திராவிடம் என்றால் என்ன?
கட்டுரைகள்
Back
திராவிடம் என்றால் என்ன?
ந.சி. கந்தையா
திராவிடம் என்றால் என்ன?
1. திராவிடம் என்றால் என்ன?
2. தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
3. அகம் நுதலுதல்
4. நூலறிமுகவுரை
5. கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
6. பதிப்புரை
7. திராவிடம் என்றால் என்ன?
திராவிடம் என்றால் என்ன?
ந.சி. கந்தையா
நூற்குறிப்பு
நூற்பெயர் : திராவிடம் என்றால் என்ன?
ஆசிரியர் : ந.சி. கந்தையா
பதிப்பாளர் : இ. இனியன்
முதல் பதிப்பு : 2003
தாள் : 16.0 கி. மேப்லித்தோ
அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 11 புள்ளி
பக்கம் : 20 + 164 = 184
படிகள் : 2000
விலை : உரு. 80
நூலாக்கம் : பாவாணர் கணினி
2, சிங்காரவேலர் தெரு,
தியாகராயர் நகர், சென்னை - 17.
அட்டை வடிவமைப்பு : பிரேம்
அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட்
20 அஜீஸ் முல்க் 5வது தெரு
ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006
கட்டமைப்பு : இயல்பு
வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம்
328/10 திவான்சாகிப் தோட்டம்,
டி.டி.கே. சாலை,
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே.
‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’
என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர்.
ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:-
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார்.
ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார்.
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின.
ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம்.
அகராதிப் பணி
தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை.
ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார்.
இலக்கியப் பணி
புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள்.
பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர்.
தமிழ்மொழி - தமிழினம்
தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை.
திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும்
தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:-
திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார்.
பிற
மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார்.
“ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.”
வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்!
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன்.
அன்பன்
கோ. தேவராசன்
அகம் நுதலுதல்
உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம்.
உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது.
தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது.
தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம்.
எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள்.
இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது.
எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை.
வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது.
அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன.
உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும்.
இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது. மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது.
சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி.
அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம்.
உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது.
நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம்.
அன்பன்
புலவர் த. ஆறுமுகன்
நூலறிமுகவுரை
திரு. ந.சி. கந்தையா பிள்ளை 1930-40களில் தமிழ், தமிழிலக்கியம், தமிழ்மொழி, தமிழர் வரலாறு, திராவிட வரலாறு, தமிழ்நாட்டுக் குடிகள் போன்ற பல விடயங்கள் பற்றி அக்காலத்துச் சாதாரண தமிழ் வாசகர் நிலையில் பெரிதும் வாசிக்கப்பட்ட நூல்களை எழுதினார். பண்டைய இலக்கியங்களான அகநானூறு, கலித்தொகை, பரிபாடல் போன்ற வற்றினை உரைநடையில் எழுதி மக்களிடையே சங்க இலக்கியம் பற்றிய உணர்வினை ஏற்படுத்தினார். திருக்குறளுக்கான ஒரு சொல்லடைவைத் திருக்குறள் அகராதி என்னும் பெயரில் வெளியிட்டவர். இவை யாவற்றுக்கும் மேலாக உலக வரலாற்று நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காலவரிசைப்படுத்தித் தந்தார். செந்தமிழ் அகராதி என்றவோர் அகர முதலியையும் தொகுத்தார்.
இன்று பின்னோக்கிப் பார்க்கும் பொழுது 1940-50களில் இளைஞர் களாக இருந்த பல தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றிய தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கான வாசிப்பு விடயங்களை அளித்தவர். இவருடைய பெரும்பாலான படைப்புக்கள் அக்காலத்திற் பிரசுரிக்கப் பட்ட ஒற்றுமை என்னும் இதழின் அலுவலகத்தாலேயே வெளியிடப் பெற்றன. இவர் வெளியிட்டனவற்றுள் பல ஒற்றுமை இதழில் வெளிவந் திருத்தல் வேண்டும். ஆனால், அதனை இப்பொழுது நிச்சயமாக என்னாற் சொல்ல முடியவில்லை. ஒற்றுமை அலுவலகம் இவற்றைப் பிரசுரித்தது என்பதை அறிவேன். ஏனெனில் இலங்கையில் தமிழாசிரியராக இருந்த எனது தகப்பனாரிடத்து இந்நூல்களிற் பெரும்பாலானவை இருந்தன.
திரு ந.சி. கந்தையா பிள்ளையின் பெயர் தமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படுமளவுக்கு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியுள்ளது. அங்கு அவர் அத்துணைப் போற்றப்படாதிருப்பதற்குக் காரணம் ஏறத்தாழ அவர்களது எல்லா நூல்களுமே தமிழகத்திலேயே வெளியிடப் பெற்றன.
இந் நூல்களின் பிரசுரப் பின்புலம் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அவற்றின் பொருளியல் அம்சங்கள் பற்றிய தரவுகளும் இப்பொழுது தெரியாதுள்ளன.
ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிற்கூட இவரது பெயர் முக்கியப் படுத்தப் பெறாது போயுள்ளது. மிகுந்த சிரமத்தின் பின்னர் அவரைப் பற்றிக் கிடைத்துள்ள தகவல்கள் பின்வருமாறு:
சுவாமி ஞானப் பிரகாசர், ந.சி. கந்தையா பிள்ளை போன்ற அறிஞர்களின் தமிழ்ப் பங்களிப்புக்கள் தமிழகத்தில் போற்றப்படுகின்றமை ஈழத்தவர்க்குப் பெருமை தருகின்றது. இவர் எழுதிய நூல்களின் பெயரை நோக்கும்பொழுது தமிழ் வாசகர்களுக்கு உலக நிலைப்பட்ட, தமிழ்நிலைப் பட்ட தரவுகளைத் தொகுத்துத் தருவதே இவரது பெருஞ்சிரத்தையாக இருந்தது என்பது புலனாகின்றது. இப்பதிப்பகத்தின் பணியினை ஊக்குவிக்க வேண்டியது தமிழ்சார்ந்த நிறுவனங்களினதும் தமிழ்ப் பெரியோர்களினதும் கடமையாகும். உண்மையில் இதனை ஒரு அறிவுப்பசிப் பிணித் தீர்வாகவே நான் காண்கிறேன்.
2/7, றாம்ஸ்கேட், அன்புடன்
58, 37ஆவது ஒழுங்கை,
கார்த்திகேசு சிவத்தம்பி
வெள்ளவத்தை, தகைசார் ஓய்வுநிலை பேராசிரியர்
கொழும்பு - 6 யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.
கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மூலவர்களில் யாழ்ப்பாணம் தந்த பேரறிஞர் ந.சி. கந்தையாவும் ஒருவர். உண்மையான அறிஞர்களைக் காலங்கடந்து அடையாளம் காண்பதும் அவர்தம் படைப்புக்களைத் தேடிப் பிடித்துப் புரப்பதும் தமிழினத்தின் பழக்கங்களில் ஒன்று.
தமிழின், தமிழரின் தொல்பழங்கால வரலாறு தொடர்பாகத் தமிழில் நூல்கள் மிகக் குறைவு. ஓர் ஆயிரம் நூல்களாவது தமிழின் தமிழரின் தொல்பழங்கால வரலாறுபற்றி வெளிவரவேண்டும். விரிவாக எழுதப்பட வேண்டிய தமிழ், தமிழர் வரலாற்று வரைவு முயற்சிக்கு வழிகாட்டும் கருவி நூல்களை வரைந்திருப்பவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.
உலகம் முழுவதும் உற்றுக் கவனிக்க வேண்டிய வரலாற்றிற்கு உரியவர்கள் தமிழர்கள். அவர்களே உலக மொழிகளை ஈன்ற மூலமொழிக்குச் சொந்தக்காரர்கள். அவர்களே உலக நாகரிகங்களின் பிறப்பிற்குக் காரணமான உலக முதல் நாகரிகத்தைப் படைத்தவர்கள். இந்த உண்மைகளைத் தமிழர்களும் அறியவில்லை உலகமும் அறியவில்லை.
தமிழர் சரித்திரம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந் தமிழர், தமிழர் யார், உலக நாகரிகத்தில் தமிழர்பங்கு, சிந்துவெளித் தமிழர், தமிழ் இந்தியா, தமிழகம், மறைந்த நாகரிகங்கள் ஆகியன ந.சி. கந்தையாவின் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும்.
உலக முதல் நாகரிகம் என இன்று உலகம் நம்பிக்கொண்டிருக்கக் கூடிய நீல ஆற்றங்கரை நாகரிகம் (Nile Civilisation) தமிழ் நாகரிகத்தின் அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் வழிப்பட்ட நாகரிகமே என்பதை ஏராளமான சான்றுகளால் விளக்குபவை மேலைய நூல்கள்.
மொழிநிலையில் தமிழின் உலக முதன்மையைப் பாவாணர் நிலைநாட்டினார் என்றால் இன நிலையில் தமிழின உலக முதன்மையை ந.சி. கந்தையா நிலைநாட்டினார் என்று உரைக்கலாம்.
நீல ஆற்றங்கரை நாகரிக முடிவின்பின் நண்ணிலக் கடற் பகுதியில் உருவான பிறிதொரு வழிநாகரிகமே கிரேக்க நாகரிகம். கிரேக்க நாகரிகத் தின் உடைவில் தெறிப்பில் பிறகு மலர்ந்தவையே இன்றைய மேலை நாகரிகம். உலகின் எல்லா நாகரிகங்களையும் தாங்கிநிற்கும் தாய் நாகரிகமே தமிழ் நாகரிகம்.
தமிழ் நாகரிகத் தொன்மையைச் சங்க நூல்களுக்கு அப்பால் சிந்துவெளி அகழ்வாய்வும் உலக வரலாற்றாசிரியர்கள் உலக முதல் நாகரிகம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் நமக்கு மேலும் விளக்கும் பகுதிகளாகத் திகழ்கின்றன. இங்கெல்லாம் சென்று நுண்மாண் நுழைபுல முயற்சியால் தமிழின வரலாறு எழுதியவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.
ந.சி. கந்தையா பெருமகனார் நூல்களைத் தமிழரின் தொல்பழங்கால வரலாற்றைக் கற்கும் முயற்சியில் நான் ஈடுபடத்தொடங்கியபோது தேடிக் கற்றேன். பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் சென்ற ஆண்டு இயற்கையெய்திய வரலாற்றுப் பேரறிஞர் கோ. நிலவழகனார் ந.சி. கந்தையா அவர்களைச் சென்னையில் அவர் வாழ்ந்த நாளில் சந்தித்தது பற்றியும் அவரின் பன்னூற்புலமை பற்றியும் எம்மிடம் மகிழ்ந்து கூறுவார். ந.சி. கந்தையா அவர்களின் நூல்கள் பலவற்றையும் அவர் வைத்திருந்தார். அருகிய பழைய நூல்களைப் பேணுவாரிடத்திலும் நூலகங்கள் சிலவற்றிலும் மட்டுமே ஒடுங்கிக்கிடந்த ந.சி. கந்தையா நூல்களை மீண்டும் அச்சில் வெளியிடுவார் இலரே என்று கவலையுற்றேன். அமிழ்தம் பதிப்பகம் இவரின் நூல்களை வெளியிடுகின்றது. உண்மைத் தமிழ் நெஞ்சங்கள் இந் நூல்களை உச்சிமோந்து வாரியணைத்துப் புகழ்ந்து கற்றுப் பயனடைவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.
பேரா. கு. அரசேந்திரன்
பதிப்புரை
வளம் சேர்க்கும் பணி
“குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம்.
இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன.
ந.சி. கந்தையா
இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது.
தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர்.
தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது.
தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர்.
நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள்
1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன.
வாழும் மொழி தமிழ்
தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம்.
ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா?
தமிழர்களின் கடன்
இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன்.
மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள்.
எழுச்சிக்கு வித்திட…
உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது.
இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிப்பகத்தார்
திராவிடம் என்றால் என்ன?
முன்னுரை
ஆரியமொழி ஒன்றுதானே இந்து ஆரியம், பாரசீகம், கிரேக்கம், இலத்தீன், சிலாவு லிதுஏனியம், சேர்மன், கெல்து முதலிய பல மொழி களாகப் பிரிந்தது போலவே தமிழும் தெலுங்கு, கன்னடம், துளு, மலை யாளம் முதலிய மொழிகளாகப் பிரிந்துள்ளது. வடநாட்டு மொழிகளின் அடிப்படையும் தமிழே. எளிதில் அடையாளம் கண்டுபிக்க முடியாத அள வில் அவை மாற்ற மடைந்துள்ளமையாலும், அவைகளின் சொற்போக்கு பெரிதும் ஆரிய மயமாயிருத்தலினாலும் அவை ஆரியத்தின் வழிமொழிகள் என்று கருதப்படுகின்றன. அம்மொழிகளின் சொற்போக்கு ஆரியத்தன்மை யுடையனவாயினும் அமைப்பு திராவிடத்தன்மை உடையதென்றும், மொழி களின் இனத்தை ஆராய்ந்து அறிதல் சொற்களாலன்று அமைப்பினா லென்றும் பி. தி. சீனிவாச ஐயங்கார் போன்ற ஆராய்ச்சி அறிஞர் பலவிடங் களில் எடுத்துக் கூறியுள்ளார்கள். வடநாட்டு மொழிகளிற் காணப்படும் மத்திய கால இந்து-ஆரியச் சொற்களில் 25 சதவீதம் மாத்திரம் பழைய இந்து ஆரியத்தினின்றும் வந்தவை என டாக்டர் காற்றி (Dr. Katre) என்பார் கூறுகின்றார். மீதிச் சொற்கள் உள்நாட்டுச் சொற்களேயாதல் வேண்டும். வடநாட்டு மொழிகளில் மாத்திரமல்ல, சமக்கிருத மொழியிலும் மிகப்பல தமிழ்ச் சொற்கள் உருமாற்றத்துடன் காணப்படுகின்றன. ஆரியத்துக்குப்பல சொற்களை உதவி அதனைச் சீர்திருத்திச் சமக்கிருதமாக்கியது தமிழே. “பழைய இந்தியாவில் மக்கள் வாழ்க்கை” என்னும் நூலில் பி. தி. சீனிவாச ஐயங்கார் இது குறித்துக் குறிப்பிட்டுள்ளார். இன்று இந்து ஆரியத்திற் காணப்படும் 25 சதவீதச் சொற்களும் உள்நாட்டு மொழிகளிலிருந்து கிடைத்தவை1.
இவ்வாறு ஆரியமும் ஆரியத்தின் வழிவந்த மொழிகளும் தமிழுக்குப் பெருங்கடப்பாடுடையனவாயிருக்கத் தமிழைப் புறக்கணித்து ஒதுக்கி அதற்கு முதல் இடங்கொடாது ஆரியத்துக்கு முதன்மை கொடுத்து அதனைச் சமயமொழியாகக் கொண்டுழலும் மக்கள் விழிப்படையும் பொருட்டுத் தமிழின் உண்மை இயல்புகளை விளக்கிச் சிறிய சிறிய நூல்களை வெளி யிட்டு வருகின்றோம். அவ்வரிசையில் இதுவுமொன்றாகும்.
சென்னை
1-9-48
ந. சி. கந்தையா
திராவிடமென்றால் என்ன?
எழுவாய்
திராவிடம் என்னும் பெயரைப்பற்றி நீண்ட காலம் வாதங்களும் எதிர் வாதங்களும் நடந்துவந்தன. மேல் நாட்டு ஆசிரியர்கள் இந்திய மொழி களை ஆராய்ந்து ஆரியம், தமிழ் என்னும் மொழிகள் ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாத வெவ்வேறு மொழிகள் என்று காட்டுவதன் முன்பு ஆரியத் தினின்றே தமிழ் தோன்றிற்று; தமிழுக்குமாத்திரமன்று உலகிலுள்ள எல்லா மொழிகளுக்கும் ஆரியம் தாய் என ஒரு கூட்டத்தார் கூறிவருவாராயினர். தமிழ் என்னும் பெயர் தானும் திராவிடம் என்னும் ஆரியச் சொல்லினின்று பிறந்ததாகுமெனவும் அவர்கள் புகன்றனர். அவ்வாறு இன்று கூறுவாரு முளர். தமிழின் உறழ்ச்சி பிறழ்ச்சிகளால் தோன்றிய கன்னடம் தெலுங்கு மலையாளம் என்னும் மொழிகளும் ஆரியத்தின் வழிவந்தன எனக் கருதப் பட்டன. கன்னடம் தெலுங்கு துளு மலையாளம் தமிழ் என்னும் மொழிகள் ஓர் ஆதிமொழியினின்று பிரிந்தன; தமிழினின்று கன்னடம் தெலுங்கு துளு மலையாளம் முதலிய மொழிகள் பிறக்கவில்லை என ஆராய்வின்றிச் சிலர் புகன்று வருகின்றனர். இவ்வகை மாறுபட்ட கருத்துக்களை எல்லாம் ஆராய்ந்து உண்மை யாது என நாட்ட முயன்ற அறிஞர் பலர் கருத்துக்களை இந்நூலகத்தே கோவைப் படுத்தியுள்ளோம் முதற்கண் 1கிளிமென் கோனர் பாடின் கிர்சன் என்னும் சேர்மன் பேராசிரியர் திராவிடம் என்னும் பொருள் பற்றி வெளியிட்ட கருத்தினை ஈண்டு தருகின்றோம்.
திராவிடம் என்றால் என்ன?
மொழி தொடர்பாகவே திராவிடம் என்னும் பெயரை உலகம் அறிந்துள்ளது. திராவிடம் என்னும் இனத்தில் முன்பின் இருபது மொழிகள் அடங்கும். அவைகளுள் நான்கு மொழிகள் தமது பழைய இலக்கியங் களைக் குறித்துப் பெருமை கொள்ள முடியும். இவைகளுள் தமிழ் மொழி யில் மாத்திரம் இந்தியாவின் எல்லையையும் கடந்து சென்றுள்ள குறள் போன்ற பழைய இலக்கியங்கள் உள்ளன. திராவிடம் என்னும் பெயர் எங்கு நின்றுவந்தது? அதன் ஆதிப் பொருள் யாது?
இப்பெயர் முதல்முதல் குமாரிலபட்டர் காலத்தில் (கி. பி. 7 அல்லது 8ஆம் நூற்றாண்டு) திராவிட நூல் வழக்கில் காணப்படுகின்றது. அவர் அதனை தென்னிந்தியாவின் கிழக்குக்கரையில் வழங்கும் தெலுங்கு, தமிழ் மொழிகளைக்குறிக்க “ஆந்திர திராவிட பாஷா” எனக் குறிப்பிட்டுள்ளார். ஆந்திர, திராவிட என்னும் சொற்களின் பொருளை அறிவதற்கு இந்தியா வின் தெற்கே வழங்கும் கன்னடம் மலையாளம் என்னும் பெயர்ப் பொருள் களைப்பற்றியும் நாம் ஆராய்தல் வேண்டும். இவ்விரண்டு பெயர்களும் இட சம்பந்தமாக வழங்கப்பட்டுள்ளன. கனரா, கன்னடா, அல்லது கர்நாடக என வழங்கும் பெயர் கர்நாட அல்லது கர்நாடக என்று பிரிகற் சம்கிதையில் எழுதப்பட்டுள்ளது. இப்பெயர் பஞ்சு விளைவதும் தேக்குச் செழித்துவளர் வதுமாகிய கரிய பூமியைக் குறிக்கின்றது. மலையாளம் என்பதற்கு மலை நாடு எனப் பொருள் கொள்ளுதல் வேண்டும். மலையம் என்பது மலையைக் குறிக்கின்றது ஆகவே கன்னடம் மலையாளம் என்னும் பெயர்கள் இடங் களைக் குறிக்க வழங்கிய பெயர்கள் என்றும் அவை வட மொழிப் பெயர்கள் அல்ல என்றும் விளங்கும். இதனால் முற்கால மக்கள் திராவிடம் என்னும் பெயரையும் அவ்வகையில் பயன்படுத்தினார்கள் என்பது தெளிவாகின்றது.
அசோகரின் கல்வெட்டுக்களுக்கு முற்பட்ட ஐதரேயப் பிராமணத் தில் ஆந்திரம் என்னும் சொல் தெலுங்கு நாட்டையும் தெலுங்கு மொழியையும் குறிக்க வழங்கப்பட்டுள்ளது. இலக்கிய கால ஆசிரியராகிய பிளினி அதனை ஆந்திரே எனக் குறிப்பிட்டுள்ளார். குமாரிலபட்டர் ஆந்திர மொழியைத் தெற்கே உள்ள தமிழோடு தொடர்பு படுத்தியுள்ளார். தமிழர், தெலுங்கர் என்பதைத் தெலிங்கர் என்றும், அவர்களின் மொழியைத் தெலுங்கு அல்லது தெலுங்கம் என்றும் வழங்கினர். தெலுங்கம் என்னும் பெயர் வேளாண்மை தொடர்பாக உண்டானது. தெல் அல்லது தெல்லு, நீண்ட சதுரமானதும் நாற்புறமும் வரம்புடையதுமாகிய சிறிய வயல் நிலத்தைக் குறிக்கும். தெலுங்கம் என்பது சென்னைக்கும் ஒரிசாவுக்கும் இடையே உள்ள மக்களையும் மொழியையும் குறிக்கவும் வழங்கும்.
அசோக பட்டையங்களில் கலிங்கம் என்னும் பெயர் நாட்டையும் மலைநாட்டையும் குறிக்க வழங்கப்பட்டுள்ளது. ‘கல்’ என்பது கல்லையும் மலையையும் குன்றையும் குறிக்கும். கலிங்கு, கலுங்கு, கலிங்கல் முதலிய சேரி வழக்குச் சொற்கள் நீர்மடையையும் குறிக்கும். கலிங்க நாட்டின் கடற்கரையிலுள்ள ஒரு பட்டினத்துக்குக் கலிங்கப்பட்டினமென்று பெயர். கஞ்சம் மாகாணத்திலுள்ள மலைத்தொடருக்குக் கலிங்க மலைத்தொடர் என்று பெயர். இதனால் ஆந்திரா என்னும் பெயரும் இடத்தொடர்பாக வழங்கப் பட்டதெனக் கொள்ளுதல் தவறாகமாட்டாது. கலிங்கப் பட்டினத்துக்கு மேற்கே 58 கல் தொலைவில் ஆந்திரா என்னும் தெலுங்கு இடம் ஒன்று உள்ளது. இது முற்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய ஓர் இடமாகலாம்.
தெலுங்கு அல்லது கலிங்கநாட்டின் மலைப்பகுதிகளாகிய ஒரிசா மலைகளிலிருந்து கிழக்குத் தொடர்ச்சிமலை எட்டும்வரையில்-கோதாவரி ஆற்றிடைக்குறை முதல் தெற்கே கன்னியாகுமரி வரையில்-தட்டையான சமபூமி காணப்படுகின்றது. இவ்விடங்கள் கரைப்போக்கு என்னும் பொருளில் திராவிடம் என்னும் பெயரால் அறியப்பட்டது. கடற்கரையை ஆள்பவன் திரையன் எனப்பட்டான். இடம் என்பது தெலுங்கில் எடா, எடாமு என வழங்கும்; இவை இடைவெளி, பரப்பு, இருக்குமிடம் போன்ற வைகளைக் குறிக்கும். திரா-விட (ம்) என்பது மயிலென்பதிலிருந்து தோன்றிய மயிலாபுரி, தீவைக் குறிக்கும் இலங்கை என்பதிலிருந்து தோன்றிய இலங்காபுரி என்னும் பெயர்களை ஞாபகப்படுத்துகின்றது.
குமாரில பட்டர் ‘திராவிட’ என வழங்கியது தமிழ் வழக்கில் திராவிடம் என்று ஆயிற்று. இப்பெயர் தொடக்கத்தில் தமிழரின் நாட்டுக்கும் மொழிக் கும் பெயராய் வழங்கிப் பின் அம்மொழியோடு சம்பந்தப்பட்ட மக்களை யும் உணர்த்துவதாயிற்று. தமிழ் சம்பந்தமான மொழி மகராட்டிரம் கூர்ச்சரம் முதலிய நாடுகளில் இன்றும் பேசப்படுகின்றது. அவ்விடங்களுக்குத் தமிழரின் ஒரு பிரிவினர் சென்றிருக்கலாம்.
கால்ட்வேல் காலம் முதல் திராவிடமென்பது தமிழோடு தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. வரலாற்று முறையான ஆராய்ச்சியாலும், மொழிகளைத் தொடர்புபடுத்தி ஆராயும் ஆராய்வினாலும் திராவிடம், தமிழ் என்னும் சொற்கள் வெவ்வேறு அடியாகப் பிறந்தன என்று தெரிகின்றது. கிரீயர்சன் என்பார், தம்முடையது என்னும் பொருள் தரும் தம் என்னும் அடியாக தமிழ் பிறந்ததெனக் கூறினார். ஐரோப்பிய மொழியில் இதை ஒத்த ஒரு எடுத்துக் காட்டுக் காணப்படுகின்றது. ஜெர்மன் மொழியில் டெயுர்ச் (Deutsch) என்பதும் டச் (Dutch) என்பதும் ஒரு பொருளில் வழங்கும். இவ்விரண்டு உச்சரிப்புக்களும் டியூரிஸ்க் (Diutisk) என்னும் சொல்லின் வேறுபாடுகள். இச் சொல்லின் பொருள் “நமது மக்களுக் குரியது.” என்பது.
மதுரை, தூத்துக்குடி, திருவனந்தபுரம் முதலிய இடங்களில் தமிழ் திருத்தமாக உச்சரிக்கப்படுகின்றது. பெசிடோ ஸ்கைலாக்ஸ் என்னும் நூலில்1 தமிராய்2 என்னும் பெயர் காணப்படுகின்றது. தாலமி தமிழகத்தைத் தமிரகே எனக் குறிப்பிட்டுள்ளார்; தபுலா பெதுருங் கேரியானா3, சிதிய தமிரிகி4 எனக் குறிப்பிடுகின்றது. ழகரத்துக்குப் பதில் ளகரம் வழங்கியதை நாம் ஆரிய நூல்களில் பார்க்கலாம். சுவேதாம்பரரின் சைன நூல்களிலும், மகாவம்சம் என்னும் இலங்கைப்பாலி நூலிலும் தமிள என்னும் உச்சரிப்புக் காணப்படுகின்றது. தமிழன் என்பதின் பன்மை தமிழர். தமிழப் பிள்ளை தமிழக் கூத்தன் என்னும் கூட்டுச் சொற்களில் தமிழ என்னும் வழக்குக் காணப்படுகின்றது. இதனால் ஆரியருக்கு முன்பு தமிழ் என்பதும் நாட்டுக்கே பெயராக வழங்கியதெனத் தெரிகின்றது.
புதிதாக வந்த ஆரியர் திராவிட, தமிழ் என்னும் சொற்களைக் கையாண்ட முறையினால் அவை ஒரே உற்பத்திக்குரியனவென்று சந்தேகிக்க வேண்டியதாயிற்று. சமக்கிருத நாடகங்களில் (சைனர் பிராகிரு தத்தில் எழுதிய நாடகங்களில்) தாவிள (davila) என்றும், வராகமிகிரரின் சில கையெழுத்து நூல்களில் (கி. பி. 6ஆம் நூற்றாண்டு) திரமிட(ம்) என்றும், கி.பி. 6ஆம் நூற்றாண்டுப் பட்டையங்கள் சிலவற்றில் திராமிடமென்றும் சொற்கள் காணப்படுகின்றன. புத்த சமயம் சம்பந்தமாகவும் புராணங்கள் சம்பந்த மாகவும் உள்ள பழைய மலையாள மொழிபெயர்ப்புக்களிலும் இவ்வாறே காணப்படுகின்றது. இதுவரையும் கூறியவைகளால் தமிழ் திராவிடம் என்னும் சொற்கள் வெவ்வேறு உற்பத்திக்குரியனவென்றும், திராவிடம் தமிழ் என்னும் சொற்கள் பிறமொழிக் குரியவர்களால் கொச்சையாக உச்சரிக்கப்பட்டுவந்தமையின் இரு சொற்களும் ஒரே உற்பத்தியைச் சேர்ந்தனவோ என்னும் மயக்கமும் ஐயப்பாடும் எழுவதாயினவென்றும் புலனாகின்றன.
1தமிழ் என்பதன் சிதைவு திராவிடம்
“திராவிடம் என்னும் சொல்லின் பொருள் விளங்காமையால் அதற்குப் பொருளமைப்பான் தொடங்கி நமது நண்பர் கீழ்வருமாறு கூறுகின்றார்:- ‘அது ஸ்திரவிடம் என்பது திராவிடம் என்று வழங்கிப் பின் திராவிடம் என நீண்டு வட நூலார் மூன்றாவது தகரத்தை உபயோகித்து வடமொழியாக மயக்கஞ் செய்ததென்று எண்ணுகிறேன். ஸ்திரவிடமென் றால் உறுதியான அல்லது நிலையான இடமென்பதேயாம். வட இந்தியாவி லிருந்து ஆரியரால் விரட்டப்பட்டு தென்திசையில் ஓடிச் சென்ற துரானிய சாதியார் எவ்விடத்தில் ஸ்திரமாய்த் தங்கினார்களோ அவ்விடத்திற்கு ஸ்திரவிடம் அல்லது திராவிடம் என்று பெயர் அமைந்தது’ என்று விடை யும் பின் பகர்ந்திருக்கிறார்கள்.
“திராவிடம் என்னும் மொழியின் சிதைவெனக் கொள்ளினும், ஸ்திரவிடம் என்னும் பெயர் தமிழுலகத்திற்கு யாரால் எச்சமயம் கொடுக்கப் பட்டதென யாம் பரியாலோசிக்க வேண்டும். இப்பெயரை உண்டு பண்ணின வர் வடமொழியாரா? அல்லது தென்மொழியாரா? ஸ்திரவிடம் என்ற பெயரில் ‘ஸ்திரம்’ என்ற வடமொழியும் இடம் என்ற தென்மொழியும் புணர்ந்து வருவ தனால் இவ்விருமொழியும் கலவாத அக்காலத்தில் இப்பெயர் உளதாதற்கு இடமே இன்று. சமஸ்கிருதமும் தமிழும் நெடுங்காலம் சேர்ந்து மயங்கிய பின்னரே இப்பெயர் உதிப்பதற்கு இடமாகும்.
“ஸ்திரவிடமென்பது திராவிடமென எவ்விதம் மருவியதென்று நோக்குங்கால் அதனைத் திரவிடம் என்று சிதைத்தவர் தமிழராகவே இருக்கவேண்டுமென்றும் இதிலிருக்கும் தகரத்தை மூன்றாவது தகரமாக் கியவர் வட மொழியாளராகவே இருக்கவேண்டுமென்றும் தெள்ளிதிற் புலப் படுகின்றன. இருமொழிகளும் சேர்ந்து இம்மாதிரி ஒரு மொழியினை மருவச் செய்வது அசம்பாவிதம் என்றே கூறல்வேண்டும். ஒலி ஒற்றுமை யினால் மருண்டு நமது நண்பர் திராவிடம் என்னும் மொழியை ஸ்திரவிடம் என்பதிலிருந்து பெறத்தொடங்கினதற்குச் சான்றாக நியாயம் ஒன்றும் இல்லை யென்றே அறைதல்வேண்டும். கூரிய ஆராய்ச்சி முன்னிலையில் ஸ்திரவிடம் என்பதன் அடிப்படை ஸ்திரமற்றதாகவே முடிகின்றது.
“இது இங்ஙனம் முடிய திராவிடம் என்னும் மொழியிலிருந்து தமிழ் என்னும் பெயர் உதித்ததென்று ஒரு சாரார் கூறுகின்றார். இவர் தக்க நியாயம் கூறித் தம் வாதத்தை நிலைபெறச் செய்கின்றார்களில்லை. அதுபற்றி வட மொழியில் அன்னார் வைத்திருக்கும் அபிமானமே இதற்குக் காரணமா யிருக்கலாமென்று யாம் மயங்கவேண்டியதாயும் முடிகின்றது. திராவிடம் என்னும் மொழிக்குத்தக்க பொருள் இதுவரையிலும் வெளிவராமையாலும், தமிழர்களுக்கும் அவர்களுடைய பாஷைக்கும் ஆரியரோடு ஊடாடும் முன்னமே பெயர்கள் இருந்திருக்கவேண்டு மென்பதினாலும், திராவிடம் என்னும் போலிச்சமஸ்கிருதச் சொல்லிலிருந்து தமிழ் என்னும் மொழியைப் பெற்றோமெனல் உண்மையற்றதே-இங்கிலீஷ்காரருக்கு ‘ஆங்கிலேயர் என்ற பெயரைத் தமிழர் சூட்டி இங்கிலீஷ் என்ற வார்த்தை ‘ஆங்கிலேயம்’ என்ற போலித் தமிழ் வழக்கிலிருந்து வந்திருக்கவேண்டுமென்று பின்சாதிக்கின் அச்சாதனை உண்மையோடு எத்துணை முரண்படுகின்றதோ அத்துணை தமிழ் திராவிடமென்பதிலிருந்து வந்ததென்னும் வாதம் உண்மையோடு முரண்படுகின்றது.
“இனித் தமிழ் என்னும் மொழியே திராவிடம் என்னும் வடமொழி ஆடம்பரத்துடன் நிற்கின்றதென வேறோர் சாரார் உரைக்கின்றார். இவர்கள் உரையே உண்மைக்கும் நியாயத்திற்கும் பொருத்தமுடையதாகவும் இருக்கின்றது. காரணங்களாவன:
1. ழ என்னும் எழுத்து தமிழ் மொழிக்கே உரியதாகையால் அவ் வெழுத்துத் தோன்றி நிற்கும் மொழியும் தமிழ் மொழியாகவே இருத்தல் வேண்டும்.
2. தமிழ் மொழியிலே தமிழ் என்னும் பதம் இனிமை என்னும் பொருள் பயந்து நிற்கின்றது. பிறமொழிகளில் இப்பதத்திற்குப் பொரு ளில்லை.
3. தமிழர் மிக்க புராதன நாகரிகம் பெற்றிருந்தவராதலினால் அவருக்கும் அவரது பாஷைக்கும் ஓர் பெயர் உண்டாயிருக்க வேண்டுமென்பதே ஐரோப்பிய வித்வான்களில் பெரும்பாலாருடைய துணிபு. கன்னடம் தெலுங்கு மலையாளம், துளு முதலிய பாஷைகளும் தமிழ்ப்பாஷையின் வம்சத்தைச் சேர்ந்தவைகளாயிருக்க அவைகளுக்குத் தமிழ் என்னும் பெயர் வராது தமிழுக்கு மட்டுமே அப்பெயர் வரக்காரணம் யாதென ஒரு சங்கை எழலாம். கூறிய பாஷைகள் எவற்றிற்கும் முந்திய தமிழிலிருந்தே அப்பாஷைகள் உதித்தனவென்றும் ஐரோப்பிய சாஸ்திரிகள் அபிப்பிராயப்படுகின்றனர். இதனாற்றான் புரோபசர் எம்.ஏ. சுந்தரம் பிள்ளை அவர்களும் தாமியற்றிய “மனோன்மணியம்” என்னும் நாடகத் தின் பாயிரத்தில் தமிழ்மாது வணக்கம் கூறும் பொழுது,
‘கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத்தே யுதித்து ஒன்று பலவாயிடினும்’
என்று கூறியிருக்கின்றார். மேற்காட்டிய நியாயங்களினாலும், பிறமொழி களின் சிதைவு தமிழ் என்பதற்கு ஒரு நியாயமும் இன்மையாலும் தமிழ் என்னும் பெயர் சுத்த தமிழ்மொழியென்றேகொள்ள வேண்டியதாகின்றது.
“ 1திராவிட என்னும் பெயர் தென்னிந்தியாவில் ஒரு குறிக்கப்பட்ட நிலப்பரப்புக்குரிய பெயரென வடமொழிப் பண்டிதர்கள் கூறுகின்றனர். சத்த கல்ப துரும என்னும் நூலில் மகாபாரதத்தை ஆதாரமாகக்கொண்டு இவ்வாறு கூறப்பட்டுள்ளது. திராவிட என்னும் நாடு கிழக்குக் கடற்கரை ஓரமாகத் திருப்பதி முதல் கன்னியாகுமரி வரையும் இருந்தது. இப்பெயர் தென்னாடு முழுவதையும் குறிக்கப் பொதுவாக வழங்கப்பட்டது.”-தமிழ் ஆராய்ச்சி.
“ 2ஆரிய மொழியை வழங்கிய மக்கள் தமிழை உச்சரிக்க முயன்ற முறையினால் திராவிடம் என்னும் சொல் உண்டாயிற்று. தமிழ் என்பது தம்மையும் தமது மொழியையும் குறிப்பதற்குத் திருவேங்கடத்துக்கும் (கடல் வாய்ப்பட்ட) பஃறுளி ஆற்றுக்கு மிடையே வாழ்ந்த மக்கள் இட்டு வழங்கிய பெயராகும். ‘ழ’கரம் ஆரிய மொழிக்குப் புதியதும் தமிழ் மொழிக் குச் சிறப்பாக உடையதுமாகும். வடநாட்டவர் ‘ழ’கரத்தை ‘ள’கரமாக அல்லது ‘ட’கரமாக உச்சரித்தனர்…..இவ்வாறு தமிழ் திராவிடமாக மாறுபட்ட தெனக் காட்டப்பட்டுள்ளது. சமக்கிருதப் பிரியர் தமிழ் சமக்கிருதத்தினின்று பிரிந்ததென்றும் திராவிட என்னும் சமக்கிருதச்சொல் தமிழ் எனத் திரிந்த தென்றும் கூறுகின்றனர். இதனால் புதிய கற்காலம் முதல் வாழ்ந்து வருகின்ற தமிழர் சமக்கிருதமொழியை வழங்கும் மக்கள் வருவதன் முன் தம்மைக் குறிப்பதற்குப் பெயரில்லாது இருந்தார்கள் என்று ஏற்படுகின்றது. இக் கொள்கையும் சமக்கிருதச் சொல் தமிழ் என மாறவில்லை என்பதை வலி யுறுத்துகின்றது. தமிழர் ‘ட’கரத்தை உச்சரிக்க முடியும். வடமொழி ‘ட’கரம் தமிழில் சென்றிருந்தால் அது ‘ட’கரமா யிருக்குமே யன்றி ‘ழ’கரமாக மாற மாட்டாது. இதனால் தமிழ் என்பது திராவிடம் என்னும் சொல்லுக்கு முந்தியதெனத் தெரிகின்றது.
1திராவிட மொழிகள் சமக்கிருதத்தினின்று தோன்றினவா?
திராவிடமொழிச் சொற்கள் பலவற்றில் சமக்கிருத அடிப்படை காணப்படுகின்றது. இதனை ஆதாரமாகக் கொண்டு பழம்போக்கான பண்டிதர்கள் சமக்கிருதத்தை விலக்கித் தனிமையான உற்பத்தியைத் தமிழுக்குக் கூறமுடியாதென்றும், தென்னிந்திய மொழிகள் எல்லாவற்றுக் கும் சமக்கிருதமே தாய்மொழியென்றும் ஆரவாரித்துக் கூறுகின்றனர். இக் கருத்தே கல்லாதவர்களிடையும் ஆராய்ச்சி அறிவில்லாத பழம்போக்கான பண்டிதர்களிடையும் நிலவுகின்றது. திராவிடமொழிகளுக்கு இலக்கண மெழுதியவர்கள் தாம் கையாளும் மொழிகள் சமக்கிருத மல்லாதன எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள். ஒவ்வொரு திராவிட மொழியின் இலக் கண ஆசிரியரும் சமக்கிருதத்திலிருந்து வேறுபடுத்தியறியப்படும் திராவிட மொழியைப்பற்றிக்காட்டியுள்ளார்கள். நன்னூல் செய்த பவணந்தியார் சமக்கிருதத்தினின்றும் தமிழில் வந்து வழங்கும் சொற்களை ஆளுவதற்கு விதி கூறியுள்ளார். ஆந்திரபாஷா பூஷணம் என்னும் தெலுங்கு இலக்கணம் செய்த கேதானர் தூய தெலுங்குச் சொற்களை சமக்கிருதச் சொற்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டியுள்ளார். சத்தமாணிதர்ப்பணம் என்னும் கன்னட இலக்கணம் செய்த கேசிராசா தற்பவச் சொற்களைப் பற்றி ஓர் அதிகாரம் எழுதியுள்ளார். கேரள பாணினீயம் என்னும் மலையாள இலக்கணத்தைச் சமீப காலத்தில் எழுதியவரும் இவ்வகை வேறுபாட்டைக் காட்டியுள்ளார். இவ்விலக்கணம் 1896இல் அச்சிடப்பட்டது. இவ்வாறு இலக்கணஞ் செய்தவர்களுள் மலையாள இலக்கணஞ் செய்தவர்கள், டாக்டர் குண்டேட், டாக்டர் கால்ட்வேல் போன்றவர்கள் திராவிட மொழிகள் ஒன்றோடு ஒன்று இனமுடையன எனக்காட்டிய ஆராய்ச்சிகளை அறிந்திருந்தார்கள். தமிழ் இலக்கண ஆசிரியர்கள் மலையாளச் சொற்களையும் தெலுங்குச் சொற்களை யும் திசைச் சொற்கள் எனக்கொண்டனர். அவர்கள் சொற்களைத் தமிழ்ச் சொல், வடசொல், திசைச்சொல் என மூன்றாகப் பிரித்தார்கள். இப் பிரிப்பின்படி அராபி, பாரசீகம், தெலுங்கு, மலையாளம், துளு, கன்னடம் முதலிய சொற் களும் திசைச் சொல்லில் அடங்கும்.
பழைய காலத்தில் சமக்கிருதம் மிக மரியாதையோடு நோக்கப் பட்டது. அதனால் அது தேவமொழி என்ற நம்பிக்கையும் உண்டாயிற்று. ஆந்திர பாஷா பூசணம் என்னும் தெலுங்கு இலக்கணத்தின் ஆசிரியராகிய கேதானா (கி. பி. 13ஆம் நூற்றாண்டு) என்பார் எல்லா மொழிகளுக்கும் தாய் சமக்கிருதம் எனக்கூறியுள்ளார் 2இதற்குச் சிறிது முற்காலத்தது எனக் கருதப்படும் நன்னயப்பட்டீயம் என்னும் பழைய கன்னட இலக்கணம் சமக்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளது. கன்னட பாஷா பூஷணம் என்னும் பழைய கன்னட இலக்கணம் சமக்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளது. கன்னட பாஷா பூஷணம் என்னும் பழைய கன்னட இலக்கணம் சமக்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளது. இராச இராச வர்மாவாற் செய்யப்பட்ட மலையாள இலக்கணத்துக்குக் கேரள பhணினீயம் என்று பெயரிடப்பட்டது. தமிழில் இலக்கணக் கொத்து என்னும் இலக்கணம் எழுதிய சாமிநாத தேசிகர் “ஒன்றேயாயினும் தனித்தமிழ் உண்டோ….1 ஐந்தெழுத்தா லொருபாடை என்று அறையவும் காணுவரே” என்று கூறினர். இவர் காலத்தவரான சுப்பிரமணிய தேசிகர் பிரயோக விவேகம் என்னும் நூலில் தமிழ் என்னும் பெயரைத் திராவிடத்தினின்றும் பிறந்ததெனக் கூறினார். இவ் வாசிரியர்கள் பதினேழாம் நூற்றாண்டில் விளங்கியவர்களாவர்.
.முற்கால இலக்கண ஆசிரியர்களுக்கு இக்கருத்துக்கள் இல்லை. அவர்கள் சமக்கிருதத்துக்கு மரியாதை கொடுத்தார்கள்; ஆனால் அவர்கள் தமது மொழிக்கு மரியாதை கொடுக்கத் தவறவில்லை. வடமொழியி லெழுதப்பட்ட தெலுங்கு கன்னட இலக்கணங்கள் போன்று தமிழ் இலக்கண மொன்றேனும் வடமொழியில் எழுதப்படவில்லை. இன்றும் தமிழ் வடமொழிக்குக் குறைந்த மொழியன்று என்றும் தமிழ் வடமொழிக் குக் குறைந்த மொழியன்று என்றும் சிவபெருமானே வடமொழியைப் பாணி னிக்கும் தமிழைக் குறு முனிக்கும் அருளிச் செய்தார் என்றும் கொள்ளும் மக்கள் காணப்படுகின்றனர். இக்கருத்து பரஞ்சோதி முனிவருடைய திருவிளையாடற் புராணத்திலும் சிவஞானயோகிகளின் காஞ்சிபுராணத்தி லும் காணப்படுகின்றது.
சமக்கிருதத்தில் அவர்கள் வைத்த மதிப்பினாலோ, சமக்கிருதத்துக் கும் திராவிட மொழிக்குமுள்ள உறவைக் கருதிய பொய்யான மரியாதையி னாலோ திராவிட மொழிகளின் இலக்கண ஆசிரியர்கள் சமக்கிருதச் சொற்களைத் திராவிடச் சொற்களினின்றும் வேறுபடுத்தி அவை திராவிட மொழிகளில் வழங்க நேர்ந்தால் அடையவேண்டிய மாறுதல்களுக்கு விதி களும் வகுத்துள்ளார்கள். தமிழ் இலக்கணங்களுட் பழைய தொல்காப்பியம் தமிழ் சமக்கிருத உற்பத்திக்குரிய மொழியென யாண்டும் கூறவில்லை. அவர் வடவெழுத்து உச்சரிப்பில்லாத சொற்கள் தமிழில் வழங்குவதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். கன்னட இலக்கணத்தில் கன்னடச் சொற்களும், வடமொழிச் சொற்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
2மலையாளம் எப்படித் தோன்றிற்று?
மலையாளம் தமிழ்ச் சிதைவினால் (Dialetic decay) உண்டான பாஷை என்று சிலர் ஒப்பார். மலையாளமும் தமிழும் வேறொரு பாஷையினின்று உற்பத்தியாயினவென்றும் அப்பாஷை இப்போது இல்லாதொழிந்துபோய் விட்டதென்றும் டாக்டர் குண்டேர்ட்டு (Dr. Cundhert) சொல்லுவதுபோல் சிலர் சொல்லுகின்றனர்; வேறு சிலர் மலையாள வியாகரண கர்த்தராகிய அப்பு நெடுங்காடி முதலானவரைப் பின் பற்றி தமிழும் சமஸ்கிருதமும் சேர மலையாளமுண்டாயிற்றென்று கூறுகின்றனர்; வேறுசிலர் தமிழைக்காட்டிலும் மலையாளமே புராதனபாஷை என்றும், பிற்கூறிய பாஷையிலிருந்தே தமிழ் உதித்ததென்றும், யாவரும் அதிசயிக்கும் வண்ணம் நூதன அபிப் பிராயம் ஒன்றை வெளியிட்டனர். இவரது கொள்கைகளனைத்தும் தவறெனச் சிறிது சிந்தித்துப் பார்த்தால் நேயர் யாவருக்கும் விளங்கும்.
டாக்டர் குண்டர்ட்டு குறிப்பிடும் “மூல பாஷை” ஒன்று இருந்ததென நாம் எங்ஙனம் அறிவது? அதற்குரிய சாட்சிகள் ஒன்றும் எடுத்துக்காட்டா மல் “மனத்தினால் மாளிகை கட்டுவது” போல தற்காலத்தில் வழங்கிவராத ஓர் மூல பாஷையைக் குறித்து டாக்டர் குண்டர்டு மனோராச்சியம் செய்யத் தலைப்பட்டனர். நெடுங்காடி முதலியவருடைய கொள்கை பாஷாசாத்தி ரிகள் முன்னிலையில் சின்னாபின்னப்பட்டுச் சிதறிவிடும் என்பதற்கு எள்ளளவேனும் சம்சயமில்லை. உலகத்தில் நடைபெற்று நிற்கும் எல்லாப் பாஷைகளும் மனிதருடைய வீடு முதலிய செயற்கைப் பொருள்களைப் போல் சிற்சில சாமான்களைச் சேர்த்துத் திடீரெனக் கொஞ்சத்தினத்திற்குள் உண்டுபண்ணப்பட்டவைகளல்ல; அவை வித்தில் முளையும், முளையில் மரமும் காலக்கிரமத்தில் தோன்றுவனபோல் இயற்கைப் பிரமாணப்படி நாளடைவில் உதித்துப் பெருகிவளர்வனவாம். பாஷா சாத்திரத்தின் பல உண்மைகளிலும் முதன்மை பூண்ட இவ்வுண்மை அறியாதார் மட்டுமே சமஸ்கிருதத்தையும் சேர்த்து மலையாளமாகிய ஒரு புதுப்பாஷை ஆதியில் இயற்றப்பட்டதெனக் கூறுவர். சமஸ்கிருதமாகிற வடமொழியின் எழுத் துக்கள் மலையாளத்தில் ஏராளமாக வரலாம்; அம் மொழியின் சொற்களும் சொற்களாலாக்கப்படும் வசனங்களும் மலையாளத்தில் ஒரு வேற்றுமை யின்றித் தோன்றலாம். அம்மொழியின் வியாகரண ரீதியை மலையாளம் சில இடங்களில் அனுசரித்துமிருக்கலாம்; அம்மொழியின் சுலோகங்கள் எங்ஙனம் எழுதப்படுகின்றனவோ அங்ஙனமே மலையாள சுலோகங்களும் எழுதப்படலாம். இவ்வித மெல்லாமிருந்தாலும் மலையாளத்திற்கு சமஸ் கிருதம் தாய்ப்பாஷை ஆகவே ஆகாது; ஏனெனில் இவ்விரண்டு பாஷை களும் இரண்டு மனித வர்க்கத்தைச் சேர்ந்தவையா யிருக்கின்றன. தற்காலத் தைய இங்கிலீஷ் மொழிக்கு ஆங்கிலோ சாக்சன் தான் மூல பாஷை எனக் கூறுவரே தவிர இலத்தீன் முதலியன தாய்ப்பாஷை என எவரேனுங் கூறுவரோ?
அதுபோலவே மலையாளமாகிய திராவிட பாஷைக்கு சமஸ்கிருதம் என்னும் ஆரிய பாஷை தாய் எனக் கூறுதல் தவறெனச் சொல்லவும் வேண்டுமோ? இத்தவறுக்குச் சமானமாகத் “தமிழ்” என்னும் சொல் திராவிடம் என்னும் மொழியின் மரூஉ என்று சில சமஸ்கிருத பாண்டித்திய முடைய தமிழ் வித்வான்கள் கூறும் பெருந்தவறு ஒன்றே உள்ளது. மனுஷிய வர்க்க சாத்திர (Ethnology) நிபுணர்கள் ஆரியர் திராவிடர் என்ற இரு பிரிவி னருக்கும் தேகத்தின் அளவு, உருவம், சக்தி, என்பவையிலும், மனப்போக்கு களிலும், புத்திக் கூர்மையிலும், ஆசாரங்களிலும், தொழில்களிலும், மதக் கோட்பாடுகளிலும் வேற்றுமை யுண்டென்று கூறுவதுந் தவிர, பாஷையிலும் வித்தியாசம் உண்டென்றறைகின்றனர். ஆகவே சமஸ்கிருதத்தை மலை யாளத்தின் மூல பாஷை எனக் கூறுதல் ஒரு விதத்திலும் பொருந்தாது. தமிழுக்கு மூல பாஷை மலையாளம் என்ற கோட்பாடுடையவர் சிலரே. இவர் சொல்லுவதை மேற்கூறிய பாஷைகளின் நூற்களை சரித்திர வாயி லாக ஆராய்ச்சி செய்வோர் ஒப்பமாட்டார்கள். ஏனெனில் அந்தக் கோட் பாட்டுக்கும் உண்மைக்கும் இருக்கும் தூரம் சிறிதன்று.
இனி டாக்டர் கால்டுவேல், புரோபஸர், எம்.ஏ. சுந்தரம் பிள்ளை முதலிய தமிழ் வித்துவான்களைப் பின்பற்றி தமிழே மலையாளத்திற்குத் தாய்ப் பாஷையென நிலை நிறுத்துங் காரணங்களனைத்தையும் ஒருவாறு ஒழுங்குபடுத்திக் கூறுவோம்.
காலஞ் சென்ற எம். ஏ. சுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றிய மனோன் மணியம் என்னும் சிறந்த நாடகத்தின் பாயிரத்தில் தமிழ் மாதைத் துதிக்கப் புகுந்து
“கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமுந் துளுவும்
உன்னுதரத்தே யுதித்து ஒன்று பலவாயிடினும்”
எனக் கூறினது ஆங்கில சாத்திர விற்பன்னர்களின் முடிவை அடிப்படை யாகக் கொண்டுள்ளது.
தமிழ் மலையாளம் என வழங்கும் இரண்டு பாஷைகளும் தமக்குள் ஏதாவது சம்பந்தத்தைப் பொருந்தியிருக்க வேண்டும் அல்லது ஒருவித சம்பந்தமும் பொருந்தாதிருக்க வேண்டும். இவ்விரண்டு மொழிகளுக்கும் சம்பந்தம் ஒன்றுமில்லையென ஒருவரும் சொல்லத் துணியார் சம்பந்தம் உண்டெனில் எவ்வித சம்பந்தம்? காரிய காரண சம்பந்தம் என்று கூற நியாயங்கள் பல இருக்கின்றன. ஆயின் காரணமாகிய பாஷை எது? காரிய பாஷை எது? முற்பட்டு நின்ற மற்ற பாஷையை உண்டு பண்ணினது தமிழா? மலையாளமா? தமிழ் சிதைந்து தான் மலையாளம் உண்டாயினதா? அல்லது மலையாளம் திரிந்து தமிழ் உண்டாயிற்றா? இதுதான் நாம் முதலாவது கவனிக்கவேண்டிய விஷயம்.
ஐரோப்பிய பாஷைகளுக்கு அமைந்திருக்கும் பாஷா சரித்திரங்கள் போல் நம் மொழிக்கும் சரித்திரம் அமைந்திருக்குமாயின் மேற்கூறிய வினாக்களுக்கு எளிதில் விடை பெறலாம். அங்ஙனம் சரித்திரம் இல்லா தொழிந்த பெருங்குறையை நீக்குவதற்கு சில கற்றுணர்ந்தோர் தம் மொழி நூற்களை நன்றாக ஆராய்ச்சி செய்து ‘புராணம் விளம்பாது’ சரித்திர வுண்மை மாத்திரம் தொடுத்துக் காட்டமுயன்றனர். அவரது அபிப்பிராயமே சரித்திரம் இல்லாத இடத்து நம்மால் கொள்ளத் தக்கது. அவர் எவ்வாறு பேசுகின்றனர் என்று பார்ப்போம்.
தமிழின்ஆதி நூலென அறியப் பெற்ற அகத்தியம் எக்காலத்தெழுதப் பட்டதெனத் திட்டமாகச் சொல்ல இடமில்லை யாயினும் அகத்தியத்தின் வழி நூலாகிய தொல்காப்பியமும், சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி யாகிய பஞ்சகாவியமும்; எட்டுத் தொகை பத்துப்பாட்டு, பதிணெண் கீழ்க்கணக்கு முதலிய நூற்களிற் சிலவும் இன்றைக்கு 1500 முதல் 2000 வருஷங்களுக்கு முற்பட்டு எழுதப்பட்டிருக்க வேண்டுமென்று சில பண்டிதர்கள் கூறுகிறார்கள். சமய குரவர்களாகிய நாயன்மார்களும், ஆழ்வார்களும் இயற்றிய தேவாரம், நாலாயிரப்பிரபந்தம் முதலியன சுமார் 1000 வருடங்களுக்கு முன் உண்டு பண்ணப்பட்டனவென் றும், கம்பராமாயணம், கலிங்கத்துப்பரணி முதலிய இசையால் திசைபோய நூல்கள் 800 முதல் 900 வருஷங்களுக்கு முன் எழுதப்பட்டனவென்றும், நைஷதம் முதலிய நூல்களும் தமிழ்க்கவியின் உண்மையையும் சிறப்பையும் முற்றும் துடைத்த ஆயிரக்கணக்கான ஸ்தல புராணங்களும் 400 முதல் 500 வருஷங்களுக்கு முன் எழுதப்பட்டன வென்றும் தமிழ்ப் புலமை சான்றோர் கூறுகின்றனர். சென்ற 400 வருட காலமாக தமிழ் வளராது பெருந்தூக்கம் தூங்குகின்றதென்பதை இக்காலத்தில் அம்மொழியிற் சிறந்த நூல்களொன்றும் எழுதப்படாமையே விளக்கிக் காட்டும். அங்ஙனமன்றி மலையாளமோ தமிழ் அயர்ந்திருக்கும் சென்ற 400 ஆண்டுகளிற்றான் வளர்ச்சியுற்றது. மலையாள பாஷையின் சரித்திரத்தைக் கூறுபடுத்தி முதற்பாகம் ‘கருந்தமிழ்’ என்றும், அது கலியப்தம் ஆரம்பமுதல் 3000 வருடம் நிகழ்ந்ததென்றும்; இரண்டாம் பாகம் ‘பழைய மலையாளம்’ என்றும் அது 1000 வருடம் நிகழ்ந்ததென்றும்; மூன்றாம் பாகம்; மத்திய கால மலையாளம் என்றும் அது கொல்லம் 600 ஆண்டுவரை நிலை நின்றதென் றும், அதன் பின் நான்காம் பாகமாகிய தற்கால மலையாளம்’ கொல்லம் ஆண்டிற்கு மேல் 500 வருடங்களாக நிலைபெற்று வருகின்றதென்றும் கனம் நாகம் அய்யர் இயற்றிய 1891 வருட திருவாங்கூர் சென்ஸஸ் ரிப்போர்ட் வாலிம் ஒன்று பக்கம் 512இல் எழுதப்பட்டிருக்கின்றன. மேலும் சென்ற 400 வருடங்களில் 176 கிரந்த கர்த்தாக்களால் 604 நூற்கள் மலையாளத்தில் இயற்றப்பட்டிருக்கின்றன வென்றும் அங்கு குறிக்கப்பட்டிருக்கின்றது. இதனால் நாம் அறிவதென்னவெனில், மலையாளம் தமிழுக்குப் பிற்பட்ட தென்பதே. 2000 வருடங்களுக்கு முன்னமே உதித்து வளர்ந்து, கீர்த்தி படைத்து சென்ற 400 வருடங்களில் அலுத்துத் தூங்கும் தமிழ் மாதாவாகும். முதியவளுக்கெதிரில் அந்நானூறு வருடங்களிலேயே உதித்து நடைபெற்று உலாவும் மலையாளத்தைச் சிறுமி எனவோ? அல்லது பசுங் குழவி என்னவோ? கர்ண பரம்பரையான கதையை வைத்துக் கணிக்கில் அம் மலை யாளத்தின் முதற்படி கருந்தமிழ் என்று ஒப்பவேண்டுமே. செந்தமிழ் சிதைந் துண்டான கருந்தமிழே மலையாளத்திற்கு “தாயுமானது தந்தையுமானது” இதனை நிலைநிறுத்துவதற்குச் சான்றுண்டோவெனில் கூறுவோம்.
1. தொன்று தொட்டு வழங்கும் பதினெண் பாஷை! என்னும் பாகு பாட்டினுள் மலையாளம் ஏன் வரவில்லையோ? துளுவம், சிங்களம், முதலியவற்றைக் கூறியும் மலையாளத்தைக் கூறாதும் விடுத்ததேன்? சமஸ்கிருதம் ஏன் பதினெண் பாஷையுள் சேர்க்கப்பட வில்லையெனின், அது பிற சாதிப் பாஷைகளைப் போல் ஓரிடத்தில் வழங்கிவராமையினா லும், அவை போலாது உலகவழக்கழிந்தொழிந்து சிதைந்தவதனாலுமே யென்று சந்தேக மறச் சாற்றலாம். மலையாளம் வழக்கில் இயலும் பாஷை யாகவிருந்தும் ஏன் குறிக்கப்பட வில்லையெனின், அக்காலத்தில் மலை யாளம் என்ற ஓர் பாஷை இல்லாதிருந்த தக்க காரணத்தினாற்றான்.
2. தமிழ் நாட்டின் பூர்வ எல்லையை நோக்கு மிடத்து, தொல்காப் பியம் சிறப்புப்பாயிரத்தில்,
“வட வேங்கடம் தென்குமரி
யாயிடைத் தமிழ் கூறு நல்லுலகத்து”
என்று கூறப்பட்டிருக்கிறது “குணகடல்குமரி குடகம் வேங்கடம் எனு நான் கெல்லையினிருந்தமிழ்க் கடல்” என்றார் பிறரும். வடவெல்லை திருவேங் கடமும் தெற்கெல்லை குமரியும் கீழ்மேல் எல்லைகள் கடலுமெனக் கூறி யிருத்தலினாலும் அவ்வெல்லைக்குள் திருவிதாங்கொடு என்னும் தேசம் அமைந்து கிடத்தலினாலும் இந்நாடு, கால அளவையை எத்துணை நீட்டி னும் 1500 வருடங்களுக்கு முன் தமிழ் நாடாக இருந்திருக்க வேண்டுமெனப் பெற்றாம்.
3. கொடுந்தமிழ் நாடு பன்னிரண்டினையும் இலக்கண நூலார் குறிக்கும் பொழுது குட்டநாடு, குடநாடு, மலாடு (மலைநாடு) முதலியன யாவும் தமிழ் நாடெனவே பேசுகின்றார். ஆலப்புழைக்குச் சமீபமாயிருக்கும் குட்டநாட்டில் தாயைத் தள்ளை என்றும் தந்தையை அச்சன் என்றும் கூறுவாராயினும் தமிழ்நாடு என்னும் பெயருக்கு அந்நாடுகளின் உரிமை கெட்டுப் போக வில்லை. தள்ளை, அச்சன் முதலிய பதங்கள் செந்தமிழ் நிலத்தில் வந்து வழங்காமையினால் அவற்றைக் கொடுந்தமிழ் நிலத்திலிருந்து வரும் ‘திசைச் சொல்’ என்று தமிழ் இலக்கண நூலார் தழுவுகின்றார். அவை கொடுந் தமிழாயினுந் தமிழே. கொடுந்தமிழ் எனினும் மலையாளத்திற்கு ஆதியாக நின்ற ‘கருந்தமிழ்’ எனினும் ஒக்கும்.
4. கொடு மலையாளம் என்று நம்மவரால் எண்ணப்படும் இடங்களி லிருந்தே அக்காலத்தில் சிலர் தமிழில் சிறந்த நூற்களியற்றி புகழ்படைத் திருக்கின்றனர். கொடுங்கல்லூர் என்ற கொடுங்கோளூரில் வசித்த இளங்கோ வடிகள் என்னும் சேர அரசனால் தமிழின் மணியென விளங்கும் பஞ்ச காவியத்துள் ஒன்றாகிய சிலப்பதிகாரம் செய்யப்பட்டிருக்கிறது. இதுபோல வேறு நூற்களும் உள.
5. தமிழிலும் மலையாளத்திலும் வழங்கிவரும் அநேக எழுத்துகள் ‘வட்டெழுத்து’ என்று சொல்லப்படும் ஒருவித பூர்வ எழுத்திலிருந்து உண்டானவை. மலையாளத்தில் ‘வட்டெழுத்து’ கோலெழுத்தாகிப் பின் சமஸ்கிருதத்தோடு ஊடாடிச் சிறுபாகம் கிரந்தாக்ஷரங்களின் பூர்வ வடிவமே பொருந்தி நிற்கின்றன. தமிழிலே பெரும்பான்மை எழுத்துக்களும் வட்டெழுத்தின் வடிவத்துடன் இருக்கின்றன. சிலவற்றில் வடிவ மாறுபாடும் புகுந்திருக்கின்றது. இவ்விஷயம் டாக்டர் பார்னல் என்னும் வித்வசிகாமணி இயற்றியிருக்கும் தென்னிந்தியாவின் எழுத்து விவரணம் (South Indian Palaeography), என்ற நூலிற் கொடுத்திருக்கும் வட்டெழுத்துப் படத்தை நோக்கும் நண்பர்களுக்கு நன்கு புலப்படும். தமிழ் அக்ஷரங்களாகிய உ, ஒ, க, வ, ண, ன, ர, முதலியவைகளுக்கும் க, உ, ங, ச, முதலிய இலக்கங்களுக்கும் வித்தியாசம் அதிகம் இல்லையே. இதனால் நாம் அறிந்து கொள்வது யாது?
6. மலையாள வீடுகளில் வழங்கிவரும் சாதாரணப் பொருள்களுக்கு மலையாளத்தில் சொல்லும் பெயர்களும் தமிழே. மலையாளத்தோடு கலந்திருக்கும் வடமொழியை நீக்குவோமாகில் மீதியாக நிற்கும் பாஷை தமிழே. அம்மை, அப்பன், ஆண், பெண், மக்கள், வீடு, சோறு, காற்று, மழை, கார், எலி, நாய், கிளி, வாழை, தெங்கு, மா முதலிய தமிழ்ச் சொற்களும், இவை போன்ற எண்ணிறந்த சொற்களும் மலையாளத்தில் வேற்றுமை யின்றிப் பிரயோகிக்கப்படுகின்றனவே. பறைந்நு, பறஞ்ஞு, என்ற மலையாளி கள் சாதாரணமாகப் பேசும் சொற்களின் ‘பறை’ என்பது காவிய வழக்கே தவிர உலக வழக்கன்று; சொல்லாமல் பறையாமல் என்று மொழித்தொடரில் மட்டிலும் அது நிலவி வருகின்றது.
7. தமிழ் இலக்கணத்தில் வரும் பால் விகுதி அள், அர், ஆர், மார், கள், தி முதலியனவும் வேற்றுமையுருபு ஐ, ஆல், கு முதலியனவும் மலை யாளத்தில் ஒரு பேதமும் இல்லாமல் வருகின்றவே! ‘உடைய’ என்பதை ‘உடே’ என மாற்றினாலும் ‘அவனோடு’ என்பதை அவனோடு என எழுதி அவனோட என உச்சரித்தாலும் இவை தமிழுக்குப் புறம்பாமோ?
8. மலையாள பாஷையிற் கூறப்படும் ‘பழமொழிகள்’ ‘பாட்டுகள்’ முதலியவற்றில் தமிழ் வார்த்தைகளே அதிகம். ‘தோற்றப்பாட்டு’ ‘அழ குடைய பெருமாள் பாட்டு’ என்ற பூர்வீக பாடல்களில் தமிழே அதிகரித் திருக்கக் காணலாம். இவைகளில் மலையாளப் பதங்களும் அப்பதங்களைச் சேர்க்கும் நீதிகளும் மிகவும் குறைந்திருப்பதனால் இவை தமிழ் அதிகம் சிதையாதிருந்த காலத்தில் உண்டு பண்ணப்பட்டனவென்று தெளிவா கின்றது.
9. மலையாள பாஷையில் ஆதியில் எழுதப்பட்ட நூற்களாகிய அய்யிப்பிள்ளை ஆசானுடைய இராமாயணம், கண்ணசப் பணிக்கருடைய இராமாயணம் முதலிய நூல்களில் தமிழ் ஏராளமாக உபயோகப் பட்டிருக் கின்ற தென்றும், தற்காலத்தில் இயலும் மலையாள பாஷையின் நூற்களென அவற்றை அழைத்தல் ஆகாதென்றும் அந்நூற்களை ஆராய்ந்த கன வான்கள் ஒப்புக்கொள்கின்றனர். இதனால் மலையாளம் எவ்விதம் எப்படி உதித்ததென்று உள்ளங்கை நெல்லிக்கனி போல் விசதமாகின்றதே!
10. சிலாலிகிதம் என்னும் பூர்வீக கல்லெழுத்துக்களை நோக்குவோ மானால் தமிழ் நாளடைவில் சிதைந்து மலையாளம் உதித்த விதம் நாம் நன்றாக அறிவோம். திருவனந்தபுரத்திற்குத் தெற்கே இருக்கும் திருவல்லம் என்னுமிடத்திலிருக்கும் சிலா லிகிதம் ஒன்றை நமது நண்பர்களாராயின் தமிழ் இங்கு கெட்ட வழியையும் பார்ப்பவர்கள் ஆவார்கள். ‘இருந்து’ என்பது இருந்நு என்று கெடவும், உடைய என்பது உடே என்று வேறுபடவும் வெகு காலம் வேண்டுமோ? உரையாடுதல் என்னும் செந்தமிழ் ‘உரியாடு தல்’ என்று இக்கொடுந் தமிழ்நாட்டில் திரியாதிருக்குமோ? கல் தச்சர் அவ் விதம் எழுத்துக்களைக் கல்லில் கொத்தித் தமிழ்ப் பாஷையைக் கெடுத்தா ரெனச் சொல்லுதலும் சாலாது. அங்ஙனம் அவர் செய்யினும் அவை வழக்கில் வரா. ஆகையினால் வழக்கத்தில் கெட்டு வந்திருந்த மொழி களையே கற்றச்சர் திருத்தாமல் கொத்தி தமிழ் பாஷையினுடைய சிதைவின் சரிதமாக நாட்டினர் என்று நாம் கொள்ளவேண்டும்.
மேற்கூறிய காரணங்களினால் தமிழ் மலையாளத்திற்கு மிகவும் முந்திய பாஷையென்றும், தமிழ் கெட்டு மலையாளம் உதித்ததென்றும் தெள்ளிதிற் புலப்படும்.
தெலுங்கு கன்னடம் முதலிய மொழிகளுக்குத் தாய் தமிழே
கன்னடம் தெலுங்கு முதலிய மொழிகளில் கி.பி. 10ஆம் நூற்றாண் டுக்கு முற்பட்ட இலக்கியங்கள் இல்லை. கன்னடம் தெலுங்கு முதலியன தமிழை ஒத்த பழைய மொழிகளாயின் அவைகளில் பழைய இலக்கியங்கள் இருத்தல் வேண்டுமன்றோ? தமிழுக்கு முற்பட்ட வேறு ஒரு பழைய மொழி இருந்ததென்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. 3000 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மொழி இருந்ததென்பதை எபிரேய மொழியில் சென்று வழங்கிய தமிழ்ச் சொற்களைக் கொண்டு அறிகின்றோம். வளர்ந்த பிள்ளைகள் தமது பெற்றோரின் உறவை மறுப்பது போல்வதே கன்னடர் தெலுங்கர் முதலி யோர் தமது மொழிக்குத் தாய் தமிழ் என்பதை மறுத்துரைப்பதாகும்.1
பி.தி. சீனிவாச ஐயங்காரவர்கள் “கற்கால இந்தியா” “ஆரியருக்கு முற்பட்ட தமிழர் நாகரீகம்” என்னும் நூல்களில் இமயமலை முதல் கன்னி யாகுமரி வரையில் தமிழ்மொழி ஒன்றே வழங்கிற்று என்று எடுத்து விளக்கி யுள்ளார்.
தமிழ் மொழி ஒன்றே வடமொழிப் பிரளயத்துக்குட்பட்டு கன்னடம் தெலுங்கு துளு மலையாளம் முதலிய மொழிகளாக மாறியுள்ளன. சங்க காலத் தமிழுக்கும் இன்றைய தமிழுக்கும் அதிக வேறுபாடு உண்டு. மணிப் பிரவாள நடை என்னும் ஒரு நடையும் ஒருகால் வழங்குவதாயிற்று. இதில் சரிக்குச் சரி தமிழும் சமக்கிருதமும் கலக்கப்பட்டன. இந்நடையைத் தமிழ்ப் புலவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ்ப் புலவர்கள் இதனை எதிர்த்து நிற்காவிடில் இன்று தமிழ் மொழி என ஒன்று இல்லாமல் போயிருக்கும். மேற்குக் கரையிலுள்ள மக்கள் இதனை அனுமதித்தமையினாலேயே தமிழ் கெட்டு மலையாள மொழியாக மாறிற்று எனச் சில ஆராய்ச்சியாளர் கூறி யுள்ளார்கள். இன்று ஐம்பது ஆண்டுகளின் முன் எழுதப்பட்ட தமிழ் நடை யில் அதிக வடசொற்களைக் காணலாம். பத்து ஆண்டுகளின் முன் எழுதப் பட்ட தமிழ் நடையில் பல வடசொற்கள் களையப்பட்டுள்ளன. இன்று வட மொழிக் கலப்பில்லாத தமிழ் நடை எழுதுவதே சிறந்த நடை எனப் போற்றப் படுகின்றது. இன்று பெரும்பாலும் தமிழ் தூய்மையாகவே கற்றோரால் எழுதப்பட்டு வருகின்றது. தமிழ்ச் சொல்லாட்சி அறியாத சில்லறைப் படிப்பாளர் பெரும்பாலும் மனம் போனவாறு எழுதி வருகின்றனர்.
இன்றும் ஒரு சாரார் தமிழோடு பிறமொழி கலப்பதினால் தமிழ் வளருமெனக் கரைகின்றனர். இவர்கள் தமிழ் அறிவு சாலாதவரேயாவர். இவர்கள் தமது தமிழ் எழுதும் திறமையின்மையைப் போர்த்து மூடுவதற் காக இங்ஙனம் கூறுகின்றார்களேயன்றி உண்மையில் உணர்ந்து கூறுகின்ற வர்களல்லர். தமிழ்க்கல்வி மிகக்குன்றிவிட்டமையால் தமிழுக்கு உரைகல் இல்லாமல் போய்விட்டது. தமிழைப்பற்றிக் கூறவல்லவர்கள் தமிழ் அறிவு நிரம்பியவர்களே. இன்று தமிழ் சம்பந்தமானவைகளுக்குத் தமிழறிவு நிரம்பாத ஆங்கிலமொழிப் பட்டம்பெற்ற சிலரே கூறி வருகின்றனர். அரசினர் பேரகராதி தொகுத்த காலத்திலும் கலைக்களஞ்சியம் தொகுக் கப்படவிருக்கும் காலத்திலும் தமிழ் அறிந்த பேராசிரியர்கள் பெயர்களிற் பல காணப்படவில்லை.
கோயில்களில் சமக்கிருதம்
தமிழ் சிறந்தமொழி, சமக்கிருதம், ஆங்கிலம் போல் பிறநாடுகளி லிருந்து வயிற்றுப் பிழைப்பின் பொருட்டு வந்த மொழி என நாம் நன்கு அறிகின்றோம். அப்படி இருந்தும் சமக்கிருதத்தை இன்னும் ஆலயங்களில் வைத்துக் கொண்டிருப்பது, தமிழ் அவமதிப்பும், புத்தியற்ற செயலுமாகும். இச்செயலில் தமிழ் மக்களின் கண் திறக்காமல் இருப்பது மிக மிக வருந்தத் தக்கது. அன்னிய மொழியைக் கோயில்களில் நுழைய விட்டு விட்டு நாம் தமிழை வளர்க்கிறோம் எனப் போடப்படும் கூச்சல்களில் பொருளே யில்லை. தமிழை வளர்ப்பதற்குச் சிறந்த முறைகளிலொன்று தமிழைச் சமய மொழியாக்குவதே.
இந்தியப் பண்பாட்டுக்குச் சமக்கிருதம் திறவுகோலா?
இந்தியப் பண்பாட்டுக்குச் சமக்கிருதம் திறவுகோல் எனச் சிலர் சாற்று கின்றனர். இன்று இந்திய மக்களின் பண்பாட்டை வெளியிடும் கருத்துக்கள் பல ஆங்கில மொழியில் எழுதப்பட்டுள்ளன. இதனால் ஆங்கிலம் இந்தியப் பண்பாட்டின் திறவுகோலாகுமா? சமக்கிருதம் சமயமொழியாகிப் பின் சாதி மொழியாகி ஒரு கூட்டத்தினரிடையே வழங்குவதாயிற்று. பிற்காலங்களில் புத்த சைனமதத்தினரும் இம்மொழியைத் தமது சமய இலக்கிய மொழியாகப் பயன்படுத்தினர். இதனால் தென்னாட்டு வடநாட்டு வித்துவான்கள் அறிந்த மொழி சமக்கிருதமாயிருந்தது. ஆகவே வடநாட்டு தென்நாட்டு வித்துவான் களுக்கு ஒருவர் கருத்தை மற்றவர் அறியும்படி உணர்த்தும் மொழி சமக் கிருதமாகச் சிலகாலம் இருந்து வந்தது. சமக்கிருத நூல்களில் காணப்படும் அரிய கருத்துக்கள் பெரும்பாலும் திராவிட மக்களுடையனவே. ஏனைய ஆரிய வகுப்பினர்களிடையே காணப்படாது இந்திய ஆரிய வகுப்பின ரிடையே காணப்படும் பண்பாடுகள் எல்லாம் திராவிட மக்களால் உதவப் பட்டனவே. வேதகாலத்திலேயே வடநாட்டில் திராவிடரும் ஆரியரும் கலந்து ஒன்றுபட்டனர். ஆரியர் திராவிடப்பெண்களை மணந்தனர். அவர் களுக்குத் தோன்றிய சந்ததியினர் ஆரியராயினர். திராவிட ஆடவர் ஆரியப் பெண்களை மணந்தனர். திராவிடரின் தாயாட்சி வழக்கின்படி அவர்கள் மூலம் பிறந்த பிள்ளைகளும் ஆரியராயினர். இவ்வாறு வடநாட்டில் ஆரிய ரெனப்படுவோர் ஆரிய திராவிட இரத்தக் கலப்பினால் தோன்றியவர்களே.
தமிழரின் பண்பாட்டுக்கு வடமொழி இம்மியளவும் துணை செய்த தன்று. அது தமிழரின் பண்பாட்டை இரண்டாயிரம் ஆண்டு முதல் கெடுத்தும் குழப்பியும் வருகின்றது. தமிழருக்குச் சமக்கிருதப் பயிற்சி வேண்டுவது மன்று. சமக்கிருதநூல்கள் பெரும்பாலும் ஆங்கிலமொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. ஆரிய நூல்களைப்பற்றி அறியவிரும்புவோர் மொழி பெயர்ப்பு நூல்களைப் படித்து அறிந்து கொள்ளுதல் கூடும். இன்று பெரும் பட்டதாரிகளாகப் பல்கலைக் கழகங்களில் இடம்பெற்று ஆராய்ச்சி செய்வோரும் மேல்நாட்டு அறிஞரின் மொழி பெயர்ப்பு நூல்களையே ஆதாரமாகக் கொண்டு நூல்கள் எழுதி வருகின்றனர். ஒரு கூட்டத்தினர் அது தமது சாதி மொழி, தமது பரம்பரை மொழி என்று வடமொழியைப் பயில்கின்றார்களேயன்றி அம்மொழியிலுள்ள உயர்ந்த நூல்களைக் கற்று ஆராயச்சி செய்வதற்கோ அறிவைப் பெருக்கிக் கொள்வதற்கோ அதனைப் பயில்கின்றவர்களல்லர். அம் மொழியில் எழுதப்பட்ட நூல்கள் பெரும் பாலும் சமய சம்பந்தமானவையும் இக்காலத்துக்கு ஏற்காதனவுமாகும். திருக்குறள் போன்ற ஒரு நூலை வடமொழியிற் காணமுடியாது.
“பத்துப் பாட்டாதி மனம் பற்றினார் பற்றுவரோ
எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே.”
“வள்ளுவர்செய் திருக்குறளை வழுவற நன்குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத் துக்கொருநீதி”
(மனோன்மணீயம்)
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதா வதெங்கும் காணோம்
பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும்
இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ சொல்லீர்
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்” (பாரதியார்)
கருத்துகள்
கருத்துரையிடுக