ஓலைக் கிளி
சிறுகதைகள்
Back
ஓலைக் கிளி
கவிஞர் பெரியசாமித்தூரன்
பகுதி : சிறுகதைகள் ஆசிரியரர் : பெ. துரான் சித்திரம் : சித்திரலேகா வெளியிட்டோர் : பழனியப்பா பிரதர்ஸ் அச்சிட்டோர் : ஏஷியன் பிரிண்டர்ஸ், சென்னை-14 விலை : ரூ. 3-50 முதற்பதிப்பு : 1-1-1961 ஐந்தாம் பதிப்பு , மே, 1985
ஓலைக்கிளி
கூடை, முறம் கட்டுகின்றவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? மூங்கிலை நீள நீளமான தப்பைகளாகவும் ஈர்க்குகளாகவும் கிழித்து அவற்றைக்கொண்டு கூடை பின்னுவது ஆச்சரியமாக இருக்கும். அப்படிச் செய்கின்ற பல பேர்கள் சேர்ந்த ஒரு கூட்டம் இருந்தது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோரும் அதிலே இருந்தார்கள். அவர்கள் ஊர் ஊராகச் சென்று, ஒவ்வோர் ஊரிலும் சில நாள்கள் தங்குவார்கள். தங்கி அங்கே தங்கள் தொழிலைச் செய்வார்கள். அவர்களுக்கு வீடு ஒன்றும் கிடையாது. போய்த் தங்குகிற இடத்தில் கூடாரங்கூடப் போட்டுக்கொள்ள மாட்டார்கள். வீடும் கூடாரமும் அவர்களுக்கு வேண்டியதில்லை. நல்ல நிழல் கொடுக்கும்படியான ஒரு பெரிய மரம் இருந்தால் போதும். அதனடியில் தங்கித் தங்கள் தொழிலைச் செய்து வயிறு வளர்ப்பார்கள். மூங்கிலில் வேலை செய்வதும் சோறு சமைத்துச் சாப்பிடுவதும் மரத்தடியிலேதான். அவர்கள் நீளமான மூங்கில்களை ஒரு கற்றையாகக் கட்டிக்கொண்டு வந்திருப்பார்கள். அந்த மூங்கில்
களும் அவற்றை லேசான தப்பைகளாகவும், ஈர்க்குகளாகவும் கிழிப்பதற்கு உபயோகமாகும் கத்திகளுந்தாம் அவர்களுடைய சொத்து. சமையல் செய்வதற்குச் சட்டிபானைகள் சிலவும் வைத்திருப்பார்கள். ஊராருக்குத் தேவையான கூடை, முறம், தட்டம் முதலான சாமான்களைச் செய்து கொடுத்துக் காசும் தானியமும் சம்பாதிப்பார்கள்.
இப்படிப்பட்ட அந்தக் கூட்டத்திலே ஒரு கிழவியும் ஒரு சிறு பையனும் இருந்தார்கள். கிழவி பையனுக்குப் பாட்டி. அவன் குழந்தையாக இருந்தபோதே அவனுடைய அப்பாவும் அம்மாவும் இறந்துபோனார்கள். பாட்டிக் கிழவிதான் அவனைக் காப்பாற்றி வளர்த்து வந்தாள். ஆனால்,
வயதாக ஆகக் கிழவியால் மூங்கிலைத் தப்பையாகக் கிழித்துக் கூடை முறம் கட்ட முடியவில்லை. அவள் கைகள் தளர்ந்து போய்விட்டன. ஓர் ஊரிலிருந்து வேறோர் ஊருக்குப் போவதே அவளுக்குக் கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் அந்தக் கூடைமுறம் கட்டும் உறவினர்களை விட்டுப் பிரிய முடியுமா ? பிரிந்தால் அவளுக்கு வேறு துணை யாரும் இல்லை. அதனால் எப்படியோ கஷ்டப்பட்டு அவர்களுடன் செல்லுவாள். அந்தச் சிறு பையனையும் அவளே தூக்கிக்கொண்டு போவாள். சில சமயங்களிலே அவ்விடத்திலே இரக்கங்கொண்டு சில பேர் அந்தப் பையனைத் துரக்கிக்கொண்டு வர உதவி செய்வார்கள். கிழவியால் ஊருக்குள்ளே தினமும் சுற்றிக் கூடை முறங்களை விற்கவும் முடியாது. சிறுவனாலும் நடக்க முடியாது. ஆதலால், அவர்கள் இரண்டு பேரும் மரத்தின் அடியிலேயே இருப்பார்கள். மற்றவர் அனைவரும் ஊருக்குள்ளே போய்த் தாங்கள் செய்த கூடை முறங்களை விற்பார்கள்.
கிழவியால் கூடை முறம் செய்ய முடியாவிட்டாலும்
பனையோலையைக்கொண்டு அழகான விளையாட்டுப் பொம்மைகள் செய்வதிலே அவள் கெட்டிக்காரி. ஓலையைப் பலவகையாகக் கிழித்தும், நறுக்கியும் அவள் பொம்மைகள் செய்வாள். கிலுகிலுப்பை உங்களுக்குத் தெரியுமா ? அதற் குள்ளே சிறிய கற்களைப் போட்டிருப்பார்கள். கிலுகிலுப்பையை ஆட்டினால் கிலுகிலு என்று சத்தம் உண்டாகும். அதைப் போல அவள் வேறு விளையாட்டுச் சாமான்களும் செய்வாள். சிறுவன் அவளுக்குப் பக்கத்திலே உட்கார்ந்து அவள் செய்வதையெல்லாம் ஆவலோடு பார்த்துக் கொண்டிருப்பான். அவன் பெயர் தங்கவேல். கிழவி அவனைச் செல்லமாகத் தங்கம் என்று கூப்பிடுவாள்.
ஒரு சமயம் இந்தக் கூடைமுறம் செய்கிறவர்கள் கூட்டம் ஒரு சிறு கிராமத்திலே வந்து தங்கியது. அந்த ஊரிலே பணக்காரர்கள் நிறைய உண்டு. குழந்தைகள் புதிய புதிய விளையாட்டுப் பொம்மைகள் வேண்டும் என்று கேட்டார்கள். கிலு கிலுப்பை அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால் அந்தக் கிழவி புதிதாகக் கற்பனை பண்ணி ஓலையாலே பின்னி ஓர் அழகிய கிளி செய்தாள். பச்சிலைகளையெல்லாம் பிடுங்கி வந்து அதற்கு அழகாகப் பச்சைச் சாயம் கொடுத்தாள். செம்மண்ணைக் கரைத்துக் கிளியின் முக்குக்கு அழகான சிவப்பு நிறம் கொடுத்தாள், அக்தப் பொம்மைக்கிளி பார்ப்பதற்கு உயிருள்ள கிளியைப் போலவே இருந்தது.
அந்த ஊர்க் குழந்தைகளெல்லாம் அதன்மேல் ஆசை கொண்டார்கள். ஒவ்வொரு குழந்தையும் தனக்கே அது வேண்டும் என்று போட்டி போட்டது. அதனால், கிழவி அதைப் போலவே இன்னும் பல கிளிகள் செய்தாள். அவளுக்குப் பணம் நிறையக் கிடைத்தது. "தங்கம், இந்தப் பணத்தையெல்லாம் வைத்து உனக்கு நல்ல சொக்காய் வாங்கிக் கொடுக்கிறேன்" என்று சிறுவனிடம் கிழவி ஆசையோடு சொன்னாள்.
புதிய சொக்காய் போட்டுக்கொள்ளத் தங்கவேலுவுக்கு ஆசைதான். இருந்தாலும் பாட்டியின் பேச்சைக் கேட்டு அவன் மகிழ்ச்சி அடையவில்லை. அவன் முகம் வாடத் தொடங்கியது ஏனென்றால், அவனுக்குப் பாட்டி செய்யும் கிளிகளிடம் அத்தனை ஆசை. அவற்றை அந்த ஊர்ச் சிறுவர்களும் சிறுமிகளும் வாங்கிக்கொண்டு ஓடுவதைப் பார்த்து அவன் மனம் வருந்தினான். அவையெல்லாம் தனக்கே வேண்டும் என்று ஆசைப்பட்டான்.
"பாட்டீ, இந்தக் கிளிகளை விற்கவேண்டாம்" என்று அவன் கண்ணீர் பெருக்கிக்கொண்டு கிழவியிடம் சொன்னான். அவளிடம் கெஞ்சினான்.
"தங்கம், இந்தக் கிளிகளெல்லாம் நமக்கு எதற்கு? காசிருந்தால் என்ன வேணுமானாலும் வாங்கலாம். பொம்மை சோறு போடுமா?" என்று கிழவி ஆறுதல் சொன்னாள். இருந்தாலும் சிறுவனுக்குச் சமாதானம் ஏற்படவில்லை
இவ்வாறு கிழவி கூறிய மறுநாள் காலையில் ஒரு சிறு பெண் கிழவியிடம் வந்து தனக்கு ரொம்பப் பெரிய கிளியாக வேண்டும் என்று கேட்டாள். இதுவரையிலும் யாருக்கும் செய்து கொடுக்காத அளவில் மிகப்பெரியதாகத் தனக்குக் கிளியொன்று வேண்டும் என்று அவள் சொன்னாள். அவள் தகப்பனார்தான் அந்த ஊரிலே எல்லோரையும்விடப் பெரிய பணக்காரர். அவர்களுடைய பெரிய மச்சு வீடு அந்தக் கூடை முறம் கட்டுவோர் தங்கியிருந்த இடத்திற்கு எதிராகவே இருந்தது. அதனால் அந்தப் பெண் கேட்டதும்
தோட்டம் இருந்தது. அதிலே நீரூற்றுகள் சிலுசிலு வென்று ஓடிக்கொண்டிருந்தன: குயில்கள் பாடின; மயில்கள் ஆடின. பச்சைக்கிளிகள் கொஞ்சிப் கொஞ்சிப் பேசின.
இவற்றையெல்லாம் பார்த்துவிட்டு மகிழ்ச்சியோடு தங்கவேல் மறுபடியும் மாளிகைக்குள் நுழைந்தான். இன்பலோகத்தில் இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. அப்படியே ஒரு பட்டு மெத்தை விரித்த கட்டிலிலே அமர்ந்து தலையணையில் சாய்ந்தான். சுகமாகத் தூக்கம் வந்தது. அவன் அப்படியே தூங்கிப்போய்விட்டான்.
தங்கவேல் மறுபடியும் கண்ணை விழிக்கும்போது பழையபடி மரத்தின் அடியிலே ஓலைத் தடுக்கின்மேல் படுத்திருந்தான். கொஞ்ச நேரத்திற்கு முன் அவன் மேலிருந்த பட்டாடைகளையெல்லாம் இப்பொழுது காணோம். கிழிந்து போன பொம்மைக்கிளி பக்கத்தில் இருந்தது, பாட்டி கொஞ்ச தூரத்தில் வெறுந்தரையில் படுத்திருந்தாள். தங்கவேலுக்கு முதலில் கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது. ஆனால் பக்கத்திலே பிய்ந்துபோன அந்தக் கிளிப் பொம்மையைப் பார்த்ததும் மனத்துக்குத் தைரியம் வந்தது.
அந்தப் பொம்மை இருக்கும் வரையில் மறுபடியும் அந்த மாளிகைக்குப் போகலாம் என்ற நம்பிக்கை உண்டாயிற்று. தங்கவேலின் நம்பிக்கை வீண்போகவில்லை. ஒவ்வொரு நாளும் அவன் தூங்கும்போது அந்தக் கிளிப்பொம்மை அவனை எங்கெல்லாமோ அதிசயமான இடங்களுக்குக் கொண்டுபோவதாக அவன் கனவு கண்டான்.
அது முதல் பாட்டி புதிய புதிய கிளிப்பொம்மைகள் செய்து விற்கும்போது அவன் முன் போலக் கவலைப்படவில்லை. சந்தோஷமாகவே ஊரிலுள்ள குழந்தைகளுக்கு அவனே அந்தப் பொம்மைகளை எடுத்துக் கொடுப்பான்.
“இந்தக் கிளி மேலே ஏறிக்கொண்டு என்னோடு வருகிறாயா? அழகான முத்து மாளிகைக்குப் போகலாம். அங்கே விளையாடலாம்” என்று அவன் சொல்லிக்கொண்டே கிளிப்பொம்மையைக் குழந்தைகளுக்குக் கொடுப்பான்.
ஆனால், அவன் சொல்வது மற்ற குழந்தைகளுக்கு விளங்காது. ஏனென்றால், அவர்களுக்குத் தங்கவேலின் கனவுகளைப் பற்றி ஒன்றுமே தெரியாது. அவன் சொல்லுகின்ற மாளிகையைப்பற்றியும் தெரியாது. அதனால் அவர்கள் பதில் சொல்லாமல் விழித்துக்கொண்டிருப்பார்கள். பிறகு தங்கள் வீட்டுக்குப் போய்விடுவார்கள்.
ஒவ்வொரு குழந்தையும் கிளிப்பொம்மை வாங்கும் போது தங்கவேல் சந்தோஷமடைய ஆரம்பித்தான். தன்டைய ஓலைக்கிளி பிய்ந்து போனதாக இருந்தாலும் அதுதான் மற்ற ஓலைக்கிளிகளைவிட உயர்ந்தது என்று அவன் நிச்சயமாக நம்பினான். அதுதானே அவனைத் தன் முதுகில் தூக்கிக்கொண்டு எங்கெங்கோ பறந்து செல்கிறது ? கிழவிக்கு இப்பொழுது அவனிடத்திலே கொஞ்சங் கூடக் கோபம் கிடையாது. “தங்கம் நல்ல பையனாகிவிட்டான்; அவன் விளையாட்டுப் பையனாக இல்லை. இனிமேல் அவன் தொழில் செய்து பிழைத்துக்கொள்வான்” என்று அவள் மனத்திற்குள்ளேயே மகிழ்ச்சியடைந்தாள்.
இவ்வாறு தங்கவேலும் அவனுடைய பாட்டிக் கிழவியும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள்.
நீலத்தாமரை
முன்னொரு காலத்தில் நெல்லி வளநாடு என்று ஒரு தேசம் இருந்தது. அந்தத் தேசத்து அரசனுடைய அரண்மனைப் பூந்தோட்டத்திலே ஒரு விசித்திரமான தாமரைக் குளம் உண்டு. அதிலே நாள்தோறும் ஒரே ஒரு தாமரை மலர்மட்டும் பூக்கும். அந்தப் பூவும் நீல நிறமாக இருக்கும். காலையில் சூரியன் தோன்றுகிற சமயத்தில் போய்ப் பார்த்தால் அந்தத் தாமரை மலர் நீல நிறத்தோடு அழகாக இதழ்களையெல்லாம் விரித்துக்கொண்டு தண்ணீருக்கு மேலே நிற்கும். வேறு தாமரையே கண்ணில் படாது. அந்த நாட்டு ராணி அந்த நீலத் தாமரையைப் பறித்துக்கொள்ளுவாள்.
இப்படி இருக்கும்போது ஒரு நாள் திடீரென்று காலையில் பார்த்தால் அந்தக் குளத்தில் அன்று மலரவேண்டிய நீலத் தாமரைப் பூவைக் காணவில்லை. யாரோ ரகசியமாக வந்து அதைப் பறித்துக்கொண்டு போய்விட்டார்கள்.
மறுநாள் பார்த்தால் அன்றும் தாமரைப்பூவைக் காணமுடியவில்லை. இப்படியே பல நாள்கள் நீலத் தாமரைப்பூத் திருட்டுப் போய்க்கொண்டிருந்தது.
அதனால் ராணிக்கு மிகுந்த கோபம் வந்துவிட்டது. திருடனை உடனே கண்டுபிடிக்க வேண்டும் என்று அரசனிடத்திலே சொன்னாள். ராணி சொன்னால் அரசன் எந்தக்காரியத்தையும் உடனே செய்வான். அப்படியிருக்கும் போது திருடனைக் கண்டுபிடிக்க ஏற்பாடு செய்யாமலா இருப்பான்? உடனே அதற்கு வேண்டிய முயற்சிகளையெல்லாம் எடுக்கலானான்.
அந்தத் தாமரைக்குளம் அரண்மனைப் பூந்தோட்டத்தில் இருக்கிறதல்லவா? அந்தப் பூந்தோட்டத்தைச் சுற்றிலும் அரசன் காவல் வைத்தான். இரவு பகல் எந்த நேரத்திலும் அந்தத் தோட்டத்தின் நான்கு பக்கங்களிலும் போர் வீரர்கள் உருவிய கத்தியுடனே ஜாக்கிரதையாக நின்று கொண்டிருந்தார்கள்.
அப்படியிருந்தும் தாமரை மலர் களவு போய்க் கொண்டேயிருந்தது. அந்த வீரர்களால் திருடனைத் தடை செய்யவோ, கண்டுபிடிக்கவோ முடியவில்லை.
ராணிக்கு மேலும் கோபம் பொங்கி எழுந்தது. அவள் அரசனிடத்திலே கோபமாகப் பேசினாள். அரசிளங்குமரர்கள் ஐந்து பேரையும் உடனே தன்னிடம் வரும்படி ஆணையிட்டாள். அவர்கள் எல்லோரும் ராணியின் கோபத்தைக் கண்டு சற்று பயத்தோடு அவளுக்கு முன்னால் வந்து நின்றார்கள்.
“நமது காவலாளிகளால் தாமரைப் பூவைத் திருடுகின்றவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. உங்கள் தந்தையால் இந்தக் காரியம் ஆகாமல் போய்விட்டது. அவர் செய்த முயற்சியெல்லாம் பலன் கொடுக்கவில்லை. அதனால் உங்களுக்கு நான் ஒரு உத்தரவு போடப்போகிறேன். அதன்படி நீங்கள் செய்தாக வேண்டும்” என்று ராணி பலத்த குரலில் சொன்னாள்.
அரசன் பேசாமல் மெளனமாக உட்கார்ந்திருந்தான். கொஞ்ச நாள்களாக அரசி தங்களிடத்திலே அன்பு காட்டாமல் கடுமையாக நடந்து வருவதை அரசகுமாரர்கள் அறிந்திருந்தார்கள். திடீரென்று தங்களுடைய அன்பான தாய் இப்படி மாறிவிட்டதை அவர்களால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அதனால் அவளிடத்தில் அதிகமாக நெருங்காமலேயே அரச குமாரர்கள் இருந்து வந்தார்கள்.
இப்பொழுது அவள் என்ன உத்தரவு போடப்போகிறாளோ என்று கவலையோடு நின்றார்கள்.
ராணி மூத்த குமாரனைப் பார்த்துப் பேசத் தொடங்கினாள். "இன்றைக்கு இரவிலே நீ குளத்தடியிலிருந்து காவல் புரிய வேண்டும். தாமரைப்பூவைத் திருடுகின்றவனைப் பிடித்துக்கொண்டு வரவும் வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால் உன்னைப் பாதாளச் சிறையில் அடைப்பேன். அடுத்த நாளைக்கு இரண்டாவது ராஜகுமாரன் போகவேண்டும்” என்று அவள் கர்ஜனை செய்தாள். அரசன் வாய் பேசாமல் தலையைக் குனிந்துகொண்டு இருந்தான்.
ராணியின் உத்தரவைக் கேட்டுக்கொண்டு அரச குமாரர்கள் தங்களுடைய அறைக்குச் சென்றார்கள். அங்கே சென்று கூடி ஆலோசனை நடத்தினார்கள்.
எல்லோருக்கும் மூத்தவனுடைய வயது பதினான்கு இருக்கும். அவன் தைரியமாகத்தான் இருந்தான். இருந்தாலும் மற்றவர்களுக்குக் கவலையாக இருந்தது. "அண்ணா, நமது வீரர்கள் அத்தனைபேரும் சேர்ந்து கண்டு பிடிக்க முடியாத திருடனை நீ எப்படிக் கண்டுபிடிப்பாய்! அப்படிக் கண்டுபிடித்தாலும் நீ அவனைக் கட்டிப் பிடித்துவர முடியுமா ?” என்று விசனத்தோடு கேட்டார்கள்.
“தம்பிகளே, நீங்கள் எதற்கும் பயப்படக்கூடாது. பயப்படுவது ஆண்களுக்கு அழகல்ல. நான் திருடனை
நிச்சயமாகக் கண்டுபிடித்து வருவேன். ராணியம்மாளின் உத்தரவிற்காக இல்லாவிட்டாலும் காட்டிலே நடக்கிற திருட்டை அடக்குவது அரசருக்கும் அவருடைய மக்களுக்கும் கடமையல்லவா ?” என்று அண்ணன் தைரியம் கூறி விட்டு, இரவிலே காவல் புரிவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைக் கவனித்தான். அவன் கையிலே தனது வில்லையும் அம்பையும் எடுத்துக்கொண்டான். இடையிலே கச்சை கட்டி, அதிலே உடைவாளைத் தொங்கவிட்டுக்கொண்டான்.
ஆனால், அவனால் திருடனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எப்படியோ அவனையும் ஏமாற்றிவிட்டுத் திருட்டு
நடந்துவிட்டது. அதனால், அவன் பாதாளச்சிறையில் அடைபட்டான். சிறைக்குள் போவதற்கு முன்பு தன் தம்பிகளைப் பார்த்து ஒருவிஷயம் சொல்ல அவன் விரும்பினான். ஆனால், ராணி அதற்கு அனுமதி தரவில்லை. அரசகுமாரன் தன் தந்தையிடம் கெஞ்சிப் பார்த்தான். அரசன் ராணியின் உத்தரவுக்கு விரோதமாக ஒன்றும் செய்ய விருப்பமில்லாமல் பேசாமல் இருந்துவிட்டான்.
மறுநாள் இரண்டாவது அரசகுமாரன் திருடனைக் கண்டுபிடிக்கச் செல்ல வேண்டும் என்பது ராணியின் கட்டளை. அதன்படியே அவனும் சென்றான். அவனுக்கும் திருடனைக் கண்டுபிடிப்பதில் வெற்றி கிடைக்கவில்லை. அவனும் தனது தம்பிகளைச் சந்திக்க முடியாமலேயே பாதாளச் சிறைக்குப் போகவேண்டியதாயிற்று.
இவ்வாறே மூன்றாவது அரசகுமாரனும், நான்காவது அரசகுமாரனும் குளத்தடியில் காவல் புரிந்து திருடனைக் கண்டுபிடிக்காமல் பாதாளச்சிறை சேர்ந்தார்கள். கடைசியில் எல்லோருக்கும் இளையவனான ஐந்தாவது அரசகுமாரனுடைய முறை வந்தது. அவன் சிறு பையன். அவன் பெயர்விக்கிரமன். அவனுக்குவயது ஆறுகூடநிரம்பவில்லை. இருந்தாலும் அவனும் திருடனைக் கண்டுபிடிக்கப் போக வேண்டும் என்று ராணி உத்தரவு போட்டாள்.
விக்கிரமன் தைரியமாகப் புறப்பட்டான். அவனும் அவனுடைய சிறிய வில்லையும் அம்பையும் எடுத்துக்கொண்டான். திருடனைப் பார்த்தால் உடனே அம்பு போட்டுக் கொன்றுவிட வேண்டும் என்று தீர்மானம் செய்துகொண்டான்.
விக்கிரமன் இரவு முழுவதும் தூங்கவேயில்லை. ஜாக்கிரதையாக அடுத்த நாள் காலையில் மலரப்போகும் தாமரை மொக்கையே பார்த்துக்கொண்டு குளக்கரையில் அமர்ந்திருந்தான். அடிக்கடி கண்ணில் தண்ணீரைத் தெளித்துக் கொண்டான்.
பொழுது விடியும் சமயம் வரையில் யாரும் வரவில்லை. அந்தத் தாமரை மொக்கும் அப்படியே இருந்தது ; அது கொஞ்சம் கொஞ்சமாக விரியத் தொடங்கியது.
கொஞ்சம் மங்கலாக வெளிச்சம் பரவத் தொடங்கிற்று. அந்தச் சமயத்திலே ஒரு அற்புதமான பஞ்சவர்ணக்கிளி யொன்று குளத்திற்கு மேலே சத்தமில்லாமல் பறந்து வந்தது.
அது நேராகக் குளத்தின் நடுவே தாமரைப் பூவின் அருகே சென்று அதைத் தன் அலகால் கொத்திப் பறிக்க முயற்சி செய்தது.
விக்கிரமன் அதைப் பார்த்துவிட்டான். ஆனால், அவ்வளவு அழகான அந்தப் பஞ்சவர்ணக் கிளியின்மேல் அம்பு போட அவனுக்கு மனம் வரவில்லை.
"பஞ்சவர்ணக்கிளியே, நீ அந்தத் தாமரைப் பூவைப் பறிக்காதே. பறித்தால் உன்மீது அம்பு போடுவேன். நீ அழகான பறவையாயிருப்பதால், உன்னைக் கொல்ல எனக்கு மனமில்லை. அந்தப் பூ ராணிக்கு வேண்டும்’ என்று விக்கிரமன் சொன்னான்.
பஞ்சவர்ணக்கிளி அவனது பேச்சைக் கேட்டுவிட்டுத் தாமரைப் பூவைப் பறிக்காமல் பக்கத்திலே இருந்த ஒரு மரக்கிளையில் வந்து அமர்ந்தது.
“விக்கிரமா, உன்னுடைய அன்பான பேச்சைக் கேட்டு என் உள்ளம் குளிர்ந்தது. உன் அண்ணன்மார்கள் இவ்வாறு ஒன்றுமே சொல்லாமல் என்மீது அம்பைப் போட்டார்கள். ஆனால், நான் அந்த அம்புகளுக்குத் தப்பிக்கொண்டு பூவைப் பறித்துச்சென்றேன்” என்று கிளி மனித பாஷையில் சொல்லிற்று.
"நீ பூவைப் பறித்துக்கொண்டு போனதால் இப் பொழுது அவர்கள் பாதாளச் சிறையில் கஷ்டப்படுகிறார்களே-நீயேன் அப்படிச் செய்தாய் ?" என்று விக்கிரமன் கேட்டான்.
"அதுவா-அது ஒரு பெரிய ரகசியம். இங்கே இருந்து பேசக்கூடாது. பேசினால் ஆபத்து வரும். நீ என்னோடு அதோ தெரிகிறதே அந்த மலையின் உச்சியில் உள்ள முருகன் கோயிலுக்கு வந்தால் எல்லாம் உனக்குச் சொல்லுகிறேன்" என்றது கிளி.
விக்கிரமன் உடனே புறப்பட்டான். தாமரைப்பூ அப்படியே மலர்ந்திருந்ததால் காவல்காரர்கள் அவனைச் சிறைப்படுத்தவில்லை. அந்தப் பூவைக் காணோமென்றால் தான் அரசகுமாரனைப்பிடித்துச் சிறைக்குக்கொண்டுபோக வேண்டும் என்பது ராணியின் கட்டளை.
விக்கிரமன் கஷ்டப்பட்டு மலைமீது ஏறினான். கிளி அவனுக்கு வழி காண்பித்துக்கொண்டே முன்னால் மெதுவாகப் பறந்து சென்றது.
மலையின் உச்சியிலுள்ள முருகன் கோயில் கண்ணுக்குத் தெரிந்தவுடனே கிளி, "விக்கிரமா, அதோ கோயில் தெரிகிறது. நீ அங்குப் போய்க் கொஞ்சம் இளைப்பாறு. நான் ஒரு நொடியில் வந்துவிடுகிறேன். பயப்படாதே” என்று சொல்லிவிட்டு வேகமாக அரண்மனைத்தோட்டத்தை நோக்கிப் பறந்தது.
விக்கிரமன் கோயிலுக்குச் சென்று முருகனை வணங்கி நின்றான். அதற்குள் கிளியும் திரும்பி வந்துவிட்டது. அது தாமரை மலரைப் பறித்து வந்திருந்தது. அந்தப் பூவை முருகனுடைய பாதத்தில் போட்டு வணங்கியது.
“இந்தப் பூவைப் பறித்துவிட்டாயா ?” என்று விக்கிரமன் கவலையோடு கேட்டான்.
“விக்கிரமா, கவலைப்படாதே. இனிமேல் அந்த மாயக்காரியைப் பற்றிப் பயம் வேண்டியதில்லை” என்று கிளி உற்சாகத்தோடு சொல்லிற்று.
"மாயக்காரியா ? அவள் என் தாயார் ராணியல்லவா ?” என்று விக்கிரமன் கேட்டான்.
"அவள் உன் தாய் அல்ல. அவள் ஒரு மாயக்காரி. நான்தான் உன்னுடைய தாய். என்னை இப்படி ஒரு கிளியாகச் செய்துவிட்டு அவள் என்னை போல வேஷம் போட்டுக்கொண்டு அரசரிடத்திலே நடிக்கிறாள். அரசரும் அவளிடத்திலே மயங்கிக் கிடக்கிறார்” என்று கிளி சொல்லிற்று.
விக்கிரமனுக்கு ஒரே ஆச்சரியமாகப் போய்விட்டது. இருந்தாலும் கிளி சொல்லுவதை முழுவதும் அவனால் நம்ப முடியவில்லை.
அவன் நம்பிக்கை கொள்ளாதிருப்பதைப் பார்த்துக் கிளி. “விக்கிரமா, என் கண்ணே, நான் சொல்லுவதில் உனக்கு நம்பிக்கையில்லையா? நான் உன்னைப் போல மனித பாஷையிலே பேசுவதைக் கேட்டாகிலும் நம்பிக்கை பிறக்கவில்லையா ?” என்று கேட்டது.
"பஞ்சவர்ணக் கிளியே, நீ என் தாயாராக இருந்தால் என் அண்ணன்மார்களைப் பாதாளச் சிறையில் அடைக்கும்
(Upload an image to replace this placeholder.)
படி செய்வாயா ? நீ இந்தத் தாமரைப்பூவைக் கொண்டு வராமலிருந்தால் அவர்கள் சுகமாக இருப்பார்களே !” என்று அவன் கேட்டான். “கண்ணே, அவர்கள் எல்லாம் சிறையில் அடைபட்டதால் எனக்கு மிகவும் வருத்தந்தான். ஆனால், அவர்கள் உன்னைப் போல என்னிடத்தில் இரக்கம் காட்டவில்லையே! இரக்கம் காட்டியிருந்தால், இங்கே அழைத்து வந்திருப்பேன். முன்பு நான் ராணியாக இருந்தபோது இந்த முருகன் கோயிலுக்குத் தாமரைப்பூவை நாள்தோறும் அனுப்புவது வழக்கம். அதன்படியே கிளியாக மாறிய பிறகும் கொண்டு வந்து முருகனுக்கு வைக்கிறேன். முருகனுடைய அருளால் தான் நான் இன்னும் உயிரோடிருக்கிறேன்” என்றது கிளி.
"இந்தக் கிளி உருவத்தை மாற்ற முடியாதா ?" என்று விக்கிரமன் கவலையோடு கேட்டான்.
"அதற்குத்தான் உன்னை இங்கே அழைத்து வந்தேன். அதோ முருகனுடைய கையிலே ஒரு வேலிருக்கிறதல்லவா ? அதை எடுத்து என் தலையில் குத்து" என்றது கிளி.
விக்கிரமனுக்கு அப்படிச் செய்ய மனம் வரவில்லை. கிளி இறந்துவிடுமே என்று பயந்தான்.
"விக்கிரமா, கவலைப்படாதே. முருகனைப் பணிந்து வேலை எடுத்துக்குத்து. உனக்கு உன் தாயார் வேண்டாவா?” என்றது கிளி.
விக்கிரமன் இதைக் கேட்டதும் தைரியமடைந்து கிளி சொன்னவாறே செய்தான்.
என்ன ஆச்சரியம் வேலை எடுத்துக் குத்தியதும் கிளி மறைந்து, விக்கிரமன் தாயார் எதிரே நின்றாள்.
அவள் விக்கிரமனைக் கட்டி அணைத்து முத்தமிட்டாள் "கண்ணே, வா. நாம் உடனே அரண்மனைக்குப் போயாக வேண்டும். அந்த மாயக்காரியின் வேடத்தை உடனே வெளிப்படுத்த வேண்டும். அவள் உன் அண்ணன்மார்களுக்கு ஏதாவது தீங்கு இழைக்க முயற்சி செய்தாலும் செய்வாள். அதற்கு முன்னே நாம் போக
வேண்டும். அந்த வேலினை எடுத்துக்கொள். அது உன் கையிலிருக்கும்போது அந்த மாயக்காரியால் ஒன்றும் செய்ய முடியாது" என்று சொன்னாள்.
இரண்டு பேரும் கடவுளைத் தொழுதுவிட்டுப் புறப்பட்டார்கள். விக்கிரமன் தன் தாயின் சொற்படி அந்த வேலை எடுத்துக்கொண்டான்.
தாயும் மகனுமாக அரண்மனைக்கு ஓடிவந்தார்கள். மாயக்காரியைப் பிடித்துச் சிறையில் தள்ளினார்கள். அரசகுமாரர்களையெல்லாம் பாதாளச் சிறையிலிருந்து விடுதலை செய்தார்கள்.
அரசனும் தன்னுடைய மயக்கம் தீர்ந்து சுயபுத்தியடைந்தான்.
எல்லோரும் சுகமாக வாழ்ந்தார்கள். விக்கிரமனும் அவன் தாயும் முருகன் கோயிலுக்கு அந்த அற்புத நீலத்தாமரைப் பூ அனுப்புவதை ஒரு நாளும் தவறாமல் செய்து வந்தார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக