தமிழர் யார்?
கட்டுரைகள்
Back
தமிழர் யார்?
ந.சி. கந்தையா
1. தமிழர் யார்?
2. தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
3. அகம் நுதலுதல்
4. நூலறிமுகவுரை
5. கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
6. பதிப்புரை
7. தமிழர் யார்?
தமிழர் யார்?
ந.சி. கந்தையா
நூற்குறிப்பு
நூற்பெயர் : தமிழர் யார்?
ஆசிரியர் : ந.சி. கந்தையா
பதிப்பாளர் : இ. இனியன்
முதல் பதிப்பு : 2003
தாள் : 16.0 கி. மேப்லித்தோ
அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 11 புள்ளி
பக்கம் : 36 + 188 = 224
படிகள் : 1000
விலை : உரு. 100
நூலாக்கம் : பாவாணர் கணினி
2, சிங்காரவேலர் தெரு,
தியாகராயர் நகர், சென்னை - 17.
அட்டை வடிவமைப்பு : பிரேம்
அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட்
20 அஜீஸ் முல்க் 5வது தெரு
ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006
கட்டமைப்பு : இயல்பு
வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம்
328/10 திவான்சாகிப் தோட்டம்,
டி.டி.கே. சாலை,
இராயப்பேட்டை, சென்னை - 600 014.
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே.
‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’
என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர்.
ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:-
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார்.
ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார்.
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின.
ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம்.
அகராதிப் பணி
தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை.
ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார்.
இலக்கியப் பணி
புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள்.
பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர்.
தமிழ்மொழி - தமிழினம்
தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை.
திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும்
தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:-
திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார்.
பிற
மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார்.
“ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.”
வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்!
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன்.
அன்பன்
கோ. தேவராசன்
அகம் நுதலுதல்
உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம்.
உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது.
தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது.
தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம்.
எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள்.
இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது.
எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை.
வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது.
அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன.
உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும்.
இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது. மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது.
சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி.
அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம்.
உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது.
நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம்.
அன்பன்
புலவர் த. ஆறுமுகன்
நூலறிமுகவுரை
திரு. ந.சி. கந்தையா பிள்ளை 1930-40களில் தமிழ், தமிழிலக்கியம், தமிழ்மொழி, தமிழர் வரலாறு, திராவிட வரலாறு, தமிழ்நாட்டுக் குடிகள் போன்ற பல விடயங்கள் பற்றி அக்காலத்துச் சாதாரண தமிழ் வாசகர் நிலையில் பெரிதும் வாசிக்கப்பட்ட நூல்களை எழுதினார். பண்டைய இலக்கியங்களான அகநானூறு, கலித்தொகை, பரிபாடல் போன்ற வற்றினை உரைநடையில் எழுதி மக்களிடையே சங்க இலக்கியம் பற்றிய உணர்வினை ஏற்படுத்தினார். திருக்குறளுக்கான ஒரு சொல்லடைவைத் திருக்குறள் அகராதி என்னும் பெயரில் வெளியிட்டவர். இவை யாவற்றுக்கும் மேலாக உலக வரலாற்று நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காலவரிசைப்படுத்தித் தந்தார். செந்தமிழ் அகராதி என்றவோர் அகர முதலியையும் தொகுத்தார்.
இன்று பின்னோக்கிப் பார்க்கும் பொழுது 1940-50களில் இளைஞர் களாக இருந்த பல தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றிய தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கான வாசிப்பு விடயங்களை அளித்தவர். இவருடைய பெரும்பாலான படைப்புக்கள் அக்காலத்திற் பிரசுரிக்கப் பட்ட ஒற்றுமை என்னும் இதழின் அலுவலகத்தாலேயே வெளியிடப் பெற்றன. இவர் வெளியிட்டனவற்றுள் பல ஒற்றுமை இதழில் வெளிவந் திருத்தல் வேண்டும். ஆனால், அதனை இப்பொழுது நிச்சயமாக என்னாற் சொல்ல முடியவில்லை. ஒற்றுமை அலுவலகம் இவற்றைப் பிரசுரித்தது என்பதை அறிவேன். ஏனெனில் இலங்கையில் தமிழாசிரியராக இருந்த எனது தகப்பனாரிடத்து இந்நூல்களிற் பெரும்பாலானவை இருந்தன.
திரு ந.சி. கந்தையா பிள்ளையின் பெயர் தமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படுமளவுக்கு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியுள்ளது. அங்கு அவர் அத்துணைப் போற்றப்படாதிருப்பதற்குக் காரணம் ஏறத்தாழ அவர்களது எல்லா நூல்களுமே தமிழகத்திலேயே வெளியிடப் பெற்றன.
இந் நூல்களின் பிரசுரப் பின்புலம் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அவற்றின் பொருளியல் அம்சங்கள் பற்றிய தரவுகளும் இப்பொழுது தெரியாதுள்ளன.
ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிற்கூட இவரது பெயர் முக்கியப் படுத்தப் பெறாது போயுள்ளது. மிகுந்த சிரமத்தின் பின்னர் அவரைப் பற்றிக் கிடைத்துள்ள தகவல்கள் பின்வருமாறு:
சுவாமி ஞானப் பிரகாசர், ந.சி. கந்தையா பிள்ளை போன்ற அறிஞர்களின் தமிழ்ப் பங்களிப்புக்கள் தமிழகத்தில் போற்றப்படுகின்றமை ஈழத்தவர்க்குப் பெருமை தருகின்றது. இவர் எழுதிய நூல்களின் பெயரை நோக்கும்பொழுது தமிழ் வாசகர்களுக்கு உலக நிலைப்பட்ட, தமிழ்நிலைப் பட்ட தரவுகளைத் தொகுத்துத் தருவதே இவரது பெருஞ்சிரத்தையாக இருந்தது என்பது புலனாகின்றது. இப்பதிப்பகத்தின் பணியினை ஊக்குவிக்க வேண்டியது தமிழ்சார்ந்த நிறுவனங்களினதும் தமிழ்ப் பெரியோர்களினதும் கடமையாகும். உண்மையில் இதனை ஒரு அறிவுப்பசிப் பிணித் தீர்வாகவே நான் காண்கிறேன்.
2/7, றாம்ஸ்கேட், அன்புடன்
58, 37ஆவது ஒழுங்கை,
கார்த்திகேசு சிவத்தம்பி
வெள்ளவத்தை, தகைசார் ஓய்வுநிலை பேராசிரியர்
கொழும்பு - 6 யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.
கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மூலவர்களில் யாழ்ப்பாணம் தந்த பேரறிஞர் ந.சி. கந்தையாவும் ஒருவர். உண்மையான அறிஞர்களைக் காலங்கடந்து அடையாளம் காண்பதும் அவர்தம் படைப்புக்களைத் தேடிப் பிடித்துப் புரப்பதும் தமிழினத்தின் பழக்கங்களில் ஒன்று.
தமிழின், தமிழரின் தொல்பழங்கால வரலாறு தொடர்பாகத் தமிழில் நூல்கள் மிகக் குறைவு. ஓர் ஆயிரம் நூல்களாவது தமிழின் தமிழரின் தொல்பழங்கால வரலாறுபற்றி வெளிவரவேண்டும். விரிவாக எழுதப்பட வேண்டிய தமிழ், தமிழர் வரலாற்று வரைவு முயற்சிக்கு வழிகாட்டும் கருவி நூல்களை வரைந்திருப்பவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.
உலகம் முழுவதும் உற்றுக் கவனிக்க வேண்டிய வரலாற்றிற்கு உரியவர்கள் தமிழர்கள். அவர்களே உலக மொழிகளை ஈன்ற மூலமொழிக்குச் சொந்தக்காரர்கள். அவர்களே உலக நாகரிகங்களின் பிறப்பிற்குக் காரணமான உலக முதல் நாகரிகத்தைப் படைத்தவர்கள். இந்த உண்மைகளைத் தமிழர்களும் அறியவில்லை உலகமும் அறியவில்லை.
தமிழர் சரித்திரம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந் தமிழர், தமிழர் யார், உலக நாகரிகத்தில் தமிழர்பங்கு, சிந்துவெளித் தமிழர், தமிழ் இந்தியா, தமிழகம், மறைந்த நாகரிகங்கள் ஆகியன ந.சி. கந்தையாவின் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும்.
உலக முதல் நாகரிகம் என இன்று உலகம் நம்பிக்கொண்டிருக்கக் கூடிய நீல ஆற்றங்கரை நாகரிகம் (Nile Civilisation) தமிழ் நாகரிகத்தின் அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் வழிப்பட்ட நாகரிகமே என்பதை ஏராளமான சான்றுகளால் விளக்குபவை மேலைய நூல்கள்.
மொழிநிலையில் தமிழின் உலக முதன்மையைப் பாவாணர் நிலைநாட்டினார் என்றால் இன நிலையில் தமிழின உலக முதன்மையை ந.சி. கந்தையா நிலைநாட்டினார் என்று உரைக்கலாம்.
நீல ஆற்றங்கரை நாகரிக முடிவின்பின் நண்ணிலக் கடற் பகுதியில் உருவான பிறிதொரு வழிநாகரிகமே கிரேக்க நாகரிகம். கிரேக்க நாகரிகத் தின் உடைவில் தெறிப்பில் பிறகு மலர்ந்தவையே இன்றைய மேலை நாகரிகம். உலகின் எல்லா நாகரிகங்களையும் தாங்கிநிற்கும் தாய் நாகரிகமே தமிழ் நாகரிகம்.
தமிழ் நாகரிகத் தொன்மையைச் சங்க நூல்களுக்கு அப்பால் சிந்துவெளி அகழ்வாய்வும் உலக வரலாற்றாசிரியர்கள் உலக முதல் நாகரிகம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் நமக்கு மேலும் விளக்கும் பகுதிகளாகத் திகழ்கின்றன. இங்கெல்லாம் சென்று நுண்மாண் நுழைபுல முயற்சியால் தமிழின வரலாறு எழுதியவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.
ந.சி. கந்தையா பெருமகனார் நூல்களைத் தமிழரின் தொல்பழங்கால வரலாற்றைக் கற்கும் முயற்சியில் நான் ஈடுபடத்தொடங்கியபோது தேடிக் கற்றேன். பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் சென்ற ஆண்டு இயற்கையெய்திய வரலாற்றுப் பேரறிஞர் கோ. நிலவழகனார் ந.சி. கந்தையா அவர்களைச் சென்னையில் அவர் வாழ்ந்த நாளில் சந்தித்தது பற்றியும் அவரின் பன்னூற்புலமை பற்றியும் எம்மிடம் மகிழ்ந்து கூறுவார். ந.சி. கந்தையா அவர்களின் நூல்கள் பலவற்றையும் அவர் வைத்திருந்தார். அருகிய பழைய நூல்களைப் பேணுவாரிடத்திலும் நூலகங்கள் சிலவற்றிலும் மட்டுமே ஒடுங்கிக்கிடந்த ந.சி. கந்தையா நூல்களை மீண்டும் அச்சில் வெளியிடுவார் இலரே என்று கவலையுற்றேன். அமிழ்தம் பதிப்பகம் இவரின் நூல்களை வெளியிடுகின்றது. உண்மைத் தமிழ் நெஞ்சங்கள் இந் நூல்களை உச்சிமோந்து வாரியணைத்துப் புகழ்ந்து கற்றுப் பயனடைவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.
பேரா. கு. அரசேந்திரன்
பதிப்புரை
வளம் சேர்க்கும் பணி
“குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம்.
இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன.
ந.சி. கந்தையா
இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது.
தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர்.
தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது.
தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர்.
நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள்
1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன.
வாழும் மொழி தமிழ்
தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம்.
ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா?
தமிழர்களின் கடன்
இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன்.
மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள்.
எழுச்சிக்கு வித்திட…
உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது.
இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிப்பகத்தார்
தமிழர் யார்?
முன்னுரை
மேல்நாட்டவர்கள் மக்கள் வரலாற்றை ஒரு கலையாகக் கொண்டு அதனை வளர்த்து வருகின்றனர். அவர்கள் மொழிகளில் மக்கள் வரலாற்றைப் பற்றி ஆயிரக்கணக்கான நூல்கள் எழுதப்பட்டுள்ளன. தமிழ்நாட்டினருக்கு வரலாறு என்பது புதிது. மக்கள் வரலாறுகளோடு கடவுளர்களைத் தொடர்பு படுத்திக் கூறும் பழங்கதைகள் போன்றனவே உண்மை வரலாறுகள் என நம்மவர் பெரிதும் நம்பி வருகின்றனர். மக்களின் உள்ளம் இவ்வாறு பழகியிருப்பதினாலேயே பேசும் படக் காட்சிகளுக்கும் இவ் வகைக் கதைகள் தெரிந்து எடுக்கப்படுகின்றன. நம்மவரின் அறிவு, வரலாற்றுத் துறையில் மிகப் பிற்போக்கடைந் திருப்பதினாலேயே, மூடத்தனமான பல பழக்க வழக்கங்கள் நம்மவர்க ளிடையே வழங்குகின்றன. மூடப்பழக்க வழக்கங்களுக்குக் காரணம், அவைகளின் உண்மை அறியப்படாதிருத்தலே யாகும். பயனற்ற அல்லது பொருளற்ற பழக்க வழக்கங்களின் தொடக்கம் அல்லது காரணம் அறியப்படின் மக்கள் அவைகளைக் கைவிடப் பின்னடைய மாட் டார்கள்.
நமது நாடு, தமிழ் வழங்கும் நிலம். இங்குக் கிராமங்கள் தோறும், வீதிகள் தோறும் ஆலயங்கள் காணப்படுகின்றன. அவ் வாலயங்களில் குருமார் சில சமக்கிருதச் சொற்றொடர்களை உச்சரித்துக் கடவுள் பூசை செய்து வருகின்றனர். அச் சமக்கிருதச் சொற்றொடர்களில் தெய்வீகம் அல்லது கடவுள்தன்மை இருப்பதாகக் கற்றாரும் கல்லாதாரும் நம்பி வருகின்றனர். சமக்கிருதம் என்பது நமது நாட்டு மொழியன்று. இது செர்மன், இலாத்தின், கெல்து முதலிய ஐரோப்பிய மொழிகளுக்கு இனமுடையது. இற்றைக்கு 4000 ஆண்டுகளுக்கு முன் மத்திய ஆசியாவி னின்றும் இந்திய நாட்டை அடைந்த ஆரியர் என்னும் அன்னிய மக்கள் பேசிய மொழியின் திருந்திய அமைப்பு. இதில் கடவுள்தன்மை இருப்ப தாக நம்மவர் நம்பிவருவதை வரலாற்று மாணவன் ஒருவன் நோக்கின், அது அவனுக்கு நகைப்பை உண்டாக்கும். சமக்கிருதத்தில் தெய்வத் தன்மை உண்டு என நினைக்கின்ற தமிழ்மக்கள் எல்லோரும் இவ் வுண்மையை அறிவார்களானால், அவர்களே தமது மூடத்தனத்தை நினைந்து நாணுவார்கள் அல்லவா?
வரலாற்றுக் கல்வியினால் இதுவும் இதுபோன்ற பல மூடக் கொள்கைகளும் ஒழியும். வரலாறே மக்களுக்குக் கண். இந் நூல் நாம் எல்லோரும் முதலில் அறிந்துகொள்ள வேண்டிய நம் முன்னோரின் ஆதி வரலாற்றைத் தெரிவிப்பதாகும். இவ் வாராய்ச்சிக்கு ஆதாரம் மேல்நாட் டறிஞரின் ஆராய்ச்சி நூல்களே.
சென்னை
12.4.46
ந.சி. கந்தையா
தமிழர் யார்?
தோற்றுவாய்
தமிழர் யார்? அவர்களின் பிறப்பிடம் யாது? அவர்கள் இந்திய நாட்டில் தொன்றுதொட்டு வாழ்ந்து வருகின்றார்களா? அல்லது பிற நாடுகளினின்றும் வந்து புதிதாகக் குடியேறினார்களா? அவர்களின் பழமை எவ்வகையினது? அவர்களின் நாகரிகம் அவர்களிடையே தோன்றி வளர்ச்சியடைந்ததா? அன்றேல் அதனைப் பிறர் அவர்களுக்கு உதவினார்களா? என்பன போன்ற கேள்விகளுக்கு இறுக்கப்படும் விடைகளே தமிழரின் பண்டை வரலாறாக அமையும். முதலில் தன் நாட்டினரையும் தன் இனத்தினரையும் பற்றிய உண்மை வரலாறுகளை அறிந்துகொள்ளாது பயிலப்படும் வரலாற்றுக் கல்வி பயனற்றதாகும். வரலாற்றுக் கல்வியே மக்களின் பகுத்தறிவுக் கண்ணைத் திறக்கவல்லது.
தமிழரையும், தமிழையும் பற்றிய பழைய வரலாற்று உண்மைகள் வெளிவராமைக்குப் பல தடைகள் இருந்தன. அவைகளுள் ஒன்று, தமிழ் வடமொழிக்குப் பிற்பட்டது; தமிழ் வடமொழியைப் பார்த்து அமைக் கப்பட்டது; தமிழர் நாகரிகம் ஆரியரால் தமிழருக்கு உதவப்பட்டது என்பன போன்ற தவறான பல கொள்கைகள் ஒரு சாரார் கருத்தில் நன்கு பதிந்திருந்தமையேயாகும்.1 இத் தவறான கொள்கைகளை முதன்முதல் தகர்த்தெறிந்தவர் பேரறிஞர். பி. சுந்தரம் பிள்ளை அவர்களாவர். அப் பெருமகற்கு இத் தமிழுலகு என்றும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டது. அக் காலம் முதல் தமிழரையும், தமிழையும் பற்றிய பழைய வரலாறு களை ஆராயும் ஆர்வம் மக்களிடையே கிளர்வதாயிற்று. அதனால் தமிழ்நாட்டைப் பற்றிய பண்டை வரலாறுகள் சிறிது சிறிதாகப் புலர்வன வாயின. சிந்து வெளியில் மறைந்து கிடந்த அரப்பா, மொகஞ்சதரோ என்னும் பழைய இந்திய மக்களின் நகரங்களைப் பற்றிய விரிந்த புதை பொருள் ஆராய்ச்சி 1931இல் சேர்யோன் மார்சல் என்பவரால் வெளி யிடப்பட்டபோது, ஆராய்ச்சியால் முடிவு காணப் பெறாது ஐயத்துக்கு இடமாயிருந்த தமிழ் மக்களின் பண்டை வரலாறுகள் முடிவு காணப் பெற்று, வெளிச்சம் எய்தின. இன்று தமிழரின் பண்டை வரலாறு இருளில் இருக்கவில்லை. ஆராய்ச்சியில் இவ் வுலக மக்களின் நாகரிகத் துக்கு அடிகோலியவர்கள் தமிழர்களே என்பது தெளிவாகின்றது. ஆராய்ச்சியாற் கிடைத்த முடிவுகளை இந் நூல் நன்கு எடுத்து விளக்கு கின்றது.
ஆதி மக்கள்
தமிழ் மக்களின் ஆதி வரலாற்றை அறிந்துகொள்வதற்கு, ஆதி மக்களைப் பற்றிய வரலாற்று அறிவு இன்றியமையாதது. இன்றைய பூகோளப் படத்தில் தெற்கே அதிக கடலும், வடக்கே அதிக நிலமும் இருப்பதைக் காண்கின்றோம். மிக மிக முற்காலத்தில் பூகோளப் படம் இதற்கு நேர்மாறாக இருந்தது. ஒரு காலம் தெற்கே கிடந்து நீருள் மறைந்துபோன பெருநிலப் பரப்பைப்பற்றி நிலநூலாரும், புராணக் கதைகளும், கன்ன பரம்பரை வரலாறுகளும் கூறுகின்றன. தெற்கே கிடந்து மறைந்துபோன நிலப்பரப்பை மேல்நாட்டுப் பௌதிக நூலார், லெமூரியா என அறைவர்.
அங்கு தேவாங்கு போன்ற உயிரினம் வாழ்ந்தது என்னும் கருத்துப் பற்றி லெமூரியா என்னும் பெயர் இடப்பட்டது. லெமூர் என்னும் பெயர் தேவாங்கைக் குறிக்கும். லெமூரியா என்னும் நிலப்பரப்பிலேயே ஆதி மக்கள் தோன்றிப் பெருகினார்கள் என ஹெக்கல் என்னும் ஆசிரியர் கூறி யுள்ளார். இக் கருத்து சிலகாலம் சிற்சிலரால் ஏற்றுக்கொள்ளப்பட வில்லை. ஆனால், இற்றை ஞான்றை ஆராய்ச்சிகளால், இக் கொள்கை வலியுறுகின்றது. எச்.சி.வெல்ஸ் என்னும் இக்காலப் பேரறிஞரும் மத்திய தரைக்கும் தென் சீனத்துக்கும் இடையிலுள்ள நிலப்பரப்பிற் றோன்றிப் பெருகிய மக்களே பல சாதியார்களாக மாறியுள்ளார்கள் எனத் தமது உலக வரலாற்றுக் காட்சிகள் (Outlines of History) என்னும் நூலகத்தே குறிப்பிடுவாராயினர். லெமூரியாக் கண்டம் உயிர்கள் தோன்றாதிருந்த காலத்திலேயே மறைந்துபோயிற்று எனச் சில ஆசிரியர்கள் கொண்ட கருத்து இன்று ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இன்று வடமொழியில் எழுதப்பட்டிருக்கும் பல கற்பனைக் கதை களோடு பின்னிக்கிடக்கும் பழங்கதைகளின் தொகுதிகள் புராணங்கள் எனப் படுகின்றன. வடமொழியாளர் இந்திய நாட்டை அடைந்தபோது, இந்திய நாட்டில் வழங்கிய பழங்கதைகளை எழுதிவைத்தல் இயல்பே யாகும். மெகஸ் தீனஸ் என்னும் கிரேக்கரும், மார்க்கோப்போலோ என் னும் இத்தாலியரும், சீன யாத்திரிகர்களும் இந்திய நாட்டு வரலாறுகள் சிலவற்றை எழுதிவைத்தமையை இதனோடு ஒப்பிடலாகும். இந்திய மக்களின் பழங்கதைகளாகிய புராணங்கள், தெற்கே பெரிய நிலப்பரப் பிருந்ததென்றும், மேரு, பூமிக்கு மத்தியிலுள்ளதென்றும், மேருமலை யின் ஒரு கொடுமுடி இலங்கைத் தீவு என்றும் கூறுகின்றன. தமிழ் நூல் களும், தெற்கே கிடந்து அழிந்துபோன நிலப் பரப்பைப் பற்றிக் கூறு கின்றன. இவை மேல்நாட்டு ஆராய்ச்சியாளர் கூற்றுக்களோடு மிக ஒத் திருக்கின்றன. தெற்கே கிடந்து மறைந்துபோன நிலப்பரப்பைத் தமிழ் மக்கள் நாவலந்தீவு எனப் பெயர் இட்டு வழங்கினர்.
பூமியின் நடுவரையை அடுத்த நாடுகளிலே, ஆதியில் மக்கள் தோன்றிப் பெருகினார்கள் என விஞ்ஞானிகள் கருதலானார்கள். மிகப் பழைய மனித எலும்பு சாவகத் தீவிற் கிடைத்தது. இது விஞ்ஞானிகள் கொண்டிருந்த கருத்துக்கு மிக இயைபுடையதாகக் காணப்பட்டது. இதனாலும் பிற காரணங்களாலும் சாவகத் தீவிலோ, அதனை அடுத் திருந்த நிலப்பரப்பிலோ, ஆதிமக்கள் தோன்றிப் பெருகியிருத்தல் வேண்டுமென விஞ்ஞானிகள் பலர் கூறுகின்றனர்.
மக்கள் ஓரிடத்தினின்றும் பல இடங்களுக்கு ஏன் சென்றார்கள்?
தொடக்கத்தில் மக்கள் விலங்குகளை ஒப்ப வாழ்ந்தார்கள். அவர்கள் காடுகளிற் கிடைக்கும் காய் கனி கிழங்குகளை உண்டு சுனை நீரைப் பருகி மலைக்குகைகளிலும், மரநிழல்களிலும் தங்கிவாழ்ந்தனர். அவர்கள், பொருள் பண்டங்கள் எவையும் இல்லாதவர்களாய் எங்கும் அலைந்து திரிவாராயினர். இந் நிலைமையில் மக்கட் பெருக்கம் உண்டாயிற்று. அதனால் எல்லாருக்கும் ஓரிடத்தில் உணவு கிடைத்தல் அரிதாயிற்று. ஆகவே உணவின் பொருட்டுப் பலர் தமது நடு இடத்தை விட்டு, உணவு தேடும் பொருட்டுச் சிறிது சிறிதாக அகலச் சென்றனர். இவ்வாறு சென்ற மக்களுக்குத் தாம் முன்னிருந்த இடங்களுக்குத் திரும்பி வரும் கட்டாயம் உண்டாகவில்லை. இவ் வுலகின் பல இடங்களில் 1பழங்கற்கால நாகரிகமுடைய மக்கள் வாழ்ந்து வந்ததற்குரிய சான்றுகள் காணப்படுகின்றன. இதனால் பழங் கற்காலத்திலேயே மக்கள் பிரிந்து உலகின் பல பாகங்களுக்குச் சென்று தங்கிவிட்டார்கள் எனத் தெரி கின்றது. பழங் கற்கால ஆயுதங்களோடு கண்டு எடுக்கப்பட்ட மனித மண்டை ஓடுகள் எல்லாம் ஒரே வகையாகக் காணப்படுகின்றமையின், அக் காலத்தில் இன்று காணப்படுவன போன்று நிறத்தாலும் உடற் கூறுகளாலும் மாறுபட்ட மக்கட் குலங்கள் தோன்றவில்லை எனக் கருதப்படுகிறது. 2புதிய கற்காலக் கல்லாயுதங்களுடன் காணப்பட்ட மனித மண்டை ஓடுகள் வெவ்வேறு வகையாக இருத்தலின் அக் காலத் திலே மக்கட் குலங்கள் தோன்றியிருந்தனவாதல் வேண்டும். ஒரு மக்கட் குலத்தினர் நிறம், உடற்கூறு முதலியவைகளால் மாறுபட்ட இன்னொரு மக்கட் குலத்தினராக மாறுபடுவதற்கு 300 தலைமுறைகள் வரையில் ஆகுமென்பது ஆராய்ச்சிவல்லார் கருத்து.
நாவலந் தீவின் அழிவு
பூமியின் நடுக்கோட்டை அடுத்த நாடுகளில், பெரிய காற்றுக் குழப்பங்களும், எரிமலைக் குழப்பங்களும் தோன்றுதல் இயல்பு. எரிமலைக் குழப்பங்களால் தரைப் பாகங்கள் கடலுள் மறைந்துபோத லும் கடலுள் தரைகள் எழுதலும் இயல்பு. ஒரு காலத்தில் பெரிய எரிமலைக் குழப்பத்தினால் நாவலந் தீவு சின்னாபின்னமாக்கப்பட்டது. இந்துமாக்கடல், பசிபிக் கடல்களின் இடையிடையே தீவுக் கூட்டங்க ளாக விளங்குவன நாவலந் தீவின் பகுதிகளே. அவை, நாவலந் தீவிலிருந்த பெரிய மலைகளின் சிகரங்கள் ஆகலாம். நாவலந்தீவு சிதறுண்டபோது அங்கு வாழ்ந்த மக்களில் எண்ணில்லாதோர் மாண்டனர். பலர் ஒருவாறு தப்பிப் பிழைத்தனர். உலக மக்கள் எல்லோரிடை யும் பெரிய கடல்கோள் ஒன்றைப் பற்றிய பழங்கதை வழங்குகின்றது. ஒவ்வொரு மக்களிடையும் வழங்கும் அப் பழங்கதைகள் எல்லாம், சிற்சில மாறுதல்களைவிட ஒரேவகையாகக் காணப்படுகின்றன. அவ் வரலாறு மக்கள் எல்லோரும் ஒரு மத்திய இடத்தில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் நேர்ந்த பெரிய வெள்ளப் பெருக்கு ஒன்றின் ஞாபகமே என்று நன்கு அறியக் கிடக்கின் றது. பெரிய வெள்ளப் பெருக்குக்குத் தப்பிப் பிழைத்த சத்திய விரதன் என்னும் தமிழ் மனுவிலிருந்து உலக மக்கள் தோன்றிப் பெருகினார்கள் எனப் புராணங்கள் நவில்கின்றன. கிறித்துவ வேதத்தில் அப் பெரிய வெள்ளப் பெருக்கைப் பற்றிய வரலாறு கூறப்படுகின்றது. அவ் வரலாறு யூதமக்களுக்குச் சாலடிய மக்கள் வாயிலாகக் கிடைத்தது. சாலடியர் சோழ நாட்டினின்றும் சென்று, மேற்கு ஆசியாவிற் குடியேறிய மக்க ளாவர்.3
நாவலந் தீவில் நாகரிகம் வளர்ச்சியுற்றிருந்த தென்பதற்குச் சான்று
சிந்துநதிப் பள்ளத்தாக்குகளில் மொகஞ்சதரோ, அரப்பா என்னும் பழந் தமிழரின் இரு புராதன நகரங்கள் அண்மையிற் கண்டு பிடிக்கப்பட்டன. அவைகளின் காலம் இற்றைக்கு ஆறாயிரம் ஆண்டுகள் வரையில். அங்குக் காணப்பட்ட முத்திரைகளில் அக் கால மக்கள் வழங் கிய எழுத்துகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. இவ் வகை எழுத்துக்கள் தென்னிந்தியாவின் சில பகுதிகளிற் கிடைத்த வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட மட்பாண்டங்களிலும் இலங்கையில் கேகாலைப் பகுதியி லுள்ள மலை ஒன்றிலும் காணப்படுகின்றன. கிழக்குத் தீவுகளிலும் பசிபிக் கடற் றீவுகளிலும் இவ் வகை எழுத்துகளே வழங்கின என்பது அவ் விடங் களிற் கிடைத்த எழுத்துப் பொறித்த பழம் பொருள்களால் நன்கு அறியப் படுகின்றது. மக்களிடையே நாகரிகம் முதிர்ந்து, மொழி உண்டாகி அது பேச்சு வழக்கில் நீண்டகாலம் நிலவிய பின்பே எழுத்துகள் தோன்றுவது இயல்பு. நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்திய நாட்டை அடைந்த ஆரியர் எழுத்தெழுத அறிந்திருக்கவில்லை. ஆனால், நாவலந் தீவு மக்கள் எழுத்தெழுத அறிந்திருந்தனர். நாவலந்தீவு மக்கள் பெரிய உலக அழி விற்கு முன்பே நாகரிக முதிர்ச்சியுடையவர்களாய் இருந்தார்கள் என்ப தற்கு அவர்கள் வழங்கிய எழுத்துகளே சான்றாகின்றன. மொகஞ்சத ரோவிற் கிடைத்த ஆயிரத்து எண்ணூறு முத்திரைகளிற் பொறிக்கப் பட்ட முத்திரைகளை ஹெரஸ் பாதிரியார் நன்கு ஆராய்ந்துள்ளார். அவ் வெழுத்துகள் சிலவற்றை அவர் வாசித்திருக்கின்றார். மொகஞ்சத ரோவில் வழங்கிய மொழி, தமிழ் என உறுதிப்பட்டுள்ளது. இதனால் நாவலந் தீவில் வழங்கிய மொழியும் தமிழேயென உறுதிப்படுகின்றது.
