யமன்
கவிதைகள்
Backயமன்
சேரன்
----------------------------------------------------------------------------
யமன்
சேரன் கவிதைகள்
படைப்பாளிகள் வட்ட வெளியீடு - 2
----------------------------------------------------------------------------
யமன்,
சேரன் கவிதைகளின்
இரண்டாவது தொகுதி
வெளியீடு:
படைப்பாளிகள் வட்டம்
நீழல்
அளவெட்டி
இலங்கை
கார்த்திகை, 1984
அச்சு:
புனிதவளன் கத்தோலிக்க
அச்சகம்.
விலை:6/=
----------------------------------------------------------------------------
இராணுவ முகாமிலிருந்து கடிதங்கள்...
எல்லாவற்றையும் மறந்துவிடலாம்...
அவர்கள் அவனை சுட்டுக் கொன்றபோது...
சொல்வதற்கு ஒன்றுமில்லை...
விமலதாசன் அண்ணா!
நாங்கள் எதை இழந்தோம்?
எல்லைப்புறத்துக் கிராமம்
ஒரு சிங்களத் தோழிக்கு எழுதியது
யமன்
----------------------------------------------------------------------------
இந்தத் தொகுதியிலுள்ள கவிதைகள்
அனைத்தும் ஜுலை 1983 இற்குப்
பிறகு எழுதப்பட்டவை. 'யமன்'
என்ற கவிதை தவிர்த்து, ஏனையவை
இதுவரை சஞ்சிகைகளில்
வெளிவராதவை.
ஆசிரியரின் மற்றைய கவிதைத்
தொகுதி;
இரண்டாவது சூரிய உதயம்
வயல் வெளியீடு,
தெல்லிப்ப்ழை - 1983.
இரண்டாவது சூரிய உதயம்
பொதுமை வெளியீடு,
சென்னை - 1983.
----------------------------------------------------------------------------
ராணுவ முகாமிலிருந்து
கடிதங்கள்....
1
அன்பே நந்தா,
இன்று காலைதான் வந்து சேர்ந்தோம்.
பிரச்சினை இல்லை.
மடியில்
ரைஃபிளை இறுகப் பற்றியிருந்ததில்
தூக்கமுமில்லை.
கனவுகள் ;
மிகவும் பயங்கரம்
திடீரென விழிப்பு.
ரயில் நிலையத்தில்
நீயும் மாமியும் அழுத அழுகையில்
நானுமே பயந்தேன்.
ஆனால்,
அனைவரும் எனக்குச் சொன்னதுபோல
வடக்கு
அப்படி ஒன்றும் பயங்கரமாகத்
தெரியவில்லை.
எங்கும் போலவே
கடைகள், தெருக்கள்,
வாகன நெரிசல்.
மனிதர்கள்தான் எமைப் பார்ப்பதேயில்லை.
தற்செயலாகப் பார்க்கிறபோதும்
அவர்கள் எல்லோரது கண்களினூடும்
ஏதோ ஒன்று ;
இனம் புரியாத ஓர் உணர்வு
என்னவாயிருக்கும் அது
என எனக்குப் புரியவே இல்லை.
நாங்கள் தனித் தனியாகச்
செல்வது இயலாது என்பதை
நீ அறிவாய் அல்லவா ?
இரண்டு கவச வாகனங்கள்,
வேறும் ஜீப்புகள் இரண்டு,
அல்லது மூன்று,
ட்ரக் ஒன்று
இவற்றில் குறைந்தது
ஐம்பது பேராவது ஒன்றாய்ச் செல்வோம்.
அது,
உண்மையிலேயே ஒரு
அணிவகுப்புத்தான்....
சுதந்திரதின விழாவில்
பார்த்திருப்பாயே
அப்படித்தான்.
ஆனால், ஒரேயொரு வித்தியாசம்:
சுதந்திர தினத்து அணிவகுப்பில்
எங்களுக்கு சுதந்திரம் இருந்தது
துப்பாக்கிகளுக்கு குண்டுகள் இல்லை.
இங்கோ,
துப்பாக்கிகளுக்கு வேண்டுமான அளவு
குண்டுகள் ;
ஆனால், சுதந்திரம் இல்லை...
