சீனத்தின் குரல்
வரலாறு
Back
சீனத்தின் குரல்
சி. பி. சிற்றரசு
மன்றம் வெளியீடு-16. முதற்பதிப்பு - ஏப்ரல் 1953.
விலை ரூ.1 -- 0 -- 0.
உரிமையுடையது.
* * *
சிட்டி பிரஸ், மதுரை ரோடு, திருச்சி.
நினைத்தது
__________
சீன வரலாற்றை, மகான் கன்பூஷியஸ் கால முதல் செஞ்சீனத் தலைவன் மா-சே-துங் காலம் வரையிலும் நான்கு நூல்களாக எழுதவேண்டுமென்று நினைத்திருந்தேன். ஆனால் எதிர்பார்த்த நூல்களெல்லாம் கிடைத்துவிட்டதாலும், வாசகர்கள் ஒரே நாளில் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளக்கூடிய வசதிக்காகவும் ஒரே நூலாக்கி வெளியிடுகிறோம்.
ஆகவே 2500 ஆண்டுகளாக சீனம் எழுப்பிய குரலின் வரலாற்றை இதில் காணலாம். ஏதாவது விடப்பட்டிருந்தால் அவ்வளவு முக்கியமானதல்ல என்ற நோக்கத்தால் விடப்பட்டிருக்கும். சுமார் இருபது மூல நூல்களைப் படித்து குறிப்புகளைச் சேகரித்து எழுதப்பட்டிருக்கிறது.
பசிக்குரல், பரிகாபக்குரல், அழுகுரல், அதிகாரக்குரல், சர்வாதிகாரக்குரல், ஆண்குரல், பெண் குரல், அபலைக்குரல், வஞ்சகக்குரல், ஞானக்குரல், விஞ்ஞானக்குரல், மறுமலர்ச்சிக்குரல், புரட்சிக் குரல் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்தே இந்த, 'சீனத்தின் குரல்' உங்களிடம் வருகிறது. இதைப் படித்து நமது நாட்டில் நாம் எழுப்பவேண்டிய குரலைப்பற்றி சிந்திப்போமாக. உங்கள் பேராதரவுக்கு என் பேனாவின் சார்பாக நன்றி.
உங்கள் அன்பன்
சி. பி. சிற்றரசு.
உள்ளடக்கம்
சீனத்தின் குரல்
போதை
தடையுத்தரவு
கன்பூஷியசுக்கு முன்
கன்பூஷியஸ்
தாய் உள்ளம்
சந்திப்பு
புலி சம்பவம்
மிகப் பழைய காலம்
கட்டுக்கடங்காத காதலி
முந்திய காலமும் பிந்திய காலமும்
கன்பூஷியனிஸம்
அவன் காலம்
தலைகீழ் மாற்றம்
இதிலும் ஒரு தவறு
கடைசி வீழ்ச்சி
தேவை
என் வரவில்லை
உள்ளே நுழைந்த கள்ளன்
முதல் அபினிப் போர்
இரண்டாவது அபினிப்போர்
அரசாங்கம்
சன்-யாட்-சன்
மத மோகம்
நாட்டுக்கே இரண சிகிச்சை
சீனம் சீனர்களுக்கே
நால்வர்
கல்விச் சங்கம் புரட்சி சங்கமாயிற்று
பனிரெண்டு நாட்கள் சிறையில்
ஜப்பானில்
துரோகி
மறு மணம்
சவ அடக்கம்
சாசனம்
மனைவிக்கு
பழைய வெறி
தோன்றினான்
அதுவும் ஒரு நன்மைக்குத்தான்
பழக்கப் புரட்சி
இராணுவ கல்லூரி
ருசிகரமான சம்பவம்
புரட்சித் தொடக்கம்
புரட்சி சங்கம்
புரட்சி அரசாங்கம்
நால்வர்1
பெரிய வேலை நிறுத்தம்
லட்சம் பேர் ஒப்புக்கொண்டனர்
பாம்பு படம் எடுக்கிறது
மற்றோர் குடியாட்சி
செத்த பாம்பு
உள்நாட்டில்
தளபதியின் ஓட்டம்
அதிசயச் சம்பவம்
தப்பியோடியும் விடவில்லை
விடாப்பிடி
அதிலும் ஒரு மோசடி
நடந்தது வேறு
விடுதலை
லியாங் கைது
மாநாடு
மீண்டும் தொல்லை
எதர்க்கப்பால்
நன்றி
சீனத்தின் குரல்
ஆசியா கண்டத்திற்கு ஆதவனை அறிமுகப்படுத்திய அவனி. உலக ஏழு அதிசயங்களிலே ஒன்றான பெருஞ்சுவற்றின் பிறப்பிடம், ஆகாய விமான காலத்திற்கு முன்பு அகிலத்தின் அவாலைத் தன்பால இழுத்த அதிசயத்தின் தாயகம். யாராலும் எளிதில் தாண்டமுடியாதென்ற அசையாத நம்பிக்கையால் சீனப் பொதுமக்கள் தங்கள் நரம்பின் வண்மையால் கட்டிக்காத்த நெடுஞ்சுவர். இன்று அதன் மேல் வட்டமிட்டு பறக்கும் ஆகாயவிமானம் வல்லூறாகவும், அதன் கீழ் பயந்து பதுங்கிக்கிடக்கும் பாம்பு போலவும் 1400 மைல் நீளத்தில் மேற்கே இருந்து கிழக்குக் கடற்கரைவரை படுத்துக் கொண்டிருக்கும் அப்பெருஞ்சுவற்றின் தாய் நாடு.
அதிசயம் ஒன்று கூடுவிட்டு கூடு பாய்வதைப் போல் ஒருகாலத்தில் அப்பெருஞ்சுவற்றில் குடியிருந்த அதிசயம் இன்று ஆகாய விமானத்திலும், இன்னும் அதைவிட சிறந்த பல பொருள்களிலும் குடிபுகுந்துவிட்டது. அவ்வித பண்டைக்கலைகளுக்குத் தாயகமாக விளங்கிய தரணி.
ஐம்பெரும் துறைமுகங்களை ஆங்கிலேயர்க்கும், அதிசயக் கோட்டைகளை மற்ற அயலாருக்கும் அர்ப்பணித்துவிட்டு கடலில் கால் ஊன்ற முடியாமல் கப்பல் களை நங்கூரத்தோடு நிறுத்திவிட்டு அளவற்ற ஆற்றலை, அபினி போதைக்கு அடிமைப்படுத்தி வேற்றுநாட்டார் படையெடுப்புக்குத் தன் நாட்டின் தலைவாயிலைத் திறந்துவிட்டு விட்டு, கைகட்டி. வாய் புதைத்து, கண்களில் ஒளி மங்கி, வீரங்குன்றி, அதுவரை அனுசரித்து வந்த மூன்று மதங்களால் அறவழி செல்ல, அரசியலுக்கு வேண்டிய மறப்போரை மறந்து காலாகாலத்தில் செய்யவேண்டிய கடமையை கைவிட்டு, விழிப்புக்கும் தூக்கத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் சதா போதையெனும் சாகரத்தில் வீழ்ந்து கிடந்த நாடு எந்தவகையாலும் பகை முடிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்த பகை நாட்டரசர்கள் வஞ்சனையால் போட்ட திட்டத்தின் தூதுவனாக உள்ளே கள்ளத்தனமாக நுழைந்த அபினி தன்னைப் பின்தொடர்ந்துவரும் செங்கோலுக்கு வழிகாட்ட, மாற்றார் மணிமுடி ஜொலிக்கத் தன் மண்ணில் இடந்தந்துவிட்ட மண்டலம்.
தன் நாட்டு அழிவுக்குக் காரணமாயிருந்த போதை மருந்தாம் அபினியை உள்ளே வரவிடாமல் தடுத்த மன்னன் சின் -யுவான் - தீ அறியாவண்ணம் இரவோடு இரவாக அந்த மயக்க மருந்தை சீனத்திற்குள்ளே கொண்டுசெல்ல அரசியல் கள்ளர்கள், ஒன்றுகூடி பெருக்கிய கள்ளமார்கட் என்ற வார்த்தையை முதன் முதலில் உலகப் பேரகராதியில் சேர்த்த தரணி.
அகில உலக வல்லரசு நாடுகளிலும் அதிக ஜனத்தொகை கொண்ட நாடு. ஆசியாவின் தலை வாயில், கீழ்நாடுகளுக்குக் கடல்வழி வகுத்துத்தந்த கடல் மன்னன் மார்க்க போலோ கண்டு களித்த களம். இந்தியாவின் நாகரிகத்தையறிய இருபெரும் தூதுவர்களை ஈன்றனுப்பிய நாடு. மகாகவி லீபோ, வரைகோல் வேந்தன் லின்-யு-டாங் போன்ற அறிஞர்கள் பிறந்த பூமி.
"பகையை பகையால் வெல்ல முடியாது, அன்பால் அனைத்தையும் வெல்லலாம், என்ற பொன் மொழியையும், "நீதி வெல்லும் நிச்சயம் வெல்லும்," என்ற பொதுமறையையும் பூதளத்திற்களித்த சாக்கிய சிம்மன் புத்தர் பிரான் பேரொளியை போற்றும் நாடு. ஞானச் சீனமாயும், தர்க்கச் சீனமாயும் இருந்த நாடு, பாசீசச் சீனமாக மாறி இன்று செஞ்சீனமாகத் திகழ்ந்து புகழேனியில் நிற்கும் நாடு
சீனத்தின் ஜோதி மகான் கன்பூஷியஸ். சீனத்தின் சீர்த்திருத்தவாதி, சன்-யாட்-சன் சீனத்தின் நோய் சியாங்-கே-ஷேக், சீனத்தின் தந்தை மா-சேதுங். இந்த நால்வர்களிட்ட எல்லைக் கோடுகளுக்குள்ளே அடங்கிவிட்ட அகிலம்.
கன்பூஷியஸ் காலத்துக் கேற்றவாறு கட்மையைச் சொன்னான், சன்-யாட் அதைச் சற்று மாறுதலோடு மக்களுக்குப் பொதுவாக்கினான், ஷேக் மடமையை வளர்த்தான், மாசே அந்த மடமைக்கு மரண சாசனம் படித்தான் ஒருநாடு வாழ்வதற்கும் வீழ்வதற்கும் அந்த நாட்டு மக்கள் மாத்திரம் காரணஸ்தர்கள் அல்லர். அவர்களை அழைத்துச் செல்லும் தலைவர்களும் காரணமாகின்றார்கள் என்பதை மிக விளக்கமாக நாம் தெரிந்து கொள்வதற்குண்டான வசதியை தேடித்தருகிறது சீனம். மற்ற நாடுகளிலே அதைத் தெள்ளத் தெளியத் தெரிந்து கொள்ள முடியாமல் போய்விடுவதும் உண்டு. ஏனெனில் தலைவர்கள் குற்றம் செய்துவிட்டு அதைத் தொண்டர்கள் மேல் சுமத்திவிட்டுத் தங்களைக் குற்றமற்றவர்கள் என்று காட்ட தொண்டர்களைக் காரணமில்லாமலே துரோகிகளென்று தூற்றுவார்கள். அப்பேற்பட்ட கள்ளமார்கெட் தலைவர்களுமுண்டு. தங்கள் குற்றத்தை உணர சாத்தியமற்றத் தலைவர்கள் தங்கள் மேதாவிலாசம் மறையாமலிருக்க சில போலி பக்தர்களை அமர்த்திக்கொண்டு, கோபுரத்தைத் தாங்கும் பொம்மைகளைப் போலிருப்பார்கள். இதேபோல் சீனத்தின் வாழ்வும் வீழ்ச்சியும் தலைவர்களையே சார்ந்து நின்றிருக்கிறது.
போதை
சிரித்தவன் சிரித்துக்கொண்டே இருப்பான். அழுதவன் அழுதுகொண்டே யிருப்பான். பேசுகின்றவன் பேசிக்கொண்டே இருப்பான். திட்டுகின்றவன் திட்டிக்கொண்டே இருப்பான். தூங்குகின்றவன் தூங்கிக்கொண்டே இருப்பான். இப்படியெல்லாம் மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது அபினிப் போதை. அதை உட்கொள்ளும் போது யார் யார் எந்தெந்த நிலையில் இருந்தார்களோ அதே நிலையில் இருப்பார்கள் போதை இறங்கும் வரையில் ஒருவனுக்கு போதை அதிகரிக்க அதிகரிக்க கண்களை மூடிக்கொண்டு கடைவாயில் எச்சில் வழிந்தோடுவது கூடத் தெரியாமல் தலையைக் கீழே தொங்கவிட்டுக்கொண்டு இருப்பான். யார் வருகின்றார்கள், யார் போகின்றார்கள், என்ன நடக்கின்றது என்பதைத் தெரிந்து கொள்வதற்குண்டான சுய உணர்ச்சியே இல்லாமல் போய்விட்டது. நாட்கணக்காகத் தூங்குவார்கள். அரசாங்க அலுவலகங்கள், நீதிமன்றங்கள் பல நாட்கள் செயலற்றுக் கிடக்கும். ஏராளமான வழக்குகள் விசாரிக்கப்படாமலே இருக்கும், வழக்கறிஞர்கள் வரமாட்டார்கள். நீதிபதிகள் இருப்பார்கள், குற்றவாளிகள் வரமாட்டார்கள். குற்றவாளிகள் வருவார்கள், நீதிபதிகள் வரமாட்டார்கள். கைதி சிறைக்கு வெளியே யிருப்பான், காவற்காரன் உள்ளே இருப்பான். கைதிகளின் சோற்றைக் காவற்காரன் உண்பான். காவற்காரன் தொப்பியைக் கைதி மாட்டிக்கொண்டு கைதட்டி சிரிப்பான். கைதிக்கு விலங்கு மாட்டுவதற்குப் பதில் காவற்காரன் கையில் கைதி விலங்கை மாட்டினாலும் மாட்டிவிடுவான். வண்டிக்கு முன்னால் குதிரையைப் பூட்டுவதால் பின்னால். பூட்டிவிட்டுத் தான் முன்னாலிருந்து வண்டியை இழுப்பதா என்ற சந்தேகம் வண்டிக்காரனுக்கு விந்து விடும் வக்கீல்களுக்கு முன்னால் சீட்ட புத்தகங்கள் விரிந்து கிடக்கும். ஆனால் வக்கீல்களுக்குப் பதில் குமாஸ்தாக்கள், அவைகளைப் படிப்பதுபோல் தங்கள் தலைகளை அவைகளில் மோதிக்கொண்டிருப்பார்கள். வக்கீல்கள் வேறோர் பக்கம் உட்கார்ந்துகொண்டு தங்கள் எதிரில் வழக்குக் கட்டுகளை வைத்துவிட்டு ஞானமார்க்கத்தில் ஈடுபட்டவர்களைப் போல கண்களை மூடிக்கொண்டிருப்பார்கள். இப்படி இந்த சீனத்தின் செல்வர்களை கண்டபடியெல்லாம் ஆட்டிப் படைத்துக்கொண்டிருந்தது. ஏகப்ராபரமாய் எங்கும் நிறைந்திருந்த அபினிப் போதையின் திருவருள்.
எதற்கும் அடங்காத வீரன், யாராலும் கட்டுப் படுத்த முடியாத பிடிவாதக்காரன், எந்த ஆராய்ச்சியாலும் மனம் குழம்பிவிடாத சிந்தனையாளன், எந்த சிக்கலான பிரச்னையிலும் தடுமாறாத விவேகி, எந்த வாதத்தாலும் தோல்வி காணாத தர்க்கவாதி, எந்தப் படையெடுப்புக்கும் அஞ்சாத போர்வீரன், எழிலைத் தன் அறிவாற்றலால் அளந்து கவி புனையும் புலவன், சொல்லால் மக்களை சொக்கவைக்கும் சொற்செல்வன், எவராயினும் போதைக்கு அடிமைப்பட்டே தீரவேண்டும் என்ற உண்மையை சிலா சாசனமாக்கிவிட்டது சீனம்.
சோம்பல் தேங்கிய முகத்தினராய், சுறுசுறுப்புக்குப் பகைவர்களாய், கவலையற்ற மனத்தினராய், கடமைக்கு விரோதிகளாய், நாகரிகத்தையும் மறந்து, நயவஞ்சகமும் அறியாமல் நிலையைத் தலைகீழாக்கும் மருந்து அபினி.
போதையிலே இரண்டு வகையுண்டு :--
ஒன்று: நரம்புகளின் வேகத்தைத் துரிதப்படுத்தி இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி எல்லா உறுப்புகளுக்கும் அதிர்ச்சியை யுண்டாக்கி உணர்வைப் போக்குவது.
மற்றொன்று: நாடிகளின். இயக்கத்தைத் தாமதப்படுத்தி இரத்த ஓட்டத்தைக் குறைத்து மனிதனை சாத்வீகத் துறையிலே கொண்டுபோய் விடுவது.
முன்னையது: அபார வீரத்தையும், அஞ்சாமையையும், முரட்டுத் தைரியத்தையும், பிடிவாத குணத்தையும் அதிகரிக்கச்செய்து மானாபிமானத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தலைகால் தெரியாமல் கூத்தாடும்படிச் செய்வது.
பின்னையத : அளவுகடந்த பொறுமையும். பய உணர்ச்சியும், பாப சிந்தையும், பரிதாப நிலையும் அடைந்து செயலற்றுக் கிடப்பது. சீன மக்கள் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர்களாய் விட்டனர்.
பிரேமையினால் மனதையும், தியாகத்தினால் ஜெகத்தையும் ஆளமுடியும் என்ற அழியாத இலக்கியத்திற்கு சான்றாயிருந்த சீனம், மாற்றாரின் படையெடுப்புக்கு மௌனம் சாதிக்கவேண்டிய நிலையை யடைந்துவிட்டது, அமெரிக்காவின் சீதனச் சொத்தென நினைக்கப்பட்ட மேடம் ஷேக்கைக் கொண்டு, சீனத்தை அமெரிக்காவின் சாசனச் சொத்தாக்கலாம் என்று கனவு கண்டுகொண்டிருந்த அமெரிக்க பணாதிபத்தி யத்தின் பல்லைப் பிடுங்கி, ஷேக்கை பார்மோசா தீவில் பதுங்கவைத்து எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான நிலைமையடைந்துவிட்ட சீனம்.
அகில உலக அரியாசனத்தில், தனக்கும் ஓர் இடம் உண்டு என்ற அழியாத முத்திரையை இட்டு விட்ட செஞ்சீனத் தலைவனைத் தொழில் உலகம் வாழ்த்தி வரவேற்கிறது.
இரும்பால் வெல்ல முடியாது, எஃகுவால் அடக்க முடியாது, எண்ணற்றப் பீரங்கிப் படைகளால் கொல்ல முடியாது, மற்ற எந்த ஆயுத சக்தியாலும், அடிமைப்படுத்த முடியாது என்று பேராசை பிரிட்டாணியம் உணர்ந்த பிறகே மதியைக் குறைக்க மதுவைத் தருவது போல் சீனத்தன் அரசியலைக். கெடுக்க அபினியைத் தந்தது. ஒருகாலத்தில் பழமைக்குப் பிறப்பிடமாயிருந்த சீனத்தை பலர் ஈனத்தனமாகப் பேசவேண்டிய நிலையை ஏற்படுத்தி விட்டது அபினி போதை.
தடையுத்தரவு
சின்-யுவாள்-தீ என்ற மன்னன் தீக்கனல் கக்கினான். தடையுத்திரவை விதித்தான். பயனில்லை தீராப் பகைவர்களைப் போல் பகைத்துக் கொள்ளாமலே பக்குவமாக படுபாதாளப் படுகுழியை வெட்டி வைத்துவிட்டது அபினி. 'அயினி வேண்டாம்' "அபினி என் நாட்டுக்குள் வரவே கூடாது," என உறுதியான சட்டத்தைச் செய்தான். பலமான காவல்களைப் போட்டுக் கண்காணிக்கச் செய்தான். துறைமுகங்கள் தவறாமல் உருவிய வாளோடு நின்றனர் வீரர்கள். எனினும் உடலின் எல்லா இரத்தக் குழாய்களிலும் விஷம் ஒரு வினாடியில் ஊடுருவிப் . பாய்வதைப் போல் சீனநாடு முழுதும் அபினி பரவி விட்டது. புராதனச் சீனம் இந்த பொல்லாத போதையிலாழ்ந்து விட்டது. யார் அதன் போதையைத் தெளிவிக்க வல்லவர்.
எதிரியாயிருந்து ரண - களத்தில் சந்தித்தால் , பிணப் பரிசையளிக்கலாம். வாளெடுத்தால் வீர மார்பைக் காட்டலாம். வேட்டு சத்தங்களென்றால் நாட்டில் அதன் எதிரொலியைக் கேட்கலாம். வெற்றியா, தோல்வியா? என்றால் இரண்டுக்கு மிடையேயுள்ள சமாதானத்தை நீட்டலாம். வீணாசையால் வீணர்கள் படையெடுக்கின்றார்கள் என்றால் வீரத்தைக் காட்டி விண்ணதிரப் போர் செய்து வீழ்ந்து மடியலாம். ஆனால், இருட்டில் வரும் திருடன் போல், நல்ல வார்த்தைகள் பேசிக்கொண்டே கெடுக்கும் நயவஞ்சகன் போல், வழிகாட்டுவதாக வஞ்சகமாக அழைத்துச்சென்று வழியில் கத்தியைக் காட்டும் கொலைகாரன் போல், நம்மையறியாமல் வரும் தூக்கம் போல், நாட்டில் வரும் கொள்ளை நோய் போல், காட்டாற்றின் வெள்ளம் போல், ஏதோ ஒரு தின்பண்டம் போல் உள்ளே நுழைந்து விட்ட அபினியைத் தடுக்க எந்த தடையுத்தரவாலும் முடியவில்லை . அபினி அத்தியாயம் தொடங்கிய பிறகு அயல் அரசுகள் கால் ஊன்றின. அதற்கு முந்திய அத் யாயத்தில் அதன் உள்நாட்டரசர்களே அதன் குரவளையை நெரித்துக் கொண்டிருந்தார்கள் என்பதை கீழ்வருமாறு வர்ணிக்கிறான் பேரறிஞன் கன்பூஷியஸ்.
"மக்கள் புலியைப் பார்த்து நடுங்கிச் சாகின்றார்கள். இந்தப் புலியைவிட மகா பயங்கரமான உருக் காட்டாக புலி அன்றாடம் ஆயிரக்கணக்கானவர்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கின்றது. அதன் பெயர் அரசியல் புலி. அதன் உண்மையான உருவம் தென்படவில்லையென்று திகைக்கின்றார்கள், பிடிவாதக் கால்களும், கட்டாயப் பார்வையும், கடினமான அடக்குமுறை வடிவமும், சட்ட வரிகளே அதன் மேவிட்ட கோடுகளாகவும், கொடுமை என்ற கூரிய நகங்களும் கொண்டு நிமிர்ந்து புறப்பட்டுக் கொண்டிருக்கும் புலியைப்பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை" என்று கண்ணீரால் கேட்டான் கன்பூஷியஸ்.
கன்பூஷியஸ் சீனத்தையறிந்த சிந்தனைச் செல்வன், சீர்கெட்டிருந்த சீனத்தைச் சீலமுள்ளதாக்கிய தந்தை, மகவீனும் மகிழ்ச்சியால் கற்ப வேதனையை சகித்துக்கொண்ட தாய்ப்போன்றவன் குற்றமுள்ளவரைக் கண்டித்து குணமுள்ளோரை ஆதரித்த நீதிமான் என்று சீனம் பேசிற்று. எனினும் பெண்குலம் சபித்தது. 'வஞ்சகரை வீழ்த்த வாள் எடுத்தேன், தாய் தடுத்தாள், சாந்தமடைந்தேன். அன்னையின் அகம் குளிர்ந்தது, அயலாரும் எனக்கிருந்த தாயன்பு கண்டு அகம் குளிர்ந்து நண்பர்களானார்கள்' என்ற முறையில் சீனத்தின் செப்பேடுகள் புகலவில்லை.
"வெஞ்சமரில் வாள் எடுக்க எண்ணினேன் கை இல்லை. ஏற்கனவே எதிரிகளால் என் கைகள் துண்டிக்கப்பட்டிருப்பதை மறந்து, இந்த என் அறியாமையைப் பார்த்த எதிரிகள் எக்காளமிட்டனர்", என்று சொல்லாமல் சொல்லுவதைப் போல் சீனத்திற்கு வீரமுண்டு, வீரத்தின் வாகனமான வாள் உண்டு, வீசுவதற்கு மனம் போன்ற கையில்லை. அந்த மனம் போதையால் அசைவற்று விட்டது! என்பதைப் போல இருந்தது சீனத்தின் குரல்.
வீரத்தை. மூட்ட முடியவில்லை. அவர்களுக்கு விழிப்புணர்ச்சியில்லாத காரணத்தால், புத்தி புகட்ட முடியவில்லை. அவர்களுக்கு போதை தலைக்கேறியிருந்த காரணத்தால், நாட்டின் நலிவை நவில முடியவில்லை, நஞ்சொத்த மருந்துண்டு மயக்கமுற்றிருந்த காரணத்தால், அவர்கள் தங்கள் கண்களைத் திறந்து ஜெகத்தைப் பார்ப்பதற்கே நான்கைந்து நாட்களாய் விடுகின்றன. இந்த நிலையில் கடலில் எறிந்த கற்களாய் விட்டனர்: சீனப்புதல்வர்கள், கற்கள் கடலில்தான் இருக்கின்றன கண்டெடுப்புவர்கள் யார்? என்ற வினாவைப்போலத்தான்: சீனத்தின் நிலை இருந்தது. சீன மக்கள் இருந்தனர்; சீனத்தில் செல்வம் இருந்தது, ஆனாலும் சீன நாட்டில் வேற்றான் கொடி, சீன மக்கள் போதையின் பிடியில், சீனச் செல்வத்தின் பெட்டிச்சாவி சீமைத் துரைகளின் மடியில்.
பதினாலு பதினைந்தாவது நூற்றாண்டில் பிரான்சிலும் இங்கிலாந்திலும் நடந்த புரட்சிக்குப் பாட்டியாய், கிருஸ்து பிறப்பதற்கு ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பே கொலை, கொள்ளை, அசம்பாவிதம் அறுவறுக்கத்தக்க செயல்கள், பெரும் பெரும், போர்கள், நட்பிண்மை, நயவஞ்சகம், கொடிய குற்றங்கள் முதலான சகல விதமான அராஜ ரீகச் செயல்களும் செய்து கொண்டிருந்தது.
அந்த கால மக்கள் எண்ணிக்கையாகிய 15 கோடி மக்களை ஆள்வதற்கென்று பத்தாயிரம் அரசாங்கங்கள் இருந்தன. ஆளும் மமதை அதிகரித்த அளவுக்கு அடிமைப்பட்ட மக்கள் அதிகப்படாத காரணத்தால் அரசியலை ஒரு வேட்டைக்காடாக மதித்து ஆங்காங்கே வெறிச் செயல்கள் நடத்திக் கொண்டிருந்தார்கள் என்று நம்ப வேண்டியிருக்கிறது.
இந்த நெருக்கடியான நேரத்தில்தான் இடிந்து விழயிருந்த சீனத்தைச் செம்மையாக்க, இருண்ட சீனத்திற்கோர் ஒளி காட்ட பேரறிஞன் கன்பூஷியஸ் தோன்றினான். அவன் எடுத்துக் கொண்ட முயற்சி எல்லா காலத்துக்கும் ஏற்றதாயில்லையாயினும் அந்த நேரத்திற்குத் தேவைப்பட்ட அவசர வைத்தியமாயிற்று. இவனுக்கு முந்திய சீனம் இருளடர்ந்திருந்தது. பிந்திய சீனமும் அவ்வழியே சில நாட்கள் சென்றதாயினும், ஒரே அடியாக சாக இருந்த சீனத்திற்கு புத்துயிரளித்தவன் இப்பெருந்தகையோன் என்பதை நாம் மறந்தாலும் வரலாற்று வரிகள் அவன் பெயரின் பேரில் அழியாத வாசனையைத் தடவி இருக்கிறது.
கன்பூஷியசுக்கு முன்
சீனர்கள் ஒரே இனத்தவரா என்பதைக் கண்டுபிடிப்பது மகாக் கடினமாக இருந்தது. டார்ட்டாரிகள், மங்கோலியர்கள், ஹன்ஸ் வகுப்பார், ஆகியவர்கள் சேர்ந்து உருவெடுத்ததுதான் சீன இனம். அதன் பிறகு பர்மியர்களும், ஜப்பானியரும், திபேத்தியர்களும் சீன இனத்தில் கலந்து விட்டார்கள்.
இப்படி, பல்வேறு பகுதியினர் சேர்ந்து வாழ்ந்துங்கூட அவர்களிடம் ஒரே விதமான நாகரிகம் காணப்பட்டது. இப்படி எல்லா மக்களும் ஒரே தன்மையதான நாகரிகமடைந்திருந்தும் சீன நாட்டை ஒரேநாடு என்று சொல்லமுடியாமல் வடக்கும் தெற்குமாகப் பிரிந்திருந்தது. எனினும் நாகரிகம் மட்டிலும் ஒன்றேதான்: கன்பூஷியஸ் காலத்தில் இவ்வகை நாகரிகம் பெற்ற மக்கள், பத்தாயிரம் சிறிய நாடுகளிலடங்கியவர்களாக இருந்தார்கள்.
இவற்றில் வாழ்ந்த செல்வர்கள், Dukes, Marquise, Earls, Counts, Barons என்று ஒரு வருக் கொருவர் தரம் குறைந்த பிரபுக்களாக இருந்தார்கள். அதாவது, பிரபு, கோடீஸ்வரன், லட்சாதிபதி, ஜமீன்தார், மிராஸ்தார், மிட்டாதார், நிலச்சுவான்தார் என்று நம்முடைய நாட்டிலிருப்பதைப் போல. இதன் காரணமாக ஒரு பக்கம் கலகங்களும், மற்றோர் பக்கம் கல்விச் சாலைகளும், மருத்துவமனைகளும் தோன்றிக் கொண்டிருந்தன. இப்படி இருந்த சீனர்கள் கன்பூஷியஸ் காலத்துக்கு. முன்பு, டாய்ஸ் மதத்தைத் தழுவினார்கள் என்று தோன்றுகிறது. கன்பூஷியஸ் காலத்துக்குப் பிறகு இவர் பெயராலேயே ஒரு மதம் தோன்றுகிறது.
கன்பூஷியஸ்
கிருஸ்துவுக்கு முன் 551-ல் ஷங்- டியாங்- ஹெய் என்பவருக்கும், சிங்-டாசி என்ற அம்மையாருக்கும் கடைசி மகனாகப் பிறந்தவர்தான் கன்பூஷியஸ். கன்பூஷ்யஸ் என்றால் தத்துவத்தின் தந்தை என்று பொருள். உடன் பிறந்தவர்கள் ஒரு அண்ணனும் ஒன்பது. சகோதரிகளும் இருந்தார்கள், கன்பூஷிஸின் ஐந்தாவது வயதிலேயே தந்தை இறந்து விட்டார். குடும்பம் ஏழ்மையைத் தழுவியிருந்த காரணத்தால் சிறு வயதிலேயே வேலை செய்து பிழைக்க வேண்டியவராய்விட்டார். பத்துப் பனிரெண்டாவது வயதிலேயே சிந்தனா சக்தி அதிகமுடையவராகக் காணப்பட்டார். பதினைந்தாவது வயதில்தான் படிக்க வேண்டுமென்ற எண்ணம் வந்தது. பத்தொன்பதாவது வயதில் திருமணம் முடிந்தது. ஒரு ஆட்டுப் பண்ணையின் முதலாளி யிடம் வேலை பார்க்கின்றார்; பிறகு இருபத்தி இரண்டாவது வயதில் ஒரு சிறிய பள்ளிக்கூடத்தை வைத்து மாணவர்களுக்கு பயிற்சியளிக்கின்றார். ஒரு பாடத்திலுள்ள ஒரு கோணத்தைத் தொட்டுக்காட்டி விட்டால் மற்ற கோணங்களை மாணவர்களே தெரிந்துகொள்ளவேண்டும். அப்படி தெரிந்து கொள்ள சக்தியற்ற மாணவர்களை விரும்புவதோ, அல்லது அந்த மாணவர்களுக்கு மறுபடியும் அந்தப் பாடத்தைச் சொல்லிக் கொடுப்பதோ இல்லை என்கிறார் கன்பூஷியஸ். தன்னுடைய இருபத்திரண்டாவது வயதில் தாயும் இயற்கையெய்திவிட்டாள். அன்றிலிருந்த சீன சர்க்காரின் சட்டப்படி யாருக்கும் சமாதி கட்டக்கூடாது. எனினும் கன்பூஷியஸ் சட்டத்தை மதிக்காமல் இறந்த தன் தாய்க்கு ஒரு சமாதியைக் கட்டிவைத்தார். ஏனென்றால் தான் லூ என்ற மாகாணத்துக்குத் தொழில் சம்மந்தமாகப் போக வேண்டுமென்று திட்டமிட்டிருப்பதால், மறுபடியும், என்றாவது ஓர் நாள் தன் தாயகத்துக்குத் திரும்பி வரும்போது, தன் தாயின் சமாதியைக் காணலாமே என்பதுதான் அவர் எண்ணம். மகன் தாயன்புக்குக் கட்டுப்பட்டவன், தாயும் தான் ஈன்ற மக்களுக்காக எவ்விதத் தியாகமும் செய்வாள்.
தாய் உள்ளம்
தாய்! 'தாய்! கொடிய கொலைகாரன் முதல் கோலேந்தி நாடாளும் கொற்றவன்வரை தாயன்புக்குக் கட்டுப்படாதவர்களேயில்லை, தாய் உள்ளம், அன்புச் சுரங்கம். மரண வேதனையை மக்களுக்காக ஏற்றுக் கொண்டு பிரசவ காலத்தில் கருணைக் கண்ணீர் சொரிந்த தாயுள்ளமாயிற்றே. தான் விரும்பியதை உண்ணமுடியாமல், எனினும் அதனால் குறைபடாமல், எப்படியும் குழந்தை சுகமாக இருந்தால் போதும் என்று தன் சுகங்கள் எல்லாவற்றையும், தியாகம் செய்த தாயின் கருணையை விரிந்த கடல் பரந்தவான் எவற்றிற்கும் அளவிட முடியாததாயிற்றே. உலகம் என்பால் பொய்' என ஓடுபவனைனயம் ஒரு கணம் நிற்கச் செய்யும் ஆற்றலுடையதாயிற்றே தாயுள்ளம். எதிரிகளாலும் தடுக்க முடியாத வாளை தன் வாய் சொல்லால் தடுக்கும் அன்னையின் குன்றா யிற்றே தாய் மனம். தாய்க்கு ஒரு சமாதி கட்ட வேண்டுமென்று நினைக்கும் சுதந்திரத்தில் சீனத்தின் சட்டம் அனாவசியமாகக் குறுக்கிடுகிறது.
இதே சட்டத்தைக் காட்டியவள் தாய், ஆகையால் தாய் முந்தி, சட்டங்கள் பிந்தி, ஆகவே சட்டங்களுக்குப் பணியமாட்டேன். "கீழ்ப்படிதலான எண்ணம் எனக்கொன்றிருக்குமானால் அதில் என் தாய்க்கே முதலிடம் அளிப்பேன்” என்று சமாதியைக் கட்டி முடித்துவிட்டு, லூ என்ற மாகாணத்திற்குச் சென்றுவிட்டார்.
சந்திப்பு
லூ மாகாணத்திற்குச் சென்ற கன்பூஷியஸ். அங்கே இருந்த நூல் நிலையத்தில் இசைக் கலையைப் பற்றி நிறைய படிக்கத் தொடங்கினார், அங்கு தான் டாய்ஸ் என்ற மதத்தை ஸ்தாபித்த Leo-tsze லோ-ட்ஸி என்பவரை சந்தித்து மத ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபடுகிறார். எதிர்பாராமல் அந்த மாகாணத்தில் கலகம் ஏற்படவே வேறு மாகாணத்துக்கு ஓடிப்போய் அங்கு சில நண்பர்களை சேர்த்துக் கொள்ளுகின்றார். இப்படி ஓடும்போது வழியில் ஒரு பெண் அழுதுகொண்டிருப்பதைக் கண்டு அவளுடைய வரலாற்றை விசாரிக்கின்றார்.
புலி சம்பவம்
அந்தப் பெண் ஆராத்துயரத்திலாழ்த்து அழுது கொண்டிருப்பதைக்கண்ட கன்பூஷியஸ் காரணம் வினவ, நடந்ததைச் சொல்லத் தொடங்கி, தானும் தன் பெற்றோர்களும் அவ்வழியே வந்து கொண்டிருந்ததாகவும், ஒரு புலி முதலில் தன் தாயையும் பிறகு தன் தந்தையையும் கொன்றதாகவும், தான் எப்படியோ தப்பித்துக் கொண்டதாகவும் சோகத்தினிடையே சொல்லி முடித்தாள், இதைக்கேட்ட கன்பூஷியஸ், "இவ்வளவு பயங்கர நிகழ்ச்சிகளுக்குப் பிறகும் நீ ஏன் இங்கிருக்கின்றாய். உன்னையும் கொன்றுவிட்டால் என்ன செய்வாய், இதை, நீ சர்க்காருக்கு அறிவித்தாயா?", என்று கேட்கின்றார். "ஆம், அறிவித்தேன், சர்க்கார் என் விண்ணப்பத்தைக் கேட்கவில்லை. இவ்வளவு கொடிய மனம் படைத்த சர்க்காரைவிட இந்த புலி வாழும் காடே நன்றென நினைத்து இங்கே புலம்பிக் கொண்டிருக்கின்றேன்" என்று தன் பரிதாப வரலாற்றைச் சொன்னாள். "ஆம், நீ சொல்வதும் உண்மைதான்." என்று சொல்லி அந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டு போய் பக்கத்து கிராமத்தில் விட்டு விட்டு தான் டிஸி என்ற நகரத்திற்குப் போய் அங்கு 15 ஆண்டுகள் ரெவின்யூ அதிகாரியாக வேலை பார்த்து தனது 52-வது வயதில் நீதிபதியாக நியமனம் பெறுகிறார். அந்த காலத்தில் அவர் செய்த சில சீர்திருத்தங்களால், நாடு வலிவடைகிறது என்று பொதுவாகச் சொல்லப்பட்டது. அதே நேரத்தில் நாடு பண்டைய நாகரிகத்தையிழந்து அதுவரை அது போற்றிவந்த தாய்மையையும், பெண்கள் குல பெருமையையும் உயிரோடு புதைத்து விட்டான் கன்பூஷியஸ் என்று பலர் தூற்றினார்கள். இந்த இரண்டுவித நிலமைகளுக்கும் சரியான காரணமில்லாலில்லை.
மிகப் பழைய காலம்
அந்த காலத்தில் குடும்பத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தால் அருமையான படுக்கையைப் போட்டு ஒரு அழகான பொம்மையை அதன் கையில் கொடுப்பார்கள். பெண் குழந்தை பிறந்தால் தரையில் கிடத்தி ஒரு மரத்துண்டை அதன் கையில் கொடுப்பார்கள். பெண்களுக்கு எல்லா வகையாலும் உயர்விருந்த காலத்திலா பெண் குழந்தையை இப்படிச் செய்தார்கள் என்றால், அது. ஆண்களே அன்றிருந்த பெண் உயர்வைப்பார்த்து பொறாமைப்பட்டு கள்ள நெஞ்சத்தோடு வஞ்சம் தீர்க்கும் முறையில் இப்படிச் செய்தார்களோ என்று நாம் சந்தேகப்படவில்லை, சீனத்தின் பெரிய எழுத்தாளன், லின் - யு - டாங் என்ற அறிஞனே இப்படி சந்தேகப்படுகின்றான். பெண்கள் தாம் குடும்பத்தின் தலைமைப் பதவியை வகித்து வந்தார்கள். அது மட்டிலுமல்ல, ஆண்கள் பெயர்களுக்கு முன்னால் பெண்களின் பெயர்களைச் சேர்த்து அழைத்துக்கொண்டு வந்தார்கள். பெண்கள் கலந்து கொள்ளாத நிகழ்ச்சிகளே இல்லை. பெண்கள். அவர்களுக்கு இஷ்டமான யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள்ளலாம். திருமணம், சமுதாயத்தில் ஒரு முக்கியமான சடங்காகக் கருதப்படவில்லை. அரசனிடம் பக்தியும், விசுவாசமும் கொண்ட குடியானவன் தன் மனைவியை அரசனுக்கே சகல சுதந்திரத்தோடு ஒப்படைத்து விடுவான். மருமகள் விதவையாய்விட்டால் மாமனாரே திருமணம் செய்துகொள்வான். மனைவியின் தங்கையையும் திருமணம் செய்துகொள்வார்கள். அரசியாருக்கும் அமைச்சனுக்கும் கள்ளக்காதல் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
கட்டுக்கடங்காத காதலி
Wei - வெய் என்ற ராணி தன் கணவனிடம் ஒரு அழகனைத் தனக்குத் தேடித் தரும்படி கேட்டாள். அவனும் அப்படியே செய்வதாக சம்மதித்து தண்டோரா போட்டு ஒரு அழகனைத் தேடித் தன் ராணிக்கு அளித்தான். அன்றிருந்த பெண்களின் போக்கு 'நானிருக்க அவனேன்' என்று தைரியமாக ஆண்கள் கேட்கமுடியவில்லை. அந்த அளவுக்கு பெண்களிடம் ஆண்கள் அடங்கியிருந்தார்கள், அல்லது அடக்கப்பட்டிருந்தார்கள். அந்த அளவுக்கு பெண்களின் கற்புக்கு விடுதலையும். ஆண்களின் நாவுக்குத் தளையும், நெஞ்சத்துக்குச் சிறை வாசமும் விதித்திருந்தார்கள் பெண்கள். ஆகவே அந்த ராணி பின் விருப்பப்படி ஒரு அழகனைத் தேடி ராணியாரின் படுக்கை அறையில் சேர்த்துவிட்டு தான் ஒரு காவலாளிபோல் வெளியே கைக்கட்டி நின்றுகொண்டிருந்தான், திருமணவிலக்கும், விதவைத் திருமணமும் வினாடிக்கு, வினாடி நடந்த வண்ணமிருந்தன.
வேண்டாத திருமண விலக்கும், விதவைத் திருமணமும் மறுமணமும் சமூக முன்னேற்றத்துக்கு மிகுந்த தேவைதான் என்றாலும் ஒரே நாளில் ஒருவன் மூன்று திருமண விலக்குகளும் நான்கு மறுமணமும் செய்துகொண்டிருந்தால் - முற்றிய காதல், தோன்றா விட்டாலும், குடும்பத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் ஏற்படவேண்டிய குறைந்த பட்ச அன்பும் இல்லாமல் போய்விடுமே. சாதாரண அன்பே பரிதியைக்கண்ட பனித்துளி யாகுமானால், கற்பு எந்தக் கடையில் விற்கிறது என்று கேட்கும் அளவுக்குத்தானே இருந்திருப்பார்கள் சீனப் பெண்கள். இதன் காரணமாக மக்களுக்கு இருக்க வேண்டிய ஒற்றுமை, அன்பு, குடும்ப பாசம் ஒன்றுமே இல்லாமல் போய்விட்டது. இன்றைய சீன மக்களை எடுத்துக்கொண்டு அவர்கள் வம்சாவளியைப் பார்த்தாலும் சுமார் நாற்பது குடும்பங்களில் அடங்கிவிடுகின்றர்கள். எனினும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில், கண்ட கண்ட இடங்களில் வீசி எறிந்த களிமண் உருண்டைகள் போலிருந்தார்கள்.
முந்திய காலமும் பிந்திய காலமும்
கன்பூஷியஸ் காலத்துக்கு முந்திய சீனத்தையும், பிந்திய சீனத்தையும் எடுத்துக் கொண்டால் மலை போன்ற வித்தியாசங்கள் காணப்படுகின்றன. முந்திய சீனத்தில் பெண்களுக்கு எல்லா உரிமைகளும் இருந்தன. தாய்தான் குடும்பத்தின் தலைவி என்ற உரிமைக்குரியவளாயிருந்தாள். அப்படியிருந்ததின் காரணமாகவே, வெளிநாடுகளோடு தொடர்புகொள்வது, வாணிபஞ் செய்வது, போர் தொடுப்பது முதலானவைகளைச் செய்யச் சக்தியற்றவர்களாயிருந்தார்கள். இவ்வளவு பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு இந்த நிலையடையக் காரணமென்ன என ஆராய்ந்தான் கன்பூஷியஸ். தாய்மை! தாய்மை!, சாந்தம், சமாதானம், அமைதி என்ற தளர்ந்த சொற்களுக்கே சீனர்கள் அடிமைகளாய் விட்டனர். வீரம், போர்க்குணம், படையெடுப்பு, இரத்தஞ் சிந்தல் முதலான தீர செயல்களைத் தீண்டத்தகாதவையென விலக்கி விட்டார்கள். இந்த அடிமைத் தனத்தை ஒழிக்கவேண்டு மானால் பேத புத்தியை ஒழித்துக்கட்ட வேண்டும். சீன சமுதாயத்திலே பெண்களுக்கிருக்கும் உரிமையை, அதிகாரத்தை அடியோடு தொலைத்தாலன்றி சீன மக்கள் வீரர்களாவது இயலாதெனக் கண்டான். கன்பூஷியஸ், ஆகவே, மக்களை ஐந்து பிரிவினராகப் பிரித்தான் 1. அரசன், 2 குடிகள், 3. கணவன், 4. மனைவி, 5. மக்கள். அவரவர்களுக்குள்ளாக் கடமையைப் போதித்தான். என்றாலும் அவன் காலத்து சீனத் தாய்க் குலம் அவனை சபித்தது. ஆண் குலம் வரவேற்றது, அறிஞர் குலம் "சீன நாகரிகத்தின் தலைமேல் ஒரு தீராப் பழிச் சுமையை ஏற்றி வைத்துவிட்டான் கன்பூஷியஸ், என்று முணுமுணுத்தது. சமுதாயத்துறையில் வேண்டுமானால் இது புறம்பாயிருக்கலாம் அரசியல் துறையிலே அவன் கையாண்ட முறைதான் சரியானதென மற்ற அரசுகள் பேசின.
எனினும் சீன மக்களை கன்பூஷியஸ் ரணகளம் அழைத்துச் செல்லவில்லை. தாய்மைக்கு அவர்கள் அளித்த அளவு கடந்த அபிமானத்தின் மூலம், மானாபிமானத்தை விட்டுவிட்டார்கள். அதனால் அயலார் தாராளமாக உள்ளே வர முடிந்தது என்பதை ஜாடையாகக் காட்டினான் கன்பூஷியஸ்.
அரசியல் வானில் போர் மேகங்கள் சூழ்ந்து பகை மின்னல்களும், ஆயுதச் சாலையின் இடி முழக்கமும் கேட்டுக் கொண்டிருக்கும் காலத்தில் சீனம் அமைதியைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறது. நீரில் மூழ்கிச் சாகப்போகின்றவனிடம், நடந்த தைச் சொல்லிவிடுகின்றேன், கொஞ்சம் நியாயத்தைச் சொல்லிவிட்டு செத்துப்போ," என்று சொல்வதைப் போல, சீனம் சரிந்து வீழ்ந்து கொண்டிருக்கும்போது வாணவேடிக்கை விட்டு வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கும் காட்சியைக் காண சகிக்காத கன்பூஷியஸ் தான் சொன்ன கருத்தில் எவ்வளவு முரன்பாடுகள் இருந்தாலும் இந்தக் கொள்கைகள்தாம் தேவை, தேவை, தேவை என்று வலியுறுத்தினான். இவன் காலத்துக்கு முன்பு தோன்றிய டாய்ஸ் மதமும் இதையேதான் சொல்லிற்று. இவ்விரண்டும் ஒன்றே போலிருக்கவே மக்கள் இரண்டையும் பின்பற்றினார்கள்.
கன்பூஷியஸ், மிகப் பழைய காலத்தைப் பார்த்து அழைத்தவர்களைப் பார்த்துச் சீறினான். அதன் விளைவாகவே பெண் வர்க்கத்திடம் கொஞ்சமும் ஈவிரக்கமில்லாமல் நடந்து கொண்டான் என்று சொல்லப்படுகிறது.
கன்பூஷியனிஸம்
"மிகப் பழைய காலத்தில் மக்களுக்கு அரசர்களே தெரியாது. பிறகு நேசித்துப் புகழ்ந்தார்கள். பிறகு பயந்தார்கள். இறுதியில் அரசர்களை எதிர்த்தார்கள்".
"அறிந்தவர்கள் பேசுவதில்லை. பேசுகிறவர்கள் அறிவதில்லை." "மக்களின் இயற்கையமைப்பு ஒன்று போலவே இருக்கிறது. ஆனால் அவர்களுடைய பழக்கங்களே அவர்களை வெகுதூரம் பிரித்து வைத்து விடுகின்றன".
"பயிற்சி இல்லாத மக்கள் கூட்டத்தை போருக்கு அழைத்துச் செல்வது அவர்களைத் தூர எறிந்துவிடுவதற்குச் சமானமே ஆகும்."
"அகங்காரம் இல்லாமல் செல்வராய் வாழ்வதைவிட முணுமுணுக்காமல் ஏழையாய் வாழ்வது கடினம்".
"நற்குணம் தனிமையில் வாழமுடியாது. அதைச் சுற்றி அன்பர்கள் தோன்றிக். கூடிவிடுவது திண்ணம்".
"ஓர் உயர்ந்த ஜனசமூகத்தை ஆளுவதில் சிறுமீனைக் சமைப்பதைப் போல் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்".
"சிந்தனையில்லாக படிப்பு பயனற்றது. படிப்பிலாத சிந்தனை அபாயகரமானது" என்றான்.
அவன் காலம்
இயேசு பிறப்பதற்கு ஐந்து நாற்றாண்டுகளுக்கு முன்தோன்றிய கன்பூஷியஸ் செய்த மேற் சொன்ன சீர்திருத்தங்கள் ஓரளவுக்கு மக்கள் மக்கள் மக்களாக்க பயன்பட்டது. அவனுடைய காலம் வரையில் ஆண்களின் கைகளுக்கும், கருத்துக்கும் இடப்பட்டிருந்த தளைகளை அப்படியே கழட்டி பெண்களுக்கு இட்டுவிட்டான். அவன் எடுத்துக் கொண்ட முயற்சிகளிலே முதலாவது, ஆண்களையும் பெண்களையும், சமூக அந்தஸ்திலிருந்து, வெவ்வேராகப் பிரித்து விட்டான். ஆண்களுக்கு உயர்வையும் பெண்களுக்குத் தாழ்வையும் சுமத்தினான்.
திருமணம் செய்துகொண்ட பெண்கள் தங்கள் சகோதரர்களோடு சமமாக உட்கார்ந்து உணவு உண்ணக்கூடாது. ஆண்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். பெண்களுக்கு இயற்கையாக உள்ள பெண் தன்மையை போற்றி வளர்க்கும்படிச் செய்தான். நல்ல பண்புகள், நாகரிகமான பழக்க வழக்கங்கள், கைத்தொழில்கள், உணவு சமைத்தல், கணவனுடைய நண்பர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ளுதல், முதலான பண்புகள் வளரச் செய்தான். இவைகள், ஆண்குலக் கோணத்திலிருந்து பார்த்தால் சரியெனப்பட்டது. ஏனெனில், அதற்கு முந்திய ஆண்களின் நிலை வெறிகொண்ட பெண்களின் மதமேறியச் செயல்களால் தலை குனிந்து நின்றது. வெளிநாட்டுப் பண்பாடுகளின் முன்னால் வெட்கி நிற்கவேண்டிய நிலையையுண்டாக்கி விட்டது என்பதுதான் கன்பூஷியஸின் ஒரு முகமான முடிவு. அது மாத்திரமல்ல, மேலும் சில சுமைகளை பெண் வர்க்கத்தின் தலைமேல் ஏற்றி வைத்தான் கன்யூஷியஸ்.
தலைகீழ் மாற்றம்
மனைவி இறந்துவிட்டால் கணவன் ஓராண்டு அழுதுகொண்டிருக்க வேண்டும், ஆனால், கணவன் இறந்துவிட்டால், மனைவி, மூன்றாண்டுகள் அழுது கொண்டிருக்க வேண்டும். விதவை மணம் அனுமதிக்கப்படவில்லை, கற்பை தெய்வமென போற்ற வேண்டும், கற்பைக் காப்பாற்றுவதற்காகவே மிங் ஆட்சி காலத்தில் பல சங்கங்கள் அமைக்கப்பட்டன. இதன் மூலமாக பெண்களிடம் வீர உணர்ச்சியும், தியாக சிந்தையும் வளருமென நம்பினார்கள். அப்படி. யாரிடமாவது மேற்சொன்ன இரண்டு பண்புகளையும் கண்டுவிட்டால் அவர்களை தெய்வங்களெனப் போற்றினார்கள். இதைப் போன்ற நிகழ்ச்சிகள் தாம் சீன இலக்கியத்தின் முதல் வரி முதல் கடைசி வரி வரையிலும் காணப்படுகின்றன. கடவுளைப்பற்றி கன்பூஷியஸ் எங்கேயும் குறிப்பிடவில்லை. அவர் காலத்துக்கு முன்பிருந்த டாய்ஸ் மதத்திலும் கடவுளைப்பற்றிய குறிப்புகள் ஒன்றும் காணப்படவில்லை. இந்த நிலைமைக்குக் கொண்டு வந்தார் கன்பூஷியஸ். அவர் இவ்வளவும் செய்தது பெண் வர்க்கத்தை பழிதீர்க்க வேண்டுமென்ற உணர்ச்சியாலல்ல. ஆண் வர்க்கம் அடிமை மலையடிவாரத்திலும், பெண் வர்க்கம் அதன் உச்சியிலும் இருந்ததால் எட்டாத தூரமாய்விட்டது. இவை இரண்டையும் சம உயர்வில் கொண்டுவர வேண்டுமென்ற சமரச உணர்வால் என்று தெரிகிறது. ஒரு சீடன். தன் குருநாதனான கன்பூஷியசைப் பார்த்து, "ஆண்டவனுக்கு தொண்டு செய்வதெப்படி?" என்று கேட்டான். அதற்கு, "நீ மக்களுக்கே இன்னும் தொண்டு செய்யக் கற்றுக் கொள்ளவில்லையே, ஆண்டவனிடம் ஏன் போகிறாய்," என்று பதில் சொல்லியிருக்கின்றார்.
ஒரு காலத்தில் கற்பைப் பற்றி கவலைப்படாதவர்கள், பிறகு அதை எவ்வளவு போற்றி வளர்த்தார்கள் என்பதற்கு சீன வரலாற்றில் இரண்டு கதைகள் உண்டு.
ஒன்று :- ஒரு விதவைப் பெண்ணை யாரோ ஒரு ஓட்டல்காரன் கையைப்பிடித்து இழுத்தானாம். அதனால் அந்த பெண், அந்த ஓட்டல்காரன் தொட்டு இழுத்தக் கையை வெட்டிக் கொண்டாளாம்.
இரண்டு :- ஒரு பெண்ணுக்கு மார்பில் புண் வந்ததாம். அதை டாக்டரிடம் காட்டினால் கற்பழிந்துவிடும் என்று கருதி அந்த வியாதியாலேயே செத்துவிட்டாளாம்.
தனக்கு விருப்பமான வாலிபனைத் தன் கணவன் மூலமாகவே பெற்று அனுபவித்து வந்த இனம் - தன் உறுப்புகள் எதையுமே எந்த ஆபத்திலும் ஆண்கள் பார்க்கக்கூடாதென்ற அளவுக்கு தலை கீழாக மாறிவிட்டது. இப்படி இறந்தவர்களை வீர மரணத்துக்குறியவர்களாக எண்ணி போற்றி வந்தனர் சீனர்கள். ஒருவள் ஐம்பது வயது வரை யிலும் தன் கற்பைக் காப்பாற்றிவிட்டால் சமூகத்திலேயே மிக உயர்ந்த அந்தஸ்தில் வைத்துப் போற்றப்பட்டாள். சர்க்காரின் கட்டாயச் சேவையிலிருந்தும் இதைப்போன்றவர்கள் விதிவிலக்கு பெற்றார்கள். சீன சர்க்காரின் வரலாறு இதைப் போன்ற தற்கொலைகளையும் வீர மரண நிகழ்ச்சிகளையும் தாங்கித் தாங்கி வளைந்து போயிருக்கின்றது. சீன இலக்கியத்திற்கு பொன்முடியளித்தவர்கள் இதைப்போன்று மாண்ட பெண்கள்தாம் என்று சரித்திரப் பேராசிரியர்கள் செப்புகின்றனர்.
கன்பூஷியஸ் செய்த மாறுதல்படி பொருளாதாரம் ஆண்கள் கைக்கு வந்துவிட்டதால், சீனம் எந்தப் பக்கம் திரும்பினாலும் பொத்திக்கொள்ளும் நெருஞ்சி முள்ளின் நிலையடைந்துவிட்டது.
இதிலும் ஒரு தவறு
இப்படி, ஆண்கள் கையில் வந்த பொருளாதாரத்தாலும், சமூக பலகையில் சம அந்தஸ்தில் வீற்றிருந்த பெண்கள் ஒரே அடியாக கீழே தள்ளப்பட்டதாலும் வைப்பாட்டி முறை வளர ஆரம்பித்தது இந்த கேடான முறைக்கு தூபம் போடுவதைப் போல் பிறகு வந்த Wei - வெய், Ching - சிங் அரசியல்கள் அமைந்தன. இதனால் வைப்பாட்டி முறை வளர்ந்தது மாத்திரமல்ல, கன்னிப் பெண்களுடைய நிலையும் தற்கொலைக் கொப்பானதாக முடிந்தது.
இரண்டாயிரம் ஆண்டு சீன சரித்திரத்தை எடுத்துப் பார்த்தால் காலையில் கிழக்கு நோக்கிப் போகின்றவனுடைய பிரயாணம் போல் முடிவடைகிறது ஏனெனில், காலையில் கிழக்கு நோக்கிப் புறப்படுகின்றவனுடைய நிழல் அவனுக்குப் பின்னால் தொடர்ந்து வந்து நடுப்பகலுக்கு மேல் முன்னால் வந்துவிடும். இதேபோல் சீன வரலாறு முற்பகுதி பின்னாலேயும், பிற்பகுதி முன்னாலேயும் வந்து கொண்டிருக்கின்றது.
இந்த பொருளாதார முறையினால் ஏழைக் குடும்பங்களில் பிறந்த பெண்களுக்கு ஆடம்பரமான திருமணங்கள் செய்ய முடியாமல் பல குடும்பங்கள் திகைத்தனர். ஆண்களின் ஆடம்பரங்கள் தலை தெறித்துப்போகும் அளவுக்கு வளர்ந்துவிட்டதற்கு உதாரணமாக ஒரு நிகழ்ச்சிக் காணப்படுகிறது.
ஒரு அரசன் தன் மாளிகையில் கம்பளத்தை விரித்து அதன்மேல் மாவைத் தூவி, அதன் மேல் பல பெண்களை நடக்கவிடுவானாம். அப்படி நடந்த பெண்களில் யாருடைய அடிச்சுவடுகள் மாவின் மேல் மெதுவாக படிந்திருக்கின்றதோ அவளைப் பஞ்சணைக்கழைத்துக்கொண்டு பகலிரவில்லாமல் பரவசமாகயிருப்பானாம். அதோடு அவளுக்கு பொன்னும் மணியும் தாராளமாக வழங்குவானாம். இந்த, கொடியவன் கையாண்ட மூட முறையால், இவனுடைய அபிமானத்தைப் பெறவேண்டும்மெனக் கருதிய பல பெண்கள் தங்களுக்கு இயற்கையாக இருந்த உடற்கட்டை செயற்கை முறைகளால் குறைத்துக்கொண்டு வெறும் எலும்பும் கூடுமாய் போய்விட்டார்கள்.
கன்பூஷியஸத்தைவிட, இந்த அரசன் அளித்த வெகுமதியால் பழைய ரோம் நகரத்து நாரீமணிகளைக் காட்டிலும், நவீன நியூயார்க் மங்கையர்களைக் காட்டிலும் கேவலமாய்விட்டார்கள். முதல் மனைவி உயிரோடிருக்கும்போதே அந்த முதல் மனைவியே பார்த்து வேறொருவளைத் தேடி தன் கணவனுக்கு இரண்டாந்தாரமாகத் திருமணம் செய்துவைத்து விடுவாள். ஆனால் புதியதாகக் கொண்டுவரப்பட்டவள் தனக்குதான் அடங்கி நடக்கவேண்டுமேயன்றி தன் கணவனுக்கல்ல என்று அதிகாரம் செய்து கொண்டிருப்பாள்; ஏனெனில் தன் விருப்பப்படி கொண்டு வரப்பட்டவள் அல்லவா அதனால்.
கடைசி வீழ்ச்சி
சீன நாட்டு பெண் குலத்தின் கடைசி. வீழ்ச்சிக்குக் காரணம் அவர்களுடைய கால்களைக் கட்டுப்படுத்தி இரும்பு பூட்சுகளால் குறிக்கிவிட்டதுதான். பெண்களும் எங்கேயும் கண்ட கண்ட விடங்களில் ஓடாமல் செய்ததானது சின. வீரத்தின் பொன்னேடுகளில் ஒரு பெண்ணின் பெயரைக் காண முடியவில்லை. சமூகப் பேராசையால் கட்டப்பட்ட அவர்களுடைய கால் நடையின் வேகம்போலத்தான் சீன சரித்திரமும் இருபதாம் நூற்றாண்டு வரையிலும் ஆமைபோல் நகர்ந்து கொண்டிருந்ததோ என்று எண்ண வேண்டிய நிலை ஏற்படுகிறது, ஓடிப்பாயும் வேங்கையாய் வெம்புலியாய் ஆகாமல் ஊர்ந்து செல்லும் பிராணிகளாய்விட்டார்கள். அடிக்கடி இப்படி ஏற்பட்ட தொல்லைகளால் சீனத்தில் நடக்கும் எந்த சடங்காக இருந்தாலும் ஒரே கூச்சல் பயமாக இருந்தது. Noisy Wedding, Noisy funerals, Noisy suffers, Noisy sleeping என்று எழுதுகின்ற லி - யு - டாங்.
செறுக்கு மனப்பான்மை குடும்பத்தில் வளர வளர குழந்தை பருவத்திலேயே பலர் வீட்டைவிட்டு வெளியே ஓட ஆரம்பித்தார்கள். மரணத்திற்காக அவர்கள் அனுசரித்த முறை, அதாவது மனைவி இறந்துவிட்டால் கணவன். ஓராண்டு அழுதுகொண்டிருக்க வேண்டுமென்ற ஏற்பாடு பலரை: பரீட்சையில் கலந்துகொள்ள முடியாமலும், சிலர் மந்திரி பதவியிலிருந்து விலக வேண்டிய நிலையும் ஏற்படுத்தியிருக்கிறது.
தேவை
இந்த கொந்தளிப்பை யடக்க ஒரு சமூக சீர்த்திருத்தவாதி, புரட்சி மனப்பான்மை கொண்டோனான பொதுநலவாதி ஒருவன் தேவைப்பட்டான். அதுவரை சீனம் சென்றுகொண்டிருந்த கரடுமுரடான பாதையை செப்பனிட ஒரு வீரன் தேவைப்பட்டான்.. இடிந்து விழுந்திருக்கும் சமூக கோபுரத்தைப் புதுப்பிக்க ஒரு நல்ல் கை தேர்ந்த கை வண்ணத்தான் தேவைப்பட்டான். பெண்களை, ஆண்களும், ஆண்களை பெண்களும் மாறி மாறி அடிமைப்படுத்திக் கொண்டிருந்த கொடுமைக்கு விடை கொடுத்தனுப்பத் தகுந்ததோர் தீரன் தேவைப்பட்டான். மடமையில், எழுத ஒண்ணாத கொடுமையில், சகிக்க முடியாத அவமான சாகரத்தின் அடிவார்த்தை நோக்கிப்போய்க் கொண்டிருக்கும் அநியாயத்தைத் தடுக்க ஒரு அறிஞன் தேவைப்பட்டான். வாள் எடுக்கா முன், போர்முகங் காணா முன், புதுயுகங் காட்ட வல்லதோர் புரட்சிக்காரன் தேவைப்பட்டான், தாயகம் போய்க்கொண்டிருக்கும் தவறான பாதையை மூடி தக்கதோர் பாதையை காட்டும் கர்ம வீரன் ஒருவன் தேவைப்பட்டான். பொதுப்பணியை பொதுப்பணியாகவே மதிக்கும் ஒரு பொதுநலவாதி தேவைப்பட்டான்.
இவ்வளவு காலமாக வீரமனப்பான்மையும் தேசாபிமானமும் தோன்றாதிருந்ததற்குக் காரணம், அவர்கள் அதுவரை அனுசரித்து வந்த மதங்களான, டாய்ஸ் மதம், கன்பூஷியஸ் மதம், புத்த மதம் ஆகிய மூன்றும், சாந்தம், சமாதானம், அமைதி, கொல்லாமை ஆகியவைகளையே போதித்து வந்தன. இவைகள் சமூக அமைப்பில் தனி மனிதர்கள் அனுசரிக்க வேண்டிய முறைகள் ஆனால் வெளி நாட்டாராதிக்கத்தைத் தொலைக்க, சுதந்திர ஆர்வம் கொள்ள இவைகள் பயன்படாதே, ஆகவே இவைகளுக்கு மேலாக அரசியல் உணர்ச்சியையும் நாட்டுபற்றையும், தனியாக ஊட்டவேண்டிய நிலை ஏற்பட்டது.
என் வரவில்லை
நாட்டுப் பற்றும் வீர உணர்ச்சியும் ஒரு சமயம் பல வெளிநாடுகளை சுற்றிப் பார்ப்பதாலும் தொடர்பு கொள்வதாலும் வரக்கூடுமா என்று யோசித்தால், அப்படியும் சீனர்கள் வெளிநாடுகளில் சுற்றி தொழிலும் வாணிபமும் செய்யாதவர்கள் என்றும் சொல்வதற்கில்லை. பத்தாவது நாற்றாண்டிலேயே தென் ஆப்பிரிக்க துறைமுகப் பட்டினங்களிலேயும், இந்தோ, சைனா, மலேயா போன்ற நாடுகளிலேயும் குடியேறி தொழிலும் வாணிபமும் செய்திருக்கின்றார்கள். மேலும், வட அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் தங்கம் கிடைக்கின்றதென்று கேள்விப்பட்டு அங்கேயும் சென்றிருக்கின்றார்கள். பல் நூற்றாண்டுகள் அங்கே வாழ்ந்துங்கூட தன் நாட்டின் நிலையை அந்தந்த நாட்டு நிலைகளோடு ஒப்பிட்டுப் பார்த்து தலை தாழ்ந்திருக்கும் தங்கள் நாட்டின் நிலையை உயர்த்த முடியவில்லை. அங்கங்கே இருந்த அரசியல் நுணுக்கங்களைக் கொண்டு வந்த தில்லை.
மொத்தத்தில் சீன மக்கள் ஏதாவது விழிப்படைந்தார்களா என்றால், பொதுவாக அபினி நாட்டில் புகுந்து, அதன் பேரால் ஏற்பட்ட இரண்டு பயங்கரமானப் போர்களுக்குப் பிறகுதான் என்றால் மிகையாகாது. அபினி உள்ளே நுழைவதற்கும் பேரறிஞனும், புரட்சித் தலைவனும், அபினியெனும் செந்தேளால் கொட்டப்பட்டு சீனத்தின் தலையிலேறியிருக்கும் விஷத்தைப் போக்கவும் தோன்றிய தலைவன் சன்-யாட்-சன் பிறப்புக்கும் ஒன்பது ஆண்டுகள்தாம் காலம் விட்ட இடைவெளி.
உள்ளே நுழைந்த கள்ளன்
'உள்ளே நுழைந்த கள்ளன்' என்று சீன நாட்டிற்குள்ளே நுழைந்த அபினியைப்பற்றி உரத்தக் குரலில் சொல்லிவிடலாம். சீனத்தின் சொத்துக்களை மாத்திரம் அது களவாடவில்லை. நாகரிகம் பண்பாடு ஆகியவைகளை மட்டிலும் அது சூறையாடவில்லை, சீனத்தின் சிந்தையையே கலக்கிவிட்டது. இந்த மருந்தின் மயக்கம் தொடங்கிய பிறகு நீண்ட நாட்கள் வரையிலும் வெளி நாட்டாராதிக்கம் நிலை பெற்றிருந்தது. இந்த நிகழ்ச்சியால், அண்டையிலிருந்த சகோதர நாடான சீன நாட்டை சீர் குலைய செய்வதற்காக சீமையர்கள் கொண்டுபோன அபினியை உற்பத்தி செய்து கொடுத்தது இந்தியா தான் என்று படிக்கும்போது உள்ளபடியே வெட்கப்பட வேண்டியதாகிறது. அதுவும் சுதந்திர வீரர்கள் தோன்றியதாகச் சொல்லப்படும் வங்காளத்தில்தான் அபினி செய்யப்பட்டது.
அபினியைக் கொண்டு சென்ற கம்பெனிகளைப் பற்றியும். கொள்ளை லாபத்தைப்பற்றியும் லூப்பாக் Lubbock என்பவன் பின்வருமாறு எழுதுகிறான்.
"சீனத்திற்கு அபினியையேற்றிச் சென்றவர்கள் கடலாதிக்கம் பெற்றவர்களாகவும், முரட்டு தைரியமுடையவர்களாகவும் இருந்து இவர்கள் செய்த அபினி வியாபாரம் பெரிய அளவில் லாபத்தைத் தந்தது என்று, சொல்வதைவிட, ஏராளமான பொருள்களை கொள்ளையடிக்க உதவி செய்தது எனலாம்."
இப்படி இந்த கொள்ளையைத் தொடங்கிய கம்பெனிகள், பிரிட்டிஷாருக்குச் சொந்தமான ஜார்டின் Jarden கம்பெனி, மேதிசன் கம்பெனி MatheSon & Co, டெண்ட் & கம்பெனி Dent & Co, அமெரிக்காவுக்குச் சொந்தமான ரஸ்ஸல் கம்பெனி Russel & Co, பாரசீகத்துக்குச் சொந்தமான பான்ஜீ கம்பெனி, Banjee Company.
இந்த கம்பெனிகளும், இவைகளைத் தொடர்ந்து பல சில்லரை கம்பெனிகளும் செய்த கைங்கரியத்தினால் தான் சீன மக்கள் மயங்கி தங்கள் விலையுயர்ந்த பொருள்களையும் விவேகத்தையும் இந்த வீணர்களிடம் விட்டுவிட்டார்கள்.
முதல் அபினிப் போர்
போதை வளர வளர பொறாமையும், அசூயையும் வளர்ந்தது. நாட்டினுள் சாதாரணமாக அனுமதித்துவிட்ட அபினியை வாள் கொண்டு வெளியே விரட்ட முடியவில்லை. சுத்த இரத்தத்தை நஞ்சாக்கும் நாச மருந்தை ஒரு சாதாரண நாயென மதித்து உள்ளே வரவிட்ட மக்கள், சிங்கமெனப் பாய்ந்து ஒவ்வோர் சீனனின் இரத்தத்தைக் குடிப்பதைக் கண்டார்கள். அந்த போதையில் மயங்காத பொருள் கள் எவையாவது இருக்குமானால், அவை உயிரில்லாத இரும்பு, எஃகு, மரச்சாமான்கள், தட்டுமுட்டு, பாய்த் தலையணை, இவைகளாகத்தானிருக்க முடியும், புரையோடிப்போயிருக்கும் புண்ணின் மேல் ஈக்கள் முய்த்து உபத்திரவத்தையுண்டாக்குவதைப் போல் சீன மக்கள் அதிலும் குறிப்பாக சிலர் நெளிய ஆரம்பித்தனர். ஆயுதமெடுத்தனர், ஆர்ப்பரித்தனர். யுத்த மேகங்கள் சூழ சீன இராணுவ தமுக்கில் போர் முழக்க மெழுப்பினார்கள். நாடு பிடிக்கும் , ஆசையாலல்ல. வெளிநாட்டாரான பிரிட்டானியர், அமெரிக்கர், ஜர்மானியர், ஜப்பானியர், பாரசீகர்கள் ஆகியோரை ஒரேயடியாக வெளியேற்ற வேண்டுமென்ற சுதந்திர எண்ணத்தோடு மாத்திரமல்ல, நாட்டை அலைக்கழித்துக் கொண்டிருக்கும் அபினியை அடியோடு தொலைக்க வேண்டும் என்ற எண்ணத்தாலுந்தான். அந்த எண்ணத்தால் ஏற்பட்ட அனல் மூச்சின் முடிவாக 1844-ம் ஆண்டு ஏற்பட்ட முதல் அபினிப் போரில் சீனர்களுக்குப் படுதோல்வியையும் ஆங்கிலேயர்க்கு அளவிட முடியாத வெற்றியையும் அளித்தது, அதாவது, தோற்ற சீனம், வென்ற வெள்ளைய ஏகாதிபத்தியத்திற்கு நஷ்ட ஈடாக ஆறு துறைமுகங்களையும், பல லட்சம் டாலர்களையும் கொடுக்க வேண்டுமென்ற முடிவோடு முடிவடைந்தது முதல் அபினிப் போர்.
சீனர்களுக்கு படுதோல்விதான் என்றாலும் அதுவரை அபினியின் ருசியைக் கண்டவர்கள் வாளின் மேல் வழிந்தோடிய இரத்த ருசியைக் கண் டார்கள் ஆண்டவனாலும் நிலைநாட்ட முடியாத அமைதியை ஆயுதத்தால் நிலைநாட்ட முடியும் என்று அரசியல் கற்பிக்கும் பாடத்தின் முதலேட்டை படிக்கத் தொடங்கிவிட்டனர். பணத்தால் வாங்கிய போதை, மதத்தால் வாங்கிய சாந்தி ஆகியவைகளை சீற்றத்தால், வாங்கிய செங்குருதி கலந்த மண்ணில் புதைக்கவேண்டுமென்ற வீர உணர்ச்சியைப் பெற்றார்கள். போர் நெருப்பு அணைந்துவிட்டது என எண்ணினர் அயல்நாட்டாரை நிறுத்த எவ்வளவோ தடுப்பு சட்டங்கள் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான அபினிப் பெட்டிகளை நடுக்கடலில் தள்ளினர். எஞ்சிய பெட்டிகளை தீயிட்டுக் கொளுத்தினர், எனினும் கள்ளத்தனமாக அபினி சீனத்துக்குள்ளே செல்வது நின்றபாடில்லை. ஏனெனில் லட்சக்கணக்கான வீரர்களை களத்தில் பலியிட்டாலும் ஒரு நாடு கிடைக்குமோ கிடைக்காதோ. ஆனால் இது அப்படியில்லை. ஒரு பத்து அபினிப் பெட்டிகள் ஒரு துறைமுகமே கிடைக்கும், சூறையிடுவதற்கேற்ற செல்வர்களின் மாளிகைகளே கிடைக்கும்... இதைவிட நாடுகளைப் பிடிக்கும் சுலபமான வழி வேறொன்றுமில்லை. ஆகையால் அபினியை விற்று பல்வகையில் லாபமடைந்த வெளிநாட்டார், எவ்வள்வு தடுத்தும் நின்றார்களில்லை.
இரண்டாவது அபினிப்போர்
முதலில் நடந்த அபினிப் போருக்குப் பிறகு சட்ட ரீதியான எவ்வளவோ நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டும் எதிரிகளின் ஆசை அடங்காதக் காரணத்தால் பதிமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 1857-ம் ஆண்டு சீனர்கள் சமர்க்களம் நோக்கி வரவேண்டியிருந்தது. இரண்டாவது முறையாகப் போர் முகங்காணும் சீனவீரர்கள் போரையே நடத்தி நடத்தி ஒவ்வொருவனும் போர் வாளாக மாறிவிட்ட வெள்ளையரை எதிர்த்து நிற்க முடியாமல் இரண்டாவது முறையாகவும் தோல்வியுற்றார்கள், பல தோல்விகள் ஒரு வெற்றிக்கு வழிகோலுவதைப் போல், புதியதாக போர்த்தொழிலைத் தொடங்கியிருக்கும் சீனர்கள் இரண்டாவது முறையும் தோல்வியுற்றதை தோல்வியாகக் கருதாமல் சிறந்த அனுபவக் கோட்டையின் இரண்டாவது வழுக்குப்படியிலிருந்து கீழே சருக்கி விழுந்துவிட்டதாக எண்ணினார்கள். இந்த இரண்டாவது போரின் முடிவு சீன சாம்ராஜ்யத்தின் பிரபல தலைநகரான பீகிங் Peiking நகரம் ஆங்கிலேயர் வசமாயிற்று.
அரசாங்கம்
இந்த கொந்தளிப்பில் சீனமக்கள் லட்சக்கணக்கானவர்கள் மடியுமளவுக்கு அன்றிருந்த மஞ்சு அரசாங்கம் என்ன செய்து கொண்டிருந்தது என்பதையரிய ஆவல் தோன்றுகிறது. இவ்வளவு வெளிநாட்டார் இங்கே வந்து ஆதிக்கம் செலுத்த காரணமாயிருந்தது இந்த மஞ்சு அரசாங்கத்தான். மக்கள் மடிந்து போனாலும் தன் சாம்ராஜ்ய கண்ணியத்திற்கு கடுகளவும் கேடு வரக்கூடாதென்றெண்ணியதால், தான் கொடுக்கக்கூடாத பல உரிமைகளைத் தந்து தன்னைக் காப்பாற்றிக்கொண்டது. அதன் சுய நலத்தை மற்றுமோர் நிகழ்ச்சியின் மூலம் நாம் தெரிந்துகொள்ளலாம்.
1870-ம் ஆண்டு ஒரு இங்கிலாந்து தேசத்தானை ஒரு சீனன் கொலை செய்துவிட்டான் என்ற காரணத்திற்காக மேலும் ஐந்து துறைமுகங்களை பிரிட்டிஷாருக்கு நஷ்ட ஈடாகக் கொடுத்தது. ஒரு ஆங்கிலேயனுடைய உயிருக்கு ஐந்து துறைமுகங்கள் ஈடாக்கப்பட்டிருக்கிறது. அன்றாடம் வறுமையால் செத்துக் கொண்டிருக்கும் சீனர்களின் உயிரை சிற்றெரும்புக்கும் மதிப்பாயில்லை. வெளிநாட்டிலிருந்து சீனத்துக்கு வந்து அக்ரமமாக ஆதிக்கம் செலுத்திய ஆங்கிலேயனுடைய. உயிர் எந்த அளவுக்கு மதிக்கப்பட்டது என்பதையும், அதே நேரத்தில் சீன மகனின் உயிர் எவ்வளவு கேவலமாக மதிக்கப்பட்டதென்பதையும் அறிய இந்த ஒரு ஆதாரமே போதுமென விடுக்கிறோம்.
இந்த சம்பவத்தின்போது, சீனாவுக்குத் தேவையான ஒரு அறிஞன் பிறந்து வளர்ந்து கொண்டிருக்கின்றான். இரண்டு போர்முனைகளில் பெற்ற அனுபவத்தின் பயனாக, இனி வாள், தேவையில்லை, வழி காட்டி தேவை, குண்டுகள் குறி தப்பிவிடுகின்றன, குறி பார்த்துக்கொடுக்க ஒரு வீரன் தேவை என்ற முடிவுக்கு வந்தார்கள். அந்த அறிஞன் இன்னும் நேரடியாக அரசியலில் கலந்து கொள்ளவில்லை. இன்னமும் அவன் அந்த வயதையடையவில்லை. அத்தகு பேரறிஞனும், சீன நாட்டின் புதுயுகக் கர்த்தாவுமான சன்-யாட்-சன் அவர்களைப்பற்றி கவனிப்போம்.
சன்-யாட்-சன்
சீனத்தின் சுடராக 1866-ம் ஆண்டு நவம்பர் திங்கள் இரண்டாம் நாள் குடுவாங் மாகாணத்தில். சாய-யங் என்ற கிராமத்தில் சன்-யாட்-சன் பிறந்தான். தாய் தந்தையர்கள் பெயர் தெரியவில்லை ஆனால் பெற்றோர்கள் கன்பூஷியஸ் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பது மாத்திரம் தெரிகின்றது. முதலில் ஒரு கிராமப் பள்ளிக்கூடத்தில் படித்து தன் அண்ணன் உதவியால் ஹவாய் (Hawai) தீவில் இருந்து கல்லூரியில் படித்தான்.
மத மோகம்
தன் பெற்றோர்கள் பின்பற்றிவந்த கன்பூஷியஸ் {மதத்தைவிட்டு, கிருஸ்து மதத்தைத் தழுவ வேண்டுமென்று நினைத்தார். கிருஸ்து மகத்தைத் தழுவியவர்களால்தான் இப்படி வீரமாக இருக்க முடியுமென்று நினைத்தாரோ என்னவோ, அந்த கிருஸ்துமத மோகம் அவரிடம் அதிகமாகக் காணப்படவே தன் அண்ணன் உடனே இந்தச் செய்தியை பெற்றோர்களுக்கு அறிவித்துவிட்டான். தந்தைக்கு கிருஸ்து மதத்தின்மேல் கோபமில்லாவிட்டால், அதைப் பின்பற்றிய ஆங்கிலேயர்கள் செய்யும். அக்ரமங்களைப் பார்த்துப் பார்த்து கிருஸ்து மதம் இதைத்தான் இவர்களுக்குப் போதித்துக் கொண்டிருக்கிறதோ என்று ஆத்திரப்பட்டுக் கொண்டிருக்கின்றார். இப்படி ஆத்திரப்பட்டுக் கொண்டிருக்கும் தந்தைக்கு தன் மகன் கிருஸ்தவ னாகப் போகின்றான் என்ற செய்தி தலையில் இடி விழுந்ததைப் போலாய்விட்டது. மதபோதை என்பது அன்று சீனத்தின் சீரழிவுக்குக் காரணமாயிருக்கும் அபினிப். போதையைவிட மகா மோசமானது என்றுணர்ந்த தந்தை, உடனே சன்யாட் சன்னை தன்னிடம் அனுப்பிவிடும்படி கட்டளையிட்டு விட்டார். அதன் படி இந்த வருங்கால கிருஸ்தவ எண்ணத்தின் பிரதிநிதி தன் தந்தையின் கட்டளைப்படி தாயகம், திரும்பிவிட்டார்.
பிறகு காண்டன் (Kantan) நகரத்திலிருந்த. டாக்டர். கெர் என்பவரிடம் வேலை செய்து கொண்டிருந்தார். அவரிடம் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போதுதான் தந்தையின் ஏற்பாட்டின்படி லு-ஷு என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். பிறகு ஹாங்காங் (Hongkong) தீவில் புதியதாக ஆரம்பிக்கப்பட்ட வைத்தியக் கல்லூரியில் சேர்த்து படித்தார். அந்தக் கல்லூரியின் தலைவர் டாக்டர் ஜேம்ஸ்காட்லி என்பவர் சன்னை அன்பாக நடத்தினார். அவரே பிற்காலத்தில் சன்-யாட்-சன்னுக்கு ஏற்படும் பலவித அரசியல் அபாயங்களில் உதவியும் செய்கிறார்.
சன்-யாட்-சன் 1892-ல் டாக்டர் பட்டம். பெற்றுக்கொண்டு மாக்கோ என்ற இடத்தில் தொழில் நடத்திக்கொண்டிருக்கின்றார். இரண சிகிச்சையில் கைதேர்ந்தவரென பெயரெடுக்கின்றார். இப்போதுதான் நாட்டின் படுமோசமான நிலையை உணர்கிறார். "அண்டை நாடான ஜப்பான் மேல்நாட்டைப் போலவே எல்லா வகையாலும் சிறப்புற்றிருக்கும் போது அகண்ட விரிவும் அதிக மக்கள் தொகையும் கொண்ட நம் நாடு இந்நிலையடைந்திருப்பதற்குக் காரணம் என்ன? என்பதை கூர்ந்து கவனிக்கிறார். காலத்துக்கேற்றவண்ணம் அரசியல் பொருளாதாரம் சமூக இயல் ஆகியவைகளை மாற்றிக்கொள்ளாத நாட்டின் கெதி இதுதான் போலும், என எண்ணினார், ஜப்பான் மேல்நாட்டைப் போலவே தன் நாட்டை மாற்றியமைத்துக் கொண்டதால் ஒரு வல்லரசாக பல பெரியநாடுகள் பார்த்து அஞ்சுமளவுக்கு இருப்பதை ஆராய்ந்து அதிலிருந்து ஒரு உண்மையைக் கண்டுபிடித்தார். பழைய முறையில் விவசாயத்தை நம்பிக்கொண்டிருக்கும் நாடு விஞ்ஞானத் துறையில் தொழில் வளப்பங்கொண்ட நாட்டை எந்தக்காலத்திலும் வெல்லமுடியாதெனக் கண்டார். கிருஸ்து மதத்தின் மகிமைதானோ, இப்படி. அயல், நாட்டாரிடம் கருணைகாட்டாமல் நடந்துகொள்ளத் தூண்டுகிறது என்ற சந்தேகத்திலாழ்ந்துவிட்டார். எல்லா வசதிகள் இருந்தும் ஏதோ ஒரு விசை சீன நாட்டுக்கில்லை. அந்த விசையைக் கண்டுபிடித்து இயக்கினால் சீனம் கண்டிப்பாக இயங்கும் என்பதைத் திடமாக நம்பினார். அன்று முதல் அவர் தனி மனிதனுக்குச் செய்யவேண்டிய இரணசிகிச்சையை மாத்திரம் பெரிதென எண்ணவில்லை.
நாட்டுக்கே இரண சிகிச்சை
அன்று முதல் இரண சிகிச்சையை நாட்டுக்குச் செய்யவேண்டிய முறையை கவனித்தார். பெரிய ஆபரேஷன் ஒன்று செய்து நாட்டின் வயிற்றில் வெகு நாளாக வளர்ந்து வரும் மந்தமதி என்ற கட்டியை அறுத்தெடுத்து, நாட்டின் முதுகில் ஓடிக் கொண்டிருக்கும் புரையை நீக்கி, வெளி நாட்டாரால் கொடுக்கப்பட்டிருக்கும் மயக்க மருந்தான அபினியால் ஏற்பட்ட போதையை நீக்கி, அயல் உலக கலைகளைக் கொண்டுவந்து குவித்து, கல்விமுறையை அடியோடு மாற்றியமைத்தாலன்றி தன் நாடு உருப்படாது எனக் கண்டார். இதைச் செய்யத் துணிந்தால் என்னென்ன எதிர்ப்புகள் ஏற்படும், அதன் விளைவுகள், அவற்றால் தான் அடைய வேண்டிய துன்பங்கள் எல்லாவற்றையுமே ஆழ்ந்து சிந்தித்தார். "இவைகளில் ஒன்றையேனும் அதுவரை சீன மக்கள் அடைய முடியாமல் தடுத்து, அயல் நாட்டாரின் கைப்பாவையாய் . ஆடிக்கொண்டிருக்கும் மஞ்சு அரசாங்கத்தை ஒழித்துத் தீரவேண்டும், அது ஒன்றுதான் நாட்டின் முன்னேற்றத்துக்கு பெரும் தடைகல்லாக இருக்கின்றது" என்ற முடிவுக்கு வந்தார் சன்-யாட்-சன்.
“சீனம் சீனர்களுக்கே”
இதே நேரத்தில்தான். மேல்நாட்டார் கொண்டு வந்த ஆயுதங்களால் பட்ட பலமான அடியின் எதிரொலியாக, "சீனம் சீனர்களுக்கே அயல் நாட்டார் ஆதிக்கம் ஒழிக", "அபினி வியாபாரம் ஒழிக", "இலஞ்சம் ஒழிக", "மஞ்சு அரசாங்கம் ஒழிக", என்ற பேரொலி நாட்டின் எல்லா மூலை முடுக்குகளிலும் கேட்டது. உதை வாங்கி வாங்கி பழகி விட்ட ஒருவன் என்றாவது ஒருநாள் அவனாலும் பொறுக்க முடியாத அலவுக்கு பலத்த அடி வாங்குகின்றபோது, மூர்க்கனாய், முரடனாய், காட்டுமிராண்டியாய் மாறிவிடுவதைப்போல, சீன மக்கள் அடி வாங்கி வாங்கி தழும்புகள் ஏறி பழகிப் போயிருந்ததால், ஏழெட்டு வல்லரசுகளின் அடி ஒன்றாகச் சேர்ந்து விழும்போது தாங்க முடியாமல் கொக்கரித்து போர்க்கோலம் கொண்டு மரண தைரியத்தோடு மாற்றாரை புறங்காணப் புறப்பட்டு விட்டார்கள். பலமான எதிர்ப்பு முகாம் அமைக்கப்பட்டுவிட்டது. சீனயந்திரம் பல நாட்களாகக் கெட்டுக் துருப்பிடித்துக் கொண்டிருப்பதற்குக் காரணத்தைக் கண்டு, அந்த காரணந்தான். மஞ்சு அரசாங்கம் என்று முன்பு சந்தேகப்பட்டதை இப்போது ஊர்ஜிதப்படுத்தி விட்டார்கள். அயல் நாட்டார், கொண்டு வந்த துப்பாக்கிகளும், குண்டுகளும் இவர் களுக்கு வீரத்தை பூட்டியிருந்தாலும் சரியாக செப்பனிடப்பட்ட அரசியல் பொருளாதார சமூக அமைப்புகளை இவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும். அதோடு விஞ்ஞான அறிவு பெறவேண்டும். இதற்கென்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தார் சன்-யாட்-சன்.
நால்வர்
இந்த நால்வரையும் சீன நாட்டின் எல்லைக்கோடுகள் என்றழைத்தால் மிகையாது. நால்வரும் நான்கு களங்கரை விளக்கமென விளங்கினார்கள். சீன மக்கள் தேடிப் பிடிக்க வேண்டிய கஷ்டமில்லா விட்ட ஒருவன் என்றாவது ஒருநாள் வேனாலும் பொறுக்க முடியாத அளவுக்கு பலத்த அடி வாங்குகின்றபோது, மூர்க்கனாய், முரடனாய், காட்டுமிராண்டியாய் மாறிவிடுவதைப்போல, சீன மக்கள் அடி வாங்கி வாங்கி தழும்புகள் ஏறி பழகிப் போயிருந்ததால், ஏழெட்டு வல்லரசுகளின் அடி ஒன்றாகச் சேர்ந்து விழும்போது தாங்க முடியாமல் கொக்கரித்து போர்க்கோலம் கொண்டு மரண தைரியத்தோடு மாற்றாரை புறங்காணப் புறப்பட்டுவிட்டார்கள். பலமான எதிர்ப்பு முகாம் அமைக்கப்பட்டு விட்டது. சீன யந்திரம் பல நாட்களாகக் கெட்டுத் துருப்பிடித்துக் கொண்டிருப்பதற்குக் காரணத்தைக் கண்டு, அந்த காரணந்தான். மஞ்சு அரசாங்கம் என்று முன்பு சந்தேகப்பட்டதை இப்போது ஊர்ஜிதப்படுத்தி விட்டார்கள், அயல் நாட்டார், கொண்டு வந்த துப்பாக்கிகளும், குண்டுகளும் இவர்களுக்கு வீரத்தை பூட்டியிருந்தாலும். சரியாக செப்பனிடப்பட்ட அரசியல் பொருளாதார சமூக அமைப்புகளை இவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும். அதோடு, விஞ்ஞான அறிவு பெறவேண்டும். இதற்கென்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தார். சன்-யாட்-சன்.
நால்வர்
இந்த நால்வரையும் சீன நாட்டின் நாட்டின் எல்லைகள் கோடுகள் என்றழைத்தால் மிகையாது. நால்வரும் நான்கு களங்கரை விளக்கமென விளங்கினார்கள்: சீன மக்கள் தேடிப் பிடிக்க வேண்டிய கஷ்டமில்லா மல், தாங்களாகவே தாய் நாட்டுக்குச் சேவை செய்ய தயங்காமல் முன் வந்தார்கள். அதுவரை சீனத்துக்கு எவை எவை? தேவைப்பட்டனவோ அவ்வளவையும் இந்த நால்வர்களே தேடித் தந்தார்கள். நாற்றாண்டுக்கு ஒருவராக் பிறக்காமல், எல்லாரும் ஒரே நூற்றாண்டில். அதுவும் முற்பகுதி பிற்பகுதிகளில் ஒவ்வொருவராக பிறக்காமல் எல்லாரும் சம காலத் தலைவராகப் பிறந்தார்கள். கட்டடத்தை எழுப்பும் தொழிலாளிகள் அனைவருமே ஒன்று சேருவதைப்போல், இசையரங்கில் பல்வேறு வாத்திய விற்பன்னர்கள் ஒன்றாய்ச் சேருவதைப் போல், புரட்சி செய்யப் புறப்படும் மக்கள் கை கோர்த்து ஒன்றாய்க் கிளம்புவதைப்போல், புதிய சீனத்தைக் காண்பதற்காக நால்வரும் ஒன்றாய்த் தோன்றினார்கள். சீன நாடு பல நாட்களாகப்பட்ட கஷ்டத்தின் பலனாக இந்த நால்வர் கிடைத்தனர். நால்வரையும் ஒன்றாக சேர்த்துப் பார்த்தால் நான்கு பக்கங்களிலும் பட்டைத் தீட்டப்பட்ட ஒரே வைரக் கல்லைப்போல ஜொலித்தார்கள்.
1. அவர்களில் என் பூ, Yen-Fu, என்பவர் ஆதம் ஸ்மித், ஜோன்ஸ் ஸ்டுவார்ட் மில், என்ற நிபுணர்கள் எழுதிய பொருளாதார தத்துவங்களை. சீன மொழியில் மொழி பெயர்த்தார்.
2. லின்-ஷூ Lin-Shu என்பவர், சேர்லெஸ் டிக்கன்ஸ், சர்வால்டர்ஸ்கார்ட் என்பவர்கள் எழுதிய சமுதாய நூல்களை மொழி பெயர்த்து தந்தார். 3. லியாங்-சி. சியோ , Liang - Chi- Chio என்பவர், சமத்துவம், சுதந்திரம், ஜனநாயகம், பொதுக்கல்வி, உத்தரவாதமான பிரதிநிதித்துவக் குடியரசு என்பவைகளைப்பற்றி எழுதித் தந்தார்.
4. டாக்டர் சன் -யாட்-சன் மஞ்சு அரசாங்கத்தை ஒழிக்கும் விதத்தையும் அதற்காக ஏற்பட வேண்டிய பொதுவுடமைக் கொள்கை, நாட்டுப் பற்று என்பவைகளைப்பற்றி எழுதித் தந்தார்.
இந்த நால்வர் எழுப்பிய குரலோசையால் தத்துவத் தாகத்தையும், விஞ்ஞான விளக்கத்தையறிய வேண்டுமென்ற ஆர்வத்தையும் தூண்டியது. இதில் அரசாங்கத் தேர்வு முறையை அடியோடு ஒழித்து பள்ளிகளின் பாடபோதனை முறைகளை காலத்திற்கேற்றவண்ணம் மாற்றி அமைத்து, எவைகளை போதிப்பது, எப்படி போதிப்பது, பட்டம் பெறுபவரிகளுடைய அந்தஸ்தை உயர்த்துவது எந்தவகையில், இலக்கிய சுவை மிகுந்த பாடங்களையுண்டாக்குவது எங்ஙனம், பெண்ணடிமையை ஒழித்து, கன்பூஷியசத்தால் உண்டான மாற்றங்களை தற்காலத்துக்கேற்றவாறு மாற்றி, அறிவு சார்ந்த எண்ணங்களைத் தூண்டி. பெரியோர்கள், அதிகாரிகள், அறிவாளிகள் ஆகியோரிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டிய முறைகள், சட்டத்தை மதித்து, அரசாங்க ஊழியத்தில் எள்ளளவும் கடமை தவறாமல் நடந்து கொள்ளவேண்டிய பொறுப்பு, தனி மனிதன் செய்யும் குற்றங்கள் சமுதாயத்தைப் பாதிக்காமல் இருக்க வேண்டியதற்கான தற்காப்பு முறைகள் ஆகிய விதிமுறைகளைக் கொண்ட ஒரு அருமையான கல்விச் சங்கத்தை காண்டனில் Kantan சன்-யாட்.-சன் ஆரம்பித்து வைத்தார். அதன் தலைவராகவும் அவரே இருந்தார். அந்த சங்கத்தை அங்கீகரிக்க வேண்டுமென்று அன்றிருந்த மஞ்சு சர்க்காருக்கு ஒரு மனுவை அனுப்பி வைத்திருந்தார். அங்கீகாரமளிக்க மறுத்துவிட்டது சர்க்கார். இரண்டாவது முறையும் மனுவை அனுப்பி வைத்திருந்தார். அந்த முறையும் மஞ்சு மகாராணியார் அங்கீகாரம் அளிக்க முடியாதென கண்டிப்பாக மறுத்துவிட்டார்.
கல்விச் சங்கம் புரட்சி சங்கமாயிற்று
ஆரம்பிக்கப்பட்டது கல்விச்சங்கந்தான் எனினும் சர்க்காரின் சம்மதம் பெற முடியவில்லை. அதில் காணப்பட்ட திட்டங்கள் மஞ்சு சர்க்காருக்கு மரண ஓலை நீட்டியதைப் போலிருந்தது. தூது வந்த மனுவில் கண்ட திட்டங்களைத் தூக்குத் தண்டனையென நினைத்தாள் இராணியார். கல்வித் திட்டம் கலக்கத்தைக் கொடுத்தது. அதில் கண்ட திட்டப்படிப் பார்த்தால் மஞ்சு சர்க்கார் மரியாதையாக வெளியேறுவது தவிர வேறுவழியில்லாமலிருந்தது, விருந்தாளியை வீட்டினுள் தள்ளிப் பூட்டி அடுப்பில் மிளகாயைப் போட்டதுப்போல் மஞ்சு சர்க்காரின் மூக்கில் நெடியையேற்றியது இந்தத் திட்டங்கள். ஒன்று இந்த திட்டங்களை சர்க்கார் ஏற்றுக்கொள்வதானால் சிங்காதனத்தைக் காலி செய்யவேண்டும், அல்லது சிங்காதனத்தைவிட மனமில்லையானால், இந்தத் திட்டத்தைத் தயாரித்த வர்களை வெளியேற்ற வேண்டும். இந்த இரண்டிலொன்றுதான் செய்ய முடியும். ஆனால் மகாராணியார் பல நாட்கள் உட்கார்ந்து பழகிவிட்ட சிங்கத்தனத்தை இழக்கச் சம்மதிப்பார்களாம். ஆகவேதான் அங்கீகாரம் அளிக்க மறுத்து விட்டார்கள்.
போட்ட திட்டங்கள் பொல்லாத இராணியால் பொடிப் பொடியானதை எண்ணி கல்விச் சங்கத்தை புரட்சி சங்கமாக மாற்றியமைத்துக்கொண்டு, ஆங்காங்கே புரட்சிக்கு ஆட்களைச் சேர்த்துக் கொண்டிருந்தார் சன்-யாட்-சன். இதையறிந்த சர்க்கார் தன் இரும்புக் கைகளை ஓங்கியது. அடி பலமாக விழும் என்று தெரிந்தவுடனே வெளிநாட்டுக்கு ஓட்ட மெடுத்தார் சன்-யாட்-சன். புரட்சி வளரவேண்டுமென்ற பெருநோக்கால் பல நண்பர்கள் தாராள சிந்தையோடு 6000 டாலர்கள் புரட்சி இயக்கத்துக்கு நன்கொடையாக வழங்கினார்கள். சீன நாடு முழுதும் சன்-யாட்-சன் தேடப்பட்டார். ஒற்றர்கள் புகுந்து பார்க்காத இடமில்லை. எங்கும் கிடைக்கவில்லை சன். ஆள் கிடைக்காமல் போகவே சர்க்காரின் பீதி பன்மடங்கு அதிகமாயிற்று. ஆனால் சன்-யாட்-சன். இங்கிலாந்துக்கு ஓடிவிட்டார்.
பனிரெண்டு நாட்கள் சிறையில்
இங்கிலாந்தில் பல நாட்கள் மாறுவேடத்தோடு திரிந்தண்டிருந்தார். இதற்கிடையில் கிருஸ்து மதத்தில் சேர்ந்து கொண்டார். ஒருநாள், மாதா கோயிலுக்கு போகும் வழியில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். வெளி நாடுகளிலேயும் இவரை ஒற்றர்கள் இவ்வளவு அக்கறையோடு தேடியதற்குக் காரணம் என்னவென்றால், சன்யாட்டைப் பிடித்துக்கொண்டு வருபவர்களுக்கு 6 லட்சம் டாலர் பரிசளிக்கப்படும் என்று சீன சர்க்கார் பிரகடனப் படுத்தி இருந்ததுதான்.
1896-ல் இப்படி இங்கிலாந்து சிறையில் அகப்பட்டுக்கொண்ட சன்-யாட்-சன் இந்த அபாயமான செய்தியைத் தன் ஆசானும் நண்பனுமான ஜேம்ஸ் காட்லி என்பவருக்கு எப்படியாகிலும் தெரிவிக்க வேண்டுமென்று ஒரு உபாயம் செய்தார். சிறைக் குள்ளிருந்தபடியே நண்பனுக்குக் கடிதம் எழுதி அதில் தங்க நாணயங்களையோ நோட்டுகளையோ வைத்து ஜன்னல் வழியாக வெளியே எறிந்து விடுவார். ஏனெனில், அதில் வைத்திருக்கும் பண ஆசையால் யாராவது அந்த பணத்தை எடுத்துக் கொண்டு, கடிதத்தைச் சம்மந்தப்பட்டவரிடம் சேர்க்கமாட்டார்களா என்பதுதான் இவருடைய நோக்கம். அதன்படியே எப்படியோ—யார் மூல மாகவோ ஒரு கடிதம் டாக்டர் ஜேம்ஸ் காட்லி அவர்களுக்குக் கிடைத்தது. அவருடைய தலையீட்டால் பனிரெண்டு நாட்களுக்குப் பிறகு விடுதலையடைந்தார்.
ஜப்பானில்
அங்கிருந்து (நேராக ஜப்பானுக்குச் சென்று, பல நண்பர்கள் உதவியால் வெடி மருந்து சாமான் களை சிமிட்டி பீப்பாய்களில் அடைத்து சைனாவுக்குக் கொண்டுவந்தார். அந்த பீப்பாய்களை சீனத் துறைமுகத்தில் இறக்குமதி செய்து கொண்டிருக்கும்போது ஒரு பீப்பாய் தவறி கீழே விழுந்து உடைந்து. தீப்பிடித்துக்கொண்டது. உடனே பரபரப்படைந்த சுங்க அதிகாரிகள், இது சன்யாட்சன் செய்த சதிதான் என தீர்மானித்தனர். உடனே சன்-யாட் சன்னைத் தேட விரைகின்றனர். இதனால் மீண்டும் அமெரிக்காவுக்கு தலைமறைவாக ஓடிப்போகின்றார். அங்கிருந்தபடியே புரட்சிக்குப் பல ஏற்பாடுகளைச் செய்து 1911-ம் ஆண்டு சீனாவுக்குத் திரும்பி புரட்சியை வெற்றிகரமாகச் செய்து மதம் பிடித்தலைந்த மஞ்சு ஆட்சியை கவிழ்த்து விட்டார். இந்தப் புரட்சிக்குப் பெருந்துணை புரிந்தவன், மஞ்சு மகாராணியிடம் முதல் மந்திரி பதவியிலிருந்த யுவான்--ஷி--கே என்பவன்தான். இந்த மாதிரி எதிரியின் கையாளிடம் உதவி பெறுவது அரசியல் மாற்றங்களில் சர்வசாதாரணமானதாகவும், புரட்சி காலங்களில் மிக முக்கியமானதாகவும் கருதப்படுகிறது, மேலும் பிரதமர் யுவான்- ஷி - கே மகாராணியாரின் மந்திரியாரே தவிர சன்- யாட்-சன் வகுத்தத் திட்டங்களுக்கு விரோதியல்ல. பிற்காலத்தில் வேண்டுமானால் யுவான்-ஷி-கே சன்னுக்கு விரோதமாக மாறலாம், அதுவல்ல முக்கியம். இப்போது நடந்து கொண்டிருக்கும் புரட்சிக்கு யார் யாரிடமிருந்து உதவிகள் கிடைக்கின்றனவோ, அவர்கள் நண்பர்களாயிருந்தாலும் சரி, பகைவர் களாயிருந்தாலும் சரி உதவி பெற்று முக்கியமான குறிக்கோளை முடிக்க வேண்டியதுதான் அரசியலின் முக்கியமான தத்துவமாகக் கருதப்பட்டதால் இந்த உதவியை பெற்றதில் ஆச்சரியமில்லையென்று ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கின்றது. அதுவும் இருபதாம் நூற்றாண்டில் இதைப்போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஆதாரங்கள் பலப் பல.
மேலும் இந்த புரட்சியில் யுவான்-ஷி-கேயின் உதவி கிடைக்காமலிருந்தால் புரட்சி படைக்கும், படையின் தலைவனுக்கும் பேராபத்து வந்திருக்கும். எப்படியோ ஒருவிதமாக மஞ்சு முடியாட்சியை ஒழித்து குடியாட்சியை ஸ்தாபித்துவிட்டார்கள். மன்னர்களாட்சியின் கடைசி ஏடு காலச்சுவட்டிலிருந்து கிழிக்கப்பட்டுவிட்டது. முடிந்தது மஞ்சு சர்க்கார். முடி துறந்தாள் மகாராணி. மக்கள் துன்பத்தை விட்டார்கள். குடியரசுக் கொடி கீழ்க்கோடியிலிருக்கும் பெரிய நாட்டில் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கின்றது. புதியதாகப் பெற்றெடுத்தக் குடியரசுக் குழந்தையைப் போற்றி வளர்க்க வேண்டும். இதுதான் அன்றிருந்த அரசியல் தலைவர்களின் ஒரே கவலை. நாட்டை செப்பனிடும் நற்பணியில் ஈடுபடவேண்டுமென்ற எண்ணத்தால், தனக்கிருந்த குடியரசுத் தலைவர் பதவியை மகாராணியாரிடம் மந்திரியாக இருந்து கொண்டே புரட்சிக்குப் பேருதவி புரிந்த யுவான்-கி-ஷே என்பவரிடம் ஒப்படைத்தார் சன்.
துரோகி
தனக்குக் குடிரசுத் தலைமைப் பதவி வந்தவுடனே, முன்பு மகாராணியாருக்கும் மஞ்சு சர்க்காருக்கும் துரோகியாக இருந்ததைப் போலவே குடியரசுக்கும் நாட்டு மக்களுக்கும் துரோகியாய்விட்டான். தன் சொந்த நலத்தைப் பெருக்குவதற்காக ஜப்பானிடம் ஏராளமான கடன் வாங்கிவிட்டான். தன்னிஷ்டம் போல் நடக்கத் தொடங்கிவிட்டான். இதனால், வெற்றிப் பாதையில் இரண்டோர் அடிகள் தள்ளாடித் தள்ளாடி அடி எடுத்து வைத்துக்கொண்டிருக்கும் குடியரசுக் குழந்தை பயத்தால் திரும்பப் பார்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதைக் கண்டித்த சன்-யாட்-சன்னுக்கு விரோதியாய் விட்டான் யுவான் - ஷி -கே.
மறு மணம்
சன்னின் முதல் மனைவி இறந்து விட்டதால், 1915-ல் தன்னிடம் ஷாங்காயில் காரியதரிசியாக வேலை பார்த்தவளும், சியாங்-கே- ஷேக்கின் மனைவிக்கு மூத்தவளுமான ஷங்-லிங்-சிங் என்பவளை மறுமணம் செய்து கொண்டார். இதன் பிறகு பொதுநலத் தொண்டர்களுக்குக் கிடைக்க வேண்டிய குடல் நோய்தான் சன்யாட்சன்னுக்கு சன்மானமாகச் கிடைக்கிறது. கடைசி காலத்தைக் காட்டும். அறிகுறி. நாட்டின் நோயைப் போக்கிய இவரே ஒரு டாக்டர்தான். எனினும் தன் நோயை ஏன் போக்கிக்கொள்ளவில்லை என்று கேட்க முடியும், சர்க்காரின் பயங்கரமான கட்டளைகளுக்கெல்லாம் அடிபணியாதவர், கண்டத்துக்குக் கண்டம் கடல் தாண்டிச் சென்றவர், குடல் நோயிலிருந்து குணமடைய முடியவில்லை. நெருப்போடு விளையாடியவர்கள், பீரங்கியின் வாயில் மண்ணையடித்தவர்கள், நீரை எதிர்த்துப் போராடியவர்கள் மற்ற எவராயிருந்தாலும் நோயோடு போராட முடிவதில்லை. அதிலும் அந்த நோய்தான் தனக்கு நிரந்தரமான ஓய்வளிக்கப்போகின்றதென்று தெரிந்துவிட்டால் அதை எதிர்த்துப் போராடுவது வீண் வேலையாகும். ஆகவே அதை நன்றாக உணர்ந்த சன் படுக்கையில் சாய்ந்துவிட்டார். சிதைய இருந்த சீனத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் சிறகடித்தப் பறவை போல் பறந்து, பங்கப்பட்டிருந்த சீன மக்களை சிங்க ஏறுகளாக்கிய சன்-யாட்-சன், சிறகொடிந்த பறவை போல் படுக்கையில் படுத்துக் கொண்டார்.
சீனத்தின் செங்கதிரோன் அஸ்தமிக்கும் நேரம் வந்து விட்டது. இனி உதயமே இல்லையா உத்தமர்கள் ஆயிரக்கணக்காக அன்றாடம் கண்ணீர் சொரிந்தனர். குடல் நோய் நாளுக்கு நாள் அதிகம், ஒரு வாரத்துக்கு முன்புதான் எழுந்து உட்கார்ந்தார். அதற்கடுத்த நாள் ஆள் தூக்கினான், ஐந்தாம் நாள் உணவு ஒரே வேளை. நான்காம் நாள் அதுவுமில்லை, மூன்றாம் நாள் மயக்கம், ஆட்கள் அடையாளம் தெரியவில்லை, நேற்று பேச்சிருந்தது, இன்று அதுவும் நின்று நினைவும் மாறிவிட்டது. கண்களைச் சுழல் விளக்காக்கினார். காலத்தின் கோர வாயில் குதித்துவிட்டார் என்று 1925-ம் ஆண்டு மார்ச்சு திங்கள் பனிரெண்டாம் நாள் சீன மக்கள் அழுது புலம்பிவிட்டனர்.
சவ அடக்கம்
சாதாரணமானவரல்ல சன்- யாட்சன். இங்கிலாந்தின் சிறைச்சாலை, ஜப்பானின் மருந்துக் கிடங்கு, அமெரிக்காவின் அரசியல் தலைவர்களாயிருந்த அனைவர்க்குமே அறிமுகமானவர், உலகத்தை அவர் அறிமுகப்படுத்திக்கொள்ளவில்லை. உலகம் அவரை அறிமுகப்படுத்திக்கொள்ளவில்லை. வல்லமை பொருந்தியது என்று பெயரளவில் இருந்த மஞ்சு சர்க்கார் அவரை உலகத்துக்கு அறிமுகப்படுத்திவிட்டது. ஆகவே அவருடைய முடிவை அகில உலகத்துக்கும் ஒலிபரப்பப்பட்டது பதினெட்டு நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் சவ அடக்கத்துக்கா
சாசனம்
தான் சாவதற்கு முன்பு சாசனம் ஒன்று எழுதி வைத்திருந்தார் அதில் :--
"நாற்பது ஆண்டுகளாக என் நாட்டு மக்களின் புரட்சி இயக்கத்திற்காக நான் இடைவிடாமல் உழைத்து வந்திருக்கின்றேன், சீனா சுதந்திரம் பெறுவதுதான் அதன் நோக்கம். இந்த நாற்பது ஆண்டுகளில் நான் பெற்றுள்ள அனுபவத்திலிருந்து இந்த நோக்கத்தை முடிப்பதற்காக பெருவாரியான மக்களை விழிப்படையச் செய்து, உலகத்தின் மற்ற நாட்டார்கள் நம்மை சமத்துவமாக நடத்துகின்றவர்களோடு நாமும் நேசம் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகின்றேன்."
"புரட்சி இன்னும் முற்று பெறவில்லை. நான் எழுதி வெளியிட்ட நூல்களான, தேசிய புனர்நிர்மாணம், குடியரசின் முக்கிய அம்சங்கள், ஆகியவைகளிலும், தேசிய பிரதிநிதிகளின் முதல் கூட்டத்தின் அறிக்கையிலும் கூறப்பட்டுள்ள தத்துவங்களையும் கொள்கைகளையும் இடைவிடாமல் பின்பற்றி நம் நோக்கம் முழுவதும் நிறைவேறும்படி நடக்க வேண்டுமென்று என் சகோதர ஊழியர்களைக் கேட்டுக் கொள்ளுகின்றேன்."
"மக்களின் மாநாட்டைக் கூட்டி, இப்போதிருந்து வரும் அநீதி நிறைந்த ஏற்றத்தாழ்வான உடன்படிக்கைகளை ரத்து செய்ய வேண்டுமென்று சமீபத்தில் சிபார்சு செய்யப்பட்ட காரியத்தை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் நிறைவேற்ற வேண்டும். இது என்னுடைய முழு மனதான வேண்டுகோளாகும்.
மார்ச்சு 11, 1925. (ஒப்பம் ) சன்வென்.
மனைவிக்கு
நான் பொதுப் பணத்துக்கு வாரிசாக என் மனைவியை நிர்ணயிக்கின்றேன் என்றோ, உடனுழைத்த தோழர்கள் யார்மீதும் எனக்கு நம்பிக்கை இல்லையென்றோ, அவர் சொல்லவில்லை. அல்லது பொதுப் பணத்தின் ஒரு பகுதியைத் தன் தியாகக் கூலியாக அவர் பெறவில்லை. அவர் தன் மனைவிக்கு விட்டுப்போன சொத்தைப் பாருங்கள். "நான் பிறந்த கிராமத்திலிருக்கும் என் மூதாதையரின் வீடும், என் பழைய உடைகளையுந்தான் என் மனைவிக்கு உரிமையாக்குகின்றேன். இவற்றை அவளுக்கு சொத்தென்று சொல்லமுடியாது, என் நினைவுப் பொருள்களாக வைத்துக்கொள்ளட்டும்."
(ஒப்பம்) சன்வென்.
பழைய வெறி
காலஞ்சென்ற சன் -யாட்-சன் தனக்குப் பிறகு மக்களின் நண்பனாக இருந்து குடியரசை செம்மையாக நடத்துவான் என்று எவ்வளவோ நம்பிக்கையோடிருந்தார் என்பதும், அவர் கண்முன்பாகவே தகாதனச் செய்துவிட்டது மாத்திரமன்னியில் தனக்கு விரோதமாக மாறிவிட்டதையும், சீனம் மீண்டுமோர் நல்லவனைத் தேடியலைய வேண்டியிருக்கின்றதே என்ற சிந்தை கலக்கத்தோடு தன் சிரத்தை சாய்த்தார். அவர் எண்ணியபடி யுவான்-ஷி-கே தன்னை ஒரு சர்வாதிகாரியாக்கிக் கொண்டு மக்களைக் கொடுமைப்படுத்த ஆரம்பித்துவிட்டான். பழைய மஞ்சு சர்க்கார் வெறியில் பாதி தனக்கும் உண்டெனக் காட்டிக்கொண்டான். தேரைக்குப் பயந்து தேளை மிதித்ததைப் போலாயிற்று சீனத் தின் நிலை. உரத்தக் குரலில் உரிமையைக் கேட்டவர்களை ஒரு வெறி பிடித்த சர்க்கார் என்னென்ன செய்யுமோ அதையே இவனும் செய்யத் தலைப்பட்டான். வயிற்றுவலி போய் குடல்வலியும் கண்வலியும் கூடவே தலைவலியும் வந்ததைப்போலாய் விட்டது. மஞ்சு சர்க்காரைத் தொலைத்த மக்கள் இந்த மாபாதகனை எப்படி தொலைப்பது என்ற பீதியில் மீண்டும் அகப்பட்டுக் கொண்டார்கள். தக்க வீரன் கிடைக்கவில்லை, தவித்தனர். ஜப்பானிடம் ஏராளமான கடன் வாங்கிக் கையில் வைத்துக் கொண்டு எதிர்க்க வருகின்றவர்களை பணக் குண்டா லடித்து பல்லைப் பிடிங்கி விடுகின்றான். மறுபடியும் ஓர் பயங்கரச் சூறாவளி சீன நாட்டை வளைத்துக் கொண்டது.
தோன்றினான்
குறிப்பு - மீண்டும் வரலாற்றை 1837-க்குக் கொண்டு போகின்றோம். இங்கே மீண்டும் சன்-யாட்-சன் பெயர் அடிபடுகிறது. வாசகர்கள் வசதிக்காக.
1887-ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 31-ம் நாள் சிக்கோ Chicko என்ற ஊரில் சு-ஆன் என்பவரின் இரண்டாவது மனைவியின் வயற்றில் பிறந்தான் சியாங்-கே-ஷேக். சிக்கோ என்றவூர் ஒரு மலையடிவாரத்திலிருந்தது. மலையடிவாரத்திலுள்ளவர்களில் பிறப்பவர்களுக்கு சீனத்தில் அதிக மரியாதையுண்டு. ஏனெனில் சீன் ஞானிகள் எல்லாம் கடைசி காலத்தில் மலைகளுக்குப் போய்விடுவது வழக்கமாம். ஆகவே மலை அல்லது மலையடிவாரங்களில் பிறப்பவர்களுக்கு மேன்மையையும் நம்பிக்கையையும் தந்து வந்தார்கள். மேலும் ஷேக்கின் தந்தை கிராம பஞ்சாயத்துகள், சண்டை சச்சரவு முதலான தகராறுகளில் நியாயத்தை வழங்கும் நீதிபதியாக இருந்ததால் பலருக்கு அறிமுகமானவராக இருந்து வந்தார். அதனால் அவருக்குப் பிறந்த ஆண் குழந்தையைப் பற்றி ஞானியாவான், தீர்க்க தரிசியாவான் என்றெல்லாம் பேச ஆரம்பித்தார்கள்.
ஷேக், தன்னுடைய ஐந்தாவது வயதில் தாயையும், ஒன்பதாவது வயதில் தந்தையையும் இழந்து விட்டதால், தன் சிற்றன்னையான தன் தந்தையின் மூன்றாவது மனைவியால் வளர்க்கப்பட்டு அந்த கிராமப் பள்ளிக்கூடத்திலேயே படித்துக் கொண்டிருந்தார்.
அதுவும் ஒரு நன்மைக்குத்தான்
பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே வீட்டில் பலவித வேலைகளைச் செய்ய வேண்டி வந்தது. தாய் தந்தையற்றக் குழந்தையை இப்படி வீடு கூட்டச் செய்வதும், சாமான்களைத் துலக்கச் செய்வதும், தண்ணீர் கொண்டுவரச் செய்வதும் சரியல்லவென்று அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஷேக்கின் சிற்றன்னையைக் கண்டிப்பார்கள். அந்தம்மையார் மாற்றாந்தாயின் மனப்பான்மையால் இதைச் செய்யவில்லை என்பது ஷேக்கின் மூலம் தெரிகிறது. தனக்குக் குழந்தைகள் இல்லாத காரணத்தால் ஷேக்கை வெகு பிரியமாக வளர்த்தார்கள். கடமைக்காகவோ, பெருமைக்காகவோ வளர்க்கவில்லை. மக்களில்லாதவர்கள் மற்ற மக்களை எவ்வளவு அன்பாக நடத்துவார்களோ அதைவிட மேலாக ஏறக்குறைய ஈன்ற தாயைப் போலவே ஷேக்கை வளர்த்தார்கள், என்றாலும் மேற்சொன்ன வேலைகளை வாங்கத் தவறவில்லை. ஏற்கெனவே ஏழைக் குடும்பமாகையால், ஒரு வேளை தானும் ஷேக்கை விட்டுப்பிரிய நேர்ந்தால் அவன் பிழைக்கத் தெரியாமல் பிச்சைக்காரனாக தெருவில் நின்று தவிக்கக் கூடாது. எப்படியாகிலும் எந்த வேலையையாகிலும் கண்ணியமாகச் செய்து அவன் பிழைத்துக்கொள்ள வேண்டும். எந்த விதமான பரம்பரை சொத்தை நாம் அவனுக்குத் தேடி. வைக்காவிட்டாலும் பிழைக்க வழியையாகிலும் நாம் அவனுக்குத் தேடிக் கொடுப்போம் என்பது தான் அந்தம்மையாரின் அந்தரங்க எண்ணம். பற்பலர் பற்பல விதமாகப் பேசித் தீர்த்தனர். எனினும் ஷேக்கின் பிற்கால வாழ்க்கை அண்டை அயலார் ஷேக்கின் சிற்றன்னையின் பேரில் சுமத்திய குற்றம் சாட்டுகள் அவ்வளவும் பொய்யென நிரூபிக்கின்றது.
பிறகு, பெங்-லு, லுங்-சிங் ஆகிய இரண்டு மத்திய தரப் பள்ளிக்கூடங்களில் படிக்கின்றார். பள்ளிக்கூடத்தில் நடக்கும் எல்லாவித. விளையாட்டுகளுக்கும் ஷேக்தான் தலைவன். தனக்கு இராணுவத்தில் சேர்ந்துகொள்ள வேண்டுமென்று ஆசை.
பழக்கப் புரட்சி
அன்றிருந்த சீன மாணவர்கள் சிறிய ஜடையைப் பின்னிக் கொண்டிருப்பார்கள். அந்த ஜடையின் மூலந்தான் ஒருவனுக்கிருக்கும் ராஜவிசுவாசத்தைக் காட்டமுடியும் என்பது சீனத்தின் கொள்கை. ஆகவே எல்லா இளைஞர்களும் கண்டிப்பாக ஜடையைப் பின்னிக் கொண்டிருக்கவேண்டும். யாரும் அதைத் துண்டித்தெறியமாட்டார்கள். இந்த சியாங்-கே-ஷேக் ஒருவர்தான் தன் பின்னலை வெட்டி எறிந்துவிட்டார். இதை நாம் ஒரு சாதாரண விஷயம் என்போம். சீனத்தில் அப்படி இல்லை. இப்படித் துணிந்து செய்த இந்த மாணவனைச் சந்தேகித்தது சீன சர்க்கார். புரட்சிக்கு வித்தூன்றாவிட்டான் மாணவன் என்றறிந்தவுடன் ஒரே பரபரப்பு உண்டாய்விட்டது, பின்னலைக் கத்தரிப்பது அங்கே ஒரு சாதாரண விஷயமா என்ன. சீன தேசத்தான் ஒருவன் பின்னலை வெட்டியெறிந்தான் என்றால். மஞ்சு சர்க்காரின் மணிமுடியைத் தட்டிவிட்டான், சிங்காதனத்தைத் தூள் தூளாக்கினன், பீகிங் கோட்டையை முற்றுகையிட்டான். சிறைக் கதவுகளைத் திறந்துவிட்டு விட்டான், சட்டத்தை உடைத்தான், சர்க்காரைத் திட்டினான். சண்டமாருத இராணுவத் தமுக்கின் வாயைக் கிழித்தான் என்பதைப்போன்ற பயங்கரச் செயலாயிற்றே. ஆகவே சர்க்காரின் கண்கள் ஷேக்கின் மேல் படாத நேரமில்லை,
இராணுவ கல்லூரி
இதையறிந்த ஷேக் ஜப்பானிலுள்ள இராணுவ கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டுமென்று ஜப்பானுக்குச் சென்று கல்லூரிக்கு மனு போட்டார். மனு தள்ளப்பட்டது. கல்லூரியில் சேர ஜப்பான் சர்க்கார் ஷேக்கை அனுமதிக்கவில்லை. ஏனெனில் சைனாவிலிருந்து ஜப்பான் இராணுவக் கல்லூரியில் சேர விரும்புவோர் சீன சர்க்காரின் நற்சாட்சிப் பத்திரம் கொண்டுவர வேண்டும். அது ஷேக்கிடம் இல்லை. படிக்கும்போது பின்னலை வெட்டி எறிந்த ஷேக்குக்கு நற்சாட்சிப் பத்திரம் எப்படி கிடைக்கும். ஆகவே மறுபடியும் தன் தாய் நாட்டுக்கே திரும்பி வந்து பா-ஓடிங் எனும் இராணுவ கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்.
ருசிகரமான சம்பவம்
சீன இராணுவ கல்லூரியின் ஆசிரியர்களில் ஜப்பானியர் ஒருவர் இருந்தார். ஓர் நாள் அவர் பேசத் தொடங்குமுன் கொஞ்சம் மண்ணை எடுத்து மேஜைமேல் வைத்துத் தட்டையாக சமப்படுத்தி, "இந்த மண்தான் சீன நாடு, இந்த மண்ணில் நாற்பது கோடி கிருமிகள் இருக்கின்றன. அந்தக் கிருமிகளைப் போன்றவர்கள்தாம் சீன மக்கள்" என்று கேலியாகவும் கிண்டலாகவும் சொன்னார். உடனே சியாங் - கே - ஷேக் மேஜையைத் தாவிப்பாய்ந்து, அதன்மேல் இருந்த மண்ணை எட்டு கூறாக்கி -ஜப்பானியர்கள் ஐந்து கோடி பேர், ஆகையால் இந்த மண்ணின் எட்டாவது கூரில் இருக்கும் 5 கோடி கிருமிகளைப் போன்றவர்களா ஜப்பானியர்கள் என்று ஆத்திரம் பொங்கக் கேட்டார். பேசவந்த பேராசிரியர் தலை குனிந்து வெளியேறினார். இந்தச் செய்தியறிந்த ஜப்பான் மனக்கலக்கமடைந்தது. எனினும் இளைஞன் தைரியத்தை அதனால் போற்றாமல் இருக்க முடியவில்லை.
1907-ல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஷின்போ -கோகியோ , Shinbo-Kokio என்னும் இடத்திலிருந்த இராணுவ கல்லூரியில் சேர்ந்து பீரங்கிப்படை தளகர்த்தனாவதற்கு படித்தார். அங்கே படித்து கொண்டிருக்கும் போதுதான் 1910-ல் Tung-Meng-Uhi டங்-மெங்-ஹி என்ற சீனப் புரட்சி சங்கத்தில் டாக்டர் சன்-யாட்சன் பேசியதை முதன் முதலில் கேட்டார். பிறகு அவரைத் தனியாகச் சந்தித்துப் பேசினர்.
புரட்சித் தொடக்கம்
1911-ம் ஆண்டு அக்டோபர் 10-ந்தேதி சீனப் புரட்சியின் முதல் நாள், புரட்சியுகம் பிறந்து விட்டது. இம்முறை யாராலும் தடுக்க முடியாத அளவுக்கு புரட்சி பூகம்பம் அதிருகிறது. இதை டோக்கியோவிலிருந்து அறிந்த சியாங் - கே ஷேக் ஜப்பான் இராணுவ கல்லூரியிலிருந்து விடுமுறைப் பெற்றுக்கொண்டு தாய்நாட்டுக்கு வந்து புரட்சியில் இரண்டறக் கலந்துவிட்டார். இந்த ஆண்டுகளிலெல்லாம் சன் யாட் சன்னுக்கு உதவியாக இருந்திருக்கின்றார். இங்கேதான் தன் சிற்றன்னையைப் பற்றி மிக உருக்கமான சொற்களை வெளியிடுகின்றார்.
"என்னை என் சிற்றன்னை கடுமையாக நடத்தியதாக பலர் ஆத்திரமடைந்தனர். இப்போது நான் இராணுவத்தில் இவ்வளவு கடுமையான வேலை செய்வதற்கு உதவியாக இருந்தது, என் இளமையில் வருங்கால தீர்க்க தரிசனத்தோடு பழகியது தான்,"என்கிறார்.
புரட்சி சங்கம்
சன்-யாட்-சன் அவர்களால் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட கல்விச் சங்கம், அரசாங்க அனுமதி கிடைக்காத காரணத்தால் புரட்சி சங்கமாக மாறியதையும் முன்பு குறிப்பிட்டிருக்கிறோம். அது நாளடைவில் வளர்ச்சியடைந்து கொமிங்டாங் கட்சி என்று பெயர் பெறுகிறது. இது முழுதிலும் அரசியல், நோக்கங்களையே அடிப்படையாகக் கொண்டிருப்பதால், சமூக சீர்திருத்தச் சங்கம் ஒன்று தேவைப்படுகிறது. சியாங்கே ஷேக்-ஒரு பக்கம் தன் அரசியல் ஆசானுக்குத் துணையாக - கோயிங்டாங் கட்சியை வளர்த்துக்கொண்டு, மற்றோர் பக்கம் 'நவஜீவன்' என்ற பெயரால் ஒரு மறுமலர்ச்சி இயக்கத்தையும் ஆரம்பித்து நடத்திக் கொண்டு வருகின்றார். சமுதாய சீர்திருத்தமும், பழைய கலைகளைத் திருத்தி தற்காலத்துக்கேற்ற முறையில் அமைத்துக் கொள்வதும், விஞ்ஞானத துறையில் முன்னேற்றமடைந்து மக்களுக்கு நல்வாழ்க்கையளிக்க வேண்டுமென்பவைதான் இந்த மறுமலர்ச்சி இயக்கத்தின் ஜீவாதாரமான கொள்கைகளாக இருந்தன. இதை ஷேக் சீன நாடு முழுதும் பரப்பினார்.
1923-ல் கொமிங்டாங் கட்சி இரண்டாவது, புரட்சியை நடத்துகிறது. இந்த புரட்சியில்தான் கம்யூனிஸ்ட் கட்சி கொமிங்டாக் கட்சியோடு ஒத்துழைக்கிறது. அதோடு ஒத்துழைத்தது மட்டிலுமல்ல கொமிங்டாங்கட்சியை வலுப்படுத்துகின்றார்கள் கம்யூனிஸ்ட்வாதிகள்.
புரட்சி அரசாங்கம்
இந்த புரட்சியின் பயனாக 1923 ஜனவரி திங்கள் 23-ம் நாள் காண்டன் நகரத்தில் புரட்சி அரசாங்கசம் அமைக்கப்படுகிறது. கொமிங்டாங் -கம்யூனிஸ்டு ஆகியோரின் கூட்டு சர்க்கார் அமைகிறது. மஞ்சு சர்க்கார் மரண கீதம் பாடிவிட்டது. இனி மக்கள் இதயப் பூங்காவில் பொது உடமைப் பூக்கள் பூத்துக் குலுங்கி அதன் வாசம் நாடு முழுதும் பரவும் என நம்பினர். இந்த எண்ணத்தோடுதான். ஷேக் ரஷ்யாவுக்குச் சென்று அங்கிருக்கும் அரசியல், முறைகளையும் - புரட்சியினால் ஏற்படுகிற பலாபலன்களையும், புரட்சிக்குத் தொடக்கத்தில் என்னென்ன தேவை என்பதை நேரில் கண்டு எந்த நாட்டிலும் புரட்சி ஏற்படுவதானால் முதன் முதலில் இராணுவம்தான் தேவை என்ற முடிவுக்கு வந்தார். அவர் கொண்ட முடிவின் சின்னமாக 1924-ம் ஆண்டு ஜனவரி 16-ல் பம்போவா என்ற இடத்தில் ஒரு இராணுவக் கல்லூரியைக் கட்டி முடித்து அதை டாக்டர் சன்-யாட்-சன் அவர்களைக் கொண்டு திறந்து வைக்கின்றார்.
டாக்டர் சன்-யாட்-சன் கம்யூனிஸ்டுகளோடு ஒத்துழைத்தது மாத்திரமல்லாமல், சைனாவின் முதல் சோவியத் தூதுவரான காரகான் என்பவபரிடத்திலிருந்தும், சைனைவைத் திருத்துவதற்கென்றே ரஷ்யாவில் இருந்து அழைத்து வரப்பட்ட Borodin போரோடின் என்பவரிடத்திலிருந்தும் பல யோசனைகளைத் தெரிந்துகொண்டு, இவர்கள் மூலமாகவே ரஷ்யாவிடமிருந்து பல உதவிகளைப்பெற்று கொமிங்டாங் அரசரங்கத்தை வலுப்படுத்திக் கொண்டார்கள். அந்த பொன் னானக் காட்சியைக் கண்ணால் காணும் வரையிலும் சன்-யாட்-சன் உயிரோடிருந்தார்.
பெரிய வேலை நிறுத்தம்
1925 மே திங்களில் ஹாங்காங்கில் 15 மாதங்கள் ஒரு பெரிய வேலை நிறுத்தம் நடைபெறுகிறது, அதில் பிரெஞ்சு பிரிட்டிஷ் சாமான்களை வாங்காமல் பகிஷ்கரித்தனர். இந்த வேலை நிறுத்தத்தை முன் நின்று வெற்றிகரமாக நடத்தியவர்கள் கம்யூனிஸ்டுகள், இது ஷேக்குக்குப் பிடிக்கவில்லை. யார் செய்தாலும் நாட்டுக்கு நன்மை கிடைத்தால் சரி, என்ற அளவில் தாராள மனப்பான்மை நாகரிக மிக்க நாடுகளுக்கே இன்னும் வரவில்லையே. சமீப காலம் வரையில் அரசியல் காற்றே அடிக்காத சீனத்துக்கு மாத்திரம் எளிதில் வந்துவிடுமா? அந்த மண்ணில் தோன்றியவர்தானே - ஷேக், ஆகவே இதைப் போன்ற வேலைகளை யாரோ நடத்திவைக்கின்றார்கள் என்று நினைத்துக் கொண்டார். இந்த எண்ணம் நாளடைவில் வலுவடைந்து - ஷேக் ஒரு பக்கமும், கம்யூனிஸ்டுகள் அவருக்கு எதிராகவும் நின்று பகைத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. இவர்கள் மேல் கொண்ட ஆத்திரத்தின் விளைவாக, காண்டனில் அமைக்கப்பட்ட சர்க்கார் முறையே அவருக்குப் பிடிக்காமல் பார்லிமெண்டரி முறைப்படி ஜனநாயக சர்க்காரை அமைக்கலாமா என்ற முடிவுக்கும் வந்துவிட்டார். இந்தக் கொள்கை இருதரத்தாருக்கும் இருந்த மன வேற்றுமையை இன்னும் அதிகமாக்கிற்று. அன்று முதல் ஷேக்கின் பேச்சில், எழுத்தில், பிரசங்கத்தில், கம்யூனிஸ்டுகள் என்பதற்குப் பதில் கொள்ளைக்காரர்கள் என்றே உச்சரிக்க ஆரம்பித்தார். தலைமைப் பதவி என்றாலே தலைக்கிறுக்கு ஏறி மாற்றுக் கட்சிகளின் உண்மையான பெயர்களை இட்டழைக்காமல் வேறு பெயரை இட்டழைக்கும் சுயநலத் தலைவர்கள் இல்லையா அந்த நோய் ஷேக்குக்கும் பிடித்துக் கொண்டது.
ஒரு சமயம் இந்த சர்ச்சைகளில் ஷேக் இறங்காமல் முன்னாடியே ஏற்பட்ட கூட்டுறவைப் பலப்படுத்தி ஜப்பான் மேல் படையெடுத்திருந்தால் நன்மையாக இருந்திருக்குமோ என்ற அளவுக்கு வந்துவிட்டது அன்றைய சினத்தின் அரசியல் நிலை.
லட்சம் பேர் ஒப்புக்கொண்டனர்
1926-ல் ஜர்மனியில் நடந்த கொமிங்டாங் மாநாட்டில் காலஞ்சென்ற சீனத்தின் சீர்திருத்தவாதி டாக்டர் சன்-யாட்-சன் அரசியல் சம்மந்தமாக தந்த மூன்று தத்துவங்களை தீர்மான வடிவத்தில் எழுதி அதை அந்த மாநாட்டில் கூடியிருந்த ஒரு லட்சம் பேர்கள் ஏக மனதாக ஒப்புக்கொண்டனர். உள்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் - இவ்வளவு கொந்தளிப்புக்கிடையே 1926 ஜூலை திங்கள் 9-ம் நாள் சியாங்-கே- ஷேக் கொமிங்டாங் படையின் தளபதியாக நியமிக்கப்பட்டார். பூ-பெய்-பூ என்ற ஒரு எதிர்க்கட்சியின் இராணுவ தளகர்த்தர் கீழிருந்துகொண்டே Hunan-ஹனான், Han- Ko ஹாங்கோ , Han-yun-ஹான் -யான், Hongo ஹாங்ஙோ முதலிய மாகாணங்களை கொமிங்டாங் சர்க்காருக்குக் கீழே கொண்டுவந்தனர். அதே போல், சன்-சிவான்-பாங் என்ற மற்றொரு தளகர்க்தரின் கீழிருந்து கொண்டே, கி-யாங்-அ, செகி-யாங், ஹூ-கியான், ஆன்-வெய்-கியாங் முதலிய மாகாணங் சுளையும் பலாத்காரமாகப் பிடித்துக்கொண்டார்.
பாம்பு படம் எடுக்கிறது
1927 மார்ச்சு 15-ம் நாள் நான்கிங் என்ற நகரத்தில் சிறு கலகம் ஒன்று நடக்கின்றது. அதில் படை வீரர்கள் குடிகளிடத்தில் சற்று கடுமையாக நடந்து கொண்டார்கள். இதற்குக் காரணம் கம்யூனிஸ்டுகள்தான் என்று அவர்களைப் பிடித்து சிலரை சிறையிலடைத்து, சிலரைத் தூக்கிலேற்றி இராணுவ சட்டத்தை அமுலாக்கினார், கம்யூனிஸ்டுகளை அடக்க இவர் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு ஆக்கமளிக்கும் முறையில் சில வியாபாரிகளும் பணக்காரர்களும் முப்பது லட்சம் டாலர்களைச் சேர்த்து ஷேக்குக்குப் பணமுடிப்பாக அளித்தார்கள். இதுவல்லாமல் அமெரிக்காவிடமும் பிரிட்டனிடமும் ஏராளமான பணத்தைக் கடன்வாங்கி, பல பெரிய பெரிய தொழிற்சாலைகள், தபால், தந்தி, ரெயில்வே நிலையங்கள், கல்லூரிகள் முதலானவற்றை நிறுவினார்.
மற்றோர் குடியாட்சி
1932-ல் Hein Bing ஹெய்ன்-பிங் குடியரசை ஸ்தாபித்துவிட்டார்கள். அதில் சீன ஜனத்தொகையில் ஆறில் ஒரு பங்கினர் அடங்கியிருந்தார்கள். இந்த நேரத்தில் தான் Civil War உள் நாட்டுப்போர் தொடங்கிவிட்டது. இதை சாதகமாக்கிக்கொண்டு, கிடைத்ததை சுருட்டுவோம் என்று ஜப்பான் சைனாவின் மேல் படையெடுத்து மஞ்சூரியாவைப் பிடித்துக்கொண்டது. ஜப்பான் சர்க்காருடைய இந்த அடாத செயலைக் கண்டித்து தாம். இழந்த மஞ்சூரியாவைத் திருப்பித்தர உத்திரவிட வேண்டுமென்று சைனா சர்வதேச சங்கத்துக்கு மனுச் செய்துகொண்டது,
செத்த பாம்பு
சர்வதேச சங்கம் தங்கள் மனுவைக்கண்டவுடனே துள்ளி எழுந்து ஜப்பானைக் கண்டித்து மஞ்சூரியாவை உடனே வாங்கித் தந்துவிடும் என்று நினைத்த சைனா முற்றிலும் ஏமாந்துவிட்டது. பாவம், சர்வதேச சங்கம் ஒரு செத்தபாம்புக்குச் சமானமானது என்று சைனாவுக்குத் தெரியாது. அது செய்த சதியால் சகிக்கமுடியாத அவமானம் கொண்டனர் சீனர்கள். பேரு பெத்தபேரு, தாகனு நீளு லேது, பெயர் மாத்திரம் பெரிய பெயர்தான், ஆனால் குடிக்கத் தண்ணீரில்லை என்று தெலுங்கில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதைப்போல பெயர் - மாத்திரம் சர்வதேச சங்கம், ஒரு பொடிநாடு ஜப்பான அடக்கமுடியவில்லை. எல்லாம் தொடை நடுங்கிகள் சங்கம், என்று ஆத்திரமடைந்த சீனர்கள் அதிருப்தி கொண்டனர். ஜப்பான் படையெடுப்பு, மஞ்சூரிய வீழ்ச்சி, உள்நாட்டில் அதிருப்தி, ஷேக்கின் சர்வாதிகாரம், கம்யூனிஸ்டுகளின் கலக்கம் ஆகிய சூழ்விலைகள் அவ்வளவும் ஒன்றாகத் திரண்டு உள்நாட்டிலேயே மூன்று போர்முனைகளை யுண்டாக்கிவிட்டது.
உள்நாட்டில்
கொமிங்டாங் கட்சிக்கு - கம்யூனிஸ்டுகளும் ஜப்பானியரும் விரோதிகள்.
கம்யூனிஸ்டுகளுக்கு - ஜப்பானியரும் கொமிங்டாங் கட்சியினரும் விரோதிகள்.
ஜப்பானியருக்கு-கொமிங்டாங் கட்சியினரும் கம்யூனிஸ்டுகளும் விரோதிகள்.
இந்த நிலையில் சீன மக்கள் எந்த விதமான பயத்தை அடைந்திருப்பார்கள் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். ஒரு பக்கம் ஜப்பானியர் தாக்குதல், மற்றொர் பக்கம் கொமிங்டாங் தாக்குதல், பிரிதொரு பக்கம் கம்யூனிஸ்டுகளின் தொல்லை. 'என் கட்சியில் சேரு', 'என் கட்சியில் சேரு' என்ற இழுப்பு. இதன் காரணமாக ஆங்காங்கே ஏற்பட்ட சிறு சிறு கலகங்கள், இவைகளே அடக்க இராணுவ சட்ட அமுல். இவ்வளவுக்குமிடையே செக்கில் அகப்பட்ட எள்ளென நசுங்கினர்கள் மக்கள். தக்க தலைவர்கள் தோன்றியும் தங்கள் நிலையுயராதது கண்டு கலங்கினார்கள். இதை இப்படியே விட்டுவிட்டால் கொலை, கொள்ளைகள்தான் நடை பெறும். ஆனால் இந்த நிலை நீடிக்க முடியாமல் திடீரென ஒரு மாறுதல் ஏற்பட்டது. அந்த மாறுதலையுண்டாக்கியவர் சியாங்-கே-ஷேக்.
தளபதியின் ஓட்டம்
சியாங்-கெ-ஷேக் எப்படியாகிலும் கம்யூனிஸ்டுகளை, நாட்டை விட்டு ஓட்டினாலன்றி சீனத்தில் அமைதி நிலவ முடியாதென்று நினைக்கின்றார். இந்த அவருடைய எண்ணத்தில் நாட்டின் முன்னேற்றம் முதலிடம் பெறவில்லை. தன் கட்சியான கொமிங்டாங் கட்சி ஓங்கி வளர வேண்டுமென்பதும் நாடு அடையப்போகும் நலனுக்கு தன் பெயர் அடிபட வேண்டும் என்பதே அவருடைய முழு நோக்கமாகக் காணப்படுகிறது. உள்ளும் வெளியுமாக இரண்டுவித நோக்கங்களை வைத்துக்கொண்டிருந்த காரணத்தால் ஜப்பானியர்களை விட மிக மோசமான எதிரிகள் கம்யூனிஸ்டுகள்தாம் என்ற முடிவுக்கு அவர் வரவேண்டியிருந்தது. மேலும் அங்கு அன்றிருந்த கம்யூனிஸ்டுகளின் போக்கும் அவ்வண்ணமிருந்தது போலும், ஆகவே அவர் கொண்டிருந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ள முடியாமல் முரட்டுப் பிடிவாதக்காரராய் விட்டார். அதுவே அவருடைய வீழ்ச்சிக்கும் காரணமாகிறது.
தன்னுடைய இராணுவம் முழுவதையும் திரட்டி வடபகுதிக்கு அனுப்புகிறார். அப்படி இவரால் வட பகுதிக்கு அனுப்பப்பட்டப் படைகளுக்கு படு தோல்வி என்று அடிக்கடி செய்திகள் வந்தும், எப்படியாகிலும் வடகோடிக்கப்பால் கம்யூனிஸ்டுகளை விரட்டி விட்டுத்தான் திரும்பவேண்டும் என்று படைத் தலைவர்களுக்கு கண்டிப்பான உத்திரவு போட்டு விடுகின்றார் சியாங் கே-ஷேக்.
இந்த நிலையில் கம்யூனிஸ்டுகளுக்கு இரண்டு தொல்லைகள். ஒன்று :- சியாங் அனுப்பிய படைகள் மூலம், மற்றொன்று :- ஜப்பானியர்களால். இந்த இரண்டு படைகளை எதிர்க்க வேண்டிய சூழ்நிலையில் அகப்பட்டுக்கொண்ட கம்யூனிஸ்டுகள் ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதாவது :--
ஜப்பானியர்களை எதிர்த்துத் தோற்கடித்தால் நாட்டின் பொது எதிரியை தோற்கடித்த நல்ல பெயர் தங்களுக்குக் கிடைக்குமென்று நினைத்தார்கள்.
அடுத்து - சியாங்-கே-ஷேக்கைத் தோற்கடித்தால் அவனுடைய சர்வாதிகாரத்தை ஒழித்து நாட்டில் நல்லாட்சி நிறுவலாம் என்பது மற்றோர் எண்ணம்.
இந்த எண்ணத்தின் அடிப்படையில் ஏற்பட்ட போராட்டம் தொடர்ந்து நடப்பதைப்பற்றி சியாங் - கின் தளபதிகள் யோசிக்கத் தொடங்கினார்கள். நாம் கம்யூனிஸ்டுகளோடு போராடுவது நியாயந்தானா, ஒருகால் சியாங்கின் மனதில் ஏதாவது கெட்ட எண்ணம் குடிகொண்டிருக்குமோ, பொது எதிரி ஜப்பான் நாட்டை நாசமாக்கிக் கொண்டிருக்கும், போது உள்நாட்டு கட்சியின் மேல் சியாங் ஆத்திரம். கொள்வானேன். முதலில் விரட்ட வேண்டியவன் ஜப்பான்காரனா, கம்யூனிஸ்டா என்பதை மிகத் தீவிரமாக சிந்தித்தார்கள். அந்த சிந்தனையில் முதன்மையானவர் சாங்-சியூ-லியாங் என்பவர். கம்யூனிஸ்டு கட்சியின் வரலாற்றையும், பழையகால வேலை முறைகளையும் ஆழ்ந்து யோசித்தார். அதற்காக கம்யூனிஸ்டு தலைவர்களையும் சந்தித்துப் பேசினார்.
இந்த நிலமைகளுக்குப் பிறகு சியாங்கின் தளபதிகள் அனைவரும் ஒன்றுகூடி ஒரு பயங்கரமான முடிவுக்கு வந்தார்கள். அந்த முடிவுதான் தங்கள் தலைவனாகிய சியாங்கைக் கைது செய்வது என்பது. சியாங்கை உள்ளே தள்ளிவிட்டால் நாட்டின் நிலமை சரிபடலாம் என்று நினைத்தார்கள். அவனை வெளியே விட்டுவைத்திருக்கும்வரை ஒருவித தெளிவும் ஏற்படப்போவதில்லையென உறுதியாக நம்பினார்கள். கைதுசெய்து விடுவதென்று ஒருமுகமாக எல்லா தளபதிகளும் 1936-ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 11-ம் நாள் முடிவுக்கு வந்துவிட்டார்கள்.
அதிசயச் சம்பவம்
இந்த சம்பவம் வரலாற்றிலேயே மிக அதிசயமானது. ஏனெனில் காட்டிய பக்கம் துப்பாக்கிகளை ஏந்திச் செல்லவேண்டிய இராணுவத்தினர் கட்டளை யிட்ட தலைவனையே! கைது செய்வதென்பது உலக வரலாற்றில் காணமுடியாத நிகழ்ச்சியாகும். மேலும், எந்த நாட்டு இராணுவமும் அரசியல் விவகாரங்களில் தலையிட்டுக் கொள்வதில்லை. தான் எந்த அரசாங் கத்துக்கு உண்மையாகவும் விசுவாசமாகவும் நடந்து கொள்வதாக ராஜவிசுவாசப் பிரமாணம் செய்து கொண்டார்களோ, அதே அரசாங்கத்தின் தலைவனைக் கைது செய்வதென்பது அதிசயத்திலும் அதிசயந்தான். எனினும், இது சினத்தில் நடந்தது, இதன் எதிரொலி போல் பல நாட்களுக்குப் பிறகு எகிப்து செய்திருக்கிறது. தோல்விமேல் தோல்வி கண்டு உடலில் பட்ட காயங்களை ஆற்றிக்கொள்வதற்குக்கூட நேரமில்லாமல் மேலும் மேலும் தலைவனுடைய கட்டளை சரியாகவோ அல்லது தவறாகவோ எப்படியிருக்காலும் நிறைவேற்றித் தரவேண்டிய வேதனையில் அகப்பட்டுக்கொண்ட இராணுவத் தலைவர்கள் சியாங்-கே-ஷேக்கை டிசம்பர் பனிரெண்டாந் தேதி காலை 6 மணிக்கு சியான் என்ற ஊரில் அவர் தங்கியிருந்த ஓட்டலிலேயே கைது செய்து உயிருக்கு ஒருவித ஆபத்தில்லாமல் பாதுகாவலில் வைக்கவேண்டுமென்றும், இந்த வேலைகளைச் செய்வதற்காக, தளபதிகளில் ஒருவரான சாங்-சியூ-லியாங் என்பவரின் மெய்க்காப்பாளனான, சன் - மிங்-சு என்பவரை நியமித்துவிட்டனர்.
தப்பியோடியும் விடவில்லை
தளபதிகள் செய்திருந்த முடிவுப்படி 1936 டிசம்பர் 12-ந் தேதி காலை 6 மணிக்கு, சியான் என்ற ஊரில் அவர் தங்கியிருந்த ஓட்டலை முற்றுகையிட்டு கலவரம் செய்தனர். வெளியே நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் தன்னைக் கைது செய்வதற்காகத்தான் என்று தெரிந்துகொண்ட சியாங்-கே-ஷேக் ஜன்னல் வழியாக கீழே குதித்து கை கால்களில் காயங்களோடு பக்கத்திலிருந்த மலையில் போய் ஒளிந்து கொண்டார். அங்கேயும் விடாமல் பின்தொடர்ந்து போய் கைது செய்துவிட்டான் சன்-மிங்-சு. ஆனால் சியாங்கை நடத்தி அழைத்துக்கொண்டு வரமுடியவில்லை. ஏனெனில் சியாங் அவ்வளவு காயமடைந்து மயக்கமுற்றுக் கீழே விழுந்து கிடந்தார். ஆகையால் தோளிலே தூக்கிக்கொண்டு வந்து பத்திரமாக பாதுகாவலில் வைத்துவிட்டான்.
விடாப்பிடி
அவரைக் கைது செய்ய வேண்டுமென்று கட்டளையிட்ட தளபதி அவரை சிறையில் சந்தித்து எவ்வளவோ கேட்டுக்கொண்டும் தன் பிடிவாதத்தைத் தளர்த்திக்கொள்ள மறுத்துவிட்டார். இந்த நிலையில் தன்னுடைய செய்கை குற்றமற்றது என்று சியாங்கை தலைவராக் கொண்ட நான்கிங் சர்க்காருக்குச் சொல்லித் தீரவேண்டிய நிலை தளபதி சாங்-சியு-லியாங் என்பவருக்கு வந்துவிட்டது. அதனால் ஒரு நீண்ட அறிக்கைத் தயார் செய்தார். அதில்,
"சியாங்-கே-ஷேக் பலமுறைகளில் பழிவாங்கும் உணர்ச்சியோடு நடந்து கொண்டிருக்கின்றார். தனக்கு பல வழிகளில் போராற்றலிருந்தும் பக்கத் தில் சூழ்ந்திருப்பவர்களுடைய சதியோசனைகளுக்கு அடிபோய் விட்டார். மக்களை சுட்டுத் தள்ள வேண்டிய அளவுக்கு உத்திரவிட அவர் உள்ளம் கெட்டது. அவருடைய அந்த கொடிய உத்தரவில் பல மாணவர்கள் சுட்டுக்கொல்லப் பட்டிருக்கின்றார்கள். கொலைகளை யடக்கவேண்டிய பொறுருப்பிலிருப்பவரே கொலைகளைத் தூண்டுமளவுக்கு கொடியவராய் மாறிவிட்டார். அவரை இன்று கைது செய்து வைத்திருப்பதின் மூலம் சந்தோஷப்படுகின்றவர்கள் அதிகமாக இருப்பார்களேயன்றி துக்கப்படுகின்றவர்கள் அதிகமாக இருக்கமாட்டார்கள். ஒரு பொறுப்புள்ள இராணுவமா இப்படிச் செய்தது என்று சர்க்கார் ஆச்சரியப்படலாம். இது தவிர வேறு வழியோ, சிறந்த முறையோ காணப்படவில்லை. இப்போதும் காலம் கடந்து விடவில்லை. சியாங் தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டால் அவரை உடனே விடுதலை செய்து அவருடைய பழைய கெளரவங்களையளிக்கத் தயாரயிருக்கிறோம். சியாங் இப்படிச் செய்தது நாட்டின் முன்னேற்றத்தைக் கருதி யென்று அவர் சொல்ல முன் வந்தால், அவரை நாங்கள் கைது செய்ததும் மக்கள் முன்னேற்றத்தைக் கருதித்தான் என்ற உண்மையை எங்களாலும் நிலைநாட்ட முடியும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இரண்டில் எது சரி என்பதை விவாதம் ஒன்றினாலேயே தீர்மானிக்க முடியும், என்று எழுதி இந்த அறிக்கையை நான்கிங் சர்க்காருக்கு அனுப்பிவிட்டார் சாங்-சியு-லியாங் என்ற தளபதி. மேலும் சியாங்கை விடுதலை செய்யவேண்டுமானால் கீழ்க்கண்ட திட்டங்களை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் அதில் குறித்திருந்தார். அவை :
1. சைனாவில் கூட்டாட்சி ஏற்படுத்தவேண்டும்.
2. உள் நாட்டுப் போரை உடனே நிறுத்த வேண்டும்.
3. ஷாங்கையில் சிறையில் வைத்திருக்கும் அரசியல் தலைவர்களை விடுதலை செய்யவேண்டும். 4. நாடு முழுதிலும் இருக்கிற எல்லா அரசியல் கைதிகளையும் உடனே விடுதலை செய்யவேண்டும்.
5. மக்களுடைய தேசிய இயக்கத்தை எவ்விதத்திலும் தடை செய்யக்கூடாது.
6. பொதுக் கூட்டங்கள் கூட்டி அந்தந்த கட்சிக்காரர்கள் தங்கள் தங்கள் கருத்துக்களைச் சொல்ல எவ்விதத் தடையும் இருக்கக் கூடாது.
7. காலஞ் சென்ற சன் -யாட்-சன் அவர்களுடைய மரண சாசனத்தை நிறைவேற்ற வேண்டும்.
8. உடனே நாடு முழுதிலும் உள்ள எல்லா அரசியல் கட்சிகளையும் கொண்ட மாநாடு ஒன்று கூட்ட வேண்டும்.
இந்த எட்டுத் திட்டங்களடங்கியது தான் அந்த அறிக்கை.
அதிலும் ஒரு மோசடி
இந்த அறிக்கை நான்கிங் சர்க்காருக்குக் கிடைத்தவுடனே ஏதாவது நல்ல பதில் வரும் என்று ஆவலாக எதிர்பார்த்தனர் தளபதிகள். ஆனால் முற்றிலும் ஏமாந்தனர். சர்க்கார்' இந்த அறிக்கையை வாங்கி குப்பைக் கூடையில் போட்டுவிட்டு சும்மாயிருந்துவிட்டது. ஏனெனில் சியாங்-கேஷேக் இந்த நிகழ்ச்சியின் மூலம் இறந்துவிட்டால் சர்க்காரை நம் தாக்கிக்கொள்ளலாம் என எண்ணி விட்டனர் சர்க்கரை கடத்திக்கொண்டிருந்த மந்திரிகள். தன் தலைவன் சிறையில் வாட, எதிரிகள் திட்டத்தை நீட்ட, ஏதாவதொரு முடிவுக்கு சர்க்கார் வந்தே தீரவேண்டுமென்ற தீவிர எண்ணத்தில் மண்ணைத் தூவியதாக இருந்தது சர்க்காரின் எருமைப் போக்கு. அதிலும் ஒரு மோசடித் தோன்றிவிட்டது, இனி சியாங்குக்கு கழுவாயே இல்லையா என ஏங்கினர் சியாங்கின் மனைவியும் சுற்றத்தாரும்.
சிய பங்கை ஒழித்து விட வேண்டுமென்று நினைத்த ம த்திரிகள் ஒரு முறையைக் கையாளலாம் நினைத்தனர், அதாவது :--
சியாங்-கைதியா!பிருக்கும் ஊரில் குண்டைப் போட்டால் ஒரு சமயம் சியாங் இறந்துவிடக்கூடும், ஆனால் சியாங்கைக் கொல்லுவதற்காகத்தான் குண்டை வீசுகிறார்கள் மந்திரிகள் என்று நினைப்பதற்குப் பதிலாக எதிரிகளைக் கொல்லுவதற்காகவும், சியாங்கைக் காப்பாற்றுவதற்காகவும்தான் இப் படிச் செய்திருப்பார்கள் என்று பொது மக்கள் நினைக்கக்கூடும். ஆனால் இதையே பொதுமக்கள் உ.றுதியாக நம்புவார்கள் என்றும் சொல்வதற்கில்லை. ஏனெனில், முன்பு, சியாங்கைக் கைது செய்த தளபதி நான்கிங் சர்க்காருக்கு சியாங்கை விடுதலை செய்வதென்ற முடிவில் கேட்டிருந்த உறுதிமொழிகளை சர்க்கார் நிராகரித்ததிலிருந்து, சியாங் இடத்தை மந்திரிகள் கைப்பற்ற எண்ணி விட்டனர் என்ற தவறான எண்ணம் பரவிவிடுமோ என்றும் பயந்தனர். ஆனால் செய்து தீரவேண்டிய நிலையில் மந்திரிகளின் பதவி மோகம் அவர்களை மெய்மறந்து கடமையை காற்றில் விடவேண்டிய நிலைக்குக் கொண்டுவந்து விட்டது. சியாங் இறந்து விட்டாலும், அல்லது அவரைக் கைது செய்த எதிரிகள் இறந்துவிட்டாலும், அல்லது இருகரக்காரும் சேர்ந்து அழிந்துவிட்டாலும் நான்கிங் மந்திரிகளுக்கு லாபந்தான். ஏனெனில் சியாங் மாத்திரம் இறந்து விட்டால் நான்கிங் சர்க்காரை சுலபமாகக் கைப்பற்றி விடலாம். அப்படி நடக்காமல் எதிரிகள் இறந்துவிட்டால், எதிரிகளை நாங்கள்தான் கொன்று உங்களைக் காப்பாற்றினோம் என்ற கித்தாப்பைக் காட்டி சியாங்கிடம் மேலும் சில சலுகைகளைப் பெறலாம். இதுதான் மந்திரிகள் விளையாடிய இருமுனை விளையாட்டு.
நடந்தது வேறு
இப்படி நினைத்த மந்திரிகள் எண்ணத்தில் மண் விழுந்தது. மந்திரிகள் இந்த ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கும்போதே சியாங்கின் மனைவியும் மைத்துனனும், சியாங்கின் ஆலோசகரான டோனால்டும் சிறையில் அவரை நேராக சந்தித்துப் பேசி அவர் விடுதலையடையும்படிச் செய்துவிட்டார்கள். இதனால் மந்திரிகள் திட்டம் தவிடுபொடியாய் விட்டது.
விடுதலை
1936 டிசம்பர் 25-ல் சியாங்கை விடுதலை செய்து தளபதி சாங்- சியூ - லியாங் தன் சொந்த விமானத்திலேயே அவரை ஏற்றிக்கொண்டு சோயா என்ற நகரம் வரையிலும் போய், அங்கிருந்து தலைநகரான நான்கிங் வரையிலும் சியாங்கின் சொந்த விமானத்தில் கொண்டு போய் சேர்த்துவிட்டார்.
லியாங் கைது
சியாங்கை பாதுகாவலில் வைத்துக் காப்பாற்றி சர்க்காரிடம் பத்திரமாக ஒப்படைக்க வேண்டுமென்று கொண்டுபோன தளபதி சாங்-கிங்-லியாங் என்ற தளபதியை நான்கிங் சர்க்கார் கைது செய்து இராணுவ உயர் நீதிமன்றத்தின் முன் நிறுத்தி விடுகிறது. பத்து ஆண்டுகள் தண்டனையளித்து விடுகிறது நீதி மன்றம். ஆனால் சியாங் அந்த தண்டனையை உடனே ரத்து செய்து விடுகின்றார். இந்த காரணங்களால் சியாங்கின் உள்ளம் ஒருவித சமாதான நீரோட்டத்தில் ஓடுகிறது.
மாநாடு
1937 பிப்ரவரி 15-ல் ஒரு மாநாடு கூட்டம் அதில் கொமிங்டாங் கட்சிக்காரர்களையும் கம்யூனிஸ்டு கட்சிக்காரர்களையும், இன்னும் பல பெரிய மனிதர்களையும் கலந்துக் கொள்ளும்படிச் செய்து, தன்னைக் கைது செய்தவர்கள் நான்கிங் சர்க்காருக்கு அனுப்பியிருந்த 8 திட்டங்கள் கொண்ட அறிக்கையையும் தான் சிறையிலிருந்தபோது தன்னை சந்தித்த் கம்யூனிஸ்டு தோழர்கள் கூறியவற்றையும், தன் கருத்தையும் விளக்கினார். இதன் காரணமாக இரண்டு கட்சிகளுக்குமிடையே ஒரு சமரசம் ஏற்பட்டது. மாநாடு வெற்றிகரமரக முடிந்தது மாத்திரமல்லாமல், மாநாட்டின் தீர்மானப்படி உள்நாட்டுப் போர் உடனே நிறுத்தப்பட்டது. இருவர் சண்டையிலே கொள்ளையடித்துக் கொண்டிருந்த ஜப்பானியர் பலம் குன்றியது.
ஐந்து மாதங்களுக்குப் பிறகு அதாவது 1937-ம் ஆண்டு ஜூலைத் திங்கள் 7-ம் நாள் ஜப்பானியர் இரண்டாவது முறையாக போர்க்கோலம் பூண்டுவிட்டனர். இந்த ஜப்பானியருக்கு அனுகூலமாக வார்சாவில் குண்டு சத்தம் எனக் கேட்டனர் இரண்டாவது உலகப்போரின் முதல் முழக்கம் என்ற வானிலை செய்தியறிவித்தது. மனிதன் மணைக்கட்டில் தேக்கி வைக்கப்பட்டிருந்த ரத்த வெள்ளத்தை திறந்து விடட்டுவிட்டான் ஹிட்லர் எனக் கேள்விப்பட்டனர். ஹிட்லரும் ஜப்பானியரோடு சேர்ந்துகொண்டான். இந்த கொடியவன் கூட்டுறவால் ஜப்பானியர் அடைந்த சந்தோஷத்துக்கு அளவேயில்லை. அந்த சந்தோஷமும் நீடித்திருந்ததா,இல்லை.
1946 ஆகஸ்டு 8-ந்தேதி நாகசாகியிலும் அதே திங்கள் 14-ந்தேதி ஹிரோஷிமாவிலும் அணுகுண்டு வீழ்ந்து ஜப்பான் சரணாகதியடைந்து போர் முடிவடைந்துவிட்டது.
மீண்டும் தொல்லை
மறுபடியும் சியாங் கம்யூனிஸ்டுகளின் விரோதியாய்விட வேண்டிய நிலை ஏற்பட்டது. சீனத்தில் சியாங்கைவிட, செல்வாக்குப் பெற்றவர்களல்ல கம்யூனிஸ்டுவாதிகள். எனினும் சியாங் செய்த சில பல தவறுகளால் தோல்வியடைய வேண்டிய நிலையும், கம்யூனிஸ்ட்கள் வெற்றி பெறவேண்டிய நிலையும் ஏற்பட்டுவிட்டது. ஆகவே ஒரு பக்கம் சியாங்-கே-ஷேக்கும், மற்றோர் பக்கம் மாசேதுங்கும் ஆயுதமெடுத்துப் போராட வேண்டியவர்களாய் விட்டார்கள்.
"சியாங்கே ஷேக்கைத் தலைவராகக் கொண்ட கோமிங்டாங் கட்சி தலை சாய்த்துவிட்டது. தலைமையில் தவறும், தன்னம்பிக்கையில் தளர்ச்சியும், தற்பெருமையில் அளவுகடந்த ஆசையும், தறுக்குமிக்க செல்வர்களின் சுயநலத்தைக் காப்பாற்ற அவர்கள் மக்கள்மேல் எடுத்துக்கொண்ட நடவடிக்கையும், இனி எக்காலத்திலுமே ஒரு முடியாட்சியும், அன்னியர் ஆதிக்கமும், வெளிநாட்டார் சுரண்டல் பேராசைக்கொள்கையும் தலையெடுக்க ஒட்டாமல் தகர்ந்து விட்டது. ஐக்கிய அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கப்பால் சென்றுவிட்டது. இனி சீனத்தை நல்வழிபடுத்துவதென்பது இயலாத காரியம். "அளவுகடந்த செல்வத்தையும் ஆயுதத்தையும் அளித்தோம், ஆயினும் அவைகள் மக்கள் கொக்கரிப்புக்கு முன் சூரியனைக்கண்ட பனியென விலகியது. இனி சீனத்தை நம்பி பயனில்லை, சியாங்-கே-ஷேக்கை ஊக்கிவிட்டதென்பது வெட்டிவேலையும் வீண் பொருள் நஷ்டமுமாகும்" என்று அமெரிக்க அரசாங்கச் செயலாளர் டீன் ஆக்கீசன் அவர்களால் ஐக்கிய அமெரிக்க குடியரசுத் தலைவர் ட்ரூமன் அவர்களுக்கு எழுதியாய் விட்டது.
"புதுயுகங் காண, நவசீனத்தைக் கட்ட, புரட்சி தோன்றிய இந்த நாள் சீனத்தின் மறுமலர்ச்சியை மாலைகளோடு அழைக்கிறது. மக்கள் வாழ்க்கை, மக்கள் ஜனநாயகம், மக்களின் நாட்டுப்பற்று இவைகளே நமது தாயகத்தின் சிகரத்தில் ஜொலிக்க வேண்டிய மணிகள் என்று விடாது சொல்லி வந்த என் கணவர் சன்யாட்சன் அவர்களின் கனவு நினைவாகும் நாள் உதயம் கண்டுவிட்டது. இருள் ஒழிந்து எங்கும் ஒளிமயம் தொடங்கிவிட்டது.
பீரங்கியின் பக்கத்தில் நின்றோர் இன்று உயிர் தப்ப சுரங்கக் கதவுகளை அபயக்குரலால் தட்டுகின்றனர். இனி வரும் உலகம் உறங்காது விழிப்படையு மாக" என்று திருமதி சன்யாட்சன் ஆசி கூறியாய் விட்டது.
பல நூற்றாண்டுகள் அன்னியர் படையெடுப்பு. அயல் நாட்டாராதிக்கம், வியாபாரக் கொள்ளை, வட்டிக்கு வட்டி, ஒரு ஆங்கில உயிருக்கு ஈடாக 5 துறைமுகங்கள் நஷ்ட ஈடு, நான்கிங்கில் ஜப்பான் கொடி, ஷாங்காயில் கொமிங்டாங் கொடி, சுங்சிங்கில் கம்யூனிஸ்டு கொடி, காண்டன் துறைமுகத்தில் வெள்ளையர் கொடி, அப்பப்பா யார் இந்த நாட்டின் அதிகாரிகள், யார் இதன் அரசியல் தலைவர்கள், எது முக்கியமான கட்சி, ஏன் உள்நாட்டுப் போர், எந்த சர்க்காரின் சட்டம் பேசுகிறது என்பதே பல் நூற்றாண்டுகள் தெரிந்துகொள்ள முடியாத அளவுக்கு இருளடர்ந்திருந்த சீனத்தை ஒளிமயமாக்கியவர் மாசேதுங், ஒன்பது ஆண்டுகள் சியாங்-கே-ஷேக்சிடமும், அவர் தலைமையிலிருந்த கொமிங்டாங் கட்சியிடமும் போரிட்டு பெற்ற வெற்றியின் சின்னமாக விளங்குகிறது புதிய சீனம்.
எதர்க்கப்பால்
சியாங்-கே-ஷேக்கின் ஆதிக்க வெறியின் மருந்துக் கிடங்காயிருந்த ஷாங்கை நீதிமன்றம் தன் துணிகரமான பேனாவால் துரோகிகளுக்கு மரண தண்டனையளித்த பிறகு அந்த கொடியவர்கள் தங்கள் கடைசி நேரத்தில் தூக்கு மேடையில் தங்கள் நிழலைப் பார்த்து, சாகும் போதாகிலும் நீதியிடம் மன்னிப்புக் கேட்கலாம் என்ற மனித வர்க்கத்தின் மாளாத உணர்ச்சியால் உந்தப்பட்ட பிறகு, தங்களையும் அறியாமல், நாங்கள் மக்களுக்கிழைத்த கொடுமைகள் எங்கள் கல்லறையிலே எங்கள் பக்கத்திலேயே தூங்குமாக என்று வாய்விட்டு கத்திய பிறகு, 'மக்கள் அபிமானி மாசேதுங் வாழ்க' 'மறைந்த மாவீரன் சன்யாட்சன் மாசற்ற மூன்று கொள்கைகள் வாழ்க' என்று தங்கள் கண்ணீரால் தூக்கு மேடையை கழுவிய பிறகு, உடலபிமானத்தால் உலகாபிமானத்தை மறந்து எங்கள் ஊன் எந்த கொமிங்டாங் கட்சியால் வளர்க்கப்பட்டதோ, அந்த கட்சிக்கு எங்கள் உயிர்த்தியாகம் செய்து, மக்களுக்கிருந்த தீராத தொல்லை எங்கள் கடைசி மூச்சோடு கலக்குமாக என்று கண்ணீர் மல்கி பலர் மடிந்த பிறகு, ஷேக்கின் பீரங்கிப் படைகள் வெளி வராமல் தடுத்து நிறுத்திய வீரர்களின் பெயரை அட்டைகளில் எழுதி நாடு நகரங்கள் எல்லாம் ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்ட பிறகு, 'நான் சீனன் ஆனால் மூன்று வெள்ளித் துண்டுகளுக்காக ஒரு சீனனையே கொன்றேன், மரண தண்டனையை எனக்கு நானே அளித்துக் கொள்கிறேன்', நீதி மன்றத்தார் மரணத் தீர்ப்பை பகிரங்கமாகச் சொல்லி என்னை அவமானப்படுத்த வேண்டாம், என்று வெட்கத்தால் முகத்தை மூடிக்கொண்டு கோர்ட்டுக்கு வெளியே ஓடி வந்த பல குற்றவாளிகளைக் கண்டு மக்கள் மனம் இறங்கிய பிறகு, அமெரிக்கர் போராடமாட்டார்கள். பொருள் தருவார்கள். போர்க்குணம் அவர்களிடமில்லை. நம்மை நாமே கொல்ல; நம்மிலே பலர் மடிய இனத்தின் உறுதி குலைய அதோ இறக்குமதி செய்யப்படுகின்ற பீரங்கிகள் எதற்காக என்பதையறியாமல் என் சகோதரனை நானே கொல்ல நேர்ந்தது. கொடுமை கொடுமை என்று தங்களைத் தாங்களே தற்கொலை செய்துகொண்டு மாண்ட பல பிரேதங்களை வழி நெடுகக் கண்ட பிறகு, டாக்டர்கள் விஷக்கிருமிகளைக் கொல்லக் கற்றுக்கொள்வதை விட, சீன சமுதாயத்தை அழிக்க அன்றாடம் தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கும் வெளிநாட்டு விஷக் கிருமிகளையும், அதன் ஏஜெண்டுகள் ஏன் வெட்கமில்லாமல் சொல்லிக்கொண்டிருக்கும் இந்த மண்ணில் பிறந்த மடையர்களையும் கொல்லக் கற்றுக்கொள்ளுங்கள் என்று மருத்துவ மாணவரிடையே அறிக்கைகள் நடமாடிய பிறகு 'பாட்டாளி மக்களே' படை திரட்டி வாரீர் என்ற கோஷமெழுந்த பிறகு, 'தொழிலாளத் தோழர்களே ! தோள் தட்டி வாரீர்' என்று வான் பிளக்கப் பேரொலி எழுந்த பிறகு, விவசாய மக்களே வீறு கொண்டெழுவீர்' என்ற விண்ணப்பம் விண்ணதிரக் கேட்ட பிறகு, நிலப்பிரபுக்களுக்கும் விவசாயிகளுக்கும் ஏற்பட்ட சச்சரவுகள் சரிபார்த்த பிறகு, கொமிங்டாங் கம்யூனிஸ்டு கலந்த கூட்டு சர்க்கார், அமைக்க அவர்கள் செய்து கொண்ட வேண்டாத திருமணம் விலக்கான பிறகு, கொரில்லா படைகளின் கை கோர நடனம் ஓய்ந்த பிறகு, மஞ்சள் சீனம் மடிந்தது தேய்பிறை சந்திரன் போல, செஞ்சீனம் தோன்றியது காலைக் கதிரவன் போல, என்று மக்கள் குதூகலத்தாலாடிய பிறகு, பெரிய மீன் சிறிய மீனைத் தின்கிறது. சிறிய மீன் ஷ்ரிம்ப் என்ற புழுவைத் தின்கிறது, புழு மண்ணைத் தின்கிறது.
அதேபோல் வெளிநாட்டு பெரிய மீன் சியாங்கே ஷேக் என்ற சிறிய மீனைத் தின்கிறது. சிறிய மீன் போன்ற சியாங்கே ஷேக், நெளிவதைப் போன்ற ஷாங்காய் சர்க்கார் என்ற புழுவைத் தின்றார். அந்த புழு மக்கள் என்ற மண்ணைத் தின்னவேண்டியதுதான் முறையென்ற வெட்டி வேதாந்தம் பேசிய கண்மூடிகளைக் கதிகலங்க வைத்தனர் மக்கள் என்ற வீர உரையை எட்டு திக்கிலும் எழுதி காட்டிய பிறகு, அளவுகடந்து உண்பதும் தேவையின் அளவே கிடைக்காததுமான கொடிய நிலையை நீண்ட நாட்களாக போரிட்டு போரிட்டு, மக்கள் வாழ்க்கைக்கு மட்டக்கோல் அமைத்துவிட்டோம் என்ற ஜெய பேரிகை முழக்கத்தை நிரபராதிகள் செவியில் புகுத்திய பிறகு, இல்லாதவனையும், அதை வெளியில் சொல்லாதவனையும், எதிர்த்து நில்லாதவனையும், ஈயாத பொல்லாதவனையும், மக்கள் நிலையை கல்லாதவனையும், குடிலர்கள் ஏவிய வழி செல்லாதவனையும், கொடுமைகளைக் கண்டு கண்டு குடல் நடுங்கி சாய்ந்த தள்ளாதவனையும், பிறந்த தாயகம் புதைக்குழியில்விழ பொய்வழி காட்டிய பொல்லாதவனையும்,
அறத்தாலாற்றியபணி, அன்பால் அயலாருக்குக் காட்டிய வழி, அபினியால் வந்தபழி, அஞ்சை யால் வந்த தாழ்வு, அச்சத்தால் வந்தபயம் ஆகிய அவ்வளவையும் விட்டு இனி ஆயுதமெடுத்தாலன்றி வாழமுடியாதென்ற விதியை நிர்ணயித்த சீனத்தின் இன்றைய தலைவன் மா -சே. அந்த மாவீரன் தான் நீண்ட உறக்கத்திலிருந்த' சீனத்தை காலைக்கதிரவன் வராமுன் எழுப்பிய செஞ்சேவல்.
பள்ளத்தாக்குகளில் விழுந்து பராமரிப்பற்று பல ஆற்றோடு ஓடி கடலில் கலந்த நீர் இன்று அணைகள் முன்நின்று ஆலோலம் பாடுகிறது. ஒளி தரும் மின்சாரமாக விசைதரும் இயந்திர இயக்கத்தின் சக்தியாக விளங்குகிறது.
காடுகளென ஒதுக்கப்பட்டவைகள். கறம்பு நிலங்களென கைவிடப்பட்ட இடங்கள் எல்லாம் இன்று கதிர்குலுங்கும் நஞ்சைகளாக்கப்பட்டிருக்கின்றன. நீர்வளத்தையும் நிலவளத்தையும் மக்கள் வளத்துக்கும் ஈடாக்கி மக்களை மக்களாகவே வாழ வைத்த மாபெரும் சாதனையை மூன்று ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறது சீனம்.
இன்பக் குரல் தவிர வேறு எந்தக் குரலும் கேட்க முடியாத அளவுக்கு வேர்த்து சலித்து விழாத, உழைப்பால், உறக்கமற்ற விழிப்புணர்ச்சியால், இரத்தம் சிந்த அஞ்சாமையால், ஈடிணையற்ற படையெடுப்பால், இறுதிவரை போராடி நெடுங்காலமாக இடிந்திருந்த செல்வாக்கை மீண்டும் அகில உலக கெளரவ சிங்காதனத்திலேற்றிய சீனம் நல்லதோர் பெருமையை நானிலத்தில் பெற்றிருக்கிறது என்று நல்லோர் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
இலவசமாக, அல்லது யாரோ தானமாகக் கொடுக்க இந்தநிலை அடையவில்லை சீனம். எங்கும் எலும்புக் கூடுகளாலாக்கப்பட்ட கோட்டையை செங்குறுதியென்ற சேற்றால் கட்டப்பட்டிருக்கிறது. இனி எக்காலத்திலும் அழிவே இல்லை என்ற அளவுக்கு பாதையை செப்பனிட்டுச் சென்ற பல அறிஞர்கள், அரசியல்வாதிகள், புரட்சிகர்த்தாக்கள் அடிச்சுவட்டின் அகண்ட பாதையில் நடந்து கொண்டிருக்கிறது சீனம்.
ஐரோப்பாவின் நோயாளி என்று தூற்றப்பட்ட நாடும் அதிவிரைவில் முன்னேறியது. ஆயினும் சீனம் சற்றொப்ப 25 தலைமுறைகள் தலையெடுக்காமலே இருந்துவிட்டது. சீன சரித்திரத்தில் உதயமே இல்லை என்று பலர் கைவிட்டனர். எனினும் தன்னைத்தானே காப்பாற்றிக் கொண்டது. வெளிநாட்டார் வரலாம், விருந்தாளிகளாக, அயலார் அன்பாக வரவேற்கப்படுவார்கள். ஆனால் ஆயுதத்தோடு உள்ளே நுழையக்கூடாது. எங்களுக்கு வெளிநாட்டு உணவு தேவையில்லை, யாருக்கு உணவு தேவை என்ற வாசகங்களே எங்கும் காட்சியளிக்கின்றன.
"நாதியற்றவர்களாய் இனி யாரையும் நடுத்தெருவில் நடமாட விடமாட்டோம். எங்கள் மரணத்தின் மேல் ஆணை, மங்காத வாழ்வின்மேல் ஆணை, மன சாட்சியின் மேல் ஆணை, மாசற்ற சட்டங்கள் மேல் ஆணை" என்று சீன சமுதாயம் தன் விரிந்த முகம் காட்டி. பரந்த உள்ளத்தால் பராக்குக் கூறும் பலத்தைப் பெற்றிருக்கிறது.
நன்றி
அழிவு தொடங்கிய அன்னாள் முதல் விழிப்படைந்த இன்னாள்வரை நாட்டின் இழிவைத் துடைக்கப் பல இடர்பட்டு இறந்துவிட்ட எமது மூதாதையருக்கு நன்றி, உலக உதயகால விஞ்ஞானிகளுக்கு பொது உடமை தத்துவத்தைக் கொஞ்சமும் பழுதுபடாமல் எமக்குரைக்க வந்த மாபெரிய தலைவர்களுக்கு எமது நன்றி, பாட்டாலும் கூத்தாலும், பலவற்றாலும் எமது பழமையை சாகடித்த பல பெரியோர்களுக்கு நன்றி, செல்வச் செறுக்கால் எம்மைச் செருகளத்துக் கழைத்த செல்வச் சீமான்களின் அதிகாரக் குரலை அடக்கிய அரசியல் மேதைகளுக்கு எமது நன்றி. தூக்குமேடையில் துஞ்சிய தூயநெஞ்சினரின் பரிதாபக் கல்லறைக்கு நிழல் தரும் மரங்களுக்கு எங்கள் நன்றி. பொது நலத்தை சுயநலத்திற்கு விலை கூறாமல் பொது நலத்தை பொது நலமாகவே கருதிய பொன்னுள்ளத்தாருக்கு எமது நன்றி. சீன இலக்கத்தை செம்மைப்படுத்தி என்றும் அது அழியாவண்ணம் சிகப்பு முத்திரையிட்ட சிந்தனையாளர்களுக்கு எமது நன்றி. உலக மக்கள் அனைவர்க்குமே எமது நன்றி. உன்னதத் தியாகிகளுக்கு எமது நன்றி. பாழ்பட இருந்த எமது நாட்டை தட்டி எழுப்பக் காரணமாயிருந்த பகை நாட்டார் ஆயுதங்களுக்கு எமது நன்றி, விதி விதி என்று இதுவரை இருந்த நியதியைத் தம் மதியால் மாற்றிய மாவீரர்களுக்கு எமது நன்றி, நாயினும் கேடாய் மதிக்கப்பட்டு வந்த எங்களை இந்த நாடுத் தன் உண்மையான சேயென மதிக்கச் செய்த மேதைகளுக்கு எமது நன்றி.
கேட்பாரற்று திறந்து கிடந்த தலைவாயலின் முன் வீரர்களை நிறுத்தி வேற்றாரை விசாரிக்கச் செய்த விவேகிகளுக்கு எமது நன்றி.
பராரியும் இங்கில்லை. படாடூபக்காரனுமில்லை, ஏய்ப்பவனுமில்லை. ஏமாறுபவனுமில்லை. சுரண்டுபவனுமில்லை, சுண்டிப் போகின்றவனுமில்லை. உப்பரிக்கையிலிருப்பவனுமில்லை, ஒட்டைக் குடிசையிலிருப்பவனுமில்லை. உயர் ஜாதிக்காரனுமில்லை. அந்த உளுத்தக் கொள்கைக்குக் கைக்கட்டி நிற்பவனுமில்லை. ஜாதித் திமிருமில்லை. தாழ்ந்தவனுமில்லை. சமூகச் சக்கரச்சுழலில் சகலரும் ஒன்றே என்ற சங்கநாதத்தை, ஜெகமுழுதும் கேட்கச் செய்த சகலத் தியாகிகளுக்கும் எமது நன்றி.
பொருளாதாரம், தொழிலாதாரம் அறிவாதாரம், சுகாதாரம் ஆகிய இவைகளே ஆள்வோரைத் தேர்ந்தெடுக்க ஆதாரமாகட்டும் என்ற பொக்கிஷத்தையளித்த அரசியல் மேதைகளுக்கு எமது நன்றி. அன்பு பேசிய அந்த காலகவிகளுக்கு, இன்ப தந்த இந்த காலகவிகளுக்கு, இடையறாத துன்பத்திலாழந்த எம்மை எழுதுகோல் மூலம் தட்டி எழுப்பிய வரைகோல் வேந்தர்களுக்கு சிறைக் கம்பிகளைப் பிடித்துப் பிடித்து கைகள் குளிர்ச்சியடைந்த தியாகிகளுக்கு எமது நன்றி.
மகான் கன்பூஷியஸ், மட்டில்லாத சிந்தனையாளன் சன்யாட்சன், செயல் வீரர் மாசேதுங் வரை கோல் வேந்தர் லின்-யு-டாங் ஆகிய அனைவருக்குமே எமது மறக்காத நன்றி.
எங்கும், எப்போதும், எல்லோரும் வாழ்க என்பதே எங்கள் விருப்பம். இதுவே இன்றைய சீனத்தின் குரல்!
வாழ்க சீனம்!!
கருத்துகள்
கருத்துரையிடுக