குமரி நாடு
நாவலந் தீவின் வடக்கில் அராவலி மலைகள் வரையும் தரை யிருந்தது. நாவலந் தீவு அழிவுற்ற காலத்தில் இந்தியக் குடாநாட்டைத் தொடர்ந்து தெற்கே பெரிய நிலப்பரப்பிருந்தது. அது கன்னியாகுமரிக் குத் தெற்கே எவ்வளவு தூரம் நீண்டிருந்ததென்று வரையறுத்துக் கூற இயலாது. பழைய தமிழ் நூல்களிற் கூறப்படுவதை நோக்குமிடத்து அந் நிலப்பரப்புப் பெரிய நீளமும் அகலமும் உடையதாய் இருந்ததென மாத்திரம் கூறலாம். குமரி நாடு என்பது குமரித் தெய்வத்தின் வழிபாடு காரணமாகத் தோன்றிய பெயர். பண்டைநாளில் ஆளும் அரசர் அல்லது வழிபடும் கடவுளர்களின் பெயர்கள் தொடர்பாகவே, பெரும்பாலும் நாடுகளுக்குப் பெயர்கள் உண்டாயின. இவ் வுலகில் ஆதியில் தோன்றி யது பெண் ஆட்சி, அக் காலத்தில் ஆடவர் மகளிருக்குக் கீழ்ப்பட்டிருந் தார்கள். சொத்துரிமை பெண்களுக்கே இருந்தது. தாயம் என்னும் சொல்லுக்குச் சொத்துத் தாயிடமிருந்து பிள்ளைகளைச் சேருவது என்று பொருள். இவ் வழக்கைப் பின்பற்றியே “சீதன” வழக்கும் உண்டா யிற்று. ஆடவன் மனைவிக்குக் கீழ்ப்படிந்து நடப்பதற்காகவே இவ் வழக்கம் எழுந்தது. தாயாட்சி உண்டாயிருந்த காலத்தில், மக்கள் தாய்க் கடவுளையே வழிபட்டார்கள். ஒரு காலத்தில் திருமணக் கட்டுப்பாடுகள் இருக்கவில்லை. ஆகவே தாய், திருமணம் பெறாதவள் அல்லது குமரி எனப்பட்டாள். குமரிக் கடவுள் வணக்கத்திற்குரிய நாடாதலின் அது குமரி நாடு என வழங்கிற்று.
குமரி நாட்டில் நாற்பத்தொன்பது பிரிவுகள் இருந்தன வென்பது சிலப்பதிகாரத்திற்கு, அடியார்க்கு நல்லார் எழுதிய உரையிற் காணப் படுகின்றது. அங்கு, குமரி, பஃறுளி என்னும் ஆறுகளும், குமரி என்னும் மலையும் இருந்தன வென இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்திற் கூறியுள் ளார். செங்கோன் தரைச்செலவு, என்னும் நூலால் அங்கிருந்த மணிமலை, பேராறு என்னும் சில மலைகள், இடங்களின் பெயர்களும் அறிய வருகின்றன. செங்கோன் தரைச்செலவு என்பது குமரிநாட் டின்கண் இருந்த பெருவள நாட்டரசனாகிய செங்கோன் மீது பாடப் பட்ட தமிழ் நூல். அதன் சில பாடல்களே வெளிவந்துள்ளன. செங் கோன் தரைச் செலவு மிகப் பழைய நூல் எனச் சிலர் கருதுகின்றனர். மொகஞ்சதரோ என்னுமிடத்தில் வழங்கிய தமிழின் போக்கை நோக்கு மிடத்து, அது மொகஞ்சதரோ காலத்துக்குப் பல நூற்றாண்டுகள் பிற்பட்ட நூல் என்பது நன்கு புலப்படும். செங்கோன் தரைச் செலவு என்னும் நூல், உரையாசிரியர்களால் எடுத்தாளப்படாமையின் அது பிற்காலத்தவர் எவரோ கட்டிய போலிநூல் எனச் சிலர் கூறுவர். உரையாசிரியர்கள் ஆட்சிக்குத் தப்பிய பல நூற்பெயர்கள் யாப்பருங்கல விருத்தியுரையிற் காணப்படுகின்றன.
குமரிநாட்டின் அழிவும், அங்கு வாழ்ந்த மக்கள் தென்னிந்தியாவிற் குடியேறுதலும்
குமரி நாடும் சிறிது சிறிதாகக் கடல்கோளுக் குட்பட்டது. இக் கடல் கோளுக்குப் பிழைத்த மக்கள் வடக்கு நோக்கிச் சென்று தென் னிந்தியாவிற் குடியேறினார்கள். அம் மக்கள் கன்னித் தெய்வத்தின் திருவுருவைத் தெற்கின்கண் வைத்து வழிபடுவாராயினர். தாம் இப்பொ ழுது குடியேறியிருக்கும் நாட்டை மேலும் கடல் கொள்ளாதிருத்தற் பொருட்டு அத் தெய்வத்தின் திருவுருவை அவர்கள் அங்கு வைத்தார்கள் ஆகலாம். இந்தியாவுக்கு வந்து மீண்டு சென்ற உரோமர் கன்னித் தெய்வத் தின் திருவுருவம் அங்கு இருந்தமையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
நாவலந் தீவு
குமரி நாட்டினின்றும் வந்து குடியேறிய மக்கள், தமது நாட்டுக்குக் கடல்வாய்ப்பட்டு மறைந்த நாவலந் தீவின் பெயரையே இட்டார்கள். அதனிடை இயற்கைக் குழப்பங்கள் யாதும் நிகழவில்லை. மக்கள் அமைதி யடைந்திருந்தனர்; தாம் முன்பு அறிந்திருந்த பல்வகைத் தொழில் களைப் புரிந்தனர்; வேளாண்மை வாணிகம் என்பன தலையெடுத்தன. நாடு நகரங்கள் உண்டாயின. அவர்கள், தம்முள் அறிவும் ஆற்றலும் வீரமுஞ் செறிந்த ஒருவனை அரசனாகத் தெரிந்தெடுத்தார்கள். அவன் வாழ்ந்த நகரம் தென் பாகத்தில் இருந்தது. மக்கள் பெருகி மேலும் வடக்கே சென்று குடியேறினர். வடக்கே பெருந்தொலைவில் மக்கள் நுழைந்து செல்லமுடியாமல் ‘தண்டகம்’ என்னும் நெருங்கிய காடு தடுத்தது. முன்னையிலும் இப்பொழுது மக்கள் அகன்ற இடத்திற் குடியேறி வாழ்ந்தார்கள். அப் பகுதிகளை ஆள்வதற்கு இன்னும் இரண்டு அரசர் தெரிந்தெடுக்கப்படுவாராயினர். இவ்வாறு நாவலந் தீவில் மூவர் ஆட்சி உண்டாயிற்று. தெற்கே உள்ள நாடு, பழைய அரசனுக்கு உரியதாத லின், அது பண்டுநாடு எனப்பட்டது. பழமையை உணர்த்தும் பண்டு என்னும் சொல்லினின்றே பாண்டியன் என்னும் சொல் உண்டாயிற்று. மாபாரதத்திற் சொல்லப்படும் பாண்டு என்பவனின் பெயரிலிருந்து பாண்டியன் என்னுஞ் சொல் உண்டாயிற்று எனச் சிலர் கூறுவர். அது பெரிதும் தவறுடைத்து; பாண்டுவுக்கு முன் பாண்டியர் இருந்தனர். மேற்குக் கடற்கரை, கிழக்குக் கடற்கரை நாடுகளை ஆண்ட அரசர் முறையே சேரர், சோழர் எனப்பட்டார்கள். இவ்வாறு நாவலந் தீவில் மக்கள் பெருகப் பெருகப் பல அரசாட்சிகள் உண்டாயின.
நாவலந் தீவினின்றும் சென்று மக்கள் பிற நாடுகளிற் குடியேறுதல்
நாவலந் தீவில் மக்கள் பெருகத் தொடங்கினார்கள். ஒரு நாட்டில் மக்கள் அதிகம் பெருகினால் அங்கு வாழ்க்கைக்கு இசைவுகள் குறைவு படும். ஆகவே மக்கள் இசைவுடன் வாழக்கூடிய பிற நாடுகளிற் சென்று குடியேறுவார்கள். தென் தமிழ்நாட்டில் வாழ்ந்த மக்கள் பற்பல கூட்டத் தினராய்க் குடியேற்ற நாடுகளைத் தேடி வெளியே சென்றனர். வடக்கே விந்திய மலை வரையிற் பெருங்காடு இருந்தமையால் அவர்கள் தரை வழியே வடக்கு நோக்கிச் செல்ல முடியவில்லை. தமிழர் திறமையுடைய மாலுமிகளா யிருந்தனர். ஆகவே அவர்கள் கடல் வழியே ஏகினர்.
சிந்துவெளி மக்கள்
இவ்வாறு சென்ற ஒரு கூட்டத்தினர் வடக்கேயுள்ள சிந்து நதி முகத்துவாரத்தை அடைந்தனர். இந் நதி ஓரங்கள் மக்கள் குடியேறி வாழ்வதற் கேற்றனவாய், இருந்தன. அக் கூட்டத்தினர் அவ் வாற்றோரங் களில் தங்கித் தானியங்களை விளைவித்து இனிது வாழ்ந்தனர். மக்கள் பெருகப் பெருக அவர்கள் அவ் வாற்றோரங்களில் குடியேறிப் பரவி னார்கள். அக் கால மக்கள் வியக்கத்தகுந்த நனி நாகரிகம் எய்தியிருந்தனர். அவர்களைப் பற்றி 1921ஆம் ஆண்டு வரையில் யாதும் தெரியவில்லை. அவர்கள் அமைத்து வாழ்ந்த இரு பெரிய நகரங்கள் பழம்பொருள் ஆராய்ச்சியாளராற் கண்டுபிடிக்கப்பட்டன. பிற்காலத்தைய மக்கள், அவைகளுக்கு மொகஞ்சதரோ, அரப்பா எனப் பெயரிட்டு வழங்கி னார்கள். இவ் விரு நகரங்களுக்கும் இடையிலுள்ள தூரம் நானூறு மைல். ஆனால், இவ் விரு நாடுகளிலும் காணப்பட்ட நாகரிகக் குறிகள் ஒரே வகையின. அதனால் அக் காலச் சிந்துவெளி மக்களின் நாகரிகம் மிகப் பரவியிருந்ததென விளங்குகின்றது.
அவர்களின் நாகரிகம் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. அக் காலத்தில் அவர்கள் இரும்பைப்பற்றி அறிந்திருக்கவில்லை. அவர் களின் நாகரிகம் கற்கால முடிவுக்கும் உலோக காலத் தொடக்கத்துக்கும் இடைப்பட்டது. இற்றைநாள் தமிழரிலும் பார்க்கச் சிந்துவெளித் தமிழர் நாகரிகத்திற் குறைந்தவர்களல்லர். முற்கால மக்கள் நாகரிகத்தாலும் அறிவாலும் தாழ்ந்தவர்களா யிருந்தார்களென்றும் காலஞ் செல்லச் செல்ல அவர்களின் நாகரிகமும், அறிவும் வளர்ச்சியடைந்தன வென்றும் சிலர் கருதுகின்றனர். சில வகைகளில் அல்லாமல், பல வகைகளில் முன்னைய மக்களே அறிவாற்றலும் மனவலியும் உடல் வலியும் பெற் றிருந்தார்கள் எனப் பழைய வரலாறுகளை நோக்குங்கால் தெளிவாக விளங்கும். நாகரிகம் முன்நோக்கிச் செல்வது போலவே, ஓர் ஒரு கால் பின்நோக்கியும் செல்வதாக அறிஞர் ஆராய்ந்து கூறியுள்ளார்கள். ஆறாயிரம் ஆண்டுகளின் முன் எகிப்தியர் கட்டி எழுப்பிய கூர்நுதிக் கோபுரங்களையும், சீரிய நாட்டினர் அறுபது அல்லது எழுபது அடி உயரமுள்ள தனிக் கற்றூண்களை நிறுத்திக் கட்டி எழுப்பிய “பால்பெக்” ஆலயத்தையும் கண்டு இன்றைய உலகம் வியப்படைகின்றது. ஆகவே காலப்போக்கிற் பின்நோக்கிச் செல்லச் செல்ல, மக்கள் அறியாமை யுடையவர்களா யிருந்தார்கள் என வரலாற்று நூலார் சிலர் கருதுதல் தவறாமென்க. அறிவும், அறியாமையும், நாகரிகமும், அநாகரிகமும் எல்லாக் காலங்களிலும் உண்டு என்பது அறியப்படுதல் வேண்டும்.
சிந்துவெளியிலே கண்டுபிடிக்கப்பட்ட பழைய நகரங்கள் உயர்ந்த நகர அமைப்பு முறையையும், சுக வாழ்க்கைக் கேற்ற விதிகளையும் தழுவி அமைக்கப்பட்டுள்ளன. அந் நகர்களின் இடையிடையே அகன்ற நெடிய வீதிகள் செல்கின்றன. அவைகளைச் சிறிய பல வீதிகள் குறுக்கே கடந்து செல்கின்றன. வீதிகளின் இரு மருங்குகளிலும் வீடுகள் நிரையாகக் கட்டப்பட்டிருக்கின்றன. அவைகளுக்கு ஒன்று முதல் மூன்று மாடிகள் வரையில் உண்டு. களி மண்ணினால் கல் அறுத்துக் காயவிட்டுச் சூளை வைக்கப்பட்ட செங்கற்கள் வீடுகள் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட் டன. வீடுகளுக்கு உள் முற்றமும், உள் முற்றத்திற் கிணறும் இருந்தன. உள் முற்றத்தில் முளைகள் அடித்து ஆடுமாடுகள் கட்டப்பட்டன. வீடுகளுக் குக் குளிக்கும் அறை இணைக்கப்பட்டிருந்தது. கழிவுநீர் செங்கற் பதித்த வாய்க்கால் வழியே சென்று வீதியிலுள்ள பெரிய வாய்க்காலில் விழுந் தது. வீதியிலுள்ள பெரிய வாய்க்காலும் செங்கல் பதிக்கப்பட்டிருந்தது. வீடுகளுக்குப் பல சாளரங்கள் இருந்தன. மாடியினின்றும் நீர் கீழே செல்வதற்குச் சூளையிட்ட களிமண் குழாய்கள் பொருத்தி வைக்கப்பட் டன. சமைப்பதற்கும் நித்திரை கொள்வதற்கும் தனியறைகள் இருந்தன. மக்கள் பல்வகைக் கைத்தொழில்கள் புரிவதிற் றிறமை யடைந்திருந்தனர். தச்சர், அழகிய கட்டில், நாற்காலி, முக்காலி முதலிய வீட்டுப் புழக்கத்துக் குரிய பொருள்களைச் செய்தார்கள். பொற்கொல்லர் மாதர் விரும்பி அணியும் அழகிய அணிகலன்களைப் பொன், வெள்ளி, வெண்கலம் முதலிய உலோகங்களாற் செய்து அளித்தனர். குயவர் அழகிய பானை, சட்டிகளைத் தண்டு சக்கரங்களைக் கொண்டு செய்தனர். அவர்கள் அம் மட்பாண்டங்கள் சிலவற்றிற்குப் பலவகை நிறங்கள் தீட்டி, அவைமீது பலவகை ஓவியங்களை எழுதினர். முற்கால மட்பாண்டங்களின் வடி வங்கள் இக் காலம் மேல்நாடுகளிலிருந்து வரும் கண்ணாடிப் பொருள்கள் போன்று அழகுடையனவா யிருக்கின்றன. சிறுவர் பலவகை விளை யாட்டுப் பொருள்களை வைத்து விளையாடி னார்கள். அவை ஊதுகுழல், கிலுகிலுப்பை, மண்ணாற் செய்து சூளையிட்ட பறவை, விலங்குகளின் வடிவங்கள் முதலியன.
மகளிர் அழகிய அணிகலன்களை அணிந்து, நெற்றியிற் செங் காவிப் பொட்டு இட்டார்கள். முகத்துக்கு ஒரு வகை வெண்பொடி பூசினார்கள். மேனி அலங்கரிப்புக்குரிய பொருள்களை முத்துச்சிப்பியின் ஓடு பதித்துச் செய்யப்பட்ட அழகிய சிமிழ்களில் வைத்திருந்தார்கள். அவர்கள் தமது கூந்தலைப் பலவகையாகக் கோதி முடிந்தனர். அவர்கள் பலவகை வேலைப்பாடுடையனவும் கண்கவரும் நிறம் ஊட்டப்பட்டன வுமாகிய அழகிய ஆடைகளை உடுத்தனர்.
கடவுள் வழிபாட்டுக்குரிய கோவில்கள் இருந்தன. கோவில் களுக்கு அருகே உள்ள படிக்கட்டுகளுடைய கேணிகளில் கால் கைகளைச் சுத்தஞ் செய்தபின் அல்லது நீராடியபின் வழிபடுவோர் ஆலயங்களுக்குச் சென்றனர். ஆடவர் முகத்தை மழித்துக் கொண்டனர். மழிக்கும் கத்திகள் வெண்கலத்தினாற் செய்யப்பட்டன. இவ்வாறு அக் கால மக்கள், உயர்ந்த நாகரிகமும், உல்லாச வாழ்க்கையும் உடையவர் களாய் விளங்கினார்கள். இது இற்றைக்கு ஆறாயிரம் ஆண்டுகளின் முற்பட்ட தமிழரின் நாகரிக நிலை.
எகிப்தியர்
தமிழ்நாட்டினின்றும் சென்ற இன்னொரு கூட்டத்தினர் செங் கடல் வழியாக ஆப்பிரிக்காவை அடைந்தனர். அங்கு என்றும் வற்றாத நீர்ப்பெருக்குடைய நைல் என்னும் ஆறு உண்டு. அதன் பக்கங்களிலுள்ள நிலம் தானியங்களை விளைவிப்பதற்கு ஏற்ற செழிப் புடையது. அவ் விடத்தே அவர்கள் தங்கி வாழ்ந்தனர்; மக்கள் பெருகினர்; நாடு நகரங்கள் உண்டாயின. அவர்களா லமைக்கப்பட்ட பெரிய நகரங்கள் மெம்பிஸ், தீப்ஸ் என்பன. அம் மக்களின் பழைய நாகரிகக் குறிகள் இன்றும் அவ் விடங்களிற் காணப்படுகின்றன. பழம்பொருள் ஆராய்ச்சியாளர் அவ் விடங்களிற் கிடைத்த பழம் பொருள்களை ஆராய்ந்துள்ளார்கள். எகிப்தி யரின் பழங்கதைகள், அவர்கள் பண்டு நாட்டினின்றும் சென்றவர்களாகக் கூறுகின்றன. பண்டு நாடு என்பது பாண்டி நாடே என வரலாற்றாசிரி யர்கள் ஆராய்ந்து காட்டியுள்ளார்கள். மக்கட் குல நூலார், தமிழரும் எகிப்தியரும் ஒரே குல முறையில் வந்தோர் எனக் கூறியிருக்கின்றனர். பழைய எகிப்தியருடைய பழக்கவழக்கங்கள் கடவுள் வழிபாட்டு முறை முதலியன தமிழ் மக்களிடையே காணப்படுவன போன்றன. அவர்கள் ஆலயங்களில் இலிங்கங்களை வைத்து வணங்கினர். நைல் ஆற்றுக்கு மேற்கில் சிவன் என்னும் பாலை நிலப் பசுந்தரை ஒன்று உள்ளது. அங்கு அவர்கள் ஞாயிற்றுக் கடவுளை, சிவனென்னும் பெயரிட்டு வழி பட்டனர்.
எகிப்தியக் குருமார் பகலில் இரு முறையும், இரவில் இரு முறையும் நீராடினார்கள்; தோய்த்துலர்த்திய ஆடையை உடுத்தார்கள்; காலில் மிதியடி தரித்தார்கள். மக்கள் தாம் பருகும் கிண்ணங்களைத் தினமும் காலையில் சுத்தஞ் செய்தார்கள்; ஆண்டில் ஒருமுறை ஆலயங்களிலும் வீடுகளிலும் தீபங்கள் ஏற்றித் தீப விழாக் கொண்டாடினார்கள். எகிப்திற் கிடைத்த பழைய மட்பாண்டங்கள் இந்தியாவிற் கிடைத்த அவ் வகைப் பொருள்களை ஒத்துள்ளன. இறந்த அரசரின் உடல்களை அடக்கஞ் செய்தற்கு அவர்கள் கட்டி எழுப்பிய கூர்நுதிக் கோபுரங்கள் இன்றும் உலக வியப்புகளுள் ஒன்றாக மதிக்கப்படுகின்றன. நீல நதியில் வளரும் நாணற் புல்லை வெட்டிப் பிளந்து ஒட்டிய தாள்களிலே அவர்கள் குச்சியில் மை தொட்டு எழுதினார்கள். அவர்கள் எழுதுவதற்கு ஓவியங் களைப் பயன்படுத்தினர். தமிழரின் பழைய எழுத்துகள் இவ் வகையின என்பது பழைய சான்றுகளால் அறியவருகின்றன.
சுமேரியர்
தமிழரில் இன்னொரு கூட்டத்தினர் பாரசீகக் குடாக்கடல் வழியே சென்று தைகிரஸ் யூபிரதிஸ் ஆறுகளின் கீழ் ஓரங்களில் குடியேறினார்கள். அவர்கள் ஆற்றினின்றும் நீரைக் கால்வாய்களால் வயல்களுக்குப் பாய்ச்சி வேளாண்மை செய்தனர். அவர்களின் தலைநக ரம் சுசா. சுமேரியாவிலே ஓர் இடத்துக்கும், ஒரு மலைக்கும் எல்லம் என்னும் பெயர் வழங்கிற்று. எல் என்பது ஞாயிற்றைக் குறிக்கும் பழந் தமிழ்ச் சொல். இந்தியாவின் தென் கோடியிலுள்ள இலங்கைத் தீவின் பழைய பெயரும் எல்லம். எல்லம் என்பதே பிற்காலங்களில் ஈழம் எனத் திரிந்து வழங்கிற்று. ஈழம் என்பதன் அடி எல் என மொழிநூலார் ஆராய்ந்து காட்டியுள்ளார்கள். எல்லம் என்னும் இடப்பெயர்களின் ஒற்றுமையால் சுமேரியர் ஒருபோது இலங்கைத் தீவினின்றும் சென்ற மக்கள் ஆவார்களோ? என்பது ஆராயத்தக்கதாகின்றது. முற்காலத்து இலங்கையும், தென்னிந்தியாவும் பிரிந்திருக்கவில்லை; நிலத்தால் இணைக்கப்பட்டிருந்தன.
சுமேரியரின் நாகரிகம், எகிப்தியருடையவும் சிந்துவெளித் தமிழர் களுடையவும் நாகரிகங்களை ஒத்த பழமையுடையது. ஓடக்கோன், உவண்ணா என்னும் தலைவர்களின் கீழ் சென்று பாரசீகத்திற் குடியேறிய மக்களே சுமேரியர் என அவர்களிடையே பழைய வரலாறு உண்டு. ஓடக்கோன் என்னும் சொல் ஓடங்களுக்குத் தலைவன் என்னும் பொருள் தரும் தமிழ்ப் பெயர். உவண்ணா என்னும் பெயர், துளுவ மக்களிடையே இன்றும் வழங்குகின்றது. அதற்குப் பூவின் அண்ணன் என்பது பொருள். சுமேரியர், தந்தைக் கடவுளை ஆண் என்றும், தாய்க் கடவுளை அம்மா என்றும் பெயர்கள் இட்டு வழிபட்டனர்.
சிந்துவெளித் தமிழரின் தந்தைக் கடவுள் ஆண்; தாய்க்கடவுள் அம்மன். சுமேரியாவிலே கிடைத்த முத்திரைகளில் சிலவற்றில் இமில் உள்ள இடபம் பொறிக்கப்பட்டிருக்கின்றன. இமிலுள்ள இடபங்கள் இந்தியாவில் மாத்திரம் காணப்படுவன. மக்கட் குலநூலார் தமிழரும் சுமேரியரும் ஒரே குலமுறையிலுள்ளோர் என ஆராய்ந்து கூறியுள் ளார்கள். வரலாற்று ஆசிரி யர்களிற் பலர், இவர்கள் இந்தியாவினின்றும் சென்று பாரசீகத்திற் குடியேறியவர்களென எழுதியுள்ளார்கள்.
பாபிலோனியர்
சுமேரியாவுக்கு வடக்கே குடியேறி வாழ்ந்த தமிழர் அக்கத்தியர் (Accadians) எனப்பட்டனர். இச் சொல் ஒருபோது அந்தப் பக்கத்தில் குடியேறியுள்ளவர்கள் என்னும் பொருளில் (அப் பக்கத்தார்) வழங்கி யிருக்கலாம். பின்னர் அவ் விடங்களில் சோழநாட்டினின்றும் வெளிப் போந்த ஒரு கூட்டத்தினர் சென்று தங்கி வாழ்ந்தனர். அவர்கள் அந் நாட்டுக்குச் சோழதேசம் எனப் பெயரிட்டனர். சோழதேசம் என்பதே கல்தேயா (Chaldia) எனத் திரிந்து பிற்காலத்து வழங்குவதாயிற்று. கல்தேயாவின் தலைநகர் ஊர். ஒரு காலத்தில் கல்தேயா, சுமேரியா என்னும் இருநாடுகளும், ஒருங்கே இணைக்கப்பட்டுப் பாபிலோனியா என்னும் பெயர் பெற்றன. பாபிலோன் நாடு, இந்திய மக்களால், பவேரு எனப்பட்டது. இந்திய வணிகர் பவேருவுக்குக் கடல்வழியாகச் சென்ற வரலாறுகள் பவேரு சாதகம் (கி.மு. 500) என்னும் புத்த நூலிற் காணப்படு கின்றது. பாபிலோனியர் பெரிய கோயிலமைத்து, அங்கே பகற்கடவுளை வழிபட்டார்கள். பகற் கடவுள் வழிபாட்டின் காரணமாகவே அவர்கள் நகருக்குப் பாபிலோன் என்னும் பெயர் உண்டாயிற்று. அவர்கள் இடப வாகனத்தின் மீது முத்தலை வேலைப் பிடித்து நிற்கும் தந்தைக் கடவுளை யும், சிங்க ஊர்தி மேலிருக்கும் தாய்க் கடவுளையும் வழிபட்டார்கள். கி.மு. ஆறாம் நூற்றாண்டில் பாபிலோனில் கடை வைத்து வாணிகம் பண்ணிய வ.ரா. என்பவரின் கடைக்கணக்குகள் எழுதிய களிமண் ஏடு அங்குக் கண்டுபிடிக்கப்பட்டது.
அசீரியர்
பாபிலோனுக்கு வடக்கே குடியேறி வாழ்ந்த தமிழர் அசீரியர் எனப்பட்டனர். அசீரியா, சீரியா முதலிய பெயர்கள் ஞாயிற்றுக் கடவுள் வழிபாடு காரணமாக சூரியன் என்னும் சொல்லினின்றும் பிறந்தன என்று வடல் (Waddell) என்னும் ஆசிரியர் கூறுவர். சூரியன் வடசொல் எனப் பலர் கருதுவர். சூரர மகளிர், சூர் மா முதல் எனப் பழந்தமிழ் இலக்கியங்களில் சூர் என்னும் சொல் பயின்று வருதலைக் காணுநர் சூரியன் ஆரியச் சொல் லாகுமோவென ஆராயற்பாலர். அசீரியர் ஞாயிற் றுக் கடவுளை அசுர் என்னும் பெயரால் வழிபட்டனர். அசீரியரின் பழைய கட்டட அமைப்புகள், திராவிட நாட்டுக் கட்டட அமைப்பு களை மிக ஒத்திருக்கின்றமையின், இவ் விரு மக்களும் ஒரு பொது உற்பத்தியைச் சார்ந்தோராவர் எனப் பழஞ் சரித்திர ஆராய்ச்சியாளர் கூறியிருக்கின்றனர். இம் மக்களின் நாகரிகம், கடவுள் கொள்கை முதலியன பெரிதும் பழந்தமிழரிடையே காணப்பட்டன போல்வன.
யூதர்
யூதர் தமிழ்நாட்டினின்றும் சென்று மத்தியதரைக் கடலின் மேற்குக் கரையோரங்களில் குடியேறி வாழ்ந்த மக்களாவர். கல்தேயாவின் தலைநகராகிய ஊரினின்றும் சென்று பாலத்தீன நாட்டிற் றங்கிய அபிரகாம் என்னும் கல்தேயரின் சந்ததியினரே யூதரும் அரேபியரும் என்னும் கன்ன பரம்பரை வரலாறு உளது. கல்தேயர் தமிழர்களே என்பது முன் கூறப்பட்டுள்ளது. பாலத்தீன மக்களின் பழக்கவழக்கங்கள், பழந்தமிழர் பழக்க வழக்கங்களை மிக ஒத்தன. அவர்கள் மரங்களின்கீழ் சிவலிங்கங்களை வைத்து வழிபட்டனர். ஆன் கன்றும் அவர்களால் வழிபடப்பட்டது. சிவன் என்னும் கடவுளை அவர்கள் சியன் (Cian) என்னும் பெயர் கொடுத்து வழிபட்டார்கள்: இறப்புப் பிறப்பால் உண்டாகும் தீட்டுக் காத்தனர். பூப்படைந்த பெண்கள் ஏழு நாள் வரையும் தனித்து உறைந்தார்கள். இறந்தவர்கள் பொருட்டு அவர்கள் முப்பது நாள் வரையும் துக்கம் கொண்டாடினர். ஒருவர் இறந்தால், அவர் இறந்த இடத்தில் ஏழு நாட்களுக்கு விளக்குக் கொளுத்தி வைத்து உணவு படைத்தார்கள். இறந்தவரின் மரணதினம், ஆண்டில் ஒருமுறை கொண்டாடப்பட்டது. அப்பொழுது விளக்குக் கொளுத்தி வைத்து, உணவு படைத்து விருந்து கொண்டாடப்பட்டது. இன்னும் இவை போன்ற யூதரின் பழைய வழக்கங்கள் இன்றும் தமிழ்நாட்டிற் காணப்படு வன போன்றன.
பினீசியர்
மத்தியதரைக் கடலின் மேற்குக் கரையிலே பாலத்தீனத்துக்கு மேற் பக்கத்தே குடியேறி வாழ்ந்த தமிழர் பினீசியர் எனப்பட்டார்கள். இவர் கள் குடியேறிய நாட்டில் ஈந்து என்னும் பனைகள் அதிகம். ஆதலினாலே அவர்கள் நாடு, பனைநாடு எனப்பட்ட தென்றும், பனைநாடு என்பதே உச்சரிப்பு வேறுபாட்டால் பினீசியா ஆயிற்றென்றும் வரலாற்று ஆசிரி யர்கள் சிலர் கருதுகின்றனர். பினீசியர் பரதர் எனவும் பட்டார்கள். இவர்கள் மொகஞ்சதரோ காலத்துக்குப் பின், மேற்கு ஆசியாவிற் சென்று குடியேறியவர்கள் ஆகலாம். இவர்கள் வழங்கிய எழுத்துப் பிராமி எழுத்தோடு ஒற்றுமை யுடையது. இவ் விரு எழுத்துகளின் நெருங்கிய ஒற்றுமை காரணமாகப் பினீசிய எழுத்துகளினின்றே பிராமி எழுத்துகள் தோன்றின என்று வரலாற்றாசிரியர்கள் ஒரு காலத்திற் கருதினர். பிராமி எழுத்து, மொகஞ்சதரோ எழுத்தின் திரிபு. இந்திய நாட்டினின்றும் வாணிகத்தின் பொருட்டுச் சென்று மேற்கு ஆசியாவிற் றங்கிய பினீசியர், பிராமி எழுத்துகளையே வழங்கினர். பினீசியரிடமிருந்து கிரேக்கரும், கிரேக்கரிடமிருந்து உரோமரும், உரோமரிடமிருந்து மற்றைய ஐரோப்பிய சாதியினரும் எழுத்தெழுதும் முறையை அறிந்தார்கள்.
பினீசிய மக்களின் பழக்கவழக்கங்களும், கடவுள் வழிபாட்டு முறைகளும் தமிழ் மக்களிடையே காணப்பட்டன போலல்லாமல் வேறு வகையாக இருத்தல் முடியாது. இவர்கள் பெரிய ஆலயங்கள் அமைத்து அவைகளில் சிவலிங்கங்களை வைத்து வழிபட்டனர். இடபமும் இவர் களின் வழிபாட்டுக்கு உரியதா யிருந்தது. இவர்களின் தலைநகராகிய தையர்ப் பட்டினத்தில் அமைக்கப்பட்டிருந்த பகலவன் கோயிலில் மரகதத்தினாலும், பொன்னினாலும் செய்யப்பட்ட இரண்டு சிவலிங் கங்கள் நிறுத்தி வழிபடப்பட்டன என்று ஹெரதொதசு ஆசிரியர் கூறி யுள்ளார். ஆற்றோரங்களில் தங்கிய மக்களைப் போல இவர்கள் தமது உணவின்பொருட்டு வேளாண்மையிற் றங்கியிருந்தாரல்லர்; உலகின் பல பாகங்களுக்கு மரக்கலங்களிற் சென்று வாணிகம் புரிந்தனர்.
சீரியர்
பினீசியாவுக்கு வடக்கே குடியேறி வாழ்ந்த தமிழர் சீரியர் எனப் பட்டனர். சூரியர் என்பதே சீரியர் என்று மாறிற்றென வடெல் என்னும் ஆசிரியர் கூறியுள்ளார். இம் மக்களின் வாழ்க்கை முறைகளும், கடவுட் கொள்கைகளும் பழந்தமிழரிடையே காணப்பட்டன போன்றன. சீரியாவிலே பால்பெக் என்னும் இடத்தில் அறுபது அல்லது எழுபது அடி உயரமுள்ள தனிக் கற்றூண்களை நிறுத்திக் கட்டப்பட்ட பெரிய பகலவன் கோயிலின் அழிபாடு இன்னும் காணப்படுகின்றது. எகிப்திய சமாதிகளைப் போல, இவ் வாலயமும் வியப்பளிப்பதா யிருக்கின்றது.
இம் மக்கள், முத்தலை வேலை ஒரு கையிலும், மழுவை மற்றொரு கையிலும் பிடித்து இடப வாகனத்தின் மீது வீற்றிருக்கும் தந்தைக் கடவுளையும், ஒரு கையிற் கேடகத்தையும் மற்ற கையிற் றண்டையும் ஏந்திச் சிங்க வாகனத்தின் மீதிருக்கும் தாய்க் கடவுளையும் முழுமுதற் கடவுளர்களாகக் கொண்டு வழிபட்டனர்.
சின்ன ஆசிய மக்கள்
தமிழரில் ஒரு கூட்டத்தினர் சின்ன ஆசியாவிற் சென்று குடியேறி னார்கள். அங்குக் கித்தைதி (Hittite) என்னும் ஒரு நாடு உண்டு. அங்கு வாழ்ந்த பழைய மக்களின் மொழி, தமிழுக்கு மிக இனமுடையது. இம் மக்களும் குல முறையில் மத்தியதரை மக்களைச் சார்ந்தவர்களே. இவர்களும் சீரிய மக்களைப் போல, ஞாயிற்றையும், இடப வாகனத்தின் மீது வீற்றிருக்கும் தந்தைக் கடவுளையும், சிங்க ஊர்தி மேல் வீற்றிருக்கும் தாய்க் கடவுளையும் முழுமுதற் கடவுளர்களாகக் கொண்டு வழிபட்ட னர். திராய் (Troy) நகரில் அகழ்ந்து கண்டுபிடிக்கப்பட்ட பழம்பொருள் களின் இடையே சிவலிங்கங்கள் பல காணப்பட்டன.
எற்றூஸ்கானியர்
பழைய இத்தாலியர் எற்றூஸ்கானியர் எனப்படுவர். அவர்கள் இந்து சமுத்திரப் பக்கங்களிலிருந்து வந்தவர்கள் ஆதல் வேண்டுமென வரலாற் றாசிரியர்கள் கூறியிருக்கின்றனர். திராய்(Troy) நகரினின்றும் வந்து குடியேறியவர்களே அவர்கள் என வடல் என்பார் கூறுவர். அவர்களின் பழக்க வழக்கங்களும், கடவுள் வழிபாட்டு முறைகளும், பழந் தமிழரிடையே காணப்பட்டன போல்வன. அங்குக் கிடைத்த பழைய மட்பாண்டங்கள், வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட தென் னிந்தியச் சமாதிகளிற் கிடைத்த அவ் வகைப் பழம்பொருள்களை மிக ஒத்துள்ளன. அவர்கள் சிவலிங்கங்களை வழிபட்டனர். இத்தாலியி லுள்ள பழைய கிறித்துவ ஆலயங்களில் சிவலிங்கங்கள் வெட்டப்பட் டிருத்தலை வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
கிரேத்தா மக்கள்
கிரேத்தா (Crete) மக்கள் தமிழ்நாட்டினின்றும் சென்று குடியே றிய மக்களேயாவர். இவர்கள் தமிழர் என்றே அழைக்கப்பட்டார்கள். என ஹெரதோதசு (Heradotus கி.மு. 480) என்னும் ஆசிரியர் குறிப்பிட் டுள்ளார். இவர்கள் பழக்க வழக்கங்களும், இந்தியக் குடாநாட்டின் மேற்குக் கரையிலுள்ள மலையாளரின் பழக்க வழக்கங்களும் ஒரே வகையின. கிரேத்தாவில் பெண்களுக்கு ஆடவரிலும் பார்க்கக்கூடிய அதிகாரம் இருந்தது. பிள்ளைகள் தாய் வழியால் அறியப்பட்டார்கள். இவர்கள் சியஸ் என்னும் கடவுளை வழிபட்டனர். சியஸ் என்பது சிவன் என்பதன் திரிபு. கிரேத்தாவில் சிவா என்னும் பெயருடைய பழைய இடமும் உண்டு. தமிழரின் சங்க நூல்களிற் கூறப்படும் ஆயரின் ஏறு தழுவுதல் போன்ற ஓவியங்கள், அங்கு அகழ்ந்து கண்டுபிடிக்கப்பட்ட கிரேத்தா அரசரின் பழைய அரண்மனைச் சுவர்களில் எழுதப்பட் டுள்ளன. இங்குக் காணப்பட்ட மட்பாண்டங்களும், இந்தியாவிற் காணப்பட்ட பழைய அவ் வகைப் பொருள்களை ஒத்துள்ளன. இவர்கள் மரங்களின் கீழ் சிவலிங்கங்களை வைத்து வணங்கியதோடு சங்கு, கொம்பு வாத்தியங்களையும் பயன்படுத்தினர்.
பாஸ்க்கு மக்கள்
பழைய ஸ்பெயின் மக்கள் பாஸ்க்குகள் எனப்பட்டனர். இம் மொழி தமிழுக்கு மிக நெருங்கிய உறவுடையது. சேர்யோன் மார்சல் என்பவர், “இரத்தத்தால் தமிழருக்கு மிக உறவுடைய மத்தியதரை மக்கள், தமிழ் மொழியையே ஒரு காலத்தில் வழங்கினார்களாகலாம்” என ஓரிடத்திற் குறிப்பிட்டுள்ளார். ஸ்பெயின் நாட்டில் இன்றும் சங்க நூல்களிற் காணப்படுவது போன்ற மாட்டுச் சண்டைகள் நடைபெறுவ துண்டு. பாஸ்க்குகள் மத்திய தரை மக்களைச் சேர்ந்தோராவர். இவர்கள் சிவலிங்கம் இடபம் முதலியவைகளை வழிபட்டனர். அமெரிக்க வெள்ளிக் காசில் (Dollar) காணப்படும் ஒன்று சிவலிங்கத்தின் அடை யாளம் என்றும், வளைவு எட்டின் பகுதி என்றும் சொல்லப்படுகின்றன. இந் நாணயக் குறியை ஸ்பானியரே ஆரம்பித்தனர். அது ஆதியில் தூண் நாணயம் (Pillar coin) எனப்பட்டது.
துருயிதியர் (DRUIDS)
பிரான்சிலும் பிரித்தனிலும் குடியேறியிருந்த துருயிதியர் என்னும் மக்கள் திராவிட மரபினரே யாவர். இங்கிலாந்திலே அறிவாளிகள் திராவிட் எனப்பட்டார்கள். அம் மக்கள் சிவலிங்கங்களையும், கல் வட்டங்களையும் வழிபட்டனர். பிரிந்தன் என்பது பாரத வருடம் என்பதன் திரிபு (Waddell) பினீசியரே இங்கிலாந்திற் குடியேறிப் பிரித் தானியர் எனப்படுவாராயினர்.
அமெரிக்கர்
பழைய அமெரிக்கரும் இந்திய நாட்டினின்றும் சென்று குடி யேறிய தமிழர்களே யென்றும், அவர்களின் மொழி, தமிழைப் போலவே ஒட்டுச் சொற்களை உடைய தென்றும், ஒட்டுச் சொற்களுடைய மொழிகள் எல்லாவற்றுக்கும் தொடக்கம் ஒன்று என்றும், அவர்கள் உறவின்முறையினரை அழைக்கும் முறை, தமிழ்நாட்டிற் காணப்படுவது போலவே உள்ளதென்றும், ஆர்தன் (Ortan) என்னும் ஆசிரியர் நன்கு ஆராய்ந்து விளக்கியுள்ளார்.
இக் கருத்துகள் புதியனவல்ல
இக் கருத்துகள் புதியனவல்ல. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் காலத்திலேயே இக் கொள்கைகள் நன்கு ஆராய்ந்து அறியப் பட்டிருந்தன. அக் கருத்துகளைத் திரட்டித் தமிழ் இசையைப் பற்றி நூல் எழுதிய ஆபிரகாம் பண்டிதர், தமது கருணாமிருத சாகரம் என்னும் நூலகத்தும் கூறியுள்ளார். அது வருமாறு:
“அதன் முன் தமிழ்நாட்டிலிருந்து மெசொபெதோமியா, பாபி லோன், கல்தேயா, ஆசியா முதலிய விடங்களுக்குப் போய்க் குடியேறி இராச்சியங்களை ஸ்தாபித்துப் பிரபலமாய் ஆண்டு கொண்டிருந்த தமிழர்கள் மிகுந்த நாகரிகமுடையவர்களாய்ப் பல பல கலைகளிற் றேர்ந்தவர்களாய்ப் பற்பல சாதியினராய் அழைக்கப்பட்டார்கள் என்றும் அவர்கள் பேசிய தமிழ்மொழி, எபிரேய, கல்தேய, பாபிலோனிய, அசீரிய, சுமேரிய, பாரசீக, பேர்குயிய, பிராகிருத, சித்திய, ஆங்கிலோ, செர்மனிய, சமக்கிருத பாசைகளில் மிக ஏராளமாகக் கலந்து வருவத னால் தமிழ் மக்களே மிகப் பூர்வ மக்களாய் உள்ள குடிகளென்றும், அவர்கள் பல கலைகளிலும் சங்கீதத்திலும் தேர்ந்திருந்தார்களென்றும், அவர்களிருந்த நாடு கடலால் கொள்ளப்பட்ட காலத்தில் தங்குதற்குச் சமீபத்திலுள்ள ஆசியா, சின்ன ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஒசினியா என்னுங் கண்டங்களின் கரையோரங்களில் தங்கினார்க ளென்றும், தப்பிப் பிழைத்தவர்களின் கலைகளின் தேர்ச்சிக்கேற்ற விதமாய் அங்கங்கே சங்கீதம், சிற்பம், சோதிடம் முதலிய அருங்கலைகள் விருத்தியாகிக் கொண்டு வந்தனவென்றும், நாம் காண்பதற்கு உதவி யாகச் சில சரித்திரக் குறிப்புகளும் சொல்லியிருக்கிறேன். சுருக்கமாகச் சொல்லுமிடத்துச் சரித்திர காலம் ஆரம்பிப்பதற்கு வெகு காலத்திற்கு முன்னதாகவுள்ள லெமூரியா நாடு, தமிழ்நாடாயிருந்த தென்றும் அதில் வசித்து வந்த வர்கள் தமிழர்களா யிருந்தார்களென்றும் லெமூரியாவிற் பேசப்பட்டு வந்த பாசை தமிழாயிருந்ததென்றும் அது இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழாக வகுக்கப்பட்டு இலக்கண வரம்புடன் மிகுந்த தேர்ச்சி யுடையதா யிருந்ததென்றும், அதன்பின் உண்டான பிரளயங்களில் அந் நாடு, கொஞ்சங் கொஞ்சமாகக் கடலால் விழுங்கப் பட்டபின், பல பல கலைகளும் இசைத் தமிழைப் பற்றிச் சொல்லும் அரிய நூல்களும், கொஞ்சங் கொஞ்சமாக மறைந்து, தற்காலம் அனுபவத்திலிருக்கும் சொற்ப முறையே மிஞ்சியிருக்கிற தென்றும் தெளிவாக அறிவோம்.”
“உலகத்தவர் எவராலும் இதன்மேல் நுட்பமாய்ச் சொல்லமுடியா தென்று கருதும்படி மிகுந்த தேர்ச்சி பெற்ற சங்கீத நூலைப் போலவே, சிற்பம், சோதிடம், கணிதம், வைத்தியம், வாதம், யோகம், ஞானம் முதலிய அருங் கலைகளும், மற்றும் பாசைகளில் திருப்பப்பட்டு வந்திருக்கின்றன வென்றும் நூலாராய்ச்சி செய்யும் அறிவாளிகள் காண்பார்கள்.”
பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்களது கருத்து இவ் வகையிற்று. ஆகையினாலேயே அவர்கள், “சதுமறை ஆரியம் வருமுன் சகமுழுதும் நினதாயின் - முதுமொழி நீயனாதி என மொழிகுவதும் வியப்பாமே” என முழங்குவராயினர்.
ஆரியர்
மத்தியதரை நாடுகளிற் குடியேறியிருந்த மக்களில் ஒரு பிரிவினர், வடக்கே குளிர் மிகுந்த நாடுகளிற் சென்று தங்கி உடல் வெண்ணிறம் ஏறப் பெற்றனர். ஆரியர் என்னும் மக்கட் குழுவினர் வடதுருவ நாடுகளில் வாழ்ந்து கொண்டிருந்தவர்களாவர் எனப் பாலகங்காதர திலகர் நன்கு ஆராய்ந்து காட்டியுள்ளார். அவர்கள் நூல்களில் தேவர் எனக் கூறப்படு வோர் ஆரியரே யாவர். தேவர்களுக்கு இரவு ஆறு திங்கள்; பகல் ஆறு திங்கள் எனப் புராணங்கள் புகலும். துருவ நாடுகளில் ஆறு மாதம் இரவும், ஆறு மாதம் பகலும் உண்டு என்பதைப் பள்ளிச் சிறுவரும் நன்கு அறிவர். அவர்கள் மத்திய ஆசியாவிற் றங்கி மாட்டு மந்தைகளை மேய்த்து அவை தரும் பயன்களைக் கொண்டு வாழ்ந்தனர். ஒரு போது நீண்டகாலம் மழை பொய்த்தமையால், அவர்களின் ஆடு மாடு முதலியன மேய்வதற்குப் புற்கிடைப்பது அருமை ஆயிற்று. ஆகவே அவர்கள் பல திசைகளை நோக்கிக் கூட்டங் கூட்டமாகச் சென்றனர். அவ்வாறு சென்றவர்களுள் ஒரு கூட்டத்தினர் இந்தியாவின் வடமேற்கே உள்ள கைபர் கணவாய் வழியாக இந்தியாவை அடைந்தனர். இது இற்றைக்கு நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய (கி.மு. 2000) நிகழ்ச்சி.
ஆரியருக்கும் தமிழர்களுக்கு மிடையிற் போர்
ஆரியருக்கும் தமிழர்களுக்கு மிடையில் நீண்ட காலம் போர் நடந்தது. இறுதியில் ஆரியர் பஞ்சாப் மாகாணம் முழுவதையும் கைப்பற் றினர். இதற்கிடையில் ஆரியருக்கும் தமிழருக்குமிடையில் திருமணக் கலப்பு உண்டாயிற்று. இக் கலப்பாற் றோன்றிய மக்கள் தம்மை ஆரியர் எனக் கூறிக் கொண்டனர். அவர்கள் கங்கைச் சமவெளிகள் வரையிற் சென்று தமிழர் இராச்சியங்களைக் கைப்பற்றினர். விந்திய மலைக்கு வடக்கேயுள்ள நாடு, ஆரிய வர்த்தம் எனப்பட்டது.
ஆரியர், தமிழரின் கொள்கைகளைப் பின்பற்றுதல்
ஆரியர் இந்திய நாட்டை அடைந்தபோது தாழ்ந்த நாகரிக நிலையில் இருந்தனர். உரோமர், கிரேக்கர்களைப் பின்பற்றி நாகரிகத்தில் உயர்ந்தது போல, ஆரிய மக்களும் அரசியல், சமயம் முதலிய கொள்கை களில் தமிழரைப் பின்பற்றி உயர்வடைந்தனர்.
மக்கட் குலங்கள்
இவ் வுலகிலே படைப்பினால் வேறுபட்டவர்களோ என்று ஐயுறும்படியான வெவ்வேறு நிறமும் தோற்றமும் உடைய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதன் காரணம் ஆராயற்பாலது. ஆதியிற் றோன்றி வாழ்ந்த மக்கள், கறுப்பு அல்லது கபில நிறமுடையர். பின்பு அவர்கள் வெவ்வேறு வெப்ப தட்பமுடைய நாடுகளிற் சென்று தங்குவாராயினர். வெப்பதட்ப நிலை மக்களின் நிறத்தை மாற்றத்தக்கது. செய்யும் தொழில், உண்ணும் உணவு முதலியவைகளாலும் உடலில் சிறு மாற்றங்கள் உண்டாகத்தக்கன. குளிர் மிகுந்த துருவ நாடுகளில் வாழ்ந் தோர் வெண்ணிற மடைந்தனர். துருவ நாடுகளுக்குத் தெற்கே நடுக்கோடு வரையிலும் வாழ்ந்த மக்கள், படிப்படியே வெண்மை குறைந்து கருமை மிகுந்து இருந்தனர். நிறத்தினால் வெள்ளை, கறுப்பு, மஞ்சள் என்று பிரித்தறியப்படும் வெவ்வேறு மக்கட் குலங்கள் தோன்றின. ஒரு மக்கட் குலத்தினர், வேறு மக்கட் குலத்தினர்களோடு கலக்கும்போது புதிய குலத்தினர் தோன்றுவது இயல்பு. இதற்கு எடுத்துக்காட்டு, யூரேசிய ராவர். இவ் வுலகில் ஆதியிற் றோன்றிய மக்கட்குலம் ஒன்றே, நாளடை வில் பல மக்கட் குலங்களாகப் பிரிந்தது என்பது மக்கட் குலநூல் ஆராய்ச்சியால் தெளிவுறுகின்றது.
ஹெரஸ் பாதிரியார், இந்திய வரலாற்று இதழில் (INDIAN HISTORICAL REVIEW - 1939) எழுதியிருப்பதன் சுருக்கம் பின்வருமாறு:
“ஆரியர் இந்திய நாட்டுக்கு வருகின்ற காலத்தில் தமிழர் சிறிதும் நாகரிகமில்லாதவராய்க் காட்டு மக்களைப் போல இருந்தார்கள் எனப் பதினைந்து ஆண்டுகளுக்குமுன் சிலர் கருதுவாராயினர். அதனை வரலாறு தொடர்பான எத்தகைய ஆதாரங்களையுங் கொண்டு நாட்டு தல் முடியாது. திராவிட அரசர் பலரும், திராவிடக் கூட்டத்தினர் சிலரும், காரணமின்றித் தம்மைத் திராவிடர் எனக் கூறிக்கொள்ள நாணி, ஆரியரென்று கூறிக் கொண்டனர். சிந்துவெளியிற் கண்டுபிடிக்கப்பட்ட மொகஞ்சதரோ என்னும் திராவிடரின் பண்டைய நகரம் கண்டு பிடிக் கப்பட்ட பின்பு, ஆர்.டி. பானர்ஜி (R.D. Banerji) என்பார் திராவிடர், இந்தியாவைப் புதிதாக வந்தடைந்த ஆரியரிலும் பார்க்க, மிக உன்னத நாகரிகம் படைத்திருந்தார்கள் எனச் சொல்லி, ஆரிய உணர்ச் சிக்கு எதிராக அறைகூவினார்.
“சுமேரியரின் ஆதியிருப்பிடம், அவர்களின் கன்ன பரம்பரைக் கதையின்படி கிழக்கில் உள்ளது. கி.மு. முதலாம் நூற்றாண்டில் விளங்கிய பெறொசஸ் (Berosus) என்னும் பாபிலோனியக் குரு சுமேரியாவில் நாகரிகத்தையும் எழுத்தெழுதும் முறையையும் கொண்டுவந்து பரப்பிய பெருமக்கள் இருவர் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார். அவர்களுள் ஒருவரின் பெயர் உவண்ணா. அதற்கு மலரின் அண்ணன் என்று பொருள். உவண்ணா என்பது கிரேக்கரின் உச்சரிப்பு முறையில் ஒஅன்னிஸ் எனத் திரிந்து வழங்கிற்று. உவண்ணா என்னும் பெயர் துளுவ மக்களிடையே இன்றும் காணப்படுகின்றது. மற்ற பெயர் ஓடக் கோன். இது ஓடங் களுக்குத் தலைவன் என்னும் பொருளில் தமிழில் வழங்குகின்றது.
கிறித்துவ வேதத்தின் பழைய ஏற்பாடு, நோவாவின் சந்ததியினர் பலரைப்பற்றிக் கூறியபின், ‘கிழக்குத் திசையினின்றும் வந்து அவர்கள் சென்னான் (சுமர்) என்னும் சமவெளியில் வாழ்ந்தார்கள். அவர்களுள் ஒவ்வொருவனும் தனது அயலவனை நோக்கிக் களிமண்ணிற் கல்லரிந்து சூளை இடுவோம் என்று சொன்னான். அவர்கள் கல்லுக்குப் பதில் செங்கல்லையும், களிமண்ணுக்குப் பதில் சுண்ணாம்பையும் பயன்படுத்தி னார்கள்’. விவிலிய வேதத்திற் கூறப்படும் அழகிய கட்டடங்கள் மொகஞ் சதரோக் கட்டடங்கள் போன்றன. சுமேரியருக்கு முற்பட்ட மக்கள் களிமண்ணாற் கட்டி வாழ்ந்த குடிசைகள், செங்கற் கட்டடங்களில் வாழ்ந்த மக்களுக்கு (இந்தியாவினின்றும் வந்த மக்களுக்கு) விரும்பத் தக்கனவா யிருக்கவில்லை. மொகஞ்சதரோ மக்கள் சுமேரியாவோடு மாத்திரம் தொடர்புடையவர்களா யிருந்தார்களல்லர். மொகஞ்சதரோ விற் கிடைத்த முத்திரை ஒன்றில் மாட்டுச் சண்டையைக் காட்டும் படம் காணப்படுகின்றது. இவ் வகை மாட்டுச் சண்டை இப்பொழுது ஸ்பெயின் நாட்டில் நடைபெறுகின்றது. இவ் வகை மாட்டுச் சண்டை களைக் குறிக்கும் ஓவியங்கள் கிரேத்தாவிலுள்ள பழைய அரண்மனைச் சுவர்களில் வரையப்பட்டிருக்கின்றன. கிரேத்தா மக்களும் ஸ்பெயின் மக்களும் மத்தியதரை மக்கட் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனப்படுகின் றனர். இக் கால மக்கட் குலநூலார், திராவிடரும் இக் கூட்டத்தைச் சேர்ந் தவர்கள் எனக் கூறுகின்றனர். இக் கொள்கை இப்பொழுது மொகஞ்சத ரோவில் நடத்தப்பட்ட பழம்பொருள் ஆராய்ச்சியால் வலியுறுகின்றன. பழைய தமிழ் நூல்கள் ஏறு தழுவுதலைப் பற்றிக் கூறு கின்றன. இது முன்பு குறிக்கப்பட்ட மொகஞ்சதரோ முத்திரையோடும், கிரேத்தாவி லுள்ள ஓவியங்களோடும் ஒப்பிட்டு ஆராயத்தக்கது.
“இந்தியாவை அடைந்தபோது, ஆரியர் எழுத்தெழுத அறியா திருந்தனர். அவர்கள் தமது பகைவர்களாகிய தாசுக்களின் எழுத்து களையே பயன்படுத்தினர். அவ் வெழுத்து இரு வகையாக வளர்ச்சி யடைந்தது. வட இந்தியாவிலுள்ள ஆரியரும், ஆரியராக்கப்பட்ட திராவிடரும் அதனை ஒரு முறையில் விருத்தி செய்தனர். தென்னிந்தி யாவிலும் இலங்கையிலும் அது இன்னொரு முறையில் வளர்ச்சியுற்றது.
“மொகஞ்சதரோவிற் கிடைத்த ஆயிரத் தெண்ணூறு பட்டையங் களைப் படித்த எனக்கு, மத்தியதரை நாடுகளிலிருந்து மக்கள் இந்தி யாவை அடைந்தார்கள் என்னும் கொள்கை நேர்மாறாக வுள்ளதென நன்கு தெளிவாகின்றது. இவ் விரு நாடுகளின் எழுத்து வளர்ச்சி, இரு நாடுகளின் சமயம், அரசரின் பட்டப் பெயர் (சந்திர குலம், சூரிய குலம் போல்வன) இராசிகளின் எண், பெரொசஸ் என்பவரின் பழைய வரலாற்றுக் குறிப்பு, விவிலிய வேதத்தின் ஆதி ஆகமத்தில் (Gen. 11: 1-5) கூறப்படுவது ஆகியன எல்லாம், மக்கள் இந்தியாவிலிருந்து மத்தியதரை நாடுகள் ஆப்பிரிக்கா, சைபிரஸ், கிரிஸ், இத்தாலி, ஸ்பெயின் முதலிய நாடுகளிற் குடியேறி, ஐரோப்பாவிலே பிரிட்டன் தீவுகள் வரையிற் பரவினார்கள் என்பதை வலியுறுத்துகின்றன. இவர்கள் சென்ற பாதை, இலங்கை முதல் அயர்லாந்து வரையில் “தொல்மென்” (Dolmen) என்றும் மூன்று கற்களால் எடுக்கப்பட்ட கட்டடங்களாலும், நிறுத்தப்பட்ட தனிக் கற்றூண்களாலும் தொடர்பாக அடையாளப்படுத்தப்பட்டிருக் கிறது. மத்தியதரைச் சாதியினர் என்று மக்கட் குலநூலாராற் கொள்ளப் படும் ஊக்கமும் நாகரிகமுமுடைய திராவிட மக்கள், காரண மின்றித் தாழ்வாகக் கருதப்படுவாராயினர்.”
பார்ப்பனர் யார்?
தமிழ்மக்கள் வரலாற்றில், பார்ப்பனர் யார்? என்பது நன்கு ஆராய்ந்து தெளிதற்குரிய பொருளாகும். இஞ்ஞான்று பார்ப்பனர், தம்மை ஆரியர் எனக் கூறி வருகின்றனர். பொதுமக்களும் அவர்களை அவ் வினத்தினர் எனவே கருதி வருகின்றனர். இதனைக் குறித்து வரலாற்று முறையில் ஆராய்வோம்.
நம் இந்திய நாட்டிலே கன்னியாகுமரி முதல் இமயம் வரையில், ஒருகால் வாழ்ந்தோர் கலப்பற்ற தமிழர்களென்பது வரலாற்று நூலார் எல்லார்க்கும் ஒப்ப முடிந்த முடிவு. இற்றைக்கு நாலாயிரம் ஆண்டு களுக்கு முன் ஆரியர் என்னும் நிறத்தால் வேறுபட்ட புதிய சாதியினர் இந்திய நாட்டை அடைந்தார்கள் என்பது முன் ஓரிடத்திற் கூறப்பட் டுள்ளது. அவர்கள் சில காலம் கலப்பின்றி வாழ்ந்து, பின்பு தமிழ் மக்களோடு கலந்து ஒன்றுபட்டனர். இந்திய நாட்டின் அயலே நின்று வந்த ஆரியரிலும், இந்திய நாட்டில் வாழ்ந்துகொண்டிருந்த தமிழர் எண்ணில் மிகப் பலராவர். தமிழர் பெருந்தொகையினராகவே ஆரியர் தமிழ் வெள்ளத்துள் மறைந்துபோயினர். ஆயினும் கலப்பினாற் றோன்றிய மக்கள் தம்மை ஆரியர் எனக் கூறிக் கொண்டனர். இருவேறு மக்கள் ஒன்றுபட்டுக் கலக்கும்போது மொழி, மதம், பழக்கவழக்கம் ஆகியவை களும் கலப்புற்றுச் சில புதிய மாறுதல்கள் உண்டாவது இயல்பு. ஆரியர் இந்தியாவை அடைந்தபோது, மந்தை மேய்ப்பவர்க ளாகவும் தாழ்ந்த நாகரிகமுடையவர்களாகவும் இருந்தனர். தமிழர் எல்லா வகையிலும் சிறந்து உயர்ந்த நாகரிகம் உடையவர்களாய் விளங்கி னார்கள். நாகரிகத் திற் றாழ்ந்தவர்கள் நாகரிகத்தில் உயர்ந்தவர்களைப் பின்பற்றுதல் எல்லாக் காலங்களிலும் காணப்படும் இயல்பு.
ஆரிய மக்களின் மொழி, மதக் கொள்கை முதலியன சிறிதுசிறிதாக மாற்றமடைந்தன. ஆரியர் ஆதியில் வழங்கிய மொழி பிராகிருதம் எனப் படும். இதற்கு இலக்கண வரம்பு இல்லை. இம் மொழி வடக்கே வழங்கிய தமிழோடு கலந்து, பல மொழிகளாகப் பிரியத் தொடங்கியபோது பிராகிருதப் பற்றுடையார் அம் மொழிக்கு இலக்கணஞ் செய்து, அதனைச் சீர்திருத்தஞ் செய்தனர். அவ்வாறு செய்யப்பட்ட மொழி சமக்கிருதம் எனப்பட்டது. சமக்கிருதம் என்பதற்கு நன்றாகச் செய்யப் பட்டது என்பது பொருள். இம் மொழி இக் காலத்திற் போல, இலக்கிய மொழியா யிருந்ததே யன்றி மக்களால் ஒருபோதும் பேசப்படவில்லை. 1சமக்கிருதத் தின் வழி வந்தன என்று கருதப்படும் வடநாட்டு மொழிகள், அமைப்பில் தமிழை ஒத்துள்ளன வென்று மொழியாராய்ச்சியாளர் கூறுகின்றனர். ஒரு மொழியின் இலக்கணத்தை, ஒரு ஆற்றின் இரண்டு அணைகளுக்கும், சொற்களை அவற்றின் இடையே ஓடும் நீருக்கும் ஒப்பிடலாம். சொற்கள், காலத்துக்குக் காலம் மாறுபடலாம். ஆனால் இலக்கணம் மாறுபடாது. ஆகவே, வடக்கே வழங்கிய தமிழ், பிராகிருதச் சொற்கள் பலவற்றையும் அவற்றின் சிதைவுகளையும் ஏற்றுக்கொண்டு, இப்பொழுது வடநாட்டில் வழங்கும் பல மொழிகளாக மாறியுள்ள தென்பது நன்கு தெளிவுறு கின்றது.
மொழியில் இவ் வகை மாற்றம் உண்டானது போலவே, ஆரியரின் சமயத்திலும் பல மாற்றங்கள் உண்டாயின. ஆரியர், இந்தியாவுக்கு வெளியே வாழ்ந்த காலத்தில், மந்தை மேய்ப்பவர்களாய் அலைந்து திரிந்தனர். ஆகவே அவர்கள் நிலையான கோயில்கள் அமைத்துக் கடவுளை வழிபட முடியவில்லை. அவர்கள் தாம் சென்ற இடங்களில் கடவுளுக்குப் பலி செலுத்தி வந்தார்கள். இந்தியாவை அடைந்த பின்பும், ஆரியர் இவ் வழக்கைக் கைக்கொண்டு வந்தனர். அவர்களுள் ஒரு காலத்தில் வருணப் பிரிவோ, சாதிப் பிரிவோ இருக்கவில்லை. குடும்பத் தலைவன் கடவுளருக்குப் பலி செலுத்தி வந்தான். அரசர் செய்யும் வேள்விகளில் பலி செலுத்தும் புரோகிதர் சிலர் இருந்தனர். ஆரியர் நாடுகளை வென்று பெரிய அரசர்களானபோது, வேள்விகள் ஆடம் பரங்களுடன் செய்யப்பட்டன. அக் காலத்தில் பிராமணங்கள் என்னும் வேள்விக் கிரியைகளைக் கூறும் நூல்கள் எழுதப்பட்டன. அக் கிரியை முறைகள், இருக்கு வேத காலம் முதல், பிற்காலம் வரையில் தமிழரின் ஆகம முறைகளைப் பின்பற்றிச் சிறிது சிறிதாக வளர்ச்சியடைந்தன வாகும். பிராமணங்களைப் பலர் பயின்றனர். பிராமணங்களில் வல்லுநர் பிராமணர் எனப்பட்டனர். அவர்கள் கோயிற் குருமாரல்லர் என்பது நன்கு கருத்திற் பதித்துக்கொள்ள வேண்டியது. வேள்விச்சாலைகளில் பிராமணருக்குத் தக்க கைம்மாறு கிடைத்தது. அரசன் அவர்களை நன்கு மதித்தான். இவைகளால் தூண்டப்பட்டுப் பலர் பிராமணங்களைப் பயின்றனர். ஒரே தொழில் புரியும் மக்கள், ஒரு இடத்தில் அளவுகடந்து பெருகுவார்களானால், அவர்கள் வெவ்வேறு இடங்களிற் சென்று தமது தொழிலைப் புரிந்து வாழ்வது இயல்பு.
பிராமணரில் பலர் தென்னாடு போந்தனர். அவர்களின் வருவாய்க்கு வேள்விகள் இன்றியமையாதன. ஆகவே அவர்கள் தமிழ்நாட்டு அரசரை அணுகி, அவர்களைத் தம் மதத்துக்குத் திருப்ப முயன்று வந்தார்கள். முற்காலங்களில் புதிய சமயங்களைப் பரப்புவோர், முதலில் அரசனையே தமது சமயத்துக்குத் திருப்புவது வழக்கம். இது கூன்பாண்டியன் சைன மதத்தைக் கடைப்பிடித்தது போன்ற வரலாறு களை நோக்கி அறிக. தமிழ்நாட்டு அரசர் சிலர், அவர்கள் மதத்தைத் தழுவி வேள்விகள் புரிந்தனர். பிராமணருக்கு அரசனின் நன்மதிப்பும், செல்வாக்கும் உண்டாயின.
தமிழ்மக்கள், ஆலயங்கள் அமைத்து அங்குக் கடவுளை வழிபட்டு வந்தார்கள். ஆலயங்களைக் கண்காணிப்பவர் பார்ப்பார் எனப்பட்டனர். ஆதியிலே அரசனே பார்ப்பானாக விருந்தான். பிற்காலங்களில் உயர்ந்த மரபிலுள்ளோர் பார்ப்பாராக இருந்தனர். பார்ப்பார் ஐயர் எனப்பட்ட னர். ஐயன் என்பது கடவுளைக் குறிக்க வழங்கும் பெயர்களுள் ஒன்று. ஐயனின் பணிவிடைகளைச் செய்தமையால் பார்ப்பார் ஐயர் எனப்பட் டார்கள். ஐயர் என்பதற்கு ஐயனுடைய வேலையாட்கள் என்பது பொருள். ஐயர் என்னும் சொல் மேற்கு ஆசிய நாடுகளிலும் கடவுளைக் குறிக்க வழங்கிற்று. ஐயர்மார் பொது மக்களின் புரோகிதருமாக இருந்து வந்தனர்.
வடநாட்டினின்றும் வந்த பிராமணருக்குச் செல்வாக்கு உண் டாகவே, அவர்கள் தமிழ்ப் பார்ப்பனர்களிடையே திருமணக் கலப் புடையராயினர். வேள்விகள் புரியும் பிராமணருக்கு நன்மதிப்பும் வருவா யும் உண்டாவதை நோக்கிப் பார்ப்பனரும் பிராமணங்களைப் பயின்று அரசருக்கு வேள்விகள் செய்யும் புரோகிதராயினர். அவர்கள் தம்மை ஆரியர் எனச் சொல்லிக் கொண்டதோடு தமக்குச் சமய முதல் நூல்கள் இருக்கு முதலிய நூல்கள் எனவும், தமக்குரிய மொழி, சமக்கிருத மென்றும் சாற்றுவாராயினர். பார்ப்பார் தமது மொழி ஆரியமெனக் கொண்ட காலத்து, அரசர் ஆணையினால் அது சமயமொழி யாக்கப் பட்டுத் திருக்கோயில்களிலும் நுழைவதாயிற்று. பார்ப்பனரிடையே நிற வேறுபாடு பலவாகக் காணப்படுதல் வடநாட்டு மக்களோடு கலந்த கலப்பின் அளவைக் காட்டுவது. இவர்களின் இயல்பை இந்திய நாட்டு யூரேசியர்களோடு ஒப்பிடலாம். பார்ப்பனரல்லாதாரிடையும் பிராமணர் கலப்புடையர்1. ஆரியரல்லாத மந்திர வித்தைக்காரரும் பிற திராவிடரும் பிராமணரானார்கள். தாழ்ந்த வகுப்பினரிடையே பிராமணர் பெண் களை மணந்து கொண்டார்கள் என்பதற்குப் பல சான்றுகள் உண்டு.
வடமொழி தென்மொழிக் கலப்பு
பார்ப்பனர் தம்மை ஆரியர் எனக் கொண்டு வடமொழியைப் பயின்று வந்தமையாலும், சமக்கிருதம் சமயமொழி யாயினமையாலும், சைன புத்த மதத்தினர் தத்தம் மதங்களைத் தென்னாட்டில் நுழைக்க முயன்றபோது, அவர்களுடன் எதிர்த்து வாதம் புரியும்பொருட்டுத் தமிழறிஞர் வடமொழியைப் பயின்று அம் மொழியில் எழுதப்பட்டுள்ள புத்த சைன நூல்களைப் பயின்றமையாலும் தென்னாட்டில் வட மொழிப் பயிற்சி அதிகமாயிற்று. இதனால் சமயத் தொடர்பான வட மொழிச் சொற்கள் பல தமிழிற் புகுந்து வழங்கலாயின. தமிழ்ப் புலவர்கள் தாம் இயற்றும் நூல்களில் வடசொற்கள் புகாமல் இயன்றளவு தவிர்த்து வந்தனர். பார்ப்பன வகுப்பினர், இம் முறையைக் கையாள வில்லை. அவர்கள் தமிழுடன் வடமொழிச் சொற்களைப் பெரிதுங் கலந்து வழங்குவாராயினர். அவர்களால் கடவுள் மொழி எனக் கருதப் பட்ட சமக்கிருத மொழிச் சொற்கள் தமிழுடன் கலப்பதனால் தமிழுக் குக் கடவுள் மணம் ஏறும் என அவர்கள் நினைத்தார்கள் போலும்! ஒரு மொழிக்குரிய சொற்களை இன்னொரு மொழியிற் கொண்டு வழங்க வேண்டுமாயின், அவை அம் மொழிக்கேற்ற ஓசைப்படி மாற்றி அமைக் கப்படுதல் வேண்டும்; இல்லையேல் அவைகளை இன்னொரு மொழியிற் சேர்க்காது தவிர்த்தல் வேண்டும். இவ் விதி கருத்திற் கொள்ளப்படாது, வட சொற்கள் வடமொழி உச்சரிப்பு முறையோடு தமிழில் வந்து வழங்கத் தலைப்பட்டமையாற் போலும், தொல்காப்பியனார் வடசொற் கள் தமிழில் வந்து வழங்குங்கால் வடவெழுத்தை நீக்கி வழங்கப்படுதல் வேண்டும், (வடசொற் கிளவி வடவெழுத்தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே) என ஆணை இடுவாராயினார்.
தமிழ், தமது சொந்த மொழியன் றெனவும், சமக்கிருதம் தமது சொந்த மொழி யெனவும் கருதினமையால், பார்ப்பனர், தமிழைப் பிறமொழிக் கலப்பின்றித் தூய்மையாக வழங்குதற்கு அக்கறை கொள்ள வில்லை! தாம் அபிமானித்த வடமொழிச் சொற்களைப் பெரிதும் தமிழிற் கலந்து வழங்குவா ராயினர். இது எவ்வளவு தூரம் சென்றிருந்த தென்பதைப் பெருந்தேவனார் பாரத வெண்பாவின் இடையிடையே காணப்படும் மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்ட வசன பாகங்களை நோக்கி அறிக.
தமிழ்ப் புலவர்கள் இதற்குப் பெரிதும் ஆற்றாராய் வருத்தமுற்றுக், காலிற்றைத்த கொடு முட்களைக் களைவது போலத் தமிழின் இனிய ஓசைக்கு ஏலாத வடமொழிச் சொற்களை நீக்கியும், அங்ஙனம் நீக்கு வதற்கு இயலாது மக்கள் ஆட்சியில் வந்துள்ள சொற்களைத் தமிழ் இயைபுக் கேற்ப மாற்றியும் வந்தனர்.
பிராமணர் தென்னாட்டுக்கு வந்து செல்வாக்குப் பெற்ற காலம் முதல் தமிழ்நாட்டில் வடமொழிக் கட்சி, தென்மொழிக் கட்சி என இரு கட்சிகள் இருந்து வருகின்றன. வடமொழிக் கட்சியினர், தமிழினும் வடமொழி உயர்ந்த தென்றும், அது கடவுள் மொழி என்றும், அதினின் றுமே தமிழுக்கு எழுத்து முதலியன வந்தன வென்றும் வாதிப்பர். தமிழ்க் கட்சியினர், தமிழ் மிக இனிமை யுடைய தென்றும், அதில் பாடப்பட்ட தெய்வீகப் பாடல்கள் புதுமைகள் பல விளைத்தன வென்றும், தமிழ் வடமொழியிலும் பார்க்க உயர்ந்த தென்றும் கூறுவர். முற்காலத்தில் வரலாற்று ஆராய்ச்சி அறியப்படாததா யிருந்தமையின் அவர்கள் வடமொழி தென்மொழிகளின் உயர்வை நாட்டுதற்கு வரலாறு தொடர் பான ஆதாரங்களை அறிந்திருக்கவில்லை. வரலாற்று ஆராய்ச்சி மிகுந் துள்ள இக் காலத்திலோ தமிழ்மொழியின் போக்கைப் பின்பற்றியே இன்றைய சமக்கிருத மொழி நிலவுகின்றதென்றும், அம் மொழிக்குரிய எழுத்து முதலியன தமிழிலிருந்தே கடன் வாங்கப்பட்டன வென்றும், போதாயனர், கார்த்தியாயனர் சாணக்கியர், இராமானுசர், மாதவர், சங்கரர், நீலகண்டர் போன்ற தமிழர்களே அம் மொழியைப் பயின்று அம் மொழியில் அரிய நூல்களைச் செய்து அதனையும் வளப்படுத்தி னார்களென்றும் எளிதில் அறிந்து கொள்ளுதல் சாலும்.
சமக்கிருதம் கலப்பற்ற மொழியெனச் சிலர் கருதுகின்றனர். தமிழ், கொண்டு முதலிய மொழிகளிலிருந்து மிகப் பல சொற்களைச் சமக்கிருதம் இரவல் பெற்றிருக்கின்றது. இந்து ஐரோப்பிய ஆரிய மொழி களுக்குப் பொதுவல்லாத மற்றைய சொற்கள் எல்லாம் இந்தியப் பூர்வ மொழிகளின் சொற்களேயாகும் என, மொழி ஆராய்ச்சிவல்லார் நுவல்கின்றனர். நகைச் சுவைக்கு எடுத்துக்காட்டு. “ஆரியர் பேசுந் தமிழ்” எனப் பேராசிரியர் ஓரிடத்தில் எடுத்துக்காட்டியுள்ளார். அதனால் ஆரியர் தமிழ்ச் சொற்களைத் திருத்தமுற உச்சரிக்க அறியாது பிழைபட உச்சரித்தார்கள் என்பது நன்கு விளங்கும். அவர்கள் தமிழைத் திராவிடம் என உச்சரித்தார்கள் என்றால் மற்றைய தமிழ்ச் சொற்களை எவ்வாறு உச்சரித்திருப்பார்கள் என்பதை நாமே ஊகித்தறியலாகும். இவ்வாறு தமிழ்ச் சொற்கள் மிக மாறுபட்டு வடமொழியிற் சென்றேறி யுள்ளன வாதலினாலேயே, நாம் அவைகளை எளிதிற் கண்டுபிடிக்க முடிய வில்லை. சென்னையிலே அம்பட்டன் பாலம் என ஒரு பாலமுள்ளது. இதன் முன்னைய பெயர் “ஹமில்டன் பிரிட்ஜ்” இது சொல்லுவோரது சொற்சோர்வினால் அம்பட்டன் பாலம் எனப்பட்டது. பின்பு அம்பட் டன் பாலம் (“Barber’s bridge”) “பார்பெர்ஸ் பிரிட்ஜ்” என ஆங்கிலப் படுத்தப்பட்டு இன்று பார்போஸ் பிரிட்ஜ் என்றே வழங்குகின்றது. ஹமில்டன், அம்பட்டன் ஆனது போன்ற பல தமிழ்ச் சொற்களும் வடமொழியில் இருத்தல் கூடும்.
பெரிய வெள்ளப் பெருக்குக்குப் பிற்பட்ட மக்கள் அல்லது
1ஹெமத்திய இந்திய மத்தியதரை மக்கட் குலம் (எச். ஹெரஸ்)
யான் பல்லாண்டுகளாகப் பிற்கால இந்திய மக்களின் நாகரிகத் தைக் குறித்து, இந்தியாவிலும், ஸ்பெயின் நாட்டிலும் இருந்து ஆராய லானேன். அவ் வாராய்ச்சி, பெரிய வெள்ளப் பெருக்குக்குப் பிற்பட்ட மக்களின் வரலாற்றையும், அம் மக்கள் பல கிளைகளாகப் பிரிந்து சென்று பற்பல குலத்தினராகப் பெருகிய வகையையும் விளக்குவதாகின் றது. யான் ஆராய்ந்து கண்ட அளவில், பழைய திராவிட மக்கள் தமது நாட்டைவிட்டு உவண்ணா, ஓடக்கோன் என்பவர்களின் தலைமையின் கீழ் சுமேரியாவை அடைந்து அங்குக் குடியேறிப் பெருகினார்கள். இக் கருத்தைப் பழைய பாபிலோனிய வரலாற்றாசிரியராகிய பெரசொஸ் என்பவரும் குறிப்பிட்டுள்ளார். சுமேரியாவிற் குடியேறிய மக்கள் மொகஞ்சதரோவிலுள்ளன போன்ற வீடுகளைக் கட்டினார்கள். விவிலிய மறையின் ஆதி ஆகமம் இந் நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுள்ளது. சுமேரிய வகுப்பைச் சேர்ந்த மக்களே சிரியாவிலும் குடியேறினார்கள். கிதைதி ஆட்சிக்குத் தளம் இட்டவர்கள் இம் மக்களே யாவர். அங்கு நின்றும் பெயர்ந்த சில மக்கள் மத்தியதரைக் கடல் ஓரங்களில் குடியேறி னார்கள். அவர்கள் பினிசியர் எனப்பட்டனர். இது பனையர் (Panis - Palm trees) என்னும் பெயரின் திரிபு. முற்காலத்தில் பெரிய வாணிகத் துணிவு உடையவர்களாயிருந்தவர்கள் இவர்களே. இவ் வினத்தினர் சிலர் கிரேக்க நாட்டிலும், இத்தாலியிலும் குடியேறி முறையே மீனவர், எதிருஸ்கர் என்னும் பெயர்களைப் பெற்றனர். திராவிடர்களிற் சிலர் யேமென் (Yemen) என்னும் இடத்திற் குடியேறி யிருந்தார்கள்.
அவர்கள் இங்கு யேமெனியிலிருந்து செங்கடல் வழியாகச் சென்று எகிப்தில் குடியேறி வியக்கத்தக்க எகிப்திய நாகரீகத்தைக் கட்டி எழுப்பினார்கள். அவர்கள் ஆப்பிரிக்காவின் வடகரை வழியாகச் சென்று குடியேறி நுமிதியர் பேர்பேரியர் என்னும் பெயர்களைப் பெறுவாராயினர். பின்பு அவர்கள் ஸ்பெயின் நாட்டிற் குடியேறியபோது உரோமர் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு ஐபீரியர் எனப் பெய ரிட்டனர். பின்பு ஐபீரிய மக்களுட் சிலர், வடக்கு நோக்கிச் சென்று மத்திய ஐரோப்பாவிலும், பிரிட்டிஷ் தீவுகளிலும் குடியேறி துரூயிதர் (Druids) எனப் பெயர் பெறுவாராயினர். பிற் காலங்களில் வந்த கெல்திய மக்களாக இவர்களைக் கொண்டு, பிற்காலத்தவர்கள் மயங்குவாராயினர்.
பழைய நாகரிகங்களைக் கோலிய இச் சாதியினர் மத்தியதரைச் சாதியினர் எனப்படுவர். இச் சாதியாரின் நாகரிகங்கள் எல்லாம் ஒரே வேரினின்றும் முளைத்தன. அவை எல்லா முக்கியப் பகுதிகளிலும் ஒத்திருக்கின்றமையால், அவைகளைப் பிற்கால இந்திய மத்தியதரை நாகரிகம் எனக் கூறலாம்.
நோவாவின் குமாரனாகிய யபேத்திலிருந்து தோன்றியவர்கள் என்று சொல்லப்படும் ஆரிய மக்களையும் திராவிடரையும் தொடுக்கும் தொடர்புகளும் காணப்படுகின்றன. சமக்கிருத, திராவிட மொழிகளுக் கிடையில் பல ஒருமைப்பாடுகள் காணப்படுகின்றன. திராவிடச் சொற்களை ஒத்த உற்பத்தியை உடைய மிகப் பல சமக்கிருதச் சொற்கள் காணப்படுகின்றன. இவ் வகை ஒருமைப்பாடு திராவிட மொழிகளுக்கும் கிரேக்க, இலத்தின் மொழிகளுக்குமிடையில் காணப்படுகின்றது. இதற்குக் காரணம் சமக்கிருதமும் திராவிடமும் ஒரே மொழியினின்றும் பிரிந்தமையேயாகும். திராவிடம் தனது பழைய ஒட்டுச் சொல் முறை யான இயல்பைக் காப்பாற்றி வந்திருக்கிறது. சமக்கிருதம் இன்னொரு வகையில் வளர்ச்சியடைந்து இக் காலத் தோற்றத்தை அடைந்துள்ளது.
1ஸ்தென்கோநோ (Mr. Sten konow) எற்றூஸ் மொழிக்கும் தமிழுக்கும் பல ஒருமைப்பாடுகள் இருப்பதைக் காட்டியுள்ளார்.
மனிதன் என்னும் மக்கள் வரலாற்று மாத வெளியீட்டில் (1906) பிளிண்டர் பெற்றி (Flinders Petrie) என்பார் எகிப்தியரின் பழைய நகர மாகிய மெம்பிஸ் அழிபாடுகளில் இந்திய ஆடவர் மகளிரைக் காட்டும் ஓவியங்கள் இருப்பதைப்பற்றி எடுத்துக் கூறியுள்ளார்.
மொகஞ்சதரோ நாகரிகமும் கீழ்நாட்டு ஆராய்ச்சியாளரும்
மேற்றிசை அறிஞர்களே மொகஞ்சதரோ நாகரிகத்தைப்பற்றி நன்கு ஆராய்ந்து கண்டவர்களாவர். ஆரிய வேதங்களைப்பற்றி ஆராய்ந்து உண்மைகளை வெளியிட்டவர்களும் அவர்களே. ஆராய்ச்சித் துறையில் கீழ்நாட்டவர்கள் மேல்நாட்டவரின் காற்சுவடுகளையே பின்பற்றி வருகின்றனர். மேல்நாட்டவர்கள் உண்மை காண்டல் ஒன்றனையே குறிக்கொண்டு ஆராய்ச்சி செய்வர். அவர்களுக்கு ஆரியரை உயர்த்த வேண்டும் என்றோ, திராவிடரை இறக்க வேண்டும் என்றோ குறிக்கோள் சிறிதும் இல்லை. மேல்நாட்டு ஆசிரியர்கள் எல்லோரும் மொகஞ்சதரோ நாகரிகம் ஆரியர் வருகைக்கு முற்பட்டதென்றும், ஆரியர் வருகைக்கு முன் அங்கு வாழ்ந்தோர் திராவிட மக்கள் என்றும் கூறினர். கீழ்நாட்டு ஆராய்ச்சியாளரின் மனப்பான்மைகளுக்கு இது மாறுபட்டது. கீழ்நாட் டார்க்குத் தாம் கொண்டிருக்கும் கருத்துக்கு ஏற்ப ஆராய்ச்சிகள் முடிவு பெறவேண்டும்; இன்றேல் அவர்கள் அவைகளை ஏற்றுக் கொள்ளமாட் டார்கள்; அவர்கள் மேல்நாட்டு ஆராய்ச்சியாளர் கூறியவைகளைப் புரட்ட முயல்வர். மொகஞ்சதரோ நாகரிகம் திராவிட மக்களுடையது என்று கூறப்பட்டதும், ஆரியரே இந்திய நாகரிகத்துக்கு அடிப்படை எனக் கனவு கண்டுகொண்டிருந்த ஒரு சாரார், மொகஞ்சதரோவில் ஆரியரின் நாகரிகத்துக்கு உரிய அடையாளங்கள் சில காணப்படு கின்றன; வேதங்களில் சில சான்றுகள் காணப்படுகின்றன என்று கூறுவாராயினர். இக் கூற்றுகள் ஒருபோதும் மேற்றிசை ஆராய்ச்சியாள ரால் ஒப்புக் கொள்ளப்படவில்லை. மொகஞ்சதரோவில் சிவ வழிபாடு வேதங்களிலும் காணப்படுகின்றது என்றும், ஆதலால் சிவ வழிபாடு திராவிடருக் குரியதன்று என்றும் ஒருவர் கூறினர். இன்னொருவர் அத்துணைப் பழங்காலத்திலேயே மக்கள் யோகத்தைப் பற்றி அறிந் திருக்க மாட்டார்கள் என்றனர். மொகஞ்சதரோ முத்திரையிற் காணப் பட்ட சிவன் வடிவம் யோகத்தில் இருப்பதாக அமைந்திருத்தலாலும், வேதங்கள் யோகத்தைப் பற்றி அறிந்திராமையாலும் அங்குக் காணப் பட்ட சிவன் வழிபாடு திராவிடருடையதே என முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு தமிழரினும் பார்க்க ஆரியரே நாகரிகத்திற் சிறந்தவர்கள், அவர்களே தமிழர்களுக்கு வழிகாட்டிகள் என்ற கருத்துகளை நாட்ட வேண்டும் என்னும் உணர்ச்சி வேகம் ஒரு சாரார் உள்ளத்தில் இருப்பதை நாம் காண்கின்றோம். தமிழர் ஆரியரிலும் சிறந்தவர் எனக் கூறின் உடனே அதனை எதிர்க்க ஒரு கூட்டம் எப்பொழுதும் ஆயத்தமாக இருப்பதை நாம் எல்லோரும் அறிவோம். இவ் வுணர்ச்சியினால் எழும் ஆரவாரங்கள் ஆராய்ச்சி எனப்படா. சாதிப்பற்று என்றே கூறவேண்டும். நாட்டுப்பற்று சாதிப்பற்று என்பன சரித்திர ஆராய்ச்சியாளரை நடுநிலைமையினின்றும் அடி சறுக்கச் செய்து விடுகின்றன என்று மேற்றிசை ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக