சிறந்த கதைகள் பதிமூன்று
சிறுகதைகள்
Back
சிறந்த கதைகள் பதிமூன்று
உள்ளடக்கம்
அஸ்ஸாமி சிறப்பு பரிசு 3
வங்காளம் பசித்த மரம் 11
ஆங்கிலம் சீதாவும் ஆறும் 31
குஜராத்தி அவன் சட்டையில் இவன் மண்டை 47
ஹிந்தி கவண் வைத்திருந்த சிறுவன் 56
கன்னடம் ராகுலன் 63
மலையாளம் சுந்தரும் புள்ளிவால் பசுவும் 73
மராட்டி அதிவேக பினே 81
ஒரியா சொர்க்கத்துக்கு ஏழு படிகள் 91
பஞ்சாபி பம் பகதூர் 101
தமிழ் ஸ்டாம்பு ஆல்பம் 113
தெலுங்கு அப்புவின் கதை 124
உருது கர்வத்தின் விலை 130
சிறப்புப் பரிசு
அனந்த தேவ சர்மா
என்ன மோசமான பையன்! அவனை உதைக்க வேண்டியது தான், மற்றப் பையன்களோடு அவன் சண்டை போடுவது பற்றியும் அதிகம் கேள்விப் படுகிறேன். அவனைக் கூப்பிடு உடனே. "மோகன்! ஏய் மோகன்!" தலைமை ஆசிரியர் தன் பியூனை கூப்பிட்டார். அவர் குரலின் வெடிப்பைக் கேட்டே, தலைமை ஆசிரியர் வெகு கோபமாக இருக்கிறார் என மோகன் புரிந்து கொண்டான். உள்ளே விரைந்து, "என்ன ஐயா?" என்று பணிவுடன் கேட்டான்.
"சீக்கிரம் போய் ஐந்தாம் வகுப்பு தபனைக் கூட்டி வா" என்று அவர் கட்டளையிட்டார்.
தபன் பதுமணி கிராமத்தின் குமாஸ்தாவான ரத்தனின் இரண்டாவது மகன். தோற்றத்தில் மெலிந்திருப்பினும் பலசாலி. சற்று கறுப்பு நிறம். ஒளி நிறைந்த கண்கள் கொண்டவன். படிப்பில் கெட்டி. ஆனால், வீட்டிலும் வெளியிலும் சதா ஏதாவது விஷமத்தனங்கள் செய்து வம்பில் சிக்கிக் கொள்வான். அவனாக வலியச் சண்டைக்குப் போகமாட்டான். ஆனால் யாராவது அவனை வம்புக்கு இழுத்தால் பதிலடி கொடுக்க அவன் தயங்குவதில்லை. தன் வயதுப் பையன்களிடையே அவனே தலைவன். அவர்களுக்காகப் பரிந்து அடிதடியில் இறங்க அவன் எப்பவும் தயாராக இருந்தான். அவன் பிரபலமானவன். அவன் சகாக்கள் அவனை மதித்தார்கள்.
கிராமத்தின் ஆரம்பப்பள்ளியில் கற்று முடிந்ததும், தயன் பதினைந்து மைல்களுக்கு அப்பால் உள்ள உயர்நிலைப்பள்ளிக்குப் போனான். தன் மாமாவுடன் ஒரு வருடம் தங்கியிருந்தான். மீண்டும் ஊருக்கு வந்து அவன் ஞானபீடம் உயர்நிலைப் பள்ளியில் படிக்கிறான். ஊரிலிருந்து ஒன்றரை மைல் தூரத்தில் இருக்கிறது அது.
அவன் ஞானபீடத்தில் சேர்ந்து ஒரு மாதம் தான் ஆகிறது. அதற்குள் அவன் மீது ஒரு குற்றச்சாட்டு வந்துவிட்டது. பதுமணி கிராமத்தின் கடைக்காரன் ஹரன் தலைமை ஆசிரியரிடம் முறையிட்டான். தபனும் பல சிறுவர்களும் சேர்ந்து முன்தினம் மாலையில் அவன் கடைமீது கற்களை வீசினார்கள்; அவன் தவறு எதுவும் செய்யவில்லை; தபன் தான் அக் கும்பலுக்குத் தலைவன் என்று கூறினான்.
தபன் பியூனுடன் வந்து சேர்ந்தான். தலைமை ஆசிரியரைப் பயத்துடன் பார்த்துத் தலைகுனிந்து நின்றான். அவர் பிரம்பை ஆட்டிய வாறு "நீ தானே தபன்?" என்று அதட்டினார்.
"ஆமாம் ஸார்" என்று தபன் பணிவுடன் சொன்னான்.
கடைக்காரனைக் காட்டி, "இவரை உனக்குத் தெரியுமா?" என்று தலைமை ஆசிரியர் கேட்டார்.
"தெரியும் ஸார். எங்கள் ஊர்க் கடைக்காரன்."
" சரி. நேற்று மாலை நீயும் உன் நண்பர்களும் கூடி இவன் கடை மீது கல்லெறிந்தது உண்மைதானா?"
"ஆமாம் ஸார். நானும் ரத்தனும் மற்றும் சிலரும் இவன் கடைமீது கல்விசியது உண்மை தான்."
"ஏன்? ஏன் அப்படிச் செய்தாய், சொல்லு" என்று தலைமை ஆசிரியர் முழங்கினார்.
"ஐயா, இவன் ஏய்க்கிறான். அதிக விலை வாங்கிக் கொண்டு, சாமான்களைக் குறைவாய்த் தருகிறான். மேலும், இவன் புதுரகத் தாள் பை ஒன்றை உபயோகிக்கிறான். அதன் அடியில் கனத்த தாள்கள் ஒட்டி யிருக்கின்றன. நேற்று முன்தினம் நாங்கள் இவனிடம் ஒரு கிலோ பருப்பு வாங்கினோம். வீட்டில் அதை நிறுத்தபோது எண்ணுாறு கிராம் தானிருந்தது. பையிலிருந்த தாள் ஐம்பது கிராம் கனமிருந்தது. நூற்றைம்பது கிராமுக்கு நிறுவையில் கள்ளத்தனம் செய்திருக்கிறான். இது ஊர் முழுதும் தெரிந்த விஷயம். நேற்று இதை நான் இவனிடம் கேட்டேன். இவன் ஏசி என்னை வெளியே துரத்தினான். அதனால் தான் நானும் மற்றவர்களும் இவன் கடை மீது கல்விசினோம்."
தலைமை ஆசிரியர் கடைக்காரனை நோக்கினார். அவன் முகம் சிவந்திருந்தது.
தலைமை ஆசிரியர் சிறிது நேரம் யோசித்தார். பிறகு தபன் பக்கம் திரும்பி, "அப்படி இருந்தாலும், நீ செய்தது சரியல்ல. பிறர் பொருளைச் சேதப்படுத்துவது தவறு. கடைக்காரன் ஏமாற்றினால், அதைக் கவனிக்க வேண்டியது அரசு அல்லது ஊர்பஞ்சாயத்தின் பொறுப்பு ஆகும். அது உன் வேலை இல்லை. கையை நீட்டு!" என்றார். தபனுக்குப் பிரம்பினால் ஐந்து அடிகள் கிடைத்தன, அவன் வகுப்புக்குத் திரும்பியதும், சக மாணவர்கள் அவனை ஒரக்கண்ணால் பார்த்துக் கேலியாகச் சிரித்தார்கள்.
சில தினங்களுக்குப் பிறகு இன்னொரு சம்பவம் நடந்தது. அவ்வட்டாரத்தில் தொல்லை கொடுத்து வந்த ஒரு முரட்டுக் காளை சம்பந்தப் பட்டது அது. அது பலபேரை முட்டித் தள்ளியிருந்தது. யாராவது கம்புடன் அதை நெருங்கினால் அது அவர்களைத் தாக்கும். அதைக் கண்டு அனைவரும் பயந்தனர்.
அந்தக் காளையின் மூர்க்கத்தனம் தபனின் வீரத்தைத் துாண்டியது. "இரு இரு தடிமாடே! நான் உன்னை அடக்குகிறேன்" என்று அவன் முனகினான். பள்ளி இடைவேளையின் போது அவன் ஒரு கம்பும் துண்டுக் கயிறும் எடுத்துக் கொண்டு மெதுவாகக் காளையை அனுகினான். காத்து நின்று, சரியான சமயம் பார்த்து, அதன் முதுகு மேல் தாவி ஏறினான். குதிரைக்குக் கடிவாளம் மாட்டுவது போல், கயிற்றைக் காளையின் வாயில் திணித்தான். காளை திடுக்கிட்டுத் திகைத்தது. தன் முதுகு மேல் இருந்த கனத்தை உணர்ந்ததும் அது கால்களை உதைக்கவும் துள்ளிக் குதிக்கவும் தொடங்கியது. தொல்லை தருபவனை உதறித் தள்ளலாம் என எண்ணி வேகமாய் பாய்ந்து ஒடியது. இதற்குள் பள்ளி இடைவேளை முடிந்தது. வகுப்பு ஆரம்பித்து விட்டது. ஆனால் தபன் காளையை அடக்குவதிலேயே கருத்தாக இருந்தான். துள்ளிக்குதிக்கும் முரட்டுக் காளையின் முதுகிலிருந்து கீழே விழாதபடி அவன் கயிற்றை இறுகப் பற்றிக் கொண்டு சமாளித்தான். காளையின் முதுகில் தட்டினான். இது காளைக்கு மேலும் வெறியூட்டியது. அது பள்ளி வளைவினுள் பாய்ந்தது. ஏழாம் வகுப்பு அறைக்குள் புகுந்தது. ஆசிரியரும் மாணவர்களும் பதறியடித்துச் சிதறினர். முட்டி மோதிக் கொண்டு அறைக்கு வெளியே ஒடினார்கள். பலர் தவறி விழுந்தனர். ஆசிரியர் ரஜனி சகாரியா வெளியில் ஒடித் தப்பினார். வெறித்தனமாய் தாவிக் குதித்த காளையின் கொம்புகள் பட்டு சன்னல் கண்ணாடிகள் உடைந்து போயின. இறுதியில், மிரண்டுவிட்ட காளை அரண்டு கதறி பள்ளி மைதானத்திற்கு ஒடித் தள்ளாடி விழுந்தது. சில கணங்களில் துள்ளி எழுந்தது. திரும்பிப் பார்க்காமலே தப்பினோம் - பிழைத்தோம் என்று பாய்ந்து ஒடியது.
ஆகவே, தபன் பேரில் மற்றொரு குற்றச்சாட்டு வந்தது. இம்முறை ஆசிரியர் ரஜனி சகாரியா முறையிட்டார். தலைமை ஆசிரியர் கோபத்தால் வெகுண்டார். அந்தப் பையன் ஒயாத தொல்லையாக, தொந்தரவு தருபவனாக இருக்கிறானே. மாணவர்கள் மட்டுமின்றி, பள்ளிக் கட்டிடமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அவர் தபனை மீண்டும் வரவழைத்தார்.
பணியாள் மோகனோடு தபன் வந்தான். அவனைக் கண்டதும் தலைமை ஆசிரியரின் கோபம் பொங்கியது.
"நீ ஒரு துஷ்டன் ஏன் அந்தக் காளையை நீ வகுப்பறைக்குள் ஒட்டினாய்?" என்று பிரம்பை ஆட்டிக்கொண்டே அவர் கேட்டார்.
தலைகுனிந்து நின்ற தபன் சொன்னான்: "ஐயா, நான் அந்தக் காளையை வகுப்புக்குள் ஒட்டவில்லை. அதை அடக்குவதற்காக நான்
அதன் முதுகில் சவாரி செய்தேன். அது சடாரென்று அறைக்குள் பாய்ந்து விட்டது."
“பள்ளி நேரத்தில் காளைச் சவாரி பண்ணும்படி உனக்கு யார் சொன்னது? கையை நீட்டு."
தபன் தலைமை ஆசிரியரின் பிரம்பால் பதினைந்து அடிகள் பெற்றான். அவன் சகமானவர்கள் மீண்டும் சிரித்துக் கேலி செய்தார்கள். பள்ளிக்கூடத்தின் கெட்ட பையன் என்ற பட்டம் அவனுக்குக் கிடைத்தது. வெகு சீக்கிரமே பள்ளியில் ஒரு சுற்றறிக்கை விடப்பட்டது. அது கூறியது: ஐந்தாம் வகுப்பு தபன் ஏழாம் வகுப்பினுள் ஒரு காளையை ஒட்டி, ஆசிரியரையும் மாணவர்களையும் நிலைகுலையச் செய்ததற்காகவும், சன்னல் கண்ணாடிகளை உடைத்ததற்காகவும், பதினைந்து பிரம்படிகள் பட்டான். மேலும் நஷ்டத்துக்கு ஈடுகட்ட ரூ. 25 அபராதம் விதிக்கப் பட்டிருக்கிறான். இனியும் இதுபோல் குற்றம் ஏதேனும் செய்தால் தபன் பள்ளியிலிருந்து நீக்கப்படுவான் என்று அது முடிந்திருந்தது. சில பையன்கள் எச்சில் துப்பும் சாக்கில் வகுப்புகளை விட்டு வெளியே வந்து தபனை நோக்கிப் பழிப்புக் காட்டினர்.
அதே தினம் மாலை, தலைமை ஆசிரியர் வீடு திரும்பி, தேநீர் பருகிவிட்டு, உலா கிளம்பினார். இது அவரது தினசரிப் பழக்கம். அவர் திரும்பிக்கொண்டிருந்த போது இருள் கவிந்தது. அவ்வேளையில் பள்ளியின் கெட்ட பையனை அவர் பார்த்தார். ஒரு கிழப் பிச்சைக்காரியின் கையை அவன் பற்றியிருந்தான். அவளது பிச்சைக் கூடையை தன் தலையில் சுமந்து வந்தான். அவனது வகுப்பைச் சேர்ந்த இரண்டு பையன்கள்-படிப்பில் முதன்மையான நரேனும் மகேஷசம்-அவனைக் கேலி செய்தபடி அருகில் நடந்தார்கள். கிழவிக்குக் கடுமையான ஜூரம். அவளால் நடக்கவே முடியவில்லை. அந்நிலையில் கூடையைச் சுமப்பது எப்படி? கிழவியின் சிரமத்தைக் கண்ட தபன், அவள் கூடையைத் தன் தலைமீது வைத்துக் கொண்டு, அவள் கையைப் பிடித்தபடி, "பாட்டி, என்னைப் பிடித்துக் கொள். நான் உன்னை உன் இடத்துக்குக் கூட்டிப் போவேன்" என்றான்.
நரேனும் மகேஷம் தலைமை ஆசிரியரைக் கண்டதும் வணக்கம் தெரிவித்தார்கள். தபனைக் கேலியாகப் பார்த்து முறுவலித்தார்கள். தபனின் கெட்ட செயல் ஒன்றை அவரே நேரடியாகப் பார்த்துவிட்டார் என்ற மகிழ்ச்சி அவர்களுக்கு ஆசிரியர் கிழவியை விசாரித்தார். தபன் தனக்கு உதவி புரிய முன்வந்ததை அவள் விவரித்தாள்.குரல் நடுங்க, அவள் தபனைக் காட்டி, இந்த அருமைப் பிள்ளை வந்திராவிட்டால், நான் இன்னும் தெருவிலேயே விழுந்து கிடப்பேன். கடவுள் அவனைக் காப்பாற்றட்டும். நான் சிரமப்படுவதை இந்த இரண்டு பையன்களும் பார்த்தார்கள். ஆனால் உதவவில்லை. உதவிக்கு வந்த அருமைப் பிள்ளையைக் கேலி செய்து கொண்டிருக்கிறார்கள். கிழவி மூச்சுவிடத் திணறினாள். தலைமை ஆசிரியர் நரேனையும் மகேஷையும் ஏசி கிழவியை அவள் இடத்தில் கொண்டுவிடும்படி அவர் தபனை கேட்டுக் கொண்டார்.
இரண்டு வாரங்களுக்குப்பிறகு ஒரு நாள், தலைமை ஆசிரியர் உலாப் போய்விட்டு வீடு திரும்பும் வேளை வழியில், முரட்டுக் காளை ஒரு கால் முறிந்து கீழே கிடப்பதையும், அதன் அருகில் தபன் மண்டியிட்டு இருப்பதையும் கண்டார். அவன் காளையின் அடிபட்ட காலுக்கு ஏதோ மருந்து தடவி, கட்டு கட்டிக் கொண்டிருந்தான். அவன் கண்களில் நீர் வழிந்தது. தலைமை ஆசிரியர் நெருங்கி வந்து நிற்கவும் அவன் திடுக் கிட்டான். கரம் கூப்பி அவரை வணங்கினான். "நீ இங்கே என்ன பண்ணுகிறாய், தபன்? " என்று அவர் கேட்டார்.
"ஐயா, யாரோ சில துஷ்டப் பையன்கள் காளையின் காலை முறித்திருக்கிறார்கள். அது ரொம்ப வேதனைப்படுகிறது. ஐயா, ஊமைப் பிராணிகளை வதைப்பது தவறு இல்லையா?" என்றான் தயன் வருத்தமாய்.
"அன்றொரு நாள் இதே காளைமீது தானே நீ சவாரி செய்தாய்; இது துஷ்ட மிருகம், இதை அடக்க வேண்டும் என்று சொன்னாயே? இன்று இது உன் பார்வையில் நல்ல பிராணியானது எப்படி?"
"ஐயா, இது கொடிய மிருகமாகத் தான் இருந்தது. ஆனால்.நான் சவாரி செய்த நாள் முதல் இது திருந்திவிட்டது. மனிதர்களை முட்டுவதை விட்டுவிட்டது. அத்தோடு, அவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கிப் போகிறது. இதை அவர்கள் அடித்திருக்கக் கூடாது. இது மிகவும் வேதனைப்படுகிறது. நான் சில மூலிகைகளை மென்று அந்தக் கூழை வைத்து, அடிபட்ட காலுக்குக் கட்டு போட்டிருக்கிறேன். அது காயத்தைக் குணப்படுத்தும் என்று என் அப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன்" என தயன் சொன்னான். அந்தக் காளைக்காக அவனுள் அனுதாபம் நிறைந்து, அவன் கண்களில் நீர்.
தலைமை ஆசிரியர் சிந்தனையில் ஆழ்ந்து நின்றார். பிறகு தயன் முகத்தைப் பார்த்தார். அவனைப் பிரியத்துடன் தட்டிக் கொடுத்தார். எதுவும் பேசாது நடக்கலானார். அவர் கண்கள் பனித்திருந்தன.
ஞானபீடம் உயர்நிலைப் பள்ளியின் பரிசளிப்பு விழா நாள். கெளஹாத்தி கல்லூரி ஒன்றின் முதல்வர் விழாவுக்குத் தலைமை தாங்க அழைக்கப்பட்டிருந்தார். இம்முறை, பள்ளியில் மிகச் சிறந்த நடத்தை உடைய மாணவனுக்கு ஒரு விசேஷப் பரிசு வழங்குவது என்று தலைமை ஆசிரியர் ரபீன் பருவா தீர்மானித்திருந்தார். மூன்று நூல்கள்-மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரது வாழ்க்கை வரலாறுகள்-பரிசாக வழங்கப்பட இருந்தன.
வகுப்புகளில் மாணவர்கள் விசேஷப் பரிசு பற்றி விவாதித்தனர். ஐந்தாம் வகுப்பு நரேன் கேலியாய் தன் அருகில் இருந்த பாபேஷிடம் உரக்கச் சொன்னான். "உனக்குத் தெரியுமா பாபேஷ்? நன்னடத்தைக்கு உரிய பரிசு தபனுக்குத் தான்" என்று. எல்லோரும் சிரித்தார்கள். தபனின் முகம் வெட்கத்தாலும் அவமானத்தாலும் சிவந்தது. பூமி பிளந்து தன்னை விழுங்காதா என அவன் எண்ணினான்.
விழா தொடங்கியது. தலைவருக்கு வரவேற்பு நிகழ்ந்தபின், செயல் அறிக்கை படித்தார். பிறகு, இசை, நடனம், கவிப்பொழிவுகளை மாண வர்கள் நிகழ்த்தினர். தலைவர் உரை தொடர்ந்தது. மற்றும் சிலர் பேசினர். அடுத்து, பரிசுகள் தரப்பட்டன. பரிசு பெற்றவர்கள் முகங்களில் மகிழ்ச் சியும் பெருமையும் பொங்கின. விசேஷப் பரிசு அறிவிக்கப்பட அனை வரும் ஆவலோடு காத்திருந்தனர். தலைமை ஆசிரியர் தெரிவித்தார்: "மாண்பு மிக்க தலைவர் அவர்களே, சீமாட்டிகளே, சீமான்களே! சிறந்த பண்புள்ள மாணவனுக்கு உரிய விசேஷப்பரிசு 5-ம் வகுப்பைச் சேர்ந்த திரு. தபன் ஹஸாரிகாவுக்கு அளிக்கப்படும்" என்றார்.
ஆசிரியர்களும் மாணவர்களும் திகைப்படைந்தார்கள். நரேன், பாபேஷ் இருவர் முகங்களும் விசித்திரமாய் மாறின. தபனுக்குத் தன் காதுகளை நம்ப முடியவில்லை. எழுந்து சென்று பரிசைப் பெறுவதற்கு அவனுக்குத் துணிவு வரவில்லை. தலைமை ஆசிரியர் திரும்பவும் அறிவித்தார். தபன் குமார் ஹஸாரிகா, 5-ம் வகுப்பு அவன் தலை சுழன்றது. இது உண்மை தானா? பள்ளியின் கெட்ட பையன் எனக் கருதப்பட்ட அவனுக்கா சிறந்த பண்புக்குரிய பரிசு தபன் எழுந்தான். தலைவரிடம் போய், வணக்கம் கூறி, பரிசை வாங்கினான்.
வயதான பிச்சைக்காரிக்கு தயன் உதவியதையும், அடிபட்ட காளைக்குச் சிகிச்சை செய்ததையும் தலைமை ஆசிரியர் விவரித்தார். அவர் தன் சொந்தப் பணத்திலிருந்து ஐந்து ரூபாயும் தயனுக்கு அளித்தார். கைதட்டல் ஒசையால் மண்டபம் அதிர்ந்தது.
தபனின் கண்களில் ஆனந்தக் கண்ணிர் ஒளிரிட்டது.
(அஸ்ஸாமியக் கதை)
பசித்த மரம்
ஸத்யஜித் ராய்
அழைப்பு மணி மீண்டும் ஒலித்ததும் என்னிடமிருந்து எரிச்சல் குரல் தானாகவே எழுந்தது. இதற்குள் இது நான்காவது தடவையாகும். இந் நிலையில் அமைதியாக வேலை செய்வது எப்படி? கார்த்திக் கடைக்குப் போவதாகக் கூறி வசதியாக நழுவி விட்டான்.
நான் எழுதுவதை நிறுத்த நேர்ந்தது. எழுந்து போய்க் கதவைத் திறந்தேன். அங்கே காந்தி பாபுவை நான் எதிர்பார்க்கவேயில்லை.
"என்ன ஆச்சர்யம் வாங்க, வாங்க!" என்றேன்.
"என்னைத் தெரிகிறதா?”
"முதலில் சந்தேகமாகத் தான் இருந்தது."
அவரை நான் உள்ளே அழைத்து வந்தேன். இந்தப் பத்து வருட காலத்தில் அவர் தோற்றம் முற்றிலும் மாறியிருந்தது. 1950 களில் இந்த மனிதர் பூதக் கண்ணாடியோடு அஸ்ஸாம் காடுகளில் சுற்றி அலைவது வழக்கம் என்று சொன்னால் இன்று யார் நம்புவார்கள் அங்கே அவரை நான் சந்தித்த போது அவருக்கு கிட்டத்தட்ட ஐம்பது வயது. ஆயினும் தலையில் ஒரு நரை கிடையாது. அந்த வயதில் அவருக்கு இருந்த ஆர்வமும் ஆற்றலும் எந்த இளைஞனையும் நாண வைக்கும்.
"ஆர்க்கிட்களிடம் உனக்கு அக்கறை இன்னும் குறையவில்லையே!" என்றார் அவர்.
என் சன்னலில் ஆர்க்கிட் பூச்செடி ஒன்று வைத்திருந்தேன். வெகு நாட்களுக்கு முன் காந்தி பாபு தந்த பரிசு அது. ஆனால் அதில் எனக்கு ஈடுபாடு உண்டு என்று சொல்வதற்கில்லை. தாவரங்கள் மீது ஒரு ஆர்வத்தை எனக்கு அவர் ஏற்படுத்தியிருந்தார். ஆனால் அவர் வெளி நாடு சென்றதும், ஆர்க்கிட்கள் மீதிருந்த சிரத்தையை நான் இழந்து விட்டேன். மற்றும் பல பொழுது போக்குகளிலும் எனக்கு ஊக்கம் இல்லாது போயிற்று. இப்போது என்னை ஈர்க்கும் ஒரே விஷயம் என் எழுத்துதான். காலம் மாறிவிட்டது. எழுதிச் சம்பாதிக்க இயலும் என்றாகியிருக்கிறது. என் மூன்று புத்தகங்களின் வருவாயைக் கொண்டு நான் என் குடும் பத்தைக் காப்பாற்றக் கூடும். நான் இன்னும் ஆபிஸ் வேலையும் பார்த்து வருகிறேன். ஆனாலும், அதை விட்டுவிட்டு என் முழு நேரத்தையும் எழுதுவதில் செலவிடவும் அவ்வப்போது சுற்றுலா சென்று வரவும் கூடிய ஒரு காலத்தை நான் எதிர்பார்த்திருக்கிறேன்.
காந்தி பாபு உட்கார்ந்தார். சட்டென்று அவர் உடல் நடுங்கியது.
"குளிர்கிறதா?" என்று கேட்டேன். சன்னலை மூடிவிடுகிறேன். இவ்வருஷம் கல்கத்தாவில் நல்ல குளிர்காலம்..."
"இல்லை இல்லை" என்று அவர் மறுத்தார். அடிக்கடி இப்போ தெல்லாம் எனக்கு நடுக்கம் வருகிறது. வயதாகி விட்டது, இல்லையா? நரம்பித் தளர்ச்சிதான்."
அவரிடம் நான் எவ்வளவோ கேட்க வேண்டியிருந்தது. கார்த்திக் வந்துவிட்டான். அவனைத் தேநீர் தயாரிக்கச் சொன்னேன்.
"நான் ரொம்ப நேரம் தங்க மாட்டேன். என்று காந்தி பாபு சொன்னார், "உன் நாவல்களில் ஒன்றைப் பார்த்தேன். பதிப்பகத்தாரைக் கேட்டு உன் விலாசம் தெரிந்து கொண்டேன். ஒரு காரியமாகத் தான் நான் உன்னைத் தேடி வந்திருக்கிறேன்."
"என்ன செய்ய வேண்டும்,சொல்லுங்கள். ஆனால், முதலில். நீங்கள் எப்ப திரும்பினர்கள் எங்கே போயிருந்தீர்கள்? இப்போது எங்கே இருக்கிறீர்கள்? நான் எவ்வளவோ அறிய விரும்புகிறேன்."
"இரண்டு வருஷங்களுக்கு முன் வந்தேன். நான் அமெரிக்காவில் இருந்தேன். இப்போது பாராசாத்தில் வகிக்கிறேன்."
"பாராசாத்?"
"அங்கே ஒரு வீடு வாங்கியிருக்கிறேன்."
"தோட்டம் இருக்கிறதா?"
"ஆமாம்."
"தாவர வீடு கூட?"
காந்தி பாபுவின் பழைய வீட்டில் அருமையான தாவர வீடு ஒன்று இருந்தது. அபூர்வமான செடி வகைகள் அங்கே உண்டு. அசாதாரணத் தாவர இனங்களை அவர் எப்படிச் சேர்த்திருந்தார்! ஆர்க்கிட்களில் மட்டும் அறுபது, அறுபத்தைந்து வகைகள் இருந்தன. அம் மலர்களைப் பார்த்து நின்றால் பொழுது போவதே தெரியாது.
பதில் கூறும் முன் காந்தி பாபு சிறிது தயங்கினார்.
"ஆமாம். தாவர விடும் இருக்கிறது."
"அப்படியானால் இப்பவும் முன் போலவே நீங்கள் தாவரங்களில் அக்கறை கொண்டிருக்கிறீர்கள்?"
"ஆமாம்."
அறையின் வடபுறச் சுவரை அவர் கூர்ந்து கவனித்தார். நானும் அந்தப் பக்கம் பார்த்தேன். ராஜ வங்கப் புலி ஒன்றின் தோல், தலையோடு அங்கே தொங்கியது.
"அதைத் தெரிகிறதா?" என்று கேட்டேன்.
"அதேதான். இல்லையா?"
"ஆம், காதருகில் இருக்கிற துளையைப் பாருங்களேன்."
"சுடுவதில் நீ மன்னன். இப்பவும் அப்படித்தானே?"
தெரியாது. சிறிது காலமாக நான் சோதனை செய்யவில்லை. நான் வேட்டையாடுவதை நிறுத்தி ஏழு வருடங்கள் ஆகின்றன."
"ஏன்?"
"சுட்டது போதும் என்று தான். எனக்கும் வயதாகிறது இல்லையா? மிருகங்களைச் சுட வேண்டும் என்று தோன்றவில்லை."
"மரக்கறி உண்பவனாக மாறிவிட்டாயா?"
"இல்லை."
"பின்னே என்ன? சுடுவது என்பது கொல்வது மட்டுமே. ஒரு புலியை, முதலையை அல்லது காட்டெருமையைச் சுடுகிறாய். அதன் தோலை எடுத்து, தலையைப் பதம் பண்ணி, அல்லது கொம்புகளைச் சீர்ப்படுத்தி சுவரில் மாட்டிவைக்கிறாய். உன் வெற்றிகளைக் கண்டு சிலர் வியக்கிறார்கள். வேறு சிலர் பயப்படுகிறார்கள். உனக்கோ அவை உன் இளமைக் கால வீரசாகசங்களின் சின்னங்கள். ஆனால் நீ ஆட்டையும் கோழியையும் மற்றதையும் தின்கிற போது என்னாகிறது? நீ அவற்றைக் கொல்வதோடு நிற்பதில்லையே! மென்று சுவைத்து ஜீரணமும் பண்ணிவிடுகிறாய். இது ரொம்ப மேலான காரியமோ?"
நான் சொல்வதற்கு எதுவுமில்லை. கார்த்திக் தேநீர் கொண்டு தந்தான், காந்தி பாபு சிறிது நேரம் அமைதியாக இருந்தார். தேநீர்க் கோப்பையை எடுப்பதற்கு முன் அவர் மறுபடி நடுங்கினார். ஒரு வாய் உறிஞ்சிவிட்டு அவர் சொன்னார்: "இயற்கையின் அடிப்படை விதியே இதுதான். ஒரு பிராணி மற்றொன்றைத் தின்ன வேண்டும். அதை வேறொன்று விழுங்கும். அதோ அங்கே பொறுமையாய்க் காத்திருக்கும் பல்லியைப் பார்"
கிங் அன்ட் கோ காலண்டருக்குச் சற்று மேலே ஒரு பல்லி, பூச்சி ஒன்றைக் கண்கொட்டாது பார்த்திருந்தது. நாங்கள் அதைக் கவனித்தோம். அது முதலில் அசையாதிருந்தது. பிறகு மெதுவாக, எச்சரிக்கையோடு அசைந்து முன்னேறியது; முடிவில் ஒரே பாய்ச்சலில் அந்தப் பூச்சியைப் பிடித்துவிட்டது.
"அருமை!" என்று காந்தி பாப் கூறினார். அதன் சாப்பாட்டுக்கு இது போதும் உணவு. உணவு தான் வாழ்க்கையின் ஜீவாதாரம், புலிகள் மனிதரைத் தின்கின்றன. மனிதர்கள் ஆடுகளைத் தின்கிறார்கள், ஆடுகள் அவை எதைத் தான் தின்னவில்லை; இதை சிந்திக்கத் தொடங்கினரல் அநாகரிகமாகவும் புராதனமாகவும் தோன்றும். ஆனால் பிரபஞ்சத்தின் இயக்கவிதியே இதுதான். இதிலிருந்து தப்பமுடியாது. இந்த இயக்கம் நின்றுவிட்டால், சிருஷ்டியே நின்று போகும்."
"மரக்கறி உணவு சாப்பிடுவதனால் நல்ல நிலை ஏற்படலாம்." என்றேன்.
"யார் சொன்னது இலைகளுக்கும் காய்கறிகளுக்கும் உயிரில்லை என்று நினைக்கிறாயா?"
அவற்றுக்கும் உயிர் உண்டு. நீங்களும் ஜகதீஷ் போஸும் அதை எனக்குக் கற்றுத் தந்தீர்கள். ஆனாலும் அது வேறுவித வாழ்க்கை தானே? தாவரங்களும் பிராணிகளும் ஒரே ரகமானவை இல்லையே"
"அவை வித்தியாசமானவை என்றா எண்ணுகிறாய்?"
"இல்லையா பின்னே? பேதங்களைப் பாருங்கள். மரங்கள் நடக்க முடியாது; தம் உணர்வுகளை வெளிப்படுத்த இயலாது. அவை எப்படி உணர்கின்றன என்று நமக்கு அறிவிக்கும் திறன் அவற்றுக்கு இல்லை. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?"
காந்தி பாபு ஏதோ சொல்லப் போகிறவர் போல் தோன்றினார். ஆனால் பேசவில்லை. தேநீரைக் குடித்துவிட்டு கீழ்நோக்கிய பார்வையுடன் அமைதியாக இருந்தார். பிறகு என்னை நோக்கினார். அவரது கவலை தோய்ந்த வெறித்த நோக்கு என்னைக் குழப்பியது. ஏதோ புரியாத அபாயத்தின் பயம் என்னுள் படர்ந்தது. அவருடைய தோற்றம் தான் எவ்வளவு மாறியிருந்தது!
அவர் மிக மெதுவாகப் பேசலானார்: "பரிமள் இங்கிருந்து இருபத்தோராவது மைலில் நான் வசிக்கிறேன். ஐம்பத்தெட்டாவது வயதில், உன் விலாசத்தைக் கண்டுபிடிக்க உன் பதிப்பாளரைத் தேடி மிக்க சிரமத்தோடு காலேஜ் வீதிக்குப் போனேன். இப்போது இங்கே இருக்கிறேன். விசேஷ காரணம் இன்றி நான் இப்படிச் செய்திருக்க மாட்டேன் என்பது உனக்குப் புரியும் என நம்புகிறேன். புரிகிறதா? இல்லை, அபத்தமான நாவல்கள் எழுதி எழுதி உன் பகுத்தறிவை நீ இழந்துவிட்டாயோ? ஒரு வேளை என்னையும் உன் கதை ஒன்றில் பயன்படுத்துவதற்கான டைப் என்று நீ நினைப்பாய்."
நான் வெட்கினேன். காந்தி பாபு சொன்னதில் தப்பு இல்லை. எனது நாவல் ஒன்றில் அவரை ஒரு பாத்திரமாக உபயோகிப்பது பற்றிய நினைப்பு என் உள்ளத்தில் ஒடத்தான் செய்தது.
"உன் எழுத்தை வாழ்க்கையோடு ஒட்டியதாக ஆக்கவில்லை என்றால், பரிமள், உனது நூல்கள் மேலோட்டமானவையாகவே இருக்கும். ஒன்றை நீ மறக்கக் கூடாது. உன் கற்பனை எவ்வளவு தெளிவாக இருந்தாலும், அது ஒருபோதும் உண்மையை விட விசித்திரமாக இராது. ஆனால் நான் உனக்கு உபதேசிக்க இங்கு வரவில்லை. உண்மையில், உன்னிடம் ஒரு உதவி யாசிக்கவே வந்தேன்."
நான் வியப்பில் ஆழ்ந்தேன். அவர் என்னிடம் என்ன விதமான உதவியை எதிர்பார்க்கிறார்?
"நீ இப்பவும் துப்பாக்கி வைத்திருக்கிறாய் அல்லவா? அல்லது அதைத் தலைமுழுகிவிட்டாயா?"
அவர் கேள்வியால் நான் திடுக்கிட்டேன். அவர் மனசில் என்ன தான் இருக்கிறது? "அதை நான் வைத்திருக்கிறேன். ஆனால் அதிகம் துரு ஏறியிருக்கும். ஏன் கேட்கிறீர்கள்?" என்றேன்.
"நாளை உன் துப்பாக்கியோடு நீ என் வீட்டுக்கு வர முடியுமா?"
நான் அவர் முகத்தைக் கூர்ந்து நோக்கினேன். அவர் வேடிக்கை பேசியதாய்த் தோன்றவில்லை. "நிச்சயம் குண்டுகளோடு தான்" என்றும் அவர் குறிப்பிட்டார். என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவர் மூளையில் கோளாறு இருக்குமோ என்று சந்தேகித்தேன். ஆனால் அவர் பேச்சு அப்படிக் காட்டவில்லையே? எப்பவும் அவர் ஒரு மாதிரி விந்தைப் போக்கு உடையவர் தான். இல்லையேல் ஏன் அவர் காட்டில், அபாயங்களுக்கு நடுவே விசித்திரச் செடிகளை தேடி அலைகிறார்?
"துப்பாக்கியோடு வர எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் எதற்காக என்று அறிய ஆவல். நீங்கள் வசிக்கும் இடத்தைச் சுற்றிக் கொடிய மிருகங்களோ திருடர்களோ உண்டோ?"
"நீ வந்ததும் நான் உனக்கு எல்லாவற்றையும் சொல்வேன். முடிவில் நீ துப்பாக்கியை சுட நேராமலே போகலாம். அப்படியே சுட்டாலும், நான் உன்னை சட்ட விரோதச் செயலில் ஈடுபடுத்த மாட்டேன். இது உறுதி."
காந்தி பாபு போக எழுந்தார். என் தோள்மீது கைவைத்துச் சொன்னார்: "பரிமள், நான் உன்னைத் தேடி வந்திருக்கிறேன், ஏனெனில் போனமுறை உன்னைப் பார்த்த போது, நீ என்னைப் போலவே சாகசச் செயல்களில் மோகம் கொண்டிருந்தாய். மனிதர்களோடு நான் என்றும் அதிகம் பழகியதில்லை. இப்போது என் தொடர்பு மேலும் குறுகிவிட்டது. எனக்கு இருக்கிற சொற்ப நண்பர்களிடையே உன்னைப் போன்ற திறமைசாலி வேறு எவரும் இல்லை."
முன்பு நான் உணர்ந்திருந்த வீரச் செயல் மீதான சிலிர்ப்பு என்னுள் மறுபடியும் கிளர்ந்தெழுவதாகத் தோன்றியது. நான் கேட்டேன்: "உங்கள் இடத்தை எப்படி அடைவது; எப்போது எங்கே..."
"சொல்கிறேன். ஜெஸ்ஸோர் சாலையில் பாராசாத் ஸ்டேஷன் வரை நேரே போ. அப்புறம் கேட்டுத் தெரியலாம். மதுமுரளி ஏரி பற்றி யாரும் சொல்வார்கள். ஸ்டேஷனிலிருந்து நாலு மைல் தள்ளியிருக்கிறது. ஏரி அருகே ஒரு பழைய பங்களா. அதை அடுத்து என் வீடு இருக்கிறது. உன்னிடம் கார் இருக்கிறதா?"
"இல்லை. ஆனால் கார் இருக்கும் நண்பன் உண்டு."
"இந்த நண்பன் யார்?"
"அபிஜித் என்னோடு கல்லூரியில் படித்தவன்."
"அவன் எப்படிப்பட்டவன் எனக்கு அவனைத் தெரியுமா?"
"உங்களுக்குத் தெரிந்திராது. ஆனால், நல்லவன். அவனை நம்பலாமா என்று யோசிக்கிறீர்களா? நிச்சயம் நம்பலாம்."
"நல்லது. அவனையும் அழைத்து வா. எப்படியும் வந்து சேர். அவசர காரியம் தான். சூரியன் மறைவதற்கு முன் வந்து விடு."
***
எங்கள் வீட்டில் ஃபோன் இல்லை. தெருக்கோடிக்குப் போய், ஒரு மருந்துக் கடையிலிருந்து அபிஜித்தைக் கூப்பிட்டேன்.
" உடனே வா. மிகமுக்கியமான விஷயம்" என்றேன்.
தெரியுமே, உன் புதுக் கதையை வாசித்துக் காட்ட அழைக்கிறாய். திரும்பவும் எனக்கு தூக்கம் தான் வரும்."
"அதில்லை. முற்றிலும் வேறு விஷயம் இது."
"அது என்ன? இப்பவே சொல்லேன்."
"அருமையான நாய்க்குட்டி வந்திருக்கிறது. ஒரு ஆள் என் வீட்டில் வைத்திருக்கிறான்."
நாயைத் தூண்டிலாக உபயோகித்தால் தான் அபிஜித்தை வரவழைக்க முடியும். அவனிடம் பதினோரு வகை நாய்கள் இருக்கின்றன. பல நாடுகளைச் சேர்ந்தவை. அவற்றில் மூன்று, பரிசு பெற்றவை. ஐந்து வருடங்களுக்கு முன் அவன் இப்படி நாய்ப்பித்து கொண்டிருக்கவில்லை. ஆனால் இப்போது அவன் வேறு எதைப் பற்றியும் சிந்திப்பதுமில்லை, பேசுவதுமில்லை.
நாயிடம் கொண்ட காதல் போக, அபிஜித்திடம் ஒரு நல்ல குணம் இருந்தது: என் திறமையிலும் தீர்ப்பிலும் அவனுக்கு முழு நம்பிக்கை, எந்தப் பதிப்பாளரும் என் முதல் நாவலை வெளியிட முன்வராத போது, அபிஜித் அதன் தயாரிப்புச் செலவை ஏற்றான். இந்த விஷயம் எல்லாம் எனக்குப் புரியாது. ஆனால் நீ இதை எழுதியிருக்கிறாய். அது குப்பையாக இருக்க முடியாது. பதிப்பகத்தார்கள் மடையர்கள்" என்று சொன்னான். புத்தகம் நன்கு விற்றது. எனக்குச் சிறிது புகழும் சேர்ந்தது. அபிஜித்துக்கு என் மீதிருந்த நம்பிக்கையை அது உறுதிப்படுத்தியது.
நாய்க்குட்டி விஷயம் உண்மை இல்லை என்று தெரிந்ததும், எனக்கு உரியது கிடைத்தது. அபி என் முதுகில் சூடாக ஒரு அறை தந்தான். ஆனால் அதை நான் பொருட்படுத்தவில்லை. அவன் என் கோரிக்கைக்கு இணங்கினான்.
"நாம் போவோம். நாம் வெளியே போய் வெகு காலம் ஆகிறது. கடைசியாக நாம் சோனார்பூர் சதுப்புகளில் வேட்டையாடியதுதான். ஆனால் யார் இந்த ஆசாமி! நீ ஏன் அதிக விவரம் தரக்கூடாது?"
"அவர் என்னிடம் விவரம் எதுவும் சொல்லவில்லை. நான் உனக்கு எப்படி அதிகம் சொல்வேன்? ஏதோ மர்மம் இருப்பதும் நல்லது தானே. நம் கற்பனை வேலை செய்வதற்கு ஒரு வாய்ப்பு."
"அந்த ஆள் யார் என்றாவது சொல்லேன்."
"காந்தி சரண் சாட்டர்ஜி, இந்தப் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறாயா? ஒரு சமயம் அவர் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் தாவர இயல் பேராசிரியராக இருந்தார். பிறகு, அபூர்வ தாவர இனங்களைச் சேகரிக்க அலைவதற்காக அந்த வேலையை விட்டார். நிறைய ஆய்வு செய்தார். சில கட்டுரைகளை வெளியிட்டார். அற்புதமான தாவரங்கள் பல-முக்கியமாக ஆர்க்கிட்கள்-அவரிடம் இருந்தன."
"நீ அவரை எப்படிச் சந்தித்தாய்?"
"ஒரு சமயம் நாங்கள் அஸ்ஸாமில் காஜிரங்காவன பங்களாவில் சேர்ந்து இருந்தோம். ஒரு புலியைச் சுடுவதற்காக நான் அங்கே போனேன். அவர் நீபென்தஸ்சை தேடிக்கொண்டிருந்தார்."
"எதை".
"நீபென்தஸ். அது தாவர இயல் பெயர். உனக்கும் எனக்கும் கூஜாச் செடி. அஸ்ஸாம் காடுகளில் வளர்கிறது. பூச்சிகளைத் தின்று வாழ்கிறது. அதை நான் பார்த்ததில்லை. இது காந்தி பாபு சொன்னவிவரம்."
"பூச்சி தின்னும் செடியா செடி பூச்சிகளைத் தின்னுமா?"
"நீ தாவர இயல் படித்ததேயில்லை என்று தெரிகிறது."
"இல்லை. நான் படித்ததில்லை."
"சந்தேகம் வேண்டாம். பள்ளிப் பாடநூல்களில் இச் செடிகளின் படங்களைக் காணலாம்."
"சரி, மேலே சொல்."
"அதுக்கு மேல் சொல்வதற்கு அதிகம் இல்லை. நான் என் புலியை வென்றேன், திரும்பி விட்டேன். அவர் அங்கு தங்கினார். என்றாவது ஒரு நாள் அவரைப் பாம்பு கடிக்கும், அல்லது வனவிலங்கு தாக்கும் என்று நான் அஞ்சினேன். அப்புறம் நாங்கள் அதிகம் சந்திக்கவில்லை. கல்கத்தாவில் ஒரிரு தடவை சந்தித்தோம். ஆனால் அடிக்கடி அவரை நினைத்துக் கொள்வேன். சிறிது காலம் நானும் ஆர்க்கிட் மோகம் பெற்றிருந்தேன். அமெரிக்காவிலிருந்து எனக்காகச் சில புதிய இனங்கள் கொண்டு வருவதாக அவர் கூறியிருந்தார்."
"அவர் அமெரிக்கா போயிருந்தாரா?"
"அவருடைய ஆய்வுக்கட்டுரை ஒன்று அயல் நாட்டுத் தாவர இயல் பத்திரிகை ஒன்றில் வெளியாயிற்று. அதனால் அவர் பிரபலமானார். தாவர இயலாளர் மாநாட்டுக்கு அவரை அழைத்தார்கள். இது நடந்தது 1951 அல்லது 52ல், அதன்பிறகு இன்று தான் நான் அவரை சந்திக்க நேர்ந்தது."
"இத்தனை வருடம் அவர் என்ன செய்தார்?"
"எனக்குத் தெரியாது. நாளைக்குத் தெரியும் என்று நம்புகிறேன்."
"அவர் பைத்தியம் இல்லையே?"
பார்க்கப்போனால் உன்னைவிட அதிகப் பைத்தியம் இல்லை. நீயும் உன் நாய்களும், அவரையும் அவரது செடிகளையும் விட உயர்ந்தவையில்லை."
நாங்கள் அபிஜித்தின் காரில் பாராசாத் நிலையம் நோக்கி ஜெஸ் ஸோர் சாலையில் சென்றோம். நாங்கள் என்பதில், அபிஜித்தையும் என்னையும் தவிர, மூன்றாவது ஒரு ஜீவன், அபிஜித்தின் நாய் பாதுஷாவும், சேரும். இது என் தவறுதான். குறிப்பாகத் தடுக்கப்படாவிட்டால், அபிஜித் தனது நாய்களில் ஒன்றைக் கட்டாயம் கொண்டு வருவான் என்பதை நான் அறிந்திருக்க வேண்டும்.
பாதுஷா கபில நிற ராம்பூர் வேட்டைநாய், பெரியது. வலியது. காரின் பின் இருக்கை முழுவதையும் அடைத்துக் கொண்டது. அதன் முகம் சன்னலுக்கு வெளியே நீண்டிருந்தது. விரிந்து பரந்த பசும் வயல்களை அது ரசித்ததாகவே தோன்றியது. அவ்வப்போது, சாலையில் தென்பட்ட ஊர் நாய்களைப் பார்த்து அது வெறுப்புடன் குரைத்தது.
பாதுஷாவின் வருகை இந்தப் பயணத்துக்கு தேவையற்றது என நான் கூறவும், அபிஜித் மறுத்துரைத்தான்: "உனது துப்பாக்கி சுடும் திறமையில் எனக்கு நம்பிக்கையில்லை. அதனால் தான் இவனை நான் கூட்டி வருகிறேன். நீ பல வருடங்களாகத் துப்பாக்கியைத் தொடவேயில்லை. ஆபத்து ஏற்பட்டால் பாதுஷா அதிகம் உதவுவான். அவன் மோப்பசக்தி அசாதாரணமானது. அவன் எப்படிப்பட்ட வீரன் என்பது உனக்கே தெரியும்."
காந்தி பாபு வீட்டைக் கண்டு கொள்வதில் சிரமம் எதுவுமில்லை. பிற்பகல் இரண்டரை மணி அளவில் நாங்கள் போய்ச் சேர்ந்தோம். வெளிவாசலைக் கடந்ததும் சீரான பாதை ஒன்று அவர் பங்களாவுக்கு இட்டுச் சென்றது. வீட்டின் பின்னால், பட்டுப்போன பெரிய ஷிரிஷ் மரம் நின்றது. அதன் அருகில் ஒரு தகர ஷெட். அது தொழிற்சாலை மாதிரி இருந்தது. வீட்டுக்கு எதிரே, பாதைக்கு மறுபக்கம், தோட்டம். அதுக்கு அப்பால் நீண்ட தரக ஷெட் அதனுள் மினுமினுக்கும் கண்ணாடிப் பெட்டிகள் பல, ஒரே வரிசையாக, வைக்கப்பட்டிருந்தன.
காந்தி பாபு எங்களை வரவேற்றார். ஆனால் பாதுஷாவைக் கண்டு சிறிது முகம் சுளித்தார்.
"இந்த நாய் பயிற்சி பெற்றது தானா?" என்று அவர் கேட்டார்.
அபி சொன்னான். இவன் எனக்குப் படிந்து நடப்பான். ஆனால் பழக்கப்படாத நாய்கள் இங்கே இருந்தால் இவன் என்ன செய்வான் என்று சொல்வதற்கில்லை. நீங்கள் நாய் வளர்க்கிறீர்களா?"
"இல்லை. நான் வளர்க்கவில்லை. ஆனாலும் தயவு செய்து அதை இந்த அறையில் இந்த சன்னலில் கட்டிப்போடுங்கள்."
அபிஜித் ஒரக்கண்ணால் என்னை நோக்கிக் கண்சிமிட்டினான். ஆயினும், பணிவுள்ள சிறுவன் போல, அந்த நாயைக் கட்டி வைத்தான். பாதுஷா சிறிது முரண்டியது. ஆனால் நிலைமையை அனுசரிப்பதாகத் தோன்றியது.
நாங்கள் வெளிவராந்தாவில் பிரம்பு நாற்காலிகளில் அமர்ந்தோம். அவருடைய வேலையாள் பிரயாக் தன் வலக்கையைக் காயப்படுத்திக் கொண்டானாம். அதனால் அவரே எங்களுக்காகத் தேநீர் தயாரித்து, ஒரு பிளாஸ்கில் மூடி வைத்திருந்தார். எங்களுக்குத் தேவைப்படும் போது நாங்கள் கேட்கலாம் என்று காந்தி பாபு தெரிவித்தார்.
இது போன்ற அமைதியான இடத்தில் இனம் புரியாத என்ன அபாயம் பதுங்கியிருக்கும் என்று என்னால் கற்பனை செய்ய இயலவில்லை. பறவைகளின் ஒலிகள் தவிர எல்லாம் அமைதியாகவே இருந்தது. துப்பாக்கியைச் சுமந்து கொண்டிருப்பது அசட்டுத்தனமாகப் பட்டது. அதை சுவரில் சாய்த்து வைத்தேன்.
அபி இயல்பாகவே நகரவாசி. அவனால் சும்மா இருக்க முடியாது. கிராமப்புறத்தின் அழகு, இனம் தெரியாத பறவைகளின் மெல்லிசை இவ்விஷயங்கள் அவனைப் பாதிப்பதில்லை. அவன் அமைதியற்று இருந்தான். பிறகு திடீரென்று பேசினான்: "பரிமள் சொன்னான், அஸ்ஸாம் காடுகளில் அதீதமான செடி எதையோ தேடுகையில், நீங்கள் ஒரு புலியால் பயங்கரமாய்த் தாக்கப்பட்டீர்களாமே?”
விஷயங்களை மிகைப்படுத்தி தன் பேக்சுக்கு நாடகப் பாங்கு அளிப்பதில் அபிக்கு விருப்பம் அதிகம். அது காந்தி பாபுவைப் புண்படுத்தலாம் என்று நான் பயப்பட்டேன். ஆனால் அவர் புன்னகை புரிந்தார். "உனக்கு காட்டில் ஆபத்து என்றால் நிச்சயம் ஒரு புலி என்று தான் அர்த்தம். இல்லையா? பெரும்பாலான மக்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள். ஆனால். இல்லை, நான் புலியைச் சந்தித்ததே இல்லை. ஒரு முறை, ஒரு அட்டை கடித்து விட்டது. அது பிரமாதம் இல்லை."
"உங்களுக்கு அந்தச் செடி கிடைத்ததா?"
"எந்தச் செடி?"
"கூஜா அல்லது கிண்ணம்-ஏதோ பெயரில் ஒரு செடி"
"ஒ, நீபென்தஸ் செடியா ஆமா, கிடைத்தது. இப்பவும் அது இருக்கிறது. அதைக் காட்டுவேன். மாமிசம் தின்னும் தாவரங்கள் தவிர மற்றச் செடிகள் மீது இப்ப எனக்கு அக்கறை இல்லை. ஆர்க்கிட்களில் கூடப் பலவற்றை எறிந்து விட்டேன்."
காந்தி பாபு உள்ளே போனார். அபியும் நானும் பரஸ்பரம் பார்த்துக் கொண்டோம், இறைச்சி தின்னும் செடிகள்! என் கல்லூரி தாவர இயல் பாட நூலில் ஒரு பக்கத்தையும், பதினைந்து வருடங்களுக்கு முன் பார்த்திருந்த சில படங்களையும் நான் நினைவு கூர்ந்தேன்.
காந்தி பாபு ஒரு புட்டியுடன் வந்தார். அதனுள் தத்துக்கிளிகள், வண்டுகள், மற்றும் பலவகைப் பூச்சிகள், பல்வேறு அளவுகளில், இருந்தன. புட்டியின் மூடியில், மிளகு ஜாடியின் மேல்மூடிவில் இருப்பது போல், துளைகள் இருந்தன. சாப்பாட்டு நேரம். என்னோடு வாருங்கள்" என்று அவர் அறிவித்தார்.
கண்ணாடிப் பெட்டிகள் இருந்த தகர ஷெட்டுக்கு நாங்கள் போனாம். ஒவ்வொரு பெட்டியிலும் வெவ்வேறு விதச் செடி இருந்தது. அவற்றில் எதையும் நான் முன்பு பார்த்ததில்லை.
இச் செடிகளை நம் நாட்டில் காணமுடியாது. நீபென்தஸை தவிர. ஒன்று நேபாளத்தை சேர்ந்தது. இன்னொன்று ஆப்பிரிக்கா மற்றவை அனைத்தும் மத்திய அமெரிக்காவிலிருந்து வந்தவை" என்று காந்தி பாபு கூறினார்.
இச்செடிகள் நமது மண்ணில் எவ்வாறு உயிரேர்டிருக்கின்றன என்று அபி அறிய விரும்பினான்.
"அவற்றுக்கும் மண்ணுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை" என்றார் காந்தி பாபு.
"எப்படி?"
"அவை மண்ணிலிருந்து ஊட்டச் சத்து பெறுவதில்லை. மனிதர்கள் வெளியிலிருந்து உணவு பெறுவது போலவும், தங்கள் நாடுகள் இல்லாத பிற நாடுகளிலும் சுகமாக வாழமுடிவதைப் போலவும், இவையும் சரியான உணவு கிடைத்தால் எந்த இடத்திலும் செழித்து வளர்கின்றன."
காந்தி பாபு ஒரு பெட்டி அருகே நின்றார். அதனுள் இரண்டு அங்குல நீளமுள்ள பச்சை இலைகளை உடைய விசித்திரச் செடி ஒன்று இருந்தது. அவ்விலைகளில் பல் வரிசைகள் போல் கூர்கூரான வெள்ளை விளிம்புகள் இருந்தன. கண்ணாடிப் பெட்டியில், புட்டியின் வாய் அளவுக்கு ஒரு வட்டக் கதவு இருந்தது. காந்தி பாபு வெகு வேகமாய் அதை திறந்தார். புட்டியின் மூடியை நீக்கி, அதன் வாயைக் கதவினுள் புகுத்தினார். உள்ளிருந்து ஒரு பூச்சி வெளிப்பட்டதும், அவர் புட்டியை விரைவாக இழுத்துக் கொண்டு, கதவை மூடினார். அந்தப் பூச்சி சற்றே அங்குமிங்கும் திரிந்தது. பிறகு ஒரு இலை மீது அமர்ந்தது. உடனே அந்த இலை நடுவில் மடங்கி, பூச்சியை இறுக்கிப் பிடித்துக் கொண்டது. பற்களின் முனைகள் ஒன்றுடன் ஒன்று சீராகப் பொருந்தின. பூச்சி அந்தக் கூண்டிலிருந்து தப்பி ஒட வழி இல்லை.
இத்தனை விசித்திரமாகவும் பயங்கரமாகவும் இயற்கை அமைத்த பொறி எதையும் இதுவரை நான் கண்டதேயில்லை.
கம்மிய குரலில் அபி கேட்டான் "பூச்சி எப்பவும் இலைமீதே உட்காரும் என்பது என்ன நிச்சயம்?"
"இச் செடிகள் பூச்சிகளை வசியம் செய்ய ஒரு மணம் பரப்புகின்றன. இச் செடிக்கு வீனஸ் ஈப்பொறி என்று பெயர். இது மத்திய அமெரிக்காவிலிருந்து வந்தது. தாவர இயல் பாட நூல்கள் அனைத்திலும் இது காணப்படும்" என்றார் காந்தி பாபு.
நான் பிரமிப்புடன் பூச்சியைக் கவனித்தேன். அது முதலில் பதறித் துடித்தது. பிறகு குழப்பமுற்றது. அதன் மேல் இலையின் இறுக்கம் அதிகரித்தது. அந்தச் செடி, உயிரைச் சூறையாடுவதில் ஒரு பல்லிக்குச் சிறிதும் சளைத்ததல்ல.
அபி சிரிப்பு வரவழைக்க முயன்றான். "வீட்டில் இது போல் ஒரு செடி இருப்பது நல்லது. பூச்சிகளை எளிதில் ஒழிக்கலாம். பாச்சைகளைக் கொல்ல டி.டி.டி. பொடி தெளிக்கத் தேவையில்லை."
"அதுக்கு இந்தச் செடி சரிப்படாது. பாச்சைகளை இது ஜீரணிக்க இயலாது. இதன் இலைகள் மிகச் சிறியன” என்று காந்தி பாபு சொன்னார்.
அடுத்த பெட்டியில் இருந்த செடியின் இலைகள் லில்லி இலைகள் போல் நீளமானவை. ஒவ்வொரு இலையின் துனியிலும் பை போன்ற ஒன்று தொங்கியது. இதையும் நான் முன்பே படங்களில் பார்த்திருக்கிறேன்.
"இது தான் நீபென்தஸ்-கூஜாச் செடி" என்று காந்தி பாபு விளக்கினார். இதன் பசி வெகு அதிகம். முதன்முதலில் இதை நான் கண்டபோது, இதன் பைக்குள் ஒரு சிறு பறவையின் மிச்சங்களைப் பார்த்தேன்."
அட கடவுளே! என்றான் அபி. இப்ப இது எதை தின்று வாழ்கிறது?" அவனது தன்னியல்பு மாறி, பயம் அவனைப் பற்றத் தொடங்கியது.
"பாச்சை, வண்ணத்துப் பூச்சி, கம்பளிப்பூச்சி வகையராத்தான். ஒரு முறை நான் ஒரு எலியைப் பிடித்து இதுக்கு ஊட்ட முயன்றேன். இது மறுத்து விடவில்லை. ஆனால் அளவு மீறித் தின்பது அவற்றுக்கே ஆபத்தாகும். இச் செடிகள் பேராசை பிடித்தவை. இயற்கை வரம்பு அவற்றுக்குத் தெரிவதில்லை."
மிகுந்த வசியத்தோடு நாங்கள் ஒவ்வொரு பெட்டியாகப் பார்த்து நகர்ந்தோம். இவற்றில் சில செடிகள் முன்பே நான் படங்கள் மூலம் அறிந்தவை. மற்றவை முற்றிலும் விசித்திரமானவை; நம்பமுடியாதவை. மாமிசபட்சணித் தாவரங்களில் இருபது வகைகள் காந்தி பாபுவிடம் இருந்தன. அவற்றில் சில உலகில் வேறு எவர் சேகரிப்பிலும் காண முடியாத அளவு அபூர்வமானவை.
அவற்றில் மிக விநோதமானது லன்ட்யூ-சூரியப்பனி. அதன் இலை மீதுள்ள ரோமங்களைச் சுற்றி நுண்ணிய நீர்த்துளிகள் மினுமினுத்தன. காந்தி பாபு, ஒரு ஏலவிதை அளவு இறைச்சித் துணுக்கை எடுத்து, ஒரு சின்னக் கயிற்றில் கட்டினார். அதை இலையிடம் மெதுவாக நகர்த்தினார். அப்போது இலையின் ரோமங்கள் ஆசையோடு இறைச்சியை நோக்கி நிமிர்வதை நாங்கள் இலகுவில் காணமுடிந்தது.
காந்தி பாபு கயிற்றை அகற்றினார். அதை மேலும் தாழ்த்தினால், இலை ஈப்பொறி போலவே இறைச்சியை கவிவிப்பிடிக்கும் அதிலிருக்கும் சத்தை உறிஞ்சிவிட்டு சக்கையை எறிந்துவிடும் என்று அவர் விளக்கினார். "நீங்களும் நானும் சாப்பிடுவது போல் தான் இதுவும்-என்ன சொல்கிறீர்கள்?"
ஷெட்டிலிருந்து நாங்கள் தோட்டத்துக்கு வந்தோம் ஷிரிஷ் மரத்தின் நிழல் நீண்டு புல்மீது படிந்திருந்தது. பிற்பகல் நான்கு மணி இருக்கும்.
காந்தி பாபு தொடர்ந்தார். இவற்றில் பெரும்பான்மைச் செடிகள் : பற்றி எழுதிவிட்டார்கள். ஆனால் நான் சேகரித்திருக்கிற மிக விசித்திரமான ஒரு இனம் பற்றி எவரும் எழுதமுடியாது. நானே எழுதினால் தான் உண்டு. அதைத் தான் நீங்கள் இப்போது காண வேண்டும். உங்களை இன்று நான் ஏன் வரச் சொன்னேன் என்பது உங்க்ளுக்கு உடனே புரிந்துவிடும். வா பரிமள், வா அபிஜித் பாபு."
தொழிற்சாலை போல் தோன்றிய இடத்துக்கு நாங்கள் அவர் பின்னே போனோம். உலோகத்தாலான கதவு பட்டப்பட்டிருந்தது. அதன் இரு புறங்களிலும் ஒவ்வொரு சன்னல் இருந்தது. காந்தி பாபு ஒன்றை திறந்து உள்ளே எட்டிப் பார்த்தார். பிறகு எங்களைப் பார்க்கும்படி அழைத்தார். அபியும் நானும் சன்னல் வழியே கவனித்தோம்.
அறையின் மேற்குச் சுவரில், உயரே கூரை அருகில், வானவெளிச் சாளரங்கள் இரண்டு இருந்தன. அவற்றின் கண்ணாடிப் பரப்பு வழியே சிறிது வெளிச்சம் பரவி அந்த இடத்துக்கு ஒரளவு ஒளி ஊட்டியது. அறைக்குள் நின்றது ஒரு தாவரம் போலவே தோன்றவில்லை. கனத்த பல தும்பிக்கைகள் கொண்ட ஒரு மிருகத்தை ஒத்திருந்தது அது. அந்த மரத்தின் அடிப்பாகம் சுமார் எட்டு அல்லது பத்து அடி உயரத்துக்கு நின்றதை நாங்கள் மெதுவாக உணரமுடிந்தது. உச்சிக்குக் கீழே சுமார் ஒரு அடிதள்ளி, மரத்தைச் சுற்றி தும்பிக்கைகள் முளைத்திருந்தன. அவை ஏழு இருந்ததை நான் எண்ணினேன். அடிமரம் வெளிறி, வழுவழுப்பாய் நெடுகிலும் கபிலநிறப் புள்ளிகள் படர்ந்து காணப்பட்டது. தும்பிக்கைகள் இப்போது முடமாய் உயிரற்றுத் தோன்றின. ஆனால் அவற்றைப் பார்க்கையில் என் முதுகத்தண்டு சில்லிட்டது. அரை குறை வெளிச்சத்துக்கு எங்கள் கண்கள் பழகியபின், இன்னொன்றையும் நாங்கள் கவனித்தோம். அந்த அறையின் தரைநெடுக சிறகுகள் சிதறிக் கிடந்தன.
நாங்கள் எவ்வளவு நேரம் செயல் மறந்து நின்றோம் என நான் அறியேன். இறுதியில் காந்தி பாபு சொன்னார்: "மரம் இப்போது தூங்குகிறது. ஆனாலும் அது விழித்துக் கொள்ளும் நேரம் தான்."
நம்பிக்கையற்ற குரலில் அபி கேட்டான், "உண்மையில் இது ஒரு மரம் இல்லையே; மரம் தானா?"
"அது மண்ணிலிருந்து வளர்வதால் அதை வேறு எப்படிச் சொல்வது? ஆனால் அது ஒரு மரம் போல் நடந்து கொள்வதில்லை என்பதையும் நான் சொல்லியாக வேண்டும். அதற்கு ஏற்ற பெயர் அகராதியிலேயே இல்லை"
"நீங்கள் எப்படி அழைக்கிறீர்கள்?"
"ஸெப்டோபஸ். வங்காளியில், சப்தபாஷ்-சப்த பாசம்-என்று கூறலாம். பாசம் என்றால் அருள் அல்லது முடிச்சு. நாக பாசம் என்பது போல."
வீடு நோக்கி நடக்கையில், இந்த இனத்தை அவர் எங்கே கண்டு பிடித்தார் என்று கேட்டேன்.
"மத்திய அமெரிக்காவில், நிகரகுவா ஏரி அருகே, அடர்ந்த காடு ஒன்றில்" என்று அவர் சொன்னார்.
"நிரம்ப சிரமப்பட்டுத் தேட வேண்டியிருந்ததா?"
"அந்த வட்டாரத்தில் இது வளர்வதாக நான் அறிந்திருந்தேன், பேராசிரியர் டன்கன் பற்றி நீங்கள் கேட்டிருக்கமாட்டீர்கள். பெரிய ஆராய்ச்சியாளர், தாவர இயலாளர். மத்திய அமெரிக்காவில் அபூர்வ தாவரங்களை கண்டுபிடிக்கும் முயற்சிலேயே அவர் தன் உயிரை இழந்தார். அவர் உடல் அகப்படவேயில்லை. அவர் எப்படி இறந்தார் என்பதும் யாருக்கும் தெரியாது. அவர் டயரியின் இறுதிப் பக்கங்களில் இத்தாவரம் குறித்து அவர் எழுதியிருந்தார்.
"சந்தர்ப்பம் கிடைத்ததும் நான் நிகரகுவா போனேன். குடிமாலாவிலிருந்தே அங்கு வசித்த மக்கள் இந்த மரம் பற்றிப் பேசுவதைக் கேட்டேன். இதை அவர்கள் சைத்தான் மரம் என்றார்கள். பின்னர் சிலவற்றை நானே கண்டேன். அவை குரங்குகளையும் இதர பிராணிகளையும் தின்பதை நேரில் பார்த்தேன். வெகுவாய்த் தேடி அலைந்த பிறகு, என்னோடு எடுத்து வருவதற்கு வசதியான சிறு தாவரம் ஒன்றைக் கண்டேன். பாருங்கள், இரண்டு வருஷங்களில் அது எப்படி வளர்ந்திருக்கிறது!"
"அது இப்போ என்ன தின்கிறது?"
"நான் கொடுப்பதை எல்லாம். சில சமயம் நான் அதுக்காக எலிகளைப் பிடித்தது உண்டு. வழியில் காரில் அடிபட்டு நாய் அல்லது பூனை கிடந்தாலும், அதை இந்த மரத்துக்காக எடுத்து வரவேண்டும் என்று பிரயாகிடம் சொன்னேன். அவற்றையும் அது ஜீரணித்தது. நாம் சாப்பிடக்கூடிய மாமிச வகையை-கோழி, ஆடு எல்லாம் தான்-கொடுத்தேன். அண்மையில் அதன் பசி மிக அதிகமாகிவிட்டது. அதுக்கு தீனி போட்டு திருப்தி அளிக்க இயலவில்லை. தினம் இந்நேரத்தில் அது விழித்தெழும் போது, அதிகப் பரபரப்பும் குழப்பமும் பெற்று விடுகிறது. நேற்று ஒரு பேராபத்து நிகழ இருந்தது. அதுக்கு கோழி தர பிரயாக் அறைக்குள் போனான். ஒரு யானைக்குத் தீனி கொடுப்பது போல் தான் இதுக்கும் தர வேண்டும். முதலில் மரப்பகுதியின் உச்சியில் ஒரு மூடி திறக்கிறது. மரம் ஒரு தும்பிக்கையின் உதவியால் உணவை உயரே எடுத்துச் சென்று, உச்சியில் இருக்கிற ஒரு பொந்துக்குள் வைக்கிறது. அப்படி அது சிறிது உணவை உள்ளே வைக்கும் ஒவ்வொரு தடவையும் செப்டோபஸ் அமைதியாக இருக்கிறது. மீண்டும் அது தன் தும்பிக்கையை ஆட்டத் தொடங்கினால் அது இன்னும் பசியாக இருக்கிறது என்று அர்த்தம்.
"இதுவரை இரண்டு கோழிகள், அல்லது ஒரு சிறு ஆடு ஒரு நாளைக்கு செப்டோபஸுக்குப் போதுமானதாக இருந்தது. நேற்று முதல் ஏதோ மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. பிரயாக் இரண்டாவது கோழியைக் கொடுத்ததும் வழக்கம் போல் வெளியே வந்தான். தொடர்ந்து தும்பிக்கைகளை ஆட்டி அடிக்கிற ஒசை கேட்கவும் என்ன விஷயம் என்று அறிய அவன் மறுபடியும் உள்ளே போனான்.
"நான் என் அறையில் குறிப்பு எழுதிக்கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு அலறல் கேட்டது. உடனே அங்கே ஒடிப்போனேன். கோரக் காட்சியைக் காண நேர்ந்தது. செப்டோபஸின் தும்பிக்கைகளில் ஒன்று பிரயாகின் வலதுகையை இரும்புப்பிடியாகப் பற்றி இருக்க, அவன் அதை விடுவிக்க முழு பலத்தோடும் போராடினான். இன்னொரு தும்பிக்கை அவனை மறுபுறமிருந்து கவ்விப் பிடிக்க, வெறியோடு நெருங்கிக் கொண்டிருந்தது.
நேரம் தாழ்த்தாமல் நான் என் கைத்தடியால் தும்பிக்கை மீது பலமாக அறைந்தேன். என் இரு கைகளாலும் பிரயாகைப் பிடித்து இழுத்தேன். ஒரு மாதிரி அவனைக் காப்பாற்றினேன். செப்டோபஸ் பிரயாகின் சதையில் ஒரு துண்டைப் பிய்த்து எடுத்துவிட்டது. அதை அது தன் வாய்க்குள் போடுவதை நான் என் கண்களால் பார்த்தேன். இது தான் எனக்குக் கவலை தருகிறது."
நாங்கள் வராந்தாவை அடைந்தோம். காந்தி பாபு உட்கார்ந்து, தன் நெற்றியைத் துடைப்பதற்காகக் கைக்குட்டையை எடுத்தார்.
"நான் இதுவரை கருதியதேயில்லை செப்டோபஸ் மனித இறைச்சியால் வசீகரிக்கப்படும் என்று. இது பேராசையாக இருக்கலாம். அல்லது ஒரு விதக் கொடுரமாகவும் இருக்கும். நேற்று நடந்ததற்குப் பிறகு அதைக் கொல்வது தவிர எனக்கு வேறு வழியில்லை. நேற்று அதன் உணவில் விஷம் கலந்து கொடுத்தேன். ஆனால் அது மிக சாமர்த்தியம் பெற்றிருக்கிறது. தும்பிக்கையால் அது உணவைத் தொட்டது; தூக்கி எறிந்து விட்டது. மீதி இருக்கிற ஒரே வழி அதைச் சுடுவது தான். பரிமள், நான் ஏன் உன்னை இங்கே கூப்பிட்டேன் என்பது இப்போது புரிந்திருக்கும்."
நான் ஒரு கணம் யோசித்தேன். "ஒரு குண்டு அதைக் கொன்றுவிடும் என்று உறுதியாக நம்புகிறீர்களா?" என்று கேட்டேன்.
"அது சாகுமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அதற்கு ஒரு மூளை இருக்கிறது. இது எனக்கு மிக உறுதியாகத் தெரியும். அது சிந்திக்கிறது. இதற்குப் போதிய சான்று உண்டு. நான் அதன் அருகே எத்தனையோ முறை போயிருக்கிறேன். ஆனால் அது ஒரு போதும் என்னைத் தாக்கியதில்லை. ஒரு நாய் தன் எஜமானை அறிவது போல், அது என்னை அறிந்திருக்கிறது. பிரயாகிடம் வன்முறையாக அது நடக்கக் காரணம் இருக்கலாம். சில தருணங்களில் பிரயாக் செப்டோபஸைச் சீண்டி விளையாட முயன்றான். உணவை நீட்டி அதற்கு ஆசைகாட்டி உடனே அதை அகற்றி விடுவான். அல்லது தும்பிக்கை அருகில் உணவைக் கொண்டுபோவது; வேடிக்கை பார்க்க, பிறகு உணவு தராமலே விலகி விடுவது-இப்படி எல்லாம் செய்வான். அதுக்கும் மூளை இருக்கிறது. எங்கே இருக்க வேண்டுமோ அங்கே அதாவது அதன் தலையில்
தும்பிக்கைகள் வளர்ந்து தொங்குகிற மரப்பாகத்தின் உச்சியில், அது இருக்கிறது. அது தான் நீ குறிவைத்துச் சுடவேண்டிய இடம்"
அபிஜித் அவசரமாயக் குறுக்கிட்டான். "அது வெகு எளிது. ஒரு நொடியில் கண்டுவிடலாம். பரிமள், உன் துப்பாக்கியை எடு."
காந்தி பாபு கை உயர்த்தி அவனை நிறுத்தினார். "எதிராளி தூங்கும் போது யாராவது அவனைச்சுடுவார்களா? பரிமள், உனது வேட்டை நியதி என்ன சொல்கிறது?"
துரங்கும் பிராணியைக் கொல்வது அனைத்து விதிகளுக்கும் எதிரானதே. அதிலும் முக்கியமாக, எதிராளி அசைய முடியாமல் இருக்கையில். அது முற்றிலும் புறம்பான விஷயம்."
காந்தி பாபு பிளாஸ்கை எடுத்து வந்து, எங்களுக்குத் தேநீர் வழங்கினார். அதை நாங்கள் பருகி முடிந்த பதினைந்து நிமிடங்களில், செப்டோபஸ் விழித்துக் கொண்டது.
சிறிது நேரமாகவே முன்னறையில் பாதுஷா அமைதியற்று இருந்தது. இப்போது திடீரென ஒரு ஒசையும் ஊளைக்குரலும் எழுந்தன. என்ன விஷயம் என்று அறிய அபியும் நானும் அங்கே விரைந்தோம். பாதுஷா கட்டை அறுக்க மூர்க்கமாய்ப் போராடியது. அபி குரல் கொடுத்து அதை அடக்க முயன்றான். அவ்வேளையில் விநோதமான கூரிய மணம் ஒன்று காற்றில் பரவியது. அந்த வாசனையும், பலமாக ஒங்கி அறையும் ஒசையும் தகர ஷெட் இருந்த திக்கிலிருந்து வருவதாய் தோன்றின.
அந்த மனத்தை வர்ணிப்பது சிரமம் என் குழந்தைப் பருவத்தில் எனது தொண்டைச் சதையை அகற்ற ஒரு சமயம் எனக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது எனக்குத் தரப்பட்ட குளோரோ ஃபாரத்தின் (மயக்க மருந்தின்) வாசனையை இந்த மணம் நினைவு படுத்தியது. காந்தி பாபு அறைக்குள் பாய்ந்தார். "வா, இது தான் நேரம்."
"இது என்ன வாசனை?" என்று கேட்டேன்.
செப்டோபஸ் தான். உணவை வசீகரிக்க அது வெளிப்படுத்துகிற வாசனையே இது..."
அவர் முடிப்பதற்குள், பாதுஷா வெறிவேகத்தோடு இழுத்து, கழுத்துப்பட்டியைத் தெறிப்பதில் வெற்றி கண்டது. காந்தி பாபுவைத் தரையில் தள்ளி விட்டு வாசனை வந்த இடம் நோக்கி அது பாய்ந்து ஒடியது.
"பேராபத்து!" என்று கத்திய அபி நாயின் பின்னே ஒடினான்.
சில கணங்களுக்குப் பிறகு, துப்பாக்கியுடன் நான் தகர ஷெட்டை அடைந்த போது, பாதுஷா சன்னல் வழியாக மறைந்து போனதைக் கண்டேன். அதை நிறுத்த அபி செய்த முயற்சிகள் பலன்தரவில்லை. காந்தி பாபு பூட்டிய கதவை திறந்த போது, ராம்பூர் வேட்டைநாயின் மரண ஒலம் கேட்டது. நாங்கள் உள்ளே ஒடினோம். பாதுஷாவைப் பிடித்திழுக்க ஒரு தும்பிக்கை போதவில்லை. செப்டோபஸ் முதலில் ஒரு தும்பிக்கையாலும், பிறகு இரண்டாவதாலும், பின் மூன்றாவது தும்பிக்கையாலும் கொடுரமாய் அந்த நாயைத் தழுவிக் கொண்டிருந்தது.
காந்தி பாபு எங்களை நோக்கிக் கத்தினார்: "ஒரு அடி கூட முன்னே போகாதீர். பரிமள், சுடு!"
நான் குறி பார்க்கத் தொடங்கவும், அபி என்னைத் தடுத்தான். அவன் தன் நாயை எவ்வளவு மதித்தான் என நான் உணர்ந்தேன். காந்தி பாபுவின் எச்சரிக்கையையும் மீறி, அவன் செப்டோபஸை நெருங்கினான். பாதுஷாவை பிடித்திருந்த தும்பிக்கைகளில் ஒன்றை பற்றி விலக்கினான். அந்த பயங்கரக் காட்சியைக் கண்டு நான் வெலவெலத்தேன். மூன்று தும்பிக்கைகளும் இப்போது, நாயை விட்டு விட்டு, அபியை சுற்றி வளைத்தன. அதே சமயம் இதர நான்கு கைகளும், மனித ரத்தம் கிடைக்கப் போகிற ஆவலால் தூண்டப்பட்ட நாக்குகள் போல், முன்னே அசைந்து வந்தன.
"சுடு, பரிமள், சுடு அங்கே தலையில் என்று காந்தி பாபு அவசரப் படுத்தினார். என் கண்கள் செப்டோபஸ் மீதே நிலைத்திருந்தன. மரத்தின் உச்சி யில் ஒரு மூடி மெதுவாய் திறப்பதை கவனித்தேன். அங்கு ஒரு பொந்து தென்பட்டது.
தும்பிக்கைகள் அபியை அந்தத் துளைக்கு தூக்கிக் கொண்டிருந்தன. அபியின் முகம் வெளுத்து, கண்கள் துரத்தி நின்றன.
மிக நெருக்கடியான கணத்தில்-இதை நான் முன்பும் கவனித்திருக்கிறேன்-என் நரம்புகள் அமைதியுற்று, மந்திரத்தால் கட்டுண்டவை போல் இயங்கின. நிதானமான கைகளால் துப்பாக்கியைப் பற்றி, செப்டோபஸின் தலையில் இருந்த இரண்டு வட்டப் புள்ளிகள் நடுவே குறிதவறாது சுட்டேன்.
ஊற்றுப் போல் ரத்தம் பீச்சியடித்தது எனக்கு நினைவிருக்கிறது. தும்பிக்கைகள் சட்டென முடமாகி, அபியின் மீதிருந்த பிடியை விட்டதைப் பார்த்ததாக நினைக்கிறேன். உடனே அந்த வாசனை பொங்கி என் உணர்வின் மீது கவிந்து கொண்டது.
***
அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நான்கு மாதங்கள் ஒடிவிட்டன. இப்போது தான் நான் எனது பூர்த்தியாகாத நாவலை தொடரும் சக்தி பெற்றிருக்கிறேன்.
பாதுஷாவைக் காப்பாற்ற முடியவில்லை. அபி புதிதாக ஒரு வீர நாய்க்குட்டியும் திபேத்திய நாயும் வாங்கிவிட்டான். வேறொரு ராம்பூர் வேட்டை நாயைத் தேடிக்கொண்டிருக்கிறான். அவனது விலா எலும்புகள் இரண்டு முறிந்து போயின. இரண்டு மாத காலம் கட்டுக்கட்டி சிகிச்சை செய்து இப்போது குணம் அடைந்திருக்கிறான்.
காந்தி பாபு நேற்று வந்தார். தனது மாமிச பட்சிணித் தாவரங்கள் அனைத்தையும் அகற்றுவது பற்றி யோசிப்பதாகச் சொன்னார். "புடலை, அவரை, கத்திரி போன்ற சாதாரண தோட்டக் காய்கறி இனங்களில் சில ஆய்வுகள் நடத்த விரும்புகிறேன். நீ எனக்குப் பெரும் உதவி செய்தாய். நீ விரும்பினால் என் செடிகள் சிலவற்றை உனக்குத் தருவேன். நீபென்தஸ் செடியை எடுத்துக் கொள். வீட்டில் பூச்சி புழுக்களின் தொல்லை நீங்கி விடும்" என்றார்.
"வேண்டாம். நன்றி. உங்கள் மனம் போல் அனைத்தையும் தூர விட்டெறியுங்கள். என் வீட்டில் பூச்சிகளைப் போக்கடிக்க எனக்கு ஒரு செடியும் தேவையில்லை" என்றேன்.
கிங் அன்ட் கோ காலண்டருக்குப் பின்னிருந்த பல்லியும் "ஆமாம், ஆமாம்" என்றது.
(வங்காளிக் கதை)
சீதாவும் ஆறும்
ஸ்கின் பாண்ட்
மலையில் தொடங்கிக் கடலில் முடிந்த அந்தப் பெரிய ஆற்றின் நடுவில் ஒரு சிறு தீவு இருந்தது. ஆறு தீவைச் சுற்றி ஒடியது; சிலசமயம் அதன் கரைகளை அரித்தது; ஆனால் ஒருபோதும் தீவின் மேலாக ஒடியதில்லை. அத் தீவில் ஒரு சிறு குடிசை இருந்தது. மண்சுவரும் சாய்வான ஒலைக் கூரையும் கொண்ட குடிசை பெரிய பாறை ஒன்றை ஒட்டி அது கட்டப்பட்டிருந்தது. எனவே மூன்று சுவர்கள் தான் மண்ணாலானவை. பாறையே நாலாவது சுவர்.
சில வெள்ளாடுகள் தீவில் முளைத்த புல்லை மேய்ந்தன. பெட்டைக் கோழிகள் சில அவற்றைச் சுற்றித் திரிந்தன. முலாம் செடிப் பாத்தியும், காய்கறிப் பாத்தியும் அங்கிருந்தன.
தீவின் மத்தியில் ஒரு அரச மரம் நின்றது.
அது மிகப் பழைய மரம். பல வருடங்களுக்கு முன்பு, வலிய காற்று ஒன்று ஒரு விதையைத் தீவில் கொண்டு சேர்த்தது. இரண்டு பாறைகளுக்கிடையே சிக்கிய அது அங்கேயே வேர்விட்டு வளர்ந்தது. பெரிய மரமாகி ஒரு சிறு குடும்பத்துக்குப் பாதுகாப்பும் நிழலும் அளித்தது.
தாத்தா மீன் வலையைப் பழுது பார்த்தார். ஆற்றில் பத்து வருட காலம் அவர் மீன் பிடித்திருக்கிறார். அவர் நல்ல மீனவர். மெலிந்த வெள்ளிய சில்வா மீன், அழகான பெரிய மாவுநீர், நீண்ட மீசைக்கார சிங்காரா மீன் வகைகள் அங்கே அகப்படும் என அவர் அறிவார். ஆறு எங்கே அதிக ஆழம், எங்கே ஆழமில்லை என்பது அவருக்குத் தெரியும். எந்தத் தூண்டில் இரை உபயோகிப்பது-எந்த மீன் புழுக்களை விரும்பும், எது பயறுகளை நாடும் என அறிவார். அவர் தன் மகனுக்கு மீன் பிடிக்கக் கற்றுத்தந்தார். ஆனால் அவர் மகன் நூறு மைல்களுக்கு அப்பால் இருந்த ஒரு நகரில் தொழிற்சாலையில் பணிபுரியப் போய்விட்டான். அவருக்கு பேரன் இல்லை. சீதா என்று ஒரு பேத்தி இருந்தாள். ஒரு பையன் செய்யக் கூடிய எல்லா வேலைகளையும் அவள் செய்தாள். சில சமயம் சிறப்பாகவே செய்தாள். அவள் மிகச் சின்னவளாக இருந்த போதே அவள் அம்மா இறந்து போனாள். பாட்டி, ஒரு பெண் அறிய வேண்டிய அனைத்தையும் அவளுக்குக் கற்றுக் கொடுத்தாள். தாத்தாவுக்கும் பாட்டிக்கும் எழுதப் படிக்கத் தெரியாது. ஆகவே சீதாவுக்கும் படிக்கவோ எழுதவோ தெரியாது.
ஆற்றுக்கு அப்பால் ஒரு ஊரில் ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. ஆனால் சீதா அதைப் பார்த்ததேயில்லை. தீவில் அவளுக்கு ஏகப்பட்ட வேலைகள் இருந்தன.
தாத்தா தனது வலையைச் சீர்படுத்திக்கொண்டிருந்த போது, சீதா குடிசைக்குள் இருந்தாள். பாட்டியின் நெற்றியைப் பிடித்து விட்டுக் கொண்டிருந்தாள். பாட்டியின் உடல் சுரத்தால் கொதித்தது. மூன்று நாட்களாகவே பாட்டிக்கு நோய்; எதுவும் சாப்பிட முடியவில்லை. முன்பும் அவள் சீக்காக இருந்திருக்கிறாள்; ஆனால் இவ்வளவு மோசமாக இல்லை. பாட்டி தூங்கியதும் சீதா மெதுவாக அறைக்குள்ளிருந்து வெளியே வந்து நின்றாள்.
மழைக்கால மேகங்களால் வானம் இருண்டிருந்தது. இரவு முழுவதும் மழை பெய்திருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் மீண்டும் மழைபெய்யும். அந்த வருடம் பருவ மழை சீக்கிரமாகவே, ஜூன் இறுதியிலேயே, வந்துவிட்டது. இப்போது ஜூலை கடைசி. ஏற்கெனவே ஆறு பொங்கிப் புரண்டது. அது பாய்ந்து வரும் ஓசை மிக நெருங்கியும், வழக்கத்தைவிட மிக அச்சம் தருவதாகவும் இருந்தது.
சீதா தாத்தா அருகில் சென்றாள். அரசமரத்தின் கீழே அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்தாள்.
"உனக்குப் பசிக்கிற போது சொல். ரொட்டி சுட்டுத் தருவேன்" என்றான் அவன்.
"உன் பாட்டி தூங்கிவிட்டாளா?"
"அவள் தூங்குகிறாள். ஆனால் சீக்கிரம் விழித்து விடுவாள். அவளுக்கு நோவு அதிகம்."
கிழவர் ஆற்றுக்கும் அப்பால், காட்டின் இருண்ட பசுமையையும், சாம்பல் நிற வானத்தையும், உற்று நோக்கினார். "நாளைக்கு அவள் குணம் அடையாவிட்டால், ஷாகன்ஞ் நகர ஆஸ்பத்திரிக்கு அவளை இட்டுப் போவேன். அவளை எப்படிக் குணப்படுத்துவது என்பது அங்கு இருப்பவர்களுக்குத் தெரியும். நீ சில தினங்கள் தனியாக இருக்க வேண்டும்."
சீதா சிரத்தையாகத் தலையாட்டினாள். பாட்டி குணம் அடைய வேண்டும். ஆற்றில் நீரோட்டம் வேகமாக இருக்கையிலும் சிறு படகை வலித்துச் செல்லும் சக்தி தாத்தாவுக்கு இருந்தது. இதை அவள் அறிவாள். வீட்டில் உள்ள தங்கள் சிறிது உடைமைகளைக் கண்காணிக்க யாராவது ஒருவர் அங்கு இருந்தாக வேண்டும்.
தனித்து இருப்பதற்கு சீதா அஞ்சவில்லை. ஆனால் ஆற்றின் போக்கு அவளுக்குப் பிடிக்கவில்லை. அன்று காலை, தண்ணிர் எடுத்து வரப் போனபோது, ஆற்றில் தண்ணர் அதிகரித்திருந்ததை அவள் கவனித்தாள். வழக்கமாய் பறவைகளின் எச்சங்கள் சிதறிக் கிடக்கும் பாறைகள் திடீரென்று மறைந்து விட்டன.
"தாத்தா, ஆறு பெருகி வந்தால் நான் என்ன செய்வேன்?"
மேடான பகுதியில் நின்றுகொள்."
மேட்டுப் பகுதிக்கும் தண்ணிர் வந்துவிட்டால்?"
கோழிகளைக் குடிசைக்குள் கொண்டு போ. நீயும் உள்ளேயே இரு."
"குடிசைக்குள் தண்ணிர் வந்தால்?"
"அரசமரத்தின் மேலே ஏறு. அது வலிமையான மரம். கீழே விழாது. தண்ணிரும் அவ்வளவு உயரம் வராது." .
"ஆடுகள், தாத்தா?"
"ஆடுகளை நான் கொண்டு போவேன், சீதா. அவற்றை விற்க நேரலாம், உன் பாட்டிக்கு உணவுக்கும் மருத்துக்கும் செலவுபண்ண. கோழிகளை, அவசியப்பட்டால், கூரை மேலே விட்டுவை. ஆனால் அதி கமாகக் கவலைப்படாதே. தண்ணிர் அவ்வளவு அதிகம் வராது" என்று, அவர் சீதாவின் தலையைத் தடவிக் கொடுத்தார்.
***
அன்று மாலை மீண்டும் மழை பெய்தது. பெரிய பெரிய துளிகள் ஆற்றின் பர்ப்பை வகுப்படுத்தின. ஆனால் கதகதப்பான மழை. சீதா அதில் சஞ்சரித்தாள். நனைவது பற்றி அவள் பயப்படவில்லை. அது அவளுக்குப் பிடித்திருந்தது. குடிசைக்குள் புழுக்கமாக இருந்தது. அடுப்புத் தீயின் வெப்பத்தில் அவளுடைய மெல்லிய ஆடை சீக்கிரம் உலர்ந்து விடும்.
அவள் கொட்டுகிற மழையில் திரிந்து, கோழிகளைத் துரத்தி, குடிசைக்குப் பின்னால் இருந்த ஒரு கூண்டுக்குள் அடைத்தாள். தீங்கற்ற கபிலநிறப்பாம்பு ஒன்று, வளைக்குள் வெள்ளம் புகுந்ததால் வெளிப் பட்டு, திறந்த வெளியில் ஒடியது. சீதா ஒரு கம்பை எடுத்து, பாம்பைத் துாக்கி, பாறைக் குவியல்களுக்கு இடையில் போட்டாள். பாம்புகளிடம் அவளுக்கு விரோதம் இல்லை. அவை எலிகளும் தவளைகளும் பெருகி விடாது தடுத்தன.
முடிவில் சீதா குடிசைக்குள் போனபோது, அவளுக்குப் பசித்தது. வறுத்த பயறை அவள் தின்றாள். சிறிது ஆட்டுப் பாலைக் காய்ச்சினாள்.
பாட்டி ஒருதரம் கண் விழித்தாள். தண்ணீர் கேட்டாள். தாத்தா பித்தளைத் தம்ளரில் நீர் கொடுத்தார்
***
இரவு முழுவதும் மழை பெய்தது.
கூரை ஒழுகியது. தரையில் சிறிது நீர் தேங்கிநின்றது. தாத்தா மண்ணெண்ணெய் விளக்கை எரிய விட்டிருந்தார். அவர்களுக்கு வெளிச்சம் தேவையில்லை. இருப்பினும் அது பாதுகாப்பாகத் தோன்றியது.
ஆற்றின் ஒசை சதா அவர்களோடுதான் இருந்தது. ஆயினும் அதை அவர்கள் கவனிப்பதில்லை. ஆனால் அன்று இரவு அதன் ஒசையில் ஒரு மாற்றம் தெரிந்தது. ஒரு புலம்பல் போல, நெட்டை மரங்களின் உச்சியில் காற்று சரசரப்பது போல், ஏதோ ஒன்று. பாறைகளைச் சுற்றி ஒடி சிறு கற்களை அடித்துச் செல்கையில் ஒரு வேக இரைச்சல் எழுந்தது. சில சமயம் மண் சரிந்து நீருக்குள் விழுந்த போது பேரோசை கேட்டது.
சீதாவால் தூங்க முடியவில்லை.
கூரையின் சிறு வெளியின் ஊடாக விடிவின் ஒளி எட்டிப் பார்த்ததுமே, அவள் எழுந்து வெளியே போனாள். பெரும் மழை இல்லை. துாறிக் கொண்டிருந்தது. ஆனால் நாட்கணக்கில் சிணுங்கக்கூடிய தூறல் அது. மலைகளில் ஆறு தொடங்கும் இடத்தில் கனத்த மழை பெய்து கொண்டிருக்கும் என்று தோன்றியது.
சீதா தண்ணீர் ஒரத்துக்குப் போனாள். அவளுக்குப் பிரியமான பாறை தென்படவில்லை. அதன் மீது அவள் அடிக்கடி உட்கார்ந்து கால்களைத் தொங்கவிட்டு நீரை அளைந்து, நீந்திச் செல்லும் சிறு சில்வா மீன்களை வேடிக்கை பார்ப்பதுண்டு. பாறை இப்பவும் அங்கு தான் இருந்தது, சந்தேகமில்லை, ஆனால் ஆறு அதுக்கு மேல் ஒடியது.
அவள் மணலில் நின்றாள். அவளது பாதங்களுக்கு அடியில் நீர் சுரந்து குமிழியிடுவதை அவள் உணரமுடிந்தது.
சூரியன் உதயமாகும் வேளையில், தாத்தா படகை ஒட்டிச் சென்றார். பாட்டி படகின் முன் பகுதியில் படுத்திருந்தாள். அவள் சீதாவை உறுத்துப் பார்த்தாள். ஏதோ சொல்ல முயன்றாள். ஆனால் வார்த்தை வரவில்லை. கையை உயர்த்தி ஆசியளித்தாள்.
சீதா குனிந்து, பாட்டியின் பாதங்களைத் தொட்டாள். உடனே தாத்தா படகை வலித்தார். அந்தச் சிறு படகு-இரு முதியவர்களோடும் மூன்று ஆடுகளுடனும்-ஆற்றின் மேலே வேகமாக நகர்ந்து, மறுகரை நோக்கி முன்னேறியது.
நீர் மீது துள்ளிச் சென்ற அது, சிறிது சிறிதாகி, முடிவில் விசாலமான ஆற்றின் மேலே ஒரு புள்ளியெனத் தோன்றியது.
திடீரென்று சீதா தனிமையில் விடப்பட்டாள்.
காற்று வீசியது. அது மழைத்துளிகளை அவள் முகத்தில் அறைந்தது. தண்ணீர் தீவைக் கடந்து பாய்ந்து சென்றது. தூரக் கரை இருந்தது. அது மழையினால் மறைக்கப்பட்டது. சிறு குடிசை இருந்தது; மரமும் இருந்தது.
அவள் சுறுசுறுப்பானாள்.கோழிகளுக்குத் தீனி போட வேண்டும். அவை தீனி தவிர வேறு எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. சிறிது தானியம், உருளைக்கிழங்குத் தோல், வேர்க்கடலைத் தோல் ஆகியவற்றை அவள் அவற்றிடம் வீசினாள்.
பிறகு அவள் துடைப்பம் எடுத்து குடிசையைப் பெருக்கினாள். கரி அடுப்பைப் பற்ற வைத்தாள். நாளை பால் இராது," என்று நினைத்தாள்.
மலைகளிலிருந்து இடி உருண்டு இறங்கியது. பூம்-பூம்-பூம்...
சீதா நெடுநேரம் உள்ளே இருக்க முடியவில்லை. வெளியே போனாள். ஆற்றை ஊடுருவிப் பார்த்தாள். இப்போது அது அதிக அகலமாகத் தோன்றியது. அது கரைகளைத் தாண்டி, சமவெளியினூடே வெகு தூரம் பரவியிருந்தது. வெகு தூரத்தில், மக்கள் நீர் நிறைந்த, வெள்ளம் பரவிய வயல்கள் ஊடாகத் தங்கள் மாடுகளை ஒட்டிச் சென்றார்கள். தங்கள் உடைமைகளை மூட்டைகட்டித்தலைகளில் அல்லது தோள்களில் சுமந்தபடி, தங்கள் வீடுகளை விடுத்து, மேட்டு நிலம் தேடிப் போனார்கள்.
எங்கும் தண்ணிர் மயம். உலகமே ஒரு பெரிய ஆறு ஆகிவிட்டது. ஆற்றின் வனப்பகுதியில் நின்ற மரங்கள் கூட, நீரிலேயே முளைத்தெழுந்த சதுப்புநில மரங்கள் போல் தோன்றின.
சிறிது நேரத்தில் மரப்பலகைகள், சிறு மரங்கள் செடிகள், பிறகு ஒரு மரக் கட்டில் முதலியன தீவைக் கடந்து மிதந்து செல்வதை அவள் கண்டாள். சீதாவின் பயம் உறுதிப்பட்டது.
அவள் தனக்கு உணவு தயாரித்துக்கொள்ளத் தீர்மானித்தாள். வெளியே பார்த்தபோது, பாறைகளிடையே நீர் தேங்கிக்கிடப்பதை அவள் கண்டாள். அது மழைத் தண்ணிரா, ஆற்றுப் பெருக்கா என்று தெரிய வில்லை.
அவளுக்கு ஒரு எண்ணம் எழுந்தது. அறையின் ஒரு மூலையில் பெரிய தகரப்பெட்டி இருந்தது. அது சீதாவின் அம்மாவுக்கு உரியது. பயனுள்ள, மற்றும் மதிப்புள்ள பொருள்களை அதில் திணித்து, அதைக் கனமாக்கிவிட்டால்-ஆறு தீவுக்குள் வந்துவிட்டாலும் கூட-அது அடித்துச் செல்லப்படாமல் இருக்கும்....
தாத்தாவின் ஹூக்கா பெட்டிக்குள் போனது. பாட்டியின் கைத்தடியும் போயிற்று. அப்படியே பருப்பு, மசாலா வகைகள் கொண்ட சிறுசிறு டின்கள் பலவும் போயின. சீதா மரத்தின் மீது பல மணி நேரம் கழிக்க நேர்ந்தாலும் கூட, அவள் மீண்டும் கீழே வந்ததும் தின்பதற்கு ஏதேனும் இருக்குமே!
சீதா பெட்டியை நிரப்புவதில் தீவிரமாக இருந்ததால் குதிகால்களைக் குளிர்நீர் தொட்டதை அவள் கவனிக்கவேயில்லை. பெட்டியைப் பூட்டி, சாவியைப் பாறைச் சுவரில் உயரே இருந்த ஒரு பொந்தில் வைத்தாள். அதன் பிறகு தான் அவள் நீர் பரவிய தரையில் நடந்து கொண்டிருந்ததை உணர்ந்தாள்.
கண்டகாட்சி அச்சுறுத்தவும், அவள் அசைவற்று நின்றாள். தண்ணிர் கதவு விளிம்பு வழியாகக் கசிந்து அறைக்குள் புகுந்து கொண்டிருந்தது.
சீதா மற்ற அனைத்தையும் மறந்தாள். குடிசையைவிட்டு வெளியே பாய்ந்தாள். முழங்கால் அளவு நீரில் விரைந்து, அரச மரத்தின் பாதுகாப்பை நாடி ஒடினாள். தரையின் நன்கறிந்த சின்னமாக அந்த மரம் மட்டும் அங்கே இல்லையென்றால், அவள் ஆழமான தண்ணீரில், ஆற்றுக்குள், தவறி விழுந்திருப்பாள்.
மரத்தின் உறுதியான கிளைகளின் மீது அவள் வேகமாக ஏறினாள். பழக்கமான ஒரு கிளைமீது பாதுகாப்பாக அமர்ந்தாள். கண்ணில் விழுந்து மறைத்த சரக்கூந்தலை ஒதுக்கிவிட்டாள்.
***
அவசரமாக வந்ததற்காக அவள் சந்தோஷப்பட்டாள். இப்போது குடிசையை நீர் சூழ்ந்து கொண்டது. தீவின் மேட்டுப் பகுதிகள் மட்டுமே சில பாறைகள், குடிசை கட்டப்பட்டிருந்த பெரிய பாறை, சில செடிகள் முளைத்திருந்த சிறு குன்று ஒன்று-பார்வையில் பட்டன.
கோழிகள் குடிசையை விட்டு வெளியே வரவில்லை. அநேகமாக அவை படுக்கைச் சட்டத்தின் மேலே ஏறியிருக்கும்.
அசாதாரணப் பொருள்கள் நீரில் மிதந்து சென்றன-அலுமினிய கெட்டில், பிரம்பு நாற்காலி, பல்பொடி டப்பா, காலியான சிகரெட் பெட்டி, மரக் காலணி, பிளாஸ்டிக் பொம்மை...
தண்ணிர் மேலும் உயர்ந்திருந்தது. தீவு வேகமாக மறைந்து கொண்டிருந்தது.
ஏதோ ஒன்று குடிசைக்குள்ளிருந்து மிதந்து வெளிப்பட்டது.
அது ஒரு காலி மண்எண்ணெய்டப்பா. கோழி ஒன்று அதன் மேலே நின்றது. டப்பா தண்ணிரில் ஆடிஅசைந்தபடி, மரத்துக்குப் பக்கத்திலேயே வந்தது; நீரோட்டத்தில் சிக்கி, ஆற்றோடு இழுத்துச் செல்லப்பட்டது. கோழி இன்னும் அதில் தொத்தி நின்றது.
சற்று நேரத்துக்குப் பிறகு தண்ணிர் படுக்கையைத் தொட்டிருக்க வேண்டும். ஏனெனில் மீதமிருந்த கோழிகள் பாறை அடுக்கிற்குப் பறந்தன. அங்கிருந்த சிறு ஒதுக்கிடத்தில் ஒண்டின.
சீதா மேலும் சிறிது உயரே போனாள். கன்னங்கரிய காட்டுக் காகம் ஒன்று மேற்கிளைகளில் தங்கியிருந்தது. அங்கு காக்கைக் கூடு இருந்ததை சீதா பார்த்தாள். ஒரு கிளையின் கவட்டையில் சுள்ளிகள் தாறுமாறாக அடுக்கிவைக்கப்பட்ட ஒரு கூடு.
கூட்டில் நான்கு முட்டைகள். நீலப் பசுமை நிறமும் புள்ளிகளும் கொண்டவை. காகம் அவற்றின் மீது உட்கார்ந்து, வருத்தமாய்க்கத்தியது. காகம் துயரத்தோடு இருந்தபோதிலும், அது அங்கே இருந்தது சீதாவுக்கு உற்சாகம் ஊட்டியது. அவள் தனியாக இருக்கவில்லையே. யாரும் இல்லாமல் இருப்பதைவிட, துணைக்கு ஒரு காகம் இருப்பது மேல்தான்.
இதர பொருள்கள் குடிசைக்குள்ளிருந்து மிதந்து வந்தன-பெரிய பூசணிக்காய், தாத்தாவுக்குச் சொந்தமான சிவப்புத் தலைப்பாகை அது கட்டவிழ்ந்து நீளப் பாம்பு போல் நீரில் நெளிந்தது.
மரம் காற்றிலும் மழையிலும் ஆடியது. காகம் கத்தியது. மேலே பறந்தது. சிலமுறை மரத்தை வட்டமிட்டது. மீண்டும் கூட்டுக்குத் திரும்பியது. சீதா கிளையோடு ஒட்டிக்கொண்டாள்.
மரம் அடி முதல் நுனி வரை அதிர்ந்தது. சீதாவுக்கு அது பூமி அதிர்ச்சி மாதிரிப்பட்டது.
இப்போது ஆறு நெடுகிலும் அவளைச் சுற்றிச் சுழன்றது. குடிசையின் கூரையைத் தொட்டுவிட்டது. விரைவில் மண்சுவர்கள் இற்றுவிழுந்து மறையும். பெரிய பாறையையும் தூரத்தில் நின்ற சில மரங்களையும் தவிர, தண்ணிர் தான் பார்வைக்குப் புலனாயிற்று.
நெட்டையான பழைய அரசமரம் நெட்டுயிர்த்தது. அதன் நீண்டு சுருண்ட வேர்கள் கெட்டியாய் தரையைப் பற்றியிருந்தன. ஆனால் மண் இளகிக் கொண்டிருந்தது. கற்கள் நீரில் அடிபட்டுச் சென்றன. வேர்கள் வேகமாய்த் தங்கள் பிடியை இழந்தவாறிருந்தன.
ஏதோ கோளாறு என்று காகம் அறிந்திருக்க வேண்டும். அது மேலே பறந்து போய், மரத்தையே வளையமிட்டது. அதில் உட்காரவும் மனமின்றி, பறந்து போகவும் விரும்பாமல் தவித்தது.
சீதாவின் ஈர நூல் ஆடை அவளது மெலிந்த உடலோடு ஒட்டிக் கொண்டது. மழைநீர் அவளது நீண்ட கருங்கூந்தலிலிருந்து வடிந்தது. அது மரத்தின் ஒவ்வொரு இலையிலும் வழிந்தது. காகமும் நனைந்து நீர் சொட்டியது.
மரம் பெருமூச்சு விட்டு, மீண்டும் அசைந்தது. கீழிருந்து மண் திரண்டு புரண்டது. மரம் அசைந்ததும், அது சரிந்தது; மெதுவாக முன்னே அசைந்தது, பக்கத்துக்குப் பக்கம் சிறிது திரும்பியது. தரைமீது தன் வேர்களை இழுத்தபடி நகர்ந்தது. ஆற்றின் மைய ஒட்டத்தினுள் அது நழுவியது.
***
அவளைச் சுற்றிலும் கிளைகள் ஆடின. ஆயினும் சீதா தன் பிடியை விட்டுவிடவில்லை. இப்போது தண்ணிர் வெகு அருகில் இருந்தது. அவள் பயந்து போனாள். வெள்ளத்தின் பரப்பையோ, ஆற்றின் அகலத்தையோ அவளால் பார்க்க முடியவில்லை. உடனடி அபாயத்தை, தண்ணீர் தன்னைச் சூழந்து கொண்டிருப்பதை மட்டுமே அவள் காணமுடிந்தது.
காகம் மரத்தைச் சுற்றிப் பறந்தது. அது கடும் கோபம் கொண்டிருந்தது. அதன் கூடு இன்னும் கிளைகளிலேயே இருந்தது - ஆனால் நெடுநேரம் இராது. மரம் புரண்டது, ஒரு பக்கமாய்ச் சாய்ந்தது. கூடு நீரில் விழுந்தது. முட்டைகள் ஒவ்வொன்றாய் விழுவதை சீதா பார்த்தாள்.
காகம் நீருக்கு மேலே தணிவாய்ப்பறந்தது. ஆனாலும் அது செய்வதற்கு ஒன்றுமில்லை. சில நொடிகளில் கூடு மறைந்து விட்டது.
பறவை சற்றுத்தூரம் மரத்தைத் தொடர்ந்தது. அதில் ஏதேனும் தங்கியிருக்கும் என்று அது எண்ணியது போலும், பிறகு, சிறகுகளை அடித்தபடி, அது ஆகாயத்தில் மேலெழும்பி, ஆற்றைக் கடந்து பறந்து மறைந்தது.
சீதா மீண்டும் தனிமைப்பட்டாள். ஆனால் தனிமையை உணர அவளுக்கு நேரமில்லை. எல்லாம் ஆட்டத்தில் இருந்தது-மேலும் கீழுமாய், பக்கவாட்டிலும் முன்னேயுமாய், விரைவில் மரம் குப்புறக் கவிழும். நான் தண்ணிரில் விழுவேன்" என்று அவள் நினைத்தாள்.
தூரத்தில், வெள்ளத்தில் சிக்கிய ஒரு ஊரையும், ஆட்கள் படகுகளில் செல்வதையும் அவள் பார்த்தாள். ஆனால் அவர்கள் வெகு தொலைவில் இருந்தார்கள். அதன் பெரிய அளவு காரணமாக, அந்த மரம் ஆற்றில் வெகு வேகமாய் நகரவில்லை. சில சமயம், ஆழமில்லாத நீரில் போன போது, அதன் வேர்கள் பாறைகளில் மாட்டிக்கொள்ள, அது நின்றது. ஆனால் நெடுநேரம் அல்ல. ஆற்றின் ஒட்டம் அதை விரைவில் அடித்துச் சென்றது.
ஒரு இடத்தில், ஆற்றின் ஒரு வளைவில் மரம் ஒரு மணல்மேட்டில் தட்டி நின்றுவிட்டது.
சீதா மிகக் களைத்திருந்தாள். அவள் புஜங்கள் வலித்தன. அவள் நேராக நிமிர்ந்திருக்கவில்லை. மரம் பெரும்பாலும் ஒரு பக்கமாய் சாய்ந்திருந்ததால், அவள் கீழே விழாமல் இருப்பதற்காகக் கிளையை இறுகப் பற்றிக் கிடக்க நேர்ந்தது. மழை இன்னும் பெய்தது.
அப்போது தான் யாரோ கூப்பிடுவதை சீதா கேட்டாள். நதியின் முன்புறம் பார்ப்பதற்காக அவள் கழுத்தை வளைத்தாள். தன்னை நோக்கி ஒரு சிறு படகு வருவதை அவள் புரிந்து கொள்ள முடிந்தது.
அந்தப் படகில் ஒரு பையன் இருந்தான். அவன் படகை மரத்துக்கு அருகில் கொண்டு வந்தான். ஊன்றுவதற்காக ஒரு கையால் கிளைகளில் ஒன்றைப் பிடித்தபடி, மறு கையைச் சீதாவிடம் நீட்டினான்.
அவள் அவன் கையைப் பற்றி படகுக்குள் நழுவினாள். அவன் தன் காலை அடிமரத்தில் ஊன்றி, படகைத் தள்ளினான்.
சின்னப் படகு ஆற்றோடு வேகமாய்ப் போனது. பெரிய மரம் மிகப் பின்தங்கிவிட்டது. சீதா அதை மறுபடி பார்க்கவே மாட்டாள்.
***
அவள் படகில் படுத்துக் கிடந்தாள். பேச இயலாதபடி பயந்திருந்தாள். பையன் அவளைப் பார்த்தான். ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. அவன் புன்னகை புரியவுமில்லை. அவன் தனது இரு சிறிய துடுப்புகள் மீதும் கவிழ்ந்து, படகு நடு ஆற்றுக்குப் போய்விடாதபடி கவனமாக, நிதானமாகத் தள்ளினான். படகு வேக நீரோட்டத்தில் செல்லாது தடுப்பதற்குப் போதிய பலம் அவனுக்கில்லை. ஆனாலும் அவன் பெரிதும் முயன்றான்.
அவன் இறுதியில், துடுப்புகளை நிறுத்திவிட்டுச் சொன்னான்: "நீ தீவில் தானே வசிக்கிறாய் சில நேரங்களில் நான் உன்னை பார்த்திருக்கிறேன். மற்றவர்கள் எங்கே? அவன் படகைச் சற்றே அதன் போக்கில் விட்டிருந்தான். ஏனெனில், ஆற்றின் அதிக விசாலமான, அதிக அமைதியுள்ள பரப்பை அடைந்திருந்தான்.
"என் பாட்டிக்கு சீக்கு, தாத்தா அவளை ஷாகன்ஞ்சில் இருக்கும் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போயிருக்கிறார்" என்று சீதா சொன்னாள்.
"நீ எங்கிருந்து வருகிறாய்" என்று கேட்டாள். ஏனெனில் அவள் அவனை இதற்கு முன் பார்த்ததேயில்லை.
"மலையடிவாரத்தில் ஒரு ஊரிலிருந்து ஊரில் வெள்ளம் புகுந்து விட்டது என்பதை ஆற்றின் அக்கரையில் இருப்பவர்களிடம் சொல்வதற்காக நான் என் படகில் வந்தேன். ஆனால் நீரின் வேகம் வெகு அதிகம். அது என்னை உன் தீவுக்கு அருகாக இழுத்து வந்தது. நாம் ஆற்றுடன் போராட முடியாது. அது நம்மை எங்கே எடுத்துச் செல்கிறதோ அங்கே போக வேண்டியது தான்."
அவன் ஒரு துடுப்பைப் பற்றியிருந்தான். மறுகையால் இருப்பிடத்தின் கீழே துழாவினான். அங்கு சிறு கூடை இருந்தது. அதிலிருந்து இரண்டு மாம்பழங்கள் எடுத்தான். ஒன்றை சீதாவுக்குக் கொடுத்தான்.
பழுத்து சதையோடிருந்த மாம்பழங்களை அவர்கள் கடித்துச் சுவைத்தார்கள். பற்களால் தோலை அகற்றினார்கள். இனிய சாறு அவர்கள் மோவாய் வழியே சொட்டியது. பழத்தின் வாசனை ரம்மியமாக இருந்தது. சீதா மாம்பழம் தின்று ஒரு வருடத்துக்கு மேலாகியிருந்தது. சில கணங்கள் அவள் ஆற்றை மறந்திருந்தாள்-மாம்பழத்தில் பூரணமாக லயித்துவிட்டாள்.
படகு மிதந்து சென்றது. ஆனால் முன்போல் வேகமாக அல்ல. மலைப் பக்கமிருந்து தள்ளிப்போகப் போக, ஆறு தனது சக்தியையும் சீற்றத்தையும் அதிகம் இழந்துவிட்டது.
"என் பெயர் கிருஷ்ணன்" என்றான் பையன். "என் அப்பா நிறைய பசுக்களும் எருமைகளும் வைத்திருக்கிறார். ஆனால் பல வெள்ளத்தோடு போய்விட்டன."
"நீ பள்ளிக்கூடம் போகிறாயா?" என்று சீதா கேட்டாள்.
ஆமாம். நான் பள்ளிக்கூடம் போவது உண்டு. எங்கள் ஊருக்கு அருகில் ஒன்று இருக்கிறது. நீ பள்ளிக்குப் போக வேண்டுமா?"
"இல்லை-எனக்கு வீட்டில் வேலை மிக அதிகம்."
அவள் வீட்டுக்கு ஆசைப்பட்டுப் பயனில்லை-இனி அங்கே வீடு எதுவும் இராது!
"மரங்கள் நிற்கும் இடத்துக்குப் போக முயல்வோம். நாம் இரவுப் பொழுதில் ஆற்றிலே இருக்கமுடியாது." என்றான் அவன்.
எனவே மரங்களை நோக்கிப் படகை தள்ளினான். பத்து நிமிடங்கள் சிரமப்பட்ட பிறகு, ஆற்றின் ஒரு வளைவை அடைந்தான். ஆற்றின் மைய நீரோட்டத்திலிருந்து அவர்கள் தப்புவது சாத்தியமாயிற்று.
விரைவில் அவர்கள் ஒரு காட்டில் இருந்தார்கள். நெடிய பசும் மரங்களுக்கிடையே படகு சென்றது.
கிருஷ்ணன் சொன்னான்: "நாம் படகை இங்கு ஒரு மரத்தில் கட்டி வைப்போம். அப்புறம் ஒய்வெடுக்கலாம். நாளை நாம் காட்டை விட்டு வெளியேற வழி காண்போம்."
அவன் படகின் அடியிலிருந்து நீளக் கயிறு ஒன்றை எடுத்தான். அதன் ஒரு நுனியைப் படகின் பின்பக்கம் கட்டினான். மறுமுனையைத் தண்ணிருக்குச் சிறிதளவே உயர்ந்து தொங்கிய கனமான கிளை ஒன்றின் மேல் வீசி முடிந்தான். படகு அடிமரத்தை ஒட்டி அமைதியாக நின்றது.
இரவில் வனவிலங்குகள் வெளிப்பட்டு நகர்ந்தன. பொந்துகள், குகைகள், வளைகளிலிருந்து வெள்ளத்தால் துரத்தப்பட்ட பிராணிகள் பாதுகாப்பையும் வறண்ட தரையையும் தேடித் திரிந்தன.
ஒரு பெரிய மலைப்பாம்பு நீரில் நீந்தித் தங்களை நோக்கி வருவதை சீதாவும் கிருஷ்ணனும் கண்டார்கள். அது படகினுள் வரக்கூடும் என்று சீதா பயந்தாள். ஆனால் அது அவர்களைகக் கடந்து சென்றது. தலை நீருக்கு மேலிருக்க, அதன் பெரிய நீண்ட பகுதி பின்னே இழுபட நீந்திய அது கரும் நிழல்களிடையே மறைந்தது.
ஒரு பெரிய சாம்பர் மான் தண்ணிரைச் சிதறியடித்து வந்தது. அது நீந்த நேரவில்லை. அது மிக உயரம், அதன் தலையும் தோள்களும் நீருக்கு மேலாகவே இருந்தன. அதன் கொம்புகள் பெரியன, அழகானவை.
"இதர மிருகங்களும் வரும். புலி கூட வரும். நாம் மரத்தின் மேல் ஏறிக்கொள்ளலாமா?" என்று சீதா கேட்டாள்.
"படகில் நாம் பத்திரமாக இருப்போம். நீபடுத்துத் துாங்கு. நான் காவல் காப்பேன்" என்று கிருஷ்ணன் சொன்னான்.
சீதா படகில் படுத்துக் கண்களை மூடினாள். படகின் புறங்களில் தட்டிச் சென்ற நீரின் ஒசை அவளைத் தாலாட்டி விரைவில் உறங்க வைத்தது. ஒரு சமயம், ஏதோ ஒரு பறவை தலைக்கு மேலே கூவியபோது, அவள் கண்விழித்தாள். தலையைத் தூக்கிப் பார்த்தாள். கிருஷ்ணன் விழிப்போடிருந்தான், படகின் முன்புறம் இருந்த அவன், அவளுக்கு நம்பிக்கை தரும் விதத்தில் முறுவலித்தான்.
கிருஷ்ணன் படகின் அடிப்பாகத்தில் படுத்துத் தூங்கினான். மேல் நோக்கிய அவன் முகத்தில் ஒரு இலை விழுந்தது. அது அவனை எழுப்ப வில்லை. அவன் கன்னத்தின் மேல் அது கிடந்தது, அங்கேயே முளைத்திருந்தது போல.
முடிவாக அவன் கண்விழித்தான்-கொட்டாவி விட்டான், சோம்பல் முறித்தான்; சீதாவின் பக்கத்தில் உட்கார்ந்தான்.
"தண்ணிர் மேலும் அதிகரிக்கவில்லை. ஆனால் எனக்குப் பசிக்கிறது" என்று கூறினான்.
"எனக்கும் தான்" என்றாள் சீதா.
அவன் கடைசியாக இருந்த இரண்டு மாம்பழங்களை எடுத்துக் கூடையைக் காலி செய்தான். கடைசி மாம்பழங்கள்" என்றான்.
தின்று முடித்ததும், கிருஷ்ணன் படகை மரங்களினூடாகச் செலுத்தினான். வெள்ளம் நிறைந்த காட்டில் சுமார் ஒரு மணி நேரம் அவர்கள் மிதந்து சென்றார்கள். மழையில் குளித்த மரங்களின் கிளைகளிலிருந்து அவர்கள் மீது நீர் சொட்டியது. சில கொடிகளையும் கிளைகளையும் அவர்கள் துடுப்புகளினால் தள்ள நேரிட்டது. சிலவேளை, நீரில் மூழ்கியிருந்த செடிகள் அவர்களைத் தடுத்தன. ஆயினும் மதியத்துக்கு முன் அவர்கள் காட்டை விட்டு வெளியேறினார்கள்.
தொலைவில் ஒரு ஊர் தெரிந்தது. அது மேட்டின் மீதிருந்தது. அவர்கள் வெள்ளம் பரவிய வயல்கள் மீது படகில் போனார்கள். வரவர ஆழம் குறைந்தது.
அந்தக் கிராமத்தின் மக்கள் அன்புடன் உதவினர். சீதாவுக்கும் கிருஷ்ணனுக்கும் உணவும் பாதுகாப்பும் தந்தார்கள். சீதா தன் தாத்தா வையும் பாட்டியையும் காண தவித்தாள். ஷாகன்ஞ் நகருக்கு வேலையாகச் செல்லவிருந்த ஒரு முதிய விவசாயி அவளைத் தன்னுடன் கூட்டிச் செல்ல முன் வந்தான்.கிருஷ்ணனும் தன்னோடு வருவான் எனஅவள் நம்பினாள். ஆனால் அவன் கிராமத்தில் காத்திருப்பதாகக் கூறினான். மற்றும் பலர் அங்கு வருவார்கள், அவர்களிடையே தன் சொந்தக்காரர்களும் இருப்பர் என அவன் அறிவான்.
"இனி உனக்கு கஷ்டம் இல்லை. உன் தாத்தாவை நீ சீக்கிரமே கண்டாக வேண்டும். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் தண்ணிர் வற்றிவிடும். நீங்கள் தீவுக்குத் திரும்பி விடலாம்" என்று அவன் சொன்னான்.
"அந்தத் தீவு அங்கே இருந்தால்" என்றாள் சீதா.
விவசாயியின் மாட்டுவண்டியில் அவள் ஏறியதும், அவளிடம் கிருஷ்ணன் ஒரு புல்லாங்குழல் கொடுத்தான்.
"இதை எனக்காக வைத்திரு. இதைப் பெற ஒரு நாள் நான் வருவேன்" என்றான். அவள் தயங்குவதைக் கண்டதும், அவன் சொன்னான். இது ஒரு நல்ல குழல்!"
***
மாட்டுவண்டி மெதுவாகத்தான் போயிற்று. கிராமத்து சாலைகள் பெரும்பாலும் அழிந்திருந்தன. வண்டிச் சக்கரங்கள் சேற்றில் சிக்குண்டன. குடியானவனும் அவன் பெரிய மகனும், சீதாவும்.அடிக்கடி கீழே இறங்கி, கிறீச்சிடும் பெரிய மரச் சக்கரங்களை மேலே தூக்கித் தள்ளிவிட நேரிட்டது. காளைகள் உடல் முழுதும் சேறு தெறித்திருந்தது. சீதாவின் கால்களிலும் அது அப்பியிருந்தது.
ஒரு பகலும் ஒரு இரவும் வண்டியில் பயணம் செய்து அவர்கள் ஷாகன்ஞை அடைந்தார்கள். அதற்குள், சீதா அடையாளம் தெரியாதபடி மாறியிருந்தாள். சுறுசுறுப்பான சந்தை நகரின் குறுகிய கடைவீதியில் அவள் நடந்தான்.
தாத்தா அவளைக் கண்டு கொள்ளவில்லை. அவர் நேரே பார்த்தபடி நிமிர்ந்து நடந்து சென்றார். துளசி படிந்து தலைமுடி குலைந்து காணப்பட்ட சிறுபெண்ணைக் கடந்து போயிருந்திருப்பார் அவர். ஆனால் அவள் நேரே அவருடைய மெலிந்து தள்ளாடிய கால்களில் பாய்ந்து, அவரை இடுப்பை வளைத்துக் கட்டிப்பிடித்தாள்.
அவர் தன்னிலை பெற்று மூச்சுவிடத் தொடங்கியதும், "சீதா!" எனக் கூவினார். "நீ இங்கே எப்படி வந்தாய்? ஏன் தீவை விட்டு வந்தாய்? அங்கிருந்து எப்படி வெளிப்பட்டாய்? எனக்கு ஒரே கவலை-சென்ற இரண்டு நாட்களாக நிலைமை மோசம்...."
"பாட்டி?" என்று சீதா கேட்டாள்.
அப்படிக் கேட்டபோதே, பாட்டி தங்களை விட்டுப் போய்விட்டாள் என அவள் அறிந்தாள். தாத்தாவின் வெறித்த பார்வை அவளுக்கு அதைப் புலப்படுத்தியது. அவள் அழ விரும்பினாள்-மேலும் துன்பம் அனுபவிக்க வேண்டாத பாட்டிக்காக அல்ல; மிக உதவியற்று, குழப்பமுற்றுக் காணப்பட்ட தாத்தாவுக்காக, ஆனால் அவள் தன் கண்ணிரை அடக்கிக் கொண்டாள். அவரது நரம்புகளோடிய, நடுங்கும் கரங்களைப் பற்றி, நெருக்கடியான தெருவில் அவரை நடத்திச் சென்றாள். வரவிருக்கும் காலத்தில் அவர் அவளையே நம்பி வாழ்வார் என்பதை அவள் அப்போதே உணர்ந்தாள்.
சில தினங்களுக்குப் பிறகு அவர்கள் தீவுக்குத் திரும்பினார்கள். ஆற்றில் வெள்ளம் இல்லை. மேலும் மழை பெய்தது. ஆனால் அபாய நிலை நீங்கிவிட்டது. தாத்தாவிடம் இரண்டு வெள்ளாடுகள் எஞ்சியிருந்தன. ஒரு ஆட்டை விற்றதே செலவுகளுக்குப் போதுமானதாக இருந்தது.
தீவிலிருந்து அரசமரம் போய்விட்டதைக் கண்டதும், அவருக்குத் தன் கண்களையே நம்பமுடியவில்லை-தீவின் கற்பாறைகளைப் போல் நிலையானதாய் தோன்றிய மரம் அது; ஆற்றைப் போலவே அதுவும் அவர்கள் வாழ்வின் ஒரு பகுதியாக இருந்தது. சீதா தப்பிப்பிழைத்ததை எண்ணி அவர் அதிசயித்தார்.
"அந்த மரம் தான் உன்னைக் காப்பாற்றியது" என்று அவர் சொன்னார்.
"அந்தப் பையனும்" என்றாள் சீதா.
அந்தப் பையனை நினைத்தாள் அவள். அவள் திரும்பவும் அவனை பார்க்க முடியுமா என எண்ணினாள். ஆனாலும் அவள் அடிக்கடி அவனை நினைக்கவில்லை. அவள் செய்தாக வேண்டிய வேலைகள் மிக அதிகமிருந்தன.
கோணிப்பைகளைக் கொண்டு அமைத்த ஒழுங்கற்ற ஒரு தடுப்பின் கீழேதான் அவர்கள் மூன்று இரவுகள் தூங்கினார்கள். பகலில் குடிசையைப் புதுப்பிக்க அவள் தாத்தாவுக்கு உதவினாள்.
அவள் கவனத்துடன் நிரப்பிய பெட்டி நீரால் இழுத்துச் செல்லப் படவில்லை. ஆனால் தண்ணிர் அதனுள் புகுந்திருந்தது. உணவும், துணி களும் கெட்டுப் போயின. எனினும் தாத்தாவின் ஹல்க்கா சேதமுற வில்லை. மாலை வேளைகளில், வேலை முடிந்த பிறகு, சீதா தயாரித்த சிற்றுண்டியை உண்ட பின், அவர் பழைய திருப்தியோடு புகை பிடிப்பார்.
சீதா, அரச மரம் நின்ற அதே இடத்தில், ஒரு மாங்கொட்டையை விதைத்தாள். அது முளைத்துப் பெரிய மரமாக வளர அநேக வருடங்கள் ஆகும். ஆனாலும், அதன் கிளைகளில் அமர்ந்து அதன் பழங்களை அவள் தின்று மகிழும் ஒரு நாளை சீதா கற்பனை செய்து களித்தாள்!
மெதுவாக மழை ஒய்ந்தது. கிராமங்களில் மக்கள் மறுபடியும் நிலத்தை உழுது, குளிர் காலத்திற்கான புதிய பயிர்களை நடத் தொடங்கினார்கள். மாட்டுச் சந்தைகளும், குத்துச் சண்டைகளும் நடந்தன. பகல் நேரங்கள் வெப்பத்தோடு புழுக்கமாய் இருந்தன. ஆற்றில் தண்ணிர் கலங்கலாக இல்லை. ஒரு மாலையில் தாத்தா பெரிய மாவுதிர் மீனைப் பிடித்தார். சீதா அதை ருசியான கறியாக ஆக்கினாள்.
***
தாத்தா குடிசைக்கு வெளியே புகை பிடித்துக் கொண்டிருந்தார். சீதா தீவின் கடைகோடியில் பாறைகள் மீது துணிகளை உலர்த்தியவாறு இருந்தாள்.
அவளுக்குப் பின்னால் மெல்லிய காலடி ஒசை எழுந்தது. அவள் திரும்பிப் பார்த்தாள். அங்கே கிருஷ்ணன் சிரித்தபடி நின்றான்.
"நீ வரவே மாட்டாய் என்று நினைத்தேன்" என்றாள் சீதா.
"எங்கள் ஊரில் நிறைய வேலை இருந்தது. என் புல்லாங்குழலை நீ வைத்திருக்கிறாயா?"
"ஆமாம். ஆனால் நான் அதைச் சரியாக வாசிக்க முடியவில்லை."
"நான் உனக்குக் கற்றுத் தருவேன்" என்று கிருஷ்ணன் கூறினான்.
அவன் அவள் அருகில் அமர்ந்தான். இருவரும் தங்கள் கால்களை நீரில் நனைத்தார்கள். தண்ணிர் இப்போது தெளிவாக இருந்தது. அதில் நீல வானம் பிரதிபலித்தது. ஆற்றுப் படுகையின் மணலையும் சிறு கற்களையும் நன்கு பார்க்க முடிந்தது.
"சில வேளை ஆறு கோபமாகவும், சில வேளை அன்பாகவும் இருக்கிறது" என்றாள் சீதா.
நாம் ஆற்றைச் சேர்ந்தவர்கள் என்று கிருஷ்ணன் சொன்னான்.
அது ஒரு நல்ல ஆறு. ஆழமானது. வலியது. மலைகளில் தொடங்கி, கடலில் முடிந்தது.
அதன் கரைகளில், பல நூறு மைல்களுக்கு, லட்சக் கணக்கான மக்கள் வசித்தார்கள். சீதா அவர்களில் ஒரு சிறு பெண். அவளைப் பற்றி எவரும் கேள்விப்பட்டதில்லை. அந்தக் கிழவர், பையன், ஆறு தவிர வேறு எவரும் அவளை அறிந்ததும் இல்லை.
(ஆங்கிலக் கதை)
அவன் சட்டையில் இவன் மண்டை...
பன்னாலால் படேல்
ஹோலி பண்டிகையின் அந்தி நேரம். கிராமப் பையன்கள் அநேகர், வேப்பமரத்தின் கீழ் கூடிநின்று, ஒருவர் மீது ஒருவர் மண்ணை வாரி வீசி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
அம்ரித்தும் ஐசபும் கைகோர்த்து வந்தனர். மற்றவர்களோடு சேர்ந்தனர். இருவரும் புதிய ஆடைகள் அணிந்திருந்தார்கள். நிறம், அளவு, துணிரகம்-அனைத்திலும் ஒரே மாதிரியாக விளங்கிய அவை அன்று தான் தைக்கப்பட்டிருந்தன. இரண்டு பேரும் ஒரே வகுப்பில், ஒரே பள்ளியில் படித்தார்கள். தெருமுனையில் எதிர் எதிராக இருந்த வீடுகளில் வசித்தார்கள். அவர்களின் பெற்றோர் விவசாயிகள். இருவருக்கும் ஒரே அளவு நிலம் இருந்தது. கஷ்ட காலங்களில் சமாளிக்க அவ்வப்போது இருவரும் வட்டிக்காரனிடம் பணம் கடன் வாங்கினார்கள். சுருக்கமாக, இரண்டு பையன்களும் எல்லா விதங்களிலும் சமம் தான். ஆனால், அம்ரித்துக்கு அப்பாவும் அம்மாவும் மூன்று சகோதரர்களும் இருந்தனர். ஐசபுக்கு அப்பா மட்டுமே இருந்தார்.
இரண்டு பையன்களும் வந்து, நடைபாதையில் உட்கார்நதார்கள். இருவரும் ஒரே மாதிரி ஆடை அணிந்திருப்பதைக் கண்டதும், ஏ அம்ரித் ஐசப், நீங்கள் இருவரும் உங்கள் அடையாளங்களை மாற்றிக் கொண்டீர்களா?" என்று இதர பையன்களில் ஒருவன் கேட்டான்.
இது இன்னொருவனுக்கு விஷம எண்ணம் ஒன்றைத் தந்தது. நீங்கள் இருவரும் ஏன் மல்யுத்தம் புரியக் கூடாது? நீங்கள் இரண்டு பேரும் பலத்திலும் ஒரே ஈடாக இருக்கிறீர்களா அல்லது ஒருவன் மற்றவனை விட வலிமை உடையவனா என்று பார்ப்போமே" என அவன் கூறினான்.
இது அருமையான எண்ணம் என முதல் பையன் கருதினான். "ஆமா, அம்ரித், ஐசப். உங்களில் யார் சிறந்தவர் என்று பார்க்கலாம்" என்றான்.
"வாங்க சும்மா வேடிக்கை தான்" என்று வேறொருவன் கத்தினான்.
ஐசப் அம்ரித்தைப் பார்த்தான். "வேண்டாம். என் அம்மா என்னை உதைப்பாள்" என்று அம்ரித் உறுதியாய்ச் சொன்னான்.
அவன் பயம் நியாயமானதே. அவன் வீட்டிலிருந்து புறப்படுகையில் அவன் அம்மா எச்சரித்து அனுப்பினாள். "புது ஆடைகள் வேண்டும் என்று அடம்பிடித்தாய் அவற்றைக் கிழித்தாலோ, அழுக்கு ஆக்கினாலோ உனக்குச் சரியானபடி உதை கொடுப்பேன்" என்றாள்.
அம்ரித் தன் பெற்றோரைப் பாடாய்ப்படுத்தினான் என்பது உண்மை தான். ஐசப் ஒரு புதுச்சட்டை வாங்குகிறான் எனக் கேள்விப்பட்டதும், ஐசப் சட்டை மாதிரியே தனக்கும் ஒன்று வேண்டும், தராவிட்டால் பள்ளிக்கூடம் போகமுடியாது என்று முரண்டு பிடித்தான். அவன் அம்மா எவ்வளவோ எடுத்துச் சொன்னாள். "மகனே, ஐசப் பண்ணையில் வேலை செய்ய வேண்டும். அவன் உடுப்புகள் கிழிந்துள்ளன. உனக்கு எல்லாம் புதுசு மாதிரி நன்றாக இருக்கின்றன" என்றாள்.
அம்ரித் தன் சட்டையிலிருந்த ஒரு கிழிசலை விரலை விட்டுப் பெரிதாக்கியபடி, "யார் அப்படிச் சொன்னது?" என்று கத்தினான்.
அம்மா வேறொரு தந்திரத்தைக் கையாண்டாள். "ஐசபுக்கு புதுச் சட்டை வாங்கித் தருவதற்கு முந்தி அவன் அப்பா அவனை நன்றாக உதைத்தார். உனக்கும் அறை கொடுக்கவா?" என்றாள்.
அம்ரித் பின்வாங்கவில்லை. "சரி. என்னை கட்டிப் போடு. அடிகொடு. ஆனால் ஐசப் சட்டை மாதிரி எனக்கும் ஒன்று வாங்கியாக வேண்டும்" என்று அவன் திடமாக அறிவித்தான்.
"சரி, போய் உன் அப்பாவிடம் கேள்" என அம்மா தட்டிக் கழித்தாள்.
அம்மா இல்லை என்று சொல்லிவிட்டால், அப்பாவும் சம்மதிக்க மாட்டார் என அம்ரித் அறிவான். ஆனால் அவன் விட்டுவிடக் கூடியவன் அல்ல. அவன் பள்ளி செல்ல மறுத்தான், சாப்பிட மறுத்தான், இரவில் வீட்டுக்கு வரவும் மறுத்தான். முடிவில், அம்மா மனம் மாறினாள். அவனுக்குப் புதிய ஆடைகள் வாங்கும்படி அப்பாவைக் கட்டாயப்படுத்தினாள். அம்ரித் ஒளிந்து கொண்டிருந்த ஐசப் வீட்டு மாட்டுத் தொழுவத்திலிருந்து அவனை அழைத்து வந்தாள்.
அழகாக ஆடை அணிந்து வீட்டிலிருந்து கிளம்பிய அம்ரித் தனது உடுப்புகளைப் பாழ்பண்ணக் கூடிய எதையும் செய்ய விரும்பவில்லை. முக்கியமாக, ஐசபுடன் சண்டையிட அவனுக்கு மனமில்லை.
அவ்வேளையில், கும்பலின் போக்கிரிப் பையன்களில் ஒருவன் அம்ரித்தின் கழுத்தைத் தன் கையால் வளைத்துக் கொண்டு,"வா, நாம் குஸ்தி போடலாம்" என்றான். அம்ரித்தைத் திறந்த வெளிக்கு இழுத்து வந்தான்.
அவன் பிடியிலிருந்து நழுவ அம்ரித் முயன்றான். "பார் காலியா, நான் குஸ்தியிட விரும்பவில்லை. என்னை விட்டுவிடு" என்றான்.
காலியா அவனை விட்டுவிட மறுத்தான். அம்ரித்தைப் பிடித்துத் தரையில் தள்ளினான். இதர பையன்கள் மகிழ்வோடு கூவினார்கள். அம்ரித் தோத்துப் போனான். காலியா வென்றான்! காலியாவுக்கு வெற்றி! ஜே! ஜே!"
ஐசப் ஆத்திரம் அடைந்தான். அவன் காலியாவின் கையைப் பற்றி, "வா, உன்னோடு நான் சண்டை போடுவேன்" என்றான்.
காலியா தயங்கினான். ஆனால் மற்றப் பையன்கள் அவனைத் தூண்டினார்கள். இரண்டு பேரும் கட்டிப்பிடித்துப் போராடினர். ஐசப் காலியாவின் காலை இடறி, அவனை மண்ணில் குப்புற வீழ்த்தினான். காலியா சத்தமிட்டு அழுதான்.
விளையாட்டாகத் தொடங்கியது வினையாக முடிந்தது என்பதைப் பையன்கள் உணர்ந்தார்கள். காலியாவின் தந்தை அடிக்க வருவார் என்று பயந்து, அவர்கள் நாலாபுறமும் சிதறி ஒடினார்கள்.
அம்ரித்தும் ஐசபும் அந்த இடத்தை விட்டு அகன்றனர். சில அடிதூரம் நடந்ததும், அம்ரித்தின் பார்வை ஐசபின் சட்டை மீது படிந்தது. அதன் பையுடன் வேறு இடத்திலும் நீளமாய் கிழிந்திருந்தது. அவர்கள் மேலே செல்லாமல் அங்கேயே நின்றனர். பயத்தால் அரண்டு போனார்கள். சட்டையின் கிழிசல்களை ஆராய்ந்தார்கள். ஐசயின் அப்பா வீட்டிலிருந்து, "ஐசப் எங்கே?" என்று கூச்சலிடுவது வேறு அவர்களுக்கு கேட்டது.
இருவர் நெஞ்சங்களும் பயத்தால் துடித்தன. தங்களுக்கு சரியானபடி கிடைக்கும் என அவர்கள் அறிவர். ஐசபின் அப்பா சட்டை கிழிந் திருப்பதைக் கண்டதுமே, அவன் தோலை உரித்துவிடுவார். வட்டிக் காரனிடம் அவர் கடன் வாங்கி, நிறைய நேரம் செலவுசெய்து நல்ல துணியாகத் தேர்ந்து, சட்டை தைத்திருந்தார்.
மறுபடியும் ஐசயின் தந்தை கத்தினார்: "யார் அழுவது? ஐசப் எங்கே?"
சட்டென அம்ரித்துக்கு ஒரு யோசனை தோன்றியது. அவன் ஐசபை ஒரு பக்கமாக இட்டுச் சென்றான். "என்னோடு வா. ஒரு விஷயம்" என்றான். இரண்டு வீடுகளுக்கும் இடையிலிருந்த சந்தில் நுழைந்ததும், அம்ரித் தனது சட்டையை கழற்றலானான். உம், நீ உன் சட்டையை கழற்று. என் சட்டையைப் போட்டுக் கொள்" என்று கூறினான்.
"உன் விஷயம் என்ன? நீ எதை அணிவாய்?" என்று ஐசப் கேட்டான்.
"நான் உன் சட்டையை அணிவேன் என்று பதிலளித்தான் அம்ரித். "சீக்கிரம். யாரும் நம்மைப் பார்ப்பதற்குள் அணிந்து கொள்."
ஐசப் தன் சட்டையைக் கழற்றத் தொடங்கினான். ஆனால் அம்ரித்தின் திட்டத்தைப் புரிந்து கொள்ள இயலவில்லை அவனால். "சட்டைகளை மாற்றிக்கொண்டால் அப்பா உன்னை அடிப்பாரே."
"நிச்சயமாக என்னை அடிப்பார். ஆனால் எனக்கு அம்மா இருக்கிறாள். அவள் என்னைப் பாதுகாப்பாள்" என்றான் அம்ரித்.
அம்ரித்தின் அப்பா அவனை அடிக்க முயல்கையில் அவன் அம்மா பின்னே பதுங்கிக் கொள்வதை ஐசப் அடிக்கடி கவனித்திருக்கிறான். அவன் அம்மாவிடம் ஒரிரு அறைகள் வாங்க நேரிடும். சந்தேகமில்லை. ஆனால் அம்மாவின் மென்மையான அடிக்கும், தன் அப்பாவின் முரட்டுக் கைவேகத்துக்கும் வித்தியாசம் உண்டு தான்.
ஐசப் தயங்கினான். அந்நேரத்தில் அருகே யாரோ இருமுவதை அவன் கேட்டான். இருவரும் வேகமாய் சட்டைகளை மாற்றிக் கொண்டு, சந்திலிருந்து வெளிப்பட்டு, எச்சரிக்கையோடு வீடு நோக்கி நடந்தார்கள்.
அம்ரித்தின் நெஞ்சு பயத்தால் பதைபதைத்தது. அவனுக்கு அதிர்ஷ்டம் தான். அன்று ஹோலிப் பண்டிகை. முரட்டு விளையாட்டு நடக்கத் தானே செய்யும் அவன் சட்டை கிழிந்திருப்பதை அம்மா பார்த்து முகத்தைச் சுளித்தாள். ஆனால் அவனை மன்னித்து விட்டாள். ஊசியும் நூலும் எடுத்து, கிழிசலைத் தைத்தாள்.
பையன்களின் பயம் போய்விட்டது. அவர்கள் திரும்பவும் கை கோர்த்தவாறு, ஊருக்கு வெளியே நிகழும் பண்டிகை சொக்கப் பனையை வேடிக்கை பார்க்கப் போனார்கள்:
சட்டை மாற்றத்தை கண்டு கொண்ட ஒரு பையன், "ஒகோ, நீங்கள் பரஸ்பரம் மாற்றிக் கொண்டீர்களா?" என்று கேலி பண்ணி அவர்கள் மகிழ்ச்சியைக் கெடுத்தான்.
தாங்கள் சட்டைகளை மாற்றிக் கொண்டதை அந்தப் பையன் பார்த்திருக்கிறான் என அஞ்சி, அம்ரித்தும் ஐசயும் நழுவி ஒட முயன்றார்கள். இதற்குள் இதர பையன்களும் அறிந்து விட்டனர். நடந்ததைப் புரிந்துகொண்டு "சட்டை அங்கே, மண்டை இங்கே!" என்று கத்தினர்.
இருவரும் தப்பிச் செல்ல முயன்றனர். ஆனால் அந்தக் கும்பல் அவர்கள் பின்னாலேயே "சட்டை அங்கே மண்டை இங்கே, மண்டை அங்கே, சட்டை இங்கே" என்று கூவியது. விஷயம் அப்பா காதை எட்டும் என அஞ்சிய இருவரும் நண்பர்களும் அவரவர் வீட்டுக்கு ஒடினார்கள்.
ஐசயின் அப்பா, வீட்டு முற்றத்தில், புகை பிடித்தபடி ஒரு கட்டிலில் இருந்தார். அவர் இருவரையும் கூப்பிட்டார். "நீங்கள் ஏன் உங்கள் நண்பர்களிடமிருந்து ஒடி வருகிறீர்கள் வாங்க, என் பக்கத்தில் உட்காருங்கள்" என்று உத்தரவிட்டார்.
அவரது மென்மையான குரல் பையன்களை குழப்பியது. "நாம் பயந்தது சரிதான். அவர் உண்மையை அறிந்திருக்கிறார். பிரியமாக இருப்பது போல் பாசாங்கு பண்ணுகிறார்" என்று நினைத்தார்கள்.
ஐசயின் தந்தை, ஒரு பட்டாணியர், பத்து வயது அம்ரித்தை தன் கைகளால் அள்ளி அணைத்தார். "வகாலி அண்ணி, இன்று முதல் உங்கள் மகன் அம்ரித் என் பையனும் தான்" என்று உரக்கச் சொன்னார்.
வகாலி அண்ணி தன் வீட்டிலிருந்து வெளியே வந்தாள். சிரித்தாள். "ஹசன் அண்ணா, உங்களால் ஒரு பையனையே வளர்க்க முடியவில்லை; இரண்டு பேரை எப்படிச் சமாளிப்பீர்கள்?" என்றாள்.
"வகாலி அண்ணி, இன்று முதல் நான் இருபத்தோரு பையன்களை வளர்க்கத் தயார். அவர்கள் அம்ரித் மாதிரி இருந்தால்" என்றார் ஹசன். அவரது குரல் உணர்ச்சியால் கம்மியது.
அவர் தொண்டையைச் செருமி விட்டுப் பேசினார். இரண்டு பையன்களும் சந்தினுள் போனதை அவர் பார்த்தாராம். "பையன்கள் என்ன செய்கிறார்கள் என்று கவனிக்க எண்ணினேன்" என்றார்.
அவர் சொல்வதைக் கேட்க அண்டை அயல் பெண்கள் அனைவரும் கூடிவிட்டார்கள்.
அவர் சொல்வதற்கு நெடுநேரம் பிடிக்கவில்லை. பையன்கள் சட்டைகளை மாற்றிக் கொண்டதைச் சொன்னார். ஐசப், 'உன்னை உன் அப்பா அடித்தால் என்ன பண்ணுவாய்?' என்று அம்ரித்தைக் கேட்டான். உங்கள் அம்ரித் என்ன பதில் சொன்னான் தெரியுமா? 'எனக்காவது அம்மா இருக்கிறாளே, காப்பாற்றுவாள்' என்றான்."
கண்களில் நீர் பெருக, அந்த பட்டாணியர் கூறினார்: "எவ்வளவு உண்மை அம்ரித்தின் பதில் என்னை மாற்றிவிட்டது. எது உண்மையான மதிப்பு உடையது என்பதை அவன் எனக்குக் கற்றுத்தந்தான்."
அம்ரித்தும் ஐசபும் கொண்டிருந்த பாசத்தைக் கேள்வியுற்ற பெண்கள் உணர்ச்சி வசப்பட்டார்கள்.
பண்டிகை சொக்கப்பனை பார்த்து விட்டுத் திரும்பிய இதர பையன்கள், அம்ரித்தையும் ஐசபையும் சூழ்ந்தனர். "இவன் சட்டையில் அவன் மண்டை, அவன் சட்டையில் இவன் மண்டை" என்று கூச்சலிட்டார்கள்.
இப்போது அம்ரித்தும் ஐசபும் குழப்பம் அடையவில்லை. மாறாக, அந்தக் கூச்சல்களால் மகிழ்ச்சி கொண்டார்கள்.
அவர்கள் சட்டை மாற்றிக் கொண்ட கதை ஊர் முழுதும் பரவியது. அது ஊர் தலைமைக்காரர் அந்தப் பையன்கள் ஊருக்கே ஒரு உதாரணமாக விளங்குவதாய் அறிவித்தார். அம்ரித்துக்கும் ஐசபுக்கும் பெருமை பிடிபடவில்லை!
(குஜராத்திக் கதை)
கவண் வைத்திருந்த சிறுவன்
பீஷம் ஸாஹனி
பள்ளியில் எங்கள் வகுப்பில் இருந்த பையன்கள் ஒரு விசித்திரக் கலவை. ஹர்பன்ஸ் லால் என்றொரு பையன். கடினமான கேள்வி கேட்கப்பட்டால், அவன் தனது மைப்புட்டியிலிருந்து சிறிது மையை உறிஞ்சுவான். அது தன் அறிவை கூர்மைப்படுத்தும் என அவன் நம்பினான். ஆசிரியர் அவன் கன்னத்தில் அறைந்தால், "கொலை! உதவி!" என கூச்சலிடுவான். அதைக் கேட்டுப் பக்கத்து வகுப்புகளிலிருந்து ஆசிரியர்களும் பையன்களும் என்ன நடந்தது என்று காண ஒடிவருவார்கள். இது ஆசிரியருக்கு குழப்பம் தரும் ஆசிரியர் அவனைப் பிரம்பால் அடிக்க முயன்றால், அவன் அவரைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கெஞ்சுவான்: "என்னை மன்னியுங்கள், மாட்சிமை மிக்கவரே! நீங்கள் மகா அக்பர் போன்றவர். நீங்கள் தான் அசோக சக்ரவர்த்தி. நீங்கள் தான் என் அப்பா, என் தாத்தா, கொள்ளுத் தாத்தா."
இது பையன்களைச் சிரிக்க வைக்கும். ஆசிரியரை முகம் மாறச் செய்யும். இந்த ஹர்பன்ஸ் லால் தவளைகளைப் பிடிப்பான். தவளை கொழுப்பை உங்கள் கைகளில் தேய்த்துக் கொண்டால், ஆசிரியரின் பிரம்படி உறைக்கவே உறைக்காது" என்று எங்களிடம் சொல்வான்.
ஆனால், போதி ராஜ் தான் எங்கள் வகுப்பில் மிக விசித்திரமானவன். நாங்கள் எல்லோரும் அவனுக்குப் பயப்பட்டோம். அவன் ஒருவரின் கையைக் கிள்ளினால், அந்தக் கை, பாம்பால் கடிபட்டது போல் வீங்கி விடும். அவன் ஈவு இரக்கமில்லாதவன். ஒரு குளவியை வெறும் விரல்களால் பிடித்துவிடுவான். அதன் கொடுக்கை நீக்கி, குளவியை ஒரு நூலில் கட்டி, பட்டம் போல் பறக்க விடுவான். பூ மீது இருக்கிற வண்ணத்துப் பூச்சியைப் பிடித்து, தன் விரல்களால் நசுக்கிக் கொல்வான். அல்லது, அதன் உடம்பில் குண்டுசியைச் செருகி, அதை தன் நோட்டுப்புத்தகத்தில் வைப்பான்.
ஒரு தேள் போதி ராஜைக் கொட்டினால், அந்தத் தேள்தான் செத்து விழும் என்று சொல்வார்கள். போதி ராஜின் இரத்தத்தில் விஷம் நிறைந்திருந்தது; பாம்பு கடித்தால் கூட அவனைப் பாதிக்காது என்று பலரும் நம்பினார்கள். அவன் சதா கையில் கவண் வைத்திருந்தான். குறி தவறாது கல்லெறிவான். பறவைகள் தான் அவனுக்குப் பிடித்தமான குறிகள். அவன் ஒரு மரத்தின் கீழ் நிற்பான். குறிபார்ப்பான். மறுகணம் பறவையின் அலறல் மேலெழும் சிறகுச் சிதறல்கள் கீழே மிதந்து வரும். அவன் மரத்தின் மேலே ஏறி, முட்டைகளை எடுப்பான்; கூட்டை அடியோடு நாசம் செய்வான்.
அவன் பழிவாங்கும் குணமுள்ளவன். பிறரைக் காயப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைந்தான். எல்லாப் பையன்களும் அவனுக்கு அஞ்சினர். அவன் அம்மா கூட அவனை ராட்சசன் என அழைத்தாள். அவன் நிஜார்ப் பைகள் விசித்திரப் பொருள்களால்-உயிருள்ள கிளி, பலவித முட்டைகள் முள்ளெலி போன்றவற்றால்-எப்போதும் உப்பியிருக்கும்.
போதி ராஜ் யாருடனாவது சண்டையிட்டால், அவன் மாடு மாதிரி தலைநீட்டிப் பாய்ந்து மோதுவான்; அல்லது தாறுமாறாக உதைப்பான், கடிப்பான். பள்ளி முடிந்ததும், நாங்கள் வீடு திரும்புவோம். ஆனால் போதிராஜ் சுற்றித் திரியப் போவான்.
அவனிடம் விநோதக் கதைகளின் ஸ்டாக் நிறைய இருந்தன. ஒரு நாள் அவன் சொன்னான். "எங்கள் வீட்டில் ஒரு உடும்பு வசிக்கிறது. உடும்பு என்றால் என்ன என்று தெரியுமா?"
"தெரியாது. உடும்பு என்பது என்ன?” அது ஒரு வகை ஊரும் பிராணி. ஒரு அடி நீளம் இருக்கும். அதுக்கு நிறைய கால்களும் கூரிய நகங்களும் உண்டு"
நாங்கள் நடுங்கினோம்.
"எங்கள் வீட்டில் மாடிப்படியின் கீழே ஒரு உடும்பு வசிக்கிறது-என்று அவன் தொடர்ந்தான். அது ஒரு முறை ஒன்றைப் பிடித்துக் கொண்டால், என்ன வந்தாலும் சரி, தன் பிடியை தளரவிடாது.
நாங்கள் திரும்பவும் நடுங்கினோம்.
"திருடர்கள் உடும்புகள் வைத்திருப்பார்கள். உயரமான சுவர்களில் ஏற அவற்றை உபயோகிப்பார்கள். அவர்கள் உடும்பின் பின்கால்களில் ஒரு கயிற்றைக் கட்டி, அதை உயரே விட்டெறிவார்கள். உடும்பு சுவரைத் தொட்டதும், அதை இறுகப் பற்றிக் கொள்ளும். பத்துப் பேர் சேர்ந்து இழுத்தால் கூட அந்தப் பிடியை விலக்க முடியாது. அவ்வளவு உறுதி. பிறகு திருடர்கள் கயிற்றின் உதவியால் சுவர் மீது ஏறுவார்கள்."
"உடும்பு எப்போது பிடியைத் தளர்த்தும்?"
"திருடர்கள் மேலே ஏறியானதும், அதற்குச் சிறிது பால் கொடுப்பார்கள். உடனே அது தன் பிடியை விட்டுவிடும்." இப்படிப்பட்ட கதைகளை போதிராஜ் சொல்வான்
என் தந்தைக்குப் பதவி உயர்வு கிட்டியது. நாங்கள் ஒரு பெரிய பங்களாவில் குடிபுகுந்தோம். அது பழங்காலத்து பங்களா. நகரின் வெளியே இருந்தது. செங்கல் தரை, உயரமான சுவர்கள், சரிவான கூரை எல்லாம் இருந்தன. ஒரு தோட்டம். அங்கு மரங்களும் செடிகளும் நிறைந்திருந்தன. பங்களா வசதியானது தான். ஆனால் பெரிதாய், காலியாய்த் தோன்றியது. அது நகரிலிருந்து மிகத் தள்ளி இருந்ததால் என் நண்பர்கள் அபூர்வமாகவே என்னைக் காணவந்தார்கள்.
போதி ராஜ் மட்டும் விதி விலக்கு. அவனுக்கு அது நல்ல வேட்டைக் களமாகத் தோன்றியது. மரங்களில் அநேகம் கூடுகள் இருந்தன. குரங்குகள் சஞ்சரித்தன. புதர்களின் அடியில் ஒரு ஜோடி கீரிப்பிள்ளைகள் வசித்தன. வீட்டின் பின்னே ஒரு பெரிய அறை. அதிகப்படியான சாமான்களை அம்மா அங்கே போட்டு வைத்திருந்தாள். இந்த அறை புறாக்களின் புகலிடமாக அமைந்திருந்தது. அவற்றின் கூவலை நாள் முழுதும் கேட் முடியும். வென்ட்டிலேட்டரின் உடைந்த கண்ணாடி அருகில் ஒரு மைனாக் கூடு இருந்தது. அறையின் தரை நெடுக சிறகுகள், பறவை எச்சங்கள் உடைந்த முட்டைகள், மற்றும் கூடுகளிலிருந்து விழுந்த வைக்கோல் துணுக்குகள் சிதறிக் கிடந்தன.
ஒரு முறை போதி ராஜ் ஒரு முள் எலி கொண்டு வந்தான். அதன் கரிய வாயும் கூரிய முட்களும் என்னைக் கலவரப்படுத்தின. போதி ராஜூடன் நான் நட்புக் கொள்வதை என் அம்மா அங்கீகரிக்கவில்லை. ஆயினும், நான் தனித்து இருப்பதையும், எனக்குத் துணை தேவை என்பதையும் அவள் உணர்ந்ததால் எதுவும் சொல்லவில்லை. என் அம்மா அவனைப் பிசாசு என்று குறிப்பிட்டாள். பறவைகளைத் துன்புறுத்தக் கூடாது என்று அவனிடம் அடிக்கடி சொன்னாள்.
ஒரு நாள் என் அம்மா என்னிடம் கூறினாள்: "உன் நண்பன் கூடுகளை அழிப்பதில் ஆசை உடையவன் என்றால், அவனை நம் சாமான் அறையைச் சுத்தப்படுத்தச் சொல். பறவைகள் அதை ரொம்ப அசிங்கப்படுத்திவிட்டன."
நான் மறுப்புத் தெரிவித்தேன். "கூடுகளை நாசப்படுத்துவது கொடுமை என்று சொன்னாயே."
"அவன் பறவைகளைக் கொல்ல வேண்டும் என்று நான் சொல்ல வில்லை. அவற்றைக் காயப்படுத்தாமலே அவன் கூடுகளை அகற்ற முடியும்"
மறுநாள் போதிராஜ் வந்ததும் நான் அவனை சாமான் அறைக்கு இட்டுச் சென்றேன். அது இருண்டிருந்தது. ஏதோ மிருகத்தின் குகைக்குள் நுழைந்தது போல் நாற்றமடித்தது.
உண்மையில் எனக்குக் கொஞ்சம் பயம்தான். போதிராஜ் அவன் இயல்புப்படி நடந்து, கூடுகளை அழித்தால், பறவைகளின் சிறகுகளைப் பிய்த்தால், அவற்றின் முட்டைகளை உடைத்தால், என்ன பண்ணமுடியும்? எங்கள் நட்பை ஆதரிக்காத அம்மா, சாமான் அறையைச் சுத்தம் செய்ய போதி ராஜை அழைத்துப் போகும்படி என்னை ஏன் ஏவினாள்? இது எனக்குப் புரியவில்லை.
போதிராஜ் தன் கவணைக் கொண்டு வந்திருந்தான். கூரையின் கீழிருந்த கூடுகளின் நிலைகளை அவன் கவனமாக ஆராய்ந்தான். கூரையின் இரண்டு பக்கங்களும் கீழ்நோக்கிச் சாய்ந்திருந்தன; அவற்றின் குறுக்கே நீண்ட உத்திரம் பாதுகாப்பாக இருந்தது. அதன் ஒரு முனையில், காற்றோடி அருகே, ஒரு மைனாக்கூடு இருந்தது. இலவம் பஞ்சுத் துணுக்குகளும் கந்தையும் அதிலிருந்து தொங்குவதை நான் கண்டேன். புறாக்கள் சில ஒன்றுக் கொன்று கூவிக் கொண்டு உத்திரத்தில் உல்லாச நடை பழகின.
போதி ராஜ் கவனால் குறிபார்த்தபடி, "மைனாக் குஞ்சுகள் கூட்டில் இருக்கின்றன" என்றான்.
சின்னஞ்சிறு மஞ்சள் அலகுகள் இரண்டு எட்டிப் பார்ப்பதை நான் கவனித்தேன்.
"பார்! இது கங்கா மைனா, இவ்வட்டாரத்தில் இது சாதாரணமாகக் காணப்படுவதில்லை. பெரிய மைனாக்கள் தங்கள் இனத்திலிருந்து பிரிந்து இங்கே வந்திருக்க வேண்டும்" என்று போதி ராஜ் விளக்கினான்.
"பெரிய மைனாக்கள் எங்கே?" என்று கேட்டேன்.
"இரை தேடிப் போயிருக்கும். சீக்கிரம் வந்துவிடும்." அவன் தன் கவணை உயர்த்தினான்.
நான் அவனைத் தடுக்க விரும்பினேன். ஆனால் நான் என் வாயைத் திறக்கும் முன் ஒரு இரைச்சல் எழுந்தது. பிறகு, சிறு கல் கூரையின் தகரத்தைத் தாக்கியதால் எழுந்த உரத்த ஒசை கேட்டது.
சின்ன அலகுகள் மறைந்தன. கூவலும் கிளுகிளுப்பும் ஒடுங்கின. எல்லாப் பறவைகளும் பயந்து வாய் மூடிவிட்டதாகத் தோன்றியது.
போதி ராஜ் மற்றுமொரு கல்லைப்பறக்க விட்டான். இம் முறை அது உத்திரத்தில்பட்டது. போதி ராஜ் எப்பவும் குறி வைப்பதில் பெருமைப் படுபவன். இரு முறை குறி தவறிவிட்டான். அவன் தன் மீதே கோபம் கொண்டான். குஞ்சுகள் கூட்டின் விளிம்பில் எட்டிப் பார்க்கவும், அவன் மூன்றாவது முறை முயன்றான். இம்முறை கல் கூட்டின் ஒரு பக்கத்தைத் தாக்கியது. சிறிது வைக்கோலும் பஞ்சும் விழுந்தன-ஆனால் கூடு அதே இடத்தில் இருந்தது.
போதி ராஜ் மீண்டும் தன் கவணை உயர்த்தினான். திடீரென்று ஒரு பெரிய நிழல் அறையின் குறுக்கே படிந்தது. காற்றோடியின் வெளிச்சத்தை அது மறைத்தது. திடுக்கிட்டு நாங்கள் மேலே பார்த்தோம். எங்களை அச்சுறுத்தும் விதத்தில் நோக்கியபடி ஒரு பருந்து தன் இறக்கைகளை விரித்து நின்றது.
"இது பருந்துக் கூடாகத் தான் இருக்கும்" என்றேன்.
"இல்லை. பருந்து எப்படி இங்கே கூடு கட்டும்? பருந்து எப்பவும் மரத்தில் தான் கூடு கட்டும். இது மைனாக் கூடுதான்."
குஞ்சுகள் தங்கள் இறக்கைகளை அடித்து, பலமாகக் கத்தத் தொடங்கின. நாங்கள் மூச்சடக்கி நின்றோம். பருந்து என்ன செய்யும்?
பருந்து காற்றோடியிலிருந்து நகர்ந்தது. உத்திரத்தில் தங்கியது. அது தன் சிறகுகளை மடக்கிக் கொண்டது. மெலிந்த கழுத்தை அசைத்தது. இப்படியும் அப்படியும் உற்று நோக்கியது.
பறவைகளின் பீதியான கூச்சல் காற்றை நிறைத்தது.
"இந்தப் பருந்து தினசரி இங்கே வருகிறது" என்று போதி ராஜ் சொன்னான்.
பிய்ந்த சிறகுகள், வைக்கோல், பறவைகளின் இறைச்சித் துண்டுக்ள் எல்லாம் ஏன் தரையில் சிதறியிருந்தன என்பதை நான் புரிந்து கொண்டேன். பருந்து அடிக்கடி கூடுகளை வேட்டையாடியிருக்க வேண்டும்.
போதி ராஜ் பருந்தின் மீதிருந்து தன் பார்வையை அகற்றவில்லை. அது மெதுவாகக் கூட்டை நோக்கி நகர்ந்து சென்றது. பறவைக் கூச்சல்கள் உச்சிநிலை எய்தின.
நான் பரபரத்தேன். மைனாக் குஞ்சுகளைப் பருந்து அல்லது போதி ராஜ் கொல்வதில் என்ன வித்தியாசம் இருக்கப் போகிறது? பருந்து வந்திராவிட்டால் போதி ராஜ் நிச்சயம் கூட்டை ஒழித்துக் கட்டியிருப்பான்.
போதி ராஜ் கவணை உயர்த்தி, பருந்தைக் குறி வைத்தான்.
"பருந்தை அடிக்காதே. அது உன்னைத் தாக்கும்" என நான் கத்தினேன். ஆனால் அவன் சட்டை செய்யவில்லை. கல் பருந்து மீது படவில்லை, கூரையைத் தாக்கியது. பருந்து சிறகுகளை அகல விரித்து, கீழே உற்று நோக்கியது.
நான் பயந்து, "இங்கிருந்து போய்விடுவோம்" என்றேன்.
‘பருந்து குஞ்சுகளைத் தின்றுவிடுமே.’ இப்படி அவன் சொன்னது விசித்திரமாகத் தொனித்தது.
போதி ராஜ் திரும்பவும் குறி வைத்தான். பருந்து உத்திரத்தை விட்டு நகர்ந்தது. தன் சிறகுகளைப் பரப்பி, அரை வட்டமாய்ப் பறந்து, குறுக்குச் சட்டத்தில் அமர்ந்தது. குஞ்சுகள் தொடர்ந்து அலறின.
போதி ராஜ் கவணையும், தன் பையிலிருந்த கற்கள் சிலவற்றையும் என்னிடம் தந்தான்.
பருந்தைக் குறிவை அடித்துக் கொண்டே இரு அதை உட்கார விடாதே" என்று கூறினான். பிறகு அவன் ஒடி சுவர் ஒரத்தில் இருந்த ஒரு மேஜையை அறையின் மத்திக்கு இழுத்தான்.
கவணை எப்படி உபயோகிப்பது என நான் அறியேன். ஒரு தடவை முயன்றேன். ஆனால் பருந்து அந்த இடத்தைவிட்டு அகன்று, வேறு இடம் பறந்தது. போதி ராஜ் மேஜையை மைனா கூட்டுக்கு நேர்கீழே கொண்டு வந்தான். மேஜை மேல் ஏறி, மெதுவாகக் கூட்டை எடுத்தான். நிதானமாய் கீழே இறங்கினான்.
"நாம் இங்கிருந்து போய் விடுவோம்" என்று கூறி அவன் கதவை நோக்கி ஒடினான். நானும் தொடர்ந்தேன்.
நாங்கள் வண்டி அறைக்குள் சென்றோம். அதற்கு ஒரே ஒரு கதவு தான். பின்பக்கச் சுவரில் ஒரு சிறு ஜன்னல் இருந்தது. அறையின் -அகலத்துக்கு ஒரு உத்திரம் குறுக்கே காணப்பட்டது.
பருந்து இங்கே வரமுடியாது" என்று சொல்லி, அவன் ஒரு பெட்டி மேல் ஏறி, கூட்டை உத்திரத்தில் வைத்தான்.
மைனாக் குஞ்சுகள் அமைதியுற்றிருந்தன. பெட்டி மேல் நின்று போதி ராஜ் முதல்முறையாக கூட்டுக்குள் எட்டிப் பார்த்தான். அவன், வழக்கமாகச் செய்வது போல், இரண்டு குஞ்சுகளையும் எடுத்துத் தன் பைக்குள் போட்டுக் கொள்வான் என நான் எண்ணினேன். ஆனால் அவன் நெடுநேரம் அவற்றைப் பார்த்து நின்ற பிறகு "கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா. குஞ்சுகளுக்கு தாகம். நாம் நீரைச் சொட்டுச் சொட்டாக அவற்றின் வாய்க்குள் விடுவோம்" என்றான்.
நான் ஒரு கிளாஸ் தண்ணிர் கொண்டு வந்தேன். இரு குஞ்சுகளும், அலகுகளைத் திறந்து, பெருமூச்சு விட்டன. போதி ராஜ் அவற்றுக்கு நீர்த்துளிகளை ஊட்டினான். அவற்றைத் தொடக்கூடாது என்று அவன் எனக்குச் சொன்னான். அவனும் தொடவில்லை.
"இவை இங்கே இருப்பது பெரிய மைனாக்களுக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்டேன்.
"தேடிக் கண்டுபிடிக்கும்".
அந்த அறையில் நாங்கள் நீண்ட நேரம் இருந்தோம். சாமான் அறையின் காற்றோடியை, பருந்து மீண்டும் அங்கே உள்ளே வர இயலாதபடி அடைப்பதற்கான யோசனைகளை போதி ராஜ் சொன்னான். அன்று மாலை அவன் வேறு எதுவும் பேசவில்லை.
மறுநாள் போதி ராஜ் வந்தபோது அவன் கவனோ கற்களோ வைத்திருக்கவில்லை. ஒரு பை நிறைய விதைகள் கொண்டு வந்தான். நாங்கள் மைனா குஞ்சுகளுக்குத் தீனி கொடுத்தோம். அவற்றின் சேட்டைகளை மணிக்கணக்கில் வேடிக்கை பார்த்தோம்.
(ஹிந்திக் கதை)
ராகுலன்
திரிவேணி
ராகுலன் முதலில் எங்கள் வீட்டுக்கு வந்த போது சிறு குட்டியாகத் தான் இருந்தது. என் பாட்டி சுத்தம் பற்றி அலட்டிக் கொள்கிறவள்; அழுக்குப் படிவது பற்றி தீவிரக் கருத்துகள் உடையவள். நாய் வருகிறது எனத் தெரிந்ததுமே அவள் குழம்பித் தவித்தாள். பத்திரிகை படித்துக் கொண்டிருந்த என் அப்பாவிடம் போய், "கவனி, குழந்தே" என்றாள். ராகுலனைப் பற்றி பாட்டி நீண்ட உபதேசம் புரிவாள் என அப்பா அறிவார். எனவே அவர் பத்திரிகையை மடக்கி விட்டு அவள் சொற்பொழிவைக் கேட்கத் தயாரானார். நான் ஒரு கொய்யாப்பழத்தைக் கடித்தபடி அவர்கள் அருகில் நின்றேன்.
"இந்த வீட்டில் என்ன நடக்கிறது" என்று அவள் கேட்டாள். "பிராமணர்கள் எப்படித் தங்கள் வீட்டில் நாய் வளர்க்கலாம்? அது அசிங்கமான பிராணி. நாம் நமது சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் அனுஷ்டிப்பதற்கு ரொம்ப சுத்தமாக இருக்கவேண்டும்."
"நாய் வெகு புத்திசாலியான பிராணி. நாம் அதுக்குக் கற்றுக் கொடுத்தால் அது விரைவில் கற்றுக் கொள்ளும், எல்லாம் நாம் அதை எப்படிப் பழக்குகிறோம் என்பதைப் பொறுத்திருக்கிறது."
"மண்ணாங்கட்டி மோசமான ஒரு நாய்க்குட்டியை நீ எப்படிப் பழக்குவாய்? எந்த நேரத்தில் அது எப்படி நடந்துகொள்ளும் என்பதை நீ எவ்வாறு அறியமுடியும் அரிசி அல்லது காய்கறி வேகும் வாசனையை உணர்ந்து அது அடுப்பங்கரைக்குள் ஒடினால் என்ன செய்வது? அடுக்களையைப் புனிதப்படுத்த நாம் எவ்வளவு செலவும் சிரமமும் மேற்கொள்ள நேரிடும்?"
"அம்மா, நாம் ஜாக்கிரதையாக இருந்து, அது அடுப்பங்கரைக்குள் போகாதபடி பார்த்துக் கொள்ளலாம். ஒரிரு தடவை அதுக்கு நல்ல அடி கொடு. எங்கே போகலாம், எங்கே போகக்கூடாது என்பதை அது தெரிந்து கொள்ளும்."
"இருக்கலாம். சாப்பிட்டானதும் எச்சில் இலைகளை விட்டெறியப் போகிற போது அது என் மேலே பாய்ந்தால் என்ன பண்ண? நான் புனிதம் அடைய கங்கை நதியில் குளிக்கப் போக வேண்டும்."
"அது சின்னக் குட்டியாக இருக்கிற போதே அதுக்குப் பயிற்சி அளித்தால் நிச்சயம் அது கற்றுக் கொள்ளும். அது உன் வழிக்கு வராதபடி நான் கவனித்துக் கொள்கிறேன்."
பாட்டி மிக அதிருப்தி கொண்டாள். நீ முடிவு பண்ணி விட்டாய் என்று புரிகிறது என்றாள்.
"அம்மா, நான் உன்னைப் பயமுறுத்த விரும்பவில்லை. ஆனால் எங்கும் திருட்டு அதிகரித்து வருகிறது. ஒரு நாய் இருப்பது பத்து காவல் காரனுக்குச் சமம். நாய், தின்னும் சோற்றுக்கு விசுவாசத்தோடு இருக்கும்."
"உன் இஷ்டம் போல் செய்," என்று கூறியபடி பாட்டி அகன்றாள். அப்பா என்னை நோக்கி, "நீ என்ன சொல்கிறாய், லீலு?" என்று கேட்டார்.
"வீட்டில் ஒரு நாய் இருப்பது நல்லது தான். நாய் வளர்க்க வேண்டும் என்று எனக்கு எப்பவும் ஆசை” என்றேன்.
ஒரு நாள் சென்னா நல்ல சாதி நாய் ஒன்று கொண்டு வந்தான். அதை அவன் தன் மார்போடு அணைத்திருந்தான். அவன் என்னைக் கூப்பிட்டான்.
"நான் கொண்டு வந்திருப்பதைப் பார்! இது அழகாக இல்லை? பாவம், அது பயந்து எங்களிடமிருந்து விலகியது. அது ரொம்பவும் கறுப்பு. இருட்டில் அதைக் கண்டு கொள்ள முடியாது, அப்படிக் கறுப்பு. அதன் உடலில் ஒரு வெள்ளை மயிர் கூடக் கிடையாது. கறுப்பாய் பட்டுப் போல் மினுமினுத்தது அது. அதன் சிறு உடலுக்கு மிகப் பெரிய காதுகள். ஒளி நிறைந்த பச்சைநிறக் கண்களுக்கு இரு புறமும் அவை தொங்கின. அதனிடம் எனக்குப் பிரியம் ஏற்பட்டது.
சென்னா, இது ரொம்ப அழகு இதன் முகம் மின்மினி மாதிரிப் பளபளக்கிறது பார். நான் இதை வைத்துக் கொள்கிறேன். வாடி கண்ணு!" என்று, நான் என் கைகளை நீட்டினேன்.
"இது டீ இல்லை, டா."
"ஓ! இவனுக்கு என்ன வயது?"
"இருபதே நாட்கள் தான். தாயிடமிருந்து எடுத்து வந்த போது இது ஊளையிட்டது. இன்னும் ஒரு மாதத்துக்கு நீ இதுக்கு பால் மட்டுமே ஊட்ட வேண்டும். இதன் உடல் எப்படி இருக்கிறது?"
"அமாவாசை இரவின் இருட்டுத் தான்" என்று நான் குட்டியை என் கைகளில் எடுத்தேன். என் அம்மாவை அழைத்தேன்.
"ஏன் இந்தக் கூப்பாடு?" என்று கேட்டவாறு அம்மா அடுப்பங்கரையிலிருந்து வந்தாள். பாட்டியும் வந்தாள். என் கையில் நாய்க் குட்டியைக் கண்டதுமே பாட்டி பின்னுக்கு நகர்ந்தாள். கத்தினாள்: "சீ! இந்தப் பெண்ணைப் பாரேன். நாய்க்குட்டியை சொந்தப் பிள்ளை மாதிரி தூக்கி வைத்திருக்கிறது: கல்யாணம் ஆகிற வயது ஆச்சு, இன்னும் இது வளர வில்லையே!”
நான் பாட்டியைச் சீண்ட விரும்பினேன். குட்டியை முத்தமிட்டேன்.
"அட கடவுளே! பாவப்பட்ட இந்தக் கண்களால் இன்னும் என்னென்ன பார்க்க வேண்டுமோ!" எனப் புலம்பி, பாட்டி திரும்பிச் சென்றாள்.
அம்மாவுக்கு ஒரே வியப்பு. குட்டியைப் பார்த்து, "என்ன அழகு!" என்றாள். "இதுக்கு என்ன பெயர் வைக்கப் பொகிறாய்?"அச்சந்தர்ப்பத்தில் நான் யசோதரா என்றொரு நாடகம் படித்துக் கொண்டிருந்தேன். என் உள்ளத்தில் யசோதரையும் ராகுலனும் நிறைந்து நின்றார்கள். எனவே என் மனசில் அலைமோதிய ராகுலன் என்ற பெயரை உச்சரித்தேன்.
அம்மா ஒரு கணம் யோசித்தாள். "சரி. அது நல்ல பெயர் தான்" என ஆமோதித்தாள்.
அன்றிறவு ராகுலன் சரியாகத் தூங்கவில்லை. அவனுக்குப் பிரிவின் ஏக்கம்.
தனது தாய் உடலின் கதகதப்பையும் அன்பையும் இழந்து விட்டானே. நான் ஒரு மூலையில், அவனுக்காக இரு கோணிப்பைகளாலான படுக்கை தயாரித்திருந்தேன். ஆயினும், ராகுலன் இரவு முழுவதும் கத்திக் கொண்டே இருந்தான். அவனைச் சீராட்ட நான் பலமுறை எழுந்தேன். என் கைகளில் எடுத்து வைத்திருந்த வரை அவன் அமைதியாக இருப்பான். ஆனால் விளக்கை அணைக்க வேண்டியது தான் தாமதம், உடனே சிணுங்கத் தொடங்குவான். அன்றிரவு வீட்டில் யாரும் தூங்கவே இல்லை. பாட்டிக்கு மகா கோபம். "சனியன் பிடித்தது. என்னைத் தூங்க விட மாட்டேன் என்கிறதே! இந்த வீட்டில் நான் எப்படி வசிப்பது என் கடைசி நாட்களை இது இப்படிச் சீரழிக்கவா?"
பாட்டியின் முணுமுணுப்புகளை நான் கேட்டவாறிருந்தேன். பிறகு "பாட்டி, இருக்கட்டும் இந்தக் குட்டிக்கு தாயின் நினைப்பு. உனக்குக் கல்யாணம் ஆனபோது பதினோரு வயது என்று நீ சொல்லவில்லையா? உன் புகுந்த வீட்டுக்கு நீபோன அன்று இரவு முழுவதும் உன்னால் தூங்க முடியவில்லை, அழுதுகொண்டே இருந்தாய் என்றாயே ராகுலனும் தன் அம்மாவை நினைத்து அழுகிறான்" என்றேன்.
பாட்டியின் எரிச்சலில் பிரியமும் கலந்தது. "நீ கெட்டிக்காரி தான்.
என்றைக்கோ நான் சொன்னதை நினைவில் வைத்திருந்து, இப்ப எனக்கு எதிராகக் குறிப்பிடுகிறாயே?" என்றாள்.
ராகுலன் அமைதி பெற ஒரு வாரம் பிடித்தது. மெதுமெதுவாக அது தன் ஊளையை நிறுத்தியது: பயத்தை விட்டொழித்தது. கொஞ்சம் கந்தல் துணிகளைப் பரப்பி அதற்கு மென்மையும் கதகதப்பும் நிறைந்த படுக்கை அமைத்தேன். அதன் சாப்பாட்டுக்குப் பெரிய கண்ணாடித் தட்டு ஒன்று வைத்தேன். கட்டிப் போட தோல் கழுத்துப்பட்டை வாங்கினேன். வாரம் ஒரு முறை சென்னா அதைக் குளிப்பாட்டினான்.
ராகுலனும் நானும் நண்பர்களானோம். நான் பள்ளி முடிந்து வந்த உடனேயே அதை வெளியே உலாவ அழைத்துச் சென்றேன். அதற்கு உணவு ஊட்ட நான் வேறு எவரையும் அனுமதிக்கவில்லை. சாதமும் பாலும் நானே கொடுத்தேன். அதை நான் குளிப்பாட்ட இயலவில்லை. ஏனெனில் தண்ணிரைக் கண்டதும் அது ஒட்டம் எடுக்கும். ஒரு நாள் நான் அதைக் குளிப்பாட்ட முயன்றேன். அது என்னைத் தள்ளிவிட்டு ஒடியது. நான் சேற்றுக்குட்டையில் விழுந்தேன். அது குளத்தின் அருகில் நின்று வாலை ஆட்டியது. அது தான் நான் அதைக் குளிப்பாட்ட முயன்ற கடைசித் தடவையும் ஆகும்.
பாட்டியின் சுத்தம், அசிங்கம் பற்றிய நோக்குகளை ராகுலனுக்குப் புரியவைப்பது சிரமமாக இருந்தது. எங்களில் யாரைக் கண்டாலும் அது துள்ளிக் குதித்து ஆள் மீது தன் முன்கால்களைப் பதிக்கும்; தட்டியும் தடவியும் பேச்சுக் கொடுத்த பிறகு தான் அது ஆளைவிடும். பாட்டி வெளியே வருகிற போதெல்லாம், யாராவது ஒருவர் ராகுலனைப் பிடித்துக் கொள்ள வேண்டும்; அல்லது கட்டிவைத்திருக்கிறதா என்று பார்க்க வேண்டும். ஒரு சமயம், ராகுலனைக் கட்டிப் போட்டிருப்பதாக நம்பி, பாட்டிவெளியே வந்தாள். அது, தன் வழக்கம்போல், அவளை வரவேற்கத் தாவியது. பாட்டி பயங்கரமாக அலறிக் கொண்டு வீட்டுக்குள் ஒடிப் போனாள்.
"நான் எல்லாக் கிரியைகளையும் முடித்த பிறகா இப்படி! என்னை அசிங்கப்படுத்திவிட்டதே பாழாய் போகிற இந்தப் பிராணி! நான் என்னை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று அவள் சொன்னாள். சென்னா ராகுலனை செம்மையாக உதைத்தான். தீட்டைப் போக்கி தன்னை சுத்தப்படுத்திக் கொள்வதற்காகப் பாட்டி மந்திரங்களை உச்சரித்தாள், பட்டினி கிடந்தாள், பிச்சைக்காரர்களுக்கு அன்னதானம் செய்தாள். அன்றிலிருந்து ராகுலன் பாட்டி அருகில் போவதில்லை. அவளைக் கண்டால் அது தொலைவிலிருந்து வாலை ஆட்டும். பாட்டி அதைப் பாராட்டினாள். இது புத்திசாலி நாய் தான். சென்னா அடி கொடுத்த நாள் முதல், இது என் பக்கத்தில் வர முயலுவதில்லை" என்றாள். வெயிலில் உலரவைக்க வேண்டிய பண்டவகைகளைப் பாட்டி தயாரிக்கும்போது, ராகுலன் அவற்றுக்குக் காவல் நிற்கும்; ஒரு காகம் கூட அருகில் வராதபடி கவனிக்கும். இப்படியாக அது பாட்டியின் அன்பைப் பெற்றுவிட்டது. ஒரு தரம் ஒரு திருடன் வீட்டினுள் புக முயன்ற போது, ராகுலன் தான் குரைத்து எல்லோரையும் எழுப்பியது. அதன் பிறகு பாட்டி அதை வெகுவாகப் புகழ்ந்தாள். முன் ஜென்மத்தில் ராகுலன் அவளது குடும்பத்துக்குப் பணி செய்வதற்குத் தன்னையே அர்ப்பணித்திருக்க வேண்டும் என்றும், அதை நாங்கள் அலட்சியப்படுத்தினால் கடவுளுக்குப் பொறுக்காது என்றும் அவள் நம்பினாள். பாட்டி தன் இரவு உணவை ராகுலனுடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினாள்.
ஒரு வருடத்திற்குள் ராகுலன் பெரிதாக வளர்ந்து விட்டது. ஒரு கரடியின் வலிமை அதற்கு இருந்தது. அதுக்கு பாலும், சோறும் ரொட்டியும் கொடுத்தோம். வாரம் ஒருமுறை சென்னா மாமிசம் தயாரித்தான். அது பின்கால்களில் எழுந்து நின்றால், என் அளவு உயரம் இருந்தது. அது மிக எச்சரிக்கையோடு காணப்பட்டது. ஒரு புல் அசைந்தால் கூட அது கண்டுகொள்ளும் தெரிந்தவர்களிடம் பிரியமாகவும் சாந்தமாகவும் பழகிய அது அந்நியர்களிடம் மூர்க்கமாக நடந்து கொள்ளும், ராகுலன் என் நண்பன், பாதுகாவலனும் கூட. அது என்னோடிருந்தால் நான் இரவில் கூடப் பயமின்றி வெளியே போகலாம். பாட்டியும் நானும் கோயிலுக்குப் போகும் போது அது எங்களோடு வரும், வாசலில் நாங்கள் விட்டுச் செல்கிற எங்கள் காலணிகளைக் காத்து நிற்கும். பாட்டி தரும் வாழைப் பழத்தையும் அது தின்னும்.
என் சிநேகிதி மாலதியின் தந்தை பெங்களுருக்கு மாற்றலாகிப் போனார். அவள் போவதற்குமுன் அவளிடமிருந்த நாய்குட்டி ஒன்றை எனக்குத் தந்தாள். அது பிறந்து பத்து நாட்களே ஆயின. அதற்கு நாங்கள் ராணி என்று பெயரிட்டோம். அது நிலாவில் வடித்தெடுத்தது போல் அப்பழுக்கற்ற வெள்ளை நிறம். அதன் கண்கள் வெளிர் நீல நிறம் பெற்றிருந்தன. இரண்டு நாய்களுக்கிடையிலும் எவ்வளவு வித்தியாசம்! ராகுலன் அடக்கப்படாத காட்டாள் மாதிரி இருந்தது. ராணியோ அமைதியுடன் சீமாட்டி போல் தோன்றியது. ராகுலன் கொந்தளிக்கும் கடல் போல் இருந்தது. ராணி சமதரையில் மெதுவாக நகரும் அமைதியான நீரோடை போல் காணப்பட்டது.
ஒரு துணை சேர்ந்ததில் ராகுலன் சந்தோஷம் அடையும் என நான் நம்பினேன். ராணியை அதனிடம் எடுத்துப் போய், "உன் ராணியைப் பார்" என்றேன். ராகுலன் உறுமியது. ராணி அதனிடமிருந்து பம்மியது. நான் ராகுலனைத் தட்டி, "அசடு, ஒரு ராணியிடம் நடந்து கொள்ளும் முறை இது அல்ல" என்று கண்டித்தேன். நான் பாலை ராகுலனின் தட்டில் ஊற்றி, அதை ராணி முன் வைத்தேன். அது நக்கிக் குடித்தது. ராகுலன் உக்கிரமாக அதைப் பார்த்து, கோபமாய்க் குரைத்தது.
நான் ராகுலனுக்குத் தீனி கொடுப்பதற்காக சென்னாவைக் கூப்பிட்டேன். சென்னா ஒரு கொட்டாங்கச்சியில் சோற்றையும் பாலையும் கலந்து, ராகுலன் முன் வைத்தான். என்னைத் தவிர வேறொருவர் ராகுலனுக்கு உணவு கொடுப்பது இது தான் முதல் முறையாகும். அது தன் முன்னே வைத்த உணவைப் பார்க்க மறுத்தது; ஆனால் ராணி தன்னுடைய தட்டில் தீனி தின்பதை உறுத்து நோக்கியபடி இருந்தது. ராணி தின்று முடித்ததும், நான் கொட்டாங்கச்சியிலிருந்த சோற்றையும் பாலையும் அதன் தட்டில் கொட்டி, அதன் முன்னே வைத்தேன். அது சந்தடி செய்யாமல் தின்றது.
இரவு வந்ததும் ராணி குளிரால் நடுங்கியது. நான் அதுக்காக இரக்கப்பட்டேன். அதை ராகுலனின் படுக்கையில் இட்டேன். ராகுலனுக்கு வேறொரு படுக்கை தயாரித்தேன். ஆனால் அது புதியதில் படுக்க மறுத்து, தரையிலேயே கிடந்தது.
புதிய இடத்துக்குப் பழக்கப்படும்படி ராணிக்குப் பயிற்சிதர வேண்டியிருந்தது. பாட்டியின் சுத்தம் பற்றிய விதிகளை அனுஷ்டிக்கவும், அடுக்களைக்குள் போகாதிருக்கவும் அதற்குக் கற்றுத் தரவேண்டுமே! ஆகவே நான் ராணியுடன் அதிக நேரம் செலவிட்டேன். சென்னா ராகுலனைக் கவனித்தான். மேலும் தன்னைத் தானே கவனித்துக் கொள்ளும் அளவுக்கு ராகுலன் வளர்ந்திருந்தது.
ராணி ராகுலனின் நட்புக்கு ஏங்கியது. அதன் பிரியத்தைப் பெற அது எண்ணற்ற வழிகளில் முயன்றது. ஆனால் ராகுலன் அதை அறவே வெறுத்தது. ராணி அருகில் நெருங்கி வந்தாலே அது பாய்ந்து பிடுங்கியது.
ஒரு மாலை, நான் கல் பெஞ்சில் அமர்ந்து புத்தகம் படித்திருந்தேன். ராணி ஒரு பந்தை உருட்டி விளையாடிக் கொண்டிருந்தது. நான் ராகுலனை அருகில் ஒரு மரத்தில் கட்டியிருந்தேன். ராணி விளையாடு வதை அது கவனித்தது. ராணி பந்தைத் தன் வாயில் கவ்வ முயன்றது. பந்து நழுவி, ஒடிச் சென்றது. ராணி அதைத் துரத்திச் சென்று, அதைப் பற்களால் கவ்வ முயன்றது. பந்து ராகுலன் அருகில் ஒடியது. ராணி தயக்கத்துடன் பந்தை எடுக்க முன்வந்தது. அதை அது எடுப்பதற்குள், ராகுலன் பயங்கரமாய்க் குரைத்து, ராணி மேல் பாய்ந்தது. ராணி உதவி கோரிக் கத்தியது. நான் என் புத்தகத்தை வீசி விட்டு, அதைக் காப்பாற்ற ஒடினேன். ராகுலன் தன் கூரிய பற்களை ராணி கழுத்தில் பதித்திருந்தது. நான் ராகுலனைக் காலால் உதைத்து, ராணியை விடும்படி செய்தேன். அதை என் கைகளில் தூக்கினேன். அது பயத்தால் நடுங்கியது. ராகுலன் குரைத்தபடி வெறியோடு குதித்தது. அதன் வாயிலிருந்து எச்சில் வடிந்தது. நான் கூட அதைக் கண்டு சிறிது பயந்து போனேன். அப்பாவி ராணி மோசமாகக் கடியுண்டிருந்தது. அதன் பணி வெள்ளை உடலில் ரத்தம் திட்டுதிட்டாகத் தென்பட்டது. எனக்கு ராகுலன் மீது கடும்கோபம். அதற்கு ஒரு பாடம் கற்பிக்க விரும்பினேன். ஒரு கைத்தடியினால் அதுக்குக் கடுமையான அறை கொடுத்தேன்.
நான் ராணியை அதிக சிரத்தையுடன் கவனிக்கலானேன்.
ஒரு ஞாயிறு பிற்பகல், நான் ராகுலனை ஒரு மரத்தில் கட்டிவிட்டு, தூங்குவதற்காக வீட்டினுள் வந்தேன். நான் தலையணையில் தலை சாய்த்திருப்பேன்; அதற்குள் ராணி அலறுவதை கேட்டேன். வெளியே ஒடினேன். நான் பார்த்தது என் வயிற்றை கலக்கியது. ராகுலன் ராணியைப் பற்களால் கவவி, அதை முரட்டுத்தனமாக, வண்ணான் துணியைக் கல் மீது அறைவது போல், தரை மீது அடித்துக் கொண்டிருந்தது. ராணியின் கதறல்கள் மெலிந்து தேய்ந்தன. ராகுலனின் கண்கள் பொறாமையால், கோபத்தால், பழிவாங்கும் உணர்வால் தகித்தன. அதன் அருகில் போவதற்கே நான் பயந்தேன்.
நான் சென்னாவை, அம்மாவை, பாட்டியைக் கூவி அழைத்தேன். அவர்கள் ஒடி வந்தார்கள். "சென்னா ராணியைக் காப்பாற்று. ராகுலன் அதைக் கொன்று போடும்" என்று கத்தினேன். சென்னா ராகுலனிடம் ஒடி, அதுக்கு ஒங்கி ஒரு உதை கொடுத்தான். ராகுலன் உருண்டு விழுந்தது. ராணியை விட்டுவிட்டது. ராணி ரத்தத்தில் தோய்ந்திருந்தது. ராகுலன் அதன் அடிவயிற்றை கடித்துக் குதறியிருந்தது. ராணி வேதனையால் முனகியது. பிறகு அசைவற்றுக் கிடந்தது.
ராகுலனின் நாக்கிலிருந்து ரத்தம் சொட்டியது. நான் அதன் பக்கம் திரும்பியதும் அது வாலை ஆட்டியது. ராணியின் அசைவற்ற உடலைப் பார்த்தது. அது தனது செயலில் மகிழ்வு அடைந்ததாகத் தோன்றியது.
"சென்னா, ராகுலனை அவிழ்த்து விட்டது யார்? நான் அதைக் கட்டியிருந்தேனே."
சென்னா குற்ற உணர்வோடு சொன்னான்: "அதைக் குளிப்பாட்ட வேண்டியிருந்தது. அவிழ்த்து விட்டு, சோப்புக்காக உள்ளே வந்தேன். நான் திரும்புவதற்குள் அது அந்தப் பிராணியை கொன்றுவிட்டது."
நான் ராகுலனிடம் ஆத்திரம் கொண்டேன். அதை அடிப்பதற்காக முன்நகர்ந்தேன்.
"அதன் பக்கத்தில் போகாதே. அதுக்குப் பைத்தியம். அது உன்னைக் கடித்துவிடும்" என்று அம்மா அலறினாள்.
"பைத்தியமா!" நான் பதறிப் போனேன்.
"நிச்சயமாக இல்லாவிட்டால் அது ராணியை கொன்றிராது."
"அது பைத்தியமாக இராது, அம்மா. இது காலம் அல்ல" என்று நான் மறுத்தேன்.
பாட்டி குறுக்கிட்டாள். "இதெல்லாம் பற்றி உனக்கு என்ன தெரியும் பைத்தியம் பிடிப்பதற்கும் தனிகாலம் உண்டா? அதன் கிட்டப் போகாதே."
என் கோபம் மறைந்தது. பைத்தியத்தின் அறிகுறி எதையும் நான் ராகுலனிடம் காணவில்லை.
"சென்னா, ராகுலனுக்கு விஷம் கொண்டு வா. அதை சோற்றில் கலந்து கொடுப்போம். குழந்தைகள் இருக்கிற வீட்டில் பைத்தியம் பிடித்த நாயை வைத்திருப்பத ஆபத்து."
"வேண்டாம், அம்மா" என்று கெஞ்சினேன். "ராகுலனுக்கு விஷம் கொடுக்காதே" நான் அழ ஆரம்பித்தேன்.
ஒரு பயனும் இல்லை. என் கண்ணி யாருடைய நெஞ்சிலும் ராகுலன்மீது இரக்கம் எழச் செய்யவில்லை.
மறுநாள் காலை சென்னா விஷமிட்ட உணவுடன் ராகுலனிடம் போனான். ராகுலன் வாலை ஆட்டியது. ஆனந்தத்துடன் குதித்தது. அதன் கிட்டப்போக சென்னா பயந்தான். சிறிது தூரத்தில் தட்டை வைத்து, அதை முன்னே தள்ளினான். ராகுலன் உணவை திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. அது என்னிடம் வர முயன்றது. அது சோற்றைத் தொடாது என்பதை அம்மா கவனித்தாள். சொன்னாள் லீலா தட்டை நீ அதன் முன்னே வை".
சொந்தக் குழந்தை போல் வளர்த்த ஒரு ஜீவனுக்கு நான் எப்படி விஷம் கொடுக்க முடியும் மறுத்து விட்டேன்.
பாட்டி சென்னாவிடம் சொன்னாள்: "தட்டை அதன் பக்கம் தள்ளு. அது பசி எடுத்தால் தின்னும்." சென்னா தட்டை நாயருகே தள்ளினான். ராகுலன் முந்திய இரவு உணவு தின்னவில்லை. அதுக்குப் பசி. அது ஒரக்கண்ணால் என்னை பார்த்தது. வாலை ஆட்டியது. உணவை விழுங்கத் தொடங்கியது. என்னால் மேலும் தாங்கமுடியவில்லை. என் அறைக்குப் போய், கதவை சாத்தினேன்.
அதன்பின் வேறு நாயை நான் என் வீட்டுக்குக் கொண்டு வந்ததேயில்லை.
(கன்னடக் கதை)
சுந்தரும் புள்ளிவால் பசுவும்
காரூர் நீலகண்ட பிள்ளை
பன்னிரண்டு வயது சுந்தர் ஊர்ப்பசுக்களை மேய்த்தான். அவன் உழைப்புக்காகச் சோறும் கறியும் அவனுக்குக் கிடைத்தன.
கோடையில் ஒருநாள் அதிகாலையில் அவன் மூன்று பசுக்களை மேய்ச்சலுக்கு இட்டுச் சென்றான். 'சுருள் கொம்பு', 'கருங்கண்', 'புள்ளி வால்' என்று அவன் அவற்றுக்குப் பெயரிட்டிருந்தான். தனது உணவை ஒருபையில் வைத்து, அதைத் தன் தோளில் தொங்கவிட்டிருந்தான். அந்தப் பையில் அவனது கத்தியும் குழலும் இருந்தன. அவன் ஒரு கொம்பைக் கொண்டு பசுக்களை தூரத்திலிருந்த மேய்ச்சல் நிலத்துக்கு ஒட்டிச் சென்றான்.
மேய்ச்சல் தளம் பலவித மரங்களும் செடிகளும் மண்டி வளர்ந்த விசாலமான நிலப்பரப்பு. இவ்வருடம் வறட்சி ஏற்பட்டிருந்தது. எல்லாம் காய்ந்து கிடந்தன. மாடுகள் தின்பதற்கு அதிகமாக இல்லை. அவை கடிப்பதற்குச் சிறிது இலைகளே எஞ்சியிருந்தன.
மாடுகளை சுந்தர் அடிக்கடி மேய்க்கக் கொண்டுபோக நேராது. மழை பெய்தால், மாடுகள் தொழுக்களில் தங்கிவிடும். விளைச்சல் நன்றாக இருந்தால் அவன் உழைப்பு தேவைப்படாது; மாடுகள் வயல்களில் நெல் தாள்களைத் தாமே தின்று கொள்ளும் கோடை காலத்தில், மாடுகளுக்குத் தீவனம் அரிதாகிவிடும்போது தான், சுந்தர் அவற்றை மேய்ச்சலுக்கு இட்டுச் செல்ல நேரிடும். இதுவும் பதினைந்து நாட்களுக்கு மேல் போகாது. ஆனால் இதற்குள் சுந்தர் மாடுகளோடு மிக ஒட்டுதலாகி விடுவான்.
மேய்ச்சல் களத்தின் அருகில் வளமான காடு ஒன்று உண்டு. அங்கு நாலாவித மரங்களும் அடர்ந்து, பலவகைப் பிராணிகளுக்கும்-நரிகள், குரங்குகள், முள்ளம்பன்றி, முயல், காட்டுப்பன்றி, மான்கள் அனைத்துக்கும்-பாதுகாப்புத் தந்தன. அவ்வப்போது யானைகளும் தென்படும். ஆனால், காடு அரசின் காவலில் இருந்தது. அங்கு மேய்ச்சல் அனுமதிக்கப் படுவதில்லை.
அன்று காலை சுந்தர் மாடுகளை தடைசெய்யப்பட்ட எல்லைக்குள் போகவிட்டிருந்தான். அவன் ஒரு முந்திரி மரத்தில் ஏறி அமர்ந்து, சிறிது பருப்புகளைக் கொய்து தின்றான். பறவைகளைப் போல் கூவினான். பசுக்களுக்கு பூமாலைகள் தொடுத்தான். பசுக்கள் காட்டினுள் திரியத் தொடங்கவும், அவற்றை வரவழைக்க அவன் புல்லாங்குழில் இசைத்தான். அவற்றின் விலாவில் தட்டினான். காட்டில் அவை வழிதவறிப் போவது பற்றிக் கண்டித்தான். சுந்தர் ஒரு மெல்லிய நாணலை எடுத்து, அதில் ஒரு கொட்டையைச் செருகினான். நாணலின் ஒரு முனையில் ஊதவும், கொட்டை துப்பாக்கியிலிருந்து குண்டு புறப்படுவதுபோல் பாய்ந்தது. அதை அவன் பல்லிகள், அணில்கள் மேல் எய்தான். அவன் மரங்கள் மேல் ஏறினான், பறவைக் கூடுகளை எட்டிப் பார்த்தான்; இலைகளைச் சேர்த்து முட்களால் குத்தி குல்லாய் செய்தான். சில சமயம், கோயில் விழாவில் அவன் கண்டது போல், கருட நாட்டியம் ஆடினான்.
மேய்ச்சல் களத்துக்கும் காட்டுக்குமிடையே ஒரு சிறு நீரோடை ஒடியது. பசுக்களைக் குளிப்பாட்டப் போதுமானநீர் இல்லை. அவை தங்கள் தாகத்தைத் தணித்துக் கொள்ளவும், அவன் தன் சோற்றையும் கூட்டையும் தின்று குடிப்பதற்கும் போதிய தண்ணிர் இருந்தது.
பிற்பகலில் பசுக்கள் நிழலில் படுத்து அசை போட்டன. சுந்தர் ஒரு பாறை நிழலில் சாய்ந்தான். ஒரு குரங்கு பக்கத்தில் வந்தது. அவன் தன் நாணல் துப்பாக்கியால் சிறு கல்லை எறிந்து அது பயந்து ஒடும்படி செய்தான். அவனுக்குக் கிறக்கமாக இருந்தது. இலைகளைப் படுக்கையாக்கி நீட்டி நிமிர்ந்தான். இரவில் இழந்த தூக்கத்தை ஈடுகட்டினான்.
அவன் அருகில் நரிகள் ஊளையிடவே சுந்தரின் ஆந்த உறக்கம் கலைந்தது. அவன் திடுக்கிட்டு விழித்தான். இரவு வந்திருந்தது. எங்கும் காரிருள். அவன் தனது மூன்று பசுக்களையும் காண முடியவில்லை. நரிகள் அவற்றை அஞ்சி ஒடச் செய்திருக்கலாம். அல்லது நரிகள் அவைகளைக் கடித்துக் குதறியிருக்குமோ? அவற்றின் காதுகளையும் மடுக்களையும் நரிகள் கடித்திருக்குமோ? பசுக்கள் செத்திருக்குமோ? நரிகளுக்கு அடிக்கடி வெறி. பிடிக்கும். நரிகளால் கடிக்கப்பட்ட நாய்களும் பைத்தியமாவது உண்டு-பசுக்களுக்கும் அப்படி நேரலாம். பைத்தியமான பசுவை யாராவது தொட்டால் அவனும் பைத்தியம் ஆவான் என்று சொல்வார்கள். அல்லது அவை காட்டுக்குள் ஒட புலி அவற்றை தின்றிருக்குமோ? ஊர்ப் பெரியவர்கள் முகத்தில் எப்படி முழிப்பது; நரிகள் அவனையும் தாக்குமா?
சுந்தர் பயந்தான்; எனினும் அமைதியாக இருந்தான். மெதுவாகப் பாறையின் மறுபக்கம் வழுக்கி இறங்கினான். கைகளாலும் பாதங்களாலும் தரையைத் தடவினான். மூன்று கற்களை அவன் கண்டெடுக்க முடிந்தது. அவற்றைத் தன் பைக்குள் வைத்து, பாறையின் உச்சிக்கு ஊர்ந்து ஏறினான். நரிகள் நின்ற திக்கில் பெரிய கல்லை வீசினான். கல் குறி தவறவில்லை. தடாலென்ற ஒசையையும், ஒரு நரி வேதனையால் ஊளை யிடுவதையும் அவன் கேட்டான். தொடர்ந்து மேலும் இரண்டு கற்களை நாணல் துப்பாக்கி மூலம் எறிந்தான். அவையும் குறிப்பாய்த் தாக்கின. நரிகள் ஒடின. தூரப் போய் ஊளையிட்டன.
சுந்தர் பாறையில் வழுக்கி இறங்கினான். ஐந்தாறு அடிகள் நடந்திருப்பான். அதற்குள் அவன் கால்கள் ஒரு மரத்தின் வேரில் சிக்கிக் கொண்டன. அவன் கைகளால் தடவி அடிமரத்தை உணர்ந்தான். முரட்டுக் கொடி ஒன்று மரத்தைச் சுற்றியிருப்பதைக் கண்டான். அவன் மரத்தின் கிளைமீது ஏறி வசதியாக அமர்ந்தான். திடீரென்று ஒரு சாகுருவி, "அவனைச் சுடு! அவனைச் சுடு!" என்று கத்தியது. இது. அவனை அதிகம் அச்சுறுத்தியது. உடனே தன்னைக் காப்பாற்ற கடவுள் இருக்கிறார் என்று தனக்குள் கூறிக் கொண்டான். பிறை நிலவு மெலிதாக ஒளி சிந்தியது. அவன் நன்றாகப் பார்க்கமுடிந்தது. அடிமரத்தில் சாய்ந்தபடி குரங்குபோல் தோன்றிய ஒரு உருவம் நிற்பதை அவன் கண்டான். அவன் கள்ளத்தனமாகக் கிளைகளில் ஊர்ந்து, குரங்கிற்கு நேர் மேலே வந்தான்; தன் பையிலிருந்த கற்களை அதன் தலையில் கொட்டினான். குரங்கு அலறியடித்து ஒடியது. இதர கிளைகளில் குந்தியிருந்த கூட்டாளிக் குரங்குகளும் கத்திக் கொண்டு கீழிறங்கின. அதுவே சுந்தர் தப்புவதற்கு ஏற்ற தருணம். அவன் மரத்தில் நழுவி இறங்கினான். கத்தியால் ஒரு நீண்ட குச்சி வெட்டி, அதை உபயோகித்து நாணல்களை விலக்கி வழிகண்டான். மீண்டும் பாறையை அடைந்து, அதன் மேலேறி, சற்று நேரம் படுத்துக் கிடந்தான். இதற்குள் பிறை நிலா மறைந்து விட்டது. வானத்தில் ஒருசில வெள்ளிகள் மின்னின.
சுந்தரின் நினைவெல்லாம் பசுக்களைப் பற்றியே இருந்தன. அப்பாவிப் பிராணிகள் இருட்டில் வழி தவறிப் போயிருக்கும். அவை உதவியற்றவை. அவற்றின் அச்சமும் வேதனையும் அவன் அனுபவிப்பதை விட அதிகமிருக்கும். அவன் குழலை ஊதினான். ஆனால் நரிகளின் ஊளை அதை அமுக்கிவிட்டது.
பசியும் தாகமும் அவனை வாட்டின. ஏதாவது பழத்தைப் பறிக்கலாம் தான். இருட்டில் அவனால் தெளிவாய்ப் பார்க்க முடியவில்லை.
பிறகு வெளிச்சம் தெரிந்தது. அது மனிதர்களா அல்லது பிசாசுகளா? சுந்தர் வியர்த்து விறுவிறுத்தான்.
வெளிச்சம் மங்கலாக இருந்தது. திடீர் ஒசை ஒன்று அமைதியைக் குலைத்தது. சுந்தர் ஊன்றிக் கவனித்தான். அது மரம் வெட்டும் ஒசை அல்ல.
தைரியம் முழுவதையும் சேர்த்து, சுந்தர் மீண்டும் பாறையிலிருந்து நழுவிக் கீழிறங்கினான். கைகளாலும் கால்களாலும் நகர்ந்து வெளிச்சத்தை நெருங்கினான்.
நாலைந்து பேர் ஒரு செத்த பிராணியைத் தோலுரித்துக் கொண்டிருந்தார்கள். அது அவனது புள்ளிவால் பசுவோ? பாவம்-அது கன்று போட்டு நான்கு மாதங்களே ஆயின. நடப்பதைக் கவனிக்க சுந்தர் ஒரு மரத்தின் பின் பதுங்கினான். அந்த ஆட்கள் ஒரு புட்டி நிறைய மின்மினிப் பூச்சிகளை அடைத்து அதை விளக்காக உபயோகித்தார்கள். வெட்டுண்ட மாட்டின் தலையை அவன் பார்த்தான். அது அவனது பிரியமான புள்ளி வால் பசு இல்லை, ஏதோ வயதான வெள்ளைக் காளை. அவன் நிம்மதியாக மூச்சு விட்டான். இது அவனுக்குத் துணிவும் அளித்தது. அவன் செய்ய வேண்டிய காரியம் அந்த மின்மினிப் புட்டியைத் திருடுவது தான். திருடர்கள் அதை சாக்கினால் மூடியிருந்தார்கள். தங்களுக்குத் தேவைப் பட்ட போது ஒரு பக்கத்தை மட்டும் திறந்து காட்டினார்கள். அவர்கள் தங்கள் கொடிய காரியத்தில் முனைந்திருக்கையில், சுந்தர் ஒசைப்படாது, சாக்கால் மூடிய புட்டியை எடுத்து மரத்தின் பின் மெல்லப் போனான்.
கும்பலில் ஒருவன், "இங்கே கொஞ்சம் வெளிச்சம்" என்று கத்துவதை அவன் கேட்டான்.
கல்லின் மேல் வைத்த புட்டியை எடுக்க மற்றொருவன் திரும்பினான். அது இல்லை. புட்டி எங்கே போயிருக்கும்?
"நான் அதை இங்கே தான் வைத்தேன். நிச்சயமாக"
"நன்றாகப் பார் அங்கே தானிருக்கும்."
"நான் கல் மேலே தான் வைத்தேன். சந்தேகமில்லை."
"யாரோ நம்மைப் பார்த்து விட்டார்கள். நாம் கையும் களவுமாய் அகப்பட்டுக் கொள்வோம். தப்பி ஒடுவதே நல்லது."
மாட்டிறைச்சியில் கிடைக்கக் கூடியதை எடுத்துக் கொண்டு வேகமாகச் செல்ல அவர்கள் தீர்மானித்தார்கள். செத்த மாட்டை வேகம் வேக மாக வெட்டத் தொடங்கினார்கள். திடீரென இருட்டில் புல்லாங்குழல் ஒசை மிதந்தது. அதைக் கேட்டு அவர்கள் பயத்தால் உறைந்தனர். கத்திகளைக் கீழே போட்டுவிட்டு, மரத்தின் மீது ஏற அவர்கள் ஒடினார்கள்.
குழலோசை ஒரு நரியின் காதிலும் விழுந்தது. அது தன் தலையை உயர்த்தி ஊளையிட்டது. மற்ற நரிகளும் கூட்டமாய் குரல் எழுப்பின. இறைச்சியை அவை மோப்பம் பிடித்தன. செத்த மாட்டை நோக்கி வந்தன. அதைப் பாய்ந்து குதறின. மரத்தின் மேலேயிருந்த திருடர்கள், தாங்கள் கொன்ற காளையை நரிகள் தின்பதை வருத்தத்தோடும், செயலற்றும் கவனித்தார்கள்.
இதற்குள் சுந்தர் தன்னிலை அடைந்தான். அவன் கண்கள் இருட்டில் பார்க்கப் பழகிவிட்டன. அவன் தன் பசுக்களை கூப்பிட்டபடி, குழலை இசைத்தான்.
காட்டின் பறவைகளும் மிருகங்களும் கலவரம் அடைந்தன. பறவைகள் கிளுகிளுத்தன, கீச்சிட்டன. சிறு பிராணிகள் அவனை கடந்து போயின. மானின் கவலை நிறைந்த கீச்சொலி காற்றை நிறைத்தது. ஆனாலும் அவனுடைய பசுக்களின் தடயமே கானோம்.
பயம் அவன் கால்களுக்கு வேகம் சேர்த்தது. அவன் ஒடலானான். முட்களும் புதர்களும் அவனது கைகளிலும் கால்களிலும் குத்தின; பிறாண்டின; அவனைக் காயப்படுத்தின. திடுமென ஒரு மரத்தின் வேர் தடுக்கி அவன் தலைகுப்புற விழுந்தான். அதிர்ஷ்டவசமாக, மின்மினிப் புட்டி உடையவில்லை. அதன் மங்கிய ஒளியில் தன் முழங்காலின் கீழே ஆழமான வெட்டுப்பட்டிருப்பதையும், அதிலிருந்து நிறைய ரத்தம் வடிவதையும் அவன் கண்டான். ரத்தப் பெருக்கை நிறுத்துவதற்காக, காயத்துக்கு உயரே சாக்குக் கயிற்றைக் கட்டினான். நோவு அதிகம் இருந்தது. அவனால் எழுந்து நிற்க முடியவில்லை.
அவனது இரத்தத்தின் வாடை ஏதாவது கொடிய மிருகத்தை கவர்ந்து இழுக்கும் தான் உயிரோடு விழுங்கப்படலாம் என்ற நினைப்பு அவனுள் அச்சம் புகுத்தியது. அல்லது, எறும்புகள் மொய்த்து அவனை அரித்துத் தின்னும்! என்ன பயங்கரம்!
அவன் மூலிகை இலைகளைக் கொண்டு தன் காயங்களை சுத்தம் செய்தான். தன் பலம் கொண்ட மட்டும் கூவி, தனது பிரியமான புள்ளி வால் பசுவை அழைத்தான். ஆனால் அவன் அழைப்பு உண்மையில் ஒரு முனு முனுப்பாகத்தானிருந்தது. முற்றிலும் களைப்புற்று சுந்தர் இருந்த இடத்திலேயே தூங்கி விட்டான்.
***
நடந்தது வெகு சாதாரணமானது. பசுக்கள் வயிறாற மேய்ந்தன. அசை போட்டன. பிறகு, வீடு திரும்ப நேரமாயிற்று என்று சுந்தருக்குச் சொல்ல சத்தமிட்டன. அவை கத்திய போது சுந்தர் தூங்கினான். புள்ளி வால் அவன் காலை நக்கிய போது, அதை அவன் ஓங்கி மிதித்தான். பசுக்கள் சுந்தர் இல்லாமலே ஊர் திரும்பின. அவை தொழுவங்களில் கட்டப்பட்டன.
இருட்டிய பிறகும் சுந்தர் வீடு திரும்பாததனால், அவன் தந்தை அவனை தேடிப் போனார். பசுக்கள் வந்துவிட்டன என அறிந்ததும், சுந்தர் கோயிலுக்கு திருவிழா பார்க்கப் போயிருப்பான் என்று தீர்மானித்து, அவர் வீடு திரும்பினார்.
மறுநாள் காலை, புள்ளிவால் யாரையும் பால் கறக்க விடவில்லை. தன் அருகே எவர் வந்தாலும் அது முட்டி உதைத்தது. அதுக்கு சீக்கு என்று ஊரார் கருதினர். ஒவ்வொருவரும் ஏதேதோ சொல்லினர்.
"அதைப் பாம்பு கடித்திருக்கும்."
"அது காட்டில் நச்சுத் தழையைத் தின்றிருக்கும்."
அதுக்கு வழக்கமாகக் கொடுக்கும் எள்ளுப் புண்ணாக்கும் தவிட்டுத் தண்ணிரும் தராது, வெறும் உப்பும் தண்ணிரும் வைக்கும்படி வீட்டு எஜமானி உத்தரவிட்டாள். அதைப் பால் கறக்க வேண்டாம்; அதன் கன்றும் பட்டினி கிடக்கட்டும் என்றும், இரண்டையும் தனித்தனியே கட்டும்படியும் சொன்னாள்.
சிறிது நேரத்துக்குப் பிறகு அவள் உப்புப் போட்ட கழுநீருடன் தொழுவத்துக்குப் போனாள். புள்ளிவால் பசு அங்கே இல்லை.
எஜமானி கலவரமடைந்தாள். அனைவரையும் திட்டினாள். "பசுவை வெளியே விடவேண்டாம் என்று நான் சொன்னேனா இல்லையா? அந்தப் பையன் சுந்தர் ஏன் என் பேச்சை மீறி அதை அவிழ்த்தான்?"
முளையில் கட்டிய கயிறு அறுபட்டுக் கிடப்பதை அவர்கள் கண்டார்கள். பசுவையும் காணோம்; பசுவை மேய்க்கும் சுந்தரையும் கானோம். சுந்தரின் தந்தையும் புள்ளிவால் பசுவின் சொந்தக்காரியும் அவர்களைத் தேடி போனார்கள். இந்தத் தேடலில் மற்றவர்களும் சேர்ந்தார்கள்.
முந்தின இரவில் சுந்தரை தூங்க விட்டுச் சென்ற இடத்துக்கு புள்ளி வால் போயிற்று. அங்கே அவன் இல்லை. அது அவனைத் தீவிரமாகத் தேடத்தொடங்கியது. சுந்தர் பையைக் கண்டது. பை அழுக்காகிக் கிழிந்து காணப்பட்டது. மேலும் தேடி, பசு சுந்தரை கண்டு கொண்டது. அவன் உடல் முழுதும் காயம் பட்டிருந்தது. அவன் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். பசு உரக்கக் கத்தியது. அவனை உடல் முழுதும் நக்கிக் கொடுத்தது. சுந்தரின் காயங்களில் மெர்ய்த்த எறும்புகளையும் ஈக்களையும் நக்கித் தள்ளியது. விசித்திரம் தான்! பசுவின் மடு கனத்து, பால் சுரந்தது. அவன் மடுக்களை எட்டக் கூடிய விதத்தில் அவற்றை சுந்தரின் முகத்தின் அருகே வைத்தபடி பசு படுத்தது. அவன், ஒரு கன்றுக்குட்டி செய்வது போலவே, பகவின் மடுவைத் தன் வாயினால் கவ்வி, பால் குடிக்கலானான். மெதுவாக அவன் உடம்பில் தெம்பு புகுந்தது. அவன் தலையைப் பசுவின் தாடையில் பதித்து, அதன் உடலோடு ஒட்டி ஒய்வாகக் கிடந்தான். தேடி வந்த கிராமத்தினர் இந்த நிலையில் தான் சுந்தரையும் புள்ளிவால் பசுவையும் கண்டார்கள்.
(மலையாளக் கதை)
சீஅதிவேக பினே
பி.ஆர். பாக்வத்
நந்து நவாதே ஒர்லியில் வசித்தான். அவன் உண்மையான பம்பாய்வாசி. பாணேஷ் (அல்லது அதிவேக) பினேயோ பூனாவில், வித்யா பவனில் படிக்கும் மாணவன். இந்த உலகம் முழுவதும் என் வீடு என்பது அவன் கொள்கை. சுற்றித்திரியும் பாணேஷைத் தன் வீட்டின் வாசல் அருகே சந்திக்க நேர்வது விசித்திரம் தான் என்று நந்து நினைத்தான். அந்தத் தற்செயலான சந்திப்பின் அதிவிசித்திர விளைவு, அதிவேக பினேக்குத்தான் ஏற்பட்டது-அதற்குக் காரணம் கூட நந்து தான்.
உண்மையில் பாணேஷ் நந்துவின் வீட்டுக்கு அழைக்கப்படவில்லை. பார்க்கப் போனால், அவர்கள் அறிமுகமானவர்களே இல்லை. அதிவேக பினேயை நந்துவுக்குத் தெரியும், மற்றவர்களுக்குத் தெரிந்திருந்தது போல் தான். அவனது வீரமும் உணர்ச்சித் துடிப்பில் செய்யும் தீரச் செயல்களும் பிரசித்தமானவை. கதை அளப்பதில் நந்து நவாதேக்கு இருந்த அசாத்தியத் திறமையை பாணேஷ் கேள்விப்பட்டிருந்தான். கதை சொல்லி நந்து சூன்யத்திலிருந்து பூரண உலகத்தையே படைக்கக் கூடியவன்.
நந்து வீட்டருகில் இருந்த ஒரு பெரிய அற்புதமான கட்டிடத்தின் மொட்டைமாடியில் தான் இவ் இரண்டு சூரர்களும் முதன்முதலாகச் சந்தித்தார்கள்.
பிள்ளைகள் பெரும் கும்பலாய்க் கூடியிருந்தார்கள். புகழ்பெற்ற கோகா மருந்துக் கம்பெனி ஒரு ஒவியப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தது. சகலவித பிரசார முறைகளையும் கையாண்டு அவர்கள் தங்களுடைய ஜாக் இருமல் மருந்தைப் பிரபலமாக்க முயன்றார்கள். இப்போது, தங்கள் முயற்சியின் உச்ச கட்டமாக, அவர்கள் ஏகப்பட்ட பலூன்களைக் கட்டியிருந்தார்கள்!
அசைந்தாடிய பலூன்கள் ஒரு மலை ஏரியில் மிதக்கும் தாமரைப் பூக்கள் போல் தோன்றின. பலநூறு பலூன்கள்-ரப்பராலும் பிளாஸ்டிக்கினாலும் செய்யப்பட்டவை-மிதந்தன. அவற்றின் முன்னே, வார்த்தைகளும் படங்களும் தீட்டும் நோக்குடன் மிகப்பல பிள்ளைகள் இருந்தார்கள். உண்மையில் அவர்கள் 'இருக்க' வில்லை; ஏறியும் இறங்கியும் அசைந்த-கான்வாஸ் அல்ல பிளாஸ்டிக்-பரப்பின் மேல் தங்கள் திறமையைக் காட்ட அவர்கள் நின்றார்கள். எண்ணற்ற வரிசைகளாக பையன்களும் பெண்களும் நின்றனர். ஒரு வரிசை மேற்கே பார்த்தது, மறுவரிசை கிழக்கை நோக்கியது. அடுத்தவரைப் பார்த்து காப்பி அடிக்காமல் இருக்கவே இந்த ஏற்பாடு.
பிள்ளைகள் பலூன் மீது, வசீகரமான ஒரு படமும் கவர்ச்சியான ஒரு வாசகமும் பளிச்சிடும் சிவப்பில் தீட்ட வேண்டும். இது தான் போட்டி, வாசகம் பதினைந்து வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும். அது, சந்தேகமின்றி, ஜாக் இருமல் மருந்தைப் புகழ்வதாக அமைய வேண்டும். ஒவியம் தீட்டப்பட்ட பலூன்களில் சிறந்ததை நீதிபதிகள் தேர்வு செய்து, வெற்றியாளனுக்குப் பரிசு அளிப்பார்கள். அந்தப் படத்தையும் வாசகத்தையும் மிகப்பெரிய பலூன் ஒன்றில் தீட்டி அதை வானில் பறக்க விடுவார்கள்.
பம்பாய் முழுவதும் அந்த விளம்பரத்தைப் பார்ப்பார்கள். ஜாக் இருமல் மருந்து, வெற்றியாளன் திறமை, இரண்டுக்கும் நல்ல விளம்பரம்!
கோகா கம்பெனியின் மிகப் பெரிய பலூன், கயிறுகளால் கட்டப்பட்டு, மொட்டை மாடியின் நடுவில் எடுப்பாக விளங்கியது.
***
பாணேஷ் (அல்லது அதிவேக) பினே, பம்பாயில் உள்ள மாதுங்காவுக்கு, அத்தை வீட்டில் தன் விடுமுறைக்காக வந்திருந்தான். போட்டி பற்றிய அறிவிப்பை அவன் பத்திரிகையில் பார்த்தான். அதில் கலந்து கொள்ள விரும்பினான்.
"நான் ஞானேஷ்வர் இல்லை தான். என்னால் ஆயிரம் வரிக் கவிதை எழுதமுடியாது. ஆனால் பத்து வார்த்தைகளைச் சேர்த்து எழுத ஒரு பெரிய எழுத்தாளன் தேவையில்லை!" என்று அவன் தன் அத்தையிடம் கூறினான்.
"எனக்குத் தெரியாதா! நீ தான் அதிவேக பினே ஆயிற்றே!" என்று அத்தை சொன்னாள். "ஆனால் உன் வாக்கியம் உண்மையிலேயே நன்றாக இருக்க வேண்டும். அதுவே வெற்றிபெற வேண்டும் சும்மா வெறுமனே...." தொடர்ந்து பேச இயலாதபடி இருமல் அவளைத் தாக்கியது. ஜாக் இருமல் மருந்து தனது முதல் வாடிக்கையைக் கண்டுகொண்டது.
"நிறுத்து!" பாணேஷ் அத்தையை நோக்கினான். தானே வெடித்த சொல்லை உருவாக்கும் முயற்சியில் அவன் வாய் திறந்தேயிருந்தது.
"என்ன விஷயம்?" என்று அவள் கேட்டாள். இருமினாள். ஒரே இருமல்!
"எனக்கு ஒரு மூளை அதிர்வு! ஒருவர் தொண்டைக்குள் ஒரு தவளை. அது க்ரோக், க்ரோக் என்று கத்துகிறது. இப்படிப்படம் வரைவேன். அடுத்தவரியில், நிற்காத இருமலா உடனே அருந்து. ஜாக் இருமல் மருந்து! பார், பத்து வார்த்தை கூட இல்லை!"
"அசடாக இராதே" என்ற அத்தை இருமிக் கொண்டே அறையை விட்டுச் சென்றாள்.
***
போட்டி நடைபெற்றது. நந்து நவாதேயும் கலந்து கொண்டான்.
நந்து உள்ளத்தில் நல்லவன்தான். ஆனால் இயல்பாக நெட்டைக் கதைகள் கூறும் பழக்கம் உடையவன். ஒருதரம் தொடங்கி விட்டால் தன் கதைப் பின்னலில் சிக்கி, தானே அதை நம்பும் அளவுக்கு ஆழ்ந்து போவான்!
ஆனால், முந்தியோ பிந்தியோ, அவன் கதைகள் அம்பலமாகிவிடும். அப்போது நந்து குழப்பத்தால் திணறுவான்.
இதற்கிடையில் அதிவேக பினேயின் கீர்த்திகள் அதிகரித்தன. அது நந்துவுக்கு ஆத்திரம் ஊட்டியது.
"அந்த அதிவேக பினே தன் அளவை மீறி வளர்ந்து விட்டான்!" என்று நந்து முணுமுணுத்தான். அவனைப் போல தைரியசாலி இந்த உலகத்தில் வேறு யாரும் இல்லை என்கிற மாதிரி அவனுக்குத் தன்னைப் பிரபலப் படுத்திக் கொள்ள வாய்ப்புகள் சேருகின்றன. எனக்கு அது இல்லை. அதிவேக பினே போகிற இடமெங்கும் ஆபத்துகள்-சாலையின் இரு புறமும் காத்திருப்பதாகத் தோன்றுகிறது!"
"அவனை வரவேற்கவா?" என்று நண்பன் சிரித்தான்.
"நான் பார்க்கவில்லை."
"நீ வீரசாகசங்களை அதிகம் அனுபவித்ததாக எப்பவும் பாசாங்கு பண்ணுகிறாய்!” என்று நண்பன் அவனைக் குத்தினான். நந்து கோபமாக, போதும், நிறுத்து என்று கத்தினான். மெளனமானான்.
அதிவேக பினேயிடம் அவனுக்குப் பொருமை என்பதில் ஐயமில்லை. ஒரு நாள் அவனை மட்டம் தட்ட முடியும் என நந்து நம்பினான்.
இப்போது அதிவேக பினே போட்டியில் ஈடுபட்டிருந்தான். அவனை அங்கு சந்திக்கக்கூடும் என நந்து எண்ணவேயில்லை. மிஸ்டர் ஒக் என்ற கற்பனை மனிதனைத் தன் பலூனில் நந்து தீட்டியிருந்தான். அதன் கீழ் சிவப்பு வர்ணத்தில் வாசகத்தை எழுதிக் கொண்டிருந்தான்.
"திடீரென மிஸ்டர் ஒக்.... தொண்டையில் விக்கினார்...." என எழுதினான். அதற்கு மேலே ஒடவில்லை. அப்புறம்? இங்கே கதை பின்னிப் பயனில்லை. இது நிஜ வாழ்க்கை பிரஷ்ஷை வாயில் கவ்வி, புருவத்தை
கழித்து, நந்து ஊக்கம் தேடி சுற்றிலும் பார்த்தான். (அதாவது, மற்றவர் பலூன்களை) சட்டென்று அவன் அந்தப் புகழ்பெற்ற கட்டமிட்ட சட்டையை, சுருட்டைத் தலையை, பெரிய கண்களை கண்டான் மேலும் அக் கண்கள் அவன் மீதே பதிந்திருந்தன.
"அட-அட-அட யார் இந்த ஐந்து புகழ்பெற்ற அதிவேக பினே தான்!" என்று நந்து கேலியாகச் சொன்னான். அதை அவன் உரக்கச் சொன்ன தால், பானேஷ் கேட்டுவிட்டான்.
"ஹலோ, நீ யார்?" என்று அவன் கேட்டான். "நான் தான் நந்து நவாதே" என நந்து உடனடியாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். அதுவே போதுமான அறிமுகம் என அவன் கருதினான். அதிவேக பினே மட்டும் தான் அந்த வட்டாரத்தில் தற்பெருமை பெற்றவன் என்பதில்லையே!
"உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி, மிஸ் நந்தினி நவாதே" என்றான் அதிவேக பினே.
"மிஸ்ஸா என்ன சொல்கிறாய்?" என்று நந்து உறுமினான். முஷ்டியை உயர்த்தினான்.
"ஒ, அடடா! நீ மிஸ் இல்லை-மாஸ்டர் நந்து என்கிறாயா?" என்று பாணேஷ் சிரித்தான். "எனக்கு எப்படித் தெரியும்? இக்காலத்தில் ஏகப்பட்ட பெண்கள் கால்சட்டை அணிகிறார்கள் தங்கள் முடியைச் சிறிதாக வெட்டிக் கொள்கிறார்கள். ஆனால் பையன்கள் உதட்டுச் சாயம் பூசுவதேயில்லை."
"உதட்டுச் சாயமா!" என்று கூறிய நந்து முகம் வெளுத்தான். அவன் ஒரு விரலை உதடுகள் மீது தேய்த்தான். வர்ணபிரஷ்ஷின் வேலையை அறிந்தான்! அவன் உதடுகள் வர்ணத்தால் சிவப்பாகப் பளிச்சிட்டிருக்கும்!
அண்டை அயல் பிள்ளைகள் பலர் கவனித்து நின்றனர். சிலர் வாய் விட்டுச் சிரித்தார்கள். மற்றவர்கள் சிரிப்பை அடக்கிக் கொண்டு வேலை பார்க்கத் திரும்பினர்.
நந்து வெட்கத்தால் குன்றிப் போனான். அவன் குழப்பத்தை அதிகப் படுத்த, மேற்பார்வையாளர் ஒருவர் அங்கே வந்தார். அவர் எல்லோரையும் கண்டித்தார். விசேஷமான கோபத்துடன் நந்து பக்கம் திரும்பினார்.
"நீ ஒவியப் போட்டியில் பங்கு பெறுகிறாயா அல்லது நாடக ஒப்பனையிலா?" என்று கத்தினார்.
"ஸாரி!" என நந்து முனகினான். உதடுகளைத் தன் சட்டைக் கையில் துடைத்தான். "அந்த அதிவேக பினேயை நான் கவனிக்கிறேன்!" என்று தனக்குள் ஆத்திரமாக முணுமுணுத்தான்.
ஒவ்வொருவரும் அவரவர் பலூனில் வர்ணம் தீட்டிமுடித்து, தங்கள் பெயரையும் முகவரியையும் சீட்டில் எழுதி ஒட்டினர். மேற்பார்வை யிடுவோர், பிள்ளைகளைத் தனியே விடுத்து, பலூன்களை ஒரு அறைக்குள் கொண்டு போனார்கள்.
போட்டியாளர்கள் கம்பெனியின் மிகப்பெரிய பலூனைச் சுற்றி ஆர்வத்தோடு குழுமினர். அதை வியப்புடன் பார்த்தபடி சுற்றிச் சுற்றி வந்தார்கள்.
ஒரு பெரும் காற்று, நீலமும் வெள்ளையுமாய் பட்டைகள் தீட்டப்பட்ட அந்தப் பெரிய அதிசயத்தை தொட்டுத் தூக்கியது; அது மேலெழுந்து கீழிறங்கும்படி செய்தது. அதன் மேல் இரண்டே வார்த்தைகள்-'கோகா', 'ஜாக்'-தீட்டப்பட்டிருந்தன. அனைவரும் மேலேயே பார்த்து நின்றனர். பலூனின் அடிப்பக்கம் நடப்பதை ஒருவரும் கவனிக்கவில்லை. பாணேஷசம் மேலே பார்த்தபடியே நின்றான்.
பலூன் கயிறுகள் இரண்டு மூன்று பித்தளை வளையங்களில் இறுகக் கட்டப்பட்டிருந்தன. ஒரே ஒரு குழந்தை தான் அவற்றைக் கவனித்தது. நந்து நவாதே கீழே குனிந்து, கனத்த கயிற்றின் முடிச்சை தளர்த்தினான்.
"கயிறு எவ்வளவு கனம்" என்று அதிவேக பினே சொன்னான்.
"கனமும் உறுதியும். இது நைலான் கயிறு," என்று நந்து தெரிவித்தான். அவன் பாணேஷ் அருகில் நின்றான். "அதை தொட்டுப் பாரேன்."
பாணேஷ் கயிற்றைப் பிடித்தது தான் தாமதம், நந்து முடிச்சை அவிழ்த்து விட்டான். கயிறு நழுவி வெளிப்பட்டது. காற்றின் பெரும் சுழற்சி ஒன்று பலூன் மேலேறி வானில் பறக்கும்படி செய்தது. அதிவேக பினேயின் கை பித்தளை வளையம் ஒன்றில் சிக்கியிருந்தது. அவன் வேகமாக மேலிழுக்கப்பட்டதால் கையை எடுக்க இயலவில்லை. அவன் திகைப்பினால் தனது மறுகரத்தையும் கயிற்றில் அழுத்திக் கொண்டான். தன் பலம் கொண்ட மட்டும் பலூனை கீழே இழுக்க அவன் முயன்றான். ஆனால் அது மேலேறும் வேகம் மிக அதிகம்; அத் தீக்குச்சி பயில்வானின் வீரம் அதை வெல்லமுடியவில்லை. பலூன் ஆகாயத்தில் உயர்ந்து சென்றது-அதில் தொத்திக் கொண்டு அதிவேக பினேயும் போனான்.
அதிவேக பினே திடீரென்று பலூனோடு மேலே சென்றதைக் கண்ட பிள்ளைகளுக்குத் தங்கள் கண்களையே நம்ப முடியவில்லை. அதை அவர்கள் கண்ணால் காணாமலிருந்து, நந்து சொல்லக் கேட்டால், அது அவனது நெட்டைக் கதைகளில் ஒன்று என்றே எண்ணியிருப்பார்கள்.
நந்துவுக்குப் பயத்தால் வாய் உலர்ந்தது. பாணேஷ் பேரில் அவனுக்கு என்ன தான் கோபமானாலும், அவனை வானத்துக்கு அனுப்ப நந்து எண்ணியதேயில்லை. பலூன் பறக்கிற போது பாணேஷ் தொல்லை அனுபவிக்க வேண்டும் என்றே அவன் விரும்பினான். ஏனெனில் பாணேஷ் பித்தளை வளையங்களைத் தொட்டிருந்தானே! நிச்சயமாக அது நல்ல திட்டம் இல்லை தான். பின்னர் அவன் பாணேஷிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வான். மனிதர்கள் தொல்லையில் சிக்கி விழிப்பதை நந்து ரசித்தான். ஆனால் இது எல்லை மீறிவிட்டது.
"அட கடவுளே, அவன் பறந்து போய்விட்டான்"
"அவனைக் கீழே இழுங்கள் கீழே இழுங்கள்!"
"கயிற்றைப் பிடி போலீஸ் போலீஸ் தீ அணைப்புப் படையை கூப்பிடு!"
அங்கு ஏகக் குழப்பம். ஒவ்வொருவரும் பயந்து போய், அடுத்தவருக்கு உத்திரவிட்டு, உபதேசம் பண்ணி, அலைபாய்ந்தனர்.
ஒர்லி கடல்புறம் வழியே ஒடிக்கொண்டிருந்த கார்கள், திடீரென்று போக்குவரத்து விளக்குகள் சிவப்பாய் மாறியதைக் கண்டவை போல், வரிசையாக நின்றுவிட்டன. நூறு கோயில்களில் சங்குகள் முழங்குவது போல் கார் ஊதுகுழல்கள் சத்தமிட்டன.
அதிவேக பினேயைச் சுமந்த பலூன் உயரே உயரே எழும்பிச் சென்றது. மேல்காற்று ஒன்று அதன் நேர்உயரப் பயணத்தை மேற்கு நோக்கி அடித்துச் சென்றது.
எந்தப் பையனின் ரத்தத்தையும் உறையவைக்கக் கூடிய பயங்கரம் அது. அதிவேக பினே எத்தனையோ பயங்கர நெருக்கடிகளை அனுபவித்திருக்கிறான். ஆனால் இதைப் போல் என்றுமே நிகழவில்லை. நீலவானின் வெறும் வெளியில் அவனை எடுத்துச் செல்கிறதே இது.
ஒரு சமயம் யுத்தமுனை ஒன்றில் அவன் பாரசூட் மூலம் கீழே இறங்கியது உண்டு. ஆனால் அது அவன் சுயநினைவோடு செய்தது, அன்னை பூமியை நோக்கி அவன் கீழிறங்குவான் என்ற நிச்சய நினைப்புடன் செய்தது. இப்போது அவனுக்கு அவ்வித நிச்சயம் எதுவுமில்லை. பலூன் அவனை எங்கே எடுத்துச் செல்கிறது-எவ்வளவு தூரம், எவ்வளவு நேரம் போகும்-அது அவனை எங்கே நழுவவிடும் என்பதெல்லாம் கடவுளுக்குத் தான் தெரியும்.
அதிவேக பினேயின் உடம்பில் வேர்த்துக் கொட்டியது. அவன் கீழே பார்த்தபோது, தலை சுற்றியது. அவன் பயந்துவிட்டான். அவன் கார்ட்டுன் படத்தில் வரும் அதிமனிதன் இல்லை. பயந்து நடுங்கும் சின்னஞ் சிறுவன் தான்.
தன் கைகள் மரத்துப்போகத் தொடங்குவதை அவன் உணர்ந்தான். ஒரு கை கயிற்றைப் பற்றியிருந்தது. மறு கை பித்தளை வளையத்தில் சிக்கியிருந்தது. பிடியை விடக்கூடாது, விட்டால் நாசம் தான் என அவன் அறிவான்! தரை மீது விழுந்தால், அவன் சட்னி ஆகிப்போவான். "கடவுளே! என்னைக் காப்பாற்று!" என்று கத்தினான். பலூன்களில் காற்றை மெது மெதுவாக வெளியேற்றுவதற்கு உதவியாக ஒரு அடைப்பு இருக்கும், இணைக்கப்பட்ட கூடை தரையில் இறங்க அது வசதி செய்யும் என்பதை அவன் திடீரென்று நினைத்துக் கொண்டான்.
ஆனால் இது அதைப் போன்ற பலூன் இல்லை. இதில் எந்தவித அடைப்பானும் இல்லை. இதிலிருந்து காற்றை எப்படி அவன் வெளியேற்றுவான்?
அவனிடம் கவனும் சில மிட்டாய்களும் இருந்தன. ஆனால் அவனது இரு கைகளும் சிக்கியிருக்கும் நிலையில் அவன் எப்படி கவணை பைக்குள்ளிருந்து எடுத்து உபயோகிப்பது?
பலூன் நகரக் கட்டிடங்களின் கூரைகள் மேலாக மிதந்து கடல் நோக்கிச் சென்றது. ஹாஜி அலி கோயிலும், கப்பல்களும், நுரை படிந்த அலைகளும் தெரிந்தன.
அவன் கடலில் விழுந்தால், காயம் படும்; ஆனால் உயிர்பிழைக்கலாம். கீழிருந்து எவராவது துப்பாக்கியால் சுட்டு பலூன் வெடிக்கும்படி செய்யலாகாதா என அவன் நினைத்தான்.
அதிவேக பினே தான் மயக்க மடையப்போவதாக எண்ணினான்.
அவன் ஒரு கையால் பித்தளை வளையத்தை இறுகப் பற்றி, மறு கையால் தன் இடுப்புவாரைக் கழற்ற முயன்றான். அது எளிதாக இல்லை. எனினும் சிரமப்பட்டுக் கழற்றினான்.
பாணேஷ் வாரின் நுனியை உறுதியாகப் பற்றி, ஒரு சவுக்கு மாதிரி, ஒங்கி அடித்தான். பளார்! பளார்! பளார்!
வாரின் பூட்டை பலூன் மீது கடுமையாக அடித்தான். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு முறை அடிக்க நேர்ந்தது. பிறகு தான் பூட்டின் ஊசி பிளாஸ்டிக்கில் குத்தியது.
ஒரு துளை பலூனின் பக்கத்தைக் கிழித்தது. காற்று பலத்த ஒசையுடன் வெளியே பாய்ந்தது.
மெதுவாக, ஆனால் நிச்சயமாக பலூன் கீழிறங்கத் தொடங்கியது. கீழே மீன்பிடிக்கும் படகுகளில், மீனவர் கண்கள் கடலின் மீன்கள் மேல் நிலைபெறவில்லை; வானத்தில் மிதந்த துரதிர்ஷ்டசாலிப் பையனையே நோக்கின. அவனுக்கு என்ன நேரும்; அவர்கள் உதவ முடியுமா?
இல்லை. எப்படி முடியும்? கடல் தான் அவர்கள் ராஜ்யம், வானம் இல்லையே.
ஆயினும், பலூன் விழுவதற்காக அவர்கள் இடம் விட்டு விலகி னார்கள். விரைவாக மீன்பிடிவலையை அகலமாகவும் உறுதியாகவும் விரித்துப் பிடித்தார்கள். பையனுக்கிருந்த ஒரே நம்பிக்கை அதுதான்.
பலூான் சரியாக அதனுள் விழுந்தது. வலை தனது இரையைப் பிடித்துவிட்டது.
***
நான் எங்கே இருக்கிறேன்?
இருமல் இருமல் இருமல்! "நீ வீட்டில் இருக்கிறாய்" என்று அத்தை சொன்னாள். "பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று அவர் சொன்னார்."
'அவர்' என்பது அவன் மாமா, ஒரு டாக்டர். அவன் மாமா பம்பாயில் பிரபல டாக்டர் ஆவார்.
"காயப்படவில்லையே, பாணேஷ்?"
"இல்லை. ஆனால் அதை நினைத்தால் எனக்கு வாந்தி வருகிறது. அழுவது யார் அத்தை யாரோ அழுவது கேட்கிறதே."
"உன் நண்பன் தான்."
"யார் அது-நந்து நந்து நவாதே? உனக்கு என்ன வந்தது?"
"பானேஷ், நான் வருத்தப்படுகிறேன். அது என் தவறு தான்."
"உன் தப்பா?"
நந்து தான் செய்ததை சுருக்கமாகச் சொன்னான். "நான் மோசமானவன், கொடியவன், சரியான கழுதை, அதிவேக பினே, என்னை மன்னித்தேன் என்று சொல். எப்படியும் நான் பரிசு பெறப்போவதில்லை. ஆனால் எனக்கே அது கிடைத்தாலும், அதை நான் வாங்கமாட்டேன். சத்தியமாக வாங்கமாட்டேன்!"
பாணேஷ் எழுந்து உட்கார்ந்தான். வியப்போடு நந்துவை நோக்கினான்.
அவ்வேளையில், அவன் மாமா உள்ளே வந்தார். "அபாரம், அதிவேகனே" என்றார். "ஆகவே நீ சுயநினைவோடு இருக்கிறாய். உனக்குத் தெரியுமா, நீ கீழே விழந்தாயே அந்த நேரத்தில் விழாமல் இருந்திருந்தால், விமானப் படை உன்னை மீட்பதாக இருந்தது! அதற்கு ஏற்பாடு பண்ணும் படி சகல இடங்களிலிருந்தும் போனில் சொன்னார்கள். இன்னும் என்ன தெரியுமா? இப்ப தான் கோகா கம்பெனியிலிருந்து போன் வந்தது. அவர்கள் உனக்காக ஒரு விசேஷப் பரிசு அறிவித்திருக்கிறார்கள். ஜாக் இருமல் மருந்துக்கு இப்படிப்பட்ட விளம்பரம் அவர்களுக்கு இதுவரை கிடைத்ததேயில்லை."
"நியாயப்படி அந்தப் பரிசு எனக்கு வரக்கூடாது; நந்து நவாதேக்கே அது உரியது!" நந்துவின் கண்களில் நீர் நிறைந்தது; பாணேஷின் கண்கள் குறும்போடு மின்னின.
(மராட்டிக் கதை)
சொர்க்கத்துக்கு ஏழு படிகள்
எஸ். கே. ஆச்சார்யா
ஒரு நாள் நான் செய்திப்பத்திரிகையை புரட்டிய போது, பின்வரும் வார்த்தைகள் என்னை கவர்ந்தன.
"ஹலோ, இளைஞர்களே! நீங்கள் விண்வெளி வீரர்கள் ஆக ஆசைப்படுகிறீர்களா?"
நான் உணர்ச்சியோடு துள்ளிக் குதிப்பதற்கு இருந்தேன்; என் கண்கள் அச்சு எழுத்துக்களில் தயங்கின. உண்மையில் அது ஒரு விளம்பரம் தான்!
நான் தொடர்ந்து படித்தேன்:
"ஸாமந்தா சந்திரசேகர் விண்வெளி ஆய்வு நிலையம், பம்பாய்-1, விண்வெளி வீரர்களை நாடுகிறது! விண்வெளிப்பயணிகள் ஆக விரும்பும் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்....
"ஸாமந்தா சந்திரசேகர்? இந்தியாவின் பெரிய வானசாஸ்திரி! ஒரு மூங்கில் குழாயின் துணையோடு வானமண்டலத்தை ஆராய்ந்து, நவீன விஞ்ஞானி மிகச் சக்தி வாய்ந்த துாரதரிசினி மூலம் காண்பது போல், நட்சத்திரங்கள் பற்றிய அனைத்தையும் சரியாக முன்கூட்டியே சொன்ன விஞ்ஞானி அல்லவா அவர்?"
நான் பலமாகத் தலையை ஆட்டினேன். பேனாவும் தாளும் தேடினேன்.
அன்று காலையில், கல்லூரி வளாகத்தில் நின்ற ஒரு பெரிய மாமரத்தில் அறையப்பட்டிருந்த அஞ்சல் பெட்டிக்குள், பம்பாய் விலாச மெழுதிய ஒரு கடிதத்தை நான் போட்டேன்.
அச்சமயம் நான் ஒரு கல்லூரி மாணவன். அதைவிட முக்கியம், வட்டார பறக்கும் சங்கத்தில் நான் ஒரு உறுப்பினன், சிறு விமானத்தை ஒட்டுவதற்கான லைசென்ஸ் எனக்கு வழங்கப்பட்டிருந்தது. பழக்கமான நீலவானம் இப்போதெல்லாம் என்னை வசீகரிக்கவில்லை. விண் வெளியில் பறக்க நான் ஆசைப்பட்டேன். ஆனால், அந்தோ, விமானம் ஒரு ராக்கெட் இல்லையே. பூமியின் வானமண்டலத்தைக் கடந்து, விண் வெளி என அழைக்கப்படும் இனம்புரியா இருட்டினுள் புகுவதற்கு ஒருவனுக்கு ராக்கெட் தேவை.
நான் ராக்கெட்டுகள் பற்றிக் கனவு கண்ட சமயத்தில் தான் என் பார்வையில் பத்திரிகை விளம்பரம் பட்டது.
எனக்கு அழைப்பு வந்ததும் நான் பம்பாய் போனேன்.
அவ்வேலைக்கு விண்ணப்பித்தவர்கள் வரிசையை கண்டதும் என் உற்சாகம் குன்றியது. நாட்டின் நாலு மூலைகளிலிருந்தும் அவர்கள் வந்திருந்தனர். நான் அவர்களுடன் கைகுலுக்கியபோது என் உள்ளம் படுத்துவிட்டது. அவர்கள் அனைவரும் சரியான ராட்சதர்களாகத் தோன்றினார்கள்-உடலைப் பேணியவர்கள், மல்யுத்த வீரர்கள், பளு தூக்கும் பயில்வான்கள்! ஒப்பு நோக்கினால் நான் சரியான நோஞ்சான்.
ராட்சதர்கள் என் கையைக் குலுக்கி, என்னை மேலும் கீழும் பார்த்து, கேலியாகச் சிரித்தார்கள். நான் நெட்டையன் இல்லை, எனக்குத் தெரியும். ஆனால் அவர்கள் வெறுப்பு என்னை நெஞ்சு நிமிர வைத்தது.
எனது தகுதிகளை நான் என் மனசில் கணக்கிட்டேன். நான் நல்ல விளையாட்டு வீரன். ஆண்டு தோறும் கல்லூரியில் நான் பரிசுகள் பெற்றிருந்தேன். ஆனால், அது பொருத்தமில்லாத விஷயமாகலாம். நான் வேறொரு தகுதியும் பெற்றிருந்தேன். பல வருடங்களுக்கு முன் ஒரு ஆசிரியரிடம் நான் பிராணாயாமம் மற்றும் ஆசனங்களில் கடுமையான பயிற்சி பெற்றிருந்தேன். மூச்சுவிடுவதையும் உட்காருவதையும் கட்டுப்படுத்தும் இப்பயிற்சிகள் பண்டைய ரிஷிகளிடமிருந்து வந்தவை. இந்தப் பயிற்சி எனக்கு நம்பிக்கை தந்தது. ராட்சதர்களோ, ராட்சதர்கள் இல்லையோ அவர்களிடையே என்னால் தாக்குப் பிடிக்க முடியும்.
டாங்! எங்கோ மணி அடித்தது. டாக்டர் போல் உடை தரித்த ஒருவர் திடீரென வந்தார். எங்களை சோதனைப் பிராணிகளைப் போல் ஒரு ஆய்வுக் கூடத்தினுள் இட்டுச் சென்றார்.
கையை நீட்டி, அவர் சொன்னார்: "இந்த பெட்டிகளைப் பாருங்கள்" - சொர்க்கத்துக்கு இட்டுச் செல்லும் ஏழு படிகள். இவற்றில் நீங்கள் ஏறமுடிந்தால், நீங்கள் சொர்க்கத்தின் கதவை, ஏன் அதற்கு அப்பாலும் கூட, தட்ட இயலும். ஆரம்பப்பயிற்சியில் வெற்றி பெறும் நபர் விண்வெளியில் பறப்பதற்குத் தேர்வு செய்யப்படுவார். இப்போ பாருங்கள்."
டாக்டரின் செயல் விளக்கத்தைப் பின்பற்றுவதற்கு முன்னரே, நான் இனம்புரியாப் பகுதிக்குள் தள்ளப்பட்டேன்.
ஒரு கதவு அடைபட்டது. சட்டென்று ஒரு சிவப்பு விளக்கு அணைக்கப்பட்டது. நான் விழுவதை உணர்ந்தேன். ஒரு பூதத்தின் வயிற்றுக்குள் நேராக விழுந்தேன்! எங்கும் கும்மிருட்டு ஆழ்ந்த மெளனம்! என் முதுகந்தண்டில் ஒரு நடுக்கம் கண்டது. பூதத்தின் திடீர்த் தொடுதல் என்னை அச்சுறுத்தியது. நான் கிட்டத்தட்ட மயங்கிவிட்டேன். ஆனால் எனக்கு சிறு பிராயக் கதை ஒன்று நினைவு வந்தது. இருட்டினுள் நோக்கியபடி எனக்கு நானே முணுமுணுத்தேன், "நினைவு கொள்! நீ தான் துருவன், புராதன இந்தியாவின் குழந்தை ரிஷி".
இதன் பின் சற்றே தெம்படைந்தவனாய் சுற்றிலும் தடவினேன். ஒரு நாற்காலியை உணர்ந்தேன். அதில் அமர்ந்தேன். என் மூச்சைக் கட்டுப்படுத்தி, தியானம் பண்ணலானேன். என்னை நானே கட்டுப்படுத்திக் கொள்ள முடிந்தது. பெட்டியில் நிறையக் கம்பிகள் தொங்கின. வெளியே நின்று கவனிக்கும் டாக்டருக்கு அவை என் இயக்கங்களைக் காட்டிக் கொடுக்கும் என நான் அறிவேன். உளவு அறியும் எலெக்ட்ரானிக் கம்பிகள், நான் ஒரு கோழை-விண்வெளி என அழைக்கப்படும் மர்ம இருட்பகுதியின் கருமையையும் மெளனத்தையும் கண்டு நான் அஞ்சு கிறேன் என்று புலப்படுத்துவதை நான் விரும்பவில்லை. இல்லை. நீ துருவன் மட்டுமில்லை. விண்வெளியாளன் ஆவதற்கான முதல் சோதனையில் முனைந்துள்ள நவமனிதனும் ஆவாய்!" என்று எனக்குள் மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டேன்.
முடிவற்ற நீண்ட இரவில் நான் இரண்டு முறை தான் என் ஆசனத்தை விட்டு நகர்ந்தேன். ஒருமுறை நான் பசியை உணர்ந்தபோது பெட்டியில் பார்த்தேன். பால் என்ற சீட்டு ஒட்டிய ஒரு புட்டியை கண்டேன். பிரெய்ல் எழுத்துக்களைப் படிக்கும் ஒரு குருடன் போல, நான் படித்த எழுத்துக்களின் செய்தியைத் தெளிவாக அறிந்தேன். எனக்காக உணவு இருந்தது. நான் பாலைக் குடித்தேன்.
இரண்டாம் முறை சிறுநீர் கழிக்க எழுந்தேன். அதற்காக இருந்த ஒரு சட்டியைக் கண்டேன்.
பூதப்பெட்டி எப்போது திறந்தது, டாக்டர் எப்ப வந்தார் என்பது சரியாக எனக்குத் தெரியாது. வெளிப்புற வெளிச்சமும் ஒசைகளும் திடீரென நான் மீண்டும் தரை மீது இருப்பதை உணர்த்தின. நான் ஆனந்தத்தால் கூவினேன். நான் நிச்சயமாக பூமிக்கு அப்பால் ஆயிரம் வருடங்கள் இருந்திருக்கிறேன்!"
ஆனால் டாக்டர் அழுத்தமாய்ச் சொன்னார்: "நாற்பத்தெட்டு மணி நேரம் தான் இருந்தாலும், நல்ல ஆரம்பம்."
மறுமுறை, டாக்டர் என்னை பூதத்திடம் தள்ளியது மட்டுமின்றி என்னோடு சாத்தானையும் சேர்த்தார். 2-ம் நம்பர் பெட்டியில் சாத்தான் நீண்ட கையுடன் இருந்தான். டாக்டர் அதில் என்னைக் கட்டினார். பிசாசின் சக்கரத்தில் படுக்கை போல் அமைந்த சட்டத்தில் நான்
விழுந்தேன். சக்கரம், மூச்சுமுட்டும் வேகத்தில், வட்டமிட்டுச் சுழன்றது. ஒருவனை இடுப்பில் நீண்ட கயிற்றை கட்டி அவன் கெஞ்சி அழுகிற வரை, ஆகாயத்தில் சுழற்றுவது போல் அது இருந்தது!
எனினும், சாத்தான் அப்படி என்னைச் சுற்றுவதற்கு முன், டாக்டர் எனக்கு ஒரு யுக்தி கூறினார்.
அவர் சொன்னார்: "பார், இதோ ஒரு ஸ்விச் அதை அமுக்கினால், தானாக விளக்கு அணைந்து மறுபடியும் எரியும். சாத்தான் கையில் பத்திரமாக இருப்பதை நீ உணரும் வரை, சுழற்சியைத் தாங்க முடிந்த வரை, ஸ்விச்சை அமுக்கிக் கொண்டே இரு நீ அதிக வேகத்தை, அதிக வேடிக்கையை விரும்புகிறாய் என்று அது எங்களுக்கு அறிவிக்கும். விளக்கு அணையாவிட்டால் நீ தோற்றுவிட்டாய் என அறிவோம். அவ்வளவுதான்!"
டாக்டரின் வார்த்தை ஒடுங்கியது. எங்கோ ஒரு மிஷின் இரைந்தது. திடீரென ஏதோ ஒன்று என் இதயம் நோக்கித் தாவுவதை உணர்ந்தேன். அது சாத்தானாகவே தான் இருக்கும் அடுத்து, என் நெஞ்சு இறுக்கப் படுவதை உணர்ந்தேன். ரத்தம் என் தலைக்குப் பாய்ந்தது. ரத்தம் உருகிய ஈயம் போல்-கனமாய், சூடாய்-மாறிவிட்டதாகத் தோன்றியது! பிறகு, நிஜமாகவே ஒரு யானை என் மார்பு மேல் உட்கார்ந்திருப்பதாக எண்ணினேன்.
மிக வதைக்கிற வேதனையையும் சித்திரவதையையும் நான் தாங்கிக் கொண்டேன். ஆனாலும் என் கையிலிருந்த ஸ்விச்சை அழுத்தியவாறு இருந்தேன். காலம், இடம் பற்றிய பிரக்ஞையே எனக்கு இல்லை.
முடிவாக, சாத்தானின் சக்கரம் நின்றது. டாக்டர் எட்டிப் பார்த்தார்.
"ஹலோ, இன்னும் நீ இருக்கிறாயா?" என்று அவர் கேட்டார்.
"மணிக்கு எழுபதாயிரம் மைல் வேகத்தில் நீ போனாய்.... நேர் கோட்டிலே தான்!” என்றும் சொன்னார்.
டாக்டர் என்னை அடுத்த கட்டத்துக்கு-மூன்றாவது பெட்டிக்குஇட்டுச் சென்ற போது, நான் எனக்கு பிராணாயாமம் கற்பித்த என் குருவை எண்ணினேன்.
அந்தப் பெட்டிக்கு அரக்கு வீடு எனப்பெயர். அப்பெயரைக் கேட்டு நான் திடுக்கிட்டேன். அங்கே எனக்கு என்ன நேரும் என நான் அறிவேன். புராணக் கதையில், பஞ்ச பாண்டவர்களை ஒருசமயம் அவர்களின் எதிரிகளான கெளரவர்கள் அறக்கு மாளிகையில் வைத்து, அதைத் தீ யிட்டுக் கொளுத்தினார்கள். என்னை டாக்டர் பெட்டிக்குள் தள்ளி, கதவை அடைத்ததும், எனக்கும் அதேபோன்ற விதி காத்திருப்பதாகக் கருதினேன்.
என் பயம் சரிதான் எனத் தெரிந்தது. பெட்டி வரவரச் சூடேறியது. ஆனால் நான் அமைதியாக இருக்க வேண்டும்-பரபரப்புக் கூடாது!
உஷ்ண அலைகள் கடுமையாக என் முகத்தைத் தாக்கின. வேர்வை என் உடலில் பெருக்கெடுத்தது. நான் மழையில் நனைந்தது போலானேன். நான் கூடியவரை அமைதியாக இருந்தேன். நான் ஒரு விண்வெளியாளன்: என் விண்வெளிக்கப்பல் நெடுந்துாரம் பறந்து விட்டுத் திரும்புகிறது என்று கற்பனை செய்தேன். பூமியின் வாயு மண்டலத்தில் அது மிண்டும் பிரவேசிக்கிறது; அதன் முகம் காற்றை இடித்து உரசுகிறது. அந்த உராய் வின் வேகத்தில் அதில் தீப்பிடித்துள்ளது. திடீரென தீ நாக்குகள் என் முகத்தில் படிவதை உணர்ந்தேன்!
இறுதியாக டாக்டரின் குரல் கேட்டது:
"108 உஷ்ணம் தான் அதிகம் இல்லை! அடுத்த சோதனைக்குத் தயாராகு!"
நாத கிரகம்-ஒலி வீடு-என்ற அடுத்த பெட்டிக்குள் அவர் என்னைத் தள்ளினார்.
அப்படிப்பட்ட வெறித்தன ஒலிகளை-கூச்சல்கள், விம்மல்கள், படார் ஒசைகளை-ஒரே சமயத்தில் அதுவரை நான் கேட்டதேயில்லை ஆயிரம் ரயில் என்ஜின்கள் வேகமாக ஒடுவது போல், அவற்றின் விசில்கள் நீண்டு கத்துவது போல்-ஒசையிட்டன. பிசாசுகளின் சங்கீதம்!
அன்பான டாக்டர் என்னை உள்ளே விடும் முன் என் காதுகளில் அடைப்புகள் செருகினார். ஆனாலும் கூட, ஒசைகள் இரக்கமின்றி என்னைத் தாக்கின. நான் நடுங்கினேன். என் தலைமயிர், எலெக்ட்ரிக் ஹீட்டரின் கம்பிகள் போல், மிகச் சூடேறுவதை உணர்ந்தேன். ஒசையின் அளவு அதிகரித்தவாறு இருந்தது. உந்து களத்திலிருந்து மேலே அனுப் பப்பட்ட ஒரு ராக்கெட்டில் நான் இருப்பதாக நினைத்தேன்.
டாக்டர் என் பெட்டியில் புகுந்ததை நான் பார்க்கவில்லை. "அடுத்த கட்டத்துக்கு நீ தயாரா?” என்று அவர் கேட்டார்.
நான் மெதுவாய் எழுந்தேன் தீநடுவே தியானம் பண்ணும் ஒரு ரிஷி மாதிரி நான் என் இருக்கையில் அமர்ந்திருந்தேன்.
எனது அடுத்த இரு சோதனைகள், மேலும் விசித்திரமான இரண்டு பெட்டிகளில் நிகழ்ந்தன. ஐந்தாவது பெட்டியை நடனப் பெட்டி என டாக்டர் கூறினார். அதனுள் நுழைந்ததுமே, நான் கீழே தள்ளுண்டேன். நான் சரியாக எழுந்து நிற்பதற்கு முன் மறுபடியும் தள்ளப்பட்டேன். பிறகு பெட்டி சுற்றிச் சுழலத் தொடங்கியது; அவ்வப்போது கரணம் அடித்தது! பெட்டி நடனமிடுகையில், என் உடலும் அதனோடு நாட்டியம் ஆடியது. இறுதியில், அது நின்றது. இருப்பினும், நான் என் கால்களைப் பலமாக ஊன்றி நின்றேன். என் தலை சுற்றவில்லை. நான் தெளிந்த மதியுடனேயே இருந்தேன். எப்பவும் ஒரு விண்வெளியாளன் போல் நான் தலை நிமிர்த்தே இருக்கவேண்டும் இல்லையெனில், நான் ஒரு விண்வெளிக் கப்பலை ஒட்டிச் செல்கையில், திசைத்தடுமாற்றம் ஏற்பட்டால், அந்தக் கப்பலை நான் தவறான பாதையில் திருப்பி விடக்கூடும்.
அடுத்த பெட்டி இன்னும் விசித்திரமானது. அதில் நுழைந்ததும், அது என் உடல் கனம் முழுவதையும் உறிஞ்சிவிட்டது. அதனால் தான் அதை கனமின்மைப் பெட்டி என டாக்டர் குறிப்பிட்டார்!
அது மிக விந்தையான அனுபவம். ஒரு கணம் சென்றதும், எனக்கு சீக்கு ஏற்படும் உணர்வு. எனினும், விண்வெளிக்கப்பலில் இருந்ததாக நான் கற்பனை செய்தேன். விண்வெளியில், மனிதன் எடையில்லா ஒரு உலகில் வாழ வேண்டும். அங்கே, அவன் உடல் கனம் இல்லாது இருக்கும்!
பெட்டி திறந்தது. நான் பிராணாயாம நிலையில் இருந்ததை டாக்டர் கண்டார்.
கடைசிப் பெட்டி, சொர்க்கத்துக்கு ஏழாவது படி, மட்டுமே எஞ்சி யிருந்தது. மிகக் கடினமானது. ஆனால், உண்மையிலேயே விண் வெளியில் இருப்பது போன்றது.
டாக்டர் என்னை விண்வெளி உடையும் முகமூடியும் அணியச் செய்தார். நான் விசித்திரமாக, விண்வெளியாளர் படங்களில் காட்சி அளிப்பது போல், தோன்றியிருக்க வேண்டும்.
டாக்டர் என்னை பிராணவாயுக் கூடாரத்தில் இட்டு, "ஆழ்ந்து சுவாசி. உனக்கு பிராணவாயு நிறைய தேவைப்படும்!" என்றார்.
பிறகு, ஒரு பையை என் முதுகின் மேல் போட்டார். சில குழாய் களையும் திருகாணிகளையும் நோண்டினார். இப்ப உள்ளே போ. காற்றில்லா விண்வெளியில் நீ எவ்வளவு உயரம் போகமுடியும் என்று பார்ப்போம்!" என்றார்.
அந்தப் பயங்கரப் பெட்டியுள் நான் போனேன். அங்கே நான் சுவாசிக்க துளிப் பிராணவாயுகூடக் கிடையாது என நான் அறிவேன்.
மறுகணம், இரைச்சல் கேட்டது. ஒரு குழாய் என் பெட்டியிலிருந்த காற்றை மெதுமெதுவாய் உறிஞ்சி எடுத்தது. என் விண்வெளி உடை உப்பத் தொடங்கியது. எனக்கு மூச்சு முட்டியது. உண்மையில், உப்பிய விண்வெளி உடை என் உடம்பைப் பாதுகாத்தது!
இந்நேரத்தில், நான் என் முகமூடி வழியே இரண்டு விஷயங்களைக் கவனித்தேன். கடியாரம் போன்ற ஒரு தகடை நான் பார்த்தேன். அதில் ஒரு முள் சில எண்களைச் சுட்டியது. நான் கவனிக்கையில் அந்த முள் நகர்ந்தது-ஏதோ பத்தாயிரத்திலிருந்து இருபது ஆயிரத்துக்கு திடீரென்று அது முப்பதுக்குத் தாவியது, மேலும் உயர்ந்தது.
அந்த முள் மணி காட்டவில்லை; உயரத்தைக் காட்டியது.
பிறகு என் கண்கள், முகமூடிக்குப் பின்னிருந்து, என் இருக்கையின் அருகே இருந்த ஒரு விந்தைப் பொருளைக் கண்டன. அது நீர் நிறைந்த ஒரு தம்ளர் போல் அபாயம் இல்லாது தோன்றியது. கடியாரமுள் வட்டத்தில் மெதுவாக மேலே நகர்ந்து கொண்டிருந்தது. திடீரென்று, எனக்கு வியப்பு எழ, தம்ளரிலிருந்த தண்ணிர் கொதிக்கத் தொடங்கியது. பின் அது ஆவியாக மாறி, நீராவிப் படலமாகியது.
நான் கடியாரத்தைக் கவனித்தேன். முள் அறுபது ஆயிரத்தைக் கடந்து செல்ல இருந்தது.
நான் நிஜமாக கடல் மட்டத்துக்கு மேல் அறுபது ஆயிரம் அடி உயரத்தில் இருந்தேனா?
ஆனால் என் பெட்டி தரைக்கு மேலே ஒரு அடி உயரத்தில் கூட இல்லை. அது காற்றை உறிஞ்சிய குழாயின் வேலை தான். இத்தனை நேரமும் அது என் காதுக்குள் இரைந்து கொண்டேயிருந்தது. என்னைச் சுற்றியிருந்த சூன்யத்தின் அளவை எனது விண்வெளி உடை காட்டியது. அவ் வெறுமை நிலையில் நீர் ஆவியாக மாறியதில் வியப்பில்லை. வாயு அரிதாகிவிட்ட அச்சூழ்நிலையில் நீர் தனது திரவத்தன்மையைக் கொண்டிருக்க இயலாது தான்.
முள் எழுபத்தைந்துக்கு நகர்ந்தது. அதாவது நான் கடல்மட்டத்துக்கு மேலே எழுபத்தையாயிரம் அடி உயரத்தில் இருந்ததாக அர்த்தம் அந்த நினைப்பே என் தலையைச் சுழலவைத்தது.
திடீரென எனக்கு ஒரு குறும்பான எண்ணம் எழுந்தது. கொஞ்சம் வேடிக்கை பண்ண நினைத்தேன். என் வலது கையின் உறையை கழற்றினேன். ஆனால் நடந்ததைக் கண்டு நான் நடுங்கிப் போனேன்.
என் கை ஒரு பூசனிக்காய் பருமன் வீங்கிவிட்டது தம்ளரில் இருந்த தண்ணிர் போல், எனது ரத்தம் சருமத்தை வெடித்துக் கொண்டு வெளிப் பட்டு ஆவியாக மாற முயன்றதாகத் தோன்றியது!
நடந்ததை டாக்டர் பார்த்திருக்க வேண்டும். ஒரு இரைச்சலோடு காற்று என் பெட்டிக்குள் புகுந்தது. காற்றை உறிஞ்சும் குழாய் மெளனமாயிற்று. என் விண்வெளி உடை தளர்ந்தது. எனது கை தன் இயல்புக்கு மாறியது. அது காப்பாற்றப்பட்டது. என் உயிரும் காப்பாற்றப்பட்டது.
நான் இறுதியாக விடுதலை பெற்றதும் டாக்டர் எனக்கு சரியான டோஸ் கொடுத்தார். அவரது திட்டுதலை நான் சந்தோஷமாக ஏற்றேன் பிறகு கேட்டேன்: "விண்வெளி உடை இல்லாமலே விண்ணகம் சென்ற ஒரு இந்தியனை உங்களுக்குத் தெரியுமா?"
டாக்டர் என்னைப் பார்த்து விழித்தார். "யுதிஷ்டிரன்! பாண்டவரில் மூத்தவர்!" என்று கூறி நான் பெருமையோடு என் நெஞ்சை நிமிர்த்தினேன். இதைக் கேட்டதும் டாக்டரின் கண்கள் ஒளிபெற்றன. என்னை நோக்கி அன்பாகக் கண்சிமிட்டி அவர் சொன்னார்: "நல்லது ரொம்ப நல்லது, பையா! நீ தேர்வு செய்யப்பட்டிருக்கிறாய்-யுதிஷ்டிரன் போல் நீயும் சோதனைகளில் வெற்றி கண்டாய்".
நூறு விண்ண்ப்பதார்களில் மூன்று பேர் மட்டுமே தேர்வு செய்யப் பட்டனர். அவர்களில் ராட்சதர் எவரும் இலர்.
"ராட்சதர்களுக்கு என்ன ஆயிற்று?" என்று கேட்டேன்.
"எங்களுக்கு ராட்சதர்கள் தேவையில்லை!" என்று வெடித்தார் டாக்டர். "உன்னைப் போன்ற சாதாரண இளைஞர்களையே நாங்கள் தேடுகிறோம்."
ஆம், நான் ஒரு சாதாரண மனிதன், மிகச் சாமான்யன், ஆனால், நான் திரும்பி, அனைத்தையும் என் குருவிடம் கூறிய போது, அவர் புன்னகைத்தார். சொன்னார். இது ஒன்றும் புதிதல்ல, என் சிறுவனே! உன் உடலை, உள்ளத்தை, ஆத்மாவை நன்றாக அறிந்துகொள். உலகம் சாமான்யர்களிடம் அலுப்புக் கொண்டிருக்கிறது. மேலும் மேலும் அதிமனிதர்கள் தாம் அதற்குத் தேவை."
(ஒரியாக் கதை)
பம் பகதூர்
குருபக்ஷ் சிங்
பம் பகதூர் என்ற யானையின் மாவுத்தன் மத்தாதின், யானை நாளுக்கு நாள் அடங்காப்பிடாரியாக ஆகிக் கொண்டு வருவதாக இளவரசனிடம் முறையிட்டான். அதன் துணைக்கு சீக்கு. எனவே, டாக்டரின் உத்திரவுப் படி அதை அதன் ஜோடியிடமிருந்து பிரித்து வைத்திருந்தார்கள். ஆனால், ஒவ்வொரு நாள் மாலையிலும் அதன் துணையை அதனுடன் உலாவ அழைத்துப் போகாவிடில் பம் பகதூர் அட்டகாசம் செய்தது; கர்ஜித்தும் பிளிறியும் களேபரப்படுத்தியது. அதன் துணையை அதனுடன் இட்டுச் சென்றால் அது துணைக்குத் தொல்லை தந்தது. துணையின் முதுகில் தன் தும்பிக்கையைத் தூக்கிப் போடாமல் அது வெளியே நகர மறுத்தது. மத்தாதின் பம் பகதூரைக் கண்டித்தால், அது தன் கோபத்தை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்தியது.
"கவலைப் படாதே, மத்தாதின்" என்று இளவரசர் மாவுத்தனைத் தேற்றினார். "நம் பம் பகதூர் தன்னை ஆடம்பரமாகக் காட்டிக் கொள்ள ஆசைப்படுகிறது. சிறிது காலமாக அந்த வாய்ப்பு அதுக்குக் கிடைக்க வில்லை. அடுத்த புதன்கிழமை, நான் என் புது மனைவியை அவளது புது வீட்டுக்கு அழைத்து வருவேன். அப்போ நீ பம் பகதூரை தடவுடலாக அலங்கரித்து, ரயில் நிலையத்துக்கு இட்டு வா. நாங்கள் அதன் மீது அமர்ந்து அரண்மனை சேர்வோம்."
பம், அதன் பெயருக்கேற்றபடி வீரமான யானை மட்டுமல்ல; மிகப் பெருமை உடையதும் கூட. அதன் இந்தக் குணத்தை இளவரசர் மிகப் பாராட்டினார். அரசு விழா மற்றும் ஊர்வலங்கள் அனைத்திலும், பம் பகதூர் கவனத்துக்கு உரியதாகத் திகழ வேண்டும் என்பதில் மகாராஜா அதிக அக்கறை காட்டினார். பூரண அலங்காரம் பெற்ற நிலையில் அதன் போக்குகள் நிறைவுற்று விளங்கும். சிறந்த பயிற்சி பெற்ற படைவீரன் அணிவகுப்பில் நடப்பதை விட உயரிய முறையில் அது நடந்து கொள்ளும். ஆனால் அதே பம் பகதூர் லாயத்தில் பெரும் தொல்லை செய்யும் மனித சுபாவங்களைக் கண்டறியும் அதீத உள்ளுணர்வு அதுக்கு இருந்தது. அதனால், பாதுகாப்பாளனின் சின்னஞ்சிறு குறை அல்லது ஒழுங் கீனமான செயல் கூட அதன் கோபத்தை வெகுவாகக் கிளறிவிடும்.
சில சமயம் பணியாளர்கள் பேசிக் கொள்வார்கள்: "பம் நல்ல யானை தான். ஆனால் மாவுத்தன் அதன் தீனியிலிருந்து திருட ஆரம்பித்த நாள் முதலாக, அது அவன் பேரில் வஞ்சம் கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் மிக நேர்த்தியான யானை என்ற பெருமையைக் கேட்பதில் பம் சந்தோஷப்படுமே."
இளவரசர் தன் புது மணப் பெண்ணுடன் உதயப்பூரிலிருந்து திரும்பி வந்தார். ரயில் நிலையம் விழாக்கோலம் பூண்டிருந்தது. சாலை நெடுக நீண்ட கார் வரிசை குதிரைப் படையினர், தங்கள் எடுப்பான உடைகளோடு, அராபியக் குதிரைகள் மேல் மிடுக்காக அமர்ந்திருந்தனர். அணிகள் அனைத்தும் பூண்டு பம் பகதூர் நின்றது. மின்னும் பெரும் கவசம் அதன் பின்புறத்தை மறைத்திருந்தது. பொன்மய அம்பாரியில் கோர்க்கப் பட்டிருந்த சிறு பொன்மணிகள் கிணுகினுத்தன. அதன் தந்தங்களில் கூடத் தங்கத் தகடுகள் மிளிர்ந்தன. அதன் முதுகில் மத்தாதின், தான் இருந்த உயரத்தை உணர்ந்தவனாய், கீழே நின்ற கூட்டத்தை பார்த்திருந்தான்.
இளவரசரும் அவரது மகாராணியும் அம்பாரியில் ஏறிய போது கூட்டம் ஆரவாரம் செய்தது. பம் பகதூர் தன் துதிக்கையை உயர்த்தி வணங்கியது. ஊர்வலம் தொடங்கியது. பம் ராஜகம்பீரத்துடன் நடந்தது. அதனிடம் சதா குறைகண்ட மத்தாதின் கூட மனநிறைவு பெற்றான். மிக்க நளினத்துடன் ஆடி அசைந்து சென்ற பம் பகதூர், தன் முதுகில் சுமந்து வந்த அரச தம்பதிகளை அரண்மனை முன்வாசலில் இறக்கியது.
தன் மணமகளை விருந்தினருக்கு அறிமுகப்படுத்துமுன், இளவரசர் தன் யானையிடம் பேசினார்: "பம் பகதூர், இது உன் புதிய மகாராணி, நீ என்னைவிட அதிக ஆவலோடு இவளை எதிர்பார்த்திருக்கலாம்." பம் பகதூர் துதிக்கையை உயர்த்தி மகாராணிக்கு வணக்கம் செலுத்தியது.
அழகு மிக்க மகாராணி அன்பின், பிரியத்தின் அவதாரமாக விளங்கினாள். அவள் ஏறத்தாழ இளவரசர் உயரம் இருந்தாள். அகன்ற நெற்றியும், திரண்ட உதடுகளும் பெற்ற அவள் கண்கள் பெரியவை, கருமையானவை, ஒளிநிறைந்தவை. அவள் விழிகளால் பார்த்தது போலவே, அவற்றால் பேசவும் செய்தாள். யார் மீது அவள் பார்வை பட்டாலும் சரி, அவர்கள் முற்றிலும் வசியமானார்கள். நன்கு சுருதி மீட்டிய சிதார் வாத்தியத்தை லேசாகத் தொட்டு இசை எழுப்பும் திறனுடைய இறகு போலவே அவையும் இருந்தன.
அழகுக்கு வணக்கம் செலுத்துவது போல் பம் பகதூர் துதிக்கையைத் தூக்கியது.
"பம் யானை மட்டுமல்ல. என் நண்பனும் கூட. நாங்கள் ஒரே நாளில் பிறந்தோம்" என்று இளவரசர் கூறினார்.
மகாராணி கரம் கூப்பி பம் பகதூரின் வணக்கத்தை ஏற்றாள். வம் பகதூர் தன் துதிக்கை நுனியால் அவற்றை லேசாய்த் தொட்டது. பிறகு, பயிற்சி பெற்ற ராணுவ வீரன் போல், சீராக நின்றது; அதன் கண்கள் மகாராணி மேல் நிலைபெற்றிருந்தன.
பம்மின் இதயத்தில் பெருகிய உணர்ச்சியை இளவரசர் உணர்ந்தார். "நமது பம், யானையின் உடலைப் பெற்றிருந்தாலும், ஒரு காதலனின் உள்ளம் அதுக்கு இருக்கிறது. அதுக்கு கண்டுணரும் சக்தி, முக்கியமாக அழகு முகங்களை அறியும் சக்தி, இருக்கிறது" என்று இளவரசர், மகாராணியைக் குறும்பாகப் பார்த்தபடி, முணுமுணுத்தார்.
மகாராணி தன் கண்களை இளவரசன் மீதும், பிறகு பம் மேலும் திருப்பினாள். இருவர் கண்களிலும் காதலின் ஒரே செய்தியைக் கண்டறிந்தாள் களிபெருவகை கொண்டாள்.
பல நாட்கள் இளவரசர் திருமண வைபவங்களில் ஈடுபட்டிருந்தார். அதனால் வாரம் ஒரு முறை சென்று யானையைப் பார்ப்பதை தவற விட்டார். இதற்கிடையே பம் பகதுருக்கு அதன் மாவுத்தனிடமிருந்து மனக்குறை அதிகரித்து வந்தது. மாவுத்தனது கட்டளைகளில் அது எரிச்சலுற்றது. அது மெலியலாயிற்று. காரணம், வழக்கமாக அது பெறக் கூடிய தீனி குறைந்து வந்தது தான்.
தக்க தருணம் பார்த்து, மத்தாதின் பம் பகதூரின் வளர்ந்துவரும் துர்க்குணம் பற்றி இளவரசரிடம் மீண்டும் முறையிட்டான். அதை மிருகக் காட்சி சாலைக்கு அனுப்ப வேண்டும் என யோசனை கூறினான். அதன் இடத்துக்கு அங்கிருந்து வேறு ஒரு குட்டி யானையைக் கொண்டு வந்து, அரச யானைக்கு உரிய பணிகளை உரிய முறையில் பயிற்றுவிக்க வேண்டும் என்றான்.
"இல்லை. பம்மிடம் எந்தக் குற்றமும் இல்லை" என இளவரசர் உறுதியாகச் சொன்னார். "நான் அதைக் கவனிக்கத் தவறிவிட்டேன். பம் உயிரோடு இருக்கும் வரை, வேறு யானை அதன் இடத்துக்கு வரக்கூடாது.
அன்று இரவு இளவரசர் மகாராணியிடம் பம்மின் நேர்மை பற்றிய பல நிகழ்வுகளைக் கூறினார். அரசுப் பணிகள் காரணமாக அவர் தன் நண்பனை அலட்சியப்படுத்த நேர்ந்ததற்காக வருத்தப்பட்டார். லாயத்துக்கு வாரம் ஒரு முறையாவது போய் பம்மை கவனிக்கும்படி மகா ராணியை அவர் கேட்டுக் கொண்டார்.
மகாராணியும் உடனே இசைந்தாள். மறுநாளே, ருசியான மாவால் பத்து சேர் லட்டுகள் செய்து எடுத்துக் கொண்டு அவள் யானையைப் பார்க்கப் போனாள். பம்முக்கு, துயர மேகங்களுடே திடீரென சூரியன் பிரகாசித்தது போலிருந்தது. அதுக்கு அடக்க இயலாத ஆனந்தம். மகாராணி தன் கையாலேயே சுவையான லட்டுக்களை அதன் வாயில் ஊட்டியபோது, அதன் மேனி மகிழ்வால் சிலிர்த்தது. அது தன் சிறிய வாலை ஆட்டியது; காதுகளை அசைத்தது. அதன் துதிக்கை மகாராணியின் கைகளை மென்மையாக வருடும் பாதங்களைத் தொடும். இளவரசர் அங்கே இருந்தால், உண்மையில் மகாராணியின் இடுப்பைத் துதிக்கையால் வளைத்து, அவளைத் தன் தலைமேல் தூக்கிக் கொள்ள பம் விரும்புவதை உணர்ந்திருப்பார்.
"பம் பகதூர், இளவரசர் விருப்பம் இது. வாரம் தோறும் அவரால் உன்னைக் காண வரமுடியாது போனால், அவருக்குப் பதில் நான் வர வேண்டும். இனி உன்னைப் பற்றி எவ்விதமான புகாரும் அவர் காதுகளை எட்டக் கூடாது என்றும் அவர் விரும்புகிறார்" என்று மகாராணி சொன்னாள்.
பம் பகதூர் துதிக்கையை உயர்த்தியது. பிறகு அதன் நுனியால் தரையில் மகாராணியின் கால்களை சுற்றி ஒரு வட்டம் வரைந்தது.
"மாண்பு மிக்கவரே!" என மாவுத்தன் விளக்கினான்: "பம் சத்தியம் செய்கிறது-இனி அது தங்கள் விருப்பப்படியே நடக்கும்."
மகாராணி மிக இளகிய மனம் படைத்தவள். ஒவ்வொரு முறையும் அவளை யார் வணங்கினாலும், அது மனிதனோ மிருகமோ, உயர்ந்தவனோ தாழ்ந்தவனோ, அவள் கைகள் தாமாகவே குவிந்து, நமஸ்காரம் பண்ணும். முதல் முறை பம் மகாராணியின் கூப்பிய கரங்களை வெறுமனே தொட்டது. இம்முறை அது தன்னை கட்டுப்படுத்த இயலவில்லை-அது தன் துதிக்கையை அவளது மணிக்கட்டுகளில் சுற்றியது: ஒரு நொடி தான். பிறகு அவள் தகுதிக்கு மதிப்பளிக்கும் விதத்தில் பின்னுக்கு நகர்ந்தது.
மத்தாதினுக்கு இது பிடிக்கவில்லை. அவன் பம்மைக் கண்டித்தான்.
"கூடாது கூடாது! நீ என் முன்னிலையில் பம்மை ஒரு போதும் திட்டக் கூடாது" என்று மகாராணி கூறினாள்.
அன்று மத்தாதின் உற்சாகமின்றி இருந்தான். ஆனால் பம் வெகு சந்தோஷமாய், மிகுந்த உற்சாகத்துடன் இருந்தது. அது மத்தாதினைக் கோபமாகக் கூடப் பார்க்கவில்லை.
அன்று மாலை மததாதின் பம்மன் இரவு உணவிலிருந்து அது முன்பு சாப்பிட்ட லட்டுகளின் எடை அளவு தீனியை எடுத்துக் கொண்டான். பம் வெகு கோபக் கொண்டு, அந்த உணவைத் தொட மறுத்துவிட்டது. மறுநாள் காலை மத்தாதின் பயந்து போனான். பம்மின் உணவு அளவில் குறைந்ததைச் சரிககட்டினான்.
மகாராணி தன் வாக்கைக் காப்பாற்றினாள். வாரம் ஒருமுறை பம் பகதூரைக் காண வந்தாள். அவள் பெற்ற வரவேற்பு அவளுக்கு மிக ஆனந்தம் தந்தது. சரியான மலை போலிருந்த ஒரு பிராணி, தன் துதிக்கையின் ஒரே வீச்சால் மெலிந்த சிறு உருவினளான அவளை நசுக்கிவிடக்கூடிய ஒன்று, அவளை எதிர்நோக்கி வாரம் முழுதும் காத்திருந்தது; அவளைக் கண்ட மகிழ்வில் உடல் புளகித்தது. இதை எண்ணவும் அவள் மிக்க மகிழ்ச்சி அடைந்தாள். அது அவளை அன்பாய் வருடும் முத்தமிடும் தன் துதிக்கை நுனியை அவள் கைகள் மீது தடவும்: அவள் பாதங்களைத் தொடும்.
அந்த மிருகம் அவளிடம் காட்டிய அன்பினால் மகாராணியின் உள்ளம் பெருமைப்பட்டது.
பம், மிகவலிமையான மரம் அல்லது தூணைத் துாள் தூளாக்கி விடக்கூடிய பலசாலி, அவள் முன்னிலையில் ஒரு குழந்தை போல் நடந்து கொள்ளும். அது மகாராணியின் கைகளையும் கால்களையும் முத்தமிடு கையில் அதன் வாய், குழந்தையின் வாய் போலவே, ஈரம் சுரக்கும். எவ்வளவு கூடுமோ அவ்வளவுக்கு அவள் அருகில் நிற்க அது விரும்பியது. ஒவ்வொரு முறையும் அவள் உணவு ஊட்டி முடிந்ததும், பம் தன் துதிக்கையால் அவளது மெல்லிடையை வளைத்து அவளைத் தன் தலைமீது தூக்கி வைக்கும். ஒரு தாய் தன் பிள்ளையைத் தூக்குவதை விட மென்மையாக அது அவளை அப்படி எடுக்கும். மகாராணி அதன் கட்டுகளை அவிழ்க்கச் செய்வாள். பம் அந்த இடம் முழுவதும் சுற்றித் திரியும். அது அவளை அரண்மனைக்கு எடுத்துச் செல்லும் மறுபடியும் துதிக்கை உயர்த்தி வணங்கும், அவள் கால்களைத் தொடும்; பிறகு வேகமாக அவள் இடுப்பைச் சுற்றி வளைக்கும். மறு கணம், மகாராணி தான் தனது பட்டாடை ஒரு சிறிதும் குலையாமல் தரைமீது நிற்பதைக் காண்பாள்.
இளவரசருக்கு அரசு அலுவல்கள் அதிகமாயின. அவர் அடிக்கடி அரண்மனையை விட்டு வெளியே செல்ல நேர்ந்தது. யானையைப் போய் பார்க்க அவருக்கு நேரமேயில்லை. மாறாக, மகாராணி அடிக்கடி வந்து பார்த்தாள். அப்படி வரும் சமயங்களை அவள் ஆவலோடு எதிர் நோக்கினாள். முந்திய நாளே இனிப்புத் தின்பண்டங்கள் தயாரிக்க உத்திரவிடுவாள். ஒவ்வொரு முறையும் அவை வெவ்வேறு ரகங்களாக இருக்கும்படி கவனித்துக் கொள்வாள். அவள் எப்போதும் அவற்றை பம் பகதூருக்குத் தன் கையாலேயே ஊட்டுவாள். அதுவரை ஒரு மனிதப் பிறவியிடமிருந்து தான் பெற்ற அன்பை விட ஒரு மிருகம் அவளிடம் காட்டுகிற அன்பு எவ்வளவு அதிகமென்மையாக இருக்கிறது என்று அவள் சிந்திப்பாள்.
இதற்கிடையில் பம்முக்கு மத்தாதினிடமுள்ள வெறுப்பு, மகாராணியிடம் அது கொண்ட அன்பு வலிதாக வளர்ந்தது போல், வேகமாக அதிகரித்தது. மத்தாதினுக்கு ஒரு துண்டு நிலத்தை இளவரசர் தானமாக வழங்கியிருந்தார். அதில் அவன் ஒரு குடிசை கட்டி, அதைச் சுற்றி ஒரு சிறு தோட்டம் அமைத்திருந்தான். அவன் தன் சுக செளகரியங்களைக் கவனிக்கும் போது, பம் பகதூருக்கு உரிய உணவைக் குறைத்து வந்தான். இரண்டு நாட்கள் பம் பகதூர் தன் உணவைத் தொடவில்லை; மத்தாதினை ஏறெடுத்துப் பார்க்கவுமில்லை.
ஒரு நாள் இளவரசர் வேட்டைக்குப் போகத் தீர்மானித்தார். முன் பெல்லாம் அவர் புலிவேட்டைக்குப் போன போதெல்லாம் பம் பகதூர் மேல் சவாரி செய்வார். இம் முறை மத்தாதின் பம்மின் மனநிலை பற்றிக் கவலை கொண்டான். சென்ற இரண்டு நாட்களாக பம் சீக்காக இருக்கிறது; அதனால் வேட்டைக்காகப் பயிற்சி பெற்ற வேறொரு யானையை ஏற்பாடு செய்திருப்பதாக அவன் இளவரசரிடம் கூறினான்.
வேட்டை கோஷ்டி யானை லாயம் அருகாகச் சென்றது. திறந்த சன்னல் வழியாக பம் அதைப் பார்த்தது. அது துயர் நிறைந்த உரத்த குரல் எழுப்பித் தன் எதிர்ப்பை அறிவித்தது. அதை எவரும் கவனிக்கவில்லை. அது மனம் தளர்ந்து மெளனமாயிற்று.
வேட்டை கோஷ்டியை அனுப்பிவிட்டு, மத்தாதின் தனது தோட்டத்துக்குப் போனான். செடிகள், பூப்பாத்திகளில் வேலை செய்யலானான். அவனுக்குக்குறைந்த சம்பளம் தான் எனினும் அவன் மிக வசதியாக வாழ்ந்தான். இதை அனைவரும் அறிவர்.
பும் நாள் முழுவதும் குமைந்து குமுறியது; தன் உள்ளத்தில் வஞ்சத்தை அசைபோட்டது. ஒரு கவளம் உணவைக் கூட அது தொடவில்லை. பிற்பகல் வேளையில், பணியாளர்கள் அதன் போக்கில் ஏதோ விசித் திரம் கண்டார்கள். மத்தாதினிடம் தெரிவித்தார்கள். அவன் வந்தான். பம்மை திட்டத் தொடங்கினான். அவன் பக்கம் பாராமலே பம் திரும்பிக் கொண்டது.
பம்மின் கால்களைப் பிணைத்த சங்கிலிகள் உறுதியாய் கட்டப்பட்டிருப்பதைக் கவனித்த பிறகு மத்தாதின் யானையை செம்மையாக அடித்தான். பம் தீனியை தின்றிருக்கிறதா என்று பார்க்க அவன் திரும்பினான். அப்போது திடீரென்று பம்மின் துதிக்கை மின்னல் வேகத்தில் பாய்ந்து மத்தாதினை தரையில் விழ அடித்தது. பம் தனது பெரிய பாதத்தை மாவுத்தனின் மார்பில் பதித்தது. ஒரு நொடியில் மத்தாதின் கூழாக நசுக்கப்பட்டான். பம் சங்கிலிகளை அறுத்து எறிந்தது. பணியாளர்கள் பயத்தால் அலறிச் சிதறி ஓடினார்கள்.
பம் பகதூர் லாயத்தை விட்டு வெளியேறி, மத்தாதின் தோட்டம் நோக்கிச் சென்றது. செடிகளைப் பிடுங்கி வீசியது; பூப்பாத்திகளை மிதித்து நாசப்படுத்தியது. மத்தாதின் குழந்தைகள் பயந்து, குடிசையை விட்டு ஓடினார்கள். பம் குடிசையைத் தகர்த்து அதை மண்னோடு மண்ணாக்கியது.
பம் பகதூர் வெறிபிடித்து அலைகிறது என்ற செய்தி மகாராணியை எட்டியது.
போலீஸ் மேலதிகாரி, யானை மேலும் பலருக்கு தீங்கு விளைவிக்கும், ஆகையால் அதை சுட்டுக் கொல்ல வேண்டும் என அனுமதி கோரினார்.
"ஆனால் மத்தாதின் ஒருவனை மட்டுமே அது தாக்கியது என்று தானே நீங்கள் தெரிவித்தீர்கள்" என்று மகாராணி மறுத்துரைத்தாள்.
"ஆம் மகாராணி அது மத்தாதின் தம்பி வீடு நோக்கிப் போகிறது என்று எனக்கு செய்தி கிடைத்திருக்கிறது. அவனையும் அது விட்டு வைக்காது."
"மத்தாதின் தம்பியா? அவன் என்ன செய்கிறான்?"
"அவன் லாயத்தை மேற்பார்வை பார்க்கிறான், மகாராணி."
"அப்படியானால் அவனும் மத்தாதின் மாதிரி பெரிய திருடனாகத் தான் இருக்க வேண்டும். பம் பகதூரைக் கொல்ல வேண்டிய அவசியம் என்ன? என்னை பம்மிடம் உடனே அழைத்துப் போங்கள்" என்று மகாராணி கூறினாள்.
அவள் தன் அறைக்குப் போய், முந்திய முறை பம் பகதூரை காணச் செல்கையில் அணிந்திருந்த பட்டாடையை உடுத்துக் கொண்டாள்.
"மகாராணி பெரிய ஆபத்தை அணுகுகிறீர்கள். அது மிக்க அபாயமாகலாம்" என்று போலீஸ் மேலதிகாரி எடுத்துச் சொன்னார்.
"நான் சொல்கிறபடி செய்யுங்கள்" என்று மகாராணி உத்திரவிட்டாள். "என் கார் வரட்டும். நீங்கள் அவசியம் என்று கருதுகிற பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செய்யுங்கள்."
சற்று நேரத்தில் மகாராணியின் கார் சாலையில் விரைந்தது. ஆயுதங்களோடு குதிரை வீரர்கள் காரைத் தொடர்ந்து சென்றார்கள். அதே சாலையின் மறுமுனையிலிருந்து பம் பகதூர் வந்தது. அது ஒரு குளத்தின் அருகே நின்றது. துதிக்கை நிறைய நீரை மொண்டு, அது மீண்டும் நடந்தது. அதன் அருகே வரத் துணிந்தவர் மீது அது சேற்று நீரை வீசிப் பரிசளித்தது. பம் பிறகு யாருக்கும் தீங்கு புரியவில்லை.
இடையே சிறிது தொலைவே இருந்தபோது, மகாராணி காரை நிறுத்தி, கீழே இறங்கினாள். போலீஸ் மேலதிகாரியை தன்னுடன் வர வேண்டாம் என்று அவள் தடுத்துவிட்டாள்.
"உங்கள் குதிரை வீரர்களைத் தயாராக வைத்திருங்கள்" என்று அவள் அறிவித்தாள். நான் என் இரண்டு கைகளையும் உயர்த்தினால், சுடுவதற்கு அது அடையாளம் என்று கொள்க. ஆனால், எந்த நிலையிலும் நீங்களாகச் சுடவே கூடாது. பம் பகதூருக்கு வெறி பிடிக்கவில்லை என்று எனக்குப் படுகிறது."
பம் பகதூர் காரைப் பார்த்தது. நின்றது. தன்னை நோக்கி நீட்டப்பட்ட துப்பாக்கிகளை அதன் கண்கள் கவனித்தன. அது தாக்குவதற்குத் தீர்மானித்தது. வேகமெடுத்து ஒடி வந்து அது காரை நெருங்கியதும், மகாராணி அதன் குறுக்கே வந்தாள். மேலதிகாரி தன் ஆட்களை சுடுவதற்கு தயாராகும்படி தூண்டினார்.
மகாராணி திரும்பி உரத்த குரலில் கத்தினாள்; "என்னிடமிருந்து சைகை கிடைக்கும் வரை சுடக்கூடாது."
பிறகு, பம் பகதூரைச் சந்திக்க அவள் ஒடினாள்.
மகாராணிக்கும் யானைக்கும் நடுவில் ஐம்பது கஜம் இடைவெளி தான் இருந்தது. மேலதிகாரியும் அவரது குதிரைவீரர்களும முன்னே பாய்ந்தார்கள். பம் பகதூர் பாதையில் அசையாது நின்றுவிட்டது. மேலும் முன்னேற வேண்டாம் என்று மகாராணி அவர்களுக்குக் கட்டளை யிட்டாள். நிதானமாக அடி எடுத்து வைத்து அவள் யானையை நெருங் கினாள். பம் பகதூர் அவளைப் பார்த்துவிட்டது. வணக்கம் தெரிவித்து அது துதிக்கையை உயர்த்தியது. மகாராணி பதிலுக்குக் கை கூப்பினாள். ஆனால் பம் முன்பு செய்தது போல் அவள் கைகளை தொடவில்லை.
மகாராணி பிரியத்தோடு பேசினாள்: "என் அருமை பம் பகதூர், இன்று உன் தும்பிக்கை சுத்தமாக இல்லை என்று தெரிகிறது. ஆனாலும் நீ என்னைத் தொடாத போதிலும், நான் உன் தும்பிக்கையை என் உடல் முழுதும் உணர்கிறேன். சொல்லு, பம் பகதூர், வருந்தத்தக்க இந் நிலையை நீ எப்படி அடைந்தாய்?"
பம் தன் துதிக்கை துனியால் மகாராணியின் கால்களை சுற்றி பல வட்டங்கள் வரைந்தது. அதன் உள்ளத்தின் துயர் அனைத்தையும் அவ் வட்டங்கள் எடுத்துக் கூறுவது போலிருந்தது.
மகாராணி மிக மென்மையான குரலில் கூறினாள்: "என் வீர பம் பகதூர் உள்ளத்தில் என்ன நடக்கிறது என நான் அறிவேன். உனக்கு வெறியில்லை என்று எனக்குத் தெரியும். கசப்பு உன் அழகிய ஆத்மாவில் கறைபடியச் செய்துவிட்டது. வெறுப்பும் கசப்பும் மக்களுக்கு என்ன செய்யும் என்றும் நான் அறிவேன்."
பம் பகதூர் அவள் காலைச் சுற்றி மற்றுமொரு வட்டம் வரைந்தது. மகாராணி யானையின் கண்களை உற்று நோக்கினாள் அவற்றில் கண்ணிர் பொங்குவதை அவள் கண்டாள்.
"நீ எங்கே போய் கொண்டிருந்தாய், பம் பகதூர் மத்தாதின் தம்பி வீட்டுக்கா? அவனும் உனக்குத் துன்பம் தந்தானா?"
பம் பகதூர் தன் வலது பாதத்தைத் துாக்கி தரையில் ஒங்கி மிதித்தது. அதில் ரத்தம் சிதறியிருந்ததை மகாராணி பார்த்தான்.
அவள் தொடர்ந்து பேசினாள்: "பம் பகதூர், வீரர் நெஞ்சில் வெறுப்பு விஷத்தைப் பாய்ச்சுகிறவர்கள் விளையாடுவது மரணத்தோடுதான். இனி உனக்கு எவரும் தீங்கு புரியாதபடி நான் கவனிப்பேன். மனிதர் போல் தோன்றுகிற, உள்ளத்தில் கயவர்களாக இருப்போரிடமிருந்து நான் உன்னைக் காப்பாற்றுவேன்."
பம் பகதூர் அமைதியாகக் கேட்டுநின்றது. மகாராண் அதனிடம் மேலும் சொன்னாள்: "அருமை பம் பகதூர், கோபம் உன் உள்ளத்தின் அன்பை எப்படி விஞ்சியது என எனக்குப் புரியவில்லை. மத்தாதின் குழந்தைகள் வசித்த வீட்டை நீ ஏன் இடித்து நொறுக்கினாய்? அவர்கள் உனக்கு ஒரு தீங்கும் செய்யவில்லை. நீ மீண்டும் அதைக் கட்டியாக வேண்டும்."
பம் பகதூர் மகாராணி கால்களை சுற்றி இரு வட்டங்கள் வரைந்தது. மகாராணி தொடர்ந்தாள்: "அதைச் செய்ததற்காக நீ வருந்துகிறாய். அது எனக்குத் தெரிகிறது. நீ அதை மறுபடி கட்டிக் கொடுத்தால் நீ எனக்கு மிக்க சந்தோஷம் அளிப்பாய். நான் அதை சீரமைப்பேன், ஆனால் அந்தச் செலவை ஈடுகட்டும் வரை உனக்குப் பாதி அளவு உணவு தான் தரப்படும். சம்மதமா?”
மகாராணி சொன்னதை பம் பகதூர் புரிந்து கொண்டதோ என்னவோ! வட்டங்கள் வரைவது தான் அது அறிந்த ஒரே மொழி. அது பல வட்டங்கள் வரைந்தது.
யானையின் துதிக்கையில் சகதி கட்டியாக உலர்ந்திருந்ததை மகாராணி கண்டாள். அவள் கைநீட்டி, துதிக்கையை வருடினாள். முன்பு யானை தான் மகாராணிக்குத் தன் அன்பை உணர்த்த முயலும். இப்போது அவள் அதை எவ்வளவு நேசித்தாள் என்பதை மகாராணி யானைக்கு உணர்த்த முயன்றாள். அங்கே அது உயிருள்ள மலை என நின்றது; அசைய விரும்பவில்லை. அசைந்தால் அன்பின், அழகின் காட்சி சிதைந்து விடும் என்று அது கருதியது.
பம் பகதூரைத் தன் பின்னால் வரும்படி கூறி மகாராணி அவ் வசியத்தைத் தகர்த்தாள். அவள் முன்னே செல்ல, யானை பின் நடந்தது. அவர்கள் பின்னால் போலீஸ் அதிகாரியும் குதிரை வீரர்களும் வந்தார்கள். இப்படியாக பம் பகதூர் அதன் லாயத்துக்குத் திரும்ப அழைத்துச் செல்லப்பட்டது.
லாயத்தின் நிர்வாகம் மாற்றி அமைக்கப்பட்டது. பம் பகதூர் தவிர இதர யானைகளுக்கும் முழு அளவு உணவு தரப்பட்டது. எனினும் பம் பகதூர் தானே அந்த இடத்தின் ராஜா என்ற தோரணையோடு நடந்தது.
பல நாட்கள் வரை மகாராணி யானையைப் பார்க்க வரவில்லை. சிறிது காலத்துக்குப் பிறகு வந்து அவள் பம் பகதூரிடம் பேசினாள் பாதி அளவு உணவு உனக்கு பிடித்திருப்பதாகவே தோன்றுகிறது. நீ முன்னை விட ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறாய். இப்போ நீ உன் பாபத்துக்கு பரிகாரம் செய்துவிட்டாய். இனி என்றும் நீ ஆனந்தமாக இருப்பாய்."
பம் பகதூர் மகாராணியைத் தன் துதிக்கையில் தூக்கி, தலை மீது வைத்துக்கொண்டது.
(பஞ்சாபிக் கதை)
ஸ்டாம்பு ஆல்பம்
சுந்தர ராமசாமி
ராஜப்பாவின் புகழ் மங்கிப்போய்விட்டது. மூன்று நாட்களாக நாகராஜனைச் சுற்றிக் கூட்டம், நாகராஜனுக்குக் கர்வம் வந்து விட்டது என்று ராஜப்பா எல்லாப் பையன்களிடமும் சொன்னான். பையன்கள் அதை ஒப்புக்கொள்ளவில்லை. நாகராஜன் சிங்கப்பூரிலிருந்து அவன் மாமா அனுப்பி வைத்த ஆல்பத்தை எல்லோரிடமும் காட்டினான். பள்ளிக் கூடத்தில் காலை முதல்மணி அடிப்பதுவரை பையன்கள் நாகராஜனைச் கற்றிச் சூழ நின்று கொண்டு ஆல்பத்தைப் பார்த்தார்கள். மதியம் இடை வேளையிலும் அவனை மொய்த்தார்கள். கோஷ்டி கோஷ்டியாக வீட்டிற்கு வந்தும் பார்த்து விட்டுப் போனார்கள். பொறுமையோடு எல்லோருக்கும் காட்டினான் அவன். யாரும் ஆல்பத்தைத் தொடக்கூடாது என்று மட்டும் சொன்னான். அவன் மடியில் வைத்தபடி ஒவ்வொரு பக்கமாகத் திருப்புவான். பையன்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வகுப்புப் பெண்களுக்கும் நாகராஜனின் புதிய ஆல்பத்தைப் பார்க்க வேண்டுமென்று ஒரே ஆசை. பெண்கள் சார்பில் பார்வதி வந்து கேட்டாள். அவள் தைரியத்திற்குப் பெயர் போனவள். ஆல்பத்திற்கு அட்டை போட்டு அவள் கையில் கொடுத்தான் நாகராஜன். எல்லாப் பெண்களும் பார்த்த பின் மாலையில் ஆல்பம் கைக்கு வந்து சேர்ந்தது.
இப்பொழுது ராஜப்பாவின் ஆல்பத்தைப்பற்றி பேசுவாரில்லை. அவனுடைய புகழ் மங்கித்தான் போய்விட்டது.
ராஜப்பாவின் ஆல்பம் மாணவர்கள் வட்டாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. தேனி தேன் சேர்ப்பது மாதிரி ஒவ்வொரு ஸ்டாம்பாகச் சேர்த்து வைத்திருந்தான். இதைத் தவிர வேறு எந்த விஷயத்திலும் கவனமில்லை அவனுக்கு. காலையில் எட்டு மணிக்கே வீட்டைவிட்டுக் கிளம்பி விடுவான். ஸ்டாம்பு சேர்க்கும் பையன்கள் வீடுதோறும் ஏறி இறங்குவான். இரண்டு ஆஸ்திரேலியாவைக் கொடுத்துவிட்டு ஒரு பின்லண்டு வாங்குவான். இரண்டு பாகிஸ்தான் வாங்கிக் கொண்டு ஒரு ருஷ்யாவைக் கொடுப்பான். மாலையில் வீட்டுக்கு வந்து புத்தகத்தை மூலையில் எறிந்துவிட்டு, முறுக்கைக் கையில் வாங்கி நிக்கர் பையில் அடைத்து நின்றபடியே காபியை விட்டுக்கொண்டு கிளம்பிவிடுவான். நாலு மைல் தொலைவில் ஒரு பையனிடம் கானடா இருப்பதாகத் தகவல் கிடைத் திருக்கும். முறுக்கைக் கடித்துக்கொண்டே வயற்காட்டு குறுக்குப் பாதையில் ஒடுவான்.
அந்தப் பள்ளிக்கூடத்திலே அவனுடைய ஆல்பம்தான் பெரிய ஆல்பம், சிரஸ்தார் பையன் அவன் ஆலபத்தை இருபத்தைந்து ரூபாய்க்கு விலைக்குக் கேட்டான். பணக் கொழுப்பு பணத்தைக் கொடுத்து ஆல்பத்தை விலைக்கு வாங்கிவிடலாமென்று நினைத்தான். ராஜப்பா சுடச்சுட பதில் கொடுத்தான். உங்க வீட்டிலெ ஒரு அழகான குழந்தை இருக்கே. முப்பது ரூபாய் தறேன். விலைக்குத் தாயேன்” என்று கேட்டான். கூடியிருந்த பையன்கள் எல்லோரும் கைதட்டி, விசில் அடித்து ஆமோதித்தார்கள்.
ஆனால் இப்பொழுது அவன் ஆல்பத்தைப் பற்றிப்பேச்சே இல்லை. அதுமட்டுமல்ல, நாகராஜனின் ஆல்பத்தைப் பார்த்தவர்கள் எல்லோரும் அதை ராஜப்பாவின் ஆல்பத்தோடு ஒப்பிட்டுப் பேசினார்கள். ராஜப் பாவின் ஆல்பத்தைத் தூக்கி அடித்துவிட்டதாம்!
ராஜப்பா நாகராஜனின் ஆல்பத்தைக் கேட்டு வாங்கிப் பார்க்க வில்லை. ஆனால் மற்றப் பையன்கள் பார்க்கிறபொழுது அந்தப் பக்கமே திரும்பாததுபோல் பாவித்துக்கொண்டு ஒரக்கண்ணால் பார்த்துக் கொண்டான். உண்மையாகவே நாகராஜனின் ஆல்பம் மிகவும் அழகாகத்தான் இருந்தது. ராஜப்பா ஆல்பத்திலிருந்த ஸ்டாம்புகள் நாகராஜனின் ஆல்பத்தில் இல்லை. எண்ணிக்கை குறைவுதான். ஆனால் அந்த ஆல்பமே அற்புதமாக இருந்தது. அதைக் கையில் வைத்துக் கொண்டிருப்பதே பெருமை தரும் விஷயம்தான். அந்த மாதிரி ஆல்பமே அந்த ஊர்க் கடைகளில் கிடைக்காது. !
நாகராஜனின் ஆல்பத்தில் முதல் பக்கத்தில் முத்து முத்தான எழுத்தில் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தது. அவன் மாமா அப்படி எழுதி அனுப்பியிருந்தார்.
ஏ.எஸ். நாகராஜன்
'வெட்கம் கெட்டுப்போய் இந்த ஆல்பத்தை யாரும் திருட வேண்டாம். மேலே எழுதியிருக்கும் பெயரைப்பார். இது என்னுடைய ஆல்பம் புல்பச்சை நிறமாக இருப்பதுவரை தாமரை சிவப்பாக இருப்பது வரை, சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் அஸ்தமிப்பதுவரை இந்த ஆல்பம் என்னுடையது தான்.' மற்ற பையன்கள் எல்லோரும் இதைத் தங்களுடைய ஆல்பத்திலும் எழுதிக் கொண்டார்கள். பெண்கள் தங்களுடைய நோட்புத்தகத்திலும் பாடப் புத்தகத்திலும் எழுதிக் கொண்டார்கள். எதுக்கடா அவனைப் பார்த்துக் காப்பி அடிக்கணும் ஈயடிச்சான் காப்பி என்று எல்லாப் பையன்களிடத்திலும் இரைந்தான் ராஜப்பா.
ஒருவரும் பதில் பேசாமல் ராஜப்பா முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். கிருஷ்ணனுக்குப் பொறுக்கவில்லை.
"போடா அசூயை பிடிச்ச பயலே" என்று கத்தினான். கிருஷ்ணன்.
"எனக்கு எதுக்குடா அசூயை? அவன் ஆல்பத்தைவிட என் ஆல்பம் பெரிசுடா!" என்றான் ராஜப்பா.
"அவனிட்ம் இருக்கிற ஒரு ஸ்டாம்பு உன்னிடம் இருக்கா? இந்தோனேஷியா ஸ்டாம்பு ஒண்ணு போருமே. கண்ணில் ஒத்திக்கடா அவன் ஸ்டாம்பெ" என்றான் கிருஷ்ணன்.
"என்னிடம் இருக்கிற ஸ்டாம்பெல்லாம் அவனிடம் இருக்கா" என்று கேட்டான் ராஜப்பா.
"அவனிடம் இருக்கிற ஒரு ஸ்டாம்பு ஒண்னு காட்டு பார்ப்போம்" என்றான் கிருஷ்ணன்.
"என்னிடம் இருக்கிற ஒரு ஸ்டாம்பு அவன் காட்டட்டும் பார்க்கலாம்: பத்து ரூபா பெட்."
"உன் ஆல்பம் குப்பைத்தொட்டி ஆல்பம்" என்று கத்தினான் கிருஷ்ணன். எல்லாப் பையன்களும், குப்பைத் தொட்டி ஆல்பம்; குப்பைத் தொட்டி ஆல்பம்; என்று கத்தினார்கள்.
தன்னுடைய ஆல்பத்தைப் பற்றி இனிமேல் பேசிப்பயனில்லை என்று தெரிந்து கொண்டான் ராஜப்பா.
அவன் அரும்பாடுபட்டுச் சிறுகச் சிறுகச் சேர்த்த ஆல்பம், சிங்கப்பூரிலிருந்து ஒரு தபால் வந்து நாகராஜனை ஒரே நாளில் பெரியவனாக்கிவிட்டு விட்டது. இரண்டிற்குமுள்ள வேற்றுமை பையன்களுக்குத் தெரியவில்லை. சொன்னாலும் அசடுகளுக்கு மண்டையில் ஏறாது.
ராஜப்பா தன்னிலையின்றி குமைந்து கொண்டிருந்தான். பள்ளிக் கூடம் போவதற்கே பிடிக்கவில்லை.
மற்றப் பையன்கள் முகத்தில் விழிப்பதற்கே வெட்கமாக இருந்தது. வழக்கமாக சனி ஞாயிறுகளில் ஸ்டாம்பு வேட்டைக்கு அலையாத அலைச்சல் அலைபவன் இந்தத் தடவை வீட்டை விட்டு வெளியே தலை நீட்டவில்லை. ஒரு நாளில் ராஜப்பா அவன் ஆல்பத்தை எத்தனை தடவை திருப்பித் திருப்பிப் பார்ப்பான் என்பதற்குக் கணக்கே கிடையாது. இரவு படுத்துக் கொண்ட பின் திடீரென்று ஏதோ நினைத்துக்கொண்டு டிரங்குப்
பெட்டியைத் திறந்து ஆல்பத்தை எடுத்து ஒரு புரட்டு புரட்டிவிட்டு வருவான். அதை இரண்டு நாட்களாக வெளியிலேயே எடுக்கவில்லை. ஆல்பத்தைப் பார்ப்பதற்கே எரிச்சலாக இருந்தது. நாகராஜனின் ஆல்பத்தைப் பார்க்கிறபொழுது தன்னுடைய ஆல்பம் வெறும் அப்பளக் கட்டு என்று தான் தோன்றிற்று அவனுக்கு.
அன்று மாலை ராஜப்பா நாகராஜனின் வீடு தேடிச் சென்றான். அவன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டான். இந்த அவமானத்தை அவனால் அதிக நாட்கள் தாங்கிக் கொண்டிருக்கமுடியாது.
திடீரென்று ஒரு புதிய ஆல்பம் நாகராஜன் கைக்கு வந்து சேர்ந்திருக்கிறது. அவ்வளவுதானே ஸ்டாம்பு சேகரிப்பதிலுள்ள தந்திரங்கள் அவனுக்கு என்ன தெரியும் ஒவ்வொரு ஸ்டாம்புக்கும் ஸ்டாம்பு சேர்க்கிறவர்கள் மத்தியில் என்ன மதிப்புண்டு என்பது அவனுக்குத் தெரியுமா என்ன பெரிய ஸ்டாம்புதான் சிறந்த ஸ்டாம்பு என்று நினைத்துக் கொண்டிருப்பான். அல்லது பெரிய தேசத்து ஸ்டாம்பு தான் அதிக மதிப்புள்ளது என்று எண்ணிக்கொண்டிருப்பான். எப்படியும் அவன் அமெச்சூர்தானே? தன்னிடம் இருக்கும் உதவாக்கரை ஸ்டாம்புகள் சில கொடுத்து, மணியான ஸ்டாம்புகளைத் தட்டிவிட முடியாதா என்ன? எத்தனையோ பேருக்கு நாமம் சாத்தவில்லையா? இதிலிருக்கிற தந்திரமும் மாயமும் கொஞ்சமா? நாகராஜன் எந்த மூலைக்கு?
ராஜப்பா நாகராஜன் வீட்டை அடைந்து மாடிக்குச் சென்றான். அவன் அடிக்கடி வருகிற பையன் என்பதால் யாரும் ஒன்றும் சொல்லவில்லை. மாடியில் சென்று நாகராஜனின் மேஜைக்கு முன் உட்கார்ந்து கொண்டான். சிறிது நேரம் கழிந்ததும் நாகராஜனின் தங்கை காமாட்சி மாடிக்கு வந்தாள். "அண்ணா டவுனுக்குப் போயிருக்கிறான்" என்று சொல்லி விட்டு, "அண்ணா ஆல்பத்தைப் பார்த்தியா?" என்று கேட்டாள்.
"உம்" என்றான் ராஜப்பா.
"அழகான ஆல்பம் இல்லையா? ஸ்கூல்லே வேறெ யாரிட்டேயும் இவ்வளவு பெரிய ஆல்பம் இல்லையாமே?"
"யாரு சொன்னா?"
"அண்ணாதான் சொன்னான்."
பெரிய ஆல்பம் என்றால் என்ன? பார்க்கப் பெரிதாக இருந்தால் போதுமா?
சிறிது நேரம் அங்கிருந்துவிட்டு, காமாட்சி கீழே சென்றுவிட்டாள்.
ராஜப்பா மேசையில் கிடந்த புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென்று டிராயர் பூட்டில் கைபட்டது. பூட்டை இழுத்துக் பார்த்தான். பூட்டித்தான் இருந்தது. திறந்து பார்த்தால் என்ன? மேஜை மேலிருந்து சாவியைக் கண்டெடுத்தான். ஏணிப்படியோரம் சென்று ஒரு தடவை கீழே குனிந்து பார்த்துவிட்டு, சட்டென்று டிராயரைத் திறந்தான். மேலாக ஆல்பம் இருந்தது. முதல் பக்கத்தைத் திருப்ப, அதில் எழுதியிருந்ததை வாசித்தான். நெஞ்சு படக் படக்கென்று அடித்துக் கொண்டது. ஒரு நிமிஷத்தில் டிராயரைப் பூட்டினான். ஆல்பத்தை எடுத்துச் சட்டைக்குள் நிக்கரில் செருகிக் கொண்டு கீழிறங்கி வீட்டைப் பார்த்து ஒட்டமாக ஒடினான்.
நேராக வீட்டிற்குள் சென்று புத்தக அலமாரிக்குப் பின்னால் ஆல்பத்தை மறைத்து வைத்தான். வாசல் பக்கம் வந்தான். உடம்பு பூராவும் கொதிப்பது போலிருந்தது. தொண்டை உலர்ந்தது. முகத்தில் ஜிவ் ஜிவ்வென்று ரத்தம் குத்திற்று.
இரவு எட்டு மணிக்கு எதிர்வீட்டு அப்பு வந்தான். கையையும் தலையையும் ஆட்டிக்கொண்டு விஷயத்தைச் சொன்னான். நாகராஜன் ஸ்டாம்பு ஆல்பத்தைக் காணவில்லையாம்! அவனும் நாகராஜனுமாக டவுனுக்குச் சென்றிருந்தார்களாம். திரும்பி வந்து பார்க்கிறபொழுது மாயமாக மறைந்துவிட்டதாம் ஆல்பம்.
ராஜப்பாவுக்கு ஒன்றும் பேச முடியவில்லை. அவன் எப்படியாவது போய்விட்டால் போதுமென்றிருந்தது. அப்பு சென்றதும் அறைக்குள் வந்தான். கதவைச் சாத்தினான். அலமாரிக்கு பின்னாலிருந்து ஆல்பத்தை எடுத்தாள். கை விறைத்தது. ஜன்னல் வழியாக யாராவது பார்த்து விடுவார்கள் என்று பயந்து மீண்டும் ஆல்பத்தை அலமாரிக்குப் பின்புறம் திணித்தான்.
இரவு சாப்பிட முடியவில்லை. வயிற்றை அடைத்துக் கொண்டு விட்டது. வீட்டிலுள்ள எல்லோரும் அவன் முகத்தைப் பார்த்து, "என்னடா, என்னடா" என்று கேட்டார்கள். தன்னுடைய முகம் பயங்கரமாக கோணிக் கொண்டிருப்பது மாதிரித் தோன்றிற்று அவனுக்கு.
எப்படியாவது துாங்கிவிடுவோம் என்று படுக்கையை விரித்து படுத்தான். தூக்கம் வரவில்லை. தான் துரங்கிக் கொண்டிருக்கிறபொழுது யாராவது அலமாரிக்குப் பின்னாலிருந்து ஆல்பத்தைக் கண்டெடுத்து விட்டால் என்ன செய்வது என்று பயந்து, ஆல்பத்தை எடுத்துவந்து தலையணைக்கடியில் வைத்துக் கொண்டான்.
இரவு எப்பொழுது தூங்கினான் என்பது அவனுக்கே தெரியாது. காலையில் கண் விழுத்த பின்பும் தலையணையில் இருந்து ஆல்பத்தை எடுக்க முடியவில்லை. தாயாரும் தகப்பனாரும் ஒருவர் மாற்றி ஒருவர் அங்கு வந்து கொண்டிருந்தார்கள். ஆல்பத்தோடு பாயைச் சுருட்டி அதன் மேல் உட்கார்ந்து கொண்டான்.
காலையில் மீண்டும் அப்பு வந்தான். அப்பொழுதும் ராஜப்பா பாய் மேல்தான் உட்கார்ந்து கொண்டிருந்தான். அப்பு காலையில் நாகராஜன் வீட்டுக்குப் போய்விட்டு வந்திருந்தான்.
"நேற்று அவனுடைய வீட்டுக்குப் போனியோ" என்று கேட்டான் அப்பு.
ராஜப்பாவுக்கு வயிற்றைக் கலக்கிற்று. ஒரு தினுசாக மண்டையை ஆட்டினான். எப்படி வேண்டுமென்றாலும் அர்த்தம் எடுத்துக்கொள்ளும் படி தலையை அசைத்தான்.
"நாங்க வெளியில் போனபின் நீ மட்டும்தான் அங்கே வந்தாய் என்று காமாட்சி சொன்னாள்" என்றான் அப்பு.
தன்னை சந்தேகப்படுகிறார்கள் என்பது தெரிந்துவிட்டது ராஜப்பாவுக்கு, நேற்று ராத்திரியிலிருந்து இதுவரை அழுது கொண்டே இருக்கிறான் நாகராஜன். அவன் அப்பா போலீஸுக்குச் சொன்னாலும் சொல்லுவார் போலிருக்கிறது" என்றான் அப்பு.
ராஜப்பா வாய் பேசாமலிருந்தான்.
"அவன் அப்பாவுக்கு டி.எஸ்.பி. ஆபீஸிலெதானே வேலை? அவர் விரலை அசைத்தால் போலீஸ் படையே திரண்டு விடும்" என்றான் அப்பு. நல்ல வேளை, அப்புவைத் தேடி அவன் தம்பி வந்தான். அப்பு சென்றுவிட்டான்.
ராஜப்பாவின் தகப்பனாரும் காலை உணவை முடித்துக்கொண்டு சைக்கிளில் ஆபீஸ் சென்று விட்டார். வாசல் கதவு சாத்தியிருந்தது.
ராஜப்பா படுக்கையிலேயே உட்கார்ந்துகொண்டிருந்தான். அரை மணி நேரமாயிற்று. அப்படியே அசையாமல் உட்கார்ந்து கொண்டிருந்தான்.
அப்பொழுது வாசல் கதவைத் தட்டும் ஒசை கேட்டது.
'போலீஸ்', 'போலீஸ்' என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் ராஜப்பா. வாசல் கதவில் உள்ளே சங்கிலி போட்டிருந்தது.
வாசல் கதவைத் தட்டும் சப்தம் தொடர்ந்து கேட்டது.
ராஜப்பா பாய்க்குள்ளிருந்து ஆல்பத்தை வெளியே எடுத்துக் கொண்டு மாடிக்கு ஒடினான். அங்கே நிற்க முடியவில்லை. அலமாரிக்குப் பின்னால் ஆல்பத்தை திணித்தான். சோதனை போட்டால் அகப்பட்டுவிடுமே? ஆல்பத்தை எடுத்துக் கொண்டு சட்டைக்குள் மறைத்தவாறே கீழே வந்தான்.
அப்பொழுதும் வாசல் கதவைத் தட்டும் ஒசை கேட்டுக் கொண்டிருந்தது.
"யாருடா? யாரு கதவைத் திறயேன்" என்று அம்மா உள்ளேயிருந்து கத்திக் கொண்டிருந்தாள். இன்னும் சில வினாடிகளில் அம்மாவே வந்து திறந்துவிடுவாள்!
ராஜப்பா பின்புறம் ஒடினான். மடமடவென்று ஸ்நான அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டான். வென்னிர் அடுப்பு தக தக வென்று எரிந்து கொண்டிருந்தது. பட்டென்று ஆல்பத்தை அடுப்பில் போட்டான். ஆல்பம் பற்றி எரிந்தது. அவ்வளவும் மணி மணியான ஸ்டாம்புகள். எங்கும் கிடைக்காத ஸ்டாம்புகள். தன்னையறியாமலே கண்களில் நீர் துளிர்த்துவிட்டது ராஜப்பாவுக்கு.
அப்பொழுது ஸ்நான அறைக்கு வெளியே அம்மாவின் குரல் கேட்டது.
"சட்டென்று குளித்துவிட்டு வாடா, உன்னைத்தேடி நாகராஜன் வந்திருக்கிறான்" என்றாள் அவன் தாயார்.
ராஜப்பா நிக்கரை கழற்றி ஸ்நான அறைக் கொடியில் போட்டுவிட்டு ஈரத்துண்டைக் கட்டிக்கொண்டு வெளியே வந்தான். வீட்டிற்குள் வந்து புதுச்சட்டையும், நிக்கரும் போட்டுக்கொண்டு மாடிக்குச் சென்றான். நாகராஜன் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்தான். ராஜப்பாவைப் பார்த்ததுமே, "என் ஸ்டாம்பு ஆல்பம் தொலைந்து போய்விட்டதடா" என்று ஈனமான குரலில் சொன்னான். முகத்தில் வருத்தம் தெரிந்தது. அழுது குளித்திருக்கிறான் என்பதையும் கண்கள் சொல்லிற்று.
"எங்கே வைத்தாய்டா?" என்று கேட்டான் ராஜப்பா,
"டிராயரில் பூட்டி வைத்திருந்ததாகத் தான் ஞாபகம். டவுனுக்குச் சென்றுவிட்டுத் திரும்பி வந்து பார்க்கிறபொழுது காணவில்லை."
நாகராஜன் கண்களிலிருந்து கண்ணிர் வழிந்தது. அவன் ராஜப்பா முகத்தைப் பார்ப்பதற்கு வெட்கப்பட்டு முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டான்.
"அழாதேடா, அழாதேடா" என்று தேற்றினான் ராஜப்பா.
ராஜப்பா சமாதானம் சொல்லச் சொல்ல மேலும் மேலும் பெரிதாக அழுதான் நாகராஜன்.
ராஜப்பா சட்டென்று கீழே சென்றான். ஒரு நிமிஷத்திற்குள் நாகராஜன் முன்னால் வந்து நின்றான். அவன் கையில் அவனுடைய ஆல்பம் இருந்தது.
"நாகராஜா. இந்த என்னுடைய ஆல்பம்.இதை நீயே வைத்துக் கொள். உனக்கே உனக்குத்தான். என்ன அப்படிப் பார்க்கிறாய் விளையாட்டில்லை. உனக்குத்தான். உனக்கே தான்."
"சும்மா சொல்கிறாய்" என்றான் நாகராஜன்.
"இல்லையடா உனக்கே தருகிறேன். நெஜமாகத்தான். உனக்கே உனக்கு வைத்துக்கொள்."
ராஜப்பா, அவன் ஸ்டாம்பு ஆல்பத்தைக் கொடுத்துவிடுவதா? நடக்கக் கூடியதா? நாகராஜனால் நம்பமுடியவில்லை. ஆனால் ராஜப்பா அதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான். அவனுக்கு குரல் கம்மிவிட்டது.
"எனக்குத் தந்துவிட்டால் உனக்கு"
"எனக்கு வேண்டாம்."
"உனக்கு ஒரு ஸ்டாம்புகூட வேண்டாமா?"
"நீ எப்படியடா ஸ்டாம்பே இல்லாமலிருப்பாய்?" என்று கேட்டான் நாகராஜன்.
ராஜப்பா கண்களிலிருந்து கண்ணிர் பெருக்கெடுத்தது.
"ஏண்டா அழுகிறாய்? எனக்கு ஆல்பத்தைத் தர வேண்டாம் நீயே வைத்துக்கொள். நீ எவ்வளவு கஷ்டப்பட்டுச் சேர்த்த ஆல்பம்" என்றான் நாகராஜன்.
"இல்லை, நீவைத்துக்கொள் உனக்கே இருக்கட்டும். எடுத்துக்கொண்டு உன் வீட்டுக்குப் போய்விடு. போ, போ" என்று ராஜப்பா அழுது கொண்டே கத்தினான். நாகராஜனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவன் ஆல்பத்தை எடுத்துக்கொண்டே கிழே இறங்கி வந்தான்.
சட்டையைத் துாக்கிக் கண்களைத் துடைத்துக்கொண்டே பின்னால் இறங்கி வந்தான் ராஜப்பா.
இருவரும் வாசல்படிக்கு வந்து விடடார்கள்.
"நீ ஆல்பத்தைக் கொடுத்ததற்கு ரொம்ப தாங்ஸ். நான் வீட்டுக்கு போகட்டுமா என்று கேட்டுக்கொண்டே படியில் இறங்கினான் நாகராஜன்.
அப்பொழுது, "நாகராஜா" என்று கூப்பிட்டான் ராஜப்பா. நாகராஜன் திரும்பிப் பார்த்தான்.
"அந்த ஆல்பத்தைக் கொண்டா. இன்று ராத்திரி ஒரே ஒரு தடவை பூராவையும் பார்த்துவிட்டு, காலையில் உன் வீட்டில் கொண்டுவந்து தந்துவிடுகிறேன்" என்றான் ராஜப்பா.
"சரி" என்று ஆல்பத்தைக் கொடுத்துவிட்டுப் போனான் நாகராஜன்.
ராஜப்பா மாடிக்குச் சென்று கதவைச் சாத்திக்கொண்டு ஆல்பத்தை நெஞ்சோடு அணைத்தவாறு ஏங்கி ஏங்கி அழுதான்.
(தமிழ்க் கதை)
அப்புவின் கதை
ரண்டி சோமராஜு
முத்துத் தீவு என்று ஒரு சிறு கிராமம் இருந்தது. ஆனால் அந்த ஊரில் முத்துக்கள் சேகரிக்கப்படவுமில்லை; அது ஒரு தீவுமில்லை. அந்த ஊர் வெகு தூரத்தில் தன்னந்தனியாக இருந்தது; அதை அடைவது சிரமம், அதனால் அந்தப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். பக்கத்து நகரம் கூடப் பல மைல் தூரத்தில் இருந்தது. இரண்டு மைல் தள்ளி கூடம், ஒரு இரவு படகுப் பயணம் போனால், பாலம், குதிரை வண்டியில் ஒரு மணி நேரம் சவாரி செய்து பிறகு பஸ்ஸில் மூன்று மணி நேரம் பயணம் செய்தால் கோர்த் திப்பாடு, ரயில் பயணம் என்றால், நகரத்துக்கும் அந்த ஊருக்கும் நானுாறு மைல் தூரம் இருந்தது.
முத்துத் தீவில் அப்பு என்றொரு சிறுவன் வசித்தான், இந்தச் சின்ன் ஊரில் வசித்தபோதிலும், அப்பு ஒரு நகரவாசியின் போக்கையும் ஊதாரிப் பழக்கங்களையும் கொண்டிருந்தான். அவனுக்குப் பணத்தின் அருமை தெரியாது; வீண் செலவுகள் செய்தான். காலையில் அவன் ஊரின் டிக் கடைக்குப் போவான்; கண்டதை எல்லாம் தின்பான். தெருவில் போகிற எந்த வியாபாரியையும் கூப்பிடுவான்; அவன் என்ன விற்றாலும் அதை எல்லாம் அப்பு வாங்குவான். தன் வயிறு புடைக்கிற மட்டும் அவன் அதனுள் தீனிவகைகளைத் திணிப்பான். மாலையில் சந்தை மைதானத் துக்குப் போவான். மீண்டும் உள்ளே தள்ளுவான்.
அப்பு சாப்பாட்டு ராமன் மட்டுமல்ல, சரியான அலங்காரப்பிரியனும் கூட விளையாடும்போது தினம் அவன் தன் உடைகளை கவனக் குறைவால் கிழித்துக்கொள்வான். பிறகு புதிய உடைகளுக்காக அடம் பிடிப்பான். மேலும், சதா அவன் தன் புத்தகங்களையும் பென்சில்களையும் தொலைத்தான்; புதியன கேட்டான். தினசரி பணத்துக்காகத் தன் அம்மாவை தொல்லைப்படுத்தினான். தன் கைப்பணம் தீர்ந்துவிட்டால் மேற்கொண்டு அம்மாவிடமிருந்து பிடுங்கலாம் என அவன் அறிவான்
அவன் பெற்றோருக்கு ஒரே பிள்ளை. அவர்கள் அவனுக்கு அதிகம் செல்லம் கொடுத்தார்கள். ஆயினும் அவன் அலட்சியமாகப் பணத்தை வீணாக்குவதைக் கண்டதும் அவன் பெற்றோர்கள் கவலைப்படலானார்கள். அவன் அப்பா அவனைக் கண்டித்தார். ஆனால் அப்பு அதைச் சட்டை செய்யவில்லை. அவன் சிரத்தையாய்க் கவனிப்பது போல் நடித்தான். எனினும், தந்தையின் வார்த்தைகள் ஒரு காதில் நுழைந்து மறு காது வழியாக வெளியேறின.
அப்பு புகைபிடிக்கத் தொடங்கினான். அவன் தந்தை அதை அறிந்து ஆத்திரம் கொண்டு, அவனைத் திட்டினார். அப்பு வெகுவாக அழுதான். அதனால் அவன் அம்மா குழம்பினாள். அவனை அணைத்துக்கொண்டு ஆறுதல் கூறினாள். பிறகு அவனுக்குச் சிறிது பணம் தந்தாள். அவனை விளையாட அனுப்பினாள். அப்புவின் அப்பா மிகவும் வருத்தப்பட்டார். தன் மகனின் கெட்ட பழக்கங்களுக்கும் ஊதாரித்தன நடவடிக்கைகளுக்கும் அவர் தன்னையே குறை கூறிக்கொண்டார். நிலைமை மிக முற்றி விட்டதோ? மிகுந்த யோசனைக்குப் பிறகு, அப்புவின் அப்பா தன் மகனின் ஆசிரியரது யோசனையையும் உதவியையும் நாடத் தீர்மானித்தார். ஆசிரியர் தம்மால் இயன்றதைச் செய்வதாக வாக்களித்தார்.
ஒரு நாள், ஆசிரியர் அப்புவைக் கூப்பிட்டனுப்பினார். அவனைப் பிரியமாய்த் தட்டிக் கொடுத்து, பிற்பகலில் அவனைத் தன் வீட்டுக்கு வருமாறு அழைத்தார். அப்பு தடுமாறித் தவித்தான். ஆசிரியர் ஏன் தன்னைப் பார்க்க விரும்பினார்; தன் படிப்பு சம்பந்தமாக இருக்குமோ? பெருக்கல் வாய்ப்பாட்டில் அவர் தன்னைக் கேள்விகள் கேட்பாரோ?
ஆசிரியர் வீட்டு வாசலில் அப்பு தயங்கி நின்றான். ஆசிரியர் அவனை உள்ளே கூப்பிட்டார், அன்பாகப் பேசினார். அவனை உட்காரச் செர்ன்னார். அவர் நடந்து கொண்ட விதம் அப்புவின் பயத்தை நீக்கியது. அவன் நெஞ்சுத்துடிப்பு சீராகியது. அவன் நிம்மதிபெற்றான்.
"அப்பு, அடுத்த மாதம் இடைத்தேர்வு இருக்கிறதே. நீ நன்றாகப் படித்திருக்கிறாயா?" என்று ஆசிரியர் மென்மையாக விசாரித்தார். அப்பு தலையசைத்தான். ஆசிரியரின் நோக்கம் என்னவாக இருக்கும் என அவன் யோசித்தான். ஆனால் ஆசிரியர் சும்மா பத்திரிகையை எடுத்து அதைப் படிக்கலானார்.
அப்பு சோம்பலுடன் சுற்றி நோக்கினான். பத்திரிகையின் கடைசிப் பக்கத்தில் இருந்த ஒரு படத்தின் மீது அவன் பார்வை படிந்தது. விண்வெளிக் கப்பல் மேலே கிளம்புவதைக் காட்டுகிற நிழற்படம் அது. அப்பு படத்தையே கூர்ந்து கவனித்தான். ராக்கெட்டில் அவன் இருப்பது போலவும், அவன் விண்வெளியில் செலுத்தப்படுவது போலவும் அவனுக்குத் தோன்றியது. அவன் பரபரத்தான். அப்புவின் மூளையில் கேள்விகள் துறுதுறுத்தன. ஆனால் அவற்றை வெளிப்படுத்த அவன் தயங்கினான்.
அப்போது ஆசிரியர் தலையை உயர்த்தினார். அப்புவைப் பார்த்தார். "நீ என்னிடம் ஏதாவது கேட்க விரும்பினாயா?"
“ஸா..ர்..ர்.. நாம் நிஜமாகவே சந்திரனுக்குப் போக முடியுமா?" என்று அப்பு கேட்டான். அவன் கண்கள் மின்னின.
"ஒ, நீ பத்திரிகைப் படத்தை பார்த்தாயா? அது தான் ராக்கெட். அது மனிதனை சந்திரனுக்கு எடுத்துச் செல்லும். அமெரிக்கர்கள் அதைச் செய்திருக்கிறார்கள்."
அப்புவின் மனசில் அநேக எண்ணங்கள் பளிச்சிட்டன. அவன் உள்ளத்தில் கனவுகள் நிறைந்தன.
"ராக்கெட்டில் ஏறிப்போக நாம் அமெரிக்காவுக்குத் தான் போகணுமா?" என்று அவன் கேட்டான்.
சந்தேகமில்லாமல்
"அமெரிக்கா எவ்வளவு தூரம் இருக்கும், ஸார்?"
"சுமார் பத்தாயிரம் மைல்கள். விமானத்தில் இரண்டு நாட்களிலும், கப்பலில் மூன்று வாரங்களிலும் சேரலாம்."
"நாம் எங்கே விமானம் ஏற வேண்டும் முத்துத் தீவிலா"
ஆசிரியர் முறுவலித்தார். "இல்லை. சர்வதேச விமான நிலையங்கள் சென்னை, பம்பாய் போன்ற பெரிய நகரங்களில் தான் இருக்கின்றன. விமானம் மூலம் பிரயாணம் செயய ஏகப்பட்ட பணம் தேவை, தெரியுமா?"
அப்பு மிகவும் கிளர்ச்சியுற்றான். கேள்விகள் அவன் உதடுகளி லிருந்து உதிர்ந்தன. "விமானத்தில் பயணம் போக எவ்வளவு பணம் தேவைப்படும்?"
"நிறைய நிறையப் பணம் வேண்டும். உலகத்தையும் அதன் அதிசயங்களையும் காண ஒருவர் மிச்சம் பிடித்துப் பணம் சேமிக்க வேண்டும்."
"திட்டமாக எவ்வளவு பணம், ஸார் அப்பு விடாது கேட்டான்.
ஆசிரியர் மகிழ்வடைந்தார். "நீ பிரயாணம் செய்து உலகத்தைக் காண விரும்புகிறாயா? இப்போது முதலே மிச்சப்படுத்து. நீ பெரியவன் ஆனதும் சுற்றிப்பார்க்கலாம். தெரியுமா, குழந்தாய். படகில் அடுத்த ஊர் போவதற்கே கால் ரூபாய் ஆகிறது!"
“எனக்குத் தெரியும், ஸார். குதிரைவண்டியில் கோர்த்திப்பாடு போக அரை ரூபாய். டவுனுக்கு பஸ்ஸில் ஒன்றரை ரூபாய்."
"நல்லது. பிரயாணம் போக அதிகம் செலவாகும். பம்பாய் சேர மூன்று நாட்கள் பிடிக்கும். ரயில் கட்டணத்தை எண்ணிப்பார்!"
"நூறு ரூபாய் போதுமா?" என்று அப்பு ஆப்பாவித்தனமாய் கேட்டான்.
ஆசிரியர் சிரித்தார்.
"அன்பான பையா, உனக்கு அமெரிக்கா போக யாரும் இலவச விமான டிக்கட் தரமாட்டார்கள். ஆறு அல்லது ஏழாயிரம் ரூபாய் நீ வைத்திருக்க வேண்டும். உன் குடும்பச் சொத்து முழுதுமே அவ்வளவுக்குத் தேராது. அப்புறம் ராக்கெட்டில் போக லட்சக் கணக்கில் செலவாகும்!"
அப்பு முற்றிலும் மனம் சோர்ந்து போனான். அவ்வளவு பணத்தை அவன் எவ்வாறு சேகரிக்க முடியும்?
"வேறொரு வழி இருக்கிறது, மகனே" என்றார் ஆசிரியர்.
அப்புவின் முகத்தில் ஒளிபிறந்தது.
"நீ நன்றாகப் படித்து சிறப்புடன் விளங்கினால், அரசு உன் பயணச் செலவை ஏற்கலாம். ஆனால் நீ மேற்கொண்டு படிக்கவும் பெரும் அளவு பணம் தேவை." ஆசிரியர் மேலும் சொன்னார், "மகனே, பணம் மதிப்புள்ளது. ஒவ்வொன்றுக்கும் உனக்கு பணம் தேவை."
அப்பு மெளனமாக இருந்தான். அவன் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.
ஆசிரியர் தொடர்ந்து கூறினார்: "பணம் சேமிக்கும்படி உன் அப்பாவிடம் சொல்லு. அவர் வீண்செலவு பண்ண வேண்டாம். உனது படிப்புக்காகவும், உன் எதிர்காலத்துக்காகவும் ஒவ்வொரு காசையும் அவர் மிச்சம் பிடிக்க வேண்டும். உன் அப்பா பணத்தை வீணடிக்கிறாரா, சொல்லு."
அப்பு தலைநிமிர்ந்து நிற்க முடியவில்லை. அவன் தன்னிரக்கத்தால் வாடினான். தன் அழுக்குத் துணிகளை, கிழிந்த புத்தகங்களை, தனது பெருந்தீனியை அவன் எண்ணினான். அவன் கண்களில் நீர் பெருகியது.
ஆசிரியர் அவனைப் பெருமையோடு கட்டித் தழுவினார்.
முத்துத் தீவு என்ற சிறிய கிராமத்தில் அன்று ஒரு சிறு முத்து பிரகாசமாய் ஒளி வீசியது.
(தெலுங்கு கதை)
கர்வத்தின் விலை
சிராஜ் அன்வர்
ஒரு முத்து மதிப்பு மிக்கதாக இருந்தால், அது விலை மதிப்பற்றது என்பார்கள். முத்துக்கள் சிப்பிப் புழுக்களில் விளைகின்றன. புழுக்கள் சிப்பிகளுள் வசிக்கும். அவை சமுத்திரத்தின் அடியில் கிடக்கும். அப்படிப் பட்ட சிப்பிப் புழு ஒன்றின் கதை தான் இது.
இந்தப் புழு தன்னிடம் தானே பெரும் மகிழ்வு கொண்டிருந்தது. உலகத்திலேயே தான் தான் அதிமுக்கியமான ஜீவன் என அது நம்பியது. உண்மைதான், பட்டுப் புழுவும் பயனுள்ளதே, ஆனால் பட்டு, முத்துக்களைப் போல் அதிக விலை பெற்றுத் தருவதில்லை. எனவே தன்னைப் பற்றி உயர்வாக எண்ணுவது தகும் என்று சிப்பிப் புழு கருதியது.
ஒரு நாள், கடலில் பெரும்புயல் வீசியது. அலைகள் உயரமாய், வீசிக் கொண்டு வெறியோடிருந்தன. இயற்கையே பயங்கரமாக தோன்றியது. அதனால் நமது சிப்பிப் புழு மென்மையான தன் கூட்டை மூடிக்கொண்டு, கடலின் கரையில் உறுதியாய்க் கிடந்தது. முயன்று, பாதுகாப்புக்காகக் கரைக்குப்போவது தன் தகுதிக்குக் கீழானது என்று அது எண்ணியது. அலைகள் வலிதாக இருந்ததால், அதன் தீர்மானத்துக்கு மாறாக, புழுவும் அதன் சிப்பியும் வாரி எடுக்கப்பட்டு கரை மீது எறியப்பட்டன. திறந்த கடற்கரையில் தான் இருப்பதைக் கண்ட புழு, எச்சரிக்கையாகத் தன் சிப்பி மூடியை உயர்த்தியது இடுக்கு வழியே உலகைப் பார்த்தது. அப்படி அது பார்க்கும் போதே, மற்றொரு பெரிய அலை அதைத் தூக்கி மேலும் தள்ளி மணலில் விட்டெறிந்தது. இப்போ, உண்மையிலேயே கலவரமான நிலைமை தான் அலைகள் அதன் மேலே புரண்டன; அதை உருட்டிப் புரட்டின. ஆயினும், அதை மறுபடியும் கடலுக்குள் இழுக்கப் போதிய பலம் அவற்றில் எதற்கும் இல்லை. அப்பாவி சிப்பிப் புழு அந்த இடத்திலேயே கிடந்தது. கடலுக்குள் திரும்பிப் போக வழியேயில்லை. அது மிகவும் கோபம் கொண்டது.
கரை அருகில் ஒரு சிறு மரம் நின்றது. அதில் ஒரு காகம் நெடு நேரமாக இருந்து, சிப்பிப் புழு படும் பாட்டைக் கவனித்தது. முடிவில், அது கீழே வந்தது. தன் அலகால் சிப்பி மீது தட்டி, "யாரது உள்ளே? கதவைத் திற" என்று அதட்டலாய் கூறியது.
சிப்பிப் புழு அதிருப்தி அடைந்தது. யாரோ மோசமான கழிசடை என்னைத் தொந்தரவு செய்கிறது" என்று அது தனக்குள் சொல்லிக் கொண்டது. பிறகு, "யார் அது?" என்று கத்தியது.
"நான் கழிசடை இல்லை. நான் ஒரு காகம் அதிலும் புத்திசாலிக் காகம். கதவைத் திறந்து வெளியே வா."
"நான் ஏன் வெளியே வரவேண்டும்?"
"சும்மாப்பேசி மகிழ, அவ்வளவு தான் என்று காகம் மென்மையாய் சொன்னது.
“எனக்குப் பேச நேரமில்லை. நான் வெளியே வரவில்லை."
"நல்லது. ரொம்ப சரி. ஆனால் அங்கே உள்ளே நீ என்ன பண்ணுகிறாய்?"
"நான் முத்து உண்டாக்குவதில் கருத்தாக இருக்கிறேன். மேலும், உன்னைப் போன்ற அசிங்கமான அழகற்ற ஒரு ஜந்துவுடன் நான் ஏன் பேசவேண்டும்?" என்று சிப்பிப் புழு மிடுக்காகக் கூறியது.
"ஒகோ-எவ்வளவு உயர்வு!" என்று காகம் சிரித்தது. "என் அருமை நண்பனே, நான் விரும்பியதெல்லாம் கடலின் அமைப்பு, அளவு பற்றிய சில கேள்விகளை உன்னிடம் கேட்கலாம் என்பது தான். இந்தப் பரந்த உலகம் பற்றிய சில விஷயங்களை உன்னிடம் சொல்லவும் விரும்பினேன்."
"ஏனோ"
"ஏனென்றால், எனக்கு அறிவியலில் அதிக ஆர்வம். நான் ஒரு பல்கலைக்கழகத்தின் கூரை மேல் வசிக்கிறேன். அறிவியல் பேராசிரியரின் சொற்பொழிவுகளைக் கேட்கிறேன். அதனால் அறிவியலில் எனக்கு விருப்பம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் தான் கடல் பற்றியும், அங்கு நடப்பது குறித்தும் கேட்டறிய விரும்புகிறேன். புறா முட்டைகள், குருவி முட்டைகள் எல்லாம் அங்கு உள்ளனவா?"
"என்ன பேத்தல்" என்று வெடுக்கெனப் பேசியது சிப்பிப் புழு. "புறாக்களும் குருவிகளும் கடலில் இருப்பது போல் தான்!"
"அதைத் தானே நான் உன்னிடம் கேட்டறிய விரும்பினேன்."
"மடத்தனமான கேள்விகள் கேட்காதே" என்றது சிப்பிப் புழு. "கடலில், என்னை போல், லட்சக்கணக்கான சிப்பிகள் இருக்கின்றன. ஆனால், அனைத்தினும் நானே பெரியவன். அதனால் நான் மற்ற சிப்பிகளுடன் பேசுவதில்லை. ஆயிரமாயிரம் வகை வர்ணமீன்கள் இருக்கின்றன; பல்லாயிரம் வகைச் செடிகள் இருக்கின்றன. அவ்வளவுதான். உன்னைப் போன்ற முட்டாள்தன அசட்டுப் பிராணிகள் அங்கு கீழே இல்லை."
காகம் சிரித்தது. நீ என்னை முட்டாள் என்பதில் எனக்கு கவலை யில்லை. உண்மையில் நான் முட்டாள் இல்லை. நான் ஒரு காகம்- அதிலும், புத்திசாலிக் காகம், ஆனால், நண்பனே, நீ இதை எல்லாம் உன் சிறிய பொந்துக்குள் இருந்தபடியே சொல்கிறாயே, ஏன் நீ வெளியே வரக்கூடாது?"
"உனக்கு நல்ல பண்பு கிடையாதா? என்னுடன் நெருக்கமாய்ப் பேச உனக்கு என்ன துணிச்சல் நான் உன் நண்பன் இல்லை."
"நீ கடல் அரசன் போல் அல்லவா பேசுகிறாய்!"
"சந்தேகம் இல்லாமல்-நான் தான் முத்துக்களை உண்டாக்குகிறேன். அது கடலுக்குக் கீர்த்தி சேர்க்கிறது. எல்லாம் என்னால் தான்" என்றது சிப்பிப் புழு.
காகம் குறும் சிரிப்புடன் சொன்னது: "அப்படியானால் நான் அவசியம் பார்க்க வேண்டும். இப்படி ஒரு அற்புதமான பொருளை நான் பார்த்ததேயில்லை."
"நான் பொருள் இல்லை-நான் சிப்பிப் புழு, முத்துக்களை ஆக்குவோன்."
"நல்லது, நல்லது. மாட்சிமை மிக்கவரே, தயவு பண்ணி வெளியே வந்து, உம்மைக் காணும் வாய்ப்பை எனக்கு அளிக்கமாட்டிரா?" என்று காகம் நகைச் சுவையுடன் கூறியது.
இல்லை; மாட்டேன். நான் கதவைத் திறக்க முடியாது. எனக்கு அதிக வேலை."
"நீ உன் முத்தைப் பிறகு செய்யலாம். இப்ப கதவை திற. நான் எளிய, சாதாரண காகம், உன்னைப் போன்ற முக்கிய நபரை-முத்து செய்யக் கூடியவரை, பார்க்க ஆசைப்படுகிறேன். நான் முத்தையும் பார்க்க வேண்டும். என் வாழ்வில் இதுவரை நான் ஒரு முத்தைக் கண்டதில்லை."
"நான் தான் சொல்லிவிட்டேனே, நான் திறக்கமாட்டேன். நீ பெரிய புத்திசாலி என்று நீ நினைத்தால், நீயே ஏன் அதை திறக்கக் கூடாது?"
சிப்பிப் புழு இப்படிக் காகத்தை கேலி பண்ண முடிந்தது. ஏனெனில், தன் சிப்பியின் மூடியை காகம் ஒரு போதும் திறக்க இயலாது என அது உறுதியாக நம்பியது.
ஆனால் இப்போது காகம் கோபம் கொண்டது.
"நல்லது. அது தான் உன் விருப்பம் என்றால், நான் செய்து காட்டுவேன். நடப்பது உனக்குப் பிடிக்காது போனால் என்னைக் குறை கூறாதே."
காகம் சிப்பியைத் தன் அலகில் கவ்விக் கொண்டு, மேலே மேலே பறந்து போயிற்று. ஒரு பாறை அடுக்கை அடைந்தது. மிக உயரே பறந்தபடி அது சிப்பியை பாறைக்கு நேராகப் போட்டது. சிப்பி தூள்துள்ளாகச் சிதறியது. காகம் அதன் பின்னே பாய்ந்தது. சிப்பிப் புழுவை அலகில் கொத்தியது. ஒரே விழுங்கில் முழுங்கித் தீர்த்தது.
பிறகு காகம் முத்தைப் பார்த்தது. முத்து அதனிடமிருந்து விலகி உருண்டோடிக் கொண்டிருந்தது. விலையில்லாத அந்த முத்து ஒரு சாணக் குவியலினுள் விழுந்ததை அது கவனித்தது. பின்னர் காகம் மேலெழுந்து வானத்தில் உயர்ந்து, மகிழ்வுடன் கத்தியவாறு, பறந்தது.
(உருதுக் கதை)
நேஷ்னல் புக் டிரஸ்ட், இந்தியா
கருத்துகள்
கருத்துரையிடுக