இருளும் ஒளியும்
காதல் கதைகள்
Backஇருளும் ஒளியும் (நாவல்)
ஸரோஜா ராமமூர்த்தி
Source:
இருளும் ஒளியும் (நாவல்)
ஸரோஜா ராமமூர்த்தி
கலைமகள் காரியாலயம், மயிலாப்பூர் :: சென்னை
முதற்பதிப்பு : ஸெப்டம்பர், 1956.
உரிமை பதிவு:
விலை ரூ. 2-0-0
Printed at :The Madras Law Journal Branch press, Tiruvidaimarudur.
--------
ஸ்ரீ சரோஜா ராமமூர்த்தி அவர்கள் எழுத்துலகில் எல்லோருக்கும் நன்கு பரிச்சயமானவர். சிறு கதைகள் எழுதுவதில் இவர் திறமையை தமிழ் வாசகர்-களெல்லாம் அநுபவித்து மகிழ்ந்திருப்பார்கள். 'நவராத்திரிப் பரிசு' என்ற இவர் சிறு கதைத் தொகுதியில் உள்ள கதைகளை ரஸிகர்கள் அநுபவித் திருப்பார்கள்.
தப்பபிப்பிராயத்தினாலும் அசூயையினாலும் ஒருவர் வாழ்க்கையே கெட்டுப் போகும் என்பதைக் காட்ட எழுந்த இந்த 'இருளும் ஒளியும்' என்ற நாவல் பெண்மணி ஒருத்தி தன் அன்பு காரணமாக எவ்வளவு தியாகங்களைச் செய்ய முடியும் என்பதையும் நன்கு காட்டுகிறது. அழகிய எளிய ஜீவன் ததும்பும் நடையில் அமைந்த இந்த நாவல் ரஸிகர்களுக்கு இன்பூட்டு மென்று நாங்கள் நம்புகிறோம்.
சென்னை 4, பதிப்பாளர்.
15-11-56.
-----------
பொருள் அடக்கம்
அன்று பகல் எல்லோரும் அடுத்த ஊருக்குப் பெண் 'பார்க்க’ ப் புறப்படுவதாக இருந்தார்கள். பிரயாணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை ஸ்வர்ணம் கவனித்துக் கொண்டிருந்தாள். பாதி விழிப்புடன் படுத்திருந்த ரகுபதியின் காதுகளில் வீணையுடன் இழைந்துவந்த மத்யமாவதி ராகம் விழுந்து பரவசமூட்டியது. மத்ய மாவதியுடன் ஸரஸ்வதி, அநேகமாகப் பாட்டை முடித்து விடுவாள் என்பது அவனுக்குத் தெரியும். படுக்கையில் எழுந்து உட்கார்ந்து, சோம்பல் முறித்துக் கொண்டிருக்கும் ரகுபதியின் படுக்கை அறை வாயிற்படியில் ஸரஸ்வதி வந்து நின்று, "அத்தான்! இன்றைக்குக்கூட என்ன இவ்வளவு தூக்கம்! சாவித்திரியைக் கைப்பிடிக்கப் போகும் சத்தியவானாகிய நீ இப்படிச் சோம்பேறியாக இருக்கலாமா அத்தான்? காபி ஆறிப்போகிறதாம். அத்தை ஒரு பாட்டம் சமையலறையில் இருந்து கொண்டு கத்துகிறாள். ஹும் . . ஹும். எழுந்திரு! அத்தான் எழுந்திரு! இல்லாவிட்டால் திருப்பள்ளியெழுச்சி பாடினால்தான் எழுந்திருப்பாயோ?" என்று பரிகாசம் தொனிக்க உற்சாகத்துடன் ரகுபதியின் அரைத் தூக்கத்தைக் கலைத்துவிட்டாள்.
ரகுபதி ஆச்சரியத்துடன் ஸரஸ்வதியின் முகத்தைப் பார்த்தான். பிறகு, “அப்படியானால், நேற்று வந்து போனார்களே அவர்கள் வீட்டுப் பெண்ணுக்குச் சாவித்திரி என்று பெயரா, ஸரஸு?' என்று கேட்டான்.
"ஆமாம் அத்தான்! புராணத்துச் சாவித்திரிக்கும் இவளுக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கும். அப்பா, அம்மாவுக்கு ரொம்ப செல்லப் பெண்ணாம் - பாட்டி ஒருத்திக்கு அருமைப் பேத்தியாம்! நாலு பேருடன் பிறந்தவளாக இருந்தாலும், தனிக் காட்டு ராணிமாதிரி அதிகாரம் செய்வாளாம்!"
ஸரஸ்வதி, குறும்புப் புன்னகையுடன் தலைப் பின்னலை கையில் முறுக்கிக்கொண்டே ரகுபதியைப் பார்த்து இவ்விதம் கூறினாள்.
"ஓஹோ! உனக்கு எல்லாம் தெரிந்திருக்கிறதே, ஸரஸு! நான் சொல்கிறேனே என்று கோபித்துக்கொள்ளாதே. நீ சங்கீதம் பயில்வதை விட்டு விட்டு, ஏதாவது பத்திரிகாலயத்தில் வேலைக்குச் சேர்ந்தாயானால், இந்தமாதிரி சரடு விடுவதில் அர்த்தம் உண்டு!" என்றான் ரகுபதி சிரித்துக்கொண்டே.
”ஐயையோ, சரடா? இல்லை. அத்தான், நிஜமாகத்தான் சொல்லுகிறேன். பெண்ணின் தகப்பனாரே அத்தையிடம் தன் பெண்ணைப்பற்றிய பிரதாபங்களை வாய் ஓயாமல் அளந்து கொண்டிருந்தார்! ” என்றாள் ஸரஸ்வதி.
அவர்கள் இருவரும் மேற்கொண்டு தொடர்ந்து வம்பளப்பதற்கு முடியாமல், அடுப்பங்கரையிலிருந்து அதிகாரத்துடன் ஒரு குரல் அவர்கள் இருவரையும் அதட்டியது.
”ஸரஸு! பேச ஆரம்பித்தால் ஓய மாட்டாயே நீ? அவனுந்தான் என்ன? பாட்டுப் பைத்தியம்; பேச்சுப் பைத்தியமும்கூட” என்று அத்தை ஸ்வர்ணம் அதட்டினாள்.
ஸரஸ்வதி மாடிப் படிகளில் மெதுவாக இறங்கினாள். "சிந்தை அறிந்து வாடி, செல்வக் குமரன் - சிந்தை அறிந்து வாடி” என்று பாடிக்கொண்டு, அத்தானைப் பார்த்துக் கலகலவென்று! சிரித்தாள் அந்தப் பெண் ஸரஸ்வதி. சிரிப்பில் சேர்ந்துகொண்ட ஸ்வர்ணம், ஸரஸ்வதியின் அருகில் வந்து வாஞ்சையுடன் அவள் தலையைத் தடவிக் கொடுத்தாள். பிறகு, ”ஸரஸு! நீ என்னதான் உன் அத்தானுடன் கபடமில்லாமல் பழகினாலும், பிறர் தவராக நினைப்பார்கள், அம்மா. போகிற இடத்திலெல்லாம் நீ பேசாமல் இருக்கிறதில்லை. இந்தக் காலத்தில் நல்லது எது, கெட்டது எது என்பதை யார் ஆராய்ந்து பார்க்கிறார்கள்? நான் சொல்கிறேனே என்று கோபித்துக்கொள்ளாதே. ஸரஸு!" என்றாள் ஸ்வர்ணம்.
ஸரஸ்வதி, அன்புடன் அத்தையை ஏறிட்டுப் பார்த்தாள்.
”நான் தான் உங்களுடன் பெண் பார்க்க வரப்போகிற இல்லையே, அத்தை. நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்?" என்று கபடமில்லாமல் கேட்டாள்.
ஸ்வர்ணத்தின் கண்களில் நீர் நிறைந்துவிட்டது. துஷ்டத்தனம் செய்யும் குழந்தையைத் தாய் அதட்டியதும், அதன் பிடிவாதம் அதிகமாவதைப்போல் இருந்தன, ஸரஸ்வதியின் பதிலும், செய்கையும்.
”உன்னை நான் என்ன சொல்லிவிட்டேன் ஸரஸு? லக்ஷனமாக, கன்னிப் பெண்ணாக நீ என்னுடன் வராமல், அழகாக இருக்கிறது நான் ரகுவை அழைத்துப்போய் அவர்கள் எதிரில் நிறுத்துவது? நீ வராவிட்டால், பாட்டுப் பரீக்ஷையைத்தான் யார் நடத்துவது? போ, போ. புறப்படுவதற்கு ஏற்பாடு செய்து கொள், போ" என்று உரிமையுடன் ஸரஸ்வதியை அதட்டினாள் ஸ்வர்ணம்.
அதென்னவோ வாஸ்தவம். அத்தான் ஒரு பாட்டுப் பைத்தியம் என்று தெரிந்த ஸரஸ்வதி, பெண் பார்க்கப் போகும் இடங்களிலெல்லாம் ஒரு சிறிய சங்கீதப் பரீட்சையே வைத்து விட்டாள் எனலாம். சில பெண்கள் அறுபது கீர்த்தனங்கள் பாடமென்று சொல்லி விட்டு, ஸ, ப,வுக்கு வித்தியாசம் தெரியாமல் விழித்தார்கள். சிலரின் சங்கீதம் ஒரே சினிமா மயமாக இருந்தது! கச்சிதமாக நாலு பாட்டுகள் பாடுகிறேன் என்று அதுவரையில் பார்த்த பெண்கள் யாரும் முன் வரவில்லை. ஸரஸ்வதி ஒரு தினம் விளையாட்டாக ரகுபதியிடம், "அத்தான்! உனக்குத் தான் வீணை வாசிக்கத் தெரியுமே. சங்கீதமே தெரியாத பெண்ணாகப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கொண்டுவிடேன்.' பிறகு நீயே பாட்டுக் கற்றுக்கொடுத்துவிடலாம்" என்றாள்.
"ஆமாம்.. கல்யாணம் ஆன பிறகு, பிள்ளைகள் மாமனார் வீட்டில் இருந்து கொண்டு, மேற்படிப்புப் படித்துப் பாஸ் செய்கிற லக்ஷணத்தைப்போலத்தான் இதுவும் இருக்கும்!" என்றாள். அத்தை ஸ்வர்ணம் சிரித்துக் கொண்டே .
"அத்தானுடைய சுபாவம் அப்படி இல்லை அத்தை. அவனுக்கு லட்சியம் ஒன்றுதான் முக்கியம்" என்றாள் ஸரஸ்வதி.
படுக்கையில், பாதி திறந்த விழிகளுடன் பழைய நினைவுகளில் மனத்தை லயிக்க-விட்டிருந்த ரகுபதிக்குப் பளிச்சென ஞாபகம் வந்தது இந்தச் சம்பாஷணை. அதோடு, யார் லட்சியவாதி; அவனா, ஸரஸ்வதியா என்ற கேள்வியும் எழுந்தது. எப்படிப் பார்த்தாலும், தன்னை விட ஒருபடி மேலாகவே கண்டான் அவளை. நல்ல சங்கீத ஞானமும், நிறைந்த சாரீர சம்பத்தும் பெற்றவள் அவள். அழகில் மட்டுந்தான் குறைந்தவளா? தாழம்பூ மேனியும் சுருண்டு, அடர்த்தியாக, அலை பாயும் கூந்தலும் மருண்ட விழிகளும் குளிர்ந்த உதடுகளும் தாமரை மலர் போன்ற கரங்களும் பெற்று அழகியாகத்தான் இருந்தாள். அதோடு ' குடும்பப் பெண்' என்பதற்கு இலக்கணமாக விளங்குபவள். உஷக்காலத்தில், வெள்ளி முளைத்திருக்கும்போது எழுந்து, முகம் கழுவி, பொட்டிட்டு, ஸ்வாமிக்கு விளக்கேற்றி, வீணையுடன் இழையும் மெல்லிய காலில் பாட ஆரம்பித்து விடுவாள் அவள். அவள் பாட்டைக் கேட்ட பிறகுதான் அந்த வீட்டில் மற்றவர்கள் எழுவார்கள்.
எனினும் ஒரே ஒரு குறை அவளிடம். அதுவும், ரகுபதியால் ஏற்பட்ட குறைதான். பால்யத்தில் ரகுபதியின் மாமன் மகளாகிய ஸரஸ்வதியும், அத்தான் ரகுபதியும் ஒன்றாக விளையாடியபோது ரகுபதி விளையாட்டாகப் பின்புறம் வந்து அவள் கால்களை இடறி விட்டபோது ஸரஸ்வதி விழுந்துவிட்டாள். சாதாரண விளையாட்டு, வினையாகி ஒரு கால் எலும்பு முறிந்து, நிரந்தரமான ஊனம் ஏற்பட்டுவிட்டது. அந்தக் குறை ஸரஸ்வதியின் மனத்திலும் அழியாத - வடுவை ஏற்படுத்திவிட்டது. என்னதான் அழகாக இருந்தாலும், என்னதான் சங்கீதம் தெரிந்திருந்தாலும், ஊனம் ஊனந்தானே! ரகுபதியும் பெரியவனாகிய பிறகு, தான் தவறுதலாகச் செய்துவிட்டதை நினைத்து வருந்தியிருக்கிறான். ”இசைக்கும், கலைக்கும் என் வாழ்க்கையை அர்ப்பணித்து விடுகிறேன் அத்தான். எனக்காக நீ ஒன்றும் வருத்தப்பட வேண்டாம்" என்று ஸரஸ்வதி ரகுபதிக்கு எவ்வளவோ முறைகள் தேறுதல் கூறியிருக்கிறாள்.
ஆனால், ஒவ்வொரு தினமும் ஸரஸ்வதி, உள்ளம் உருகிப் பாடும் போதெல்லாம் ரகுபதி இந்தப் பழைய சம்பவத்தை நினைத்துக் கொண்டு ஏங்குவான். தானே அவளை மணந்து கொண்டு விட்டால் அவளிடம் இருக்கும் குறையைப் பாராட்டாமல் இருக்க முடியும் என்று நினைத்து, அவளிடம் அவன் அதைப் பற்றிப் பிராஸ்தாபித்தபோது, அவள் ஒரு குழந்தையைப்போல் கபடமில்லாமல் சிரித்தாள். வெண்கல மணி ஒலிப்பதுபோல் கலகலவென்று சிரித்து விட்டு, "அத்தான்! பாபம் செய்தவர்கள் பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டியது அவசியந்தான். விளையாட்டாக நேர்ந்து விட்ட தற்காக உன் வாழ்க்கையைப் பாழாக்கிக்கொள்ள வேண்டுமா? நாலு பேர் எதிரில் நொண்டிப் பெண்ணை, மனைவி என்று அழைத்துச் செல்ல வேண்டுமா? உனக்கும் எனக்கும் என்றும் இந்தச் சகோதர அன்பே நிலைத் திருக்கட்டும், அத்தான்" என்று பெரிய வேதாந்தியைப்போல் கூறிவிட்டாள் ஸரஸ்வதி. இந்தப் பதிவைக் கேட்டு ரகுபதி ஒன்றும் பேச முடியவில்லை. வாதப் பிரதாபாதங்களுக்கு இடமில்லாமல் அவள் அளித்த பதில் ரகுபதியின் தாய் ஸ்வர்ணத்தைக்கூடப் பிரமிக்கச் செய்துவிட்டது. அத்துடன் அவர்கள் அந்த யோசனையைக் கைவிட்டு விட்டார்கள். ரகுபதிக்கு வேறு இடத்திலிருந்து ஜாதகங்கள் வர ஆரம்பித்தன. இரண்டொரு இடங்களுக்குப் போய்ப் பெண் பார்த்தும் வந்தார்கள். இந்தப் பேட்டிப் படவங்களில் ஒன்றுதான் அன்று நடைபெறவிருந்தது . அதற்குத்தான் இத்தனை அமர்க்களமும்.
-----------------
இதே மாதிரி அன்று அதிகாலையிலிருந்தே சாவித்திரியின் வீட்டிலும் கேலிப்பேச்சும் சிரிப்பும் நிறைந்திருந்தன. பிள்ளை வீட்டார் பெண் பார்க்க வரப்போகிறார்கள் என்று அறிந்து ஒவ்வொருவரும் ஓடி ஆடிக் குதூகலத்துடன் வேலை செய்து கொண்டிருந்தார்கள். சாவித்திரி நொடிக்கு ஒரு தரம் நிலைக் கண்ணாடியின் எதிரில் நின்று தன்னைக் கவனித்துக்கொள்வதில் முனைந்திருந்தாள். சாவித்திரியின் தாய் மங்களம் - வழக்கமாகத் தன் மாமியாருக்குப் பயப்படுகிறவள்கூட - அன்று தானும் கூடிய விரைவில் மாமியார் ஆகப்போகிறோம் என்கிற பெருமிதத்தில், சற்று இரைந்தே பேசிக்கொண்டிருந்தாள். சாவித்திரியின் தங்கை சீதாவுக்குத் தான் வீட்டிலே அதிகம் வேலைகள் காத்துக்கிடந்தன. சரசரவென்று மாடிக்கும் கீழுக்கும் ஹாலுக்கும் காமரா அறைக்குமாகத் தன் மேலாடை பறக்கத் திரிந்து கொண்டிருந்தாள் அவள்.
பெண்ணுக்குக் கல்யாணமென்றால் தாய்க்குத்தான் அதில் பெருமையும் பங்கும் அதிகம் என்று கூறலாம். பிள்ளை வீட்டார் வந்து சாவித்திரியைப் பார்த்துத் தம் சம்மதத்தை அறிவிப்பதற்கு முன்பே மங்களம் பெண்ணுக்குச் செய்ய வேண்டிய சீர் வரிசைகளைப் பற்றித் தன் கணவர் ராஜமையரிடம் பேசினாள்.
"மாப்பிள்ளைக்குத் தீபாவளிக்கு வைர மோதிரம் போடுவதாகச் சொல்லிவிடுங்கள். இப்போது சாவித்திரிக்குக் கணிசமாக நாலு வளையல்கள் செய்தாக வேண்டும். மோதிரச் செலவையும் சமாளிக்க முடியாது. அப்புறம் சம்பந்திகள் எதிரில் வழவழ
என்று பேசிவிடாதீர்கள்" என்றாள் மங்களம் காபியை ஆற்றிக் கொண்டே.
ராஜமையர், "ஹும்.. ஹும்.." என்று தலையை ஆட்டினார். அவருக்குப் பதில் சாவித்திரியின் தமையன் சந்துரு பேச ஆரம்பித்தான்: ”உன் பெண்ணுக்குத்தான் ஒரு ஜதை வளையல்கள் குறைவாக இருக்கட்டுமே அம்மா. மாப்பிள்ளைக்கு இப்பொழுதே மோதிரம் போட்டுவிடலாம். நாலு பேருக்குத் தெரிந்து எந்த மரியாதையையும் செய்தால் நன்றாகச் சோபிக்கும்" என்றான் சந்துரு.
அந்த வீட்டில் தனக்குத் தெரியாமல் ஒன்றும் நடக்கக் கூடாது என்கிற சுட்சியைச் சேர்ந்தவள் சாவித்திரியின் பாட்டி. ஆகவே, "ரொம்ப நன்றாக இருக்கிறதே! கல்யாணம் பண்ணுகிற குழந்தைக்குக் கை நிறைய வளையல்கள் வேண்டாமாடா, அப்பா?” என்று கேட்டாள் பாட்டி.
இவ்வளவு வாதப் பிரதிவாதங்களுக்கும் ராஜமையர் தலையைக்கூட அசைக்காமல் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கம்பீரமாகப் புன்னகை செய்து கொண்டு படுத்திருந்தார். குடும்பத் தலைவர் என்கிற அந்தஸ்து எவ்வளவு பொறுப்பு வாய்ந்தது என்பதை நினைத்தே அவர் யோசனையில் ஆழ்ந்திருந் தார் என்று கூறலாம். வீட்டிலே கல்யாணச் சீர் வரிசைகளைப் பற்றி ஒவ்வொருத்தர் அபிப்பிராயம், ஒவ்வொரு விதம் இருக்கிறது. பணச் செலவை எப்படியோ சரிக்கட்டி சமாளிக்கும் திறன் அவரிடந்தானே இருக்கிறது? அதைப்பற்றி யாராவது நினைத்துப் பார்க்கிறார்களா? இவ்வாறு எண்ணித்தான் அவர் புன்னகை புரிந்திருக்க வேண்டும்.
ராஜமையர் காபி சாப்பிட்ட டவராவையும் டம்ளரையும் எடுத்துக்கொண்டு மங்களம், "ஒன்றுக்கும் உங்கப்பா வாயைத் திறக்கமாட்டார். வீடு பற்றி எரிந்தால்கூட, 'அதென்ன புகைச்சல்?' என்று கேட்கிறவராயிற்றே!" என்று கூறிக் கொண்டே விசுக்கென்று சமையற்கட்டிற்கு எழுந்து சென்று விட்டாள்.
அதற்கும் ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு ராஜமையர், "சீதா! அவர்கள் எல்லோரும் வருவதற்கு மூன்று மணி ஆகும். அதற்குள் சாவித்திரியின் அலங்காரமெல்லாம் முடிந்து விடும் அல்லவா?" என்று மகளைக் கூப்பிட்டு விசாரித்தார்.
சீதா ஏதோ வேலையாக அந்தப் பக்கம் வந்தவள், தகப்பனார் கேட்ட கேள்விக்குப் பதில் கூறாமல் இரு கரங்களிலும் நான்கு பட்டுப் புடைவைகளை வாரி எடுத்துக் கொண்டு அவர் கேட்டதற்குத் தலையை மட்டும் அசைத்துவிட்டு அந்த வீட்டுக் காமரா அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டாள். அந்த அறைக்குள் சாவித்திரி, பீரோவிலிருக்கும் ஒவ்வொரு புடைவையாக எடுத்து மத்தியான்னம் பிள்ளை வீட்டார் வரும்போது எதை உடுத்துக் கொண்டால் அழகாக இருக்கும் என்று ஆராய்வதில் முகாந்திருந்தாள். அவளிடமிருந்த ஏழெட்டுப் பட்டுப் புடைவைகளில் ஒன்றாவது அவள் மனத்துக்குப் பிடித்ததாக இல்லை. கடையிலிருந்து வாங்கும்போது என்னவோ அந்தப் புடைவைகளை ஆசையுடன் தான் வாங்கிக்கொண்டாள். நாழிக்கொரு மோஸ்தரும், வேளைக் கொகு அலங்காரமுமாக மாறி மாறி வரும் புடைவை ரகங்களைப் பார்த்தபோது அந்தப் புடைவைகள் அவருக்குப் பழைய ரகங்களாகத் தோற்றமளித்தன. சலிப்புடன் அவள் பீரோவைப் பட்டென்று மூடும்போது, சீதா கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள். கையிலிருந்த புடைவைகளைச் சோபாவில் போட்டு விட்டு, "எதையாவது சீக்கிரம் நிச்சயம் பண்ணு சாவித்திரி. எனக்குக் கொள்ளை வேலை காத்துக் கிடக்கிறது" என்று கூறினாள் தமக்கையிடம்.
சாவித்திரியும் சீதாவும் உடன் பிறந்த சகோதரிகளாக இருந்தாலும் குணத்தில் ஒருவருக்கொருவர் அதிக வித்தியாசத்தைப் படைத்தவர்கள். எவ்வளவு ஆடை, ஆபரணங்கள் இருந்தாலும் சாவித்திரியின் மனம், போதும் என்று ஒப்புக் கொள்ளாது. சீதாவுக்கோ சாதாரண வாயில் புடைவை இருந்தால் போதும். இருவருக்கும் பெற்றோர்கள் ஒரே மாதிரி ஆடை, ஆபரணங்கள் வாங்கி அளித்திருந்தாலும் சீதாவின் பொருள்கள் தாம் சாவித்திரிக்குப் பிடித்தமானவைகளாக இருக்கும்.
சாவித்திரி, சோபாவில் கிடந்த புடைவைகளைப் புரட்டிப் பார்த்தாள். தன்னுடைய-வையாக இருந்தால் நலங்கிவிடுமே, மடிப்புக் கலைந்துவிடுமே என்று யோசனை செய்திருப்பாள். சீதாவின் புடைவைகள் தாமே அவைகள்! அவைகள் எப்படிப் போனால் என்ன! புடைவைகளை இப்படியும் அப்படியும் புரட்டிப் பார்த்துவிட்டு, "ஏண்டீ, இந்தக் கனகாம்பரக் கலர் 'கிரேப்' புடைவையை உடுத்துக் கொள்கிறேனே. நீயும் இதைத்தான் ’செலக்ட்’ பண்ணி இருக்கிறாயா என்ன?" என்று நிஷ்டுரமாகக் கேட்டாள் சீதாவைப் பார்த்துச் சாவித்திரி.
"ஹும்.. ஹும்.. பெண் பார்க்க வருவது உன்னையே தவிர என்னை அல்ல சாவித்திரி! உனக்குத்தான் தெரியுமே, எனக்கு இந்தப் பகட்டான புடைவை யெல்லாம் பிடிக்காது என்று".-- சாவதானமாகப் பதிலளித்த சீதா, தான் பொறுக்கி எடுத்த புடைவையை வைத்துவிட்டு மற்றவைகளைத் திரும்பவும் பீரோவில் அடுக்கி வைப்பதற்கென்று தன்னுடைய அறைக்குத் திரும்பினாள்,
இதற்குள்ளாகச் சமையலறையில் சிறு பூகம்பம் ஒன்று ஏற்பட்டது என்று கூறலாம். ஜப மாலையை உருட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்த பாட்டி, தன் நாட்டுப் பெண் மங்களத்தைப் பார்த்துத் திடீரென்று ஒரு கேள்வி கேட்டாள்.
"என்ன உயர்வு என்று இந்த வரனை நிச்சயம் பண்ணி இருக்கிறீர்கள்? பிள்ளைக்கு வேலை இல்லையாமே! சொத்து இருந்து விட்டால் போதுமா? புருஷனாய், லக்ஷணமாய், வேலை பார்க்காமல், பொழுது விடிந்து பொழுதுபோனால் வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டு! கேட்கச் சகிக்கவில்லையே!" என்று பாட்டி கோபத்துடன் கூறிவிட்டு, வேகமாக ஜபமாலையை உருட்டினாள்.
மங்களத்துக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அந்த நாளில் ராஜமையர் உத்தியோகம் பண்ணிக் கிழித்தது அவளுக்குத் தெரிந்ததுதானே? இருந்த வேலையையும் ஒரே நாளில், 'சத்தியாக்கிரகம் பண்ணி ஜெயிலுக்குப் போகிறேன்' என்று ஆரம்பித்து, ராஜிநாமா செய்தவர் ஆயிற்றே! பிறகு சீதா பிறக்கிறவரைக்கும் பத்திரிகைகளுக்கு விஷய தானம் செய்தே குடும்பம் நடத்தவில்லையா? மாமியாருக்கு இதெல்லாம் மறந்து போனதைப்பற்றி மங்களத்துக்குக் கோபமும் ஆத்திரமும் ஏற்பட்டன. அடுப்பில் காய்ந்து கொண்டிருந்த நெய்யில் முந்திரிப் பருப்பையும் திராக்ஷையையும் போட்டு வறுத்துக்கொண்டே, மாமியாருக்குப் பதில் கூறாமல் இருந்தாள் மங்களம்.
உருட்டிக் கொண்டிருந்த ஜபமாலையைச் சம்புடத்தில் வைத்துவிட்டு. இரண்டு உத்தரணி ஜலத்தை 'ஆசமனீயம்' செய்தாள் பாட்டி. பிறகு, "கூடப் பிறந்தவர்கள் எத்தனை பேராம்?" என்று கேட்டாள் நாட்டுப் பெண்ணை.
இனிமேலும் பதில் கூறாமல் இருக்க முடியாது என்று தெரிந்து. "ஒரே பிள்ளை தான்; பிக்கல், பிடுங்கல் ஒன்றும் கிடையாது. தகப்பனார் வேண்டியது சம்பாதித்து வைத்திருக்கிறார். பிள்ளைக்குச் சங்கீதம் என்றால் ரொம்ப ஆசையாம். சீக்கிரத்திலேயே சங்கீதப் பள்ளிக்கூடம் ஒன்று ஆரம்பிக்கப் போகிறானாம்!" என்றாள் மங்களம்.
"பாட்டுப் பள்ளிக்கூடம் வைப்பது ஒரு உத்தியோகமா! போகிறதே இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்குப் புத்தி! ஆயிரம் ஆயிரமாகக் கொட்டிப் பரீக்ஷை பாஸ் பண்ணிவிட்டுச் செருப்புக் கடை வைத்துச் சம்பாதிக்கிறேன் என்று ஆரம்பிக்கவில்லையா நம்ப சுப்ரமணியின் பிள்ளை குண்டு! கர்மம், கர்மம்!" என்று தலையில் இரண்டு போட்டுக் கொண்டாள் பாட்டி.
பாட்டிக்கு வயசு எழுபது ஆனாலும் வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷயமும் தனக்குத் தெரியாமல் நடக்கக்கூடாது என்கிற எண்ணம் வாய்ந்தவள். 'பிள்ளைகளை வளர்த்துப் பெரியவர்கள் ஆக்கியாயிற்று. பெண்களும் புக்ககம் போய் விட்டார்கள். பேரன் பேத்திகள் வீடு நிறைய இருக்கிறார்கள். செய்த வேலைகள் போதும், இனி ஓய்வு பெறலாம்' என்கிற எண்ணம் பாட்டிக்குக் கிடையாது. 'நாம் ஒன்றிலும் தலையிடக் கூடாது: கிருஷ்ணா, ராமா என்று காலத்தை ஓட்டவேண்டும்' என்று பாட்டி அநேக முறைகள் மனத்தை வைராக்கியத்துக்கு இழுத்து வந்திருக்கிறாள். அந்த வைராக்கியம் அரை நிமிஷங் கூட நிலைக்காது. மாமியாருக்கும் நாட்டுப் பெண்ணுக்கும் ஏதாவது ஒரு காரணத்தைப்பற்றித் தினம் சண்டையும் பூசலும் ஏற்படும். இருவரும் நாள் கணக்கில் பேசமாட்டார்கள். ஆனால், பாட்டி சாப்பிடாமல், மங்களம் அந்த வீட்டில் ஜலபானம் பண்ணமாட்டாள். வயசான மனுஷி என்கிற மரியாதையும் அபிமானமுந்தான் காரணம். ராஜமையருக்கு இலை போட்டுப் பரிமாறும்போதே, மாமியாருக்கும் இலை போட்டு விடுவாள் மங்களம், மாமியார் சொன்ன சொற்கள் மனத்தை வாட்டி எடுத்தாலும், அவருக்குச் செய்யும் சிசுருஷையில் கொஞ்சம் கூடக் குறைவு இராது.
ராஜமையர் எதையும் காதில் வாங்கிக் கொள்ள மாட்டார். மனைவியைத் தனிமையில் சந்திக்கும்போதெல்லாம், "மங்களம்! நீ சாப்பிட்டாயா? உடம்பைக் கவனித்துக் கொள்ளாமல் வேலை வேலை என்று பறக்கிறாயே!" என்று அன்புடன் கடிந்து கொள்வார்.
"ஆமாம், வேலை செய்யாவிட்டால் உங்கள் வீட்டில் எனக்கு யார் சோறு போடுகிறார்கள்!" என்று நிஷ்டுரமாகக் கேட்பாள் மங்களம். "உங்கள் வீடா? அடி அசடே! வீட்டுக்கு நீதானே எஜமானி? நீதானே இந்தக் கிருகத்தில் அன்னபூரணியாக இருக்கிறாய்? நான் கூட உன்னிடந்தானே, 'தேஹி' என்று வர வேண்டும்" என்று கூறி, அவள் கரங்களை அன்புடன் பற்றித் தம் கைகளில் சேர்த்துக்கொள்வார். அவருடைய இன்ப ஸ்பரிசத்தில் ஆயிரம் வருஷங்களின் கஷ்டங்களை மறந்து விடுவாள் மங்களம்.
இவ்விதம் மனஸ்தாபம் மூண்டு எழுந்தாலும் அன்பு நீரால் அத்தம்பதிகள் அதை அணைத்து விடுவார்கள். மேலே பற்றி எரிய வழி இல்லை அல்லவா?
அடுப்பிலிருந்த வாணலியை இறக்கிவிட்டு மங்களம், மாமியாருக்கு இலை போட்டாள். பஞ்சபாத்திரத்தில் ஜலத்துடன் 'நச்' கென்று இலை முன்னால் வந்து உட்கார்ந்த பாட்டி, "ஆமாம். பிக்கல், பிடுங்கல் இல்லை என்று சொன்னாயே. உனக்கு மாத்திரம் இங்கே என்ன பிடுங்கல்? இந்த வீட்டுக்கு யார் வரக் காத்துக் கிடக்கிறார்கள்? கூப்பிட்டால் வரப்போகிறார்கள். இல்லாவிட்டால் இல்லை" என்று மனஸ்தாபத்தைப் பாதியில் நிறுத்த இஷ்டமில்லாமல் தொடர்ந்து ஆரம்பித்தாள்.
மங்களத்தின் கண்களிலிருந்து பொலபொலவென்று கண்ணீர் வழிந்தது. சமையலறைப் பக்கம் ஏதோ வேலையாக வந்த சந்துரு தாயின் தர்மசங்கடமான நிலையை உணர்ந்து. அவளை ஜாடையாகக் கூப்பிட்டான்.
"மாப்பிள்ளை வந்து நாளைக்குப் பேரன், பேத்தி எடுக்கப் போகிறாய். எதற்கெடுத்தாலும் குழந்தை மாதிரி அழுது கொண்டு நிற்கிறாயே அம்மா. பாட்டி சொல்வதைக் காதில் வாங்காமல் உன் வேலையைக் கவனிக்க மாட்டாயா?" என்று சந்துரு அவளை அன்புடன் கடிந்து கொண்டான்.
--------------
மாலை நான்கு மணிக்கு ஸரஸ்வதி, ஸ்வர்ணம், ரகுபதி மூவரும். ராஜமையர் ரயிலடிக்கு அனுப்பி இருந்த மாட்டு வண்டியில் சாவித்திரியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.
"வாருங்கள் அம்மா! வா ..ம்மா!" என்று மங்களம் வாய் நிறைய உபசாரத்துடன் கூப்பிட்டு, எல்லோரையும் உள்ளே அழைத்துப் போனாள். ”இவன்தான் என் மூத்த பையன் சந்திர சேகரன்" என்று ராஜமையர் தம் பிள்ளையை வரப்போகும் மாப்பிள்ளைக்கு அறிமுகம் செய்து வைத்தார். "இப்படி உட்காருங்கள் மாமி" என்று கூறி, சீதா, ரத்தினக் கம்பளம் ஒன்றை எடுத்து விரித்து உபசரித்தாள். ஸரஸ்வதியும் ஸ்வர்ணமும் அமர்ந்து, லோகாபிராமமாகப் பேசிக் கொண்டிருந்தனர். சம்பிரதாயப்படி சிற்றுண்டியும் காபியும் சாப்பிட்டு முடிந்த பின்பு ஸரஸ்வதி தன்னுடன் கொண்டுவந்திருந்த பையிலிருந்து பழம், பாக்கு, வெற்றிலை, புஷ்பம் முதலியவைகளை எடுத்து ஒரு தட்டில் வைத்தாள்.
”பெண்ணை வரச்சொல்லுங்கள் மாமி" என்றாள் ஸரஸ்வதி. வீணையைப் பழிக்கும் அவள் குரல் இனிமையைக் கேட்டுச் சந்துரு. அடிக்கடி அவளைத் திரும்பிப் பார்த்தான். சாந்தமும் அழகும் கொண்ட அந்த முகவிலாசத்தை அவன் - இதுவரை பார்த்த - எந்தப் பெண்ணிடத்திலும் கண்டதில்லை என்று நினைத்தான். ஆனால், கருணை வடியும் இந்த முகத்தை எங்கோ பார்த்த ஞாபகம் ஒன்று லேசாக அவன் மனத்தில் தோன்றியது. எங்கே பார்த்திருக்க முடியும்? போன வருஷம் வடக்கே போய் வந்தானே அங்கே யாரையாவது கண்டிருப்பானா? சிறிது நேரம் யோசனையில் மூழ்கி இருந்தான் சந்துரு. திடீரென்று ஏதோ நினைவு வந்தவனாகக் கூடத்தில் மாட்டப்பட்டிருந்த ஸரஸ்வதி தேவியின் படத்தைப் பார்த்தான் சந்துரு. அந்த முகத்தில் நிலவும் கம்பீரமும் சாந்தமும் இந்தப் பெண்ணிடம் ஏதோ கொஞ்சம் இருக்கிறது. அது போதாதா அவளை எழிலுள்ள வளாகக் காட்டுவதற்கு! சகல கலாவாணியாகிய ஸரஸ்வதி தேவியின் கடாட்சத்துக்குப் பாத்திரமானவள்தானே இந்தப் பெண்ணும்! வெகு அற்புதமாக வீணை வாசிக்கிறாள். அகத்தின் அழகு முகத்தில் சுடர்விடாதா! அறிவுக் களை என்பது அலாதியானது அல்லவா!
சந்துருவின் கண்களை ஸரஸ்வதியின் நீண்ட நயனங்கள் சந்தித்துப் பூமியை நோக்கித் தாழ்ந்தன. அவன் தன்னையே விழுங்கிவிடுவதைப்போல் பார்ப்பதை அறிந்த ஸரஸ்வதி. ”அத்தான்! பெண்ணைச் சரியாகப் பார்த்துக்கொள்; பிறகு ஏதாவது குறை சொல்லாதே!" என்று கூறி, முறுவலித்தாள்.
சந்துரு சுய நினைவு வந்தவனாகத் திரும்பிப் பார்த்தான். சாவித்திரி, பெரியவர்கள் எல்லோருக்கும் நமஸ்காரம் செய்து விட்டு உட்கார்ந்தாள்.
"உம்..... பெண்ணை நல்லதாக ஒரு பாட்டுப் பாடச் சொல்லுங்களேன், மாமி" என்றாள் ஸரஸ்வதி.
"எங்கள் வீட்டில் யாருக்குமே நன்றாகப் பாடத் தெரியாதே" என்று கூறினாள் சீதா, ஸரஸ்வதியைப் பார்த்து.
தெரியாது! சமைக்கத் தெரியாது. குடும்பம் நடத்தத் தெரியாது. பாடத் தெரியாது. பேசத் தெரியாது! இந்தத் ’தெரியாது' என்கிற சொல் எவ்வளவு பேரைக் காப்பாற்றுகிறது. தெரியுமா? 'பாவம்! அவனுக்கு ஒன்றுமே தெரியாது!' என்று பிறரை அநுதாபப்படச் செய்கிறதும் இந்தத் ’தெரியாது' என்கிற சொல்தான்.
"இந்த வீட்டில் யாரோ பாட்டுக் கற்றுக்கொள்ளுகிறார்கள். அதற்கு அத்தாட்சியாக அதோ தம்பூர் வைத்திருக்கிறது. ஏன் ஸார்! ஒரு வேளை படித்துப் படித்து என்னத்தைப் புரட்டப் போகிறோம் என்று. நீங்கள் பாட்டுக் கற்றுக்கொள்கிறீர்களோ?" என்று கேலிப் புன்னகையுடன் ரகுபதி சந்துருவைப் பார்த்துக் கேட்டுவிட்டுச் சாவித்திரியைக் குறும்பாகப் பார்த்தான்.
சாவித்திரி, கோபத்தால் முகம் சிவக்கச் சீதாவைப் பார்த் தாள். 'நாளெல்லாம் வள வளவென்று அரட்டை அடித்துக் கொண்டிருப்பாயே. இப்போது என்ன ஒரே பேசா மடந்தை ஆகி விட்டாய் நீ?' என்று கேட்பதுபோல் சாவித்திரி கோபக் கண் களால் தன் தங்கையைப் பார்த்தாள்.
சீதா, அர்த்த புஷ்டியுடன் ஒரு சிரிப்புச் சிரித்தாள். அப்புறம் ரகுபதியின் பக்கம் திரும்பி, "வீணாகச் சாவித்திரியின் பேரில் சந்தேகப்படாதீர்கள்.. நான் தான் இந்த வீட்டில் பாட்டுக் கற்றுக்கொள்கிறவள். எனக்காகத் தான் தம்பூர் வாங்கியிருக்கிறார்கள். சாவித்திரி அதைத் தன் விரலாலும் தொட்ட தில்லை!" என்று கூறிவிட்டுக் 'களுக்' கென்று சிரித்தாள்.
"அப்படியானால் யாராவது பாட்டுத் தெரிந்தவர்கள் தான் இரண்டு பாட்டுகள் பாடக்கூடாதா? என்ன ஸரஸு! இந்தப் பூனை யும் பாலைக் குடிக்குமா என்று உட்கார்ந்திருக்கிறாயே? நீதான் பாடேன். கல்யாணப் பெண்தான் பாடவேண்டும் என்று எந்தச் சாஸ்திரத்திலாவது சொல்லியிருக்கிறதா?" என்று ரகுபதி உரிமையுடன் ஸரஸ்வதியிடம் கூறினான்.
"பாடித்தான் ஆகவேண்டும் என்றால், கட்டாயம் பாடிவிடுகிறேன், அத்தான்" என்று சரஸ்வதி கூறிவிட்டு, சீதாவின் பக்கம் திரும்பி, "சீதா! நீ போய்த் தம்பூரை எடுத்து வா அம்மா" என்றாள்.
ஸரஸ்வதி பாடப்போகிறாள் என்பதைக் கேட்டவுடன் சந்துருவின் மனம் சந்தோஷத்தில் ஆழ்ந்தது. தம்பூரை மீட்டிக் கொண்டு மெல்லிய குரலில் அவள் பாட ஆரம்பித்ததும் அங்கிருந்தவர்கள் எல்லோரும் மெய்ம் மறந்து உட்கார்ந்திருந்தனர். 'ஆஹா! இவ்வளவு அழகும் சங்கீத ஞானமும் உடைய பெண்ணைவிட்டு, அசலில் இவர்கள் பெண் தேடுவானேன்?' என்று சந்துரு நினைத்து வியந்தான். மங்களமும் இதையே நினைத்து ஆச்சரியப் பட்டாள். கூடத்தில் மாட்டியிருந்த ஸரஸ்வதி தேவியின் படத்திலிருந்தே, மானிட உருக்கொண்டு இந்தப் பெண் வந்து உட்கார்ந்து பாடுகிறதோ என்று ஐயம் ஏற்படும் நிலையைச் சிருஷ்டித்து விட்டாள் ஸரஸ்வதி. அவள் உள்ளம் உருக, 'பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து' என்கிற பாடலைப் பாடியபோது, எல்லோர் உள்ளமும் அந்தப் பக்திப் பிரவாகத்தில் லயித்து, அதிலேயே அழுந்தி விட்டன என்று கூறலாம். ஸரஸ்வதி, கச்சிதமாக நான்கு கீர்த்தனங்கள் பாடித் தம்பூரை உரைக்குள் இட்டு, மூடி வைத்துவிட்டு, உட்கார்ந்தது தான் எல்லோரும் சுய நினைவை அடைந்தார்கள்.
”நன்றாகப் பாடுகிறாளே! இந்தக் குழந்தைக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா?" என்று மங்களம் ஸ்வர்ணத்தைப் பார்த்துக் கேட்டாள். ஸ்வர்ணம் சிறிது நேரம் ஒன்றும் தோன்றாமல் பதில் எதுவும் கூறாமல் உட்கார்ந்திருந்தாள். பிறகு, கண்ணீர் திரையிட, "இல்லை. அவளுக்குத்தான் பகவான் ஒரு தீராத குறையைக் கொடுத்துவிட்டானே!" என்றாள் ஸ்வர்ணாம்பாள்.
ஸரஸ்வதிக்கு ஏதோ குறை என்று கூறியதும், அங்கிருந்தவர்களுக்கு அது என்ன வென்று அறிய ஆவல் ஏற்பட்டது. அவர்கள் அதை எப்படிக் கேட்டது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே அவர்கள் கேளாமலேயே ஸ்வர்ணாம்பாள் ஸரஸ்வதியின் கால் ஊனத்தைப்பற்றி மங்களத்திடம் கூறினாள். மேலும் அவள். "அவள்” அத்தானுக்கு அவளைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற அபிப்பிராயம் இருந்தது. தாயில்லாததால், குழந்தையிலிருந்தே நானும் அவளை வளர்த்து விட்டேன். அவளுக்குத்தான் கல்யாணம் செய்து கொள்ளவே இஷ்டமில்லையாம். 'முதலில் எல்லோரும் சம்மதப்பட்டுச் செய்து கொண்டு விடுவீர்கள் அத்தை. காலப்போக்கில் உங்கள் மனமெல்லாம் எப்படி எப்படியோ மாறிவிடும்' என்று கூறுகிறாள்.
"அத்தானுக்குப் பாட்டுப் பிடிக்கிறது என்று என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்கிறான் என்று வைத்துக்கொள் அத்தை. கொஞ்ச நாளைக்குள் அதுவும் அலுத்துவிடும். 'போயும் வந்தும் இந்த நொண்டியைத் தானா என் தலையில் கட்டிக்கொண்டு அழவேண்டும்!' என்று அவன் மனம் சலித்துப்போகும். வேண்டாம், அத்தை' என்று வேதாந்தம் பேசுகிறாள் ஸரஸ்வதி" என்று ஸ்வர்ணாம்பாள் மங்களத்திடம் கூறினாள்.
ஸரஸ்வதி லஜ்ஜையுடன் முகத்தைக் கவிழ்த்துக்கொண்டு, "என்ன அத்தை இது? போகிற இடத்திலெல்லாம் என் ராமாயணம் பெரிசாக இருக்கிறதே” என்று கேட்டாள்,
"ராமாயணம் என்ன? வயசு வந்த பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுக்காமல் வைத்திருந்தால், காரணம் என்ன என்று தெரிந்து கொள்ள நினைப்பது எல்லோருக்கும் சசஜந்தானே?" என்றாள் ஸ்வர்ணாம்பாள்.
பெண் வீட்டாருக்குப் பிள்ளையைப் பிடித்துவிட்டது. பிள்ளை வீட்டாரின் அபிப்பிராயமும் ஒன்றாகத் தான் இருந்தது. சாவித்திரியின் சம்மதத்தை, ஸரஸ்வதி அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டாள். கூடத்தில் இருந்தவர்கள் ஏதோ வேலையாக வெளியே சென்றதும் ஸரஸ்வதி, சாவித்திரியின் அருகில் சென்று உட்கார்ந்தாள். பிறகு சங்கோசத்துடன், ”என் அத்தானை உனக்குப் பிடித்திருக்கிறதா? சொல்லிவிடு. நான் ரகசியமாக இந்த விஷயத்தை அவனிடம் சொல்லி விடுகிறேன்" என்று கேட்டாள். சாவித்திரி மெதுவாகத் தலையை அசைத்து விட்டு மௌனமாக உட்கார்ந்திருந்தாள்.
”பெண்ணின் மன ஆழத்தை இன்னொரு பெண்ணே புரிந்து கொள்வது கஷ்டம்” என்பதை ஸரஸ்வதி உணர்ந்திருக்க மாட்டாள். சிலர் வெகுளியாக இருக்கிறார்கள். மனத்தில் ஒன்றையும் ஒளித்து வைக்கமாட்டார்கள். படபடவென்று பேசிவிடுவார்கள். சிலரின் மன ஆழத்தில் என்ன எண்ணங்கள் இருக்கின்றன -என்பதையே எவ்வளவு முயன்முலும் புரிந்து கொள்ள முடியாது. ஸரஸ்வதி வெள்ளை மனம் படைத்தவள்; கபடம் இல்லாதவள்; சூதுவாதுகளுக்கு மனத்தில் அவள் இடமே அளிக்கவில்லை.
சாவித்திரி, வார்த்தைகளையே அளந்து பேசும் சுபாவம் படைத்தவள். உள்ளத்தில் ஏற்படும் உணர்ச்சிகளை அப்படியே முகத்தில் காட்டி, ஒரு நொடிப் பொழுதில் எல்லோரையும் மட்டந் தட்டிவிடுவாள் அவள். பேசாமல் மௌனமாக உட்கார்ந்திருக்கும் சாவித்திரியை ஸரஸ்வதி கேலியாகப் பார்த்து, ”இப்பொழுது என்னிடம் ஒன்றும் சொல்ல மாட்டாய். அப்படித் தானே? அத்தானிடமே நேரில் சொல்லப் போகிறாயாக்கும்! ஹும்............" என்று பெருமூச்சு விட்டுவிட்டு அந்த இடத்தை விட்டு எழுந்து சென்றாள்.
இவ்வளவு நேரமும் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த பாட்டிக்கு இப்போது தான் சந்தர்ப்பம் கிடைத்தது. ” இதென்னடீது அதிசயம்! பெண் பார்க்க வந்தால் அவளைப் பாடச் சொல்றதைத் தான் கண்டதுண்டு; கேட்டதுண்டு. இங்கே தலைகீழ்ப் பாடமா பயிருக்கே! யாரோ ஒருத்தி வருகிறாள்; இல்லாத உறவெல்லாம் கொண்டாடி; புருஷா இருக்கிறதையும் பார்க்காமே பாட்டுக் கச்சேரி செய்கிறாள். இதுகளும் பேஷ் பேஷ்னு தலையாட்டுகிறதுகள்! ஹும் . . . . நன்றாகவே யில்லை" என்று சரளி வரிசை பாட ஆரம்பித்து விட்டாள். ஆனால் அவளை யாரும் சட்டை செய்வதாக இல்லை. குறை சொல்வது தான் அவள் கூடப் பிறந்த குணமாயிற்றே என்று உதறிவிட்டு, மேற்கொண்டு ஆகவேண்டியதைக் -கவனிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
----------------
பிள்ளை வீட்டார் ஊருக்குப் புறப்பட்டுச் சென்ற பிறகு அந்த வீட்டுச் சாப்பிடும் கூடத்தில் ஒரே இரைச்சலும், சிரிப்புமாக இருந்தது. எப்பொழுதும் பிறருடைய குற்றங் குறைகளையே சிலர் ஆராய்ந்து கொண்டிருப்பார்கள். தங்களிடம் இருக்கும் ஒரு சிறு குறைகூட அவர்கள் மனதில் படுவதில்லை.
"ஆமாம், என்ன பிரமாதமாக வீடு கட்டிவிட்டான்? முக்கால் அடிச் சுவர் வைத்து சேற்றைப் பூசி ஒழுங்கு பண்ணி விட்டானாக்கும்" என்று வாடகை வீட்டில் இருந்து கொண்டே வீடு கட்டுகிறவர்களைப் பழிக்கும் சுபாவமுடையவர்களை நாம் தினமும் சந்திக்கிறோம். எப்பொழுதும் எதற்கெடுத்தாலும் பிறரைப் பழிக்கும் சுபாவம் உடையவள் சாவித்திரி. எவ்வளவோ அருமையுடன் வளர்க்கும் பெற்றோரிடமே அவளுக்குக் குறை உண்டு. அன்றும் வழக்கம்போல் சாப்பிட்டுக் கொண்டே ஆரம்பித்தாள் சாவித்திரி :
"நானுந்தான் பார்க்கிறேன். அந்தப் பெண் ஸரஸ்வதிக்கு என்ன அவர்கள் வீட்டில் அவ்வளவு சுதந்தரம்? வெட்கம் இல்லாமல் காலைச் சாய்த்துக்கொண்டு இவள் பெண் பார்க்க வரவில்லை என்று யார் அடித்தார்கள்?"
"ஆமாண்டி அம்மா, நானும் கவனித்தேன். 'அத்தான், அத்தான்' என்று வயசுவந்த பிள்ளையோடு என்ன குலாவல் வேண்டி இருக்கிறதோ!" என்றாள் பாட்டி. சாதாரணமாக ஏதாவது அகப் பட்டால்கூட கண், காது, மூக்கு வைத்துப் பேசுபவள் ஆயிற்றே பாட்டி? பேத்தியிடம் அதிக வாஞ்சை கொண்டவள் அவள். இந்த விஷயத்தில் மங்களத்துக்கும், பாட்டிக்கும் பல தகராறுகளும், சண்டைகளும் கிளம்புவது அந்த வீட்டில் சர்வ சகஜம்.
"சிறு குழந்தை மாதிரி உனக்கு யார் பேரிலாவது ஏதாவது சொல்லிக் கொண்டே யிருக்க வேண்டும். இந்த புத்தியை விட்டு விடு, சாவித்திரி!" என்று சந்துரு அதட்டிக் கூறி அவளைக் கண்டித்தான்.
"என்னடா அப்பா, அப்படிச் சொல்லிவிட்டேன்? நீ பிரமாதமாக அவளுக்குப் பரிந்துகொண்டு கிளம்புகிறாயோ" என்று வெடுக்கென்று கேட்டு அவனைப் பொசுக்கிவிடுவது போல் நிமிர்ந்து பார்த்தாள் சாவித்திரி.
"கிளம்புகிறது என்ன? உள்ளதைச் சொன்னால் உனக்குக் கோபம் பொத்துக்கொண்டு வருகிறதே! பிறருடைய குறைகளைப்பற்றியே நீ பேசிக்கொண்டிருந்தால் உன்னிடம் எவ்வளவு குறைகள் இருக்கின் றன என்பதை உனக்கு ஆராய்வதற்கே பொழுது இல்லாமல் போய்விடும்: இனிமேல் உன் கல்யாணத்துக்கு அப்புறம் நீயும், ஸரஸ்வதியும் ஒரே வீட்டில் இருக்க வேண்டியவர்கள். இருவரும் ஒருவர் மனதை ஒருவர் அறிந்து பழக வேண்டியவர்கள். அப்படியில்லாமல் சண்டை பிடித்துக்கொண்டு நின்றால் நன்றாக இருக்குமா, சாவித்திரி?" என்று இதுவரையில் மெள்னமாக இருந்த ராஜமையர், பெண்ணை அன்புடன் கடிந்து கொண்டார். அதிக அவசியம் நேர்ந்தாலன்றி அவர் பேசமாட்டார். தாய்க்கும், தம் மனைவிக்கும் ஏற்படும் மனஸ்தாபங்களைக்கூட அவர் காதில் போட்டுக் கொள்வதில்லையே!
ஒரு குடும்பத்தில் எஜமானனுடைய நிலைமைதான் மிகவும் பரிதாபமானது. ஏனெனில், மாமியார் - மருமகள் சண்டையில் யாருக்குச் சமாதானம் கூறுவது என்பது மிகவும் கடினமான பிரச்னை. "பெற்று வளர்த்து நான் கஷ்டப்பட்டது எனக்கல்லவா தெரியும்? நேற்று வந்தவள் வைத்தது 'சட்டமாகி விட்டது. இந்த வீட்டில்’ என்பாள் மாமியார். - "அன்பும் ஆதரவும் வேண்டுமென்று பெற்றோர், உற்றோரை எல்லாம் விட்டுவிட்டு இவரே கதி என்று வந்திருக்கிறேனே; என் மனசை ஏன் இப்படிப் புண்ணாக அடிக்கிறார்கள்?" என்பாள் மருமகள். பெற்ற தாயும், வாழ்க்கைத் துணைவியும் குடும்பத் தலைவனது அன்புக்குப் பாத்திரமானவர்கள். இது கடினமான - பிரச்னை தானே?
நாளடைவில் பாட்டியின் சண்டை - சச்சரவுகள் சகஜமாகி விட்டன. மங்களத்தின் மனம் மறத்துப் போய்விட்டது. இரண்டு வேளை சாப்பாடு ஜீரணமாகிறமாதிரி மாமியாரின் கடுஞ் சொற்களையும் ஜீரணித்துக்கொண்டாள் மங்களம். தாய்க்கு ஏற்பட்டிருந்த சகிப்புத் தன்மையில் ஓர் அணு அளவு கூட சாவித்திரிக்கு இல்லை. அவள் குழந்தைப் பருவத்தில் பாட்டியும், அம்மாவும் சண்டை பிடித்துக் கொண்டதெல்லாம் பசுமரத்தாணி போல் சாவித்திரியின் மனதில் பதிந்து போயிருந்தது. பாட்டி, அம்மாவை ஓட ஓட விரட்டியமாதிரி தானும் விரட்டினாள். எடுத்த்தெற்கெல்லாம் 'ஹடம்' பிடித்தாள். அதைப் பாட்டியின் சலுசையால் சாதித்துக்கொண்டாள்.
ராஜமையர் சாவித்திரியைக் கடிந்து கொண்ட பிறகு சிறிது நேரம் எல்லோரும் மௌனமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். சாவித்திரிக்குக் கோபம் என்பதை எல்லோரும் புரிந்து கொண்டிருந்தார்கள். 'கடு கடு' வென்று முகத்தை வைத்துக் கொண்டு குனிந்த தலை நிமிராமல் அவள் உட்கார்ந்து சாப்பிடுவதைப் பார்த்த சீதா, "யாருக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, எனக்கு ஸரஸ்வதியை ரொம்பவும் பிடிக்கிறது. சிரித்துச் சிரித்துக் கபடம் இல்லாமல் பேசுகிறாளே" என்றாள்.
”உனக்கு யாரைத்தான் பிடிக்காது? எல்லோரையும் பிடிக்கும்!" என்று ஆத்திரத்துடன் கூறிவிட்டுச் சாப்பிடும் தாலத்தை 'நக்' கென்று நகர்த்திக்கொண்டே அவ்விடம்விட்டு எழுந்தாள் சாவித்திரி.
இதுவரையில் இவர்கள் சச்சரவில் தலையிடாமல் இருந்த மங்களம் சலிப்புடன், "என்ன சண்டை இது, சாப்பிடுகிற வேளையில்? அரட்டை அடிக்காமல் ஒரு நாளாவது சாப்பிடுகிறீர்களா?" என்று கோபித்துக்கொண்டாள். அதற்குமேல் எல்லோரும் கப்சிப்பென்று அடங்கிவிட்டார்கள்.
ராஜமையர் வெற்றிலைக்குச் சுண்ணாம்பைத் தடவியபடி சமையற்கட்டில் வந்து மங்களத்தின் எதிரில் உட்கார்ந்து கொண்டார். சிறிது பொறுத்து, ”வர வர உனக்கு என்னைக் கவனிக்கவே அவகாசம் இல்லாமல் போய்விட்டது மங்களம்! சாப்பிட்டு கை அலம்புகிறதற்கு முன்னாடியே தயாராக வெற்றிலை மடித்து வைத்துக்கொண்டு காமரா அறையில் வந்து நிற்பாயே. இப்பொழுது என்னடாவென்றால் பாக்கு, வெற்றிலை, சுண்ணாம்பு மூன்றையும் தேடி நானே எடுத்துப் போட்டுக்கொண்டு உனக்கும் தட்டில் வைத்துக்கொண்டு வந்து கொடுக்க வேண்டியிருக்கிறது" என்று பாதி நிஷ்டுரமாகவும் பாதி கேலியாகவும் கூறினார்.
மங்களமும் பொய்க்கோபத்துடன் அவரைப் பார்த்து, "நாளைக்கே மாப்பிள்ளை வரப்போகிறான். பிறகு நாட்டுப் பெண் வருவாள். இன்னும் உங்களுக்கு நான் நடுங்க வேண்டாமா? நடுங்கிச் செத்ததெல்லாம் போதாதா?" என்று கேட்டாள்.
"பார்த்தாயா மங்களம், அப்பொழுதே சொல்லவேண்டும் என்று இருந்தேன். குழந்தைகள் ஒருத்தருக்கு ஒருத்தர் ஏகப் பட்டதாகத் தர்க்கம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எதிரில் பேசவேண்டாம் என்று பேசாமல் இருந்து விட்டேன். பிள்ளைக்கும், அவனைச் சேர்ந்தவர்களுக்கும் சாவித்திரியை மிகவும் பிடித்து விட்டதாம். என் பெண்ணின் சம்மதத்தைக் கேட்டுவிடு" என்றார் ராஜமையர்.
மங்களத்துக்கு இப்பொழுது நிஜமாகவே கோபம் வந்தது. "சின்ன வயசிலிருந்தே செல்லம் கொடுத்து வளர்த்துவிட்டீர்கள் உங்கள் பெண்ணை! நான் என்ன கேட்கிறது அவளை? அவள் ஏதாவது என்னை மதித்துப் பதில் சொல்லுவாளா? நீங்களே கேளுங்கள். முதலில் அவளுக்குப் பிடித்தாகவேண்டும். அப்புறம் உங்கள் அம்மாவுக்குப் பிடிக்கவேண்டும் ….”
மங்களம் இந்த வார்த்தைகளை உரக்கவே சொன்னாள். பாட்டியோ பலகாரமெல்லாம் முடிந்து கூடத்தில் ஊஞ்சலில் படுத்து அரைத்தூக்கத்தில் ஆழ்ந்திருந்தாள். ஆகவே மாமியாரைப்பற்றி இரண்டொரு வார்த்தைகள் நிஷ்டுரமாகப் பேச முடிந்தது.
""நம் காலத்தைப்போல் இல்லையே. பெண் பார்ப்பதற்குப் பிள்ளை வீட்டார் போவார்களே தவிர, பிள்ளையை அவ்வளவாக அழைத்துப்போகும் வழக்கம் இருந்ததில்லை. பெரியவர்கள் பார்த்துச் செய்துவைத்த கல்யாணங்களில் நூற்றில் தொண்ணூறு அழகாகவே அமைந்தன. பிள்ளைக்குப் பதினைந்து வயசும் பெண்ணுக்கு ஒன்பது வயசும் என்று பார்த்துச்செய்த கல்யாணங்களில் எழுபது வயசுவரையில் தம்பதிகள் அன்யோன்யமாக வாழ்ந்திருக்கிறார்கள். இந்தக் காலத்தில் மனசுக்குப் பிடித்திருக்கிறதா என்று ஆயிரம் தடவை பெண், பிள்ளை சம்மதத்தைக் கேட்டு நடத்தும் கல்யாணம் நூற்றுக்குத் தொண்ணூறில் 'நான், நீ' என்ற சச்சரவுடன் வாழ்க்கை நடத்துகிறார்கள்" என்று ராஜமையர் கூறினார்.
அப்பொழுது சமையலறைப் பக்கம் வந்த சந்துரு தாயைப் பார்த்து, 'ஏன் அம்மா! நீ அப்பாவை முதலில் பார்த்துத்தான் கல்யாணம் பண்ணிக்கொண்டாயா?" என்று விஷமச் சிரிப்புடன் கேட்டான்.
”ஏண்டா, எனக்கென்ன குறைச்சல்? பாட்டி காதில் விழுந்தால் உனக்குப் பிடித்திருக்கிற சனியை விடுவித்து விடுவாளே! கறுப்பாக இருக்கிறேன் என்றுதானேடா கேலி செய்கிறாய்? ' யானை கறுத்தால் ஆயிரம் பொன்' என்று சொல்லுவார்கள். ஆண்பிள்ளை எப்படி இருந்தால் என்ன? புருஷ காம்பீர்யம் என்பது ஒன்று இருந்தால் போதும்" என்றார் ராஜமையர்.
மங்களம் முகத்தைத் தோளில் இடித்துக்கொண்டு, "போகிறது. அந்த மட்டும் பழமொழியைச் சொல்லியாவது ஆறுதல் அடைகிறீர்களே! பிள்ளையும், பெண்களும் என் நிறத்தைக் கொள்ளாமல் இருந்திருந்தால் உங்கள் பெண்களுக்கு வரன் தேட காலுக்கு விளக்கெண்ணெய்தான் போட்டுக்கொள்ள வேண்டும். நீங்கள்!" என்று ஒரு போடு போட்டாள்.
"அதான் நான் கறுப்பு என்று அந்த நாளில் உன் வீட்டார் என்னைக் கொஞ்சமாகவா ஏசினார்கள்? உன் அத்தை கூட, 'பலாச்சுளை மீது ஈ உட்கார்ந்தமாதிரி' என்று எனக்கும், உனக்கும் 'பச்சை' பூசும்போது பந்தலிலேயே சொல்லவில்லையா மங்களம்?”
"ஐயோ! எனக்கு நாழிகை ஆகிறது. தடி தடியாய் அததுகள் தின்றுவிட்டு ரேடியோ கேட்கப் போய்விட்டதுகளே. போதாக்குறைக்கு நீங்கள் வேறே எதையாவது பேசிக் கொண்டு!" என்று கூறிவிட்டு மங்களம் அடுக்களையைச் சுத்தம் செய்வதில் முனைந்தாள் .
-------------------
கல்யாணத்திற்காக ராஜமையர் விசேஷ ஏற்பாடுகள் எல்லாம் செய்திருந்தார். வீட்டைச்சுற்றி பெரிய கொட்டாரப் பந்தல் போட்டிருந்தது. விருந்தினர்கள் தங்குவதற்காகவும் சம்பந்தி வீட்டார் தங்குவதற்காகவும் இரண்டு வீடுகள் வேறு வாடகைக்கு அமர்த்தினார். அந்த ஜில்லாவிலேயே கைதேர்ந்த சமையற்காரர்களை ஏற்பாடு செய்தார். சீர் வரிசைகளும், மற்ற ஏற்பாடுகளும் விமரிசையாகவே இருந்தன. 'இன்னொரு பெண் இருக்கிறாளே; கொஞ்சம் நிதானமாகத்தான் செலவு செய்யுங்களேன்" என்று மங்களம் அடிக்கடி அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
பிரபலமான நாதஸ்வர வித்வானை வரவழைக்க அவர் ஏற்பாடு செய்திருந்தார். மாப்பிள்ளை ரகுபதிக்குச் சங்கீதம் என்றால் பிடித்தம் அதிகம் என்று சந்துரு அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தான். 'பாட்டுக் கச்சேரிக்கு நல்ல பாடகராக யாரையாவது அமர்த்தலாம்' என்று ராஜமையர் கூறியபோது, சந்துரு அவரைத் தடுத்துவிட்டான். எங்கே ஸரஸ்வதியின் வீணாகானத்தையும், தேனைப்போல் இனிக்கும் அவள் குரல் இனிமையையும் கேட்க முடியாமல் போய்விடுமோ என்கிற கவலை தான் காரணமாக இருக்கவேண்டும். ”அந்தப் பெண்தான் கொள்ளைப் பாட்டு பாடுகிறாளே" என்று மங்களம் வேறு கூறினாள்.
புடைவைகள் வாங்கும் பொறுப்பைச் சாவித்திரியின் இஷ்டப் படி விட்டுவிட்டார்கள். "நம் ஜவுளி தினுசுகளே அறுநூறு ரூபாய்க்குமேல் போய்விட்டதே. இன்னும் மாப்பிள்ளைக்கு எடுக்கும் ஜவுளிகளையும் நீங்களே வாங்குவதாக ஒப்புக் கொண்டிருக்கிறீர்களாமே" என்று கவலையுடன் மங்களம் ஜவுளிக்கடைப் பட்டியலைப் பார்த்துக் கேட்டாள்.
”த்ஸு! பிரமாதம்... முதல் முதலில் குழந்தைக்குக் கல்யாணம் செய்கிறோம். விட்டுத் தள்ளு இதையெல்லாம். செலவைப் பார்த்தால் முடியுமா?" என்று ஒரே வார்த்தையில் பதில் கூறி முடித்துவிட்டார் ராஜமையர்.
கணவன் வார்த்தையைத் தடுத்துப் பேசி அறியாத மங்களம் பதில் எதுவும் கூறாமல் பட்சணங்களுக்குச் சாமான் ஜாதா மனத்துக்குள் தயாரித்துக்கொண்டிருந்த போது வாசற் கதவை திறந்து கொண்டு தந்திச் சேவகன் உள்ளே வந்து தந்தி ஒன்றை ராமையரிடம் கொடுத்துவிட்டுச் சென்றான்.
தந்தியைப் பிரித்துப் பார்த்தவுடன் அவர் முகம் சந்தோஷத்தால் மலர்ந்தது. சில வருஷங்களாகப் பார்க்காதிருந்த அவர் சகோதரி பாலமும், அவள் குழந்தையும் வருவதாகச் செய்தி எத்திருந்தது.
"பாலம், நாளைக் காலை வண்டிக்கு வருகிறாளாம். மாப்பிள்ளை ராமசேஷு தந்தி கொடுத்திருக்கிறார். நாத்தனாரும், மதனியும் வருஷக் கணக்கில் சேர்த்து வைத்திருக்கும் விஷயங்களைப் பேசித் தீர்த்துவிடுவீர்கள்" என்று சிரித்துக் கொண்டே கூறிவிட்டு அந்தச் செய்தியைத் தாயினிடம் தெரிவிப்பதற்காக ஊஞ்சலில் படுத்திருக்கும் அம்மாவைத் தேடிக்கொண்டு போனார் அவர்.
நாத்தனார் வரப்போகிறாள் என்பது தெரிந்தவுடன் மங்களம் மிகவும் சந்தோஷம் அடைந்தாள். பாலம் எங்கே வர முடியாதென்று எழுதி விடுகிறாளோ என்று மங்களம் - கவலைப் பட்டுக்கொண்டிருந்தாள். "கல்யாணத்தில் சம்பந்திகளைக் கவனிப்பது போல் தன்னையும் கவனிக்கவில்லை என்று பாட்டியிட மிருந்து புகார்கள் கிளம்பும். பாலம் வந்து விட்டாளானால், 'உன் அம்மாவின் வேலைகளை நீ கவனித்துக் கொள்' என்று அவளிடம் ஒப்படைத்துவிடுவேன். மாப்பிள்ளைக்கு ’அவளை முன்னாடி அனுப்பச் சொல்லிக் கடிதம் போட்டுவிடுங்கள்" என்று ராஜமையரைத் தினம் தொந்தரவு செய்துவந்தாள் மங்களம்.
பாலத்தின் கணவர் ஒரு வியாதிக்கார மனுஷர். நல்ல கல்வி ஞானமும், சம்பாதிக்கும் திறமையும் அவருக்கு . இருந்த போதிலும் ஆரோக்ய பாக்கியத்தை இழந்து சதா மருந்து சாப்பிட்டுக் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார். ஆகவே கடந்த ஏழு வருஷங்களாக அன்பைச் சொரிந்த தமையனையும், ஆசையுடன் பராமரித்த மதனியையும், தாயையும் மறந்து கணவனுடனேயே பிறந்தகம் வராமல் தங்கிவிட்டாள் பாலம், எட்டு மாதக் குழந்தையாக டில்லிக்குப் போன பத்மா இப்பொழுது எட்டு வயதுக் குழந்தையாக மாறி இருந்தாள்.
ஊரிலிருந்து அடுத்த நாள் காலையில் ராமசேஷவும், பாலமும், பத்மாவும் வண்டியிலிருந்து இறங்கிய போது வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் அடையாளம் தெரியாமல் மாறி இருந்தார்கள்.
"வாடி அம்மா பாலம்! வா அப்பா ராமு" என்று ராஜமையர் தங்கையையும் அவள் புருஷனையும் வரவேற்றார்.
பழக்கம் இல்லாத புது மனிதர்களைப் பார்த்து பத்மா, தாயின் அருகிலேயே நின்றுகொண்டிருந்தாள். "பத்மாதானே இது? வாடி என் கண்ணே " என்று பாட்டி ஆசையுடன் பேத்தியை இழுத்துக் கட்டிக்கொண்டு அவள் கன்னத்தை வருடினாள்.
"மன்னி! நீதான் என்ன இவ்வளவு கிழவியாகிவிட்டாயே? மாப்பிள்ளை வருவதற்கு முன்னாடியே கிழமாகப் போய் விட்டாயே மன்னி!" என்று பாலம் சந்தோஷத்தில் சொன்ன வார்த்தைகளையே திருப்பித் திருப்பிச் சொன்னாள்.
இப்படி ஒருவருக்கொருவர் சந்தோஷ மிகுதியில் நேரம் போவது தெரியாமல் நின்றுகொண்டே பேசினர். நாத்தனாருடன் எவ்வளவோ பேசவேண்டுமென்று நினைத்திருந்த மங்களம் பிரமித்துப்போய் பாலத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்,
"என்ன அம்மா, அத்தையை விழுங்கிவிடுவதுபோல் பார்க்கிறாயே! அத்தை எந்தக் கடையில் டில்லியில் அரிசி வாங்கினாள் என்று கேட்க வேண்டும்போல் இருக்கிறதா உனக்கு?" என்றான் சந்துரு.
"ஆமாம், ஆமாம்; பாலம் கொஞ்சம் பருத்துத் தான் இருக்கிறாள்" என்று தலையை ஆட்டிப் பிள்ளை கூறுவதை ஆமோதித்தார் ராஜமையர்.
”சரி, சரி, மணி ஆகிறது. அவாள் எல்லாம் சாப்பிட்டு எத்தனை நாள் ஆச்சோ? எழுந்து ஸ்நானம் செய்யப் போகட்டும்" என்று கூறி மங்களம் உள்ளே சென்றாள்:
சாப்பாடு முடிந்த பின்னர் பாலம் சாவித்திரிக்காக வாங்கியிருக்கும் வெள்ளிப் பாத்திரங்கள், புடைவைகளைப் பார்வை யிட்டாள். வெள்ளியில் வாங்கியிருந்த குடத்தைப் பார்த்து விட்டு, "ஆமாம் மன்னி! குடம் பித்தளையில் வாங்குவது தானே? வெள்ளிக் குடத்திலா சாதாரணமாக நாம் ஜலம் கொண்டு வருகிறோம்?" என்று கேட்டாள்.
"அதென்னவோ அம்மா! பெட்டியிலே தூங்குவதற்காக எத்தனை புடைலைகள், நகைகள், பாத்திரங்கள் செய்தாக வேண்டுமோ? அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களை வாங்கிவிட்டு மிகுதிப் பணத்தைப் பயனுள்ளதாகச் செலவழித்தால் எவ்வளவோ நன்றாக இருக்கும். நாலு பேர் மெச்சிப் புகழவேண்டும் என்பதற்காகவே பணத்தை இப்படி விரயம் செய்யவேண்டி இருக்கிறது" என்றாள் மங்களம்.
"என்னதான் பணம் காசு இருந்தாலும் நம் கல்யாணத்தின் போதெல்லாம் இந்த மாதிரி டாம்பீகச் செலவு குறைவாகத்தான் இருந்தது; இல்லையா மன்னி? இப்படிக் கண்டபடி பணத்தை வாரி இறைக்கிறார்கள். சாப்பாட்டுப் பண்டங்களை அழ்க வைத்தும் ஊச வைத்தும் குப்பையிலே கொட்டுகிறார்கள். டில்லியில் ஒரு கல்யாணம் நடந்தது. தடபுடலாக ஒர வைபவமாகத்தான் நடத்தினார்கள். வந்தவர்கள் வந்தபடி இருந்தார்கள். ஆனால் அந்தக் கல்யாணத்துக்காக இரவு பகலாக உழைத்த வேலைக்காரர்களுக்கு நிறுத்துத்தான் சாப்பாடு போட்டார்களாம். பலகாரங்களைப் பூட்டிவைத்து ஊசிப்போன பிறகு எடுத்துக் கொடுத்தார்களாம்! எப்படி இருக்கிறது விஷயம்?" என்று ஆத்திரத்துடன் பேசினாள் பாலம்.
"அத்தை, டில்லிக்குப் போன பிறகு நன்றாகப் பேசக் கற்றுக் கொண்டு இருக்கிறாள். அடிக்கடி சட்டசபை கூட்டங்களுக்குப் போவாயாமே, அத்தை!" என்று கேலி செய்தாள் சாவித்திரி.
"என்னவெல்லாமோ பேசிக் கொண்டிருக்கிறேனே, முக்கியமான விஷயத்தை மறந்துவிட்டு. ஏண்டி சாவித்திரி! உனக்கு வரப்போகிற ஆத்துக்காரர் எப்படி இருக்கிறார்? சிவப்பா, கறுப்பா" என்று சாவித்திரியைப் பார்த்துக் கேட்டாள் பாலம்.
"போ அத்தை! நான் சரியாகக் கவனிக்கவில்லை" என்று வெட்கத்துடன் கூறினாள் சாவித்திரி.
"பொய்யைப் பார் பொய்யை! இவள் மனசில் தான் என்ன இருக்கிறதோ? கேட்டுக் கொள் அத்தை. மாப்பிள்ளைக்குப் பாட்டு என்றால் ஆசையாம். இவளை அவர் பாடச்சொன்ன போது இவள் அவரை விழித்துப் பார்த்தாளே? அப்பொழுது அவர் சிவப்பா, கறுப்பா என்று தெரியவில்லையாமா இவளுக்கு?" என்று கேட்டுச் சீதா, சாவித்திரியை மேலே பேசவிடாமல் தடுத்தாள்.
"இந்த வாயாடியுடன் என்ன பேச்சு வேண்டி இருக்கிறது?" என்று கூறிவிட்டு சாவித்திரி 'சடக்' கென்று எழுந்து அப்பால் சென்றாள்.
--------------
சாவித்திரி -ரகுபதி விவாகம் 'ஜாம், ஜாம்' என்று நடந்தேறியது. பணத்தைப் 'பணம்' என்று பாராமல் செலவழித்தார் ராஜமையர். சந்துருவுக்கும். சீதாவுக்கும் இருந்த உற்சாகத்தில் ஊரையே அழைத்துவிட்டார்கள். வந்தவா, போனவர்களுக்கு ஒரு குறைவும் இல்லாமல், ஓடி ஆடி எல்லாவற்றையும் கவனித்து வந்தாள் மங்களம். சம்பந்தி வர்க்கத்திலும், 'நொட்டைச் சொல்' சொல்ல யாரும் இல்லை. ஸ்வர்ணமும், ஸரஸ்வதியும் இன்ப வெள்ளத்தில் மிதந்து திளைத்தனர். அவ்வளவு தடபுடலாகக் கல்யாணம் நடைபெறுவதில் அவர்களுக்குப் பரமதிருப்தி.
அன்று சித்திரை மாதத்துப் பௌர்ணமி. பால் போன்ற நிலவொளியில் அந்த ஊரும் அதன் சுற்றுப்புறங்களும் மூழ்கிக் கிடந்தது. அந்த ஊரில் பல இடங்களில் கல்யாணம். நாதஸ்வரத்தின் இன்னிசையும் நிலவின் குளுமையும், 'கம்'மென்று காதவழிக்கு வாசனை வீசும் மல்லிகை மலர்களுமாகச் சேர்ந்து ஸ்வர்க்கத்தில் இவ்வளவு இன்பம் உண்டா என்கிற சந்தேகத்தை எழுப்பின. ராஜமையர் பூந்தோட்டத்திலிருந்து குண்டு மல்லிகையாகவே கல்யாணத்திற்கு வரவழைத்திருந்தார். கரு நாகம்போல் வளைந்து துவளும் பெண்களின் ஜடைகளின் மீது வெள்ளை வெளேர் என்று மணம் வீசும் மல்லிகையின் அகு பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தது. முகூர்த்தத்தன்று இரவு விருந்துக்கு அப்புறம், கொட்டாரப் பந்தலில் ஊஞ்சலில் பெண்ணையும், பிள்ளையையும் உட்கார வைத்தார்கள். ஊஞ்சல் வேடிக்கையை ரசிப்பதற்கு ஆண்களை விடப் பெண்களின் கூட்டமே வழக்கம்போல் அதிகமாக இருந்தது.
" என்னடி இது? ஊஞ்சலில் அவர்களை உட்கார்த்திவைத்து விட்டு எல்லோரும் பேசாமல் இருக்கிறீர்கள்? நறுக்கென்று நாலு பாட்டுகள் பாடமாட்டீர்களோ" என்று கூறிவிட்டு 'கன்னூஞ்சல் ஆடினாரே, மீனாட்சி சுந்தரேஸ்வரர்' என்று இரண்டு கட்டை ஸ்ருதியில் பாட ஆரம்பித்தாள் பெரிய சுமங்கலியாகிய ஒரு அம்மாள்.
யுவதிகள் கூட்டத்திலிருந்து கலீர் என்று சிரிப்பொலி எழுந்தது. பொங்கிவந்த சிரிப்பை வெகு சிரமப்பட்டுச் சீதா அடக்கிக்கொண்டு. "ஸரஸு! பாட்டுத் தெரிந்தும் பாடாமல் இருப்பவர்களுக்கு இதுதான் சரியான தண்டனை! புரிந்ததா உனக்கு?" என்று கேட்டாள். ஊஞ்சல் பாட்டை அரைகுறை பாக நிறுத்திவிட்டு மறுபடியும் அந்த அம்மாள், 'லாலி --லாலய்ய லாலி' என்று ஆரம்பிக்கவே, கொஞ்சம் தள்ளி உட்கார்ந்திருந்த ராஜமையர் சுவாதீனமாக அவளைப் பார்த்து, "அம்மாமி! வருகிற மாசந்தானே மாமாவுக்குச் சஷ்டியப்த பூர்த்தி? ஜமாய்த்துத் தள்ளிவிடுவாய்போல் இருக்கிறதே!" என்று கேலி செய்தார்.
"போடா அப்பா! சிறுசுகள் எல்லாம் பாடாமல் உட்கார்ந்திருந்தால் கிழவிதானே பாடவேண்டும்?" என்று கூறி அந்தப் பாட்டையும் அரைகுறையாகவே நிறுத்தி விட்டாள், அந்த அம்மாள்.
இதற்குள்ளாகச் சந்துருவின் கண்கள் ஆயிரம் முறை ஸரஸ்வதியின் பக்கம் பார்த்து, 'உன் கானத்தைக் கேட்பதற்காகவே தவம் கிடக்கிறேனே' என்று சொல்லாமல் சொல்லின. புன்னகை ததும்ப நிலத்தைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந் திருந்த ஸரஸ்வதி திடீரென்று நிமிர்ந்து பார்த்து, "சாவித்திரி! பெண் பார்க்க வந்த அன்றே எங்களை எல்லாம் நீ ஏமாற்றி விட்டாய். அத்தானுடைய விருப்பப்படி என்னிடந்தான் நீ பாட்டுக் கற்றுக்கொள்ள வேண்டும். ஏதோ ஒரு பாட்டு உனக்குத் தெரிந்தவரையில் பாடு பார்க்கலாம்" என்று கொஞ்சுதலாகக் கூறினாள்.
எதிலும் கலந்து கொள்ளாமல் எங்கோ பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்த சாவித்திரி, திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்: பிறகு கடுகடுவென்றிருந்த முசுபாவத்தைச் சட்டென்று மாற்றிக் கொண்டு புன்சிரிப்புடன், "எனக்குத் தெரியாது என்று அன்றே சொல்லி இருக்கிறேனே" என்றாள்.
"பேஷ், பேஷ்... பாட்டு பாட்டு என்று மாய்ந்துபோனவனுக்கு இந்த மாதிரி மனைவியா வந்து வாய்க்க வேண்டும்? ரொம்ப அழகுதான் போ" என்று ரகுபதியின் அத்தை பரிகாசம் செய்யவே, சாவித்திரிக்கு ரோஷம் பொத்துக்கொண்டது. சிறிது அதட்டலாக, "எனக்குப் பாடத் தெரியாது என்றால் பேசாமல் விட்டுவிட வேண்டும். இது என்ன தொந்தரவு?" என்று கூறி முகத்தை 'உர்' ரென்று வைத்துக்கொண்டாள்.
இதுவரையில் பேசாதிருந்த ரகுபதி ஸரஸ்வதியின் பக்கம் திரும்பி, "ஸரஸு! நீதான் பாடேன். இதில் நான், நீ என்று போட்டிக்கு என்ன இருக்கிறது?" என்று கூறினான்.
ஸரஸ்வதி சிரித்துக்கொண்டே உள்ளே போய்த் தன் வீணையை எடுத்து வைத்துக்கொண்டு ஸ்ருதி சேர்க்க ஆரம்பித்தாள். தூரத்தில் நின்று இதுகாறும் ஸரஸ்வதியின் பரிகாசங்களைக் கவனித்துவந்த சந்துரு பந்தலுக்குள் வந்து உட்கார்ந்து கொண்டான்.
ஸ்ருதி சேர்த்து முடிந்ததும் ஸரஸ்வதி ரகுபதியைப் பார்த்து, "அத்தான்! எந்தப் பாட்டை வாசிக்கட்டும்?" என்று கேட்டாள். அதற்குள் ராஜமையர், ”குழந்தை! 'ஷண்முகப்-பிரியா' ராகத்தை நீ அற்புதமாக வாசிப்பாயாமே. எல்லோரும் சொல்லுகிறார்கள்: அதையே வாசி, அம்மா கேட்கலாம்" என்றார்.
வீணையின் மதுர ஒலி, அந்த மோகன நிலவிலே தேவலோகத்துக் கின்னரர்கள் எழுப்பும் யாழின் ஒலிபோல் இருந்தது. குழந்தைகள் கொஞ்சும் மழலையைப்போல் மனதுக்கு இன்பமளித்தது. மகான்களின் உபதேச மொழிகளைக் கேட்டு ஆறுதல் கொள்ளும் மன நிலையை அங்குள்ளவர்கள் அடைந்தார்கள். தெய்வ சந்நிதானத்தில் நிற்கும் பரவச நிலையைச் சிலர் அடைந்தார்கள். சந்துருவின் உள்ளம் கிளுகிளுத்தது. நொடிக்கொரு முறை அன்புடன் ஸரஸ்வதியை அவன் பார்த்த போது அவன் பார்வையின் தாக்குதலைச் சகிக்க முடியாமல் ஸரஸ்வதி தலையைக் குனிந்து கொண்டே பாடினாள்.
வெளியே பாலைப் பொழிவதுபோல் நிலவு வீசிக்கொண்டிருந்தது. களி நடனம் புரியும் மோகன சந்திரிகையிலே, ஸரஸ்வதியின் குரல் இனிமையோடு, இழைந்து வரும் வீணா கானம் ஒவ்வொருவர் உள்ளத்தில் ஒவ்வொருவிதமான உணர்ச்சியை ஊறச் செய்தது.
'ஷண்முகப்பிரியா' ராகத்தில், 'வள்ளி நாயகனே' என்கிற கீர்த்தனத்தை முடித்த ஸரஸ்வதி 'சங்கராபரண' த்தில் ஒரு ஜாவளியையும் வாசித்தாள். மதுர கீதத்தைப் பருகியவாறு அங்கிருந்தவர்கள் மெய்ம் மறந்து உட்கார்ந்திருந்தனர்.
------------
கல்யாணத்துக்கு அப்புறம் சில தினங்கள் வரையில் எல்லோரும் ஏக மனதாக ஸரஸ்வதியின் சங்கீத ஞானத்தைப் புகழ்ந்து கொண்டிருந்தார்கள். அவள் 'கலீர், கலீர்' என்று சிரித்தது. குறும்புத்தனம் நிறைந்த அவள் அழகிய முகம், மைதீட்டிய பேசும் விழிகள், கபடமற்ற எளிய சுபாவம் முதலியவை, சந்துருவின் மனதில் அழியாத ஓவியமாகப் பதிந்து விட்டன. தனிமையில் உட்கார்ந்து அவன் மானசிகமாக ஸரஸ்வதியை நினைத்து. நினைத்துப் பார்த்துக் களிப்பெய்தினான், அவளைப்பற்றி வீட்டிலே யாராவது பேசிக் கொண்டிருந்தால் ஆனந்தம் பொங்க அங்கு நின்று அதை முற்றும் கேட்டு விட்டுத்தான் நகருவான். படிக்கும் போது ஒருவருக்கும் தெரியாமல் காகிதத்தில், 'ஸரஸ்வதி, ஸரஸ்வதி' என்று எழுதிப் பார்ப்பதில் அவன் மனம் திருப்தியடைந்தது.
கல்யாணமெல்லாம் கழித்து, பாலம் டில்லிக்குப் புறப்படுவதற்கு முதல் தினம் சாப்பிடும் கூடத்தில் உட்கார்ந்து எல்லோரும் பேசிக்கொண்டிருந்தனர். சீதா கல்யாண அவசரத்தில் ஸரஸ்வதியிடமிருந்து புதுப் பாட்டுகளாக இரண்டு கற்றுக் கொண்டிருந்தாள். பூஜை அறையில் அவள் தம்பூரை மீட்டி அதைப் பாடும்போது சந்துரு அங்கு வந்து சேர்ந்தான். பாட்டைச் சிறிது நேரம் கேட்டுவிட்டு அவன், "இந்தப் பாட்டில் தானே அநுபல்லவியில் 'நிரவல்' செய்தாள் ஸரஸ்வதி? அபாரமாக இருந்தது. இப்பொழுது கூட என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது சீதா" என்றான் அவன்.
"செதுக்கி எடுத்த சிலை மாதிரி மூக்கும், விழியும், பாவம், பச்சைக் கிளிமாதிரி இருக்கிறது அந்தப் பெண்; கால்கூட அப்படி ஒன்றும் ஊனம் இல்லை; வெளியிலே ஒன்றும் தெரியவில்லை. ஒரே பிடிவாதமாகக் கல்யாணமே வேண்டாம் என்கிறாளாமே. நான்கூட என் மைத்துனனுக்குப் பண்ணிக்கொள்ளலாம் என்று சம்பந்தி அம்மாளை விசாரித்துப் பார்த்தேன்" என்றாள் பாலம்.
“தகப்பனார் வெளிநாட்டில் இருக்கிறாராம். மாசம் இந்தப் பொண்ணுக்கென்று நூறு ரூபாய் அனுப்புகிறாராம். கல்யாணத்துக்கென்று பத்தாயிரம் ரூபாய் வைத்திருக்கிறாராம்! ' பத்தாயிரம் ரூபாய்க்கு ஒரு சங்கீதப் பள்ளிக்கூடம் ஆரம்பித்து விடுகிறேன் அத்தை' என்று சொல்லுகிறதாம் அந்தப் பெண்! அங்கங்கே கல்யாணத்துக்குப் பணமில்லாமல் பெண்கள் நிற்கறதுகள். இது என்னடா என்றால் புதுமாதிரியாக இருக்கிறது' என்று மங்களம் நாத்தனாரிடம் சொல்லி அதிசயப்பட்டாள்.
"அதிசயந்தான்! இந்தக் காலத்தில் பெண்களும், பிள்ளைகளும், கல்யாணம் வேண்டாம் என்று சொல்வது ஒரு 'பாஷன்' என்று நினைத்துக் கொண்டிருக்கிறதுகள். நம்ப சுப்பரமணியின் பெண்ணும் பி. ஏ. பாஸ் பண்ணிவிட்டு ஆபீஸுக்குப் போய் உத்தியோகம் பண்ணுகிறதாமே! 'ஏண்டி புருஷாள் எல்லாம் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் அவதிப்படுகிறாளே, நீ ஆபீஸுக்குப் போய்ச் சம்பாதித்துத்தான் ஆகவேண்டுமாடி?' என்று கேட்டால், 'எதற்கெடுத்தாலும் புருஷன் கையை எதற்கு எதிர்பார்க்க வேண்டும்?' என்று கேட்கிறாளே! அதிசயந்தாண்டி அம்மா. என் காலத்திலே புருஷனுக்குத் தெரியாமல் நாலு காசு வைத்துக்கொள்ளத் தெரியாதே எனக்கு?" என்று சொல்லி மிகவும் அதிசயப்பட்டாள் பாட்டி.
”இதல்லாம் ஒன்றும் அதிசயம் இல்லை பாட்டி. நீ அத்தையுடன் வடநாட்டுக்குப் போய் அங்கே நல்ல காப்பிக்கொட்டை கிடைக்காமல் காப்பியையே விட்டுவிட்டு வரப்போகிறாயே, அது தான் ரொம்பவும் அதிசயம் பாட்டி! காசிக்குப் போனால் தனக்குப் பிடித்தமான பண்டம் எதையாவது சாப்பிடுவதில்லை என்று விட்டுவிட வேண்டுமே. காப்பியை விட்டுத் தொலைத்து விடேன்" என்று சீதா பாட்டியைக் கேலி செய்தாள்.
பாட்டியும், பாலத்துடன் காசி க்ஷேத்திரத்தைத் தரிசிக்கப் புறப்பட ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தாள். 'அங்கே போனால் கோதுமை ரொட்டிதான் சாப்பிடவேண்டும்' என்று சாவித்திரி பயமுறுத்தினாள் பாட்டியை. 'நல்ல காப்பிக்கொட்டை கிடைக்காது' என்று சீதா பயமுறுத்தினாள். 'எச்சில், விழுப்பு ஒன்றும் பார்க்கக்கூடாது' என்று சந்துரு மிரட்டினான்.
"நீ பேசாமல் இரு அம்மா. அதுகள் தமாஷுக்குச் சொல்லுகிறதுகள்" என்று பாலம் தாயாரைச் சமாதானப்படுத்தினாள். மாமியாரும், நாத்தனாரும் ஊருக்குக் கிளம்பியதுமே வீடு வெறிச் சென்று போய்விட்டது மங்களத்துக்கு. இன்னும் இரண்டொரு மாதங்களில் சாவித்திரியும் புக்ககம் கிளம்பிவிடுவாளே! மங்களம் இதை நினைத்து மிகவும் வேதனைப்பட்டாள்.
அம்மாவுக்குப் பாட்டியின் துணப்பன் இல்லாமல் பாத்த, பாசு இருக்காது போல் இருக்கிறது" என்று சந்துரு தாயைக் கேலி செய்தான்.
பாட்டியும், பாலமும் ஊருக்குச் சென்ற ஒரு மாதத்துக்கு அப்புறம் சம்பந்தி வீட்டாரிடமிருந்து ராஜமையருக்குக் கடிதம் வந்தது. அதில் சாவித்திரியை நல்ல நாள் பார்த்துக் கொண்டு வந்து விடவேண்டும் என்று எழுதி இருந்தார்கள்.
"எல்லோரும் இப்படி ஒரேயடியாய்க் கிளம்பிவிட்டால் நான் எப்படி ஒண்டியாக இருக்கிறது இந்த வீட்டில்? சந்துரு அவன்பாட்டுக்கு மாடி அறையில் உட்கார்ந்து இருப்பான். சீதாவுக்கு ஹிந்தி வகுப்புக்குப் போகவும், சங்கீதப் பள்ளிக் சுடத்துக்குப் போகவுமே பொழுது சரியாக இருக்கிறது. கொட்டுக் கொட்டென்று வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டு எப்படி இருக்கிறது?" என்று மங்களம் அலுத்துக்கொண்டாள்.
கடிதத்தின் வாசகத்தை உரக்க ஒரு தரம் மனைவியிடம் படித்துக் காண்பித்தார் ராஜமையர் :
அன்புள்ள மாமா அவர்களுக்கு ரகுபதி அநேக நமஸ்காரம். உபய க்ஷேமம். சௌ. சாவித்திரியை இந்த மாசக் கடைசிக்குள் நம் வீட்டில் கொண்டுவந்து விடும்படி அம்மா தங்களுக்கு எழுதச் சொன்னாள். வரும் தேதியை முன்னாடியே தெரியப்படுத்தவும். மாமிக்கு என் நமஸ்காரத்தைச் சொல்லவும்.
தங்கள் அன்புள்ள,
ரகுபதி.
காதில் ஜ்வலிக்கும் வைரக் கம்மல்களைப் புடைவை முன்றானையால் துடைத்துக் கொண்டே மங்களம், "என்ன செய்யப் போகிறீர்கள்?" என்று கணவரைக் கேட்டாள்.
ராஜமையர் யோசனையுடன் தலையைத் தடவிக்கொண்டார், பிறகு, கம்மிய குரலில் வருத்தம் தேங்கும் முகத்துடன், பார்த்தாயா மங்களம்! நேற்றுவரை பெற்று வளர்த்தவர்களுக்கு இல்லாத உரிமை ரகுபதிக்கு இப்போது ஏற்பட்டிருக்கிறது! பெண்ணை அழைத்து வர வேண்டும் என்று சொன்னவுடன் கதறிக்கொண்டு ஓடுகிறோம். இது விந்தை அல்லவா?" என்றார்.
"ஆமாம். . ஆமாம் . . உங்கள் காலத்தைக் கொஞ்சம் நினைவு படுத்திக்கொள்ளுங்கள். நமக்குக் கல்யாணம் முடிந்ததும், 'என் அண்ணா பிள்ளைக்கு ஆண்டு நிறைவு. அத்தை பெண்ணுக்குச் சீமந்தம்' என்று என்னை எங்கே பிறந்தகத்தில் தங்கவிட்டீர்கள்? வேண்டியதுதான் உங்களுக்கும்!" என்று மங்களம் பழைய விஷயங்களை நினைவு படுத்தினாள். இருந்தாலும், அவள் குரலும் கம்மிப்போயிருந்தது.
இவர்கள் கூடத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த சமயம் காமரா அறையில் சாவித்திரி தன் கணவன் எழுதி இருந்த கடிதத்தைப் படித்துக்கொண்டிருந்தாள். திரும்பத் திரும்பப் படிக்கும்படியாக அக்கடிதம் காதல் ரஸத்தில் தோய்ந்த தாகவோ, சிறிது இன்ப மொழிகளைக் கொண்டதாகவோ இல்லை. அதற்கு மாறாகக் கடிதத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரையில், ஸரஸ்வதி, சாவித்திரியைத் தினமும் எதிர்பார்ப்பதைப் பற்றியும், அவன் மனம் கோணாமல் அவள் ஸரஸ்வதியிடம் சங்கீதம் பயின்று இன்னும் சில வருஷங்களில் ஒரு பாடகி ஆக வேண்டும் என்பதை வற்புறுத்தியும் எழுதப்பட்டிருந்தது.
சாவித்திரி பற்றிவரும் எரிச்சலுடன் கடிதத்தைப் பெட்டியில் வைத்து, 'டப்' பென்று அகங்காரத்துடன் மூடினாள். கீழே சந்துருவின் குரல் பலமாகக் கேட்டது.
"ஊருக்குப் போகும்போது நல்ல வீணையாக ஒன்று வாங்கித் தந்துவிடேன். மாப்பிள்ளைக்குப் பரம திருப்தியாக இருக்கும்" என்று சொல்லிக் கொண்டிருந்தான் சந்துரு.
தடதடவென்று கோபத்தில் இரண்டொரு படிகளைத் தாண்டி இறங்கிக் கீழே வந்தாள் சாவித்திரி. வந்த வேகத்தில் மேல்மூச்சு வாங்குவதையும் பாராட்டாமல், "எனக்கு வீணையும் வேண்டாம்! பூனையும் வேண்டாம். உங்களுக்கெல்லாம் வேறு வேலையே கிடையாதா என்ன?' என்று எரிந்து விழுந்தாள் அவள்.
சீதாவும், சந்துருவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கண்னைச் சிமிட்டிக்கொண்டனர்.
"நம் வழக்கப்படி சீர் செய்து விடுவோம்; புருஷன்பாடு, மனைவி பாடு. நாம் ஒன்றும் வீணை வாங்கவேண்டாம்" என்று கூறி மங்களம் அங்கே ஆரம்பிக்க இருந்த சண்டைக்கு முற்றுப் புள்ளி வைத்தாள்,
-----------
ரகுபதியின் குடும்பத்தார் வசித்து வந்த ஊர், கிராமாந்தர வர்க்கத்தைச் சேர்ந்ததல்ல. நூறு பிராம்மணக் குடும்பங்களும் மற்ற வகுப்புக் குடும்பங்கள் ஐநூறு வாழ்ந்த அந்தச் சிற்றூரில் ஒரு பெரிய பள்ளிக் கூடமும், தபாலாபீஸும், அழகிய கோவிலும் இருந்தன. அவ்வூரில் வசித்துவந்த பிராம்மணக் குடும்பங்களில் பெரும்பாலோர் நல்ல ஸ்திதியில் இருப்பவர்கள். ரகுபதியின் தகப்பனார் அவன் குழந்தையாக இருந்தபோதே இறந்து விட்டார். ஊர் ஜனங்கள் நல்லவர்களாக இருந்ததால் பால்ய விதவையான ஸ்வர்ணாம்பாள் ஒருவித வம்புக்கும் ஆளாகாமல் அந்த ஊரிலேயே காலம் தள்ளி வந்தாள். ரகுபதி தாய்க்கு அடங்கிய பிள்ளை. ஆனால், தாயார் தான் பிள்ளைக்கு அடங்கி நடந்துவருவதாகச் சொல்லும்படி இருந்தது. பெரிய படிப்பெல்லாம் படித்துத் தேறிவிட்டு ரகுபதி வேலைக்குப் போகாமல் வீட்டுடன் இருந்தான்.
சிறு வயதில் ஸ்வர்ணாம்பாள் - நன்றாகப் பாடுவாள். அவள் குரலினிமைக்கு ஆசைப்பட்டே ரகுபதியின் தகப்பனார் அவளைக் கல்யாணம் பண்ணிக்கொண் டாராம். அவரும் சங்கீதப் பித்துப்பிடித்த மனுஷன். இந்தக் காலத்தைப்போல் சங்கீத சபைகளும், நாடக மண்டலிகளும் அப்பொழுது அவ்வளவாக இல்லை. நல்ல சங்கீதத்தைக் கேட்க வேண்டுமானால் கோயில்களின் உற்சவகாலங்களிலும், பெரிய மனிதர்கள் வீட்டுக் கல்யாணங்களிலுமே முடியும். பெரிய வித்வான்களை அழைத்துக் கோயிலில் கச்சேரிகளுக்கு ஏற்பாடு செய்வதோடு. அவர்களைத் தம் வீட்டிலேயே அழைத்து வேண்டிய சௌகர்யங்களைச் செய்து கொடுப்பார் ரகுபதியின் தகப்பனார். அவருக்கு வாய்த்திருந்த மனைவியும் அவர் எடுத்த காரியத்தில் பங்கெடுத்துக்கொண்டு சண்டை, பூசலுக்கு இடம் இல்லாமல் நடந்து கொண்டாள். பரம்பரையாக இருந்துவந்த சங்கீத ஞானம் ரகுபதியையும் பிடித்துக்கொண்டது. அவனும் தகப்பனாரைப்போலவே சங்கித விழாக்கள் நடத்தினான். அதற்காக நன்கொடைகள் கொடுத்தான்.
குழந்தைப் பருவத்திலிருந்து தாயை இழந்து தன்னுடன் வளர்ந்து வந்த ஸரஸ்வதிக்கும் அவ்வித்தையைப் பழுதில்லாமல் கற்பித்தான். தனக்கு வாய்க்கும் மனைவியும் அம்மாதிரி இருக்க பேண்டும் என்று அவன் ஆசைப்படுவது இயற்கையே அல்லவா?
அன்று கோழி கூவுவதற்கு முன்பே ரகுபதியின் வீட்டில் எல்லோரும் விழித்துக் கொண்டு விட்டார்கள். வேலைக்காரி, வரப்போகும் தன் புது எஜமானிக்காக விதவிதமாகக் கோலங்கள் போட்டு, செம்மண் பூசிக்கொண்டிருந்தாள். சமையலறையில் ஸ்வர்ணாம்பாளும், ஸரஸ்வதியும் காலை ஆகாரம் தயாரிப்பதில் முனைந்திருந்தனர். எவ்வளவுதான் பணம் காசில் மூழ்கி இருந்தாலும், சமையலுக்கு ஆள் வைத்துக் கொள்ளும் வழக்கம் மட்டும் அவ்வூரில் இல்லை. யார் வீட்டில் எந்த விசேஷம் நிகழ்ந்தாலும் ஊரில் உள்ள அத்தனை பெண்களும் ஒன்று சேருவார்கள். தலைக்கொரு வேலையாகச் செய்வார்கள். வேலையும் அழகாகவும் ஒழுங்காகவும் முடிந்துவிடும். அன்றும் கோடி வீட்டிலிருந்து பாகீரதி அம்மாமி வந்திருந்தாள். வயது அறுபது இருக்கும். வாய் படபடவென்று எதையாவது பொரிந்து தள்ளுவதற்கு ஈடாக கையும் சரசரவென்று லட்சியமில்லாமல் வேலை செய்து கொண்டிருக்கும். இதற்கு நேர் விரோத குணம் படைத்தவள் ரகுபதியின் தாய் ஸ்வர்ணாம்பாள். கறிகாய் நறுக்க உட்கார்ந்தால் மணிக் கணக்காக அங்கேயே உட்கார்ந்திருப்பாள்!
பாகீரதி அம்மாமி மற்றக் காரியங்களைக் கவனித்துக்கொண்டிருக்க, ஸ்வர்ணம் ஒரு கூடை நிறையக் காய்கறிகளை வைத்துக் கொண்டு அரிவாள்மணைக்கு முன்பு உட்கார்ந்திருந்தாள். உள்ளே யிருந்து கமகமவென்று சமையல் வாசனை கிளம்பிக் கொண்டிருந்தது. பாகீரதி அம்மாமி பாயசத்துக்குச் சேமியாவை வறுத்துக்கொண்டே, "ஏண்டி ஸ்வர்ணம்! நீ முன்னாடி அந்த இடத்தை விட்டு எழுந்திரு பார்க்கலாம். மீதியை நான் நறுக்கிக் கொள்கிறேன்" என்றாள்.
"இருக்கட்டும் அம்மாமி, நீங்கள் எத்தனை காரியங்கள் தான் செய்வீர்கள்?"
”நான் என்னத்தைச் செய்ய இருக்கிறது? அடுப்பில் வைத்தால் தானே ஆகிறது. ஏண்டி! புடலங்காயைக் கூட்டுக்கு நறுக்கச் சொன்னால் விரல் பருமனுக்கு நறுக்கி வைத்திருக்கிறாயே!" என்று கூறினாள் பாகீரதி அம்மாமி.
"த்ஸொ ...... த்ஸொ . . . . திரும்பவும் நறுக்கிவிடட்டுமா மாமி?" என்று கேட்டாள் ஸ்வர்ணம் பாகீரதியைப் பார்த்து.
”வேண்டாம்; வேண்டாம். நாட்டுப்பெண் வருகிற நாழிகை ஆகிறது. நீ போய் மற்றக் காரியங்களைக் கவனி" என்றாள் அந்த அம்மாள்.
அவள் சொல்லி வாய்மூடுமுன் வாசலில் வண்டி வந்து நின்றது. அதிலிருந்து மங்களமும், சந்துருவும், சாவித்திரியும் இறங்கினார்கள். ஸரஸ்வதி பரக்கப் பரக்க ஆரத்தி எடுத்துக் கொண்டு வந்தாள். அவள் முகத்தில் பொங்கிய சந்தோஷத்தைக் கண்டு சந்துரு வியப்படைந்தான்.
"வா, சாவித்திரி! வாருங்கள் மாமி" என்று புன்முறுவலுடன் வரவேற்றாள் ஸரஸ்வதி. அவர்களை அழைத்துவிட்டு அவள் திரும்பியபோது சந்துரு தன்னையே உற்றுப் பார்ப்பதை அறிந்ததும் அவளுக்கு வெட்கமாகப் போய் விட்டது. ரகுபதி அதுசமயம் வெளியே சென்றிருந்ததால் சங்கோஜத்துடன் ஸரஸ்வதி அவனைப் பார்த்து, "வாருங்கள்" என்று அழைத்தாள்.
பல வருஷங்களுக்கு அப்புறம் அவ்வீட்டிற்கு ஒளி தர வந்திருக்கும் சாவித்திரி, மாமியாரை நமஸ்கரித்தபோது ஸ்வர்ணாம்பாள் உணர்ச்சி மிகுதியால் வாயடைத்து நின்றாள். கண்களில் ஆனந்த பாஷ்பம் பொங்கி வழிந்தது. உவகையுடன் உள்ளம் - பூரிக்க, பெருமிதத்துடன் சாவித்திரியைக் கட்டி அணைத்துக் கொண்டாள்.
“வீட்டிலே எல்லோரும் சௌக்யந்தானே, மாமி?" என்று ஸரஸ்வதி மங்களத்தை விசாரித்தபோது, 'சௌக்யந்தானே?" என்று தன்னை நேரில் கேட்பதற்கு வெட்கப்பட்டுக் கொண்டு ஸரஸ்வதி மறைமுகமாகத் தன் தாயை விசாரிப்பதாக நினைத்த சந்துரு, ”சீதா உன்னை ரொம்பவும் விசாரித்ததாகச் சொல்லச் சொன்னாள். உன்னிடம் கற்றுக்கொண்ட பாட்டுகளைப் பாடம் பண்ணிவிட்டதாகவும் சொன்னாள்" என்றான்.
"ஓஹோ!" என்று அவனுக்குப் பதில் அளித்துவிட்டு ஸரஸ்வதி மற்ற அலுவல்களைக் கவனிக்க உள்ளே சென்றாள்.
இதற்குள்ளாக வெளியே போயிருந்த ரகுபதி திரும்பி விடவே சாவித்திரியும், மங்களமும் கூடத்திலிருந்து பின் கட்டுக்குச் சென்றார்கள்:
"வந்தவர்களை வா என்று கூடச் சொல்லத் தெரியாமல் பிரமித்து உட்கார்ந்திருக்கிறாயே ஸ்வர்ணம். நாலு வார்த்தைகள் நறுக்கென்று பேசத் தெரிய-வில்லையே உனக்கு!" என்று பாகீரதி அம்மாமி கையில் பிடித்த கரண்டியுடன் சம்பந்தி அம்மாளை வரவேற்று. ஸ்வர்ணத்தைப் பரிகாசம் செய்தாள்.
ஸ்வர்ணம் நிஜமாகவே பிரமித்துப்போய் இருந்தாள். ஒன்றரை வயதுக் குழந்தையிலிருந்து தகப்பன் இல்லாமல் அல்லும் பகலும் அரும்பாடுபட்டு வளர்த்த குழந்தைக்குக் கல்யாணம் ஆகி மனைவி வந்திருக்கிறாள் என்றால் அது எளிதான காரியமா? நாலு பேரைப்போல் அவளும் பேரன் பேத்தி எடுக்கப் போகிறாள். இருண்டிருந்த வீட்டில் ஒளி வீசப்போகிறது. இனிமேல் தன்னை மிஞ்சக்கூடியவர்கள் யாரும் இல்லை என்றே அவளுக்குத் தோன்றியது.
சாவித்திரி புக்ககம் வந்து இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. அந்த இரண்டு மாதங்களில் ஸ்வர்ணம் நாட்டுப்பெண்ணுக்கு விதவிதமாகப் பூவைத்துப் பின்னினாள். நகைகள் பூட்டி அழகு பார்த்தாள். ஒரு வேலையும் செய்யவிடாமல் தானே எல்லா வற்றையும் கவனித்துக்கொண்டாள். சாதாரணமாகத் திருப்தி யடையும் மனமிருந்தால், மாமியாரின் இந்தச் சரளமான சுபாவத்தைப் புரிந்துகொண்டு சாவித்திரி ராஜாத்தி மாதிரி இருந்திருக்கலாம். அந்த வீட்டுக்கு நாட்டுப்பெண்ணாகவும், பெண்ணாகவும் இருந்து அருமையோடு வாழ்ந்திருக்கலாம். ஆனால், லேசில் ஒருவரையும் நம்பும் சுபாவம் படைத்தவள் அல்ல சாவித்திரி. அவள் எதிரில் தங்கப் பதுமைபோல் வளையவரும் ஸரஸ்வதியைப் பார்த்தபோதெல்லாம் அவள் நெஞ்சு பொறாமை யால் வெடித்துவிடும் போல் இருந்தது.
”இவளுக்கு என்ன இந்த வீட்டில் இவ்வளவு சலுகை?' என்று தன்னைக் கேட்டு அதற்கு விடை புரியாமல் தவித்தாள் சாவித்திரி, சதாகாலமும் முகத்தை 'உப்' பென்று வைத்துக்கொண்டு கணவன் கேட்கும் வார்த்தைகளுக்குப் பதில் கூறாமல் இருந்தாள் அவள்.
ஓர் இரவு கணவனும், மனைவியும் தனியாகச் சந்திக்கும் போது சாவித்திரியின் கண்கள் கோவைப் பழம்போல் அழுது சிவந்திருந்தன. திறந்த மாடியில் கைப்பிடிச் சுவரைப் பிடித்த வண்ணம் தொலைவில் தெரியும் ஆலயத்தின் கோபுரத்தைப் பார்த்தவாறு நின்றிருந்தாள் சாவித்திரி.
அடிமேல் அடிவைத்து உள்ளம் சிலிர்க்க, தன்னை நாடிவரும் ரகுபதியை அவள் கவனிக்கவில்லை. மங்கிய நிலாவில் மனைவியின் முகத்தைத் திருப்பி அவன் பார்த்தபோது கண்களிலிருந்து கண் ணீர் முத்துக்கள் போல் கன்னங்களில் உருண்டன. ஏன் சாவித்திரி அழுகிறாள்? பல குடும்பங்களில் இன்றும் நடக்கும் மாமியார். நாட்டுப் பெண் சண்டை தன் குடும்பத்தில் தோன்றிவிட்டதா என்று ரகுபதி ஐயுற்றான். பிறகு அன்புடன், "சாவித்திரி! ஏன் அழுகிறாய்?" என்று கேட்டு அவள் கண்ணீரைத் துடைத்தான்.
-------------
கன்னங்களில் வழிந்த கண்ணீரைத்தான் ரகுபதியின் கரங்கள் துடைத்தன. சாவித்திரியின் மனதில் ஏற்பட்டிருக்கும் குறையை - சந்தேகத்தை - பொறாமையை அவனால் துடைக்க முடியவில்லை 'மனிதன், அல்ப சந்தோஷி' என்று பெரியவர்கள் கூறுகிறார்கள். கல்யாணம் முடிந்தவுடன் மனைவியின் விருப்பப் படி கணவன் நடப்பதோ, கணவனின் விருப்பப்படி மனைவி நடப்பதோ இயலாத காரியம். வெவ்வேறு குடும்பத்திலிருந்து தெய்வ ஆக்ஞையால் சேர்க்கப்பட்ட இருவரின் உள்ளங்களும் ஒன்றுபடச் சில வருஷங்களாவது அவகாசம் வேண்டி இருக்கும். சாவித்திரி அந்த வீட்டுக்கு வந்ததும் அங்கு ஸரஸ்வதிக்கு அளித்திருக்கும் உரிமையைக் கண்டு ஆச்சரியப்பட்டாள். பீரோவிலிருந்து அத்தானுடைய கைச் செலவுக்குப் பணங்கூட அவள்தான் எடுத்துக் கொத்தாள். வரவு-செலவைக் கணக்கெழுதி வைத்தாள். ஸரஸ்வதிக்கு என்று சங்கீத சபைகளில் ஒன்றுக்குப் பத்தாகப் பணம் செலவழித்துக் கச்சேரிகளுக்கு ரகுபதி டிக்கெட்டுகள் வாங்கினான்.
தன் கணவன் இப்படிச் செலவழிப்பதை சாவித்திரி ஒரு குற்றமாக எடுத்துக் கொண்டாள். என்ன தான் தகப்பனார் மாதந்தோறும் ஸரஸ்வதிக்காகப் பணம் அனுப்பினாலும், பணத்தில் ’என்னுடையது உன்னுடையது' என்று எங்கே வித்தியாசம் தெரிகிறது? ரகுபதி வெளியே சென்று விட்டு வீடு திரும்பும்போது சாவித்திரி கணவன் மீது ஏற்பட்ட கோபத்தால் அவன் வந்ததைக்கூட லட்சியம் செய்யாமல் தன் அறையில் கதவைச் சார்த்திக்கொண்டு உட்கார்ந்திருப்பாள். வேலை செய்து களைத்துப்போய் ஸ்வர்ணம் படுத்துத் தூங்கிவிடுவாள். அப்பொழுதெல்லாம் ஸரஸ்வதி அத்தானுக்குப் பரிந்து உபசரித்துக் காபி கொடுத்து, உணவு பரிமாறி, கவனித்துக் கொள்வாள். ”அவள் ஏன் அதைச் செய்யவேண்டும்? அவனுடையவள் என்று உரிமை பாராட்ட ஒருத்தி இருக்கும்போது ஸரஸ்வதிக்கும், இன்னொருத்திக்கும் அந்த இடத்தில் என்ன வேலை இருக்கிறது? 'எனக்குச் சாதம் போட வா' என்று கணவன் வந்து தன்னைக் கூப்பிடட்டுமே! தன்னைக் காணாவிடில், ’ஸரஸு" என்று அவளைக் கூப்பிட அவனுக்கு என்ன உரிமை இருக்கிறது?' என்று சாவித்திரி எண்ணி எண்ணி மனம் வெதும்பினாள்.
குழந்தை மனம் படைத்த ஸரஸ்வதிக்குச் சாவித்திரியின் போக்கு புரியவில்லை. ஒரு வேளை கணவன், மனைவிக்குள் ஏதாவது ஊடலாக இருக்கும். நாம் ஏன் இதில் தலையிடவேண்டும்?' என்று அவள் என்றும் போல் பழகி வந்தாள்.
நீல வர்ணப் பட்டுப் புடைவை உடுத்தி, இளம் பச்சை ரவிக்கை அணிந்து சாவித்திரி அழகாகத் தோன்றினாள் ரகுபதிக்கு. சிரித்துப் பேசும் சமயத்தில் கண்ணீரும், சண்டையும் அவனுக்குப் பிடிக்கவில்லை. கீழே தூக்கம் வராமையால் ஸரஸ்வதி வீணையில் 'ஸஹானா' ராகத்தை வாசித்துக் கொண்டிருந்தாள்: சங்கீதத்துக்கே குழந்தையிலிருந்து பெரியவர்கள் வரையில் யாவரையும் 'மயக்கும் சக்தி’ உண்டு. சாவித்திரி வீணாகானத்தில் தன்னை மறந்து சிறிது நேரம் கணவனின் மார்பில் சாய்ந்திருந்தாள். ரகுபதி அவளை அன்புடன் பார்த்து, "சாவித்திரி! அப்பா, அம்மாவை நினைத்துக்கொண்டு விட்டாயா? ஊருக்குப் போக வேண்டும் என்று ஆசை வந்து விட்டதாக்கும்!" என்று கொஞ்சினான்.
"அதெல்லாம் ஒன்றும் இல்லை." - முகம் சிவக்கக் கண்களை மூடிக் கொண்டாள் அவள்.
கீழே 'ஸஹானா' ராகத்தை முடித்துவிட்டாள் ஸரஸ்வதி. அடுத்த பாட்டு சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு அமைந்தது. ’தூண்டிற் புழுவினைப்போல்' வீணையில் ஒலிக்க ஆரம்பித்ததும், ரகுபதி, “இதோ பார்த்தாயா? இந்த வீணையின் நாதத்துக்கு இந்த உலகத்தையே காணிக்கையாக வைத்து விடலாம். அதன் தந்திகளை மீட்டும்போது எழும் ஓசைக்கு ஈடு வேறு எதையும் சொல்ல முடியாது. சாவித்திரி! ஸரஸுவிடம் நீ பாட்டுக் கற்றுக் கொள்ளலாமே. முன்பு ஒரு தடவை கேட்டாயே, 'உங்களுக்கு என்ன பிடிக்கும்!' என்று. எனக்குப் பிடித்தது இது ஒன்றுதான். என் மனைவி என் எதிரில் உட்கார்ந்து ஆனந்தமாகப் பாட வேண்டும். காலம் நேரம் போவது தெரியாமல் நான் அதை அனுபவிக்க வேண்டும்."-ரகுபதி உணர்ச்சி யுடன் பேசினான்.
மகுடி ஊதுவதைத் திடீரென்று நிறுத்தியதும் சீறும் சர்ப்பம் போல் சாவித்திரி 'விசுக்'கென்று அவன் மடியிலிருந்து எழுந்தாள்.
"எனக்கு எல்லாம் தெரியும். கல்யாணத்தின் போதே எனக்குத் தெரியுமே! மணிக் கணக்கில் ஸரஸ்வதியைப் பாடச் சொல்லிவிட்டு நேரம் போவது தெரியாமல் உட்கார்ந்திருந்தீர்களே! மறந்து போய்விட்டேன் என்றா பார்த்தீர்கள்? மறக்க வில்லை!" என்று கோபமும், பரிகாசமும் தொனிக்கக் கூறிவிட்டு சாவித்திரி அவனிடமிருந்து ஒதுங்கி உட்கார்ந்து கொண்டாள்:
ரகுபதி பொறுமையை இழக்காமல் சாவித்திரியைப் பார்த்து. "என்னவோ சம்பந்தம் இல்லாமல் பேசுகிறாயே! அயலாரிடம் உன்னைப் பாட்டுக் கற்றுக்கொள்ளச் சொல்லவில்லையே! ஸரஸ்வதி நம் வீட்டு மனுஷிதானே?" என்று கேட்டான்.
"உங்கள் - ஸரஸ்வதி எனக்கு ஒன்றும் வாத்தியார் ஆக வேண்டாம். அந்தப் பெருமை எல்லாம் உங்களோடு இருக்கட்டும். எனக்குப் பாட்டும் வேண்டாம் கூத்தும் வேண்டாம். எனக்கு இஷ்டமில்லாத விஷயத்தை வற்புறுத்த வேண்டாம். என் பிறந்த வீட்டிலேயே என்னை யாரும் எதற்கும் வற்புறுத்த மாட்டார்கள். ஆமாம்.." என்று படபடவென்று பேசிவிட்டுப் படுக்கை அறைக்குள் சென்று கட்டிலின் மீது 'பொத்’தென்று: உட்கார்ந்து கொண்டாள்.
வெளியே சென்று வந்த கணவன் சாப்பிட்டானா என்று விசாரிக்கவேண்டும் என்றுகூட அவளுக்குத் தோன்றவில்லை. ரகுபதி சப்பிட்ட மனத்துடன் படுக்கை அறையில் நுழைந்து அன்று வந்த தினசரி ஒன்றைப் படிப்பதில் முனைந்தான். மேஜைமீது வைக்கப்பட்டிருந்த பால் ஆறிப்போயிருந்தது. சிறிது நேரம் கணவனையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த சாவித்திரி கீழே ஸரஸ்வதி பாட்டை முடித்ததும் “அப்பாடா! பாதி ராத்திரி வரைக்கும் பாட்டும் கதையும்! தூ . " என்று கூறிக்கொண்டு போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்துவிட்டாள். மனைவி தன்னை இவ்வளவு உதாசீனம் செய்வாள் என்று ரகுபதி எதிர்பார்க்கவில்லை. ஆகவே, கோபமும். வெட்கமும் நிறைந்த மனத்துடன் அவள் அறைக்கு வெளியே வராந்தாவில் யோசித்த படி குறுக்கும், நெடுக்குமாக உலாவும்போது கீழே ஸரஸ்வதி மங்கிய விளக்கொளியில் படுக்கையை உதறிப்போட்டுக்கொண்டு படுப்பது தெரிந்தது. சிறிது நேரத்துக்-கெல்லாம் அவள் அயர்ந்து தூங்கிவிட்டாள். சலனம் இல்லாத அவள் முகத்தில் புன்னகை மிளிர்ந்து கொண்டிருந்தது.
ரகுபதி மகத்தான தவறு செய்துவிட்டான். கை எதிரில் இருந்த கனியை அருந்தாமல், காயைக் கனிய வைக்கும் விஷயத்தை அவன் மேற்கொண்டால் அது எளிதில் நடந்துவிடுகிற காரியமா? ரகுபதி சிலைபோல் நின்று அவளையே கண் இமைக்காமல் பார்த்தான். பிறகு, சாம்பிய மனத்துடன் அவன் அறைக்குத் திரும்பியபோது சாவித்திரி. 'புஸ்' ஸென்று பெருமூச்சு விட்டுக் கொண்டே அனல் தெறிக்கும் விழிகளால் அவனைப் பார்த்தாள். அவளைக் கவனியாதவன் போல் ரகுபதி அறைக்குள் வந்து கதவைத் தாழிட்டுக்கொண்டு படுக்கையில் படுத்தான். கணவன், மனைவிக்கு இடையே சாண் அகலம் இடைவெளி இருந்தாலும், சாவித்திரியும், அவனும் எங்கோ ஒருவருக்கொருவர் தொலைவில் இருப்பதாகவே நினைத்தார்கள்.
'நாம் சொல்வதைத்தான் இவள் கேட்டால் என்ன?' என்று அவன் பொருமிக்கொண்டே படுத்திருந்தான்.
'போயும், போயும், அவளிடந்தான் பாட்டுக் கற்றுக் கொள்ள வேண்டும்! பாடு என்றால் பாடவேண்டும். ஆடு என்றால் ஆட வேண்டும்! ஓடு என்றால் ஓட வேண்டும்! வா என்றால் வர வேண்டும்! இந்தப் புருஷர்களுடைய அதிகாரத்துக்கு அளவில்லையா என்ன? ஸ்திரீகளைச் சமமாகப் பாவிக்கிறார்களாம்! பேச்சிலே தான் எல்லாம் அடிபடுகிறது. வீட்டிலே அவனவன் மனைவியை இன்னும் அடிமையாகத்தான் வைத்திருக்கிறான்.'-- சாவித்திரி பெருமூச்சு விட்டுக்கொண்டு இவ்விதம் நினைத்தாள்.
' நான் சொல்லுவதை இவள் ' உத்தரவாக' ஏன் எடுத்துக் கொள்ளவேண்டும்? கணவனின் அன்புக் கட்டளை என்று கொள்ளக்கூடாதா? வீட்டிலே பாட்டியும், பெற்றோர்களும் இடங்கொடுத்துத் தலைமேல் ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள். வந்த இடத்திலும் பணியும் சுபாவம் ஏற்படவில்லை. ஆகட்டும்.... பார்க்கலாம்' என்று தீர்மானித்துக்கொண்டு ரகுபதி தூங்க ஆரம்பித்தான்.
நிம்மதியாகத் தூங்கும் ஸரஸ்வதி ஒரு கனவு கண்டு சிரித்துக் கொண்டிருந்தாள். அழகிய மலர் மாலை ஒன்றைக் கையில் எந்திச் சந்துரு அன்புடன் அவளை நெருங்கி வருவதை உணர்ந்து ஸரஸ்வதி சிரித்துக் கொண்டே அவனிடமிருந்து விலகிப் போகிறாள்.
"ஸரஸ்வதி! உன்னிடம் ஒரு குறையும் இல்லை. அற்ப விஷயம் அது. நான் அதைப் பாராட்டுகிறவன் அல்ல, ஸரஸ்வதி" என்று சந்துரு உண்மை ஜ்வலிக்கும் பார்வையுடன் அவளிடம் கூறுகிறான்:
ஸரஸ்வதி திடுக்கிட்டு விழித்துக்கொண்டாள். சாவித்திரியைப் புக்ககத்துக்கு அழைத்து வந்த போது சந்துரு அவளைத் தனிமையில் சந்தித்துப் பேச எவ்வளவோ சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொண்டாலும் ஸரஸ்வதி அதற்கு இடங்கொடாமல் உறுதியுடன் இருந்தாள்.
"சீதா உன்னை எங்களுடன் அழைத்து வரச் சொன்னாள்" என்று மங்களம் கூப்பிட்டபோது, "ஆகட்டும் மாமி, வரு கிறேன். சீதாவைத்தான் இங்கே அனுப்பி வையுங்களேன்" என்று சிரித்துக்கொண்டே கூறினாள் ஸரஸ்வதி.
இது என்ன கனவு? கனவில் காண்பதெல்லாம் வாழ்க்கையில் உண்மையாக நடக்குமா? நடந்தாலும் நடக்கலாம். நடக்காமல் போனாலும் போகலாம்; அவள் படுக்கை அறைக்கு எதிரில் பூஜை அறை இருந்தது. அன்று அறைக்கதவு சார்த்தப் படாமலேயே திறந்திருந்தது. உள்ளே பூஜையில் மாட்டியிருந்த நடராஜனின் உருவப்படம் லேசாகத் தெரிந்தது. 'காலைத் தூக்கி நின்றாடும் தெய்வ’த்தின் கலை அழகைக்கண்டு ரசித்தாள் ஸரஸ்வதி. உன்னதமான கலையைத் தனக்கு அருளி இருக்கும் ’அவன்’ தன்னைக் கேவலம் இந்த உலக இன்பங்களில் சிக்க வைக்கமாட்டான் என்கிற உறுதியும் கூடவே ஸரஸ்வதியின் மனதில் உதித்தது. இருந்தாலும் திடீர் திடீர் என்று சந்துருவின் நினைவு அவளுக்கு ஏன் தோன்றவேண்டும்? மனித சுபாவம் அப்படித்தான் என்று புரிந்து கொள்ளவில்லை ஸரஸ்வதி.
---------
அந்த இரவுக்கு அப்புறம் கணவனும் மனைவியும் பல முறைகள் தனிமையில் சந்தித்திருக்கிறார்கள். ஆனால், மனம் விட்டுப் பேசவோ, அளவளாவவோ அவர்களுக்கு முடியவில்லை. கணவனுக்கு உணவு பரிமாறும் போது சாவித்திரி அவன் முகத்தைப் பார்க்காமல் யாரோ அன்னியனுக்குப் படைப்பது போல் கலத்தில் பரிமாறிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டு வெளியே சென்று விடுவாள். அவன் அவளை நிமிர்ந்து பாராமல் உண்டு விட்டுப் போய்விடுவான். ஒரு தினம் தலை வாரிக்கொள்ள சாவித்திரியை அழைத்து சீப்புக் கேட்டபோது அவன் எதிரில் மேஜை மீது 'பட்' டென்று சீப்பு வந்து விழுந்தது! 'இந்தத் துணிகளை இன்று சோப்புப் போட்டுத் துவைக்க வேண்டும்' என்று அவன் தயங்கிக் கொண்டே யாரோ மூன்றாவது மனிதரிடம் சொல்லுவது போல் கூறிவிட்டு வெளியே போவான். மாலை வீடு திரும்பும் போது ஒவ்வொரு தினம் அவை துவைத்து அழகாக மடித்து வைக்கப்பட்டு இருக்கும். பல நாட்கள் அவை அவன் அறையில் ஒரு மூலையில் கேட்பாரற்றும் கிடப்பது உண்டு.
"அத்தான்! மாடியில் உன் அறைப்பக்கம் போனேன்: துவைப்பதற்குத் துணி இருக்கவே துவைத்து மடித்து வைத்தேனே பார்த்தாயோ?" என்று ஸரஸ்வதி அவனைக் கேட்ட பிறகுதான் அவைகளைத் துவைத்தது யார் என்பதும் அவனுக்குப் புரியும்.
படுக்கை அறையில் மேஜைமீது வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை மீது தூசு படிந்து கிடக்கும். படங்களில் மலர் மாலைகள் வாடிக் கருகித் தொங்குவதைக் கவனிப்பதற்கு யாரும் இல்லை. பெரியவர்கள், 'ஆணுக்குப் பெண் துணை' என்றும் ' பெண்ணுக்கு ஆண் துணை' என்றும் ஏன் ஏற்படுத்தியிருக்கிறார்கள்? உடல் இன்பத்திற்காக என்றால் புனிதமான தாம்பத்ய உறவு அவசியம் இல்லை. ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உத்தியோக நிமித்தம் சென்றிருக்கும் கணவனின் சுக வாழ்வுக்காக மனைவி ஊரில் அவனையே நினைத்துத் தவங்கிடந்து நோன்புகள் செய்வானேன்?
தாம்பத்ய உறவில் உள்ளம் இரண்டும் ஒன்று சேர்ந்து உறவாடுவதுதான் இன்பம். சாவித்திரி தினம் இரவு நேரத்தில் பால் டம்ளருடன் படுக்கை அறைக்குள் நுழைவாள். 'நக்' கென்று அதை மேஜை மீது வைத்துவிட்டுப் படுக்கையில் ' பொத்' தென்று சாய்ந்து போர்வையை இழுத்து மூடிக்கொண்டு படுத்து விடுவாள்.
ரகுபதி ஒரு சங்கீதப் பித்தன். இரவில் நகரத்தில் சங்கிதக் கச்சேரி கேட்டுவிட்டு வீடு திரும்பும்போது பொழுதாகிவிடும். வீடு திரும்பும் கணவனை மலர்ந்த முகத்துடன் சாவித்திரி வரவேற்க மாட்டாள். கூடத்தில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும் ஸ்வர்ணத்தை எழுப்புவதற்கு ரகுபதிக்கு மனம் வராது. ஸரஸ்வதியைக் கூப்பிட இனி, அவள் யார்? அவன் யார்? தளர்ந்த மனத்துடன் ரகுபதி, மாடிக்குப் போய்ச் சாவித்திரியை அழைக்கவேண்டும் என்கிற எண்ணத்துடன் படி களில் ஏறும்போது தடதடவென்று சாவித்திரி மாடிப் படிகளில் இறங்கி வேகமாக அவனைத் தாண்டிச் செல்வாள். அப்ப! ஒரு ஸ்திரீக்கு அகங்காரமும், கோபமும் ஏற்படும் போது உண்டாகும் வேகம் ஓர் அணு குண்டுக்குக்கூட இருக்காது என்று சொல்லலாம்! அடுத்தாற்போல சமையலறைக் கதவைப் 'பட்' டென்று திறந்து சாப்பிடும் தட்டை 'நக்' கென்ற ஓசையுடன் வைத்து விட்டு உறுமும் பெண் புலியைப்போல் காத்து நிற்பாள் சாவித்திரி. 'உங்களுக்குச் சாதம் போடும் வேலை ஒரு கடன்' என்று சொல்லுகிற மாதிரி இருக்கும் அவள் செய்கைகள் எல்லாம்! குமுறும் எண்ணங்களை வார்த்தைகளில் கொட்டித் தீர்த்துவிட்டாலும் பரவாயில்லையே! எண்ணங்கள் மனத்துள் குமுறக் குமுற, எழப்போகும் அனல் விபரீதமாக அன்றோ இருக்கும்? குமுறும் எரிமலையை எவ்வளவு காலந்தான் அடக்கி வைக்க முடியும்?
ரகுபதி சாப்பிட்டு முடித்தவுடன் குடிப்பதற்கு ஜலம் தேவை யென்று டம்ளரைச் சற்று நகர்த்தி வைப்பான். அதை கவனியாதவள் போல் சாவித்திரி 'விர்' ரென்று மாடிப் படிகளில் ஏறி அறைக்குள் சென்றுவிடுவாள். வேதனையும், கோபமும் நிறைந்த மனத்துடன் ரகுபதி அறைக்குள் சென்று ஏதாவது புஸ்தகத்தை எடுத்து வைத்துக்-கொண்டு படிக்க ஆரம்பித்துவிடுவான்.
இப்படியே பேலும் இரண்டு மாதங்கள் சென்றன. இல்வாழ்க்கை ஆரம்பமானவுடன் பாலில் சொட்டுப் புளி விழுந்ததுபோல் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே எழுந்த மனஸ்தாபம் சிறிது சிறிதாக நாளடைவில் வளர்ந்துவிட்டது. கணவனுக்காகப் பிடிவாத குணமுடைய சாவித்திரி தன் போக்கை மாற்றிக்கொள்ளவும் தயாராக இல்லை. மனைவியைத் தன் கொள்கைக்கு இணங்கி வரும்படி வற்புறுத்த வேண்டாம் என்கிற பிடிவாதத்தையும் ரகுபதி தளர்த்தவில்லை.
இவர்கள் இருவருடைய மனஸ்தாபத்துக்கும் இடையில் சரஸ்வதி மிகவும் குழப்பம் அடைந்திருந்தாள். வலுவில் அவளாகவே சென்று சாவித்திரியுடன் பேசினாலும் முகத்தைத் திருப்பிக்கொண்டு சாவித்திரி போய்விடுவாள். ஒரு தவறும் செய்யாத தன்னிடம் சாவித்திரிக்கு என்ன கோபம் ஏற்பட்டிருக்கும் என்பது ஸரஸ்வதிக்குப் பல நாட்கள் வரையில் புரியவே இல்லை.
நாளாக நாளாக, சாவித்திரியின் கோபம் தன்மீது மட்டும் ஏற்பட்டிருக்கவில்லை, அது தன் அத்தான் மீதும் பாயத் தொடங்கி இருக்கிறது என்பதையும் ஓரளவு ஸரஸ்வதி ஊகித்துக் கொண்டாள். 'நிலவு பொழியும் இரவுகளை, இளம் மனைவியைப் படைத்திருக்கும் அத்தான் ரகுபதி, திறந்த வெளியில் சாய்வு நாற்காலியில் தனியாகக் கழிப்பானேன்?' என்று தன் மனத்தையே கேட்டுப் பார்த்தாள் ஸரஸ்வதி. அவளுக்கு அதற்கும் விடை புரியவில்லை. ஆகவே, ஒரு தினம் ஸரஸ்வதி கூடத்து ஊஞ்சலில் உட்கார்ந்து கீதை படிக்கும் தன் அத்தை ஸ்வர்ணத்தினிடம் சென்று நெருங்கி உட்கார்ந்து கொண்டு, "அத்தை" என்று மெதுவாகக் கூப்பிட்டாள். இதுவரையில் கண்ணனின் உபதேச மொழிகளில் மனதை லயிக்கவிட்டிருந்த ஸ்வர்ணம் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்து. "நீ இங்கேயா அம்மா இருக்கிறாய்? மாடியில் சாவித்திரியுடன் இருப்பதாக அல்லவோ நினைத்துக்கொண்டிருந்தேன்?" என்று வியப்புடன் கூறினாள்.
"சாவித்திரி தூங்குகிறாள் அத்தை. அவளைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தான் இங்கு வந்தேன்" என்றாள் ஸரஸ்வதி. அவள் குரலில் ஏமாற்றமும், ஏக்கமும் நிரம்பி இருந்தன.
ஸ்வர்ணம் மெதுவாகச் சிரித்துக்கொண்டே, 'உனக்கு மத்தியான்ன வேளைகளில் தூக்கமே வராதே. எதையாவது. ”கொடை, கொடை'ன்னு குடைந்துண்டே இருப்பாயே குழந்தையிலிருந்து! ஒரு தரம் உங்கம்மா இருக்கும் போது ...." என்று ஸ்வாதீனமாகப் பழைய கதை ஒன்றை ஆரம்பித்தாள்.
"உஸ். . . . உஸ்" என்று ஸரஸ்வதி வெகு ஸ்வாதீனமாக அத்தையின் வாயைப் பொத்திக் குறும்புத்தனமாகச் சிரித்துக் கொண்டே, "அம்மா இருக்கும் போது நான் செய்த விஷமங்களைக் கேட்டுக் கேட்டுக் காது புளித்துப் போய்விட்டது! அதெல்லாம் பழைய விஷயங்கள்! புது விஷயமாக - ஒன்று சொல்லப்போகிறேன்" என்றாள் ஸரஸ்வதி.
"சொல்லேன்! அதற்கு இவ்வளவு பீடிகை வேண்டுமா என்ன?" என்று கேட்டாள் ஸ்வர்ணம்.
ஸரஸ்வதியின் முகத்தில் சிறிது முன்பு நிலவிய குறும்புச் சிரிப்பும் குறுகுறுப்பும் திடீரென்று மறைந்தன. நிலத்தைக் காலால் கீறிக்கொண்டே தரையைச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். பிறகு நீர் நிறைந்த கண்களுடன், அத்தை ஸ்வர்ணத்தை ஏறிட்டுப் பார்த்து, ”அத்தை! என்னை அப்பாவிடம் அனுப்பிவிடு. நான் அவருடனேயே இனிமேல் இருந்துவிடுகிறேன்" என்றாள், பொங்கி வரும் துயரத்தை அடக்கிக்கொண்டு.
ஸ்வர்ணத்தின் கையில் இருப்பது கீதையானாலும், அவள் இதுவரையில் கண்ணனின் உபதேச மொழிகளில் மனத்தை லயிக்க விட்டிருந்தாலும், அவள் ஒரு சாதாரண அஞ்ஞானம் நிரம்பிய பெண்மணி என்பதை அவள் வேதனை படரும் முகம் தெள்ளெனக் காட்டியது. 'என்னை அப்பாவிடம் அனுப்பிவிடு' என்னும் வார்த்தைகள் அவள் மனத்தில் வேல் போல் பாய்ந்தன. அளவுக்கு மீறிய துயரத்துடன் ஸரஸ்வதியின் முகவாயைத் தன் கையால் பற்றிக்கொண்டு, "ஏன் அம்மா ஸரஸு?" என்று கேட்டாள் ஸ்வர்ணம். கையில் தாங்கி இருக்கும் ஸரஸ்வதியின் முகத்தில் பல வருஷங்களுக்கு முன்பு இறந்துபோன தன் மதனீயின் பரிதாபமான முகம் தோன்றி மறைவதுபோல் இருந்தது ஸ்வர்ணத்துக்கு.
தங்கப் பதுமைபோல் மாலையும், கழுத்து மாய் ஸரஸ்வதியின் தாய் நேற்றுதான் ஸ்வர்ணத்தின் தமையனைக் கைப்பிடித்து வீட்டில் நுழைந்தது போல் இருக்கிறது. அதற்குள்ளாக ஒரு. பெண்ணைப்பெற்று, திக்கில்லாமல் விட்டுவிட்டுப் போய் விட்டாள். அவளுக்குத்தான் ஸ்வர்ணத்தினிடம் எவ்வளவு அன்பு! நாத்தனாரும் மதனியும் கூடப்பிறந்த சகோதரிகள் மாதிரி இருந்தார்கள். அவள் மறைவுக்குப் பிறகுதான் ஸ்வர்ணத்தின் தமையன் மனம் வெறுத்து எங்கோ இருக்கிறான். பெற்ற பெண்ணைப்போல் வளர்த்த ஸரஸ்வதியைப் பிரிந்து ஸ்லர்ணத்தால் இருக்க முடியுமா?
ஸ்வர்ணம் ஆழ்ந்த யோசனைக்கு அப்புறம் பெருமூச்சு விட்டாள். பிறகு அங்கு நிலவி இருந்த அசாதாரணமான அமைதியைக் கலைத்துக் கனிவுடன், "உனக்கு இங்கே என்ன கஷ்டம் ஸரஸு?" என்று கேட்டாள் ஸரஸ்வதியைப் பார்த்து.
"கஷ்டம் ஒன்றுமில்லை அத்தை. எனக்கும் வெளி ஊர்களெல்லாம் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. கொஞ்ச காலம் அப்படித்தான் பார்த்துவிட்டு வருவோமே என்று தோன்றுகிறது" என்று வெகு சாமர்த்தியமாக மனக் கஷ்டத்தை மறைக்க முயன்றாள் ஸரஸ்வதி.
ஸ்வர்ணத்தின் இளகிய மனதால் அதற்குமேல் நிதானமாக இருக்க முடியவில்லை. கண்களில் கண்ணீர் பெருக ஸரஸ்வதியைச் சேர்த்து அணைத்துக்கொண்டு, ”அம்மா! திடீரென்று ஊருக்குப் போகிறேன் என்று சொல்லுகிறாயே, உன்னை அனுப்பி விட்டுத் தனியா இந்த வீட்டில் எப்படி இருப்பேன் சொல்?" என்றாள் ஸ்வர்ணம். ஸரஸ்வதி அத்தையின் கைகளை ஆசை யுடன் பற்றிக்கொண்டு, "நீயும் அத்தானும் அடிக்கடி என்னைக் கல்யாணம் செய்து கொண்டு குடியும் குடித்தனமுமாக இருக்க வேண்டும் என்று சொல்லுகிறீர்களே! கல்யாணம் ஆன பிறகு புக்ககம் போக வேண்டாமா அத்தை? இதற்கே இப்படிப் பிரமாதப்படுத்துகிறாயே நீ?" என்று கண்ணைச் சிமிட்டிக் குறும்புத்தனமாகப் பார்த்துக்கொண்டே அத்தையைக் கேட்டாள்.
"அசட்டுப் பெண்ணே! அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?" என்று திகைப்புடன் தன்னைப் பார்க்கும் அத்தையிடம், ஸரஸ்வதி ரகசியம் பேசும் குரலில், "என்னால் அத்தானுக்கும் சாவித்திரிக்கும் ஏதாவது சச்சரவு வந்துவிடும். நான் நன்றாகப் பாடுகிறேன் என்று சாவித்திரிக்குப் பொறாமை போலிருக்கிறது. அதனால் அவர்கள் ஒருவருக்கொருவர் மனஸ்தாபப் படுகிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் சந்தோஷமாக இல்லாவிட்டால் உன் மனம் நிம்மதியாக இருக்குமா அத்தை?" என்று கேட்டாள்.
ஸ்வர்ணத்திற்கு க்ஷணப்பொழுதில் எல்லாம் விளங்கிற்று. ஸரஸ்வதி அந்த வீட்டில் இருப்பதனால் சாவித்திரியும் ரகுபதியும் மனஸ்தாபப்படுகிறார்களா? இதென்ன விந்தை? கபடமற்ற இந்தப் பேதைப் பெண்ணைப் பார்த்துச் சாவித்திரிக்கு இரக்கம் தோன்றாமல் பொறாமை ஏற்பட்டிருப்பதும் ஆச்சர்யந்தான். ஸ்வர்ணம் கண்ணீர் பெருகச் செயலிழந்து உட்கார்ந்திருந்தாள். அத்தையின் தோளில் முகத்தைக் கவிழ்த்துக் கொண்டு ஸரஸ்வதி கண்ணீர் உகுத்தாள்.
வானவெளியில் மனம் போனபடி ஆடிப் பாடிப் பறந்து செல்லும் வானம்பாடியைப் பிடித்து யாரோ கூட்டில் அடைத்துச் செய்யுளும், இலக்கணமும் கற்றுக்கொடுக்கும் கட்டுப்பாடான நிலையை அடைந்து ஸரஸ்வதியின் மனம் வேதனையுற்றது. ஒருவருக்காக அவள் தன் சங்கீதக் கலையை அப்யாசிக்காமல் விட்டு விடவும் மனம் ஒப்பவில்லை.
--------------
அடுத்த நாள் வெள்ளிக்கிழமை. பூஜை அறையில் வழக்கம் போல் சுடர்விளக்கு ஏற்றிய பிறகு ஸரஸ்வதி வீணை வாசிக்க உட்கார்ந்தாள். இரண்டு மாதங்களுக்கு மேலாகத் தொடாமல் கிடந்த வீணை 'டிரிங்' கென்ற நாதத்துடன் ரீங்காரம் செய்ய ஆரம்பித்தது. அத்துடன் ஸ்வர்ணம் அன்று காலையில் ஸரஸ்வதியைப் பார்த்து, "அம்மா ஸரஸு! சங்கீதம் என்பது சாமான்ய வித்தையல்ல. தெய்வ கடாக்ஷத்தால் சித்திக்கும் அபூர்வக் கலை அது. அத்தெய்வீகக் கலையை ஒருத்தருக்காக உதாசீனம் செய்வது நல்லதில்லை. நீ வீணையைத் தொட்டு மாதக்கணக்கில் ஆகிறதே. சாயங்காலம் விளக்கேற்றிய பிறகு இரண்டு பாட்டாவது வாசி கேட்கலாம்" என்று கூறினாள்.
'வாஸ்தவந்தாள்! சாவித்திரிக்குப் பிடிக்காவிட்டால் அவளுக்காக நமக்குத் தெரிந்த கலையை உதாசீனம் செய்வானேன்?' என்று எண்ணமிட்டாள் ஸரஸ்வதி. ஆகவே, அன்று மாலை தூசுபடிந்து கிடந்த வீணையைத் துடைத்து எடுத்து வைத்துக்கொண்டு ஸ்ருதி சேர்க்க ஆரம்பித்தாள் ஸரஸ்வதி. சாவித்திரியும், ஸ்வர்ணமும் அருகில் உட்கார்ந்திருந்தார்கள். படங்களுக்குப் போட்டிருந்த மல்லிகை மாலைகளின் மணமும், ஊதுவர்த்தியின் சுகந்தமும் சேர்ந்து அந்த இடத்தில் ஒரு தெய்வீகக் களையை ஏற்படுத்தின. நீர் ஊற்றுப்போல் கிளம்பும் நாத வெள்ளம் எல்லோரையும் மெய்மறக்கச் செய்தது. காம்போதி ராகத்தை விஸ்தாரமாக ஆலாபனம் செய்து தானம் வாசித்த பிறகு, 'ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே' என்கிற கிருதியை ஸரஸ்வதி வீணையில் வாசித்து, மதுரமான குரலில் பாடினாள். இதுவரையில் அவள் பாட்டிலேயே லயித்துப்போய் உட்கார்ந்திருந்த ஸ்வர்ணம், "ஸரஸு! உன் அத்தான் இன்று இந்தப் பாட்டைக் கேட்க இங்கே இல்லையே? நேற்று கூட, 'ஏனம்மா! ஸரஸ்வதி இப்பொழுதெல்லாம் பாடுகிறதேயில்லை' என்று என்னிடம் கேட்டான்" என்றாள்.
புன்னகை ததும்பும் முகத்துடன் ஸரஸ்வதி பாட்டை முடித்துவிட்டு வேறு நீர்த்தனம் தன்றை ஆரம்பித்தாள். ஸ்வர்ணம் ஆசையுடன் நாட்டுப்பெண்ணின் பக்கம் திரும்பி, ”சாவித்திரி! உன்னைப் பாடர் சொல்லிக் கேட்க வேண்டும் என்று எனக்கு ரொம்ப நாட்களாக எண்ணம். எல்லோரும் சங்கீதத்தை முறைப்படி கற்காவிட்டாலும், சாதாரணமாக நாலு பாட்டுகள் பாடத் தெரிந்து கொண்டே இருப்பார்கள். எனக்குக்கூடப் பாடத் தெரியும். மார்கழி மாதத்தில் விடியற்காலம் ஸ்நானம் செய்து விட்டு, 'மாயனை மன்னு வட மதுரை மைந்தனை' என்று எதையாவது பாடிக்கொண்டே வீட்டு வேலைகள் செய்வேன். புளியையும் உப்பையும் போட்டுச் சமைத்துச் சமைத்து அலுத்துப்போன மனசுக்கு எதையாவது பாடிக்கொண்டே வேலை செய்தால் கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறமாதிரி தோன்றும்.
” ஆராரோ ஆரரிரோ" என்று தாலாட்டுப் பாடுகிறோம். ராகமும், தாளமும் தெரிந்துவைத்துக்கொண்டா பாடுகிறோம்?. குழந்தை அந்தப் பாட்டைக் கேட்டுத் தூங்கவில்லையா? ஸரஸு பாடி முடித்ததும் உனக்குத் தெரிந்தது ஏதாவது பாடு பார்க்கலாம். ரகுபதியும் ஒரு சங்கீதப் பைத்தியம்!" என்றாள்.
சாவித்திரியின் முகத்தில் சொல்லொணாத துக்கமும், பொறாமையும் நிரம்பியிருந்தன. சாவித்திரி தன் பிள்ளையின் மனமறிந்து நடந்து கொள்ள வேண்டும் என்று ஸ்வர்ணம் விரும்பியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஸ்வர்ணத்துக்குச் சாவித்திரி பதில் எதுவும் கூறாமல் தலையைக் குனிந்து தரையில் விரலால் கீறிக்கொண்டிருந்தாள்.
இதற்குள்ளாக வெளியே சென்றிருந்த ரகுபதி அழகிய வீணையுடன் ஸரஸ்வதி பாடும் இடத்துக்கு வந்து வீணையைப் படத்தருகில் வைத்துவிட்டு ஸரஸ்வதியின் எதிரில் உட்கார்ந்தான், சிறிது நேரம் அங்கு ஒருவரும் பேசவில்லை. பாட்டு முடிந்ததும் ஸ்வர்ணம் ரகுபதியைப் பார்த்து, "ரகு! ஸரஸு ஏன் பாடுகிறதில்லை என்று கேட்டாயே? அவள் பாடும்போது நீ இல்லையே என்று நினைத்துக் கொண்டேன். சமயத்தில் வந்துவிட்டாய்" என்று அன்புடன் கூறினாள்.
ஸரஸ்வதி தன்னுடைய வீணையை உறைக்குள் போட்டு மூடிவிட்டுப் புது வீணையை ஸ்ருதி சேர்ப்பதற்காக அதைக் கையில் எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். தனக்கும், அந்த வீட்டில் நடக்கும் விஷயங்களுக்கும். எவ்வித சம்பந்தமும் இல்லை போல் பாவித்திருக்கும் சாவித்திரி, வீணையைப் பார்த்துக் கொண்டிருந்த ஸரஸ்வதியின் பக்கம் திரும்பி அவளை வெட்டுவது போல் ஒரு பார்வை பார்த்துவிட்டு மறுபடியும் நிலத்தில் கோலமிட ஆரம்பித்தாள். யாராவது ஒருவர். 'இந்த வீணை எதற்கு வாங்கினாய்?" என்று கேட்பார்கள் என்று ரகுபதி எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தான். அந்த வீணை எதற்காக, யாருக்காக வாங்கப்பட்டது என்கிறதை அவனாகவே சொல்லித்தான் ஆகவேண்டும் என்கிற நிலைமை ஏற்பட்டவுடன் ரகுபதி தன் தாயைப் பார்த்து, " அம்மா! இன்று நல்ல நாளாக இருப்பதால் டவுனுக்குப்போய் இந்த வீணையை வாங்கி வந்தேன், சாவித்திரிக்கு இருக்கட்டு மென்று. வெள்ளிக்-கிழமையாகவும் இருக்கிறது. இன்றே பாடமும் ஆரம்பிக்கலாம். என்ன ஸரஸு?" என்று ஸரஸ்வதியைப் பார்த்துக் கேட்டுவிட்டுத் தன் மனைவியை நோக்கிப் புன்னகை புரிந்தான்.
சாவித்திரி கோபம் பொங்கும் முகத்துடன் கணவனைத் ’துரு துரு' வென்று விழித்துப் பார்த்துவிட்டு அசட்டையுடன் முகத்தைத் திருப்பிக்கொண்டு பதில் எதுவும் கூறாமல் உட்கார்ந்திருந்தாள். கையில் வைத்திருந்த வீணையைக் கீழே வைத்து விட்டு ஸரஸ்வதி நிதானமாக, "இன்றைக்கே என்ன அவசரம் அத்தான்? ஆகட்டுமே; இன்னொரு நாள் ஆரம்பித்தால் போகிறது" என்றாள்.
"அவசரம் ஒன்றுமில்லை. நாள் நன்றாக அமைந்திருக்கிறது. நான் கேட்பதற்கு முன்பே கடைக்காரர்களும், 'புதுசாக வீணை தஞ்சாவூரிலிருந்து வந்திருக்கிறது, ஸார்; வேண்டுமானால் எடுத்துப் போங்கள்' என்று கையில் கொடுத்தார்கள்" என்று கூறிவிட்டுத் தன் வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுக்காமல் உட்கார்ந்திருக்கும் மனைவியின் முகத்தை மறுபடியும் பார்த்தான் ரகுபதி.
ஏதோ அலுவலாகச் சற்றுமுன் சமையலறைக்குச் சென்று காய்ச்சிய பாலை இறைவனுக்குப் படைப்பதற்காக எடுத்து வந்த ஸ்வர்ணம், மகன் கூறுவதைக் கேட்டுவிட்டு, "அவன் இஷ்டப்படி தான் இன்றைக்குப் பாட்டு ஆரம்பியேன். இதற்குப்போய் இவ்வளவு தர்க்கம் வேண்டியதில்லையே! யாராவது ஒருத்தர் தாழ்ந்து போய்விட்டால் ஆயிற்று" என்று கூறிவிட்டுப் பாலைக் கீழே வைத்துவிட்டு உட்கார்ந்தாள்.
இதுவரையில் பேசாமல் ஏதோ முழுகிவிட்டது போல் உட்கார்ந்திருந்த சாவித்திரி சரேலென்று எழுந்து, "எனக்கு இதிலெல்லாம் அவ்வளவு பிடித்தமில்லை என்று முன்னாடியே சொல்லி இருக்கிறேனே. வெறுமனே இதென்ன வீண் தொந்தரவு?" என்று கூறி அறையைவிட்டுப் போக எத்தனித் தா…..
ஸ்வர்ணத்துக்கும் கோபம் வந்தது. நாட்டுப்பெண்ணைப் பார்த்து அதட்டும் குரலில், "நீ செய்கிறதும், பேசுகிறதும் நன்றாகவே இல்லை, சாவித்திரி. அவன் இஷ்டப்படி தான் கேட்டு வையேன், இதிலே என்ன குறைந்துவிடப்போகிறாய்? அவன் கிழக்கே பார்க்கச் சொன்னால் நீ மேற்கே பார்த்துக் கொண்டு நிற்கிறாயே, சுத்தமாக நன்றாக இல்லையே நீ செய்கிறது!" என்றாள் ஸ்வர்ணம்.
"ஆமாம்... . நன்றாகத்தான் இல்லை. அதுவும் என்னுடைய இஷ்டம்" என்று வெடுக்கென்று கூறிவிட்டு 'திடுதிடு' வென்று படுத்துக்கொண்டு கண்ணீர் பெருக்கினாள் சாவித்திரி.
----------------------
மாடிக்குச் செல்லும் மனைவியைச் சற்றும் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்த ரகுபதி, கோபத்துடன் மனைவியை "சாவித்திரி! சாவித்திரி!" என்று இரைந்து கூப்பிட்டான். ஸரஸ்வதி பயந்து போய் முகம் வெளுக்க ரகுபதியின் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றாள். அவன் கூப்பிட்ட தற்கு மாடியிலிருந்து பதில் ஒன்றும் வராமற்போகவே திடுதிடு வென்று மாடிப்படிகளில் ஏறினான் ரகுபதி. அவன் பின்னால் சென்ற ஸரஸ்வதியும், ஸ்வர்ணமும் சாவித்திரியைப் பார்த்து விட்டு ஒருகணம் திகைத்து நின்றார்கள். பிறகு ஸ்வர்ணம் பொங்கி எழும் கோபத்தை அடக்கிக்கொண்டு, "நன்றாக இருக்கிறது சாவித்திரி! வெள்ளிக்கிழமையும் அதுவுமாக!" என்றாள்.
"சாவித்திரி! இதென்னம்மா இப்படி அழுகிறாய்? எழுந்திரு" என்று அவள் கரங்களை அன்புடன் பற்றினாள் ஸரஸ்வதி.
சாவித்திரி கண்ணீர் வழியும் முகத்துடன் கணவனைத் திரும்பிப் பார்த்தாள். பிறகு ஆத்திரம் தொனிக்க, "என் பிறந்த வீட்டில் கூட என்னை யாரும் வற்புறுத்த மாட்டார்கள். இங்கே . ..." என்று மேலும் கூறாமல் தேம்பித் தேம்பி அழுதாள்.
ரகுபதிக்குச் சற்று தணிந்திருந்த கோபம் பீறிட்டு எழுந்தது.
"இங்கே உன்னை வாணலியில் போட்டு வதக்கி, தாலத்தில் எடுத்து வைக்கிறார்கள்! நீ பிறந்த வீட்டில் சுதந்தரமாக வளர்ந்த லக்ஷணம் தான் இப்போது தெரிகிறதே!" என்று கேலியும், ஆத்திரமும் கலந்த குரலில் கூறினான் ரகுபதி.
"என்ன தெரிகிறதாம்?" என்று கணவனைப் பதில் கேள்வி கேட்டு மடக்கிவிட்டதாக நினைத்து, நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டாள் சாவித்திரி.
" உன் லக்ஷணம்! உன் பிடிவாதம்! வேறு என்ன கிடக்கிறது தெரிகிறதற்கு?" என்று ஆவேசத்துடன் கூறிவிட்டுப் பொறுமையை இழந்தவனாக ரகுபதி கீழே உட்கார்ந்திருந்த மனைவியின் கன்னத்தில் பரீரென்று அறைந்தான். அடுத்த விநாடி அவன் தன் தவறை உணர்ந்து கொண்டான். இது வரையில், பெற்ற தாயின் மனம் நோகும்படி ரகுபதி பேசி அறியமாட்டான். உடன் பிறந்தவளைப்போல் அவனுடன் ஒன்றாக வளர்ந்துவரும் ஸரஸ்வதியின் கண்களில் கண்ணீரைக் கண்டால் அவன் நெஞ்சு உருகிவிடும். பெண்களை மலரைப்போல் மென்மையாக நடத்தவேண்டும் என்னும் கொள்கையை உணர்ந்தவன். தன்னுடைய அருமை மனைவியைத் தொட்டு அடிப்பதற்கு மனம் வருமா? கை தீண்டி அடிக்கும்படியான நீச மனோபாவம் தனக்கு
ஏன் ஏற்பட்ட்து என்பதை ரகுபதியால் உணர முடியவில்லை.
ஸ்தம்பித்து உணர்விழந்து நிற்கும் மகனை ஸ்வர்ணம் கண்களில் நீர் பொங்க ஏறிட்டுப் பார்த்து. "சீ! சீ! உனக்குப் புத்தி கெட்டுவிட்டதாடா ரகு? ஊரார் பெண்ணை அடிக்க உனக்கு என்னடா அப்படிப் பாத்தியம் ஏற்பட்டுவிட்டது? ஊரிலே நாலுபேர் என்ன சொல்லமாட்டார்கள்? புருஷன் - மனைவி தகராறு என்று உலகம் ஒத்துக்கொள்ளாது அப்பா. நடுவில் நான் ஒருத்தி இருக்கிறேன் பாரு" என்றாள். அவள் கண்கள் கண்ணீரால் நனைந்திருந்தன.
ஸரஸ்வதி ரகுபதியைத் தன் அழகிய விழிகளால் சுட்டு விடுவதுபோல் விழித்துப் பார்த்தாள். மானைப்போல் மருண்டு பார்க்கும் பார்வை ஒரு விநாடி அனல் பொறிகளை உதிர்த்தது.
"ரொம்ப அழகாக இருக்கிறது அத்தான்! உன்னுடைய போக்கு கொஞ்சங்கூட நன்றாக இல்லை. என்னாலேதானே இந்தத் தொந்தரவுகள் எல்லாம் ஏற்படுகின்றன? நான் எங்கேயாவது தொலைந்துபோகிறேன்" என்று படபட வென்று கூறிவிட்டு, கன்னங்களில் வழியும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.
ஸரஸ்வதி கூறியதைக் கேட்டதும், சாவித்திரி 'விசுக்' கென்று எழுந்து ”எனக்காக இங்கிருந்து யாரும் போக வேண்டாம். எனக்கும் என் மனுஷாளைப் பார்க்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. நானே புறப்பட்டுப்போகிறேன். ஆமாம்...." என்று கூறி, பீரோவிலிருந்து புடைவைகளை எடுத்துப் பெட்டியில் வைக்க ஆரம்பித்தாள்.
தலையில் அடிபட்ட நாகம்போல் ரகுபதியின் கோபம் மறு படியும் 'புஸ்' - என்று கிளம்பியது. அவன் அலட்சியத்துடன் அவளைப் பார்த்து, "பேஷாய்ப் போயேண்டி அம்மா: நீ இல்லாமல் இந்த உலகம் அஸ்தமித்துவிடப்போகிறதா என்ன?
ஹும்.. ஹும் . . என்னவோ மிரட்டுகிறாயே?" என்றான்.
"நன்றாக இருக்கிறதடா நீ அவளைப் போகச் சொல்லுகிறதும், அவள் புறப்படுகிறதும்! பிறந்தகத்திலிருந்து வந்து நான்கு மாசங்கள் கூட முழுசாக ஆகவில்லை. அம்மா, அப்பாவைப் பார்க்க வேண்டுமானால், சண்டை கூச்சலில்லாமல் சௌஜன்யமாகப் போகிறது தான் அழகு" என்று வேதனை தொனிக்கும் குரலில் கூறினாள் ஸ்வர்ணம்.
ரகுபதி கோபத்துடன் தாயை உறுத்துப் பார்த்துவிட்டு, மாடியிலிருந்து கீழே இறங்கிச் சென்றான். சாவித்திரி தன்னை எவ்வளவுதான் சுட்டுப் பேசினாலும், ஸரஸ்வதியின் கபடமற்ற மனம் அதைப் பாராட்டாமல், அவளை எப்படியாவது ஊருக்குப் போகவிடாமல் தடுக்கவேண்டும் என்று ஆசைப்பட்டது. ஆகவே அவள் அத்தை ஸ்வர்ணம் கீழே சென்றபின்பு உரிமையுடன் சாவித்திரியின் பக்கத்தில் உட்கார்ந்து அவள் தோள் மீது தன் கையை வைத்து, "சாவித்திரி! அசட்டுத்தனமாக இப்படி யெல்லாம் செய்யாதே அம்மா. அத்தானின் மனசு தங்கமானது. தங்கத்தை உருக்கி, எப்படி இழுத்தாலும் வளைவது மாதிரி அவன் மனசை நீ அறிந்து, அதன்படி நடந்து கொண்டால் நன்றாக இருக்கும். அத்தையும் பரம சாது" என்றாள்.
கணவனின் அடியால் 'விறு விறு' என்று வலிக்கும் தன் கன்னத்தின் எரிச்சலுடன், ஸரஸ்வதியின் அன்பு மொழிகள் அவளுக்கு ஆறுதலைத் தராமல், மேலும் எரிச்சலை மூட்டின.
"எல்லோருடைய குணமுந்தான் தெரிந்து விட்டதே! இனி மேல் தெரிவதற்கு என்ன இருக்கிறது? யார் வேண்டுமானாலும் தங்கமாக இருக்கட்டும், வைரமாக வேண்டுமானாலும் இருக்கட்டும்! 'எனக்கு அதெல்லாம் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.' 'நான் போகத்தான் வேண்டும்" என்று சாவித்திரி அழுத்தந்திருத்தமாகக் கூறிவிட்டுத் துணிமணிகளை அடுக்கி வைத்துக்கொண்டிருந்தாள். ஸரஸ்வதி முகவாட்டத்துடன் அங்கிருந்து போய்விட்டாள்.
அன்றிரவு படுக்கை அறைக்குள் வந்த - கணவனிடம் வேறெதுவும் பேசாமல், சாவித்திரி, "நாளை காலை வண்டிக்கு என்னை எங்கள் ஊருக்கு ரெயில் ஏற்றிவிடுகிறீர்களா?" என்று கேட்டாள். ரகுபதியின் கோபம் அதற்குள் முற்றிலும் தணிந்துவிட்டது. அவன் புன் சிரிப்புடன் அவள் கைகளாப் பற்றிக்கொண்டு. ”சாவித்திரி! அடித்துவிட்டேன் என்று கோபமா உனக்கு? அடிக்கிற கை, அணைப்பதும் உண்டு என்பதை நீ தெரிந்து கொள்ளவில்லையே! உன்னை ஊருக்கு அனுப்பிவடடு. நான் தனியாக இங்கே இருக்கமுடியுமா சொல்?" என்றான்.
சாவித்திரி அவன் பிடியிலிருந்து தன் கைகளை உதறி விடுவித்துக் கொண்டாள். பின்பு அவனை ரோஷத்துடன் நிமிர்ந்து பார்த்து, "உங்களால் ரெயில் ஏற்றிவிடமுடியுமா, முடியாதா என்பதைச் சொல்லுங்கள்! வேறு எந்த ராமாயணமும் எனக்கு வேண்டாம்!" என்று கூறிவிட்டு வழக்கம்போல் போர்வையை உதறிப் போர்த்திக்கொண்டு படுத்துவிட்டாள்.
அதே சமயத்தில் சமையலறையில், சாப்பாட்டுக்கு அப்புறம் ஸ்வர்ணமும், ஸரஸ்வதியும் மெதுவான குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள்.
"என்னம்மா ஸரஸு! இப்படிப்பட்ட சண்டியாக வந்து வாய்த்திருக்கிறதே" என்று ஸ்வர்ணம் கவலையுடன் கேட்டாள் ஸரஸ்வதியை.
ஸரஸ்வதியின் மனதில் வேதனை நிரம்பியிருந்தது. முகத்தை ஒரு தினுசாக அசைத்து அவள், "இந்த அத்தானிடமும் தவறு இருக்கிறது அத்தை. அவள் இஷ்டப்படி இருந்துவிட்டுப் போகட்டுமே!" என்றாள்.
ஸ்வர்ணம் பழைய நாளைய மனுஷி. புருஷன் சொல்லி மனைவி கேட்டு பக்தியுடன் நடந்து கொள்ளவேண்டும் என்கிற பண்பாட்டில் ஊறிப்போனவள். அத்துடன் தன் செல்லப் பிள்ளையின் மனம் நோகும்படி எதிர்த்துப் பேசிய சாவித்திரியிடம்
அவளுக்கு அடங்காத கோபம் ஏற்பட்டிருந்தது.
"நாளைக்கு. ஊரில் போய் இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி, நமக்குக் கெட்ட பெயர் வாங்கிவைக்குமோ என்னவோ இந்தப் பெண்! இப்படி ஒரு பிடிவாதமா ஒரு பெண்ணுக்கு!" என்று அதிசயப்பட்டாள் ஸ்வர்ணம்.
"என்னவோ போ அத்தை! எனக்குத் தெரிந்ததை நான் சொல்லுகிறேன். இதையெல்லாம் பார்த்தால் எனக்குப் பயமாக இருக்கிறது" என்று பயந்த மனத்துடன் கூறினாள் ஸரஸ்வதி.
--------------
அடுத்த நாள் அதிகாலையில் சாவித்திரியை ரெயில் எற்றுவதற்காக அரை மனத்துடன் ரகுபதி அவளுடன் வண்டியில் ஏறி உட்கார்ந்தான். பெரிய நகரமாக இருந்தால் ஒருவர் வீட்டில் நடக்கும் விஷயங்களை இன்னொருவர் அவ்வளவாகக் கவனிக்கமாட்டார்கள். அந்த ஊர் சற்றுக் கிராமாந்தரமாக இருக்கவே அண்டை அயலில் இருக்கும் பெண்கள் வாசலில் கோலமிட வந்தபோது அதிசயத்துடன் கோலத்தைப் பாதியில் நிறுத்திவிட்டு ஸ்வர்ணத்தின் வீட்டு வாசலில் வண்டி நிற்பதைக் கவனித்தார்கள். சாவித்திரியும் ரகுபதியும் வண்டி ஏறுவதற்கு முன்பு கசமசவென்று ஏதோ பேசப்படுவதையும் கேட்டார்கள்.
திடுமென்று நாட்டுப்பெண் ஊருக்குப் போவதை ஸ்வர்ணம் துளிக்கூட விரும்பவில்லை. "எங்கள் நாளில் இப்படியா இருந்தோம்? புருஷன் ஏதோ கோபித்துக்கொண்டு அடிக்கிறதும் உண்டு. இரண்டு நாள் புருஷனோடு பேசாமல் இருப்போம். அப்புறம் சமாதானம் ஆகிப் பேசுகிறதில் எவ்வளவு இன்பம் என்பதைச் சொல்லவே முடியாது. அதையெல்லாம் பாராட்டலாமா?" என்று சொல்லி மாய்ந்து போனாள்.
"புருஷன், மனைவியை அடிக்கிறது தவறு அத்தை ! உனக்கு, இந்தக் காலத்து விஷயமே தெரியவில்லை. நீ என்னவோ அந்த நாளைப்பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறாயே!" என்று ஸரஸ்வதி கோபித்துக்கொண்டாள்.
கணவனும், மனைவியும் ரெயில் நிலையத்தை அடையும் வரையில் ஒருவரோடொருவர் பேசவில்லை. ரெயில் நிலையத்தினுள் அதிகக் கூட்டமில்லாமல் இருக்கவே ரகுபதி சாவித்திரியின் அருகில் நெருங்கி, 'இப்பொழுதாவது கோபம் தணிந்து விட்டதா? திரும்பி வீட்டுக்குப் போய்விடலாமா? இல்லை, டிக்கெட் வாங்கித்தான் வர வேண்டுமா?" என்று குறும்புச் சிரிப்புடன் கேட்டான்.
"இது என்ன விளையாட்டு? அழுகிற குழந்தைக்கு மிட்டாய் வாங்கித்தருகிற மாதிரி குழைந்து குழைந்து என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது? ரெயில் வந்துவிட்டால் நம் தர்க்கத்தை ரத்துக் கொண்டு நிற்காது! பேசாமல் போய் டிக்கெட் வாங்கி வாருங்கள்" என்று சாவித்திரி கோபத்துடன் பொரித்து தள்ளினாள்.
ரகுபதியின் மனத்தை ஊசியால் 'நறுக்'கென்று குத்துவது போல் அவள் வார்த்தைகள் தைத்தன. அவன் வேறெதுவும் பேசாமல் டிக்கெட்டை வாங்கி வந்து அவளிடம் கொடுப்பதற்கும் ரெயில் வருவதற்கும் சரியாக இருந்தது. கணவன், மனைவி என்கிற பந்தம் எவ்வளவு நெருங்கியதாக இருந்தாலும் சாவித்திரிக்கும் ரகுபதிக்கும் ஏற்பட்டிருந்த பிளவு அசாதாரண மாகத்தான் இருந்தது. ஜன்னலின் மீது கையை ஊன்றி முகத்தைச் சாய்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும் சாவித்திரியின் வெகு சமீபத்தில் பெட்டிக்கு வெளியேதான் ரகுபதி நின்றிருந்தான். இருந்தாலும் அவர்கள் இருவரின் மனங்களும் வெவ்வேறு துருவங்களைப் பார்த்துக்கொண்டிருந்தன. ரெயிலின் 'கார்டு' தன் ஊதலை எடுத்து ஊதிக் கொடியைப் பறக்கவிட்டு ஆட்டினார். திக்கித் திணறி ரகுபதி, "ஊருக்குப் போனதும் கடிதம் போடு" என்றான். சாவித்திரி மௌனமாகத் தலையை அசைத்தாள்.
மனைவியை ரெயில் ஏற்றிவிட்டுக் கால் நடையாகவே திரும்பி பாகுபதி வீட்டுக்கு வரும்போது பலமுறை அவன் மனம் அவனையும் அறியாமல் சாவித்திரியையும், ஸரஸ்வதியையும் ஒப்பிட்டுப் பார்த்தது. இப்பொழுது நடந்தது மாதிரி இருந்தது அவனுக்கு அந்தச் சம்பவம். ஒரு நாள் ஸரஸ்வதியை - அவ ளுக்குப் பன்னிரண்டு வயசாக இருக்கும் போது - ஏதோ ஒரு பாட்டைப் பாடச் சொல்லி வற்புறுத்தினான் ரகுபதி. ஓடி விளையாடும் பருவத்தில் மணிக்கணக்காக உட்கார்ந்துப் பாடிப் பாடி அலுத்துவிட்டது அவளுக்கு. ஆகவே சற்றுக் கோபத் துடன், "போ அத்தான்! உனக்கு இது ஒரு பைத்தியம்! என்னாலே இனிமேல் பாட முடியாது போ" என்று கூறி எழுந்து சென்ற ஸரஸ்வதியின் பறக்கும் மேலாக்கைப்பற்றி ரகுபதி' இழுத்தபோது அது கிழிந்து போய்விட்டது.
"புத்தப் புதுசையெல்லாம் கிழித்து விடுகிறாயே அத்தான்!" என்று இரைந்தாள் ஸரஸ்வதி.
"கத்தாதே இப்படி ராக்ஷசி மாதிரி!" என்று அவள் கொவ்வைக் கன்னங்களை அழுத்திக் கிள்ளிவிட்டான் ரகுபதி. உதடுகள் துடிக்க அவனை நீர் மல்கும் விழிகளால் பார்த்துவிட்டு உள்ளே ஓடிவிட்டாள் ஸரஸ்வதி:
"ஐயோ பாவம்! தாயில்லாக் குழந்தை! முரட்டுத்தனமாகக் கிள்ளிவிட்டோமே. பார்த்து ஆறுதல் கூறவேண்டும்" என்று அவளைத் தேடி. ரகுபதி சென்ற போது அவளாகவே வலுவில் எதிரில் வந்து. "அத்தான்! காப்பி சாப்பிடாமல் மறந்து போய் விட்டாயே இன்றைக்கு. ஆறிப்போகிறதே" என்று சுடச்சுட காபியை எடுத்துவந்து அவன் கையில் கொடுத்தாள். ரோஜாக் கன்னம் இன்னும் சிவந்துதான் இருந்தது. "கிள்ளி விட்டேனே. வலிக்கிறதா?" என்று கேட்க அவனுக்கு வெட்கம்.
" நீதான் கிள்ளினாயே!" என்று மறுபடியும் அந்த சம்பவத்தை நினைவு படுத்த அவளும் வெட்கினாள்.
நேற்று ரகுபதி மனைவியின் கரங்களைப் பிடித்துக்கொண்டு, "அடித்து விட்டேனே" என்று மனம் வருந்தியபோது சாவித்திரி அதைப் பாராட்டவில்லை அல்லவா? ' அடிப்பதை அடித்தாயிற்று. தோரணையில் உதாசீனமாகத்தானே பேசினாள்?
ரகுபதி சாம்பிய மனத்துடன் வீட்டை அடைந்தான். யந்திரம்போல ஒருவருடனும் பேசாமல் தன் வேலைகளைக் கவனித்துக்கொண்டான். ஸ்வர்ணமும், ஸரஸ்வதியும் அவனுடன் ஒன்றுமே பேசவில்லை. 'அவனாகவே ஏதாவது பேசட்டும்’ என்று ஸ்வர்ணம் நினைத்தாள். அத்தானிடம் ஏதாவது வலுவில் பேசி அவன் மனப் புண்ணைக் கிளறக்கூடாது என்று ஸரஸ்வதி மௌனமாகவே இருந்துவிட்டாள். இந்த அசாதாரணமான சாந்தம் அவன் நெஞ்சைப்பிடித்து உலுக்கியது. ஏன் ஒருவரும் தன்னுடன் பேசவில்லை - என்று அவனுக்கு வியப்பாகவும் இருந்தது. ஒரு வேளை சாவித்திரியை அடித்தது ஒரு மாபெரும் குற்றம் என்று எல்லோரும் கருதுகிறார்களோ? குற்றமாக இருந்தாலும், பிறகு அவளை எவ்வளவு முறை சமாதானப்படுத்த முயன்றான்? ’மனைவியின் கைகளைப் பிடித்துக் கொண்டு நான் கெஞ்சினேன்' என்று ஒருவனுக்கு பெற்ற தாயிடம் மட்டும் சொல்லிக்கொள்ள லஜ்ஜையாக இராதா என்ன? உடன் பிறந்தவளைப்போல் ஸரஸ்வதி பழகினாலும் இந்த விஷயங்களையெல்லாம் அவளிடம் வாய்விட்டுச் சொல்ல முடியுமா? ' ஒருவனுக்கு ஏற்படும் சில உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொள்வதற்கு 'அந்த ஒருத்தி' தான் தேவையாகவிருக்கிறது.
தாயாக இருந்தாலும், உடன் பிறப்பாக இருந்தாலும், தோழனாக இருந்தாலும் மற்றவர்களால் பகிர்ந்து கொள்ள முடியாத சில உணர்ச்சிகளை சகதர்மிணி ஒருத்தியால்தான் வாழ்க்கையில் பகிர்ந்துகொள்ள முடியும். இதையொட்டித்தான் பெரியவர்கள் மனைவியைச் 'சகதர்மிணி' என்று பெயரிட்டு அழைக்கிறார்களோ' என்று நினைத்து ரகுபதி மனம் வருந்தினான்.
இப்படியே நாலைந்து தினங்கள் ஓடிவிட்டன. பிள்ளையின் இந்த அசாதாரணமான மௌனத்தைப் பொறுக்க முடியாமல் ஸ்வர்ணம் ரகுபதியைப் பார்த்து. "ஏண்டா! சாவித்திரி எப்பொழுது வருகிறேன் என்று சொன்னாளடா? கேட்டாயோ அவளை?" என்று கவலையுடன் விசாரித்தாள். இந்த நாலைந்து தினங்களுக்குள்ளாகவே ஊரில், சாவித்திரி திடீரென்று பிறந்தகம் சென்றதைப்பற்றியே பேச்சாக இருந்தது.
"நேற்றுக்கூட ஸ்வர்ணத்தைக் கோவிலில் பார்த்தேன். நாட்டுப்பெண் ஊருக்குப் போகிறதைப்பற்றி ஒன்றுமே சொல்ல வில்லையே" என்று அவயம் ஆச்சரியப்பட்டாள்.
"வர வர ஸ்வர்ணம் முன்னைப்போல் இல்லையடி. எந்த விஷயத்தையும் பூட்டிப் பூட்டி வைத்துக்கொள்கிறாளே பத்திரமாக!" என்று பாகீரதி அம்மாமி முகத்தைத் தோளில் இடித்துக் கொண்டு அவயம் கூறியதை அப்படியே ஆமோதித்தாள். இப்படி கோவிலிலும், குளக்கரையிலும், நடுக்கூடங்களிலும் ஸ்திரி ரத்தினங்கள் பேசுவதை அரை குறையாகக் கேட்ட ஸ்வர்ணம், மனக்கஷ்டம் தாங்காமல் பிள்ளையை மேற்கூறியவிதம் விசாரித்தாள்.
"எப்படிப் போனாளோ அப்படி வந்து சேருகிறாள். இங்கே யாராவது அவளைப் போகச்சொன்னோமா என்ன?” என்று தாயின் மீது சீறிவிழுந்தான் ரகுபதி.
"அவள் தான் முரடாக இருக்கிறாள் என்றால் நீயாவது தணிந்து போகமாட்டாயா அப்பா? ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மூலையைப் பார்த்துக்கொண்டு நின்றால் நன்றாக இருக்குமா?" என்றாள் ஸ்வர்ணம்.
அதற்குப் பதில் எதுவும் கூறாமல் எழுந்து சென்ற ரகுபதியை மாடிப்படிகளில் சந்தித்த ஸரஸ்வதி கனிவுடன், "அத்தான்! சாவித்திரியிடமிருந்து ஊர்போய்ச் சேர்ந்ததைப்பற்றி கடிதம் ஏதாவது வந்ததா?" என்று கேட்டாள்.
"வெறுமனே அதைப்பற்றிப் பேசிப் பேசி என் மனத்தை என் எல்லோரும் நோக அடிக்கிறீர்கள், ஸரஸ்" என்று பரிதாப மாகக் கூறிவிட்டு மேலே விரைந்து சென்றுவிட்டான் ரகுபதி.
’கல்யாணமாகி வாழ்க்கை நடத்த ஆரம்பித்த இவ்வளவு குறுகிய காலத்துக்குள் இவ்வளவு மனக் கசப்பும், வெறுப்பும் என் அத்தானுக்கு ஏற்பட்டுவிட்டதே' என்று நினைத்து வரஸ்வதி மனம் வருந்தினாள். ஒருவேளை அது அவளால் ஏற்பட்டதோ என்பதை நினைத்துப்பார்க்கையில் மலரினும் மெல்லியதான அவள் மனம் 'திக்'கென்று அடித்துக்கொண்டது.
--------------------
அன்று சனிக்கிழமையாதலால் ராஜமையர் காரியாலயத்திலிருந்து பகல் ஒரு மணிக்கே வீட்டிற்கு வந்துவிட்டார். காசிக்குத் தன் பெண் பாலத்துடன் சென்றிருந்த அவர் தாயாரும் ஊரிலிருந்து முதல் நாள் தான் வந்திருந்தாள். இடைவேளைச் சிற்றுண்டிக்கு அப்புறம் கூடத்தில் உட்கார்ந்து வடநாட்டைப்பற்றிப் பாட்டி கூறுவதைக் கேட்டுக்கொண்டு. இடை யிடையே அவளைக் கேலி செய்து கொண்டிருந்தார்கள்.
"பாட்டி! காசிக்குப் போனால் ஏதாவது அவரவர்களுக்குப் பிடித்த பண்டத்தை விட்டுவிடவேண்டும் என்று சொல்லுகிறார்களே. நீ காப்பியை விட்டுவிட்டாயா பாட்டி?" என்று சீதா சிரித்துக்கொண்டே கேட்டாள்.
”சே. . சே... காப்பியை இன்னும் ' ஸ்ட்ராங்'காகச் சாப் பிடுவது என்று சங்கல்பம் செய்து கொண்டு வந்திருப்பாள் பாட்டி!" என்று சந்துரு கேலி செய்தான்.
"போடா அரட்டை! கொய்யாப் பழத்தையும், பாகற் காயையும் விட்டுவிட்டேன்" என்று பேரன், பேத்திக்குப் பதில் கூறினாள் பாட்டி.
”அடி சக்கை! தினம் தினந்தான் கொய்யாப்பழமும், பாகற்காயும் நாம் சாப்பிடுகிறோம்? சரியாகத்தான் பார்த்துப் பொறுக்கி எடுத்திருக்கிறாய்?" என்றான் மீண்டும் சந்துரு.
"காயும், பழமும் விடவேண்டும் என்பது ஒன்றும் சாஸ்திரம் இல்லை. நமக்கு இருக்கும் பலவித ஆசைகளில் எதையாவது துளி அந்தப் புனித க்ஷேத்திரத்தில் விட்டுவர வேண்டும். ஆசா பாசங்களை ஒடுக்கவேண்டும் என்று பெரியவர்கள் ஏற்படுத்தி இருக்கிறார்கள்" என்றார் ராஜமையர்.
சற்று ஒதுப்புறமாக உட்கார்ந்திருந்த மங்களம், "ஏதாவது அரட்டை வேண்டுமோ இல்லையோ? சாவித்திரியிடமிருந்து கடிதம் வந்து பத்து தினங்களுக்கு மேல் ஆகிறது. யாரும் ஒரு வரி பதிலே போடவில்லை. உன்னை எழுதச் சொல்லி எத்தனை முறைகள் சொல்லி இருப்பேன் சதா?" என்று மகன் கோபித்துக்கொண்டாள்.
"இதோ வந்துவிட்டேன் அம்மா" என்று கூறி காமரா அறைக்குள் சென்று கையில் கடிதமும் உரையும் அவள் எடுத்து வந்தபோது தெருவில் வண்டி வந்து நின்றது. கையில் ஒரு சிறு பெட்டியை எடுத்துக்கொண்டு சாவித்தி மட்டும் இறங்கி உள்ளே வந்தாள். அடுத்தாற்போல் மாப்பிள்ளை ரகுபதி வருவான் என்று எல்லோரும் வாசற்பக்கத்தையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வண்டிக்காரன் காலி வண்டியைத் திருப்பிக்கொண்டு போன பிறகுதான் சாவித்திரி மட்டும் தனியாக வந்திருக்கிறாள் என்பது தெரிந்தது.
"என்னம்மா இது? நீ மாத்திரம் தனியாகவா வருகிறாய்?" என்று ஆச்சரியத்துடன் மகளைப் பார்த்துக் கேட்டார் ராஜமையர்.
"இது என்னடி அதிசயம். ஒரு கடுதாசி போட்டிருந்தால் இங்கேயிருந்து யாராவது வந்து அழைத்து வந்திருக்க மாட்டோமா?" என்று பாட்டி அதிசயம் தாங்காமல் கேட்டுவிட்டுப் பேத்தியைப் பார்த்தாள்.
சாவித்திரி பதில் எதுவும் கூறாமல் காமரா அறைக்குள் சென்று பெட்டியை வைத்துவிட்டு அவளைத் தொடர்ந்து அறைக்குள் நுழைந்த மங்களத்தின் தோளில் தலையைச் சாய்த்துக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதாள். அப்புறம் மாமியார் வீட்டில் தனக்கு ஏற்பட்ட கஷ்டங்களைச் சாவித்திரி தாயிடம் கூறவும், அது வீடு முழுவதும் பரவுவதற்குச் சில நிமிஷங்கள் கூடப் பிடிக்கவில்லை.
”அடிக்கிறதாவது? ஹூம். . பதினெட்டு வயசு வரையில் வளர்த்துக் கொடுத்தால் அடிக்கிறதாவது? ஹும் . ." என்று ராஜமையர் திருப்பித் திருப்பித் தாம் சொன்ன வார்த்தைகளையே சொல்லிக்கொண்டிருந்தார்.
"அடிப்பார்கள். நாளைக்கு இவளை வேண்டாம் என்று தள்ளியும் வைப்பார்கள். வீட்டிலேதான் பெண் குதிர் மாதிரி வளர்கிறதே!" என்று பாட்டி, சம்பந்தம் இல்லாமல் பேச ஆரம்பித்தபோது சந்துரு , திடுக்கிட்டான். ’ஸரஸ்வதியைக் குறித்தா இவ்வளவு கேவலமாகப் பேசுகிறாள் பாட்டி? ரகுபதி ஒரு கல்யாணம் பண்ணிக்கொண்டு, அந்த மனைவியைத் தள்ளி வைத்த பிறகு தன்னை மணக்கவேண்டும் என்று விரும்புகிற பெண்ணா அவள்?' - பாட்டியின் சொல்லைப் பொறுக்கமுடியாமல் சந்துரு சற்று இரைந்து. "சரி, சரி, எல்லாவற்றையும் கொஞ்சம் பொறுமையாக ஆராய்ந்து விசாரிக்கலாம். வாய்க்கு வந்ததைப் பேசிக்கொண்டு நிற்கவேண்டாம்" என்று கூறினான்.
சாப்பிடும் கூடத்தில் சாவித்திரியின் பக்கத்தில் சீதா வந்து உட்கார்ந்து, "உனக்கும், அத்திம்பேருக்கும் ஏதோ ஊடல் போல இருக்கிறது! தமிழ்க் கவிதைகளையும், தலைவன், தலைவி ஊடல் பாடல்களையும் படித்துவிட்டு அத்திம்பேர் உன்னிடம் ஊடலை ஆரம்பித்திருக்கிறார் போல இருக்கிறது! நடுவில் யாராவது தூது செல்வதற்கு இருந்திருந்தால் நீ இங்கே வந்திருக்கமாட்டாய் இல்லையா சாவித்திரி? அப்படித்தானே?" என்று குறும்பு தவழக் கேட்டாள்.
"நாளைக்கு உனக்கு வரப்போகிற புருஷன் உன்னைக் கன்னத்தில் நாலறை அறைந்து வீட்டைவிட்டு வெளியே தள்ளினால், நீ அதை ’வேடிக்கை’ன்னு நினைத்துக்கொண்டு அழகாகக் குடித்தனம் செய்து கொண்டு இருப்பாய்" என்று பாட்டி உரக்க இரைய ஆரம்பித்தாள், தன் சின்னப் பேத்தியைப் பார்த்து.
சீதாவுக்கு உண்மையிலேயே தன் தமக்கைமீது கோபம் ஏற்பட்டது.
”கணவன் அடிக்கிறான் என்றே வைத்துக்கொள்வோம். வீட்டைவிட்டுத் துரத்துகிறான் என்றே வைத்துக்கொள்வோம். வீடு என்பது கணவன், மனைவி இருவருக்கும் சொந்தமான இடம். இதிலிருந்து ஒருவரையொருவர் வெளியே போகச்சொல்ல யாருக்கு அதிகாரம்? அப்படியே அவன் வற்புறுத்தினாலும், 'சீ, சீ, உங்களையே கதி என்று நம்பி வந்திருக்கும் என்னை, என் வீட்டைவிட்டு வெளியேற்ற உங்களுக்கு வெட்கமில்லையா? அவமானமாக இல்லையா? பேசாமல் இருங்கள். என் வீட்டுக்கு நான் தான் அரசி' என்று கூறிவிட்டு நான் உள்ளே போய் விடுவேன். காலப் போக்கில் எவ்வளவோ மனஸ்தாபங்கள் கரைந்து போய்விடுகின்றன. இதைத்தானே அன்னை கஸ்தூரிபாயும் நமக்குப் போதிக்கிறார்?" என்று சீதா ஆவேசத்துடன் பேசினாள். அவள் அப்பொழுது சந்துரு லைப்ரரியிலிருந்து வாங்கிவந்த காந்திஜியின் 'சத்திய சோதனை’யைப் படித்துக் கொண்டிருந்தாள்.
"சீதா! நீ பேசாமல் இருக்கமாட்டாயா? உன்னை அதிகம் படிக்கவைப்பதே ஆபத்தாக முடியும் போல் ! இருக்கிறதே!" என்று ராஜமையர் அதட்டிய பிறகுதான் அப்பாவும் விஷயத்தைப் பிரமாதப்படுத்த விரும்புகிறார் என்பதைச் சீதா தெரிந்து கொண்டாள்.
சாவித்திரியின் கல்யாணத்துக்காக ராஜமையர் -ஆறாயிரம் ரூபாய்க்குமேல் செலவு செய்திருக்கிறார். விமரிசையாகக் கல்யாணம் செய்தார். மாப்பிள்ளை ரொம்பவும் நல்ல பிள்ளை என்று முடிவு கட்டியிருந்தார். பிக்கல், பிடுங்கல் ஒன்றும் இல்லை. பெண் சுதந்தரமாக வாழ்வாள் என்றும் எதிர்பார்த்தார். ஆனால், கல்யாணம் நடந்த நான்கு மாதங்களுக்குள் கணவனுடன் மனஸ்தாபப்பட்டுக்கொண்டு தன்னந்தனியே வந்து நிற்கும் மகளைப் பார்த்ததும், பொறுமைசாலியான அவர் மனமும் கோபத்தால் வெகுண்டது: எரியும் நெருப்புக்கு விசிறி கொண்டு விசிறுவது போல அவர் தாயார் மேலும் தொடர்ந்து. "ஏண்டா அப்பா! குழந்தையை அடித்துத் துரத்தும்படி என்னடா கோபம் வந்துவிட்டது அவர்களுக்கு? சீர்வரிசைகளில் ஏதாவது - குறைந்து போய்விட்டதா? சாவித்திரிதான் என்ன அழகிலே குறைவா? எதறகாக இந்தமாதிரி பண்ணியிருக்கிறார்கள்?" என்று கேள்விமேல் கேள்வியாகக் கேட்டு அவரைத் திணற அடித்தாள்.
"பணம் காசைப்பற்றி என் மாமியார் வீட்டாருக்கு ஒருவிதக் குறையுமில்லை பாட்டி. அவர் இஷ்டப்படி நான் வீணை கற்றுக்கொள்ள வேண்டுமாம்! சங்கீதம் தெரிந்தவளாக இருந்தால்தான் அவர் மனசுக்குப் பிடித்தமாக இருக்குமாம்!" என்று பாட்டியின் கேள்விகளுக்குப் பதில் அளித்தாள் சாவித்திரி.
"அப்பா! இவ்வளவுதானா? பேஷாகக் கற்றுக்கொள்கிறது. இதிலே சண்டைக்கும், சச்சரவுக்கும் இடமில்லையே. அப்படி உனக்குச் சங்கீதம் பயின்றும் வராமல் போனால் அத்திம்பேர் தன்னால் மனம் சலித்து விட்டுவிடுகிறார்" என்றாள் சீதா.
"அடேயப்பா! இதுதானா விஷயம்?" என்று மங்களம் ஒரு பெருமூச்சு விட்டாள். இதுவரையில் இவர்கள் பேச்சைக் கவனித்த சந்துரு உதட்டை மடித்துக் கொண்டே
சீதாவைப் பார்த்தான்.
”ஒருவேளை நாளைக் காலை வண்டியில் அத்திம்பேர் சாவித்திரியைத் தேடிக்கொண்டு வந்தாலும் வருவார்" என்று சீதா கூறியதும், "வரட்டுமே. தயாராக ஆரத்தி கரைத்து வை! வந்ததும் திருஷ்டி கழித்து ஆரத்தி சுற்றி நெற்றிக்குத் திலக மிட்டு உள்ளே அழைத்து வாயேண்டி. அசடே. . . ." என்று கூறிப் பல்லை நறநறவென்று கடித்தாள் சாவித்திரி.
--------------------
பல நாள் முயற்சியின் பேரில் ரகுபதி அந்த ஊரில் ஒரு சிறு சங்கீத மண்டபம் கட்டி முடித்திருந்தான். அதன் திறப்புவிழாவை அவன் வெகு விமரிசையாகக் கொண்டாட வேண்டும் என்றும் தீர்மானித்திருந்தான். மனைவியுடன் வெகு உற்சாகமாக அவன் அந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பியதில் வியப்பு ஒன்றுமில்லை. ஆனால், பிறந்தகம் சென்ற சாவித்திரி மூன்று மாதங்களாகியும் அவனுக்கு ஒரு கடிதங்கூடப் போடாததை நினைத்துத்தான் அவன் மனம் சதா ஏங்கிக்கொண்டிருந்தது. 'சௌக்கியமாக ஊர் போய்ச் சேர்ந்தேன்' என்று கடிதம் போடும்படி அன்று ரெயிலடியில் அவளிடம் தான் கேட்டுக்கொண்டும் அவள் தன்னை மதிக்கவில்லையே என்று ரகுபதி எண்ணி வருந்தாத நாளில்லை. ஆசையுடன் வாங்கிவந்த வீணை அவன் அறையில் ஒரு மூலையில் கேட்பாரற்றுத் தூசி படிந்து கிடந்தது. அன்று நடந்த ஒரு சிறு சம்பவம் மனைவியையும் கணவனையும் பிரித்து எவ்வளவு பெரிய பிளவை ஏற்படுத்திவிட்டது! குடும்ப வாழ்க்கையில் இன்பமும், அமைதியும் நிலவ வேண்டிய நாட்களில் மன அமைதி குறைந்து வாழ்க்கையில் கசப்பல்லவா ஏற்பட்டிருக்கிறது?
மன நிம்மதியை இழந்த ரகுபதி தன் அறைக்குள் மேலும் கீழுமாக உலாவிக்கொண்டே சிந்தனையில் மூழ்கி இருந்தான். எதிரே மேஜைமீது திறப்பு விழாவுக்காக அனுப்ப வேண்டிய அழைப்பிதழ்கள் வைக்கப்பட்டிருந்தன. தான் நடத்தப் போகும் இந்த விழாவைக் குறித்துத் தன் மாமனாருக்கும் அன்றைய தபாலில் நான்கு வரி ஒரு கடிதம் எழுதிப் போட்டிருந்தான். அதில் அவரைக் கட்டாயம் வரவேண்டும் என்றும் எழுதி இருந்தான். ஒருவேளை பெண்ணைச் சமாதானப்படுத்தி அவர் அழைத்து வந்தாலும் வரலாம் அல்லவா? சாவித்திரி தன் தகப்பனாருடன் வந்துவிட்டால் பழைய விஷயங்களை எல்லாம் மறந்துவிடவேண்டும். அதைப்பற்றித் தப்பித் தவறிக் கூட அவளிடம் பிரஸ்தாபிக்கக்கூடாது என்று ரகுபதி தீர்மானித்துக் கொண்டான்.
அவன் சிந்தனையைக் கலைப்பது போல் கீழே பூஜை அறையை மெழுகிப் படத்தருகில் வித விதமாகக் கோலம் போட்டுக்கொண்டே மெல்லிய குரலில் ஸரஸ்வதி பாடிக் கொண்டிருந்தாள். மாடியில் ரகுபதியின் அறைக்கு வெளியே இருக்கும் வராந்தாவில் நின்று பார்த்தால் அறையும் நன்றாகத் தெரியும். குந்தலவராளி ராகத்தில் உருக்க மாக "மாலே மணி வண்ணா' என்கிற ஆண்டாளின் பாசுரத்தை அவள் பாடுவதைக் கேட்டு வராந்தாவின் கைப்பிடிச்சுவர் மீது சாய்ந்து நின்றுகொண்டு அதை ரசிக்க ஆரம்பித்தான் ரகுபதி. அப்பொழுது மாலை நேரம். எல்லோர் வீட்டிலும் விளக்கேற்றி விட்டார்கள். வித விதமாக ஆடைகள் உடுத்து இளம் பெண்களும் சிறுமிகளும் கையில் குங்குமச் சிமிழுடன் ஊரழைக்க வெளியே புறப்பட்டுக்கொண்டிருந்தனர். இன்று என்ன விசேஷம்?' என்று ரகுபதி யோசித்தான்.
"ஓஹோ! நவராத்திரி - ஆரம்பம்போல் இருக்கிறது. கல்யாணம் நடந்த வருஷத்தில் மங்களகரமாகக் கணவனுடன் இருந்து பண்டிகைகள் கொண்டாட வேண்டியவள் பிறந்தகத்தில் - போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள்! ஆயிற்று, நவராத்திரி முடிந்ததும் தீபாவளி வரும். இந்தத் தீபாவளி தலை தீபாவளி ஆயிற்றே?. மாமனார் வீட்டிலிருந்து பலமாக அழைப்பு வரும்! பெட்டி நிறையப் பட்டாசுக் கட்டுகளும் ஆருயிர் மனைவிக்கு வண்ணச்சேலையும் வாங்கிப் போகவேண்டியது தான் பாக்கி.
ரகுபதிக்கு எதையோ, என்னவோ நினைத்து நினைத்துத் தலையை வலிக்க ஆரம்பித்தது. அவன் சிந்தனையைக் கலைத்து அவன் தாய், "ரகு!" என்று ஆதரவுடன் கூப்பிட்டாள். திடுக்கிட்டு அவன் திரும்பிப் பார்த்தபோது ஸ்வர்ணம் அவனுக்கு வெகு அருகிலேயே நின்றுகொண்டிருப்பதைக் கண்டான்.
"ஏண்டா அப்பா! திறப்பு விழாவுக்காவது சாவித்திரி வந்துவிட்டால் தேவலை. நாம்தான் பேசாமல் இருக்கிறோம். ஊரில் நாலுபேர் கேட்பதற்குப் பதில் சொல்ல முடியவில்லையே. உன் மாமனாருக்காவது ஒரு கடிதம் எழுதிப் பாரேன்" என்றாள்
ஸ்வர்ணம்.
"அவருக்கு இன்று தான் ஒரு கடிதம் எழுதிப்போட்டேன்" --வரட்சியுடன் பதிலளித்த மகனின் முகத்தைப் பார்த்ததும் ஸ்வர்ணத்தின் மனம் உருகியது. இப்படிச் செய்வதுதான் நல்லது. இது தான் உடம்புக்கு ஒத்துக்கொள்ளும். நான் சொல்வதை நீ கேட்டுத்தான் ஆகவேண்டும்' என்று குழந்தையில் அதட்டித் திருத்தி அவள் வளர்த்த மகன்தான் ரகுபதி. இருந்தாலும், இன்று அவன் மனத்துக்கு நல்லது கெட்டது தெரிந்திருக்கிறது. அதிகமாக அவனை ஒன்றும் சொல்ல முடிய வில்லை. அப்படிச் சொல்லித் திருத்துவதற்கும் பிரமாதமாகத் தவறு ஒன்றும் அவன் இழைத்துவிடவில்லை. இந்தப் பிளவு - இந்த வைராக்கியம் - ஒரு வேளை நீடித்து நிலைத்துவிடுமோ? அப்படியானால், அவள் ஒரே மகன் வாழ்க்கை முற்றும் இப்படித் தான் ஒண்டிக் கட்டையாக நிற்கப்போகிறானா? ஸ்வர்ணத்தின் நெஞ்சை யாரோ கசக்கிப் பிழிவது போன்ற வேதனையை அநுபவித்தாள்.
பெற்ற அன்னை மகனைப் பாலூட்டி, சீராட்டி வளர்க்கிறாள். அவன் அறிவு பெற அரிய கதைகளை மனதில் பதியும்படி கூறுகிறாள். பள்ளிக்கு அனுப்புகிறாள். அவன் கல்வியில் தேர்ந்து பட்டம் பெற்று வரும்போது திருஷ்டி கழிக்கிறாள். பொங்கிப் பூரிக்கிறாள். அவனுக்கு ஆசையோடு மணம் முடித்து வைத்துப் பேரன் பேத்தியோடு குலம் தழைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறாள். நடு நடுவில் குடும்பங்களில் சிறு பூசல்கள் எழலாம். மாமியாரும், மரு மகளும் சண்டை போட்டுக்கொண்டு விலகி வாழலாம். இவை தினமும் நடக்கின்றன. பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், மகன் நல்வாழ்வு வாழவேண்டும் என்று எண்ணிய அன்னையின் உள்ளத்தில் அந்த ஆசை, சண்டை - பூசல்களுக் கிடையில் நிலைத்துத்தான் இருக்கும். அதன் முன்பு மற்றச் சிறு வியவகாரங்கள் மறைந்து போகின்றன; தெளிந்த கங்கையில் கழுவப்படும் மாசுமறுக்களைப்போல!
கீழே கூடத்தில் கலகலவென்று சிரித்துக்கொண்டே நாலைந்து பெண்கள் வந்தார்கள்.
"ஸரஸ்வதி! புது சங்கீத மண்டபத்தில் உன்னுடைய கச்சேரியாமே! என்ன பாட்டுகள் பாடப் போகிறாயடி?" என்று ஒருத்தி கேட்டாள்.
"அதெல்லாம் முன்னாடி சொல்லுவாளா? நாளைக்கே பெரிய பாடகியாகி 'தேசிய’ நிகழ்ச்சியில் பாடினாலும் பாடுவாள். இப்பொழுது சாதாரண ஸரஸ்வதியாக இருக்கிறவள் அப்பொழுது கான ஸரஸ்வதியாகவோ, இசைக் குயிலாகவோ மாறிவிடுவாள் இல்லையா? 'நீ யார்? எந்த ஊர்?' என்று உன்னைப் பார்த்துக் கேட்டாலும் கேட்பாள். இல்லாவிடில் எல்லோருக்கும் பொதுவாக ஒரு 'நமஸ்காரம்' போட்டுவிட்டுக் காரில் போய் ஏறி உட்கார்ந்து காண்டாலும் கொள்வாள்!" என்றாள் இன்னொருத்தி.
அவள் பேசி முடித்ததும் எல்லோரும் 'கலி' ரென்று சிரித்தார்கள்.
"அப்படியெல்லாம் பண்ண மாட்டாள் ஸரஸ்வதி. இன்றைக்கு மாத்திரம் என்ன, அவள் பெரிய பாடகி ஆவதற்கு வேண்டிய தகுதி இல்லையா? குடத்துள் விளக்காக இருக்கிறாள். தன்னைப்பற்றி அதிகம் வெளியிலே சொல்லிக்கொள்ளவே அவளுக்கு வெட்கம்!" - முதலில் பேசிய பெண் ஸரஸ்வதிக்காகப் பரிந்து பேசினாள்.
இவர்கள் பேச்சுக்குப் பதில் கூறாமல் ஸரஸ்வதி புன்சிரிப்புடன் கம்பளத்தை எடுத்து விரித்து அவர்களை அதில் உட்கார்ந்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டாள். பிறகு, அங்கிருந்த பெண்கள் பூஜை அறையைக் கவனித்துவிட்டு, "இந்த வருஷம் ஏன் பொம்மைகளை அதிகமாகக் காணோம்? சாவித்திரி எப்பொழுது பிறந்தகத்திலிருந்து வருவாள்?" என்றெல்லாம் கேட்க ஆரம்பித்தார்கள். அங்கே நின்று பேசினால் மேலும் அவர்கள் ஏதாவது கேட்டுக்கொண்டே இருப்பார்கள் என்று நினைத்து, ஸரஸ்வதி பூஜை அறைக்குள் சென்று தட்டில் வெற்றிலை பாக்கு, பழத்துடன் வெளியே வந்தாள். வந்த பெண்கள் எல்லோரும் தாம்பூலம் பெற்றுக்கொண்டு வெளியே போய் விட்டார்கள்.
மாடியிலிருந்து அந்தப் பெண்கள் பேசியதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ரகுபதி நிதானமாகக் கீழே இறங்கி வந்தான். பூஜை அறை வாயிற்படியில் நின்றிருந்த ஸரஸ்வதியைப் பார்த்து, "சங்கீத மண்டபத்தில் உன்னுடைய கச்சேரிக்கு ஏற்பாடு ஆகி இருக்கிறதுபற்றி உனக்குத் தெரியுமா ஸரஸு? அதைப்பற்றி அழைப்பிதழ்களில் கூட வெளியிட்டிருக்கிறோமே! பத்திரிகைகளிலும் விளம்பரம் வந்திருக்கிறது" என்று சொன்னான்.
"இதெல்லாம் எதற்கு அத்தான்? நான் என்றும் சாதாரண ஸ்ரஸ்வதியாகவே இருக்கிறேனே. நீ ஏன் இப்படி அமர்க்களப் படுத்துகிறாய்?" என்று கேட்டாள் ஸரஸ்வதி, குழந்தையைப் போல.
------------------
அன்று காலை தபால்காரன் கொண்டுவந்து கொடுத்த "அழைப்பிதழ்', ராஜமையர் வீட்டில் மேஜை மீது கிடந்தது. கையில் நூலும், ஊசியும் வைத்துக்கொண்டு சீதா சவுக்கம் பின்னிக்கொண்டிருந்தாள்.. நொடிக்கொருதரம் அவள் கண்கள் அழைப்பிதழை நோக்கி மலர்ந்தன. 'ஸ்ரீமதி சரஸ்வதி வாய்ப் பாட்டும், வீணையும்' என்று தங்க நிற எழுத்துக்களில் அச்சடித்திருக்கும் வார்த்தைகளைத் திருப்பித் திருப்பிப் படித்தாள் சீதா. சாவித்திரி மட்டும் ஒற்றுமையுடன் அவர்களிடையே இருந்தால் இன்று சீதா அந்தக் கடிதத்தைப் பார்த்துவிட்டுத் துள்ளிக் குதித்திருப்பாள். கட்டாயம் சென்று ஸரஸ்வதியின் இன்னிசையைக் கேட்க வேண்டும் என்று வீட்டில் ஆர்ப்பாட்டம் செய்திருப்பாள். காலையில் கடிதம் வந்ததும் காரியாலயத்துக்குப் போவதற்கு முன்பு ராஜமையர் அதை அலட்சியத்துடன் பார்த்து விட்டு, மேஜைமீது 'பொத்' தென்று வீசி எறிந்தார். அவருக்கு மாப்பிள்ளையிடம் ஏற்பட்டிருந்த கோபத்தை ஒருவாறு புரிந்து கொண்டாள் சீதா. அவருக்குப் பிரத்தியேகமாக ரகுபதி எழுதி இருந்த கடிதத்தைப் படித்தபோது அவர் முகம் 'கடுகடு' வென்று மாறியது.
"இந்தத் திறப்பு விழாவுக்குத் தாங்கள் வந்திருந்து அவசியம் நடத்திவைக்க வேண்டும். அங்கு எல்லோரும் சௌக்கியம் என்று நம்புகிறேன்."
சாமர்த்தியமாக எழுதப்பட்ட கடிதம் என்றுதான் அவர் நினைத்தார்: சாவித்திரியைப் பற்றி விசாரித்து ஒன்றும் எழுத வில்லை. அவள் எப்பொழுது வரப்போகிறாள் என்றும் கேட்க வில்லை. எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால் பெண்ணைப் பெற்றவரிடமே பெண்ணைப்பற்றி ஒரு வார்த்தைகூடப் பிரஸ்தாபியாமல் அவளுக்கும் தனக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தின் காரணத்தை விளக்காமல்--வருமாறு அழைத்திருப்பான் என்று அவர் உள்ளத்தில் அனல் கனன்றது:
பயந்து கொண்டே மங்களம் கணவனின் அருகில் வந்து என்று விசாரித்தாள்.
”அது என்ன கடிதம்? யார் எழுதி இருக்கிறார்கள்?” என்று விசாரித்தாள்.
"உன் அழகான மாப்பிள்ளை எழுதியிருக்கிறான்! சங்கீத மண்டபம் கட்டித் திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்திருக்கிறானாம். நான் வந்து அவனுடன் இருந்து நடத்திவைக்க வேண்டுமாம். உடனே ஓட வேண்டியது தான் பாக்கி!" என்று அலட்சியமாகக் கூறிவிட்டு காரியாலயத்துக்குப் புறப்பட்டார்.
"சாவித்திரியை அழைத்து வரும்படி எழுதி இருக்கிறதா?"" என்று கவலையுடன் விசாரித்தாள் மங்களம்.
"அட சீ. . . . நீ ஒன்று!" ’சாவித்திரிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்' என்று கேட்கிற தோரணையில் அல்லவா கடிதம் எழுதி இருக்கிறான் அவன்? இன்னும் கொஞ்ச காலம் போனால் 'சாவித்திரி யார்?' என்றே கேட்டு விடுவான் போல் இருக்கிறது! "ஹும்" என்று கூறிவிட்டுச் சற்றுக் கோபம் அடங்கியவராகத் தன் முகவாயைத் தடவிக்கொண்டே யோசித்தார் ராஜமையர்.
“நான் சொல்கிறேனே என்று கோபித்துக் கொள்ளாதீர்கள். விரோதத்தை வளர்த்துக்கொண்டே போனால் அப்புறம் குழந்தையின் கதி என்ன ஆகிறது? யோசித்துப் பாருங்கள். நாளைக்கே சந்துருவுக்குக் கல்யாணம் ஆகவேண்டும். அப்புறம் சீதா வளர்ந்துவிட்டாள். அவளுக்கும் உடனே கல்யாணம் பண்ணி ஆகவேண்டும். கணவனுடன் வாழ வேண்டிய பெண் பிறந்த வீட்டில் இருந்தால் பார்ப்பதற்கு நன்றாக இருக்குமா? இந்தச் சந்தர்ப்பத்தையே ஒரு சாக்காக வைத்துக்கொண்டு சாவித்திரியை அழைத்துக்கொண்டு போங்கள். அவர்கள் சரக்கை அவர்களிடம் ஒப்பித்துவிட்டு வந்துவிடுங்கள். அப்புறம் எல்லாம் சரியாகிவிடும்'- மங்களம் இவ்விதம் கூறி விட்டு, ஆவலுடன் கணவன் முகத்தைப் பார்த்தாள்.
"மனைவியை ஏதோ கோபத்தில் அடித்துவிட்டான். நான் கூட உன்னை அடித்திருக்கிறேன் அந்தக் காலத்தில்! இவளும் கோபித்துக்கொண்டு வந்துவிட்டாள். என்னை மதித்து எப்போது வரச்சொல்லிக் கூப்பிட்டிருக்கிறானோ, எனக்கு இதைப் பற்றி அவன் ஏதாவது எழுத வேண்டுமோ இல்லையோ? அவ்வளவு கர்வம் பிடித்தவனிடம் என்னைப் போய்ப் பல்லைக் காட்டச் சொல்லுகிறாய். ”உம்மைத்தானே வரச் சொன்னேன்? இவளை ஏன் கூட்டி வந்தீர்?' என்று கேட்டால் முகத்தை எங்கே திருப்பிக்கொள்கிறதடீ?"
கோபத்தில் இப்படி இரைந்துவிட்டு அவசர அவசரமாக வெளியே போய்விட்டார் ராஜமையர், மங்களம் கண்களில் நீர் தளும்ப பிரமித்துப்போய் நின்றிருந்தாள். வெளியே செல்வதற்காக அங்கு வந்த சந்துரு தாயின் குழப்பமான நிலையை அறிந்து, அவள் அருகில் வந்து நின்று. " என்னம்மா விஷயம்?" என்று கேட்டான். மேஜைமீது கிடந்த அழைப்பிதழில் கொட்டை எழுத்துக்களில், 'ஸ்ரீமதி ஸரஸ்வதி-வாய்ப்பாட்டும் வீணையும்' என்று எழுதி இருந்தது பளிச்சென்று தெரிந்தது.
"அம்மா! ஸரஸ்வதி முதன் முதலாகக் கச்சேரி செய்யப் போகிறாளாமே. நன்றாகப் பாடுவாள் அம்மா" என்றான் சந்துரு சந்தோஷம் தாங்காமல்.
ஸரஸ்வதியின் பெயரைக் கேட்டாலே அகமும் முகமும் மலர்ந்து நிற்கும் சந்துருவின் மனதை ஒருவாறு புரிந்து கொண்டாள் மங்களம். இருந்தாலும் அதை வெளிக்குக் காட்டிக்கொள்ளாமல், “எல்லாம் ரொம்ப விமரிசையாகத்தான் நடக்கும்போல் இருக்கிறது. நாம்தான் ஒன்றுக்கும் கொடுத்து வைக்கவில்லை" என்றாள் மங்களம்.
இதுவரையில் தோட்டத்தில் ஏதோ அலுவலாக இருந்த சாவித்திரி உள்ளே வந்தபோது, தாயாரும், தமையனும், தங்கையும் ஏதோ கூடிப் பேசுவதைக் கவனித்துவிட்டு அருகில் வந்து நின்று, "என்ன அது பிரமாதமான ரகசியம்? கூடிப் பேசுகிறீர்களே?" என்று கேட்டாள்.
சந்துரு அவளுக்குப் பதில் கூறாமல் மேஜைமீது கிடந்த அழைப்பிதழை எடுத்து அவளிடம் கொடுத்தான்.
சாவித்திரியின் முகம் க்ஷண காலத்தில் வெளுத்து வாடியது. பிறகு சரேலென்று 'ஜிவு ஜிவு' வென்று சிவந்தது. ஆத்திரத்துடன் கடிதத்தை எடுத்துச் சுக்கு நூறாகக் கிழித்துப்போட்டு, “பூ! இவ்வளவுதானா? கச்சேரி செய்ய வேண்டியது ஒன்று தான் பாக்கியாக இருந்தது. அதுவும் ஆரம்பமாகி விட்டதாக்கும்!" என்று அதைத் தூள் தூளாகக் கிழித்து எறிந்தாள் எரிச்சலுடன்.
அழகிய எழுத்துக்களில் 'ஸ்ரீமதி ஸரஸ்வதி' என்று எழுதி இருந்த வார்த்தைகள் துண்டு துண்டாகச் சிதறிக் கூடத்தில் இறைந்து கிடப்பதைப் பார்க்க மனம் சகிக்காமல் சந்துரு சாவித்திரியைக் கோபத்துடன் விழித்துப் பார்த்து விட்டு அங்கிருந்து வெளியே சென்றான்.
-----------------
திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து கொண்டிருந்தன. ஆவலுடன் ஒவ்வொரு நாளும் மனைவியின் வரவை எதிர்பார்த்துக்கொண்டிருந்தான் ரகுபதி. கோபத்தைப் பாராட்டாமல் கடிதமும், அழைப்பும் அனுப்பிய பிறகு வராமல் இருக்கமாட்டார்கள் என்றும் நினைத்தான். ஸ்வர்ணம் மட்டும் அடிக்கடி, "அவர்கள் என்ன பண்ணப்போகிறார்களோ? வருகிறதானால் கடிதம் ஏதாவது போட-மாட்டார்களா?" என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
நண்பர்கள் எல்லோரும் வருவார்கள். ”எங்கேயடா உன் மனைவி?" என்று துளைப்ப ஆரம்பித்து விடுவார்கள். கல்யாணமாகி வந்த புதுசிலேயே நண்பர்கள் சாவித்திரியைத் தத்தம் வீடுகளுக்கு அழைத்து வரும்படி ரகுபதியைத் தொந்தரவு செய்து கொண்டிருந்தார்கள். ஒன்றிரண்டு பேர் ரகுபதியின் வீட்டைத் தேடியே வந்து பார்த்துவிட்டுப் போனார்கள். இவர்களுக்குப் பதில் சொல்லுவதற்குப் போதுமென்று ஆகிவிடும்.
தெருவில் வண்டி ஏதாவது போனால் கூட ஸ்வர்ணம் கைக் காரியத்தைப் போட்டுவிட்டு வாசலில் வந்து எட்டிப் பார்த்து விட்டுப் போவாள். 'வருகிறார்களோ இல்லையோ' என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்வதில் அவளுக்கு ஒரு திருப்தி ஏற்பட்டது. ரகுபதியின் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. சாவித்திரியுடன் முதலில் யார் பேசுவது என்பது புரியாமல் மனத்தைக் குழப்பிக்கொண்டான் அவன். வலுவில் அவன் தான் அவளுடன் பேசவேண்டும் என்பதையும் அவன் நன்குணர்ந்திருந்தான். பிடிவாதக்காரியுடன் வேறென்ன செய்ய முடியும்?
யோசித்தவண்ணம் உட்கார்ந்திருந்த ரகுபதியின் முன்பு ஸரஸ்வதி இளமுறுவலுடன், "அத்தானுக்கு என்னவோ பலமான யோசனை!" என்று சொல்லிக்கொண்டே தட்டில் சிற்றுண்டியைக் கொண்டுவந்து வைத்தாள்.
"என்ன யோசனை இருக்கப்போகிறது? எல்லோருக்கும் அழைப்பு அனுப்பியாகி விட்டதா என்று நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். வேறொன்றும் இல்லை!" என்று சலிப்புடன் பதிலளித்தான் அவன்.
"போ, அத்தான். உன் மனசில் இருக்கிற ஏக்கந்தான் முகத்திலேயே தெரிகிறதே. நான் என்ன பச்சைக் குழந்தையா?"" என்று அவளும் வருத்தம் தொனிக்கக் கூறினாள்.
'தான் சந்தோஷப்படும் போது அவள் பார்த்துச் சந்தோஷப்படவும், தான் வருந்தும்போது அவள் வருந்தவும் ஸரஸ்வதிக்கும் தனக்கும் அப்படி என்ன பந்தம் இருக்கிறது?' என்று ரகுபதி யோசித்தான். ஊஞ்சல் சங்கிலியைப் பிடித்துக் கொண்டு, எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்த கூந்தலைப் பின்னிவிடாமல், முதுகில் புரளவிட்டுக் கண்களில் கரைந்து இமைகளில் சற்று அதிகமாகவே வழியும் மையுடன் அவனைப் பார்த்து முறுவலித்துக்கொண்டே நின்றாள் ஸரஸ்வதி.
ஆர்வத்துடன் அவளை விழுங்கிவிடுவது போல் பார்த்துக் கொண்டே ரகுபதி, "உனக்குத்தான் எப்படியோ பிறத்தியாருடைய மனசில் இருப்பதைக் கண்டு பிடிக்கத் தெரிந்து இருக்கிறதே! என் மனசில் இருப்பதைத் தெரிந்து கொண்டே எதற்கு.
என்னைக் கேட்கிறாய் ஸரஸு?" என்றான்.
ஸரஸ்வதி வெட்கத்துடன் தலையைக் குனிந்து கொண்டாள். பிறகு சட்டென்று விழிகளை உயர்த்தி அவனைப் பார்த்து. ”உன்னைவிட அத்தைதான் நாட்டுப்பெண் இன்னும் வந்து சேரவில்லையே என்று கவலைப்படுகிறாள். நல்ல வேளை! நான் சமையலறையில் இராமல் இருந்தால் ரவா சொஜ்ஜியில் உப்பை அள்ளிப் போட்டிருப்பாள்! ஆனால் உனக்கு அதுவும் தெரிந்திருக்காது. இது ஏதோ புதுமாதிரி பட்சணம்போல் இருக்கிறது என்று நினைத்துக்கொள்வாய். அத்தான்! அன்றொரு நாள் சாவித்திரி பொரிச்ச கூட்டு என்று சமைத்து வற்றல் குழம்பை உன் இலையில் பரிமாறினாளே; நீயும் அதைப் 'பேஷ்' என்று சொல்லி ஆமோதித்துச் சாப்பிட்டாயே; நினைவிருக்கிறதா உனக்கு? 'புருஷன், மனைவி வியவகாரத்தில் நாம் ஏன் தலையிட வேண்டும்' என்று நான், பொத்துக்கொண்டு வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு வெளியே போய்விட்டேன்" என்றாள் ஸரஸ்வதி. பொங்கி வரும் சிரிப்பை அடக்க முடியாமல் அவள் ’கலகல' வென்று சிரித்தபோது அந்தச் சிரிப்பின் ஒலி யாழின் இசை போலும், வேய்ங்குழலின் நாதம் போலும் இருந்தது ரகுபதிக்கு.
”வர வர உனக்கு வாய் அதிகட்கிவிட்டது. நான் இருக்கிற சவரணைக்கு என்னைப் பார்த்துப் பரிகாசம் பண்ணுகிறாயே. சாவித்திரி என்னுடன் இருந்ததே ரொம்பக் காலம்! அதிலும் அவள் எனக்கு எது பிடிக்கும் பிடிக்காது என்று என் மனத்தை அறிந்து உபசாரம் செய்தது அதைவிட அதிகம்! சமையலறையி பருந்து அம்மாவோ நீயோ காய்ச்சி வைத்த பாலை எனக்குக் பாலைக் கொண்டு வந்து மேஜைமீது மூடாமல் வைத்துவிட்டுப் போர்வையை இழுத்துப் படுத்துக்கொள்ளத்தான் தெரியும் அவளுக்கு. இன்பமும், ஆனந்தமும் நிறைந்திருக்க வேண்டிய அறையில் அழுகையின் விம்மலும், 'படபட' வென்று பொரிந்து வெடிக்கும் கடுஞ்சொற்களையும்தான் கேட்கலாம். என் படுக்கை அறைச் சுவர்களுக்கு வாய் இருந்தால். நான் ரசித்த காட்சியை அவைகளும் வர்ணிக்குமே, ஸரஸு!" என்ற ரகுபதியின் கண்கள் கலங்கிவிட்டன. ஸரஸ்வதியின் நெஞ்சைப் பிளந்து கொண்டு விம்மலின் ஒலி எழுந்தது.
'பிறர் துன்பத்தைத் தன்னுடைய தாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும்' என்று பெரியவர்கள் சொல்லுகிறார்கள். ஸரஸ்வதிக்குத் தன் அத்தானின் துன்பத் துக்கு எப்படிப் பரிகாரம் தேடுவது, அதைத் தான் எப்படிப் பகிர்ந்து கொள்வது என்பதே புரியவில்லை. சிறிது நேரம் அவள் யோசித்துவிட்டு மெதுவாக, "அத்தான்! நான் ஒன்று சொல்லுகிறேன் கேட்கிறாயா? ஒருவருக்கும் தெரியாமல் நீ போய் சாவித்திரியை அழைத்து வந்துவிடு. அத்தைக்குக்கூடத் தெரிய வேண்டாம். என்ன இருந்தாலும் அவள் அந்த நாளைய மனுஷி. ஏதாவது சொல்லுவாள்" என்றாள்.
ரகுபதியின் கலங்கிய கண்களில் வைராக்கியத்தின் ஒளி வீசியது.
"அழகாகப் பேசுகிறாயே ஸரஸு? தவறு செய்தவன் நானாக இருந்தாலும் அதற்காக அவளிடம் மனம் வருந்தி இங்கிருந்தபோதே அவளைப் போகவேண்டாம் என்று தடுத்துப் பார்த்தேன். ஊருக்குப் போன பிறகு கடிதம் போடும்படி வற்புறுத்திச் சொன்னேன். எனக்கு யார் பேரிலும் வருத்த மில்லை என்று தெரிவிக்க என் மாமனாருக்கு அழைப்பு அனுப்பிக் கடிதமும் போட்டிருக்கிறேன். இனியும் நான் போய் அவளை வேண்ட வேண்டுமென்று விரும்புகிறாயே. மனிதனுக்குச் சுய மரியாதை என்பது இல்லையா?" என்று சற்றுக் கோபத்துடன் கூறினான் ரகுபதி.
அதற்குமேல் ஸரஸ்வதியால் ஒன்றும் பேச முடியவில்லை. ஏதோ ஒருவித ஏக்கம் மனத்தைப் பிடித்து அழுத்த அவள் அங்கிருந்து தன் அறைக்குள் சென்றுவிட்டாள். கற்றைக் கூந்தல் காற்றில் பறக்க மெதுவாக அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்த ரகுபதி, பெருமூச்செறிந்தான். அவள் உள்ளே சென்ற பிறகுதான், அவள் திறப்பு விழாவுக்கு என்ன பாடப் போகிறாள் என்று கேட்காமல் போனதற்கு வருந்தினான் ரகுபதி. அவள் எதிரில் தான் உற்சாகம் குறைந்து இருந்தால், அவள் மனமும் வாடிப் போகுமே என்றும் நினைத்தான். வாடிய உள்ளத்திலிருந்து கிளம்பும் பாட்டும் சோகமாகத்தானே இருக்கும்? இப்பொழுதெல்லாம் ஸரஸ்வதி அதிகமாகப் பாடுவதே யில்லை. ஏன் பாடுவதில்லை? ஒருவேளை அவன் வருத்தமாக இருக்கிறான் என்று நினைத்துப் பாடுவதையே விட்டுவிட்டாளோ? சீ... இனிமேல் அவள் எதிரில் ரகுபதி உற்சாகத்துடன் நடந்து கொள்ளவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான். மெதுவாகத் தனக்குள் அவன், 'குழலோசை கேட்குதம்மா- கோபால கிருஷ்ணன் குழலோசை கேட்குதம்மா-' என்று பாடுவதை ஜன்னல் வழியாக அறைக்குள்ளிருந்து இரு கமலநயனங்கள் பார்த்தன.
"நன்றாகப் பாடுகிறாயே அத்தான். உனக்குப் பாட்டைக் கேட்கத்தான் தெரியும் என்று நினைத்திருந்தேன். பாடவும் தெரிந்திருக்கிறதே" என்று ஸரஸ்வதி தன் மகிழ்ச்சியை உள்ளிருந்தே அறிவித்துக்கொண்டாள்.
----------------
திறப்பு விழாவுக்கு இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பு ரகுபதியின் அத்தை அலமேலு 'திடு திப்' பென்று கிராமத்திலிருந்து வந்து சேர்ந்தாள். ஒற்றை மாட்டு வண்டியில் மூட்டை முடிச்சுகள் -கிதம் அவள் வந்து இறங்கியதுமே ஸரஸ்வதிக்கு ’அலமு அத்தை வெறுமனே வரவில்லை; வெறும்வாயை மெல்லுகிறவளுக்கு ஒரு பிடி அவல் கிடைத்த சமாசாரமாக வம்பை அளக்க வந்திருக்கிறாள்' என்பது புரிந்துவிட்டது. "அத்தை! அத்தை ! உன் நாத்தனார் வந்திருக்கிறாரே. இனிமேல் நீ இதுவரையில் ஒருத்திக்கும் பயப்படாமல் இருந்த மாதிரி இருக்க முடியாது! வீட்டு விஷயங்களை மூடி மூடி ரகசியமாகவும் வைத்துக்கொள்ள முடியாது. அலமு அத்தை இருப்பது கிராமமாக இருந்தாலும் ’ஆல் இந்தியா ரேடியோ'வுக்குச் செய்திகள் எட்டுவதற்கு முன்பே அவளுக்கு எட்டிவிடும் தெரியுமா?" என்று பின் கட்டுக்கு விரைந்து விஷயத்தை அறிவித்தாள் ஸ்ரஸ்வதி. ஸ்வர்ணம் ஸரஸ்வதியின் கன்னத்தில் லேசாகத் தட்டி, "அடி பெண்ணே ! இன்னும் நீ குழந்தையா என்ன? வாயைத் திறக்காமல் தான் கொஞ்சம் இரேன். வாயும் கையும் 'பர பர’ வென்று ஏன் தான் இப்படி இருக்கிறாயோ?" என்று கடிந்து கொண்டே நாத்தனாரை வரவேற்கக் கூடத்துக்கு வந்தாள்.
வண்டியிலிருந்து இறங்கிய நாலைந்து தகர டப்பாக்கள், புடைவையில் கட்டப்பட்ட மூட்டை ஒன்று, - சிறிய பிரம்புப் பெட்டி இவைகள் புடைசூழ அலமு காலை நீட்டிக்கொண்டு கூடத்தில் உட்கார்ந்து சாவித்திரியும் - ரகுபதியும் கல்யாணத்தின் போட்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். நடையில் கதவுக்கு அருகில் சற்று ஒதுங்கி பயத்துடன் நின்றுகொண்டிருந்த ஒரு பெண்ணை அதுவரையில் யாரும் கவனிக்கவில்லை. அலமு அத்தை வண்டியிலிருந்து இறங்குவதைப் பார்த்ததுமேதான் ஸரஸ்வதி பின்கட்டுக்கு விஷயத்தை அறிவிக்க ஓடிவிட்டாளே? தயக்கத்துடன் அந்தப் பெண்ணைப் பார்த்து ஸரஸ்வதியும், ஸ்வர்ணமும், “உள்ளே வாயேன் அம்மா" என்று அழைத்தார்கள். அவர்கள் அழைத்ததைக் கேட்டவுடன் அலமு முகத்தைத் திருப்பி நடைப்பக்கம் பார்த்துவிட்டு, "இதென்னடி இது அதிசயம்? உள்ளே வாயேன் தங்கம். கல்யாணப் பெண் மாதிரி ஒளிந்து கொண்டு நிற்கிறாயே!" என்று அதட்டலுடன் அவளைக் கூப்பிட்டாள். பதினாறு பதினேழு வயது மதிக்கக்கூடிய அந்தப் பெண் பயந்து கொண்டே உள்ளே வந்து அத்தை அலமுவின் பக்கம் உட்கார்ந்து கொண் டாள். அலமு அத்தை சுவரில் மாட்டியிருந்த புகைப்படத்திலிருந்து கண்களை ஒரு சுழற்றுச் சுழற்றி ரகுபதியின் மனைவி எங்கே இருக்கிறாள் என்று அறிவதற்காகக் கூடத்தை ஒரு கோடியிலிருந்து மறு கோடிவரைக்கும் ஆராய்ந்தாள். சாவித்திரி புக்ககத்தில் கோபப்பட்டுக்கொண்டு பிறந்தகம் சென்றிருக்கிறாள் என்பதும் அவளுக்கு அரைகுறையாக எட்டியிருந்தது.
"உன் நாட்டுப்பெண்ணை எங்கே காணோம்?" என்று கேட்டுக்கொண்டே மூட்டை முடிச்சுகளைப் பிரித்து எடுக்க ஆரம்பித்தாள்.
"பிறந்தகத்துக்குப் போயிருக்கிறாள். எழுந்திருங்களேன்.. ஸ்நானம் செய்து சாப்பிடலாம்" என்று ஸ்வர்ணம் பேச்சை மாற்றி அவர்களை உள்ளே அழைத்துச் சென்றாள். ஸரஸ்வதியைத் தனியாகப் பார்த்து, "ஏண்டி அம்மா! நான் என்ன செய்வேன்? இந்தமாதிரி திடும் என்று வீட்டுச் சமாசாரங்களைத் துப்புத்துலக்க வந்துவிட்டாளே?"என்று கவலையுடன் கேட்டாள்.
"எல்லாம் தெரிந்து கொண்டுதான் வந்திருக்கிறாள் அத்தை. அந்தப் பெண் யாரென்பது உனக்குத் தெரியுமா? பரம சாதுவாக இருக்கும்போல் இருக்கிறதே!" என்று விசாரித்தாள் ஸரஸ்வதி.
"யரோ என்னவோ? அலமுவுக்கு உறவினர் ஆயிரம் பேர்கள் இருப்பார்கள்! எல்லோரையும் உறவு கொண்டாடுவது அவள் வழக்கம். இன்றைக்கு ஒருத்தர் நல்லவராக இருப்பார்கள். நாளைக்கே அவர்களைக் கண்டால் அலமுவுக்குப் பிடிக்காது. அது ஒருமாதிரி சுபாவம்" என்றாள் ஸ்வர்ணம்.
இதற்குள் ஊரிலிருந்து வந்தவர்கள் சாப்பாட்டை முடித்து விட்டு வெளியே வந்தார்கள். சாயம்போன பழைய சீட்டிப் புடைவையையும், பல இடங்களில் தைக்கப்பட்ட ரவிக்கையையும் தங்கம் உடுத்துயிருந்தாலும், பருவத்துக்கு ஏற்ற பூரிப்பு அவள் உடம்பில் பளிச்சிட்டது. பல வாசனைத் தைலங்களாலும், 'ஷாம்பூ' க்களாலும் அடைய முடியாத அடர்ந்த கூந்தலை அந்தப் பெண் பெற்றிருந்தாள். புளித்த பழைய அமுதும், ஓரொரு சமயங்களில் கேழ்வரகுக் கூழுமாகச் சாப்பிட்டதே அவள் கன்னங்களுக்குக் காஷ்மீரத்து ஆப்பிள் பழத்தின் நிறத்தை அளித்திருந்தன. சலியாத உழைப்பும், பரிசுத்தமான உள்ளமும் அவள் பெற்றிருந்ததால் கபடமற்ற முகலாவண்யத்தையும், வனப்பு மிகுந்த உடலமைப்பையும் பெற்றிருந்தாள்.
ஸரஸ்வதி அழகு தான். மேட்டூர் அணையில் தேக்கி சிறிது சிறிதாக வெளியே வரும் காவிரியின் கம்பீரமும் அழகும் ஸரஸ்வதியிடம் நிறைந்திருந்தன. 'தலைக்காட்'டில் உற்பத்தியாகிப் பிரவாகத்துடன் பொங்கிப் பூரித்துவரும் காவிரியைத் தங்கத்தின் அழகோடு ஒப்பிடலாம். காட்டு ரோஜாவிலிருந்து வீசும் ஒருவித நெடியைத் தங்கத்தின் அழகில் உணரமுடியும். பன்னீர் ரோஜாவின் இனிமையான சுகந்தத்தை ஸரஸ்வதியின்
அடக்கமான அழகு காட்டிக்கொண்டிருந்தது.
வைத்த விழி வாங்காமல் கதவைப் பிடித்துக்கொண்டு தன்னையே உற்று நோக்கும் ஸரஸ்வதியைத் தங்கம் பார்த்து விட்டு, பயத்தோடும், லஜ்ஜைரோடும் தலையைக் கவிழ்த்துக் கொண்டாள்.
"எதற்காக இந்தப் பெண் இப்படி என்னைப் பார்த்துப் பயப்படுகிறாள் அத்தை?" என்று ஸரஸ்வதி கேட்டுவிட்டு, "தங்கம்! இங்கே வந்து உட்கார் அம்மா. நாங்களும் உனக்குத் தெரிந்தவர்கள்தாம். பயப்படாமல் இப்படி வா" என்று அன்புடன் அழைத்தாள். அதற்குள் அலமு அத்தை ஸரஸ்வதி யைப் பார்த்து. "பயப்படவும் இல்லை, ஒன்றுமில்லை. நீ பெரிய பாடகி. கச்சேரியெல்லாம் பண்ணப்போகிறாயாம். உன்னைப் பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டாள். அழைத்துவந்தேன். கொஞ்சம் பழகிவிட்டால் 'லொட லொட' வென்று பேச ஆரம்பித்து விடுவாளே" என்றாள்.
'ஓஹோ! நான் கச்சேரி செய்யப்போவதைத் தெரிந்து கொண்டுதான் அலமு அத்தை வந்திருக்கிறாளோ!" என்று ஸரஸ்வதி மனத்துக்குள் வியந்து கொண்டே, ”அப்படியா?" என்று தன் மகிழ்ச்சியை அறிவித்துக்கொண்டாள்,
தங்கமும், ஸரஸ்வதியும் சில மணி நேரங்களில் மனம் விட்டுப் பழகிவிட்டார்கள். 'அக்கா, அக்கா' என்று அருமையாகத் தன்னைக் கூப்பிடும் அந்தப் பெண்ணிடம் ஸரஸ்வதிக்கு ஏதோ ஒருவிதப் பாசம் விழுந்துவிட்டது. வெளியே சென்றிருந்து திரும்பிய ரகுபதிக்கு முதலில் தன் அத்தையைப் பார்த்ததும் தூக்கி வாரிப்போட்டது.
"ஏண்டா இப்படி இளைத்துவிட்டாய் ரகு?" என்று உள்ளூற ஆதங்கத்துடன் தான் செய்து வந்த பொரிவிளாங்காய் உருண்டையையும், முறுக்கையும் தட்டில் வைத்துக் கொடுத்து விட்டு விசாரித்தாள் அலமு. வீட்டில் உருக்கிய நெய்யில் செய்த முறுக்கை ரசித்தபடியே ரகுபதி ஸரஸ்வதியுடன் உட்கார்ந்து பூத்தொடுக்கும் பெண்ணையும் கவனித்தான். சற்று முன் பழைய சீட்டிப் புடைவையைக் கட்டிக்கொண்டிருந்த தங்கம், இப்பொழுது அழகிய பூப்போட்ட வாயல் புடைவையை உடுத்திருந்தாள். "சீ. சீ, இது ஒன்றும் நன்றாக இல்லை. இந்தா, இதை உடுத்திக்கொள்" என்று ஆசையுடன் ஸரஸ்வதி கொடுத்த மருதாணிச் சிவப்பு வாயல் தங்கத்தின் தங்க நிற மேனிக்கு மிகவும் அழகாக இருந்தது.
'சரசர’ வென்று விரல்கள் மல்லிகையைத் தொடுப்பதில் முனைந்திருந்தன. சில நிமிஷங்களுக்குள் மல்லிகைச் சரம் தொடுத்துவிட்டாள். அதை அழகிய மாலையாக வளைத்துக் கட்டிவிட்டு அவள் நிமிர்ந்தபோது கூடத்தில் ஊஞ்சலில் உட்கார்ந்து தன்னையே கவனிக்கும் ரகுபதியின் கண்களைத் தங்கம் சந்தித்தாள்.
"ஸரஸ்வதியின் பாட்டைக் கேட்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அவளைப் பார்க்கவேண்டும் என்று விரும்பினாள். அவள் யாரென்று தெரிகிறதாடா உனக்கு? மறந்து போயிருப்பாய் நீ" என்று அலமு ஆரம்பித்து, "என் கல்யாணத்தின் போது உனக்கு ஆறு வயசு இருக்கும். நம் கிராமத்துக்கு வந்திருந்தாயேடா. தொட்டிலில் கிடந்த தங்கத்தைப் பார்த்து விட்டு, இந்தப் பாப்பா அழகாக இருக்கிறது அத்தை. அப்பா! எவ்வளவு பெரிய கண்கள் அத்தை. இந்தப் பாப்பாவை நான் எடுத்துக்கொண்டு போகிறேன் விளையாட" என்றெல்லாம் சொல்லுவாயே. தங்கத்தின் அப்பா- அதுதான் என் மைத்துனன்கூட வேடிக்கையாக, ”டேய் பயலே! உனக்கே அவளைக் கொடுக்கிறேண்டா" என்று சொல்லுவான். நீதான் புது சம்பந்தமாக எங்கேயோ போய்க் கல்யாணம் பண்ணிக்கொண்டு விட்டாய். ஸரஸ்வதியைவிட்டு நீ வேறு இடத்தில் பெண் தேடியதே எங்களுக்கு ஆச்சரியந்தான்!" என்று கூறி முடித்தாள்:
'கள்ளமற்ற பிள்ளைப் பருவத்தில் நான் சந்தித்த பெண்களை எல்லாம் மறந்துவிட்டு, சாவித்திரியை ஏன் மணந்துகொண்டேன்? ஏன்....?' என்று மெதுவாகத் தன் மனத்தையே கேட்டுக்கொண்டான் ரகுபதி.
-------------------
ஸரஸ்வதியின் இன்னிசைக் கச்சேரியின் அரங்கேற்றத்துடன் திறப்புவிழா இனிது முடிந்தது. சாவித்திரி வராமலேயே வைபவம் குறைவில்லாமல் நடந்துவிட்டது. அன்று காலைவரையில் தெருவில் போகிற வண்டியைப் பார்த்துப் பார்த்து அலுத்துப் போனாள் ஸ்வர்ணம்! ஊரில் தெரிந்தவர்கள் கேட்பதற்குப் பதில் சொல்லியே அவளுக்குச் சலித்துப்போய்விட்டது. முதல் நாள் அலமு, ஒன்றுக்குப் பத்தாகச் சொல்லிய செய்திகள் வேறு அவள் மனத்தை அரித்தன.
"நீதான் ஒருத்தருக்கும் ஒன்றும் தெரியாது என்று மூடி மூடி வைத்திருக்கிறாய். உன் நாட்டுப்பெண்ணின் பாட்டி இருக்கிறாளே, அவள், நாம் தான் அவள் பேத்தியைப் பாடாய்ப் படுத்தி வைக்கிறோம் என்று தம்பட்டம் அடித்து வருகிறாள். அதற்கு என்ன பண்ணப்போகிறாய் மன்னீ?" என்று அலமு ஆத்திரத்தைக் கிளப்பிவிட்டாள்.
ஸ்வர்ணத்துக்கு வியப்பும், கோபமும் ஒருங்கே ஏற்பட்டன. 'புருஷனுக்கும், மனைவிக்கும் ஏதோ சில்லறை மனஸ்தாபத்தால் பிறந்தகம் போயிருக்கும் பெண் கிளப்பிவிட்டிருக்கும் வதந்தி எவ்வளவு அபாண்டமாக இருக்கிறது? சாவித்திரியிடம் நான் எவ்வளவு அன்புடன் இருந்தேன்? இரண்டு வேளைகளிலும் தலை வாரிப் பின்னிப் பூச் சூட்டுகிறதும், பரிந்து பரிந்து சாதம் போடுகிறதுமாக இருந்தவளையே எப்படித் தூற்றிவிட்டாள் பார்த்தாயா?' என்று நினைத்து நினைத்து வருந்தினாள்
ஸ்வர்ணம்,
"என்ன அம்மா அப்படியே அசந்து நின்றுவிட்டாய்? சொல்லிவிட்டுப் போகட்டும் போ" என்று ரகுபதி தாய்க்கு ஆறுதல் கூறினான்.
தங்கமும், ஸரஸ்வதியும் விழாவில் குதூகலத்துடன் பங்கெடுத்துக்கொண்டார்கள். . எப்படிக் கூப்பிடுவது? என்ன உறவு என்று சொல்வது என்று கவனியாமல் தங்கம், ஸரஸ்வதி அழைப்பது போல், "அத்தான்!" என்று ஆசையுடன் ரகுபதியை அழைத்து ஓடி ஓடி வேலைகளைச் செய்தாள்.
" உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள். இதோ ஒரு நிமிஷத்தில் தயார்!" என்று சிரித்துக்கொண்டே பேசி அவன் மனத்தைக் கவர்ந்துவிட்டாள் தங்கம். ”உனக்குப் பாடத் தெரியுமா?" என்று ரகுபதி அவளை விளையாட்டாகக் கேட்டபோது. "ஓ!" என்று தலையை ஆட்டினாள் தங்கம். "பாடுவேன். ஆனால், ஸரஸு அக்கா மாதிரி தாளம் கீளம் போட்டுக்கொண்டு சுத்தமாகப் பாடத் தெரியாது. கிராமத்துக்கு வரும் சினிமாவிலிருந்து எவ்வளவு பாட்டுகள் கற்றுக்கொண்டிருக்கிறேன் தெரியுமா? மாட்டிற்குத் தீனி வைக்கும் போது பாடுவேன். கோலம் போடும் போது பாடுவேன்; ஸ்வாமிக்கு மலர் தொடுக்கும்போது பாடுவேன்; கிணற்றில் ஜலம் இழுக்கும்போது பாடுவேன்; மாடு கறக்கும் போதும், தயிர் கடையும்போதும் பாடுவேன். என் பாட்டைக் கேட்டு ரசிப்பவர்கள் மேற்கூறியவர்கள்தாம், அத்தான்! நான் பாடுவதைக் கேட்டுப் பசு மெய்ம்மறந்து கன்றை நக்குவதற்குப் பதிலாக என் முகத்தையே பார்த்துக் கொண்டு
நிற்கும். ”
கிண்கிணியின் நாதம்போல் படபட வென்று தங்கம் பேசிக் கொண்டு போனாள்.
"சரி, அப்படியானால் ஸரஸ்வதியிடம் நாளைக்குள் கடவுள் வாழ்த்துப் பாடுவதற்கு ஏதாவது பாட்டு கற்றுக்கொள்'. நாளைக்கு நீதான் பாடவேண்டும்" என்றான் ரகுபதி திடீரென்று.
"ஆ...." என்று வாயை ஆச்சரியத்துடன் திறந்தாள் தங்கம்.
'ஏறக்குறைய ஆயிரம் பேர்களுக்கு எதிரில் தான் பாடுவதா? ஐயோ! தொண்டை எழும்பவே எழும்பாதே. எனக்கு. பாடத் தெரியும் என்று இவரிடம் சொன்னதே ஆபத்தாக முடிந்துவிட்டதே' என்று பயந்து கொண்டே தயங்கினாள் தங்கம். ஆகவே, சிறிது அச்சத்துடன் ரகுபதியைப் பார்த்து, “முதலிலேயே பெரிய பரீக்ஷை வைத்துவிட்டீர்களே! யாரும் இல்லாத இடத்தில் என்னவோ வாய்க்கு வந்ததைப் பாடுவேன் என்று சொன்னால், விழாவுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடு என்கிறீர்களே அத்தான். நன்றாக இருக்கிறதே!" என்று கன்னத்தில் வலது கையை ஊன்றிக் கண்களைச் சிமிட்டிக் கொண்டே கூறினாள்.
"மனம் போனபடி பாடுபவர்களுக்குத்தான் தைரியம் உண்டு. விழா மண்டபத்தைக் கிராமத்தின் மாட்டுத் தொழுவமாக நினைத்துக்கொண்டுவிட்டால் ஆயிற்று. எல்லாவற்றிற்கும் மனம் தானே காரணம், தங்கம்? அரண்மனையையும், குடிசையையும் சமமாகப் பாவிக்கும் மகான்கள் பிறந்த சத்தில் கொஞ்ச மாவது நாம் சமதிருஷ்டியோடு இருக்கவேண்டாமா? ஏதோ ஒரு பாட்டுப் பாடு பார்க்கலாம். பிறகு சொல்கிறேன், உனக்குப் பாட வருமா, வரதா என்று?” என்றான் ரகுபதி. சிறுது பொழுது தங்கம் தரையைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். பிறகு மெதுவான குரலில், 'நந்தகோபாலனோடு நான் ஆடுவேன்' என்கிற பாட்டை பல பிழைகளுடன் பாட ஆரம்பித்தாள். பிழைகள் மலிந்திருந்தபோதிலும், அவள் பாட்டில் உருக்கம் இருந்தது. அவள் மனத்தில் கண்ணனின் உருவம் நிறைந்திருப்பதும் அவள் அதை அனுபவித்துப் பாடுகிறாள் என்பதும் புரிந்தது. அவளுடைய அகன்ற விழிகளிலிருந்து தானர தாரையாகக் கண்ணீர் பெருகியது. உடனே உதடுகள் படபடவென்று துடித்தன. மெல்ல மெல்ல பாட்டின் ஒலி அடங்கிவிட்டது. விம்மலின் ஒலிதான் அதிகமாயிற்று. தங்கம் இரண்டு கைகளாலும் கண்களைப் பொத்திக்கொண்டு தேம்பினாள்.
ரகுபதி திடுக்கிட்டான். சற்றுமுன் சிரிப்பும், கேலியுமாகப் பேசிக் கொண்டிருந்தவளுக்குத் திடீரென்று என்ன வந்துவிட்டது என்று நினைத்து வாஞ்சையுடன் அவள் தலையை வருடி, "தங்கம்! இதென்ன அம்மா! ஏன் அழுகிறாய்? உன்னை யாராவது ஏதாவது சொன்னார்களா?" என்று கேட்டான்.
தங்கம் மெதுவாக 'இல்லை' என்று தலையசைத்தாள். பிறகு அழுகையின் நடுவில் சிரித்துக்கொண்டே, "நான் பாடியது நன்றாக இருக்கிறதா அத்தான்? என் குரல் நன்றாக இருக்கிறதா?" என்று கேட்டாள். அழுகையின் நடுவில் பளிச்சென்று தன் முத்துப்போன்ற பற்கள் தெரிய நகைக்கும் அந்தப் பெண்ணின் முகவிலாசத்தை உற்றுக் கவனித்தான் ரகுபதி. வானவெளியில் சஞ்சரிக்கும் கார்மேகத்தைக் கிழித்துக்கொண்டு
களை சுடர் விட்டது.
"நீ நன்றாகப் பாடுகிறாய். உன் குரலும் இனிமையாக இருக்கிறது. ஸரஸ்வதியிடம் கொஞ்சகாலம் சங்கீதம் பயின்றால் பேஷாகப் பாடலாமே. ஆமாம்.... நீ ஏன் அழுதாய்?" என்று திரும்பவும் கேட்டான் ரகுபதி.
அவள் மிருந்த சங்கோஜத்துடன் அவனைப் பார்த்து, "ஒரொரு சமயம் என்னைப்-பற்றியே எனக்குப் பலத்த சந்தேகம் வந்துவிடுகிறது. ஒரு வேளை என்னைத்தான் பிடிக்கவில்லையோ என்று நினைக்கிறேன். என்னைக் கல்யாணம் செய்து கொள்ள அதற்காகப் பெண் பார்க்க எங்கள் வீட்டுக்கு இதுவரையில் ஏழெட்டுப் பேர்கள் வந்தார்கள். அம்மா கடன் வாங்கியாவது பஜ்ஜியும், ஸொஜ்ஜியும் செய்துவைப்பாள். வருகிறவர்கள் முதலில் நாங்கள் வசிக்கும் ஓட்டு வீட்டைப் பார்ப்பார்கள். பிறகு எங்கள் வீட்டில் புழங்கும் சாமான்களின் தராதரத்தை மதிப்பிடுவார்கள். அப்புறம் என்னைப் பாடச் சொல்லுவார்கள். இவ்வளவையும் செய்துவிட்டுப் பெண்ணைப் பிடித்திருக்கிறது; பணங்காசுதான் குறைவு' என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். எப்படியோ ஆயிரம் ரூபாய் செலவழித்து ஒரு நாள் கல்யாணம் பண்ணிவிடுவாள், அம்மா. ஆனால் அவர்கள் கேட்கும் வெள்ளிப் பாத்திரங்களும், சீர் வரிசைகளுந்தான் அம்மாவைப் பயமுறுத்துகின்றன அத்தான்!"
’இருக்கிறவர்கள் தாராளமாகக் கொடுக்கட்டும். வாங்கு பவர்கள் தாராளமாக வாங்கிக்கொள்ளட்டும். ஆனால், பணத்தையும், தங்கத்தையும் ஒப்பிட்டு மதிப்புப் போடுவது சுத்தப் பைத்தியக்காரத்தனம்' என்று ரகுபதி நினைத்தான். "அழகில் சிறந்தவளாகக் குடித்தனப் பாங்குடன் இருக்கும் ஒரு பெண்ணை இந்தச் சமூகம் பணத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கிறதென்றால் சமூகம் சீர்திருந்திவிட்டது என்று கூறமுடியுமா? பாரதி பாடல்களைப் பாடும் வாலிபர்கள் மனம்தான் சீர்திருத்தி இருக்கிறதென்று சொல்லமுடியுமா?'
முகவாயில் கையை ஊன்றி யோசனையில் ஆழ்ந்திருந்த ரகுபதிக்கு முன்னால் ஸரஸ்வதி வந்து, "அத்தான்! நாளைக்குக் கடவுள் வாழ்த்து யார் பாடுகிறது?" என்று கேட்டாள்.
'தங்கத்துக்கு ஏதாவது சிறிய பாட்டாகக் கற்றுக் கொடு ஸரஸு. அவள் அழகாகப் பாடுகிறாள். நீ இதுவரையில் கேட்கவில்லையே. பாவம்-" என்றான் ரகுபதி. ஸரஸ்வதி
கொண்டு. 'அப்படியா தங்கம்? ஆனால் வா போகலாம்" என்று அவள் கைகளைப் பற்றி அழைத்துப்போனாள்.
----------
ஏறக்குறைய ஆயிரம் பேர்களுக்குமேல் கூடியிருந்த அந்த மண்டபத்தில் சபைக் கூச்சம் எதுவும் ஏற்படாமல் தங்கம்: 'கணி' ரென்று பாடினாள். அவளுக்குத் துணையாக ஸரஸ்வதியும் மெதுவான குரலில் பாடவே அவளுக்கு அச்சம் எதுவும் ஏற்படவில்லை. தந்தப் பதுமைபோல் நின்று அவள் பாடிய அழகே அங்கு, வந்திருந்தவர்களின் மனத்தை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. ஸரஸ்வதி வருஷக்கணக்கில் சங்கீதம் பயின்றவள். அவள் முதல் கச்சேரியே மிகவும் தரமாக அமைந்துவிட்டது. அன்று அவள் பாடிய சங்கராபரணமும், தோடியும் வெகு நேரம் வரை எல்லோர் காதுகளிலும் ரீங்காரம் செய்துகொண்டிருந்தன. பேருக்கும் புகழுக்கும் ஆசைப்படாமல் எங்கும் நிறைந்த பரப்பிரும்மத்தை நாத ரூபமாக வணங்கினாள் ஸரஸ்வதி.
ரகுபதிக்கு அன்று, தான் விழாவில் கலந்து கொண்டிருக்கும் உணர்ச்சியே ஏற்படவில்லை. கானவெள்ளத்தில் : எல்லோரையும் இழுத்துச் செல்லும் ஸரஸ்வதியும், தன்னடக்கமாக அவன் வார்த்தைக்கு மதிப்பு வைத்து ஒரு நாளைக்குள் சிறிய பாட்டைப் பாடம் செய்து கச்சிதமாகப் பாடிய தங்கமும் மாறி மாறி அவன் அகக் கண்முன்பு தட்டாமாலை ஆடினர். குழந்தைப் பருவத்திலிருந்து பார்த்த ஸரஸ்வதியாக அன்று அவள் அவன் கண்களுக்குத் தோன்றவில்லை. ஒரே சமயத்தில் ஆயிரம் நாவுகளின் புகழுக்குப் பாத்திரமாகிவிட்டாள் அல்லவா? அவள் இனிமேல் சாதாரண விஷயங்களில் மனதைச் செலுத்தவும் மாட்டாள். தங்கம் அப்படியில்லை. வாழ்க்கையில் தனக்கு இனியனாக ஒருவன் கிடைக்க மாட்டானா என்று ஏங்கி நிற்பவள். பாட்டும், கதையும் தெரிந்து கொண்டிருந்தாலாவது கல்யாண 'மார்க்கெட்’டில் விலை பெறுவோமா என்று காத்திருப்பவள். அவளை முன்பாகவே சாவித்திரியைக் கல்யாணம் பண்ணிக்கொள்வதற்கு முன்பாகவே பார்த்திருந்தால் தங்கத்தையே மணந்திருக்கலாம்.
"தங்கம்! என் துணிகளைத் துவைத்து வை" என்று உத்தரவு இடலாம். அதை அவள் சிரமேற்கொன்டு செய்து முடிப்பாள். "தங்கம்; ஏதோ உனக்குத் தெரிந்த பாட்டு இரண்டு பாடு மனசு என்னவோபோல் இருக்கிறது" என்றால் ஏதோ பாடியும் வைப்பாள். கலகலவென்று சிரிப்பாள். கோபம் வந்தாலும் உடனே தீர்ந்துவிடும். இப்பொழுது? அது தான் ஆங்கிலத்தில் சொல்லுகிறார்களே, ” அவசரமாக மணமுடித்து, சாவதானமாக யோசிப்பது" என்று. அந்த நிலைக்கு ஏறக்குறைய ரகுபதியின் நிலை வந்துவிட்டது.
விழாவில் நண்பர்கள் அவனைக் கேலி செய்தார்கள்.
"என்ன அப்பா! மனவியை இந்த மாதிரி சமயத்தில் ஊருக்கு அனுப்பிவிட்டாய். சகதர்மிணியோடு சேர்ந்து செய்கிற காரியத்துக்கே பலன் அதிகம் என்று சொல்லுவார்களே" என்று கேட்டு அவன் மனத்தைப் புண்ணாக்கினார்கள்.
" வேறு ஏதாவது விசேஷமோ?" என்று நண்பர் ஒருவர் குறும்புச் சிரிப்புடன் அவனைக் கேட்டார்.
"மாஸ்டர் ரகுபதி வரப்போகிறான் போலிருக்கிறது. விசேஷம் இருக்கிறது ஸார்!" என்றார் இன்னொருவர்.
"அதெல்லாம் ஒன்றுமில்லையப்பா" என்று மேலுக்குச் சிரித்து மழுப்பினான் ரகுபதி.
மேலும் அங்கு உட்கார்ந்திருந்தால் பேச்சை வளர்த்துவார்கள் என்று தோன்றியதால் வெளியே சென்றுவிட்டான் அவன். மறுபடியும் அவன் வீட்டுக்கு வந்தபோது தங்கமும், எரஸ்வதியும் கூடத்தில் உட்கார்ந்திருந்தார்கள். அலமு அத்தை தன் கையில் நாலைந்து மிளகாயையும், உப்பையும் வைத்து அவர்கள் இருவருக்கும் சுழற்றி உள்ளே எரியும் அடுப்பில் போட்டாள். திருஷ்டி தோஷம் ஏற்பட்டுவிடுமாம்!
”கட்டாயம் சுற்றிப்போடு அத்தை, என் கண்ணே பட்டு விடுமோ என்று பயந்து கொண்டிருந்தேன். 'சாதாரணமாகத்தான் பாடுவேன்' என்று சொல்லிவிட்டு ஜமாய்த்துத் தள்ளி நட்டாளே தங்கம்!" என்று தன் அதிசயத்தையும், சந்தோஷத்தையும் வெளியிட்டான் ரகுபதி.
"அவளுக்கு என்ன தெரியாது என்று நினைக்கிறாய்? பத்துப் பேர்களுக்குப் பேஷாகச் சமைத்துவிடுவாள். மணி மணியாகக் கோலங்கள் போடுவாள். வயலிலே போய்க் கதிரடிக்கச் சொல்; சேலைத் தலைப்பை வரிந்து கட்டிக்கொண்டு குடியானப் பெண் சருடன் கதிரடிப்பாள், குளத்திலே முழுகி நீச்சலடிப்பாள். ஆனால், அவளுக்கு ஆங்கிலம் படிக்க வராது. உடம்பு தெரிய இருளும் ஒளியும் உடைகள் உடுத்திக்கொண்டு உதட்டுக்குச் சாயம் பூசிக் கொள்ளத் தெரியாது" என்று அலமு ஆரம்பித்துவிட்டாள்.
"ஓஹோ !" என்றான் ரகுபதி. "உனக்கு நீந்தத் தெரியுமா? பலே! நான் கிராமத்துக்கு வந்தால் எனக்கு நீச்சல் கற்றுக் கொடுப்பாயா தங்கம்?" என்று கேட்டான் ரகுபதி.
"போங்கள் அத்தான்! இந்தப் பெரியம்மாவுக்கு என்ன வேலை? எதையாவது சொல்லிக்கொண்டு இருப்பாள்!" என்று சிரித்துக்கொண்டே தங்கம் ஓடி மறைந்து விட்டாள்.
ஸரஸ்வதி ரகுபதியைப் பார்த்து, " என்ன அத்தான்! --கிராம யாத்திரை ஏதாவது போவதாக யோசனையோ?" என்று கேட்டாள்.
“வரட்டுமே இங்கே உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறானாம்? பெண்டாட்டிதான் கோபித்துக்கொண்டு ஊரிலே போய் உட்கார்ந்திருக்கிறாள். இவன் போய் அவளை வேண்டி அழைத்துவர வேண்டுமாக்கும்! நன்றாக இருக்கிறது ஸ்திரீ சுதந்தரம்?" என்று அலமு சற்று இரைந்து கோபத்துடன் கூறினாள்.
"அப்பொழுது தங்கத்தையும் உங்களோடு அழைத்துட் போய் விடுவீர்களா என்ன?" என்று கேட்டாள் ஸரஸ்வதி.
"ஆமாம். அவள் இங்கே எதற்காக இருக்க வேண்டும்? உன்னைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள், அழைத்து வந்தேன்" என்றாள் அலமு.
சாவித்திரி புக்ககத்துக்கு வந்தாள். வந்து இரண்டு மூன்று மாதங்களுக்குள் ஊருக்குப் போய்விட்டாள். மறுபடியும் ஸரஸ்வதியின் வாழ்க்கை தனியாகவே கழிந்தது. திடீரென்று தங்கம் வந்தாள், பெயரைப்போல் ஒளியை வீசிக்கொண்டு! சாவித்திரியைப்போல் இல்லாமல் கபடமற்றுப் பழகினாள். ஸரஸ்வதியுடன் பாடினாள். "ஸரஸு அக்கா!" என்று சகோதர பாவம் கொண்டாடி அருமையாக அழைத்தாள்! ஸரஸ்வதியின் மனத்தில் இடமும் பிடித்துக்கொண்டாள். பத்தரைமாற்றுப் பசும் பொன்னை உருக்கி வளைப்பது போல் தங்கத்தைப் பலவிதங்களிலும் சீர்திருத்தி சமூகத்தில் உயர்ந்தவளாகச் செய்ய முடி.யும் என்று ஸரஸ்வதி கருதினாள். அவளிடம் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்குக் கொண்டுவரமுடியும் என்று நினைத்தாள்,
ஆனால் தங்கம் ஊருக்குப் போகப்போகிறாள். கிராமத்திலே இருண்ட ஓட்டு வீட்டின் மூலையில் ’மினுக் மினுக்' கென்று எரியும் அகல் விளக்கைப்போல் அவளும் கிராமத்திலே இருண்ட வீட்டில் மங்கிய வெளிச்சத்தைப் பரப்பிக்கொண்டு இருப்பாள். இந்தப் பெண்-சமூகத்தில் எல்லா நலங்களையும் பெற்று வாழ வேண்டிய தங்கம் - யாராவது ஒரு வயோதிகனுக்கோ, வியாதிக் காரனுக்கோ, தன் கழுத்தை நீட்டி, விவாகம் என்கிற பந்தத்தைப் பிணைத்துக் கொள்ளாமல் - இருக்கவேண்டுமே! அரும்பு வெடித்து மலர்வதற்கு முன்பே கசக்கி எறியப்படாமல் இருக்க வேண்டுமே! அப்படி - அவளைக் காப்பாற்ற யார் வரப் போகிறார்கள்?
ஸரஸ்வதியின் மென்மையான மனம் புண்ணாக வலித்தது. 'இன்று அவள் அந்த வீட்டுக் கூடத்தில் கண்ட தங்கத்தைப் போல் தமிழ் நாட்டில் ஆயிரம் ஆயிரம் 'தங்கங்கள்’ அவதிப்படுகிறார்கள். ஏழைப் பெண்கள் என்கிற காரணத்தினால் நசுக்கப் படுகிறார்கள் என்பதை நினைத்தபோது, ஏனோ அவள் மனத்தை ஆயிரம் ஊசிகளால் குத்தும் வேதனையை அடைந்தாள். மனத்தில் குமுறும் வேதனையுடன் ஸரஸ்வதி அங்கிருந்து சென்று தங்கம் உட்கார்ந்திருக்கும் இடத்துக்கு வந்தாள். அவள் கரங்களைப் பற்றிச் சேர்த்துத் தன் கைகளில் பிணைத்துக்கொண்டு, "தங்கம்! நீ ஊருக்குப் போகிறாயாமே தங்கம்? ஏன், உனக்கு இந்த ஊர் பிடிக்கவில்லையா என்ன?" என்று கேட்டாள்.
தங்கத்தின் கண்களிலும் கண்ணீர் தளும்பி நின்றது.
"பிடிக்காமல் என்ன அக்கா? இருந்தாலும், எத்தனை நாளைக்கு நான் இங்கே இருக்க முடியும்? தை பிறந்தால் எனக்கும் ஒரு வழி பிறக்காதா என்று ஏங்கிக் காத்திருக்க வேண்டாமா நான்? அத்துடன், என் ஊரில் எனக்கு ஏற்படும் இன்பம் மற்ற இடங்களில் ஏற்படுவதில்லை அக்கா. 'தங்கம்மா' என்று கபடமில்லாமல் அழைக்கும் அந்தக் கிராமவாசிகளின் அன்பை எனக்கு இங்கே காணமுடியவில்லை. இங்கேயும் உன் னைத் தேடி அநேகம் பெண்கள் வருகிறார்கள். உன்னுடைய அருமைத் தோழிகள் என்று சொல்லிக்கொள்கிறாய். ஆனால், அவர்கள் பகட்டாகப் பேசுகிறார்கள். மனம் விட்டு நீங்கள் எதுவும் பேசுவதில்லை. அன்று ஒரு பெண்ணைப் பார்த்து நீ கேட்டாயே, ' உன் கணவரிடமிருந்து கடிதம் வந்திருக்கிறதா? சௌக்யமாக இருக்கிறாரா?' என்று. அதற்கு அவள் ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டுத் தலையை மட்டும் ஆட்டிவிட்டாள். எங்கள் ஊரிலேயானால் கொள்ளை விஷயங்களைச் சொல்லி விடுவாளே அந்த மாதிரி ஒரு பெண்! உள்ளத்து உணர்ச்சிகளை வெளியிடுவதை அநாகரிகமாகக் கருதுகிறார்களோ என்னவோ உன் தோழிகள்!
"தங்கம்! நீ ரொம்பவும் புத்திசாலி. சேற்றிலே மலரும் தாமரையைப்போல உன்னை நினைக்கிறேன் தங்கம். ஏதாவது அசட்டுப் பிசட்டென்று பயந்து கொண்டு செய்துவிடாதே. உனக்குப் பிடிக்காதவரை மணந்து கொள்ளாதே. தெரியுமா?"
என்று விரலை ஆட்டிக் கண்டிப்புடன் எச்சரித்தாள் ஸரஸ்வதி.
----------------------
தபால் இலாகாவினருக்குச் சிரமம் வைக்காமல் செய்திகள் மின்னல் வேகத்தில் சாவித்திரியின் ஊருக்கு எட்டின. சாவித்திரிக்குப் பழைய சலுகைகள் அவ்வளவாக இப்பொழுது பிறந்த வீட்டில் இல்லை. கல்யாணத்துக்கு முன்பு தன்னோடு ஒட்டிக் கொண்டு, தான் கோபம் அடைந்தாலும் பாராட்டாத சீதா இப்பொழுது வேற்று மனுஷியாகக் காட்சி அளித்தாள். அவளுக்கு மட்டற்ற வேலைகள் கிடந்தன. ஹிந்தி வகுப்புக்குப் போக வேண்டும். பிறகு சங்கீதம் பயிலவேண்டும்; கலாசாலைக்குப் போக வேண்டும்; வீட்டில் அம்மாவுக்கு உதவியாக ஏதாவது செய்து முடித்தாக வேண்டும். சகோதரியிடம் மனம்விட்டுப் பேச என்ன இருக்கிறது? சாவித்திரியைவிட நான்கைந்து வயது சிறியவளான சீதா ஏன் அப்படி ஒதுங்கிச் செல்கிறாள்? சந்துரு, சாவித்திரியுடன் அதிகம் பேசுவதேயில்லை. ஆதியிலிருந்தே இருவருக்கும் ஒத்துக்கொள்கிறதில்லை. இருவரும் எதையாவது குறித்துத் தர்க்கம் செய்ய ஆரம்பித்தார்களானால் மணிக்கணக்கில் ஓயமாட்டார்கள்.
இதனிடையில் பாட்டி, தினம் தினம் ஏதாவது ஒரு புதுச் செய்தியைக் கொணர்ந்து தெரிவிப்பாள்.
"ஏண்டி! என்னவோ விழா நடத்தினானாமே உன் ஆம்படையான்? அமர்க்களப் பட்டதாம். அவள் இருக்கிறாளே ஒருத்தி, ஸரஸ்வதியோ, லக்ஷ்மியோ? பாட்டுக் கச்சேரி செய்தாளாம்! திறந்த வாய் மூடாமல் உன் கணவன் அவள் எதிரில் உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருந்தானாம். போதாக்குறைக்கு ஊரிலே யிருந்து ஒரு பெண் வந்திருந்ததாம். நேற்று அங்கிருந்து வந்த கோபு வீட்டு ராமு என்னிடம் சொன்னான். உன் அம்மா காதில் விழுந்தால் சண்டைக்கு வருவாள். என்னாலேயே நீ கெட்டுப் போய் விட்டாயாம். அவள் தான் அதை வாய்க்கு வாய் சொல்லுகிறாளே” என்று பாட்டி யாரும் அருகில் இராத சமயம் பார்த்துச் சாவித்திரியிடம் தெரிவித்தாள்.
அன்று காலைப் பத்திரிகையில் வெளியாகி இருந்த செய்தியும் அதுவேதான். விழாவில் ஸரஸ்வதி கச்சேரி செய்யும் புகைப் படம், பிரமாதமாக வெளியாகி இருந்தது. ஒலிபெருக்கியின் முன்பு புதுப் பெண் ஒருத்தி நின்று தன் பவளவாய் திறந்து பாடிக்கொண்டிருந்தாள். ரகுபதி தலைவரைக் கைகூப்பி வணங்கி அழைத்துவரும் காட்சி மற்றொரு பக்கத்தில் வெளியாகி இருந்தது. சாவித்திரி, படங்களையே கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தபோது தான் பாட்டி வந்து மேற்கூறிய விதம் தெரிவித்தாள். பத்திரிகையில், நடந்தது நடந்தபடி வெளியாகி இருந்தது. அத்துடன் கூட்டியோ குறைத்தோ செய்திகளை வெளியிடும் சாமர்த்தியம் அதைக் கவனித்த நிருபருக்கு இல்லை! ஆனால், பாட்டிக்கு அந்தச் சாமர்த்தியம் அபாரமாக அமைந்திருந்தது. திறந்த வாய் மூடாமல் பாட்டை ரகுபதி ரஸித்தான் என்று கூறினாள். மனம் சரியில்லாமல் ரகுபதி விழா மண்டபத்துக்குள்ளே பெரும்பாலும் நிற்கவில்லை. இடையிடையே ஸரஸ்வதி அபூர்வ சங்கதிகளைப் பாடும் போதோ, ஆலாபனம் செய்யும்போதோதான் அவன் சற்று நின்று அவைகளை ரஸித்தான். பாதிக் கச்சேரியில், மனக் கோளாறினால் ஏற்பட்ட அயர்வைத் தாங்காமல் காரியதரிசி யிடம் பொறுப்பை விட்டுவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டான். ஒன்றுக்குப் பத்தாகப் பேசுவது சிலருடைய இயல்பு. கண்ணால் கண்டதை வெளியிடவே சிலர் தயங்குவார்கள்.
பொங்கிவரும் அழுகையைச் சமாளிக்க முடியாமல் சிறிது நேரம் திகைத்துப்போய்க் கண்களில் பெருகும் நீருடன் உட்கார்ந்திருந்தாள் சாவித்திரி. ஒரு க்ஷணம் அவளுக்கு கணவனிடம் கோபித்துக்கொண்டு வந்ததே தவறோ என்று கூடத் தோன்றியது. 'தவறு என்ன? நான் அங்கே இருக்க வேண்டும் என்று யார் அழுதார்கள்?' என்று சற்று உரக்க வாய்விட்டுப் பேசிக்கொண்டாள்.
"என்ன சொல்லிக் கொள்கிறாயடி அம்மா?" என்று கேட்டுக் கொண்டே பேத்தியின் அருகில் வந்து நின்று அவள் முகத்தை உற்றுக் கவனித்தாள் பாட்டி. பிறகு, "நன்றாக இருக்கிறதே நீ இப்படி மாலை மாலையாகக் கண்ணீர் வடிக்கிறது? இப்படி அழுதால் உடம்புக்கு ஆகுமாடி சாவித்திரி? அசடுதான் போ" என்று கூறினாள்.
இவர்கள் இருவரின் பேச்சையும் சற்றுத் தொலைவில் மேஜை அருகில் உட்கார்ந்து காலேஜ் பாடங்களை எழுதிக்கொண்டிருந்த சீதா கவனித்தாள். பாட்டியின் அநுதாபத்தைக் கண்டதும் அவளுக்குக் கோபம் பற்றி எரிந்தது. ’இல்லாததையும், பொல்லாததையும் வந்து சொல்லிவிட்டு இப்பொழுது என்ன இழையல் வேண்டி யிருக்கிறது' என்றுதான் சீதா கோபம் அடைந்தாள். ஆகவே, அவள் சாவித்திரியைச் சிரிக்க வைப்பதற்காகப் பாட்டியைப் பார்த்து. "ஏன் பாட்டி! பாட்டைக் காதால்தான் கேட்பார்கள். அத்திம்பேர் திறந்த வாய் மூடாமல் எப்படிப் பாட்டைக் கேட்க முடியும்?" என்று குறும்புச் சிரிப்புடன் கேட்டாள்.
"அடி அம்மா! நீ இங்கே இருக்கிறதை நான் பார்க்கவே இல்லையே. ஒன்றும் பாதியுமாகப் போய் உன் அம்மாவிடமும், அண்ணாவிடமும் கலகம் பண்ணி வைக்காதே. நான்பாட்டுக்கு எங்கேயோ விழுந்து கிடக்கிறேன். நீ சண்டையைக் கிளப்பி விடாதேடி அம்மா. உனக்குப் புண்யம் உண்டு!" என்று பாட்டி சீதாவைப் பார்த்து.
"ஆமாம். . . . . . ஆமாம். . . . . .பாட்டி, இதையெல்லலாம் நேரில் போய்ப் பார்த்துவிட்டு வந்திருக்கிறாள்! அதான் இவ்வளவு வக்கணையாகச் சொல்கிறாள். அதைக் கேட்டுவிட்டு நீயும் அழுகிறாய்!" என்று சாவித்திரியைக் கேலியாகப் பார்த்துக் கொண்டு கூறினாள் சீதா.
"ஆமாமடி பாட்டி ரெயிலேறிப்போய் இதெல்லாம் பார்த்துவிட்டு வருகிறாள்! வேறு வேலையே இல்லை பார் அவளுக்கு? உன் அத்திம்பேர் விஷயந்தான் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறதே...”
சீதாவுக்கு அங்கே பேசிக் கொண்டு நிற்கப் பொழுதில்லை. காலேஜுக்கு நேரமாகி விட்டதால் அவள் புறப்பட்டுவிட்டாள்.
சீதா காலேஜுக்குப் போன பிறகு, ஊர் வம்புகளை ஒப்பிக்கும் வழக்கமான வேலையைப் பாட்டி நிர்ப்பயமாக நடத்தினாள். அவள், சாவித்திரியின் அருகில் வந்து, நேற்று கோவிலுக்குப் போயிருந்தேன். ராமுவைப் பார்த்தேன். அவன் உன்னைப் பற்றி விசாரித்தான். ”ஆமாண்டா அப்பா! சாவித்திரி இங்கே தான் இருக்கிறாள். அவளைக் கொண்டுவந்து விடும்படி சம்பந்தி வீட்டார் ஒரு வரிகூட எழுதவில்லையே. நீ அந்தப் பக்கம் போயிருந்தாயோ?" என்று கேட்டேன். 'போயிருந்தேன் பாட்டி! அவர்கள் வீட்டிற்குப் போக வேண்டும் என்று நான் கிளம்பவில்லை. தற்செயலாக வழியிலேயே மாப்பிள்ளைப் பையனைச் சந்தித்தேன். 'ஏண்டா அப்பா! நீ செய்கிறது நன்றாக இருக்கிறதா?' என்று கேட்போம் என்று பார்த்தால் அங்கே ஏகப்பட்ட அமர்க்களம். அவன் தான் திறந்த வாய் மூடாமல் பாட்டைக் கேட்டுக்கொண்டு இருக்கிறானே. அவனை என்னத்தைக் கேட்கிறது?' என்று ராமு சொன்னான். அவன் பொய்யா சொல்லப் போகிறான்?"
"சரி, சரி, போதும். இனிமேல் நீ யாரிடமும் எதையும் விசாரிக்க வேண்டாம். நடக்கிறபடி நடக்கட்டும் போ" என்று அலுப்புடன் கூறிவிட்டுச் சாவித்திரி அங்கிருந்து எழுந்து விட்டாள். எழுந்தவள் நேராகத் தன் அறைக்குச் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டு காகிதத்தையும், பேனாவையும் எடுத்தாள். மளமளவென்று கணவனுக்குக் கடிதம் எழுத ஆரம்பித்தாள். கோபத்தாலும், ஆங்காரத்தாலும் அவள் கைகள் நடுங்கின. பேனாவிலிருந்து அங்கங்கே இரண்டு சொட்டுகள் மசியும் காகிதத்தில் விழுந்தன. கடிதம் எழுதி முடித்ததும் அதை வாசிக்க ஆரம்பித்தாள்.
அன்புள்ள கணவருக்கு என்றோ, ஆருயிர்க் காதலருக்கு என்றோ கடிதம் ஆரம்பிக்கப் படவில்லை.
"நமஸ்காரம். பத்திரிகைகளில் வெளியாகி இருந்த புகைப் பட்டங்கள் மிகவும் அபாரம்! கட்டிய மனைவி ஒருத்தி இருக்கிறாள் என்பதை மறந்துவிட்டு உங்களுடைய கலை வேஷம் நன்றாக இருக்கிறது! அந்த இன்னொரு பெண் யார் என்பதை எனக்குத் தெரிவிப்பீர்களா?"
கடிதம் பைத்தியக்காரத்தனமாக எழுதப்பட்டது. ஆத்திரத்தில், அவசரத்தில் என்ன எழுதுகிறோம் என்பதைக் கவனியாமல் எழுதப்பட்டது. சாவித்திரிக்குப் பளிச்சென்று ஒரு யோசனை தோன்றியது. 'நாம் ஏன் அவருக்குக் கடிதம் எழுதவேண்டும்? கடிதம் எழுதி அவர் சொந்த விஷயங்களில் தலையிட நமக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? இருவரையும் பலமாகப் பிணைக்கும் கணவன்-மனைவி என்கிற பந்தத்தைத் தவிர வேறு என்ன உரிமையுடன் அவரைக் கேட்க முடியும்?' என்று ஒன்றும் புரியாமல் கடிதத்தைச் சுக்கு நூறாகக் கிழித்துக் கீழே போட்டாள் சாவித்திரி. குமுறும் ஹிருதயத்தைக் கையில் அழுத்தியவாறு தேம்பித் தேம்பி அழுதாள் அவள். இந்த நிலையில் பிரமை பிடித்தது போல் அவள் வெகுநேரம் உட்கார்ந்து இருந்திருக்க வேண்டும்.
அறைக் கதவை யாரோ லேசாகத் தட்டினார்கள். சாவித்திரி எழுந்து கதவைத் திறந்ததும் மங்களம் வாயிற்படியில் நின்றிருந்தாள். "சாப்பிடாமல் மணி பன்னிரண்டு அடிக்கப் போகிறதே!" என்று அன்புடன் அவளை அழைத்தாள் மங்களம். அழுது ரத்த மெனச் சிவந்திருக்கும் மகளின் கண்களைப் பார்த்ததும் அந்தத் தாயுள்ளம் பாகாய்க் கரைந்தது. கையைப்பற்றி ஆசையுடன் அழைத்துப்போய் சமையலறையில் உட்கார்த்தி அன்புடன் உணவைப் பரிமாறினாள் மங்களம்.
-------------
அடுத்த நாள் அலமுவும், தங்கமும் ஊருக்குப் புறப்படுவதாக இருந்தார்கள். வீட்டைச் சுற்றிச் சுற்றி வளைய வரும் தங்கம் ஊருக்குப் போய்விட்டால் வீடு வெறிச்சோடிவிடும். தெருவில் முத்து முத்தாக யார் கோலம் போடுவார்கள்? பூஜைக்கு விடியற் காலை யார் மலர் கொய்து வைப்பார்கள்? ஸரஸ்வதி அவ்வேலைகளைச் செய்தாலும், தங்கம் செய்வதில் தனியான தொரு அழகைக் கண்டு ரசித்தான் ரகுபதி. "அத்தான்! உங்களுக்கு மிளகு வடை என்றால் ஆசையாமே" என்று கரகரவென்று அந்தப் பலகாரத்தைச் செய்து தட்டில் வைத்துக் கொண்டுவந்து வைத்தாள் தங்கம், ஒரு நாள். எல்லோருடைய மனதையும் தான் கவர வேண்டும்; எல்லோருக்கும் தான் இனியவளாக நடந்துகொள்ள வேண்டும் என்கிற ஆசையுடன் அனைவரும் மெச்சும்படியாக நடந்து கொண்டாள் அவள்.
“பாவம்! நல்ல இடமாகப் பார்த்துக் கொடுத்தால் - பெண் சௌக்கியமாக வாழ்வாள். அவசரப்பட்டு எங்காவது பாழுங் கிணற்றில் தள்ளுகிற மாதிரி தள்ளி விடாதீர்கள்”. அலமு என்று ஸ்வர்ணம் தன் நாத்தனாரிடம் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தாள்.
அன்று நடு மத்தியான்னத்தில் மாடியில் நாற்காலியில் சாய்ந்து யோசனையில் ஆழ்ந்திருந்தான் ரகுபதி. இன்று இல்லாவிடில் நாளை வருவாள் அல்லது கடிதமாவது எழுதுவாள் என்று தினம் தினம் எதிர்பார்த்து ஏமாந்து போகவே, ரகுபதியின் மனத்தில் ஒருவித அசட்டு எண்ணம் - சபல புத்தி தலை எடுக்க ஆரம்பித்தது. சர்க்கரையைவிட்டு இனிப்பை எப்படிப் பிரிக்க முடியாதோ, அம்மாதிரி தாம்பத்திய அன்பினால் இருவரின் உள்ளங்களும் பிரிக்க முடியாதபடி ஒன்றிய நேசம், சாவித்திரிக்கும், ரகுபதிக்கும் ஏற்படவில்லை. மிக மிகக் குறுகிய காலத்துக்குள் அவனுடைய வாழ்க்கை சுசந்து வழிந்தது. 'இளம் மனைவியுடன் ஆனந்தமாக வாழ்க்கை நடத்தப்போகிறோம்' என்று: அவன் கட்டிய கோட்டை தகர்ந்து விழுந்தது. அதனால், மனம் ஓடிந்து போயிருந்த அவன் மனக்கண் முன்பு தங்கம் தோன்றி மறைந்துகொண்டிருந்தாள். அவளிடம் அவனுக்கு அலாதியான ஒருவித பாசம் ஏற்படுவதை உணர்ந்தான். 'நாளைக்கு அவள் இங்கிருந்து போய்விடுவாள். நானும் அவளுடன் கிராமத்துக்குப் போய்விடுகிறேன். பிறகு?' என்று யோசித்தான் ரகுபதி, ’பிறகு என்ன? அந்தக் கர்வம் பிடித்தவளுக்குப் படிப்பினையாக ஆடம்பரமில்லாமல், ஒருவருக்கும் சொல்லாமல் தங்கத்தைக் கல்யாணம் செய்து கொண்டுவிடுகிறேன். என்னை யார் என்ன செய்யமுடியும்?' என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டான்.
கீழே ஸரஸ்வதி பைரவி ராகத்தில் அருணாசலக் கவியின் 'யாரோ இவர் யாரோ' என்கிற கீர்த்தனத்தில் சரணத்தைப் பாடிக்கொண்டிருப்பது கேட்டது. 'அந்த நாளில் சொந்தம் போல உருகினார்' - சாதாரணமாக இந்த இடத்தை - ஸரஸ்வதி நான்கைந்து தடவைகள் பாடினாள். ரகுபதிக்கு மிகவும் பிடித்தமான பாட்டுதான். ஆனால் இன்றோ அவனுக்கு ஸரஸ்வதியின் பேரில் கோபம் வந்தது. சாவித்திரிக்கும், அவனுக்கும் இந்த ஜன்மத்தில் மட்டும் இல்லை; அந்த நாளில், கடந்த பிறவிகளிலிருந்தே தொடர்பு இருக்கிறது என்பதை ஸரஸ்வதி பாட்டின் மூலம் எச்சரிக்கிறாளோ என்று தோன்றியது!
'சட்! இவள் யார் என் சொந்த விஷயத்தில் தலையிட’ என்று முணு முணுத்தான் ரகுபதி. இதற்குள் மாடிப்படிகளில் ’தடதட' வென்று தங்கம் இரைக்க இரைக்க ஏறி ஓடி வந்தாள். நிதானமாக ஸரஸ்வதி அவள் பின்னால் வந்து நின்றாள். தங்கம் ஸரஸ்வதியைத் திரும்பிப் பார்த்து. "அக்கா! நான் கேட்கட்டுமா?" என்று கேட்டாள்:
* கேளேன். யார் கேட்டால் என்ன?" என்றாள் ஸரஸ்வதி சிரித்துக்கொண்டே.
"போ அக்கா! எனக்கு வெட்கமாக இருக்கிறது. நீயே கேட்டுவிடு" என்றாள் தங்கம் லஜ்ஜையுடன்.
”என்ன கேட்பதற்கு இவ்வளவு பீடிகை?" என்று ரகுபதி அவர்களை வினவிவிட்டு, இருவரையும் மாறி மாறிப் பார்த்தான்.
“ஒன்றுமில்லை அத்தான். தங்கம் பாட்டுக் கச்சேரியே அதிகம் கேட்டதில்லையாம். டவுனில் இன்று ஏதோ கச்சேரி இருக்கிறதாக நேற்றுச் சொன்னாயே; அதற்கு அவளும் வருகிறாளாம். இவ்வளவு தான் விஷயம்” என்றாள் ஸரஸ்வதி.
”அப்பா! இவ்வளவுதானா? என்னவோ சுயம்வரத்துக்கு ஏற்பாடு பண்ணுகிறமாதிரி அல்லவா வெட்கமும், நாணமும் நடுவில் வந்து விடுகிறது? என்னவோ என்று பார்த்தேன். வரட்டுமே. நீயுந்தான் வாயேன்" என்று அழைத்தான் ரகுபதி இருவரையும்.
தங்கம் சந்தோஷ மிகுதியினால் மறுபடியும் மாடிப்படிகளில் ’தடதட' வென்று வேகமாக இறங்கினாள். இடுப்பின் கீழே புரளும் பின்னல், இப்படியும் அப்படியும் ஆடி அசைவதையே கவனித்துக் கொண்டிருந்தான் ர்குபதி.
"என்ன அத்தான் பார்க்கிறாய்? தங்கம் இப்படி ஓடுகிறாளே என்றுதானே பார்க்கிறாய்? அந்தப் பெண் எதையும், எந்த வேலையையும் இப்படித்தான் ஓடி ஓடிச் செய்கிறாள். பாவம்" என்று ஸரஸ்வதி கூறிவிட்டு அங்கிருந்து கீழே சென்றாள்.
சாயந்தரம் நாலு மணிக்கு மூவரும் கச்சேரி கேட்பதற்கு நகரத்துக்குப் புறப்பட்டார்கள். ஸரஸ்வதி ஆரஞ்சு வர்ணப் புடைவையும். கறுப்பு ஜாக்கெட்டும் அணிந்திருந்தாள். தங்கம் மருதாணிச் சிவப்பில் ஸரஸ்வதியின் பட்டுப் புடைவையை உடுத்தி இருந்தாள். சங்கு போன்ற கழுத்தில் கரியமணிச்சரம் இரட்டை வடம் பூண்டு, நெற்றியில் பிறை வடிவத்தில் திலகமிட்டிருந்தாள் தங்கம், கைகளில் 'கலகல' வென்று ஒலிக்கும் சிவப்புக் கண்ணாடி வளையல்கள். தேர்ந்த ஓவியனின் சித்திரத்திலிருந்து உயிர் பெற்று வந்த பாவையாகத் தோன்றினாள் அவள். 'அதிக அழகு அதிருஷ்டத்தைக் குறைத்துவிடும்' என்று யாரோ சொல்லியிருப்பதை நினைத்துப் பார்த்தான் ரகுபதி. 'அதான் இந்தப் பெண் இப்படி ஏழ்மையில் வாடிப்போகிறாளோ' என்றும் எண்ண மிட்டான்!
"ஜாக்கிரதையாகப் போய் வாருங்கள்" என்று ஸ்வர்ணம் கூறியதும் ஸரஸ்வதி, "என்ன அத்தான்! நீ 'ரெடி' தானே?" என்று கேட்டாள்.
இதுவரையில் தங்கத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ரகுபதி திடுக்கிட்டுத் திரும்பி, "ஓ!" என்று கூறிவிட்டுப் புறப்பட்டான்.
"போகிறபோது நடந்து போய் விடலாம். வரும்போது இருட்டிவிடும். பஸ் பிடித்துதான் ஆகவேண்டும். என்ன சொல்கிறாய் தங்கம்?" என்று கேட்டான் ரகுபதி.
"ஐய்ய! உன் யோசனை பலமாக இருக்கிறதே! வியர்க்க விறுவிறுக்க வேர்வை சொட்டி வழிய வெயிலில் நடந்து போய்த் தான் சங்கீதத்தை அனுபவிப்பார்களோ? வருகிறபோது நடந்து வரலாம் அத்தான். 'ஜிலு ஜிலு' வென்று குளுமையாக இருக்கும், சிரமமும் தெரியாது" என்று அவன் கூறியதை ஆட்சேபித்தாள் ஸரஸ்வதி.
"உன் யோசனை அதைவிட அருமையாக இருக்கிறது. இரவு வேளையில் தனியாகச் சிறிசுகளை அழைத்துக்கொண்டு நடந்து வருகிறதாவது? அதுவும் உன் கால் இருக்கிற வலுவுக்கு நீ நடந்து வரவேண்டும் என்று ஆசைப்படுகிறாயே, ஸரஸு?" என்று ஸ்வர்ணம் கோபித்துக்கொண்டாள். ஆகவே, மூவரும் பஸ்ஸில் போய் வருவது என்று தீர்மானித்துப் புறப்பட்டார்கள்.
அன்று கச்சேரிக்குச் சென்றிருந்த மூவரின் உள்ளங்களும் வெவ்வேறு கற்பனையில் மூழ்கி இருந்தன. ரகுபதியின் மனம் ஓர் இடத்திலும் நிலைக்காது அலை பாய்ந்து கொண்டிருந்தது.'அங்கு வந்திருக்கும் தம்பதிகளைப் பார்த்துப் பெருமூச்செறிந்தான். அவன் மட்டும் எத்தனை காலம் தனிமையை அனுபவிப்பது? இந்தக் கேள்வி அவன் மண்டையைக் குடைந்து எடுத்து அவன் தலையை வலிக்கச் செய்தது. சங்கீதம், நாத ரூபமாக இறைவனை வழிபடும் சாதனம் என்பதை அவன் அந்த நிமிஷம் மறந்து விட்டான். பாடகி பாடும் ஒவ்வொரு பாட்டும் அவனுக்குப் போதையை உண்டு பண்ணியது. 'ஆறுமோ ஆவல், ஆறுமுகனை நேரில் காணாது' என்று பாடகி பாடும்போது அவன் மது அருந்தியவனின் நிலையை அடைந்துவிட்டான். மேடையில் அமர்ந்து பாடும் பாடகி தங்கமாக மாறினாள். கச்சேரிக் கூடம் அவன் வீடாக மாறியது. அந்த வீட்டில் தங்கம் ஒருத்தி உட் கார்ந்து பாடுவதாகவும், அதை அவன் மட்டும் ரஸிப்பதாகவும் கற்பனை செய்து கொண்டான் ரகுபதி!
தங்கம் சிறிது நேரம் பாட்டை ரஸித்தாள். பிறகு அங்கே கூடியிருக்கும் பெண்மணிகளின் நடை, உடை, பாவனைகளைப் பெரிதும் கவனிக்க ஆரம்பித்தாள். வயலிலே கிராமத்தில் வேலை செய்யும் பெண்கள் போட்டுக்கொள்ளும் சொருக்குக் கொண்டையைக்கூட அல்லவா இந்த நகரத்தில் நாகரிகமாகப் போற்றுகிறார்கள் என்று நினைத்தாள். ஒய்யாரமாக ஒருத்தி வந்தாள். அடர்ந்த கூந்தலை அள்ளி வளைத்து உச்சந்தலையில் கொண்டை போட்டுக் கொத்துக் கொத்தாக ரோஜா மலர்களைச் செருகி இருந்தாள். கழுத்திலே நாலைந்து முத்துச் சரங்கள். காதில் மாங்காய் வடிவத்தில் செய்த தோடுகள். தோளில் சரிந்து விழும் உயர்ந்த மைசூர் 'ஜார்ஜெட்' புடைவை. தங்கம் வாயைப் பிளந்து கொண்டு அவளையே பார்த்தாள். மற்றொரு பெண் வந்தாள், அடக்கமாகத் தலையைக் குனிந்து கொண்டு. காஞ்சீபுரம் பட்டுப் புடைவை உடுத்தி, ஜடைக் குஞ்சலம் ஊசலாட, வைரங்கள் மின்ன, அமரிக்கையாய்த் தலைப்பைப் போர்த்திக்கொண்டு வந்து உட்கார்ந்தாள். பல ரகங்களில் உடை அணிந்து வரும் பெண்களைப் பார்ப்பதில் தான் தங்கம் பெரிதும் தன் பொழுதைக் கழித்தாள் எனலாம். ஸரஸ்வதி ஆடாமல், அலுங்காமல் பாடகியின் இசை இன்பத்தில் மூழ்கி இருந்தாள். வேறு எதிலும் அவள் மனம் செல்லவில்லை. இத்தகைய தெய்வீகக் கலைக்குத் தன் வாழ்நாளை அர்ப்பணம் செய்வதைவிட வேறு பயன் தரக்கூடியது ஒன்றுமில்லை என்று நினைத்து ஆனந்தப்பட்டாள் அவள்.
அவள் சிந்தனையைக் கலைத்து மெதுவான குரலில் ரகுபதி, "ஸரஸு! எனக்கு உடம்பை என்னவோ செய்கிறது. வீட்டுக்குப் போகலாம் வருகிறாயா?" என்று கூப்பிட்டான். மூவரும் எழுந்து வெளியே வந்தார்கள்.
"உடம்பு சரியில்லை என்றால் 'டாக்ஸி' வைத்துக்கொண்டு போகலாமே, அத்தான்" என்றாள் ஸரஸ்வதி. பயத்தால் அவள் முகத்தில் முத்துப்போல் வியர்வைத் துளிகள் அரும்பி இருந்தன.
"அப்படி பயப்படும்படி ஒன்றுமில்லை ஸரஸு. லேசாகத் தலையை வலிக்கிறது.. உன்னை பஸ்ஸில் ஏற்றிவிட்டு நானும் தங்கமும் காற்றாட நடந்து வருகிறோம். அம்மாவைக் கவலைப்பட வேண்டாம் என்று சொல்" என்றான் ரகுபதி.
-----------
நகரத்திலிருந்து ரகுபதியின் வீட்டிற்கு இரண்டு மைல்களுக்குமேல் இருக்கும். சாலையில் இரண்டு பக்கங்களிலும் ஓங்கி உயர்ந்து வளர்ந்த அசோக மரங்கள் கப்பும் கிளைகளுமாகத் தழைத்து நின்றன. பகல் வேளைகளில் சூரியனின் வெப்பம் தெரியாமலும், இரவில் நிலாக் காலங்களில் பசுமையான இலைகளின் மீது நிலவின் கிரணங்கள் தவழ்ந்து விளையாடுவதாலும் அச்சாலை பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அங்கொன்றும், இங்கொன்றுமாகக் கட்டப்பட்டிருக்கும் பங்களாக் களிலிருந்து வீசும் மலர்களின் மணமும் சாலையில் லேசாகப் பரவுவதுண்டு. ஸரஸ்வதியைப் பஸ் ஏற்றிவிட்டுத் தங்கத்துடன் திரும்பிய ரகுபதி சிறிது நேரம் வரையில் ஒன்றுமே பேசவில்லை. வளைந்து செல்லும் அந்த அழகிய சாலையில் அவ்வப்போது ஒன்றிரண்டு கார்களும், வண்டிகளும் போய் வந்து கொண்டிருந்தன.
தங்கம் இதுவரையில் ஓர் ஆடவனுடன் தனித்து இரவு வேளையில் எங்கும் சென்றதில்லை. மனம் பயத்தால் ' திக் திக்' கென்று அடித்துக்கொள்ள, ரகுபதியைவிட்டு விலகி நாலடி முன்னாலேயே அவள் சென்றுகொண்டிருந்தாள். ரகுபதிக்கும், அவன் எதற்காகத் தங்கத்தைத் தனியாக அழைத்து வந்தான் என்பதும் புரியவே இல்லை. 'ஸரஸ்வதி என்ன நினைக்கிறாளோ? வீட்டில் அலமு அத்தையும், அம்மாவும் என்ன சொல்வார்களோ' என்றும் பயந்தான். மருட்சியுடன் அடிக்கடி அவனைத் திரும்பிப் பார்த்த தங்கம் ஒருவழியாக, "அத்தான்! உங்களுக்குத் தலைவலி குறைந்திருக்கிறதா? என்னையும் ஸரஸு அக்காவுடனேயே அனுப்பி இருக்கலாமே?" என்று கேட்டாள்.
ரகுபதி ஆவலுடன் அவள் முகத்தைப் பார்த்தான். ஒருவிதக் களங்கமும் இல்லாமல் விளங்கும் அந்த அழகிய வதனத்தில் உலாவும் இரண்டு பெரிய கண்களைக் கவனித்தான். வில்லைப்போல் வளைந்து இருக்கும் புருவங்களைக் கவனித்தான். எப்போதும் சிரிப்பதுபோல் இருக்கும் அவள் அழகிய அதரங்களைக் கவனித்தான். கானல் நீர் தொலைவில் பளபளவென்று மான்களுக்குத் தெரிவதில்லையா? நெருப்புப் பறக்கும் கடுங் கோடையில் தெளிந்த நீர்ப் பிரவாகம் பொங்கிப் பெருகுகிறது என்று எண்ணித்தானே மான் கூட்டங்கள் அங்கு விரைகின்றன? சாவித்திரி தன் வாழ்வில் ஏற்படுத்திய பள்ளத்தைத் தங்கத்தால் தங்கத்தின் அன்பினால் - நிரவமுடியும் என்று ரகுபதி ஏமாற்றம் அடைந்திருக்க வேண்டும். தன்னையே விழுங்கிவிடுவதைப்போல் கவனிக்கும் ரகுபதியைத் தங்கம் பார்த்தாள்.
"என்ன அத்தான்! அப்படிப் பார்க்கிறீர்களே? என்னைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள வந்தார்களே புமான்கள்! அவர்கள் யாருங்கூட இப்படிப் பார்க்கவில்லையே என்னை! . முதலில் எங்கள் வீட்டுக் கூரையைப் பார்த்தார்கள். பிறகு கீழே அவர்கள் உட்கார விரித்திருப்பது, பழைய ஜமக்காளமா அல்லது விலையுயர்ந்த ரத்தினக் கம்பளமா என்பதைக் கவனித்தார்கள். அப்புறம், எங்கள் வீட்டு 'டிபனை'க் கவனித்தார்கள். பிறகு, 'மணப் பெண் வந்திருக்கிறாள். பாருங்கள் ஸ்வாமி! என்று அவர்கள் கவனத்தை என்பேரில் திருப்புவதற்கு நான் ஏதாவது பாடி ஆகவேண்டும். இதுவரையில் கவனிப்பதற்கு அவகாசம் இல்லாமல் இருந்தவர்களுக்குத் திடீரென்று என் மீது கருணை பிறந்துவிடும். ஒரு அம்மாள் என் அருகில் வந்து பரபர வென்று பின்னலிட்டிருக்கும் என் கூந்தலை அவிழ்த்து மறுபடியும் பின்னுவாள். 'இதென்ன ஆச்சரியம்?' என்று நான் அதிசயப் பட்டபோது எனக்கு இருப்பது நிஜமான கூந்தலா அல்லது செயற்கையா என்று கண்டுபிடிப்பதற்காகத்தான் இவ்வளவும் என்று தெரிந்தது! இதெல்லாம் ஒன்றுமில்லாமல் இருக்கும் போது நீங்கள் எதற்கு அத்தான் என்னை இப்படிப் பார்க்க வேண்டும்?" - இப்படிக் கூறிவிட்டு தங்கம் 'கலகல' வென்று சிரித்தாள்.
ரகுபதியின் முதுகில் யாரோ சாட்டையால் அடிப்பது போல் இருந்தது. தங்கத்தின் சிரிப்பொலியைக் கேட்டு. 'ஒருவேளை தனக்கு ஏற்பட்டிருந்த பலவீனத்தைத் தங்கம் கண்டுபிடித்து விட்டாளோ?' என்று நினைத்துப் பயந்து போனான். அவன் மெதுவான குரலில் அவள் அருகில் நெருங்கி, "தங்கம்! நாளைக்கு நீ ஊருக்குப் போகிறாயே. ஏன் இப்பொழுதே போக வேண்டுமா? இன்னும் கொஞ்சநாள் இருந்துவிட்டுப் போயேன்" என்றான்.
தங்கம் கபடமில்லாமல் சிரித்துக்கொண்டே, "எதற்காக அத்தான் என்னை இருக்கச் சொல்லுகிறீர்கள்? நான் இருப்பதால் உங்களுக்குச் சந்தோஷம் ஏற்படுகிறதா? ஒருவேளை சாவித்திரி மதனி ஊரிலிருந்து வருகிறாளா? அவளைப் பார்த்து விட்டுப் போகச் சொல்லுகிறீர்களா என்ன?" என்று கேட்டாள்.
ரகுபதி மறுபடியும் திடுக்கிட்டான். 'என்ன? இந்தப் பெண்ணுக்கு மனோதத்துவம் தெரிந்திருக்கிறதா? இதுவரையில் இன்று வரையில் - நிஷ்களங்கமாக இருந்த மனத்தில் களங்கம் ஏற்பட்டிருக்கிறது என்பதை எப்படிக் கண்டுபிடித்தாள் இவள்? ஒருவேளை நாம்தான் தத்துப்பித் தென்று நடந்து கொண்டு விட்டோமோ' என்று ரகுபதி மனத்தைக் குழப்பிக்கொண்டிருந்த சமயம், தங்கம் அவன் அருகில் நெருங்கி, "சாவித்திரி மதனிக்கும் உங்களுக்கும் ஏதோ மனஸ்தாபமாமே? எங்கள் ஊரில் பேசிக்கொண்டார்கள். உங்களிடம் கோபித்துக்கொண்டுதானே மதனி பிறந்தகம் போயிருக்கிறாள்? அப்படித்தானே அத்தான்? போகிறது. கோபத்தையெல்லாம் மறந்துவிடுங்கள். வரப் போகிற தீபாவளிப் பண்டிகைக்கு வேட்டகம் போய் மதனியை அழைத்து வந்துவிடுங்கள். ஊருக்குத் திரும்பும்போது எங்கள் ஊருக்கு வாருங்கள், அத்தான்" என்று அவனை அன்புடன் அழைத்தாள்.
தங்கம் சாதாரணப் பெண் தான். அறிஞர்கள் கற்றிருக்கும் ஜோதிஷ சாஸ்திரமும், மேதாவிகள் படித்திருக்கும் மனோதத்துவமும் அவளுக்குத் தெரிய நியாயமில்லை. வான வெளியைப்போல் பரிசுத்தமானதும், தெளிந்த நீரைப்போன்ற களங்கமற்ற மனத்தைப் படைத்த தங்கம் ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்துப் பெண். பெரிய பெரிய சாஸ்திரங்களையும், படிப்புகளையும் அவள் எப்படிக் கற்றிருக்க முடியும்?
மறுபடியும், அமைதியான சாலை வழியாகத் தங்கமும், ரகுபதியும் மெதுவாக நடக்க ஆரம்பித்தார்கள். ரகுபதியின் மனம் ஒரேயடியாக இருண்டு கிடந்தது. வான வீதியில் எண்ணற்ற தாரகைகள் பளிச்சிட்டன. வளர்பிறை ஆதலால் மூளிச் சந்திரன் மங்கலாகப் பிரகாசித்துக்கொண்டிருந்தான். தங்கம் அவன் அருகிலேயே வந்து கொண்டிருந்தாள். அவள் தலையில் சூட்டி இருந்த முல்லைப் புஷ்பங்களின் மணம் 'கம்' மென்று வீசியது. தொலைவில் ஊரின் ஆலய கோபுரம் தெரிந்தது. சோர்ந்த மனத்துடன், ரகுபதி எதுவும் பேசாமல் விரைவாக நடந்தான். வீட்டிலே பெரியவர்கள் என்ன சொல்வார்களோ என்று பயந்து தங்கமும் வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.
விரைவில் கோயிலுக்கு முன்பாக இருவரும் வந்துவிட்டார்கள். கோயிலின் வாயிற் கதவு திறந்திருந்தது. மூலஸ்தானத்தில் கோதண்டத்துடன் நிற்கும் ஸ்ரீ ராமபிரானின் உருவம் கம்பீரமாகத் தெரிந்தது. பக்கத்திலே என்றும் எப்பொழுதும் இணை பிரியாமல் வசிக்கும் சீதா தேவியைப் பார்த்தான் ரகுபதி. "ஹே பிரபு! என் மனத்தில் ஏற்பட்டிருக்கும் மாசுமருக்களைத் துடைத்துவிடு. பாபத்தில் ஆழ்ந்துவிடுவேனோ என்னவோ பகவானே!' என்று உள்ளம் உருக வேண்டிக்கொண்டான் அவன். வீட்டை அடைந்ததும் மனத்தின் பாரம் குறையாமல் போகவே, ரகுபதி தளர்ச்சியுடன் நேராக மாடியில் தன் அறைக்குச் சென்று படுக்கையில் சாய்ந்துகொண்டான்.
"உடம்பு சரியில்லையா என்ன, ரகு?"" என்று சுடச்சுட பாலைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு ஸ்வர்ணம் மகனின் நெற்றியில் கையை வைத்துப் பார்த்தாள். சில்லென்று இருக்கும் ஐப்பசி மாத்த்து இரவில் ரகுபதியின் நெற்றியில் வியர்வைத் துளிகள் அரும்பி இருந்தன. பாலைத் தாயின் கையிலிருந்து வாங்கி மேஜைமீது வைத்துவிட்டு, அவள் கரங்களைச் சேர்த்துத் தன் கண்களில் ஒற்றிக்கொண்டான் ரகுபதி.
"அம்மா! என்னால் நீ ஒருவித சந்தோஷத்தையும் அநுபவிக்கவில்லையே. உன்னைப் பலவிதத்திலும் நான் ஏமாற்றி விட்டேன் அம்மா. என்னை மன்னித்துவிடு" என்றான்.
" அசட்டுப் பிள்ளையாக இருக்கிறாயே ரகு? உன் மனசில் இருப்பது எனக்குத் தெரியாதா? தலை தீபாவளிக்கு ஊருக்குப் போய் வந்தால் எல்லாம் சரியாகிவிடும். பாலைச் சாப்பிட்டு விட்டுத் தூங்கு" என்று அன்புடன் கூறிவிட்டு ஸ்வர்ணம் கம்பளிப் போர்வையை உதறி ரகுபதிக்குப் போர்த்திவிட்டாள்.
------------
பரிவுடன் மகனுக்குப் போர்வையைப் போர்த்திவிட்டுக் கீழே சென்ற ஸ்வர்ணத்திற்கு வருத்தம் தாங்கவில்லை. சங்கீத விழாவுக்கு நாட்டுப்பெண் வராத விஷயம் ஊராருக்குத் தெரியும். நல்லதோ கெட்டதோ எதுவும் ஊராருடைய அபிப் பிராயத்துக்கு இணங்கித்தான் நடக்க வேண்டியிருக்கிறது. இது உலக இயல்பு. ”இருந்து, இருந்து ஒரே பிள்ளை. வீட்டிலே லக்ஷணமாக நாட்டுப்பெண் இராமல், வந்ததும் வராததுமாகப் பிறந்த வீட்டில் போய் மாசக் கணக்கில் உட்கார்ந்து கொண்டிருப்பது அழகாக இருக்கிறது!" என்று நாத்தனார் அலமு வேறு எப்போதும் ஸ்வர்ணத்திடம் கூறி அவள் மனத்தை வாட்டிக்கொண்டிருந்தாள்.
சாவித்திரி வருவதற்கு முன்பாவது வீட்டில் நிம்மதியும் சந்தோஷமும் நிலவி இருந்தன. தினம் தவறாமல் ஸரஸ்வதி விடியற்காலமும், சாயந்தரமும் பாட்டைச் சாதகம் செய்து வந்தாள். இப்பொழுதெல்லாம் எப்பொழுதோ அத்தி பூத்தாற் போல் பாடுவது என்று வைத்துக்கொண்டுவிட்டாள் ஸரஸ்வதி. பூஜை அறையை மெழுகும்போதும், கோலம் போடும் போதும், இறைவனுக்கு மாலை கட்டும்போதும் மட்டும் மெதுவாக மனதுக்குள் பாடிக்கொள்வாள். பிறவியிலேயே அவளுடன் கலந்து விட்ட அந்த இசை இன்பம் அவள் மனத்தைவிட்டு ஒரு கணமும் அகலவில்லை. வாயைத் திறந்து பாடினால் தான், பாட்டா? ஊர் ஊராகச் சென்று கச்சேரிகள் செய்தால்தான் சங்கீதமா? நித்திரையிலும் விழிப்பிலும் அவள் மனம் இசை இன்பத்தை அநுபவித்துக்கொண்டே யிருந்தது.
ஸரஸ்வதியின் பரந்த மனத்திலும் ஒருவிதத் துயர் குடிகொண்டிருந்தது. அவளால்தான் வீட்டில் இவ்வளவு சச்சரவுகளும் நேர்ந்துவிட்டதாகக் கருதினாள். இசை விழாவின்போது, தான் கச்சேரி செய்ய ஒப்புக்கொண்டதே தவறு என்று நினைத்தாள். சாவித்திரியின் ஊருக்குச் சென்று அவளை அழைத்துவந்து ரகுபதியிடம் சேர்த்து விடுவது என்று கூட யோசித்துப் பார்த்தாள். ஆனால், அங்கு அவளுக்கு எந்த விதமான வரவேற்பு கிடைக்குமோ? இதற்குள் ஊர் வதந்திகள் ஒன்றுக்குப் பத்தாக இறக்கை கட்டிக்கொண்டு எப்படி எல்லாம் பறந்து சென்றிருக்கின்றனவோ? அத்தான் ரகுபதி கல்யாணம் பண்ணிக் கொண்டவுடனேயே அவள் அந்த வீட்டிலிருந்து விலகிச் சென்றிருக்க வேண்டும். அதைச் செய்யாமல் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யப் புகுந்த கதையாக இப்பொழுது நினைத்து வருந்துவதில் என்ன பிரயோஜனம் இருக்கிறது? இவ்விதம் நினைத்து வருந்திக்கொண்டே ஸரஸ்வதி, ரகுபதி கச்சேரியிலிருந்து வீடு திரும்புவதற்கு முன்பே தன் அறைக்குள் சென்று படுத்துக் கொண்டு விட்டாள். ரகுபதி வந்ததும், அவன் யாருடனும் அதிகம் பேசாமல் மாடிக்குச் சென்று படுத்துக் கொண்டதையும் அறிவாள். ஸ்வர்ணம் மாடியிலிருந்து கீழே வந்ததும் வருத்தம் தாங்காமல் கண்ணீர் பெருக ஊஞ்சலில் வந்து உட்கார்ந்தாள். எவ்வளவோ சகிப்புத் தன்மையை அடைந்திருந்த அத்தை அழுவதைப் பார்த்து ஸரஸ்வதி கவலையுடன் அவள் அருகில் வந்து உட்கார்ந்து, "ஏன் அழுகிறாய் அத்தை? அத்தானுக்கு உடம்பு ஒன்றும் இல்லையே?" என்று விசாரித்தாள்.
இதற்குள்ளாக அலமு ஊருக்குப் புறப்படுவதற்காக மூட்டைகளைக் கட்டிவைத்துவிட்டு, "அவசரப்பட்டுக்கொண்டு முன்னே பின்னே விசாரியாமல் புது சம்பந்தம் செய்தாயே மன்னி; இப்பொழுது படுகிறாய் சேர்த்துவைத்து!" என்று ஆத்திரத்துடன் இரைந்து பேசினாள். ஸ்வர்ணத்துக்கு அடங்கி இருந்த துக்கமெல்லாம் பொங்கி வந்தது.
"இந்தாடி அம்மா! பெண்ணை நான் மட்டும் போய்ப் பார்த்துவிட்டு வரவில்லை. உன் மருமானும் தான் வந்தான். அவன் மனசுக்குப் பிடித்திருக்கிறது என்று தெரிந்துதான் கல்யாணம் நடந்தது."
"அந்தச் சவரணைதான் தெரிறெதே!" என்றாள் அலமு.
மறுபடியும் ஏதாவது சண்டை ஆரம்பித்துவிடப்போகிறது என்று நினைத்த ஸரஸ்வதி, அதட்டும் குரலில், “அத்தை! அத்தானுக்கு ஒரே தலைவலி என்றானே. அவன் தூங்குகிற சமயமாக நீங்கள் இங்கே சண்டைக்கு ஆரம்பிக்கிறீர்களே. பாவம், அவனைப் பார்த்தால் வருத்தமாக இருக்கிறது. போதும்; உங்கள் பேச்சை நிறுத்திக்கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டு, 'விர்' ரென்று எழுந்து கூடத்தில் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்த விளக்கை அணைத்துவிட்டுத் தன் அறைக்குள் சென்றுவிட்டாள்.
கூடத்து மூலையில் மங்கலாக எரியும் சிறு விளக்கின் வெளிச்சத்தில், அதற்கு மேல் பேச்சை வளர்த்த இஷ்டப்படாமல், அலமு கோபத்துடன் படுக்கையில் 'பொத்' தென்று சாய்ந்து படுத்துக்கொண்டுவிட்டாள்.
மாடியில் படுத்திருந்த ரகுபதிக்கு மனப்பாரம் சற்றுக் குறைந்தது. நிசப்தமான இரவில் நீல வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே வெகுநேரம் வெளியில் நின்றிருந்தான் அவன். மறுபடியும் தன் அறைக்கு வந்து அவன் படுக்கும் போது ஸரஸ்வதியின் அறையைக் கவனித்தான். லேசாக வீசும் நிலவொளியில் ஸரஸ்வதிக்கு அருகாமையில் தங்கம் படுத்திருந்தாள். அவளுடைய அழகிய கைகள் ஸரஸ்வதியின் கழுத்தை வளைத்துக் கட்டிக்கொண்டிருந்தன. மங்கிய வெளிச் சத்தில் தங்கம் நன்றாக விழித்துக்கொண்டு படுத்திருப்பது தெரிந்தது. 'ஆமாம்... ஸரஸ்வதியும் விழித்துக் கொண்டுதான் இருக்கிறாள். மெல்லிய குரலில் இருவரும் ஏதோ பேசுகிறார்கள். தங்கம் இவ்வளவு அந்தரங்கமாக என்ன பேசப்போகிறாள்? அன்று மாலை கச்சேரியிலிருந்து திரும்பும்போது நான் அசட்டுப் பிசட்டென்று அவளிடம் நடந்துகொண்டதை ஸரஸ்வதியிடம் வெளி யிடுகிறாளோ? பொழுது விடிந்தால் தங்கம் ஊருக்குப் போய் விடுவாள். ஆனால், ஸரஸ்வதிக்கு என் அசட்டுத்தனம் தெரிந்த பிறகு. அவளிடம் . எதிரில் நின்று பேசவே வெட்கமாக இருக்குமே!' என்று நினைத்து ரகுபதி வெட்கமடைந்தான். ஸரஸ்வதி பேசுவதைக் கேட்டுவிட்டுத் தங்கம் அந்த நள்ளிரவிலும் 'கலீ’ரென்று சிரித்தாள்.
"போடி அசடே! அத்தை விழித்துக்கொண்டுவிடப் போகிறாள். கதையைக் கேட்டுவிட்டு இப்படியா சிரிப்பார்கள்?" என்று தங்கத்தை அதட்டிவிட்டு ஸரஸ்வதி திரும்பிப் படுத்துக் கொண்டாள்.
ரகுபதி நீண்ட பெருமூச்சு விட்டான். 'நல்லவேளை! கதை பேசிக்கொள்கிறார்களா? என்னவோ என்று பயந்து போனேனே' என்று மெதுவாகத் தனக்குள் சொல்லிக் கொண்டே அறைக்குள் சென்றான்.
இரவு தூங்குவதற்கு நேரமாகவே ரகுபதி விடியற்காலம் அயர்ந்து தூங்கிவிட்டான். அவன் எழுந்திருக்கும்போது பொழுது நன்றாக விடிந்துவிட்டது. சமையலறையில் ஸரஸ்வதி, ஸ்வர்ணத்துக்கு உதவியாக வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள். தோட்டத்தைச் சுற்றிச் சுற்றிவரும் தங்கமும், அலமுவும் விடியற்காலையிலேயே ஊருக்குப் போய்விட்டதால் வீடு வெறிச்சோடிக் கிடந்தது. கூடத்து ஊஞ்சலில் உட்கார்ந்து தன் மேலாக்கு பறக்க வீசி வீசி ஊஞ்சலாடும் தங்கம், அவனிடம் ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல் ஊருக்குப் போய்விட்டாள்.
"அத்தானிடம் சொல்லிவிட்டு வருகிறேன்" என்று வேகமாக மாடிப்படிகளில் ஏறிய தங்கத்தின் கைகளை ஸரஸ்வதி பற்றி இழுத்தாள்.
"இந்தாடி அசடே! கொஞ்சங்கூட நாகரிகமே தெரிய வில்லையே உனக்கு? நீ இன்று ஊருக்குப் போவதைத்தான் ஆயிரம் தரம் சொல்லியாயிற்றே. நேற்றெல்லாம் உடம்பு சரியில்லையே அவனுக்கு. இப்போது போய் அவனைத் தொந்தரவு செய்வானேன்?" என்று உரிமையுடன் அதட்டி அவள் மாடிக்குப் போவதைத் தடுத்தவள் ஸரஸ்வதிதான்.
"எனக்குப் பதிலாக நீயே சொல்லிவிடு , அக்கா" என்று தங்கம் சிரித்துக்கொண்டே கூறிச் சென்றிருந்தாள்.
ரகுபதி தீவிரமாக யோசித்தான். 'கொத்துக் கொத்தாக ரோஜாச்செடியில் மலர்கள் குலுங்குகின்றன. 'பறிக்கவேண்டும்; முகர்ந்து பார்க்கவேண்டும்; அதன் மெல்லிய இதழ்களை வருடவேண்டும்' என்று ஒவ்வொருவரும் ஆசைப்படுவது இயற்கைதான். அதுபோல் அழகிய தங்கம் வந்தாள். முல்லைச் சிரிப்பால் என் மூடிய மனதை மலர வைத்தாள். பட்டுப் பூச்சி வர்ண ஜாலங்களை வீசுவதைப்போல், நொடிக்கொரு பேச்சும், நாழிக் கொரு வார்த்தையுமாக வளைய வந்தாள். மலர் செறிந்த ரோஜாச் செடியில் மலரைக் கிள்ளும்போது, 'சுரீர்' என்று தைக்கும் முள்ளைப்போல, 'ஊருக்குப் போகிறேன்' என்று ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல் மனதைக் குத்திவிட்டு ஓடிப்போய்விட்டாள். மலரின் மென்மையை மெச்சுவதுபோல் முள்ளின் வேதனையையும் மெச்சித்தான், 'சபாஷ்' போடவேண்டும். நேற்று இரவு ஸ்ரீராமபிரான் கோவில் முன்பு கைகூப்பி வணங்கி வேண்டிக் கொண்டதை யெல்லாம் மனம் மறந்துவிட்டது. மறுபடியும், 'தங்கம், தங்கம்' என்று ஜபிக்க ஆரம்பித்துவிட்டதே! இது என்னடா, தொந்தரவு?' என்று ரகுபதி மண்டையைக் குழப்பிக் கொண்டான்.
சமையலறையிலிருந்து ஸரஸ்வதி கூடத்துக்கு வந்தாள். கைப்பிடிச் சுவரைப் பிடித்துக்கொண்டு பித்துப் பிடித்தவன் போல் நிற்கும் ரகுபதியைப் பார்த்து, "அத்தான்! தலைவலி எப்படி இருக்கிறது? கீழே வந்து பல் தேய்த்துவிட்டுக் காப்பி சாப்பிடுகிறாயா? இல்லை, மாடிக்கே நான் வெந்நீரும், காப்பியும் கொண்டு வரட்டுமா?" என்று விசாரித்தாள்.
"வேண்டாம் ஸரஸு! நானே வருகிறேன். அலமு அத்தையும், தங்கமும் ஊருக்குப் போய்விட்டார்களா? நன்றாகத்தான் தூங்கிவிட்டேன் போல் இருக்கிறது. என்னை எழுப்பக்கூடாதோ?" என்று கேட்டான் ரகுபதி,
"தங்கம் உன்னிடம் சொல்வதற்குத்தான் மாடிக்கு வந்தாள். நான் தான் உன்னைத் தொந்தரவு செய்யக்கூடா தென்று தடுத்துவிட்டேன். பாவம்! கபடமில்லாத பெண் அவள். . அவள் இல்லாமல் எனக்குக்கூட பொழுது போகாதுபோல் இருக் கிறது" என்றாள் ஸரஸ்வதி.
ரகுபதி மாடிப்படிகளில் மன நிம்மதியுடன் இறங்கினான். “தங்கம் என்னிடம் சொல்லிவிட்டுப் போகத்தான் நினைத்தாள்”: இது அவனுக்கு எவ்வளவோ ஆறுதலை அளித்தது. தங்கம் மாடிக்கு வந்து என்னை எழுப்பி இருந்தால் தொந்தரவு ஏற்பட்டுவிடும் என்று ஸரஸ்வதி தடுத்துவிட்டாளாமே? இது என்ன விந்தை! விந்தைதான்! கட்டவிழ்த்துவிட்ட குதிரை மாதிரி மனதுக்கு, 'எது நல்லது. எது கெட்டது' என்பதைத் தெரிய வைக்க ஸரஸ்வதியைப்போன்ற ஒருத்தி தேவைதான்! தங்கம் மாடிக்கு வந்திருந்தால் நிஜமாகவே ஏதாவது தொந்தரவு ஏற்பட்டிருக்கலாம்.' - விவேகியான ரகுபதியின் மனம் ஸரஸ்வதிக்கு மானசிகமாகத் தன் நன்றியைச் செலுத்தியது.
-------------
சாவித்திரியின் பிறந்தகத்தில் முன்னைப்போல உற்சாகமும், மகிழ்ச்சியும் பொங்கவில்லை. சிந்தனையும் கவலையும் உருவாக மங்களம் அவ்வீட்டுக் கூடத்தில் படுத்த படுக்கையாகக் கிடந்தாள். கடந்த இரண்டு, மூன்று மாதங்களில் அவள் உள்ளம் சோர்ந்து நைந்து போய்விட்டது. தளிர்த்துச் செழித்து வளரும் மரத்தைக் கோடறி கொண்டு வெட்டுவதுபோல் தழைத்துப் பெருக வேண்டிய குடும்பத்திற்குத் தடங்கலாகப் புக்ககத்தில் வாழாமல் பிறந்தகம் வந்திருக்கும் சாவித்திரியைப் பற்றியும், அவள் வருங்காலத்தைப் பற்றியும் - எல்லோரும் கவலை அடைந்தார்கள். வழக்கமாகக் காணப்படும் இரைச்சலோ, உற்சாகமோ அந்த வீட்டில் அப்பொழுது நிலவவில்லை. குடும்பத்துக்கு வேண்டியவற்றைக் கவனித்துச் செய்வதற்கு அக்கறை உள்ளவர்கள் யார் இருக்கிறார்கள்? சீதாவுக்கு அவ்வளவு அநுபவம் போதாது. விளையாட்டுச் சுபாவம் படைத்த அவள் தான் தற்சமயம் குடும்பப் பொறுப்பை நிர்வகித்து வந்தாள். வீட்டில் உள்ளவர்கள் அத்தனை பேரும் தன் பேரில் பழி சொல்வதாக நினைத்து சாவித்திரி, அதை அந்நிய இடமாகவே பாவித்தாள். இஷ்டமிருந்தால் யாருடனாவது பேசுவாள், இல்லாவிடில் அதுவும் இல்லாமல் தன் அறையிலேயே அடைபட்டுக் கிடப்பாள் அவள்.
தேக வலிமையும், சலியாமல் உழைக்கும் திறனுமுடைய தன் தாயார் உடல் மெலிந்து படுத்த படுக்கையில் கிடப்பதைப் பார்த்த சந்துரு. தன் சகோதரியை மனத்துக்குள் வெறுத்தான். மனைவியின் தேக நிலையைக் கண்ணுற்ற ராஜமையருக்கு மாப் பிள்ளை ரகுபதியின் மீதே கோபம் அதிகமாயிற்று.
மங்களம் தன் பெண்ணின் பிடிவாத குணத்தைக் கண்டு ஆறாத் துயரத்தை அடைந்தாள். சிறு வயதிலிருந்தே பரம சாதுவாகவும், யார் எதைச் சொன்னாலும் சகித்துக்கொள்ளும் சாமர்த்தியமும் பெற்றிருந்த அவளுக்கு சாவித்திரியின் மனப்போக்கு ஒரு புதிராகவே இருந்தது. சீதாவுக்கும் கல்யாண வயது நெருங்கிக் கொண்டிருந்தது. அடுத்தாற்போல் சந்துரு வுக்கும் கல்யாணம் பண்ண வேண்டியதுதான். ஆனால், புக்ககத்தில் வாழவேண்டிய பெண் கோபித்துக்கொண்டு. பிறந்தகத்தில் இருக்கிறாள் என்பதை நினைக்கையில், சீதாவுக்கு வரன் தேடவோ, சந்துருவுக்குப் பெண் கொள்ளவோ யாருக்கும் தைரியம் ஏற்படவில்லை.
படுக்கையில் கவலையே உருவமாகப் படுத்திருக்கும் தாயிடம் சந்துரு வந்து உட்கார்ந்தான். அன்புடன் அவள் நெற்றியில் கை வைத்துப் பார்த்து விட்டு, ”அம்மா! உனக்கு வியாதியே ஒன்றுமில்லையாம். மன நிம்மதி இல்லாமல் உடம்பு கெட்டுப் போயிருப்பதாக டாக்டர் சொல்லுகிறார். உற்சாகமான மனம், அதற்கேற்ற சூழ்நிலை அமையவேண்டும் என்று அவர் கருதுகிறார். நீயோ கொஞ்சமாவது மனசுக்கு ஆறுதலைத் தேடிக்கொள்ள மாட்டேன் என்கிறாய். சதா கவலையும் கண்ணீருமாக இருந்தால் உன் உடம்பு எப்படியம்மா சரியாகும்?" என்று ஆசையுடன் விசாரித்தான் தாயை.
"கவலைப்படாமல் எப்படியப்பா இருக்கமுடியும்; மானத்தோடு கௌரவமாக வாழ்ந்த குடும்பம் ஆயிற்றே, நம் குடும்பம்? ஏதாவது பேச்சை ஆரம்பித்தால் உன் அப்பா சீறி விழுகிறார். பெண்ணை 'நர்ஸு'கள் பள்ளியில் சேர்க்கப்போகிறாராம்! * படித்து விட்டு உத்தியோகம் செய்து சாப்பிடுகிறாள்! அவள் ஒருத்தரிடமும் கைகட்டி நிற்க வேண்டாம்' என்கிறாரே. இந்த நாளில் இது ஒரு வழக்கம் ஆரம்பித்து இருக்கிறதே!" என்று கூறிவிட்டு, வியாதியால் மெலிந்து வெளுத்துப்போன உதடுகளை நெளித்து வரண்ட சிரிப்பொன்றை உதிர்த்தாள், மங்களம்.
சந்துரு அலட்சியத்துடன் 'ஹும்' என்றுவிட்டு, "இவளுக்கு இருக்கிற பொறுமைக்கு 'நர்ஸ்' உத்தியோகம் ஒன்றுதான் குறைச்சலாக இருக்கிறது. பொறுமையிலே சாக்ஷாத் பூமிதேவி தான் நம் சாவித்திரி" என்றான்.
"மாப்பிள்ளையாகட்டும், அவன் அம்மாவாகட்டும் பரம சாதுக்கள். இவள்தான் புருஷனுக்கும் மாமியாருக்கும் சற்றுப் பணிந்து நடந்தால் என்ன? பணிவதால் என்ன முழுகியா விடும்?" என்றாள் மங்களம்.
பணிவைப்பற்றியும், அடக்கத்தைப்பற்றியும் ஓயாமல் பேசி அவ்விதமே பல வருஷங்கள் நடந்து கொண்ட மங்களத்தினாலேயே மகளின் மனத்தைப் பணியவைக்க முடியவில்லை என்றால் பிறகு யாரால் முடியப்போகிறது? சந்துரு யோசித்து விட்டு, "ஏனம்மா! தீபாவளிப் பண்டிகைக்குப் பத்துத் தினங்கள் கூட இல்லையே. தலை தீபாவளியாயிற்றே. மாப்பிள்ளையை அழைக்கவேண்டாமா? அப்பா, ரகுபதிக்கு ஏதாவது கடிதம் போடுவதாகச் சொன்னாரா?" எனக் கேட்டான்.
மங்களம் வருத்தத்துடன் தலையை அசைத்துவிட்டு, "அதையெல்லாம் அவர் காதிலே போட்டுக்கொள்வதே யில்லை. நான் சொன்னதற்குத் 'தலையும் இல்லை காலும் இல்லை' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். சந்துரு! நீதான் மாப்பிள்ளைக்கு ஒரு கடிதம் எழுதேன். அதிலே என்ன தவறு இருக் கிறது? அவசியம் தீபாவளிக்கு வரவேண்டும் என்று எழுதப்பா, அவர் கட்டாயம் வருவதானால் நான் எப்படியாவது சமாளித்து சீர்வரிசைகள் செய்துவிடுகிறேன்" என்றாள் குரல் தழுதழுக்க. நம்பிக்கையுடனும், ஆர்வத்துடனும் மங்களம் கேட்பதைச் சந்துருவால் தட்ட முடியவில்லை. 'மனைவி ஊரிலிருந்து வந்த பிறகு ஒருவரி கடிதம் கூடப் போடவில்லை. மாமனார் ஏனோ தானோ வென்று ஒன்றும் தெரியாதவர்போல் இருக்கிறார். மைத்துனன் அழைப்பு அனுப்பி மாப்பிள்ளை தலை தீபாவளிக்கு வந்த மாதிரிதான்' என்று நினைத்த சந்துரு, தாயைத் திருப்தி செய்யவேண்டி, காகிதமும், பேனாவும் எடுத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்தான்.
சோர்ந்துபோயிருந்த மங்களத்தின் மனத்தில் நம்பிக்கை ஊற்றெடுத்தது. ரகசியமாகப் பிள்ளையின் காதில், "சந்துரு! குடும்பச் செலவிலிருந்து சேர்த்த பணம் நூறு ரூபாய்க்குமேல் பெட்டியில் இருக்கிறது. சரிகை வேஷ்டியும், புடைவையும் வாங்கி வந்து உன் பெட்டியில் வைத்து வை. அப்பாவுக்கு இதெல்லாம் தெரியவேண்டாம்" என்றாள்.
'ஆகட்டும்' என்று தலையை அசைத்துவிட்டு கையிலிருந்த காகிதத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டு யோசனையுடன் உட்கார்ந்திருந்தான் சந்துரு. 'தலை தீபாவளிக்கு மாப்பிள்ளை மட்டும் வருவது சம்பிரதாயமில்லை அல்லவா? ரகுபதியுடன் வரக்கூடியவர்கள் அந்த வீட்டில் யார் இருக்கிறார்கள்? ஸரஸ்வதி வருவாளா? இதற்குள்ளாக அவள் மனம் நம்மைப்பற்றியும், நம் குடும்பத்தைப்பற்றியும் என்ன அபிப்பிராயம் கொண்டு விட்டதோ? அவசியம் ஸரஸ்வதியையும் அழைத்து வரச்சொல்லி எழுதுகிறேன். தவறாக இருந்தாலும் இருக்கட்டும். சரியாக இருந்தாலும் இருக்கட்டும்' என்று துணிவுடன் கடிதத்தை எழுதி முடித்தான். அவன் சாவித்திரியைப் புக்ககத்துக்கு அழைத்துப் போனபோது ஸரஸ்வதியுடன் பேசுவதற்குப் பல சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொண்டான். சுருக்கமாகவும் நிதானமாகவும் இரண்டொரு வார்த்தைகளில் ஸரஸ்வதி பதிலளித்துவிட்டுச் சென்று விடுவாள்.
அவன் அங்கிருந்த நான்கு தினங்களில் ஒரு தினம், அதி காலையில் ஸரஸ்வதி தோட்டத்தில் பூஜைக்காக மலர்கள் பறிக்கும்போது சந்துருவும் அங்கிருந்தான். ரோஜாச் செடியிலிருந்து மலரைப் பறிக்கையில் அருகிலிருந்த முள் ஒன்று அவள் விரலில், 'சுரீர்' என்று குத்தவே, முத்துப்போல், அந்த இடத்தில் செக்கச் செவேல்' என்று ஒரு பொட்டு ரத்தம் கசிந்தது. ஸரஸ்வதி கையை உதறிக்கொண்டாள். "த்ஸொ ... த்ஸொ ... முள் குத்திவிட்டதுபோல் இருக்கிறதே. ஆழமாகக் குத்திவிட்டதா என்ன?" என்று கவலையுடன் விசாரித்தான் சந்துரு. அவள் பட்டுப்போன்ற கையைப் பார்த்துக்கொண்டே. "இல்லை.....ஆமாம் குத்திவிட்டது. கொஞ்ச நேரத்தில் சரியாகப் போய்விடும்" என்றாள் ஸரஸ்வதி.
மேலே என்ன கேட்பது, எதைப்பற்றிக் கேட்பது என்று புரியாமல் சிறிது நேரம் அவள் முகத்தையே ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தான் சந்துரு. ஸரஸ்வதி 'சர சர' வென்று மலர்களைப் பறித்துக் கூடையில் நிரப்பிக்கொண்டு உள்ளே சென்றுவிட்டாள்.
மறுபடியும் அன்று மாலையே ஒரு சந்திப்பு. மங்களம் வெகுவாகக் கேட்டுக் கொண்டதன் பேரில் ஸரஸ்வதி பாடுவதற்கு உட்கார்ந்தாள். சில பாட்டுகளைப் பாடிய பிறகு, ஸரஸ்வதி வீணையை உறையிலிடுவதற்கு ஆரம்பித்தபோது மங்களம் அங்கிருந்து எழுந்து சென்று விட்டாள்:
"ஷண்முகப் பிரியா” ராகத்தை நீ வாசித்தால் அற்புதமாக இருக்கிறது. கல்யாணத்தின் போது வாசித்தது என் மனத்தை விட்டு அகலவே இல்லை. மறுபடியும் இன்று அதைக் கேட்க ஆசைப்படுகிறேன், ஸரஸ்வதி" என்று முறுவலுடன் கேட்டுக் கொண்டான் சந்துரு.
உறையிலிட்ட வீணையை வெளியே எடுத்து, 'ஷண்முகப் பிரியா'வை அழகாக வாசித்தாள் ஸரஸ்வதி. ஆவலுடன் அவளையே கவனிக்கும் சந்துருவை அவள் ஒரு முறைகூட ஏறிட்டுப் பார்க்கவில்லை.'
பழைய சம்பவங்களை நினைத்துப் பெருமூச்சுவிட்டான் சந்துரு. ஸரஸ்வதியின் மனம் ஒரு புதிர். வாக்தேவியின் பரிபூர்ண அருளுக்குப் பாத்திரமாக இருக்கும் அந்தப் பெண், ஒரு தெய்விகப் பிறவி என்பதாக நினைத்துச் சந்துரு வியப்பும், மகிழ்ச்சியும் எய்தினான். கடிதத்தை உறையிலிட்டு நிறைந்த மனத்தினனாக அதைத் தபாலில் அன்றே சேர்த்து விட்டான்.
-------------
தீபாவளி அழைப்பைக் கையில் வைத்துக்கொண்டு கூடத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான் ரகுபதி, ’கடிதம் யார் எழுதி இருக்கிறார்கள்? என்ன எழுதப்பட்டிருக்கிறது?' என்று அறிந்து கொள்ள ஸரஸ்வதியும், ஸ்வர்ணமும்
ஆவலுடன் அவன் எதிரில் நின்றிருந்தார்கள்.
"கடிதம் போட்டுவிட்டார்கள் பிரமாதமாக! நான் குதித் துக்கொண்டு ஓட வேண்டியதுதான் பாக்கி!" என்று வெறுப்புடன் கடிதத்தை அங்கிருந்த மேஜைமீது வீசி எறிந்துவிட்டு ’விடுவிடு' என்று வெளியே போய்விட்டான் ரகுபதி. ஸரஸ்வதி, ஸ்வர்ணத்தின் ஏக்கம் நிறைந்த முகத்தைக் கவனித்துவிட்டு, "அத்தை! கடிதத்தை நான் படிக்கட்டுமா? ஒருவேளை கடிதம் சாவித்திரி எழுதியதாக இருக்குமோ என்று யோசிக்கிறேன். படிக்கட்டுமா அத்தை? அதில் ஒன்றும் தவறில்லையே?" என்று கேட்டாள்.
"இப்பொழுது நடக்கிறதெல்லாம் சரியாக இருக்கிறது! கடிதத்தைப் படித்தால்தான் தவறு ஏற்பட்டுவிடுமோ? படியேன்" என்றாள் ஸ்வர்ணம் பாதி கோபமாகவும், பாதி வருத்தமாகவும் ஸரஸ்வதியைப் பார்த்து. கடிதத்தை உறையிலிருந்து எடுத்து ஸரஸ்வதி படிக்க ஆரம்பித்தாள்:
அன்புள்ள ரகுபதிக்கு,
அநேக ஆசீர்வாதம். நீயும், உன் அம்மாவும், சௌ. ஸரஸ்வதியும் சௌக்கியமென்று நம்புகிறேன். தீபாவளிப் பண்டிகை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த வருஷம் தலை தீபாவளி ஆதலால் உன் வரவை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
சௌ. ஸரஸ்வதியின் கச்சேரி அரங்கேற்றத் துக்கு வரமுடியாமல் போய்விட்டது. பத்திரிகைகளில் வெளியான செய்திகளையும், புகைப் படங்களையும் பார்த்து ஆனந்தப்பட்டேன். ஸரஸ்வதியைக் கட்டாயம் உன்னுடன் அழைத்து வரவேண்டும். ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
இப்படிக்கு.
சந்திரசேகரன்.
கடிதத்தைப் படித்து முடித்ததும் ஸரஸ்வதி கபடமில்லாமல் ’கல கல' வென்று சிரித்து, 'அத்தை! தலை தீபாவளி அழைப்பு மாப்பிள்ளைக்கா அல்லது எனக்கா என்பது புரியவில்லையே. வெறுமனே பத்துத் தடவை என்னைத்தானே வரும்படி சந்துரு எழுதி இருக்கிறார்?" என்றாள்.
"அவர்கள் வீட்டில் எல்லோருக்கும் உன் பேரில் கொள்ளை ஆசை. சாவித்திரியின் அம்மாவுக்குச் சதா உன் பேச்சுத்தான். சீதாவும் கல்யாணத்தின்போது எப்படி ஒட்டிக்கொண்டு இருந்தாள் பார்த்தாயா? நமக்கென்று வந்து வாய்த்திருக்கிறதே அந்தப் பெண் தான் அவர்கள் வீட்டிலேயே அலாதியாக இருக் கிறது!" என்று ஸ்வர்ணம் கூறிவிட்டு, "எப்பொழுது அவர்கள் மதித்துக் கடிதம் போட்டிருக்கிறார்களோ அவசியம் நீயும் ரகுபதியும் போய்விட்டு வாருங்கள். இந்தச் சந்தர்ப்பத்திலாவது இருவரின் மனமும் மாறி ஒற்றுமை ஏற்படட்டும்" என்றாள்.
ஸரஸ்வதி கடிதத்தை மறுமுறை மனதுக்குள் படித்துக் கொண்டாள். 'இவருக்கென்ன என்னிடம் அலாதி அன்பு? வருந்தி வருந்தி அழைக்கிறாரே. ஒரு வேளை அவருக்கு என்னை-' என்று நினைத்த ஸரஸ்வதியின் மனம் அதற்குமேல் ஒன்றையும் யோசியாமல் தயங்கியது. பிறகு ஸ்வர்ணத்தை நிமிர்ந்து பார்த்து, "அத்தான் அவசியம் போக வேண்டியதுதான் அத்தை. நான் எதற்கு?" என்று கேட்டாள்.
" உன்னை வரச் சொல்லி அந்தப் பிள்ளை எழுதி இருக்கிறானே. முன்பு அவர்கள் இங்கு வந்திருந்தபோதும் கூப்பிட்டார்கள். போய் விட்டுத்தான் வாயேன், ஸரஸு" என்றாள் ஸ்வர்ணம்.
ஸ்வர்ணம் கூறுவதைச் சரியென்று ஸரஸ்வதியின் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. 'ஏற்கனவே. என்னால் கணவன் - மனைவி இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு, அதனால் பிறந்தகம் போயிருக்கிறாள் சாவித்திரி. ஊரிலும் என்னைப் பற்றியே தான் அவள் குடும்பத்தார் பழி கூறிக்கொண்டிருப்பார்கள். சில விஷயங்களில் ஆண்களின் சுபாவம் பரந்த நோக்கமுடையதாக இருக்கும். ஆகவே, சந்துரு என்னையும் வரும்படி கூப்பிடுகிறார். இதைப்போய்ப் பிரமாதமாக நினைத்துக்கொண்டு போவது தவறு' என்று ஸரஸ்வதி தீர்மானித்துக்கொண்டாள்.
வெளியே சென்றிருந்த ரகுபதி திரும்பியதும் ஸ்வர்ணம் மறுபடியும் கடிதத்துடன் அவன் அருகில் சென்று உட்கார்ந்து கொண்டாள். தீவிரமான யோசனையில். ஈடுபட்டிருக்கும் மகனின் முகத்தை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டே, "ரகு! என் பேரில் கோபமோ, வருத்தமோ வைத்துக் கொள்ளாதே. விரோதத்தை வளர்த்துக்கொண்டே போனால் அது வளர்ந்து கொண்டுதான் வரும். எதையும் பாராட்டாமல் தள்ளிவிட்டோ மானால் - விரோதம் வளர்வதற்கு இடமில்லையப்பா. தலை தீபாவளிக்கு மாப்பிள்ளை வர வேண்டும் என்று ஆசைப்பட்டுத் தான் அந்தப் பிள்ளை கடிதம் போட்டிருக்கிறான். அவன் அழைப்பிலே எல்லோருடைய அழைப்பும் கலந்திருப்பதாக பாவித்துப் போய்வா. நான் தான் எவ்வளவு காலம் சாஸ்வதமாக இருக்கப் போகிறேன்? ’தாய்க்குப் பிறகு தாரம்' என்று சொல்லுவார்கள். எனக்குப் பிறகு உன்னைப் பார்த்துக் கொள்ள வேண்டியவள் சாவித்திரிதான். அவளும் சிறியவள். உலகம் தெரியவில்லை. என் வார்த்தையைத் தட்டாதே. ரகு!" என்று உருக்கமாகக் கூறிவிட்டு மகனின் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தாள்.
தாயின் கையிலிருந்த கடிதத்தைத் திருப்பிப் பார்த்துக் கொண்டே , ”ஸரஸ்வதியும் வருகிறாள் இல்லையா?" என்று கேட்டான் ரகுபதி.
"உன்னுடன் 'போய் வா' என்றுதான் சொன்னேன். அவளுக்குத்தான் தனியாக ஏதோ லட்சியம், கொள்கை என்றெல்லாம் இருக்கிறதே. அவள் என்ன சொல்லப் போகிறாளோ?" என்றாள் ஸ்வர்ணம்.
இதுவரையில் இவர்கள் பேச்சில் தலையிடாமல் கையிலிருந்த "மீரா பஜனை'க் கீர்த்தனங்களில் லயித்திருந்த ஸரஸ்வதி, அத்தையைப் பார்த்து, ”இந்த விஷயத்தில் என்னை இரண்டு பேரும் மன்னித்துவிடுங்கள். இன்றைய தினசரியில், அப்பா சர்க்கார் வேலையாக, அயல் நாட்டிலிருந்து சென்னை வந்து. மைசூர் போவதாகச் செய்தி வந்திருக்கிறது. நானும் மைசூர் போகப் போகிறேன், அத்தை. அத்தான் மட்டும் போய்வரட்டும். என்ன அத்தான் நான் சொல்கிறது?" என்று கேட்டாள்.
மூன்று வருஷங்களுக்கு மேலாகத் தகப்பனாரைப் பாராமல் இருந்த பெண்ணைத் தடை செய்வது நியாயம் என்று தோன்றாமல் போகவே ஸ்வர்ணமும், ரகுபதியும் ஸரஸ்வதியை அதற்கு மேல் வற்புறுத்த வில்லை. அத்துடன் ஸரஸ்வதியிடம் ஒரு சிறப்பான அம்சம் உண்டு. மனத்துக்குப் பிடிக்காத விஷயமாக இருந்தாலும் சரி, கொள்கைக்கு முரணாக இருந்தாலும் சரி, அதனால் எவ்வளவு நன்மை ஏற்படுவதானாலும் விட்டுக் கொடுக்க மாட்டாள். ஸரஸ்வதி, சாவித்திரியின் வீட்டுக்குப் போனால் சட்டென்று சமரஸம் ஏற்பட்டுவிடும். சமத்காரமாகப் பேசி எல்லோர் மனதையும் கவர்ந்துவிடுவாள். பழைய விரோதத்தை எல்லோரும் மறந்துவிடுவார்கள். ஆனால் சாவித்திரி புக்ககத்தில் இருந்த நான்கு மாதங்களில் ஒரு தினமாவது ஸரஸ்வதியிடம் இன்முகமாகப் பேசியதில்லை. அவளாகவே வலுவில் சென்று சாவித்திரியிடம் பேசினாலும், அவளை மதிப்பதில்லை. கடைசியாக சாவித்திரி ஊருக்குப் புறப்படுவதற்கு முதல் நாள் அன்புடன் அவள் கேட்டுக் கொண்டதைக்கூடப் பாராட்டாமல் சென்ற பெண்ணுடன், நேருக்கு நேர் நின்று, 'நான் வந்திருக்கிறேன், பார்! அழையா வீட்டுக்குச் சம்பந்தியாக!' என்று கூறிச் செல்வதற்கு வெட்கமாக இராதா? அசட்டுக் கௌரவமும், முரட்டுப் பிடிவாதமும் உடைய பெண்ணிடம் போய் கைகட்டி நிற்கும் படியான நிலைமை ஸரஸ்வதிக்கு ஏற்படவில்லை. ' என்னை இரண்டு பேரும் மன்னித்துவிடுங்கள்' அவள் அத்தையிடம் கேட்டுக் கொண்ட பாவனை-யிலிருந்து அவள் மனத்தில் ஓடும் எண்ணங்களை ஸ்வர்ணம் ஒருவாறு ஊகித்துக் கொண்டாள்.
' இந்த மட்டும் பிள்ளையாவது தீபாவளிக்குப் போகிறேன் என்று ஒப்புக் கொண்டானே' என்று ஸ்வர்ணம் ஆறுதல் அடைந்தாள்.
-------------
கடலலைகள் போல் ஓயாமல் பொங்கிக்கொண்டிருந்த ஸ்வர்ணத்தின் மனம், மகனின் பதிலைக் கேட்டு ஆறுதல் அடைந்தது. தீபாவளிக்கென்று மகனிடம் கொடுத்தனுப்ப சாவித்திரிக்கு விலையுயர்ந்த புடைவையை எடுத்தாள். பல வர்ணங்களில் ரவிக்கைத் துண்டுகள் வாங்கினாள். கட்டு வெற்றிலையும், வாசனைப் பாக்கும், சீப்புப் பழமும், மணக்கும் கதம்பமும் வாங்கிக் கூடையை நிரப்பினாள். "மனைவியிடம் நல்ல மாதிரி பேச வேண்டும். பரிவாக நடந்து கொள்ள வேண்டும். 'தஸ், புஸ்' ஸென்று உன் கோபத்தைக் காட்டாதே" என்றெல்லாம் புத்திமதிகள் கூறினாள் ஸ்வர்ணம். "வேட்டகத்தில் பெரியவர்கள் ஏதாவது சொன்னாலும் பொறுத்துக்கொள், அப்பா!" என்றுவேறு மகனுக்குச் சொன்னாள். ரகுபதி எல்லா வற்றிற்கும் மௌனமாகவே தலையை அசைத்தான். மைசூர் பிரயாணத்துக்காகப் பெட்டியில் துணிமணிகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்த ஸரஸ்வதி, ஸ்வர்ணம் கூறுவதை முழுவதும் கேட்டுவிட்டு, "எல்லா புத்திமதிகளையும் சொன்னாயே அத்தை. முக்கியமான விஷயத்தைச் சொல்ல மறந்துவிட்டாயே" என்றாள்.
"என்ன?" என்று ஸ்வர்ணம் அவளைத் திருப்பிக் கேட்டதும், அவள், ”எல்லோரிடமும் சரிவர நடந்து கொண்டு திரும்பி வரும்போது சாவித்திரியையும் அழைத்து வந்து விடு என்று சொல்ல வேண்டாமா?" என்று கேட்டு விட்டு பெருமை பொங்கும் முகத்துடன் ரகுபதியைத் திரும்பிப் பார்த்தாள்,
"அதற்குத்தான் நீ அவனுடன் போய் எல்லாவற்றையும் பொறுமையுடன் நடத்திக்கொண்டு வருவாய் என்றிருந்தேன். திடீரென்று நீதான் யாத்திரை கிளம்பி விட்டாயே!" என்று நிஷ்டுரமாகப் பதிலளித்தாள் ஸ்வர்ணம்.
தீபாவளிக்கு இரண்டு தினங்களுக்கு முன்பே ரகுபதியும். ஸரஸ்வதியும் ஊருக்குக் கிளம்பிவிட்டார்கள். ரெயில் நிலையம் வரையில் இருவரும் ஒன்றாகச் சென்று வெவ்வேறு வண்டிகளில் ஏறினார்கள். "அத்தான்! நான் திரும்பி வரும்போது நீ தனியாக இருக்கக்கூடாது. கட்டாயம் சாவித்திரியை அழைத்து வந்து விடு" என்று உண்மையான அன்புடனும் அநுதாபத்துடனும் ஸரஸ்வதி கூறி அவனை ரெயில் ஏற்றினாள். ரகுபதியின் வண்டி புறப்பட்டுச் சென்ற பிறகு அரை மணி கழித்துத்தான் ஸரஸ்வதியின் ரெயில் கிளம்ப வேண்டும். ரெயில் சென்ற திசையைச் சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு நிறைந்த மனத்துடன் ஸரஸ்வதி பெருமூச்சு விட்டாள்.
தீபாவளி கொண்டாடிவிட்டு மனைவியுடன் ரகுபதி ஊருக்குத் திரும்பி விட்டான் என்று அறிந்தால், அவள் சமீபத்தில் ஊருக்குத் திரும்பக்கூடாது என்று தீர்மானித்துக் கொண்டாள். ரெயிலில் ஒரு மூலையில் உட்கார்ந் திருந்த ரகுபதி சிறிது நேரம் வரையில் அங்கு என்ன நடைபெறு கிறது என்பதைக் கவனிக்கவில்லை. பித்துப் பிடித்தவன் போல் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். இரவின் அமைதியைக் கலைத்துக்கொண்டு வனப் பிரதேசத்தில் ’தட தட' வென்று ரெயில் சென்றுகொண்டிருந்தது. அத்துடன் குழந்தை ஒன்று வீறிட்டு அழுதது. தாயார் கொஞ்ச நேரம் சமாதானம் செய்து பார்த்தாள். பிறகு தகப்பனார் சீராட்டிப் பார்த்தார். அழுகை ஓய்ந்தபாடில்லை. இருவரும் மனம் சலித்தவர்களாக, "சனியனே! என்ன தான் வேண்டுமென்று சொல்லித் தொலையேன்" என்று இரைந்து கோபித்துக் கொண்டார்கள் குழந்தையை! குழந்தை அழுது கொண்டு தன் மழலை மொழியில், "நீ ஆண்டாம் போ.... பாட்டிதான் வேணும். பாட்டிகிட்டே தாச்சுக்கணும் போ" என்றது.
'அப்பாடா' என்று பெற்றோர் பெருமூச்சு விட்டனர். ஓடுகிற ரெயிலில் ஊரிலிருக்கும் பாட்டியை எப்படி வரவழைப்பது என்று புரியாமல் திகைத்தனர். இருவரும் படும் சிரமத்தைப் பார்த்து ரகுபதி கூடையை அவிழ்த்து அதிலிருந்து இரண்டு பெரிய ஆரஞ்சுப் பழங்களை எடுத்தான்.
”இந்தா பாப்பா! பாட்டியிடம் காலம்பற போகலாம்”, என்று கூறி அவைகளை குழந்தையிடம் கொடுத்தான். தங்க நிறத்தில் பளபளவென்று உருண்டு விளங்கும் பழங்களைத் தன் குஞ்சக் கரங்களால் குழந்தை வாங்கிக்கொண்டு சமாதானம் அடைந்தது. இந்தக் காட்சியை ரசித்த பெரியவர் ஒருவர். ”இதைத்தான் குழந்தை மனம் என்கிறது, ஸார்! நம்மால் லேசில் திருப்தியடைய முடியாத விஷயங்கள் பல இருக்கின்றன. அகங்காரமும், மமதையும் தலை தூக்கி நம்மை நசுக்கிவிடுகின்றன. லேசிலே மனம் பணியமாட்டேன் என்கிறது. குழந்தைகள் அப்படி இல்லை. ஒன்று வேண்டுமென்று ஹடம் பிடிப்பார்கள். வீம்பு பண்ணுவார்கள். ஆனால், அதையே நீடித்து நினைவு வைத்து கொள்ள மாட்டார்கள். சட்டென்று மறந்து போவார்கள்" என்று கூறினார்.
ரகுபதி மனைவியைப் பார்த்து வருவதற்காகத்தான் கிளம்பி இருக்கிறான். அவளிடம் எப்படியெல்லாம் 'பவ்யமாக' நடந்து கொள்ளவேண்டும் என்று தாயார் வேறு உபதேசம் செய்து அனுப்பி இருக்கிறாள். ஸரஸ்வதி ரெயில் நிலையத்தில் கூட 'சாவித்திரியை அழைத்து வந்துவிடு' என்று உத்தரவு போட்டிருக்கிறாள். ஆனால் அவன் அந்தராத்மா இருக்கிறதே அது லேசில் மசிந்து போகத் தயாராக இல்லை. படுக்கை அறையில், "உன்னை அடித்துவிட்டேன் என்று கோபமா சாவித்திரி?" என்று அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு கெஞ்சியபோது, அவள் தன் கைகளை ஆங்காரத்துடன் உதறி விடுவித்துக்கொண்ட சம்பவத்தை அவன் மனம் மறக்கவில்லை. சாதாரண சிறாய்ப்புக் காயமாக இருந்தால் சீக்கிரம் குணமாகிவிடும். ஆழப்பதிந்து போன வெட்டுக் காயமாக அல்லவா ஏற்பட்டிருக்கிறது?
புகை வண்டி பெரும் வேகத்தில் போய்க்கொண்டிருந்தது. அதன் வேகத்தைப்போல் ரகுபதியின் மனோ வேகமும் அதிக மாயிற்று. பைத்தியக்காரத்தனமாக அல்லவா அவன் மனைவியை நாடிப் போகிறான்? மறுபடியும் அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டு போகமாட்டாள் என்பது என்ன நிச்சயம்? சிந்தனைச் சுழலில் ஜன்னலின் மேல் தலை வைத்துக்கொண்டே கண்ணயர்ந்து விட்டான் ரகுபதி. விடியற்காலை சில்லென்று காற்றுப் பட்டவுடனேயே விழிப்பு ஏற்பட்டது. ரெயிலும் தன் வேகத்தைக் குறைத்துக்கொண்டு ஒரு நிலையத்தில் நின்றிருந்தது. ஊரின் பெயரை உற்றுக் கவனித்தான். 'ஆ! தங்கம் இங்கேதானே அருகில் கிராமத்தில் இருக்கிறாள்' என்று நினைத்தான். "சாவித்திரி மன்னியோடு எங்கள் ஊருக்கு வாருங்கள்!' என்று அழைத்துவிட்டுப் போனாளே! மன்னியும் வேண்டாம், பொன்னியும் வேண்டாம். நான் மட்டுந்தான் போகிறேனே. தங்கத்தின் ஊரில் தீபாவளி கிடையாதா என்ன? கூடை நிறைய இருக்கும் கதம்பம் தங்கத்தின் கருங்கூந்தலுக்குத் தான் அர்ப்பணம் ஆகட்டுமே! பெட்டியிலே வைத்திருக்கும் வாணங்கள், பட்டாசுகளைத் தங்கந்தான் வெடித்து ரசிக்கட்டுமே?" ரகுபதி பெட்டியையும், கூடையையும் அவசரமாக இறக்கிவிட்டுத் தானும் கீழே இறங்கினான். ரெயிலும் அவன் அறியாமையைக் கண்டு சீறுவது போல் 'புஸ்' ஸென்று பெருமூச்சு விட்டுக் கொண்டு கிளம்பிவிட்டது.
-------------
ரகுபதியும் ஸரஸ்வதியும் ஒன்றாகவே ரெயில் நிலையத்துக்கு வந்தார்கள். சற்று முன்பாக ரெயில்கள் கிளம்பின. இருவரும் ஒவ்வோர் ஊரைக் குறிக்கோளாக வைத்துக்கொண்டு பிராயணச் சீட்டுகள் வாங்கியிருந்தார்கள். ரகுபதியின் பிரயாணம் பாதியில் நின்றது. சட்டென்று என்னவோ தோன்றவே ஒருவித யோசனையுமின்றி ரெயிலிலிருந்து அவன் இறங்கி விட்டான். ஸரஸ்வதியின் மனம் களங்கமற்று இருந்தது. இவ்வளவு காலம் மனத்தைப் பீடித்திருந்த கவலையும் ஒருவாறு நீங்கிவிட்டதல்லவா? அத்தான் ரகுபதி தன் மனைவியை அழைத்துவரப் புறப்பட்டுவிட்டான். இனிமேல் அத்தை ஸ்வர்ணத்தின் கவலைகளும் நீங்கிவிடும். ஆகவே, ரெயில் புறப்பட்டவுடன் படுக்கையை உதறிப் போட்டுக்கொண்டு படுத்தவள் விடியுமளவு நன்றாகத் தூங்கினாள். காலைக் கதிரவனது கிரணங்கள், ஓடும் ரெயிலின் ஜன்னல் வழியாகத் தன் மீது பட்டவுடன்தான் ஸரஸ்வதிக்கு விழிப்பு ஏற்பட்டது. செந்தமிழ் நாட்டைக் கடந்து மைசூர் ராஜ்ய எல்லைக்குள் ரெயில் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. காவிரி நதி பாய்ந்து வளம் பெற்று இருப்பதால் எங்கு பார்த்தாலும் பசுமை போர்த்த காடுகளும், சிறு குன்றுகளும், புதர்களும் நிறைந்து பார்ப்பதற்குப் 'பசேல்' என்று காட்சி அளித்தது. தமிழ் நாட்டிலே 'சுரீரென்று மக்களைத் தாக்கும் கதிரவன், மைசூர் ராஜ்யத்தில் சற்று நிதானமாகவே பவனி வருகிறான். பனி தோய்ந்த பள்ளத்தாக்குகளில் புகை போல் பனி மூடியிருக்கும் மலைச் சாரலில் அவன் ஜம்பம் ஒன்றும் சாயவில்லை.
ஓடும் ரெயில் ஒரு சிறிய கிராமத்தினூடே செல்லும்போது தலையில் தயிர்க் கூடைகளுடனும், மைசூருக்கே உரித்தான செழுமையான காய்கறிகள் கூடைகளுடனும் பெண்கள் அணியாகக் கேழ்வரகுக் கொல்லைக்குள் புகுந்து செல்வதை ஸரஸ்வதி கண்டாள். காலை ஒன்பது மணிக்கு மேல் ரெயில், ஸ்ரீரங்கப் பட்டணத்தை அடைந்தது. நிலையத்தில் அவளை அழைத்துப் போவதற்கென்று அவளுடைய தகப்பனார் வந்திருந்தார். பெரிய உத்தியோகத்தில் இருப்பவர். அந்தஸ்து வாய்ந்தவர் என்பதற்கு அறிகுறியாக அவருடன் நாலைந்து பேர்கள் வந்திருந்தார்கள். வண்டியிலிருந்து இறங்கியதும் ஸரஸ்வதி அன்புடன், ”அப்பா" என்று அழைத்து அவர் அருகில் சென்று நின்றாள். ” எப்படியம்மா இருக்கி? நீ மட்டுமா தனியாக வந்தாய்?" என்று ஆதுரத்துடன் மகளைக் கேட்டு, ஆசையுடன் அவள் முதுகில் தட்டிக் கொடுத்தார். அவருடன் வந்திருந்த நண்பர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் விடைபெற்றுக் கொண்டு போய்விட்டார்கள். தகப்பனாரும், அவர் நண்பரும் பின் தொடர ஸரஸ்வதி வெளியே சென்று தயாராக இருந்த வாடகை மோட்டாரில் ஏறிக் கொண்டாள்.
'அப்பாதான் எவ்வளவு மாறிவிட்டார்! மூன்று வருஷங்களுக்கு முன்புகூட இள வயதினர் போல இருந்தாரே! இப்பொழுது தலையில் லேசாக வழுக்கை விழுந்து விட்டதே!' என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டாள் சரஸ்வதி.
'குழந்தை நன்றாக வளர்ந்துவிட்டாள். சமீபத்தில் பத்திரிகைகளில் வெளியாகி இருந்த ஸரஸ்வதியின் புகைப் படத்தைப் பார்த்தே பரவசமாகி இருந்தேனே. நேரிலே பாயத்தால் புகைப்படம் மோசம் என்றுதான் சொல்ல வேண்டும். 'மூக்கும், விழியும், அடக்கமும், மரியாதையுமாக என் ஸரஸ்வதி எப்படி இருக்கிறாள்! 'அவள்' இல்லையே இந்த ரத்தினத்தைக் கண்டு மகிழ்வதற்கு!' என்று தகப்பனார் மகளைப் பார்த்துச் சந்தோஷமும், மனைவி இதைக்கண்டு அநுபவிப்பதற்கு இல்லையே என்று துக்கமும் எய்தினார். கண்களில் உணர்ச்சிப் பெருக்கால் துளிர்த்த நீரை அடக்குவதற்கு வெகு பிரயாசைப்பட்டார்.
அருகில் உட்கார்ந்திருந்த நண்பர் ஏறக்குறைய ஸரஸ்வதியின் தகப்பனார் வயதை உடையவர். அவர் பழகுகிற முறையிலிருந்து ஆப்த நண்பர் என்பது சொல்லாமலேயே விளங்கிவிட் டது. நட்பிலே பல தரங்கள் உண்டல்லவா? சிலர் தங்களுடைய வேலைகள் நடக்க வேண்டுமானால் மிகவும் நட்புரிமை பாராட்டுவார்கள். "உங்களைப்போல உண்டா?" என்பார்கள். அவர்கள் வேலை முடிந்து விட்டால் பிறகு, " இருக்கிறாயா?" என்று கேட்பதற்குக்கூட அவர்களுக்கு வாய்வலித்துப்போகும்! சில நண்பர்கள் குழைந்து குழைந்து நண்பர்களிடம் வேலை வாங்கிக் கொள்வார்கள். தாங்கள் ஏதாவது செய்ய வேண்டுமானால் தூர விலகிவிடுவார்கள். 'ரெயில் சிநேகம்' என்று குறிப்பிடுகிறோம். ரெயிலில் சில மணி நேரங்கள் சந்தித்துப் பிரிகிறவர்களை அப்படிச் சொல்லுகிறோம். அருகிலேயே இருப்பார்கள் சில நண்பர்கள். அவர்களுடன் நாம் எவ்வளவு நட்புக்கொண்டு பழகினாலும் அவர்கள் விலகியே செல்வார்கள்.
பாரதத்திலே கர்ணனும், துரியோதனனும் பழகி வளர்த்த நட்பு மிகவும் சிறந்தது. உண்மையான நட்பு எந்த விதமான கட்டு திட்டங்களுக்கும் உட்பட்டதல்ல. பணக்காரன், ஏழை என்று வித்தியாசம் பாராட்ட அதில் இடம் இல்லை. இந்தக் காலத்திலே சிலர் தாங்கள் சிநேகம் பாராட்டுகிறவர்களின் சொத்து, அந்தஸ்து முதலியவைகளை ஆராய்ந்து பழகுகின்றனர். கண்ணனுக்கும், ஏழைக் குசேலருக்கும் அந்தஸ்தில் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசந்தான். இருந்தபோதிலும், அந்த தூய நட்பைப்பற்றிப் படிக்கும் போதெல்லாம் மனம் உருகிக் கண்ணீர் பெருகி விடுகிறது. இந்த மாதிரியே ஸரஸ்வதியின் தகப்பனாரும், அவருடன் கூடவந்த நண்பர் கோபால தாஸரும் அந்தஸ்தில் மிகுந்த வித்தியாசம் உடையவர்கள். பால்யத்தில் இருவரும் விஞ்ஞானக் கல்வி பயில ஒன்றாக மைசூர் ராஜ்யத்தில் வசித்தவர்கள். ஸரஸ்வதியின் தகப்பனார் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். பாஷை தெரியாத கன்னட ராஜ்யத்தில் கோபால தாஸர் அவருக்குச் சிறந்த நண்பராக விளங்கினார். கல்விப் பயிற்சிக்கு அப்புறம் ஸரஸ்வதியின் தகப்பனாருக்கு அதிருஷ்ட வசமாக உயர் பதவி கிட்டியது. கோபால தாஸருக்கும் கிட்டி இருக்கும். ஆனால், தேச சேவைக்காக காந்தி அண்ணலின் அன்புக்குரல் அவரை அழைத்தது. தியாக அக்னியில் ஸ்புடம் போட்ட தங்கத்தைப்போல் இருந்தார் அவர். ஆகவே, பதவியும், உயர்வாழ்வும் அவருக்குக் கிட்டவில்லை. அவரும் அதில் ஆசை கொள்ளாமல் தேசப்பணியிலேயே தம் வாழ்நாளைக் கழித்து விட்டார். இடை இடையே, நண்பர்கள் சந்திக்கும் போதெல்லாம், ஸரஸ்வதியின் தகப்பனார் தம் நண்பரிடம் அவரைப் பல உத்தியோகங்களை வகிக்கும்படி அழைத்தார். பிரும்மசாரியாகிய அவருக்கு, தாம் சம்பாதித்து யாரைக் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கவே நண்பரின். வேண்டுகோளை மறுத்துவிட்டார்.
அமைதி நிரம்பிய காவிரி நதிக்கரை ஓரமாகவே மோட்டார் சென்று கோபால தாஸரின் சிறு வீட்டை அடைந்தது. வீட்டிற்குப் பின்னால் ஓடும் நதியில் நொப்பும், நுரையுமாகப் புது வெள்ளம் செக்கச் செவேலென்று சுழித்துக்கொண்டு ஓடியது. காலைச் சூரியனின் தங்க நிறக் கிரணங்கள். சிவந்த தண்ணீரில் விழுந்து மேலும் அதைத் தங்கமய-மாக்கியது. நதியின் இரு மருங்கிலும் அடர்ந்த சோலைகள். வண்டுகள் ரீங்காரமிட்டன. பட்சிகள் இனிய குரலில் இசை பாடின. தொலைவில் திப்புவின் சமாதிக்கோவில் கம்பீரமாகக் காட்சி அளித்தது. நதிக்கரையை அடுத்த பழைய கோட்டை, கொத்தளங்கள் இடிந்து கிலமாகக் கிடந்தன. மனித வாழ்வின் க்ஷண கால இன்பத்தைப் பறை சாற்றும் சின்னங்கள் அவை.
ரெயில் பிரயாணத்தால் அலுத்துப்போய் ஸரஸ்வதி பகல் போஜனத்துக்கு அப்புறம் படுத்துத் தூங்கிவிட்டாள். அவள் விழித்து எழுந்தபோது மாலை ஆறு மணி இருக்கும். இப்படி தேகம் தெரியாமல் தூங்கியதை நினைத்து அவளே வெட்கிப் போனாள்.
"தூங்கி எழுந்தாயா அம்மா? வெளியே போய் இப்படி உலாவிவிட்டு வருவோமா?" என்று தகப்பனார் மகளை அழைத்தார்.
மூவரும் நதிக்கரை ஓரமாகவே மௌனமாக நடந்தனர். வெறுமனே 'வள வள' வென்று பேசுவதைவிட, அங்கு நிலவி யிருந்த அமைதியை ரஸிப்பதே பெரும்பொழுது போக்காக அவர்கள் கருதி இருக்க வேண்டும். ஸரஸ்வதியின் தகப்பனார் அன்று உற்சாகமாக இல்லை. 'மகள் வளர்ந்து விட்டாள். தனக்கும் வயதாகிக்கொண்டு வருகிறது. அவளுடைய வருங் காலம் எப்படி?' என்று அவர் மனம் ஓயாமல் அவரைக் கேட்டது. இதுவரையில் பேசாமல் இருந்த ஸரஸ்வதி, "அப்பா! இந்த நதிக்கரையும், அதோ தெரியும் ஸ்ரீரங்கநாதர் ஆலயமும், இந்த ஊரின் அமைதியுமாகச் சேர்ந்துதான் கோபால மாமாவை இப்படி எதிலும் பற்றில்லாமல் வாழச் செய்திருக்க வேண்டும். நான்கூட இங்கேயே தங்கிவிடலாம் என்று பார்க்கிறேன். இந்த ஊரிலேயே ஒரு சங்கீதப் பள்ளிக்கூடம் ஆரம்பித்து விட்டால் என்ன?" என்று ஆர்வத்துடன் தகப்பனாரை விசாரித்தாள்.
"நீ பேசுகிறது நன்றாக இருக்கிறதே குழந்தை! உன் அப்பாவுக்குத் தாம் தாத்தா ஆகவேண்டும் என்று ஆசை ஏற்பட்டிருக்கிறது. நீ விவாகமே வேண்டாமென்கிறாயாம். ஒரு பெண் தனியாக வாழ்க்கை நடத்துவது கடினம் என்பது உனக்குத் தெரியாத விஷயமில்லையே. ஸ்ரீரங்கப்பட்டணம் வந்து நீ சன்னியாசினியாவதற்கு நான் ஒருகாலும் உனக்கு உதவி புரியமாட்டேன் ஸரஸ்வதி! ஆமாம்...." என்று சிரித்துக் கோபால தாஸர் ஸேரஸ்வதியை உரிமையுடன் அதட்டினார்.
ஸரஸ்வதி சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்தாள். பிறகு, நண்பரைப் பார்த்துப் பணிவுடன், "இதென்ன மாமா, இப்படிப் பேசுகிறீர்கள்? எந்த விஷயத்திலும் ஆசை கொள்வதற்கு மனந்தானே காரணம்? என் மனம் என்னவோ கல்யாணத்தைத் தற்சமயம் விரும்பவில்லை. எங்கள் தமிழ் நாட்டில் சில நூற்றாண்டுகளுக்கு முன் ஸ்ரீவில்லி-புத்தூரில் பெரியாழ்வார் என்னும் மகானுக்குக் கோதை என்று ஒரு மகள் கிடைத்தாள். அத்தெய்வக் கன்னி சதாகாலமும் கண்ணனையே அகத்துள் இறுத்தி பக்தி செலுத்தினாள்; காதல் கொண்டாள்; அன்பு பூண்டாள். அகத்திலே அவனுக்கன்றி வேறு ஒருவருக்கு இடம் தர மறுத்தாள்; பெரியாழ்வார், மணப்பருவம் எய்தும் தம் மகளுக்குத் தகுந்த மணாளன் கிடைக்க வேண்டுமே என்று என் தகப்பனார் விரும்பியதைப் போலத்தான் விரும்பினார். ஆனால், அவள் உள்ளத்தை ஆட்கொண்ட மணிவண்ணன் அவளையும் ஆட்கொண்டு அருள் புரிந்தான். தம் மகளால் ஒரு படி உயர்ந்து விட்டார் தந்தை!" என்றாள்.
கோபால தாஸரின் கண்கள் அருவியாக மாறி இருக்க வேண்டும். காவிரியின் பிரவாகத்தைப்போல் அவர் கண்கள் கண்ணீரைக் கொட்டின. அவர் ஸரஸ்வதியின் வார்த்தை களுக்குப் பதில் கூறாமல் புரந்தரதாஸரின் அழகிய பாடலைப் பாட ஆரம்பித்தார்:
----------
முற்றத்தில் துளசி மாடத்தின் முன்பு மணிக்கோலமிடும் தங்கத்தின் எதிரில் ரகுபதி அதிகாலையில் வந்து நின்றான். தலைப் பின்னல் முன் பக்கம் சரிந்து விழ, முதுகில் புரளும் மேலாக்கு நழுவ அவள் கோலமிட்டுக் கொண்டிருந்தாள். கைகள் 'சரசர' வென்று புள்ளிகளை வைத்தன; புள்ளிகளைச் சேர்த்து அழகிய கோலமாக்கின. கோலத்தை முடித்துவிட்டுத் தலை நிமிர்ந்த போது தான் அவள் சற்றும் எதிர்பாராத விதமாக ரகுபதி காட்சி அளித்தான் அங்கே! தங்கம் தன் அழகிய கண்களால் அவனைப் பார்த்துக் கொட்டக் கொட்ட விழித்தாள். பிறகு வழக்கமான சிரிப்புடன், ”ஓ! அத்தானா! வாருங்கள், வாருங்கள், எங்கே இப்படி? ஓஹோ! தீபாவளிப் பிரயாணமோ?" என்று கேட்டாள்.
"அத்தானேதான்! சாட்சாத் ரகுபதி தான். நீ ஊருக்கு வரும்போது யாரிடம் சொல்லிக் கொள்ளாமல் வந்தாயோ, அவனே தான்! தீபாவளி கொண்டாடத்தான் இங்கே வந்திருக்கிறேன்!" என்று சொல்லிவிட்டு, கூடையைப் பிரித்துக் கட்டுக் கதம்பத்தையும், பழங்களையும் எடுத்து அவளிடம் கொடுத்தான்.
'இதற்குள்ளாக உள்ளிருந்து வியப்புடன் அலமு அத்தை பரபரவென்று முற்றத்துக்கு வந்தாள். "வந்தாயாடா, ரகு! வா அப்பா. இப்பொழுதாவது வழி தெரிந்ததே உனக்கு!" என்று அவனை வரவேற்று உபசரித்தாள். தீபாவளி இன்னும் இரண்டு நாட்கள் தாம் இருக்கின்றன என்பதற்கு அறிகுறியாக அவ்வீட்டிலிருந்து 'கம கம' வென்று பலகாரங்களின் வாசனை வீசியது. துளசி மாடத்துக்குக் கோலமிட்டு முடித்தவுடன் தங்கம் கொல்லைப்புறம் சென்றாள். தவிடும், பிண்ணாக்கும் கலந்து பிசைந்து ஆசையுடன் கறவைப்பசுவுக்கு வைத்தாள். 'தக தக' வென்று தேய்த்து அலம்பிய பித்தளைச் செம்பில் நுரை பொங்கும் பாலைக் கறக்க ஆரம்பித்தாள். 'சொர், சொர்'ரென்று பால் பாத்திரத்தில் விழ ஆரம்பித்தது. ரகுபதி, கையில் பல் துலக்கும் 'பிரஷ்'ஷுடன் கொல்லைப்பக்கம் வந்தான். பாலைக் கறந்துகொண்டே தங்கம் அவனைப் பார்த்து. "அத்தான்! கையில் என்னவோ வைத்திருக்கிறீர்களே. அது என்னது? விலை ரொம்ப இருக்குமோ?" என்று கேட்டாள்.
"தூ பிரமாதம்! அதன் விலை ஒரு ரூபாயிலிருந்து இரண்டு ரூபாய்களுக்கு மேல் போகாது" என்றான் ரகுபதி.
தங்கம் ஒரு மாதிரியாகச் சிரித்தாள். பிறகு அவனைப் பார்த்து. “அத்தான்! நான் சொல்கிறேனே என்று கோபித்துக் கொள்ளாதீர்கள். நம் பண்ணைக் குடியானவன் கிட்டே ஒரு வார்த்தை சொன்னால் ஒரு கட்டு வேப்பங் குச்சிகளைச் சீவி ஒழுங்கு படுத்தித் தருவான், விலை, கிலை ஒன்றும் நீங்கள் தர வேண்டாம். ஊருக்குப் போகும்போது எடுத்துப் போங்கள்!" என்றாள்.
ரகுபதி 'கட கட' வென்று சிரித்து விட்டான். அவன் இம்மாதிரி மனம் விட்டுச் சிரித்து எவ்வளவோ காலம் ஆயிற்று. கிணற்றிலிருந்து ஜலம் இழுத்துக் கைகால்களை அலம்பிக் கொண்டே , ”அது போகட்டும். காலையில் எழுந்தவுடன் துளசி மாடத்துக்குக் கோலம் போடுவது. அதன் பிறகு மாட்டிற்குத் தீனி வைத்துப் பால் கறப்பது. அதன் பிறகு?" என்று அவளைக் கேட்டான் ரகுபதி.
"அதன் பிறகு ஏரிக்குப் போய்த் துணிகளைத் துவைத்துக் குளிப்பது" என்று ஒய்யாரமாகப் பதிலளித்தாள் தங்கம்.
"இப்படியே நாள் பூராவும் ஒரு வேலை மாற்றி இன்னொன்று என்று செய்து கொண்டிருப்பாயாக்கும்! வேறு பொழுது போக்கு எதுவும் இல்லையா?" என்று மேலும் கேட்டான் ரகுபதி.
தங்கம் அவனுக்கு மறுமொழி கூறுவதற்கு முன்பே உள்ளிருந்து அலமு அவளைக் கூப்பிட்டாள். பால் பாத்திரத்துடன் உள்ளே சென்ற தங்கம், தட்டில் இட்லிகளுடனும், கையில் மணக்கும் காப்பியுடனும் கூடத்துக்கு வந்து. ரகுபதியின் முன்பு அவைகளை வைத்துவிட்டுத் தாழ்வாரத்திலிருந்த துணிகளை மூட்டையாகக் கட்டி எடுத்துக் கொண்டாள். இடுப்பில் குடத்தை ஒய்யாரமாகச் சாய்த்து வைத்துக்கொண்டு, "ஏரிக்குப் போய்விட்டு வருகிறேன், அத்தான்! வந்த பிறகு அதற்கு அடுத்தாற்போல் என்ன வேலை என்பதையும் சொல்லுகிறேன்" என்று கூறிவிட்டு வெளியே போய்விட்டாள்.
சூரியன் வானத்தில் மேலே வந்து விட்டான். சமையலறை யிலிருந்து கீரைக் குழம்பு 'கம கம' வென்று மணக்க ஆரம்பித்தது. வெறுமனே கூடத்தைச் சுற்றிச் சுற்றி வர ரகுபதிக்குப் பிடிக்கவில்லை. ஆகவே, 'வெளியே போய் வரலாம்' என்று கிளம்பி, அலமுவிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டான். வழியெல்லாம் ஓலை வேய்ந்த குடிசைகள். அவைகளை அடுத்து மரகத வண்ணத்தில் வயல் வெளிகள். அவைகளில் படிந்து 'சல சல" வென்று ஓடும் நீரின் ஓசை. ஈர மண்ணிலிருந்து எழும் ஒருவித வாசனை. வழக்கமாக நகரவாசிகளில் பலர் அத்தர், சந்தணத் தின் மணத்தையே உணர்ந்தவர்கள். சுக போகத்திலேயே திளைப்பவர்கள். காலில் மண் ஒட்டிக் கொண்டால் முகத்தைச் சுளிப்பவர்கள்: இவர்களுக்கு, முழங்கால்கள் வரையில் சேற்றில் அழுந்தப் பாடுபடும் ஏழைக் குடியானவர்களைப்பற்றிச் சிந்திப்பதற்கே பொழுது இருப்பதில்லை. ஈர மண்ணிலிருந்து எழும் வாசனை யை நுகர்ந்து அநுபவிப்பதற்கும் பாக்கியம் செய்ய வில்லை
ரகுபதி சிறிது தடுமாற்றத்துடனேயே வரப்புகளின் மீது நடந்து சென்றான். அங்கே மனத்துக்கு ரம்யமான காட்சி ஒன்றைக் கண்டான். இசையும், கலையும். ஆடலும், பாடலும் நகரங்களில் மட்டும் இல்லை. சேறும், சகதியும், உழைப்பும், பலனும் நிறைந்திருக்கும் கிராமங்களிலும் அவை இருக்கின்றன என்பதை ரகுபதி உணர்ந்து கொண்டான். உடல் கட்டுடன் விளங்கும் இளமங்கை ஒருத்தி வயல்களுக்கு மடை கட்டிக்கொண்டிருந்தாள். சற்று எட்டி, ஏற்றக் கிணற்றிலிருந்து ஓர் ஆடவன் ஏற்றம் இறைத்துக்கொண்டே,
அவன் உள்ளத்திலிருந்து பெருமூச்சு ஒன்று கிளம்பியது. மெதுவாக ஒன்றும் தோன்றாமல் மேலே நடக்க ஆரம்பித்தான் அவன். எதிரில் தங்கம் குளித்துவிட்டு வந்து கொண்டிருந்தாள். உடம்பிலே ஈரப்புடைவை. தோளில் துவைத்த துணிகளின் சுமை. இடுப்பில் நீர் வழியும் குடம். தேர்ந்த எழுத்தாளனாக இருந்தால், அவளைக் குறைந்த பட்சம் இரண்டு பக்கங்களாவது வர்ணித்து விடுவான்? வார்த்தைகளுக்கும், வர்ணனைகளுக்கும் எட்டாத அழகு அது. ஆகவே, அவன் வாயடைத்து அவளுடன் வீடு திரும்பி வந்து சேர்ந்தான்.
------------
தீபாவளி பட்சணத்திற்காக மாவு அரைப்பதற்குத் தகர டப்பாக்களில் சாமான்களை நிரப்பிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள் மங்களம். தலை தீபாவளிக்கு மாப்பிள்ளை வரும் வீட்டில் நிலவ வேண்டிய உற்சாகம் அங்கே காணோம். தீபாவளி அழைப்பு அனுப்பியதைப்பற்றிச் சந்துருவும், சீதாவும், மங்களமும் மட்டும் அறிந்திருந்தனர். முன் ஜாக்கிரதையாக விருந்துக்கு வேண்டிய சாமான்களை வாங்கி வைத்துவிட்டாள் மங்களம்.
"வருஷா வருஷம் வருகிற பண்டிகைதானே? மாப்பிள்ளை வந்து சவரணையாகத் தலை தீபாவளி கொண்டாடுகிறது பாழாகத் தான் போகிறது! எதற்கு இப்படி ஒரேயடியாகச் சாமான்களை வாங்கி நிரப்பி வைத்திருக்கிறாயாம்?" என்று பாட்டி மங்களத்தைக் கேட்டாள். பாட்டியின் வார்த்தைகள் மங்களத்துக்குச் சுரீரென்று தைத்தன. “எதையாவது அச்சான்யமாகச் சொல்லிக்கொண்டு இருப்பதுதான் இந்தக் கிழத்துக்கு வேலை. வீட்டைச் சுற்றிச் சுற்றிவந்து. 'அது எதற்கு; இது என்ன?' என்று ஓயாமல் கேட்டுத்தான் என்ன பலனை அடையப் போகிறாளோ?" என்று மனத்துக்குள் மாமியாரை வெறுத்துக் கொண்டாள்.
தீபாவளி நெருங்கிவிட்டது என்பதற்கு அறிகுறியாக அவ்வப்போது வெடிகளின் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. புடைவைக் கடைகளில் கூட்டம் நெரிந்தது. அசல் நெய்யுடன் மட்ட நெய்யைக் கலந்து புத்துருக்கு நெய் என்று வியாபாரிகள் பீற்றிக் கொண்டனர். பட்டாசுக் கடைகளில் சிறுவர் சிறுமியரின் கூட்டம். குடும்பத் தலைவருக்கு ஒரே தலைவலி, எப்படி ' பட்ஜெட்'டைச் சமாளிக்கப் போகிறோம் என்று.
குதூகலம் நிரம்பியிருக்கும் இந்த நிகழ்ச்சிகளைப் பார்த்துச் சாவித்திரி பெருமூச்செறிந்தாள். 'சௌம்யமான மனத்தைப் படைத்தவர், ஸ்ரீராமர். குற்றமுள்ளவரிடத்தும் நன்மையைச் செய்கிறவர். நன்றியுள்ளவர். சத்தியம் தவறாதவர்' என்றெல்லாம் வால்மீகி ராமாயணத்தில் வரும் வர்ணனையைச் சீதா உரக்கப் படித்துக் கொண்டிருப்பதைச் சாவித்திரி கேட்டாள். கவியின் அமர சிருஷ்டியாகிய ஸ்ரீ ராமசந்திரனின் கல்யாண குணங்களைக் கேட்டவுடன் சாவித்திரியின் உள்ளம் பாகாய் உருகியது. சிறு விஷயத்துக்காக ஏற்பட்ட இவ்வளவு மனஸ்தாபத்தையும், அதைத் தீர்ப்பதற்குத் தெரியாமல் தான் படும் அவஸ்தையையும் நினைத்து அவள் மனம் வருந்தியது. ரகுபதி உயர்ந்த குணங்களைப் படைத்தவன், ஏதோ சில விஷயங்களில் தவிர, பிறர் மனத்தை நோக வைக்கும் குணம் அவனிடமில்லை. தான் செய்த குற்றத்தை உணர்ந்து அவளிடம் நேராகத் தைரியமாக மன்னிப்புக் கேட்டிருக்கிறான். அசட்டுக் கௌரவம் என்பது அவனிடம் லவலேசமும் இல்லை. இத்தகைய குணவானைக் கணவனாக அடைந்தும் அவனிடம் ஒத்து வாழ முடியாமல் போனது எதனால் என்று சாவித்திரி சாவதானமாக இப்பொழுதுதான் ஆராய ஆரம்பித்திருந்தாள். தீபாவளிக்குக் கணவன் வரவேண்டும். பரம சாதுவாகிய தன் மாமியார். பிள்ளையை அனுப்பி வைப்பார் என்றும் நினைத்துக் கொண்டாள், சாவித்திரி.
முற்றத்தில் காகம் உட்கார்ந்து கத்தும் போதெல்லாம், ' ஹோ! அவர் வருகிறார் போல் இருக்கிறது!' என்று நினைத்து உவகை எய்துவாள்.
அன்று ராஜமையர் காரியாலயத்திலிருந்து திரும்பி வரும் போது கையில் பெரிய துணி மூட்டையுடன் வந்து சேர்ந்தார். காப்பி அருந்தி சற்று இளைப்பாறிய பின்பு மூட்டையைப் பிரித்து, "இது சாவித்திரிக்கு. இது சீதாவுக்கு, இது சந்துருவுக்கு. இது உனக்கு" என்று துணிகளை ஒவ்வொன்றாக எடுத்து மேஜை மீது வைத்தார்.
எலோருக்கும் போக ஒரு ஜதை சரிகை வேஷ்டி மிகுந் திருந்தது. சீதா குறும்புத்தனமாக அதைப் பார்த்துக் கொண்டே, * அப்பா! மாப்பிள்ளையை மறக்கவில்லை போல் இருக்கிறதே! ஜம்மென்று சரிகை - போட்டுப் பிரமாதமாக வாங்கியிருக்கிறீர்களே!" என்று கூறிச் சிரித்தாள். மாப்பிள்ளை வருவான் என்று ராஜமையரும் எதிர்பார்த்துத் தான் ஜவுளி எடுத்திருந்தார்.
"அடியே! இரண்டு பவுனில் கைக் கடியாரத்துக்குச் சங்கிலி பண்ணச் சொல்லி இருக்கிறேன். கையோடு இருக்கட்டுமே ஒன்று" என மங்களத்தைப் பார்த்துக் கூறினார் அவர்.
"அழைக்காத விட்டுக்குச் சம்பந்தியாக வரமாட்டானோ, உங்கள் மாப்பிள்ளை! ரொம்பத் தெரிந்தவர், நீங்கள்! உங்கள் தலை தீபாவளிக்கு என் அப்பா எப்படி-யெல்லாம் உபசாரம் பண்ணி இருந்தார் என்பதை நினைத்துப் பாருங்கள். ஒரு மாசத்துக்கு முன்பே கடிதங்களில் உங்களை வரச்சொல்லி எழுதி இருந்தாரே" என்று சமயத்தை விடாமல் மங்களம் இடித்துக் காட்டினாள்.
”ரகுபதியோடு ஸரஸ்வதியும் வருவாள் அம்மா. அவளுக்கு நாம் ஏதாவது தீபாவளிப் பரிசு கொடுக்க வேண்டாமா?" என்று சந்துரு கேட்டான்.
"ஒரு நிமிஷங்கூட ஸரஸ்வதியை நீ மறக்கமாட்டாய் போலிருக்கிறதே! உன் வியாச புஸ்தகம் பூராவும் ஸரஸ்வதி நாம ஸ்மரணையாக இருக்கிறதே! இந்த ஸ்துதியைக் கேட்டு சாக்ஷாத் ஸ்ரீ ஸரஸ்வதியே பிரசன்னமாகி விடுவாள்; இல்லையா அண்ணா?" என்று சீதா தமையனைச் சமயம் பார்த்துத் தாக்கினாள்.
வெட்கத்தால் பதில் ஒன்றும் கூறாமல் சந்துரு மென்று விழுங்கினான். அந்த வீட்டில் ஒவ்வொருவரும் ரகுபதி வர வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். சந்துரு யாருக்கும் தெரியாமல் நடராஜரின் சித்திரம் ஒன்றை வாங்கி வைத்திருந்தான். சாதாரணப் புடைவையும், ரவிக்கையும் உன்னத லட்சியங்களுக்கு இருப்பிடமான ஸரஸ்வதிக்கு அளிப்பதற்குத் தகுதி உள்ளவைகளாக இல்லை. ஸரஸ்வதியைத் தீபாவளியின் போது சந்தித்தால் இந்தக் கலைப் பரிசை அவளுக்குக் கொடுக்க வேண்டும்; அவன் தூய காதல் ஈடேற தில்லையம்பலத்து இறைவன் அருள் புரிவான் என்றும் நம்பினான்..
-------------
மைசூர் ராஜ்யத்தில் பார்க்க வேண்டிய இடங்களை அநேகமாகப் பார்த்து முடித்து விட்டாள் ஸரஸ்வதி. கோபாலதாஸர் வசித்து வந்த வீடும், அதன் சுற்றுப்புறங்களும் அவளுக்கு மிகவும் பிடித்துவிட்டது. சர்க்கார் அலுவலாக வந்திருந்த அவள் தகப்பனார், தம் வேலைகளை முடித்துக்கொண்டு விட்டார். தன் சகோதரியின் குடும்ப நிலையை இதற்குள் அவர் ஒருவாறு ஸரஸ்வதி சொல்லித் தெரிந்து கொண்டிருந்தார். அவர்களிடம் இனிமேல் ஸரஸ்வதி தங்கியிருக்க இயலுமா என்றும் கவலை அடைந்தார் அவர். ஆகையால் அவர் ஊருக்குப் புறப்படுவதற்கு முன்பு, "ஏனம்மா! நீயும் என்னோடு வந்து விடுகிறாயா? வெளி நாடுகளெல்லாம் பார்த்தாற்போல் இருக்கும்” என்று கூப்பிட்டார்.
ஸரஸ்வதி சிறிது நேரம் யோசித்துவிடு. "தீபாவளிப் பண்டிகைக்கு அத்தான் வேட்டகம் போயிருக்கிறான். அநேகமாக மனைவியை அழைத்து வந்து விடுவான். அத்தையிடம் சொல்லிக் கொள்ளாமல் எப்படியப்பா வந்து விடுவது?" என்று கேட்டாள். அதுவும் வாஸ்தவந்தான் என்று தோன்றியது அவருக்கு. மகளைப் பிரிந்து செல்லும்போது அன்புடன் அவள் தலையை வருடிக் கொண்டே, "அம்மா! எல்லாவற்றிலும் நீ புத்திசாலியாக இருக்கிறாய். உன்னிடம் ஒரே ஒரு அசட்டுத்தனம் இருக்கிறது. என் குடும்பத்தின் விளக்கே நீ ஒருத்திதான். இந்த விளக்கால் என் குடும்பம் ஒளிபெற வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். இந்த ஒரு விளக்கிலிருந்து பல தீபங்களை ஏற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். உன் மனசுக்குப் பிடித்தவனாக யாரைச் சொல்லுகிறாயோ அவனை நான் ஏற்பாடு செய்கிறேன், ஸரஸ்வதி!" என்று உருக்கமாகக் கூறினார்.
ஸரஸ்வதியின் பளிங்குக் கன்னங்களில் கண்ணீர் உருண்டு வழிந்தது. ஆர்வத்துடன் தகப்பனாரின் கரங்களைப் பற்றிக் கண்களில் ஒற்றிக்கொண்டாள் ஸரஸ்வதி. பிறகு உதடுகள் உணர்ச்சியால் துடிக்க, "அப்பா! நான் என்றுமே இப்படிக் கன்னியாக இருந்து விடுவேன் என்று கவலைப்படுகிறீர்களா? அப்படி யெல்லாம் நான் விரதம் ஒன்றும் எடுத்துக் கொள்ளவில்லை. லட்சியப் பாதையில் செல்லுகிறவர்கள் வகுத்துக் கொள்ள வேண்டிய இல்லறமே வேறு. அத்தான் ரகுபதி ஒரு லட்சிய வாதி. இசை என்றால் ஆசைப்படுகிறவன். அவன் ஆரம்பித்த கபவாழ்வு இனிமையாக இல்லை. அவன் லட்சியம் ஈடேற அவன் மனைவி அவனுடன் ஒத்துழைக்க மறுக்கிறாள். அவனாவது தன் மனதை மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது அவளாவது அவன் வழிக்குத் திரும்ப வேண்டும். ஆகையால், நான் விவாகம் செய்து கொள்வதற்கு முன்பு யோசித்துத்தான் செய்து கொள்ள வேண்டும். அன்று கூறியதுபோல் நான் ஆண்டாளாக மாறி விடுவேன் என்று வருத்தப்படாதீர்கள். அவ்வளவு பக்தியும், மனத்தெளிவும் சாதாரணப் பெண்ணாகிய எனக்கு இல்லை" என்றாள் அவள்.
சிறிது நேரத்துக்கெல்லாம் வான வெளியில் ஊர்ந்து செலலும் விமானத்தைப் பார்த்துக்கொண்டே நின்றாள் ஸரஸ்வதி. 'அப்பா வந்தார். அவருடன் ஒரு வார காலம் பொழுது சென்றதே தெரியாமல் பல இடங்களைச் சுற்றிப் பார்த்தோம். அத்தானும், சாவித்திரியும் தீபாவளி முடிந்து ஊருக்குத் திரும்பி விடுவார்கள். அத்தையும் நாட்டுப் பெண்ணைப்பற்றிய களிப்பில் என்னை மறந்துபோய்விடுவாள்' என்று சிந்தனை படர்ந்து சென்றது. இவ்வளவு பெரிய உலகில் தான் தனியாக நிற்பதாக ஒருவித பிரமை அவளுக்கு ஏற் பட்டது.
"குழந்தை! வீட்டிற்குப் போகலாமா?" என்று கோபால தாஸர் அவளை அழைத்தபோது தான் அவள் சுய உணர்வை அடைந்தாள். இருவரும் நதிக்கரை ஓரமாகவே நடந்தார்கள். அடிக்கடி ஸரஸ்வதி பெருமூச்சுவிடுவதையும், கண்களைத் துடைத்துக் கொள்வதையும் கவனித்த நண்பர், ”ஏனம்மா! வருத்தப்படுகிறாயா என்ன? அன்று எனக்குப் பலமாக உபதேசித்த நீயா இப்படிக் கண்ணீர் விடுவது? வீட்டிற்குப் போய் நான் எழுதிய 'குழலோசை' என்கிற கவிதையைப் படித்துச் சொல்கிறேன். கேட்டு ஆறுதல் அடையலாம். வா அம்மா!" என்று அன்புடன் கோபால தாஸர் அழைத்தார் ஸரஸ்வதியை.
வீட்டை அடைந்ததும் அன்று காலைத் தபாலில் கடிதம் ஒன்று வந்திருந்தது. ரகுபதி கிராமத்திலிருந்து எழுதிய கடிதம் அது. பொழுது விடிந்தால் தீபாவளி. மனைவியின் வீட்டிற்குச் செல்லாமல், கிராமத்தில் அத்தான் என்ன செய்கிறான் என்று ஆச்சரியம் அடைந்தாள் ஸரஸ்வதி. உறையைக் கிழித்துக் கடிதத்தை எடுத்துப் படித்தாள். அவளுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. சிறிது முன்பு தகப்பனாரைப் பிரிந்ததற்கு வருந்திய ஸரஸ்வதி, இப்பொழுது அத்தானின் போக்கைக் கண்டு வருந்தினாள். குழலோசைக் கவிதைப் புஸ்தகத்தை எடுத்து வந்த கோபால தாஸர் ஸரஸ்வதியின் சிவந்த முகத்தைக் கண்டு பயந்து விட்டார். கையில் பிரித்த கடிதத்துடன் உட்கார்ந்திருந்த அவளைப் பார்த்ததும் காவியங்களில் தோன்றும் கண்ணகியும், திரௌபதியும் அவர் அகக்கண் முன்பு காட்சி அளித்தனர்.
“ என்னம்மா, விஷயம்?" என்று கேட்டார் அவர்,
"இது ஒரு பெரிய ராமாயணம் மாமா. ஆதியோடு அந்தமாக இதைச் சொல்லி முடியாது. என்னுடைய அத்தான் இருக்கிறானே அவன் மனைவியுடன் தீபாவளி கொண்டாட வில்லை. இரண்டுங்கெட்டானாக யார் வீட்டிலேயோ அழைக்காத விருந்தாளியாகப் போய் உட்கார்ந்திருக்கிறான். மனிதன் வாழ்க்கையில் ஏமாறுவது சகஜந்தான். அதைக் காரணமாக வைத்துக் கொண்டு அவன் ஒழுங்கான பாதையிலிருந்து விலகிச் செல்வது தவறு அல்லவா? மனைவி உதாசீனம் செய்கிறாள் என்றால், கணவன் பதிலுக்கு அவளை உதாசீனம் செய்யவேண்டும் என்பது சரியல்ல" என்று கூறிவிட்டுக் கடிதத்தை மறுபடியும் உரக்கப் படித்தாள்:
" அன்புள்ள ஸரஸ்வதிக்கு, ரகுபதி அநேக ஆசீர்வாதம். உன் மைசூர் பிரயாணமெல்லாம் முடிந்து எப்பொழுது நீ ஊருக்குத் திரும்பி வரப்போகிறாய்? உன்னுடன் ஒன்றாக ரெயிலடி வரையில் வந்த நான், என் தீர்மானத்தைத் தகர்த்தெறிந்து விட்டேன். மதிக்காத மனைவியைத் தேடிப் போவதைவிட, மதித்து என்னைத் தன் ஊருக்கு வரும்படி அழைத்த தங்கத்தின் வீட்டில் இப்பொழுது நான் இருக்கிறேன். நாளைப் பொழுது விடிந்தால் தீபாவளி. தீபாவளியும் இங்கேதான். அத்தை அலமு உனக்காக ரொம்பவும் பயப்படுகிறாள். ' நீ இங்கே விருப்பது தெரிந்தால் அந்தப் பெண் ஸரஸ்வதி என்னைப் பொசுக்கி விடுவாள்' என்று அடிக்கடி சொல்கிறாள்.
தங்கம் 'ஸரஸு அக்கா'வை மறக்களில்லை. உன்னிடம் கற்றுக்கொண்ட 'சின்னஞ்சிறு கிளியே- கண்ணம்மா'வைத் தினம் பாடுகிறாள். அந்தப் பெண்ணுக்குத்தான் என்ன சாரீரம் என்கிறாய், ஸரஸு! இறைவன் சிலருக்குத் தான் இந்த பாயத்தை அளிக்கிறான் போலும். தங்கத்துக்கு நிகமாகவே பூட்டிக்கொள்ள உடம்பில் தங்க நகைகள் இல்லையே தவிர, அவள் பசும் பொன் என்பதில் சந்தேகம் இல்லை.
மது நிறைந்திருக்கும் மலர்களைத்தான் வண்டு தேடிக் கொண்டு போகும். மதுவில்லாததும், வாசனை இல்லாததுமான மலர் இங்கே யாருக்கு வேண்டும்?"
ஸரஸ்வதியின் கண்கள் கோபத்தால் சிவந்தன; "அழகாக இருக்கிறது தங்கத்தைப் பற்றிய வர்ணனை! பாவம், பேதைப் பெண்!" என்றாள் ஸரஸ்வதி.
செந்தமிழை நன்றாகப் புரிந்துகொள்ள முடியாத கோபால தாஸர் கவலையுடன், "என்னம்மா இதெல்லாம்? ஊரிலே எல்லோரும் சௌக்கியந்தானே?" என்று விசாரித்தார்.
“சீக்கிரத்தில் நான் ஊருக்குப் புறப்படுகிறேன், மாமா! கொஞ்சம் என் அத்தானுக்குச் சித்தப்பிரமை ஏற்பட்டிருக்கிறது. அதைப்போய்த் தெளியவைக்க வேண்டும்" என்றாள் ஸரஸ்வதி. அந்த அதிசயப் பெண்ணைப் பார்த்துக் கோபால தாஸர் மனத்துக்குள் வியந்தார்.
-------------
கங்கா ஸ்நானம் செய்துவிட்டுப் பட்டாசு கொளுத்திக் கொண்டிருந்தாள், தங்கம். மத்தாப்பின் சிவப்பு ஒளி அவள் சிவந்த கன்னங்களை மேலும் சிவப்பாகக் காட்டியது: மாங்காய்க்கரை போட்டு ரோஜா வர்ணத்தில் சாதாரண நூல் புடைவையை உடுத்தியிருந்தாள் அவள். ரகுபதிக்கு அப்பொழுது இருந்த தாராளத்தில், சாவித்திரிக்காக அவன் வாங்கி வந்திருந்த விலையுயர்ந்த பட்டுப் புடைலையைக்கூடத் தங்கத்திடம் எடுத்துக்கொடுத்து விட்டிருப்பான். ஊரிலே அம்மாவுக்குப் பதில் சொல்லியாக வேண்டும். அந்தப் பகட்டான சேலையைப் பார்த்தாலே தங்கம் பயந்து போவாள்! ஒரு தடவை அதைப் பெட்டியிலிருந்து அவன் வெளியே எடுத்துக் காண்பித்தபோதே தங்கம், "அப்பா!” என்று கண்களைப் பொத்திக் கொண்டாள். ”அப்படியே கண்ணைப் பறிக்கிறதே, இது!" என்று வேறு சொன்னாள். எல்லோர் வீட்டிலும் கங்கா ஸ்நானம் நடக்கிறது என்பதற்கு அடையாளமாக, கிணற்றிலிருந்து ஜலம் இழுக்கும் போது ராட்டினங்கள் 'நொய், நொய்' என்று சத்தமிட்டன. ஒவ்வொருவர் வீட்டுப் புறக்கடையிலிருந்தும் வெந்நீர் அடுப்புப் புகை சுருள் சுருளாக எழுந்தது. குதித்துக் கொம்மாளம் போட்டுக்கொண்டு குழந்தைகள் பட்டாசு சுட்டனர். தலை தீபாவளி நடக்கும் வீடுகளிலெல்லாம் நாதஸ்வரத்தின் இன்னொலி பரவி இருந்தது. ரகுபதி தெருவிலே நின்று கொண்டு இந்தக் காட்சிகளைப் பார்ப்பதில் ஈடுபட்டிருந்தான்.
அவன் அருகில் நின்றிருந்த தங்கம் மத்தாப்பு கொளுத்துவதைத் திடீரென்று நிதுத்திவிட்டுத் எதிர் வீட்டுக்கு ஓடினாள். சிறிது நேரத்துக்கெல்லாம் கையில் செவேல் என்று காணும் ஆரத்தி நீரைக் கொண்டுவந்து தெருக்கோலத்தில் ஊற்றிவிட்டு மறுபடியும் உள்ளே போனாள். மறுபடியும் வெற்றிலைப் பாக்குப் பழத்துடன் வெளியே வந்தாள். ரகுபதி சிறிது நேரம் அவளையே உற்றுப் பார்த்தான். பிறகு, "என்ன? காலையில் வரும்படி பிரமாதமாக இருக்கிறது?" என்று கேட்டான்.
தங்கம் கைகளை விரித்துக் காண்பித்தாள். வெற்றிலைப் பாக்கின் நடுவில் வெள்ளி அரை ரூபாய் ’பளபள'வென்று மின்னி யது. புன்சிரிப்புடன், "அவர்கள் வீட்டில் தலை தீபாவளி. மாப்பிள்ளைக்கும், பெண்ணுக்கும் ஆரத்தி எடுப்பதற்கு அங்கே யாரும் இல்லை. என்னைக் கூப்பிட்டார்கள். போயிருந்தேன். வரும்படி வந்தது. நீங்கள் தான் தீபாவளிக்கு ஊருக்குப் போகாமலும், என்னையும் அழைத்துப் போகாமலும் ஏமாற்றிவிட்டீர்களே! போங்கள் அத்தான்! சாவித்திரி மன்னி உங்களை எவ்வளவு எதிர்பார்த்திருப்பாள்?" என்று கேட்டாள் தங்கம்.
ரகுபதி அதற்கு ஒன்றும் பதில் கூறவில்லை. அசட்டுப் பிசட்டென்று தீபாவளிக்கு வேட்டகம் போகாமல் கிராமத்தில் வந்து உட்கார்ந்திருப்பது ரகுபதிக்கே ஆச்சரியமாகவும், பயமாகவும் இருந்தது. ஊரிலே அம்மாவுக்குத் தெரிந்தால் அவனை லேசில் விடமாட்டாள். ஸரஸ்வதியைப்பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. பைத்தியக்காரத்தனமாக அல்லவா அவன் தங்கத்தை வர்ணித்து ஸரஸ்வதிக்குக் கடிதம் போட்டுவிட்டான்? அதைப் பார்த்ததும் அவளுக்குக் கோபம் ஏற்படும்.
”ஸரஸ்வதிக்கு என்ன வேலை? எல்லோரும் பார்த்துச் செய்த கல்யாணந்தான் இவ்வளவு அழகாக இருக்கிறதே, அவள் ஓயாமல் தர்மத்தைப்பற்றியும், நியாயத்தைப்பற்றியுந்தான் பேசுவாள். அவள் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தால் வாழ்க்கையில் இன்பம் ஏற்பட்டமாதிரிதான்! 'சர்க்கரை' என்று சீட்டில் எழுதிச் சுவைத்தால் இனிக்குமா, அல்லது சர்க்கரையை அள்ளித் தின்றால் அதன் சுவை தெரியுமா? ’சாவித்திரி, சாவித்திரி' என்று ஜபித்துக் கொண்டிருந்தால் என் வாழ்க்கை இனித்தமாதிரி தான்" என்று ரகுபதி அலுத்துக்கொண்டான்.
பொழுது நன்றாக விடிந்துவிட்டது. எதிர் வீட்டுக் காமரா அறையில் ஓர் அழகிய காட்சியைக் கண்டான் ரகுபதி. இளம் பெண் ஒருத்தி தட்டில் பலகாரங்களும், காப்பியும் வைத்து எடுத்து வருகிறாள். லேசாகத் திறந்திருந்த கதவை அழுத்தி மூடிவிட்டு, அவள் கையிலிருந்த தட்டை வாங்கி மேஜைமீது வைத்து விடுகிறான் கணவன், தட்டிலே நாவில் ஜலம் ஊறச் செய்யும் பலகாரங்கள் இருக்கின்றன. ஆவி பறக்கும் காப்பி ’கமகம' வென்று மணக்கிறது. அவைகளிலெல்லாம் கணவனுக்கு ஒரு விசேஷமும் தென்படவில்லை. பசி ஏப்பக்காரன் முன்பு அல்லவா அவைகளை வைக்கவேண்டும்? பலகாரங்களுக்காகவும், ’ஸ்ட்ராங்' காப்பிக்காகவும் காதங்கடந்து அவன் வந்திருக்க வேண்டியதில்லை. மனைவியின் மெல்லிய கரங்களைப் பற்றித் தன் கைகளுக்குள் சேர்த்துக்கொள்கிறான்.
ரகுபதிக்கு மேலும் தான் அங்கே நிற்பது அசம்பாவிதம் என்று தோன்றியது. அறைக்குள் சென்று உட்கார்ந்து விட்டான். லேசாகத் திறந்திருந்த கதவை நன்றாகத் திறந்து கொண்டு தங்கம் பலகாரத் தட்டுடன் உள்ளே வந்தாள். தட்டைத் தானாகவே மேஜை மீது வைத்தாள். பிறகு, 'காப்பி கொண்டு வருகிறேன்' என்று வெளியே புறப்பட்டாள். ரகுபதி எழுந்தான். இரண்டடி முன்னே சென்றான். தங்கத்தின் புடைவை மேலாப்பு காற்றில் பின்புறம் பறந்து கொண்டிருந்தது. அதைத் தொட்டுவிட்டான். ஆனால், எங்கிருந்தோ ஒரு குரல் கண்டிப்பாக அவனை எச்சரித்தது! மெல்லிய காற்றில் காலையில் ஏரிக்கரையிலிருந்து வந்த குரல் அது.
'லோக நாயகனாகிய ஸ்ரீராமன், ஏகபத்தினி விரதத்தை அனுஷ்டிப்பவன்; சதா சீதையை நினைத்து அவளிடம் மனத்தைச் செலுத்துபவன்; சொன்ன சொல்லைக் கடவா தவன் சத்தியசந்தன்.' இப்படிப்பட்ட ஸ்ரீராமனை நான் வணங்குகிறேன்' என்று பொருள் செறிந்த கவிதை ஒன்றைப் பாடிக்கொண்டே வயது முதிர்ந்த அந்தணர் ஒருவர் வீதி வழியே வந்து கொண்டிருந்தார்.
தங்கம் காப்பியை எடுத்துக்கொண்டு உள்ளே வரவில்லை. பாடிக்கொண்டு செல்லும் அந்தணருக்குப் பிக்ஷை அளித்து விட்டுக் கீழே விழுந்து அவர் பாதங்களில் நமஸ்கரித்தாள்.
ரகுபதி இடியால் தாக்குண்டவன் போல் அயர்ந்து போய், கவிதையை நினைத்து நினைத்துப் பார்த்துக்கொண்டான்; அவன் செய்கை அவனுக்கே வெறுப்பை அளித்தது. 'சீ, சீ! என்ன நீச மனோபாவம்? மனிதன் வாழ்க்கையில் ஏமாற்றமடைந்து விட்டால் தான் என்ன? இப்படியா என் புத்தி பேதலிக்க வேண்டும்?' என்று வருந்தினான் அவன்.
அத்தை அலமு காப்பியை எடுத்துக்கொண்டு உள்ளே வந்தாள். "ஏண்டா அப்பா! தீபாவளிக்குப் போகாமல் இங்கேயே தங்கிவிட்டாயே. உன் அம்மாவுக்குத் தெரிந்தால் வீண் மனஸ்தாபம் ஏற்படுமே. ஸரஸ்வதி என்னை வெறுமனே விட மாட்டாளே, அப்பா!" என்றாள் அவள்.
ரகுபதி அவளுக்கு மறுமொழி கூறாமல் காப்பியை அருந்தி விட்டு வெளியே போய் விட்டான்.
-----------
தலைத் தீபாவளிக்கு மாப்பிள்ளை வரவில்லை என்கிற ஒரு காரணமே மங்களத்தை மறுபடியும் படுக்கையில் தள்ளி விட்டது எனலாம். எந்த அழைப்பை வைத்துக்கொண்டு மாப்பிள்ளை வருவான் என்று எதிர்பார்த்திருந்தாளோ, அந்த அழைப்பை அவன் லட்சியம் செய்யவில்லை என்பதைப் புரிந்து கொண்டாள் மங்களம். இரு குடும்பங்களுக்கும் சௌஜன்ய பாவம் நிறைந்திருந்தால் ஒரு வேளை மாப்பிள்ளை அழைக்காமலேயே வந்திருப்பான்: ஓர் இடத்தில் பிரியமும், மதிப்பும் ஏற்பட்டுவிட்டால் அவர்கள் செய்யும் பெரிய குற்றங்களைக்கூட மறந்து விடுகிறோம். அவர்கள் நம்மை 'வா' என்று கூப்பிடாததற்கு முன்பே, நாமாகவே வலுவில் அங்கு போகிறோம். அவர்கள் முகங் கொடுத்துப் பேசாமல் இருந்தாலும் பாராட்டாமல் வந்து விடுகிறோம். "அவர்கள் சுபாவம் அப்படி" என்று நம் மனத்துக்கே நாம் தேறுதல் கூறிக் கொள்கிறோம். பிடிக்காத இடமாக இருந்தாலோ, ஒவ்வொரு விஷயத்தையும் தவறாக எடுத்துக்கொண்டு பிரமாதப்படுத்துவது மனித சுபாவம்.
சாதாரண சமயமாக இருந்தால் சந்துரு எழுதிய கடிதமே ரகுபதி வருவதற்குப் போதுமானது. ராஜமையர் வேறு எழுத வேண்டும் என்கிற அவசியம் இல்லை. சாவித்திரி தீபாவளிக்கு ஒரு மாசம் முன்பே கணவனுக்கு அன்புக் கட்டளை இட்டிருந்தால் வேறு ஒருத்தருமே கடிதம் போட்டிருக்க வேண்டாம்! ரகுபதி ஓடோடியும் வந்திருப்பான். நிலைமை மாறி இருக்கும்போது இவ்வளவு சரளமான சுபாவத்தை நாம் எதிர்பார்க்க முடியாது.
வீட்டில் எப்போதும் சண்டையும், சச்சரவும், வாதப் பிரதி வாதங்களுமாகச் சேர்ந்து மங்களத்தின் மனத்தை வெகுவாகக் கெடுத்துவிட்டன. சிறு வயதிலிருந்து மரியாதை செலுத்தி வந்த தன் மாமியாரிடம் மங்களத்தின் மனம் கசந்தது. மனஸ்தாபம் முற்றி விடுவதற்கு முன்பே ராஜமையர் தாயாரைத் தம் சகோதரியிடம் அனுப்பிவைத்தார். குடும்பத்துச் செய்திகள் ஒன்றுக்குப் பத்தாக ஊரில் பரவுவதை அவர் விரும்பவில்லை.
'சாவித்திரியின் மனம் ஒரு பெரிய புதிர். அவளுடைய மனத்தில் மாறுதல் ஏற்பட்டிருக்கிறதா? கணவனைப் பார்த்து, அவனுடன் சென்று வாழ்க்கை நடத்த வேண்டும் என்று அவள் ஆசைப்படுகிறாளா?' என்பதை யாராலும் அறிய முடியவில்லை. பெற்ற தாயிடமும், உடன் பிறந்த சகோதரியிடமுமே அவள் மனத்தை ஒளித்தாள் என்றால் வேறு யார் அவளை அறிய முடியும்? அவள் மனம் உற்சாகமில்லாமல் இருந்து வருவதை மட்டும் சீதா கண்டுபிடித்துவிட்டாள். வீட்டை விட்டு வெளியே எங்கும் போவதில்லை. கூடப் படித்த சிநேகிதிகளிடம் அதிகம் பேசுவதில்லை. அவர்களாகத் தேடி வந்தாலும், அவள் முகங்கொடுத்துப் பேசாவிட்டால் தாமாக விலகிச்சென்று விடுவார்கள்.
அன்று பிற்பகல் கூடத்தில் படுத்திருந்த தாயிடம் சந்துரு வந்து உட்கார்ந்தான். வாஞ்சையுடன் தாயின் கரங்களைப் பிடித்துக்கொண்டு, "ஏனம்மா! தீபாவளிக்கு முன்பு உடம்பு தெம்பாகச் சற்று நடமாடிக்கொண்டிருந்தாயே. மறுபடியும் படுத்துவிட்டாயே!" என்று விசாரித்தான்.
மங்களத்தின் கண்களில் கண்ணீர் பெருகியது.
"ஆமாம் அப்பா! 'மாப்பிள்ளை வருவான், சாவித்திரியை அழைத்துப்போவான்' என்கிற நம்பிக்கையே 'டானிக்' மாதிரி உடம்புக்கு வலுவைத் தந்தது. அவன் வரவில்லை என்றதும் மனம் சோர்ந்துவிட்டது. சந்துரு! இந்த நிலையில் நான் அதிக காலம் இருக்க மாட்டேன் என்று தோன்றுகிறது. எனக்கு ஒருவரைப் பற்றியும் கவலையில்லை. சீதா புத்திசாலி. பிறர் சுபாவம் தெரிந்து பழகிக்கொள்வாள். கண்டிப்பாகப் புக்ககத்தில் நல்ல பெயர் வாங்கிவிடுவாள். நல்ல குணமுள்ள பெண்ணாக நீ கல்யாணம் பண்ணிக் கொண்டு விட்டாயானால் அவள் உன் தகப்பனாரைக் கவனித்துக் கொள்வாள். குடும்பம் செழித்துப் பெருகும்போதே மஞ்சளும், குங்குமமுமாக நான் போகிறதில் எனக்குக் கவலையில்லை. சாவித்திரி வாழாப் பெண்ணாக இருந்து விடுவாளோ என்று என் ஹிருதயம் அலறித் துடிக்கிறது. கணவனிடம் கண்ணை மூடிக்கொண்டு பக்தி செலுத்தும் என் வயிற்றில் இந்தப் பெண் எங்கேயிருந்து வந்து பிறந்தாள் என்று மனம் கிடந்து தவிக்கிறது" என்று நா தழுதழுக்கக் கூறினாள் மங்களம்.
சந்துரு தாயின் கரங்களில் முகத்தைப் புதைத்துக் கொண்டு, ”அம்மா! நீ என்ன செய்யச் சொல்கிறாயோ அப்படிச் செய்கிறேன் அம்மா. ரகுபதியை நேரில் போய்ப் பார்த்துப் பேசுகிறேன். அதற்காக அப்பா என்னைக் கோபித்துக்கொண்டாலும் பரவாயில்லை. ரகுபதியே என்னை மரியாதைக் குறைவாக நடத்தினாலும் பொறுத்துக் கொள்கிறேன். ஒரு நன்மை விகாவதற்காக ஆயிரம் பிழைகளைப் பொறுக்கலாம். அம்மா. உன் மனம் குளிர்வதற்காக நான் அவமானம் அடைந்தாலும் பாதக மில்லை. எனக்கு விவரம் தெரிந்த நாட்களாகப் பரம சாதுவாகக் குடும்பத்துக்கே உழைத்து, அதில் காணும் நலன்களைக் கண்டு பெருமைப்படும் உனக்காக நான் இந்தச் சிறு காரியத்தைச் செய்யக்கூடாதா என்ன?" என்றான் உணர்ச்சியுடன்.
காலேஜிலிருந்து திரும்பி வந்த சீதா தமையன் கடைசியாகக் கூறிய வார்த்தைகளைக் கேட்டாள். பிறகு அவனைப் பார்த்து.. " அண்ணா ! அத்திம்பேர் ஊரில் இல்லையாம். அவருடைய கிராமத்தில் இருக்கிறாராம். ஸரஸ்வதி மைசூருக்குப் போய் இருக்கிறாளாம். ஊரிலே ஸ்வர்ணம் மாமி மட்டும் இருப்பதாக என் சிநேகிதி ஒருத்தி சொன்னாள்" என்று தெரிவித்தாள்.
மங்களம் ஆவலுடன் சந்துருவின் முகத்தைப் பார்த்தாள். பிறகு அவனைப் பார்த்து. ஸரஸ்வதியின் விலாசம் தெரிந்தாலாவது, நீ அவளுக்காவது ஒரு கடிதம் போடலாம். இந்தக் காலத்தில் இதிலெல்லாம் தவறு ஒன்றுமில்லையே. விலாசமும் தெரிய வில்லையே. என்ன செய்கிறது இப்போது?" என்று கவலையுடன் கேட்டாள்.
"இனிமேல் நேரில் தான் எல்லா விஷயங்களையும் தீர்க்க வேண்டும் அம்மா. ஸரஸ்வதி இதில் தலையிட்டிருந்தால் இந்த விஷயம் இவ்வளவு முற்றி இருக்காது. அவள் விலகிச் சென்றிருப்பதைக் கவனித்தால் இதில் தலையிட அவளுக்கும் விருப்ப மில்லையோ என்று தோன்றுகிறது. ஆனால், தன் அத்தானின் குடும்பம் ஒழுங்குபடுவதை அவள் விரும்பாமல் இருக்க மாட்டாள். நானே கிராமத்துக்குப் போய் ரகுபதியைப் பார்த்து வருகிறேன்", என்று கூறினான் சந்துரு.
" அப்படித்தான் செய்! ஒருவேளை நீ கிராமத்திலிருந்து. திரும்புவதற்கு முன்பே மைசூரிலிருந்து ஸரஸ்வதி வந்து விட்டாளானால் அவளையும் இங்கு அழைத்து வா. அந்தப் பெண்ணின் முகம் என் மனசைவிட்டு அகலவே மாட்டேன் என்கிறது. கடந்த ஏழெட்டு மாசங்களாகத்தான் அவளை எனக்குத் தெரியும். ஆனால், அவளை நான் எப்பொழுதோ எங்கோ பார்த்த மாதிரியே இருக்கிறதப்பா!" என்றாள் மங்களம்.
"அதான் சொல்லிவிட்டேனே, உனக்காக நான் ரகுபதியைப் போய்ப் பார்த்துச் சமாதானம் பண்ணுகிறேன் என்று. நாம் எல்லாரும் நினைக்கிற மாதிரி ரகுபதி அவ்வளவு முரடன் இல்லை. எப்படியும் உன் பெண்ணும், மாப்பிள்ளையும் ஒன்று சேர்ந்து விட்டார்களானால் எனக்கு என்ன அம்மா தருவாய்?"" என்று சிரித்துக் கொண்டே தாயைப் பார்த்துக் கேட்டான் சந்துரு.
" உனக்குத் தருவதற்கு என்னிடம் என்ன அப்பா இருக்கிறது? பெற்று, வளர்த்து, அறிவு புகட்டிப் பெரியவனாக்குவது வரை என் கடமை தீர்ந்துவிட்டதே. இன்னொன்று பாக்கி இருக்கிறது. நல்ல பெண்ணாகக் கலியாணம் செய்து கொண்டு நீ வாழவேண்டும் என்கிற ஆசியைத்தான் நான் தரமுடியும்!" என்று உருக்கமாகக் கூறினாள் மங்களம்.
சந்துரு வெட்கத்தினால் சிறிது நேரம் தலைகுனிந்து உட்கார்ந்திருந்தான். அருகில் கேலிச் சிரிப்புடன் நிற்கும் சீதாவைப் பார்த்து. "என்னவோ சொல்ல வேண்டும் என்று துடித்துக் கொண்டு நிற்கிறாயே சீதா, சொல்லிவிடேன்" என்றான்.
"இந்தப் பகிரங்க ரகசியத்தை நான் தான் சொல்ல வேண்டுமா அம்மா? சாதாரண ஸரஸ்வதியாக அந்த ஸரஸ்வதி இங்கே வருவதை அண்ணா விரும்பவில்லை. உன் நாட்டுப் பெண்ணாகத்தான் வர வேண்டுமாம். இந்த ரகசியத்தைச் சொன்னதற்கு எனக்கு என்ன பரிசு தரப்போகிறாய் அண்ணா?" என்று குறும்புத்தனத்துடன் கேட்டாள் சீதா.
"தெய்வ சங்கல்பம் இருந்தால் நடக்கட்டுமே அப்பா! என்னைப் பொறுத்தவரையில் உன் மகிழ்ச்சி ஒன்றுதான் எனக்கு முக்கியமானது" என்றாள் மங்களம்.
"இது என்னுடைய ஆசை மட்டுந்தான். ஸரஸ்வதியின் மனசைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது."
"ஏதேது அண்ணா. அஸ்திவாரம் பலமாகப் போட்டு விட்டாயே!" என்று சீதா மறுபடியும் சிரித்தாள்.
"அஸ்திவாரம் போட்டுவிட்டால் கட்டிடம் எழும்பின மாதிரியா சீதா? ஸரஸ்வதியின் மனதைப்பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. எவ்வளவு சரளமான சுபாவமுடையவளாக இருக்கிறாளோ, அவ்வளவுக்கு அவள் மனம் ஆழமானது. மனத்தில் எழும் உணர்ச்சிகளை லேசில் வெளியிடவே மாட்டாள்!"
"உனக்குச் சம்மதமிருந்து. அவளுக்கும் இஷ்டமிருந்தால் நடக்கட்டுமே. இந்தப் புது சம்பந்தத்தால் நம்முடைய பழைய குற்றங்கள் மறைந்த மாதிரியும் இருக்கும்" என்றாள் மங்களம்.
கொல்லைப் பக்கத்திலிருந்து வேகமாக வந்த சாவித்திரி கடைசியாகத் தாயார் கூறியதைக் கேட்டாள். 'நம்முடைய குற்றங்கள் மறைந்த மாதிரியும் இருக்கும்' என்று கூறியது அவள் செவிகளில் மணி ஓசைபோல் கேட்டுக்கொண்டே இருந்தது.
'நம்முடைய குற்றம்! நம்முடைய குற்றம்!' என்று அவள் மனம் உருப் போட்டது. ”நம்முடையது' அல்ல. சாவித்திரியின் குற்றம். என்னுடைய குற்றம்” என்று சொல்லிக் கொண்டாள் சாவித்திரி, தன் மனத்துக்குள்.
அவரவர்களுடைய குற்றத்தை உணர்வதே ஒரு தனிச் சிறப்பு வாய்ந்த குணம். அதை உணர்ந்து மனம் வருந்தினாலே போதும். 'குற்றங்களையெல்லாம் குணமாகக் கொள்ளும் குணக் குன்றாகிய இறைவன்' நம்மை மன்னித்து நாம் வாழ வழி செய்வான்.
---------
பொழுது விடிந்தால் ஸரஸ்வதி ஊருக்குப் புறப்பட வேண்டும். மைசூர் ராஜ்யத்தில் பல இடங்களில் அவள் கச்சேரிகள் நடைபெற்றன. கோபாலதாஸர் அக்கறையுடன் அவளைக் கவனித்துக் கொண்டார். அதிகமாகப் புகழும், பொருளும் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசையைவிட, கலை மூலமாக - நாதோபாஸனையின் மூலமாக-- உள்ளத்தைத் தூய்மைப் படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற ஆசைதான் ஸரஸ்வதியிடம் மேலோங்கி இருந்தது. அன்று வெள்ளிக்கிழமை ஆதலால் காலையிலேயே ஸரஸ்வதி கோபாலதாஸருடன் சாமுண்டிமலைக்குப் புறப்பட்டாள். பனி போர்த்த மைசூர் நகரம் இன்னும் விழித்துக்கொள்ளவில்லை. 'சிலு சிலு' வென்று நடுக்கும் குளிரில், ஸரஸ்வதி காவிரியில் ஸ்நானம் செய்துவிட்டு மலைக்குப் புறப்பட்டு விட்டாள். மலை அடிவாரத்தை அடைந்ததும் கோபாலதாஸர் அவளைக் கனிவுடன் பார்த்து, "குழந்தை! உன்னால் மலை ஏற முடியுமா? இல்லாவிடில் 'டாக்ஸி' வைத்துக் கொள்ளலாமா?" என்று கேட்டார்.
"வேண்டாம் மாமா! மெதுவாக நடந்து இயற்கைக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டே போகலாம். நாம் யந்திர யுகத்தில் வசிப்பது தான் தெரிந்த விஷயமாயிற்றே. தெய்வ சந்நிதானத்தில் கூடவா நம் அவசரத்தைக் காண்பித்துக் கொள்ள வேண்டும்?' என்று கூறிப் படிகளின் வழியாக ஏற ஆரம்பித்தாள்.
மைசூர் நகரம் அமைதிக்கு இருப்பிடம். அங்கு அமைதியாகப் பெருகி ஓடும் காவிரியே அதற்குச் சாட்சியாக விளங்குகிறாள். நவராத்திரிகளில் கோலாகலம் நிரம்பியிருக்கும் இந்த அழகிய நகரத்தில், மற்ற நாட்களில் அமைதியைக் காணலாம். மலை மேல் உயர்ந்து நிற்கும் கோபுரத்தைப் பார்த்ததுமே ஸரஸ்வதியின் உள்ளம் சிலிர்த்தது. ஜகன்மாதா என்று அழைக்கப்படும் தேவி இங்கு ரௌத்ராம்சத்தில் வீற்றிருக்கிறாள். தாயின் அன்பில் கோபத்தையும், கண்டிப்பையும் காணமுடிகிறதே. அப்படி லோகமாதாவின் அன்பிலே கோபம் பொங்கி வழிகிறது. ’அதர்மத்தைப் பொறுக்கமாட்டேன்' என்று கர்ஜித்து கோரரூப மெடுத்து அதைச் செயலிலும் காட்டி இருக்கிறாள் ஈஸ்வரி.
சந்நிதியின் முன்பு கூப்பிய கரங்களுடன் ஸரஸ்வதி நின்றிருந்தாள். கண்களிலிருந்து அருவிபோல் நீர்பெருக, "ஜய சங்கீத ரஸிகே!" என்கிற சியாமளா தண்டக ஸ்லோகத்தில் ஒரு வரியைத் திருப்பித் திருப்பி வாய்க்குள் பாடிச்கொண்டாள் அவள்.
"உன்னத லட்சியங்களுக்கு இருப்பிடமாகவும், மனத் தூய்மையுடனும், உன்னிடம் மாறாத பக்தியைச் செலுத்துபவளாகவும் என்னை வைத்திரு. தாயே!" என்று உள்ளம் உருகப் பிரார்த்தித்தாள் ஸரஸ்வதி.
கோவிலைவிட்டுக் கீழிறங்கி ஸ்ரீரங்கப் பட்டணத்தை அடைவதற்குள் ஸரஸ்வதியின் மனம் தூய்மை பெற்றுவிட்டது எனலாம். சில நாட்களாகவே அவள் உள்ளம் சந்துருவை அடிக்கடி நினைக்க ஆரம்பித்திருந்தது. இதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால், இடையில் தன் உறுதி தளர்ந்து போவதை அவள் விரும்பவில்லை. சந்துருவைத் தான் மணந்து தான் ஆக வேண்டும் என்கிற அவசியமும் ஒன்றும் இல்லை. அந்த உறுதி வலுப்பெற ஸ்ரீ சாமுண்டீச்வரி அவளுக்கு அருள் புரிந்தாள். சமீபத்தில் விவாக பந்தத்தில் சிக்கவேண்டாம் என்றும் தீர்மானித்துக் கொண்டாள் ஸரஸ்வதி.
அதற்கு அநுசரணையாகக் கோபாலதாஸர் வழி நெடுக ஸரஸ்வதியைப் பார்த்து, ”திருச்செந்தூர் பார்த்திருக்கிறாயா? பழனிக்குப் போய் இருக்கிறாயா? மதுரையில் மீனாக்ஷியை வணங்கி இருக்கிறாயா? கண்ணனின் வேய்ங்குழல் நாதத்தால் புனித மாக்கப்பட்ட பிருந்தாவனம், வட மதுரைக்குப் போய்ப் பாரம்மா. கோகுலத்தில் அவன் திவ்யரூபத்தை நீ வணங்க வேண்டும். பக்தை மீராவின் பாடல்களைக் கேட்க வேண்டும். ’தாஸ மீராலால கிரிதர'னின் புகழைக் கேட்க வேண்டும். உலகம் உன்னுடைய அத்தையையும், அத்தானையும், சாவித் திரியையும் மட்டும் கொண்டதல்ல. உலகம் பரந்தது. அதில் எல்லோரும் உன் நண்பர்கள், உறவினர்கள் என்கிற மனப் பான்மையை நீ வளர்க்க வேண்டும். எப்பொழுதாவது இல்லறத்தில் நீ ஈடுபட்டாலும் ஆண்டவனிடம் பக்தி செலுத்து வதை மட்டும் மறக்காதே. இறைவனின் திவ்ய ரூபத்தை உன் மனசில் பிரதிஷ்டை செய்து கொள் அம்மா. உனக்கு ஒரு குறைவும் வராது!" என்று பல விஷயங்களைக் கூறி ஆசீர்வதித்தார்.
ரெயில் நிலையத்துக்கு வழி அனுப்ப வந்திருந்தார் கோபால தாஸர். வீட்டைவிட்டுக் கிளம்புவதற்கு முன்பே ஸரஸ்வதி அவரை வணங்கினாள். "மாமா! எனக்குத் தெரியாத பல விஷயங்களைத் தெரிய வைத்தீர்கள். என் அத்தானையும், சாவித்திரியையும் ஒன்று சேர்த்த பிறகு அத்தையுடன் நான் வட நாட்டுக்குப் புறப்படுகிறேன். ஒன்று சேர்ந்த தம்பதிகளிடமிருந்து சில நாட்கள் நாங்கள் பிரிந்து தான் இருக்க வேண்டும். கட்டாயம் பக்தை மீரா வசித்த புனித ஸ்தலத்துக்குப் போகிறேன். அவள் அழகிய பாடல்களைக் கற்றுக்கொள்கிறேன். துளசிதாஸரின் அருமையான ராமாயணக் கவிதைகளைப் படிக்கிறேன், வங்கத்துக்குச் சென்று மகாகவி தாகூரின் உபதேசங்களைக் கேட்கிறேன். ராஜகட்டத்துக்குப் போய் அண்ணல் காந்தியடிகளுக்கு மரியாதை செலுத்துகிறேன். என்னை ஆசீர்வதித்து அனுப்புங்கள்!" என்று அவரை வேண்டிக்கொண்டாள்.
------------
தீபாவளிப் பண்டிகைக்கு அப்புறம் கிராமம் மறுபடியும் அமைதியில் ஆழ்ந்துவிட்டது. தங்கம் முன்னைப்போல ’ரகுபதி' யிடம் அதிகம் பேசுவதில்லை. 'படித்தவர் என்று சொல்லிக் கொள்கிறாரே தவிர, கொஞ்சமாவது நல்லது கெட்டது தெரிய வில்லையே இந்த அத்தானுக்கு!' என்று நினைத்துக்கொண்டாள் தங்கம். ஏற்கனவே ஊரார் அவளைக் கல்யாணம் ஆகாமல் குதிர் மாதிரி நிற்பதாக வர்ணித்து வந்தார்கள். குதிரை மாதிரி திரிவதாகவும் கதை கட்டியிருந்தார்கள். வாயாடி என்று வேறு நாமகரணம் சூட்டி இருந்தார்கள். ’கன்னாபின்னா' என்று பல்லைக் காட்டும் கிராமத்து வாலிபர்களுக்குத் தங்கத்தைக் கண்டாலே சிம்ம சொப்பனம்! ஏரிக்கரையில் அவளிடம் அசம்பாவிதமாக நடந்து கொண்ட வாலிபன் ஒருவனுக்குத் தங்கத்தை நினைத்த போதெல்லாம் முதுகிலே யாரோ சாட்டையால் 'சுளீர் , சுளீர்' என்று அடிப்பது போல் பிரமை ஏற்படுவதுண்டு. துணிகளைத் துவைக்கும் தங்கத்தின் எதிரில் சிரித்துக் கொண்டே நின்றதன் பலனை அனுபவித்திருந்தான் அவன். தங்கம் அவனை ஏறிட்டுக்கூடப் பார்க்கவில்லை. பச்சைத் தண்ணீரில் புடைவையை நனைத்து முறுக்கிப் பிழிந்து கல்லின் மீது 'பட் பட்’டென்று அடித்தாள். வேகமாக சுழற்றிச் சுழற்றி வீசினாள். 'சுளீர்' என்று ஜலம் வேகமாக வாலிபனின் முகத்தில் தெறித்தன. அவன் முதுகைத் திருப்பிக்கொண்டு நின்றபோது 'சுரீர்' என்று முதுகில் தெறித்தன. அவன் திரும்பிப் பார்த்தபோது தங்கம் புடைவையை முறுக்கிப் பிழிந்து கையை ஓங்கிக் கொண்டு நின்றிருந்தாள். வாலிபனின் எண் சாண் உடம்பும் ஒரு சாணாகக் குறுகியது. அன்றுமுதல் தங்கத்தை அவன் கோவிலில் வணங்கும் பர தேவதையாக நினைத்தான். அவள் இருக்கும் திசைக்கே ஒரு கும்பிடு போட் டான்! அவள் ரொம்பவும் கண்டிப்புக்காரி என்பதைக் கிராமத்து ஏழை ஜனங்கள் புரிந்து கொண்டிருந்தார்கள். ’தங்கம்மா எத்தனை வருசம் கல்யாணம் கட்டிக்காமல் இருந்தாலும் பரவாயில்லை அம்மா. அது துரோபதை மாதிரி தன்னைத்தானே காப்பாத்திக்கும். அஞ்சு புருசன் இருந்தும் துரோபதை அம்மாளை யாரம்மா காப்பாத்தினாங்க? நம்ப தங்கம்மாவுக்கு அந்தச் சாமர்த்தியம் இருக்குது. அர்ச்சுன ராஜாமாதிரி நல்ல புருசனா அதுக்குக் கிடைப்பாங்க. கவலைப்படாதீங்க!' என்று அலமுவுக்கு ஆறுதல் கூறுவார்கள்.
சிப்பியிலே நல்முத்து விளைகிறது. பட்டுப் புழுவில் அதி அற்புதமான பட்டு உற்பத்தியாகிறது. சேற்றிலே செந்தாமரை மலர்கிறது. ஈசன் வண்ண மலர்களில் மட்டும் துவைத் தேக்கி வைக்கவில்லை. அழகு விளைவதற்கு நல்ல இடங்கள் தாம் வேண்டும் என்பதில்லை. சமதிருஷ்டியுடன் அவன் எல்லா இடங்களிலும் அழகைத் தேக்கி வைத்திருக்கிறான். படித்த பெண்களுக்கு இல்லாத சில அரிய பண்பாடுகள் தங்கத்தினிடம் நிரம்பி இருந்தன. எல்லோரையும் மரியாதையாகக் கௌரவிக்கத் தெரியும் அவளுக்கு; நாலு பேரை மதித்து நாலு வார்த்தைகள் பேசத் தெரியும்; செய்துவிட்ட குற்றத்தை உணர்ந்து மன்னிப்புக் கேட்கும் பண்பும் அவளுக்குத் தெரியும். பிறவியுடன் அறிவு பிறந்துவிடுகிறது. அதை வளர்க்கத்தான் கல்வி அறிவு பயன் படுகிறது. சிறந்த பண்பாட்டைப் பெண்கள் பெற அதற்கேற்ற குடும்பச் சூழ்நிலை அவசியமாகிறது. உள்ளத் தூய்மையும், அகந்தையற்ற தன்மையும் உள்ள பெரியவர்களிடை குழந்தைகள் வளர்ந்து வந்தால் அவர்கள் குணத்தை இவர்களும் அடை கிறார்கள். போலிக்கௌரவமும், ஒருவரையும் மதியாத சுபாவமும் நிறைந்த கூட்டத்தில் வளரும் குழந்தைகள், அந்த மனப்பான் மையைத்தான் வளர்த்துக் கொள்வார்கள். தப்பித் தவறி எங்கோ விதி விலக்காகச் சிலர் இருப்பதைப் பார்க்கலாம். பெரும்பாலும் இப்படித்தான் இருக்கிறது.
தங்கத்தின் மனம் எவ்வளவு தெளிவாக இருக்கிறதோ அவ்வளவு கண்டிப்பும் நிறைந்திருந்தது. ஆரம்பத்தில் ரகுபதி அவளிடம் சகோதர அன்புடன் பழகி வருவதாக நினைத்திருந்தாள். வரவர அவன் பித்தனைப்போல் நடப்பதை அறிந்து பயந்தாள். 'தங்கத்தைத் தனியாகச் சந்தித்துப் பேசவேண்டும் என்கிற அவசியம் ரகுபதிக்கு இல்லை. அவளிடம் அவன் அந்த ரங்கமாகச் சம்பாஷிப்பதற்கு என்ன இருக்கிறது? எல்லோர் எதிரிலும் தாராளமாகப் பேசலாம். ஆனால், ரகுபதி அவளிடம் தனித்துப் பேச பல சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொண்டான். ஏரிக்கரைக்குத் தங்கம் போனால் அங்கே அவனும் விரைந்தான்.. கிராமத்து வாலிபர்களைச் சுட்டுப் பொசுக்கும் தங்கம், ரகுபதி யோடு தனித்து உரையாடுவதை அவர்கள் பார்த்தால் சும்மா விடுவார்களா?’
ஒரு நாள் அதிகாலையில் ஏரியில் குளித்து விட்டுத் திரும்பும் தங்கத்தைக் கோவிலில் சந்தித்தான் ரகுபதி. குடலை நிறையத் தங்க அரளிப் புஷ்பங்களைப் பறித்து நிரப்பிக்கொண்டு வந்து நின்றிருந்தாள் தங்கம், பொழுது இன்னும் நன்றாக விடியவில்லை. அவளுக்கு மனசிலே ஆயிரம் குறைகள் உண்டு. அதைக் கோவிலில் வந்து தெய்வத்தினிடம் முறையிட்டுக்கொள்வது அவள் வழக்கம். அதைக் கலைப்பதற்கு வந்த ரகுபதியை அவள் அங்கே சந்திக்க விரும்பவில்லை.
" என்ன அத்தான்! இவ்வளவு காலையில் வந்து விட்டீர்கள்!" என்று சொல்லாமல் சொல்லி விளங்கவைக்தாள் தங்கம்.
"வந்துவிட்டேன்! வரக்கூடாதா தங்கம்? உன்னைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறேன்."
”வேடிக்கைதான்! பொழுது விடிந்து பொழுது சாய்வதற்குள் வீட்டிலே பல முறைகள் பார்ப்பவளைக் கோவிலில் அதிசயமாகப் பார்க்க வந்தாராமே!' என்று வியந்தாள் தங்கம்.
இருந்தபோதிலும் பொறுமையை இழக்காமல், “வீட்டிலே பேசிக்கொண்டால் போயிற்று. அதற்காக என்னை இங்கே தேடி வர வேண்டுமா என்ன? இது கிராமாந்திரம் அத்தான்! உங்கள் நகரத்திலே குற்றங் குறைகள் யாருடைய கண்களிலும் அவ்வளவாகத் தென்படாது. குற்றத்தைக்கூட ஒரு நாகரிகம் என்று நினைத்து ஒதுங்கிப் போவார்கள். இங்கே அப்படி இல்லை: ஒன்றுக்குப் பத்தாகக் கதை கட்டிவிடுவார்கள். ஆமாம்....!"
ரகுபதி அவளைப் பார்த்து அழகு காட்டும் பாவனையாக, "ஆமாம்!" என்றான்.
"உன்னை என்னவோ என்று நினைத்திருந்தேன். நன்றாகப் பேசுகிறாயேடி அம்மா நீ! பெண்களே பேச்சில் வல்லவர்கள் என்று நினைக்கிறேன்!" என்று கூறிவிட்டு அவள் கையிலிருந்த புஷ்பக் குடலையைப் பற்றி, “இங்கே கொண்டு வா அதை. நான் எடுத்து வருகிறேன். தோளில் ஈரத் துணிகளின் சுமை அழுத்துவது போதாது என்று கையிலே வேறு!" என்று கூறிக் குடலையை வாங்கினான்.
தங்கம் பதறிப்போனாள். சட்டென்று குடலையை நழுவ விடவே அது கீழே விழுந்து மலர்கள் சிதறிப்போயின. மை தீட்டிய விழிகளால் அவனைச் சுட்டுவிடுவது போலப் பார்த்தாள் தங்கம்.
"அத்தான்! என் பெயருக்கு மாசு கற்பிக்காதீர்கள். என்னைத் தனியாக வந்து எங்கேயும் சந்திக்க வேண்டாம். மாசற்றவளாக இருக்கும்போதே என்னைச் சமூகம் கீழே தள்ளி மிதிக்கிறது. பிறகு கேட்கவே வேண்டாம். நான் ஏழைப் பெண் அத்தான்!" என்று கூறிவிட்டு அங்கிருந்து வீட்டிற்கு நடந்து விட்டாள் தங்கம்.
பெண் குலத்தின் பெருமையைக் கலையின் மூலம் உயர்த்த வேண்டும் என்று பாடுபட்டு வந்த ரகுபதியா அவன்? சந்தர்ப்பக் கோளாறுகளால் அவன் ஏன் இப்படி மாற வேண்டும்? கணவனின் நன்மை தீமைகளில் பங்கு கொள்ளாத மனைவியை அடைந்த குற்றந்தான் காரணமாக இருக்க வேண்டும். சாவித்திரிதான் அவன் இப்படி மாறி வருவதற்குக் காரணமானவள்.
ரகுபதி இனிமேல் கிராமத்தில் இருப்பதில்லை என்று தீர்மானித்துக் கொண்டான். அன்றே பகலில் சாப்பிடும்போது அலமுவிடம், "அத்தை! ஊருக்குப் போகிறேன். அம்மாவை விட்டு வந்து எவ்வளவோ நாட்களாகின்றன. ஸரஸ்வதியும் ஊரில் இல்லை!" " என்றான்.
“இவ்வளவு நாட்கள் இங்கே இருந்துவிட்டு உன் வேட்டகத்துக்குப் போகாமல் திரும்புவது நன்றாக இல்லை ரகு. போய் உன் மனைவியை அழைத்துப் பாரேன். என்னவோ அப்பா எனக்குத் தெரிந்ததைச் சொல்லுகிறேன். அந்த வீட்டுக்கு உங்களால்தான் ஒளி ஏற்படவேண்டும். மன்னிக்கு ஒன்றுமே தெரியாது. பாவம், அவள் மனம் புழுங்கிச் சாகிறாள் ரகு. அவளுக்காகவாவது நீ சாவித்திரியுடன் வாழ்ந்துதான் ஆகவேண்டும்!" என்று உருக்கமாகக் கூறினாள் அலமு.
ரகுபதி எவ்விதத் தீர்மானத்துக்கும் வராமல் பெட்டி, படுக்கையைக் கட்டிக் கூடத்தில் வைத்துவிட்டு வெளியே போய் விட்டான்.
-----------
விசாலமான ஏரியில் காற்றினால் எழுப்பப்பட்ட சிற்றலைகள் நெளிந்து சுருண்டன. சுரீரென்று வான வீதியில் பவனி வரும் சூரியனின் பொன் கிரணங்கள் நீரில் தவழ்ந்து விளையாடின. நல்ல மழை காரணமாக ஏரி தளும்பி வழிந்தது. அதற்கடுத்த வயல்களில் நல்ல விளைச்சல், குழந்தையைக் காக்கும் தாயைப் போல, கிராமவாசிகள் பயிர்களைக் கண்ணின் கருமணிபோலக் காத்து வந்தார்கள். அவர்கள் வாழ்வும், தாழ்வும் அதில் தானே இருக்கிறது. 'டைப்' அடித்துப் பிழைப்பவர்களாக இருந்தால் ஓர் இடத்தில் வேலை போனால் இன்னொன்று என்று தேட இட மிருக்கிறது. தொழிலாளிகள் அவர்கள் கற்ற தொழிலைத்தான் போஷித்து வளர்க்கவேண்டி இருக்கிறது. அவர்களை வாழவைக்கும் மண்ணை நம்பிக் குடியானவர் வாழ்கிறார்கள். அதில் கிடைக்கும் பலாபலன்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
மணி மணியாய்க் கதிர்களில் நெல் மணிகள் அரும்பி இருந்தன. ஆயிற்று; கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது. மார்கழியும் போனால் தைப் பொங்கலுக்கு முன்பே அறுவடை செய்துவிடுவார்கள். உழைப்பின் பலனை அனுபவித்து உள்ளம் நிறைவு பெறுவார்கள். வீட்டில் பெட்டி, படுக்கையைக் கூடத்தில் வைத்துவிட்டு ரகுபதி ஏரிக்கரைக்கு வந்து, உட்கார்ந்திருந்தான். தொலைவில் சாலையில் இரட்டை மாட்டு வண்டி ஒன்று ஆடி அசைந்து வந்து கொண்டிருந்தது. பன்னிரண்டரை மணி பஸ் வந்து போய்விட்டது என்பதற்கு இந்தச் சவாரி வண்டிகள் தான் அத்தாட்சி. ஏனெனில், வெளியூரிலிருந்து வருபவர்கள் ரெயில் நிலையத்திலிருந்து கிராமத்துக்கு வருவதானால் மத்தியான்னம் இந்தப் பஸ்ஸிலாவது அல்லது மாலை ஐந்தரை மணி பஸ்ஸிலாவது தான் வரமுடியும். அப்படிப் பிரயாணிகளைக் கருணையுடன் சுமந்து வரும் பஸ் அவர்களை ஏரிக்கரையிலிருந்து ஒரு மைல் தொலைவிலேயே சாலையில் இறக்கிவிட்டுப் போய்விடும். கால்களில் தெம்புள்ளவர்கள் நடந்து கிராமத்தை அடைந்து விடுவார்கள். இல்லாவிடில் மாட்டு வண்டியில் வந்து சேர்வார்கள். சிறிது நேரம் வண்டியைக் கவனித்த ரகுபதி அசிரத்தையுடன் அங்கன வேறு பக்கம் ஓட்டினான். 'யாரோ வருகிறார்கள்' என்று அலட்சியமாக இருந்தான். அவன் அலட்சியத்தை முந்திக் கொண்டு தச்சரியம் கிளம்பியது.
'என்ன? ஸரஸ்வதியா வருகிறாள்? இவளுக்கு என்ன ஜோஸ்யம் ஏதாவது தெரியுமா? சமயசஞ்சீவியாக இருக்கிறாளே' என்று எண்ணி வியந்தான். அவன் நேருக்கு நேர் பார்க்கவும் அஞ்சினான். ஏதோ ஒருவித வெட்கம் அவனைச் சூழ்ந்துகொண் டது. குனிந்த தலையுடன் உட்கார்ந்திருந்த ரகுபதியின் முன்பு ஸரஸ்வதி வந்து நின்றாள்.
"அத்தான்! இந்த ஊரில் என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்று நிதானமாக அவனைக் கேட்டாள் ஸரஸ்வதி.
ரகுபதி சங்கோஜத்துடன் தலையை நிமிர்ந்து பார்த்தான். குற்றவாளியைப்போல் மென்று விழுங்கினான். வார்த்தைகள் தடுமாற, "நீயா வந்திருக்கிறாய் ஸரஸு?" என்று அழைத்தான்.
"ஆமாம், அத்தான்! மைசூரிலிருந்து நேற்றுப் புறப்பட்டேன். உன் கடிதம் வந்தது! இனி தாமதிப்பதில் பிரயோஜனமில்லை என்று புறப்பட்டேன். ஒரு வாரத்துக்கு முன்பே வந்திருப்பேன். சில கச்சேரிகளுக்கு ஒப்புக்கொண்டதால் வர முடியாமல் போய்விட்டது. ஏரிக்கரையில் நீ உட்கார்ந்திருப்பதைப் பார்த்து இங்கேயே இறங்கிவிட்டேன்."
”இன்று மாலை நானும் ஊருக்குப் புறப்படுவதாக இருக்கிறேன், ஸரஸு. நீயும் வருகிறாய் அல்லவா?” என்று கேட்டான் ரகுபதி.
"ரொம்ப அழகாக இருக்கிறதே. வராமல் எனக்கு இங்கே என்ன வேலை?" என்று கேட்ட ஸரஸ்வதி சற்றுத் தணிவாக, "அத்தான்! தீபாவளிக்கு நீ ஊருக்குப் போக வில்லையாமே. அத்தைக்கு எவ்வளவு ஏமாற்றமாக இருக்கும், அத்தான்? பாவம்........"
"போகவில்லை ஸரஸு. பெண்களைத்தான் சஞ்சல புத்தியுள்ளவர்கள் என்று நம் பெரியவர்கள் வர்ணிக்கிறார்கள். ஆனால் உன்னிடம் நிரம்பியிருக்கும் மனோ உறுதி எனக்கு இல்லாமல் போய்விட்டது. பாதி வழியிலேயே நான் இங்கு வந்துவிட்டேன். நீயானால், மைசூர் பிரயாணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு திரும்பி வந்திருக்கிறாய்" என்றான்.
"இங்கே எதற்காக வந்தாய் யாருக்காக வந்தாய்? உன்னை நாடுபவளை நீ நாடிப் போகாமல் கானல் நீரை நம்பி வந்திருக்கிறாயா? தங்கத்தை என்ன என்று நினைத்துக் கொண்டு வந்தாய் அத்தான்? மலையிலிருந்து பள்ளத்தில் வழியும் அருவி பார்ப்பதற்கு ரம்மியமாகத்தான் இருக்கும். தொலைவில் நின்று அதன் அழகை நினைத்து வியக்கலாம். பார்த்து ரஸிக்கலாம். தவறிப் போய் அதில் காலை வைத்தோமானால் பரலோகம் போக வேண்டி யது தான். நீ மணமானவன். உன்னுடைய கடமையைப் புறக் கணித்துவிட்டுத் தங்கத்தைப் பார்க்க நீ வந்திருக்கக் கூடாது. அந்தப் பெண் பாவம் வெகுளி, அவளுக்கு என்ன தெரியும் அத்தான்?" என்று படபடவெனக் கூறினாள் ஸரஸ்வதி.
ரகுபதி செயலிழந்து நின்றுவிட்டான். 'ஸரஸ்வதி சங்கீதத்தில் தான் தேர்ந்தவள். தர்ம சாஸ்திரத்திலும் தேர்ந்தவளா?'
'படபடவென்று வார்த்தைகளைக் கொட்டி அத்தானைக் கோபித்துக்கொண்டோமே' என்று ஸரஸ்வதி வருந்தினாள். பிறகு சமாதானம் அடைந்து, "ரொம்பவும் இளைத்துப்போய் விட்டாய் அத்தான். அத்தை பார்த்தால் உருகிப்போய் விடுவாள். வா, வீட்டிற்குப் போகலாம். தங்கத்தைப் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. வா!" என்று அன்புடன் அவனை அழைத்தாள்.
ரகுபதி பேசுவதற்கோ, தர்க்கிப்பதற்கோ ஒன்றும் இல்லை; மறுமொழி கூறாமல் ஸரஸ்வதியுடன் அவன் வீட்டை நோக்கி நடந்தான். அவர்கள் வீட்டை அடையும் போது மாலை மூன்று மணிக்கு மேலாகிவிட்டது. கொல்லைப் பக்கம் மாட்டுத் தொழுவத்திலிருந்து தங்கம் ஸரஸ்வதி வருவதைக் கவனித்துவிட்டாள். சந்தோஷத்தால் அவள் மனம் துள்ளியது: துள்ளி ஓடும் கன்றைப்போல, "ஸரஸு அக்கா!" என்று வாய் நிறைய அழைத்துக்கொண்டு முற்றத்துக்கு வந்து ஸரஸ்வதியை இறுகச் சேர்த்து அணைத்துக்கொண்டாள் தங்கம்.
"என்னைப் பார்ப்பதற்குத்தானே அக்கா இவ்வளவு தூரம் வந்திருக்கிறாய்? என்னிடம் உள்ள வாஞ்சையினால் தானே அக்கா - இங்கே வந்தாய்?" என்றெல்லாம் சந்தோஷம் தாங்காமல் கேட்டாள்.
"ஆமாம், அதற்காகத்தான் வந்தேன். தங்கம் நீ எப்படி இருக்கிறாய் என்று பார்ப்பதற்குத்தான் வந்தேன்" என்று ஸரஸ்வதி கூறி அவளைச் சேர்த்து அணைத்துக் கொண்டாள்.
ஸரஸ்வதியின் பேச்சுக் குரலைக் கேட்டு அலமு உள்ளிருந்து முற்றத்துக்கு வந்தாள். வந்தவள் திகைப்பும், பயமும் ஒருங்கே அடைந்தவளாக, "நீயா வந்திருக்கிறாய் ஸரஸு? உன் அத்தானைப் பார்த்தாயா? தீபாவளிக்கு ஊருக்குப் போகாமல் இங்கே வந்து உட்கார்ந்து விட்டான். என்ன சொன்னாலும் கேட்கவில்லையேடி. அம்மா; நான் என்ன பண்ணுவேன் சொல். மன்னிக்குத் தெரிந்தால் என்னைத்தான் குற்றம் சொல்லுவாள். நீ என்ன சொல்லுவாயோ என்று பயந்து செத்தேன் போ" என்று ஸரஸ்வதி எதையும் கேட்பதற்கு முன்பே படபடவென்று பேசினாள் அலமு.
'அலமு அத்தைக்குப் பயமா? அதுவும் என்னிடம் ஏற்பட்ட பயமா?' என்று ஸரஸ்வதி நினைத்துப் பார்த்துக்கொண்டாள்.
'அவள் எல்லோரும் பயப்படும்படியாகவா இருக்கிறாள்? தர்மத்தைக் கண்டு அதர்மம் அஞ்சுகிறது. சத்தியம் அசத்தியத்தை வெல்லுகிறது. பொறுமை கோபத்தை விரட்டுகிறது. நன்மை தீமையை அழிக்கிறது. அவ்வளவு தான்! ஸரஸ்வதியைக் கண்டு யாரும் பயப்பட வேண்டியதில்லை. நற்குணங்களைப் போற்றும் அந்தப் பெண் சாதாரணமானவள்.'
ஸரஸ்வதி புன்சிரிப்புடன் அலமுவைப் பார்த்துச் சிரித்து விட்டு உள்ளே போய்விட்டாள்.
------------
சந்துரு தன் தாயிடம் கூறியபடி ரகுபதியைப் பார்த்து முடிவாக விஷயங்களை ஒழுங்குபடுத்துவது என்கிற தீர்மானத்துக்கு வந்து விட்டான். ஸரஸ்வதி இருந்தால் இந்த விஷயத்தில் மிகவும் உதவி செய்வாள் என்றும் நம்பினான். பலவிதமான குழப்பங்களுக்கிடையில் ஸரஸ்வதியின் அழகிய முகமும், கருணை ததும்பும் கண்களும் அவன் மனத்தைப் பூரிக்கச் செய்தன. ஸரஸ்வதியை எதிர்பாராமல் கிராமத்தில் சந்தித்தால் அவன் ஆசை பூர்த்தி ஆகிவிடும். ஆகவே உற்சாகத்துடன் சந்துரு கிராமத்துக்குக் கிளம்பினான்.
இடையில் ஸரஸ்வதி கிராமத்தின் முக்கியமான இடங்களை எல்லாம் சுற்றிப் பார்த்தாள். தங்கமும், அவளும் ஆந்திரீகமாகக் கூடிப் பேசினர். ரகுபதி தன்னிடம் அசட்டுத்தனமாக நடந்து கொண்டதையெல்லாம் தங்கம் ஸரஸ்வதியிடம் விவரித்தாள், கோவிலில் புஷ்பக் குடலையைப் பற்றி அவன் இழுத்ததையும், தான் அவனைக் கடிந்து பேசினதையும் கூறிவிட்டுத் தங்கம், ’பாவம்' என்று வருந்தினாள்.
இதையெல்லாம் கேட்டபோது ஸரஸ்வதியின் மனம் வெட்கத்தால் குன்றிப்போனது. உயர்ந்த லட்சியவாதியாகிய ரகுபதி குறுகிய காலத்துக்குள் இவ்விதம் மாறிவிட்டான் என்பதை அவளால் நம்பவே முடியவில்லை. தங்கத்தின் மாசற்ற குணத்தையும், உறுதியையும் கண்டு வியந்தாள்.
”தங்கம்! உன்னை நான் ஊரில் ஒரு தடவை நீ புத்திசாலி என்று தெரிவித்தேனே. அந்த வார்த்தை பொய்க்கவில்லை. நீ ரொம்பவும் புத்திசாலி. மிகுந்த கெட்டிக்காரி. சாவித்திரியைப் பாராமல் உன்னை முதலில் நான் பார்த்திருந்தால் அத்தானுக்கு உன்னையே கல்யாணம் செய்து வைத்திருப்பேன், இவ்வளவு சங்கடங்கள் ஏற்பட்டிருக்காது” என்று பாராட்டினாள் ஸரஸ்வதி.
"போ, அக்கா! நீதான் என்னைக் கெட்டிக்காரி என்று கொண்டாடுகிறாய் புத்திசாலி என்று புகழ்ந்து பேசுகிறாய். நான், பெற்றவர்களுக்கும் உறவினர்காருக்கும் பாரமாக இருக்கிறேன். எனக்குக் கல்யாண ஆகவில்லையே என்று அம்மா வீட்டைவிட்டு வெளியிலேயே வருவதில்லை. பெரியம்மா வேறு மரம்மாதிரி நிற்பதாகச் சொல்கிறாள். கன்னிப்பெண், வாழாமல் வீட்டுடன் இருப்பதால் தான் தரித்திரம் பிடுங்குவதாக பெரியம்மா கோபித்துக்கொள்கிறாள். எனக்கு விமோசனம் ஏற்படுமா அக்கா? என்னை மணந்துகொள்ள யாராவது முன் வருவார்களா?" என்று கண்ணீர் வழியக்கேட்டு, ஸரஸ்வதியின் மடியில் முகத்தைப் புதைத்துக்கொண்டு தேம்பினாள் தங்கம்.
ஸரஸ்வதியின் மனம் துடித்துப் போய்விட்டது. 'எல்லா வசதிகளும் இருக்கும் என்னைக் கல்யாணம் செய்து கொள்ளும்படி அப்பா மைசூரில் பன்முறை கேட்டாரே. இன்றைக்கு 'சரி'யென்று தலை அசைத்தால் கல்யாணம் நடந்துவிடும். அப்பாவை அழைத்து வந்து இந்தப் பேதைப் பெண்ணைக் காட்டாமல் போனேமே. வாழ வழி தெரியாமல் ஆயிரக் கணக்கில் பரிதவிக்கும் தமிழ் நாட்டுக் கன்னிகைகளைத் தங்கம் ஒருத்தியின் மூலமாகப் பார்த்துவிடலாம். இப்படி இருக்கும் போது எனக்கு என்ன கல்யாணத்துக்கு அவசரம்? பணமில்லையா? அழகில்லையா? எனக்குக் கல்யாணம் நடக்காமல் போய்விடுமா? தங்கத்துக்குத்தான் முதலில் வாழ வழி செய்யவேண்டும். ஆமாம்!' என்று ஸரஸ்வதி தனக்குள் பேசிக்கொண்டாள்.
மடியில் முகத்தைப் புதைத்துக்கொண்டிருக்கும் தங்கத்தின் முகத்தைப் பரிவுடன் நிமிர்த்தி, "தங்கம்! கட்டாயம் உனக்குக் கல்யாணம் நடக்கும். உனக்கு நல்ல கணவன் கிடைப்பான். என் மனம் அவ்விதம் கூறுகிறது. அதை நம்புகிறேன். அழாதே அம்மா!" என்று தேற்றினாள்.
தங்கம் மறுபடியும் தன் முத்துப் போன்ற பற்கள் தெரிய நகைத்தாள்.
”இந்த ஊரில் உள்ள குடியான ஜனங்களும் அப்படித்தான் சொல்கிறார்கள், அக்கா. அர்ச்சுனராஜா மாதிரி எனக்குப் புருஷன் கிடைப்பானாம். திடமான நம்பிக்கையுடன்
சொல்கிறார்கள்; நீயும் சொல்கிறாய் அக்கா!" என்றாள்.
ஸரஸ்வதி அர்த்த புஷ்டியுடன் தலை அசைத்து, "ஏழை ஜனங்கள் உள்ளார்ந்த அன்புடன் கூறும் வாக்கு பொய்க்காது. உள்ளம் நிறைந்து பேசுகிறார்கள். தங்கள் எதிரில் வளர்ந்து பெரியவளான நீ நன்றாக வாழவேண்டும் என்று விரும்பு கிறார்கள்" என்று கூறினாள்.
சோர்ந்திருந்த தங்கத்தின் மனத்தில் உற்சாகம் குமிழியிட்டது. ”அக்கா! நீயும், நானும் சேர்ந்து பாடி எவ்வளவு நாட்களாயின? பாடலாமா அக்கா?" என்று கேட்டாள்.
"ஆஹா, பாடவாம்"" என்று ஸரஸ்வதி ஆமோதித்ததும் அந்த வீட்டுக் கூடத்திலிருந்து இன்னிசை பெருகியது.
”பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்
மாமயில் மீது மாயமாய் வந்தான். ..."
பாடிக்கொண்டே தங்கம் சிந்தித்தாள். 'பரம ஏழையாகிய எனக்கு நல்ல கணவனாக ஒருவன் கிடைப்பான் என்று ஸரஸு அக்கா சொல்கிறாள். மாயமாக அந்த 'ஒருவன்' என்று வருவானோ? அவன் எப்படிப்பட்டவனோ? முருகவேள் அதற்குக் கிருபை செய்வானா?" என்று பலவாறு நினைத்தாள் அவள்.
நல்லவர்களை வாழ்விக்கும் இறைவன் அருள் புரிந்தான். தெருவில் வந்து நின்ற வண்டியிலிருந்து சந்துரு இறங்கி உள்ளே வந்தான். இதுவரையில் அறையில் உட்கார்ந்திருந்த ரகுபதி, தங்கமும், ஸரஸ்வதியும் பாடுவதைக் கேட்டுக் கூடத்தில் வந்து உட்கார்ந்திருந்தான். சந்துருவின் வரவை யாரும் எதிர்பார்க்க வில்லை. ஒரு நிமிஷம் ரகுபதியின் மனத்தில் கோபம், ரோஷம், வெட்கம், அவமானம் முதலிய உணர்ச்சிகள் தோன்றின. தலையைக் குனிந்து உதட்டைக் கடித்துக்கொண்டே உட்கார்ந்திருந்தான் அவன்.
வீட்டுக்கு வந்தவர்களை ”வாருங்கள்" என்று வாய்குளிர அழைப்பது நமது சிறந்த குணங்களில் ஒன்று. வரவேற்காத வீட்டு வாசலை மிதிப்பதற்குக்கூட உள்ளம் கூசுகிறது.
சந்துரு தயங்கினான். பாட்டைப் பாதியில் நிறுத்தி விட்டாள் ஸ்ரஸ்வதி. தன் அழகிய கண்களை உயர்த்தி, "நமஸ்காரம், வாருங்கள். ஊரில் எல்லோரும் சௌக்கியந்தானே?* என்று விசாரித்தாள்.
தங்கம் எழுந்து இரண்டெட்டில் உக்கிராண அறைக் கதவருகில் போய் நின்று, வந்தவர் யாராய் இருக்கும் என்று யோசித்தாள். சுருள் சுருளாக வாரிவிடப்பட்ட கேசமும், ஆழ்ந்து சிந்திக்கும் கண்களும் உயர்ந்த உருவமும் கொண்ட அந்தச் சுந்தர புருஷனை, ஆறு முகனேதாள் தனது பிரார்த்தனையைக் கேட்டு அனுப்பி இருக்கிறானோ என்று எண்ணிப் பூரித்துப் போனாள். திடீரென்று எதிர்பாராதவிதமாக --மாயமாக வந்து நிற்கும் புருஷன் – தன்னை வாழ்விக்கத்தான் வந்திருக்கிறானோ என்று எண்ணி எண்ணி மாய்ந்துபோனாள் தங்கம்.
சந்துரு ஸரஸ்வதியைக் கனிவுடன் பார்த்து. "எல்லோரும் சௌக்கியந்தான். அம்மாவுக்குத்தான் உடம்பு சரியில்லை . பலஹீனமாக இருக்கிறாள்" என்று கூறிவிட்டு, "மாப்பிள்ளை! தீபாவளிக்கே நீங்கள் வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன். ஸரஸ்வதியும் வருவாள் என்று அம்மா நினைத்துக் கொண்டிருந்தாள்" என்றான்.
"நான் வந்திருக்கவேண்டியது தான்! அத்தானும், நானும் ரெயிலடி வரையில் ஒன்றாகத் தான் வந்தோம். அவசரமாக என் தகப்பனாரைப் பார்ப்பதற்கு மைசூர் போயிருந்தேன். வராமல் விட்ட பிசகை இப்பொழுது தான் உணர்கிறேன்!" என்றாள் ஸரஸ்வதி.
"யார் பேரில் பிசகிருந்தாலும் அதையெல்லாம் மறந்து மன்னித்துவிடுவதுதான் மனிதப் பண்பு. சாவித்திரி ரொம்பவும் மாறிவாட்டாள். அவள் மனசிலே தன் கணவனை எப்பொழுது சந்திக்கப் போகிறோம் என்கிற ஆவல் மிகுந்திருக்கிறது. தன் செய்கையை நினைத்து வெட்கப்படுகிறாள் என்றே தோன்றுகிறது. ரகுபதி! பெண்ணின் மனத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. ஊருக்குக் கிளம்புவதற்கு முன்பு சீதா என்னிடம் ஒரு சிறு நோட்டுப் புஸ்தகத்தைக் கொடுத்தாள். படித்தேன். நீந்தத் தெரியாதவன் தண்ணீரில் விழுந்து தத்தளிப்பதை யாராவது பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்களா? அவனைக் காப்பாற்ற எப்படியும் முயலுவார்கள். சாவித்திரி கண்ணீர் விட்டுப் பல இரவுகள் அழுதிருக்கிறாள் என்பதை அந்தச் சிறு புஸ்தகம் விளங்க வைத்துவிட்டது.
"மாடியிலே நிலவு வீசுகிறது. களைத்து வீடு வந்த கணவருக்கு நான் எந்த வகையில் இன்பமளித்தேன்? கோபத்தால் பொருமினேன், ஏன்?”
"கணவர் தூங்கிவிட்டார். அமைதியாகத் தூங்குகிறார். அவர் அமைதி என் ஆத்திரத்தைத் தூண்டிவிட்டது. பொறாமைத் தீயில் மனம் வெந்து போகிறது.”
"இன்னும் என்னென்னவோ எழுதி இருக்கிறாள். தன் தவறை உணர்ந்துவிட்டாள் என்றே நினைக்கிறேன். அசட்டுப்பெண்! உங்களுக்குக் கடிதம் எழுதி இருக்கலாம். மனசைக் கொட்டிக் கதறி இருக்கலாம். ஓடிவந்து உங்கள் காலில் விழுந்திருக்கலாம். என் தங்கை குழந்தைப் பருவத்திலிருந்தே பிடிவாதத்தில் வளர்ந்தவள். அந்தப் பிடிவாதமும், போலிக் கௌரவ முந்தான் அவளைத் தடுத்திருக்கவேண்டும்!" என்று சந்துரு விஷயத்தைச் சொல்லிக்கொண்டே போனான்.
ஸரஸ்வதி ரகுபதியைத் திரும்பிப் பார்த்துக் கண்டிப்பு நிறைந்த குரலில், "அத்தான்! அவருடன் ஊருக்குப் புறப்படு, உன் மனைவியை அழைத்துவா, அத்தான். இது பரீக்ஷைக்கூடம் அல்ல; கேள்விகள் தயாரித்துக் கேட்பதற்கும், அவர் பதில்கள் அளிப்பதற்கும். சாவித்திரி தன் குற்றங்களை உணர்ந்து விட்டாள் என்பதே போதுமானது. உன் லட்சியத்தைக் குறுகிய பாதையில் நடத்த வேண்டும் என்பதில்லை. சாவித்திரி ஒருத்தி சங்கீதம் பயின்றுவிட்டால் உன் லட்சியம் நிறைவேறிவிடுமா? ஆர்வத்துடன் சங்கீதத்தைப் பயில்வதற்கு எவ்வளவோ பெண்கள் காத்திருக்கிறார்கள். பரந்த மனப்பான்மையுடன் அவர்களுக்கு உதவி செய்தால் லட்சியம் நிறைவேறிவிடும். இதற்காக இனிக்க வேண்டிய இல்வாழ்வைக் கசப்பாக்கிக் கொள்ளாதே" என்றாள்
ஸரஸ்வதி.
சந்துரு அப்படியே அயர்ந்துவிட்டான். ' நாவிலே கலைவாணி நர்த்தனம் புரியும்போது ஸரஸ்வதி ஏன் இவ்வளவு அழகாகப் பேசமாட்டாள்! இந்தப் பெண்ணைப் பார்த்து எப்படி என்னை மணந்து கொள்கிறாயா என்று கேட்பது?' என்று புரியாமல் விழித்தான் சந்துரு.
------------
அழகே உருவமாக இருந்த சாவித்திரி சில மாதங்களில் எப்படித்தான் மாறி விட்டாள்? கண்களைச் சுற்றிக் கருமை படர்ந்திருந்தது. 'கொழு கொழு'வென்று இருந்த கன்னங்கள் ஓட்டி உலர்ந்து போயிருந்தன. அவளுடைய சிவப்புக்கூட மாறி விட்டதாக வீட்டில் எல்லோரும் சொல்லிக்கொண்டார்கள். மகளைப் பார்த்துப் பார்த்து மங்களம் தனிமையில் கலங்கினாள். ஒவ்வொரு தினம் இரவில் சாப்பிடாமலேயே போய்ப் படுத்து விடுவாள் சாவித்திரி. நொடிக்கு ஒருதரம் ஆழ்ந்த பெருமூச்சு விடுவாள். மனக் கஷ்டத்தை யாரிடமாவது கொட்டி அழுது விடலாம் என்றால் அநுதாபத்துடன் யார் கேட்கப் போகிறார்கள்? சீதா இன்னும் விளையாட்டுப் பெண்ணாகவே இருக்கிறாள். ஒரு நொடியில் விஷயத்தைச் சொல்லித் தம்பட்டம் அடித்து விடுவாள். அப்பாவிடம் போய் 'என்னை உங்கள் மாப்பிள்ளையிடம் அனுப்பி விடுங்கள்' என்று எப்படிச் சொல்வது? சந்துருவின் எதிரில் நிற்கவே அவளுக்குப் பயமாகவும், வெட்கமாகவும் இருந்தது. தப்பித் தவறி ஏதாவது சொல்லிவிட்டால், 'உன்னை யார் போகவேண்டாம் என்கிறார்கள்? புறப்படு போகலாம்' என்று மூட்டை கட்ட ஆரம்பித்துவிடுவான்.
சந்துரு ஊருக்குப் புறப்பட்டுப் போன பிறகு சாவித்திரி காரணமில்லாமல் மகிழ்ச்சி யடைந்தாள். ஒரு சமயம் கலங்கினாள். 'அவர் வந்துவிடுவார்' என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள். 'வராமல் இருந்துவிட்டால் நானே போய்விடுகிறேன். பிறந்த வீட்டில் எல்லோராலும் உதாசீனம் செய்யப்படுவதை விட.. அவர் கால்களில் விழுகிறேன்' என்று வைராக்கியத்துக்கு மனசைத் தயார் செய்தாள்.
மங்களம், வெந்நீர் அடுப்பு 'பூ' என்று ஊதினால் கூட, மாப்பிள்ளை வந்துவிடுவான் என்று நம்பி மகிழ்ந்தாள். 'அடுப்பு ஊதுகிறது. உன் அகமுடையான் வந்து விடுவான் - சாவித்திரி' என்று பெண்ணைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே சொன்னாள். பெற்ற மனம் பித்துக் கொண்டது என்பதற்கு அவள் ஓர் உதாரணம்.
"காக்கை கத்துகிறது. அத்திம்பேர் வரப்போகிறார்" என்று சொல்லி ஆனந்தப்பட்டாள் சீதா. அந்த வார்த்தைகளை மறுபடியும் அவள் சொல்லிக் கேட்கவேண்டும் போல் சாவித் திரிக்குத் தோன்றியது.
"ஏண்டி சாவித்திரி! அத்திம்பேர் வரும் போது நீ எந்தப் புடைவையைக் கட்டிக் கொள்ளப் போகிறாயடி? கல்யாணத்துக்கு முன்பு உடுத்திக்கொண்டாயே முதன் முதல் கனகாம்பர வண்ணப் புடைவை, அதைத்தானே?" என்று அக்காவைக் கேட்டாள் சீதா.
" போடி! அது ஒன்றும் வேண்டாம். அதைக் கண்டால் எனக்குப் பிடிக்கவில்லை. உனக்கு அதைக் கொடுத்துவிடுகிறேனடி அம்மா" என்றாள் சாவித்திரி மகிழ்ச்சி பொங்கும் குரலில்.
"ஏனோடி அம்மா! ரொம்ப ' ஆகி'வந்த புடைவையோ இல்லையோ? அவசியம் எனக்கு வேண்டியதுதான். அதைக் கட்டிக்கொண்டு என் சுயம்வரத்துக்கு நான் நிற்க வேண்டியதுதான் பாக்கி!" என்றாள் சீதா.
சகோதரிகள் இருவரும் 'கலகல' வென்று சிரித்தார்கள்; சாவித்திரி இப்படிச் சிரித்து எத்தனை மாதங்கள் ஆயின? காகம் கத்தியது வீண்போகவில்லை. மனித உணர்ச்சிகளை அறியாத அடுப்பு ஊதியதும் பொய்க்கவில்லை. சந்துருவும், ரகுபதியும் வந்து சேர்ந்தார்கள். சாவித்திரி காமரா அறையிலிருந்து திருட்டுத்தனமாகக் கணவனைப் பார்த்தாள். துடிக்கும் மார்பை அழுத்திப் பிடித்துக் கொண்டாள். 'வந்துவிட்டாரே' என்று மெல்ல வாய்க்குள் சொல்லிக்கொண்டாள். நிலைக் கண்ணாடி முன்பு நின்று விரலின் நுனியைமைச் சிமிழில் தோய்த்துக் கண்களுக்கு மை தீட்டிக்கொண்டாள். வாசனை வீசும் கதம்பத்தைத் தலையில் வைத்துக்கொண்டாள். புருவத்தின் இடையில் திலக மிட்டுக்கொண்டு, கோணல் சிரிப்புடன் கண்ணாடியில் தன் அழகைக் கவனித்தாள் சாவித்திரி. 'கட்டாயம் என் கருவிழிகளைக் கண்டு அவர் மயங்கவேண்டும். சிரிக்கும் உதடுகளைக் கண்டு பரவசமடைய வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாகத் என் அன்பினால் அவரை வெல்லவேண்டும்; அடிமைப்படுத்த வேண்டும். அது ஒன்றுதான் சிறந்த வழி!' என்று உவகை எய்திய சாவித்திரி ஆசை தீரக் கணவனை ஜன்னல் வழியாகவே பார்த்துக் களித்தாள்.
அன்று, வழக்கமாகக் கூடத்தில் காணப்படும் மங்களத்தின் படுக்கையைக்கூடக் காணோம். மறுபடியும் மாப்பிள்ளை வந்து 'டானிக்' கொடுத்து அவளைப் பிழைக்க வைத்துவிட்டான்!
தினசரி படிப்பதில் முனைந்திருந்த ராஜமையர் தம் மூக்குக் கண்ணாடியை நிதானமாகக் கழற்றி வைத்தார். பிறகு நிமிர்ந்து பார்த்து. "வா அப்பா ரகுபதி. அம்மா வரவில்லையா? ஸரஸ்வதி எங்கே?" என்று அழைத்தார். மாப்பிள்ளை மீது அவருக்கு ஏற்பட்டிருந்த கோபம் ஒரு நொடியில் மறைந்து போனது ஆச்சரியந்தான். வயதிலும், அனுபவத்திலும் பெரியவராகிய அவர் மாறியது ஒன்றும் வியப்பில்லை. யர் மாழு விட்டால் மங்களம் அவரை லேசில் விடமாட்டாள்.
"அத்திம்பேரே! நிஜமாகவே வந்து விட்டீர்களே! தீபாவளிக்கு வந்திருந்தால் ஒற்றை வரும்படி. அப்படி வராமற் போனதற்கு இப்பொழுது இரட்டிப்பாக வரும்படி தரப்போகிறீர்கள். தீபாவளிச் சீருடன், கார்த்திகைச் சீரும் சேர்ந்து கிடைக்கப் போகிறது" என்று கேலியாகச் சீதா கூறிச் சிரித்தாள்.
இவர்கள் பேச்செல்லாம் மங்களத்துக்கு ரசிக்கவில்லை. "ஒருவரை-ஒருவர் பிரிந்து மாதக் கணக்கில் இருந்திருக்கிறார்கள். எவ்வளவோ பேசவேண்டி இருக்கும். 'தொண தொண' வென்று இவர்களுக்கு என்ன வேலை' என்று நினைத்தாள் அவள்.
ரகுபதி எழுந்து சற்று வெளியே போனபோது. "இந்தாருங்கள்! எல்லாச் சமாசாரங்களையும் ஆற அமரக் கேட்டுக் கொள்ளலாம்; ஒன்றும் கொள்ளை போய்விடாது. அவன் பெண்டாட்டியோடு அவனைப் பேசவிடுங்கள்" என்று கூறிவிட்டு விருந்து தயாரிப்பதற்குச் சமையலறைக்கு விரைந்தாள்.
கூடத்துக்கு வேலையாக வந்த சீதா குறும்புத்தனமாகச் சிரித்து, ”அத்திம்பேரே! அதோ உங்கள் சிறை இருக்கிறது. காவல்காரியும் அங்கேதான் இருக்கிறாள்!" என்று கூறிவிட்டுப் போய்விட்டாள்.
தனியாக விடப்பட்ட ரகுபதி, சீதா காட்டிய அறையைப் பார்த்தான். பிறகு துணிவுடன் எழுந்து அறைக்குள் சென்றான். சாவித்திரிக்கு ஒரு கணம் தன் கால்களின் கீழ் இருக்கும் பூமி நடுங்குவதுபோல் இருந்தது. கட்டிலைக் கையால் பிடித்துக் கொண்டாள். அவனை ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சினாள். ரகுபதியின் மனம் அன்பு நிறைந்தது அல்லவா? "சாவித்திரி! இன்னும் என் மேல் உனக்குக் கோபமா?" என்று கேட்டு அவள் கரங்களைப் பற்றித் தன் கைகளுடன் சேர்த்துக்கொண்டான்.
உதடுகள் துடிக்க அவள், 'இல்லை' என்னும் பாவனயாகத் தலை அசைத்தாள். அவன் கரங்களைப் பற்றித் தன் முகத்தை மறைத்துக்கொண்டாள்.
”எல்லாவற்றையும் மறந்து விடுவோம் சாவித்திரி! புதிய வாழ்க்கை தொடங்குவோம்!" என்று ஆர்வத்துடன் அவள் முகத்தைத் திருப்பி அவளைப் பார்த்தான் ரகுபதி.
கண்கள் கலந்து உறவாடின. காதலர்களைத் தனியாக விட்டுவிடுவோம்.
-----
மறுபடியும் ஸ்வர்ணம் தன் நாட்டுப் பெண்ணை வரவேற்க. ஆடி ஓடி வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள். அடுத்த நாள் கார்த்திகைப் பண்டிகை. சமையலறை-யிலிருந்து ’படபட' வென்று நெல் பொரியும் சத்தம் கேட்டுக்கொண்டே யிருந்தது. பாகீரதி அம்மாமிதான் மறுபடியும் ஸ்வர்ணத்துக்கு உதவியாக வேலைகளைச் செய்ய வந்திருந்தாள். காலம் மாறிப்போய்விடும். குழந்தைகள் பெரியவர்களாகிறார்கள். வாலிப வயதுடையவர்கள் நடுத்தர வயதை அடைகிறார்கள். பிறகு கிழத்தன்மையை அடைகிறார்கள். மனிதர்கள் உருவத்தில் மாறுதல் ஏற்படலாம். குணத்திலே மாறுதல் அடையக்கூடாது. நேற்றுவரை சகஜமாகப் பழகியவர்களிடம் இன்று 'நீ யார்? உன்னால் எனக்கு என்ன ஆகவேண்டும்?' என்கிற தோரணையில் பழகக்கூடாது. பாகீரதி அம்மாமி என்றும், எப்பொழுதும் ஒரே சுபாவத்தையுடையவள். ரகுபதி மனைவியை அழைத்து வருகிறான் என்று கேள்விப்பட்ட வுடனேயே ஸ்வர்ணத்திடம் வந்தாள். 'பண்டிகைக்கு என்னால் ஆன உதவிகளைச் செய்கிறேன்' என்று கூறினாள். இவள் சாதாரணமாகத்தான் படித்திருக்கிறாள். கோர்வையாக நாலு வார்த்தைதள் கூடப் பேசத் தெரியாது. படித்த பெண்கள் என்று சொல்லிக்கொள்கிறவர்களே; சற்றுமுன் பார்த்தவர்களை மறந்துபோய் விடுகிறார்கள்! நாமாகப் பேச முயன்றாலும் தங்களுக்கு அவசர ஜோலி இருப்பதாக ஓடிப்போய்விடுவார்கள். இது ஒரு அசட்டு நாகரிகம்!
வெல்லப் பாகின் வாசனை 'கம்' மென்று வீசிக்கொண்டிருந்தது. வேலைக்காரப் பெண் நெற்பதரையும், பொரியையும் பிரித்து எடுத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். முறத்தி லிருந்த பொரியைப் பாத்திரத்தில் கொட்டிவிட்டு ஸ்வர்ணத்தைப் பார்த்து அவள். “ஏனம்மா! சின்ன அம்மா வந்தால் திருப்பிக் கோவிச்சுகினு பிறந்த வூட்டுக்குப் போயிடுமா என்ன?" என்று கேட்டாள்.
"யார் பேரிலே அவள் கோபித்துக்கொள்ளப் போகிறாள்? நானும், ஸரஸ்வதியுந்தான் வெளியூருக்குப் போகப்போகிறோமே. கோபமோ, - சமாதானமோ இதில் தலையிட இங்கே யாரும் இருக்கப்போவதில்லை" என்றாள் ஸ்வர்ணம்.
"இந்த வீட்டுக்கு உன் சின்ன அம்மா தான் எஜமானி. இத்தனை வருஷ காலம் அதன் எஜமானியாக இருந்தது போதும். அத்தையம்மாவின் இடுப்புச் சாவி இடம் மாறப் போகிறது. வீட்டைச் சின்ன அம்மா பாத்துக்குவாங்க" என்றாள் ஸரஸ்வதி.
"பாத்துக்குவாங்க! அவ்வளவு இருந்தா இவங்களைப் பிடிக்க முடியாதம்மா. வாய்க்கு ருசியா புருசனுக்குச் சமைத்துப் போடத் தெரியாட்டியும் இதிலே ஒண்ணும் குறைச்சல் இல்லை போங்க!"
ஸரஸ்வதியும், ஸ்வர்ணமும் ஊருக்குப் போகப் போகிறார்கள் என்பதை நினைத்து வேலைக்காரப் பெண் கண் கலங்கினாள். புது எஜமானி எப்படி இருப்பாளோ என்கிற பயம் காரணமாக இருக்கலாம்.
கார்த்திகைச் சீருடன் சாவித்திரியும், ரகுபதியும், சந்துருவும், மங்களமும் வந்து சேர்ந்தார்கள். ஸரஸ்வதி முன்னைப் போல் ஆரத்தியுடன் ஓடிச் சாவித்திரியை வரவேற்கவில்லை! மனத்தில் தாக்கிய காயம் ஆழமாகப் போய்விட்டது. அதன் வலியை எவ்வளவு தான் அவள் மறக்க முயன்றாலும் அது வலித்துக்கொண்டேதான் இருந்தது. கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிளவுக்கே தான் காரணமானவள் என்று நினைத்து ஸரஸ்வதி ஒதுங்கிவிட்டாள். அவளுடன் வந்திருந்த தங்கம் சிரித்த முகத்துடன் ஆரத்தியைக் கொண்டுவந்தாள்.
"ஏதோ, கிழக்குப் பக்கமாக நில்லுங்கள்" என்றாள். "கௌரீ கல்யாணமே வைபோகமே" என்று பாடினாள். எல்லோரும் சிரித்தார்கள். எல்லோர் முகத்திலும் புன்னகை தவழ, மனத்தில் திருப்தியான இன்ப அலைமோத இந்தப் 'புனர் கிருகப் பிரவேசம்' நடைபெற்றது.
அன்பு கனிந்த பார்வையுடன் ஸரஸ்வதியைத் தேடிய மங்களம் அவளுடன், பேசச் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொண் டாள். "ஸரஸ்வதி! எங்கள் ஊருக்கு வரக்கூடாதென்று விரதம் எடுத்துக் கொண்டிருக்கிறாயா? தீபாவளிக்கு வருவாய் என்று நினைத்திருந்தேன். உன் அத்தானுடன் வருவாய் என்று நினைத்து ஏமாந்தேன். இப்பொழுது நானாகவே உன்னைப் பார்ப்பதற் கென்று வந்துவிட்டேன். ஏனம்மா வரவில்லை?" என்று விசாரித்தாள்.
"வராமல் என்ன மாமி? எனக்கு எல்லோரும் ஒன்றுதான். தாயன்புக்காக ஏங்கியவள் நான். உடன் பிறந்த சகோதரிகள் யாரும் இல்லையே என்று பார்க்கும் பெண்களை எல்லாம் என் சகோதரிகளாகவே நினைக்கிறேன். கணவன் - மனைவிக்குள் ஆயிரம் இருந்தாலும், சாவித்திரி என்னை அழைத்திருக்க வேண்டாமா? அவளுக்கு நான் என்ன தீங்கு செய்தேன்?-"
ஸரஸ்வதி கண்ணீர் விட்டு அழுது யாரும் அதிகமாகப் பார்த்ததில்லை. கஷ்டத்திலேயே வளர்ந்து, தாயை இழந்து அவதிப்பட்டவள் அவள். பிறருடைய துன்பங்களை உணர்ந்தவள். அவள் மனம் புண்ணாகித்தான் அழுதிருக்க வேண்டும்.
சந்துருவின் மனம் வாடிப்போய்விட்டது. ரகுபதி முகம் சோர, வேறுபக்கம் திரும்பிக் கொண்டு விட்டான். ஸ்வர்ணம் அங்கு நிற்கவேயில்லை. சாவித்திரி தலை குனிந்து உள்ளேபோய் விட்டாள். மனச்சாட்சி என்பது ஒன்று உண்டென்றால் அவள் தவறுகளுக்கு அதுவே பதில் கூறும்.
அமைதியாக இருந்த கூடத்துக்குத் தங்கம் உள்ளிருந்து ஓடி வந்தாள். "பாகிலே பொரியைப் போடுவதா? பொரியிலே பாகை ஊற்றுவதா, அக்கா? எது சரி சொல் பார்க்கலாம்?" என்றாள் சிரித்துக்கொண்டு.
ஸரஸ்வதியின் முகம் மலர்ந்துவிட்டது.
"நீதான் சொல்லேன். எனக்கு இதெல்லாம் தெரிந்து என்ன ஆகவேண்டும் சொல். நான் என்ன வீட்டுக்குள் பொரி உருண்டையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கப் போகிறேனா? உனக்குத்தான் கல்யாணம் நடக்கப்போகிறது. எல்லாம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்" என்றாள் அவள்.
இதைக் கேட்ட சந்துருவின் முகம் வாடிப்போய்விட்டது. 'ஸரஸ்வதி என்ன சொல்கிறாள்? தனக்குக் கல்யாணமே வேண்டாம் என்கிறாளா? இது என்ன ஏமாற்றம்?'
சாப்பிடும் கூடத்தில் மங்களமும், ஸ்வர்ணமும் பேசிக் கொண்டிருந்தார்கள். "அவள் சம்மதப்படுவாள் என்று எனக்குத் தோன்றவில்லை அம்மா. அவள் போக்கே விசித்திரமாக இருக்கிறது. வட நாட்டுக்கு யாத்திரைக்கல்லவா கிளம்பி இருக்கிறாள்? கல்லை அசைத்தாலும் அசைக்கலாம். அவள் உறுதியை அசைக்க முடியாது" என்றாள் ஸ்வர்ணம்.
சந்துரு மனசைத் திடப்படுத்திக்கொண்டான். 'ஆகட்டும். ஸரஸ்வதியையே கேட்டுவிடுகிறேன்' என்று சொல்லிக்கொண்டான். ஆனால் ஸரஸ்வதியைத் தனியாகவே அவனால் சந்திக்க முடியவில்லை. எப்போதும் அவள் பின்னால் தங்கம் 'அக்கா, அக்கா' என்று அழைத்துக்கொண்டிருந்தாள். ' அந்தப் பெண் இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும். கேட்டுவிடுவது' என்று தீர்மானித்துக்கொண்டு அவர்களிருவரும் இருந்த இடத்தை நாடிச் சென்றான்.
ஸரஸ்வதி புஷ்ப மாலை கட்டிக்கொண்டிருந்தாள். சந்துரு வந்து நிற்பதை ஏறிட்டுப் பார்த்த தங்கம் வெட்கத்தால் குன்றிப் போனாள். "அக்கா! அவர் வந்திருக்கிறார்" என்றாள். சந்துரு சிரித்துக்கொண்டே, 'ஒரு முக்கியமான விஷயம். நானும் அம்மாவும், சாவித்திரியைக் கொண்டுவந்து விடுவதற்காக இவ்வளவு தூரம் வரவில்லை-"
"நீங்கள் வந்திருக்கும் சமாசாரம் எனக்குத் தெரியுமே! என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளும்படியாகச் செய்வதற்கு வந்திருக்கிறீர்கள்; அவ்வளவு தானே-" என்று கூறிவிட்டு ஸரஸ்வதி யோசித்தாள். பிறகு தைரியத்துடன் நிமிர்ந்து சந்துருவைப் பார்த்து, "நண்பரே! சிறந்த குணசாலியான பெண்ணை மணக்க ஆசைப்படுகிறீர்கள். கலை ஆர்வத்தில் மூழ்கியிருக்கும் நான், உங்களுடைய அருமை மனைவியாக இருக்க முடி யாது. என்னுடைய வழியே அலாதியானது. லட்சியப் பாதையில் செல்பவர்கள் லட்சியவாதிகளைத் தாம் மணந்து கொள்ள ஆசைப்படுவார்கள். அப்படி இராமல் போனால் ரகுபதியும். சாவித்திரியும் போலத்தான் இருக்க வேண்டும். வீட்டின் ஒளியாக, கிருஹலக்ஷ்மியாக, சகதர்மிணியாக இருக்க வேண்டிய பெண், கலை ஆர்வம் கொண்டவளாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. நம்முடைய ஹிந்து சமுதாயம் வகுத்திருக்கிற அரிய விஷயங்களைத் தெரிந்தவளாக இருந்தால் போதும். கணவனிடம் அன்பு காட்டத் தெரிந்தால் போதும். பெற்ற குழந்தைகளை வளர்க்கத் தெரிந்தால் போதும். வீட்டை ஒளி யுடன் வைத்துக்கொள்ளத் தெரிந்தால் போதும். சங்கீதம் தெரிந்த வித்வாம்சினியாகவோ, எழுதத் தெரிந்த எழுத்தாளி யாகவோ, ஆடத் தெரிந்த அதிசயப் பெண்ணாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. குணத்தில் சிறந்த பெண் திலகங்கள் நிறைந்த தமிழ் நாடு இது. இதிலே எந்தக் கன்னிகையாவது உங்களைக் கட்டாயம் மணக்க வருவாள். இதோ! இந்தப் பெண் ஏழை என்கிற காரணத்தால் வாழ்வு கிடைக்குமா என்று ஏங்குகிறாள். நீங்கள் மனம் வைத்தால் அவளை வாழவைக்கலாம். தங்கம் எல்லாவிதத்திலும் சிறந்தவள். என்னைவிடச் சிறந்தவள். எனக்காவது பாடத் தெரியும் என்கிற எண்ணம் உண்டு. அவள் மனசிலே ஒரு விதமான அகம் பாவமும் இல்லை."
ஸரஸ்வதி கொஞ்சநேரம் பிரசங்கம் புரிந்தாள். தங்கம் ஆத்திரத்துடன் ஸரஸ்வதியின் கைகளைப் பிடித்துக்கொண்டு, "அக்கா! அக்கா! என்ன இப்படிப் பேசுகிறாயே?" என்று அதிசயப்பட்டாள்.
சந்துருவின் மனத்தில் புதைந்து கிடந்த பிரச்னைக்கு விடை கிடைத்துவிட்டது. ஸரஸ்வதி லட்சியப் பெண். உன்னதப் பாதையில் நடக்கிறவள். சாமானிய வாழ்விலே அவள் சிக்கி உழலமாட்டாள் என்பதும் தெரிந்து போயிற்று.
அவன் ஒரே வார்த்தையில் பதில் கூறினான். "ஆகட்டும் ஸரஸ்வதி! உன் விருப்பப்படியே தங்கத்தின் பெரியம்மாவைக் கண்டு பேசுகிறேன்" என்றான்.
அவன் அங்கிருந்து சென்ற பிறகு தங்கம் ஸ்ரஸ்வதியின் முகத்தோடு தன் முகத்தைச் சேர்த்துக்கொண்டாள்.
"அக்கா!" என்று தேம்பினாள்.
"என்னை விட்டுவிடு அசடே. உனக்குத்தான் அர்ச்சுனன் கிடைத்துவிட்டானே. நான் எதற்கு?" என்று ஸரஸ்வதி
தங்கத்தின் கண்ணாடிக் கன்னங்களில் லேசாகத் தட்டினாள்.
------------
அந்த ஊரிலிருக்கும் கோதண்டராமனின் ஆலயம் அன்று ஜகஜ்ஜோதியாக விளங்கியது. பிராகாரத்தைச் சுற்றிவந்த ஸரஸ்வதி அழகிய மனம் உருகும் காட்சி ஒன்றைக் கவனித்தாள். வயது முதிர்ந்த கிழவி ஒருத்தி, கோவில் பிராகாரங்களுக்கு விளக்கேற்றிக் கொண்டே வந்தாள். 'இவள் எதற்காகக் கோவிலுக்கு விளக்கேற்ற வேண்டும்? ஆசைக்காதலன் கிடைக்க வேண்டும் என்று தவம் புரிகிறாளா? வீட்டை விளங்கவைக்க மகப்பேறு வேண்டும் என்று வேண்டுகிறாளா? செல்வம் கொழிக்க வேண்டும் என்று விளக்கேற்றிக் கும்பிடுகிறாளா?'-ஸரஸ்வதியின் ஆச்சரியம் எல்லை கடந்துவிட்டது. மெதுவாக அவளருகில் சென்று ஸரஸ்வதி, "பாட்டி" என்று அழைத்தாள். "உங்களுக்கு என்ன கோரிக்கை நிறைவேறுவதற்காக இப்படி விளக்கேற்றி வணங்குகிறீர்கள்?" என்று கேட்டாள்.
கிழவியின் கண்களில் கண்ணீர் பெருகியது. "அம்மா! சில வருஷங்களுக்கு முன்புகூடக் கண்கள் சரியாகத் தெரியாமல் இருந்தன. பெரிய பெரிய சிகிச்சைகள் செய்து கொள்ளப் பணம் இல்லை. கோதண்டராமனை நம்பினேன். பார்வை கிடைத்தது. என் கண்களுக்கு ஒளி தந்தவனுக்கு நான் விளக்கேற்றுகிறேன் அம்மா. ஒளிமயமாக இருப்பவனை ஒளியின் மூலமாக வணங்குகிறேன்."
பொருள் நிறைந்த அவள் வார்த்தைகளைக் கேட்டு ஸரஸ்வதியின் உள்ளம் சிலிர்த்தது. எல்லோருடைய வாழ்விலும் ஒளி அவசியம். இரவாகிய இருளைக் கண்டால் சகல ஜீவன்களும் அஞ்சுகின்றன. நித்திரை மயக்கத்தில் ஆழ்ந்து, இருளை விரட்டி ஒளியைக் காண விழைகின்றன. அருணோதயத்தை எதிர்பார்த்து நிற்கிறோம். ' நல்லபடியாகப் பொழுது விடியட்டும்' என்பதில் வாழ்விலே ஒளி வீசட்டும் என்கிற அர்த்தம் மறைந்து காணப் படுகிறது.
'ரகுபதி – சாவித்திரியின் வாழ்வில் ஒளி வீசட்டும். தங்கமும் சந்துருவும் ஒளியுடன் வாழட்டும். என் கலை வாழ்விலே ஒளி வீச ஆண்டவன் அருள் புரியட்டும்' என்று பிரார்த்தித்துக் கொன்டே ஸரஸ்வதி வீட்டை அடைந்தாள்.
சாவித்திரியும், தங்கமும் அகல் விளக்குகளை ஏற்றிக்கொண்டிருந்தார்கள். வீடு முழுவதும் ஒரே ஒளிமயம். கூடத்திலே முருகனின் உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது.
'முத்தமிழால் வைதாரையும் வாழவைக்கும்" வள்ளி நாயகன் கம்பீரமாகக் காட்சியளித்தான்.
உள்ளே வந்த ஸரஸ்வதி தன் வீணையை எடுத்து வைத்துக் கொண்டாள். பிறகு செஞ்சுருட்டியில் திருப்புகழைப் பாட ஆரம்பித்தாள்:
முற்றும்

பதிப்புரை

1. வேதாந்தி | 21. குமுறும் ஹிருதயம் |
2. மாமியார் நாட்டுப் பெண் | 22. தங்கத்துடன் ரகுபதி |
3. பாடத் தெரியுமா? | 23. சாலை வழியே |
4. அவளுக்கு அவ்வளவு சுதந்தரமா? | 24. முள்ளின் வேதனை |
5. டில்லியிலிருந்து | 25. மங்களத்தின் நம்பிக்கை |
6. வீணாகானம் | 26. தாய்க்குப் பிறகு தாரம் |
7. ரகுபதியின் கடிதம் | 27. தங்கத்துக்கு அர்ப்பணம் |
8. பொறாமை | 28. மைசூரில் |
9. மனித சுபாவம் | 29. வரவேற்பு |
10. 'வானம்பாடி' | 30. சாவித்திரியின் உள்ளம் |
11. வீணையும் கண்ணீரும் | 31, அழைக்காத விருந்தாளி |
12. ரகுபதியின் கோபம் | 32. நீச மனோபாவம் |
13. பிறந்த வீட்டுக்கு | 33. என்னுடைய குற்றம் |
14. சீதாவின் உபதேசம் | 34. பிரார்த்த னை |
15. "மாலே மணி வண்ணா !" | 35. 'நான் ஏழைப் பெண்' |
16. சந்துருவும் சாவித்திரியும் | 36. கானல் நீர் |
17. 'நினைவிருக்கிறதா?' | 37. 'விமோசனம் உண்டா ?' |
18. 'அந்தப் பெண் யார்?' | 38. 'இன்னும் கோபமா?' |
19. 'நந்த கோபாலனோடு நான்' | 39. கிருகப் பிரவேசம் |
20. 'தை பிறந்தால் வழி பிறக்காதா?' | 40. இருளும் ஒளியும் |
இருளும் ஒளியும் : 1. வேதாந்தி
அன்று பகல் எல்லோரும் அடுத்த ஊருக்குப் பெண் 'பார்க்க’ ப் புறப்படுவதாக இருந்தார்கள். பிரயாணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை ஸ்வர்ணம் கவனித்துக் கொண்டிருந்தாள். பாதி விழிப்புடன் படுத்திருந்த ரகுபதியின் காதுகளில் வீணையுடன் இழைந்துவந்த மத்யமாவதி ராகம் விழுந்து பரவசமூட்டியது. மத்ய மாவதியுடன் ஸரஸ்வதி, அநேகமாகப் பாட்டை முடித்து விடுவாள் என்பது அவனுக்குத் தெரியும். படுக்கையில் எழுந்து உட்கார்ந்து, சோம்பல் முறித்துக் கொண்டிருக்கும் ரகுபதியின் படுக்கை அறை வாயிற்படியில் ஸரஸ்வதி வந்து நின்று, "அத்தான்! இன்றைக்குக்கூட என்ன இவ்வளவு தூக்கம்! சாவித்திரியைக் கைப்பிடிக்கப் போகும் சத்தியவானாகிய நீ இப்படிச் சோம்பேறியாக இருக்கலாமா அத்தான்? காபி ஆறிப்போகிறதாம். அத்தை ஒரு பாட்டம் சமையலறையில் இருந்து கொண்டு கத்துகிறாள். ஹும் . . ஹும். எழுந்திரு! அத்தான் எழுந்திரு! இல்லாவிட்டால் திருப்பள்ளியெழுச்சி பாடினால்தான் எழுந்திருப்பாயோ?" என்று பரிகாசம் தொனிக்க உற்சாகத்துடன் ரகுபதியின் அரைத் தூக்கத்தைக் கலைத்துவிட்டாள்.
ரகுபதி ஆச்சரியத்துடன் ஸரஸ்வதியின் முகத்தைப் பார்த்தான். பிறகு, “அப்படியானால், நேற்று வந்து போனார்களே அவர்கள் வீட்டுப் பெண்ணுக்குச் சாவித்திரி என்று பெயரா, ஸரஸு?' என்று கேட்டான்.
"ஆமாம் அத்தான்! புராணத்துச் சாவித்திரிக்கும் இவளுக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கும். அப்பா, அம்மாவுக்கு ரொம்ப செல்லப் பெண்ணாம் - பாட்டி ஒருத்திக்கு அருமைப் பேத்தியாம்! நாலு பேருடன் பிறந்தவளாக இருந்தாலும், தனிக் காட்டு ராணிமாதிரி அதிகாரம் செய்வாளாம்!"
ஸரஸ்வதி, குறும்புப் புன்னகையுடன் தலைப் பின்னலை கையில் முறுக்கிக்கொண்டே ரகுபதியைப் பார்த்து இவ்விதம் கூறினாள்.
"ஓஹோ! உனக்கு எல்லாம் தெரிந்திருக்கிறதே, ஸரஸு! நான் சொல்கிறேனே என்று கோபித்துக்கொள்ளாதே. நீ சங்கீதம் பயில்வதை விட்டு விட்டு, ஏதாவது பத்திரிகாலயத்தில் வேலைக்குச் சேர்ந்தாயானால், இந்தமாதிரி சரடு விடுவதில் அர்த்தம் உண்டு!" என்றான் ரகுபதி சிரித்துக்கொண்டே.
”ஐயையோ, சரடா? இல்லை. அத்தான், நிஜமாகத்தான் சொல்லுகிறேன். பெண்ணின் தகப்பனாரே அத்தையிடம் தன் பெண்ணைப்பற்றிய பிரதாபங்களை வாய் ஓயாமல் அளந்து கொண்டிருந்தார்! ” என்றாள் ஸரஸ்வதி.
அவர்கள் இருவரும் மேற்கொண்டு தொடர்ந்து வம்பளப்பதற்கு முடியாமல், அடுப்பங்கரையிலிருந்து அதிகாரத்துடன் ஒரு குரல் அவர்கள் இருவரையும் அதட்டியது.
”ஸரஸு! பேச ஆரம்பித்தால் ஓய மாட்டாயே நீ? அவனுந்தான் என்ன? பாட்டுப் பைத்தியம்; பேச்சுப் பைத்தியமும்கூட” என்று அத்தை ஸ்வர்ணம் அதட்டினாள்.
ஸரஸ்வதி மாடிப் படிகளில் மெதுவாக இறங்கினாள். "சிந்தை அறிந்து வாடி, செல்வக் குமரன் - சிந்தை அறிந்து வாடி” என்று பாடிக்கொண்டு, அத்தானைப் பார்த்துக் கலகலவென்று! சிரித்தாள் அந்தப் பெண் ஸரஸ்வதி. சிரிப்பில் சேர்ந்துகொண்ட ஸ்வர்ணம், ஸரஸ்வதியின் அருகில் வந்து வாஞ்சையுடன் அவள் தலையைத் தடவிக் கொடுத்தாள். பிறகு, ”ஸரஸு! நீ என்னதான் உன் அத்தானுடன் கபடமில்லாமல் பழகினாலும், பிறர் தவராக நினைப்பார்கள், அம்மா. போகிற இடத்திலெல்லாம் நீ பேசாமல் இருக்கிறதில்லை. இந்தக் காலத்தில் நல்லது எது, கெட்டது எது என்பதை யார் ஆராய்ந்து பார்க்கிறார்கள்? நான் சொல்கிறேனே என்று கோபித்துக்கொள்ளாதே. ஸரஸு!" என்றாள் ஸ்வர்ணம்.
ஸரஸ்வதி, அன்புடன் அத்தையை ஏறிட்டுப் பார்த்தாள்.
”நான் தான் உங்களுடன் பெண் பார்க்க வரப்போகிற இல்லையே, அத்தை. நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்?" என்று கபடமில்லாமல் கேட்டாள்.
ஸ்வர்ணத்தின் கண்களில் நீர் நிறைந்துவிட்டது. துஷ்டத்தனம் செய்யும் குழந்தையைத் தாய் அதட்டியதும், அதன் பிடிவாதம் அதிகமாவதைப்போல் இருந்தன, ஸரஸ்வதியின் பதிலும், செய்கையும்.
”உன்னை நான் என்ன சொல்லிவிட்டேன் ஸரஸு? லக்ஷனமாக, கன்னிப் பெண்ணாக நீ என்னுடன் வராமல், அழகாக இருக்கிறது நான் ரகுவை அழைத்துப்போய் அவர்கள் எதிரில் நிறுத்துவது? நீ வராவிட்டால், பாட்டுப் பரீக்ஷையைத்தான் யார் நடத்துவது? போ, போ. புறப்படுவதற்கு ஏற்பாடு செய்து கொள், போ" என்று உரிமையுடன் ஸரஸ்வதியை அதட்டினாள் ஸ்வர்ணம்.
அதென்னவோ வாஸ்தவம். அத்தான் ஒரு பாட்டுப் பைத்தியம் என்று தெரிந்த ஸரஸ்வதி, பெண் பார்க்கப் போகும் இடங்களிலெல்லாம் ஒரு சிறிய சங்கீதப் பரீட்சையே வைத்து விட்டாள் எனலாம். சில பெண்கள் அறுபது கீர்த்தனங்கள் பாடமென்று சொல்லி விட்டு, ஸ, ப,வுக்கு வித்தியாசம் தெரியாமல் விழித்தார்கள். சிலரின் சங்கீதம் ஒரே சினிமா மயமாக இருந்தது! கச்சிதமாக நாலு பாட்டுகள் பாடுகிறேன் என்று அதுவரையில் பார்த்த பெண்கள் யாரும் முன் வரவில்லை. ஸரஸ்வதி ஒரு தினம் விளையாட்டாக ரகுபதியிடம், "அத்தான்! உனக்குத் தான் வீணை வாசிக்கத் தெரியுமே. சங்கீதமே தெரியாத பெண்ணாகப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கொண்டுவிடேன்.' பிறகு நீயே பாட்டுக் கற்றுக்கொடுத்துவிடலாம்" என்றாள்.
"ஆமாம்.. கல்யாணம் ஆன பிறகு, பிள்ளைகள் மாமனார் வீட்டில் இருந்து கொண்டு, மேற்படிப்புப் படித்துப் பாஸ் செய்கிற லக்ஷணத்தைப்போலத்தான் இதுவும் இருக்கும்!" என்றாள். அத்தை ஸ்வர்ணம் சிரித்துக் கொண்டே .
"அத்தானுடைய சுபாவம் அப்படி இல்லை அத்தை. அவனுக்கு லட்சியம் ஒன்றுதான் முக்கியம்" என்றாள் ஸரஸ்வதி.
படுக்கையில், பாதி திறந்த விழிகளுடன் பழைய நினைவுகளில் மனத்தை லயிக்க-விட்டிருந்த ரகுபதிக்குப் பளிச்சென ஞாபகம் வந்தது இந்தச் சம்பாஷணை. அதோடு, யார் லட்சியவாதி; அவனா, ஸரஸ்வதியா என்ற கேள்வியும் எழுந்தது. எப்படிப் பார்த்தாலும், தன்னை விட ஒருபடி மேலாகவே கண்டான் அவளை. நல்ல சங்கீத ஞானமும், நிறைந்த சாரீர சம்பத்தும் பெற்றவள் அவள். அழகில் மட்டுந்தான் குறைந்தவளா? தாழம்பூ மேனியும் சுருண்டு, அடர்த்தியாக, அலை பாயும் கூந்தலும் மருண்ட விழிகளும் குளிர்ந்த உதடுகளும் தாமரை மலர் போன்ற கரங்களும் பெற்று அழகியாகத்தான் இருந்தாள். அதோடு ' குடும்பப் பெண்' என்பதற்கு இலக்கணமாக விளங்குபவள். உஷக்காலத்தில், வெள்ளி முளைத்திருக்கும்போது எழுந்து, முகம் கழுவி, பொட்டிட்டு, ஸ்வாமிக்கு விளக்கேற்றி, வீணையுடன் இழையும் மெல்லிய காலில் பாட ஆரம்பித்து விடுவாள் அவள். அவள் பாட்டைக் கேட்ட பிறகுதான் அந்த வீட்டில் மற்றவர்கள் எழுவார்கள்.
எனினும் ஒரே ஒரு குறை அவளிடம். அதுவும், ரகுபதியால் ஏற்பட்ட குறைதான். பால்யத்தில் ரகுபதியின் மாமன் மகளாகிய ஸரஸ்வதியும், அத்தான் ரகுபதியும் ஒன்றாக விளையாடியபோது ரகுபதி விளையாட்டாகப் பின்புறம் வந்து அவள் கால்களை இடறி விட்டபோது ஸரஸ்வதி விழுந்துவிட்டாள். சாதாரண விளையாட்டு, வினையாகி ஒரு கால் எலும்பு முறிந்து, நிரந்தரமான ஊனம் ஏற்பட்டுவிட்டது. அந்தக் குறை ஸரஸ்வதியின் மனத்திலும் அழியாத - வடுவை ஏற்படுத்திவிட்டது. என்னதான் அழகாக இருந்தாலும், என்னதான் சங்கீதம் தெரிந்திருந்தாலும், ஊனம் ஊனந்தானே! ரகுபதியும் பெரியவனாகிய பிறகு, தான் தவறுதலாகச் செய்துவிட்டதை நினைத்து வருந்தியிருக்கிறான். ”இசைக்கும், கலைக்கும் என் வாழ்க்கையை அர்ப்பணித்து விடுகிறேன் அத்தான். எனக்காக நீ ஒன்றும் வருத்தப்பட வேண்டாம்" என்று ஸரஸ்வதி ரகுபதிக்கு எவ்வளவோ முறைகள் தேறுதல் கூறியிருக்கிறாள்.
ஆனால், ஒவ்வொரு தினமும் ஸரஸ்வதி, உள்ளம் உருகிப் பாடும் போதெல்லாம் ரகுபதி இந்தப் பழைய சம்பவத்தை நினைத்துக் கொண்டு ஏங்குவான். தானே அவளை மணந்து கொண்டு விட்டால் அவளிடம் இருக்கும் குறையைப் பாராட்டாமல் இருக்க முடியும் என்று நினைத்து, அவளிடம் அவன் அதைப் பற்றிப் பிராஸ்தாபித்தபோது, அவள் ஒரு குழந்தையைப்போல் கபடமில்லாமல் சிரித்தாள். வெண்கல மணி ஒலிப்பதுபோல் கலகலவென்று சிரித்து விட்டு, "அத்தான்! பாபம் செய்தவர்கள் பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டியது அவசியந்தான். விளையாட்டாக நேர்ந்து விட்ட தற்காக உன் வாழ்க்கையைப் பாழாக்கிக்கொள்ள வேண்டுமா? நாலு பேர் எதிரில் நொண்டிப் பெண்ணை, மனைவி என்று அழைத்துச் செல்ல வேண்டுமா? உனக்கும் எனக்கும் என்றும் இந்தச் சகோதர அன்பே நிலைத் திருக்கட்டும், அத்தான்" என்று பெரிய வேதாந்தியைப்போல் கூறிவிட்டாள் ஸரஸ்வதி. இந்தப் பதிவைக் கேட்டு ரகுபதி ஒன்றும் பேச முடியவில்லை. வாதப் பிரதாபாதங்களுக்கு இடமில்லாமல் அவள் அளித்த பதில் ரகுபதியின் தாய் ஸ்வர்ணத்தைக்கூடப் பிரமிக்கச் செய்துவிட்டது. அத்துடன் அவர்கள் அந்த யோசனையைக் கைவிட்டு விட்டார்கள். ரகுபதிக்கு வேறு இடத்திலிருந்து ஜாதகங்கள் வர ஆரம்பித்தன. இரண்டொரு இடங்களுக்குப் போய்ப் பெண் பார்த்தும் வந்தார்கள். இந்தப் பேட்டிப் படவங்களில் ஒன்றுதான் அன்று நடைபெறவிருந்தது . அதற்குத்தான் இத்தனை அமர்க்களமும்.
-----------------
2. மாமியார் நாட்டுப்பெண்
இதே மாதிரி அன்று அதிகாலையிலிருந்தே சாவித்திரியின் வீட்டிலும் கேலிப்பேச்சும் சிரிப்பும் நிறைந்திருந்தன. பிள்ளை வீட்டார் பெண் பார்க்க வரப்போகிறார்கள் என்று அறிந்து ஒவ்வொருவரும் ஓடி ஆடிக் குதூகலத்துடன் வேலை செய்து கொண்டிருந்தார்கள். சாவித்திரி நொடிக்கு ஒரு தரம் நிலைக் கண்ணாடியின் எதிரில் நின்று தன்னைக் கவனித்துக்கொள்வதில் முனைந்திருந்தாள். சாவித்திரியின் தாய் மங்களம் - வழக்கமாகத் தன் மாமியாருக்குப் பயப்படுகிறவள்கூட - அன்று தானும் கூடிய விரைவில் மாமியார் ஆகப்போகிறோம் என்கிற பெருமிதத்தில், சற்று இரைந்தே பேசிக்கொண்டிருந்தாள். சாவித்திரியின் தங்கை சீதாவுக்குத் தான் வீட்டிலே அதிகம் வேலைகள் காத்துக்கிடந்தன. சரசரவென்று மாடிக்கும் கீழுக்கும் ஹாலுக்கும் காமரா அறைக்குமாகத் தன் மேலாடை பறக்கத் திரிந்து கொண்டிருந்தாள் அவள்.
பெண்ணுக்குக் கல்யாணமென்றால் தாய்க்குத்தான் அதில் பெருமையும் பங்கும் அதிகம் என்று கூறலாம். பிள்ளை வீட்டார் வந்து சாவித்திரியைப் பார்த்துத் தம் சம்மதத்தை அறிவிப்பதற்கு முன்பே மங்களம் பெண்ணுக்குச் செய்ய வேண்டிய சீர் வரிசைகளைப் பற்றித் தன் கணவர் ராஜமையரிடம் பேசினாள்.
"மாப்பிள்ளைக்குத் தீபாவளிக்கு வைர மோதிரம் போடுவதாகச் சொல்லிவிடுங்கள். இப்போது சாவித்திரிக்குக் கணிசமாக நாலு வளையல்கள் செய்தாக வேண்டும். மோதிரச் செலவையும் சமாளிக்க முடியாது. அப்புறம் சம்பந்திகள் எதிரில் வழவழ
என்று பேசிவிடாதீர்கள்" என்றாள் மங்களம் காபியை ஆற்றிக் கொண்டே.
ராஜமையர், "ஹும்.. ஹும்.." என்று தலையை ஆட்டினார். அவருக்குப் பதில் சாவித்திரியின் தமையன் சந்துரு பேச ஆரம்பித்தான்: ”உன் பெண்ணுக்குத்தான் ஒரு ஜதை வளையல்கள் குறைவாக இருக்கட்டுமே அம்மா. மாப்பிள்ளைக்கு இப்பொழுதே மோதிரம் போட்டுவிடலாம். நாலு பேருக்குத் தெரிந்து எந்த மரியாதையையும் செய்தால் நன்றாகச் சோபிக்கும்" என்றான் சந்துரு.
அந்த வீட்டில் தனக்குத் தெரியாமல் ஒன்றும் நடக்கக் கூடாது என்கிற சுட்சியைச் சேர்ந்தவள் சாவித்திரியின் பாட்டி. ஆகவே, "ரொம்ப நன்றாக இருக்கிறதே! கல்யாணம் பண்ணுகிற குழந்தைக்குக் கை நிறைய வளையல்கள் வேண்டாமாடா, அப்பா?” என்று கேட்டாள் பாட்டி.
இவ்வளவு வாதப் பிரதிவாதங்களுக்கும் ராஜமையர் தலையைக்கூட அசைக்காமல் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கம்பீரமாகப் புன்னகை செய்து கொண்டு படுத்திருந்தார். குடும்பத் தலைவர் என்கிற அந்தஸ்து எவ்வளவு பொறுப்பு வாய்ந்தது என்பதை நினைத்தே அவர் யோசனையில் ஆழ்ந்திருந் தார் என்று கூறலாம். வீட்டிலே கல்யாணச் சீர் வரிசைகளைப் பற்றி ஒவ்வொருத்தர் அபிப்பிராயம், ஒவ்வொரு விதம் இருக்கிறது. பணச் செலவை எப்படியோ சரிக்கட்டி சமாளிக்கும் திறன் அவரிடந்தானே இருக்கிறது? அதைப்பற்றி யாராவது நினைத்துப் பார்க்கிறார்களா? இவ்வாறு எண்ணித்தான் அவர் புன்னகை புரிந்திருக்க வேண்டும்.
ராஜமையர் காபி சாப்பிட்ட டவராவையும் டம்ளரையும் எடுத்துக்கொண்டு மங்களம், "ஒன்றுக்கும் உங்கப்பா வாயைத் திறக்கமாட்டார். வீடு பற்றி எரிந்தால்கூட, 'அதென்ன புகைச்சல்?' என்று கேட்கிறவராயிற்றே!" என்று கூறிக் கொண்டே விசுக்கென்று சமையற்கட்டிற்கு எழுந்து சென்று விட்டாள்.
அதற்கும் ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு ராஜமையர், "சீதா! அவர்கள் எல்லோரும் வருவதற்கு மூன்று மணி ஆகும். அதற்குள் சாவித்திரியின் அலங்காரமெல்லாம் முடிந்து விடும் அல்லவா?" என்று மகளைக் கூப்பிட்டு விசாரித்தார்.
சீதா ஏதோ வேலையாக அந்தப் பக்கம் வந்தவள், தகப்பனார் கேட்ட கேள்விக்குப் பதில் கூறாமல் இரு கரங்களிலும் நான்கு பட்டுப் புடைவைகளை வாரி எடுத்துக் கொண்டு அவர் கேட்டதற்குத் தலையை மட்டும் அசைத்துவிட்டு அந்த வீட்டுக் காமரா அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டாள். அந்த அறைக்குள் சாவித்திரி, பீரோவிலிருக்கும் ஒவ்வொரு புடைவையாக எடுத்து மத்தியான்னம் பிள்ளை வீட்டார் வரும்போது எதை உடுத்துக் கொண்டால் அழகாக இருக்கும் என்று ஆராய்வதில் முகாந்திருந்தாள். அவளிடமிருந்த ஏழெட்டுப் பட்டுப் புடைவைகளில் ஒன்றாவது அவள் மனத்துக்குப் பிடித்ததாக இல்லை. கடையிலிருந்து வாங்கும்போது என்னவோ அந்தப் புடைவைகளை ஆசையுடன் தான் வாங்கிக்கொண்டாள். நாழிக்கொரு மோஸ்தரும், வேளைக் கொகு அலங்காரமுமாக மாறி மாறி வரும் புடைவை ரகங்களைப் பார்த்தபோது அந்தப் புடைவைகள் அவருக்குப் பழைய ரகங்களாகத் தோற்றமளித்தன. சலிப்புடன் அவள் பீரோவைப் பட்டென்று மூடும்போது, சீதா கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள். கையிலிருந்த புடைவைகளைச் சோபாவில் போட்டு விட்டு, "எதையாவது சீக்கிரம் நிச்சயம் பண்ணு சாவித்திரி. எனக்குக் கொள்ளை வேலை காத்துக் கிடக்கிறது" என்று கூறினாள் தமக்கையிடம்.
சாவித்திரியும் சீதாவும் உடன் பிறந்த சகோதரிகளாக இருந்தாலும் குணத்தில் ஒருவருக்கொருவர் அதிக வித்தியாசத்தைப் படைத்தவர்கள். எவ்வளவு ஆடை, ஆபரணங்கள் இருந்தாலும் சாவித்திரியின் மனம், போதும் என்று ஒப்புக் கொள்ளாது. சீதாவுக்கோ சாதாரண வாயில் புடைவை இருந்தால் போதும். இருவருக்கும் பெற்றோர்கள் ஒரே மாதிரி ஆடை, ஆபரணங்கள் வாங்கி அளித்திருந்தாலும் சீதாவின் பொருள்கள் தாம் சாவித்திரிக்குப் பிடித்தமானவைகளாக இருக்கும்.
சாவித்திரி, சோபாவில் கிடந்த புடைவைகளைப் புரட்டிப் பார்த்தாள். தன்னுடைய-வையாக இருந்தால் நலங்கிவிடுமே, மடிப்புக் கலைந்துவிடுமே என்று யோசனை செய்திருப்பாள். சீதாவின் புடைவைகள் தாமே அவைகள்! அவைகள் எப்படிப் போனால் என்ன! புடைவைகளை இப்படியும் அப்படியும் புரட்டிப் பார்த்துவிட்டு, "ஏண்டீ, இந்தக் கனகாம்பரக் கலர் 'கிரேப்' புடைவையை உடுத்துக் கொள்கிறேனே. நீயும் இதைத்தான் ’செலக்ட்’ பண்ணி இருக்கிறாயா என்ன?" என்று நிஷ்டுரமாகக் கேட்டாள் சீதாவைப் பார்த்துச் சாவித்திரி.
"ஹும்.. ஹும்.. பெண் பார்க்க வருவது உன்னையே தவிர என்னை அல்ல சாவித்திரி! உனக்குத்தான் தெரியுமே, எனக்கு இந்தப் பகட்டான புடைவை யெல்லாம் பிடிக்காது என்று".-- சாவதானமாகப் பதிலளித்த சீதா, தான் பொறுக்கி எடுத்த புடைவையை வைத்துவிட்டு மற்றவைகளைத் திரும்பவும் பீரோவில் அடுக்கி வைப்பதற்கென்று தன்னுடைய அறைக்குத் திரும்பினாள்,
இதற்குள்ளாகச் சமையலறையில் சிறு பூகம்பம் ஒன்று ஏற்பட்டது என்று கூறலாம். ஜப மாலையை உருட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்த பாட்டி, தன் நாட்டுப் பெண் மங்களத்தைப் பார்த்துத் திடீரென்று ஒரு கேள்வி கேட்டாள்.
"என்ன உயர்வு என்று இந்த வரனை நிச்சயம் பண்ணி இருக்கிறீர்கள்? பிள்ளைக்கு வேலை இல்லையாமே! சொத்து இருந்து விட்டால் போதுமா? புருஷனாய், லக்ஷணமாய், வேலை பார்க்காமல், பொழுது விடிந்து பொழுதுபோனால் வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டு! கேட்கச் சகிக்கவில்லையே!" என்று பாட்டி கோபத்துடன் கூறிவிட்டு, வேகமாக ஜபமாலையை உருட்டினாள்.
மங்களத்துக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அந்த நாளில் ராஜமையர் உத்தியோகம் பண்ணிக் கிழித்தது அவளுக்குத் தெரிந்ததுதானே? இருந்த வேலையையும் ஒரே நாளில், 'சத்தியாக்கிரகம் பண்ணி ஜெயிலுக்குப் போகிறேன்' என்று ஆரம்பித்து, ராஜிநாமா செய்தவர் ஆயிற்றே! பிறகு சீதா பிறக்கிறவரைக்கும் பத்திரிகைகளுக்கு விஷய தானம் செய்தே குடும்பம் நடத்தவில்லையா? மாமியாருக்கு இதெல்லாம் மறந்து போனதைப்பற்றி மங்களத்துக்குக் கோபமும் ஆத்திரமும் ஏற்பட்டன. அடுப்பில் காய்ந்து கொண்டிருந்த நெய்யில் முந்திரிப் பருப்பையும் திராக்ஷையையும் போட்டு வறுத்துக்கொண்டே, மாமியாருக்குப் பதில் கூறாமல் இருந்தாள் மங்களம்.
உருட்டிக் கொண்டிருந்த ஜபமாலையைச் சம்புடத்தில் வைத்துவிட்டு. இரண்டு உத்தரணி ஜலத்தை 'ஆசமனீயம்' செய்தாள் பாட்டி. பிறகு, "கூடப் பிறந்தவர்கள் எத்தனை பேராம்?" என்று கேட்டாள் நாட்டுப் பெண்ணை.
இனிமேலும் பதில் கூறாமல் இருக்க முடியாது என்று தெரிந்து. "ஒரே பிள்ளை தான்; பிக்கல், பிடுங்கல் ஒன்றும் கிடையாது. தகப்பனார் வேண்டியது சம்பாதித்து வைத்திருக்கிறார். பிள்ளைக்குச் சங்கீதம் என்றால் ரொம்ப ஆசையாம். சீக்கிரத்திலேயே சங்கீதப் பள்ளிக்கூடம் ஒன்று ஆரம்பிக்கப் போகிறானாம்!" என்றாள் மங்களம்.
"பாட்டுப் பள்ளிக்கூடம் வைப்பது ஒரு உத்தியோகமா! போகிறதே இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்குப் புத்தி! ஆயிரம் ஆயிரமாகக் கொட்டிப் பரீக்ஷை பாஸ் பண்ணிவிட்டுச் செருப்புக் கடை வைத்துச் சம்பாதிக்கிறேன் என்று ஆரம்பிக்கவில்லையா நம்ப சுப்ரமணியின் பிள்ளை குண்டு! கர்மம், கர்மம்!" என்று தலையில் இரண்டு போட்டுக் கொண்டாள் பாட்டி.
பாட்டிக்கு வயசு எழுபது ஆனாலும் வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷயமும் தனக்குத் தெரியாமல் நடக்கக்கூடாது என்கிற எண்ணம் வாய்ந்தவள். 'பிள்ளைகளை வளர்த்துப் பெரியவர்கள் ஆக்கியாயிற்று. பெண்களும் புக்ககம் போய் விட்டார்கள். பேரன் பேத்திகள் வீடு நிறைய இருக்கிறார்கள். செய்த வேலைகள் போதும், இனி ஓய்வு பெறலாம்' என்கிற எண்ணம் பாட்டிக்குக் கிடையாது. 'நாம் ஒன்றிலும் தலையிடக் கூடாது: கிருஷ்ணா, ராமா என்று காலத்தை ஓட்டவேண்டும்' என்று பாட்டி அநேக முறைகள் மனத்தை வைராக்கியத்துக்கு இழுத்து வந்திருக்கிறாள். அந்த வைராக்கியம் அரை நிமிஷங் கூட நிலைக்காது. மாமியாருக்கும் நாட்டுப் பெண்ணுக்கும் ஏதாவது ஒரு காரணத்தைப்பற்றித் தினம் சண்டையும் பூசலும் ஏற்படும். இருவரும் நாள் கணக்கில் பேசமாட்டார்கள். ஆனால், பாட்டி சாப்பிடாமல், மங்களம் அந்த வீட்டில் ஜலபானம் பண்ணமாட்டாள். வயசான மனுஷி என்கிற மரியாதையும் அபிமானமுந்தான் காரணம். ராஜமையருக்கு இலை போட்டுப் பரிமாறும்போதே, மாமியாருக்கும் இலை போட்டு விடுவாள் மங்களம், மாமியார் சொன்ன சொற்கள் மனத்தை வாட்டி எடுத்தாலும், அவருக்குச் செய்யும் சிசுருஷையில் கொஞ்சம் கூடக் குறைவு இராது.
ராஜமையர் எதையும் காதில் வாங்கிக் கொள்ள மாட்டார். மனைவியைத் தனிமையில் சந்திக்கும்போதெல்லாம், "மங்களம்! நீ சாப்பிட்டாயா? உடம்பைக் கவனித்துக் கொள்ளாமல் வேலை வேலை என்று பறக்கிறாயே!" என்று அன்புடன் கடிந்து கொள்வார்.
"ஆமாம், வேலை செய்யாவிட்டால் உங்கள் வீட்டில் எனக்கு யார் சோறு போடுகிறார்கள்!" என்று நிஷ்டுரமாகக் கேட்பாள் மங்களம். "உங்கள் வீடா? அடி அசடே! வீட்டுக்கு நீதானே எஜமானி? நீதானே இந்தக் கிருகத்தில் அன்னபூரணியாக இருக்கிறாய்? நான் கூட உன்னிடந்தானே, 'தேஹி' என்று வர வேண்டும்" என்று கூறி, அவள் கரங்களை அன்புடன் பற்றித் தம் கைகளில் சேர்த்துக்கொள்வார். அவருடைய இன்ப ஸ்பரிசத்தில் ஆயிரம் வருஷங்களின் கஷ்டங்களை மறந்து விடுவாள் மங்களம்.
இவ்விதம் மனஸ்தாபம் மூண்டு எழுந்தாலும் அன்பு நீரால் அத்தம்பதிகள் அதை அணைத்து விடுவார்கள். மேலே பற்றி எரிய வழி இல்லை அல்லவா?
அடுப்பிலிருந்த வாணலியை இறக்கிவிட்டு மங்களம், மாமியாருக்கு இலை போட்டாள். பஞ்சபாத்திரத்தில் ஜலத்துடன் 'நச்' கென்று இலை முன்னால் வந்து உட்கார்ந்த பாட்டி, "ஆமாம். பிக்கல், பிடுங்கல் இல்லை என்று சொன்னாயே. உனக்கு மாத்திரம் இங்கே என்ன பிடுங்கல்? இந்த வீட்டுக்கு யார் வரக் காத்துக் கிடக்கிறார்கள்? கூப்பிட்டால் வரப்போகிறார்கள். இல்லாவிட்டால் இல்லை" என்று மனஸ்தாபத்தைப் பாதியில் நிறுத்த இஷ்டமில்லாமல் தொடர்ந்து ஆரம்பித்தாள்.
மங்களத்தின் கண்களிலிருந்து பொலபொலவென்று கண்ணீர் வழிந்தது. சமையலறைப் பக்கம் ஏதோ வேலையாக வந்த சந்துரு தாயின் தர்மசங்கடமான நிலையை உணர்ந்து. அவளை ஜாடையாகக் கூப்பிட்டான்.
"மாப்பிள்ளை வந்து நாளைக்குப் பேரன், பேத்தி எடுக்கப் போகிறாய். எதற்கெடுத்தாலும் குழந்தை மாதிரி அழுது கொண்டு நிற்கிறாயே அம்மா. பாட்டி சொல்வதைக் காதில் வாங்காமல் உன் வேலையைக் கவனிக்க மாட்டாயா?" என்று சந்துரு அவளை அன்புடன் கடிந்து கொண்டான்.
--------------
3. பாடத் தெரியுமா?
மாலை நான்கு மணிக்கு ஸரஸ்வதி, ஸ்வர்ணம், ரகுபதி மூவரும். ராஜமையர் ரயிலடிக்கு அனுப்பி இருந்த மாட்டு வண்டியில் சாவித்திரியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.
"வாருங்கள் அம்மா! வா ..ம்மா!" என்று மங்களம் வாய் நிறைய உபசாரத்துடன் கூப்பிட்டு, எல்லோரையும் உள்ளே அழைத்துப் போனாள். ”இவன்தான் என் மூத்த பையன் சந்திர சேகரன்" என்று ராஜமையர் தம் பிள்ளையை வரப்போகும் மாப்பிள்ளைக்கு அறிமுகம் செய்து வைத்தார். "இப்படி உட்காருங்கள் மாமி" என்று கூறி, சீதா, ரத்தினக் கம்பளம் ஒன்றை எடுத்து விரித்து உபசரித்தாள். ஸரஸ்வதியும் ஸ்வர்ணமும் அமர்ந்து, லோகாபிராமமாகப் பேசிக் கொண்டிருந்தனர். சம்பிரதாயப்படி சிற்றுண்டியும் காபியும் சாப்பிட்டு முடிந்த பின்பு ஸரஸ்வதி தன்னுடன் கொண்டுவந்திருந்த பையிலிருந்து பழம், பாக்கு, வெற்றிலை, புஷ்பம் முதலியவைகளை எடுத்து ஒரு தட்டில் வைத்தாள்.
”பெண்ணை வரச்சொல்லுங்கள் மாமி" என்றாள் ஸரஸ்வதி. வீணையைப் பழிக்கும் அவள் குரல் இனிமையைக் கேட்டுச் சந்துரு. அடிக்கடி அவளைத் திரும்பிப் பார்த்தான். சாந்தமும் அழகும் கொண்ட அந்த முகவிலாசத்தை அவன் - இதுவரை பார்த்த - எந்தப் பெண்ணிடத்திலும் கண்டதில்லை என்று நினைத்தான். ஆனால், கருணை வடியும் இந்த முகத்தை எங்கோ பார்த்த ஞாபகம் ஒன்று லேசாக அவன் மனத்தில் தோன்றியது. எங்கே பார்த்திருக்க முடியும்? போன வருஷம் வடக்கே போய் வந்தானே அங்கே யாரையாவது கண்டிருப்பானா? சிறிது நேரம் யோசனையில் மூழ்கி இருந்தான் சந்துரு. திடீரென்று ஏதோ நினைவு வந்தவனாகக் கூடத்தில் மாட்டப்பட்டிருந்த ஸரஸ்வதி தேவியின் படத்தைப் பார்த்தான் சந்துரு. அந்த முகத்தில் நிலவும் கம்பீரமும் சாந்தமும் இந்தப் பெண்ணிடம் ஏதோ கொஞ்சம் இருக்கிறது. அது போதாதா அவளை எழிலுள்ள வளாகக் காட்டுவதற்கு! சகல கலாவாணியாகிய ஸரஸ்வதி தேவியின் கடாட்சத்துக்குப் பாத்திரமானவள்தானே இந்தப் பெண்ணும்! வெகு அற்புதமாக வீணை வாசிக்கிறாள். அகத்தின் அழகு முகத்தில் சுடர்விடாதா! அறிவுக் களை என்பது அலாதியானது அல்லவா!
சந்துருவின் கண்களை ஸரஸ்வதியின் நீண்ட நயனங்கள் சந்தித்துப் பூமியை நோக்கித் தாழ்ந்தன. அவன் தன்னையே விழுங்கிவிடுவதைப்போல் பார்ப்பதை அறிந்த ஸரஸ்வதி. ”அத்தான்! பெண்ணைச் சரியாகப் பார்த்துக்கொள்; பிறகு ஏதாவது குறை சொல்லாதே!" என்று கூறி, முறுவலித்தாள்.
சந்துரு சுய நினைவு வந்தவனாகத் திரும்பிப் பார்த்தான். சாவித்திரி, பெரியவர்கள் எல்லோருக்கும் நமஸ்காரம் செய்து விட்டு உட்கார்ந்தாள்.
"உம்..... பெண்ணை நல்லதாக ஒரு பாட்டுப் பாடச் சொல்லுங்களேன், மாமி" என்றாள் ஸரஸ்வதி.
"எங்கள் வீட்டில் யாருக்குமே நன்றாகப் பாடத் தெரியாதே" என்று கூறினாள் சீதா, ஸரஸ்வதியைப் பார்த்து.
தெரியாது! சமைக்கத் தெரியாது. குடும்பம் நடத்தத் தெரியாது. பாடத் தெரியாது. பேசத் தெரியாது! இந்தத் ’தெரியாது' என்கிற சொல் எவ்வளவு பேரைக் காப்பாற்றுகிறது. தெரியுமா? 'பாவம்! அவனுக்கு ஒன்றுமே தெரியாது!' என்று பிறரை அநுதாபப்படச் செய்கிறதும் இந்தத் ’தெரியாது' என்கிற சொல்தான்.
"இந்த வீட்டில் யாரோ பாட்டுக் கற்றுக்கொள்ளுகிறார்கள். அதற்கு அத்தாட்சியாக அதோ தம்பூர் வைத்திருக்கிறது. ஏன் ஸார்! ஒரு வேளை படித்துப் படித்து என்னத்தைப் புரட்டப் போகிறோம் என்று. நீங்கள் பாட்டுக் கற்றுக்கொள்கிறீர்களோ?" என்று கேலிப் புன்னகையுடன் ரகுபதி சந்துருவைப் பார்த்துக் கேட்டுவிட்டுச் சாவித்திரியைக் குறும்பாகப் பார்த்தான்.
சாவித்திரி, கோபத்தால் முகம் சிவக்கச் சீதாவைப் பார்த் தாள். 'நாளெல்லாம் வள வளவென்று அரட்டை அடித்துக் கொண்டிருப்பாயே. இப்போது என்ன ஒரே பேசா மடந்தை ஆகி விட்டாய் நீ?' என்று கேட்பதுபோல் சாவித்திரி கோபக் கண் களால் தன் தங்கையைப் பார்த்தாள்.
சீதா, அர்த்த புஷ்டியுடன் ஒரு சிரிப்புச் சிரித்தாள். அப்புறம் ரகுபதியின் பக்கம் திரும்பி, "வீணாகச் சாவித்திரியின் பேரில் சந்தேகப்படாதீர்கள்.. நான் தான் இந்த வீட்டில் பாட்டுக் கற்றுக்கொள்கிறவள். எனக்காகத் தான் தம்பூர் வாங்கியிருக்கிறார்கள். சாவித்திரி அதைத் தன் விரலாலும் தொட்ட தில்லை!" என்று கூறிவிட்டுக் 'களுக்' கென்று சிரித்தாள்.
"அப்படியானால் யாராவது பாட்டுத் தெரிந்தவர்கள் தான் இரண்டு பாட்டுகள் பாடக்கூடாதா? என்ன ஸரஸு! இந்தப் பூனை யும் பாலைக் குடிக்குமா என்று உட்கார்ந்திருக்கிறாயே? நீதான் பாடேன். கல்யாணப் பெண்தான் பாடவேண்டும் என்று எந்தச் சாஸ்திரத்திலாவது சொல்லியிருக்கிறதா?" என்று ரகுபதி உரிமையுடன் ஸரஸ்வதியிடம் கூறினான்.
"பாடித்தான் ஆகவேண்டும் என்றால், கட்டாயம் பாடிவிடுகிறேன், அத்தான்" என்று சரஸ்வதி கூறிவிட்டு, சீதாவின் பக்கம் திரும்பி, "சீதா! நீ போய்த் தம்பூரை எடுத்து வா அம்மா" என்றாள்.
ஸரஸ்வதி பாடப்போகிறாள் என்பதைக் கேட்டவுடன் சந்துருவின் மனம் சந்தோஷத்தில் ஆழ்ந்தது. தம்பூரை மீட்டிக் கொண்டு மெல்லிய குரலில் அவள் பாட ஆரம்பித்ததும் அங்கிருந்தவர்கள் எல்லோரும் மெய்ம் மறந்து உட்கார்ந்திருந்தனர். 'ஆஹா! இவ்வளவு அழகும் சங்கீத ஞானமும் உடைய பெண்ணைவிட்டு, அசலில் இவர்கள் பெண் தேடுவானேன்?' என்று சந்துரு நினைத்து வியந்தான். மங்களமும் இதையே நினைத்து ஆச்சரியப் பட்டாள். கூடத்தில் மாட்டியிருந்த ஸரஸ்வதி தேவியின் படத்திலிருந்தே, மானிட உருக்கொண்டு இந்தப் பெண் வந்து உட்கார்ந்து பாடுகிறதோ என்று ஐயம் ஏற்படும் நிலையைச் சிருஷ்டித்து விட்டாள் ஸரஸ்வதி. அவள் உள்ளம் உருக, 'பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து' என்கிற பாடலைப் பாடியபோது, எல்லோர் உள்ளமும் அந்தப் பக்திப் பிரவாகத்தில் லயித்து, அதிலேயே அழுந்தி விட்டன என்று கூறலாம். ஸரஸ்வதி, கச்சிதமாக நான்கு கீர்த்தனங்கள் பாடித் தம்பூரை உரைக்குள் இட்டு, மூடி வைத்துவிட்டு, உட்கார்ந்தது தான் எல்லோரும் சுய நினைவை அடைந்தார்கள்.
”நன்றாகப் பாடுகிறாளே! இந்தக் குழந்தைக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா?" என்று மங்களம் ஸ்வர்ணத்தைப் பார்த்துக் கேட்டாள். ஸ்வர்ணம் சிறிது நேரம் ஒன்றும் தோன்றாமல் பதில் எதுவும் கூறாமல் உட்கார்ந்திருந்தாள். பிறகு, கண்ணீர் திரையிட, "இல்லை. அவளுக்குத்தான் பகவான் ஒரு தீராத குறையைக் கொடுத்துவிட்டானே!" என்றாள் ஸ்வர்ணாம்பாள்.
ஸரஸ்வதிக்கு ஏதோ குறை என்று கூறியதும், அங்கிருந்தவர்களுக்கு அது என்ன வென்று அறிய ஆவல் ஏற்பட்டது. அவர்கள் அதை எப்படிக் கேட்டது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே அவர்கள் கேளாமலேயே ஸ்வர்ணாம்பாள் ஸரஸ்வதியின் கால் ஊனத்தைப்பற்றி மங்களத்திடம் கூறினாள். மேலும் அவள். "அவள்” அத்தானுக்கு அவளைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற அபிப்பிராயம் இருந்தது. தாயில்லாததால், குழந்தையிலிருந்தே நானும் அவளை வளர்த்து விட்டேன். அவளுக்குத்தான் கல்யாணம் செய்து கொள்ளவே இஷ்டமில்லையாம். 'முதலில் எல்லோரும் சம்மதப்பட்டுச் செய்து கொண்டு விடுவீர்கள் அத்தை. காலப்போக்கில் உங்கள் மனமெல்லாம் எப்படி எப்படியோ மாறிவிடும்' என்று கூறுகிறாள்.
"அத்தானுக்குப் பாட்டுப் பிடிக்கிறது என்று என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்கிறான் என்று வைத்துக்கொள் அத்தை. கொஞ்ச நாளைக்குள் அதுவும் அலுத்துவிடும். 'போயும் வந்தும் இந்த நொண்டியைத் தானா என் தலையில் கட்டிக்கொண்டு அழவேண்டும்!' என்று அவன் மனம் சலித்துப்போகும். வேண்டாம், அத்தை' என்று வேதாந்தம் பேசுகிறாள் ஸரஸ்வதி" என்று ஸ்வர்ணாம்பாள் மங்களத்திடம் கூறினாள்.
ஸரஸ்வதி லஜ்ஜையுடன் முகத்தைக் கவிழ்த்துக்கொண்டு, "என்ன அத்தை இது? போகிற இடத்திலெல்லாம் என் ராமாயணம் பெரிசாக இருக்கிறதே” என்று கேட்டாள்,
"ராமாயணம் என்ன? வயசு வந்த பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுக்காமல் வைத்திருந்தால், காரணம் என்ன என்று தெரிந்து கொள்ள நினைப்பது எல்லோருக்கும் சசஜந்தானே?" என்றாள் ஸ்வர்ணாம்பாள்.
பெண் வீட்டாருக்குப் பிள்ளையைப் பிடித்துவிட்டது. பிள்ளை வீட்டாரின் அபிப்பிராயமும் ஒன்றாகத் தான் இருந்தது. சாவித்திரியின் சம்மதத்தை, ஸரஸ்வதி அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டாள். கூடத்தில் இருந்தவர்கள் ஏதோ வேலையாக வெளியே சென்றதும் ஸரஸ்வதி, சாவித்திரியின் அருகில் சென்று உட்கார்ந்தாள். பிறகு சங்கோசத்துடன், ”என் அத்தானை உனக்குப் பிடித்திருக்கிறதா? சொல்லிவிடு. நான் ரகசியமாக இந்த விஷயத்தை அவனிடம் சொல்லி விடுகிறேன்" என்று கேட்டாள். சாவித்திரி மெதுவாகத் தலையை அசைத்து விட்டு மௌனமாக உட்கார்ந்திருந்தாள்.
”பெண்ணின் மன ஆழத்தை இன்னொரு பெண்ணே புரிந்து கொள்வது கஷ்டம்” என்பதை ஸரஸ்வதி உணர்ந்திருக்க மாட்டாள். சிலர் வெகுளியாக இருக்கிறார்கள். மனத்தில் ஒன்றையும் ஒளித்து வைக்கமாட்டார்கள். படபடவென்று பேசிவிடுவார்கள். சிலரின் மன ஆழத்தில் என்ன எண்ணங்கள் இருக்கின்றன -என்பதையே எவ்வளவு முயன்முலும் புரிந்து கொள்ள முடியாது. ஸரஸ்வதி வெள்ளை மனம் படைத்தவள்; கபடம் இல்லாதவள்; சூதுவாதுகளுக்கு மனத்தில் அவள் இடமே அளிக்கவில்லை.
சாவித்திரி, வார்த்தைகளையே அளந்து பேசும் சுபாவம் படைத்தவள். உள்ளத்தில் ஏற்படும் உணர்ச்சிகளை அப்படியே முகத்தில் காட்டி, ஒரு நொடிப் பொழுதில் எல்லோரையும் மட்டந் தட்டிவிடுவாள் அவள். பேசாமல் மௌனமாக உட்கார்ந்திருக்கும் சாவித்திரியை ஸரஸ்வதி கேலியாகப் பார்த்து, ”இப்பொழுது என்னிடம் ஒன்றும் சொல்ல மாட்டாய். அப்படித் தானே? அத்தானிடமே நேரில் சொல்லப் போகிறாயாக்கும்! ஹும்............" என்று பெருமூச்சு விட்டுவிட்டு அந்த இடத்தை விட்டு எழுந்து சென்றாள்.
இவ்வளவு நேரமும் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த பாட்டிக்கு இப்போது தான் சந்தர்ப்பம் கிடைத்தது. ” இதென்னடீது அதிசயம்! பெண் பார்க்க வந்தால் அவளைப் பாடச் சொல்றதைத் தான் கண்டதுண்டு; கேட்டதுண்டு. இங்கே தலைகீழ்ப் பாடமா பயிருக்கே! யாரோ ஒருத்தி வருகிறாள்; இல்லாத உறவெல்லாம் கொண்டாடி; புருஷா இருக்கிறதையும் பார்க்காமே பாட்டுக் கச்சேரி செய்கிறாள். இதுகளும் பேஷ் பேஷ்னு தலையாட்டுகிறதுகள்! ஹும் . . . . நன்றாகவே யில்லை" என்று சரளி வரிசை பாட ஆரம்பித்து விட்டாள். ஆனால் அவளை யாரும் சட்டை செய்வதாக இல்லை. குறை சொல்வது தான் அவள் கூடப் பிறந்த குணமாயிற்றே என்று உதறிவிட்டு, மேற்கொண்டு ஆகவேண்டியதைக் -கவனிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
----------------
4. அவளுக்கு அவ்வளவு சுதந்தரமா?
பிள்ளை வீட்டார் ஊருக்குப் புறப்பட்டுச் சென்ற பிறகு அந்த வீட்டுச் சாப்பிடும் கூடத்தில் ஒரே இரைச்சலும், சிரிப்புமாக இருந்தது. எப்பொழுதும் பிறருடைய குற்றங் குறைகளையே சிலர் ஆராய்ந்து கொண்டிருப்பார்கள். தங்களிடம் இருக்கும் ஒரு சிறு குறைகூட அவர்கள் மனதில் படுவதில்லை.
"ஆமாம், என்ன பிரமாதமாக வீடு கட்டிவிட்டான்? முக்கால் அடிச் சுவர் வைத்து சேற்றைப் பூசி ஒழுங்கு பண்ணி விட்டானாக்கும்" என்று வாடகை வீட்டில் இருந்து கொண்டே வீடு கட்டுகிறவர்களைப் பழிக்கும் சுபாவமுடையவர்களை நாம் தினமும் சந்திக்கிறோம். எப்பொழுதும் எதற்கெடுத்தாலும் பிறரைப் பழிக்கும் சுபாவம் உடையவள் சாவித்திரி. எவ்வளவோ அருமையுடன் வளர்க்கும் பெற்றோரிடமே அவளுக்குக் குறை உண்டு. அன்றும் வழக்கம்போல் சாப்பிட்டுக் கொண்டே ஆரம்பித்தாள் சாவித்திரி :
"நானுந்தான் பார்க்கிறேன். அந்தப் பெண் ஸரஸ்வதிக்கு என்ன அவர்கள் வீட்டில் அவ்வளவு சுதந்தரம்? வெட்கம் இல்லாமல் காலைச் சாய்த்துக்கொண்டு இவள் பெண் பார்க்க வரவில்லை என்று யார் அடித்தார்கள்?"
"ஆமாண்டி அம்மா, நானும் கவனித்தேன். 'அத்தான், அத்தான்' என்று வயசுவந்த பிள்ளையோடு என்ன குலாவல் வேண்டி இருக்கிறதோ!" என்றாள் பாட்டி. சாதாரணமாக ஏதாவது அகப் பட்டால்கூட கண், காது, மூக்கு வைத்துப் பேசுபவள் ஆயிற்றே பாட்டி? பேத்தியிடம் அதிக வாஞ்சை கொண்டவள் அவள். இந்த விஷயத்தில் மங்களத்துக்கும், பாட்டிக்கும் பல தகராறுகளும், சண்டைகளும் கிளம்புவது அந்த வீட்டில் சர்வ சகஜம்.
"சிறு குழந்தை மாதிரி உனக்கு யார் பேரிலாவது ஏதாவது சொல்லிக் கொண்டே யிருக்க வேண்டும். இந்த புத்தியை விட்டு விடு, சாவித்திரி!" என்று சந்துரு அதட்டிக் கூறி அவளைக் கண்டித்தான்.
"என்னடா அப்பா, அப்படிச் சொல்லிவிட்டேன்? நீ பிரமாதமாக அவளுக்குப் பரிந்துகொண்டு கிளம்புகிறாயோ" என்று வெடுக்கென்று கேட்டு அவனைப் பொசுக்கிவிடுவது போல் நிமிர்ந்து பார்த்தாள் சாவித்திரி.
"கிளம்புகிறது என்ன? உள்ளதைச் சொன்னால் உனக்குக் கோபம் பொத்துக்கொண்டு வருகிறதே! பிறருடைய குறைகளைப்பற்றியே நீ பேசிக்கொண்டிருந்தால் உன்னிடம் எவ்வளவு குறைகள் இருக்கின் றன என்பதை உனக்கு ஆராய்வதற்கே பொழுது இல்லாமல் போய்விடும்: இனிமேல் உன் கல்யாணத்துக்கு அப்புறம் நீயும், ஸரஸ்வதியும் ஒரே வீட்டில் இருக்க வேண்டியவர்கள். இருவரும் ஒருவர் மனதை ஒருவர் அறிந்து பழக வேண்டியவர்கள். அப்படியில்லாமல் சண்டை பிடித்துக்கொண்டு நின்றால் நன்றாக இருக்குமா, சாவித்திரி?" என்று இதுவரையில் மெள்னமாக இருந்த ராஜமையர், பெண்ணை அன்புடன் கடிந்து கொண்டார். அதிக அவசியம் நேர்ந்தாலன்றி அவர் பேசமாட்டார். தாய்க்கும், தம் மனைவிக்கும் ஏற்படும் மனஸ்தாபங்களைக்கூட அவர் காதில் போட்டுக் கொள்வதில்லையே!
ஒரு குடும்பத்தில் எஜமானனுடைய நிலைமைதான் மிகவும் பரிதாபமானது. ஏனெனில், மாமியார் - மருமகள் சண்டையில் யாருக்குச் சமாதானம் கூறுவது என்பது மிகவும் கடினமான பிரச்னை. "பெற்று வளர்த்து நான் கஷ்டப்பட்டது எனக்கல்லவா தெரியும்? நேற்று வந்தவள் வைத்தது 'சட்டமாகி விட்டது. இந்த வீட்டில்’ என்பாள் மாமியார். - "அன்பும் ஆதரவும் வேண்டுமென்று பெற்றோர், உற்றோரை எல்லாம் விட்டுவிட்டு இவரே கதி என்று வந்திருக்கிறேனே; என் மனசை ஏன் இப்படிப் புண்ணாக அடிக்கிறார்கள்?" என்பாள் மருமகள். பெற்ற தாயும், வாழ்க்கைத் துணைவியும் குடும்பத் தலைவனது அன்புக்குப் பாத்திரமானவர்கள். இது கடினமான - பிரச்னை தானே?
நாளடைவில் பாட்டியின் சண்டை - சச்சரவுகள் சகஜமாகி விட்டன. மங்களத்தின் மனம் மறத்துப் போய்விட்டது. இரண்டு வேளை சாப்பாடு ஜீரணமாகிறமாதிரி மாமியாரின் கடுஞ் சொற்களையும் ஜீரணித்துக்கொண்டாள் மங்களம். தாய்க்கு ஏற்பட்டிருந்த சகிப்புத் தன்மையில் ஓர் அணு அளவு கூட சாவித்திரிக்கு இல்லை. அவள் குழந்தைப் பருவத்தில் பாட்டியும், அம்மாவும் சண்டை பிடித்துக் கொண்டதெல்லாம் பசுமரத்தாணி போல் சாவித்திரியின் மனதில் பதிந்து போயிருந்தது. பாட்டி, அம்மாவை ஓட ஓட விரட்டியமாதிரி தானும் விரட்டினாள். எடுத்த்தெற்கெல்லாம் 'ஹடம்' பிடித்தாள். அதைப் பாட்டியின் சலுசையால் சாதித்துக்கொண்டாள்.
ராஜமையர் சாவித்திரியைக் கடிந்து கொண்ட பிறகு சிறிது நேரம் எல்லோரும் மௌனமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். சாவித்திரிக்குக் கோபம் என்பதை எல்லோரும் புரிந்து கொண்டிருந்தார்கள். 'கடு கடு' வென்று முகத்தை வைத்துக் கொண்டு குனிந்த தலை நிமிராமல் அவள் உட்கார்ந்து சாப்பிடுவதைப் பார்த்த சீதா, "யாருக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, எனக்கு ஸரஸ்வதியை ரொம்பவும் பிடிக்கிறது. சிரித்துச் சிரித்துக் கபடம் இல்லாமல் பேசுகிறாளே" என்றாள்.
”உனக்கு யாரைத்தான் பிடிக்காது? எல்லோரையும் பிடிக்கும்!" என்று ஆத்திரத்துடன் கூறிவிட்டுச் சாப்பிடும் தாலத்தை 'நக்' கென்று நகர்த்திக்கொண்டே அவ்விடம்விட்டு எழுந்தாள் சாவித்திரி.
இதுவரையில் இவர்கள் சச்சரவில் தலையிடாமல் இருந்த மங்களம் சலிப்புடன், "என்ன சண்டை இது, சாப்பிடுகிற வேளையில்? அரட்டை அடிக்காமல் ஒரு நாளாவது சாப்பிடுகிறீர்களா?" என்று கோபித்துக்கொண்டாள். அதற்குமேல் எல்லோரும் கப்சிப்பென்று அடங்கிவிட்டார்கள்.
ராஜமையர் வெற்றிலைக்குச் சுண்ணாம்பைத் தடவியபடி சமையற்கட்டில் வந்து மங்களத்தின் எதிரில் உட்கார்ந்து கொண்டார். சிறிது பொறுத்து, ”வர வர உனக்கு என்னைக் கவனிக்கவே அவகாசம் இல்லாமல் போய்விட்டது மங்களம்! சாப்பிட்டு கை அலம்புகிறதற்கு முன்னாடியே தயாராக வெற்றிலை மடித்து வைத்துக்கொண்டு காமரா அறையில் வந்து நிற்பாயே. இப்பொழுது என்னடாவென்றால் பாக்கு, வெற்றிலை, சுண்ணாம்பு மூன்றையும் தேடி நானே எடுத்துப் போட்டுக்கொண்டு உனக்கும் தட்டில் வைத்துக்கொண்டு வந்து கொடுக்க வேண்டியிருக்கிறது" என்று பாதி நிஷ்டுரமாகவும் பாதி கேலியாகவும் கூறினார்.
மங்களமும் பொய்க்கோபத்துடன் அவரைப் பார்த்து, "நாளைக்கே மாப்பிள்ளை வரப்போகிறான். பிறகு நாட்டுப் பெண் வருவாள். இன்னும் உங்களுக்கு நான் நடுங்க வேண்டாமா? நடுங்கிச் செத்ததெல்லாம் போதாதா?" என்று கேட்டாள்.
"பார்த்தாயா மங்களம், அப்பொழுதே சொல்லவேண்டும் என்று இருந்தேன். குழந்தைகள் ஒருத்தருக்கு ஒருத்தர் ஏகப் பட்டதாகத் தர்க்கம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எதிரில் பேசவேண்டாம் என்று பேசாமல் இருந்து விட்டேன். பிள்ளைக்கும், அவனைச் சேர்ந்தவர்களுக்கும் சாவித்திரியை மிகவும் பிடித்து விட்டதாம். என் பெண்ணின் சம்மதத்தைக் கேட்டுவிடு" என்றார் ராஜமையர்.
மங்களத்துக்கு இப்பொழுது நிஜமாகவே கோபம் வந்தது. "சின்ன வயசிலிருந்தே செல்லம் கொடுத்து வளர்த்துவிட்டீர்கள் உங்கள் பெண்ணை! நான் என்ன கேட்கிறது அவளை? அவள் ஏதாவது என்னை மதித்துப் பதில் சொல்லுவாளா? நீங்களே கேளுங்கள். முதலில் அவளுக்குப் பிடித்தாகவேண்டும். அப்புறம் உங்கள் அம்மாவுக்குப் பிடிக்கவேண்டும் ….”
மங்களம் இந்த வார்த்தைகளை உரக்கவே சொன்னாள். பாட்டியோ பலகாரமெல்லாம் முடிந்து கூடத்தில் ஊஞ்சலில் படுத்து அரைத்தூக்கத்தில் ஆழ்ந்திருந்தாள். ஆகவே மாமியாரைப்பற்றி இரண்டொரு வார்த்தைகள் நிஷ்டுரமாகப் பேச முடிந்தது.
""நம் காலத்தைப்போல் இல்லையே. பெண் பார்ப்பதற்குப் பிள்ளை வீட்டார் போவார்களே தவிர, பிள்ளையை அவ்வளவாக அழைத்துப்போகும் வழக்கம் இருந்ததில்லை. பெரியவர்கள் பார்த்துச் செய்துவைத்த கல்யாணங்களில் நூற்றில் தொண்ணூறு அழகாகவே அமைந்தன. பிள்ளைக்குப் பதினைந்து வயசும் பெண்ணுக்கு ஒன்பது வயசும் என்று பார்த்துச்செய்த கல்யாணங்களில் எழுபது வயசுவரையில் தம்பதிகள் அன்யோன்யமாக வாழ்ந்திருக்கிறார்கள். இந்தக் காலத்தில் மனசுக்குப் பிடித்திருக்கிறதா என்று ஆயிரம் தடவை பெண், பிள்ளை சம்மதத்தைக் கேட்டு நடத்தும் கல்யாணம் நூற்றுக்குத் தொண்ணூறில் 'நான், நீ' என்ற சச்சரவுடன் வாழ்க்கை நடத்துகிறார்கள்" என்று ராஜமையர் கூறினார்.
அப்பொழுது சமையலறைப் பக்கம் வந்த சந்துரு தாயைப் பார்த்து, 'ஏன் அம்மா! நீ அப்பாவை முதலில் பார்த்துத்தான் கல்யாணம் பண்ணிக்கொண்டாயா?" என்று விஷமச் சிரிப்புடன் கேட்டான்.
”ஏண்டா, எனக்கென்ன குறைச்சல்? பாட்டி காதில் விழுந்தால் உனக்குப் பிடித்திருக்கிற சனியை விடுவித்து விடுவாளே! கறுப்பாக இருக்கிறேன் என்றுதானேடா கேலி செய்கிறாய்? ' யானை கறுத்தால் ஆயிரம் பொன்' என்று சொல்லுவார்கள். ஆண்பிள்ளை எப்படி இருந்தால் என்ன? புருஷ காம்பீர்யம் என்பது ஒன்று இருந்தால் போதும்" என்றார் ராஜமையர்.
மங்களம் முகத்தைத் தோளில் இடித்துக்கொண்டு, "போகிறது. அந்த மட்டும் பழமொழியைச் சொல்லியாவது ஆறுதல் அடைகிறீர்களே! பிள்ளையும், பெண்களும் என் நிறத்தைக் கொள்ளாமல் இருந்திருந்தால் உங்கள் பெண்களுக்கு வரன் தேட காலுக்கு விளக்கெண்ணெய்தான் போட்டுக்கொள்ள வேண்டும். நீங்கள்!" என்று ஒரு போடு போட்டாள்.
"அதான் நான் கறுப்பு என்று அந்த நாளில் உன் வீட்டார் என்னைக் கொஞ்சமாகவா ஏசினார்கள்? உன் அத்தை கூட, 'பலாச்சுளை மீது ஈ உட்கார்ந்தமாதிரி' என்று எனக்கும், உனக்கும் 'பச்சை' பூசும்போது பந்தலிலேயே சொல்லவில்லையா மங்களம்?”
"ஐயோ! எனக்கு நாழிகை ஆகிறது. தடி தடியாய் அததுகள் தின்றுவிட்டு ரேடியோ கேட்கப் போய்விட்டதுகளே. போதாக்குறைக்கு நீங்கள் வேறே எதையாவது பேசிக் கொண்டு!" என்று கூறிவிட்டு மங்களம் அடுக்களையைச் சுத்தம் செய்வதில் முனைந்தாள் .
-------------------
5. டில்லியிலிருந்து
கல்யாணத்திற்காக ராஜமையர் விசேஷ ஏற்பாடுகள் எல்லாம் செய்திருந்தார். வீட்டைச்சுற்றி பெரிய கொட்டாரப் பந்தல் போட்டிருந்தது. விருந்தினர்கள் தங்குவதற்காகவும் சம்பந்தி வீட்டார் தங்குவதற்காகவும் இரண்டு வீடுகள் வேறு வாடகைக்கு அமர்த்தினார். அந்த ஜில்லாவிலேயே கைதேர்ந்த சமையற்காரர்களை ஏற்பாடு செய்தார். சீர் வரிசைகளும், மற்ற ஏற்பாடுகளும் விமரிசையாகவே இருந்தன. 'இன்னொரு பெண் இருக்கிறாளே; கொஞ்சம் நிதானமாகத்தான் செலவு செய்யுங்களேன்" என்று மங்களம் அடிக்கடி அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
பிரபலமான நாதஸ்வர வித்வானை வரவழைக்க அவர் ஏற்பாடு செய்திருந்தார். மாப்பிள்ளை ரகுபதிக்குச் சங்கீதம் என்றால் பிடித்தம் அதிகம் என்று சந்துரு அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தான். 'பாட்டுக் கச்சேரிக்கு நல்ல பாடகராக யாரையாவது அமர்த்தலாம்' என்று ராஜமையர் கூறியபோது, சந்துரு அவரைத் தடுத்துவிட்டான். எங்கே ஸரஸ்வதியின் வீணாகானத்தையும், தேனைப்போல் இனிக்கும் அவள் குரல் இனிமையையும் கேட்க முடியாமல் போய்விடுமோ என்கிற கவலை தான் காரணமாக இருக்கவேண்டும். ”அந்தப் பெண்தான் கொள்ளைப் பாட்டு பாடுகிறாளே" என்று மங்களம் வேறு கூறினாள்.
புடைவைகள் வாங்கும் பொறுப்பைச் சாவித்திரியின் இஷ்டப் படி விட்டுவிட்டார்கள். "நம் ஜவுளி தினுசுகளே அறுநூறு ரூபாய்க்குமேல் போய்விட்டதே. இன்னும் மாப்பிள்ளைக்கு எடுக்கும் ஜவுளிகளையும் நீங்களே வாங்குவதாக ஒப்புக் கொண்டிருக்கிறீர்களாமே" என்று கவலையுடன் மங்களம் ஜவுளிக்கடைப் பட்டியலைப் பார்த்துக் கேட்டாள்.
”த்ஸு! பிரமாதம்... முதல் முதலில் குழந்தைக்குக் கல்யாணம் செய்கிறோம். விட்டுத் தள்ளு இதையெல்லாம். செலவைப் பார்த்தால் முடியுமா?" என்று ஒரே வார்த்தையில் பதில் கூறி முடித்துவிட்டார் ராஜமையர்.
கணவன் வார்த்தையைத் தடுத்துப் பேசி அறியாத மங்களம் பதில் எதுவும் கூறாமல் பட்சணங்களுக்குச் சாமான் ஜாதா மனத்துக்குள் தயாரித்துக்கொண்டிருந்த போது வாசற் கதவை திறந்து கொண்டு தந்திச் சேவகன் உள்ளே வந்து தந்தி ஒன்றை ராமையரிடம் கொடுத்துவிட்டுச் சென்றான்.
தந்தியைப் பிரித்துப் பார்த்தவுடன் அவர் முகம் சந்தோஷத்தால் மலர்ந்தது. சில வருஷங்களாகப் பார்க்காதிருந்த அவர் சகோதரி பாலமும், அவள் குழந்தையும் வருவதாகச் செய்தி எத்திருந்தது.
"பாலம், நாளைக் காலை வண்டிக்கு வருகிறாளாம். மாப்பிள்ளை ராமசேஷு தந்தி கொடுத்திருக்கிறார். நாத்தனாரும், மதனியும் வருஷக் கணக்கில் சேர்த்து வைத்திருக்கும் விஷயங்களைப் பேசித் தீர்த்துவிடுவீர்கள்" என்று சிரித்துக் கொண்டே கூறிவிட்டு அந்தச் செய்தியைத் தாயினிடம் தெரிவிப்பதற்காக ஊஞ்சலில் படுத்திருக்கும் அம்மாவைத் தேடிக்கொண்டு போனார் அவர்.
நாத்தனார் வரப்போகிறாள் என்பது தெரிந்தவுடன் மங்களம் மிகவும் சந்தோஷம் அடைந்தாள். பாலம் எங்கே வர முடியாதென்று எழுதி விடுகிறாளோ என்று மங்களம் - கவலைப் பட்டுக்கொண்டிருந்தாள். "கல்யாணத்தில் சம்பந்திகளைக் கவனிப்பது போல் தன்னையும் கவனிக்கவில்லை என்று பாட்டியிட மிருந்து புகார்கள் கிளம்பும். பாலம் வந்து விட்டாளானால், 'உன் அம்மாவின் வேலைகளை நீ கவனித்துக் கொள்' என்று அவளிடம் ஒப்படைத்துவிடுவேன். மாப்பிள்ளைக்கு ’அவளை முன்னாடி அனுப்பச் சொல்லிக் கடிதம் போட்டுவிடுங்கள்" என்று ராஜமையரைத் தினம் தொந்தரவு செய்துவந்தாள் மங்களம்.
பாலத்தின் கணவர் ஒரு வியாதிக்கார மனுஷர். நல்ல கல்வி ஞானமும், சம்பாதிக்கும் திறமையும் அவருக்கு . இருந்த போதிலும் ஆரோக்ய பாக்கியத்தை இழந்து சதா மருந்து சாப்பிட்டுக் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார். ஆகவே கடந்த ஏழு வருஷங்களாக அன்பைச் சொரிந்த தமையனையும், ஆசையுடன் பராமரித்த மதனியையும், தாயையும் மறந்து கணவனுடனேயே பிறந்தகம் வராமல் தங்கிவிட்டாள் பாலம், எட்டு மாதக் குழந்தையாக டில்லிக்குப் போன பத்மா இப்பொழுது எட்டு வயதுக் குழந்தையாக மாறி இருந்தாள்.
ஊரிலிருந்து அடுத்த நாள் காலையில் ராமசேஷவும், பாலமும், பத்மாவும் வண்டியிலிருந்து இறங்கிய போது வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் அடையாளம் தெரியாமல் மாறி இருந்தார்கள்.
"வாடி அம்மா பாலம்! வா அப்பா ராமு" என்று ராஜமையர் தங்கையையும் அவள் புருஷனையும் வரவேற்றார்.
பழக்கம் இல்லாத புது மனிதர்களைப் பார்த்து பத்மா, தாயின் அருகிலேயே நின்றுகொண்டிருந்தாள். "பத்மாதானே இது? வாடி என் கண்ணே " என்று பாட்டி ஆசையுடன் பேத்தியை இழுத்துக் கட்டிக்கொண்டு அவள் கன்னத்தை வருடினாள்.
"மன்னி! நீதான் என்ன இவ்வளவு கிழவியாகிவிட்டாயே? மாப்பிள்ளை வருவதற்கு முன்னாடியே கிழமாகப் போய் விட்டாயே மன்னி!" என்று பாலம் சந்தோஷத்தில் சொன்ன வார்த்தைகளையே திருப்பித் திருப்பிச் சொன்னாள்.
இப்படி ஒருவருக்கொருவர் சந்தோஷ மிகுதியில் நேரம் போவது தெரியாமல் நின்றுகொண்டே பேசினர். நாத்தனாருடன் எவ்வளவோ பேசவேண்டுமென்று நினைத்திருந்த மங்களம் பிரமித்துப்போய் பாலத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்,
"என்ன அம்மா, அத்தையை விழுங்கிவிடுவதுபோல் பார்க்கிறாயே! அத்தை எந்தக் கடையில் டில்லியில் அரிசி வாங்கினாள் என்று கேட்க வேண்டும்போல் இருக்கிறதா உனக்கு?" என்றான் சந்துரு.
"ஆமாம், ஆமாம்; பாலம் கொஞ்சம் பருத்துத் தான் இருக்கிறாள்" என்று தலையை ஆட்டிப் பிள்ளை கூறுவதை ஆமோதித்தார் ராஜமையர்.
”சரி, சரி, மணி ஆகிறது. அவாள் எல்லாம் சாப்பிட்டு எத்தனை நாள் ஆச்சோ? எழுந்து ஸ்நானம் செய்யப் போகட்டும்" என்று கூறி மங்களம் உள்ளே சென்றாள்:
சாப்பாடு முடிந்த பின்னர் பாலம் சாவித்திரிக்காக வாங்கியிருக்கும் வெள்ளிப் பாத்திரங்கள், புடைவைகளைப் பார்வை யிட்டாள். வெள்ளியில் வாங்கியிருந்த குடத்தைப் பார்த்து விட்டு, "ஆமாம் மன்னி! குடம் பித்தளையில் வாங்குவது தானே? வெள்ளிக் குடத்திலா சாதாரணமாக நாம் ஜலம் கொண்டு வருகிறோம்?" என்று கேட்டாள்.
"அதென்னவோ அம்மா! பெட்டியிலே தூங்குவதற்காக எத்தனை புடைலைகள், நகைகள், பாத்திரங்கள் செய்தாக வேண்டுமோ? அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களை வாங்கிவிட்டு மிகுதிப் பணத்தைப் பயனுள்ளதாகச் செலவழித்தால் எவ்வளவோ நன்றாக இருக்கும். நாலு பேர் மெச்சிப் புகழவேண்டும் என்பதற்காகவே பணத்தை இப்படி விரயம் செய்யவேண்டி இருக்கிறது" என்றாள் மங்களம்.
"என்னதான் பணம் காசு இருந்தாலும் நம் கல்யாணத்தின் போதெல்லாம் இந்த மாதிரி டாம்பீகச் செலவு குறைவாகத்தான் இருந்தது; இல்லையா மன்னி? இப்படிக் கண்டபடி பணத்தை வாரி இறைக்கிறார்கள். சாப்பாட்டுப் பண்டங்களை அழ்க வைத்தும் ஊச வைத்தும் குப்பையிலே கொட்டுகிறார்கள். டில்லியில் ஒரு கல்யாணம் நடந்தது. தடபுடலாக ஒர வைபவமாகத்தான் நடத்தினார்கள். வந்தவர்கள் வந்தபடி இருந்தார்கள். ஆனால் அந்தக் கல்யாணத்துக்காக இரவு பகலாக உழைத்த வேலைக்காரர்களுக்கு நிறுத்துத்தான் சாப்பாடு போட்டார்களாம். பலகாரங்களைப் பூட்டிவைத்து ஊசிப்போன பிறகு எடுத்துக் கொடுத்தார்களாம்! எப்படி இருக்கிறது விஷயம்?" என்று ஆத்திரத்துடன் பேசினாள் பாலம்.
"அத்தை, டில்லிக்குப் போன பிறகு நன்றாகப் பேசக் கற்றுக் கொண்டு இருக்கிறாள். அடிக்கடி சட்டசபை கூட்டங்களுக்குப் போவாயாமே, அத்தை!" என்று கேலி செய்தாள் சாவித்திரி.
"என்னவெல்லாமோ பேசிக் கொண்டிருக்கிறேனே, முக்கியமான விஷயத்தை மறந்துவிட்டு. ஏண்டி சாவித்திரி! உனக்கு வரப்போகிற ஆத்துக்காரர் எப்படி இருக்கிறார்? சிவப்பா, கறுப்பா" என்று சாவித்திரியைப் பார்த்துக் கேட்டாள் பாலம்.
"போ அத்தை! நான் சரியாகக் கவனிக்கவில்லை" என்று வெட்கத்துடன் கூறினாள் சாவித்திரி.
"பொய்யைப் பார் பொய்யை! இவள் மனசில் தான் என்ன இருக்கிறதோ? கேட்டுக் கொள் அத்தை. மாப்பிள்ளைக்குப் பாட்டு என்றால் ஆசையாம். இவளை அவர் பாடச்சொன்ன போது இவள் அவரை விழித்துப் பார்த்தாளே? அப்பொழுது அவர் சிவப்பா, கறுப்பா என்று தெரியவில்லையாமா இவளுக்கு?" என்று கேட்டுச் சீதா, சாவித்திரியை மேலே பேசவிடாமல் தடுத்தாள்.
"இந்த வாயாடியுடன் என்ன பேச்சு வேண்டி இருக்கிறது?" என்று கூறிவிட்டு சாவித்திரி 'சடக்' கென்று எழுந்து அப்பால் சென்றாள்.
--------------
6. வீணாகானம்
சாவித்திரி -ரகுபதி விவாகம் 'ஜாம், ஜாம்' என்று நடந்தேறியது. பணத்தைப் 'பணம்' என்று பாராமல் செலவழித்தார் ராஜமையர். சந்துருவுக்கும். சீதாவுக்கும் இருந்த உற்சாகத்தில் ஊரையே அழைத்துவிட்டார்கள். வந்தவா, போனவர்களுக்கு ஒரு குறைவும் இல்லாமல், ஓடி ஆடி எல்லாவற்றையும் கவனித்து வந்தாள் மங்களம். சம்பந்தி வர்க்கத்திலும், 'நொட்டைச் சொல்' சொல்ல யாரும் இல்லை. ஸ்வர்ணமும், ஸரஸ்வதியும் இன்ப வெள்ளத்தில் மிதந்து திளைத்தனர். அவ்வளவு தடபுடலாகக் கல்யாணம் நடைபெறுவதில் அவர்களுக்குப் பரமதிருப்தி.
அன்று சித்திரை மாதத்துப் பௌர்ணமி. பால் போன்ற நிலவொளியில் அந்த ஊரும் அதன் சுற்றுப்புறங்களும் மூழ்கிக் கிடந்தது. அந்த ஊரில் பல இடங்களில் கல்யாணம். நாதஸ்வரத்தின் இன்னிசையும் நிலவின் குளுமையும், 'கம்'மென்று காதவழிக்கு வாசனை வீசும் மல்லிகை மலர்களுமாகச் சேர்ந்து ஸ்வர்க்கத்தில் இவ்வளவு இன்பம் உண்டா என்கிற சந்தேகத்தை எழுப்பின. ராஜமையர் பூந்தோட்டத்திலிருந்து குண்டு மல்லிகையாகவே கல்யாணத்திற்கு வரவழைத்திருந்தார். கரு நாகம்போல் வளைந்து துவளும் பெண்களின் ஜடைகளின் மீது வெள்ளை வெளேர் என்று மணம் வீசும் மல்லிகையின் அகு பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தது. முகூர்த்தத்தன்று இரவு விருந்துக்கு அப்புறம், கொட்டாரப் பந்தலில் ஊஞ்சலில் பெண்ணையும், பிள்ளையையும் உட்கார வைத்தார்கள். ஊஞ்சல் வேடிக்கையை ரசிப்பதற்கு ஆண்களை விடப் பெண்களின் கூட்டமே வழக்கம்போல் அதிகமாக இருந்தது.
" என்னடி இது? ஊஞ்சலில் அவர்களை உட்கார்த்திவைத்து விட்டு எல்லோரும் பேசாமல் இருக்கிறீர்கள்? நறுக்கென்று நாலு பாட்டுகள் பாடமாட்டீர்களோ" என்று கூறிவிட்டு 'கன்னூஞ்சல் ஆடினாரே, மீனாட்சி சுந்தரேஸ்வரர்' என்று இரண்டு கட்டை ஸ்ருதியில் பாட ஆரம்பித்தாள் பெரிய சுமங்கலியாகிய ஒரு அம்மாள்.
யுவதிகள் கூட்டத்திலிருந்து கலீர் என்று சிரிப்பொலி எழுந்தது. பொங்கிவந்த சிரிப்பை வெகு சிரமப்பட்டுச் சீதா அடக்கிக்கொண்டு. "ஸரஸு! பாட்டுத் தெரிந்தும் பாடாமல் இருப்பவர்களுக்கு இதுதான் சரியான தண்டனை! புரிந்ததா உனக்கு?" என்று கேட்டாள். ஊஞ்சல் பாட்டை அரைகுறை பாக நிறுத்திவிட்டு மறுபடியும் அந்த அம்மாள், 'லாலி --லாலய்ய லாலி' என்று ஆரம்பிக்கவே, கொஞ்சம் தள்ளி உட்கார்ந்திருந்த ராஜமையர் சுவாதீனமாக அவளைப் பார்த்து, "அம்மாமி! வருகிற மாசந்தானே மாமாவுக்குச் சஷ்டியப்த பூர்த்தி? ஜமாய்த்துத் தள்ளிவிடுவாய்போல் இருக்கிறதே!" என்று கேலி செய்தார்.
"போடா அப்பா! சிறுசுகள் எல்லாம் பாடாமல் உட்கார்ந்திருந்தால் கிழவிதானே பாடவேண்டும்?" என்று கூறி அந்தப் பாட்டையும் அரைகுறையாகவே நிறுத்தி விட்டாள், அந்த அம்மாள்.
இதற்குள்ளாகச் சந்துருவின் கண்கள் ஆயிரம் முறை ஸரஸ்வதியின் பக்கம் பார்த்து, 'உன் கானத்தைக் கேட்பதற்காகவே தவம் கிடக்கிறேனே' என்று சொல்லாமல் சொல்லின. புன்னகை ததும்ப நிலத்தைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந் திருந்த ஸரஸ்வதி திடீரென்று நிமிர்ந்து பார்த்து, "சாவித்திரி! பெண் பார்க்க வந்த அன்றே எங்களை எல்லாம் நீ ஏமாற்றி விட்டாய். அத்தானுடைய விருப்பப்படி என்னிடந்தான் நீ பாட்டுக் கற்றுக்கொள்ள வேண்டும். ஏதோ ஒரு பாட்டு உனக்குத் தெரிந்தவரையில் பாடு பார்க்கலாம்" என்று கொஞ்சுதலாகக் கூறினாள்.
எதிலும் கலந்து கொள்ளாமல் எங்கோ பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்த சாவித்திரி, திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்: பிறகு கடுகடுவென்றிருந்த முசுபாவத்தைச் சட்டென்று மாற்றிக் கொண்டு புன்சிரிப்புடன், "எனக்குத் தெரியாது என்று அன்றே சொல்லி இருக்கிறேனே" என்றாள்.
"பேஷ், பேஷ்... பாட்டு பாட்டு என்று மாய்ந்துபோனவனுக்கு இந்த மாதிரி மனைவியா வந்து வாய்க்க வேண்டும்? ரொம்ப அழகுதான் போ" என்று ரகுபதியின் அத்தை பரிகாசம் செய்யவே, சாவித்திரிக்கு ரோஷம் பொத்துக்கொண்டது. சிறிது அதட்டலாக, "எனக்குப் பாடத் தெரியாது என்றால் பேசாமல் விட்டுவிட வேண்டும். இது என்ன தொந்தரவு?" என்று கூறி முகத்தை 'உர்' ரென்று வைத்துக்கொண்டாள்.
இதுவரையில் பேசாதிருந்த ரகுபதி ஸரஸ்வதியின் பக்கம் திரும்பி, "ஸரஸு! நீதான் பாடேன். இதில் நான், நீ என்று போட்டிக்கு என்ன இருக்கிறது?" என்று கூறினான்.
ஸரஸ்வதி சிரித்துக்கொண்டே உள்ளே போய்த் தன் வீணையை எடுத்து வைத்துக்கொண்டு ஸ்ருதி சேர்க்க ஆரம்பித்தாள். தூரத்தில் நின்று இதுகாறும் ஸரஸ்வதியின் பரிகாசங்களைக் கவனித்துவந்த சந்துரு பந்தலுக்குள் வந்து உட்கார்ந்து கொண்டான்.
ஸ்ருதி சேர்த்து முடிந்ததும் ஸரஸ்வதி ரகுபதியைப் பார்த்து, "அத்தான்! எந்தப் பாட்டை வாசிக்கட்டும்?" என்று கேட்டாள். அதற்குள் ராஜமையர், ”குழந்தை! 'ஷண்முகப்-பிரியா' ராகத்தை நீ அற்புதமாக வாசிப்பாயாமே. எல்லோரும் சொல்லுகிறார்கள்: அதையே வாசி, அம்மா கேட்கலாம்" என்றார்.
வீணையின் மதுர ஒலி, அந்த மோகன நிலவிலே தேவலோகத்துக் கின்னரர்கள் எழுப்பும் யாழின் ஒலிபோல் இருந்தது. குழந்தைகள் கொஞ்சும் மழலையைப்போல் மனதுக்கு இன்பமளித்தது. மகான்களின் உபதேச மொழிகளைக் கேட்டு ஆறுதல் கொள்ளும் மன நிலையை அங்குள்ளவர்கள் அடைந்தார்கள். தெய்வ சந்நிதானத்தில் நிற்கும் பரவச நிலையைச் சிலர் அடைந்தார்கள். சந்துருவின் உள்ளம் கிளுகிளுத்தது. நொடிக்கொரு முறை அன்புடன் ஸரஸ்வதியை அவன் பார்த்த போது அவன் பார்வையின் தாக்குதலைச் சகிக்க முடியாமல் ஸரஸ்வதி தலையைக் குனிந்து கொண்டே பாடினாள்.
வெளியே பாலைப் பொழிவதுபோல் நிலவு வீசிக்கொண்டிருந்தது. களி நடனம் புரியும் மோகன சந்திரிகையிலே, ஸரஸ்வதியின் குரல் இனிமையோடு, இழைந்து வரும் வீணா கானம் ஒவ்வொருவர் உள்ளத்தில் ஒவ்வொருவிதமான உணர்ச்சியை ஊறச் செய்தது.
'ஷண்முகப்பிரியா' ராகத்தில், 'வள்ளி நாயகனே' என்கிற கீர்த்தனத்தை முடித்த ஸரஸ்வதி 'சங்கராபரண' த்தில் ஒரு ஜாவளியையும் வாசித்தாள். மதுர கீதத்தைப் பருகியவாறு அங்கிருந்தவர்கள் மெய்ம் மறந்து உட்கார்ந்திருந்தனர்.
------------
7. ரகுபதியின் கடிதம்
கல்யாணத்துக்கு அப்புறம் சில தினங்கள் வரையில் எல்லோரும் ஏக மனதாக ஸரஸ்வதியின் சங்கீத ஞானத்தைப் புகழ்ந்து கொண்டிருந்தார்கள். அவள் 'கலீர், கலீர்' என்று சிரித்தது. குறும்புத்தனம் நிறைந்த அவள் அழகிய முகம், மைதீட்டிய பேசும் விழிகள், கபடமற்ற எளிய சுபாவம் முதலியவை, சந்துருவின் மனதில் அழியாத ஓவியமாகப் பதிந்து விட்டன. தனிமையில் உட்கார்ந்து அவன் மானசிகமாக ஸரஸ்வதியை நினைத்து. நினைத்துப் பார்த்துக் களிப்பெய்தினான், அவளைப்பற்றி வீட்டிலே யாராவது பேசிக் கொண்டிருந்தால் ஆனந்தம் பொங்க அங்கு நின்று அதை முற்றும் கேட்டு விட்டுத்தான் நகருவான். படிக்கும் போது ஒருவருக்கும் தெரியாமல் காகிதத்தில், 'ஸரஸ்வதி, ஸரஸ்வதி' என்று எழுதிப் பார்ப்பதில் அவன் மனம் திருப்தியடைந்தது.
கல்யாணமெல்லாம் கழித்து, பாலம் டில்லிக்குப் புறப்படுவதற்கு முதல் தினம் சாப்பிடும் கூடத்தில் உட்கார்ந்து எல்லோரும் பேசிக்கொண்டிருந்தனர். சீதா கல்யாண அவசரத்தில் ஸரஸ்வதியிடமிருந்து புதுப் பாட்டுகளாக இரண்டு கற்றுக் கொண்டிருந்தாள். பூஜை அறையில் அவள் தம்பூரை மீட்டி அதைப் பாடும்போது சந்துரு அங்கு வந்து சேர்ந்தான். பாட்டைச் சிறிது நேரம் கேட்டுவிட்டு அவன், "இந்தப் பாட்டில் தானே அநுபல்லவியில் 'நிரவல்' செய்தாள் ஸரஸ்வதி? அபாரமாக இருந்தது. இப்பொழுது கூட என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது சீதா" என்றான் அவன்.
"செதுக்கி எடுத்த சிலை மாதிரி மூக்கும், விழியும், பாவம், பச்சைக் கிளிமாதிரி இருக்கிறது அந்தப் பெண்; கால்கூட அப்படி ஒன்றும் ஊனம் இல்லை; வெளியிலே ஒன்றும் தெரியவில்லை. ஒரே பிடிவாதமாகக் கல்யாணமே வேண்டாம் என்கிறாளாமே. நான்கூட என் மைத்துனனுக்குப் பண்ணிக்கொள்ளலாம் என்று சம்பந்தி அம்மாளை விசாரித்துப் பார்த்தேன்" என்றாள் பாலம்.
“தகப்பனார் வெளிநாட்டில் இருக்கிறாராம். மாசம் இந்தப் பொண்ணுக்கென்று நூறு ரூபாய் அனுப்புகிறாராம். கல்யாணத்துக்கென்று பத்தாயிரம் ரூபாய் வைத்திருக்கிறாராம்! ' பத்தாயிரம் ரூபாய்க்கு ஒரு சங்கீதப் பள்ளிக்கூடம் ஆரம்பித்து விடுகிறேன் அத்தை' என்று சொல்லுகிறதாம் அந்தப் பெண்! அங்கங்கே கல்யாணத்துக்குப் பணமில்லாமல் பெண்கள் நிற்கறதுகள். இது என்னடா என்றால் புதுமாதிரியாக இருக்கிறது' என்று மங்களம் நாத்தனாரிடம் சொல்லி அதிசயப்பட்டாள்.
"அதிசயந்தான்! இந்தக் காலத்தில் பெண்களும், பிள்ளைகளும், கல்யாணம் வேண்டாம் என்று சொல்வது ஒரு 'பாஷன்' என்று நினைத்துக் கொண்டிருக்கிறதுகள். நம்ப சுப்பரமணியின் பெண்ணும் பி. ஏ. பாஸ் பண்ணிவிட்டு ஆபீஸுக்குப் போய் உத்தியோகம் பண்ணுகிறதாமே! 'ஏண்டி புருஷாள் எல்லாம் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் அவதிப்படுகிறாளே, நீ ஆபீஸுக்குப் போய்ச் சம்பாதித்துத்தான் ஆகவேண்டுமாடி?' என்று கேட்டால், 'எதற்கெடுத்தாலும் புருஷன் கையை எதற்கு எதிர்பார்க்க வேண்டும்?' என்று கேட்கிறாளே! அதிசயந்தாண்டி அம்மா. என் காலத்திலே புருஷனுக்குத் தெரியாமல் நாலு காசு வைத்துக்கொள்ளத் தெரியாதே எனக்கு?" என்று சொல்லி மிகவும் அதிசயப்பட்டாள் பாட்டி.
”இதல்லாம் ஒன்றும் அதிசயம் இல்லை பாட்டி. நீ அத்தையுடன் வடநாட்டுக்குப் போய் அங்கே நல்ல காப்பிக்கொட்டை கிடைக்காமல் காப்பியையே விட்டுவிட்டு வரப்போகிறாயே, அது தான் ரொம்பவும் அதிசயம் பாட்டி! காசிக்குப் போனால் தனக்குப் பிடித்தமான பண்டம் எதையாவது சாப்பிடுவதில்லை என்று விட்டுவிட வேண்டுமே. காப்பியை விட்டுத் தொலைத்து விடேன்" என்று சீதா பாட்டியைக் கேலி செய்தாள்.
பாட்டியும், பாலத்துடன் காசி க்ஷேத்திரத்தைத் தரிசிக்கப் புறப்பட ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தாள். 'அங்கே போனால் கோதுமை ரொட்டிதான் சாப்பிடவேண்டும்' என்று சாவித்திரி பயமுறுத்தினாள் பாட்டியை. 'நல்ல காப்பிக்கொட்டை கிடைக்காது' என்று சீதா பயமுறுத்தினாள். 'எச்சில், விழுப்பு ஒன்றும் பார்க்கக்கூடாது' என்று சந்துரு மிரட்டினான்.
"நீ பேசாமல் இரு அம்மா. அதுகள் தமாஷுக்குச் சொல்லுகிறதுகள்" என்று பாலம் தாயாரைச் சமாதானப்படுத்தினாள். மாமியாரும், நாத்தனாரும் ஊருக்குக் கிளம்பியதுமே வீடு வெறிச் சென்று போய்விட்டது மங்களத்துக்கு. இன்னும் இரண்டொரு மாதங்களில் சாவித்திரியும் புக்ககம் கிளம்பிவிடுவாளே! மங்களம் இதை நினைத்து மிகவும் வேதனைப்பட்டாள்.
அம்மாவுக்குப் பாட்டியின் துணப்பன் இல்லாமல் பாத்த, பாசு இருக்காது போல் இருக்கிறது" என்று சந்துரு தாயைக் கேலி செய்தான்.
பாட்டியும், பாலமும் ஊருக்குச் சென்ற ஒரு மாதத்துக்கு அப்புறம் சம்பந்தி வீட்டாரிடமிருந்து ராஜமையருக்குக் கடிதம் வந்தது. அதில் சாவித்திரியை நல்ல நாள் பார்த்துக் கொண்டு வந்து விடவேண்டும் என்று எழுதி இருந்தார்கள்.
"எல்லோரும் இப்படி ஒரேயடியாய்க் கிளம்பிவிட்டால் நான் எப்படி ஒண்டியாக இருக்கிறது இந்த வீட்டில்? சந்துரு அவன்பாட்டுக்கு மாடி அறையில் உட்கார்ந்து இருப்பான். சீதாவுக்கு ஹிந்தி வகுப்புக்குப் போகவும், சங்கீதப் பள்ளிக் சுடத்துக்குப் போகவுமே பொழுது சரியாக இருக்கிறது. கொட்டுக் கொட்டென்று வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டு எப்படி இருக்கிறது?" என்று மங்களம் அலுத்துக்கொண்டாள்.
கடிதத்தின் வாசகத்தை உரக்க ஒரு தரம் மனைவியிடம் படித்துக் காண்பித்தார் ராஜமையர் :
அன்புள்ள மாமா அவர்களுக்கு ரகுபதி அநேக நமஸ்காரம். உபய க்ஷேமம். சௌ. சாவித்திரியை இந்த மாசக் கடைசிக்குள் நம் வீட்டில் கொண்டுவந்து விடும்படி அம்மா தங்களுக்கு எழுதச் சொன்னாள். வரும் தேதியை முன்னாடியே தெரியப்படுத்தவும். மாமிக்கு என் நமஸ்காரத்தைச் சொல்லவும்.
தங்கள் அன்புள்ள,
ரகுபதி.
காதில் ஜ்வலிக்கும் வைரக் கம்மல்களைப் புடைவை முன்றானையால் துடைத்துக் கொண்டே மங்களம், "என்ன செய்யப் போகிறீர்கள்?" என்று கணவரைக் கேட்டாள்.
ராஜமையர் யோசனையுடன் தலையைத் தடவிக்கொண்டார், பிறகு, கம்மிய குரலில் வருத்தம் தேங்கும் முகத்துடன், பார்த்தாயா மங்களம்! நேற்றுவரை பெற்று வளர்த்தவர்களுக்கு இல்லாத உரிமை ரகுபதிக்கு இப்போது ஏற்பட்டிருக்கிறது! பெண்ணை அழைத்து வர வேண்டும் என்று சொன்னவுடன் கதறிக்கொண்டு ஓடுகிறோம். இது விந்தை அல்லவா?" என்றார்.
"ஆமாம். . ஆமாம் . . உங்கள் காலத்தைக் கொஞ்சம் நினைவு படுத்திக்கொள்ளுங்கள். நமக்குக் கல்யாணம் முடிந்ததும், 'என் அண்ணா பிள்ளைக்கு ஆண்டு நிறைவு. அத்தை பெண்ணுக்குச் சீமந்தம்' என்று என்னை எங்கே பிறந்தகத்தில் தங்கவிட்டீர்கள்? வேண்டியதுதான் உங்களுக்கும்!" என்று மங்களம் பழைய விஷயங்களை நினைவு படுத்தினாள். இருந்தாலும், அவள் குரலும் கம்மிப்போயிருந்தது.
இவர்கள் கூடத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த சமயம் காமரா அறையில் சாவித்திரி தன் கணவன் எழுதி இருந்த கடிதத்தைப் படித்துக்கொண்டிருந்தாள். திரும்பத் திரும்பப் படிக்கும்படியாக அக்கடிதம் காதல் ரஸத்தில் தோய்ந்த தாகவோ, சிறிது இன்ப மொழிகளைக் கொண்டதாகவோ இல்லை. அதற்கு மாறாகக் கடிதத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரையில், ஸரஸ்வதி, சாவித்திரியைத் தினமும் எதிர்பார்ப்பதைப் பற்றியும், அவன் மனம் கோணாமல் அவள் ஸரஸ்வதியிடம் சங்கீதம் பயின்று இன்னும் சில வருஷங்களில் ஒரு பாடகி ஆக வேண்டும் என்பதை வற்புறுத்தியும் எழுதப்பட்டிருந்தது.
சாவித்திரி பற்றிவரும் எரிச்சலுடன் கடிதத்தைப் பெட்டியில் வைத்து, 'டப்' பென்று அகங்காரத்துடன் மூடினாள். கீழே சந்துருவின் குரல் பலமாகக் கேட்டது.
"ஊருக்குப் போகும்போது நல்ல வீணையாக ஒன்று வாங்கித் தந்துவிடேன். மாப்பிள்ளைக்குப் பரம திருப்தியாக இருக்கும்" என்று சொல்லிக் கொண்டிருந்தான் சந்துரு.
தடதடவென்று கோபத்தில் இரண்டொரு படிகளைத் தாண்டி இறங்கிக் கீழே வந்தாள் சாவித்திரி. வந்த வேகத்தில் மேல்மூச்சு வாங்குவதையும் பாராட்டாமல், "எனக்கு வீணையும் வேண்டாம்! பூனையும் வேண்டாம். உங்களுக்கெல்லாம் வேறு வேலையே கிடையாதா என்ன?' என்று எரிந்து விழுந்தாள் அவள்.
சீதாவும், சந்துருவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கண்னைச் சிமிட்டிக்கொண்டனர்.
"நம் வழக்கப்படி சீர் செய்து விடுவோம்; புருஷன்பாடு, மனைவி பாடு. நாம் ஒன்றும் வீணை வாங்கவேண்டாம்" என்று கூறி மங்களம் அங்கே ஆரம்பிக்க இருந்த சண்டைக்கு முற்றுப் புள்ளி வைத்தாள்,
-----------
8. பொறாமை
ரகுபதியின் குடும்பத்தார் வசித்து வந்த ஊர், கிராமாந்தர வர்க்கத்தைச் சேர்ந்ததல்ல. நூறு பிராம்மணக் குடும்பங்களும் மற்ற வகுப்புக் குடும்பங்கள் ஐநூறு வாழ்ந்த அந்தச் சிற்றூரில் ஒரு பெரிய பள்ளிக் கூடமும், தபாலாபீஸும், அழகிய கோவிலும் இருந்தன. அவ்வூரில் வசித்துவந்த பிராம்மணக் குடும்பங்களில் பெரும்பாலோர் நல்ல ஸ்திதியில் இருப்பவர்கள். ரகுபதியின் தகப்பனார் அவன் குழந்தையாக இருந்தபோதே இறந்து விட்டார். ஊர் ஜனங்கள் நல்லவர்களாக இருந்ததால் பால்ய விதவையான ஸ்வர்ணாம்பாள் ஒருவித வம்புக்கும் ஆளாகாமல் அந்த ஊரிலேயே காலம் தள்ளி வந்தாள். ரகுபதி தாய்க்கு அடங்கிய பிள்ளை. ஆனால், தாயார் தான் பிள்ளைக்கு அடங்கி நடந்துவருவதாகச் சொல்லும்படி இருந்தது. பெரிய படிப்பெல்லாம் படித்துத் தேறிவிட்டு ரகுபதி வேலைக்குப் போகாமல் வீட்டுடன் இருந்தான்.
சிறு வயதில் ஸ்வர்ணாம்பாள் - நன்றாகப் பாடுவாள். அவள் குரலினிமைக்கு ஆசைப்பட்டே ரகுபதியின் தகப்பனார் அவளைக் கல்யாணம் பண்ணிக்கொண் டாராம். அவரும் சங்கீதப் பித்துப்பிடித்த மனுஷன். இந்தக் காலத்தைப்போல் சங்கீத சபைகளும், நாடக மண்டலிகளும் அப்பொழுது அவ்வளவாக இல்லை. நல்ல சங்கீதத்தைக் கேட்க வேண்டுமானால் கோயில்களின் உற்சவகாலங்களிலும், பெரிய மனிதர்கள் வீட்டுக் கல்யாணங்களிலுமே முடியும். பெரிய வித்வான்களை அழைத்துக் கோயிலில் கச்சேரிகளுக்கு ஏற்பாடு செய்வதோடு. அவர்களைத் தம் வீட்டிலேயே அழைத்து வேண்டிய சௌகர்யங்களைச் செய்து கொடுப்பார் ரகுபதியின் தகப்பனார். அவருக்கு வாய்த்திருந்த மனைவியும் அவர் எடுத்த காரியத்தில் பங்கெடுத்துக்கொண்டு சண்டை, பூசலுக்கு இடம் இல்லாமல் நடந்து கொண்டாள். பரம்பரையாக இருந்துவந்த சங்கீத ஞானம் ரகுபதியையும் பிடித்துக்கொண்டது. அவனும் தகப்பனாரைப்போலவே சங்கித விழாக்கள் நடத்தினான். அதற்காக நன்கொடைகள் கொடுத்தான்.
குழந்தைப் பருவத்திலிருந்து தாயை இழந்து தன்னுடன் வளர்ந்து வந்த ஸரஸ்வதிக்கும் அவ்வித்தையைப் பழுதில்லாமல் கற்பித்தான். தனக்கு வாய்க்கும் மனைவியும் அம்மாதிரி இருக்க பேண்டும் என்று அவன் ஆசைப்படுவது இயற்கையே அல்லவா?
அன்று கோழி கூவுவதற்கு முன்பே ரகுபதியின் வீட்டில் எல்லோரும் விழித்துக் கொண்டு விட்டார்கள். வேலைக்காரி, வரப்போகும் தன் புது எஜமானிக்காக விதவிதமாகக் கோலங்கள் போட்டு, செம்மண் பூசிக்கொண்டிருந்தாள். சமையலறையில் ஸ்வர்ணாம்பாளும், ஸரஸ்வதியும் காலை ஆகாரம் தயாரிப்பதில் முனைந்திருந்தனர். எவ்வளவுதான் பணம் காசில் மூழ்கி இருந்தாலும், சமையலுக்கு ஆள் வைத்துக் கொள்ளும் வழக்கம் மட்டும் அவ்வூரில் இல்லை. யார் வீட்டில் எந்த விசேஷம் நிகழ்ந்தாலும் ஊரில் உள்ள அத்தனை பெண்களும் ஒன்று சேருவார்கள். தலைக்கொரு வேலையாகச் செய்வார்கள். வேலையும் அழகாகவும் ஒழுங்காகவும் முடிந்துவிடும். அன்றும் கோடி வீட்டிலிருந்து பாகீரதி அம்மாமி வந்திருந்தாள். வயது அறுபது இருக்கும். வாய் படபடவென்று எதையாவது பொரிந்து தள்ளுவதற்கு ஈடாக கையும் சரசரவென்று லட்சியமில்லாமல் வேலை செய்து கொண்டிருக்கும். இதற்கு நேர் விரோத குணம் படைத்தவள் ரகுபதியின் தாய் ஸ்வர்ணாம்பாள். கறிகாய் நறுக்க உட்கார்ந்தால் மணிக் கணக்காக அங்கேயே உட்கார்ந்திருப்பாள்!
பாகீரதி அம்மாமி மற்றக் காரியங்களைக் கவனித்துக்கொண்டிருக்க, ஸ்வர்ணம் ஒரு கூடை நிறையக் காய்கறிகளை வைத்துக் கொண்டு அரிவாள்மணைக்கு முன்பு உட்கார்ந்திருந்தாள். உள்ளே யிருந்து கமகமவென்று சமையல் வாசனை கிளம்பிக் கொண்டிருந்தது. பாகீரதி அம்மாமி பாயசத்துக்குச் சேமியாவை வறுத்துக்கொண்டே, "ஏண்டி ஸ்வர்ணம்! நீ முன்னாடி அந்த இடத்தை விட்டு எழுந்திரு பார்க்கலாம். மீதியை நான் நறுக்கிக் கொள்கிறேன்" என்றாள்.
"இருக்கட்டும் அம்மாமி, நீங்கள் எத்தனை காரியங்கள் தான் செய்வீர்கள்?"
”நான் என்னத்தைச் செய்ய இருக்கிறது? அடுப்பில் வைத்தால் தானே ஆகிறது. ஏண்டி! புடலங்காயைக் கூட்டுக்கு நறுக்கச் சொன்னால் விரல் பருமனுக்கு நறுக்கி வைத்திருக்கிறாயே!" என்று கூறினாள் பாகீரதி அம்மாமி.
"த்ஸொ ...... த்ஸொ . . . . திரும்பவும் நறுக்கிவிடட்டுமா மாமி?" என்று கேட்டாள் ஸ்வர்ணம் பாகீரதியைப் பார்த்து.
”வேண்டாம்; வேண்டாம். நாட்டுப்பெண் வருகிற நாழிகை ஆகிறது. நீ போய் மற்றக் காரியங்களைக் கவனி" என்றாள் அந்த அம்மாள்.
அவள் சொல்லி வாய்மூடுமுன் வாசலில் வண்டி வந்து நின்றது. அதிலிருந்து மங்களமும், சந்துருவும், சாவித்திரியும் இறங்கினார்கள். ஸரஸ்வதி பரக்கப் பரக்க ஆரத்தி எடுத்துக் கொண்டு வந்தாள். அவள் முகத்தில் பொங்கிய சந்தோஷத்தைக் கண்டு சந்துரு வியப்படைந்தான்.
"வா, சாவித்திரி! வாருங்கள் மாமி" என்று புன்முறுவலுடன் வரவேற்றாள் ஸரஸ்வதி. அவர்களை அழைத்துவிட்டு அவள் திரும்பியபோது சந்துரு தன்னையே உற்றுப் பார்ப்பதை அறிந்ததும் அவளுக்கு வெட்கமாகப் போய் விட்டது. ரகுபதி அதுசமயம் வெளியே சென்றிருந்ததால் சங்கோஜத்துடன் ஸரஸ்வதி அவனைப் பார்த்து, "வாருங்கள்" என்று அழைத்தாள்.
பல வருஷங்களுக்கு அப்புறம் அவ்வீட்டிற்கு ஒளி தர வந்திருக்கும் சாவித்திரி, மாமியாரை நமஸ்கரித்தபோது ஸ்வர்ணாம்பாள் உணர்ச்சி மிகுதியால் வாயடைத்து நின்றாள். கண்களில் ஆனந்த பாஷ்பம் பொங்கி வழிந்தது. உவகையுடன் உள்ளம் - பூரிக்க, பெருமிதத்துடன் சாவித்திரியைக் கட்டி அணைத்துக் கொண்டாள்.
“வீட்டிலே எல்லோரும் சௌக்யந்தானே, மாமி?" என்று ஸரஸ்வதி மங்களத்தை விசாரித்தபோது, 'சௌக்யந்தானே?" என்று தன்னை நேரில் கேட்பதற்கு வெட்கப்பட்டுக் கொண்டு ஸரஸ்வதி மறைமுகமாகத் தன் தாயை விசாரிப்பதாக நினைத்த சந்துரு, ”சீதா உன்னை ரொம்பவும் விசாரித்ததாகச் சொல்லச் சொன்னாள். உன்னிடம் கற்றுக்கொண்ட பாட்டுகளைப் பாடம் பண்ணிவிட்டதாகவும் சொன்னாள்" என்றான்.
"ஓஹோ!" என்று அவனுக்குப் பதில் அளித்துவிட்டு ஸரஸ்வதி மற்ற அலுவல்களைக் கவனிக்க உள்ளே சென்றாள்.
இதற்குள்ளாக வெளியே போயிருந்த ரகுபதி திரும்பி விடவே சாவித்திரியும், மங்களமும் கூடத்திலிருந்து பின் கட்டுக்குச் சென்றார்கள்:
"வந்தவர்களை வா என்று கூடச் சொல்லத் தெரியாமல் பிரமித்து உட்கார்ந்திருக்கிறாயே ஸ்வர்ணம். நாலு வார்த்தைகள் நறுக்கென்று பேசத் தெரிய-வில்லையே உனக்கு!" என்று பாகீரதி அம்மாமி கையில் பிடித்த கரண்டியுடன் சம்பந்தி அம்மாளை வரவேற்று. ஸ்வர்ணத்தைப் பரிகாசம் செய்தாள்.
ஸ்வர்ணம் நிஜமாகவே பிரமித்துப்போய் இருந்தாள். ஒன்றரை வயதுக் குழந்தையிலிருந்து தகப்பன் இல்லாமல் அல்லும் பகலும் அரும்பாடுபட்டு வளர்த்த குழந்தைக்குக் கல்யாணம் ஆகி மனைவி வந்திருக்கிறாள் என்றால் அது எளிதான காரியமா? நாலு பேரைப்போல் அவளும் பேரன் பேத்தி எடுக்கப் போகிறாள். இருண்டிருந்த வீட்டில் ஒளி வீசப்போகிறது. இனிமேல் தன்னை மிஞ்சக்கூடியவர்கள் யாரும் இல்லை என்றே அவளுக்குத் தோன்றியது.
சாவித்திரி புக்ககம் வந்து இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. அந்த இரண்டு மாதங்களில் ஸ்வர்ணம் நாட்டுப்பெண்ணுக்கு விதவிதமாகப் பூவைத்துப் பின்னினாள். நகைகள் பூட்டி அழகு பார்த்தாள். ஒரு வேலையும் செய்யவிடாமல் தானே எல்லா வற்றையும் கவனித்துக்கொண்டாள். சாதாரணமாகத் திருப்தி யடையும் மனமிருந்தால், மாமியாரின் இந்தச் சரளமான சுபாவத்தைப் புரிந்துகொண்டு சாவித்திரி ராஜாத்தி மாதிரி இருந்திருக்கலாம். அந்த வீட்டுக்கு நாட்டுப்பெண்ணாகவும், பெண்ணாகவும் இருந்து அருமையோடு வாழ்ந்திருக்கலாம். ஆனால், லேசில் ஒருவரையும் நம்பும் சுபாவம் படைத்தவள் அல்ல சாவித்திரி. அவள் எதிரில் தங்கப் பதுமைபோல் வளையவரும் ஸரஸ்வதியைப் பார்த்தபோதெல்லாம் அவள் நெஞ்சு பொறாமை யால் வெடித்துவிடும் போல் இருந்தது.
”இவளுக்கு என்ன இந்த வீட்டில் இவ்வளவு சலுகை?' என்று தன்னைக் கேட்டு அதற்கு விடை புரியாமல் தவித்தாள் சாவித்திரி, சதாகாலமும் முகத்தை 'உப்' பென்று வைத்துக்கொண்டு கணவன் கேட்கும் வார்த்தைகளுக்குப் பதில் கூறாமல் இருந்தாள் அவள்.
ஓர் இரவு கணவனும், மனைவியும் தனியாகச் சந்திக்கும் போது சாவித்திரியின் கண்கள் கோவைப் பழம்போல் அழுது சிவந்திருந்தன. திறந்த மாடியில் கைப்பிடிச் சுவரைப் பிடித்த வண்ணம் தொலைவில் தெரியும் ஆலயத்தின் கோபுரத்தைப் பார்த்தவாறு நின்றிருந்தாள் சாவித்திரி.
அடிமேல் அடிவைத்து உள்ளம் சிலிர்க்க, தன்னை நாடிவரும் ரகுபதியை அவள் கவனிக்கவில்லை. மங்கிய நிலாவில் மனைவியின் முகத்தைத் திருப்பி அவன் பார்த்தபோது கண்களிலிருந்து கண் ணீர் முத்துக்கள் போல் கன்னங்களில் உருண்டன. ஏன் சாவித்திரி அழுகிறாள்? பல குடும்பங்களில் இன்றும் நடக்கும் மாமியார். நாட்டுப் பெண் சண்டை தன் குடும்பத்தில் தோன்றிவிட்டதா என்று ரகுபதி ஐயுற்றான். பிறகு அன்புடன், "சாவித்திரி! ஏன் அழுகிறாய்?" என்று கேட்டு அவள் கண்ணீரைத் துடைத்தான்.
-------------
9. மனித சுபாவம்
கன்னங்களில் வழிந்த கண்ணீரைத்தான் ரகுபதியின் கரங்கள் துடைத்தன. சாவித்திரியின் மனதில் ஏற்பட்டிருக்கும் குறையை - சந்தேகத்தை - பொறாமையை அவனால் துடைக்க முடியவில்லை 'மனிதன், அல்ப சந்தோஷி' என்று பெரியவர்கள் கூறுகிறார்கள். கல்யாணம் முடிந்தவுடன் மனைவியின் விருப்பப் படி கணவன் நடப்பதோ, கணவனின் விருப்பப்படி மனைவி நடப்பதோ இயலாத காரியம். வெவ்வேறு குடும்பத்திலிருந்து தெய்வ ஆக்ஞையால் சேர்க்கப்பட்ட இருவரின் உள்ளங்களும் ஒன்றுபடச் சில வருஷங்களாவது அவகாசம் வேண்டி இருக்கும். சாவித்திரி அந்த வீட்டுக்கு வந்ததும் அங்கு ஸரஸ்வதிக்கு அளித்திருக்கும் உரிமையைக் கண்டு ஆச்சரியப்பட்டாள். பீரோவிலிருந்து அத்தானுடைய கைச் செலவுக்குப் பணங்கூட அவள்தான் எடுத்துக் கொத்தாள். வரவு-செலவைக் கணக்கெழுதி வைத்தாள். ஸரஸ்வதிக்கு என்று சங்கீத சபைகளில் ஒன்றுக்குப் பத்தாகப் பணம் செலவழித்துக் கச்சேரிகளுக்கு ரகுபதி டிக்கெட்டுகள் வாங்கினான்.
தன் கணவன் இப்படிச் செலவழிப்பதை சாவித்திரி ஒரு குற்றமாக எடுத்துக் கொண்டாள். என்ன தான் தகப்பனார் மாதந்தோறும் ஸரஸ்வதிக்காகப் பணம் அனுப்பினாலும், பணத்தில் ’என்னுடையது உன்னுடையது' என்று எங்கே வித்தியாசம் தெரிகிறது? ரகுபதி வெளியே சென்று விட்டு வீடு திரும்பும்போது சாவித்திரி கணவன் மீது ஏற்பட்ட கோபத்தால் அவன் வந்ததைக்கூட லட்சியம் செய்யாமல் தன் அறையில் கதவைச் சார்த்திக்கொண்டு உட்கார்ந்திருப்பாள். வேலை செய்து களைத்துப்போய் ஸ்வர்ணம் படுத்துத் தூங்கிவிடுவாள். அப்பொழுதெல்லாம் ஸரஸ்வதி அத்தானுக்குப் பரிந்து உபசரித்துக் காபி கொடுத்து, உணவு பரிமாறி, கவனித்துக் கொள்வாள். ”அவள் ஏன் அதைச் செய்யவேண்டும்? அவனுடையவள் என்று உரிமை பாராட்ட ஒருத்தி இருக்கும்போது ஸரஸ்வதிக்கும், இன்னொருத்திக்கும் அந்த இடத்தில் என்ன வேலை இருக்கிறது? 'எனக்குச் சாதம் போட வா' என்று கணவன் வந்து தன்னைக் கூப்பிடட்டுமே! தன்னைக் காணாவிடில், ’ஸரஸு" என்று அவளைக் கூப்பிட அவனுக்கு என்ன உரிமை இருக்கிறது?' என்று சாவித்திரி எண்ணி எண்ணி மனம் வெதும்பினாள்.
குழந்தை மனம் படைத்த ஸரஸ்வதிக்குச் சாவித்திரியின் போக்கு புரியவில்லை. ஒரு வேளை கணவன், மனைவிக்குள் ஏதாவது ஊடலாக இருக்கும். நாம் ஏன் இதில் தலையிடவேண்டும்?' என்று அவள் என்றும் போல் பழகி வந்தாள்.
நீல வர்ணப் பட்டுப் புடைவை உடுத்தி, இளம் பச்சை ரவிக்கை அணிந்து சாவித்திரி அழகாகத் தோன்றினாள் ரகுபதிக்கு. சிரித்துப் பேசும் சமயத்தில் கண்ணீரும், சண்டையும் அவனுக்குப் பிடிக்கவில்லை. கீழே தூக்கம் வராமையால் ஸரஸ்வதி வீணையில் 'ஸஹானா' ராகத்தை வாசித்துக் கொண்டிருந்தாள்: சங்கீதத்துக்கே குழந்தையிலிருந்து பெரியவர்கள் வரையில் யாவரையும் 'மயக்கும் சக்தி’ உண்டு. சாவித்திரி வீணாகானத்தில் தன்னை மறந்து சிறிது நேரம் கணவனின் மார்பில் சாய்ந்திருந்தாள். ரகுபதி அவளை அன்புடன் பார்த்து, "சாவித்திரி! அப்பா, அம்மாவை நினைத்துக்கொண்டு விட்டாயா? ஊருக்குப் போக வேண்டும் என்று ஆசை வந்து விட்டதாக்கும்!" என்று கொஞ்சினான்.
"அதெல்லாம் ஒன்றும் இல்லை." - முகம் சிவக்கக் கண்களை மூடிக் கொண்டாள் அவள்.
கீழே 'ஸஹானா' ராகத்தை முடித்துவிட்டாள் ஸரஸ்வதி. அடுத்த பாட்டு சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு அமைந்தது. ’தூண்டிற் புழுவினைப்போல்' வீணையில் ஒலிக்க ஆரம்பித்ததும், ரகுபதி, “இதோ பார்த்தாயா? இந்த வீணையின் நாதத்துக்கு இந்த உலகத்தையே காணிக்கையாக வைத்து விடலாம். அதன் தந்திகளை மீட்டும்போது எழும் ஓசைக்கு ஈடு வேறு எதையும் சொல்ல முடியாது. சாவித்திரி! ஸரஸுவிடம் நீ பாட்டுக் கற்றுக் கொள்ளலாமே. முன்பு ஒரு தடவை கேட்டாயே, 'உங்களுக்கு என்ன பிடிக்கும்!' என்று. எனக்குப் பிடித்தது இது ஒன்றுதான். என் மனைவி என் எதிரில் உட்கார்ந்து ஆனந்தமாகப் பாட வேண்டும். காலம் நேரம் போவது தெரியாமல் நான் அதை அனுபவிக்க வேண்டும்."-ரகுபதி உணர்ச்சி யுடன் பேசினான்.
மகுடி ஊதுவதைத் திடீரென்று நிறுத்தியதும் சீறும் சர்ப்பம் போல் சாவித்திரி 'விசுக்'கென்று அவன் மடியிலிருந்து எழுந்தாள்.
"எனக்கு எல்லாம் தெரியும். கல்யாணத்தின் போதே எனக்குத் தெரியுமே! மணிக் கணக்கில் ஸரஸ்வதியைப் பாடச் சொல்லிவிட்டு நேரம் போவது தெரியாமல் உட்கார்ந்திருந்தீர்களே! மறந்து போய்விட்டேன் என்றா பார்த்தீர்கள்? மறக்க வில்லை!" என்று கோபமும், பரிகாசமும் தொனிக்கக் கூறிவிட்டு சாவித்திரி அவனிடமிருந்து ஒதுங்கி உட்கார்ந்து கொண்டாள்:
ரகுபதி பொறுமையை இழக்காமல் சாவித்திரியைப் பார்த்து. "என்னவோ சம்பந்தம் இல்லாமல் பேசுகிறாயே! அயலாரிடம் உன்னைப் பாட்டுக் கற்றுக்கொள்ளச் சொல்லவில்லையே! ஸரஸ்வதி நம் வீட்டு மனுஷிதானே?" என்று கேட்டான்.
"உங்கள் - ஸரஸ்வதி எனக்கு ஒன்றும் வாத்தியார் ஆக வேண்டாம். அந்தப் பெருமை எல்லாம் உங்களோடு இருக்கட்டும். எனக்குப் பாட்டும் வேண்டாம் கூத்தும் வேண்டாம். எனக்கு இஷ்டமில்லாத விஷயத்தை வற்புறுத்த வேண்டாம். என் பிறந்த வீட்டிலேயே என்னை யாரும் எதற்கும் வற்புறுத்த மாட்டார்கள். ஆமாம்.." என்று படபடவென்று பேசிவிட்டுப் படுக்கை அறைக்குள் சென்று கட்டிலின் மீது 'பொத்’தென்று: உட்கார்ந்து கொண்டாள்.
வெளியே சென்று வந்த கணவன் சாப்பிட்டானா என்று விசாரிக்கவேண்டும் என்றுகூட அவளுக்குத் தோன்றவில்லை. ரகுபதி சப்பிட்ட மனத்துடன் படுக்கை அறையில் நுழைந்து அன்று வந்த தினசரி ஒன்றைப் படிப்பதில் முனைந்தான். மேஜைமீது வைக்கப்பட்டிருந்த பால் ஆறிப்போயிருந்தது. சிறிது நேரம் கணவனையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த சாவித்திரி கீழே ஸரஸ்வதி பாட்டை முடித்ததும் “அப்பாடா! பாதி ராத்திரி வரைக்கும் பாட்டும் கதையும்! தூ . " என்று கூறிக்கொண்டு போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்துவிட்டாள். மனைவி தன்னை இவ்வளவு உதாசீனம் செய்வாள் என்று ரகுபதி எதிர்பார்க்கவில்லை. ஆகவே, கோபமும். வெட்கமும் நிறைந்த மனத்துடன் அவள் அறைக்கு வெளியே வராந்தாவில் யோசித்த படி குறுக்கும், நெடுக்குமாக உலாவும்போது கீழே ஸரஸ்வதி மங்கிய விளக்கொளியில் படுக்கையை உதறிப்போட்டுக்கொண்டு படுப்பது தெரிந்தது. சிறிது நேரத்துக்-கெல்லாம் அவள் அயர்ந்து தூங்கிவிட்டாள். சலனம் இல்லாத அவள் முகத்தில் புன்னகை மிளிர்ந்து கொண்டிருந்தது.
ரகுபதி மகத்தான தவறு செய்துவிட்டான். கை எதிரில் இருந்த கனியை அருந்தாமல், காயைக் கனிய வைக்கும் விஷயத்தை அவன் மேற்கொண்டால் அது எளிதில் நடந்துவிடுகிற காரியமா? ரகுபதி சிலைபோல் நின்று அவளையே கண் இமைக்காமல் பார்த்தான். பிறகு, சாம்பிய மனத்துடன் அவன் அறைக்குத் திரும்பியபோது சாவித்திரி. 'புஸ்' ஸென்று பெருமூச்சு விட்டுக் கொண்டே அனல் தெறிக்கும் விழிகளால் அவனைப் பார்த்தாள். அவளைக் கவனியாதவன் போல் ரகுபதி அறைக்குள் வந்து கதவைத் தாழிட்டுக்கொண்டு படுக்கையில் படுத்தான். கணவன், மனைவிக்கு இடையே சாண் அகலம் இடைவெளி இருந்தாலும், சாவித்திரியும், அவனும் எங்கோ ஒருவருக்கொருவர் தொலைவில் இருப்பதாகவே நினைத்தார்கள்.
'நாம் சொல்வதைத்தான் இவள் கேட்டால் என்ன?' என்று அவன் பொருமிக்கொண்டே படுத்திருந்தான்.
'போயும், போயும், அவளிடந்தான் பாட்டுக் கற்றுக் கொள்ள வேண்டும்! பாடு என்றால் பாடவேண்டும். ஆடு என்றால் ஆட வேண்டும்! ஓடு என்றால் ஓட வேண்டும்! வா என்றால் வர வேண்டும்! இந்தப் புருஷர்களுடைய அதிகாரத்துக்கு அளவில்லையா என்ன? ஸ்திரீகளைச் சமமாகப் பாவிக்கிறார்களாம்! பேச்சிலே தான் எல்லாம் அடிபடுகிறது. வீட்டிலே அவனவன் மனைவியை இன்னும் அடிமையாகத்தான் வைத்திருக்கிறான்.'-- சாவித்திரி பெருமூச்சு விட்டுக்கொண்டு இவ்விதம் நினைத்தாள்.
' நான் சொல்லுவதை இவள் ' உத்தரவாக' ஏன் எடுத்துக் கொள்ளவேண்டும்? கணவனின் அன்புக் கட்டளை என்று கொள்ளக்கூடாதா? வீட்டிலே பாட்டியும், பெற்றோர்களும் இடங்கொடுத்துத் தலைமேல் ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள். வந்த இடத்திலும் பணியும் சுபாவம் ஏற்படவில்லை. ஆகட்டும்.... பார்க்கலாம்' என்று தீர்மானித்துக்கொண்டு ரகுபதி தூங்க ஆரம்பித்தான்.
நிம்மதியாகத் தூங்கும் ஸரஸ்வதி ஒரு கனவு கண்டு சிரித்துக் கொண்டிருந்தாள். அழகிய மலர் மாலை ஒன்றைக் கையில் எந்திச் சந்துரு அன்புடன் அவளை நெருங்கி வருவதை உணர்ந்து ஸரஸ்வதி சிரித்துக் கொண்டே அவனிடமிருந்து விலகிப் போகிறாள்.
"ஸரஸ்வதி! உன்னிடம் ஒரு குறையும் இல்லை. அற்ப விஷயம் அது. நான் அதைப் பாராட்டுகிறவன் அல்ல, ஸரஸ்வதி" என்று சந்துரு உண்மை ஜ்வலிக்கும் பார்வையுடன் அவளிடம் கூறுகிறான்:
ஸரஸ்வதி திடுக்கிட்டு விழித்துக்கொண்டாள். சாவித்திரியைப் புக்ககத்துக்கு அழைத்து வந்த போது சந்துரு அவளைத் தனிமையில் சந்தித்துப் பேச எவ்வளவோ சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொண்டாலும் ஸரஸ்வதி அதற்கு இடங்கொடாமல் உறுதியுடன் இருந்தாள்.
"சீதா உன்னை எங்களுடன் அழைத்து வரச் சொன்னாள்" என்று மங்களம் கூப்பிட்டபோது, "ஆகட்டும் மாமி, வரு கிறேன். சீதாவைத்தான் இங்கே அனுப்பி வையுங்களேன்" என்று சிரித்துக்கொண்டே கூறினாள் ஸரஸ்வதி.
இது என்ன கனவு? கனவில் காண்பதெல்லாம் வாழ்க்கையில் உண்மையாக நடக்குமா? நடந்தாலும் நடக்கலாம். நடக்காமல் போனாலும் போகலாம்; அவள் படுக்கை அறைக்கு எதிரில் பூஜை அறை இருந்தது. அன்று அறைக்கதவு சார்த்தப் படாமலேயே திறந்திருந்தது. உள்ளே பூஜையில் மாட்டியிருந்த நடராஜனின் உருவப்படம் லேசாகத் தெரிந்தது. 'காலைத் தூக்கி நின்றாடும் தெய்வ’த்தின் கலை அழகைக்கண்டு ரசித்தாள் ஸரஸ்வதி. உன்னதமான கலையைத் தனக்கு அருளி இருக்கும் ’அவன்’ தன்னைக் கேவலம் இந்த உலக இன்பங்களில் சிக்க வைக்கமாட்டான் என்கிற உறுதியும் கூடவே ஸரஸ்வதியின் மனதில் உதித்தது. இருந்தாலும் திடீர் திடீர் என்று சந்துருவின் நினைவு அவளுக்கு ஏன் தோன்றவேண்டும்? மனித சுபாவம் அப்படித்தான் என்று புரிந்து கொள்ளவில்லை ஸரஸ்வதி.
---------
10. 'வானம்பாடி'
அந்த இரவுக்கு அப்புறம் கணவனும் மனைவியும் பல முறைகள் தனிமையில் சந்தித்திருக்கிறார்கள். ஆனால், மனம் விட்டுப் பேசவோ, அளவளாவவோ அவர்களுக்கு முடியவில்லை. கணவனுக்கு உணவு பரிமாறும் போது சாவித்திரி அவன் முகத்தைப் பார்க்காமல் யாரோ அன்னியனுக்குப் படைப்பது போல் கலத்தில் பரிமாறிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டு வெளியே சென்று விடுவாள். அவன் அவளை நிமிர்ந்து பாராமல் உண்டு விட்டுப் போய்விடுவான். ஒரு தினம் தலை வாரிக்கொள்ள சாவித்திரியை அழைத்து சீப்புக் கேட்டபோது அவன் எதிரில் மேஜை மீது 'பட்' டென்று சீப்பு வந்து விழுந்தது! 'இந்தத் துணிகளை இன்று சோப்புப் போட்டுத் துவைக்க வேண்டும்' என்று அவன் தயங்கிக் கொண்டே யாரோ மூன்றாவது மனிதரிடம் சொல்லுவது போல் கூறிவிட்டு வெளியே போவான். மாலை வீடு திரும்பும் போது ஒவ்வொரு தினம் அவை துவைத்து அழகாக மடித்து வைக்கப்பட்டு இருக்கும். பல நாட்கள் அவை அவன் அறையில் ஒரு மூலையில் கேட்பாரற்றும் கிடப்பது உண்டு.
"அத்தான்! மாடியில் உன் அறைப்பக்கம் போனேன்: துவைப்பதற்குத் துணி இருக்கவே துவைத்து மடித்து வைத்தேனே பார்த்தாயோ?" என்று ஸரஸ்வதி அவனைக் கேட்ட பிறகுதான் அவைகளைத் துவைத்தது யார் என்பதும் அவனுக்குப் புரியும்.
படுக்கை அறையில் மேஜைமீது வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை மீது தூசு படிந்து கிடக்கும். படங்களில் மலர் மாலைகள் வாடிக் கருகித் தொங்குவதைக் கவனிப்பதற்கு யாரும் இல்லை. பெரியவர்கள், 'ஆணுக்குப் பெண் துணை' என்றும் ' பெண்ணுக்கு ஆண் துணை' என்றும் ஏன் ஏற்படுத்தியிருக்கிறார்கள்? உடல் இன்பத்திற்காக என்றால் புனிதமான தாம்பத்ய உறவு அவசியம் இல்லை. ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உத்தியோக நிமித்தம் சென்றிருக்கும் கணவனின் சுக வாழ்வுக்காக மனைவி ஊரில் அவனையே நினைத்துத் தவங்கிடந்து நோன்புகள் செய்வானேன்?
தாம்பத்ய உறவில் உள்ளம் இரண்டும் ஒன்று சேர்ந்து உறவாடுவதுதான் இன்பம். சாவித்திரி தினம் இரவு நேரத்தில் பால் டம்ளருடன் படுக்கை அறைக்குள் நுழைவாள். 'நக்' கென்று அதை மேஜை மீது வைத்துவிட்டுப் படுக்கையில் ' பொத்' தென்று சாய்ந்து போர்வையை இழுத்து மூடிக்கொண்டு படுத்து விடுவாள்.
ரகுபதி ஒரு சங்கீதப் பித்தன். இரவில் நகரத்தில் சங்கிதக் கச்சேரி கேட்டுவிட்டு வீடு திரும்பும்போது பொழுதாகிவிடும். வீடு திரும்பும் கணவனை மலர்ந்த முகத்துடன் சாவித்திரி வரவேற்க மாட்டாள். கூடத்தில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும் ஸ்வர்ணத்தை எழுப்புவதற்கு ரகுபதிக்கு மனம் வராது. ஸரஸ்வதியைக் கூப்பிட இனி, அவள் யார்? அவன் யார்? தளர்ந்த மனத்துடன் ரகுபதி, மாடிக்குப் போய்ச் சாவித்திரியை அழைக்கவேண்டும் என்கிற எண்ணத்துடன் படி களில் ஏறும்போது தடதடவென்று சாவித்திரி மாடிப் படிகளில் இறங்கி வேகமாக அவனைத் தாண்டிச் செல்வாள். அப்ப! ஒரு ஸ்திரீக்கு அகங்காரமும், கோபமும் ஏற்படும் போது உண்டாகும் வேகம் ஓர் அணு குண்டுக்குக்கூட இருக்காது என்று சொல்லலாம்! அடுத்தாற்போல சமையலறைக் கதவைப் 'பட்' டென்று திறந்து சாப்பிடும் தட்டை 'நக்' கென்ற ஓசையுடன் வைத்து விட்டு உறுமும் பெண் புலியைப்போல் காத்து நிற்பாள் சாவித்திரி. 'உங்களுக்குச் சாதம் போடும் வேலை ஒரு கடன்' என்று சொல்லுகிற மாதிரி இருக்கும் அவள் செய்கைகள் எல்லாம்! குமுறும் எண்ணங்களை வார்த்தைகளில் கொட்டித் தீர்த்துவிட்டாலும் பரவாயில்லையே! எண்ணங்கள் மனத்துள் குமுறக் குமுற, எழப்போகும் அனல் விபரீதமாக அன்றோ இருக்கும்? குமுறும் எரிமலையை எவ்வளவு காலந்தான் அடக்கி வைக்க முடியும்?
ரகுபதி சாப்பிட்டு முடித்தவுடன் குடிப்பதற்கு ஜலம் தேவை யென்று டம்ளரைச் சற்று நகர்த்தி வைப்பான். அதை கவனியாதவள் போல் சாவித்திரி 'விர்' ரென்று மாடிப் படிகளில் ஏறி அறைக்குள் சென்றுவிடுவாள். வேதனையும், கோபமும் நிறைந்த மனத்துடன் ரகுபதி அறைக்குள் சென்று ஏதாவது புஸ்தகத்தை எடுத்து வைத்துக்-கொண்டு படிக்க ஆரம்பித்துவிடுவான்.
இப்படியே பேலும் இரண்டு மாதங்கள் சென்றன. இல்வாழ்க்கை ஆரம்பமானவுடன் பாலில் சொட்டுப் புளி விழுந்ததுபோல் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே எழுந்த மனஸ்தாபம் சிறிது சிறிதாக நாளடைவில் வளர்ந்துவிட்டது. கணவனுக்காகப் பிடிவாத குணமுடைய சாவித்திரி தன் போக்கை மாற்றிக்கொள்ளவும் தயாராக இல்லை. மனைவியைத் தன் கொள்கைக்கு இணங்கி வரும்படி வற்புறுத்த வேண்டாம் என்கிற பிடிவாதத்தையும் ரகுபதி தளர்த்தவில்லை.
இவர்கள் இருவருடைய மனஸ்தாபத்துக்கும் இடையில் சரஸ்வதி மிகவும் குழப்பம் அடைந்திருந்தாள். வலுவில் அவளாகவே சென்று சாவித்திரியுடன் பேசினாலும் முகத்தைத் திருப்பிக்கொண்டு சாவித்திரி போய்விடுவாள். ஒரு தவறும் செய்யாத தன்னிடம் சாவித்திரிக்கு என்ன கோபம் ஏற்பட்டிருக்கும் என்பது ஸரஸ்வதிக்குப் பல நாட்கள் வரையில் புரியவே இல்லை.
நாளாக நாளாக, சாவித்திரியின் கோபம் தன்மீது மட்டும் ஏற்பட்டிருக்கவில்லை, அது தன் அத்தான் மீதும் பாயத் தொடங்கி இருக்கிறது என்பதையும் ஓரளவு ஸரஸ்வதி ஊகித்துக் கொண்டாள். 'நிலவு பொழியும் இரவுகளை, இளம் மனைவியைப் படைத்திருக்கும் அத்தான் ரகுபதி, திறந்த வெளியில் சாய்வு நாற்காலியில் தனியாகக் கழிப்பானேன்?' என்று தன் மனத்தையே கேட்டுப் பார்த்தாள் ஸரஸ்வதி. அவளுக்கு அதற்கும் விடை புரியவில்லை. ஆகவே, ஒரு தினம் ஸரஸ்வதி கூடத்து ஊஞ்சலில் உட்கார்ந்து கீதை படிக்கும் தன் அத்தை ஸ்வர்ணத்தினிடம் சென்று நெருங்கி உட்கார்ந்து கொண்டு, "அத்தை" என்று மெதுவாகக் கூப்பிட்டாள். இதுவரையில் கண்ணனின் உபதேச மொழிகளில் மனதை லயிக்கவிட்டிருந்த ஸ்வர்ணம் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்து. "நீ இங்கேயா அம்மா இருக்கிறாய்? மாடியில் சாவித்திரியுடன் இருப்பதாக அல்லவோ நினைத்துக்கொண்டிருந்தேன்?" என்று வியப்புடன் கூறினாள்.
"சாவித்திரி தூங்குகிறாள் அத்தை. அவளைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தான் இங்கு வந்தேன்" என்றாள் ஸரஸ்வதி. அவள் குரலில் ஏமாற்றமும், ஏக்கமும் நிரம்பி இருந்தன.
ஸ்வர்ணம் மெதுவாகச் சிரித்துக்கொண்டே, 'உனக்கு மத்தியான்ன வேளைகளில் தூக்கமே வராதே. எதையாவது. ”கொடை, கொடை'ன்னு குடைந்துண்டே இருப்பாயே குழந்தையிலிருந்து! ஒரு தரம் உங்கம்மா இருக்கும் போது ...." என்று ஸ்வாதீனமாகப் பழைய கதை ஒன்றை ஆரம்பித்தாள்.
"உஸ். . . . உஸ்" என்று ஸரஸ்வதி வெகு ஸ்வாதீனமாக அத்தையின் வாயைப் பொத்திக் குறும்புத்தனமாகச் சிரித்துக் கொண்டே, "அம்மா இருக்கும் போது நான் செய்த விஷமங்களைக் கேட்டுக் கேட்டுக் காது புளித்துப் போய்விட்டது! அதெல்லாம் பழைய விஷயங்கள்! புது விஷயமாக - ஒன்று சொல்லப்போகிறேன்" என்றாள் ஸரஸ்வதி.
"சொல்லேன்! அதற்கு இவ்வளவு பீடிகை வேண்டுமா என்ன?" என்று கேட்டாள் ஸ்வர்ணம்.
ஸரஸ்வதியின் முகத்தில் சிறிது முன்பு நிலவிய குறும்புச் சிரிப்பும் குறுகுறுப்பும் திடீரென்று மறைந்தன. நிலத்தைக் காலால் கீறிக்கொண்டே தரையைச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். பிறகு நீர் நிறைந்த கண்களுடன், அத்தை ஸ்வர்ணத்தை ஏறிட்டுப் பார்த்து, ”அத்தை! என்னை அப்பாவிடம் அனுப்பிவிடு. நான் அவருடனேயே இனிமேல் இருந்துவிடுகிறேன்" என்றாள், பொங்கி வரும் துயரத்தை அடக்கிக்கொண்டு.
ஸ்வர்ணத்தின் கையில் இருப்பது கீதையானாலும், அவள் இதுவரையில் கண்ணனின் உபதேச மொழிகளில் மனத்தை லயிக்க விட்டிருந்தாலும், அவள் ஒரு சாதாரண அஞ்ஞானம் நிரம்பிய பெண்மணி என்பதை அவள் வேதனை படரும் முகம் தெள்ளெனக் காட்டியது. 'என்னை அப்பாவிடம் அனுப்பிவிடு' என்னும் வார்த்தைகள் அவள் மனத்தில் வேல் போல் பாய்ந்தன. அளவுக்கு மீறிய துயரத்துடன் ஸரஸ்வதியின் முகவாயைத் தன் கையால் பற்றிக்கொண்டு, "ஏன் அம்மா ஸரஸு?" என்று கேட்டாள் ஸ்வர்ணம். கையில் தாங்கி இருக்கும் ஸரஸ்வதியின் முகத்தில் பல வருஷங்களுக்கு முன்பு இறந்துபோன தன் மதனீயின் பரிதாபமான முகம் தோன்றி மறைவதுபோல் இருந்தது ஸ்வர்ணத்துக்கு.
தங்கப் பதுமைபோல் மாலையும், கழுத்து மாய் ஸரஸ்வதியின் தாய் நேற்றுதான் ஸ்வர்ணத்தின் தமையனைக் கைப்பிடித்து வீட்டில் நுழைந்தது போல் இருக்கிறது. அதற்குள்ளாக ஒரு. பெண்ணைப்பெற்று, திக்கில்லாமல் விட்டுவிட்டுப் போய் விட்டாள். அவளுக்குத்தான் ஸ்வர்ணத்தினிடம் எவ்வளவு அன்பு! நாத்தனாரும் மதனியும் கூடப்பிறந்த சகோதரிகள் மாதிரி இருந்தார்கள். அவள் மறைவுக்குப் பிறகுதான் ஸ்வர்ணத்தின் தமையன் மனம் வெறுத்து எங்கோ இருக்கிறான். பெற்ற பெண்ணைப்போல் வளர்த்த ஸரஸ்வதியைப் பிரிந்து ஸ்லர்ணத்தால் இருக்க முடியுமா?
ஸ்வர்ணம் ஆழ்ந்த யோசனைக்கு அப்புறம் பெருமூச்சு விட்டாள். பிறகு அங்கு நிலவி இருந்த அசாதாரணமான அமைதியைக் கலைத்துக் கனிவுடன், "உனக்கு இங்கே என்ன கஷ்டம் ஸரஸு?" என்று கேட்டாள் ஸரஸ்வதியைப் பார்த்து.
"கஷ்டம் ஒன்றுமில்லை அத்தை. எனக்கும் வெளி ஊர்களெல்லாம் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. கொஞ்ச காலம் அப்படித்தான் பார்த்துவிட்டு வருவோமே என்று தோன்றுகிறது" என்று வெகு சாமர்த்தியமாக மனக் கஷ்டத்தை மறைக்க முயன்றாள் ஸரஸ்வதி.
ஸ்வர்ணத்தின் இளகிய மனதால் அதற்குமேல் நிதானமாக இருக்க முடியவில்லை. கண்களில் கண்ணீர் பெருக ஸரஸ்வதியைச் சேர்த்து அணைத்துக்கொண்டு, ”அம்மா! திடீரென்று ஊருக்குப் போகிறேன் என்று சொல்லுகிறாயே, உன்னை அனுப்பி விட்டுத் தனியா இந்த வீட்டில் எப்படி இருப்பேன் சொல்?" என்றாள் ஸ்வர்ணம். ஸரஸ்வதி அத்தையின் கைகளை ஆசை யுடன் பற்றிக்கொண்டு, "நீயும் அத்தானும் அடிக்கடி என்னைக் கல்யாணம் செய்து கொண்டு குடியும் குடித்தனமுமாக இருக்க வேண்டும் என்று சொல்லுகிறீர்களே! கல்யாணம் ஆன பிறகு புக்ககம் போக வேண்டாமா அத்தை? இதற்கே இப்படிப் பிரமாதப்படுத்துகிறாயே நீ?" என்று கண்ணைச் சிமிட்டிக் குறும்புத்தனமாகப் பார்த்துக்கொண்டே அத்தையைக் கேட்டாள்.
"அசட்டுப் பெண்ணே! அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?" என்று திகைப்புடன் தன்னைப் பார்க்கும் அத்தையிடம், ஸரஸ்வதி ரகசியம் பேசும் குரலில், "என்னால் அத்தானுக்கும் சாவித்திரிக்கும் ஏதாவது சச்சரவு வந்துவிடும். நான் நன்றாகப் பாடுகிறேன் என்று சாவித்திரிக்குப் பொறாமை போலிருக்கிறது. அதனால் அவர்கள் ஒருவருக்கொருவர் மனஸ்தாபப் படுகிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் சந்தோஷமாக இல்லாவிட்டால் உன் மனம் நிம்மதியாக இருக்குமா அத்தை?" என்று கேட்டாள்.
ஸ்வர்ணத்திற்கு க்ஷணப்பொழுதில் எல்லாம் விளங்கிற்று. ஸரஸ்வதி அந்த வீட்டில் இருப்பதனால் சாவித்திரியும் ரகுபதியும் மனஸ்தாபப்படுகிறார்களா? இதென்ன விந்தை? கபடமற்ற இந்தப் பேதைப் பெண்ணைப் பார்த்துச் சாவித்திரிக்கு இரக்கம் தோன்றாமல் பொறாமை ஏற்பட்டிருப்பதும் ஆச்சர்யந்தான். ஸ்வர்ணம் கண்ணீர் பெருகச் செயலிழந்து உட்கார்ந்திருந்தாள். அத்தையின் தோளில் முகத்தைக் கவிழ்த்துக் கொண்டு ஸரஸ்வதி கண்ணீர் உகுத்தாள்.
வானவெளியில் மனம் போனபடி ஆடிப் பாடிப் பறந்து செல்லும் வானம்பாடியைப் பிடித்து யாரோ கூட்டில் அடைத்துச் செய்யுளும், இலக்கணமும் கற்றுக்கொடுக்கும் கட்டுப்பாடான நிலையை அடைந்து ஸரஸ்வதியின் மனம் வேதனையுற்றது. ஒருவருக்காக அவள் தன் சங்கீதக் கலையை அப்யாசிக்காமல் விட்டு விடவும் மனம் ஒப்பவில்லை.
--------------
11. வீணையும் கண்ணீரும்
அடுத்த நாள் வெள்ளிக்கிழமை. பூஜை அறையில் வழக்கம் போல் சுடர்விளக்கு ஏற்றிய பிறகு ஸரஸ்வதி வீணை வாசிக்க உட்கார்ந்தாள். இரண்டு மாதங்களுக்கு மேலாகத் தொடாமல் கிடந்த வீணை 'டிரிங்' கென்ற நாதத்துடன் ரீங்காரம் செய்ய ஆரம்பித்தது. அத்துடன் ஸ்வர்ணம் அன்று காலையில் ஸரஸ்வதியைப் பார்த்து, "அம்மா ஸரஸு! சங்கீதம் என்பது சாமான்ய வித்தையல்ல. தெய்வ கடாக்ஷத்தால் சித்திக்கும் அபூர்வக் கலை அது. அத்தெய்வீகக் கலையை ஒருத்தருக்காக உதாசீனம் செய்வது நல்லதில்லை. நீ வீணையைத் தொட்டு மாதக்கணக்கில் ஆகிறதே. சாயங்காலம் விளக்கேற்றிய பிறகு இரண்டு பாட்டாவது வாசி கேட்கலாம்" என்று கூறினாள்.
'வாஸ்தவந்தாள்! சாவித்திரிக்குப் பிடிக்காவிட்டால் அவளுக்காக நமக்குத் தெரிந்த கலையை உதாசீனம் செய்வானேன்?' என்று எண்ணமிட்டாள் ஸரஸ்வதி. ஆகவே, அன்று மாலை தூசுபடிந்து கிடந்த வீணையைத் துடைத்து எடுத்து வைத்துக்கொண்டு ஸ்ருதி சேர்க்க ஆரம்பித்தாள் ஸரஸ்வதி. சாவித்திரியும், ஸ்வர்ணமும் அருகில் உட்கார்ந்திருந்தார்கள். படங்களுக்குப் போட்டிருந்த மல்லிகை மாலைகளின் மணமும், ஊதுவர்த்தியின் சுகந்தமும் சேர்ந்து அந்த இடத்தில் ஒரு தெய்வீகக் களையை ஏற்படுத்தின. நீர் ஊற்றுப்போல் கிளம்பும் நாத வெள்ளம் எல்லோரையும் மெய்மறக்கச் செய்தது. காம்போதி ராகத்தை விஸ்தாரமாக ஆலாபனம் செய்து தானம் வாசித்த பிறகு, 'ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே' என்கிற கிருதியை ஸரஸ்வதி வீணையில் வாசித்து, மதுரமான குரலில் பாடினாள். இதுவரையில் அவள் பாட்டிலேயே லயித்துப்போய் உட்கார்ந்திருந்த ஸ்வர்ணம், "ஸரஸு! உன் அத்தான் இன்று இந்தப் பாட்டைக் கேட்க இங்கே இல்லையே? நேற்று கூட, 'ஏனம்மா! ஸரஸ்வதி இப்பொழுதெல்லாம் பாடுகிறதேயில்லை' என்று என்னிடம் கேட்டான்" என்றாள்.
புன்னகை ததும்பும் முகத்துடன் ஸரஸ்வதி பாட்டை முடித்துவிட்டு வேறு நீர்த்தனம் தன்றை ஆரம்பித்தாள். ஸ்வர்ணம் ஆசையுடன் நாட்டுப்பெண்ணின் பக்கம் திரும்பி, ”சாவித்திரி! உன்னைப் பாடர் சொல்லிக் கேட்க வேண்டும் என்று எனக்கு ரொம்ப நாட்களாக எண்ணம். எல்லோரும் சங்கீதத்தை முறைப்படி கற்காவிட்டாலும், சாதாரணமாக நாலு பாட்டுகள் பாடத் தெரிந்து கொண்டே இருப்பார்கள். எனக்குக்கூடப் பாடத் தெரியும். மார்கழி மாதத்தில் விடியற்காலம் ஸ்நானம் செய்து விட்டு, 'மாயனை மன்னு வட மதுரை மைந்தனை' என்று எதையாவது பாடிக்கொண்டே வீட்டு வேலைகள் செய்வேன். புளியையும் உப்பையும் போட்டுச் சமைத்துச் சமைத்து அலுத்துப்போன மனசுக்கு எதையாவது பாடிக்கொண்டே வேலை செய்தால் கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறமாதிரி தோன்றும்.
” ஆராரோ ஆரரிரோ" என்று தாலாட்டுப் பாடுகிறோம். ராகமும், தாளமும் தெரிந்துவைத்துக்கொண்டா பாடுகிறோம்?. குழந்தை அந்தப் பாட்டைக் கேட்டுத் தூங்கவில்லையா? ஸரஸு பாடி முடித்ததும் உனக்குத் தெரிந்தது ஏதாவது பாடு பார்க்கலாம். ரகுபதியும் ஒரு சங்கீதப் பைத்தியம்!" என்றாள்.
சாவித்திரியின் முகத்தில் சொல்லொணாத துக்கமும், பொறாமையும் நிரம்பியிருந்தன. சாவித்திரி தன் பிள்ளையின் மனமறிந்து நடந்து கொள்ள வேண்டும் என்று ஸ்வர்ணம் விரும்பியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஸ்வர்ணத்துக்குச் சாவித்திரி பதில் எதுவும் கூறாமல் தலையைக் குனிந்து தரையில் விரலால் கீறிக்கொண்டிருந்தாள்.
இதற்குள்ளாக வெளியே சென்றிருந்த ரகுபதி அழகிய வீணையுடன் ஸரஸ்வதி பாடும் இடத்துக்கு வந்து வீணையைப் படத்தருகில் வைத்துவிட்டு ஸரஸ்வதியின் எதிரில் உட்கார்ந்தான், சிறிது நேரம் அங்கு ஒருவரும் பேசவில்லை. பாட்டு முடிந்ததும் ஸ்வர்ணம் ரகுபதியைப் பார்த்து, "ரகு! ஸரஸு ஏன் பாடுகிறதில்லை என்று கேட்டாயே? அவள் பாடும்போது நீ இல்லையே என்று நினைத்துக் கொண்டேன். சமயத்தில் வந்துவிட்டாய்" என்று அன்புடன் கூறினாள்.
ஸரஸ்வதி தன்னுடைய வீணையை உறைக்குள் போட்டு மூடிவிட்டுப் புது வீணையை ஸ்ருதி சேர்ப்பதற்காக அதைக் கையில் எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். தனக்கும், அந்த வீட்டில் நடக்கும் விஷயங்களுக்கும். எவ்வித சம்பந்தமும் இல்லை போல் பாவித்திருக்கும் சாவித்திரி, வீணையைப் பார்த்துக் கொண்டிருந்த ஸரஸ்வதியின் பக்கம் திரும்பி அவளை வெட்டுவது போல் ஒரு பார்வை பார்த்துவிட்டு மறுபடியும் நிலத்தில் கோலமிட ஆரம்பித்தாள். யாராவது ஒருவர். 'இந்த வீணை எதற்கு வாங்கினாய்?" என்று கேட்பார்கள் என்று ரகுபதி எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தான். அந்த வீணை எதற்காக, யாருக்காக வாங்கப்பட்டது என்கிறதை அவனாகவே சொல்லித்தான் ஆகவேண்டும் என்கிற நிலைமை ஏற்பட்டவுடன் ரகுபதி தன் தாயைப் பார்த்து, " அம்மா! இன்று நல்ல நாளாக இருப்பதால் டவுனுக்குப்போய் இந்த வீணையை வாங்கி வந்தேன், சாவித்திரிக்கு இருக்கட்டு மென்று. வெள்ளிக்-கிழமையாகவும் இருக்கிறது. இன்றே பாடமும் ஆரம்பிக்கலாம். என்ன ஸரஸு?" என்று ஸரஸ்வதியைப் பார்த்துக் கேட்டுவிட்டுத் தன் மனைவியை நோக்கிப் புன்னகை புரிந்தான்.
சாவித்திரி கோபம் பொங்கும் முகத்துடன் கணவனைத் ’துரு துரு' வென்று விழித்துப் பார்த்துவிட்டு அசட்டையுடன் முகத்தைத் திருப்பிக்கொண்டு பதில் எதுவும் கூறாமல் உட்கார்ந்திருந்தாள். கையில் வைத்திருந்த வீணையைக் கீழே வைத்து விட்டு ஸரஸ்வதி நிதானமாக, "இன்றைக்கே என்ன அவசரம் அத்தான்? ஆகட்டுமே; இன்னொரு நாள் ஆரம்பித்தால் போகிறது" என்றாள்.
"அவசரம் ஒன்றுமில்லை. நாள் நன்றாக அமைந்திருக்கிறது. நான் கேட்பதற்கு முன்பே கடைக்காரர்களும், 'புதுசாக வீணை தஞ்சாவூரிலிருந்து வந்திருக்கிறது, ஸார்; வேண்டுமானால் எடுத்துப் போங்கள்' என்று கையில் கொடுத்தார்கள்" என்று கூறிவிட்டுத் தன் வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுக்காமல் உட்கார்ந்திருக்கும் மனைவியின் முகத்தை மறுபடியும் பார்த்தான் ரகுபதி.
ஏதோ அலுவலாகச் சற்றுமுன் சமையலறைக்குச் சென்று காய்ச்சிய பாலை இறைவனுக்குப் படைப்பதற்காக எடுத்து வந்த ஸ்வர்ணம், மகன் கூறுவதைக் கேட்டுவிட்டு, "அவன் இஷ்டப்படி தான் இன்றைக்குப் பாட்டு ஆரம்பியேன். இதற்குப்போய் இவ்வளவு தர்க்கம் வேண்டியதில்லையே! யாராவது ஒருத்தர் தாழ்ந்து போய்விட்டால் ஆயிற்று" என்று கூறிவிட்டுப் பாலைக் கீழே வைத்துவிட்டு உட்கார்ந்தாள்.
இதுவரையில் பேசாமல் ஏதோ முழுகிவிட்டது போல் உட்கார்ந்திருந்த சாவித்திரி சரேலென்று எழுந்து, "எனக்கு இதிலெல்லாம் அவ்வளவு பிடித்தமில்லை என்று முன்னாடியே சொல்லி இருக்கிறேனே. வெறுமனே இதென்ன வீண் தொந்தரவு?" என்று கூறி அறையைவிட்டுப் போக எத்தனித் தா…..
ஸ்வர்ணத்துக்கும் கோபம் வந்தது. நாட்டுப்பெண்ணைப் பார்த்து அதட்டும் குரலில், "நீ செய்கிறதும், பேசுகிறதும் நன்றாகவே இல்லை, சாவித்திரி. அவன் இஷ்டப்படி தான் கேட்டு வையேன், இதிலே என்ன குறைந்துவிடப்போகிறாய்? அவன் கிழக்கே பார்க்கச் சொன்னால் நீ மேற்கே பார்த்துக் கொண்டு நிற்கிறாயே, சுத்தமாக நன்றாக இல்லையே நீ செய்கிறது!" என்றாள் ஸ்வர்ணம்.
"ஆமாம்... . நன்றாகத்தான் இல்லை. அதுவும் என்னுடைய இஷ்டம்" என்று வெடுக்கென்று கூறிவிட்டு 'திடுதிடு' வென்று படுத்துக்கொண்டு கண்ணீர் பெருக்கினாள் சாவித்திரி.
----------------------
12. ரகுபதியின் கோபம்
மாடிக்குச் செல்லும் மனைவியைச் சற்றும் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்த ரகுபதி, கோபத்துடன் மனைவியை "சாவித்திரி! சாவித்திரி!" என்று இரைந்து கூப்பிட்டான். ஸரஸ்வதி பயந்து போய் முகம் வெளுக்க ரகுபதியின் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றாள். அவன் கூப்பிட்ட தற்கு மாடியிலிருந்து பதில் ஒன்றும் வராமற்போகவே திடுதிடு வென்று மாடிப்படிகளில் ஏறினான் ரகுபதி. அவன் பின்னால் சென்ற ஸரஸ்வதியும், ஸ்வர்ணமும் சாவித்திரியைப் பார்த்து விட்டு ஒருகணம் திகைத்து நின்றார்கள். பிறகு ஸ்வர்ணம் பொங்கி எழும் கோபத்தை அடக்கிக்கொண்டு, "நன்றாக இருக்கிறது சாவித்திரி! வெள்ளிக்கிழமையும் அதுவுமாக!" என்றாள்.
"சாவித்திரி! இதென்னம்மா இப்படி அழுகிறாய்? எழுந்திரு" என்று அவள் கரங்களை அன்புடன் பற்றினாள் ஸரஸ்வதி.
சாவித்திரி கண்ணீர் வழியும் முகத்துடன் கணவனைத் திரும்பிப் பார்த்தாள். பிறகு ஆத்திரம் தொனிக்க, "என் பிறந்த வீட்டில் கூட என்னை யாரும் வற்புறுத்த மாட்டார்கள். இங்கே . ..." என்று மேலும் கூறாமல் தேம்பித் தேம்பி அழுதாள்.
ரகுபதிக்குச் சற்று தணிந்திருந்த கோபம் பீறிட்டு எழுந்தது.
"இங்கே உன்னை வாணலியில் போட்டு வதக்கி, தாலத்தில் எடுத்து வைக்கிறார்கள்! நீ பிறந்த வீட்டில் சுதந்தரமாக வளர்ந்த லக்ஷணம் தான் இப்போது தெரிகிறதே!" என்று கேலியும், ஆத்திரமும் கலந்த குரலில் கூறினான் ரகுபதி.
"என்ன தெரிகிறதாம்?" என்று கணவனைப் பதில் கேள்வி கேட்டு மடக்கிவிட்டதாக நினைத்து, நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டாள் சாவித்திரி.
" உன் லக்ஷணம்! உன் பிடிவாதம்! வேறு என்ன கிடக்கிறது தெரிகிறதற்கு?" என்று ஆவேசத்துடன் கூறிவிட்டுப் பொறுமையை இழந்தவனாக ரகுபதி கீழே உட்கார்ந்திருந்த மனைவியின் கன்னத்தில் பரீரென்று அறைந்தான். அடுத்த விநாடி அவன் தன் தவறை உணர்ந்து கொண்டான். இது வரையில், பெற்ற தாயின் மனம் நோகும்படி ரகுபதி பேசி அறியமாட்டான். உடன் பிறந்தவளைப்போல் அவனுடன் ஒன்றாக வளர்ந்துவரும் ஸரஸ்வதியின் கண்களில் கண்ணீரைக் கண்டால் அவன் நெஞ்சு உருகிவிடும். பெண்களை மலரைப்போல் மென்மையாக நடத்தவேண்டும் என்னும் கொள்கையை உணர்ந்தவன். தன்னுடைய அருமை மனைவியைத் தொட்டு அடிப்பதற்கு மனம் வருமா? கை தீண்டி அடிக்கும்படியான நீச மனோபாவம் தனக்கு
ஏன் ஏற்பட்ட்து என்பதை ரகுபதியால் உணர முடியவில்லை.
ஸ்தம்பித்து உணர்விழந்து நிற்கும் மகனை ஸ்வர்ணம் கண்களில் நீர் பொங்க ஏறிட்டுப் பார்த்து. "சீ! சீ! உனக்குப் புத்தி கெட்டுவிட்டதாடா ரகு? ஊரார் பெண்ணை அடிக்க உனக்கு என்னடா அப்படிப் பாத்தியம் ஏற்பட்டுவிட்டது? ஊரிலே நாலுபேர் என்ன சொல்லமாட்டார்கள்? புருஷன் - மனைவி தகராறு என்று உலகம் ஒத்துக்கொள்ளாது அப்பா. நடுவில் நான் ஒருத்தி இருக்கிறேன் பாரு" என்றாள். அவள் கண்கள் கண்ணீரால் நனைந்திருந்தன.
ஸரஸ்வதி ரகுபதியைத் தன் அழகிய விழிகளால் சுட்டு விடுவதுபோல் விழித்துப் பார்த்தாள். மானைப்போல் மருண்டு பார்க்கும் பார்வை ஒரு விநாடி அனல் பொறிகளை உதிர்த்தது.
"ரொம்ப அழகாக இருக்கிறது அத்தான்! உன்னுடைய போக்கு கொஞ்சங்கூட நன்றாக இல்லை. என்னாலேதானே இந்தத் தொந்தரவுகள் எல்லாம் ஏற்படுகின்றன? நான் எங்கேயாவது தொலைந்துபோகிறேன்" என்று படபட வென்று கூறிவிட்டு, கன்னங்களில் வழியும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.
ஸரஸ்வதி கூறியதைக் கேட்டதும், சாவித்திரி 'விசுக்' கென்று எழுந்து ”எனக்காக இங்கிருந்து யாரும் போக வேண்டாம். எனக்கும் என் மனுஷாளைப் பார்க்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. நானே புறப்பட்டுப்போகிறேன். ஆமாம்...." என்று கூறி, பீரோவிலிருந்து புடைவைகளை எடுத்துப் பெட்டியில் வைக்க ஆரம்பித்தாள்.
தலையில் அடிபட்ட நாகம்போல் ரகுபதியின் கோபம் மறு படியும் 'புஸ்' - என்று கிளம்பியது. அவன் அலட்சியத்துடன் அவளைப் பார்த்து, "பேஷாய்ப் போயேண்டி அம்மா: நீ இல்லாமல் இந்த உலகம் அஸ்தமித்துவிடப்போகிறதா என்ன?
ஹும்.. ஹும் . . என்னவோ மிரட்டுகிறாயே?" என்றான்.
"நன்றாக இருக்கிறதடா நீ அவளைப் போகச் சொல்லுகிறதும், அவள் புறப்படுகிறதும்! பிறந்தகத்திலிருந்து வந்து நான்கு மாசங்கள் கூட முழுசாக ஆகவில்லை. அம்மா, அப்பாவைப் பார்க்க வேண்டுமானால், சண்டை கூச்சலில்லாமல் சௌஜன்யமாகப் போகிறது தான் அழகு" என்று வேதனை தொனிக்கும் குரலில் கூறினாள் ஸ்வர்ணம்.
ரகுபதி கோபத்துடன் தாயை உறுத்துப் பார்த்துவிட்டு, மாடியிலிருந்து கீழே இறங்கிச் சென்றான். சாவித்திரி தன்னை எவ்வளவுதான் சுட்டுப் பேசினாலும், ஸரஸ்வதியின் கபடமற்ற மனம் அதைப் பாராட்டாமல், அவளை எப்படியாவது ஊருக்குப் போகவிடாமல் தடுக்கவேண்டும் என்று ஆசைப்பட்டது. ஆகவே அவள் அத்தை ஸ்வர்ணம் கீழே சென்றபின்பு உரிமையுடன் சாவித்திரியின் பக்கத்தில் உட்கார்ந்து அவள் தோள் மீது தன் கையை வைத்து, "சாவித்திரி! அசட்டுத்தனமாக இப்படி யெல்லாம் செய்யாதே அம்மா. அத்தானின் மனசு தங்கமானது. தங்கத்தை உருக்கி, எப்படி இழுத்தாலும் வளைவது மாதிரி அவன் மனசை நீ அறிந்து, அதன்படி நடந்து கொண்டால் நன்றாக இருக்கும். அத்தையும் பரம சாது" என்றாள்.
கணவனின் அடியால் 'விறு விறு' என்று வலிக்கும் தன் கன்னத்தின் எரிச்சலுடன், ஸரஸ்வதியின் அன்பு மொழிகள் அவளுக்கு ஆறுதலைத் தராமல், மேலும் எரிச்சலை மூட்டின.
"எல்லோருடைய குணமுந்தான் தெரிந்து விட்டதே! இனி மேல் தெரிவதற்கு என்ன இருக்கிறது? யார் வேண்டுமானாலும் தங்கமாக இருக்கட்டும், வைரமாக வேண்டுமானாலும் இருக்கட்டும்! 'எனக்கு அதெல்லாம் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.' 'நான் போகத்தான் வேண்டும்" என்று சாவித்திரி அழுத்தந்திருத்தமாகக் கூறிவிட்டுத் துணிமணிகளை அடுக்கி வைத்துக்கொண்டிருந்தாள். ஸரஸ்வதி முகவாட்டத்துடன் அங்கிருந்து போய்விட்டாள்.
அன்றிரவு படுக்கை அறைக்குள் வந்த - கணவனிடம் வேறெதுவும் பேசாமல், சாவித்திரி, "நாளை காலை வண்டிக்கு என்னை எங்கள் ஊருக்கு ரெயில் ஏற்றிவிடுகிறீர்களா?" என்று கேட்டாள். ரகுபதியின் கோபம் அதற்குள் முற்றிலும் தணிந்துவிட்டது. அவன் புன் சிரிப்புடன் அவள் கைகளாப் பற்றிக்கொண்டு. ”சாவித்திரி! அடித்துவிட்டேன் என்று கோபமா உனக்கு? அடிக்கிற கை, அணைப்பதும் உண்டு என்பதை நீ தெரிந்து கொள்ளவில்லையே! உன்னை ஊருக்கு அனுப்பிவடடு. நான் தனியாக இங்கே இருக்கமுடியுமா சொல்?" என்றான்.
சாவித்திரி அவன் பிடியிலிருந்து தன் கைகளை உதறி விடுவித்துக் கொண்டாள். பின்பு அவனை ரோஷத்துடன் நிமிர்ந்து பார்த்து, "உங்களால் ரெயில் ஏற்றிவிடமுடியுமா, முடியாதா என்பதைச் சொல்லுங்கள்! வேறு எந்த ராமாயணமும் எனக்கு வேண்டாம்!" என்று கூறிவிட்டு வழக்கம்போல் போர்வையை உதறிப் போர்த்திக்கொண்டு படுத்துவிட்டாள்.
அதே சமயத்தில் சமையலறையில், சாப்பாட்டுக்கு அப்புறம் ஸ்வர்ணமும், ஸரஸ்வதியும் மெதுவான குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள்.
"என்னம்மா ஸரஸு! இப்படிப்பட்ட சண்டியாக வந்து வாய்த்திருக்கிறதே" என்று ஸ்வர்ணம் கவலையுடன் கேட்டாள் ஸரஸ்வதியை.
ஸரஸ்வதியின் மனதில் வேதனை நிரம்பியிருந்தது. முகத்தை ஒரு தினுசாக அசைத்து அவள், "இந்த அத்தானிடமும் தவறு இருக்கிறது அத்தை. அவள் இஷ்டப்படி இருந்துவிட்டுப் போகட்டுமே!" என்றாள்.
ஸ்வர்ணம் பழைய நாளைய மனுஷி. புருஷன் சொல்லி மனைவி கேட்டு பக்தியுடன் நடந்து கொள்ளவேண்டும் என்கிற பண்பாட்டில் ஊறிப்போனவள். அத்துடன் தன் செல்லப் பிள்ளையின் மனம் நோகும்படி எதிர்த்துப் பேசிய சாவித்திரியிடம்
அவளுக்கு அடங்காத கோபம் ஏற்பட்டிருந்தது.
"நாளைக்கு. ஊரில் போய் இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி, நமக்குக் கெட்ட பெயர் வாங்கிவைக்குமோ என்னவோ இந்தப் பெண்! இப்படி ஒரு பிடிவாதமா ஒரு பெண்ணுக்கு!" என்று அதிசயப்பட்டாள் ஸ்வர்ணம்.
"என்னவோ போ அத்தை! எனக்குத் தெரிந்ததை நான் சொல்லுகிறேன். இதையெல்லாம் பார்த்தால் எனக்குப் பயமாக இருக்கிறது" என்று பயந்த மனத்துடன் கூறினாள் ஸரஸ்வதி.
--------------
13. பிறந்த வீட்டுக்கு
அடுத்த நாள் அதிகாலையில் சாவித்திரியை ரெயில் எற்றுவதற்காக அரை மனத்துடன் ரகுபதி அவளுடன் வண்டியில் ஏறி உட்கார்ந்தான். பெரிய நகரமாக இருந்தால் ஒருவர் வீட்டில் நடக்கும் விஷயங்களை இன்னொருவர் அவ்வளவாகக் கவனிக்கமாட்டார்கள். அந்த ஊர் சற்றுக் கிராமாந்தரமாக இருக்கவே அண்டை அயலில் இருக்கும் பெண்கள் வாசலில் கோலமிட வந்தபோது அதிசயத்துடன் கோலத்தைப் பாதியில் நிறுத்திவிட்டு ஸ்வர்ணத்தின் வீட்டு வாசலில் வண்டி நிற்பதைக் கவனித்தார்கள். சாவித்திரியும் ரகுபதியும் வண்டி ஏறுவதற்கு முன்பு கசமசவென்று ஏதோ பேசப்படுவதையும் கேட்டார்கள்.
திடுமென்று நாட்டுப்பெண் ஊருக்குப் போவதை ஸ்வர்ணம் துளிக்கூட விரும்பவில்லை. "எங்கள் நாளில் இப்படியா இருந்தோம்? புருஷன் ஏதோ கோபித்துக்கொண்டு அடிக்கிறதும் உண்டு. இரண்டு நாள் புருஷனோடு பேசாமல் இருப்போம். அப்புறம் சமாதானம் ஆகிப் பேசுகிறதில் எவ்வளவு இன்பம் என்பதைச் சொல்லவே முடியாது. அதையெல்லாம் பாராட்டலாமா?" என்று சொல்லி மாய்ந்து போனாள்.
"புருஷன், மனைவியை அடிக்கிறது தவறு அத்தை ! உனக்கு, இந்தக் காலத்து விஷயமே தெரியவில்லை. நீ என்னவோ அந்த நாளைப்பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறாயே!" என்று ஸரஸ்வதி கோபித்துக்கொண்டாள்.
கணவனும், மனைவியும் ரெயில் நிலையத்தை அடையும் வரையில் ஒருவரோடொருவர் பேசவில்லை. ரெயில் நிலையத்தினுள் அதிகக் கூட்டமில்லாமல் இருக்கவே ரகுபதி சாவித்திரியின் அருகில் நெருங்கி, 'இப்பொழுதாவது கோபம் தணிந்து விட்டதா? திரும்பி வீட்டுக்குப் போய்விடலாமா? இல்லை, டிக்கெட் வாங்கித்தான் வர வேண்டுமா?" என்று குறும்புச் சிரிப்புடன் கேட்டான்.
"இது என்ன விளையாட்டு? அழுகிற குழந்தைக்கு மிட்டாய் வாங்கித்தருகிற மாதிரி குழைந்து குழைந்து என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது? ரெயில் வந்துவிட்டால் நம் தர்க்கத்தை ரத்துக் கொண்டு நிற்காது! பேசாமல் போய் டிக்கெட் வாங்கி வாருங்கள்" என்று சாவித்திரி கோபத்துடன் பொரித்து தள்ளினாள்.
ரகுபதியின் மனத்தை ஊசியால் 'நறுக்'கென்று குத்துவது போல் அவள் வார்த்தைகள் தைத்தன. அவன் வேறெதுவும் பேசாமல் டிக்கெட்டை வாங்கி வந்து அவளிடம் கொடுப்பதற்கும் ரெயில் வருவதற்கும் சரியாக இருந்தது. கணவன், மனைவி என்கிற பந்தம் எவ்வளவு நெருங்கியதாக இருந்தாலும் சாவித்திரிக்கும் ரகுபதிக்கும் ஏற்பட்டிருந்த பிளவு அசாதாரண மாகத்தான் இருந்தது. ஜன்னலின் மீது கையை ஊன்றி முகத்தைச் சாய்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும் சாவித்திரியின் வெகு சமீபத்தில் பெட்டிக்கு வெளியேதான் ரகுபதி நின்றிருந்தான். இருந்தாலும் அவர்கள் இருவரின் மனங்களும் வெவ்வேறு துருவங்களைப் பார்த்துக்கொண்டிருந்தன. ரெயிலின் 'கார்டு' தன் ஊதலை எடுத்து ஊதிக் கொடியைப் பறக்கவிட்டு ஆட்டினார். திக்கித் திணறி ரகுபதி, "ஊருக்குப் போனதும் கடிதம் போடு" என்றான். சாவித்திரி மௌனமாகத் தலையை அசைத்தாள்.
மனைவியை ரெயில் ஏற்றிவிட்டுக் கால் நடையாகவே திரும்பி பாகுபதி வீட்டுக்கு வரும்போது பலமுறை அவன் மனம் அவனையும் அறியாமல் சாவித்திரியையும், ஸரஸ்வதியையும் ஒப்பிட்டுப் பார்த்தது. இப்பொழுது நடந்தது மாதிரி இருந்தது அவனுக்கு அந்தச் சம்பவம். ஒரு நாள் ஸரஸ்வதியை - அவ ளுக்குப் பன்னிரண்டு வயசாக இருக்கும் போது - ஏதோ ஒரு பாட்டைப் பாடச் சொல்லி வற்புறுத்தினான் ரகுபதி. ஓடி விளையாடும் பருவத்தில் மணிக்கணக்காக உட்கார்ந்துப் பாடிப் பாடி அலுத்துவிட்டது அவளுக்கு. ஆகவே சற்றுக் கோபத் துடன், "போ அத்தான்! உனக்கு இது ஒரு பைத்தியம்! என்னாலே இனிமேல் பாட முடியாது போ" என்று கூறி எழுந்து சென்ற ஸரஸ்வதியின் பறக்கும் மேலாக்கைப்பற்றி ரகுபதி' இழுத்தபோது அது கிழிந்து போய்விட்டது.
"புத்தப் புதுசையெல்லாம் கிழித்து விடுகிறாயே அத்தான்!" என்று இரைந்தாள் ஸரஸ்வதி.
"கத்தாதே இப்படி ராக்ஷசி மாதிரி!" என்று அவள் கொவ்வைக் கன்னங்களை அழுத்திக் கிள்ளிவிட்டான் ரகுபதி. உதடுகள் துடிக்க அவனை நீர் மல்கும் விழிகளால் பார்த்துவிட்டு உள்ளே ஓடிவிட்டாள் ஸரஸ்வதி:
"ஐயோ பாவம்! தாயில்லாக் குழந்தை! முரட்டுத்தனமாகக் கிள்ளிவிட்டோமே. பார்த்து ஆறுதல் கூறவேண்டும்" என்று அவளைத் தேடி. ரகுபதி சென்ற போது அவளாகவே வலுவில் எதிரில் வந்து. "அத்தான்! காப்பி சாப்பிடாமல் மறந்து போய் விட்டாயே இன்றைக்கு. ஆறிப்போகிறதே" என்று சுடச்சுட காபியை எடுத்துவந்து அவன் கையில் கொடுத்தாள். ரோஜாக் கன்னம் இன்னும் சிவந்துதான் இருந்தது. "கிள்ளி விட்டேனே. வலிக்கிறதா?" என்று கேட்க அவனுக்கு வெட்கம்.
" நீதான் கிள்ளினாயே!" என்று மறுபடியும் அந்த சம்பவத்தை நினைவு படுத்த அவளும் வெட்கினாள்.
நேற்று ரகுபதி மனைவியின் கரங்களைப் பிடித்துக்கொண்டு, "அடித்து விட்டேனே" என்று மனம் வருந்தியபோது சாவித்திரி அதைப் பாராட்டவில்லை அல்லவா? ' அடிப்பதை அடித்தாயிற்று. தோரணையில் உதாசீனமாகத்தானே பேசினாள்?
ரகுபதி சாம்பிய மனத்துடன் வீட்டை அடைந்தான். யந்திரம்போல ஒருவருடனும் பேசாமல் தன் வேலைகளைக் கவனித்துக்கொண்டான். ஸ்வர்ணமும், ஸரஸ்வதியும் அவனுடன் ஒன்றுமே பேசவில்லை. 'அவனாகவே ஏதாவது பேசட்டும்’ என்று ஸ்வர்ணம் நினைத்தாள். அத்தானிடம் ஏதாவது வலுவில் பேசி அவன் மனப் புண்ணைக் கிளறக்கூடாது என்று ஸரஸ்வதி மௌனமாகவே இருந்துவிட்டாள். இந்த அசாதாரணமான சாந்தம் அவன் நெஞ்சைப்பிடித்து உலுக்கியது. ஏன் ஒருவரும் தன்னுடன் பேசவில்லை - என்று அவனுக்கு வியப்பாகவும் இருந்தது. ஒரு வேளை சாவித்திரியை அடித்தது ஒரு மாபெரும் குற்றம் என்று எல்லோரும் கருதுகிறார்களோ? குற்றமாக இருந்தாலும், பிறகு அவளை எவ்வளவு முறை சமாதானப்படுத்த முயன்றான்? ’மனைவியின் கைகளைப் பிடித்துக் கொண்டு நான் கெஞ்சினேன்' என்று ஒருவனுக்கு பெற்ற தாயிடம் மட்டும் சொல்லிக்கொள்ள லஜ்ஜையாக இராதா என்ன? உடன் பிறந்தவளைப்போல் ஸரஸ்வதி பழகினாலும் இந்த விஷயங்களையெல்லாம் அவளிடம் வாய்விட்டுச் சொல்ல முடியுமா? ' ஒருவனுக்கு ஏற்படும் சில உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொள்வதற்கு 'அந்த ஒருத்தி' தான் தேவையாகவிருக்கிறது.
தாயாக இருந்தாலும், உடன் பிறப்பாக இருந்தாலும், தோழனாக இருந்தாலும் மற்றவர்களால் பகிர்ந்து கொள்ள முடியாத சில உணர்ச்சிகளை சகதர்மிணி ஒருத்தியால்தான் வாழ்க்கையில் பகிர்ந்துகொள்ள முடியும். இதையொட்டித்தான் பெரியவர்கள் மனைவியைச் 'சகதர்மிணி' என்று பெயரிட்டு அழைக்கிறார்களோ' என்று நினைத்து ரகுபதி மனம் வருந்தினான்.
இப்படியே நாலைந்து தினங்கள் ஓடிவிட்டன. பிள்ளையின் இந்த அசாதாரணமான மௌனத்தைப் பொறுக்க முடியாமல் ஸ்வர்ணம் ரகுபதியைப் பார்த்து. "ஏண்டா! சாவித்திரி எப்பொழுது வருகிறேன் என்று சொன்னாளடா? கேட்டாயோ அவளை?" என்று கவலையுடன் விசாரித்தாள். இந்த நாலைந்து தினங்களுக்குள்ளாகவே ஊரில், சாவித்திரி திடீரென்று பிறந்தகம் சென்றதைப்பற்றியே பேச்சாக இருந்தது.
"நேற்றுக்கூட ஸ்வர்ணத்தைக் கோவிலில் பார்த்தேன். நாட்டுப்பெண் ஊருக்குப் போகிறதைப்பற்றி ஒன்றுமே சொல்ல வில்லையே" என்று அவயம் ஆச்சரியப்பட்டாள்.
"வர வர ஸ்வர்ணம் முன்னைப்போல் இல்லையடி. எந்த விஷயத்தையும் பூட்டிப் பூட்டி வைத்துக்கொள்கிறாளே பத்திரமாக!" என்று பாகீரதி அம்மாமி முகத்தைத் தோளில் இடித்துக் கொண்டு அவயம் கூறியதை அப்படியே ஆமோதித்தாள். இப்படி கோவிலிலும், குளக்கரையிலும், நடுக்கூடங்களிலும் ஸ்திரி ரத்தினங்கள் பேசுவதை அரை குறையாகக் கேட்ட ஸ்வர்ணம், மனக்கஷ்டம் தாங்காமல் பிள்ளையை மேற்கூறியவிதம் விசாரித்தாள்.
"எப்படிப் போனாளோ அப்படி வந்து சேருகிறாள். இங்கே யாராவது அவளைப் போகச்சொன்னோமா என்ன?” என்று தாயின் மீது சீறிவிழுந்தான் ரகுபதி.
"அவள் தான் முரடாக இருக்கிறாள் என்றால் நீயாவது தணிந்து போகமாட்டாயா அப்பா? ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மூலையைப் பார்த்துக்கொண்டு நின்றால் நன்றாக இருக்குமா?" என்றாள் ஸ்வர்ணம்.
அதற்குப் பதில் எதுவும் கூறாமல் எழுந்து சென்ற ரகுபதியை மாடிப்படிகளில் சந்தித்த ஸரஸ்வதி கனிவுடன், "அத்தான்! சாவித்திரியிடமிருந்து ஊர்போய்ச் சேர்ந்ததைப்பற்றி கடிதம் ஏதாவது வந்ததா?" என்று கேட்டாள்.
"வெறுமனே அதைப்பற்றிப் பேசிப் பேசி என் மனத்தை என் எல்லோரும் நோக அடிக்கிறீர்கள், ஸரஸ்" என்று பரிதாப மாகக் கூறிவிட்டு மேலே விரைந்து சென்றுவிட்டான் ரகுபதி.
’கல்யாணமாகி வாழ்க்கை நடத்த ஆரம்பித்த இவ்வளவு குறுகிய காலத்துக்குள் இவ்வளவு மனக் கசப்பும், வெறுப்பும் என் அத்தானுக்கு ஏற்பட்டுவிட்டதே' என்று நினைத்து வரஸ்வதி மனம் வருந்தினாள். ஒருவேளை அது அவளால் ஏற்பட்டதோ என்பதை நினைத்துப்பார்க்கையில் மலரினும் மெல்லியதான அவள் மனம் 'திக்'கென்று அடித்துக்கொண்டது.
--------------------
14. சீதாவின் உபதேசம்
அன்று சனிக்கிழமையாதலால் ராஜமையர் காரியாலயத்திலிருந்து பகல் ஒரு மணிக்கே வீட்டிற்கு வந்துவிட்டார். காசிக்குத் தன் பெண் பாலத்துடன் சென்றிருந்த அவர் தாயாரும் ஊரிலிருந்து முதல் நாள் தான் வந்திருந்தாள். இடைவேளைச் சிற்றுண்டிக்கு அப்புறம் கூடத்தில் உட்கார்ந்து வடநாட்டைப்பற்றிப் பாட்டி கூறுவதைக் கேட்டுக்கொண்டு. இடை யிடையே அவளைக் கேலி செய்து கொண்டிருந்தார்கள்.
"பாட்டி! காசிக்குப் போனால் ஏதாவது அவரவர்களுக்குப் பிடித்த பண்டத்தை விட்டுவிடவேண்டும் என்று சொல்லுகிறார்களே. நீ காப்பியை விட்டுவிட்டாயா பாட்டி?" என்று சீதா சிரித்துக்கொண்டே கேட்டாள்.
”சே. . சே... காப்பியை இன்னும் ' ஸ்ட்ராங்'காகச் சாப் பிடுவது என்று சங்கல்பம் செய்து கொண்டு வந்திருப்பாள் பாட்டி!" என்று சந்துரு கேலி செய்தான்.
"போடா அரட்டை! கொய்யாப் பழத்தையும், பாகற் காயையும் விட்டுவிட்டேன்" என்று பேரன், பேத்திக்குப் பதில் கூறினாள் பாட்டி.
”அடி சக்கை! தினம் தினந்தான் கொய்யாப்பழமும், பாகற்காயும் நாம் சாப்பிடுகிறோம்? சரியாகத்தான் பார்த்துப் பொறுக்கி எடுத்திருக்கிறாய்?" என்றான் மீண்டும் சந்துரு.
"காயும், பழமும் விடவேண்டும் என்பது ஒன்றும் சாஸ்திரம் இல்லை. நமக்கு இருக்கும் பலவித ஆசைகளில் எதையாவது துளி அந்தப் புனித க்ஷேத்திரத்தில் விட்டுவர வேண்டும். ஆசா பாசங்களை ஒடுக்கவேண்டும் என்று பெரியவர்கள் ஏற்படுத்தி இருக்கிறார்கள்" என்றார் ராஜமையர்.
சற்று ஒதுப்புறமாக உட்கார்ந்திருந்த மங்களம், "ஏதாவது அரட்டை வேண்டுமோ இல்லையோ? சாவித்திரியிடமிருந்து கடிதம் வந்து பத்து தினங்களுக்கு மேல் ஆகிறது. யாரும் ஒரு வரி பதிலே போடவில்லை. உன்னை எழுதச் சொல்லி எத்தனை முறைகள் சொல்லி இருப்பேன் சதா?" என்று மகன் கோபித்துக்கொண்டாள்.
"இதோ வந்துவிட்டேன் அம்மா" என்று கூறி காமரா அறைக்குள் சென்று கையில் கடிதமும் உரையும் அவள் எடுத்து வந்தபோது தெருவில் வண்டி வந்து நின்றது. கையில் ஒரு சிறு பெட்டியை எடுத்துக்கொண்டு சாவித்தி மட்டும் இறங்கி உள்ளே வந்தாள். அடுத்தாற்போல் மாப்பிள்ளை ரகுபதி வருவான் என்று எல்லோரும் வாசற்பக்கத்தையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வண்டிக்காரன் காலி வண்டியைத் திருப்பிக்கொண்டு போன பிறகுதான் சாவித்திரி மட்டும் தனியாக வந்திருக்கிறாள் என்பது தெரிந்தது.
"என்னம்மா இது? நீ மாத்திரம் தனியாகவா வருகிறாய்?" என்று ஆச்சரியத்துடன் மகளைப் பார்த்துக் கேட்டார் ராஜமையர்.
"இது என்னடி அதிசயம். ஒரு கடுதாசி போட்டிருந்தால் இங்கேயிருந்து யாராவது வந்து அழைத்து வந்திருக்க மாட்டோமா?" என்று பாட்டி அதிசயம் தாங்காமல் கேட்டுவிட்டுப் பேத்தியைப் பார்த்தாள்.
சாவித்திரி பதில் எதுவும் கூறாமல் காமரா அறைக்குள் சென்று பெட்டியை வைத்துவிட்டு அவளைத் தொடர்ந்து அறைக்குள் நுழைந்த மங்களத்தின் தோளில் தலையைச் சாய்த்துக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதாள். அப்புறம் மாமியார் வீட்டில் தனக்கு ஏற்பட்ட கஷ்டங்களைச் சாவித்திரி தாயிடம் கூறவும், அது வீடு முழுவதும் பரவுவதற்குச் சில நிமிஷங்கள் கூடப் பிடிக்கவில்லை.
”அடிக்கிறதாவது? ஹூம். . பதினெட்டு வயசு வரையில் வளர்த்துக் கொடுத்தால் அடிக்கிறதாவது? ஹும் . ." என்று ராஜமையர் திருப்பித் திருப்பித் தாம் சொன்ன வார்த்தைகளையே சொல்லிக்கொண்டிருந்தார்.
"அடிப்பார்கள். நாளைக்கு இவளை வேண்டாம் என்று தள்ளியும் வைப்பார்கள். வீட்டிலேதான் பெண் குதிர் மாதிரி வளர்கிறதே!" என்று பாட்டி, சம்பந்தம் இல்லாமல் பேச ஆரம்பித்தபோது சந்துரு , திடுக்கிட்டான். ’ஸரஸ்வதியைக் குறித்தா இவ்வளவு கேவலமாகப் பேசுகிறாள் பாட்டி? ரகுபதி ஒரு கல்யாணம் பண்ணிக்கொண்டு, அந்த மனைவியைத் தள்ளி வைத்த பிறகு தன்னை மணக்கவேண்டும் என்று விரும்புகிற பெண்ணா அவள்?' - பாட்டியின் சொல்லைப் பொறுக்கமுடியாமல் சந்துரு சற்று இரைந்து. "சரி, சரி, எல்லாவற்றையும் கொஞ்சம் பொறுமையாக ஆராய்ந்து விசாரிக்கலாம். வாய்க்கு வந்ததைப் பேசிக்கொண்டு நிற்கவேண்டாம்" என்று கூறினான்.
சாப்பிடும் கூடத்தில் சாவித்திரியின் பக்கத்தில் சீதா வந்து உட்கார்ந்து, "உனக்கும், அத்திம்பேருக்கும் ஏதோ ஊடல் போல இருக்கிறது! தமிழ்க் கவிதைகளையும், தலைவன், தலைவி ஊடல் பாடல்களையும் படித்துவிட்டு அத்திம்பேர் உன்னிடம் ஊடலை ஆரம்பித்திருக்கிறார் போல இருக்கிறது! நடுவில் யாராவது தூது செல்வதற்கு இருந்திருந்தால் நீ இங்கே வந்திருக்கமாட்டாய் இல்லையா சாவித்திரி? அப்படித்தானே?" என்று குறும்பு தவழக் கேட்டாள்.
"நாளைக்கு உனக்கு வரப்போகிற புருஷன் உன்னைக் கன்னத்தில் நாலறை அறைந்து வீட்டைவிட்டு வெளியே தள்ளினால், நீ அதை ’வேடிக்கை’ன்னு நினைத்துக்கொண்டு அழகாகக் குடித்தனம் செய்து கொண்டு இருப்பாய்" என்று பாட்டி உரக்க இரைய ஆரம்பித்தாள், தன் சின்னப் பேத்தியைப் பார்த்து.
சீதாவுக்கு உண்மையிலேயே தன் தமக்கைமீது கோபம் ஏற்பட்டது.
”கணவன் அடிக்கிறான் என்றே வைத்துக்கொள்வோம். வீட்டைவிட்டுத் துரத்துகிறான் என்றே வைத்துக்கொள்வோம். வீடு என்பது கணவன், மனைவி இருவருக்கும் சொந்தமான இடம். இதிலிருந்து ஒருவரையொருவர் வெளியே போகச்சொல்ல யாருக்கு அதிகாரம்? அப்படியே அவன் வற்புறுத்தினாலும், 'சீ, சீ, உங்களையே கதி என்று நம்பி வந்திருக்கும் என்னை, என் வீட்டைவிட்டு வெளியேற்ற உங்களுக்கு வெட்கமில்லையா? அவமானமாக இல்லையா? பேசாமல் இருங்கள். என் வீட்டுக்கு நான் தான் அரசி' என்று கூறிவிட்டு நான் உள்ளே போய் விடுவேன். காலப் போக்கில் எவ்வளவோ மனஸ்தாபங்கள் கரைந்து போய்விடுகின்றன. இதைத்தானே அன்னை கஸ்தூரிபாயும் நமக்குப் போதிக்கிறார்?" என்று சீதா ஆவேசத்துடன் பேசினாள். அவள் அப்பொழுது சந்துரு லைப்ரரியிலிருந்து வாங்கிவந்த காந்திஜியின் 'சத்திய சோதனை’யைப் படித்துக் கொண்டிருந்தாள்.
"சீதா! நீ பேசாமல் இருக்கமாட்டாயா? உன்னை அதிகம் படிக்கவைப்பதே ஆபத்தாக முடியும் போல் ! இருக்கிறதே!" என்று ராஜமையர் அதட்டிய பிறகுதான் அப்பாவும் விஷயத்தைப் பிரமாதப்படுத்த விரும்புகிறார் என்பதைச் சீதா தெரிந்து கொண்டாள்.
சாவித்திரியின் கல்யாணத்துக்காக ராஜமையர் -ஆறாயிரம் ரூபாய்க்குமேல் செலவு செய்திருக்கிறார். விமரிசையாகக் கல்யாணம் செய்தார். மாப்பிள்ளை ரொம்பவும் நல்ல பிள்ளை என்று முடிவு கட்டியிருந்தார். பிக்கல், பிடுங்கல் ஒன்றும் இல்லை. பெண் சுதந்தரமாக வாழ்வாள் என்றும் எதிர்பார்த்தார். ஆனால், கல்யாணம் நடந்த நான்கு மாதங்களுக்குள் கணவனுடன் மனஸ்தாபப்பட்டுக்கொண்டு தன்னந்தனியே வந்து நிற்கும் மகளைப் பார்த்ததும், பொறுமைசாலியான அவர் மனமும் கோபத்தால் வெகுண்டது: எரியும் நெருப்புக்கு விசிறி கொண்டு விசிறுவது போல அவர் தாயார் மேலும் தொடர்ந்து. "ஏண்டா அப்பா! குழந்தையை அடித்துத் துரத்தும்படி என்னடா கோபம் வந்துவிட்டது அவர்களுக்கு? சீர்வரிசைகளில் ஏதாவது - குறைந்து போய்விட்டதா? சாவித்திரிதான் என்ன அழகிலே குறைவா? எதறகாக இந்தமாதிரி பண்ணியிருக்கிறார்கள்?" என்று கேள்விமேல் கேள்வியாகக் கேட்டு அவரைத் திணற அடித்தாள்.
"பணம் காசைப்பற்றி என் மாமியார் வீட்டாருக்கு ஒருவிதக் குறையுமில்லை பாட்டி. அவர் இஷ்டப்படி நான் வீணை கற்றுக்கொள்ள வேண்டுமாம்! சங்கீதம் தெரிந்தவளாக இருந்தால்தான் அவர் மனசுக்குப் பிடித்தமாக இருக்குமாம்!" என்று பாட்டியின் கேள்விகளுக்குப் பதில் அளித்தாள் சாவித்திரி.
"அப்பா! இவ்வளவுதானா? பேஷாகக் கற்றுக்கொள்கிறது. இதிலே சண்டைக்கும், சச்சரவுக்கும் இடமில்லையே. அப்படி உனக்குச் சங்கீதம் பயின்றும் வராமல் போனால் அத்திம்பேர் தன்னால் மனம் சலித்து விட்டுவிடுகிறார்" என்றாள் சீதா.
"அடேயப்பா! இதுதானா விஷயம்?" என்று மங்களம் ஒரு பெருமூச்சு விட்டாள். இதுவரையில் இவர்கள் பேச்சைக் கவனித்த சந்துரு உதட்டை மடித்துக் கொண்டே
சீதாவைப் பார்த்தான்.
”ஒருவேளை நாளைக் காலை வண்டியில் அத்திம்பேர் சாவித்திரியைத் தேடிக்கொண்டு வந்தாலும் வருவார்" என்று சீதா கூறியதும், "வரட்டுமே. தயாராக ஆரத்தி கரைத்து வை! வந்ததும் திருஷ்டி கழித்து ஆரத்தி சுற்றி நெற்றிக்குத் திலக மிட்டு உள்ளே அழைத்து வாயேண்டி. அசடே. . . ." என்று கூறிப் பல்லை நறநறவென்று கடித்தாள் சாவித்திரி.
--------------------
15. 'மாலே மணி வண்ணா !'
பல நாள் முயற்சியின் பேரில் ரகுபதி அந்த ஊரில் ஒரு சிறு சங்கீத மண்டபம் கட்டி முடித்திருந்தான். அதன் திறப்புவிழாவை அவன் வெகு விமரிசையாகக் கொண்டாட வேண்டும் என்றும் தீர்மானித்திருந்தான். மனைவியுடன் வெகு உற்சாகமாக அவன் அந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பியதில் வியப்பு ஒன்றுமில்லை. ஆனால், பிறந்தகம் சென்ற சாவித்திரி மூன்று மாதங்களாகியும் அவனுக்கு ஒரு கடிதங்கூடப் போடாததை நினைத்துத்தான் அவன் மனம் சதா ஏங்கிக்கொண்டிருந்தது. 'சௌக்கியமாக ஊர் போய்ச் சேர்ந்தேன்' என்று கடிதம் போடும்படி அன்று ரெயிலடியில் அவளிடம் தான் கேட்டுக்கொண்டும் அவள் தன்னை மதிக்கவில்லையே என்று ரகுபதி எண்ணி வருந்தாத நாளில்லை. ஆசையுடன் வாங்கிவந்த வீணை அவன் அறையில் ஒரு மூலையில் கேட்பாரற்றுத் தூசி படிந்து கிடந்தது. அன்று நடந்த ஒரு சிறு சம்பவம் மனைவியையும் கணவனையும் பிரித்து எவ்வளவு பெரிய பிளவை ஏற்படுத்திவிட்டது! குடும்ப வாழ்க்கையில் இன்பமும், அமைதியும் நிலவ வேண்டிய நாட்களில் மன அமைதி குறைந்து வாழ்க்கையில் கசப்பல்லவா ஏற்பட்டிருக்கிறது?
மன நிம்மதியை இழந்த ரகுபதி தன் அறைக்குள் மேலும் கீழுமாக உலாவிக்கொண்டே சிந்தனையில் மூழ்கி இருந்தான். எதிரே மேஜைமீது திறப்பு விழாவுக்காக அனுப்ப வேண்டிய அழைப்பிதழ்கள் வைக்கப்பட்டிருந்தன. தான் நடத்தப் போகும் இந்த விழாவைக் குறித்துத் தன் மாமனாருக்கும் அன்றைய தபாலில் நான்கு வரி ஒரு கடிதம் எழுதிப் போட்டிருந்தான். அதில் அவரைக் கட்டாயம் வரவேண்டும் என்றும் எழுதி இருந்தான். ஒருவேளை பெண்ணைச் சமாதானப்படுத்தி அவர் அழைத்து வந்தாலும் வரலாம் அல்லவா? சாவித்திரி தன் தகப்பனாருடன் வந்துவிட்டால் பழைய விஷயங்களை எல்லாம் மறந்துவிடவேண்டும். அதைப்பற்றித் தப்பித் தவறிக் கூட அவளிடம் பிரஸ்தாபிக்கக்கூடாது என்று ரகுபதி தீர்மானித்துக் கொண்டான்.
அவன் சிந்தனையைக் கலைப்பது போல் கீழே பூஜை அறையை மெழுகிப் படத்தருகில் வித விதமாகக் கோலம் போட்டுக்கொண்டே மெல்லிய குரலில் ஸரஸ்வதி பாடிக் கொண்டிருந்தாள். மாடியில் ரகுபதியின் அறைக்கு வெளியே இருக்கும் வராந்தாவில் நின்று பார்த்தால் அறையும் நன்றாகத் தெரியும். குந்தலவராளி ராகத்தில் உருக்க மாக "மாலே மணி வண்ணா' என்கிற ஆண்டாளின் பாசுரத்தை அவள் பாடுவதைக் கேட்டு வராந்தாவின் கைப்பிடிச்சுவர் மீது சாய்ந்து நின்றுகொண்டு அதை ரசிக்க ஆரம்பித்தான் ரகுபதி. அப்பொழுது மாலை நேரம். எல்லோர் வீட்டிலும் விளக்கேற்றி விட்டார்கள். வித விதமாக ஆடைகள் உடுத்து இளம் பெண்களும் சிறுமிகளும் கையில் குங்குமச் சிமிழுடன் ஊரழைக்க வெளியே புறப்பட்டுக்கொண்டிருந்தனர். இன்று என்ன விசேஷம்?' என்று ரகுபதி யோசித்தான்.
"ஓஹோ! நவராத்திரி - ஆரம்பம்போல் இருக்கிறது. கல்யாணம் நடந்த வருஷத்தில் மங்களகரமாகக் கணவனுடன் இருந்து பண்டிகைகள் கொண்டாட வேண்டியவள் பிறந்தகத்தில் - போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள்! ஆயிற்று, நவராத்திரி முடிந்ததும் தீபாவளி வரும். இந்தத் தீபாவளி தலை தீபாவளி ஆயிற்றே?. மாமனார் வீட்டிலிருந்து பலமாக அழைப்பு வரும்! பெட்டி நிறையப் பட்டாசுக் கட்டுகளும் ஆருயிர் மனைவிக்கு வண்ணச்சேலையும் வாங்கிப் போகவேண்டியது தான் பாக்கி.
ரகுபதிக்கு எதையோ, என்னவோ நினைத்து நினைத்துத் தலையை வலிக்க ஆரம்பித்தது. அவன் சிந்தனையைக் கலைத்து அவன் தாய், "ரகு!" என்று ஆதரவுடன் கூப்பிட்டாள். திடுக்கிட்டு அவன் திரும்பிப் பார்த்தபோது ஸ்வர்ணம் அவனுக்கு வெகு அருகிலேயே நின்றுகொண்டிருப்பதைக் கண்டான்.
"ஏண்டா அப்பா! திறப்பு விழாவுக்காவது சாவித்திரி வந்துவிட்டால் தேவலை. நாம்தான் பேசாமல் இருக்கிறோம். ஊரில் நாலுபேர் கேட்பதற்குப் பதில் சொல்ல முடியவில்லையே. உன் மாமனாருக்காவது ஒரு கடிதம் எழுதிப் பாரேன்" என்றாள்
ஸ்வர்ணம்.
"அவருக்கு இன்று தான் ஒரு கடிதம் எழுதிப்போட்டேன்" --வரட்சியுடன் பதிலளித்த மகனின் முகத்தைப் பார்த்ததும் ஸ்வர்ணத்தின் மனம் உருகியது. இப்படிச் செய்வதுதான் நல்லது. இது தான் உடம்புக்கு ஒத்துக்கொள்ளும். நான் சொல்வதை நீ கேட்டுத்தான் ஆகவேண்டும்' என்று குழந்தையில் அதட்டித் திருத்தி அவள் வளர்த்த மகன்தான் ரகுபதி. இருந்தாலும், இன்று அவன் மனத்துக்கு நல்லது கெட்டது தெரிந்திருக்கிறது. அதிகமாக அவனை ஒன்றும் சொல்ல முடிய வில்லை. அப்படிச் சொல்லித் திருத்துவதற்கும் பிரமாதமாகத் தவறு ஒன்றும் அவன் இழைத்துவிடவில்லை. இந்தப் பிளவு - இந்த வைராக்கியம் - ஒரு வேளை நீடித்து நிலைத்துவிடுமோ? அப்படியானால், அவள் ஒரே மகன் வாழ்க்கை முற்றும் இப்படித் தான் ஒண்டிக் கட்டையாக நிற்கப்போகிறானா? ஸ்வர்ணத்தின் நெஞ்சை யாரோ கசக்கிப் பிழிவது போன்ற வேதனையை அநுபவித்தாள்.
பெற்ற அன்னை மகனைப் பாலூட்டி, சீராட்டி வளர்க்கிறாள். அவன் அறிவு பெற அரிய கதைகளை மனதில் பதியும்படி கூறுகிறாள். பள்ளிக்கு அனுப்புகிறாள். அவன் கல்வியில் தேர்ந்து பட்டம் பெற்று வரும்போது திருஷ்டி கழிக்கிறாள். பொங்கிப் பூரிக்கிறாள். அவனுக்கு ஆசையோடு மணம் முடித்து வைத்துப் பேரன் பேத்தியோடு குலம் தழைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறாள். நடு நடுவில் குடும்பங்களில் சிறு பூசல்கள் எழலாம். மாமியாரும், மரு மகளும் சண்டை போட்டுக்கொண்டு விலகி வாழலாம். இவை தினமும் நடக்கின்றன. பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், மகன் நல்வாழ்வு வாழவேண்டும் என்று எண்ணிய அன்னையின் உள்ளத்தில் அந்த ஆசை, சண்டை - பூசல்களுக் கிடையில் நிலைத்துத்தான் இருக்கும். அதன் முன்பு மற்றச் சிறு வியவகாரங்கள் மறைந்து போகின்றன; தெளிந்த கங்கையில் கழுவப்படும் மாசுமறுக்களைப்போல!
கீழே கூடத்தில் கலகலவென்று சிரித்துக்கொண்டே நாலைந்து பெண்கள் வந்தார்கள்.
"ஸரஸ்வதி! புது சங்கீத மண்டபத்தில் உன்னுடைய கச்சேரியாமே! என்ன பாட்டுகள் பாடப் போகிறாயடி?" என்று ஒருத்தி கேட்டாள்.
"அதெல்லாம் முன்னாடி சொல்லுவாளா? நாளைக்கே பெரிய பாடகியாகி 'தேசிய’ நிகழ்ச்சியில் பாடினாலும் பாடுவாள். இப்பொழுது சாதாரண ஸரஸ்வதியாக இருக்கிறவள் அப்பொழுது கான ஸரஸ்வதியாகவோ, இசைக் குயிலாகவோ மாறிவிடுவாள் இல்லையா? 'நீ யார்? எந்த ஊர்?' என்று உன்னைப் பார்த்துக் கேட்டாலும் கேட்பாள். இல்லாவிடில் எல்லோருக்கும் பொதுவாக ஒரு 'நமஸ்காரம்' போட்டுவிட்டுக் காரில் போய் ஏறி உட்கார்ந்து காண்டாலும் கொள்வாள்!" என்றாள் இன்னொருத்தி.
அவள் பேசி முடித்ததும் எல்லோரும் 'கலி' ரென்று சிரித்தார்கள்.
"அப்படியெல்லாம் பண்ண மாட்டாள் ஸரஸ்வதி. இன்றைக்கு மாத்திரம் என்ன, அவள் பெரிய பாடகி ஆவதற்கு வேண்டிய தகுதி இல்லையா? குடத்துள் விளக்காக இருக்கிறாள். தன்னைப்பற்றி அதிகம் வெளியிலே சொல்லிக்கொள்ளவே அவளுக்கு வெட்கம்!" - முதலில் பேசிய பெண் ஸரஸ்வதிக்காகப் பரிந்து பேசினாள்.
இவர்கள் பேச்சுக்குப் பதில் கூறாமல் ஸரஸ்வதி புன்சிரிப்புடன் கம்பளத்தை எடுத்து விரித்து அவர்களை அதில் உட்கார்ந்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டாள். பிறகு, அங்கிருந்த பெண்கள் பூஜை அறையைக் கவனித்துவிட்டு, "இந்த வருஷம் ஏன் பொம்மைகளை அதிகமாகக் காணோம்? சாவித்திரி எப்பொழுது பிறந்தகத்திலிருந்து வருவாள்?" என்றெல்லாம் கேட்க ஆரம்பித்தார்கள். அங்கே நின்று பேசினால் மேலும் அவர்கள் ஏதாவது கேட்டுக்கொண்டே இருப்பார்கள் என்று நினைத்து, ஸரஸ்வதி பூஜை அறைக்குள் சென்று தட்டில் வெற்றிலை பாக்கு, பழத்துடன் வெளியே வந்தாள். வந்த பெண்கள் எல்லோரும் தாம்பூலம் பெற்றுக்கொண்டு வெளியே போய் விட்டார்கள்.
மாடியிலிருந்து அந்தப் பெண்கள் பேசியதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ரகுபதி நிதானமாகக் கீழே இறங்கி வந்தான். பூஜை அறை வாயிற்படியில் நின்றிருந்த ஸரஸ்வதியைப் பார்த்து, "சங்கீத மண்டபத்தில் உன்னுடைய கச்சேரிக்கு ஏற்பாடு ஆகி இருக்கிறதுபற்றி உனக்குத் தெரியுமா ஸரஸு? அதைப்பற்றி அழைப்பிதழ்களில் கூட வெளியிட்டிருக்கிறோமே! பத்திரிகைகளிலும் விளம்பரம் வந்திருக்கிறது" என்று சொன்னான்.
"இதெல்லாம் எதற்கு அத்தான்? நான் என்றும் சாதாரண ஸ்ரஸ்வதியாகவே இருக்கிறேனே. நீ ஏன் இப்படி அமர்க்களப் படுத்துகிறாய்?" என்று கேட்டாள் ஸரஸ்வதி, குழந்தையைப் போல.
------------------
16. சந்துருவும் சாவித்திரியும்
அன்று காலை தபால்காரன் கொண்டுவந்து கொடுத்த "அழைப்பிதழ்', ராஜமையர் வீட்டில் மேஜை மீது கிடந்தது. கையில் நூலும், ஊசியும் வைத்துக்கொண்டு சீதா சவுக்கம் பின்னிக்கொண்டிருந்தாள்.. நொடிக்கொருதரம் அவள் கண்கள் அழைப்பிதழை நோக்கி மலர்ந்தன. 'ஸ்ரீமதி சரஸ்வதி வாய்ப் பாட்டும், வீணையும்' என்று தங்க நிற எழுத்துக்களில் அச்சடித்திருக்கும் வார்த்தைகளைத் திருப்பித் திருப்பிப் படித்தாள் சீதா. சாவித்திரி மட்டும் ஒற்றுமையுடன் அவர்களிடையே இருந்தால் இன்று சீதா அந்தக் கடிதத்தைப் பார்த்துவிட்டுத் துள்ளிக் குதித்திருப்பாள். கட்டாயம் சென்று ஸரஸ்வதியின் இன்னிசையைக் கேட்க வேண்டும் என்று வீட்டில் ஆர்ப்பாட்டம் செய்திருப்பாள். காலையில் கடிதம் வந்ததும் காரியாலயத்துக்குப் போவதற்கு முன்பு ராஜமையர் அதை அலட்சியத்துடன் பார்த்து விட்டு, மேஜைமீது 'பொத்' தென்று வீசி எறிந்தார். அவருக்கு மாப்பிள்ளையிடம் ஏற்பட்டிருந்த கோபத்தை ஒருவாறு புரிந்து கொண்டாள் சீதா. அவருக்குப் பிரத்தியேகமாக ரகுபதி எழுதி இருந்த கடிதத்தைப் படித்தபோது அவர் முகம் 'கடுகடு' வென்று மாறியது.
"இந்தத் திறப்பு விழாவுக்குத் தாங்கள் வந்திருந்து அவசியம் நடத்திவைக்க வேண்டும். அங்கு எல்லோரும் சௌக்கியம் என்று நம்புகிறேன்."
சாமர்த்தியமாக எழுதப்பட்ட கடிதம் என்றுதான் அவர் நினைத்தார்: சாவித்திரியைப் பற்றி விசாரித்து ஒன்றும் எழுத வில்லை. அவள் எப்பொழுது வரப்போகிறாள் என்றும் கேட்க வில்லை. எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால் பெண்ணைப் பெற்றவரிடமே பெண்ணைப்பற்றி ஒரு வார்த்தைகூடப் பிரஸ்தாபியாமல் அவளுக்கும் தனக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தின் காரணத்தை விளக்காமல்--வருமாறு அழைத்திருப்பான் என்று அவர் உள்ளத்தில் அனல் கனன்றது:
பயந்து கொண்டே மங்களம் கணவனின் அருகில் வந்து என்று விசாரித்தாள்.
”அது என்ன கடிதம்? யார் எழுதி இருக்கிறார்கள்?” என்று விசாரித்தாள்.
"உன் அழகான மாப்பிள்ளை எழுதியிருக்கிறான்! சங்கீத மண்டபம் கட்டித் திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்திருக்கிறானாம். நான் வந்து அவனுடன் இருந்து நடத்திவைக்க வேண்டுமாம். உடனே ஓட வேண்டியது தான் பாக்கி!" என்று அலட்சியமாகக் கூறிவிட்டு காரியாலயத்துக்குப் புறப்பட்டார்.
"சாவித்திரியை அழைத்து வரும்படி எழுதி இருக்கிறதா?"" என்று கவலையுடன் விசாரித்தாள் மங்களம்.
"அட சீ. . . . நீ ஒன்று!" ’சாவித்திரிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்' என்று கேட்கிற தோரணையில் அல்லவா கடிதம் எழுதி இருக்கிறான் அவன்? இன்னும் கொஞ்ச காலம் போனால் 'சாவித்திரி யார்?' என்றே கேட்டு விடுவான் போல் இருக்கிறது! "ஹும்" என்று கூறிவிட்டுச் சற்றுக் கோபம் அடங்கியவராகத் தன் முகவாயைத் தடவிக்கொண்டே யோசித்தார் ராஜமையர்.
“நான் சொல்கிறேனே என்று கோபித்துக் கொள்ளாதீர்கள். விரோதத்தை வளர்த்துக்கொண்டே போனால் அப்புறம் குழந்தையின் கதி என்ன ஆகிறது? யோசித்துப் பாருங்கள். நாளைக்கே சந்துருவுக்குக் கல்யாணம் ஆகவேண்டும். அப்புறம் சீதா வளர்ந்துவிட்டாள். அவளுக்கும் உடனே கல்யாணம் பண்ணி ஆகவேண்டும். கணவனுடன் வாழ வேண்டிய பெண் பிறந்த வீட்டில் இருந்தால் பார்ப்பதற்கு நன்றாக இருக்குமா? இந்தச் சந்தர்ப்பத்தையே ஒரு சாக்காக வைத்துக்கொண்டு சாவித்திரியை அழைத்துக்கொண்டு போங்கள். அவர்கள் சரக்கை அவர்களிடம் ஒப்பித்துவிட்டு வந்துவிடுங்கள். அப்புறம் எல்லாம் சரியாகிவிடும்'- மங்களம் இவ்விதம் கூறி விட்டு, ஆவலுடன் கணவன் முகத்தைப் பார்த்தாள்.
"மனைவியை ஏதோ கோபத்தில் அடித்துவிட்டான். நான் கூட உன்னை அடித்திருக்கிறேன் அந்தக் காலத்தில்! இவளும் கோபித்துக்கொண்டு வந்துவிட்டாள். என்னை மதித்து எப்போது வரச்சொல்லிக் கூப்பிட்டிருக்கிறானோ, எனக்கு இதைப் பற்றி அவன் ஏதாவது எழுத வேண்டுமோ இல்லையோ? அவ்வளவு கர்வம் பிடித்தவனிடம் என்னைப் போய்ப் பல்லைக் காட்டச் சொல்லுகிறாய். ”உம்மைத்தானே வரச் சொன்னேன்? இவளை ஏன் கூட்டி வந்தீர்?' என்று கேட்டால் முகத்தை எங்கே திருப்பிக்கொள்கிறதடீ?"
கோபத்தில் இப்படி இரைந்துவிட்டு அவசர அவசரமாக வெளியே போய்விட்டார் ராஜமையர், மங்களம் கண்களில் நீர் தளும்ப பிரமித்துப்போய் நின்றிருந்தாள். வெளியே செல்வதற்காக அங்கு வந்த சந்துரு தாயின் குழப்பமான நிலையை அறிந்து, அவள் அருகில் வந்து நின்று. " என்னம்மா விஷயம்?" என்று கேட்டான். மேஜைமீது கிடந்த அழைப்பிதழில் கொட்டை எழுத்துக்களில், 'ஸ்ரீமதி ஸரஸ்வதி-வாய்ப்பாட்டும் வீணையும்' என்று எழுதி இருந்தது பளிச்சென்று தெரிந்தது.
"அம்மா! ஸரஸ்வதி முதன் முதலாகக் கச்சேரி செய்யப் போகிறாளாமே. நன்றாகப் பாடுவாள் அம்மா" என்றான் சந்துரு சந்தோஷம் தாங்காமல்.
ஸரஸ்வதியின் பெயரைக் கேட்டாலே அகமும் முகமும் மலர்ந்து நிற்கும் சந்துருவின் மனதை ஒருவாறு புரிந்து கொண்டாள் மங்களம். இருந்தாலும் அதை வெளிக்குக் காட்டிக்கொள்ளாமல், “எல்லாம் ரொம்ப விமரிசையாகத்தான் நடக்கும்போல் இருக்கிறது. நாம்தான் ஒன்றுக்கும் கொடுத்து வைக்கவில்லை" என்றாள் மங்களம்.
இதுவரையில் தோட்டத்தில் ஏதோ அலுவலாக இருந்த சாவித்திரி உள்ளே வந்தபோது, தாயாரும், தமையனும், தங்கையும் ஏதோ கூடிப் பேசுவதைக் கவனித்துவிட்டு அருகில் வந்து நின்று, "என்ன அது பிரமாதமான ரகசியம்? கூடிப் பேசுகிறீர்களே?" என்று கேட்டாள்.
சந்துரு அவளுக்குப் பதில் கூறாமல் மேஜைமீது கிடந்த அழைப்பிதழை எடுத்து அவளிடம் கொடுத்தான்.
சாவித்திரியின் முகம் க்ஷண காலத்தில் வெளுத்து வாடியது. பிறகு சரேலென்று 'ஜிவு ஜிவு' வென்று சிவந்தது. ஆத்திரத்துடன் கடிதத்தை எடுத்துச் சுக்கு நூறாகக் கிழித்துப்போட்டு, “பூ! இவ்வளவுதானா? கச்சேரி செய்ய வேண்டியது ஒன்று தான் பாக்கியாக இருந்தது. அதுவும் ஆரம்பமாகி விட்டதாக்கும்!" என்று அதைத் தூள் தூளாகக் கிழித்து எறிந்தாள் எரிச்சலுடன்.
அழகிய எழுத்துக்களில் 'ஸ்ரீமதி ஸரஸ்வதி' என்று எழுதி இருந்த வார்த்தைகள் துண்டு துண்டாகச் சிதறிக் கூடத்தில் இறைந்து கிடப்பதைப் பார்க்க மனம் சகிக்காமல் சந்துரு சாவித்திரியைக் கோபத்துடன் விழித்துப் பார்த்து விட்டு அங்கிருந்து வெளியே சென்றான்.
-----------------
17. 'நினவிருக்கிதா ?'
திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து கொண்டிருந்தன. ஆவலுடன் ஒவ்வொரு நாளும் மனைவியின் வரவை எதிர்பார்த்துக்கொண்டிருந்தான் ரகுபதி. கோபத்தைப் பாராட்டாமல் கடிதமும், அழைப்பும் அனுப்பிய பிறகு வராமல் இருக்கமாட்டார்கள் என்றும் நினைத்தான். ஸ்வர்ணம் மட்டும் அடிக்கடி, "அவர்கள் என்ன பண்ணப்போகிறார்களோ? வருகிறதானால் கடிதம் ஏதாவது போட-மாட்டார்களா?" என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
நண்பர்கள் எல்லோரும் வருவார்கள். ”எங்கேயடா உன் மனைவி?" என்று துளைப்ப ஆரம்பித்து விடுவார்கள். கல்யாணமாகி வந்த புதுசிலேயே நண்பர்கள் சாவித்திரியைத் தத்தம் வீடுகளுக்கு அழைத்து வரும்படி ரகுபதியைத் தொந்தரவு செய்து கொண்டிருந்தார்கள். ஒன்றிரண்டு பேர் ரகுபதியின் வீட்டைத் தேடியே வந்து பார்த்துவிட்டுப் போனார்கள். இவர்களுக்குப் பதில் சொல்லுவதற்குப் போதுமென்று ஆகிவிடும்.
தெருவில் வண்டி ஏதாவது போனால் கூட ஸ்வர்ணம் கைக் காரியத்தைப் போட்டுவிட்டு வாசலில் வந்து எட்டிப் பார்த்து விட்டுப் போவாள். 'வருகிறார்களோ இல்லையோ' என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்வதில் அவளுக்கு ஒரு திருப்தி ஏற்பட்டது. ரகுபதியின் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. சாவித்திரியுடன் முதலில் யார் பேசுவது என்பது புரியாமல் மனத்தைக் குழப்பிக்கொண்டான் அவன். வலுவில் அவன் தான் அவளுடன் பேசவேண்டும் என்பதையும் அவன் நன்குணர்ந்திருந்தான். பிடிவாதக்காரியுடன் வேறென்ன செய்ய முடியும்?
யோசித்தவண்ணம் உட்கார்ந்திருந்த ரகுபதியின் முன்பு ஸரஸ்வதி இளமுறுவலுடன், "அத்தானுக்கு என்னவோ பலமான யோசனை!" என்று சொல்லிக்கொண்டே தட்டில் சிற்றுண்டியைக் கொண்டுவந்து வைத்தாள்.
"என்ன யோசனை இருக்கப்போகிறது? எல்லோருக்கும் அழைப்பு அனுப்பியாகி விட்டதா என்று நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். வேறொன்றும் இல்லை!" என்று சலிப்புடன் பதிலளித்தான் அவன்.
"போ, அத்தான். உன் மனசில் இருக்கிற ஏக்கந்தான் முகத்திலேயே தெரிகிறதே. நான் என்ன பச்சைக் குழந்தையா?"" என்று அவளும் வருத்தம் தொனிக்கக் கூறினாள்.
'தான் சந்தோஷப்படும் போது அவள் பார்த்துச் சந்தோஷப்படவும், தான் வருந்தும்போது அவள் வருந்தவும் ஸரஸ்வதிக்கும் தனக்கும் அப்படி என்ன பந்தம் இருக்கிறது?' என்று ரகுபதி யோசித்தான். ஊஞ்சல் சங்கிலியைப் பிடித்துக் கொண்டு, எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்த கூந்தலைப் பின்னிவிடாமல், முதுகில் புரளவிட்டுக் கண்களில் கரைந்து இமைகளில் சற்று அதிகமாகவே வழியும் மையுடன் அவனைப் பார்த்து முறுவலித்துக்கொண்டே நின்றாள் ஸரஸ்வதி.
ஆர்வத்துடன் அவளை விழுங்கிவிடுவது போல் பார்த்துக் கொண்டே ரகுபதி, "உனக்குத்தான் எப்படியோ பிறத்தியாருடைய மனசில் இருப்பதைக் கண்டு பிடிக்கத் தெரிந்து இருக்கிறதே! என் மனசில் இருப்பதைத் தெரிந்து கொண்டே எதற்கு.
என்னைக் கேட்கிறாய் ஸரஸு?" என்றான்.
ஸரஸ்வதி வெட்கத்துடன் தலையைக் குனிந்து கொண்டாள். பிறகு சட்டென்று விழிகளை உயர்த்தி அவனைப் பார்த்து. ”உன்னைவிட அத்தைதான் நாட்டுப்பெண் இன்னும் வந்து சேரவில்லையே என்று கவலைப்படுகிறாள். நல்ல வேளை! நான் சமையலறையில் இராமல் இருந்தால் ரவா சொஜ்ஜியில் உப்பை அள்ளிப் போட்டிருப்பாள்! ஆனால் உனக்கு அதுவும் தெரிந்திருக்காது. இது ஏதோ புதுமாதிரி பட்சணம்போல் இருக்கிறது என்று நினைத்துக்கொள்வாய். அத்தான்! அன்றொரு நாள் சாவித்திரி பொரிச்ச கூட்டு என்று சமைத்து வற்றல் குழம்பை உன் இலையில் பரிமாறினாளே; நீயும் அதைப் 'பேஷ்' என்று சொல்லி ஆமோதித்துச் சாப்பிட்டாயே; நினைவிருக்கிறதா உனக்கு? 'புருஷன், மனைவி வியவகாரத்தில் நாம் ஏன் தலையிட வேண்டும்' என்று நான், பொத்துக்கொண்டு வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு வெளியே போய்விட்டேன்" என்றாள் ஸரஸ்வதி. பொங்கி வரும் சிரிப்பை அடக்க முடியாமல் அவள் ’கலகல' வென்று சிரித்தபோது அந்தச் சிரிப்பின் ஒலி யாழின் இசை போலும், வேய்ங்குழலின் நாதம் போலும் இருந்தது ரகுபதிக்கு.
”வர வர உனக்கு வாய் அதிகட்கிவிட்டது. நான் இருக்கிற சவரணைக்கு என்னைப் பார்த்துப் பரிகாசம் பண்ணுகிறாயே. சாவித்திரி என்னுடன் இருந்ததே ரொம்பக் காலம்! அதிலும் அவள் எனக்கு எது பிடிக்கும் பிடிக்காது என்று என் மனத்தை அறிந்து உபசாரம் செய்தது அதைவிட அதிகம்! சமையலறையி பருந்து அம்மாவோ நீயோ காய்ச்சி வைத்த பாலை எனக்குக் பாலைக் கொண்டு வந்து மேஜைமீது மூடாமல் வைத்துவிட்டுப் போர்வையை இழுத்துப் படுத்துக்கொள்ளத்தான் தெரியும் அவளுக்கு. இன்பமும், ஆனந்தமும் நிறைந்திருக்க வேண்டிய அறையில் அழுகையின் விம்மலும், 'படபட' வென்று பொரிந்து வெடிக்கும் கடுஞ்சொற்களையும்தான் கேட்கலாம். என் படுக்கை அறைச் சுவர்களுக்கு வாய் இருந்தால். நான் ரசித்த காட்சியை அவைகளும் வர்ணிக்குமே, ஸரஸு!" என்ற ரகுபதியின் கண்கள் கலங்கிவிட்டன. ஸரஸ்வதியின் நெஞ்சைப் பிளந்து கொண்டு விம்மலின் ஒலி எழுந்தது.
'பிறர் துன்பத்தைத் தன்னுடைய தாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும்' என்று பெரியவர்கள் சொல்லுகிறார்கள். ஸரஸ்வதிக்குத் தன் அத்தானின் துன்பத் துக்கு எப்படிப் பரிகாரம் தேடுவது, அதைத் தான் எப்படிப் பகிர்ந்து கொள்வது என்பதே புரியவில்லை. சிறிது நேரம் அவள் யோசித்துவிட்டு மெதுவாக, "அத்தான்! நான் ஒன்று சொல்லுகிறேன் கேட்கிறாயா? ஒருவருக்கும் தெரியாமல் நீ போய் சாவித்திரியை அழைத்து வந்துவிடு. அத்தைக்குக்கூடத் தெரிய வேண்டாம். என்ன இருந்தாலும் அவள் அந்த நாளைய மனுஷி. ஏதாவது சொல்லுவாள்" என்றாள்.
ரகுபதியின் கலங்கிய கண்களில் வைராக்கியத்தின் ஒளி வீசியது.
"அழகாகப் பேசுகிறாயே ஸரஸு? தவறு செய்தவன் நானாக இருந்தாலும் அதற்காக அவளிடம் மனம் வருந்தி இங்கிருந்தபோதே அவளைப் போகவேண்டாம் என்று தடுத்துப் பார்த்தேன். ஊருக்குப் போன பிறகு கடிதம் போடும்படி வற்புறுத்திச் சொன்னேன். எனக்கு யார் பேரிலும் வருத்த மில்லை என்று தெரிவிக்க என் மாமனாருக்கு அழைப்பு அனுப்பிக் கடிதமும் போட்டிருக்கிறேன். இனியும் நான் போய் அவளை வேண்ட வேண்டுமென்று விரும்புகிறாயே. மனிதனுக்குச் சுய மரியாதை என்பது இல்லையா?" என்று சற்றுக் கோபத்துடன் கூறினான் ரகுபதி.
அதற்குமேல் ஸரஸ்வதியால் ஒன்றும் பேச முடியவில்லை. ஏதோ ஒருவித ஏக்கம் மனத்தைப் பிடித்து அழுத்த அவள் அங்கிருந்து தன் அறைக்குள் சென்றுவிட்டாள். கற்றைக் கூந்தல் காற்றில் பறக்க மெதுவாக அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்த ரகுபதி, பெருமூச்செறிந்தான். அவள் உள்ளே சென்ற பிறகுதான், அவள் திறப்பு விழாவுக்கு என்ன பாடப் போகிறாள் என்று கேட்காமல் போனதற்கு வருந்தினான் ரகுபதி. அவள் எதிரில் தான் உற்சாகம் குறைந்து இருந்தால், அவள் மனமும் வாடிப் போகுமே என்றும் நினைத்தான். வாடிய உள்ளத்திலிருந்து கிளம்பும் பாட்டும் சோகமாகத்தானே இருக்கும்? இப்பொழுதெல்லாம் ஸரஸ்வதி அதிகமாகப் பாடுவதே யில்லை. ஏன் பாடுவதில்லை? ஒருவேளை அவன் வருத்தமாக இருக்கிறான் என்று நினைத்துப் பாடுவதையே விட்டுவிட்டாளோ? சீ... இனிமேல் அவள் எதிரில் ரகுபதி உற்சாகத்துடன் நடந்து கொள்ளவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான். மெதுவாகத் தனக்குள் அவன், 'குழலோசை கேட்குதம்மா- கோபால கிருஷ்ணன் குழலோசை கேட்குதம்மா-' என்று பாடுவதை ஜன்னல் வழியாக அறைக்குள்ளிருந்து இரு கமலநயனங்கள் பார்த்தன.
"நன்றாகப் பாடுகிறாயே அத்தான். உனக்குப் பாட்டைக் கேட்கத்தான் தெரியும் என்று நினைத்திருந்தேன். பாடவும் தெரிந்திருக்கிறதே" என்று ஸரஸ்வதி தன் மகிழ்ச்சியை உள்ளிருந்தே அறிவித்துக்கொண்டாள்.
----------------
18. 'அந்தப் பெண் யார்?'
திறப்பு விழாவுக்கு இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பு ரகுபதியின் அத்தை அலமேலு 'திடு திப்' பென்று கிராமத்திலிருந்து வந்து சேர்ந்தாள். ஒற்றை மாட்டு வண்டியில் மூட்டை முடிச்சுகள் -கிதம் அவள் வந்து இறங்கியதுமே ஸரஸ்வதிக்கு ’அலமு அத்தை வெறுமனே வரவில்லை; வெறும்வாயை மெல்லுகிறவளுக்கு ஒரு பிடி அவல் கிடைத்த சமாசாரமாக வம்பை அளக்க வந்திருக்கிறாள்' என்பது புரிந்துவிட்டது. "அத்தை! அத்தை ! உன் நாத்தனார் வந்திருக்கிறாரே. இனிமேல் நீ இதுவரையில் ஒருத்திக்கும் பயப்படாமல் இருந்த மாதிரி இருக்க முடியாது! வீட்டு விஷயங்களை மூடி மூடி ரகசியமாகவும் வைத்துக்கொள்ள முடியாது. அலமு அத்தை இருப்பது கிராமமாக இருந்தாலும் ’ஆல் இந்தியா ரேடியோ'வுக்குச் செய்திகள் எட்டுவதற்கு முன்பே அவளுக்கு எட்டிவிடும் தெரியுமா?" என்று பின் கட்டுக்கு விரைந்து விஷயத்தை அறிவித்தாள் ஸ்ரஸ்வதி. ஸ்வர்ணம் ஸரஸ்வதியின் கன்னத்தில் லேசாகத் தட்டி, "அடி பெண்ணே ! இன்னும் நீ குழந்தையா என்ன? வாயைத் திறக்காமல் தான் கொஞ்சம் இரேன். வாயும் கையும் 'பர பர’ வென்று ஏன் தான் இப்படி இருக்கிறாயோ?" என்று கடிந்து கொண்டே நாத்தனாரை வரவேற்கக் கூடத்துக்கு வந்தாள்.
வண்டியிலிருந்து இறங்கிய நாலைந்து தகர டப்பாக்கள், புடைவையில் கட்டப்பட்ட மூட்டை ஒன்று, - சிறிய பிரம்புப் பெட்டி இவைகள் புடைசூழ அலமு காலை நீட்டிக்கொண்டு கூடத்தில் உட்கார்ந்து சாவித்திரியும் - ரகுபதியும் கல்யாணத்தின் போட்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். நடையில் கதவுக்கு அருகில் சற்று ஒதுங்கி பயத்துடன் நின்றுகொண்டிருந்த ஒரு பெண்ணை அதுவரையில் யாரும் கவனிக்கவில்லை. அலமு அத்தை வண்டியிலிருந்து இறங்குவதைப் பார்த்ததுமேதான் ஸரஸ்வதி பின்கட்டுக்கு விஷயத்தை அறிவிக்க ஓடிவிட்டாளே? தயக்கத்துடன் அந்தப் பெண்ணைப் பார்த்து ஸரஸ்வதியும், ஸ்வர்ணமும், “உள்ளே வாயேன் அம்மா" என்று அழைத்தார்கள். அவர்கள் அழைத்ததைக் கேட்டவுடன் அலமு முகத்தைத் திருப்பி நடைப்பக்கம் பார்த்துவிட்டு, "இதென்னடி இது அதிசயம்? உள்ளே வாயேன் தங்கம். கல்யாணப் பெண் மாதிரி ஒளிந்து கொண்டு நிற்கிறாயே!" என்று அதட்டலுடன் அவளைக் கூப்பிட்டாள். பதினாறு பதினேழு வயது மதிக்கக்கூடிய அந்தப் பெண் பயந்து கொண்டே உள்ளே வந்து அத்தை அலமுவின் பக்கம் உட்கார்ந்து கொண் டாள். அலமு அத்தை சுவரில் மாட்டியிருந்த புகைப்படத்திலிருந்து கண்களை ஒரு சுழற்றுச் சுழற்றி ரகுபதியின் மனைவி எங்கே இருக்கிறாள் என்று அறிவதற்காகக் கூடத்தை ஒரு கோடியிலிருந்து மறு கோடிவரைக்கும் ஆராய்ந்தாள். சாவித்திரி புக்ககத்தில் கோபப்பட்டுக்கொண்டு பிறந்தகம் சென்றிருக்கிறாள் என்பதும் அவளுக்கு அரைகுறையாக எட்டியிருந்தது.
"உன் நாட்டுப்பெண்ணை எங்கே காணோம்?" என்று கேட்டுக்கொண்டே மூட்டை முடிச்சுகளைப் பிரித்து எடுக்க ஆரம்பித்தாள்.
"பிறந்தகத்துக்குப் போயிருக்கிறாள். எழுந்திருங்களேன்.. ஸ்நானம் செய்து சாப்பிடலாம்" என்று ஸ்வர்ணம் பேச்சை மாற்றி அவர்களை உள்ளே அழைத்துச் சென்றாள். ஸரஸ்வதியைத் தனியாகப் பார்த்து, "ஏண்டி அம்மா! நான் என்ன செய்வேன்? இந்தமாதிரி திடும் என்று வீட்டுச் சமாசாரங்களைத் துப்புத்துலக்க வந்துவிட்டாளே?"என்று கவலையுடன் கேட்டாள்.
"எல்லாம் தெரிந்து கொண்டுதான் வந்திருக்கிறாள் அத்தை. அந்தப் பெண் யாரென்பது உனக்குத் தெரியுமா? பரம சாதுவாக இருக்கும்போல் இருக்கிறதே!" என்று விசாரித்தாள் ஸரஸ்வதி.
"யரோ என்னவோ? அலமுவுக்கு உறவினர் ஆயிரம் பேர்கள் இருப்பார்கள்! எல்லோரையும் உறவு கொண்டாடுவது அவள் வழக்கம். இன்றைக்கு ஒருத்தர் நல்லவராக இருப்பார்கள். நாளைக்கே அவர்களைக் கண்டால் அலமுவுக்குப் பிடிக்காது. அது ஒருமாதிரி சுபாவம்" என்றாள் ஸ்வர்ணம்.
இதற்குள் ஊரிலிருந்து வந்தவர்கள் சாப்பாட்டை முடித்து விட்டு வெளியே வந்தார்கள். சாயம்போன பழைய சீட்டிப் புடைவையையும், பல இடங்களில் தைக்கப்பட்ட ரவிக்கையையும் தங்கம் உடுத்துயிருந்தாலும், பருவத்துக்கு ஏற்ற பூரிப்பு அவள் உடம்பில் பளிச்சிட்டது. பல வாசனைத் தைலங்களாலும், 'ஷாம்பூ' க்களாலும் அடைய முடியாத அடர்ந்த கூந்தலை அந்தப் பெண் பெற்றிருந்தாள். புளித்த பழைய அமுதும், ஓரொரு சமயங்களில் கேழ்வரகுக் கூழுமாகச் சாப்பிட்டதே அவள் கன்னங்களுக்குக் காஷ்மீரத்து ஆப்பிள் பழத்தின் நிறத்தை அளித்திருந்தன. சலியாத உழைப்பும், பரிசுத்தமான உள்ளமும் அவள் பெற்றிருந்ததால் கபடமற்ற முகலாவண்யத்தையும், வனப்பு மிகுந்த உடலமைப்பையும் பெற்றிருந்தாள்.
ஸரஸ்வதி அழகு தான். மேட்டூர் அணையில் தேக்கி சிறிது சிறிதாக வெளியே வரும் காவிரியின் கம்பீரமும் அழகும் ஸரஸ்வதியிடம் நிறைந்திருந்தன. 'தலைக்காட்'டில் உற்பத்தியாகிப் பிரவாகத்துடன் பொங்கிப் பூரித்துவரும் காவிரியைத் தங்கத்தின் அழகோடு ஒப்பிடலாம். காட்டு ரோஜாவிலிருந்து வீசும் ஒருவித நெடியைத் தங்கத்தின் அழகில் உணரமுடியும். பன்னீர் ரோஜாவின் இனிமையான சுகந்தத்தை ஸரஸ்வதியின்
அடக்கமான அழகு காட்டிக்கொண்டிருந்தது.
வைத்த விழி வாங்காமல் கதவைப் பிடித்துக்கொண்டு தன்னையே உற்று நோக்கும் ஸரஸ்வதியைத் தங்கம் பார்த்து விட்டு, பயத்தோடும், லஜ்ஜைரோடும் தலையைக் கவிழ்த்துக் கொண்டாள்.
"எதற்காக இந்தப் பெண் இப்படி என்னைப் பார்த்துப் பயப்படுகிறாள் அத்தை?" என்று ஸரஸ்வதி கேட்டுவிட்டு, "தங்கம்! இங்கே வந்து உட்கார் அம்மா. நாங்களும் உனக்குத் தெரிந்தவர்கள்தாம். பயப்படாமல் இப்படி வா" என்று அன்புடன் அழைத்தாள். அதற்குள் அலமு அத்தை ஸரஸ்வதி யைப் பார்த்து. "பயப்படவும் இல்லை, ஒன்றுமில்லை. நீ பெரிய பாடகி. கச்சேரியெல்லாம் பண்ணப்போகிறாயாம். உன்னைப் பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டாள். அழைத்துவந்தேன். கொஞ்சம் பழகிவிட்டால் 'லொட லொட' வென்று பேச ஆரம்பித்து விடுவாளே" என்றாள்.
'ஓஹோ! நான் கச்சேரி செய்யப்போவதைத் தெரிந்து கொண்டுதான் அலமு அத்தை வந்திருக்கிறாளோ!" என்று ஸரஸ்வதி மனத்துக்குள் வியந்து கொண்டே, ”அப்படியா?" என்று தன் மகிழ்ச்சியை அறிவித்துக்கொண்டாள்,
தங்கமும், ஸரஸ்வதியும் சில மணி நேரங்களில் மனம் விட்டுப் பழகிவிட்டார்கள். 'அக்கா, அக்கா' என்று அருமையாகத் தன்னைக் கூப்பிடும் அந்தப் பெண்ணிடம் ஸரஸ்வதிக்கு ஏதோ ஒருவிதப் பாசம் விழுந்துவிட்டது. வெளியே சென்றிருந்து திரும்பிய ரகுபதிக்கு முதலில் தன் அத்தையைப் பார்த்ததும் தூக்கி வாரிப்போட்டது.
"ஏண்டா இப்படி இளைத்துவிட்டாய் ரகு?" என்று உள்ளூற ஆதங்கத்துடன் தான் செய்து வந்த பொரிவிளாங்காய் உருண்டையையும், முறுக்கையும் தட்டில் வைத்துக் கொடுத்து விட்டு விசாரித்தாள் அலமு. வீட்டில் உருக்கிய நெய்யில் செய்த முறுக்கை ரசித்தபடியே ரகுபதி ஸரஸ்வதியுடன் உட்கார்ந்து பூத்தொடுக்கும் பெண்ணையும் கவனித்தான். சற்று முன் பழைய சீட்டிப் புடைவையைக் கட்டிக்கொண்டிருந்த தங்கம், இப்பொழுது அழகிய பூப்போட்ட வாயல் புடைவையை உடுத்திருந்தாள். "சீ. சீ, இது ஒன்றும் நன்றாக இல்லை. இந்தா, இதை உடுத்திக்கொள்" என்று ஆசையுடன் ஸரஸ்வதி கொடுத்த மருதாணிச் சிவப்பு வாயல் தங்கத்தின் தங்க நிற மேனிக்கு மிகவும் அழகாக இருந்தது.
'சரசர’ வென்று விரல்கள் மல்லிகையைத் தொடுப்பதில் முனைந்திருந்தன. சில நிமிஷங்களுக்குள் மல்லிகைச் சரம் தொடுத்துவிட்டாள். அதை அழகிய மாலையாக வளைத்துக் கட்டிவிட்டு அவள் நிமிர்ந்தபோது கூடத்தில் ஊஞ்சலில் உட்கார்ந்து தன்னையே கவனிக்கும் ரகுபதியின் கண்களைத் தங்கம் சந்தித்தாள்.
"ஸரஸ்வதியின் பாட்டைக் கேட்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அவளைப் பார்க்கவேண்டும் என்று விரும்பினாள். அவள் யாரென்று தெரிகிறதாடா உனக்கு? மறந்து போயிருப்பாய் நீ" என்று அலமு ஆரம்பித்து, "என் கல்யாணத்தின் போது உனக்கு ஆறு வயசு இருக்கும். நம் கிராமத்துக்கு வந்திருந்தாயேடா. தொட்டிலில் கிடந்த தங்கத்தைப் பார்த்து விட்டு, இந்தப் பாப்பா அழகாக இருக்கிறது அத்தை. அப்பா! எவ்வளவு பெரிய கண்கள் அத்தை. இந்தப் பாப்பாவை நான் எடுத்துக்கொண்டு போகிறேன் விளையாட" என்றெல்லாம் சொல்லுவாயே. தங்கத்தின் அப்பா- அதுதான் என் மைத்துனன்கூட வேடிக்கையாக, ”டேய் பயலே! உனக்கே அவளைக் கொடுக்கிறேண்டா" என்று சொல்லுவான். நீதான் புது சம்பந்தமாக எங்கேயோ போய்க் கல்யாணம் பண்ணிக்கொண்டு விட்டாய். ஸரஸ்வதியைவிட்டு நீ வேறு இடத்தில் பெண் தேடியதே எங்களுக்கு ஆச்சரியந்தான்!" என்று கூறி முடித்தாள்:
'கள்ளமற்ற பிள்ளைப் பருவத்தில் நான் சந்தித்த பெண்களை எல்லாம் மறந்துவிட்டு, சாவித்திரியை ஏன் மணந்துகொண்டேன்? ஏன்....?' என்று மெதுவாகத் தன் மனத்தையே கேட்டுக்கொண்டான் ரகுபதி.
-------------------
19. ' நந்தகோபாலனோடு நான்'
ஸரஸ்வதியின் இன்னிசைக் கச்சேரியின் அரங்கேற்றத்துடன் திறப்புவிழா இனிது முடிந்தது. சாவித்திரி வராமலேயே வைபவம் குறைவில்லாமல் நடந்துவிட்டது. அன்று காலைவரையில் தெருவில் போகிற வண்டியைப் பார்த்துப் பார்த்து அலுத்துப் போனாள் ஸ்வர்ணம்! ஊரில் தெரிந்தவர்கள் கேட்பதற்குப் பதில் சொல்லியே அவளுக்குச் சலித்துப்போய்விட்டது. முதல் நாள் அலமு, ஒன்றுக்குப் பத்தாகச் சொல்லிய செய்திகள் வேறு அவள் மனத்தை அரித்தன.
"நீதான் ஒருத்தருக்கும் ஒன்றும் தெரியாது என்று மூடி மூடி வைத்திருக்கிறாய். உன் நாட்டுப்பெண்ணின் பாட்டி இருக்கிறாளே, அவள், நாம் தான் அவள் பேத்தியைப் பாடாய்ப் படுத்தி வைக்கிறோம் என்று தம்பட்டம் அடித்து வருகிறாள். அதற்கு என்ன பண்ணப்போகிறாய் மன்னீ?" என்று அலமு ஆத்திரத்தைக் கிளப்பிவிட்டாள்.
ஸ்வர்ணத்துக்கு வியப்பும், கோபமும் ஒருங்கே ஏற்பட்டன. 'புருஷனுக்கும், மனைவிக்கும் ஏதோ சில்லறை மனஸ்தாபத்தால் பிறந்தகம் போயிருக்கும் பெண் கிளப்பிவிட்டிருக்கும் வதந்தி எவ்வளவு அபாண்டமாக இருக்கிறது? சாவித்திரியிடம் நான் எவ்வளவு அன்புடன் இருந்தேன்? இரண்டு வேளைகளிலும் தலை வாரிப் பின்னிப் பூச் சூட்டுகிறதும், பரிந்து பரிந்து சாதம் போடுகிறதுமாக இருந்தவளையே எப்படித் தூற்றிவிட்டாள் பார்த்தாயா?' என்று நினைத்து நினைத்து வருந்தினாள்
ஸ்வர்ணம்,
"என்ன அம்மா அப்படியே அசந்து நின்றுவிட்டாய்? சொல்லிவிட்டுப் போகட்டும் போ" என்று ரகுபதி தாய்க்கு ஆறுதல் கூறினான்.
தங்கமும், ஸரஸ்வதியும் விழாவில் குதூகலத்துடன் பங்கெடுத்துக்கொண்டார்கள். . எப்படிக் கூப்பிடுவது? என்ன உறவு என்று சொல்வது என்று கவனியாமல் தங்கம், ஸரஸ்வதி அழைப்பது போல், "அத்தான்!" என்று ஆசையுடன் ரகுபதியை அழைத்து ஓடி ஓடி வேலைகளைச் செய்தாள்.
" உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள். இதோ ஒரு நிமிஷத்தில் தயார்!" என்று சிரித்துக்கொண்டே பேசி அவன் மனத்தைக் கவர்ந்துவிட்டாள் தங்கம். ”உனக்குப் பாடத் தெரியுமா?" என்று ரகுபதி அவளை விளையாட்டாகக் கேட்டபோது. "ஓ!" என்று தலையை ஆட்டினாள் தங்கம். "பாடுவேன். ஆனால், ஸரஸு அக்கா மாதிரி தாளம் கீளம் போட்டுக்கொண்டு சுத்தமாகப் பாடத் தெரியாது. கிராமத்துக்கு வரும் சினிமாவிலிருந்து எவ்வளவு பாட்டுகள் கற்றுக்கொண்டிருக்கிறேன் தெரியுமா? மாட்டிற்குத் தீனி வைக்கும் போது பாடுவேன். கோலம் போடும் போது பாடுவேன்; ஸ்வாமிக்கு மலர் தொடுக்கும்போது பாடுவேன்; கிணற்றில் ஜலம் இழுக்கும்போது பாடுவேன்; மாடு கறக்கும் போதும், தயிர் கடையும்போதும் பாடுவேன். என் பாட்டைக் கேட்டு ரசிப்பவர்கள் மேற்கூறியவர்கள்தாம், அத்தான்! நான் பாடுவதைக் கேட்டுப் பசு மெய்ம்மறந்து கன்றை நக்குவதற்குப் பதிலாக என் முகத்தையே பார்த்துக் கொண்டு
நிற்கும். ”
கிண்கிணியின் நாதம்போல் படபட வென்று தங்கம் பேசிக் கொண்டு போனாள்.
"சரி, அப்படியானால் ஸரஸ்வதியிடம் நாளைக்குள் கடவுள் வாழ்த்துப் பாடுவதற்கு ஏதாவது பாட்டு கற்றுக்கொள்'. நாளைக்கு நீதான் பாடவேண்டும்" என்றான் ரகுபதி திடீரென்று.
"ஆ...." என்று வாயை ஆச்சரியத்துடன் திறந்தாள் தங்கம்.
'ஏறக்குறைய ஆயிரம் பேர்களுக்கு எதிரில் தான் பாடுவதா? ஐயோ! தொண்டை எழும்பவே எழும்பாதே. எனக்கு. பாடத் தெரியும் என்று இவரிடம் சொன்னதே ஆபத்தாக முடிந்துவிட்டதே' என்று பயந்து கொண்டே தயங்கினாள் தங்கம். ஆகவே, சிறிது அச்சத்துடன் ரகுபதியைப் பார்த்து, “முதலிலேயே பெரிய பரீக்ஷை வைத்துவிட்டீர்களே! யாரும் இல்லாத இடத்தில் என்னவோ வாய்க்கு வந்ததைப் பாடுவேன் என்று சொன்னால், விழாவுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடு என்கிறீர்களே அத்தான். நன்றாக இருக்கிறதே!" என்று கன்னத்தில் வலது கையை ஊன்றிக் கண்களைச் சிமிட்டிக் கொண்டே கூறினாள்.
"மனம் போனபடி பாடுபவர்களுக்குத்தான் தைரியம் உண்டு. விழா மண்டபத்தைக் கிராமத்தின் மாட்டுத் தொழுவமாக நினைத்துக்கொண்டுவிட்டால் ஆயிற்று. எல்லாவற்றிற்கும் மனம் தானே காரணம், தங்கம்? அரண்மனையையும், குடிசையையும் சமமாகப் பாவிக்கும் மகான்கள் பிறந்த சத்தில் கொஞ்ச மாவது நாம் சமதிருஷ்டியோடு இருக்கவேண்டாமா? ஏதோ ஒரு பாட்டுப் பாடு பார்க்கலாம். பிறகு சொல்கிறேன், உனக்குப் பாட வருமா, வரதா என்று?” என்றான் ரகுபதி. சிறுது பொழுது தங்கம் தரையைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். பிறகு மெதுவான குரலில், 'நந்தகோபாலனோடு நான் ஆடுவேன்' என்கிற பாட்டை பல பிழைகளுடன் பாட ஆரம்பித்தாள். பிழைகள் மலிந்திருந்தபோதிலும், அவள் பாட்டில் உருக்கம் இருந்தது. அவள் மனத்தில் கண்ணனின் உருவம் நிறைந்திருப்பதும் அவள் அதை அனுபவித்துப் பாடுகிறாள் என்பதும் புரிந்தது. அவளுடைய அகன்ற விழிகளிலிருந்து தானர தாரையாகக் கண்ணீர் பெருகியது. உடனே உதடுகள் படபடவென்று துடித்தன. மெல்ல மெல்ல பாட்டின் ஒலி அடங்கிவிட்டது. விம்மலின் ஒலிதான் அதிகமாயிற்று. தங்கம் இரண்டு கைகளாலும் கண்களைப் பொத்திக்கொண்டு தேம்பினாள்.
ரகுபதி திடுக்கிட்டான். சற்றுமுன் சிரிப்பும், கேலியுமாகப் பேசிக் கொண்டிருந்தவளுக்குத் திடீரென்று என்ன வந்துவிட்டது என்று நினைத்து வாஞ்சையுடன் அவள் தலையை வருடி, "தங்கம்! இதென்ன அம்மா! ஏன் அழுகிறாய்? உன்னை யாராவது ஏதாவது சொன்னார்களா?" என்று கேட்டான்.
தங்கம் மெதுவாக 'இல்லை' என்று தலையசைத்தாள். பிறகு அழுகையின் நடுவில் சிரித்துக்கொண்டே, "நான் பாடியது நன்றாக இருக்கிறதா அத்தான்? என் குரல் நன்றாக இருக்கிறதா?" என்று கேட்டாள். அழுகையின் நடுவில் பளிச்சென்று தன் முத்துப்போன்ற பற்கள் தெரிய நகைக்கும் அந்தப் பெண்ணின் முகவிலாசத்தை உற்றுக் கவனித்தான் ரகுபதி. வானவெளியில் சஞ்சரிக்கும் கார்மேகத்தைக் கிழித்துக்கொண்டு
களை சுடர் விட்டது.
"நீ நன்றாகப் பாடுகிறாய். உன் குரலும் இனிமையாக இருக்கிறது. ஸரஸ்வதியிடம் கொஞ்சகாலம் சங்கீதம் பயின்றால் பேஷாகப் பாடலாமே. ஆமாம்.... நீ ஏன் அழுதாய்?" என்று திரும்பவும் கேட்டான் ரகுபதி.
அவள் மிருந்த சங்கோஜத்துடன் அவனைப் பார்த்து, "ஒரொரு சமயம் என்னைப்-பற்றியே எனக்குப் பலத்த சந்தேகம் வந்துவிடுகிறது. ஒரு வேளை என்னைத்தான் பிடிக்கவில்லையோ என்று நினைக்கிறேன். என்னைக் கல்யாணம் செய்து கொள்ள அதற்காகப் பெண் பார்க்க எங்கள் வீட்டுக்கு இதுவரையில் ஏழெட்டுப் பேர்கள் வந்தார்கள். அம்மா கடன் வாங்கியாவது பஜ்ஜியும், ஸொஜ்ஜியும் செய்துவைப்பாள். வருகிறவர்கள் முதலில் நாங்கள் வசிக்கும் ஓட்டு வீட்டைப் பார்ப்பார்கள். பிறகு எங்கள் வீட்டில் புழங்கும் சாமான்களின் தராதரத்தை மதிப்பிடுவார்கள். அப்புறம் என்னைப் பாடச் சொல்லுவார்கள். இவ்வளவையும் செய்துவிட்டுப் பெண்ணைப் பிடித்திருக்கிறது; பணங்காசுதான் குறைவு' என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். எப்படியோ ஆயிரம் ரூபாய் செலவழித்து ஒரு நாள் கல்யாணம் பண்ணிவிடுவாள், அம்மா. ஆனால் அவர்கள் கேட்கும் வெள்ளிப் பாத்திரங்களும், சீர் வரிசைகளுந்தான் அம்மாவைப் பயமுறுத்துகின்றன அத்தான்!"
’இருக்கிறவர்கள் தாராளமாகக் கொடுக்கட்டும். வாங்கு பவர்கள் தாராளமாக வாங்கிக்கொள்ளட்டும். ஆனால், பணத்தையும், தங்கத்தையும் ஒப்பிட்டு மதிப்புப் போடுவது சுத்தப் பைத்தியக்காரத்தனம்' என்று ரகுபதி நினைத்தான். "அழகில் சிறந்தவளாகக் குடித்தனப் பாங்குடன் இருக்கும் ஒரு பெண்ணை இந்தச் சமூகம் பணத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கிறதென்றால் சமூகம் சீர்திருந்திவிட்டது என்று கூறமுடியுமா? பாரதி பாடல்களைப் பாடும் வாலிபர்கள் மனம்தான் சீர்திருத்தி இருக்கிறதென்று சொல்லமுடியுமா?'
முகவாயில் கையை ஊன்றி யோசனையில் ஆழ்ந்திருந்த ரகுபதிக்கு முன்னால் ஸரஸ்வதி வந்து, "அத்தான்! நாளைக்குக் கடவுள் வாழ்த்து யார் பாடுகிறது?" என்று கேட்டாள்.
'தங்கத்துக்கு ஏதாவது சிறிய பாட்டாகக் கற்றுக் கொடு ஸரஸு. அவள் அழகாகப் பாடுகிறாள். நீ இதுவரையில் கேட்கவில்லையே. பாவம்-" என்றான் ரகுபதி. ஸரஸ்வதி
கொண்டு. 'அப்படியா தங்கம்? ஆனால் வா போகலாம்" என்று அவள் கைகளைப் பற்றி அழைத்துப்போனாள்.
----------
20. 'தை பிறந்தால் வழி பிறக்காதா?
ஏறக்குறைய ஆயிரம் பேர்களுக்குமேல் கூடியிருந்த அந்த மண்டபத்தில் சபைக் கூச்சம் எதுவும் ஏற்படாமல் தங்கம்: 'கணி' ரென்று பாடினாள். அவளுக்குத் துணையாக ஸரஸ்வதியும் மெதுவான குரலில் பாடவே அவளுக்கு அச்சம் எதுவும் ஏற்படவில்லை. தந்தப் பதுமைபோல் நின்று அவள் பாடிய அழகே அங்கு, வந்திருந்தவர்களின் மனத்தை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. ஸரஸ்வதி வருஷக்கணக்கில் சங்கீதம் பயின்றவள். அவள் முதல் கச்சேரியே மிகவும் தரமாக அமைந்துவிட்டது. அன்று அவள் பாடிய சங்கராபரணமும், தோடியும் வெகு நேரம் வரை எல்லோர் காதுகளிலும் ரீங்காரம் செய்துகொண்டிருந்தன. பேருக்கும் புகழுக்கும் ஆசைப்படாமல் எங்கும் நிறைந்த பரப்பிரும்மத்தை நாத ரூபமாக வணங்கினாள் ஸரஸ்வதி.
ரகுபதிக்கு அன்று, தான் விழாவில் கலந்து கொண்டிருக்கும் உணர்ச்சியே ஏற்படவில்லை. கானவெள்ளத்தில் : எல்லோரையும் இழுத்துச் செல்லும் ஸரஸ்வதியும், தன்னடக்கமாக அவன் வார்த்தைக்கு மதிப்பு வைத்து ஒரு நாளைக்குள் சிறிய பாட்டைப் பாடம் செய்து கச்சிதமாகப் பாடிய தங்கமும் மாறி மாறி அவன் அகக் கண்முன்பு தட்டாமாலை ஆடினர். குழந்தைப் பருவத்திலிருந்து பார்த்த ஸரஸ்வதியாக அன்று அவள் அவன் கண்களுக்குத் தோன்றவில்லை. ஒரே சமயத்தில் ஆயிரம் நாவுகளின் புகழுக்குப் பாத்திரமாகிவிட்டாள் அல்லவா? அவள் இனிமேல் சாதாரண விஷயங்களில் மனதைச் செலுத்தவும் மாட்டாள். தங்கம் அப்படியில்லை. வாழ்க்கையில் தனக்கு இனியனாக ஒருவன் கிடைக்க மாட்டானா என்று ஏங்கி நிற்பவள். பாட்டும், கதையும் தெரிந்து கொண்டிருந்தாலாவது கல்யாண 'மார்க்கெட்’டில் விலை பெறுவோமா என்று காத்திருப்பவள். அவளை முன்பாகவே சாவித்திரியைக் கல்யாணம் பண்ணிக்கொள்வதற்கு முன்பாகவே பார்த்திருந்தால் தங்கத்தையே மணந்திருக்கலாம்.
"தங்கம்! என் துணிகளைத் துவைத்து வை" என்று உத்தரவு இடலாம். அதை அவள் சிரமேற்கொன்டு செய்து முடிப்பாள். "தங்கம்; ஏதோ உனக்குத் தெரிந்த பாட்டு இரண்டு பாடு மனசு என்னவோபோல் இருக்கிறது" என்றால் ஏதோ பாடியும் வைப்பாள். கலகலவென்று சிரிப்பாள். கோபம் வந்தாலும் உடனே தீர்ந்துவிடும். இப்பொழுது? அது தான் ஆங்கிலத்தில் சொல்லுகிறார்களே, ” அவசரமாக மணமுடித்து, சாவதானமாக யோசிப்பது" என்று. அந்த நிலைக்கு ஏறக்குறைய ரகுபதியின் நிலை வந்துவிட்டது.
விழாவில் நண்பர்கள் அவனைக் கேலி செய்தார்கள்.
"என்ன அப்பா! மனவியை இந்த மாதிரி சமயத்தில் ஊருக்கு அனுப்பிவிட்டாய். சகதர்மிணியோடு சேர்ந்து செய்கிற காரியத்துக்கே பலன் அதிகம் என்று சொல்லுவார்களே" என்று கேட்டு அவன் மனத்தைப் புண்ணாக்கினார்கள்.
" வேறு ஏதாவது விசேஷமோ?" என்று நண்பர் ஒருவர் குறும்புச் சிரிப்புடன் அவனைக் கேட்டார்.
"மாஸ்டர் ரகுபதி வரப்போகிறான் போலிருக்கிறது. விசேஷம் இருக்கிறது ஸார்!" என்றார் இன்னொருவர்.
"அதெல்லாம் ஒன்றுமில்லையப்பா" என்று மேலுக்குச் சிரித்து மழுப்பினான் ரகுபதி.
மேலும் அங்கு உட்கார்ந்திருந்தால் பேச்சை வளர்த்துவார்கள் என்று தோன்றியதால் வெளியே சென்றுவிட்டான் அவன். மறுபடியும் அவன் வீட்டுக்கு வந்தபோது தங்கமும், எரஸ்வதியும் கூடத்தில் உட்கார்ந்திருந்தார்கள். அலமு அத்தை தன் கையில் நாலைந்து மிளகாயையும், உப்பையும் வைத்து அவர்கள் இருவருக்கும் சுழற்றி உள்ளே எரியும் அடுப்பில் போட்டாள். திருஷ்டி தோஷம் ஏற்பட்டுவிடுமாம்!
”கட்டாயம் சுற்றிப்போடு அத்தை, என் கண்ணே பட்டு விடுமோ என்று பயந்து கொண்டிருந்தேன். 'சாதாரணமாகத்தான் பாடுவேன்' என்று சொல்லிவிட்டு ஜமாய்த்துத் தள்ளி நட்டாளே தங்கம்!" என்று தன் அதிசயத்தையும், சந்தோஷத்தையும் வெளியிட்டான் ரகுபதி.
"அவளுக்கு என்ன தெரியாது என்று நினைக்கிறாய்? பத்துப் பேர்களுக்குப் பேஷாகச் சமைத்துவிடுவாள். மணி மணியாகக் கோலங்கள் போடுவாள். வயலிலே போய்க் கதிரடிக்கச் சொல்; சேலைத் தலைப்பை வரிந்து கட்டிக்கொண்டு குடியானப் பெண் சருடன் கதிரடிப்பாள், குளத்திலே முழுகி நீச்சலடிப்பாள். ஆனால், அவளுக்கு ஆங்கிலம் படிக்க வராது. உடம்பு தெரிய இருளும் ஒளியும் உடைகள் உடுத்திக்கொண்டு உதட்டுக்குச் சாயம் பூசிக் கொள்ளத் தெரியாது" என்று அலமு ஆரம்பித்துவிட்டாள்.
"ஓஹோ !" என்றான் ரகுபதி. "உனக்கு நீந்தத் தெரியுமா? பலே! நான் கிராமத்துக்கு வந்தால் எனக்கு நீச்சல் கற்றுக் கொடுப்பாயா தங்கம்?" என்று கேட்டான் ரகுபதி.
"போங்கள் அத்தான்! இந்தப் பெரியம்மாவுக்கு என்ன வேலை? எதையாவது சொல்லிக்கொண்டு இருப்பாள்!" என்று சிரித்துக்கொண்டே தங்கம் ஓடி மறைந்து விட்டாள்.
ஸரஸ்வதி ரகுபதியைப் பார்த்து, " என்ன அத்தான்! --கிராம யாத்திரை ஏதாவது போவதாக யோசனையோ?" என்று கேட்டாள்.
“வரட்டுமே இங்கே உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறானாம்? பெண்டாட்டிதான் கோபித்துக்கொண்டு ஊரிலே போய் உட்கார்ந்திருக்கிறாள். இவன் போய் அவளை வேண்டி அழைத்துவர வேண்டுமாக்கும்! நன்றாக இருக்கிறது ஸ்திரீ சுதந்தரம்?" என்று அலமு சற்று இரைந்து கோபத்துடன் கூறினாள்.
"அப்பொழுது தங்கத்தையும் உங்களோடு அழைத்துட் போய் விடுவீர்களா என்ன?" என்று கேட்டாள் ஸரஸ்வதி.
"ஆமாம். அவள் இங்கே எதற்காக இருக்க வேண்டும்? உன்னைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள், அழைத்து வந்தேன்" என்றாள் அலமு.
சாவித்திரி புக்ககத்துக்கு வந்தாள். வந்து இரண்டு மூன்று மாதங்களுக்குள் ஊருக்குப் போய்விட்டாள். மறுபடியும் ஸரஸ்வதியின் வாழ்க்கை தனியாகவே கழிந்தது. திடீரென்று தங்கம் வந்தாள், பெயரைப்போல் ஒளியை வீசிக்கொண்டு! சாவித்திரியைப்போல் இல்லாமல் கபடமற்றுப் பழகினாள். ஸரஸ்வதியுடன் பாடினாள். "ஸரஸு அக்கா!" என்று சகோதர பாவம் கொண்டாடி அருமையாக அழைத்தாள்! ஸரஸ்வதியின் மனத்தில் இடமும் பிடித்துக்கொண்டாள். பத்தரைமாற்றுப் பசும் பொன்னை உருக்கி வளைப்பது போல் தங்கத்தைப் பலவிதங்களிலும் சீர்திருத்தி சமூகத்தில் உயர்ந்தவளாகச் செய்ய முடி.யும் என்று ஸரஸ்வதி கருதினாள். அவளிடம் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்குக் கொண்டுவரமுடியும் என்று நினைத்தாள்,
ஆனால் தங்கம் ஊருக்குப் போகப்போகிறாள். கிராமத்திலே இருண்ட ஓட்டு வீட்டின் மூலையில் ’மினுக் மினுக்' கென்று எரியும் அகல் விளக்கைப்போல் அவளும் கிராமத்திலே இருண்ட வீட்டில் மங்கிய வெளிச்சத்தைப் பரப்பிக்கொண்டு இருப்பாள். இந்தப் பெண்-சமூகத்தில் எல்லா நலங்களையும் பெற்று வாழ வேண்டிய தங்கம் - யாராவது ஒரு வயோதிகனுக்கோ, வியாதிக் காரனுக்கோ, தன் கழுத்தை நீட்டி, விவாகம் என்கிற பந்தத்தைப் பிணைத்துக் கொள்ளாமல் - இருக்கவேண்டுமே! அரும்பு வெடித்து மலர்வதற்கு முன்பே கசக்கி எறியப்படாமல் இருக்க வேண்டுமே! அப்படி - அவளைக் காப்பாற்ற யார் வரப் போகிறார்கள்?
ஸரஸ்வதியின் மென்மையான மனம் புண்ணாக வலித்தது. 'இன்று அவள் அந்த வீட்டுக் கூடத்தில் கண்ட தங்கத்தைப் போல் தமிழ் நாட்டில் ஆயிரம் ஆயிரம் 'தங்கங்கள்’ அவதிப்படுகிறார்கள். ஏழைப் பெண்கள் என்கிற காரணத்தினால் நசுக்கப் படுகிறார்கள் என்பதை நினைத்தபோது, ஏனோ அவள் மனத்தை ஆயிரம் ஊசிகளால் குத்தும் வேதனையை அடைந்தாள். மனத்தில் குமுறும் வேதனையுடன் ஸரஸ்வதி அங்கிருந்து சென்று தங்கம் உட்கார்ந்திருக்கும் இடத்துக்கு வந்தாள். அவள் கரங்களைப் பற்றிச் சேர்த்துத் தன் கைகளில் பிணைத்துக்கொண்டு, "தங்கம்! நீ ஊருக்குப் போகிறாயாமே தங்கம்? ஏன், உனக்கு இந்த ஊர் பிடிக்கவில்லையா என்ன?" என்று கேட்டாள்.
தங்கத்தின் கண்களிலும் கண்ணீர் தளும்பி நின்றது.
"பிடிக்காமல் என்ன அக்கா? இருந்தாலும், எத்தனை நாளைக்கு நான் இங்கே இருக்க முடியும்? தை பிறந்தால் எனக்கும் ஒரு வழி பிறக்காதா என்று ஏங்கிக் காத்திருக்க வேண்டாமா நான்? அத்துடன், என் ஊரில் எனக்கு ஏற்படும் இன்பம் மற்ற இடங்களில் ஏற்படுவதில்லை அக்கா. 'தங்கம்மா' என்று கபடமில்லாமல் அழைக்கும் அந்தக் கிராமவாசிகளின் அன்பை எனக்கு இங்கே காணமுடியவில்லை. இங்கேயும் உன் னைத் தேடி அநேகம் பெண்கள் வருகிறார்கள். உன்னுடைய அருமைத் தோழிகள் என்று சொல்லிக்கொள்கிறாய். ஆனால், அவர்கள் பகட்டாகப் பேசுகிறார்கள். மனம் விட்டு நீங்கள் எதுவும் பேசுவதில்லை. அன்று ஒரு பெண்ணைப் பார்த்து நீ கேட்டாயே, ' உன் கணவரிடமிருந்து கடிதம் வந்திருக்கிறதா? சௌக்யமாக இருக்கிறாரா?' என்று. அதற்கு அவள் ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டுத் தலையை மட்டும் ஆட்டிவிட்டாள். எங்கள் ஊரிலேயானால் கொள்ளை விஷயங்களைச் சொல்லி விடுவாளே அந்த மாதிரி ஒரு பெண்! உள்ளத்து உணர்ச்சிகளை வெளியிடுவதை அநாகரிகமாகக் கருதுகிறார்களோ என்னவோ உன் தோழிகள்!
"தங்கம்! நீ ரொம்பவும் புத்திசாலி. சேற்றிலே மலரும் தாமரையைப்போல உன்னை நினைக்கிறேன் தங்கம். ஏதாவது அசட்டுப் பிசட்டென்று பயந்து கொண்டு செய்துவிடாதே. உனக்குப் பிடிக்காதவரை மணந்து கொள்ளாதே. தெரியுமா?"
என்று விரலை ஆட்டிக் கண்டிப்புடன் எச்சரித்தாள் ஸரஸ்வதி.
----------------------
21. குமுறும் ஹிருதயம்
தபால் இலாகாவினருக்குச் சிரமம் வைக்காமல் செய்திகள் மின்னல் வேகத்தில் சாவித்திரியின் ஊருக்கு எட்டின. சாவித்திரிக்குப் பழைய சலுகைகள் அவ்வளவாக இப்பொழுது பிறந்த வீட்டில் இல்லை. கல்யாணத்துக்கு முன்பு தன்னோடு ஒட்டிக் கொண்டு, தான் கோபம் அடைந்தாலும் பாராட்டாத சீதா இப்பொழுது வேற்று மனுஷியாகக் காட்சி அளித்தாள். அவளுக்கு மட்டற்ற வேலைகள் கிடந்தன. ஹிந்தி வகுப்புக்குப் போக வேண்டும். பிறகு சங்கீதம் பயிலவேண்டும்; கலாசாலைக்குப் போக வேண்டும்; வீட்டில் அம்மாவுக்கு உதவியாக ஏதாவது செய்து முடித்தாக வேண்டும். சகோதரியிடம் மனம்விட்டுப் பேச என்ன இருக்கிறது? சாவித்திரியைவிட நான்கைந்து வயது சிறியவளான சீதா ஏன் அப்படி ஒதுங்கிச் செல்கிறாள்? சந்துரு, சாவித்திரியுடன் அதிகம் பேசுவதேயில்லை. ஆதியிலிருந்தே இருவருக்கும் ஒத்துக்கொள்கிறதில்லை. இருவரும் எதையாவது குறித்துத் தர்க்கம் செய்ய ஆரம்பித்தார்களானால் மணிக்கணக்கில் ஓயமாட்டார்கள்.
இதனிடையில் பாட்டி, தினம் தினம் ஏதாவது ஒரு புதுச் செய்தியைக் கொணர்ந்து தெரிவிப்பாள்.
"ஏண்டி! என்னவோ விழா நடத்தினானாமே உன் ஆம்படையான்? அமர்க்களப் பட்டதாம். அவள் இருக்கிறாளே ஒருத்தி, ஸரஸ்வதியோ, லக்ஷ்மியோ? பாட்டுக் கச்சேரி செய்தாளாம்! திறந்த வாய் மூடாமல் உன் கணவன் அவள் எதிரில் உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருந்தானாம். போதாக்குறைக்கு ஊரிலே யிருந்து ஒரு பெண் வந்திருந்ததாம். நேற்று அங்கிருந்து வந்த கோபு வீட்டு ராமு என்னிடம் சொன்னான். உன் அம்மா காதில் விழுந்தால் சண்டைக்கு வருவாள். என்னாலேயே நீ கெட்டுப் போய் விட்டாயாம். அவள் தான் அதை வாய்க்கு வாய் சொல்லுகிறாளே” என்று பாட்டி யாரும் அருகில் இராத சமயம் பார்த்துச் சாவித்திரியிடம் தெரிவித்தாள்.
அன்று காலைப் பத்திரிகையில் வெளியாகி இருந்த செய்தியும் அதுவேதான். விழாவில் ஸரஸ்வதி கச்சேரி செய்யும் புகைப் படம், பிரமாதமாக வெளியாகி இருந்தது. ஒலிபெருக்கியின் முன்பு புதுப் பெண் ஒருத்தி நின்று தன் பவளவாய் திறந்து பாடிக்கொண்டிருந்தாள். ரகுபதி தலைவரைக் கைகூப்பி வணங்கி அழைத்துவரும் காட்சி மற்றொரு பக்கத்தில் வெளியாகி இருந்தது. சாவித்திரி, படங்களையே கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தபோது தான் பாட்டி வந்து மேற்கூறிய விதம் தெரிவித்தாள். பத்திரிகையில், நடந்தது நடந்தபடி வெளியாகி இருந்தது. அத்துடன் கூட்டியோ குறைத்தோ செய்திகளை வெளியிடும் சாமர்த்தியம் அதைக் கவனித்த நிருபருக்கு இல்லை! ஆனால், பாட்டிக்கு அந்தச் சாமர்த்தியம் அபாரமாக அமைந்திருந்தது. திறந்த வாய் மூடாமல் பாட்டை ரகுபதி ரஸித்தான் என்று கூறினாள். மனம் சரியில்லாமல் ரகுபதி விழா மண்டபத்துக்குள்ளே பெரும்பாலும் நிற்கவில்லை. இடையிடையே ஸரஸ்வதி அபூர்வ சங்கதிகளைப் பாடும் போதோ, ஆலாபனம் செய்யும்போதோதான் அவன் சற்று நின்று அவைகளை ரஸித்தான். பாதிக் கச்சேரியில், மனக் கோளாறினால் ஏற்பட்ட அயர்வைத் தாங்காமல் காரியதரிசி யிடம் பொறுப்பை விட்டுவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டான். ஒன்றுக்குப் பத்தாகப் பேசுவது சிலருடைய இயல்பு. கண்ணால் கண்டதை வெளியிடவே சிலர் தயங்குவார்கள்.
பொங்கிவரும் அழுகையைச் சமாளிக்க முடியாமல் சிறிது நேரம் திகைத்துப்போய்க் கண்களில் பெருகும் நீருடன் உட்கார்ந்திருந்தாள் சாவித்திரி. ஒரு க்ஷணம் அவளுக்கு கணவனிடம் கோபித்துக்கொண்டு வந்ததே தவறோ என்று கூடத் தோன்றியது. 'தவறு என்ன? நான் அங்கே இருக்க வேண்டும் என்று யார் அழுதார்கள்?' என்று சற்று உரக்க வாய்விட்டுப் பேசிக்கொண்டாள்.
"என்ன சொல்லிக் கொள்கிறாயடி அம்மா?" என்று கேட்டுக் கொண்டே பேத்தியின் அருகில் வந்து நின்று அவள் முகத்தை உற்றுக் கவனித்தாள் பாட்டி. பிறகு, "நன்றாக இருக்கிறதே நீ இப்படி மாலை மாலையாகக் கண்ணீர் வடிக்கிறது? இப்படி அழுதால் உடம்புக்கு ஆகுமாடி சாவித்திரி? அசடுதான் போ" என்று கூறினாள்.
இவர்கள் இருவரின் பேச்சையும் சற்றுத் தொலைவில் மேஜை அருகில் உட்கார்ந்து காலேஜ் பாடங்களை எழுதிக்கொண்டிருந்த சீதா கவனித்தாள். பாட்டியின் அநுதாபத்தைக் கண்டதும் அவளுக்குக் கோபம் பற்றி எரிந்தது. ’இல்லாததையும், பொல்லாததையும் வந்து சொல்லிவிட்டு இப்பொழுது என்ன இழையல் வேண்டி யிருக்கிறது' என்றுதான் சீதா கோபம் அடைந்தாள். ஆகவே, அவள் சாவித்திரியைச் சிரிக்க வைப்பதற்காகப் பாட்டியைப் பார்த்து. "ஏன் பாட்டி! பாட்டைக் காதால்தான் கேட்பார்கள். அத்திம்பேர் திறந்த வாய் மூடாமல் எப்படிப் பாட்டைக் கேட்க முடியும்?" என்று குறும்புச் சிரிப்புடன் கேட்டாள்.
"அடி அம்மா! நீ இங்கே இருக்கிறதை நான் பார்க்கவே இல்லையே. ஒன்றும் பாதியுமாகப் போய் உன் அம்மாவிடமும், அண்ணாவிடமும் கலகம் பண்ணி வைக்காதே. நான்பாட்டுக்கு எங்கேயோ விழுந்து கிடக்கிறேன். நீ சண்டையைக் கிளப்பி விடாதேடி அம்மா. உனக்குப் புண்யம் உண்டு!" என்று பாட்டி சீதாவைப் பார்த்து.
"ஆமாம். . . . . . ஆமாம். . . . . .பாட்டி, இதையெல்லலாம் நேரில் போய்ப் பார்த்துவிட்டு வந்திருக்கிறாள்! அதான் இவ்வளவு வக்கணையாகச் சொல்கிறாள். அதைக் கேட்டுவிட்டு நீயும் அழுகிறாய்!" என்று சாவித்திரியைக் கேலியாகப் பார்த்துக் கொண்டு கூறினாள் சீதா.
"ஆமாமடி பாட்டி ரெயிலேறிப்போய் இதெல்லாம் பார்த்துவிட்டு வருகிறாள்! வேறு வேலையே இல்லை பார் அவளுக்கு? உன் அத்திம்பேர் விஷயந்தான் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறதே...”
சீதாவுக்கு அங்கே பேசிக் கொண்டு நிற்கப் பொழுதில்லை. காலேஜுக்கு நேரமாகி விட்டதால் அவள் புறப்பட்டுவிட்டாள்.
சீதா காலேஜுக்குப் போன பிறகு, ஊர் வம்புகளை ஒப்பிக்கும் வழக்கமான வேலையைப் பாட்டி நிர்ப்பயமாக நடத்தினாள். அவள், சாவித்திரியின் அருகில் வந்து, நேற்று கோவிலுக்குப் போயிருந்தேன். ராமுவைப் பார்த்தேன். அவன் உன்னைப் பற்றி விசாரித்தான். ”ஆமாண்டா அப்பா! சாவித்திரி இங்கே தான் இருக்கிறாள். அவளைக் கொண்டுவந்து விடும்படி சம்பந்தி வீட்டார் ஒரு வரிகூட எழுதவில்லையே. நீ அந்தப் பக்கம் போயிருந்தாயோ?" என்று கேட்டேன். 'போயிருந்தேன் பாட்டி! அவர்கள் வீட்டிற்குப் போக வேண்டும் என்று நான் கிளம்பவில்லை. தற்செயலாக வழியிலேயே மாப்பிள்ளைப் பையனைச் சந்தித்தேன். 'ஏண்டா அப்பா! நீ செய்கிறது நன்றாக இருக்கிறதா?' என்று கேட்போம் என்று பார்த்தால் அங்கே ஏகப்பட்ட அமர்க்களம். அவன் தான் திறந்த வாய் மூடாமல் பாட்டைக் கேட்டுக்கொண்டு இருக்கிறானே. அவனை என்னத்தைக் கேட்கிறது?' என்று ராமு சொன்னான். அவன் பொய்யா சொல்லப் போகிறான்?"
"சரி, சரி, போதும். இனிமேல் நீ யாரிடமும் எதையும் விசாரிக்க வேண்டாம். நடக்கிறபடி நடக்கட்டும் போ" என்று அலுப்புடன் கூறிவிட்டுச் சாவித்திரி அங்கிருந்து எழுந்து விட்டாள். எழுந்தவள் நேராகத் தன் அறைக்குச் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டு காகிதத்தையும், பேனாவையும் எடுத்தாள். மளமளவென்று கணவனுக்குக் கடிதம் எழுத ஆரம்பித்தாள். கோபத்தாலும், ஆங்காரத்தாலும் அவள் கைகள் நடுங்கின. பேனாவிலிருந்து அங்கங்கே இரண்டு சொட்டுகள் மசியும் காகிதத்தில் விழுந்தன. கடிதம் எழுதி முடித்ததும் அதை வாசிக்க ஆரம்பித்தாள்.
அன்புள்ள கணவருக்கு என்றோ, ஆருயிர்க் காதலருக்கு என்றோ கடிதம் ஆரம்பிக்கப் படவில்லை.
"நமஸ்காரம். பத்திரிகைகளில் வெளியாகி இருந்த புகைப் பட்டங்கள் மிகவும் அபாரம்! கட்டிய மனைவி ஒருத்தி இருக்கிறாள் என்பதை மறந்துவிட்டு உங்களுடைய கலை வேஷம் நன்றாக இருக்கிறது! அந்த இன்னொரு பெண் யார் என்பதை எனக்குத் தெரிவிப்பீர்களா?"
கடிதம் பைத்தியக்காரத்தனமாக எழுதப்பட்டது. ஆத்திரத்தில், அவசரத்தில் என்ன எழுதுகிறோம் என்பதைக் கவனியாமல் எழுதப்பட்டது. சாவித்திரிக்குப் பளிச்சென்று ஒரு யோசனை தோன்றியது. 'நாம் ஏன் அவருக்குக் கடிதம் எழுதவேண்டும்? கடிதம் எழுதி அவர் சொந்த விஷயங்களில் தலையிட நமக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? இருவரையும் பலமாகப் பிணைக்கும் கணவன்-மனைவி என்கிற பந்தத்தைத் தவிர வேறு என்ன உரிமையுடன் அவரைக் கேட்க முடியும்?' என்று ஒன்றும் புரியாமல் கடிதத்தைச் சுக்கு நூறாகக் கிழித்துக் கீழே போட்டாள் சாவித்திரி. குமுறும் ஹிருதயத்தைக் கையில் அழுத்தியவாறு தேம்பித் தேம்பி அழுதாள் அவள். இந்த நிலையில் பிரமை பிடித்தது போல் அவள் வெகுநேரம் உட்கார்ந்து இருந்திருக்க வேண்டும்.
அறைக் கதவை யாரோ லேசாகத் தட்டினார்கள். சாவித்திரி எழுந்து கதவைத் திறந்ததும் மங்களம் வாயிற்படியில் நின்றிருந்தாள். "சாப்பிடாமல் மணி பன்னிரண்டு அடிக்கப் போகிறதே!" என்று அன்புடன் அவளை அழைத்தாள் மங்களம். அழுது ரத்த மெனச் சிவந்திருக்கும் மகளின் கண்களைப் பார்த்ததும் அந்தத் தாயுள்ளம் பாகாய்க் கரைந்தது. கையைப்பற்றி ஆசையுடன் அழைத்துப்போய் சமையலறையில் உட்கார்த்தி அன்புடன் உணவைப் பரிமாறினாள் மங்களம்.
-------------
22. தங்கத்துடன் ரகுபதி
அடுத்த நாள் அலமுவும், தங்கமும் ஊருக்குப் புறப்படுவதாக இருந்தார்கள். வீட்டைச் சுற்றிச் சுற்றி வளைய வரும் தங்கம் ஊருக்குப் போய்விட்டால் வீடு வெறிச்சோடிவிடும். தெருவில் முத்து முத்தாக யார் கோலம் போடுவார்கள்? பூஜைக்கு விடியற் காலை யார் மலர் கொய்து வைப்பார்கள்? ஸரஸ்வதி அவ்வேலைகளைச் செய்தாலும், தங்கம் செய்வதில் தனியான தொரு அழகைக் கண்டு ரசித்தான் ரகுபதி. "அத்தான்! உங்களுக்கு மிளகு வடை என்றால் ஆசையாமே" என்று கரகரவென்று அந்தப் பலகாரத்தைச் செய்து தட்டில் வைத்துக் கொண்டுவந்து வைத்தாள் தங்கம், ஒரு நாள். எல்லோருடைய மனதையும் தான் கவர வேண்டும்; எல்லோருக்கும் தான் இனியவளாக நடந்துகொள்ள வேண்டும் என்கிற ஆசையுடன் அனைவரும் மெச்சும்படியாக நடந்து கொண்டாள் அவள்.
“பாவம்! நல்ல இடமாகப் பார்த்துக் கொடுத்தால் - பெண் சௌக்கியமாக வாழ்வாள். அவசரப்பட்டு எங்காவது பாழுங் கிணற்றில் தள்ளுகிற மாதிரி தள்ளி விடாதீர்கள்”. அலமு என்று ஸ்வர்ணம் தன் நாத்தனாரிடம் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தாள்.
அன்று நடு மத்தியான்னத்தில் மாடியில் நாற்காலியில் சாய்ந்து யோசனையில் ஆழ்ந்திருந்தான் ரகுபதி. இன்று இல்லாவிடில் நாளை வருவாள் அல்லது கடிதமாவது எழுதுவாள் என்று தினம் தினம் எதிர்பார்த்து ஏமாந்து போகவே, ரகுபதியின் மனத்தில் ஒருவித அசட்டு எண்ணம் - சபல புத்தி தலை எடுக்க ஆரம்பித்தது. சர்க்கரையைவிட்டு இனிப்பை எப்படிப் பிரிக்க முடியாதோ, அம்மாதிரி தாம்பத்திய அன்பினால் இருவரின் உள்ளங்களும் பிரிக்க முடியாதபடி ஒன்றிய நேசம், சாவித்திரிக்கும், ரகுபதிக்கும் ஏற்படவில்லை. மிக மிகக் குறுகிய காலத்துக்குள் அவனுடைய வாழ்க்கை சுசந்து வழிந்தது. 'இளம் மனைவியுடன் ஆனந்தமாக வாழ்க்கை நடத்தப்போகிறோம்' என்று: அவன் கட்டிய கோட்டை தகர்ந்து விழுந்தது. அதனால், மனம் ஓடிந்து போயிருந்த அவன் மனக்கண் முன்பு தங்கம் தோன்றி மறைந்துகொண்டிருந்தாள். அவளிடம் அவனுக்கு அலாதியான ஒருவித பாசம் ஏற்படுவதை உணர்ந்தான். 'நாளைக்கு அவள் இங்கிருந்து போய்விடுவாள். நானும் அவளுடன் கிராமத்துக்குப் போய்விடுகிறேன். பிறகு?' என்று யோசித்தான் ரகுபதி, ’பிறகு என்ன? அந்தக் கர்வம் பிடித்தவளுக்குப் படிப்பினையாக ஆடம்பரமில்லாமல், ஒருவருக்கும் சொல்லாமல் தங்கத்தைக் கல்யாணம் செய்து கொண்டுவிடுகிறேன். என்னை யார் என்ன செய்யமுடியும்?' என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டான்.
கீழே ஸரஸ்வதி பைரவி ராகத்தில் அருணாசலக் கவியின் 'யாரோ இவர் யாரோ' என்கிற கீர்த்தனத்தில் சரணத்தைப் பாடிக்கொண்டிருப்பது கேட்டது. 'அந்த நாளில் சொந்தம் போல உருகினார்' - சாதாரணமாக இந்த இடத்தை - ஸரஸ்வதி நான்கைந்து தடவைகள் பாடினாள். ரகுபதிக்கு மிகவும் பிடித்தமான பாட்டுதான். ஆனால் இன்றோ அவனுக்கு ஸரஸ்வதியின் பேரில் கோபம் வந்தது. சாவித்திரிக்கும், அவனுக்கும் இந்த ஜன்மத்தில் மட்டும் இல்லை; அந்த நாளில், கடந்த பிறவிகளிலிருந்தே தொடர்பு இருக்கிறது என்பதை ஸரஸ்வதி பாட்டின் மூலம் எச்சரிக்கிறாளோ என்று தோன்றியது!
'சட்! இவள் யார் என் சொந்த விஷயத்தில் தலையிட’ என்று முணு முணுத்தான் ரகுபதி. இதற்குள் மாடிப்படிகளில் ’தடதட' வென்று தங்கம் இரைக்க இரைக்க ஏறி ஓடி வந்தாள். நிதானமாக ஸரஸ்வதி அவள் பின்னால் வந்து நின்றாள். தங்கம் ஸரஸ்வதியைத் திரும்பிப் பார்த்து. "அக்கா! நான் கேட்கட்டுமா?" என்று கேட்டாள்:
* கேளேன். யார் கேட்டால் என்ன?" என்றாள் ஸரஸ்வதி சிரித்துக்கொண்டே.
"போ அக்கா! எனக்கு வெட்கமாக இருக்கிறது. நீயே கேட்டுவிடு" என்றாள் தங்கம் லஜ்ஜையுடன்.
”என்ன கேட்பதற்கு இவ்வளவு பீடிகை?" என்று ரகுபதி அவர்களை வினவிவிட்டு, இருவரையும் மாறி மாறிப் பார்த்தான்.
“ஒன்றுமில்லை அத்தான். தங்கம் பாட்டுக் கச்சேரியே அதிகம் கேட்டதில்லையாம். டவுனில் இன்று ஏதோ கச்சேரி இருக்கிறதாக நேற்றுச் சொன்னாயே; அதற்கு அவளும் வருகிறாளாம். இவ்வளவு தான் விஷயம்” என்றாள் ஸரஸ்வதி.
”அப்பா! இவ்வளவுதானா? என்னவோ சுயம்வரத்துக்கு ஏற்பாடு பண்ணுகிறமாதிரி அல்லவா வெட்கமும், நாணமும் நடுவில் வந்து விடுகிறது? என்னவோ என்று பார்த்தேன். வரட்டுமே. நீயுந்தான் வாயேன்" என்று அழைத்தான் ரகுபதி இருவரையும்.
தங்கம் சந்தோஷ மிகுதியினால் மறுபடியும் மாடிப்படிகளில் ’தடதட' வென்று வேகமாக இறங்கினாள். இடுப்பின் கீழே புரளும் பின்னல், இப்படியும் அப்படியும் ஆடி அசைவதையே கவனித்துக் கொண்டிருந்தான் ர்குபதி.
"என்ன அத்தான் பார்க்கிறாய்? தங்கம் இப்படி ஓடுகிறாளே என்றுதானே பார்க்கிறாய்? அந்தப் பெண் எதையும், எந்த வேலையையும் இப்படித்தான் ஓடி ஓடிச் செய்கிறாள். பாவம்" என்று ஸரஸ்வதி கூறிவிட்டு அங்கிருந்து கீழே சென்றாள்.
சாயந்தரம் நாலு மணிக்கு மூவரும் கச்சேரி கேட்பதற்கு நகரத்துக்குப் புறப்பட்டார்கள். ஸரஸ்வதி ஆரஞ்சு வர்ணப் புடைவையும். கறுப்பு ஜாக்கெட்டும் அணிந்திருந்தாள். தங்கம் மருதாணிச் சிவப்பில் ஸரஸ்வதியின் பட்டுப் புடைவையை உடுத்தி இருந்தாள். சங்கு போன்ற கழுத்தில் கரியமணிச்சரம் இரட்டை வடம் பூண்டு, நெற்றியில் பிறை வடிவத்தில் திலகமிட்டிருந்தாள் தங்கம், கைகளில் 'கலகல' வென்று ஒலிக்கும் சிவப்புக் கண்ணாடி வளையல்கள். தேர்ந்த ஓவியனின் சித்திரத்திலிருந்து உயிர் பெற்று வந்த பாவையாகத் தோன்றினாள் அவள். 'அதிக அழகு அதிருஷ்டத்தைக் குறைத்துவிடும்' என்று யாரோ சொல்லியிருப்பதை நினைத்துப் பார்த்தான் ரகுபதி. 'அதான் இந்தப் பெண் இப்படி ஏழ்மையில் வாடிப்போகிறாளோ' என்றும் எண்ண மிட்டான்!
"ஜாக்கிரதையாகப் போய் வாருங்கள்" என்று ஸ்வர்ணம் கூறியதும் ஸரஸ்வதி, "என்ன அத்தான்! நீ 'ரெடி' தானே?" என்று கேட்டாள்.
இதுவரையில் தங்கத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ரகுபதி திடுக்கிட்டுத் திரும்பி, "ஓ!" என்று கூறிவிட்டுப் புறப்பட்டான்.
"போகிறபோது நடந்து போய் விடலாம். வரும்போது இருட்டிவிடும். பஸ் பிடித்துதான் ஆகவேண்டும். என்ன சொல்கிறாய் தங்கம்?" என்று கேட்டான் ரகுபதி.
"ஐய்ய! உன் யோசனை பலமாக இருக்கிறதே! வியர்க்க விறுவிறுக்க வேர்வை சொட்டி வழிய வெயிலில் நடந்து போய்த் தான் சங்கீதத்தை அனுபவிப்பார்களோ? வருகிறபோது நடந்து வரலாம் அத்தான். 'ஜிலு ஜிலு' வென்று குளுமையாக இருக்கும், சிரமமும் தெரியாது" என்று அவன் கூறியதை ஆட்சேபித்தாள் ஸரஸ்வதி.
"உன் யோசனை அதைவிட அருமையாக இருக்கிறது. இரவு வேளையில் தனியாகச் சிறிசுகளை அழைத்துக்கொண்டு நடந்து வருகிறதாவது? அதுவும் உன் கால் இருக்கிற வலுவுக்கு நீ நடந்து வரவேண்டும் என்று ஆசைப்படுகிறாயே, ஸரஸு?" என்று ஸ்வர்ணம் கோபித்துக்கொண்டாள். ஆகவே, மூவரும் பஸ்ஸில் போய் வருவது என்று தீர்மானித்துப் புறப்பட்டார்கள்.
அன்று கச்சேரிக்குச் சென்றிருந்த மூவரின் உள்ளங்களும் வெவ்வேறு கற்பனையில் மூழ்கி இருந்தன. ரகுபதியின் மனம் ஓர் இடத்திலும் நிலைக்காது அலை பாய்ந்து கொண்டிருந்தது.'அங்கு வந்திருக்கும் தம்பதிகளைப் பார்த்துப் பெருமூச்செறிந்தான். அவன் மட்டும் எத்தனை காலம் தனிமையை அனுபவிப்பது? இந்தக் கேள்வி அவன் மண்டையைக் குடைந்து எடுத்து அவன் தலையை வலிக்கச் செய்தது. சங்கீதம், நாத ரூபமாக இறைவனை வழிபடும் சாதனம் என்பதை அவன் அந்த நிமிஷம் மறந்து விட்டான். பாடகி பாடும் ஒவ்வொரு பாட்டும் அவனுக்குப் போதையை உண்டு பண்ணியது. 'ஆறுமோ ஆவல், ஆறுமுகனை நேரில் காணாது' என்று பாடகி பாடும்போது அவன் மது அருந்தியவனின் நிலையை அடைந்துவிட்டான். மேடையில் அமர்ந்து பாடும் பாடகி தங்கமாக மாறினாள். கச்சேரிக் கூடம் அவன் வீடாக மாறியது. அந்த வீட்டில் தங்கம் ஒருத்தி உட் கார்ந்து பாடுவதாகவும், அதை அவன் மட்டும் ரஸிப்பதாகவும் கற்பனை செய்து கொண்டான் ரகுபதி!
தங்கம் சிறிது நேரம் பாட்டை ரஸித்தாள். பிறகு அங்கே கூடியிருக்கும் பெண்மணிகளின் நடை, உடை, பாவனைகளைப் பெரிதும் கவனிக்க ஆரம்பித்தாள். வயலிலே கிராமத்தில் வேலை செய்யும் பெண்கள் போட்டுக்கொள்ளும் சொருக்குக் கொண்டையைக்கூட அல்லவா இந்த நகரத்தில் நாகரிகமாகப் போற்றுகிறார்கள் என்று நினைத்தாள். ஒய்யாரமாக ஒருத்தி வந்தாள். அடர்ந்த கூந்தலை அள்ளி வளைத்து உச்சந்தலையில் கொண்டை போட்டுக் கொத்துக் கொத்தாக ரோஜா மலர்களைச் செருகி இருந்தாள். கழுத்திலே நாலைந்து முத்துச் சரங்கள். காதில் மாங்காய் வடிவத்தில் செய்த தோடுகள். தோளில் சரிந்து விழும் உயர்ந்த மைசூர் 'ஜார்ஜெட்' புடைவை. தங்கம் வாயைப் பிளந்து கொண்டு அவளையே பார்த்தாள். மற்றொரு பெண் வந்தாள், அடக்கமாகத் தலையைக் குனிந்து கொண்டு. காஞ்சீபுரம் பட்டுப் புடைவை உடுத்தி, ஜடைக் குஞ்சலம் ஊசலாட, வைரங்கள் மின்ன, அமரிக்கையாய்த் தலைப்பைப் போர்த்திக்கொண்டு வந்து உட்கார்ந்தாள். பல ரகங்களில் உடை அணிந்து வரும் பெண்களைப் பார்ப்பதில் தான் தங்கம் பெரிதும் தன் பொழுதைக் கழித்தாள் எனலாம். ஸரஸ்வதி ஆடாமல், அலுங்காமல் பாடகியின் இசை இன்பத்தில் மூழ்கி இருந்தாள். வேறு எதிலும் அவள் மனம் செல்லவில்லை. இத்தகைய தெய்வீகக் கலைக்குத் தன் வாழ்நாளை அர்ப்பணம் செய்வதைவிட வேறு பயன் தரக்கூடியது ஒன்றுமில்லை என்று நினைத்து ஆனந்தப்பட்டாள் அவள்.
அவள் சிந்தனையைக் கலைத்து மெதுவான குரலில் ரகுபதி, "ஸரஸு! எனக்கு உடம்பை என்னவோ செய்கிறது. வீட்டுக்குப் போகலாம் வருகிறாயா?" என்று கூப்பிட்டான். மூவரும் எழுந்து வெளியே வந்தார்கள்.
"உடம்பு சரியில்லை என்றால் 'டாக்ஸி' வைத்துக்கொண்டு போகலாமே, அத்தான்" என்றாள் ஸரஸ்வதி. பயத்தால் அவள் முகத்தில் முத்துப்போல் வியர்வைத் துளிகள் அரும்பி இருந்தன.
"அப்படி பயப்படும்படி ஒன்றுமில்லை ஸரஸு. லேசாகத் தலையை வலிக்கிறது.. உன்னை பஸ்ஸில் ஏற்றிவிட்டு நானும் தங்கமும் காற்றாட நடந்து வருகிறோம். அம்மாவைக் கவலைப்பட வேண்டாம் என்று சொல்" என்றான் ரகுபதி.
-----------
23. சாலை வழியே
நகரத்திலிருந்து ரகுபதியின் வீட்டிற்கு இரண்டு மைல்களுக்குமேல் இருக்கும். சாலையில் இரண்டு பக்கங்களிலும் ஓங்கி உயர்ந்து வளர்ந்த அசோக மரங்கள் கப்பும் கிளைகளுமாகத் தழைத்து நின்றன. பகல் வேளைகளில் சூரியனின் வெப்பம் தெரியாமலும், இரவில் நிலாக் காலங்களில் பசுமையான இலைகளின் மீது நிலவின் கிரணங்கள் தவழ்ந்து விளையாடுவதாலும் அச்சாலை பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அங்கொன்றும், இங்கொன்றுமாகக் கட்டப்பட்டிருக்கும் பங்களாக் களிலிருந்து வீசும் மலர்களின் மணமும் சாலையில் லேசாகப் பரவுவதுண்டு. ஸரஸ்வதியைப் பஸ் ஏற்றிவிட்டுத் தங்கத்துடன் திரும்பிய ரகுபதி சிறிது நேரம் வரையில் ஒன்றுமே பேசவில்லை. வளைந்து செல்லும் அந்த அழகிய சாலையில் அவ்வப்போது ஒன்றிரண்டு கார்களும், வண்டிகளும் போய் வந்து கொண்டிருந்தன.
தங்கம் இதுவரையில் ஓர் ஆடவனுடன் தனித்து இரவு வேளையில் எங்கும் சென்றதில்லை. மனம் பயத்தால் ' திக் திக்' கென்று அடித்துக்கொள்ள, ரகுபதியைவிட்டு விலகி நாலடி முன்னாலேயே அவள் சென்றுகொண்டிருந்தாள். ரகுபதிக்கும், அவன் எதற்காகத் தங்கத்தைத் தனியாக அழைத்து வந்தான் என்பதும் புரியவே இல்லை. 'ஸரஸ்வதி என்ன நினைக்கிறாளோ? வீட்டில் அலமு அத்தையும், அம்மாவும் என்ன சொல்வார்களோ' என்றும் பயந்தான். மருட்சியுடன் அடிக்கடி அவனைத் திரும்பிப் பார்த்த தங்கம் ஒருவழியாக, "அத்தான்! உங்களுக்குத் தலைவலி குறைந்திருக்கிறதா? என்னையும் ஸரஸு அக்காவுடனேயே அனுப்பி இருக்கலாமே?" என்று கேட்டாள்.
ரகுபதி ஆவலுடன் அவள் முகத்தைப் பார்த்தான். ஒருவிதக் களங்கமும் இல்லாமல் விளங்கும் அந்த அழகிய வதனத்தில் உலாவும் இரண்டு பெரிய கண்களைக் கவனித்தான். வில்லைப்போல் வளைந்து இருக்கும் புருவங்களைக் கவனித்தான். எப்போதும் சிரிப்பதுபோல் இருக்கும் அவள் அழகிய அதரங்களைக் கவனித்தான். கானல் நீர் தொலைவில் பளபளவென்று மான்களுக்குத் தெரிவதில்லையா? நெருப்புப் பறக்கும் கடுங் கோடையில் தெளிந்த நீர்ப் பிரவாகம் பொங்கிப் பெருகுகிறது என்று எண்ணித்தானே மான் கூட்டங்கள் அங்கு விரைகின்றன? சாவித்திரி தன் வாழ்வில் ஏற்படுத்திய பள்ளத்தைத் தங்கத்தால் தங்கத்தின் அன்பினால் - நிரவமுடியும் என்று ரகுபதி ஏமாற்றம் அடைந்திருக்க வேண்டும். தன்னையே விழுங்கிவிடுவதைப்போல் கவனிக்கும் ரகுபதியைத் தங்கம் பார்த்தாள்.
"என்ன அத்தான்! அப்படிப் பார்க்கிறீர்களே? என்னைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள வந்தார்களே புமான்கள்! அவர்கள் யாருங்கூட இப்படிப் பார்க்கவில்லையே என்னை! . முதலில் எங்கள் வீட்டுக் கூரையைப் பார்த்தார்கள். பிறகு கீழே அவர்கள் உட்கார விரித்திருப்பது, பழைய ஜமக்காளமா அல்லது விலையுயர்ந்த ரத்தினக் கம்பளமா என்பதைக் கவனித்தார்கள். அப்புறம், எங்கள் வீட்டு 'டிபனை'க் கவனித்தார்கள். பிறகு, 'மணப் பெண் வந்திருக்கிறாள். பாருங்கள் ஸ்வாமி! என்று அவர்கள் கவனத்தை என்பேரில் திருப்புவதற்கு நான் ஏதாவது பாடி ஆகவேண்டும். இதுவரையில் கவனிப்பதற்கு அவகாசம் இல்லாமல் இருந்தவர்களுக்குத் திடீரென்று என் மீது கருணை பிறந்துவிடும். ஒரு அம்மாள் என் அருகில் வந்து பரபர வென்று பின்னலிட்டிருக்கும் என் கூந்தலை அவிழ்த்து மறுபடியும் பின்னுவாள். 'இதென்ன ஆச்சரியம்?' என்று நான் அதிசயப் பட்டபோது எனக்கு இருப்பது நிஜமான கூந்தலா அல்லது செயற்கையா என்று கண்டுபிடிப்பதற்காகத்தான் இவ்வளவும் என்று தெரிந்தது! இதெல்லாம் ஒன்றுமில்லாமல் இருக்கும் போது நீங்கள் எதற்கு அத்தான் என்னை இப்படிப் பார்க்க வேண்டும்?" - இப்படிக் கூறிவிட்டு தங்கம் 'கலகல' வென்று சிரித்தாள்.
ரகுபதியின் முதுகில் யாரோ சாட்டையால் அடிப்பது போல் இருந்தது. தங்கத்தின் சிரிப்பொலியைக் கேட்டு. 'ஒருவேளை தனக்கு ஏற்பட்டிருந்த பலவீனத்தைத் தங்கம் கண்டுபிடித்து விட்டாளோ?' என்று நினைத்துப் பயந்து போனான். அவன் மெதுவான குரலில் அவள் அருகில் நெருங்கி, "தங்கம்! நாளைக்கு நீ ஊருக்குப் போகிறாயே. ஏன் இப்பொழுதே போக வேண்டுமா? இன்னும் கொஞ்சநாள் இருந்துவிட்டுப் போயேன்" என்றான்.
தங்கம் கபடமில்லாமல் சிரித்துக்கொண்டே, "எதற்காக அத்தான் என்னை இருக்கச் சொல்லுகிறீர்கள்? நான் இருப்பதால் உங்களுக்குச் சந்தோஷம் ஏற்படுகிறதா? ஒருவேளை சாவித்திரி மதனி ஊரிலிருந்து வருகிறாளா? அவளைப் பார்த்து விட்டுப் போகச் சொல்லுகிறீர்களா என்ன?" என்று கேட்டாள்.
ரகுபதி மறுபடியும் திடுக்கிட்டான். 'என்ன? இந்தப் பெண்ணுக்கு மனோதத்துவம் தெரிந்திருக்கிறதா? இதுவரையில் இன்று வரையில் - நிஷ்களங்கமாக இருந்த மனத்தில் களங்கம் ஏற்பட்டிருக்கிறது என்பதை எப்படிக் கண்டுபிடித்தாள் இவள்? ஒருவேளை நாம்தான் தத்துப்பித் தென்று நடந்து கொண்டு விட்டோமோ' என்று ரகுபதி மனத்தைக் குழப்பிக்கொண்டிருந்த சமயம், தங்கம் அவன் அருகில் நெருங்கி, "சாவித்திரி மதனிக்கும் உங்களுக்கும் ஏதோ மனஸ்தாபமாமே? எங்கள் ஊரில் பேசிக்கொண்டார்கள். உங்களிடம் கோபித்துக்கொண்டுதானே மதனி பிறந்தகம் போயிருக்கிறாள்? அப்படித்தானே அத்தான்? போகிறது. கோபத்தையெல்லாம் மறந்துவிடுங்கள். வரப் போகிற தீபாவளிப் பண்டிகைக்கு வேட்டகம் போய் மதனியை அழைத்து வந்துவிடுங்கள். ஊருக்குத் திரும்பும்போது எங்கள் ஊருக்கு வாருங்கள், அத்தான்" என்று அவனை அன்புடன் அழைத்தாள்.
தங்கம் சாதாரணப் பெண் தான். அறிஞர்கள் கற்றிருக்கும் ஜோதிஷ சாஸ்திரமும், மேதாவிகள் படித்திருக்கும் மனோதத்துவமும் அவளுக்குத் தெரிய நியாயமில்லை. வான வெளியைப்போல் பரிசுத்தமானதும், தெளிந்த நீரைப்போன்ற களங்கமற்ற மனத்தைப் படைத்த தங்கம் ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்துப் பெண். பெரிய பெரிய சாஸ்திரங்களையும், படிப்புகளையும் அவள் எப்படிக் கற்றிருக்க முடியும்?
மறுபடியும், அமைதியான சாலை வழியாகத் தங்கமும், ரகுபதியும் மெதுவாக நடக்க ஆரம்பித்தார்கள். ரகுபதியின் மனம் ஒரேயடியாக இருண்டு கிடந்தது. வான வீதியில் எண்ணற்ற தாரகைகள் பளிச்சிட்டன. வளர்பிறை ஆதலால் மூளிச் சந்திரன் மங்கலாகப் பிரகாசித்துக்கொண்டிருந்தான். தங்கம் அவன் அருகிலேயே வந்து கொண்டிருந்தாள். அவள் தலையில் சூட்டி இருந்த முல்லைப் புஷ்பங்களின் மணம் 'கம்' மென்று வீசியது. தொலைவில் ஊரின் ஆலய கோபுரம் தெரிந்தது. சோர்ந்த மனத்துடன், ரகுபதி எதுவும் பேசாமல் விரைவாக நடந்தான். வீட்டிலே பெரியவர்கள் என்ன சொல்வார்களோ என்று பயந்து தங்கமும் வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.
விரைவில் கோயிலுக்கு முன்பாக இருவரும் வந்துவிட்டார்கள். கோயிலின் வாயிற் கதவு திறந்திருந்தது. மூலஸ்தானத்தில் கோதண்டத்துடன் நிற்கும் ஸ்ரீ ராமபிரானின் உருவம் கம்பீரமாகத் தெரிந்தது. பக்கத்திலே என்றும் எப்பொழுதும் இணை பிரியாமல் வசிக்கும் சீதா தேவியைப் பார்த்தான் ரகுபதி. "ஹே பிரபு! என் மனத்தில் ஏற்பட்டிருக்கும் மாசுமருக்களைத் துடைத்துவிடு. பாபத்தில் ஆழ்ந்துவிடுவேனோ என்னவோ பகவானே!' என்று உள்ளம் உருக வேண்டிக்கொண்டான் அவன். வீட்டை அடைந்ததும் மனத்தின் பாரம் குறையாமல் போகவே, ரகுபதி தளர்ச்சியுடன் நேராக மாடியில் தன் அறைக்குச் சென்று படுக்கையில் சாய்ந்துகொண்டான்.
"உடம்பு சரியில்லையா என்ன, ரகு?"" என்று சுடச்சுட பாலைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு ஸ்வர்ணம் மகனின் நெற்றியில் கையை வைத்துப் பார்த்தாள். சில்லென்று இருக்கும் ஐப்பசி மாத்த்து இரவில் ரகுபதியின் நெற்றியில் வியர்வைத் துளிகள் அரும்பி இருந்தன. பாலைத் தாயின் கையிலிருந்து வாங்கி மேஜைமீது வைத்துவிட்டு, அவள் கரங்களைச் சேர்த்துத் தன் கண்களில் ஒற்றிக்கொண்டான் ரகுபதி.
"அம்மா! என்னால் நீ ஒருவித சந்தோஷத்தையும் அநுபவிக்கவில்லையே. உன்னைப் பலவிதத்திலும் நான் ஏமாற்றி விட்டேன் அம்மா. என்னை மன்னித்துவிடு" என்றான்.
" அசட்டுப் பிள்ளையாக இருக்கிறாயே ரகு? உன் மனசில் இருப்பது எனக்குத் தெரியாதா? தலை தீபாவளிக்கு ஊருக்குப் போய் வந்தால் எல்லாம் சரியாகிவிடும். பாலைச் சாப்பிட்டு விட்டுத் தூங்கு" என்று அன்புடன் கூறிவிட்டு ஸ்வர்ணம் கம்பளிப் போர்வையை உதறி ரகுபதிக்குப் போர்த்திவிட்டாள்.
------------
24. முள்ளின் வேதனை
பரிவுடன் மகனுக்குப் போர்வையைப் போர்த்திவிட்டுக் கீழே சென்ற ஸ்வர்ணத்திற்கு வருத்தம் தாங்கவில்லை. சங்கீத விழாவுக்கு நாட்டுப்பெண் வராத விஷயம் ஊராருக்குத் தெரியும். நல்லதோ கெட்டதோ எதுவும் ஊராருடைய அபிப் பிராயத்துக்கு இணங்கித்தான் நடக்க வேண்டியிருக்கிறது. இது உலக இயல்பு. ”இருந்து, இருந்து ஒரே பிள்ளை. வீட்டிலே லக்ஷணமாக நாட்டுப்பெண் இராமல், வந்ததும் வராததுமாகப் பிறந்த வீட்டில் போய் மாசக் கணக்கில் உட்கார்ந்து கொண்டிருப்பது அழகாக இருக்கிறது!" என்று நாத்தனார் அலமு வேறு எப்போதும் ஸ்வர்ணத்திடம் கூறி அவள் மனத்தை வாட்டிக்கொண்டிருந்தாள்.
சாவித்திரி வருவதற்கு முன்பாவது வீட்டில் நிம்மதியும் சந்தோஷமும் நிலவி இருந்தன. தினம் தவறாமல் ஸரஸ்வதி விடியற்காலமும், சாயந்தரமும் பாட்டைச் சாதகம் செய்து வந்தாள். இப்பொழுதெல்லாம் எப்பொழுதோ அத்தி பூத்தாற் போல் பாடுவது என்று வைத்துக்கொண்டுவிட்டாள் ஸரஸ்வதி. பூஜை அறையை மெழுகும்போதும், கோலம் போடும் போதும், இறைவனுக்கு மாலை கட்டும்போதும் மட்டும் மெதுவாக மனதுக்குள் பாடிக்கொள்வாள். பிறவியிலேயே அவளுடன் கலந்து விட்ட அந்த இசை இன்பம் அவள் மனத்தைவிட்டு ஒரு கணமும் அகலவில்லை. வாயைத் திறந்து பாடினால் தான், பாட்டா? ஊர் ஊராகச் சென்று கச்சேரிகள் செய்தால்தான் சங்கீதமா? நித்திரையிலும் விழிப்பிலும் அவள் மனம் இசை இன்பத்தை அநுபவித்துக்கொண்டே யிருந்தது.
ஸரஸ்வதியின் பரந்த மனத்திலும் ஒருவிதத் துயர் குடிகொண்டிருந்தது. அவளால்தான் வீட்டில் இவ்வளவு சச்சரவுகளும் நேர்ந்துவிட்டதாகக் கருதினாள். இசை விழாவின்போது, தான் கச்சேரி செய்ய ஒப்புக்கொண்டதே தவறு என்று நினைத்தாள். சாவித்திரியின் ஊருக்குச் சென்று அவளை அழைத்துவந்து ரகுபதியிடம் சேர்த்து விடுவது என்று கூட யோசித்துப் பார்த்தாள். ஆனால், அங்கு அவளுக்கு எந்த விதமான வரவேற்பு கிடைக்குமோ? இதற்குள் ஊர் வதந்திகள் ஒன்றுக்குப் பத்தாக இறக்கை கட்டிக்கொண்டு எப்படி எல்லாம் பறந்து சென்றிருக்கின்றனவோ? அத்தான் ரகுபதி கல்யாணம் பண்ணிக் கொண்டவுடனேயே அவள் அந்த வீட்டிலிருந்து விலகிச் சென்றிருக்க வேண்டும். அதைச் செய்யாமல் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யப் புகுந்த கதையாக இப்பொழுது நினைத்து வருந்துவதில் என்ன பிரயோஜனம் இருக்கிறது? இவ்விதம் நினைத்து வருந்திக்கொண்டே ஸரஸ்வதி, ரகுபதி கச்சேரியிலிருந்து வீடு திரும்புவதற்கு முன்பே தன் அறைக்குள் சென்று படுத்துக் கொண்டு விட்டாள். ரகுபதி வந்ததும், அவன் யாருடனும் அதிகம் பேசாமல் மாடிக்குச் சென்று படுத்துக் கொண்டதையும் அறிவாள். ஸ்வர்ணம் மாடியிலிருந்து கீழே வந்ததும் வருத்தம் தாங்காமல் கண்ணீர் பெருக ஊஞ்சலில் வந்து உட்கார்ந்தாள். எவ்வளவோ சகிப்புத் தன்மையை அடைந்திருந்த அத்தை அழுவதைப் பார்த்து ஸரஸ்வதி கவலையுடன் அவள் அருகில் வந்து உட்கார்ந்து, "ஏன் அழுகிறாய் அத்தை? அத்தானுக்கு உடம்பு ஒன்றும் இல்லையே?" என்று விசாரித்தாள்.
இதற்குள்ளாக அலமு ஊருக்குப் புறப்படுவதற்காக மூட்டைகளைக் கட்டிவைத்துவிட்டு, "அவசரப்பட்டுக்கொண்டு முன்னே பின்னே விசாரியாமல் புது சம்பந்தம் செய்தாயே மன்னி; இப்பொழுது படுகிறாய் சேர்த்துவைத்து!" என்று ஆத்திரத்துடன் இரைந்து பேசினாள். ஸ்வர்ணத்துக்கு அடங்கி இருந்த துக்கமெல்லாம் பொங்கி வந்தது.
"இந்தாடி அம்மா! பெண்ணை நான் மட்டும் போய்ப் பார்த்துவிட்டு வரவில்லை. உன் மருமானும் தான் வந்தான். அவன் மனசுக்குப் பிடித்திருக்கிறது என்று தெரிந்துதான் கல்யாணம் நடந்தது."
"அந்தச் சவரணைதான் தெரிறெதே!" என்றாள் அலமு.
மறுபடியும் ஏதாவது சண்டை ஆரம்பித்துவிடப்போகிறது என்று நினைத்த ஸரஸ்வதி, அதட்டும் குரலில், “அத்தை! அத்தானுக்கு ஒரே தலைவலி என்றானே. அவன் தூங்குகிற சமயமாக நீங்கள் இங்கே சண்டைக்கு ஆரம்பிக்கிறீர்களே. பாவம், அவனைப் பார்த்தால் வருத்தமாக இருக்கிறது. போதும்; உங்கள் பேச்சை நிறுத்திக்கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டு, 'விர்' ரென்று எழுந்து கூடத்தில் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்த விளக்கை அணைத்துவிட்டுத் தன் அறைக்குள் சென்றுவிட்டாள்.
கூடத்து மூலையில் மங்கலாக எரியும் சிறு விளக்கின் வெளிச்சத்தில், அதற்கு மேல் பேச்சை வளர்த்த இஷ்டப்படாமல், அலமு கோபத்துடன் படுக்கையில் 'பொத்' தென்று சாய்ந்து படுத்துக்கொண்டுவிட்டாள்.
மாடியில் படுத்திருந்த ரகுபதிக்கு மனப்பாரம் சற்றுக் குறைந்தது. நிசப்தமான இரவில் நீல வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே வெகுநேரம் வெளியில் நின்றிருந்தான் அவன். மறுபடியும் தன் அறைக்கு வந்து அவன் படுக்கும் போது ஸரஸ்வதியின் அறையைக் கவனித்தான். லேசாக வீசும் நிலவொளியில் ஸரஸ்வதிக்கு அருகாமையில் தங்கம் படுத்திருந்தாள். அவளுடைய அழகிய கைகள் ஸரஸ்வதியின் கழுத்தை வளைத்துக் கட்டிக்கொண்டிருந்தன. மங்கிய வெளிச் சத்தில் தங்கம் நன்றாக விழித்துக்கொண்டு படுத்திருப்பது தெரிந்தது. 'ஆமாம்... ஸரஸ்வதியும் விழித்துக் கொண்டுதான் இருக்கிறாள். மெல்லிய குரலில் இருவரும் ஏதோ பேசுகிறார்கள். தங்கம் இவ்வளவு அந்தரங்கமாக என்ன பேசப்போகிறாள்? அன்று மாலை கச்சேரியிலிருந்து திரும்பும்போது நான் அசட்டுப் பிசட்டென்று அவளிடம் நடந்துகொண்டதை ஸரஸ்வதியிடம் வெளி யிடுகிறாளோ? பொழுது விடிந்தால் தங்கம் ஊருக்குப் போய் விடுவாள். ஆனால், ஸரஸ்வதிக்கு என் அசட்டுத்தனம் தெரிந்த பிறகு. அவளிடம் . எதிரில் நின்று பேசவே வெட்கமாக இருக்குமே!' என்று நினைத்து ரகுபதி வெட்கமடைந்தான். ஸரஸ்வதி பேசுவதைக் கேட்டுவிட்டுத் தங்கம் அந்த நள்ளிரவிலும் 'கலீ’ரென்று சிரித்தாள்.
"போடி அசடே! அத்தை விழித்துக்கொண்டுவிடப் போகிறாள். கதையைக் கேட்டுவிட்டு இப்படியா சிரிப்பார்கள்?" என்று தங்கத்தை அதட்டிவிட்டு ஸரஸ்வதி திரும்பிப் படுத்துக் கொண்டாள்.
ரகுபதி நீண்ட பெருமூச்சு விட்டான். 'நல்லவேளை! கதை பேசிக்கொள்கிறார்களா? என்னவோ என்று பயந்து போனேனே' என்று மெதுவாகத் தனக்குள் சொல்லிக் கொண்டே அறைக்குள் சென்றான்.
இரவு தூங்குவதற்கு நேரமாகவே ரகுபதி விடியற்காலம் அயர்ந்து தூங்கிவிட்டான். அவன் எழுந்திருக்கும்போது பொழுது நன்றாக விடிந்துவிட்டது. சமையலறையில் ஸரஸ்வதி, ஸ்வர்ணத்துக்கு உதவியாக வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள். தோட்டத்தைச் சுற்றிச் சுற்றிவரும் தங்கமும், அலமுவும் விடியற்காலையிலேயே ஊருக்குப் போய்விட்டதால் வீடு வெறிச்சோடிக் கிடந்தது. கூடத்து ஊஞ்சலில் உட்கார்ந்து தன் மேலாக்கு பறக்க வீசி வீசி ஊஞ்சலாடும் தங்கம், அவனிடம் ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல் ஊருக்குப் போய்விட்டாள்.
"அத்தானிடம் சொல்லிவிட்டு வருகிறேன்" என்று வேகமாக மாடிப்படிகளில் ஏறிய தங்கத்தின் கைகளை ஸரஸ்வதி பற்றி இழுத்தாள்.
"இந்தாடி அசடே! கொஞ்சங்கூட நாகரிகமே தெரிய வில்லையே உனக்கு? நீ இன்று ஊருக்குப் போவதைத்தான் ஆயிரம் தரம் சொல்லியாயிற்றே. நேற்றெல்லாம் உடம்பு சரியில்லையே அவனுக்கு. இப்போது போய் அவனைத் தொந்தரவு செய்வானேன்?" என்று உரிமையுடன் அதட்டி அவள் மாடிக்குப் போவதைத் தடுத்தவள் ஸரஸ்வதிதான்.
"எனக்குப் பதிலாக நீயே சொல்லிவிடு , அக்கா" என்று தங்கம் சிரித்துக்கொண்டே கூறிச் சென்றிருந்தாள்.
ரகுபதி தீவிரமாக யோசித்தான். 'கொத்துக் கொத்தாக ரோஜாச்செடியில் மலர்கள் குலுங்குகின்றன. 'பறிக்கவேண்டும்; முகர்ந்து பார்க்கவேண்டும்; அதன் மெல்லிய இதழ்களை வருடவேண்டும்' என்று ஒவ்வொருவரும் ஆசைப்படுவது இயற்கைதான். அதுபோல் அழகிய தங்கம் வந்தாள். முல்லைச் சிரிப்பால் என் மூடிய மனதை மலர வைத்தாள். பட்டுப் பூச்சி வர்ண ஜாலங்களை வீசுவதைப்போல், நொடிக்கொரு பேச்சும், நாழிக் கொரு வார்த்தையுமாக வளைய வந்தாள். மலர் செறிந்த ரோஜாச் செடியில் மலரைக் கிள்ளும்போது, 'சுரீர்' என்று தைக்கும் முள்ளைப்போல, 'ஊருக்குப் போகிறேன்' என்று ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல் மனதைக் குத்திவிட்டு ஓடிப்போய்விட்டாள். மலரின் மென்மையை மெச்சுவதுபோல் முள்ளின் வேதனையையும் மெச்சித்தான், 'சபாஷ்' போடவேண்டும். நேற்று இரவு ஸ்ரீராமபிரான் கோவில் முன்பு கைகூப்பி வணங்கி வேண்டிக் கொண்டதை யெல்லாம் மனம் மறந்துவிட்டது. மறுபடியும், 'தங்கம், தங்கம்' என்று ஜபிக்க ஆரம்பித்துவிட்டதே! இது என்னடா, தொந்தரவு?' என்று ரகுபதி மண்டையைக் குழப்பிக் கொண்டான்.
சமையலறையிலிருந்து ஸரஸ்வதி கூடத்துக்கு வந்தாள். கைப்பிடிச் சுவரைப் பிடித்துக்கொண்டு பித்துப் பிடித்தவன் போல் நிற்கும் ரகுபதியைப் பார்த்து, "அத்தான்! தலைவலி எப்படி இருக்கிறது? கீழே வந்து பல் தேய்த்துவிட்டுக் காப்பி சாப்பிடுகிறாயா? இல்லை, மாடிக்கே நான் வெந்நீரும், காப்பியும் கொண்டு வரட்டுமா?" என்று விசாரித்தாள்.
"வேண்டாம் ஸரஸு! நானே வருகிறேன். அலமு அத்தையும், தங்கமும் ஊருக்குப் போய்விட்டார்களா? நன்றாகத்தான் தூங்கிவிட்டேன் போல் இருக்கிறது. என்னை எழுப்பக்கூடாதோ?" என்று கேட்டான் ரகுபதி,
"தங்கம் உன்னிடம் சொல்வதற்குத்தான் மாடிக்கு வந்தாள். நான் தான் உன்னைத் தொந்தரவு செய்யக்கூடா தென்று தடுத்துவிட்டேன். பாவம்! கபடமில்லாத பெண் அவள். . அவள் இல்லாமல் எனக்குக்கூட பொழுது போகாதுபோல் இருக் கிறது" என்றாள் ஸரஸ்வதி.
ரகுபதி மாடிப்படிகளில் மன நிம்மதியுடன் இறங்கினான். “தங்கம் என்னிடம் சொல்லிவிட்டுப் போகத்தான் நினைத்தாள்”: இது அவனுக்கு எவ்வளவோ ஆறுதலை அளித்தது. தங்கம் மாடிக்கு வந்து என்னை எழுப்பி இருந்தால் தொந்தரவு ஏற்பட்டுவிடும் என்று ஸரஸ்வதி தடுத்துவிட்டாளாமே? இது என்ன விந்தை! விந்தைதான்! கட்டவிழ்த்துவிட்ட குதிரை மாதிரி மனதுக்கு, 'எது நல்லது. எது கெட்டது' என்பதைத் தெரிய வைக்க ஸரஸ்வதியைப்போன்ற ஒருத்தி தேவைதான்! தங்கம் மாடிக்கு வந்திருந்தால் நிஜமாகவே ஏதாவது தொந்தரவு ஏற்பட்டிருக்கலாம்.' - விவேகியான ரகுபதியின் மனம் ஸரஸ்வதிக்கு மானசிகமாகத் தன் நன்றியைச் செலுத்தியது.
-------------
25. மங்களத்தின் நம்பிக்கை
சாவித்திரியின் பிறந்தகத்தில் முன்னைப்போல உற்சாகமும், மகிழ்ச்சியும் பொங்கவில்லை. சிந்தனையும் கவலையும் உருவாக மங்களம் அவ்வீட்டுக் கூடத்தில் படுத்த படுக்கையாகக் கிடந்தாள். கடந்த இரண்டு, மூன்று மாதங்களில் அவள் உள்ளம் சோர்ந்து நைந்து போய்விட்டது. தளிர்த்துச் செழித்து வளரும் மரத்தைக் கோடறி கொண்டு வெட்டுவதுபோல் தழைத்துப் பெருக வேண்டிய குடும்பத்திற்குத் தடங்கலாகப் புக்ககத்தில் வாழாமல் பிறந்தகம் வந்திருக்கும் சாவித்திரியைப் பற்றியும், அவள் வருங்காலத்தைப் பற்றியும் - எல்லோரும் கவலை அடைந்தார்கள். வழக்கமாகக் காணப்படும் இரைச்சலோ, உற்சாகமோ அந்த வீட்டில் அப்பொழுது நிலவவில்லை. குடும்பத்துக்கு வேண்டியவற்றைக் கவனித்துச் செய்வதற்கு அக்கறை உள்ளவர்கள் யார் இருக்கிறார்கள்? சீதாவுக்கு அவ்வளவு அநுபவம் போதாது. விளையாட்டுச் சுபாவம் படைத்த அவள் தான் தற்சமயம் குடும்பப் பொறுப்பை நிர்வகித்து வந்தாள். வீட்டில் உள்ளவர்கள் அத்தனை பேரும் தன் பேரில் பழி சொல்வதாக நினைத்து சாவித்திரி, அதை அந்நிய இடமாகவே பாவித்தாள். இஷ்டமிருந்தால் யாருடனாவது பேசுவாள், இல்லாவிடில் அதுவும் இல்லாமல் தன் அறையிலேயே அடைபட்டுக் கிடப்பாள் அவள்.
தேக வலிமையும், சலியாமல் உழைக்கும் திறனுமுடைய தன் தாயார் உடல் மெலிந்து படுத்த படுக்கையில் கிடப்பதைப் பார்த்த சந்துரு. தன் சகோதரியை மனத்துக்குள் வெறுத்தான். மனைவியின் தேக நிலையைக் கண்ணுற்ற ராஜமையருக்கு மாப் பிள்ளை ரகுபதியின் மீதே கோபம் அதிகமாயிற்று.
மங்களம் தன் பெண்ணின் பிடிவாத குணத்தைக் கண்டு ஆறாத் துயரத்தை அடைந்தாள். சிறு வயதிலிருந்தே பரம சாதுவாகவும், யார் எதைச் சொன்னாலும் சகித்துக்கொள்ளும் சாமர்த்தியமும் பெற்றிருந்த அவளுக்கு சாவித்திரியின் மனப்போக்கு ஒரு புதிராகவே இருந்தது. சீதாவுக்கும் கல்யாண வயது நெருங்கிக் கொண்டிருந்தது. அடுத்தாற்போல் சந்துரு வுக்கும் கல்யாணம் பண்ண வேண்டியதுதான். ஆனால், புக்ககத்தில் வாழவேண்டிய பெண் கோபித்துக்கொண்டு. பிறந்தகத்தில் இருக்கிறாள் என்பதை நினைக்கையில், சீதாவுக்கு வரன் தேடவோ, சந்துருவுக்குப் பெண் கொள்ளவோ யாருக்கும் தைரியம் ஏற்படவில்லை.
படுக்கையில் கவலையே உருவமாகப் படுத்திருக்கும் தாயிடம் சந்துரு வந்து உட்கார்ந்தான். அன்புடன் அவள் நெற்றியில் கை வைத்துப் பார்த்து விட்டு, ”அம்மா! உனக்கு வியாதியே ஒன்றுமில்லையாம். மன நிம்மதி இல்லாமல் உடம்பு கெட்டுப் போயிருப்பதாக டாக்டர் சொல்லுகிறார். உற்சாகமான மனம், அதற்கேற்ற சூழ்நிலை அமையவேண்டும் என்று அவர் கருதுகிறார். நீயோ கொஞ்சமாவது மனசுக்கு ஆறுதலைத் தேடிக்கொள்ள மாட்டேன் என்கிறாய். சதா கவலையும் கண்ணீருமாக இருந்தால் உன் உடம்பு எப்படியம்மா சரியாகும்?" என்று ஆசையுடன் விசாரித்தான் தாயை.
"கவலைப்படாமல் எப்படியப்பா இருக்கமுடியும்; மானத்தோடு கௌரவமாக வாழ்ந்த குடும்பம் ஆயிற்றே, நம் குடும்பம்? ஏதாவது பேச்சை ஆரம்பித்தால் உன் அப்பா சீறி விழுகிறார். பெண்ணை 'நர்ஸு'கள் பள்ளியில் சேர்க்கப்போகிறாராம்! * படித்து விட்டு உத்தியோகம் செய்து சாப்பிடுகிறாள்! அவள் ஒருத்தரிடமும் கைகட்டி நிற்க வேண்டாம்' என்கிறாரே. இந்த நாளில் இது ஒரு வழக்கம் ஆரம்பித்து இருக்கிறதே!" என்று கூறிவிட்டு, வியாதியால் மெலிந்து வெளுத்துப்போன உதடுகளை நெளித்து வரண்ட சிரிப்பொன்றை உதிர்த்தாள், மங்களம்.
சந்துரு அலட்சியத்துடன் 'ஹும்' என்றுவிட்டு, "இவளுக்கு இருக்கிற பொறுமைக்கு 'நர்ஸ்' உத்தியோகம் ஒன்றுதான் குறைச்சலாக இருக்கிறது. பொறுமையிலே சாக்ஷாத் பூமிதேவி தான் நம் சாவித்திரி" என்றான்.
"மாப்பிள்ளையாகட்டும், அவன் அம்மாவாகட்டும் பரம சாதுக்கள். இவள்தான் புருஷனுக்கும் மாமியாருக்கும் சற்றுப் பணிந்து நடந்தால் என்ன? பணிவதால் என்ன முழுகியா விடும்?" என்றாள் மங்களம்.
பணிவைப்பற்றியும், அடக்கத்தைப்பற்றியும் ஓயாமல் பேசி அவ்விதமே பல வருஷங்கள் நடந்து கொண்ட மங்களத்தினாலேயே மகளின் மனத்தைப் பணியவைக்க முடியவில்லை என்றால் பிறகு யாரால் முடியப்போகிறது? சந்துரு யோசித்து விட்டு, "ஏனம்மா! தீபாவளிப் பண்டிகைக்குப் பத்துத் தினங்கள் கூட இல்லையே. தலை தீபாவளியாயிற்றே. மாப்பிள்ளையை அழைக்கவேண்டாமா? அப்பா, ரகுபதிக்கு ஏதாவது கடிதம் போடுவதாகச் சொன்னாரா?" எனக் கேட்டான்.
மங்களம் வருத்தத்துடன் தலையை அசைத்துவிட்டு, "அதையெல்லாம் அவர் காதிலே போட்டுக்கொள்வதே யில்லை. நான் சொன்னதற்குத் 'தலையும் இல்லை காலும் இல்லை' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். சந்துரு! நீதான் மாப்பிள்ளைக்கு ஒரு கடிதம் எழுதேன். அதிலே என்ன தவறு இருக் கிறது? அவசியம் தீபாவளிக்கு வரவேண்டும் என்று எழுதப்பா, அவர் கட்டாயம் வருவதானால் நான் எப்படியாவது சமாளித்து சீர்வரிசைகள் செய்துவிடுகிறேன்" என்றாள் குரல் தழுதழுக்க. நம்பிக்கையுடனும், ஆர்வத்துடனும் மங்களம் கேட்பதைச் சந்துருவால் தட்ட முடியவில்லை. 'மனைவி ஊரிலிருந்து வந்த பிறகு ஒருவரி கடிதம் கூடப் போடவில்லை. மாமனார் ஏனோ தானோ வென்று ஒன்றும் தெரியாதவர்போல் இருக்கிறார். மைத்துனன் அழைப்பு அனுப்பி மாப்பிள்ளை தலை தீபாவளிக்கு வந்த மாதிரிதான்' என்று நினைத்த சந்துரு, தாயைத் திருப்தி செய்யவேண்டி, காகிதமும், பேனாவும் எடுத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்தான்.
சோர்ந்துபோயிருந்த மங்களத்தின் மனத்தில் நம்பிக்கை ஊற்றெடுத்தது. ரகசியமாகப் பிள்ளையின் காதில், "சந்துரு! குடும்பச் செலவிலிருந்து சேர்த்த பணம் நூறு ரூபாய்க்குமேல் பெட்டியில் இருக்கிறது. சரிகை வேஷ்டியும், புடைவையும் வாங்கி வந்து உன் பெட்டியில் வைத்து வை. அப்பாவுக்கு இதெல்லாம் தெரியவேண்டாம்" என்றாள்.
'ஆகட்டும்' என்று தலையை அசைத்துவிட்டு கையிலிருந்த காகிதத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டு யோசனையுடன் உட்கார்ந்திருந்தான் சந்துரு. 'தலை தீபாவளிக்கு மாப்பிள்ளை மட்டும் வருவது சம்பிரதாயமில்லை அல்லவா? ரகுபதியுடன் வரக்கூடியவர்கள் அந்த வீட்டில் யார் இருக்கிறார்கள்? ஸரஸ்வதி வருவாளா? இதற்குள்ளாக அவள் மனம் நம்மைப்பற்றியும், நம் குடும்பத்தைப்பற்றியும் என்ன அபிப்பிராயம் கொண்டு விட்டதோ? அவசியம் ஸரஸ்வதியையும் அழைத்து வரச்சொல்லி எழுதுகிறேன். தவறாக இருந்தாலும் இருக்கட்டும். சரியாக இருந்தாலும் இருக்கட்டும்' என்று துணிவுடன் கடிதத்தை எழுதி முடித்தான். அவன் சாவித்திரியைப் புக்ககத்துக்கு அழைத்துப் போனபோது ஸரஸ்வதியுடன் பேசுவதற்குப் பல சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொண்டான். சுருக்கமாகவும் நிதானமாகவும் இரண்டொரு வார்த்தைகளில் ஸரஸ்வதி பதிலளித்துவிட்டுச் சென்று விடுவாள்.
அவன் அங்கிருந்த நான்கு தினங்களில் ஒரு தினம், அதி காலையில் ஸரஸ்வதி தோட்டத்தில் பூஜைக்காக மலர்கள் பறிக்கும்போது சந்துருவும் அங்கிருந்தான். ரோஜாச் செடியிலிருந்து மலரைப் பறிக்கையில் அருகிலிருந்த முள் ஒன்று அவள் விரலில், 'சுரீர்' என்று குத்தவே, முத்துப்போல், அந்த இடத்தில் செக்கச் செவேல்' என்று ஒரு பொட்டு ரத்தம் கசிந்தது. ஸரஸ்வதி கையை உதறிக்கொண்டாள். "த்ஸொ ... த்ஸொ ... முள் குத்திவிட்டதுபோல் இருக்கிறதே. ஆழமாகக் குத்திவிட்டதா என்ன?" என்று கவலையுடன் விசாரித்தான் சந்துரு. அவள் பட்டுப்போன்ற கையைப் பார்த்துக்கொண்டே. "இல்லை.....ஆமாம் குத்திவிட்டது. கொஞ்ச நேரத்தில் சரியாகப் போய்விடும்" என்றாள் ஸரஸ்வதி.
மேலே என்ன கேட்பது, எதைப்பற்றிக் கேட்பது என்று புரியாமல் சிறிது நேரம் அவள் முகத்தையே ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தான் சந்துரு. ஸரஸ்வதி 'சர சர' வென்று மலர்களைப் பறித்துக் கூடையில் நிரப்பிக்கொண்டு உள்ளே சென்றுவிட்டாள்.
மறுபடியும் அன்று மாலையே ஒரு சந்திப்பு. மங்களம் வெகுவாகக் கேட்டுக் கொண்டதன் பேரில் ஸரஸ்வதி பாடுவதற்கு உட்கார்ந்தாள். சில பாட்டுகளைப் பாடிய பிறகு, ஸரஸ்வதி வீணையை உறையிலிடுவதற்கு ஆரம்பித்தபோது மங்களம் அங்கிருந்து எழுந்து சென்று விட்டாள்:
"ஷண்முகப் பிரியா” ராகத்தை நீ வாசித்தால் அற்புதமாக இருக்கிறது. கல்யாணத்தின் போது வாசித்தது என் மனத்தை விட்டு அகலவே இல்லை. மறுபடியும் இன்று அதைக் கேட்க ஆசைப்படுகிறேன், ஸரஸ்வதி" என்று முறுவலுடன் கேட்டுக் கொண்டான் சந்துரு.
உறையிலிட்ட வீணையை வெளியே எடுத்து, 'ஷண்முகப் பிரியா'வை அழகாக வாசித்தாள் ஸரஸ்வதி. ஆவலுடன் அவளையே கவனிக்கும் சந்துருவை அவள் ஒரு முறைகூட ஏறிட்டுப் பார்க்கவில்லை.'
பழைய சம்பவங்களை நினைத்துப் பெருமூச்சுவிட்டான் சந்துரு. ஸரஸ்வதியின் மனம் ஒரு புதிர். வாக்தேவியின் பரிபூர்ண அருளுக்குப் பாத்திரமாக இருக்கும் அந்தப் பெண், ஒரு தெய்விகப் பிறவி என்பதாக நினைத்துச் சந்துரு வியப்பும், மகிழ்ச்சியும் எய்தினான். கடிதத்தை உறையிலிட்டு நிறைந்த மனத்தினனாக அதைத் தபாலில் அன்றே சேர்த்து விட்டான்.
-------------
26. தாய்க்குப் பிறகு தாரம்
தீபாவளி அழைப்பைக் கையில் வைத்துக்கொண்டு கூடத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான் ரகுபதி, ’கடிதம் யார் எழுதி இருக்கிறார்கள்? என்ன எழுதப்பட்டிருக்கிறது?' என்று அறிந்து கொள்ள ஸரஸ்வதியும், ஸ்வர்ணமும்
ஆவலுடன் அவன் எதிரில் நின்றிருந்தார்கள்.
"கடிதம் போட்டுவிட்டார்கள் பிரமாதமாக! நான் குதித் துக்கொண்டு ஓட வேண்டியதுதான் பாக்கி!" என்று வெறுப்புடன் கடிதத்தை அங்கிருந்த மேஜைமீது வீசி எறிந்துவிட்டு ’விடுவிடு' என்று வெளியே போய்விட்டான் ரகுபதி. ஸரஸ்வதி, ஸ்வர்ணத்தின் ஏக்கம் நிறைந்த முகத்தைக் கவனித்துவிட்டு, "அத்தை! கடிதத்தை நான் படிக்கட்டுமா? ஒருவேளை கடிதம் சாவித்திரி எழுதியதாக இருக்குமோ என்று யோசிக்கிறேன். படிக்கட்டுமா அத்தை? அதில் ஒன்றும் தவறில்லையே?" என்று கேட்டாள்.
"இப்பொழுது நடக்கிறதெல்லாம் சரியாக இருக்கிறது! கடிதத்தைப் படித்தால்தான் தவறு ஏற்பட்டுவிடுமோ? படியேன்" என்றாள் ஸ்வர்ணம் பாதி கோபமாகவும், பாதி வருத்தமாகவும் ஸரஸ்வதியைப் பார்த்து. கடிதத்தை உறையிலிருந்து எடுத்து ஸரஸ்வதி படிக்க ஆரம்பித்தாள்:
அன்புள்ள ரகுபதிக்கு,
அநேக ஆசீர்வாதம். நீயும், உன் அம்மாவும், சௌ. ஸரஸ்வதியும் சௌக்கியமென்று நம்புகிறேன். தீபாவளிப் பண்டிகை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த வருஷம் தலை தீபாவளி ஆதலால் உன் வரவை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
சௌ. ஸரஸ்வதியின் கச்சேரி அரங்கேற்றத் துக்கு வரமுடியாமல் போய்விட்டது. பத்திரிகைகளில் வெளியான செய்திகளையும், புகைப் படங்களையும் பார்த்து ஆனந்தப்பட்டேன். ஸரஸ்வதியைக் கட்டாயம் உன்னுடன் அழைத்து வரவேண்டும். ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
இப்படிக்கு.
சந்திரசேகரன்.
கடிதத்தைப் படித்து முடித்ததும் ஸரஸ்வதி கபடமில்லாமல் ’கல கல' வென்று சிரித்து, 'அத்தை! தலை தீபாவளி அழைப்பு மாப்பிள்ளைக்கா அல்லது எனக்கா என்பது புரியவில்லையே. வெறுமனே பத்துத் தடவை என்னைத்தானே வரும்படி சந்துரு எழுதி இருக்கிறார்?" என்றாள்.
"அவர்கள் வீட்டில் எல்லோருக்கும் உன் பேரில் கொள்ளை ஆசை. சாவித்திரியின் அம்மாவுக்குச் சதா உன் பேச்சுத்தான். சீதாவும் கல்யாணத்தின்போது எப்படி ஒட்டிக்கொண்டு இருந்தாள் பார்த்தாயா? நமக்கென்று வந்து வாய்த்திருக்கிறதே அந்தப் பெண் தான் அவர்கள் வீட்டிலேயே அலாதியாக இருக் கிறது!" என்று ஸ்வர்ணம் கூறிவிட்டு, "எப்பொழுது அவர்கள் மதித்துக் கடிதம் போட்டிருக்கிறார்களோ அவசியம் நீயும் ரகுபதியும் போய்விட்டு வாருங்கள். இந்தச் சந்தர்ப்பத்திலாவது இருவரின் மனமும் மாறி ஒற்றுமை ஏற்படட்டும்" என்றாள்.
ஸரஸ்வதி கடிதத்தை மறுமுறை மனதுக்குள் படித்துக் கொண்டாள். 'இவருக்கென்ன என்னிடம் அலாதி அன்பு? வருந்தி வருந்தி அழைக்கிறாரே. ஒரு வேளை அவருக்கு என்னை-' என்று நினைத்த ஸரஸ்வதியின் மனம் அதற்குமேல் ஒன்றையும் யோசியாமல் தயங்கியது. பிறகு ஸ்வர்ணத்தை நிமிர்ந்து பார்த்து, "அத்தான் அவசியம் போக வேண்டியதுதான் அத்தை. நான் எதற்கு?" என்று கேட்டாள்.
" உன்னை வரச் சொல்லி அந்தப் பிள்ளை எழுதி இருக்கிறானே. முன்பு அவர்கள் இங்கு வந்திருந்தபோதும் கூப்பிட்டார்கள். போய் விட்டுத்தான் வாயேன், ஸரஸு" என்றாள் ஸ்வர்ணம்.
ஸ்வர்ணம் கூறுவதைச் சரியென்று ஸரஸ்வதியின் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. 'ஏற்கனவே. என்னால் கணவன் - மனைவி இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு, அதனால் பிறந்தகம் போயிருக்கிறாள் சாவித்திரி. ஊரிலும் என்னைப் பற்றியே தான் அவள் குடும்பத்தார் பழி கூறிக்கொண்டிருப்பார்கள். சில விஷயங்களில் ஆண்களின் சுபாவம் பரந்த நோக்கமுடையதாக இருக்கும். ஆகவே, சந்துரு என்னையும் வரும்படி கூப்பிடுகிறார். இதைப்போய்ப் பிரமாதமாக நினைத்துக்கொண்டு போவது தவறு' என்று ஸரஸ்வதி தீர்மானித்துக்கொண்டாள்.
வெளியே சென்றிருந்த ரகுபதி திரும்பியதும் ஸ்வர்ணம் மறுபடியும் கடிதத்துடன் அவன் அருகில் சென்று உட்கார்ந்து கொண்டாள். தீவிரமான யோசனையில். ஈடுபட்டிருக்கும் மகனின் முகத்தை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டே, "ரகு! என் பேரில் கோபமோ, வருத்தமோ வைத்துக் கொள்ளாதே. விரோதத்தை வளர்த்துக்கொண்டே போனால் அது வளர்ந்து கொண்டுதான் வரும். எதையும் பாராட்டாமல் தள்ளிவிட்டோ மானால் - விரோதம் வளர்வதற்கு இடமில்லையப்பா. தலை தீபாவளிக்கு மாப்பிள்ளை வர வேண்டும் என்று ஆசைப்பட்டுத் தான் அந்தப் பிள்ளை கடிதம் போட்டிருக்கிறான். அவன் அழைப்பிலே எல்லோருடைய அழைப்பும் கலந்திருப்பதாக பாவித்துப் போய்வா. நான் தான் எவ்வளவு காலம் சாஸ்வதமாக இருக்கப் போகிறேன்? ’தாய்க்குப் பிறகு தாரம்' என்று சொல்லுவார்கள். எனக்குப் பிறகு உன்னைப் பார்த்துக் கொள்ள வேண்டியவள் சாவித்திரிதான். அவளும் சிறியவள். உலகம் தெரியவில்லை. என் வார்த்தையைத் தட்டாதே. ரகு!" என்று உருக்கமாகக் கூறிவிட்டு மகனின் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தாள்.
தாயின் கையிலிருந்த கடிதத்தைத் திருப்பிப் பார்த்துக் கொண்டே , ”ஸரஸ்வதியும் வருகிறாள் இல்லையா?" என்று கேட்டான் ரகுபதி.
"உன்னுடன் 'போய் வா' என்றுதான் சொன்னேன். அவளுக்குத்தான் தனியாக ஏதோ லட்சியம், கொள்கை என்றெல்லாம் இருக்கிறதே. அவள் என்ன சொல்லப் போகிறாளோ?" என்றாள் ஸ்வர்ணம்.
இதுவரையில் இவர்கள் பேச்சில் தலையிடாமல் கையிலிருந்த "மீரா பஜனை'க் கீர்த்தனங்களில் லயித்திருந்த ஸரஸ்வதி, அத்தையைப் பார்த்து, ”இந்த விஷயத்தில் என்னை இரண்டு பேரும் மன்னித்துவிடுங்கள். இன்றைய தினசரியில், அப்பா சர்க்கார் வேலையாக, அயல் நாட்டிலிருந்து சென்னை வந்து. மைசூர் போவதாகச் செய்தி வந்திருக்கிறது. நானும் மைசூர் போகப் போகிறேன், அத்தை. அத்தான் மட்டும் போய்வரட்டும். என்ன அத்தான் நான் சொல்கிறது?" என்று கேட்டாள்.
மூன்று வருஷங்களுக்கு மேலாகத் தகப்பனாரைப் பாராமல் இருந்த பெண்ணைத் தடை செய்வது நியாயம் என்று தோன்றாமல் போகவே ஸ்வர்ணமும், ரகுபதியும் ஸரஸ்வதியை அதற்கு மேல் வற்புறுத்த வில்லை. அத்துடன் ஸரஸ்வதியிடம் ஒரு சிறப்பான அம்சம் உண்டு. மனத்துக்குப் பிடிக்காத விஷயமாக இருந்தாலும் சரி, கொள்கைக்கு முரணாக இருந்தாலும் சரி, அதனால் எவ்வளவு நன்மை ஏற்படுவதானாலும் விட்டுக் கொடுக்க மாட்டாள். ஸரஸ்வதி, சாவித்திரியின் வீட்டுக்குப் போனால் சட்டென்று சமரஸம் ஏற்பட்டுவிடும். சமத்காரமாகப் பேசி எல்லோர் மனதையும் கவர்ந்துவிடுவாள். பழைய விரோதத்தை எல்லோரும் மறந்துவிடுவார்கள். ஆனால் சாவித்திரி புக்ககத்தில் இருந்த நான்கு மாதங்களில் ஒரு தினமாவது ஸரஸ்வதியிடம் இன்முகமாகப் பேசியதில்லை. அவளாகவே வலுவில் சென்று சாவித்திரியிடம் பேசினாலும், அவளை மதிப்பதில்லை. கடைசியாக சாவித்திரி ஊருக்குப் புறப்படுவதற்கு முதல் நாள் அன்புடன் அவள் கேட்டுக் கொண்டதைக்கூடப் பாராட்டாமல் சென்ற பெண்ணுடன், நேருக்கு நேர் நின்று, 'நான் வந்திருக்கிறேன், பார்! அழையா வீட்டுக்குச் சம்பந்தியாக!' என்று கூறிச் செல்வதற்கு வெட்கமாக இராதா? அசட்டுக் கௌரவமும், முரட்டுப் பிடிவாதமும் உடைய பெண்ணிடம் போய் கைகட்டி நிற்கும் படியான நிலைமை ஸரஸ்வதிக்கு ஏற்படவில்லை. ' என்னை இரண்டு பேரும் மன்னித்துவிடுங்கள்' அவள் அத்தையிடம் கேட்டுக் கொண்ட பாவனை-யிலிருந்து அவள் மனத்தில் ஓடும் எண்ணங்களை ஸ்வர்ணம் ஒருவாறு ஊகித்துக் கொண்டாள்.
' இந்த மட்டும் பிள்ளையாவது தீபாவளிக்குப் போகிறேன் என்று ஒப்புக் கொண்டானே' என்று ஸ்வர்ணம் ஆறுதல் அடைந்தாள்.
-------------
27. தங்கத்துக்கு அர்ப்பணம்
கடலலைகள் போல் ஓயாமல் பொங்கிக்கொண்டிருந்த ஸ்வர்ணத்தின் மனம், மகனின் பதிலைக் கேட்டு ஆறுதல் அடைந்தது. தீபாவளிக்கென்று மகனிடம் கொடுத்தனுப்ப சாவித்திரிக்கு விலையுயர்ந்த புடைவையை எடுத்தாள். பல வர்ணங்களில் ரவிக்கைத் துண்டுகள் வாங்கினாள். கட்டு வெற்றிலையும், வாசனைப் பாக்கும், சீப்புப் பழமும், மணக்கும் கதம்பமும் வாங்கிக் கூடையை நிரப்பினாள். "மனைவியிடம் நல்ல மாதிரி பேச வேண்டும். பரிவாக நடந்து கொள்ள வேண்டும். 'தஸ், புஸ்' ஸென்று உன் கோபத்தைக் காட்டாதே" என்றெல்லாம் புத்திமதிகள் கூறினாள் ஸ்வர்ணம். "வேட்டகத்தில் பெரியவர்கள் ஏதாவது சொன்னாலும் பொறுத்துக்கொள், அப்பா!" என்றுவேறு மகனுக்குச் சொன்னாள். ரகுபதி எல்லா வற்றிற்கும் மௌனமாகவே தலையை அசைத்தான். மைசூர் பிரயாணத்துக்காகப் பெட்டியில் துணிமணிகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்த ஸரஸ்வதி, ஸ்வர்ணம் கூறுவதை முழுவதும் கேட்டுவிட்டு, "எல்லா புத்திமதிகளையும் சொன்னாயே அத்தை. முக்கியமான விஷயத்தைச் சொல்ல மறந்துவிட்டாயே" என்றாள்.
"என்ன?" என்று ஸ்வர்ணம் அவளைத் திருப்பிக் கேட்டதும், அவள், ”எல்லோரிடமும் சரிவர நடந்து கொண்டு திரும்பி வரும்போது சாவித்திரியையும் அழைத்து வந்து விடு என்று சொல்ல வேண்டாமா?" என்று கேட்டு விட்டு பெருமை பொங்கும் முகத்துடன் ரகுபதியைத் திரும்பிப் பார்த்தாள்,
"அதற்குத்தான் நீ அவனுடன் போய் எல்லாவற்றையும் பொறுமையுடன் நடத்திக்கொண்டு வருவாய் என்றிருந்தேன். திடீரென்று நீதான் யாத்திரை கிளம்பி விட்டாயே!" என்று நிஷ்டுரமாகப் பதிலளித்தாள் ஸ்வர்ணம்.
தீபாவளிக்கு இரண்டு தினங்களுக்கு முன்பே ரகுபதியும். ஸரஸ்வதியும் ஊருக்குக் கிளம்பிவிட்டார்கள். ரெயில் நிலையம் வரையில் இருவரும் ஒன்றாகச் சென்று வெவ்வேறு வண்டிகளில் ஏறினார்கள். "அத்தான்! நான் திரும்பி வரும்போது நீ தனியாக இருக்கக்கூடாது. கட்டாயம் சாவித்திரியை அழைத்து வந்து விடு" என்று உண்மையான அன்புடனும் அநுதாபத்துடனும் ஸரஸ்வதி கூறி அவனை ரெயில் ஏற்றினாள். ரகுபதியின் வண்டி புறப்பட்டுச் சென்ற பிறகு அரை மணி கழித்துத்தான் ஸரஸ்வதியின் ரெயில் கிளம்ப வேண்டும். ரெயில் சென்ற திசையைச் சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு நிறைந்த மனத்துடன் ஸரஸ்வதி பெருமூச்சு விட்டாள்.
தீபாவளி கொண்டாடிவிட்டு மனைவியுடன் ரகுபதி ஊருக்குத் திரும்பி விட்டான் என்று அறிந்தால், அவள் சமீபத்தில் ஊருக்குத் திரும்பக்கூடாது என்று தீர்மானித்துக் கொண்டாள். ரெயிலில் ஒரு மூலையில் உட்கார்ந் திருந்த ரகுபதி சிறிது நேரம் வரையில் அங்கு என்ன நடைபெறு கிறது என்பதைக் கவனிக்கவில்லை. பித்துப் பிடித்தவன் போல் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். இரவின் அமைதியைக் கலைத்துக்கொண்டு வனப் பிரதேசத்தில் ’தட தட' வென்று ரெயில் சென்றுகொண்டிருந்தது. அத்துடன் குழந்தை ஒன்று வீறிட்டு அழுதது. தாயார் கொஞ்ச நேரம் சமாதானம் செய்து பார்த்தாள். பிறகு தகப்பனார் சீராட்டிப் பார்த்தார். அழுகை ஓய்ந்தபாடில்லை. இருவரும் மனம் சலித்தவர்களாக, "சனியனே! என்ன தான் வேண்டுமென்று சொல்லித் தொலையேன்" என்று இரைந்து கோபித்துக் கொண்டார்கள் குழந்தையை! குழந்தை அழுது கொண்டு தன் மழலை மொழியில், "நீ ஆண்டாம் போ.... பாட்டிதான் வேணும். பாட்டிகிட்டே தாச்சுக்கணும் போ" என்றது.
'அப்பாடா' என்று பெற்றோர் பெருமூச்சு விட்டனர். ஓடுகிற ரெயிலில் ஊரிலிருக்கும் பாட்டியை எப்படி வரவழைப்பது என்று புரியாமல் திகைத்தனர். இருவரும் படும் சிரமத்தைப் பார்த்து ரகுபதி கூடையை அவிழ்த்து அதிலிருந்து இரண்டு பெரிய ஆரஞ்சுப் பழங்களை எடுத்தான்.
”இந்தா பாப்பா! பாட்டியிடம் காலம்பற போகலாம்”, என்று கூறி அவைகளை குழந்தையிடம் கொடுத்தான். தங்க நிறத்தில் பளபளவென்று உருண்டு விளங்கும் பழங்களைத் தன் குஞ்சக் கரங்களால் குழந்தை வாங்கிக்கொண்டு சமாதானம் அடைந்தது. இந்தக் காட்சியை ரசித்த பெரியவர் ஒருவர். ”இதைத்தான் குழந்தை மனம் என்கிறது, ஸார்! நம்மால் லேசில் திருப்தியடைய முடியாத விஷயங்கள் பல இருக்கின்றன. அகங்காரமும், மமதையும் தலை தூக்கி நம்மை நசுக்கிவிடுகின்றன. லேசிலே மனம் பணியமாட்டேன் என்கிறது. குழந்தைகள் அப்படி இல்லை. ஒன்று வேண்டுமென்று ஹடம் பிடிப்பார்கள். வீம்பு பண்ணுவார்கள். ஆனால், அதையே நீடித்து நினைவு வைத்து கொள்ள மாட்டார்கள். சட்டென்று மறந்து போவார்கள்" என்று கூறினார்.
ரகுபதி மனைவியைப் பார்த்து வருவதற்காகத்தான் கிளம்பி இருக்கிறான். அவளிடம் எப்படியெல்லாம் 'பவ்யமாக' நடந்து கொள்ளவேண்டும் என்று தாயார் வேறு உபதேசம் செய்து அனுப்பி இருக்கிறாள். ஸரஸ்வதி ரெயில் நிலையத்தில் கூட 'சாவித்திரியை அழைத்து வந்துவிடு' என்று உத்தரவு போட்டிருக்கிறாள். ஆனால் அவன் அந்தராத்மா இருக்கிறதே அது லேசில் மசிந்து போகத் தயாராக இல்லை. படுக்கை அறையில், "உன்னை அடித்துவிட்டேன் என்று கோபமா சாவித்திரி?" என்று அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு கெஞ்சியபோது, அவள் தன் கைகளை ஆங்காரத்துடன் உதறி விடுவித்துக்கொண்ட சம்பவத்தை அவன் மனம் மறக்கவில்லை. சாதாரண சிறாய்ப்புக் காயமாக இருந்தால் சீக்கிரம் குணமாகிவிடும். ஆழப்பதிந்து போன வெட்டுக் காயமாக அல்லவா ஏற்பட்டிருக்கிறது?
புகை வண்டி பெரும் வேகத்தில் போய்க்கொண்டிருந்தது. அதன் வேகத்தைப்போல் ரகுபதியின் மனோ வேகமும் அதிக மாயிற்று. பைத்தியக்காரத்தனமாக அல்லவா அவன் மனைவியை நாடிப் போகிறான்? மறுபடியும் அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டு போகமாட்டாள் என்பது என்ன நிச்சயம்? சிந்தனைச் சுழலில் ஜன்னலின் மேல் தலை வைத்துக்கொண்டே கண்ணயர்ந்து விட்டான் ரகுபதி. விடியற்காலை சில்லென்று காற்றுப் பட்டவுடனேயே விழிப்பு ஏற்பட்டது. ரெயிலும் தன் வேகத்தைக் குறைத்துக்கொண்டு ஒரு நிலையத்தில் நின்றிருந்தது. ஊரின் பெயரை உற்றுக் கவனித்தான். 'ஆ! தங்கம் இங்கேதானே அருகில் கிராமத்தில் இருக்கிறாள்' என்று நினைத்தான். "சாவித்திரி மன்னியோடு எங்கள் ஊருக்கு வாருங்கள்!' என்று அழைத்துவிட்டுப் போனாளே! மன்னியும் வேண்டாம், பொன்னியும் வேண்டாம். நான் மட்டுந்தான் போகிறேனே. தங்கத்தின் ஊரில் தீபாவளி கிடையாதா என்ன? கூடை நிறைய இருக்கும் கதம்பம் தங்கத்தின் கருங்கூந்தலுக்குத் தான் அர்ப்பணம் ஆகட்டுமே! பெட்டியிலே வைத்திருக்கும் வாணங்கள், பட்டாசுகளைத் தங்கந்தான் வெடித்து ரசிக்கட்டுமே?" ரகுபதி பெட்டியையும், கூடையையும் அவசரமாக இறக்கிவிட்டுத் தானும் கீழே இறங்கினான். ரெயிலும் அவன் அறியாமையைக் கண்டு சீறுவது போல் 'புஸ்' ஸென்று பெருமூச்சு விட்டுக் கொண்டு கிளம்பிவிட்டது.
-------------
28. மைசூரில்
ரகுபதியும் ஸரஸ்வதியும் ஒன்றாகவே ரெயில் நிலையத்துக்கு வந்தார்கள். சற்று முன்பாக ரெயில்கள் கிளம்பின. இருவரும் ஒவ்வோர் ஊரைக் குறிக்கோளாக வைத்துக்கொண்டு பிராயணச் சீட்டுகள் வாங்கியிருந்தார்கள். ரகுபதியின் பிரயாணம் பாதியில் நின்றது. சட்டென்று என்னவோ தோன்றவே ஒருவித யோசனையுமின்றி ரெயிலிலிருந்து அவன் இறங்கி விட்டான். ஸரஸ்வதியின் மனம் களங்கமற்று இருந்தது. இவ்வளவு காலம் மனத்தைப் பீடித்திருந்த கவலையும் ஒருவாறு நீங்கிவிட்டதல்லவா? அத்தான் ரகுபதி தன் மனைவியை அழைத்துவரப் புறப்பட்டுவிட்டான். இனிமேல் அத்தை ஸ்வர்ணத்தின் கவலைகளும் நீங்கிவிடும். ஆகவே, ரெயில் புறப்பட்டவுடன் படுக்கையை உதறிப் போட்டுக்கொண்டு படுத்தவள் விடியுமளவு நன்றாகத் தூங்கினாள். காலைக் கதிரவனது கிரணங்கள், ஓடும் ரெயிலின் ஜன்னல் வழியாகத் தன் மீது பட்டவுடன்தான் ஸரஸ்வதிக்கு விழிப்பு ஏற்பட்டது. செந்தமிழ் நாட்டைக் கடந்து மைசூர் ராஜ்ய எல்லைக்குள் ரெயில் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. காவிரி நதி பாய்ந்து வளம் பெற்று இருப்பதால் எங்கு பார்த்தாலும் பசுமை போர்த்த காடுகளும், சிறு குன்றுகளும், புதர்களும் நிறைந்து பார்ப்பதற்குப் 'பசேல்' என்று காட்சி அளித்தது. தமிழ் நாட்டிலே 'சுரீரென்று மக்களைத் தாக்கும் கதிரவன், மைசூர் ராஜ்யத்தில் சற்று நிதானமாகவே பவனி வருகிறான். பனி தோய்ந்த பள்ளத்தாக்குகளில் புகை போல் பனி மூடியிருக்கும் மலைச் சாரலில் அவன் ஜம்பம் ஒன்றும் சாயவில்லை.
ஓடும் ரெயில் ஒரு சிறிய கிராமத்தினூடே செல்லும்போது தலையில் தயிர்க் கூடைகளுடனும், மைசூருக்கே உரித்தான செழுமையான காய்கறிகள் கூடைகளுடனும் பெண்கள் அணியாகக் கேழ்வரகுக் கொல்லைக்குள் புகுந்து செல்வதை ஸரஸ்வதி கண்டாள். காலை ஒன்பது மணிக்கு மேல் ரெயில், ஸ்ரீரங்கப் பட்டணத்தை அடைந்தது. நிலையத்தில் அவளை அழைத்துப் போவதற்கென்று அவளுடைய தகப்பனார் வந்திருந்தார். பெரிய உத்தியோகத்தில் இருப்பவர். அந்தஸ்து வாய்ந்தவர் என்பதற்கு அறிகுறியாக அவருடன் நாலைந்து பேர்கள் வந்திருந்தார்கள். வண்டியிலிருந்து இறங்கியதும் ஸரஸ்வதி அன்புடன், ”அப்பா" என்று அழைத்து அவர் அருகில் சென்று நின்றாள். ” எப்படியம்மா இருக்கி? நீ மட்டுமா தனியாக வந்தாய்?" என்று ஆதுரத்துடன் மகளைக் கேட்டு, ஆசையுடன் அவள் முதுகில் தட்டிக் கொடுத்தார். அவருடன் வந்திருந்த நண்பர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் விடைபெற்றுக் கொண்டு போய்விட்டார்கள். தகப்பனாரும், அவர் நண்பரும் பின் தொடர ஸரஸ்வதி வெளியே சென்று தயாராக இருந்த வாடகை மோட்டாரில் ஏறிக் கொண்டாள்.
'அப்பாதான் எவ்வளவு மாறிவிட்டார்! மூன்று வருஷங்களுக்கு முன்புகூட இள வயதினர் போல இருந்தாரே! இப்பொழுது தலையில் லேசாக வழுக்கை விழுந்து விட்டதே!' என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டாள் சரஸ்வதி.
'குழந்தை நன்றாக வளர்ந்துவிட்டாள். சமீபத்தில் பத்திரிகைகளில் வெளியாகி இருந்த ஸரஸ்வதியின் புகைப் படத்தைப் பார்த்தே பரவசமாகி இருந்தேனே. நேரிலே பாயத்தால் புகைப்படம் மோசம் என்றுதான் சொல்ல வேண்டும். 'மூக்கும், விழியும், அடக்கமும், மரியாதையுமாக என் ஸரஸ்வதி எப்படி இருக்கிறாள்! 'அவள்' இல்லையே இந்த ரத்தினத்தைக் கண்டு மகிழ்வதற்கு!' என்று தகப்பனார் மகளைப் பார்த்துச் சந்தோஷமும், மனைவி இதைக்கண்டு அநுபவிப்பதற்கு இல்லையே என்று துக்கமும் எய்தினார். கண்களில் உணர்ச்சிப் பெருக்கால் துளிர்த்த நீரை அடக்குவதற்கு வெகு பிரயாசைப்பட்டார்.
அருகில் உட்கார்ந்திருந்த நண்பர் ஏறக்குறைய ஸரஸ்வதியின் தகப்பனார் வயதை உடையவர். அவர் பழகுகிற முறையிலிருந்து ஆப்த நண்பர் என்பது சொல்லாமலேயே விளங்கிவிட் டது. நட்பிலே பல தரங்கள் உண்டல்லவா? சிலர் தங்களுடைய வேலைகள் நடக்க வேண்டுமானால் மிகவும் நட்புரிமை பாராட்டுவார்கள். "உங்களைப்போல உண்டா?" என்பார்கள். அவர்கள் வேலை முடிந்து விட்டால் பிறகு, " இருக்கிறாயா?" என்று கேட்பதற்குக்கூட அவர்களுக்கு வாய்வலித்துப்போகும்! சில நண்பர்கள் குழைந்து குழைந்து நண்பர்களிடம் வேலை வாங்கிக் கொள்வார்கள். தாங்கள் ஏதாவது செய்ய வேண்டுமானால் தூர விலகிவிடுவார்கள். 'ரெயில் சிநேகம்' என்று குறிப்பிடுகிறோம். ரெயிலில் சில மணி நேரங்கள் சந்தித்துப் பிரிகிறவர்களை அப்படிச் சொல்லுகிறோம். அருகிலேயே இருப்பார்கள் சில நண்பர்கள். அவர்களுடன் நாம் எவ்வளவு நட்புக்கொண்டு பழகினாலும் அவர்கள் விலகியே செல்வார்கள்.
பாரதத்திலே கர்ணனும், துரியோதனனும் பழகி வளர்த்த நட்பு மிகவும் சிறந்தது. உண்மையான நட்பு எந்த விதமான கட்டு திட்டங்களுக்கும் உட்பட்டதல்ல. பணக்காரன், ஏழை என்று வித்தியாசம் பாராட்ட அதில் இடம் இல்லை. இந்தக் காலத்திலே சிலர் தாங்கள் சிநேகம் பாராட்டுகிறவர்களின் சொத்து, அந்தஸ்து முதலியவைகளை ஆராய்ந்து பழகுகின்றனர். கண்ணனுக்கும், ஏழைக் குசேலருக்கும் அந்தஸ்தில் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசந்தான். இருந்தபோதிலும், அந்த தூய நட்பைப்பற்றிப் படிக்கும் போதெல்லாம் மனம் உருகிக் கண்ணீர் பெருகி விடுகிறது. இந்த மாதிரியே ஸரஸ்வதியின் தகப்பனாரும், அவருடன் கூடவந்த நண்பர் கோபால தாஸரும் அந்தஸ்தில் மிகுந்த வித்தியாசம் உடையவர்கள். பால்யத்தில் இருவரும் விஞ்ஞானக் கல்வி பயில ஒன்றாக மைசூர் ராஜ்யத்தில் வசித்தவர்கள். ஸரஸ்வதியின் தகப்பனார் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். பாஷை தெரியாத கன்னட ராஜ்யத்தில் கோபால தாஸர் அவருக்குச் சிறந்த நண்பராக விளங்கினார். கல்விப் பயிற்சிக்கு அப்புறம் ஸரஸ்வதியின் தகப்பனாருக்கு அதிருஷ்ட வசமாக உயர் பதவி கிட்டியது. கோபால தாஸருக்கும் கிட்டி இருக்கும். ஆனால், தேச சேவைக்காக காந்தி அண்ணலின் அன்புக்குரல் அவரை அழைத்தது. தியாக அக்னியில் ஸ்புடம் போட்ட தங்கத்தைப்போல் இருந்தார் அவர். ஆகவே, பதவியும், உயர்வாழ்வும் அவருக்குக் கிட்டவில்லை. அவரும் அதில் ஆசை கொள்ளாமல் தேசப்பணியிலேயே தம் வாழ்நாளைக் கழித்து விட்டார். இடை இடையே, நண்பர்கள் சந்திக்கும் போதெல்லாம், ஸரஸ்வதியின் தகப்பனார் தம் நண்பரிடம் அவரைப் பல உத்தியோகங்களை வகிக்கும்படி அழைத்தார். பிரும்மசாரியாகிய அவருக்கு, தாம் சம்பாதித்து யாரைக் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கவே நண்பரின். வேண்டுகோளை மறுத்துவிட்டார்.
அமைதி நிரம்பிய காவிரி நதிக்கரை ஓரமாகவே மோட்டார் சென்று கோபால தாஸரின் சிறு வீட்டை அடைந்தது. வீட்டிற்குப் பின்னால் ஓடும் நதியில் நொப்பும், நுரையுமாகப் புது வெள்ளம் செக்கச் செவேலென்று சுழித்துக்கொண்டு ஓடியது. காலைச் சூரியனின் தங்க நிறக் கிரணங்கள். சிவந்த தண்ணீரில் விழுந்து மேலும் அதைத் தங்கமய-மாக்கியது. நதியின் இரு மருங்கிலும் அடர்ந்த சோலைகள். வண்டுகள் ரீங்காரமிட்டன. பட்சிகள் இனிய குரலில் இசை பாடின. தொலைவில் திப்புவின் சமாதிக்கோவில் கம்பீரமாகக் காட்சி அளித்தது. நதிக்கரையை அடுத்த பழைய கோட்டை, கொத்தளங்கள் இடிந்து கிலமாகக் கிடந்தன. மனித வாழ்வின் க்ஷண கால இன்பத்தைப் பறை சாற்றும் சின்னங்கள் அவை.
ரெயில் பிரயாணத்தால் அலுத்துப்போய் ஸரஸ்வதி பகல் போஜனத்துக்கு அப்புறம் படுத்துத் தூங்கிவிட்டாள். அவள் விழித்து எழுந்தபோது மாலை ஆறு மணி இருக்கும். இப்படி தேகம் தெரியாமல் தூங்கியதை நினைத்து அவளே வெட்கிப் போனாள்.
"தூங்கி எழுந்தாயா அம்மா? வெளியே போய் இப்படி உலாவிவிட்டு வருவோமா?" என்று தகப்பனார் மகளை அழைத்தார்.
மூவரும் நதிக்கரை ஓரமாகவே மௌனமாக நடந்தனர். வெறுமனே 'வள வள' வென்று பேசுவதைவிட, அங்கு நிலவி யிருந்த அமைதியை ரஸிப்பதே பெரும்பொழுது போக்காக அவர்கள் கருதி இருக்க வேண்டும். ஸரஸ்வதியின் தகப்பனார் அன்று உற்சாகமாக இல்லை. 'மகள் வளர்ந்து விட்டாள். தனக்கும் வயதாகிக்கொண்டு வருகிறது. அவளுடைய வருங் காலம் எப்படி?' என்று அவர் மனம் ஓயாமல் அவரைக் கேட்டது. இதுவரையில் பேசாமல் இருந்த ஸரஸ்வதி, "அப்பா! இந்த நதிக்கரையும், அதோ தெரியும் ஸ்ரீரங்கநாதர் ஆலயமும், இந்த ஊரின் அமைதியுமாகச் சேர்ந்துதான் கோபால மாமாவை இப்படி எதிலும் பற்றில்லாமல் வாழச் செய்திருக்க வேண்டும். நான்கூட இங்கேயே தங்கிவிடலாம் என்று பார்க்கிறேன். இந்த ஊரிலேயே ஒரு சங்கீதப் பள்ளிக்கூடம் ஆரம்பித்து விட்டால் என்ன?" என்று ஆர்வத்துடன் தகப்பனாரை விசாரித்தாள்.
"நீ பேசுகிறது நன்றாக இருக்கிறதே குழந்தை! உன் அப்பாவுக்குத் தாம் தாத்தா ஆகவேண்டும் என்று ஆசை ஏற்பட்டிருக்கிறது. நீ விவாகமே வேண்டாமென்கிறாயாம். ஒரு பெண் தனியாக வாழ்க்கை நடத்துவது கடினம் என்பது உனக்குத் தெரியாத விஷயமில்லையே. ஸ்ரீரங்கப்பட்டணம் வந்து நீ சன்னியாசினியாவதற்கு நான் ஒருகாலும் உனக்கு உதவி புரியமாட்டேன் ஸரஸ்வதி! ஆமாம்...." என்று சிரித்துக் கோபால தாஸர் ஸேரஸ்வதியை உரிமையுடன் அதட்டினார்.
ஸரஸ்வதி சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்தாள். பிறகு, நண்பரைப் பார்த்துப் பணிவுடன், "இதென்ன மாமா, இப்படிப் பேசுகிறீர்கள்? எந்த விஷயத்திலும் ஆசை கொள்வதற்கு மனந்தானே காரணம்? என் மனம் என்னவோ கல்யாணத்தைத் தற்சமயம் விரும்பவில்லை. எங்கள் தமிழ் நாட்டில் சில நூற்றாண்டுகளுக்கு முன் ஸ்ரீவில்லி-புத்தூரில் பெரியாழ்வார் என்னும் மகானுக்குக் கோதை என்று ஒரு மகள் கிடைத்தாள். அத்தெய்வக் கன்னி சதாகாலமும் கண்ணனையே அகத்துள் இறுத்தி பக்தி செலுத்தினாள்; காதல் கொண்டாள்; அன்பு பூண்டாள். அகத்திலே அவனுக்கன்றி வேறு ஒருவருக்கு இடம் தர மறுத்தாள்; பெரியாழ்வார், மணப்பருவம் எய்தும் தம் மகளுக்குத் தகுந்த மணாளன் கிடைக்க வேண்டுமே என்று என் தகப்பனார் விரும்பியதைப் போலத்தான் விரும்பினார். ஆனால், அவள் உள்ளத்தை ஆட்கொண்ட மணிவண்ணன் அவளையும் ஆட்கொண்டு அருள் புரிந்தான். தம் மகளால் ஒரு படி உயர்ந்து விட்டார் தந்தை!" என்றாள்.
கோபால தாஸரின் கண்கள் அருவியாக மாறி இருக்க வேண்டும். காவிரியின் பிரவாகத்தைப்போல் அவர் கண்கள் கண்ணீரைக் கொட்டின. அவர் ஸரஸ்வதியின் வார்த்தை களுக்குப் பதில் கூறாமல் புரந்தரதாஸரின் அழகிய பாடலைப் பாட ஆரம்பித்தார்:
-
" பிருந்தாவனத்தில் ஆடுபவன் யார்?
சந்திர வதனனைப் பார்க்கலாம் வாடி-அடி தோழி!"
----------
29. வரவேற்பு
முற்றத்தில் துளசி மாடத்தின் முன்பு மணிக்கோலமிடும் தங்கத்தின் எதிரில் ரகுபதி அதிகாலையில் வந்து நின்றான். தலைப் பின்னல் முன் பக்கம் சரிந்து விழ, முதுகில் புரளும் மேலாக்கு நழுவ அவள் கோலமிட்டுக் கொண்டிருந்தாள். கைகள் 'சரசர' வென்று புள்ளிகளை வைத்தன; புள்ளிகளைச் சேர்த்து அழகிய கோலமாக்கின. கோலத்தை முடித்துவிட்டுத் தலை நிமிர்ந்த போது தான் அவள் சற்றும் எதிர்பாராத விதமாக ரகுபதி காட்சி அளித்தான் அங்கே! தங்கம் தன் அழகிய கண்களால் அவனைப் பார்த்துக் கொட்டக் கொட்ட விழித்தாள். பிறகு வழக்கமான சிரிப்புடன், ”ஓ! அத்தானா! வாருங்கள், வாருங்கள், எங்கே இப்படி? ஓஹோ! தீபாவளிப் பிரயாணமோ?" என்று கேட்டாள்.
"அத்தானேதான்! சாட்சாத் ரகுபதி தான். நீ ஊருக்கு வரும்போது யாரிடம் சொல்லிக் கொள்ளாமல் வந்தாயோ, அவனே தான்! தீபாவளி கொண்டாடத்தான் இங்கே வந்திருக்கிறேன்!" என்று சொல்லிவிட்டு, கூடையைப் பிரித்துக் கட்டுக் கதம்பத்தையும், பழங்களையும் எடுத்து அவளிடம் கொடுத்தான்.
'இதற்குள்ளாக உள்ளிருந்து வியப்புடன் அலமு அத்தை பரபரவென்று முற்றத்துக்கு வந்தாள். "வந்தாயாடா, ரகு! வா அப்பா. இப்பொழுதாவது வழி தெரிந்ததே உனக்கு!" என்று அவனை வரவேற்று உபசரித்தாள். தீபாவளி இன்னும் இரண்டு நாட்கள் தாம் இருக்கின்றன என்பதற்கு அறிகுறியாக அவ்வீட்டிலிருந்து 'கம கம' வென்று பலகாரங்களின் வாசனை வீசியது. துளசி மாடத்துக்குக் கோலமிட்டு முடித்தவுடன் தங்கம் கொல்லைப்புறம் சென்றாள். தவிடும், பிண்ணாக்கும் கலந்து பிசைந்து ஆசையுடன் கறவைப்பசுவுக்கு வைத்தாள். 'தக தக' வென்று தேய்த்து அலம்பிய பித்தளைச் செம்பில் நுரை பொங்கும் பாலைக் கறக்க ஆரம்பித்தாள். 'சொர், சொர்'ரென்று பால் பாத்திரத்தில் விழ ஆரம்பித்தது. ரகுபதி, கையில் பல் துலக்கும் 'பிரஷ்'ஷுடன் கொல்லைப்பக்கம் வந்தான். பாலைக் கறந்துகொண்டே தங்கம் அவனைப் பார்த்து. "அத்தான்! கையில் என்னவோ வைத்திருக்கிறீர்களே. அது என்னது? விலை ரொம்ப இருக்குமோ?" என்று கேட்டாள்.
"தூ பிரமாதம்! அதன் விலை ஒரு ரூபாயிலிருந்து இரண்டு ரூபாய்களுக்கு மேல் போகாது" என்றான் ரகுபதி.
தங்கம் ஒரு மாதிரியாகச் சிரித்தாள். பிறகு அவனைப் பார்த்து. “அத்தான்! நான் சொல்கிறேனே என்று கோபித்துக் கொள்ளாதீர்கள். நம் பண்ணைக் குடியானவன் கிட்டே ஒரு வார்த்தை சொன்னால் ஒரு கட்டு வேப்பங் குச்சிகளைச் சீவி ஒழுங்கு படுத்தித் தருவான், விலை, கிலை ஒன்றும் நீங்கள் தர வேண்டாம். ஊருக்குப் போகும்போது எடுத்துப் போங்கள்!" என்றாள்.
ரகுபதி 'கட கட' வென்று சிரித்து விட்டான். அவன் இம்மாதிரி மனம் விட்டுச் சிரித்து எவ்வளவோ காலம் ஆயிற்று. கிணற்றிலிருந்து ஜலம் இழுத்துக் கைகால்களை அலம்பிக் கொண்டே , ”அது போகட்டும். காலையில் எழுந்தவுடன் துளசி மாடத்துக்குக் கோலம் போடுவது. அதன் பிறகு மாட்டிற்குத் தீனி வைத்துப் பால் கறப்பது. அதன் பிறகு?" என்று அவளைக் கேட்டான் ரகுபதி.
"அதன் பிறகு ஏரிக்குப் போய்த் துணிகளைத் துவைத்துக் குளிப்பது" என்று ஒய்யாரமாகப் பதிலளித்தாள் தங்கம்.
"இப்படியே நாள் பூராவும் ஒரு வேலை மாற்றி இன்னொன்று என்று செய்து கொண்டிருப்பாயாக்கும்! வேறு பொழுது போக்கு எதுவும் இல்லையா?" என்று மேலும் கேட்டான் ரகுபதி.
தங்கம் அவனுக்கு மறுமொழி கூறுவதற்கு முன்பே உள்ளிருந்து அலமு அவளைக் கூப்பிட்டாள். பால் பாத்திரத்துடன் உள்ளே சென்ற தங்கம், தட்டில் இட்லிகளுடனும், கையில் மணக்கும் காப்பியுடனும் கூடத்துக்கு வந்து. ரகுபதியின் முன்பு அவைகளை வைத்துவிட்டுத் தாழ்வாரத்திலிருந்த துணிகளை மூட்டையாகக் கட்டி எடுத்துக் கொண்டாள். இடுப்பில் குடத்தை ஒய்யாரமாகச் சாய்த்து வைத்துக்கொண்டு, "ஏரிக்குப் போய்விட்டு வருகிறேன், அத்தான்! வந்த பிறகு அதற்கு அடுத்தாற்போல் என்ன வேலை என்பதையும் சொல்லுகிறேன்" என்று கூறிவிட்டு வெளியே போய்விட்டாள்.
சூரியன் வானத்தில் மேலே வந்து விட்டான். சமையலறை யிலிருந்து கீரைக் குழம்பு 'கம கம' வென்று மணக்க ஆரம்பித்தது. வெறுமனே கூடத்தைச் சுற்றிச் சுற்றி வர ரகுபதிக்குப் பிடிக்கவில்லை. ஆகவே, 'வெளியே போய் வரலாம்' என்று கிளம்பி, அலமுவிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டான். வழியெல்லாம் ஓலை வேய்ந்த குடிசைகள். அவைகளை அடுத்து மரகத வண்ணத்தில் வயல் வெளிகள். அவைகளில் படிந்து 'சல சல" வென்று ஓடும் நீரின் ஓசை. ஈர மண்ணிலிருந்து எழும் ஒருவித வாசனை. வழக்கமாக நகரவாசிகளில் பலர் அத்தர், சந்தணத் தின் மணத்தையே உணர்ந்தவர்கள். சுக போகத்திலேயே திளைப்பவர்கள். காலில் மண் ஒட்டிக் கொண்டால் முகத்தைச் சுளிப்பவர்கள்: இவர்களுக்கு, முழங்கால்கள் வரையில் சேற்றில் அழுந்தப் பாடுபடும் ஏழைக் குடியானவர்களைப்பற்றிச் சிந்திப்பதற்கே பொழுது இருப்பதில்லை. ஈர மண்ணிலிருந்து எழும் வாசனை யை நுகர்ந்து அநுபவிப்பதற்கும் பாக்கியம் செய்ய வில்லை
ரகுபதி சிறிது தடுமாற்றத்துடனேயே வரப்புகளின் மீது நடந்து சென்றான். அங்கே மனத்துக்கு ரம்யமான காட்சி ஒன்றைக் கண்டான். இசையும், கலையும். ஆடலும், பாடலும் நகரங்களில் மட்டும் இல்லை. சேறும், சகதியும், உழைப்பும், பலனும் நிறைந்திருக்கும் கிராமங்களிலும் அவை இருக்கின்றன என்பதை ரகுபதி உணர்ந்து கொண்டான். உடல் கட்டுடன் விளங்கும் இளமங்கை ஒருத்தி வயல்களுக்கு மடை கட்டிக்கொண்டிருந்தாள். சற்று எட்டி, ஏற்றக் கிணற்றிலிருந்து ஓர் ஆடவன் ஏற்றம் இறைத்துக்கொண்டே,
-
"வண்டி கட்டி மாடு கட்டி- ஏலேலமடி ஏலம்
மீனாக்ஷி அம்மை கூண்டு கட்டி - ஏலேலமடி ஏலம்"
-
"கூண்டுக்குள்ளே போற பெண்ணே - ஏலேலமடி ஏலம்
அட! கூப்பிட்டாலும் கேட்கலையோ? - ஏலேலமடி ஏலம்"
என்று சவால் விடுப்பது போல் தீங்குரலில் பாடினாள்.
அவன் உள்ளத்திலிருந்து பெருமூச்சு ஒன்று கிளம்பியது. மெதுவாக ஒன்றும் தோன்றாமல் மேலே நடக்க ஆரம்பித்தான் அவன். எதிரில் தங்கம் குளித்துவிட்டு வந்து கொண்டிருந்தாள். உடம்பிலே ஈரப்புடைவை. தோளில் துவைத்த துணிகளின் சுமை. இடுப்பில் நீர் வழியும் குடம். தேர்ந்த எழுத்தாளனாக இருந்தால், அவளைக் குறைந்த பட்சம் இரண்டு பக்கங்களாவது வர்ணித்து விடுவான்? வார்த்தைகளுக்கும், வர்ணனைகளுக்கும் எட்டாத அழகு அது. ஆகவே, அவன் வாயடைத்து அவளுடன் வீடு திரும்பி வந்து சேர்ந்தான்.
------------
30. சாவித்திரியின் உள்ளம்
தீபாவளி பட்சணத்திற்காக மாவு அரைப்பதற்குத் தகர டப்பாக்களில் சாமான்களை நிரப்பிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள் மங்களம். தலை தீபாவளிக்கு மாப்பிள்ளை வரும் வீட்டில் நிலவ வேண்டிய உற்சாகம் அங்கே காணோம். தீபாவளி அழைப்பு அனுப்பியதைப்பற்றிச் சந்துருவும், சீதாவும், மங்களமும் மட்டும் அறிந்திருந்தனர். முன் ஜாக்கிரதையாக விருந்துக்கு வேண்டிய சாமான்களை வாங்கி வைத்துவிட்டாள் மங்களம்.
"வருஷா வருஷம் வருகிற பண்டிகைதானே? மாப்பிள்ளை வந்து சவரணையாகத் தலை தீபாவளி கொண்டாடுகிறது பாழாகத் தான் போகிறது! எதற்கு இப்படி ஒரேயடியாகச் சாமான்களை வாங்கி நிரப்பி வைத்திருக்கிறாயாம்?" என்று பாட்டி மங்களத்தைக் கேட்டாள். பாட்டியின் வார்த்தைகள் மங்களத்துக்குச் சுரீரென்று தைத்தன. “எதையாவது அச்சான்யமாகச் சொல்லிக்கொண்டு இருப்பதுதான் இந்தக் கிழத்துக்கு வேலை. வீட்டைச் சுற்றிச் சுற்றிவந்து. 'அது எதற்கு; இது என்ன?' என்று ஓயாமல் கேட்டுத்தான் என்ன பலனை அடையப் போகிறாளோ?" என்று மனத்துக்குள் மாமியாரை வெறுத்துக் கொண்டாள்.
தீபாவளி நெருங்கிவிட்டது என்பதற்கு அறிகுறியாக அவ்வப்போது வெடிகளின் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. புடைவைக் கடைகளில் கூட்டம் நெரிந்தது. அசல் நெய்யுடன் மட்ட நெய்யைக் கலந்து புத்துருக்கு நெய் என்று வியாபாரிகள் பீற்றிக் கொண்டனர். பட்டாசுக் கடைகளில் சிறுவர் சிறுமியரின் கூட்டம். குடும்பத் தலைவருக்கு ஒரே தலைவலி, எப்படி ' பட்ஜெட்'டைச் சமாளிக்கப் போகிறோம் என்று.
குதூகலம் நிரம்பியிருக்கும் இந்த நிகழ்ச்சிகளைப் பார்த்துச் சாவித்திரி பெருமூச்செறிந்தாள். 'சௌம்யமான மனத்தைப் படைத்தவர், ஸ்ரீராமர். குற்றமுள்ளவரிடத்தும் நன்மையைச் செய்கிறவர். நன்றியுள்ளவர். சத்தியம் தவறாதவர்' என்றெல்லாம் வால்மீகி ராமாயணத்தில் வரும் வர்ணனையைச் சீதா உரக்கப் படித்துக் கொண்டிருப்பதைச் சாவித்திரி கேட்டாள். கவியின் அமர சிருஷ்டியாகிய ஸ்ரீ ராமசந்திரனின் கல்யாண குணங்களைக் கேட்டவுடன் சாவித்திரியின் உள்ளம் பாகாய் உருகியது. சிறு விஷயத்துக்காக ஏற்பட்ட இவ்வளவு மனஸ்தாபத்தையும், அதைத் தீர்ப்பதற்குத் தெரியாமல் தான் படும் அவஸ்தையையும் நினைத்து அவள் மனம் வருந்தியது. ரகுபதி உயர்ந்த குணங்களைப் படைத்தவன், ஏதோ சில விஷயங்களில் தவிர, பிறர் மனத்தை நோக வைக்கும் குணம் அவனிடமில்லை. தான் செய்த குற்றத்தை உணர்ந்து அவளிடம் நேராகத் தைரியமாக மன்னிப்புக் கேட்டிருக்கிறான். அசட்டுக் கௌரவம் என்பது அவனிடம் லவலேசமும் இல்லை. இத்தகைய குணவானைக் கணவனாக அடைந்தும் அவனிடம் ஒத்து வாழ முடியாமல் போனது எதனால் என்று சாவித்திரி சாவதானமாக இப்பொழுதுதான் ஆராய ஆரம்பித்திருந்தாள். தீபாவளிக்குக் கணவன் வரவேண்டும். பரம சாதுவாகிய தன் மாமியார். பிள்ளையை அனுப்பி வைப்பார் என்றும் நினைத்துக் கொண்டாள், சாவித்திரி.
முற்றத்தில் காகம் உட்கார்ந்து கத்தும் போதெல்லாம், ' ஹோ! அவர் வருகிறார் போல் இருக்கிறது!' என்று நினைத்து உவகை எய்துவாள்.
அன்று ராஜமையர் காரியாலயத்திலிருந்து திரும்பி வரும் போது கையில் பெரிய துணி மூட்டையுடன் வந்து சேர்ந்தார். காப்பி அருந்தி சற்று இளைப்பாறிய பின்பு மூட்டையைப் பிரித்து, "இது சாவித்திரிக்கு. இது சீதாவுக்கு, இது சந்துருவுக்கு. இது உனக்கு" என்று துணிகளை ஒவ்வொன்றாக எடுத்து மேஜை மீது வைத்தார்.
எலோருக்கும் போக ஒரு ஜதை சரிகை வேஷ்டி மிகுந் திருந்தது. சீதா குறும்புத்தனமாக அதைப் பார்த்துக் கொண்டே, * அப்பா! மாப்பிள்ளையை மறக்கவில்லை போல் இருக்கிறதே! ஜம்மென்று சரிகை - போட்டுப் பிரமாதமாக வாங்கியிருக்கிறீர்களே!" என்று கூறிச் சிரித்தாள். மாப்பிள்ளை வருவான் என்று ராஜமையரும் எதிர்பார்த்துத் தான் ஜவுளி எடுத்திருந்தார்.
"அடியே! இரண்டு பவுனில் கைக் கடியாரத்துக்குச் சங்கிலி பண்ணச் சொல்லி இருக்கிறேன். கையோடு இருக்கட்டுமே ஒன்று" என மங்களத்தைப் பார்த்துக் கூறினார் அவர்.
"அழைக்காத விட்டுக்குச் சம்பந்தியாக வரமாட்டானோ, உங்கள் மாப்பிள்ளை! ரொம்பத் தெரிந்தவர், நீங்கள்! உங்கள் தலை தீபாவளிக்கு என் அப்பா எப்படி-யெல்லாம் உபசாரம் பண்ணி இருந்தார் என்பதை நினைத்துப் பாருங்கள். ஒரு மாசத்துக்கு முன்பே கடிதங்களில் உங்களை வரச்சொல்லி எழுதி இருந்தாரே" என்று சமயத்தை விடாமல் மங்களம் இடித்துக் காட்டினாள்.
”ரகுபதியோடு ஸரஸ்வதியும் வருவாள் அம்மா. அவளுக்கு நாம் ஏதாவது தீபாவளிப் பரிசு கொடுக்க வேண்டாமா?" என்று சந்துரு கேட்டான்.
"ஒரு நிமிஷங்கூட ஸரஸ்வதியை நீ மறக்கமாட்டாய் போலிருக்கிறதே! உன் வியாச புஸ்தகம் பூராவும் ஸரஸ்வதி நாம ஸ்மரணையாக இருக்கிறதே! இந்த ஸ்துதியைக் கேட்டு சாக்ஷாத் ஸ்ரீ ஸரஸ்வதியே பிரசன்னமாகி விடுவாள்; இல்லையா அண்ணா?" என்று சீதா தமையனைச் சமயம் பார்த்துத் தாக்கினாள்.
வெட்கத்தால் பதில் ஒன்றும் கூறாமல் சந்துரு மென்று விழுங்கினான். அந்த வீட்டில் ஒவ்வொருவரும் ரகுபதி வர வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். சந்துரு யாருக்கும் தெரியாமல் நடராஜரின் சித்திரம் ஒன்றை வாங்கி வைத்திருந்தான். சாதாரணப் புடைவையும், ரவிக்கையும் உன்னத லட்சியங்களுக்கு இருப்பிடமான ஸரஸ்வதிக்கு அளிப்பதற்குத் தகுதி உள்ளவைகளாக இல்லை. ஸரஸ்வதியைத் தீபாவளியின் போது சந்தித்தால் இந்தக் கலைப் பரிசை அவளுக்குக் கொடுக்க வேண்டும்; அவன் தூய காதல் ஈடேற தில்லையம்பலத்து இறைவன் அருள் புரிவான் என்றும் நம்பினான்..
-------------
31. அழைக்காத விருந்தாளி
மைசூர் ராஜ்யத்தில் பார்க்க வேண்டிய இடங்களை அநேகமாகப் பார்த்து முடித்து விட்டாள் ஸரஸ்வதி. கோபாலதாஸர் வசித்து வந்த வீடும், அதன் சுற்றுப்புறங்களும் அவளுக்கு மிகவும் பிடித்துவிட்டது. சர்க்கார் அலுவலாக வந்திருந்த அவள் தகப்பனார், தம் வேலைகளை முடித்துக்கொண்டு விட்டார். தன் சகோதரியின் குடும்ப நிலையை இதற்குள் அவர் ஒருவாறு ஸரஸ்வதி சொல்லித் தெரிந்து கொண்டிருந்தார். அவர்களிடம் இனிமேல் ஸரஸ்வதி தங்கியிருக்க இயலுமா என்றும் கவலை அடைந்தார் அவர். ஆகையால் அவர் ஊருக்குப் புறப்படுவதற்கு முன்பு, "ஏனம்மா! நீயும் என்னோடு வந்து விடுகிறாயா? வெளி நாடுகளெல்லாம் பார்த்தாற்போல் இருக்கும்” என்று கூப்பிட்டார்.
ஸரஸ்வதி சிறிது நேரம் யோசித்துவிடு. "தீபாவளிப் பண்டிகைக்கு அத்தான் வேட்டகம் போயிருக்கிறான். அநேகமாக மனைவியை அழைத்து வந்து விடுவான். அத்தையிடம் சொல்லிக் கொள்ளாமல் எப்படியப்பா வந்து விடுவது?" என்று கேட்டாள். அதுவும் வாஸ்தவந்தான் என்று தோன்றியது அவருக்கு. மகளைப் பிரிந்து செல்லும்போது அன்புடன் அவள் தலையை வருடிக் கொண்டே, "அம்மா! எல்லாவற்றிலும் நீ புத்திசாலியாக இருக்கிறாய். உன்னிடம் ஒரே ஒரு அசட்டுத்தனம் இருக்கிறது. என் குடும்பத்தின் விளக்கே நீ ஒருத்திதான். இந்த விளக்கால் என் குடும்பம் ஒளிபெற வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். இந்த ஒரு விளக்கிலிருந்து பல தீபங்களை ஏற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். உன் மனசுக்குப் பிடித்தவனாக யாரைச் சொல்லுகிறாயோ அவனை நான் ஏற்பாடு செய்கிறேன், ஸரஸ்வதி!" என்று உருக்கமாகக் கூறினார்.
ஸரஸ்வதியின் பளிங்குக் கன்னங்களில் கண்ணீர் உருண்டு வழிந்தது. ஆர்வத்துடன் தகப்பனாரின் கரங்களைப் பற்றிக் கண்களில் ஒற்றிக்கொண்டாள் ஸரஸ்வதி. பிறகு உதடுகள் உணர்ச்சியால் துடிக்க, "அப்பா! நான் என்றுமே இப்படிக் கன்னியாக இருந்து விடுவேன் என்று கவலைப்படுகிறீர்களா? அப்படி யெல்லாம் நான் விரதம் ஒன்றும் எடுத்துக் கொள்ளவில்லை. லட்சியப் பாதையில் செல்லுகிறவர்கள் வகுத்துக் கொள்ள வேண்டிய இல்லறமே வேறு. அத்தான் ரகுபதி ஒரு லட்சிய வாதி. இசை என்றால் ஆசைப்படுகிறவன். அவன் ஆரம்பித்த கபவாழ்வு இனிமையாக இல்லை. அவன் லட்சியம் ஈடேற அவன் மனைவி அவனுடன் ஒத்துழைக்க மறுக்கிறாள். அவனாவது தன் மனதை மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது அவளாவது அவன் வழிக்குத் திரும்ப வேண்டும். ஆகையால், நான் விவாகம் செய்து கொள்வதற்கு முன்பு யோசித்துத்தான் செய்து கொள்ள வேண்டும். அன்று கூறியதுபோல் நான் ஆண்டாளாக மாறி விடுவேன் என்று வருத்தப்படாதீர்கள். அவ்வளவு பக்தியும், மனத்தெளிவும் சாதாரணப் பெண்ணாகிய எனக்கு இல்லை" என்றாள் அவள்.
சிறிது நேரத்துக்கெல்லாம் வான வெளியில் ஊர்ந்து செலலும் விமானத்தைப் பார்த்துக்கொண்டே நின்றாள் ஸரஸ்வதி. 'அப்பா வந்தார். அவருடன் ஒரு வார காலம் பொழுது சென்றதே தெரியாமல் பல இடங்களைச் சுற்றிப் பார்த்தோம். அத்தானும், சாவித்திரியும் தீபாவளி முடிந்து ஊருக்குத் திரும்பி விடுவார்கள். அத்தையும் நாட்டுப் பெண்ணைப்பற்றிய களிப்பில் என்னை மறந்துபோய்விடுவாள்' என்று சிந்தனை படர்ந்து சென்றது. இவ்வளவு பெரிய உலகில் தான் தனியாக நிற்பதாக ஒருவித பிரமை அவளுக்கு ஏற் பட்டது.
"குழந்தை! வீட்டிற்குப் போகலாமா?" என்று கோபால தாஸர் அவளை அழைத்தபோது தான் அவள் சுய உணர்வை அடைந்தாள். இருவரும் நதிக்கரை ஓரமாகவே நடந்தார்கள். அடிக்கடி ஸரஸ்வதி பெருமூச்சுவிடுவதையும், கண்களைத் துடைத்துக் கொள்வதையும் கவனித்த நண்பர், ”ஏனம்மா! வருத்தப்படுகிறாயா என்ன? அன்று எனக்குப் பலமாக உபதேசித்த நீயா இப்படிக் கண்ணீர் விடுவது? வீட்டிற்குப் போய் நான் எழுதிய 'குழலோசை' என்கிற கவிதையைப் படித்துச் சொல்கிறேன். கேட்டு ஆறுதல் அடையலாம். வா அம்மா!" என்று அன்புடன் கோபால தாஸர் அழைத்தார் ஸரஸ்வதியை.
வீட்டை அடைந்ததும் அன்று காலைத் தபாலில் கடிதம் ஒன்று வந்திருந்தது. ரகுபதி கிராமத்திலிருந்து எழுதிய கடிதம் அது. பொழுது விடிந்தால் தீபாவளி. மனைவியின் வீட்டிற்குச் செல்லாமல், கிராமத்தில் அத்தான் என்ன செய்கிறான் என்று ஆச்சரியம் அடைந்தாள் ஸரஸ்வதி. உறையைக் கிழித்துக் கடிதத்தை எடுத்துப் படித்தாள். அவளுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. சிறிது முன்பு தகப்பனாரைப் பிரிந்ததற்கு வருந்திய ஸரஸ்வதி, இப்பொழுது அத்தானின் போக்கைக் கண்டு வருந்தினாள். குழலோசைக் கவிதைப் புஸ்தகத்தை எடுத்து வந்த கோபால தாஸர் ஸரஸ்வதியின் சிவந்த முகத்தைக் கண்டு பயந்து விட்டார். கையில் பிரித்த கடிதத்துடன் உட்கார்ந்திருந்த அவளைப் பார்த்ததும் காவியங்களில் தோன்றும் கண்ணகியும், திரௌபதியும் அவர் அகக்கண் முன்பு காட்சி அளித்தனர்.
“ என்னம்மா, விஷயம்?" என்று கேட்டார் அவர்,
"இது ஒரு பெரிய ராமாயணம் மாமா. ஆதியோடு அந்தமாக இதைச் சொல்லி முடியாது. என்னுடைய அத்தான் இருக்கிறானே அவன் மனைவியுடன் தீபாவளி கொண்டாட வில்லை. இரண்டுங்கெட்டானாக யார் வீட்டிலேயோ அழைக்காத விருந்தாளியாகப் போய் உட்கார்ந்திருக்கிறான். மனிதன் வாழ்க்கையில் ஏமாறுவது சகஜந்தான். அதைக் காரணமாக வைத்துக் கொண்டு அவன் ஒழுங்கான பாதையிலிருந்து விலகிச் செல்வது தவறு அல்லவா? மனைவி உதாசீனம் செய்கிறாள் என்றால், கணவன் பதிலுக்கு அவளை உதாசீனம் செய்யவேண்டும் என்பது சரியல்ல" என்று கூறிவிட்டுக் கடிதத்தை மறுபடியும் உரக்கப் படித்தாள்:
" அன்புள்ள ஸரஸ்வதிக்கு, ரகுபதி அநேக ஆசீர்வாதம். உன் மைசூர் பிரயாணமெல்லாம் முடிந்து எப்பொழுது நீ ஊருக்குத் திரும்பி வரப்போகிறாய்? உன்னுடன் ஒன்றாக ரெயிலடி வரையில் வந்த நான், என் தீர்மானத்தைத் தகர்த்தெறிந்து விட்டேன். மதிக்காத மனைவியைத் தேடிப் போவதைவிட, மதித்து என்னைத் தன் ஊருக்கு வரும்படி அழைத்த தங்கத்தின் வீட்டில் இப்பொழுது நான் இருக்கிறேன். நாளைப் பொழுது விடிந்தால் தீபாவளி. தீபாவளியும் இங்கேதான். அத்தை அலமு உனக்காக ரொம்பவும் பயப்படுகிறாள். ' நீ இங்கே விருப்பது தெரிந்தால் அந்தப் பெண் ஸரஸ்வதி என்னைப் பொசுக்கி விடுவாள்' என்று அடிக்கடி சொல்கிறாள்.
தங்கம் 'ஸரஸு அக்கா'வை மறக்களில்லை. உன்னிடம் கற்றுக்கொண்ட 'சின்னஞ்சிறு கிளியே- கண்ணம்மா'வைத் தினம் பாடுகிறாள். அந்தப் பெண்ணுக்குத்தான் என்ன சாரீரம் என்கிறாய், ஸரஸு! இறைவன் சிலருக்குத் தான் இந்த பாயத்தை அளிக்கிறான் போலும். தங்கத்துக்கு நிகமாகவே பூட்டிக்கொள்ள உடம்பில் தங்க நகைகள் இல்லையே தவிர, அவள் பசும் பொன் என்பதில் சந்தேகம் இல்லை.
மது நிறைந்திருக்கும் மலர்களைத்தான் வண்டு தேடிக் கொண்டு போகும். மதுவில்லாததும், வாசனை இல்லாததுமான மலர் இங்கே யாருக்கு வேண்டும்?"
ஸரஸ்வதியின் கண்கள் கோபத்தால் சிவந்தன; "அழகாக இருக்கிறது தங்கத்தைப் பற்றிய வர்ணனை! பாவம், பேதைப் பெண்!" என்றாள் ஸரஸ்வதி.
செந்தமிழை நன்றாகப் புரிந்துகொள்ள முடியாத கோபால தாஸர் கவலையுடன், "என்னம்மா இதெல்லாம்? ஊரிலே எல்லோரும் சௌக்கியந்தானே?" என்று விசாரித்தார்.
“சீக்கிரத்தில் நான் ஊருக்குப் புறப்படுகிறேன், மாமா! கொஞ்சம் என் அத்தானுக்குச் சித்தப்பிரமை ஏற்பட்டிருக்கிறது. அதைப்போய்த் தெளியவைக்க வேண்டும்" என்றாள் ஸரஸ்வதி. அந்த அதிசயப் பெண்ணைப் பார்த்துக் கோபால தாஸர் மனத்துக்குள் வியந்தார்.
-------------
32. நீச மனோபாவம்
கங்கா ஸ்நானம் செய்துவிட்டுப் பட்டாசு கொளுத்திக் கொண்டிருந்தாள், தங்கம். மத்தாப்பின் சிவப்பு ஒளி அவள் சிவந்த கன்னங்களை மேலும் சிவப்பாகக் காட்டியது: மாங்காய்க்கரை போட்டு ரோஜா வர்ணத்தில் சாதாரண நூல் புடைவையை உடுத்தியிருந்தாள் அவள். ரகுபதிக்கு அப்பொழுது இருந்த தாராளத்தில், சாவித்திரிக்காக அவன் வாங்கி வந்திருந்த விலையுயர்ந்த பட்டுப் புடைலையைக்கூடத் தங்கத்திடம் எடுத்துக்கொடுத்து விட்டிருப்பான். ஊரிலே அம்மாவுக்குப் பதில் சொல்லியாக வேண்டும். அந்தப் பகட்டான சேலையைப் பார்த்தாலே தங்கம் பயந்து போவாள்! ஒரு தடவை அதைப் பெட்டியிலிருந்து அவன் வெளியே எடுத்துக் காண்பித்தபோதே தங்கம், "அப்பா!” என்று கண்களைப் பொத்திக் கொண்டாள். ”அப்படியே கண்ணைப் பறிக்கிறதே, இது!" என்று வேறு சொன்னாள். எல்லோர் வீட்டிலும் கங்கா ஸ்நானம் நடக்கிறது என்பதற்கு அடையாளமாக, கிணற்றிலிருந்து ஜலம் இழுக்கும் போது ராட்டினங்கள் 'நொய், நொய்' என்று சத்தமிட்டன. ஒவ்வொருவர் வீட்டுப் புறக்கடையிலிருந்தும் வெந்நீர் அடுப்புப் புகை சுருள் சுருளாக எழுந்தது. குதித்துக் கொம்மாளம் போட்டுக்கொண்டு குழந்தைகள் பட்டாசு சுட்டனர். தலை தீபாவளி நடக்கும் வீடுகளிலெல்லாம் நாதஸ்வரத்தின் இன்னொலி பரவி இருந்தது. ரகுபதி தெருவிலே நின்று கொண்டு இந்தக் காட்சிகளைப் பார்ப்பதில் ஈடுபட்டிருந்தான்.
அவன் அருகில் நின்றிருந்த தங்கம் மத்தாப்பு கொளுத்துவதைத் திடீரென்று நிதுத்திவிட்டுத் எதிர் வீட்டுக்கு ஓடினாள். சிறிது நேரத்துக்கெல்லாம் கையில் செவேல் என்று காணும் ஆரத்தி நீரைக் கொண்டுவந்து தெருக்கோலத்தில் ஊற்றிவிட்டு மறுபடியும் உள்ளே போனாள். மறுபடியும் வெற்றிலைப் பாக்குப் பழத்துடன் வெளியே வந்தாள். ரகுபதி சிறிது நேரம் அவளையே உற்றுப் பார்த்தான். பிறகு, "என்ன? காலையில் வரும்படி பிரமாதமாக இருக்கிறது?" என்று கேட்டான்.
தங்கம் கைகளை விரித்துக் காண்பித்தாள். வெற்றிலைப் பாக்கின் நடுவில் வெள்ளி அரை ரூபாய் ’பளபள'வென்று மின்னி யது. புன்சிரிப்புடன், "அவர்கள் வீட்டில் தலை தீபாவளி. மாப்பிள்ளைக்கும், பெண்ணுக்கும் ஆரத்தி எடுப்பதற்கு அங்கே யாரும் இல்லை. என்னைக் கூப்பிட்டார்கள். போயிருந்தேன். வரும்படி வந்தது. நீங்கள் தான் தீபாவளிக்கு ஊருக்குப் போகாமலும், என்னையும் அழைத்துப் போகாமலும் ஏமாற்றிவிட்டீர்களே! போங்கள் அத்தான்! சாவித்திரி மன்னி உங்களை எவ்வளவு எதிர்பார்த்திருப்பாள்?" என்று கேட்டாள் தங்கம்.
ரகுபதி அதற்கு ஒன்றும் பதில் கூறவில்லை. அசட்டுப் பிசட்டென்று தீபாவளிக்கு வேட்டகம் போகாமல் கிராமத்தில் வந்து உட்கார்ந்திருப்பது ரகுபதிக்கே ஆச்சரியமாகவும், பயமாகவும் இருந்தது. ஊரிலே அம்மாவுக்குத் தெரிந்தால் அவனை லேசில் விடமாட்டாள். ஸரஸ்வதியைப்பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. பைத்தியக்காரத்தனமாக அல்லவா அவன் தங்கத்தை வர்ணித்து ஸரஸ்வதிக்குக் கடிதம் போட்டுவிட்டான்? அதைப் பார்த்ததும் அவளுக்குக் கோபம் ஏற்படும்.
”ஸரஸ்வதிக்கு என்ன வேலை? எல்லோரும் பார்த்துச் செய்த கல்யாணந்தான் இவ்வளவு அழகாக இருக்கிறதே, அவள் ஓயாமல் தர்மத்தைப்பற்றியும், நியாயத்தைப்பற்றியுந்தான் பேசுவாள். அவள் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தால் வாழ்க்கையில் இன்பம் ஏற்பட்டமாதிரிதான்! 'சர்க்கரை' என்று சீட்டில் எழுதிச் சுவைத்தால் இனிக்குமா, அல்லது சர்க்கரையை அள்ளித் தின்றால் அதன் சுவை தெரியுமா? ’சாவித்திரி, சாவித்திரி' என்று ஜபித்துக் கொண்டிருந்தால் என் வாழ்க்கை இனித்தமாதிரி தான்" என்று ரகுபதி அலுத்துக்கொண்டான்.
பொழுது நன்றாக விடிந்துவிட்டது. எதிர் வீட்டுக் காமரா அறையில் ஓர் அழகிய காட்சியைக் கண்டான் ரகுபதி. இளம் பெண் ஒருத்தி தட்டில் பலகாரங்களும், காப்பியும் வைத்து எடுத்து வருகிறாள். லேசாகத் திறந்திருந்த கதவை அழுத்தி மூடிவிட்டு, அவள் கையிலிருந்த தட்டை வாங்கி மேஜைமீது வைத்து விடுகிறான் கணவன், தட்டிலே நாவில் ஜலம் ஊறச் செய்யும் பலகாரங்கள் இருக்கின்றன. ஆவி பறக்கும் காப்பி ’கமகம' வென்று மணக்கிறது. அவைகளிலெல்லாம் கணவனுக்கு ஒரு விசேஷமும் தென்படவில்லை. பசி ஏப்பக்காரன் முன்பு அல்லவா அவைகளை வைக்கவேண்டும்? பலகாரங்களுக்காகவும், ’ஸ்ட்ராங்' காப்பிக்காகவும் காதங்கடந்து அவன் வந்திருக்க வேண்டியதில்லை. மனைவியின் மெல்லிய கரங்களைப் பற்றித் தன் கைகளுக்குள் சேர்த்துக்கொள்கிறான்.
ரகுபதிக்கு மேலும் தான் அங்கே நிற்பது அசம்பாவிதம் என்று தோன்றியது. அறைக்குள் சென்று உட்கார்ந்து விட்டான். லேசாகத் திறந்திருந்த கதவை நன்றாகத் திறந்து கொண்டு தங்கம் பலகாரத் தட்டுடன் உள்ளே வந்தாள். தட்டைத் தானாகவே மேஜை மீது வைத்தாள். பிறகு, 'காப்பி கொண்டு வருகிறேன்' என்று வெளியே புறப்பட்டாள். ரகுபதி எழுந்தான். இரண்டடி முன்னே சென்றான். தங்கத்தின் புடைவை மேலாப்பு காற்றில் பின்புறம் பறந்து கொண்டிருந்தது. அதைத் தொட்டுவிட்டான். ஆனால், எங்கிருந்தோ ஒரு குரல் கண்டிப்பாக அவனை எச்சரித்தது! மெல்லிய காற்றில் காலையில் ஏரிக்கரையிலிருந்து வந்த குரல் அது.
'லோக நாயகனாகிய ஸ்ரீராமன், ஏகபத்தினி விரதத்தை அனுஷ்டிப்பவன்; சதா சீதையை நினைத்து அவளிடம் மனத்தைச் செலுத்துபவன்; சொன்ன சொல்லைக் கடவா தவன் சத்தியசந்தன்.' இப்படிப்பட்ட ஸ்ரீராமனை நான் வணங்குகிறேன்' என்று பொருள் செறிந்த கவிதை ஒன்றைப் பாடிக்கொண்டே வயது முதிர்ந்த அந்தணர் ஒருவர் வீதி வழியே வந்து கொண்டிருந்தார்.
தங்கம் காப்பியை எடுத்துக்கொண்டு உள்ளே வரவில்லை. பாடிக்கொண்டு செல்லும் அந்தணருக்குப் பிக்ஷை அளித்து விட்டுக் கீழே விழுந்து அவர் பாதங்களில் நமஸ்கரித்தாள்.
ரகுபதி இடியால் தாக்குண்டவன் போல் அயர்ந்து போய், கவிதையை நினைத்து நினைத்துப் பார்த்துக்கொண்டான்; அவன் செய்கை அவனுக்கே வெறுப்பை அளித்தது. 'சீ, சீ! என்ன நீச மனோபாவம்? மனிதன் வாழ்க்கையில் ஏமாற்றமடைந்து விட்டால் தான் என்ன? இப்படியா என் புத்தி பேதலிக்க வேண்டும்?' என்று வருந்தினான் அவன்.
அத்தை அலமு காப்பியை எடுத்துக்கொண்டு உள்ளே வந்தாள். "ஏண்டா அப்பா! தீபாவளிக்குப் போகாமல் இங்கேயே தங்கிவிட்டாயே. உன் அம்மாவுக்குத் தெரிந்தால் வீண் மனஸ்தாபம் ஏற்படுமே. ஸரஸ்வதி என்னை வெறுமனே விட மாட்டாளே, அப்பா!" என்றாள் அவள்.
ரகுபதி அவளுக்கு மறுமொழி கூறாமல் காப்பியை அருந்தி விட்டு வெளியே போய் விட்டான்.
-----------
33. என்னுடைய குற்றம்
தலைத் தீபாவளிக்கு மாப்பிள்ளை வரவில்லை என்கிற ஒரு காரணமே மங்களத்தை மறுபடியும் படுக்கையில் தள்ளி விட்டது எனலாம். எந்த அழைப்பை வைத்துக்கொண்டு மாப்பிள்ளை வருவான் என்று எதிர்பார்த்திருந்தாளோ, அந்த அழைப்பை அவன் லட்சியம் செய்யவில்லை என்பதைப் புரிந்து கொண்டாள் மங்களம். இரு குடும்பங்களுக்கும் சௌஜன்ய பாவம் நிறைந்திருந்தால் ஒரு வேளை மாப்பிள்ளை அழைக்காமலேயே வந்திருப்பான்: ஓர் இடத்தில் பிரியமும், மதிப்பும் ஏற்பட்டுவிட்டால் அவர்கள் செய்யும் பெரிய குற்றங்களைக்கூட மறந்து விடுகிறோம். அவர்கள் நம்மை 'வா' என்று கூப்பிடாததற்கு முன்பே, நாமாகவே வலுவில் அங்கு போகிறோம். அவர்கள் முகங் கொடுத்துப் பேசாமல் இருந்தாலும் பாராட்டாமல் வந்து விடுகிறோம். "அவர்கள் சுபாவம் அப்படி" என்று நம் மனத்துக்கே நாம் தேறுதல் கூறிக் கொள்கிறோம். பிடிக்காத இடமாக இருந்தாலோ, ஒவ்வொரு விஷயத்தையும் தவறாக எடுத்துக்கொண்டு பிரமாதப்படுத்துவது மனித சுபாவம்.
சாதாரண சமயமாக இருந்தால் சந்துரு எழுதிய கடிதமே ரகுபதி வருவதற்குப் போதுமானது. ராஜமையர் வேறு எழுத வேண்டும் என்கிற அவசியம் இல்லை. சாவித்திரி தீபாவளிக்கு ஒரு மாசம் முன்பே கணவனுக்கு அன்புக் கட்டளை இட்டிருந்தால் வேறு ஒருத்தருமே கடிதம் போட்டிருக்க வேண்டாம்! ரகுபதி ஓடோடியும் வந்திருப்பான். நிலைமை மாறி இருக்கும்போது இவ்வளவு சரளமான சுபாவத்தை நாம் எதிர்பார்க்க முடியாது.
வீட்டில் எப்போதும் சண்டையும், சச்சரவும், வாதப் பிரதி வாதங்களுமாகச் சேர்ந்து மங்களத்தின் மனத்தை வெகுவாகக் கெடுத்துவிட்டன. சிறு வயதிலிருந்து மரியாதை செலுத்தி வந்த தன் மாமியாரிடம் மங்களத்தின் மனம் கசந்தது. மனஸ்தாபம் முற்றி விடுவதற்கு முன்பே ராஜமையர் தாயாரைத் தம் சகோதரியிடம் அனுப்பிவைத்தார். குடும்பத்துச் செய்திகள் ஒன்றுக்குப் பத்தாக ஊரில் பரவுவதை அவர் விரும்பவில்லை.
'சாவித்திரியின் மனம் ஒரு பெரிய புதிர். அவளுடைய மனத்தில் மாறுதல் ஏற்பட்டிருக்கிறதா? கணவனைப் பார்த்து, அவனுடன் சென்று வாழ்க்கை நடத்த வேண்டும் என்று அவள் ஆசைப்படுகிறாளா?' என்பதை யாராலும் அறிய முடியவில்லை. பெற்ற தாயிடமும், உடன் பிறந்த சகோதரியிடமுமே அவள் மனத்தை ஒளித்தாள் என்றால் வேறு யார் அவளை அறிய முடியும்? அவள் மனம் உற்சாகமில்லாமல் இருந்து வருவதை மட்டும் சீதா கண்டுபிடித்துவிட்டாள். வீட்டை விட்டு வெளியே எங்கும் போவதில்லை. கூடப் படித்த சிநேகிதிகளிடம் அதிகம் பேசுவதில்லை. அவர்களாகத் தேடி வந்தாலும், அவள் முகங்கொடுத்துப் பேசாவிட்டால் தாமாக விலகிச்சென்று விடுவார்கள்.
அன்று பிற்பகல் கூடத்தில் படுத்திருந்த தாயிடம் சந்துரு வந்து உட்கார்ந்தான். வாஞ்சையுடன் தாயின் கரங்களைப் பிடித்துக்கொண்டு, "ஏனம்மா! தீபாவளிக்கு முன்பு உடம்பு தெம்பாகச் சற்று நடமாடிக்கொண்டிருந்தாயே. மறுபடியும் படுத்துவிட்டாயே!" என்று விசாரித்தான்.
மங்களத்தின் கண்களில் கண்ணீர் பெருகியது.
"ஆமாம் அப்பா! 'மாப்பிள்ளை வருவான், சாவித்திரியை அழைத்துப்போவான்' என்கிற நம்பிக்கையே 'டானிக்' மாதிரி உடம்புக்கு வலுவைத் தந்தது. அவன் வரவில்லை என்றதும் மனம் சோர்ந்துவிட்டது. சந்துரு! இந்த நிலையில் நான் அதிக காலம் இருக்க மாட்டேன் என்று தோன்றுகிறது. எனக்கு ஒருவரைப் பற்றியும் கவலையில்லை. சீதா புத்திசாலி. பிறர் சுபாவம் தெரிந்து பழகிக்கொள்வாள். கண்டிப்பாகப் புக்ககத்தில் நல்ல பெயர் வாங்கிவிடுவாள். நல்ல குணமுள்ள பெண்ணாக நீ கல்யாணம் பண்ணிக் கொண்டு விட்டாயானால் அவள் உன் தகப்பனாரைக் கவனித்துக் கொள்வாள். குடும்பம் செழித்துப் பெருகும்போதே மஞ்சளும், குங்குமமுமாக நான் போகிறதில் எனக்குக் கவலையில்லை. சாவித்திரி வாழாப் பெண்ணாக இருந்து விடுவாளோ என்று என் ஹிருதயம் அலறித் துடிக்கிறது. கணவனிடம் கண்ணை மூடிக்கொண்டு பக்தி செலுத்தும் என் வயிற்றில் இந்தப் பெண் எங்கேயிருந்து வந்து பிறந்தாள் என்று மனம் கிடந்து தவிக்கிறது" என்று நா தழுதழுக்கக் கூறினாள் மங்களம்.
சந்துரு தாயின் கரங்களில் முகத்தைப் புதைத்துக் கொண்டு, ”அம்மா! நீ என்ன செய்யச் சொல்கிறாயோ அப்படிச் செய்கிறேன் அம்மா. ரகுபதியை நேரில் போய்ப் பார்த்துப் பேசுகிறேன். அதற்காக அப்பா என்னைக் கோபித்துக்கொண்டாலும் பரவாயில்லை. ரகுபதியே என்னை மரியாதைக் குறைவாக நடத்தினாலும் பொறுத்துக் கொள்கிறேன். ஒரு நன்மை விகாவதற்காக ஆயிரம் பிழைகளைப் பொறுக்கலாம். அம்மா. உன் மனம் குளிர்வதற்காக நான் அவமானம் அடைந்தாலும் பாதக மில்லை. எனக்கு விவரம் தெரிந்த நாட்களாகப் பரம சாதுவாகக் குடும்பத்துக்கே உழைத்து, அதில் காணும் நலன்களைக் கண்டு பெருமைப்படும் உனக்காக நான் இந்தச் சிறு காரியத்தைச் செய்யக்கூடாதா என்ன?" என்றான் உணர்ச்சியுடன்.
காலேஜிலிருந்து திரும்பி வந்த சீதா தமையன் கடைசியாகக் கூறிய வார்த்தைகளைக் கேட்டாள். பிறகு அவனைப் பார்த்து.. " அண்ணா ! அத்திம்பேர் ஊரில் இல்லையாம். அவருடைய கிராமத்தில் இருக்கிறாராம். ஸரஸ்வதி மைசூருக்குப் போய் இருக்கிறாளாம். ஊரிலே ஸ்வர்ணம் மாமி மட்டும் இருப்பதாக என் சிநேகிதி ஒருத்தி சொன்னாள்" என்று தெரிவித்தாள்.
மங்களம் ஆவலுடன் சந்துருவின் முகத்தைப் பார்த்தாள். பிறகு அவனைப் பார்த்து. ஸரஸ்வதியின் விலாசம் தெரிந்தாலாவது, நீ அவளுக்காவது ஒரு கடிதம் போடலாம். இந்தக் காலத்தில் இதிலெல்லாம் தவறு ஒன்றுமில்லையே. விலாசமும் தெரிய வில்லையே. என்ன செய்கிறது இப்போது?" என்று கவலையுடன் கேட்டாள்.
"இனிமேல் நேரில் தான் எல்லா விஷயங்களையும் தீர்க்க வேண்டும் அம்மா. ஸரஸ்வதி இதில் தலையிட்டிருந்தால் இந்த விஷயம் இவ்வளவு முற்றி இருக்காது. அவள் விலகிச் சென்றிருப்பதைக் கவனித்தால் இதில் தலையிட அவளுக்கும் விருப்ப மில்லையோ என்று தோன்றுகிறது. ஆனால், தன் அத்தானின் குடும்பம் ஒழுங்குபடுவதை அவள் விரும்பாமல் இருக்க மாட்டாள். நானே கிராமத்துக்குப் போய் ரகுபதியைப் பார்த்து வருகிறேன்", என்று கூறினான் சந்துரு.
" அப்படித்தான் செய்! ஒருவேளை நீ கிராமத்திலிருந்து. திரும்புவதற்கு முன்பே மைசூரிலிருந்து ஸரஸ்வதி வந்து விட்டாளானால் அவளையும் இங்கு அழைத்து வா. அந்தப் பெண்ணின் முகம் என் மனசைவிட்டு அகலவே மாட்டேன் என்கிறது. கடந்த ஏழெட்டு மாசங்களாகத்தான் அவளை எனக்குத் தெரியும். ஆனால், அவளை நான் எப்பொழுதோ எங்கோ பார்த்த மாதிரியே இருக்கிறதப்பா!" என்றாள் மங்களம்.
"அதான் சொல்லிவிட்டேனே, உனக்காக நான் ரகுபதியைப் போய்ப் பார்த்துச் சமாதானம் பண்ணுகிறேன் என்று. நாம் எல்லாரும் நினைக்கிற மாதிரி ரகுபதி அவ்வளவு முரடன் இல்லை. எப்படியும் உன் பெண்ணும், மாப்பிள்ளையும் ஒன்று சேர்ந்து விட்டார்களானால் எனக்கு என்ன அம்மா தருவாய்?"" என்று சிரித்துக் கொண்டே தாயைப் பார்த்துக் கேட்டான் சந்துரு.
" உனக்குத் தருவதற்கு என்னிடம் என்ன அப்பா இருக்கிறது? பெற்று, வளர்த்து, அறிவு புகட்டிப் பெரியவனாக்குவது வரை என் கடமை தீர்ந்துவிட்டதே. இன்னொன்று பாக்கி இருக்கிறது. நல்ல பெண்ணாகக் கலியாணம் செய்து கொண்டு நீ வாழவேண்டும் என்கிற ஆசியைத்தான் நான் தரமுடியும்!" என்று உருக்கமாகக் கூறினாள் மங்களம்.
சந்துரு வெட்கத்தினால் சிறிது நேரம் தலைகுனிந்து உட்கார்ந்திருந்தான். அருகில் கேலிச் சிரிப்புடன் நிற்கும் சீதாவைப் பார்த்து. "என்னவோ சொல்ல வேண்டும் என்று துடித்துக் கொண்டு நிற்கிறாயே சீதா, சொல்லிவிடேன்" என்றான்.
"இந்தப் பகிரங்க ரகசியத்தை நான் தான் சொல்ல வேண்டுமா அம்மா? சாதாரண ஸரஸ்வதியாக அந்த ஸரஸ்வதி இங்கே வருவதை அண்ணா விரும்பவில்லை. உன் நாட்டுப் பெண்ணாகத்தான் வர வேண்டுமாம். இந்த ரகசியத்தைச் சொன்னதற்கு எனக்கு என்ன பரிசு தரப்போகிறாய் அண்ணா?" என்று குறும்புத்தனத்துடன் கேட்டாள் சீதா.
"தெய்வ சங்கல்பம் இருந்தால் நடக்கட்டுமே அப்பா! என்னைப் பொறுத்தவரையில் உன் மகிழ்ச்சி ஒன்றுதான் எனக்கு முக்கியமானது" என்றாள் மங்களம்.
"இது என்னுடைய ஆசை மட்டுந்தான். ஸரஸ்வதியின் மனசைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது."
"ஏதேது அண்ணா. அஸ்திவாரம் பலமாகப் போட்டு விட்டாயே!" என்று சீதா மறுபடியும் சிரித்தாள்.
"அஸ்திவாரம் போட்டுவிட்டால் கட்டிடம் எழும்பின மாதிரியா சீதா? ஸரஸ்வதியின் மனதைப்பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. எவ்வளவு சரளமான சுபாவமுடையவளாக இருக்கிறாளோ, அவ்வளவுக்கு அவள் மனம் ஆழமானது. மனத்தில் எழும் உணர்ச்சிகளை லேசில் வெளியிடவே மாட்டாள்!"
"உனக்குச் சம்மதமிருந்து. அவளுக்கும் இஷ்டமிருந்தால் நடக்கட்டுமே. இந்தப் புது சம்பந்தத்தால் நம்முடைய பழைய குற்றங்கள் மறைந்த மாதிரியும் இருக்கும்" என்றாள் மங்களம்.
கொல்லைப் பக்கத்திலிருந்து வேகமாக வந்த சாவித்திரி கடைசியாகத் தாயார் கூறியதைக் கேட்டாள். 'நம்முடைய குற்றங்கள் மறைந்த மாதிரியும் இருக்கும்' என்று கூறியது அவள் செவிகளில் மணி ஓசைபோல் கேட்டுக்கொண்டே இருந்தது.
'நம்முடைய குற்றம்! நம்முடைய குற்றம்!' என்று அவள் மனம் உருப் போட்டது. ”நம்முடையது' அல்ல. சாவித்திரியின் குற்றம். என்னுடைய குற்றம்” என்று சொல்லிக் கொண்டாள் சாவித்திரி, தன் மனத்துக்குள்.
அவரவர்களுடைய குற்றத்தை உணர்வதே ஒரு தனிச் சிறப்பு வாய்ந்த குணம். அதை உணர்ந்து மனம் வருந்தினாலே போதும். 'குற்றங்களையெல்லாம் குணமாகக் கொள்ளும் குணக் குன்றாகிய இறைவன்' நம்மை மன்னித்து நாம் வாழ வழி செய்வான்.
---------
34. பிரார்த்தனை
பொழுது விடிந்தால் ஸரஸ்வதி ஊருக்குப் புறப்பட வேண்டும். மைசூர் ராஜ்யத்தில் பல இடங்களில் அவள் கச்சேரிகள் நடைபெற்றன. கோபாலதாஸர் அக்கறையுடன் அவளைக் கவனித்துக் கொண்டார். அதிகமாகப் புகழும், பொருளும் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசையைவிட, கலை மூலமாக - நாதோபாஸனையின் மூலமாக-- உள்ளத்தைத் தூய்மைப் படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற ஆசைதான் ஸரஸ்வதியிடம் மேலோங்கி இருந்தது. அன்று வெள்ளிக்கிழமை ஆதலால் காலையிலேயே ஸரஸ்வதி கோபாலதாஸருடன் சாமுண்டிமலைக்குப் புறப்பட்டாள். பனி போர்த்த மைசூர் நகரம் இன்னும் விழித்துக்கொள்ளவில்லை. 'சிலு சிலு' வென்று நடுக்கும் குளிரில், ஸரஸ்வதி காவிரியில் ஸ்நானம் செய்துவிட்டு மலைக்குப் புறப்பட்டு விட்டாள். மலை அடிவாரத்தை அடைந்ததும் கோபாலதாஸர் அவளைக் கனிவுடன் பார்த்து, "குழந்தை! உன்னால் மலை ஏற முடியுமா? இல்லாவிடில் 'டாக்ஸி' வைத்துக் கொள்ளலாமா?" என்று கேட்டார்.
"வேண்டாம் மாமா! மெதுவாக நடந்து இயற்கைக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டே போகலாம். நாம் யந்திர யுகத்தில் வசிப்பது தான் தெரிந்த விஷயமாயிற்றே. தெய்வ சந்நிதானத்தில் கூடவா நம் அவசரத்தைக் காண்பித்துக் கொள்ள வேண்டும்?' என்று கூறிப் படிகளின் வழியாக ஏற ஆரம்பித்தாள்.
மைசூர் நகரம் அமைதிக்கு இருப்பிடம். அங்கு அமைதியாகப் பெருகி ஓடும் காவிரியே அதற்குச் சாட்சியாக விளங்குகிறாள். நவராத்திரிகளில் கோலாகலம் நிரம்பியிருக்கும் இந்த அழகிய நகரத்தில், மற்ற நாட்களில் அமைதியைக் காணலாம். மலை மேல் உயர்ந்து நிற்கும் கோபுரத்தைப் பார்த்ததுமே ஸரஸ்வதியின் உள்ளம் சிலிர்த்தது. ஜகன்மாதா என்று அழைக்கப்படும் தேவி இங்கு ரௌத்ராம்சத்தில் வீற்றிருக்கிறாள். தாயின் அன்பில் கோபத்தையும், கண்டிப்பையும் காணமுடிகிறதே. அப்படி லோகமாதாவின் அன்பிலே கோபம் பொங்கி வழிகிறது. ’அதர்மத்தைப் பொறுக்கமாட்டேன்' என்று கர்ஜித்து கோரரூப மெடுத்து அதைச் செயலிலும் காட்டி இருக்கிறாள் ஈஸ்வரி.
சந்நிதியின் முன்பு கூப்பிய கரங்களுடன் ஸரஸ்வதி நின்றிருந்தாள். கண்களிலிருந்து அருவிபோல் நீர்பெருக, "ஜய சங்கீத ரஸிகே!" என்கிற சியாமளா தண்டக ஸ்லோகத்தில் ஒரு வரியைத் திருப்பித் திருப்பி வாய்க்குள் பாடிச்கொண்டாள் அவள்.
"உன்னத லட்சியங்களுக்கு இருப்பிடமாகவும், மனத் தூய்மையுடனும், உன்னிடம் மாறாத பக்தியைச் செலுத்துபவளாகவும் என்னை வைத்திரு. தாயே!" என்று உள்ளம் உருகப் பிரார்த்தித்தாள் ஸரஸ்வதி.
கோவிலைவிட்டுக் கீழிறங்கி ஸ்ரீரங்கப் பட்டணத்தை அடைவதற்குள் ஸரஸ்வதியின் மனம் தூய்மை பெற்றுவிட்டது எனலாம். சில நாட்களாகவே அவள் உள்ளம் சந்துருவை அடிக்கடி நினைக்க ஆரம்பித்திருந்தது. இதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால், இடையில் தன் உறுதி தளர்ந்து போவதை அவள் விரும்பவில்லை. சந்துருவைத் தான் மணந்து தான் ஆக வேண்டும் என்கிற அவசியமும் ஒன்றும் இல்லை. அந்த உறுதி வலுப்பெற ஸ்ரீ சாமுண்டீச்வரி அவளுக்கு அருள் புரிந்தாள். சமீபத்தில் விவாக பந்தத்தில் சிக்கவேண்டாம் என்றும் தீர்மானித்துக் கொண்டாள் ஸரஸ்வதி.
அதற்கு அநுசரணையாகக் கோபாலதாஸர் வழி நெடுக ஸரஸ்வதியைப் பார்த்து, ”திருச்செந்தூர் பார்த்திருக்கிறாயா? பழனிக்குப் போய் இருக்கிறாயா? மதுரையில் மீனாக்ஷியை வணங்கி இருக்கிறாயா? கண்ணனின் வேய்ங்குழல் நாதத்தால் புனித மாக்கப்பட்ட பிருந்தாவனம், வட மதுரைக்குப் போய்ப் பாரம்மா. கோகுலத்தில் அவன் திவ்யரூபத்தை நீ வணங்க வேண்டும். பக்தை மீராவின் பாடல்களைக் கேட்க வேண்டும். ’தாஸ மீராலால கிரிதர'னின் புகழைக் கேட்க வேண்டும். உலகம் உன்னுடைய அத்தையையும், அத்தானையும், சாவித் திரியையும் மட்டும் கொண்டதல்ல. உலகம் பரந்தது. அதில் எல்லோரும் உன் நண்பர்கள், உறவினர்கள் என்கிற மனப் பான்மையை நீ வளர்க்க வேண்டும். எப்பொழுதாவது இல்லறத்தில் நீ ஈடுபட்டாலும் ஆண்டவனிடம் பக்தி செலுத்து வதை மட்டும் மறக்காதே. இறைவனின் திவ்ய ரூபத்தை உன் மனசில் பிரதிஷ்டை செய்து கொள் அம்மா. உனக்கு ஒரு குறைவும் வராது!" என்று பல விஷயங்களைக் கூறி ஆசீர்வதித்தார்.
ரெயில் நிலையத்துக்கு வழி அனுப்ப வந்திருந்தார் கோபால தாஸர். வீட்டைவிட்டுக் கிளம்புவதற்கு முன்பே ஸரஸ்வதி அவரை வணங்கினாள். "மாமா! எனக்குத் தெரியாத பல விஷயங்களைத் தெரிய வைத்தீர்கள். என் அத்தானையும், சாவித்திரியையும் ஒன்று சேர்த்த பிறகு அத்தையுடன் நான் வட நாட்டுக்குப் புறப்படுகிறேன். ஒன்று சேர்ந்த தம்பதிகளிடமிருந்து சில நாட்கள் நாங்கள் பிரிந்து தான் இருக்க வேண்டும். கட்டாயம் பக்தை மீரா வசித்த புனித ஸ்தலத்துக்குப் போகிறேன். அவள் அழகிய பாடல்களைக் கற்றுக்கொள்கிறேன். துளசிதாஸரின் அருமையான ராமாயணக் கவிதைகளைப் படிக்கிறேன், வங்கத்துக்குச் சென்று மகாகவி தாகூரின் உபதேசங்களைக் கேட்கிறேன். ராஜகட்டத்துக்குப் போய் அண்ணல் காந்தியடிகளுக்கு மரியாதை செலுத்துகிறேன். என்னை ஆசீர்வதித்து அனுப்புங்கள்!" என்று அவரை வேண்டிக்கொண்டாள்.
------------
35 ' நான் ஏழைப் பெண்'
தீபாவளிப் பண்டிகைக்கு அப்புறம் கிராமம் மறுபடியும் அமைதியில் ஆழ்ந்துவிட்டது. தங்கம் முன்னைப்போல ’ரகுபதி' யிடம் அதிகம் பேசுவதில்லை. 'படித்தவர் என்று சொல்லிக் கொள்கிறாரே தவிர, கொஞ்சமாவது நல்லது கெட்டது தெரிய வில்லையே இந்த அத்தானுக்கு!' என்று நினைத்துக்கொண்டாள் தங்கம். ஏற்கனவே ஊரார் அவளைக் கல்யாணம் ஆகாமல் குதிர் மாதிரி நிற்பதாக வர்ணித்து வந்தார்கள். குதிரை மாதிரி திரிவதாகவும் கதை கட்டியிருந்தார்கள். வாயாடி என்று வேறு நாமகரணம் சூட்டி இருந்தார்கள். ’கன்னாபின்னா' என்று பல்லைக் காட்டும் கிராமத்து வாலிபர்களுக்குத் தங்கத்தைக் கண்டாலே சிம்ம சொப்பனம்! ஏரிக்கரையில் அவளிடம் அசம்பாவிதமாக நடந்து கொண்ட வாலிபன் ஒருவனுக்குத் தங்கத்தை நினைத்த போதெல்லாம் முதுகிலே யாரோ சாட்டையால் 'சுளீர் , சுளீர்' என்று அடிப்பது போல் பிரமை ஏற்படுவதுண்டு. துணிகளைத் துவைக்கும் தங்கத்தின் எதிரில் சிரித்துக் கொண்டே நின்றதன் பலனை அனுபவித்திருந்தான் அவன். தங்கம் அவனை ஏறிட்டுக்கூடப் பார்க்கவில்லை. பச்சைத் தண்ணீரில் புடைவையை நனைத்து முறுக்கிப் பிழிந்து கல்லின் மீது 'பட் பட்’டென்று அடித்தாள். வேகமாக சுழற்றிச் சுழற்றி வீசினாள். 'சுளீர்' என்று ஜலம் வேகமாக வாலிபனின் முகத்தில் தெறித்தன. அவன் முதுகைத் திருப்பிக்கொண்டு நின்றபோது 'சுரீர்' என்று முதுகில் தெறித்தன. அவன் திரும்பிப் பார்த்தபோது தங்கம் புடைவையை முறுக்கிப் பிழிந்து கையை ஓங்கிக் கொண்டு நின்றிருந்தாள். வாலிபனின் எண் சாண் உடம்பும் ஒரு சாணாகக் குறுகியது. அன்றுமுதல் தங்கத்தை அவன் கோவிலில் வணங்கும் பர தேவதையாக நினைத்தான். அவள் இருக்கும் திசைக்கே ஒரு கும்பிடு போட் டான்! அவள் ரொம்பவும் கண்டிப்புக்காரி என்பதைக் கிராமத்து ஏழை ஜனங்கள் புரிந்து கொண்டிருந்தார்கள். ’தங்கம்மா எத்தனை வருசம் கல்யாணம் கட்டிக்காமல் இருந்தாலும் பரவாயில்லை அம்மா. அது துரோபதை மாதிரி தன்னைத்தானே காப்பாத்திக்கும். அஞ்சு புருசன் இருந்தும் துரோபதை அம்மாளை யாரம்மா காப்பாத்தினாங்க? நம்ப தங்கம்மாவுக்கு அந்தச் சாமர்த்தியம் இருக்குது. அர்ச்சுன ராஜாமாதிரி நல்ல புருசனா அதுக்குக் கிடைப்பாங்க. கவலைப்படாதீங்க!' என்று அலமுவுக்கு ஆறுதல் கூறுவார்கள்.
சிப்பியிலே நல்முத்து விளைகிறது. பட்டுப் புழுவில் அதி அற்புதமான பட்டு உற்பத்தியாகிறது. சேற்றிலே செந்தாமரை மலர்கிறது. ஈசன் வண்ண மலர்களில் மட்டும் துவைத் தேக்கி வைக்கவில்லை. அழகு விளைவதற்கு நல்ல இடங்கள் தாம் வேண்டும் என்பதில்லை. சமதிருஷ்டியுடன் அவன் எல்லா இடங்களிலும் அழகைத் தேக்கி வைத்திருக்கிறான். படித்த பெண்களுக்கு இல்லாத சில அரிய பண்பாடுகள் தங்கத்தினிடம் நிரம்பி இருந்தன. எல்லோரையும் மரியாதையாகக் கௌரவிக்கத் தெரியும் அவளுக்கு; நாலு பேரை மதித்து நாலு வார்த்தைகள் பேசத் தெரியும்; செய்துவிட்ட குற்றத்தை உணர்ந்து மன்னிப்புக் கேட்கும் பண்பும் அவளுக்குத் தெரியும். பிறவியுடன் அறிவு பிறந்துவிடுகிறது. அதை வளர்க்கத்தான் கல்வி அறிவு பயன் படுகிறது. சிறந்த பண்பாட்டைப் பெண்கள் பெற அதற்கேற்ற குடும்பச் சூழ்நிலை அவசியமாகிறது. உள்ளத் தூய்மையும், அகந்தையற்ற தன்மையும் உள்ள பெரியவர்களிடை குழந்தைகள் வளர்ந்து வந்தால் அவர்கள் குணத்தை இவர்களும் அடை கிறார்கள். போலிக்கௌரவமும், ஒருவரையும் மதியாத சுபாவமும் நிறைந்த கூட்டத்தில் வளரும் குழந்தைகள், அந்த மனப்பான் மையைத்தான் வளர்த்துக் கொள்வார்கள். தப்பித் தவறி எங்கோ விதி விலக்காகச் சிலர் இருப்பதைப் பார்க்கலாம். பெரும்பாலும் இப்படித்தான் இருக்கிறது.
தங்கத்தின் மனம் எவ்வளவு தெளிவாக இருக்கிறதோ அவ்வளவு கண்டிப்பும் நிறைந்திருந்தது. ஆரம்பத்தில் ரகுபதி அவளிடம் சகோதர அன்புடன் பழகி வருவதாக நினைத்திருந்தாள். வரவர அவன் பித்தனைப்போல் நடப்பதை அறிந்து பயந்தாள். 'தங்கத்தைத் தனியாகச் சந்தித்துப் பேசவேண்டும் என்கிற அவசியம் ரகுபதிக்கு இல்லை. அவளிடம் அவன் அந்த ரங்கமாகச் சம்பாஷிப்பதற்கு என்ன இருக்கிறது? எல்லோர் எதிரிலும் தாராளமாகப் பேசலாம். ஆனால், ரகுபதி அவளிடம் தனித்துப் பேச பல சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொண்டான். ஏரிக்கரைக்குத் தங்கம் போனால் அங்கே அவனும் விரைந்தான்.. கிராமத்து வாலிபர்களைச் சுட்டுப் பொசுக்கும் தங்கம், ரகுபதி யோடு தனித்து உரையாடுவதை அவர்கள் பார்த்தால் சும்மா விடுவார்களா?’
ஒரு நாள் அதிகாலையில் ஏரியில் குளித்து விட்டுத் திரும்பும் தங்கத்தைக் கோவிலில் சந்தித்தான் ரகுபதி. குடலை நிறையத் தங்க அரளிப் புஷ்பங்களைப் பறித்து நிரப்பிக்கொண்டு வந்து நின்றிருந்தாள் தங்கம், பொழுது இன்னும் நன்றாக விடியவில்லை. அவளுக்கு மனசிலே ஆயிரம் குறைகள் உண்டு. அதைக் கோவிலில் வந்து தெய்வத்தினிடம் முறையிட்டுக்கொள்வது அவள் வழக்கம். அதைக் கலைப்பதற்கு வந்த ரகுபதியை அவள் அங்கே சந்திக்க விரும்பவில்லை.
" என்ன அத்தான்! இவ்வளவு காலையில் வந்து விட்டீர்கள்!" என்று சொல்லாமல் சொல்லி விளங்கவைக்தாள் தங்கம்.
"வந்துவிட்டேன்! வரக்கூடாதா தங்கம்? உன்னைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறேன்."
”வேடிக்கைதான்! பொழுது விடிந்து பொழுது சாய்வதற்குள் வீட்டிலே பல முறைகள் பார்ப்பவளைக் கோவிலில் அதிசயமாகப் பார்க்க வந்தாராமே!' என்று வியந்தாள் தங்கம்.
இருந்தபோதிலும் பொறுமையை இழக்காமல், “வீட்டிலே பேசிக்கொண்டால் போயிற்று. அதற்காக என்னை இங்கே தேடி வர வேண்டுமா என்ன? இது கிராமாந்திரம் அத்தான்! உங்கள் நகரத்திலே குற்றங் குறைகள் யாருடைய கண்களிலும் அவ்வளவாகத் தென்படாது. குற்றத்தைக்கூட ஒரு நாகரிகம் என்று நினைத்து ஒதுங்கிப் போவார்கள். இங்கே அப்படி இல்லை: ஒன்றுக்குப் பத்தாகக் கதை கட்டிவிடுவார்கள். ஆமாம்....!"
ரகுபதி அவளைப் பார்த்து அழகு காட்டும் பாவனையாக, "ஆமாம்!" என்றான்.
"உன்னை என்னவோ என்று நினைத்திருந்தேன். நன்றாகப் பேசுகிறாயேடி அம்மா நீ! பெண்களே பேச்சில் வல்லவர்கள் என்று நினைக்கிறேன்!" என்று கூறிவிட்டு அவள் கையிலிருந்த புஷ்பக் குடலையைப் பற்றி, “இங்கே கொண்டு வா அதை. நான் எடுத்து வருகிறேன். தோளில் ஈரத் துணிகளின் சுமை அழுத்துவது போதாது என்று கையிலே வேறு!" என்று கூறிக் குடலையை வாங்கினான்.
தங்கம் பதறிப்போனாள். சட்டென்று குடலையை நழுவ விடவே அது கீழே விழுந்து மலர்கள் சிதறிப்போயின. மை தீட்டிய விழிகளால் அவனைச் சுட்டுவிடுவது போலப் பார்த்தாள் தங்கம்.
"அத்தான்! என் பெயருக்கு மாசு கற்பிக்காதீர்கள். என்னைத் தனியாக வந்து எங்கேயும் சந்திக்க வேண்டாம். மாசற்றவளாக இருக்கும்போதே என்னைச் சமூகம் கீழே தள்ளி மிதிக்கிறது. பிறகு கேட்கவே வேண்டாம். நான் ஏழைப் பெண் அத்தான்!" என்று கூறிவிட்டு அங்கிருந்து வீட்டிற்கு நடந்து விட்டாள் தங்கம்.
பெண் குலத்தின் பெருமையைக் கலையின் மூலம் உயர்த்த வேண்டும் என்று பாடுபட்டு வந்த ரகுபதியா அவன்? சந்தர்ப்பக் கோளாறுகளால் அவன் ஏன் இப்படி மாற வேண்டும்? கணவனின் நன்மை தீமைகளில் பங்கு கொள்ளாத மனைவியை அடைந்த குற்றந்தான் காரணமாக இருக்க வேண்டும். சாவித்திரிதான் அவன் இப்படி மாறி வருவதற்குக் காரணமானவள்.
ரகுபதி இனிமேல் கிராமத்தில் இருப்பதில்லை என்று தீர்மானித்துக் கொண்டான். அன்றே பகலில் சாப்பிடும்போது அலமுவிடம், "அத்தை! ஊருக்குப் போகிறேன். அம்மாவை விட்டு வந்து எவ்வளவோ நாட்களாகின்றன. ஸரஸ்வதியும் ஊரில் இல்லை!" " என்றான்.
“இவ்வளவு நாட்கள் இங்கே இருந்துவிட்டு உன் வேட்டகத்துக்குப் போகாமல் திரும்புவது நன்றாக இல்லை ரகு. போய் உன் மனைவியை அழைத்துப் பாரேன். என்னவோ அப்பா எனக்குத் தெரிந்ததைச் சொல்லுகிறேன். அந்த வீட்டுக்கு உங்களால்தான் ஒளி ஏற்படவேண்டும். மன்னிக்கு ஒன்றுமே தெரியாது. பாவம், அவள் மனம் புழுங்கிச் சாகிறாள் ரகு. அவளுக்காகவாவது நீ சாவித்திரியுடன் வாழ்ந்துதான் ஆகவேண்டும்!" என்று உருக்கமாகக் கூறினாள் அலமு.
ரகுபதி எவ்விதத் தீர்மானத்துக்கும் வராமல் பெட்டி, படுக்கையைக் கட்டிக் கூடத்தில் வைத்துவிட்டு வெளியே போய் விட்டான்.
-----------
36. கானல் நீர்
விசாலமான ஏரியில் காற்றினால் எழுப்பப்பட்ட சிற்றலைகள் நெளிந்து சுருண்டன. சுரீரென்று வான வீதியில் பவனி வரும் சூரியனின் பொன் கிரணங்கள் நீரில் தவழ்ந்து விளையாடின. நல்ல மழை காரணமாக ஏரி தளும்பி வழிந்தது. அதற்கடுத்த வயல்களில் நல்ல விளைச்சல், குழந்தையைக் காக்கும் தாயைப் போல, கிராமவாசிகள் பயிர்களைக் கண்ணின் கருமணிபோலக் காத்து வந்தார்கள். அவர்கள் வாழ்வும், தாழ்வும் அதில் தானே இருக்கிறது. 'டைப்' அடித்துப் பிழைப்பவர்களாக இருந்தால் ஓர் இடத்தில் வேலை போனால் இன்னொன்று என்று தேட இட மிருக்கிறது. தொழிலாளிகள் அவர்கள் கற்ற தொழிலைத்தான் போஷித்து வளர்க்கவேண்டி இருக்கிறது. அவர்களை வாழவைக்கும் மண்ணை நம்பிக் குடியானவர் வாழ்கிறார்கள். அதில் கிடைக்கும் பலாபலன்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
மணி மணியாய்க் கதிர்களில் நெல் மணிகள் அரும்பி இருந்தன. ஆயிற்று; கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது. மார்கழியும் போனால் தைப் பொங்கலுக்கு முன்பே அறுவடை செய்துவிடுவார்கள். உழைப்பின் பலனை அனுபவித்து உள்ளம் நிறைவு பெறுவார்கள். வீட்டில் பெட்டி, படுக்கையைக் கூடத்தில் வைத்துவிட்டு ரகுபதி ஏரிக்கரைக்கு வந்து, உட்கார்ந்திருந்தான். தொலைவில் சாலையில் இரட்டை மாட்டு வண்டி ஒன்று ஆடி அசைந்து வந்து கொண்டிருந்தது. பன்னிரண்டரை மணி பஸ் வந்து போய்விட்டது என்பதற்கு இந்தச் சவாரி வண்டிகள் தான் அத்தாட்சி. ஏனெனில், வெளியூரிலிருந்து வருபவர்கள் ரெயில் நிலையத்திலிருந்து கிராமத்துக்கு வருவதானால் மத்தியான்னம் இந்தப் பஸ்ஸிலாவது அல்லது மாலை ஐந்தரை மணி பஸ்ஸிலாவது தான் வரமுடியும். அப்படிப் பிரயாணிகளைக் கருணையுடன் சுமந்து வரும் பஸ் அவர்களை ஏரிக்கரையிலிருந்து ஒரு மைல் தொலைவிலேயே சாலையில் இறக்கிவிட்டுப் போய்விடும். கால்களில் தெம்புள்ளவர்கள் நடந்து கிராமத்தை அடைந்து விடுவார்கள். இல்லாவிடில் மாட்டு வண்டியில் வந்து சேர்வார்கள். சிறிது நேரம் வண்டியைக் கவனித்த ரகுபதி அசிரத்தையுடன் அங்கன வேறு பக்கம் ஓட்டினான். 'யாரோ வருகிறார்கள்' என்று அலட்சியமாக இருந்தான். அவன் அலட்சியத்தை முந்திக் கொண்டு தச்சரியம் கிளம்பியது.
'என்ன? ஸரஸ்வதியா வருகிறாள்? இவளுக்கு என்ன ஜோஸ்யம் ஏதாவது தெரியுமா? சமயசஞ்சீவியாக இருக்கிறாளே' என்று எண்ணி வியந்தான். அவன் நேருக்கு நேர் பார்க்கவும் அஞ்சினான். ஏதோ ஒருவித வெட்கம் அவனைச் சூழ்ந்துகொண் டது. குனிந்த தலையுடன் உட்கார்ந்திருந்த ரகுபதியின் முன்பு ஸரஸ்வதி வந்து நின்றாள்.
"அத்தான்! இந்த ஊரில் என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்று நிதானமாக அவனைக் கேட்டாள் ஸரஸ்வதி.
ரகுபதி சங்கோஜத்துடன் தலையை நிமிர்ந்து பார்த்தான். குற்றவாளியைப்போல் மென்று விழுங்கினான். வார்த்தைகள் தடுமாற, "நீயா வந்திருக்கிறாய் ஸரஸு?" என்று அழைத்தான்.
"ஆமாம், அத்தான்! மைசூரிலிருந்து நேற்றுப் புறப்பட்டேன். உன் கடிதம் வந்தது! இனி தாமதிப்பதில் பிரயோஜனமில்லை என்று புறப்பட்டேன். ஒரு வாரத்துக்கு முன்பே வந்திருப்பேன். சில கச்சேரிகளுக்கு ஒப்புக்கொண்டதால் வர முடியாமல் போய்விட்டது. ஏரிக்கரையில் நீ உட்கார்ந்திருப்பதைப் பார்த்து இங்கேயே இறங்கிவிட்டேன்."
”இன்று மாலை நானும் ஊருக்குப் புறப்படுவதாக இருக்கிறேன், ஸரஸு. நீயும் வருகிறாய் அல்லவா?” என்று கேட்டான் ரகுபதி.
"ரொம்ப அழகாக இருக்கிறதே. வராமல் எனக்கு இங்கே என்ன வேலை?" என்று கேட்ட ஸரஸ்வதி சற்றுத் தணிவாக, "அத்தான்! தீபாவளிக்கு நீ ஊருக்குப் போக வில்லையாமே. அத்தைக்கு எவ்வளவு ஏமாற்றமாக இருக்கும், அத்தான்? பாவம்........"
"போகவில்லை ஸரஸு. பெண்களைத்தான் சஞ்சல புத்தியுள்ளவர்கள் என்று நம் பெரியவர்கள் வர்ணிக்கிறார்கள். ஆனால் உன்னிடம் நிரம்பியிருக்கும் மனோ உறுதி எனக்கு இல்லாமல் போய்விட்டது. பாதி வழியிலேயே நான் இங்கு வந்துவிட்டேன். நீயானால், மைசூர் பிரயாணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு திரும்பி வந்திருக்கிறாய்" என்றான்.
"இங்கே எதற்காக வந்தாய் யாருக்காக வந்தாய்? உன்னை நாடுபவளை நீ நாடிப் போகாமல் கானல் நீரை நம்பி வந்திருக்கிறாயா? தங்கத்தை என்ன என்று நினைத்துக் கொண்டு வந்தாய் அத்தான்? மலையிலிருந்து பள்ளத்தில் வழியும் அருவி பார்ப்பதற்கு ரம்மியமாகத்தான் இருக்கும். தொலைவில் நின்று அதன் அழகை நினைத்து வியக்கலாம். பார்த்து ரஸிக்கலாம். தவறிப் போய் அதில் காலை வைத்தோமானால் பரலோகம் போக வேண்டி யது தான். நீ மணமானவன். உன்னுடைய கடமையைப் புறக் கணித்துவிட்டுத் தங்கத்தைப் பார்க்க நீ வந்திருக்கக் கூடாது. அந்தப் பெண் பாவம் வெகுளி, அவளுக்கு என்ன தெரியும் அத்தான்?" என்று படபடவெனக் கூறினாள் ஸரஸ்வதி.
ரகுபதி செயலிழந்து நின்றுவிட்டான். 'ஸரஸ்வதி சங்கீதத்தில் தான் தேர்ந்தவள். தர்ம சாஸ்திரத்திலும் தேர்ந்தவளா?'
'படபடவென்று வார்த்தைகளைக் கொட்டி அத்தானைக் கோபித்துக்கொண்டோமே' என்று ஸரஸ்வதி வருந்தினாள். பிறகு சமாதானம் அடைந்து, "ரொம்பவும் இளைத்துப்போய் விட்டாய் அத்தான். அத்தை பார்த்தால் உருகிப்போய் விடுவாள். வா, வீட்டிற்குப் போகலாம். தங்கத்தைப் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. வா!" என்று அன்புடன் அவனை அழைத்தாள்.
ரகுபதி பேசுவதற்கோ, தர்க்கிப்பதற்கோ ஒன்றும் இல்லை; மறுமொழி கூறாமல் ஸரஸ்வதியுடன் அவன் வீட்டை நோக்கி நடந்தான். அவர்கள் வீட்டை அடையும் போது மாலை மூன்று மணிக்கு மேலாகிவிட்டது. கொல்லைப் பக்கம் மாட்டுத் தொழுவத்திலிருந்து தங்கம் ஸரஸ்வதி வருவதைக் கவனித்துவிட்டாள். சந்தோஷத்தால் அவள் மனம் துள்ளியது: துள்ளி ஓடும் கன்றைப்போல, "ஸரஸு அக்கா!" என்று வாய் நிறைய அழைத்துக்கொண்டு முற்றத்துக்கு வந்து ஸரஸ்வதியை இறுகச் சேர்த்து அணைத்துக்கொண்டாள் தங்கம்.
"என்னைப் பார்ப்பதற்குத்தானே அக்கா இவ்வளவு தூரம் வந்திருக்கிறாய்? என்னிடம் உள்ள வாஞ்சையினால் தானே அக்கா - இங்கே வந்தாய்?" என்றெல்லாம் சந்தோஷம் தாங்காமல் கேட்டாள்.
"ஆமாம், அதற்காகத்தான் வந்தேன். தங்கம் நீ எப்படி இருக்கிறாய் என்று பார்ப்பதற்குத்தான் வந்தேன்" என்று ஸரஸ்வதி கூறி அவளைச் சேர்த்து அணைத்துக் கொண்டாள்.
ஸரஸ்வதியின் பேச்சுக் குரலைக் கேட்டு அலமு உள்ளிருந்து முற்றத்துக்கு வந்தாள். வந்தவள் திகைப்பும், பயமும் ஒருங்கே அடைந்தவளாக, "நீயா வந்திருக்கிறாய் ஸரஸு? உன் அத்தானைப் பார்த்தாயா? தீபாவளிக்கு ஊருக்குப் போகாமல் இங்கே வந்து உட்கார்ந்து விட்டான். என்ன சொன்னாலும் கேட்கவில்லையேடி. அம்மா; நான் என்ன பண்ணுவேன் சொல். மன்னிக்குத் தெரிந்தால் என்னைத்தான் குற்றம் சொல்லுவாள். நீ என்ன சொல்லுவாயோ என்று பயந்து செத்தேன் போ" என்று ஸரஸ்வதி எதையும் கேட்பதற்கு முன்பே படபடவென்று பேசினாள் அலமு.
'அலமு அத்தைக்குப் பயமா? அதுவும் என்னிடம் ஏற்பட்ட பயமா?' என்று ஸரஸ்வதி நினைத்துப் பார்த்துக்கொண்டாள்.
'அவள் எல்லோரும் பயப்படும்படியாகவா இருக்கிறாள்? தர்மத்தைக் கண்டு அதர்மம் அஞ்சுகிறது. சத்தியம் அசத்தியத்தை வெல்லுகிறது. பொறுமை கோபத்தை விரட்டுகிறது. நன்மை தீமையை அழிக்கிறது. அவ்வளவு தான்! ஸரஸ்வதியைக் கண்டு யாரும் பயப்பட வேண்டியதில்லை. நற்குணங்களைப் போற்றும் அந்தப் பெண் சாதாரணமானவள்.'
ஸரஸ்வதி புன்சிரிப்புடன் அலமுவைப் பார்த்துச் சிரித்து விட்டு உள்ளே போய்விட்டாள்.
------------
37. விமோசனம் உண்டா ?
சந்துரு தன் தாயிடம் கூறியபடி ரகுபதியைப் பார்த்து முடிவாக விஷயங்களை ஒழுங்குபடுத்துவது என்கிற தீர்மானத்துக்கு வந்து விட்டான். ஸரஸ்வதி இருந்தால் இந்த விஷயத்தில் மிகவும் உதவி செய்வாள் என்றும் நம்பினான். பலவிதமான குழப்பங்களுக்கிடையில் ஸரஸ்வதியின் அழகிய முகமும், கருணை ததும்பும் கண்களும் அவன் மனத்தைப் பூரிக்கச் செய்தன. ஸரஸ்வதியை எதிர்பாராமல் கிராமத்தில் சந்தித்தால் அவன் ஆசை பூர்த்தி ஆகிவிடும். ஆகவே உற்சாகத்துடன் சந்துரு கிராமத்துக்குக் கிளம்பினான்.
இடையில் ஸரஸ்வதி கிராமத்தின் முக்கியமான இடங்களை எல்லாம் சுற்றிப் பார்த்தாள். தங்கமும், அவளும் ஆந்திரீகமாகக் கூடிப் பேசினர். ரகுபதி தன்னிடம் அசட்டுத்தனமாக நடந்து கொண்டதையெல்லாம் தங்கம் ஸரஸ்வதியிடம் விவரித்தாள், கோவிலில் புஷ்பக் குடலையைப் பற்றி அவன் இழுத்ததையும், தான் அவனைக் கடிந்து பேசினதையும் கூறிவிட்டுத் தங்கம், ’பாவம்' என்று வருந்தினாள்.
இதையெல்லாம் கேட்டபோது ஸரஸ்வதியின் மனம் வெட்கத்தால் குன்றிப்போனது. உயர்ந்த லட்சியவாதியாகிய ரகுபதி குறுகிய காலத்துக்குள் இவ்விதம் மாறிவிட்டான் என்பதை அவளால் நம்பவே முடியவில்லை. தங்கத்தின் மாசற்ற குணத்தையும், உறுதியையும் கண்டு வியந்தாள்.
”தங்கம்! உன்னை நான் ஊரில் ஒரு தடவை நீ புத்திசாலி என்று தெரிவித்தேனே. அந்த வார்த்தை பொய்க்கவில்லை. நீ ரொம்பவும் புத்திசாலி. மிகுந்த கெட்டிக்காரி. சாவித்திரியைப் பாராமல் உன்னை முதலில் நான் பார்த்திருந்தால் அத்தானுக்கு உன்னையே கல்யாணம் செய்து வைத்திருப்பேன், இவ்வளவு சங்கடங்கள் ஏற்பட்டிருக்காது” என்று பாராட்டினாள் ஸரஸ்வதி.
"போ, அக்கா! நீதான் என்னைக் கெட்டிக்காரி என்று கொண்டாடுகிறாய் புத்திசாலி என்று புகழ்ந்து பேசுகிறாய். நான், பெற்றவர்களுக்கும் உறவினர்காருக்கும் பாரமாக இருக்கிறேன். எனக்குக் கல்யாண ஆகவில்லையே என்று அம்மா வீட்டைவிட்டு வெளியிலேயே வருவதில்லை. பெரியம்மா வேறு மரம்மாதிரி நிற்பதாகச் சொல்கிறாள். கன்னிப்பெண், வாழாமல் வீட்டுடன் இருப்பதால் தான் தரித்திரம் பிடுங்குவதாக பெரியம்மா கோபித்துக்கொள்கிறாள். எனக்கு விமோசனம் ஏற்படுமா அக்கா? என்னை மணந்துகொள்ள யாராவது முன் வருவார்களா?" என்று கண்ணீர் வழியக்கேட்டு, ஸரஸ்வதியின் மடியில் முகத்தைப் புதைத்துக்கொண்டு தேம்பினாள் தங்கம்.
ஸரஸ்வதியின் மனம் துடித்துப் போய்விட்டது. 'எல்லா வசதிகளும் இருக்கும் என்னைக் கல்யாணம் செய்து கொள்ளும்படி அப்பா மைசூரில் பன்முறை கேட்டாரே. இன்றைக்கு 'சரி'யென்று தலை அசைத்தால் கல்யாணம் நடந்துவிடும். அப்பாவை அழைத்து வந்து இந்தப் பேதைப் பெண்ணைக் காட்டாமல் போனேமே. வாழ வழி தெரியாமல் ஆயிரக் கணக்கில் பரிதவிக்கும் தமிழ் நாட்டுக் கன்னிகைகளைத் தங்கம் ஒருத்தியின் மூலமாகப் பார்த்துவிடலாம். இப்படி இருக்கும் போது எனக்கு என்ன கல்யாணத்துக்கு அவசரம்? பணமில்லையா? அழகில்லையா? எனக்குக் கல்யாணம் நடக்காமல் போய்விடுமா? தங்கத்துக்குத்தான் முதலில் வாழ வழி செய்யவேண்டும். ஆமாம்!' என்று ஸரஸ்வதி தனக்குள் பேசிக்கொண்டாள்.
மடியில் முகத்தைப் புதைத்துக்கொண்டிருக்கும் தங்கத்தின் முகத்தைப் பரிவுடன் நிமிர்த்தி, "தங்கம்! கட்டாயம் உனக்குக் கல்யாணம் நடக்கும். உனக்கு நல்ல கணவன் கிடைப்பான். என் மனம் அவ்விதம் கூறுகிறது. அதை நம்புகிறேன். அழாதே அம்மா!" என்று தேற்றினாள்.
தங்கம் மறுபடியும் தன் முத்துப் போன்ற பற்கள் தெரிய நகைத்தாள்.
”இந்த ஊரில் உள்ள குடியான ஜனங்களும் அப்படித்தான் சொல்கிறார்கள், அக்கா. அர்ச்சுனராஜா மாதிரி எனக்குப் புருஷன் கிடைப்பானாம். திடமான நம்பிக்கையுடன்
சொல்கிறார்கள்; நீயும் சொல்கிறாய் அக்கா!" என்றாள்.
ஸரஸ்வதி அர்த்த புஷ்டியுடன் தலை அசைத்து, "ஏழை ஜனங்கள் உள்ளார்ந்த அன்புடன் கூறும் வாக்கு பொய்க்காது. உள்ளம் நிறைந்து பேசுகிறார்கள். தங்கள் எதிரில் வளர்ந்து பெரியவளான நீ நன்றாக வாழவேண்டும் என்று விரும்பு கிறார்கள்" என்று கூறினாள்.
சோர்ந்திருந்த தங்கத்தின் மனத்தில் உற்சாகம் குமிழியிட்டது. ”அக்கா! நீயும், நானும் சேர்ந்து பாடி எவ்வளவு நாட்களாயின? பாடலாமா அக்கா?" என்று கேட்டாள்.
"ஆஹா, பாடவாம்"" என்று ஸரஸ்வதி ஆமோதித்ததும் அந்த வீட்டுக் கூடத்திலிருந்து இன்னிசை பெருகியது.
”பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்
மாமயில் மீது மாயமாய் வந்தான். ..."
பாடிக்கொண்டே தங்கம் சிந்தித்தாள். 'பரம ஏழையாகிய எனக்கு நல்ல கணவனாக ஒருவன் கிடைப்பான் என்று ஸரஸு அக்கா சொல்கிறாள். மாயமாக அந்த 'ஒருவன்' என்று வருவானோ? அவன் எப்படிப்பட்டவனோ? முருகவேள் அதற்குக் கிருபை செய்வானா?" என்று பலவாறு நினைத்தாள் அவள்.
நல்லவர்களை வாழ்விக்கும் இறைவன் அருள் புரிந்தான். தெருவில் வந்து நின்ற வண்டியிலிருந்து சந்துரு இறங்கி உள்ளே வந்தான். இதுவரையில் அறையில் உட்கார்ந்திருந்த ரகுபதி, தங்கமும், ஸரஸ்வதியும் பாடுவதைக் கேட்டுக் கூடத்தில் வந்து உட்கார்ந்திருந்தான். சந்துருவின் வரவை யாரும் எதிர்பார்க்க வில்லை. ஒரு நிமிஷம் ரகுபதியின் மனத்தில் கோபம், ரோஷம், வெட்கம், அவமானம் முதலிய உணர்ச்சிகள் தோன்றின. தலையைக் குனிந்து உதட்டைக் கடித்துக்கொண்டே உட்கார்ந்திருந்தான் அவன்.
வீட்டுக்கு வந்தவர்களை ”வாருங்கள்" என்று வாய்குளிர அழைப்பது நமது சிறந்த குணங்களில் ஒன்று. வரவேற்காத வீட்டு வாசலை மிதிப்பதற்குக்கூட உள்ளம் கூசுகிறது.
சந்துரு தயங்கினான். பாட்டைப் பாதியில் நிறுத்தி விட்டாள் ஸ்ரஸ்வதி. தன் அழகிய கண்களை உயர்த்தி, "நமஸ்காரம், வாருங்கள். ஊரில் எல்லோரும் சௌக்கியந்தானே?* என்று விசாரித்தாள்.
தங்கம் எழுந்து இரண்டெட்டில் உக்கிராண அறைக் கதவருகில் போய் நின்று, வந்தவர் யாராய் இருக்கும் என்று யோசித்தாள். சுருள் சுருளாக வாரிவிடப்பட்ட கேசமும், ஆழ்ந்து சிந்திக்கும் கண்களும் உயர்ந்த உருவமும் கொண்ட அந்தச் சுந்தர புருஷனை, ஆறு முகனேதாள் தனது பிரார்த்தனையைக் கேட்டு அனுப்பி இருக்கிறானோ என்று எண்ணிப் பூரித்துப் போனாள். திடீரென்று எதிர்பாராதவிதமாக --மாயமாக வந்து நிற்கும் புருஷன் – தன்னை வாழ்விக்கத்தான் வந்திருக்கிறானோ என்று எண்ணி எண்ணி மாய்ந்துபோனாள் தங்கம்.
சந்துரு ஸரஸ்வதியைக் கனிவுடன் பார்த்து. "எல்லோரும் சௌக்கியந்தான். அம்மாவுக்குத்தான் உடம்பு சரியில்லை . பலஹீனமாக இருக்கிறாள்" என்று கூறிவிட்டு, "மாப்பிள்ளை! தீபாவளிக்கே நீங்கள் வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன். ஸரஸ்வதியும் வருவாள் என்று அம்மா நினைத்துக் கொண்டிருந்தாள்" என்றான்.
"நான் வந்திருக்கவேண்டியது தான்! அத்தானும், நானும் ரெயிலடி வரையில் ஒன்றாகத் தான் வந்தோம். அவசரமாக என் தகப்பனாரைப் பார்ப்பதற்கு மைசூர் போயிருந்தேன். வராமல் விட்ட பிசகை இப்பொழுது தான் உணர்கிறேன்!" என்றாள் ஸரஸ்வதி.
"யார் பேரில் பிசகிருந்தாலும் அதையெல்லாம் மறந்து மன்னித்துவிடுவதுதான் மனிதப் பண்பு. சாவித்திரி ரொம்பவும் மாறிவாட்டாள். அவள் மனசிலே தன் கணவனை எப்பொழுது சந்திக்கப் போகிறோம் என்கிற ஆவல் மிகுந்திருக்கிறது. தன் செய்கையை நினைத்து வெட்கப்படுகிறாள் என்றே தோன்றுகிறது. ரகுபதி! பெண்ணின் மனத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. ஊருக்குக் கிளம்புவதற்கு முன்பு சீதா என்னிடம் ஒரு சிறு நோட்டுப் புஸ்தகத்தைக் கொடுத்தாள். படித்தேன். நீந்தத் தெரியாதவன் தண்ணீரில் விழுந்து தத்தளிப்பதை யாராவது பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்களா? அவனைக் காப்பாற்ற எப்படியும் முயலுவார்கள். சாவித்திரி கண்ணீர் விட்டுப் பல இரவுகள் அழுதிருக்கிறாள் என்பதை அந்தச் சிறு புஸ்தகம் விளங்க வைத்துவிட்டது.
"மாடியிலே நிலவு வீசுகிறது. களைத்து வீடு வந்த கணவருக்கு நான் எந்த வகையில் இன்பமளித்தேன்? கோபத்தால் பொருமினேன், ஏன்?”
"கணவர் தூங்கிவிட்டார். அமைதியாகத் தூங்குகிறார். அவர் அமைதி என் ஆத்திரத்தைத் தூண்டிவிட்டது. பொறாமைத் தீயில் மனம் வெந்து போகிறது.”
"இன்னும் என்னென்னவோ எழுதி இருக்கிறாள். தன் தவறை உணர்ந்துவிட்டாள் என்றே நினைக்கிறேன். அசட்டுப்பெண்! உங்களுக்குக் கடிதம் எழுதி இருக்கலாம். மனசைக் கொட்டிக் கதறி இருக்கலாம். ஓடிவந்து உங்கள் காலில் விழுந்திருக்கலாம். என் தங்கை குழந்தைப் பருவத்திலிருந்தே பிடிவாதத்தில் வளர்ந்தவள். அந்தப் பிடிவாதமும், போலிக் கௌரவ முந்தான் அவளைத் தடுத்திருக்கவேண்டும்!" என்று சந்துரு விஷயத்தைச் சொல்லிக்கொண்டே போனான்.
ஸரஸ்வதி ரகுபதியைத் திரும்பிப் பார்த்துக் கண்டிப்பு நிறைந்த குரலில், "அத்தான்! அவருடன் ஊருக்குப் புறப்படு, உன் மனைவியை அழைத்துவா, அத்தான். இது பரீக்ஷைக்கூடம் அல்ல; கேள்விகள் தயாரித்துக் கேட்பதற்கும், அவர் பதில்கள் அளிப்பதற்கும். சாவித்திரி தன் குற்றங்களை உணர்ந்து விட்டாள் என்பதே போதுமானது. உன் லட்சியத்தைக் குறுகிய பாதையில் நடத்த வேண்டும் என்பதில்லை. சாவித்திரி ஒருத்தி சங்கீதம் பயின்றுவிட்டால் உன் லட்சியம் நிறைவேறிவிடுமா? ஆர்வத்துடன் சங்கீதத்தைப் பயில்வதற்கு எவ்வளவோ பெண்கள் காத்திருக்கிறார்கள். பரந்த மனப்பான்மையுடன் அவர்களுக்கு உதவி செய்தால் லட்சியம் நிறைவேறிவிடும். இதற்காக இனிக்க வேண்டிய இல்வாழ்வைக் கசப்பாக்கிக் கொள்ளாதே" என்றாள்
ஸரஸ்வதி.
சந்துரு அப்படியே அயர்ந்துவிட்டான். ' நாவிலே கலைவாணி நர்த்தனம் புரியும்போது ஸரஸ்வதி ஏன் இவ்வளவு அழகாகப் பேசமாட்டாள்! இந்தப் பெண்ணைப் பார்த்து எப்படி என்னை மணந்து கொள்கிறாயா என்று கேட்பது?' என்று புரியாமல் விழித்தான் சந்துரு.
------------
38. 'இன்னும் கோபமா?'
அழகே உருவமாக இருந்த சாவித்திரி சில மாதங்களில் எப்படித்தான் மாறி விட்டாள்? கண்களைச் சுற்றிக் கருமை படர்ந்திருந்தது. 'கொழு கொழு'வென்று இருந்த கன்னங்கள் ஓட்டி உலர்ந்து போயிருந்தன. அவளுடைய சிவப்புக்கூட மாறி விட்டதாக வீட்டில் எல்லோரும் சொல்லிக்கொண்டார்கள். மகளைப் பார்த்துப் பார்த்து மங்களம் தனிமையில் கலங்கினாள். ஒவ்வொரு தினம் இரவில் சாப்பிடாமலேயே போய்ப் படுத்து விடுவாள் சாவித்திரி. நொடிக்கு ஒருதரம் ஆழ்ந்த பெருமூச்சு விடுவாள். மனக் கஷ்டத்தை யாரிடமாவது கொட்டி அழுது விடலாம் என்றால் அநுதாபத்துடன் யார் கேட்கப் போகிறார்கள்? சீதா இன்னும் விளையாட்டுப் பெண்ணாகவே இருக்கிறாள். ஒரு நொடியில் விஷயத்தைச் சொல்லித் தம்பட்டம் அடித்து விடுவாள். அப்பாவிடம் போய் 'என்னை உங்கள் மாப்பிள்ளையிடம் அனுப்பி விடுங்கள்' என்று எப்படிச் சொல்வது? சந்துருவின் எதிரில் நிற்கவே அவளுக்குப் பயமாகவும், வெட்கமாகவும் இருந்தது. தப்பித் தவறி ஏதாவது சொல்லிவிட்டால், 'உன்னை யார் போகவேண்டாம் என்கிறார்கள்? புறப்படு போகலாம்' என்று மூட்டை கட்ட ஆரம்பித்துவிடுவான்.
சந்துரு ஊருக்குப் புறப்பட்டுப் போன பிறகு சாவித்திரி காரணமில்லாமல் மகிழ்ச்சி யடைந்தாள். ஒரு சமயம் கலங்கினாள். 'அவர் வந்துவிடுவார்' என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள். 'வராமல் இருந்துவிட்டால் நானே போய்விடுகிறேன். பிறந்த வீட்டில் எல்லோராலும் உதாசீனம் செய்யப்படுவதை விட.. அவர் கால்களில் விழுகிறேன்' என்று வைராக்கியத்துக்கு மனசைத் தயார் செய்தாள்.
மங்களம், வெந்நீர் அடுப்பு 'பூ' என்று ஊதினால் கூட, மாப்பிள்ளை வந்துவிடுவான் என்று நம்பி மகிழ்ந்தாள். 'அடுப்பு ஊதுகிறது. உன் அகமுடையான் வந்து விடுவான் - சாவித்திரி' என்று பெண்ணைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே சொன்னாள். பெற்ற மனம் பித்துக் கொண்டது என்பதற்கு அவள் ஓர் உதாரணம்.
"காக்கை கத்துகிறது. அத்திம்பேர் வரப்போகிறார்" என்று சொல்லி ஆனந்தப்பட்டாள் சீதா. அந்த வார்த்தைகளை மறுபடியும் அவள் சொல்லிக் கேட்கவேண்டும் போல் சாவித் திரிக்குத் தோன்றியது.
"ஏண்டி சாவித்திரி! அத்திம்பேர் வரும் போது நீ எந்தப் புடைவையைக் கட்டிக் கொள்ளப் போகிறாயடி? கல்யாணத்துக்கு முன்பு உடுத்திக்கொண்டாயே முதன் முதல் கனகாம்பர வண்ணப் புடைவை, அதைத்தானே?" என்று அக்காவைக் கேட்டாள் சீதா.
" போடி! அது ஒன்றும் வேண்டாம். அதைக் கண்டால் எனக்குப் பிடிக்கவில்லை. உனக்கு அதைக் கொடுத்துவிடுகிறேனடி அம்மா" என்றாள் சாவித்திரி மகிழ்ச்சி பொங்கும் குரலில்.
"ஏனோடி அம்மா! ரொம்ப ' ஆகி'வந்த புடைவையோ இல்லையோ? அவசியம் எனக்கு வேண்டியதுதான். அதைக் கட்டிக்கொண்டு என் சுயம்வரத்துக்கு நான் நிற்க வேண்டியதுதான் பாக்கி!" என்றாள் சீதா.
சகோதரிகள் இருவரும் 'கலகல' வென்று சிரித்தார்கள்; சாவித்திரி இப்படிச் சிரித்து எத்தனை மாதங்கள் ஆயின? காகம் கத்தியது வீண்போகவில்லை. மனித உணர்ச்சிகளை அறியாத அடுப்பு ஊதியதும் பொய்க்கவில்லை. சந்துருவும், ரகுபதியும் வந்து சேர்ந்தார்கள். சாவித்திரி காமரா அறையிலிருந்து திருட்டுத்தனமாகக் கணவனைப் பார்த்தாள். துடிக்கும் மார்பை அழுத்திப் பிடித்துக் கொண்டாள். 'வந்துவிட்டாரே' என்று மெல்ல வாய்க்குள் சொல்லிக்கொண்டாள். நிலைக் கண்ணாடி முன்பு நின்று விரலின் நுனியைமைச் சிமிழில் தோய்த்துக் கண்களுக்கு மை தீட்டிக்கொண்டாள். வாசனை வீசும் கதம்பத்தைத் தலையில் வைத்துக்கொண்டாள். புருவத்தின் இடையில் திலக மிட்டுக்கொண்டு, கோணல் சிரிப்புடன் கண்ணாடியில் தன் அழகைக் கவனித்தாள் சாவித்திரி. 'கட்டாயம் என் கருவிழிகளைக் கண்டு அவர் மயங்கவேண்டும். சிரிக்கும் உதடுகளைக் கண்டு பரவசமடைய வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாகத் என் அன்பினால் அவரை வெல்லவேண்டும்; அடிமைப்படுத்த வேண்டும். அது ஒன்றுதான் சிறந்த வழி!' என்று உவகை எய்திய சாவித்திரி ஆசை தீரக் கணவனை ஜன்னல் வழியாகவே பார்த்துக் களித்தாள்.
அன்று, வழக்கமாகக் கூடத்தில் காணப்படும் மங்களத்தின் படுக்கையைக்கூடக் காணோம். மறுபடியும் மாப்பிள்ளை வந்து 'டானிக்' கொடுத்து அவளைப் பிழைக்க வைத்துவிட்டான்!
தினசரி படிப்பதில் முனைந்திருந்த ராஜமையர் தம் மூக்குக் கண்ணாடியை நிதானமாகக் கழற்றி வைத்தார். பிறகு நிமிர்ந்து பார்த்து. "வா அப்பா ரகுபதி. அம்மா வரவில்லையா? ஸரஸ்வதி எங்கே?" என்று அழைத்தார். மாப்பிள்ளை மீது அவருக்கு ஏற்பட்டிருந்த கோபம் ஒரு நொடியில் மறைந்து போனது ஆச்சரியந்தான். வயதிலும், அனுபவத்திலும் பெரியவராகிய அவர் மாறியது ஒன்றும் வியப்பில்லை. யர் மாழு விட்டால் மங்களம் அவரை லேசில் விடமாட்டாள்.
"அத்திம்பேரே! நிஜமாகவே வந்து விட்டீர்களே! தீபாவளிக்கு வந்திருந்தால் ஒற்றை வரும்படி. அப்படி வராமற் போனதற்கு இப்பொழுது இரட்டிப்பாக வரும்படி தரப்போகிறீர்கள். தீபாவளிச் சீருடன், கார்த்திகைச் சீரும் சேர்ந்து கிடைக்கப் போகிறது" என்று கேலியாகச் சீதா கூறிச் சிரித்தாள்.
இவர்கள் பேச்செல்லாம் மங்களத்துக்கு ரசிக்கவில்லை. "ஒருவரை-ஒருவர் பிரிந்து மாதக் கணக்கில் இருந்திருக்கிறார்கள். எவ்வளவோ பேசவேண்டி இருக்கும். 'தொண தொண' வென்று இவர்களுக்கு என்ன வேலை' என்று நினைத்தாள் அவள்.
ரகுபதி எழுந்து சற்று வெளியே போனபோது. "இந்தாருங்கள்! எல்லாச் சமாசாரங்களையும் ஆற அமரக் கேட்டுக் கொள்ளலாம்; ஒன்றும் கொள்ளை போய்விடாது. அவன் பெண்டாட்டியோடு அவனைப் பேசவிடுங்கள்" என்று கூறிவிட்டு விருந்து தயாரிப்பதற்குச் சமையலறைக்கு விரைந்தாள்.
கூடத்துக்கு வேலையாக வந்த சீதா குறும்புத்தனமாகச் சிரித்து, ”அத்திம்பேரே! அதோ உங்கள் சிறை இருக்கிறது. காவல்காரியும் அங்கேதான் இருக்கிறாள்!" என்று கூறிவிட்டுப் போய்விட்டாள்.
தனியாக விடப்பட்ட ரகுபதி, சீதா காட்டிய அறையைப் பார்த்தான். பிறகு துணிவுடன் எழுந்து அறைக்குள் சென்றான். சாவித்திரிக்கு ஒரு கணம் தன் கால்களின் கீழ் இருக்கும் பூமி நடுங்குவதுபோல் இருந்தது. கட்டிலைக் கையால் பிடித்துக் கொண்டாள். அவனை ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சினாள். ரகுபதியின் மனம் அன்பு நிறைந்தது அல்லவா? "சாவித்திரி! இன்னும் என் மேல் உனக்குக் கோபமா?" என்று கேட்டு அவள் கரங்களைப் பற்றித் தன் கைகளுடன் சேர்த்துக்கொண்டான்.
உதடுகள் துடிக்க அவள், 'இல்லை' என்னும் பாவனயாகத் தலை அசைத்தாள். அவன் கரங்களைப் பற்றித் தன் முகத்தை மறைத்துக்கொண்டாள்.
”எல்லாவற்றையும் மறந்து விடுவோம் சாவித்திரி! புதிய வாழ்க்கை தொடங்குவோம்!" என்று ஆர்வத்துடன் அவள் முகத்தைத் திருப்பி அவளைப் பார்த்தான் ரகுபதி.
கண்கள் கலந்து உறவாடின. காதலர்களைத் தனியாக விட்டுவிடுவோம்.
-----
39. கிருகப் பிரவேசம்
மறுபடியும் ஸ்வர்ணம் தன் நாட்டுப் பெண்ணை வரவேற்க. ஆடி ஓடி வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள். அடுத்த நாள் கார்த்திகைப் பண்டிகை. சமையலறை-யிலிருந்து ’படபட' வென்று நெல் பொரியும் சத்தம் கேட்டுக்கொண்டே யிருந்தது. பாகீரதி அம்மாமிதான் மறுபடியும் ஸ்வர்ணத்துக்கு உதவியாக வேலைகளைச் செய்ய வந்திருந்தாள். காலம் மாறிப்போய்விடும். குழந்தைகள் பெரியவர்களாகிறார்கள். வாலிப வயதுடையவர்கள் நடுத்தர வயதை அடைகிறார்கள். பிறகு கிழத்தன்மையை அடைகிறார்கள். மனிதர்கள் உருவத்தில் மாறுதல் ஏற்படலாம். குணத்திலே மாறுதல் அடையக்கூடாது. நேற்றுவரை சகஜமாகப் பழகியவர்களிடம் இன்று 'நீ யார்? உன்னால் எனக்கு என்ன ஆகவேண்டும்?' என்கிற தோரணையில் பழகக்கூடாது. பாகீரதி அம்மாமி என்றும், எப்பொழுதும் ஒரே சுபாவத்தையுடையவள். ரகுபதி மனைவியை அழைத்து வருகிறான் என்று கேள்விப்பட்ட வுடனேயே ஸ்வர்ணத்திடம் வந்தாள். 'பண்டிகைக்கு என்னால் ஆன உதவிகளைச் செய்கிறேன்' என்று கூறினாள். இவள் சாதாரணமாகத்தான் படித்திருக்கிறாள். கோர்வையாக நாலு வார்த்தைதள் கூடப் பேசத் தெரியாது. படித்த பெண்கள் என்று சொல்லிக்கொள்கிறவர்களே; சற்றுமுன் பார்த்தவர்களை மறந்துபோய் விடுகிறார்கள்! நாமாகப் பேச முயன்றாலும் தங்களுக்கு அவசர ஜோலி இருப்பதாக ஓடிப்போய்விடுவார்கள். இது ஒரு அசட்டு நாகரிகம்!
வெல்லப் பாகின் வாசனை 'கம்' மென்று வீசிக்கொண்டிருந்தது. வேலைக்காரப் பெண் நெற்பதரையும், பொரியையும் பிரித்து எடுத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். முறத்தி லிருந்த பொரியைப் பாத்திரத்தில் கொட்டிவிட்டு ஸ்வர்ணத்தைப் பார்த்து அவள். “ஏனம்மா! சின்ன அம்மா வந்தால் திருப்பிக் கோவிச்சுகினு பிறந்த வூட்டுக்குப் போயிடுமா என்ன?" என்று கேட்டாள்.
"யார் பேரிலே அவள் கோபித்துக்கொள்ளப் போகிறாள்? நானும், ஸரஸ்வதியுந்தான் வெளியூருக்குப் போகப்போகிறோமே. கோபமோ, - சமாதானமோ இதில் தலையிட இங்கே யாரும் இருக்கப்போவதில்லை" என்றாள் ஸ்வர்ணம்.
"இந்த வீட்டுக்கு உன் சின்ன அம்மா தான் எஜமானி. இத்தனை வருஷ காலம் அதன் எஜமானியாக இருந்தது போதும். அத்தையம்மாவின் இடுப்புச் சாவி இடம் மாறப் போகிறது. வீட்டைச் சின்ன அம்மா பாத்துக்குவாங்க" என்றாள் ஸரஸ்வதி.
"பாத்துக்குவாங்க! அவ்வளவு இருந்தா இவங்களைப் பிடிக்க முடியாதம்மா. வாய்க்கு ருசியா புருசனுக்குச் சமைத்துப் போடத் தெரியாட்டியும் இதிலே ஒண்ணும் குறைச்சல் இல்லை போங்க!"
ஸரஸ்வதியும், ஸ்வர்ணமும் ஊருக்குப் போகப் போகிறார்கள் என்பதை நினைத்து வேலைக்காரப் பெண் கண் கலங்கினாள். புது எஜமானி எப்படி இருப்பாளோ என்கிற பயம் காரணமாக இருக்கலாம்.
கார்த்திகைச் சீருடன் சாவித்திரியும், ரகுபதியும், சந்துருவும், மங்களமும் வந்து சேர்ந்தார்கள். ஸரஸ்வதி முன்னைப் போல் ஆரத்தியுடன் ஓடிச் சாவித்திரியை வரவேற்கவில்லை! மனத்தில் தாக்கிய காயம் ஆழமாகப் போய்விட்டது. அதன் வலியை எவ்வளவு தான் அவள் மறக்க முயன்றாலும் அது வலித்துக்கொண்டேதான் இருந்தது. கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிளவுக்கே தான் காரணமானவள் என்று நினைத்து ஸரஸ்வதி ஒதுங்கிவிட்டாள். அவளுடன் வந்திருந்த தங்கம் சிரித்த முகத்துடன் ஆரத்தியைக் கொண்டுவந்தாள்.
"ஏதோ, கிழக்குப் பக்கமாக நில்லுங்கள்" என்றாள். "கௌரீ கல்யாணமே வைபோகமே" என்று பாடினாள். எல்லோரும் சிரித்தார்கள். எல்லோர் முகத்திலும் புன்னகை தவழ, மனத்தில் திருப்தியான இன்ப அலைமோத இந்தப் 'புனர் கிருகப் பிரவேசம்' நடைபெற்றது.
அன்பு கனிந்த பார்வையுடன் ஸரஸ்வதியைத் தேடிய மங்களம் அவளுடன், பேசச் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொண் டாள். "ஸரஸ்வதி! எங்கள் ஊருக்கு வரக்கூடாதென்று விரதம் எடுத்துக் கொண்டிருக்கிறாயா? தீபாவளிக்கு வருவாய் என்று நினைத்திருந்தேன். உன் அத்தானுடன் வருவாய் என்று நினைத்து ஏமாந்தேன். இப்பொழுது நானாகவே உன்னைப் பார்ப்பதற் கென்று வந்துவிட்டேன். ஏனம்மா வரவில்லை?" என்று விசாரித்தாள்.
"வராமல் என்ன மாமி? எனக்கு எல்லோரும் ஒன்றுதான். தாயன்புக்காக ஏங்கியவள் நான். உடன் பிறந்த சகோதரிகள் யாரும் இல்லையே என்று பார்க்கும் பெண்களை எல்லாம் என் சகோதரிகளாகவே நினைக்கிறேன். கணவன் - மனைவிக்குள் ஆயிரம் இருந்தாலும், சாவித்திரி என்னை அழைத்திருக்க வேண்டாமா? அவளுக்கு நான் என்ன தீங்கு செய்தேன்?-"
ஸரஸ்வதி கண்ணீர் விட்டு அழுது யாரும் அதிகமாகப் பார்த்ததில்லை. கஷ்டத்திலேயே வளர்ந்து, தாயை இழந்து அவதிப்பட்டவள் அவள். பிறருடைய துன்பங்களை உணர்ந்தவள். அவள் மனம் புண்ணாகித்தான் அழுதிருக்க வேண்டும்.
சந்துருவின் மனம் வாடிப்போய்விட்டது. ரகுபதி முகம் சோர, வேறுபக்கம் திரும்பிக் கொண்டு விட்டான். ஸ்வர்ணம் அங்கு நிற்கவேயில்லை. சாவித்திரி தலை குனிந்து உள்ளேபோய் விட்டாள். மனச்சாட்சி என்பது ஒன்று உண்டென்றால் அவள் தவறுகளுக்கு அதுவே பதில் கூறும்.
அமைதியாக இருந்த கூடத்துக்குத் தங்கம் உள்ளிருந்து ஓடி வந்தாள். "பாகிலே பொரியைப் போடுவதா? பொரியிலே பாகை ஊற்றுவதா, அக்கா? எது சரி சொல் பார்க்கலாம்?" என்றாள் சிரித்துக்கொண்டு.
ஸரஸ்வதியின் முகம் மலர்ந்துவிட்டது.
"நீதான் சொல்லேன். எனக்கு இதெல்லாம் தெரிந்து என்ன ஆகவேண்டும் சொல். நான் என்ன வீட்டுக்குள் பொரி உருண்டையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கப் போகிறேனா? உனக்குத்தான் கல்யாணம் நடக்கப்போகிறது. எல்லாம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்" என்றாள் அவள்.
இதைக் கேட்ட சந்துருவின் முகம் வாடிப்போய்விட்டது. 'ஸரஸ்வதி என்ன சொல்கிறாள்? தனக்குக் கல்யாணமே வேண்டாம் என்கிறாளா? இது என்ன ஏமாற்றம்?'
சாப்பிடும் கூடத்தில் மங்களமும், ஸ்வர்ணமும் பேசிக் கொண்டிருந்தார்கள். "அவள் சம்மதப்படுவாள் என்று எனக்குத் தோன்றவில்லை அம்மா. அவள் போக்கே விசித்திரமாக இருக்கிறது. வட நாட்டுக்கு யாத்திரைக்கல்லவா கிளம்பி இருக்கிறாள்? கல்லை அசைத்தாலும் அசைக்கலாம். அவள் உறுதியை அசைக்க முடியாது" என்றாள் ஸ்வர்ணம்.
சந்துரு மனசைத் திடப்படுத்திக்கொண்டான். 'ஆகட்டும். ஸரஸ்வதியையே கேட்டுவிடுகிறேன்' என்று சொல்லிக்கொண்டான். ஆனால் ஸரஸ்வதியைத் தனியாகவே அவனால் சந்திக்க முடியவில்லை. எப்போதும் அவள் பின்னால் தங்கம் 'அக்கா, அக்கா' என்று அழைத்துக்கொண்டிருந்தாள். ' அந்தப் பெண் இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும். கேட்டுவிடுவது' என்று தீர்மானித்துக்கொண்டு அவர்களிருவரும் இருந்த இடத்தை நாடிச் சென்றான்.
ஸரஸ்வதி புஷ்ப மாலை கட்டிக்கொண்டிருந்தாள். சந்துரு வந்து நிற்பதை ஏறிட்டுப் பார்த்த தங்கம் வெட்கத்தால் குன்றிப் போனாள். "அக்கா! அவர் வந்திருக்கிறார்" என்றாள். சந்துரு சிரித்துக்கொண்டே, 'ஒரு முக்கியமான விஷயம். நானும் அம்மாவும், சாவித்திரியைக் கொண்டுவந்து விடுவதற்காக இவ்வளவு தூரம் வரவில்லை-"
"நீங்கள் வந்திருக்கும் சமாசாரம் எனக்குத் தெரியுமே! என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளும்படியாகச் செய்வதற்கு வந்திருக்கிறீர்கள்; அவ்வளவு தானே-" என்று கூறிவிட்டு ஸரஸ்வதி யோசித்தாள். பிறகு தைரியத்துடன் நிமிர்ந்து சந்துருவைப் பார்த்து, "நண்பரே! சிறந்த குணசாலியான பெண்ணை மணக்க ஆசைப்படுகிறீர்கள். கலை ஆர்வத்தில் மூழ்கியிருக்கும் நான், உங்களுடைய அருமை மனைவியாக இருக்க முடி யாது. என்னுடைய வழியே அலாதியானது. லட்சியப் பாதையில் செல்பவர்கள் லட்சியவாதிகளைத் தாம் மணந்து கொள்ள ஆசைப்படுவார்கள். அப்படி இராமல் போனால் ரகுபதியும். சாவித்திரியும் போலத்தான் இருக்க வேண்டும். வீட்டின் ஒளியாக, கிருஹலக்ஷ்மியாக, சகதர்மிணியாக இருக்க வேண்டிய பெண், கலை ஆர்வம் கொண்டவளாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. நம்முடைய ஹிந்து சமுதாயம் வகுத்திருக்கிற அரிய விஷயங்களைத் தெரிந்தவளாக இருந்தால் போதும். கணவனிடம் அன்பு காட்டத் தெரிந்தால் போதும். பெற்ற குழந்தைகளை வளர்க்கத் தெரிந்தால் போதும். வீட்டை ஒளி யுடன் வைத்துக்கொள்ளத் தெரிந்தால் போதும். சங்கீதம் தெரிந்த வித்வாம்சினியாகவோ, எழுதத் தெரிந்த எழுத்தாளி யாகவோ, ஆடத் தெரிந்த அதிசயப் பெண்ணாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. குணத்தில் சிறந்த பெண் திலகங்கள் நிறைந்த தமிழ் நாடு இது. இதிலே எந்தக் கன்னிகையாவது உங்களைக் கட்டாயம் மணக்க வருவாள். இதோ! இந்தப் பெண் ஏழை என்கிற காரணத்தால் வாழ்வு கிடைக்குமா என்று ஏங்குகிறாள். நீங்கள் மனம் வைத்தால் அவளை வாழவைக்கலாம். தங்கம் எல்லாவிதத்திலும் சிறந்தவள். என்னைவிடச் சிறந்தவள். எனக்காவது பாடத் தெரியும் என்கிற எண்ணம் உண்டு. அவள் மனசிலே ஒரு விதமான அகம் பாவமும் இல்லை."
ஸரஸ்வதி கொஞ்சநேரம் பிரசங்கம் புரிந்தாள். தங்கம் ஆத்திரத்துடன் ஸரஸ்வதியின் கைகளைப் பிடித்துக்கொண்டு, "அக்கா! அக்கா! என்ன இப்படிப் பேசுகிறாயே?" என்று அதிசயப்பட்டாள்.
சந்துருவின் மனத்தில் புதைந்து கிடந்த பிரச்னைக்கு விடை கிடைத்துவிட்டது. ஸரஸ்வதி லட்சியப் பெண். உன்னதப் பாதையில் நடக்கிறவள். சாமானிய வாழ்விலே அவள் சிக்கி உழலமாட்டாள் என்பதும் தெரிந்து போயிற்று.
அவன் ஒரே வார்த்தையில் பதில் கூறினான். "ஆகட்டும் ஸரஸ்வதி! உன் விருப்பப்படியே தங்கத்தின் பெரியம்மாவைக் கண்டு பேசுகிறேன்" என்றான்.
அவன் அங்கிருந்து சென்ற பிறகு தங்கம் ஸ்ரஸ்வதியின் முகத்தோடு தன் முகத்தைச் சேர்த்துக்கொண்டாள்.
"அக்கா!" என்று தேம்பினாள்.
"என்னை விட்டுவிடு அசடே. உனக்குத்தான் அர்ச்சுனன் கிடைத்துவிட்டானே. நான் எதற்கு?" என்று ஸரஸ்வதி
தங்கத்தின் கண்ணாடிக் கன்னங்களில் லேசாகத் தட்டினாள்.
------------
40. இருளும் ஒளியும்
அந்த ஊரிலிருக்கும் கோதண்டராமனின் ஆலயம் அன்று ஜகஜ்ஜோதியாக விளங்கியது. பிராகாரத்தைச் சுற்றிவந்த ஸரஸ்வதி அழகிய மனம் உருகும் காட்சி ஒன்றைக் கவனித்தாள். வயது முதிர்ந்த கிழவி ஒருத்தி, கோவில் பிராகாரங்களுக்கு விளக்கேற்றிக் கொண்டே வந்தாள். 'இவள் எதற்காகக் கோவிலுக்கு விளக்கேற்ற வேண்டும்? ஆசைக்காதலன் கிடைக்க வேண்டும் என்று தவம் புரிகிறாளா? வீட்டை விளங்கவைக்க மகப்பேறு வேண்டும் என்று வேண்டுகிறாளா? செல்வம் கொழிக்க வேண்டும் என்று விளக்கேற்றிக் கும்பிடுகிறாளா?'-ஸரஸ்வதியின் ஆச்சரியம் எல்லை கடந்துவிட்டது. மெதுவாக அவளருகில் சென்று ஸரஸ்வதி, "பாட்டி" என்று அழைத்தாள். "உங்களுக்கு என்ன கோரிக்கை நிறைவேறுவதற்காக இப்படி விளக்கேற்றி வணங்குகிறீர்கள்?" என்று கேட்டாள்.
கிழவியின் கண்களில் கண்ணீர் பெருகியது. "அம்மா! சில வருஷங்களுக்கு முன்புகூடக் கண்கள் சரியாகத் தெரியாமல் இருந்தன. பெரிய பெரிய சிகிச்சைகள் செய்து கொள்ளப் பணம் இல்லை. கோதண்டராமனை நம்பினேன். பார்வை கிடைத்தது. என் கண்களுக்கு ஒளி தந்தவனுக்கு நான் விளக்கேற்றுகிறேன் அம்மா. ஒளிமயமாக இருப்பவனை ஒளியின் மூலமாக வணங்குகிறேன்."
பொருள் நிறைந்த அவள் வார்த்தைகளைக் கேட்டு ஸரஸ்வதியின் உள்ளம் சிலிர்த்தது. எல்லோருடைய வாழ்விலும் ஒளி அவசியம். இரவாகிய இருளைக் கண்டால் சகல ஜீவன்களும் அஞ்சுகின்றன. நித்திரை மயக்கத்தில் ஆழ்ந்து, இருளை விரட்டி ஒளியைக் காண விழைகின்றன. அருணோதயத்தை எதிர்பார்த்து நிற்கிறோம். ' நல்லபடியாகப் பொழுது விடியட்டும்' என்பதில் வாழ்விலே ஒளி வீசட்டும் என்கிற அர்த்தம் மறைந்து காணப் படுகிறது.
'ரகுபதி – சாவித்திரியின் வாழ்வில் ஒளி வீசட்டும். தங்கமும் சந்துருவும் ஒளியுடன் வாழட்டும். என் கலை வாழ்விலே ஒளி வீச ஆண்டவன் அருள் புரியட்டும்' என்று பிரார்த்தித்துக் கொன்டே ஸரஸ்வதி வீட்டை அடைந்தாள்.
சாவித்திரியும், தங்கமும் அகல் விளக்குகளை ஏற்றிக்கொண்டிருந்தார்கள். வீடு முழுவதும் ஒரே ஒளிமயம். கூடத்திலே முருகனின் உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது.
'முத்தமிழால் வைதாரையும் வாழவைக்கும்" வள்ளி நாயகன் கம்பீரமாகக் காட்சியளித்தான்.
உள்ளே வந்த ஸரஸ்வதி தன் வீணையை எடுத்து வைத்துக் கொண்டாள். பிறகு செஞ்சுருட்டியில் திருப்புகழைப் பாட ஆரம்பித்தாள்:
-
"தீட மங்கள ஜோதீ நமோ நம
தூய அம்பல லீலா நமோ நம
தேவ குஞ்சரி பாகா நமோ நம
-அருள் தாராய்"
முற்றும்
----------
கருத்துகள்
கருத்துரையிடுக