒரு பைபிளையும் (கிறிதுவ வேதம்) மறவாமல் எடுத்து வந்தான்.
ஊருக்குப் புறத்தில்
ஊர் திரும்பி வந்தான் ஸன். எப்படியோ வந்து விட்டானே யென்று மகிழ்ச்சி கொண்டார்கள் பெற்றோர்கள்; இவனைப் பார்த்து ஒரு வித ஆறுதலும் பெற்றார்கள்; ஆனால் வந்த தினத்தி லிருந்தே இவனுடைய பார்வையிலும், பேச்சிலும் நடவடிக்கை யிலும் ஒரு வித மாறுதலையும் கண்டார்கள். பரம்பரையாகக் காப்பாற்றப்பட்டு வருகின்ற குடும்ப கௌரவத்திற்கு இவனால் எங்கே களங்கம் ஏற்பட்டுவிடுமோ என்ற கவலை இவர்கள் உள்ளத்தில் குடி கொண்டது.
ஸன்னோ, ஹோனோலூலுவிலிருந்து ஸுயிஹெங்குக்கு வந்ததை, வெளிச்சமும் காற்றும் நிறைந்த ஒரு மண்டபத்திலிருந்து, இருட்டும் புழுக்கமும் உள்ள ஓர் அறைக்கு வந்திருப்பதாக உணர்ந்தான். ஹோனோலூலு அந்நிய நாடாக இருந்த போதிலும், அங்கே கழித்த நான்கு வருஷ காலமும் எவ்வளவு இன்பகரமாக இருந்தது? இதற்குக் காரணம் அங்கே எந்தவித கட்டுப்பாடும் இல்லாத ஒரு சூழ்நிலை அமைந்திருந்த தல்லவா? இப்படிப்பட்ட சூழ்நிலையில்தானே மனிதன் முன்னேற்றப் படிகளின் மீது சுலபமாக ஏற முடியும்? இங்கே ஸுயிஹெங்கிலா? சொந்த ஊர்தான்! பெற்றோர், உற்றார் இவர்களுடைய பராமரிப்புக்குக் குறை வில்லை. இருந்தாலும் எத்தனை வித கட்டுப்பாடுகள்? குடும்பத்தினரின் அர்த்தமில்லாத பழக்க வழக்கங்கள், அரசாங்க அதிகாரிகள் அவ்வப்பொழுது வந்து இடும் அநியாய உத்தரவுகள், இப்படிப் பலவற்றிற்கும் தலை குனியவேண்டும்; இவைகளையெல்லாம் சகித்துக் கொண்டு எவ்வளவு காலம் இருப்பது? இப்படியெல்லாம், வாழ்க்கையின் பதினேழாவது மைற்கல்லில் வந்து கொண்டிருக்கும் ஸன்னின் மனம் சிந்திக்கத் தொடங்கியது. நாளாக நாளாக இந்தச் சிந்தனையும் வலுப் பெற்று வந்தது.
இந்த நிலையில் இவனுக்கு லூ ஹா டுங்(Lu Hao-tung) என்ற ஒருவன் நண்பனானான். ஸுயிஹெங் கிராமத்தைச் சேர்ந்தவன்தான். வயதில் இவனைக் காட்டிலும் சிறிது மூத்தவன் என்று சொல்லலாம். பண வசதியுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவனாயிருந்தபடியால் ஷாங்காய் நகரத்திற்குச் சென்று ஆங்கிலக் கல்வி பயின்று, கிறிதுவனுமாகி ஊருக்குத் திரும்பி வந்திருந்தான். இருவரும் ஆங்கிலத்திலேயே பேசிக் கொள்வார்கள்; ஆங்கிலேயர்களிட மிருந்து கற்றுக் கொண்ட விஷயங்களைப் பரிமாறிக் கொள் வார்கள்; தங்கள் நாட்டு மக்களின் பழக்க வழக்கங்களெல்லாம் காலத்திற் கொவ்வாதவை. மதச் சடங்குகள், மதக் கொள்கைகள் முதலியவை அர்த்தமற்றவை, என்று பரிகசித்துப் பேசுகிற போது இருவருக்கும் பொழுது போவதே தெரியாது. மற்றும், கிறிதுவ மதத்தைப் பற்றி இருவரும் மனம் விட்டுப் பேசிக்கொள்வார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், இருவரும் கருத்தொருமித்த நண்பர்களானார்கள்.
சீனாவின் தெற்குப் பகுதிகளில்தான் முதன் முதலாக - ஏறக் குறைய பதினேழாவது நூற்றாண்டிலிருந்து - மேலைநாட்டார் பிரவேசித்து மெதுமெதுவாக ஆதிக்கங்கொள்ளத் தொடங்கினர். இதன் விளைவாக, இந்தப் பகுதிகளிலுள்ளவர்களுக்கு மேலை நாட்டாருடன் தொடர்பு கொள்ள அதிகமான வாய்ப்புக்கள் கிடைத்தன. இந்தத் தொடர்பு அதிகரிக்க அதிகரிக்க, இவர்கள் மீது, அதாவது பிரிட்டிஷார், பிரெஞ்சுக்காரர், அமெரிக்கர் முதலிய அந்நியர் அனைவர் மீதும், வெறுப்பே தெற்குப் பகுதி களில் பரவியது. ஏனென்றால், இந்த அந்நியர்கள், தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொள்ளவும், சீனாவின் பொருளாதார வாழ்க்கையை நாச மாக்கிவிட்டு, அதன் மீது தங்கள் பொருளாதார அபிவிருத்தியைக் காணவும் கையாண்ட முறைகள், ஐயோ, எவ்வளவு கேவலம், எவ்வளவு கேவலம் என்று சொல்லக் கூடியனவாயிருந்தன.
அந்நியர் மீது ஏற்பட்ட இந்த வெறுப்பு, மஞ்சூ ஆட்சியின் மீதும் திரும்பியது. மஞ்சூ அரச பீடத்தில் அமர்ந்திருந்தவர்கள், பொதுவாகச் சீனாவை நல்ல முறையிலேயே ஆண்டு வந்தார்கள் என்று தான் சரித்திரம் கூறுகிறது. ஆனால் இவர்களுடைய ஆட்சி காலத்தில்தான், சீனா, அந்நியர்கள் பூட்டிய பல தளைகளுக்குட் பட்டது. இந்தத் தளைகள், சீன மக்களின் பொருளாதார வாழ்வைப் பல வழிகளிலும் பாதித்தன. மற்றும் இந்த மஞ்சூக்கள், சீன மக்களின் நல்லெண்ணத்தையும் விசுவாசத்தையும் மெது மெதுவாக இழந்து விடுகின்ற முறையில் ஆட்சி புரிந்து வந்தார்கள். அரசாங்க நிருவாகத்தில் திறமையின்மையும், ஊழலும் மலிந்து காணப் பட்டன. அரசாங்க அதிகாரிகள், ஜனங்களைப் பல வழிகளிலும் இம்சித்து வந்தார்கள். இவையெல்லாம் திரண்டு மஞ்சூ ஆட்சியை ஒழித்துக்கட்ட வேண்டுமென்ற எண்ணத்தை மக்களிடையே வளர்த்துக் கொடுத்தது.
இந்த எண்ணம், சீனாவின் தென் பிரதேசங்களில் தான் அதிக மாகப் பரவியதென்று சொல்லவேண்டும். அந்நிய ஆதிக்கத்தின் மீது வெறுப்பு ஏற்படக் தொடங்கியதும் இந்தப் பகுதிகளில்தான். இந்தத் தெற்குப் பகுதி மக்கள், அந்நியர்களுடன் நெருக்கமான தொடர்பு கொள்ள அதிகமான சந்தர்ப்பங்கள் பெற்றிருந்தபடியால், மேலை நாட்டு நாகரிகத்திற்கும் கிறிதுவ மதத்திற்கும் எளிதில் வசப் பட்டார்கள். மேலை நாடுகளில் அவ்வப்பொழுது தலைதூக்கிய அரசியல் புரட்சிகளென்ன, மதப் புரட்சி களென்ன, இவை பலவும் தெற்கு சீனாவின் மீது வேகமாக வந்து மோதின. சீன சரித்திரத்தின் ஏடுகளைப் புரட்டிப் பார்த்தோமானால், அந்நிய ஆதிக்கத்திற்கு விரோதமாகவும், மஞ்சூ ஆட்சிக்கு விரோதமாகவும் பத்தொன்ப தாவது நூற்றாண்டில் நடைபெற்ற புரட்சிகள் பலவும் தென் பகுதிகளிலேயே முதன் முதலாகத் தோன்றின என்பது புலனாகும். கிறிதுவ மதப் பிரசாரமும் இந்தப் பகுதிகளில்தான் சீக்கிரமாகச் செல்வாக்குப் பெற்றதென்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஸுயிஹெங் கிராமத்தில் வசித்து வந்த ஸன்னும், இவனுடைய கிறிதுவ நண்பனுமாகிய லூவும், தங்களுக்கு முந்திய தலைமுறை யில், இத்தகைய புரட்சிகளில் ஒன்று நடைபெற்றதைப் பற்றிக் கிராமத்துப் பெரியவர்கள், தங்களுக்குள் பேசிக் கொள்வதைக் கேட்டு வந்தார்கள். இந்த புரட்சிக்கு தைப்பிங் புரட்சி அல்லது தைப்பிங் கலகம்1 என்று பெயர். இந்தக் கலகம், முதன் முதலாக க்வாங்டுங் மாகாணத்திலேயே வித்திடப் பெற்றபடியால், இது சம்பந்தமான விவரங்கள் பலவும், ஸுயிஹெங் கிராமத்துப் பெரிய வர்களுக்கு ஒருவாறு தெரிந்திருந்தது. ஆனால் இதைப் பற்றிப் பகிரங்கமாக, நான்கு பேர் அறிய, பேசிக் கொள்ளமாட்டார்கள். அப்படிப் பேசினால், மஞ்சூ அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக வேண்டி வருமென்ற அச்சம் இவர்களை ஆட்கொண்டிருந்தது.
தைப்பிங் கலகத்திற்கு முதல் வித்திட்டவன் ஹுங் ஸியு சுவான் (Hung-Hsiu-Chuan) என்பவன். இவன் ஒரு பள்ளிக் கூட ஆசிரியன். அரசாங்க உத்தியோகத்திற்காக நடைபெற்ற போட்டிப் பரீட்சைக்கு இரண்டு தடவை சென்று இரண்டு தடவையும் தோல்வியுற்றான். இதனால் ஆசாபங்க மடைந்தவனாய், தன் எண்ணத்தையும் சக்தியை யும் வேறு வழியில் திருப்பினான். ஏற்கனவே இவன் கிறிதுவ மத சம்பந்தமான சில நூல்களைப் படித்திருந்தான். அந்த நூல்களில் காணப்பட்ட சில கருத்துக்கள் இவன் மனத்தைக் கவர்ந்தன. சீனர்கள் பரம்பரையாக அனுஷ்டித்து வந்த உருவ வழிபாட்டை எதிர்க்கத் துணிந்தான். இதற்காகச் சில சங்கங்களைத் தோற்று வித்தான். க்வாங்டுங் மாகாணத்திலும் அதற்கு அடுத்தாற்போல் மேற்குப் பக்கத்திலுள்ள க்வாக்ஸி(Kwangsi) மாகாணத்திலும் தீவிரப் பிரசாரம் தொடங்கினான். இப்படி இவன் தொடங்கியது ஏறக் குறைய 1840ஆம் வருஷத்திலென்பர். சீனமக்களை, உருவ வழிபாடு செய்வதினின்று திருப்பி நல்வழியில் செலுத்துவதற்காக ஆண்ட வனால், தான் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், தன்னை யேசு கிறிதுவின் சகோதரனென்றும் இந்தப் பிரசாரத்தில் சொல்லிக் கொண்டான். காலக்கிரமத்தில் இவனைப் பின்பற்றும் ஒருகூட்டம் சேர்ந்தது. சேராமலிருக்குமா? அதிலும், மேலை நாட்டுக் கல்வி வாசனையை நுகர்ந்த இளைஞர்களே இந்தக் கூட்டத்தில் பெரும் பான்மை யோராயிருந்தனர். இந்தக் கூட்டம், சிறிது காலத்திற்குப் பிறகு புரட்சிக் கூட்டமாக மாறிவிட்டது மஞ்சூ ஆட்சியையும், அத னோடு உருவ வழிபாடு செய்வோர் அனைவரையும் ஒழித்துவிட்டு உண்மையான ஆட்சியை நிலைநாட்டுவதே எங்கள் நோக்கம், என்று முழக்கஞ் செய்து வந்த இந்தப் புரட்சிக் கூட்டத்தினர், ஒழுங்கான படையினராகத் தங்களை அமைத்துக் கொண்டு ஊர் ஊராகச் சென்று பிரசாரம் செய்தனர்; சில ஊர்களைத் தங்கள் சுவாதீனப்படுத்தியும் கொண்டனர். வடக்கே நான்கிங் நகரம்1 வரை சிறிது காலம் இவர்கள் வசத்திலிருந்தது. இவர்களை அடக்கி ஒடுக்க மஞ்சூ அரசாங்கம் முயன்று முடியாமற் போய் கடைசியில் அந்நிய நாட்டினரின் உதவியை நாடியது. சந்தோஷத்துடன் உதவிக்கு வந்தனர் அந்நிய நாட்டினர். கலகமும் கடுமையாக அடக்கி ஒடுக்கப் பட்டது. இப்படி ஒடுக்கப்பட்டது 1864ஆம் வருஷம் என்பர். கலகத்திற்கு வித்திட்ட ஹுங் ஸியு சுவானும் இந்த வருஷத்தில் தற்கொலை செய்து கொண்டு விட்டான். இந்த தைப்பிங் கலகத்தி னால், லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்; செழுமையான பிரதேசங்கள் சில பாழாயின.
இந்தக் கலக விவரங்களை ஸுயிஹெங் கிராமத்துப் பெரிய வர்கள் மூலம் ஒருவாறு தெரிந்துகொண்ட சிறியவர்களான ஸன்னும் லூவும் இந்தக் கலகத்தைப் பற்றிச் சிறிது பகிரங்கமாகவே பேசத் தொடங் கினார்கள். ஆங்கிலக் கல்வி பயின்றவர்களல்லவா? கிறிதுவப் பாதிரிமார் களின் பழக்கத்தினால், தங்கள் மனத்தில் தோன்றியதை தைரியமாக எடுத்துச் சொல்லும் துணிச்சலும் பெற்றிருந்தார்கள். தைப்பிங் கலகம் எந்த நோக்கங்களுடன் தொடங்கப்பெற்றதோ அந்த நோக்கங்கள், அதாவது சீனர்களிடைய நிலவி வந்த மூட நம்பிக்கைகளையும், அதே சமயத்தில் மஞ்சூ ஆட்சியையும் ஒழித்துவிட வேண்டுமென்றே நோக்கங்கள் நிறை வேறவில்லை யாயினும், இந்தக் கலகத்தின் விளைவாக, சீனர் களிடையே ஒரு மன மாறுதல் ஏற்பட்டிருக்கிறதென்பதையும், மஞ்சூ ஆட்சிக்கு ஓர் அசைவு ஏற்பட்டுவிட்டதென்பதையும் இந்த இரு இளைஞர்களும் கண்டுகொண்டார்கள்; இந்த நோக்கங்கள் நிறை வேற வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதை நன்கு உணர்ந் தார்கள். இதற்காக முனையவும் முற்பட்டுவிட்டார்கள். இப்படி முற்பட்டதன் முதல் விளைவுதான் தைப்பிங் கலகத்தைப் பற்றிப் பகிரங்கமாகப் பேச முற்பட்டது.
சில சமயங்களில் ஸன், மஞ்சூ ஆட்சியைக் கண்டித்துப் பகிரங்க மாகப் பேசுவான், அரசாங்கத்திற்கு அவ்வப்பொழுது விண்ணப்பங்கள் மூலம் நமது குறைகளைத் தெரிவித்துக்கொண் டால் பரிகாரங் கிடைக்கும் என்று கிராமத்துப் பெரியவர்கள் சொன்னால் உங்கள் விண்ணப்பங்கள் அரசாங்க இலாகாக்களில் படிக்கப்படுகின்றனவா என்பதுகூட சந்தேகந்தான் என்பான்; அதிகாரிகள் அக்கிரமம் செய்தால் அரசாங்கம் என்ன செய்யும் என்று யாராவது கேட்டால் அரசாங்கம் வேறே அதிகாரிகள் வேறேயா என்று பதில் கேள்வி போடுவான். இளைஞனுடைய தைரியத்தைக் கண்டு கிராமத்துப் பெரியவர்கள் ஒரு பக்கம் வியப்புக் கொண்டாலும் மற்றொரு பக்கம், இவனிடம் பேசினால் எந்தச் சமயத்தில் எந்த விதமான ஆபத்து தங்களுக்கு உண்டாகுமோ என்று அஞ்சவும் செய்தார்கள்.
ஒரு நாள் ஸுயிஹெங் கிராமத்துக் கோயிலில் ஒரே அமளி குமளி. ஊர் ஜனங்கள் அங்கு ஒன்று கூடி குசுகுசுவென்று பேசிக் கொண்டார்கள் கோயிலில் என்ன நடந்துவிட்டது? அங்குள்ள மூன்று தெய்வ உருவங்களில் ஒன்றின் கைவிரல் எப்படியோ ஒடிந்து கிடந்தது; மற்றோர் உருவத்தின் தலைப்பக்கம் சிறிது சேதமாக்கப் பட்டிருந்தது. யார் இந்த அக்கிரமத்தைச் செய்தது? ஊருக்கு நாச காலம் வந்து விட்டது போலும் என்றனர் சிலர்; தெய்வங்களின் சாபம் நிச்சயமாக ஊரை வந்து தாக்கப்போகிறதென்றனர் வேறு சிலர். கூட்டத்திலிருந்த சில குழந்தைகள், ஸன்னும் அவன் நண்பனான லூவும் கோயிலுக்குள் வந்து, தெய்வங்களையெல்லாம் பரிகசித்தும் பழித்தும் பேசினார்களென்று கூறினார்கள். என்ன அநியாயம்? ஸன்னின் பெற்றோர்கள் பெரிதும் வருத்தப்பட்டார்கள்; பரம்பரை யாகக் காப்பாற்றப்பட்டு வந்த குடும்ப கௌரவத்திற்குப் பழுது ஏற்பட்டு விட்டதைக் கண்டு தலை குனிந்தார்கள்.
இந்தத் தெய்வ நிந்தனைக்கு என்ன பரிகாரம்? ஊருக்குப் பொதுவான விஷயமல்லவோ இது? ஊர்ப்பெரியவர்கள் ஒன்று கூடிப் பேசினார்கள். வெள்ளைக்காரர்களுடன் நெருங்கிப் பழகி வந்த ஸன்னும் அவன் நண்பனான லூவும்தான் இந்த அக்கிர மத்தைச் செய்திருக்க வேண்டுமென்றும், லூ என்பவன் கிறிது வனான படியால் அவனை ஒன்றும் செய்வதற்கில்லையென்றும், ஸன்னின் தந்தையான ஸன் டாவ் சுவான் தான், இதற்குப் பொறுப் பேற்றுக்கொண்டு பரிகாரந்தேடித்தர வேண்டுமென்றும், அதாவது பழுது பார்ப்பதற்காக ஏற்படும் செலவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும், அவனுடைய மகனை - ஸன்னை - உடனே ஊரை விட்டு வெளியேற்றிவிட வேண்டுமென்றும், அப்பொழுது தான் தெய்வங்கள் கோபம் நீங்கி ஊரை எப்பொழுதும்போல் காப்பாற்றி வருமென்றும் தீர்ப்பளித்தார்கள். இந்தத் தீர்ப்புக்கு மாற்று ஏது? தந்தை, கோயிலுக்கு நஷ்ட ஈடு செலுத்தினான். மகன்-ஸன்-கிராமத்தை விட்டு வெளியேறினான்.
சொந்த ஊரை விட்டு வெளியேற்றப்பட்டதற்காக ஸன் சிறிதுகூட வருத்தப்படவில்லை; எங்கே செல்வது, என்ன செய்வது என்பவைகளைப் பற்றி யோசிக்கவுமில்லை. ஹோனோலூலுவிலிருந்து வந்ததிலிருந்தே அயோலானியில் தான் பெற்ற கல்வி யறிவை மேலும் அபிவிருத்தி செய்துகொள்ளவேண்டுமென்ற ஆவல் இவனுக்கு இருந்தது. இந்த ஆவலை ஒருவாறு நிறைவேற்றிக் கொள்ள, இப்பொழுது நல்ல வாய்ப்புக் கிடைத்ததாக உணர்ந்தான். ஸீயிஹெங் கிராமத்தை விட்டு நேரே ஹாங்காங்1 நகருக்குச் சென்றான். அங்கிருந்த சாதாரண ஒரு கிறிதுவப் பள்ளிக்கூடத் தில் மாணாக்கனாகப் போய்ச் சேர்ந்து கொண்டான். இப்டிச் சேர்ந்து கொண்டது 1883 ஆம் வருஷம் நவம்பர் மாதம். ஆனால் அடுத்த மாதமே - டிசம்பர் மாதம் - பள்ளிக்கூடத்தை விட்டு ஸுயிஹெங் கிராமத்திற்குத் திரும்பிவிட வேண்டியதாயிற்று. இவன் தந்தை திடீரென்று இறந்து போய் விட்டான். தன் மகன், குடும்ப கௌரவத்திற்குக் களங்கம் ஏற்படக்கூடிய விதமாக நடந்துகொண்டு விட்டதை எண்ணி எண்ணி மனமுடைந்து போய் மரித்து விட்டான் என்று கிராமவாசிகள் பேசிக்கொண்டார்கள். அஃதெப்படி இருந்த போதிலும், தந்தையின் மரணச் செய்தி கிடைத்ததும், ஸன் ஊருக்கு வந்து சேர்ந்தான். ஈமச் சடங்குகள் கிரமப்படி நடைபெற்றன. சீனாவில் துக்கம் கொண்டாடுவதென்பது மாதக் கணக்கில் நீடிக்கும். எனவே ஸன் சுமார் மூன்று மாத காலம் ஊரில் இருந்துவிட்டு, மறுபடியும் ஹாங்காங் நகருக்குச் சென்று, அங்கிருந்த க்வீன் காலேஜ் (Queens’s Collage) என்ற பிரபலமான கல்லூரியில் சேர்ந்து படிக்கத் தொடங்கினான். காலேஜ் என்று அழைக்கப்பட்டாலும் இதில் மெட்ரிகுலேஷன் வகுப்பு வரையிலேயே இருந்தது. சுமார் இரண்டரை வருஷ காலம் இங்குத் தொடர்ந்து படித்தான். இங்குச் சீன மொழி கட்டாய பாடமாகப் போதிக்கப்பட்டது. ஆங்கிலம், சரித்திரம், கணிதம் முதலிய பாடங்களில் ஒருவன் எவ்வளவுதான் தேர்ச்சி பெற்றிருந்தாலும், சீன மொழிப் பாடத்தில் தேர்ச்சி பெறா விட்டால் அவனை மேல் வகுப்புக்கு அனுப்புவதில்லை யென்ற விதி கட்டாயமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதனால், ஸன்னுக்கு சீனாவின் பழைய நூல்களில் நல்ல பரிச்சயம் ஏற்பட்டது. ஸுயிஹெங் கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் அர்த்தம் தெரியாமல் நெட்டுருப் போட்டு வந்தவைகளில் பலவற்றிற்கு இப்பொழுது அர்த்தம் தெரிந்து கொண்டான்; அவைகளில் பொதிந்து கிடக்கும் உட்கருத்துக்களை ரசிக்கக்கூடிய பக்குவத்தையும் பெற்றான்.
இங்ஙனம் படிக்கிற காலத்தில் செலவு வகைகளுக்கு என்ன செய்தான் ஸன் என்ற கேள்வி இங்கே பிறக்குமல்லவா? இவனுடைய தமையன் ஆமி, குடும்பச் செலவுக்கென்று அவ்வப்பொழுது ஹோனோலூலுவிலிருந்து ஒரு தொகை அனுப்பிக்கொண்டு வந்தான். இதிலிருந்து இவனுக்கு ஒரு பகுதி கிடைத்துக் கொண்டிருந்தது. இதைக்கொண்டு சிக்கனமாகச் செலவு செய்து படித்து வந்தான். ஆமியும், தனது சகோதரன் படிப்பில் ஊக்கங்காட்டி வருவதைக் கேட்டு, சிறிதுகூட சலித்துக்கொள்ளாமல் பணம் அனுப்பி வந்தான். தன் தந்தை காலமானதும் இவன் - ஆமி - ஸுயிஹெங்குக்கு வந்து போகவில்லை யென்றே தெரிகிறது. வந்து போவதென்றால் எவ்வளவு செலவு? அங்கே ஹோனோலூலுவில் வியாபாரம் வேறே கெட்டுப்போகும்? இவைகளை உத்தேசித்தே வந்து போகவில்லை போலும்.
ஹாங்காங்கில் மாணாக்கர்கள் வசிப்பதற்கென்று சில விடுதிகள் இருந்தன. இப்படிப்பட்ட விடுதிகள் ஒன்றில் வசித்துக் கொண்டுதான் ஸன் க்வீன் காலேஜுக்குப் போய் வந்து கொண் டிருந்தான். இந்த விடுதியின் மேல் மாடி, சார்லஸ் ஹாகர்(Charles R. Hager) என்ற ஓர் அமெரிக்கப் பாதிரியின் வாசதலமாயிருந்தது. இந்தப் பாதிரி, சமீபகாலத்தில்தான் சீனாவுக்கு வந்தவன். சீன பாஷையை இன்னும் சரியாகக் கற்றுக் கொள்ளவில்லை. ஆனால் சீன மக்களோடு நெருங்கிப் பழகவேண்டுமென்ற ஆசை இவனிடம் மேலிட்டிருந்தது. ஆங்கிலமும் சீனமும் தெரிந்த ஒருவனை நண்ப னாகக் கொள்ள விழைந்தான். இந்த நிலையில் இவனுக்கும் ஸன் னுக்கும் சந்திப்பு ஏற்பட்டது. ஒரே விடுதியில் வசித்து வந்தார்களாத லினால் இருவருக்கும் சுலபமாகச் சந்திக்க முடிந்தது. இந்தச் சந்திப்பு சீக்கிரத்தில் நட்பாகவும் முதிர்ந்தது. ஒருவரையொருவர் நன்கு அறிந்து கொண்டார்கள். ஸன், கிறிதுவனாகவில்லை யென்றாலும், அந்த மதத்தில் அதிக பற்றுள்ளம் கொண்டிருந்தான் என்பதை ஹாகர் தெரிந்துகொண்டான். ஒருநாள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, நீ ஏன் இன்னும் ஞானநானம் பெற்றுக்கொள்ள வில்லை யென்று ஸன்னைப் பார்த்துக் கேட்டான் ஹாகர். எந்த நிமிஷத்திலும் நான் தயார் என்றான் பதிலுக்கு ஸன். அவ்வளவு தான். சில நாட்களுக்குள் ஞானநானம் செய்விக்கப் பெற்றான். படிப்பிற்காக ஹாங்க்காங் நகருக்கு வந்து சேர்ந்த சிறிது காலத்திற் குள்ளாகவே, அதாவது 1884ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் தன்னுடைய பதினெட்டாவது வயதில் கிறிதுவனாகி விட்டான் ஸன்.
ஸன், ஹவாயிலிருந்து திரும்பி வருவதற்கு முந்தியே, இவனுடைய தந்தை, இவனுக்கு ஒரு பெண்ணைப் பார்த்து விவாக நிச்சயம் செய்து வைத்திருந்தானல்லவா, அது நடைபெறாமலே நின்றிருந்தது. இவன்-ஸன்-எதிர்பாராத விதமாகக் கிராமத்திலிருந்து வெளியேற வேண்டி வந்து விட்டதாலும் இதற்குப் பிறகு தந்தை மரித்து, துக்கம் கொண்டாட வேண்டி வந்துவிட்டதாலும், நிச்ச யிக்கப்பட்டிருந்த விவாகம் தள்ளிப் போயிற்று. துக்கக் கொண் டாட்டமும் ஒருவாறு முடிவடைந்தது. இனியும் விவாகத்தைத் தள்ளிப் போடுவது சரியன்று எனக் கருதினார்கள் குடும்பத்தினர். படிப்புக்காக ஹாங்காங் சென்றிருந்த ஸன்னை ஊருக்கு வரவழைத்தார்கள். இவன் கிறிதுவனாகிவிட்ட செய்தி ஏற்கனவே கிராமத்திற்கு எட்டியிருந்தது. ஆனால் இதற்காக இவன் மீது குடும்பத்தினர் வருத்தங்கொள்ளவில்லை. கொண்டு என்ன பயன்? குடும்பக் கடமைகளை இவன் ஒழுங்காக நிறைவேற்றிக்கொண்டு வருகிற போழ்து இவனை யார் என்ன சொல்ல முடியும்? மற்றும், இவன்-ஸன்-பரம்பரையாக அனுஷ்டிக்கப்பட்டு வந்த மதத்திற்குப் புறம்பானவனாகத் தன்னைச் செய்து கொண்டுவிட்ட போதிலும், தாங்கள் நிச்சயம் செய்து வைத்திருந்த விவாகத்திற்கும் புறம்பான வனாகிவிடக் கூடாதென்று தீர்மானித்தார்கள் குடும்பத்தினர்.
ஸன்னும் குடும்பத்தினர் கட்டளைப்படி, ஊருக்கு வந்து சேர்ந்தான். இவனுக்கும் லூஸூ என்ற பெண்ணுக்கும் 1884ஆம் வருஷம் மே மாதம் ஏழாந்தேதி சீன முறைப்டி சிறப்பாகத் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது, தம்பதிகளைப் புதிய பெயரிட்டு அழைப்பது சீனர்கள் வழக்கம். இதன் பிரகாரம் லூஸூ (Lu Szu)என்ற பெயர் டக்முங்(Tuck-mung) என்ற பெயராக மாறியது. இந்தப் பெயரால்தான் இவள் புக்ககத்தினராலும் பிற ராலும் அழைக்கப்பட்டாள். ஸன்னின் பெயரும் மாற்றமடைந்தது. ஆனால் மாற்றமடைந்த பெயரை இவன் உபயோகிக்கவில்லை. ஸன் யாட் ஸென் என்ற பெயராலேயே தன்னை அழைத்துக் கொண் டான். மேலை நாட்டினர்தான் இந்தப் பெயரை அதிகமாக உப யோகித்து வருகிறார்கள். சீனர்கள் இன்னும் ஸன் - வென் என்ற பெயர்கொண்டே இவனைப் போற்றி வருகிறார்கள்.
விவாகமானதும் ஸன், ஹாங்காங்குக்குத் திரும்பி விட்டான். படிப்பில் ஊக்கங் காட்டி வந்ததோடல்லாமல் ஓய்ந்த நேரங்களில் ஹாகருடன் சேர்ந்து கொண்டு கிறிதவ மதப் பிரசாரத்தில் ஈடுபட்டான். பள்ளிக்கூட விடுமுறை நாட்களில் இந்தப் பிரசார நிமித்தம் இருவரும், வேறு சில சீனக் கிறிதுவ நண்பர்களைக் கூட்டிக்கொண்டு, சுற்றுப் புறமுள்ள கிராமங்களுக்குச் செல் வார்கள். சீன மொழியில் ஆக்கப்பட்ட பைபிளைப் பலருக்கும் வழங்கி, அதிலுள்ள செவ்விய கருத்துக்களை விளக்கிச் சொல்வதில் ஸன் திறமை மிக்கவனானான். இங்ஙனம் இவன், பிரசாரத்திற்காக மற்றக் கிராமங்களுக்குச் சென்றது பெரிதல்ல. தன் சொந்தக் கிராமமாகிய ஸுயிஹெங்குக்கே, ஹாகருடனும் மற்றக் கிறிதுவ நண்பர்களுடனும் சென்றதுதான் பெரிது. ஏனென்றால், எந்தக் கிராமம், மத தூஷணைக்காக இவனை வெளியேற்றி விட்டதோ, அந்தக் கிராமத்திற்கே, வெளியேற்றப்பட்ட சுமார் ஒரு வருஷத் திற்குள், வேற்று மதத்தினனாய், வேற்று மதத்தினருடன் வேற்று மதப் பிரசாரத்திற்காகச் செல்வதென்றால் அதற்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும்? எவ்வளவு தன்னம்பிக்கையும் மன உறுதியும் படைத் திருக்க வேண்டும்? தன் நண்பர்களுடன் சென்ற இவன் எங்கே தங்கினா னென்று நினைக்கிறீர்கள்? தன் வீட்டிலேயே! கூட வந்திருந்தவர் களுக்குச் சகல வசதிகளையும் செய்து கொடுத்து உபசரித்தான்! வீட்டிலிருந்த அனைவரும் அப்படியே பிரமித்துப் போய்விட் டார்கள். இவன் இருந்து போகிறவரையில் யாரும் வாய் திறக்க வில்லை. இவனிடத்தில் கொண்ட பயத்தினாலல்ல; யாரிடத்திலும் அன்பாகவும் பணிவாகவும் இவன் நடந்து கொண்டு வந்ததனால், இவனை எதிர்த்தோ, இவன் கொண்டிருந்த கொள்கைகளை கண்டித்தோ பேச யாருக்கும் தைரியம் பிறக்கவில்லை.
வைத்தியத் துறையில்
ஸன் இங்ஙனம் கிறிதுவ மதப் பிரசார நிமித்தம் ஸுயிஹெங் கிராமத்திற்கு வந்து போன பிறகு, கிராமத்திலேயே ஒரு பரபரப்பு உண்டாயிற்று. இவன் குடும்பத்தினர், இவன் எதிரில் ஏதும் பேசத் துணிய வில்லையாயினும் இவன் போன பிறகு பெரிதும் கலக்க மடைந்தனர். குடும்பம் பூராவுமே, கிராமத்தினரால் பகிஷ்கரிக்கப் பட்டுவிடுமோ என்ற அச்சம் சிலரை ஆட்கொண்டது. என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்தார்கள். இவன் தாயாரோ, ஐயோ, கிறிதுவ மதப் பித்து இப்படி இவன் தலைக்கேறிவிட்டிருக்கிறதே! இதைப் போக்க என்ன வழி என்று கவலைப்பட ஆரம்பித்தாள். பள்ளிக்கூட விடுமுறை நாட்களில் ஊருக்கு வந்து போய்க்கொண்டிருந்தால், தனது இளம் மனைவியின் முகத்தைப் பார்த்துப் பார்த்து இவன் மனம் மாறுதலடையக் கூடுமென்றும், அதன் விளைவாக இவனுடைய கிறிதுவ மத நம்பிக்கையிலும் மாறுதல் ஏற்படக் கூடுமென்றும் இவள் கருதி னாள்; சீக்கிரத்தில் முன்னோர்கள் அனுஷ்டித்து வந்த மதத்திற்கே திரும்பி வந்துவிடுவானென்றும் எதிர்பார்த்தாள். ஆனால் இவள் கருதியதற்கும் எதிர்பார்த்ததற்கும் நேர்மாறாக ஸன்னுக்கு, கிறிதுவ மதத்தின் மீது கொண்டிருந்த பற்றும், அதன் கொள்கைகளைப் பரப்பவேண்டு மென்பதிலிருந்த ஆர்வமும் வளர்ந்து வந்தன.
ஸன், கிறிதுவ மதப் பிரசாரகனாக ஸுயிஹெங்குக்கு வந்து போன பிறகு, இவன் தாயார், ஹோனோலூலுவிலிருந்த ஆமிக்கு, இவனைப் பற்றிக் கடிதங்கள் எழுதினாள்; அங்குச் சென்றவரிடம் தகவலும் சொல்லியனுப்பினாள்; இதைக் கேட்ட ஆமி கடுங் கோபங் கொண்டான்; கிறிதுவ மதத்திலிருந்து உடனே விலகிக் கொள்ளாவிட்டால் குடும்பச் செலவுக்கென்று வழக்கமாக அனுப்பி வரும் பணத்தை நிறுத்தி விடுவதாக ஸன்னுக்குத் தெரிவிக்கச் செய் தான். ஆனால் ஸன், இந்தப் பயமுறுத்தலைக் கேட்டு பயப்பட வில்லை. எப்பொழுதும் போல் கிறிதுவ மதப் பிரசாரத்தில் ஊக்கங்காட்டி வந்தான்.
ஆமி பார்த்தான். கடிதங்கள் மூலமாக ஸன்னை மாற்ற முடியாதென்று எண்ணி, ஹோனோலூலுவுக்கு இவனை உடனே புறப்பட்டு வருமாறு ஒரு கடிதம் எழுதினான். அங்கு, தான் சம்பாதித்துச் சேர்த்த ஒரு சொத்தை விற்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிற தென்றும், இது சம்பந்தமாக ஸன் கையெழுத்துப் போட வேண்டு மென்றும், எனவே தாமதம் செய்யாமல் உடனே புறப்பட்டு வருமாறும் இந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தான்.
ஸன்னும், தன் சகோதரன் கட்டளைக்கிணங்க, உடனே-1886 ஆம் வருஷம் மத்தியில்-ஹோனோ லூலுவுக்குச் சென்றான்; தமை யனைக் கண்டான். அவனும், இவனை வரவழைத்ததன் உண்மை யான நோக்கத்தை எடுத்துச் சொல்லி, கிறிதுவ மதத்திலிருந்து உடனே விலகிக் கொண்டுவிடுமாறு நயமாகக் கேட்டுக் கொண் டான்; அப்படி விலகிக்கொள்ளா விட்டால் விபரீத விளைவுகள் உண்டாகுமென்று எச்சரிக்கை செய்தான். ஸன் எதற்கும் அசைய வில்லை. கடைசியில், ஊருக்குத் திரும்பிச் செல்ல, கப்பல் செலவுக்குப் பணங்கொடுக்க முடியாதென்று சொல்லி விட்டான் ஆமி.
என்ன செய்வான் ஸன்? அங்குள்ள சில கிறிதுவர்களின் உதவியை நாடினான். அவர்களும், மனமுவந்து, இவனுடைய பிரயாணச் செலவுக்குப் பணங்கொடுத்தார்கள். அதைக்கொண்டு, ஸன், மெதுவாக ஹாங்காங் நகருக்கு வந்து சேர்ந்தான். ஆனால் க்வீன் காலேஜில் சேர்ந்து படிக்க முடியவில்லை. இடையில் சில மாத காலம் பள்ளிக்கூடத்திற்கு வர வில்லையாதலினால், பள்ளிக் கூட நிருவாகிகள் இவனை மறுபடியும் சேர்த்துக்கொள்ள மறுத்து விட்டார்கள். இனி என்ன செய்யலாமென்று சிந்திக்கலானான். இந்தச் சிந்தனையில் சில மாதங்கள் கழிந்தன.
கடைசியில் இவனுடைய பாதிரி நண்பனாகிய ஹாகர், வைத்தியத் தொழிலுக்குப் படிக்குமாறு இவனுக்கு யோசனை கூறினான். சீனாவில் வைத்தியத் தொழிலுக்கு எப்பொழுதுமே அதிக மான மதிப்பு இருந்து வந்தது. தவிர, மேனாட்டு முறையில் வைத்தியம் பயின்றவர்கள் அதிகம் பேர் தேவையாகவும் இருந்தது. எனவே, ஸன், ஹாகருடைய யோசனையைத் தயக்கமின்றி ஏற்றுக் கொண் டான். அப்பொழுது காண்ட்டன் நகரத்தில் டாக்டர் ஜே. ஜி. கெர் (Dr. J. G. Kerr) என்ற ஒரு பாதிரி, ஓர் ஆபத்திரி வைத்து நடத்தி வந்தான்; கூட, விருப்பமுள்ள சீன இளைஞர்களுக்கு வைத்தியத் தொழிலில் பயிற்சியும் அளித்து வந்தான். ஹாகருக்கு அவனை நன்கு தெரியும். ஆதலின், ஸன்னை ஓர் அறிமுகக் கடிதத்துடன் அவனிடம் அனுப்பினான்.
ஸன்னும் இந்த அறிமுகக் கடிதத்துடன் காண்ட்டன் நகரம் சென்று டாக்டர் கெர்ரை சந்தித்து, அவனுடைய அன்பையும் ஆதரவையும் பெற்றான். அவனுடைய ஆபத்திரியில் வைத்தியம் பயின்றான். இவனோடு இவனுடைய பாலிய நண்பனாகிய லூ என்பவனும் டாக்டர் கெர்ரிடம் வைத்தியம் கற்க வந்து சேர்ந்தான். செங் ஷி லியாங்(Cheng Shih - liang) என்ற இன்னொரு நண்பனும் இவர் களோடு வந்து சேர்ந்து கொண்டான்.
இந்த மூன்று நண்பர்களும் அடிக்கடி அரசியலைப் பற்றிப் பேசுவார்கள். மஞ்சூ ஆட்சியை ஒழித்து, அதன் தானத்தில் மக்களுக் குகந்த ஆட்சியை ஏற்படுத்துவதற்கு என்னென்ன முறைகளைக் கையாளலாமென்பதைப் பற்றிக் காரசாரமாகத் தர்க்கம் செய் வார்கள். ஆனால் எல்லாம் பேச்சளவில்தான்! உலக அனுபவம் பெறாத இளைஞர்கள்தானே?
ஸன், கெர்ரிடம் ஒரு வருஷ காலம் வைத்தியம் கற்றான். ஆபத்திரியில் இவன் சுறுசுறுப்பாக வேலை செய்வதையும், நோயாளி களிடம் அன்பாக நடந்து கொள்வதையும் கண்ட கெர், இவனுடைய தொழில் முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவி செய்தான்.
இப்படி இவன் காண்ட்டன் நகரத்தில் பயின்று கொண் டிருக்கையில் இதே வைத்தியத் துறையில் மேல் படிப்புப் படிக்கக் கூடிய ஒரு வாய்ப்பு இவனுக்குக் கிட்டியது. 1887 ஆம் வருஷம் ஹாங்காங் நகரத்தில் மேனாட்டு முறையில் வைத்தியம் கற்பிக்கும் ஒரு கல்லூரி துவக்கப் பட்டது. ஸர் பாட்ரிக் மான்ஸன்1 என்ற ஓர் ஆங்கிலேயே வைத்தியன் இதைத் துவக்கிவைக்கப் பெரிதும் உதவி செய்தான். ஆனால் இதற்குப் பெரிதும் ஆதரவு தந்தவன், இதன் வளர்ச்சிக்குப் பாடுபட்டவன் டாக்டர் காண்ட்லி2 என்பவன். சீனாவிலும் இங்கிலாந்திலும் இவனுக்கு நல்ல பெயர் இருந்தது. இவன் ஆதரவில் வளர்ந்த வைத்தியக் கல்லூரியில் ஸன் ஒரு மாணாக்கனாகச் சேர்ந்து கொண்டான்.
சேர்ந்துகொண்ட சிறிது காலத்திற்குள்ளாகவே இவனிடம் காண்ட்லிக்குத் தனிக் கவர்ச்சி ஏற்பட்டு விட்டது. கூறுகிறான் காண்ட்லி ஓரிடத்தில்:-
“கல்லூரியில் சேர்ந்த இருபத்து நான்கு பேரில் ஸன் என்னை அதிக மாகக் கவர்ந்துவிட்டான். அவனுடைய இனிய சுபாவம், படிப்பில் அவன் காட்டிய சிரத்தை, கல்லூரியிலாகட்டும், தனிப்பட்ட முறையிலாகட்டும் அவன் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டது இவையெல்லாம் என்னைப் பெரிதும் கவர்ந்துவிட்டன. மற்றவர் களுக்கு வழிகாட்டி போலவே அவன் நடந்துகொண்டான். ஆசிரியர் களையும் மாணாக்கர் களையும் வசீகரிக்கக்கூடிய மாதிரியாகவே அவனுடைய தன்மை இருந்தது.”
இந்த டாக்டர் காண்ட்லியும் ஸன்னும் காலக் கிரமத்தில் நெருங்கிய நண்பர்களானார்கள்; பரபரம் மதிப்பு வைத்துப் பழகினார்கள். பிற்காலத்தில் ஸன் தீவிர அரசியல்வாதியாக, அந்நிய ஆதிக்கத்திற்கு விரோதியாகப் போராடி வந்தபோதுகூட, காண்ட்லி இவனிடம் வைத்திருந்த மதிப்பைக் குறைத்துக் கொள்ளவேயில்லை. உண்மையில், ஒரு சமயம் ஸன்னின் உயிருக்கு ஆபத்து ஏற்பட இருந்த காலத்தில் அந்த ஆபத்திலிருந்து இவனை மீட்டு வைத்தது இந்த டாக்டர் காண்ட்லிதான். தன் உள்ளக் கிடக்கையை அறிந்த ஒருவனாக ஸன் இவனைக் கருதியிருந்தான். இவைகளைப் பற்றிப் பின்னர்த் தெரிந்து கொள்வோம்.
கல்லூரியில் சேர்ந்த சிறிது காலத்திற்குள் ஸன்னுக்கு உபகாரச் சம்பளம் கிடைத்தது. சில பாடங்களில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்த தற்காகப் பரிசு களும் கிடைத்தன. பள்ளிப் படிப்போடு, பள்ளியைச் சேர்ந்த ஆபத்திரியிலும் அனுபவப் பயிற்சி பெற்று வந்தான். இங்ஙனம் டாக்டர் காண்ட்லி யின் மேற்பார்வையில் ஐந்து வருஷ காலம் பயின்று பட்ட மும் பெற்றான்.
இந்த ஐந்து வருஷ காலத் தில், காண்ட்லியின் உதவி இவ னுக்குக் கிடைத்துக்கொண் டிருந்ததோடு, இவனுக்கு ஞானநானம் செய்வித்த ஹாகரின் உதவியும் கிடைத்துக் கொண்டிருந்தது. இவன் கிறிதுவ மதத்தில் சேர்ந்த சிறிது காலத்திற்குப் பிறகு, இவனுடைய சகோதரன் ஆமிக்கு இவன் மீது ஏற்பட்டிருந்த கோபமும் சிறிது தணிந்துவிட்டது. இதனால் அவனும் இவனுடைய செலவு வகைகளுக்காக ஒரு தொகை தவறாமல் அனுப்பி வந்தானென்று தெரிகிறது. எப்படியோ, சகோதரர் களிடையே ஏற்பட்ட பிணக்கு சிறிது காலமானதும் மறைந்து போயிற்று.
டாக்டர் காண்ட்லி, வைத்தியக் கல்லூரியில் போதகாசிரியன்; ஆபத்திரியில் டாக்டர்; இவற்றோடு, குஷ்டரோக நிவாரண சம்பந்தமாகச் சில ஆராய்ச்சிகளும் செய்துவந்தான். இந்த ஆராய்ச்சி யில் இவனது மனைவி இவனுக்குப் பெரிதும் உதவி செய்துவந்தாள். இந்த ஆராய்ச்சி நிமித்தம், இவ்விருவரும் ஹாங்காங்கைச் சுற்றி யுள்ள சில கிராமங் களுக்கு அடிக்கடி சென்று வருவார்கள். ஏனென் றால், இந்தக் கிராமங் களில், இந்தக் கிராமங்களில் மட்டுமென்ன, சீனாவின் தென்பகுதியிலுள்ள அநேக கிராமங்களில் இந்தக் கொடிய வியாதி, மக்களை உருக்குலைத்து வந்தது. இவர்களைப் பரிசோதனை செய்து, இந்த நோய்க்குக் காரண மென்ன, இதற்குப் பரிகாரம் ஏதேனும் கண்டுபிடிக்க முடியுமா என்பதற்காகவே காண்ட்லி தம்பதிகள் இந்தக் கிராமங்களுக்கு அடிக்கடி சென்று வந்தார்கள். இவர்களோடு ஸன்னும் சென்று வந்தான்; வைத்திய சம்பந்தமாக அநேக உண்மைகளைத் தெரிந்து கொண்டான். காண்ட்லி தம்பதிகளுக்கும் இவனுக்குமிடையே ஏற்பட்ட நட்பு வளர்வதற்கு இந்தச் சுற்றுப் பிரயாணம் பெரிதும் உதவியாயிருந்தது.
விடுமுறை நாட்களில், ஸன், தன் சொந்தக் கிராமத்திற்கு வந்து போய்க்கொண்டிருந்தான். 1891 ஆம் வருஷம் அக்டோபர் மாதம் பதினெட்டாந் தேதி, அதாவது இவனது இருபத்தைந்தாவது வயதில் இவனுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. இதற்கு ஸன் போ (Sun - fo) என்று பெயரிட்டார்கள். இந்த ஸன் போ, பிற்காலத்தில், காண்ட்டன் நகரத்து மேயராகவும், சியாங் கை ஷேக்(Chiang Kai - Shek) அரசாங் கத்தில் ஒரு மந்திரி யாகவும் இருந்து நல்ல பெயரெடுத்தான்; தன் தந்தையின் அரசியல், பொருளாதாரக் கோட்பாடுகளைப் பற்றி ஒரு நூலும் எழுதியிருக்கிறான். இந்த ஸன் போவுக்குப் பிறகு, ஸன்னுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன.
ஸன், வைத்தியக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றா னல்லவா, அப்பொழுது இவனுக்கு வயது இருபத்தாறு. பட்டம் பெற்றதோடு, இவனுக்குப் போதனை செய்துவந்த ஆங்கில ஆசிரியர் களின் நன்மதிப்பையும் பெற்றான். இவன் பட்டம் பெற்றதை யொட்டி டாக்டர் காண்ட்லி இவனுக்கு ஒரு விருந்து நடத்தினான். இதைக்கொண்டு அவன், ஸன்னிடம் எவ்வளவு மதிப்பு வைத் திருந்தான் என்பது ஒருவாறு புலனாகும்.
ஸன், வைத்தியக் கல்லூரியில் பயின்றுவந்த காலத்தில் அர சியலை மறந்துவிடவில்லை சாதாரணமாக, வைத்தியத் துறைக்கும் அரசியல் துறைக்கும் சிறிது தூரம் என்று சொல்வார்கள். ஸன் விஷயத்தில். இஃது உண்மையாகவில்லை; இரண்டும் நெருங்கிய தொடர்பு கொண்டுவிட்டன. ஹாங்காங் நகரம், ஆங்கில ஆதிக்கத்துக் குட்பட்ட ஒரு பிரதேசமாயிருந்த படியால், அங்குள்ளவர்களுக்குப் பேச்சுரிமை முதலியன இருந்தன. இந்த உரிமையை அனுபவிக்கின்ற முறையில் ஸன், தனது நண்பர் சிலருடன், மஞ்சூ ஆட்சியைத் தாக்கிப் பகிரங்கமாகப் பேச முற்பட்டான். அரசியல் நூல்கள் பலவற்றைப் படித்து, அவற்றின் மூலம், பிறநாடுகளில் அரசியல் புரட்சிகள் எப்படி நடைபெற்றிருக்கின்றன என்பதை ஒருவாறு தெரிந்து கொண்டான். இவனோடு மூன்று நண்பர்கள் சேர்ந்து கொண்டார்கள். இவர்கள் அடிக்கடி ஒன்றுகூடி, அரசியல் விஷயங் களைப் பற்றி உற்சாகத்துடன் பேசுவார்கள்; அரசியல் கருத்துக் களைப் பரிமாறிக் கொள்வார்கள். நாங்கள், முக்கியமாகப் பிற நாடுகளில் நடைபெற்ற புரட்சிகளின் வரலாறுகளைப் படிப்போம். அப்படிப் பேசாவிட்டால் எங்களுக்குத் திருப்தி உண்டாகாது. இங்ஙனம் சில வருஷங்கள் கழிந்தன. எங்களுடைய நண்பர்களிற் சிலர், பிரிக்க முடியாத பெரிய போக்கிரிகள் என்று எங்களுக்குப் பட்டமும் சூட்டினார்கள்; என்னைப் பொறுத்தமட்டில், புரட்சிக்கு என்னைத் தயார்ப் படுத்திக்கொண்ட காலமாக இதனைக் கருது கிறேன் என்று கூறுகின்றான் ஸன் ஓரிடத்தில்.
மன மலர்ச்சி
1892ஆம் வருஷம் ஸன், டாக்டர் பட்டம் பெற்றுவிட்டான். பட்டம் பெற்ற இந்தச் சமயத்தில்தான் தன் பெயரையும் மாற்றிக் கொண்டான். அதாவது இதுகாறும் ஸன் டை சியோங் என்று இருந்த பெயரை ஸன் யாட் ஸென் என்று மாற்றிக்கொண்டான். டாக்டர் ஸன் யாட் ஸென் என்றே எல்லோரும் அழைக்க லானார்கள்.
டாக்டர் பட்டம் பெற்றுவிட்டது சரி; இனி வைத்தியத் தொழிலை எங்கே நடத்துவது என்ற பிரச்னை எழுந்தது ஸன்னுக்கு தான் தொழில் நடத்தும் இடம் தன் சொந்தக் கிராமத்திற்கு அருகில் இருந்தால் நல்லது என்று கருதினான். அப்பொழுதுதான், தன் குடும்பத்தை தன்னுடைய மேற்பார்வையிலேயே கவனித்துக்கொண்டு வரமுடியும் என்று எண்ணினான். ஒரு தந்தையாகி விட்டானல்லவா, தன் பொறுப்பை நன்கு உணர்ந்திருந்தான். இவனுடைய வாழ்க்கை முழுவதிலும், இந்த பொறுப்புணர்ச்சி படிந்திருந்ததென்றே சொல்லவேண்டும்.
மாக்கோ1 என்னும் ஒரு சிறிய தீவு, காண்டன் நகரத்திற் கருகிலுள்ளது; ஸுயிஹெங் கிராமத்திற்கும் சமீபந்தான். இது போர்த்துக்கேசியர் ஆதிக்கத்திற்குட்பட்டிருந்தது. இங்குள்ள செல்வாக்கு மிகுந்த சீனர் சிலர் சேர்ந்து ஓர் ஆபத்திரியை நடத்தி வந்தனர். இதில் சேர்ந்து, தன் தொழிலைத் துவங்கத் தீர்மானித்தான் ஸன். அப்படிச் செய்வதுதான் நல்லதென்று டாக்டர் காண்ட்லியும் தெரிவித்தான். அந்த ஆபத்திரி நிருவாகிகளும் இவனுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுப்பதாகக் கூறினார்கள். எனவே இவன் ஹாங்காங் நண்பர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, டாக்டர் காண்ட்லியின் நல்லாசியுடன் மாக்கோ சென்று தொழில் துவங்கி னான். ஆபத்திரி நிருவாகிகள், இவனுக்குத் தேவைப்பட்ட கருவிகள், மற்றச் சாதனங்கள் அனைத்தையும் வரவழைத்துக் கொடுத்தனர். இவனும், தன்னிடம் வரும் நோயாளிகளை விரைவில் குணப்படுத்தியனுப்பி வந்தான். சத்திர சிகிச்சை செய்வதில் கெட்டிக் காரன் என்ற பெயரும் இவனுக்கு வெகு சீக்கிரத்தில் கிடைத்து விட்டது. நல்ல கைராசியும் இவனுக்கு இருந்தது. டாக்டர் காண்ட்லி யும் ஹாங்காங்கிலிருந்து பிரதியொரு ஞாயிற்றுக்கிழமையும் மாக்கோவுக்கு வந்து, இவனுக்கு வேண்டிய ஆலோசனைகளைச் சொல்லி வந்தான். டாக்டர் காண்ட்லி, சத்திர சிகிச்சை செய்வதில் வல்லவனென்று பெயர் படைத்திருந்தபடியால், அவனுடைய ஆலோசனை, இவனது தொழில் வெற்றிக்குப் பெரிதும் துணை செய்தது. டாக்டர் காண்ட்லி ஏன் பிரதி ஞாயிற்றுக்கிழமையும் மாக்கோ சென்று ஸன்னுக்கு உதவி செய்யவேண்டும்? அவனிடத் தில் எனக்கு இருந்த அன்பும் மதிப்புமே என்னை மாக்கோவுக்கு வரும்படி செய்தன என்று டாக்டர் காண்ட்லியே இதற்குக் காரணம் கூறுகிறான்.
ஸன், நீண்ட காலம் மாக்கோவில் இருந்து தன்தொழிலை நடத்திவர முடியவில்லை. போர்த்துக்கேசிய வைத்தியப் பத்திரம் பெற்றவர்கள் தான், போர்த்துக்கேசிய ஆதிக்கத்திற்குட்பட்ட பிரதேசத்தில் வைத்தியத் தொழில் நடத்தலாமென்ற ஒரு விதியை மாக்கோவிலுள்ள போர்த்துக்கேசிய அதிகாரிகள் இவனுக்கு எடுத்துக்காட்டி, இங்கு ஆங்கில வைத்தியப் பத்திரம் பெற்றவர்கள் தொழில் செய்வது சட்ட விரோதமென்று கூறிவிட்டனர். கீழ் நாட்டார் அறியாமையில் தோய்ந்திருக் கின்றனர் என்று பொதுவாக மேனாட்டார், அதிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி யில் சீனாவைச் சுரண்டி வந்த மேனாட்டார் கூறி வந்தனர். ஆனால் இந்தக் கீழ்நாட்டாருடைய அறியாமை, கீழ்நாட்டானாகிய கீழ் நாட்டின் முன்னேற்றத்திற்குத் தனது சர்வத்தையும் அர்ப்பணம் செய்த ஸன் யாட் ஸென்னின் முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டையா யில்லை; முற்போக்குச் சக்திகளை முடுக்கி விட்டதாகப் பெருமை கொள்ளும் மேனாட்டாரின் பொறாமைதான் முட்டுக்கட்டையா யிருந்தது. மாக்கோவிலுள்ள போர்த்துக்கேசிய டாக்டர்களில் சிலர், ஸன், திறமை மிக்கவன் என்று பெயரெடுத்து வருவதைக் கண்டு பொறாமைப் பட்டார்கள். எங்கே தங்கள் வருமானம் குறைந்து போகுமோ என்ற அச்சமும் இவர்களை ஆட்கொண்டது; தங்கள் அரசாங்கத்தினரை தூண்டி விட்டு, ஸன்னை மாக்கோவில் தொழில் நடத்தவிடாதபடி செய்து விட்டனர் என்று அப்பொழுது எல்லோ ரும் சொல்லிக்கொண்டனர். எப்படியோ ஸன், மாக்கோவிலிருந்து வெளியேறிவிட வேண்டியதாயிறு. இனி எங்கே செல்வது? என்ன செய்வது?
சீனாவின் வட மாகாணங்களிலொன்றை நிருவாகம் செய்து வந்த மஞ்சூ அரசப் பிரதிநிதியொருவன், மேனாட்டாரின் முன் னேற்றத்தில் சிறிது பிரமை கொண்டிருந்தான். இவன், டீண்ட்ஸின்1 நகரத்தில், மேனாட்டு முறையில் வைத்தியம் பயிலுவிக்கும் ஒரு வைத்தியக் கல்லூரியை தாபிக்க வேண்டுமென்று திட்ட மிட்டான். இந்த விஷயம், ஸன்னுக்கு எப்படியோ தெரிந்தது. அந்த அரசப் பிரதிநிதியிடம் சென்று, அவனுடைய திட்டத்தை உருப்படுத்திக் கொடுக்கின்ற முறையில் தன் அதிருஷ்டத்தைப் பரிசோதனை செய்து பார்ப்பதென்று தீர்மானித்தான், இந்தத் தீர்மானத்தை, தன் பழைய நண்பனாகிய லூவுக்குத் தெரிவித்தான். அவன் அப்பொழுது காண்ட்டன் நகரத்தில் டாக்டர் கெர்ரின் ஆபத்திரியில் வேலை செய்து கொண்டிருந்தான். இருவரும் கலந்து யோசித்து, டீண்ட் ஸின் செல்வதென்று முடிவு செய்தனர்; அப்படியே புறப்பட்டனர்.
அப்பொழுதெல்லாம் போக்குவரத்து வசதிகள் அதிகமாக இல்லாத காலம். எனவே இருவரும், வெகு தூரம் கால்நடையாக வும், சிறிது தூரம் ஆற்றுப் படகுகள் மூலமாகவும் சென்று டீண்ட் ஸின் நகரத்தை அடைந்தனர். வழி நெடுக இருவரும் தங்களுடைய வருங்காலம் மிகவும் பிரகாசமாயிருக்கப் போகிறதென்று நம்பிக்கை யுடன் பேசிக்கொண்டு சென்றனர் என்பதைச் சொல்ல வேண்டுவ தில்லை.
ஆனால் இந்த நடைப் பயணம் இருவருக்கும் புதிய அனுப வத்தைக் கொடுத்தது. சீனாவின் மற்ற மாகாணங்களில், மக்களின் வாழ்க்கை நிலை எப்படியிருக்கிறதென்பதை நேரிற் காணும் வாய்ப்பு இந்த நடைப் பயணத்தின்போது இருவருக்கும் கிடைத்தது. பொதுவாகவே, சீன மக்கள் பொறுமைசாலிகள்: உழைப்பதற்குச் சிறிதுகூட சலிக்கமாட்டார்கள். ஆனால் இவைகளுக்கும் ஓர் எல்லையுண்டல்லவா? இவைகளை மேலும் மேலும் பரிசோதனை செய்து பார்க்கின்ற முறையிலேயே மஞ்சூ ஆட்சி நடைபெற்று வருவதை நேரில் கண்டு இருவரும் உள்ளம் கொதித்தனர். மனித உள்ளம் படைத்தவர்கள்தானே? இவர்களால் சும்மாயிருக்க முடிய வில்லை. டீண்ட்ஸின் நகரத்தை அடைந்ததும், அரசப் பிரதிநிதி யிடம் சமர்ப்பிக்க ஒரு மகஜரைத் தயாரித்தனர்.
ஜனங்களுக்கு இப்பொழுது போதிய உணவுப் பொருள்கள் கிடைப்ப தில்லை. இதற்காக விவசாய நிலங்களை, அவற்றி லிருந்து நல்ல பலன் காணக்கூடிய விதமாகப் பண்படுத்தச் செய்ய வேண்டும். விவசாயத்தில் நவீன சாதனங்களை உபயோகப் படுத்தச் செய்ய வேண்டும். பூமியின் ஆழத்திலிருந்து கிடைக்கக் கூடிய சுரங்கப் பொருள்களையெல்லாம் மேலுக்குக் கொணர்ந்து பயன்படுத்த வேண்டும். ஜனங்களுக்குத் தேவையான பொருள் களை உற்பத்தி செய்து கொடுக்கும் பல தொழிற் சாலைகளை நிறுவ வேண்டும். இந்தத் தொழிற்சாலைகளிலிருந்து உற்பத்தி யாகும் பொருள்கள் மக்களுக்கு மலிவாகவும் சீக்கிரமாகவும் கிடைக்கக்கூடிய வகையில் போக்குவரத்துச் சாதனங்களை அபிவிருத்தி செய்யவேண்டும். எல்லாருக்கும் இலவசமாகக் கல்வி போதிக்கப்பட வேண்டும்; தொழிற்கல்வியும் அளிக்கப்பட வேண்டும்
இவைதான் ஸன்னும் லூவும் சேர்ந்து தயாரித்த மகஜரில் அடங்கியிருந்த விஷயங்கள். உண்மையில் ஸன்னுக்குத்தான் இந்த மகஜர் தயாரிப்பதில் அதிக பங்கு உண்டு என்று சொல்லவேண்டும். மகஜரின் கடைசியில் கீழ்க்கண்ட வாக்கியத்தைப் பொறித்தான் ஸன். இவைதான் இப்பொழுது தேவை இவற்றைச் செய்து கொடுப் பதுதான் நியாயம். எனவே இவற்றைச் செய்து கொடுத்தேயாக வேண்டும்.
இந்த மகஜரிலுள்ள விஷயங்களைக் கொண்டு, சீனாவின் அப்பொழுதைய பொருளாதார நிலை, மக்களின் வாழ்க்கைத் தரம், அறிவு வளர்ச்சி முதலியவைகளை ஒருவாறு நாம் கண்டுகொள்ள லாம்.
இளைஞர்களிருவரும் உற்சாகத்தினாலும், ஜனங்களிடம் கொண்ட பரிவினாலும் இந்த மகஜரைத் தயாரித்தார்களென் றாலும், இது, கடைசியில் அரசப் பிரதிநிதிக்குப் போய்ச் சேரவே இல்லை. இடையிலேயே அதிகாரிகள் மறித்துவிட்டார்கள் போலும். அரசப் பிரதிநிதிக்கு இது போய்ச் சேர்ந்திருந்தாலும், அவன் இளைஞர்கள் ஏதோ உற்சாகத்தினால் கிறுக்கியிருக்கிறார்கள். இவையெல்லாம் நடக்கிற காரியமா? என்று சொல்லிச் சிரித்து விட்டு. பக்கத்திலுள்ள குப்பைக் கூடையில் போட்டிருப்பான். அப்பொழுதைய மஞ்சூ அரசாங்கத்தின் ஆட்கள் இந்த மனோ நிலையிலேயே இருந்தார்கள்.
ஸன்னும் லூவும் எதற்காக டீண்ட்ஸின் சென்றார்கள்? அங்கு தாபிக்கப்பட இருக்கும் வைத்தியக் கல்லூரியில் உத்தியோகம் பெற. அதற்கான முயற்சிகளைச் செய்யாமல், சீன மக்களின் மீது கொண்ட பரிவின் விளைவாக ஒரு மகஜர் தயாரிக்கும் வேலையில் ஈடுபடுவானேன்? கடைசியில் உத்தியோகத்திற்கு உத்தியோகமும் போய் விட்டது; மகஜர் தயாரித்ததும் வீணாயிற்று.
ஸன்னின் வாழ்க்கையில் இது, முதல் தோல்வியென்று சொல்லவேண்டும். ஆனால் இந்தத் தோல்வி இவனை ஒரு லட்சிய வாதியாக, மக்களுக்காகப் பரிந்து பேசக்கூடிய ஒரு தலைவனாகப் புலப்படுத்திக் காட்டிவிட்டது. ஆம்; இனி இவன் சீனாவின் தலைவன் தான்; வேண்டுமானால் வருங்காலத்துத் தலைவன் என்று இந்தச் சந்தர்ப்பத்தில் சொல்லிக்கொள்ளுங்கள்.
இவன் முக்கிய பங்கெடுத்துக்கொண்டு தயாரித்த மகஜரைப் பற்றி இங்கே ஒரு வார்த்தை. இஃது அரசப் பிரநிதிக்குப் போய்ச் சேரவில்லை யாயினும், சுமார் ஒரு வருஷத்திற்குப் பிறகு ஒரு சீனப் பத்திரிகையில் வெளியாயிற்று. ஸன்னின் அரசியற் கொள்கைகள் முதன்முதலாகப் பகிரங்கமானது இப்பொழுதுதான். சீனர்களில் படித்த வகுப்பினர், இவனது கொள்கைகளைக் கவனிக்கத் தொடங் கியதும் இந்தக் காலத்தி லிருந்துதான்.
டீண்ட்ஸின் முயற்சி பயனற்றுப் போனதிலிருந்து ஸன் வைத்தியத் தொழிலைத் தொடர்ந்து நடத்தவில்லை. ஏகதேசமாக, அறிந்தவர் தெரிந்தவர்களுக்கு மட்டும் சத்திர சிகிச்சை செய்து வந்தானென்று சொல்லலாம். இனி இவன் முயற்சியெல்லாம், உழைப்பெல்லாம் அரசியலிலேயே சென்றது. சுருக்கமாக, டீண்ட்ஸினில் ஏற்பட்ட ஏமாற்றத்திற்குப் பிறகு ஸன், முழு நேர அரசியல்வாதியாகி விட்டான்.
இங்ஙனம் அரசியல்வாதியாக மாறிய பிறகு இவன் பெயரும் சிறிது மாற்றத்தை அடைந்தது. ஸன் யாட் ஸென் என்ற பெயர், வேறு அர்த்தத்தில், வேறு விதமான உச்சரிப்பில் அழைக்கப்பட்டது. இந்தப் புதிய பெயருக்கு தினந்தோறும் புதுப்பித்துக் கொள்கிற ஸன் என்று அர்த்தம். அதாவது, ஸன், இந்தக் காலத்திலிருந்து தன் வாழ்க்கையைப் புதுப்பித்துக் கொண்டு வந்ததையோ, சீனாவுக்குப் புதிய வாழ்வு தொடங்கிவிட்ட தென்பதையோ இந்தப் புதிய பெயர் குறிப்பதாகக் கொள்ளலாமென்று சீன அறிஞர்கள் கூறுவார்கள்.
தவிர, இதே காலத்தில், ஸன் வென் என்ற பெயராலும் தன்னை அழைத்துக்கொண்டான் ஸன். டீண்ட்ஸின் நகரத்திலிருந்த அரசப் பிரதிநிதிக்கு மகஜர் தயாரித்தபோது அதில், ஸன் வென்1 என்றே கையெழுத்திட்டான். இதற்குப் பிறகு இவன் எழுதிய கட்டுரைகள், வெளியிட்ட பிரகடனங்கள், கடைசி காலத்தில் இவன் தயாரித்து வைத்துப்போன உயில் எல்லாவற்றிலும் ஸன் வென் என்றே கையெழுத்திட்டு வந்திருக்கிறான். அறிஞனாகிய ஸன் என்று இந்தப் பெயருக்கு அர்த்தம். சீனாவில் எல்லோரும் இவனை இந்தப் பெயரிட்டே அழைப்பர்.
முதற் புரட்சி
சீனாவில் முந்தியெல்லாம், அரசியல் நோக்கங்களுக்காகவோ, சமய சம்பந்தமாகவோ, வேறெந்தக் கொள்கையுடனோ தொடங்கப் பெற்ற எந்த ஒரு சங்கமும் ரகசியமாகவே நடைபெறுவது வழக்கம். இதற்கு என்ன காரணம் என்று யாராலும் சொல்ல முடியாது. விளம்பரத்திலோ, பிரசாரத்திலோ சீனர்களுக்கு அதிக நம்பிக்கை யில்லாததே இதற்குக் காரணம் என்று சிலர் கூறலாம். சீன மன்னர் களிற் பலர், ஜனங்களை அச்சுறுத்தி அச்சுறுத்தி ஆண்டு வந்ததனால், அந்த அச்சமானது ஜனங்களின் அன்றாட வாழ்க்கையில் கலந்து விட்டதென்றும், இதனால் அவர்கள் எந்த ஒரு பொது விஷயத்தைப் பற்றியும் பகிரங்கமாகச் சொல்லவோ செய்யவோ துணிவு கொள்ளாமற் போய்விட்டார்களென்றும், ரகசியமாகப் பேசுவதும் செய்வதும் அவர்களுக்கு சகஜமாகிப் போய்விட்ட தென்றும் வேறு சிலர் சொல்ல லாம். என்ன காரணமாயிருந்தபோதிலும், சீனாவில் ரகசியச்சங்கங்கள் வெகு காலமாகவே, இயங்கி வந்தன வென்பது நிச்சயம். 1894ஆம் வருஷத்தில் இந்தப் பலவகை ரகசியச் சங்கங்களில், இருபது லட்சத் துக்கு மேல் முப்பது லட்சம் வரை சீனர்கள் அங்கத்தினர்களாயிருந் தார்களென்று ஓர் அறிஞன் உத்தேசக் கணக்குப் போட்டுச் சொல் கிறான். இத்தகைய ரகசியச் சங்க மொன்றை தாபித்து அதன் மூல மாகவே ஸன், தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினான்.
ஸன், சிறு வயதிலிருந்து மஞ்சூ ஆட்சியின் மீது வெறுப்புக் கொண்டிருந்தானல்லவா, இந்த வெறுப்பு வர வர முதிர்ந்தது; அந்த ஆட்சியை எப்படியாவது ஒழித்துவிட வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டான். எப்படி ஒழிப்பது? ஏற்கனவே அந்த ஆட்சி யின் மீது ஜனங்களுக்கு ஒரு வித அதிருப்தி இருந்து வந்தது. இந்த அதிருப்தியை வளர்ப்பதோடு, ராணுவத்தினரிடையிலும் இந்த அதிருப்தி விதையை விதைப்பது; இங்ஙனம் அதிருப்தி கொண்ட வர்களை ஒருங்கு கூட்டிக்கொண்டு, எந்த ஊரில் அரசப் பிரதிநிதி யின் அல்லது அரசாங்க மேலதிகாரியின் மாளிகை இருக்கிறதோ அந்த ஊருக்குச் சென்று அந்த மாளிகையைக் கைப்பற்றிக் கொள் வது; அந்த மாளிகையில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங் களைக் கைப்பற்றிக் கொள்வது;1 அந்த ஆயுதங்கள் போதுமானவையா யில்லாமற் போனால், அந்த ஊரிலுள்ள ஆயுதக் கிடங்கைக் கைப் பற்றிக்கொள்வது; இப்படி ஆயுத பலம் கிடைத்து விடுமானால், இதுகாறும் அதிருப்தி கொள்ளாதிருந்த ஜனங்களும் ராணுவத்தின ரும் நம் பக்கம் சேர்ந்து கொண்டுவிடுவார்கள்; இவர்கள் துணை பெற்று ஒவ்வொர் ஊராகக் கைப்பற்றிக் கொண்டுபோய் கடைசி யில் மஞ்சூ அரசாங்கத்தின் தலைநகரமாகிய பீக்கிங்1கைக் கைப் பற்றிக் கொள்வது; பீக்கிங் நகரத்தைக் கைப்பற்றிக் கொண்டு விட்டால், மஞ்சூ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது போலத் தானே? இப்படியாக எண்ணினான் ஸன். அதாவது, ஜனங் களிடையே புரட்சி எண்ணத்தைத் தூண்டி வளர்த்து, அவர்களின் துணைகொண்டு புரட்சி நடத்தி மஞ்சூ ஆட்சியை அகற்றிவிடத் துணிவு கொண்டான்.
புரட்சியென்றால் லேசான காரியமா? அதற்கு, முதலாவது ஆள் பலம் தேவை; அதைக்காட்டிலும் அதிகமாகப் பணபலம் தேவை. இதற்கு என்ன செய்வது?
பத்தொன்பதாவது நூற்றாண்டின் பிற்பாதியில், மற்ற நாடுகளைக் காட்டிலும் அமெரிக்காதான் சீனர்களை அதிகமாகக் கவர்ந்தது. அங்கு, வயிறு பிழைக்கவோ, தொழில் நடத்திப் பணம் சம்பாதிக்கவோ, படிப்புக்காகவோ, சீனர்கள் பலர் சென்றனர். இப்படிச் சென்றவர்களின் பொருளாதார வாழ்க்கை சிறிது மேம் பட்டிருந்ததோடு, அரசியற் கருத்துக்களும் சிறிது முற்போக்குடை யனவாக இருந்தன. பொதுவாக, ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்குச் செல்கிறவர்கள் இந்த மாதிரி பொருளாதாரத் துறை யிலும் அரசியல் துறையிலும் சிறிது முற்போக்குடையவர்களாக இருப்பதைப் பார்க்கிறோம். தவிர, இவர்களிடத்தில் தாராள மனப்பான்மை, மன உறுதி, எந்த ஒரு காரியத்தையும் துணிந்து செய்யக்கூடிய ஆற்றல், ஒற்றுமை உணர்ச்சி, தங்கள் தாய்நாட்டின் மீது அதிகமான பற்று, இன்ன பல தன்மைகள் இருப்பதைக் காண லாம். அமெரிக்கா சென்ற சீனர்கள், இத் தன்மைகளுடையவர்களா யிருந்தார்களென்பதில் ஆச்சரியமில்லை. இந்தத் தன்மைகளை, ஸன், தன் புரட்சி எண்ணத்திற்குச் சாதகமாக உபயோகித்துக் கொள்ளத் தீர்மானித்தான். ஏற்கனவே இவன் ஹவாயி தீவிலிருந்த போது, அமெரிக்கர்களைப் பற்றியும், அமெரிக்காவிலும் அதன் தொடர்பு கொண்ட பிரதேசங்களிலுமுள்ள சீனர்கள் எத்தகைய வாழ்க்கை நடத்துகிறார்களென்பதைப் பற்றியும் ஒருவாறு தெரிந்துகொண்டிருந்தான்.
இவனுக்கு ஞானநானம் செய்வித்த ஹாகர் பாதிரியும் ஓர் அமெரிக்கன்தானே? எனவே, முதலில், ஹவாயி தீவுக்குச் செல்வ தென்று திட்டமிட்டான். இவனுக்குப் பழக்கப்பட்ட இடமல்லவா அது? தவிர, காண்ட்டன் நகரத்திலிருந்தும் அதன் சுற்றுப் பக்கங் களிலிருந்தும் வந்த சீனர்கள் பலர் அங்கிருந்தார்கள். தனக்கும் காண்ட்டன் நகரத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டென்று இவர்களிடம் சொல்லி, தன் புரட்சித் திட்டத்திற்கு இவர்களுடைய உதவியை நாடுவது சுலபமாயிருக்கு மென்று இவன் கருதினான். பிற்காலத்தில், இவன் செய்த பிரசாரங்கள், நடத்திய போராட் டங்கள் முதலிய பல துறை வேலைகளுக்கும் இந்தக் காண்ட்டன் நகரமே நிலைக்களமாயிருந்து வந்திருக்கிறது.
ஸன், 1894 ஆம் வருஷக் கடைசியில் ஹவாயி தீவு வந்து சேர்ந்தான். வந்து சேர்ந்த சில நாட்களுக்குள் ஒரு சங்கத்தை தாபித்தான். இதற்கு முற்போக்குச் சீனர்கள் சங்கம் என்று பெயரிட்டான். சீன பாஷையில் இது ஸிங் சுங் ஹு(Hsing Chung Hui) என்று அழைக்கப் பட்டது. இதன் நடவடிக்கைகள் ரகசியமாகவே இருக்க வேண்டு மென்று திட்டமிட்டான். ரகசியத்திற்கு அவசியமே இல்லை. ஏனென்றால் ஹவாயி தீவுக்கும் சீனாவுக்கும் எவ்விதமான அரசியல் தொடர்பும் இருக்கவில்லை. தவிர, இந்தச் சங்கத்தைத் துவக்கிய இவன்-ஸன்-எவ்விதத்திலும் பிரபல மடையவில்லை. இவனைப் பற்றி மஞ்சூ அரசாங்கத்திற்கு ஒன்றுமே தெரியாது. அந்த அரசாங் கத்திற்குப் பயப்படக்கூடிய நிலைமையில் இவன் இல்லை. மற்றும் இந்தச் சங்கம் வகுத்துக்கொண்ட கொள்கைகள், யாராலும் ஆட்சே பிக்கக் கூடியனவாக இல்லை. பின் ஏன் ரகசிய முயற்சி என்று வாசகர்களே, கேட்கிறீர்களா? என்ன பதில் சொல்வது? சீர்திருத்த எண்ணமுள்ள சீனர்கள் ரகசியச் சங்கங்கள் தாபித்து அவை மூலமாக வேலை செய்வதையே விரும்பினார்களென்று சொல்ல லாம். அல்லது, தன் புரட்சி எண்ணம் கைகூட வேண்டுமானால், ரகசியமாக வேலை செய்வதுதான் உசிதமென்று ஸன் கருதியிருக்க லாம்.
எப்படியோ முற்போக்குச் சீனர்கள் சங்கம் ரகசியமாகத் தோன்றியது. முதலில் பத்து பேரே அங்கத்தினர்களாகச் சேர்ந்து கொண்டனர். எல்லோரும் இளைஞர்கள். ஒவ்வொருவரும் பத்து டாலர் கட்டணம் செலுத்தி, சங்கத்திற்கும் அதன் கொள்கை களுக்கும் விரோதமில்லாமல் விசுவாசத்துடன் நடந்து கொள்வதாகப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர். ஸன்தான், முதன் முதல், கையில் பைபிளை வைத்துக் கொண்டு பிரமாணம் எடுத்துக்கொண்டான். பிரமாணம் எடுத்துக்கொண்ட எல்லோரும் சங்கத்துப் புத்தகத்தில் கையெழுத்திட்டனர்.
சரி; சங்கத்தின் நோக்கம் யாது? சீனாவின் அபிவிருத்தியை யும் செழுமையையும் குறிக்கோளாகக் கொண்டு, அதன் செல்வ நிலை, அதன் சக்தி இவைகைளைப்பற்றி ஆராய்ச்சி செய்ய, சீனா விலும் வெளிநாடுகளிலுமுள்ள முற்போக்கான எண்ணமுடைய சீனர்களை ஒரு தாபனத்தில் ஒன்று சேர்த்தல். யாருக்கும் எந்த விதமான சந்தேகமும் உதிக்கக் கூடாதென்ற கருத்துடனேயே இந்த மாதிரி வாசகம் பொறிக்கப் பட்டது. வெளிநாடுகளிலுள்ள சீனர்கள் இந்த வாசகத்தின் உட்கருத்தை எளிதில் புரிந்து கொள்ளக் கூடு மென்று ஸன் எண்ணினான். அவர் களுடைய தேச பக்திக்கு விண்ணப்பித்துக் கொண்டால் போதுமென்று கருதினான்.
சங்கம் ஏற்படவேண்டிய அவசியத்தை விளக்குகின்ற முறை யில், அதன் நோக்கத்திற்கு முகவுரையாகப் பின்வரும் வாசகங்கள் பொறிக்கப்பட்டன:
“சீனாவின் விவகாரங்கள் தவறான போக்கில் சென்று கொண்டிருக் கின்றன. பழைய உறவு முறைகள், நற்பண்புகள் முதலிய யாவும் சீரழிக்கப்பட்டு வருகின்றன. நம்மைச் சுற்றியுள்ள நாட்டார் பல முடையவர்களாயிருக்கிறார்கள். அவர்கள், நாம் ஒருமனப்பட்ட வர்களாயில்லை யென்பதற்காக நம்மைக் கீழ்க்கண்ணுடனேயே பார்க்கிறார்கள்; தாழ்வாகவும் நடத்துகிறார்கள். நம்முடைய ஜனங்கள், சுயநலமுடையவர்களாகவும், உடனடியாகப் பலன் காணவேண்டுமென்ற ஆவலுடையவர்களாகவும் இருக்கிறார்கள்; பெரிய அளவில் கவனிக்கவேண்டிய எதனையும் புறக்கணித்து விடு கிறார்கள். மற்ற வல்லரசுகள், சீனாவைத் துண்டு போட்டுக் கொண்டு விட்டால், தங்கள் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் அடிமைகளாகப் போக நேரிடுமே யென்பதையும் அவர்களுடைய குடும்பத்திற்கு எவ்வித பாதுகாப்பும் இல்லாமற் போகுமே யென்பதையும் பற்றி நமது ஜனங்கள் சிறிதும் யோசித்துப் பார்க்கிறார்களில்லை. இது மிகவும் அவசரமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இதைக்காட்டிலும் வேறு அவசர விஷய மில்லை. ஜனங்கள், இப்பொழுது சுயநலவாதிகளாயிருப்பதைப் போல் இதற்குமுன் எப்பொழுதும் இருந்ததில்லை. சீன ஜாதி பூராவும் ஒரே குழப்பத்தில் சிக்கிக்கொண்டிருக்கிறது. யாருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. நிலைமையைச் சமாளிக்க யாரும் இல்லை. அப்படியானால், இந்த ஆபத்தான நிலைமையைத் தவிர்ப்பது எப்படி? நம்மை நாம் இப்பொழுது சுதாரித்துக் கொள்ளாவிட்டால், அதற்கான முயற்சிகளை இப்பொழுது செய்யாவிட்டால், தற்பொழுது நாம் விழித்துக்கொள்ளா விட்டால், ஆயிரக்கணக்கான வருஷங்களாக நம்மைத் தொடர்ந்து வந்திருக்கிற புகழோ நம்முடைய பண்பாடோ, தலைமுறை தலைமுறையாக அனுஷ்டிக்கப்பட்டு வரும் பழக்க வழக்கங்களோ, சன்மார்க்க முறைகளோ நாசமாகிவிடும்; அடியோடு அழிந்து போகும். இந்த நிலைமை ஏற்படுமானால் அதற்கு யார் பொறுப் பாளி? இந்த நிலைமையை நல்லவர்களும் புத்திசாலிகளுமான வர்களைத் தவிர வேறு யார் அறியமுடியும்?”
இந்த நிலைமையிலிருந்து சீனாவைக் காப்பாற்றுமாறு, வெளி நாடுகளிலுள்ள நல்லவர்களும் புத்திசாலிகளுமான சீனர்களின் தேச பக்தியைத் தூண்டிவிடக்கூடிய மாதிரியாக இந்த முகவுரை வாசகங்கள் பொறிக்கப்பட்டன.
இதில் ஒரு விஷயத்தைக் கவனிக்கவேண்டும். மற்ற வல்லரசுகள் சீனாவைத் துண்டுபோட்டுக் கொண்டுவிட்டால் என்று இதில் ஸன் கூறியிருக்கிறான். இப்படிக் கூறியிருப்பது இவனுடைய தீர்க்க தரிசனத்தையே காட்டுகிறது. இவன் கூறிய மூன்று நான்கு வருஷங் களுக்குள்ளாகவே, தெற்கு சீனாவை பிரான்ஸும், மத்திய சீனாவை பிரிட்டனும், வடகிழக்கு சீனாவை ஜெர்மனியும், மஞ்சூரியாவை ருஷ்யாவும் செல்வாக்குப் பிரதேசங்க ளென்று சொல்லிக் கொண்டு பங்கு போட்டுக்கொண்டன. ஐரோப்பிய ராஜதந்திரிகளிற் சிலர், துருக்கியையும் சீனாவையும் குறித்துப் பேசுகிறபோது சாகுந்தறுவாயிலுள்ள நாடுகளென்றே குறிப்பிட்டு வந்தார்கள். இஃது இப்படி இருக்கட்டும்.
முற்போக்குச் சீனர்கள் சங்கத்தில் பதின்மர் மட்டுமே அங்கத்தினராகச் சேர்ந்ததற்கு ஸன் முதலில் சிறிது மனத்தளர்ச்சியே யடைந்தான். ஆனால் சங்கம் தோன்றிய சொற்ப காலத்திற்குள், ஹவாயி தீவிலுள்ள பணக்கார சீனர் சிலர், அதற்குப் பண உதவி செய்ய முன்வந்தனர். இது ஸன்னுக்குப் பெரிய ஆறுதலாயிருந்தது. உதவி செய்ய முன் வந்தவரில் இவனுடைய சகோதரன் ஆமியும் ஒருவன்! என்ன வேடிக்கை! சுமார் எட்டு வருஷங்களுக்கு முன் இவனுக்குக் கப்பல் செலவுக்குக் கூட பணங்கொடுக்க மறுத்த ஆமி,1 இப்பொழுது இவனுடைய லட்சியத்தைக் கண்டு மெச்சி, தானே வலிய இவனுக்குப் பண உதவி செய்ய முன்வந்தது ஆச்சரிய மில்லையா? ஸன்னினுடைய நேர்மையிலும், அரசியல் லட்சியத் திலும் ஆமிக்கு இருந்த நம்பிக்கையையே இது புலப்படுத்துகிறது. இந்த முதல் உதவியிலிருந்து, ஆமி, ஸன்னின் முக்கிய ஆதரவாளர் களில் ஒருவனாயிருந்து வந்தான்.
ஹவாயி தீவில் முற்போக்குச் சீனர்கள் சங்கத்தை நிலைபெறச் செய்துவிட்டு, அமெரிக்கா சென்று, அங்கு இதற்குப் பல கிளைச் சங்கங்களை தாபித்து, அவை மூலம் தன் கொள்கைகளைப் பரப்புவ தென்று திட்டமிட்டான் ஸன். இப்படித் திட்டமிட்டு எல்லா ஏற்பாடு களையும் செய்துகொண்டு, ஹோனோலூலுவை விட்டுப் புறப்படுவதற்கு முந்தி, உடனே சீனாவுக்குத் திரும்பி வரும்படி இவனுக்கு ஷாங்காய்1 நகரத்திலிருந்து ஓர் அவசர அழைப்பு வந்தது. அழைப்பு அனுப்பியது யார்? சார்லஸ் ஜொன்ஸ் ஸுங்(Charles Jones Soong) இவனைப்பற்றி வாசகர்கள் சிறிதளவு தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
ஸுங், ஸன்னைக் காட்டிலும் ஐந்து வயது மூத்தவன். இருவரும் சீனாவின் தெற்குப் பகுதியினர்; இருவரும் மேனாட்டுக் கல்வி பயின்றவர்கள்; இளமையிலேயே கிறிதுவர்களானவர்கள்; நாட்டுப் பணியில் ஆர்வமிக்கவர்கள். எனவே இருவரும் நெருங்கிய நண்பர்களானதில் வியப்பேதுமில்லை. ஸன் நடத்திய அரசியல் போராட்டங்கள் பலவற்றிற்கும் பக்கபலமாக இருந்துவந்தான் ஸுங். இருவருடைய நட்பும் உழைப்பும் சேர்ந்து சீன சரித்திரத்தில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்ததென்று சொல்லலாம்.
ஸுங் குடும்பத்தினர் சுய முயற்சியுடையவர்கள்; எவ்வளவு தொலைவானாலும் துணிந்து சென்று வியாபாரம் செய்து பணந் திரட்டுவதில் வல்லவர்கள். இவர்களில் ஒருவன் அமெரிக்கா விலுள்ள பாட்டன்2 நகரத்தில் வியாபாரம் செய்து வந்தான். ஸுங், சிறு வயதிலேயே அங்கு அனுப்பப்பட்டான். அங்கு வியாபார நுணுக்கங்கள் சிலவற்றைக் கற்றுக்கொண்டு வந்தான். பன்னிரண்டு வயது முடிந்து பதின்மூன்றாவது வயது ஆரம்பம். அமெரிக்க இளைஞர்கள், பள்ளிக்கூடம் போய் வருவதைப் பார்த்துப் பார்த்து, இவனுக்கும் பள்ளி சென்று படிக்கவேண்டுமென்று ஆசை உண்டா யிற்று. தன் உறவினனான வியாபார முதலாளியின் உத்தரவு கேட்டான். உத்தரவு கிடைக்கவில்லை. வியாபாரத்தில் ஏற்படுகிற அனுபவமே போதுமென்றும், அதை வைத்துக்கொண்டே நிறைய பணம் சம்பாதிக்கலாமென்றும் அவன் சொல்லிவிட்டான்.
ஆனால் ஸுங்குக்கோ எப்படியாவது படிக்கவேண்டுமென்று ஆசை. எனவே, தன் உறவினனிடம் சொல்லாமல் ஓடிப்போய் விட்டான். ஓடிப்போய் ஒரு கப்பலில் சிற்றாளாக அமர்ந்தான். இவனுடைய கூரிய அறிவையும் சுறுசுறுப்பையும் கண்ட கப்பல் தலைவனான சார்லஸ் ஜொன்ஸ்(Captain Charles Jones) என்பவன் இவனிடம் தனியன்பு காட்டினான்; சிறிது காலத்திற்குள் இவனைக் கிறிதுவனாகவும் ஆக்கிவிட்டான். தான் கிறிதுவனானதற்குக் காரணமாயிருந்த கப்பல் தலைவன் சார்ல ஜோன்ஸின் பெயரை இவன் வைத்துக் கொண்டான். இது முதற்கொண்டு சார்ல ஜோன் ஸுங் என்றே அழைக்கப்படலானான்.
இதற்குப் பிறகு அமெரிக்கப் பள்ளியொன்றில் சேர்ந்து சிறிது காலம் படித்தான். ஆனால் இவன் மனமெல்லாம் கிறிதுவ மதத்திலேயே படிந்திருந்தது. ஒரு பாதிரியாகி, சீனாவுக்குச் சென்று கிறிதுவ மதத்தைப் பரப்பவேண்டுமென்று எண்ணங்கொண் டான். இதற்காக, அமெரிக்க சர்வ கலாசாலையொன்றில் சேர்ந்து மூன்று வருஷ காலம் மத போதனை பெற்றான். அதை முடித்துக் கொண்டு, கிறிதுவ மத போதனையில் உற்சாகம் மிகுந்தவனாக, சீனாவுக்குத் திரும்பி வந்தான்.
ஆனால் வந்த சிறிது காலத்திற்குள் இவனுடைய உற்சாகம் குன்றிவிட்டது. கிறிதுவ மதத்தை நல்லமுறையில் பரப்பவேண்டு மானால், அமெரிக்காவில் தான் பெற்ற மத போதனை போதா தென்று உணர்ந்தான். ஆனால் சும்மாயிருக்க முடியுமா? சிறிது காலம் ஒரு கிறிதுவப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியனாகப் பணியாற்றினான். கிறிதுவ மதத்தைப் பரப்பும் விஷயத்தில் இவன் உற்சாகம் குன்றியவனாயிருந்த போதிலும் ஓர் உண்மைக் கிறிதுவனாகவே வாழ்க்கையை நடத்தி வந்தான். தினந்தோறும் தேவாலயத்திற்குச் செல்லத் தவறமாட்டான்.
இப்படியிருக்கையில், ஸுங், தன்னைப்போல் கிறிதுவ மதப் பிரசாரத்தில் ஆர்வம் மிக்க ஒரு சீனப் பெண்ணை மணஞ் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையில் ஈடுபடலானான். இதற்குப் பிறகு இவன், ஷாங்காய் நகரத்தில் ஒரு வியாபாரம் தொடங்கி அதன் மூலம் நிறையப் பணம் சம்பாதிக்கலானான். இவனுக்கும் இவன் மனை விக்கும் ஷாங்காய் நகரத்தில் நல்ல மதிப்பு ஏற்பட்டது. ஆரம்பத்தில் கிறிதுவ மதப் பிரசாரத்தில் இவனுக்கு இருந்த உற்சாகமெல்லாம் பின்னர், மஞ்சூ ஆட்சியை ஒழிக்க வேண்டு மென்பதில் திரும்பியது. ஸன் நடத்திய போராட்டங்கள் பலவற் றிற்கும் உதவியாக நின்றான்.
ஸன், ஹவாயி தீவுக்குச் சென்று, முற்போக்குச் சீனர்கள் சங்கத்தைத் துவக்க முயற்சிகள் எடுத்துக் கொண்டிருந்த காலத்தில், ஸுங், ஷாங்காய் நகரத்தில் நல்ல வியாபாரம் செய்து கொண் டிருந்தான். அப்பொழுது, ஸன் சீனாவுக்குத் திரும்பி வரவேண்டியது அவசியம் என்று உணர்ந்தான். உடனே அவசர அழைப்பு அனுப்பி னான். ஏன் இந்த அவசர அழைப்பு?
ஸன், ஹவாயி தீவுக்கு செல்வதற்கு முந்தி, அதாவது 1894 ஆம் வருஷம் ஜூலை மாதம் கொரியா விஷயமாக, சீனாவுக்கும் ஜப்பானுக்கும் சண்டை மூண்டது. மூண்ட சில மாதங்களுக்குள், சீனாவின் பலவீனம் நன்கு புலப்பட்டது. என்ன கேவலம்! சிறிய ஜப்பானிடத்தில் பெரிய சீனா தலைகுனிய வேண்டி வந்துவிட்டது. ஷிமோனோஸெகி(Shimonoseki) ஒப்பந்தம்! 1895 ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் பதினேழாந் தேதி நிறைவேறிய இந்த ஒப்பந்தப்படி, சீனா, சில பிரதேசங்களை இழந்தது; ஜப்பானுக்கு ஒரு பெரிய தொகையை நஷ்ட ஈடாகக் கொடுக்க உடன்பட்டது.
இந்த ஒப்பந்தம், சீன மக்களுக்குப் பெரிய ஏமாற்றத்தை உண்டு பண்ணியது. மஞ்சூ அரசாங்கத்தின் மீதுள்ள அதிருப்தி அதிகரிக்கத் தொடங்கியது. இந்த அதிருப்தியைப் பயன்படுத்திக் கொண்டு, ஒரு புரட்சியைத் தொடங்கலாமென்றும், புரட்சியின் மூலம்தான் மஞ்சூ அரசாங்கத்தை ஒழிக்கமுடியுமென்றும் ஸுங் கருதினான். புரட்சிக்குத் தலைமை தாங்கி நடத்தக்கூடியவன் யார்? ஸன் யாட் ஸென்! இவனிடத்தில் அவ்வளவு பக்தி, அவ்வளவு நம்பிக்கை ஸுங்குக்கு. உடனே வருமாறு அழைப்பு அனுப்பினான்.
ஸன்னும், தன்னோடு விசுவாசப் பிரமாணம் எடுத்துக் கொண்ட சிலருடன் சீனாவுக்குத் திரும்பி வந்தான். நாட்டில் ஒரே குழப்பம். ராணுவத்திலிருந்து விடுதலை பெற்றவர்கள், கூட்டங் கூட்டமாகச் சென்று கொள்ளையடித்தும் கொலை செய்தும் ஜனங் களைப் பலவித இம்சைகளுக்குட்படுத்தி வந்தார்கள். ஜனங்களோ, அரசாங்கத்தின் உதவி கோரினார்கள். ஏதும் கிடைக்கவில்லை. தாங்களே கொள்ளைக் கூட்டத்தினரை எதிர்த்துப் போராடும் நிர்ப்பந்தத்திற்குட்பட்டார்கள். இப்படிப் பல இடங்களில் சிறு சிறு கலகங்கள் தோன்றுவதும் அடங்குவது மாயிருந்தன. அரசாங்கத்தி னிடம் அதிருப்தி கொண்டவர்களை ஒருங்கு சேர்ப்பது ஸன்னின் முதல் வேலையாயிருந்தது. ஆனால் இதைப் பகிரங்கமாகச் செய்ய விரும்பவில்லை. அரசாங்க அதிகாரிகளின் சந்தேகப் பார்வைக்குட் படக் கூடாதல்லவா?
எனவே ஸன், நண்பர் சிலருடன் சேர்ந்து காண்ட்டன் நகரத்தில் சாதிரீய விவசாய சங்கம்2 என்ற பெயரால் ஒரு தாபனத்தைத் தோற்றுவித்தான். இதற்குக் கிளையாக ஹாங்காங் நகரத்தில் ஒரு சங்கம் ஏற்படுத்தப் பெற்றது. இந்தக் கிளைச் சங்கம், வெளிப் பார்வைக்கு, சில்லரைச் சாமான்கள் விற்கும் ஒரு கடையாகவே காட்சியளித்தது. ஆள் சேர்க்கவும் ஆயுதங்கள் திரட்டவும் தீவிர முயற்சிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. சங்க உறுப்பினர் அனை வரும் தங்களாலியன்றளவு பணத்தைக் கொடுத்தனர். ஸன்னின் பால்ய நண்பனாகிய லூ ஹா டுங்,3 தனக்குச் சொந்தமாயிருந்த நில புலங்களையும், தன் மனைவியின் நகைகளையும் விற்றுக் கொடுத் தான். இப்படிச் சேர்ந்த பணத்தைக் கொண்டு, சில பெரிய துப்பாக் கிகள், சுமார் அறுநூறு கைத்துப்பாக்கிகள், அவைகளுக்கு வேண்டிய ரவைகள், கொஞ்சம் வெடி மருந்து, சில கத்தரிக்கோல்கள், இப்படிப் பலவும் வாங்கப்பட்டன. மற்றவைகளை வாங்கியது சரி; கத்தரிக் கோல்கள் எதற்கு என்று வாசகர்கள் கேட்கலாமல்லவா?
மஞ்சூ ஆட்சி ஏற்பட்ட காலத்திலிருந்து, சீனர்கள் ஆளப் படுஞ் சாதியினர் என்பதைக் குறிக்க, தலையின் முன் பாகத்தை க்ஷவரம் செய்துகொண்டு, பின் பாகத்திலுள்ள மயிரை நீண்ட பின்னலாகப் பின்னித் தொங்க விட்டுக்கொள்ள வேண்டுமென்று உத்தரவிடப்பட்டார்கள். தாங்கள் ஆளப்படுவோர் என்ற வேறு படுத்திக் காட்டுகிற இந்த உத்தரவு, சீனர்களின் மனத்தை உறுத்திக் கொண்டிருந்தது. வேண்டா வெறுப்புடனேயே இந்த உத்தரவுக்குக் கட்டுப்பட்டார்கள். இது நிற்க.
சாதிரீய விவசாய சங்கத்தினர், தங்கள் புரட்சி முயற்சி வெற்றி பெற்றால், தாங்கள் மங்சூ ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றவர்கள் என்பதைக் காட்டும் பொருட்டு, முதலில் தங்கள் தலைப் பின்னலை அகற்றி விட வேண்டுமென்று சங்கற்பித்துக் கொண்டார்கள். பின்னலை அகற்ற கத்தரிக்கோல் வேண்டு மல்லவா? இதற்காகச் சில கத்தரிக் கோல்கள் வாங்கப்பட்டன.
இங்ஙனம் சேகரிக்கப்பட்ட ஆயுதங்கள் முதலியவற்றை ஹாங்காங் கிளைச் சங்கத்தினர் சில பீப்பாய்களில் வைத்து நன்றாகப் பந்தோபது செய்து, மேலே சிமெண்ட் என்று முத்திரை யிட்டு, காண்ட்டன் நகரத் திற்குக் கப்பல் மூலம் அனுப்புவதென்று ஏற்பாடு செய்தார்கள். சிமெண்ட் பீப்பாய்கள் என்றால் சுங்க அதிகாரிகள் முதலியவர்களுக்கு எவ்வித சந்தேகமும் தோன்றாது என்பது இவர்கள் எண்ணம்.
இவர்கள் ஏற்பாட்டின்படியே, பீப்பாய்கள் ஹாங்காங்கி லிருந்து காண்ட்டனுக்கு வந்து சேர்ந்தன, கப்பலிலிருந்து இறக்குகிற சமயத்தில் ஒரு பீப்பாய் திடீரென்று வெடித்தது. துறைமுகத்தில் ஒரே அதிர்ச்சி. சுங்க அதிகாரிகள் விழித்துக் கொண்டார்கள். மற்றப் பீப்பாய்கள் பறிமுதலாயின.
இனி இந்தப் பிப்பாய்களை அனுப்பியவர்களையும் பெற்றுக் கொள்ள இருந்தவர்களையும் சும்மா விடுவார்களா அதிகாரிகள்? அவர்களைக் கண்டுபிடிக்கும் வேலையில் இறங்கினார்கள்.
துறைமுகத்தில் பீப்பாய் வெடித்துப் போனது அதிகாரிகள் துப்பறியத் தொடங்கியிருப்பது எல்லாம் காண்ட்டன் சாதிரீய விவசாய சங்கக் காரியாலயத்திற்கு எட்டியது.
அப்பொழுது ஸன்னும், லூவும், வேறு நால்வரும் அங்கு இருந்தார்கள். நிச்சயமாக ஏதேனும் ஆபத்து வரக்கூடுமென்று உணர்ந்தான் லூ. உடனே ஸன்னை அழைத்து, எங்கேனும் தலை மறைவாகச் சென்று விடும்படி கூறினான். ஸன்னும் அவன் சொல்லுக்கு கட்டுப்பட்டு வெளியே சென்றுவிட்டான். இருந்தவர்கள் ஐவர்தான். இவர்கள், அதிகாரிகளின் சந்தேகத்திற்கும் சோதனைக்கும் இலக் காகக் கூடிய சங்க ததாவேஜுகள், அங்கத்தினர் ஜாபிதா முதலிய வற்றைத் தீயிட்டுக் கொளுத்திவிடத் தீர்மானித்து அப்படியே செய்து கொண்டிருந் தார்கள். செய்து கொண்டிருக்கையில் வந்துவிட் டார்கள் மாகாண அதிகாரியின் ஏவலாட்கள் காரியாலத்தைத் தீவிரமாகச் சோதனை போட்டார்கள்; கொளுத்தப்படாமல் எஞ்சி யிருந்த காகிதங்களைக் கைப்பற்றிக்கொண்டார்கள்; ஐவரையும் கைது செய்து கொண்டு போய், சிறையில் தள்ளிவிட்டார்கள்.
இந்த ஐவரில், லூ சிறந்த கல்விமான்; ஓவியம் தீட்டுவதிலும் கவிதை இயற்றுவதிலும் வல்லவன். உண்மைக் கிறிதுவனாக வாழ்க்கையை நடத்தி வந்தான். நாட்டு நலனுக்காக, தன்னுடைய சர்வத்தையும் கொடுத்துவிட்டு அதிலே பெருமையடைந்திருந்தான். ஸன் ஒருவனால்தான் சீனாவைக் காப்பாற்ற முடியுமென்று மனப் பூர்வமாக நம்பி அவனைத் தலைவனாக ஏற்றுக்கொண்டிருந்தான்.
இத்தகைய லூவினிடம் மதிப்புக் கொண்டிருந்த கிறிதுவ நண்பர்கள் சிலர், இவன் சிறையிலே வைக்கப்பட்டிருப்பதை அறிந்து, மனம் வருந்தியவர்களாய், இவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படக் கூடாதென்று கோரி, மாகாண அதிகாரிக்கு எழுத்து மூலம் விண்ணப்பம் செய்துகொண்டார்கள். இதற்காக ஒரு தொகையைக் கொடுக்கவும் சித்தமாயிருப்பதாகத் தெரிவித்தார்கள். இதையறிந்த லூ, தனக்காக இப்படித் தயை கோரப்படுவதைச் சிறிதுகூட விரும்பவில்லை. மஞ்சூக்களின் தயவை நாடுவதா என்று ஆத்திரங் கொண்டான். சிறையி லிருந்து ஓர் அறிக்கையை வெளி யிடச் செய்தான். அதில், மஞ்சு அரசாங்க மானது, ஜனங்களை அறியாமையில் அழுத்தி வைத்திருக்கிறதென்றும், சீனாவின் பலவகைத் துன்பங்களுக்கு இந்த அரசாங்கமே காரணமா யிருந்து வருகிறதென்றும் கண்டிருந்தான். இந்த அறிக்கையைக் கண்ட மஞ்சு அதிகார வர்க்கம், இவனுக்குத் தயை காட்டுமா? சிரச் சேதம் செய்து விடுமாறு உத்தரவிட்டு விட்டது. லூவோடு சிறை சென்ற நால்வரில், ஒருவன் சிறைவாசத்தைச் சகித்துக்கொள்ள முடியாத வனாய் அங்கேயே இறந்துபோய் விட்டான். லூவும் மற்ற மூவரும் கொலைக்களத்திற்குக் கொண்டு போகப் பட்டார்கள். ஐயோ, அடுத்த கணத்தில் உடல் வேறு, தலைவேறாகி விட்டது. சீனக் குடியரசு லட்சியத்திற்கு இந்த நால்வரே முதல் பலியானவர்கள் சீன சரித்திரம் இவர்களை மறக்குமா?
மஞ்சூ அரசாங்கத்தில், நீதி வழங்கும் முறை சிறிது விசித்திர மாயிருந்தது. குற்றவாளியாகக் கருதப்படும் ஒருவன், அதிகாரிகளின் பிடிக்குள் அகப்படாமல் தப்பியோடி விட்டாலோ, அல்லது அவ னுக்கு விதிக்கப்படும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமா யிருக்க வேண்டுமென்று அதிகாரிகள் கருதினாலோ அவனுடைய உறவினர்களைச் சிறைப்படுத்தி பலவித தண்டனைகளுக்குட்படுத்தி விடுவார்கள். குடும்பத்தில் யாராவது ஒருவன் குற்றஞ் செய்து விட்டால் அதற்கு அந்தக் குடும்பத்தின் தலைவன் பொறுப்பாளி யாக்கப்பட வேண்டும் என்பது ஒரு சீனப் பழமொழி.
காண்ட்டன் நகரத்தில் அதிகாரிகள் எடுத்துக் கொண்ட நடவடிக்கைகள் ஸுயிஹெங் கிராமத்திற்கு எட்டின. ஸன் குடும்பத் தினரும் லூ குடும்பத்தினரும் ஒரே பரபரப்படைந்தார்கள்; அதி காரிகள் தங்களைச் சும்மா விடமாட்டார்களே யென்று பயந் தார்கள். இவர்கள் பயந்தபடியே அதிகாரிகளும் கிராமத்திற்கு வந்து விட்டார்கள். ஆனால் நல்லவேளையாக இவர்கள் வருவதற்குச் சிறிது முந்தியே ஸன்னின் தாயார், மனைவி, ஸன் போ என்ற நான்கு வயது மகன், இரண்டு பெண் குழந்தைகள் ஆகிய அனைவரும் கிராமத்தை விட்டுப் போய்விட்டார்கள்.
ஸன் தப்பியதுபோல் தப்பிப்போன இவர்கள் சில நாட் களுக்குப் பிறகு ஹோனோலூலுவை அடைந்தார்கள். அங்கு ஆமி இவர்களை அன்போடு வரவேற்றான்; இவர்களைக் காப்பாற்றி வரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டான். தந்தைக்குப் பிறகு இவனல்லவோ குடும்பத்தின் தலைவன்? எனவே இவனுடைய போஷணையில் ஸன் குடும்பத்தினர் சில வருஷ காலம், அமைதியாக இருந்து வந்தார்கள். இப்படிச் சொல்வது வெறும் உபசார வழக்கு தான். உண்மையில் இவர்கள் உள்ளம், ஸன்னை விட்டுப் பிரிந் திருந்த காரணத்தினால் குழம்பிக்கொண்டுதான் இருந்தது. ஸன் நாடோடியாகத் திரிந்துகொண்டிருக்கும்பொழுது இவர்கள் எப்படி மன நிம்மதியுடன் இருக்க முடியும்?
இங்கே ஸுயிஹெங் கிராமத்தில், லூ குடும்பத்தினரின் கதியென்ன? லூவின் பெரிய தகப்பனொருவன், கிராமத் தலைவ னாக அலுவல் பார்த்துக்கொண்டிருந்தான். இவன், அதிகாரிகள் வருவது தெரிந்ததும், தப்பியோடிப் போய்விட்டான். மற்றோர் உறவினன், தப்பிப் போக முடியாமல் அதிகாரிகளிடம் அகப்பட்டுக் கொண்டான். இவனைக் காண்ட்டனுக்கு அழைத்துப்போய், சிறை வாசியாக்கி விட்டார்கள். இவன் சிறிது படித்தவனாயிருந்த படி யால், சிறையிலேயே இவனுக்குக் கணக்கு உத்தியோகம் கொடுத்து ஓரளவு சௌகரியமாக வைத்திருந்தார்கள். ஆறு வருஷத்திற்குப் பிறகு, இவனுக்காகச் சிலர் முன் வந்து, இவனை விடுதலை செய்துவிட வேண்டுமென்று கோரி அதிகாரிகளிடம் மனுச் செய்து கொண்டார்கள். மனுச்செய்து கொண்டால் மட்டும் விடுதலை கிடைத்துவிடுமா? காணிக்கை செலுத்தவேண்டாமா? ஆறாயிரம் டாலர்! அதிகாரிகளுக்கு லஞ்சம்! உடனே விடுதலை! மஞ்சு அரசாங்க நிருவாகம் எப்படி நடைபெற்று வந்ததென்பதைக் கவனித்துக்கொண்டீர்களா?
சாதிரீய விவசாய சங்கக் காரியாலயத்திலிருந்து தப்பிச் சென்ற ஸன், நாலைந்து நாட்கள் வரை காண்ட்டன் நகரத்திலேயே ஒளிந்து ஒளிந்து வாழ்ந்து கொண்டிருந்தான். இவன் தொடங்கிய முதற் புரட்சி தோல்வியடைந்தது. ஆனால் முதல் தோல்வி முற்றுந் தோல்வியாக வில்லை. ஏனென்றால், தான் மேற்கொண்டுள்ள காரியத்தின் நியாயத்தில் இவனுக்குத் திட நம்பிக்கை இருந்தது; தளராத முயற்சி யுடையவனாய் இருந்தான். வெற்றியைப் பற்றி இவன் சந்தேகப் படவேயில்லை. இறுதியில் வெற்றியும் கிட்டியது.
நாடு விட்டு நாடு
காண்ட்டன் நகரத்தில் எத்தனை நட்கள்தான் ஒளிந்து ஒளிந்து வாழ்வது? நாலைந்து நாட்களேயாயின வென்றாலும், நாலைந்து யுகங்களை வீணாக்கி விட்டதுபோன்ற உணர்ச்சி உண்டாயிற்று ஸன்னுக்கு. தெற்கு நோக்கி நடந்தான். இடைமறித்து ஓடிய சிற்றோடை களென்ன, பெரிய வாய்க்கால்களென்ன, அனைத்தை யும் கடந்தான். இந்த நடைய்பயணம் இவனுக்குப் புதிய சக்தியை அளித்ததென்றே சொல்ல வேண்டும். காண்ட்டன் நகரத்தை விட்டுப் புறப்பட்ட பத்தாவது நாள் மாக்கோ தீவை அடைந்தான். அங்கு, ஸன்னை உயிரோடு பிடித்துக் கொடுக்கிறவர்களுக்குப் பதினாயிரம் வெள்ளி இனாம் கொடுக்கப்படும் என்ற கருத்தடங்கிய ஒரு சுவரொட்டி விளம்பரத்தைக் கண்டான். தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டான். மஞ்சூ அரசாங்கம், தன்னைப்பற்றி எவ்வளவு கவலை கொண்டிருக்கிற தென்பதையும் ஒருவாறு உணர்ந்தான். இந்த மாதிரி பல இடங்களிலும் விளம்பரப் படுத்தியிருந்தனர் அரசாங்க அதிகாரிகள். ஆனால் யாரும் இந்தச் சன்மானத்தைப் பெறக் கூடிய இழிநிலைக்கு வரவில்லை. மஞ்சூ அரசாங்கத்தின் மீது அவ்வளவு வெறுப்பு!
ஸன், ஓரிரண்டு நாட்கள்தான் மாக்கோவில் தங்கியிருந்தான். பின்னர் சில நண்பர்கள் முயற்சி செய்து இவனை ஹாங்காங்குக்கு ரகசியமாகக் கப்பலேற்றி விட்டார்கள். இவனும் யாருக்கும் தன்னைப் புலப்படுத்திக்கொள்ளாமல், பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்குட் பட்டிருந்த இந்த ஊருக்கு வந்து சேர்ந்தான். இங்கே மஞ்சூ அரசாங்கத்தின் துப்பறியும் உத்தியோகதர்கள் இருக்கிறார் களென்பது இவனுக்குத் தெரியும். இவர்கள் எந்த நிமிஷத்திலும் தன்னைக் கண்டு பிடித்துவிடக்கூடுமென்பதை இவன் அறிந்தே இருந்தான். அல்லது பீக்கிங்கிலுள்ள மேலதிகாரிகளுக்கு இவன் இங்கே இருப்பது தெரிந்தால், இவனை வெளியேற்றித் தங்களிடம் ஒப்படைக்குமாறு ஹாங்காங்கிலுள்ள பிரிட்டிஷ் அதிகாரிகளைக் கேட்கலாம். ஏற்கனவே, மஞ்சூ அரசாங்கத்தின் கடுமையான சில நடவடிக்கைகளின் விளைவாக, சீனர் பலர் ஹாங்காங்கில் வந்து தஞ்சம் புகுந்திருந்தனர். இவர்களைப்பற்றி ஹாங்காங் அதிகாரி களுக்கு ஒரு வித கவலை இருந்து வந்தது. இந்த நிலைமையில்தான் ஸன் இங்கு வந்து சேர்ந்தான். இங்கேயே இருப்பதா? வேறெங் கேனும் செல்வதா? ஒன்றும் புரியவில்லை இவனுக்கு.
இவனுடைய ஆசிரியனும் நண்பனுமான டாக்டர் காண்ட்லி இங்கே வசித்துக் கொண்டிருந்தானல்லவா? அவனுடைய ஆலோ சனையைக் கேட்பதென்று தீர்மானித்து அவனிடம் சென்றான். அவனும் ஒரு வக்கீலைக் கலந்தாலோசித்து, ஸன் இங்கே இருப்பது உசிதமல்ல வென்றும், சீன எல்லைக்கப்பால் எங்கேனும் சென்று விடுவதுதான் உத்தமமென்றும் தீர்மானித்தான் இந்தத் தீர் மானத்தை ஏற்றுக்கொண்டான் ஸன். நண்பர் சிலர் பணவுதவி செய்தனர். இதை வைத்துக்கொண்டு ஜப்பானிலுள்ள கோப்1 நகரம் சென்றான். சென்றான் என்று சுலபமாகச் சொல்லிவிட்டோம். ஆனால் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு, அரசாங்க ஒற்றர் களின் கண்காணிப்பிலிருந்து தப்பிச் செல்வதென்பது எவ்வளவு கடினம் என்பது, அனுபவித்த வர்களுக்குத்தான் தெரியும். டாக்டர் காண்ட்லியின் உதவியில்லாமற் போயிருந்தால், தான் ஹாங்காங்கி லிருந்து தப்பி ஜப்பானுக்குச் சென்றிருக்க முடியாதென்று, ஸன், பின்னர் ஒரு முறை கூறி, டாக்டர் காண்ட்லிக்குத் தன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறான்.
ஸன், கோப் நகரம் சென்றதும், தலைப்பின்னலை நீக்கி விட்டான். ஜப்பானியனைப் போல் உடை தரித்துக்கொண்டான். யாரும் இவனைப் பார்த்து சீனக்காரன் என்று சொல்ல முடியாது. ஜப்பானியர்களும் இவனைத் தங்கள் நாட்டவனென்று கருதி இவனிடம் அன்பு காட்டினார்கள்.
ஜப்பானில் ஸன் அதிக நாட்கள் தங்கவில்லை. ஏனென்றால், சீன அரசாங்கம், தன்னைக் கைது செய்து சீனாவுக்குத் திருப்பி அனுப்பும்படி கோரினால், அதற்கு சர்வதேச சட்ட ரீதியாக, ஜப்பான் இணங்க வேண்டிவரும் என்ற பயம் இவனுக்கு ஏற்பட்டது. எனவே, கோப் நகரத்திலிருந்து ஹோனோலூலுவுக்குச் சென்று, தன் குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டான். அப்பொழுது ஆமி ஓரளவு சௌகரியமான நிலைமையில், ஏராளமான சொத்து பற்றுக்களுக்குச் சொந்தக்காரனா யிருந்தான். ஆமி, ஸன்னை அன்போடு வரவேற்றான் என்பதைப்பற்றிச் சொல்லத் தேவை யில்லை. ஆனால் ஸன்னின் தாயாரும் மனைவியும், இவன் ஒரு புரட்சிக்காரன் என்று பெயர் பெற்றுக்கொண்டு ஊர் ஊராகச் சென்று ஒளிந்து வாழ்வதை விரும்பவில்லை. மகனே! உன் குடும்பத் தினருக்குத் தொந்தரவு உண்டாகும்படியாக ஏன் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறாய்? நமது கிராமத்தில் நிம்மதியாக வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கக் கூடாதா? என்று தாயார் அடிக்கடி கடிந்து கொண்டாள். ஆனால் லட்சியவாதியாகிய ஸன் இந்த வார்த்தைகளுக் கெல்லாம் எப்படிச் செவி கொடுத்துக் கொண் டிருக்க முடியும்?
ஸன், ஹோனோலூலு சென்றதும், தான் கொண்ட லட்சி யத்தில் கருத்து செலுத்தத் தொடங்கினான்; முந்தித் துவங்கிய முற்போக்குச் சீனர்கள் சங்கத்தைப் புதிய முறையில் அமைக்கும் முயற்சியில் இறங்கினான்; புதிதாக அங்கத்தினர் பலரைச் சேர்த்தான். சுமார் நூறு பேருக்கு மேல் சேர்ந்தார்கள். இவர்களுக்குத் தினந் தோறும் ராணுவத்தினருக்கு அளிக்கப்படும் பயிற்சிகளை அளிக்கவேண்டியது அவசியமென்று கருதினான். இதற்காகப் பெரியதோர் இடத்தை வாடகைக்கு அமர்த்திக்கொண்டான். இவன் எதிர்பார்த்ததை விடச் சிறிது அதிகமாகப் பண உதவியும் கிடைத்துக் கொண்டிருந்தது.
இங்ஙனம் ஹோனோலூலுவில் சங்கத்தை வலுப்படுத்தி வைத்துவிட்டு, அமெரிக்காவுக்குச் சென்று அங்குள்ள சீனர்களின் ஆதரவைப் பெறுவதென்று திட்டமிட்டான். ஏற்கனவே போட் டிருந்த திட்டந்தான். ஸுங்கின் அவசர அழைப்புக்கிணங்க சீனா வுக்குச் செல்ல வேண்டி யிருந்ததனால், இந்தத் திட்டம் நிறைவேற வில்லை யென்பது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கும்.
அமெரிக்காவில் ஸான் பிரான்சிகோ1 நகரத்திற்கு முதலில் செல்வதென்று ஸன் ஏற்பாடு செய்து கொண்டிருந்தான். இதற் கிடையில் ஒரு நாள், ஏதோ காரியமாக ஹோனோலூலுவின் பிரசித்தமான ஒரு தெரு வழியே நடந்து சென்றுகொண்டிருக்கை யில் காண்ட்லி தம்பதி களின் சந்திப்பு ஏற்பட்டது. எதிர்பாராத விதமான இந்தச் சந்திப்பு, ஸன்னுக்கு ஆச்சரியத்தை உண்டு பண்ணி யது. இந்தச் சந்திப்பை டாக்டர் காண்ட்லியே வருணிக்கட்டும்:-
“நானும் என் மனைவியும், எனது சிறு மகனைக் கவனித்துக் கொண்ட ஜப்பானியப் பணிப்பெண்ணுடன் தெரு வழியே சென்று கொண்டிருக்கும்போது ஒருவன் இடைமறித்து எங்களை நிறுத்தி னான். அவனைப் பார்த்தால் ஜப்பானியன் மாதிரி தோன்றியது. ஐரோப்பிய உடையில் ஒழுங்காகக் காணப்பட்டான். மீசையும் அளவாக வைத்துக் கொண்டிருந்தான். எங்களுக்கு மரியாதை காட்டும் முறையில் கையை நீட்டினான்; தலைத் தொப்பியைத் தூக்கினான்; முகத்தில் புன்முறுவலும் பூத்தது. இப்படி அவன் செய்ததைக் கண்டு, நாங்கள் அவனைச் சிறிது ஆச்சரியத்துடன் பார்த்தோம். எங்களுடனிருந்த பணிப்பெண், அவனிடம் ஜப்பானிய பாஷையில் சில வார்த்தைகள் சொன்னாள். அவனும் வாய் விட்டுப் பதில் சொல்லாமல் தலையசைத்துக் கொண்டிருந்தான். அவனையே பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்கு சிறிது நேரமான பிறகே அவன் ஸன் என்று தெரிந்தது. பரபரம் க்ஷேமம் விசாரித்துக் கொண்டோம். பின்னர் அவன் லண்டன் செல்வதற்கு ஏற்பாடு செய்யப் பட்டது.”
ஜப்பானியனாகத் தோற்றமளித்த ஸன்னை, காண்ட்லி தம்பதிகளுக்கே சுலபமாக அடையாளங்கண்டு பிடித்துக்கொள்ள முடியவில்லை யென்பதிலிருந்து இவன் எந்த ஒரு காரியத்தைச் செய்தபோதிலும் அதை ஒழுங்காகச் செய்வான் என்று புலனாகிற தல்லவா? இந்த ஒழுங்கு முறையை இவன், தன் வாழ்நாள் பூராவும் கடைப்பிடித்து வந்தான்.
ஏற்கனவே ஸன்னுக்கு, ஐரோப்பிய நாடுகள், சிலவற்றிற்கு சென்று, தன் கொள்கைகளையும் அவற்றைச் செயல்படுத்துவதற் கான வழிகளையும் பற்றிச் சிலரைக் கலந்தாலோசிக்க வேண்டு மென்றும் அவர்களின் உதவி கொண்டு ஓரளவு பிரசாரம் செய்ய வேண்டுமென்றும் எண்ணம் இருந்தது. இந்த எண்ணத்தை, காண்ட்லி தம்பதிகளைச் சந்தித்த பிறகு உறுதிப்படுத்திக் கொண் டான். ஆனால் உடனே லண்டனுக்குப் புறப்பட்டு விடவில்லை.
முந்திச் செய்துகொண்ட ஏற்பாட்டின்படியே 1896 ஆம் வருஷம் ஜூன் மாதம் ஸான் பிரான்சிகோ நகரம் சென்றான். முழுக்க முழுக்க மேனாட்டு நாகரிகத்தில் தோய்ந்திருந்த ஒரு நகரத்தை முதன்முதலாக இப்பொழுது தான் பார்த்தான். ஜனங்கள் எவ்வளவு சுறுசுறுப்பாயிருக்கிறார்கள்! யந்திர உபயோகத்தினால் காரியங்கள் எவ்வளவு துரிதமாக நடைபெறுகின்றன! என்ன வேகம்! அதே சமயத்தில் என்ன ஒழுங்கு! இவைகளையெல்லாம் பார்த்த ஸன்னுக்குப் பலவிதமான எண்ணங்கள் உதித்தன. தனது தாய்நாட்டின் தாழ்வுற்ற நிலையைப் பற்றிச் சிந்தித்தான். அதனை மேனாடுகளுக்குச் சமதையாக மேன்மைப்படுத்த வேண்டுமென்ற உறுதியும் கொண்டான்.
ஸான் பிரான்சிகோ நகரத்தில் சில நாட்கள் தங்கிய ஸன் அங்குள்ள சீனர்களை, தான் கொண்டுள்ள லட்சியம் நிறைவேறு வதற்கு உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டான். ஏதோ சொற்ப பலன் கிட்டியது. அங்கிருந்து புறப்பட்டு, வழிநெடுகவுள்ள பல ஊர்களிலும் சில சில நாட்கள் தங்கித் தங்கிக் கடைசியில் நியூயார்க்1 நகரம் போய்ச் சேர்ந்தான். இதற்குச் சுமார் மூன்று மாத காலம் பிடித்தது. வழியிலுள்ள சில சில ஊர்களில் தங்கினானென்று சொன்னால், எவ்வித காரியமும் இல்லாமல் தங்கினான் என்பது அர்த்தமல்ல. ஆங்காங்குள்ள முக்கியமான சீனர் களைக் கண்டு பேசினான். சீனாவுக்குப் பெரிய ஆபத்து ஏற்பட்டிருக் கிறதென்றும், இதிலிருந்து அதனைக் காப்பாற்ற வேண்டுமானால் முதலில் மஞ்சூ ஆட்சியை ஒழித்தாக வேண்டுமென்றும், எப்படி அமெரிக்கா ஒரு பெரிய புரட்சி நடத்தி இங்கிலாந்தின் ஆதிக்கத்திலிருந்து விடு விடுத்துக் கொண்டதோ அப்படியே சீனாவும் விடுவித்துக்கொள்ள வேண்டுமென்றும், அமெரிக்காவில் குடியரசு ஏற்பட்ட பிறகுதான் ஜனங்கள் நன்மையடைந்தார்களென்றும், அதைப் போல் சீன மக்கள் நன்மைபெற வேண்டுமானால் சீனாவில் குடியரசு தாபிக்கப் பட வேண்டியது அவசியமென்றும் இப்படியெல்லாம் எடுத்துச் சொன்னான். ஆனால் இவன் எதிர்பார்த்தபடி அதிகமான பலன் உண்டாகவில்லை. சில ஊர்களில் மட்டும் முற்போக்குச் சீனர்கள் சங்கத்திற்கு அங்கத்தினர்கள் சேர்ந்தார்கள். இந்த மூன்று மாதப் பிரயாணம் இவனுக்கு ஓரளவு ஏமாற்றத்தையே கொடுத்த தென்று சொல்லவேண்டும்.
1896 ஆம் வருஷம் ஜூன் மாதம் ஸன், ஸான் பிரான்சிகோ நகரம் சென்றானென்று சொன்னோமல்லவா? அந்தக் காலத்தில், போட்டோ எடுப்பதென்பது, தனித் தொழிலாகச் செய்யக்கூடிய அளவுக்கு அபிவிருத்தியடைந்திருந்தது. சொற்பத்தொகை கொடுத் தால், யாரும் தங்களுடைய உருவம் மாதிரியொன்றை தனியே எடுத்து வைத்துக் கொள்ளலாமென்று ஏற்பட்டபொழுது, யாருக்கும் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டுமென்ற ஆசை பிறக்கு மல்லவா? ஸன், ஸான் பிரான்சிகோ நகரத்தில் தங்கியிருந்த பொழுது, பலரும் போட்டோ எடுத்துக் கொள்வதைப் பார்த்தான். இவனுக்கும் ஆசையுண்டாயிற்று. போட்டோ எடுத்துக்கொண் டான். இதனால், இவன் ஆசை தீர்ந்த தென்னவோ வாதவம். ஆனால் இவனுக்கு ஆபத்தும் உண்டாயிற்று.
மஞ்சு அரசாங்க ஒற்றர்கள் இவனைத் தேடிக்கொண்டிருந் தார்களல்லவா? அமெரிக்காவின் தலை நகரமாகிய வாஷிங்க்டனில் (Washington) இருந்த சீன அரசாங்கத்தின் பிரதிநிதி கையில் ஸன்னின் போட்டோ பிரதியொன்று அகப்பட்டது. இதை வைத்துக்கொண்டு அவன், ஸன் எப்படியிருப்பான், என்னென்ன அடையாளங்களோடு கூடி யிருப்பான், என்பவைகளைப் பற்றி விவரமாக, மற்ற நாடுகளி லுள்ள சீன அரசாங்கத்தின் ஒற்றர்களுக்குத் தெரிவித்துவிட்டான். ஸன்னை உயிரோடு பிடிப்பதென்பது இப்பொழுது சுலபமாக யிருக்கு மல்லவா?
ஸன், அமெரிக்காவில் சுற்றுப்பிரயாணம் செய்து வருவதாகத் தெரிகிறதென்றும், அவனைக் கண்டு பிடித்து சீனாவுக்கு பந்தோ பதாக அனுப்பிவிட வேண்டுமென்றும், மஞ்சூ அரசாங்கம், வாஷிங்க்டனிலுள்ள தன் பிரதிநிதிக்கு எச்சரிக்கை கொடுத்திருந்தது. இந்தப் பிரதிநிதியும், ஸன்னின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணித்து வந்தான். ஸன், அமெரிக்காவை விட்டு இங்கி லாந்துக்குப் புறப்படும் தேதியை இவன் முன்கூட்டியே தெரிந்து கொண்டு, லண்டனிலுள்ள சீன தானீகனுக்கு எச்சரிக்கையும் கொடுத்துவிட்டான்; மஞ்சூ அரசாங்கத்துக்கும் தெரிவித்து விட்டான். மஞ்சு அரசாங்கம், இங்கிலாந்து வர இருக்கும் ஸன்னை, அங்கே தங்கவிடாமல் அப்படியே வெளியேற்றிச் சீனாவுக்கு அனுப்பிவிடும்படி பிரிட்டிஷ் அரசாங்கத்தைக் கேட்டது.
ஒரு நாட்டின் பிரஜை, கொலையோ, களவோ, தேசத்துரோகச் செயலோ, இப்படி ஏதோ ஒரு பெரிய குற்றத்தைச் செய்துவிட்டு வேறொரு நாட்டில் தஞ்சம் புகுந்துகொள்வானாகில் அவனை வெளியேற்றித் தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமென்று அந்தப் பிரஜையினுடைய சொந்த நாட்டு அரசாங்கம், அவன் தஞ்சம் புகுந்த நாட்டு அரசாங்கத்தைக் கேட்கலாம். அந்த நாட்டு அரசாங்கம் இந்தக் கோரிக்கைக்கு இணங்கும். ஆனால் இதற்கு, இரண்டு நாடுகளுக்குமிடையே ஓர் ஒப்பந்தம் இருக்க வேண்டும். சர்வதேச உறவு முறைகளுக்குட்பட்ட ஒரு நியதி இது. இந்த நியதிப்படி, பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கும் சீன அரசாங்கத்திற்கும் எவ்வித ஒப்பந்தமும் இல்லை. எனவே, சீன அரசாங்கம், ஸன் விஷயமாகக் கேட்டதற்குப் பிரிட்டிஷ் அரசாங்கம் மறுத்துவிட்டது.
அடைபடலும் விடுபடலும்
ஸன், நியூயார்க் நகரத்திலிருந்து புறப்பட்டு 1896 ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் முப்பதாந்தேதி, இங்கிலாந்திலுள்ள லிவர்ப்பூல்1 நகரம் வந்து சேர்ந்தான். தன்னை யாரும் கண்டுபிடிக்கக் கூடா தென்பதற்காக, தன் பெயரை மாற்றி வைத்துக் கொண்டு வந்தான். லிவர்ப்பூலில் ஓரிரண்டு நாள் தங்கிவிட்டு, நேரே லண்டனுக்கு2 வந்து சேர்ந்தான். சேர்ந்ததும், காண்ட்லி தம்பதிகளின் சந்திப்பு கிடைத்தது. அவர்கள், இவனைக் கண்டதும் பெரு மகிழ்ச்சி யடைந்தார்கள். இவனுக்குத் தனி ஜாகை ஏற்படுத்திக் கொடுத்து உதவினார்கள். ஆனால், இவன் ஒரு நாளின் பெரும் பொழுதை காண்ட்லி தம்பதிகளுடனேயே கழித்தான்.
ஞாயிற்றுக்கிழமைதோறும் காண்ட்லி தம்பதிகள் தேவாலயத் திற்குச் செல்வது வழக்கம். ஒரு ஞாயிற்றுக்கிழமை. சரியாகச் சொல்லப்போனால் 1896 ஆம் வருஷம் அக்டோபர் மாதம் பதினோராந் தேதி, தங்களோடு தேவாலயத்திற்கு வரவேண்டுமென்று ஸன்னுக்குச் சொல்லியிருந்தார்கள் காண்ட்லி தம்பதிகள். அப்படியே ஸன்னும் அன்று காலை, தன் ஜாகையிலிருந்து கிளம்பி காண்ட்லி தம்பதிகளின் இருப்பிடத் திற்கு வந்து கொண்டிருந்தான். வரும் வழியில் சீன தானீகனுடைய காரியாலயம் இருந்தது. காண்ட்லி தம்பதிகளின் இருப்பிடத்திற்கும் இதற்கும் சில கஜ தூரந்தான். இதைச் சேர்ந்த சீன ஒற்றர்கள், ஸன்னைக் கண்காணித்து வரக்கூடு மென்று டாக்டர் காண்ட்லி எப்படியோ ஊகித்துக் கொண்டு, அந்த காரியாலயத்தின் பக்கம் அதிகமாக நடமாடவேண்டா மென்று இவனுக்கு - ஸன்னுக்கு - எச்சரிக்கை செய்திருந்தான். இதை மறந்தோ அல்லது தன் ஜாகையிலிருந்து காண்ட்லி தம்பதிகளின் இருப்பிடத்திற்கு வர வேறு வழி இல்லாத காரணத்தினாலோ, ஸன், மேலே சொன்ன ஞாயிறு காலை, இந்தக் காரியாலயம் உள்ள தெரு வழியே வந்துகொண்டிருந்தான். குறித்த நேரத்தில் காண்ட்லி தம்பதிகளுடன் சேர்ந்து தேவாலயத்திற்குச் செல்லவேண்டுமென்ற எண்ணமே இவனிடம் அப்பொழுது மேலோங்கி நின்றது. இதனால் வேக நடைபோட்டுத்தான் வந்துகொண்டிருந்தான். இப்படி வந்து கொண்டிருக்கையில் ஒரு சீனன் இவனைப் பின் தொடர்ந்தான்; சிரித்த முகத்தினன், ஆங்கிலத்தில் இவனிடம் பேசத் தொடங்கி னான்.
நீங்கள் ஒரு ஜப்பானியரா? ஒரு சீனன் தன்னைப் பார்த்து இப்படிக் கேட்டதும், ஸன்னுக்கு அதிக சந்தோஷம் உண்டாயிற்று. அயல்நாடு ஒன்றில் சொந்த நாட்டு மக்களை எதிர்பாராத விதமாகச் சந்திக்கிறபோது யாருக்குமே அலாதியான ஒரு மகிழ்ச்சியுண்டாதல் இயல்பு. இந்த மகிழ்ச்சி மிகுதியினால் ஸன், நான் ஒரு சீனன் என்று உண்மையைச் சொல்லிவிட்டான்.
“சீனாவின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தாங்கள்?”
“காண்ட்டன் நகருக்குச் சமீபம்.”
இந்தப் பதிலைக் கேட்டு அந்தச் சீனன், மகிழ்சிச் பொங்கியவ னாய் அப்படியானால் நாமிருவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள்! லண்டனிலுள்ள மற்றச் சீனர்கள், காண்ட்டன் பகுதியில் பேசப் படுகிற பாஷையைப் பேசுவதில்லை. அவர்களுக்கு இந்தப் பாஷை தெரிவதில்லை. இதனால் நான் அவர்களுடன் ஆங்கிலத்திலேயே பேசவேண்டியிருக்கிறது என்று கூறினான்.
இங்கே ஒரு விஷயம். சீனாவில் யாரைப் போய்க் கேட்டா லும், தங்கள் தாய்மொழி சீனம் என்றுதான் சொல்லுவார்கள். எழுதுவது ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆனால் பேசுகின்ற விதம் தான் வேறு வேறாக இருக்கும். தெற்குப் பகுதியில் உள்ள வர்கள் பேசுவது வடக்குப் பகுதியிலுள்ளவர்களுக்குப் புரியாது. இப்படியே வடக்குப் பகுதியிலுள்ளவர்கள் பேசுவது தெற்கு பகுதியிலுள்ளவர்களுக்குப் புரியாது. ஒவ்வொரு பகுதியிலுள்ள வர்களும் ஒவ்வொரு மாதிரியாகப் பேசுவார்கள். இதனால்தான், ஸன்னைச் சந்தித்த சீனன், காண்ட்டன் பகுதியில் பேசப்படுகிற பாஷையை லண்டனிலுள்ள மற்றச் சீனர்கள் பேசுவதில்லையென்று கூறினான்.
இவன் இப்படிப் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருக்கையில் மற்றொரு சீனன் அங்கு வந்து சேர்ந்தான். முந்தியவனுக்குத் தெரிந்தவன்தான். இருவரும், ஸன்னை, தங்கள் ஜாகைக்கு வந்து சிறிது நேரம் இருந்து விட்டுப் போகுமாறும், கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுப் போனால்தான் தங்களுக்குத் திருப்தியா யிருக்குமென்றும் சொல்லி அழைத்தார்கள். ஸன்னுக்கு இவர்கள் மீது சிறிதும் சந்தேகம் உண்டாக வில்லை; இவர்கள் அழைப்பை மறுக்கவும் முடியவில்லை. அன்போடு அழைப்பதாகவே கருதி னான். களங்கமில்லாத உள்ளத்தவனல்லவா?
இருவரும் ஸன்னைக் கைகொடுத்து மெதுவாக அழைத்துக் கொண்டு போனார்கள். சீன தானீகனுடைய காரியாலயத்திற்கு அருகே வந்தார்கள். இதன் பின்பக்கக் கட்டடம் வேறொரு தெருவில் இருந்தது. இந்தக் கட்டடத்திற்கு வந்ததும், ஒரு கதவைத் திறந்து இதுதான் எங்கள் ஜாகை; உள்ளே வாருங்கள் என்று சிரித்துச் சொல்லிக்கொண்டே ஸன்னின் முதுகு மீது கை வைத்து உள்ளே தள்ளி, கதவின் வெளிப்பக்கத்தில் தாளிட்டு விட்டார்கள்! சீன ஒற்றர்களின் வலையில் சிக்கிக்கொண்டு விட்டான் ஸன்! காண்ட்லி தம்பதிகள், இவனுடைய வருகைக்காகக் காத்துக்கொண்டிருந் தார்கள்; வெகு நேரம்வரை வராமலிருக்கவே அவர்களுக்குச் சந்தேகம் தோன்றிவிட்டது. இவனைப்பற்றிப் பகிரங்கமாகவும் விசாரிக்க முடியவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துக்கொண்டிருந்தார்கள்.
ஸன், அறையில் அடைபட்ட சிறிது நேரத்திற்கெல்லாம், சீன தானீகன் அலுவல் பார்க்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டான். அப்பொழுது தானீகனாயிருந்தவன் ஸர் ஹாலிடே மக்கார்ட்னி(Sir Halliday Macartney) என்ற ஆங்கிலேயன். இவன் சீனா வில் மஞ்சூ அரசாங்கத்தின் கீழ், சுமார் பதினைந்து வருஷகாலம் ஊழியம் செய்தவன். அந்த ஆட்சியின் சீர்கேட்டை ஒருவாறு உணர்ந்தவன் இருந்தாலும், அந்த அரசாங்கத்தின் விருப்பத்திற் கிணங்கியும், அந்த அரசாங்கம் அளிக்கும் ஊதியத்தைக் கைவிட மனமில்லாமலும், லண்டனில் அந்த அரசாங்கத்தின் தானீகனாக அலுவல் பார்த்து வந்தான்.
இவன் - இந்த மக்கார்ட்னி - தன் அறைக்கு அழைத்து வரப் பட்ட ஸன்னை ஏற இறங்கப் பார்த்தான். ஏற்கனவே இவனுடைய போட்டோவைப் பார்த்திருந்தபடியால், மஞ்சூ அரசாங்கம் தேடிக் கொண்டிருக்கிற நபர் இவன்தான் என்று நிச்சயப்படுத்திக் கொண்டான்.
“மஞ்சூ அரசாங்கத்தினுடைய உத்தரவின் பேரில்தான் உங்களைப் பிடித்துப் பாதுகாப்பில் வைத்திருக்கிறேன்” என்றான் மக்கார்ட்னி.
“இப்படிச் செய்ய உங்களுக்கு அதிகாரமில்லை” யென்றான் ஸன் பணிவாக.
ஆனால் பயன் ஏதும் விளையவில்லை. பழையபடி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுவிட்டான். மக்கார்ட்னியோ, ஸன் அகப்பட்டு விட்டதாகவும், மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுத்துக்கொள்வ தென்று கேட்டும் மஞ்சூ அரசாங்கத்திற்குத் தந்தி கொடுத்தான். தனியாக ஒரு கப்பலை வாடகைக்குப் பேசி, அதில் ஸன்னை ஒரு பைத்தியக் காரனென்று சொல்லி ஏற்றி, சீனாவுக்கு அனுப்பிவிட வேண்டுமென்பது இவன் திட்டம். மஞ்சூ அரசாங்கத் திடமிருந்து பதிலை ஆவலோடு எதிர் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஸன்னை மேல் மாடியிலுள்ள ஓர் அறைக்கு அழைத்துக் கொண்டு போய் வைத்துப் பூட்டி விட்டார்கள். அங்கே தனியனாய் நிலைகலங்கி நின்றான். காண்ட்லி தம்பதிகளுக்குத் தகவல் தெரிய வேண்டுமே? அவர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்களே? என்னுடைய இந்தக் கதியைக் கேட்டால், ஹவாயி தீவிலுள்ள என் குடும்பத்தினர் எப்படித் திடுக்கிட்டுப் போவார்கள்? இப்படி ஒன்றன் பின் ஒன்றாக பல எண்ணங்கள் இவன் உள்ளத்தில் ஓடலாயின. சில மணி நேரங் கழித்து இந்த எண்ணங்களும் நின்று போயின. பிறகு? தாய்நாட்டின் அவலநிலை இவன் அகக்கண் முன்னர் வந்து நின்றது. மஞ்சூ அரசாங்கம் மதிப்பிழந்து நிற்கிறது. அந்நிய சக்திகள் அட்ட காசம் செய்கின்றன. நாற்பது கோடி சீன மக்கள் வறுமையிலும் அறியாமையிலும் மூழ்கிக் கிடக்கின்றனர். இவைகளுக்கெல்லாம் பரிகாரம் என்ன? மஞ்சூ ஆட்சியை ஒழித்துக் குடியரசை தாபிப் பதுதான். இப்படி ஒன்றன் பின்னொன்றாக எழுந்த சிந்தனைகள் மீது சில மணி நேரம் மிதந்து சென்றான்.
ஆனால் இப்படிச் சிந்தனைகளின் மீது மிதந்து சென்றதோடு இவன் திருப்தியடையவில்லை. டாக்டர் காண்ட்லியுடன் எப்படி யாவது தொடர்பு கொள்ள வேண்டுமென்று முயன்றான். அவனுக்கு - டாக்டர் காண்ட்லிக்கு - ஒரு சீட்டெழுதி அதில் ஒரு நாணயத்தையும் வைத்துக்கட்டி, தன் மாடி அறையிலிருந்து கீழே போட்டான். அதை யாராவது கண்டெடுத்து டாக்டர் காண்ட்லி யிடம் சேர்ப்பிப்பார்களென்று எதிர்பார்த்தான். அந்த சீட்டிலுள்ள நாணயத்தை அவர்கள் பிரதிபலனாக எடுத்துக்கொள்ளட்டும் என்பது இவன் எண்ணம். ஆனால் இவன் எண்ணியபடி அன்று யாரும் வந்து அந்தச் சீட்டை எடுக்கவில்லை.
அன்றிரவு தன்னைப்பற்றி நினைக்கத் தொடங்கினான் ஸன். ஒருவித பயமும் இவனை ஆட்கொண்டது. இனி தப்புவதற்கு வழியேது? எப்படியும் சீனாவுக்கு அனுப்பிவிடுவார்கள். அங்கே மஞ்சூ அரசாங்க அதிகாரிகள் என்னைச் சும்மா விடுவார்களா? என் உடம்பிலுள்ள எலும்புகளைத் துண்டு துண்டாக்குவார்கள்; கண் ரெப்பைகளை அறுத்து அப்புறப்படுத்தி விடுவார்கள். என் உயிர் போன பிறகு என்னை யாரும் அடையாளங் கணடுகொள்ள முடியாமலாக்கி விடுவார்கள். அரசியல் குற்றவாளிகளுக்குக் கருணை காட்டுவதென்பது மஞ்சூ அதிகாரிகளுக்குத் தெரியாத விஷய மல்லவா? இப்படி மரண பயத்தில் சிறிது நேரம் சிக்கி உழன்றான்.
நான் மரித்தாலும் சீனா பிழைக்குமா? நாற்பது கோடி மக்கள் புத்துயிர் பெற்று புதுவாழ்வு காண்பார்களா? திரும்பவும் தாய்நாட்டின் மீது சிந்தனை. அறையில் அடைபட்ட முதல் நாள் பூராவும் இந்த மாதிரியான சிந்தனைகள்.
மறுநாள் இவன் உள்ளத்தில் ஓர் ஒளி தோன்றியது அந்த ஒளியில் கடவுளின் அருட்சக்தி காட்சியளித்தது. அஃது அஞ்சேல் என்று இவனுக்குக் கூறுவதுபோலிருந்தது. கடவுளை நோக்கிப் பிரார்த்தனை செய்யத் தொடங்கினான். ஐந்தாறு நாட்கள் இப்படிப் பகலும் இரவுமாகப் பிரார்த்தனை செய்தான். பிரார்த்தனை பலன் அளித்தது. ஆறாவது நாள் உறுதிகொண்ட நெஞ்சினனாய், தெளிவு பெற்ற மதியினனாய் ஆனான். அக்டோபர் மாதம் பதினாறாந் தேதி காலை எனக்கு ஒருவித அமைதியும் நம்பிக்கையும் தைரியமும் ஏற்பட்டன என்று இவனே கூறுகிறான்!
ஸன், உண்மையான கடவுட் பற்றுடையவன். புதுமையின் மீது ஏற்பட்ட ஒரு மோகத்தினால் இவன் கிறிதுவனாகவில்லை. யேசுநாதரின் எளிய வாழ்க்கையும் அரிய உபதேசங்களும், அந்தப் பெருமானிடத்தில் இவனை ஈடுபடுத்திவிட்டன. இந்த ஈடுபாடு இவனை விட்டுக் கடைசி வரை அகலவேயில்லை. கடவுளை நம்பினோர் கைவிடப் படாரல்லவா?
அக்டோபர் மாதம் பதினாறாந் தேதி காலை ஸன், மன அமைதி பெற்றானல்லவா? அன்று வெள்ளிக்கிழமை அன்றைய தினத்திலிருந்தே, தான் தப்பிக்க வழிதேடத் தொடங்கினான். ஏற்கனவே டாக்டர் காண்ட்லியுடன் தொடர்பு கொள்ள, தான் செய்த முயற்சி பலிக்க வில்லையென்பதற்காக இவன் மனச் சோர்வு கொள்ளவில்லை.
இந்த ஒரு வாரத்தில், தன்னைக் காவல் செய்ய நியமிக்கப்பட் டிருந்த சிலருடன் நட்புக்கொண்டிருந்தான். இவர்களில் ஒருவன் கோல்(Cole) என்பவன். இவன் ஓர் ஆங்கிலேயன். இவனை மெது வாக, தன் வசமாக்கிக் கொண்டான் ஸன். அன்று சனிக்கிழமை. இந்த கோல் என்பவனும், காரியாலயத்தில் அலுவல் பார்த்துக் கொண் டிருந்த ஸ்ரீமதி ஹோ(Mrs Howe) என்பவளைக் கலந்து கொண்டு, அவள் மூலம் டாக்டர் காண்ட்லிக்குச் செய்தியை எட்ட விடுவதாக ஒப்புக் கொண்டான். ஸன்னுக்குச் சிறிது நம்பிக்கை பிறந்தது.
ஸ்ரீமதி ஹோ, அன்றிரவு-அக்டோபர் மாதம் பதினேழாந் தேதி சனிக்கிழமை இரவு-சுமார் பதினோரு மணிக்கு, டாக்டர் காண்ட்லி யின் வீட்டுக்குச் சென்று, தான் ஏற்கனவே எழுதி வைத்திருந்த சீட்டை தெருக் கதவண்டை போட்டுவிட்டு வந்துவிட்டாள். திரும்புவதற்கு முன், கதவிலுள்ள மின்சார மணியை அழுத்திவிட்டு வந்தாள். ஒரு வீட்டிற்கு வருகிறவர்கள், அந்த வீட்டுக்குள்ளிருக் கிறவர்களுக்குத் தங்கள் வருகையைத் தெரிவிக்க, தெருக்கதவுப் பக்கமுள்ள மின்சாரப் பொத்தானை அழுத்துவார்கள். உடனே உள்ளே மணியோசை கேட்கும். உள்ளேயிருக்கிறவர்கள் வெளியே வந்து யார் வந்திருக்கிறதென்று பார்ப்பார்கள். மின்சார வசதியுள்ள பெரும்பாலான மாளிகைகளில் இதைப் பார்க்கலாம்.
மணிச் சப்தம் கேட்டதும் காண்ட்லி தம்பதிகள் வெளியே வந்து பார்த்தார்கள். கதவண்டை ஒரு சீட்டுக் கிடந்தது. எடுத்துப் படித்தார்கள். அதில் பின் வருமாறு எழுதப்பட்டிருந்தது:-
“உங்களுடைய நண்பர் ஒருவர், இங்குள்ள சீன தானீகர் காரியாலயத்தில் சென்ற ஞாயிற்றுக்கிழமை முதல் சிறை வைக்கப் பட்டிருக்கிறார். அவரைச் சீனாவுக்கு அனுப்பிவிட உத்தேசித்திருக் கிறார்கள். அங்கே அவரைத் தூக்கிலிட்டு விடுவார்கள் என்பது நிச்சயம். ஐயோ பாவம்! அவருடைய நிலைமை வருந்தத் தக்கதா யிருக்கிறது. அவர் விஷயமாக உடனே ஏதேனும் நடவடிக்கை எடுத்துக் கொள்ளா விட்டால் அவரைக் கடத்திக்கொண்டு போய் விடுவார்கள். அப்பொழுது யாருக்கும் தெரியவராது. இந்தச் சீட்டில் என் கையெழுத்தைப் போட எனக்குத் தைரியமில்லை. ஆனால் இஃது உண்மை. நான் சொல்வதை நம்புங்கள். நீங்கள் என்ன செய்வதாயிருந்தாலும் உடனே செய்ய வேண்டும் காலங்கடந்து விட்டால் கஷ்டம். அவருடைய பெயர் லின் யென் ஸென்1”
இந்தச் சீட்டைப் பார்த்ததும் டாக்டர் காண்ட்லிக்கு ஒன்றும் தோன்றவில்லை. மஞ்சூ அரசாங்கத்தின் கண்காணிப்பில் வரக் கூடிய அளவுக்கு, தன்னிடம் வைத்தியம் பயின்ற ஸன் பிரசித்தி யடைந்து விட்டானா என்று எண்ணியவண்ணம் சிறிது நேரம் திகைத்து நின்றான். இப்படிச் சில நிமிஷங்கள்தான். பின்னர், ஸன்னை விடுதலை செய் விக்கும் முயற்சியில் இறங்கினான். நள்ளிரவென்று பார்க்கவில்லை. மக்கார்ட்னியின் வீட்டுக்குச் சென்று, தகவல் அறிய விரும்பினான். அங்கு ஏதும் பதில் கிடைக்கவில்லை. உடனே அடுத் தாற்போலிருந்த போலீ டேஷனுக்குச் சென்று விசாரித்தான். அங்கிருந்தவர்கள், தலைமைப் போலீ காரியாலயமாகிய ஸ்காத் லாந்து யார்டு(Scotland Yard)க்குக் கைகாட்டி விட்டார்கள். அந்த காத்லாந்து யார்டிலிருந்த அதிகாரியோ, துப்பு துலங்குவது சந்தேகந்தான் என்று சொல்லிவிட்டான்.
மக்கார்ட்னி, முயற்சியில் தளர்ச்சி காட்டவில்லை. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை ஒரு நீதிபதியைக் கண்டு பேசினான். சுங்க இலாகா அதிகாரியொருவரை விசாரித்தான். ஏதும் விவரம் தெரிந்து கொள்ள முடியவில்லை. உடனே, தனது பழைய ஹாங்காங் நண்பனாகிய ஸர் பாட்ரிக் மான்ஸனை நாடிச் சென்றான். அப்பொழுது இந்த மான்ஸன், சீனாவிலிருந்து ஓய்வு பெற்று லண்டனில் வாசஞ் செய்து கொண்டிருந்தான்.
மான்ஸனும் காண்ட்லியும் சந்தித்துப் பேசிக் கொண் டிருக்கையில், சீன தானீகன் காரியாலயத்து ஊழியனும், ஸன்னும் உதவி செய்ய முன் வந்தவனுமான கோல் என்பவன் ஸன் கொடுத் தனுப்பிய ஒரு சீட்டுடன் வந்தான். அதில் நான் சென்ற ஞாயிற்றுக் கிழமையன்று கள்ளத்தனமாகப் பிடிக்கப்பட்டு காப்பில் வைக்கப் பட்டிருக்கிறேன் என்று ஸன் கையெழுத்துப்படக் கண்டிருந்தது. இதைப் பார்த்த காண்ட்லி, ஸன்னின் பரிதாப நிலைக்குப் பெரிதும் இரங்கினான். உடனே லண்டன் டைம்3 பத்திரிகாலயத்திற்குச் சென்று, ஸன் சம்பந்தமாக நடந்தவைகளை அதில் வெளியிடும்படி செய்தான்.
ஸன்னிடமிருந்து சீட்டுக் கொண்டுவந்த கோல், சும்மா திரும்பிச் செல்லாமல், இன்னும் இரண்டு தினங்களில் ஸன்னை, சீனாவுக்குக் கப்பலேற்றி அனுப்பிவிடக் கூடுமென்ற தகவலையும் கொடுத்துவிட்டுச் சென்றான்.
லண்டன் டைம் பத்திரிகாலயத்திலிருந்து திரும்பி வந்ததும் காண்ட்லி, மான்ஸனைச் சந்தித்து, அவனையும் கூட்டிக்கொண்டு, மறுபடியும் காத்லாந்து யார்டுக்குச் சென்று, ஏதேனும் பரிகாரம் காணமுடியுமாவென்று பார்த்தான். பயனில்லை. உடனே அந்நிய நாட்டு மந்திரியின் காரியாலத்திற்குச் சென்று, அங்குள்ள பிரதம அதிகாரியிடம் விஷயத்தை விளக்கிச் சொன்னான். அந்த அதிகாரி, அன்று ஞாயிற்றுக் கிழமையானபடியால் ஒன்றுஞ் செய்வதற்கில்லை யென்றும், மறுநாள் திங்கட்கிழமை கவனிப்பதாகவும் கூறினான். இதைக் கேட்டு காண்ட்லி சிறிது திருப்தியடைந்தான். ஆனால் மான்ஸனுக்குத் திருப்தியுண்டாக வில்லை. அந்நிய நாட்டு மந்திரி காரியாலயத்திற்குத் தெரியாமல், சீன தானீகன் காரியாலயம், எங்கே ஸன்னை சீனாவுக்குக் கடத்திவிடுமோ என்ற கவலை அவனுக்கு. எனவே அந்தச் சீன தானீகன் காரியாலயத் திற்குச் சென்று, ஸன்னைக் கடத்திச் சென்றால், பிரிட்டிஷ் அந்நிய நாட்டு மந்திரி காரியாலயம் தக்க நடவடிக்கை எடுத்துத் தடுக்கும் என்று அங்குள்ள அதிகாரிகளுக்கு எச்சரிக்கை செய்து வந்தான் இருந்தா லும் இவனுக்குச் சந்தேகம். சீன தானீகன் காரியாலயத்தைக் கண்காணித்து வரச் செய்தல் நல்லதென்று காண்ட்லிக்கு யோசனை கூறினான். அப்படியே காண்ட்லியும், தனிப்பட்ட ஒருவனுக்குப் பணங்கொடுத்து மேற்படி காரியாலயத்தைக் கண்காணித்து வரச்செய்தான்.
இங்ஙனம் காண்ட்லி, மான்ஸனின் துணை கொண்டு, தேவை யான நடவடிக்கைகள் எடுத்து வருவது, கோல் என்பவனுக்குத் தெரிந்தது. திங்கட்கிழமையன்று காலை வழக்கம்போல் ஸன்னின் அறையைக் காவல் செய்யச் சென்றான். சென்றவன் சும்மா செல்ல வில்லை; ஒரு சீட்டெடுத்துக்கொண்டு சென்றான்; காண்ட்லியிட மிருந்துதான். தைரியமாயிரு; உனக்காக பிரிட்டிஷ் அரசாங்கம் தக்க நடிவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது, இன்னும் சில தினங்களில் நீ விடுதலை பெறக்கூடும் என்று அந்தச் சீட்டில் கண்டிருந்தது. இதைக் கண்ட ஸன்னுக்கு ஒரு நம்பிக்கை பிறந்தது.
அந்நிய நாட்டுக் காரியாலயத்துப் பிரதம அதிகாரி, ஸன் விஷயமாக, மறுநாள் திங்கட்கிழமை கவனிப்பதாக, காண்ட்லி யிடம் சொன்ன போதிலும் அப்படி அவனால் கவனிக்க முடிய வில்லை. அரசாங்க யந்திர மல்லவா? மெதுவாகவே நகர்ந்தது; ஸன்னை சீனாவுக்குக் கொண்டுபோய் விடாதபடி சில நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டது. கடைசியில் அக்டோபர் மாதம் இருபத்து மூன்றாந் தேதி வெள்ளிக்கிழமை மாலை சுமார் நாலரை மணிக்கு மேல், ஸன் காப்பிலிருந்து விடுவிக்கப்பெற்றான்.
விடுதலை பெற்றதும் ஸன் நேரே காண்ட்லி தம்பதிகளின் இல்லத்திற்குச் சென்று அவர்களுக்கு நன்றி செலுத்தினான். காண்ட்லியின் முயற்சியின்றேல் ஸன் விடுதலை பெற்றிருக்க முடியாது. இதை இவன் நன்கு உணர்ந்திருந்தான். சில மாதங் களுக்குப் பிறகு, ஹாங்காங்கிலும் காண்ட்டனிலுமுள்ள ஸன்னின் நண்பர்கள், ஸன்னின் சார்பாகத் தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்ற முறையில், காண்ட்லிக்கு மரத்தினாலாய ஒரு பட்டயத்தை அனுப்பினார்கள்… அதில் பிறரிடம் கருணை காட்டுகின்றவர்கள் ஆண்டவனால் ஆசீர்வதிக்கப்படுவர் என்ற விவிலிய வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.
ஸன்னை இங்ஙனம் காப்பில் வைக்கச் செய்தவர்கள் இவனுக்கு ஒருவிதத்தில் நல்லதையே செய்தார்களென்று சொல்லவேண்டும். ஏனென்றால், இதுகாறும் பிரபலமடையாதிருந்த இவன் பெயர், இப்பொழுது பிரபலமடையத் தொடங்கியது. இவன் கொண்ட குறிக்கோள் பலருக்கும் தெரிந்தது. ஆங்கிலப் பத்திரிகைகள் இவனைப் பற்றிப் பேச ஆரம்பித்தன. உண்மையில், லண்டன் டைம் போன்ற பிரபல பிரிட்டிஷ் பத்திரிகைகள், இவனைக் காப்பில் வைத்தது சட்ட விரோதமென்றும், இவனை விடுதலை செய்வதுதான் பிரிட்டிஷ் நீதிக்குப் பொருத்தமான தென்றும் எழுதி, இவன் விடுதலைக்கு உதவி செய்தன. இவனும், தான் விடுதலை யடைந்ததும், மேற்படி பத்திரிகைகளுக்கு நன்றி செலுத்திக் கடிதம் எழுதி வெளியிடச் செய்தான்.
இவன் காப்பில் வைக்கப்பட்டது, காண்ட்லியின் உதவியி னால் இவன் விடுதலை பெற்றது முதலிய எல்லா விவரங்களும் சில நாட்களுக்குப் பிறகு, சீனாவுக்கு வெளியே வாழ்ந்து வந்த சீனர் பலருக்கும் தெரிந்தது. சீனாவின் வருங்காலத் தலைவன் இவன் தான் என்று நிச்சயம் செய்துகொண்டார்கள். காப்பிலிருந்து விடுதலை பெற்ற பிறகு இவன் சொல்லுக்கு மதிப்புக் கொடுத்தார்கள்; அப்படியே இவன் செயல்களுக்குத் தங்களாலான ஆதரவையும் அளித்தார்கள்.
இங்ஙனம் ஸன்னின் பெயர் பரவப் பரவ, இவன் மீது மஞ்சூ அரசாங்கம் கொண்டிருந்த கோபமும் அதிகரித்தது; இவனை எப்படியாவது அகப்படுத்தி விட, தீவிர நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டது. பலவித பந்தங்களில் சிக்கி உழன்றுகொண்டிருக்கும் ஒரு சமுதாயத்திற்கு விடுதலை வாங்கித்தர முனைகின்றவர்களை எப்பொழுதும் ஆபத்து சூழ்ந்து கொண்டிருக்கிறதென்பது எவ்வளவு உண்மை!
முடிவுக்கருகில் முடியாட்சி
ஒரு நாட்டின் ஆட்சி முறையில் மாற்றங்கள் ஏற்படவிருக்கிற பொழுது, அந்த நாட்டு அரசியல்வாதிகளிடையே முக்கியமான இரண்டு கட்சிகள் தோன்றுவது இயல்பாகவே இருந்து வருகிறது. நிதானப் போக்குடையவர்களைக் கொண்டது ஒரு கட்சி; தீவிரப் போக்குடையவர்களைக் கொண்டது மற்றொரு கட்சி. இவ்விரு கட்சியினருடைய குறிக்கோளில் வேற்றுமை காண முடியாது; ஆனால் செயல்முறையில் வேற்றுமைகள் பலவற்றைக் காணலாம். இந்த வேற்றுமைகளும், அந்தந்த நாட்டு மக்களுடைய பண்பாடு, பொருளாதார நிலைமை, ஆட்சி நடத்தி வருகின்றவர்களுடைய சக்தி முதலியவை களைப் பொறுத்து வேறுபடுகின்றன.
நிதானக் கட்சியினர், இருப்பதை வைத்துக் கொண்டு, அதைச் சீர்திருத்தி அமைக்கவேண்டுமென்ற போக்கில் செல்வர். தீவிரவாதி களோ, இருப்பதை அடியோடு அகற்றிவிட்டு அதன் தானத்தில் வேறொன்றை அமைக்கப் பாடுபடுவர். இருப்பது மாறவேண்டு மென்பதில் இரு சாராரும் ஒரு நோக்கம் உடையவரே. பொதுவாக எல்லா நாடுகளின் அரசியல் வாழ்விலும் காணப்படுகின்ற நியதி இது.
சீனாவில், பத்தொன்பதாவது நூற்றாண்டின் கடைசி பகுதி யில் இத்தகைய இரண்டு கட்சிகள் தோன்றலாயின. ஒரு கட்சியின் தலைவன் ஸன் யாட் ஸென் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இது தான் தீவிரக்கட்சி; கட்டுக்கோப்பான கட்சியுங்கூட. புரட்சி யாளர்களின் கட்சி என்றும் இதனைச் சொல்லலாம். மற்றொன்று, நிதானக் கட்சி; அல்லது சீர்திருத்தவாதிகளின் கட்சி இதனை ஒரு கட்டுக்கோப்பான கட்சி என்று சொல்லமுடியாது; சீர்திருத்த நோக்கமுடைய சிலர் சேர்ந்த ஒரு கூட்டுறவு என்று வேண்டுமானால் சொல்லலாம். இதன் முக்கியதர் களாகக் குறிப்பிடப்படக் கூடிய வர்கள் இருவர். ஒருவன் சாங் சீ டுங்1; மற்றொருவன் காங் யூ வெய்.2
சாங் சீ டுங் என்பவன், மஞ்சூ அரசு பீடத்தினிடம் பக்தி பூண் டவன்; இரண்டு மாகாணங்களுக்கு அதிகாரியாயிருந்து நிருவாக அனுபவம் பெற்றவன். இருந்தாலும், சீனா இப்பொழுதிருப்பதைப் போல் இல்லாமல் சில துறைகளிலேனும் முன்னேற்றமடைய வேண்டுமென்ற கொள்கையன்; மேனாட்டு முறைகள் சிலவற்றைச் சீனாவில் கொண்டு புகுத்தவேண்டுமென்று விரும்பினான். சீர்திருத்த சம்பந்தமாகச் சீன அறிஞர்கள் பலர் அவ்வப்பொழுது எழுதி வந்த கட்டுரைகளைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டான். இது வெளியான சொற்ப காலத்திற்குள் பத்து லட்சம் பிரதிகளுக்கு மேல் செலவழிந்ததென்று சொன்னால் இவன் எழுத்துக்கும் கருத்துக்கும் மக்களிடையே எவ்வளவு மதிப்பிருந்த தென்பதை நாம் ஒருவாறு தெரிந்துகொள்ளலாம். இவன் சீர்திருத்த நோக்கமுடையவனா யிருந்தானென்றாலும், குடியரசு முறை சீனாவுக்கு ஏற்றதல்ல வென்ற கொள்கையுடையவனாயிருந்தான். முதலில் சில சீர்திருத்தங்கள் செய்ய வேண்டுமென்றும், அவற்றினால் ஏற்படுகிற விளைவுகளை ஆராய்ந்து பார்த்த பின்னரே, குடியரசுப் பிரச்னையைப் பற்றி யோசிக்க வேண்டுமென்றும், அதுவரை பொறுத்திருக்க வேண்டு மென்றும் இவன் அடிக்கடி கூறிவந்தான்.
மற்றொருவன் காங் யூ வெய். இவனை சீனாவின் ரூஸோ1 என்று அழைப்பர். சாங் சீ டுங்கைக் காட்டிலும் சிறிது முற்போக் கான எண்ணங் களுடையவன். காண்ட்டன் நகரவாசி. ஸன்னைவிட சுமார் எட்டு வயது மூத்தவன். ஆனால் ஸன்னைப் போல் குடியரசு வாதியல்ல. இவன், காண்ட்டன் நகரத்தில் ஒரு பள்ளிக்கூடம் தொடங்கி நடத்திவந்தான். அதில், இவனுடைய மாணாக்கனாக லியாங் சீ சௌ2 என்ற ஒருவன் படித்துவந்தான்; மகா புத்திசாலி; பிற்காலத்தில் தலைசிறந்த எழுத்தாளனாகப் புகழெய்தினான். இவன் மாணாக்கனாகச் சேர்ந்த சொற்ப காலத்திற்குள், இவனுடைய மேதையிலே காங் யூ வெய்க்கு அதிக மதிப்பு ஏற்பட்டது. ஆசிரிய னும் மாணாக்கனும் நெருங்கிய நண்பர்களானார்கள். சீனா பல வகையிலும் சீர்திருத்தம் பெற வேண்டுமென்கிற விஷயத்தில் இருவரும் ஒரே மாதிரியான கருத்துடையவர்களாயிருந்தார்கள். இருவரும் சேர்ந்து, அரசாங்க உயர்தர உத்தியோகங்களுக்காக பீக்கிங் நகரத்தில் நடைபெற்று வந்த போட்டிப் பரீட்சைக்குச் சென் றார்கள். காங் வெற்றி பெற்றான். நல்ல பெயரும், அரசாங்கத்தில் ஓர் உயர்தர உத்தியோகமும் இவனுக்குக் கிடைத்தன; அரசாங்க வட்டாரத்தில் ஓரளவு செல்வாக்கும் ஏற்பட்டது. இந்தச் செல் வாக்கை ஆதாரமாகக் கொண்டு இவன், சீர்திருத்தத் திட்ட மொன்றைத் தயாரித்து அரச சந்நிதானத்திற்கு அனுப்பினான் பயனில்லை. தவிர, இவன் பள்ளிக்கூட ஆசிரியனா யிருந்தபோதும், பின்னரும் சீர்திருத்தக் கருத்துக்களடங்கிய சில நூல்களெழுதி யிருந்தான். இந்த நூல்களையும் ஒவ்வொன்றாக அரச சந்நிதானத் திற்கு அனுப்பி வந்தான். அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரு மல்லவா? அரச சந்நிதானமும் லேசாகவேனும் அசைந்து கொடுக்க வேண்டிய அவசியத்திற்குட்பட்டது எப்படி?
இந்தக் காலத்தில் மஞ்சூ அரச பீடத்தில் அமர்ந்திருந்தவன் குவாங் ஷு(Kuang Hsu) என்ற மன்னன். குவாங் ஷு என்பது இவனது பட்டப்பெயர். இயற் பெயர் த்ஸை டீன்(Tsai Tien). இவன் பிறந்தது 1871ஆம் வருஷம். ஏறக்குறைய நான்காவது வயதில் - 1875ஆம் வருஷம் - பட்டத்திற்குரியவனாக்கப் பெற்றான். சிறு பிள்ளை யல்லவா? எனவே, இவனுக்குப் பதினெட்டு வயது முடியும் வரை-1889ஆம் வருஷம் வரை த்ஸு ஹ்ஸி1 என்பவள், ரீஜெண்ட்டா யிருந்து ராஜ்ய நிருவாகத்தை நடத்தி வந்தாள். பதினெட்டு வயது முடிந்ததும் குவாங் ஷுவிடம் ஆளும் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது. த்ஸு ஹ்ஸியும் ரீஜெண்ட் பதவியிலிருந்து விலகிக் கொண்டு, பீக்கிங் நகருக்குப் புறத்தே தனியாக ஓர் அரண்மனையில் வசித்து வரத் தொடங்கினாள். ஆயினும், அரச அதிகாரங்கள் தன்னை மிஞ்சிப் போய்விடாதபடி சர்வ ஜாக்கிரதையுடன் பார்த்து வந்தாள். இதனால் குவாங் ஷு மன்னன், அவளுடைய அதிகாரத் திற்குக் கட்டுப்பட்டவனாகவே நடந்து வரவேண்டிய நிலைமை ஏற்பட்டது. இவனை அவ்வளவு திறமைசாலி யென்று சொல்ல முடி யாது. ஆயினும், த்ஸு ஹ்ஸியின் கட்டுப்பாட்டுக்குத் தொடர்ந்து இருந்து வருவதை இவன் விரும்பவில்லை. தவிர, முற்போக்கான எண்ணங்கள் பல இவன் மனத்தில் படிப்படியாகப் படிந்து வந்த படியால், ராஜ்ய நிருவாகத்திலும் பிற துறைகளிலும் சில சீர் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமென்று விரும்பினான். த்ஸு ஹ்ஸிக்கோ முற்போக்கு சீர்திருத்தம் என்று காதில் விழுந்தாலே போதும்; நஞ்சு கக்கும் பாம்பெனச் சீறினாள்.
இந்த த்ஸு ஹ்ஸி யாரென்று வாசகர்கள் சுருக்கமாகவேனும் தெரிந்துகொள்ள வேண்டாமா? இவளுடைய இயர்பெயர் ஹெஹோனலா(Yehonala) சூழ்ச்சியில் வல்லவள்; மகா கொடுமைக் காரி. இவளை எதிர்த்து நின்றவர்கள், சர்வ சுலபமாக, வெகு சீக்கிரமாக இறந்து போய்க் கொண்டிருந்தார்கள். ஜனங்களுக்கு இவளிடத்தில் ஒருவித அச்சம் இருந்து வந்தது. குவாங் ஷு மன்னனுக்கு முந்தி இருந்தவனையும், பெயரளவில் அரச பீடத்தில் அமர்ந்திருக்கும்படி செய்துவிட்டு, இவளே சுமார் பத்து வருஷ காலம் ரீஜெண்ட்டா யிருந்து ஆண்டு வந்தாள். ரீஜெண்ட்டான தொடக்கத்திலேயே இவள், தன் பெயரை த்ஸு ஹ்ஸி என்று மாற்றி வைத்துக் கொண்டாள். இந்தப் பெயருக்கு கருணையுடையவள் - மங்களகரமானவள் என்று அர்த்தம். ஆனால் இவ்விரண்டுக்கும் நேர்மாறாக இருந்தன இவள் நடவடிக்கைகள்.
குவாங் ஷு மன்னன், 1889ஆம் வருஷம் ஆளும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட காலத்தில், சீர்திருத்த நோக்கங் கொண்ட பலர், அரசாங்கத்தில் உயர் பதவிகள் வகித்து வந்தனர். இவர்களிற் சிலருக்கு, குவாங் ஷு மன்னனை அடிக்கடி அணுகும் வாய்ப்புக் கிட்டி வந்தது. இவர்கள் சமயம் வாய்த்தபோதெல்லாம், சீர்திருத்த சம்பந்தமான கருத்துக்கள் அரசன் செவியில் விழும்படி செய்து வந்தனர். இவன் மனமும் நாளாவட்டத்தில் சீர்திருத்தப் பாதையில் திரும்பியது. சீர்திருத்தங்கள் செய்யவேண்டுமென்ற விருப்பத்தையும் கொண்டான். ஆனால் த்ஸு ஹ்ஸிக்குத் தெரியாமலோ, அவளைப் புறக்கணித்துவிட்டோ, தன் விருப்பப்படி நடக்க இவனுக்குத் தைரியம் பிறக்கவில்லை. ஆனால் காங் யூ வெய்யைப் போன்ற சீர்திருத்தவாதிகள், இவனுடைய தைரியத்தை அதிகரிக்கச் செய்து வந்த முயற்சியில் சலிக்கவுமில்லை. கடைசியில், குவாங் ஷு மன்னனுக்கு ஆளும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட சுமார் பத்து வருஷங்களுக்குப் பிறகு துணிவு ஏற்பட்டது சீர்திருத்த சம்பந்தமான உத்தரவுகள் பலவற்றை ஒன்றன் பின்னொன்றாகப் பிறப்பித்தான். புதிதாக ரெயில் பாதைகள் போடுதல், அரசாங்க உயர்தர உத்தி யோகங்களுக்காக நடைபெறும் பரீட்சையில் மேனாட்டு விஞ்ஞான சாதிரம் முதலிய பாடங்களைச் சேர்த்துக் கொள்ளுதல், ராணுவத்தை நவீன முறையில் சீர்திருத்தி அமைத்தல், மேனாட்டுக் கல்வி முறையைத் தழுவி பீக்கிங் நகரத்தில் ஒரு சர்வ கலாசாலை ஏற்படுத்துதல், கோயில்கள் உள்ள இடங்களில் பள்ளிக் கூடங்களை தாபித்தல் ஒரு வேலையுமில்லாமல் கௌரவத்திற்காக இருந்த அநேக உத்தியோகதர்களை விலக்குதல், இப்படிப் பல உத்தரவுகள் பிறந்தன. 1898ஆம் வருஷம் ஜூன் மாதத்திலிருந்து செப்டம்பர் மாதத்திற்குள் சுமார் முப்பத்தெட்டுக்கு மேற்பட்ட உத்தரவுகள் அடுத்தடுத்துப் பிறந்தன.
இங்ஙனம் சீர்திருத்த உத்தரவுகள் ஒன்றுக்குப் பின்னொன் றாய்ப் பிறந்து அமுலுக்கு வருவதைச் சிறிது கூட விரும்பவில்லை த்ஸு ஹ்ஸி. ஆத்திரங் கொண்டாள். இந்த உத்தரவுகளினால் மஞ்சூ ஆதிக்கத்துக்கு ஊறு ஏற்பட்டு விடுமென்று அஞ்சினாள். தான் எடுத்துக் கொண்டிருந்த ஓய்வுக்கு விடை கொடுத்துவிட்டு 1898ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் இருபத்திரண்டாந் தேதி அதிகார கடிவாளத்தை மீண்டும் கைப்பற்றிக் கொண்டாள். உடனே குவாங் ஷு மன்னனைத் தனியாக ஓரிடத்தில் கொண்டு போய் வைக்கும்படி உத்தரவிட்டாள். அவனை ஒரு காவல் கைதி மாதிரியாக்கி வைத்து விட்டு, மன்னனுக்கு உடம்பு சரியா யில்லையென்றும் அவனுக்குச் சிறிது காலம் ஓய்வு வேண்டுமென்றும், அதனால் தானே மறுபடியும் ரீஜெண்ட் பதவியை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் நாடெங்கணும் பிரகடனம் செய்வித்தாள். சீர்திருத்த உத்தரவுகள் யாவும் ரத்து செய்யப்பட்டன. சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பி வந்த பத்திரிகைகள் நிறுத்தப்பட்டன. சீர்திருத்தவாதிகளை அரசனுக்கு அறிமுகப்படுத்தி வைத்த உத்தியோகதர்களிற் சிலர் கீழான பதவிகளுக்கு இறக்கப்பட்டார்கள்; சிலர் ஆயுள்பரியந்தம் சிறைத் தண்டனை விதிக்கப் பெற்றார்கள். சீர்திருத்தவாதிகளை அறிமுகப் படுத்தியவர்களுக்கே இந்தக் கதியென்றால், சீர்திருத்தவாதிகளைப் பற்றிச் சொல்லவேண்டுமா? சிலர், எவ்வித விசாரணையுமில்லாமல் மரண தண்டனைக்குட்படுத்தப் பெற்றார்கள். சிலர் தப்பியோடி விட்டார்கள். காங் யூ வெய், பிரிட்டிஷ் ஆதினத்திற்குட்பட்ட ஹாங் காங்குக்கும், அவன் மாணாக்கனாகிய லியாங் சீ சௌ ஜப்பானுக்கும் முறையே தப்பிச் சென்றார்கள். சீர்திருத்த உத்தரவுகள், நூறு நாள் வாழ்வு நடத்திவிட்டு இறந்து போயின.
இதற்குப் பிறகு சுமார் ஆறு வருஷம் கழித்து - 1904ஆம் வருஷம்-த்ஸு ஹ்ஸி, தன் எழுபதாவது பிறந்த நாளை நாடெங்கணும் கொண்டாடச் செய்தாள். அதையொட்டி அரசியல் காரணங்களுக் காகச் சிறையிலிருந்தவர்கள் மூவரைத் தவிர மற்றவர்கள் அனை வரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டாள். அந்த மூவர் யார்? (1) காங் யூ வெய் (2) லியாங் சீ சௌ (3) ஸன் யாட் ஸென். இம்மூவரும் மன்னிக்க முடியாத குற்றாவளிகளென்று கருதிவிட்டாள் த்ஸு ஹ்ஸி. எவ்வளவு ஆத்திரம் இவளுக்கு முற்போக்குச் சக்தியின் மீது?
ஆக, காங் யூ வெய்யைப் போன்ற சீர்திருத்தவாதிகளும், ஸன் யாட் ஸென்னைப் போன்ற புரட்சிவாதிகளும், மஞ்சூ அரசாங்கத் தின் மருண்ட கண் முன்னர் ஒரே நிலையில்தான் நின்றார்கள். இரு சாராராலும் அதிகமாக ஒன்றையும் சாதிக்க முடியவில்லை. இரு சாராரின் முக்கிய தலைவர்கள் நாட்டுக்கு வெளியே சென்றுதான் வசிக்க வேண்டியவர் களானார்கள். இரு பக்கத்திலும் பலர் சிறை சென்றனர்; உயிரிழந்தவரும் அநேகர். இரு தரப்பாரும் வழி முறை களில் வேறுபட்ட போதிலும், சீனா பலவகையிலும் மாறுதலடைய வேண்டுமென்கிற விஷயத்தில் ஒரே நோக்கமுடையவர்களாயிருந் தார்கள். ஆனால் த்ஸு ஹ்ஸிக்கு இந்த நோக்கமோ வழிமுறை களோ எதுவுமே பிடிக்கவில்லை. ஏறக்குறைய பழைய நிலைமையே இருந்து வருமாறு செய்தாள்.
ஆனால் நாட்டிலே, சிறப்பாகச் சீனாவின் தெற்குப் பகுதி களிலே முற்போக்கான எண்ணங்கள் - சீர்திருத்த சம்பந்தமான கருத்துக்கள் - மக்களிடையே பரவிக் கொண்டுதான் வந்தன. இதை த்ஸு ஹ்ஸி அறியாதவளல்ல. இந்த முற்போக்குச் சக்தியை அடி யோடு தடுத்து நிறுத்தி விட்டால், நாட்டில் அதிருப்தி பரவும் என்பதையும், இந்த அதிருப்தி ஒரு நாளில்லாவிட்டால் மற்றொரு நாள் தன்னை வந்து தாக்கக் கூடுமென்பதையும் இவள் அறிந்து கொண்டுதான் இருந்தாள். அப்படி வந்து தாக்குவதற்கு முன்னர், அதை வேறொரு பக்கமாகத் திருப்பிவிடவேண்டுமென்று யோசித்துக் கொண்டிருந்தாள்; அதற்குத் தகுந்த சர்ந்தர்ப்பத்தையும் எதிர் பார்த்துக் கொண்டிருந்தாள். இவளுடைய அதிருஷ்ட வசமாக ஆனால் நாட்டின் துரதிருஷ்ட வசமாக, அத்தகைய ஒரு சந்தர்ப்ப மும் ஏற்பட்டது.
கி.பி. பத்தொன்பதாவது நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து, சீனாவில் அந்நியர் மீது ஒரு விதமான பகைமை பரவிக்கொண்டு வந்தது. இதற்குக் காரணங்கள் பல. ஐரோப்பிய வல்லரசுகள், நீதிக்கு மாறான முறையில் சீனாவைப் பங்கு போட்டுக்கொள்வதில் முனைந்து நின்றன. தவிர, சீனாவில் பலவந்தமாகத் திணிக்கப்பட்ட அபினி வியாபாரம் நாளுக்கு நாள் வலுத்து வந்தது. இதே பிரகாரம் அந்நிய நாட்டுப் பொருள்களும் திணிக்கப்பட்டன. இவற்றின் விளைவாக சீன மக்களின் பொருளாதார வாழ்வு சீர்குலைந்து வந்தது. அந்நிய நாடுகளைச் சேர்ந்த கிறிதுவப் பாதிரிமார்கள், சீன மக்களின் புராதனக் கோட்பாடுகளையும் மத நம்பிக்கைகளை யும் பழிக்கின்ற முறையில் பிரசாரம் செய்து வந்தார்கள். இவை யெல்லாம் சேர்ந்து படிப்படியாக வளர்ந்து 1898ஆம் வருஷக் கடைசியில் பகைமைப் புகையாக எழுந்தது. இந்தப் பகைமைப் புகையை எழுப்பியவர்கள் ‘பாக்ஸர்கள்’ (Boxers) என்று அந்நியர் களால் அழைக்கப்பட்ட ஓர் இயக்கத்தினர். இவர்கள், மந்திர தந்திரங்களில் தாங்கள் வல்லவர்களென்றும்,இதனால், அந்நியர்கள் தங்கள் மீது எவ்வித ஆயுதங்களைப் பிரயோகித்தாலும் தங்களைப் பாதிக்காதென்றும் சொல்லி, பாமர ஜனங்களுக்குத் தங்கள் மீது ஒருவித நம்பிக்கை உண்டாகுமாறு முதலில் செய்துகொண்டார்கள். பிறகு அந்நியர்கள் மீது துவேஷத்தை உண்டுபண்ணி வந்தார்கள். இங்ஙனம் இவர்கள் எழுப்பிய பகைமைப் புகையானது 1900ஆம் வருஷம் பெருந் தீயாக மூண்டது. இதுதான் சரித்திரப் பிரசித்தி பெற்ற பாக்ஸர் கலகம்.(Boxer Rebellion) இந்தக் கலகத்தினால் சீனா அநேக கஷ்ட நஷ்டங்களை யடைந்தது. இந்தக் கலகத்தைக் காரண மாகக் காட்டி, ஐரோப்பிய வல்லரசுகள் சீனாவை பல தளைகளுக் குட்படுத்தின; நஷ்ட ஈடாக மட்டும் நூறு கோடி ரூபாய் வசூலித்தன. இது பெரிய கதை.
பாக்ஸர் கலகத்திற்கு மூல காரணமான இயக்கம், ஆரம்பத்தில் மஞ்சூ ஆட்சிக்கு விரோதமாகவே தோன்றியது. பின்னர் இஃது அந்நியர்களுக்கு விரோதமான இயக்கமாகத் திரும்பியது. இங்ஙனம் திரும்புவதற்கு த்ஸு ஹ்ஸியின் சாமர்த்தியமும் சூழ்ச்சியும் பெரிதும் துணை செய்தன. சரித்திரத்தின் போக்கு விசித்திரமானதல்லவா?
எனவே பாக்ஸர் கலகத்திற்கு மஞ்சூ அரசாங்கம் ஆதரவு அளித்ததில் ஆச்சரியமில்லை. ஆனால் இந்த ஆதரவைப் பகிரங்க மாக அளிக்க அதற்குப் போதிய தைரியமில்லை; மறைமுகமாகவே அளித்தது. ஐரோப்பிய வல்லரசுகளுக்கு இத தெரியாமலில்லை. அந்த வல்லரசுகளின் படைகள் பீக்கிங் நகரத்தைக் கைப்பற்றிக் கொள்ள வந்தபோது, த்ஸுஹ்ஸி, குவாங்ஷு மன்னனைக் கூட்டிக் கொண்டு அரச பரிவாரங்களுடன் வேறிடத்திற்குத் தப்பிச் சென் றாள்; பாக்ஸர் கலகத்திற்கு வல்லரசுகள் விரும்பிய முறையில் பரிகாரந் தேடிக் கொடுத்த சில மாதங்களுக்குப் பிறகுதான் - 1902 ஆம் வருஷம் ஜனவரி மாதம் - பீக்கிங் நகரம் திரும்பி வந்தாள். இதற்குப் பிறகும் இவள், சூழ்ச்சிகள் செய்வதை விடவில்லை. ஆனால் இந்தச் சூழ்ச்சிகள் பலவும், ஐரோப்பிய வல்லரசுகளைச் சமாதானப் படுத்து வதிலேயே செலவழிந்தன என்று சொல்ல வேண்டும். காலப்போக்கை அனுசரித்தும், தன்னுடைய பதவிக்கு மறுபடியும் ஆபத்து நேரிடா மல் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டும், அரசாங்க நிருவாகத் தில் அவ்வப்பொழுது சில சீர்திருத்தங்களைச் செய்துவந்தாள். ஆனால் தன் கடைசி காலம்வரை, குவாங் ஷு மன்னனைக் காவல் கைதி மாதிரியாகவே தனியிடத்தில் வைத்திருந்தாள். அவனும் 1908 ஆம் வருஷம் நவம்பர் மாதம் பதினான்காந்தேதி மரணத்தின் மூலம் விடுதலை பெற்றான். அவனுடைய தானத்தில் பூயி1 என்ற மூன்று வயதுச் சிறுவனை அரசபீடத்திற்குரியவனாக்கி, தன்னிடமிருந்து அதிகார கடிவாளம் கைநழுவிப் போய் விடாதபடி பாதுகாத்துக் கொண்டாள் த்ஸு ஹ்ஸி. ஆனால் விதி இவளை வேறுவழியில் அழைத்துச் சென்றது. குவாங் ஷு மன்னன் இறந்த மறுநாளே இவள் இறந்துவிட்டாள். உண்மையில் குவாங் ஷு மன்னனை இறந்து போகும்படி செய்து விட்டு, பிறகுதான் இவள் இறந்து போனாள் என்றே அப்பொழுது சொல்லப்பட்டது என்று சொல்லி இவளுடைய கதையை முடித்துக்கொள்வோம்.
ஸன் யாட் ஸென்னுக்கும் பாக்ஸர் கலகத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இருக்கவில்லை. இவன் அப்பொழுது சீனாவில் இல்லவும் இல்லை; வெளிநாடுகளில் ஒருவிதமான நாடோடி வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தான். இதைப்பற்றி அடுத்த அத்தியாயத்தில் கவனிப்போம்.
மீண்டும் புரட்சி
ஸன் யாட் ஸென், டாக்டர் காண்ட்லியின் உதவியினால், சீன அரசாங்க தானீகனுடைய காப்பிலிருந்து விடுதலை பெற்ற பிறகு, சில மாதங்கள் வரை லண்டனிலேயே தங்கினான். அப்பொழுது, முந்தின அத்தியாயத்தில் சொல்லப்பெற்ற காங் யூ வெய்யும் இன்னுஞ் சிலரும் மஞ்சூ ஆட்சியில் சில சீர்திருத்தங்களைச் செய்ய முயன்று வருவதைக் கேள்வியுற்றான். இந்த முயற்சிகளினால் மஞ்சூ ஆட்சியைச் சீர்திருத்த முடியுமா என்பது இவனைப் பொறுத்தமட்டில் சந்தேகந்தான். ஆயினும் பொறுத்துப் பார்ப்போமென்றிருந்தான்.
ஸன், லண்டனில் தங்கியிருந்த பொழுது வீண்பொழுது போக்கவில்லை. ஒவ்வொரு வினாடியையும், தனது பிற்கால வாழ்க்கை, சீனாவுக்குப் பயன்படுகின்ற முறையில் அமைய வேண்டு மென்பதை மனத்தில் கொண்டு செலவழித்தான். உண்மையில், இந்த லண்டன் வாசம் இவனுக்கு ஒரு புதிய பார்வையைக் கொடுத்த தென்று சொல்லவேண்டும். அநேகமாக தினந்தோறும், லண்டன் பொருட்காட்சி சாலையைச் சேர்ந்த நூல் நிலையத்திற்குச் சென்று வந்தான். அங்கு, அதுகாறும் தான் பரிச்சயம் பெறாத பல அறிவுத் துறைகளில் பரிச்சயம் பெற்றான். அரசியல் சாதிரம், சர்வதேச உறவு முறைகள், ராணுவச் சட்ட திட்டங்கள், விவசாயம், தொழிற் பெருக்கம், உலோகப் பொருள்கள் ஆகிய பல்வேறு விஷயங்களைப் பற்றிய நூல்களை ஊக்கத்துடன் படித்தான். படித்தவற்றிற்கு உடனுக்குடன் குறிப்புக்கள் எடுத்துக் கொண்டான். இவை, பிற் காலத்தில், ஸான் மின் சூயி1 என்ற தலைப்புக் கொடுத்து இவன் நிகழ்த்திய சொற்பொழிவுகளுக்குப் பெரிதும் துணையாயிருந்தன. இந்த ஸான் மின் சூயியைப் பற்றிப் பின்னரும் பேசுவோம்.
மற்றும் லண்டன் வாசத்தின்போது ஸன், ஆங்கில சமுதாய வாழ்க்கையில் அநேக ஏற்றத்தாழ்வுகளைக் கண்டான். இப்படி இருக்கு மென்று இவன் எதிர்பார்க்கவில்லை. பார்த்தபோது ஆச்சரியமே யடைந்தான். ஏழை மக்கள் வசிக்கும் சேரிகளை, சீனாவில் காண்ட்டன் போன்ற சில நகரங்களில் இவன் பார்த்திருக் கிறான். இங்கிலாந்தில் அப்படியிராது, செல்வங் கொழிக்கும் நாடாகிய அங்குச் சேரிகளைக் காணமுடியாது என்று கருதியிருந்தான். ஆனால் லண்டனில், இவன் கருதியிருந்ததற்கு நேர் மாறான காட்சி களைக் கண்டான். அழுக்கும் துர்நாற்றமும் நிறைந்த இடங்களில் காற்றோட்டமோ பிற வசதிகளோ இல்லாத சின்னஞ்சிறு குடிசை களில், பிணியோடும் பசியோடும் போராடிக்கொண்டு வாழ்கிற ஏழை மக்கள் ஒரு பக்கம்; பெரிய பெரிய மாளிகைகளில், தேவைக்கு மிஞ்சின பொருளைக் கூட்டி வைத்துக் கொண்டு ஆடம்பர வாழ்க்கை நடத்தும் பணக்காரர்கள் மற்றொரு பக்கம். இரு சாராருடைய வாழ்க்கைத் தரத்தைக் கணித்துப் பார்க்கிறபோது, மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசமல்லவோ இருக்கிறது? என்ன அநியாயம்! இந்த நிலை மாறி சம நிலைப்பட்ட ஒரு சமுதாயம் ஏற்பட வேண்டு மென்று அறிஞர் பலர் பேசியும் எழுதியும் வருகிறார்கள்; இந்தச் சமநிலை ஏற்படுவதற்காக, புரட்சி நடத்தவேண்டுமென்று கூட சிலர் சொல்லி வருகிறார்கள். அவ்வளவென்ன? புரட்சிகள் நடை பெற்றும் இருக்கின்றன. இந்த புரட்சிகள் வெவ்வேறு பெயர் கொண்டு எழுந்த போதிலும், இவற்றின் அடிப்படையான நோக்கம், சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகள் இல்லாமற் செய்வதுதானல்லவா? புரட்சிகள் நடைபெற்று மென்ன? சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகள் குறையவில்லை; ஓரளவுக்கு அதிகப்பட்டு வருகின்றனவென்று கூட சொல்லலாம். சொல்லளவில் எல்லாரும் சமத்துவம் பேசுகிறார்கள்; ஆனால் செயலளவில் நேர்மாறாக வல்லவோ இருக்கிறது? இந்த மாதிரியான சிந்தனைகளின் மீது மிதந்து கொண்டிருந்தான் ஸன், தனது லண்டன் வாசத்தின்போது.
ஸன், லண்டன் நூல் நிலையத்திற்குச் சென்று படித்துவந்த காலத்தில், ஒருநாள், அங்கு, ருஷ்யாவில் ஜார் அரசாங்கத்தினால் நாடு கடத்தப்பெற்று வந்திருந்த ருஷ்யர் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றான். அவர்கள் இவனிடம், ஜார் ஆட்சியில் நிலவும் கொடுமை களைப் பற்றி விரிவாக எடுத்துச் சொன்னார்கள். அங்கு, புரட்சி ஏற் படக்கூடிய ஒரு சூழ்நிலையை தாங்களும் தங்களைப் போன்ற சிலரும் உண்டுபண்ணி வருவதாகவும், எப்படியும் அங்கு, இப்பொழுதில்லா விட்டாலும் சில ஆண்டுகளுக்குப் பிறகு புரட்சி ஏற்படக்கூடு மென்றும் சொன்னார்கள். அவர்களுடன் இவனுக்கு ஏற்பட்ட இந்தத் தொடர்பு, பிற்காலத்தில், இவனுடைய அரசியல் வாழ்க்கைப் பாதையில் ஒரு சிறிய திருப்பத்தை அமைத்துக் கொடுத்தது.
சீனாவில் ருஷ்யாவிலுள்ளதுபோல் நிலப்பிரபுக்களின் ஆதிக்கம் இருக்கிறதல்லவா? இவர்கள்தானே அரசியலிலும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்? இந்த ஆதிக்கங்களை ஒழிக்க, புரட்சியைத் தவிர வேறு வழி ஏது? இந்தக் கேள்விகளைத் தனக் குள்ளே கேட்டுக் கொண்டு ஸன், லண்டனை விட்டுப் புறப் பட்டான்; ஐரோப்பா முழுவதிலும் பிரயாணம் செய்தான்.
வேடிக்கைக்காகவோ பொழுது போக்குக்காகவோ இவன் இந்தப் பிரயாணத்தை மேற்கொள்ளவில்லை. நேரிடையான அனுப வம் பெறவேண்டுமென்பதற்காகவே மேற்கொண்டான். இதற்காக, நூற்றுக் கணக்கான மைல்கள் கால்நடையாகவே சென்றான். வழியில் ஆகாரமா? கொஞ்சம் சோறும் தண்ணீருந்தான். இதனால் இவனுக்கு உடல் சோர்வோ மனச்சலிப்போ ஏற்படவில்லை. இங்ஙனம் சென்றதனால், பல ஊர்களைப் பார்க்கவும், பலதரப் பட்ட மனிதர்களைச் சந்திக்கவும் இவனால் முடிந்தது. எங்கும், லண்டன் நகரத்திலிருந்தது போல், செல்வமானது ஒரு பக்கம் மேடிட்டு நிற்பதையும், அதற்கருகிலேயே வறுமையானது ஆழ்ந்த பள்ளத்தில் உழன்று கொண்டிருப்பதையும் கண்டான். ஐரோப்பாவி லுள்ள பல நாடுகளிலும், சமுதாய சமத்துவம் இல்லையென்பதை நன்கு உணர்ந்தான். ஆங்காங்குப் புரட்சியின் முணுமுணுப்புச் சப்தமும் இவன் செவியில் விழுந்தது.
பொதுவாக, இந்த ஐரோப்பியப் பிரயாணத்தினால், ஸன்னுக்கு, மேனாடுகளின் முன்னேற்றத்தின் மீதிருந்த பிரமை சிறிது அகன்றது; மேனாட்டு நாகரிகத்தின் மீதிருந்த மோகம் சிறிது விலகி யது. இருந்தாலும், சீனா, உலக அரங்கத்தில் தனக்குரிய தானத்தை அடைய வேண்டுமானால், அது, பல அமிசங்களில் மேனாடுகளைப் பின்பற்ற வேண்டியது அவசியமென்று கருதினான். ஐரோப்பிய வல்லரசுகள், சீனாவுக்கு இழைத்து வரும் அநீதியை அறிந்திருந்தும் இவன் இந்தக் கருத்தை மாற்றிக்கொள்ளவில்லை. பொதுவாக, இவனுக்குக் குடியரசுத் தத்துவத்தில் அதிக நம்பிக்கை இருந்தது. அஃது இந்த ஐரோப்பியப் பிரயாணத்தின் போது உறுதிப்பட்டது. அதனை அமுலுக்குக் கொண்டுவர வேண்டுமானால், முதலில் மஞ்சூ ஆட்சியை ஒழிக்கவேண்டும்; அதனுடைய தானத்தில் குடியாட்சியை நிறுவ வேண்டும்; ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டும் போதுமா? ஆட்சி மாற்றத்தினால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும்; அதற்காகப் பாடுபட வேண்டுமென்ற சங்கற்பத்தை மேற்கொண் டான் ஸன், இந்த ஐரோப்பியப் பிரயாணத்தின் போது.
ஸன் இங்ஙனம் ஐரோப்பாவில் பிரயாணம் செய்துகொண் டிருக்கும்போது, குவாங் ஷு மன்னன் பட்டமேற்றவுடன் சீர்திருத்த உத்தரவுகள் பல பிறப்பித்ததையும், அவை நூறு நாள் வாழ்வுக்குப் பிறகு இறந்துவிட்டதையும், த்ஸு ஹ்ஸி, பழைய மாதிரி ரீஜெண்ட் பதவி ஏற்றுக்கொண்டதையும், சீர்திருத்த உத்தரவுகள் பிறப்பதற்குக் காரணமாயிருந்த பலரும் பலவித தண்டனைக்குள்ளானதையும் அறிந்தான். சீர்திருத்த முடியாத அளவுக்கு மஞ்சூ ஆட்சி நைந்து போயிருக்கிறதென்பதை இவன் நன்கு தெரிந்து கொண்டிருந்தா னாயினும், சீர்திருத்தவாதிகளின் முயற்சிகள் ஏதேனும் பலன் கொடுக் கின்றனவா வென்று பொறுத்துப் பார்ப்போமென்ப தற்காகத்தான் இதுகாறும் ஐரோப்பாவில் காலங்கடத்தி வந்தான். சீர்திருத்த முயற்சிகள் தோல்வியுற்றுப் போனது தெரிந்ததும், தான் செல்லவேண்டிய வழி இன்னதென்று தீர்மானித்துக் கொண்டான். அது தான் புரட்சி வழி. ஏற்கனவே ஒருமுறை - 1895 ஆம் வருஷம் - புரட்சி செய்து தோல்வியுற்றுப் போனாலென்ன? மறுபடியும் புரட்சி நடத்தித்தான் தீரவேண்டும்! முயற்சியுடையார் இகழ்ச்சியடை யாரல்லவா?
இத்தருணத்தில், தாய்நாடு அழைக்கின்ற குரல் ஸன்னின் செவியில் விழுந்தது. ஐரோப்பாவிடமிருந்து விடைபெற்றுக்கொண் டான். தாய்நாடு பக்கம் சென்றான்; ஆனால் தாய்நாடு செல்ல வில்லை. அங்குச் சென்றால், தன் உயிருக்கு ஆபத்து நேரிடுமென்று இவனுக்குத் தெரியும். மஞ்சூ அரசாங்கம், கண்குத்திப் பாம்பு போல் இவனைக் கவனித்து வந்தது. எனவே நேரே ஜப்பானுக்குச் சென்றான்.
இவன் ஜப்பான் வந்து சேர்ந்த சமயம், சீனா, பாக்ஸர் கலகத் தினால் பெரும் அவதிகளுக்குள்ளாயிருந்தது. அந்தக் கலகத்தில் ஈடுபட்டிருந்த சிலர், இன்னமும் நாடெங்கணும் சுற்றித் திரிந்து கொள்ளையும் கொலையும் நிகழ்த்தி வந்தார்கள். நாட்டின் பல பகுதிகளிலும் நிறுவப்பட்டிருந்த ஐரோப்பிய வல்லரசுப் படை களால் ஜனங்கள் அச்சமும் கலக்கமும் அடைந்திருந்தார்கள். இதுதான், புரட்சி நடத்த, தக்க தருணமென்று கருதினான் ஸன். அப்படி நடத்தினால், ஐரோப்பிய வல்லரசுகள், தனக்கு ஓரளவு பக்க பலமாயிருக்குமென்று எண்ணினான். ஆனால் இதற்காக, தான் சீனா செல்வது உசிதமில்லை யென்பதையும் இவன் தெரிந்து கொண் டிருந்தான். மஞ்சூ அரசாங்கத்தின் கோபமான பார்வை ஒருபுற மிருக்க, மக்களே இவனையும் இவன் சகாக்களையும், முதல் புரட்சிக்குப் பிறகு வெறுப்புப் பார்வையோடு பார்த்து வந்தார்கள். இவனே சொல்கிறான் ஓரிடத்தில்:- 1895 ஆம் வருஷத்துப் புரட்சிக்குப் பிறகு, ஜனங்கள் எங்களை, அக்கிரமச் செயல்கள் புரிகின்ற கலகக்காரர் களென்றும் கொள்ளைக்காரர்களென்றும் கருதிவந்தனர். வசைகளும் சாபங்களும் எங்கள் மீது விழுந்தவண்ணம் இருந்தன. விஷங் கக்கும் பாம்புகளாக எங்களைக் கருதினர். எங்க ளுடன் எவ்விதத் தொடர்பும் கூடாதென்ற முறையில் எங்களிட மிருந்து விலகியே இருந்தனர்.
இந்த நிலையில் சீனாவில் தங்கி, புரட்சி நடத்துவது சாத்திய மில்லையென்று கண்டான் ஸன். ஆனாலும் புரட்சி நடந்துதானாக வேண்டும். மஞ்சூ ஆட்சியை ஒழித்து, மக்களாட்சி ஏற்படுத்தி, அதன் மூலமாக, மக்களை நல்வாழ்வு பெறச் செய்யவேண்டுமல்லவா? அது தானே தன்னுடைய குறிக்கோள்? எனவே, தனது சகாக்களிற் சிலரை, சீனாவில் எந்தப் பகுதியில் மக்கள் அதிகமாக அதிருப்தி யடைந்திருக் கிறார்களோ அந்தப் பகுதிக்கு அனுப்பி, புரட்சிக்கான ஏற்பாடுகளைச் செய்வதென்றும், தான் சீனாவுக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிற சந்தர்ப்பத்தில் செல்வதென்றும் தீர்மானித்தான்.
எனவே, டாக்டர் கெர் ஆபத்திரியில் இவன் வைத்தியத் தொழில் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த போது இவனுடைய நண்பனாக வந்துசேர்ந்தவனும், இவனுடைய நம்பிக்கையைப் பெற்றிருந்தவனுமான செங் ஷி லியாங்1 என்பவன் தலைமையில், ஜப்பானியர்களிடமிருந்து படைக்கலப் பயிற்சி பெற்றிருந்த ஒரு சிறு கூட்டத்தினரை சீனாவில் ஒரு பகுதிக்கும், லீ கியாங் ஜோ(Li Kiang - Jo) என்ற இன்னொருவனுடைய தலைமையில் இன்னொரு படையை சீனாவில் மற்றொரு பகுதிக்கும் முறையே அனுப்பி, அங்குப் புரட்சிக்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கூறினான். சீனாவில் நிறுவப்பட்டிருந்த ஐரோப்பிய வல்லரசுப் படைகள், இந்தப் புரட்சி ஏற்பாடுகளுக்கு உதவி செய்யுமென்று எதிர்பார்த் தான் ஸன் ஏற்பாடுகளெல்லாம் ஒருவாறு முடிந்ததாக, தனக்குத் தகவல் தெரிந்ததும், தானே நேரில் சீனாவுக்குச் சென்று புரட்சிக்குத் தலைமை வகித்து நடத்தவேண்டுமென்பது இவன் திட்டம்.
அப்படியே சிறிது காலங் கழித்துத் தகவல் கிடைத்ததும், ஜப்பானிலிருந்து ஹாங்காங் துறைமுகத்திற்கு ரகசியமாக வந்தான் ஸன். ஆனால் இவன் துறைமுகத்தை வந்தடைந்ததும் யாரோ ஓர் அயோக்கியன் இவனைக் காட்டிக்கொடுத்து விட்டான். ஹாங்காங் துறைமுகப் பட்டினம் பிரிட்டிஷ் ஆதீனத்திற்குட்பட்டதல்லவா? துறைமுகத்திலிருந்த அதிகாரிகள் இவன் கப்பலிருந்து இறங்கு வதற்கு அனுமதி கொடுக்க மறுத்துவிட்டார்கள். லண்டனில் சீன தானீகனுடைய் பாதுகாப்பிலிருந்து இவன் விடுதலை பெற்ற பிறகு, சீனாவில் பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்குட்பட்ட பிரதேசங்களில் இவனை அனுமதிப்பதில்லை யென்று, பிரிட்டிஷ் அரசாங்கத்தாரிடமிருந்து சீன அரசாங்கத்தார் வாக்குறுதி பெற்றிருந்தனர். அதனை இப்பொழுது நிறைவேற்றிக் காட்டினர்.
எனவே ஸன், ஹாங்காங் துறைமுகத்தில் இறங்காமல், ஜப்பானுக்கே திரும்பிச் செல்லவேண்டியதாயிற்று அங்கே அதிக நாள் தங்காமல் போர்மோஸா2 தீவுக்கு வந்தான். வெகு காலமாக, சீனாவின் ஆதிக்கத்துக்குட்பட்டிருந்த இந்தத் தீவு, 1894 ஆம் வருஷம், சீனாவுக்கும் ஜப்பானுக்குப் நடைபெற்ற போரின் விளை வாக ஏற்பட்ட ஷிமோனோஸெகி ஒப்பந்தத்திற்குப் பிறகு (17-4-1895)1 ஜப்பானைப் போயடைந்தது. இந்தத் தீவு, சீனாவின் தெற்குத் தரைப் பகுதிக்கு வெகு சமீபத்திலிருந்தபடியால், இங்கிருந்துகொண்டு, புரட்சிக்கான ஏற்பாடு களைச் செய்வது சுலப சாத்தியமாயிருக்கு மென்று இவன் கருதினான். தவிர, இந்தத் தீவிலிருந்த ஜப்பானிய அதிகாரிகள், ஜப்பானிய அரசாங்கத்தினுடைய அங்கீகாரத்தின் பேரில், இவனுடைய புரட்சி முயற்சிகளுக்கு ஆதரவு தருவதாகச் சொன்னார்கள். 1937ஆம் வருஷம், ஜப்பான், எவ்வித முன் னறிவிப்போ, காரணமோ இல்லாமல் சீனாவைத் தாக்கியதல்லவா, அதற்கு வெகுகாலம் முந்தியிருந்தே, சீனாவைப் பல விதத்திலும் அலைக்கழிக்க வேண்டுமென்பதில் அது-ஜப்பான்-தீவிர நாட்டங் கொண்டிருந்தது. நாகரிக வாழ்க்கைக்குத் தேவையான அநேக பாடங்களைச் சீனாவிடமிருந்து கற்றுக்கொண்ட ஜப்பான், காலக் கிரமத்தில் அந்தச் சீனாவையே சீரழிக்க முனைந்தது ஒரு தனிக்கதை. ஆம்; நன்றியின்மை, துரோகம், ஏகாதிபத்திய வெறி முதலிய பல படலங்கள் நிறைந்த ஒரு புராணம் இது கிடக்கட்டும்.
போர்மோஸா தீவிலிருந்த ஜப்பானிய அதிகாரிகள் ஆதரவு கொடுப்பதாகச் சொன்னதன் பேரில், ஸன், தன் புரட்சித் திட்டத்தைச் சிறிது மாற்றிக்கொண்டான். எந்த நோக்கத்திற்காகப் புரட்சி செய்யப்படுகிற தென்பதைப்பற்றிப் பொதுவாக மக்களிடையே, சிறப்பாக விவசாயி களிடையே தீவிரப் பிரசாரம் செய்யுமாறும், இந்தப் பிரசாரத்தின் விளைவாக, புரட்சிப் படையில் சேர விரும்பும் விவசாயிகளைச் சேர்த்துக்கொள்ளுமாறும், இந்தப் புரட்சிப் படை யின் பலத்தைக் கொண்டு கடலோரமாகவுள்ள பிரதேசங்களைத் தாக்கிக் கைப்பற்றிக் கொள்ளுமாறும், தக்க சமயத்தில், தான், போர்மோஸா தீவிலிருந்து அதிகமான ஆயுதங்களையும் ராணுவப் பயிற்சி பெற்ற சிலரையும் அனுப்புவதாகவும் செங் ஷி லியாங்குக்கு அறிவித்தான்.2 உள் பக்கமாகவுள்ள ஊர்களைக் கைப்பற்றிக்கொள்ள முயலுகிறபோது, மஞ்சூ அரசாங்கப் படைகளின் தாக்குதலுக்கு உட்பட வேண்டியிருக்கு மென்பதையும், அப்பொழுது பின்வாங்க நேரிட்டால், சுலபமாகப் பின்வாங்க முடியாதென்பதையும் இவன் நன்கு உணர்ந்திருந்தான். கடலோரப் பிரதேசங்களால், மஞ்சூ படைகளின் பலமான தாக்குதல் ஏற்படுகிற பொழுது, சிறு சிறு கப்பல்களின் உதவி பெற்றாவது பின் வாங்குவது கஷ்டமாயிரா தென்றும் தவிர, தான் போர்மோஸாவிலிருந்து ஆயுதங்கள் முதலிய வைகளைக் கடலோரப் பிரதேசங்களுக்கு அனுப்புவது சுலபமா யிருக்குமென்றும் கருதினான் எவ்வளவோ முன் யோசனையுடன் தான் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன - 1900ஆம் வருஷம் பிற்பகுதியில்.
செங் ஷி லியாங்கும், ஸன் சொன்னபடியே விவசாயிக ளிடையே தீவிரப் பிரசாரம் நடத்தி, அவர்களிற் சுமார் பதினாயிரம் பேரைத் தன் படையிலே சேர்த்துக் கொண்டு கடலோரமாகவுள்ள சில பிரதேசங்களைத் தாக்கினான். ஆங்காங்கிருந்த மஞ்சூ காவல் படைகள், இந்த தாக்கு தலைச் சமாளிக்க முடியாமல், தங்கள் ஆயுதங் களையெல்லாம் கைசோர விட்டுவிட்டு தப்பியோடின. அந்த ஆயுதங்கள் யாவும் செங் வசமாயின. பின்னர் இவன் கடலோரமாக வுள்ள சில பிரதேசங்களை ஒவ்வொன்றாக சுவாதீனப்படுத்திக் கொண்டு வந்தான். இதற்குச் சுமார் ஒரு மாத காலம் பிடித்தது. மேற் கொண்டு நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ள, போர்மோஸாவி லிருந்து ஸன் அனுப்புவதாகச் சொன்ன ஆயுதங் களுக்கும் ஆட் களுக்கும் எதிர் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால்-? ஸன் திட்ட மிட்டிருந்தபடி போர்மோஸாவிலிருந்து ஏதும் அனுப்ப முடிய வில்லை. காரணம் ஜப்பானில் எதிர்பாராத விதமாக அரசாங்க மாற்றம் ஏற்பட்டதுதான். ஸன்னுக்கு ஆதரவு அளிப்பதாகச் சொன்ன லிபரல் கட்சி, அரசாங்க நிருவாகப் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ளும்படியான நிலைமை, ஜப்பானிய அரசிலில் ஏற் பட்டது. கன்ஸர்வேடிவ் கட்சி அரசாங்க நிருவாகப் பொறுப்பை ஏற்றது. இந்தக் கட்சி அரசாங்கம், ஸன்னுக்கு எந்த விதமான ஆயுத உதவியும் தரக்கூடாதென்று போர்மோஸா அதிகாரிகளுக்கு உத்தர விட்டது. இதையறிந்த ஸன் பெரிதும் ஏமாற்றமடைந்தான்.
ஏமாற்றத் தரும் இந்தச் செய்தியை செங் ஷி லியாங்குக்குத் தெரிவிக்க வேண்டுமல்லவா? இதற்காக யமாடா (Yamada) என்ற ஒரு ஜப்பானியனை அனுப்பினான். இவன் மூலம் விஷயமறிந்த செங் ஷி லியாங், வேறு வழியின்றி தான் சேகரித்த படையைக் கலைத்து விட்டு, ஒரு சில நூறு பேருடன் ஹாங்காங் தீவையடைந்தான். அங்கிருந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் இவனை ஒன்றுஞ் செய்ய வில்லை. இவன் மீது மஞ்சூ அரசாங்கத்தார் கண்போட வில்லை யல்லவா? ஆனால் யமாடாவை மஞ்சூ அதிகாரிகள் கண்டுபிடித்துச் சிரச்சேதஞ் செய்து விட்டார்கள். சீனப் புரட்சிக்கு முதன் முதலில் பலியான அந்நியன் இவன்.
செங் ஷி லியாங்கைத் தவிர, லீ கியாங் ஜோ என்பவன் போர் மோஸாவிலிருந்து ஸன்னால் அனுப்பப் பட்டிருந்தானல்லவா,1 அவன், காண்ட்டன் பகுதியிலிருந்து கொண்டு, ஸன்னின் உத்தரவை எதிர்பார்த்துக்கொண்டிருந்தான். ஸன்னால் ஏதும் உதவி அனுப்ப முடிய வில்லை என்பதை அறிந்தான். செங் ஷி லியாங்குக்குத் தன்னால் ஏதேனும் உதவி செய்ய முடியுமா வென்று பார்த்தான். அதுவும் முடியா தென்று தெரிந்தது. எனவே, மஞ்சூ அரசாங்கத்திற்கு ஏதே னும் ஓர் அதிர்ச்சி உண்டு பண்ணவேண்டுமென்பதற்காக, காண்ட்டன் பகுதிக்கு அரசப் பிரதிநிதியாயிருந்தவனுடைய மாளிகையை, வெடி குண்டு வைத்துத் தகர்க்க முயன்றான். இம் முயற்சி கைகூடுவதற்கு முன்னர், மஞ்சூ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, சிரச்சேதம் செய்யப்பட்டான். இவன் கதி இப்படியானதை அறிந்த ஸன் பெரிதும் துக்கித்தான். துக்கத்தோடு குறிப்பிடுகிறான் ஓரிடத்தில்:-
தைரியத்திலும் திறமையிலும் (புரட்சிக்கு முதல் பலியாக நின்றவருள் ஒருவனான) லூ ஹா டுங்குக்கு1 நிகரானவன் லீ கியாங் ஜோ. இவ்விருவரும் ஓவியம் வரைவதிலும் கவிதை புனை வதிலும் வல்லவர்கள் இவர்கள் எப்பொழுதும் என் நினைவில் இருந்து கொண்டிருப்பார்கள். இவர்கள் இறந்து விட்டபோதிலும் இவர்களுடைய ஆத்மா என் இதயத்தில் எப்பொழுதும் வசித்துக் கொண்டிருக்கும்.
இங்ஙனம் ஸன்னின் இரண்டாவது புரட்சி முயற்சி, 1900 ஆம் வருஷ இறுதியில் தோல்வியடைந்தது. ஆனால் இந்தக் காலத்தில் சீன மக்களிடையே இவன் பெயர் பிரபலமடைந்தது. சீனாவின் தெற்குப் பிரதேசங்களில் இவன் பெயரைத் தெரியாதவர்கள் இல்லையென்று சொல்லலாம். இவன், ஒரு சித்த புருஷனோ என்று சிலர் எண்ணினர்; மாயா சக்தியுடையவனோ என்று சிலர் கருதினர். ஏனென்றால் ஒரு சமயம், இவனை போர்மோஸாவில் பார்த்ததாகச் சிலர் கூறினர்; இன்னொரு சமயம், இவனை ஹாங்காங்கில் மாறுவேஷத்துடன் கண்டதாகச் சிலர் சொல்லினர்; பிறிதொரு சமயம், செங் ஷி லியாங் புரட்சி நடத்திக்கொண்டிருந்த இடத்திற்குச் சமீபத்தில் இவன் தென்பட்டதாகச் சிலர் பகர்ந்தனர். ஆக நோக்கிய இடங்களிலெல்லாம் இவன் நீக்கமற நிறைந்திருப்பதாக ஜனங்கள் நம்பினார்கள். இவனிடத்தில் தங்களை யறியாமலே ஒரு வித பக்தி கொண்டார்கள்.
நாடோடி வாழ்க்கை
இரண்டாவது புரட்சிக்கு பிறகு, ஸன் யாட் ஸென்னை மஞ்சை அரசாங்க ஒற்றர்கள் முன்னைக் காட்டிலும் அதி தீவிரமாகக் கண்காணித்து வரத் தலைப்பட்டார்கள். சீனாவுக்குள் எங்கும் பகிரங்கமாக வசிக்க முடியாதவனானான். ஏதேனும் ஒரு வெளி நாட்டுக்குச் சென்று வசிப்பதற்கும் மஞ்சூ அரசாங்கம் இடங் கொடுக்கவில்லை; எந்த நாட்டுக்கு இவன் செல்ல விரும்புகிறா னென்பதை ஒற்றர்கள் மூலம் முன் கூட்டியே தெரிந்துகொண்டு, அந்த நாட்டுக்குள் வரவொட்டாதபடி செய்துவிடுமாறு அந்த நாட்டு அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டது. இங்ஙனம் இவன் பல நாடுகளுக்கும் புறத்தியாக்கப்பட்டான்.
கடைசியில் ஜப்பான் நாடு இவனுக்கு அடைக்கலம் கொடுத்தது. ஜப்பானில் யோகோஹாமா1 என்ற ஒரு நகரம் உண்டு. இங்குள்ள சீன தானீகனுக்கு, ஜப்பானில் வசிக்கும் சீனப் பிரஜைகள் விஷயத்தில் எவ்வித அதிகாரமும் கிடையாது. இதைத் தெரிந்து கொண்ட ஸன், மேற்படி யோகோஹாமா நகரம் சென் றான். அங்கு, சீன தானீகனுடைய காரியாலயத்திற்குச் சில கஜ தூரத்திற்கடுத்தாற் போலவே. ஓர் இடத்தை வாடகைக்குப் பிடித் தான். இதுவே இவனுடைய வாசதலமாகவும், புரட்சிக் காரியாலய மாகவும் அமைந்தது. இங்கிருந்து கொண்டு, சீனாவில் புரட்சி கிளப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முற்பட்டான்.
இவனுடைய நோக்கம், வெளி நாடுகளில் வசிக்கும் சீனர் களின் உதவியைக் கொண்டு, சீனாவில் புரட்சிக்கான ஒரு சூழ் நிலையை உண்டுபண்ண வேண்டுமென்பதுதான். இவன் நோக்கப் படியே அந்தச் சூழ்நிலையும் அமைந்தது. புரட்சிகளும் நடைபெற்றன. இரண்டாவது தடவைக்குப் பிறகு எட்டு தடவை புரட்சிகள் நடைபெற்றன. ஒன்பதாவது தடவை நடைபெற்ற புரட்சிதான்-1911 ஆம் வருஷம் அக்டோபர் மாதம் நடைபெற்ற புரட்சிதான்-வெற்றி வாங்கித் தந்தது. ஆக மொத்தம் பதினோரு தடவை புரட்சிகள் நடைபெற்றன; பத்து தடவை தோல்வி.2 தோல்வியடைந்த இந்தப் பத்து புரட்சிகளைத் தவிர, இவனுக்குத் தெரிந்தும் தெரியாமலும், மஞ்சூ ஆட்சிக்கு விரோதமாகச் சில்லரைப் புரட்சிகள் பல, சீனாவின் பல பகுதிகளில்-சிறப்பாகச் சீனாவின் தெற்குப் பகுதியில்-தான் தோன்றித் தனமான முறையில் எழுந்து எழுந்து அடங்கின. இந்தச் சில்லரைப் புரட்சிகளையும் சேர்த்து இவன் நடத்திய புரட்சிகளை அதிகப்படுத்திக் காட்டுவர், இவனிடம் பக்தி பூண்ட சீன அறிஞர் சிலர். எண்ணிக்கை எவ்வளவாக இருந்த போதிலும் மஞ்சூ ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைத்த கடைசி புரட்சியைத் தவிர, அதாவது 1911ஆம் வருஷம் அக்டோபர் மாதம் நடைபெற்ற புரட்சியைத் தவிர, பிசுபிசுத்துப் போன மற்றப் புரட்சிகளைப் பற்றிச் சவிதாரமாகச் சொல்லிக் கொண்டு போனால் அது படிப்ப வர்களுக்குச் சலிப்பையே தரும். தவிர, பிசுபிசுத்துப் போன இந்தப் புரட்சிகளைப் பற்றிய விவரங்கள் ஒரே சிக்கலும் குழப்பமுமா யிருக்கின்றன. ஆகவே இவைகளைப் பற்றி விசேஷமாக ஏதும் சொல்லிக்கொண்டு போகாமல், ஸன் யாட் ஸென், ஜப்பானில் யோகோஹாமா நகரத்தில், தன் புரட்சிக் காரியாலயத்தை அமைத்துக் கொண்ட பிறகு, நடத்திய வாழ்க்கை, அடைந்த ஆசாபாசங்கள், பெற்ற அனுபவங்கள், சாதித்த காரியங்கள் ஆகியவைகளைச் சுட்டிக்காட்டிக் கொண்டு போக விரும்புகிறோம்.
பொதுவாகச் சொல்லப் போனால், ஸன் யாட் ஸென்னுடைய ஐம்பத்தெட்டு வருஷ வாழ்க்கையில், ஏறக்குறைய பாதிக்கு மேல் நாடோடி வாழ்க்கையாகவே கழிந்தது. அதிலும் இரண்டாவது புரட்சிக்குப் பிறகு, பத்தாவது புரட்சிவரை சுமார் பத்து வருஷம் இவனுடைய வாழ்க்கையில் மிகவும் கடுமையான பரிசோதனைக் காலம். இந்தக் காலத்தில் இவன் மேற்கொண்ட விடாமுயற்சி, காட்டிய மன உறுதி, தன் தாய்நாட்டின் எதிர்கால வாழ்க்கையில் வைத்த அசையாத நம்பிக்கை முதலியவைகளைப் பார்க்கிறபோது, இவன் ஓர் அசாதாரண புருஷன், சீனாவை வாழ்விப்பதற்கென்றே தோன்றிய நாயகன் என்ற எண்ணங்களே நமக்குத் தோன்றும்.
யோகோஹாமாவிலுள்ள சீன தானீகனுக்கு ஜப்பானில் வசிக்கும் சீனர்கள் விஷயத்தில் எவ்வித அதிகாரமுமில்லை யென் றாலும், மஞ்சூ அரசாங்க ஒற்றர்கள், தன்னை, வேறு விதமாக அகப் படுத்தி விடக் கூடுமென்பதை ஸன் யாட் ஸென் நன்கு அறிந்திருந் தான். லண்டனில் ஏற்பட்ட அனுபவத்தை இவன் மறக்கவில்லை. எனவே தற்காத்துக் கொள்ளும் விஷயத்தில் சர்வ ஜாக்கிரதை யுடனிருந்தான். எந்த ஓர் இடத்திலும் எந்த ஒரு காரியத்திலும் தன்னை யாரும் சந்தேகிக்காதபடி எச்சரிக்கையுடன் நடந்து கொண்டான். இவனை நன்கு அறிந்த, இவனுடைய நம்பிக்கையைப் பெற்ற ஒரு சிலருக்குத் தான் இவனுடைய உண்மையான பெயர் தெரிந்திருந்ததே தவிர, மற்றவர்களுக்கு நகயாமா1 என்ற பெய ராலேயே அறிமுகமாயிருந்தான்.
யோகோஹாமாவில் இவன் எப்படி வசித்துக் கொண் டிருந்தான், என்ன மாதிரியான கருத்துக்களைக் கொண்டிருந்தான் என்பதை, இவனுடன் ரகசியமாகச் சந்தித்துப் பேசிய ஓர் அமெரிக்க நிருபன் மூலமாகக் காண்போம்:-
“யோகோஹாமாவில் சீனர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியிலேயே இவன் - ஸன் யாட் ஸென் - வசித்துக் கொண்டிருந்தான். அநேக சந்து பொந்துகளைக் கடந்து தான் இவன் இருப்பிடத்தையடைய வேண்டி யிருந்தது. இந்த இருப்பிடத்தை வெளியிலிருந்து பார்க்கிறபொழுது ஒரு பாழடைந்த வீடு மாதிரி தென்பட்டது. வீட்டுக்கு முன்னால் விளக்கு வெளிச்சம் எதுவுமில்லை. வீட்டின் முகப்புக் கதவைத் தட்டினேன், உயரமும் கட்டுமதான சரீரமுள்ள ஒரு சீனன் வந்து கதவைத் திறந்தான். மிடர் நகயாமா என்னை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகச் சொல்லி உள்ளே அழைத்துப் போனான். உள்ளே போகும் வழி ஒரே இருட்டாயிருந்தது. பல வாயிற்படிகளைக் கடந்து சென்றோம். நாங்கள் செல்லச் செல்ல, எங்களுக்குப் பின்னால் ஒவ்வொரு கதவாக மூடிக் கொண்டு வந்தது. கடைசியில் விளக்கு வெளிச்சம் நிறைய ஓர் அறையை அடைந் தோம். அங்கு ஒரு மேஜை போடப்பட்டிருந்தது. அதைச் சுற்றி தேசீய உடை அணிந்திருந்த சீனர் சிலர் உட்கார்ந்திருந்தனர். அவருள் வாலிபனான ஒருவன் மட்டும் ஐரோப்பிய உடையில் இருந்தான். அவன் என்னைக் கண்டதும் எழுந்து முன் வந்து கைலாகு கொடுத்த வரவேற்றான். அவனை முதலில் பார்க்கும் யாரும் ஒரு ஜப்பா னியன் என்றே எண்ணுவார்கள். முறுக்கிவிட்ட கறுப்பு மீசை; ஒளி நிறைந்த கண்கள். அவனைப் பார்த்தவுடன் எப்பொழுதும் சுறுசுறுப்பும் உற்சாகமு முள்ளவனாயிருப்பான் என்று தெரிந்தது. அவன் என் கையை அழுத்திப் பிடித்துக் குலுக்கிய போது, அவன் மனவுறுதி மிகப் படைத்தவன் என்பதும் தெரிந்தது. அறையில் இருந்த மேஜை நாற்காலி, புத்தக அலமாரிகள் யாவும் ஐரோப்பிய முறையில் அமைந்திருந்தன. புத்தக அலமாரிகளில் புத்தகங்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. எல்லாம், போர் முறைகள், சரித்திரம், அரசியல், பொருளாதாரம் இவைகளைப் பற்றிய புத்தகங்கள்தான். சமீபத்தில் அவன் நடத்துவித்த புரட்சிகளைப் பற்றி என்னிடம் கூற அவன் தயங்கவில்லை. எங்கெங்கே சண்டைகள் நடைபெற்றன, புரட்சிப் படைகள் எந்தெந்த வழிகளில் சென்றன என்பவைகளை எனக்குத் தெரிவிப்பதற்காக ஒரு பூகோள படத்தைக் கொண்டுவந்து காட்டினான். போதிய போர்க்கருவிகள் இல்லாமை யினாலேயே தோல்வி ஏற்பட்டதென்றும் சொன்னான். மேலும் அவன் கூறியதாவது - இந்தத் தோல்விகளைக் கண்டு நாங்கள் சிறிதும் சோர்வடையவில்லை. அதற்கு மாறாக உற்சாகமே கொண்டுள்ளோம். எங்கள் படைகளுக்குப் போதிய ஆயுத பல மிருந்து சிறிது முனைவோமானால், மஞ்சூ படைகளை எவ்வளவு சுலபமாகத் தோற்கடிக்க முடியுமென்பதை நாங்கள் அறிந்திருக் கிறோம்.”
‘புரட்சி செய்யவேண்டியது அவசியமா? படிப்படியாகச் சீர்திருத்தங்கள் செய்து சீனாவுக்கு விமோசனம் காண முடியாதா?’ என்று நான் கேட்டேன்.
‘மஞ்சூ அரச பீடம் எந்தச் சூழ்நிலைக்கு மத்தியில் இருக்கிற தென்பதை அறிந்தவர்கள், தீவிரமான சீர்திருத்தங்களைக் கொண்டு வர, சக்ரவர்த்திக்குச் சக்தியில்லையென்பதை நன்கு உணர்வார்கள்’ என்று அவன் பதில் அளித்தான்.
ஸன் யாட் ஸென்னுடைய விருப்பமெல்லாம், ஜப்பானைப் போலவே, சீனாவை, எல்லா வகையிலும் மேனாட்டு முன்னேற்றப் போக்கில் திருப்பிவிட வேண்டுமென்பதாயிருக்கிறது. இந்த விஷயத் தில் அவன் உறுதியுடனும் உற்சாகத்துடனும் காணப்பட்டான். ஜப்பானியர் களைப் போல் சீனர்கள், சீக்கிரமான ஒரு மாறுதலுக்கு உட்படுவார்களா என்று நான் கேட்டதற்கு அவன் சரியான தலைவர்கள் வழி காட்டி அழைத்துச் செல்வார்களானால், நிச்சயம் சீனர்கள் மாறுதலுக்கு உட்படுவார்கள் என்று கூறினான்.
தனது நோக்கங்கள், திட்டங்கள் இவைகளைப் பற்றி அவன் நீண்ட நேரம் ருசிகரமாகப் பேசினான். மேனாட்டு முறையில் கல்வி பயின்ற சீன இளைஞர் பலர் அவனைப் பின்பற்றத் தயாராயிருக்கி றார்கள். அப்படியே பணம் படைத்த சீனர் பலர், தக்க சமயத்தில் அவனுக்குப் பணவுதவி செய்யவும் தயாராயிருக்கிறார்கள்.
‘நீங்கள் கொண்டிருக்கும் ஆசை மகத்தானது’ என்றேன்.
ஆம்: மகத்தானதுதான், அது நிறைவேற உயிரையும் கொடுக்கலாம் என்றான் அவன்.
பிறகு அவன், சீனாவின் பெரிய நிலப்பரப்பு, அதிக ஜனத் தொகை, அபிவிருத்தி செய்யப்படாத அதன் பல்வேறு துறைகள், சீன மக்களுக்கு ஒரு விழிப்பை உண்டுபண்ணிவிட்டால், எதிர் காலத்தில் சீனா எப்படியெல்லாம் இருக்கக்கூடும் என்பவைகளைப் பற்றிப் பேசினான்.
அவனைப் போல் இனிய சுபாவமுள்ள ஒரு மனிதனை நான் பார்த்த தில்லை. ஒரு தலைவனாயிருப்பதற்குரிய தகுதிகள், எல்லோரையும் வசீகரிக்கக்கூடிய ஒரு சக்தி, எல்லோராலும் வியந்து பாராட்டப்படக் கூடிய உறுதி, இவையெல்லாம் அவனிடத்தில் காணக்கிடக்கின்றன.
ஸன்,யோகோஹாமாவில், தன் புரட்சிக் காரியாலயத்தை ஏற்படுத்திக்கொண்ட சிறிது காலத்திற்குள், ஐப்பானிய அரசியல்வாதி களுடன் தொடர்பு கொண்டான். சிறப்பாக, லிபரல் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள், இவனுடைய புரட்சி முயற்சிகளுக்கு ஆதரவு காட்டிப் பேசினர். இந்த லிபரல் கட்சி யினர் தான், இவன் போர்மோஸாவிலிருந்து கொண்டு இரண்டாவது புரட்சிக்கு ஏற்பாடு செய்த பொழுது, இவனுக்கு முதலில் ஆதரவு காட்டினர் என்பதும், பின்னர் கன்சர்வேடிவ் கட்சியினர் நிருவாக ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டதனால், இந்த ஆதரவு இவனுக்குத் தொடர்ந்து கிடைக்கவில்லை என்பதும் வாசகர்களுக்கு நினைவிருக்கும். இப்பொழுது அதே லிபரல் கட்சியினர் ஆதரவு காட்டிப் பேசியது இவனுக்கு மிகவும் உற்சாகத்தை அளித்தது.
ஸன் யாட் ஸென், ஐப்பானிலிருந்து கொண்டு அவ்வப் பொழுது, பிரிட்டனின் செல்வாக்குக்குட்பட்டிருந்த மலேயா தீப கற்பம்2, பிரெஞ்சு ஆதிக்கத்திற்குட்பட்டிருந்த இந்தோ - சீனா3, அமெரிக்க ஆதிக்கத்துக் குட்பட்டிருந்த ஹவாயி தீவு. இப்படிச் சில நாடுகளுக்கு ரகசியமாகச் சென்று வந்ததோடல்லாமல், சீனாவுக் குள்ளும் அடிக்கடி சென்று, அங்குத் தாழ்வுற்ற நிலையில் வாழ்க்கை நடத்தும் குடியானவர்களென்ன, தொழிலாளர்களென்ன இவர் களுடனும், முக்கியமான நகரங்களில் வசிக்கும் மத்தியதர வகுப்பா ரென்ன, ஒரு சில பணக்காரர்களென்ன, இப்படிப் பட்டவர்களுட னும் தொடர்பு கொண்டு, மஞ்சூ ஆட்சியின் அவல நிலையையும் அதிலிருந்து மீளவேண்டிய அவசியத்தையும், அவரவர்களுடைய அறிவுப் பக்குவத்திற்குத் தகுந்தாற்போல் உணர்த்தி வந்தான். பொதுவாக, புரட்சிக்கான ஒரு சூழ்நிலையை உண்டு பண்ணி வந்தானென்று சொல்லலாம்.
இங்ஙனம் ரகசியமாகப் பிரசாரம் செய்வது எவ்வளவு கடினமான காரியமென்பது, அந்தத் துறையில் இறங்கிப் பார்த்த வர்களுக்குத்தான் தெரியும்.
ஸன், சீனாவுக்குள் எப்படி எப்படியெல்லாம் சென்று வந்தான்? கேட்டால் கற்பனைக் கதையாகவே தோன்றும், ஒரு சமயம், மூக்குக் கண்ணாடி அணிந்துகொண்டு, சில்லரைச் சாமான் களைக் கூவி விற்பவனாகச் சென்றான்; மற்றொரு சமயம் ஓர் ஏழைக் கூலி மாதிரி சென்றான்; இன்னொரு சமயம், ஒரு ஜப்பானியனைப் போல் வேஷம் போட்டுக்கொண்டு சென்றான்; இந்த மாதிரி சமயங் களில் தன்னை யாரும் சுலபமாகக் கண்டுகொண்டு விடாதபடி மிகவும் சாமர்த்தியமாக நடந்து கொண்டானென்பதைப்பற்றி நாம் அதிகம் சொல்லவேண்டுமோ?
இவ்வளவு சாமர்த்தியமாக இவன் நடந்து வந்த போதிலும், இவனுடைய உயிர், மயிரிழையில் தப்பிய சந்தர்ப்பங்கள் பல ஏற்பட்டிருக்கின்றன. ஒரு சமயம் இவன் ஷாங்காய் நகரத்திற்கு வந்திருந்தான். இஃதொரு சர்வதேசத் துறைமுகப் பட்டினம். பிரிட்டிஷார் என்ன, பிரெஞ்சுக்காரர் என்ன, இப்படிப் பல நாட்டினரும் இங்குச் சகல உரிமைகளுடனும் சகல சலுகைகளு டனும் தனித் தனிப் பகுதிகளில் வசித்து வந்தனர். ஸன் யாட் ஸென் பிரெஞ்சுப் பகுதியில் வந்து தங்கி யிருந்தான். எப்படியோ இது மஞ்சூ அரசாங்க ஒற்றர்களுக்குத் தெரிந்து விட்டது. இவனை உயிரோடு பிடித்துக் கொடுக்கின்றவர்களுக்கு ஒரு லட்சம் பவுன் சன்மானம் அளிக்கப்படுமென்ற பிரகடனம் ரத்து செய்யப் படாமலிருந்த காலம் அது. பிரெஞ்சுப் பகுதியில் பிரெஞ்சுப் பிரஜை களைப் பற்றின விவகாரங்களை விசாரித்துத் தீர்ப்புச் சொல்வதற் கென்று ஒரு நீதிமன்றம் இருந்தது. இதில் ஜார்ஜ் மோரண்ட்1 என்பவன், நீதிபதி அலுவல் பார்த்துக்கொண்டிருந்தான். பிரெஞ்சுப் பகுதியில் தஞ்சம் புகுந்துவிடும் விரும்பப்படாத சீனர்களை வெளியேற்றி விடுமாறு சீன அதிகாரிகள் தக்க முகாந்தரங்கள் காட்டி அதிகார பூர்வமாகக் கோரிக்கை விடுப்பார்களானால், அந்த மாதிரியான கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து ஆவன செய்ய வேண்டியதும், பிரான்ஸுக்கோ, பிரெஞ்சு ஆதிக்கத் திற்குட்பட்ட பிரதேசங்களுக்கோ செல்ல விரும்பும் சீனர்களுக்குப் பிரயாண அனுமதிச் சீட்டுக் கொடுப்பதுமான இப்படிச் சில பொறுப்புக் களும் இந்த மோரண்டுக்கு இருந்தன. ஜப்பானிலிருந்து இந்தோ - சீனாவுக்குச் செல்ல உத்தேசித்த ஸன், ஷாங்காய் நகரம் வந்து, இந்தோ - சீனாவுக்குச் செல்ல, பிரயாண அனுமதிச் சீட்டுக் கொடுக்கு மாறு, பிரெஞ்சு தானீகனை அணுகிக்கேட்டான். மஞ்சூ அரசாங்கம் இவனைத் தேசப்பிரஷ்டம் செய்துவிட்டிருந்தபடியால், அந்த அரசாங்கத்திடமிருந்து பிரயாண அனுமதிச் சீட்டுப் பெற முடியாதிருந்த நிலையிலேயே இவன் பிரெஞ்சு தானீகனை அணுகினான். அந்த தானீகனும் இவனை மோரண்ட்டிடம் அனுப்பினான். மோரண்ட்டும் இவனுக்குப் பிரயாண அனுமதிச் சீட்டுக் கொடுத்து விட்டான்.
இப்படி இவன் பிரயாண அனுமதிச் சீட்டுப்பெற மோரண்ட் டின் காரியாலயத்தில் இருந்துகொண்டிருக்கையில், மஞ்சூ அரசாங்கத்தின் மேலதிகாரியொருவன் அங்கு வந்து, ஸன்னைக் கைது செய்வதற்காக மஞ்சூ அரசாங்கம் பிறப்பித்திருந்த ஓர் உத்தர வில் கையெழுத்திடுமாறு மோரண்ட்டைப் பணிவுடன் கேட்டான்.
மோரண்ட்டின் கையெழுத்தைப் பெற இந்த மாதிரியான உத்தரவுகள் பல தினந்தோறும் அவன் காரியாலயத்திற்கு வருவ துண்டு. ஒவ்வொன்றையும் நுணுகிப் பார்த்துக் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருக்க முடியுமா? உத்தரவுகளை நீட்டும் அதிகாரிகளை நம்பித் தான் கையெழுத்துப் போட வேண்டும்; அப்படித்தான் போடுவது வழக்கம். இதே பிரகாரம் ஸன் சம்பந்த மாகக் கொண்டுவரப்பட்ட உத்தரவில் அதனைச் சரிவரப் பாராமலே மோரண்ட் கையெழுத்துப் போட்டிருக்கலாம். ஆனால் ஸன்னின் அதிருஷ்ட வசமாக, சீன அதிகாரி கொண்டுவந்த உத்தரவைப் பார்த்த மோரண்ட், ஸன்னைக் கைது செய்வதற்குப் போதிய காரணங்களைக் காட்டுமாறும், அந்தக் காரணங் களைப் பரிசீலனை செய்த பார்த்த பிறகே, உத்தரவில் கையெழுத்துப் போட முடியுமென்றும் தெரிவித்தான். இதைக் கேட்ட அந்த அதிகாரியும், மேலிடத்திற்குத் தகவல் தெரிவித்து உத்தரவு பெற்று வருவதாகச் சொல்லிப் போய்விட்டான்.
மோரண்ட், அந்த மஞ்சூ அதிகாரியுடன் பேசிக் கொண் டிருக்கையில், அங்கிருந்த ஸன், மெதுவாக அந்த இடத்திலிருந்து நழுவிச் சென்று துறைமுகத்தை அடைந்து அங்கிருந்த ஒரு கப்பலில் ஏறிவிட்டான்.
சீன அதிகாரி கொண்டுவந்த உத்தரவைப் பாராமல் அதில் மோரண்ட் கையெழுத்திட்டிருந்தால் ஸன்னின் கதி என்னவா யிருக்கும்? அவ்வளவென்ன? சீனாவின் சரித்திரப் போக்கே மாறிவிட்டிருக்கு மல்லவா?
இதே மாதிரி வேறு இரண்டு சந்தர்ப்பங்களில் இவன் உயிர் மயிரிழையில் தப்பியிருக்கிறது. பணத்திற்கு ஆசைப்பட்டு, சிலர், இவனை மஞ்சூ அதிகாரிகளுக்குக் காட்டிக்கொடுக்க இரண்டு தடவை முனைந்தனர். இரண்டு தடவைகளிலும் இவன் அவர் களிடம் நல்ல வார்த்தைகள் சொல்லித் தப்பித்துக்கொண்டான். எப்பொழுதுமே ஸன்னுக்கு, இங்கிதமாகப் பேசி யாரையும் வசீகரப்படுத்தி விடுகிற சக்தியுண்டு.
இங்ஙனம் ஸன் மறைமுகமாகச் சீனாவின் பல பகுதிகளுக்கும் வந்து போனானென்றாலும், ஷாங்காய் நகரம்தான் இவனை அதிகமாக ஈர்த்தது. 1889 ஆம் வருஷத்திலிருந்து 1910 ஆம் வருஷம் வரை இவன் பல தடவை ஷாங்காய் நகரத்திற்கு வந்து போனான். விதீரணத்திலும் ஜனத்தொகையிலும் மிகப் பெரிதான இந்த நகரத்தில் பலதரத்து மனிதர்களைச் சந்தித்துத் தன் புரட்சி முயற்சிகளுக்கு ஆதரவு தேடிக் கொள்ள அதிகமான சந்தர்ப்பங்கள் கிடைக்குமென்ற எண்ணத்தினாலும், மஞ்சூ அரசாங்க ஒற்றர்களின் கண்காணிப்பு இங்குக் குறைவா யிருக்குமென்ற நம்பிக்கையினாலும் இந்த நகரத்தை அடிக்கடி நாடினான்.
இவை தவிர, வேறொரு முக்கியமான காரணமும் உண்டு. இங்குதான், இவனுடைய முதல் புரட்சிக்கு ஆதரவாயிருந்த சார்ல ஜோன் ஸுங்1, தன் குடும்பத்துடன், செல்வமும் செல்வாக்கும் நிறைந்தவனாய் வாழ்ந்து வந்தான். அவனுடைய ஆதரவு எப் பொழுதும் போல் இவனுக்கு இருந்து வந்தது. அவன் வீட்டில் வந்து தங்குவது இவனுக்குப் பல விதங் களிலும் அனுகூலமாயிருந்தது. ஸுங்கின் குடும்பத்தினர் இவனை அந்நியனாகக் கருதாமல், தங்கள் நெருங்கிய உறவினரில் ஒருவனாகக் கருதி இவனுக்கு எல்லா உபசாரங்களையும் செய்தனர்.
ஸுங்குக்கு, ஏலிங்(Eling), சிங்லிங்(Chingling), மேலிங்(Mayling) என்ற மூன்று பெண்கள் உண்டு. இவர்கள், தங்கள் தந்தை, ஸன் னிடம் அதிக பக்தி விசுவாசம் வைத்திருப்பதை நன்கு அறிந்திருந் தார்கள். இதனால் ஸன்னை, மாமா, மாமா என்று அழைத்து இவனிடம் அன்பு காட்டினர்; இவனுக்குப் பல உபசாரங்கள் செய்து வந்தனர்.
குடும்பத்தோடு ஒன்று சேர்ந்து வாழ்ந்து அதன் சுகத்தை அனுபவிக்க அதிக சந்தர்ப்பம் பெறாத ஸன், அவ்வப்பொழுது, ஸுங் குடும்பத்தினருடன் வந்து தங்குவதில் மிக்க மகிழ்ச்சி கொண்டான்; மன ஆறுதலும் பெற்றான்.
ஸுங்கின் மூன்று பெண்களும் பெரியவர்களான பிறகு, மூத்தவளான ஏலிங் என்பவள், கன்பூஷியஸின்3 எழுத்தைந்தாவது தலைமுறையினனும், பிற்காலத்தில் சிறந்த பொருளாதார நிபுண னென்று பெயர் படைத்தவனும், குடியரசு ஏற்பட்ட பிறகு, அரசாங் கத்தில் பல உயர்தர உத்தியோகங்கள் வகித்தவனுமான எச். எச். குங் (H.H. Kung) என்பவனை மணந்து கொண்டாள்.
இரண்டாவதான சிங் லிங் என்பவள், ஸன் யாட் ஸென்னுக்கு இரண்டாந்த தாரமாக வாழ்க்கைப்பட்டாள். மூன்றாவதான மேலிங் என்பவள், ஸன் யாட் ஸென்னுடன் புரட்சி இயக்கத்தில் சேர்ந்துழைத்த சியாங் கை ஷேக்கை மணந்து கொண்டாள். இவர்களைப் பற்றிப் பிந்தியதோர் அத்தியாயத்திலும் பேசுவோம்.
தீவிரப் பிரசாரம்
ஸன், ஜப்பானிலிருந்து கொண்டு, அவ்வப்பொழுது மலேயா தீபகற்பம் சென்று வந்தானென்று மேலே சொன்னோமல்லவா, அங்கு - மலேயா தீபகற்பத்தில்-ஆங்காங்கு முற்போக்குச் சீனர் சங்கத்திற்குக் கிளை தாபனங்கள் நிறுவி அவை நன்றாக நடை பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தான். மலேயாவில் ரப்பர் தோட்டங்களுக்கும், ஈயச் சுரங்கம் போன்ற சில சுரங்கங்களுக்கும் முதலாளிகளான சீனர் பலர் இருந்தனர். இன்னும் வேறுவகைத் தொழில்கள் நடத்திப் பணங்குவித்த பணக்காரர் பலர் இருந்தனர். இவர்களிடமிருந்து ஆதரவு கோரினான் ஸன். ஆனால் இவர் களுடைய ஆதரவு மட்டும் இருந்தால் போதா தென்பதையும் உணர்ந்திருந்தான். எந்த ஒரு புரட்சியும் சமுதயாத்தின் குறிப்பிட்ட ஒரு வகுப்பினருடைய அல்லது பிரிவினருடைய, ஆதரவு பெற்று மட்டும் வெற்றி பெறாதென்பதையும், சமுதாயத்தின் பல்வேறு பிரிவினருடைய, சிறப்பாகப் பாமர மக்களென்று சொல்லப்படுகிற சாதாரண ஜனங்களுடைய ஒத்துழைப்பு அவசியமென்பதையும் இவன் நன்கு உணர்ந்திருந்தான். எனவே அன்றாடம் உழைத்துப் பிழைப்பு நடத்துகிற ஏழைச் சீனர்களுடைய ஆதரவையும் நாடி னான். அவர்களிடையே சென்று, அவர்களுக்குப் புரியும்படி, சீனா வின் அவல நிலையைப் பற்றியும், புரட்சி செய்து மஞ்சூ ஆட்சியை ஒழிக்க வேண்டிய அவசியத்தைப் பற்றியும் எடுத்துக் கூறினான்; ஓரளவு ஆதரவும் பெற்றான்.
பிரெஞ்சு ஆதிக்கத்திற்குட்பட்டிருந்த இந்தோ-சீனாவுக்குச் சென்று வந்தானென்று சொன்னோமல்லவா, அங்கு, பிரெஞ்சு அதிகாரிகளே இவனுக்கு மறைமுகமாக ஆதரவு காட்டினரென்று சொன்னால், வாசகர் களுக்கு வியப்பாயிருக்கும். மஞ்சூ ஆட்சி விரைவிலே விழுந்துபடக் கூடுமென்பதையும், ஸன் யாட் ஸென்தான், சீனாவின் வருங்காலத் தலைவனாயிருக்கக் கூடுமென்பதையும், அப்பொழுதைய பிரெஞ்சு அரசாங்கம் நன்கு உணர்ந்திருந்ததனால், இந்தோ - சீனாவிலுள்ள தன் அதிகாரிகளுக்கு, ஸன்னின் புரட்சி முயற்சிகளுக்கு ஆதரவு தருமாறு கூறியதென்று பின்னர்த் தெரிய வந்தது. எப்படியோ ஸன், இந்தோ-சீனாவில், தன் பிரசாரத்தைத் தைரியமாகவே நடத்தினானென்று சொல்லலாம்.
ஸன், 1903 ஆம் வருஷம் ஹவாயி தீவுக்குச் சென்று அங்குச் சுமார் ஓர் ஆறு மாத காலம் தங்கினான். ஏற்கனவே இவனுக்குப் பழக்கமான இடந்தானே அது? தவிர இவன் சகோதரன் ஆமியும், இவன் மனைவி மக்களும் அங்கிருந்தனர். ஆமி, முந்தின தடவை களைக் காட்டிலும் இந்தத் தடவை, நிறையப் பணஞ் சம்பாதித்து நல்ல செல்வாக்குடைய வனாக இருந்தான். தன்னைப் போல் தன் சகோதரன்-ஸன்-பணஞ் சம்பாதிக்காவிட்டாலும், புகழ் சம்பாதித்து வருவதைக் கண்டு உள்ளூர மகிழ்ச்சி கொண்டிருந்தான். பணம் நிலைத்திராது, புகழ் நிலைத்திருக்கு மென்பதை ஆமி நன்கு அறிந் திருந்தான் போலும், இதனால் தன் சகோதரனிடத்தில் முன்னைக் காட்டிலும் அதிக வாஞ்சை காட்டியதோடு அதிக மதிப்பும் காட்டி னான். ஸன்னின் மனைவி லூஸூ, ஒரே மகனான பன்னிரண்டு வயதடைந்த ஸன் போவுடனும் இரண்டு பெண் குழந்தைகளுடனும் ஆமியின் பராமரிப்பில் வசித்து வந்தாள்1. தன் கணவனுடன் சேர்ந்து வாழும் நாளை இவள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந் தாள் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? ஸன்னும், தன் மனைவி மக்களைக் கண்டு, அவர்களுடன் சிறிது காலமேனும் சேர்ந்துவாழும் சந்தர்ப்பம் ஏற்பட்டதற்காகப் பெரிதும் மகிழ்ச்சி கொண்டான்.
ஸன், ஹவாயி தீவில் ஆறு மாத காலம் தங்கியிருந்தானென் றாலும், குடும்பத்தினருடன் தங்கியிருந்த நாட்கள் சிலவே, மற்ற நாட்களை , தன் புரட்சி முயற்சிக்கு ஆதரவு தேடுவதிலேயே செல வழித்தான். முந்தின தடவைகளில் வந்திருந்தபோது, விதைத்து விட்டுப் போன புரட்சி விதைகள் பயன்தர வேண்டுமென்பதற்காக, இந்தத் தடவை இவன் சிறிது பகிரங்கமாகவே வேலை செய்ய வேண்டியிருந்தது. இதற்காக இவன் சிறிதுகூட பயப்படவில்லை. தற்காப்பு நிமித்தம் இவன் சில வழிமுறைகளை வகுத்து வைத்திருந் தான். இந்த வழிமுறைகள், நேர்மைக்கு மாறுபட்டவையென்றே சொல்லவேண்டும். ஆனால் இவன் லட்சியத்தைத்தான் பெரிதாகக் கருதினான்; அதனையடையும் வழிகளைப் பற்றிக் கவலைகொள்ள வில்லை. அவற்றிற்கும் அரசியலுக்கும் அடிக்கடி பிணக்குகள் நிகழ்வதும், இறுதியில் அரசியலே வெற்றி பெறுவதும், உலகத்துப் பல நாடுகளில் விடுதலைப் போராட்டங்கள் நடத்திய பெரும் பாலோருடைய வாழ்க்கையின் சர்வ சாதாரண நியதிகளாயிருந்து வந்திருக்கின்றன. ஸன்னின் அரசியல் வாழ்க்கை, இந்த நியதிக்குப் புறம்பாக இருக்கவில்லை.
ஹவாயி தீவை 1890ஆம் வருஷம் அமெரிக்கா, தன் ஆதிக்கத் திற்குட்படுத்திக் கொண்டுவிட்டது. இதைத் தொடர்ந்து, ஹவாயி தீவில் பிறந்தவர்கள் அனைவரும் அமெரிக்கப் பிரஜா பாத்தியதை கொண்டாட உரிமை பெற்றார்கள். இந்த உரிமையைத் தனக்குச் சாதகமாக உபயோகப்படுத்திக் கொண்டான் ஸன். முந்தியொரு தடவை இவன், ஹவாயி தீவுக்கு வந்திருந்தபோது, அங்கிருந்த அமெரிக்க அரசாங்கப் பிரதிநிதியிடம் தான் ஹவாயி தீவிலேயே பிறந்தவனென்றும், அப்படியே ஜனன மரணக் கணக்குப் புத்தகத் தில் பதிவு செய்து கொள்ளுமாறும் சொல்லி, அதற்கான அத்தாட்சிப் பத்திரம் ஒன்றையும் வாங்கி வைத்துக் கொண்டான். உண்மையில் இவன் சீனாவில் ஸுயிஹெங் கிராமத்திலல்லவோ பிறந்தவன்? தான் ஒரு சீனப் பிரஜையென்று சொல்லிக் கொள்வதனால் தொந்தரவு ஏற்படுமென்று தெரிகிற சமயங்களில், அமெரிக்க அதிகாரியின் இந்த அத்தாட்சிப் பத்திரத்தைக் காட்டி, தான் ஓர் அமெரிக்கப் பிரஜை என்று சொல்லி அந்தத் தொந்தரவுக் காளாகாமலிருக்கலா மல்லவா? இதுதான் இவனுடைய உத்தேசம். அமெரிக்க அதிகாரி யிடமிருந்து இவன் பெற்று வைத்திருந்த அத்தாட்சிப் பத்திரத்தின் உண்மையை யாரேனும் பரிசீலனை செய்து பார்த்திருந்தால் இவனுடைய கதியாதாயிருக்குமோ? ஆனால் அதைப்பற்றி இங்கே நாம் ஏன் சிந்தித்துக் கொண்டிருக்கவேண்டும்?
ஹவாயி தீவின் பிரதான பட்டினமாகிய ஹோனோலூலுவில் சீனர் பலர் நல்ல நிலைமையில் இருந்து வந்தனர். இதனால் ஸன், இங்கு அதிக நாட்கள் தங்கினான். அநேகத் தடவை, பொதுக் கூட்டங்கள் கூட்டி, சீனாவின் தற்கால நிலையைப்பற்றி அரிய சொற்பொழிவுகள் நிகழ்த்தி வந்தான்.
பொதுவாக, ஸன் நல்ல பேச்சாளி. ஆரவாரம், அடுக்குத் தொடர் முதலியன இவன் பேச்சில் காணப்படமாட்டா. கை கால் களை ஆட்டிக்கொண்டு பேச மாட்டான். ஒரே நிலையில் நின்று நிதானமாகப் பேசுவான். சொல்ல வேண்டியதைத் தெளிவாகச் சொல்வான். தான் சொல்லும் கருத்து, கேட்போர் மனத்தில் பதிய வேண்டுமென்பதற்காக இடையிடையே அழகிய உவமைகளைக் கையாள்வான்; சீன சரித்திரத்திலிருந்தும், பிற நாடுகளின் சரித்திரங் களிலிருந்தும் அநேக உதாரணங்களை எடுத்துக்காட்டுவான். அதிகக் கல்வியறிவு இல்லாதவர்களும், நல்ல படிப்பாளிகளும் உணர்ந்து அனுபவிக்கின்ற முறையில் இவன் பேச்சு இருக்கும். சாதாரணமாக, மூன்று அல்லது நான்கு மணி நேரம் தொடர்ந்தாற் போல் பேசுவான். யாருக்கும் சலிப்பு ஏற்படாது. கூட்டத்தி னிடையே யாரும் எழுந்து போகமாட்டார்கள். சுருக்கமாகச் சொல்லப்போனால், இவன் பேச்சு, கேட்பாரைப் பிணிக்குந் தன்மையதாய் இருக்கும். பேசுகிறபோது, இவனிடத்திலுள்ள ஏதோ ஒரு சக்தி இவனைப் பேச வைக்கிறதென்றே தோன்றும்.
பொதுக் கூட்டங்களில் மட்டுமல்ல, தனிப்பட்ட நபர்களிடம் பேசுகிறபோதுகூட, இங்கிதமாகப் பேசுவான். இவனுடைய பரிச்சயத்தைப் பெறாமலே, இவனைப்பற்றித் தவறாக நினைத்துக் கொண்டிருக் கிறவர்கள்கூட. இவனைச் சந்தித்துச் சிறிது நேரம் சம்பாஷித்துக் கொண்டிருப்பார்களானால், இவனிடத்தில் மதிப்புக் கொள்ளவேண்டிய அவசியத்துக்குட்படுவர். ஒரே ஓர் உதாரணம்.
சீனாவிலுள்ள சர்வ கலாசாலை யொன்றில் பேராசிரியராக இருந்த ஒரு சீன அறிஞர், ஒரு சமயம், அதாவது ஸன் ஜப்பானில் யோகோஹாமா நகரத்தில் இருந்த சமயம், அங்குச் சென்றிருந்தார். அவருடன் வேறு மூன்று ஆசிரியர்களும் சென்றிருந்தார்கள். இவர் களுக்கு ஸன்னை நன்றாகத் தெரியும். அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொண்டிருப்பார்கள். ஒரு நாள், அந்தப் பேராசிரியரையும், தங்க ளோடு ஸன்னைப் பார்க்க வரும்படி அழைத்தார்கள். ஸன்னைப் போய்ப் பார்ப்பதாவது? அவனென்ன அவ்வளவு பெரிய மனிதனா என்ன? என்று அலட்சியமாகப் பேசினார் அந்தப் பேராசிரியர். ஸன்னைப் பார்க்க மறுத்துவிட்டார். சில நாட்கள் கழித்து, ஸன்னும் அந்தப் பேராசிரியரும் யதேச்சையாகச் சந்திக்க நேரிட்டது. ஏதோ பேசினார்கள். அவ்வளவுதான்., பேராசிரியர், ஸன்னின் பரம பக்தரா னார்; ஸன்னின் புரட்சி முயற்சிகளுக்கு உறுதுணையாக நின்றார்; பல புரட்சிகளில் பங்கெடுத்துக் கொண்டார்; இதனால் மஞ்சூ அரசாங்கத்தின் கோபத்திற்கு இலக்கானார். இது காரணமாக, அவர் சீனாவிலிருந்து உயிர் தப்பி இங்கிலாந்துக்கு ஓட வேண்டிய தாயிற்று!
ஸன்னின் இந்தத் தடவை ஹவாயி விஜயத்தின் போது, ஹோனோலூலுவிலுள்ள ஒரு நாடகக் கொட்டகையில் 1903 ஆம் வருஷம் டிசம்பர் மாதம் பதின்மூன்றாந் தேதி முதல் முறையாக ஒரு பிரசங்கம் செய்தான். இந்தப் பிரசங்கம், ஹோனோலூலுவில் இருந்த சீனர்களிடையே ஒரு பரபரப்பை உண்டு பண்ணியது; உள் நாட்டிலும் வெளி நாடுகளிலுமுள்ள சீனர்களின் உண்மை நிலையை ஒருவாறு உணரவும், இவனால்தான் சீனாவுக்கு விமோசனம் பிறக்கக்கூடுமென்று நம்பவும் தலைப்பட்டார்கள்; இவனுக்கு ஆதரவு தருவது தங்கள் கடமையென்று கருதினார்கள்.
சீனர்களுக்குச் சீன பாஷையில் இவன் பேசினானென்றாலும், அந்நகரத்தில் வெளியான ஹோனோலூலு அட்வர்ட்டைஸர் (Honolulu Advertiser) என்ற ஆங்கிலப் பத்திரிகை, இவன் பேச்சின் சாரத்தை, நல்ல தலைப்புக் கொடுத்து வெளியிட்டது. இதன் மூலம், எந்த அயல் மொழியினருக்கும் கொடுக்காத ஒரு கௌரவத்தை இவனுக்குக் கொடுத்தது. இவனுடைய பிரசங்கத்தின் ஒரு பகுதி வருமாறு:
“மஞ்சூக்களல்லாத சீனர்களிடையே நாம் தேசீய உணர்ச்சியை வளர்க்க வேண்டும். வளர்த்துக் கொடுப்பதையே என் ஆயுட்காலப் பணியாகக் கொண்டிருக்கிறேன். தேசீய உணர்ச்சியை நாம் ஒருமுறை தூண்டி விடுவோமானால், நாற்பது கோடி சீன மக்களும் ஒருமுகமாக எழும்பி மஞ்சூ அரசை அடியோடு அப்புறப்படுத்தி விடுவர். இதற்குப் பிறகு குடியரசு நிர்மாணிக்கப்படும். அமெரிக்கா வில் பல மாகாணங்களும் சேர்ந்திருப்பது போல் சீனாவிலும் பல மாகாணங்கள் சேர்ந்திருக்கும். இப்படிச் சேர்த்து ஒரே மாதிரியான ஆட்சி நடத்த நமக்கு ஒரு பிரசிடெண்ட் தேவையாயிருக்கும்.
இப்பொழுது சீனர்களாகிய நாம் நாடில்லாத மனிதர்கள் போலிருக் கிறோம். வெளி நாடுகளில் வசிக்கும் நம்மை யாரேனும் தாக்கி னால், நம்முடைய சீன அரசாங்கம் நம்மைப் பற்றிக் கவலைப் படுவதேயில்லை. நீங்கள் ஏன் தலை மயிரைப் பின்னல் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் தெரியுமா? மஞ்சூ ஆதிக்கத்துக்குட்பட்ட வர்கள் நீங்களென்று காட்டும் பொருட்டுத்தான். சீனாவில் இங்ஙனம் நீங்கள் பின்னலிட்டுக்கொள்ள மறுத்தீர்களானால் உடனே சிரச்சேதம் செய்யப்படுவீர்கள்.
ஐரோப்பிய வல்லரசுகள் பல சேர்ந்து, சீனாவைத் தங்களுக்குள்ளே பங்கு போட்டுக்கொள்ளும் என்று நம்மில் பலர் அஞ்சுகிறார்கள். பங்கு போட்டுக் கொள்ள நாம் துணையாயிருந்தாலன்றி, அவை வேறு விதமாகப் பங்கு போட்டுக்கொள்ள முடியாது. சட்ட வரம்புக்குட்பட்ட மன்னராட்சி முறையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று நம்மிலே சிலர் சொல்கிறார்கள். ஆனால் அது நடவாத காரியம். நமக்குக் குடியரசு முறை கூடாதென்பதற்கான காரணங்கள் எதுவுமில்லை. ஏற்கனவே சீனாவில் ஒரு விதமான குடியரசு முறை நிலவுகிறதென்பதை நாமெல்லோரும் அறி வோம்."
சீனாவிலுள்ள கிராமங்கள், அரசாங்கத்திற்கு வரி செலுத்து வது என்ற ஒன்றைத் தவிர, தங்களுடைய மற்ற விவகாரங்களைத் தாங்களே கவனித்துக் கொண்டு வந்தன. இதையே இங்கு ஸன் குறிப்பிடுகிறான்.
இங்ஙனம் ஹோனோலூலுவிலும் ஹவாயி தீவின் மற்ற இடங் களிலும் சொற்பொழிவுகள் நிகழ்த்தி வந்ததோடு ஸன் ஒரு துண்டுப் பிரசுரத்தையும் எழுதி அச்சிட்டு வெளியிட்டான். சீனப் பிரச்னைக்கு உண்மையான பரிகாரம் என்பது இதற்குத் தலைப்பு இதில் மஞ்சூ ஆட்சிக்கு முன்னர் சீனா, சீரும் சிறப்புமாக இருந்ததென்றும், மஞ்சூ ஆட்சி ஏற்பட்ட பிறகு அது பல வகையிலும் சீரழிந்து வருகிற தென்றும், பொதுவாகச் சொல்லி, எந்தெந்த வகையில் சீரழிந்து வருகிறதென்பதை வரிசைப் படுத்திக் காட்டினான்.
மற்றும், சீனாவை இந்தச் சீரழிவினின்று காப்பாற்ற வேண்டு மானால், முதலில் மஞ்சூ ஆட்சியை ஒழிக்க வேண்டுமென்றும், அதன் தானத்தில் குடியரசை நிறுவ வேண்டுமென்றும் வலி யுறுத்திக் கூறினான். இன்னும், மஞ்சூ ஆட்சியை ஒழிக்க வேண்டு மானால், அது புரட்சி யினால்தான் சாத்தியமாகுமென்றும் அந்தப் புரட்சிக்கு ஆதரவு தரக் கூடியவர்களை மூன்று பிரிவினராகப் பிரிக்கலாமென்றும் குறிப்பிட்டான். மூன்று பிரிவினர் யாரார்? மஞ்சூ அரசாங்க உத்தியோகதர்களின் பலவித கொடுமைகளுக் காளாகி அன்றாட ஜீவனத்திற்கே கஷ்டப்படுகிறவர்கள் முதற் பிரிவினர். இவர்கள்தான் இப்பொழுது சீனாவில் அதிகமான பேரா யிருக்கிறார்கள். அந்நியர்களான மஞ்சூக்களின் மீது வெறுப்புக் கொண்ட சீனர் இரண்டாவது பிரிவினர். சீனா நல்வாழ்வு பெற வேண்டுமென்ற உயர்ந்த நோக்கத்தினால் உந்தப்பட்டவர்கள் மூன்றாவது பிரிவினர். இந்த மூன்று பிரிவினருடைய ஒத்துழைப்பும் இருக்கும் பட்சத்தில், மஞ்சூ ஆட்சி வீழ்ந்து படுவது அதிக தொலை வில் இராதென்று எடுத்துச் சொன்னான். கடைசியில், இந்தத் துண்டுப் பிரசுரத்தைப் பின்வரும் வாக்கியத்தோடு முடித்தான்:-
சீன மக்களாகிய நாங்கள், நியாயமாக நடத்தப்பட வேண்டு மென்பதற்காகவும், பொதுவாக உலகத்திலும், சிறப்பாகக் கீழ் நாட்டிலும் அமைதியை நிலை நிறுத்துவதற்காகவும், முடிந்தவரை சமாதான முறைகளையும் அவசியமானால் பலாத்கார முறைகளை யும் அனுஷ்டிக்கத் தீர்மானித்திருக்கிறோம்.
இந்தத் துண்டுப் பிரசுரத்தை வெளிப்படுத்தியதன் மூலம், ஸன், தன் புரட்சி முயற்சிகளை இதுகாறும் திரைமறைவில் வைத் திருந்ததுபோல் வைக்காமல் பகிரங்க மேடைக்குக் கொண்டுவந்து விட்டானென்றே சொல்லவேண்டும். எவ்வளவு துணிச்சல்! எவ்வளவு தன்னம்பிக்கை!
மேலே எடுத்துக்காட்டப்பெற்ற கடைசி வாக்கியத்தில் ஓர் அமிசம் குறிப்பிடத்தக்கது. முடிந்தால் சமாதான முறைகள் கையாளப் படுமென்று இதில் கூறுகிறான். இதனால் சமாதான முறையில் இவன் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லையென்று தெரிகிறது. பலாத்காரத்தைக் கையாள்வதனால் உண்டாகிற தீமைகளை இவன் அறியாதவனல்ல. அதில் ஓரளவு அனுபவமும் இவனுக்கு ஏற்பட் டிருக்கிறதல்லவா? இவன் தலைமையில் நடந்த முதலிரண்டு புரட்சிகளைக் கண்டு, மஞ்சூ அரச பீடம், இவன் திட்டங்களை நிறைவேற்றிக் கொடுக்கிற முறையில் சிறிது இணங்கிக் கொடுத் திருக்குமானால், இவன் மேற்கொண்டு பலாத்கார சக்தியின் துணையை நாடி இருக்கமாட்டானோ என்னவோ? ஆனால் சரித்திரப் போக்கை யார் தடுக்கவோ, மாற்றவோ முடியும்?
ஸன், ஹவாயி தீவில் சுமார் ஆறு மாத காலம் தங்கிவிட்டு
1904ஆம் வருஷம் மார்ச்சு மாதக் கடைசியில் அமெரிக்கா சென்று அங்குச் சுமார் ஒரு வருஷ காலம் சுற்றுப் பிரயாணஞ் செய்தான். பல ஊர்களுக்குச் சென்றான்; பழைய நண்பர்களைச் சந்தித்தான். புதிய சிநேகிதர்களைச் சம்பாதித்தான். ஆங்காங்குக் கூட்டங்கள் போட்டு, சீனா, விமோசனம் பெறவேண்டிய அவசியத்தைப் பற்றிப் பல சொற்பொழிவுகள் நிகழ்த்தினான். இவன் பேச்சைக் கேட்டால், சீனாவில் இன்றைய நிலைமையையும் வருங்கால நிலைமையையும் திரைப்படத்தில் காண்பது போல் இருக்கும் என்று ஓர் அறிஞன் கூறுகிறான்.
ஸன், பகல் நேரங்களில் இப்படிப் பொதுக் கூட்டங்கள் கூட்டிப் பேசுவான். இந்தப் பொதுக் கூட்டங்களுக்கு அநேகமாகப் படித்தவர்களும் வாழ்க்கை வசதிகள் அதிகமாக உள்ளவர்களுமே வருவார்கள். இது ஸன்னுக்கு நன்றாகத் தெரியும். வாய்மொழியா லும், முடிந்தால் பணத்தாலும் இவர்கள், தன் முயற்சிகளுக்கு ஆதரவு தருவார்களே தவிர, தான் செயலில் இறங்கினால் அப்பொழுது எவ்வளவு தூரம் ஆதரவு தருவார்களென்பதையும் இவன் அறிந்திருந் தான். ஆனால் இவர்களுடைய ஆதரவும் தேவைதானல்லவா?
பொதுக்கூட்டங்கள் நடைபெறாத நாட்களில், அமெரிக்கக் கலாசாலைகளில் படித்து வரும் சீன இளைஞர்களைத் தனித் தனியாகவோ, கூட்டங்கூட்டியோ சந்தித்து, தன் கொள்கைகளை யும் திட்டங்களையும் விளக்குவான். அவர்களுடைய அபிப் பிராயங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்வான். இதன் மூலம் அவர் களுக்கு அரசியலறிவைப் புகட்டியதோடு, தானும் தன்னுடைய அரசியலறிவைப் பெருக்கிக் கொண்டான்.
ஒரு சமுதாயத்திற்கு விமோசனம் வாங்கித் தரக்கூடியவர்கள் யார்? அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த மத்திய வகுப்பினரும் கீழ்த்தர வகுப்பினருமேயாவர். இதை ஸன் எப்பொழுதுமே உணர்ந்திருந் தான். எங்கே இருந்தபோதிலும் இத்தகையவர்களுடன் தொடர்பு கொள்வது தன் கடமையென்று கருதினான். எனவே இரவு நேரங் களில், சில்லரை வியாபாரிகளென்ன, துணி வெளுத்தல் போன்ற சிறு தொழில்கள் நடத்துவோரென்ன, தோட்ட வேலை செய்வோ ரென்ன, இப்படிப்பட்டவர் களைத் தனித் தனியாகவும், சிறு சிறு கூட்டங்கள் கூட்டியும் சந்தித்து, அவர்களுக்குச் சீனாவின் நிலையை யும் தன் திட்டத்தையும் விளக்கிக் கூறுவான். இரவு நேரங்களில் தானே அவர்கள் ஓய்வாயிருப்பார்கள்? இதனால்தான், அவர்களைச் சந்திப்பதற்கென்று இரவு நேரங்களைப் பயன்படுத்திக் கொண்டான். அவர்களைச் சந்திப்பதும் எப்படி? தன்னிடத்திற்கு வரவழைத்தா? இல்லை; இல்லை; அவர்களிடத்திற்குச் சென்று. அவர்களைப் பல கேள்விகள் கேட்பான்; தன்னையும் கேட்கச் செய்வான். அவர் களுக்குச் சந்தேகங்கள் தோன்றினால் தெளிவு படுத்து வான்; விவரங்கள் கேட்டால் தெரியப்படுத்துவான். இப்படிப் பேச்சுக் கொடுத்துப் பேச்சு வாங்கியதன் மூலம், அவர்கள் எந்த விதமான வாழ்க்கையை நடத்துகிறார்கள், தாய்நாட்டைப் பற்றி அவர்கள் காணும் கனவுகளென்ன, நினைக்கும் எண்ணங்களென்ன, தன் திட்டங்களைச் செயல் படுத்துகின்றபோது, அவர்கள் எந்த அளவுக்கு உதவி செய்யச் சித்தமாயிருப்பார்கள் என்பவைகளைப் பற்றி யெல்லாம் நன்கு தெரிந்துகொண்டான்.
இப்படி இரவு பகலென்று பாராமல் ஊர் ஊராகச் சுற்றுப் பிரயாணம் செய்ததனாலும், பலதரத்தினரைச் சந்தித்துப் பேசியத னாலும், இவன் உடல் சிறிது தளர்ச்சியடைந்தது; ஆனால் உள்ளம் சோர்வடையவில்லை. ஓர் அறிஞன் இவனைப் பற்றி எழுதுகிறான்:-
“டாக்டர் ஸன், ஒரு சிலரிடத்தில் பேசினாலும் சரி, நூற்றுக் கணக்கான பேரோ, ஆயிரக்கணக்கான பேரோ உள்ள கூட்டங்களில் பேசினாலும் சரி, கேட்கிறவர்கள் தம்பித்துப் போகும்படி மணிக்கணக்கில் பேசுவான். நியூயார்க் நகரத்தில், சீனர்கள் நடத்தும் சலவைத் தொழிற் சாலைகள் பல உண்டு. இவற்றின் பின் பக்க அறைகளிலேயே இவர்கள் வசிப்பார்கள். இந்தப் பின்னறை களுக்கு இவன் இரவு நேரங்களில் சென்று, அங்குள்ளவர்களுக்குப் போர்க்களங்களிலும், அரச தந்திர மேடைகளிலும் சீனா அடைந்த தோல்விகள், சீன மக்கள் விடுதலை பெறுதவற்காகவும், அவர் களுக்குச் சுய ஆட்சி கிடைப்பதற்காகவும் தான் வகுத்திருக்கும் திட்டங்கள், இவைகளைப் பற்றி விளக்கிச் சொல்கிறபோதுதான் இவனுடைய முழுத் திறமையும் வெளிப்படும். அநேக சமயங் களில் இவன் உடல் சோர்வடைந்து காணப்படும். ஆனால் இவன் உள்ளம் சோர்வடைந்ததே யில்லை. தன்னுடைய காரியத்தில் எப் பொழுதும் உற்சாகம் கொண்டவனாகவே காணப்படுவான்.”
ஸன் இங்ஙனம் சுமார் ஒரு வருஷ காலம் அமெரிக்காவில் சுற்றுப் பிரயாணம் செய்ததன் விளைவாக முற்போக்குச் சீனர்கள் சங்கத்திற்கு அதிகமான அங்கத்தினர்கள் சேர்ந்தார்கள். ஒரு வகையில் இது திருப்தியளிக்க கூடியதாகவே இருந்தது. ஆனால் இந்தச் சுற்றுப் பிரயாணம் சுலபமாக நடைபெற்று விடவில்லை. எத்தனையோ தங்கு தடைகள்! எத்தனையோ ஆசாபங்கங்கள்!
இவன் அமெரிக்கா வந்திறங்கிய அதே தருணத்தில், மஞ்சூ அரசாங்கத்தின் பிரதிநிதியாக மஞ்சூ அரசிளங்குமரன் ஒருவனும், பிரபல சீர்திருத்தவாதியாகிய காங் யூ வெய்யும்1 வந்திறங்கினர்.
காங் யூ வெய், இன்னும் தேசப் பிரஷ்டனாகவே இருந்தான். இவனைப் பிடித்துக் கொடுக்கிறவர்களுக்கு ஒரு பெருந்தொகை சன்மானமாக அளிக்கப்படுமென்ற பிரகடனம் இன்னும் ரத்து செய்யப்படாமலே இருந்தது. இருந்தாலும், ஸன்னின் புரட்சி முயற்சிகளில் இவன் சம்பந்தப் படாதவனாகவே இருந்தான். இருவரும் நண்பர்களானாலும், இந்த அமெரிக்கப் பிரயாணத்தின்போது, ஒருவருக்கொருவர் சந்தித்துப் பேசியதாகத் தெரியவில்லை. அமெரிக்க சமுதாயத்தின் மேல் படியிலுள்ளவர்கள், அரசாங்க உத்தியோகதர்கள், பணம் படைத்த சீனர்கள் ஆகிய இப்படிப்பட்டவர்கள் காங் யூ வெய்யின் நிதானப் போக்கில் ஈடுபட்டு, அவனுக்கு ஆதரவு காட்டும் முறையில் பேசினார்கள். மஞ்சூ அரசிளங்குமரனைப் பற்றிச் சொல்லவேண் டியதேயில்லை. சீன அரசாங்கத்தின் பிரதிநிதியாக வந்தருக்கிறா னல்லவா?
அமெரிக்காவில் செயிண்ட் லூயிஸ்(St. Louis) என்ற ஒரு நகரம் உண்டு. இங்கு 1904ஆம் வருஷம் அகில உலகப் பொருட்காட்சி யொன்று நடைபெற்றது. இதற்கு, உலகத்துப் பல நாடுகளின் அரசாங்கங்களும் அழைக்கப்பட்டிருந்தன. சீன அரசாங்கத்தின் பிரதிநிதியாக மேற்படி அரசிளங்குமரன் வந்திருந்தான்.
இவன் மேற்படி பொருட்காட்சிக்கு வரப்போவதை உத்தே சித்து, வேறோர் ஊரில் தங்கியிருந்த ஸன்னை, அந்த ஊரிலிருந்து வெளியே செல்லவொட்டாதபடி தடுத்து வைத்திருந்தார்கள் அமெரிக்க அதிகாரிகள். இவனுடைய பிரயாண அனுமதிச் சீட்டில் ஏதோ குறைகள் இருப்பதாக இதற்குக் காரணம் கூறினார்கள். இஃது உண்மையான காரணமில்லை. அமெரிக்கப் பத்திரிகைகள், ஸன் னுக்கு விரோதமான செய்திகளையே வெளியிட்டு வந்தன. மஞ்சூ அரசிளங்குமரன் பொருட்காட்சிக்கு விஜயஞ் செய்கிற போது, சமயம் பார்த்து அவனைக் கொலை செய்துவிட ஸன் யாட் ஸென் முயற்சி செய்யக்கூடுமென்று ஒரு பத்திரிகை தெரிவித்தது. என்ன அநியாயம்! இந்த மாதிரி சில தவறான செய்திகளை ஆதாரமாகக் கொண்டுதான், அமெரிக்க அரசாங்க அதிகாரிகள், ஸன்னை, சுமார் மூன்று வாரம் வரை, அதாவது அந்த மஞ்சூ அரசிளங்குமரன், செயிண்ட் லூயி நகரம் வந்து, இருந்து, திரும்பிப் போகிறவரை, ஓர் ஊரிலேயே நிறுத்தி வைத்திருந்தனர்.
ஸன்னுக்கு விரோதமாக இப்படிப் பத்திரிக்கைகள் தவறான செய்திகளை வெளியிட்டு வந்ததோடு, ஸான் பிரான்சிகோ நகரத்தி லிருந்த சீன தானீகன், அமெரிக்காவிலுள்ள சீனர்கள், ஸன் விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்று பின் வரும் எச்சரிக்கை விடுத்தான்:-
நம்மிடையே புரட்சித் தலைவன் ஒருவன் இருக்கிறான். அவன் தப்பும் தவறுமான செய்திகளைச் சொல்லி, ஜனங்களின் உணர்ச் சியைக் கிளப்பி விடுகிறான். பணத்தைச் சம்பாதித்து, பிறகு அதைத் தன்னிஷ்டத்திற்குச் செலவழித்துக்கொள்வதே அவன் உத்தேசம் என்பதை, படிப்பாளிகள் சுலபமாகத் தெரிந்துகொள்ளக் கூடும். ஆனால் ஒன்றுமறியாத பாமர ஜனங்கள் அவனிடத்தில் ஏமாந்து போவார்கள். சீன அரசாங்கத்தின் பிரதம தானீகன் என்ற முறை யில் அவர்களைக் காப்பாற்றவேண்டியது எனது கடமையாயிருக் கிறது. அவனுடைய பொய்ப் பிரசாரத்தினால், விவரம் தெரிந்த வயதானவர்கள் மன மாறுதலடைய மாட்டார்களென்று நம்பு கிறேன். அவர்கள் - விவரம் தெரிந்த அந்த வயதானவர்கள் - தங்கள் இளைய சகோதரர்களுக்கும் பிள்ளைகளுக்கும், இந்த மனிதனிடத் தில் ஜாக்கிரதையாகயிருக்குமாறு எச்சரிக்கை செய்யவேண்டும். உங்கள் பணத்தை அவன் வீணடித்து விடுவான்; உங்களைத் தொந்தரவில் சிக்க வைப்பான். ஆதலின் ஜாக்கிரதை!
ஸன்னுக்கு இந்த மாதிரியான தடைகள் ஆங்காங்கு ஏற்பட்டு வந்தன. இதே சமயத்தில், மஞ்சூ அரசிளங்குமரனுக்கும் காங் யூ வெய்க்கும், சென்ற இடமெல்லாம் சிறப்புக்களும் விருந்துபசாரங் களும் நடைபெற்றன.
மஞ்சூ அரசிளங்குமரன், செயிண்ட் லூயி பொருட் காட்சிக்குச் சென்று பார்த்துவிட்டுப் போன சில நாட்களுக்குப் பிறகு, ஸன் மேற்படி பொருட்காட்சிக்கு சென்று, அமெரிக்கா, விஞ்ஞானத் துறையில் எவ்வளவு தூரம் முன்னேறி யிருக்கிறதென் பதைக் காட்டும் பல்வேறு காட்சிகளைக் கண்டான். சீனா, மேலை நாடுகளுடன் சம நிலையில் நின்று வாழ வேண்டுமானால், அது விஞ்ஞானத் துறையில் இன்னும் எவ்வளவு தூரம் முன்னேற வேண்டுமென்பதையும் ஒருவாறு உணர்ந்துகொண்டான்.
நல்ல படிப்பாளியான காங் யூ வெய் சிறந்த பேச்சாளியாகவும் இருந்தான். சீனாவில் என்னென்ன சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமென்பதைப் பற்றி அவன் ஆங்காங்கு நிகழ்த்தி வந்த சொற்பொழிவுகள், அமெரிக்காவின் முக்கியமான நகரங்களில் வசித்து வந்த படித்த சீனர்களின் ஆதரவையும் அமெரிக்கர் பல ருடைய ஆதரவையும் அவனுக்குத் தேடிக் கொடுத்தன.
அவனுடைய சீர்திருத்தப் பிரசாரத்தின்போது, ஹோமர் லீ (Ho-mer Lea) என்ற ஓர் அமெரிக்கனுடைய நட்பு அவனுக்குக் கிடைத்தது. அந்த ஹோமர் லீக்கு, சீனர்களுடைய நாகரிகம், கலாசாரம் முதலியவை விஷயத்தில் ஒருவித ஈடுபாடு இருந்தது. அதே சமயத்தில் யுத்த மனப்பான்மை கொண்டவனாகவும் இருந்தான். இதனால் காங் யூ வெய், ஸான்பிரான்சிகோ நகரத்தில் தங்கியிருந்தபோது, அங்குள்ள சீன இளைஞர் சிலரைக் கூட்டி அவர்களுக்கு யுத்தப் பயிற்சி அளித்து, அவர்களை ஒரு படையாகத் திரட்டினான். அந்தப் படைக்குச் சீர்திருத்த இளைஞர் படை என்று பெயர் கொடுத் தான். காங் யூ வெய், பிரசாரத்திற்காகச் சென்ற சில முக்கியமான ஊர்களில், இந்தப் படையினர், ராணுவ உடையுடன் பாண்டு வாத்தியங்கள் முழக்கிக்கொண்டு அவனுக்கு முன்னும் பின்னுமாக அணிவகுத்துச் செல்வர். ஹோமர் லீயை, காங் யூ வெய்யின் ராணுவ ஆலோசகன் என்றே அமெரிக்கப் பத்திரிகைகள் எழுதி வந்தன. இங்ஙனம் சீன இளைஞர்களைக் கொண்ட ஒரு படையைத் திரட்டு வதையும், அந்தப் படை பகிரங்கமாக அணிவகுத்துச் செல்வதையும் அனுமதிக்கக் கூடாதென்று அமெரிக்க அரசாங்கத்தைச் சீன அரசாங்கம் கேட்டுக்கொண்டது. ஆனால் பயனில்லை. ஆயுத முதீப்புகள் எதுவுமில்லாத ஸன் யாட் ஸென்னுக்கு இல்லாத பொல்லாத தடைகள்! பகிரங்கமாகப் படைகளோடு சென்ற காங் யூ வெய்யுக்கு எங்கணும் வரவேற்பு! கேட்பதற்கே விந்தையாக இல்லையா இது?
1905ஆம் வருஷம் மத்தியில் ஸன், அமெரிக்காவை விட்டுப் புறப்பட்டு ஐரோப்பாவுக்குச் சென்றான். ஐரோப்பாவுக்கு இவன் வந்தது இஃது இரண்டாவது தடவை. முதலில் இங்கிலாந்தை அடைந்து லண்டன் போந்தான். போந்த அன்றே காண்ட்லி தம்பதி களைக் கண்டு அவர்களுக்குத் தன் வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டான். தான், அதுகாறும் செய்த வேலைகளை அவர்களுக்கு விரிவாக எடுத்துக் கூறினான். அவர்களும், இவன் வைத்தியத் தொழிலிலிருந்து ஒதுங்கி முழு அரசியல்வாதியாக, புரட்சிவாதியாக மாறிவிட்டதைக் கண்டு ஆச்சரியப்படவில்லையானாலும், இவன் உயிருக்கு எவ்வித ஆபத்தும் உண்டாகாமலிருக்க வேண்டுமே, இவன் முயற்சிகள் வெற்றி பெற வேண்டுமே என்பதில் கவலை கொள்ளாமலில்லை. லண்டனின் சில நாட்கள் தங்கிவிட்டு, ஸன் பிறகு, பிரான்சு முதலிய சில நாடுகளுக்குச் சென்று தன் கொள்கை களை விளக்கிச் சில பிரசங்கங்கள் செய்துவிட்டு, பெல்ஜியம் நாட்டின் தலைநகரான ப்ரஸ்ஸெல்ஸ் (Brussels) நகரத்தை யடைந்தான்.
அங்குதான் முதன்முதலாக, மாணாக்கர்களடங்கிய ஒரு கூட்டத்தில் ஜனங்களின் மூன்று தத்துவங்கள்1 என்று ஒருவாறு பொருள் தரக்கூடிய ஸான் மின் சூயியைப்பற்றிச் சுருக்கமாக ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினான். எனவே ஸான் மின் சூயி பிறந்தது இந்த ப்ரஸெல் கூட்டத்தில்தான். இந்தச் சொற்பொழிவி லிருந்துதான் என்று சொல்ல வேண்டும். பிறகே, இவன் பெற்ற அறிவு, அனுபவம் முதலியவைகளால் வளர்க்கப் பெற்று, அது - ஸான் மின் சூயி - 1924 ஆம் வருஷம் காண்ட்டன் நகரத்தில் பதினாறு சொற்பொழிவுகளாகப் பரிணமித்தது, சீனாவின் அரசியல், பொருளா தார, சமுதாயக் கொள்கைகளுக்கு இந்த ஸான் மின் சூயியே அடிப்படையாக அமைந்திருக்கிறதென்று சொல்ல வேண்டும்.
ப்ரஸெல் கூட்டத்தில் இவன் பேசியதன் விளைவாக முற்போக்குச் சீனர் சங்கத்தில் முப்பது சீன இளைஞர்கள் அங்கத் தினர்களாகச் சேர்ந்தார்கள்; தவிர, பாரி, பெர்லின் முதலிய நகரங் களில் கிளைச் சங்கங்கள் தாபிக்கப்பட்டன. ஐரோப்பாவில், தான் சென்ற இடங்களி லெல்லாம், ஸன், ஸான் மின் சூயி கொள்கை களைப் பல கோணங்களில் வைத்து விளக்கினான். இந்தக் கொள்கைகள், ஐரோப்பாவின் முக்கிய நகரங்களில் உயர்தரப் படிப்புக்காக வந்திருந்த சீன இளைஞர்கள் மத்தியில் ஒருவாறு செல்வாக்குப் பெற்றன.
பாரி மாநகரில் இவன் சில நாட்கள் தங்கியிருந்த காலத்தில் ஒரு வேடிக்கையான சம்பவம் நடைபெற்றது. சீன இளைஞர் இருவர், மஞ்சூ அரசாங்கத்திடமிருந்து உபகாரச் சம்பளம் பெற்று, பாரிஸிலுள்ள ஒரு தொழிற் கல்லூரியில் படித்துக் கொண்டிருந் தார்கள். இவர்கள், ஸன்னின் பிரசங்கங்களைக் கேட்டு உற்சாகங் கொண்டு, முற்போக்குச் சீனர் சங்கத்தில் அங்கத்தினர்களாகச் சேர்ந்து கொண்டார்கள். இவர்களோடு படித்துக் கொண்டிருந்த ஒரு மஞ்சூ இளைஞன், புரட்சியை நோக்கமாகக் கொண்ட இந்த மாதிரியான சங்கத்தில் சேர்ந்துகொண்டிருப்பதை மஞ்சூ அரசாங்கம் கேள்விப்படுமானால், உபகாரச் சம்பளம் நிறுத்தப்படக் கூடு மென்றும், மேற்கொண்டு தொந்தரவுகள் உண்டாகக் கூடுமென்றும் இவர்களுக்கு - இந்த இரண்டு இளைஞர்களுக்கு - எச்சரிக்கை செய்தான். அதைக்கேட்டு இந்த இளைஞர்கள் பயந்துபோய், தங்கள் செய்கைக்குக் கழுவாய் தேடிக்கெள்ளத் தீர்மானித்தார்கள். ஒரு நாள், இருவரும் ஸன் தங்கியிருந்த விடுதிக்கு அவன் இல்லாத சமயம் பார்த்துச் சென்றார்கள். அங்கு, முற்போக்குச் சீனர் சங்கத் தின் அங்கத்தினர் பட்டியல் புத்தகம் இருந்தது. அதை அப்படியே எடுத்துக் கொண்டு நேராக மஞ்சூ அரசாங்கத்தின் தானீகன் காரியாலயம் சென்றார்கள். தாங்கள் முற்போக்குச் சீனர் சங்கத்தில் தெரியாமல் சேர்ந்துகொண்டதாகவும், தாங்கள் மன்னிப்புப் பெறுவதற்கு ஏற்பாடு செய்வதாயிருந்தால், தாங்கள் கள்ளத்தனமாக எடுத்து வந்திருக்கும் மேற்படி சங்கத்தின் அங்கத்தினர் பட்டியல் புத்தகத்கை அவனிடம் ஒப்புவிப்பதாகவும் சொன்னார்கள். அந்த தானீகன், இவர்களைக் கடிந்துகொண்டு, பட்டியல் புத்தகத்தை உடனே ஸன்னிடம் கொடுத்துவிடுமாறும், அப்படிச் செய்யாவிட் டால், பிரெஞ்சு போலீஸார், திருட்டுக் குற்றத்திற்காக இவர்களைக் கைது செய்யக்கூடு மென்றும், இவர்களுடைய உபகாரச் சம்பளத்தை நிறுத்திவிடுமாறு தானும் மஞ்சூ அரசாங்கத்திற்குச் சிபார்சு செய்யக் கூடுமென்றும் பயமுறுத்தினான். இளைஞர் இருவரும் பயந்து போனார்கள். பட்டியல் புத்தகத்துடன் நேரே ஸன்னிடம் சென்று முழந்தாளிட்டுப் பணிந்து, தங்கள் செயலுக்கு மன்னிப்பு அளிக்கு மாறு வேண்டிக்கொண்டு, புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்தார்கள். ஸன்னும் இவர்களை உடனே மன்னித்து விட்டான். மன்னிக்கும் சுபாவம் ஸன்னுக்கு எப்பொழுதுமே உண்டு.
கட்சியின் தோற்றம்
ஸன், ஐரோப்பாவில் சுற்றுப் பிரயாணத்தை முடித்துக் கொண்டு, சூய கால்வாய்1 வழியாக சிங்கப்பூர் வந்து சேர்ந்தான். பொதுவாகவே மலேயா தீபகற்பத்தில் சீனர்களின் எண்ணிக்கை, வருஷத்திற்கு வருஷம் அதிகரித்துக்கொண்டு வந்தது. இந்தச் சீனர் களில் பலர், ஸன்னின் புரட்சிப் பிரசாரத்திற்குச் செவி கொடுத்தனர். இதன் விளைவாக, தீபகற்பத்தின் பல பகுதிகளிலும் முற்போக்குச் சீனர் சங்கத்தின் கிளை தாபனங்கள் நிறுவப் பட்டன. சாதாரண வாழ்க்கையை நடத்தும் சீனர்களைத் தவிர, பணம் படைத்த சீனர்களும் இந்தக் கிளை தாபனங்களில் அங்கத்தினர்களாகச் சேர்ந்தார்கள். ஸன்னின் இந்தத் தடவை பிரசாரத்தினால் கிடைத்த பலன் இது. ஏற்கனவே சீன சமுதாயத்தின் சாதாரண மக்களிடையே பரவி யிருந்த மஞ்சூ ஆட்சியைப் பற்றின அதிருப்தி, இப்பொழுது பண பலம் படைத்தவர்களிடமும் பரவி விட்டதென்பது இதனால் நன்கு புலனாகிறது. எந்த ஒரு காரியத்திற்கும் பணபலம் தேவையா யிருக்கிறதல்லவா? அதிலும் பலாத்காரத்தைத் துணையாகக் கொண்ட புரட்சிக்குப் பணபலம் இன்றியமையாததாகி விடுகிறது.
மலேயாவிலிருந்து பழையபடி ஐப்பானுக்குத் திரும்பி வந்தான் ஸன். தன்னுடைய பிரசாரத்தினால், அமெரிக்கா, ஐரோப்பா. தென்கிழக்கு ஆசியா ஆகிய நாடுகள் பலவற்றிலும் முற்போக்குச் சீனர் சங்கத்தின் கிளை தாபனங்கள் ஏற்பட்டதைக் கண்டு தனக்குள் ஒரு வித திருப்தி யடைந்தான். சீனாவில் மட்டுமென்ன, சுமார் நாற்பதுக்கு மேற்பட்ட கிளை தாபனங்கள் ஏற்பட்டன. ஒவ்வொரு கிளையிலும் ஏறக்குறைய ஆயிரம் பேருக்கு அதிகமான அங்கத்தினர்கள் இருந்தார்கள். எல்லோரும், புரட்சிக்குச் சமிக்ஞை கொடுக்கப்பட்டவுடனே, அதில் தீவிரமாகப் பங்கு கொள்வதாகப் பிரமாணம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். இவர்களுடைய நடவடிக்கைகள் யாவும் ரகசியமாகவே இருந்தனவென்பதை நாம் சொல்லவும் வேண்டுமோ?
சீனாவில் இந்தப் புரட்சி தாபனங்கள் அமைக்கும் விஷயத் தில் ஸன்னுக்கு அதிக உதவியாயிருந்தவன் சார்ல ஜோன்ஸுங். ஏற்கனவே சொன்னபடி1 இவன் ஷாங்காய் நகரத்திலிருந்து கொண்டு ரகசியமாக, இந்த தாபனங்கள் ஏற்படுவதற்கு வேலை செய்தான். ஸன், இந்தத் தடவை ஐரோப்பாவிலிருந்து ஜப்பானுக்குத் திரும்பி வந்து பிறகு, அங்கிருந்துகொண்டே, ஸுங்குடன் கலந்தபேச அடிக்கடி ஷாங்காய் நகரம் வந்த போனான்.
ஜப்பானில் இருக்கையில் ஸன்னுக்கு இரண்டு பேருடைய நட்பு கிடைத்தது. ஒருவன் ஹுவாங் ஸிங்: மற்றொருவன் ஸுங் சியோ ஜென்.2 இருவரும் மேனாட்டு முறையில் சிறிது கல்வி பயின்ற வர்கள். முதல்வனான ஹுவாங் ராணுவ சம்பந்தமான விஷயங்களில் ஓரளவு அறிவு பெற்றிருந்தான். ஸன், அமெரிக்காவிலிருக்கையில், இவன் சீனாவில் மஞ்சூ ஆட்சியை எதிர்த்து ஒரு சிறு புரட்சி நடத்தித் தோல்வி கண்டிருந்தான். இவனைப் போலவே ஸுங் சியோ ஜென் னும் புரட்சியில் ஈடுபட்டவன். இதனாலேயே இருவரும் சீனாவி லிருந்து பிரஷ்டம் செய்யப்பட்டு ஐப்பானுக்கு வந்திருந்தார்கள். இவர்கள் ஸன்னுக்கு நல்ல துணைவர்களாகச் சேர்ந்து கொண் டார்கள்.
ஜப்பானிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான சீன இளைஞர்கள், தனிப்பட்ட முறையிலும் மஞ்சூ அரசாங்கத்தின் ஆதரவிலும் படித்து வந்தார்களல்லவா, இவர்களின் பொதுக்கூட்ட மொன்று 1905ஆம் வருஷம் ஆகட் மாதம் டோக்கியோ நகரத் தில் கூடியது. சீனர்களடங்கிய இவ்வளவு பெரிய கூட்டம் அது காறும் ஜப்பானில் நடைபெறவில்லை. இந்தப் பெரிய கூட்டத்தில் ஸன் பேசினான். சீனாவின் மஞ்சூ ஆட்சியை ஒழிக்கவேண்டு மென்பதிலும், அதற்குப் புரட்சி செய்ய வேண்டியது அவசியமென்ப திலும், சீனாவிலும் வெளிநாடு களிலுமுள்ள சீனர்கள் பலர் ஒருமித்த கருத்துடையவர்களா யிருந்த போதிலும், புரட்சி எப்படி நடத்துவது என்பதைப் பற்றியே கருத்து வேறுபாடு கொண்டவர்களாயிருந் தார்கள். ஜப்பானிலும் இத்தகைய கருத்து வேறுபாடு கொண்ட பலர் இருந்தனர். இவர்களனைவரும் ஒன்று சேரவேண்டிய அவசி யத்தை மேற்படி கூட்டத்தில் எடுத்துக் கூறினான் ஸன். கூட்டத்தி லிருந்து அனைவரும் இதை ஒருமுகமாக உற்சாகத்துடன் ஆதரித் தார்கள்.
இந்த உற்சாகத்தைப் பயன்படுத்திக்கொண்டான் ஸன். டுங் மெங் ஹுயி3 என்ற பெயரால் ஒரு சங்கத்தைத் தோற்றுவித்தான். பிரமாணம் எடுத்துக்கொண்ட சகோதர சீனர்கள் சங்கம் என்று இதற்கு அர்த்தம் கூறலாம். இந்தச் சங்கத்தில் அங்கத்தினர்களாகச் சேர்ந்து கொள் கிறவர்கள் முதலில் ஒரு பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று விதி செய்யப்பட்டது. பிரமாண வாசகம் வருமாறு:-
“மஞ்சூ அரச வமிசத்தை வீழ்த்தவும், அதன் தானத்தில் குடியரசை நிறுவவும், சீனாவிலுள்ள விவசாய நிலங்கள், எல்லோருக்கும் நியாயமான முறையில் பங்கிடப் பெற வேண்டுமென்ற அடிப் படையில் நிலப் பிரச்னை தீர வேண்டுமென்பதற்காகவும் நான் என்னாலானதைச் செய்வதாக, தெய்வ சாட்சியாகப் பிரமாணம் எடுத்துக்கொள்கிறேன். இந்தக் கொள்கைகள் விஷயத்தில் நான் விசுவாசமாக நடந்து கொள்வேன். என்னிடம் ஒப்படைக்கப்படும் பொறுப்புக்கு நான் துரோகம் செய்து விடுவேனாகில், விதிக்கப் படும் எல்லாவித கடுமையான தண்டனைகளுக்கும் உட்பட நான் சம்மதிக்கிறேன்.”
டுங் மெங் ஹுயி சங்கத்தில் சேர்வதை லேசாகக் கருதிவிடக் கூடாது சேர்ந்தவர்களுக்குச் சில பொறுப்புக்கள் உண்டு, அவர்கள் சில கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்பவைகளை வலி யுறுத்தும் பொருட்டே பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டு மென்ற விதி சேர்க்கப் பட்டது. கடுமையான தண்டனைகள் என்றால் என்ன? மரண தண்டனை உட்பட எல்லாந்தான். கட்சிக்குத் துரோகம் செய்வது, கட்சி அங்கத்தினர் களை மஞ்சூ ஒற்றர்களுக்குக் காட்டிக் கொடுப்பது போன்ற செயல்களைச் செய்கிறவர்கள் மரண தண்டனைக்குட்படத் தயாராயிருக்க வேண்டும் என்பதற்காகவே, விதிக்கப்படும் எல்லாவிதக் கடுமையான தண்டனை களுக்கும் உட்பட நான் சம்மதிக்கிறேன் என்ற கடைசி வாக்கியம் பிரமாணத் தில் பொறிக்கப்பட்டது.
இவ்வளவு கடுமையான நிபந்தனைகள் ஏற்படுத்தப் பெற் றிருந்த போதிலும், மேலே சொன்ன முதற் கூட்டத்திலேயே, சுமார் நானூறு இளைஞர்கள் டுங் மெங் ஹுயி சங்கத்தில் அங்கத்தினர் களாகச் சேர்ந்து கொண்டார்கள். பிறரை ஆட்படுத்துகின்ற ஏதோ ஒரு சக்தி ஸன்னிடத்தில எப்பொழுதுமே குடி கொண்டிருந்தது. அந்தச் சக்தியே இத்தனை பேரை முதற் கூட்டத்திலேயே, டுங் மெங் ஹுயி சங்கத்தில் சேரும்படி செய்ததென்று சொல்லவேண்டும். சங்கத்தின் தலைவனாக ஸன்னும், உப தலைவனாக ஹு வாங் ஸிங்கும் முறையே தெரிந்தெடுக்கப் பட்டார்கள்.
இந்த டுங் மெங் ஹுயி சங்கத்தில், முற்போக்குச் சீனர்கள் சங்கமும், அதன் கிளைச் சங்கங்களும், புரட்சியை நோக்கமாகக் கொண்டு ஆங்காங்குத் தனித் தனியாக இயங்கிவந்த ரகசியச் சங்கங்கள் பலவும் இணைக்கப்பட்டன. ஆக, மஞ்சூ ஆட்சியை ஒழித்து, குடியரசை நிறுவும் நோக்கத்தைக் கொண்ட ஒரே கட்சி உருவாகியது.
டுங் மெங் ஹுயி சங்கத்தின் நடவடிக்கைகள் யாவும் ரகசிய மாகவே நடைபெற்றன. ஒவ்வோர் அங்கத்தினருக்கும் ஒவ்வோர் நெம்பர் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நெம்பர் பெயராலேயே அவரவரும் அழைக்கப்பட்டார்கள். கிளைச்சங்கம் துவங்குவதற்கு யார் காரணமா யிருந்தாரோ அவருக்கு மட்டுந்தான் அங்கத்தினர் பெயர் முதலிய விவரங்கள் தெரிந்திருந்தன. அங்கத்தினர்கள் ஒருவரையொருவர் சந்திக்கிற போது சமிக்ஞைகளால்தான் பேசிக்கொளவர்.
டுங் மெங் ஹுயி சங்கம் தோன்றியதும், அதன் நோக்கங்களை விவரித்து ஒரு பிரகடனம் வெளியிடப் பெற்றது. நோக்கங்கள் வருமாறு:-
1. ஊழல் நிறைந்த மஞ்சூ ஆட்சியை வீழ்த்துவது.
2. குடியரசை நிறுவுவது.
3. உலகத்தில் சமாதானத்தை நிலைநாட்டுவது.
4. விவசாய நிலங்களை நியாயமான முறையில் பங்கீடு செய்வது.
5. சீனாவும் ஜப்பானும் ஒத்துழைக்க வேண்டுமென்ற கொள்கையை ஆதரிப்பது.
6. சீனாவின் புனருத்தாரணத்திற்காக உலகத்திலுள்ள எல்லா நாடுகளின் ஆதரவையும் நாடுவது.
இந்தப் பிரகடனத்தைத் தயாரிக்கும் முழுப் பொறுப்பு ஸன்னினுடையதாகவே இருந்தது. இதில் கண்டுள்ள அமிசங்கள் பலவும் சுலபமாகவோ சீக்கிரமாகவோ நிறைவேறும் என்று ஸன் நினைக்க வில்லை; இவைகளுக்காக எத்தனையோ போராட்டங்கள் நடத்த வேண்டி யிருக்கும். எத்தனையோ உயிர்களைப் பலி கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை உணராமலுமில்லை.
நோக்கங்களை வகுத்துக் காட்டியப் பிரகடனத்தை வெளி யிட்டுவிட்டால் மட்டும் போதுமா? இவற்றைத் தக்க முறையில் பிரசாரம் செய்யவேண்டாமா? இதற்காக நாடகத்துறையை நாடி னான் ஸன். சீனாவில் எப்பொழுதுமே நாடகத்திற்கு மதிப்பு உண்டு. சமுதாயத்தின் பல துறை வாழ்வினைப் பிரதிபலித்துக் காட்டுவதற்கு நாடகத்தையே முக்கிய துணையாகக் கொண்டார்கள் சீனர்கள். கிராமங்கள் தோறும் நாடகக் குழுக்கள் ஏற்பட்டு அவ்வவ்பொழுது பலவித நாடகங்களை நடித்துக் காட்டி வந்தன. ஸன், டுங் மெங் ஹுயி சங்கத்தின் நோக்கங்களையும் கொள்கைகளையும் பிரசாரம் செய்ய, பல நாடகங்களை எழுதுவித்து ஆங்காங்கு நடிக்கச் செய்தான். இவை மூலம், கல்வியறிவு, பண வசதி முதலியன இல்லாத சாதாரண ஜனங்கள், டுங் மெங் ஹுயி சங்கத்தைப் பற்றி ஒருவாறு தெரிந்து கொண்டார்கள்.
படித்த வகுப்பாரிடையே சங்கத்தைப் பற்றிப் பிரசாரம் செய்வதற்கு மின் NGH(Min Pao) என்ற ஒரு பத்திரிகையைத் தொடங்கச் செய்தான். மின் போ என்றால், மக்கள் பத்திரிகை என்று அர்த்தம். மொத்தம் மூவாயிரம் பிரதிகள் அச்சிடப்பெற்றன. இவற்றில், இரண்டாயிரம் பிரதிகள், ஜப்பானில் படிக்கும் சீன மாணவர் களிடையே பரவின; மிகுதி ஆயிரம் பிரதிகள் சீனாவுக்கும், வெளி நாடுகளிலுள்ள சீனர்களுக்கும் சென்றன. பத்திரிகையை அச்சடித்தல், விநியோகம் செய்தல் ஆகிய யாவும் ரகசியமாகவே நடை பெற்றன.
பத்திரிகை இங்ஙனம் ரகசியமாகப் பரவிய போதிலும், இதற்கு அதிக கிராக்கி இருந்தது, விலை கொடுத்தோ, இரவலாகவோ வாங்கிப் படிக்கிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித் தது. சீனாவின் பல இடங்களில், இந்தப் பத்திரிகையின் முக்கியமான சில கட்டுரைகள் தனித்தனித் துண்டுப் பிரசுரங்களாக அச்சிடப் பெற்று வழங்கப் பெற்றன. ஜப்பானில் படித்துவந்த சீன இளைஞர் களை, இந்தப் பத்திரிகையின் புரட்சிகரமான கருத்துக்களும், விறுவிறுப்பான நடையும் பெரிதும் கவர்ந்தன. இவர்களிற் பலர் படிப்பை முடித்துக்கொண்டு, சீனாவுக்குத் திரும்பிச் சென்று, புரட்சிப் பிரசாரம் நடத்தத் தலைப்பட்டார்கள். இவர்கள் பேச்சை மக்கள் செவி கொடுத்துக் கேட்டார்கள். சிலர் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களாயமர்ந்தார்கள்; அமர்ந்து, இளைஞர்கள் மனத்தை, புரட்சிப் பாதையில் மெது மெதுவாகத் திருப்பிவந்தார்கள். ராணுவக் கல்லூரிகளில் பயிற்சி பெற்ற இளைஞர்கள், சீனாவுக்குத் திரும்பி வந்து, சீன ராணுவத்தில் உத்தியோகதர்களாகப் பதவி யேற்றதும், போர் வீரர்களிடையே மிகவும் நாசூக்கான முறையில், சீன ராணுவம், தக்க சமயத்தில் புரட்சிப் படையாக மாறி விடக் கூடிய ஒரு சூழ்நிலையை உண்டு பண்ணினார்கள்.
இந்தப் பிரசாரத்திற்கெல்லாம் பணம் தேவையல்லவா? இது தாராளமாகவும் ஏராளமாகவும் கிடைத்தது. இதற்கு ஸன்னின் செல்வாக்குதான் காரணம். வெளிநாடுகளிலுள்ள பணக்கார வியாபாரிகள், சங்க நிதிக்கு ஒரு தொகையை ஒழுங்காகக் கொடுத்து, வந்தார்கள். சாதாரண நிலையிலுள்ளவர்கள், அவ்வப்பொழுது ஒரு சிறு தொகையை அனுப்பி வந்தார்கள். இதில் ஒரு வேடிக்கை யென்னவென்றால், மஞ்சூ அரசாங்கத்திடமிருந்து உபகாரச் சம்பளம் பெற்று ஜப்பானில் படித்துக்கொண்டிருந்த சீன இளை ஞர்கள், தங்களுடைய உபகாரச் சம்பளத்தில் ஒரு பாகத்தை அந்த மஞ்சூ அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக ஏற்பட்ட ஓர் இயக்கத்திற்கு, ஒரு கட்சிக்கு ஒழுங்காகக் கொடுத்து வந்ததுதான். இப்படிப் பல வகையிலும் சங்கத்திற்குப் பணம் கிடைத்து வந்தது. இது விஷயத் தில் அதிக சிரத்தை எடுத்து உழைத்தவன் வாங் சிங் வெய்1 என்பவன். இவன் மின் போ பத்திரிகையின் ஆசிரியக் குழுவில் ஒருவனாக இருந்து பணியாற்றி வந்தான்.
ஸன் ஆங்காங்கு நிகழ்த்திய சொற்பொழிவுகளைக் கேட்டு அவற்றில் அப்படியே லயித்துப்போய், ஸன்னின் விருப்பப்படி உபயோகித்துக் கொள்ள, தங்களுடைய சர்வத்தையும் கொடுத்த வர்கள் எத்தனையோ பேர். இவர்கள்தான் உண்மையில் சீனப் புரட்சி வெற்றி பெறுவதற்கு அடிகோலியவர்களென்று சொல்ல வேண்டும்.
ஸன், பாரி நகரத்தில் சில சொற்பொழிவுகள் நிகழ்த்தினான் என்று முந்தின அத்தியாயத்தில் சொன்னோமல்லவா, அந்தச் சொற்பொழிவு களில் ஒன்றைக் கேட்டான் ஒரு சிறிய வியாபாரி. விநோதமான அரிய பொருள்களை விற்கிற ஒரு கடைக்காரன் தான். சொற்பொழிவு முடிந்ததும் ஸன்னிடம் வந்து உங்களுடைய முயற்சிக்கு எப்பொழுது பணம் தேவைப்படுகிறதோ அப்பொழுது தெரிவியுங்கள்; என்னால் முடிந்த ஒரு தொகையை அனுப்புகிறேன் என்று தெரிவித்துக் கொண்டான். பின்னர் ஸன், ஜப்பானுக்கு வந்து, டுங் மெங் ஹுயி சங்கத்தை தாபித்து, பிரசார வேலைகள் மும்முர மாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது, பாரி கடைக்கார னுக்கு, அவன் சொன்ன வாக்கை நினைவுபடுத்தி ஒரு தந்தி கொடுத் தான். அவன் உடனே, தன் கடையை அப்படியே அறுபதினாயிரம் டாலருக்கு விற்று, அந்தத் தொகை பூராவையும் ஸன்னுக்கு அனுப்பிவிட்டான்!
அமெரிக்காவில் ஸன் பிரயாணம் செய்து கொண்டிருக் கையில், பிலடெல்பியா (Philadelpia) என்ற நகரத்தில் ஒரு பிரசங்கம் செய்தான். அதைக் கேட்டுக்கொண்டிருந்த ஒரு சலவைத் தொழி லாளி, பிரசங்கம் முடிந்ததும், ஸன் தங்கியிருந்த விடுதிக்கு வந்து, இவனிடம் ஒரு முடிப்பைக் கொடுத்தான். சுமார் இருபது வருஷ காலமாக, தொழில் முறையில் அவன் சேமித்து வைத்திருந்த பணம் பூராவும் அதில் இருந்தது!
சீனாவில் மொச்சைக்காய் முதலிய பொருள்களில் வியாபாரம் செய்யும் ஒருவன் ஸன்னிடம் ஒரு நாள் வந்து, தன் ஆதி பூராவையும் விற்றுக்கொண்டு வந்திருக்கும் நாலாயிரம் பவுனை ஏற்றுக்கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொண்டான். இதைப் பெற்றுக்கொள்ள ஸன் சிறிது தயங்கினான். அப்பொழுது அந்த வியாபாரி சொன்னான்.- எத்தனையோ பேர் தங்கள் உயிரையே அர்ப்பணம் செய்ய முன் வந்திருக்கிறார்கள். ஜனங்கள் நன்மை யடைய வேண்டுமென்பதற்காக இன்னும் எத்தனையோ பேர் எவ்வளவோ செய்திருக்கிறார்கள். என்னுடைய ஆதியைக் கொடுப்பது என்ன பிரமாத காரியம்? இதைக் கேட்ட ஸன்னின் மனம் அப்படியே உருகிவிட்டது. பணிவுடன் ஏற்றுக்கொண்டான் நாலாயிரம் பவுனை. ஏற்றுக்கொண்டதற்காக நன்றி செலுத்தினான் அந்த சில்லரை வியாபாரி!
பிலிப்பைன் தீவுத் தொகுதியில்1 பால் லைன்பார்கர்Paul Linebarger) என்ற ஓர் அமெரிக்கன், நீதிபதி உத்தியோகம் பார்த்துக் கொண்டிருந்தான், இவனிடம் ஒரு சீனன் சமையல்காரனாக இருந்தான். இவன் ஒரு சமயம், தன் எஜமானனிடம் சென்று, தனக்குச் சில நாட்கள் ரஜா கொடுக்க வேண்டுமென்று கேட்டான். எதற்கு என்று லைன்பார்கர் கேட்க, அவன் முதலில் சரியான பதில் சொல்லவில்லை. பிறகு வற்புறுத்திக் கேட்க, தான் ஸன்யாட் ஸென்னின் ரகசியச் சங்கத்தில் ஓர் அங்கத்தினன் என்றும், சீனாவுக்கு வருமாறு தனக்குச் சங்கத் தலைமைக் காரியாலயத் திலிருந்து உத்தரவு வந்திருக்கிறதென்றும், ஆதலின் தான் உடனே புறப்பட்டுப் போகவேண்டுமென்றும் சொன்னான். லைன்பார்கரும் அவனுக்கு ரஜா கொடுத்தனுப்பி விட்டான். சில மாதங்கள் வரை அவனைப் பற்றி தகவல் எதுவும் தெரியவில்லை. பிறகு ஒரு நாள் திடீரென்று அவன் லைன்பார்கர் முன் தோன்றி, தான் பழையபடி சமையல் வேலைக்கு வந்திருப்பதாகத் தெரிவித்துக்கொண்டான். அப்பொழுது அவன் கை கால்களெல்லாம் முடங்கிக் கிடந்தன. விசாரித்ததில் அவன் ஸன்னுக்காக சீனாவில் வேலை செய்துகொண்டிருந்த போது, மஞ்சூ அதிகாரிகளிடம் அகப்பட்டுக் கொண்டு விட்டதாக வும், அப்பொழுது அவர்கள் அவனை எலும்பு முறிய நன்றாகப் புடைத்துவிட்டதாகவும், இப்படித் தன் கதையை விவரமாகச் சொன்னான். லைன்பார்கர் இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டுப்போய், அவனுடைய தலைவனை -ஸன் யாட் ஸென்னை-தான் காண விரும்புவதாகத் தெரிவித்தான். பிறகு ஒரு சமயம் ஸன், பிலிப்பைனின் தலைநகரமான மணிலா (Manila) வுக்குச் சென்றிருந்த போது, இரு வருக்கும் சந்திப்பு ஏற்பட்டது. அந்த முதல் சந்திப்பிலிருந்து இரு வரும் நெருங்கிய நண்பர்களானார்கள். லைன்பார்கருக்கு ஸன் னிடத்தில் பெருமதிப்பு ஏற்பட்டது. இவனுடைய புரட்சி முயற்சி களுக்கு ஆதரவு காட்டினான். பின்னர் ஸன்னைப்பற்றி ஒரு நூலும் எழுதினான்.
சாங் செள(Chang Chou) என்ற ஒரு வாலிபன் ஹவாயி தீவில் பிறந்தவன். 1894ஆம் வருஷம் ஸன் அங்கு முற்போக்குச் சீனர் சங்கத்தை தாபித்தபோது அதில் ஓர் அங்கத்தினனாகச் சேர்ந்தான் வசீகரத் தோற்றமுடையவனாக இருந்த அவனிடத்தில் ஸன்னுக்கு அன்பும் நம்பிக்கையும் ஏற்பட்டன. அவனைப் பார்த்து ‘உன் னுடைய சேவை தேவைப்படுகிற பொழுது உன்னைக் கூப்பிடுவேன்; அப்பொழுது நீ வரத் தயாரா? என்று கேட்டான் ஸன். தயார் என்றான். சிறிதுகூடத் தயக்கமில்லாமல் அந்த இளைஞன்.
சில ஆண்டுகள் கழிந்தன. ஸன் ஜப்பானில் இருந்து கொண்டு, சீனாவில் புரட்சி நடைபெறுவதற்கான சில ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தான். அப்பொழுது சாங் சௌவின் சேவை தேவைப் பட்டது. உடனே ஹவாயி தீவை விட்டுப் புறப்பட்டு எப்படியோ யோகோஹாமா வந்து ஸன் முன்னர் ஆஜரானான். உடனே நீ ஹாங்காங்குக்குச் சென்று அங்கிருந்து காண்ட்டனுக்குப் போக வேண்டும் என்றான் ஸன். அப்படியே சாங் சௌ காண்ட்டனை அடைந்து, மேற்கொண்டு உத்தரவுக்குக் காத்துக் கொண்டிருந்தான்.
பிறகு ஸன்னே யோகோஹாமாவிலிருந்து ரகசியமாக காண்ட்டன் நகரம் போந்து, புரட்சிக்கான ஏற்பாடுகளைச் செய்ய ஓரிடத்தில் தங்கியிருந்தான். இவனோடு முக்கியமான சிலரும் இருந்தனர். ஸன், காண்ட்டனுக்கு வந்திருப்பது சாங் சௌவுக்குத் தெரியாது. இந்த நிலையில். சாங் சௌ இருப்பிடத்திற்குத் திடீ ரென்று ஒருவன் வந்து, ஸன் தங்கியிருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றான். அங்குச் சென்றதும், ஸன் சாங் செளவைப் பார்த்து நீ என்னுடைய மெய்க் காப்பாளனாக இருக்கவேண்டும் என்றான். அப்படியே இருக்கிறேன் என்று உடனே பதில் கிடைத்தது சாங் சௌவிடமிருந்து. அது முதற்கொண்டு ஸன்னை விட்டு சாங் சௌ ஒரு கணமும் பிரியவில்லை. ஸன் எங்குச் சென்றபோதிலும், நிழல்போல் பின் தொடர்ந்தான்.
உயிர் கொடுத்த தியாகிகள்
ஸன், ஐப்பானிலிருந்து கொண்டே சீனாவில் புரட்சிகள் நடைபெறு வதற்கு ஏற்பாடு செய்தான். ஆனால் இவை ஏற்கனவே சொன்னபடி கடைசி சமயத்தில பிசுபிசுத்துப் போயின. இவை பற்றின சில ருசிகரமான சம்பவங்களை இங்குக் கூற ஆசைப்படு கிறோம்.
காண்ட்டன் நகரத்தில் புரட்சி தொடங்க வேண்டுமென்று ஏற்பாடு. இதற்காக முன்கூட்டியே ஸன், ஜப்பானிலிருந்து அங்கு வந்திருக்கிறான். சாங் செளவைச் சந்தித்தது இந்தச் சந்தர்ப்பத்தில் தான்.
ஹாங்காங்கிலிருந்து காண்ட்டனுக்கு வர ஒரு தனிக்கப்பல் வாடகைக்கு பிடிக்கப்பட்டது. இதில் மூவாயிரம்பேர் வரவேண்டு மென்றும், இவர்கள் ஒளிவு மறைவாக ஆயுதங்கள் வைத்திருக்க வேண்டு மென்றும் ஏற்பாடு செய்யப்பட்டது. இவர்கள்தான் புரட்சிப் படையினர். இவர்கள் புரட்சியில் கலந்துகொள்ள வேண்டும்: அதனோடு, புரட்சி நடைபெற்றால் அப்பொழுது நகரத்திலுள்ள ஜனங்கள் கலவரப்பட்டுப் போகாதபடி அவர்களிடையே அமைதியை நிலை நிறுத்தவேண்டும்; இப்படி இரண்டு வித பொறுப்புக்களை இவர்கள் நிறைவேற்ற வேண்டுமென்று ஏற்பாடு செய்யப்பட்டது. மற்றும் இந்த மூவாயிரம் பேரும், காண்ட்டனில் வந்திறங்கியதும், ஒரே இடத்தில் தங்கக் கூடா தென்றும், நகரத்தின் பல பகுதிகளிலும் பரவலாகப் பிரிந்திருக்க வேண்டு மென்றும், அறிவிப்புக் கிடைத்த வுடனே எல்லாரும் ஒரே சமயத்தில் புரட்சிக்குக் கிளம்ப வேண்டு மென்றும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த மூவாயிரம் பேர் தவிர, இவர்களுடைய படுக்கை முதலிய சாமான்களைக் கொண்டுவரவும், இவர்களுக்கு அவ்வப்பொழுது தேவையான உணவுப் பொருள்களைக் கொண்டு தரவும், எழுநூறு கூலியாட்கள் ஹாங்காங் நகரத்திலிருந்து காண்ட்டனுக்கு வழக்க மாக வரும் சாதாரணக் கப்பல்களில் வரவேண்டுமென்றும் திட்ட மிடப்பட்டது. இந்தச் சாதாரணக் கப்பல்களில் எப்பொழுதும் கூட்டமிருக்கும்; இதனால் எழுநூறு பேர் ஒரே கப்பலில் வருவதால் இவர்களைப் பற்றி யாருக்கும் எவ்வித சந்தேகமும் உண்டாகாது. இந்தத் தகவல்களில் எதுவும் கூலியாட்களுக்குத் தெரிவிக்கப்பட வில்லை. காண்ட்டனுக்கு வாருங்கள்; அங்கே மேற்கொண்டு என்ன செய்யவேண்டுமென்பது சொல்லப்படும் என்று மட்டும் அறிவிக்கப்பட்டிருந்தது. கூலிக்கு வேலை செய்கிறவர்கள் எங்குக் கூலி கிடைக்கிறதோ அங்குச் செல்வது சகஜந்தானே?
இந்தமாதிரியான முன்னேற்பாடுகளைச் செய்து விட்டுத்தான் ஸன், காண்ட்டன் நகரத்திற்குத் தன் முக்கிய சகாக்களுடன் ரகசிய மாக வந்து ஒரு விடுதியில் தங்கினான். முன்னெச்சரிக்கையாக, சந்தேகத்திற் கிடமாயுள்ள ததாவேஜுகளை எரிக்கச் செய்து விட்டான். மஞ்சூ அரசாங்க ஒற்றர்களின் கண்ணுக்கு எதுவும் அகப்படக்கூடாதல்லவா?
இப்படியிருக்க, ஹங்காங்கிலிருந்து ஸன்னுக்கு ஒரு தந்தி வந்தது. மூவாயிரம் பேரைக் கொண்ட கப்பல் புறப்படவில்லை; துறைமுகத்திலேயே நிறுத்தப்பட்டு விட்டது. இதுதான் தந்தியின் சாரம். தந்தியைப் பார்த்ததும், ஸன், காரணத்தை விசாரித்துக் கொண்டிராமல், உடனே ஹாங்காங்குக்கு, அங்கிருந்து வருவதாக இருந்த எழு நூறு கூலிகளை அனுப்பவேண்டாமென்று தந்தி கொடுத்தான். துரதிருஷ்ட வசமாக, ஹாங்காங்கிலிருந்தவர்கள், இந்தத் தந்தியைச் சரியாகப் புரிந்துக் கொள்ளாமல், கூலிகளை ஏற்றி அனுப்பிவிட்டார்கள். கூலிகளும் காண்ட்டனுக்கு வந்த சேர்ந் தார்கள். இவர்களை வரவேற்று மேற் கொண்டு தகவல் தெரிவிக்க, துறைமுகத்தில் ஸன்னின் ஆட்கள் யாரு மில்லை. எனவே இவர்கள்- இந்த எழுநூறு கூலிகள் - நகரத்தில் சுற்றித் திரிந்து கொண் டிருந்தார்கள். இவர்கள் இப்படி எவ்வித நிலவரமும் இல்லாமல் சுற்றித் திரிவதை, காண்ட்டனிலிருந்த மஞ்சூ அரசாங்கத்தின் அரசப் பிரதிநிதி கேள்வியுற்று, இவர்களை உடனே சிறைப்படுத்தி விசாரிக்கச் செய்தான். தாங்கள் வந்த காரணத்தைச் சரியாக சொல்ல முடியாமல் விழித்தார்கள் இந்தக் கூலிகள் உடனே இவர்களிற் சிலரைச் சிரச்சேதம் செய்துவிடும்படி உத்தரவிட்டான் அரசப் பிரதிநிதி.
ஸன் இதைக் கேள்வியுற்றான். தன்னுடனிருந்த சகாக்களைத் தனித்தனியாய் பிரிந்து தலைமறைவாகப் போய்விடும்படி கூறினான். ஆயினும் இவர்களில் பதினாறு பேர் எப்படியோ மஞ்சூ ஒற்றர்களின் வசம் சிக்கிக்கொண்டனர். அவ்வளவுதான். பதினாறு பேரும் சிரச்சேதம் செய்யப்பட்டனர். ஸன்னும் மெய்க்காப்பாள னான சாங் சௌவும் ஒற்றர் களின் கையில் அகப்பட்டுக்கொள்ளா மல் தப்பி காண்ட்டன் ஆற்றோரத்திற்கு வந்து சேர்ந்தனர். ஆற்றுக்கு அக்கரையில் ஒரு கிறிதுவ தேவாலயம், அங்கு, ஸன்னின் உத்தர வுக்குக் காத்திருந்த சுமார் ஐந்நூறு புரட்சிவாதிகள் கூடியிருந்தனர். அந்தத் தேவாலயத்தைச் சேர்ந்த சீனக் கிறிதுவப் பாதிரியும் தேவாலயச் சிப்பந்திகளும் புரட்சிவாதிகளே! அவர்களனை வருக்கும் விஷயம் அறிவித்து உடனே கலைந்து போய் விடுமாறு எச்சரிக்கை செய்யவேண்டுமென்று துடித்தான் ஸன்.
ஆற்றோரத்திற்கு வந்ததும் ஸன், அங்கு, பிரயாணிகளை அக்கரைக்கு அழைத்துச் செல்வதற்காகக் காத்துக்கொண்டிருந்த வாடகைப் படகு ஒன்றில் ஏறி அமர்ந்தான் சாங் சௌவுடன். அந்தப் படகைச் செலுத்தியவர்கள் இரண்டு திரீகள். படகில் ஏறி அமர்ந் ததும், அந்த திரீகள் மாற்று உடை வைத்திருப்பதைக் கண்டான் ஸன். பளிச்சென்று ஒரு யோசனை தோன்றியது. தங்களிரண்டு பேருக்கும் அந்த திரீ உடைகளைக் கொடுக்குமாறும், அதற்காக ஒரு தொகையைக் கொடுப்பதாகவும் அவர்களிடம் பேரம் பேசி அந்த இரண்டு உடைகளையும் வாங்கிக் கொண்டான். அக்கரைக்கு வேகமாகப் படகைச் செலுத்தி, கிறிதுவ தேவாலயத்தின் அருகே கொண்டுபோய் நிறுத்தினால், அதற்காக வேறு அதிகக் கட்டணம் கொடுப்பதாக அந்தப் படகோட்டிகளுக்குக் கூறினான். கேட் பானேன் அவர்களுடைய சந்தோஷத்திற்கு? படகும் வேகமாகச் சென்றது. ஆற்றின் நடுவே சென்று கொண்டிருக்கையில், ஸன்னும் சாங் சௌவும், தங்கள் உடைகளை அகற்றி விட்டுப் பெண்ணுடை களைத் தரித்துக்கொணடார்கள். அந்த திரீ படகோட்டிகள் தலையில் அணிந்துகொண்டிந்த தொப்பி போன்ற ஒன்றை வாங்கித் தலையில் அணிந்துகொண்டார்கள். இருவருக்கும் பெண் வேஷம் பொருத்தமாகவே இருந்தது.
தவிர, ஸன்னும் சாங் சௌவும் மற்றச் சீனர்களைப் போல் தலை மயிரைப் பின்னித் தொங்கவிட்டுக் கொண்டிராமல் க்ராப் வைத்துக் கொண்டிருந்தார்கள். புரட்சி இயக்கத்தில் சேர்ந்த ஒரு சிலர்தான் இப்படி க்ராப் வைத்துக்கொண்டிருந்தார்களே தவிர, மற்றவர்கள், அதாவது மஞ்சூக்களல்லாத சீனர்கள் தலை மயிரைப் பின்னித் தொங்கவிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்படிப் பின்னித் தொங்கவிட்டுக்கொள்ள வேண்டு மென்பது மஞ்சூ அரசாங்கத்தின் உத்தரவாயிருந்தது. ஆளப்படும் ஜாதியார் என்று சீனர்களுக்கு உணர்த்தும் பொருட்டே இந்த உத்தரவு பிறந்தது. ஆனால் சீனர்கள் இதைச் சுலபமாக ஏற்றுக்கொண்டு விட வில்லை. எந்தெந்த வித மாகவோ எதிர்த்துப் போராடினார்கள்; எத்தனையோ உயிர்களைப் பலி கொடுத்தார்கள். கடைசியில் இந்த உத்தரவுக்கு இணங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குட்பட்டார்கள். தலைமயிருக்காக நடைபெற்ற இந்தப் போராட்டம். சீன சரித்திரத்தின் கறைபடிந்த பகுதிகளில் ஒன்று.2
ஸன்னும் சாங் சௌவும் ஆணுடையில் க்ராப் தலையுடன் பகிரங்கமாக வெளிவந்திருந்தால், இவர்கள் புரட்சி இயக்கத்தைச் சேர்ந்தவர்களோ என்று மஞ்சூ ஒற்றர்களின் சந்தேகப் பார்வை இவர்கள் மீது நிச்சயம் விழுந்திருக்கும், இதைத் தவிர்க்கவேண்டியே இவர்கள், மேற்சொன்ன விதமாகப் பெண்ணுடை தரித்துக் கொண்டார்கள். ஸன், எப்பொழுதுமே இந்த மாதிரி ஆபத்தான சமயங்களில் முன் யோசனை யுடனும் மனோ உறுதியுடனும் நடந்து வந்திருக்கிறான். இஃதிருக்கட்டும்.
படகும் அக்கரை சேர்ந்தது. அதிலிருந்து இரண்டு திரீ படகோட்டிகள்-ஸன்னும் சாங் சௌவும்தான்-அவசரமாக இறங்கி வேகமாகக் கிறிதுவ தேவாலயத்திற்குச் சென்றார்கள். அங்குள்ள வர்களுக்கு, உடனே தப்பிச் சென்றுவிடுமாறு சொல்லிவிட்டு, ஹாங்காங்குக்குப் புறப்படத் தயாராக அருகேயிருந்த ஒரு படகில் ஏறி, அங்குள்ள பெண்களோடு பெண்களாய்ப் போய் உட்கார்ந்து கொண்டுவிட்டார்கள். படகும் உடனே புறப்பட்டு விட்டது. ஹாங்காங்கை அடைந்ததும் ஸன்னும் சாங் சௌவும் அங்குச் சில நாட்கள் தலைமறைவாக இருந்தார்கள். பிறகு ஸன், சிங்கப்பூருக்குச் சென்றான். சாங் செளவை ஹோனோலூலுவுக்குச் செல்லுமாறும், அவசியம் ஏற்பட்டால் திரும்ப வரவழைத்துக் கொள்வதாகவும் சொல்லி யனுப்பினான். அவனும் அப்படியே ஹோனோலூலு வுக்குச் சென்று விட்டான்.
காண்ட்டன் நகரத்தில் நடைபெறுவதாக இருந்த இந்தப் புரட்சி இப்படிப் பிசுபிசுத்துப் போன பிறகு, ஸன்னின் நெருங்கிய நண்பர்களுக்கு ஒருவித மனச் சோர்வு ஏற்பட்டது. புரட்சி முயற்சியைக் கைவிட்டு விடுமாறு ஸன்னுக்கு ஆலோசனை கூறினார்கள். ஆனால் பொறுமைக்கும், மன உறுதிக்கும், விடாமுயற்சிக்கும் நிலைக்களமா யிருந்த ஸன், இந்த யோசனைக்கு இணங்கவில்லை. இணங்கியிருந்தால், சீன சரித்திரப் போக்கு வேறு விதமாகவல்லவோ திரும்பியிருக்கும்?
சில நாட்களுக்குப் பின் ஸன், சிங்கப்பூரிலிருந்து ஜப்பா னுக்குச் சென்றான். சென்று மின் போ பத்திரிகையின் ஆண்டு விழாவை டோக்கியோ நகரத்தில் விமரிசையாக நடத்தினான். அது போழ்து, மஞ்சூ ஆட்சியைத் தாக்கி நீண்டதொரு சொற்பொழிவு நிகழ்த்தினான். இது மஞ்சூ அரசாங்கத்திற்குத் தெரிந்தது. உடனே அது, ஸன்னை தேசப்பிரஷ்டம் செய்துவிடும்படி ஜப்பானிய அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டது. மஞ்சூ அரசாங்கத்திட மிருந்து நயமாகவும் பயப்படுத்தியும் எத்தனையோ சலுகைகளை ஜப்பான் பெற்றிருந்தது. அதற்குப் பிரதியாக, ஸன்னைப் பிரஷ்டம் செய்வதாகிற இந்தச் சிறு உபகாரத்தையாவது செய்யவேண்டாமா? தவிர, ஜப்பானில் படிக்கும் சீன இளைஞர்களிடையே ஸன்னின் புரட்சி எண்ணங்கள் தீவிரமாகப் பரவி வருவதையும், அது காரண மாக ஸன்னின் செல்வாக்கு அதிகரித்து வருவதையும் ஜப்பான் விரும்பவில்லை. ஐரோப்பிய ராஜ தந்திரத்தின் பரிச்சயம் அதற்கு ஓரளவு ஏற்பட்டிருந்தபடியால், ஸன்னின் வளர்ந்து வரும் செல் வாக்கு, தன்னைப் பிற்காலத்தில் பாதித்தாலும் பாதிக்கக்கூடுமென்று அது கருதியது. இந்தக் காரணங்களினால், ஸன்னுக்கு, நாட்டை விட்டு வெளியேறி விடும்படி உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவு காரணமாக, ஸன், அதிக நாட்கள் ஜப்பானில் தங்கியிருக்க முடியவில்லை. மறுபடியும் நாடோடி வாழ்க்கை இவனைக் கைதட்டி அழைத்தது. மின் போ பத்திரிகையின் நிரு வாகத்தையும், புரட்சிக் காரியாலய சம்பந்தமான வேலைகளையும், தன்னோடு உழைத்து வந்த இளைஞர் சிலரிடம் ஒப்படைத்துவிட்டு, இந்தோ சீனாவின் தலைநகரமான ஹனாய்(Hanoi)க்குச் சென்றான். ஏற்கனவே பிரெஞ்சுக் காரர் சிலருடைய ஆதரவு இவனுக்கு இருந்தது. ஷாங்காயில் மோரண்ட் என்ற நீதிபதி, இவன், மஞ்சூ அதிகாரிகளிடம் அகப்பட்டுக்கொள்ளாமல் தப்பிச் செல்வதற்குச் காரணமாயிருந்தானல்லவா?
ஒரு சமயம் இவன் ஷாங்காய் நகரத்தில் தங்கியிருந்த போது, ஒரு பிரெஞ்சு ராணுவ உத்தியோகதன் இவனிடம் வந்து, உத்தியோக காலம் முடிந்து ஓய்வு பெற்றிருக்கிற பிரெஞ்சு ராணுவ நிபுணர்கள் சிலர் இருக்கின்றனர் என்றும், வேண்டுமானால் அவர் களுடைய சேவையை உபயோகித்துக் கொள்ளலாமென்றும் கூறினான். அப்படியே ஸன்னும், எண்மருடைய சேவையை உப யோகித்துக்கொள்ளத் தீர்மானித்தான். அந்த எண்மரையும், சீனா வின் தெற்குப் பிரதேசங்களுக்கு அனுப்பி, ஆங்காங்குப் புரட்சிப் படைக்கு ஆள் சேர்க்குமாறு, அப்படிச் சேர்ந்த ஆட்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்குமாறும் கூறினான்.
இந்த மாதிரியான சில காரணங்களினால்தான், அதாவது இந்தோ சீனாவுக்குச் சென்று அங்கிருந்து கொண்டு சீனாவில் புரட்சியைக் கிளப்புவது சுலபமாயிருக்கும், அதற்குப் பிரெஞ்சுக் காரருடைய ஆதரவு இருக்கும் என்ற நம்பிக்கையினால்தான், ஸன் ஹனாய் நகருக்குச் சென்றான். அப்படியே ஹனாயிலிருந்து கொண்டு புரட்சிக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தான்.
இந்தச் சமயத்தில் சீனாவின் தென்மேற்கிலுள்ள ஷெக்குவான் (Szechuan) மாகாணத்தில் வரிகொடா இயக்கம் ஒன்று தோன்றியது. இந்தப் பகுதியில் ஜனத்தொகை குறைவு. அவ்வளவு செழுமையான பூமியென்று சொல்ல முடியாது. மிகுந்த உழைப்பின் பேரில்தான் ஜனங்கள், தங்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்களைப் பெற முடிந்தது. இந்த நிலையில் மஞ்சூ அரசாங்கம், செழுமையான மற்றப் பகுதிகளில் வரி விதிப்பதைப்போல் இங்கும் விதித்து வசூலிக்க முயன்றது. ஜனங்களால் செலுத்த முடியவில்லை. வரிகொடா இயக்க மொன்று தானாகவே தோன்றியது. இதை அடக்க அரசாங்கம், இரண்டு தளகர்த்தர்கள் தலைமையில் ஆயிரக்கணக்கான துருப்புக் களை இந்தப் பகுதிக்கு அனுப்பியது.
இந்த வரிகொடா இயக்கத்தை, தன் புரட்சி முயற்சிக்குச் சாதக மாகப் பயன்படுத்திக்கொள்ளத் தீர்மானித்தான் ஸன். பிரசாரம் செய்வதில் திறமை வாய்ந்த இருவரை மேற்படி பகுதிக்கு அனுப்பி, அரசாங்கத் துருப்புக்களிடையே புரட்சிப் பிரசாரம் செய்யச் செய்தான். புரட்சிப் படையொன்று இந்தப் பகுதிக்கு வந்து கொண் டிருக்கிறதென்று சொல்லச் செய்தான். அரசாங்கத்தின் சார்பாக வந்திருந்த இரண்டு தளகர்த்தர்கள் இந்தப் பிரசாரத்தில் லயித்துப் போய், ஸன் அனுப்பும் புரட்சிப் படை வந்து சேர்ந்ததும், அந்தப் படையுடன் தாங்கள் தங்கள் படையுடன் வந்து சேர்ந்துகொள்வ தாகக் கூறினர்.
வரிகொடா இயக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு இந்தத் தடவை வெற்றி கண்டுவிடலாமென்று ஓரளவு நம்பிக்கை கொண் டிருந்தான் ஸன். இந்த நம்பிக்கையுடன், டுங் மெங் ஹுயி சங்கத்தின் கிளை தாபனங்கள் பலவற்றிற்கும் தயாராயிருக்குமாறு தகவல் கொடுத்தான். ஹோனோலூலுவுக்குச் சென்றிருந்த சாங் சௌவுக்கு உடனே வருமாறு செய்தி விடுத்தான். முந்தின புரட்சி முயற்சி தோல்வி யுற்ற பிறகு ஸன் அவனை ஹோனோலூலுவுக்கு அனுப்பியது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கும்.
சாங் சௌ, ஹோனோலூலுவுக்குச் சென்றதும், லாபகரமான ஒரு தொழிலை ஆரம்பித்து லேசாக நடத்திவந்தான். ஸன்னிட மிருந்து உடனே ஜப்பானுக்கு புறப்பட்டு வருமாறு தகவல் கிடைத்த தும், நடத்தி வந்த தொழிலை அப்படியே விட்டுவிட்டு, தகவல் கிடைத்த அதே தினத்தில் ஜப்பானுக்குச் செல்லும் கப்பலில் புறப்பட்டுவிட்டான். ஸன்னின் இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தான். தலைவனிடத்தில் எவ்வளவு நம்பிக்கை! எவ்வளவு விசுவாசம்!
ஸன், இந்தோ சீனாவிலிருந்து ஒரு புரட்சிப் படையைத் தயாரித்து வரிகொடா இயக்கப் பகுதிக்கு அனுப்பிவிட்டான். ஜப்பானிலிருந்து சில யுத்த தளவாடங்களை இந்தோ சீனாவுக்கு அனுப்புமாறு டோக்கி யோவிலுள்ள புரட்சிக் காரியாலயத்துடன் ஏற்பாடு செய்தான். அந்தத் தளவாடங்கள் கிடைத்ததும், தானே ஒரு படையுடன் முந்தி அனுப்பப்பட்ட படைக்குத் துணையாக மேற்படி வரிகொடா இயக்கப் பகுதிக்குச் செல்லவேண்டுமென்பது இவன் திட்டம், ஆனால் இவன் எதிர்பார்த்தபடி ஜப்பானிலிருந்து எவ்வித தளவாடங்களும் வரவில்லை, அங்கே டோக்கியோ சங்கத்தில் அங்கத்தினர்களுக்குள் பிளவு!
முதலில் அனுப்பப்பட்ட புரட்சிப் படையினர், வரிகொடா இயக்கப் பகுதிக்கு வெகு சாமர்த்தியமாகச் சென்றுவிட்டனர்; யுத்த தளவாடங்களுடன் ஸன்னை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஸன், இந்தோ சீனாவிலிருந்து புறப்படவே முடியவில்லை. இவன் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மேற்படி புரட்சிப் படை, ஒன்றும் செய்ய முடியாமல் வேறோரிடத்திற்குப் பின்வாங்கிக் கொண்டுவிட்டது. இந்தப் பலவீனத்தைத் தெரிந்துகொண்டனர், அரசாங்கப் படையைச் சேர்ந்த மேற்சொன்ன இரண்டு தள கர்த்தர்கள்; புரட்சிப் படையுடன் எவ்வித தொடர்பும் கொள்ளா மல் ஒதுங்கிவிட்டனர்; எப்பொழுதும்போல் அரசாங்க விசுவாசி களாக நடந்து கொண்டனர். வரிகொடா இயக்கமும் ஒருவாறு ஒடுங்கிவிட்டது; ஸன்னின் இந்தத் தடவை புரட்சி முயற்சியும் பிசுபிசுத்துப் போய்விட்டது.
பார்த்தார்கள் இந்தோ சீனாவிலுள்ள பிரெஞ்சு அதிகாரிகள். இவன் விஷயத்தில் ஓரளவு அநுதாபம் காட்டி வந்தார்களாயினும், தங்கள் பிரதேசத்தில் இவன் ஒரு புரட்சிப் படையுடன் இருந்து வருவதை விரும்பவில்லை. தவிர, மஞ்சூ அரசாங்கத்தார், இவனை நாட்டை விட்டு வெளியேற்றி விடும்படி வற்புறுத்தி வந்தனர்; இவனை அகப்படுத்தவும் ஆட்கள் விட்டனர். எனவே, ஸன், இந்தோ சீனாவை விட்டு வெளியேற வேண்டியவனானான்.
ஆனால் தான் தயாரித்து வைத்திருந்த புரட்சிப் படையை என்ன செய்வது? அதற்கு ஏதேனும் ஒரு வேலை கொடுக்க வேண்டு மல்லவா? யோசித்தான். ஹுவாங் ஸிங் தலைமையில் அப்படையைச் சீனாவின் கடலோரப் பிரதேசங்களுக்கு அனுப்பி, ஆங்காங்கு நிறுவப்பட்டிருந்த மஞ்சூ அரசாங்கப் படைகளைத் தாக்கும்படி செய்தான். ஆனால் இதனால் அதிகமான பயன் உண்டாகவில்லை. கடைசியில் இந்தப் படையின் ஒரு பகுதி சிங்கப்பூரை அடைந்தது. ஹுவாங்ஸி மட்டும் ஒரு சிலருடன் சீனாவிலிலேயே தங்கி, புரட்சிப் படைக்கு மேலும் ஆட்கள் சேர்த்து வந்தான்.
இனி இந்தோ சீனாவில் இருக்க முடியாத நிலையில், ஸன்னும் சாங் சௌவும் ஹனாய் நகரத்திலிருந்து புறப்பட்டார்கள். இருவரும் ஒரு கிராமத்தண்டை வருகையில் இரண்டு பிச்சைக்காரர்களைக் கண்டார்கள்; அவர்களுக்குத் தங்கள் உடைகளையும் ஒரு தொகை யையும் கொடுத்து, அவைகளுக்குப் பதிலாக அவர்களுடைய கந்தல் துணிகளை வாங்கி உடுத்திக் கொண்டார்கள்; முகத்தையும் அழுக்குப்படுத்திக் கொண்டார்கள். இந்தப் பிச்சைக்காரக் கோலத் துடன் இருவரும், நடந்தும் ஆற்று மார்க்கமாகவும் கடல் வழியாக வும் எப்படியோ மெதுவாக ஹாங்காங் நகரம் வந்து சேர்ந்தார்கள். இங்குச் சிறிது காலம் மஞ்சூ ஒற்றர்களின் கண்ணுக்குப் படாமல் ஒளிந்து வசித்து வந்தனர்.
டோக்கியோ சங்கத்தில் பிளவு ஏற்பட்டதென்று சொன்னோ மல்லவா,1 அது ஸன்னுக்கு விரோதமாகவே திரும்பியது. சங்கத்தைச் சேர்ந்த இரண்டு அங்கத்தினர்கள், ஸன், தன் தலைமைப் பதவியை துஷ்பிரயோகப்படுத்தி வருகிறானென்றும், அடைய முடியாத ஒரு லட்சியத்திற்காக - குடியரசு லட்சியத்திற்காக ஏராளமான உயிர் களை அனாவசியமாகப் பலி கொடுத்து வருகிறானென்றும், சங்கத்தின் பணத்தைத் தன் சொந்த நலனுக்குச் செலவழித்துக் கொள்கிறானென்றும், இப்படி அபாண்டமான பழிகளை சுமத்தி ஒரு துண்டுப் பிரசுரத்தை அச்சிட்டு எங்கும் வழங்கி வந்தார்கள். இவ்விருவருக்கும் ஸன் எவ்விதத் தீங்கும் செய்ததாகத் தெரிய வில்லை. அப்படியிருந்தும் இவர்கள் ஏன் இங்ஙனம் செய்தார் களென்பது ஒரு புதிர்தான்!
தவிர, சங்க அங்கத்தினர் சிலர், ஸன்னின் ஆலோசனையைக் கேளாமலே, ஜப்பானிய தளகர்த்தன் ஒருவனை சங்கத்தின் ராணுவ ஆலோசகனாக நியமித்துக் கொண்டார்கள். இதனால் தீமையே விளைந்தது. சங்கத்தின் ரகசிய நடவடிக்கைகளை யெல்லாம் இவன் அவ்வப் பொழுது தன் அரசாங்கத்திற்குத் தெரிவித்து வந்தான். இதனால் அது - ஜப்பானிய அரசாங்கம்-சங்கத்தை இனி ஓங்க விடக் கூடாதென்று தீர்மானத்திற்கு வந்தது. மின் போ பத்திரிகை இனி வெளிவரக் கூடாதென்று தடை செய்துவிட்டது. டுங் மெங் ஹுயி சங்கத்தின் காரியாலயத்தையும் மூடும்படி செய்துவிட்டது.
இப்பொழுது ஸன் எங்கே? சீனா, ஜப்பான், இந்தோ-சீனா, ஜாவா சுமத்ரா முதலிய கிழக்கிந்தியத் தீவுகள் ஆகிய பலவும் இவன் வாசத்திற்குப் புறம்பானவையாகி விட்டன. எங்கே செல்வது? தோல்வி மேல் தோல்வி. சங்கத்தில் பிளவு. பண முடை எப்படிப்பட்ட திண்ணிய உள்ளம் படைத்தவனையும் திகைக்க வைக்கக்கூடிய நிலைமை. ஆனால் ஸன், திகைக்கவில்லை; சோர்வு கொள்ள வில்லை; ஊக்கம் குன்ற வில்லை. மீண்டும் அமெரிக்கா சென்று, தன் புரட்சி முயற்சிக்கு அங்குப் பணம் திரட்டுவதென்று தீர்மானித்தான். அப்படியே 1910ஆம் வருஷம், ஹனாயிலிருந்து ஹாங்காங்குக்கு ரகசியமாக வந்து, அங்கிருந்து ஹவாயி தீவு வழியாக அமெரிக்கா வுக்குச் சென்றான். இவன் சென்று கொண்டிருக்கட்டும். இவன் சென்ற பிறகு சீனாவில் என்ன நடந்ததென்று பார்ப்போம்.
புரட்சிப் படையில் புதிதாகச் சேர்ந்த ஒரு சிலர் ஒருங்கு கூடி 1910ஆம் வருஷம் காண்ட்டன் நகரத்தில் ஒரு சிறு புரட்சியை எழுப்பினர். ஆனால் இவர்களுக்குச் சரியான தலைவனில்லை. யுத்த பரிச்சயமில்லாத ஒருவன் - ஸன்னின் ஆள்தான் - தலைமை தாங்கி புரட்சியை நடத்த முற்பட்டான். ஆனால் இவன், எதிர்பாராது ஏற்பட்ட ஒரு குண்டு விபத்தினால் மாண்டு போனான். புரட்சி முயற்சியும் பிசுபிசுத்துப் போய்விட்டது.
1911ஆம் வருஷம் மார்ச்சு மாதம் இருபத்து நான்காந் தேதி, காண்ட்டன் நகரத்தில் மறுபடியும் ஒரு புரட்சிக்கு ஏற்பாடு செய்யப் பட்டது. இதுதான் கடைசி தடவையாகத் தோல்வியடைந்த புரட்சி. இதற்குத் தலைமை தாங்கியவன் ஹுவாங் ஸிங். இவன் வசம் ஐந்நூறு பேர் இருந்தனர். காண்ட்டன் நகரத்திற்கு வெளிப்புறத்தில் இன்னும் நூற்றுக்கணக்கான பேர் வைக்கப்பட்டிருந்தனர். போதிய யுத்த தளவாடங்கள் ஊருக்குள் வந்து சேர்ந்துவிட்டதாகத் தகவல் தெரிந்ததும், இவர்கள் மேற்சொன்ன ஐந்நூறு பேருடன் வந்து சேர்ந்துகொள்ள வேண்டு மென்பது ஏற்பாடு, யுத்த தளவாடங்கள் நல்ல பெட்டிகளில் அடக்கம் செய்யப்பட்டு, மருந்து சாமான் களைக் கொண்ட பெட்டிகள் என்று சொல்லி நகருக்குள் கொண்டு வரப்பட்டன. நகருக்குள் வந்த பிறகு, இவை, மணமக்களுக்கு விவாக காலத்தில் அளிக்கப்படவிருக்கும் பரிசுகள் என்று சொல்லப்பட்டன. மஞ்சூ அதிகாரிகளுக்கு எந்தவிதமான சந்தேகமும் தோன்றக் கூடாதென்பதற்காக, புரட்சியின் முன்னணியில் நிற்கக்கூடிய சுமார் நூறு பேருக்கு விவாகம் நடத்துவிக்கப் பெற்று, அவர்களுக்கு மேலே சொன்ன பரிசுப் பெட்டிகள் வழங்கப்பெற்றன! சிலர் நெருங்கிய உறவினர்களையே கல்யாணம் செய்து கொண்டனர்! சிலர் தங்கள்
மனைவிமார்களையே கல்யாணம் செய்துகொண்டனர்!
ஒரு நேரத்தைக் குறிப்பிட்டு அந்த நேரத்தில் புரட்சி தொடங்கப் பட வேண்டுமென்று ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் தபால் தந்திப் போக்கு வரத்துக்களில் எதிர்பாராத விதமான இடைஞ்சல் ஏற்பட்டு விட்டபடியால், குறிப்பிட்ட நேரத்தை எல்லோருக்கும் அறிவிக்க முடியவில்லை. புரட்சி தொடங்கக் காத்திருந்தவர் களிடையே சலசலப்பு ஏற்பட்டது. இதை மஞ்சூ அதிகாரிகள் மோப்பம் பிடித்துவிட்டனர். நகரத்தின் முக்கியமான பகுதிகளில் பந்தோபது ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இது தெரிந்ததும் ஹுவாங் ஸிங், புரட்சி தொடங்குவதைத் தள்ளிப் போட்டிருக்கலாம், ஆனால் அவன் அப்படிச் செய்ய விரும்பவில்லை. தள்ளிப்போட்டால், புரட்சிக்காரர்களிடையே இன்னும் அதிகமான சோர்வு ஏற்பட்டு விடுமென்று கருதினான். எனவே, குறிப்பிட்ட நேரத்தில் சுமார் நூறு பேருடன் மஞ்சூ அரசப் பிரதிநிதி மாளிகையைத் தாக்கினான், தாக்கி வெற்றி காணும் சமயத்தில், சுமார் இரண்டாயிரம் பேர் கொண்ட அரசாங்கப் படையொன்று வந்துவிட்டது. இருதரப்புப் படைகளுக்கும் ஐந்து மணி நேரத்திற்கு அதிகமாகச் சண்டை நடைபெற்றது. கடைசியில், புரட்சிப் படையினரில் நாற்பத்து மூன்று பேர் இறந்துபட்டனர்; இருபத்தொன்பது பேர் அரசாங்கப் படையினர் வசம் அகப்பட்டுக் கொண்டனர். ஹுவாங் ஸிங் உள்பட சுமார் முப்பது பேர் தப்பி யோடி விட்டனர். ஹுவாங் ஸிங்கின் இடக்கை விரல்களில் இரண்டு துண்டித்துப் போயின. அகப்பட்ட இருபத்தொன்பது பேரும் உடனே சிரச்சேதம் செய்யப்பட்டனர். ஆக, எழுபத்திரண்டு பேர் இந்தப் புரட்சியில் பலியாயினர்.
அடுத்தாற்போல் ஏறக்குறைய ஆறு மாதங்கழித்து நடை பெற்ற புரட்சி வெற்றி பெறுவதற்கு இந்த எழுபத்திரண்டு பேர் பலியாக வேண்டியது. அவசியமாயிருந்தது போலும். ஏனென்றால் இந்த எழுபத்திரண்டு பேர் உயிர் துறந்தது சீனா முழுவதிலும் என்று மில்லாத ஒரு பரபரப்பை உண்டுபண்ணியது. அரசாங்க ராணுவத்தி லுள்ளவர்கள், தாங்கள் எடுத்துக்கொண்ட - ராஜ விசுவாசப் பிரமாணத்தைப் பொருட் படுத்தாமல், புரட்சிவாதிகளுக்கு ஆதரவு காட்டத் தொடங்கினார்கள். புரட்சியை ஒடுக்க அனுப்பப்பட்ட படையினரிற் பெரும்பாலோர் புரட்சி வாதிகளாகவே இருந்தார் களென்றால் வேறு சொல்ல வேண்டுமா? நாட்டில் ஆங்காங்கே அரசாங்கத்திற்கு விரோதமான சிறு சிறு எதிர்ப்புக்கள் எழுந்து எழுந்து அடங்கின. மஞ்சூ அரச வமிசத்தைச் சேர்ந்த பிரபுக்கள் பலர் மாயமாய் உயிரிழந்தனர். இப்படியொருபுறம் நடை பெற்றுக் கொண்டிருக்க, மற்றொரு புறத்தில், டுங் மெங் ஹுயி சங்கத்திற்கு, ஆள் பலம், பணபலம் எல்லாம் சேர்ந்தது. பொது ஜனங்கள், பலி யான எழுபத்திரண்டு பேரையும் தேசிய வீரர்களாகப் போற்றத் தலைப்பட்டனர்.
குடியரசு ஏற்பட்ட பிறகு, பலியான இந்த எழுபத்திரண்டு பேருக்கும் காண்ட்டன் நகரத்தில் ஒரு ஞாபகச்சின்னம் நிறுவப் பெற்றது. இன்றளவும் சீனர்களுக்கு இஃதொரு புனித யாத்திரை தலமாக இருந்து வருகிறது.
இனி அமெரிக்காவுக்குப் பணந்திரட்டச் சென்ற ஸன்னைப் பற்றிச் சிறிது கவனிப்போம்.
வெற்றி வருமுன்னே
அமெரிக்கா, ஸன்னுக்கு ஏற்கனவே பழக்கமான நாடு. இதனால் இவனுடைய பணந்திரட்டும் முயற்சியில் அதிக கஷ்டம் இருக்கவில்லை. ஒரு சில வாரங்களில் ஆயிரக்கணக்கான டாலர்கள் திரட்ட முடிந்த தென்று இவனே ஓரிடத்தில் சொல்லியிருக்கிறான். அமெரிக்காவிலிருந்த சீனர்கள், இவனுடைய புரட்சி முயற்சிகளுக்கு ஆதரவு தந்தார்களென்பது ஒருபுறமிருக்க, இவனுடைய தன்னல மற்ற சேவையிலும், கண்ணியமான நடத்தையிலும் அதிகமான நம்பிக்கையும் மதிப்பும் கொண்டிருந்தார்களென்பதை யாரும் மறுக்க முடியாது. இவனுடைய நற்பண்புகள்தான் இவனுக்குப் பணத்தைச் சேகரித்துக் கொடுத்தன வென்று சொல்லவேண்டும். சேகரித்த பணத்தை அவ்வப்பொழுது பல வழிகளில் சீனாவுக்கு அனுப்பி புரட்சி முயற்சிகளுக்கு ஆக்கமளித்து வந்தான்.
சீனாவின் பழமையான நாகரிகத்திலும் மற்றச் சிறப்பியல்பு களிலும் அதிக மதிப்புக்கொண்டிருந்த அமெரிக்கர் சிலரும், ஸன்னிடம் அதிக மதிப்புக் காட்டினர்; சீனாவின் எதிர்கால நல்வாழ்வில் இவனுக்கிருந்த திட நம்பிக்கையைக் கண்டு வியந்தனர்; எல்லாவற்றிற்கும் மேலாக இவனுடைய எளிய வாழ்க்கை, உயர்ந்த நோக்கம், பரந்த அறிவு, விசால மனம் இன்ன பலவற்றையும் கண்டு, இவன் தவறான பாதையில் செல்லக்கூடியவனன்று என்பதை நன்கு உணர்ந்தனர்; இவன் புரட்சி முயற்சிகளுக்கு ஒருவாறு ஆதரவும் காட்டினர்.
ஸன், அமெரிக்காவிலுள்ள முக்கியமான நகரங்களுக்குச் சென்றதோடல்லாமல் கானடாவிலுள்ள சில பகுதிகளுக்கும் சென் றான். கானடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia) என்பது ஒரு மாகாணம். இங்குச் சீனர் பலர், பலதுறைத் தொழில்களில் ஈடுபட்டு நல்ல பணம் சம்பாதித்து வந்தனர். இவர்களுடைய ஆதரவை நாடுவதற்காகவே ஸன் இந்த மாகாணத்திற்குச் சென்றான். ஓரளவு ஆதரவும் கிடைத்தது. இந்த மாகாணத்தில் தங்கியிருக்கும் பொழுது ஜே. எல்லி பார்க்கர் (J. Ellis Barker) என்ற ஓர் அறிஞனைச் சந்திக்கும் வாய்ப்பு இவனுக்குக் கிடைத்தது.
இந்த எல்லி பார்க்கர், சீன சரித்திரத்தையும் அதன் இலக்கியம், அரசியல் முதலியவற்றையும் நன்கு அறிந்தவன்; அவற்றை நல்லெண்ணத்துடன் பார்க்கிறவன். இவன் தங்குமிடத் திற்கு ஸன் அடிக்கடி சென்று சீனாவைப் பற்றிப் பேசிக்கொண் டிருப்பான். இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள்.
எல்லி பார்க்கர், ஒரு பத்திரிகையில் பின்வருமாறு எழுதுகிறான்:-
ஒரு புரட்சியின் தன்மை, அதற்குத் தலைமை தாங்கி நடத்தும் தலைவனின் தன்மையைப் பொறுத்திருக்கிறது. எனவே டாக்டர் ஸன் யாட் ஸென்னுடன் எனக்கு ஏற்பட்ட பழக்கத்தின் விளைவாக, அவனைப் பற்றி என் மனத்தில் எழுந்த அபிப்பிராயத்தை இங்குச் சொல்லுகிறேன்.
டாக்டர் ஸன் யாட் ஸென், நடுத்தர உயரம்; ஒல்லியான மனிதன் என்றே சொல்லவேண்டும்; ஆனால் உடல் கட்டுடையவனாகக் காணப் படுகிறான். சுமார் நாற்பத்தைந்து வயது இருக்கும். சுத்தமாக இங்கிலீஷ் பேசுகிறான். மிகவும் அடக்கமுள்ளவன். யாரிடத்திலும் சிறிது ஒதுங்கினாற் போலிருந்து பழகும் சுபாவ முடையவன். எதையும் ஆலோசித்து நின்று நிதானமாகவே பழகு கிறான். அவன் தெளிந்த ஞானமுடையவனாகவும் சிறந்த சிந்தனை யாளனாகவும் காணப்படுகிறான்.
டாக்டர் ஸன் யாட் ஸென், தன்னலமற்ற நோக்கத்தினால் உந்த ப்பட்டு, காரியங்களை செய்கிறவனாகவே தென்படுகிறான். கிளர்ச்சி செய்வதையே தொழிலாகக் கொண்டவர்கள். தங்களுக்குச் சாதகத்தையே தேடிக்கொள்வார்கள். ஆனால் ஸன் யாட் ஸென் அப்படிப்பட்டவனா யில்லை. தன்னுடைய கிளர்ச்சியினால் தான் எந்த விதமான சாதகத்தையும் அடைய அவன் விரும்பவில்லை. சாதாரண தொழிலாளர்கள் நாடும் ஒரு ஹோட்டலில், எவ்வித வசதியுமில்லாத ஒரு சிறிய அறையில்தான் அவன் தங்கியிருக் கிறான். சாதாரண உடையைத்தான் உடுத்துகிறான். குறைவான சாமான்களையே வைத்துக் கொண்டிருக்கிறான். நான் நெருக்கிக் கேட்டபோது, அவன் புன்சிரிப்புடன் நிதானமாக, தன் தலையைக் கொண்டு வருகிறவர்களுக்கு மஞ்சூ அரசாங்கமும் மற்ற மாகாண அரசாங்கங்களும் அளிப்பதாகப் பிரகடனம் செய்த சன்மானத் தொகையைப் பற்றிக் கூறினான். இவைகளைக் கூட்டிப் பார்த்தால் சுமார் ஒரு லட்சம் பவுன் இருக்கும்.
ஒரு நாள் அவன், நான் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வந்தான். இரவு பன்னிரண்டு மணிவரையில் சீனா சம்பந்தப்பட்ட பல விஷயங்களைப் பற்றி இரண்டு பேரும் பேசிக்கொண்டிருந்தோம். பிறகு அவன், சுமார் முக்கால் மைல் தூரத்திலுள்ள தன் ஹோட்ட லுக்குத் திரும்பிப் போக யத்தனித்தபோது, நான் அவனோடு செல்ல விரும்பினேன். அவனிடத்தில் எனக்குள்ள மரியாதையைக் காட்டும் பொருட்டும், தனியே செல்லும் அவனை யாராவது தாக்கினால் அந்தச் சமயத்தில் அவனைப் பாதுகாக்கும் பொருட்டும், நான் கூட வருவதாக வற்புறுத்திச் சொன்னேன். ஆனால் அவன் கண்டிப்பாக மறுத்துவிட்டான். உன் தலைக்கு லட்சம் பவுன் சன்மானம் என்ற ஆபத்து இருக்கிறபொழுது, இந்த அயலூரில் இந்த நள்ளிரவில் ஜன நடமாட்டமில்லாத தெருக்களின் வழியே நீ தனியாகச் செல்லக் கூடாது உன்னைப்பற்றி உனக்கு எவ்வித அச்சமும் இல்லையா னாலும், நீ கொண்டுள்ள லட்சியத்திற்காகவும் உன்னுடைய நாட்டுக்காகவும் உன் உயிரை நீ காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று நான் கடைசியாகச் சொன்னேன். அவன் இதற்குப் புன்சிரிப்புடன் நிதானமாகப் பின்வருமாறு பதில் கூறினான்:- சில வருஷங்களுக்கு முன் அவர்கள் என்னைக் கொன்றிருந்தால், நான் கொண்டுள்ள லட்சியத்திற்குச் சிறிது ஊனம் ஏற்பட்டிருக்கும். இப்பொழுது என் உயிரைப்பற்றிக் கவலையில்லை. எங்களுடைய தாபனம் பூரணமான தாபனமாகி விட்டது. என்னுடைய தானத்தை வகிக்க எத்தனையோ சீனர்கள் இருக்கிறார்கள். என்னை அவர்கள் மஞ்சூக்கள் - கொன்றால் ஒன்றும் முழுகிப் போய்விடாது.
இந்தச் சிறிய சம்பவம், அந்த மனிதனுடைய சுபாவத்திற்கும் மனத் திண்மைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. ஹோட்டல் வாயிலண்டை வந்து அவனுக்கு விடைகொடுத்தனுப்பினேன். அவனுடைய க்ஷேமத்திற்கு நான் பொறுப்பாளி என்ற உணர்ச்சி எனக்கு ஏற்பட்டது. எனவே அவனைப் பின்தொடர்ந்தேன். அவனை அழைத்துக் கொண்டு செல்லவோ பின் தொடர்ந்து செல்லவோ ஒரு சீனன்கூட இல்லை. அவன் சென்ற வீதிகளிலோ ஜன நடமாட்டமே இல்லை. அன்று இரவு எந்த ஒரு சீனனும் ஆசைப்பட்டிருந்தால், ஸன்னின் தலையை வாங்கிவிட்டு ஒரு லட்சம் பவுன் சம்பாதித்திருக்கக்கூடும் .
“டாக்டர் ஸன் யாட் ஸென், எளிய சுபாவமுடையவனாகவும், இன்ப துன்பங்களினால் பாதிக்கப்படாதவனாகவும், அடக்கம் நிறைந்த வனாகவும் இருக்கிறான். உண்மையிலேயே அவன் ஒரு பெரிய மனிதனாக விளங்குகிறான். அவனை பெஞ்ஜமின் பிராங்க்லி னுடனோ1 கரிபால்டியுடனோ2 ஒப்பிடுதல் பொருத்தமாகாது. அவன் தனிச் சிறப்புடையவன். உலகத்து மிகப்பெரிய மனிதர்களுள் ஒருவனாக மதிக்கப்பட வேண்டியவன். உலகத்திலேயே மிகப் பழமையானதும், இருக்கின்ற நிலையிலேயே இருப்பதில் திருப்தி யடைகின்றதுமான ஒரு ராஜ்யத்தைச் சீர்திருத்தி அமைக்க வேண்டு மென்றும், அந்த ராஜ்யத்தைக் குடியரசாக மாற்றவேண்டு மென்றும் இதுவரை யாருமே முயன்ற தில்லை. இது மிகப்பெரிய காரியம். ஜப்பானில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டுமென்பது, சீனாவைப் புனர் நிர்மாணம் செய்வதென்பதோடு ஒப்பிட்டுப் பார்க்கிறபோது, முன்னது மிகச் சிறிய விஷயமென்றே சொல்ல வேண்டும்.”
எல்லி பார்க்கர், ஸன்னைச் சந்தித்துப் பேசிய பிறகு, சீனா, மஞ்சூ ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறவேண்டிய அவசியத்தை யும், ஸன் நடத்திவரும் புரட்சி இயக்கத்தின் நியாயத்தையும் நன்கு உணர்ந்தான். மேலும் எழுதுகிறான்:-
“சுதந்திரம் பெற வேண்டுமென்று சீனர்கள் விழைவது நியாயமே. சுதந்திரம் பெறுவதற்காகவும் தங்கள் நாட்டில் பொதுஜன ஆட்சி நிலவ வேண்டுமென்பதற்காகவும் அவர்கள் நடத்தும் இந்தப் போராட்டத்தில உலகத்தாரின் அநுதாபத்தைப் பெற அவர்கள் தகுதியுடைவர்கள். அவர்கள் நடத்தும் இந்தப் போராட்டத்தில் ஐரோப்பாவோ அமெரிக்காவோ தலையிடுதல் கூடாதென்று எச்சரிக்கை செய்கிறேன். புரட்சி வாதிகள், கூடிய சீக்கிரத்தில் மஞ்சூ ஆட்சிக்கு முடிவுகட்டி விடுவார்களென்று நம்பலாம். சீன மக்களுடைய மதிப்பில் மஞ்சூ ஆட்சி மிகவும் தாழ்வுற்றிருக்கிறது. எனவே அது நீண்ட காலம் நிலைத்திருக்க முடியாது.”
சீனாவின் உண்மையான நிலைமையை ஸன், இந்த அமெரிக்க அறிஞனுக்கு எவ்வளவு அழகாக உணர்த்தியிருக்க வேண்டுமென்பது இதனால் நன்கு தெரிகிறது.
ஸன், பார்க்கரோடு பேசிக்கொண்டிருந்தபோது, சீனா, குடியரசு முறைக்கு மிகவும் தகுதியுடையதென்று சொல்லி ஆட்சித் திட்டம் ஒன்றையும் வகுத்துக் காட்டினான். சீனாவிலுள்ள ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒவ்வொரு சட்டசபை இருக்கவேண்டு மென்றும், இந்த மாகாண சட்டசபைகளுக்கு மேலாக அகில சீனாவுக்கும் ஒரு சட்டசபை இருக்கவேண்டுமென்றும், இந்த முறையினால், மத்திய அரசாங்கத்தின் அதிகமான தலையீடு இல்லாமல் மாகாண அரசாங்கங்கள் தங்கள் அலுவல்களைப் பொறுப்புடன் கவனிப்பது சாத்தியமாகுமென்றும், இந்தத் திட்டத்தில் விளக்கியிருந்தான்.
சீனாவில் குடியரசு ஏற்படுமானால், அப்பொழுது அங்குள்ள அந்நியர்களின் உயிருக்கோ பொருளுக்கோ ஆபத்து ஏற்படுமென்று யாரும் அஞ்சவேண்டாமென்றும், அந்நியர்களுக்கு எல்லா வித பாதுகாப்பு களும் அளிக்கப் பெறுமென்றும், உலகத்து எல்லா நாடு களுடனும் சீனக் குடியரசானது நட்புரிமையுடன் பழகுமென்றும் உறுதி கூறினான். ஆனால் அதே சமயத்தில், சீனா, மற்ற வல்லரசு களினால், தான் கண்ணியமாக நடத்தப்பட வேண்டுமென்று எதிர்பார்க்குமென்று சொல்ல இவன் மறந்துவிடவில்லை. உலக வல்லரசுகளின் மத்தியில் சீனா, கௌரவமான தானத்தை வகிக்க வேண்டுமென்பதை இவன் முக்கிய மாகக் கருதினான். அதுவே இவன் நோக்கங்களில் ஒன்றாயிருந்தது.
ஸன் அமெரிக்காவில் முக்கியமான ஒவ்வொரு நகரத்திலும் பிரசாரம் செய்துகொண்டு வருகையில் ஒருநாள், அதாவது 1911ஆம் வருஷம் அக்டோபர் மாதம் இரண்டாவது வாரம் சீனாவிலுள்ள ஹாங்க்கோ(Hankow) நகரத்திலிருந்து இவனுக்கு ஒரு தந்தி வந்தது. இது சங்கேத வார்த்தைகளடங்கிய தந்தி. இந்த வார்த்தைகளுக்குச் சரியான அர்த்தங்களடங்கிய அகராதியொன்று இருக்கும். இந்த அகராதியின் பிரதிகள், தந்திகொடுப்போர் வசமும் தந்தி பெறு வோர் வசமும் இருக்கும். சங்கேத வார்த்தைகளடங்கிய தந்தி செல்லும்போதோ பெறும்போதோ இந்த அகராதியைப் பார்த்தே செய்திகளைத் தெரிவிப்பர்; தெரிந்து கொள்வர். பிறருக்குத் தெரியாவண்ணம் செய்திகளைப் பரிமாறிக்கொளள இந்த முறை கையாளப்படுவது வழக்கம். டுங் மெங் ஹுயி சங்கத்தைச் சேர்ந்த வர்கள், புரட்சி இயக்கம் சம்பந்தமான செய்திகளைப் பரிமாறிக் கொள்ள இந்த முறையையே கையாண்டனர். இந்த முறையில் ஸன்னுக்கு ஹாங்க்கோவிலிருந்து தந்தி வந்தது. ஆனால் இந்த வாசகங்களைப் புரிந்துகொள்வதற்கு ஏதுவாயுள்ள அகராதி அப் பொழுது இவன் வசம் இல்லை. அதை, தன் சாமான் பெட்டியில் வைத்து, அடுத்தாற்போல் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட் டிருந்த மிஸௌரி மாகாணத்திலுள்ள கொலம்பியா1 என்ற நகரத்திற்கு முன்கூட்டியே அனுப்பிவைத்து விட்டான். சீனாவி லிருந்து இப்படியொரு தந்தி வருமென்று இவன் எதிர்பார்க்க வில்லையல்லவா? தவிர, சீனாவி லிருந்து முக்கியமான செய்தி என்ன வரப்போகிறதென்று இவன் சிறிது அசட்டையாகவும் இருந்தான். எனவே இந்தத் தந்தியை அப்படியே வைத்துக்கொண்டு விட்டான்.
சுமார் பத்து நாட்களுக்குப் பிறகு, மேற்படி கொலம்பியா நகரத்திற்குச் சென்று, பெட்டியைத் திறந்து அகராதியை எடுத்துப் பார்த்தான். புரட்சிவாதிகள் வூசங்2 நகரத்தைக் கைப்பற்றிக் கொள்ளப் போகிறார்கள் என்று தந்தியில் கண்டிருந்தது. இந்த வாசகத்தைப் பார்த்ததும், முந்தின தடவைகளில் நடைபெற்றப் புரட்சிகளைப் போல் இந்த வூசங் புரட்சி இராதென்று மட்டும் இவனுடைய உள்மனம் கூறியது.
மறுநாள் பத்திரிகையொன்றை வாங்கிப் பார்த்தான் ஸன். அதில் வூசங் நகரத்தைப் புரட்சிவாதிகள் கைப்பற்றிக்கொண்டு விட்டார்கள் என்ற ஒரு செய்தி பெரிய தலைப்புடன் காணப் பட்டது.
ஸன், இந்தச் செய்தியைப் பார்த்து ஆச்சரியப்பட்டானோ என்னவோ யாருக்குத் தெரியும்? ஆனால் சீனாவுக்கு உடனே செல்ல வேண்டுமென்று இவன் அவசரப்படவில்லை. புரட்சியை வெற்றிகர மான முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய ஆற்றல் படைத்த தன் சகாக்கள் பலர் இருக்கின்றனர் என்பதை இவன் உணர்ந்திருந்தான். சிறப்பாக ஹுவாங் ஸிங்கினிடத்தில் இவனுக்குப் பூரண நம்பிக்கை இருந்தது.
இந்தத் தடவை புரட்சி வெற்றிகரமாக முடியுமென்று இவனுக்கு ஏற்பட்டிருந்த அபார நம்பிக்கையானது, அடுத்தாற் போல், குடியரசு ஏற்பட்டால் அதன் தேவைகள் என்னென்ன என்பதைப்பற்றி இவனைச் சிந்திக்கச் செய்தது; தாய்நாட்டுக்கு உடனே செல்லவேண்டுமென்று இவனை அவசரப்படுத்தவில்லை. சீனாவில் குடியரசு ஏற்பட்டால் அதற்கு ஆரம்பத்திலேயே பலமான அதிவாரம் அமைத்து விட வேண்டுமென்பது இவன் எண்ணம். இதற்காக லண்டன் செல்லவேண்டியது அவசியமென்று உணர்ந் தான். ஏன் என்று வாசகர்களே, கேட்கிறீர்களா?
சில வருஷங்களாக மஞ்சூ அரசாங்கம், பிரிட்டன், பிரான், ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகளிலுள்ள சில பாங்குகளைக் கொண்ட ஒரு கூட்டு தாபனத்திடமிருந்து கடன் வாங்கி வந்தது. இப்படிக் கடன் பெற்றதன் மூலம், மஞ்சூ அரசாங்கம் மேற்படி நாடுகளின் தாட்சண்யத் திற்குட் பட வேண்டிய நிர்ப்பந்தத்திற்குட் பட்டது. இது போதாதென்று, சமீபத்தில் ஒரு பெருந்தொகையை மேற்படி தாபனத்திடமிருந்து கடனாகப் பெற மஞ்சூ அரசாங்கம் பேச்சு வார்த்தைகள் நடத்திக் கொண்டிருப்பதாக ஸன்னுக்குத் தெரிந்தது. இதைத் தடுத்து நிறுத்திவிட வேண்டுமென்பது இவன் எண்ணம். மஞ்சூ அரசாங்கம், கடன் கிடைத்தால், அந்தப் பணத்தைப் புரட்சி இயக்கத்தை அடக்கி ஒடுக்குவதற்கும், குடியரசு ஏற்படாதபடி தடுப்பதற்கும் செலவழிக்குமென்பது இவனுக்குத் தெரியும். இதனாலேயே லண்டனுக்குச் சென்று இந்தக் கடன் கொடு படாதபடி செய்துவிட வேண்டுமென்று தீர்மானித்தான். லண்டன் சென்றால்தான் இது சாத்தியமாகுமென்பது இவனுக்குத் தெரிந் திருந்தது.
ஸன் இங்ஙனம் தீர்மானித்துக்கொண்டு கொலம் பியாவி லிருந்து செயின்ட் லூயி நகரத்திற்கு வந்து அங்கு ஒரு நாள் தங்கி னான். இந்த நகரத்தில்தான் 1904ஆம் வருஷம் அகில உலகப் பொருட்காட்சியொன்று நடைபெற்றதென்பதும், அதற்கு ஸன் வந்திருந்தானென்பதும் வாசகர் களுக்கு ஞாபகமிருக்கும். இந்த நகரத்திற்கு வந்ததும், அன்றையதினம் வெளிவந்த ஒரு தினசரிப் பத்திரிகையை வாங்கிப் பார்த்தான். அதில் ஸன் யாட் ஸென் தலைமையில் வூசங் புரட்சி நடைபெற்றது. சீனக் குடியரசின் முதல் தலைவனாக அவன் தெரிந்தெடுக்கப் படுதல் கூடும் என்று தலைப்புக் கொடுத்து ஒரு செய்தி வெளிவந்தது. இதைப் பார்த்து ஸன் சிறிது கூட பரபரப்படையவில்லை யென்று இங்கு விசேஷ மாகக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியிருக்கிறது.
ஏனென்றால் யாருமே, வருங்காலத்தில் தனக்கு ஒரு பெரும் பதவி காத்திருக்கிறதென்று ஊகமாகச் சொல்லப்படுகிறபோது, அதிலும் பத்திரிகையில் பகிரங்கமாக வெளி வந்திருக்கிறபோது, தன்னைப் பற்றிச் சிறிது உயர்வாக நினைத்துக்கொண்டு அது காரணமாக யாரையும் சிறிது தலைநிமிர்ந்து பார்க்கக் கூடுமல்லவா? அந்தமாதிரியான எண்ணம் ஏதும் ஸன்னுக்கு உண்டாகவில்லை. எப்பொழுதும்போல் அடக்கமாகவே இருந்தான். தான் இன்னா னென்று யாருக்கும் தெரிவித்துக் கொள்ள வில்லை. நிதானமாகவே தன் காரியங்களைக் கவனித்துக் கொண்டு வந்தான்.
கடைசியில் நியூயார்க் நகரம் வந்து சேர்ந்தான் ஸன். வந்ததும், அங்குள்ள சீனர் பலரைச் சந்தித்தான். இவர்கள் ஏற்கனவே இவனுக்குத் தெரிந்தவர்கள்தான். இவர்கள் மூலம், வூசங்கிலே ஆரம்பித்த புரட்சி யானது தெற்கு மாகாணங்களில் பரவி வருகிற தென்றும், காண்ட்டன் நகரம் வெகு சீக்கிரத்தில் புரட்சிக்காரர் வசப்பட்டுவிடக் கூடுமென்றும் அறிந்தான். உடனே, காண்ட்டன் நகரிலுள்ள மஞ்சூ அரசப் பிரதிநிதிக்கு, உயிர்ச்சேதம் அதிகமாக ஏற்படாமலிருக்கும் பொருட்டு, புரட்சிவாதி களுக்கு விட்டுக் கொடுத்து அவர்களுடன் சேர்ந்து கொள்ளுமாறு ஒரு தந்தி கொடுத் தான். மற்றும் இந்த அரசப் பிரதிநிதியின் உயிருக்கு ஊறு விளை விக்க வேண்டாமென்று தன் கட்சியினருக்கும் ஒரு தந்தி கொடுத் தான். இந்த இரண்டு தந்திகளின்படியே காரியங்கள் நடந்தன.
சில நாட்களுக்குப் பிறகு ஸன், நியூயார்க் நகரத்திலிருந்து புறப்பட்டு இங்கிலாந்து சென்று லண்டனையடைந்தான். அடைந் ததும், வழக்கம்போல் முதலில் காண்ட்லி தம்பதிகளின் வீட்டுக்குச் சென்றான். அங்கே, டாக்டர் காண்ட்லியின் மேற்பார்வையிட்டு இவன் பெயருக்கு அநேக தந்திகள் வந்து காத்துக் கொண்டிருந்தன. இவன் இல்லாத காலத்தில் இவனுக்கு வரும் தந்திகளைப் பிரித்துப் பார்த்து விஷயங் களைத் தெரிந்துகொள்ளும் உரிமை டாக்டர் காண்ட்லிக்கு இருந்தது. இந்த உரிமையைத் தனது முன்னாள் ஆசிரியனுக்குக் கொடுத்திருந்தான் ஸன். காண்ட்லி தம்பதிகளிடம் இவனுக்கு அவ்வளவு நம்பிக்கை இருந்தது. அவர்களும் இவனுக்கும் அவ்வப்பொழுது எச்சரிக்கை கொடுக்கவேண்டி யிருந்தால் கொடுத்தும், உதவி செய்யவேண்டியிருந்தால் செய்தும் வந்தார்கள். மஞ்சூ அரசாங்க ஒற்றர்களின் கண்காணிப்பு இவன் விஷயத்தில் இருந்துகொண்டிருக்கிறதல்லவா?
ஸன், காண்ட்லி தம்பதிகளின் வீட்டை அடைவதற்குச் சிலமணி நேரம் முந்தி ஸன் வென், லண்டன் என்று விலாசமிட்டு ஒரு தந்தி, லண்டன் தந்தி நிலையத்திற்கு வந்தது. இப்படிப் பொதுப்படையாக விலாசமிட்டு வந்தால் யாரிடம் பட்டுவாடா செய்வது? தந்தி நிலையத்தார், சீன தானீகனுடைய காரியாலத்தில் விசாரிக்குமாறு தந்திச் சேவகனிடம் கூறினார்கள். இந்தத் தந்தியில் சங்கேத வார்த்தைகள் அடங்கியிருந்தன. தந்திச் சேவகன், தந்தியைச் சீன தானீகன் காரியாலயத்தில் காட்ட, அங்குள்ள ஓர் அதிகாரி, தந்தியைப் பிரித்துப் பார்த்து, சங்கேத வார்த்தைகளுக்கு நேராகச் சீன வார்த்தைகளைக் குறித்துக் கொடுத்து, இந்த விலாசதார் டாக்டர் காண்ட்லியின் வீட்டில் இருக்கிறாராவென்று விசாரித்துப் பார்க்கும்படி தந்திச் சேவகனை அனுப்பினான். அப்படியே தந்திச் சேவகன், டாக்டர் காண்ட்லியின் வீட்டுக்கு வந்து விசாரித்தான். அப்பொழுது டாக்டர் வீட்டில் இல்லை; டாக்டர் மனைவி மட்டும் இருந்தாள். அவள் தந்தியை வாங்கிப் பார்த்தாள். ஸன்னை முந்தின தடவைபோல் அகப்படுத்த தானீகன் காரியாலயத்தினர் சூழ்ச்சி செய்கின்றனரோ என்று சந்தேகங் கொண்டாள். எனவே சங்கேத வார்த்தைகளையும் அவைகளுக்கு நேராகவுள்ள சீன எழுத்துக்களை யும் வேறொரு காகிதத்தில் ஜாக்கிரதையாகக் குறித்துக்கொண்டு விலாசதார் இங்கு இல்லையென்று சொல்லி, தந்திச் சேவகனைத் தந்தியுடன் திருப்பி அனுப்பிவிட்டாள். சிறிது நேரங்கழித்து, ஸன் வந்து சேர்ந்தான். காண்ட்லி அம்மையாரிடமிருந்து தந்தியின் நகலை வாங்கிப் பார்த்தான். வாய் திறக்கவில்லை லேசாகப் புன்முறுவல் முகத்தில் பூத்தது. நகல் காகிதத்தை மடித்து ஜேபியில் போட்டுக் கொண்டான். காண்ட்லி அம்மையாரும் விஷயமென்னவென்று கேட்கவில்லை.
மறுநாள், காண்ட்லி தம்பதிகள் தந்தியைப் பற்றி லேசாக விசாரிக்கிற முறையில் நேற்று வந்த தந்தி ரகசியமானதோ என்று ஸன்னைக் கேட்டார்கள். ஓ! அஃதெல்லாம் ஒன்றுமில்லை. குடியரசின் தலைமைப் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு என்னைக் கேட்டிருக்கிறார்கள்; அவ்வளவு தான் என்று சர்வ சாதாரணமாகப் பதில் சொன்னான். ஏற்றுக் கொள்ளப் போகிறாயல்லவா, என்று காண்ட்லி தம்பதிகள் அன்போடு கேட்டார்கள். ஆம்; வேறொரு வரும் அகப்படாவிட்டால் தற்காலிகமாக ஏற்றுக் கொள்வேன் என்று அடக்கமாகப் பதில் கூறினான்.
ஸன், லண்டனில் தங்கியிருந்த நாட்களில், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அந்நிய நாட்டு இலாகாவை அணுகி, பிரிட்டிஷ் ஆதீனத்திற்குட்பட்ட மலேயா, ஹாங்காங் முதலிய பிரதேசங்களில் தான் வரக்கூடாதென்று தடுக்கப்பட்டிருக்கும் உத்தரவை ரத்து செய்யுமாறு கேட்டுக்கொண்டான். தவிர, பாங்குகளின் கூட்டு தாபனத்தைச் சேர்ந்தவர்களைச் சந்தித்து, மஞ்சூ அரசாங்கத் துக்குக் கடன் கொடுக்க வேண்டாமென்றும், அங்குக் குடியரசு ஏற்பட்டிருக்கிறதென்றும் சொல்லி வைத்தான். இவன் லண்டனுக்கு வந்ததன் நோக்கமே இதுதானே?
லண்டனில் சில நாட்கள் தங்கிவிட்டு ஸன் 1911ஆம் வருஷக் கடைசியில் சீனாவுக்குப் புறப்பட்டான்.
சீனாவுக்கு இவன் கப்பலில் வந்துகொண்டிருக்கட்டும். அதற்கிடையில், 1910 ஆம் வருஷம் இவன் அமெரிக்கா சென்ற பிறகு, சீனாவில், சென்ற அத்தியாயத்தின் கடைசியில் கூறப்பட்டவை தவிர, வேறு என்னென்ன காரியங்கள் நடைபெற்றன. 1911ஆம் வருஷக் கடைசியில் இவன் தாய்நாடு திரும்பியதற்குக் காரணமாயிருந்தது எது, ஆகியவற்றைப் பற்றி அடுத்த அத்தியாயத்தில் அறிந்து கொள்வோம்.
அரச பீடத்தின் அலறல்
இத்தாலி சுதந்திரம் பெறவேண்டுமென்பதற்காக அரும்பாடு பட்ட மாஜினி1 தன் வாழ்நாளின் பெரும் பகுதியை,இத்தாலிக்கு வெளியிலேயே கழிக்கும் படியான நிர்ப்பந்தத்திற்குட்பட்டான். அப்படியிருந்த போதிலும், அவன் மூட்டிவிட்ட புரட்சித்தீ, இத்தாலியில் பரவிக்கொண்டுதான் வந்தது. அவன் இல்லையென்ற குறையில்லாமல் அவனுடைய நண்பர்கள் பலர், புரட்சிக்கு ஆக்க மளித்து அதனை வளர்த்து வந்தனர். தான் இல்லா விட்டாலும், தான் சுட்டிக் காட்டிய குறிக்கோளை நாடிச்செல்ல அன்பர் பலர் முன்வந்தது அவனுக்குத் திருப்தியை அளித்தது. இந்தத் திருப்தியில் தான் அவன், தான் அனுபவித்த பலவித துன்பங்களைச் சிறிது நேரமேனும் மறந்திருந்தான்.
ஸன் யாட் ஸென்னின் நிலைமையும் ஏறக்குறைய இப்படித் தான். இவன் சீனாவில் இல்லாத காலங்களில், இவன் மூட்டிவிட்ட புரட்சித் தீயை இவனுடைய நண்பர்கள் பலர் சிறிது சிறிதாகப் பரவவிட்டுக் கொண்டு வந்தார்கள். தலைவன், அதாவது ஸன், தலத்தில் இல்லையே யென்பதற்காக இவர்கள், புரட்சி நடத்த வேண்டிய சந்தர்ப்பமோ அவசியமோ ஏற்பட்டால் அதைக் கை நழுவவிடவில்லை; அதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை அனுப விக்கவும் தயங்கவில்லை. இத்தகைய சகாக்கள் பலரை ஸன் பெற் றிருந்தான். இவர்கள் புரட்சி இயக்கத்தில் காட்டிய ஊக்கந்தான், இவனுக்கு மனச் சோர்வு ஏற்படாமல் தகைந்து வந்தது.
ஸன் 1910ஆம் வருஷம் அமெரிக்காவுக்குச் சென்ற பிறகு, சீனாவில் புரட்சி இயக்கம் சிறிதும் வலுக்குன்றவில்லை; அதற்கு மாறாக முன்னைக்காட்டிலும் அதிகமாக வலுப்பெற்று வந்தது. இங்ஙனம் வலுப்பெறச் செய்து வந்தவர்களில் சார்ல ஜோன் ஸுங்கைக் குறிப்பிட வேண்டும். ஸன் சீனாவுக்குள் ரகசியமாக வந்து தங்கவேண்டிய அவசியம் ஏற்பட்ட போதெல்லாம், ஷாங்காய் நகரத்திலுள்ள இந்த ஸுங்கின் வீடுதான் நல்ல பாதுகாப்பு அளித்த தென்பதை வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.2
இந்த ஸுங், மஞ்சூ ஆட்சியின் மீது மக்களுக்கு அதிருப்தி யுண்டாகக் கூடிய விதமாக அநேக துண்டுப் பிரசுரங்களை அவ்வப் பொழுது அச்சிட்டு, சீனா முழுவதிலும் பரப்பி வந்தான்; இவை களில் சில பிரதிகளை, ஸன் எங்கிருந்தாலும் அங்குத் தவறாமல் அனுப்பி வந்தான். இவனுடைய குடும்பத்தினர் இவனுக்கு இந்த விஷயத்தில் மிகவும் ஒத்தாசை யாயிருந்தனர். டுங் மெங் ஹுயி சங்கத்தின் அங்கத்தினர் பட்டியலை ஒழுங்காக வைத்திருத்தல், அவ்வப்பொழுது வந்துகொண்டிருக்கும் சந்தாக்களுக்கும் நன்கொடைகளுக்கும் சரியான கணக்கு வைத்தல் முதலிய காரியங் களை இவனுடைய மூத்த பெண்ணான ஏலிங் திறம்படச் செய்து வந்தாள். 1911ஆம் வருஷ மத்தியில், டுங் மெங் ஹுயி சங்கத்தில் மூன்று லட்சம் பேர் அங்கத்தினர்களா யிருந்தார்களென்றால், புரட்சி இயக்கம் எவ்வளவு வேகமாக வளர்ந்து வந்ததென்பது ஒருவாறு தெரியும். இத்தனைக்கும் இந்தச் சங்கம் ரகசிய தாபன மாகவே இயங்கி வந்தது.
புரட்சி இயக்கம் வேகமாகப் பரவி வருவதை மஞ்சூ அரசாங்கம் சும்மா பார்த்துக் கொண்டிருக்கவில்லை. அதைத் தடுக்க, ஒரு பக்கம் அடக்கு முறையைக் கையாண்டது; மற்றொரு பக்கம் சில சீர்திருத் தங்களை வழங்க முற்பட்டது. 1908ஆம் வருஷம் நவம்பர் மாதம் பதினான்காந் தேதி குவாங்ஷு மன்னன் இறந்து போன பிறகு அவனுடைய இடத்தில் பூயி என்ற மூன்று வயதுச் சிறுவன், ஸுவான் டுங்(Hsuan Tung) என்ற பட்டப் பெயருடன் சக்ரவர்த்தியாக நியமிக்கப் பட்டதும், அவன் சிறு பையனாயிருந்தபடியால், அவனுக்குப் பதி லாக ரீஜெண்ட்டாயிருந்து அரசாங்கக் காரியங்களைக் கவனிக்கும் பொறுப்பை த்ஸுஹ்ஸி ஏற்றுக் கொண்டதும், ஆனால் அவள் மறுநாளே இறந்துவிட்டதும் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். த்ஸுஹ்ஸிக்குப் பிறகு பூயி மன்னனுடைய தந்தையான சுன் (Prince Chun) என்பவன் ரீஜெண்ட்டாக நியமிக்கப்பட்டான்.3
பாக்ஸர் கலகத்திற்குப் பிறகு த்ஸுஹ்ஸி, காலத்திற்கேற்ற
சில சீர்திருத்தங்களைச் செய்யாவிட்டால், தன் பதவிக்கு ஆபத்து ஏற்படுமென்று நன்கு உணர்ந்து சில சீர்திருந்த உத்தரவுகளை அமுலுக்குக் கொண்டுவரும்படி செய்தாள். இப்படி அமுலுக்குக் கொண்டுவரச் செய்தது, நிர்ப்பந்தத்தின் காரணமாகவே தவிர, மனப் பூர்வமாக அல்லவென்பதை நாம் இங்குச் சொல்லித்தான் ஆக வேண்டியிருக்கிறது.
மேனாட்டு முறையில் பயிற்சி அளிக்கக் கூடிய கல்வி நிலை யங்கள் பல திறக்கப்பட்டன. அரசாங்க உத்தியோகங்களுக்கென்று நடைபெற்று வந்த பரீட்சை முறைகள் மாற்றியமைக்கப்பட்டன. கோயில்கள் பல பள்ளிக்கூடங்களாக மாற்றப்பட்டன. 1910ஆம் வருஷக் கடைசியில் அரசாங்கச் சார்பில் 35, 198 பள்ளிக்கூடங்கள் நடைபெற்று வந்தனவென்றும், இவற்றில் 8,75,760 பிள்ளைகள் படித்து வந்தார் களென்றும் ஒரு கணக்கு கூறுகிறது.
மேனாட்டு முறையில் கல்வி பயில நூற்றுக்கணக்கான சீன இளைஞர்கள், ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடு களுக்குச் சென்றனர். மேனாட்டு இலக்கியங்கள் பல சீன மொழியி லாக்கப்பட்டு வெளிவந்தன. ராணுவம், மேனாட்டு முறையில் சீர்திருத்தியமைக்கப் பட்டது. அபினி வியாபாரம் வர வரக்குறைவ தற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டன. நீதிமன்றங்களும் சட்டங் களும் திருத்தியமைக்கப்பட்டன. புதிய புதிய ரெயில்கள் போடப் பட்டன. உத்தியோக நியமனம், விவாக சம்பந்தம் முதலிய விஷயங் களில் மஞ்சூக்களுக்கும் சீனர்களுக்குமிடையில் நிலவிவந்த வேற் றுமைகள் குறைக்கப்பட்டன.
இவையெல்லாம் ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதிலும் மற்றொரு பக்கம் மஞ்சூ அரசாங்கத்தின் மீது ஜனங் களுக்கிருந்த அதிருப்தியென்னவோ நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வந்தது. மஞ்சூ ஆட்சியின் அதமனம் நெருங்கிவிட்ட தென்பதற்கான சூசகங்கள் பல தென்பட்டன. இந்த அதிருப்தி யானது, ஆங்காங்குப் புரட்சி களாகப் பரிணமித்தது. டுங் மெங் ஹுயி சங்கத்தைச் சேர்ந்தவர்களும், ஜனங்களுடைய அதிருப்திக்குத் தூபம் போட்டு வளர்த்துக் கொடுத்து வந்தார்கள்.
இந்த அதிருப்திக்குக் காரணங்கள் பல கூறலாம். உதாரண மாக, மஞ்சூ அரசாங்க நிருவாகத்தில் ஊழல்கள் பல நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வந்தன. லஞ்சம் வாங்காத அரசாங்க உத்தியோகதர்களே இல்லையென்று சொல்லலாம். போதாக் குறைக்கு, ஜனங்கள், வருஷத்திற்கு வருஷம் அதிகப்படியான வரியைச் செலுத்த வேண்டியவர்களானார்கள். இந்த நிலையில், வெள்ளப்பாழ், உணவுப் பஞ்சம் முதலியன ஏற்பட்டு வந்தன. சிறப்பாக 1910-11ஆம் வருஷத்தில் யாங்க்ட்ஸீ கியாங்1 நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கானது லட்சக் கணக்கான உயிர்களைக் கொள்ளை கொண்டது. உயிரைப் பறிகொடுத்தவர்கள் போக, உயிரைப் பிடித்துக் கொண்டிருந்தவர்கள், இருக்க இடமின்றியும் உண்ண உணவின்றியும் தவித்தார்கள். இந்த நிலையில் நோய் களுக்குக் கேட்கவேண்டுமா? அநேகம் பேர் இரையாயினர். உணவுப் பொருள்களின் விலையோ நாளுக்கு நாள் விஷம்போல் ஏறிக் கொண்டு வந்தது. இவைகளையெல்லாம் தடுத்து ஒழுங்குபடுத்த மஞ்சூ அரசாங்கத்தினால் முடியவில்லை. ஜனங்களுக்கு அரசாங் கத்தினிடம் நம்பிக்கையில்லாமற் போனதில் ஆச்சரியமென்ன இருக்கிறது?
சீனாவில் அநேக ஆண்டுகளாக, ரெயில், கப்பல் முதலிய போக்குவரத்து சாதனங்கள் அந்நிய நாட்டு முதலாளிகள் வசமே இருந்து வந்தன. ஆனால் 1911ஆம் வருஷ ஆரம்பத்தில் மஞ்சூ அரசாங்கம் போக்குவரத்து வசதிக் குறைவாயுள்ள ஷெக்குவான் மாகாணத்தில் ஒரு ரெயில் பாதை நிர்மாணம் செய்வதென்றும், இதற்கு வேண்டிய மூலதனத்தை அந்த மாகாண வாசிகளில் பணம் படைத்தவர்களிடம் கடனாகப் பெறுவதென்றும், காலக்கிரமத்தில் இந்தக் கடனை அவர் களுக்குத் திருப்பிக் கொடுத்துவிடுவதென்றும் தீர்மானித்தது. அந்த மாகாண வாசிகளும் மனமுவந்து பணங் கொடுத்தனர். ரெயில் பாதை நிர்மாண வேலையும் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. இத்தருணத்தில், அந்நிய நாட்டு முதலாளிகள் சிலர் சேர்ந்து, ரெயில் போடும் உரிமையைத் தங்களுக்குத் தரவேண்டுமென்று கேட்டார்கள். மஞ்சூ அரசாங்கமும் அந்நிய வல்லரசுகளின் தாட்சண்யத்திற்குக் கட்டுப்பட்டு, பிரிட்டன், பிரான், ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகளைச் சேர்ந்த நில முதலாளிகள் அடங்கிய ஒரு கூட்டு தாபனத்திற்கு அந்த உரிமையை அளித்து விட்டது. இது தெரிந்த ஷெக்குவான் மாகாண வாசிகள் ஆத்திரங் கொண்டனர். ரெயில்வே உரிமைகளைப் பாதுகாக்கும் சங்கம் என்ற பெயரால் ஒரு தாபனத்தைத் தோற்றுவித்து, அதன் மூலமாகக் கிளர்ச்சி செய்யத் தொடங்கினர். ஆங்காங்கு அரசாங்கத்திற்கு விரோதமான கோஷங்களைக் கோஷித்துக்கொண்டு ஊர்வலங்கள் நடத்தினர். வியாபாரிகள் வியாபாரம் செய்வதை நிறுத்திவிட் டார்கள். மாணாக்கர்கள் பள்ளிக்கூடங்களுக்குச் செல்ல மறுத்து விட்டார்கள். விவசாயிகள், வரி கொடுக்க முடியாதென்றார்கள். பொதுவாக, சமுதாய வாழ்க்கை தம்பித்துப் போய்விட்டது.
இந்தக் கிளர்ச்சி இவ்வளவு தூரம் வலுக்குமென்று மஞ்சூ அரசாங்கமோ ஷெக்குவான் மாகாணத்தின் அரசப் பிரதிநிதியோ எதிர்பார்க்கவில்லை. அந்த அரசப் பிரதிநிதி, இந்தக் கிளர்ச்சியை அடக்கி ஒடுக்கிவிடவே முனைந்தான். கிளர்ச்சியின் முன்னணியில் நின்ற பலரை வெகு சுலபமாக யமனுலகுக்கு அனுப்பிவிட்டான். இவன் கையாண்ட கடுமையான அடக்கு முறையின் விளைவாக, ஷெக்குவான் மாகாணத்தைப் பொறுத்தமட்டில் கிளர்ச்சி அடங்கி விட்டது; ஆனால் மற்ற மாகாணங்களில் பலாத்கார சக்திகள் கிளர்ந்தெழுந்தன.
ஷெக்குவான் மாகாணத்திற்கு அடுத்தாற்போல் கிழக்குப் பக்கத்திலுள்ள ஹ்யூப்பை(Hupei) என்ற மாகாணத்தின் அரசப் பிரதிநிதியைக் கொலை செய்ய ஒரு சூழ்ச்சி நடைபெற்றது. ஆனால் அரசாங்க ஒற்றர்கள் இதை முன்கூட்டியே கண்டுபிடித்து விட்டார்கள். அரசப் பிரதிநிதி உயிர் தப்பினான். என்றாலும் என்ன? அகமாத்தாக அவன் கையில் டுங் மெங்ஹுயி சங்கத்தின் அங்கத் தினர் ஜாபிதா ஒன்று எப்படியோ சிக்கியது. இப்படிச் சிக்கியது 1911ஆம் வருஷம் அக்டோபர் மாதம் ஒன்பதாந் தேதி.
மறுநாள் - அக்டோபர் மாதம் பத்தாந் தேதி - மஞ்சூ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த, குடியரசுக்கு அடிகோலிய புரட்சி ஆரம்பித்து விட்டது. ஷெக்குவான் மாகாண வாசிகள், ரெயில் போடும் உரிமை சம்பந்தமாகச் செய்த கிளர்ச்சியும், ஹ்யூப்பை மாகாண அரசப் பிரதிநிதியைப் கொலை செய்வதற்காக நடைபெற்ற சூழ்ச்சியும், இந்தப் புரட்சி ஆரம்பத்திற்கு உடனடியான காரணங்களென்று சொல்ல முடியாது. அநேக ஆண்டுகளாக, டுங் மெங் ஹுயி சங்கத்தினர் செய்த வந்த புரட்சி முயற்சிகள் வெற்றி பெறுவதற்கான ஒரு சூழ்நிலையை இவை உண்டு பண்ணின என்று சொல்லலாம். தவிர, வெகு காலமாக ஜனங்களிடையே பரவி வந்த அதிருப்திப் புகையானது ஒரு நாளில்லா விட்டால் ஒருநாள் நெருப்பாகப் பற்றிக் கொள்ள வேண்டுமல்லவா? அந்த நெருப்பு தான் இந்தப் புரட்சி இஃது எப்படித் தொடங்கியதென்று பார்ப்போம்.
சீனாவில் அந்நிய நாட்டார் பலரும் சலுகை பெற்று வாழும் நகரங்கள் பல உண்டு. இவற்றிற்கு ‘கன்ஸெஷன்கள்’ (Concessions) என்று பெயர். ஒவ்வொரு நகரத்திலும் ஒவ்வொரு பகுதியில் ஒவ் வொரு நாட்டார், அவர்களுடைய நாட்டுச் சட்ட திட்டங்களுக் குட்பட்டு வசிப்பர். இந்தப் பகுதிகளில் சீன அரசாங்கத்தின் சட்ட திட்டங்கள் செல்லுபடியாகா, இத்தகைய கன்ஸெஷன்களில் ஒன்று, ஹ்யூப்பே (Hupeh) மாகாணத்தைச் சேர்ந்த ஹாங்க்கோ. இது யாங்ட்ஸீ கியாங் நதியின் வடகிழக்கிலுள்ள ஒரு துறைமுகப் பட்டினம். ஸன் அமெரிக்காவில் சுற்றுப் பிரயாணம் செய்து கொண்டிருக்கையில், புரட்சி தொடங்கிவிட்டதாகத் தந்தியொன்று கிடைத்ததென்று முந்தின அத்தியாயத்தில் சொன்னோமல்லவா, அஃது இந்தப் பட்டினத்திலிருந்துதான்.
இந்தத் துறைமுகப் பட்டினத்தில், ருஷ்யர்கள் வசிக்கும் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் டுங் மெங் ஹுயி சங்கத்தினர் ஓர் அறை பிடித்து, அதில் வெடிகுண்டு முதலிய சில போர்க் கருவிகளைச் சேமித்து வைத்திருந்தனர். 1911ஆம் வருஷம் அக்டோபர் மாதம் ஒன்பதாந் தேதி பிற்பகல், இந்த அறையிலிருந்து ஒரு வெடிகுண்டு அகமாத்தாக வெடித்துவிட்டது. இது தெரிந்து, ருஷ்யப் போலீசார் ஓடி வந்தனர்; அறையைப் பரிசோதனை செய்தனர்; புரட்சிவாதிகள் உபயோகித்து வந்த கொடி முதலிய சின்னங்களையும், சில ததா வேஜுகளையும் கண்டனர். இந்தச் செய்தியை, அடுத்தாற்போல், அதாவது யாங்ட்ஸீ கியாங் நதியின் தென்மேற்கிலுள்ள வூ சங் என்னும் பட்டினத்திலிருந்த மஞ்சூ அரசப் பிரதிநிக்குத் தெரி வித்தனர். இந்த வூ சங், சீனர்கள் வசிக்கும் பட்டினம். இங்குச் சுமார் மூவாயிரம் பேரடங்கிய மஞ்சூ அரசாங்கப் படையொன்று இருந்தது. டுங் மெங் ஹுயி சங்கத்தின் கிளைக் காரியாலயம் ஒன்றும் இங்கு இருந்தது. இந்தக் காரியாலயம் இருந்த இடத்தை மேற்படி அரசப் பிரதிநிதி, மறுநாள், அதாவது 1911ஆம் வருஷம் அக்டோபர் மாதம் பத்தாந் தேதி எப்படியோ கண்டுபிடிக்கச் செய்து பரிசோதனை போடச் செய்தான். அப்பொழுது புரட்சி வாதிகளின் விலாசம் முதலியன அடங்கிய ஒரு ஜாபிதா அகப் பட்டது. இந்த ஜாபிதாவில் புரட்சி தொடங்கினால், அதில் சேர்ந்து கொள்வதாக உறுதிமொழி கொடுத்திருக்கிற மஞ்சூ ராணுவத்தைச் சேர்ந்த பலருடைய பெயர், விலாசம் முதலியன காணப்பட்டன. ஏற்கனவே புரட்சி இயக்கத்தில் அநுதாபம் கொண்டவர் களென்ற சந்தேகிக்கப்பட்ட ராணுவத்தினர் பலரும் வேறு வேறு இடங் களுக்கு, அதாவது போக்குவரவு வசதிகள் குறைவாயுள்ள தொலை வான இடங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டார்களாயினும், இந்த ஜாபிதாவைப் பார்த்ததும், மஞ்சூ அரசப் பிரதிநிதி நடுக்கமே கொண்டுவிட்டான். நகரத்திலுள்ள ராணுவத்தினர் உண்மையில் அரசாங்க விசுவாசிகளா யிருக்கிறார்களா என்ற சந்தேகம் அவனுக்கு ஏற்பட்டுவிட்டது. உடனே சிலரைச் சிரச்சேதம் செய்து விடும்படி உத்தரவிட்டான். இதையறிந்த ராணுவத்திலுள்ள மற்றவர் அனைவரும் ஒரே ஆத்திரங்கொண்டனர். நகரத்தில் ஒரே பரபரப்பு நிமிஷத்திற்கு நிமிஷம் கொந்தளிப்பு அதிகரித்து வந்தது. தன் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடுமென்று அச்சங் கொண்டுவிட்டான் அரசப் பிரதிநிதி.
தங்களுடைய பெயர், விலாசம் முதலியன அரசாங்க அதிகாரிகள் கைக்கு அகப்பட்டுவிட்டதை அறிந்தார்கள் புரட்சி வாதிகள். அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கை எடுக்கு முன்னர், தாங்கள் நடவடிக்கை எடுத்துக் கொண்டுவிடத் தீர்மானித்தார்கள். இவர்களோடு ஆத்திரமடைந்திருந்த ராணுவத்தினரும் சேர்ந்து கொண்டார்கள். அன்றிரவு - பத்தாந் தேதி இரவு - அரசப் பிரதி நிதியின் மாளிகையைத் தாக்கினார்கள். இவர்கள் தாக்க வருவதை யறிந்த அரசப் பிரதிநிதியும், ராணுவத் தலைவனும், படையினரில் அரசாங்க விசுவாசிகளாயிருந்த சிலரும் தப்பியோடி விட்டார்கள். மாளிகையும் அதிலுள்ள யுத்த தளவாடங்கள் முதலியனவும் இவர்கள் வசமாயின, பிறகு, அரசாங்கக் காரியாலயங்களென்ன, உத்தியோகதர்களின் வாசதலங்களென்ன, இப்படி ஒன்றன் பின்னொன்றாக இவர்கள் வசமாயின. விதரித்துக் கொண்டு போவானேன்? சில மணி நேரத்திற்குள் வூ சங் நகரமும் அதனைச் சேர்ந்த சில பகுதிகளும் புரட்சிப் படையினரின் சுவாதீனமாயின.
இப்படிச் சுவாதீனமானது ஆச்சரியமான விஷயம். ஏனென் றால் புரட்சிப் படைக்குச் சரியான தலைவனில்லை. ஸன்னோ அமெரிக்காவில் இருக்கிறான். ஸன்னுக்கு அடுத்தபடியாகத் தலைமை வகிக்கக்கூடிய ஹுவாங் ஸிங்கும் அங்கு இல்லை, புரட்சி வேலையாக, வெகு தொலை விலுள்ள சில பகுதிகளுக்குச் சென்றிருந் தான். உள்ளூர்த் தலைவனும் அங்கு இல்லை; புரட்சி வேலையாக வெளியூர் சென்றிருந்தான். இந்த நிலையில் தலைவன் யார் என்ற கேள்வி எழுந்தது. சரியான தலைவனில்லாமல், தொடங்கிய புரட்சியை வெற்றிகரமான முடிவுக்குக் கொண்டுவர முடியா தல்லவா? இதனை நன்கு உணர்ந்திருந்தனர் புரட்சிப் படையினர். உடனே தற்காலிகமாக ஒரு தலைவனைக் கண்டுபிடிக்க யோசித் தனர்.
லீயுவான் ஹுங் (Liyuan Hung) என்ற ஒருவன், மஞ்சூ ராணுவத் தில் ஒரு பகுதித் தலைவனாக வுள்ளவன். நாணயதன்; சாது; தமாஷ் பெயர்வழிகூட, அவனைத் தற்காலிகத் தலைவனாக இருக்கும்படி செய்வ தென்று, புரட்சிப் படையைச் சேர்ந்த முக்கியதர் சிலர் தீர்மானித்தனர். இவர்கள் ஒரு குழுவாகத் தங்களை அமைத்துக்கொண்டு,மேற்படி லீயுவான் ஹுங்கின் வீட்டுக்குச் சென்றனர். அப்பொழுது நள்ளிரவு. எங்கும் நிசப்தம். அவனோ நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தான். புரட்சிக் குழுவினர், கதவைத் தட்டி அவனை எழுப்பினர். அவன் இவர்களைக் கண்ட தும், தன்னைக் கொல்ல வந்திருக்கிறார்களென்று பயந்து போய், ஓடி ஒளிய ஆரம்பித்தான். வீட்டிலுள்ள ஒவ்வொரு அறையாகச் சென்று பதுங்கினான். புரட்சிக் குழுவினரும் மரியாதையுடன் ஒவ்வோர் அறையாக அவனைப் பின் தொடர்ந்தனர். கடைசியில் அவன், தன் படுக்கையறையிலுள்ள ஒரு கட்டிலின் கீழ்ச்சென்று பதுங்கிக் கொண்டான். அந்த அறைக்கும் சென்றனர் புரட்சிக் குழுவினர். அவ னுடைய குதிகால் மட்டும் கட்டிலுக்கு வெளியே சிறிது தெரிந்தது. அதனைக் கண்டுவிட்ட புரட்சிக் குழுவினர், அவனை வெளியே வருமாறு செய்தனர். அவனும் நடு நடுங்கிக்கொண்டு வெளியே வந்து நின்றான்; தன்னைக் கொல்லா திருக்குமாறு கெஞ்சினான். ஆனால் புரட்சிக் குழுவினரோ, அவனுடைய க்ஷேமத்தைப் பற்றி விசாரித்து விட்டு தளபதி அவர்களே, நீங்களும் உங்கள் படையும் எங்களுடைய புரட்சிப் படையுடன் சேர்ந்துகொண்டு எங்களைக் கௌரவப்படுத்துமாறு கேட்டுக் கொள் கிறோம் என்று பணிவாகச் சொன்னார்கள். இதைக் கேட்டு அந்த லீயுவான் ஹுங் ஆச்சரியப் பட்டுப்போனான். புரட்சிப் படைக்குத் தலைமை வகித்து, புரட்சியை வெற்றிகரமான முடிவுக்குக் கொண்டுவருமாறு குழு வினர் அவனைக் கேட்டுக்கொண்டனர். அவனும் ஒப்புக் கொள்ள வேண்டிய அவசியத்திற்குட்பட்டான். அவனைத் தலைவனாகக் கொண்டிருந்த மஞ்சூ படையும் புரட்சிப் படையுடன் சேர்ந்து கொண்டது.
புரட்சிப் படையின் தலைவன் என்ற முறையில், லீயுவான் ஹுங், மறுநாள், ஒரு பிரகடனம் வெளியிட்டான். அதில், மஞ்சூ ஆட்சி வீழ்ந்து விட்ட தென்றும், அதன் தானத்தில் புரட்சி அரசாங்கம் நிறுவப் பட்டிருக்கிறதென்றும் குறிப்பிட்டான். தவிர, கொலை, கொள்ளை முதலியன மரண தண்டனைக்குரிய குற்றங் களாகக் கருதப்படுமென்றும், உணவுப் பொருள்களைப் பதுக்கி வைக்கக் கூடாதென்றும், அவை நியாயமான விலைக்கு விற்கப்பட வேண்டுமென்றும், அந்நியர்களுடைய உயிருக்கும் பொருளுக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படாதென்றும், அந்நிய வல்லரசுகள், மஞ்சூ ஆட்சிக்கு எந்த விதத்திலும் உதவி செய்யாதிருக்கும் பட்சத்தில், தற்போதுள்ள ஒப்பந்தங்கள் யாவும் கௌரவிக்கப்படுமென்றும் இந்தப் பிரகடனத்தில் காணப்பட்டன.
பிரகடனம் வெளியான ஓரிரண்டு நாட்கள்வரை, வூ சங் நகரத் திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், சிதறிப் போய்க்கொண் டிருந்த மஞ்சூ படைகளுக்கும் புரட்சிப் படைகளுக்கும் லேசு லேசாகக் கைகலப்புக்கள் நடைபெற்றன. ஆனால் லீயுவான் ஹுங்கின் நிதானமான நடத்தை யினால் விபரீதமாக எதுவும் நடைபெறவில்லை.
வூ சங்கில், புரட்சி அரசாங்கம் தாபிக்கப்பட்டு விட்ட தென்ற செய்தி நாடெங்கணும் பரவிவிட்டது. 1911ஆம் வருஷம் சீனாவில் மொத்தம் இருபத்தெட்டு மாகாணங்கள் இருந்தன. இவற்றுள், பதினான்கு மாகாணங் களில், வூ சங்கில் புரட்சி தொடங்கிய ஐம்பது நாட்களுக்குள் புரட்சி அரசாங்கங்கள் அமைந்துவிட்டன வென்றும், அந்தந்த மாகாணத்தில் நிறுவப்பட் டிருந்த அரசாங்கப் படைகள் புரட்சிப் படைகளாக மாறிவிட்டன வென்றும் சொன்னால், மஞ்சூ ஆட்சியின் செல்வாக்கு எவ்வளவு தாழ்வுற்ற நிலையிலிருந்ததென்பதை ஒருவாறு தெரிந்து கொள்ள லாம்.
இங்கே ஒரு விஷயம். சீன இளைஞர் பலர், மஞ்சூ அரசாங்கத் திடம் உபகாரச் சம்பளம் பெற்று ஜப்பானில் ராணுவப் பயிற்சி பெற்று வந்தார்களென்பது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கும். இவர் களில் மூன்று பேர், வூ சங்கில் புரட்சி ஆரம்பித்துவிட்டதென்று கேள்வியுற்று, பயிற்சி நிலையத்தின் அதிகாரிகளிடம் சொற்ப காலத்திற்கு விடுமுறை பெற்றுக் கொண்டு ஷாங்காய் நகரத்திற்கு வந்து சேர்ந்தனர். அங்குள்ள புரட்சித் தலைவனிடம் சென்று, புரட்சிப் படையில் சேர்ந்து சேவை செய்ய வந்திருப்பதாகத் தெரிவித்தனர். புரட்சித் தலைவனும் இவர்களுடைய சேவையை ஏற்றுக்கொண்டு வெவ்வேறு பகுதிகளுக்கு அனுப்பினான். இம் மூவரில் ஒருவன் சியாங் கை ஷேக். அப்பொழுது இவனுக்கு இருபத்து நான்கு வயது. இவன், சுமார் நூறு பேர் கொண்ட ஒரு படையுடன் ஹாங்சௌ2 என்ற ஊருக்குச் சென்று, அங்குள்ள அரசப் பிரதிநிதியின் மாளிகையைத் தாக்கி அதனைக் கைப்பற்றிக் கொண்டதோடு, அடுத்த இருபத்து நான்கு மணி நேரத்திற்குள் ஊர் பூராவையும் கைப்பற்றிக்கொண்டான்.
புரட்சி அரசாங்கங்கள் அமைந்த மாகாணங்கள் பலவும், சீனாவின் தெற்குப் பகுதியிலும் மத்தியப் பகுதியிலும் இருந்தன. வடக்குப் பகுதி, மஞ்சூ அரசாங்கத்தின் ஆதிக்கப் பிடியிலேயே இருந்தது. இந்தப் பகுதியில் பெரும்பாலும் நிலப் பிரபுக்களும், பல வகைப் பணக்காரர்களும் இருந்தார்கள். இந்தப் பகுதியிலுள்ள வர்களுக்குத்தான் அரசாங்க உத்தியோகங்கள் முதலிய சலுகைகள் பல கிடைத்து வந்தன. இதனால் இவர்கள், மஞ்சூ ஆதிக்கம் என்றும் நிலை பெற்றிருக்க வேண்டுமென்று ஆவல் கொண்டவர்களா யிருந்தார்கள். ஆனால் புரட்சிக் காற்று வேகமாகப் பரவி வருவதைக் கண்டு இவர்கள் ஒருவித அச்சத்திற்கு ஆட்பட்டார்கள். சிறப்பாக மஞ்சூ இனத்தைத் சேர்ந்தவர்கள், தங்கள் உயிருக்கும் பொருளுக்கும் எந்த நிமிஷத்திலும் ஆபத்து ஏற்படக் கூடுமென்று வெகுவாகப் பயந்து போனார்கள். பீக்கிங் நகரத்திலிருந்து மட்டும் சுமார் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட மஞ்சூக்கள், தங்கள் வீடு வாசல்களைத் துறந்துவிட்டு, மஞ்சூரியா3வுக்கு ஓடிப்போய் விட்டார்கள்.
இந்த நிலையில் மஞ்சூ அரச பீடம் நடுக்கங்கொண்டு விட்ட தில் ஆச்சரியமில்லை. வூ சங்கில் புரட்சி தொடங்கியது அக்டோபர் மாதம் பத்தாந் தேதியல்லவா, இதற்கு இருபது நாட்கள் கழித்து, அதாவது சரியாக அக்டோபர் மாதம் முப்பதாந் தேதி சிறு பிள்ளை யான ஷீவான் டுங் சக்ரவர்த்தியின்4 பெயரால் பின்வரும் பிரகட னத்தை வெளியிடச் செய்தது:-
“குடிமக்களின் நன்மையை மனத்தில் கொண்டே நான் சென்ற மூன்று வருஷ காலமாக ஆண்டு வந்திருக்கிறேன். எனக்கு அரசியல் விவகாரங்களில் அதிக திறமையில்லாத காரணத்தினால், சரியான மனிதர்களைச் சரியான பதவியில் நியமிக்கவில்லை. அரசியல் தர்மத்திற்கு விரோதமாக, அரசியல் செல்வாக்குடைய பதவி களுக்குப் பிரபுக்கள் பலரை நியமித்துவிட்டேன். ரெயில்வே விவகாரங்களில் சிலரை நம்பினேன். அவர்கள் என்னை ஏமாற்றி விட்டார்கள். இதனால் பொது ஜன அபிப்பிராயம் எதிர்ப்புக் காட்டியது. சில சீர்திருத்தங்களை அமுலுக்குக் கொண்டுவர வேண்டுமென்று நான் சொன்னால், அந்தச் சந்தர்ப்பத்தை உபயோகித்துச் சில பிரபுக்களும் உத்தியோகதர்களும் மோசடி செய்ய முயல்கிறார்கள். பழைய சட்டங்களை ரத்து செய்தால்; பெரிய உத்தியோகதர்கள், தங்கள் நலனை நாடுவதிலேயே முனை கிறார்கள். ஜனங்களிடமிருந்து ஏராளமான பணம் வரியாக வசூலிக்கப் படுகிறது. ஆனால் இதற்குச் சமதையாக ஜனங்களுக்கு நன்மை தரக் கூடிய காரியம் எதுவும் செய்யப்படவில்லை. சட்டங்கள் நிறைவேற்றப் பட்டால் அவைகளுக்கு யாரும் கீழ்ப்படிவதில்லை. ஜனங்கள் சூதாட்டங்களில் அதிகமாக ஈடுபடுகிறார்கள். ஆனால் எனக்கு அது தெரிவிக்கப்படுவதில்லை. அழிவுச் சக்திகள் நம்மை எதிர்நோக்கி நிற்கின்றன. ஆயினும் அவற்றை நான் பார்க்க முடிவதில்லை.”
நமது ராஜ்யம் பூராவிலும் அதிருப்தி புழுங்கிக் கொண் டிருக்கிறது. ஜனங்கள் கலக்கமடைந்திருக்கிறார்கள். நமது மூதாதை யர்களான சக்ரவர்த்திகளின் ஆத்மாக்கள், நாம் இடும் பலி முதலிய வைகளைச் சரியானபடி ஏற்று அனுபவிக்க முடிவதில்லை. இதனால் ஜனங்கள் அதிகமான துன்பத்திற்காளாக வேண்டி வருமேயென்று அஞ்சுகிறேன். இவையெல்லாம் என்னுடைய குற்றங்களே. ஆதலின் இனி, பலவிதமான சீர்திருத்தங்களை அமுலுக்குக் கொண்டு வரச் செய்வேனென்று உறுதி கூறுவதாக இதன் மூலம் உலகத்தாருக்கு அறிவிக்கிறேன். நமது படைகளையும் ஜனங்களையும் துணையாகக் கொண்டு, அரசியல் திட்டத்தைச் சரியானபடி அமுல் நடத்தச் செய்வேன் ஜனங்களுடைய அபிப்பிராயங்களையும் நன்மையையும் தழுவி, சட்டங்களை மாற்றுவதோ, ஜனங்களுடைய கஷ்ட நிஷ்டூரங் களை அகற்றுவதோ எல்லாவற்றையும் செய்வேன். காலத்திற் கொவ்வாத பழைய சட்டங்கள் பலவற்றையும் அகற்றச் செய்வேன்.
இந்தக் குழந்தைச் சக்ரவர்த்தியின் தகப்பன் ரீஜெண்ட்டா யிருந்து அரச காரியங்களைக் கவனித்து வந்தானென்று முன்னே சொல்லியிருக் கிறோமல்லவா,1 இவன் திறமையற்றவனென்று இவனை ரீஜெண்ட் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு, குழந்தைச் சக்ரவர்த்தியின் தாயார் த்ஸுஹ்ஸி என்பவள் ரீஜெண்ட் பதவியை ஏற்றுக்கொண்டாள்.2 இவள், மேற்படி அக்டோபர் மாதம் முப்பதாந் தேதியிட்டு பிரகடனம் வெளியான ஒரு மாதத்திற்குப் பிறகு, ராஜ்யத்தின் சீர்கேடான நிலைமைக்கு முந்திய ரீஜெண்ட்டின் திறமையின்மையே காரணமென்று சொல்லி, அந்த ரீஜெண்ட்டின் மீது எல்லாப் பழிகளையும் போட்டு, மற்றொரு பிரகடனம் வெளி யிடச் செய்தாள். அதில் காணப்பெற்ற ஒரு பகுதி வருமாறு:-
“(முந்திய) ரீஜெண்ட்டின் நிருவாகம் எல்லா வகையிலும் பொதுஜன ஆதரவைப் பெறாமல் போய் விட்டது. சட்ட ரீதியாக அரசாங்கத்தை அமைத்தல் என்பது நிறைவேறவில்லை. இதனால் பல சிக்கல்கள் ஏற்பட்டு மக்களின் மனம் உடைந்துபோய் விட்டது. நாட்டில் குழப்ப நிலைமை உண்டாகிவிட்டது. ஒரு மனிதன், அதாவது ரீஜெண்ட், சரியாக நடந்துகொள்ளாத காரணத்தினால், ராஜ்யம் பூராவுக்கும் சங்கடம் ஏற்பட்டுவிட்டது. அவர், தமது செயலுக்காக இப்பொழுது பெரிதும் வருந்துகிறார். ஆனால் இனி வருந்தி என்ன பயன்? இனியும் தாம் தொடர்ந்து பதவியிலிருந்தால், தம் உத்தரவுகளுக்கு யாரும் கீழ்ப்படியமாட்டார் என்று அவர் உணர்கிறார். ரீஜெண்ட் பதவியிலிருந்து தாம் விலகிக்கொள்வதாக நிரம்பக் கேட்டுக் கொண்டார். இனி அரசியலில் பிரவேசிப்ப தில்லையென்று சொன்னார். அரண்மனைக்குள் வசிக்கும் ரீஜெண்ட் சக்ரவர்த்தினியான எனக்கு ராஜ்யத்தின் சீர்கேடான நிலைமை இதுவரை தெரியாமலே இருந்தது. இனி நான் விஷயங்களை விசாரித்து ஆவன செய்ய முயல்வேன்.”
இந்த இரண்டு பிரகடனங்களையும் கொண்டே 1911ஆம் ஆண்டுக் கடைசியில் மஞ்சூ ஆட்சி எவ்வளவு சீர்கேடான நிலை மையிலிருந்த தென்பதை வாசகர்கள் ஒருவாறு தெரிந்துகொள்ள லாம். இந்தச் சீர்கேடான நிலைமையைத்தான், ஸன், சென்றபதி னாறு ஆண்டுகளுக்கு மேலாக உலகத்தினருக்கு உணர்த்தி வந்தான்.
இந்த இரண்டு பிரகடனங்களையும் பார்த்தவர்கள், மஞ்சூ அரசாங்கம், தன் செயல்களுக்கு வருந்துகின்ற தென்றும், இனி அதன் ஆட்சி ஒழுங்காக நடைபெறுமென்றும் எண்ணினார்களோ என்னவோ நமக்குத் தெரியாது. ஆனால் இந்தப் பிரகடனங்களுக்குப் பிறகு அது நடந்து கொண்ட மாதிரி, இந்தப் பிரகடனங்களுக்கு அடிப்படையில் நல்ல எண்ணமோ நல்ல நோக்கமோ இல்லை யென்பதை நன்கு புலப் படுத்தியது. ஒரு பக்கத்தில் பிரகடனத்தை வெளியிட்டுவிட்டு மற்றொரு பக்கத்தில் படைபலத்தைத் திரட்ட ஆரம்பித்தது மஞ்சூ அரச பீடம். சீனாவின் வட மாகாணங்கள் பல வற்றிலும், அரசாங்கத்திடம் பக்தி கொண்ட படைகள் ஏராளமாக இருந்தன. இவைகளையெல்லாம் ஒன்று கூட்டி யுவான் ஷிகாய்1 என்ற படைத் தலைவனிடம் ஒப்படைத்தது. இந்த யுவான் ஷிகாய், அரச தந்திரத்திலும் போர்த் தந்திரத்திலும் மிகச் சிறந்தவனென்று பெயரெடுத்தவன். சமீப காலமாக அரச பீடத்தோடு பிணங்கிக் கொண்டு பொதுவாழ்விலிருந்து ஒதுங்கியிருந்தான். இவனை அரசபீடம் அழைத்து, மஞ்சூ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி ஏற்படாத படி அதனைக் காப்பாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொண்டது.
யுவான் ஷிகாய் சுயநலவாதி. மஞ்சூ ஆட்சி அதமித்துப் போகின்ற நிலையில் இருக்கிறதென்பதையும், அதே சமயத்தில் மஞ்சூ ஆட்சிக்கு விரோதமான புரட்சி இயக்கம் நாளுக்கு நாள் வலுத்து வருகிற தென்பதையும் இவன் நன்கு தெரிந்துகொண் டிருந்தான். உண்மையில் இவனுக்கு மஞ்சூ அரச பீடத்தைக் காப்பாற்ற வேண்டுமென்ற எண்ண மில்லை. அதே சமயத்தில், புரட்சி இயக்கம் ஆக்கம் பெற்று வருவதையும் இவன் விரும்ப வில்லை. புரட்சிவாதிகளிடையே பிளவை யுண்டுபண்ணி அதன், மூலமாகப் புரட்சி இயக்கத்தைத் தன் படைபலம் கொண்டு ஒடுக்கி விட்டால், மஞ்சூ அரச பீடத்தைத தன்னிஷ்டத்திற்கு இணங்கும்படி செய்து, பிறகு சந்தர்ப்பம் நேரிடுகிறபோது அதனை வீழ்த்திவிட்டு, தானே சர்வாதிகாரியாகிவிடலாம், அல்லது தன்னை முதல்வனாகக் கொண்ட ஓர் அரச பரம்பரையை தாபித்து விடலாமென்ற எண்ணமே இவனுக்கு இருந்தது.
இந்த எண்ணத்துடன் இவன் பீக்கிங் நகரத்திலிருந்து ஒரு பெரும்படையுடன் புறப்பட்டான். ஆங்காங்கிருந்த புரட்சிப் படை களைத் தோல்வியுறச் செய்தான். சமரஸப் பேச்சு வார்த்தைகள் நடத்த விரும்புவதாகக் காரணஞ் சொல்லி, புரட்சிவாதிகளை அழைத்து, அவர் களிடையே வட சீனர் என்றும் தென் சீனரென்றும் வேற்றுமை யுணர்ச்சியைப் புகுத்தினான். இதன் மூலம், புரட்சி இயக்கத்தில் சம்பந்தப் பட்டிருந்த வட சீனரில் அநேகரைத் தன் பக்கம் அணைத்துக்கொண்டான். புரட்சி இயக்கத்தின் முக்கியதர் களென்று கருதப்பட்ட சிலரை - சிறப்பாகத் தென் சீனரை-சிரச் சேதம் செய்வித்தான். இதனால் சிலர் வெகுண்டு, இவன் உயிரைப் போக்கத் துணிந்தார்கள். ஆனால் இதை எப்படியோ இவன்-யுவான்-அறிந்து துணிந்தவர்களின் சிரத்தைத் துணிக்கச் செய்தான்.
இஃது இப்படியிருக்க, தெற்கு சீனாவின் பல பகுதிகளிலும் புரட்சி அரசாங்கங்களை அமைத்தவர்களுக்குள் ஒற்றுமையில்லாம லிருந்தது. ஒவ்வொரு பகுதியினரும், புரட்சியை வெற்றிகரமாகக் கொணர்ந்ததற்குத் தாங்கள்தான் காரணமென்று சொல்லிக் கொண்டு, தங்கள் தங்கள் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசி வந்தார்கள்.
இந்த நிலையில், தெற்கு சீனாவின் தலைநகரமென்று வெகு காலமாகக் கருதப்பட்டு முக்கியத்துவம் பெற்று வந்திருக்கிற நான்கிங்(Nanking) நகரத்தில், புரட்சி நடத்திய எல்லா மாகாணப் பிரதிநிதி களும் ஒன்றுகூடி, தங்களுக்குள் ஒரு தேசீய சபையை அமைத்துக் கொண்டார்கள். ராணுவ தோரணையில் தற்காலிக அரசாங்கமொன்றும் நிறுவப்பட்டது.
பின்னர் மேற்படி தேசீய சபை கூடி, குடியரசு முறையை அடிப்படையாகக் கொண்ட தேசீய அரசாங்கமொன்று நிரந்தர மாக அமைய வேண்டுமென்றும், இந்த அரசாங்கத்திற்குத் தற்காலிக தலைவனாக (பிரசிடெண்டாக) (President) ஸன் யாட் ஸென் இருக்க வேண்டு மென்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. ஸன்னின் வருகையைத் தேசீய சபையினர் ஆவலோடு எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
தலைமை துறந்ததன் விளைவு
இங்கிலாந்திலிருந்து சீனாவுக்குப் புறப்பட்ட ஸன், 1911ஆம் வருஷம் டிசம்பர் மாதம் மூன்றாவது வாரம் சிங்கப்பூர் வந்து சேர்ந்தான். இவன் தற்காலிக பிரசிடெண்டாகத் தெரிந்தெடுக்கப் பட்ட செய்தி இவன் வருவதற்கு முன்னரே அங்குள்ள சீனர்களுக்கு எட்டி விட்டது. அவர்கள், இவன் கப்பலிலிருந்து இறங்கியதும், வழி நெடுக வண்ண மலர்கள் தூவி இவனை வரவேற்று, தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டார்கள்.
சிங்கப்பூரில் ஓரிரண்டு நாட்கள் தங்கிவிட்டு, ஷாங்காய் நகரத்திற்கு வந்தான் ஸன். அங்குப் புரட்சித் தலைவர்களடங்கிய பிரதிநிதி கோஷ்டி யொன்று இவனை வரவேற்று, நான்கிங் நகரத் தில் ராணுவ தோரணையில் புரட்சி அரசாங்கம் ஏற்பட்டிருப்பது பற்றியும், சுமார் பதினான்கு மாகாணங்கள் இந்த அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குட் பட்டிருப்பது பற்றியும், யுவான் ஷிகாயின் தலைமையில் மஞ்சூ படையொன்று புரட்சி அரசாங்கத்திற்கு விரோதமாக நடவடிக்கைகள் எடுத்து வருவதுபற்றியும், குடியரசு முறையை அடிப்படையாகக் கொண்ட அரசாங்கத்தை தாபித்து அதன் முதல் பிரசிடெண்டாக ஸன் இருக்க வேண்டுமென்று தேசீய சபை தீர்மானம் நிறைவேற்றியிருப்பதுபற்றியும், இப்படி எல்லா விவரங்களையும் தெரிவித்தார்கள்.
ஆனால் கூர்த்த மதி படைத்த ஸன், புரட்சிவாதிகளிடையே பல விதமான வேற்றுமைகள் தலைதூக்கி நிற்கின்றன வென்பதை யும், புரட்சியாளர்களிற் சிலர், யுவான் ஷிகாயோடு சமரஸம் செய்து கொள்ள விருப்பமுடையவர்களா யிருப்பதையும் தெரிந்து கொண் டான். எனவே இன்னும் சிறிது காலத்திற்கு ராணுவ தோரணையி லேயே நான்கிங் அரசாங்கம் இயங்கிக் கொண்டு வருதல் நல்ல தென்று இவனுக்குத் தோன்றியது. ஏனென்றால், முதலில் சீனா பூராவிலும் அமைதியும் ஒழுங்கும் ஏற்படவேண்டியது அவசியம். அடுத்து மஞ்சூ ஆட்சியை ஆதரித்து வருகிற சுயநலக் கூட்டங்களை அடியோடு ஒழித்தல் வேண்டும். இவைகளைச் செய்ய, ராணுவக் கட்டுப்பாட்டுக்குட்பட்ட ஓர் அரசாங்கத்தினால்தான் இயலும். அதுவரை, குடியரசு அரசாங்கம் நிறுவுவதைத் தள்ளிப் போட வேண்டும். இப்படியெல்லாம் ஸன் கருதினான். ஆனால் பிரதிநிதி கோஷ்டியினர், உடனே குடியரசு அரசாங்கம் நிறுவப்படவேண்டு மென்றும், அதற்கு ஸன்னே முதல் பிரசிடெண்டாக இருக்கவேண்டு மென்றும் வேண்டிக்கொண்டனர். ஸன் இதற்கு இணங்க வேண்டியவனானான்.
1912ஆம் வருஷம் ஜனவரி மாதம் முதல் தேதி ஸன், நான்கிங் நகரத்திற்கு பிரவேசித்தான். இருபத்தோரு குண்டு மரியாதையுடன் கோலாகலமாக வரவேற்கப்பட்டான். குடியரசு முறையைத் தழுவிய அரசாங்கம் அன்று முதல் - 1912ஆம் வருஷம் ஜனவரி மாதம் முதல் தேதி முதல் - நிறுவப்படுகிறதென்றும், இதற்கு ஸன் யாட் ஸென், தற்காலிக பிரசிடெண்டென்றும் ஒரு பிரகடனம் வெளியிடப் பட்டது. ஸன்னும் தலைமைப் பதவியைச் சம்பிரதாயமாக ஏற்றுக் கொண்டான். நான்கிங் அரசாங்க மாளிகையில், குடியரசு கொடி பறந்தது. சென்ற முப்பது வருஷ காலமாக ஸன் கண்டுவந்த குடியரசுக் கனவு அன்று நனவாகியது.
பிரசிடெண்ட் பதவியை ஏற்றுக்கொண்டதும், ஸன், உலகத்தி லுள்ள எல்லா நாடுகளுக்கும் ஓர் அறிக்கை விடுத்தான். அதில், மஞ்சூ ஆட்சிக்கு முற்றுப்புள்ளியிடப் பெற்றுவிட்டதென்றும், அதன் தானத்தில் குடியரசு நிறுவப்பட்டிருக்கிறதென்றும், நாற்பது கோடி சீன மக்களின் நல்வாழ்க்கைக்குப் பாடுபடுவதே இந்தக் குடியரசின் நோக்கமாயிருக்கு மென்றும், இதற்கு எல்லா நாடுகளின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் கண்டிருந்தான். பிறகு ஸன், 1912ஆம் வருஷம் ஜனவரி மாதம் இருபத்தோராந் தேதி யிட்டு, லண்டனிலுள்ள காண்ட்லி தம்பதிகளுக்கு, தான் குடியரசின் பிரசிடெண்டானது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருமென்று நம்புவ தாகவும், குடியரசு ஏற்பட வேண்டுமென்பதற்காக, தான் மேற் கொண்ட உழைப்புக்கு ஊக்கமூட்டியவர்கள் அவர்களே யென்றும், அவர்கள் தன்னிடம் காட்டிய விசுவாசத்திற்குப் பெரிதும் நன்றி செலுத்துவதாகவும் ஒரு கடிதம் எழுதினான். எழுமையும் எழுபிறப்பும் உள்ளுவர், தங்கண் விழுமம் துடைத்தவர் நட்பு என்ற திருக்குறளுக்கு எடுத்துக்காட்டாயிருந்தது இந்தக் கடிதம்.
இஃது இப்படியிருக்க, நான்கிங்கில் குடியரசு அரசாங்கம் ஏற்பட்டது. அதற்கு ஸன் தலைவனாகத் தெரிந்தெடுக்கப்பட்டது. இவை யனைத்தையும் அவ்வப்பொழுது அறிந்துகொண்டு வந்த மஞ்சூ அரச பீடம் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றது, லண்டனிலுள்ள சில பணக்கார முதலாளிகளிடம் தான் கேட்டிருந்த கடன் தொகையும் கிடைக் காதென்று அதற்குத் தெரிந்துவிட்டது. ஸன், லண்டனிலிருக்கையில், அத்தொகை கிடைக்காதபடி செய்துவிட்டானல்லவா? தவிர, ராணுவ பலத்தையே நம்பிக் கொண்டிருக்க முடியாதென்பதையும் அந்த அரச பீடம் உணர்ந்து கொண்டது. எனவே, முடி துறப்பதைத் தவிர, வேறு வழியில்லை யென்று தீர்மானித்து, ரீஜெண்ட்டான த்ஸுஹ்ஸி என்பவள் பெயரால், 1912ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் பன்னி ரண்டாந் தேதி, ஒரு பிரகடனம் வெளியிடச் செய்தது. அதன் ஒரு பகுதி வருமாறு:-
இன்று நமது ஏகாதிபத்தியத்திலுள்ள எல்லாப் பிரஜைகளும், குடியரசு ஏற்பட வேண்டுமென்பதில் ஒரே மனமுடையவர்களாயிருக் கிறார்கள். ஆண்டவனுடைய திருவுள்ளமும் மக்களுடைய விருப்பமும் இன்னதென்று தெளிவாகத் தெரிகிறது. எங்கள் ஒரு குடும்பத்தினுடைய (அதாவது அரச வமிசத்தினுடைய நற்பெயருக் காகவும், கௌரவத் திற்காகவும், லட்சக்கணக்கான மக்களுடைய விருப்பத்தை எப்படிப் புறக்கணிக்க முடியும்? ஆகவே ரீஜெண்ட் டாகிய நாமும், (சீன) ஏகாதிபத்தியத்திலுள்ள எல்லா ஜனங் களுடைய ஆவலை நிறைவேற்றிக் கொடுக்கின்ற முறையில், சீனா வில் அரசியலமைப்பு, சட்ட வரம்புக்குட்பட்ட குடியரசு முறையைத் தழுவியதாக இருக்க வேண்டு மென்று தீர்மானிக்கிறோம்.
இந்தப் பிரகடனம் வெளியானதை அறிந்த யுவான் ஷிகாய், தனது நோக்கம் நிறைவேறுவதற்கான சூழ்நிலை அமைந்து வருவது கண்டு மகிழ்ச்சி கொண்டான். உடனே இந்தப் பிரகடனத்தை உறுதிப் படுத்தி, நான்கிங் அரசாங்கத்திற்கும் அதன் தலைவனான ஸன்னுக்கும் ஒரு தந்தி கொடுத்தான். ஆட்சி முறைகளிலே குடியரசு முறைதான் மிகச் சிறந்தது. உலகம் பூராவும் இதை ஒப்புக்கொண் டிருக்கிறது. சுயேச்சாதிகாரத்தி லிருந்து ஒரேயடியாகக் குடியரசுக்குத் தாண்டிவிட்டோம். நீங்களெல்லோரும் சேர்ந்து செய்த முயற்சியி னால்தான் இது சாத்தியமாயிற்று. இந்தக் குடியரசு முறைதான் ஜனங்களுக்கு மிகவும் நன்மை பயப்பதாகும். இனி நம் நாட்டில் எப்பொழுதும் மன்னராட்சி முறைக்கு இடங்கொடுக்க மாட் டோம். இவ்வாறு மேற்படி தந்தியில் கண்டிருந்தான். தவிர, நான்கிங் அரசாங்கத்தோடு, தான் ஒத்துழைக்கத் தயாராயிருப்ப தாகவும் தெரிவித்தான். உண்மையில், ஸன்னையும் நான்கிங் அரசாங்கத்தையும் தன் பக்கம் இழுத்துக்கொள்ள இவன் கை யாண்ட சூழ்ச்சியே இது.
ஸன் லட்சியவாதி; தூய்மையான உள்ளம் படைத்தவன். பிறரிடத்தில் அவ நம்பிக்கை கொள்வதென்பது இவனுக்குப் புறம் பான விஷயம். இதனால் யுவான் ஷிகாய் தெரிவித்ததை அப்படியே நம்பி விட்டான். குடியரசு அரசாங்கம் தொடர்ந்து நடைபெற வேண்டுமென் பதற்காகவும், அந்தக் குடியரசின் கீழ் சீனா முழுவதும் ஒற்றுமைப் பட்டிருக்க வேண்டுமென்பதற்காகவும், தன் பிரசி டெண்ட் பதவியை, யுவான் ஷிகாய்க்கு விட்டுக்கொடுத்தல் நல்ல தென்று கருதினான். ஏனென்றால் அவனுக்கு - யுவான் ஷிகாய்க்கு - படைபலம், போர்த்திறம், நிருவாக அனுபவம் ஆகிய இவை பலவும் இருந்தன. மற்றும் வட சீனாவில் அவனுக்கு அபாரமான செல் வாக்கு இருந்தது. அந்தச் செல்வாக்கை, வடசீனாவில் நிலவிவரும் புரட்சி இயக்கத்திற்கு விரோதமான சக்திகளை அடக்கி ஒடுக்க உபயோகிக்கலாமென்று இவன்-ஸன்-எண்ணினான். பொதுவாக, நாட்டின் ஒற்றுமைக்காகவும் நலனுக் காகவும் இவன், தனக்கு வலிய வந்த பதவியைத் துறக்கச் சித்தமானான். அப்படியே 1912ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் இருபத்து மூன்றாந் தேதி, தன் பிரசிடெண்ட் பதவியை ராஜீநாமா செய்தான்; அந்த தானத்தில் யுவான் ஷிகாயை நியமிக்கச் செய்தான். 1912ஆம் வருஷம் மார்ச் மாதம் பதினோராந் தேதி, ஐம்பத்தாறு ஷரத்துக்களடங்கிய, தற்காலிக அரசியல் திட்டமொன்று அமுலுக்குக் கொண்டுவரப் பட்டது.
யுவான் ஷிகாய், பீக்கிங் நகரத்திலிருந்து கொண்டே பிரசி டெண்ட் பதவியை ஏற்றுக்கொண்டான். புரட்சி அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள், அவனை நான்கிங்குக்கு வருமாறு அழைத்தார்கள். ஏனென்றால் அதுதானே, குடியரசு அரசாங்கத்தின் தலைநகரமாகத் தெரிந்தெடுக்கப் பட்டிருக்கிறது? தலைநகரத்தில்தானே தலைவனும் இருக்கவேண்டும்? இந்தக் காரணங்களைச் சொல்லி அழைத் தார்கள். ஆனால் யுவான், நான்கிங்குக்கு வர மறுத்துவிட்டான். தன் ஊர் யானை; அயலூர் பூனை என்பதை அவன் நன்கு அறிந்தவன். பொதுவாக வட மாகாணங்களிலும், சிறப்பாக பீக்கிங் நகரத்திலும் அவனுடைய படைபலமெல்லாம் இருந்தது. இதை அவன் வெளிப் படையாகத் தெரிவிக்கவில்லை. இதற்குத் தகுந்தாற் போல், பீக்கிங் நகரத்தில் சில்லரைக் கலகங்கள் ஏற்பட்டுக் கொண்டுவந்தன. இவை களை அடக்கி, அமைதியை உண்டுபண்ணு வதற்கு, தான் பீக்கிங்கில் இருக்க வேண்டியது அவசியமாயிருக்கிற தென்ற காரணத்தைக் காட்டி, அங்கேயே இருந்துவிட்டான். தவிர, பீக்கிங்தான், பரம்பரையாகச் சீனாவின் தலை நகரமாயிருந்து வருகிற தென்றும், ஆகவே, குடியரசின் கீழ் அதுவே தலைநகரமாயிருத்தல் பொருத்த மென்றும் எடுத்துக் கூறினான். புரட்சிவாதிகளும் இதை ஒப்புக் கொண்டார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில், யுவானுக்குப் பக்க பலமா யிருந்தான், வூசங் புரட்சிக்குத் தலைமை வகித்த லீயுவான் ஹுங். இவன், யுவானுக்கு அடுத்த படி குடியரசின் உபதலைவனாக - வை பிரசிடெண்டாகத் - தெரிந்தெடுக்கப் பட்டிருந்தான்.
யுவானிடம் பிரசிடெண்ட் பதவியை ஒப்புக் கொடுத்ததும் ஸன், இனி நிர்மாண வேலைகளில் ஈடுபடவேண்டுமென்று தீர் மானித்தான். முதலாவதாக, டுங் மெங் ஹுயி சங்கத்தைச் சீர்திருத்தி யமைத்தான். இதுகாறும், இச்சங்கத்தின் நோக்கம், புரட்சி செய்து குடியரசை தாபிப்பதா யிருந்ததல்லவா? இப்பொழுது அது நிறைவேறிவிட்டது. இனி, குடியரசை ஆதரிக்கின்ற முறையில், இது தனிப்பட்ட ஓர் அரசியல் கட்சியாக இயங்குவதுதான் சரியென்று உணர்ந்து, அதன்படி சங்கத்தின் அமைப்பு, நடைமுறை முதலிய வற்றை மாற்றச்செய்தான். இதற்கு ‘கோமிண்ட்டாங்’ (Kuomintang) கட்சி என்று பெயரும் கொடுத்தான். இது நடைபெற்றது 1912ஆம் வருஷம் மத்தியில்.
பின்னர் ஸன், சீனாவின் பல பகுதிகளிலும் சுற்றுப் பிராயாணஞ் செய்யத் தொடங்கினான். சென்ற விடமெல்லாம் சிறப்பும் பெற் றான். இவனை வரவேற்கின்ற முறையில் ஆங்காங்குப் பல பொதுக் கூட்டங்கள் நடைபெற்றன. இவற்றில் ஸன் பேசுகிறபொழுது, குடியரசுக்கு ஆக்கந் தேடித் தர வேண்டுமென்பதை வலியுறுத்தி வந்தான். அதாவது இவன் பேச்சுக்கள், யுவானை முற்றிலும் ஆதரிக்கின்ற முறையிலேயே அமைந் திருந்தன. இவனுடைய இந்தச் சுற்றுப் பிரயாணத்தின் விளைவாக, கோமிண்ட்டாங் கட்சியும் வலுப்பெறலாயிற்று.
இங்ஙனம் ஸன், யுவானிடத்தில் நம்பிக்கை வைத்துப் பேசி வருகையில், யுவான், இவனை ஒதுக்கித் தள்ளிவிட்டு. குடியரசின் சர்வ அதிகாரங்களையும் தன்னிடம் தேக்கி வைத்துக்கொள்வதற் கான சூழ்ச்சிகளில் முனைந்து நின்றான். ஸன்னோடு சேர்ந்து, புரட்சியில் ஈடுபட்டிருந்த இரண்டு பேரை, அரசாங்க நிருவாக சம்பந்தமாகக் கலந்தாலோசிக்க வேண்டுமென்று காரணஞ் சொல்லி, பீக்கிங்குக்கு வரவழைத்து, அவர்களைச் சிரச்சேதஞ் செய்துவிட்டான். இதில் தனக்கேதும் சம்பந்தமில்லை யென்கிற மாதிரி காட்டிக் கொண்டு, யுவான் சில நாட்கள் கழித்து, ஸன்னை யும் ஹுவாங் ஸுங்கையும்1 பீக்கிங்குக்கு வருமாறு அழைத்தான். இந்த அழைப்பில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறதென்று ஸன்னின் நண்பர்கள் கருதி இவனைப் போக வேண்டாமென்று தடுத்தார்கள். ஆனால் ஸன் இதைப் பொருட்படுத்தவில்லை; எவ்வித அச்சமோ அவநம்பிக்கையோ கொள்ளாமல் பீக்கிங்குக்குச் சென்றான். ஹுவாங் ஸிங் பின் தங்கிவிட்டான்.
ஸன் பீக்கிங்கை அடைந்ததும், நகர மக்கள் இவனுக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தார்கள். பொதுமக்களிடத்தில் ஸன்னுக்கு இவ்வளவு செல்வாக்கு இருக்குமென்று யுவான் எதிர் பார்க்கவில்லை; எனவே, ஸன்னுக்கு விரோதமாகத் தான் ஏதேனும் செய்ய முயன்றால், தன் பதவிக்கு ஆபத்து உண்டாகுமென்று உணர்ந்தான். ஏற்கனவே நான்கிங்கிலிருந்து வந்த புரட்சிவாதிகள் கொலையுண்டதற்காக பீக்கிங் மக்கள் ஆத்திரமடைந்திருந்தார்கள். இந்த ஆத்திரம் யுவானுக்கு விரோதமான முணுமுணுப்புச் சப்த மாகவும் கேட்டுக் கொண்டிருந்தது. இந்த நிலையில் அவன் - யுவான் - ஸன்னிடம் பகிரங்கமாக விரோதம் பாராட்டுவானா?
ஸன்னை வேறு விதமாக வசப்படுத்தத் தீர்மானித்தான் யுவான். இவனுக்கு ராஜோபசாரங்கள் நடத்துவிக்க ஏற்பாடு செய்தான்; அரசாங்கத்தின் சார்பாக விருந்துகள் பல நடைபெற்றன. இந்த விருந்துகளின் போது நிகழ்த்திய சொற்பொழிவுகளில் ஸன், சீனாவின் முன்னேற்றத்திற்கான சில திட்டங்களை வகுத்துக் காட்டி னான். சீனாவில் ரெயில் போக்குவரத்து வசதிகளை அதிகரிக்கச் செய்ய வேண்டுமென்பது, இந்தத் திட்டங்களில் ஒன்றாயிருந்தது. இஃது உடனே நடைமுறையில் கொண்டுவரப்பட வேண்டிய தென்று யுவான் கருதி, ஸன்னை, ரெயில்வே போக்குவரத்து மேலதிகாரியாக (டைரெக்டராக) நியமித்து, செலவினங்களுக்காக மாதந்தோறும் ஒரு பெருந்தொகையை ஒதுக்கிக் கொடுத்து, அதனை ரெயில்வே அபிவிருத்திக்கு உபயோகித்துக் கொள்ளுமாறு கூறினான். இந்தத் தொகையில் பெரும்பகுதியை ஸன், தன் சொந்தத் திற்கு உபயோகித்துக்கொண்டு பணக்காரனாகி விடுவானென்றும், இதனால் மனமாற்றம் அடைந்து, தன் சூழ்ச்சிகளுக்கு ஆதரவு தருவா னென்றும், ஆதரவு தராமற் போனாலும் எதிர்ப்புக் காட்டாம லிருப்பானென்றும் யுவான் எண்ணினான். அதாவது, லஞ்சம் கொடுத்து ஸன்னை வஞ்சகமாக மடக்கி, தன் கையாளாக ஆக்கிக் கொண்டுவிட வேண்டுமென்பது யுவானின் நோக்கம். ஆனால் ஸன் இந்தமாதிரியான இச்சைகளுக் கெல்லாம் அப்பாற்பட்டவன். தனக்குக் கொடுக்கப்பெற்ற பொறுப்பை, தேசீயப் பணியாகக் கருதி ஏற்று, தன் காரியாலயத்தை ஷாங்காய் நகரத்தில் அமைத்துக் கொண்டான்.
இதற்கிடையில் யுவான் அமைத்துக்கொண்ட மந்திரி சபைக் குள் பிணக்கு தோன்றிவிட்டது. சீனாவின் அபிவிருத்திக்கென்று சொல்லி, முந்தி மஞ்சூ அரசாங்கம் செய்ததுபோல், மேனாட்டுப் பண முதலாளி களடங்கிய ஒரு கூட்டு தாபனத்திடமிருந்து ஒரு பெருந்தொகையைக் கடனாக வாங்க யுவான் முயற்சி செய்து கொண்டிருந்தான். இதற்கு அவனுடைய மந்திரி சபையிலேயே பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. இந்த எதிர்ப்பை மறைக்கும் பொருட்டும், மேனாட்டு வல்லரசுகளின் நல்லெண்ணத்தையும் நம்பிக்கையையும் சம்பாதித்துக்கொள்ளும் பொருட்டும், யுவான், சில ஐரோப்பியர் களைத் தனக்கு ஆலோசகர்களாக நியமித்துக்கொண்டான். இவர் களைக் கொண்டு தன் காரியத்தைச் சாதித்துக் கொள்ளலாமென்று எதிர்பார்த்தான்.
மற்றும் யுவான், குடியரசுத் திட்டப்படி அமைக்கப்பட் டிருந்த தேசீய சபையைக் கூட்டி, கடன் வாங்க அனுமதி கோரி னான். ஆனால் சபையில் இதற்குப் பலமான கண்டனங்கள் எழுந்தன; இதைப்போல் வேறு இடங்களிலிருந்தும் கண்டனக் குரல்கள் எழும்பின. கண்டனம் செய்தவர்கள் வெகு சுலபமாக உயிரிழந்தார்கள். அவ்வளவென்ன, பிரதம மந்திரியாகத் தெரிந் தெடுக்கப்பட்ட ஸுங் சியோ ஜென்(Sung Chiao-Jen) என்பவனே ஷாங்காய் நகரத்திற்குச் சென்றிருந்த போது அங்குக் கொலை யுண்டான். இந்தக் காலத்தில், யுவான், கொலைக்கருவியைச் சிறிது தாராளமாகவே உபயோகித்தான் என்று சொல்லலாம். ஒன்றன் பின்னொன்றாக நிகழ்ந்த இந்தக் கொலைகள், பீக்கிங் நகரத்தில் மட்டுமல்ல. சர்வ சீனாவிலும் ஒரு பரபரப்பை உண்டுபண்ணின. ஆனால் யுவான் இதைப் பொருட்படுத்தவில்லை. கடன் பெற தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருந்தான். ஐரோப்பிய நாடு களிலுள்ள பண முதலாளிகளடங்கிய ஒரு கூட்டு தாபனம், யுவான் கோரிய கடனைக் கொடுக்க முன் வந்தது. அமெரிக்க பண முதலாளிகள் இதில் சேர்ந்து கொள்ளவில்லை.
கடன் தொகை கிடைத்ததும், அதை யுவான், குடியரசின் விரோதமான காரியங்களுக்குச் செலவழிப்பான் என்று தெரிந்ததும், ஸன் தன் கண்டனக்குரலை எழுப்ப முயன்றான். இது தெரிந்ததும், யுவான், கண்டனம் தெரிவிக்க வேண்டாமென்று, டாக்டர் ரிச்சர்ட் (Dr. Richard) என்ற ஓர் ஆங்கிலேயப் பாதிரி மூலம் சொல்லியனுப்பி னான். ஸன் இதற்கு இணங்கவில்லை. தன் ஆசிரியனும் நண்பனு மான டாக்டர் காண்ட்லி மூலம், பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு, கடன் கொடுக்க வேண்டாமென்று எச்சரிக்கை விடுத்தான். இது சம்பந்த மாக பிரிட்டிஷ் பத்திரிகைகளுக்குச் சில கட்டுரைகள் எழுதியனுப் பினான். ஆனால் அவை, இவற்றைப் பிரசுரிக்க மறுத்துவிட்டன.
கடைசியில் யுவான், தான் கோரிய கடனைப் பெற்றே விட்டான். இதைக்கொண்டு, முதலாவதாக, தன் படைபலத்தை அதிகரித்துக் கொண்டான். இங்ஙனம் யுவான் ஒரு பக்கம், தன் ஆதிக்கத்தை நிலைப் படுத்திக் கொள்ள முனைந்துகொண்டிருக்க, மற்றொரு பக்கம், அவனுடைய ஆதிக்கத்திற்கு விரோதமாகச் சிறு சிறு கலகங்கள் ஆங்காங்குத் தோன்றின. இவைகளைக் கடுமையாக அடக்கினான் யுவான்.
யுவான் கடன் பெற்றது, அதையொட்டிக் கலகங்கள் எழுந்தது எல்லாம் 1913ஆம் வருஷம் ஜனவரி மாதத் தொடக்கத்திலிருந்து ஜூன் மாதம் வரை நடைபெற்றன.
குடியரசு ஏற்பட்டுச் சுமார் பதினெட்டு மாதங்களாகியும், நாட்டின் எல்லாத் துறைகளிலும் ஒரு வித திரத்தன்மை ஏற்படாம லிருப்பது குறித்து ஸன் பெரிதும் மனம் வருந்தினான். யுவான் தொடர்ந்து பிரசிடெண்ட் பதவியிலிருந்து கொண்டிருந்தால், இதே நிலைமைதான் நீடிக்குமென்று இவனுக்குத் தோன்றியது. எனவே பிரசிடெண்ட் பதவியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு அவனுக்குத் தந்திமூலம் தெரிவித்தான். அந்தத் தந்தியின் ஒரு பகுதி வருமாறு:-
நாட்டின் கடினமான பொறுப்பை நிறைவேற்றும் பொருட்டு, பிரசிடெண்ட் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு நீங்கள் முந்தி அழைக்கப் பட்டீர்கள். இப்பொழுது, நாடு தொந்தரவான நிலை யில் சிக்கிக்கொள்ளா திருக்கும் பொருட்டு அந்தப் பதவியிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ள வேண்டும். என்னுடைய ஆலோசனையை நீங்கள் ஏற்றுக்கொள்வ தாயிருந்தால், நாட்டின் தெற்குப் பகுதியி லும் கிழக்குப் பகுதியிலும் ஆயுதபாணிகளாக நிற்கும் போர் வீரர்களுக்கும் ஜனங்களுக்கும் ஆயுதங்களைக் கீழே வையுங்கள் என்று நான் சொல்லமுடியும். என்னுடைய இந்த ஆலோசனையை நீங்கள் நிராகரிக்கும் பட்சத்தில், முடியாட்சிக்கு, அதாவது மஞ்சூ ஆட்சிக்கு விரோதமாக நான் என்னென்ன நடிவடிக்கைகள் எடுக்கும் படி நேர்ந்ததோ அதே நடவடிக்கைகளை உங்களுக்கு விரோதமாக எடுக்க நேரிடும். இது விஷயத்தில் நான் உறுதி கொண்டுவிட் டேன். கடைசி தடவையாக இந்த ஆலோசனையைக் கூறு கிறேன். நீங்கள் இதைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பீர்களென்று நம்புகிறேன்.
இந்தத் தந்தி, யுவானுக்குக் கோபத்தை மூட்டி விட்டது. ஸன்னை, ரெயில்வே டைரெக்டர் பதவியிலிருந்து விலக்கிவிட்டான்.
ஆனால் நாட்டில் யுவானுக்கு விரோதமான உணர்ச்சி வலுத்துவரத் தலைப்பட்டது. ஸன்னை விலக்கிவிட்ட அதே மாதத்திலேயே - 191ஆம் வருஷம் ஜூலை மாதத்திலேயே - யுவானின் சர்வாதிகாரப் போக்குக்கு நாட்டின் பல பகுதிகளிலும் எதிர்ப்புக்கள் தோன்றின. ஹுவாங் ஸிங்,1 நான்கிங்கைத் தலைநகர மாகக் கொண்டு, யுவானுக்கு விரோதமாக ஒரு பெரும்படை திரட்டி னான். இன்னும் சில மாகாணங்கள் படை திரட்டின. இந்தப் படை களொன்றின் தளகர்த்தனாக இருந்தான் சியாங் கை ஷேக். இந்தப் படைகள் யாவும் சேர்ந்து செயல்படுவதற்கு முன்னமேயே,யுவான் முன்னெச்சரிக்கையுடன் இருந்து கொண்டு, இந்த எதிர்ப்பு முயற்சி களையெல்லாம் முறியடித்துவிட்டான். ஸன், ஹுவாங் ஸிங், சியாங் கை ஷேக் முதலியோர் ஜப்பானுக்குத் தப்பியோடும்படி நேரிட்டது. ஸன்னுடன், சார்ல ஸுங்கும் அவன் இரண்டு குமாரத்திகளும் சென்றார்கள்.
ஜப்பானுக்குச் சென்ற ஸன், அங்கே சும்மாயிருக்கவில்லை. நாட்டு நன்மைக்கு விரோதமான சக்திகள் தலைவிரித்தாடுகிறபோது, இவனால் எப்படிச் சும்மாயிருக்க முடியும்? யுவான் ஷிகாயின் சர்வாதிகார ஆட்சி நிலைக்க வொட்டாதபடி தகைவது தனது கடமையென்று கருதினான். மறுபடியும் புரட்சி சக்திகளை ஒன்று படுத்தினான். இதற்காக, 1912ஆம் வருஷம் பிற்பகுதியில் கோமிண்ட்டாங் கட்சியை, பழையமாதிரி புரட்சிக் கட்சியாக மாற்றியமைத்தான். இதற்கு ‘கேமிண்ட்டாங்’ (Kemingtang) என்று பெயர் கொடுத்தான். இந்தத் தடவை, கட்சியைச் சில கட்டுப்பாடுகளுக்குட் படுத்தினான். தன்னுடைய தலைமையை ஏற்றுக்கொண்டு, தன்னி டம் விசுவாச முடையவர்களாய் இருப்பதாக யாரார் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்களோ அவர்கள் மட்டும் கட்சியில் அங்கத் தினர்களாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். இப்படிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டுமென்பதை ஹுவாங் ஸிங் போன்ற சிலர் விரும்பவில்லை. இதனால் அவர்கள் வெளிநாடு களுக்குச் சென்று விட்டார்கள். இன்னுஞ் சிலர், கட்சியிலிருந்து விலகிக்கொண்டு விட்டார்கள். மற்றுஞ் சிலர், யுவான் ஷிகாயின் சேவையில் அமர்ந்திருப்பதில் திருப்தி கண்டார்கள். தன்னோடு சேர்ந்து இதுகாறும் உழைத்த சிலர், இப்படி விலகிக்கெண்டு விட்டபோதிலும், ஸன் சிறிதும் தளர்ச்சியடையவில்லை. கட்சியை வலுப்படுத்தி வந்தான். இதற்காக முந்தின தடவைகளைப்போல் ரகசிய மாகவே வேலை செய்யவேண்டி யிருந்தது. ஜப்பானியனைப் போலவே பல தடவைகளிலும் நடித்து வந்தான். இடையிடையே, சீனாவுக்கு ரகசியமாகச் சென்று, யுவான் ஷிகாயின் சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப் புள்ளியிடும் வேலையைச் செய்துவந்தான். இந்தக் காலத்தில், இவனோடு ஜப்பானுக்கு வந்த ஸுங் குடும்பத்தினர் இவனுக்குப் பல வகையிலும் உதவியாயிருந்தனர்.
யுவானுக்குப் படைபலம் இருந்தது; ஐரோப்பிய வல்லரசு களின் பொருள் பலமும் இருந்தது. இவைகளை அவன் நன்கு தெரிந்து கொண்டிருந்தான். ஆனால் அதே சமயத்தில் தன்னைக் காட்டிலும் ஸன்னுக்குப் பொது ஜனங்களிடத்தில், அதிலும் தெற்கு மாகாணங்களில் அதிகமான செல்வாக்கு இருக்கிறதென்பதை அவன் மறந்துவிடவில்லை; அந்தச் செல்வாக்குக்கு அஞ்சவும் செய்தான். எனவே அந்தச் செல்வாக்கைக் குலைக்கத் தீர்மானித்து, ஸன்னுக்கு விரோதமாக இரண்டு நூல்களை வெளியிடச் செய்து நாடெங்கனும் பரவச் செய்தான். ஒன்றுக்கு ஸன் வென்னின் வாழ்க்கை வரலாறு என்று பெயர்; மற்றொன்றுக்கு ஸன்வென்-தேசத்தின் திருடன் என்று பெயர். இந்தப் பெயர்களைக் கொண்டே இந்த நூல்களின் பொருளடக்கத்தை ஒருவாறு தெரிந்து கொள்ள லாம். ஆனால் இவற்றினால், எதிர்பார்த்ததற்கு நேர் விரோதமான பலனே ஏற்பட்டது. ஸன்னின் செல்வாக்கு வளரவே செய்தது.
நாட்டில் தனக்கு விரோதமாகவுள்ள உணர்ச்சியையோ, ஸன்னுக்குள்ள செல்வாக்கையோ பொருட்படுத்தாமல், யுவான், தன்னை ஐந்து வருஷ காலம் தொடர்ந்தாற்போல் குடியரசின் பிரசிடெண்டாக இருக்குமாறு கேட்டுக்கொள்வதாக, தேசீய சபையில் ஒரு தீர்மானம் கொண்டுவரச் செய்து, அதனைப் பலவந்தமாக நிறைவேற்றச் செய்தான். ஆனால் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாமல் சீனாவிலேயே இருந்த தேசீய சபையின் அங்கத் தினர் பெரும்பாலோர். பிரசிடெண்டின், அதாவது யுவான் ஷிகாயின் அதிகாரத்தை ஒரு வரையறைக்குட்படுத்த வேண்டு மென்று, சபை யில் பல தீர்மானங்கள் கொண்டுவர முனைந்தார்கள். முனைந்தவர் களில் சுமார் முன்னூறு பேர், சபையினின்று அப்புறப் படுத்தப்பட் டார்கள். இதனால் சபையில் குறைந்தபட்ச எண்ணிக்கை யுடைய அங்கத்தினர்கள் கூட இல்லாமற் போய்விட்டது. இதனை ஒரு காரணமாகவும், நாட்டின் பல பகுதிகளிலும் எழுந்துள்ள கிளர்ச்சி களை அடக்க, எல்லா அதிகாரங்களும் தன்னிடமே இருக்க வேண்டு மென்பதை மற்றொரு காரணமாகவும் காட்டி, யுவான் 1915ஆம் வருஷம் ஜனவரி மாதம் தேசீய சபையைக் கலைத்துவிட்டான். இதன் மூலம் தன்னை ஒரு சர்வாதிகாரியாக ஆக்கிக் கொண்டான். இவனுடைய இந்தச் சர்வாதிகாரப் போக்குக்கு ஐரோப்பிய வல்லரசுகள் ஆதரவு கொடுத்தன. இந்த ஆதரவு, யுவானுக்கிருந்த அதிகார ஆசையை ஒரு வெறியாக முற்றச் செய்தது. பரம்பரை பாத்தியதையுடைய ஓர் அரச வமிசத்திற்கு, தான் ஏன் மூல புருஷனாயிருக்கக் கூடாதென்ற கேள்வி இவன் உள்ளத்தே எழுந்தது. ஒரு சக்ரவர்த்தியாக முடிசூட்டிக்கொள்ளத் தீர்மானித்தான். 1916ஆம் வருஷம் ஜனவரி மாதம்முதல் தேதி, தான் முடி சூட்டிக் கொள்வதென்று தேதியை நிர்ணயித்து, இது சம்பந்தமாக ஒரு பிரகடனத்தையும் வெளியிடச் செய்தான். இதற்குச் சோபானமாக ஓர் அமெரிக்கனுடைய துணை கொண்டு, சீனா, குடியரசு முறைக்குத் தகுதியுடையதில்லை யென்றும், எப்பொழுதும் போல் அங்கு முடியரசுதான் நிலவ வேண்டுமென்றும், முடியரசின் கீழ்தான் அதன் எதிர்காலத்து நல்வாழ்வு இருக்கிறதென்றும் பிரசாரம் செய்வித்தான்; அந்த அமெரிக்கனுடைய துணை கொண்டே முடியரசு முறையை அடிப்படையாகக் கொண்டு ஓர் அரசியல் திட்டத்தையும் தயாரிக்கச் செய்தான்; தான் முடி சூட்டிக்கொள்வதற்கான ஏற்பாடுகளையும் செய்துவந்தான்.
இதற்கு எதிர்ப்பு இல்லாமற் போகுமா? யுவானுடைய மந்திரி சபை யிலேயே எதிர்ப்பு ஏற்பட்டது. மந்திரிகள் சிலர் ராஜீநாமா செய்தார்கள். பொது ஜனங்களிடையிலும் கிளர்ச்சி எழுந்தது. குடியரசு ஏற்பட்டு அதனால் அதிக நன்மைகள் உண்டாகவில்லை யென்பதை ஜனங்கள் உணர்ந்திருந்தார்கள். அப்படி நன்மைகள் உண்டாகாதபடி அநேக தடைகள் குறுக்கிட்டு வருகின்றன என்ப தும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. ஆனாலும் முடியரசு முறைக்கு ஆதரவு தர அவர்கள் தயாராயில்லை. ஸன், சென்ற பல ஆண்டு களாகச் செய்துவந்த பிரசாரம் குடியரசு முறை யிலேயே அவர்கள் மனத்தைப் பதியச் செய்துவிட்டது. உடனடியாக இல்லா விட்டாலும், சிறிது காலத்திற்குப் பிறகாவது, குடியரசு முறையின் கீழ்தான் நன்மையடைய முடியும் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு ஏற்பட்டிருந்தது.
யுவானுடைய பிரகடனம் ஜனங்களுக்கு அதிக ஆத்திரத்தை உண்டு பண்ணிவிட்டது. குடியரசைக் காப்பாற்ற வேண்டுமென்ற கொள்கையைக் கொண்ட ஓர் இயக்கம் தோன்றியது. 1916ஆம் வருஷம் ஜனவரி மாதம் முதல் தேதி யுவானின் முடிசூட்டு விழா நிச்சயிக்கப் பட்டிருந்ததல்லவா, இதற்குச் சுமார் மூன்று வாரங் களுக்கு முந்தியே, அதாவது 1915ஆம் வருஷம் டிசம்பர் மாதம் முதல் வாரம், இந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், ஷாங்காய் நகரத்தி லுள்ள ஆயுத கிடங்கைத் தாக்கினார்கள். இதனால் அதிக பலன் ஏற்படவில்லையானாலும், ஜனங்களுடைய ஆத்திரம் இதன் மூலம் ஒருவாறு வெளிப்பட்டது. இந்தச் சமயத்தில் ஸன்னும் ஹுவாங் ஸிங்கும் ஜப்பானிலிருந்து ரகசியமாக ஷாங்காய் நகருக்கு வந்து தங்கியிருந்தார்கள். இவர்களுடைய தூண்டுதல் பேரில் தான் மேற்படி ஆயுத கிடங்கு தாக்கப்பட்டதாக அப்பொழுது சொல்லப் பட்டது.
ஷாங்காய் நகரத்தில் ஆயுத கிடங்கு தாக்கப்பட்ட சுமார் இருபது நாட்கள் கழித்து, தென்மேற்குப் பகுதியிலுள்ள யுன்னான் (Yunnan) மாகாணம், யுவான் ஷிகாய்க்கு விரோதமாகக் கலகக் கொடி தூக்கியது. இதற்குக் காரணமாக இருந்தவன் லியாங் சீ சௌ. இவன் முதலில், முடியரசை ஆதரிக்கும் சீர்திருத்தவாதியாக இருந்தா னென்பது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கும். மஞ்சூ அரச பீடத்தி னால் தேசப் பிரஷ்டம்செய்யப்பட்டதும், ஜப்பானுக்குச் சென்று அங்கு ஸன்னோடு சேர்ந்து கொண்டு குடியரசுக்காக உழைத்து வந்தான். குடியரசு ஏற்பட்டதும், யுவான் ஷிகாயிடம் நம்பிக்கை கொண்டு, அவனுடைய மந்திரிசபையில் ஓர் அங்கத்தினனாகச் சேர்ந்து உத்தியோகம் பார்த்தான். சிறிது காலத்திற்குப் பிறகு, யுவானின் சர்வாதிகாரப் போக்கு பிடிக்காமல், மந்திரி சபையி லிருந்து ராஜீநாமா செய்துவிட்டு, ஸன்னோடு வந்து சேர்ந்து கொண் டான். யுவானுக்கு விரோதமாக யுன்னான் மாகாணத்தில் கலகத்தைக் கிளப்பிவிட்டு அதற்குத் தலைமை வகித்தான். அது மட்டுமல்ல; யுன்னான் மாகாணம், யுவானின் அதிகார வரம்பிலிருந்து விலகிக் கொண்டு விட்டதாக அறிவித்தும் விட்டான்.
உண்மையில் யுவான் ஷிகாய் இதை எதிர்பார்க்கவில்லை. ஜனவரி மாதம் முதல் தேதி, தான் முடிசூட்டிக் கொள்வதாக இருந்ததைத் தள்ளிப் போட்டான். ஆனால் யுன்னான் மாகா ணத்தில் தொடங்கிய கலகம் அங்கேயே தேங்கிவிடவில்லை; மற்ற மாகாணங்களுக்கும் பரவியது. 1916ஆம் வருஷம் மார்ச்சு மாதம் பதினைந்து தேதிக்குள் ஆறு மாகாணங்கள், யுன்னான் மாகா ணத்தைப் பின்பற்றி, யுவான் ஆதிக்கத்திலிருந்து விடைபெற்றுக் கொண்டன.
தனக்கு எதிர்ப்பு வலுத்துக்கொண்டு வருவதைப் பார்த்த யுவான், 1916ஆம் வருஷம் மார்ச்சு மாதம் இருபத்திரண்டாந் தேதி, முடி சூட்டிக் கொள்ளும் எண்ணத்தை, தான் கைவிட்டு விட்ட தாகவும், குடியரசு முறையில் அரசாங்கத்தை அமைக்க ஏற்பாடுகள் செய்து கொண்டிருப்ப தாகவும் ஒரு பிரகடனம் வெளியிடச் செய்தான்.
ஆயினும் குடியரசுவாதிகளுக்கு இது திருப்தியளிக்கவில். எப்பொழுது யுவான், தான் சக்ரவர்த்தியாக முடிசூட்டிக்கொள்ளப் போவ தாகப் பிரகடனம் வெளியிட்டானோ அப்பொழுதே அவன், குடியரசின் பிரசிடெண்டாக இருப்பதற்குத் தகுதியற்றவனாகி விட்டான்; அந்தப் பதவியிலிருந்து அவன் விலகிக் கொண்டு விட்ட தாகவே கருதப்பட வேண்டுமென்று தீர்மானித்து இவர்கள் பீக்கிங் அரசாங்கத்திற்குப் போட்டியாக காண்ட்டன் நகரத்தில் ஓர் அரசாங்கத்தை ஏற்படுத்தினார்கள். பீக்கிங் அரசாங்கத்தின் உப தலைவனாக - வை பிரசிடெண்டாக - இருக்கும் லீயுவான் ஹுங்கை, காண்ட்டன் அரசாங்கத்தின் பிரசிடெண்டாக இருக்கு மாறு கேட்டுக்கொண்டார்கள். ஆனால் அவன் மறுத்துவிட்டான். பீக்கிங் நகரத்தை விட்டு வெளிவர அவன் துணியவில்லை.
யுவான் ஷிகாயிடத்தில் ஜனங்களுக்கு வர வர நம்பிக்கை குறைந்து வந்தது. எதிர்ப்புக்களும் அதிகமாயின. இவைகளை ஊக்குவிக்கின்ற முறையில் ஸன் பலத்த பிரசாரம் செய்து வந்தான். இவையெல்லாம் சேர்ந்து, யுவானின் ஆசை நிறைந்த உள்ளத்தை அரிக்கச் செய்தன. கூடவே நோயும் பற்றிக் கொண்டது. கடைசியில் 1916ஆம் வருஷம் ஜூன் மாதம் ஆறாந் தேதி பீக்கிங்கிலேயே இறந்து போனான்.
குடும்ப வாழ்ககை
இந்த அத்தியாயத்தில், ஸன்னின் குடும்ப வாழ்க்கையைப் பற்றிச் சிறிது பேசுவோம்.
1912ஆம் வருஷம் ஜனவரி மாதம் குடியரசு ஏற்படுகிற வரை, ஸன்னின் குடும்ப வாழ்க்கை, கொந்தளிப்பு நிறைந்த சமுத்திரத்தில் ஆடி அலைந்து செல்லும் ஒரு கப்பல் மாதிரியாகவே இருந்தது. தொடர்ந் தாற்போல் சிறிது காலமேனும், தன் குடும்பத்தினரோடு சேர்ந்து மன நிம்மதியுடன் வாழ்ந்துகொண்டிருந்தானென்று சொல்ல முடியாது. அப்படிச் சேர்ந்து வாழ்ந்த சொற்ப காலத்திலும், இடையிடையே புரட்சி சம்பந்தமான வேலைகளில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம் இவனுக்கு ஏற்பட்டது. ஆயினும் இவன், நன்றியுள்ள சகோதரனாகவும், மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் தவறாத தந்தையாகவும், விசுவாசமுள்ள கணவனாக வும் நடந்து வந்தான்.
இவன் மனைவி, லூஸூ, சீனாவின் பழைய சம்பிரதாயங்களில் ஊறிப்போனவள். கணவனிடமும் அவனைச் சேர்ந்தவர்களிடமும் மிகுந்த பயபக்தியுடன் நடந்து வந்தாள்; தன் கணவன், தன்னோடு சேர்ந்திருக்க வில்லையென்பதற்கு இவள் அதிகமாக வருத்தம் காட்டிக்கொள்ள வில்லை; காட்டிக்கொள்வதால் பயனில்லை யென்பதையும் இவள் தெரிந்து கொண்டிருந்தாள்; தன் மூன்று குழந்தைகளின் வளர்ச்சியில் கருத்தைச் செலுத்திக்கொண்டு, கணவன் தன்னோடு சேர்ந்திராத குறையை ஒருவாறு மறந்திருந்தாள்.
மூன்று குழந்தைகளில் ஆண் மகன் ஒருவன்; ஸன் போ என்று பெயர். பெண்கள் இரண்டு பேர். இவர்களைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். இவர்கள் குடியரசு ஏற்பட்டு, ஸன் அதன் முதல் பிரசிடெண்டாகத் தெரிந்தெடுக்கப்படும் வரை, அதாவது 1912 ஆம் வருஷம் வரை, தங்கள் தாயோடு ஆமியின் பராமரிப்பிலேயே வாழ்ந்து வந்தார்கள். ஆமியும் இவர்களை அதிக கவனத்தோடு பரா மரித்து வந்தான். ஸன்னின் விருப்பப்படி, மகன் ஸன் போ, அமெரிக்கா விலுள்ள காலிபோர்னியா சர்வ கலாசாலையில் படித்து வந்தான்.
இஃது இப்படியிருக்க, குடியரசு ஏற்படுவதற்கு இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முந்தியே, ஆமி, ஹவாயி தீவிலிருந்த தன் சொத்து பற்றுக்களையெல்லாம் விற்று முதலாக்கிக் கொண்டு, தன் தாய் நாட்டில் திரமாக வசிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் ஹாங்காங் தீவுக்குச் சமீபத்தில் பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்குப்பட்டிருந்த கௌ லூன்(Kowloon) என்ற பகுதியில் வந்து குடியேறினான்; தன்னோடு, ஸன்னின் மனைவி மக்களையும் அழைத்துக் கொண்டு வந்தான். அப்பொழுது இவனுக்கு - ஆமிக்கு - ஏறக்குறைய அறுபது வயது.
சில ஆண்டுகளாகவே, ஆமி ஸன்னின் புரட்சிக் கொள்கை களுக்குத் தன்னாலியன்ற அளவு ஆதரவு தந்து வந்தானென்பதை வாசகர்கள் அறிவார்கள். இப்பொழுது கௌலூன் வந்த பிறகு, ஸன்னின் புரட்சி முயற்சிகளில் தீவிர பங்கெடுத்துக்கொண்டான். இவன் வீடு, புரட்சியாளர்களின் தலைமை தானமாகிவிட்டது. இது கண்ட பிரிட்டிஷ் அதிகாரிகள், இவனை, கௌலூனை விட்டு வெளியேறி விடும்படி உத்தரவிட்டார்கள். இதனால் இவன்-ஆமி-பிரெஞ்சு ஆதிக்கத்துக்குட்பட்ட ஒரு பிரதேசத்தில் சிறிது காலம் தங்கிவிட்டு, கடைசியில் மாக்கோ என்ற தீவில் குடியேறினான். இங்குதான், ஸன், ஆரம்பத்தில் வைத்தியத் தொழில் தொடங்கினா னென்பது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கும்.2
ஆமி, மாக்கோ தீவில் வந்து குடியேறிய சொற்ப காலத்திற்குப் பிறகு, குடியரசு அமைந்து, ஸன், அதன் பிரசிடெண்டானான். இதைக் கேட்டதும், அமெரிக்காவில் காலிபோர்னியா சர்வ கலாசாலையில் படித்துக் கொண்டிருந்த ஸன் போ-ஸன்னின் மகன்-குடியரசுக்குத் தன்னாலியன்ற சேவையைச் செய்ய வேண்டுமென்ற உற்சாக மேலீட்டால், சீனாவுக்கு வந்தான். இப்படி இவன் வந்ததை ஸன் அவ்வளவாக விரும்பவில்லை. ஏனென்றால் குடியரசின் பிரசிடெண்டாகிவிட்டானே தவிர, சொற்ப காலத்திற்குள் இவ னுடைய வாழ்க்கை திரமற்றதொரு வாழ்க்கையாகி விட்ட தல்லவா? இந்த நிலைமையில், தன் மகன் தன்னோடு இருந்து என்ன செய்ய முடியும் என்பதே இவன் கேள்வி.
நான்கிங்கில் குடியரசு அரசாங்கம் அமைந்து, அங்கே பிரசி டெண்ட் என்ற ஹோதாவில் இவன் வசிக்கக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டதும், மாக்கோவிலிருந்து, தன் மனைவி மக்களை அழைத்துக் கெண்டான். ஆனால் சொற்ப காலமே இப்படிக் குடும்பத்தோடு இருக்க முடிந்தது. பிறகு இவன் வாழ்க்கை பழையபடி நாடோடி வாழ்க்கையாகி விட்டது. மனைவியை மாக்கோவுக்கு அனுப்பி னான்; மகன் ஸன் போவை, மேல் படிப்பை முடித்து வர மறுபடியும் அமெரிக்காவிலுள்ள காலிபோர்னி யாவுக்கு அனுப்பினான்; அவனோடு, தன் பெண்கள் இருவரையும், அங்கேயே படித்துவர அனுப்பினான். அப்பொழுது ஸன்னின் பழைய நண்பனான டாக்டர் ஹாகர்1 அங்கே இருந்தான். அவனுடைய பராமரிப்பில் இந்த மூவரும் படித்து வந்தார்கள்.
ஸன், புரட்சி முயற்சிகளில் ஈடுபட்டிருந்த காலங்களில், அடிக்கடி ஷாங்காய் நகருக்கு ஒளிமறைவாக வந்து போவா னென்றும், அப்பொழுதெல்லாம் ஸுங் குடும்பத்தினர் இவனுக்குப் பலவிதங்களிலும் உதவியாயிருந்து வந்தனரென்றும், அதேபோல் ஜப்பானுக்குச் சென்ற பிறகும் உதவியா யிருந்தனரென்றும் முந்திச் சொல்லியிருக்கிறோ மல்லவா? இந்தக் குடும்பத்தின் மூன்று பெண்களில் மூத்தவளான ஏலிங் என்பவள், ஸன்னின் காரியதரிசியா யிருந்து அரும்பணியாற்றி வந்தாள். இவள் ஜப்பானில் இருக்கும் போது எச். எச். குங் என்பவனை மணந்துகொண்டாள்.2 பிறகு இவளுடைய அடுத்த சகோதரியாகிய சிங் லிங் என்பவள், ஸன்னின் காரிய தரிசியாயிருந்து வந்தாள். காரியதரிசி யாயிருந்ததோடு மட்டுமல்ல, ஸன்னின் அரசியல் லட்சியத்திலும் வாழ்க்கைப் போக்கிலும் ஒத்த மனமுடையவளாயிருந்தாள். தவிர, ஸன்னுக்கும், தன்னுடைய பொதுநல வாழ்க்கையோடு இணைந்து போகக் கூடிய ஒருத்தியை, தன் வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற விருப்பம் இருந்தது. எனவே சிங் லிங்கை மணந்து கொள்வதென்று தீர்மானித்தான்.
இப்படி இவன் தீர்மானித்ததினால், ஏற்கனவே இவனுக்கு வாழ்க்கைப்பட்டிருந்த லூஸு வினிடத்தில் இவனுக்கு வெறுப்போ அலட்சியமோ ஏற்பட்டுவிட்ட தென்று சொல்ல முடியாது. லூஸுவும், ஸன்னினிடத்தில் பரம விசுவாசம் வைத்து நடந்து வந்தாள். உண்மையில் இவ்விருவருக்குமிடையே சுமார் முப்பது வருஷ காலமாக நிலவிவந்த கணவன்-மனைவி உறவு, எல்லா வகையிலும் சீன சம்பிரதாயத்தை அனுசரித்ததாகவே இருந்தது. இந்த உறவில் ஒருபோதும் எவ்வித கரகரப்பும் ஏற்பட்டது கிடை யாது. ஆனால் ஸன்னின் கொந்தளிப்பு நிறைந்த வாழ்க்கையோடு ஒட்டிப்போக முடியாத வளா யிருந்தாள் லுஸு; அதற்கு மாறாக, நாளேற நாளேற எட்டியே போய்க்கொண்டிருந்தாள். இதற்காக அவளை எப்படிக் குறை சொல்ல முடியும்? சீனாவில் பழமையான பழக்க வழக்கங்கள், எண்ணப் போக்குகள் முதலிய வற்றோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டிருந்தாள் அவள். அவற்றினின்று விடுவித்துக்கொள்ளக்கூடிய, நவீன நாகரிகப் போக்கோடு ஒட்டிப் போகக்கூடிய பயிற்சியை அவள் பெறவில்லை; பெறுவதற்கான ஆவலோ, தகுதியோ, மனோதிடமோ எதுவும் அவளுக்கு இல்லை.
ஸன், சிங் லிங்கை மணஞ் செய்து கொள்வதென்று தீர்மா னித்ததும், மாக்கோவிலிருந்த லூஸுவை ஜப்பானுக்கு வரவழைத் தான். அவளோடு கலந்து பேசினான். இருவரும் விவாகரத்து செய்து கொண்டார்கள். இதற்குப் பிறகுதான், ஸன்னுக்கும் சிங் லிங்குக்கும் 1915ஆம் வருஷம் அக்டோபர் மாதம் இருபத்தைந்தாந் தேதி டோக்கியோ நகரத்தில் மிகவும் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.
இந்த விவாகத்திற்குப் பிறகு ஸன்னும் சிங் லிங்கும் சேர்ந்து வாழ்ந்ததெல்லாம் பத்து வருஷ காலந்தான். ஆனால் இந்தப் பத்து வருஷ காலத்தில், இருவரும் சேர்ந்து நடத்திய வாழ்க்கை இனிய இல்லற வாழ்க்கையாக மட்டுமல்லாமல், நாட்டு நலனை நாடிச் சென்ற வாழ்க்கை யாகவும் இருந்ததென்று சொல்லி இந்த அத்தியாயத்தை முடிப்போம்.
துரோகத்தினின்று தப்பிய விந்தை
யுவான் ஷிகாய் இறந்த பிறகு, லீ யுவான் ஹுங், குடியரசின் பிரசிடெண்டானான். இவன், 1911ஆம் வருஷம் அக்டோபர் மாதம் வூசங்கில் நடைபெற்ற புரட்சிக்குக் கட்டாயத்தின் பேரில் தலைவ னாக்கப்பட்டவன் என்பது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். இவன், பிரசிடெண்ட் பதவியை ஏற்றுக்கொண்டதும், யுவான்ஷிகா யினால் ரத்து செய்யப்பட்டிருந்த அரசியல் சட்டத்தை அமுலுக்குக் கொண்டுவரச் செய்தான். அதாவது குடியரசு ஏற்பட்ட பிறகு, எந்த முறையில் அரசாங்க அமைப்பு முதலியன இருக்க வேண்டுமென்று சட்டம் செய்யப் பட்டிருந்ததோ அந்தச் சட்டத்தை அமுலுக்குக் கொண்டுவரச் செய்தான். யுவான் ஷிகாயினால் கலைக்கப்பட்டு விட்டிருந்த தேசீய சபையைக் கூட்டுவித்தான்.
இது தெரிந்ததும் ஜப்பானிலிருந்த ஸன்னும், ஸுங் குடும்பத் தினரும் சீனாவுக்கு வந்து சேர்ந்தார்கள். இனி, தான் சீனாவில் செய்ய வேண்டிய வேலை நிறைய இருப்பதை ஸன் உணர்ந்தான். எனவே சீனாவுக்கு வந்து, காண்ட்டன் நகரத்திலிருந்து கொண்டு குடி யரசு அரசாங்கத்திற்கு ஆதரவு தருகின்ற முறையில் பிரசாரஞ் செய்து வந்தான்.
லீ யுவான் ஹுங் பிரசிடெண்ட் பதவியை ஏற்றுக்கொண்டு, குடியரசுக்குப் புதுவாழ்வு கொடுக்க முயன்றானெனினும் இவனுடைய முயற்சிக்குச் சாதகமான சூழ்நிலை அமையவில்லை. இவனுடைய மந்திரிசபைக்குள்ளேயே கட்சிப் பிரதி கட்சிகள் ஏற்பட்டுவிட்டன. அரசாங்க சக்தியென்பது வலுவிழந்து நின்றது. பண பலமும் படை பலமுமுடையவர்கள் ஆங்காங்குத் தோன்றிக் கலகம் விளைவித்தார்கள்.
இந்த நிலையில் 1914ஆம் வருஷம் ஆகட் மாதம் தொடங்கிய ஐரோப்பிய மகா யுத்தம் மும்முரமாக நடைபெற்று வந்தது. இதில் சீனாவை இழுத்து விட ஐரோப்பிய வல்லரசுகள் முனைந்தன. இதற்காக, பீக்கிங் அரசாங்கத்திற்கு, அதாவது லீ யுவான் ஹுங்கைப் பிரசிடெண்டாகக் கொண்டிருந்த அரசாங்கத்திற்கு எல்லாச் சலுகைகளும் காட்டி வந்தன. இந்த அரசாங்கத்திற்கே மதிப்பும் கொடுத்துவந்தன.
யுத்தத்தில் சீனா சேருவதா வேண்டாமா என்பதைப் பற்றி ஒரு முடிவு செய்ய பீக்கிங் நகரத்தில் தேசீய சபை கூட்டப்பட்டது. பெரும் பாலோரான அங்கத்தினர்கள் யுத்தத்தில் சீனா சேரக்கூடா தென்று சொன்னார்கள். ஆனால் அப்பொழுது அரசாங்கத்தின் பிரதம மந்திரியா யிருந்த துவான் சீ #&Æ(Tuan Chi-Jui) பெரும் பாலோரின் அபிப்பிராயத்தைப் புறக்கணித்து விட்டு, சீனா, நேசக் கட்சி யினருடன் சேர்ந்துகொண்டு, ஜெர்மனி மீது யுத்தந் தொடுத் திருப்பதாகப் பிரகடனம் செய்துவிட்டான்.
இதனால் யுத்தத்தில் சீனா பிரவேசிக்கக் கூடாதென்று கருதிய வர்கள், தெற்குப் பகுதிக்கு வந்து காண்ட்டன் நகரத்தில் 1917 ஆம் வருஷம் ஆகட் மாதம் கடைசி வாரம் ஓர் அரசாங்கத்தை தாபித்து, இதுதான் சீனாவின் பிரதிநிதித்துவம் வாய்ந்த அரசாங்கம் என்று ஒரு பிரகடனம் வெளியிட்டார்கள். இந்த அரசாங்கத்திற்கு ஸன் பிரசிடெண்டாகத் தெரிந் தெடுக்கப் பட்டான். இந்த காண்ட்டன் அரசாங்கம், சீனா யுத்தத்தில் இழுத்துவிடப்படுவதை ஆட்சேபிப்ப தாக ஒரு பிரகடனம் வெளியிட்டது.
ஆனால் இந்த அரசாங்க அங்கத்தினர்களுக்குள்ளேயே பிணக்குகள் தலைதூக்கி நின்றன. ஸன் சர்வாதிகார தோரணையில் நிருவாகத்தை நடத்த முற்படுவதாகச் சிலர் முணுமுணுத்தனர். இந்த நிலையில் பீக்கிங் அரசாங்கத்தின் செல்வாக்கை யொடுக்கி, சர்வ சீனாவுக்கும் ஒரே அரசாங்கத்தை ஏற்படுத்த இவர்கள் சில நட வடிக்கைகள் எடுத்துக் கொண்டார்கள். ஆனால் விளைந்த பயன் ஏதுமில்லை. பீக்கிங்கில் அமைந்த அரசாங்கத்தின் அதிகாரம், எப்படி அந்த நகர எல்லைக்குள் மட்டும் செல்லுபடியாகிக் கொண் டிருந்ததோ அப்படியே காண்ட்டனில் அமைந்த அரசாங்கத்தின் அதிகாரமும் அந்த நகர எல்லைக்குள் மட்டும் செல்லுபடியாகிக் கொண்டிருந்ததென்று சொல்லலாம். ஆக, சீனாவின் பெரும்பகுதி, எந்த வித ஒழுங்கான அதிகாரத்திற்கும் உட்படாமல் ஒரே குழப்ப நிலையில் இருந்தது. 1917ஆம் வருஷம் மத்தியிலிருந்து 1926ஆம் வருஷம் வரையில், ஏறக்குறைய இதே நிலைமைதான் இருந்த தென்று சொல்லவேண்டும்.
காண்ட்டன் அரசாங்கம் சரியானபடி செயலாற்ற முடிய வில்லையே யென்பதற்காக ஸன் பெரிதும் வருந்தினான். ஒரு வித சோர்வு இவனை ஆட்கொண்டது. அரசியல் வாழ்விலிருந்து ஒதுங்கி விடுவதென்றும், சீனாவின் புனருத்தாரணத்திற்காகச் சில திட்டங்கள் வகுத்து அவற்றை நூல் வடிவாக்கி வெளியிடுவ தென்றும் யோசித்தான். இதன் விளைவாக தேசீய புனர் நிர்மாணத் திற்கான திட்டங்கள் என்ற தலைப்பில் மூன்று பகுதிகள் கொண்ட ஒரு நூல் 1918ஆம் ஆண்டுக் கடைசியில் வெளியா யிற்று.
இந்த நூல் வெளியானபோது, 1914ஆம் வருஷம் தொடங்கிய முதல் உலக மகா யுத்தம் முடியுந்தருணத்தில் இருந்தது. இந்த யுத்தம் முடிந்த பிறகு, யுத்தத் தேவைகளைப் பூர்த்தி செய்து வந்த தொழிற் சாலைகள் பல மூடப்பட வேண்டியிருக்குமென்றும், இதனால் வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்படுமென்றும், இதனைச் சமாளிக்க, நிர்மாண திட்டங் களை வகுத்துக்கொள்ள வேண்டியது அவசியமென்றும் சொல்லி, இந்த நூலில் சில திட்டங்களையும் வகுத்துக் காட்டினான் ஸன். இதே நூல் பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. இதில் ஓரிடத்தில் கூறுகிறான்:-
சமீபத்தில் நடைபெற்ற யுத்தம், மானிட சமுதாயத்திற்கு ஒரு பெரிய உண்மையை நிரூபித்துக் காட்டி விட்டது. அஃது என்னவென்றால், போர் தொடுத்தவர்கள், தொடுக்கப்பட்டவர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் யுத்தத்தினால் அழிவே உண்டாகும், அதிலும் போர் தொடுத்தவர் களுக்குத்தான் அதிக அழிவு உண்டா கும் என்பதுதான். ஆயுதப் போரினால் ஏற்படுகிற அழிவைக் காட்டிலும், வியாபாரப் போட்டியினால் ஏற்படுகிற அழிவுதான் அதிகமாயிருக்கும். வருங்காலத்தில் யுத்தம் ஏற்படாமலிருக்க, சர்வதேச சங்கமொன்றை அமைக்க வேண்டுமென்று, பிரசிடெண்ட் வில்ஸன் கூறுகிறார். இதே பிரகாரம், சீனாவை அபிவிருத்தி செய்யும் விஷயத்தில் பரபர உதவி, ஒத்துழைப்பு இவை மூலம் வியாபாரப் போட்டியையும் அதனால் விளையக் கூடிய சண்டை சச்சரவுகளையும் தவிர்க்க வேண்டுமென்று நான் ஆசைப்படு கிறேன். இப்படிச் செய்யப்படுமானால், இனி யுத்தம் ஏற்படுவதற் கான காரணமே இல்லாமற் போய்விடும். சர்வ தேசங்களும் இந்த முறையில் ஒத்துழைக்கு மானால் மானிட சகோதரத்துவம் வளரும்.
தன்னுடைய இந்த ஒத்துழைப்புத் திட்டத்தை ஸன், ஐரோப்பிய அரசாங்கங்கள் அனைத்திற்கும் அனுப்பினான். ஆனால் ஓர் அரசாங்க மாவது, இதற்குக் கொடுக்க வேண்டிய மதிப்பைக் கொடுக்கவில்லை; அலட்சியப் படுத்திவிட்டன என்று கூடச் சொல்லலாம்.
காண்ட்டன் அரசாங்கம், சரியானபடி செயலாற்றி வரவில்லை யென்றாலும் அது வளர்ந்து வரும் ஒரு சக்தியென்பதை ஐரோப்பிய வல்லரசுகள் உணர்ந்து கொண்டுதான் வந்தன. இதற்கு, இந்த காண்ட்டன் அரசாங்கத்திற்கு, ஐரோப்பிய வல்லரசுகள் உதவி செய்ய வில்லை யென்றாலும், பிரிட்டனும் அமெரிக்காவுமாவது தக்க முறையில் உதவி செய்யும் என்று ஸன் எதிர்பார்த்தான். ஒன்றும் நடைபெறவில்லை. ஆனால் இதனை-இந்த காண்ட்டன் அரசாங்கத்தை - அவை அலட்சியப் படுத்தி விடவும் துணிவு கொள்ளவில்லை. 1918ஆம் வருஷக் கடைசியில் முடிவுற்ற யுத்தத்திற்குப் பிறகு நடை பெற்ற பாரி சமாதான மகாநாட்டிற்கு பீக்கிங் அரசாங்கத்தி லிருந்து பிரதிநிதிகள் அழைக்கப்பட்டது போல், காண்ட்டன் அரசாங்கத்திலிருந்தும் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டார்கள். ஆக சீனாவின் பெயரால் இரண்டு அரசாங்கங்களிலிருந்து பிரதிநிதிகள் பாரி சமாதான மகா நாட்டிற்குச் சென்றார்கள்.
இவர்கள் இந்த மகாநாட்டில் கிளத்திய கோரிக்கைகள் பலவும் நிராகரிக்கப்பட்டன. இதனால் சீனாவில் பெருங்கிளர்ச்சி யுண்டாயிற்று. இதன் விளைவாக, சமாதான ஒப்பந்தத்தில் சீனப் பிரதிநிதிகள் கையெழுத்திடவில்லை.
இஃது இப்படியிருக்க, ஸன், அரசியல் வாழ்விலிருந்து ஒதுங்கி யிருக்க விரும்பினானென்றாலும், அப்பொழுதைய அரசியல் நிலைமை யானது, இவனை ஒதுங்கியிருக்கவிடவில்லை; தொடர்ந் தாற் போல் காண்ட்டன் அரசாங்கத்தின் பிரசிடெண்டாக இருந்து வந்தான்.
காண்ட்டன் அரசாங்கத்தின் சக்தியும் வர வர அதிகரித்துக் கொண்டு வந்தது. இதை உணர்ந்த ஸன், 1921 ஆம் வருஷம், சீனாவின் வடக்குப் பகுதியில் அட்டூழியம் புரிந்துகொண்டு வரும் படைபலங்கொண்ட பிரபுக் களை அடக்கி ஒடுக்க, ஒரு படை திரட்டி அனுப்ப வேண்டுமென்று தீர்மானித்தான். ஆனால் ராணுவத் தலைவர்களில் ஒருவனாகிய சென்சியுங் மிங்(Chen Chiuhg-ming) இதை ஆட்சேபித்தான். ஆட்சேபித்தவனை ஒதுக்கிவிடாமல் ஸன், அவ னிடத்திலேயே, மேற்படி படையெடுப்புக்கு வேண்டிய ஏற்பாடு களைச் செய்யும் பொறுப்பை ஒப்படைத்தான். எப்பொழுதுமே ஸன், பிறரைச் சுலபமாக நம்பிவிடுகிறவன். இவனுடைய களங்க மற்ற மனம்தான் இதற்குக் காரணம் இவன் திட்டப்படி வடக்கு நோக்கி ஒரு பெரும் படை அனுப்பப்பட்டது. இந்தப் படை, முன் னோக்கிச் சிறிது தூரம் சென்றதும், இதற்கு உணவுப் பொருள்கள் முதலியன அனுப்புவதற்குப் பொறுப்பேற்றுக்கொண்டிருந்த ஒரு தளகர்த்தன் கொலை செய்யப்பட்டான். செங் சியுங் மிங்தான் இதனைத் தூண்டியிருக்க அனுப்பினார்கள். ஆனால் ஸன்னுக்கு வேண்டுமென்று அப்பொழுது சொல்லப்பட்டது. ஆனால் ஸன் இதனை நம்பவில்லை. செங் சியுங் மிங்குக்கு, ராணுவத்தின் ஒரு பகுதி கட்டுப்பட்டிருந்தது. இந்தப் பலத்தை வைத்துக் கொண்டு அவன் ஸன்னுக்கு விரோதமாக ரகசியத்தில் வேலை செய்து வந்தான்.
இந்த நிலையில், வடக்கே பீக்கிங் அரசாங்கத்தைச் சேர்ந்த வர்கள், காண்ட்டன் அரசாங்கத்தைக் கலைத்துவிட்டு, தங்களோடு ஒன்று சேர்ந்து, சர்வ சீனாவின் நலனுக்காக உழைக்குமாறும், இது விஷயமாகக் கலந்தாலோசிக்க பீக்கிங்குக்கு வருமாறும் ஸன்னுக்கு அழைப்பு அனுப்பினார்கள். ஆனால் ஸன்னுக்கு இந்த அழைப்பில் அவநம்பிக்கை ஏற்பட்டது. தன் விஷயத்தில் அவர்கள் விரோத உணர்ச்சி கொண்டிருக் கிறார்களென்று தெரிந்து கொண்டான். எனவே அழைப்பை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டான். பீக்கிங்குக்குச் செல்லவில்லை. வடக்கு நோக்கி அனுப்பப்பட்ட படைக்கு திரும்பி வந்துவிடுமாறு உத்தரவிட்டான்.
இது தெரிந்ததும், செங் சியுங் மிங், பகிரங்கமாகவே ஸன்னுக்கு விரோதம் காட்ட தலைப்பட்டான். தன் கீழிருக்கும் படையைக் கொண்டு, காண்ட்டன் நகரத்தில் ஸன் வசித்துக்கொண்டிருந்த பிரசிடெண்ட் மாளிகையைத் தாக்க ஏற்பாடு செய்தான். அப் பொழுது மேற்படி நகரத்தில், ஸன்னிடம் விசுவாசமுள்ள படைகள் மிகக் குறைவாகவே இருந்தன. வடக்கு நோக்கி அனுப்பப்பட்ட படை இன்னும் திரும்பி வந்து சேர வில்லை. இந்த நிலைமையைத் தெரிந்துகொண்டுதான் செங் சியுங் மிங், பிரசிடெண்ட் மாளிகையைத் தாக்க முற்பட்டான்.
செங் சியுங் மிங், பகிரங்கமாகக் கலகத்திற்குக் கிளம்பிவிட்டா னென்றும், விரைவில் பிரசிடெண்ட் மாளிகையைத் தாக்கக் கூடு மென்றும், ஸன்னின் மெய்க்காப்பாளர்களாக நின்ற சிலர், ஸன்னுக்கு முன்கூட்டி எச்சரிக்கை கொடுத்தார்கள். ஆனால் ஸன் இதை நம்ப வில்லை; செங் சியுங் மிங், அவ்வளவு விசுவாசமற்றவனாக நடந்து கொள்ள மாட்டானென்று கூறினான். ஆயினும் அவர்கள், ஸன்னை, மாளிகையை விட்டு எப்படியாவது தப்பிச் செல்லுமாறு வற்புறுத் தினார்கள். இதற்கு ஸன், அக்கிரமமான எதிர்ப்பு ஏற் பட்டிருக்கிறபொழுது, என் கடமைகளைப் புறக்கணித்துவிட்டு விலகிச் செல்ல முடியாது. அப்படிச் செல்வேனானால், ஜனங்கள் என்னிடம் வைத்திருக்கும் நம்பிக்கைக்குத் துரோகம் செய்தவ னாவேன். என் உயிர் பெரிதல்ல எனக்கு வெற்றி முக்கியமல்ல. நாட்டுக்குத் துரோகம் செய்கிறவர்களை அப்புறப்படுத்தவேண் டியது என் கடமை. ஆகையால் செங் சியுங் மிங்கின் இந்தத் துரோகச் செயலை எப்படியாவது அடக்கிப் போடுவேன் என்று பதில் கூறினான். ஆயினும் என்ன?
1922ஆம் வருஷம் ஜூன் மாதம் பதினாறாந் தேதி பின்னிரவு சுமார் இரண்டு மணி இருக்கும். செங் சியுங் மிங்கின் படை, பிரசிடெண்ட் மாளிகையைச் சூழ்ந்து கொண்டு தாக்க ஆரம்பித்து விட்டது. ஸன், தன் மனைவி சிங் லிங்கைத் தூக்கத்திலிருந்து எழுப்பி, இருவரும் எப்படியாவது தப்பிச் செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்ட தென்றும், ஆற்றோரம் சென்று அங்கு ஆற்றில் இருக்கும் சீனக் கடற் படைக்குச் சொந்தமான ஒரு படகில் ஏறிக்கொண்டு வேறு இடத்திற்குச் சென்றுவிட வேண்டுமென்றும் கூறினான். ஆனால் சிங் லிங் இதற்குச் சம்மதிக்கவில்லை. அவள் மகா தைரியசாலி; தான் மாளிகையிலேயே இருப்பதாகவும், தான் ஒரு பெண்ணானபடியால், தன்னை யாரும் ஒன்றுஞ் செய்ய மாட்டார்களென்றும், ஸன் மட்டும் தப்பித்துச் செல்ல வேண்டியது அவசியமென்றும் சாவதானமாக எடுத்துச் சொன்னாள். இந்த யோசனையை ஸன் உடனே ஏற்றுக்கொண்டான். சுமார் ஐம்பது பேர் கொண்ட ஒரு சிறு படையை தன் மனைவிக்குப் பாதுகாப்பாக இருக்கும்படி செய்து விட்டு, தான் மட்டும் வெளியே சென்றான்.
சென்று, ஆற்றோரம் நோக்கி நடந்து கொண்டிருக்கையில், செங் சியுங் மிங்கின் படையைச் சேர்ந்த சிலர், கூச்சலும் குழப்பமும் விளைவித்துக் கொண்டு, எதிர்ப்பக்கமாக வந்துக்கொண்டிருந்தனர். ஸன், இவர்களோடு ஒருவனாகச் சேர்ந்துகொண்டான். சிறிதுகூட மன அமைதியை இழக்கமால் இவர்கள் கூடவே சிறிது தூரம் வந்தான். ஆற்றுப் பக்கமாக இவர்கள் வந்து கொண்டிருக்கையில் இவர்களிடமிருந்து நழுவிப் போய் ஆற்றிலிருந்த கடற்படைப் படகில் ஏறிக்கொண்டான்.
அங்கு பிரசிடெண்ட் மாளிகையில் ஸன் இருக்கிறானென்று கருதி கலகக்காரர்கள், அதாவது செங் சியுங் மிங்கின் படையைச் சேர்ந்தவர்கள் மாளிகைக்குள் நுழைந்து சூறையாட ஆரம்பித் தார்கள். சிங் லிங்குக்குக் காவலாகச் சுமார் ஐம்பது பேர் வரை இருந் தார்களல்லவா, அவர்களத் தனை பேரும் இந்தக் கலகக்காரர்கள் கையில் கொலையுண்டார்கள். சிங் லிங்கின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் போலிருந்தது. எனவே அவள், தன் பக்கத்திலேயே எப்பொழுதும் இருந்துகொண்டிருந்த இரண்டு பேரைத் துணைக்கு அழைத்துக்கொண்டு ஓர் ஆண்பிள்ளை வேஷத்துடன் மெதுவாக மாளிகையிலிருந்து தப்பி வெளியே வந்து விட்டாள். வந்து ஒரு தெரு வழியாகப் போய்க்கொண்டிருக்கையில், எதிர்ப்பக்கமாக, கொள்ளை யடிப்பதையே நோக்கமாகக் கொண்ட ஒரு கூட்டம் வந்து கொண்டிருந்தது. தன்னை யாராவது அடையாளம் கண்டுபிடித்துத் தாக்கினால் என்ன செய்வது என்று ஒரு கணம் யோசித்தாள். தெரு ஓரத்தில் கீழே படுத்துக் கொண்டு பிணம்போல் கிடந்துவிட்டாள். இதனால் கொள்ளைக்கூட்டம் இவளைக் கவனிக்கவில்லை. அந்தக் கூட்டம் அப்பாற் சென்ற பிறகு இவள் எழுந்து சிறிது தூரத்திலிருந்த ஒரு குடியானவன் வீட்டை அடைந்து அங்கே தஞ்சம் புகுந்தாள். இவளை அந்த வீட்டில் இருக்கச் செய்துவிட்டு, கூட வந்த இருவருள் ஒருவன், மேற்கொண்டு தப்பிச் செல்வதற்கு என்ன வழி இருக்கிற தென்று பார்க்க வெளியே சென்றான். சென்றவன் திரும்பி வரவே இல்லை; கொள்ளைக் கூட்டத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டான். சிங் லிங்குக்கு இது தெரிந்தது. உடனே ஒரு குடியானவப் பெண் மாதிரி வேஷந் தரித்துக் கொண்டாள்; துணையாளாக இருந்த மற்றொருவனை, சில்லரைச் சாமான் விற்பவனாக வேஷந் தரித்துக் கொள்ளச் செய்தாள். இந்த விதமாக இருவரும், மேற்படி குடியானவன் வீட்டிலிருந்து வெளியேறி, வழியிலே ஏற்பட்ட சில இடையூறுகளைச் சமாளித்துக்கொண்டு, கடைசியில், ஸன் தங்கி யிருந்த படகுக்குப் போய்ச் சேர்ந்தார்கள். பிறகு இவளை மாறு வேஷத்துடனேயே ஸன், தக்க பாதுகாப்புடன் ஹாங்காங்குக்கு அனுப்பி விட்டு, தான்மட்டும் படகிலேயே இருந்தான். இந்தக் காலத்தில் இவனுக்குப் பெரிதும் துணையா யிருந்தவன் சியாங் கை ஷேக்.
வடக்கு நோக்கி அனுப்பப்பட்ட படை விரைவில் காண்ட்டன் நகருக்குத் திரும்பி வந்து விடுமென்றும், வந்து செங் சியுங் மிங்கின் படையை விரட்டியடித்து விடுமென்றும், பிறகு காண்ட்டன் நகரத்திற்குள் பிரவேசிப்பது சுலப சாத்தியமாயிருக்கு மென்றும் எண்ணிக் கொண்டு தான் ஸன் படகிலேயே இருந்தான். ஆனால் இவன் எண்ணப்படி நடக்க வில்லை. சுமார் இரண்டு மாத காலம் இவனும் சியாங் கை ஷேக்கும் படகிலேயே காலங்கழிக்க வேண்டியதாயிற்று.
வடக்கிலிருந்து திரும்பி வந்த படையை, செங் சியுங் மிங், தோல்வி காணச் செய்தான். பிறகு, ஸன்னைக் கொலை செய்யும்படி ஏற்பாடு செய்துகொண்டிருப்பதாகப் புலன் கிடைத்தது. இனி காண்ட்டன் அருகில் இருப்பது ஆபத்து என்று உணர்ந்தான் ஸன். இதற்குத் தகுந்தாற்போல் இவன் தங்கியிருந்த படகை, செங் சியுங் மிங்கின் படையினர் குண்டு போட்டுத் தாக்கிய வண்ணமா யிருந்தனர். இதனால் இவன் சியாங்கை ஷேக்குடன் வேறிடத்திற்குத் தப்பிச்செல்ல வேண்டியது அவசியமாகி விட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில் பிரிட்டிஷ் அதிகாரிகள், இவர்களுக்கு உதவியாக இருந்தார்கள்; தங்களுடைய ஒரு கப்பலில் இவர்களை ஏற்றிக் கொண்டு போய் ஹாங்காங்கில் கொண்டு விட்டார்கள். அங்கிருந்து இவர்கள் ஷாங்காய் நகரத்திற்குச் சென்றார்கள். ஸன் இங்ஙனம் தப்பிச் சென்றதனால், மக்களிடையே இவனுடைய மதிப்பு உயர்ந்ததே தவிர குறையவில்லை.
கோமிண்ட்டாங் காங்கிர
ஸன், லண்டனில் 1896ஆம் வருஷம், சீன தானீகனுடைய காரியாலத்திலிருந்து தப்பி வெளியே வந்து சிறிது காலம் தங்கி யிருந்தபோது, நூல் நிலையத்தில் நாடு கடத்தப்பட்ட சில ருஷ்யர் களைச் சந்தித்ததையும், அவர்களிடமிருந்து, அங்கு - ருஷ்யாவில் புரட்சி ஏற்படக் கூடிய ஒரு சூழ்நிலை அமைந்து வருகிறதென்று இவன் கேள்விப் பட்டதையும் முந்திச் சொன்னோமல்லவா,1 அந்தப் புரட்சி அங்கு 1917ஆம் வருஷம் அக்டோபர் மாதம் நடைபெற்றே விட்டது. இதன் விளைவாக ஜார் ஆட்சி வீழ்ந்தது; லெனின்2 தலைமையில் குடியாட்சி அமைந்தது.
ருஷ்யாவும் சீனாவும் ஒன்றையொன்று தொட்டுக் கொண் டிருக்கிற நாடுகள். இரண்டின் எல்லைப்புறங்களும் சந்திக்கின்றன. இரண்டும் விதீரணமான நிலப்பரப்புடையவை. இரண்டிலும் விவசாயத்தையே முக்கிய ஜீவனோபாயமாகக் கொண்ட மக்களே அதிகம்; தொழில் முயற்சிகள் மிகக் குறைவு; போக்குவரவு சாதனங் களோ வசதிகளோ அதிகமில்லை; அறியாமையிலும் வறுமையிலும் மூழ்கிக் கிடக்கும் மக்களின் எண்ணிக்கை கோடிக்கணக்கில். ருஷ்யா, புதுவாழ்வு பெற வேண்டுமென்பதில் லெனின் எவ்வளவு கவலையுடையவனாகவும் அக்கரையுடையவனாகவும் இருந் தானோ அதேபோல் ஸன்னும் சீனா விஷயத்தில் கவலையுடைய வனாகவும் அக்கரையுடையவனாகவும் இருந்தான். இருவருடைய நோக்கங்களும் ஏறக்குறைய ஒரே மாதிரி யாகவே இருந்தன. எனவே ருஷ்யாவில் புரட்சி ஏற்பட்டதென்று தெரிந்து ஸன் மகிழ்ச்சி கொண்டானென்பதில் ஆச்சரியமில்லை. லெனினுக்குத் தன் பாராட்டுதலைத் தெரிவித்து ஒரு தந்தியும் கொடுத்தான்.
லெனின் தலைமையில் அமைந்த சோவியத் அரசாங்கமும் சீனா விஷயத்தில் பரிவு காட்டியது; முந்தி ஜார் ஆட்சியின் கீழ் சீனாவில், தான் கொண்டாடி வந்த பாத்தியதைகளையெல்லாம், சில பேச்சு வார்த்தை களுக்குப் பிறகு 1920ஆம் வருஷம் விட்டுக் கொடுத்து விட்டது. இதே பிரகாரம் ஐரோப்பிய வல்லரசுகளும் அமெரிக்காவும், சீனாவில் கொண்டாடி வந்த பாத்தியதைகளையும் அனுபவித்து வந்த சலுகை களையும் விட்டுக்கொடுத்து விடுமென்று ஸன் எதிர்பார்த்தான். ஆனால் ஏமாற்றமே அடைந்தான்.
1921ஆம் வருஷம் லெனின், தன் பிரதிநிதியாக ஒருவனைச் சீனாவுக்கு அனுப்பி அங்குள்ள நிலைமையை அறிந்து வரச்செய் தான். அவனும் முதலில் பீக்கிங் நகரம் வந்து அங்குள்ள நிலைமையை ஒருவாறு அறிந்துகொண்டு பிறகு தெற்கே காண்ட்டன் நகரம் போந்து ஸன்னைச் சந்தித்தான். இந்தச் சந்திப்பின் விளைவாக, சீனாவிலேயே ஸன் ஒருவனுக்குத்தான் திடமான கொள்கையும், ஒரு திட்டம் வகுத்துக்கொண்டு அதன் பிரகாரம் வேலை செய்ய வேண்டுமென்ற உறுதிப்பாடும் இருக்கின்றனவென்று இவன் அபிப்பிராயப்பட்டு இங்ஙனமே லெனினுக்கும் தெரிவித்தான். இதற்குப் பிறகு லெனினுக்கு ஸன்னிடம் அதிக மதிப்பு ஏற்பட்டது. ஸன்னும், ஏகாதிபத்திய சக்தியை எதிர்த்து நிற்பதற்காக சோவியத் அரசாங்கம் கடைப்பிடித்து வரும் கொள்கைகள், நடைமுறைகள் முதலியவற்றைக் கூர்ந்து கவனித்து வந்தான். தவிர, மற்ற மேலை நாட்டு வல்லரசுகள், சீனாவை அலட்சியப் பார்வையோடு பார்த்துக் கொண்டிருக்க, சோவியத் ருஷ்யா ஒன்றுதான் சீனாவை, தனக்குச் சமதையான அந்ததில் வைத்துக் கணித்து வந்தது. இத்தகைய காரணங்களினால், ஸன், சோவியத் அரசாங்கத்திடம் அதிக மதிப்பு வைக்கத் தொடங்கினான்; அதன் ஆலோசனையை நாடவும் செய் தான். இதனால் சோவியத் அரசாங்கம் கடைப்பிடித்து வந்த பொது வுடைமைக் கொள்கையை இவன் அப்படியே ஏற்றுக் கொண்டு விட்டான் என்று சொல்ல முடியாது. சீனாவின் அப்பொழுதைய நிலைமைக்கு பொதுவுடைமைத் தத்துவம் ஏற்றதன்று என இவன் கருதினான். இதைப் பல தடவை வலியுறுத்திப் பேசியுமிருக்கிறான்.
1922ஆம் வருஷம் ஆகட் மாதம் சோவியத் அரசாங்கம், அடால்ப் ஜாப்பே1 என்பவனைச் சீனாவுக்கு அனுப்பியது. இந்த ஜாப்பே சிறந்த ராஜ தந்திரி. இவன், முந்திய வருஷம் வந்த பிரதிநிதியைப் போல் முதலில் பீக்கிங் நகரம் போந்தான். அங்கு இவனுக்கு நடைபெற்ற உபசரிப்புக்கள் பல. ஓரிடத்தில் பேசிய போது இவன், சீனா ஏகாதிபத்திய சக்திகளின் பிடிப்பினின்று எந்தத் தருணத்தில் விடுவித்துக் கொள்கிறதோ அந்தத் தருணத்திலிருந்து, ருஷ்யாவின் உதவியை நிச்சயமாக எதிர்பார்க்கலா மென்றும், சீனாவை, சோவியத் அரசாங்கம் சம அந்ததிலேயே எப்பொழுதும் வைத்து நடத்துமென்றும் குறிப்பிட்டான்.
பிறகு 1923 ஆம் வருஷம் ஜனவரி மாதம் ஜாப்பே தெற்கே வந்து ஸன்னைச் சந்தித்துப் பேசினான். முதலில் ஸன், சோவியத் அரசாங்கம் உதவி செய்வதாகச் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டான். பிறகு பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடந்ததன் பேரில் சோவியத் அரசாங்கத்தின் நல்லெண்ணத்தில் இவனுக்கு ஓரளவு நம்பிக்கை ஏற்பட்டது. இருவரும் - ஸன்னும் ஜாப்பேயும் - சேர்ந்து ஒரு கூட்டறிக்கை வெளியிட்டனர். இதில், சீனா வின் தற்போதைய நிலைமையில், பொதுவுடைமைக் கொள்கையை நடைமுறையில் கொண்டுவர முடியாதென்றும், சீனாவின் உடனடி யான தேவை தேசீய ஒற்றுமையென்றும், இந்த ஒற்றுமைப்படும் விஷயத்தில் சோவியத் அரசாங்கத்தின் பரிபூரண உதவி சீனாவுக்கு எப்பொழுதும் இருந்து கொண்டிருக்குமென்றும் காணப்பட்டன.
எதற்காக இந்த ஸன் - ஜாப்பே கூட்டறிக்கையைப் பற்றிப் பிரதாபிக்கிறோமென்றால், சோவியத் அரசாங்கத்தின் பொது வுடைமைக் கொள்கையோ, அதன் நடைமுறைகளோ சீனாவின் அன்றைய நிலைமைக்குப் பொருந்தா என்பதை ஸன் நன்கு உணர்ந்திருந்தான் என்பதை எடுத்துக்காட்டும் பொருட்டுத்தான்.
ஆனால் 1917ஆம் வருஷத்து ருஷ்யப் புரட்சி, சீன சமுதாயத் தில் ஒரு வித சலசலப்பை உண்டு பண்ணவே செய்தது. வறுமையிலே உழன்று கொண்டிருந்த சீன மக்கள், தங்கள் விமோசனத்திற்கு, சோவியத் அரசாங்கத்தின் பொதுவுடைமைக் கொள்கை வழிகாட்டு மென்று கருதத் தொடங்கினார்கள். இந்தக் கருத்து வேரூன்று வதற்கும் பரவுவதற்கும் உதவுகின்ற முறையில், சோவியத் அரசாங்கப் பிரதிநிதிகள், அவ்வப் பொழுது சீனாவுக்கு வந்து போய்க்கொண் டிருந்தனர். இத்தகைய பல காரணங்களினால், சீனாவில் பொது வுடைமைக் கட்சியொன்று தனியாக உருவாகி வளர்ந்து வந்தது. 1923ஆம் வருஷத் தொடக்கத்தில், அதாவது ஸன்னினுடைய வாழ்நாளின் கடைசி காலத்தில், ஸன்னினாலும் புறக்கணித்து விடமுடியாத செல்வாக்குள்ள ஒரு கட்சியாக இயங்கி வந்தது.
இஃது இப்படியிருக்க, 1923ஆம் வருஷம் மார்ச்சு மாதம் துவக்கத்தில், ஸன்னுக்குத் துரோகம் விளைவித்த சென் சியுங் மிங், காண்ட்டன் நகரத்திலிருந்து விரட்டப்பட்டு விட்டான். ஸன் ஆதிக்கம் பெற்றான். பெற்றதும், சியாங் கை ஷேக்கை, ராணுவத் தின் பிரதம தளகர்த்தனாக நியமித்து, சோவியத் அரசாங்கம் தனது ராணுவத்தை எப்படி அமைத்து ஒழுங்குபடுத்தியிருக்கிறதென்பதை ஓர் ஆறு மாத காலம் இருந்து கவனித்து வர மாக்கோ1 நகருக்கு அனுப்பி வைத்தான். அவனும் அப்படியே சென்று, ராணுவ அமைப்புச் சம்பந்தமான எல்லா நுணுக்கங் களையும் கவனித்துக் கொண்டு வந்து, வாம்பொவா(Whampoa) என்ற இடத்தில் ராணுவக் கழக மொன்றை தாபித்தான். இதிலிருந்து நவீன முறையில் அமைந்த சீனப் படையொன்று உருவாகி வளரத் தொடங்கியது.
தவிர இந்தக் காலத்தில் ஸன், கோமிண்ட்டாங் கட்சியின் மீது கவனஞ் செலுத்தினான். 1912ஆம் வருஷம் பிற்பகுதியில் புத்துருவம் பெற்று வளர்ந்து வந்த இந்த கோமிண்ட்டாங் கட்சி, 1919ஆம் வருஷம், அப்பொழுதிருந்த சூழ்நிலைக்குத் தக்கவண்ணம் சீர்திருத்தி யமைக்கப் பட்டிருந்தது. மறுபடியும் 1924 ஆம் வருஷத் தொடக்கத் தில் நாட்டின் ஒற்றுமையை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு, கட்சியை, கட்டுக் கோப்பான ஒரு கட்சியாக இயங்குகின்ற முறையில் ஒழுங்குபடுத்தி அமைத்தான் ஸன்.
இங்ஙனம் ஒழுங்குபடுத்தி அமைக்கப்பெற்ற கோமிண்ட்டாங் கட்சியின் முதல் தேசீய காங்கிர 1924ஆம் வருஷம் ஜனவரி மாதம் இருபதாந் தேதி கூடியது. இதைத் துவக்கி வைத்து ஸன், நீண்ட தொரு சொற்பொழிவு நிகழ்த்தினான்:-
(நமது போரட்டத்தில்) நாம் வெற்றி பெற வேண்டுமானால், நாம் ஒற்றுமையுடனிருக்க வேண்டும்; ஒரே மனத்தினராய் இருக்க வேண்டும். ஓர் அரசியல் கட்சிக்கு அத்தியாவசியமாய் இருக்க வேண்டிய ஆன்மீக ஒற்றுமை ஏற்பட வேண்டுமானால், கட்சியின் அங்கத்தினர்கள், கட்சியின் நலனுக்காகத் தங்கள் சொந்த உரிமை களை விட்டுக்கொடுக்க வேண்டும்; தங்களுடைய திறமைகளை யெல்லாம் கட்சியின் நலனுக்கு அளிக்க வேண்டும். அப்பொழுது தான் கட்சியானது சுதந்திரத்துடனும் திறமை யுடனும் இயங்க முடியும்; நாட்டின் புனருத்தாரணத்திற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள முடியும். முந்தி, கட்சியின் முயற்சிகள் வெற்றி பெறாமற் போனதற்குக் காரணம், அங்கத்தினர்களுக்குப் பூரண சுதந்திரம் அனுமதிக்கப் பட்டதுதான். இதனால் கட்சியானது சுதந்திரத்துடன் இயங்க முடியாமற் போய்விட்டது. அப்படியே, அங்கத்தினர்கள், தனிப்பட்ட முறையில் திறமையுடையவர்களாயிருந்தார்கள். ஆனால் கட்சியாக மொத்தத்தில் பார்க்கிறபோது அதற்குத் திறமை யில்லாமற் போய்விட்டது. கோமிண்ட்டாங் கட்சி, செயலாற்றும் திறனற்றுப் போன தற்கு இதுதான் காரணம், இனி, கட்சியைச் சீர்திருத்தியமைக்கின்ற முறையில், அதனிடம் காணப்பட்ட குறைபாடுகளை நாம் முதலில் களையவேண்டும்.
இந்தக் காங்கிரஸின் போதுதான், முதன் முதலாக, பெண்கள் கோமிண்ட்டாங் கட்சியில் அங்கத்தினர்களாகச் சேர்த்துக் கொள்ளப் பட்டார்கள். ஸன்னின் மனைவி சிங் லிங் அங்கத்தின ராகச் சேர்ந்தாள் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
தவிர, இந்த முதல் காங்கிரஸின் போதுதான், ஸன்னின் யோசனைப் படி, பொதுவுடைமைவாதிகள் கோமிண்ட்டாங் கட்சியில் அங்கத்தினர் களாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். அதாவது, பொதுவுடைமைக் கட்சி, கோமிண்ட்டாங் கட்சியோடு ஐக்கியமாகி விடவில்லை. பொது வுடைமைக் கட்சி தனியாகத்தான் இயங்கிக்கொண்டு வந்தது. ஆனால் அதன் அங்கத்தினர்கள் தனிப் பட்ட முறையில் கோமிண்ட்டாங் கட்சியில் சேர்த்துக்கொள்ளப் பட்டார்கள்.
நாட்டில் ஒற்றுமையை உண்டு பண்ணுவதற்காகவே ஸன் இப்படிச் செய்தான். பொதுவுடைமைவாதிகளை, கோமிண்ட்டாங் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று இவன் மேற்படி காங்கிரஸில் பேசிய பொழுது, பொதுவுடைமைக் கொள்கையும், சோவியத் அரசாங்க அமைப்பும் சீனாவுக்குப் பொருந்தா என்பதைச் சொல்ல மறந்து விடவில்லை.
சொல்லாற்றல் மிக்க தலைவன்
1924ஆம் வருஷத் தொடக்கத்திலிருந்தே ஸன்னின் உடல் நிலை கவலைக்கிடந்தர ஆரம்பித்தது. ஓய்வு காணாத உழைப்பே இதற்குக் காரணமென்று சொல்ல வேண்டும். வாழ்க்கையின் பெரும் பகுதி நாடோடி வாழ்க்கையாகி விட்டதல்லவா? சிங் லிங்கை மணந்து கொண்ட பிறகுதான், குடும்ப வாழ்க்கையில் கிடைக்கக் கூடிய சில சௌகரியங் களை இவனால் அனுபவிக்க முடிந்தது. ஆனாலும் இந்தச் சௌகரியங்கள் இவனுக்குத் தொடர்ந்து கிடைக்கவில்லை.
ஸன், சீர்கெட்டு வரும் தன் உடல் நிலையைச் சிறிதும் பொருட் படுத்தாமல், அரசியல் வேலைகளில் ஈடுபட்டான்; ஈடுபடவேண்டிய அவசியம் இவனுக்கு ஏற்பட்டது. சீனாவின் அப்பொழுதைய சூழ்நிலை இவன் சேவையை மிகவும் வேண்டி நின்றது.
சிங் லிங் இவன் உடல் நலத்தைப் பேணிக் காப்பதில் அதிக சிரத்தை காட்டினாள். இதனால் இவன், தன் தேகத்தை மறந்து தேசத்தின் மீது கவனஞ் செலுத்துவது சாத்தியமாயிருந்தது.
1914ஆம் வருஷம் தொடங்கிய முதல் உலக மகா யுத்தம் முடியுந் தறுவாயிலிருந்தது. இந்த யுத்தத்தின் விளைவாக, சீனா எந்தெந்த வகையில் பாதிக்கப்படும், அப்பொழுது சீனா, தன்னை எப்படி எப்படிச் சமாளித்துக்கொள்ள வேண்டும், அதன் அபிவிருத் திக்கு உலக வல்லரசுகள் எங்ஙனம் உதவக்கூடும். அதற்கான வழிமுறைகளென்ன, திட்டங்களென்ன என்பவைகளைப்பற்றி, மேற்படி யுத்தத்தில் சீனா இழுத்துவிடப்பட்ட காலத்திலிருந்தே ஸன் சிந்தித்துக் கொண்டிருந்தான்; தன் சிந்தனையில் உதயமான கருத்துக்களை அவ்வப்பொழுது மேடைப் பிரசங்கங்கள் வாயி லாகவும்; பத்திரிகைக் கட்டுரைகள் வாயிலாகவும் வெளியிட்டு வந்தான். ஆனால் இவை இவனுக்குத் திருப்தி அளிக்க வில்லை. அனைத்தையும் தொகுத்து நிரந்தரமாக இருக்கக்கூடிய முறையில் நூல் வடிவாக்கி வெளிக்கொணர விரும்பினான். இதற்காகப் பிற நாட்டுப் பலதுறை வரலாறுகளைப் படித்தான்; அவ்வப்பொழுது குறிப்புக்களும் எடுத்துச் சேகரித்தான். இவற்றைப் பயன்படுத்திக் கொண்டு தேசீய புனர் நிர்மாணத்தற்கான திட்டங்கள் என்ற தலைப்புக் கொடுத்து ஒரு நூல் எழுதி முடித்தான். இது 1918ஆம் வருஷக் கடைசியில் வெளியாயிற்று. உண்மையில் இந்த நூலை, மூன்று தனித்தனி நூல்கள் என்று சொல்லக்கூடிய உண்மையில் இந்த நூலை, மூன்று பகுதிகளைக் கொண்ட ஒரு தொகுப்பு நூல் என்றே சொல்லவேண்டும். முதற்பகுதி, சீனர்களின் மனப்போக்கை எப்படி புனர் நிர்மாணம் செய்ய வேண்டு மென்பது பற்றியும், இரண்டாவது பகுதி, ஜனநாயகத்தின் அடிப்படைத் தத்துவங் களைப் பற்றியும், மூன்றாவது பகுதி, சீனாவின் புனர் நிர்மாணமும் சர்வதேச ஒத்துழைப்பும் என்பது பற்றியும் முறையே கூறுகின்றன. முதல் இரண்டு பகுதிகளைச் சீன மொழியிலும், மூன்றாவது பகுதியைச் சீன மொழியிலும் இங்கிலீஷ் மொழியிலும் ஸன் எழுதி னான். இவை சீனாவில் வெளியான பிறகு, சுமார் இரண்டு வருஷம் கழித்து. மூன்றாவது பகுதியை மட்டும், அதாவது இங்கீலீஷ் மொழி யிலுள்ளதை மட்டும் இங்கிலாந்தில் வெளியிட வேண்டுமென்றும். இதன் மூலம் இதிலுள்ள கருத்துக்கள், உலகத்திலுள்ள எல்லா நாடுகளுக்கும் தெரிய வேண்டுமென்றும் ஸன் விரும்பினான். இந்த நூலுக்கு, லார்ட் கர்ஸனை2 அறி முகவுரை எழுதச்சொல்ல வேண்டு மென்ற விருப்பமும் இவனுக்கு இருந்தது. இவைகளுக்காக டாக்டர் காண்ட்லி மூலம் சில முயற்சிகள் செய்தான். உடனடியான பயன் ஏதும் உண்டாகவில்லை. லார்ட் கர்ஸன், அறிமுகவுரை எழுதிக் கொடுக்க மறுத்துவிட்டான். மறுத்ததற்காக ஸன் சிறிதும் வருத்தப் படவில்லை. அவனை - லார்ட் கர்ஸனை - தர்ம சங்கடமான நிலை யில் வைக்க, தான் விரும்பவில்லையென்று டாக்டர் காண்ட்லிக்கு நாசூக்காகப் பதில் எழுதிவிட்டான்.
ஸன், ஐரோப்பாவில் சுற்றுப்பிரயாணம் செய்து கொண் டிருந்த பொழுது, 1905ஆம் வருஷம் ப்ரஸெல் நகரத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், ஸான் மின் சூயியைப் பற்றிச் சுருக்க மான முறையில் பேசிக் காட்டினான் என்று முந்திச் சொன்னோ மல்லவா,3 இதைப்பற்றி விரிவாக, சீன மக்களுக்குப் பயன்படுகின்ற முறையில் ஒரு நூல் எழுத வேண்டு மென்று 1921ஆம் வருஷம் திட்டமிட்டான். இதற்காக, அதுவரையில் வெளிவந்திருக்கிற மேலை நாட்டு நூல்கள் பலவற்றையும் அநேக புள்ளி விவரங்களை யும் சேகரித்தான். ஏற்கனவே இவன் லண்டன் நூல் நிலையத்தில் படித்து எடுத்த குறிப்புகளோடு4 வேறு பல குறிப்புக்களும் அவ்வப் பொழுது எடுத்துக் கொண்டு வந்தான். அனைத்தையும் பயன் படுத்தி, ஒரு நூலுக்கேற்ற முறையில் எழுத வேண்டுமென்று அநேகந் தடவை முயன்றான். ஆனால் ஓரிடத்தில் ஆர அமர உட்கார்ந்து எழுதுவதற்குப் போதிய அவகாசம் இவனுக்குக் கிடைக்கவில்லை; அமைதியான சூழ்நிலையும் அமையவில்லை. ஆனால் இரண்டும், ஒரு நாளில்லாவிட்டால் ஒரு நாள் கிடைக்குமென்ற நம்பிக்கை மட்டும் கொண்டிருந்தான். இந்த நம்பிக்கைதான், இவனை அநேக சந்தர்ப்பங்களில் கைகொடுத்துக் காப்பாற்றியிருக்கிறது.
என்றாலும், துரதிருஷ்டமானது இவனைப் பின் தொடர்ந்தே வந்தது. 1922ஆம் வருஷம் சென்சியுங் மிங் இவனுக்கு விரோதமாகக் கிளம்பி, காண்ட்டன் நகரத்தில் இவன் வசித்துக்கொண்டிருந்த மாளிகையைத் தாக்கினானல்லவா. அப்பொழுது இவன் சேகரித்து வைத்திருந்த நூற்றுக்கணக்கான நூல்களென்ன, குறிப்புக்களென்ன, யாவும் நாசமாயின. இது ஸன்னுக்குப் பெரிய மன வேதனையைக் கொடுத்ததென்பதைச் சொல்லவும் வேண்டுமோ? ஆனால் இவன் படித்த நூல்களில் அடங்கிய விஷயங்களும் இவன் எடுத்த குறிப்புக் களும் இவன் நினைவிலேயே மிதந்து கொண்டிருந்தன. இவை களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பும் சிறிது காலத்திற்குப் பிறகு இவனுக்குக் கிடைத்தது.
1924ஆம் வருஷம் ஜனவரி மாதம், கோமிண்ட்டாங் கட்சி சீர்திருத்தியமைக்கப்பட்டு முதல் காங்கிர கூடி முடிந்த பிறகு, கட்சிக் கொள்கைகளையும் திட்டங்களையும் நாடெங்கணும் பிரசாரம் செய்ய வேண்டிய அவசியத்தைக் கட்சி அங்கத்தினர்கள் உணர்ந்தார்கள். இதற்காக என்ன செய்யலாம், ஜனங்களுக்கு என்னென்ன விஷயங்களை எடுத்துச் சொல்லவேண்டும் என்பவை களைப் பற்றி ஸன்னைக் கேட்டார்கள். எனவே இவன் 1924ஆம் வருஷம் ஜனவரி மாதம் இருபத்தேழாந் தேதி முதல் ஏப்ரல் மாதம் இருபத்தாறாந் தேதி வரை, வாரத்திற்கு ஒரு சொற்பொழிவு வீதம் பன்னிரண்டு சொற்பொழிவுகளும் பிறகு ஆகட் மாதம் மூன்றாந் தேதி முதல் இருபத்து நான்காந் தேதி வரை நான்கு சொற்பொழிவு களும் ஆக மொத்தம் பதினாறு சொற்பொழிவுகள், காண்ட்டன் நகரத்திலுள்ள தேசீய குவாங்டுங் சர்வ கலாசாலையில்2 நிகழ்த்தினான். முதலில் திட்டமிட்டிருந்தபடி, ஏப்ரல் மாதம் இருபத் தாறாந் தேதிக்குப் பிறகு ஆகட் மாதம் மூன்றாந் தேதி வரை, சுமார் நான்கு மாத இடைக்காலத்தில் வாரத்திற்கொரு முறை வீதம் தொடர்ந்து இவனால் சொற்பொழிவுகள் நிகழ்த்த முடியவில்லை. சீர்கெட்டுக் கொண்டு வந்த இவனது உடல் நிலைதான் இதற்குக் காரணம். ஆனால் இந்த நிலையிலும், வேறு வேறு இடங்களில் வேறு வேறு விஷயங்களைப்பற்றி இவன் பிரசங்கங்கள் செய்யாமலிருக்கவில்லை. ஒரே நாளில் ஐந்து பிரசங்கங்கள் வீதம் கூட இவன் அநேக நாட்கள் செய்திருக்கிறான்.
மற்றும் இந்தப் பிரசங்கங்களைச் செய்கிறபோது இவனுக்கு அமைந்திருந்த சூழ்நிலையைச் சிறிது நிதானித்துப் பார்த்தோ மானால், எப்படித்தான் இந்தப் பிரசங்கங்களைச் செய்வதற்கு இவனால் சாத்தியப் பட்டதோ என்று நாம் ஆச்சரியமே அடைய வேண்டியிருக்கிறது. ஏனென்றால் அப்பொழுது சீனாவின் அரசியல் நிலைமை ஒரே குழப்பமாயிருந்தது. வடக்கு தெற்கு போராட்டம் ஒரு பக்கம்; பொது வுடைமைக் கட்சியின் வளர்ந்து வரும் செல் வாக்கு மற்றொரு பக்கம்; காண்ட்டன் அரசாங்கத்திற்குள்ளேயே ஒருமைப்பாடின்மை பிறிதொரு பக்கம்; எல்லாவற்றிற்கும் மேலாக, கடுமையான உடல் நோய் இவனை வாட்டி எடுத்தது. வயிற்றில் புற்று நோய் என்று சொல்லிக்கொண்டார்கள். நெடுநேரம் நின்று பேசக்கூட முடியாத நிலையில் இருந்தான். இதனால் முதுகுப் பக்கம் ஒரு தடியை ஊன்ற வைத்துக்கொண்டு, நின்ற வண்ணம் இந்தப் பிரசங்கங்களைச் செய்யவேண்டியிருந்தது. பிரசங்கங்கள் செய்கிற போது கையில் எவ்வித குறிப்புக்களும் வைத்துக் கொள்ளவில்லை. அதுமட்டுமல்ல; பிரசங்கங்களுக்கு முன்னரும் பின்னரும் எத் தனையோ அரசியல் காரியங்களை இவன் கவனிக்கவேண்டி யிருந்தது. இந்த நிலையில் இவன் மேற்படி பதினாறு பிரசங்கங் களைத் தொடர்ந்து செய்தது எவ்வளவு கடினமான சாதனை என்பதைப் பற்றி நாம் சொல்லத் தேவையில்லை. இவனது கடமை உணர்ச்சியை நாம் ஒருவாறு அறிந்துகொள்கிறோம்.
இவன் மொத்தம் பதினெட்டு சொற்பொழிவுகள் நிகழ்த்த வேண்டு மென்று முதலில் திட்டமிட்டிருந்தான். ஆனால் பதினாறு சொற்பொழிவு களுக்கு மேல் இவனால் செய்ய முடியவில்லை. இவனைப் பற்றிக் கொண்ட புற்று நோய் இவனைக் கடுமையாக வாட்டத் தொடங்கியதுதான் இதற்குக் காரணம்.
ஸன் பிரசங்கம் செய்கிறபோது, இவனுடைய காரியதரிசி களில் ஒருவன் அதனை அப்படியே எழுதிக்கொண்டு வந்தான்; இன்னொரு காரியதரிசி அதனைப் பரிசீலனை செய்து, தொடர்ச்சி விட்டுப் போகாதிருக்கின்ற முறையில் செப்பனிட்டான். ஸன், அவற்றை மேலெழுந்த வாரியாக ஒரு முறை பார்த்து, அச்சுக்குக் கொடுத்து நூலாக வெளி வருமாறு செய்தான்.
இந்தச் சொற்பொழிவுகளில் ஸன் உலக சரித்திரத்தை ஒரு வாறு அளந்திருக்கிறான். அந்த உலக சரித்திரத்தை, சீனாவின் அரசியல், சமுதாய, பொருளாதார வாழ்க்கையோடு பொருத்தி வைத்துப் பார்த்திருக் கிறான். இவைகளின் மூலம், இவனுடைய பரந்த அறிவும் உலக அனுபவமும் நமக்கு நன்கு புலனாகின்றன.
பதினாறு சொற்பொழிவுகளும் சேர்ந்த இந்தத் தொகுப்பு ஸான் மின் சூயி என்று சீன மொழியில் அழைக்கப்படுகிறது. இதனைத் தமிழில் ஜனங்களின் மூன்று தத்துவங்கள் என்று ஒருவாறு கூறலாம். இதனையும் தெளிவுபடுத்திச் சொல்லவதா யிருந்தால் ஜனங்களுக்குத் தெரியவேண்டிய மூன்று கருத்துக்கள் என்று கூறலாம்.
மூன்று தத்துவங்கள் யாவை (1) தேசீயம் (2) ஜனநாயகம் (3) வாழ்க்கைத் தத்துவம்
முதலாவது தேசீயம். இதன்படி சீனர்கள், தங்கள் குடும்பத்தினிடமும் மூதாதையர்களிடமும் பரம்பரையான பக்தியுடையவர் களல்லவா? இந்த பக்தியைத் தேச பக்தியாக மாற்றிக்கொள்ள வேண்டும். சீனாவிலுள்ள பல்வகைச் சமூகத்தினரும் ஒன்றுபட்டு, அரசியல், சமுதாய, பொருளாதார விஷயங்களில் ஒரே மாதிரியான உரிமைகளை அனுபவிக்க வேண்டும். இப்படி அனுபவிப்பதற்கு முடியாமல் தடையாயிருக்கிற அந்நிய ஆதிக்க சக்திகளை அப்புறப் படுத்தி, உலக வல்லரசுகளின் மத்தியில் சீனா சமதையான தானத்தைப் பெறவேண்டும்.
இரண்டாவது ஜனநாயகம். இதன்கீழ் ஜனாதிக்க சக்தியின் மகத்துவம் விளக்கப்படுகிறது; ஜனங்களுக்காக ஜனங்களுடைய ஆட்சி நடைபெற வேண்டுமென்பது வலியுறுத்தப்படுகிறது.
மூன்றாவது வாழ்க்கைத் தத்துவம். சமுதாயத்தின் கீழ்ப் படியிலேயுள்ள விவசாயிகள், தொழிலாளர்கள் முதலியவர்களை மேல் படியிலுள்ளவர்கள் சுரண்டாமலிருக்க, தக்க பாதுகாப்புச் சட்டங்களை இயற்றல்; அவர்களுடைய வாழ்க்கையில் தேவை என்பதை உணராம லிருக்கும்படி செய்தல்; அவர்களுக்கு இலவச மான கல்வி வசதி, வைத்திய வசதி முதலியன ஏற்பாடு செய்தல்; சுருக்கமாக, சமுதாயத்திலே யுள்ள எல்லாருக்கும் எல்லா வகையிலும் ஒரே மாதிரியான நீதி கிடைக்குமாறு செய்தல் ஆகிய பலவும் இதன் கீழ் சொல்லப்படுகின்றன.
ஸான் மின் சூயி, சீன சமுதாயத்தின் மீது ஆழ்ந்த முத்திரை இட்டுவிட்டதென்று சொல்லவேண்டும். ஸன்னின் மரணத்திற்குப் பிறகு, சீனாவின் அரசியல் அமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டன; அரசியல், சமுதாய, பொருளாதாரத் துறைகளில் முரண்பட்ட கருத்துக்கள் ஒலி செய்தன; அரசியல் ஆதிக்கம் பெற அவாக் கொண்டு ஆயுதங்களின் துணையை நாடியவர் அங்கீகரிக்கப்பட் டிருப்பது, அனைவராலும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட் டிருப்பது இந்த ஸான் மின் சூயியே யாகும். பள்ளிக்கூடத்தில் படிக்கும் இளைஞர் முதல், போர்க்களத்தில் அணிவகுத்து நிற்கும் வீரர் வரை அனைவராலும் தினந்தோறும் நினைவு கொள்ளப் படுவது இந்த ஸான் மின் சூயியேயாகும்.
ஒற்றுமைக்கு முயற்சி
_ஸன், ஸான் மின் சூயி பிரசங்கங்கள் செய்து வந்த காலத்தில், சீனாவின் அரசியல் நிலைமை ஒரே குழப்பமாருந்ததென்று முந்தின அத்தியாயத்தில் சொன்னோமல்லவா, அதைப்பற்றிச் சிறிது பேசுவோம்._
1917ஆம் வருஷ மத்தியிலிருந்து, வடக்கே பீக்கிங்கைத் தலைநகரமாகக் கொண்டு ஓர் அரசாங்கமும், தெற்கே காண்ட்டனை தலைநகரமாகக் கொண்டு மற்றோர் அரசாங்கமும், ஆக இருவகைப் பட்ட அரசாங்கங்கள் நடைபெற்று வந்தனவென்பதும், காண்ட்டன் அரசாங்கத் திற்கு ஸன் யாட் ஸென் பிரசிடெண்டாயிருந்து வந்தா னென்பதும் வாசகர்களுக்கு ஞாபகமிருக்கும். இந்த காண்ட்டன் அரசாங்கத் திற்குள்ளேயே அடிக்கடி பூசல்களும் பிணக்குகளும் ஏற்பட்டு வந்தன. இவற்றையெல்லாம் ஸன், தன் இனிய சுபாவத் தினாலும் நிதான புத்தியினாலும் சமாளித்து வந்ததோடல்லாமல், கட்டுக்கோப்புள்ள ஓர் அரசாங்கமாக மதிப்புப் பெறக்கூடிய முறையில் இயக்கியும் வந்தான். 1924ஆம் வருஷம் ஜனவரி மாதம் கோமிண்ட்டாங் கட்சியின் முதல் காங்கிர கூடியது. கட்சி, சீர்திருத்தியமைக்கப்பட்டது. கட்சியில் பொதுவுடைமைவாதிகள் தனிப்பட்ட ஹோதாவில் அங்கத்தினர்களாகச் சேர்த்துக்கொள்ளப் பட்டார்கள். அரசாங்க நிருவாகத்திலும் இவர்களுக்குப் பங்கு அளிக்கப்பட்டது. தேசீய சக்திகளையெல்லாம் ஒன்று திரட்டி அதன்மூலம், நாட்டின் ஒற்றுமையைக் குலைத்துவரும் முயற்சி களைப் பயனற்றதாகச் செய்து விடவேண்டுமென்ற பெரு நோக்கத் துடனேயே இவன், பொதுவுடைமைவாதிகளைக் கட்சியிலும் அரசாங்க நிருவாகத்திலும் சேர்த்துக்கொண்டு, இரண்டும் - கட்சியும் அரசாங்கமும் - ராணுவத்திலுள்ளதைப் போல ஒரு வித கட்டுப்பாட்டுக்குட்பட்டு இயங்குமாறு சீர்திருத்தியமைத்தான். இந்தச் சீர்திருத்த அமைப்பின் கீழ் இவனே பிரசிடெண்டானான்.
ஆனால் பொதுவுடைமைவாதிகளைக் கொண்ட இந்தச் சீர்திருத்த அமைப்பு, சிலருக்குப் பிடிக்கவில்லை. எப்பொழுதும் போல் கட்சியிலும் அரசாங்க நிருவாகத்திலும் சில்லரைப் பூசல் களும் பிணக்குகளும் தலை தூக்கியே நின்றன. ஸன்னுக்கு விரோத மாகவும் சிலர் தலைதூக்கினர். மறுபடியும் இவன் உயிருக்கு ஆபத்து!
ஒரு சமயம் ஸன்னின் உயிருக்கு உலை வைக்க வேண்டுமென்ற நோக்கத்துடன், படைபலம் கொண்ட ஒருவன், தன் படைகளுடன், காண்ட்டன் நகரத்தில் ஸன் வசித்துக்கொண்டிருந்த மாளிகையைச் சூழ்ந்து கொண்டான். அப்பொழுது மாளிகைக்குள் ஏதோ அவசர அலுவல் பார்த்துக்கொண்டிருந்த ஸன், இந்தத் தகவல் தெரிந்ததும், படைத் தலைவனை நேரில் சந்தித்துப் பேச விரும்பி மாளிகைக்கு வெளியே வர முனைந்தான். ஆனால் கூட இருந்த சிங் லிங், இப்படித் தனித்துப் போகக்கூடாதென்று தடுத்துப் பார்த்தாள். ஏற்கனவே இந்த மாதிரியான ஒரு சம்பவம் ஏற்பட்டு1. உயிர் தப்ப வெகு கஷ்டப் பட்டிருக்கிறாளல்லவா? அந்த நினைவு இப்பொழுது தோன்றியது. போகவேண்டாமென்றாள். ஆனால் பிறருடைய நல்லெண்ணத்தில் நம்பிக்கை வைக்கும் சுபாவமுடைய ஸன், சிங் லிங்குக்குப் பாதுகாப் பாகத் தன் மெய்க் காப்பாளர்களில் ஒருவனை வைத்துவிட்டு, வெளியே புறப்பட்டான். அந்தப் படைத் தலைவனைச் சந்தித்தான். என்ன பேசினானோ தெரியாது. ஆனால் விபரீதம் ஏதும் நடை பெற வில்லை. வந்த படைத் தலைவனும், மந்திரத்தால் கட்டுண்ட பாம்பு போல் அடங்கிப் போய்த் திரும்பிவிட்டான்.
1924ஆம் வருஷம் அக்டோபர் மாதம் காண்ட்டன் நகரத்தில் அரசாங்கத்திற்கு விரோதமாக ஒரு கலகம் கிளம்பியது. பிரிட்டி ஷாரும், அவர்களுக்குக் கையாட்களாக இருந்த சில பணக்காரப் பிரபுக்களும் இந்த கலகத்தைத் தூண்டிவிட்டனர் என்று அப் பொழுது சொல்லப்பட்டது. இந்தக் கலகத்தினால் பலர் உயிரிழந் தனர்; அநேக கட்டடங்கள் நாசமாயின. ஏராளமான பொருள் நஷ்டம் ஏற்பட்டது. போதாக்குறைக்கு. முந்தி மாதிரி சென் சியுங் மிங் ஸன்னுக்கு விரோதமாகப் படை கூட்டினான். தொடர்ந்தாற் போல் ஏற்பட்டுவரும் இந்த எதிர்ப்புக்களைக் கண்டு எப்படி பட்டவனுடைய உள்ளமும் கலங்கிப் போயிருக்கும். ஆனால் ஸன் கலங்கவேயில்லை. நிதானமாக ஆனால் உறுதியாக அனைத்தையும் அடக்கிவிட்டான்.
இஃது இப்படிருக்க, 1924ஆம் வருஷம் செப்டம்பர் மாதக் கடைசியில், வடக்கே பீக்கிங் அரசாங்கத்தை நடத்தி வந்த படை பலமும் பண பலமும் கொண்ட ஒரு கட்சியினருக்கும், அந்த அரசாங்கத்தைத் தங்கள் ஆதிக்கத்திற்குட்படுத்திக் கொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்ட அதே மாதிரியான மற்றொரு கட்சி யினருக்கும் போர் மூண்டது. இந்தப் போர் திடீரென்று ஏற்பட்ட தல்ல. 1916ஆம் வருஷம் ஜூன் மாதம் யுவான் ஷிகாய் இறந்துபோன காலத்திலிருந்தே, பொதுவாக வட மாகாணங் களில், சிறப்பாக பீக்கிங்கை மையமாகக் கொண்ட பிரதேசங்களில் இந்தக் கட்சிப் போர்கள் தொடர்ந்தாற்போல் நடைபெற்று வந்தன. இவைகளுக்கு, முதல் உலக மகா யுத்தத்தில் ஈடுபட்டிருந்த மேலை நாட்டு வல்லரசுகள் சில, தங்களிடம் பயன்படாமலும் துருப்பிடிக்கும் தறுவாயிலுமிருந்த போர்க்கருவிகள் பலவற்றை உதவி உற்சாக மளித்தன. சீனா ஒன்றுபட்டு வாழக்கூடாதென்பதிலே இந்த வல்லரசுகளுக்கு அவ்வளவு அக்கரை! கடைசியில் ஒரு கட்சி வெற்றி பெற்று அரசாங்க நிருவாகத்தைக் கைப்பற்றிக் கொண்டு துவான் சி ஜூயி1 தலைமையில் ஒரு மந்திரி சபையை அமைத்தது. இந்த மந்திரி சபை, வடக்கு தெற்குப் போராட்டம் நீடித்துக்கொண்டு வருவதை விரும்பவில்லை. இதற்கு ஒரு முடிவு காண முனைந்தது. இதைப் பற்றிப் பேசவும், நாட்டின் ஒற்றுமைக்கு வழி கோலவும், ஸன்னை பீக்கிங்குக்கு வருமாறு அழைத்தது. ஏனென்றால், ஸன், காண்ட்டன் அரசாங்கத்தின் பிரசிடெண்டாயிருந்ததோடு, தெற்குப் பகுதிகளில் அபரிமிதமான செல்வாக்குடையவனாக இருந்தானல்லவா? இதைத் தவிர, குடியரசு ஏற்பட்டு ஏறக்குறைய பன்னிரண்டு வருஷங் களாகி யும், இன்னமும் நாட்டில் ஒற்றுமை நிலவாமலிருப்பது குறித்தும் ஒழுங்கான ஓர் அரசாங்கம் ஏற்படாமலும் அமைதி உண்டாகாம லும் இருப்பது குறித்தும், சீனா பூராவிலும் மக்கள் கவலை கொண்டார்கள். இந்தக் கவலை அவர்களுடைய அன்றாட வாழ்க்கையைப் பாதித்தது. எனவே நாடு முழுமைக்கும் பிரதிநிதித் துவம் ஏற்படுகின்ற முறையில் ஒரு தேசீய சபை கூடவேண்டு மென்றும், இந்தச் சபையானது, ஒழுங்கான தோர் அரசியலமைப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்றும், நாட்டின் பல பகுதி களிலும் கிளர்ச்சி எழுந்தது. இவைகளையெல்லாம் உணர்ந்தே பீக்கிங் மந்திரி சபை ஸன்னுக்கு அழைப்பு அனுப்பியது.
ஸன், நாட்டு நலன் கருதி இந்த அழைப்பை ஏற்றுக்கொண் டான். சீர்கெட்டு வந்த தன் உடல் நிலையையும் பொருட்படுத் தாமல், சியாங் கை ஷேக் உள்பட முக்கியமான சகாக்கள் சிலருடன் பீக்கிங்குக்குப் புறப்பட ஆயத்தமானான். சீனா ஒன்றுபட்டு ஓர் அரசாங்க அமைப்புக்குட்படு மானால், ஸான் மின் சூயி தத்துவங் களை நடைமுறையில் கொணர்வது சாத்தியமாயிருக்குமென்று இவன் எதிர்பார்த்தான். சர்வானுகூல வாதியல்லவா?
புறப்படுவதற்கு முன்னாடி. சர்வ சீனாவுக்கும் பிரதிநிதித்துவம் இருக்கின்ற முறையில் தேசீய சபையைக் கூட்டுவது எப்படி, அதில் என்னென்ன விஷயங்களைப்பற்றிப் பேசவேண்டும் என்பவை களடங்கிய திட்டமொன்றை, அதாவது நிகழ்ச்சி நிரல் மாதிரி யொன்றைத் தயாரித்து, பீக்கிங் அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்தான். ஏனென்றால், எந்த அடிப்படையில் பேச்சைத் துவக்க வேண்டுமென்று பீக்கிங் அரசாங்கமும் தெரிந்துகொள்ள வேண்டு மல்லவா? இதற்காக அதுவும் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளலா மல்லவா? இங்ஙனம் முன்கூட்டி அனுப்பிய இந்தத் திட்டத்தில், ஸன், ஒரு நிபந்தனையை மட்டும் கண்டிப்பாகக் குறிப்பிட்டிருந் தான். கூட்டப் படவிருக்கும் தேசீய சபையில், படை பலத்தையும் பண பலத்தையும் வைத்துக்கொண்டு நாட்டை அலைக் கழித்து வரு கின்ற பிரபுக்களுக்கு எந்தக் காரணத்தை முன்னிட்டும் பிரதிநிதித் துவம் அளிக்கக் கூடாதென்பதுதான் இந்த நிபந்தனை.
புறப்படுவதற்கு முன்னாடி ஸன் மற்றொரு காரியத்தையும் செய்தான். அதாவது, சீனா முழுவதும் ஒன்றுபட்டு ஓர் அரசாங்க அமைப்புக்குள்ளான பிறகு, என்னென்ன செய்யப்படும் என்பதைப் பற்றி ஒரு பிரகடனம் வெளியிட்டான். இந்தப் பிரகடனத்தில் காணப்பெற்ற முக்கியமான அமிசங்கள்: (1) அரசாங்கத்திற்கு விரோத மாகத் தோன்றும் புரட்சிகள் யாவும் கண்டிப்பாக அடக்கி ஒடுக்கப் படும். (2) அந்நிய வல்லரசுகளுடன் அதுகாறும் ஏற்பட்டு வந்திருக்கிற ஏற்றத் தாழ்வான ஒப்பந்தங்கள் யாவற்றையும், அதாவது சீனாவுக்குச் சம அந்தது கொடாமலிருக்கிற ஒப்பந்தங்கள், அந்நியர்கள் அனுபவித்து வருகிற சலுகைகள் ஆகியயாவற்றையும் ரத்து செய்ய வேண்டுமென்று கோரப்படும். (3) சர்வ தேசங்களும் சம அந்த துடனும் சுய நிர்ணய உரிமை யுடனும் வாழ நாடுகளுடனும் புதிய ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்படும். (4) ஏற்றத் தாழ்வான ஒப்பந்தங்கள் ரத்தான பிறகு, இப்பொழுது அந்நியர்கள் சலுகை பெற்று வாழும் பிரதேசங்கள் உள்பட சீனாவின் எல்லாப் பிரதேசங் களிலும் புதிய சட்டங்கள் இயற்றப்பெற்று அமுலுக்குக் கொண்டு வரப்படும்.
இங்ஙனம் எல்லா ஏற்பாடுகளுடனும் சீனாவின் எதிர்கால நல்வாழ்வில் சகிதம் 1924ஆம் வருஷம் நவம்பர் மாதம் பதின் மூன்றாந் தேதி காண்ட்டன் நகரத்தை விட்டுப் புறப்பட்டான். நேரே பீக்கிங்குக்குத் தரைமார்க்கமாகச் செல்லவில்லை. வழியிலுள்ள பல பிரதேசங்கள், தான்றோன்றித் தலைவர்களின் ஆதிக்கத்துக்குட் பட்டு, குழப்பமான நிலைமையிலிருந்தன. எனவே ஜப்பானில் கோப் துறைமுகத்தை அடைந்து அங்கிருந்து டீண்ட்ஸின் வழியாக டிசம்பர் மாதம் முப்பத்தோராந் தேதி பீக்கிங் நகரம் போய்ச் சேர்ந்தான். வழிநெடுக இவனுக்கு அளிக்கப்பெற்ற வரவேற்புகளும் நடைபெற்ற உபசரணைகளும் எண்ணற்றவை. ஆங்காங்கு இவன் சொற்பொழிவைக் கேட்க, ஆயிரக் கணக்கில் ஜனங்கள் திரண்டு வந்தார்கள். இவனும், தன் உடல் நோயைப் பொறுத்துக்கொண்டு ஜனங்களுக்குப் புத்துணர்ச்சி உண்டாகும் வகையில் சொற்பொழி வுகள் நிகழ்த்தி வந்தான். கோப் நகரத்தில் இவன் செய்த பிரசங்கத்தில். உலகத்தில் நிலையான சமாதானம் நிலவ வேண்டுமானால், ஆசியாவில் மேலை நாட்டு வல்லரசுகள் செலுத்தி வரும் ஆதிக்கம் ஒழிய வேண்டும். ஒழிப்பதற்காக ஆசியாவிலுள்ள எல்லா நாடுகளும் ஒன்று சேரவேண்டும் என்னும் கருத்தை வெளி யிட்டான். இந்தப் பிரசங்கம், அப்பொழுத மேலை நாட்டு வல்லரசு களுக்கு அதிர்ச்சியை உண்டுபண்ணியது. தங்கள் ஆதிக்கத்திற்கு அசைவு காலம் வந்து விட்டதாக அவை உணரவும் தலைப்பட்டன.
குடியரசின் தந்தை
ஸன் பீக்கிங் நகருக்கு வந்து சேர்ந்தானே தவிர, பிறகு, இவன் திட்டமிட்டிருந்தபடி எந்த ஓர் அலுவலிலும் தீவிரமாகக் கலந்து கொள்ள முடியாதவனானான். காரணம், இவனை நெடுநாட்களாக அரித்துக் கொண்டு வந்த புற்று நோய், மரண வாயிலுக்கு இவனை அழைத்துப் போகத் துணிந்துவிட்டது; சொல்ல முடியாத உடல் வலிக்கு இவனை ஆட்படுத்தியது. அப்பொழுது இவனுடன் சென்றிருந்த மனைவி சிங்லிங்கும் மகன் ஸன் போவும், மற்ற உறவினர்களும் நண்பர்களும் கலந்தாலோசித்து இவனை, பீக்கிங் நகரத்துப் பிரதான ஆபத்திரியில் கொண்டுபோய்ச் சேர்ந்தார்கள். சத்திர சிகிச்சை நடைபெற்றது. ஆனால் பயனில்லை. நாட்பட்ட நோயானபடியால் பிழைப்பது அரிது என்று வைத்தியர்கள் சொல்லிவிட்டார்கள்.
இதற்குப் பிறகு ஸன் சுமார் ஆறு வார காலம் படுக்கை யிலேயே கிடந்தான். அந்த நிலையிலும் நாட்டின் நினைவுதான். இவனுக்குப் பணி விடை புரிந்து வந்த ஆங்கில நர் ஒருத்தி, எத்தனையோ நோயாளி களுக்கு நான் இதுவரை பணிவிடை புரிந்து வந்திருக்கிறேன். ஆனால் இவனைப்போல் தன்னலமற்ற ஒரு நோயாளியை நான் பார்த்ததே இல்லை. பொறுக்கமுடியாத வலியி னால் அவதைப்பட்டுக் கொண்டிருந்த போதிலும், தன்னுடைய தேவை/ சுகம் இவைகளைப் பற்றிய எண்ணமே இல்லாதவனா யிருந்தான் என்று புகழ்ந்து பேசியிருக்கிறாள்.
படுக்கையிலிருந்து கொண்டே ஸன் வழக்கம் போல், தன் தலைமைப் பதவிக்கேற்பட்ட பொறுப்புக்களைத் தொடர்ந்து நிறைவேற்றி வரவேண்டுமென்பதிலேயே ஆவல் காட்டினான். இவன், காண்ட்டனை விட்டபிறகு, அங்குக் கலகம் விளைவித்து வந்த சென் சியுங் மிங்கின் படைகள் முறியடிக்கப்பட்டு விட்டன என்று கேட்டு ஓரளவு மகிழ்ச்சி கொண்டான். தேசீய சபை கூட்டுவது பற்றியும், அது செய்யவேண்டிய காரியங்கள் பற்றியும், தான் காண்ட்டனிலிருந்து புறப்படுவதற்கு முந்தி அனுப்பியிருந்த திட்டங்களை பீக்கிங்கிலுள்ள தலைவர்கள் அலட்சியம் செய்து விட்டது பற்றி வருந்தினான். தேசீய சபையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருக்கும் முறை, அது வகுத்திருக்கும் நிகழ்ச்சி நிரல் இவைகளைக் கண்டித்து, சபை கூடுவதற்கு முந்தி ஒரு செய்தி அனுப்பினான். இதை மதிக்காமல் சபையும் கூடியது, ஆனால் கோமிண்ட்டாங் கட்சியினர் அதில் கலந்துகொள்ளவில்லை. ஒற்றுமைப் பட்ட சீனாவைக் காண முடியாமலே ஸன் கண்மூட வேண்டிய வனானான்.
இரண்டொரு வாரத்திற்குள் தன் மூச்சு நின்றுவிடுமென்று தெரிந்ததும் ஸன், ஓர் உயில் எழுதச் செய்தான். அது வருமாறு:
“தேசீயப் புரட்சியை முன்னிட்டு நான் நாற்பது வருஷ காலமாக உழைத்து வந்திருக்கிறேன். சர்வ தேசங்களுக்கும் மத்தியில், சீனாவைச் சுதந்திரமுள்ளதாகவும் சமத்துவமுடையதாகவும் உயர்த்த வேண்டு மென்பதே மேற்படி புரட்சியின் நோக்கம். இந்த நாற்பது வருஷ அனுபவத்திலிருந்து நான் தெரிந்துகொண்ட தென்ன வென்றால், மேற்படி நோக்கத்தை அடைவதற்கு, நாம் ஜனங்களைத் தட்டி எழுப்பவேண்டும்; நம்மைச் சமத்துவ நிலை யிலே வைத்துப் பார்க்கிற உலகத்துச் சர்வ ஜாதியினருடனும் சேர்ந்து பொதுவான ஒரு போராட்டத்தில் ஈடுபட வேண்டும்.
நமது புரட்சி இன்னும் முடியவில்லை. நமது சகோதரர்கள் அனை வரும், என்னுடைய நூல்களாகிய தேசீய புனர் நிர்மாணத்திற் கான திட்டங்கள் என்பதையும், (ஸான் மின் சூயி என்று அழைக்கப் பெறும்) ஜனங்களின் மூன்று தத்துவங்கள் என்ற நூலையும், (1924 ஆம் வருஷம் ஜனவரி மாதம் கூடிய) நமது (கோமிண்ட்டாங்) கட்சி யின் முதல் காங்கிரஸின் போது வெளியிடப்பெற்ற அறிக்கை யையும் படித்து, அவற்றில் கூறப்பெற்றள்ள கொள்கைகளையும் முறைகளையும் பின்பற்றுவார்களாக! அவற்றைத் தொடர்ந்து அனுஷ்டித்து வருவதற்கு எல்லா முயற்சிகளையும் செய்வார்களாக! மற்றும், சீனாவிலுள்ள சர்வ ஜனங்களின் தேசீய சபையொன்று கூட்டப்படவேண்டுமென்பது பற்றியும், ஏற்றத் தாழ்வான ஒப்பந்தங்களை ரத்து செய்யவேண்டுமென்பது பற்றியும் நான் வெளியிட்டுள்ள கருத்துக்களை விரைவில் அனுஷ்டானத்திற்குக் கொண்டுவர முயற்சி செய்வார்களாக!
இதுவே என்னுடைய கடைசி உயிலும் மரண சாஸனமுமாகும்,
11-3-1925.
(ஒப்பம்) ஸன் வென்“
இதைத் தவிர, ஸன், குடும்ப சம்பந்தமாக மற்றோர் உயிலையும் எழுதுவித்தான். அது வருமாறு:-
“ஜனங்களுக்குத் தொண்டு செய்வதிலேயே என் வாழ்க்கை பூராவையும் செலவழித்து விட்டபடியால், எனக்கென்று சொந்த மாகச் சொத்து பற்றுக்கள் சேர்க்க நான் எவ்வித சர்ந்தர்ப்பமும் பெற்றேனில்லை. என்னுடையவை என்று சொல்லக்கூடிய எல்லாவற்றையும், அதாவது புத்தகங்கள், துணி மணிகள், வீடு, இன்னும் உள்ள எல்லாவற்றையும், சர்வ பாத்தியதைகளோடு என் மனைவி சிங் லிங்குக்கு இதன் மூலம் கொடுக்கிறேன். என் குழந்தைகள் வயது வந்தவர்களாகி விட்டபடியால் அவர்கள், தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்வார்கள். நான் செய் திருக்கும் இந்த ஏற்பாட்டை அவர்கள் ஒப்புக்கொள்வார் களென்றும், நான் விட்டுப்போயிருக்கும் வேலையைத் தொடர்ந்து செய்து வருவார் களென்றும் நம்புகிறேன்.”
இந்த இரண்டு உயில்களையும் ஸன்னின் விருப்பப்படி எழுதியவன் வாங் சிங் வெய்1 என்பவன். இவன் தான் ஸன்னுக்குப் பிறகு, காண்ட்டன் அரசாங்கத்தின் தலைவனானான். இவன், உயில் களைப் படித்துக் காட்டியதும் ஸன் பேஷ்! உயில்களின் வாசகம் நன்றாக அமைந்துவிட்டது என்று சொல்லித் திருப்தி யடைந்தான். ஆனால் உடனே இவற்றில் கையெழுத்துப் போடவில்லை. அதற்கு இன்னும் சமயம் வரவில்லை யென்று சொல்லிக்கொண்டிருந்தான். கடைசியில், உயிர் பிரிவதற்கு முந்தின நாள், அதாவது 1925 ஆம் வருஷம் மார்ச்சு மாதம் பதினோராந் தேதி, உயில்களைக் கொண்டு வரச் செய்து அவற்றில் கையெழுத் திட்டான். முதலாவது உயிலில் ஸன் போ உள்ளிட்ட எட்டு பேர் சாட்சிகளாகக் கையெழுத் திட்டனர்.
மறுநாள், கண்மூடப் போவதற்குச் சிலமணி நேரம் முந்தி, ஸன், ருஷ்யப் பொதுவுடைமைக் கட்சித் தலைவனுக்கு ஆங்கிலத் தில் ஒரு கடிதம் எழுதச் செய்து அதில் கையெழுத்திட்டான். அந்தக் கடிதம் வருமாறு:-
“மனிதர்களால் செய்யக்கூடிய சிகிச்சைகளுக்கெல்லாம் அப்பாற் பட்ட ஒரு நோயினால் பீடிக்கப்பட்டு வரும் நான் படுக்கையில் கிடக்கிறேன். இந்தத் தருணத்தில், என் நினைவெல்லாம், உங்கள் மீதும், என்னுடைய (கோமிண்ட்டாங்) கட்சி, என்னுடைய தாய் நாடு இவற்றின் எதிர்காலத்தின் மீதும் செல்லுகின்றன.
அமரனாகிவிட்ட லெனின், உலகத்திலுள்ள ஒடுக்கப்பட்ட ஜனங் களுக்கு ஆதியாக வைத்துவிட்டுப் போன ஓர் ஐக்கிய நாட்டுக்கு, அதாவது சுதந்திரக் குடியரசுப் பிரதேசங்கள் பல கொண்ட ஓர் ஐக்கிய ருஷ்யாவுக்கு நீங்கள் தலைவராயிருக்கிறீர்கள். அந்த ஆதியின் துணைபெற்று, அடிமைத்தனம், யுத்தம், அநீதி ஆகிய இவற்றை யுகக் கணக்கில் அடித்தளங் களாகக் கொண்டிருக்கும் ஏகாதிபத்திய சக்திக்கு இரையாயிருக்கிறவர்கள் நிச்சயமாக விமோசனம் காண்பார்கள்.
நான் எனக்குப் பின்னால், ஒரு கட்சியை விட்டுச் செல்கிறேன். அந்தக் (கோமிண்ட்டாங்) கட்சி, சீனாவுக்கும், சுரண்டப்பட்டு வரும் மற்ற நாடுகளுக்கும் ஏகாதிபத்தியத் தளையினின்று விடுதலை வாங்கித் தரும் விஷயத்தில் உங்களோடு ஐக்கியப்பட்டிருக்கு மென்று எப்பொழுதும் போல் நான் எண்ணிக்கொண்டிருக்கிறேன். விதி வசத்தினால், நான் தொடங்கிய வேலையை முடிக்காமலே கண்மூட வேண்டியவனாயிருக் கிறேன். அந்த வேலையை (கோமிண்ட்டாங்) கட்சியின் கொள்கை களுக்கும் போதனை களுக்கும் விசுவாசமாக இருந்து வரக்கூடியவர் களிடம் ஒப்படைத்து விட்டுப் போகிறேன். அப்படி விசுவாசமாக இருந்தார்களானால் தான் அவர்கள் என்னை உண்மையிலேயே பின்பற்றியவர்களா வார்கள்.
ஆதலின் புரட்சி வேலையையும் தேசீய இயக்கத்தையும் தொடர்ந்து நடத்திவர வேண்டுமென்று கோமிண்ட்டாங் கட்சிக்குக் கட்டளை யிடுகிறேன். அப்படி நடத்தி வருவதன் விளைவாக, ஏகாதிபத்திய வாதி களினால் சாதாரண ஒரு குடியேற்ற நாட்டந்ததுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கும் சீனா, சுதந்திர நாடாக விளங்கும்.
இந்த நோக்கத்துடன், உங்களோடு அடிக்கடி தொடர்பு வைத்துக் கொண்டிருக்க வேண்டுமென்று (கோமிண்ட்டாங்) கட்சிக்குக் கட்டளை யிட்டிருக்கிறேன். எனது நாட்டுக்கு இதுவரை நீங்கள் அளித்து வந்த ஆதரவை இனியும் தொடர்ந்து அளித்து வருவீர் களென்று நம்புகிறேன்.
சோவியத் ருஷ்யா, சுதந்திர சீனாவை ஒரு சிநேகித நாடாகவும் நல்லுறவு கொள்ளத்தக்க நாடாகவும் வரவேற்கக்கூடிய காலம் சீக்கிரத்தில் வருமென்ற நம்பிக்கையுடனும், பிறகு இரண்டு நாடுகளும் கையோடு கைகோத்துக்கொண்டு உலகத்திலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விடுதலை வாங்கித் தருவதற்காக நடை பெறவிருக்கும் போராட்டத்தில் வெற்றியை நாடி முன்னேறிச் செல்லும் என்ற நம்பிக்கையுடனும், என் அருமைத் தோழர்களே, உங்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்கிறேன்."
எதிர்காலத்தைப் பற்றி ஸன் கொண்டிருந்த நம்பிக்கை வீண் போகவில்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகு, சீனாவும் சோவியத் ருஷ்யாவும் கையோடு கை கோத்துக் கொண்டு பல துறைகளிலும் முன்னேற முனைந்துவிட்டதை, இரண்டு நாட்டு வரலாறுகளு மல்லவோ கூற வேண்டும்? இந்தக் கடிதம் கிடைத்ததும், சோவியத் அரசாங்கத்தின் சார்பாக, டாலின்,1 ருஷ்யாவின் ஆதரவும் உதவி யும் சீனாவுக்கு எப்பொழுதும் தொடர்ந்து கிடைத்துக் கொண் டிருக்கும் என்று உறுதி கூறுவதாகத் தந்தி மூலம் பதில் அனுப்பி னான். ஆனால் ஸன் கண்மூடிய பிறகே இந்தப் பதில் கிடைத்தது.
சோவியத் ருஷ்யாவுக்கு அனுப்பப் பெற்ற மேற்படி கடிதத்தில் கையெழுத்திட்ட சில மணி நேரத்தில், ஸன், தன்னைச் சுற்றிக் கண்ணீரும் கம்பலையுமாக நின்று கொண்டிருந்த அனைவரிட மிருந்தும் கடைசி தடவையாக விடை பெற்றுக்கொண்டு விட்டான். அன்று, 1925 ஆம் வருஷம் மார்ச் மாதம் பன்னிரண்டாந் தேதி. அப்பொழுது அவனுக்கு ஐம்பத் தெட்டு வயது பூர்த்தியாகி ஐம்பத் தொன்பதாவது வயது நடந்துகொண்டிருந்தது.
கடைசி மூச்சு இருக்கிறவரையில் ஸன்னின் முகம் மலர்ந்தே இருந்தது. சுய நினைவு தப்பவே இல்லை. சீனாவைக் காப்பாற்றப் போராடுங்கள்; அமைதி உண்டாகட்டும் என்ற வார்த்தைகள் வாயிலிருந்து வெளிவந்தன. மூச்சும் நின்றது.
இந்தக் கடைசி வார்த்தைகளிலிருந்து, ஸன், சீனாவோடு தன்னை எப்படி ஐக்கியப்படுத்திக் கொண்டிருந்தானென்பதை நாம் நன்றாகத் தெரிந்துகொள்கிறோம்.
“அமைதி உண்டாகட்டும்” என்று சொல்லிக் கொண்டு கண் மூடினான் ஸன். ஆனால் அவன் மரணத்திற்குப் பிறகு, சுமார் இருபது ஆண்டுகள் வரை, சீனா முழுவதும் உள்நாட்டுச் சண்டைகளுக்கு இரையாகிவிட்டது. சீனாவின் வரலாற்றில் இதைப் பரக்கக் காணலாம்.
ஸன்னின் உயிர் போன பிறகு, கிறிதுவ முறைப்படி அந்திமச் சடங்குகள் நடைபெற்றன. பிறகு அன்பர்கள், அவனது உடலை, தேசீயக் கொடி முதலியவைகளால் நன்கு அலங்கரித்து, பீக்கிங் நகரத்துப் பெரியதொரு பூங்காவில் கொண்டுபோய் வைத்தார்கள். அங்கு ஐந்து நாட்கள் வரை, ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் கடைசி மரியாதையைச் செலுத்தினார்கள். அந்தச் சமயத்தில், எத்தனை கண்கள் நீரைப் பெருக்கினவோ? எத்தனை இதயங்கள் ஸன்னின் நேர்மையையும் களங்கமற்ற தேச பக்தியையும் எண்ணி உருகினவோ?
ஐந்து நாட்களுக்குப் பிறகு ஸன்னின் உடலை, பீக்கிங்குக்குச் சுமார் பத்து மைல் தொலைவிலுள்ள ஒரு கோயில் அடைக்கல மாகப் பெற்றது. அங்குச் சுமார் ஐந்து வருஷ காலம் அந்த உடலை, அன்பர்கள், நாட்டின் சேம நிதியெனக் கருதிக் காப்பாற்றி வந்தார்கள். பிறகு நான்கிங் நகரத்தில், ஸன்னின் உடல் அடக்கம் பெறுவதற்கென்று எழுப்பப்பட்டிருந்த ஒரு சமாதிக் கட்டடத்தில் கொண்டுபோய் வைத்தார்கள். இப்படிக் கொண்டு வைப்பதற்கு, அப்பொழுது சியாங் கை ஷேக் தலைமையில் நடைபெற்று வந்த அரசாங்கம் முக்கிய காரணமாயிருந்ததென்று சொல்ல வேண்டும். இந்தக் கட்டடமே, ஸன்னின் நிரந்தர நினைவுச் சின்னமாக விளங்குகிறது, சீனர்களுக்கு இஃதொரு யாத்திரை தலமாகவும் இருந்து வருகிறது. அது மட்டுமல்ல; ஸன்னின் உருவப் படத்தை வைத்து வழுத்தாத குடிசைகளையோ, மாளிகைகளையோ, அரசாங்க அலுவலகங்களையோ, பள்ளிக்கூடங்களையோ, பொது தலங் களையோ, சீனாவில் காண்பது அரிது.
ஸன் உயிரோடிருந்தவரையில் கோமிண்ட்டாங் கட்சியினர், அவனை ஸுங்க்லி அதாவது தலைவன் என்று அழைத்துப் பின் பற்றி வந்தார்கள். அவன் மரணத்திற்குப் பிறகு எல்லாக் கட்சி யினரும் அவனை சீனக் குடியரசின் தந்தை என்று போற்றி வருகிறார்கள்.
சீன மக்களின் இதய பீடத்தில் தலைவனாகவும், அவர் களுடைய அன்றாட வாழ்க்கையில் தந்தையாகவும் ஸன் யாட் ஸென் என்றும் வாழ்ந்துகொண்டிருப்பான் என்பது திண்ணம்.
வாழ்க்கைச் சுவடுகள்
1866 - ஸன் யாட் சென் பிறந்தது. (12-11-1866)
1876 - மூத்த சகோதரன் ஆமியின் அழைப்புக்கிணங்க, ஸன், ஹவாயி தீவுக்குச் சென்றது.
1879 - ஸன், ஹோனோலூலுவில் உள்ள ஒரு கிறிதுவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கத் தொடங்கியது.
1882 - ஸன், கல்லூரியில் பரிசு பெற்றது.
1883 - ஸன், ஹோனோலூலுவிலிருந்து தாய்நாடு திரும்பி யது.
1884 - ஹாங்காங்கிலுள்ள க்வீன் காலேஜில் மேற் கொண்டு படிக்க, ஸன், சேர்ந்துகொண்டான். ஸன், கிறிதுவ மதத்தைத் தழுவிக்கொண்டது.
1886 - சகோதரன் ஆமியின் அழைப்புக்கிணங்க, ஸன், மீண்டும் ஹோனோலூலுவுக்குச் சென்றது.
1887 - ஹோனோலூலுவிலிருந்து திரும்பி வந்து, ஹாங்காங்கிலுள்ள வைத்தியக் கல்லூரியில் வைத்தியக் கல்லூரியில் பயிலத் தொடங்கியது.
1891 - ஸன்னுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
1892 - வைத்தியப் பயிற்சி முடிந்து டாக்டரானது; பெயர் மாற்றம் பெற்றது.
1894 - ஸன், புரட்சிப் பிரசார நிமித்தம் ஹவாயி தீவு சென்றது; முற்போக்குச் சீனர் சங்கத் துவக்கம்.
1895 - மஞ்சூ ஆட்சிக்கு விரோதமாக முதற் புரட்சி நடை பெற்றது; தோல்வியடைந்தது.
1896 - ஸன், ஹவாயிலும் அமெரிக்காவிலும் புரட்சிப் பிரசாரம் செய்தது, சீன தானீகனுடைய காரி யாலயத்தில் காப்பில் அகப்பட்டுக்கொண்டு பிறகு விடுதலை பெற்றது.
1900 - முந்திய ஆண்டில் கிளர்ந்தெழுந்த பாக்ஸடர் கலகம் மும்மரமாகி பிறகு ஒருவாறு அடங்கியது; ஸன்னின் முயற்சியால் மஞ்சூ ஆட்சிக்கு விரோதமாக இரண்டாவது தடவை புரட்சி நடைபெற்றுத் தோல்வியுற்றது.
1903 - ஸன், திரும்பவும் ஹவாயி தீவுக்குச் சென்று புரட்சிப் பிராசாரம் செய்தது.
1904 - ஸன்னின் அமெரிக்க சுற்றுப் பிராயணம்.
1905 - ஸன்னின் ஐரோப்பிய சுற்றுப் பிராயணம்; பெல்ஜியம் தலைநகரான ப்ரஸெல்ஸில், ஸான்த மின் சூயியை அடிப்படையாகக் கொண்டு சொற்பொழிவு நிகழ்த் தியது; பிறகு ஜப்பான் வந்து, மஞ்சூ ஆட்சியை ஒழிப்பதன் அவசியத்தை வற்புறுத்திச் சொற் பொழிவு நிகழ்த்தியது: டுங் மெங்ஹுயி சங்கத்தின் தோற்றம்.
1907 - ஸன்னினுடடைய ஏற்பாட்டின் பேரில், மஞ்சூ ஆட்சிக்குத விரோதமாக நான்கு தடவை புரட்சிகள் நடைபெற்றது, தோல்வியுற்றது.
1908 - குவாங் ஷு மன்னன் மரணம்: இதைத் தொடர்ந்து ரீஜென்ட்யிருந்த த்ஸு ஹரியின் மரணம்; இதைத் தொடர்ந்தது ரீஜெண்ட்டாயிருந்த த்ஸு ஹஸியின் மரணம்: பூயி தஎன்ற மூன்று வயதுச் சிறுவன் பட்டத்திற்குரியவனாக்கப் பெற்றான்; ஸன்னின் ஏற்பாட்டின் பேரில் இரண்டு தடவை புரட்சிகள் நடை பெற்றுத் தோல்வியுற்றது.
1910 - மறுபடியும் புரட்சி நடைபெற்றுத் தோல்வியுற்றது.
1911 - மார்ச் மாதம் ஒரு புரட்சி நடைபெற்றுத் தோல்வி யடைந்தது; அக்டோபர் மாதம் புரட்சி நடை பெற்று வெற்றியடைந்தது; இவ்வாண்டின் கடைசி யில், ஸன், வெளி நாட்டிலிருந்து தாய் நாடு திரும்பி வந்தான்.
1912 - சீனாவில் மஞ்சூ ஆட்சி முற்றுப் பெற்றது; குடியரசு உதயமாயிற்று: ஸன், முதல் பிரசிடெண்டாகத் தெரிந்தெடுக்கப்ட்டது: நாட்டின் ஒற்றுமையைக் கருதி, ஸன், குடியரசு பிரசிடென்ட் பதவியை யுவான் ஷிகாய்க்கு விட்டுக் கொடுத்தது; டுங் மெங் ஹுயி சங்கம், சீர்திருத்தப்பட்டு கோமிண்ட்டாங் கட்சி யாக உருக் கொண்டது: குடியரசை ஆதரித்து சீனா முழுவதிலும் ஸன் பிரசாரடம் செய்தது; ஸன் ரெயில்வே டைரெக்டாராக நியமனம்.
1913 - யுவான் ஷிகாயின் நிருவாகத்தை எதிர்த்துத நாட்டில் குட்டிக் கலகங்கள் தோன்றின; ஸன் ஜப்பானுக்குத் தப்பிச் சென்றான்; கோமிண்ட்டாங் கட்சி மறுபடியும் சீர்திருத்தம் பெற்றது.
1914 - முதல் உலக மகா யுத்தம் தொடக்கம்.
1915 - ஸன்னுக்கும் முதல் மனைவி லுஸுவுக்கும் விவா கரத்து ஏற்பட்டது; ஸன், இரண்டாந்தாரமாக சிங் லிங்கை மணந்து கொண்டது.
1916-யுவான் ஷிகாய், முடி சூட்டிக் கொள்ளப் போவதாகப் பிரகடடன் வெளியிட்டது; சில மாதங்களுக்குப் பிறகு அவன் மரணம்.
1917 - முதல் உலக மகா யுத்தத்தில் சீனா இழுத்துவிடப் பட்டது.
1918 - பாரி சமாதான மகாநாடு; சீனா, சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து விட்டது; நாடெங்கணும் கிளர்ச்சி, ஸன்னின் தேசீய புணர் நிர்மாண திட்டம் என்ற நூல் வெளியானது.
1919 - பீக்கிங்கைத் தலைநகராகக் கொண்ட ஒர் அரசாங் கமும், காண்ட்டனைத் தலைநகராகக் கொண்டு ஒர் அரசாங்கமும் ஏற்பட்டன.
1921 - ஸன். சென் சியுங் மிங்கின் தலைமையில் வடக்கு நோக்கி ஒரு படையை த அனுப்பியது; ஆனால் அந்த சென் சியுங் மிங், ஸன்னுக்குத் துரோகம் விளைவிக்க முனைந்தது.
1922 - செங்த சியுங் மிங்கின் படையியனர், காண்ட்டனில் ஸன் வசித்து வந்த மாளிகையைத் தாக்கியது: ஸன் தப்பிச் சென்றது.
1923 - சோவியத் அரசாங்கத்தின் சார்பாகச் சீனாவுக்கு வந்தஅடால்ப் ஜாப்பே, ஸன்னைச் சந்தித்தது; பொதுவுடைமைக் கட்சி வளர ஆரம்பித்தது.
1924 - கோமிண்ட்டாங் கட்சி கட்டுக்கோப்பான ஒரு கட்சியாக அமைக்கப்பட்டது; அதன் முதல் காங்கிர கூடியது; இந்தக் காங்கிரஸின் போது, பொதுவுடைமை வாதிகள் கோமிண்ட்டாங் கட்சியிடல் சேர்த்துக கொள்ளப் பட்டார்கள்; ஸன், ஸான் மின் சூயி தலைப்பில், காண்ட்டனிலுள்ள தேசீய குவாங் டுங் சர்வ கலாசலையில் பதினாறு சொற்பொழிவுகள்த நிகழ்த்தியது; நாட்டின் ஒற்றுமையைக் குறிக்கோளாகக் கொண்டு, பீக்கிங்கில் இயங்கி வந்த அரசாங்கத்தன் தலைவர் களுடன் சமரஸம்பேச, ஸன், பரிவாரங்களுடன் வடக்கு நோக்கிப் புறப்பட்டது.
1925 - இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக புற்று நோயால் அவதைப்பட்டுக் கொண்டிருந்த ஸன் பீக்கிங்கை யடைந்த சொற்ப காலத்திற்குள் (12-3-1925) மரித்தது.
கருத்துகள்
கருத்துரையிடுக