2
இன்று முழுவதும் மிகுந்த அலைச்சல்
பனை மரங்களூடாக வளைந்து வளைந்து
செல்லும் தெருக்களில்
(அவை மிக மோசம்)
கவச வாகனம் குலுங்கக் குலுங்க
இடுப்பு எலும்பெல்லாம்
பிறகு ஒரே வலி.
மத்தியானம்
வயல் வெளிகளுக்கு நடுவிலிருந்த
ஒரு கிராமத்தில்
மூன்று கொழுத்த ஆடுகள் சுட்டோம்.
இளைஞர்கள் இல்லை ;
பெண்கள் ஓடி ஒளிந்து கொண்டார்கள்.
முகாமுக்கு மீள்கிற பாதிவழியில்
மேஜருக்குரிய சிகரெட் வாங்க
மறந்து போனதை
ஒருவன் ஞாபகப்படுத்தவும்,
பிறகென்ன ?
அணிவகுப்பாக அவ்வளவு பேரும்
நகருக்குத் திரும்ப நேர்ந்தது !
3
இன்று
எதிரிவீரவும் சந்திரசிறியும்
மூன்று தமிழரைச் சுட்டுக் கொன்றனர்.
'நெருக்கடி மிகுந்த தெருவில்
திடீரென இவர்கள் ஓடிச் சென்றதால்,
கலவரமுற்றுச் சுட்டுவிட்டேன்'
என்று சந்திர சொன்னான் ; பிறகு.
விசாரணையின்றியே
இரண்டுபேரையும்
கொழும்புக்கு அனுப்பினர்
இடமாற்றம்தான்.
(கொடுத்து வைத்தவர்கள்)
.................,
யாரையாவது சுட்டால்
அல்லது
சனங்கள்மீது தாக்குதல் நிகழ்த்தினால்
வீடுகளைப் பற்றவைத்தால்
உடனடியாக மாற்றம் கிடைக்கிறது. ( ? )
...........,
நேற்றும் ஐந்துபேர்
உடனடியாக மாற்றம் பெற்றனர்.
நான் வந்ததிலிருந்து
மொத்தமாக ஐம்பது பேராவது
திரும்பி விட்டனர் ;
எப்போது எனக்கு மாற்றம் வருமோ
நான் அறியேன்.
4
இன்றும் புதிதாக நூறுபேர்
எங்கள் முகாமுக்கு வந்தனர்.
சின்னப் பயல்கள் ;
மீசைகூட அரும்புதான்.
இயந்திரத் துவக்கை இயக்குவதிலோ
திறமையும் குறைவு....
..............
இப்போதெல்லாம்
பகலில் அலைந்து திரிந்த பின்னரும்
இரவில் தூக்கம் பிடிப்பதேயில்லை.
நீண்ட நாளாயிற்று
உன்னை நேரே பார்த்து.
விடுமுறை என்பது நினைக்கவே
இயலாதது....
....................
5
நேற்று இரவு,
எமது பிரிவின் பதின்மூன்றுபேரை
'அவர்கள்' கொன்றனர்.
குறி பிசகாத குண்டு வெடிப்பின் பின்
சுற்றி வளைத்தன இயந்திரத் துவக்குகள்.
நாங்கள்,
எவருமே இதனை எதிர்ப்பார்க்கவில்லை.
தலைமை முகாமுடன் வானொலித் தொடர்பு
இடையறாமல் இருந்தும்,
இருட்டினுள் யமனின்
இருப்பை மீற
ஒன்றுமே இயலாது போயிருக்க வேண்டும்.
அடுத்தநாட் காலை
எந்தத் தெருவிலும் சனங்கள் இல்லை.
அர்த்தம் தெரியாமல் ஓர் அமைதி
என்ன தேசம் இது ?
இப்போதெல்லாம்
இரவு மிகவும் கொடூரம் மிக்கது.
நிலவொளி படர்கையில்
நிழல்கள் அசைவதும்
பெயர் தெரியாத பறவைகள்
திடீரென அலறுவதும்
பகல் வரும்வரையில் நரகம்தான்.
............
அப்புறம்,
உடனடியாக மாற்றம் கேட்ட
எமதுபிரிவு நேற்றுத் தெருவில்
இறங்கிற்று.....
எத்தனைபேரைச் சுட்டுத் தீர்த்தது
என்ற விபரம் சரியாகத் தெரியாது.
ஐம்பது அல்லது அறுபது என்று
மேஜர் நினைக்கிறார்.
6
அன்பே நந்தா....
ஒரு வழியாக எல்லாம் முடிந்தது
நாளை எனக்கு இடமாற்றம் !
கடவுளுக்கு நன்றி.
இன்று கடைசித் தடவையாக
நகருக்குச் சென்றேன்
அப்படி ஒன்றும் பயங்கரமாகத்
தெரியவில்லை.
முன்பு போலவே கடைகள், தெருக்கள்....
ஆனால் மனிதர்கள்தான்
முன்பு போலவும்
எம்மைப் பார்ப்பதேயில்லை....
----------------------------------------------------------------------------
எல்லாவற்றையும் மறந்து விடலாம்...
எல்லாவற்றையும் மறந்து விடலாம்;
இந்தப் பாழும் உயிரை
அநாதரவாக இழப்பதை வெறுத்து
ஒருகணப் பொறியில் தெறித்த
நம்பிக்கையோடு
காலி வீதியில்
திசைகளும், திசைகளோடு இதயமும்
குலுங்க விரைந்த போது,
கவிழ்க்கப்பட்டு எரிந்த காரில்
வெளியெ தெரிந்த தொடை எலும்பை,
ஆகாயத்திற்கும் பூமிக்குமிடையில்
எங்கோ ஒரு புள்ளியில் நிலைத்து
இறுகிப்போன ஒரு விழியை,
விழியே இல்லாமல், விழியின் குழிக்குள்
உறைந்திருந்த குருதியை,
'டிக்க்மண்ட்ஸ்' ரோட்டில்
தலைக் கறுப்புக்ளுக்குப் பதில்
இரத்தச் சிவப்பில் பிளந்து கிடந்த
ஆறு மனிதர்களை,
தீயில் கருகத் தவறிய
ஒரு சேலைத் துண்டை,
துணையிழந்து,
மணிக்கூடும் இல்லாமல்
தனித்துப்போய்க் கிடந்த
ஒரு இடது கையை,
எரிந்து கொன்டிருக்கும் வீட்டிலிருந்து
தொட்டில் ஒன்றைச்
சுமக்க முடியாமல் சுமந்துபோன
ஒரு சிங்களக் கர்ப்பிணிப் பெண்ணை
எல்லாவற்றையும்,
எல்லாவற்றையுமே மறந்துவிடலாம்
ஆனால்-
உன் குழந்தைகளை ஒளித்துவைத்த
தேயிலைச் செடிகளின் மேல்
முகில்களும் இறங்கி மறைத்த
அந்தப் பின் மாலையில்
நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த
கொஞ்ச அரிசியை பானையிலிட்டுச்
சோறு பொங்கும் என்று
ஒளித்தபடி காத்திருந்தபோது
பிடுங்கி எறிபட்ட என் பெண்ணே,
உடைந்த பானையையும்
நிலத்தில் சிதறி
உலர்ந்த சோற்றையும்
நான் எப்படி மறக்க....?
----------------------------------------------------------------------------
அவர்கள் அவனைச்
சுட்டுக் கொன்றபோது....
அவர்கள் அவனைச் சுட்டுக் கொன்றபோது
எல்லோருமே பார்த்துக்கொண்டு
நின்றார்கள்.
இன்னும் சரியாகச் சொல்வதானால்,
அவன் சுடப்படுவதைக் காண்பதற்காகவே
அவர்கள் நின்றனர்.
அவனுடைய வீட்டைக்
கொளுத்த வந்தவர்கள்,
பெட்டிக் கடையில்
பாண் வாங்கவந்த இரண்டு கிழவிகள்,
கையில் கற்களுடன்
ஏராளமான சிறுவர்கள்
மற்றும்,
அன்று வேலைக்குப் போகாத
மனிதர்கள், பெண்கள்.
இவர்கள் அனைவரின் முன்னிலையில்
நிதானமாக
அவன் இறந்து போனான்.
அவன் செய்ததெல்லாம்
அதிகமாக ஒன்றுமில்லை;
அவனுடைய வீட்டிலும்
அதிகமாக ஒன்றுமிருந்ததில்லை.
ஆனால்,
தமிழர்களுடைய வீட்டைக் கொள்ளையிடுவதை
யார்தான் தடுக்க முடிகிறது?
அன்று காலையும் அதுதான் நடந்தது.
ஐம்பதுபேர்,
அவனுடைய வீட்டை உடைக்க வந்தனர்.
வனத் திணைக்கள அதிகாரியான
அவனுடைய அப்பாவின் துவக்கு
நீண்ட காலமாய்
முன்னறைப் பரணின் மேல் இருந்தது.
துவக்கை இயக்க அவனும் அறிவான்.
கொள்ளையடிக்க வந்த
சிங்களவர் மீது
துவக்கால் சுடுவதைப்
புத்தர்கூட அனுமதிக்க மாட்டார்
என்பதை
அரசு அறியும்;
அமைச்சர்கள் அறிவார்;
அவன் எப்படி அறிவான்?
ராணுவம், கடற்படை, விமானப்படை
என,
எல்லோருமாக முற்றுகையிட்டு
அவனுடைய வீடு எரிந்துவருகிற
புகையின் பின்னணியில்
அவனைக் கொல்வதற்கு முன்,
அவன் செய்ததெல்லாம்
அதிகம் ஒன்றுமில்லை.
இரண்டு குண்டுகள்,
ஒன்று ஆகாயத்திற்கு
அடுத்தது பூமிக்கு...
----------------------------------------------------------------------------
சொல்வதற்கு
ஒன்றுமில்லை.....
சொல்வதற்கு ஒன்றுமில்லை.
இறந்த உடல்களுக்கும்,
அகதி முகாம்களிலே
குழந்தைகளின்
இடையறாத அழுகுரல்களுக்கும்,
எரிந்த வீடுகளுக்கும்
இடையே
எதைத்தான் எழுத?
எமது நிலத்தின்
வடக்கு எல்லையில்
தூக்கணாங் குருவிக் கூடுகளின்
பச்சை நிறம் இன்னும் உலராத
பற்றைக் காடுகளுக்கு அப்பாலும்
கிழக்கே,
அடுத்த விதைப்பிற்கென
எஞ்சிய நெற்கட்டைகளை
வயலில் கொளுத்த
புகை கிளம்பி
முகில் மறைக்கும்
வயல்வெளிகளுக்கு அப்பாலும்
அவர்களின் போர்க்குரல் கேட்கிறது.
ராட்சத வாகனம்;
இரட்டைக் குழல் பொருத்தித்
தானியங்கும் துப்பாக்கி,
பச்சையுடுப்பணிந்த காலாட்படை.
கொலையுண்ட நம் மக்களைப்
புதைத்த குழிகளின் மேல்
புற்கள் மலரும் முன்பாக
எமது கரங்களில்
துப்பாக்கி எழுகிறது !
நிணம் புசித்தவர்களின் நிழல்கள்
நிலவொளி படர்ந்த இரவுகளில்
எமது நிலத்தை அசுத்தப் படுத்துவதை
எப்படி நாங்கள்
அனுமதிக்க முடியும்?
----------------------------------------------------------------------------
விமலதாசன் அண்ணா....
இந்தக் கடிதம்
உங்களுக்கு கிடைக்கும் என்ற
பேராசைத் தனமான கற்பனை எதுவும்
எனக்கு கிடையாது.
எனினும்,
இதனை எழுதாமல் விடவும்
முடியவே இல்லை.....
மனம்,
வண்ணத்துப் பூச்சியின்
செட்டையைப்போல
அடித்துக் கொள்கிறது.
உங்களை நான்
கடைசியாகச் சந்தித்தது
எப்போது என்று நினைவிருக்கிறதா?
அன்றைக்கு, உங்களிடம்
நீங்கள் வழக்கமாகத்
தோளில் மாட்டும் துணிப்பை
இருக்கவில்லை.
கதைக்க நிறைய விஷயங்கள் இருந்தும்
அவசரத்தில்,
ஒன்றுமே முடியவில்லை.
நான் மெலிந்துபோய் விட்டேன்
என்று சொன்னீர்கள்.
( எல்லோரும்தான் சொல்கிறார்கள்! )
ஆனால்,
யாரைப்பார்த்து
யார் சொல்வது?
இங்கே இப்போது
நிலைமை மோசம்.
நாங்கள் உயிர் வாழ்வதற்கான
நிகழ்தகவு
அச்சந்தரும் வகையில்
குறைந்து போய்விட்டது.
இரவுகளில்
அநேகமாக எல்லோரும்
பயங்கரமான கனவுகளைக்
காண்கிறார்கள்.
அவற்றில்-
ஹெலிக்கொப்டர்கள்
தலைகீழாகப் பறக்கின்றன....
கவச வாகனங்கள்
குழந்தைகளுக்கு மேலாகச்
செல்கின்றன....
நமது சிறுவர்கள்
கடதாசியில் துப்பாக்கி செய்து
விளையாடுகிறார்கள்.
சமயங்களில்,
நகரில் எல்லாக் கடைகளும்
பூட்டப்பட்டாலும்,
சவப்பெட்டிக் கடைக்காரன்
மட்டும்
நம்பிக்கையோடு
திறந்து வைத்திருகின்றான்.
உங்களுக்கு தெரியுமோ
என்னவோ,
நமது அருமை நண்பர்கள்
பலரை இழந்தோம்.
எப்படி என்றுநான்
எப்படிச் சொல்ல?
என்றாலும்,
'வெற்றிடங்களை இயற்கை விடுவதில்லை'
என்பது நீங்கள் அறிந்ததே.
இறுதி வரையில்
நாம் வழி தொடர்வோம்....
---------------------------------------------------------------------------
நாங்கள் எதை இழந்தோம்?
நாங்கள் எதை இழந்தோம்?
நம் இனிய நண்பனே....
நடுத்தெருவில் சுட்டெரித்து
நாய்கள் நிணம் புசிக்கச்
செம்மணியில் வீசுவதற்கா
திருமலையில் தொட்டிலிட்டு
உன்னை ஈழமகள்
பெற்றெடுத்தாள்?
காலனது காலடிகள்
காற்றதிர பதிவதற்கா
காலமகள் நீரெடுத்துக்
கோலமிட்டாள் மணற்பரப்பில்?
நெற்கதிரே,
நீள்விசும்பே,
நெஞ்சு இரங்காச் சூரியனே,
புல்லின் இதழ் நுனியில்
பூத்திருக்கும் பனித்துளியே
நீங்கள் அறிவீர்களா
எம் நெஞ்சுறையும் சோகத்தை?
எம் செந்நீரின் சரித்திரங்கள்
திசை எங்கும் சேதி சொல்ல
காற்றில் கலந்துவிட்ட
சாம்பல் துகள்களிலே
பயணம் தொடர்ந்த கதை
யார்தான் அறியவில்லை...?
எங்கள் இழந் தோழா!
அப்பாவி மக்களின்மேல்
மட்டுமே மறுபடியும்
துப்பாக்கி சுடத் தெரிந்த
'வீரமிலா நாய்' களது
வெறித்தனத்தில் உயிரிழந்தாய்...
நீள் தொலைவில்,
பைன் மரத்துக் காடுகளில்
பனி உறையும் குளிர் இரவில்
முன்னர் உனை நேசித்த
பெண்ணவளின் கண்கலங்கும்...
வாழ்க்கை அன்று தீர்த்து வைக்க
முடியாத ஒரு வழக்கை
மரணம் இன்று
முடித்து வைத்த
துயர்க்கதைக்குச் சாட்சியில்லை,
துயரங்களும் முடிவதில்லை...
உனை அவளும் இழந்தாள்.
நாங்கள் எதை இழந்தோம்?
உன் உயிரை, உனைப்போல
இன்னும் பல உயிரை.
ஆனால்,
நம்பிக்கைகளை
நாங்கள் இழக்கிலோம்.
நமது கடமையை
நாங்கள் இழக்கிலோம்
நமது நாட்டையும்
ஒருபோதும் நாம் இழக்கோம்!
அது போதும் உனக்கு.
காற்றாகி நில்;
கடலாகி அலை வீசு!
போரிடும் நம் தொழர்களின்
வேட்டொலிக்குப் புறங்காட்டித்
தோற்றோடும் ராணுவத்தின்
அவலக் குரல்களின்மேல்
உனதும்,உனைப் போன்ற
ஏராளம் மக்களதும்
நினைவுக்குச் சாசனத்தை
இந் நிலத்தில் நாம் பொறிப்போம்!
(நண்பன் கேதீஸ்வரன் நினைவுக்கு)
----------------------------------------------------------------------------
எல்லைப்புறத்துக் கிராமம்
அன்பான நகர்ப்புறத்துக் கொரில்லாவே !
என் வந்தனங்கள் உனக்கு
அடுத்த வெடிகுண்டுத் தாக்குதலுக்குத்
தயாராவதற்கு இடையில்
ரைஃபிளைத் துடைத்தல்,
வெடிமருந்தைச் சரிபார்த்தல்,
திருடர்களுக்கும், கொள்ளைக்காரருக்கும்
மரணதண்டனை வழங்க என
உனக்கு நூறு வேலைகள்
இருக்கும்தான்.
என்றாலும்,
தயவு செய் ;
மூன்று நிமிடம் நான்
சொல்வதைக் கேள் எனத்
தாழ்மையாய் வேண்டினேன் :
நமது நிலத்தின் எல்லைப்புறங்களில்
கொஞ்சக்காலம் திரிய நேர்ந்தது.
கிழக்கு மாகாணத்தில்,
அந்நியன் கணைக்கு எந்தநேரமும்
நொருங்கக் கூடிய
நீண்டதோர் எல்லை ; அனைவரும்
அறிவர் !
இருபது மைல்கள் காட்டினுள் நடக்கையில்
விட்டும் தொட்டும்
குளிர்ந்தும் கொதித்தும்
இடையிடை குறுக்கிடும்
அருவியில் குளித்து,
தரையிலே பூத்த தாமரைகளின்
வழி ஒதுங்கி,
சூரியனுக்கு நேர் கீழே இருக்கிறோம்
என்பதான பிரமையில்
நடந்தோம்.
வழியில்,
* 'புலி பாய்ந்த கல்' என்ற இடம்
( பெயர் உனக்குப் பிடிக்கிறது இல்லையா? )
அதற்கு வலப்புறமாய்
போகிறது ஆறு ;
அது போகட்டும் அப்புறமாய்
என்றபடி
நாங்கள் நடந்தோம் இப்புறமாக.
எல்லைப்புறத்துக் கிராமம்.
மாதுறு ஓயாவிற்கு இப்புறமாக
நமது நிலமும்
அப்புறமாக அவர்களின் நிலமும்
பச்சையாய் விரிந்தது.
ஆறு,
மணலென உறைந்துள்ள நாட்களில்
இப்புறமாக முயல்களை வேட்டையாட
அவர்கள் வருவராம்.
உரத்த குரலில் எருமையை விரட்டும்
அவர்கள் குரலும் இங்கே கேட்குமாம்.
ஒருபுறம் காடு ; யானைகள் திரியும்.
மறுபுறம் குன்றுகள் ;
இடையிலே நீர் நிலை.
தொலைவில் கூட்டமாய்,
அரசாங்கத்தால் அத்துமீறிக்
குடியேற்றப்பட்டோர் குடிசைகள் தெரியும்...!
கியூபாவில்தான் உள்ளனர் என்று
நீ சத்தியமாக நம்பியிருந்த
'உழவர்கள்'
இங்கும்கூட உள்ளனர் நண்பா !
நிலமும் நிலத்துடன் பிணைந்த மனிதனும்....
பத்திரிகைகளை இவர்கள் அறியார்,
பாடசாலையை இவர்கள் அறியார்.
ரீ.வி , வீடியோ, மின்சார வசதிகள்
இலத்திரன் கருவிகள் எதுவுமே அறியார்....
இலங்கை அரசின் வானொலி தருகிற
செய்தியை மட்டுமே கேட்டுப் பழகி
உன்னைக்கூட,
'பயங்கரவாதி' யாய்த்தான்
இவர்கள் அறிவார் !
எப்படி இது ?
காக்கி அணிந்த அரக்கர்கள் கையில்
வதைபடும் மக்களைக் காப்பதற்காக
துப்பாக்கி உயர்த்த யார் முன் வருகிறார் ?
எல்லைப் புறங்களில் மக்களைக் காப்பது
யாருடைய பணி ?
'சுத்திச் சுத்திச் சுப்பற்றை கொல்லைக்குள்'
எத்தனை நாள்தான்
குண்டு வெடிப்பும், கொரில்லாத் தாக்கும் ?
'சும்மா போ ! நீ முட்டாள் கவிஞனே !
கேள்விகள் கேட்க இதுவா நேரம்....'
என்று,
நின்று பதில்தரச் சிரமப்பட்டு
அடுத்த குண்டுத் தாக்குதலுக்கு
ஓடுவாயானால்,
அதற்கடுத்த வெடிகுண்டுத் தாக்குதலுக்கு
தயாராவதற் கிடையில்
மறுபடி இதனை நான் சொல்ல நேரும் !
மக்களைப் பிரிந்த துப்பாக்கிகளுக்கு
அவை
ஏ.கே. 47 ஆயினும் கூட
ஏது அர்த்தம் ?
* 'புலி பாய்ந்த கல்' என்னும் இடம் கிரானிலிருந்து வடமுனைக்குச் செல்லும்
வழியில் மாதுறுஓயாத் திட்டப் பகுதியிலுள்ளது.
----------------------------------------------------------------------------
ஒரு சிங்களத் தோழிக்கு
எழுதியது :
நெல் விதைப்பதற்குப் பதிலாகத்
துப்பாக்கி ரவைகளையே விதைக்கும்
எங்கோ ஒரு கண்காணாத தொலைவில்,
பாதி மாடிவீடுகளாகவும்
பாதி 'பயங்கரவாதி'களாகவும்
நிறைந்திருப்பதாகச் சொல்லக் கேட்ட
ஓர் இடத்தில் இருந்து வந்த
சாதாரண மனிதனான என்னைச்
சந்தித்த அதிர்ச்சியிலிருந்து
நீங்களும்
உங்கள் நண்பர் குழுவும்
விடுபட
நீண்டநாளாகாது.
மண் கலங்க ஓர் நிறமும்,
மண்ணோடு நீர் கலங்க
நீரில் நிழல் விரிக்கும் மேகங்களால்
ஓர் நிறமும்.
மின்னுவதற்கென்றே
நிலவின் திரை நூலிழையில்
போர்வையிட்ட
பாலாவி நீர்ப்பரப்பின்
படித்துறையில்,
அருகமர்ந்து
இனிய குரலில்
உங்கள் சிங்களப் பாடலைக்
கேட்கிறபோது
நான் மனம் கிளர்ந்தேன்.
முன்னர் ஒரு தரம்,
அப்போது நான் சிறுவன் ;
மாகோ ரயில் நிலையத்தில்
மட்டக்களப்பு ரயிலுக்காகக்
காத்திருக்கையில்,
அப்பாவோடு
தண்டவாளத்தில் கொஞ்சநேரம்
நீள நடந்தபோது,
நடு இரவு ;
மெல்லிய குரலில்
ஓர் தாலாட்டுப் பாடல்
காற்றில் அனுங்கிற்று.
குழந்தையின் அழுகுரல் இடை
அம் மெல்லிய குரலின் அதிர்வு
அவ்விரவு,
எனது மனதை நெகிழ்த்திற்று.
நான் துயருற்றேன்.
இன்றும்,
மெல்லிய துயர்
எனைச் சூழ்ந்தது.
ஆடியிலே தூங்கும்வரை
ஓயாத பெருங்காற்று ;
ஓயாத பெருங்காற்றில்
உதிர்கின்ற பொன்னொச்சிப்
பூக்களையும்,
நெடுந்தோகைமயில்
தனது நடையின் திசைமாற்றத்
தடுமாறும் கணங்களையும்
புன்சிரிப்போடு
பார்த்து ரசிக்கப்
புரியாத மொழி நம்மைத்
தொலைவிலா வைத்தது ?
உங்களுக்கு விருப்பம்
என்பதற்காக
என்னால் ஒரு மயிலிறகாவது
பறித்து தர முடியவில்லை......
முன்னிரவில்
புல் வழியில்
முழு நிலவில் நடந்து போக
நீங்கள் விரும்பிய போதும்
என்னால் துணைவர முடிந்ததில்லை.
மெல்லிய ஏமாற்றங்களை மறக்க
உங்கள் கண்களுக்கு முடியவில்லை.
உங்கள் மெல்லிய நேசத்தை மறக்க
எனக்கும் முடியவில்லை
இயற்கையின் கழுத்தை நெரிக்காமல்
பூக்களை மலரவிட்டுப்
புற்களைப் பூக்கவிட்டுப்
போய்விட்டோம்.
நீங்கள் தெற்காக;
நானோ வடக்காக
மலைத் தொடரின் மாபெரிய
மரங்களுக்கு மேலாகக்
குளிர்காற்று இறங்கிவரும்
இளங் காலைப் பொழுதில்,
பல் துலக்கும்போது
பயிலும் சிறுநடையில்,
மாந்தையில்
மூடுண்ட நகரை மீட்க முயலும்
ஆய்வு வேலையில்
கொஞ்சநாள் இணைந்ததை
நீங்கள் நினைப்பீர்கள்.
உங்களுடைய மக்களுக்குச்
சொல்லுங்கள் :
இங்கும் பூக்கள் மலர்கின்றன,
புற்கள் வாழ்கின்றன,
பறவைகள் பறக்கின்றன....!
----------------------------------------------------------------------------
யமன்
காற்று வீசவும்
அஞ்சும் ஓர் இரவில்
நட்சத்திரங்களுக்கிடையே இருக்கிற
அமைதியின் அர்த்தம் என்ன
என்று
நான் திகைத்த ஓர் கணம்,
கதவருகே யாருடைய நிழல் அது ?
நான் அறியேன் ;
அவர்களும் அறியார்.
உணர்வதன் முன்பு
அதுவும் நிகழ்ந்தது....
மரணம்.
காரணம் அற்றது,
நியாயம் அற்றது,
கோட்பாடுகளும் விழுமியங்களும்
அவ்வவ்விடத்தே உறைந்து போக
முடிவிலா அமைதி.
மூடப்பட்ட கதவு முகப்பில்,
இருளில்,
திசை தெரியாது
மோதி மோதிச் செட்டையடிக்கிற
புறாக்களை,
தாங்கும் வலுவை என்
இதயம் இழந்தது.
இளைய வயதில்
உலகை வெறுத்தா
நிறங்களை உதிர்த்தன,
வண்ணத்துப் பூச்சிகள் ?
புழுதி படாது
பொன் இதழ் விரிந்த
சூரிய காந்தியாய்,
நீர் தொடச்
சூரிய இதழ்கள் விரியும்
தாமரைக் கதிராய்,
நட்சத்திரங்களாய்
மறுபடி அவைகள் பிறக்கும்.
அதுவரை,
பொய்கைக் கரையில்
அலைகளைப் பார்த்திரு !
கண் விழித்திருப்போம்
நண்பர்களே !
சோகம் படர்ந்த
தேசப் படமும்,
இதுவரைகாலம்
சிந்திய இரத்தமும்,
இதுவரைகால
இழப்பும்,
நெருப்பும்,
எரியும் மனமும்
இன்னொருவனுக்கு அடிமையாகவா ?
இரவல் படையில்
புரட்சி எதற்கு?
எங்கள் நிலத்தில்
எங்கள் பலத்தில்
எங்கள் கால்களில்
தங்கி நில்லுங்கள்.
வெல்வோமாயின் வாழ்வோம் ;
வீழ்வோமாயினும் வாழ்வோம் !
நமது பரம்பரை
போர் புரியட்டும்.
----------------------------------------------------------------------------
புனிதவளன் கத். அச்சகம், யாழ்ப்பாணம்.
----------------------------------------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக