சுதந்திரம் பிறந்த கதை
கவிதைகள்
Back
சுதந்திரம் பிறந்த கதை
குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா
சுதந்திரம் பிறந்த
கதை
குழந்தைக் கவிஞர்
அழ. வள்ளியப்பா
விற்பனை உரிமை :
பாரி நிலையம்
59, பிராட்வே , சென்னை - 1
* * *
நாடு விடுதலை பெற்றதன்பின்
நம்தமிழ் நாட்டில் பிறந்தவரே,
ஏடு பயிலும் சிறுவர்களே
இனிய நல் வாழ்வினைப் பெற்றிடுவீர்.
சுதந்திரம்
பிறந்த கதை
சின்னஞ் சிறுவர் சிறுமியரே
தேசத்தின் உயரிய செல்வங்களே
இன்றுநான் ஓர்கதை கூறுகின்றேன்- அதை
எல்லோரும் கூடிக் கேட்டிடுவீர்
கள்ளிக் கோட்டை எனும் ஊர்ப்பெயரை-நீங்கள்
காதாலே நிச்சயம் கேட்டிருப்பீர்.
வெள்ளைக் காரர்அந்த ஊரினிலே-வந்து
வியாபாரம் செய்திடக் காலைவைத்தார்.
பாய்மரக் கப்பலில் ஏறிவந்தார்-அவர்
பல்லா யிரம்மைல் தாண்டிவந்தார்.
ஆயிரம் ஆயிரம் குதிரைகளை- இங்கே
அதிகப் பணத்திற்கு விற்றுவந்தார்.
குதிரைகள் விற்பதும், வாசனைப் பொருள்களைக்
கொள்முதல் செய்வதும் அவர்தொழிலாம்.
அதிகமாய்த் தொழிலும் நடந்திடவே-பல
அந்நிய ரும் இங்கே வந்தனராம்.
அப்படி இந்தியா வந்தவரே-இந்த
ஆங்கி லேயர்எனும் வெள்ளையராம்.
கப்பலில் ஏறியே வந்தவரும்-ஒரு
கம்பெனி தன்னை அமைத்தனராம்.
செல்வம் திரட்டினர் கம்பெனியார்-பின்னர்
சென்னை நகரையும் வாங்கினராம்.
மெல்ல மெல்ல இந்த நாட்டினிலே-அவர்
மிக்க பலத்தினைப் பெற்றனராம்.
இமய மலைமுதல் குமரி முனைவரை
எல்லா வளமும் நிரம்பியதாய்
நமது நன்னாடும் இருந்ததனால் -அவர்
நாட்டின்மேல் ஆசையும் கொண்டனராம்.
அந்தச் சமயத்தில் இந்திய தேசத்தை
அரசர்கள் பற்பலர் ஆண்டுவந்தார்.
அந்த அரசர்கள் தங்களுக் குள்ளேயே
ஆயிரம் சண்டைகள் போட்டுவந்தார
அரசர் இரண்டுபேர் சண்டையிட்டால்-உடன்
ஆனந்தங் கொள்ளுவர் ஆங்கிலேயர்.
ஒருவர்மேல் ஒருவரை ஏவிவிட்டே-நாட்டில்
ஒற்றுமை தன்னைக் குலைத்துவந்தார்.
ஒற்றுமை தன்னைக் குலைப்பதுவும்-பகை
ஓங்கிடச் சூழ்ச்சிகள் செய்வதுவும்
மற்றவர் சொத்தை விழுங்குவதும்-தினம்
வழக்கமாய்ப் போனது வெள்ளையர்க்கே.
தராசு பிடித்திட வந்தவர்கள்-கையில்
சண்டைத் துப்பாக்கி பிடித்தனராம்!
இராஜ்ஜிய மெல்லாம் கவர்ந்தனராம்-இந்த
நாட்டை அடிமைப் படுத்தினராம்!
***
சுதந்தி ரத்தை இழந்த மக்கள்
துன்பம் பெரிதும் அடைந்தனர்.
தொழில்கள் யாவும் நசித்த தாலே
சோறும் இன்றி வாடினர்.
அதர்ம மாக வரிகள் பலவும்
அந்நி யர்கள் போட்டனர்.
அரசர் கூடக் கப்பம் கட்டி
அடங்கி ஒடுங்கி வாழ்ந்தனர்.
“அடிமை யாக வைத்து நம்மை
அந்நி யர்கள் ஆள்வதோ?
அரட்டி உருட்டி வரிகள் கேட்க
அமைதி யின்றி வாழ்வதோ ?
உடனே இந்தக் கொடுமை தன்னை
உறுதி யோடு நானுமே
உயிர்இ ருக்கும் வரைஎ திர்ப்பேன்.
ஒருவ ருக்கும் அஞ்சிடேன்”
என்றுகூறிச் சிங்கம் போலே
எதிர்த்த கட்ட பொம்மனை
அன்று நமது மன்னன் ஒருவன்
ஐயோ, காட்டிக் கொடுத்தனன் !
கண்ணைப் போலச் சுதந்தி ரத்தைக்
கருதும் கட்ட பொம்மனின்
கழுத்தில் கயிறு மாட்டிக் கொன்ற
கதையைக் கேட்பின் உருகுவீர்!
அதற்குப் பின்னர் ஐம்ப தாண்டு
ஆன பிறகு நாட்டினில்
ஆங்கி லேயர் தமைஎ திர்க்க
அனைவரும்கி ளம்பினர்.
இதற்குப் பெயரே சுதந்தி ரப்போர்
என்று கூறி வருகிறோம்.
இது கடந்து நூறு வருடம்
[1]இன்று முடிவு பெற்றதாம்.
இந்தப் போரின் கார ணங்கள்
யாவை என்று நானுமே
எடுத்துக் கூற விரும்பு கின்றேன்.
இருந்து கொஞ்சம் கேளுங்கள் !
“இந்தி யாவில் நூறு வருடம்
எங்கள் ஆட்சி நிலைத்ததே!”
என்று வெள்ளைக் காரர் உலகில்
அன்று காட்ட விரும்பினர்.
சிறந்த முறையில் விழா நடத்தத்
திட்டம் போட்டு வந்தனர்.
தேச மக்கள் இதைய றிந்து
சீற்றம் கொள்ள லாயினர்.
பிறந்த நாட்டில் மக்கள் வாடப்
பெருமை கொள்ளும் இவர்களைத்
துரத்தி அடிக்க வேண்டு மென்று
துணிந்து முடிவு கட்டினர்.
மகன் இல்லாமல் அரசர் யாரும்
மடிய நேர்ந்தால் அவரது
வார்சு நாங்கள்' என்றுகூறி
வம்பு செய்தார் வெள்ளையர்.
சுகம் இழந்து, சொத்தி ழந்து
சுதந்திரத்தை இழந்ததால்,
துடிதுடித்து மன்னர் சிலரும்
துணிச்சலாய்எ திர்த்தனர்.
ஆங்கி லேயர் படையில் சேர்ந்தே
அதிக மான இந்தியர்,
ஆள்வ தற்கே உதவி செய்தார்,
அந்தோ, வயிறு வளர்க்கவே!
ஏங்கி நிற்கும் மக்கள் நிலையை
எடுத்துக் காட்டி அவரிடம்
எதிர்த்துப் புரட்சி செய்ய வேண்டும்
என்று சிலரும் தூண்டினர்.
இந்து முஸ்லிம் மக்கள் தம்மை
இழிவு படுத்தி வந்தனர்.
'இன்ப மெல்லாம் உதவு வோர்க்கே'
என்றும் ஆசை காட்டினர்.
இந்தக் கொடுமை கண்டு மக்கள்
இதயம் கொதிக்க லாயினர்.
இவைக ளாலே சுதந்தி ரப்போர்
எரிம லைபோல் எழுந்ததே!
ஆணைப் போல உடை தரித்தே
அரசி ஒருத்தி வந்தனள்.
அச்சம் இன்றிக் குதிரை ஏறி
அமர்ந்து யுத்தம் செய்தனள்.
ஜான்ஸி ராணி அவளே. வீரச்
சண்டை போட்டும், ஐயகோ!
சமயம் பார்த்து முதுகில் ஒருவன்
தாக்கிக் கொன்று விட்டனன்!
ஜான்ஸி ராணி போலப் பலரும்
சண்டை யில்ம டிந்தனர்.
தாயைப் போன்ற நாட்டைக் காக்கச்
சகல மும்து றந்தனர்.
ஆண்மை யோடு போர் புரிந்தும்
அரிய புதிய கருவிகள்,
அவர்க ளேப்போல் நமக்கும் இல்லை.
ஆத லாலே வென்றனர்!
பெற்றபொன் னாட்டினிலே-வந்து
மற்றவர் ஆளுவது
முற்றும் அநீதியன்றோ ?-நாட்டை
மீட்க வேண்டுமன்றோ?
அறிஞர்கள் கூடினரே-கூடி
அமைத்தனர் காங்கிரசை,
உரிமைகள் கேட்டனரே-சுதந்திர
உணர்ச்சி ஊட்டினரே.
காங்கிரஸ் மாசபையும்-தோன்றக்
காரண மாயிருந்தார்
ஆங்கில நாட்டினிலே! -பிறந்த
அறிஞர் ஹ்யூம்என்பார்.
உயரிய கொள்கையுடன்-பலரும்
உழைத்தனர் காங்கிரசில்.
‘சுயராஜ்யம்’ என்றசொல்லை--முதலில்
சொன்னவர் நெளரோஜி !
‘இன்ப சுதந்திரமாம்-அது
எங்கள் பிறப்புரிமை!’
என்றார் திலகருமே-தட்டி
எழுப்பினர் மக்களையே.
“நாடு நமக்குச் சொந்தம்-இதில்
நம்மவர் யாவரையும்
ஆடுகள் மாடுகள்போல்-இவர்கள்
அடக்கி ஆளுவதோ ?
அந்நியர் இங்குவந்தே-நம்மை
அந்நியர் போல்நடத்த
வெந்ததே உள்ளமெல்லாம்-உடனே
வீறிட்டு நாம்எழுவோம்.”
என்றார் சிதம்பரனார்-கேட்டு
எழுந்தார் இளைஞரெல்லாம்.
கண்களைப் போன்றதுவாம்-விடுதலை
காணத் துடித்தனராம்.
வங்காளி பங்கிம்சந்த்ரர்-சொன்ன
‘வந்தே மாதரமே’
எங்கும் ஒலித்ததுவாம்-கேட்டே
எதிரிகள் சீறினராம்.
பாட்டுக்கள் பாடியுமே-நமது
பாரதி மக்களுக்கே
ஊட்டினர் தேசபக்தி-வீர
உணர்ச்சியும் பொங்கியதாம்.
சுதந்திர நல்லுணர்வை-நாட்டில்
தூண்டிய தலைவர்களை
விதவிதக் கொடுமைகளால்-அந்தோ!
வெள்ளையர் வாட்டினரே.
அருமைத் தலைவர்களை-தினம்
அடித்து நொறுக்கிவந்தார்.
சிறையில் அடைத்துவைத்தார்-அங்கே
சித்ரவதைகள் செய்தார்.
சொந்தமாம் நாட்டினுக்கே-வீர
சுதந்திரம் கேட்டவரை
அந்நிய தேசத்திலே -கொண்டுபோய்
அடைத்து வைத்தனரே
மக்களைச் சுட்டனரே-பலர்
மாளவும் செய்தனரே.
அக்கிர மங்கள்செய்தே-மேலும்
ஆட்சி நடத்தினரே !
முப்பது கோடியாம் இந்தியரும்
முனைந்து விடுதலைப் போரிடவே,
அப்போது காந்தி புதியதொரு
ஆயுதம் கண்டு பிடித்தனராம்.
சத்தியம், சாந்தம் கலந்துசெய்த
சத்தியாக் கிரகமே ஆயுதமாம்.
ஒத்துழையாமை இயக்கமுமே
உறுதியாய்க் காந்தி தொடங்கினராம்.
வெள்ளையர் தந்த பட்டமெலாம்
வேண்டா மெனச்சிலர் விட்டனராம்.
பள்ளிக்கு மாணவர் செல்வதில்லை.
பாதிப் படிப்போடே நின்றனராம்.
துன்பம் கொடுத்திடும் சட்டமெலாம்
துணிவாய் மீறி நடந்தனராம்.
அந்நியத் துணியைக் கொளுத்தினராம்.
அடக்கு முறையை எதிர்த்தனராம்.
சிறையிலே வாடினோர் எத்தனைபேர் !
செல்வம் இழந்தவர் எத்தனைபேர்!
அருமை உயிரையும் தேசத்துக்கே
அர்ப்பணம் செய்தவர் எத்தனைபேர்
அந்நியர் ஆட்சிநம் தேசத்திலே
அடியோ டொழிந்திட வேண்டுமென்றே
எண்ணினர் மக்கள் அனைவருமே,
எதிர்த்துப் புரட்சிகள் செய்தனரே.
***
ஆகஸ்ட்டுப் புரட்சி எழுந்ததுவே!
அனைவரும் அதனில் குதித்தனரே!
வேகமாய்க் கூறினர் காந்திமகான்,
‘வெள்ளைய னே,வெளி யேறு!’ என்றே.
‘வெள்ளைய னே,வெளி யேறு!’ என்றே
வீதிகள் எங்கும் முழங்கிடவே
பிள்ளை களும்அதில் சேர்ந்தனரே.
பீதி அடைந்தனர் ஆட்சியினர்.
சமரசம் பேசினர் வெள்ளையர்கள்.
தலைவர்கள் யாவரும் ஒர்முகமாய்,
“எமக்குச் சுதந்திரம் வேண்டுமன்றி
எதையும் விரும்பிடோம்” என்றனரே.
‘இன்னும் அடக்கிநாம் ஆளுவதோ
இயலாத காரியம்’ என்பதனை
நன்ரறாய் உணர்ந்தனர் வெள்ளையர்கள்
“நாங்களே போகிறோம்” என்றனரே!
‘இருநூறு ஆண்டுகள் ஆண்டுவிட்டோம்.
இனியும் முடியாது’ என உணர்ந்தே
அருமைத் தலைவர்கள் கைகளிலே
ஆட்சிப் பொறுப்பினை ஒப்படைத்தார்.
மக்களுள் மாணிக்கம் நேருஜியும்
மதிநுட்பம் மிக்கநம் ராஜாஜியும்
பக்க பலமாக ராஜன்பாபு
பட்டே லுடன்பொறுப் பேற்றனராம்.
‘அன்னை விலங்கு முறிந்ததே !
அடிமை வாழ்வும் அகன்றதே!’
என்றே எண்ணி நாமுமே
இன்று பெருமை அடைகிறோம்.
சாந்தப் போரின் சக்தியை,
தருமப் போரின் வெற்றியை
காந்தி சொன்ன வழியிலே
கண்டோம் நமது நாளிலே!
மக்க ளுக்கு மக்களால்
மக்கள் ஆளும் நாட்டிலே
தக்க முறையில் வாழுவோம்;
தலை நிமிர்ந்து செல்லுவோம்.
ஆட்டம் ஆடி மகிழுவோம்;
பாட்டுப் பாடிப் புகழுவோம்;
கூட்டம் கூட்ட மாகவே
கொடி வணக்கம் செய்குவோம்!
தேச நலனை எண்ணி, எண்ணிச்
சிறையிலே உழன்றவர்.
திரணமாக எண்ணி உயிரைத்
தியாகம் செய்து சென்றவர்,
பாசங் கொண்டு நாட்டுக் காகப்
பாடு பலவும் பட்டவர்
பலரை யும்ம னத்தில் வைத்துப்
பக்தி யோடு போற்றுவோம்.
***
சுதந்தி ரத்தை வாங்கித் தந்த
தலைவர் வாழ்க, வாழ்கவே!
துணைவராக நின்று ழைத்த
தொண்டர் வாழ்க, வாழ்கவே!
விதம்விதமாய்த் துன்ப முற்ற
வீரர் வாழ்க, வாழ்கவே!
விடுதலேயைப் பெற்ற நாமும்
இனிது வாழ்க. வாழ்கவே!
இப்பாடல் விடுதலைப் போராட்ட நூற்றாண்டு விழாவில் ‘கல்கி’ இதழில் வெளிவந்தது.
* * *
↑ 15–8–1957
கருத்துகள்
கருத்துரையிடுக