செப்பனிட்ட படிமங்கள்
கவிதைகள்
Backசெப்பனிட்ட படிமங்கள்
சி. சிவசேகரம்
-----------------------------------------------------
செப்பனிட்ட படிமங்கள்
(கவிதைத் தொகுப்பு)
சி. சிவசேகரம்
முதல்பதிப்பு: பிப்ரவரி 1988
உள் அச்சு: இராசகிளி பிரிண்டர்ஸ், 12, முதல் பிரதான சாலை, நேருநகர், அடையாறு, சென்னை-20.
அட்டை அமைப்பு: ஏஞ்சலோ கிராபிக்ஸ், சென்னை-14
அட்டை அச்சு: சுதர்சன் கிராபிக்ஸ், சென்னை-14
வெளியீடு: சென்னை புக்ஸ், 6, தாயர் சாகிப் 2வது சந்து, சென்னை- 600002
விலை: ரூ 7-50
------------------------------------------------------------
சி. சிவசேகரம்
கவிஞர் சிவசேகரம் அவர்களின் இரண்டாவது கவிதைத் தொகுதி இது. இவர் ஒரு கவிஞராக மட்டுமன்றி, தலைசிறந்த விமர்சகராகவும் ஆய்வாளராகவும் அறியப்பட்டவர். தனது விமர்சனங்களை முதுகு சொறியும் பரிந்துரைகளாகவன்றி நேர்மையுடன் அபிப்பிராய பேதங்களையும் முன்வைத்து, படைப்பிலக்கியங்களின் முனைப்பான அம்சங்களை வெளிக்கொணர்வதால் அனைவராலும் விரும்பிப் படிக்கப்படுபவர். சமூக விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் இவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள், சமூக- பொருளாதார- அரசியல்- மொழியியல் துறைகளில் காத்திரமான பங்கு வகித்துள்ளன. மாக்ஸிஸக் கண்ணோட்டத்துடன் சமூக ரீதியான பல்துறை ஆற்றல்களையும் வெளிப்படுத்தும் இவர், இலங்கை பேராதெனிய பல்கலைக்கழக வளாகத்தில் பொறியியல் துறைப் பேராசிரியராகப் பதவி வகித்தவர்- தற்போது லண்டனில் பணியாற்றுகிறார். இவரது முதலாவது கவிதைத் தொகுதி "நதிக்கரை மூங்கில்".
----------------------------------------------------------------------------
விமர்சகர்கட்கும்
வாசகர்கட்கும்
"நதிக்கரை மூங்கில்" கவிதைத் தொகுதி பற்றிய விமர்சனங்கள் எனக்கு ஏமாற்றத்தைத் தந்தன. கவிதைத் தொகுதி வெளிவருமுன்னமே என் கவிதைகள் ஐந்தை சுருக்கமான விமர்சனக் குறிப்பொன்றுடன் தமிழவன் படிகளில் பிரசுரித்தார். கவிதைகளில் ஒன்றைத் தவிர மற்றவை அரசியற் தன்மையுடையன. எனவே தமிழவன், பொதுப்பட, அவை அரசியற் தன்மையுடையன என்பதைச் சரியாகவே சுட்டிக் காட்டினார். அவற்றின் இலக்கியத் தகுதி பற்றிய அவரது மதிப்பீடு மிகையானது என்றே இன்னமும் கருதுகிறேன். தமிழவனின் மதிப்பீட்டுக்கு எதிர்வினையாக ஒரு விமர்சகர் படிகளில் எழுதினார். அவரது கருத்தில், என் கவிதைகளில் ஒன்றில் (வீரசூரிய : வேறொரு கோணம்) மட்டுமே அரசியற் தன்மை மேலோங்கியிருந்தது. அதைவிட, என் கவிதைகள் ஆழமான சோக உணர்வையே அடிப்படையாகக் கொண்டவை என்றும் அவர் கூறியிருந்தார். உண்மையில் வெளிப்படையாக ஒரு வித அரசியல் நிகழ்வையோ நிலைப்பாட்டையோ கூறாத 'பயணம்', 'வீரசூரிய' கவிதையை விட ஆழமான அரசியற் தன்மையுடையது என்பது என் எண்ணம். தீவிரமான, ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்துவதில் ஒவ்வொரு ஆக்க எழுத்தாளனும் வெவ்வேறு முறைகளைக் கையாளலாம். ஒரே மனிதன் எல்லாச் சூழ்நிலைகளிலும் தன் தீவிரமான கருத்தை ஒரேவிதமாகத் தெரிவிக்கும் அவசியமும் இல்லை.
'செம்பதாகை'யில் வந்த விமர்சனத்தில் சில கவிதைகளில் கூறப்படும் அரசியற் கருத்து பெரும்பாலோருக்கு எளிதாக விளங்கக் கூடியதாக இல்லை என்று கூறப்பட்டிருந்தது. இது சரியானதே. ஆயினும் என் கவிதைகள், அடிப்படையில், தேடல் முயற்சிகளே. என்னையும் என் சூழலையும் அறியும் தேவையின் காரணமாக மேற்கொள்ளப்படும் தேடலில் மனதில் இடறும் எண்ணங்களே கவிதை வடிவம் பெறுகின்றன. புதிர் போடுவதோ படிப்பவர்களைக் குழப்புவதோ என் நோக்கமில்லை. சில சமயங்களில் சில நிகழ்வுகள் என் மனதில் ஏற்படுத்தும் பாதிப்புக்களைப் பட்டும் படாது கூறி விட்டு மிகுதியை வாசிப்பவரின் பொறுப்பில் விட்டு விடுகிறேன். என்னுடைய தேடல் முயற்சியின் முழுமையான விளைப்பயனாக அல்லாமல் இடையிடையில் தெரியும் (அல்லது தெரிவதாகா நினைக்கும்) ஒளிக் கீற்றுக்களாகவே ஒவ்வொரு கவிதையும் அமைகிறது. பிரகாசமான ஒளியை விட மங்கலான வெளிச்சம் கூடிய தெளிவைத் அத்ரும் சூழ்நிலைகள் உண்டு. என்றாலும் தன் சமுதாயச் சூழலையும் அதன் தேவைகளையும் சமுதாயச் சார்புள்ள எந்த்ந்வொரு படைப்பாளியும் புறக்கணிக்க இயலாது என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.
'நதிக்கரை மூங்கில்' பற்றிப் பிரசுரமான பிற குறிப்புகளில் 'தாயகத்'தில் பிரசுரமான முருகையனுடைய விமர்சனம் மட்டுமே ஆழமான விமர்சன நோக்கில் எழுதப்பட்டிருந்தது. அது முருகையனின் கவியுள்ளத்தைக் காட்டிய அளவுக்கு அவரது விமர்சனக் கூர்மையைக் காட்டவில்லை என்பது என் எண்ணம். ஒரு இடத்தில் (கிழக்கே) "வரமறுக்கும் வானவில்" என்ற சொற்றொடரை நான் பாவித்ததை அவர் பாராட்டி, வழமையாக வரமாட்டேன் என்று மறுக்கும் வானவில் வந்ததை நான் அழகாகச் சித்தரித்ததாக விளக்கியிருந்தார். என் கற்பனை அவ்வளவு தூரம் போகவில்லை. என் நோக்கம் ஒரு மங்கிய மாலைப் பொழுதை எல்லா வகையிலும் இருண்டதாகச் சித்தரித்து இறுதியில் புதிய நாளை எதிர்பார்த்துக் காவல் நிற்கும் விளக்குகள் மூலம் எதிர் காலம் பற்றிய ஒரு நம்பிக்கைக் கீற்றை வரைவதுதான். எனவேதான், மழைத் தூறலின் பின், மேகங்கள் மூடியதால், வானத்தில் வானவில் வர இயலாமையை ஒரு ஏமாற்ற உணர்வுடன் கூற முற்பட்டேன். " வானவில் வரமறுக்கும்" என்று எழுதியிருந்தால் தெளிவாக இருந்திருக்கும். ஆயினும் "வரமறுக்கும் வானவில்" என்பதன் ஓசை நயம் மனதிற்கு அதிக்ம் விருப்பமாக இருந்தது. முருகையனுடைய கவியுள்ளம் அவரது விமர்சனப் பார்வையை மீறி நின்றது என்று நினைக்கிறேன். அவர் "வரமறுக்கும் வானவில்" வந்ததாக நான் சொன்னேன் என்று விளங்கியதில் தவறில்லை. ஆனால் வானவில்லின் வருகை, நான் சித்தரிக்க முயன்ற இருளடைந்த சூழலைச் சிறிது பிரகாசப்படுத்திக் கவிதையைப் பலவீனப்படுத்தியிருக்கும். கவிதைகளில் சொற் பிரயோகத்தின் சிறப்புக்களைத் தேடி அடையாளங் காட்டிய அளவுக்கு அவர் அவற்றின் முழுமையான பாதிப்பின் குறைபாடுகளையும் சுட்டிக் காட்டியிருக்கலாம். 'கிழக்கே' என்ற சொல்லை நான் அகற்றியிருந்தால் த்ந்ளிவாகவும் சரியாகவும் அமைந்திருக்கும்.
தன்னை ஒரு கலை இலக்கிய விமர்சன முக்கியஸ்தராகவும் முன் வரிசைக் கவிஞர்களுள் ஒருவராகவும் கருதும் ஒருவரது கருத்துக்களையும் குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன். தனிப்பட்ட முறையில் கூறப்பட்டவை என்பதால் அவரது பேரைக் கூற விரும்பவில்லை. "ஹிற்லர் டயறிகள்" கவிதை ஹிற்லர் எவரைக் குறிக்கிறது என்று சொல்லத் தவறிவிட்டதாக அவர் விமர்சித்தார். 'ஹிற்லர்' யாரையும் குறிக்கவில்லை. அது ஒரு அரசியற் போக்கை (குரூரமான இனவாதத்தை) மட்டுமே குறித்தது. 1982இல் வந்த ஹிற்லர் டயறிகள் போலி என்று 1983இல் உறுதிப்படுத்தப் பட்டது. ஹிற்லரின் மரணம் பாஸிஸத்தின் மரணமோ இன வெறியின் மரணமோ அல்ல என்று 1983 இனவாத வன்முறை நினைவூட்டியது. ஹிற்லரின் முக்கியத்துவம் அவ்வளவு தான். அரசியற் போக்குகளின் பிரதிநிதிகளாகத் தனிமனிதர்கள் அமையலாம். இங்கே முக்கியமானது அரசியற் போக்கே ஒழிய அதன் தனி மனிதக் குறியீடல்ல. ஹிற்லர் வேறு ஒரு மனிதனைக் குறித்தே ஆக வேண்டும் என்று எதிர்பார்ப்பது சமுதாய மாற்றத்தைத் தனிமனிதர்களின் செயல்களாக மட்டுமே பார்த்துப் பழகிவிட்ட ஒரு பலவீனத்தின் வெளிப்பாடு என்று நினைக்கிறேன்.
தமிழ் இலக்கியத் துறையில் தகுதி வாய்ந்த விமர்சகர்கள் பலர் இருக்கிறார்கள். ஆயினும் சமகாலப் படைப்புக்கள் பற்றிய நல்ல விமர்சனங்களையோ முழுமையான விமர்சனங்களையோ அடிக்கடி காணக் கிடைப்பதில்லை. சில விமர்சகர்கள் விமர்சனம் என்றால் மிகவும் சிக்கலான விஷயமாக இருக்க வேண்டுமென்று நம்புகிறார்கள் போற் தெரிகிறது. சிக்கலான விஷயத்தை எழுதுவதால் தெளிவாகவும் சுற்றிவளைக்காமலும் மழுப்பாமலும் எழுத இயலாமற் போக வேண்டியதில்லை. வேறு சிலர் நாலுபக்கச் சிறுகதைக்கு நாற்பது பக்க ஆய்வுக்கட்டுரை எழுதுவார்கள். மெய்யியல், உளவியல் மற்றும் பல துறைகளையும் துணைக்கழைத்து பக்கத்துக்குப் பக்கம் மேற்கோள்கள் சகிதம் எழுதுகிற விமர்சனத்தில் அப்பட்டமான பிழைகளோ அடிப்படையான விஷயமோ அகப்படாது. சிக்கலான நடையும் நீண்ட பல பக்கங்களும் ஆழமான ஆராய்ச்சி ஆகிவிடாது. முதலில் விமர்சனத்துக்குரிய பொருளின் அடிப்படையான தன்மை, படைப்பாளியின் பார்வைக் கோணம், நிலைப்பாடு, படைப்பின் நோக்கம், அதை நிறைவேற்றக் கையாளும் முறை போன்ற விஷயங்களை அடையாளங் காணவும் காட்டவும் தயங்குகிறவர்கள் ஆழமாக விமர்சிப்பதாகப் பேசுவதில் பொருளில்லை. நிர்வாண ஊர்வலம் வந்த ராஜாவின் ஆடை அலங்கார வர்ணனைகளை இன்னும் எவ்வளவு காலம் சகிக்க முடியும்? ராஜாவின் நிர்வாணத்தை விட ஆடைகள் பற்றிய வர்ணனைகள் அபத்தமானவை, ஆபாசமானவை. இன்றும் பம்மாத்துக்காரர்கள் ஆழமான விமர்சகர்களாகப் பவனிவர முடிகிறதென்றால், அதற்கு விமர்சனம் பற்றி நம்மிடையே சகிப்புத்தன்மை போதாதிருப்பதும் துணை செய்கிறது. மிகவும் எளிதாகவே அடையாளங் காணக்கூடிய தவறுகளையும், மோசடிகளையும் சுட்டிக்காட்டி நான் எழுதிய விமர்சனங்கள் சிலவற்றுக்கு 'எதிர் முகாமில்' உள்ள சிலர் எழுதிய பதில்களில் தனிப்பட்ட தாக்குதலும் குரோதமும் விஷமத் தனமான வியாக்கியானங்களும் மேலோங்கியிருந்தன. இந்த மனோபாவத்திலிருந்து நம் இலக்கியத் துறை விடுபட வேண்டும். தவறான கருத்தானாலும் அதைத் துணிவுடனும் நேர்மையுடனும் முன்வைக்கவும், தவறு சுட்டிக் காட்டப்படும் போது அதுபற்றித் திறந்த மனதுடன் விவாதிக்கவும்- ஏற்றுக் கொள்ளவும் நம் படைப்பாளிகளும் விமர்சகர்களும் ஒரு ஆரோக்கியமான மனப்பான்மையை விருத்தி செய்ய வேண்டும். நமது இலக்கியத் துறையின் எதிர்கால வளர்ச்சியை விமர்சனத் துறையின் வளர்ச்சியினின்றும் பிரிக்க இயலாது.
* * *
இத் தொகுதியிலுள்ள கவிதைகளில் 'ஒதுங்கி ஓடியவர்கள்' 1973 அளவில் மலையகத் தொழிற்சங்கப் பத்திரிகையான 'செங்கொடி'யில் வந்தது. 1970களில் எழுதியவற்றில் 'நதிக்கரை மூங்கிலில்' வராதவை மேலும் நாலைந்து இருக்க வேண்டும். ஆயினும் இந்தத் தொகுதியில் மாதிரிக்கு ஒன்றாக அது சேர்க்கப் பட்டுள்ளது. மற்ற அனைத்துமே செம்பதாகை, புதிய பூமி, தாயகம் ஆகிய ஏடுகளில் வந்தவை அல்லது வரவுள்ளவை. 'அலை'யுடன் என் தொடர்பு முறிந்தது காலத்தின் போக்கிற் தவிர்க்க இயலாத ஒன்று. அது பற்றி வருந்தவோ ஆத்திரப்படவோ எனக்கு அவசியமில்லை. 'அலை' ஆசிரியர் குழுவுக்கும் அவ்வாறே என்று எதிர்பார்க்கிறேன். 'பசிகள்' நின்று விட்டது. அரசியல் ரீதியாக உடன்பாடு இல்லாத பத்திரிகைகளில் எழுதுவதைத் தவிர்த்து வருகிறேன். (விதிவிலக்காக, இரண்டொரு நாளேடுகளில் என் விமர்சனக் கட்டுரைகள் பிரசுரமாயின).
சில கவிதைகளைப் பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன்:
1983இல் ஹற்றனில் நடந்த கைலாசபதி நினைவுக் கூட்டத்தில் பங்குபற்றிய தேசிய கலை இலக்கியப் பேரவையைச் சேர்ந்த ஒரு மலையக இளைஞர் அடுத்த நாள் இந்தியா செல்ல இருந்தார். அவர் அந்தக் கூட்டத்தில் பேசிய போது அவரும் அவரது நண்பர்களும் கண்கலங்கி விட்டார்கள். ஹற்றன் புகையிரத நிலையத்தில் முன்பு பல தடவை கண்ட பிரியாவிடை நிகழ்வுகள் மனதிற்கு வந்தன. அதன் விளைவாக எழுதியது 'ஒரு பிரியாவிடை'. ஆனால் அது பிரசுரமான போது நானே இலங்கையிலிருந்து புறப்படுமாறு என் தனிப்பட்ட சூழ்நிலைகள் மாறிவிட்டன. 'மாநகர்' இரண்டும் வெகுகாலமாக மனதில் இருந்த ஒரு நீண்ட கவிதைக்கு உருவம் தர இயலாது போனதன் விளைவுகள். கவிதையில் சிலேடையை நான் விரும்பிப் பயன்படுத்துவதில்லை. ஆயினும் 'மாநகர்: மோகினி'யில் "வசமிழந்து... கற்கோபுரங்களிலும்... வீதி ஓரங்களிலும் உறைந்து விடுகிறார்கள்" என்பதில் 'உறைந்து' என்ற சொல்லின் சிலேடை எதிர்பாராத விதமாக நன்கு அமைந்து விட்டது. 'காரணங்கள்', 'அக்கறையற்ற உனக்கு' ஆகிய இரண்டிலும் பேச்சு மொழியின் சந்தத்தின் வலிமையைப் பயன்படுத்தி யிருக்கிறேன். 'உன் சட்ட ரீதியான உரிமைகள்' கவிதைகளிலும் வேறு சிலவற்றிலும் கூடப் பேச்சோசையின் சந்தம் பயன்படுத்தப்பட்ட போதிலும் இவற்றினளவு திருப்தியாக இல்லை. 'ஐம்பத்திருவருக்கு', 'ஹிற்லரின் நாட்குறிப்பு' இரண்டும் நதிக்கரை மூங்கிலில் '52', 'ஹிற்லரின் டயறிகள்' என்ற தலைப்பில் வந்தவை. தமிழவனுடைய பார்வைக்காக அனுப்பப்பட்ட அவை அவரால் முதலில் படிகளிலும் பின்னர் எனக்குச் சொல்லாமலே கவிதைத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டன. அவருக்கு என்னை கலந்தாலோசனை செய்யும் வாய்ப்பு இருக்கவில்லை. அவரது நல்லெண்ணம் காரணமாகவே அவை தொகுதியிற் சேர்க்கப்பட்டன. திருத்தப்பட்ட வடிவங்கள் செம்பதாகையிலும், தாயகத்திலும் பிரசுரிக்கப்பட்டன. எனவே அவற்றை இத்தொகுதியில் உள்ளடக்குவது பொருந்தும் என்று நினைக்கிறேன்.
'வீயா நெக்ரா கிராமத்தில் ஹூவான் பாதிரியாரின் முதல் நாளும் இறுதி நாளும்' உண்மையில் சிறுகதை ஒன்றுக்குரிய விஷயம். என்னால் அதை நல்ல சிறுகதையாக எழுத இயலாத காரணத்தால் அதை இத்தொகுதியிலுள்ள வடிவத்தில் எழுதினேன் என்று ஒத்துக்கொள்ள வேண்டும்.
'புதிய பூமி' முதலில் சிறீ சிறீ அவர்களது தெலுங்குக் கவிதையின் மட்டரகமான ஒரு ஆங்கில மொழிபெயர்ப்பினின்று தமிழாக்கப்பட்டு 'அலை'யில் என் ஆட்சேபனையை மீறிப் பிரசுரிக்கப்பட்டது. அது பத்மநாப ஐயரது தனிப்பட்ட வேண்டுகோளுக்காக நான் அனுப்பிய மொழிபெயர்ப்பு. அது மிகவும் மோசமான கவிதைத் தன்மையுடைய ஆங்கில வடிவினின்று பெறப்பட்டதும் எனக்குத் திருப்தியற்றதுமான மொழிபெயர்ப்பு என்று தெளிவாகக் கூறியிருந்தேன். அதை விட அதில் ஒருபுறம் அரசியல் பார்வையிலுள்ள தவறும் மறுபுறம் படிமங்களின் பிரயோகத்தில் உள்ள தவறுகளும் என் மனதுக்குப் பிடிக்கவில்லை. சிறீ சிறீ பாட்டாளி வர்க்கத்திற்குப் பதிலாக வாலிபர்களையே சமுதாய மாற்றத்திற்கான உந்து சக்தியாகச் சித்தரித்திருந்தார். (ஒருவேளை இந்தக் காரணத்தினாலேதான் அலையில் அந்த மொழிபெயர்ப்பு பிரசுரமாகியிருக்கலாம்). புரட்சிகர சக்திகள் வேட்டை நாய்கள் போல, கழுகுகள் போல, பாம்புகள் போல எதிரிகளைத் தாக்கும் என்று வருகிற உவமைகள் புதிய படிமங்களாக இருக்கலாம்; ஆனால் புரட்சிகர வீரத்தைச் சித்தரிக்க மரபில் வழங்கும் படிமங்கள் இவற்றைவிட உகந்தவை என்பது என் எண்ணம். 'புதிய பூமி' முதலாவது இதழுக்கு ஒரு கவிதை கேட்டிருந்தார்கள். 'அலை'யில் இழைக்கப்பட்ட தவற்றைத் திருத்த அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஆங்கிலத்திலிருந்து படுமோசமான வார்த்தைக் குவியலிலிருந்து சிறிதி கவித்துவத்தை மீட்டெடுத்தேன் என்று நினைக்கிறேன்.
'திசை மாறிய நண்பனுக்கு', 'சட்டை மாற்றிய சாமியார்' இரண்டும் குறிப்பிட்ட நபர்களைப் பற்றியவை என்ற கருத்துக் கூறப்பட்டதாக அறிகிறேன். வேடிக்கை என்னவென்றால் ஒவ்வொன்றும் ஒன்றுக்கு மேற்பட்டவர்களைக் குறிப்பதாகக் கருதப்பட்டதுதான். உண்மையில் இரண்டுமே சில மனிதர்களது செயல்கள் பற்றியன. ஏளனம் செய்யப்பட்டவை தவறான செயல் முறைகளே ஒழியத் தனிநபர்களல்ல. 'சட்டை மாற்றிய சாமியாரை' எழுதத் தூண்டியவற்றில் சு. வில்வரத்தினம், வ. ஐ. ச. ஜெயபாலன் இருவரதும் கவிதைகள் (அலை 25) உள்ளடங்கும். ஆனால் சட்டை மாற்றிய சாமியார் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். எனவே எந்தத் தனிநபரும் இந்தக் கிரீடம் தனக்காகவே செய்யப்பட்டது என்று கருத அவசியமில்லை.
'செப்பனிட்ட படிமங்கள்' இதுவரை நான் தேர்ந்த கவிதைத் தலைப்புகளில் மனதிற்குப் பிடித்த ஒன்று என்பதோடு இத்தொகுதிக்கு ஒரு பொருத்தமான தலைப்பு எனவும் தோறுகிறத். என் கவிதைகளின் தன்மையில் அண்மைக் காலத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்ட வருகிறதாக ஓர் உணர்வு. நல்லதா இல்லையா என்பதை உங்களிடம் விட்டு விடுகிறேன்.
* * *
'நதிக்கரை மூங்கில்' விஷயத்தில் பத்மநாப ஐயர் வகித்த பங்கு இந்தத் தொகுதியில் நண்பர் கே. ஏ. சுப்பிரமணியத்திற்கு உரியது. அவருடன் தேசிய கலை இலக்கியப் பேரவை நண்பர்கள் அனைவரும் காட்டிய அன்பும் அக்கறையும் வழங்கிய உதவிகளும் இல்லாமல் இத்தொகுதி உருவாகியிராது. அவர்கள் என் நன்றிக்குரியவர்கள். நதிக்கரை மூங்கிலில் வராத பத்மநாத ஐயருக்கும் என் நன்றி உரியது. தொகுதியை வெளியிட முன்வந்த சென்னை புக்ஸ் நிறுவனத்தினருக்கும், எனக்குத் தெரியாமலும் என்னைத் தெரியாமலும் பல வகையிலும் உதவி செய்த சகலருக்கும் என் நன்றி.
சி. சிவசேகரம்,
லண்டன்,
12-3-1987.
-------------------------------------------------------
நண்பனும் எதிரியும்
வானம் முழுதும்
முகில் மூடி
மழை
ஓயாது அழுத
குளிர்ந்த
இருண்ட
பகற்பொழுதுகள்
அடுக்கடுக்காய் நின்ற
ஒரு இளவேனில்.
துளிர்கள் அவிழ்தலும்
மலர்கள் விரிதலும்
தொடர்ந்தன.
வெண்பனியில்
தூவல் மறந்து
வானம்
நீலமாய் விரிந்து
வெய்யில் வழிந்த
இதமான நாட்கள்
தொடர்ந்த
குளிர்கால
வெதுவெதுப்பு.
மலர்கள் விரியாது
இலைகள் முளையாது
கரந்தன.
தாயகம்- 15
ஜூன் 1985
-------------------------------------------------------
பார்வைகள்
வானும் மலையும் நிலமும் நதியும்
மரமும் இலையும் மலரும் சருகும்
பனியின் பிடியில் உருகும் மறையும்.
விழிகள் தொழிலின் திறமை அழியும்.
விடியும், பனியின் பிடியும் தளரும்.
பள்ளத்தாக்கில் ஒதுங்கி ஒடுங்கி
மெல்ல மறையும்.
கொடுமைகள் இதுபோல்
மீள்வது நிசமென மனம் தளர்ந்திடலாம்.
ஒழிவது நிசமெனத் துணிவுடன் எழலாம்.
தாயகம்- 10
நவம்பர்- டிசெம்பர் 1984
-------------------------------------------------------
தியாகங்கள்
சிறையினிலே பிறந்ததனால் கிருஷ்ணன் என்றால்
சிலுவையிலே இறந்ததனால் யேசு என்றால்
போர்க்களத்து வார்த்தையெல்லாம் கீதையாகும்.
படுகொலைகள் அத்தனையும் யாகம் ஆகும்.
வாழுகிற நாள் முழுதும் சிறையில் வாடி
வேதனையால் உந்தன் உயிர் போனாற் கூட
ஏதுக்காய் எவருக்காய் என்ற கேள்வி
முன்னிற்கும் அவ்வேளை மக்கட்காக
நகமொன்றை இழந்தவனும் உன்னில் மேலாய்
உயர்வாதல் கூடும் அதை உணர்வாய், கேளாய்
சிலுவையிலே ஒரு யேசு சாய்ந்த போது
இரு கள்வர் அருகினிலே அறையப்பட்டார்.
தாயகம்- 9
ஓகஸ்ற்- செடெம்பர் 1984
---------------------------------------------------------------------------
ஒரு பிரியாவிடை
இரவோடிறுகிய பனிப்பிடி இளகும்
நகரைச் சூழ நாலு திசையிலும்
ஒன்றொன்றாகக் குன்றுகள் நிமிர்ந்து
நில்லெனக் கூறும், நின்வழி மறிக்கும்.
புதினம் பார்க்கும் மேகத் தலைகள்
தம்முட் குழம்பித் தவித்துத் திரியும்.
ரோசாப் பூவின் கண்ணீர் துடைக
நீளும் சூரியக் கரங்களை முந்தி
நீர்த்துளி வீழ்ந்து நிலத்தை நனைக்கும்.
நண்பர்கள் விழிநீர் விரல்களிற் சிதறும்
இரையும் ஓசைகள் இடையோர் ஊதல்:
பாரிய பிரிவொன் றெளிதாய் நிகழும்.
பிறந்து தேய்ந்த மண்ணை இழந்து
பிறிதோர் மண்ணில் தேய்வுறப் பெயரும்
நண்ப,
நாளை நம்மிடை வருக.
மாறிய இந்த மண்ணின் மீது
ஒவ்வொரு குன்றும் தன்சிரம் தாழ்த்தி
நம்முடன் சேர்ந்து நல்வர வுரைக்கும்.
தாயகம்- 5
ஜனவரி 1984
----------------------------------------------------------------
மாநகர்: மோகினி
உன் கடுநோயோ
தீராப் பெரும் பசியோ
தாகமோ
அவர்கட்குத் தெரிவதில்லை.
உன் பூச்சும் மினுமினுப்பும் பகட்டும்
பொய் முறுவலும்
அவர்களைத் தங்கள் கடலோரங்களினின்றும்
வயல் வெளிகளினின்றும்
மலைக் காடுகளினின்றும்
உன்னை நோக்கி இழுக்கின்றன.
உன் வாயிலில் அடிவைத்த நேரமே
வசமிழந்து
நாற்றமெடுக்கும் உன் கால்வாய்க் கரைகளிலும்
காற்றாடாத கற்கோபுரங்களிலும்
புழுதி அடங்காத வீதி ஓரங்களிலும்
உறைந்து விடுகிறார்கள்.
நீ அவர்களது மாமிசத்தையோ இரத்தத்தையோ
விரும்பி அருந்துவதில்லை,
ஏனெனில் அவர்களது அயதார இயக்கம்
உனக்கு ஊட்டமளிக்கிறது-
ஆனாலும் நீ
அவர்களது ஆன்மாக்களை ஆகாரமாக்கி விடுகிறாய்.
இரவில் மின்னும் உன் வண்ண விளக்குகளில்
அவர்கள் ஈசல்கள் போல் மொய்த்து
விடியலில் விழுந்து கிடக்கிறார்கள்;
உன்னுடைய அவலக் கூச்சலே சங்கீதமாக
அவர்கள் உன் குப்பைத் தொட்டிகளில்
விருந்துண்ணுகிறார்கள்.
உன்னைச்சூழ எரிகின்ற நீயும்
சொரிகின்ற ரத்தமும்
அவர்கட்கு அச்சமோ அருவருப்போ தருவதில்லை,
தங்கள் ஆன்மாக்களினின்று பிரிந்த அவர்களும்
பிசாசுகளாகி விட்டார்கள்.
உன்னுடைய உருவம் விகாரமடைந்து
உன் தேகம் வீங்கி வருகிறது.
ஆனாலும் உன் கவர்ச்சி
தவளையின் நாக்குப்போல
தூரத் தூர நீள்கிறது-
இளம் மனிதர்கள் உனக்கு இரையாகிறார்கள்.
என்றென்றைக்குமே அல்ல!
ஈசாப்பின் தவளையின் வயிறு போல,
ஊதிவரும் உன் தேகம்
இன்றோ நாளையோ
வெடிக்கத்தான் போகிறது.
நீ விழுங்கிய ஆன்மாக்கள்
விடுதலை பெற்று
மனிதர்கள் உயிர்க்கத்தான் போகிறார்கள்.
தாயகம்- 12
ஓகஸ்ற் 1985
--------------------------------------------------------------------
மாநகர்: அற்புதங்கள்
வண்டில் மாடுகள் நடந்த தடத்தில்
சூறைக் காற்றென வாகனம் விரையும்.
விரலைச் சொடுக்கி ஓசை எழுமுன்
விண்ணை நோக்கிக் கோபுரம் உயரும்.
பொழியும் ஒளியில் இரவு அமிழும்.
கோடை வெய்யிலுள் வீடு குளிர்ந்தது.
கற்சுவர் நடுவே தென்றல் வீசும்.
அற்புதம் இன்னும்-
ஓங்கி உயர்ந்த கொங்கிறீற் வனத்துள்
மின்மலர் விரிந்து பிளாஸ்ற்றிக் கனியும்.
மாநகர் கணமும் உருவம் மாறும்.
அற்புதம் இன்னும் பெரியன உண்டு-
காணும் பொறிகள், காட்டும் பொறிகள்,
பேசும் பொறிகள், கேட்கும் பொறிகள்,
நடக்கும் பொறிகள், சுமக்கும் பொறிகள்,
கொடுக்கும் பொறிகள், பறிக்கும் பொறிகள்,
பணிக்கும் பொறிகள், பணியும் பொறிகள்,
இயக்கும் பொறிகள், இயங்கும் பொறிகள்,
ஆளும் பொறிகள், அடிமைப் பொறிகள்-
புணர்தல் செய்து பொறிகளை ஈன்று
உறங்கி விழித்து இயங்கி ஒழியும்
மானுடம் இழந்த பொறிகளின் உலகம்
நேற்றின் அற்புதம்.
நாளைய அற்புதம் அதனிற் பெரிது.
பாண்டியன் ஆண்ட பழைய மதுரையில்
நரிகள் பரிகள் ஆயின ஒருநாள்.
மறுநாள் வேறொரு அற்புதம் நிகழ்ந்தது.
பொறிகளினின்று மானுடர் எழுவர்.
தாயகம்- 14
பெப்ரவரி 1986
-----------------------------------------------
காரணங்கள்...
தெருவோரம் நிற்கின்ற சில்லுவைத்த
குப்பைத் தொட்டிகள்
நிரம்பி வழிந்து நாறுவது
ஏனென்று கேட்கிறாய் - நண்பனே
நகரத்தின் சுகாதாரத்தைப் பேண
அவை அங்கே வைக்கப்பட்டிருக்கின்றன.
கும்மிருட்டில்
ராணுவத்தார்
ஊரடங்குச் சட்டத்தை அமுல் செய்யும் நேரத்தில்
வீடுகள் எரிகிறது
ஏனென்று கேட்கிறாய் - நண்பனே
நாட்டின் அமைதியைப் பேண
அவர்கள் அங்கே வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
சிறையில்
பொலீசார்
விசாரணைக் கைதிகட்குக் காவலிருக்க
உள்ளே கொடுவதைகள் நேருவது
ஏனென்று கேட்கிறாய் - நண்பனே
நாட்டில் நியாயத்தை நிலைநாட்ட
அவர்கள் அங்கே வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
விசாரணைக் கமிஷன்களில்
நீதிபதிகள்
தலைமையில் வீற்றிருக்க
அரசியல் எதிரிகட்கு உரிமைகள் பறிபோவது
ஏனென்று கேட்கிறாய் - நண்பனே
நாட்டில் நீதியைக் காப்பாற்ற
அவர்கள் அங்கே வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
அரசாங்கத்தில்
அமைச்சர்கள்
சட்டம் குற்றவாளி எனக் கண்டவர்க்குப்
பதவி உயர்வு தருகிறது
ஏனென்று கேட்கிறாய் - நண்பனே
சட்டங்களை ஆக்கவும் காக்கவும்
உன்னாலும் என்னாலும்
அவர்கள் அங்கே வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
தேர்தலில்
நாங்கள்
இதற்காகவா வாக்களித்தோம்
என்றென்னைக் கேட்கிறாய் - நண்பனே
இவர்களால் ஏமாற்றப் படுவதற்கென்றே
நாம் இங்கே வைக்கப்பட்டிருக்கிறோம்.
இதிலிருந்தாவது தெரிந்துகொள்:
குப்பைத் தொட்டி முதலாக
எல்லாமே
இங்கு
காரணத்துடன்தான் வைக்கப்பட்டுள்ளன.
செம்பதாகையிலிருந்து
தாயகம்- 11
மே 1985
---------------------------------------------------------------
அக்கறையற்ற உனக்கு
நடைபாதையில் குத்தாக நிற்கும்
கூரிய கண்ணாடிச் சில்லை
ஓரமாக ஒதுக்கி விடவோ
பஸ்ஸில் உன் கண்முன்னே நடக்கின்ற திருட்டை
பிடிக்கவோ மறிக்கவோ
தெருவைக் கடக்க முடியாமல் கீழே விழுகின்ற நோயாளிக் கிழவியை
தாங்கி நிற்கவோ
அரை இருளில் எவனோ
முரடனிடம் திணறுகிற பெண்ணை
மீட்கவோ
கூட்டத்தில் இழந்துபோய் அழுகின்ற குழந்தையை
யாரென்று கேட்கவோ
உனக்கு அவசியமில்லை.
ஏனென்றால்,
வெறுங்காலோ
பறிபோகும் பணமோ பண்டமோ உனதல்ல.
கிழவன் உன் அப்பனோ கிழவி உன் ஆத்தாளோ அல்ல.
திணறுகிற பெண் உனக்குத்
தங்கையோ மனைவியோ அல்ல,
குழந்தை உனதல்ல-
அனேகமாக.
அது போக,
அலுவலகத்துக்கோ, கடற்கரைக்கோ,
சீட்டாடவோ, சினிமாவுக்கோ,
ஓடுகிற உனக்கு
நேரந்தான் ஏது?
படித்தவன் நீ:
நடப்பது எதுவுமே
உனக்கல்ல என்று நன்றாக அறிவாய்.
அப்படியே ஒருநாள்
உனக்கேதான் ஏதேன் நடந்தாலும்
உன்னைக் காப்பதற்கு எவனோ மடையன் வேலையற்று
இல்லாமலா போவான்?
உலகம் தெரிந்தவன் நீ:
உன்நேரம் பொன்னானது.
தாயகம்- 6
பெப்ரவரி- மார்ச் 1984
---------------------------------------------------------------
நாளைக்கு
இன்றைக்கு ராப்பொழுதும் பசியோடு உள்ளோரே,
நாளைக்கு உங்களுக்கு நன்றாகச் சோறு விழும்,
முட்டைப் பொரியலுடன் மீன்கட்லெற், கடல் நண்டு,
மாட்டிறைச்சி, கோழிக்கால், சிங்க இறால் சில துண்டு,
கோவாப்பூ அரை அவியல், தக்காளி பச்சடியாய்,
முழுசான முந்திரியங் கொட்டையுடன் நெய்ச்சோறு,
இடியாப்பப் புரியாணி, அன்னாசிப் பழத்துண்டு,
அன்னமுன்னாப் பழக்கூட்டு ஐஸ்கிறீமுடன் கலந்து
கொட்டிக் குவிந்திருக்கும். கட்டாயமாய் உண்மை:
அரசாங்க ஆதரவில் எப். ஏ. ஓ. தாபனத்தார்
பட்டினியை இல்லாமற் பண்ணுதற்காய்க் கூட்டுவித்த
மாநாடு, பலநூறு தீர்மானம் பரிந்துரைகள்
செய்ததன் பின் இன்றோடு முற்றாச்சு-
ஆதலினால்
நாளைக்கு நீங்களெல்லாம் வயிறாற உண்டதன்பின்
பிள்ளைகட்கும் தோழர்கட்கும் பொதியாகக் கட்டியது
போய்மீந்து, நாய், பூனை விட்டொதுக்கக் காகங்கள்
தின்று, பறப்பதற்குத் திணறுகிற வாறுண்மை!
இன்றிரவு,
மாநாட்டில் பங்கேற்ற மானுடர்க்குப் பெருவிருந்து.
காலையிலே ஹோட்டேலின் பின்சுவரின் ஓரத்தே
தொட்டி அருகாகக் கட்டாயம் காத்திருப்பீர்.
கொட்டிக் கிடக்கும்.
கை கவனம்-
சோற்றுக்கு இடைநடுவே கண்ணாடிச் சில்லிருக்கும்.
தாயகம் - 4
டிசெம்பர் 1983
---------------------------------------------------------------
ஹிற்லரின் நாட்குறிப்பு - 1983
ஹிற்லரின் டயறிகள்-
அண்மையில் வந்தவை போலிகள். உண்மை.
ஹிற்லர் மரித்ததும் உண்மை.
ஆனால்
ஹிற்லர் டயறிகள் தொடர்ந்து எழுதப்படுவன:
செயலாய், நிசமாய்.
இன்று இந்த
இலங்கை மண்ணில்
ஹிற்லரின் சொற்கள்
உயிர்த்துத் தங்கள்
நிழலுரு நீங்கி நிசங்களாவன.
அக்கினி தோய்த்து
எழுதிய சொல்லாய்
எரியும் கடைகள், வீடுகள், மனிதர்.
வெட்டு வாள்களும்
வெடித்துவக்குகளும்
வரிக்குவரி கீழ்ச் செங்கோடிடுவன.
இந்த மண்ணில்
தமிழர்கள் வாழும்
ஒவ்வொரு தெருவிலும்
வீடு, தோட்டம்,
பள்ளிக்கூடம்,
பல்கலைக்கழகம்,
பணிமனை, கோயில்,
பெருஞ்சிறைக்கூடம்-
ஒவ்வோரிடத்தும்
குருதியும் தசையும்
நிணமும் எலும்பும்
தோலும் மயிரும்
தாளாய் விரியும்.
வாளும் துவக்கும்
தீவட்டிகளும்
இனவெறி உந்தும்
ஆயிரங் கைகள்
ஏந்த, அழுத்தி
எழுதிச் செல்லும்.
திரையின் மறைவில்
இருந்து இயக்கி
எரிகிற வீட்டில்
விறகு பொறுக்கும்
அரசு முதலைக்
கண்ணீர் உகுக்கும்.
அல்லது புண்ணில் முள்ளாற் செதுக்கும்.
தாயகம்- 3
1983
---------------------------------------------------------------
ஐம்பத்திருவருக்கு
சற்றே வழி விலகி
நந்தி வழி விட்டாற் போல்
வெலிக்கடையின் சிறைக்கூட
இரும்பு நெடுங்கதவு
தானே திறக்கும்.
அங்கு,
காவலர்கள் அறியாமல்,
கற்சுவர்கள் சூழ்ந்திருக்கும்
அறைக்குட் கொலை நடக்கும்.
பகுத்தறிவு ஆளுகிற
யுகமதனில் அற்புதங்கள்
ஒருக்கால் நிகழுமெனில்
ஒப்பார்கள் என்பதனால்
மறுகால் நிகழும்.
கண்டு விறைத்த
சிறைச் சுவர்கள்
மௌனிக்கும்.
தாயகம் - 3
1983
---------------------------------------------------------------
யன்னல்கள்*
ஒன்றின்மேல் ஒன்றாய்
வரிசையாய்த்
தெரியும் ஒளிச்சதுரம்
ஒவ்வொன்றன் பின்னாலும்
கடல்போல புத்தகங்கள்
கண்முன் விழித்திருக்கும்
மூழ்க முடியாது
முகங்கள் மிதந்திருக்கும்.
பகல்முழுதுங் கேட்ட
விரிவுரையின் தாலாட்டை
இரவு நினைக்க
இன்னொருகாற் கண்ணயரும்.
ஊய் என்றொரு சீழ்க்கை
உரக்க ஒலித்தடங்கும்
ஆற்றின் எதிர்க்கரையில்
எதிரொலியாய் ஊளை எழும்-
சரிந்த தலை நிமிரும்.
காற்றடித்துக் கண்ணாடி
கொட்டுண்ட யன்னல்களின்
பின்னிருந்து கைவிளக்குச்
சைகையிலே பல கதைகள்
ஒரு சதுரம் இருளாக
மறு சதுரம் ஒளியேறும்.
ஒளியில் அயர்ந்த விழி
இருளில் விரிந்திருக்கும்.
கட்டிடத்தின் காவலாள்
கதிரையிலே தூங்குகையில்
பேராதனையின் வளாகம் விழித்திருக்கும்.
இன்று-
கதவு அடைத்திருக்கும் கட்டிடங்கள் தூங்குகையில்
காவலர்கள் விழித்திருப்பர்.
ஊமை இருளில் யன்னல் அழும் முனகல்
காதுக்குக் கேட்காது.
"வழமையிலும் அதிகமாய்
திறந்திருக்கக் கடவது"
என்று பொறித்த சொற்கள் மிக உறுத்த
செனெற் மண்டபத்தின்
பளிங்குக் கல் உருகாது,
உள்ளே புழுங்கும்.
(*1984 ஜூலை மாதம் மூடிய பேராதனை வளாகத்திற்கு)
தாயகம்- 10
நவம்பர்- டிசெம்பர் 1984
---------------------------------------------------------------
திசை மாறிய மாஜி நண்பனுக்கு
"இல்லாத ஊருக்கு
நாளை புறப்பட்டு
நேற்றிரவு போய்ச்சேர
இந்த இரவின்
இருளால் வழிகாட்டு"
என்றென்னைக் கேட்டாய்.
"ஏலாது" என்றேன்
"எதிரி" என என்னை
ஏசிவிட்டுப் போனாய்.
முன்னொரு நாள்,
"போகும் இடம் தெரிதல்
வழிதெரிதல், வகைதெரிதல்
நேரம் பெரிதல்ல,
போதல் தனியே
பெரிது" என ஓதிக்
"கீதை மொழி" என்றாய்.
என்னுட் சிரித்தேன்.
என்றோ தெளிவாய்
என்ற எதிர்பார்ப்பில்
ஏமாற வந்தாய்
இரவில் வழிகேட்டு.
என்னைத் தவிர்த்தால்
உன்னை வழிகாட்ட
இல்லாமலோ போவார்.
போனாய், விடியலிலே
வாலைத் துரத்தி
வளைய வளைய வரும்
நாய்போற் திரிகின்றாய்.
திசைகெட்டு, ஏறுகிற
வெய்யிலுடன் ஏறுகிற
வேகத்தில் ஓடுவாய்;
நேரத்தை வெல்லும்
குறி போலும்.
'ஒரு கணமே
நில்' லென்றால் நீ குரைப்பாய்
அல்லாற் கடிப்பாய்.
அறிவேன் அகல்கின்றேன்.
உன்போல் என்னால்
ஓடல் இயலாது.
ஆனால் எனக்குப்
போகும் இடம் தெரியும்
வேளை, வழி, வகையும்.
செம்பதாகையிலிருந்து
தாயகம் - 8
ஜூன்-ஜூலை 1984
---------------------------------------------------------------
சட்டை மாற்றிய சாமியார்
சேதி தெரியுமோ?
எங்களூர்ச் சன்னாசி மடத்துக்குப் புதிதாகச்
சாமியார் ஒருவர் எழுந்தருளி இருக்கின்றார்.
காவியுடுக்காத சன்னியாசியார், பழைய
புத்தகங்களெல்லாம் புழுதியிலே விட்டெறிந்து
செஞ்சட்டை தன்னைச் சேற்றில் முழுகடித்து
லட்சியங்கள் கைவிட்டுக் கொள்கை தலைமுழுகி
முற்றும் துறந்த முனிவர் எனச் சொல்கின்றார்.
ஓரேழு ஊர்வலங்கள் பதினாறு பொதுக்கூட்டம்
இரண்டு பொதுத்தேர்தல் பார்த்தும் அதன்பிறகு
இரவோடிரவாகப் புரட்சி இறங்கி வந்து
சமுதாயம் உருப்பட்டுப் புதுவுலகம் உருவாகக்
காணாத காரணத்தால், இனிமேலும் காத்திருந்து
இன்றைக்கு நாளைக்குள் சோஷலிஸம் வாராதேல்
பிறவி எடுத்த பயன் பாழாகிப் போமென்று
நடுச்சாம வெய்யிலிலே ஞானஒளி தெரிந்த
மாமுனிவர் நம்மூர் மடத்துக்கு வந்துள்ளார்.
ஆற்றோடு போவதற்கும் அலையோ டெழுவதுக்கும்
கொம்யூனிஸ்ற் காரர்களை எதிர்த்திசையில் வீசுகிற
காற்றுள்ளபோதே தூற்றிப் பயன் பெறவும்,
வல்ல முனிவர் வழிபட்டால் வழியுரைப்பார்.
குறுக்கே கதையாமற் கைகட்டித் தலைவணங்கிக்
குருவே சரண் என்று கும்பிட்டு நிற்பாயேல்
ஆசீர்வதித்து
ஆன்மீகம்பேசி, அகிம்சை வழியினிலே
இனவெறுப்பும் போதித்து
படுகொலைக்கும் நல்ல ஞாயம் பலவுரைப்பார்,
எதிர்த்துக் கதைத்தால் ஏளனமாய்ப் பார்ப்பார்,
தனக்கே விளங்காத வார்த்தைகளால் ஏசி
சாபங்கள் போடுவதில் சன்னியாசியார் சமர்த்தர்.
எங்களூர்ச் சன்னாசி மடத்து மனேச்சர்மார்
கொம்யூனிஸ்ற் பேய்களுக்குக் கொம்பறுக்க அவதரித்த
ஞானச்சுடரென்று போற்றுகிறார். என்றாலும்
சாமியார் வாயால் வரங்கேட்க வேண்டுமெனில்
நில்லாதே ஓடு மடத்தடிக்கு -நாளைக்கு ஒரு
ஞானச்சுடர் புதிதாய் வந்தால் மனேச்சர்மார்
சாமியார் கையில் சாமரத்தை வைப்பாரோ?
கால்கழுவ வாளியும் செம்பும் தருவாரோ?
செம்பதாகை
மலர் 7; இதழ் 6
ஜூன் 1985
---------------------------------------------------------------
ஒதுங்கி ஓடியவர்கள்
சில்லென்று இளங்காற்று மெல்ல வீசும்
நெல்லிடையே மறைந்திருந்த பதர்கள் ஓடும்
தழுவுகிற காற்றினிலே கிளைகளாடும்
பழுதுண்ட இலைகளெலாம் பதறிவீழும்
சீறுகிற புயலினிலே பாறை நிற்கும்
சிறுமணல்கள் புழுதியுடன் சேர்ந்து ஓடும்
ஆறோடி மோதுகையில் வேர்கள் ஆழ்ந்த
மரம்நிற்கும். புல்பிய்ந்து சூழலில்மூழ்கும்.
எதிர்ப்புரட்சிப் புயல்மோதச் சிலபேரோடி
எதிரணியில் சேர்வார்கள் சிதறுவார்கள்.
பதர் விலகி நெல்கெட்டுப் போவதாமோ?
வழி விலகிப் போனோராற் புரட்சிசாமோ?
செங்கொடி 6-1
ஜனவரி 1974
---------------------------------------------------------------
விசாரணை
விடியற் காலையில் வீதியோரமாய்
விழுந்து கிடக்கின்றான்
அலங்கோலமாக.
அவனை யாரென்று தெரியுமோ
உனக்கு?
எனக்குத் தெரியாது.
வெறிபோல் இல்லை,
வலிப்போ மயக்கமோ போலவும் இல்லை.
முதுகுச் சட்டையில் அப்பிக் கிடப்பது
காய்ந்த இரத்தம்.
ஆகவே அவன் செத்து
நெடுநேரம் இருக்கலாம்.
அந்தச் சட்டையின் கீழே
தோட்டா ஒன்று புதைந்து இருக்கலாம்.
அதை ஜனித்த துப்பாக்கி
ஆருக்கு உரியதோ
அதை அறிந்தால்
அதுவே அவனது அடையாளம்.
(அவனது ஊரோ பேரோ முக்கியமல்ல)
காக்கிச்சட்டைக் காரனுக்குரியதேல்
கட்டாயம் அவன் பயங்கரவாதி.
போட்டி இயக்கக் காரனுக்குரியதேல்
நிச்சயமாய் அவன் சமூக விரோதி.
போதும் இது.
அவனைச் சுட்ட துப்பாக்கி
யாருக்குரியது என்பதை அறிதல்
இப்போதைக்கு
எனக்கும் உனக்கும் இயலமாட்டாது.
தேவையும் இல்லை.
வெய்யிலேறட்டும்,
மரண விசாரணை அதிகாரி வரட்டும்.
செம்பதாகையிலிருந்து
தாயகம் - 7
ஏப்ரல்-மே 1984.
---------------------------------------------------------------
கடற்கரையும் தனித்த மாலைப்பொழுதும்
கரை மீது வலை உலரும்.
நண்டுக் கூடைகள் காவலிருக்கும்.
வள்ளங்கள் அயர்ந்து சரிந்திருக்கும்.
பறங்கியர் கோட்டையை உசுப்ப முடியாமல்
மணற் கோட்டைகளை இடிக்கும் கடலலைகள்.
ஈர மணலில் கால் புதைத்து
அலைகளை விரட்டும் சிறுவர்களின்
வீரமுழக்கங்கள்
செவியில் விழுந்த நாட்கள் நகர்ந்து
நெடுங்காலமில்லை.
கரையிற் குழிதோண்டி நீர்தொட்டு
சிறு நண்டு பிடித்து
கிளிஞ்சல் பொறுக்கி
வீசுங் காற்றில் மணல் இறைக்கும் கைகளும்
அலைச் சுவட்டை மிதித்து
ஓடியும் நடந்தும் நின்றும்
கரை நெடுகப் பதினாயிரம் சுவடுகள் பதித்த
கால்களும்
கடலிலே கண்ணையும் காதையும் புதைத்திருக்கும்
முகங்களும்
இன்று இல்லை.
சிறையுண்ட நகரின்
நீண்ட மணல் விளிம்பைப்
பிரிக்கும் பெரும்பாறை.
மானுடரை
மறிக்கும் கோட்டை மதில்.
பறங்கியர் இடித்தெறிந்த கோயிலை
விழுங்கிய கடலைப் பார்த்திருக்கும் கோணேசர்.
இன்னும் இடித்தெறிய முன்னிற்கும்
இனவெறியர் இழிசெயலைக் காண மனங்கூசி
எதிர்த்திசையை நோக்கிக்
கல்லாய்ச் சமைந்த போதிசத்துவர்.
கடப்பாரை எடுப்போம்
மானுடரைப் பிரிக்கின்ற மதிற்சுவர்கள் அத்தனையும்
தாக்கித் தகர்த்தெறிவோம்.
மாநகரை விடுவிப்போம்.
மானுடத்தை விடுவிப்போம்.
தாயகம் - 16
ஒக்ரோபர் 1986
---------------------------------------------------------------
உன் சட்ட ரீதியான உரிமைகள்-1
இந்த மண்ணில் மணிக்கொரு கொலை விழுந்தாலும்
கொலைகாரனின் உயிருக்கு உத்தரவாதம் இருக்கிறது-
சட்டப்படி அவனுக்குப் பாதுகாப்புக் கிடைக்கிறது.
இந்த மண்ணில் கற்பழித்தல் நடக்காமல்
காலை விடியாதெனினும்
குற்றவாளியின் பாதுகாப்புக்கு உரிமை இருக்கிறது-
சட்டம் அதற்கு உத்தரவாதம் தருகிறது.
இந்த மண்ணில் ஏழில் ஒருவருக்கு
வேலையில்லை என்றாலும்
எவனையும் வேலை நீக்க முதலாளிக்கு
வலிமை இருக்கிறது-
சட்டம் அவனுக்கு அதனை வழங்குகிறது.
இந்த மண்ணில் கொள்ளை அடித்த பணக்காரன்
அகப்பட்டால்
சட்ட நுணுக்கங்கள் அவனுக்குத்
துணையாக நிற்கின்றன-
சட்டம் அதைக் காணமலேயே தொடர்கிறது.
இந்த மண்ணில் எதையுமே தவறென்று நீ கண்டால்
விமர்சிக்க, மறுத்துரைக்க, நியாயங் கோர
சட்டப்படி உனக்கும் உரிமை இருக்கிறது, என்றாலும்
உன் சொல்லும் செயலும்
உளுத்துப்போன சட்டப் புத்தகத்தின் மறைவில்
ஒதுங்கும் மானுடப் பூச்சிகளை
உதறிப் போடுமளவுக்குத் துணியும் என்றால்
உன்னைத் தடுக்கவும் மறிக்கவும்
அவசியமானால் சிறைக்கு அனுப்பவும்
சட்டம் அவர்களுக்கு இடமளிக்கிறது.
அல்லாமல், சிலவேளை,
உன்னை அடித்து நொறுக்க வரும்
அடையாளம் தெரியாத குண்டர்களின்
உரிமைகட்குப் பரிந்துரைக்கவும்
அவர்களது சுதந்திரத்தைப் பேணவும் கூட
சட்டத்தில் நிறையவே இடமிருக்கிறது.
இந்த மண்ணில்-
நீரில் இறங்காமல் நீச்சல் அடிக்கவும்
யார் காதிலும் விழாதபடி பேசவும்
உனக்கு எல்லையற்ற உரிமை இருக்கிறது.
இந்த மண்ணின் சட்டம்
அதற்குப் பூரண உத்தரவாதம் வழங்குகிறது.
செம்பதாகை
மலர் 7; இதழ் 9
செப்ரெம்பர் 1985.
---------------------------------------------------------------
உன் சட்ட ரீதியான உரிமைகள்-2
இந்த வாக்குமாலத்தில் ஒப்பமிடுவதன் முன்
அதை வாசிக்கவும் வாசிப்பிக்கவும்
அதன் அர்த்தத்தைத் தெளிவுபடுத்திக் கொள்ளவும்
யாருடைய வற்புறுத்தலும் இன்றி
உன் சுயவிருப்பின் பேரிலேயே
அதில் ஒப்பமிடுவதற்கும்
ஒப்பமிட மறுப்பதற்கும்
அல்லது வாக்குமூலமே தராதிருக்கவும்
உனக்குச் சட்டப்படி உரிமை இருக்கிறது.
இந்த வாக்குமூலம்
உன்னைப் பயங்கரவாதி என்று தண்டனை வழங்கக்
காத்திருக்கிறதாக நீ நினைக்கிற
நீதிமன்றத்தின் முன்
உனக்கு விரோதமாகப் பயன்படுத்தப்படலாம்
என்பதால்
உன் வ்றழக்கறிஞரை அழைத்து ஆலோசனை கேட்கவும்
உனக்குச் சட்டப்படி உரிமை இருக்கிறது.
உன் மேனியில் (எங்கள் அபிப்பிராயத்தில்)
நீயாகவே ஏற்படுத்திக் கொண்ட
ஊமைக் காயங்களும் உளைவுகளும்
எவ்வாறு ஏற்பட்டன என்று
எங்கள் மறியற் கூட வைத்தியரிடம்
விசாருக்கவும் உனக்கு உரிமை இருக்கிறது.
இவையெல்லாம் ஒருவேளை உனக்கு
முன்னமே தெரிந்தும் இருக்கலாம்.
இரவில் காவல் நிற்கிற முரடர்கட்குத்
தெரியாமலும் இருக்கலாம்.
இனிமேல் உனக்கும் அவர்கட்கும்
இவைபற்றித் தெரிந்தென்ன, தெரியாமலென்ன?
உன்னிடந் தான் நேற்றே ஒப்பம் வாங்கியாயிற்றே!
செம்பதாகை
மலர் 7; இதழ் 9
செப்ரெம்பர் 1985.
---------------------------------------------------------------
நத்தார் நாள் வெறுவயிற்றில்
பெரிய வெள்ளிக்கிழமை நினைவுகள்
யேசுவே!
மானுடனாகப் பிறந்து மானுடனாக மரித்தீர்.
சிலர் உம்மைத் தேவகுமாரன் என்கிறார்கள்-
ஒரு வேளை,
நாமெல்லோருமே தேவகுமாரர்களாக இருக்கலாம்.
நான் அறிந்த அளவில்,
சக மானுடரை உய்விக்க உம்வழியில் முயன்றீர்,
ஒடுக்கப்பட்ட ஒவ்வொருவனுக்காகவும்
குரல் எழுப்பினீர்,
உம் சொல்லிலும் செயலிலும் உறுதியுடன் நின்றீர்,
சிலுவையில் சாகடிக்கப்பட்டீர்.
மானுடத்துக்காக மரித்ததனால்
மூன்றாம் நாளல்ல,
மரித்த மறுகணமே மரணத்துள் உயிர்த்தீர்!
உம் பிறப்பும்
உம் செயல்களும்
அற்புதங்களாக்கப்பட்டு
நீரும் சித்து விளையாட்டுக்காரருள் ஒருவராக்கப்பட்டு
அந்த அற்புதங்கள் தூண்களாய்
உம் கல்லறை அத்தி வாரமாய்
திருச்சபை ஒன்று நிறுவப்பட்டு...
அது ஓங்கி வளர்ந்தபோது
உம்மால் எழுச்சி பெற்ற எழைகள்
சிலுவைக்குக் குத்தகைக்காரர்களால்
மறுபடி நசுக்கப்பட்டார்கள்.
அவர்கள் கூறும்
உம் மூன்றாம் நாள் உயிர்ப்பில்
உம் தியாகத்தின் நற்பலன்கள்
சிலுவையில் அறையப்பட்டன.
அவர்களோ
இன்னமும் நம் எல்லோரையும்
சிலுவையில் அறைகிறார்கள்.
அவர்களிடம்
துப்பாக்கிகளும் பீரங்கிகளும்
அணுகுண்டுகளும் ஏவு கணைகளும்
அவற்றை இயக்கக் கூலியாட்களும்
கூலி கொடுக்க நிறையப் பணமும் உள்ளது.
அவர்களுக்குத் திருச்சபையின்
ஆசீர்வாதமும் இருக்கிறது.
ஒரு கன்னத்தில் அறைந்தவனுக்கு
மறுகன்னத்தைக் காட்ட
நம் குழந்தைகளின் முகத்தில் கன்னங்கள் இல்லை-
குழிகள் இருக்கின்றன.
சிலுவை ஏறி அலுத்ததனால்
சிலுவை ஏற்றுகிறவர்களைச்
சிலுவை எற்றப் போகிறோம்.
பரமபிதாவுக்கு
இனி ஒரு நாளும்
தன் குமாரன் எவனையும்
சிலுவையில் அறையப்படுவதற்காக
பூமிக்கு அனுப்பும் அவசியம் ஏற்படாது.
தாயகம் - 14
பெப்ரவரி 1986
---------------------------------------------------------------
வீயா நெக்ரோ கிராமத்தில்
ஹூவான் பாதிரியாரின்
முதல் நாளும் இறுதி நாளும்
கர்த்தரது கட்டளைகளையும்
தேவகுமாரனது நற்செய்தியையும்
ரட்சணிய மார்க்கத்தையும்
விசுவாசிகட்கும் பாவிகட்கும்
அறியத் தருவதற்காகவும்,
நரகப் படுகுழியில்
அவர்கள் வீழாமல்
ரட்சணை பெறவும்,
கருதினால் மூலமாக வந்து
பெரிய பாதிரியார் வாயால்
வழங்கப்பட்ட
போப்பரசரது நல்லாசிகளை
நெஞ்சிலும்
ராத்தங்கலுக்கான பொருட்களைப்
பையிலும்
சுமந்தபடி,
மாதாங் கோவிலுக்குரிய
குளிரூட்டப்பட்ட காரில்
அனுப்பப்பட்டேன்.
மழை நீர் ஊறிய
மண் வீதிச் சேற்றில்
வண்டி போக மறுத்தது.
கர்த்தரின் புனித சித்தம்
அவ்வாறேயாயின்
அவ்வாறே ஆகட்டும்.
ஆமென்!
விரைவாகத் திரும்பும் அவசியம்
சாரதிக்கு-
பெரிய பாதிரியார்
வணக்கத்திற்குரிய கல்டேரா
மாலை விருந்தொன்றுக்குப்
போகிறார்.
ஜெனரல் ஹெர்னான்டெஸ் டா சூசா
விசுவாசி என்று மட்டுமே
கேள்விப் பட்டிருக்கிறேன்.
புதிய கிராமம்
வீயா நெக்ரோவுக்கு
இன்னும்
ஒன்றரைக் கிலோமீற்றர்.
பையைத் தோளில் மாட்டியபடி
வெள்ளை அங்கியை
சேறுபடியாமல் உயர்த்தி,
பட்டியை இறுக்கிக் கொண்டு
ஓரமாக நடந்தேன்.
ஓங்கிய மரங்களூடாக
சூரிய ஒளியும்
அதன் நடுவே
கரிய மனித நிழல் வடிவுகளும்
தெரிந்தன.
அவர்கள்
நான் போய்ச்சேரும் வரை
பார்த்திருக்கவில்லை.
வந்த ஏழுபேரும்
அழுக்கேறிய கால்கள்
சேற்றில் பதிய
மண்டியிட்டு வரவேற்றனர்.
த்ந்ந்வ கிருபையால்
மறுநாள் செபமும்
மனப்பாடம் செய்துவைத்த
போதனைப் பிரசங்கமும்
நன்றாகவே நடந்தன.
ஆனாலும்
அவர்களுக்கு
அதிகம் விளங்கியிராது.
அவர்களுடைய
பாவச்செயல்களின் பட்டியல்
நீளமானது.
விதவை மாகரீத்தாவின்
ஆறு குழந்தைகட்கு
மூவர் தகப்பன்மார்.
அவளுடைய காதலன் பெப்பேக்கு
வேறிரண்டு காதலிமார்.
சூஸேக்கும் மூவர்.
ஹோஸே
கோபத்தில் கொலை செய்தான்-
அகப்படவில்லை.
களவெடுத்த மானுவேல்
ஜெயிலால் ஒரு மாதம்
பாவத்தில் பிறக்காத
பிள்ளை ஏதுமில்லை
மும்களவும் காம கொலையும்
அவர்கட்குப்
பாவங்களாகத் தெரியவில்லை.
அவை பற்றி
இரகசியங்களும் இல்லை.
என் வற்புறுத்தலில்
இரண்டு பேர் மட்டும்
(மரியாவும் இஸபெல்லும்)
பாவமன்னிப்புப் பெற்றனர்.
கர்த்தரே!
பாவிகள் அனைவரையும்
பிழைகளை உணரச் செய்து
மன்னித்து ரட்சிப்பீராக.
ஆமென்!
என் நேரம்
போதனையையும் ஜெபத்தையும்விட
பயிர்ச்செய்கையிலும்
கிராமத்துப் பிள்ளைகட்குக் கற்பிப்பதிலும்
செலவாகிவிடுகிறது.
இரண்டு வருஷத்தில்
வீயா நெக்ரோ
கொஞ்சம் மாறித்தான் உள்ளது.
இப்போதெல்லாம்
கிராமத்துக் குழந்தைகளின்
விலா எலும்பு தெரிவதில்லை
மரிஹூவானா பயிரிட்ட நிலத்தில்
மரவள்ளியும் சோளமும்
நிற்கின்றன...
மாலை நேரங்களில்
பெற்றோமக்ஸ் விளக்கொளியில்
அழுக்கு இல்லாத ஆடைகளுடன்
பாடி ஆடுகிறார்கள்.
ஆனாலும்-
நாளைப் பகலோடு
வீயா நெக்ரோ
மூடப்பட உள்ளது.
அரசாங்கம்
இந்த நிலங்களை
அமெரிக்கன் கொம்பனிக்கு
விற்றுவிட்டது.
கல்தேரா பாதிரியார்
கார் அனுப்பியிருந்தார்.
நாளை வருவதாகச்
சாரதியிடம் சொன்னேன்.
ஜெனரல் டா சூஸாவின்
படைப்பிரிவினர்
அதிகாலையிலேயே
வந்து விட்டார்கள்.
மானுவேல்
தன் பழைய துப்பாக்கிக்கு
எண்ணெய் பூசுகிறான்.
சூஸேயும் ரமோனும்
கத்திகளுக்குச்
சாணை பிடிக்கிறார்கள்.
மாகரீத்தா
கழிகளின் முனைகளைக்
கூராக்குகிறாள்.
"கர்த்தரே,
நாளைப் பின்னேரம்
வானம் மட்டுமே
சிவப்பாக இருக்கட்டும்"
என்று வேண்டிக் கொண்டேன்.
கிராமவாசிகளில் நால்வர் மரணம்.
காயப்பட்ட முப்பது பேரில்
மூவர் பெண்கள்,
ஏழுபேர் குழந்தைகள்.
சூஸேயைக்
கொண்டு போய் விட்டார்கள்,
பெரும்பாலும் பிழைக்கமாட்டான்.
மானுவேலின் பிணம்
மரவள்ளிகளின் மறைவில் கிடந்தது.
மிஞ்சியவர்கள்
காட்டுக்குள் தலைமறைவானார்கள்.
கர்த்தரே!
நான்
காட்டிலிருந்து திரும்பும் வரை
மரப் பொந்தில் வைத்துள்ள
என் வெள்ளை அங்கியையும்
தோல் உறைபோட்ட பைபிளையும்
பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்.
என்னுடைய மக்கள்
பத்திரமாக
ஊர் திரும்பிய பிறகே
எனது அடுத்த ஜெபம்
நடைபெறும்.
அதுவரையில், கர்த்தரே
என்னை மன்னிப்பீராக.
ஆமென்!
தாயகம் - 16
ஒக்ரோபர் 1986
---------------------------------------------------------------
செப்பனிட்ட படிமங்கள்
கோழியெறிந்த கனங்குழை இடறும்
பொற்றே ருட்டும் சிறுவர் கரங்கள்
முத்து எறிந்து நன்மணி சிதறும்
அலைகடற் கரைமேல் பிச்சை இரக்கும்.
தாயார் அடைப்ப மகளிர் திறப்பத்
தேயும் குடுமிக் கதவுகள் பின்னால்
நேயக் கலவி மயக்கம் தெளியும்,
கைகள் காசைத் துகிலென அள்ளும்.
முறத்தால் புலியை அடித்த மறத்தி
தெருவாற் தனியே போகாள் - போனால்
மார்வேல் தாங்கா எங்கள் மறவன்
ஏறு தழுவான், சீழ்க்கை ஒலிப்பான்.
தாயகம் - 9
ஓகஸ்ட்-செப்ரெம்பர் 1984
---------------------------------------------------------------
புதிய படிமம்
பல ஆயிரம் வருஷப்
படிமங்கள் பொடிபடட்டும்
வார்த்துஞ் செதுக்கியும்
கடைந்தும் குடைந்தும்
கல்லிற் பொழிந்தெடுத்தும்
வார்த்தை பல வரைந்தும்
வர்ணங்கள் தீட்டியும்
மந்தைகள்போற் பெண்குலத்தை
மேய்த்த பரம்பரையோர்
காத்துக் கவனமுடன்
பேணிப் பராமரித்த
கல்லும் உலோகமும்
களிமண்ணும் காகிதமும்
ஓலைகளும் சீலைகளும்
வேய்ந்த சிறைக்கூடம்
வீழ்ந்து நொறுங்கட்டும்
பெண்ணடிமைப் பெருங்கோட்டை
மதில்கள் பொடிபடட்டும்.
அச்சம் அணிகலனோ?
மடமை மணிமுடியோ?
நாணுதலே பெண்மையோ?
தளர்நடையும் மருள்விழியும்
துடியிடையும் கொடியுடலும்
ஆண்குலத்தின் வேட்கைக்காய்
அமைந்ததுதான் பெண்குலமோ?
பரம்பரையின் பண்பாடும்
தன்மானம் பேணுவதும்
கற்புநெறி நிற்பதுவும்
கைம்மையிலே கருகுவதும்
மாதர் குலச்சுமையோ?
கற்பும் அறநெறியும்
எல்லார்க்கும் பொதுவென்போம்.
அஞ்சுதலும் நாணுதலும்
ஏய்த்துப் பிழைப்போர்க்கும்
எத்திப் பறிப்போர்க்கும்
மானுடரைத் தாழ்த்திக்
கொடுமைபல செய்வோர்க்கும்
தீயோர்க்கும் உரித்தென்போம்.
அஞ்சாமை மனத்துணிவு
அறிவு எமதுரிமை.
மானுடரை மானுடரே
அழித்தல் அடிமைசெயல்
இன்றே ஒழியட்டும்.
பெண்காள் திரள்மின்!
சூழுகின்ற வேலிச்
சுவர்களெல்லாம் சாயட்டும்!
மூடி மறைத்திருக்கும்
கூரை பெயரட்டும்!
தலைகள் நிமிரட்டும்,
கைகள் உயரட்டும்-
வானத்தில் ஒரு பாதி
அங்கே அமரட்டும்.
தாயகம் - 17
மார்ச் 1978
---------------------------------------------------------------
புதிய பூமி
அலையின் மோதல்,
மணியின் நாதம்
புதிய பூமி விடுக்கும் அழைப்பு.
தாவி ஒலித்து வரவழைக்கிறது
முன்னே செல்வீர், முன்னுற விரைவீர்
மேலும் முன்னே சென்றிடத் திரள்வீர்...
எங்கள் ஆத்ம கீதமிசைக்க
முன்னே தாவிப் பாய்வோம் விரைவோம்.
துள்ளும் மனதில்
இலட்சியம் சேரும் பாதை தெளிகுது
நேரம் அணுகுது
புதிய பூமியின் அழைப்பு இனியது.
புதிய பூமியின் அருவியின் அழைப்பு
மன மகிழ்வுடனே முன்னே செல்வோம்.
எங்கள் இரத்த வெள்ளம் ஓடி
ஊறி நனைந்த சிவந்த பூமி.
ஆழ்கடல் கடப்போம்,
கரைகளை ஆள்வோம்
பூமியின் அமைப்பைப் புதிதாய்ப் புனைவோம்,
புது வரலாறும் நாமே படைப்போம்.
முன்னோக்கிய நம் பெரும்படை நடப்பை
பாலையும் வனமும் மறித்திட மாட்டா.
மலையும் நதியும் திருப்பிட மாட்டா.
நான்கு திசையிலும் நமது சக்திகள்
ராஜாளிகள் போல் சிம்மங்கள் போல்
கள்வர் கயவர் கோட்டைகள் கக்கும்.
மக்கள் எதிரிகள் மாய்வதும் உறுதி.
முன்னே பாய்வீர், முன்னுற விரைவீர்
புதிய பூமியின் வரவை உரைப்பீர்
மணியொலி இசையும்
புதிய பூமியின் முரசின் முழக்கமும்
எல்லாச் செவிக்கும் எட்ட எழுப்புக
அழிந்து போன அதர்ம யுகத்தின்
கறையும் அழுக்கும் களைய எழுவீர்
மானுட இனத்தின் உன்னத ஜோதி
ஒளிரும் அக்கினிக் கோபுரமாக
உலகின் தொழிலாளர்களே எழுக
கீழைக் காற்றெனக் கூவி எழுக
ஊழித் தீயென ஓங்கி எழுக.
பார்த்தன் போல பூமியை வெல்க
உதயாஞ்சலியாய்ச் சங்கு முழங்குக.
புதிய சத்ய பூமியின் ஜனனம்
ஒரு குரலாக முழு மானுடமும்
ஒலிக்கும் புதிய பூமியின் கீதம்.
இழப்பதற் கெதுவும் இல்லாதவர்கள்
வெல்வதற் குரிய புதிய பூமி
முன்னே உளது.
முன்னே, முன்னே.
செங்கொடி கூறும் விடியலின் மேன்மை
புதிய பூமியின் தீயின் ஜோதி
அற்புதம், விந்தை.
காலம் வளர்த்த ஹோமாக்கினி இது.
(கவிஞர் சிறீ. சிறீ. அவர்களின் தெலுங்குக் கவிதை ஒன்றின் ஆங்கிலச் சுருக்கத்தைத் தழுவி எழுதப்பட்டது)
புதிய பூமி 1-1
நவம்பர் 1985
---------------------------------------------------------------
கொம்பியூட்டருக்கு ஒரு கணக்கு
கடதாசித் துண்டொன்றில்
கூட்டிக் கழித்துக்
கணக்கெழுதும் நேரத்தில்
வந்தான் என் நண்பன் (ஊர்க்காரன் முன்பு,
இப்போது அமெரிக்கன்)
செய்குவது என்னவெனக் கேட்டான்,
உரக்கச் சிரித்தான்.
"கொம்பியூட்டர் மூலம்
காரியங்கள் செய்கின்ற
இந்த யுகத்தினிலா
நீயும் இருக்கின்றாய்?
கையாற் கணக்கெழுதல்
கற்காலம் காண்" என்று
நீட்டி முழக்கியவன்
நேரஞ்சில மேலும்
பேசியபின் போனான்,
போனதன் பின் யோசித்தேன்.
கொம்பியூட்டர் வழிகாட்ட
விண்கலங்கள் சஞ்சரிக்கும்
விண்வெளியின் கீழேதான்
மானுடத்தின் பாதியினர்
சுட்டெரிக்கும் வெய்யிலிலே
செருப்பின்றி நடக்கின்றார்.
கொம்பியூட்டர் மொழிபெயர்த்து
அச்சடித்துத் தருகின்ற
இந்த யுகத்தில்தான்
பேரெழுதத் தெரியாமல்
மானுடத்தின் பாதியினர்
கைநாட்டுப் போடுகிறார்.
கொழுப்புக் கரைவதற்கும்
கொம்பியூட்டர் துணைபோகும்
கோளமிதன் மேலேதான்
மானுடத்தின் பாதியினர்
நிறையாத வயிற்றுடன்
நித்திரைக்குப் போகின்றார்.
காலிற் செருப்பற்ற,
கைநாட்டுப் போடுகிற,
அரைவயிற்றுக் கூட்டத்தார்
அனல்கக்கிக் குண்டெறிய வழிகாட்டும் கொம்பியூட்டர்
கொண்டுதமை ஆள்பவரை
மோத முனைவதெலாம் மடமையெனில்-
வெல்லுகிறார், எவ்வாறு?
விளக்கிடுமா கொம்பியூட்டர்?
செம்பதாகை
மலர் 4; இதழ் 9
1982
---------------------------------------------------------------
சென்னை புக்ஸ்
அட்டை ஓவியம்: ஆதிமூலம்
----------------------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக