பதுங்குகுழி நாட்கள்
கவிதைகள்
Backபதுங்குகுழி நாட்கள்
பா. அகிலன்
குருத்து வெளியீடு
------------------------------------------------------
பா. அகிலன்
பதுங்குகுழி நாட்கள்
குருத்து வெளியீடு
----------------------------------------------------------------
நூலின் பெயர் : பதுங்குகுழி நாட்கள்
ஆசிரியர் : பா. அகிலன்
உரிமை : ஆசிரியருக்கு
முதற்பதிப்பு : ஆவணி 2000
அட்டைப்பட ஓவியங்கள் : தா. சனாதனன்
முன்னட்டை : 'Self with in', கலப்புச் சாதனம் 2000.
பின்னட்டை : 'Jaffna', எக்சிங் பதிப்போவியம், 1995.
ஒளி அச்சுக் கோர்வை : எம். எஸ். கிராபிக்ஸ், சென்னை - 14
வெளியீடு : குருத்து,
தாய்த்தமிழ் பள்ளி வளாகம்,
கோபிச்செட்டிப்பாளையம் (வட்டம்),
ஈரோடு (மாவட்டம்) 638 476.
மின்னஞ்சல் : sundarprs@hotmail.com
விலை : ரூ. 45/-
-----------------------------------------------------------------
குமாரசிங்கம் மாஸ்ரருக்கு
-----------------------------------------------------------------
அகிலனது கவிதைகளில், அனுபவங்களின் கொடூரம் புதிய பாஷையை, புதிய சொல் முறையை சிருஷ்டித்துள்ளதைக் காணலாம்; பழகிய அனுபவங்கள் புதிய அர்த்தங்களைக் கொள்கின்றன.
- வெங்கட்சாமிநாதன்
----------------------------------------------------------------
1. யாரோ ஏதோ
சில நட்சத்திரங்கள்
துயர நிலவு
யாரோ மட்டும் வருகிறேன்.
கையில் பற்றியிருந்த கொண்டல் மலர்களும்
காற்றில் அலைவுற்ற கூந்தலுமாய்
குரூர வெளியில்
உன்னையும் பறிகொடுத்தாயிற்று...
"எங்கே போகிறாய்" கற்றில் யாரோ ஒலிக்கவும்
"தெரியாது..."
ஆனி 1990
----------------------------------------------------------------
2. முடிந்துபோன மாலைப்பொழுது
பார்க்கிறோம்,
விழி கொள்ளாத் துயரம்
உதடுகள் துடிக்கின்றன
தடுமாறி உயிராகும் வார்த்தைகளும்
காற்றள்ளப் போய்த் தொலைகிறது...
நேற்று
சணற்காட்டில் மஞ்சள் மௌனம்,
இன்று
கண்களில் நீர்
போகிறாய்
மேற்கில் வீழ்ந்தணைகிறது சூரியன்.
ஆனி 1990
----------------------------------------------------------------
3. பதுங்குகுழி நாட்கள் - 1
காலமற்று
இருள் பரந்து உறைந்தது
பீதிநிறை கண்களும், செபிக்கும் வாய்களும்
அந்தரத்தில் தொங்கப்
போர்!
குண்டெறி விமானம் ஓய்ந்த துளிப்பொழுது
வெளிப்போந்த திண்மம் - மீள
குழிக்குள் பதுங்கிக் கூறுசேதியில்
கைகளில் உயிர்
இன்னும் நடுங்குண்டு போகும்
'கோ' என்ற முலையுடைத் திண்மத்தின் அலறலில்
திடுக்கிட்டுத் திரும்பவும்
யோனிவாய் பிளவுண்டு, குருதி சீற
இன்னொரு சிறு திண்மம்.
ஆவணி 1990
----------------------------------------------------------------
4. இருப்பு
வெளியோடு கனக்கும் இருள்
சுவாசிப்பில்
உள்ளும் நுழைந்து
மேலும், மனத்தை இருட்டும்
முற்றிலாக் கூவலாய்
தலை தறித்து, குடலறுத்து
யோனிவாய் கிழியப் புணர்ந்தும்
குமைவில் திண்மங்கள்
இன்னொரு பெயரிலி நான்...
நிலையாமைத் துயரும், அச்சமும்
பாறை கொண்டு எதிர்வர
கனவுகளும், வரைவுகளும்
வெளியெலாம் தொங்கும்
காற்றோ
இஷ்டப்படி அலைக்கும்.
பங்குனி 1990
----------------------------------------------------------------
5. 1987 - 'அமைதி'
பின்னரும் நான் வந்தேன்,
நீ வந்திருக்கவில்லை
காத்திருந்தேன்...
அன்றைக்கு நீ வரவேயில்லை,
அப்புறம்
சுவாலை விட்டெரிகிற தீயோடு
தெதிசை நாட்கள் பெய்ந்ர்ந்தன,
காலம் தாழ்த்தி
தெருவோரம் நாய் முகரக் கிடந்த
உன் மரணம் செவிப்பட்டது நண்ப,
துக்கமாய் சிரிக்கும் உன்முகம் நினைவில் வர
தொண்டை கட்டிப் போயிற்று...
எல்லாவற்றின் பொருட்டாயும் நெடுமூச்சே
'விதி' என்றாகிவிட்ட சுதந்திரத்துடன்
மறுபடி மறுபடி திசையற்றுப் போனோம்.
புரட்டாதி 1990
----------------------------------------------------------------
6. பார்வை
மெல்லிய சாம்பற்படிவாய்
கொட்டுகிறது மழை...
வயல்,
ஓரங்களில் தயிர்வளை*
பறக்கிற கொக்கு, குடையுடன் மனிதரும்
மெல்லிய சாம்பலின் படிவாய்...
காற்று வீச்சில்
வெண் முத்தென முகம் நனைத்த நீரோடு
அழுவது உன் குரலா...?
போ
போவதுமில்லை...
பின்னர் வா
வருதலுமில்லை...
கொட்டுகிறது மழை
மெல்லிய சாம்பற் படிவாய்...
மார்கழி 1990
*தயிர்வளை - மழைக்காலத்தில் தெருவோரம் வளரும் சிறு பூக்களை உடைய பூண்டு.
----------------------------------------------------------------
7. பதுங்குகுழி நாட்கள் - 2
வேர் முடிச்சுக்களிலிருந்தும்,
பாறைப் படிவங்களின் கீழிருந்தும்
தலையின்றி மீண்டன அவைகள்.
வெட்டை வெளிகளில் மண்டியிட்டன,
கண்ணெட்டாத் தொலைவுகளிற்கு
ஓடியும் தொலைந்தன
அங்கங்கள் சிதற
மரித்தும் ஆயின...
மீண்டும்,
நிலத்தினடிப் புகுந்து
அமைதி ந்நளுக்காய் துதித்தும் இருந்தன
என் கடவுளே,
சிதறிப் போயிற்று கடிகாரம்
ஒளி சுருங்கிப் போகிறது கைவிளக்கு...
பங்குனி 91
ஓவியர் நிலாந்தனின் 'Bunker Family' ஓவியத்தால் அருட்டப்பெற்று
----------------------------------------------------------------
8. சிலுவை - 1
இருளால் மூடுண்டது என் முகம்
வேண்டப்படாதது எனதாத்மா
நான் அதிகமாய் மிதிக்கும் உன் முன்றிலும்
சாளரத்தை மூடுகையில்
இரவுகளில் நித்திரையுமற்றுப் போகிறது
ஓயாது பெய்கிற மழையில்
என் துக்கமெனும் தீயோ மூண்டெரிகிறது
சொல்
ஊளையிடும் காற்று வெளியில்
நேசமான மெழுகுதிரிச் சுடரை
எவ்விதம் காப்பாற்றுவேன்...?
ஆனி 1991
----------------------------------------------------------------
9. பதுங்குகுழி நாட்கள் - 3
பெரிய வெள்ளி
உன்னைச் சிலுவையிலறைந்த நாள்
அனற்காற்று
கடலுக்கும், தரைக்குமாய் வீசிக்கொண்டிருந்தது,
ஒன்றோ இரண்டோ கடற்காக்கைகள்
நிர்மல வானிற் பறந்தன.
காற்று பனைமரங்களை உரசியவொலி
விவரிக்க முடியாத பீதியைக் கிளப்பிற்று
அன்றைக்குத்தான் ஊரிற் கடைசி நாள்
கரைக்கு வந்தோம்,
அலை மட்டும் திரும்பிப் போயிற்று.
சூரியன் கடலுள் வீழ்ந்தபோது
மண்டியிட்டழுதோம்
ஒரு கரீய ஊளை எழுந்து
இரவென ஆயிற்று.
தொலைவில்
மயான வெளியில் ஒற்றைப் பிணமென
எரிந்து கொண்டிருந்தது எங்களூர்,
பெரிய் வெள்ளி
உன்னைச் சிலுவையிலறைந்த நாள்.
மாசி 1992
----------------------------------------------------------------
10. பதுங்குகுழி நாட்கள் - 4
குருதியோலம்
நிராசைகளின் வலைகளில் காலச்சிலந்தி தின்னக்
கிடந்ததொரு பூச்சி
சூரியன் பகலின் ஒற்றன்
இதயத்தைப் பிடுங்கியபோது
குருவிச் செட்டைகளும், பூவின்மென் இதழ்களும்
வீழ்ந்தனவாம்.
பின்னர்,
இதயத்தைக் கீறி உப்பிட்டு வைத்தார்கள்,
குரலை உருவி
மரத்தில் அறைந்து விட்டார்கள்,
விறகுக்காய்
எலும்புகளையும் வெட்டினார்கள்.
யாரோ, எப்போதோ
காற்றில் விட்டெறிந்த புன்னகை
கொடியில் கிடந்து உலர்கிறது.
'ஆண்டவனே
ஆண்டவனே
எங்களை ஏன் கைவிட்டீர்?'
பங்குனி 1992
----------------------------------------------------------------
11. ஆயர்பாடி
நெடிய
நீல இரவுகளின்
கழிமுகம் வரையிலும்
அழுதிருந்தாள் அவள்,
அசைவற்ற மலைகளிலிருந்து
பாய்ந்தோடுகிறது நித்திய நதி
அவளிற்கு
ஆறுதல் கூறத்தான் யாருமில்லை.
கார்த்திகைப் பிறைபோல
நீ வந்தநாளோ
அவள் நினைவுகளின் தொலைவில்.
மேகம் கறுத்த வானிடை
நட்சத்திரங்கள் விழிமலர
குழலெடுத்து ஊதும் காற்று
இமைப்பொழுதே கண்ணா,
உன் நினைவு நீளப் பொற்கயிற்றின் அந்தத்தில்
கைவிடப்பட்ட பாடலின் பொருளாய்
உணர்வூறுவாள்,
ஒரு தாமரை மொட்டுப்போல
மனம் கூம்பி
மழைபொழியும் புலரியொன்றில்
விழிநீள சாளரத்தண்டை நிற்கின்றாள்,
பொழிமழைப் பெருக்கின்
நூறு கபாடங்கள் தாழ்திறப்ப
அதோ
அங்கு வருவது யார்?
சித்திரை 1992
----------------------------------------------------------------
12. உன்னுடைய மற்றும் என்னுடைய கிராமங்களின் மீதொரு பாடல்
1
எனக்குத் தெரியாது.
ஒரு ஆர்ப்பரிக்கும் கடலோரமோ
அல்லது
வனத்தின் புறமொன்றிலோ
உன் கிராமம் இருந்திருக்கும்
பெரிய கூழாமரங்கள் நிற்கின்ற
செம்மண் தெருக்களை,
வஸந்தத்தில் வந்தமர்ந்து பாடும்
உன் கிராமத்துக் குருவிகளை
எனக்குத் தெரியாது.
மாரிகளில்
தெருவோரம் கண்மலரும் சின்னஞ்சிறிய பூக்களை
நீள இரவுகளில்
உடுக்கொலித்து நீ பாடிய கதைகளை
நிலவு கண்ணயரும்
உன் வாவிகளை
நானறியேன்.
2
காற்றும் துயரப்படுத்தும்
இவ்விரவில்
நானும், நீயும் ஒன்றறிவோம்;
ஒரு சிறிய
அல்லது பெரிய
சுடுகாட்டு மேடு போலாயின
எமது கிராமங்கள்.
அலைபாடும் எங்கள் கடலெல்லாம்
மனிதக் குருதி படர்ந்து மூடியது
விண்தொடவென மரமெழுந்த வனமெல்லாம்
மனிதக் குரல்கள் சிதறி அலைய,
சதைகள் தொங்கும் நிலையாயிற்று...
முற்றுகையிடப்பட்ட இரவுகளில்
தனித்து விடப்பட்ட நாய்கள்
ஊளையிட
முந்தையர் ஆயிரம் காலடி பரவிய
தெருவெல்லாம் புல்லெழுந்து மூடியது,
நானும் நீயும் இவையறிவோம்.
இறந்து போன பூக்களை,
கைவிடப்பட்டுப்போன பாடலடிகளை...
நினைவு கூரப்படாத கணங்களை
அறிவோம்.
3
ஆனால்,
கருகிப்போன புற்களிற்கு
இன்னும் வேர்கள் இருப்பதை.
கைவிடப்பட்ட பாடல்
சொற்களின் மூலத்துள் அமர்ந்திருப்பதை
நீ அறிவாயா?
குருதி படர்ந்து மூடிய
கடலின் ஆழத்துள்
இன்னும்
எங்களின் தொன்மைச் சுடர்கள் மோனத்திருப்பதை
நீயும் அறியாது விடின்
இன்றறிக,
'ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்த பின்'
ஓர் நாள் சூரியன் எழுந்து
புலர்ந்ததாம்.
மாசி 1993
----------------------------------------------------------------
13. புராதன இரவு
ஓலமிடும் தெருக்களிலிருந்து
வீட்டிற்கு வருகிறாய்
முதிய
பீதி படர்ந்த விழிகள் எதிர்கொள்ளும்
மௌனம்
வௌவாலாய் முகடுகளில் தொங்கும்
சொற்கள் சிதறி
சுவர்களில் ஊர்ந்து திரியும்
சிலவேளை
சிலந்தி வலைக்குள்ளும் சிக்குண்டு கொள்ளும்
கடிகார முகமென்பது
காலனின் முகமென்பது உண்மையே
தினக்காடியும்
அவனுக்குச் சேவகம் செய்யும்
சுவர் மூலைக்குள்
கனவின் வண்ணத்திட்டுக்கள்
புதை சேறாகி
வாய் திறக்கும்
பத்திரிகையைப் புரட்டுவாய்
கர்ப்பக்குழிக்குள்
குழந்தைகள் தகனிக்கப்பட்ட சேதி
அச்சுக் குமைவுள் தலை நீட்டிக் கிடக்கும்
நெடுமூச்செறிந்து
கிரீச்சிடும்
பழைய கதவம் திறந்து
வெளி வந்து நிற்கும் உன்னை
காற்று மெல்ல ஸ்பரிசித்து நகர
நிமிர்கிறாய்,
புராதன இரவு
யுகங்களுக்கு அப்பாலிருந்து ஒளிரும்
கோடி, கோடி நட்சத்திரங்கள்.
வைகாசி 1993
----------------------------------------------------------------
14. இராதை கண்ணனுக்கு எழுதிய கடிதம் (சுருக்கப்பட்டது)
கோகுலம்,
மளைக்காலம்
வாவிகள் நிரம்பிவிட்டன
வெள்ளிகள் முளைக்காத
இருண்ட இரவுகளில்
காத்திருக்கிறேன் நான் உனக்காக
எங்கோ தொலைதூர நகரங்களின்
தொன்மையான இரகசியங்களிற்கு
அழைப்பது போன்ற உன் விழிகள்
வெகு தொலைவில் இருந்தன
என்னை விட்டு
புதைந்திருக்கிறது மௌனத்துள் மலை
இருக்கிறேன் நான் துயராய்
அசைகிறது சலனமின்றி நதி
காற்றில் துகளாய்ப் போனேன்
இங்கே,
என் கண்ணா
சற்றுக்கேள் இதை
மல்லிகைச் சரம்போன்றது என் இதயம்
கசக்கிடவேண்டாம் அதை
ராதா
பிரியமுடன்
கார்த்திகை 1993
----------------------------------------------------------------
15. முந்தைப் பெருநகர்
இழந்துபோன
அற்புதமான கனவின்
நினைவுத்துயரென படர்கிறது நிலவு,
பகலில் புறாக்கள் பாடி
சிறகடித்துப் பறந்த
வெள்ளைக் கட்டிடங்களுடைய
முந்தைப் பெருநகர்
இடிபாடுகளோடு குந்தியிருக்கிறது யுத்தவடுப்பட்டு
பாசி அடர்ந்த பழஞ்சுவர்களின்
பூர்வ மாடங்களில்
கர்வ நாட்களின்
முன்னைச் சாயல் இன்றும்
பண்டையொரு ஞானி*
சித்தாடித் திரிந்த
அதன் அங்காடித் தெருக்களில்
சொல்லொண்ணா இருளை இறக்கியது யார்?
பாடியின்** தந்திகளிலோ தோய்கிறது துக்கம்
விழாவடங்கிய சதுக்கங்கள்
காலமிறந்த ஆங்கிலக் கடிகாரக் கோபுரம்
ஊடே
புகைத்தெழுகிற பீதியிடை
கடல் முகத்தில்
விழித்திருக்கும் காவலரண்கள் ஓயாது,
தானே தனக்குச் சாட்சியாய்
யாவற்றையும் பார்த்தபடிக்கு
மாநகரோ மௌனத்துள்
ஓங்கி
இன்னும் இன்னும் முரசுகள் முழங்கவும்
சத்தியத்தின் சுவாலை நெருப்பு உள்ளேந்தி
மாநகரோ மௌனத்துள் அமரும்.
மார்கழி 1993
* கடையிற்சுவாமி- ஈழத்துச் சித்தர் பரம்பரையின் மூலவர்களுள் ஒருவராகக் கருதப்படுபவர். யாழ்ப்பாணக் கடைத்தெருவில் எப்போதும் சுற்றித் திரிவாராம்.
** யாழ்பாடி- அந்தகனான ஒரு யாழ்பாடிக்கு பரிசாக முன்னொருகால் வழங்கப்பட்ட நகரமே யாழ்ப்பாணம் என்றொரு ஐதீகமுண்டு.
----------------------------------------------------------------
16. கைவிடப்பட்ட கிராமம் பற்றிய பாடல்
இங்கேதான்
கசப்பானதும், உல்லாசமானதுமான
என் பால்யகாலத்து நினைவுகள் கலந்துள்ளன
இதோ,
இந்த வரிகளை எழுதும் நடு இரவில்
சனங்களற்ற உன்னுடைய வீடுகளை
தெருக்களை நினைத்து நான் பார்க்கிறேன்
சொல்லமுடியாப் பிரிவின் துயரால்
மனம் அஞ்சலப்படுகிறது.
போற்றுதற்குரிய
முன்னோர்களின் சிறிய கிராமமே
மாயக் கனவுகளை ஊதியெழுப்பும்
உன்னுடைய வயற்கரைகளை
வைக்கோல் போர்கள் நிறைந்த முற்றங்களை
நினைத்துப் பார்க்கிறேன்,
பனங்கூடல்களின் அருகே
தியானத்துள் அமர்ந்த
பாட்டனின் பழம்பெரும் வீடே
உன்னோடு கழித்த விடுமுறை நாட்கள்
நினைவுத் தெருவில் நடுகல்லாய்
அமர்ந்திருக்கிறது.
ஒரு முதியபெண் பெருங்குரலில்
பழங்கதை சொல்லி அழுகிறாள்
தூர்ந்து போய் ஐதீகங்கள் மண்டிக் கிடக்கும்
உன்னுடைய கேணிகளில்
நினைவின் ஆழ அடுக்குகளுள் இழுத்துச் செல்கிற்
பூர்வீகத் தெருக்களில்
பித்தாய் மனம் பற்றி அலைகிறது
எங்கே நீ...
தெய்வங்கள் உள்ளுறைந்த உன்னுடைய முதுமரங்கள்
எங்கே?
நொந்தநிலா முகில்களுள் முகம்புதைத்து விம்முகிறது
விழி திறந்து
இரவுக் கடலில் எரிகிற சூள் விளக்குகளை*
விழாநாட் தெருக்களில்
ஒயாது முழங்குகின்ற பறைகளின் ஒலிகளை
காற்றைப் பிடித்துலுப்பி எழுகிற
மூதாதையரின் பாடல்களை
வாள் முனையில் உயிர்துடிக்க
இழந்துதான் போனோமா?
ஆனி 1996
* சூள் விளகு- மீன்பிடிக்கப் பயன்படுத்தப்படும் காற்றில் இலகுவில் அணைந்து விடாத விளக்கு.
----------------------------------------------------------------
17. இராதையின் கடிதங்கள் மற்றும் தினக்குறிப்பிலிருந்து
இந்தத் துயரம்
என்னைக் கதறியழவைக்கும்
இனி, மனம் வாழும்
காலமெல்லாம்
மறுகி நான் அழுவேன்
விழி மூடி நிலவே
நீ தூங்கு
அலையடங்கிக் கடலே
நீ தூங்கு
சாபங்களால் வனையப்பட்ட பாடலே
நீ அழு
உனக்காகத் திறக்கப்படாத
நெடுங்கபாடங்கள் முன்னிருந்து அழு
நாட்கள் பாறைகளாய்க் கனக்கின்றன.
முடிவில்லாத மௌனம்
முடிவில்லாத காத்திருப்பு
தீயாய் கனன்று எரிகிறதென் உடல்
இரவு,
வார்த்தைகள் அற்றொடுங்கிய பின்
தனிமையால்
வேயப்பட்ட சிறிய குடிலில்
நம்பிக்கையின் சுடர்மணி விளக்குகளை
ஏற்றி நான் வைக்கிறேன்
இரவு பகலித் தின்கிறது
பகல் இரவைத் தின்கிறது
திரௌபதையின் துகிலய்
நீண்டு செல்கிறதென் பாதை
ஆனி 1995
----------------------------------------------------------------
18. புனைவுகளின் பெயரால்
நானொரு ஆசியன்,
கடவுளர்களின் கண்டத்தைச் சேர்ந்தவன்
சமுத்திரங்களின் சொர்க்கத் தீவில்
வடகுடாவின் வெப்பத் தெருக்களில்
காட்டுப்பறவை.
நீங்கள் அறியீர்கள் என்னை
கட்டப்பட்ட புனைகதைச் சுவடிக்குள்
சிறையிடப்பட்டது எனது வரலாறு,
உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நான்
உங்கள் தாழ்வாரங்களை நிரப்பும்
வேண்டப்படாத அசுத்த விருந்தினன்,
தேசங்களின் எல்லைகளைத் திருட்டுத்தனமாகக் கடக்கும்
கள்ளக் குடியேறி,
சமரசமின்றி இறப்பை ஏந்திச் செல்லும்
முரட்டுப் போராளி...
அறியீர்கள் நீங்கள்
வரலாற்றின் மூத்தவேர்களில்
எனக்கொரு வீடு இருந்ததை
கவர்ந்து,
எனது தெருக்கள் தூக்கிலிடப்பட்டதை
புனைவுகளின் பெயரால்
முடிவற்று சீவியெடுக்கப்படும் குருதியின் வலியை...
இல்லை,
அறிந்துள்ளீர்கள் அனைத்தையும் நீங்கள்,
எனினும்
அற்பமான உங்கள் நன்மைகளுக்கு
அவசியமானது
தோற்க சதுரங்கப் பலகையில் மறுக்கும்
முடிவற்ற எங்களின் குருதி
பங்குனி 1997
----------------------------------------------------------------
19. யாழ்ப்பாணம் 1996 - நத்தார்*
ஸ்தோத்திரம் சுவாமி
கூரை பெயர்க்கப்பட்ட வீட்டிலிருந்து
எனது இராக்காலப் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்ளும்
இவ்வருடம் நீர் பிறந்தபோது
அடைக்கப்பட்டிருந்தன தேவாலயங்கள்
கைது செய்யப்பட்டிருந்தது
நள்ளிரவு மணியோசை
மறுதலிக்கப்பட்ட புனித இரவில்
மத்தலோனா**
அழுதாள், புலம்பினாள், மன்றாடினாள்
தன் தலைமுறைகளுக்காக,
தீனமான தாயின் குரலின் கீழ் குருதி
விளக்கற்ற கரிய தெருக்களில்
பவித்திரமான அவளது கண்ணீர்.
ஊரங்கிய இரவில்
பிதாவே, நீர் பிறந்தபோது
அன்னியராய் இருந்தோம்
எங்கள் நகரில்,
மந்தைகளாக நடத்தப்பட்டோம்
எங்கள் முற்றங்களில்.
எங்களுடைய கிராமங்கள் கொள்ளையிடப்பட்டன.
வரலாற்றின் பரப்பிலிருந்து
துடைத்தெறியப்பட்டன அவை.
அவமானப்படுத்தப்பட்டது
வெற்றிப் பிரகடனக் கூச்சல்களால் எனது பட்டினம்,
பிதாவே,
சிதறிப் போனார்கள்
குரல்கள் கைப்பற்றப்பட்ட சனங்களெல்லாம்,
வெறிச்சோடியுள்ளன வீடுகள்
தேவாலயத்தின் வழிகளெல்லாம்
உதாசீனம் செய்யப்பட்ட அவர்களின் துயரங்கள்
சேவல் கூவுவதற்கு முன்பாக
பேதுரு*** எல்லாவற்றையும் பன்முறை மறுதலித்தான்
சிறைபிடிக்கப்பட்ட நகருள்
என்றாலும், நீர் பிறந்துள்ளீர்
குருதியாறாத நிலத்தில்
நித்திய மோகனத்தில்.....
ஐப்பசி 1997
1. Christmas
2. Mactelin
3. St. Peter
----------------------------------------------------------------
20. தலைப்பிடப்படாத காதல் கவிதை
காலங்கடந்துவிட்ட புன்னகை நான்
இறந்த காலத்தில் வாழ்பவன்
நீயொரு மழைக்காலத் தெரு
நினைவுகளின் உவகை வழியில் தோன்றினாய் நீ
கண்ணீரைத் தெரியாது எனக்கு அப்போது
நடக்கவில்லை மரணத்துடனான ஆரம்ப உரையாடல்கள் கூட.
அந்தி வானத்தில் நிலவாய்ச் சாய்ந்து மிதந்தாய் நீ
அப்போது முழுவதும் கற்பனையானது காதல்
கிளையெல்லாம் பூக்களும், வசந்தகாலக் குருவிகளும்
இன்பத்தின் முதல்வாயிற் கதவுகளையும் நீயே திறந்தாய்
பிரிதலின் முதல்வலியையும் நீயே தந்தாய்
நதிகளின் பயணம் தத்தம் வழிகளிற்தான்
வரலாறானோம் எனக்கு நீயும், உனக்கு நானும்
இளைஞர்களுக்காக வானத்தில் கனவுகளுண்டு
இப்போதும்
கனவுகளும் மென்மையும் அற்றவெளிக்கு
என்னை விட்டெறிந்தாய் நீ
போனேன்
என்னுள்
என்னோடு
என்னைத்தேடி.....
ஐப்பசி 1997
----------------------------------------------------------------
21. யாத்திரை - 1
தேனீரின் இறுதித்துளியைப் பகிர்ந்தாய்
எல்லா மாலைப் பொழுதுகளும், அவற்றின் சரிகைக் கரைகளோடு
மூட்டை கட்டப்பட்டிருந்தன.
முடிந்துவிட்டதொரு நெடும்பகல்
காற்றுக்கும், வெளிக்குமிடையில்
எனக்கான ஆசனத்தில் அமர்ந்தபடி
துயரங்களை முடிவின்றிப் பருகினேன்
மகிழ்ச்சி சிதறி உலர்ந்த தெருக்களில்
காகங்கள் வடுக்களைக் கொத்திப் பிறாண்டின
அச்சப் பிராந்தியமாகியது எனது பாலியம்
மர்ம அலகுகளால் துரத்தப்பட்டேன்
காப்புச் சுவருள் இருந்தது கத்தி
என் சொப்பனங்களுக்குச் சிலுவை கொடுத்தேன்
சொற்களின் நிலவுருக்கள் சரிந்தன
நடுநிசி
மாயமுடுக்கு வெறிச்சோடுகிறது
உன் மனோகர விழிகள் தூர்ந்தன
புதர் மண்டிய ஞாபகங்களிடையே
யாரோ நடந்து சென்றார்கள்
போய் வருக
கசப்பின் முதற்குழந்தைகள் நாமல்ல
கேணிகளில் தாமரை மலரட்டும்
இன்னும் சிலகாத தூரம்
எல்லாவற்றையும் ஊதிவிட்டு நான்
போய் விடுவேன்.
மார்கழி 1998
----------------------------------------------------------------
22. யாத்திரை - 2
அச்சத்தால் தறையப்பட்டிருந்தேன்,
சந்ததிகளின் முடைநாறும் உறுப்புக்களிலிருந்து
சீழ் வடிந்தது.
சொற்களின் முளைகளோடு
ஊடுருவி இருளின் கர்ப்பத்துள் ஒடுங்கியிருந்தேன்
பலகாலம்
பந்தரெல்லாம் கண்ணீர்,
சொப்பனத்துள் மோகினிகள் நுழைந்தன
கரியபட்சிகள் கட்டிலில்,
சுக்கிலம் வழிந்து தொடைகளில் ஒட்டியது.
அபாயங்கள் சுவருள் சொருகப்பட்டிருந்தன,
நள்ளிரவு ஊளைகளால் சதுரம் கிழிந்தது.
மைனாக்களும், வயலும், கொத்துப் பூக்களும்
உயிர்தப்பியிருந்தன அதிசயமாய்
பரிவு
என் அந்திமத்திற்கும் அப்பால்!...
காட்டுமழையில்
தழைத்து வளரும் புராணங்கள்,
காற்றின் நிழலில்
கதவோரம் நடமாடித்திரியும் பூர்வ உச்சாடனங்கள்,
நான் இன்னுமடையாத மேட்டில்
எனக்கொரு வீட்டை நானறிந்தேன் சிறிது.
மார்கழி 1998
----------------------------------------------------------------
23. யாத்திரை - 3
My shadow without me,
Diary note - Feb 99.
சொப்பனத்துள்ளும் அச்சம்
தேசிக்கனிகளில்* வசியப்பொடி மந்திரிக்கப்படுகிறது.
நிலைக்கண்ணாடியிலிருந்து
விம்பங்கள் வெளியேறுகின்றன் காயத்துடன்...
காலமொடிகிறது கடிகாரம்,
முப்பது வருட உறவு...
முலைப்பாலிலிருந்து தொலைவில் ஓரறை,
மூடப்பட்டிருக்கிறது இதயம் துப்பட்டியினால்
செப்புத் தட்டில் எரிந்து புகைகிறது இரத்தம்,
பூமியின் முள்ளில்
வேற்றானின் காவியாடை...
வைகாசி 1999
* எலுமிச்சங்கனி
----------------------------------------------------------------
24. கடதாசிப்* படகின் மரணம் - 1
நினைவுப் பாதாளம்
நிம்மதியற்று அலையும் ஒருவனை
காண்கிறேன் இன்னும் அங்கு
அவனது நுழல் நான்
நிழலும் வடிவமும் சஞ்சரித்தன தொலைவில்
நியதியின் விநோதமாய்
கடற்பறவையின் அலகாயிருந்தது காலம்
கண்ணீருள் அடைக்கலம் புகுந்த பல இரவுகளையும்
சிறிய பூவின் முதுமையையும் காவியபடி
சென்றது ஒரு மழைக்காலம்.
மார்கழி 1999
* கடதாசி- காகிதம்
----------------------------------------------------------------
25. சிலுவை - 2
1
நேசத்தின் தாள்களை முல்வாய்* தின்பதுவும்
இற்று வெறுப்பாய் வீழ்வதுவும்
எப்போதும், எதுவும் முறிந்துவிடக்கூடிய
அகாலத் தருணங்களுக்காக
இதய மேட்டின் நீர்வழிகள் வற்றிக் காய்வதுவும்
அழுகிப் போவதுவும்
நேசிப்பதால் என்னை
சிறுமேகங்கள் தீரா துக்கப்படலங்களால்
சூழப்படுவதுவும்
நான் எனும் அடவியின் யன்னல்கள்
தீப்பற்றி எரிவதுவும்
நியதியின் வலிய கோடுகள் வழியா?
ஐப்பசி 1999
2
இதயத்தைப் பிடுங்கி ஈட்டியிற் குத்துவதும்
ஒழுகும் குருதிக்கு நாவுகொடுத்து
துக்கத்தின் மகிழ்ச்சியை உண்பதுவும்
துப்பிய வார்த்தைகளின்
வெம்மையில் கருகுவதும்
உறவுலர்ந்து
தீட்டாகிப் போவதுவும்
தானே தனக்கு தீ மூட்டி மாழ்வதுவும்
காவி வந்த மூட்டையின் பாரவழியா?
கார்த்தைகை 1999
* முல்வாய்- கறையான்
----------------------------------------------------------------
26. கடதாசிப் படகின் மரணம் - 2
மீட்கப்படமுடியாத பள்ளத்தாக்கில்
புதைந்தது கடதாசிப் படகு
செல்லமுடியாத் தெருக்களில்
தள்ளாடிச் செல்கிறது பித்தனின் தினக்குறிப்பு
சொற்பற்றைக்குள்
துப்பிய மௌனத்தில்
காதல் எரிகிறது இன்றும்
தோற்ற வலைகளில் முடிவற்று
சுழல்கிறது காலம்
மதுக்கோப்பையுடன்
தப்பிச் செல்கிறது தூக்கமற்ற இரவு
மாசி 2000
----------------------------------------------------------------
27. அநாதிப் புகையிரதம்
இரவின் மூலையில்
நாடோடி எருதுகளுடன் ஒரு பாதி நிலா
தண்டவாளங்களின் பின்னால்
எனது வீடு கூடுபொல
காட்டுப்பாடல் ஒரு புகையிரதம்
கட்டுக்கதைகளின் இரவு தேனீர் கடைகளில்
புகையிரதக் கூவலின் முடிவற்ற தெருக்களில்
ஒட்டு பீடியுடன்
கடவுளின் எதுவுமறியாத மந்தகாசம்
பழைய திரவம்
வேறு குவளையில்
எனது வலி
பிறக்க முன் பெய்த அடைமழையும்
இறந்த பின் முளைக்கவிருந்த முதலாவது புல்லும்
அநாதிகளைத் தொடுக்கிறது புகையிரதம்
வைகாசி 2000
----------------------------------------------------------------
பின்னுரைக்குப் பதிலாக
சொற்களின் யாத்திரை
1
எனது பதினாறாவது, பதினேழாவது வயதில் இன்னதென்று கண்டுபிடிக்கப்படாத மார்பு நோயொன்று பெரும்பாலும் இரவுகளில் என்னை வருத்தத் தொடங்கியிருந்தது. எல்லா இரவுகளும் பீதி நிறைந்தனவாக இருந்தன. பகலும் அச்சத்துடனேயே கழிந்தது. இன்னும் சில மாதங்களிலோ, வருடங்களிலோ நிச்சயாமாக இறந்து விடுவேன் என்று திடமாக நம்பினேன். விவரிக்க முடியாதளவு உக்கிரத்துடன் மரண நினைவுகள் துரத்தத் தொடங்கியிருந்தன.
சில மாதங்களுக்குப் பின் நோய் இல்லாமற் போய் விட்டது. ஆனால், அதுவுண்டாக்கிய மனமூட்டம் பின்தொடரலானது. அப்போது உறவுமுறைகள் சார்ந்து வலிமிகுந்த பிரமையுடைவுகளும் ஏற்பட்டிருந்தன. தனிமையும், அடைக்கப்பட்ட அறையும் விருப்பத்திற்கு உரியதாகின. அச்சமும், பீதியும், கேள்விகளும், கசப்பும் நிறைந்த இந்த நாட்களிற்தான் கவிதையெழுத மெதுவாக ஆரம்பித்தேன். மரணத்திற்கு மாற்றாகச் சொற்களை விட்டுச் செல்லும் ஆசை, அப்போது அதில் ஒட்டியிருந்தது. நிரந்தரமின்மைக்கு எதிரான இடைவிடாததொரு போராட்டம் கலைகு எப்போதும் இருப்பதாகவே இப்போதும் நினைக்க தோன்றுகிறது.
ஆனால், சொற்களின் மீதான பித்தும், ஈர்ப்பும் அதற்கு முன்பாகவே முளைவிட்டு இருந்தது. தூங்கவைக்க சின்னவயதில் அப்பா சொன்ன கதைகள், தேவார திருவாசகங்கள், பாரதிபாடல்கள், தாத்தா வாங்கிய அம்புலிமாமா தொடக்கம் கல்கி வரையான சஞ்சிகைகள் எனச் சொற்களின் விநோத உலகத்துள் நுழைதல் ஆரம்பமாகிவிட்டது அப்போதே.
இந்த ஆரம்பங்களை எண்பதுகளில் பேரளவில் அதிகரித்துவிட்ட தமிழர்கள் மிதான இன வன்முறையும், அதன் எதிர்வினையாக எழுந்த தமிழர் உரிமைப் போராட்டத்தின் நேரிடையான, எதிரிடையான சம்பவங்களும் மேலும் தூண்டிவிட்டன.
இருளில், இரவோடு ஒட்டப்பட்டுவிடுகிற போராளிகளின் ஆரம்பகாலச் சுவரொட்டிக் கவிதைகளின் பிரிவு வரிகள், இதே காலச் சுற்றாடலில் மேடையேற்றப்பட்ட குழந்தை ம. சண்முகலிங்கத்தின் 'மண் சுமந்த மேனியர் - 1' நாடகத்துடன் சேர்ந்நு ஆற்றப்பட்ட 'எங்கள் மண்ணும் இந்த நாட்களும்' என்ற கவிதைகளை Collage பாணியில் சேர்ந்திணைத்த நாடகப்படுத்தப்பட்ட கவிதை கூறல், திரு. சி. ஜெயசங்கர் அவர்கள் மூலமாக அறிமுகமான அலை முதலான பல சிறுபத்திரிகைகளின் பரிச்சயம், ரஷ்ய எழுத்துக்கள், குறிப்பாக சிங்கிஸ் ஐத்மாத்தவ்வின் துயரம்கப்பிய ஸ்தெப்பி வெளியும், நட்சத்திரங்கள் கொட்டிய கோதுமை வயல்களும் எனது எழுத்தாரம்பங்களை அகலித்து விட்ட விடையங்கள்.
யுத்தம் அனைத்து நிச்சயங்களையும் கேள்விக்குள்ளாக்கியது. காயமும், பீதியும், இழத்தல்களும், கையுகளும், காணாமல் போதல்களும் என்ற வாழ்க்கையில் அதிகபட்ச நிச்சயம் மரணம் என்றாகியது. மரணத்துக்கு நடுவில் கொடுங்கனவுகளோடு சனங்கள் வாழத் தொடங்கினார்கள், கௌரவமான வாழ்க்கையின் உயர்வான பெறுபேறுகளுக்காக மரணத்தைத் துச்சமாக ஏந்தி எறிந்துவிட்டுப் போகிற புரிந்துகொள்ளக் கடினமான, நூதனமான வாழ்வைப் போராளிகள் ஏற்றுக் கொண்டார்கள். போக்கிடங்களிலெல்லாம் சந்தேகிக்கப்படுகிற, நியாயங்களற்று அவமதிக்கப்படுகிற ஒருவகைப் பிராணிகளாக ஈழத் தமிழர்கள் எதிர்கொள்ளப்பட்டார்கள். குருதி கசியும் எனது சொற்களின் மூலங்கள் இவை யாவுந்தான். வலிதரும் அனுபவங்களின் மௌனமே எனது வரிகளுக்கு இடையில் இடைவிடாது ஊடாடிச் செல்கிறது.
தொண்ணூறுகளில் கவிதையெழுதத் தொடங்கிய தலைமுறையைச் சேர்ந்தவன் நான். கவிதைகள் என்ற வகையில் எனது முதல் வாசிப்பு எண்பதுகளில் வந்த கவிஞர்கள் சார்பானதுதான். சேரன், வ.ஐ.ச. ஜெயபாலன் முதலியவர்களின் கவிதைகளே முதல்வாசிப்பும், ஈர்ப்பும். இக்காலகட்டத்தில் எண்ணிக்கையில் அதிகமான இளந்தலைமுறையொன்று கவிதையுலகத்தினுள் நுழைகிறது. இதற்குப் பிதான் மூத்த கவிஞர்கள் பலரையும் படித்தேன். நீலாவணன், மகாகவி, மு. பொ., தா. இராமலிங்கம் தொடக்கம் பலரையும், தமிழகத்துக் கவிஞர்களையும். இவர்களது பாதிப்பும், தொடர்ச்சிகளும் என்னிடம் எவ்வளவென என்னால் உறுதிபடக் கூற முடியவில்லை. ஒவ்வொரு படைப்பாளியும் தனக்கு முந்தைய சந்ததிகள் அனைத்துக்கும் கடப்பாடுடையவன்; அவர்கள் இட்டுக் கொடுத்த நெடிய வீதியில்தான் அவன் நடந்து வருகிறான். இதேநேரம் முன்னர் படித்த பல கவிதைகளைத் திரும்பப் படிக்கும் போது, அதிக உற்சாகத்தை அவை தராமற்கூடப் போய்விடுகின்றன. அதிகம் ஒற்றைப்படையாக, அதனால் திறக்கும் தோறும் திறந்து, திறந்து செல்லும் வைகுண்டத்தின் தொல்கதவுகள் போல அனுபவங்களின் பல தளங்களைத் திறந்து, திறந்து செல்லாதவையாகவும் அவையுள்ளன.
என்னுள் வெடிகுண்டு போல வந்து மோதி வெடித்தவை சுகுமாரனின் கவிதைகள். அவரின் காயவார்த்தைகளும் அன்னா அக்கமத்தோவாவின் மென்னுணர்வும், துயரமும் கவிந்த வார்த்தைகளும் பெரும்பாதிப்பை என்னிடம் உண்டாக்கின. என் கவிதைகளை உற்று நோக்கும் எவரும் அன்னாவின் நேவாநதியை, சுகுமாரனின் 'சவரக் கத்தியின் பளபளக்கும் கூர்முனையை' அவற்றில் காணவே செய்வர்.
தொண்ணூறுகளில் ஈழத்தமிழ் கவிதையின் பயில்களம் மேலும் விரிவாகிறது. எண்பதுகளின் கவிதையெழுத்துக்கள் ஈழத்தின் வடபுலமையமாக அதிகபச்சமிருக்க, தொண்ணூறுகளிலோ வடக்கு (சிவரமணி, கருணாகரன்...), கிழக்கு (சோலைக்கிளி, றஷ்மி...), புலம்பெயர் தேசங்கள் (கி.பி. அரவிந்தன், நட்சத்திரன் செவ்விந்தியன்...) என அதன் களம் விரிவடைகிறது. அனுபவங்களின் புதிய சித்திப்பால் பேசு பொருள்ரீதியாக தொண்ணூறுகளின் கவிதை மாற்றங்களுடையதாயினும், அதனுடனிகழ்வான வெளிப்பட்டு வடிவில் எவ்வளவு தூரம் கலகத்தனமான மாற்றங்கள் சம்பவித்துள்ளன எனச் சிந்திக்க வேண்டி இருக்கிறது. ஈழத்தின் கவிதைப் பாரம்பரியம் பற்றிய மறுவாசிப்பின்முறை, கவிஞர்களது பட்டியல் இவற்றின் மீதான அவசியம் பற்றி இத்துறை சார்ந்தவர்கள் சிந்தித்தாகிய வேண்டிய உடனடித் தேவைகள் இருப்பதாகவே நினைக்கிறேன். ஈழத்துக் கவிதை மரபு (அதற்கும் தமிழக முயற்சிகளுக்குமிடையிலான ஊடாடுகளம்) பற்றிய புராணப் படத்தை அதுவே உடைக்க முடியும். இதுபற்றிய மேலதிகமான கருத்து நகர்வுகளுக்கு இக்கட்டுரை இப்போது செல்லவில்லை.
2
படைப்பு, அடிப்படையில் ஒரு மொழியுடல், ஒரு மனோநிலை (State of mind). படைப்பாளிகள் தமக்கு வாலாயமான ஊடகங்களூடாக அவற்றின் சாதனங்களை (Materials) ஊடறுத்துக் கொண்டு வெளிப்பட்டு நிற்கும் தருணநிலை ஆகியவற்றோடு சம்பந்தமுடையது.
இலக்கியம் சொல் உடலில் வாசிப்பது. 'சொற்களால், சொற்களுக்கப்பால்' தொழில்படுதல் என்பது இலக்கியத்தின் அடிப்படையம்சம். உணர்ச்சிகளின் கொதிநிலையில் சொற்கள் சினைப்படுகையில் கவிதைகள் உருவாகின்றன. அதர்க்கங்களின் தர்க்கமே அவற்றின் இருப்பினடிப்படை. சொற்களின் உள்ளோடும் மௌனத்தில்தான் கவிதையின் அனுபவமும், அர்த்தமும் உள்ளன. படைப்பென்பது முதலிலும், முடிவிலும் அனுபவங்களின் எல்லையற்ற சாத்தியம்தான்.
இத்தொகுப்பில் இருப்பவை மொத்தம் இருபத்தியேழு கவிதைகள். கிழித்துப் போட்டுவிட்ட மிகவாரம்பக் கவிதைகளையும், தொகுக்கும்போது விலக்கிவிட்ட சில கவிதைகளையும் சேர்த்தால், முப்பத்தைந்து கவிதைகள் வரையில் வரும். பத்து வருடங்களில் (1990-2000) இந்த எண்ணிக்கை சந்தேகமில்லாமல் மிகவும் குறைவானதுதான். ஆனால் அதிகமாக எழுதவும் முடிந்ததில்லை. ஒரு சமயம் பீறிடும் கவிதை மனம், பின்னர் வனவாச்ம் போய்விடுகிறது. இனி முடியாது, இவ்வளவுதான் என நினைக்கையில் எழுத முடிகிறது மறுபடியும். இதுவொரு ஏக்க விளையாட்டு. இதேநேரம் படைப்பாக்க மூட்டத்திலேயே மனம் மூழ்கிப் போய்ச் ச்லக்காலம் கிடப்பதுமுண்டு. எதுவாகிலும், எனது மனம் 'அடைகாக்கும்' காலம் அதிகமானதுதான்.
எல்லவற்றிற்கு முன்னும் ஒரு 'காத்திருப்பு' உண்டு. கருக்கட்டி இருக்கும் மனதிலிருந்து கவிதையை வெளியெடுத்துவர அல்லது பற்றிப்பரவக் கவிஞனுக்கு ஒரு சொல் கிடைக்கிறது; சில சமயம் அது ஒரு வரியாகக் கூட இருக்கலாம். அதனைக் கொண்டு சிலவேளை எரிபற்றுநிலை உச்சத்திலிருக்குமொரு பொருளைத் தீண்டு முன்பே, அது தீப்பற்றி எரிந்து விடுவது போலக் கவிதை எரிந்துவிடும், ஆனால் வேறு சிலவேளை தாமதமாகும். இதற்கு எதுவிதமான பொதுவிளக்கமோ, வரையறுப்போ கிடையாது. 'என்னுடைய மற்றும் உன்னுடைய கிராமங்களின் மீதொரு பாடல்' கவிதையைப் பொறுத்த வரைக்கும் 'எனக்குத் தெரியாது' என்ற திறப்புவாசகம் கிடைத்த கணத்திலேயே முழுக்கவிதையும் கீழ் இறங்கி விட்டது. மாறாக 'ஆயர்பாடி' கவிதையில் வரும் 'கைவிடப்பட்ட பாடலின் பொருளாய்' என்ற திறப்பு வரியோடு நீண்ட நாட்கள் அலைய வேண்டி ஏற்பட்டது. இதேநேரம், மனதில் கருக்கட்டிய கணமே பிறந்து, பிறந்த கணமே மனவெளியில் மறைந்துபோய்விடுகிற பலகவிதைகள் கவிஞர்களுக்குத் தரும் சஞ்சலத்தைப் பிறர் அறிவதில்லை. இவ்விதம் பிறக்கும் கணமே, இறக்கும் கவிதைகளே அதிகம் போலும்.
பலவகையிலும், மன இயக்கத்திற்குக் கவிதை சமமானது. மனதைப் போல அதற்கும் கால, இட, இயக்க ஒருமைகளில்லை. காலங்கள் ஒன்றுள் ஒன்று புகுவதும், வெளியேறுவதும், கசிவதும் ஐதீகங்களைப் பகுதியாக்கிக் கொள்வதும் எனது கவிதைகளில் நடைபெறுகிறது. இந்து, கிறிஸ்தவ மதங்கள் சார்ந்த ஐதீகங்கள் எனது கவிதைகளில் ஊடாடுகின்றன. பல கவிதைகளில் கிறிஸ்தவக் குறியீடுகளும், கதைகளும் உள்வாங்கப்பட்டுள்ளன. மனித அவலத்தைப் பேசுமிடங்களில் அது எனக்கு மிகவும் நெருக்கமானதாக இருப்பதாக ஆனுணர்கிறேன். சனம் பெருத்த நகரில் தனித்திருக்கிறாளே .... எரோமியா (பைபிளில்) புலம்புகையில் எனது குலைத்தெறியப்பட்ட கிராமங்களும், நகரங்களும் வெறிச்சோடிப் போன அவ்ற்றின் தெருக்களும்தான் சமாந்தரமாக நினைவு கொள்ளப்படுவதாகத் தோன்றும்.
ஏறத்தாழக் கவிதையெழுதத் தொடங்கிய காலத்திலிருந்தே நாடக அரங்கிலும் பயிலனுபவம் இருக்கிறது. கவிதைகளை ஒலிநிலைப் படுத்துவதால் பெறப்படும் நாடகீய அனுபவம் எனது கவிதைகளுள் செரிக்கப்பட்டு இருப்பதாகவே நினைக்கிறேன். உள்நகரும் ஒலிலயமும், ஆற்றுதலுக்கான சந்தர்ப்பங்களும் இதன்வழி இக்கவிதைகளில் தொழிற்படிகின்றன.
இதேவேளை ஓவிய நண்பர்களுடன்னன ஊடாட்டமும், எனது மேற்படிப்பு கட்புலக்கலைகள் பற்றியதாகவும் அமைந்திருத்தலின் காரணமாகக் கட்புலக்கலைகள் சார்ந்த தூண்டலையும், உள்ளியங்கும் கட்புலவிளைவுகளையும் எனது எழுத்து பெற்றுக் கொண்டுள்ளது என்றே தோன்றுகிறது. இந்த இடத்தில் சுவாரஸ்யமான ஒரு கலைகள் சார்ந்த ஊடாட்டத்தை இணைத்துக் கொள்கிறேன். நண்பர் நிலாந்தன் "Bunker family' என்றொரு ஓவியத்தை வரைந்தார். இதனால் தூண்டப்பெற்று 'பதுங்குகுழி நாட்கள்-2'ஐ எழுதினேன். இந்தக் கவிதையால் கிடைத்த அருட்டுணர்வே சார்ந்த இந்நூலின் பின்னட்டையில் இடம்பெற்றுள்ள நண்பர் சனாதனனின் 'Jaffna' எச்சிங் பதிப்போவியம். இந்நூலட்டையில் சனாதனனின் ஓவியத்தோடு, நிலாந்தனின் ஓவியமும் இடம்பெற வேண்டுமென்ற விருப்பத்தை, யுத்தகாலப் போக்குவரத்து நெருக்கடிகள் தடுத்துவிட்டன என்பது வருத்தத்திற்குரிய துரதிஷ்டம்.
பலவேளைகளில், ஒன்றையே திரும்பதிரும்ப நான் எழுதுவதாகப்படுகிறது. லா. ச. ரா. சொன்னாரே ஒரே கதையத்தான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன் என, அதுபோல. எனது ஸ்தாயிபாவமும் அனேகமாக ஒன்றுதான், சஞ்சாரி பாவங்களே அனந்தம். கவிதை அதன் சாரத்தில் சொற்களின் மூலம் நோக்கிய முடிவற்ற யாத்திரை தான்.
3
இந்தக் கவிதைகள் பலவும் நீண்டகாலம் உறங்குநிலையில் இருந்தவை. கவிஞர் சு. வில்வரத்தினம் 'லாச்சிக் கவிதைகள்' (இழுப்பறைக் கவிதைகள்) என ஒருமுறை இவற்றைக் குறிப்பிட்டார். கவிதையின் தரம் பற்றிய ஒருவகைப் பயமும், எப்போதும் ஒட்டிக் கொண்டிருக்கும் மந்தத்தனமுமே நாளெடுத்துக் கொண்ட பிரசுரிப்பிற்கான பிரதான காரணம்.
ஆக்கபூர்வமான கருத்துக்களோடும், கடுமையான விமர்சனங்களோடும் என்னை எனது அனைத்துத் தளங்களிலும் அணுகுபவர்கள் நண்பர்கள் நிலாந்தனும், சனாதனனும். என்னுடைய பல கவிதைகளின் முதல் வாசகர்களும் அவர்கள்தான். அவர்களது விமர்சனங்களும், செம்மைப்படுத்தல்களும் எனது கவிதைக்கு மேலும் பலம் சேர்த்துள்ளன. எனது கவிதைகளை சனாதனன் விரைவில் பரவலான அறிமுகத்திற்குக் கொண்டு செல்ல வேண்டுமென விரும்பினார். இந்தத் தொகுப்புக்குப் பின்னாலுள்ள பிரதான உந்தலும் அவர்தான். அவரது கொப்பியில் (Note book) படியெடுக்கப்பட்டிருந்த கவிதைகளையே வெங்கட் சாமிநாதன் அவர்கள் முதலில் படித்தார். பின்னர், வெ. சா. அவர்கள் கவிதைகள் பற்றி அறிமுகம் எழுதப்போகிறார் என்பதை அறிந்தபோது நம்பவே முடியவில்லை. அவரால் எழுதப்பட்ட அறிமுகக் கட்டுரைகளே (சரிநிகரிலும், வெ. சா. எ யிலும்) எனது கவிதைகள் பற்றிய முதல் பொது அறிமுகமாக அமைந்தது. நம்பிக்கையும், மகிழ்ச்சியையும் அது தந்தது; அவரது கருத்துக்களும், செம்மையாக்கல்களும் கவிதைகளை வலுவேற்றியிருக்கிறது.
வெளிச்சத்தில், காலச்சுவட்டில், சரிநிகரில், வெ. சா. எ யில், மூன்றாவது மனிதனில் கவிதைகள் பலவும் பிரசுரமாகியிருந்தன. கலாநிதி சுரேஷ் கனகராஜாவும், ஏ. ஜே. கனகரத்தினா அவர்களும் இவற்றில் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தனர். அவை Third eye சஞ்சிகையில் பிரசுரமாயிருந்தன.
தொகுப்பு பற்றி சு.வி, மு.பொ, ஜெயமுருகன் ஆகியோரும் வற்புறுத்தியிருந்தனர். இப்போதுதான் அது சாத்தியமாஅகிறது. 'குருத்து' சுந்தர் இந்நூல் உருவாக்கத்திற் பட்ட கஷ்டங்கள் சாதாரணமானவை அல்ல. இயலுமையை மீறிய தரமான வெளிப்பாட்டிற்காக அவர் நிறைய உழைத்தார். கவிஞர் இளமுருகு, வசந்தகுமார், எம்.எஸ். கிராபிக்ஸ் சினேகிதர்கள் ஆகியோரும் நூல் முழுமையாக்கத்தில் உதவியுள்ளனர். மேற்படி அனைவரது தன்னலமற்ற அன்புக்கும், பத்திரிகைகளது முயற்சிகளுக்கும், நான் கடப்பாடுடையவன். நன்றி என்ற வார்த்தை நான் அவர்களோடு பகிர விரும்பும் கடப்பாட்டிற்கும், நேசத்திற்கும் போதுமானதல்ல.
பா. அகிலன்
சென்னை,
09. 08. 2000.
-------------------------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக