சைவ சமய வரலாறு
வரலாறு
Back
சைவ சமய வரலாறு
ந.சி. கந்தையா
சைவ சமய வரலாறு
1. சைவ சமய வரலாறு
2. தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
3. அகம் நுதலுதல்
4. நூலறிமுகவுரை
5. கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
6. பதிப்புரை
7. சைவ சமய வரலாறு
நூற்குறிப்பு
நூற்பெயர் : சைவ சமய வரலாறு
ஆசிரியர் : ந.சி. கந்தையா
பதிப்பாளர் : இ. இனியன்
முதல் பதிப்பு : 2003
தாள் : 16.0 கி. மேப்லித்தோ
அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 11 புள்ளி
பக்கம் : 20 + 164 = 184
படிகள் : 2000
விலை : உரு. 80
நூலாக்கம் : பாவாணர் கணினி
2, சிங்காரவேலர் தெரு,
தியாகராயர் நகர், சென்னை - 17.
அட்டை வடிவமைப்பு : பிரேம்
அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட்
20 அஜீஸ் முல்க் 5வது தெரு
ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006
கட்டமைப்பு : இயல்பு
வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம்
328/10 திவான்சாகிப் தோட்டம்,
டி.டி.கே. சாலை,
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே.
‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’
என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர்.
ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:-
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார்.
ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார்.
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின.
ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம்.
அகராதிப் பணி
தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை.
ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார்.
இலக்கியப் பணி
புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள்.
பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர்.
தமிழ்மொழி - தமிழினம்
தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை.
திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும்
தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:-
திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார்.
பிற
மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார்.
“ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.”
வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்!
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன்.
அன்பன்
கோ. தேவராசன்
அகம் நுதலுதல்
உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம்.
உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது.
தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது.
தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம்.
எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள்.
இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது.
எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை.
வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது.
அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன.
உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும்.
இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது. மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது.
சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி.
அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம்.
உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது.
நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம்.
அன்பன்
புலவர் த. ஆறுமுகன்
நூலறிமுகவுரை
திரு. ந.சி. கந்தையா பிள்ளை 1930-40களில் தமிழ், தமிழிலக்கியம், தமிழ்மொழி, தமிழர் வரலாறு, திராவிட வரலாறு, தமிழ்நாட்டுக் குடிகள் போன்ற பல விடயங்கள் பற்றி அக்காலத்துச் சாதாரண தமிழ் வாசகர் நிலையில் பெரிதும் வாசிக்கப்பட்ட நூல்களை எழுதினார். பண்டைய இலக்கியங்களான அகநானூறு, கலித்தொகை, பரிபாடல் போன்ற வற்றினை உரைநடையில் எழுதி மக்களிடையே சங்க இலக்கியம் பற்றிய உணர்வினை ஏற்படுத்தினார். திருக்குறளுக்கான ஒரு சொல்லடைவைத் திருக்குறள் அகராதி என்னும் பெயரில் வெளியிட்டவர். இவை யாவற்றுக்கும் மேலாக உலக வரலாற்று நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காலவரிசைப்படுத்தித் தந்தார். செந்தமிழ் அகராதி என்றவோர் அகர முதலியையும் தொகுத்தார்.
இன்று பின்னோக்கிப் பார்க்கும் பொழுது 1940-50களில் இளைஞர் களாக இருந்த பல தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றிய தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கான வாசிப்பு விடயங்களை அளித்தவர். இவருடைய பெரும்பாலான படைப்புக்கள் அக்காலத்திற் பிரசுரிக்கப் பட்ட ஒற்றுமை என்னும் இதழின் அலுவலகத்தாலேயே வெளியிடப் பெற்றன. இவர் வெளியிட்டனவற்றுள் பல ஒற்றுமை இதழில் வெளிவந் திருத்தல் வேண்டும். ஆனால், அதனை இப்பொழுது நிச்சயமாக என்னாற் சொல்ல முடியவில்லை. ஒற்றுமை அலுவலகம் இவற்றைப் பிரசுரித்தது என்பதை அறிவேன். ஏனெனில் இலங்கையில் தமிழாசிரியராக இருந்த எனது தகப்பனாரிடத்து இந்நூல்களிற் பெரும்பாலானவை இருந்தன.
திரு ந.சி. கந்தையா பிள்ளையின் பெயர் தமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படுமளவுக்கு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியுள்ளது. அங்கு அவர் அத்துணைப் போற்றப்படாதிருப்பதற்குக் காரணம் ஏறத்தாழ அவர்களது எல்லா நூல்களுமே தமிழகத்திலேயே வெளியிடப் பெற்றன.
இந் நூல்களின் பிரசுரப் பின்புலம் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அவற்றின் பொருளியல் அம்சங்கள் பற்றிய தரவுகளும் இப்பொழுது தெரியாதுள்ளன.
ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிற்கூட இவரது பெயர் முக்கியப் படுத்தப் பெறாது போயுள்ளது. மிகுந்த சிரமத்தின் பின்னர் அவரைப் பற்றிக் கிடைத்துள்ள தகவல்கள் பின்வருமாறு:
சுவாமி ஞானப் பிரகாசர், ந.சி. கந்தையா பிள்ளை போன்ற அறிஞர்களின் தமிழ்ப் பங்களிப்புக்கள் தமிழகத்தில் போற்றப்படுகின்றமை ஈழத்தவர்க்குப் பெருமை தருகின்றது. இவர் எழுதிய நூல்களின் பெயரை நோக்கும்பொழுது தமிழ் வாசகர்களுக்கு உலக நிலைப்பட்ட, தமிழ்நிலைப் பட்ட தரவுகளைத் தொகுத்துத் தருவதே இவரது பெருஞ்சிரத்தையாக இருந்தது என்பது புலனாகின்றது. இப்பதிப்பகத்தின் பணியினை ஊக்குவிக்க வேண்டியது தமிழ்சார்ந்த நிறுவனங்களினதும் தமிழ்ப் பெரியோர்களினதும் கடமையாகும். உண்மையில் இதனை ஒரு அறிவுப்பசிப் பிணித் தீர்வாகவே நான் காண்கிறேன்.
2/7, றாம்ஸ்கேட், அன்புடன்
58, 37ஆவது ஒழுங்கை,
கார்த்திகேசு சிவத்தம்பி
வெள்ளவத்தை, தகைசார் ஓய்வுநிலை பேராசிரியர்
கொழும்பு - 6 யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.
கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மூலவர்களில் யாழ்ப்பாணம் தந்த பேரறிஞர் ந.சி. கந்தையாவும் ஒருவர். உண்மையான அறிஞர்களைக் காலங்கடந்து அடையாளம் காண்பதும் அவர்தம் படைப்புக்களைத் தேடிப் பிடித்துப் புரப்பதும் தமிழினத்தின் பழக்கங்களில் ஒன்று.
தமிழின், தமிழரின் தொல்பழங்கால வரலாறு தொடர்பாகத் தமிழில் நூல்கள் மிகக் குறைவு. ஓர் ஆயிரம் நூல்களாவது தமிழின் தமிழரின் தொல்பழங்கால வரலாறுபற்றி வெளிவரவேண்டும். விரிவாக எழுதப்பட வேண்டிய தமிழ், தமிழர் வரலாற்று வரைவு முயற்சிக்கு வழிகாட்டும் கருவி நூல்களை வரைந்திருப்பவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.
உலகம் முழுவதும் உற்றுக் கவனிக்க வேண்டிய வரலாற்றிற்கு உரியவர்கள் தமிழர்கள். அவர்களே உலக மொழிகளை ஈன்ற மூலமொழிக்குச் சொந்தக்காரர்கள். அவர்களே உலக நாகரிகங்களின் பிறப்பிற்குக் காரணமான உலக முதல் நாகரிகத்தைப் படைத்தவர்கள். இந்த உண்மைகளைத் தமிழர்களும் அறியவில்லை உலகமும் அறியவில்லை.
தமிழர் சரித்திரம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந் தமிழர், தமிழர் யார், உலக நாகரிகத்தில் தமிழர்பங்கு, சிந்துவெளித் தமிழர், தமிழ் இந்தியா, தமிழகம், மறைந்த நாகரிகங்கள் ஆகியன ந.சி. கந்தையாவின் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும்.
உலக முதல் நாகரிகம் என இன்று உலகம் நம்பிக்கொண்டிருக்கக் கூடிய நீல ஆற்றங்கரை நாகரிகம் (Nile Civilisation) தமிழ் நாகரிகத்தின் அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் வழிப்பட்ட நாகரிகமே என்பதை ஏராளமான சான்றுகளால் விளக்குபவை மேலைய நூல்கள்.
மொழிநிலையில் தமிழின் உலக முதன்மையைப் பாவாணர் நிலைநாட்டினார் என்றால் இன நிலையில் தமிழின உலக முதன்மையை ந.சி. கந்தையா நிலைநாட்டினார் என்று உரைக்கலாம்.
நீல ஆற்றங்கரை நாகரிக முடிவின்பின் நண்ணிலக் கடற் பகுதியில் உருவான பிறிதொரு வழிநாகரிகமே கிரேக்க நாகரிகம். கிரேக்க நாகரிகத் தின் உடைவில் தெறிப்பில் பிறகு மலர்ந்தவையே இன்றைய மேலை நாகரிகம். உலகின் எல்லா நாகரிகங்களையும் தாங்கிநிற்கும் தாய் நாகரிகமே தமிழ் நாகரிகம்.
தமிழ் நாகரிகத் தொன்மையைச் சங்க நூல்களுக்கு அப்பால் சிந்துவெளி அகழ்வாய்வும் உலக வரலாற்றாசிரியர்கள் உலக முதல் நாகரிகம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் நமக்கு மேலும் விளக்கும் பகுதிகளாகத் திகழ்கின்றன. இங்கெல்லாம் சென்று நுண்மாண் நுழைபுல முயற்சியால் தமிழின வரலாறு எழுதியவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.
ந.சி. கந்தையா பெருமகனார் நூல்களைத் தமிழரின் தொல்பழங்கால வரலாற்றைக் கற்கும் முயற்சியில் நான் ஈடுபடத்தொடங்கியபோது தேடிக் கற்றேன். பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் சென்ற ஆண்டு இயற்கையெய்திய வரலாற்றுப் பேரறிஞர் கோ. நிலவழகனார் ந.சி. கந்தையா அவர்களைச் சென்னையில் அவர் வாழ்ந்த நாளில் சந்தித்தது பற்றியும் அவரின் பன்னூற்புலமை பற்றியும் எம்மிடம் மகிழ்ந்து கூறுவார். ந.சி. கந்தையா அவர்களின் நூல்கள் பலவற்றையும் அவர் வைத்திருந்தார். அருகிய பழைய நூல்களைப் பேணுவாரிடத்திலும் நூலகங்கள் சிலவற்றிலும் மட்டுமே ஒடுங்கிக்கிடந்த ந.சி. கந்தையா நூல்களை மீண்டும் அச்சில் வெளியிடுவார் இலரே என்று கவலையுற்றேன். அமிழ்தம் பதிப்பகம் இவரின் நூல்களை வெளியிடுகின்றது. உண்மைத் தமிழ் நெஞ்சங்கள் இந் நூல்களை உச்சிமோந்து வாரியணைத்துப் புகழ்ந்து கற்றுப் பயனடைவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.
பேரா. கு. அரசேந்திரன்
பதிப்புரை
வளம் சேர்க்கும் பணி
“குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம்.
இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன.
ந.சி. கந்தையா
இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது.
தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர்.
தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது.
தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர்.
நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள்
1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன.
வாழும் மொழி தமிழ்
தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம்.
ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா?
தமிழர்களின் கடன்
இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன்.
மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள்.
எழுச்சிக்கு வித்திட…
உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது.
இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிப்பகத்தார்
சைவ சமய வரலாறு
முன்னுரை
சைவசமயத்தின் பழைய வரலாறுகள் நன்கு அறியப்படாமையால் அவை பழங்கதை வடிவில் இருந்து வருகின்றன. சிவ வழிபாடு இந்திய நாட்டில் காணப்படுவது போலவே இந்திய நாடல்லாத பிற நாடுகளிலுமிருந்ததென்பது அண்மை வரையில் அறியப்படவில்லை. மேல்நாட்டினரின் தொல் பொருள் ஆராய்ச்சிகளால் பாம்பு வணக்கம், இலிங்க வணக்கம், சிவ வணக்கம், காளி வணக்கம் என்பன பிற நாடுகளுக்கு முரியனவாயிருந்தன வென்பதை அறிகின்றோம். இதற்கு ஆதாரமாகக் கிடைத்துள்ள சான்றுகளையும், சாங்கியம், யோகம், பூர்வமீமாம்சை, உத்தரமீமாம்சை, வைசேடிகம், வேதாந்தம், சைவசித்தாந்தம் முதலிய தத்துவ ஞானங்களின் வரலாறுகளையும் இங்கு சுருக்க மாகக் கூறியுள்ளோம். இந் நூல் புராணமுறையில் இருந்து வரும் சமயவரலாற்றுக்குப் பல வகையில் விளக்கமளிப்பதாக இருக்கும்.
ந.சி.கந்தையா
சென்னை
03.05.1958
இருபது ஆண்டுகளின் முன்
டாக்டர் ஐசாக் தம்பையா அவர்கள்,
இந் நூலாசிரியரைப் பற்றி எழுதிய கருத்துரை.
ஞநுசூஹசூழு ழடீருளுநு
துயககயே, 8வா துயரேயசல, 1938.
Mr.N.S.Kandiah of Navaly is a very agreable discovery. He is a Tamil whose interest in Tamil Literature is splendidly altruistic. There are not many who are so supremely unselfish. Mr.N.S.Kandiah is a scholar, and a scholar with a modern environment. This is a great advantage, for it enables him to be a liberal in literary values and cultural assessments. He is doing yeoman service to the cause of Tamil learning by his prose rendering in Tamil of such classics as Pattuppattu and Purapporul. His tamilagam is a mine of scholarly information well and balancedly presented. He is a patriotic scholar whose scholarship is unaffected by national bias.
(Sd.) T. ISAAC THAMBYAH, னு.கூழ.
President, Jaffna Association.
சைவ சமய வரலாறு
03.05.1958
தோற்றுவாய்
சைவமே மிகப் பழைய சமயமென நாம் எல்லோரும் நம்பி வருகின்றோம். நம் முன்னோர்களும் அப்படியே நம்பி வந்தார்கள். உலகில் நாகரிகம் பெற்று ஆங்காங்கு வாழ்ந்த பழங்கால மக்களும் தத்தம் மதங்களே மிகப் பழையன வென்று நம்பிவந்தார்கள். இவ்வாறு மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைக்கு மூலகாரணம் ஒன்றுண்டு. அது எல்லாச் சமயங்களுக்கும் ஆதியில் வேர் ஒன்றாக இருந்ததென்பதாகும். பழைய நாகரிக சாதியாரின் வரலாறுகளை ஒருங்கு வைத்து ஒப்பிட்டு நோக்கு மிடத்து இவ்வுண்மை மிகத் தெளிவாகின்றது.
மனித சமூகத்தில் சாதி, சமயம், மொழி என்னும் மூன்றும் முதன்மை யுடையன. இவை ஆதியில் ஒன்றாகவிருந்தன. இதனை மானிடவியல், மொழிஇயல், சமயஇயல் ஆராய்ச்சிகள் வெளியிடுகின்றன. மக்கள் இயற்கை முறையில் வாழாது நாகரிகமடைந்து செயற்கை முறையில் வாழத்தொடங்குவதற்கு முன் அவர்களின் வாழ்க்கை முறை உலகம் முழுமையிலும் ஒரே வகையிலிருந்தது. மக்களிற் பெரும்பாலினர் வேடன், இடையன் என்னும் நிலைகளைக் கடந்து உழவன் என்னும் நிலையை அடைந்து நாகரிகமும் பண்பாடும் அடைந்துள்ளார்கள். முன் இரு நிலைகளைக் கடவாது வாழும் மக்களும் ஆங்காங்கு காணப்படு கிறார்கள். பழங்கற்காலம், புதிய கற்காலம், செம்புக் காலம், வெண்கலக் காலம் என்பனவும் மக்கள் தாண்டி வந்துள்ள பண்பாட்டுப் படிகளாகும். இரும்புக் காலத்தில் நாகரிகம் விரைவில் முன்னேறிற்று. கற்காலப் பண்பாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் இன்றும் உலகின் சில பகுதிகளிற் காணப்படுகிறார்கள்.
மஞ்சள், கறுப்பு, வெண்மை, கபிலம் முதலிய நிறங்களும் இவற் றிற்கு இடைப்பட்ட நிறங்களுமுள்ள மக்கள் உலகின் வெவ்வேறு பாகங் களிற் காணப்படினும், இவ்வின மக்களெல்லோரும் ஒரு கூட்டத்தினின்று பிரிந்து சென்று இடங்களின் வெப்பதட்பநிலை, சூழ்நிலைகள், உண்ணும் உணவு, உணவுதேட மேற்கொள்ளும் முயற்சி, வாழுமிடங்களுக்கேற்ப இயற்கை உதவும் பாதுகாப்புகள் போன்ற பல காரணங்களால் பல்வேறு குணங்குறிகளுடையராயினர் என மனிதவியலார் கூறுவர். இக் காரணங் களால் தொடக்கத்தில் மக்கட்குலம் ஒன்றாகவிருந்ததெனத் தோன்று கின்றது.
மக்கள் ஆதியிற் பேசுவதற்கும் எழுதுவதற்கும் கையாண்ட முறைகள் ஒரே அடிப்படையுடையனவாக விருந்தன. எல்லா மக்களும் தொடக்கத்தில் ஓவிய எழுத்துக்களையும் பின் அவற்றின் சிதைவு களையும், பின் அச்சிதைவுகளினின்று அமைத்துக்கொண்ட குறியீடு களையும் வழங்கினார்கள். இவ் வுலகில் வழங்கும் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மொழிகளும் ஆரியம், ஆரியமல்லாதவை என்னும் இரு பெரும் பிரிவுகளில் அடங்குமென்றும், அவ்விரு பிரிவுகளும் மிகத் தொலைவான ஒரு இடத்தில் சந்திக்குமென்றும் மொழி ஆராய்ச்சி யாளர் கூறுவர். ஆகவே ஆதியில் மொழி ஒன்றாகவிருந்ததென்பதும் புலனாகின்றது.
இசை, கூத்து, ஓவியம், சிற்பம், கட்டடம், மருத்துவம் போன்ற நற் கலைகள் மிகச் சிறிய தொடக்கங்களாக எல்லா மக்களிடையும் ஒரே வகையில் தோன்றிச் சூழ்நிலைகளுக்கேற்ப வளர்ச்சியடைந்து உள்ளன. மக்கள் இவ்வுலகில் பல இலட்சக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள். இன்றைய மக்களின் அறிவென்பது பல இலட்சக்கணக் கான ஆண்டுகளாகத் தலைமுறைகள் தோறும் சிறிது சிறிதாகத் திரண்டு வந்ததாகும். மனிதனொழிந்த மற்றைய உயிர்களின் புதிய அறிவுகள் அப் பிராணிகள் இறக்கும்போது அவற்றோடு மறைந்து விடுகின்றன. அவை அவற்றைச் சமூகத்துக்கு வெளியிட முடிவதில்லை.
மனிதன் தான் புதிதாகக் கண்டறிந்ததொன்றைத் தனது சமூகத் துக்கு அறிவிக்கிறான். இதனால் ஒருவனுடைய அறிவென்பது சமூகத்தின் அறிவாக நிலைபெறுகின்றது. சமூகத்திலுள்ள பலர் கண்டறியும் அறிவுகள் சமூக அறிவுகளாகத் தலைமுறை தலைமுறையாகத் திரண்டு தொடர்ந்து வருகின்றன. இவ்வாறு வளர்ந்தனவே மக்களின் கலைகள், பண்பாடுகள், நாகரிகங்கள் என்பன.
சமயமும் கலைகளைப் போலவே சிறிய தொடக்கத்திலிருந்து பல்லாயிரமாண்டுகளாக வளர்ந்து வந்திருக்கின்றது. சமயமென்பதையும் ஒரு கலை என்றே கூறலாம். சமயம் எல்லா மக்களிடையும் ஒரே அடிப் படையிலிருந்தே தோன்றி வளர்ச்சியடைந்துள்ளது. காடுகளிலும், மலை களிலும் தனித்துவாழும் பிற்போக்கான மக்களின் சமயக் கொள்கை களும், சமயத் தொடர்பான நம்பிக்கைகளும் பெரும்பாலும் ஒரேவகை யாகவுள்ளன. மக்கள் தோன்றிய காலம் முதல் ஒரே போக்கில் வளர்ந்து கொண்டு வந்தசமயம் என்னும் மரம் அவர்கள் நாகரிகம் பெற்று விளங்கிய ஒரு காலத்தில் பல பெருங்கிளைகள் விட்டு விரியத் தொடங்கிற்று என்பதைப் பழங்காலத்தில் நாகரிகம் பெற்று விளங்கிய எகிப்து, மேற்கு ஆசியா, ஆசியா மைனர், இந்தியா முதலிய நாடுகளின் பழைய வரலாறு களை நோக்கின் நாம் நன்கு அறிந்து கொள்ளலாம். மேற்கூறியன ஆதியில் சமயம் ஒன்றாகவே இருந்ததென்பதைப் புலப்படுத்தும்.
சமயத் தோற்றம்
ஆதிகால மக்கள் தமக்கு வியப்பளித்த காற்று, மழை, இடி, மின்னல், மலை, ஆறு, கடல் போன்ற இயற்கைப் பொருள்களை வழி பட்டார்கள். தமக்கு மேலான வல்லமையோ வல்லமைகளோ உண்டு என நம்பிக்கை கொண்ட மக்கள் தமது சிந்தனையினாலும் அனுபவத்தி னாலும் அவற்றை அறிய முயன்றுவந்தார்கள். இவ்வாறு சிந்தனை செய்து வந்த மக்கள் உலகுக்கெல்லாம் ஒளி செய்கின்ற ஞாயிறே முழு முதற் கடவுளெனத் துணிந்தார்கள். அக்காலத்தில் மக்கள் வழங்கிய மொழிகள் பலவாகவிருந்தன. இரா, இல், எல், எலோசு, பால், அல், அல்லா, எலோகிம், ஒசிரிஸ், யுபிதர், அசுர், சிவன், தேவன் போன்ற பெயர்கள் வெவ்வேறு பல சமூகங்களால் முழுமுதற் கடவுளைக் குறிக்க வழங்கிய பெயர்களாகக் காணப்படுகின்றன. இப் பெயர்கள் ஒளியுடை யது அல்லது ஞாயிறு என்னும் பொருளுடையனவாக இருக்கின்றன வென்று அவற்றை ஆராய்ந்தோர் கூறியுள்ளனர். ஒரு காலத்தில் உலகம் முழுமையிலும் ஞாயிற்று வழிபாடு முதன்மை பெற்றிருந்தது.
வெள்ளப் பெருக்குக்குமுன் ஞாயிற்று வழிபாடு
ஒரு காலத்தில் பெரிய வெள்ளப் பெருக்கு ஒன்று உண்டானதாகப் பழங்கால மக்கள் எல்லோரிடையும் பழங்கதை வழங்கிற்று. இவ் வெள்ளப் பெருக்கைப்பற்றி விவிலிய வேதத்தின் பழைய ஏற்பாடும் குறிப் பிடுகின்றது. இந்தியாவில் மனு என்னும் முனிவர் வெள்ளப்பெருக்குக்குப் பிழைத்திருந்து உலகில் மனுக்குலத்தைத் தோற்றுவித்த வரலாற்றைப் புராணங்கள் கூறுகின்றன. உலகின் பல பாகங்களில் வழங்கும் வெள்ளப் பெருக்கைப் பற்றிய பழங்கதைகளை எல்லாம் திரட்டி வைத்து மேல் நாட்டறிஞர் ஆராய்ச்சி செய்துள்ளனர். விவிலிய வேதத்திற் கூறப்படும் சலப்பிரளய வரலாறு எபிரேய மக்களுக்குப் பாபிலோனியர் வழியாகக் கிடைத்ததென்றும், இந்தியாவினின்றும் சென்று பாபிலோனியாவிற் குடியேறிய மக்கள் இக் கதையையும் தம்மோடு கொண்டு சென்று அந் நாட்டிற் பரப்பினார்களென்றும் ஆராய்ச்சியாளர் கருதுவர். சலப்பிரளயத் துக்குப் பிழைத்திருந்து மனுக்குலத்தைத் தோற்றுவித்தவர்களாகச் சொல் லப்படும் மனுக்கள் எல்லோரும் சூரியனின் புதல்வர் அல்லது சூரிய னோடு சம்பந்தப்பட்டவர்களாகக் காணப்படுகின்றனர். இதனால் சலப் பிரளயத்துக்கு முன்னும் பின்னும் ஞாயிற்று வழிபாடு உலகில் பரவி முதன்மை பெற்றிருந்ததெனத் தெரிகிறது.
சிவன்
பழங்கால மக்கள் ஞாயிற்றுக் கடவுளைக் குறிக்க வழங்கிய பெயர்களுள் எல், சிவன் என்னும் பெயர்கள் மிகப்பழமை உடையன. எல் என்பதற்கு இலங்குவது என்பது பொருள் “எல்லே இலக்கம்” என்பது தொல்காப்பியச் சூத்திரம். எல் என்பது அல், இல் எனவும் உச்சரிப்பு வேறுபட்டு வழங்கிற்று. இலங்கை, ஈழம் முதலிய பெயர்களும் எல் அடியாகப் பிறந்தவை. அராபியாவிலும் மேற்கு ஆசியாவிலும் எல் தொடர்பான மிகப் பல இடப்பெயர்கள் காணப்படுகின்றன. மக்களும் தமது பெயர்களினிறுதியில் எல் என்பதைச் சேர்த்து வழங்கினார்கள். இவ்வகைப் பெயர்கள் பலவற்றை விவிலிய வேதத்தின் பழைய ஏற்பாட்டிற் காணலாம். எல் என்பதைப் போலவே பால் (பகல்) என்னும் பெயரையும் மேற்கு ஆசிய மக்கள் வழங்கினார்கள். ஹனி பால், அசுர்பானிப்பால் என்னும் பெயர்கள் இதற்கு எடுத்துக் காட்டுகளாகும். இன்றும் தமிழ் நாட்டில் சிவன் என்பதைப் பெயரினிறுதியிலிட்டு வழங்கும் வழக்குண்டு. பழங்கால இலங்கை அரசருட் பலரும் இவ்வழக்கை மேற்கொண் டிருந்தனர்.
எல் என்னும் பெயரிலும் பார்க்கச் சிவன் என்னும் பெயரே பழமையுடையது. சிவனென்பதற்குச் சிவந்தவன் என்னும் பொருளுண்டு. எபிரேயரின் மாதங்களிலொன்றின் பெயர் சிவன். முற்கால மக்கள் ஒவ்வொரு மாதத்தையும் ஒவ்வொரு கடவுளுக்குரியதாகக் கொண்டு மாதங்களுக்குக் கடவுளரின் பெயர்களை இட்டு வழங்கினார்கள். மொசே, கடவுளருளிய பத்துக் கட்டளைகளைச் சிவன் மாதத்தில் சினாய் மலையினின்றும் வெளியிட்டார். மொசேக்கு நெடுங்காலம் முன் தொட்டு எபிரேய நாட்டில் சிவன் வழிபாடு இருந்ததாகத் தெரிகிறது. பெத்தெல், பால் என விவிலிய வேதத்தின் பழைய ஏற்பாட்டிற் கூறப் படுவன சிவன் வழிபாடுகளே. பாபிலோனியரின் மாதங்களிலொன்றும் சிவன் எனப்பட்டது. இது அங்கு கண்டுபிடிக்கப்பட்ட களிமண் தட்டு களிலெழுதப்பட்ட சாசனங்களால் அறியப்படுகின்றது.
எகிப்திலுள்ள பாலைவனப் பசுந்தரை ஒன்று சிவன் எனப் பெயர் பெற்றிருந்தது. இப் பசுந்தரையில் பழைய ஞாயிற்றுக் கோயிலின் இடிபாடு ஒன்றுள்ளது. முற்காலத்தில் மக்கள் கோயிலைச் சுற்றிக் குடியேறியிருந் தார்கள். கோயில் கொண்டுள்ள கடவுளின் பெயரால் இடங்கள் அறியப் பட்டன. இன்றும் தென்னிந்திய இடப்பெயர்களில் பெரும்பாலன கோயிற் பெயர்களாகவே இருக்கின்றன. சிவன் கோயிலிருந்தமையால் அப் பாலை நிலப் பசுந்தரை சிவன் எனப்பட்ட தென்பது பிழையாகாது. பழைய நாகரிகம் பெற்று விளங்கியதெனவும், தமிழ் மக்கள் குடியேறி வாழப்பெற்றதெனவும் கருதப்படும் கிரீத்துத் (Crete) தீவில் அகழ்ந்து ஆராயப்பட்ட இடங்களிலொன்று சிவன் என்னும் பெயர் பெற்றிருந்தது. இவ்விடத்தில் தூபக்கால்கள் போன்ற பழம்பொருள்கள் அகழ்வு ஆராய்ச்சியில் கிடைத்தன.
அமெரிக்காவிலே கொலராடோ ஆற்றுக்குப் பக்கத்திலுள்ள பீடபூமி ஒன்று சிவன்கோயில் என அறியப்பட்டு வந்தது. இதன் பக்கத்தை அரித்துக் கொண்டு ஒரு மைல் ஆழத்தில் கொலராடோ ஆறு ஓடுகின்றது. இவ்வாற்று அரிப்பைக் கொண்டு அப் பீடபூமி மிகப் பழமையுடையதெனக் கருதப்படுகின்றது. அங்கு சிவன் வழிபாடு நடை பெற்றமையால் அது சிவன் கோயில் என நீண்ட காலமாக அறியப்பட்டு வந்தது. அதன் பழமை குறைந்தபட்சம் பத்தாயிரமாண்டுகளாகலா மெனத் தொல்பொருளியலார் கூறுகின்றனர். சிவன் வழிபாடு அமெரிக்கா வில் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்தது அறியப்படுகின்றது. அமெரிக்காவில் சிவலிங்கங்கள், விநாயகர் முதலிய சிலைகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க ஆதிக்குடிகளின் மொழி தமிழைப்போல் ஒட்டுச் சொற்களுடையதாகவிருத்தல், பழைய மாயா மக்களின் சிற்பக் கலையும், உருவ அமைப்புக்களும் தென் இந்தியாவோடு தொடர்புடையனவாகக் காணப்படுதல், இன்கா மக்களின் நாகரிகப் பகுதிகள் சில பழந்தமிழர் நாகரிகத்தோடு ஒத்திருத்தல் போன்ற சில அடையாளங்கள் மிகப் பழங்காலத்தில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் தொடர்பிருந்ததை விளக்குகின்றன. கொலராடோவில் காணப்பட்ட சிவன் வழிபாடு இக் கருத்தை மேலும் வலியுறுத்துகின்றது. சிவனென்னும் பெயருடைய இடப்பெயர்கள் பிறவுமுண்டு. இப் பெயரொற்றுமைகள் தற்செயலாக ஏற்பட்டவையல்ல. சிவ வழிபாடு மொகஞ்சதரோ காலத்தில் (கி.மு.3500) மிகப் பிரபலம் பெற்றிருந்தது.1
தமிழ்நாட்டு மக்கள் எவ் வடிவில் சிவனை வழிபட்டார்களோ அவ் வடிவில் ஆசியா மைனர் மக்களும் மேற்கு ஆசிய மக்களும் சிவனை வழிபட்டார்கள். ஆசியா மைனரில் இடபத்தின் மீது நின்று கையில் இடியேற்றைப் பிடித்துக் கொண்டு நிற்பதாகிய உருவச்சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இடியேறென்பது கீழும் மேலும் மூன்று வேல் (முத்தலைவேல்) உள்ள ஆயுதம். இடபத்தின் மேல் நின்று கொண்டு அம்பெய்யும் வடிவுள்ள இன்னொரு உருவச் சிலையும் கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. இடபத்திலிருக்கும் தந்தைக் கடவுளும், தந்தைக்கட வுளுக்குப் பக்கத்தில் சிங்கவாகனத்தின் மீதிருக்கும் தாய்க்கடவுளும் பொறிக்கப்பட்ட நாணயமொன்றும் அங்குக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக் கடவுளின் உடைகள் நம்நாட்டுச் சிவனின் உடைபோலல்லாது வேறு வகையிலுள்ளது. ஆசியா மைனர் மக்கள் கிரீத்துத் தீவினின்றும் சென்று குடியேறியவர்களென பழஞ்சரித்திரக்காரர் கூறுவர். கிரீத்து நாட்டு மக்கள் தமிலி எனப்பட்டார்களென எரதோதசு (கி.மு.470) என்னும் பழைய வரலாற்று ஆசிரியர் கூறியுள்ளார். இலைசியாவில் (ஆசியா மைனர்) தமிலி என்னும் பெயர் கல்வெட்டுகளிற் காணப்படுகிறது. கிரீத்து மக்களும் இலைசிய மக்களும் தமிழ்நாட்டினின்றும் சென்றவர்க ளெனக் கருதப்படுவர். சிவ வழிபாடு தமிழ் நாட்டினின்றுஞ் சென்று மேற்கு ஆசிய நாடுகளிற் பரவியதென இப்பொழுது அறியப்படுகின்றது.
1சிரியா நாட்டில் இடபத்தின் மீது நின்று கீழும் மேலும் முத்தலை களுள்ள படைக்கலத்தைப் பிடிக்கும் உருவம் வரையப்பட்ட செப்புத் தகடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இடபத்தின் நெற்றியில் பூமாலை காணப்படுகிறது. இவ்விடபமும் சிவன் வடிவமும், தமிழ்நாட்டு இடபத் தையும் சிவன் வடிவத்தையும் பெரிதும் ஒத்துள்ளன. இவ்வழிபாடு சிரியா விலிருந்து உரோமைப் போர்வீரர்களால் உரோமுக்கும், அங்கிருந்து இங்கிலாந்துக்கும் கொண்டு போகப்பட்டதென்றும், பாடி வீடுகளில் உரோமைப் போர்வீரர் இக் கடவுளை வழிபட்டனரெனவும் ஆராய்ச்சி யாளர் கூறியுள்ளனர். இடியேற்றைப் பிடித்துக்கொண்டு இடபத்தின்மீது நிற்கும் கடவுளின் உருவம் பாபிலோனிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிரேக்கர் வழிபட்ட சியஸ் (Zeus) கடவுள் நெற்றிக் கண்ணுடையவராயும், ஒலிம்பஸ் மலையில் உறைபவராகவும், இடியேற்றை கையிற் பிடித்தவ ராகவுமிருந்தார். பின்லாந்து மக்களின் காத்தற்கடவுள் சிவன் எனப் பட்டது.
சிவலிங்கம்1
ஞாயிற்று வழிபாட்டைப் போலவே இலிங்க வழிபாடும் மிகப் பழமையுடையது. பழங்கால மக்கள் ஞாயிற்றை மலைமுகடுகளிற் கண்டு வழிபட்டார்கள். மலைகள் புனித இடங்களாகவும் கடவுளரின் இருப் பிடங்களாகவும் கொள்ளப்பட்டன. கிரேக்க தெய்வங்களின் உறைவிடம் ஒலிம்பஸ் மலை; இந்துக்களின் கடவுளுக்கு உறைவிடம் மேரு; இமயம் முதலிய மலைகள் எல்லாக் குன்றுகளும் முருகக் கடவுளுக்கு உறைவிடம். இதனைக் குன்றுதோறாடல் எனத் திருமுருகாற்றுப்படை கூறுதலா லறிக. மெசபெதேமி யாவில் வாழ்ந்த மக்கள் ஞாயிற்றுக் கடவுளைப் பால் (பகல்) என்னும் பெயரிட்டு வழிபட்டார்கள். ஆகவே அந் நாட்டுக்குப் பாபிலோன் என்னும் பெயருண்டாயிற்று. பகல் வழிபாடு பாலஸ்தீனத் தில் பெருஞ்செல்வாக்குப் பெற்றிருந்ததை விவிலிய வேதம் குறிப்பிடு கின்றது.
மலைகளில்லாத நாடுகளில் வாழ்ந்த மக்கள் செய்குன்றுகளையும் உயர்ந்த கோபுரங்களையும் அமைத்து அவைமீது பகற்கடவுளை வழி பட்டார்கள். பின்னர் செய்குன்றுகளுக்கும் கோபுரங்களுக்கும் பதிலாக, அடிநிமிர்ந்து நுனிகுவிந்த கற்றூண்கள் நட்டு வழிபடப்பட்டன. இவ்வாறு கற்றூண்களை நட்டு வழிபடும் முறை மனிதன் கற்காலத்தில் இருந்த போதே வழக்கிலிருந்தது. இவ்வகை இலிங்கங்கள் மொகஞ்சதரோ விலும் சிவாலிக் மலையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வருட் குறி இலிங்கம் எனப்பட்டது. இலிங்கம் என்பதற்கு இலங்குவது என்பது பொருள். இலங்குவதாகிய ஞாயிற்றின் அடையாளமாக அமைந்தமை யின் இது இலிங்கம் என்னும் பெயர்பெற்றது. இலிங்கம் ஞாயிற்றின் கதிரைக் குறிக்கும் எனவும் சிலர் கூறியுள்ளனர். வெவ்வேறு வகைகளில் கற்றூண் வழிபாடுகள் தோன்றி, ஞாயிற்று வழிபாட்டோடு சம்பந்தப் பட்ட இலிங்க வழிபாட்டோடு கலந்தன. இக்காரணத்தினாலேயே இலிங்க வழிபாட்டுக்கு வெவ்வேறு காரணங்கள் அல்லது கருத்துக்கள் கூறப்படுகின்றன.
இலிங்க வழிபாடு இங்கிலாந்து தொடக்கமும் யப்பான் இறுதி யாகவும், அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியக்கடல் தீவுகள், பசிபிக்கடல் தீவுகளிலும் காணப்பட்டது. இலிங்க வழிபாட்டைக் குறித்து ஆங்கில மொழியில் தனி நூல்கள் எழுதப்பட்டுள்ளன. அவைகளில் உலகின் எல்லாப் பாகங்களிலும் எவ்வகைகளில் இலிங்க வழிபாடு செய்யப்பட்ட தென்பதன் விபரங்கள் காணப்படுகின்றன. இலிங்க வழிபாட்டினராய் நாகரிகமடைந்து உலகின் பலபாகங்களில் வாழ்ந்த மக்கள் எல்லோரும் ஒரே குலமுறையிலுள்ளவர்களா யிருந்தார்களென்பது சில ஆராய்ச்சி யாளரின் கருத்தாகும்.
இலிங்க வழிபாடு எங்கு காணப்பட்டதோ அங்கெல்லாம் பாம்பு வழிபாடும் காணப்பட்டது. பாம்பு வழிபாடு எப்படித் தோன்றிற்றென்பது ஆராய்ச்சிக் கெட்டவில்லை. இதுபோலவே, இலிங்க வழிபாட்டுக்கும் பாம்பு வழிபாட்டுக்குமுள்ள தொடர்பும் அறியமுடியாமலிருக்கின்றது.
ஞாயிற்றுக் கடவுளைக் குறிக்கும் தூண்கள் மரங்களின் கீழும், திறந்த வெளிகளிலும், சோலைகளிலும் நட்டு வழிபடப்பட்டன. அக் காலத்தில் கோயில்கள் கட்டப்படவில்லை. வழிபடுவோர் நீருண்ணும் பொருட்டும், நீரைக் கொண்டு கால், கை, உடல் முதலியவற்றைச் சுத்தஞ் செய்யும் பொருட்டும் இலிங்கத்துக்கு அயலில் கிணறு அகழப்பட்டது. இலிங்கம், மரம், கிணறு என்னும் மூன்றுமுள்ளது வழிபாட்டிடமாக விருந்தது. வன்னியும், கிணறும், இலிங்கமும் அழைத்த திருவிளையாடற் கதை பழைய காலத்தில் இவ்வகை வழிபாட்டிடங்கள் காணப்பட்டன வென்பதை விளக்கும். இலிங்கத்தைச் சுற்றிக் கட்டடம் அமைக்கப்பட்ட போது மரம் தலத்துக்குரிய மரமாகக் கொள்ளப்பட்டது. தென்னிந்தியா விலுள்ள எல்லாப் பழைய கோயில்களுக்கும் ஒவ்வோர் தலமரம் உண்டு. மறைக்காடு, தில்லைவனம், திருவாலங்காடு, திருவெண்காடு முதலிய பெயர்கள் இலிங்கங்கள் காடுகளிலும் தோப்புகளிலும் நிறுத்தப்பட் டிருந்தமையைத் தெரிவிக்கின்றன.
பலஸ்தீன் நாட்டு மக்கள் இலிங்கங்களைப் பெத்தல் என வழங் கினர். அவை வீதிகளின் ஓரங்களில் நிறுத்தப்பட்டிருந்தன. வழிபடுவோர் இலிங்கத்தின் மீது எண்ணெயை ஊற்றி வழிபட்டனர். இலிங்கவடிவான சிறிய கற்கள் தாயத்துக்களாகவும் அணியப்பட்டன. வீரசைவர் இலிங்க தாரணம் செய்து கொள்கின்றனர். வீரசைவமென்பது வைதீக மதமும் சைவமதமும் கலந்து வைதீக சைவம் தோன்றுவதன் முன் இருந்த சைவ சமயக் கொள்கைகளைக் கடைப்பிடித்துவரும் மதம் எனப்படுகின்றது. வைதீக மதத்துக்கு மடங்காமல் அல்லது வளைந்து கொடாமல் இருந் தமையின் இது வீரசைவமெனப் பட்டதென அறிஞர் கூறுகின்றனர். வீர சைவர் இலிங்கங்கட்டிகள் எனவும் அறியப்படுவர்.
திங்கள் வணக்கமும் தீ வணக்கமும்
ஞாயிற்று வணக்கம் தோன்றி வளர்ந்தபின் ஒளியுடைப் பொரு ளாகிய திங்களையும் மக்கள் வழிபட்டார்கள். திங்களை வழிபட்ட மக்கள் திங்களின் அருட்குறியாக மரத்தூணை இலிங்கத்துக்கு (கற்றூணுக்கு) அருகில் நட்டு வழிபட்டார்கள். இவ்வருட் குறிகளின் தொடக்கங்கள் மறக்கப்பட்ட காலத்தில் அவர்கள் ஞாயிற்றைத் தந்தைக் கடவுளாகவும், திங்களைத் தாய்க்கடவுளாகவும் கொண்டு வழிபட்டார்கள். மேற்கு ஆசிய நாடுகளில் திங்கள் பெண் தெய்வமாகக் கொள்ளப்பட்டது. இந்திய மக்கள் இதனை ஆண் தெய்வமாகக் கொண்டார்கள். திங்கள் வழிபாடு மேற்கு ஆசிய நாடுகளில் அஸ்தரெத் என்னும் பெண் தெய்வ வழிபாடாகச் சோலைகளில் நடைபெற்றது. இத் தெய்வத்தைப் பெண் பூசாரிகளே மேற்பார்த்தார்கள்.
இதன்பின் ஒளியுடைப் பொருளாகிய தீ வழிபடப்பட்டது. நிம்ரொட் அரசன் காலத்தில் தீ வழிபாடு தொடங்கியதென விவிலிய வேதத்தின் பழைய ஏற்பாடு கூறுகின்றது. தீ வழிபாடு இன்றும் பார சீகத்தில் இருந்து வருகின்றது. இந்திய ஆரியர் தீயை அக்கினி என்னும் பெருந்தெய்வமாக வழிபட்டனர். ஞாயிறு, திங்கள், தீ என்பன தீ ஒன்று வாயிலாகவும் வழிபடப்பட்டன. மூன்று ஒளியுடைப் பொருள்களையும் குறிக்க முறையே வட்டம், பிறை முக்கோண வடிவான குண்டங்களை அமைத்துத் தீ மூட்டி அவை வழிபடப்பட்டன.
ஞாயிற்றுக் கடவுளும் திங்கட்கடவுளும் ஆணும் பெண்ணும் என்னும் கொள்கை எழுந்தபின் அவை கணவனும் மனைவியும் என்னும் நம்பிக்கை மேற்கு நாடுகளில் எழுந்தது. இவ்வகையில் சிவலிங்கங்கள், கடவுளுக்கு ஆண் தன்மை பெண் தன்மை என்னும் தன்மைகள் உண் டென்பதை உணர்த்துகின்றன வென்னும் கருத்து எழுந்தது.
தாய்க்கடவுள் வழிபாடு
ஞாயிற்று வணக்கத்தையும் இலிங்க வணக்கத்தையும் போலவே தாய்க்கடவுள் வணக்கமும் பழமையுடையது. இன்று தந்தை குடும்பத் துக்குத் தலைவனாயிருப்பதுபோல், தாய் குடும்பத்துக்குத் தலைவியாக ஒரு காலத்திலிருந்தாள். அக் காலத்தில் தந்தையின் முதன்மை உண் டாகவில்லை. பிள்ளைகள் தாய்வழியாக அறியப்பட்டார்கள். தாயே சொத்துக்குரியவளாக இருந்தாள். சொத்து, தாய் வழியாகப் பிள்ளை களை அடைந்தது. பிள்ளைகள் தாயைச் சூழ்ந்து இருந்தார்கள். அவர்கள் தாயே எல்லா வல்லமையும் உடையவள் என நினைத்தார்கள். ஆகவே, அவர்கள் கடவுளைத் தாய்வடிவில் வழிபட்டார்கள்.
தாய்க்கடவுள் வீரதெய்வமாக இருந்தது. செல்வம், கல்வி முதலிய வற்றுக்கு தாய்க்கடவுளரே தெய்வங்களாகக் கொள்ளப்பட்டனர். பாரதப் போரில் வீரதெய்வமாகிய தாய்க்கடவுளுக்குக் களப்பலி கொடுக்கப்பட்ட தென மாபாரதம் கூறுகின்றது. போருக்குச் செல்லும் போது படைவீரர் வீர தெய்வமாகிய தாய்க்கடவுளின் வடிவமெழுதிய கொடியை முன்னே எடுத்துச் சென்றனர். இதனைத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. தமிழ்மக்கள் தாய்க்கடவுளைக் காடுகிழாள், காடு கெழுசெல்வி, கொற்றவை, காளி முதலிய பெயர்கள் கொடுத்து வழிபட் டார்கள். காளி என்பதற்குக் கறுத்தவள் அல்லது இருண்டவளென்பது பொருள்.
காடுகிழாள் வழிபாடு மக்கள் மிகத் தாழ்நிலையில் வேடர்களாக அலைந்து கொண்டிருந்த காலத்தில் உண்டாயிற்று. காடுகிழாள் பாலை நிலத் தெய்வம். இவ் வழிபாடு நரபலி, விலங்குப் பலிகளோடு நடை பெற்றது. இவ் வழிபாட்டின் தன்மைகளைப் பரணி நூல்கள் கூறுகின் றன. மக்கள் படிப்படியே திருத்தமடைந்து வாழ்க்கையிற் பண்பட்டுவந்த காலங்களில் இவ்வழிபாட்டின் பயங்கரத் தன்மைகள் படிப்படியே குறைவடைந்து வந்தன. சிலப்பதிகாரத்தில் காடுகிழாள் வழிபாடு கூறப் பட்டுள்ளது. அதில் இவ்வழிபாட்டைப் பற்றிய விபரம் பயங்கரமாகத் தோன்றவில்லை.
விலங்குகளில் வீரமுள்ள சிங்கம், தாய்க்கடவுளின் வாகனமாக்கப் பட்டது. அவள் வாள், வேல், கதை போன்ற ஆயுதங்களைக் கையில் பிடித் திருந்தாள். அவள் போர்களில் அசுரரைக் கொன்றதாகப் பழங்கதைகள் வழங்குகின்றன. அப் பழங்கதைகளின் நினைவாக மான் அம்பு என்னும் விழா இன்றும் தமிழ்நாட்டுக் கோயில்களில் நடைபெறுகின்றது. தசரா என்பதும் இதுவே. தமிழ்நாட்டில் காணப்படுவதுபோலவே மத்திய தரைக்கடலைச் சூழ்ந்த நாடுகளிலும் இவ்வழிபாடு பரவியிருந்தது. கிரீத்து, எகிப்து, மெசபெதேமியா, ஆசியா மைனர் முதலிய நாடுகளில் சிங்க வாகனியாய் ஆயுதந்தாங்கிய தாய்க்கடவுளின் உருவங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
மக்களின் குலமுறை, நாகரிகம், மொழி, எழுத்து முதலிய ஆராய்ச்சி களால், மத்தியதரை நாடுகளில் வாழ்ந்த மக்களும் தமிழ் மக்களும் ஒரே இனத்தவர்களென ஆராய்ச்சியாளர் அனுமானித்திருந்தார்கள். அந் நாடுகளில் தாய்க் கடவுளின் வழிபாடு தென்னிந்தியாவில் காணப்பட்டது போல இருந்ததென்பது, மேலும் அவர்களின் அனுமானங்களை வலி செய்வதாகவுள்ளது. எகிப்து, மெசபெதேமியா, ஆசியா மைனர், கிரீத்து, முதலிய நாடுகளில் வாழ்ந்த மக்கள் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்களெனக் கருதப்படுவார்கள். இந் நாடுகளில் ஒரு காலத்தில் தாயாட்சி இருந்ததென் பதற்கு வரலாற்றுச் சான்றுகளுமுள்ளன. இன்று இந்திய மக்கள் மலாயா, தென்னாப்பிரிக்கா போன்ற தூரநாடுகளிற் சென்று குடியேறியிருப்பது போலவே, முற்காலத் தமிழரும் எகிப்து, ஆசியாமைனர், மெசபெ தேமியா முதலிய நாடுகளில் சென்று குடியேறியிருந்தார்கள். குடியேறிய மக்கள் தம்மோடு சமயத்தையும் கொண்டு சென்றார்கள்.
மக்களின் அறிவு பண்பட்ட காலத்தில் தாய்க்கடவுள் அன்பு மயமான கடவுளாகக் கொள்ளப்பட்டது. காடு கிழாள் உமாதேவியார் என்னும் தெய்வமாகக் கொள்ளப்பட்டது. முருகக் கடவுளைக் “கொற் றவை சிறுவன்” எனத் திருமுருகாற்றுப்படை கூறுகின்றது. கடவுளுக்குக் குணங்குறிகளில்லை என்றும், அவருக்கு ஆண் தன்மை, பெண் தன்மை என்னும் இருவகைச் சக்திகளுண்டென்றும் தத்துவக் கருத்துக்கள் எழுந்தன. அப்பொழுது தாய்க் கடவுள் ஆண் வடிவாகக் கொள்ளப் பட்ட கடவுளின் பாதியாகக் கொள்ளப்பட்டது. பின் சக்தியும் சிவமும் பூவும் மணமும் போன்று ஒன்றைவிட்டு ஒன்றைப் பிரிக்க முடியாதவை என்றும் “சிவமின்றேல் சக்தியில்லை” “சக்தியின்றேல் சிவமில்லை” என்றும் உயர்ந்த கருத்துக்கள் எழுந்தன.
இந்தியாவில் தாய்க்கடவுள் வழிபாடு அல்லது சக்தி வழிபாடு மிகப் பரவி முக்கியம் பெற்றிருந்தது. அக் காலத்தில் சக்தி வழிபாடு களைக் கூறும் சாக்த ஆகமங்கள் எழுந்தன. சாக்த ஆகமங்கள் 77 உண்டு. அவை மற்றெல்லா வழிபாடுகளிலும் பார்க்கச் சக்தி வழிபாடே சிறந்த தெனக் கூறும்.
ஆண் தன்மை, பெண் தன்மை என்னும் இரு தன்மைகள் கடவுளுக்கு உண்டென்னும் கருத்து இப்போது சிவலிங்கத்துக்குக் கூறப் பட்டது. இதனைப் பீடமும் இலிங்கமுமாகவுள்ள சிவலிங்க வடிவங்கள் உணர்த்துகின்றன.
மால் வழிபாடு
சிவ வழிபாட்டை ஒப்ப மால் வழிபாடும் மிகப் பழமையுடையது. சிவ வழிபாடும் மால் வழிபாடும் ஒரே தொடக்கத்தை உடையன. மேற்கு ஆசிய மக்களைப் போலவே தமிழ் மக்களும் கடவுளுக்கு எல் எனும் பெயர் கொடுத்து வணங்கினர். இன்றும் தமிழ்நாட்டில் எல்லப்பன், எல்லம்மா முதலிய பெயர்கள் வழங்குகின்றன. மால் வழிபாடு எல் வழிபாடே யாகும். மா-எல் என்பது மால் என வழங்குகின்றது. மா என்பது பெருமையைக் குறிக்க எல் என்பதன் முன் இடப்பட்டது. மா என்பது கருமையையு முணர்த்தும்.
ஞாயிற்று வணக்கத்தோடு பாம்பு, சங்கு, முத்துத் தாமரை, சுவத்திகம் முதலியன தொடர்பு பெற்றிருந்தன. திருமால் பாம்பின் மீது பள்ளி கொள்வதாகப் பழங்கதை வழங்குகின்றது. திருமால் கையில் இருப்பது சங்கு. சங்கைச் சமய சின்னங்களுள் ஒன்றாகக் கொள்ளும் வழக்கம் ஞாயிற்றுக் கடவுளை வணங்கிய எல்லா மக்களிடையும் இருந்தது. முற்காலத்தில் கிறித்துவ கோயில்களிலும், பௌத்தர் சைத்தியங் களிலும் சங்கு ஒலிக்கப்பட்டது. சிவபெருமானின் காதுகளிலிருப்பது “சங்க வெண்குழை” திருமாலின் கையிலிருக்கும் சக்கரமும் ஞாயிற்றைக் குறிக்கின்றது. சங்கு எப்படிச் சிறந்த சமய சின்னமாகக் கொள்ளப் பட்டதோ அப்படியே முத்தும் சமய சின்னமாகக் கொள்ளப்பட்டது. கடவுளின் உருவங்களுக்கு முத்துமாலை அணியப்பட்டது. அரசரும் பெரு மக்களும் முத்துமாலை அணிந்தார்கள். திருமாலின் கழுத்திலிருப்பது முத்து மாலை. முத்து விலையேறப் பெற்றதாதலின் முத்துக்குப் பதில் உருத்திராக்கம் அணியும் வழக்கம் பிற்காலத்தில் உண்டாயிற்று. திருமால் வணக்கமும் சிவ வணக்கமும் வேறானவையல்ல என்னும் கருத்து பழங் காலம் முதல் இருந்து வருகின்றது. “அரியும் சிவனும் ஒன்று” என்னும் முதுமொழி இதனை விளக்கும். “அரியலாற் றேவியில்லை ஐயாற னார்க்கே” என வரும் தேவாரத்தால் திருமால் வழிபாடு ஒருகாலத்தில் தாய்க்கடவுள் வழிபாடாக இருந்ததோவெனக் கருதக்கிடக்கின்றது.
1திருமால் வழிபாடு முல்லைநில மக்களுக்குரியதாகத் தொல் காப்பியங் கூறுகின்றது. பிற்காலத்தில் விட்டுணு வழிபாடு, கண்ணன் வழி பாடு, இராமர் வழிபாடு முதலியன திருமால் வழிபாட்டோடு கலந்தன. ஆகவே கண்ணன், இராமர் முதலியவர்களின் பிறப்புகள் திருமாலின் அவதாரங்களாகக் கொள்ளப்பட்டன. கிறித்து பிறப்பதற்கு முன் கண்ணன் வழிபாடு மிகப் புகழ் பெற்றிருந்தது. கி.மு. இரண்டாம் நூற் றாண்டில் தமிழ் நாட்டினின்றும் சென்று ஆர்மேனியாவிற் குடியேறிய தமிழர் அங்கு கிருட்டிண, பலதேவ வழிபாட்டை நாட்டியிருந்
தார்கள்.
விட்டுணு வழிபாடென்பது வடநாட்டு ஆரிய மக்களிடையே தோன்றிய ஞாயிற்று வழிபாடு. பிற்காலத்தில் இவ் வழிபாடு திருமால் வழிபாட்டோடு இணைந்தது. சிலப்பதிகாரத்தில் கூறப்படும் திருமால் வழிபாடு கண்ணன் வழிபாடாகவுள்ளது. திருமாலின் ஊர்தி பருந்து. எகிப்திய மக்கள் பருந்தை ஞாயிற்றுக் கடவுளின் சின்னமாகக் கொண்டு வழிபட்டார்கள்.
முருக வழிபாடு
சிவ வழிபாட்டைப்போலவே முருக வழிபாடும் மிகப் பழமை யுடையது. மொகஞ்சதரோவில் சிவ வழிபாடு இருந்ததைக் காட்டும் சான்றுகள் காணப்பட்டதுபோல முருக வழிபாட்டைக் காட்டும் சான்றுகள் காணப்படவில்லை. மொகஞ்சதரோ முத்திரைகளில் பொறிக் கப்பட்டிருந்த எழுத்துக்களின் வாசிப்பொன்றில் முருகன் என்னும் பெயர் காணப்படுவதாக ஹெரஸ் பாதிரியார் காட்டியுள்ளார்.
முருக வழிபாடு தொடக்கத்தில் கதிரவன் வழிபாடாக இருந்தது. இலங்கையிலுள்ள முருகன் கோயில் கதிர்காமம் எனப்படும். கதிர்க்கடவு ளின் வழிபாட்டுக்குரிய இடம் கதிர்காமம் எனப்பட்டது. சிவ வழிபாடும் முருக வழிபாடும் ஒன்று எனவே மக்களின் நம்பிக்கை இருந்து வருகிறது. சிவ வழிபாடு தொடக்கத்தில் சிவலிங்க வழிபாடாகவிருந்தது. முருக வழிபாடும் இவ்வாறே இருந்தது. சிவன் என்பதற்குச் சிவந்தவன் என்னும் பொருள் இருப்பது போலவே முருகனைக் குறிக்கும் சேய், சேயோன், செவ்வேள் என்னும் பழைய பெயர்கள் சிவந்தவன் என்றும் பொரு ளுடையன.
சிவவழிபாடு உலகின் பல்வேறு பாகங்களில் காணப்பட்டது போலவே முருக வழிபாடும் பலஸ்தீன நாட்டில் காணப்பட்டது. அங்கு சிவன் என்னும் கடவுள் பால் (பகல்) என்னும் பெயரில் வழிபடப் பட்டார். பாற் கடவுளுக்கு இரண்டு வடிவுகளுண்டு. ஒன்று முதியபால், மற்றது இளம்பால். இவ்விரண்டு வடிவங்களும் முதிய தோற்றமும் இளந் தோற்றமுமாக இருந்தன. வடிவங்கள் வெவ்வேறாக இருந்தபோதும் இரண்டும் ஒரு கடவுளின் தோற்றங்களாகவே கொள்ளப்பட்டன. நீல வானிலே கடலில் தோன்றும் ஞாயிற்றின் தோற்றம் மயில் ஊர்தியில் காட்சியளிக்கும் குழந்தை வடிவான கடவுளாக உருவகப்படுத்தப்பட்டது. பழங்காலத்தில் மக்கள் எவ்வாறு முருகக் கடவுளை வழிபட்டார்களென் பதைத் திருமுருகாற்றுப்படை என்னும் நூல் நன்கு கூறுகின்றது. திருமுருகாற்றுப்படை, பரிபாடல் முதலிய நூல்கள் முருகக் கடவுளுக்கு ஆறு திருமுகங்களிருப்பதாகக் கூறுகின்றன. முருகக்கடவுள் வீரதெய்வ மாகக் கூறப்படுகின்றார். சங்ககால மக்கள் முருகக் கடவுளை மயிலூர்தி யுடையவராகவே வழிபட்டார்களென்பது “மணி மயிலுயரிய மாறா வென்றிப் - பிணிமுகவூர்தி ஒண் செய்யோனும்” (56) என்னும் புற நானூற்றுப் பாடலால் தெரியவருகின்றது. ஸ்கந்தர், கார்த்திகேயர், சுப்பிரமணியர், குகன் முதலிய பெயர்கள் சங்க இலக்கியங்களில் காணப் படவில்லை. இப் பெயர்கள் வடநாட்டினின்றும் வந்து பிற்காலங்களில் தமிழ் நாட்டில் வழங்கின. கந்தன் என்பதே ஸ்கந்த என வடமொழியில் உச்சரிப்பு வேறுபட்டது. கந்தனென்பதற்குக் கந்திலுறைபவன் அல்லது கந்தில் வழிபடப்படுபவன் என்னும் பொருளுண்டு.
மும்மூர்த்திகள்
தொடக்கத்தில் தாய்க் கடவுள், தந்தைக் கடவுள், குமாரக் கடவுள் என்னும் மூவருமே மும்மூர்த்திகள் எனப்பட்டார்கள். இவ்வழக்கே மத்திய தரைக்கடலைச் சூழ்ந்த நாடுகளிலுமிருந்து வந்தது. பிரமா, விட்டுணு, உருத்திரன் என்னும் தெய்வங்கள் ஆரிய மக்களிடையே வடநாட்டில் தோன்றியவை. பிராமண மதத்தினர் தென்னாட்டுக்கு வந்து தமது மதக் கொள்கைகளைப் பரப்பிய காலத்தில் பிரமா, விட்டுணு, உருத்திரன் என்னும் தெய்வங்கள் மும்மூர்த்திகளாயின. உருத்திர வணக்க மும் சிவ வணக்கமும் வெவ்வேறு தொடக்கமுடையனவாயினும் பிற் காலத்தில் இரண்டும் ஒன்றாகக் கொள்ளப்பட்டன.1 சிவவழிபாட்டினர் சிவன் மும்மூர்த்திகளுக்கு வேறானவர் எனக் கொண்டு வந்தனர். அவர்கள் சிவனை “மூவர்கோன்” என்பர்.
கோயிலும் கோயிற்கிரியையும்
மக்கள் அருள்தறி, தந்தை, தாய் என்னும் வடிவுகளில் கடவுளை வழிபட்டு வந்தார்கள். இவற்றைச் சுற்றிக் கட்டடங்களெழுந்தன. கடவுளுக்கு இருப்பிடமாகிய கட்டடம் அரசனுடைய வீடு போன்ற அமைப்பில் எடுக்கப்பட்டது. கோயிலென்பது அரசன் இருக்கும் வீட்டையும் கடவுள் இருக்கும் வீட்டையும் குறிக்கும். மக்கள் கீழ்நிலையி லிருந்து மேல்நிலை அடைந்த போது கோயிலும் பெரியதாக எடுக்கப் பட்டது.
அரசன் கடவுளின் அவதாரம் எனக் கருதப்பட்ட காலத்து அரசனே தலைமைக் குருவாக இருந்தான். பின் அரசனுக்குப் பதில் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கோயிற் குருக்களாக இருந்தார்கள். இக் காரணத்தினாலேயே குருமாருக்கு முற்காலங்களில் அதிக மதிப்பு உண்டாகியிருந்தது. பிற்காலங்களில் அரசருக்கும் அரச குடும்பத்தினருக் கும் பதில் உயர் குடும்பங்களிலுள்ளவர்கள் கோயிற் குருக்களாக நியமிக் கப்பட்டார்கள். தந்தை புரிந்த தொழிலை மகன் புரிதல் என்னும் வகையில் குரு வகுப்பினர் பெருகினர். இவர்களல்லாது ஆங்காங்கு நிறுவப்பட்டிருந்த அருட் குறிகளை மேற்பார்த்த பலதிற வகுப்பினரும் பூசாரிக் குடும்பங்களாகப் பெருகினர்.
அரண்மனையில் அரசனும் அரசனைச் சூழ்ந்த அவனுடைய அமைச்சர், சேனாபதியர், தலைமை அதிகாரிகள், உறவினர் எவ்வாறு வாழ்ந்தார்களோ அவ்வாறே கோயிலிலும் பரிவார தெய்வங்கள் இருந்தன. அரசனுடைய அரண்மனையைச் சூழ்ந்து மதிலும் அகழும் இருந்தது போலக் கோயிலுக்கும் மதிலும் அகழும் இருந்தன. கோயில் ஒரு கோட்டையின் அமைப்பு உடையது. தஞ்சாவூர்ப் பெரிய கோயில் இதற்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறது. தென்னிந்தியா, அசீரியா, எகிப்து, மெசபெதேமியா முதலிய நாடுகளில் கோயில்களின் அமைப்பு ஒரே வகையாக இருந்தது. எகிப்திலே கர்நாக் என்னுமிடத்தில் பழங் காலக் கோயில்கள் காணப்படுகின்றன. இக் கோயில்களுக்குத் தென்னிந்திய கோயில்களுக்குக் காணப்படுவது போன்று வாயில்கள், கோபுரங்கள் காணப்படுகின்றன. கோபுரங்களில் அடிமுதல் நுனிவரை சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தென்னிந்திய சிற்பக்கலைக்கும் எகிப்திய கட்டடக் கலைக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதைச் சிற்பக் கலை ஆராய்ச்சியாளர் குறிப்பிட்டுள்ளனர். எகிப்தியர் தாமரைப் பூவைத் தெய்வங்களுக்குரியதாகக் கொண்டனர். கட்டடத் தூண்களில் தாமரை மொட்டின் வடிவங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மெசபெதேமியா விலும் அசீரியாவிலுமுள்ள கோயிலமைப்பு தென்னிந்தியக் கோயி லமைப்பை ஒத்துள்ளது. பலஸ்தீன நாட்டு அரசனாகிய சாலமன் கட்டிய கோயில் தென்னிந்தியக் கோயில் போன்றதே. கோயில்கள் சூரிய னுதிக்கும் திசையை நோக்கி நின்றன.
கோயிற் கிரியைகள் என்பன அரசனுக்கு அவனுடைய பணியாளர் காலை முதல் அவன் நித்திரைக்குச் செல்லும் வரை என்னென்ன உப சாரங்களைச் செய்கிறார்களோ அவற்றை எல்லாம் செய்து காட்டுவ தாகும். கிறித்துவ வேதத்திலே சாலமனின் கோயிலில் செய்யப்பட்ட கிரியைகளை நோக்கினால் அக் கிரியைகள் பெரும்பாலும் தென் னிந்தியக் கோயில்களில் நடைபெறும் கிரியைகளை ஒத்திருத்தலைக் காணலாம்.
கோயில் அமைக்கவேண்டிய விதிகள், அளவுகள், கிரியைகள் என்பவற்றைக் கடவுள் அருளிச் செய்தார் என்னும் நம்பிக்கை தென் னிந்தியாவிலிருப்பது போலவே மெசபெதேமியாவிலு மிருந்தது. இவ் விதிகளை உண்டாக்கினோர் உண்மையில் கோயிற் குருமார்களே ஆவர்.
தமிழ் நாட்டினின்றுஞ் சென்று எகிப்து மெசபெதேமியா முதலிய நாடுகளிற் குடியேறிய மக்களே கோயிலெடுக்கும் விதிகளையும் சமயக் கிரியைகளையும் கொண்டு சென்று அந் நாடுகளில் பரப்பினார்களென்ப தற்குரிய சான்றுகள் மேல்நாட்டாராய்ச்சியாளர் செய்துள்ள ஆராய்ச்சி களில் கிடைக்கின்றன.
ஆகமங்கள்
சமயத்துக்குக் கோயில்களும் கோயில் கிரியைகளும் முதன்மை உடையனவாக இருந்தன. கோயிலமைக்க வேண்டிய மாதிரி, நீளம், அகலம், உயரம் போன்றனவும் கோயிற் கிரியை முறைகளும் தலைமுறை தலைமுறையாகக் காப்பாற்றப்பட்டு வந்தன. இவற்றை அறிந்திருந்த வர்கள் கோயிற் குருமார்களாக இருந்தார்கள். இவையும் இவை போன்று சமயத்தோடு தொடர்பு பெற்றிருந்த பல செய்திகளும் நீண்ட காலம் தலைமுறைகளாகத் தொடர்ந்து வந்தன; இவற்றின் தொகுப்பே ஆதியில் ஆகமமாக இருந்து வந்தது. எகிப்து, மெசபெதேமியா, இந்தியா முதலிய நாடுகளில் ஆகமக் கருத்துக்கள் ஒரே வகையாக இருந்தன.
ஆரிய மக்கள் இந்திய நாட்டை வந்தடைவதன் முன் ஆகமக் கொள்கைகள் இந்தியாவிலிருந்தன.1 தமிழ் மக்கள் கடவுளைக் கோயில் களில் வழிபட்டார்கள். ஆரிய மக்கள் கடவுளைக் கோயில்களில் வழிபட வில்லை. அவர்கள் யாகங்கள் புரிந்து அவற்றில் தேவர்களுக்கு உணவு அளித்து அவர்களை மகிழ்வித்தார்கள். உயிர்களின் மறுபிறப்புக் கொள்கையைப் பற்றி ஆரியர் அறிந்திருக்கவில்லை என்றும், அவர்கள் மறுபிறப்பைப் பற்றி அங்கு வாழ்ந்து கொண்டிருந்த மக்களிடத்தில் பிற்காலங்களில் அறிந்து கொண்டார்கள் என்றும் வேத ஆராய்ச்சிக்காரர் கூறுகின்றனர். ஆகவே கோயில், கோயிற் கிரியைகள் சம்பந்தமான அறிவும், உயிர், உலகம், கடவுள் என்னும் முப்பொருள்களின் ஆராய்ச்சி யும் தமிழர்களுடையனவாகும்.
தமிழரிடத்து வழங்கிய தத்துவ ஞானங்கள் உபநிடதங்கள் (உபதேசங்கள்) என்னும் பெயர்களுடன் பிற்காலங்களில் வெளியிடப் பட்டன. உபநிடதம் என்பதற்குக் கிட்ட இருந்து கேட்டல் என்பது பொருள். உபநிடதங்களில் கூறப்படும் மறைபொருள் குருமாணாக்க முறையிற் கேட்டு அறிதற்குரியன. ஆகவே அவை எழுதிவைக்கப்பட வில்லை. இஞ்ஞானங்களைக் கேட்டறிவதில் தாகங்கொண்டிருந்த ஆரிய மக்களுட் சிலர் அவற்றைத் தமிழறிஞரிடம் கேட்டறிந்த பின் தாம் அவற்றைப் பிறருக்கு உபதேசிக்கும் பொருட்டு எழுதி வைக்கலாயினர். வீடு பேற்றுக்குரிய ஞானங்களை எழுதி வைக்கும் மரபு தமிழ்நாட்டில் இருக்கவில்லை எனத் தொல்காப்பியங் கூறுகின்றது. பிற்கால உரை யாசிரியர்களான நச்சினார்க்கினியர், பரிமேலழகர் முதலானோரும் இதனைக் குறிப்பிட்டுள்ளார்கள். உபநிடதங்களும் ஆகமங்கள் எனப் படும். இதனால் உபநிடதங்களிலுள்ள கருத்துக்கள் ஆகமக் கருத்துக் களே எனப் புலப்படும்.
வேதங்களைச் சூத்திரரும், பெண்களும் ஓதுதலும் கேட்டலும் கூடாது. உபநிடத ஞானங்களைப் பெண்களும் எல்லாக் குலத்தினரும் பெறலாம். “ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் கங்கை வார்சடைக் கரந்தார்க் கன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே” என்பது உபநிடதக் கருத்துக்கள் பற்றி எழுந்ததே. உபநிடதங்கள் ஆரியரல்லாத மக்களுடையன வென்பதை விண்டர் நிட்ஸ் என்னும் செர்மன் பேராசிரியர் இந்திய இலக்கியங்களின் வரலாறு என்னும் நூலில் நன்கு எடுத்து விளக்கியுள்ளார்.
சைவ சமயத்துக்கு ஆதாரம் எனப்படும் நூல்கள் 28 சிவ ஆகமங்கள். இவ்வாகமங்களில் சில அச்சிடப்பட்டுள்ளன. பல அச்சிடப் படவில்லை. பல பெயரளவிலேயே இருந்து வருகின்றன. ஆகமங்கள் தமிழருக்கும் சைவத்துக்கும் உரியனவாயின் அவை ஏன் வடமொழியில் எழுதப்பட்டிருக்கின்றன என்னும் கேள்வி எழலாம். ஆகமக் கருத்துக்கள் செவி வழக்கில் இருந்து வந்தன வென்று கூறினோம். ஆகமங்கள் எழுதப் பட்ட “பாஷா” என்னும் நடை கி.பி.1000 வரையில் வழங்கியதென்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். கி.பி. 7 ஆம் நூற்றாண்டுக்குப் பின் தென் னாட்டில் படிப்படியே வடமொழி ஆதிக்கம் ஏற்பட்டு வந்தது. அப் பொழுது1 தமிழிலிருந்த ஆகமங்கள் வடமொழியில் மொழிபெயர்க்கப் பட்டிருத்தல் வேண்டும் அல்லது செவி வழக்கிலிருந்த ஆகமக் கருத்துக் கள் திரட்டப்பட்டு வடமொழியில் எழுதப்பட்டிருத்தல் வேண்டும். தமிழில் ஆகமங்கள் பல இருந்தன வென்று கி.பி.5 ஆம் நூற்றாண்டள வில் செய்யப்பட்ட திருமந்திரம் கூறுகின்றது.
சைவத்துக்கு 28 ஆகமங்களும்2 வைணவத்துக்கு 108 ஆகமங்களும், சாக்தத்துக்கு 77 ஆகமங்களுமுண்டு. இவற்றுட் சிலவற்றுக்கு எழுதப் பட்ட உரைகளில் இவையல்லாத நூற்றுக்கணக்கான ஆகமங்களும் குறிக்கப்பட்டுள்ளன. ஆகமங்கள் கடவுளாற் சொல்லப்பட்டன என நம்பப்பட்டு வருகின்றன.
ஆகமங்கள் பொதுவாக ஞானம், யோகம், கிரியை, சரியை என நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஞானம் என்பது கடவுளைப் பற்றிய அறிவு. அது வீடு எனப்படும். யோகம் என்பது மனத்தை ஒரு செயலில் பற்ற வைத்து நிற்பது. கிரியை என்பது கோயில் கட்டுவதற்கு, நிலத்தை உழுதல், தளமிடுதல் முதல் விக்கிரகத்தை நாட்டுதல் வரையிலுள்ள செயல்கள். சரியை என்பது கடவுளை வழிபட வேண்டிய முறைகள். சரியை, கிரியை, யோகம் முதலிய மூன்றும் ஆசிரியனிடத்தில் கற்றுக்கொள்ள வேண்டியன வென்றும், பக்குவமடைந்தவர்களுக்கு ஞானத்தை அளிக்க இறைவன் குரு முகூர்த்தத்தில் நேரில் வருவான் என்றும் ஆகமங்கள் கூறுகின்றன. உலகம் பொய்த் தோற்றமாக உள்ளது என்னும் கொள்கையை (மாயா வாதத்தை) ஆகமங்கள் எதிர்க்கின்றன.
ஆகமங்கள் உலகத்தைப் பொய்த் தோற்றமெனக் கொள்ள வில்லை. கடவுளிடத்தில் பத்தி செலுத்துவதையே ஆகமங்கள் சிறப்பாக வலியுறுத்துகின்றன. பாடுதல், ஆடுதல் போன்ற உள்ளக் கிளர்ச்சி தரும் செயல்கள் பக்தி காரணமாக எழுந்தனவே. தமிழிலும் சமக்கிருதத்திலும் பக்திமயமான பாடல்கள் பல உள்ளன. இசை, நாட்டியம், அபிநயம் என்பனவும் சமய பக்தி காரணமாக வளர்ச்சி அடைந்தன. அபிநயம் காரணமாகத் தேவதாசிகள் கோயில்களில் அமர்த்தப்பட்டார்கள்.
சைவ ஆகமங்களும் சாக்த ஆகமங்களும் ஒன்றுக்கு ஒன்று ஒற்றுமை யுடையன. சைவ சித்தாந்தக் கொள்கைகள் 28 ஆகமங்களிலும் வேதாந்த சூத்திரங்களுக்கு நீலகண்ட சிவாசாரியார் செய்த சைவ பாடியத்திலும், சென்ற 1500, ஆண்டுகளாகச் செய்யப்பட்ட சைவ நூல்களிலும் காணப் படுகின்றன. சைவசித்தாந்தக் கொள்கைகள் சிவாகமங்களுள் முதன்மை யுடையதான காமிகாகமத்தின் ஞான பாதமாகிய மிருகேந்திரத்தில் கூறப்படுகின்றன. (இவ்வாகமங்களும் வேறு சிவாகமங்களும் தமிழுரை யோடு அச்சிடப்பட்டுள்ளன). சிவம் தொடக்கமில்லாதது. அது எல்லா வற்றையும் அறிவது, எல்லாவற்றையும் செய்வது, உயிர்களின் அறிவை மூடியிருக்கும் மலத்தை நீக்குவது என மிருகேந்திராகமங் கூறுகின்றது. படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் (துரோதானம்) எல்லாம் சிவத்தின் செயல்கள். உலகம், உயிர், இறைவன் என்னும் முப் பொருள்களும் உட்பொருள்கள்.
சைவ சித்தாந்தக் கொள்கைகளை, 13ஆம் நூற்றாண்டளவிற் செய்யப்பட்ட சைவ சித்தாந்த நூல்கள் நுட்பமாக எடுத்து விளக்கு கின்றன. சைவ சித்தாந்தம் சாதி, வருணாச்சிரம தருமம் போன்றவற்றை அனுமதிக்கவில்லை. பெரிய புராணத்திற் கூறப்படும் மெய்யடியார்கள் வரலாறுகள் இதற்குச் சான்றாக உள்ளன. வைணவ மதத்தினரும் இதே கொள்கையுடையராகவிருந்தனர். வைணவ அடியார்களுள் ஒருவர் பாணர் வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தார். சாதி பேதம், வருணாச்சிரம தருமம் போன்ற கொள்கைகள் தலையெடுத்த காலத்தில் கன்னட தேசத்தில் வசவர் தோன்றினார்.
இவர் வாழ்ந்த காலம் 12ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி. இவரால் கொண்டுவரப்பட்ட சைவம் இலிங்கங்கட்டி மதம் அல்லது இலிங் காயதம் அல்லது வீரசைவம் எனப்பட்டது. இதன் முக்கிய கொள்கை பிராமண ஆதிக்கத்தையும் சாதி பேதத்தையும் ஒழிப்பதாக இருந்தது. பிராமண சாதியிற் பிறந்தவராகிய வசவர் இக் கொள்கையை நிலைநாட்ட முன்வந்தது வியப்புக்குரியதாக இருந்தது. இவருக்கு முன் விளங்கிய புத்தர் முதலிய சமய சீர்திருத்தக்காரர்களைப் போலவே இவரும் தமது போதனைகளை உள்நாட்டு மொழிகளில் செய்தார். வழக்கம்போலப் பிராமணர் இம் மதத்தவரிடையே சாதிபேதக் கொள்கையை நுழைத்து அதன் சீவசத்தை வாங்கிவிட்டார்கள். இலிங்காயத மதம் பௌத்த மதத்தைப் போலச் சாதிபேதத்துக் கெதிராக எழுந்ததாயினும் இன்று இலிங்காயதப் பிராமணர், இலிங்காயத சூத்திரர் முதலியோர் காணப் படுகின்றனர்.
யோகமார்க்கம்
கடவுள் புலன்களாலறிய முடியாதவர், நினைவுக்கு எட்டாதவர் எல்லாவற்றையும் இயக்குபவர் என்னும் உண்மைகளையும் மக்கள் அறிந்திருந்தார்கள். ஆகவே குணங்குறியில்லாத முழுமுதற் கடவுளைக் குறிக்கக் கடவுள் இயவுள் என்னும் பெயர்களை அவர்கள் இட்டுவழங்கி னார்கள். கடவுளென்பதற்கு உள்ளத்தைக் கடந்தவர் என்பதும் இயவுள் என்பதற்கு எல்லாவற்றையும் இயக்குபவர் என்பதும் பொருள்களாகும். புலன்களாலறியப்படாத பொருளை அறிவதற்குப் புலன்களை அடக்குதல் வேண்டுமென்னும் கொள்கை எழுந்தது. புலன்களை ஒடுக்கி (ஐந்தடக்கி) மனதை ஒரு நிலைப்படுத்துவதற்கு வாய்ப்பான முறைகள் கண்டுபிடிக் கப்பட்டன. இவ்வழி யோக மார்க்கம் எனப்பட்டது. 5000 ஆண்டுகளின் முன் மொகஞ்சதரோ மக்கள் இம் முறைகளை அறிந்திருந்தார்கள்.1 அங்கு கிடைத்த தொல்பொருள் ஒன்றில் மூக்கு நுனியைப் பார்த்துக் கொண்டு அட்டணைக் காலிட்டு யோகத்தில் வீற்றிருக்கும் பாவனையிலுள்ள உருவமொன்று வெட்டப்பட்டுள்ளது. மிக முற்காலத்தில் தமிழ் மக்க ளிடையே தோன்றியிருந்த இக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டே சமண, பௌத்த மதங்கள் எழுந்தன. சமண, பௌத்த மதங்கள் ஆரியர் வருகைக்கு முன் இந்தியநாட்டிலிருந்த சமயக் கருத்துக்களைப் பின்பற்றி எழுந்தவை என ஆராய்ச்சியாளர் கூறியிருக்கின்றனர். சமண, பௌத்த மதங்களின் மூலாதாரக்கொள்கை புலன்களை வென்று ஆசை யற்றிருப்பது. “திரையற்றகடல் போற் சிந்தை தெளிந்தார்க்குப் - புரையற் றிருந்தான் திரிசடையோனே” எனத் திருமூலரும் குறிப்பிடுதல் காண்க.
கடவுளைப் பற்றி ஆராயத் தொடங்கிய மக்கள் இவ்வுலகைப் பற்றியும் உலகில் வாழும் உயிர்களைப்பற்றியும், உலகுக்கும் உயிருக்கும் கடவுளுக்குமுள்ள தொடர்புகளைப் பற்றியும் ஆராயத் தொடங்கினர். இவ் வாராய்ச்சிகள் தொடர்பான நூல்கள் தத்துவ சாத்திரங்கள் எனப் படுகின்றன. கௌதம புத்தருக்கும் மகாவீரருக்கும் முன்னிருந்தவர் கபிலர். இவர் செய்த தத்துவ நூல் சாங்கியம். சாங்கிய மதக்கொள்கையை அடிப்படையாகக் கொண்டு சமண பௌத்த மதங்கள் எழுந்தனவெனக் கூறுவர் ஆராய்ச்சி வல்லார்.
வேதமார்க்கமும் ஆகமமார்க்கமும்
தொடக்கத்தில் வேதமார்க்கமும் ஆகமமார்க்கமும் வேறுபட்டன வாக இருந்தன. இருக்குவேத காலத்தில் தாசுக்களுக்கும் ஆரியருக்கும் நேர்ந்த பிணக்குகளென்பன சமயத்தை அடிப்படையாகக் கொண்டி ருந்தன வென்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். சமண, பௌத்த மதங்களை விழுத்தும் பொருட்டு வேத மதத்தினரும் ஆகம மதத்தினரும் தமிழ்நாட்டில் ஒத்துழைத்தனர். சமணபௌத்த மதங்கள் விழுந்தபின் ஆகம மார்க்கமும் வேத மார்க்கமும் இணைந்து பல நூற்றாண்டுகளாக வருகின்றன. இவை இவ்வாறு நீண்டகாலமாக வருகின்றமையின் இக் காலத்தவர் அவற்றின் வேறு பாட்டை உணர்வதில்லை.
ஆகமங்கள் வேதங்களினின்றும் பிறந்தனவெனவும் சிலர் நம்பி வருகின்றனர். வேதங்கள் செய்யப்பட்டுச் சில காலத்தின் பின் அவை எவராலும் செய்யப்படாமல் தாமாக உள்ளன என்னும் நம்பிக்கை இருந்துவந்தது. ஆகமங்களைச் சிவபெருமான், திருமால் முதலிய கடவுளர் செய்தனர் என்னும் நம்பிக்கையும் இருந்துவருகிறது.1 வேத மந்திரங்கள் வைதீகக் கிரியைகளில் ஓதுதற்குரியன. ஆகமங்கள் சைவ, வைணவக் கிரியை முறைகளையும், யோகசாதனைகளையும் தத்துவக் கூறுபாடுகளையும் கூறுகின்றன. வைதீகக் கிரியைகள் தீ வளர்த்துச் செய்யப்படுவன. அப்போது உணவு தீயிலிடப்படுகின்றது. ஆகமக்கிரியை களில் வழிபடுவோர் உணவுகளைப் படைத்துப் பின் எடுக்கின்றனர். வைதீகக் கிரியைகளில் வெவ்வேறு தொழில்களைச் செய்கின்ற பல தேவர் அழைக்கப்படுகின்றனர். ஆகமக்கிரியைகளில் ஒரு தெய்வத் துக்கே வழிபாடு செய்யப்படுகின்றது. வேதக்கிரியைகளில் வேள்வியாசி ரியன் செய்யும் ஒவ்வொரு கிரியையும் ஒவ்வொரு மந்திரஞ் சொல்லிச் செய்யப்படுகிறது. ஆகமங்களில் வேத மந்திரங்களுக்கு இடமில்லை. வேத மந்திரங்கள் சில ஆகமக்கிரியைகளில் சொல்லப்படுகின்றன. இம் மந்திரங்கள் பொருளற்றனவாகவிருக்கின்றன. தூப எனத்தொடங்கும் மந்திரமொன்று தூபங் காட்டும் போது சொல்லப்படுகிறது. இம் மந்திரம் மாட்டை வண்டியிற் பூட்டுவதைக் குறிக்கிறது. ஆகமக் கிரியைகளில் பெரும் பகுதி கடவுளுக்குள்ள பல பெயர்களை ஈற்றில் நம என்பதை வைத்துத் துதிப்பதாகவுள்ளது. வைதீகக் கிரியைகளின் நோக்கம் தீயில் உணவைச் சொரிவது. ஆகமக்கிரியைகளின் நோக்கம் ஒரு அரசனுக்குச் செய்வது போன்ற உபசாரங்களைச் செய்வது. வேதக்கிரியைகளுக்குத் தெய்வத்தினுருவம் வேண்டப்படவில்லை. எல்லாத் தேவர்களையும் குறிக்கத் தீ ஒன்றே போதுமானது. ஆகமக் கிரியைகளுக்குக் கடவுளின் திருவுருவம் அல்லது கடவுளை குறிக்கும் ஒரு பொருள் வேண்டப்படும்.
வைதீகக் கிரியைகள் மக்களை நான்கு வருணங்களாகப் பிரிக் கின்றன. கடைசி வருணத்தவருக்கு வேத, வேதாந்தக் கல்விகள் மறுக்கப் பட்டன. நான்கு வருணப் பிரிப்பிலிருந்து வருணாச்சிரம தருமங்கள் வளர்ச்சியடைந்தன. வருணங்களுக்கேற்ப வருணாச்சிரம தருமங்களும் வேறுபட்டன. இச் சாதனைகளால் சன்னியாசம் பிராமணருக்கு மாத்திரம் உரியதாக இருந்தது. சன்னியாசத்தினால் மாத்திரம் மோட்சம் அடையக் கூடியதாகவும் இருந்தது. ஆகமங்கள் இக் கொள்கைகளை எதிர்த்தன. ஆகமங்கள் நான்கு வருணங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகமமார்க்கத்தின்படி சண்டாளனாயினும் சிவன், திருமால் முதலிய உருவங்களை வைத்துப் பூசிக்கலாம். வேதாந்தம் வேதத்தின் பகுதியாக இருந்தமையின் அது நான்காம் வருணத்தவருக்கு மறுக்கப்பட்டது. ஆகமங்களை எவரும் ஓதலாம். சிவதீட்சை பெற்ற புலையனும் பிராமணனுக்குத் தீட்சை செய்து அவனுக்குக் குருவாகலாம். ஆகமக் கொள்கையினரிடையே சன்னியாசமும் பரவிற்று. வைணவ சன்னி யாசிகள் ஏகாந்திகளெனவும், சைவ சன்னியாசிகள் சிவயோகிகள் எனவும் பட்டனர். ஆகமக் கொள்கையின்படி மோட்சமடைவதற்குச் சன்னியாசம் அத்தியாவசியமன்று. எல்லாருக்குமுரிய பத்திமார்க்கமே முக்கியமுடையது. ஆகமக் கொள்கையினர் கடவுளின் பெயரால் உயிர்க் கொலை செய்வதைக் கண்டித்தனர். ஆகவே தானிய மாவினால் செய்யப் பட்ட விலங்கின் வடிவங்கள் விலங்குகளுக்குப் பதில் பலியிடப்பட்டன. சிறிது சிறிதாக வேதாந்தக் கொள்கைகள் ஆகமக் கொள்கைகளோடு இணைந்தன. புராணங்களில் இவை ஒன்றாக இணையவில்லை.
சைவ மடங்கள்
சமண பௌத்த மதங்களை ஒழிக்கும் பொருட்டுத் தோளொடு தோள் நின்று போராடிய வைதீக, ஆகம மதங்களுக்கிடையில் சிறிது சிறிதாக மாறுபாடுகள் எழுந்தன. உயர்ந்த சமய ஞானங்களைப் பற்றிய அறிவு சமக்கிருத மொழி மூலம் நூல்களைப் பயின்று பெறப்படுதல் வேண்டும். உள் நாட்டு மொழிகள் மூலம் அவற்றைப் பயில்வது பயனற்றது. பிராமணர் ஒழிந்தோர் துறவிகள் ஆதல் கூடாது. சமக்கிருதம் தெய்வ மொழி. தமிழ், மனிதர் பேசும் மொழி என்னும் கொள்கைகள் சிறிது சிறிதாகப் பரவத் தொடங்கின. இந் நிலை 16ஆம் நூற்றாண்டில் உச்ச நிலை அடைந்திருந்தது. மேற் கூறப்பட்ட கொள்கைகள் தோன்றிப் பரவத் தொடங்கிய காலத்திலேயே திருமந்திரம், சித்தர் பாடல்கள், மெய்கண்ட சாத்திரங்கள் முதலிய நூல்கள் எழுந்தன. எல்லாக் காரியங் களிலும் மொழி, சமூகம் என்பவற்றைப் பற்றிய அபிமானம் முதன்மை பெற்றிருந்தது. இவற்றின் உரிமைக்கு இழுக்கு நேர்ந்த காலங்களில் மக்களிடையே உள்ளக் கொதிப்பு எழுந்தது. ஒவ்வொரு சமூகத்தினரும் தமது மொழியின் உரிமை, சமூக உரிமைகளுக்குப் போராடி வந்தனர். உள் நாட்டு மொழிகள் மூலம் சமய ஞானங்களைக் கற்றறிதல் பயனற்ற தென ஒரு சாரார் கூறுதலும் தமிழ் மொழியில் பல சமய நூல்கள் இயற்றப்பட்டன. பிராமணரல்லாதார் துறவு அடைதல் கூடாது என ஒரு சாரார் கூறுதலும் பிராமணரல்லாத பலர் துறவு பூண்டனர். இவ்வகைக் குழப்பங்களுண்டாகும்போது அரசாங்கமும் இவற்றில் பங்கு பற்றுவ துண்டு. பிராமணரல்லாத துறவிகள் மடங்களமைத்துக் கொண்டு இருத்தல் கூடாது என ஒரு சாரார் கூறிக் கலகம் விளைவித்துக் கலகக் காரரை ஏவிப் பல பிராமணரல்லாதார் மடங்களை அழித்தனர்.1 ஆகவே சைவத் துறவிகள் குகைகளை நாடிச் செல்ல நேர்ந்தது. குகை நமச் சிவாயர் முதலிய பெயர்கள் இதற்குச் சான்றுகளாகும்.
இந் நெருக்கடியான 16ஆம் நூற்றாண்டிலும் அதனை அடுத்தும் சைவ மடங்கள் தமிழ்நாட்டில் எழுந்தன. சைவமடத்தலைவர் எப்பொழு தும் பிராமணரல்லாதாராகவே இருந்து வருவர். சங்கராச்சாரியார் மடங்களின் தலைவர்கள் எப்பொழுதும் பிராமணராக விருப்பர்.
அரசர் பெரும்பாலும் வைதீக சமயத்தவர்களைச் சார்ந்து நின்ற மையின் கோயில்கள் சிறிது சிறிதாக வைதீக மதத்தினரின் கைப்பட்டன. அக் காலத்திலேயே கிரியை முறைகள் வடமொழியில் எழுதப்பட்டு அம் மொழியில் வழங்கலாயின. வடமொழிச் சொற்றொடர்களைச் சொல்லிச் செய்யும் கிரியைகளின் இடையிலும் தமிழிசை பாடுவதாகிய ஒரு பகுதியும் இருந்து வந்தது. முற்காலத்தில் தமிழ்த்துதி பாடிப் பூசை புரியப்பட்டதன் நிழலாக இது இப்பொழுதும் இருந்து வருகின்றது. தமிழிசை பாடுவோர் பிராமணரல்லாதாராவர்.
மொழிபற்றிய உணர்ச்சி ஒருபோதும் மக்களுள்ளத்தை விட்டு அகன்று விட மாட்டாது. மனோன்மணீய ஆசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் காலத்திலும் இவ்வுணர்ச்சி எவ்வளவுக்கு மக்களுள்ளத்தில் பதிந்திருந்ததென்பதை அவர் மனோன்மணீயத்துக்குச் செய்துள்ள தமிழ்த் தெய்வ வணக்கத்தைக் கொண்டு அறியலாம். இன்றும் இவ் வுணர்ச்சி மறைந்துவிடவில்லை. தமிழ் மொழியே தமிழரின் சமய மொழியாக இருக்க வேண்டு மென்னும் கிளர்ச்சி தமிழ்நாட்டில் இருந்து வருகிறது.
வேதாந்த சித்தாந்த சமரசம்
பௌத்த, சமண மத ஆதிக்கம் ஒழிக்கப்பட்ட பின் அரி பெரிது, சிவன் பெரிது என்னும் கொள்கைகள் பற்றி வைணவ, சைவ மதங் களுக்கிடையில் பூசல்கள் எழுந்தன. அக்காலத்தில் தத்தம் கடவுளரே பெரியர் என்று சாதிக்கும் பொருட்டுப் பல புராணக் கதைகள் எழுந்தன. வைணவர்களுக்குள் வடகலை, தென்கலை என இரு பிரிவுகள் தோன்றி அவைகளும் ஒன்றோடு ஒன்று தருக்கிப் பூசல் விளைத்தன. சைவரும் வைணவரும் மாறுபடுவதை விரும்பாத சிலர் “அரியும் சிவனுமொன்று, அறியாதவன் வாயில் மண்ணு” என்று சொல்லிச் சந்து செய்தனர்.
பிராமண மதத்தினர் சைவ சித்தாந்தக் கொள்கையினராக இருக்க வில்லை. அவர்கள் வேதாந்தக் கொள்கை உடையவர்களாக இருந்தனர். வேதாந்தமென்பது பிரமமொன்றே உள்ளது. உலகம். உயிர் என்பன பிரமத்தின் போலித் தோற்றங்கள் எனக் கொள்ளும் கொள்கை. சங்கராச் சாரியார் இக் கொள்கையைப் பின்பற்றி வேதாந்த சூத்திரத்துக்குப் பாடியஞ் செய்தார். இக் கொள்கை சங்கராச்சாரியருக்குப் பின் தமிழ் நாட்டில் பெரிதும் பரவத் தொடங்கிற்று. வேதாந்த கொள்கைகளை மெய்கண்ட சாத்திரங்கள் கண்டிக்கின்றன. வேதாந்த சித்தாந்தக் கொள்கைகள் சம்பந்தமான வாதங்கள் நடந்து வந்தன. பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த தாயுமான சுவாமிகள் இவ்விரு கொள்கையின ரையும் சந்துப்படுத்தும் பொருட்டு “வேதாந்த சித்தாந்த சமரச முன்னிலை பெற்ற வித்தகச் சித்தர் கணமே” எனக் கூறினர். குமரகுருபரசுவாமிகள் “வேதாந்தமென் றுச்சியிற் பழுத்த-ஆராவின்ப அருங்கனி பிழிந்த-சாரங் கொண்ட சைவ சித்தாந்தம்” எனக் கூறினர். தமிழ் நாட்டில் பிராமணரல் லாத பலர் வேதாந்தக் கொள்கைகளைப் பயின்று அக் கொள்கைகளை விளக்க நூல்கள் பல தமிழிற் செய்தனர். வேதாந்தக் கொள்கைகள் மாயா வாதம் எனச் சித்தாந்திகளால் கண்டித்து ஒதுக்கப்பட்டன.
வேதாந்தக் கொள்கைகள் பரவியிருந்த காலத்திலேயே அருள் திரு.ஆறுமுக நாவலரவர்கள் தோன்றிச் சைவ சமயக் கொள்கைகளை மக்களிடையே பரப்பும் பொருட்டுப் பல ஆக்க வேலைகள் புரிந்து வந்தார். அக் காலத்தில் மாணவரும் பொது மக்களும் சமயக் கொள்கை களைக் கற்றறிவதற்கேற்ற வசன நூல்கள் எழுதப்படவில்லை. ஆகவே நாவலரவர்கள் மாணவரும் பொது மக்களும் கற்கும் பொருட்டுச் சைவ வினா விடை போன்ற நூல்களை எழுதி வெளியிட்டார்கள். நாவலர் காலத்தில் இக்கால முறையான ஆராய்ச்சிகள் செய்யப்படவில்லை. அக் காலத்தில் பொதுவாக நம்பப்பட்டு வந்த சில கொள்கைகளையும் அவர்கள் தழுவியுள்ளார்கள். சைவ சமயத்துக்கு வடமொழி வேதங்கள் ஆதாரம், சமக்கிருதம் தெய்வமொழி என்பவை போன்ற கொள்கைகள் இப்பொழுது ஏற்றுக் கெள்ளப்படவில்லை.
நாவலர் காலத்தில் அறியப்படாதிருந்த பல சரித்திர உண்மைகள் இப்பொழுது அறியப்பட்டுள்ளன. அவை மேல்நாட்டறிஞர் வெளியிட் டுள்ள மனிதவியல் நூல்களிலும் பிறவற்றிலும் காணப்படுகின்றன.
சமயத்தின் நோக்கம்
மனிதன் எப்படி வேடன், இடையன் முதலிய, படிகளைத் தாண்டிப் படிப்படியே நாகரிகமடைந்தானோ அவ்வாறே சமயமும் படிப்படியாக வளர்ச்சியடைந்தது. கடவுள், உயிர் உலகம் முதலிய வற்றின் தொடர்பு, வினைப்பயன் போன்ற தத்துவக் கொள்கைகள் இந்திய நாட்டிலேயே தொடங்கி கிரேக்க நாட்டுக்குச் சென்றனவென்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். இந்தியாவினின்றும் சென்று பிற நாடுகளில் குடியேறிய மக்களும் அசோகச் சக்கரவர்த்தியால் பிற நாடுகளுக்கு அனுப்பப்பட்ட சமயபோதகர்களும் இக் கொள்கைகளைப் பிறநாடுகளில் பரவச் செய்தனர். கிரேக்க தத்துவ சாத்திரிகளில் முந்தியவ ராகிய பிதகோரஸ் இந்தியாவுக்கு வந்தோ, அல்லது பாரசீகத்திலிருந்தோ கபிலரின் சாங்கியக் கொள்கைகளை அறிந்து அக் கருத்துக்களைக் கிரேக்க மக்களுக்கு வெளியிட்டாரெனச் சிலர் கருதுகின்றனர். கபிலர் காலம் முதல் தத்துவ சம்பந்தமான மதங்கள் இந்தியாவில் தோன்றி வளர்ச்சியடைந்தன. சமயத்தின் முடிவு பிறப்பை ஒழிப்பது என்பது பலசமயங்களின் கோட்பாடாக இருந்து வந்தது. நாளேற நாளேறத் தத்துவமுறையான சமயக் கொள்கைகள் மறக்கப்பட்டன. தத்துவமுறை யில் சமயத்தை அனுட்டிப்பவர் இக் காலத்தில் அரியர். சமயங்கள் என்பன சமூகங்கள் என்பன போல ஒவ்வொரு கூட்டத்தினராலும் பெய ரளவில் கைக்கொள்ளப்படுவனவாக இருந்துவருகின்றன. சமயத்தின் பெயரால் சமூகங்களின் இணைப்பு உண்டாகிறது. சமயத்தில் கூறியபடி நடத்தல் வேண்டுமென்னும் கடப்பாடு ஒரு சமயத்தவராலும் கொள்ளப் படுவதில்லை. சமயம் ஒரு புறமும் மக்களின் நடத்தை இன்னொரு புறமாகவுமிருந்து வருகின்றன. பௌத்தமோ, சமணமோ, சைவமோ உள்ள நாட்டில் ஒரு பௌத்தன், சைவன், அல்லது சமணன் கடல் தொழில் அதிகாரியாக இருக்க முடியாது. ஆனால் இன்று அப்படியல்ல. ஒருவன் அச்சமய சின்னங்களை அணிந்து கொள்ளலாம், அச் சமயக் கொள்கைகளில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டுமென்னும் கடப்பாடு வேண்டியதில்லை. சமயங்கள் உயர்ந்த நோக்கத்தோடு வளர்ந்தன. இன்று சமயங்களின் நிழல்களே உலாவுகின்றன. மதங்கள் மறைந்துவிட்டன வென்று கூறலாம்.
சங்கரர்
வேதாந்த அத்வைதக் கொள்கையைக் கன்னியாகுமரி முதல் இமயம் வரையில் போதித்துப் பரவச்செய்தவர் சங்கரர். இவர் மலை யாளத்திலுள்ள காலடி என்னுமிடத்தில் நம்பூதிரிப் பிராமணர் குலத்திற் பிறந்தார். இவர் குடும்பத்தினரின் சமயம் சிவமதமென்று சிலரும், சாக்த மதமென வேறு சிலரும் கூறுவர். இவர் கௌடபாதரின் மாணாக்கராகிய கோவிந்தரிடத்தில் வேதங்களைக் கற்றார். கோவிந்தர் இவருக்கு அத் வைதக் கொள்கைகளைக் கற்பித்தார். எட்டு வயதாகவிருக்கும்போதே இவர் வேதங்களை எல்லாம் கற்றுக் கரைகண்டார். இவர் இடங்கள் தோறுஞ் சென்று வேறு மதக்கொள்கையுடைய மதத் தலைவர்களோடு வாதம் புரிந்தார். இவர் குமாரிலர், மந்தனமிசிரர் முதலியவர்களோடு வாதம் புரிந்ததாக ஐதீகமுண்டு. மந்தனமிசிரர் சங்கரரின் மாணவராகிச் சுரேஸ்வர ஆசிரியர் என அறியப்பட்டார். சங்கரர் நான்கு மடங்களைத் தாபித்தார். இவற்றில் முதன்மைபெற்றது மைசூரிலுள்ள சிரிங்ககிரி மடம். சன்னியாசிகளுக்கு விதிக்கப்பட்ட விதிகளுக்குமாறாக இவர் தாயின் அந்தியக் கிரியைகளைச் செய்தார். அவர் கூட்டத்தினர் இதற்காக அவரை எதிர்த்தனர். இவர் 32ஆவது வயதில் காலமானார் என்று ஐதீகமுண்டு.
இவர் கி.பி. 778-820 வரை வாழ்ந்தாரெனச் சிலரும் 9ஆம் நூற் றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தாரென வேறு சிலருங் கூறுவர். இவர் சமயகுரவருள் ஒருவராகிய திருஞான சம்பந்தருக்குப் பின் வாழ்ந்தவ ரென்பது இவர் திருஞான சம்பந்தரைத் திராவிட சிசு எனச் சௌந்தரிய லகரியிற் குறிப்பிட்டிருப்பது கொண்டு அறியப்படுகின்றது.
புதுமுறை இந்துமதம்
இவர் பழைய சமயநூல்களுக்கு அத்வைதமுறையான உரை கண்டார். 6 ஆம் 7 ஆம் நூற்றாண்டில் புதுமுறையான இந்துமதம் தோன் றிற்று. தெற்கில் பௌத்தமதம் வீழ்ச்சி அடைந்தது. சமணம் உச்சநிலை யடைந்தது. வைதீகக் கிரியைகள் மங்கிக்கொண்டிருந்தன. சைவ அடியார் களும், வைணவ ஆழ்வார்களும் பக்திமார்க்கத்தைப்பரப்பிக் கொண் டிருந்தார்கள். புராண சம்பந்தமான இந்துமதமும், புராண சம்பந்தமான விழாக்களும் எங்கும் பரவின. தெற்கில் பல்லவ அரசர்கள் உச்ச அதிகாரம் பெற்று விளங்கினார்கள். அக் காலத்தில் பிராமணமதம் புராண இந்து மதமாக மாறிற்று. பல்லவர் ஆட்சியின் தொடக்கத்தில் அரசர் பௌத்த மதத்தினராக விருந்தனர். பிற்காலத்தவர்கள் வைணவர்களாகவும், சைவர் களாகவுமிருந்தார்கள். பௌத்த மதத்தினரின் துறவுக் கொள்கையை எதிர்ப்பதற்காகவும், கடவுட் கொள்கையில் பக்தியை உண்டாக்குவதற் காகவும் மீமாம்சகர் வேதக்கிரியைகளின் முதன்மையை மிகைப்படுத்தி னர். குமாரிலரும் மந்தனமிசிரரும் ஞானத்தையும் சன்னியாசத்தையும் பழித்து இல்லாச்சிரமத்தின் அவசியத்தை வலியுறுத்தினர். (குமாரிலர் மீமாம்சை சூத்திரத்துக்கும் அதன் பாடியத்துக்கும் உரைசெய்தவர். இவர் பீகார் பிராமணர். பௌத்த மதத்திலிருந்து இந்து மதத்தைத் தழுவியவர்).
அத்வைதம்
இக் காலத்தில் சங்கரர் சமய சீர்திருத்தக்காரராகத் தோன்றினார். அவர் புராணகாலக் கொள்கைகளையும் உபநிடதங்களின் உண்மை களையும் பரப்ப முயன்றார். இம் முயற்சியில் அவர் உயிரை உயர் வழிப் படுத்தக்கூடிய ஒரு தத்துவக் கொள்கையைக் கொண்டு போராடினார். பௌத்தம், மீமாம்சை, பத்தி முதலிய கொள்கைகளிலும் பார்க்க மக்களின் ஆன்மீக தேவைகளைத் திருப்திப்படுத்தக் கூடிய தத்துவ ஞானம் வேண்டப்பட்டது. மீமாம்சை கிரியைகளால் உயிர்களை உயர் நிலைப்படுத்தலாமென்றது. அக் காலத்தில் பிளவு பட்டிருந்த சமயக் கொள்கைகளை எல்லாம் திருப்திப்படுத்துவதற்கு உயிர் பிரமத்தோடு ஐக்கியப்பட்டுப் பிறப்பொழிவதாகிய வழியைக் கூறும் அத்வைதஞானம் சிறந்ததென அவர் கண்டார். அவர் அதனை மக்களுக்குப் போதித்தார். மலையாளத்திலிருந்து இமயத்துக்குச் செல்லும் வரையில் அவர் பல சமயங்களைக் கண்டார். விட்டுணு, சிவன், சக்தி, சூரியன் முதலிய கடவுளர் மீது அழகிய பாடல்கள் செய்தார். அவர் தென்னிந்தியாவில் சக்தி வழிபாட்டைக் கீழ்ப்படுத்தினார். கல்கத்தாவிலுள்ள காளிகோயி லில் இது முடியவில்லை. வைணவர் சங்குசக்கரம் சுட்டுக்கொள்வதை இவர் கண்டித்தார். இவர் பகவத்கீதை, வேதாந்த சூத்திரம், உபநிடதம் முதலியவற்றுக்கு உரைசெய்தார். தக்கணாமூர்த்தி தோத்திரம், ஆனந்தலகரி, சௌந்தரியலகரி, விட்ணுசகத்திரநாமம் போன்ற பல தோத்திர நூல்களையும் செய்தார்.
சங்கரருக்குப் பின்பே மாயாவாதம் என்னும் வேதாந்தக் கொள்கை தென்னாட்டிற் பரவிற்று. மாயாவாதம் பிரமத்தை விட உயிர் உலகம் என்பன பொய் (மித்தை) எனக் கூறுவது. சூரியன் ஒன்றே குடங்களில் நிறைக்கப்பட்ட நீரில் பல சூரியராகத் தோன்றுவது போலப் பிரம மொன்றே பல உயிர்களாகத் தோன்றுகின்றதெனக் கூறுகின்றது. இக் கொள்கை பதி, பசு, பாசம் என்னும் முப் பொருள்களும் உட் பொருள்கள் எனக்கூறும் சைவ, வைணவ மதக்கொள்கைகளுக்கு முரணானது. பக்தி மார்க்கத்துக்கு மாறாகவிருந்தமையின் இது தென்னாட்டில் தலை யெடுக்கவில்லை. இக் கொள்கைகளை சந்தானாசிரியர்களும் பிறரும் கண்டித்திருக்கின்றனர். “யானே பிரமனென்றிடும் பாதகத்தவரும்” “ஒன்றென்ற தொன்றேகாண் பதி, பசுவாம் - ஒன்றென்ற நீ பாசத்தோ டுனைகாண்” “பதி, பசு, பாசமெனப் பகர் மூன்றினிற் பதியினைப்போற் பசு பாசமனாதி” போன்ற வாக்கியங்கள் மாயாவாதக் கொள்கையை மறுத்துக் கூறுபவற்றுட் சில. “மாயாவாதமென்னுஞ் சண்டமாருதஞ் சுழித்தடித் தார்ப்ப” என்னும் மாணிக்கவாசக சுவாமிகள் திருவாக்கும் அதனைக் கண்டிப்பதாக இருக்கலாம்.
விவேகானந்தரும் சங்கரர் மதக் கொள்கைகளைக் கடைப் பிடித்தவராவர். இராமகிருஷ்ண சபை, விவேகானந்த சபைகளை மேற் பார்க்கும் சுவாமிகளாக உள்ளவர்களும் இம் மதக்கொள்கையினரே ஆவர்.
மாயாவாத வேதாந்தத்தைத் தழுவியிருந்த வைதீகர் திருக்கோயில் வழிபாட்டையும் கோயிற்பூசை செய்யும் புரோகிதரையும் தாழ்ந்தவர் களாகக் கருதினர். அக் காலத்திலேயே தமிழில் சைவ சித்தாந்தத்தை விளக்கும் நூல்கள் எழுந்தன. வைணவ ஆசாரியார்கள் சங்கரர் கொள்கைக்கு மாறாக வேதாந்த சூத்திரம், பகவத்கீதை முதலிய சூத்திரங் களுக்கு விசிட்டாத் துவைத, துவைத உரைகள் செய்தனர்; ஆகமங்களைப் பிரமாணமாகக் கொள்ள வேண்டுமென வற்புறுத்தினர்.
சந்தான குரவர்
சமயாசாரியர்கள் மக்களிடையே பக்தி மார்க்கத்தைப் பரப் பினார்கள். சந்தானாசிரியர்கள் தத்துவ ஞானத்தைப் பரப்பினார்கள். மெய்கண்டதேவர், அருணந்தி சிவாசாரியர், மறைஞான சம்பந்தர், உமா பதி சிவாசாரியர் என்னும் நால்வரும் சந்தானாசிரியர்கள் எனப்படுவர்.
மெய்கண்டார் சடையப்ப வள்ளலின் மகளின் மகன் என்னும் ஐதீகமுளது. சிவஞானபோதம் மெய்கண்டாரால் 13ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் செய்யப்பட்டது. திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார் என்னும் இரு நூல்கள் மெய்கண்ட தேவருக்கு முன் வாழ்ந்த குருவும் மாணவருமாகிய உய்யவந்ததேவர் என்னும் பெயருடைய இருவரால் செய்யப்பட்டவை. மெய்கண்டாரின் மாணவரிலொருவர் அருணந்தி சிவாசாரியர். இவர் அந்தண குலத்தவர். இவர் செய்த நூல் சிவஞான சித்தி, இருபாஇருபஃது என்னும் இரு நூல்கள். சிவஞானசித்தி சிவஞான போதத்துக்கு விரிவுரை போல அமைந்துள்ளது. மறைஞான சம்பந்தர் வேளாண்மரபினர். இவருடைய மாணவர் உமாபதி சிவாசாரியர். உமா பதி சிவாசாரியர் அந்தண மரபினர். அந்தணரல்லாதாரிடம் அந்தண வகுப்பினர் உபதேசம் பெறுவதும், அவர்களிடம் மாணாக்கராகவிருந்து உண்மை ஞானங்களைப் பெறுதலும், தமிழ்நாட்டு வழக்காக விருந்தன வென்பதும், வருணாச்சிர தருமங்கள் என்பன தமிழ் நாட்டுக்குப் புறம் பானவை என்பதும் இதனால் தெரியவருகின்றன. மறைஞான சம்பந்தர் நூல் எதுவும் செய்யவில்லை. உமாபதி சிவாசாரியர் திருவருட்பயன், போற்றிப்பஃறொடை, வினா வெண்பா, கொடிக்கவி, உண்மைநெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம், நெஞ்சு விடுதூது, சிவப்பிரகாசம் முதலிய நூல்களைச் செய்தார். சங்கற்ப நிராகரணம் கி.பி. 1313இல் செய்யப்பட்டது. சித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றாகிய உண்மை நெறி விளக்கம் செய்தவர் மனவாசகங் கடந்தார். இவர் மெய்கண்டாரின் மாணவருளொருவர்.
சைவ சித்தாந்தம் உயிர், உலகம், கடவுள் என்னும் முப்பொருள் களும் உட்பொருள்களென்றும், உயிர்கள் எண்ணிலாதன, அனாதியே மும்மலங்களால் பந்திக்கப்பட்டவை என்றும், இறைவன் உலகம் எல்லாமாகியும், உலகத்துக்கு வேறாகியும், எண்ணில்லாத உயிர்கள் கன்மத்தின் ஆணையில் அமர்ந்துசெல்ல அவற்றுக்கெல்லாந் தலைவ னாகவுமிருப்பவன் என்றும் மும்மூர்த்திகளுக்கு மேலானவன் என்றும் கூறுகின்றது. சிவனுக்கு அவதாரங்களில்லை. அவர் அடியார் வழிபடும் உருவில் குருவாகத் தோன்றி அவர்களை ஆட்கொள்பவர். உயிர்களின் போக போக்கியங்களுக்கு ஏதுவாகிய மாயை உட்பொருள்.
உபநிடதங்கள், ஆகமங்கள், திருமந்திரம், திருமுறை நூல்களிற் கூறப்படுவன சைவ சித்தாந்தக் கொள்கைகளே. சைவ சித்தாந்தக் கொள்கையே மிகப் பழங்காலம் முதல் தமிழரிடையே இருந்துவந்த சமயக் கொள்கையெனத் தெரிகின்றது.
வசவர்
இவர் கன்னட நாட்டில் பாகவாடி என்னுமிடத்தில் பிராமண குலத்தில் கி.பி. 1125இல் பிறந்தார். இவர் கல்யாணி அரசனாகிய பிச்சால னுக்கு (1156-1166) மந்திரியாக இருந்தார். இவர் அதிக செல்வாக்குப் பெற்றிருந்தமையால் அரசன் இவருடைய சகோதரியை மணஞ்செய்தான். வசவர் இன்னொரு சகோதரியின் மகனாகிய சன்னபச வருடன் வீர சைவமதக் கொள்கைகளை வேகமாகப் பரப்பி வந்தார். வீரசைவக் கொள்கை தெலுங்கு நாட்டிலும் தென் பகுதிகளிலும் பரவிற்று. அனுபவ மண்டபமென்னும் சமய கூடத்தை இவர் அமைத்தார். இதன் தலைவர் அல்லமாப் பிரபுவாக இருந்தார். சாதியை ஒழிப்பது, தொழிலுக்கு மதிப்பளிப்பது, பெண்களுக்கு ஆண்களை ஒத்த மதிப்பளிப்பது என்பன இம்மதக் கொள்கைகளுட் சில. வீர சைவ மதத்தைத் தொடக்கியவ ரல்லராயினும் அம்மதக் கொள்கைகளைப் பரப்பியவர் என்னும் வகையில் வசவர் புகழ் பெறுவர்.
வீர சைவம்
வீர சைவம் என்பதற்கு வீறான அல்லது வீரமுள்ள சைவமென்பது பொருள். இம்மதம் மிகப் பழங்காலத்தில் ஐந்து ஞானாசிரியர்களால் வெளியிடப்பட்டது. இவ்வாசியர்கள் கலியுகத் தொடக்கத்தில் இரேவண சித்தர், மருள சித்தர், ஏகோராமர், பண்டிதாரத்தியர், விசுவாராத்தியர் என்னும் குரவர்களாக அவதாரஞ் செய்து இக் கொள்கைகளை மறுபடி யும் வெளியிட்டார்கள். இவ்வாறு வீர சைவர்களின் ஐதீகம் இருந்து வருகிறது. இவர்கள் சாமான்ய, மிர்ச, சித்தாந்த சைவர்களுக்கு வேறான வர்கள். முன் இரு பிரிவினரும் சிவனையும் விட்டுணுவையும் வழிபடுவர். சித்தாந்த சைவரும், வீர சைவரும் சிவனை மாத்திரம் வழிபடுவர். இலிங்க தாரணஞ் செய்து கொள்வது வீர சைவரைச் சித்தாந்த சைவரிலிருந்து வேறுபடுத்துகின்றது. ஆகவே இவர்கள் இலிங்காயதர் என்னும் பெயர் பெறுவர்.
வீர சைவம் ஆகமங்களைத் தழுவும் மதம். இது அறுபத்து மூன்று சைவ நாயன்மார்களுக்குப் பக்தி செலுத்துகின்றது. இவர்கள் மத்திய கால அடியார்களெனப்படுவர். மத்திய கால அடியார்களும் 770 பேர் உளர். இவர்களுள் வசவரும் அவரது முக்கிய சீடர்களும் சேர்க்கப்பட் டுள்ளனர். வீர சைவ தத்துவ ஞானம் சக்தி விசிட்டாத்துவைதம் எனப் படும். இக் கொள்கையின்படி உயிரும் கடவுளும் ஒன்றை விட்டொன்று பிரிக்க முடியாத பொருள்கள். பிரிக்க முடியாது இணைத்துக் கொண் டிருக்கும் ஆற்றல் சக்தி எனப்படும். உயிர் கடவுளுமன்று, கடவுளில் வேறு மன்று. சக்தி பரமசிவத்தோடு எப்பொழுதுமிருக்கும் பிரிக்க முடியாத பொருள். இச் சக்தியே மூலப்பிரகிருதி அல்லது மாயையாகப் பிரிந்து உலகத்தைத் தோற்றுவிக்கின்றது. சூரியனுக்கு ஒளியும், நெருப்புக்குச் சூடும் இருப்பதுபோலக் கடவுளுக்குச் சக்தி இருக்கிறது. அவித்தை ஒழியும்போது சீவன் சிவனுடன் கலந்து ஒன்றாகி விடுகிறது.
வைதீக சமயம்
கி.மு.2000 வரையில் ஒரு புதிய மக்கட் கூட்டத்தினர் வடஇந்தியா வின் தென்மேற்குப் புறத்தை அடைந்தனர். இவர்கள் ஆரியரெனப்பட் டார்கள். இவர்கள் வரும்போது இந்தியாவில் நாகரிகம் பெற்ற மக்கள் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். இவர்களின் வருகைக்கு முற்பட்டது மொகஞ்சதரோ நாகரிகம். புதியவர்களாக வந்த ஆரியர் மந்தை மேய்ப்ப வர்களாக இருந்தனர். இவர்களின் வழிபாடு இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களின் வழிபாட்டைவிட வேறு வகையாக இருந்தது.
இவர்கள் இடி, மின்னல், காற்று, நெருப்புப் போன்ற இயற்கைப் பொருள்களைக் கடவுளர்களாகக் கொண்டு வழிபட்டார்கள். அக் கடவுளர் மீது பாடப்பட்ட துதிப்பாடல்கள் பல அவர்கள் நினைவில் மிதந்து கொண்டிருந்தன. எழுதும் முறையை அறியாதிருந்தமையால் அவர்கள் அவற்றை எழுதி வைக்கவில்லை. ஒருவர் சொல்ல மற்றவர் கேட்டு மனப்பாடஞ் செய்யும் முறையில் அவை காப்பாற்றப்பட்டு வந்தன. இந்திய நாட்டை அடைந்த பின்பும் அவர்களில் பலர் தெய் வங்கள் மீது பல பாடல்களைச் செய்தார்கள். பாடல்களைச் செய்த வர்கள் இருடிகள் எனப்பட்டார்கள். இவர்கள் வேறு வகை நாகரிகமும் மொழியுமுடைய மக்களின் மத்தியிலிருந்தமையால் தமது பாடல்கள் அழிந்து போகாமல் இருக்கும் பொருட்டு, நினைவில் மிதந்து கொண் டிருந்த பாடல்களெல்லாவற்றையும் திரட்டிப் பாதுகாத்து வந்தார்கள். இவ்வாறு திரட்டப்பட்ட பாடல்களின் தொகுப்பு வேதமெனப்பட்டது.
வேள்விகளில் வேத பாடல்கள் பாடப்பட்டன. வெவ்வேறு கிரியைகளில் வேதபாடல்களில் சிற்சில பகுதிகளே பாடப்பட்டன. இவ்வாறு வெவ்வேறு கிரியைகளில் பாடுவதற்காகத் தொகுக்கப்பட்ட தொகுதிகள் வெவ்வேறு பெயர்கள் பெற்றன.
வேதங்கள்
இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என வேதங்கள் நான்கு. முதல் மூன்றும் மொழி, பொருள்களில் பெரிதும் ஒற்றுமையுடையன. இவற்றுள் இருக்கு முதன்மையுடையது. சாமவேதம் துதிப் பாடல்களாக அமைந்துள்ளது. இப் பாடல்களில் பல இருக்கு வேதத்தில் காணப்படு கின்றன. சாமவேதப் பாடல்கள் யாகங்களில் பாடுவதற்காகத் திரட்டப் பட்டவை. எசுர்வேதப் பாடல்கள் கிரியைகளில் பாடுவதற்காகத் தொகுக் கப்பட்டவை. வேதங்களை வியாச முனிவர் நான்காகப் பிரித்தார் என்னும் ஐதீகம் இருந்து வருகிறது.1
வேதங்களை மந்திரம், பிராமணம் என இரண்டாகப் பிரிக்கலாம். யாகக் கிரியைகளுக்காக மாத்திரம் திரட்டப்பட்ட பாடல்கள் மந்திர மெனப்பட்டன. அதற்கு மற்றொரு பெயர் சங்கிதை. மந்திரங்கள் இருக்கு வேத சங்கிதை, எசுர்வேத சங்கிதை முதலிய பெயர்கள் பெறும். யாகக் கிரியைகளை விரித்துக் கூறும் பாடல்களும் பல உரைநடைப் பகுதிகள் கொண்ட பகுதிகளும் பிராமணங்கள் எனப்பட்டன. பிராமணங்களை வேதங்களின் மிகப் பழைய உரைகள் எனக் கூறலாம். பிராமன் எனப் படுவது வேதம். பிராமனோடு சம்பந்தப்பட்டது பிராமணம். பிராமணங் களில்2 கிரியை முறைகளும் தத்துவ ஞானங்களும் அடங்கியுள்ளன. தத்துவார்த்தமான ஞானங்களடங்கிய பகுதி ஆரணியகங்களெனப் பட்டன.3 அவை எல்லோருக்கும் கற்பிக்கப்படுவதில்லை. அவற்றை விளங்கிக்கொள்வதற்குத் தனிமையும் அமைதியும் வேண்டும். உபநிட தங்களில் பல ஆரணியகங்கள் காணப்படுகின்றன. இவ்வாறு ஒவ்வொரு வேதத்திலும் மந்திரங்கள், பிராமணங்கள், உபநிடதங்கள் என்னும் மூன்று பிரிவுகளிருக்கின்றன. வேதத்தினிறுதியில் சேர்க்கப்பட்டிருப்பதால் உபநிடதங்கள் வேத முடிவு அல்லது வேதாந்தம் எனப்பட்டன.
வேதங்களில் வருணன், மித்திரன், சூரியன், பூசன், அசுவினி, சோமன், இந்திரன், உசாக்கள், அதிதி, அக்கினி, உருத்திரன், மருத்துக்கள், பிரமன், பிரகஸ்பதி முதலிய பல தெய்வங்களுக்குத் துதிகள் காணப் படுகின்றன.
வேதகாலச் சமயம் விக்கிரக வணக்கத்தைக் கைக்கொள்ள வில்லை. தெய்வங்களுக்குக் கோயில்களிருக்கவில்லை. தெய்வங்கள் வழிபடுவோரின் நண்பர்களாக இருந்தன. தமது தேவைகளை உதவுமாறு மக்கள் தெய்வங்களைத் துதித்தார்கள். வேள்விகளில் உணவும் நீரும் பெறும் பொருட்டு பிதிரர் (இறந்தவர்களின் ஆவிகள்) அழைக்கப் பட்டனர். தேவர்களை மகிழ்விப்பதற்கு யாகங்கள் செய்யப்பட்டன. மறு பிறப்பைப்பற்றி அறியப்படவில்லை. மரணத்துக்குப் பின் உயிர்கள் நரகம் அல்லது சுவர்க்கம் போன்ற உலகங்களில் வாழ்கின்றன என்னும் நம்பிக்கை இருந்து வந்தது.
பிராமணங்கள்
வேதத்தின் இரண்டாவது பகுதி பிராமணங்கள். இவை சதபதம், ஐதரேயம் என்பன. வேள்விக் கிரியைகளையும் வேள்விகளிற் படிக்கும் மந்திரங்களையும் அறிந்தவன் பிராமணன் எனப்பட்டான். யாகங்களால் இம்மை மறுமைப் பயன்களைப் பெறலாமென்னும் நம்பிக்கை உறுதி பெற்றிருந்தது. நூறு யாகங்களைச் செய்தவன் சுவர்க்கத்துக்கு அரச னாகிய இந்திரனையும் பதவியிலிருந்து விழுத்தலாமென நம்பப்பட்டது. உலகில் எல்லாம் நடைபெறுவது யாகங்களினால்; யாகங்களில்லாவிடில் சூரியனும் உதிக்கமாட்டாது என்பது போன்ற நம்பிக்கைகளும் இருந் தன. யாகங்கள் அதிகப்பட்டதும் புரோகிதரின் மதிப்பும் அளவு கடந்து வளர்ந்தது.
உபநிடதங்கள்1
உபநிடதமென்பதற்குக் கிட்ட இருத்தல் என்பது பொருள். இதன் கருத்து கிட்ட இருந்து கற்கப்படுவதென்பது. உபநிடத ஞானத்தைக் குரு தகுதியுள்ள தமது மாணாக்கனுக்கு உபதேசித்தார்.
உபநிடதங்கள் எத்தனை என்பதைக் குறித்து அறிஞர் ஒரே வகையாகக் கூறவில்லை. சிலர் 150 என்றும், சிலர் 108 என்றும் கூறு கின்றனர். முத்திகோப உபநிடதம் 108 உபநிடதங்களைக் குறிப்பிடுகின் றது. இப்பொழுது 108 உபநிடதங்களுள்ளன. 1656இல் உபநிடதங்கள் சில பாரசீகத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. அவற்றில் 50 உபநிடதங்க ளுள்ளன. அவ்வைம்பதும் இன்று கிடைக்கவில்லை. 14 உபநிடதங்களே வேதங்களைச் சேர்ந்தனவென்று சங்கராச்சாரியர் (கி.பி.8ஆம் நூ.) கூறியுள்ளார். மற்றைய ஆச்சாரியார்கள் 102 உபநிடதங்களே பிரமாண மாக உள்ளவை என்று கூறியுள்ளார்கள். ஈச, கேன, கதா, முண்டக, மண்டூக்கிய, ஐதரேய, தைத்திரீய, பிராஸ்ன, சாந்தோக்கிய, பிரிதாரண்யக முதலிய உபநிடதங்களிற் காணப்படாத புதிய கருத்துக்கள் மற்றைய உபநிடதங்களிற் காணப்படவில்லை.
ஈசா, கேனா என்னும் சொற்களோடு தொடங்குகின்ற உபநிடதங்கள் ஈச, கேன என்னும் பெயர்களைப் பெற்றன. கதா என்பது எசுர் வேதத்தி லுள்ள பிராமணத்தின் ஒரு பகுதியில் இப்பெயருடன் காணப்படு கின்றது. முண்டகம் மழிக்கப்பட்ட தலையைக் குறிக்கும். இது சன்னியாசி களைக் குறிக்கின்றது. சன்னியாசிகளுக்குரியதாதலின் இது இப் பெயர் பெற்றது. மண்டூகர் என்னும் இருடி செய்த உபநிடதம் மண்டூக உபநிடதமெனப்பட்டது. பிராஸ்ன என்பது கேள்வியைக் குறிக்கும். இதில் ஆறு கேள்விகள் இருப்பதால் இதற்கு இப்பெயரிடப்பட்டது. ஐதிரேய உபநிடதம் ஐதிரேயராற் செய்யப்பட்டது. தைத்திரீய உபநிடத்தைப் பற்றிப் புதுமையான கதை வழங்குகிறது. யாக்ஞவல்கி தமது மாணவ ரொருவருடன் யாதோ காரணமாக வெறுப்படைந்தார். அவர் கோபா வேசத்தில் தாம் கற்பித்தவற்றைத் திருப்பிக் கொடுக்கும்படி கேட்டார். மாணாக்கர் அதனை வாந்தி செய்தார். இருடிகளிற் சிலர் கௌதாரி வடிவங் கொண்டு அதனை உண்டனர். கௌதாரி தித்திரீஸ் எனப்படும். சாந்தோக்கியமென்னும் பெயர்வந்த காரணம் அறிய முடியவில்லை. பிர்கத் ஆரணியமென்பதற்கு ஆரணியத்திற் செய்யப்பட்ட பெரிய கதை என்பது பொருள்.
இவ்வுபநிடதங்களின் காலங்களைக் குறிப்பிட முடியாது. இவை புத்தர் காலத்துக்கு முற்பட்டவை எனக் கூறலாம். உபநிடதங்களின் காலம் கி.மு. 1000க்கும் 500க்குமிடையில்.
உபநிடதங்கள் ஒருவரால் எழுதப்பட்டவையல்ல. அவை உபதேசங்களின் குறிப்புகளாகும். உபதேசங்கள் ஒருவரிடமிருந்து ஒருவருக்குக் கேள்விமுறையில் வந்தன. நீண்ட காலத்தின் பின் அவை பல்வேறு ஆச்சிரமங்களில் மாணவருக்கு உபதேசிக்கும் பொருட்டுக் குறிப்பாக எழுதி வைக்கப்பட்டவை. இக் குறிப்புகளே உபநிடதங்கள் என்னும் வடிவில் வெளி வந்துள்ளன.
உபநிடதங்கள் வேதங்களின் பகுதிகளாகவுள்ளன. நால்வேதங் களினிறுதியிலும் பத்து உபநிடதங்களுள்ளன. ஆகவே, உபநிடதங்கள் வேதாந்தம் எனப்படும். அவை ஞானங்களைக் கூறுகின்றன. சங்கராச் சாரியர் உரையெழுதிய உபநிடதங்கள் பௌத்த மதத்துக்குப் பிற்பட் டவை. பழைய உபநிடதங்கள் உரைநடையிலுள்ளன. இவை ஒரு கட்சியைச் சேர்ந்தவையல்ல. உபநிடதங்கள் செய்தவர்களைப் பற்றி ஒன்றும் அறியப்படவில்லை. அவர்கள் தமது பெயர்களை வெளிப் படுத்தவில்லை. உபநிடதங்கள் யாகங்களைக் கண்டிக்கின்றன. பிற்காலத் தில் உபநிடதம் என்னும் பெயருடன் பல நூல்கள் எழுதப்பட்டன. அவற்றுள் அல்லா உபநிடதம் என்பதும் ஒன்று.
உபநிடத ஞானங்கள் ஆரியரின் வருகைக்குமுன் மொகஞ்சதரோ மக்களிடையே தோன்றி வளர்ச்சியடைந்தவை. இஞ்ஞானங்களைப் பிராமணர் அறிந்திருக்கவில்லை.1 அரசவகுப்பினரே இவற்றை அறிந் திருந்தார்கள். அவர்களிடமிருந்து பிராமணர் இஞ்ஞானங்களைப் பெற்றார்கள். சாங்கியம், வேதாந்தம், பௌத்தம், சமணம் போன்ற மதக் கொள்கைகளுக்கெல்லாம் ஆதாரமாகவுள்ளவை உபநிடத ஞானங்களே.
தரிசனங்கள்
பௌத்தமும், சமணமும் தோன்றி வேதமார்க்கத்தை எதிர்த்தன. பௌத்த மதத்துக்குத் தர்க்கம் ஆயுதமாக இருந்தது. பௌத்த மதத்துக்கு முன் பலதத்துவ ஞானக் கொள்கைகள் தோன்றி ஆங்காங்கு நிலை பெற்றிருந்தன. இப்பொழுது இத் தத்துவஞானக் கொள்கைகளைத் தர்க்க முறையாக ஒழுங்கு செய்ய வேண்டிய அவசியமுண்டாயிற்று. நியாயம் ஏற்றுக் கொள்ளத்தக்க முறையிலிருந்தால் கொள்கைகளின் முடிவுகளில் மக்களுக்கு நம்பிக்கை உண்டாகும். அக்காலத்தில் தத்துவமுறையான ஆறு தரிசனங்கள் இருந்தன. அவை கௌதமரின் நியாயமும், கணாதரின் வைசேடிகமும், கபிலரின் சாங்கியமும், பதஞ்சலியின் யோகமும், யமினியின் பூர்வமீமாம்சையும், வாதநாராயணரின் உத்தரமீமாம்சையு மாகும். இவை எல்லாம் வேதங்களைத் தமக்குப் பிரமாணமாகக் கூறுகின்றன.
ஆத்திகமும் நாத்திகமும்
அக்காலத்தில் வேதங்களைப் பிரமாணமாகக் கொண்ட சமயங்கள் ஆத்திகமென்றும், அவற்றைப் பிரமாணமாகக் கொள்ளாத சமயங்கள் நாத்திகமென்றும் அறியப்பட்டன. ஆத்திகம், நாத்திகம் என்பவற்றின் முடிவு வேதத்தை ஆதாரமாகக் கொள்வதிலேயே தங்கியிருந்தது. ஆத்திகத் துக்குக் கடவுட் கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்னும் நியதி இருக்கவில்லை. பௌத்த மதத்தின் தொடக்கமும் உபநிடதங்களிலுள்ளது. வேதங்களைப் பிரமாணமாகக் கொள்ளாமையால் அது நாத்திகம் எனப்பட்டது. வேதங்களை ஒப்புக்கொள்வது அனுபூதி, தர்க்க முடிவு களிலும் பார்க்க மேற்பட்ட முடிவு எனக் கருதப்பட்டது. வைசேடிகமும் நியாயமும் கடவுளை அனுமானத்தினால் ஒப்புக்கொள்கின்றன. சாங்கி யம் கடவுட் கொள்கையுடையதன்று. யோகம் வேதத்துக்குப் புறம்பே நிற்கின்றது. இரண்டு மீமாம்சைகளும் வேதங்களை ஆதாரமாகக் கொள் பவை. பூர்வமீமாம்சை தெய்வங்களை வேதங்களிலிருந்து கொள்கிறது. அது தலைமையான ஒரு முழுமுதற் கடவுளைப்பற்றி அக்கறை கொள்ள வில்லை. உத்தரமீமாம்சை சுருதி அனுமானங்களால் கடவுளை ஒப்புக் கொண்டு தியானத்தினாலும், ஞானத்தினாலும் கடவுளை அடையலா மெனக் கூறுகின்றது. கடவுட் கொள்கையுள்ள பிற்கால அறிஞர் சாங்கியத்தைத் தரிசனங்களிலொன்றாகக் கொள்ள மறுத்தனர்.
சூத்திர வடிவில் தத்துவ ஞான நூல்கள்
ஒவ்வொரு தத்துவ ஞானக் கொள்கையினரும் தத்தமக்கு ஏற்றவாறு வேதவாக்கியங்களுக்குப் பொருள் கண்டார்கள். அவர்கள் தத்தம் கொள்கைகளை முறைப்படுத்திக் கூற முயன்றபோது சூத்திரங்கள் எழுந்தன. சூத்திரமென்பது பரந்த பொருளைச் சுருங்கக் கூறும் ஒரு வகைப் பா. சூத்திரங்கள் செய்யப்பட்ட பின் தத்துவ ஞானங்களைப் பற்றிய கொள்கைகள் பலவாறு வளர்ச்சியடைந்தன. தத்துவ ஞானங் களைப் பற்றிய சூத்திரங்கள் ஏறக்குறைய ஒரே காலத்தில் தோன்றியன வாகக் காணப்படுகின்றன. சூத்திரங்களைச் செய்தவர்கள் இத் தத்துவ ஞானங்களைத் தொடக்கியவர்களல்லர். இத்தத்துவ ஞானங்கள் சூத்திரங்கள் செய்யப்படுவதன் முன் தனித்தனியே வளர்ந்தன. தத்துவ ஞானங்கள் குருமாணாக்க முறையில் பயிலப்பட்டுவந்தன.
எல்லாத் தத்துவஞானங்களும் வேதத்தைப் பிரமாணமாகக் கொள்வதால் அவை எல்லாம் ஒரு தொடக்கத்தை உடையனவென்று தெரிகிறது. மாயை, புருடன், சீவன், அவித்தை போன்ற சொற்களை எல்லாத் தரிசனகாரரும் ஆளுகின்றனர். ஆனால் இச் சொற்களை ஒவ்வொரு பிரிவினரும் வெவ்வேறு கருத்துக்களில் ஆண்டுள்ளனர். எல்லாத் தரிசனங்களும் பௌத்தரின் நிரீச்சுரக் கொள்கையைக் கண்டிருக்கின்றன. பூர்வ மீமாம்சையைத் தவிர மற்றைய தரிசனங் களெல்லாம் பிறப் பொழிப்பை (வீட்டை) குறிக்கோளாக உடையன.1
“ஒவ்வொரு தத்துவ ஞானத்தைப் பற்றியும் சூத்திர வடிவில் நூல்கள் செய்யப்பட்டன. இச் சூத்திரங்கள் ஒவ்வொன்றிலும் மற்றைய தத்துவஞானங்களைக் கண்டிக்கும் பகுதிகளுண்டு. இப் பகுதிகள் மற்றைய தத்துவஞான நூல்கள் எழுதி முடிந்தபின்பே எழுதப்பட்டிருத் தல் வேண்டும். எல்லாத் தத்துவ ஞானங்களும் ஒரே காலத்தில் தோன்றி ஒன்றன் பக்கத் தொன்றாக வளர்ச்சி அடைந்தன என்று கூற முடியாது. முதலில் தத்துவஞானக் கொள்கைகளுக்குக் கருவாகவுள்ள சூத்திரங்கள் செய்யப்பட்டன. பின்பு மற்றைய கொள்கைகளைக் கண்டிக்கும் சூத் திரங்கள் செய்யப்பட்டன. சில காலத்தின் பின் இச் சூத்திரங்கள் மாற்றத்துக் கிடமில்லாமல் நிலைத்து விட்டன. ஆறு தரிசனங்களையும் சில ஒற்றுமைகளால் இவ்விரண்டாக (மூன்று சோடிகளாகப்) பிரிக்க லாம். நியாயமும் வைசேடிகமும் ஒரு சோடியும், சாங்கியமும் யோகமும் இன்னொன்றும், பூர்வமீமாம்சையும் உத்தரமீமாம்சையும் மற்றொன்று மாகும். பின் கூறப்பட்ட சோடி பிற்காலத்தில் பிரிந்தது. இத்தத்துவ ஞானங்கள் புத்தர் காலத்துக்கு முன் இருந்தன. அவற்றின் முடிவைக் கூறும் சூத்திரங்கள் பிற்காலத்திற் செய்யப்பட்டன.” (The history and culture of Indian people, Vvol.2)
சாங்கியம்
சாங்கியத்துக்குக் கர்த்தா கபிலர். இவர் கௌதம புத்தருக்கு முன் வாழ்ந்த அரச மரபினர் என்றும், இவர் பெயர் சம்பந்தமாகவே கபிலவாஸ்து என்னும் பெயர் உண்டானதென்றும், கௌதம புத்தர் கபிலர் மரபைச் சேர்ந்தவரென்றும் நம்பப்பட்டு வருகின்றன. கபிலர் செய்த நூல்கள் மறைந்துபோயின. சாங்கிய சூத்திரம், சாங்கிய பிரவசனா என்னும் நூல்கள் இவர் செய்தனவாக வழங்குகின்றன. அவை சமீப காலத்தில் செய்யப்பட்டவை எனக் கொள்ளப்படுகின்றன. இப்பொழுது கிடைக்கும் சாங்கிய மதக்கொள்கைகளை விளக்கும் நூல். கி.பி.3ஆம் நூற்றாண்டளவில் ஈசுவர கிஷ்ணர் என்பவரால் செய்யப்பட்ட சாங்கிய காரிகை என்னும் நூல். சாங்கிய காரிகைக்குக் கௌடபாதர் ஒரு உரை எழுதினார்.
இவர் கி.பி. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சாங்கியம் சடத் தோடு ஆதிமுதல் சம்பந்தப்பட்டு வருகின்ற உயிர் பின் சடத்தோடு சேராதிருக்கும் நிலையை அடையும் மார்க்கத்தைக் கூறுகின்றது. இது கடவுள் ஒன்று இருப்பதை ஒப்புக்கொள்ளவில்லை. ஆகவே அது நிரீச்சுர வாதம் எனப்படுகின்றது. சாங்கியம் என்பதற்கு எண், கணக்கிடுதல், ஞானம் என்னும் பொருள்களுண்டு.
யோகம்
1யோகத்தைப் பற்றிக் கூறும் நூல்களுள் பதஞ்சலியின் யோக சூத்திரம் பழமையுடையது. இது நான்கு பகுதிகளுடையது. முதற்பகுதி நிட்டை கூடியிருப்பதைப் (சமாதி) பற்றிக் கூறுகின்றது. இரண்டாவது நிட்டை கூடுவதற்குரிய சாதனைகளையும், மூன்றாவது யோக சித்திகளை யும் நான்காவது வீட்டையும் (கைவல்லியம்) கூறுகின்றன. யாக்ஞவல்கிய மிருதி யோக முறையைக் கண்டவர் இரணிய கர்ப்பர் எனக் கூறுகின்றது. பதஞ்சலி கி.மு. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். மாதவர் யோக சூத்திரத்தைச் செய்தவர் பதஞ்சலி எனக் கூறியுள்ளார். இலக்கண நூலாசிரியராகிய பதஞ்சலி கி.மு. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகக் கொள்ளப்படுவர். யோக சூத்திரஞ் செய்தவரும் பாணினியின் நூலுக்குப் பாடியஞ் செய்தவரும் ஒருவரோ என்பது நிர்ணயிக்கப்படவில்லை. வியாசாசிரியர் (கி.பி.4ஆம் நூ.) இதற்கு உரை செய்துள்ளார். வாசஸ்பதி (9ஆம் நூ.) தத்துவ சாரடீ என்னும் அட்டவணை ஒன்று இந் நூலுக்கு எழுதியுள்ளார். போச இராசமார்த்தாண்டா என்பது யோகத்தைப் பற்றிய சிறந்த நூல். பிற்கால உபநிடதங்கள் பல யோக சாதனங்களுக்கு முதன்மை கொடுக்கின்றன. போசர் யோக சூத்திரத்துக்கு இராச மார்த் தாண்டா என்னும் உரை எழுதியுள்ளார். பதஞ்சலி இலக்கணம், யோகம், மருந்து முதலியவற்றைப் பற்றியும் எழுதினார் என அவர் கூறியுள்ளார். புத்தர் யோகப் பயிற்சி செய்தார். இலலித விஸ்தாரா என்னும் நூல் (கி.பி.3 ஆம் நூ.) புத்தர் காலத்தில் பலவகை யோகப் பயிற்சிகள் இருந்தன வென்று கூறும். சாங்கியம், யோகம் என்னும் தரிசனங்களுக்கு அதிக ஒற்றுமை உண்டு. யோகமதமும் கடவுளைப் பற்றிக் கூறாமையின் அது நிரீச்சுர மதம் எனப்படும்.
சாங்கியமும், யோகமும் சடம் சம்பந்தமான உலகம் முழுவதையும் பிரகிருதி எனக் கூறும். இராசதம், தாமசம், சத்துவம் என்னும் மூன்று குணங்கள் பிரகிருதிக்கு உண்டு. இக் குணங்கள் பலவிதமாகச் சேர்வதி னால் உலகிலுள்ள பொருள்களெல்லாம் உண்டாகின்றன. ஆன்மாவென் பதை இம்மதங்கள் புருடன் என்று கூறும். ஆன்மா, அந்தக் கரணம் போன்ற பௌதிகக் கூறுகளோடு சேர்ந்தபோதும் தனித்து நிற்கும் இயல்புடையது. ஆன்மாக்கள் பல உண்டு. இவை சாங்கிய யோகக் கொள்கைகளாகும்.
வைசேடிகம்
வைசேடிக சூத்திரம் செய்தவர் கணாதர். இவரது, உண்மையான பெயர் காசியப்பர் எனத் தெரிகிறது. வைசேடிக சூத்திரம் பத்துப் பகுதி களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வைசேடிக சூத்திரம் நியாய சூத்திரத்துக்கு முற்பட்டது. இது பிரம சூத்திரம் (வேதாந்த சூத்திரம்) செய்யப்பட்ட காலத்ததாகலாம். இது கி.மு. 3ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தியது எனக் கருதப்படும். கணாதர் வேதங்கள் இருடிகளாற் செய்யப்பட்டவை யென்று கூறுவர். மீமாம்சைகர் அவை நித்தியமெனக் கூறுவர். வைசேடிகம் பௌத்த மதத்தின் எதிர்ப்பாகத் தோன்றியது. வைசேடிக மும், நியாயமும் பல கொள்கைகளில் ஒத்து நிற்கின்றன. வைசேஷ என்பதற்கு குறிக்கப் பட்ட என்பது பொருள். அது ஆராயப்பட்டுள்ள ஒவ்வொரு பொருளின் தன்மைகளையும் கூறுகின்றது. வைசேடிகம் அணுக் கொள்கையைக் கூறுகிறது. வைசேடிக சூத்திரமும் நியாய சூத்திரமும் செய்தவர்கள் சிவ வழிபாட்டினர்1 என வரலாறுளது. பதஞ்சலியும் வியாக்கிர பாதரும் (அட்சபாதர்) சிதம்பரத்தில் தவங்கிடந்து சிவபெருமானின் திருக் கூத்தைக் கண்டவர்களாகத் திருவிளையாடற் புராணம் கூறும்.
நியாயம்
நியாய சூத்திரம் என்னும் தத்துவ ஞான நூலைச் செய்தவர் கௌதமர். நியாயம், தர்க்கம், வாதம் என்பன ஒரு பொருளன. யமினிக்கு முன் மீமாம்சை இருந்தது போலக் கௌதமருக்கு முன் நியாயம் இருந்தது. நியாயம் பிராமணக்கருத்துக்களைத் தர்க்க மூலம் தத்துவ ஞானக் கொள்கைகளோடு சம்பந்தப்படுத்துகிறது. நியாய சூத்திரம் கி.மு. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. நியாய சூத்திரத்தின் சில பகுதிகள் கிறித்துவ சகாப்தத் தொடக்கத்தின் பின் செய்யப்பட்டவை. இதற்கு வற்சயாயனர் பாடியஞ் செய்துள்ளார். வற்சயாயனர் கி.பி.400 வரையில் வாழ்ந்த தெலுங்கு நாட்டவர். இவர் தமிழ்நாட்டவரெனவும் கருதப் படுவர்.
நியாயம், வைசேடிகம், மீமாம்சை என்னும் மூன்றும் சடப்பொருள் அணுவாலாகியது; அவ் வணுக்கள் பல இனங்களாகும்; அணுக்கள் சேர்ந்து பிரபஞ்சமுண்டாகிறது; நித்தியமான ஆன்மாவும் பலதிறப் பட்டது; ஆன்மா தனது தனிப் பண்பு நிலையில் எதனுடனும் உறவற்றது. ஆனால் சடத்துடன் உறவு கொள்ளும்போது உடலும் பொறிகளும் பெற்று எல்லையுணர்ச்சி பெறுகின்றது எனக் கூறும்.
பூர்வ மீமாம்சை
மீமாம்சை சூத்திரம் யமினியாற் செய்யப்பட்டது. இது வேதங் களில் கொடுக்கப்பட்டுள்ள பிரமாணங்களைத் (நியாயங்களை) திரட்டிக் கூறுகின்றது. அது பல வகை யாகங்களையும் அவற்றின் பயன்களையும் சில தத்துவ ஞானக் கொள்கைகளையுங் கூறுகின்றது. அதற்கு 12 அதிகாரங் களுண்டு. வேதங்களிற் கூறப்படுவனவெல்லாம் தழுவப்படத்தக்கன வென்று யமினி வாதிக்கின்றார்.
யமினியின் நூல் கி.மு. 4ஆம் நூற்றாண்டிற் செய்யப்பட்டது. நியாய, யோக சூத்திரக் கருத்துக்கள் இதில் காணப்படுகின்றன. யமினி யின் நூலுக்கு சபரர் உரை எழுதியுள்ளார். பட்டர், பாவதாசர், அரி, உபவாசர் என்போர் சபரருக்கு முன் உரை எழுதியிருக்கின்றனர். சபரர் கி.பி.200 க்கும் 500 க்கும் இடைப்பட்ட காலத்தவர். சபரரின் உரையே எல்லாப் பிற்கால மீமாம்சை நூல்களுக்கும் ஆதாரமாக உள்ளது. புரோகிதரின் முதன்மையையும் வேதங்களின் பிரமாணத்தையும் வற்புறுத்தும் உரை குமாரிலரால் (8 ஆம் நூ.) எழுதப்பட்டது. குமாரிலர் சங்கரரின் கொள்கைகளை மறுக்கிறார்.
உத்தர மீமாம்சையிலிருந்து பிரித்தறிவதற்காக யமினி செய்த நூல் பூர்வ மீமாம்சையெனப்பட்டது. உபநிடதங்களைத் தவிர ஏனைய வேதங்களின் பகுதிகள் வேள்வி முதலிய கிரியைகளைக் கூறுகின்றன. கிரியைகளில் சந்தேகங்களையும் சந்தேக நிவர்த்திகளையும் உணர்த்தும் வினாக்களும் விடைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சந்தேகங்களும் நிவர்த்திகளும் பற்றிய செய்திகள் பிரமாணங்களில் காணப்படுகின்றன. பிரமாணங்களெனப்படுவன முடிவு பெறாதனவும் விளக்கமில்லாதனவு மாகக் காணப்படுகின்றன. பலர் கிரியைகளைப் பலவாறு செய்து வந்தனர். ஆகவே அவற்றுக்கு ஆதாரம் ஆராயப்பட்டது. பௌத்த மதம் தோன்றிய பின் அறியப்பட்ட உண்மைகளையெல்லாம் திரட்டிச் சூத்திரமாக நூல் செய்யப்பட்டது.1 பூர்வ மீமாம்சையில் ஞானத்திலும் பார்க்கக் கிரியை முதல் இடம் பெறுகின்றது. கிரியைகளைத் தாக்காத அளவில் பூர்வ மீமாம்சை மற்றைய தத்துவ ஞானங்களை ஏற்றுக் கொள்கின்றது; வேதங்களை ஆதாரமாகக் கொண்டு பௌத்த மதத்தை எதிர்க்கின்றது; பௌத்த மதக் கொள்கைக்கு மாறாக உலகத்தை உட்பொருளெனக் கொள்கின்றது. இக்கால இந்து மத சட்டங்கள் மீமாம்ச மதக்கொள்கை யின் செல்வாக்குப் பெற்றுச் செய்யப்பட்டவை.
2வேத இலக்கியங்கள் பல காலங்களில் செய்யப்பட்டவை. இவற்றி லுள்ள பாடல்கள் கால ஒழுங்கில் இல்லாமல் பலவாறு குழப்பமடைந் திருக்கின்றன. தொடக்கத்தில் கிரியைகள் இலகுவாக இருந்தன. வேள்வி களில் இந்திரன், வருணன், மித்திரன், விட்டுணு முதலிய தேவருக்கு உணவும் சோம பானமும் அளிக்கப்பட்டன. அப்பொழுது இருடிகள் அத்தேவர்கள் மீது பல துதிப் பாடல்களைப் பாடித் தமக்கு நேரக்கூடிய ஆபத்துக்களைத் தடுக்கும் படியும், தமக்கு வேண்டியவற்றைக் கொடுக் கும்படியும் வேண்டினார்கள். யாகங்கள் வளர்ச்சி அடைந்து கிரியைகள் சிக்கலடைந்த போதும் பல பாடல்கள் பாடப்பட்டன.
பாடல்கள் செய்யப்பட்டபின் சிறிது காலங்கழிந்தது. பாடல்கள் மக்களின் நினைவில் இருந்துகொண்டிருந்தன. அப்பொழுது இவற்றை எல்லாம் திரட்டும் முயற்சி நடைபெற்றது. பாடல் வகையான தொகுப்பு இருக்கு எனவும் வசன நடையான தொகுப்பு எசுர் எனவும் அறியப் பட்டன. வேதங்கள் செய்யப்பட்டதற்கும் பாடல்கள் தொகுக்கப்பட்டதற் கும் இடைப்பட்ட காலம், அப் பாடல்கள் எவ்வெத் தேவர்களைக் குறித்துப் பாடப்பட்டன வென்பதையும், எப்பொழுது பாடுவதற்குரியன வென்பதையும் மறந்துவிடக் கூடிய நீண்டதாக விருந்தது. இப்பொழுது வேத இலக்கியம் சுருதி என்னும் முறையில் சிறிதும் விடாமல் கிரியை களிற் படிக்கப்பட்டு வந்தது.
மிகப் பழங்காலத்திலும் பாடல்களின் பகுதிகள் பிரித்தெடுக்கப் பட்டு மந்திரங்களாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன. அவை இலக்கிய மாகக் கருதப்படவில்லை. தொடக்கத்தில் வேதம் ஒன்றாகவிருந்த தென்றும் பின்பு அது நான்காகப் பிரிக்கப்பட்டதென்றும், ஒவ்வொன்றும் வெவ்வேறு புரோகிதரால் யாகங்களில் பாடப்பட்டனவென்றும் விட்டுணு புராணம் ஓரிடத்தில் குறிப்பிடுகின்றது. யாகங்களை நடத்தும் புரோகிதன் அத்வாரு எனப்பட்டான். அவன் பயன்படுத்துவதற்காக எசுர் வேதம் தொகுக்கப்பட்டது. இது இருக்கு (பாடல்)களும் வசனமும் அடங்கிய பகுதி. இதைக் கொண்டு அவன் பூரணை அமாவாசிக் காலங்களில் செய்யப்படும் இலகுவான யாகங்கள் முதல் சிக்கலான கிரியைகளடங்கிய அசுவமேதம் முதலிய யாகங்களைச் செய்ய வேண்டியிருந்தது. யாகங்கள் புரியும் முறைகள் அடங்கியிருப்பதினாலும் அத்வாருவுக் குரியதாதலாலும் எசுர் வேதம் மிகச் சிக்கலுடையது. ஹோதா என்னும் புரோகிதன் யாகங்களில் தேவர்களை அழைத்து அவர்களைப் பாடல்களால் துதித்தான். ஒவ்வொரு கிரியையைச் செய்யும் போதும் அவ்வக்கிரியைக்குரிய பாடல்களை மாத்திரம் பாடும் அத்வாருவின் செயல்போலல்லாது இவனுடைய செயல் பாடல்களைத் தொடர்பாகப் பாடுதலளவிலிருந்தது. ஆகவே இவனுக்காகத் தொகுக்கப் பட்ட பாடல்கள், பகுதிகள் பிரித்தெடுக்கப்படாது முழுப்பாடல்களாகத் தொகுக்கப்பட்டன. இத்தொகுதி இருக்கு வேதமெனப்பட்டது. இருக்கு வேத பாடல்கள் பிரித்தெடுக்கப்படாது முழுப்பாடல்களாக இருப்பதி னாலேயே ஐரோப்பிய அறிஞர் இருக்குவேதம் முதலில் தொகுக்கப்பட்ட தென்றும், அது எசுர் வேதத்துக்கு முந்தியதெனவுங் கருதினார்கள். உத்காதா என்னும் புரோகிதர், தெரிந்தெடுக்கப்பட்ட சில பாடல்களை மாத்திரம் பாடினார். இவருக்காகச் சாமவேதம் தொகுக்கப்பட்டது. இவ்வாறு மூன்று வேதங்கள் அமைந்துள்ளன. வீடுகளில் செய்யப்படும் கிரியைகளிற் பயன்படுத்தப்படும் பாடல்களும் மந்திர வித்தைகளும் திரட்டப்பட்ட தொகுப்பு அதர்வண வேதமெனப்பட்டது.
யாகங்களிற் செய்யப்படும் கிரியைகள் பெருகிக் குழப்பமான போது யாகக் கிரியைகளை மேற்பார்த்து நடத்துதற்கு பிரம என்னும்1 புரோகிதரும், வீட்டுக் கிரியைகளை நடத்துவதற்குக் கிரியா என்னும் புரோகிதரும் வேண்டப்பட்டார்கள். இக்காலத்தின் பின் மக்கள் பண்பாட்டு முறையில் சில மாறுதல்கள் உண்டாயிருத்தல் வேண்டும். அப்பொழுது சங்கிதைகள் எழுதப்பட்டிருந்த மொழியை மக்கள் மறந் தார்கள். பிராமணங்கள் எழுதப்பட்டுள்ள மொழி தோன்றலாயிற்று. இது வேத கால மொழிக்கும் சமக்கிருதத்துக்கும் இடைப்பட்டது. பாடல் களின் பொருள் விளங்க முடியாதிருந்த காலத்தில் அவை யாகங்களில் முறை தவறிப் பாடப்பட்டன. அவற்றின் பொருள்களும் தவறாகக் கொள்ளப்பட்டு வந்தன. கிரியைகளின் விபரங்கள் அவற்றிலுச்சரிக்க வேண்டிய மந்திரங்களைப் பற்றிச் சபைகளில் வாதங்கள் நடந்தன. அவ் வகை வாதங்களுக்கு முடிவுகாண நியாயம் ஆளப்பட்டது. நியாயங்கள் என்பன ஏற்றுக்கொள்ளக் கூடிய அனுமானங்களைத் தரக்கூடிய முது மொழிகளும் உவமைகளும். அகிகுண்டல நியாயமென்பது பாம்பையும் அதன் மண்டலங்களையும் போல எனக் கூறும் வாதம். தாலிபுளக நியாயமென்பது ஒரு பானை சோற்றுக்கு ஒரு அவிழ்பதம் எனக் கூறுவது. இவை நியாயம் எப்படித் தோன்றியதென்பதற்கு எடுத்துக்காட்டுக் களாகும்.
காலத்தில் பிராமணங்களும் வேதங்களோடு சேர்க்கப்பட்டன. மந்திரங்களும் பிராமணங்களும் சேர்ந்து வேதம் பெரிதானபோது வேதத்திலுள்ளவற்றுக்கு விளக்கங்கூறுவது கடினமாகவும் சிக்கலாகவு மிருந்தன. வேதங்களிற் கூறப்படும் கிரியைகளில் நேரும் தவறுகளை அறிந்து கூறுவது, அவற்றை விளக்குவது என்னும் முறைகள் மீமாம்ச சாத்திரமெனப்பட்டன. இவ்வகையிலமைந்த பல சூத்திரங்களே யமினி சூத்திரம். யமினியின் கொள்கை தர்மத்தைத் தெளிவாக்குவது. தர்மம் என்பது கடமை. தர்மங்கள் சமய சாத்திரங்களின் கட்டளைகள். வேதங் களில் சொல்லப்பட்ட கட்டளைகள் மனிதருக்கும் தேவருக்கும் அப்பாற் பட்டவை. ஆகவே மீமாம்சையில் கடவுளுக்கு இடமில்லை. மீமாம்சை, பிறப்பு, இறப்பு, மறுபிறப்புகளைப் பற்றிய ஆராய்ச்சியில் சொல்ல வில்லை. யமினி, வேதம் நித்தியம் அது எவராலும் செய்யப்படவில்லை என்று நாட்டுவதற்குப் பல நியாயங்களைக் கூறுகின்றார்.
வேதாந்த சூத்திரம்
வேதாந்த சூத்திரம் வாதநாராயணரால் செய்யப்பட்டதெனச் சங்கரர் முதல் பின்வந்த ஆசிரியர்கள் கூறியிருக்கின்றனர். சூத்திரங்களில் வாதநாராயணரின் பெயர் படர்க்கையிற் கூறப்பட்டிருத்தலால் வேதாந்த சூத் திரத்தைச் செய்தவர் அவரல்லர் எனவும் கருதப்படுகின்றது. நூலாசிரி யர்கள் தமது பெயரைப் படர்க்கைப்படுத்திக் கூறுதல் இந்தியமரபாதலின் அதனைப் பிற ஆசிரியர் செய்ததாகக் கொள்ள வேண்டியதில்லை. வேதாந்த சூத்திரத்தைச் செய்தவர் வாதநாராயணர் என்றும், வியாசர் என்றும் ஐதீகம் இருந்து வருகின்றது. சங்கரரின் மாணவர்களாகிய வாசஸ்பதி, ஆனந்தகிரி என்போர் வாதநாராயணர், வியாசர் என்போரை ஒருவாராகக் கொண்டனர். இராமானுசர், வல்லபர், பலதேவர் என்போர் வேதாந்த சூத்திரத்தை வியாசர் செய்ததாகக் கூறுவர். வாதநாராயணர் பலவிடங்களில் யமினியைப் பிரமாணமாகக் குறிப்பிட்டுள்ளார். யமனி வியாசரின் மாணவரெனக் கொள்ளப்படுவர். மகாபாரதம், விட்டுணு புராணம், பகவத் கீதை முதலிய நூல்களை நாம் நம்பினாலும், வாத நாரா யணர் யமினியின் நூலைக் குறிப்பிட்டிருப்பதாலும் யமினி வியாசரின் மாணவரென்பது உறுதிப்படமாட்டாது. சபரர், கோவிந்தர், ஆனந்தர், ஆனந்தகிரி என்போர், வியாசரும் வாதநாராயணரும் ஒருவர் எனக் கொள்வதற்கு யாதும் சந்தேகமில்லையெனக் கொள்வர். சங்கரரின் கொள்கை யாது என்பது தெளிவாகவில்லை.
சாங்கியம், வைசேடிகம், சமணம், பௌத்தம் முதலிய மதக் கொள்கைகளை வேதாந்த சூத்திரங்கள் குறிப்பிடுகின்றன. சங்கரர், இராமானுசர், மாதவர், வல்லபர் என்போர் வேதாந்த சூத்திரம் கீதையைக் குறிப்பிடுவதை அறிந்துள்ளனர். சூத்திரத்தில் காணப்படும் பல பெயர்கள் ஆஸ்வலாயனம், காத்தியாயனம், தைத்திரிய, பிராதி சாக்கிய சூத்திரம் முதலிய நூல்களில் காணப்படுகின்றன. போதாயனரின் கிரியா சூத்திரங்களிலும் இப்பெயர்கள் காணப்படுகின்றன. கருட புராணம், பத்ம புராணம், மனு முதலிய நூல்கள் வேதாந்த சூத்திரத்தை யும், அரிவம்சத்தையும் குறிப்பிடுகின்றன. கருடபுராணம், பத்ம புராணம், மனு முதலிய நூல்கள் கி.பி.200ஐச் சேர்ந்தவை. வேதாந்த சூத்திரம் கி.மு.500-க்கும், கி.பி.200-க்கும்மிடையில் செய்யப்பட்டதெனக் கொள்ளப்படுகின்றது.
வேதாந்தம்
1வேதாந்தம் என்பதற்கு வேதத்தின் முடிவு என்பது பொருள். இது வேதத்தின் நான்காவது பகுதியாகிய உபநிடதங்களைக் குறிக்கும். வேதாந்த சூத்திரம், பிரம சூத்திரமெனவும் அறியப்படும். யமினியின் கர்ம மீமாம்சை வேதங்களில் சொல்லப்பட்ட தர்மங்களையும் (கடமைகள்) அவற்றின் பலன்களையும் ஆராய்கின்றது. வாதநாராயணரின் உத்தர மீமாம்சை உபநிடத ஞானங்களை விரித்துக் கூறுகின்றது. வேதாந்த சூத்திரத்தில் இரண்டு அல்லது மூன்று சொற்களடங்கிய 555 சூத்திரங் களுண்டு. இவற்றிலிருந்து வேதாந்த ஞானம் விரிவடைந்தது. இச் சூத்திரங்கள் பொருள் விளங்க முடியாதவை. உரையாசிரியர்களின் உரைகளைக்கொண்டே இவற்றின் பொருள்கள் அறியப்படுகின்றன. இதற்குப் பலர் பலவாறு உரைகண்டுள்ளனர். சங்கரர், பாஸ்கரர், யாதவப் பிரகாசர், இராமானுசர், கேசவர், நீலகண்டர், மாதவர், பலதேவர், வல்லபர், விஞ்ஞான பிட்சு முதலியோர் வெவ்வேறு கொள்கைகளை நாட்டி, உரை செய்துள்ளனர். வேதாந்தக் கொள்கையில் மாறுபட்ட கருத்துக்களும் தடுமாற்றங்களும் உண்டான காலத்திலேயே உரைகள் எழுந்தன.
பகவத்கீதை
பகவத்கீதை மாபாரதத்தில் வீட்டும பருவத்திலுள்ளது. இதில் தத்துவஞானம், சமயம், நீதி முதலியன அடங்கியுள்ளதால் இது மற்றைய தத்துஞான நூல்களிலும் பார்க்கச் சிறப்பாகக் கொண்டாடப்படு கின்றது. கீதை செய்யப்படுவதன் முன் செல்வர் யாகங்களால் தேவர்களை விலைக்கு வாங்கி விடலாம். அறிவாளிகள் மாத்திரம் ஞானமடையலாம் என்னுங்கொள்கைகளிருந்தன. கீதை பக்திமார்க்கத்தால் எல்லோரும் கடவுளை அடையக் கூடிய வழியைக் கூறுகின்றது.
பாண்டவருக்கும் கௌரவருக்கும் நேர்ந்த பாரதப்போரில் போர்க் களத்திற் போய் நின்ற அருச்சுனன் தனது உறவினரையும் ஆசிரியரையும் கொல்ல மனமில்லாதவனாகத் தயங்கிய போது கண்ணன் அவனுக்குப் போதித்த ஞானமே பகவத்கீதை எனப்படுகின்றது. 700 பாடல்கள் கொண்ட இந் நூலைக் கண்ணன் போர்க்களத்தில் அருச்சுனனுக்குப் போதித்தார் என்பது நம்பக் கூடியதாக விருக்கவில்லை. இது எவரோ ஒரு புலவரால் கி.மு.200-க்கும் கி.பி.200க்கு மிடையில் செய்யப்பட்டதென ஆராய்ச்சியாளர் கருதுவர். இந் நூலில் கண்ணன் தன்னைக் கடவுளின் அவதாரமாகக் கூறியிருப்பது காணப்படுகின்றது. பகவத் கீதை, வேதாந்த, சாங்கிய, ஆகமக் கொள்கைகளை ஒன்று சேர்க்கும் பொருட்டுச் செய்யப் பட்டதெனக் கருதப்படுகின்றது.
இதற்கு சங்கரர், இராமானுசர், வல்லபர், மாதவர் முதலிய பலர் உரை செய்திருக்கின்றனர். உரையாசிரியர்கள் நூலின் உண்மைப் பொருளைக் காணும் நோக்கமில்லாமல் தத்தம் கொள்கைகளைப் பலப் படுத்துவதற்கு அதனைப் பயன்படுத்தியுள்ளார்கள். உரையாசிரியரின் கொள்கைக்கு மாறான பகுதிகள் காணப்பட்டால், அவை இலக்கணவிதி, சொல்லிலக்கணம் முதலிய உபாயங்களால் திரித்துப் பொருள் விளக்கப் பட்டன.
இராமானுசர் உயிர், உலகம் என்னும் பொருள்கள் கடவுளைவிட வேறானவை என்றும் இவ்விரண்டும் கடவுளுக்கு உடல் என்றும் கூறுவர். இக் கொள்கை விசிட்டாத்துவைதம் எனப்படும். மாதவர் உயிரும், கடவுளும் வெவ்வேறு பொருள்களென்பதை ஒப்புக்கொள்வர். சங்கரர் பிரமமொன்றே உட்பொருள்; உயிர்கள் பிரமத்தின் பிரதிபலிப்புகள்; உலகம் பொய்த்தோற்றம் என்பர். இக் கொள்கைகளை வலியுறுத்தி இவர்கள் பகவத்கீதைக்கு உரை செய்துள்ளனர்.
பகவத் கீதை உலகம் ஈசுவரனுடைய சக்தியாகிய மாயையிலிருந்து தோன்றுகிறதென்று கூறும்.1
சமணம்
சமணர் 24 தீர்த்தங்கரரைப் பற்றிக் கூறுகின்றார்கள். தீர்த்தங்கரர் என்பதற்கு வழியைக் கண்டுபிடித்தவர்கள் என்பது பொருள். ஒவ்வொரு தீர்த்தங்கரரும் அவரவர் வாழ்ந்த காலங்களுக்கு வேண்டிய சமண தருமங்களைப் போதித்தார்கள். தீர்த்தங்கரரின் வரலாறுகள் பழங்கதை வடிவிலுள்ளன.
பார்சவர், மகாவீரர் என்னும் பின் இரு தீர்த்தங்கரரின் வரலாறு களும் அறியத்தக்கனவாகவுள்ளன. பார்சவரைப் பற்றி நமக்கு அதிகம் தெரியாது. இவர் காசி அரசன் அசுவசேனனுக்கும், மனைவி வாமிக்கும் புதல்வனாகப் பிறந்தார். இவர் முப்பது ஆண்டுகளின் பின் துறவு பூண்டார்; 84 நாட்கள் தவமிருந்தபின் ஞானமடைந்தார். இவர் நூறு ஆண்டுகள் வாழ்ந்த பின் கி.மு.776 இல் மரணமடைந்தார்.
இவருக்குப்பின் வாழ்ந்த மகாவீரரைப்போலவே இவர் சடப் பொருளின் நித்தியத்தைப் பற்றி நம்பினார். தன்னடக்கம் கன்மத்தை முடி வுறுத்துகிறதென்றும், தவம் கன்மத்தை அழிக்கிறதென்றும் பார்சவரைப் பின்பற்றியவர்கள் நம்பினார்கள். சமணத்துறவிகள் வெள்ளாடை உடுப்பதைப் பார்சவர் அனுமதித்தார். மகாவீரர் இதைத் தடுத்தார். ஆகவே, சமணருள் வெள்ளாடை உடுப்பவர்கள் என்னும் பொருளில் சுவேதாம்பரர் என்றும், காற்றை உடுப்பவர்கள் என்னும் பொருளில் திகம்பரர் என்றும் இருபிரிவினர்கள் தோன்றினார்கள்.
மகாவீரர்
மகாவீரர் வைசாலியிலுள்ள குண்டக்கிராமத்தில் கி.மு.599இல் பிறந்தார். குண்டக்கிராமம் இப்பொழுது பரசுகுண்டமெனப்படுகிறது. இவர் நாய என்னும் குலத்தைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை சித்தார்த்தர்; தாய் வைசாலி அரச குடும்பத்தைச் சேர்ந்த திரிசாலை. மகாவீரருக்குத் தாய் தந்தையர் இட்ட பெயர் வர்த்தமானர். புகழ் பெற்ற மகாவீரரென்னும் இப்பெயர் இவருக்குத் தேவர்களாலிடப்பட்டதெனச் சொல்லப்படுகிறது.
மகாவீரர் யசோதரையை மணந்தார். அவருக்கு அருணோசா அல்லது பிரியதரிசனா என்னும் புதல்வியிருந்தாள். தாய் தந்தையரிறந்த பின் மகாவீரர் தமது தமையன் நந்திவர்தானாவின் அனுமதி பெற்றுத் துறவு பூண்டார். அப்பொழுது அவர் முப்பது வயதினராகவிருந்தார். 13 மாதங்களின் பின், இவர் உடையின்றி நிர்வாணத் துறவியாகத் திரிந்தார். இவர் பிராணிகளுக்கு மாத்திரமல்லாமல் நிலம், நீர் போன்ற சடப் பொருள்களுக்கும் உயிர் இருப்பதாகக் கொண்டார். 72வது வயதில் இவர் மசிம்மபாவா என்னுமிடத்தில் அத்திபாலா என்னும் சிற்றரசன் வீட்டில் காலமானார். இவ்விடம் இப்பொழுது பாட்னா மாகாணத்தில் பாவாபுரி எனப்படுகின்றது. பௌத்த மதத்தைப் போலவே, சமண மதமும் அரசரின் ஆதரவைப் பெற்றிருந்தது.
பெரும் பஞ்சமொன்று நேரவிருப்பதை அறிந்த பௌத்திரபாகு என்னும் சமணமுனிவர், மயூரசந்திரகுப்தனோடும் பெருந்தொகையான மாணவரோடும் மைசூரிலுள்ள சரவணபெலகொள என்னுமிடத்துக்கு வந்திருந்தாரென்றும், அவர்கள் மூலம் திகம்பரசமணம் தென்னிந் தியாவிற் பரவியதென்றும் தென்னிந்திய வரலாறு கூறுகின்றது. மகா வீரர் இறந்து ஆயிரம் ஆண்டுகளின் பின் கி.பி.464இல் வல்லபி என்னு மிடத்தில் கூடிய சமணசங்கத்தில் சுவேதாம்பரரிடமிருந்த சைன ஆகமங்களே ஏற்றுக் கொள்ளப்பட்டன. சமணர் மேலான ஒரு கடவுளை மறுத்தாலும் நிர்வாணமடைந்து விடுதலை பெற்றவர்களாகிய தீர்த்தங் கரர்களுடைய உருவங்களை வணங்குவர். தீர்த்தங்கரர் இருஷபர் முதல் மகாவீரர் வரை இருபத்து நால்வர்.
புத்தர்
புத்தர் என்பதற்கு ஞானமடைந்தவர் என்பது பொருள். இவர் கி.மு.547இல் பிறந்தார். இவருக்குத் தாய் தந்தையர் இட்ட பெயர் சித்தார்த்தர். கௌதமர் என்பது இவர் தோன்றிய குலத்தின் பெயர். இவர் தந்தையின் பெயர் சுத்தோதனர். தாயின் பெயர் மாயை, இவர்களின் சமயம் சைவமாக இருந்ததென்பது ஐதீகம்.1 சித்தார்த்தர் பிறந்த ஏழாவது நாள் தாய் இறந்தார். தாயின் சகோதரியால் இவர் வளர்க்கப்பட்டார். இவர் தமது மைத்துனியாகிய யசோதரையை மணந்தார். யசோதரை வயிற்றில் இராகுலன் என்னும் புதல்வன் பிறந்தான். கபிலவாஸ்து நகர் வீதியில் இவர் ஒருநாள் கூனி வளைந்த ஒரு கிழவனையும், ஒரு நோயாளி யையும், பிச்சைக்காரனையும், அழுது கொண்டு பலர் பின்னே செல்லக் கொண்டு போகப்படும் ஒரு பிணத்தையும் கண்டார். அவர் இவ்வுலகில் உள்ள துன்பங்களைக் கண்டு துறவுகொள்ள முடிவுசெய்தார். அவர் துறவு பூண்டு மஞ்சளாடையணிந்து பிச்சையேற்று உண்டு, உண்மையை நாடி அலைந்து திரிந்தார். இவர் உருவலா என்னும் காட்டுக்குத் தமது ஐந்து நம்பிக்கையுள்ள நண்பர்களுடன் சென்று அரசமரத்தின் கீழ் நிட்டையி லமர்ந்தார். ஏழுவாரங்கள் தவஞ்செய்த பின் அவருக்கு ஞானம் உதய மாயிற்று. அவர் தமது நண்பர்களாகவிருந்த ஐவரையும் முதலில் தமது மாணாக்கராகத் தெரிந்தெடுத்தார். மாணவர்கள் நாள்தோறும் அதிகப் பட்டு வந்தார்கள். புதிய பௌத்த தருமங்களைப் போதிப்பதற்கு எல்லாத் திசைகளுக்கும் போதகர்களனுப்பப்பட்டார்கள். நாற்பது ஆண்டுகள் துறவியாக வாழ்க்கை நடத்தியபின் அவர் காலமானார்.
புத்தர் இறந்து இருநூறு ஆண்டுகளுக்குப்பின்பே புத்தரின் வரலாறு எழுதப்பட்டது. அவ் வரலாற்றில் பல கற்பனைகள் நுழைந்து உள்ளன. பௌத்த ஆகமம் திரிபிடகம் எனப்படும். இதிற் கூறப் பட்டவையே புத்தரால் போதிக்கப்பட்டவை என நம்பப்படுகின்றன. புத்தரின் போதனைகள் நீண்ட காலமாகச் செவி வழக்கில் இருந்து வந்தன. இலங்கை அரசனாகிய வட்டகமினியின் காலத்தில் (கி.மு. 80) இவை பாலி மொழியில் எழுதப்பட்டன. பாலி நூலில் கதைகள், ஒழுக்கங்கள் (விநாயா), கொள்கைகள் என மூன்று பிரிவுகளுள்ளன.
பௌத்தமதம் கடவுளை ஒப்புக்கொள்ளவில்லை. உலகத்தைப் பொய்த் தோற்றமெனக் கூறுகிறது. கன்மத்தை ஏற்றுக்கொள்கின்றது. தேவர்கள் பிறப்பு, இறப்புக்குரியவர்களெனக் கூறுகின்றது. பௌத்த மதத்தின் முடிவு நிர்வாணமடைதல். நிர்வாணமென்பது, பிறப்பு இறப்புக் கேதுவாகிய காரணத்தை ஒழித்தல். இதற்கு விருப்பு வெறுப்புகளின்றி யிருத்தல் வேண்டும். பௌத்தமதமும், சமண மதமும் வேதங்களைக் கண்டிக்கின்றன. யாகங்களை வெறுக்கின்றன. சமணமும், பௌத்தமும் வேதங்களை ஒப்புக் கொள்ளாதபடியால் அவை நிரீச்சுர மதங்களெனக் கொள்ளப்பட்டன.
மகாபாரதம்
மகாபாரதம் கௌரவர் பாண்டவர்களுக்கிடையில் நடந்த போரைப் பற்றிக் கூறுகின்றது. பாரதப் போர் நடந்த காலம் கி.மு.1400 எனக் கணக்கிடப்படுகின்றது. வேதங்களில் பாரத இராமாயண நிகழ்ச்சி களைப் பற்றியோ அவற்றில் வரும் வீரர்களைப் பற்றியோ கூறப்பட வில்லை. பாரதப் போர் தொடர்பான பழைய வரலாறு திராவிட நாட்டுக் கதை என்றும், பின் அது ஆரியரின் கதையாக மாற்றப்பட்டதென்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர்.1 இந்திய நாட்டின் பல பகுதிகளில் வழங்கிய கதைகள் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு மகாபாரதம் செய்யப்பட்டது. இது அக் கால வழிபாடுகளையும் பழக்க ஒழுக்கங்களையும் கூறுகின்றது.
முன் பாரதமென வழங்கிய கன்னபரம்பரை வரலாற்றை விரித்துச் செய்யப்பட்டதே மகாபாரதம். வியாசரால் செய்யப்பட்ட பாரத சம்கிதையில் 24,000 சுலோகங்களுள்ளன. அவை மறுபடியும் அவரால் 6,000,000 சுலோகங்களாகச் செய்யப்பட்டன. அவற்றுள் இப்பொழுது ஒரு இலட்சம் சுலோகங்களே உள்ளன. பாரதத்துக்கு முன் பாணர் போன்ற பாடகர்களால் இசையோடு பாடப்படும் பாடல்களும், பிற பாட்டுக்களும் இருந்தன. இந்திய நாடுகளில் அரசரின் வீரச் செயல் களைப் புகழ்ந்து பாடகர்கள் பாடுவது அக் கால வழக்காக இருந்தது. ஞாபகத்திலிருந்து பாடப்பட்டமையின், இவை காலத்துக்குக் காலம் பல மாறுதல்களை அடைந்தன. இவற்றோடு சம்பந்தம் பெறாத பிராமண மதக் கொள்கைகளையும் இவற்றோடு சேர்க்க வேண்டி இருந்தது. ஆகவே, ஆரியர், ஆரியரல்லாதாரின் பண்பாடுகள், பழங்கதைகள், வழிபாடுகள் முதலியவற்றுக்கு வேற்றுமை தெரியாதபடி ஒன்று சேர்த்து நூல் செய்யப்பட வேண்டியிருந்தது. பாரத காலத்துக்கு அண்மையில் இப் பாடல்கள் சமயத்தோடு கலவாமல் வீரரைப் புகழும் பாடல்களாக மாத்திரம் இருந்தன. மகாபாரதம் செய்யப்பட்ட பின் மேலும் பல செய்திகள் கிடைத்தன. அவற்றை அதனோடு ஒட்ட வைத்தல் முடியாம லிருந்தது. அவ்வாறிருந்த போதும் அவற்றை ஒட்டவைக்கச் செய்த முயற்சியினால் உருவானதே மகாபாரதம். பாரதம் செய்யப்படுகின்ற காலத்தில் பல தெய்வ வழிபாடுகளிருந்தன. மகாபாரதத்தில் வரும் இந்திர, அக்கினி வழிபாடுகள் வேத வழிபாட்டின் சின்னங்களாகும். அக் காலத்தில் அவதாரங்கள் அறியப்படவில்லை. சிருட்டி வரலாறு சரித்திர சம்பந்தமான வரலாறாகக் காணப்படுகின்றது.
மகாபாரதத்தின் பிந்திய பகுதியில் யவனர், பாலவர் (Parthians), சகர் குறிப்பிடப்படுகின்றனர். அப்பொழுது பிரமா, விட்டுணு, உருத்திரன் என்னும் மும்மூர்த்திகள், ஒரு கடவுளின் படைத்தல், காத்தல், அழித்தல் களைச் செய்யும் வடிவங்களென்னும் கொள்கை காணப்படுகிறது. இந்திரனுக்குக் கூறப்பட்ட வலிமை இப்பொழுது விட்டுணுவுக்கும், சில சமயங்களில் சிவனுக்கும் கூறப்படுகின்றது. வீரப்பாடல்களாகிய மகா பாரதம் பிராமண மத சம்பந்தம் பெற்று விட்டுணு, சிவனென்னும் தெய்வங்களை முதன்மையாகக் கொண்ட மத நூலாக மாறியது. பகவத் கீதை இக் காலத்தைச் சேர்ந்ததாகலாம். உள்நாட்டு வழிபாடுகளைத் தழுவிச் சிலர் பிராமண மதத்தைக் கைவிட்ட காலத்தில் மறுமலர்ச்சி வேண்டியதாகவிருந்தது.
மகாபாரதம் 5ஆம் வேதமெனப்படும். வேதங்கள் மூன்று வருணத் தாருக்கு முரியனவாகவிருந்தன. ஐந்தாம் வேதம் எல்லாருக்கும் உரியதாக விருந்தது. மகாபாரதம் கி.மு.500இல் தொடங்கி கி.பி.6ஆம் நூற்றாண்டு வரை வளர்ச்சி அடைந்து வந்ததென நம்பப்படுகின்றது.
இராமாயணம்
இராமாயணம் வான்மீக முனிவராற் செய்யப்பட்டது. இது மகாபாரதத்தைப் போலப் பலவகைப் பொருள்களைப் பற்றிக் கூறாது கதையையே கூறுகின்றது. இராமர் எல்லா நல்ல குணங்களும் நிரம்பி யவராக கூறப்படுகின்றார். ஆகவே, அவர் கடவுளின் அவதாரமாக்கப் பட்டார். தொடக்கத்தில் அது பழங்கதையைக் கூறுவதாயிருந்து பின் வைணவரின் நூலாக மாற்றமடைந்தது. அதன் தொடக்கமும் போக்கும் முடிபும் அதனைப் பலர் செய்தார்கள் என்று கூறுவதற்கு இடந்தர வில்லை. அதைக் கதையடங்கிய பழைய பகுதி (II -VI), சமயங்கலந்த புதிய பகுதி (II-ம் VII-ம்) என இரண்டாகப் பிரிக்கலாம். வான்மீகர், இராமர் நற்குணங்களும் வீரமும் நிறைந்தவரெனக் கூறுகிறாரேயன்றி அவரை விட்டுணுவின் அவதாரமாகக் கூறவில்லை. சமயம் பல தெய்வ வழிபாடாக இருந்தது. இந்திரன் தெய்வங்களுக்குத் தலைமை வகித்தான். காமன், குபேரன், கார்த்திகேயன், கங்கை, விட்டுணு, சிவன், இலக்குமி, உமை முதலிய தெய்வங்களும் தெய்வங்களாக்கப்பட்ட சேடன், சடாயு, நந்தி முதலியனவும் கூறப்படுகின்றன. வழிபாடு வேள்வி முறையாக இருந்தது. விட்டுணுவும் சிவனும் தலைமை இடம் பெறுகின்றனர். ஆறுகள், பாம்புகள் வழிபாடும் கூறப்படுகின்றன. இரண்டாம் பிரிவில் கிரேக்கர், பாலவர், சகர் முதலியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். இராமரை அவதாரமாக்குவதற்கு முயற்சி செய்யப்பட்டுள்ளது.
தத்தவஞானத்துக்கும் சமயத்துக்கும் இராமாயணம் மகாபார தத்தைப் போல் சிறந்ததன்று. அது இல்லறத்தைப் பெருமைப்படுத்து கிறது. விடுதலை பெறுவதற்குத் துறவு வேண்டியதன்று என்பதை உணர வைக்கின்றது. புத்தரை நாத்திகன் எனக் கூறுகின்றது. இராமாயணக் கதை பாரதக் கதைக்கு முற்பட்டதாயினும் பாரதத்துக்குப் பின் இராமாயணஞ் செய்யப்பட்டதென்பதை இது உணர்த்துகின்றது. இராமாயணம் பாரதகாலத்துக்குப்பின் தொடங்கி, கிறித்துவ சகாப்தத்தின் பின் சில நூற்றாண்டுகள் வரையில் வளர்ச்சி அடைந்து வந்ததென ஆராய்ச்சி யாளர் கூறுவர். சீதாபிராட்டியின் தந்தையாகிய சனகன் யாக்ஞவல்கி காலத்திருந்தவராகக் கூறப்படுதலாலும், யாக்ஞவல்கி சனமேசயன் காலத்தவராதலாலும், இராமாயண நிகழ்ச்சி பாரதப் போருக்குப் பிற் பட்டதெனக் கருதப்படுகின்றது. தென்னாட்டில் வழங்கிய பழங்கதை ஒன்றையும் வடநாட்டில் வழங்கிய கதையையுமிணைத்து, இராமாயணஞ் செய்யப்பட்ட தென்னும் கருத்து இருந்து வருகிறது.1
புராணங்கள்
புராணங்களை வியாசர் செய்தாரென்னும் நம்பிக்கை இருந்து வருகின்றது. அவை இதிகாசங்களுக்குப் பின் செய்யப்பட்டவை. புராணங்கள் உலகம், உயிர் என்பவற்றுக்கு வேறாகக் கடவுள் உண்டு என்னும் கொள்கை உடையன. அவற்றில் திரிமூர்த்திகள் முதன்மை யடைகின்றார்கள். சிவ புராணங்கள் சிவனை மேலாகவும், விட்டுணு புராணங்கள் விட்டுணுவை மேலாகவும், பிரம புராணங்கள் பிரமாவை மேலாகவும் கூறுகின்றன. அவை வேதமுறையான யாகங்களையும், துதிகளையும் தழுவவில்லை; உருவ வணக்கத்தையும், பக்தி மார்க்கத்தை யும் தழுவுகின்றன. கன்மம், மறுபிறப்பு, ஞானத்தினால் மோட்சம் என்னும் கொள்கைகளை ஏற்றுக்கொள்கின்றன; தத்துவ ஞானங்களி லும் பார்க்கப் பத்தி மார்க்கஞ் சிறந்ததெனக் கூறுகின்றன. வேத மார்க்கம், உருவ வழிபாடு, பத்தி மார்க்கம், உபநிடதக் கொள்கைகள் என்பவற்றை எல்லாம் ஒன்றுபடுத்திச் செய்யப்பட்டனவே புராணங்களாகும். புராணங் களில் முதன்மையுடையவை பதினெட்டு. விட்டுணு, பாகவதம், நாரதீயம், கருடம், பதுமம், வராகம் என்பன விட்டுணு புராணங்கள். சிவ, இலிங்க, ஸ்கந்த, அக்கினி, மச்ச, கூர்ம என்பன சிவ புராணங்கள். பிரம, பிரமாண்ட, வைவர்த்த, மார்க்கண்டேய, பாவிச்ஸ்யா, வாமன என்பன பிரம புராணங் கள். இவையன்றி உப புராணங்களுமுள்ளன. எல்லாப் புராணங்களும் உலகப்படைப்பு, பிரளயம், மனுவந்தரம், அரச பரம்பரை, அரசர்களின் வரலாறுகளைக் கூறும். அரச பரம்பரைகளைப்பற்றியும், அரசர்கள் வரலாற்றுக்களைப் பற்றியும் சூதர் எனப்பட்டோர் அரச சபைகளில் பாடுவது அக்கால வழக்கமாகவிருந்தது. அவர்கள் நினைவில் காப்பாற்றி வந்தவற்றைக் கொண்டே அரசர் வரலாறுகள் எழுதப்பட்டன. புராணங் கள் கி.மு.500 முதல் கி.பி. 500 வரையில் எழுதப்பட்டனவென்று கருதப் படுகின்றன.1 “வேதமொழி வழக்கிறந்து வேதக் கொள்கைகள் விளங்க முடியாமலிருந்தன. ஆகவே பிராமண மதக் கொள்கைகளை மக்கள் அறியாதிருந்தார்கள். அப்பொழுது வியாசரும் வேறு பலரும் சேர்ந்து ஆயிரமாண்டுகளாக (கி.மு.500 - கி.பி. 500) பதினெட்டுப் புராணங்களைச் செய்தார்கள். அவை 400,000 இரண்டடிப் பாடல்களாக உள்ளன. அவை உலகப் படைப்பு, உலகம் வளர்ச்சி அடைந்து மாறுதல்களுக்குள்ளாகி அழிந்தது, தெய்வங்களின் வமிசம், வீரர்காலக் கதைகள் என்பவற்றைக் கூறுகின்றன. அவை தர்க்க முறைகளையோ காலக் கணக்குகளையோ பொருட்படுத்தவில்லை. புரூரவர் ஊர்வசியோடு அறுபத்தோராயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாரெனப் புராணங்கள் கூறுகின்றன.”
“கற்பமென்பது கால முடிவு. உலகப் படைப்பின் காலம் 1000 மகா உகம். ஒவ்வொரு மகாஉகமும் 4,320,000,000 ஆண்டுகளைக் கொண்டது. ஒவ்வொரு மகாஉகத்திலும் நான்கு உகங்களுண்டு. இப்பொழுது நடக்கின்ற மகாஉகத்தில் மூன்று உகங்கள் கழிந்துவிட்டன (3,888,388 ஆண்டுகள்). நாம் இப்பொழுது கலியுகத்தில் 5,535-ல் வாழ்கின்றோம். இன்னும் கலியுகத்தில் 426,965 ஆண்டுகளிருக்கின்றன. இவ்வுக இறுதியில் பிரளயமுண்டாகும். பின் பிரமாவுக்கு ஒரு நாள் உண்டாகும். அது 4,320,000,000 ஆண்டுகளைக் கொண்ட மகா உகமாகும்.”1
இராமானுசர்
இராமானுசர் சிறீபிரம்பூரில் 1027இல் பிறந்தார். இளமைக் காலத்தில் தந்தை காலமானார். இவர் இளமையில் காஞ்சியில் யாதவப் பிரகாசரிடம் வேதாந்தக் கல்வி பயின்றார். யாதவரின் வேதாந்தக் கருத்துக்கள் எல்லாவற்றையும் இவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சிறீரங்கத்தில் மடத்தலைவராகவிருந்த ஆளவந்தார் இராமானுசரின் கல்வித் திறமையைக் கேள்வியுற்று அவரைத் தமக்குப் பின் மடத்தலைவ ராக்க விரும்பினார். ஆளவந்தார் தமது அந்திய காலம் அணுகியதும் இராமானுசரை அழைத்து வரும்படி பெரியநம்பியை விடுத்தார். இராமா னுசர் வந்தபோது ஆளவந்தார் காலமடைந்து விட்டார். பிரேதத்தின் மூன்று வலது கைவிரல்கள் மடித்தபடி இருந்தன. அவர் மாணாக்கர் அவருக்கு மூன்று விருப்பங்கள் நிறைவேற்றப்படாமலிருந்தனவென்று அதற்குப் பொருள் கூறினார்கள். நிறைவேற்றப்படாமலிருந்தவற்றுள் வேதாந்த சூத்திரத்துக்கு உரை எழுதுவது ஒன்று. இராமானுசர் காஞ்சீ புரத்துக்குத் திரும்பிச் சென்று வழக்கம்போல் கடவுள் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தார். ஒரு நாள் இவர் கோயில் பட்டரிடம் வருங்காலத்தில் தாம் என்ன செய்ய வேண்டுமென்று கடவுளைக் கேட்கும்படி சொன் னார். இறுதியில் வீடுபேறு கிட்டுமென அவருக்குக் கடவுள் வாக்குக் கிடைத்தது. அவர் மதுராந்தகத்தில் பெரியநம்பியைக் கண்டு, அவரிடம் வேதாந்த இரகசியங்களைக் கேட்டுத் தெளிந்தார். அவர் இல்லறத்தில் நுழையாது துறவு பூண்டார். துறவு பூண்டபின் எங்கும் இவருக்குப் பெருமதிப்பு உண்டாயிற்று. அவர் துறவிகளின் அரசன் எனப்பட்டார். அவர் சிறீரங்கத்தில் தங்கியிருந்து திருவாய்மொழியை ஓதிப் புலமை யடைந்தார். போதாயன விருத்தியை மனப்பாடஞ் செய்திருந்த தனது மாணவர் கூரத்தாழ்வாரின் துணையோடு இவர் வேதாந்த சாரம், வேதாந்த சங்கிரகம், வேதாந்த தீபம், பிரம சூத்திர உரை, பகவத்கீதை உரை முதலியவற்றைச் செய்தார். வைணவர்கள் இராமானுசரின் பிரம சூத்திர உரையை ஒப்புக்கொண்டு, அதனைச் சிறீபாடியமென வழங்குவர். இவர் 1137இல் காலமானார்.
இவர் கடவுளுக்குப் புறம்பான உயிர்களும் உலகமும் (சடம்) உண் டென்றும், அவை கடவுளுக்கு உடல் என்றும் கூறுவர். இவர் வெளி யிட்ட தத்துவஞானம் விசிட்டாத்துவைதம் எனப்படும்.
மாதவர்
மாதவர் தென் கன்னடத்திலுள்ள உடுப்பிக்கு அண்மையில் ஒரு கிராமத்தில் 1199இல் பிறந்தார். இவர் இளமையில் வேதங்களைக் கற்றறிந்து சன்னியாசத்தை மேற்கொண்டார். இவர் திருமாலை முழு முதலாகக் கொண்டு துவைத மதத்தைப் போதித்தார். இராமானுசரைப் போலவே இவரும் தோளில் சங்கு, சக்கரம் முதலிய அடையாளங்களைச் சுட்டுக்கொள்வதை அனுமதித்தார். இவர் உடுப்பியில் கிருட்டிணன் கோயிலைக் கட்டினார்; உயிர்ப் பலியிடுவதைத் தடுத்தார். பிரம சூத்திரத் துக்கு உரை எழுதினார். தமது உரைக்குச் சமாதானங் கூறுவதாக அனு வியாக்கியானம் என்னும் நூலையும் இவர் வெளியிட்டார். இவரியற்றிய பாரத தாற்பரிய நிர்ணயம், பகவத்கீதை உரை, உபநிடத உரை என்பன இவருடைய மதக்கொள்கைகளுக்கு விளக்கமளிக்கின்றன. இவர் இருக்கு வேதத்தின் நாற்பது பாடல்களுக்கு உரை எழுதினார். உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம சூத்திரம் என்பவற்றிலும் பார்க்க இவர் புராணங்களில் நம்பிக்கை கொண்டிருந்தார். இவர் வைணவ மதத்தையும், சைவ மதத்தை யும் ஒன்றுபடுத்த முயன்று வந்தார். வைணவக் கோயில்கள் சிலவற்றில் சிவன், பார்வதி, கணேசர் முதலிய கடவுளரின் உருவங்கள் வைத்து வழிபடப்பட்டன.1
14ஆம் நூற்றாண்டில் விசய நகரத்தில் வாழ்ந்த வித்தியாரணியரும் மாதவர் (மத்துவர்) எனப்படுவர். இவரும் தத்துவஞானியாக இருந்து பல நூல்கள் செய்துள்ளார். இவர் சங்கரரின் அத்துவைதக் கொள்கையைப் பின்பற்றியவர். இவருடைய தம்பி சாயணர் வேதங்களுக்கு உரை எழுதியுள்ளார்.
ஸ்கந்த வழிபாடு
வடநாட்டு மக்கள் முருகக் கடவுளுக்கு வெவ்வேறு பெயர்களிட்டு வழிபட்டார்கள். வடநாட்டில் முருகக்கடவுளுக்கு வழங்கிய பெயர்கள் ஸ்கந்தர், கார்த்திகேயர், மகாசேனர், குகர், விசாகர், ஸ்கந்த குமரர், பிரமணியர், முதலியன. பிரமணியரென்பதே சுப்பிரமணியரெனத் தமிழ்நாட்டில் மத்திய காலம் முதல் வழங்குகின்றது. இப் பெயர்கள் வடநாட்டில் வாழ்ந்த வெவ்வேறு கூட்டத்தினர் முருகக்கடவுளை வெவ்வேறு பெயர்களில் வழிபட்டதனால் வந்திருக்கலாம் அல்லது ஒரு கடவுளின் வெவ்வேறு தன்மைகளை உணர்ந்த வெவ்வேறு திருவுருவங் களை அமைத்து, அவர்கள் வழிபட்டதனால் உண்டாயிருக்கலாம். இதிகாசங்களில் ஸ்கந்த, கார்த்திகேய வழிபாடுகளைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. வேதங்களில் இவ் வழிபாடுகள் காணப்படவில்லை. பாணினியின் இலக்கணத்துக்குப் பாடியஞ் செய்த பதஞ்சலி (கி.மு. 2ஆம் நூ.) ஸ்கந்த வழிபாட்டைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார். மௌரிய அரசர் ஸ்கந்த, சிவ, விசாக விக்கிரகங்களை விற்றுப் பணத்தைக் கருவூலத்தில் சேர்த்தார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் கி.மு. 4ஆம் நூற்றாண்டிலும் அதற்கு முன்னும் முருக வழிபாடு வட இந்தியாவில் பரவியிருந்ததெனத் தெரிகிறது. குவிஷ்கா (Huviska) அரசன் ஸ்கந்தர், மகாசேனர், குமரர், விசாகர் என்னும் முகூர்த்தங்களில் முருகக்கடவுளின் வடிவங்களை நாணயங்களில் பொறித்தான். உருவங்களின் கீழ் கிரேக்க எழுத்தில் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந் நாணயங்கள் கி.மு. 2 ஆம் அல்லது 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. ஏறத்தாழ இக் காலத்தைச் சேர்ந்த நாணயமொன்றில் ஒரு பக்கத்தில் ஆறுமுகங்களுடைய கடவுளும் மறுபுறத்தில் பெண் தெய்வத்தின் வடிவமும் பொறிக்கப்பட் டுள்ளன. மறுபக்கத்திலுள்ள பெண் தெய்வம் முருகக்கடவுளின் பாரி யாகிய தேவசேனை எனக் கருதப்படுகின்றது. காளிதாசர் (கி.பி.4ஆம் அல்லது 6ஆம் நூ.) குமாரக் கடவுளின் பிறப்பைக் கூறும் குமாரசம்பவம் என்னும் நூல் செய்துள்ளார். வெவ்வேறு வடிவுகளில் வடநாட்டில் வழிபடப்பட்ட முருகக்கடவுளைச் சுற்றித் திரண்ட பழங்கதைகளும், தென்னாட்டில் தோன்றிய பழங்கதைகளும் திரண்டு இன்று முருகக் கடவுளைப்பற்றிய புராணமாக வழங்குகின்றன. இவ்வாறு இன்றைய முருக வழிபாடு வடநாட்டின் தொடர்பு பெற்றது.
விட்டுணு மதம்
வைணவ மதத்துக்குப் பாகவதம், பஞ்சராத்திரம் முதலிய பெயர்களும் வழங்கும். விட்டுணுவைத் தலைமையாகக் கொண்டு வழி படும் சமயம் வைணவம் எனப்படும். இருக்கு வேதத்தில் விட்டுணு பெரிய தெய்வமாகக் bகாள்ளப்படவில்லை. அவர் சூரியனைக் குறிப்பதாகவும், சிறு தெய்வங்களிலொன்றாகவுமிருந்தார். அப்பொழுது அவர் மும் மூர்த்திகளில் ஒருவர் என்னும் நிலையை அடையவில்லை. விட்டுணு மூவடிகளால் உலகை அளந்தாரென்பது சூரியனின் உதயம், நண்பகல், மாலை என்னும் மூன்று காலங்களிலும் விண்ணில் செல்லும் செலவைக் குறிக்கின்றது.
கி.மு. 4ஆம் நூற்றாண்டளவில் வாசுதேவனை (கிருட்டிணன்) வழி படும் சமயமொன்று தோன்றியிருந்தது. யாதவ வமிசத்தில் வசுதேவருக்கு வாசுதேவர் என்னும் புதல்வரிருந்தார். புராணங்களும், இதிகாசங்களும் இவரை வாசுதேவகிருட்டிணர் எனக்கூறும். யாதவ வகுப்பினரின் தலை வராக இருந்த இவர் பிற்காலத்தில் பகவத் அல்லது பகவான் என்னும் பெயரால் வழிபடப்பட்டார். இச் சமயம் கி.மு. 2ஆம் நூற்றாண்டில் பெரிதும் கைக்கொள்ளப்பட்டிருந்தது. இந்தியாவில் பெஸ்நகரில் (Besnagar) கிரேக்க தூதராகவிருந்த எலியோதோரஸ் என்னும் கிரேக்க கடவுளரின் கடவுளாகிய வாசு தேவருக்குக் கருடத்தம்பமொன்றை கி.மு. 2ஆம் நூற்றாண்டில் நாட்டினார். சாந்தோக்கிய உபநிடதம், தேவகி மைந்தனாகிய கிருட்டிணன் கோரர் என்னும் இருடியின் மாணவர் எனக் கூறுகின்றது. கோரரின் போதனைகளிற் சில கீதையிற் கூறப்படுவனபோற் காணப்படுகின்றன. கோரரும் கிருட்டிணரும் சூரிய வழிபாட்டினர். கிருட்டிணர் கீதையிற் கூறியவற்றுக்குக் கரு, கோரரின் உபதேசங்களாக லாம். வாசுதேவ மதத்தினர் இத் தத்துவஞானத்தை விரிவுப்படுத்தி யிருத்தல் கூடும்.
வாசுதேவரால் நாட்டப்பட்ட சமயம் வைணவ மதத்துக்கு ஆதாரமாக வுள்ளது. இது சூரிய வணக்கத்தின் வளர்ச்சியாக இருக்க லாம். கீதையைக் கண்ணன் சூரியனுக்கு உபதேசிக்க, சூரியன் அதை மனுவுக்கும், மனு அதை இஷ்வாகுவுக்கும் உபதேசித்ததாகக் கீதை கூறு கின்றது. அரி வம்சம், வாயு புராணம், பாகவத புராணம் முதலியன கிருட்டிணன் ஆயர்குலத்திற் பிறந்து, கோபிகளோடு விளையாடியது முதலிய கதைகளைக் கூறுகின்றன.
பிற்காலத்தில் வாசுதேவ கிருட்டிணரும், வேதகால விட்டுணுவும் ஒருவராகக் கொள்ளப்பட்டனர். இக் கொள்கை பகவத் கீதை செய் வதற்கு முன் வலிபெற்றுவிட்டது. பின்பு வாசுதேவ - கிருட்டிண-விட்டுணு வழிபாட்டோடு நாராயணர் என்னும் இருடி வழிபாடும் இணைக்கப்பட்டது. நாராயணர் ஐந்து இரவுகள் யாகம் புரிந்தவராகச் சொல்லப்படுவர். இதனால் பஞ்ச ராத்திரா அல்லது பஞ்ச ராத்திரிகா என்பது வைணவ மதத்தைக் குறிக்க வழங்கும். போதாயன தரும சூத்திரம் (கி.மு.3ஆம் நூ.) நாராயணரைக் கடவுளாகக் கூறுகின்றது. தைத்திரிய ஆரணியகம் நாராயணர், வாசுதேவர், விட்டுணு என்போரை ஒரே கடவுளாகக் கூறுகின்றது. நாராயணர் அரி எனவும் அறியப்பட்டார். நாராயணரை வழிபட்டோர் ஆதியில் பஞ்ச ராத்திரிகர் எனப்பட்டனர். நாராயண வழிபாடு இமயமலைப் பகுதிகளில் தொடங்கியது.
தென்னாட்டில் திருமால் வழிபாடு மிகப் பழங்காலம் முதல் இருந்து வருகிறது. இது எப்படித் தொடங்கியதென்பது அறிந்து கொள்ளமுடியாதது. இவ் வழிபாடு காடும் காடு சார்ந்த நிலத்தில் வாழ்ந்த மக்களிடையே தொடங்கியதாகத் தொல்காப்பியம் கூறுகிறது. தொல்காப்பியத்தில் திருமால் மாயோன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளார். இது கரியமால் என்னும் பொருள் தருவதாகலாம். மாயோன் வழிபாடு சூரிய வழிபாட்டோடு சம்பந்தம் பெற்றுள்ளது. சங்கும் சக்கரமும் சூரியனைக் குறிப்பன. பாற்பொங்கல் செய்து படைத்து, பெண்கள் கை கோத்து நின்று பாடிக் குரவையாடித் திருமாலை வழிபடுவது பண்டை வழக்கு. இவ் வழிபாட்டுக்கும், வடநாட்டில் தோன்றிய பஞ்சராத்திர பாகவத வைணவத்துக்கும் ஒருவகைத் தொடர்பும் இருக்கவில்லை. வடநாட்டில் நிலவிய பாகவத-வைணவம் தெற்கு நோக்கிப் பரவியது. அப்பொழுது திருமால் மதமும், வடநாட்டு வைணவ மதமும் ஒன்று கலந்தன. பழங்கதைகளும் கலந்தன. அப்பொழுது திருமால் வழிபாடு கண்ணன் வழிபாடாக மாறியது. தென்னாட்டில் கண்ணன் பலதேவ வழிபாடுகள் மிக்கிருந்தன. இதனைச் சங்கநூல்கள் குறிப்பிடுகின்றன. பரிபாடலில் திருமாலுக்கு எட்டுப் பாடல்களுண்டு. அவற்றுள் இப்பொழுது ஏழு பாடல்களுள்ளன. அவற்றுள் திருமால் தொடர்பாக வழங்கிய பழங்கதைகள் பல காணப்படுகின்றன.
தென்னாட்டில் திருமாலுக்குக் கோயில்களிருந்தன. 12 ஆழ்வார்கள் காலத்தில் கோயில் வழிபாடு மிகச் சிறப்புற்றிருந்தது. பல சாதிகளைச் சேர்ந்த இவ்வடியார்கள் (கி.பி. 6-9ஆம் நூ.) திருமால் மீது பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிரப் பிரபந்தம் எனப்படும். முதலாம் இராசேந்திர சோழன் காலத்தும், முதலாம் இராசேந்திர சோழதேவர் காலத்தும் (985-1030) வாழ்ந்த நாதமுனி என்பார் இப் பாடல்களைத் தொகுத்தார். இவர் காலத்தின் முன் சமயத்துக்கு வேதங்களே ஆதாரம் என்னும் கொள்கை தலை எடுத்திருந்தது. வேதாந்தக் கொள்கைகளும் பரவிக் கொண்டிருந்தன. நாதமுனியின் பேரனாகிய ஆளவந்தார் (யமுனா சாரியர்) வைணவ வேதாந்தத்தை (விசிட்டாத்துவைதம்) விளக்கும் சித்தித்திரயம் என்னும் நூலையும், ஆகமப் பிரமாணியமென்னும் நூலை யும் செய்து பஞ்சராத்திர ஆகமங்களையும் வேதாந்தத்தையும் இணைத் தார். இராமானுசர் விசிட்டாத்துவைதமாகவும், மாதவர் துவைதமாக வும் வேதாந்த சூத்திரத்துக்கு உரை செய்தார்கள். வைணவமதத்தினர் பெரும்பாலும் வடமொழியையே முதன்மையாகக் கொண்டு, வட மொழியில் சமய நூல்களும் உரைகளும் இயற்றிவந்தனர். இவர்கள் சரிக்குச் சரி தமிழும் வடமொழியும் கலந்த ஒரு நடையையும் கையாண் டார்கள். இந் நடை மணிப்பிரவாளமெனப்பட்டது. சைவர்கள் தமிழில் சமய சாத்திரங்களும் அவற்றுக்கு தமிழுரைகளும் செய்து வந்தார்கள்.
வைணவ சமய வளர்ச்சி
தொடக்கத்தில் ஆரிய சம்பந்தம் பெறாத வாசுதேவகிருஷ்ண மதம் கி.மு.300 வரையிலிருந்தது. வாசுதேவகிருஷ்ண மதம் பின்பு விட்டுணுவைத் தலைமையாகக் கொண்ட பிராமண மதமாக்கப்பட்டது. விட்டுணு வழி பாட்டினரின் பெயராக வைணவம் என்பது மகாபாரதத்தில் காணப்படு கின்றது. வேதத்தில் கூறப்படும் விட்டுணுவுக்கு அவரின் சக்தி கூறப்பட வில்லை. வைணவ சமயத்தின் மூன்றாவது படி வேதாந்தம், சாங்கியம், யோகங்களோடு சம்பந்தப்பட்டது. இது கிறித்துவ சகாப்தம் முதல் கி.பி. 1200 வரையில் நடைபெற்றது. மகாபாரதத்தில் கிருஷ்ணன் முழுமுதற் கடவுளாக்கப்பட்டுள்ளார். சில சமயங்களில் அவர் மகாதேவனை வழிபட்டார்.
வைணவ ஆகமங்கள் 108. இவற்றிற் சிலவே அச்சிடப்பட்டுள்ளன. இவை பாகவத, பஞ்சராத்திர, சத்வாதக் கொள்கைகளை அடிப்படை யாகக் கொண்டு தோன்றியவை. இக்கொள்கைகளைப் பற்றி மகாபாரதம் கூறுகின்றது. இவற்றின் வேறுபாடு சமயத்தைப் பின்பற்றுவோரின் மந்திரத்தைப் பற்றியது. பாகவதர் பன்னிரெண்டெழுத்துக் கொண்ட மந்திரத்தையும், பஞ்சராத்திரர் எட்டெழுத்துக் கொண்ட மந்திரத்தையும் வழங்குவர். பாகவதர் என்னும் பிரிவினர் இப்பொழுது சிறுதொகையின ராக உள்ளனர். இவர்கள் தெலுங்கு நாட்டிலும், மகாராட்டிரத்திலும் காணப்படுகின்றனர். இராமானுசர் தமது வேதாந்த பாடியத்தில் பாகவதர், பஞ்சராத்திரர், சத்வாதர் என்போர் ஒரே கொள்கையுடையவர் களெனக் கூறியுள்ளனர். வைணவரின் 108 ஆகமங்களும் பஞ்சராத்திர ஆகமங்களெனப்படும். பத்ம சம்கிதை அவற்றின் பெயர்களைக் குறிப்பிடுகின்றது. அவ்வாகமங்களு ளொன்றாகிய பரத்துவாச என்பது பத்ம சம்கிதைக்குப் பிற்பட்டது. இதனால் பழையவை மறைந்து போக, அவற்றுக்குப் பதில் புதியன எழுதப்பட்டன வென்பது தெரியவருகிறது. 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வேதாந்த தேசிகர் தமது காலத்தில் அவற்றுட் பல மறைந்து போயினவெனக் கூறியுள்ளார். ஆகமங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமையால் அவற்றைப் புதியனவாக எழுதுவ தற்கும் அவற்றிற் பலவற்றைப் புகுத்துவதற்கும் வாய்ப்புக்களிருந்தன.
பத்ம சம்கிதை, இலக்குமி தந்திரமென்பன பழமையுடையன. அவை இராமானுசருக்குப் பிற்பட்ட வைணவக் கொள்கைகளிலும் பார்க்கச் சாக்த, சைவக் கொள்கைகளுக்கு அண்மையிலுள்ளன. பத்ம சம்கிதையில் பஞ்ச ராத்திரமென்பதற்கு விளக்கம் கூறப்பட்டுள்ளது. இதற்குப் பொருள், சிவன், பிரமா, கபிலர், புத்தர் அருகரால் வெளியிடப் பட்ட சைவ, யோக, சாங்கிய, யோக, பௌத்த, அருகதக் கொள்கைகளை இரவு ஆக்குவது எனப் பொருள் கூறப்பட்டுள்ளது.
இக்கால வைணவர் ஆகமக் கொள்கைகளை விட்டு விலகிச் சென்று விட்டனர். இக்கால விசிட்டாத்துவைதர் இராமானுசரின் வேதாந்த ஞானத்தையும், ஆகமத்தில் கூறப்படும் உலகப் படைப்பு வரலாறுகளையும், கிரியை முறைகளையும் கைக்கொள்கின்றனர். பஞ்ச ராத்திரத்தை விளக்குவதாகக் கூறிய இராமானுசர் வேதாந்தக் கொள்கை களையே விளக்கியுள்ளார். இராமானுசரைப் பின்பற்றினோர் அவருடைய தத்துவ ஞானத்தை அலட்சியஞ் செய்து ஆகமக் கொள்கைகளையும் அவற்றுட் கூறும் அனுட்டானங்களையுமே கடைப்பிடித்தனர். இராமா னுசருக்கு முன்னிருந்த யமுனாச்சாரியருக்கு முன் வேதங்களே பிரமாண மாகக் கொள்ளப்பட்டு வந்தன. வைணவ அத்துவைதக் கொள்கையைப் (விசிட்டாத்துவைதம்) போதித்த யமுனாச்சாரியர் வேதங்களைப் போல் ஆகமங்களும் பிரமாணமாகக் கொள்ளப்படுதல் வேண்டுமென வற் புறுத்தி, வேதங்களையும் ஆகமங்களையுமிணைத்தார்.
முற்பட்ட ஆகமங்கள் கடவுளைப் பரப்பிரமமென்றும், அவர் உலகைக் காத்தல் முதலிய கடமைகளை அவருடைய சக்தி புரிவதாகவும் கூறியுள்ளன. புராணங்களின்படி விட்டுணு திரிமூர்த்திகளுள் ஒருவராக வுள்ளனர். இவர் சிறீ, பூ, நில என்னும் மூன்று மனைவியருடன் ஆதி சேடனாகிய படுக்கையில் பாற்கடலில் பள்ளிகொள்வர். அவர் புதல்வ னாகிய பிரமா வேண்டிக் கொள்ளும் போது அவர் பூமியில் அவதாரஞ் செய்வர்.
சாக்தம்
இந்தியாவில் தாய்க்கடவுள் வழிபாடு ஆரியர் வருகைக்கு முற் பட்டது. தாய்க்கடவுள் வழிபாடு மக்களின் அநாகரிக காலத்தில் தோன்றி வளர்ச்சியடைந்து வந்தது. ஆகவே, இவ்வழிபாட்டில் அநாகரிக முறைகள் முதல் நாகரிக முறைகள் வரையில் காணப்படும். இத்தெய்வம் வடநாட்டில் துர்க்கை எனப்பட்டது. இது பிறகு சிவன் கடவுளின் பாரியாகிய உமை எனக்கொள்ளப்பட்டது. சிவனோடு சம்பந்தம் பெறாது தனித்து வழிபடப்பட்ட துர்க்கை அல்லது காளி வழிபாட்டி லிருந்து சக்தி வழிபாடு தொடங்கியது. தைத்திரிய ஆரணியகம், கேன உபநிடதங்களில் உமை, பார்வதி முதலிய பெயர்கள் காணப்படுகின்றன. வட இந்தியாவில் குவிஷ்க (Huvishka) அரசன் காலத்தில் சிவனோடும் சிவனில்லாமலும் உமையின் வடிவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் வழங்கின. அசெஸ் (Azos) என்னும் இந்து-சித்திய அரசனின் (கி.பி. 2ஆம் நூ.) நாணயங்களில் சிங்க வாகனத்திலிருக்கும் துர்க்கை வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது.
மகாபாரதத்தில் வீட்டும பருவப்பாடல்களிலும், விராட பருவத் தில் வரும் பாடல்களிலும் உமைக்குப் புதிய பெயர்கள் கூறப்பட்டுள்ளன. விராட பருவத்தில் துர்க்கை நாராயணனின் பாரி என்றும், வீட்டும பருவத்தில் சிவனின் மனைவி என்றும், மகிடாசுரநாசினி என்றும் கூறப் பட்டுள்ளன. அரிவம்சம் அவள் விந்தியமலையிலிருப்பவளாகக் கூறு கின்றது. குமரி, காளி, கபாலி, மகாகாளி, சண்டி, காத்தியாயனி, விசையி, காராளி, கௌசிகி, காந்தர் வாசினி முதலிய பெயர்கள் பிற்காலத்து வழங்கின.
சைவமும் சாக்தமும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டவை. சாக்த ஆகமங்கள் 77. இவற்றுள் ஐந்து சுபாகமங்கள் எனப்படும். அவை வசிட்ட, சனக, சுக, சனாதன, சனத்குமார என்பன. இவை ஞானத்துக்கும் வீடு பேற்றுக்குமுரிய வழிகளைக்கூறும். அவை வலதுகை மார்க்கமெனவும் சமயாசாரமெனவும்படும். 64 ஆகமங்கள் கௌள ஆகமங்களெனப்படும். அவை மந்திர வித்தைகளையும் இடக்கரான வழிபாடுகளையும் கூறும். 8 மிசிர காமங்களெனப்படும் இவை இரண்டையும் கூறும். கௌள ஆகமக் கொள்கைகள் இடதுகை மார்க்கமெனவும், மிசிர ஆகம மார்க்கம் கலப்பு மார்க்கமெனவும்படும். மிசிராமங்களாவன: சந்திரகலை, சோதீஸ்வதி, புவனேசுவரி, துர்வாச மாதா, பர்கஸ் பதியா என்பன. சக்தி சூத்திரங்கள் என்னும் நூல் சாக்த தத்துவ ஞானத்தை விரிவாகக் கூறுகின்றது. பாஸ்கராச்சாரியார் தமது இலலித விஸ்வதாரபாடியம் என்னும் நூலில் இதிலிருந்து ஒன்பது சூத்திரங்களை எடுத்தாண்டுள்ளார். சக்தி சிவத் தோடு சேராவிடில் சிவத்தால் ஒரு தொழிலும் புரிய முடியாது என்பது இம்மதத்தின் கொள்கை. கடவுளைப் பெண் வடிவில் வழிபடும் மதம் இமயமலை முதல் கன்னியாகுமரி வரையில் பரவியிருந்தது. வேதாந்த சூத்திரத்துக்கு அத்வைத உரை கண்ட சங்கராச்சாரியர் சாக்த மதத் தினரே ஆவர். சக்தியும் சிவமும், குணமும் குணியும் போன்றவை; ஒன்றை விட்டு ஒன்றைப் பிரிக்க முடியாதவை என்பது சைவர்களது கொள்கை. இது பற்றி எழுந்ததே சிவனின் பாகம் பெண் வடிவான வடிவு.
சக்தி வழிபாட்டினர் சக்தியை வெவ்வேறு வடிவுகளில் உபாசிப்பர். கன்னி, வாலை, மனோன்மணி, திரிபுரை முதலியன சக்திகள் சிலவற்றின் பெயர்களாகும். சக்தி வழிபாட்டில் வேதங்களில் கூறப்படும் தெய்வங்கள் ஒன்றும் வணங்கப்படுவதில்லை.
உருத்திர சிவன்
சிவ வழிபாடு ஆரியரின் வருகைக்கு முன் இந்தியாவிலிருந்தது. ஆரியர் தெய்வங்களுளொன்று உருத்திரனாக இருந்தது. இது தொடக்கத் தில் மற்றத் தெய்வங்களோடு ஒத்த உயர்வுடையதாகக் கொள்ளப்பட வில்லை. மற்றத் தெய்வங்களுக்கு உணவு தீயிலிடப்பட்டது; உருத்திரனுக் கும் அதன் பரிவாரங்களுக்கும் மக்களுலாவாத நாற்சந்திகளிலெறியப் பட்டது. இத் தெய்வம் நாளடைவில் ஒரு கூட்டத்தினர் வழிபடும் நிலைமைக்கு உயர்வடைந்தது. உருத்திரன் ஊளையிடும் தெய்வமாகவும் பயம் விளைப்பதாகவுமிருந்தது. இது நாளடைவில் சிவனுக்குரிய பண்பு களைச் சிறிது சிறிதாக ஏற்றுக்கொண்டு சிவனாக மாறுதலடைந்தது.1 உபநிடதங்கள் வேதகாலத் தெய்வங்களுக்கு மேலான தெய்வம் எனக் கூறுகின்றன. கௌதம புத்தரின் குடும்ப தெய்வம் சிவனெனத் தெரிகிறது. சிவ வழிபாட்டுக்குப் பாசு பதம் என்னும் பெயருமுண்டு. கடவுள் பசுபதி என்னும் கொள்கை உடைமையால் இப் பெயர் வந்ததெனச் சிலர் கூறுவர். சிவனைப் பசுபதி வடிவில் மக்கள் வழிபட்டமையால் இப்பெயர் தோன்றியதெனவும் கருதப்படுகிறது. மகாபாரதம் பாசுபதத்தைப் பற்றிக் கூறுகிறது. அருச்சுனன் சிவனிடத்தில் பெற்றது பாசுபத அத்திரம். நையாயிக, வைசேடிக சூத்திரங்களைச் செய்த கௌதமரும், கணாதரும் சிவ மதத்தினர் எனச் சொல்லப்படுகின்றனர். இராமாயணம், சீகந்த, மகாதேவ, உருத்திரன், திரியம்பகன் முதலிய பெயர்களால் சிவனைக் குறிப்பிடுகின்றது. சிவன் காமனை எரித்தது, பகீரதன் கங்கையைப் பூமிக்குக் கொண்டு வந்தது, பாற்கடலிலிருந்து எழுந்த நஞ்சைச் சிவன் உண்டது, தேவாசுரர் பாற்கடலைக் கடைந்தது, சிவன் திரிபுரங்களை எரித்தது முதலிய கதைகளும் இராமாயணத்திற் காணப்படுகின்றன.
மகாபாரத காலத்தில் சைவமும் வைணவமும் முதன்மை பெற் றிருந்தன. இராமாயணத்தில் சிவனைப் பற்றிக் கூறப்படும் கதைகள் மகா பாரதத்தில் விரித்துக் கூறப்பட்டுள்ளன. சிவன் திரிபுரங்களை எரித்தது, தக்கன் வேள்வியை அழித்தது முதலிய கதைகள் விரித்துக் கூறப்பட் டுள்ளன. வீட்டும பருவத்தில் அருச்சுனன் துர்க்கையை வழிபட்ட செய்தி காணப்படுகின்றது. கண்ணன் சிவனைக் கேட்ட வரங்களுள் ஒன்று தான் சிவபக்தனாக இருக்கவேண்டுமென்பது, பாரதம் தொடக்கத்தில் வைணவ சம்பந்தப்பட்ட நூலாக இருக்கவில்லை. கி.பி. 1ஆம் 2ஆம் நூற்றாண்டள வில் பிராமண மதக் கொள்கையினரால் இது வைணவ நூலாக்கப் பட்டதென ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.
வட இந்தியாவில் ஆட்சி புரிந்த இந்திய - சித்திய, இந்து - பட்டாணிய, குசான் அரசர் காலங்களில் இடபத்தோடு கூடிய சிவன் வடிவம் நாணயங்களில் பொறிக்கப்பட்டன. பௌத்த, சமண சமயங்கள் தோன்றும்போது வடநாட்டிலிருந்த சமயம் சைவம் எனக் கருதப்படு கிறது. வடஇந்தியாவினின்றும் இலங்கைக்கு வந்தவன் எனப்படும் விசயனும் அவனுக்குப் பின் அரசராக இருந்தோரும் சிவவழி பாட்டின ராக இருந்தார்கள்.
காசுமீர சைவம்
சைவ சமயம் வட நாட்டில் மிகப் பழங்காலம் முதல் இருந்து வருகிறது. வேத காலத்தில் சிவாக்கள் என்னும் ஒரு கூட்டத்தினர் வட இந்தியாவில் வாழ்ந்தார்கள். இவர்கள் சிவ வழிபாட்டினர் எனக் கருதப்படுகிறார்கள். வட நாட்டில் சைவமதம் பிரபலம் பெற்றிருந்த தென்பதை விளக்குவதற்குப் பல வலிய சான்றுகளுள்ளன. காசுமீரத்தில் சைவ சமய தத்துவ ஞானம் பற்றிய வரலாறு கி.பி. 8ஆம் நூற்றாண்டில் தொடங்குகின்றது. வாசுகுப்தர் கி.பி. 8ஆம் நூற்றாண்டில் சிவ சூத்திரத்தைக் கண்டுபிடித்தார். இது சிவபெருமானால் வாசுகுப்தருக்கு உபதேசிக்கப்பட்டதென்றும், இது சிவபெருமானால் பாறையில் பொறிக்கப்பட்டிருந்ததென்றும் பழங்கதைகளுள்ளன. வாசுகுப்தர் சிவ சூத்திரத்தைக் கண்டுபிடித்து அதனைக் கல்லாடருக்கு உபதேசித்தார். வாசுகுப்தர் அல்லது கல்லாடரால் செய்யப்பட்ட ஸ்கந்த காரிகை, சோமதேவரால் செய்யப் பட்ட (கி.பி.900) சிவ திருஷ்டி, உத்பலரால் செய்யப்பட்ட பிரதிபிஞ்ஞா சூத்திரம் முதலியன காசுமீர தத்துவஞான நூல்களுட் சில. காசுமீர சைவம் ஆகமங்களையும், சைவசித்தாந்த சாத்திரங்களையும் ஒப்புக் கொள்கின்றது. இது சங்கரரின் அத்துவைதக் கொள்கைச் சார்புடையது. காசுமீரத்தைச் சேர்ந்தவரெனக் கருதப்படும் பாணினி முனிவர் சிவ வழிபாட்டினர். இவர் வடமொழி இலக்கணத்தைச் சிவபெருமானிடம் கேட்டுணர்ந்தபின் செய்தாரென்னும் ஐதீகமிருந்து வருகிறது. “வட மொழியைப் பாணினிக்கு வகுத்தருளி” என்பது அதை உணர்த்துகின்றது.
இந்து சமயம்
சைவ சமயம் உட்பட, பௌத்தம், சமணம் அல்லாத இந்திய நாட்டில் தோன்றிய சமயங்களெல்லாம் இப்பொழுது இந்து சமயம் எனப்படுகின்றன. இந்து, இந்து சமயம் என்பன ஆரியத் தொடர்புடைய வடநாட்டு மக்களையும் அவர்களின் வேத சம்பந்தமான மதத்தையும் குறிக்க மேல்நாட்டவர் வழங்கிய பெயர்களாகும். சாக்தம், சைவம் முதலிய மதங்களுக்கும் வேதங்களுக்கும் தொடர்பிருப்பதாக வரலாறு கூறவில்லை. வேத மார்க்கமும் ஆகம மார்க்கமும் தம்முள் மாறுபாடு டையன. ஆகவே, சைவத்தை இந்து மதம் என்னும் கூட்டத்துள் அடக்குவது வரலாற்றுக்கும் கொள்கைக்கும் முரணுடையதாகும்.
சைவத்துக்கும் தமிழுக்குமுள்ள தொடர்பு
சைவத்துக்கும் தமிழுக்கும் மிக மிகப் பழங்காலம் முதல் தொடர்பிருந்து வருகின்றது. சிவபெருமான், முருகக்கடவுள் முதலிய கடவுளர் சங்கமிருந்து தமிழ் ஆய்ந்தது, சிவபெருமான் அகத்தியருக்குத் தமிழை அருளிச் செய்தது; தருமிக்குக் “கொங்குதேர் வாழ்க்கை” என்னும் பாட்டை எழுதி உதவியது; நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறியது; சேக்கிழாருக்கு “உலகெலாம்” என அடி எடுத்துக் கொடுத்தது; பெற்றான் சாம்பானுக்கு “அடியார்க்கெளியன்” என்னும் கைச்சீட்டெழுதி அளித்தது, சமயகுரவர் தமது செழும் பாடல்களால் புதுமைகள் பல விளைத்தது போன்ற ஐதீகங்கள் வழங்குகின்றன.
இவ்வைதீகங்கள் தமிழ் மொழியைப் பேசிய மக்களிடையே சிவ வழிபாடு தோன்றித் தமிழோடு நெருங்கிய உறவு கொண்டு செழித்து வளர்ந்ததென்பதை உணர்த்துகின்றன. தொன்மை தொட்டுச் சமய சம்பந்தமான தோத்திரங்களும், சாத்திரங்களும் இம்மொழியிலேயே இருந்து வந்தன. ஆகவே, சிவ வழிபாடும் தமிழும் ஒன்றை விட்டு ஒன்றைப் பிரிக்க முடியாதபடி சதையும் நகமும் போல ஒன்றுபட்டிருந் தன. பிற்காலத்தில் சமயம், மொழியினின்று பிரிக்கப்பட்டது. தமிழல் லாத மொழி சமயமொழியாக்கப்பட்டது. அப்பொழுது சைவமும், தமிழும் பிரிக்கப்பட்ட சதையும் நகமும் போலாயின. சமய வளர்ச்சியும் மொழி வளர்ச்சியும் குன்றின. மொழி சம்பந்தமான பூசல்கள் எழுந்தன. பேச்சு மொழி ஒன்றாகவும், சமய மொழி ஒன்றாகவும் இருத்தல் பல குழப்பங்களுக்கும் இன்னல்களுக்கும் ஏதுவாகும். பழமை தொட்டு ஆரியம், தமிழ் என்னும் போராட் டங்கள் அல்லது பொறாமைகள் இருந்து வருகின்றன. சமய சீர்திருத்தம், தமிழ் மொழி வளர்ச்சி என்பவற்றுக்குப் பணியாற்றும் உத்தமர்கள் இதனைக் கருத்திற் கொள்ளுதல் நன்று.
சைவம் வாழ்க! தமிழ் வாழ்க!!
BIBLIOGRAPHY
1. A Literary History of India - R.W. Frazer.
2. A short history of India - E.B. Havell.
3. Buddhists way of life its philosophy and history - Harold Smith.
4. Castes in India - its nature, function and origins - J. Hatton.
5. Encyclopaedia Britannica, 15th Ed.
6. History of civilization - Will Durant.
7. History of the Tamils - P.T. Srinivasa Aiyengar.
8. Indian Philosophy parts I & II - Dr. S. Radhakrishnan.
9. Literary achievements in India - Mrs. Hensa Metha.
10. Local Government in ancient India - R.K. Mookerji.
11. Mohenjo - Daro and Indus Civilization - Sir John Marshall.
12. Orient and Linguistic studies - William Dwlight.
13. Outlines of Indian philosophy - P.T. Srinivasa Aiyengar.
14. Pre-Aryan Tamil culture - Do.
15. Pre-historic ancient and Hindu India. - R.D. Banerji.
16. Sanskrit Literature - Professor Macdonell.
17. Short Studies in comparative religions - J.G.R. Forlong.
18. The Hindu view of art - Mulk Raj Anand Ph.D.
19. The History and Culture of Indian People - Bharatiya Vidya Bhavan, Bombay.
20. The Indus Civilization - Earnest Mackay.
21. The systems of Vedanta Philosophy - Dr.Paul Duessen.
22. Upanishads - R.D. Diwakar, Bombay 1950.
23. Zeus - Arthur Bernard Cook.
PERIODICALS
24. Annals of Bhandarkar - Oriental Research Institute - Vol. XIX.
25. Bulletin of the School of oriental studies. Vol.VIII.
26. Indian culture. Vol.VII.
27. Indo-Asian culture. Vol.I.
28. Journal of Indian History. Vol.XII.
29. Memoir No.41 Arch. Survey (India).
30. New Review. Vol.X
பொருட் குறிப்பு
அ
>அகிகுண்டல நியாயம், 67
>அக்கினி, 13
>அசுர்பானிப்பால், 10
>அதர்வணம், 6
>அத்வாரு 64
>அமெரிக்காவில் சிவன் கோயில், 6
>அரச வகுப்பினர் உபநிடத ஞானத்தை அறிந்திருந்தனர், 52
>அரசனே தலைமைக்குரு, 21
>அரசன் கடவுளின் அவதாரம், 21
>அருச்சுனன், 70
>அவதாரங்கள், 77
>அருணந்தி சிவாசாரியார், 42
ஆ
>ஆகமங்கள், 22
>ஆசியா மைனரில் சிவ வழிபாடு, 8
>ஆதிசேடன், 91
>ஆத்திகமும் நாத்திகமும், 53
>ஆர்மேனியாவில் கண்ணன் வழிபாடு, 18
>ஆழ்வார்கள், 88
>ஆளவந்தார், 82,88
>ஆறுதரிசனங்களை இவ்விரண் டாகப் பிரிக்கலாம், 58
>ஆறு தரிசனங்கள், 53
>ஆறுமுக நாவலர், 36
>ஆனந்தகிரி, 68
இ
>இந்து சமயம், 97
>இராமாயணம், 77
>இராமானுசர், 68,82
>இருக்கு, 63
>இருக்கு வேதம், 65
>இருபா இருபஃது, 42
>இருஷபர், 74
>இலக்குமி தந்திரம், 90
>இலிங்கம் - இலங்குவது, 10
>இலிங்க வழிபாடும் பாம்பு வழிபாடும், 11
>இலிங்காயதம், 28
>இலைசியாவில் தமிலி என்னும் மக்கள், 8
>இளம்பால் (பகல்), 19
>இஷ்வாகு, 87
> (இ) ஸ்கந்த வழிபாடு, 84
>ஈசுவர கிஷ்ணர், 56
உ
>உண்மைநெறி விளக்கம், 43
>உத்தரமீமாம்சை, 53, 62, 69
>உபநிடக் கருத்துக்கள், ஆகமக் கருத்துக்கள், 24
>உபநிடதங்களின் காலம், 51
>உபநிடதங்களின் பாரசீக மொழிபெயர்ப்பு, 50
>உபநிடதங்கள் - உபதேசங்கள், 24,49
>உபநிடதங்கள் யாகங்களைக் கண்டிக்கின்றன, 52
>உபநிடத ஞானங்கள் மொகஞ்சதரோ காலத்தவை, 52
>உமாதேவியார், 15
>உமாபதி சிவாசாரியார், 42
>உய்யவந்த தேவர், 42
>உருத்திரசிவன், 93
>உருத்திரன், 20,93
எ
>எகிப்தியர் தாமரைப் பூவைத் தெய்வம்,21
>எசுர், 63
>எபிரேய நாட்டில் சிவன், 6
ஏ
>ஏகாந்திகள், 32
ஒ
>ஒலிம்பஸ் மலை, 10
>ஒ (ஹோ) தா, 64
ஐ
>ஐந்தாம் வேதம், 77
க
>கடவுள், இயவுள் என்னும் பெயர்கள், 28
>கடைசி வருணத்தவருக்கு வேத வேதாந்தங்கள் மறுக்கப்பட்டன, 31
>கண்ணன் சிவபத்தனாயிருக்க வரம் கேட்டது, 96
>கண்ணன் வழிபாடு, 17
>கந்தன் = கந்திலுறைபவன், 19
>கதிர்காமம், 18
>கபிலர், 30
>கபிலவாஸ்து, 56
>கருடத்தம்பம், 86
>கர்மமீமாம்சை, 69
>கலியுகம், 82
>களப்பலி, 14
>கற்பம், 81
>காசுமீர சைவம், 96
>காஞ்சீபுரக் கைலாசநாதர் கோயிற் சாசனம், 26
>காடு கிழாள், 14
>காமிகாகமம், 27
>கார்த்திகேயர் 19, 85
>காளிதாசர், 85
>கிரியா என்னும் புரோகிதர், 66
>கிரியை, 26
>கிருட்டிணன் மகாதேவரை வழிபடல், 89
>குகர், 84
>குமார சம்பவம், 85
>குமாரிலர், 62
>கூரத்தாழ்வார், 83
>கோயிலுக்கு மதிலும் அகழும், 21
>கோயிலும் கோயிற் கிரியையும் 20
>கௌதம புத்தரின் குடும்ப தெய்வம் சிவன், 94
>கௌரவர், 70
ச
>சக்தியின் பெயர்கள், 93
>சங்கரர், 30
>சங்கரர் உரை எழுதிய உபநிடதங்கள், 52
>சங்கிதை, 67
>சங்கு, 16
>சடையப்ப வள்ளல், 42
>சந்தான குரவர், 43
>சமணம், 72
>சமயத் தோற்றம், 4
>சரியை, 26
>சனகன், 79
>சாக்த ஆகமங்கள் 27, 77, 92
>சாக்தத்துக்கு 77, ஆகமங்கள், 26
>சாக்தம், 91
>சாங்கிய காரிகை, 56
>சாங்கியத்துக்கு ஞானம் எண் என்னும் பொருள், 56
>சாங்கியம், 53, 56
>சாமவேதம், 65
>சாலமனின் கோயில், 22
>சிங்க வாகனத்திலிருக்கும் தாய்க் கடவுள், 8
>சித்தர் பாடல்கள் 32
>சித்தார்த்தர், 74
>சித்தித்திரயம், 88
>சியஸ் கடவுளுக்கு மூன்று கண், 9
>சிரியா நாட்டுத் தந்தைக் கடவுள், 8
>சிலப்பதிகாரம், 18
>சிவசூத்திரம், 97
>சிவஞான போதம், 42
>சிவஞான சித்தி, 42
>சிவப்ரகாசம், 43
>சிவயோகிகள், 32
>சிவ வணக்கமும் திருமால் வணக்கமும் ஒன்று, 17
>சிவலிங்கம், 9
>சிவலிங்க வழிபாடு 18
>சிவன், 5,18
>சிவன் மதம், 6
>சிவன் மும்மூர்த்திகளுக்கு வேறானவர், 20
>சிவாக்கள், 96
>சிறீ, பூ, நில என்னும் விட்டுணுவின் மனைவியர், 91
>சுப்பிரமணியர், 19,84
>சுவத்திகம், 16
>சுவேதாம்பரர், 72
>சூத்திர வடிவில் தத்துவ ஞானம், 54
>செவ்வேள், 19
>சேக்கிழார், 98
>சேயோன், 19
>சைவ சித்தாந்தக் கொள்கை, 27
>சைவத்துக்கு 28
>ஆகமங்கள் 26
>சைவத்துக்கும் தமிழுக்குமுள்ள தொடர்பு, 97
>சைவமடங்கள் 34
>சோம பானம், 63
ஞா
>ஞாயிறு முழுமுதற் கடவுள், 4
>ஞான நூல்களை எழுதிவைத்தல் தமிழ் மரபன்று, 24
>ஞானம், 26
த
>தக்கன் வேள்வி, 96
>தரிசனங்கள், 53
>தர்மம்-கடமை, 67
>தலமரம், 11
>தாமரை மொட்டின் வடிவங்கள், 22
>தாய் குடும்பத்துக்குத் தலைவி, 13
>தாலிபுளக நியாயம், 67
>திகம்பரர், 72
>திங்கள் வணக்கம், 12
>திரிபிடகம், 75
>திரியம்பகன், 95
>திருக்களிற்றுப்பாடியார், 42
>திருமந்திரம், 25,32
>திருமுருகாற்றுப்படை, 19
>திருவுந்தியார், 42
>திருவருட் பயன், 43
>திரையற்ற கடல்போல் சிந்தை, 29
>தீர்த்தங்கரர், 72
>தீவணக்கம், 12
>துரோதானம், 27
>துர்க்கை, 91
>துர்க்கையின் பெயர்கள், 92
>தென்னிந்திய சிற்பமும் எகிப்திய சிற்பமும், 21
>தேவசேனை, 85
>தேவதாசிகள், 27
>தொல்காப்பியம்
ந
>நச்சினார்க்கினியர், 24
>நாணயங்களில் சிவ வடிவம், 96
>நாதமுனி, 88
>நாராயணர், 87
>நாலாயிரப் பிரபந்தம், 88
>நான்கு வருணங்கள், 37
>நிம்ரொட் அரசன், 13
>நியாயங்கள், 67
>நிரீச்சுர வாதம், 56, 75
>நியாயம், 60
>நிர்வாணம், 73
>நீலகண்ட சிவாசாரியார், 27
>நீலகண்டர், 70
>நூறுயாகங்கள் செய்தவன் சுவர்க்கத்துக்கு அரசன், 49
ப
>பகவத்கீதை, 70
>பகவான், 86
>பகற் கடவுள் சம்பந்தமாக பாபிலோன்,10
>பசுபதி, 94
>பஞ்சராத்திரம் என்பதன் பொருள், 90
>பஞ்சராத்திரரின் 8 எழுத்து மந்திரம், 89
>பஞ்சராத்திரிகா, 87
>பதஞ்சலி, 59
>பதினெண் புராணங்கள், 81
>பத்மசங்கிதை, 90
>பரணி நூல்கள், 14
>பரிபாடல், 19,88
>பரிமேலழகர், 24
>பரிவார தெய்வங்கள், 21
>பலதேவ வழிபாடு, 88
>பாகவதம், 85
>பாகவதரின் 12 எழுத்து மந்திரம், 89
>பாசுபத அத்திரம், 95
>பாசுபதம், 91
>பாணினி, 97
>பாண்டவர், 70
>பாரதப்போர், 76
>பாரதம் திராவிட நாட்டுக் கதை, 76
>பார்சவர், 72
>பாலவர், 77
>பால் கடவுள், 19
>பாஷா என்னும் நடை, 25
>பாற்கடல், 91
>பிணிமுகவூர்தி, 19
>பிரம என்னும் புரோகிதர், 65
>பிரம சூத்திரம், 60, 69
>பிரமணியர், 84
>பிரமா, விட்டுணு, உருத்திரன், 20
>பிராமணங்கள், 49,87
>பிராமணரல்லாத துறவிகள், 33
>புத்தர், 28,74
>புராணங்களின் காலம், 80
>புராணங்கள், 18, 79.
>பூசாரிக் குடும்பங்கள், 21
>பூர்வமீமாம்சை, 53,61
>பூர்வமீமாம்சை முழு முதற்கடவுளைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை, 54
>பெத்தெல், 12
>பெரியநம்பி, 82
>பெரிய புராணம் 27
>போசராச மார்த்தாண்டா, 59
>போதாயன கிரியா சூத்திரம், 60
>போற்றிப் பஃறொடை, 43
>பௌத்திர பாகு, 73.
ம
>மகாஉகம், 81
>மகாசேனர், 84
>மகாபாரதம், 76
>மகாவீரர், 72
>மணிப்பிரவாளம், 89
>மயூர சந்திரகுப்தன், 73
>மறு பிறப்பைப் பற்றி ஆரியர் அறிந்திருக்கவில்லை, 23
>மறைஞான சம்பந்தர், 42, 43
>மனுக்கள், 5
>மாதவர், 83
>மாயா மக்கள், 7
>மால் வழிபாடு, 16
>மிருகோத்திரம், 27
>மீமாம்சை, 61
>முண்டகம் மழிக்கப்பட்ட தலை, 51
>முதியபால் (பகல்), 19
>மும்மூர்த்திகள், 20
>முருகக் கடவுளுக்கு ஆறுமுகம், 19
>முருகக் கடவுள், 19
>முழிக வழிபாடு, 18
>முருகவழிபாடு கதிரவன் வழிபாடு, 18
>மூவடிகளால் உலகளந்தது, 86
ய
>யமினி, 61
>யமினி சூத்திரம், 67
>யமுனாசாரியர், 88,90
>யவனர், 77
>யாக்ஞவல்கிய மிகுதி, 58
>யாதவப் பிரகாசர், 70,82
>யோகம், 26,53,56
வ
>வசவர், 27
>வருணாச்சிரம தருமம், 27
>வல்லபர், 68
>வற்சயாயனர், 61
>வன்னியும், கிணறும் இலிங்கமும், 11
>வாசஸ்பதி, 68
>வாசுகுப்தர், 96
>வாசுதேவ கிருட்டிணர், 96
>வாசுதேவ கிருட்டிண விட்டுணு, 87
>வாசுதேவன், 86
>வாத நாராயணர், 68
>வார்த்தமானர், 73
>விசாகர், 84
>விசிடாத்துவைதம், 71,83
>விட்டுணு மதம், 85
>விட்டுணு வழிபாடு, 17
>விட்டணுவின் அவதாரம், 78
>விட்டுணுவும் சிவனும், 78
>வித்தியாரணியர், 84
>விநாயா, 75
>வியாக்கிர பாதர், 60
>வியாசர், 76,81
>வினா வெண்பா, 43
>வீட்டும பருவம், 70
>வீரசைவம், 12, 28
>வெள்ளப் பெருக்கு, 4
>வேதங்களில் பத்து உபநிடதங்கள், 51
>வேதங்களைப் பெண்கள் கேட்டலும் ஓதலும் கூடாது, 29
>வேதங்கள், 46
>வேதமார்க்கமும் ஆகம மார்க்கமும், 30
>வேதம் ஒன்றாகவிருந்தது, 64
>வேதம் நித்தியம், 68
>வேதாந்த சூத்திரம், 68
>வேதாந்த தேசிகர், 90
>வேதாந்தம், 69
>வைசேடிகம், 53,59
>வைசேஷ, 60
>வைணவ ஆகமங்கள், 108, 89
>வைணவ சமய வளர்ச்சி, 89
>வைதீக சமயம், 45.
கருத்துகள்
கருத்துரையிடுக