சரித்திரம் பேசுகிறது
வரலாறு
Back
சரித்திரம் பேசுகிறது
கா. அப்பாத்துரையார்
மூலநூற்குறிப்பு
நுற்பெயர் : சரித்திரம் பேசுகிறது (அப்பாத்துரையம் - 3)
ஆசிரியர் : கா.அப்பாதுரையார்
தொகுப்பாசிரியர் : முனைவர் கல்பனா சேக்கிழார்
பதிப்பாளர் : கோ. இளவழகன்
முதல்பதிப்பு : 2017
பக்கம் : 20+300 = 320
விலை : 400/-
பதிப்பு : தமிழ்மண் பதிப்பகம், எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை 600 017, தொ.பே.: 24339030, செல்: 9444410654
மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in
தாள் : 16.0 கி. மேப்லித்தோ, அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 11.5 புள்ளி, பக்கம் : 312
கட்டமைப்பு : இயல்பு படிகள் : 500
நூலாக்கம் : கோ. சித்திரா
அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)
அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.
நுழைவுரை
தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர்.
பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம்.
தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும்.
தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம்.
தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார்.
அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன.
இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும்.
தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள்
கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலை
யிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர்
திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன்,
திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர்.
இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய ‘கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும்’சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி.
நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
“ஆக்கத்தை எனக்கிந் நாட்டார்
அளித்திட்ட அறிவை யெல்லாம்
தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே
செலவிடக் கடமைப் பட்டேன்.”
- பாவேந்தர்
கோ. இளவழகன்
தொகுப்புரை
மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்!
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின.
“அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார்.
பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார்.
சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன.
- தனித்தமிழ் இயக்கத் தோற்றம்
- நீதிக் கட்சி தொடக்கம்
- நாட்டு விடுதலை உணர்ச்சி
- தமிழின உரிமை எழுச்சி
- பகுத்தறிவு விழிப்புணர்ச்சி
- இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர்
- புதிய கல்வி முறைப் பயிற்சி
- புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம்
இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன.
“தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது!
அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்!
பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக,
- உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல்.
- தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல்.
- தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல்.
- தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல்.
- திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல்.
- நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல்.
இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது.
பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது.
உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன.
1. தமிழ் - தமிழர் - தமிழ்நாடு
2. வரலாறு
3. ஆய்வுகள்
4. மொழிபெயர்ப்பு
5. இளையோர் கதைகள்
6. பொது நிலை
பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும்.
இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின்
உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன.
கல்பனா சேக்கிழார்
நூலாசிரியர் விவரம்
பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார்
இயற்பெயர் : நல்ல சிவம்
பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989
பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி
பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி)
உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர்
மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு
வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா
தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி
பள்ளிக் கல்வி : நாகர்கோவில்
கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம், இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி ‘விசாரத்’, எல்.டி.
கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி)
நூல்கள் : 120 (ஆங்கிலம், 5)
இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை.
பணி :
- 1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர்.
- 1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர்.
- பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு.
- 1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி
- 1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர்.
- 1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர்
அறிஞர் தொடர்பு:
- தொடக்கத்தில் காந்திய சிந்தனை.
- 1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு
விருதுகள்:
- மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது,
- 1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் ’சான்றோர் பட்டம்’, ‘தமிழன்பர்’ பட்டம்.
- 1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் ’கலைமாமணி’.
- 1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய ’திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம்.
- மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய ’பேரவைச் செம்மல்’ விருது.
- 1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர்.
- 1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார்.
- இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது.
பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்:
- அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005.
- பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007.
பதிப்பாளர் விவரம்
கோ. இளவழகன்
பிறந்த நாள் : 3.7.1948
பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625,தஞ்சாவூர் மாவட்டம்.
கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு
இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல்
ஆற்றியுள்ள பொதுப்பணிகள்
1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர்.
பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் ’ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர்.
உரத்தநாட்டில் ’தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர்.
பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ’உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர்.
தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும்,
19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர்.
பொதுநிலை
தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர்.
தொகுப்பாசிரியர் விவரம்
முனைவர் கல்பனா சேக்கிழார்
பிறந்த நாள் : 5.6.1972
பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம்.
கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர்
இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
ஆற்றியுள்ள கல்விப்பணிகள்
- அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி.
- திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு.
- புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர்.
- பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார்.
- பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார்.
- 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
- மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார்.
- இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார்.
- செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார்.
நூலாக்கத்திற்கு உதவியோர்
தொகுப்பாசிரியர்:
- முனைவர் கல்பனா சேக்கிழார்
கணினி செய்தோர்:
- திருமதி கோ. சித்திரா
- திரு ஆனந்தன்
- திருமதி செல்வி
- திருமதி வ. மலர்
- திருமதி சு. கீதா
- திருமிகு ஜா. செயசீலி
நூல் வடிவமைப்பு:
- திருமதி கோ. சித்திரா
மேலட்டை வடிவமைப்பு:
- செல்வன் பா. அரி (ஹரிஷ்)
திருத்தத்திற்கு உதவியோர்:
- பெரும்புலவர் பனசை அருணா,
- திரு. க. கருப்பையா,
- புலவர் மு. இராசவேலு
- திரு. நாக. சொக்கலிங்கம்
- செல்வி பு. கலைச்செல்வி
- முனைவர் அரு. அபிராமி
- முனைவர் அ. கோகிலா
- முனைவர் மா. வசந்தகுமாரி
- முனைவர் ஜா. கிரிசா
- திருமதி சுபா இராணி
- திரு. இளங்கோவன்
நூலாக்கத்திற்கு உதவியோர்:
- திரு இரா. பரமேசுவரன்,
- திரு தனசேகரன்,
- திரு கு. மருது, திரு வி. மதிமாறன்
அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு:
- வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14.
சரித்திரம் பேசுகிறது
முதற் பதிப்பு – 1959
இந்நூல் 2002 இல் தமிழ்மண் பதிப்பகம், சென்னை - 17. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது.
வரலாற்றின் குரல்
சரித்திரம் பேசுகிறது!
வரலாறு குரல் எழுப்புகிறது!
ஒரு வாயாலல்ல, பல நூறு வாய்களால்! ஒரு நூற்றாண்டுச் சரித்திரமல்ல, ஒரு நாட்டுச் சரித்திரமல்ல; பல நூற்றாண்டுச் சரித்திரங்கள், பல நாட்டுச் சரித்திரங்கள்!
ஒரு மொழியில் மட்டுமல்ல; உலகின் பல நூறு மொழிகளில் சரித்திரம் பேசுகிறது!
மொழிகளில் மட்டுமா? காவியங்களிலும் ஓவியங்களிலும் அது இன்னிசை பயில்கின்றது. கலைகளிலும் கலைப் பொருள் களிலும் அது மிழற்றுகின்றது. பாறைகளிலும் மண்ணடியிலுள்ள புதைபொருள்களிலும் அது உரையாடுகின்றது.
மனித உலகின் வரலாறு மாண்புமிக்க தன் பல்லாயிர வாய்களால், பல்லாயிர வகைகளில் நமக்குப் பயனுடைய படிப்பினைகள் தருகிறது!
இயற்கையின் எல்லையற்ற பரப்பில் நின்று அது நமக்கு அறிவுரை தருகின்றது, எச்சரிப்புரை தருகின்றது, அவ்வப்போது அது நகைக்கிறது, சீறுகிறது, வாழ்த்துகிறது, மாழ்கி மறுகுகிறது.
மனிதன் வாழ்ந்த வகை, வளர்ந்த வகைகளை அது காட்டுகிறது. அவன் தாழ்ந்த வகை, தளர்ந்த வகைகளைத் தீட்டுகிறது. மன்னர் சென்ற வழிகளை அது வகுத்துரைக்கிறது. மக்கள் அடைந்த நலங்களை, இன்னல்களை அது தொகுத்துணர்த்துகிறது. அரசியலின் தோற்ற வளர்ச்சிகள், மதங்களின் எழுச்சி தளர்ச்சிகள், போராட்டங்கள், வெற்றி தோல்விகள், மறுமலர்ச்சிகள் ஆகியவற்றை அது பக்கம் பக்கமாக, ஏடு ஏடாக நமக்கு எடுத்தியம்புகிறது!
மொழி கடந்த கலை
வரலாற்றின் குரலுக்கு ஒரு தனி மதிப்பு உண்டு. தனி ஆற்றல், தனிக் கவர்ச்சி உண்டு. தனிப்பட்ட நிறைபயனும் உண்டு. ஏனெனில், அது இயல்களில் ஓர் இயல். இயல்களின் மெய்மை, வாய்மை உடையது. அது கலைகளில் ஒரு கலை, கலையின் கவர்ச்சி உடையது. அதே சமயம் இயல் கடந்து, கலை கடந்து அது நிறைவளமும் நிறைபயனும் உடையது. இயல்களையும் கலைகளையும் வளர்ப்பது அதுவே.
இயல்கள் பல கலைகள் பல, இயல்களுக்கும் கலைகளுக்கும் அடிப்படையாயுள்ளது மொழி. வரலாறு இவையனைத்தையும் உள்ளடக்கியது. இயல்களின் வரலாறுகள், கலைகளின் வரலாறுகள், மொழியின் வரலாறு, மக்கள் வரலாறு ஆகிய யாவும் நாட்டு வரலாற்றின் கூறுகளே. அத்தகைய பல நாட்டு வரலாறுகள், மக்கள் வரலாறுகள் ஆகியவற்றின் கூட்டுத் தொகுதியே சரித்திரம், உலக வரலாறு!
வரலாறு உண்மையில் ஒரு பேராறு. இயற்கை என்னும் வான் முகில்வளமே அதன் கருமூலம். மனித இனம் என்னும் தடங் குவட்டிலிருந்து. அது பிறக்கிறது. காலத்திலும் வாழ்க்கைப் பரப்பிலும் அது தவழ்ந்தோடி அவற்றை வளப்படுத்துகிறது. எல்லையற்ற நிறைபயன் என்னும் கடல் நோக்கி அது பாய்கிறது, பாய்ந்து கொண்டேயிருக்கிறது.
வரலாறு மொழியில் எழுதப்படலாம். எந்த மொழியிலும், உலகின் பன்னூறு மொழிகளிலும் எழுதப்படலாம். ஆனால் இயல்பு முறையில், அது மொழி கடந்த கலை. அதன் குரல் மொழியின் குரல் அன்று; மொழி கடந்த கலையின் குரல். கற்சிலை, வண்ணத்திரை ஓவியம், மொழியின் காவியம் ஆகியவற்றைக் கலைஞன் பேச வைக்கிறான். ஆனால், வரலாறு தானே இயற்கை மொழியில் பேசுகிறது. அதைத் தானும் கேட்டு, மொழி மூலம் பிறரையும் கேட்கவைக்கும் அருங் கலைஞனே வரலாற்றாசிரியன்.
பேசும் கலை
கல் உயிரற்றது. கலைஞன் அதைச் சிலையாக்குகிறான், உயிர் கொடுக்கிறான். அது பேசுகிறது. கல்லா உள்ளங்கள்கூட அதன் வசப்படுகின்றன. உயிருள்ள உருவங்களின் பேச்சைவிடச் சிறப்பு வாய்ந்த ஒரு மொழியில், கலை மொழியில், அது பேசுகிறது. பேசி, உயிர்ப்பண்புடைய உள்ளங்களையே இயக்குகிறது.
உயிருள்ள உருவங்களின் பேச்சுக்கு ஓய்வு உண்டு. பேச்சு காற்றில் மிதந்து சென்று பரந்து மறைந்து விடுகிறது. ஆனால் சிலையுருவங்களின் கலைப்பேச்சு மறைவதில்லை. கலையுடன் இணைந்து அது நிலையாக இயங்கிக்கொண்டே இருக்கிறது. கல்லிலும் வண்ணப் பொருள்களிலும் பதிந்து, அது நம் கண்களில் ஓயாது உலவுகிறது; நம் கரத்தில் இடைவிடாது நிலவுகிறது.
பல்லவன் மகேந்திரவர்மன் ஆயிரத்தைந்நூறு ஆண்டு களுக்கு முன் தமிழகத்தை ஆண்ட பேரரசன். அவன் மக்கட் பேரரசன் மட்டுமல்ல; வீரப் பேரரசன் மட்டுமல்ல; கலைப் பேரரசனாகவும் விளங்கினான். அவன் தன் வாழ்வில் என்றோ ஒரு நாள், ஏதோ ஒரு தறுவாயில், ஏதோ ஒரு வெற்றியின் எக்களிப்பில் அல்லது ஏதோ ஒரு கலைத்திற நுகர்வில் ஈடுபட்டுப் புன்முறுவல் பூத்திருக்கக்கூடும்! இன்று நாம் அதை நேரடியாகக் காணவும் முடியாது, கருதவும் முடியாது. ஆயினும் அவன் கட்டுவித்த சிற்றன்னவாசல் குகைக்கோயில் ஓவியங்களில், நாம் அக் காட்சியைக் கண்ணுறுகிறோம். அதுபோன்ற பல இனிய கலைக்காட்சிகளும் நம் கண்முன் இழைகின்றன.
மகேந்திரன் புன்முறுவலை நாம் இன்றளவும் காண்கிறோம். உலகமும் காண்கிறது. காலங்கடந்து கலைஞன் வாழ்வும் நம் வாழ்வும் கடந்து, அது புன்முறுவல் பூத்துக்கொண்டே யிருக்கிறது. உருவங்கள் பேசிக் கொண்டேயிருக்கின்றன.
உயிருள்ள உருவங்கள் வாயால் மட்டுமே பேசும். கலைஞன் அழகுருவங்களில் பேசாத பகுதி இல்லை என்னலாம். கண் பேசும். இதழ்கள் பேசும். சிற்றிடையும் சிறு விரல்களும்கூடப் பேசமுடியும். இவை மட்டுமோ? கோடுகளும் புள்ளிகளும் வேறு வேறு குரலெழுப்பும், வண்ணங்களும் வளைவுகளும் வகைவகையாக இசை மிழற்றும். அது மட்டுமன்றி உருவின் குரலுடன் உருவின் வாழ்வும் வாழ்வின் பண்பும், பண்பின் பயனும் நம் கண் முன்னும் கருத்தின் முன்னும் என்றும் நின்று நிழலாடும், கலைப் பண்பாடும்!
பேசும் நகரம்
வரலாறு கலையைக் காட்டிலும் மாயமான ஆற்றலுடைய உயிர்க் கலை. கல் சடப்பொருள். ஆனாலும் கலைஞன் அதற்கு உயிரூட்டுகிறான். உயிர்களில் சிறந்த மனித உயிரையே அதனால் வயப்படுத்துகிறான். இது பெரிதான ஆற்றல்தான். ஆனால், அந்த மனித உயிர் வாழ்க்கையை கலைப் பொருளாக்குகிறான் வரலாற்றுக் கலைஞன். இயற்கை என்னும் திரையில் காலம் என்னும் தூரிகை கொண்டு அதைத் தீட்டுகிறான். உயிருக்கும் உயிர் வாழ்க்கைக்கும் அவன் உள்ளுயிர் கொடுத்து விடுகிறான்.
சடப்பொருளில் உயிரூட்டி உயிர்களை இயக்கும் கலைஞனைப் பார்க்கிலும், உயிரில் உள்ளுயிரூட்டி இயற்கையையே இயக்க முனையும் வரலாற்றுக் கலைஞனின் ஆற்றல் குறைந்ததன்று, கோடிப்பங்கு உயர்ந்தது. கலையின் பண்பினால் கல் பேசுமானால், அதன் உள்ளுயிர்த் துடிப்புப் பெற்ற உயிர்ப்பண்பு எவ்வளவு கிளர்ச்சியுடன் பேசாது!
ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முன் இத்தாலி நாட்டில் பாம்பி என்றொரு மாநகர் இருந்தது. அதன் அருகே விசூவியஸ் என்ற ஒரு மலை உண்டு. அது ஒரு தூங்கும் எரிமலை. ஒரு நாள் திடுமென அது விழித்துக் கொண்டது. பெருமூச்சு விட்டு அனலும் ஆவியும் கக்கிற்று. புகைப் படலங்கள் எழுந்து வானத்தையும் திசைகளையும் மறைத்தன. அடிநிலப் பாறைகளுடன் கற்பாறைகளும் உருகிக் குழம்பாகிப் பெருக்கெடுத்தோடின. நகரமும் நகர வாழ்வும் ஒரு கணப்போதில் கற்குழம்பினடியில் உயிருடன் புதையுண்டன.
மாநகரம் மறைந்து போயிற்று!
உலகமும் அந்த மாநகரத்தைச் சில நாட்களுக்குள் மறந்து விட்டது!
இருநூறு ஆண்டுகளுக்கு முன்னே ஓர் இத்தாலிய இளவரசன் தோட்டத்தில் நீருக்காகக் கேணி அகழ்வித்தான். அதன் பயனாய்த் தற்செயலாக நிலத்தின் ஆழத்திலிருந்த நகரம் வெளிப்பட்டது. உலகிலே புதைபொருளாராய்ச்சியைத் தூண்டிய முதல் நிகழ்ச்சி இதுவே.
நிலத்தினுள்ளே பாம்பி நகரத்தின் வீடுகள், தெருக்கள், வீட்டின் தட்டு முட்டுப் பொருள்கள், கலங்கள், துணிமணிகள்; காசுகள், கவின் பொருள்கள் யாவும் ‘அன்றொரு நாள்’ இருந்தபடி இருந்தன. அது மட்டுமோ? ‘அந்த ஒருநாள்’ இருந்த, கிடந்த, நின்ற, செயலாற்றிய நிலையிலேயே, மாண்ட பின்னும் மாளா உயிருடைய ஆவிக்கூடுகளாக, மாண்டவரின் எலும்புக்கூடுகள் நின்று நிலவின.
வீடுகள், தெருக்கள், சுவர்கள், காசுகலங்கள், அணிமணிகள், ஆவிக்கூடுகள் ஆகிய இவை அனைத்துமே இன்று வரலாற்றின் உரத்த குரல்கள் கொண்டு பேசுகின்றன - பதினெட்டு நூற்றாண்டு களுக்கு முன் பாம்பி நகர மக்கள் வாழ்ந்த சுகபோக, கோலாகல வாழ்க்கையைப் பற்றி நமக்கு விளக்கமாக எடுத்தியம்புகின்றன.
கலைகளின் களஞ்சியம்: இயல்களின் எழிற்கோவை
உலகின் கூறுகள் பல, கோணங்கள் பல. அவற்றைக் கண்டு வரலாற்றுக் கலை ஆக்கும் கலைஞரும் பலப் பலர், பல வகையினர். அவர்கள் படைத்த, படைக்கிற உருவங்கள் பல்லாயிரம் படைத்த உருவங்களின் முகங்களோ பன்னூறாயிரங் கோடி! அத்தனையும் பேசுகின்றன, வரலாற்றுக் கலைஞன் கையில்! அத்தனையையும் பேச வைக்கிறான் அவன்!
வரலாற்றுக் கலைஞன் படைக்கும் வரலாறு ஒரு தனிக் கலையின் சிறு படைப்பல்ல; கலையின் ஒரு தனிப்படைப்புக்கூட அல்ல; அது கலைகளின் ஒரு கலைக்குவியல்; கலைப்படைப்புக் களின் ஒரு கண்காட்சி; கலைகள் அடங்கிய ஒரு கலை உலகம். கலைகள் எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஓர் அகலக் கலையாக, இயல்கள் எல்லாவற்றையும் அகங்கொண்ட பெரும் பேரியலாக, வாழ்க்கை முழுவதையுமே தன்னகத்தடக்கிய வாழ்க்கைக் கலையாக, வாழ்க்கையியலாக அது இயங்குகிறது. அது மனித நாகரிகத்தைத் தோற்றுவித்து, வளர்த்து வருங்கால வள நோக்கி அதைக் கொண்டு சென்று பேண முனைகிறது.
உயிருக்கும் உயிர்கொடுக்கும் திறமுடையது வரலாற்றுக் கலையின் உள்ளுறை பேருயிர். அது இயற்கையின் மறை உள்ளத்தின், கடவுட் பண்பின் நிழல்; ஊழ் முதல்வனின் குரலுக்கு எதிர் குரலாக, அது ஊழ்கடந்து மனித இனம் வளர்க்கிறது! இயற்கைக்குக் அது நின்று பயன் அளிக்கிறது!
வரலாறு இங்ஙனம் கலைகளின் களஞ்சியமாக, இயல்களின் எழிற்கோவையாக இயங்குகிறது. அது வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டி விளக்கும் ஒரு விளக்கக் கண்ணாடி. இயற்கையின் மறை கதவம் திறக்கும் ஒரு திறவுகோல். அதன் பேச்சு நம் உயிர் மூச்சு. அதை அறிந்தவர் எல்லாம் அறிவர். எல்லா அறிவும் அதன் ஒரு பகுதியே. ஆனால், அது எல்லா அறிவும் தாண்டி, எல்லா அறிவுக்கும் அறிவாய், இயற்கையின் எல்லையற்ற செல்வத்தின் ஒரு பெரும் சேமகலமாய் இயல்கின்றது.
ஓடும் திரைப்படம்
இயல்கள், கலைகள் நிலையான உலகத்தை, நம் கண்முன் நிலவும் நிகழ்கால உலகை மட்டும் அளாவி நிற்பன. வரலாறோ, இயங்கும் உலகை, உலக இயக்கத்தையே ஓடும் திரைப்பட மாக்குவது. அது காலத்தில் வளர்வது. இறந்த காலத்தை ஆய்வது! நிகழ்காலத்தை விளக்குவது, வருங்காலத்தை ஆக்குவது! முக்காலமும் அளாவிய மற்றோர் இயல், மற்றொரு கலை கிடையாது என்றால் தவறில்லை.
நிகழ்ச்சிகளை மட்டுமின்றி, நிகழ்ச்சிகளின் போக்கை, காரணகாரியத் தொடர்பை, தோற்ற வளர்ச்சிகளை, தளர்ச்சி ஒடுக்கங்களைக் காட்டுவது வரலாறு. அது பொருள்களை மட்டுமின்றி, பொருள்களின் பண்புகளையும், பொருள்கள் பண்புகள் ஆகியவற்றின் தொடர்புகளையும் காட்டி, நமக்கு எல்லையற்ற படிப்பினைகளைத் தருகிறது. மெய்மை கடந்த வாய்மை, வாய்மை கடந்த உண்மை உணர்த்தவல்ல அருங்கலை அதுவே.
கண்கூடாகக் காண்பது, புலன்கள் மூலம் உணர்வது மெய்மை. இது அறிவின் உடற்கூறு; நிகழ்காலக் கூறு. இதனடிப்படையிலே. இதன் மூலம் உணர்வால் உய்த்துணரப்படுவது வாய்மை. இது உணர்வுக் கூறு, உள்ளுடற் கூறு, இறந்தகாலக் கூறு. இவ்விரண்டின் இணைவாராய்வால், வரலாற்று முறையால், நுனித்துணரப் படுவது உண்மை. இதுவே அறிவின் உயிர்க்கூறு, எதிர்காலக் கூறு. உயிருள்ள வரலாறு இம்முக்கூறுகளும் அமையப் பெற்றதேயாகும்.
வரலாற்றின் குரலறிந்து, அதன் படிப்பினைகளின் பாங் குணர்ந்தால், நம்மால் என்னதான் செய்ய முடியாது? அவற்றின் மூலம் நம் நாட்டை வளப்படுத்தலாம், நாட்டு மொழியை வளர்க்கலாம்; நாட்டு மக்கள் வாழ்வை மாட்சிமைப்படுத்தலாம்! நாட்டுக்கும், மொழிக்கும், இனத்துக்கும் புகழ் தந்து, உலகுக்கே உயர்வு நாடலாம்! உலகம் நாட்டைப் போற்ற, நாடு நம்மைப் போற்ற, நாம் புகழ் மலையின் பொற்குவடுகளில் தவழ்ந்து உலாவலாம்!
வரலாற்றின் மறை குரலறிந்தவர்கள் தாமே தம் வாழ்வின் சிற்பிகள் ஆகலாம். தம் வாழ்வின் விதியைத் தம் மதிவழி நிறுத்தலாம். அக்குரலறிந்து, மக்களை அவ்வழி நடத்துபவர்கள். தம் நாட்டின் விதியை, தம் மொழியின் ஊழை, தம் உலகின் போக்கைத் தாமே ஆக்கிக்கொள்ளும் ஆற்றல் உடையவர் ஆவர். இயற்கையின் எல்லையினுள் மற்றோர் இயற்கையை, உலகின் எல்லையினுள் மற்றோர் உலகை, ஊழின் எல்லைக்குள் அதனுடன் போட்டியிடும் மற்றோர் ஊழைப் படைத்து, ‘இறைவனின் நிழல்’களாகவே அவர்கள் இயங்குவர். இத்தகைய தெய்வப் பெரியோர்களையே திருவள்ளுவர் பெருமான் ’பகவன்’ என்றும், ‘தெய்வத்தோடொப்பர்’ என்றும், ‘அறவோர்’ என்றும், ‘சான்றோர்’ என்றும், ‘பண்பாளர்’ என்றும் பல படிகளில் வைத்துப் போற்றினார்.
உயிர்ப் பண்பின் இரகசியம்
“பெரியார் எல்லாம் பெரியரும் அல்லர்,
சிறியார் எல்லாம் சிறியரும் அல்லர்!
பெற்றார் எல்லாம் பிள்ளைகளல்லர்
உற்றார் எல்லாம் உறவினர் அல்லர்!”
இவ்வாறு ‘அரச கவிஞனும்’ ‘கவி அரசனும்’ ‘பிள்ளைக் கவிஞனும்’ ஆன அதிவீரராமபாண்டியர் அடுக்கிக்கொண்டே போகிறார், மெய்மையும் வாய்மையும் கடந்த உண்மைத் தோற்றம் பற்றி! அவர் அடுக்குடன் அடுக்காக, நாம்,
“கல்லில் உருவம் சமைக்க வல்லார்
எல்லாம் கலைஞர் அல்லரும் அல்லர்”
என்று இணைக்கலாம். ஏனென்றால் கல்லுக்கு உயிர் கொடுக்கும் உயிர்க் கலைஞர் இருப்பது போல, கல்லுக்கு உருவம் மட்டுமே தரும் கல்லாக் கலைஞரும் இருக்கின்றனர். கலைப்படம் வரையும் கலைஞரைப் போலவே, நிழற்படம் ஆக்கும் ’ஒளி நிழற் கருவி’களும் உண்டு. இவை போலவே, உயிர்த்துடிப்புள்ள பேசும் வரலாறு காண்பவரும் உண்டு. பேசமாட்டாத, உயிரற்ற ஊமை வரலாறுகள் காண்பவரும் உண்டு.
கல்லுக்கு உயிர்க் கலைஞன் ஊட்டும் உயிர்ப்பண்பு கல்லில் இல்லை. கற்சிலைக்கு முன்மாதிரியாகக் கருதப்படும் உயிருருவத்தில் கூட இல்லை. அது கலைஞன் உள்ளத்திலிருந்தே, உள்ளத்தில் கருக்கொண்டு துடித்தாடும் கலைப் பண்பிலிருந்தே வடித்து உருவாக்கப் பெறுகிறது. வரலாற்றுக் கலையின் உயிர்ப் பண்பும் இது போன்றதே. மனித வாழ்க்கை அக்கலைஞனுக்குக் கல்லையும், தீட்டு திரையையும் ஒத்தது. அவன் அறிவு அவனுக்குத் தூரிகை, உளி போன்று ஒரு கருவி போன்றது. வரலாற்றின் மெய்மை அவன் கலைக்குரிய உருவமைதி மட்டுமே. அவன் கலையின் உயிர்ப்பண்பு இவற்றிலில்லை. இவை கடந்து, வாழ்க்கையை அவன் தீட்டிச் செல்லும் போக்கிலும், திசையிலும், முறையிலுமே அது அமைந்துள்ளது.
மெய்மை, வாய்மை என்றும் இரு கரைகளினூடாக, வளர்ச்சி தளர்ச்சி என்னும் மேடு பள்ளங்கடந்து, இன நிறைவு பொங்கல் வளம் என்னும் குறி நோக்கிச் செல்லும் ஓர் ஆறாக அவன் வரலாற்றைத் தீட்டிக் காட்டுகிறான்.
வரலாற்றுக் கலைஞனின் நடுநிலை சிறிதும் கோடாத மெய்ம்மை ஆர்வம், வாழ்க்கை ஈடுபாடு, இன ஆர்வம் ஆகியவற்றிலேயே வரலாற்றுக் கலையின் உயிர் அடங்கியுள்ளது. இவை நிறைந்த வரலாறே பேசும் வரலாறு. இவை இடம் பெறாத வரலாறு பேசாத, உயிரற்ற வரலாறேயாகும்.
நம் பள்ளி கல்லூரி வரலாறு
“எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கெடுத்தான்” என்பது பழந்தமிழ்ப் பழமொழி. இதனுடன் புதுத் தமிழ்ப் புதுமொழியாக, ‘கேட்டவன் காதுகளையும் கெடுத்துக் கொண்டான்’ என்று நாம் சேர்த்துக்கொண்டால் தவறில்லை. ஏனென்றால், கலை வளர்ச்சியடைவதற்குரிய மூன்று தேவைக் கூறுகளை அது நன்கு எடுத்துக் காட்டிவிடும்.
பாட்டை இயற்றுபவனுக்கும் கலைப்பண்பு வேண்டும். அதைப் பிறர் கேட்டு நுகரப் பாடுபவனுக்கும் அப்பண்பு தேவை. கேட்பவனுக்கும் அது இல்லாவிட்டால் பாட்டு பயன்படாது. இதைப் போலவே வரலாற்றை இயற்றுபவனுக்கு மட்டுமன்றி, அதைக் கற்பிப்பவருக்கும் கற்பவருக்கும் வரலாற்றுப் பண்பு இன்றிமையாதது. நம் பள்ளி கல்லூரி வரலாறுகள் இம் மூவகைகளிலும் இன்னும் குறைபாடுடையவைகளாகவே இருக்கின்றன.
நம் பள்ளி கல்லூரிக் கல்விமுறையும், வரலாற்றுக் கல்வியும் ஒருங்கே மேலை உலகம் நமக்குத் தந்த ஒளிகளே. நம் பண்டைப் பெருமை அழிந்து இரண்டாயிர ஆண்டுகளாக நாம் வரலாற்று உணர்வற்று, ஆராய்ச்சி உணர்வுமற்றுக் கிடந்தோம். மேலை உலகு இரண்டையும் தந்தது. நமது புதுவாழ்வுக்கு இது வழிவகுத்துள்ளது. ஆயினும் மொழித்துறையிலும் பண்பாட்டுத் துறையிலும், அறிவுத் துறையிலும் நம் செறிந்த இடைக்கால அடிமை மனப்பான்மை நல்ல பண்புகளைக்கூட உயிரற்ற பண்புகளாக்கி விடுகிறது.
மாறாத ஓர் அறிவற்ற பண்பை நாம் நேற்றுவரை பின்பற்றினோம். இது பழைய அடிமைத்தனம். இப்போது மாறுபடும் ஓர் அறிவுடைய பண்பைப் பின்பற்றுகிறோம். இது புதிய அடிமைத்தனம்.
உயிர்த்துடிப்புடைய வரலாறு கண்டு நாம் பயன் அடைய வேண்டுமானால், பழைய அடிமைத்தனம் மட்டுமன்றி, புதிய அடிமைத்தனமும் போகவேண்டும். உருவைப் பின்பற்றும் முறையையும், மாறுபடும் இயக்கங்களைப் பின்பற்றும் முறையையும், ஒருங்கே விட்டுவிட வேண்டும். நம் உள்ளுயிர்ப் பண்பைத் தட்டி எழுப்பி, அதன் வழி நின்று புத்தார்வத்துடன் முன்னேற வேண்டும்.
புராணக் கதைகள், கற்பனைகள், அரைகுறைக் கேள்வி மரபுகளை விட்டு நாம் முன்னேறி விட்டோம், பள்ளி கல்லூரிகளிலாவது! மன்னர் இளங்கோக்கள் வாழ்வு தாழ்வு, வெற்றி தோல்விகள் கடந்து, மனித வாழ்க்கையில் கருத்துக் கொண்டு விட்டோம். சென்ற சில ஆண்டுகளுக்குள், நிகழ்ச்சிக் கோவையாகக் கற்பிக்கப்பட்ட பழைய வரலாற்று முறையை ஒழித்து, வாழ்வியலாகவும் சமூகவியலாகவும் பள்ளிகளில் வரலாற்றைக் கற்கத் தொடங்கிவிட்டோம், கற்பிக்கத் தொடங்கி விட்டோம். இத்தனையும் வரவேற்கத்தக்கனவே. ஆனால் இம்முறைகள் நம் மக்கள் ஆர்வத்தை, நம் பள்ளி மாணவர் உணர்ச்சியைத் தூண்ட வில்லை. தூண்டும் முறையில் மாணவர் ஆர்வம் தட்டி எழுப்பப்படவில்லை. ஏனென்றால், கற்பிக்கும், ஆசிரியர்களுக்கும் எழுதும் நூலாசிரியர்களுக்கும் நாட்டார்வம், மொழியார்வம், மக்கள் நல ஆர்வம், உலக ஆர்வம் ஏற்படவில்லை. மேனாட்டு முறைகளைச் சுடச்சுடப் பார்த்துப் பின்பற்றும் சடங்கார்வமே முனைப்பாயிருந்து வருகிறது. பொருளற்ற சடங்குகள் நிறைந்த நம்நாட்டு வாழ்வில், புதுமைகூட எளிதில் தன் பண்பற்ற அடிமைத்தனத்தின் சின்னமாகி ஒரு சடங்காகி விடுகிறது!
நம் தேவை
தன்னிறைவு கடந்த தன்னல ஆர்வம், தன்னலம் கடந்த பொதுநல ஆர்வம், நாட்டார்வம், சமுதாய ஆர்வம், அறிவார்வம், பண்பார்வம் ஆகியவற்றிலேயே வரலாற்றின் உயிர்த்துடிப்பு பிறக்க முடியும். அவற்றிலேயே அவ்வுயிர்த்துடிப்பைப் பெற முடியும். அவற்றின்வழிநாடும் உணர்வே கலைப்பண்பு ஆகிறது. அவ் வுணர்வே, கலை ஆக்குகிறது, இயல் ஆக்குகிறது. அத்தகு கலைகளைத் தமிழகம், இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன்பு பெற்றிருந்தது. அத்தகைய இயல்களை மேலைஉலகம் இன்று பெற்றிருக்கிறது. வருங்காலத்தில் இவை இரண்டையும் பெற நாம் பாடுபட வேண்டும் வரலாற்றின் மெய்க்குரல்கள் இவை இரண்டையுமே வருங்காலத்தில் நமக்கு நிறைவுடன் ஆக்கித்தருபவை ஆகும்.
அக்குரல்களுக்கு நாம் செவி சாய்ப்போம்!
உண்மையான, உயிர்க்குரலுடைய, கலைப் பண்புடைய வரலாற்றுக் கலைஞன் உள்ளத்தில் புகுந்து, உயிர்த் துடிப்புடைய வரலாற்று மாணவன் குரலில் இழைந்து, நிகழ்கால உணர்வு, வருங்கால ஆர்வம் என்னும் இசை நரம்புகளின் அதிர்வில் விதிர்விதிர்ப்புற்று வரலாற்றின் படிப்பினைகள் சிலவற்றில் நாம் கருத்துச் செலுத்துவோம்!
உலகில் நாம்!
உலகம் எல்லையற்ற பரப்புடையது. ஆனால் அது மனிதன் ஆற்றலெல்லைக்குட்பட்டுக் குறுகி வருகிறது.
உலகம் பல்வண்ணப் பெருக்கம் உடையது. பல நாடுகள் கொண்டது. வேறுபாடுகள், வேற்றுமைகள் நிறைந்தது. ஆயினும் அது ஒன்றுபட்டுக் கொண்டு வருகிறது. ‘ஓருலகம்’ ஆகிக் கொண்டு வருகிறது.
இயல் நூல் வளர்ச்சி இடத்தை வென்றுவிட்டது, வென்று வருகிறது. இது விசை வண்டி, தொடர் ஊர்தி, மின்னூர்தி, நீராவிக்கப்பல், வானூர்தி ஆகியவற்றின் விளைவு. காலத்தையும் இயல் நூல் வென்று விட்டது, வென்று வருகிறது. இது அஞ்சல், தந்தி, கம்பியில்லாத் தந்தி, தொலைபேசி, தொலைக்காட்சி ஆகியவற்றின் பயன். இவற்றால் உலகு விரைந்து மனிதன் கைக்கெட்டிய தொலைவுக்கு உட்பட்டுக் குறுகிவருகிறது. அத்துடன் நாடு கடந்த, இனம் கடந்த, மொழி கடந்த தொடர்புகள் பெருக்கமுற்று வருகின்றன. இவற்றால் உலக மக்கள் வேற்றுமைகள், வேறுபாடுகள் தாண்டி, ‘ஓர்’ உலகை’த் தம் மனக்கண்முன் அணிமைக் கனவுக் காட்சியாகக் காணத் தொடங்கியுள்ளார்கள்.
எல்லைக்குட்பட்டுக் குறுகிவரும் உலகம்!
வேற்றுமைகள் அகன்று ஒன்றுபட்டுவரும் ‘ஓர் உலகம்!’
இத்தகைய உலகத்தில் நாம் - தமிழர்-கொண்டுள்ள, கொண்டிருந்த, இனிக்கொள்ள இருக்கிற அல்லது கொள்ள வேண்டிய இடம் எது? பங்கு என்ன? நில இயலும் இயற்கையும் இதில் நமக்கு எந்த அளவில் உதவுகின்றன? எந்த அளவில் தடங்கலாயுள்ளன? நம் வரலாற்று மரபு அதாவது பண்பு எந்த அளவில் நமக்கு உகந்ததாயிருக்கிறது? எந்த அளவில் ஊறு செய்கிறது?
தமிழக வரலாறும் உலக வரலாறும் இவ்வகைளில் நமக்குக் குரல் கொடுக்க வேண்டும்; ஒளிகாட்டி வழிவகுத்து உதவ வேண்டும்,
நம் பத்திரிகை ‘உலகம்’
நிகழ்கால வரலாற்றில் பங்குகொண்டு, வருங்கால வரலாற்றை ஆக்கவல்லவை பத்திரிகைகள். நம் நிகழ்கால நிலையைப் பத்திரிகை உலகமே - சிறப்பாக நம் தமிழகப் பத்திரிகை உலகமே, தமிழ்ப் பத்திரிகை உலகமே - தெளிவாகக் காட்டவல்லது.
உலகச் செய்திகள், தேசக் செய்திகள், சில்லறைச் செய்திகள்! பத்திரிகைச் செய்திகளின் முக்கிய கூறுகள் இவையே.
உலகச் செய்திகள் வல்லரசுகளின் வட்டாரங்களுக்குரியவை. அவை பெரும்பாலும் அமெரிக்க, ஐரோப்பியச் செய்திகளாக இருக்கும். இரண்டாம் உலகப் போருக்குப் பின் தற்காலிகமாக சீனாவும் அதில் சிறிது இடம் பெற்றுள்ளது. அவ்வக் காலங்களில், அமெரிக்க, ஐரோப்பிய நலங்கள் பாதிக்கப்பெறும் இடங்களில், பிற வட்டாரங்களிலும் ‘நிகழ்கால வரலாற்றொளி’ கொஞ்சம் நிழலாடும்!
உலகச் செய்திகளின் தலைப்பில் உள்ள தேதி வரியில் நாம் நியூயார்க், மாஸ்கோ, வாஷிங்டன், சிக்காகோ, ஹாலிவுட், லண்டன், பாரிஸ், ஜெனீவா ஆகிய நகரங்களையே பெரிதும் காண்போம்.
இன்றைய ‘ஓர் உலகின்’ உயிர் மையங்கள் இவையே.
இன்றைய ‘ஓர் உலகத்தின்’ உயிர்ப் பகுதி, தலைப் பகுதி, இதயப் பகுதி நம் இடமல்ல, நாமல்ல. நமக்கருகிலுள்ள இடமுமல்ல. நம்முடன் தொடர்புடைய இடங்களுமல்ல. நம் இடத்துக்கும் அந்த ‘ஓர் உலகுக்கும்’ இடையேயுள்ள தொலை ஒரு ‘முழு உலகத்’ தொலை என்றே கூறலாம். ஏனெனில், நாம் உலகத்தின் ஒரு கோடி என்றால், அந்த உலகம் கிட்டத்தட்ட அதன் மறுகோடி!
நமக்கும் அந்த ’ஓர் உலகத்’துக்கும் இடையேயுள்ள தொடர்பு சரிசமத் தொடர்பு அல்லது தோழமைத் தொடர்பும் அல்ல. சிறிது ஏற்றத் தாழ்வுடைய தொடர்பு அல்லது போட்டித் தொடர்பும் அல்ல. அது பெரிதும் ஆண்டவன் - பக்தன், ஆண்டான் - அடிமை, அரசன் - ஆண்டி, முதலாளி - தொழிலாளி ஆகிய தொடர்புகளுடன் ஒத்தது.
பத்திரிகைச் செய்திகளின் இரண்டாவது கூறு தேசச் செய்திகள்.
இங்கே தேதி வரியில் நாம் டில்லி, பம்பாய், கல்கத்தா, அலாகாபாத் போன்ற நகர்ப் பெயர்களையே பெரும்பாலும் காண்போம். சென்னை சில சமயம் அவற்றிடையே தலைகாட்டும். ஆனால் மதுரை, திருச்சிராப்பள்ளி, கோயமுத்தூர், திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி தலை காட்டமாட்டா. அவை இந்த இரண்டாம் படியில்கூட எளிதில் காணமுடியாத இடங்கள். உண்மையில் மூன்றாம் பகுதியான சில்லறைச் செய்திகளில்கூடச் சென்னை மிகுதியாகவும், இந்நகரங்கள் அருகலாகவுமே இடம் பெறும்.
செய்திகளும் ‘தேசச் செய்தி’ என்ற முக்கியத்துவம் பெறும்போது அவ்வாறு உயர்வுபெறும் அளவுக்கு நம்மைவிட்டு அகலச்செல்லும். அகலச் செல்லும் அளவிலேயே அவற்றின் ‘தேசியம்’ வளர்வதாகக் கொள்ளப்பெறும்.
தமிழ்ப் பத்திரிகைகளும் தமிழரும்
தமிழகப் பத்திரிகைகள் அதாவது தமிழகத்தில் தமிழ்த் தொடர்புற்றவர்களால், தமிழ்த் தொடர்பற்ற அல்லது தமிழ்த் தொடர்பு மிகுதியில்லாதவர்களுக்காக வெளியிடப்படும் பத்திரிகைகள் சார்ந்த செய்தி இது. இவையல்லாமல், தமிழ் மொழியிலேகூட இதே நிலைப்பட்ட பல பத்திரிகைகள் உண்டு. ஆனால் சில பத்திரிகைகளில் - அதுவும் சென்ற சில ஆண்டுகளில் வெளிவந்த பத்திரிகைகளில் மட்டும் - ‘தமிழகச் செய்திகள்’ என்ற ஒரு தலைப்பைக் காண்போம். இது மூன்றாம் பகுதி சார்ந்ததேயானாலும், அந்தப் பகுதியிலேயே சற்று முனைப்பான இத்தகைய தலைப்புக்குரிய அவசியத்தை இப்பத்திரிகைகள் உணர்ந்து கொண்டு விட்டன என்னலாம்!
தமிழகச் செய்திகள் என்ற தொடருக்குரிய தமிழ் மொழி பெயர்ப்பாக, வேறு சில பத்திரிகைகள் ’பிரதேச’ச் செய்திகள் என்ற தொடரை வழங்குவதுண்டு. இது ஏதோ ’பிற’தேசச் செய்திகளாகக் காட்சியளிக்கும்!
இரண்டாம் பகுதியில் தேசம் என்று நாம் குறிப்பிடுவது தமிழகத்தையோ, தமிழ் நாட்டையோ அல்ல - தமிழகத்தை ஒரு நேர் உறுப்பாகக் கொண்ட இணையரசுப் பகுதியைக்கூட அல்ல. ஏனெனில், நாட்டு உருவிலோ, மாகாண உருவிலோகூட அத்தகைய தமிழகம் இன்னும் உருவாகவில்லை. தேசிய அரங்கிலும் சரி, உலக அரங்கிலும் சரி - தமிழகம் என்ற பெயர் சொல்ல மிகவும் வெட்கப்படும் நிலையிலேயே தமிழகத்தை ஆளும் ‘தேசியம்’ இன்றும் உள்ளது.
தமிழர்கள் வாழும் இடத்தை அல்லது இடங்களை உள்ளடக்கிய ஓர் ஆட்சிப் பகுதியையே - நாம் தேசம், இந்திய தேசம் என்று குறிக்கிறோம். பத்திரிகை உலகிலோ, அரசியலிலோ, கல்வித் துறையிலோ, வாழ்விலோ கூடத் தமிழருக்கு மொழி சார்ந்த உரிமை இல்லாததன் காரணம் இதுவேயாகும்.
தமிழக மாகாணமும் தமிழ் மொழியாட்சியும் ஏற்பட்ட பின் கூடத் தங்குதடையற்ற மொழியுரிமையோ தமிழ் நலங்களில் அக்கறையும் பொறுப்புமுடைய உரிமையாட்சியோ அமைவ தென்பது இன்றைய சூழ்நிலையில் அரிதேயாகும்.
தமிழக நகரங்களிலே சென்னை ஒன்றே தேசச் செய்திகளில் சில சில சமயம் இடம் பெறுகிறது. இதுகூடச் சென்னை தமிழர் நகரங்களில் ஒன்று, அல்லது தமிழர் நகரங்களில் முக்கியமானது என்பதன் காரணமாக வன்று. தமிழகத்துடன் தேசத்தையும், தமிழகத்துடன் உலகத்தையும் இணைக்கும் பாலம் அதுவே. அம் முறையிலேயே அது உலகுக்கும் தேசத்துக்கும் தொண்டாற்றும் பத்திரிகைகளில் இடம் பெறுகிறது என்னலாம்.
மூன்று படிகள்
தமிழ்ப் பத்திரிகை யுலகம் தன் மூன்று செய்திக் கூறுகள் மூலம் உலகின் மூன்று படிகளை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
உலகம்-
தேசம்-
நாம்-
என நாம் அந்தப் படி முறையைக் குறிக்கலாம். உலகில் ‘நம்’ இடத்தையும், தேசத்தில் ‘நம்’ இடத்தையும் இது நமக்கு முன்னிலைப்படுத்திக் காட்டுகிறது.
டில்லி, பம்பாய், கல்கத்தா வட்டார மக்களின் பத்திரிகை யுலகிலும் நாம் மூன்று படிகளைக் காணலாம்.
உலகம்-
தேசம், நாம்-
சில்லறைச் செய்திகள்-
என அவற்றைக் குறிக்கலாம். ஆனால் இங்கே, ‘நாம்’ அதாவது ‘அவர்கள்’ வசிக்கும் இடம் இரண்டாவது இடமாக உயர்ந்து விடுகிறது. உலகை நோக்கி அவர்கள் இடம் பெற்று வருகிறார்கள். தேசத்தில் இடம் பெற்று விட்டார்கள்.
நியூயார்க், லண்டன் முதலிய மேலை உலக வட்டாரங் களிலுள்ள மக்கள் பத்திரிகைகளிலும் நாம் மூன்று படிகளைக் காணலாம்.
உலகம், நாம்-
தேசம், நாம்-
சில்லறைச் செய்திகள்-
என அப்படிகள் அமையும். இங்கே ‘நாம்’ அல்லது ‘அவர்கள்’ முதற் படிக்கே உயர்வது காணலாம்.
தமிழன் காணும் ‘ஓர் உலகின்’ மூன்று படிகளில் அவனுக்குரிய படியையும் இதுவே காட்டுகிறது.
உலகில் - தேசத்தில் - நாம் பெறும் இடம்
உலகில் நாம் இருக்கிறோம். ஆனால் அதில் நாம் உரிமை உறுப்பினரல்ல. அவ்வுலகம் நம் உலகமல்ல.
தேசத்தில் நாம் இருக்கிறோம். ஆனால் அதில் நாம் உரிமை உறுப்பினர் அல்ல, உரிமைக் குடிகள் அல்ல. அது நம் தேசமாய் இயங்கவில்லை.
அமெரிக்கச் செய்தி, பிரிட்டிஷ் செய்தி ஆகியவை நம்மிடையே அடிபடுகிற அளவில் ஆயிரத்திலொரு பங்கு நம் செய்தி எதுவும் அவர்களிடையிலோ, வேறு இடங்களிலோ அடிபடாது. அது போலவே டில்லி, பம்பாய்ச் செய்திகள் நம்மிடையே பெறுகிற மதிப்பில் நூற்றில் ஒரு பங்கு மதிப்புக்கூட நம் செய்தி எதுவும் அங்கே பெறமாட்டாது.
அமெரிக்கா, ஐரோப்பா அல்ல - டில்லி, பம்பாய் அல்ல - ஐரோப்பியர் குடியேற்ற நிலங்களான ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா - ஆசிய தேசங்களான சீனா, ஜப்பானிலோகூட தமிழன் செய்தி எதுவும் ஓசைபடாது.
ஓர் உலகில் நம் நிலையைப் படவிளக்கம் செய்வதானால், அதை இவ்வாறு குறிக்கலாம்.
உலகின் நடுநாயகப் பகுதிகள் அமெரிக்கா, ஐரோப்பா.
சற்று ஒதுங்கிய தேசங்களில் ஒரு தேசம் இந்தியா.
உலகத்தில் முழுதும் ஒதுங்கி மறைந்து, உலகின் ஒரு கண்காணா மூலையிலும், தேசத்தில் ஒரு கண்காணாத இடுக்கிலும், சிற்சில சமயம் நிழலாடுவதாகக் கருதப்படும் மக்கள் ‘நாம்’, “தமிழர்.”
உலக மட்டத்திலிருந்து, தேச மட்டத்திலிருந்து பார்ப்பவர்கள் மிக நுணுகிய ஆராய்ச்சியுடையவர்களாக, நுண்ணோக்கு ஆடியின் துணையுடையவர்களாக இருந்தாலல்லாமல், ‘நாம்’ இங்கே இருப்பதை எவரும் ஊகித்துவிட முடியாது!
இன்றைய நிலையில், நிகழ்கால வரலாற்றின்படி, ‘உலகில் நாம்’ பெற்றுள்ள நிலை இது.
எவரும் கண்டு பொறாமைப்படத்தக்க நிலையல்ல, நம் நிலை.
இந்நிலை எவ்வாறு ஏற்பட்டது?
நில இயல் முறைப்படி இதற்கு உகந்த இயற்கைப் பண்புகள் ஏதேனும் உண்டா? உண்டானால் அவை யாவை என்று காண்போம்.
நில இயல் தரும் குரல்
உலகப்படத்தை வகுத்தவர்கள் நாம் அல்ல. மேலை உலகத்தவர். தேசப்படத்தை அமைத்தவர்களும் அவர்களே. பத்திரிகை உலகம் தரும் ’ஓர் உலகத்’தையும் நம் தமிழகத்தையும் அதில் காண்போம். இயற்கை உலகில், தமிழகம் பெறும் இடத்தை மதிப்பிட்டுப் பார்ப்போம்.
உலக உருண்டையில் அமெரிக்கா தன்னந்தனியாக ஒரு பாதியில் இரு மாகடல்களால் மறு பாதியிலிருந்து பிரிக்கப்பட்டுக் கிடக்கிறது. இயற்கை வளம் அதற்கு உண்டு. இயற்கை யமைப்பில் கடற் பாதுகாப்பு மிகுதி உண்டு. மற்றபடி. அது உலகில் நடுவிடம் வகிப்பதென்று கூற முடியாது.
ஐரோப்பாவின் நிலையோ இன்னும் மோசமானது. அது நில உலகின் ஒரு மூலைமுடுக்கில் இருக்கிறது. அதன் வடபகுதி உறைபனி மூடிய வடமாகடல், கிழக்குப் பகுதியில் பனிமூடிய வெண் பாலை, மேற்குப் பகுதியில் மட்டுமே சிறிது கடற் போக்குவரவுக்கு இடமுண்டு. கடல், நிலத்தொடர்பு தெற்கிலும், கிழக்கிலும் மட்டும் தான் இருக்கமுடியும்! வரலாற்றில் அத்திசைகளிலிருந்தே அது மனித நாகரிக ஒளிபெற்றது.
தவிர, சிறிய அளவான உலகப் படங்களில், வெறும் கண் கொண்டே எவரும் நம் நாட்டைப் பார்க்கலாம். மேலை உலகின் குடியேற்ற நாடான அமெரிக்காவையும் வெறும் கண்கொண்டு பார்க்க முடியும். மேலை உலகின் பழந்தாயகமான ஐரோப்பாவை, அதன் பகுதிகளைக் காண உருப்பெருக்கிக் கண்ணாடி வேண்டும்!
இந்நிலைக்கு நேர்மாறாக இந்திய மாநிலம் நிலவுலகின் நடுவில், கடலுலகத்தின் மையத்தில், உலக வான்வழிப் பாதைகளின் சந்திப்பிடத்தில் அமைந்திருப்பது காணலாம்.
தேசத்தில் தமிழர் வாழ் பகுதியான தென்னகத்தின் நிலையை இனிக் காண்போம்.
வடக்கில் நிலம் விரிவுடையது. தெற்கில் கடல் விரிவுடையது. தென்னாடு மாநிலத்தின் தென்பாதியிலும், தமிழகம் அதன் தென் கோடியிலும் அமைந்திருக்கிறது.
வடக்கிலுள்ள எந்தப் பகுதியையும்விட, தென்கோடியில் கன்னியாகுமரி அல்லது அதை அடுத்த பகுதியே மாநிலத்தின் இரு கடற்கரைகளுக்கும் நடுவில் சரிசம தொலைவில் இருப்பது காணலாம். இந்துமா கடலின் நடுத்தலைப்பாக இது அமைவதும் குறிப்பிடத்தக்கது. உலகக் கடல் நெறிகளின் சந்திப்பு மையமாகவும் அது விளங்குகிறது. கரை வழியாக அது இந்திய மாநில முழுவதற்கும், ஆசியா முழுவதற்கும் சராசரி சமதூர மையமாகவும் இருக்கிறது. வான்வழிப் பாதைகளுக்கும் அப்படியே.
கடற்கரை பற்றிய மட்டில் உடைபட்டு வளைந்தோடிய ஐரோப்பாவின் கடற்கரை கடல் வாணிகத்துக்கு உகந்தது என்றும், தமிழகக் கடற்கரை உட்பட இந்திய மாநிலத்தின் கடற்கரை அந்த அளவு வாய்ப்பற்ற தென்றும் மேலை உலக நில நூலறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அத்துடன், ‘இந்தியர் கடல் வாணிக வளமற்றவராயிருப்பது இதனால்தான்’ என்றும் இதிலிருந்து முடிவு செய்கின்றனர். வாதம் சரியாகத் தோற்றலாம், ஆனால் வரலாற்றின் படி முடிவு தவறானது. இதுபற்றி மேலே கூறுவோம்.
மேலை உலகின் இரும்பு நிலக்கரி போன்ற கனிவளம் இந்தியாவில் - தென்னாட்டில் இல்லை என்றும் பழைய நில நூலார் கூறினர். ஏற்கனவே பல புதிய கனிவளங்கள் கண்டபின் இது முற்றிலும் பொய்த்து வருகிறது.
இந்திய மாநிலம் உலகில் ஒதுங்கிய நிலையில் இன்று இருப் பதற்கும், தமிழகம் உலகிலும் இந்தியாவிலும் உரிமையிழந்து தடைப்பட்டிருப்பதற்கும் நிலஇயல், இயற்கைக் கூறுகள் காரணம் அல்ல என்று எளிதில் காணலாம்.
அப்படியானால் குறைபாட்டை இறந்தகால வரலாற்றிலோ, மக்கள் பண்பாட்டுக் கோளாறுகளிலோதான் காணமுடியும். அத்துறைகளில் கருத்துச் செலுத்துவோம்.
மொழித்தாயகமும் இனத்தாயகமும்
தமிழருக்கு மொழித் தாயகம் - தமிழகம் - உரிமையரசாக அமையவில்லை. இது ஒரு பெருங்குறை. இதனால் தங்கு தடையற்ற மொழியுரிமை இல்லாது போயிற்று. தமிழர் சார்பான முழுநிறை பொறுப்பாட்சிக்கும் வழியில்லை. தமிழக எல்லை ஒரு மாகாண அரசாக இடம்பெறினும் அது தமிழகம் என்ற பெயர் உரிமைகூடப் பெறாத உரிமையற்ற அரசுப் பிரிவாகவே அமைந்துள்ளது. தமிழ் மொழி ஆட்சி மொழியாக இடம் பெற்றும் உண்மை உரிமை பெறவில்லை. பிற மொழி ஆதிக்கங்களுக்கு அஞ்சி அஞ்சி வாழ வேண்டிய நிலையிலேயே உள்ளது. அயல் நிலங்களில் தமிழர் அவலநிலை குறித்து அனுதாபம் தெரிவிக்கக்கூட அதற்கு உரிமை கிடையாது கல்வி நிலையங்கள் தமிழ்க் கல்வி நிலையங்களாக அமைய முடிய வில்லை. இவற்றுக்கான திட்டங்கள், கனவுகள்கூட எழவில்லை.
தமிழகம் மட்டுமன்றி, தமிழகம் சூழ்ந்த தமிழின முழுமையும் இனத்தாயகம் அற்றதாயுள்ளது. இன உணர்ச்சியற்றதாகவும் உள்ளது.
இதுமட்டுமோ?
தமிழரோ, தமிழினத்தவரோ இவை பற்றிக் கவலை கொள்வதே கிடையாது. தம் அடிமை நிலையை அவர்கள் இயல்பான ஒன்றாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
தமிழருக்கென்று மொழித் தாயகமோ, இனத் தாயகமோ இல்லா நிலை கிடக்கட்டும்! அது மட்டுமே முழுதும் தமிழர் அவலநிலைக்குக் காரணம் என்று கூற வேண்டியதில்லை. ஏனெனில், இவ்விரண்டு மில்லாமலே, புகுந்த தாயகத்தை அல்லது தாயகங்களைத் தம் தாயகம் அல்லது தாயகங்களாக்கிய இனங்கள், தாயகமில்லாமலே உலகில் தக்க இடம்பெற்ற இனங்கள், வரலாற்றில் உண்டு. தமிழர் நிலை தாயகம் இல்லா நிலைகூட அல்ல. தாயகத்திலேயே அயலார் எல்லாம் உரிமை பெற, தாம் அயலாராயிருக்கும் நிலையே அவர்கள் நிலை.
பார்சிகள்
ஆயிரத்திருநூறு ஆண்டுகளுக்கு முன் அணிமைக் கிழக்கு நாடுகளெங்கும் இஸ்லாம் பரவிற்று. அதன் பயனாக, தாயகமும் தாயக வாழ்வும் துறந்து, இந்தியா வந்து, அதைப் புதுப் தாயகமாக, வாழ்வகமாக ஏற்றுக்கொண்டவர்கள்தான் பார்சிகள்.
தாயகத்தின் பெயரான பாரசீகம் என்பதை அவர்கள் இன்னும் பார்சிகள் என்ற தம் இனப் பெயரில் வைத்துக்கொண்டு பேணி வருகிறார்கள். இவ்வாறு இனத் தாயகத்தின் பெயரை அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், தாயகம் அவர்கள் பெயரைக் கூறவில்லை. ஆயிர ஆண்டுகளாக அது அவர்கள் பெயரையே மறந்து விட்டது. தன்னை விட்டகலாதிருந்து, புதிய சமயமும் பண்பும் ஏற்றுக்கொண்ட மக்களை அது பாரசீகர் என்ற புதுப் பெயரால் சுட்டிற்று.
தாயகம் அவர்களைத் துரத்திற்று. ஆனால் அவர்கள் தாயகம் விட்டு ஓடிவரும்போதும் தாயகப்பற்றையும் இனப்பற்றையும் தம்முடன் கொண்டு வரத் தவறவில்லை. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, தம் பெண்டு பிள்ளைகளை உடன் கொண்டுதான் அவர்கள் விரைந்தோடி வந்தனர். ஆனால் அப்போதும் அவர்கள் தங்கள் ‘இன விளக்கை’ உடன் கொண்டுவரத் தவறவில்லை. இதுவே இனவாழ்வின் சின்னமாக, அவர்கள் பண்டைத் தாயகத்தில் தம் இனக் கோயிலில் இரவும் பகலும் தவறாமல் வளர்த்து வந்த ஒளி. காடும் மலையும் பாலைவனங்களும் கடந்து அவர்கள் இந்தியா வந்தனர். ஆனால் அவ்வளவு நீண்ட பயணத்திலும் ‘இனவிளக்கை’ அவர்கள் பேணி எடுத்துக்கொண்டு வந்தனர்.
புயலிலும் மழையிலும் ‘இனவிளக்கை’ அவர்கள் அணைய விடவில்லை.
ஆயிர ஆண்டு, இரண்டாயிர ஆண்டு சென்ற பின்னும் இன்றளவும் ‘இன விளக்கு’ பம்பாய் நகரத்தில் ஆண்டு கடந்து ஆண்டு, தலைமுறை கடந்து தலைமுறை தளராது எரிந்து கொண்டேயிருக்கிறது. அதுமட்டுமா? பார்சிகள் குடியேற்றம் எங்கெங்கெல்லாம் இருக்குமோ அங்கங்கெல்லாம் ‘இன விளக்கின்’ கிளையாக ‘குல விளக்குகள்’ எரிந்த வண்ணம் உள்ளன.
மின் விளக்குகளும் பொறி விளக்குகளும் ஏற்பட்டுவிட்ட இக் காலத்திலும் அவர்கள் பழைய மரபுப்படி அணையா நெய் விளக்குகளைப் பேணிக்கொண்டுதான் வருகிறார்கள். அதற்கு நெய்யும் திரியும் இட்டுக்காத்து அணையாமல் பேணும் கடமையை அவர்கள் இனக் கடமையாக இன்னும் கடைப்பிடித்து வருகிறார்கள்; தம்முள் முறை வைத்துக் கட்டுப்பாட்டுடன் காத்து வருகிறார்கள்!
புகுந்த வாழ்வகத்தைப் பார்சிகள் தம் புதுத் தாயகமாகக் கொண்டனர். புதுத் தாயகம் அவர்களை ஏற்றுப் பெருமை கொண்டது. அவர்களும், அதன் வாழ்வில் பெரும் பங்கு கொள்ளத் தவறவில்லை. அவர்களைத் துரத்திய பண்டைத் தாயகம் இன்று அவர்களை ஆர்வத்துடன் திரும்பி அழைக்க விரும்புகிறது. அவர்கள் புகழைத் தன் புகழாக்கத் துடிக்கிறது. அவர்கள் புகழ் வாழ்வைத் தன் வாழ்வுடன் இணைக்க ஆர்வங்கொள்கிறது. ஆனால், பார்சிகளோ வாழ்வகத்தையே தாயகமாக்கிக் கொண்டு விட்டார்கள். தாம் வாழும் இடத்தையே பழம்புகழ்ப் பாரசீகம் அல்லது ‘பண்டை ஈரான்’ ஆக்கிவிட்டார்கள். ‘எம் நாடு, நம் நாடு’ என்று அவர்கள் இந்தியாவைப் போற்றுகிறார்கள். இந்தியாவும் ‘என் மக்கள், என் தலை மக்கள், என் முதன் மக்கள்’ என்று அவர்களைப் போற்றத் தயங்கவில்லை.
‘தாயகம் இல்லாத மக்கள்கூடத் தட்டுக்கெட்டுத் தடுமாறத் தேவையில்லை. தங்களையே தாயகமாக்கிக் கொண்டு வாழ முடியும்’ என்பதைப் பார்சிகளின் ஆர்வமூட்டும் வரலாறு விளக்குகிறது.
தமிழர்கள் பார்சிகளைப் போல இருந்திருந்தால், தாயகம் இல்லாமை ஒரு கேடன்று. ஏனெனில் அவர்கள் தாயக நிலத்திலேயே தாயகமற்றவர்களாக வாழமாட்டார்கள். அயலகத்தைக் கூடத் தாயகமாக்கும் ஆற்றல் பெற்றிருப்பார்கள்.
இந்தியாவில் இன்று பார்சிகள் நிலை, ஏனைய இந்தியர் களுடன் சரிசமமான நிலை மட்டுமல்ல; இந்தியர்களிலே முதல் நிலை, முதல் நிலையிலும் முன் வரிசை நிலை. உலகில்கூட அவர்கள் நிலை முதல் நிலைக்குப் பிற்பட்டதன்று.
யூதர்கள்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே மற்றோரினம் தாயகம் இழந்தது. அதுவும் இஸ்லாமிய ஆட்சிப் பரப்புக் காரணமாகவே அந்நிலைப்பட்டது. துருக்கிய, அராபிய இணைப் பேரரசனான ‘சாரசனிய’ ஆட்சியாளர் யூதர்களை அவர்கள் தாயகமாகிய பழம் பாலஸ்தீனத்திலிருந்து துரத்தினர்!
பார்சிகளாவது தாயகமிழந்தபின் ஒரு புது வாழ்வகத்தை அடைந்து அதைப் புதிய நிலையான தாயகமாக்கிப் புது வாழ்வு கண்டனர். ஆனால், யூதர் நிலை இதைக் காட்டிலும் பன்மடங்கு அவலமானது. அவர்கள் கடல் கடந்து உலகெங்கும் சிதறினர். இந்தியா வந்தவரும் உண்டு. தென்னாட்டில் வந்து தங்கியவரும் உண்டு. இவர்கள் இன்று நாட்டு மக்களுடன் கலந்து, தென்னாட்டு மக்களுடன் மக்களாகி விட்டனர். ஆனால் பெரும் பகுதியினர் ஐரோப்பாவெங்கும் பரந்தனர். சிறுசிறு தொகுதிகளாகப் பல்வேறு நாடுகளில் தனித்தனி வாழ்வகங்கள் கண்டனர். ஆங்காங்கே அவ்வந் நாட்டு மக்கள் மொழி பேசி, பல படிகளாக அவ்வந் நாட்டு மக்கள் பழக்க வழக்கங்களை மேற்கொண்டு பல்வேறுபட்ட குடியினர் ஆயினர்.
பார்சிகளுக்கு இந்தியாவில் கிடைத்த பொன்னான, அமைதி வாய்ந்த வாழ்வு யூதர்களுக்குக் கிட்டவில்லை. ஆயிர ஆண்டுகளாகப் பல்வேறு நாடுகளில் சிதறுண்டு சின்னாபின்னப் பட்டுக் கிடந்த யூதர்கள் எங்கும் மக்கள் வெறுப்புக்கு ஆளாயினர். அரசியல்களின் கொடுமைகளுக்கு இரையாயினர். மதத் தலைவர்களின் பழி கேடுகளுக்கும், தூற்றல்களுக்கும் உரியவ ராயினர். ஆயிர மாண்டுகளாக அவர்கள் பட்ட அவதி சொல்லுந்தரமன்று. ஆனால், இத்தனை எதிர்ப்புக்களையும், பகைமைகளையும் கொடுமைகளையும் பொறுமையுடன் தாங்கி, அவற்றைத் தாண்டி, இன்னும் அவர்கள் உலகில் சீரிய இடம் பெற்றுள்ளார்கள். தாயகமில்லா நிலையிலும்கூடப் பல நாடுகளை அவர்கள் தாயகங்களாகக் கொள்ள முடிந்திருக்கிறது. உலகையே தாயகமாகக் கொள்ள முடிந்திருக்கிறது. உலகையே தட்டி எழுப்பி, உலகின் கைகொண்டே தம் பழைய தாயகத்தை அதன் புதிய குடிமக்களிட மிருந்து பறித்துத் தமதாகக்கொள்ள முடிந்திருக்கிறது!
பிரிவினை, சிறுபான்மை, எதிர்ப்பு, பகைமை ஆகிய எதுவும் அவ்வந்நாட்டில், யூதர்கள் தமக்குரிய நாட்டுரிமைப் பங்கை, வாழ்க்கைப் பங்கைப் பெறுவதற்குத் தடையாயில்லை. உண்மையில் பல நாடுகளிலும் சிறு பான்மையினரான அவர்களே ஆற்றலிலும் உரிமையிலும், செல்வத்திலும் செல்வாக்கிலும், தேசிய வாழ்வு களிலும் அரசியல்களிலும் முதலிடம் வகிக்கிறார்கள் என்னலாம். அத்துடன் உலகிலும் சிறுபான்மையினராகவும், சிதறுண்ட நிலையினராகவும் உள்ள அவர்களே செல்வத்திலும் ஆற்றலிலும் கிட்டத்தட்ட முதலிடம் பெற்றுள்ளார்கள். சிறுபான்மை இனத்தவரான அவர்கள் பங்கு பெரும்பான்மை இனங்களுக்குக் கூடக் கிடைக்கவில்லை. எல்லா நாடுகளிலும் சிதறுண்ட சிறுபான்மையினராகிய அவர்கள் வாழ்வு, பல நாடுகளையும் உள்ளடக்கிய பெரும்பான்மை இனத்தினர்களுக்குக்கூட எளிதில் கிட்டவில்லை.
அணிமையில் இரண்டாம் உலகப்போர்க் காலத்தை ஒட்டி, யூதருக்கு எதிராக முன்னிலும் பெருத்த எதிர்ப்பு மேலை உலகில் ஏற்பட்டது. ஆனால், இது பொறாமை காரணமாக ஏற்பட்ட எதிர்ப்பேயாகும். உலகெங்கும் யூதருக்கு உயர்குடி வட்டாரங் களிலும், அரசியல்களிலும் இருந்து வரும் செல்வாக்கும், யூதரின் செல்வ ஆற்றலும் இதைக்கூட எளிதில் சமாளிக்க உதவியுள்ளன. சமாளித்து வென்றாள உதவியுள்ளன.
பார்சி, யூத இன வரலாற்றின் படிப்பினைகள்
இனப்பற்று, பொறுமையாற்றல், விடாப்பிடி உறுதி, தன் முயற்சி, தன்மதிப்பு ஆகிய பண்புகள் இருந்தால், எத்தகைய சூழல்களையும் தாயகமில்லாமலேகூட, சிதறுண்ட நிலையிலே கூட, ஓர் இனம் சமாளித்து வளரமுடியும் என்பதை யூதரின் துயரமிக்க, ஆனால் வெற்றி வீறுமிக்க வரலாறு காட்டவல்லது.
பார்சிகள், யூதர்கள் ஆகிய இனங்களைப் பார்க்க, தமிழரோ தமிழினமோ தட்டுக்கெட்டவர் என்று கூற முடியாது. அவர்களுக்குத் தாய் நில வாய்ப்புக்கேடோ, ஒற்றுமை வாய்ப்புக் கேடோ உண்டு என்று கூற முடியாது. ஆயினும் இன்றைய உலகில் பார்சிகள், யூதர்கள் நிலை முதல் நிலை தமிழன் நிலை கடைநிலை.
தமிழனுக்குத் தாய் நிலம் மட்டுமன்றி, தாய்மொழியும் தாயின மொழிகளும் உண்டு. அவை இன்னும் உயிருடைய தாய் மொழியாகவும், தாயின மொழிகளாகவும் தவழ்கின்றன. இந்த வாய்ப்பு யூதர்களுக்கோ, பார்சிகளுக்கோகூடக் கிடையாது. ஆயினும் மொழிப்பற்றும் இனப்பற்றும், தன்மதிப்பும் ஒற்றுமையும் தமிழனிடத்திலே - தமிழினத்தினிடத்திலேயே மிகவும் குறைவு. இது ஒன்றே தமிழினத்தின் தாழ்நிலைக்குப் பெரிதும் காரணம் என்னலாம்.
யூதர்களைவிடப் பார்சிகள் ஒப்புரவுணர்ச்சி அல்லது சமரசப் பண்பில் மேம்பட்டவர்கள். தமிழனோ இருவரையும் மிஞ்சிய ஒப்புரவுணர்வுடையவன். ஆயினும் இன உணர்வற்ற நிலையில் அது அவன் அடிமைத் தனத்தையும், உரிமை மறந்த நிலையையும் மூடி மறைக்கும் ஒரு திரையாக மட்டுமே இன்று அமைந்துள்ளது. உலகமும் இப் பண்புகளைச் சரியாக மதிப்பிட்டுள்ளது. யூதர் பார்சிகள் ஒப்புரவுக்கிருக்கும் மதிப்பு உலகில் எந்தத் தமிழ் அருளாளருக்கும் கிடையாது!
தமிழனின் இன்றைய அவலநிலைக்கு - தமிழினத்தின் தட்டுக் கெட்ட தன்மதிப்பற்ற நிலைக்கு நில இயல்பு காரண மன்று. வரலாற்று முறையில்கூடத் தாய்நில வாய்ப்புக்கேடுகள், மொழி வாய்ப்புக்கேடுகள் காரணமல்ல. அவன் இனப் பற்றின்மையே - ஒற்றுமைக் கேடே காரணம்.
யூதர் தன்னலங்கடந்த இனப்பற்றுடையவர்கள். பல இடங்களில் அவர்கள் இனப்பற்றுக் கடந்து உலகப் பற்றுடைய அருளாளர்களாகவும் விளங்கியுள்ளார்கள். உலகம் போற்றும் இயேசு பிரான் இத்தகைய அருளாண்மையுடைய ஒரு பழங்கால யூதரே என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. பார்சிகளும் அது போலவே தன்னலங் கடந்த இனநலப்பற்றும். இனநலங்கடந்த உலகப்பற்றும் உடையவராய்த் திகழ்கின்றனர். ஆனால், அவர் களிடம் இனப்பற்றற்ற தன்னலத்தையோ, அதே வகைப்பட்ட மாயச் சமரசத்தையோ காணமுடியாது.
தமிழனிடத்திலும், தமிழினத்தவரிடத்திலும் தன்னலத்தை நிரம்பக் காணலாம். அது இனப்பற்றற்ற தன்னலம் உலகப் பற்றைக் காணலாம். அது இனப்பற்றற்ற உலக நலம். உண்மையில் இன்றைய தமிழரிடம் சமரசம் ஒப்புரவு ஆகிய சொற்கள் இனப்பகைமை அல்லது இனப்பற்றின்மையையோ, தன்மதிப் பின்மை அல்லது அடிமை மனப்பான்மையையோ, தன்னலம் அல்லது ‘கங்காணித்’ தனத்தையோ மறைத்துச் சுட்டுவதற்கான ஒரு குழூஉக்குறி அல்லது மங்கல வழக்கே என்னலாம்.
தமிழன் தாழ்வுக்குரிய இப்பண்புகள் எவ்வாறு தமிழன் வாழ்வில் தோன்றி வளர்ந்தன?
வரும் இயல்களில் இவற்றை ஆய்ந்து காண்போம்!
வரலாற்றில் நாம்!
மேலை உலகம் நமக்கு உலகப்படத்தை ஆக்கித் தந்துள்ளது. வரலாற்றையும் ஆக்கித் தந்துள்ளது. ஆராய்ச்சி முறையை ஊக்கியுள்ளது. இம்மூன்றையும் ஒருங்கே இணைத்தால், வரலாற்றில் நம் இடம் தெற்றென விளங்கும்.
வரலாற்றடிப்படையான, வரலாற்று வண்ணம் தோய்ந்த ஓர் உலகப் படத்தை நம் கருத்தின் முன் கொண்டு ஆராய்வோம்!
உலகப்படத்தில் ஐந்து கண்டங்கள் உள்ளன. ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்பன. இவற்றுள் ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய மூன்று கண்டங்களும் ஒருங்கிணைந்து கிடக்கின்றன. ஆசியாவும் ஐரோப்பாவும் ஒரே மாகண்டம் என்று கூறலாம். ஒரே பரப்பாக இடையே ‘யூரல் மலையும்’ ‘யூரல் ஆறும்’ எல்லையாகக் கொண்டு கிடக்கின்றன. ஆப்பிரிக்கா, மனிதன் வெட்டி உருவாக்கிய சூயஸ் கடற் கால்வாயினாலும், செங்கடலாலும் மட்டுமே ஆசியாவிலிருந்து பிரிவுற்று, அதை ஒட்டிக் கிடக்கிறது. ஐரோப்பாவிலிருந்து குடுவையான தண்ணீர்த் தொட்டிபோலக் கிடக்கும் நடுநிலக்கடலாலேயே அது பிரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் மற்ற மூன்று கண்டங் களிலிருந்தும் விலகிக் கிடக்கின்றன.
அமெரிக்காவைப் பதினைந்தாம் நூற்றாண்டில் அதாவது நானூறு ஆண்டுகளுக்கு முன் கொலம்பஸ் கண்டு உலகுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். ஆஸ்திரேலியாவைப் பதினெட்டாம் நுற்றாண்டில் காப்டன்குக் அறிமுகப்படுத்தி வைத்தார். ஆகவே இந்த இரு கண்டங்களும் புத்தம் புதிய கண்டங்கள். அணிமை யிலேயே வரலாற்றில் இடம் பெற்ற நிலங்கள் இவை. இவ்விரண்டு கண்டங்களும் நில இயலில் ‘புதிய உலகம்’ என அழைக்கப் படுகின்றன.
ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய மூன்று கண்டங்களுமே பழைய காலம் எனப்படுகின்றன.
புதிய உலகமும் பழைய உலகமும்
புதிய உலகத்திலும் மனிதர்கள், விலங்குகள், பறவைகள், மரஞ்செடி கொடிகள் இருந்தன.
ஆஸ்திரேலியாவில் இவை உலகில் வேறு எங்கும் இல்லாத புது மாதிரிகளாயுள்ளன! குட்டியை வைத்துப் பேண வயிற்றில் பையையுடைய பைம்மா (கங்காரு), ஒட்டைக் கழுத்துடைய வரிக்குதிரை ஆகியவையும், மனிதரைத் தின்னும் மனித இனவகையினரும் ஆஸ்திரேலியாவின் புதுமை வாய்ந்த பழமைச் சின்னங்கள்.
அமெரிக்காவில் மரஞ் செடி கொடி விலங்கு பறவைகள் ஆஸ்திரேலியாவளவு பழைய உலகிலிருந்து துண்டுபட்டவையல்ல. மனித இனமும் அப்படியே. ஆனால், அங்குள்ள பழைய மனித இனத்தவர் சிகப்பு நிறத்தவர். அவர்கள் பழைய உலகத்திலில்லாத பல அரும்பண்புகள் உடையவர்கள். ஆயினும் அவர்கள் நாடோடிகளாகவே வாழ்ந்தனர். எனினும், நாடு நகர்களும் அரசியலும் வகுத்திருந்த ‘பெருவியர்’ ‘மயர்’ என்ற இரண்டு உயர் நாகரிக இனத்தவர், வெள்ளையர் குடியேறுமுன் நடு அமெரிக்காவில் வளம் பெற்றிருந்தனர். அவர்கள் நாகரிகங்கள் பல வகைகளில் தென் இந்திய நாகரிகத்துடனும் தென் கிழக்காசிய நாகரிகத்துடனும் தொடர்புடையவை என்று வரலாற்றறிஞர் கருதுகிறார்கள். வரலாறும் ஆராய்ச்சியும் சென்றெட்டாத காலத்திய தொடர்புகளாகவே அவை இருந்திருக்க வேண்டும். இத்தொடர்புகளை வருங்கால ஆராய்ச்சிகளே போதிய அளவு தெளிவுபடுத்தக்கூடும்.
சென்ற நானூறு ஆண்டுகட்கு முற்பட்ட மனித உலக வரலாறு, பழைய உலகமாகிய ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களின் வரலாறே.
ஆப்பிரிக்காவில் ஆசியாவுடன் ஒட்டிக்கிடக்கும் நீல ஆற்று நிலம் அதாவது எகிப்து, தென்னாட்டுக்கும் அராபியாவுக்கும் எதிராகக் கிடக்கும் அபிசினியா ஆகிய இரு நாடுகளும்தான் பண்டை நாகரிகம் வளர்த்த பகுதிகள். மீந்த ஆப்பிரிக்கக் கண்டம் முழுவதும் நாகரிகமோ, நாடு நகர் வாழ்க்கையோ இல்லாதவை நாடோடிகள், காட்டுமக்கள், புதர் நிலமக்கள் ஆகியோர் வாழ்ந்த பகுதிகளாகவே இன்றளவும் அவை நிலவுகின்றன.
மூன்று கண்டங்களிலும் நாகரிக வளர்ச்சியில் காலத்தால் மிகவும் பிற்பட்ட புதிய கண்டம் ஐரோப்பா என்றே கூறத்தகும். நாகரிகம் வளர்வதற்குரிய இயற்கை வாய்ப்பு இன்றுகூட ஐரோப் பாவின் வட கோடிப்பகுதியிலும் ஆசியாவின் வட கோடிப் பரப்பிலும் இல்லை. இயல் நூலின் ஆற்றலால் சோவியத் அரசியலார் அப் பாலை நிலங்களைச் சோலை நிலங்களாக்கி யிராவிட்டால், அவற்றின் வருங்காலமும் இப்படியேதான் இருந்திருக்கும்!
பனிக்கட்டியில் வளைதோண்டி வாழும் அரைகுறை மக்களாகவே ‘லாப்லாந்து’ போன்ற வடகோடிப் பகுதியிலுள்ள வர்கள் இன்றளவும் உள்ளனர்.
உருசிய நாடு நாகரிக உலகில் இடம்பெற்று இரண்டு மூன்று நூற்றாண்டுகள் ஆகியுள்ளன. ஜெர்மனி ஒரு நாடாக உருப்பெற்றது இதற்கு இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு முற்பட்டேயாகும். மீந்த வடமேற்கு ஐரோப்பா கி.பி. ஏழு, எட்டாம் நூற்றாண்டுகளில் அராபிய ஆட்சியின் பயனாகவும், அதற்கு முன் கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு வரை நிலவிய உரோமக ஆட்சியின் பயனாகவுமே நாகரிக உலகப் பகுதியாகப் பரிமளித்துள்ளது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் ஐரோப்பாவில் நாகரி கமுடைய பகுதி வட ஐரோப்பாவும் அல்ல. மேலை ஐரோப் பாவுமல்ல, தென்கிழக்கு ஐரோப்பாவே. இலத்தீன மொழியையும் இலக்கியத்தையும் வளர்த்தது உரோமக நாடு. அதுவே இன்றைய இத்தாலி. அது கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்குள் இத்தாலி முழுவதும் வென்று, கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் நடுநிலக்கடல் சூழ்ந்த பகுதி முழுவதும் பேரரசு நிறுவிற்று. அடுத்த நூற்றாண்டுக்குள் அது மேலை ஆசியாவையும் வட ஐரோப்பாவின் வட மேற்குப் பகுதியையும் வென்று விரிவுற்றது.
உரோம நாகரிகத்துக்கு முற்பட்ட ஐரோப்பாவின் பழம் பெரு நாகரிகம், ஐரோப்பாவின் தென் கிழக்குக் கோடியில் இயங்கிய கிரேக்க நாகரிகமே. கிரேக்கர் கி.மு. எட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. நான்காம் நூற்றாண்டு வரை கலையும் இலக்கியமும் கடல் வாணிகமும் குடியேற்றங்களும், கடற் பேரரசுகளும் பேணிப் பீடுடன் வாழ்ந்தனர். கிரேக்க இலக்கியமும் கலையும் உரோமக இலக்கியத்தையும் கலையையும் ஊக்கின. இடைக்கால இஸ்லாமிய நாகரிகத்துக்கும் இன்றைய ஐரோப்பிய நாகரிகத்துக்கும் முன்னோடியாகவும் முன்மாதிரியாவும் உதவிய, உதவுகிற நாகரிகம் இதுவே.
நடுநிலக் கடலக நாகரிகம்
தென் ஐரோப்பாவிலே உரோமகரும், கிரேக்கரும் கி.மு. 10 ஆம் நூற்றாண்டளவில் வந்து குடிபுகுந்த இனத்தவரேயாவர். புகுந்த பின்னர் அவர்கள் நாகரிகமுற்றனர். அப்பகுதிகளில் அவர்களுக்கு முன்பே எட்ரஸ்கானர், மிசினியர், கிரேட்டர் முதலிய நாகரிக இனங்கள் வாழ்ந்து வந்தன. அப்பகுதிகளில் குடிபுகுந்து, அம்மக்கள் நாகரிகத்துடன் கலந்த பின்னரே கிரேக்கர்கள் தம் புது நாகரிகம் வளர்த்தனர். இன்றைய உலகத்துக்கு மூல முதலாக உள்ள பண்டைக் கிரேக்க நாகரிகம் இப்புது நாகரிகமேயாகும்.
எட்ரஸ்கானர், மிசினியர், கிரேட்டர் நாகரிகங்கள் எகிப்திய நாகரிகத்துடனும், மேலை ஆசியாவிலுள்ள ஃபினீசிய, யூத, அசீரிய நாகரிகங்களுடனும் நெருங்கிய தொடர்புடையவை. உண்மையில் நடுநிலக் கடலைச் சுற்றித் தென் ஐரோப்பா, மேலை ஆசியா, வட ஆப்பிரிக்கா ஆகிய மூன்று கண்டங்களின் சந்திப்புப் பகுதிகளிலும் உள்ள மக்கள் ஒரே நாகரிகமும் பண்பும் உடைய ஒரே பேரினத்தவரேயாவர். இந்த இனத்தையே நாம் நடுநிலக் கடலக இனம் என்று குறிக்கிறோம். இவ்வினத்தவர் அனைவருமே கடலோடிகள். நடுநிலக்கடல் அவர்கள் வாணிக, கலைத் தொடர்பின் உயிர்க்களமாயிருந்தது.
நடுநிலக் கடலக நாகரிக இனம் கி.மு. 3000-க்கு முன்னிருந்து கி.மு. 1500 வரை தென் ஐரோப்பாவிலும் சிறிய ஆசியாவிலும் தழைத்திருந்தது. நாடோடிகளாக கி.மு. 1500இல் வடக்கிலிருந்து குடிபெயர்ந்து வந்த உரோமர், கிரேக்கர் ஆகியவர்களின் தாக்கு தலாலேயே அது அழிவுற்றது. ஆயினும் மேலை ஆசியாவிலும் வட ஆப்பிரிக்காவிலும் அது உரோமக ஆட்சிக் காலம் வரையும் அது கடந்தும் நீடித்து வளர்ச்சியுற்றது. இன்றைய உலகுக்கு இஸ்லாம், கிறித்துவம் ஆகிய புதிய சமயங்களையும் பழைமை யான யூத சமயத்தையும் வழங்கிய இனம் இதுவே.
இன்றைய ஐரோப்பிய நாகரிகத்தின் மூலக்கூறுகள் பலவற்றை நாம் நடுநிலக் கடலக இனத்தவரின் வாழ்வில் காணலாம். ஆங்கிலம் முதலிய இன்றைய ஐரோப்பிய மொழிகளின் எழுத்துக்களுக்கும்; இலத்தீன, கிரேக்க எழுத்துகளுக்கும்; அராபிய, யூத எழுத்து முறைகளுக்கும்; பாரசீக, உருது எழுத்து முறைகளுக்கும் மூலமுதல் நடுநிலக் கடலகத்தில் ஃபினீசியரும் எகிப்தியரும் வழங்கிய எழுத்து முறையே. எழுத்துகள் மட்டுமன்றி, ஒலியும் வரிசை முறையும்கூட ஐயாயிரம் ஆண்டுகளாக மாறாமல் அம்முறையிலேயே இன்றளவும் ஐரோப்பியரால் வழங்கப் பெறுகின்றன.
நடுநிலக் கடலக நாகரிகத்தையே, சிறப்பாக எகிப்திய நாகரிகத்தையே, ஐரோப்பிய நாகரிகத்தின் மூல முதல் என்றும், மனித நாகரிகத்தின் தொட்டில் என்றும் மேலையுலகத்தார் 19ஆம் நூற்றாண்டு வரை மதித்திருந்தனர். அந்நூற்றாண்டின் இறுதி யிலும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் கண்டாராயப் பட்ட அகழ்வாராய்ச்சிகள் இம்முடிவைப் பேரளவில் திருத்தியுள்ளன, திருத்தி வருகின்றன.
சமற்கிருதம் விளைத்த புரட்சி
மேலை உலகத்தாரின் பழமையாராய்ச்சிகள் தொடக்கத்தில் பெரும்பாலும் தம் நாகரிகமூலம், தம் இனமூலம் தம் மதமூலம், நாடியே சென்றன. நாகரிகமூலம் இனமூலம் ஆகிய இரு தேட்டங்களும் அவர்களைக் கிரேக்க நாகரிகப் பழமை நோக்கி இட்டுச் சென்றன. மதமூலத் தேட்டம் யூத இனச் சூழலையும் அதற்குத் தாயகமான நடுக்கடலக இனத்தையும் நாடிச் சென்றது.
கிரேக்க நாகரிகம் தற்கால ஐரோப்பிய மக்களுடன் இனத் தொடர்பு கொண்டது. அதுவே ஆரிய இனமென்றும், இந்து ஐரோப்பிய இனமென்றும் மொழி இன ஆராய்ச்சியறிஞரால் அழைக்கப்படுகிறது. இவ்வினத் தொடர்பை இந்தியாவில் வங்காளக்குடாக் கடலின் கரையிலிருந்து ஐரோப்பாவில் நர்வே, பிரிட்டிஷ் தீவுகள் வரை காண்கிறோம். அவ்வின மொழிகளும் கிழக்குக் கோடியில் சமற்கிருதம், வங்காளி தொடங்கி வடமேற்கு ஐரோப்பாவில் செருமன், டேனிஷ், நார்வீஜியம், ஆங்கிலம், ஐஸ்லாண்டிக் ஐரிஷ் வரை பரந்து கிடக்கின்றன.
நடுநிலக் கடலக நாகரிகம் ஆரிய இனம் சார்ந்ததன்று. அவ்வினம் நடுநிலக் கடலக இனம் அல்லது செமித்திய இனம் என்று அழைக்கப்படுகிறது. கிரேக்கப் பழமையும் நடுநிலக் கடலகப் பழமையிலே சென்று முடிந்தபின், மேலை உலகினரின் மத மூலமே நாகரிக மூலமாகவும் காணப்பட்டது. நடுநிலக் கடலகமே மனித நாகரிகத்தின் தொட்டில் என்ற முடிவு உறுதி பெற்று வந்தது.
கீழை உலக நாகரிகங்கள், மொழிகள், கலைகள், இலக்கியங்கள் ஆகியவற்றின் ஆராய்ச்சி 18 ஆம் நூற்றாண்டிலிருந்தே தொடங்கி, ஐரோப்பியரின் உலக அறிவை விரிவுபடுத்தின. இவ்வகையில் பெருத்த முக்கியத்துவம் உடையவை சமற்கிருத இலக்கிய இலக்கண ஆராய்ச்சியும், சமஸ்கிருத மொழி ஆராய்ச்சியுமே தொடக்கத்தில் அது மேலை உலகத்தில் மட்டுமன்றி இந்தியாவிலும் ஒரு பெரும் கருத்துப் புரட்சியை உண்டு பண்ணிற்று. இந்தியாவில் அதன் விளைவுகள் இன்றுகூட ஓயவில்லை.
நடுநிலக் கடலக இனம் நாகரிகப் பழமையில் மட்டுமே கிரேக்க நாகரிகத்தை வென்றிருந்தது. கிரேக்கரின் கலை, இலக்கியம், மொழிவளம், அறிவு, நூலாராய்ச்சித் திறம் ஆகியவற்றுக் கீடாக நடுநிலக் கடலகம் எதையுமே காட்ட முடியவில்லை. கலைப் பெருமை, அறிவுத்துறைப் பெருமையில் பழமையெல்லை மட்டுமல்ல, உயர்வெல்லையும் கிரேக்க மொழிக்கேயுரியது என்ற ஆழ்ந்த நம்பிக்கை உறுதி மேலை உலகத்தாருக்கு, பதினெட்டாம் நூற்றாண்டுவரை நீடித்து நிலைத்திருந்தது.
கிரேக்க மொழியினர் கனவு காணாத பழமை வளம், கலை வளம், இலக்கிய வளம், அறிவியல் வளம் ஆகியவற்றை சமற்கிருதம் மேலை உலகத்தினர் கண்முன் கொண்டு வந்து காட்டிற்று. சாகுந்தலம், மிருச்சகடிகம் முதலிய சமற்கிருத நாடகங்கள் சேக்சுபியர் நாடகங்களுடன் மேலை உலக மேடைகளில் போட்டியிடலாயின. செருமனியின் சேக்சுபியரான கவிஞர் பெருமான் கெதே சமற்கிருதத்தின் புகழ்பாடும் பாவலருள் முதல் வரிசையில் இடம் பெற்றார்.
வேதங்கள், உபநிடதங்கள், சுமிருதிகள், இதிகாசங்கள் ஆகியவை உலகின் மதப் பழமையாராய்ச்சிக்கு விருந்தாயிருந்தன.
கலை இலக்கிய ஆராய்ச்சிகள் தாண்டி மொழியாராய்ச்சி பயன் தந்தது. வட இந்தியத் தாய்மொழிகளும் சமற்கிருதமும் வேதமொழியும் கிரேக்க இலத்தீன மொழிகளுடனும் ஐரோப்பிய மொழிகளுடனும் இனத் தொடர்புகளுடையவை என்று மொழியாராய்ச்சியாளர்கள் கண்டனர். இந்திய மக்களிடம் ஐரோப்பியருக்கும், சிறப்பாக செருமானியருக்கும் ஆங்கி லேயருக்கும், ஒரு புதுப்பாசம் ஏற்பட்டது. அதன் அறிவியல் விளைவாக, மொழி நூல், ஒலிநூல் முதலிய புதிய இயல்நூல் துறைகள் வளர்ந்தன. சமற்கிருதச் சார்பான மொழிகள் பேசும் வட இந்தியரும் ஐரோப்பியரும் இந்து ஐரோப்பியர் அல்லது ஆரியர் என்ற ஒரு பேரினத்தவர் என்னும் உண்மை இவை யனைத்துக்கும் அடிப்படையாய் உதவின.
நாகரிகப் பழமையில் நடுநிலக் கடலக நாகரிகமே முற்பட்ட தாயினும், கலை இலக்கியச் சிறப்பில் ஆரிய இனம் அதனினும் உயர்வுடையது என்ற முடிவு முன்னிலும் வலியுறவு பெற்றது. ஏனென்றால் ஐரோப்பாவில் ஓர் கிரேக்க இலக்கியத்தையும், இந்தியாவில் ஓர் சமற்கிருத இலக்கியத்தையும் அந்த ஓர் இனமே படைத்திருந்தது.
உலக மொழிகளின் மூலமே சமற்கிருதம்தான் என்ற கருத்துக் கூடச் சில நாள் சில காலம் மேற்கொள்ளப்பட்டது. இக் கருத்து மேலை உலகில் தவறென்று கைவிடப்பட்டாலும், இந்தியாவில் தேச, இனப்பற்றுக் காரணமாக இன்னும் ஓய்வுறாமல் நீடித்து வளர்ந்தே வருகிறது.
ஆனால், நடுநிலக் கடலகத்தின் பழமை ஆரியர் நாகரிக உலகுக்கு வந்து நாகரிகமடைவதற்கு முற்பட்டது. இம்முடிவை எதுவும் அசைக்கவில்லை. பழம்பொருளாராய்ச்சி இதை மென் மேலும் வலியுறுத்தியும் விளக்கமுறுத்தியும் வருகிறது.
தொல் பழங்கால நாகரிக உலகம்
கலை, இலக்கிய, அறிவியல் துறைகளின் பழமை எல்லை கிரேக்க நாடுதான் என்ற முடிவை சமற்கிருதச் சார்பான ஆராய்ச்சி உடைத்தெறிந்தது. ஆனால் நாகரிகப் பழமை எல்லை நடுநிலக் கடலகமே என்ற முடிவை அது அசைக்கவில்லை. கிரேக்க நாகரிகத்தைப் போலவே சமற்கிருத நாகரிகமும் நடுநிலக் கடலக இனத்தையே மூலமாகக் கொண்டது என்று பல ஆராய்ச்சியாளர் கருதினர். பல ஆராய்ச்சி விளக்கங்களில் நாம் இப்போக்கைக் காணலாம். விளக்க முறையில் இங்கே ஒன்றை மட்டும் குறிப்போம்.
கிரேக்க மொழி உட்பட, மேலை உலகமொழிகளின் எழுத்து முறைகளுக்கு எகிப்திய மொழியே மூலம் எனக் குறிப்பிட்டிருந்தோம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைமையுடைய அந்த எழுத்து முறைகளின் பழைய குறைபாடுகள் இன்றளவும் ஐரோப்பியர் எழுத்து முறைகளில் உள்ளன. உயிர் எழுத்து மெய் எழுத்துப் பாகுபாடுகள் அரபுமொழி, யூதர் மொழி, கிரேக்கமொழி ஆகியவற்றில் இல்லாதது போலவே, இன்றளவும் ஐரோப்பிய மொழிகளிலும் கீழை உலக இசுலாமிய மொழிகளிலும் இல்லை. வரிசை முறையிலும் சமற்கிருதம், தமிழ் போன்ற இந்திய மொழிகளில் உள்ள ஒழுங்கு இவை எவற்றிலும் கிடையாது.
எடுத்துக்காட்டாக, ஆங்கிலத்தை மாதிரியாகக் கொண்டு காட்டினால், உயிர் எழுத்துக்கள் ஐந்தும் (a, e, i, o, u) நெடுங் கணக்கில் 1-வது, 5-வது, 9-வது, 15-வது, 20-வது எழுத்துக்களாக மெய் எழுத்துக்களிடையே சிதறி இடைப் பெய்யப்பட்டுள்ளன. மெய்யெழுத்துகளிலும் இதே நிலையைக் காண்கிறோம். சிதறிக்கிடக்கும் ப, ம (p, b, m) என்பன ஒரே பிறப்புடைய ஒலிகள். த, ந (t, d, n) ஆகியவையும் அவ்வாறே. அரபுமொழி முதல் ஆங்கிலம் வரை அரிச்சுவடியில் இவை ஒரே குளறுபடியாகவே அமைந்துள்ளன.
சமற்கிருதத்தின் ஒலி ஒழுங்கு முறையையும் இந்திய மொழிகளின் ஒலி ஒழுங்கு முறையையும் கண்டு ஐரோப்பிய ஆராய்ச்சியறிஞர்கள் வியந்தனர். அவை உலகின் எழுத்து முறைகளைக் கடந்த கலைப்பண்பும் அறிவுப் பண்புமுடையவை என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆனால் இந்த எழுத்து முறைகளை கி.மு. 9 ஆம் நூற்றாண்டில் நடுநிலக் கடலகத்துடன் வாணிகம் நடாத்திய தமிழக வணிகரே கொண்டு வந்து சமற்கிருதத்துக்கும் ஏனைய மொழிகளுக்கும் அளித்தனர் என்று இன்றுவரை பல மேல்நாட்டு ஆராய்ச்சியாளர் கூறி வருகின்றனர். வளர்ச்சித் திறத்தையும் திருத்தத் திறத்தையும் இந்தியாவுக்களித்து ஆக்கத்திறத்தை நடுக்கடலகத்துக்கு அவர்கள் உரிமைப் படுத்தினர்.
ஆனால், நடுநிலக் கடலகக் கோட்பாட்டுக்கு ஒரு புது முட்டுக் கட்டையாகச் சீனப் பழமையாராய்ச்சி அமைந்தது.
சீனர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அச்சுப் பொறியைக் கண்டுபிடித்தவர்கள். ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்னரே அவர்களுக்கு எழுத்து முறை இருந்தது. அது உலகின் எழுத்து முறைகளுக்கு மூலமாகக் கருதப்பட்ட எகிப்தின் எழுத்துக்கள் போலவே பட எழுத்து அல்லது உருவ எழுத்தாய் அமைந்திருந்தது. எழுத்து முறையின் தோற்றம் நடுநிலக் கடலகம் சார்ந்தது என்ற முடிபை உடைக்க இது போதுமாயிருந்தது.
வரலாற்றுக்கு முற்பட்ட நாகரிக உலகின் எல்லை நடுநிலக் கடலகத்துடன் நின்றுவிடவில்லை என்பதை இது காட்டிற்று.
மூவாயிர ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல் பழங்கால நாகரிக உலகம் மேற்கே ஸ்பெயினிலிருந்து கிழக்கே சீனா வரை பரவியிருந்தது. அதில் அடங்கியுள்ள நிலப்பகுதி தென் ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, மேற்கு, தெற்கு, தென் கிழக்கு ஆசியா, சீனா ஆகியவையே இன்றைய நாட்டெல்லைப்படி அதில் தென் ஐரோப்பாவைச் சார்ந்த ஸ்பெயின், இத்தாலி, கிரீஸ்; நடுநிலக் கடலிலுள்ள தீவுகள்; வட ஆப்பிரிக்காவைச் சார்ந்த எகிப்து, கிழக்காப்பிரிக்காவிலுள்ள அபிசினியா; ஆசியாவைச் சார்ந்த துருக்கி, பாலத்தீனம், சிரியா, ஈராக், பாரசீகம், தென்னாடு உட்பட்ட இந்தியா-பாகிசுத்தான், இலங்கை, தென்கிழக்காசியா, சீனா, கிழக்கிந்தியத் தீவுகள் ஆகியவை அடங்கியுள்ளன.
மூவாயிர ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த நாகரிக உலகப் படத்தில் புதிய உலகமாகிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா மட்டுமன்றி, வட ஐரோப்பா, வட ஆசியா, ஆப்பிரிக்காவின் பெரும்பகுதி ஆகியவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாகரிக உலகமாகிய நடுவுலகப் பகுதியில் அன்று வாழ்ந்த மக்கள் வேளாண்மையிலீடுபட்டு உழுதுண்டனர். வீடும் ஊரும் நகரும் நாடும் அமைத்து, குடியாட்சியும் நாட்டாட்சியும் பேணினர். மொழியை எழுதி வைக்க எழுத்துமுறை கண்டிருந்தனர். பொதி மாடுகளிலும் வண்டிகளிலும் பயணம் செய்தனர். சரக்கேற்றி இவற்றின் மூலம் உள்நாட்டு வெளிநாட்டு வாணிகம் நடத்தினர். நாணயங்கள் அடித்தனர். இலக்க எண்முறை கண்டிருந்தனர். வான நூலும் மருத்துவமும் அறிந்திருந்தனர். கலமேறிக் கடல் கடந்து நாகரிக உலகமெங்கும் சென்று கடல் வாணிகம் நடத்தினர். படைகள் வைத்துக்கொண்டு போரிட்டனர்.
நம் கால நாட்டுப்புற நாகரிகத்தைவிட இது சிலபல வகைகளில் மேம்பட்டது என்று காணலாம்.
இதே காலத்திலும் (மூவாயிர ஆண்டுகளுக்கு முன்னும்) இதற்கு ஆயிர ஆண்டுகள் கழித்தும்கூட இன்றைய மேலை ஐரோப்பா நாடு, நகர், வீடு, குடி, உழவு, வாணிகம் ஆகிய எதுவுமற்ற நாடோடி இனத்தவரின் வேட்டைக் காடாகவே இருந்தது. வட ஐரோப்பா, வட ஆசியா ஆகிய பகுதிகளோ இன்னும் பிற்பட்ட முரட்டு மக்கள் ஊடாடிய இடமாயிருந்தது.
வடபுல இனங்களின் எழுச்சி
நாகரிகமற்ற வடபுலங்களுக்கும் நாகரிகமுடைய தென் புலங்களுக்கும் உள்ள அன்றைய தொடர்பு ஒன்றே ஒன்றுதான். நாகரிக உலகுக்கு வடக்கே நீண்ட அரண் வரிசைபோல அமைந்த நடுவுலக மலைத்தொடர் கடந்து, நாடோடிக் கூட்டத்தார் அடிக்கடி நாகரிக மக்களைத் தாக்கினர். ஓயாது சாய்ந்துவந்த இந்தத் தாக்குதலைச் சமாளிக்கவே நாகரிக மக்கள் படைகளும் கோட்டைகளும் அமைத்திருந்தனர். சிலசமயம் இவை ஒருவரை ஒருவர் தாக்குவதற்கும் பயன்பட்டன. அவ்வக் காலத்தில் பேரரசுகள் அமைவதற்கும் இவை வழிவகுத்தன.
தொல் பழங்கால நாகரிக மக்கள் எவ்வளவு பழமை யானவர்கள் என்பதை நாம் இன்னும் காணமுடியவில்லை. அந்நாகரிக மக்கள் ஐயாயிர ஆண்டுகட்கு முன்னிருந்து மூவாயிரம் அல்லது மூவாயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்கு முன்வரை அதாவது, கி.மு. 3000 முதல் கி.மு. 1500 வரை வலிமையுடன் வாழ்ந்தனர் என்று கூறலாம். ஆனால் கி.மு. 1500-லிருந்து தொடங்கி கி.பி. 1600 வரை கிட்டத்தட்ட மூவாயிர ஆண்டுக்காலமாக அவர்கள் வடபுலப் படையெடுப்புக்கு ஆளாகி, ஒவ்வொரு பகுதியாக வீழ்ச்சியடைந்து அழிவுற்றனர். அவர்கள் கோட்டை கொத்தளங்கள் பெரும்பாலும் மண்ணுள் மடிந்து தகர்ந்து போயின. அவர்கள் மொழிகள் பெரும்பாலும் தடங்கெட்டழிந்து விட்டன. அவர்கள் பெயர்கள் கூடச் சரிவர நமக்கு வந்து எட்டவில்லை. அவர்கள் வாழ்ந்த இடங்களில் இன்று வேறு மொழிகள், வேறு மக்கள், வேறு இனத்தவர் வாழ்கின்றனர். ஆனால் அப்பழங்கால நாகரிக உலகில் இரண்டே இரண்டு துண்டங்கள் - தென்னாடும் சீனாவும் - மொழியும் வாழ்வும் முற்றிலும் கெடாமல் இன்றும் நின்று நிலவுகின்றன.
வடபுலங்களிலிருந்து நாகரிக உலகின் மீது படையெடுத்து அதை அழித்த இனங்கள் பல. நாம் அறிந்தவரை அவற்றில் மிகப்பழமையான இனம் இந்து - ஐரோப்பிய இனம் என்று குறிக்கப்படும் ஆரிய இனமே. இவ்வினத்தவர் கி.மு. 2000-க்கும் கி.மு. 1500-க்கும் இடையில் மேற்கு நோக்கியும் தெற்கு நோக்கியும் கிழக்கு நோக்கியும் நாகரிக உலகின் மீது பாய்ந்தார்கள். பழைய நாகரிகங்களை அவர்கள் எங்கும் ஒரேயடியாக அழிக்கவில்லை. ஆனால், பழைய நாகரிகத் தடங்கள் பெரும்பாலும் அழிந்தன. புதிய நாகரிகமாகப் பழைய நாகரிக இடிபாடுகளிலிருந்து இன்றைய புதிய உலக நாகரிகங்கள் தோன்றியுள்ளன.
நாகரிக உலகில் புகுந்து நாகரிமடைந்த முற்கால ஆரிய இனத்தவர் மீதும் நாகரிகமடையாது வடக்கேயிருந்த புதிய ஆரியரும் பிற இனத்தாரும் மீண்டும் மீண்டும் படையெடுத்துக் கொண்டேயிருந்தனர். கி.பி. 5ஆம் நூற்றாண்டில் காத்தியர், விசிகாத்தியர் என்ற பண்படா ஆரிய இனத்தவர் புகுந்து உரோமப் பேரரசையும் அதன் நாகரிகத்தையும் தடங்கெட அழித்தார்கள். கி.மு. 200இல் இருந்து தொடங்கி கி.பி. 7ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவில் குஷாணர், ஊணர் முதலிய முரட்டுக் கூட்டத்தார் படையெடுத்துப் பேரழிவு செய்தனர். இவர்கள் நாகரிகமுற்று இந்தியருடன் இந்தியரான பின்பும் பிற இனங்கள் தொடர்ந்து வந்து அழிவு செய்துகொண்டேயிருந்தன.
வடபுலத்தின் அழிவுப்படைகளுள் வரலாற்றில் கடைசியாக நாம் கேள்விப்படும் இனம் மங்கோலிய இனமேயாகும். கி.பி. 9 ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்கி 16 ஆம் நூற்றாண்டுவரை அவர்கள் ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் ஒருங்கே, பெருங் கிலியூட்டி வந்தனர். அவர்கள் தலைவர்களாகிய செங்கிஸ்கானும் தைமூரும் இரண்டு கண்டங்களிலும் பேரழிவு செய்தனர். சிறப்பாக உருசியம், பாரசீகம், இந்தியா, சீனா ஆகிய நாடுகள் அவர்களின் கோரக் கொள்ளைக்கு ஆளாயின. ஆயினும் கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலுமே நாளடைவில் அவர்கள் தாம் வென்றடக்கிய மக்கள் நாகரிகத்தை ஏற்று, அதனைப் புதிதாக வளர்க்க உதவினர். இந்தியாவின் வரலாற்றில் நாம் இதைத் தெளிவாகக் காணலாம். தைமூரின் காலத்தில் மங்கோலியர் நாடோடிக் கொள்ளைக் கூட்டத்தினராக இருந்தனர். தைமூரின் கொள்ளுப் பேரன்தான் பாபர். அவன் காலத்திற்குள் அவ்வயல் மரபினர் இந்தியாவுக்கு வந்து நாகரிகமுற்று, முகலாயப் பேரரசமைத்தனர்.
இந்தியா வந்து நாகரிகமுற்றுப் பேரரசனான பின்னும், ‘இந்தியா ஒரு அநாகரிக தேசம்’ என்றுதான் பாபர் கருதி னானாம்! அவன் பேரன் அக்பர் கட்டாயமாக இவ்வாறு கருதி யிருக்கமாட்டான்! பைத்தியக்காரனுக்கு உலகமே பைத்தியமாகத் தெரியும். உலகம் பைத்தியமல்ல என்பது அவன் பைத்தியம் தெளிந்த பிறகுதானே விளங்கும்!
பேசாக் குரல்கள்
இன்றைய நாகரிக உலகின் நாடுகள், மொழிகள் பெரும் பாலும் புத்தம் புதிய நாடுகள், மொழிகளே. மிகப் பழமையானவை என்று கருதப்படுபவைகூட, தமிழ், தமிழகம், சீன மொழி, சீன நாடு நீங்கலாகச் சென்ற மூவாயிர ஆண்டுக்கு இப்பாற்பட்டவையே. அதற்கு முன்னுள்ள நாடுகள், மொழிகள், இனங்கள், பண்பாடுகள், ஒன்று முற்றிலும் தடமழிந்து போயின; அல்லது உருத்தெரியாது புதிய இனங்களுடன் கலந்து திரிந்துவிட்டன.
‘ரிப் வான் விங்கிள்’ என்ற ஆங்கில மொழிச் சிறுகதையில் ரிப்வான் அறுபது ஆண்டு மாயத் தூக்கம் தூங்கி எழுகிறான். ஊரும் நாடும் ஆட்சியும் மக்களும் மாறியபின், அவன் புதுமுகம், புதுப் பண்புகளிடையே வாழ நேர்கிறது. தமிழரும், சீனரும் நம் புதிய உலகில் கிட்டத்தட்ட அந்நிலையிலேயே உள்ளனர் என்னலாம். மாண்ட ஓர் உலகினின்று வருங்கால உலகுக்கு விடப்பட்ட தூதுவராக இரண்டு இனங்களும் விளங்குகின்றன.
இன்றைய வரலாறு மேல்நாட்டார் வகுத்த ஒரு கலையே. இன்றைய உலக மொழிகளிலேயே அது எழுதப்படுகிறது. அதன் எழுத்து மூலங்கள் கூட மிகப் பெரிய அளவில் இன்றைய மொழிகளில்தான் இருக்கமுடியும். ஆகவேதான் எழுத்து மூல ஆதாரமுடைய வரலாறு மூவாயிர ஆண்டுகளுக்கு முன் செல்ல வில்லை. இந்த மூவாயிர ஆண்டுகளையும் இக் காரணத்தாலேயே வரலாற்றுக் காலம் என்று கூறுகிறோம்.
வரலாறு இக் காலத்தில் பேசும் வரலாறாகக் காட்சி தருகிறது. இவ் வரலாற்றின் குரலை நாம் பேசும் குரல் என்னலாம்.
வரலாற்றுக் காலத்துக்கு முன்பே மொழி உண்டு. எழுத்து உண்டு. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்துக்கு நமக்கு எழுத்து மூலங்களும் சில உண்டு. புதைபொருள்கள், மண்படிவங்கள், கலைப் பொருள்கள், எலும்புக்கூடுகள் ஆகியவற்றின் வாய்பேசா ஆதாரங்களும் உண்டு. எழுத்து மூலங்களில் சிலவற்றின் மொழிகள் அவற்றின் இக்கால இன மொழிகளின் துணை கொண்டு விளக்க முற்றிருக்கின்றன. எகிப்திய மொழி, சுமேரிய மொழி ஆகியவை புரிந்துவிட்ட மொழிகள். மொகெஞ்சதாரோ விலுள்ள முத்திரைகளின் மொழியும், தமிழகத்தில் உள்ள சில பண்டைக் கல்வெட்டுக்களின் மொழிகளும் இன்னும் உணரப்படவில்லை. முற்றிலும் விளக்கமுறாத இம்மொழி மூலங்கள் மற்ற புதைபொருள்களின் மூலங்கள் ஆகியவற்றை நாம் வரலாற்றின் பேசாக் குரல்கள் என்னலாம்.
வரலாற்றுக்கு முற்பட்ட கால வரலாறு பெரிதும் பேசாக் குரல்களின் வரலாறே.
வரலாற்றுக் காலங்களிலேயே சில குரல்களை வரலாறு எழுதுவோர் அல்லது படிப்போர் அல்லது பயன்படுத்துவோர் கேளாதிருப்பதும் உண்டு. இவற்றைக் கேளாக் குரல்கள் என்னலாம்.
தமிழகத்தின் குரல் வரலாற்றுக்காலக் குரல் மட்டுமல்ல. வரலாற்றுக்கு முற்பட்ட காலக் குரலும் உடையது. ஆனால் புதைபொருளாராய்ச்சி தமிழகத்தில் மிகுதி வளர்ச்சியுறவில்லை. தமிழகத்துக்கு உதவும் குரல்கள் பிற நாடுகளின் வரலாற் றாராய்ச்சியும் புதைபொருளாராய்ச்சியுமே. இவற்றின் குரல்கள் கூட இன்று ரிப் வான் விங்கிளின் குரல்களாயுள்ளன. தமிழகம் பற்றி அவை கூறும் செய்திகளை இன்றைய வரலாற்றாராய்ச்சி யினர் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை, அல்லது ஏற்றுக்கொள்ள முடிய வில்லை.
இவற்றுட் சிலவற்றைக் காண்போம்.
கேளாக் குரல்கள்
நாகரிகமுள்ளவர், நாகரிகமற்றவர் என்று அடிக்கடி பேசுகிறோம். சரியாகச் சொல்வதானால் நாகரிகமிக்கவர், நாகரிகம் குன்றியவர் என்றோ, நாகரிகத்தில் முற்பட்டவர், நாகரிகத்தில் பிற்பட்டவர் என்றோதான் கூறவேண்டும். ஏனெனில் நாகரிகம் ஒரு நிலையான பண்பல்ல, ஒரு வளர்ச்சி. பண்டைய நாகரிகம் நமக்குப் பிற்பட்டதாகத் தோற்றலாம். இன்றைய நாகரிகம் நாளை பிற்பட்ட தாகிவிடலாம். நாகரிகப்படியை வைத்தே நாம் அதன் அளவை உணர்கிறோம்.
தமிழகம் பண்டு எவ்வளவு நாகரிகமுடையதானாலும், இன்று பிற்பட்டுவிட்டதென்பதில் ஐயமில்லை. சிறப்பாக மேலை உலகநாடுகள் தமிழகந்தாண்டி நெடுந்தொலை சென்றிருக்கின்றன. ஆயினும் பிற்பட்ட நாடுகள் எப்போதும் பிற்பட்டிருக்க வேண்டு மென்பதில்லை. அதற்கு மேலை உலகே சான்று தவிர, நாகரிகத்தின் உயிர்நிலை விரைவுவளர்ச்சியல்ல, நிலையான வளர்ச்சியே. தமிழகம் தொன்றுதொட்டு இன்றுவரை நிலையாக வளர்ந்து வந்துள்ளது. இன்றைய பிற்பட்ட நிலை அதன் இடைவேளை ஓய்வு நிலை, தூக்க நிலையே இனியும் அது தொடர்பு அறாது, வளர்ந்து, மாண்ட பழங்காலத்திலிருந்து இனி வரவிருக்கும் காலங்களுக்குரிய காலத்தின் பண்பாட்சித் தூதராய் நிலவும் என்று நாம் நம்பலாம்.
ஆண்டி நிலையிலிருந்து அரச நிலைக்கு உயர்ந்தவனுக்கு ஆண்டிகளிடையில் பழைய தோழரும், அரசுரிமையில் புதிய தோழரும் இருப்பர். எல்லாப் படியிலும் அவ்வப்படியில் தோழர் இருப்பர். அதுபோலவே, உலக நாகரிகத்தின் பல படிகளையும் கடந்து வந்துள்ள தமிழகத்துக்கு எல்லாப் படிகளிலும் தோழமைத் தொடர்பு காணப்படுவது இயல்பு. எல்லாக் கிளைகளையும் இணைக்கும் தாய் மரம் போல, அது உலகின் எல்லா இனங்களையும் இணைக்கிறது. மேலும் அது எல்லா இனங்களின் பண்புகளையும் தன்னகங் கொண்டு, தன் பண்புகளை எல்லா இனங்களிலும் ஊடுருவவிட்டு உலவுகிறது. இதனால் மனித இன வளர்ச்சியையே அது தன் வளர்ச்சியாகக் கொண்டிருக்கிறது.
பழைய உலகுடன் தொடர்பற்றுத் தனி வளர்ச்சியாக வளர்ந்த புது உலக நாகரிகங்கள், ‘பெரு’விய, ’மய’ நாகரிகங்கள். ஆனால் அவற்றில் தென்னக நாகரிகங்களுடன் இணைவான பல வேர்த் தொடர்புகள் காணப்படுகின்றன என்பதை மேலே குறித்தோம். இதே வேர்த் தொடர்பு சுமத்ரா, ஜாவா தீவுகளிலுள்ள தென் கிழக்காசிய நாகரிகங்களிலும் மடகாஸ்கர் தீவினை அடுத்த தென் ஆப்பிரிக்காவிலும் அதற்கு உண்டு. இத் தொடர்புகள் மனித உலகத் தொடக்கக் காலத்துக்குரிய அடிப்படைத் தொடர்புகள். ஏனென்றால் மனித நாகரிகத்தில் காணப்படுகிற இந்த ஒற்றுமை, இவ்விடங்களிலுள்ள பாறைகள், மரஞ் செடிகொடியினங்கள், விலங்கு பறவையினங்கள் ஆகிய வற்றிலும் காணப்படுகின்றன. பன்னூறாயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னாடு, தென் கிழக்காசியத் தீவுகள், தீவக்குறைகள், ஆஸ்திரேலியா, வட தென் அமெரிக்காவின் மேல்கரைப் பகுதி, இலங்கை, மடகாஸ்கர், தென் ஆப்பிரிக்கா ஆகிய நிலங்கள் இன்றிருக்கும் நிலையிலிராமல் இந்துமா கடலிருக்கும் இடத்தில் ஒரே கண்டமாகக் கிடந்தன என்று மண்ணூல் விளக்குகிறது. இதை ‘இலெமூரியா’ என்று மேல்நாட்டு அறிஞரும் ‘குமரிக்கண்டம்’ எனத் தமிழரும் குறிக்கின்றனர்.
தமிழகத்துடனுள்ள அடுத்த தொடர்பு வட ஐரோப்பா விலுள்ள ஹங்கேரி, ஆசியாவில் துருக்கிஸ்தான், சீனா, ஜப்பான் ஆகியவற்றுடனேயே ஆகும். பழைய ஆராய்ச்சியாளர்கள் தமிழினத்தை இந்த இணங்களுடன் தொடர்புபடுத்தியதற்கு இத் தொடர்பின் தடங்களே காரணம். இது ஆரியர் எழுச்சிக்கு முற்பட்ட தொடர்பு. ஆகவேதான் நடு உலகின் வடபகுதிகள் ஆரியக்கலப்பால் புது நாகரிகமடைந்தபின் இவை தமிழகத் தொடர்பிலிருந்து துண்டுபட்டு மேல் வளர்ச்சியற்று, தமிழரின் தொடக்கக் காலப் பண்பாட்டுடன் நின்றுவிட்டன. அயர்லாந்து, பின்லாந்து, ஹங்கேரியம், சீனம், ஜப்பானியம் ஆகிய இனங்களின் மொழிகளிலும் பழக்கவழக்கங்களிலும் சமயக் கருத்துக்களிலும் கூட இத்தொடர்பின் சின்னங்களைக் காண்கிறோம். எடுத்துக் காட்டாகப் ‘பின்னிய’ மொழியில் இரு மெய்கள் (ஸ்தலம் என்ற சமற்கிருதச் சொல், ஸ்டோன் என்ற ஆங்கிலச்சொல் போல) முதலில் வருவதில்லை. சீன மொழியில் வல்லினம் (வாக் என்ற சமற்கிருதச் சொல், நட் என்ற ஆங்கிலச் சொல் போல) ஈற்றில் வருதல் இல்லை. இவை தமிழின மொழிகளின் பண்புகளென்று கூறத் தேவையில்லை.
வரலாற்றின் முற்பட்ட தொல் பழங்கால வட ஐரோப்பிய மொழிகளின் தொடர்பை ஆங்கில மொழியிலேகூடக் காணலாம். ஆரிய மொழிகள், செமித்திய மொழிகள் உட்பட, நாகரிக உலகின் எல்லா மொழிகளிலும் சொற்களுக்கு அதன் பொருளுடன் தொடர்பற்ற ‘சொற்பால்’ உண்டு. பழங்கால ஆங்கிலத்திலும் இது இடம் பெற்றிருந்தது. ஆனால் தொல் பழங்கால இனத் தொடர்பு காரணமாக, இது வரவரத் தேய்வுற்று மறை கும் திராவிட மொழிகளுக்கும் கீழை ஆசிய மொழிகளுக்கும் மட்டுமே இந்த ‘இயற்கைப் பால்’ வேறுபாடு இருப்பது குறிப்பிடத் தக்கது.
வரலாற்றுக்கு முற்பட்ட தொல் பழங்கால நாகரிக இனம்
இந்த இரண்டு தொடர்புகளுக்கும் அடுத்தபடியான இனத் தொடர்புமிக முக்கியமானது. அதுவே நடுநிலக் கடலக, இனத் தொடர்பு ஆகும். கி.மு. 3000-க்கு முன்னிருந்தே தொடங்கி, வரலாற்றுக்கு முற்பட்ட காலம் கடந்து தமிழகத்துக்கும் எகிப்து, பாலஸ்தீனம், ஃபினிஷியா, இவற்றுக்கெல்லாம் முற்பட்ட சுமேரிய நாகரிகம், சிந்துவெளி நாகரிகம் ஆகியவற்றுக்கும் வாணிகத் தொடர்பு, குடியேற்றத் தொடர்பு ஆகியவை மட்டுமன்றி, நாகரிகத் தொடர்பும் இருந்தது என்று எல்லா ஆராய்ச்சியாளரும் ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் இத்தொடர்பு கூட்டுறவுத் தொடர்பல்ல. அதனினும் அடிப்படை யானது என்பதில் ஐயமில்லை. மொழி, இடப்பெயர், ஊர்ப்பெயர், இனப்பெயர், பண்பாடு, பழக்க வழக்கங்கள் ஆகிய எல்லாவற்றிலும் இதைக் காண்கிறோம். உண்மையில் நடுநிலக் கடலக இனமும் திராவிட இனமும் ஒரே பேரினம் என்று சில ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். அவை ஒரே இனமாய் இராவிட்டால் கூட, ஒன்றுபட்ட இன நாகரிங்கள் என்பதில் ஐயமில்லை.
நடுநிலக் கடலக இனமும் தென்னாடும் மட்டுமல்ல; வரலாற்றுக்கு முற்பட்ட நாகரிக உலகம் முழுவதுமே ஒரே கருமூல இனத்தின் நாகரிக அடிப்படையிலேயே வளர்ந்தது என்று கூறலாம். வரலாற்றுக் காலத்திலும் நாகரிக உலகில் இதுவே அடிப்படை யினமாயினும், ஆரிய இனம் மற்றொரு துணை அடிப்படை இனமாகப் பரந்து, ஆட்சியில் பல பகுதிகளில் முதன்மை பெற்று விட்டது.
நடுநிலக் கடலக நாகரிகம் வேறு, திராவிட நாகரிகம் வேறு. சீன, தென்கிழக்காசிய நாகரிகங்கள் வேறு என்ற கருத்தே இன்று ஆராய்ச்சியாளர் ’கொள்கை’யாக இருந்துவருகிறது. அவற்றின் வேறுபாடு தனித்தனி வளர்ச்சி சார்ந்தது, அடிப்படை ஒன்றே என்பதை வருங்கால ஆராய்ச்சிகளே தெளிவுபடுத்த வல்லன. ஆனால் அவற்றின் ஒற்றுமை இன்றும் இக்கருத்தை வலியுறுத்தப் போதியன.
தற்கால உலகில் தமிழினத்தின் இத்தொடர்புகள் ஆராய்ச்சி உலகத்தில் பூட்டி வைக்கப்பட்டு வரலாற்றின் கேளாக் குரல்களாக உள்ளன.
தேசத்தில் நாம்!
இன்றைய உலகம் நாடு நாடாகப் பிரிவுற்று இயங்குகிறது. நாட்டுக்கு நாடு தனித்தனி வரலாறுகள் ஏற்பட்டுள்ளன. ஏற்பட்டு வருகின்றன. எல்லா நாடுகளையும் சேர்த்து நாம் உலகம் என்று அழைக்கிறோம். எல்லா நாட்டு வரலாறுகளையும் சேர்த்தே நாம் உலக வரலாறு காண எண்ணுகிறோம்.
நாடு இன்று நமக்கு இயற்கையாய் விட்டது. மெய்யாகி விட்டது. நாட்டை எண்ணிய பின்பே நாம் உலகை எண்ணு கிறோம். நாடுகளின் மொத்த இணைப்பாகவே நாம் அதைக் கருது கிறோம். நாடு கடந்த ஒன்றாகவே அதைக் கனவு காண்கிறோம். ஆயினும் உண்மையில் நாடு ஏற்பட்டபின் உலகம் உண்டாக வில்லை. உலகம் ஏற்பட்ட பின்னரே நாடு தோன்றிற்று.
உலகமும் வரலாறும் இயற்கையின் இரண்டு கூறுகள். இயற்கையின் இடக்கூறு உலகம். அதன் காலக்கூறு வரலாறு. உலகம் என்றுமுள்ளது; ஆனால், மாறாதது. வரலாறு என்றுமுள்ளது; ஆனால், இயங்கிக் கொண்டேயிருப்பது; உலகின் இயக்கத்துக்கும் வளர்ச்சி தளர்ச்சிகளுக்கும் வழி வகுப்பது. சமுதாயமும் இனமும், அரசும் நாடும் இவ்வளர்ச்சியின் பயன்கள்.
உலகம் இயற்கை அளித்த பரிசு. நாடு மனித நாகரிகம் அளிக்கும் வளம். நாம் கனவு காணும் உலகம் நாடு கடந்த உலகம். அது இயற்கை அளித்த பரிசு மட்டுமல்ல; இயற்கை அளித்த அடிப்படை மீது, மனித நாகரிகம் கட்டமைத்துவரும், கட்டமைக்க இருக்கும் கட்டுக்கோப்பு.
நாடு என்பது நிலப்பரப்பல்ல. மனித இனம் வாழாத நிலப் பரப்புகள் இன்றுகூட உலகில் உண்டு. சகாராப் பாலைவனம், தென்முனை வடமுனைப் பகுதிகள் இத்தகையன. அதேசமயம் மனிதர் குழாம் மட்டும் நாடாய் விடாது. ஒரே இடத்தில் தங்கி வாழாமல், வீடு, குடி, நாடு நகர் இல்லாமல், நாடோடிகளாகத் திரியும் மக்களினங்கள் இன்றும் உண்டு. ஜிப்சிகள் அல்லது குழுவர் இத்தகையவர்.
உலகும் நாடும்
மனிதர் வாழ்வதாலோ, ஒரே ஆட்சிக்கு உட்பட்ட காரணத்தினாலோ ஒரு நிலப்பரப்பு நாடாய்விட்டது. ஏனெனில், நாடு இயற்கையின் படைப்பன்று. ஆட்சியின் படைப்பன்று. சமுதாயத்தின் படைப்பே. இயற்கையும் ஆட்சியும் அதற்கு உதவக்கூடும். சமுதாயத்தின் தன்னிச்சையான, மனமார்ந்த விருப்பமே நாட்டை உருவாக்கவல்லது.
உலகின் அடிப்படை இயற்கை. நாட்டின் அடிப்படை இயற்கையோ டொட்டிய அல்லது இயற்கை கடந்த சமுதாய விருப்பம். அது வாழ்வின் பாதுகாப்புக்காக, வாழ்க்கை வளத்துக்காக, கூட்டு வளர்ச்சிக்காக, தன்னியல்பாகவோ, தற்காலிக, ஆற்றல்களால் இயக்கப்பட்டோ, சமுதாயம் அமைத்துக்கொள்ளும் அல்லது அமைய இடங்கொடுக்கும் ஒரு கூட்டமைப்பேயாகும்.
“வாழ்ந்தால் ஒருங்கு வாழ்வோம். வீழ்ந்தால் ஒருங்கு வீழ்வோம். வீழ்ச்சியைத் தடுப்பதில் ஒருவருக்கொருவர் உதவுவோம். வாழ்வை வளப்படுத்துவதில் ஒருவரை ஒருவர் ஊக்குவோம். எல்லார் நலங்களையும் ஒவ்வொருவரும் பயன்படுத்துவோம். ஒவ்வொருவர் நலங்களையும் எல்லாரும் பயன்படுத்த உதவுவோம்.”
இத்தகைய உணர்ச்சியே சமுதாயத்தை, இனத்தை, நாட்டை உண்டுபண்ணக் காரணமாய் இருந்தது; வளர்க்கக் காரணமாய் இருக்கிறது.
கட்டுப்பாடும் சட்டதிட்டமும் இல்லாமல் இயற்கை யுணர்ச்சிகளின் அடிப்படையில், மனித இனம் கண்டு பயன் படுத்திய ஒரு கூட்டுறவு அமைப்பு, அல்லது கூட்டுறவுக் காப்பு நிதி நிலையம் நாடு. தனி மனிதனுக்காகச் சமுதாயம், சமுதாயத்துக் காகத் தனி மனிதன் என்ற தத்துவத்தின் மீது அது அமைந்தது.
குடியாட்சியின் கருப்பண்பும் பொதுவுடைமைத் தத்துவத்தின் மூலக்கூறும் இதிலே அடங்கிக் கிடக்கின்றன.
சமுதாயம் அரசாக வளர்ந்தது. பேரரசுகளாகப் பொங்கிற்று. ஆனால் அரசும் பேரரசும் அலைகள். அலைகளாக அவை எழுந்தன. அலைகளாக மீட்டும் விழுந்தன. ஆனால், சமுதாயமோ, சமுதாயத் தொகுதியோ விரும்பிய இடத்தில், அது நாடாக, நாடு கடந்த இனமாக, நாட்டுக் கூட்டுறவாக, ‘ஓர் உலகை’ நோக்கிய பேரமைப்பாக வளர்ந்தது.
நாடும் மொழியும்
நாட்டின் வளர்ச்சிக்குப் பல பண்புகள் உதவின. நாடு கடந்த ‘ஓர் உலக’ வளர்ச்சிக்கும் பல பண்புகள் உதவின. நாட்டு வளர்ச்சிக்கு உதவிய மிக முக்கியமான பண்பு மொழி. நாடுகடந்த வளர்ச்சிக்கு உதவிய முக்கியமான பண்புகள் கலைகள், இயல்கள், ஒப்புரவுணர்ச்சி ஆகியவையே.
பலரை ஒன்றுபடுத்தி ஓரமைப்பாக்கியது. சமுதாயம். இது தொகை எல்லை, இட எல்லை வென்ற பண்பு. ஆனால் தலைமுறை கடந்த தலைமுறையை ஒன்றாக்கப் பயன்பட்டது மொழி, கலை, இயல்கள், ஆகியவை. இவை கால எல்லையை வெல்ல உதவின. இவற்றுள் மொழி மிக மிக முக்கியமானது. அது கலை இயல்களை நாட்டெல்லையில் வளர்த்தது. ஆனால் கலைகள், இயல்கள் மொழிகடந்து, நாடுகடந்து விரிவுற்றன. நாட்டுக்கு நாடு, மொழிக்கு மொழி தொடர்பு உண்டுபண்ணியவை அவையே.
“நாம் அனைவரும் ஒன்றுபட்டால் போதாது, ஒவ்வொரு வரும் எல்லார் நலங்களும் பெறுவது சரி; எல்லாரும் ஒவ்வொருவர் நலனும் பெறுவது சரி; ஆனால் நம் எல்லார் நலன்களையும் நம் ஒவ்வொருவர் பிள்ளையும், பிள்ளையின் பிள்ளையும் பெறவேண்டும். இதற்கொரு வழி வகுப்போம்”.
மனிதனின் இயற்கை உணர்ச்சிகள் இவ்வாறு தூண்டின. அதன் பயனே மொழி. அது அவன் இதயத்தை விரிவுபடுத்திற்று. மூளையை வளர்த்தது. தனிமனிதன் தனக்காக மட்டும் சிந்திக்க வில்லை சமுதாயத்துக்காகவும் சிந்தித்தான். சமுதாயம் தனக்காக மட்டும் சிந்திக்கவில்லை. தன் அடுத்த தலைமுறைக்காகவும், மரபுக் கால்வழிக்காவும், இனத்துக்காகவும் சிந்தித்தது. ஆள்கடந்த, இடங்கடந்த, காலங்கடந்த இந்தச் சிந்தனையே மொழி. மனித இனத்தின் மூளையாக அது வளர்ந்தது, வளர்ந்து வருகிறது.
சமுதாய வாழ்வு தனிமனிதன் பண்புகளை வளர்த்தது! தனிமனிதன் வாழ்வு சமுதாயத்தின் ஆற்றலைப் பெருக்கிற்று. இவை இரண்டும் மொழி வழியாகத் தொடர்ந்து இனப்பண்பாயின. இது மொழிவழி கலை வளர்த்தது. கலைவழி மொழி வளர்த்தது. இரண்டின் வழியாகவும் அது வாழ்க்கையை உருவாக்கி, மீண்டும் மொழிக்குப் புதுவளம் தந்தது.
பண்பென்னும் கழிகளுடன், பழக்கவழக்கங்களென்னும் வண்டலடித்துக் கொண்டு சென்று, அவற்றின் உரத்தின் மூலம் இனத்தை உருவாக்கி, இனத்துடன் இனம் இணையக் கலை இயல்கள் வளர்த்து விரிவுற்று, இயற்கையின் நிறைவள மென்னும் எல்லையற்ற கடவுட் பண்பு நோக்கி விரையும் ஒரு பேராறே மொழி.
மொழி கடந்த மொழியாக மனிதப்பண்பு அதன் மீது தென்றலாக வீசி அலை எழுப்புகிறது. அந்த அலையே கலை. அதன் ஆற்றலே இயல்.
இணைக்கும் பண்புகளும் சிதைக்கும் பண்புகளும்
கூட்டுழைப்பு, விட்டுக் கொடுப்பு, பொதுநல உணர்வு, தியாகம், தொலைநோக்கு, வாய்மை, நேர்மை, சமநிலை ஆகிய வற்றின் அடிப்படையில் பண்பொத்த நாடுகள், நாட்டினங்கள், குடியினங்கள் இணைந்தன. நாடு இனமாக விரிவுற்றது. இனங்கள் பேரினங்களாக வளர்ந்தன.
இவற்றுக்கு மாறான தன்னலம், போட்டி, ஆதிக்க அடிமை மனப்பான்மைகள், பேரவா, தன்னிறைவு, பொய்மை, போலித் தன்மை, வஞ்சனை, பழிக்குப்பழி சூழும் மனப்பான்மை, சூழ்ச்சி ஆகிய பண்புகள் இனங்களை, நாடுகளை, குடும்பத்தைப் பிரித்துப் பிளவு செய்தன. நாகரிகங்களை, நாடுகளை அழித்தன.
இன்றைய உலகில் நாட்டுப்பற்று, இனப்பற்று, மொழிப் பற்று, மனித இனப்பற்று அற்றவர்கள் ஏராளம். ஆனால் தீங்கு அத்துடன் முடியவில்லை. பற்றற்ற தன்மையைவிடத் தவறான பற்றுக்கள் தரும் தீங்குகள் எல்லையற்றவை நாட்டுப்பற்று என்ற பெயரால் நாட்டா திக்கம், நாட்டுப் பகைமை, தன்னலம், சூழ்ச்சி முறைகள் ஆகியவை அரசியல் என்ற பெயருடன் பெருக்க மடைந்துள்ளன. இனப்பற்றின் பெயரால் இன ஆதிக்கம், இனப்பகைமை, இனநலம் விற்றுத் தன்னலம் பெருக்கும் குறுகிய அறிவு, இனச்சூழ்ச்சி முறைகள் ஆகியவை எங்கும் நெளிகின்றன. தன்னலத்தின் அகல் விரிவான குழுநலன், உட்கட்சி நலன் ஆகியவை வேறு பொல்லாங்கிழைக்கின்றன.
நாடுகடந்த உலகம் இன்று ஏன் கனவாக இருக்கிறது என்பதை இவ்வுண்மைகள் காட்டும். அன்பு இருக்குமிடத்தில் நாடு உண்டு. நாடுகடந்த உலகமும் அரிதல்ல. ஆனால் அன்பு சமத்துவம் இருக்கும் இடமே நாடும். விட்டுக்கொடுப்பு, தியாகம் ஆகியவற்றுடன் கூடியே உலவும். அன்பு இல்லாத இடத்தில் உலகமும் நீடித்து நிலவ முடியாது. நாடும் நீடித்து நிலவ வழியிராது உலகமும் நாடுமென்ன, ஊரும் தெருவும் வீடும் குடும்பமும்கூட வளம்பெற வகை இராது.
இவை வரலாற்றின் படிப்பினைகள் - ஒழுக்கப் படிப்பினைகள் மட்டும் அல்ல!
வரலாறும் வள்ளுவரும்
திருவள்ளுவரின் அறம் மட்டுமல்ல, பொருளும் இதையே அடிப்படையாகக் கொண்டது. அவர் கருத்துப்படி மறம் அல்லது வீரம்கூட அன்படிப்படையானதே.
“அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்;
மறத்திற்கும் அஃதே துணை.” (76)
அன்பில்லா வீரத்துக்கு வீரம் என்ற பெயர் கிடையாது. அது கொடுமை, அட்டூழியம் ஆகியவற்றின் மறைபெயர் ஆகும்.
வரலாற்றின் இந்தப் படிப்பினைக் குரல்களை வரலாற்றா சிரியர்கள் பெரும்பாலும் கேட்கவில்லை. கேட்டு உலகுக்கு எடுத்துக் கூறவும் இல்லை. ஆனால் வள்ளுவர் இவற்றைக் கேட்டார். கேட்டு உலகுக்கு எடுத்துக்காட்டினார். அவர் வரலாறு தரவில்லை. ஆனால் அதன் குரல் தருகிறார்.
வரலாற்றின் இந்தக் குரல்கள் வரலாற்றில் - ஊமை வரலாற்றில் - பின்னணியிலிருந்து - திரைக்குப் பின்னிருந்து குமுறுகின்றன.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன், தமிழினுடனும், தமிழனுடனும், தமிழகத்தினுடனும் தோளோடு தோள் கோத்து உலாவிய இனங்கள், மொழிகள், நாடுகள் எத்தனையோ! அவை எல்லாம் இப்போது எங்கே?
அவை ஏன் அழிந்தன?
அறிவு இல்லாமலா, கலையில்லாமலா? வீரமில்லாமலா, செல்வமில்லாமலா? வாழும் ஆர்வம், வாழும் வகை இல்லாமலா?
வள்ளுவர் வரலாறு வகுக்காமல் வரலாற்றின் குரலில் இக் கேள்விகளுக்கு மறுமொழி தருகிறார்.
“பண்புடையார்ப் பட்டுண் டுலகம்; அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்” (996)
உலகம் பண்பு உடையவர்களைப் பெற்றிருந்தால், அது நீடித்து நிலவி வாழும். எங்காவது, எந்த இனத்துக்காவது அது இல்லாமற் போய்விட்டால், அந்த இனம் மண்ணோடு மண்ணாகிப் புதையுண்டு அழிவது திண்ணம்.
ஆம், பொய்யாமொழி பொய்க்கவில்லை. அவர் பொன்னுரை இன்னும் பொலிவுற்று நிற்கின்றது. ஆனால் அதன் பொன்றாத வாய்மைக்குச் சான்றாக, எகிப்து, சால்டியா, மான்க்மேர், சுமேர், சிந்துவெளி நாகரிகம், பண்டைய கிரீஸ், ரோம் ஆகியவை அழிவுற்றன. மண்புக்கு மாய்ந்து மடிந்தன!
அழிவின் மறைதிறவு
எகிப்து ஏன் அழிந்தது?
எகிப்தியருக்கும் முற்பட்ட ஏதோ ஓர் இனம், வரலாறும் வரலாற்றுக்கு முற்பட்ட வரலாறும் கண்டுணராத ஏதோ ஒரு மாய இனம் அவர்களுக்கு ஒரு வாய்பேசா எச்சரிக்கைக் குரல் தந்திருந்தது. அதுவும் ‘ஸ்ஃவிங்க்ஸ்’ உருவில், மாயச் ‘சிங்கப்பெண்’ சிலை உருவில்! அழகும் கவர்ச்சியும் மிக்க பெண் தலை, சிங்கத்தின் உடல்! சிலை அளவில் அல்ல; மலை அளவில், மலையாகவே பாலைவனத்தில் கிடந்தது. காலத்தின் கலையுருவே போல் கனிவும் சோகமும் கலந்து படிந்த பாவனையில், அது பேச இருப்பதுபோல் பேசாமல் அமைந்துள்ளது.
“உனக்கு முன்னும் நான் இருந்தேன்! என்னை உருவாக்கிய வர்கள் இன்றில்லை. உன்னையும் நான் காண்கிறேன்! உனக்குப் பின்னும் நான் இருக்கத்தான் போகிறேன்!” என்று அது வரலாற்றின் குரலில் கூறாமல் கூறியிருக்க வேண்டும்!
இன்றைய மேலை உலகினர் வியக்கும் கலை, அறிவுவளம் கொண்டவர்கள் எகிப்தியர். இறந்த மன்னர்களின் உடலை அழியாது பாதுகாக்கும் மாயவகையை அவர்கள் அறிந்திருந் தார்கள். அவ்வுடல்கள் இன்னும் அழியாத் தசையுருவுடன் தூங்கின்றன. அவற்றின் உடல்மீது ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்திலிருந்து பெற்ற தென்னாட்டு ‘மல்மல்’ ஆடையும் தென்னாட்டு நறுமணப் பொருள்களும் இன்னும் அழியா திருக்கின்றன.
அவ்வுடல்கள்மீது ஐந்நூறு, அறுநூறு அடிக்கு மேற்பட்ட உயரமுள்ள ‘கலைமலைகள்’ ‘எகிப்தியக்’ ‘கூர்ங்கோபுரங்கள்’ ’ஸ்ஃவிங்க் ’ஸுடன் போட்டியிட முயல்பவைபோல, காலத்தை நோக்கி நகையாடிய வண்ணம் நிற்கின்றன. அவற்றின் உட்கட்டடப் பகுதியிலுள்ள தேக்குமர வேலைப்பாடுகள் தென்னகத்தின் தொடர்புக்கு அழியாச் சின்னங்களாயமைகின்றன.
எகிப்து, கிரீஸ், மான்க்மேர்!
எகிப்தியர் இயல்நூல் அறிவுக்கு அவர்கள் உலகில் விட்டுச் சென்ற ‘மாய எகிப்தியக் கலங்கள்’ சான்று பகர்கின்றன. கலம் நிரம்பும்வரை அது நீரேற்கும், நிரம்பியவுடன் நீர் கீழே விழுந்து விடும்! கலத்தை உலகுக்கு அவர்கள் அளித்தனர். தத்துவத்தைத் தம்முடன் கொண்டு சென்று மாண்டனர். நல்ல காலமாக நம் அறிவியலறிஞர் இப்போது தத்துவத்தை உணர்ந்துகொண்டு விட்டனர். இயல் நூலில் அது வளைகுழாய்த் தத்துவம் (Siphon principle) என விளக்கப்படுகிறது.
தென்னகத்திலிருந்து முத்தும் பொன்னும் அவர்கள் இறக்கு மதி செய்தனர்.
இத்தகைய எகிப்து மாண்டது. மொழி மறைந்தது. புகழ் மட்டும் நிலவுகிறது! பண்பு மறைந்தது. ஆனால் மாள்விலும் அது மண்ணுலகப் பண்பை வளர்த்துச் சென்று மாண்டது!
கிரீஸ் வீழ்ச்சியுற்றது. ஏன் வீழ்ச்சியுற்றது?
கலை, இலக்கியம், அறிவு, இன்ப வாழ்க்கை வாய்ப்புக்கள் இல்லாமலா? இத்தனையிலும் அவர்கள் உலகின் உச்சியையே எட்டிப் பிடித்திருந்தனர். சிலபல துறைகளில் இன்றைய மேலை உலகமட்டுமல்ல, வருங்கால உலகம்கூட அவர்களை எட்டிப் பிடிப்பது அருமை!
‘மான்க்மேர்’கள் ’சாம்’கள் இந்துசீனாவிலுள்ள கம்போடியா நாடு! தமிழர்களுடன் வாழ்க்கை, மொழி, கலை, சமயம் ஆகிய எல்லாவற்றிலும் தொடர்பு கொண்டவர்கள்! தமிழகப் பெருமாள் சிலைகளை மிஞ்சி, உலகத்தின் மிகப்பெரிய ’பெருமாள் சிலை’ ஆக்கிய மன்னர்கள்! எங்கே போயினர் அவர்கள்? ஏன் போயினர்?
ஒரு வாசகத்தில் சொல்வதானால், அவர்கள் வள்ளுவர் அன்பறம், புத்தர்பிரான் அருள்நெறி, இயேசு பெருமான் அருளிரக்கம் பேணவில்லை. இவ்வெல்லா நாடுகளிலும் ‘சாதி வருணநெறி’ சதிராடிற்று. உரிமைக் குடியினமும் அடிமையினமும், ‘நிறைகுடியாட்சி’ பேணிய கிரேக்கரிடையேகூட நிலவின. தன்னலப் போட்டி, ஆதிக்க அடிமைத்தனங்கள் இவ் வெல்லா இடங்களிலும் இடம் பெற்றிருந்தன.
மாண்ட பாம்பி நகரத்தின் அழிவுச் சின்னங்களே அந்த நகரில் ஒய்யார வாழ்வு வாழ்ந்த உயர்குடியினர், அதற்கு உதவிய அடிமைகள் என்ற வேறுபாட்டு நிலையை நமக்கு தெள்ளத் தெளியக் காட்டுகின்றன.
தகைசான்ற இந்த இனங்கள் அழிந்தன - ஸ்ஃவிங்க்ஸ் நின்று நிலவுவதுபோலத் தமிழகம் நீடித்து நின்று நிலவுகின்றது!
அந்த இனங்களில் படிந்த மாசு தமிழகத்தில் படியவில்லை என்று கூறமுடியாது. ஆனால் வள்ளுவர் போன்ற பெரியார்கள் வகுத்த தமிழ்ப் பண்பு அக்கேடுகளைத் தவிர்க்க, குறைக்க, உயர் பண்பாட்டுக் குறிக்கோள்களை ஊக்க வழிவகுத்தது. தமிழன் தமிழனாயிருந்த அளவும் அவற்றைப் பேணினான். தமிழனா யிருக்கும் அளவில் இன்றும் உள்ளூரப் பேணுகிறான். ஆனால் பண்புடைய தமிழினத்தில் பற்றுநீத்து, அயலினங்களில் சொக்கி அழிவுறும் தமிழர் பெருகி வருகின்றனர். அயலினங்களில் பண்புடையன, பண்பற்றன அறியாமல் ஒப்புரவாடியதால், இப்பண்புகள் தட்டுக்கெடுகின்றன. எகிப்தின் வாழ்வில் ஏற்பட்ட மாசு, கிரீசின் புகழில் ஏற்பட்ட கறை இரண்டாயிரம் ஆண்டு களாகத் தமிழன் மீதும் படியத் தொடங்கியுள்ளன; படிந்து வருகின்றன.
தமிழினப்பற்று, தமிழர் மறுமலர்ச்சி ஆகியவை இம்மாசை விலக்கப் பாடுபட வேண்டும் இனப்பற்று - தன் இனப்பகை மையன்று, தன் இனப்பற்று - அவ்வழியில் செயலாற்ற வேண்டும்.
நாட்டுரிமையுணர்வும் நாடுகளும்
இன்று உலகில் புரண்டோடும் நாட்டுரிமை உணர்ச்சி, நாட்டின விடுதலை உணர்ச்சி வரலாற்றில் புத்தம் புதிது. பதினெட்டாம் நூற்றாண்டில் (1765-ல்) எழுந்த அமெரிக்க விடுதலைப் புரட்சி அதைத் தூண்டிற்று. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஃபிரஞ்சுப் புரட்சி அதை ஊக்கிற்று. இத்தாலிய விடுதலை அதற்குத் தூபமிட்டது. இருபதாம் நூற்றாண்டில் அது ஆசியாவெங்கும் கொழுந்துவிட்டெரியத் தொடங்கியுள்ளது.
நாட்டுரிமை உயர்ச்சியைவிட நாட்டுணர்ச்சி ஒரு சிறிதே முற்பட்டது. அதற்கு மொழியே உலகெங்கும் அடிப்படைத் தூண்டுதலாய் இருந்து வந்திருக்கிறது. ஆனால், இனம், சமயம், பழக்கவழக்கப் பண்பாடுகள், கூட்டுநலங்கள், அரசியல் வாய்ப்பு ஆகியவை காரணமாகவும் நாட்டுணர்ச்சியும் நாடும் அமைவ துண்டு.
மொழியடிப்படையில் அமைந்த நாட்டுக்கு ஃபிரான்சையே சிறந்த எடுத்துக்காட்டாகக் கூறுவர். அது ஒரே அரசின் கீழ் மொழியுணர்ச்சியுடைய ஒரு நாடானது 13ஆம் நூற்றாண்டிலேயே யாகும். கிட்டத்தட்ட அதே சமயத்தில் அல்லது அதை அடுத்து 15,16 ஆம் நூற்றாண்டுகளிலேயே இங்கிலாந்து மொழியுரிமை யுடைய நாடாயிற்று. செருமனியும் மற்ற ஐரோப்பிய நாடுகளும் நாட்டுணர்வெல்லை வகுத்து நாடானது 18ஆம் நூற்றாண்டின் பின்னரே.
உலகின் இயற்கைப்படம் - ஆறு, மலை, பள்ளத்தாக்கு களைக் காட்டும் படந்தான் நிலையானது. நாட்டுப் பிரிவினை காட்டும் அரசியல் படம் நூற்றாண்டுக்கு நூற்றாண்டு, சில சமயம் ஆண்டுக்கு ஆண்டு மாறுவது. உலகின் இன்றைய பெரும்பாலான நாடுகள் எவ்வளவு புத்தம் புதியவை என்பதை இம்மாறுதலே காட்டும்.
நம் கண்முன் நாடுகள் தோன்றுகின்றன; உருவாகின்றன; எல்லை மாறுகின்றன; உருமாறுகின்றன.
ஆஃப்கனிஸ்தான் பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே உரு வாயிற்று. உருவாக்கப்பட்டது என்றுகூடக் கூறலாம். ஏனெனில் பாரசீக மொழியன்றி, அதற்கென ஒரு மொழி கிடையாது. பாகிஸ்தான் இருபதாம் நூற்றாண்டிலேயே, நம் கண் முன்னாலேயே (1947-ல்) பிறந்தது. இந்தியாவைப் போலவே, அதுவும் பன்மொழி, பல இனப் பரப்பு.
இனப்பெயர், நாட்டுப்பெயர், மொழிப்பெயர்
பல நாடுகள் நிலப்பிரி வடிப்படையாகப் பெயர் பெற்றன. இன்னும் மிகப் பல நாடுகள் இன அடிப்படையில் பெயர் பெற்றுள்ளன. இன அடிப்படையாகப் பெயர் பெற்றவையே மிகப் பல. மொழிகள் நிலப் பெயராலோ இனப் பெயராலோ பெயர் பெற்றன. இனம், நாடு, மொழி என்ற வரிசையிலேயே பெரும்பாலும் பெயர்கள் தோன்றின. மூன்றும் ஒரே அடிப்படையில் அமையப்பெற்ற இனங்களே முழுநிறை நாட்டினங்கள்.
இங்கிலாந்து என்ற பெயர் ஆங்கிள், சாக்ஸன், ஜூட் என்ற மூன்று செருமானிய இனங்கள் குடியேறிய இடத்தின் பெயர். பெரும்பான்மை இனப் பெயரே நாட்டுப் பெயராகி, அதுவே ஆங்கிலம் என்ற மொழிப் பெயராய் அமைந்தது. செருமனி, ஃபிரான்சு, இத்தாலி முதலிய நாட்டின் மொழிகளின் பெயர் வரலாறுகளும் இம்முறைப்பட்டவையே ஆகும்.
இனமும் நாடும் மொழியும் அயலினங்களின் வழக்கிலிருந்து பெயர் பெறுதலும் உண்டு. இந்து என்பது சிந்துவெளியிலும் அதற்கிப்பாலும் உள்ள மக்களினப் பெயராக 2500 ஆண்டுகளுக்கு முன் பாரசீகராலும் கிரேக்கராலும் வழங்கப்பட்டது. அதுவே பின் நாட்டுப் பெயராகவும் நாட்டின் பெரும்பான்மைச் சமயப் பெயராகவும், இந்தி என்ற எல்லைப்புற மொழிப் பெயராகவும் வழங்கிற்று. மொழிப்பெயர் 16 ஆம் நூற்றாண்டிலேயே உருவாயிற்று.
தமிழ் என்ற மொழிப்பெயர், தமிழர் என்ற இனப்பெயர், தமிழகம் என்ற நாட்டுப்பெயர் ஆகிய மூன்றும் தமிழருக்கு ஒரே அடிப்படையிலே அமைந்துள்ளன. இவற்றுள் எது முந்தியது என்று கூறுவது கூட அருமை - மூன்றும் ஒருங்கே அவ்வளவு பழமையான காலத்திலிருந்தே வழங்கி வருகின்றன.
உலகின் முழுமுதல் தேசிய இனம்
தொல்காப்பியத்திலே தமிழ் என்ற சொல் மொழிப் பெயராகவே வழங்குகிறது. ஆனால் தமிழகம் என்ற நாட்டுப் பெயரும் எல்லையும், தமிழர் என்ற இனப்பெயரும் இடம் பெறுகின்றன. தமிழ வீரர், தமிழ வேந்தர் போன்ற தொடர்கள் அன்றே வழங்கின. ஆயினும் மொழிப்பெயரே முந்தியது என்னலாம். அது முதலில் ‘பேச்சு’ என்ற பொதுப் பொருளிலும் ‘இனிமையானது’ என்ற பொதுப் பொருளிலும் வழங்கியிருக்கக் கூடும். பின் தம் பேச்சு, தம் இனிமை என்ற பொருள்களில் (தம்+இழ் என) வழங்கி, தமிழர் பேசிய திருந்திய பேச்சையும், இனிமையான பேச்சையும் குறித்திருக்கக்கூடும்.
சங்க இலக்கியத்தில் ‘தமிழ்’ என்ற மொழிப் பெயரை விட மிகுதியாக இனப்பெயரே முனைப்பாக வழங்குகிறது.
மொழியடிப்படையாக மக்களினமும், மக்களின் அடிப்படையாக நாடும் அமையும் தேசியமே முழுத் தேசியமாகும். தமிழகம் இத்தகைய முழுத் தேசியம். அத்துடன் அதுவே உலகத்தின் முதல் தேசியமுமாகும். மேலே குறிப்பிட்ட தமிழக அகச்சான்றுகளேயன்றி, வரலாற்றின் புறச்சான்றுகளும் இதற்கு உண்டு. கி.மு. 6ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரை கிரேக்கரும் உரோமரும் தமிழகத்துடன் வாணிக, பண்பாட்டு, அரசியல் தொடர்புகள் கொண்டிருந்தனர். கிரேக்க கடல் பயண விவரநூலான பெரிப்ளஸின் சான்றும், நிலநூலாசிரியரான டாலமியின் சான்றும் தமிழகத்தை மட்டுமன்றி அதன் அந்நாளைய எல்லையையுங்கூடக் குறிப்பிடுகின்றன.
கிரேக்கர் தமிழகத்தைத் தம் மொழியில் ‘தமிரிகா’ என்று குறித்தனர். அத்துடன் அது மேல் கடற்கரையில் வெள்ளைத் தீவு அல்லது மங்களூர் முதல் கீழ் கடற்கரையில் பழவேற்காட்டு ஏரிவரை உள்ள கடற்கரையால் சூழப்பட்ட நிலப்பகுதி என்றும் தெரிவித்துள்ளனர். இவ்வெல்லை இன்றைய தமிழகத்தைவிட விரிவானது. மலையாள நாட்டை முழுதும் அது உள்ளடக்கியது. கன்னட, தெலுங்குப் பகுதிகளின் கூறுகளும் அதில் சேர்ந்திருக் கின்றன. சங்க இலக்கியங்களில் கண்ட முற்காலத் தமிழக எல்லை இதுவே.
முழுநிறை தேசியப் பண்பு
பல இனங்களில் தாய்மொழி இலக்கிய மொழியாகவோ, சமய மொழியாகவோ, அரசியல் மொழியாகவோ, கலைஇயல் மொழியாகவோ அமைவதில்லை. மேலை நாடுகளில் இலத்தீனும், கீழை நாடுகளில் சமற்கிருதமும் மிகப் பல மொழியினங்களுக்கு இலக்கிய இயல், சமய மொழிகளாய் அணிமை வரை இருந்தன. இன்னும் பல இனங்களில் இருக்கின்றன. தாய்மொழிகள் படிப்படியாகவே அந் நிலை பெறத் தொடங்கியுள்ளன. இன்னும் முழுதும் தமிழ் நீங்கலாக மற்ற எந்தத் தாய்மொழியும் உலகில் முழுநிலை வாழ்க்கை மொழியாக அமைந்துவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தமிழினத்துக்குத் தொன்று தொட்டுத் தமிழே தமிழர் வாழ்வின் எல்லாத் துறைகளுக்கும் உரிய ’வாழ்க்கை மொழி’யாய் இருந்து வந்துள்ளது. இது இலக்கியம் அல்லது இயல் கலை மட்டுமன்றி, இசைக்கலையும் நாடகக்கலையும் வளர்த்தது. தமிழரசர், பேரரசர் அதை வைத்தே தமிழகமும் உலகமும் ஆண்டனர். ஆட்சிமொழி யாகவும் வாணிக மொழியாகவும், வாணிகக் கணக்கு மொழியாகவும் அது வளர்ந்தது. சமயத்துறையில் தமிழர் பொது மறையாகிய திருக்குறளும், சைவ வைணவர் திருமறைகளும் (தேவாரம், திருவாசகம், ஞான நூல்கள், திருவாய்மொழி முதலியன) தமிழிலேயே உள்ளன. புத்தர், சமணர், இகலாமியர், கத்தோலிக்கக் கிறித்தவர், புரோட்டஸ்டாண்டுக், கிறித்தவர் ஆகிய ஒவ்வொரு சமயத்தவருக்கும் தமிழில் தனித்தனி இலக்கியம் உண்டு.
வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும், உலக சமயங்கள் எல்லாவற்றிலும் இடம் பெற்ற உலகப் பண்பு நிறைந்த மொழி தமிழன்றி உலகில் வேறு எதுவும் இன்றளவும் இல்லை.
கலை இயல் துறைகளில் தமிழகம் உலகத்துக்கு வழிகாட்டியதுடன் தனித்தன்மையும் பேணிவந்துள்ளது. தமிழ் இசை, தமிழ் ஓவியம், தமிழ்ச் சிற்பம் ஆகியவை உலகுக்கு தனிப் பண்புகள் அளித்துள்ளன. மருத்துவத் துறையில் சித்தர் நெறியும், வானூற்கணிப்பில் திருக்கு அல்லது காட்சி முறை எனப்படும் ஞாயிற்றுக்கணிப்பு முறையும் தமிழருக்கே தனிச் சிறப்பான இயல்துறைகள் ஆகும்.
சிற்றன்னவாசல் ஓவியங்கள், மாமல்லபுரம் கற்சிலைகள், குகைக் கோயில்கள், மதுரை தஞ்சைக் கோபுரங்கள், திருமலை நாயக்கர் மகால் ஆகியவை தமிழ்க்கலையின் தனி மொழி பேசுகின்றன.
நாடு கடந்த மாநிலப்பண்பு, உலகப்பண்பு
உலகத்தில் நாடுகள் அமைவதற்கு நெடுநாள் முன்னரே தமிழர்நாடு அமைந்திருந்தனர். அதைத் தேசிய இனமாக வளர்த் திருந்தனர். ஆனால் அவர்கள் அத்துடன் அமையவில்லை. நாடு கடந்த உலகநோக்குக் கொண்டிருந்தனர். ஏடுகள் தொடங்கு வதற்குரிய மங்கலச் சொற்களாக அவர்கள் கொண்டவற்றுள் மிக முதன்மையானது ‘உலகம்’ என்பதே. பத்துப் பாட்டில் ஒன்றாகிய திருமுருகாற்றுப்படையின் கால முதல் இன்றுவரை அச் சொல்லுடன் தொடங்கிய ஏடுகள் மிகப்பல. சொல்வழக்குக் கடந்து கருத்திலும் ஓர் உலகுக்குரிய பண்புகளை அவர்கள் வளர்த்தனர். ‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ என்ற பழந்தமிழ்த் தொடர் இவ்வுயரிய குறிக்கோளை சுட்டிக்காட்டு கிறது. தொல்காப்பியம் தமிழகத்தையே ‘தமிழ் கூறும் நல் உலகம்’ என்று குறிப்பிட்டது. உலகத்தினுள் உலகமாக, உலகை வளர்த்து ஊக்குகின்ற உலகின் ஒரு கரு முதலாகவே தமிழர் தமிழகத்தைக் கனாக்கண்டனர். அக்கனவு வீண்போகவில்லை என்பதை வரலாறு காட்டுகிறது.
இந்தியாவில் பல இனங்கள், மொழிகள், பண்பாடுகள் நிலவுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை அணிமைக் காலத்திலே உருவானவை. அணிமைக் காலத்திலேயே எழுத்தும் மொழியுருவும் மொழி எல்லையும் இலக்கிய இலக்கணமும் வகுத்துக் கொண்டவை. சில இப்போது அவற்றை வகுத்து உருவாக்கத் தொடங்கியுள்ளன. ஆயினும் உருவாகிவிட்ட இனங்களையும், உருவாகும் இனங்களையும் ஒரே தேசியங் கடந்த மாநிலப் பண்பாட்டுச் சட்டத்தில் அமைக்கும் மூலத் தேசிய இனமாகத் தமிழகம் விளங்கி வந்துள்ளது.
இந்திய மாநிலத்தின் வரலாற்றடிப்படையான நிலப்படமே இதைச் சுட்டிக்காட்ட வல்லது. தமிழகத்திலிருந்து மிகு தொலைவில் வடமேற்குக் கோடியில் மேலைப் பாகிஸ்தானத்தி லுள்ள மொழிகளே இன்னும் உருவாகாத, அல்லது உருவாகத் தொடங்கியுள்ள மொழி இனங்கள். இங்கிருந்து கிழக்கும் தெற்கும் செல்லுந்தோறும், தேசியப் பண்பு வளர்ந்து வருவது காணலாம்.
இனக்கலப்புச் சற்றுக் குறைந்துவரும் நடுப்பகுதியில் 18 ஆம் நூற்றாண்டிலிருந்து உருவாகிவரும் மொழியே இந்தி. சிந்து கங்கை சமவெளியின் தென்மேற்கிலும் தென்கிழக்கிலும் இதைக் காட்டிலும் சற்றுப் பழமையான தேசிய இனங்கள் காணப்படு கின்றன. இவை மேற்கே தென்னக எல்லையை அடுத்துள்ள குஜராத்தி, மராத்தி ஆகியவையும், கிழக்கே தென்னகத்தை ஒட்டிக் கிடக்கிற வங்காளியும் ஆகும். இவை 16ஆம் நூற்றாண்டிலிருந்து தேசிய உருப்பெற்று, இலக்கியமும் மொழி எல்லையும் உடையவையாய் இலங்குகின்றன.
தென்னகத்திலுள்ள தமிழின மொழிகள் விந்திய மலைக்கு அப்பாலுள்ள மொழிகளைவிடத் தெளிவான மொழி உருவும் இலக்கிய அமைப்பும் உடையவை. அவற்றின் தேசிய வாழ்வு பல நூற்றாண்டுகள், கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை உடையது. இன்றிருக்கும் இலக்கிய அளவிலேயே தெலுங்கு மலையாளம் ஆகியவை 12ஆம் நூற்றாண்டிலிருந்தும், கன்னடம் 9 ஆம் நூற்றாண்டிலிருந்தும் தேசிய வளம் உடையனவாக விளங்குகின்றன. தமிழ்ச்சங்க இலக்கியம் இன்னும் ஆயிர ஆண்டுகட்கு மேற்பட்ட பழமை உடையது. தொல்காப்பியர் காலம் வரையறுக்கப்படவில்லையானாலும், அது இன்னும் தொன்மை சான்றது என்பதில் ஐயமில்லை. அது குறைந்தது 2500 ஆண்டுகளுக்கு, அதாவது புத்தர் காலத்துக்கு முற்பட்டது என்று கூறலாம்.
இந்திய மாநிலத்தின் நாகரிகம் குறைந்த அளவில் 3000 ஆண்டு பழமையுடையது. புத்தர், அசோகன், கனிஷ்கன், ஹர்ஷன், அக்பர், அவுரங்கசீப் ஆகிய பெரியோர், பேரரசர் புகழ் கொண்டது. இதில் இந்தியா பெருமை கொள்கிறது. கொள்வது தகுதி. ஆனால் மொழித் துறையில் இந்தப் பெருமையில் பெருமைகொள்ளத்தக்க இன்றைய இந்திய மாநிலப் பகுதி தமிழகம் ஒன்றே என்னலாம். ஏனெனில் வேறு எந்த இன்றைய இந்திய மொழியிலும், சமற்கிருத மொழியில்கூட, புத்தர், அசோகன் கால இலக்கியம் கிடையாது. வேறு எந்த மொழியிலும் அக்கால முதல் இக்காலம் வரை இந்தியப் பண்பாட்டின் வளர்ச்சியை வரிசைப்படுத்திக் காணமுடியாது. தமிழ் இலக்கியம் நூற்றாண்டு கடந்து நூற்றாண்டாக, இந்திய நாகரிகத்தின் ஒரு காலக்கண்ணாடியாக, திரைப்படமாக, நமக்குக் காட்சி யளிக்கிறது. மாநிலத்தின் பண்பையும் இயக்கங்களையும் வரலாற்று முறையில் காட்டத்தக்க இந்தியாவின் ஒரே தேசிய இலக்கியமாக அது அமைந்துள்ளது.
இந்திய தேசியத்தின் உயிர்மூலம்
தமிழகத் தேசியம் நாடு கடந்து உலகமாக, உலகத்தின் ஒரு சிறு பகுதியான தேசம் அல்லது துணைக்கண்ட அமைப்பாக வளர்ந்து கொண்டு வருகிறது. வரலாறு இதைக் காட்டுகிறது. இந்திய வரலாறு எழுதுபவர்களோ, அதன் அரசியல் அமைப்பவர்களோ இந்த வரலாற்றின் படிப்பினையைக் கண்டால், அது இந்தியாவின் வருங்காலப் புகழை நம் கனவெல்லை தாண்டி வளர்க்க வல்லதாயமையும். ஆனால் தமிழகத் தேசியத்தையே இருட்டடிப்பதன் மூலம், வரலாற்றின் குரலையே கேளாக் குரலாக்குவதன் மூலம், வரலாற்றாசிரியரும் அரசியலறிஞரும் தெரிந்தோ, தெரியாமலோ மாநிலத்தின் வருங்காலப் புகழையே இருட்டடிப்புச் செய்கிறார்கள்.
வரலாற்றின் குரலை இருட்டடிக்கப் பெரிதும் உதவியவர்கள் ஆங்கில ஆட்சியாளரே என்னலாம்.
இந்தியாவுக்கு வந்த வெள்ளையர் அனைவரும் தென்னகத்தி லேயே தங்கள் தலைமையிடத்தை நிறுவினர். ஆங்கிலேயர் நீங்கலாக, எல்லா வெள்ளையரின் தலைமை இடங்களும் தென்னகத்திலேயே இறுதிவரை இருந்தன. முதன் முதல் வந்த வெள்ளையர் போர்ச் சுகீசியர். அவர்கள் தலைமையிடம் கன்னட கொண்காண மொழி எல்லைகளில் உள்ள கோவா ஃபிரஞ்சுக்காரர் தலைமையிடம் தென்னார்க்காடு மாவட்டத்தை அடுத்துள்ள புதுச்சேரி ஆங்கிலேயரும் தொடக்கத்தில் சென்னையிலேயே தங்கள் மூலதளத்தை அமைத்திருந்தனர். ஆனால் பாஞ்சாலங்குறிச்சி வீரன் கட்டபொம்மன் உருவிலும், ஹைதர், திப்பு உருவிலும் தென்னகம் காட்டிய எதிர்ப்பே. அவர்களை வடதிசை நாடச் செய்தது. 18ஆம் நூற்றாண்டில் தலைநகரம் வங்கத்தின் இதயமான கல்கத்தா ஆயிற்று. 19ஆம் நூற்றாண்டில் இதுவும் தேசிய இயக்கங்களின் உயிர்நிலைப் பகுதியாய்விடவே, 1857-ல் நடைபெற்ற விடுதலைப் போர் அவர்களைப் பின்னும் வடக்கே, மேற்கே துரத்திற்று. இந்திய தேசியத்தின் பிடியிலிருந்து தப்பி, அதன் குரல் வளையைப் பிடிக்கத்தக்க இடம், இந்தியாவின் அயல் இனப் பண்பாடுகளின் மூலதனமான டில்லியே என்று அவர்கள் கண்டனர்.
இந்தியாவின் தேசியத் தலைமை அதன் தேசியத்தின் மூல முதலான தென் திசையிலிருப்பதே சால்பு. வரலாறு தரும் இப்பாடம் இன்று கவனிக்கப்படவில்லை. தலைமை மாறியது மட்டுமல்ல, பண்பும் இன்று மாறியுள்ளது. அயல்மொழி ஆட்சி நீங்கியபின், தேசியத்தில் குறைபட்ட மொழியின் - இந்தியின் - ஆட்சியே கனாக் கொள்ளப்பட்டுள்ளது. இன வேறுபாடு கடந்த தமிழர் ஓர் உலகக் குறிக்கோளுக்கு மாறாக, சாதி வருண அடிப் படையான சமற்கிருதப் பண்பே தலைதூக்க இடம் ஏற்பட்டுள்ளது.
தமிழகம் எப்படி இந்தியாவை நாடுகடந்த ஒரு பண்பாட்டுப் பேரினம் ஆக்கிற்று என்ற விளக்கம் வரலாற்றிலுள்ளது. ஆனால் அதுவும், இன்று புலப்படா விளக்கம், திரையிடப்பட்ட விளக்க மாகியுள்ளது.
நாடுகடந்த பண்பாட்டியக்கங்கள்
இந்தியாவின் வரலாற்றையே இரு பேரியக்கங்களின் வரலாறாக உருவகப்படுத்தலாம். ஒன்று பண்டைப் பகுத்தறி வியக்கம். இது ஒன்றிரண்டு ஆண்டுகள் நிலவும் நம் இன்றைய இயக்கங்களைப் போன்றதன்று. நூற்றாண்டுக்கணக்கில் நிகழும் ஃபிரஞ்சுப் புரட்சி போன்ற இயக்கங்களைக் கூட மிஞ்சியது. ஏனெனில், அது ஆயிர ஆண்டுகளுக்குமேல் இந்தியாவிலும் இந்தியா கடந்தும் பரவிய ஒரு மாபெரிய உலக இயக்கம் ஆகும். அது உபநிடதங்களையும், புத்தர் சமணர் நெறிகளையும் இவை சார்ந்த அறிவாராய்ச்சி, கலை இயக்கங்களையும் நமக்குத் தந்துள்ளது. இப்பேரியக்கத்தின் கண்ணாடியாகத் தமிழில் சங்க இலக்கியம் மிளிர்கின்றது.
மூன்றாம் நூற்றாண்டிலிருந்து அறிவியக்கத்தின் இடத்தை அதனுடன் பண்பில் இணைந்த அன்பியக்கம் எடுத்துக் கொண்டது. இதுவும் ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்குமேல் மாநிலத்தில் பரவிய இயக்கம் ஆகும். கி.பி. 3 முதல் 12 ஆம் நூற்றாண்டு வரை அது தமிழகத்தில் சைவ நாயன்மார்களை, வைணவ ஆழ்வார்களைத் தந்தது. தமிழிலக்கியத்தை வளர்த்த பின் அது தென்னகத்திலும் சிந்து கங்கை வெளியிலும் பரந்தது. 12 முதல் 16ஆம் நூற்றாண்டு வரை தென்னகத்தின் எல்லா மொழி இலக்கியங்களையும் வளர்த்தபின், அது வடதிசை சென்று அங்கும் 16 முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை தாய்மொழிகளுக்குப் புத்துயிர் தந்து, அவற்றை இலக்கிய மொழிகளாக்கின.
தமிழ் நாயன்மார், ஆழ்வார்கள் நீங்கலாக, வைணவ இயக்கம் தந்த கவிஞர்களில் முதல் கவிஞர் தமிழ் இராமாயணம் பாடிய கம்பரே. கடைசிக் கவிஞர் இந்தி இராமாயணம் பாடிய துளசிதாசர் ஆவார்.
வைணவ சமயமூலமாக இந்தியா முழுவதும் தமிழகம் பரப்பிய பண்பாடே இன்றைய தேசியப் பண்பாடு.
இந்தியாவை ஒன்றுபடுத்த உதவிய இன்னொரு பண்பு சோழப் பேரரசர் ஆட்சியாகும். இந்தியாவெங்கும் நேரடியாட்சி முறை வகுத்து ஆண்ட ஒரே பேரரசு அதுவே. இப்பேரரசின் எல்லையே, பாகிஸ்தான் நீங்கிய பின்னுள்ள இன்றைய இந்தியக் கூட்டுறவின் எல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அது வெள்ளையர் அமைத்த எல்லையன்று, சோழர் ஆட்சி வகுத்த எல்லையே என்பதை வரலாற்று மாணவர் கவனித்தல் தகும்.
இன்றைய இந்திய மாநில ஆட்சி முறையின் அடிப்படை சோழர் ஆட்சிமுறையே என்பதும் வரலாறு அடங்கிய குரலில் நமக்கு எடுத்துக் கூறும் கூற்று ஆகும்!
சோழப் பேரரசுக்கு ஆயிர ஆண்டுகளுக்கு முன்னர் நூற்றுவர் கன்னர் என்ற ஆந்திரப் பேரரசருடன் சேரன் செங்குட்டுவன் தோழமைக் கூட்டாட்சிப் பரப்பாகவும், அதற்கும் சில பல நூற்றாண்டுகட்கு முன்னதாக, சோழன் கரிகால்வளவன், நெடியோன் அல்லது மாகீர்த்தியாகிய நிலந்தரு திருவிற் பாண்டியன் ஆகிய பேரரசர் பேராட்சிப் பரப்பாகவும் இந்திய மாநிலம் ஒரே தமிழ்ப் பண்பாட்டடிப்படையுடைய பரப்பாக வளர்ச்சி பெற்றிருந்தது.
இன்றைய தமிழகத்தின் மொழி எல்லை திருவேங்கடம். ஆனால், மொழிகடந்த தேசிய இன எல்லை மொழியின் எல்லையாகிய தென்னகமே. மொழி, இனம் ஆகிய இரண்டும் கடந்த பண்பாட்டெல்லையே ‘இந்தியா’ என்ற பரப்பு.
மருத்துவனை அழிக்கும் நோயாளி
தமிழகத்தின் வரலாற்றுத் தொடர்பு இங்ஙனம் ’இந்தியா’வாக விரிவுபட்டுள்ளது. இன்றைய தமிழுலகம் தமிழர் வாழும் பிறநாட்டுப் பகுதிகள், தமிழரின் வரலாற்றுக்கு முற்பட்ட பண்டைத் தொடர்பின் சின்னங்கள் மேலை ஆசியாவுடன் அவர்கள் கொண்ட தொடர்பிலிருந்தே இன்றைய மேலை உலக நாகரிகம் மலர்ந்துள்ளது. தென்கிழக்காசியாவுடன் அவர்கள் கொண்ட தொடர்பே இன்றைய ஆசிய மறுமலர்ச்சியின் மூல முதல் என்னலாம்.
இவ்வாறு உலகத்தின் முதல் தேசிய இனம் வகுத்தவர் தமிழர். அவர்கள் இன்று ‘ஓர் உலகத்தில்’ ஒரு தேசியமாகக்கூட இடம் பெறவில்லை. இந்திய மாநிலத்தின் ஒளி விளக்காக, தென்னகத்தின் உயிராக அவர்கள் நிலவி வந்துள்ளனர். ஆனால் அவர்கள் ஒரு தேசியத்தின் சரிசமமான உறுப்பாகக்கூட, தன்னுரிமையாட்சியுடைய மாகாணமாகக்கூட இன்னும் இடம்பெறவில்லை.
இந்தியாவின் மொழிக் குழுக்கள் இரண்டு. சமற்கிருதச் சார்பான வடதிசைக் குழு ஒன்று. தமிழ்ச் சார்பான தென்திசைக் குழு மற்றொன்று. தென்திசைக் குழுவில் ஆந்திரம் குறைந்த அளவு தன் பெயர் கூறும் உரிமையேனும் பெற்ற ஒரு மாகாணமாக உருப்பெற்றுள்ளது. தமிழகமும் கன்னடமும் அதைக்கூடப் பெறவில்லை.
நாடுகடந்த தேசிய உரிமை இன்று வடதிசைக் குழுவுக்கே உரிமைப்பட்டுள்ளது. பெரும்பரப்பு, பெருந்தொகை ஆகிய வற்றின் பெயரால், இந்தியப் பண்பாட்டில் முழுதும் இழையாத அயற்பண்புக்கு மேலுரிமை ஏற்பட்டுள்ளது.
சமத்துவமின்றி அழிந்துபட்ட இனங்களுக்குச் சமத்துவக் குரல் கொடுத்து எச்சரித்தது தமிழினம். அறியாமையால் அழிந்து பட்ட அவ்வினங்களின் வரலாற்றை எடுத்துக்காட்டி அது மீண்டும் எச்சரித்து வருகிறது. பண்டைய இனங்கள் அழிந்தபின் புதுவாழ்வு வாழும் புது இனங்களுக்கு அறிவுரை கூறுகிறது. ஆனால், இந்திய தேசியத்தின் மீதமர்ந்துள்ள புதிய இனம் அறிவுரை ஏற்க மறுப்பதுடன் நிற்கவில்லை. அறிவுரை தருபவனையே அடக்கி மடக்க முனைகிறது. நோய்க்கு மருந்து தரவிருக்கும் மருத்துவனையே அழித்து, நோயைப் பாதுகாக்க அது விரைகிறது.
ஆண்ட தமிழகத்துக்கு ஆட்சியில் பங்குகூட மறுக்கும் இந்தத் தேசியத்தின் போக்கை மாற்ற வரலாற்றின் குரல் பயன்பட வேண்டும். புதிய வரலாறு காண மாணவர் உலகம் எழவேண்டும்.
தமிழகத்தில் நாம்!
மெய்ம்மை கண்டுணரும் ஆர்வம், ஒருச் சார்பற்ற நடுநிலை, காரணகாரியத் தொடர்பான விளக்கம் - இவையே ஆராய்ச்சி முறைக்குரிய இலக்கணங்கள். இவற்றுள் ஒன்று வழுவினாலும் முடிவு ஆராய்ச்சிக்கு ஒத்தது ஆகமாட்டாது. ஆனால் இவை மூன்றும் அமைந்திருந்தால்கூட ஆராய்ச்சி முன்னேறாது. இவை ஆராய்ச்சியின் இலக்கணங்கள். ஆராய்ச்சியாளன் இலக்கணங் களல்ல. ஆராய்ச்சியாளன் ஓர் இயந்திரப் பொறியல்ல, மனிதனே. அவன் மனிதத் தன்மையே ஆராய்ச்சியின் உள்ளுயிர்.
ஆராய்ச்சி இலக்கணம் கவிதை இலக்கணம் போன்றது.
கவிதை இலக்கணம் உணர்ந்தால் மட்டும் கவிதை இயற்றிவிட முடியாது. அதற்கு ஒருவன் கவிஞனாய் இருக்க வேண்டும், கலைஞனாயிருக்கவேண்டும். அதுபோலவே ஆராய்ச்சியாளனும் ஒரு கவிஞனாக, கலைஞனாக இருக்க வேண்டும்; கற்பனையாளனாக இருக்க வேண்டும். அவன் கற்பனையை அவன் இனப்பற்று இயக்கும். இனப்பற்றும் கற்பனையும் மெய்ம்மை கண்டுணரும் ஆர்வத்தைக் தூண்டியியக்கும், மெய்ம்மையில் ஊன்றி நிற்க உதவும்.
இனப்பற்று ஆராய்ச்சிக்குக் குந்தகமானது என்று பலர் எண்ணுவதுண்டு. இது தவறான இனப்பற்று, இனம் பற்றிய தவறான கருத்தினால் விளைவதாகும். இனம் வேற்றுமை சுட்டுவதாயிருக்கலாம். வேற்றுமையின் அடிப்படையில் உணரப் படுவதாயிருக்கலாம். ஆனால் அது நாடுவது வேற்றுமைல்ல, ஒற்றுமை. இனம் என்ற சொல்லே ஒன்றுபட்ட குழு என்னும் பொருளைச் சுட்டிக்காட்டுவதாகும். தனி மனிதரை இயற்கை யடிப்படையில், மரபு வரலாற்றடிப்படையில் ஒன்றுபடுத்தி, அது அவர்களை மனித இனம் என்ற பேரினம் நோக்கி இட்டுச் செல்வதாகும்.
தனி மனிதன், இனம், மனித இனம் என்ற போக்குடைய தாயிருக்கும் உணர்வே இன உணர்வு. இப்போக்கின் திசை மாறுபட்டால், இனம் அழியும். தனி மனிதன் அழிவும் தொலை விலிராது. இப்போக்கு எந்தப் படியிலாவது தடைபட்டால், இன வளர்ச்சி நின்றுவிடும். அழிவுக்கு வித்து விதைக்கப் பட்டுவிடும். இன வளர்ச்சியும், தனி மனிதன் வளர்ச்சியும் இடையறாத இவ் வளர்ச்சி விரிவின் பயனாக ஏற்படுவதேயாகும். ஊழை வெல்லும் உயிர்ப்போக்கு இதுவே. அறிவார்ந்த தன்னலம், தொலைநோக்கு ஆகியவை இப் போக்கில் விரையும். அறிவற்ற குறுகிய தன்னலம், குறுகிய நோக்கு இதற்கெதிரிடையாகச் செல்லும் அல்லது முன்னேறாமல், வளர்ச்சியற்று, விரிவுறாது தடுமாறும் ஒழுக்க நூலும் வரலாறும் ஒருங்கே தரும் நீதிகள் இவையே.
இனப்பற்றும் ஆராய்ச்சியும்
மனித இனக் கூற்றாராய்ச்சியாளர் இனம் என்ற சொல்லைப் பிறப்படிப்படையான, உடல் மரபு சார்ந்த இனத்தைக் குறிக்க வழங்குகின்றனர். இது தவறான வழக்கல்ல. ஆனால் இதைப் பலர் தவறாகப் புரிந்து கொள்கின்றனர். உயிரின அடிப்படையில் உயிர்கள் எல்லாமே ஒரே மூல உயிர்மரபில் வந்தவைதான். பறவை இனம், விலங்கினம் என்பவை உயிரினம் என்ற பேரினத்துக்கும் உட்பட்ட எல்லைகுறுகிய இனங்கள் மட்டுமே. மனித இனம் என்பது விலங்கினம் என்ற பேரினத்துக்கு உட்பட்ட எல்லை குறுகிய ஓர் இனம். பேரினத்தின் உறுப்புக்கள் ஒன்றுடன் ஒன்று கொண்ட தொடர்பை விட, குறுகிய இனத்தில் உறுப்புக்கள் ஒன்றுடன் ஒன்று கொண்ட தொடர்பு நெருக்கமானது, அணிமை உறவுடையது.
மனிதப் பொது இனத்தில் மனிதருடன் மனிதர் கொண்ட தொடர்புகள் பொதுத் தொடர்புகள். இதை வளர்ப்பதே குறுகிய மரபினங்களின் கடமை. இனங்கள் விரிவுற்று மனித இனம் நோக்கி வளரும் வகையும் இதுவே. மொழி, கலை, பண்பாடு ஆகியவை மரபினத்தில் உறுப்பினர் தொடர்பை, ஒத்துழைப்பை வளர்க்கின்றன. மரபினம் வளர்கிறது. தன் வளர்ச்சியால் அது மற்ற மரபினங்களைத் தூண்டுகிறது. மனிதப் பேரினத்தையும் தன்னுடன் கொண்டுசென்று வளர்க்கிறது.
ஆராய்ச்சியாளன், சிறப்பாக வரலாற்றாராய்ச்சியாளன் உயிரற்ற வெற்று மெய்ம்மைகளைக் காண அவாவுபவனல்லன். அப்படி அவாவினால், அவன் அவா ‘ஆர்வம்’ ஆகாது. ‘ஆர்வம்’ என்று நாம் அதனைக் கூறவும் மாட்டோம். இனவாழ்வின் வருங்கால வளர்ச்சிக்கும் உலகின் வருங்கால வளர்ச்சிக்கும் ஒருங்கே உதவும் மெய்ம்மைகளையே அவன் வரலாற்றிலும் இயற்கையிலும் தேடிப்பெற அவாவுகிறான்.
உலகை நோக்கிய இனப்பற்று, இனத்தை நோக்கிய தனி மனிதப்பற்று இவையே மெய்ம்மையின் அடிப்படை. இவையே நிலையான இன நலமும் உலக நலமும் பயப்பவை. நீடித்த நிலையான தனி மனிதன் நலங்களும் இவையே. இத்தகைய இனப்பற்று ஆராய்ச்சிக்கு உகந்தது மட்டுமன்று, ஆராய்ச்சிக்கு இன்றியமையாதது. ஆனால், இனப்பற்று என்ற பெயரால் இன ஆதிக்கமோ, தன்னாதிக்கமோ நாடுபவர் தவறான இனப்பற்றால் மெய்ம்மை, நடுநிலைமை பிறழ்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் தம்மினம் புகழ்வர். தம் இனநலம் நாடுவர். பிற இனம் இகழ்வர். பிற இன நலங்களின் கேடு சூழ்வர். இனவேற்றுமை அடிப் படையில் இனத்தில் இவர்கள் தம்மளவில் சிலகாலம் வெற்றியும் வளர்ச்சியுங்கூடப் பெறக் கூடும். ஆனால் இவர்கள் புகழ்ச்சியும் சரி, இகழ்ச்சியும் சரி இரண்டும் பயனற்றவை; ஒருங்கே கேடு பயப்பவை. ஏனெனில், மெய்ம்மையடிப்படையான இகழ்ச்சி அதற்குரிய தீய பண்புகளைக் கடிந்து எச்சரிக்கை தந்து அதே வகையில் நலம் விளைவிக்கும் தவறான இனப்பற்றுடையவர் புகழ்ச்சி, இகழ்ச்சி இரண்டுமே வேற்றுமைப்படுத்தும் பண்புகள், தீங்கிழைக்கும் பண்புகள் ஆகும். அவை புகழ்ச்சிக்கு ஆளான இனத்தையும், இகழ்ச்சிக்கு ஆளான இனத்தையும் ஒருங்கே அழிக்கும்.
தமிழகத்தின் சூழ்நிலை
மெய்ம்மை என்பது பழைய அறிவின் திருத்தம் அல்லது புதிய அறிவு ஆகும். அதைக் காண விழைபவருக்கு ஒரு கைம் முதல் வேண்டும். அதுவே கற்பனை அல்லது முற்கோள். இது ஒரு நம்பிக்கையாகவோ, தற்காலிக முடிவாகவோ, ஒரு பற்றார்வ மாகவோ இருக்கலாம். ஆராய்ச்சி மனப்பான்மை கொண்டவர் களுக்கு, மெய்ம்மை அதாவது நிலையான தன்மையுடைய பண்பு களை விழைபவர்களுக்கு இத் தொடக்கப்பற்று ஒரு தூண்டுதல் மட்டுமே. அதனால் கேடில்லை. ஊக்க நலன்கூட உண்டு. முற்கோள் மெய்யானது என்று உறுதிப்பட்டால், ஆராய்ச்சி யாளர் அதனடிப்படையாக மேலும் ஆராய்ச்சியில் முன்னேறுவர். முற்கோள் தவறென்று காணப்பட்டால், அதைக் கைவிட்டு, வேறொரு முற்கோளை நாடுவர். ஆனால் அந்த முற்கோள், பற்று அல்லது நம்பிக்கை காரணமாக ஆராய்ச்சியின் முடிவை ஏற்காமலோ, ஏற்று முன்னேறாமலோ அல்லது அதை மறைத்தோ செயலாற்றினால், அந்த ஆராய்ச்சி போலி ஆராய்ச்சி ஆகும். பயனில்லாத ஆராய்ச்சி மட்டுமல்ல, தீங்கான ஆராய்ச்சியுமாகும்.
உலகப் பழைமை ஆராய்ச்சியாளர்களில் எவரும் தென்னாட்டுப்பற்றையோ, தமிழினப்பற்றையோ, தமிழ்ப் பற்றையோ முற்கோளாகக் கொண்டவரல்லர். மேலை உலகப்பற்று, சமற்கிருதப்பற்று ஆகிய முற்கோள்களுடன் ஆராய்ச்சி தொடங்கி முன்னேறியவரே பலர். இந்நிலையிலும் உலகப்பழமையாராய்ச்சிகள், சமற்கிருதப் பழமையாராய்ச்சிகள் ஆகியவற்றின் போக்கே பொதுவாகத் தென்னாட்டு நாகரிகத்தின் பழம் பெருமையையும், உயர்வையும் பரப்பையும் சுட்டிக்காட்டு கின்றன. ஆனால் இவற்றைத் தெளிவுபடுத்தத்தக்க நாட்டுப் பழமையாராய்ச்சிகள், வரலாற்றாராய்ச்சிகள், மொழியாராய்ச்சி கள் தென்னகத்திலும் தமிழகத்திலும் மேற்கொள்ளப்படவில்லை. அவ்வகையில் மக்கள் ஆர்வத்தைத் திரட்ட, மக்களை ஊக்கத் தக்க தமிழக அரசியலும் தமிழகமும் தொலைச் செய்திகளாகவே உள்ளன. கல்வி நிலையங்கள், பத்திரிகை நிலையங்கள் இச்சூழ்நிலைகளை மாற்றியமைப் பவையாயில்லை. அவற்றுக் கேற்றவையாகவே இன்னும் நிலவு கின்றன.
தேச உலகச் சூழ்நிலைகளும் தமிழாராய்ச்சிக்கு இன்றைய நிலையில் முழுதும் உகந்தனவாயில்லை.
மேலை உலக, கீழை உலக ஆராய்ச்சிப் போக்குகள்
மேலை உலகப்பற்று மெய்ம்மை யடிப்படையில் நின்று, ஆராய்ச்சியின் போக்குகளுக்குப் பெரிதும் விட்டுக்கொடுத்தே வந்தது. மேலை உலக நாகரிகத்தில் மூலமுதலை அவர்கள் ஒருபுறம் பண்டைய உரோம கிரேக்க நாகரிகங்களில் கண்டனர். மறுபுறம் சமய அடிப்படையாக அதைப் பாலஸ்தீனத்தில், செமித்திய அல்லது நடுநிலைக் கடலக இனங்களில் ஒன்றில் கண்டார்கள். இரண்டும் வரலாற்றுக்கு முற்பட்ட பழமையில் எகிப்து, சால்டியா, பாரசீகம் எனக் கிழக்கு நோக்கியே சென்றன. மேலை உலக ஆராய்ச்சி, மேலை உலகப் பற்றார்வம் காரணமாக இப்போக்கைத் தடைப்படுத்தவில்லை. நேர்மாறாக, மேலை நாட்டினர் மெய்ம்மையையே நாடி அதன் அடிப்படையிலே தம் இன வாழ்வைக் கட்டமைக்க முனைந்தனர்.
மேலையுலக ஆராய்ச்சி கீழை உலகை அடைந்தவுடன் அது சமற்கிருத இனப்பற்றுடன் இணைந்தது. இரண்டும் ஒன்றாக இழைந்தன. ஆனால் இரண்டும் ஒன்றுபட்டு விரிவுறுவதற்கு மாறாகக் குறுக்கமுற்றன. இனப்பற்றின் போக்கு திசைமாறிற்று. ஏனெனில், சமற்கிருதப் பற்று ஆராய்ச்சியை ஊக்கி வளர்த்துடன் நிற்கவில்லை. அதன் முடிவுகளை மெய்ம்மை நோக்கி இட்டுச் செல்வதற்கு மாறாக, உலகநலன் நோக்கிச் செலுத்துவதற்கு எதிராக, இன ஆதிக்கம் என்னும் கோட்டைக்குள் கட்டுப்படுத்திச் சுழல வைத்தது. மேலை உலக ஆராய்ச்சியின் கட்டற்ற போக்கை அது தடுத்து நிறுத்த முடியாவிட்டாலும், அதனைத் தயக்க மடையச் செய்து, தளைப்படுத்தித் தேக்கி வைக்க முடிந்தது.
ஆதிக்கத்துக்கு உட்பட்டுத் தன்னிலையழிந்து ஒற்றுமை கெட்டுக் கிடக்கும் தமிழகத்தின் நலனை உலக நலனில் ஒரு பகுதியாகச் சேர்க்க ஆரிய இன எழுச்சியாளர் விரும்பவில்லை. தம் ஆதிக்கத்துக்கு உதவும் இப்பண்பை மேலை உலகமும் சில சமயம் தன் இயல்புக்கு மாறாக ஏற்றமைய நேர்ந்துள்ளது.
பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து சமற்கிருதப் பற்றும் ஆரிய இன எழுச்சியும் மேலை உலகில் தென்றலாக வீசிற்று. கீழ்த்திசையில், சிறப்பாக இந்திய மாநிலத்தில் அவ்வெழுச்சி புயலாகக் குமுறியடித்தது. ஆதிக்க இனங்களின் பொது நலனை ஊக்கியதனால், அது அரசியல், சமய, சமுதாய ஆட்சி வகுப்பினரின் ஆதரவு பெற்றுக்கரைபுரண்டு பெருக்கெடுத்தோடிற்று. காட் டாற்றின் வேகத்துடன் அது தன் எதிர்ப்பட்ட தடைக்கற்களையும் தட்டுத்தடங்கல்களையும், அணைகளையும், பாலங்களையும் முறித்தடித்து ஆர்ப்பரித்துச் சென்றது. இன்றளவும் மாநிலத்தின் ஆட்சி வகுப்புக்குரிய தேசிய இயக்கமாகி வீசியடித்துக் கொண்டுதான் இருக்கிறது. பொது மக்கள் வாழ்வு, அரசியல்கள், கல்வி நிலையங்கள், பத்திரிகை உலகம், சமயத்துறை, கோயில் குளங்கள் எங்கும் அதன் ஆதிக்கமே ஆட்சியாய் இயங்குகிறது. ஆராய்ச்சித் துறையில்கூட அதன் ஆற்றல் பெரிதாகியுள்ளது.
மேலை உலகமும் கிரேக்க மொழியிலோ, சமற்கிருத மொழியிலோ காட்டிய ஆர்வத்தைத் தமிழ் வகையிலோ, மற்றத் தென்னாட்டு மொழிக் குழு வகையிலோ காட்டவில்லை. ஐரோப்பிய மொழிகளுடன் அவற்றுக்கிருந்த இனத்தொடர்பு ஒரு புறம், ஐரோப்பிய இனத்துக்கு வட ஐரோப்பாவிலும், மேலை ஐரோப்பாவிலும் இல்லாத பழம் பெருமையை அவை தந்தன என்பது மற்றொரு புறம் அவர்களை ஊக்கிற்று. தவிர, சரியாகவோ, தவறாகவோ இந்தியாவின் உயிர்ப்பண்பை இந்தியத் தாய்மொழிகளில் காண முடியாது. காண எண்ணுவது வீண் என்ற முடிவு அவர்களிடையே பரவியிருந்தது. பரப்பட்டிருந்தது. வழக்கிறந்த சமற்கிருத மொழியில் மட்டும்தான் அதைக் காண முடியும் என்று அவர்கள் நம்பினர் - இந்த நம்பிக்கையில் அவர்கள் ஊக்கப்பட்டார்கள்.
சமற்கிருதமும் தாய்மொழியும்
‘தாய்மொழிகள் சமற்கிருதத்தின் நிழல்கள் மட்டுமே, தேசிய வாழ்வுக்கும் அவற்றிற்கும் தொடர்பு கிடையாது’ என்ற கருத்து சிந்து கங்கைவெளியிலுள்ள மொழிகளைப் பற்றிய மட்டில் ஓரளவிலேனும் உண்மையாகலாம். ஏனெனில் அவை புத்தம் புதிய மொழிகள். அவை அசோகன் அறியாதவை, அக்பர்கூடக் கேள்விப்படாதவை. ஆங்கில ஆட்சிக்காலப் புதுப்பயிர்கள் அவை. இந்தியாவின் அரசியல் சமய, சமுதாய வரலாற்றுப் பண்புகளை அவற்றில் ஒருசிறிதும் காண முடியாது. ஆனால் தென்னாட்டின் மொழிகள் பற்றியமட்டில் இது சிறிதும் சரியல்ல. கன்னட, தமிழ்மொழிகள் வகையில் இது மேலும் பன்மடங்கு தவறானது. சிறப்பாகத் தமிழ், சமற்கிருத்தைக் காட்டிலும் மிகுதியாகத் தென்னாட்டு வாழ்வையும், கீழையுலக வாழ்வையும், கீழையுலகப் பண்பாட்டையும் மிகத் தெளிவாகக் காட்டவல்லது ஆகும்.
தமிழைக் கீழை உலகின் தாய்மொழிகளுள் ஒன்றாகக் கணித்ததனால், அதற்கு இன்னொரு பெரும் பிழையயும் தேசத்தாலும் உலகாலும் இழைக்கப்பட்டது. கிரேக்க மொழியையும் சமற்கிருத மொழியையும் விட அது பழமை வாய்ந்தது. உயரிய பண்புகள் பல உடையது. அவற்றோடொப்ப, அவற்றைக் காட்டிலும் அது உயர் தனிச் செம்மொழி என்னும் தகுதியுடையது. ஆனால் சமற்கிருதத்துக்கு அப் பதவியளித்த உலகம், உலகப் பல்கலைக் கழகங்கள், தேசம், தேசப் பல்கலைக்கழகங்கள், தமிழ்வகையில் புறக்கணிப்பு மனப்பான்மை கொண்டுள்ளன, ‘உரிமை மாறாட்டம்’ செய்கின்றன. அதுமட்டுமன்று தென்னாட்டுப் பல்கலைக்கழகங்கள், தமிழகப் பல்கலைக்கழகங்கள், ‘தமிழ்ப் பல்கலைக்கழகம்’ என்று தமிழர் ஆர்வக்கனவு காரணமாக அழைக்கப்பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவைகூட இக் கருத்தின் நிழலைக் கனவாக கருக்கொள்ளவில்லை!
இந் நிலையில், ‘உயர் தனிச் செம்மொழிகள்’ என்றால், அவை மாண்டு மடிந்து வழக்கொழிந்த மொழிகளாகவே இருக்க வேண்டும் என்ற தப்பெண்ணம் உலக முழுவதும் - பொது மக்களிடையே மட்டுமல்ல, அறிவுலகின் உச்சியில்கூட - நிலவுவதில் வியப்பில்லை. ஆலையில்லா உலகில் சர்க்கரை இலுப்பைப் பூவுக்கு இணையில்லை என்ற கதையாயிற்று, தமிழன் நிலை!
வரலாற்றில் சமற்கிருத ஆதிக்கம்
இந்தியாவிலே சென்ற இரண்டாயிர ஆண்டுக்காலமாக, சமற்கிருதம் படிப்படியாக உயர்த்தப்படும், தாய்மொழிகள் படிப்படியாகத் தாழ்த்தப்பட்டும், நசுக்கப்பட்டுமே வந்துள்ளன. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் தமிழகத்துடன் ஒப்பாக உயர்வுற்றிருந்த சிந்து கங்கைவெளி இப்போது மொழி, கலை, இலக்கியத் துறைகளில் பிற்பட்டுவிட்டதற்குரிய முக்கிய காரணம் சமற்கிருதப் பற்றின் ஆட்சியேயாகும். தென் இந்திய மொழிகளையும் ஓரளவு இது பல்வேறு படிகளில் தாக்கி அழிக்க முனைந்துள்ளது என்பதில் ஐயமில்லை. குறிப்பாக வங்க மொழியிலும், தெலுங்கு கன்னட மொழிகளிலும் சமற்கிருத ஆதிக்கத்தால் அழிந்த இலக்கியப் பகுதிகள் இன்றைய ஆராய்ச்சியாளரால் மீட்டுத் தரப்பட்டு வருகின்றன.
சமற்கிருத்தில்கூடப் பல அறிவு நூல்கள், இலக்கிய நூல்கள் இந்த சமற்கிருத இனப்பற்றாளரின் அழிவுச் செயல்களுக்கு ஆளாகியுள்ளன. ஜப்பானிய மொழிபெயர்ப்புக்கள் மூலமே நமக்கு வந்து எட்டியுள்ள திங்நாகரின் தருக்க நூலையும், அராபிய மொழிபெயர்ப்புகள் மூலமே நமக்கு வந்து எட்டியுள்ளன வராசுமிகிரர் வானூலையும் இதற்குச் சான்றுகளாகக் கூறலாம்.
தாய்மொழிகளின் வாழ்வை இனித் தடுக்க முடியாது என்ற நிலை ஏற்பட்ட பின்னும், சமற்கிருதச் சொற்கலப்பால், மொழி பெயர்ப்புக்களால், பண்புகளால் தாய்மொழிகளின் தன்மதிப்பையும் பண்பையும் அடக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரே நூற்றாண்டில் ஒரே இயக்கமாக, மணிப்பிரவாளம் என்ற பெயருடன் தென்னாட்டு முழுவதும் இது பரப்பப்பட்டது. பதின் மூன்றாம் நூற்றாண்டில் எல்லாத் தாய்மொழிகளும் இம் முயற்சியை எதிர்த்துப் போராடின. அதன் சின்னங்களைத் தென்னக மொழிகள் எல்லாவற்றிலும் காணலாம். இப் போராட்டத்தில் சமற்கிருத ஆதிக்கம் அடைந்த அரைகுறை வெற்றிகளின் பயனாகவே தமிழ் நீங்கலான தென்னக மொழிகள் தமிழிலிருந்து துண்டிக்கப்பட்டு, பிறஇனச் சார்பாகச் சிறிது சாயவேண்டி நேர்ந்தது. தமிழ் இப் போராட்டத்தில் வென்றது, வென்று வருகிறது. ஆனால் போராட்டம் எவ்வளவு கடுமையானது என்பதைச் சுவாமிநாத தேசிகரின் இலக்கணக் கொத்து காட்டும்.
இந்தியாவிலேயே சமற்கிருத ஆதிக்கவாதிகளின் தலைவர் என்று ‘இலக்கணக் கொத்து’ ஆசிரியரான சுவாமிநாத தேசிகரைக் கூறலாம். தமிழுக்கும் சமற்கிருதத்துக்கும் பொதுவான எழுத்துக்களைச் சமற்கிருத எழுத்துக்கள் என்று அவர் முடிவுசெய்தார். தமிழ்ச் சிறப் பெழுத்துக்களான ற, ன, ழ, எ, ஒ, என்ற ஐந்துமே தமிழ் எழுத்துக்கள் என்று கொண்டார். ஐந்தெழுத்தால் ஒரு ‘பாடை’ எப்படி ‘தனிமொழி’ ஆகும் என்ற வீறாப்புடன் அவர் வினவினார். தமிழைப் பழித்து அவர் தமிழ் மொழியிலேயே எழுதத்துணிந்தார்.
பொது எழுத்துக்களைத் தமிழ் எழுத்துக்களாகக் கொண்டு, சமற்கிருதத்தின் சிறப்பெழுத்துக்களையே சமற்கிருதத்துக்கு உரிமையாக சுவாமிநாத தேசிகர் கொண்டிருந்தால், சமற்கிருதத்தின் நிலை இன்னும் மோசமாய் விடும். ஏனென்றால் அதற்கு உயிரெழுத்தே இராது. மெய்த்திரிபுகளாக ஆறும் மெய்களாக இருபத்துநாலும் கொண்ட ஒரு பேய் மொழியாகவே அது செவிக்குப் புலனாகும்.
ஆரிய இன எழுச்சியும் தேசிய வாழ்வும்
ஆரிய இன எழுச்சி தன் ஆதிக்கத்துக்கு உகந்த ஆராய்ச்சி முடிவுகளை, போக்குகளை, ஆர்வ இழைகளை ஆவலுடன் வரவேற்றது, நீருற்றி உரமிட்டு வளர்த்தது. அவற்றை அறிவுலகில் மட்டுமல்ல, பொது மக்களிடையேயும் பரப்ப அரும்பாடுபட்டது. தனக்கெதிரான, அதாவது தன் ஆதிக்கத்துக்குக் குந்தகமான அல்லது குந்தகமானவை என்று தனக்குத் தோற்றிய யாவற்றையும். அது அழிக்க, மடக்க, கொய்தொழிக்க முற்பட்டது. இவை முடியாதபோது, அவற்றைப் புறக்கணித்தொதுக்க, அறிவுலக எல்லையிலேனும் நிறுத்த, பொதுமக்களிடையிலிருந்து அல்லது உலக நோக்கிலிருந்து இருட்டடிப்புச் செய்ய முனைந்தது. இத் துறைகளில் அது தற்காலிகமாகவேனும் வெற்றியடைந்து வருகின்றது.
மேலை உலக இன எழுச்சியில் நாட்டுப்பற்றே முனைப் பாயிருந்தது. ஆராய்சியாளர்களிடையேயுள்ள வேற்றுமைகள் கூட அறிவுலக வேற்றுமைகளாக இருந்தனவேயன்றி, நாட்டுக்கு நாடு, இடத்துக்கிடம், மக்கள் வகுப்புக்கு வகுப்பு வேற்றுமை விளைவிப்பவையாயில்லை. ஏனெனில் அவை ஐரோப்பியர் அனைவருக்கும் ஒருங்கே உரியவையாயிருந்தன. அவர்களிடையே அது உயர்வு தாழ்வு கற்பிக்கவுமில்லை. இருந்த உயர்வு தாழ்வுகளை நீடித்து நிலவக் செய்ய உதவும் பிரசாரங்களாகவும் அமையவில்லை. இக்காரணங்களால் மேலை உலக ஆராய்ச்சி அறிவுலகின் தென்றலாக வீசிற்று. வாழ்வின் புயலாக அழிசெயலாற்றவில்லை. ஆனால் இந்தியாவில், தென்னகத்தில், தமிழகத்தில் ஆரிய இன எழுச்சி முழுநிலை தேசப்பாற்றாகவோ, நாட்டுப் பற்றாகவோ, மக்கட் பற்றாகவோ, மொழிப் பற்றாகவோ இயங்கவில்லை. தேசத்தில் ஒரு பகுதியை உயர்த்தி ஒரு பகுதியிலேயே ஒரு மொழியை உயர்த்தி ஒரு மொழியைத் தாழ்த்திற்று. ஒரு பகுதியில், ஒரு மொழி பேசிய மக்களிடையே ஒரு சிலரை உயர்த்திற்று, வேறு பலரைத் தாழ்த்திற்று.
மொழித்துறையில் ஆரிய இன எழுச்சி சமற்கிருதப் பற்றாக மட்டும் காட்சி தரவில்லை. தாய்மொழிகள்மீது சமற்கிருத ஆதிக்க மாக அது ஒரு புறம் வீசிற்று. அதே சமயம் சமற்கிருதச் சார்பற்ற மொழிகள்மீது சமற்கிருதச் சார்பான மொழிகளின் ஆதிக்கத்தை அது ஊக்கிற்று. சமற்கிருதச் சார்பு குன்றி மொழிகளில் கூட, அது அச்சார்பு மிக்கவற்றை அச்சார்பு குறைந்தவற்றுடன் மோத விட்டது. இப்போக்கு பொதுவாக நாட்டின் வடக்கில் உயர்வும், தெற்கில் தாழ்வும்; மேற்கில் உயர்வும். கிழக்கில் தாழ்வும் நாடிற்று. அத்துடன் எங்கும் உயர் சாதிக்கு மேலுரிமையும் பெரும்பாலான பிற மக்களுக்கு அடிமை நிலையும் தேடிற்று.
மொழி, இடம், பிறப்பு, பண்பாடு ஆகிய எல்லாத் துறை களிலும் ஆரிய இன எழுச்சி ஏணிப்படிகள் போன்ற அடுக்கடுக் கான உரிமைப் படிமுறைகளை வகுத்தது. இந்தப் படிமுறை ஆதிக்கத்தைக் காக்க அது நாட்டுமக்களின் அடிப்படைத் தேசியப் பண்பாட்டை, இன நலத்தை, மனித நாகரிக நலத்தையே பலியிட முனைந்தது, முனைந்து வருகின்றது. இந்நோக்கங்களுடனேயே அது ஆராய்ச்சியை அணுகுவதால், அதன் ஆராய்ச்சிகள் ஆராய்ச்சி இலக்கணங்களை முழுதும் உடையதாய், அதன் பண்பு நலன் மட்டும் அற்றதாய் அமைகின்றது. பொய்ம்மையை மெய்ம்மையாக்கும் இப்போலி ஆராய்ச்சிகள் மேலை நாட்டு ஆராய்ச்சிகளையும் புளிக்க வைத்துள்ளன. அவை தனித்தனி மெய்ம்மைகளைக்கூடப் பொய்ம்மைச் சட்டத்தில் பிணைப்பவை களாய், மெய்ம்மைகளைக் கூட அழிவுப் பண்புகளாக்குகின்றன.
ஆரிய இன எழுச்சியின் திருகுதாளங்கள்
இடம், சாதி, மொழி என்ற துறைகளில் பல்வேறு வகைப் பட்ட ஆதிக்க உருவம் கொண்ட காரணத்தினால், ஆரிய இன எழுச்சி உருவில் பலவாய் இயங்குகின்றது. ஆனால் அதன் நோக்கம் ‘ஆதிக்கம்’ என்ற ஒன்றே யாதலால், அது அவ் ஒரே உயிர்கொண்டு இயங்குகிறது. எனவே நோக்கத்தில் ஒத்த அளவு அது முறையில் ஒத்து விளங்கவில்லை, காலத்துக்குக் காலம், இடத்துக்கு இடம், ஆளுக்கு ஆள் அது முறையை மாற்றிக் கொள்ளும் கொள்கைகளை வளைத்து வேண்டியதை உருவாக்கிக் கொள்ளும். தொடர்ந்து பரந்து அதைக் கவனிப்பவர்களுக்கன்றி, அதன் திருவிளையாடல்கள், திருகுதாளங்கள், தகிடுதத்தங்கள் எளிதில் புலப்படமாட்டா. சிறிது விழிப்புடனும் பொது அறிவமைதியுடனும் நோக்கினால், இவற்றின் சான்றுகளை நம் வாழ்விலேயே எங்கும் காணலாம்.
எடுத்துக்காட்டாக, திசை ஆரியம் கங்கையை உயர்த்தும், காவிரியைத் தாழ்த்தும், அதேசமயம் சாதி ஆரியம் கங்கைப் புலையனைத் தாழ்த்தும் காவிரிப் பார்ப்பானை உயர்த்தும். மொழி ஆரியம் வேத மொழியின் உலகப் புகழ் பாடும். ஆனால் சாதி ஆரியம் அவ்வேதம் ஒரு சாதிக்கே உரியதென்று சாதிக்கும். ஓரிடத்தில் ஆரிய இன எழுச்சி ஆரியர்-ஆரியரல்லாதார் வேறு பாட்டை விளக்கும் மற்றோரிடத்தில் அது சமரசம் பேசும் ஒரு குரலில் நால்வருண நெறி பேசி இந்தியரிடமிருந்து இந்தியரைப் பிரிக்கும். மற்றொரு குரலில் கங்கைக்கரைப் பிராமணனுடன் வால்கா ஆற்றங்கரை ரஷ்யனையும், ரைன் ஆற்றோரமுள்ள ஜெர்மானியனையும் இணைக்கும். சேரிவாணரை அது தீண்டாதவரென்னும் அவரே இஸ்லாம் நெறி தழுவினால் அவரை மனிதப் பண்புடன் நடத்த முன்வரும். திரும்பவும் அவர்கள் இந்து சமுதாயப் படுகுழிக்கே வந்துவிடும்படி ஓரிடத்தில் ‘மகுடி’ ஊதும். வெளியுலகில் இன ஆதிக்கம், நிற ஆதிக்கம் நாடுபவருடன் வேண்டிய வேண்டிய இடங்களில், வேண்டிய வேண்டிய படி ஒத்துழைத்தும், மல்லாடியும்; பிற சமயம் புகுந்தவர்கள் வாழ்வில் படுகுழி மணம் பரப்பச் சமயகீதம், இனக்கீதம், சமரசகீதம் ஆகியவற்றை முறையறிந்து பாடும்!
ஆரிய இன எழுச்சியின் காலடியில் துவண்டவர்களின் எதிரெழுச்சியில்கூட அவ்வெழுச்சியின் பொருந்தா முரண்பாடு களைக் காணலாம். பல சாதியினர் தம் இழிவு போக்கத் தாமும் ஆரியரென்று வாதாடினர். ஆரிய இன எழுச்சியாளர் இதை எதிர்த்தனர்.
மாடு தின்னும் புலையா!-உனக்கு
மார்கழித் திருநாளா?
என்று நந்தன் நாடகத்தில் வரும் புரோகிதன் பாணியில் சீறினர். ஆனால் அதே சமயம் அவ்வச்சாதியினர் ஆரியர் என்பதற்கான புராணங்களும் அவர்களுக்கு எழுதித் தந்தனர். அத்துடன் அவர்களோடு ஆரிய உரிமைக்காகப் போட்டியிடும் பிற வகுப்பினருக்கும் அவர்களுக்கேற்ற புராணம் எழுதி ஒருவருடன் ஒருவரை மோதவிட்டனர். இவ்விரு சாராரையும் போலன்றி, ‘ஆரியரல்லாதார்’ என்ற நிலை ஏற்று உரிமைப்போரை யாராவது எழுப்பினால், அப்போது ஆரிய இன எழுச்சி படமெடுத்தாடுவதை நிறுத்தி; ‘இந்தப் பிள்ளையும் பால் குடிக்குமோ’ என்ற நிலையில் வால் குழைத்து, சமரச கீதம் பாடி மகிழும்.
தமிழின் எழுச்சி
தமிழகத்தில் மட்டும் ஆரிய இன எழுச்சிக்கு ஒரு புதுவகை யான வரவேற்பு கிடைத்துள்ளது.
பார்ப்பனர் நீங்கலாக, தமிழ்நாட்டின் உச்ச உயர் சாதி, உயர் வகுப்பினர் கூடத் தமிழ் ஆரியச் சார்பானதென்று கூற, வாதாட, வழக்காட முன்வரவில்லை. தமிழ் ஆரியச் சார்பற்ற தென்பதனை ஒரு குற்றச்சாட்டாக, பழிச் சொல்லாக, அவமதிப்பாக, வெட்கப் படுவதற்குரிய செய்தியாகவும் அவர்கள் கருதவில்லை. அதை வாளா ஏற்றனர், ஏற்றமைந்தனர்; அது மட்டுமோ, அதில் பெருமையும் கண்டனர். சமற்கிருதப் பற்றாளர் கூடத் தமிழ் சமற்கிருதத்துக்கு ஒப்பானது என்று கருதினர். சமற்கிருதத்தில் மதிப்புக் காட்டியவர்கள் கூடத் தமிழில் பற்றுக்கொண்டனர். தமிழ் சமற்கிருதத்தினும் மேம்பட்ட தென்றும் பலர் வாதாடினர்.
சரணடைதல், கெஞ்சுதல், மன்றாடுதலன்றி வேறு வகை எதிர்ப்பை இந்திய மாநிலத்தில் நெடுங்காலமாகக் காணாத ஆரிய இன எழுச்சியாளர், தமிழரின் தறுகண் மானம் கண்டு சீறினர், சினந்தனர்; குமுறினர், குமைந்தனர்; பயந்தனர், நயந்தனர்; ஒறுத்தனர், வெறுத்தனர். ஆனால், தமிழக நீங்கலாக, இமய முதல் குமரி வரை ஆர்ப்பரித்த ஆரிய இன எழுச்சியருகே, தமிழ் எழுச்சி முதலிலும், தமிழ் இன எழுச்சி அதனை அடுத்தும் எழுந்து பரவத் தொடங்கிற்று. புயலிடைத் தோன்றிய தென்றலாக விளங்கி, அது கடும்புயலாற்றலை எதிர்க்கும் இன்னமைதியாற்றலாக வளர்ந்து வருகின்றது.
தமிழின் இவ்வுள்ளார்ந்த எதிர்ப்பாற்றலுக்குத் தொல் காப்பியமும் திருவள்ளுவரின் திருக்குறளும் சங்க இலக்கியமும் பின்னணி ஆற்றல்கள், உள்ளுரம் என்னலாம். இவற்றின் பெயரும் தன்மையும், இயல்பும் எழிலும் இன்னும் இந்திய தேசத்திலோ, உலகிலோ பரவாமல், தமிழகத்திலுள்ள ஆரிய இன எழுச்சிப் படை விழிப்பாகப் பார்த்துக் கொள்கிறது. தமிழகத்திலும் பொது மக்களிடையே அவற்றின் அழிவு பரவாமல் சென்ற ஆயிர ஆண்டு ஆரியச் சார்புள்ள இலக்கியப் பிரசாரம் தடுத்து வந்தது. ஆயினும் நாயன்மார்கள், ஆழ்வார்கள் பாடலிலும் கம்பராமாயணத் திலும் கூட உள்ளீடாக ஆங்காங்கே தமிழின் தன்மானப் பண்பைக் காணலாம்.
கடுப்பு - எதிர் - கடுப்பு
கலை இலக்கியத் துறையில் இந்தியாவிலுள்ள ஆரிய இன எழுச்சி இயக்கத்துக்குப் பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்தே தமிழ்மொழியும் தமிழகமும் ஒரு முள்ளாகக் குத்தத் தலைப்பட்டன. இந்த முள்ளின் கடுப்பையும் எதிர் கடுப்பையும் ஆராய்ச்சியாளரிடையே பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்திலிருந்தே காணலாம். இச்சமயத்திலிருந்து தமிழகத்தில் ஆரிய இன எழுச்சி, தமிழ் எழுச்சி ஆகிய இரு தரப்புக்களிலும் தமிழாராய்ச்சியாளர்களைக் காண்கிறோம். ஆனால் ஒரு சாதியினர், பார்ப்பனர், எப்போதும் ஆரிய எழுச்சியின் பக்கமே நின்றனர். தமிழின எழுச்சியாளர் இதை என்றும் சுட்டிக்காட்டியதில்லை. சுட்டி உணர்ந்தது கூட இல்லை என்னலாம். ஆனால் தமிழ் எழுச்சியாளர் பக்கத்தில் அந்நாளில் ஒரு சாதியினரே துணிந்து நின்றனர், நிற்க முடிந்தது. அதை மட்டும் அந் நாளைய ஆரிய எழுச்சி ஆராய்ச்சியாளர் குறித்துக் காட்டினர். அந்த ஆராய்ச்சியாளரை அவர்கள் ‘வேளாள ஆராய்ச்சியாளர்’ அல்லது அவர்கள் எழுதிக் காட்டிய முறையில் ‘வெள்ளான ஆராய்ச்சியாளர்’ என்று குறிப்பிட்டனர். வேளாளரே துணிந்து செய்த பழி இப்போது தமிழர் பழியாய் விட்டது. வேளாளர் சிலர் தம் முன்னோர் செய்த பழிக்கு இப்போது ‘பிராயச்சித்தம்’ செய்தும் வருகின்றனர்!
மேனாட்டு ஆராய்ச்சியாளரிடையேகூட மேற்குறிப்பிட்ட காலத்திலிருந்து கருத்து எதிர் கருத்தைக் காண்கிறோம். மேனாட்டினரும் தம்மை ஆரியர் என்றே கருதுபவராதலால் தமிழ்ச் சார்பாகக் கருத்துரைத்த போதும், தம்மையறியாது ஆரியச்சார்பு அல்லது, சாய்வு கொள்வதுண்டு. ஆனால் கருத்து எதிர் கருத்தன்றி, கடுப்பு-எதிர்-கடுப்பை அவர்களிடம் காண முடியாது. இந்திய-ஆரியர் இந்திய-ஆரியரல்லாதாரிடையே அவர்கள் வழக்காடினரேயன்றி, உலக ஆரிய நிலையை வழக்கில் இழுக்கவில்லை.
பொதுவாகத் தமிழ், தமிழின மொழிகள் மேலை நாட்டவர் ஆர்வத்தைத் தூண்டவில்லை. அதைக் கற்க முனைந்தவர்களும் மிகச் சிலர். ஆயினும் கிறித்துவ சமயம் பெரும்பாலும் தென்னாட்டிலேயே மிகுதி பரவிற்று. கிறித்துவ சமயப் பிராசாரத்திலீடுபட்ட பாதிரிகள், அதாவது சமயப்பணி யாளர்கள், அது காரணமாகத் தமிழையோ, தமிழின மொழிகளையோ கற்க நேர்ந்தது. தமிழைத் தாய்மொழிகளில் ஒன்றாக மட்டும் கருதுவது தவறு என்பதை அவர்கள் எளிதில் கண்டகொண்டனர். தமிழ் சமற்கிருதச் சார்பற்ற தனிமொழி என்பதும் அவர்களுக்குத் தெளிவாகப் புலனாயிற்று. இதுமட்டுமன்று, தென்னாட்டு மொழிகள் எல்லாமே அடிப் படையில் சமற்கிருதத் தொடர்பற்றவை என்றும், அவை தமிழுடன் இணைந்த தமிழினக் குழு என்றும் அவர்கள் கண்டனர். சமற்கிருத நூலாசிரியர் வழக்கை ஒட்டி அவர்கள் அதைத் திராவிடம் அல்லது பெருந்தமிழினக் குழு என்று அழைத்தனர். 19ஆம் நூற்றாண்டிறுதியில் டாக்டர் கால்டுவெல் இம்முடிவை வகுத்து விளக்கித் ‘திராவிட ஒப்பியல் மொழி நூல்’ இயற்றினார். அதன் முடிவு பேரளவில் இன்று ஆராய்ச்சி உலகின் முடிவாய் விளங்குகிறது.
தமிழ் மொழி, தமிழினம், தமிழிலக்கியம் ஆகியவை பற்றி மேலை உலக ஆசிரியர் பலர் தம் கருத்தை வெளியுலகுக்கு ’மதிப்புரை’களாகக் கூறிப்போயினர்.
ஆரிய மறைப்புத் திரை என்னும் முகில் கிழித்து இவை சிறிதளவு ஒளிக் கோடுகள் பரப்பின.
தமிழ்பற்றிய மேலை அறிஞர் புகழ்மாலை
தமிழ் ஆங்கிலப் பேரகராதி இயற்றிய டாக்டர் வின்சுலோ தமிழ் பற்றிக் கூறுவதாவது:
“தமிழ்பற்றி நான் கூறுவது மிகு புகழ்ச்சியாக, உயர்வு நவிற்சியணியாகத் தோன்றக்கூடும். ஆனால் என் உள்ளக் கருத்தை நான் அப்படியே வெளியிட விரும்புகிறேன். தமிழ், கிரேக்க மொழியைவிடத் திட்பமும் நுட்பமும் வாய்ந்தது. (இலக்கியத் தமிழ், பேச்சுத் தமிழ் என்ற) இரு வழக்குகளிலும் அது பல நலன்களை வெளியிலிருந்து பெற்றுள்ளது உண்மையே என்றாலும், அந்நிலையிலேயே அது இலத்தீன மொழியைக் காட்டிலும் வளமுடையது. பொருள் நிறைவிலும் ஆற்றலிலும், அதற்கீடாக ஆங்கில மொழி, ஜெர்மன் மொழி ஆகிய இரண்டையும் மட்டுமே நான் குறிப்பிடமுடியும். உலகின் வேறு எந்த மொழியும் அதற்கு ஈடாக மாட்டாது.”
அது பல நலன்களை வெளியிலிருந்து பெற்றுள்ளது. உண்மையே என்றாலும்’ - ஆரிய இன எழுச்சியாளரைப் புண்படுத்திவிடக்கூடாதே என்ற டாக்டர் வின்சுலோவின் பெருமித உணர்வை இவ்வாசகம் குறித்துக் காட்டுகிறது.
தமிழ் மொழியின் தன்மை பற்றியும் திருக்குறள் பற்றியும் இன்னும் பல மேலை அறிஞர் ஆர்வமதிப்புரை பகர்ந்துள்ளனர்.
டெய்லர் என்ற அறிஞர் கூறுவதாவது: ‘மனித இனம் பேசும் மொழிகளிலே சொல்வளத்திலும் திருத்த நயத்திலும் வனப்பிலும் ஒப்புயர்வற்ற முதல்தர மொழிகளில் தமிழ் ஒன்று.’
டாக்டர் சிலேட்டர் குறிப்பிடுவதாவது: ‘நுண்ணயத்திலும் ஆய்வுணர்வுத் திறத்திலும் தமிழ் மொழியின் மேம்பாடு மிகமிக வியத்தற்குரியது!’
“ஒழுக்கத்தில் விழுப்பசியும் அறவாழ்க்கையில் உறுவேட்கையும் உடைய இந்தத் தமிழ் மக்களுக்கு எதிர்காலத்தில் சீரியதொரு பொங்கல் வாழ்வு உரிமைப்பட்டிருந்தல் வேண்டும். இக்கருத்து என் உள்ளத்தில் அடிக்கடி களிநடம் புரிகிறது” என்று டாக்டர் ஜி.யூ. போப் திருக்குறளையும் தமிழின் மற்ற அற நூல்களையும் கருத்தில் கொண்டு கூறுகிறார்.
இதே திருக்குறளைப்பற்றி இருபதாம் நூற்றாண்டின் ஜெர்மன் பேரறிஞர் ஆல்ஃவிரட் ஷ்வைட்ஸர் கூறுவதாவது: “இத்தகைய உயர்ந்த தலைசிறந்த நீதிகளடங்கிய மற்றொரு நூல் உலக இலக்கியத்திலேயே கிடையாது.”
நம் முன் உள்ள கடா
மொழியின் தனித்தன்மை, இன முதன்மை ஆகியவற்றைக் கால்டுவெல் நூலும், மொழியின் விழுச்சிறப்பையும் இலக்கியச் சிறப்பையும் பிற அறிஞர் உரைகளும், பண்பாட்டை ஆல்ஃவிரட் ஷ்வைட்சர் இயற்றிய “இந்தியாவின் கருத்து முறைகளும் அவற்றின் வளர்ச்சியும்” என்ற நூலும் நன்கு விளக்குகின்றன. “சமயாசாரியர்களான சங்கரர், இராமானுஜர், இராமானந்தர் ஆகியவர்கள் கருத்துக்களுக்கும்; அருளாளர்களான இராம கிருஷ்ணர், விவேகானந்த அடிகள், காந்தியடிகள் ஆகியோர் பண்புகளுக்கும் மூல முதலை சமற்கிருதத்திலோ வேறு எந்த மொழியிலோ உள்ள வேறு எந்த நூலிலோ காணமுடியாது. அவை திருவள்ளுவர் திருக்குறளின் விழுமிய மரபில் வந்தவையே” என்று ஆல்ஃவிரட் ஷ்வைட்சரின் நூல் விளக்கம் தருகிறது.
மொழி, இலக்கியம் ஆகியவை பற்றி இக்குறிப்புக்களே யன்றி, பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றைப் பற்றிய பல செய்திகளும் இந்தியா பற்றிய, உலகு பற்றிய பல அறிஞர் நூல்களில் காணக்கிடக்கின்றன. பழம் பொருளாராய்ச்சிகளும் உலக நாகரிகத்தின் பழமைக் கொடியின் வேரைத் தேடித் தென்னகம் நோக்கி வருகின்றன/ வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் இத்துறை ஆராய்ச்சியில் உலகை ஊக்கத் தமிழினம் தன் ஆற்றலை அளிக்க வேண்டும். இதில் தமிழக ஆட்சி வகுப்பின் பொறுப்பு பெரிது. ஆனால் அப் பொறுப்பில் அவர்களை ஊக்க மக்களும், மக்கள் ஆர்வத்தைத் திரட்டத் தமிழார்வமிக்க இளைஞரும் நங்கையரும் முன்வர வேண்டும். இதுவகையில் ஆராய்ச்சிகளையும் ஆராய்ச்சி முடிவுகளையும் திரட்ட வேண்டும். ஆராய்ச்சி யிடையே இனப்பற்று, நம்பிக்கை ஆகியவற்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு எழுந்த போலி முடிவுகளை, தப்பெண்ணங்களை அகற்ற வேண்டும். பழமை ஆராய்ச்சி களிலும் வரலாற்றாராய்ச்சிகளிலும் அவற்றின் குரல்களிலும் மிகுதி கவனம் செலுத்த வேண்டும்.
மேனாட்டினர் சமற்கிருதத்தின் பெருமையை ஒத்துக் கொண்ட போதும், பாராட்டியபோதும், ஆரிய இன எழுச்சி யாளருக்கு ஏற்பட்டிருந்த விருவிருப்பும் எக்களிப்பும், ஒரு சிறிது, தமிழ்ப் புகழைக் கேட்கும்போதுகூடக் கடுப்பாக மாறத் தொடங்கிற்று. மேலை நாட்டினர் பலர் கீழை நாட்டின் ஆட்சி வகுப்பினராகிய அவர்களைப் புண்படுத்த விரும்பாமல் தொனியை மாற்றிக்கொள்வது காணலாம்.
புகழிடையே குறைபாட்டை ஒத்துக்கொண்டு, புகழை மட்டுப் படுத்துவதன் மூலம் ஆட்சி வகுப்புக்குரிய சலுகை நாடும் பண்பை நாம் மேலே டாக்டர் வின்சுலோவின் மதிப்புரையில் கண்டோம்.
கீழ் திசையிலும் ஆளப்படும் இனம், உலக அரங்கில் இடம் பெறாத இனம் என்ற முறையில் பல மேனாட்டு ஆராய்ச்சியாளர் தமிழ், தமிழினம், தமிழ்ப்பண்பாடு வகையில் தெரிந்தோ தெரியாமலோ அக்கறையற்ற, கவனமற்ற தன்மை காட்டி வந்தனர்.
பழம்பொருளாராய்ச்சிகளின் போக்கு ஒன்றே இவற்றை மாற்றி வருகிறது, பேரளவில் மாற்றியுள்ளது. வரலாற்றா ராய்ச்சியிலும்; அரசியல், மொழி, பண்பாட்டாராய்ச்சிகளிலும் உள்ள சில தப் பெண்ணங்கள், கேளாக் குரல்கள், மறைபடிப் பினைகள் ஆகியவற்றிலும்; பழம்பொருள், புதைபொருள் ஆராய்ச்சியின் முடிவுகளிலும் இனி கருத்துச் செலுத்துவோம்.
தப்பெண்ணக் கோட்டை
இரண்டாயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்கு முன் சிந்து கங்கை வெளியில் தோன்றியவர் பேரறிஞர் புத்தர் பிரான். அவர் உலகின் மூட நம்பிக்கைகள் கடந்தவர். அவற்றை விலக்க அறிவொளி பரப்பியவர். ஆராய்ச்சியொளியில் தம் சீடர்களை ஊக்கியவர். ஆனால் ஆராய்ச்சியையே பீடிக்கும் புதையுருவான புது மூட நம்பிக்கைகள் பற்றிய அச்சம் அவருக்கு ஏற்பட்டது. அவற்றைப் பற்றி அவர் எச்சரித்தார். அவற்றை அறியா மூடம், அறிவு மூடம், உலக மூடம் என்று அவர் மூன்றாக வகுத்தார்.
அறியா மூடம் என்பது தமக்குத் தெரியாத ஒன்று இருக்க முடியாது என்று முடிவு கட்டிவிடுவது. அறிவு மூடம் என்பது தாம் ஆராய்ச்சியால் கண்டுணர்ந்ததே முடிந்த முடிவு என்று நம்பி விடுவது. அறிந்தனர், அறியாதவர் ஆகிய உலகமக்கள் அனைவரும் ஒத்துக்கொள்ளும் அல்லது நம்பும் செய்தி உண்மையானதாகத்தான் இருக்கவேண்டும் என்று கருதுவதே உலக மூடம்.
கீழை உலகில் ஆராய்ச்சி ஊழியின் இறுதியில் அதாவது கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் புத்தர் பிரான். மேலை உலகில் ஆராய்ச்சி ஊழியின் தொடக்கத்தில், அதாவது 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஃவிரான்சிஃ பேக்கன். அவர் ஆராய்ச்சிக்குரிய தடங்கல்களை மருளுருக்குள் (Idols) என வகுத்தார். இனமருட்சி (Idols of the tribe), குடுவை மருட்சி (Idols of the cave), சமூக மருட்சி (Idols of the market-place), மேடை மருட்சி (Idols of the theatre), என அவற்றுக்கு அவர் கவிதை யுணர்வுடன் அழகிய பெயர்கள் தந்தார்.
இவற்றுள் இனமருட்சி புத்தர் பிரானின் உலக மூடமேயாகும். ஆனால் பேக்கன் அதன் எல்லையை விரிவுபடுத்தினர். மனித அறிவாற்றலின் குறைபாட்டால் ஏற்படும் எல்லா இடர்களையும் அவர் இதில் சேர்த்தார். குடுவை மருட்சியில் அவர் தன்னலப் பற்று, குடும்ப நலப்பற்று, நாட்டுப்பற்று, மொழிப்பற்று, இனப்பற்று, குழுப்பற்று, குழுநல மனப்பான்மை ஆகியவற்றால் இயற்கையாகவோ, செயற்கையாகவோ ஏற்படும் ஒளிப்பு மறைப்புத் திரைகளை உள்ளடக்கினார்.
சமூக மருட்சி மொழியின் சொற்களால், சொற்களின் கால தேசத் திரிபுகளால், பொருள் மயக்கங்களால் ஏற்படுவது. புகழ் பெற்ற அறிஞர், பெரியோர், முன்னோர் அறிவின் முடிவில் அல்லது அறியப்பட்ட இன அறிவின் முடிவில் நின்று ‘இதுதான் முடிந்த அறிவு, இனி வேறில்லை’ என்று கருதுவது மேடை மருட்சி.
பழைய மூட நம்பிக்கைகளும் புதிய மூட நம்பிக்கைகளும்
கீழை உலக நாகரிகம் பொதுவாகவும், தமிழக நாகரிகம் சிறப்பாகவும், சென்ற ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வளர்ச்சி குன்றி இருப்பானேன்? இதன் விடை புத்தர் பெருமான் கண்ட மூடங்களிலேயே உள்ளது. அவர் காலத்திலிருந்தே அவை நம்மைப் பீடித்து வருகின்றன. அவை ஆராய்ச்சியாளர், அறிஞர் அறிவை மழுக்குகின்றன. சமுதாய அறிவையும் சமுதாய வாழ்வையும் பண்பையும் கெடுக்கின்றன. அவற்றை உயிரற்ற வாதக் கோட்பாடுகளாகவும், ஆசாரங்களாகவும், சடங்குகளாகவும் ஆக்கியுள்ளன. மக்கள் வாழ்விலும், அறிஞர் அறிவிலும், கலைஞர் பண்பிலும் மரமரப் பூட்டியுள்ளன.
இம்மூடங்கள் கீழை உலகைப் பாதித்த அளவு மேலை உலகைப் பாதிக்கவில்லை. ஆயினும் மேலை உலகையும் அவை முழுதும் விட்டுவிட வில்லை கீழை உலகினின்று அவை மேலை உலகுக்கும் பரவியேயுள்ளன.
ஆராய்ச்சியூழியின் அறிவொளி மேலை உலகுக்குப் புதுப் பாதை வகுத்துள்ளது. ஆயினும் கீழை உலக வாழ்வே மேலை உலக வாழ்வுக்கும் வழிவகுத்தது. சமயப் பண்புகளும் அறிவியற் பண்புகளும் சிறப்பாகக் கீழை உலகம் மேலை உலகத்துக்கு அளித்த பரிசுகளே. கிரேக்க மொழி சார்ந்த நாகரிகமும், சமற்கிருத மொழி சார்ந்த நாகரிகமும் மேலை உலக வாழ்வின் புதுப் பாதையிலும் அதை ஊக்கியுள்ளன. கீழை உலகின் இந்த நல்விதைகள் நல்ல சூழ்நிலை பெற்று மேலை உலகில் தழைக்கின்றன. ஆயினும் கீழை உலகில் அவற்றின் வளர்ச்சியைத் தடைப்படுத்திய களைகளின் விதைகளும் பயிர்விதைகளுடன் மேலை உலகில் கலந்துள்ளன. பயிர் வளர்ச்சி பெரிது. ஆனால் களைகளும் வளர்ந்தே வருகின்றன. மேலை உலகின் ஓருலக வளர்ச்சியுடனே வளர்ச்சியாக, இந்தத் தப்பெண்ணங்களும் வளர்ந்து வருகின்றன. இவை பெரும்பாலும் கருத்துக்களின் அடிப்படையிலேயே உள்ள தப்பெண்ணங்களாதலால், அவை கருவில் தோற்றிய நோய்போல, ஆராய்ச்சிக் கோட்டைகளை உள்ளூரத் தப்பெண்ணக் கோட்டைகளாக்கி வருகின்றன.
இவை மக்களை மயக்கும் மூடங்கள் மட்டுமல்ல; ஆராய்ச்சி யாளர்களையும் மருட்டும் மருளுருக்கள்! அறிவின்முன் விலகிக் கலையும் பழைய மூடநம்பிக்கைகளல்ல; அறிவுடன் போலி அறிவாக வளரும் புதிய மூடநம்பிக்கைகள்! அவை இயற்கையாக எழும் தப்பெண்ணங்கள் மட்டு மல்ல, செயற்கையாக, தன்னலம், குழுநலம், இனநலம் காரணமாக எழுப்பப்படும் போலிக் கருத்துக்கள், போலி ஆராய்ச்சிகள்! மனி இன வரலாற்றையும், நாகரிகத்தையும், வாழ்வையும் பொதுவாகவும், தமிழின வரலாற்றையும் நாகரிகத்தையும் வாழ்வையும் சிறப்பாகவும் இவை மூடி மறைத்து ஒளிமழுங்கச் செய்கின்றன.
“மெய் உடைஒருவன் சொலமாட்டாமையால்
பொய் போலும்மே, பொய்போலும்மே!
பொய்உடை ஒருவன் சொல்வன்மையினால்
மெய்போலும்மே, மெய்போலும்மே!”
என்ற அதிவீரராம பாண்டியன் நறுந்தொகை வரிகள் அவர் காலத்திலேயே நிலவிய தமிழன் ஏலமாட்டா மெய்ம்மை களையும், பிறர் அவன்மீது ஏற்றிவந்த போலி மெய்ம்மைகளையும் கருத்துட் கொண்டவை என்னலாம்.
வரலாற்றின் கேளாக் குரல்கள், அடங்கிய குரல்கள், அடக்கப் பெற்ற குரல்களாக இப்போலி மரபுகள் இயங்குகின்றன. வரலாறு எழுப்பாத, அதாவது வரலாற்றறிஞன் கேளாத, ஆனால் வரலாறு வாய்விடாது கேட்கிற கேள்விக் குரல்களும் உண்டு. வருங்காலத் தமிழகத்தின் பொறுப்பையும், வருங்கால உலக நலனையும் மனத்துட்கொண்டு இவற்றுட் சிலவற்றைத் தமிழ் மக்களுக்கும் இன ஆராய்ச்சியாளருக்கும் முன்னிலைப் படுத்துவோம்.
புது உலகத் தொடர்பு
இன்றைய உலகப் படத்தில் பழைய உலகத்துடன் நிலத் தொடர்பற்றுக் கிடப்பது புதிய உலகம், அதாவது அமெரிக்கா, ஆஸ்திரேலியா கண்டங்கள். இவற்றுடன் வரலாற்றுக் காலத் தொடர்பு அணிமையிலேயே ஏற்பட்டது. ஆனால் வரலாற்றுக் காலத்திலேயே, மிகப் பழமையான நாட்களில் (8,9 ஆம் நூற்றாண்டு களில் டேனியர் (Danes) அந் நிலங்களில் சிறிது பரவி யிருக்கலாம் என்று கருதியவர் உண்டு. அதற்கு முன்னால் தொடர்பு இருந்திருக்க முடியாது என்றில்லை. ஆயினும் பண்டைய அமெரிக்க நாகரிகத் தொடர்பும், ஆஸ்திரேலிய இனத் தொடர்பும் இத்தகைய போக்குவரவுத் தொடர்புகளாய் இல்லை. அவை கருமூலமான இனத்தொடர்பாகவே காணப்படுகின்றன.
அமெரிக்காவின் பழங்குடியினர் சிவப்பு இந்தியர், அவர்களை அழித்த வெள்ளையர் ஸ்பெயின் நாட்டவர். அழிவைப் பயன்படுத்திக் குடியேறிய வெள்ளையர் எல்லா ஐரோப்பிய நாட்டவருமே. ஆனால் தம்முடன் இனத் தொடர்பற்ற அந் நாட்டுப் பழமை பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்க அரசியலும் மக்களும் ஈடுபட்டுள்ளனர். இதற்கு மாறாக, அத் தொல் பழங்கால நாகரிகத்தின் தொடர்புடைய வரான இனத்தவர்களே தமிழகத்திலும் தென்கிழக்காசியாவிலும் வாழ்கின்றனர். எனினும், இத்திசையிலுள்ள மக்களோ, மக்கள் அரசியலோ, அறிஞரோ இன்னும் இத்துறையில் கருத்து செலுத்தவில்லை.
இத் தொடர்பு புது உலகமும் பழைய உலகமும் ஒன்றாய்க் கிடந்த ஓர் ஊழியிலுள்ள தொடர்பு என்று மண்ணுலார் கருது கின்றனர். வரலாற்றுப் பழமை, வரலாற்றுக்கு முற்பட்ட பழமை ஆகிய இரண்டுக்கும் எட்டாத, பதினாயிர, நூறாயிரக்கணக்கான ஆண்டுப் பழமைகள் இவை. தென்னாடு, தென் ஆப்பிரிக்கா, கிழக்கு ஆப்பிரிக்கா, இலங்கை, தென்கிழக்காசியா, ஆஸ்திரேலியா, வடமேற்கு அமெரிக்கா ஆகிய யாவும் ஒரே தென்மா கண்ட’மாகக் கிடந்த காலம் அது. இதனையே ‘இலெமூரியா’ என்னும் குமரிக் கண்டம் என்று கூறுகிறோம். இதன் வாழ்வுக் காலம் இன்றைக்கு இரண்டு நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரிருந்து ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்வரை என்று மண்ணூலார் கணிக்கின்றனர்.
குமரிக்கண்டம்
இவ்வூழியில் சிந்து கங்கைவெளி இருந்ததில்லை. சிந்துவும் கங்கையும் பிரமபுத்திராவும் பிறப்பதற்கிடமான இமயமலை இருந்ததில்லை. அவை இன்றிருக்கும் இடத்தில் ஓர் அகன்ற நடுமாகடல் அலை பாய்ந்து கொண்டிருந்தது. ஆனால் இதே சமயத்தில் கோதாவரியும் காவிரியும் வைகையும் தண் பொருநையும் உயிர் ஆறுகளாக - இன்றைவிடப் பெரிய ஆறுகளாக ஓடின. நீலமலையும் ஆனைமலையும் பொதியமலையும் இருந்தன - இன்றைவிட மிகப் பெரிய, மிக உயரிய மலைகளாக நிமிர்ந்து நின்றன. இன்றைய தமிழனின் முன்னோர்கள் அன்றும் தமிழகத்தில் வாழ்ந்தனர். ஆனால் இன்றைய தமிழன் வணங்கும் தெய்வங்களின் தாயகங்கள் - சிவபெருமான் கயிலைமலை, அவர் உருத்திராட்ச மணி விளையும் திபெத்து மேடு, திருமால் திருப்பிறவி எடுத்த அயோத்தி, வடமதுரை - இவற்றின் தடமே அன்று கிடையாது.
இன்றைய தமிழனிடம் பழம்பெருமை பேசும் இனங்கள், அன்று பிறக்கவில்லை. பனி வெளியிலே பனி வெளியாய் அவை இயற்கை வெளியில் உலகின!
இந்து ஐரோப்பிய இனம் - அதாவது ஆரிய இனம் - தோன்றி வளர்ந்து பரவிய வெளி வட ஐரோப்பிய, வட ஆசியப் பனிவெளியாகும். பொதுவுடைமைப் பூங்காவாக இன்று இயங்கும் சோவியத் மாநிலப்பரப்பு இதுவே. இதுவும் தென்மா கண்டம் நிலவிய காலத்தில் உடன் நிலவிய பரப்பேயாகும். இப்பெரும் பரப்பில் அன்று மனித இனமே வாழவில்லை என்று ஆராய்ச்சியறிஞர் கருதுகின்றனர். ஆயினும் இன்றைய மனித இனத்துக்கு முற்பட்ட அரை மனித இனங்கள் வட ஆசியா, வட ஐரோப்பாவிலும் வேட்டையாடித் திரிந்தனர். அவர்கள் இன மரபுகள் இன்று அழிந்துபட்டுவிட்டன என்று மனித இன ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்.
ஆரியர் பிறப்பு வளர்ச்சிக்குக் காரணமான வடதிசைப் பனி வெளிக்கும், தமிழினப் பிறப்பு வளர்ச்சிக்குக் காரணமான தென் திசைக்கும் இடையே அன்று நடுமா கடல் கிடந்தது. அதன் அடி நிலம் இமயமலையாக உயரப் பதினாயிரக்கணக்கான ஆண்டு களாயின. சிந்து கங்கையாறுகளின் வண்டல் படிந்து அந்தக் கடல் முழுதும் தூர்ந்து நிரம்பி நிலமாகப் பதினாயிரக்கணக்கான ஆண்டுகள் பிடித்தன. சிந்து கங்கை அடித்துக் கொணர்ந்த வண்டல் நிலமே இன்றைய வட இந்தியா!
தொல் பழங்காலப் பாண்டியன்
தமிழகத்தின் தென்திசையில் குமரிக்கண்டத்தின் பெரும் பகுதியைக் கடல் படிப்படியாகக் கொண்டு சென்றது. தமிழினம் தன் மூலமுதலூழித் தோழர்களிடமிருந்து பிரிவுற்றுத் துண்டு பட்டது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுக் காலமாகத் தமிழினத்தின் பெரும்பகுதி கடலில் அழிவுற்றது. தொல் பழங்கால ஏடுகள் அழிவுக்குத் தமிழக மரபு கூறும் தலைக்காரணம் இதுவே.
மிகத் தொல் பழங்காலப் பாண்டியன் ஒருவன் - தொல் காப்பியர் காலத்திய மன்னன் நிலந்தரு திருவிற் பாண்டியன் - இழந்த பரப்புக்கீடாகப் புது நிலமாகிய சிந்து கங்கை வெளியில் தமிழினத்தைக் குடியேற்றினான். அத்துடன் துண்டுபட்டுப் பிரிந்த தொல் பழந்தமிழகப் பகுதிகளான மலாயா, சாவா, சுமாத்ரா முதலிய கடல் கடந்த மாநிலங்களை வென்று அங்கும் தன் கடலாட்சியை நிறுவினான். சுமாத்திராவின் பழம்பெயர் ‘சய’ நாடு என்பது. அதை வென்றதனால் அவன் சயமாகீர்த்தி என்ற விருதுப் பெயர் பெற்றான். இதுவகையில், சங்க நூல்களின் பழம் பாடல்கள் தரும் சான்றுகள் உண்டு.
“பஃறுளி ஆற்றுடன்
பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும்
கொடுங்கடல் கொள்ள,
வடதிசைக் கங்கையும்
இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட
தென்னவன் வாழி”
என்பது சங்கப் பழம் பாடல்களுடன் ஒண்டி நமக்கு வந்து சேர்ந்த தொல்பழம் பாடல்களுள் ஒன்று.
இத் தொல்பழங்காலத்தை அடுத்துத் தமிழெல்லையாக இருபுறம் கடல்கள் (அரபிக்கடல், வங்கக்குடாக் கடல்), ஒருபுறம் - வடபுறம், மலை (இமயமலை), மற்றொருபுறம் - தெற்கே, ஒரு பெரிய ஆறு (கடல்கொண்ட பரப்பில் உள்ள குமரியாறு) ஆகியவை நிலவின. இதனைத்,
“தென்குமரி வடபெருங்கல்
குணகுடகடலா எல்லை”
என்ற பாடல் வரிகள் காட்டும்.
இக்காலத்திய செல்வங்களுள் - கங்கை பிறந்த காலத்துச் செல்வங்களுள் - கங்கை வெளிக்குத் தமிழர் நாகரிகமளித்த காலத்திய செல்வங்களுள் - நமக்கு முழு இலக்கியமாக அல்லது இலக்கணமாக மீந்திருப்பது தொல்காப்பியம் ஒன்றே. சங்கப் பாடல்களின் இடையே சில உதிரிப் பாடல்களும் இக்காலத்தன ஆகலாம். ஆனால் இவை கடந்த இருபெருஞ் செல்வங்கள் இன்னும் நம்மிடையே உண்டு. அவை நம் தமிழ் மொழி - நம் குருதி நாளங்களில் ஓடும் நம் தமிழ்ப் பண்பு ஆகியவையே. இவற்றை நாம் இழக்கவில்லை, ஆயினும் 2000 ஆண்டுகளாக, இழக்கும் சூழல்களை வளர்த்து வருகிறோம்!
ஆரியர் வரவால் தமிழகம் பெற்ற ஆதாயம்!
வரலாற்றுக்கு முந்திய காலச் செய்திகளில் ஆரியர் வருகை ஒரு முக்கிய நிகழ்ச்சி ஆகும். இதன் காலவரையறையையும் முக்கியத்துவத்தை யும் காட்டும் செய்திகள் சில உண்டு. அவற்றுள் வரலாறு தரும் ஒரு சான்று முக்கியமானது.
எகிப்துக்கும் சீனாவுக்கும் கி.மு. 3000-லிருந்தே வாணிகத் தொடர்பு இருந்தது. சீனாவின் பசுமணிக்கல் இதுவகையில் முக்கியத்துவம் உடையதாயிருந்தது. வணிகர் அதைச் சீனாவிலிருந்து நிலவழியாக நடு ஆசியா, ஈராக், அரேபியா கடந்து எகிப்துக்குக் கொண்டு சென்று விற்றனர். ஆனால் கி.மு. 2000த்திலிருந்து திடுமென இந்த நிலவழி வாணிகம் நின்று விட்டது. விரைவில் மீண்டும் அவ் வாணிகம் தொடர்ந்தது. ஆனால் இத்தடவை அது நிலவழிப் பாதையில் செல்லவில்லை. கடல் வழியாகத் தென்கிழக்காசியாவைச் சுற்றிக்கொண்டு தமிழகம் கடந்து செங்கடல் கரைக்குச் சென்றது. இடையே அவர்கள் தமிழகக் கடற்கரையைச் சுற்றவில்லை. தமிழகக் கீழ்க்கரையில் சரக்குகளைக் காவிரிப்பூம்பட்டினத்தில் இறக்கினர். அங்கிருந்து வண்டிகளில் சரக்கேற்றி, மேல்கரையில் வஞ்சி அல்லது தொண்டித்துறையில் கொண்டு சென்று மீண்டும் கப்பலேற்றினர்.
சீனா-எகிப்து நிலவழிப் பாதை, இப்போது தமிழகத்தின் கடற்பாதையாயிற்று. நிலவழிப் பாதையில் அராபிய வணிகரே பெரும்பங்கு கொண்டிருந்தனர். ஆனால் கடல்வழித் தமிழகப் பாதையில் தமிழர் பெரும்பங்கு கொண்டனர். தமிழகத்தின் பண்டைச் செல்வப் பெருக்குக்கு இதுவும் ஒரு பெருங் காரணமாய் அமைந்தது.
வாணிகப்போக்கின் இப்பெரு மாற்றத்துக்கு ஆரியர் படை யெடுப்பே காரணம் என்று வரலாற்றறிஞர் ஊகிக்கின்றனர். கி.மு. 2000-லிருந்து கி.மு. 1500 கடந்து நீண்டகாலம் ஆரியர் எழுச்சியால் நடு ஆசியா, பாரசீகம், சிந்துவெளி ஆகிய பரப்புக்கள் முழுதும் அமைதியிழந்தன.
சிந்து வெளியின் அழிபாடுகள் புதைபொருள் துறையிலும், பார்சிகளின் அவெஸ்தாப் பழம்பாடல்கள், இந்திய ஆரியரின் இருக்கு வேதப் பழம்பாடல்கள் ஆகியவை மொழி மரபுத் துறையிலும் இவ் வெழுச்சிக்குச் சான்றுகள் தருகின்றன.
தமிழ், திராவிடம் என்ற சொற்கள்
தமிழ் என்ற பெயர் திராவிடம் என்ற பெயரின் மரூஉ என்று சில ஆராய்ச்சியாளர் கருதினர். மொழி நூல் மரபில் இம் மாறுதல் இயற்கைக்கு மாறுபட்டதன்று. திராவிடம், திராமிடம், திராமிளம், தாமிளம், தமிளம், தமிழ் என்ற மாறுபாடு புரியக்கூடியதே. ஆனால் நமக்குக் கிடைத்துள்ள கல்வெட்டுச் சான்றுகள் இம் முடிவுக்கு நேர் எதிராயுள்ளன. திராவிடம் என்ற சொல்லுக்கு முற்பட்டே திராமிளம், திரமிளம் என்பவையும்; அதற்கு முற்பட்டே தாமிளம் தமிளம் ஆகியவையும் நமக்கு சமற்கிருதத் கல்வெட்டுக்களில் கிட்டுகின்றன. மாறுதல் திராவிடத்திலிருந்து தமிழாயிருக்க முடியாது. தமிழிலிருந்தே திராவிடம் என்ற மாறுபாடு ஏற்பட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு இது நம்மை இட்டுச் செல்கிறது.
தமிழ் என்ற சொல் திராவிடம் என்பதன் மரூஉ அல்ல என்ற இம்முடிவு கடந்து, திராவிடம் என்ற சொல்லும் மரூஉவல்ல என்று வேறு பல ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். ஸ்பெயினிலும் ஃபிரான்சிலும் பிரிட்டனிலும் வாழ்ந்த பழங்குடி மக்களின் குருமார் துருயிதர்கள் என்றழைக்கப்பட்டனர். இது திராவிடம் என்ற இனப் பெயருடன் தொடர்புடையது என்று அவர்கள் கருதுகிறார்கள். இது உண்மையானால், தமிழ் என்ற பெயரைப் போலவே, திராவிடம் என்ற பெயரும் மிகப் பழமையான இனப்பெயர் என்று ஏற்படுகிறது.
திருத் தந்தை ஹீராஸ் இரண்டு சொல்மூலப் பகுதிகளும் தொடர்புடையன என்று கருதுகிறார். தமிழ் என்பதன் சொல்மூலம் ‘இழ்’ என்பது. இது மொழியையும் இனத்தையும் குறிக்கிறது. திராவிடம் என்ற சொல் திரை, இடம் என்ற சொற்களாலானது. ‘இடம்’ ‘இழ்’ என்பதனுடன் தொடர் புடையது. ‘இடம்’ என்ற சொல் ‘இழ்’ இனத்தவர் வாழும் தாயகத்தை முதலில் குறித்துப் பின் பொதுவாக இடம் என்ற பொதுப் பொருள் பெற்றது.
ஈழம் என்ற இலங்கையின் பெயர் ‘இழ்’ இனத்தவர் நாடு என்ற பொருளுடையதே.
திரையர் தமிழரின் ஒரு பெரும் பிரிவினர். அவர்கள் கடற் கரையில் வாழ்ந்த நெய்தல் நிலவாணர். அவர்களே உலகெங்கும் பரந்து குடியேறினர். அவர்கள் தாயகம் தமிழகமாகிய திராவிடம் பரவிய இடங்களில் அவர்கள் ‘திரை’ என்ற சொல்லடியாகப் பல இனப்பெயர், இடப்பெயர்கள் பூண்டனர். இத்தாலியில் உரோமர் களுக்கு முற்பட வாழ்ந்த கலைப்புகழ் வாய்ந்த எட்ரஸ்கானர், நடுக்கடலில் கீழ்பால் வாழ்ந்த திரேனியர் பெயர்கள் இதை நினைவூட்டுவன.
நடுநிலக் கடல் சூழ்ந்த நாடுகளிலும் எகிப்திலும் ‘ஊர்’ ‘சேலம்’ என்ற இடப்பெயர், நகர்ப்பெயர்கள், ‘மிடஸ்’ ‘பாண்டியன்’ என்ற அரசர் பெயர்கள், பிற மலைப்பெயர், தெய்வப்பெயர்கள் ஆகியவை தமிழக, தமிழினத் தொடர்பை நினைவூட்டுவனவாயுள்ளன.
ஸ்பெயின் முதல் சீனாவரை பரவி வாழ்ந்த இனம் அல்லது இனத்தின் பெரும்பகுதி திராவிட இனத்துடனும், நாகரிகத் துடனும் நெருங்கிய தொடர்புடையது என்பதில் ஐயமில்லை. இன்றைய உலகிலும் அவ்வினத் தொடர்புடைய பிற புதிய இனத்தவரே நாகரிக உலகில் பெரும் பங்கு கொண்டுள்ளனர். இந்தப் பேரின ஒற்றுமை போதிய அளவில் இன்னம் ஆராயப்படவில்லை என்னலாம்.
தாம் ஆரிய இனத்தவர் என்ற எண்ணமும் அதனடிப்படை யான தவறான பெருமையும், தம் நாகரிகம் ஆகிய இன நாகரிகம் என்ற மாயக் கருத்தும் புது இனத்துடன் கலந்த இந்தத் தொல்பழங்குடி இனத்தவர்களைத் தங்கள் உண்மைத் தாயினத் திலும் தாயகப் பண்பாட்டு மரபிலும் அக்கறையில்லாதவர்கள் ஆக்கியுள்ளன. ஆராய்ச்சியின் நடுநிலை மனப்பான்மை இங்கே கேலிக்குரியதாகி விடுகிறது.
‘ஆரியர்’ என்ற பெயர்க் காரணம்
இந்தியாவில் ஆரிய இன எழுச்சியாளர் தாய்மொழிகளில் சமற்கிருதச் சொற்களை மிகுதியாகக் கலப்பதையே 13 ஆம் நூற்றாண்டு முதல் தம் இனக் கடமையாகக் கொண்டுள்ளனர். அதேசமயம் அதே மூச்சில் எல்லாச் சொற்களும் ஆரியச் சொற்களே என்ற ஆர்வக் கருத்தை வலியுறுத்தவும் அவர்கள் நாடுகின்றனர். ‘திராவிடம்’, ‘தமிழ்’ என்ற சொற்களின் ஆராய்ச்சியில் இப் போக்கை மேலே கண்டோம். ஆராய்ச்சி முடிவு எப்படியிருந்தாலும், தமிழ்ச் சார்பான மெய்ம்மை பரவுவதில்லை. ஏனெனில் தமிழர் இனப்பற்றில் முனைப்புடைய வரல்ல. இதைப் பயன்படுத்தி, தமிழ் சார்ந்த மெய்ம்மைகளைப் புறக்கணிக்க முடிகிறது. தமிழுக்கு எதிரான போலி மெய்ம்மை களைக்கூட உலகில் பரப்ப முடிகிறது. தமிழகத்திலேயே, தமிழன் மூலமேகூட, இவற்றைப் பரப்ப முடிகிறது.
உண்மையில் திராவிட இனம் பழமையானது. தனக்கென ஒரு பெயரும் பண்பும் உடையது. அயலார் அவர்கள் இனப்பெயர்களில் ஏதேனும் ஒன்றைச் சுட்டியே அவர்களை அழைத்தனர். ஆனால் ஆரிய இனம் தனக்கென்று ஒரு பண்பும் பெயரும் இல்லாமலே உலகில் பரவிற்று. இன்று ஆராய்ச்சி யாளர் அவ்வினம் குறிக்க வழங்கும் பெயர் இந்தோ-ஐரோப்பிய இனம் என்பது. இது அவர்கள் பரவிய இடம் பற்றி மேலை அறிஞர் கொடுத்த பெயரன்றி வேறன்று. இந்தியா முதல் ஐரோப்பா வரை பரவியுள்ள இனம் என்பதே இதன் பொருள். இந்தோ-செருமானியர் என்ற பெயரும் சிலரால் வழங்கப் படுகிறது. இப்பெயர் சுட்டுகிற பொருளும் முன்போன்றதே. இந்தியா முதல் செருமனி வரை பரந்த இனம் என்பதே அதன் குறிப்பு.
ஆரியர், உர்- ஆரியர் (மூல ஆரியர்) என்ற பெயர்களும் முன்னால் அவ்வினம் குறிக்க வழங்கின. ஆனால் இப்போது ஆரியர் என்ற பெயர் இந்தியா, பாரசீகம் ஆகிய இரண்டு நாடுகளிலும் பரவிய இந்து-ஐரோப்பிய இனப்பிரிவினை மட்டுமே குறிக்க வழங்குகிறது. இதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. ‘ஆரியர்’ என்ற சொல் சமற்கிருதம், பாரசீகம் நீங்கலாக இந்து - ஐரோப்பிய இனமொழிகள் எதிலும் இடம்பெறவில்லை. இந்த இரண்டு மொழியாளர்கள் மட்டுமே தம்மை ‘ஆரியர்’ அல்லது அதன் திரிபாகிய ஈரானியர் என்ற இனப்பெயரால் குறித்துக்கொண்டனர்.
ஆரியர் என்ற பெயர் இந்த இனம் குறிக்க ஏன் வழங்கப் பட்டது? எவ்வாறு, எப்போது வழங்கப்பட்டது? அதன் பொருள் என்ன? கீழை இந்து - ஐரோப்பிய இனத்தவர் மட்டுமே அதை வழங்குவானேன்? அவர்களின் மேலை உலக உறவினர்க்கு அந்தப் பெயர் ஏன் இல்லாது போயிற்று?
வரலாற்றில் கேட்கப்படாத கேள்விகள் இவை! ஆனால் கேட்கப்பட்டால் வரலாறே இக் கேள்விகளுக்குச் சரியான விடைகள் தரும்.
ஆரியர் என்பதன் சமற்கிருத வடிவம் ‘ஆர்ய’ என்பது; பாரசீக வடிவம் ‘ஈரான்’ என்பது. இவ்விரு மொழிகளிலுமே இதற்கு ‘மேலானவர்’ என்ற பொருளும் உண்டு. இதன் வேர்ச்சொல் ‘ஆர்’ அல்லது ‘ஏர்’ என்பது. கலப்பை, நிறைவு, அழகு என்பன அதன் தொடர்புபட்ட பொருள்கள். உழவுத்தொழில் செல்வ நிறைவையும் அதன் பயனாக அமைந்த வாழ்வு, அறிவு, இன்பம், கலை, பண்பாடு ஆகியவற்றையும் தரவல்லது. தமிழில் ஆர், ஏர் என்ற பகுதிகள் இரண்டிலும் இத்தனை பொருளையும் காணலாம். இந்து -ஐரோப்பிய இன மொழிகளிலேயே இலத்தீன் மொழியில் ‘ஆரா’ என்பது கலப்பையையும் ‘அரியன்’ என்ற வினைச்சொல் உழுதலையும் குறிக்கும். மற்றப் பொருள்களை ஆர்ய, ஈரான் என்ற சமற்கிருத, பாரசீகச் சொற்களில் காணலாம்.
மேற்கூறிய பொருள் வரலாற்று முறையில் மெய்யானது என்பதைப் பழங்கால வரலாற்றுச் செய்திகள் குறிக்கும். சந்திரகுப்தன் காலத்தில் அவன்மீது படையெடுத்து அவனால் தோற்கடிக்கப் பட்ட கிரேக்க அரசன் ஸெல்யூக்கஸ். அவன் சந்திரகுப்தனுக்குத் தன் புதல்வியை மணம் செய்வித்தான். பெண் வழிச் செல்வமாக அவன் கொடுத்த நாடுகள் அல்லது மாகாணங்கள் ஆரியம், ஆரக்கோசியம் என்பன. இவை நடு ஆசியாவில் ‘இந்து கோசுமலை’ என்று இஸ்லாமியர்களால் அழைக்கப்பட்ட மலைப் பகுதியில் உள்ளது.
ஆரிய நாடும் ஆரியரும்
வடபுலப் பனி வெளியில் திரிந்த மக்கள் நாடோடிகள். வீடும் குடியும் நாடும் அற்றவர்கள். உழவும் தொழிலும் அவர்களிடையே கிடையாது. நாகரிகம் குன்றிய இடத்தில் வேட்டையும், சிறிது நாகரிகப்பட்ட இடங்களில் மேய்ச்சல் வாழ்வும் மட்டுமே அவர்களின் வாழ்க்கைத் தொழில்கள். ஆனால் அவர்கள் வேட்டைக்காட்டெல்லையடுத்து, இந்தியாவின் இன்றைய எல்லை கடந்து நிலவிய ஆரியநாடு ஆரியருக்கு முற்பட்ட இந்திய நாகரிகத்தின் தொடர் பால் உழவும் தொழிலும் உடைய நாடாய் அன்றே இலங்கிற்று. அது ‘ஆரிய’ நாடு என்று அழைக்கப்பட்டதன் காரணம் இதுவே.
ஆரிய நாட்டிற்கு வந்த இந்து ஐரோப்பியர் அந்நாட்டின் பண்பாடும் உழவும் தொழிலும் மேற்கொண்டனர். ஆரியநாட்டுப் புரோகிதர் அல்லது வேளாளரையே அவர்கள் தம் புரோகிதர் களாகக் கொண்டனர். அவர்களிடமிருந்தே வேள்வி முறையைக் கற்றுக்கொண்டனர். ஆனால் அவர்கள் இயல்புக்கேற்ப, அது கொலைவேள்வியாக இருந்தது. புதிதாகக் கற்ற உழவுப் பண் பாட்டையும், புதிதாக ஆக்கிக்கொண்ட கொலை வேள்வி முறையையும் உடைய இவர்கள் பாரசீகத்தில் பரந்தனர். அந்நாட்டின் நாகரிகம் ஆரிய நாட்டினும் உயர்ந்தது. இதனால் ஆரியப்பெயர் பூண்ட மக்கள் அவர்களுடன் கலந்து இன்னும் நாகரிக உயர்வு பெற்றனர். ஆனால் அப்பண்பாட்டுக் கலப்பை எதிர்த்தவர்கள் அங்கே பெருகினர். அவர்கள் புதிய கலப்பின ஆரியரின் கொலை வேள்வியையும் குடியையும் வெறுத்தனர். திருவள்ளுவர் போன்ற, புத்தர் போன்ற, மகாவீரர் போன்ற ஓர் அறிஞர் அவர்கள் தலைவராயினர். அவரே பார்சிகளின் மூதாதையான ஜரதுஷ்டிரர். அவர் செல்வாக்கு மிகுதியானதால், கொலை வேள்வியை ஆதரித்த ‘ஆரியர்’ அதாவது ஆரியநாட்டின் பண்பாடு பெற்ற கலப்பினத்தார் சிந்து ஆற்றை நோக்கி ஓடிவந்தனர்.
இவர்களே ‘இந்திய ஆரியர்’ என்ற பெயருடன், இந்தியா விலுள்ள பழங்குடியினருடன் கலந்து, மேன்மேலும் நாகரி கமுற்றனர். கங்கை ஆற்றங்கரைக்கு வருவதற்குள் அவர்கள் நாகரிகம் கிட்டத்தட்டப் பழங்குடி மக்கள் நாகரிகமாயிற்று. அவர்கள் மொழி பழங்குடிமக்கள் பண்பட்ட மொழிகளின் பண்பை அழித்தாலும் அவற்றுடன் கலந்துதான் பண்பட்டது.
கங்கைக்கரையில் பண்பட்ட ஆரியரால் கி.பி. 3 ஆம் நூற்றாண்டளவில் வகுத்துக்கொள்ளப்பட்ட புதிய ஆரியக் கலவை மொழியே சமற்கிருதம்.
ஆரிய மொழியும் நடுநிலக் கடலக, திராவிட மொழிகளும்
மேற்கூறிய விளக்கத்தில் ஆரிய இன எழுச்சியாளர் இரண்டு குறைகள் காணமுடியும். ஒன்று ஆர், ஏர் என்ற தமிழ்ச் சொல்லும், ‘ஆரா’ என்ற இலத்தீனச் சொல்லும் இரு வேறு மொழியினச் சொற்களாயிற்றே! தமிழ் திராவிட இனமொழி. இலத்தீனம் இந்து ஐரோப்பிய அதாவது ஆரிய இன மொழி. அவை எப்படித் தொடர்புபட்ட பொருள் கொள்ளக்கூடும்? அவற்றினடிப்படையில் ‘ஆரிய நாடு’ அமைதல் எவ்வாறு?
ஆரியர் அதாவது இந்து ஐரோப்பியர் வருமுன் ஆரிய நாட்டில் வாழ்ந்த மக்கள் இந்து-ஐரோப்பிய இனத்தவரல்ல. அவர்கள் பண்டை மொழி இந்தியப் பழங்குடி இனமொழிகளுடன் தொடர்புடையதாக இருந்திருக்கக் கூடாதன்று. கீழை இந்து-ஐரோப்பியரும் அவர்கள் மொழிகளும் ஆரியரல்லா இனங்களுடனும் அவர்கள் மொழிகளுடனும் கலந்ததுபோல, கிரேக்க இலத்தீன மக்களும் நடுநிலக் கடலக நாகரிக மக்களுடனும், அவர்கள் மொழிகளுடனும் கலந்தனர். ஆகவே இலத்தீனிலும் ஆரிய நாட்டிலும் தமிழிலும் உள்ள ஒரே பொருளுடைய வேர்ச் சொற்கள் நடுநிலக் கடலக நாகரிகத்தை உள்ளடக்கிய தென் உலகப் பேரினங்களின் பொதுச் சொற்களாகவே கொள்ளத்தக்கவை. அவை அனைத்தும் அன்று ஒரே இனத்தின் வகை பிரிவுகளாகவோ, ஒரே இனப்பண்பாட்டில் இழைந்து வளர்ந்த இனங்களாகவோதான் விளங்கின.
‘பழைய,’ ‘புது’ ‘பல’ போன்ற பல தமிழ்ச்சொற்கள் கிரேக்க மொழியிலும், ‘ஒன்று’ ‘எட்டு’ முதலிய சொற்கள், பத்தடுக்கிய (பதின்மானம் decimal) எண்முறை ஆகியவை எல்லா ஆரிய மொழிகளிலும் உள்ளன. ஒன்றன்பால் விகுதி (து), பலவின்பால் விகுதி (அ), அணிமைச்சுட்டு (இ), தொலைச் சுட்டு (அ) முதலிய அடிப்படையிலக்கண அமைதிகள் தமிழுக்கும் ஆரிய மொழிகள் பலவற்றுக்கும் பொது ஆகும். இவற்றால் தென் இந்து ஐரோப்பிய இனம் சிறப்பாகவும், வட ஐரோப்பிய இனம் குறைவாகவும் நடு உலக இனத்தொடர்பின் அளவிலேயே ஒற்றுமை வேற்றுமைகள் உடையன என்று காணலாம்.
தவிர, இந்திய ஆரியர் மட்டுமே தாயகமாக, ஆரிய நாட்டை என்றும் சுட்டினர். அதற்கு அவர்கள் கொடுத்த பெயர் ‘உத்தர குரு’ என்பதாம். அதையே அவர்கள் பின்னாளில் தங்கள் ‘பிதிரர்’ அல்லது மூதாதையரது உலகாகவும், இன்ப உலகாகவும் வருணித்தனர்.
ஆரியர்கள் உழவும் குடியிருப்பும் ஆரிய நாட்டில் ஓரளவு பயின்றாலும் தங்கள் நாடோடி வாழ்க்கையை இந்தியா வந்த பின்னும் புத்தர் காலத்துக்குச் சற்றுமுன் வரை (கி.மு. 7 ஆம் நூற்றாண்டுவரை) விடவில்லை. அவர்கள் பழைய நாட்டுப் பெயர்களில் ஏற்படும் குழப்பத்துக்கு இதுவே காரணம். ஓர் ஆண்டு ஒரு நாடு சிந்து ஆற்றங்கரையில் இருக்கும். அடுத்த சில ஆண்டுகளில் ஆற்றங்கரைதான் இருந்த இடத்தில் இருக்கும், நாடு கங்கைக் கரைக்கு வந்துவிடும்!
சமற்கிருத மொழி இலக்கிய மொழியானபோதே அது வழக்கிழந்த மொழியாயிற்று. ஆனால் இலக்கிய மொழியாகுமுன் அது இன்றைய ‘இந்தி’ போலப் பேச்சு மொழியாய் இருந்தது. உண்மையில் சமற்கிருதத்தின் தாய் மூலமொழி ‘இன்றைய பண்படா இந்தி’யின் தாய் மூலமான மூவாயிர ஆண்டுக்கு முற்பட்ட ’பண்டைக் காலப் பண்படா இந்தி’யேயாகும். அந்த மூலப் ’பேச்சு மொழிச் சமற்கிருதம்’ உருவாகும் காலத்தில் ஆரியர் நாடோடிகளாக இருந்தனர். இவ்வாழ்வின் சின்னத்தை சமற்கிருத மொழி இன்னும் தாங்கித் திரிகிறது. அதில் இன்றும் நாட்டுப் பெயர்கள் அஃறிணைப் பெயர்களல்ல, உயர்திணைப் பெயர்கள், ஒருமைப் பெயர்களல்ல, பன்மைப் பெயர்கள். அதாவது பாண்டிய நாடு என்பதன் சமற்கிருதம் ‘பாண்டியர்கள்’ என்பதே. ‘இராமன் கோசலத்திலிருந்து விதேகத்துக்குச் சென்றான்’ என்பதன் சமற்கிருதமொழிப் பாணி இன்றும் ‘இராமன் கோசலத்தாரிடமிருந்து விதேகத்தாரிடம் சென்றான்’ என்பதே. அன்று அவர்கள் நாடு, வீடும் தெருவும் ஊரும் நகரும் உடைய நாடல்ல, நாடோடிக் கும்பல்களாகத் திரண்டு இடத்துக்கிடம் சென்ற ஒரு மந்தையாகவே இருந்தது என்பதை இது காட்டுகிறது.
தாய்மொழி எது? கலப்பு மொழி எது?
சமற்கிருதத்திலும் தாய்மொழிகளிலும் ஒரு சொல் இருந்தால், ஆரிய இன எழுச்சியாளர் உடனே துள்ளிக்குதித்து, அது சமற்கிருதச் சொல் என்று கண்டுபிடித்து விடுவார்கள்! உண்மை மறுபுறமும் இருக்கலாம் என்பதை அவர்கள் குடுவை மருட்சி காணவிடுவதில்லை.
இந்தி, வங்காளி முதலிய சிந்து கங்கைவெளித் தாய் மொழிகள் சமற்கிருதத்தையே தாய் மூலமாகக் கொண்டவை என்பது ஆரிய இன எழுச்சியாளரின் ஆராயா இயற்கை முடிபு! இந்தியாவின் அறிஞர்களில் பெரும்பாலாரும், மேலை அறிஞரில் பெரும்பாலாரும் இதைக் கண்மூடி ஏற்றுக்கொண்டு, அதன் அடிப்படையிலே இலக்கணமும் மொழி நூலும், ஆராய்ச்சிகளும் வரலாறுகளும் எழுதிவிடுகின்றனர்!
இந்த மாயக்கோட்டையை எவரும் தட்டிப் பார்ப்பதில்லை!
உண்மை இதற்கு நேர்மாறானது! சமற்கிருத வழக்கும் ஆராய்ச்சியுமே இதற்குச் சான்றுதரும்! தந்துவிட்டு, மாயக் கோட்டையில் வாளா அமர்ந்து விடவும் செய்யும்!
சமற்கிருதம் என்ற சொல் திருந்திய மொழி என்னும் பொருளுடையது. அதன் எதிர் வழக்கு ‘பிராகிருதம்’ அதாவது இயற்கை மொழி அல்லது திருந்தா மொழி என்பது. இது செந்தமிழ், கொடுந் தமிழ் என்ற தமிழ் வழக்கை நினைவூட்டுவது. பிராகிருதம் முற்பட்டது. ஆனால் இலக்கியப் பண்பற்ற தாய்மொழி. சமற்கிருதம் பிற்பட்டது. ஆனால் இலக்கியப் பண்புடையது. அசோகன் காலத்தில் பிராகிருத வகைகளே இருந்தன. அசோகனும் அவனுக்கு முன் புத்தரும் பேசிய பாளியும், மகாவீரர் பேசிய அர்த்தமாகதியும் அவற்றுட்பட்டவையே. இன்றைய இந்தி, வங்காளி ஆகியவற்றின் பழைய வடிவங்களே இந்தப் பிராகிருதங்கள்.
சமற்கிருதம் பிராகிருதத்தைத் தாய்மூலமாகக் கொண்டது.
பிராகிருதங்கள் இந்தி, வங்காளி ஆகிய தாய்மொழிகளின் பழைய வடிவங்கள்.
பண்டைய இந்தி, வங்காளியின் உயிருடைய பிள்ளைகள் இன்றைய இந்தி, வங்காளி. அதே இந்தி, வங்காளி ஆகியவற்றின் உயிரற்ற பொம்மைப் படைப்பு, சமற்கிருதம்.
இந்தியும், வங்காளியும் ஓரினத் தொடர்புடைய தனி மொழிகள் அல்லது ஒரே தாய்மொழியின் வகை பேதங்கள். ஆனால் சமற்கிருதம் அவற்றின் கொண்டு கூட்டாக எழுந்த செயற்கைக் கலவை மொழி.
இந்த உண்மைகள் இந்திய மொழி வரலாற்றறிஞர் அறியாதன அல்ல. எல்லா மொழி நூல்களிலும் இந்த உண்மையைக் காணலாம். ஆனால் முழு உருவிலல்ல; துண்டு துண்டாக, தெனாலிராமன் வரைந்த குதிரை வடிவங்கள் மாதிரியிலேயே! மேலும் ஆராய்ச்சி முடிவை ஆராய்ச்சியாளரே மறந்து, இந்த உண்மைகளைச் சுட்டிக்காட்டிய ‘அத்தியாயம்’ கடந்து அடுத்த ‘அத்தியாயத்தில்’ சமற்கிருதம் மூலத்தாய் மொழி என்ற ’இனமருட்சி’யில் இழைந்து விடுவர். ஆராய்ச்சிக் கோட்டையை விட்டு அவர்கள் மாயக் கோட்டையில் புகுந்துவிடுவர்.
தமிழ் தெலுங்கு போல, இந்தி வங்காளி போல, சமற்கிருதம் இயற்கை மொழியல்ல. தனி மொழியுமல்ல. இன மூல மொழியு மல்ல. அது செயற்கை மொழி. பல மொழிகளின் கூட்டுச் சரக்கான கலப்பு மொழி. இந்த உண்மையை மொழி நூலடிப்படையிலேயே காட்டமுடியும். தாய் மொழிகளில் சமற்கிருதச் சார்பற்ற சொற்கள் உண்டு. சமற்கிருதச் சார்புடையவை என்று கருதப்படும் சொற்களில்கூட மிகப் பல தாய்மொழிகளிலிருந்து சமற்கிருதம் மேற்கொண்ட சொற்களே. மேலும் சமற்கிருதத்திலில்லாத தனி ஒலிகளாகத் தமிழில் ற, ழ இருப்பது போல’ இந்தி வங்காளியிலும் உண்டு. இந்தியின் இருவகை எழுத்து மொழிகளின் மூலமாகிய, சமற்கிருதம், பாரசீகம் ஆகிய இரண்டு எழுத்து முறைகளிலுமே இந்த எழுத்துக்கள் இல்லை. ஆகவே இந்திக்கும் உருதுவுக்கும் எழுத்தமைத்தவர்கள் குத்துக்கள் இட்டு அல்லது சேர்த்து அவற்றை எழுதுகின்றனர். இவை திராவிட இனத்தின் சிறப்பெழுத்துக்களாக ஒலி நூலார் கருதுகின்ற ’ட’வின் வடிவங்கள் என்பதும், ஒலியில் ற, ழ என்ற தமிழ் சிறப்பெழுத்துக்கள் போன்றவை என்பதும் குறிப்பிடத்தக்கன.
தமிழும் சமற்கிருதமும்
‘ஆரியம், வடமொழி, சமற்கிருதம்’ ஆகிய மூன்று சொற்களும் இன்று தமிழில் ஒரே பொருளுடைய பல சொற்களாக வழங்கப் படுகின்றன. என்றும் எப்போதும் எங்கும் இதே வகையில் அவை ஒரு பொருட் சொற்கள் என்றும் கருதப்பட்டு விடுகின்றன. இது உண்மையில் சொல் மருட்சி அதாவது அறிஞர் பேக்கன் வகுத்த சமூக மருட்சியேயாகும். ஏனெனில் அவை காலத்துக்குக் காலம், இடத்துக்கிடம் பொருள் திரிபும் தொனி மாறு பாடும், சில சமயம் தொடர்பற்ற பிற பொருளும் கொள்பவை ஆகும்.
சமற்கிருதம் கங்கை நாட்டில் கி.பி. 3 ஆம் நூற்றாண்டிலிருந்து உருவாகி கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் இலக்கிய வடிவம் பெற்ற பண்பட்ட மொழியின் பெயர் ஆகும். ஆனால் அது சில சமயம் பாணினிக்கு முற்பட்ட காலத்துப் புராண இதிகாச மொழிக்கும் அதற்கும் முற்பட்ட வேத மொழிக்கும் சேர்த்து வழங்கப்பட்டு விடுகிறது. மூன்றும் தொடர்புடைய மொழிகளானாலும், ஒரே சொல்லால் மூன்றையும் வழங்குவதனால் குளறுபடி ஏற்படுவது இயல்பு. ஆனால் இந்தக் குளறுபடி சமற்கிருதப் பற்றாளருக்கும், ஆரிய இன எழுச்சியாளருக்கும் சாதகமாயிருப்பதனால், அதை யாரும் கண்டுகொள்வதில்லை.
சமற்கிருதத்துக்கு இலக்கிய இலக்கணப் பெருமை உண்டு. பழமை, சமயச்சார்பு இரண்டும் கிடையாது. புராண இதிகாச மொழிக்கு ஓரளவு சமயச்சார்பு உண்டு. பழமையோ இலக்கிய இலக்கணப் பெருமையோ கிடையாது. வேதமொழிக்குப் பழமைச் சிறப்பு உண்டு. இலக்கிய இலக்கணப் பெருமை கிடையாது. சமயச் சார்பிலும் இந்திய பொது மக்களின் சமய வாடையே அதில் இல்லை.
தவிர, சமற்கிருதம் தமிழைப் போன்ற சொல்வளமுடைய மொழி. புராண இதிகாச மொழியில் இது குறைவு. வேதமொழி இன்னும் குறைபட்டது.
மூன்று மொழிப் பெயரும் ஒன்றாகக் கூறுவதால் ஆரிய இன எழுச்சியாளருக்குத் தம் மொழியாக ஒரே மொழிக்கு மூன்று பெருமையும் தரமுடிகிறது. அழகுடையவள், அறிவுடையவள், நல்லவள் என்ற மூவேறு சிறப்பும் கொண்ட மூன்று அணங்குகளின் சிறப்பு வேறு, மூன்றும் ஒருங்கே உடைய ஒரே அணங்கின் சிறப்பு வேறு.
தவிர, சமற்கிருதம் பாளி பாகதங்களுக்குப் பிற்பட்டது. சமற்கிருத இலக்கியம் தமிழ்ச் சங்ககால இலக்கியத்துக்கும் திருக் குறளுக்கும் மிகவும் பிற்பட்டது. மூன்றையும் ஒரு மொழியாகச் சொல்வதன் மூலமே மூன்றும் ஒன்றான அம்மொழி தமிழை ஒத்த பழமையுடையதென்றும், இலக்கியப் பண்புடையதென்றும், தமிழைப்போலவே மக்கட்சமயச் சார்புடைய தென்றும் இரண்டாயிர ஆண்டுகளாக மக்களையும் அறிஞரையும், தமிழகத்தையும் உலகத்தையும் நம்பவைக்க முடிகிறது. தமிழ்ப்பற்றில் முனைப்பற்ற தமிழர் இதை நம்பும்படி செய்வது வியப்பன்று. மேலை அறிஞரையும் இதுவே தமிழ்பற்றிய அக்கறை எதுவும் இல்லாதவராக்கியுள்ளது.
வடமொழி என்ற சொல் வழக்கு
வடமொழி என்ற சொல் தென்மொழி என்பதன் எதிர்வழக்கு என்பது தெளிவு. இந்த வழக்கே அவ்விரு சொற்களும் பெருக்கமாக வழங்கப்பட்ட கால நிலையைக் காட்டுகிறது. தமிழுடன் ஒப்பாக சமற்கிருதம், சமற்கிருதத்துடன் ஒப்பாகத் தமிழ் வளர்ச்சியுற்ற ஒரு நிலையை அது சுட்டிக்காட்டுகிறது. அதே சமயம் இவற்றுடன் போட்டியிடும் தாய்மொழிகள் இல்லா நிலையையும் அது குறித்துக் காட்டுகிறது. இச் சூழ்நிலைகள் கி.பி. 5 முதல் 10ஆம் நூற்றாண்டு வரை உள்ள நிலைமைக்கே உரியவை. பத்தாம் நூற்றாண்டுக்குப் பின் மற்றத் தாய்மொழிகளும் இலக்கிய மொழிகளாக வந்து போட்டியிட்டன. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்னோ தமிழ் மொழி மட்டும் இலக்கிய மொழியாய் இருந்தது. சமற்கிருதம் இலக்கிய மொழியாய் அதனுடன் போட்டியிடும் நிலையில் இல்லை. அம்மொழி அன்று பிறக்கக்கூட இல்லை.
தாய்மொழிகள் பலவும் இலக்கிய மொழியானபின், தமிழ் தாய் மொழிகளுள் ஒன்றாயிற்று. சமற்கிருதத்தின் மதிப்பு, தாய் மொழிகள் அனைத்துக்கும் பொதுவான மொழி என்ற முறையில் உயர்வுற்றது. புராண இதிகாச மொழிபெயர்ப்புகள் பெருகப் பெருக, சமற்கிருதம் மூலமொழி என்ற மயக்கம் ஏற்படத் தொடங்கிற்று.
வடமொழி என்ற சொல் சமற்கிருதம் என்ற சொல்லைப் போலவே இலக்கிய மொழி, புராண மொழி, வேத மொழி மூன்றிற்கும் வழங்கிய காலம் 10ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே ஆகும். 5 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரோ அது சமற்கிருதத்தைக் குறிக்கவில்லை. தென்மொழி, வடமொழி என்ற இணை வழக்கும் கிடையாது. வடமொழி என்ற சொல் புராண மொழிக்கும் வேத மொழிக்கும் அன்று வழங்கியிருக்கக்கூடும்.
தொல்காப்பியத்தில் ‘வடசொல்’ என்ற வழக்கு உண்டு, ’இயற்சொல், திரிசொல், வடசொல், திசைச்சொல் என்ற நான்கு வகைத் தமிழ்ச் சொற்களில் ஒன்றாகவே அது இங்கே குறிக்கப் படுகிறது. இங்கே வடசொல் என்பதை வடமொழியின் சொல் அதாவது சமற்கிருதத்தின் சொல் என்று கொள்வது இன்று இயல்பாகத் தோற்றலாம். தோற்றக்கூடும். தோற்றுகிறது. வடசொல்லை வட எழுத்து நீக்கி மேற்கொள்க என்ற தொல்காப்பியர் கட்டளையும் இதை வலியுறுத்துவதாகவே அமைகின்றது. திசைச் சொல்லும் இதற்கேற்ப அயல் மொழிச் சொற்கள் என்ற பொருளைக் கொள்கிறது. மற்ற அயல் மொழிச் சொற்களுக்கில்லாத தனிச் சிறப்புடைய அயல் மொழிச் சொல்லாக, வட மொழிச் சொல் தொல்காப்பியர் காலத்திலேயே கொள்ளபட்டிருந்தது என்று நம்புவதும் இன்று நமக்கு எளிதே. இப்பொருள்களுடன் உரையாசிரியர்கள் முற்றிலும் அமைந்தனர்.
தொல்காப்பியமும் அறிஞர் பா.வே. மாணிக்க நாயகரும்
அறிஞர் பா.வே. மாணிக்க நாயகர் ஒருவரே இப் பொருள்களின் அமைதியில் ஐயம் கொண்டு வினா எழுப்புகிறார். ‘வடசொல் வடமொழியல்ல, அதாவது சமற்கிருதச் சொல்லல்ல; திசைச் சொல், அயல் மொழிச் சொல் அல்ல’ என்பதே அவர் கருத்தாகத் தெரிகிறது.
தொல்காப்பியம் எவ்வளவு பழமை வாய்ந்த நூல் என்பதை நாம் இன்று வரையறுத்துக் கூறமுடியாது. அதற்கான சான்றுகள் கிட்டவில்லை. ஆயினும் அது கடைச்சங்க காலத்துக்கு மிகவும் முற்பட்டது என்பது அறிஞருள் மிகப் பெரும்பாலோர் முடிவு. இன்றோ, உரையாசிரியர் காலத்திலோ, சங்க காலத்திலோகூட வழக்கிலில்லாத சொற்கள், வழக்குகள், இலக்கண மரபுகள், நூல் வழக்குகள், நூல் வகைகள், நாகரிகம் ஆகியவை தொல்காப் பியத்தில் காணக்கிடக்கின்றன. பல சூத்திரங்கள் சொல் எளியனவா யிருந்தும் இன்று பொருளே விளங்காதன ஆகின்றன. இவை அதன் தொல் பழமையை வலியுறுத்தும். அது கி.மு. 5 ஆம் நூற்றாண்டுக்கு பிந்தியதென்று எவரும் கூறமுடியாது.
இத்தனை பழமையான காலத்தில்கூட தமிழர் மேற் கொள்ளத்தக்க சொல்லாட்சியுடைய இலக்கிய மொழி கீழை உலகில் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. சங்க காலத்திலேயே நாம் பிறமொழி பற்றிய கருத்து எதனையும் தமிழில் காணமுடியாது. சிலப்பதிகாரத்தில் வரும் வடமொழி வாசகம் பஞ்சதந்திரத்திலுள்ளது. ஆனால் அது சமற்கிருத பஞ்சதந்திரமாய் இருக்க வேண்டுமென்றில்லை. பஞ்சதந்திரம், உதயணன் கதை ஆகியவற்றின் மூலமொழி பாளி, பாகதம், பேய் மொழி ஆகிய அக்காலத் தாய்மொழிகளே. அம் மொழிகள் மட்டுமல்ல, இலக்கியங்களும் என்றோ இறந்து விட்டன.
சமற்கிருதத்துக்கே அன்று இலக்கிய வளம் இல்லை யானால், வேறு திசைமொழி, அயல் மொழிகளுக்கு இடம் இருக்க முடியாது.
உண்மையில் திசைச்சொல் என்பது சமற்கிருத வாணரின் ‘தேசியம்’ என்ற வழக்குச் சொல்லே. இலக்கியத் தமிழில் வழங்காத வழக்குச் சொற்களில் பல இன்னும் உண்டு. பல இன்றும் தெலுங்கு, கன்னட, துளு, மலையாளங்களில் வழங்குவதுண்டு. இவற்றையே பிற்காலத்தார் அயல் மொழிச் சொற்கள் என மயங்கினர் என்பது தவறன்று.
வடசொல் என்பது நூல்கள் அதாவது அறிவுத் துறை ஏடுகள், சிறப்பாக, சமயத்துறை ஏடுகள் சார்ந்த கலைத்துறைச் சொற்களாக இருத்தல்கூடும் என்ற மாணிக்க நாயகர் கருத்து தவறுடையது என்று தோற்றவில்லை. வருங்கால ஆராய்ச்சிகள் இன்னும் இதை வலியுறுத்தக் கூடும்.
பெயர், வினை, உரி, இடை என்ற சொற்பாகுபாடும் இதனை வலியுறுத்தும். இது இலக்கணப் பாகுபாடு. முந்தியது வழக்குப் பாகுபாடு என்பது தெளிவு.
இயற்சொல் இலக்கியத்திலும் உலகவழக்கிலும் ஒருங்கே வழங்கும் சொல்.
திரிசொல் என்பது இலக்கியத்தில் மட்டுமே, அதுவும் பண்டை இலக்கியத்தின் அருமரபு வழக்காக வழங்கும் சொல். தொல்காப்பியர் காலத்தில்கூட அருவழக்காய்ப் போய்விட்ட சொற்களாக, அவை இருத்தல் வேண்டும். நமக்குச் சான்றுகள் அல்லது எடுத்துக்காட்டுகள் இல்லாத விதிகளுக்குரிய சொற்களில் இவையே பலவாக இருந்திருத்தல் வேண்டும்.
திசைச்சொல் உலகவழக்கில் வழங்கி இலக்கியத்தில் புது வழக்காக எடுத்துக்கொள்ளப்படுவது. தவிர நாடக வழக்கிலும், உலகியல் வழக்கிலும் இதுவே எளிதில் இடம்பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வடசொல் மந்திரச் சார்பான பண்புடைய சொல்.
இலக்கணப் பாகுபாட்டில்கூட, பெயரும் வினையுமே தமிழின் எல்லாச் சொற்களும். தொல்காப்பியர் இவற்றையே தன் கருத்தாகச் சொல்வகைகள் என்றார். இடைச்சொல் போன்றது. உரிச்சொல் பண்பு குளித்த சொல் என்பது சொற்பொருளின் இலக்கணமேயன்றிச் சொல்லின் இலக்கணமன்று, இலக்கியத்துக்கே பெரிதும் உரித்தான சொல் என்பது அதற்குரிய இலக்கணம் என்னலாம்.
இடையும் உரியும் சொல் வகைகளாகவது முற்றிலும் சொல் இலக்கணத்தாலும் அன்று, வழக்காலும் அன்று. ஆகவேதான் வழக்குவகை நான்கிலுள்ளும் சேர்க்காமல், முற்றிலும் சொல் வகையிலும் சேர்க்காமல் தொல்காப்பியர் அதைச் சொல்வகை யுடன் ஒட்டவைத்தாராதல் வேண்டும்.
ஆரியம் என்ற சொல் வழக்கு
சமற்கிருதம், வடமொழி ஆகிய சொற்களைவிட, ஆரியம் என்ற சொல் கால இடவேறுபாடு மிகுதி உடையது. இன்று சிலரால் முழு இந்து - ஐரோப்பிய இனத்தையும், சிலரால் அதன் இந்திய பாரசீகக் குழுவினரையும் குறிக்க அது வழங்குகிறது. பண்டைத் தமிழரால் இது பிற்காலத்தில் பொதுவாக வடநாட்டவரைக் குறிக்க வழங்கப்பட்டது. தமிழராலும் புத்த சமண நூலாராலும் கங்கை நாட்டில் கி.மு. 7 ஆம் நூற்றாண்டிலிருந்து வளர்ந்த கங்கை நாட்டு நாகரிக இனத்தைக் குறிக்கவே அது முற்காலத்தில் (புத்தர் காலம் அல்லது சங்ககாலத்தில்) வழங்கப்பட்டது. புத்தரையும், சமணரையும் இது சிறப்பாகக் குறித்தது. சிற்சில இடங்களில் இது வேத மொழியாளரைக் குறிக்கவும் அதை வழங்கிய ஆரியப்பார்ப்பன வகையினரைக் குறிக்கவும் வழங்கிற்று. சிலசமயம் தமிழ்ப் பார்ப்பனர், புத்த சமண சமயப்பார்ப்பனரையும் ஒருங்கு சேர்த்துக் குறிக்க அது வழங்கிற்று.
திருவள்ளுவரும் பிற தமிழரும் ஆரியப் பார்ப்பனரல்லாத மற்ற அருட் பார்ப்பனரைக் குறிக்கவே ‘அந்தணர்’ என்ற சொல் வழங்கினர். இவர்கள் ஆரியப் பார்ப்பனரைப் போல் கொலை வேள்வி செய்யவில்லை. ஊன் உண்ணவில்லை. மது அருந்த வில்லை. தென்னாட்டில் இவர்கள் தொகை பெரிதாயிருந்தத தனால், ஆரியப் பார்ப்பனரும் அவர்கள் வழிநின்று திருந்தினர். திருந்திய இந்தப் பார்ப்பனரையே ‘பிற்கால’ நூல்களான சமற்கிருத மனு, சுமிருதி போன்ற ஏடுகள் ‘திராவிடப் பார்ப்பனர்’ அல்லது ‘திராவிடர்’ என்று சிறப்பித்தன.
கி.மு. 7 ஆம் நூற்றாண்டுக்கு முன் சிந்து கங்கைவெளியிலே கங்கை நாட்டவர் கலப்பாரியராகவும் சிந்துவெளி நாட்டவரே - சிறப்பாக ஆப்கனிஸ்தான் எல்லையில் உள்ளவரே நல்ல ஆரியராகவும் கருதப்பட்டனர். இக்காலத்திலே காசியும் கங்கையும் ஆரியரால் மதிக்கப்பெறவில்லை. ஐந்து சிந்து ஆற்றுக் கிளைகளுடன் சிந்துவும் காபூல் ஆறும் சேர்ந்து ஏழு ஆறுகளுமே புனித ஆறுகள். அவற்றின் நிலமே புண்ணிய தேசமாய் இருந்தது.
மூல முதற்பொருளில் ஆரியர் என்பது இந்து ஐரோப்பிய இனத்தின் பெயரல்ல; தமிழினத்துடன் தொடர்புடைய ஒரு ஆரியரல்லா நாகரிக நாட்டினர் பெயர் என்று மேலே காட்டினோம்.
வரலாற்றின் மருட்சிகள் அனைத்திலும் சமற்கிருதம், வட மொழி, ஆரியம் ஆகிய சொற்களின் பொருட் பிறழ்ச்சியும், மாறுபாடுமே பெருத்த இடர்பாட்டுக்குக் காரணமாய் உள்ளன. ஆராய்ச்சியாளர் இச்சொற்களைத் திட்ப நுட்பமுடைய சொற்களைக் கொண்டு விளக்கி வரையறுத்தே பயன்படுத்தல் வேண்டும்.
வரலாற்றின் வினாக்கள்
என்ன? எப்படி? ஏன்?
அறிவார்வத்தின் மூன்று படிகளை, அறிவின் மூன்று தளங் களைக் குறித்துக் காட்டுபவை இந்தக் கேள்விகள்.
என்ன என்ற படி கடந்து எப்படி என்பதை விளக்குபவை இயல் நூல் துறைகள். ஏன் என்ற படியில் விளக்கம் நாடுவது மெய்விளக்கத் துறை மட்டுமே.
என்ன, எப்படி என்ற இரண்டு படிகளை முற்ற முழுக்க விளக்குவதுடன், ஏன் என்ற படியையும் எட்டிக் காண்பது வரலாறு. என்ன என்பதன் கூறுகளாக எங்கே, எப்போது, யார், யாரால் முதலிய வினாக்களை எழுப்பி அது விளக்கம் தருகிறது. எப்படி என்பதைக் காலமுறைப்படுத்தி எவ்வாறு என்று காட்ட முனைகிறது. என்ன என்பதனுடன் எது, எத்தன்மையது, எப்பண்புடையது, எத்தகைய சூழலுடையது என்பவற்றை விளக்குவதன் மூலம் அது வளர்ச்சியின் போக்கையும், வளர்ச்சிக் குறிக்கோளின் எல்லையையும் சுட்டிக் காட்டுகிறது. வளர்ச்சிப் போக்கிலுள்ள வளர்ச்சிப் பண்புகளையும் தளர்ச்சிப் பண்புகளையும் பிரித்துக் காட்டுவதன் மூலம் அது இயற்கையின் அகக் குறிக்கோள் காட்டி ‘ஏன்’ என்ற வினாவுக்கும் விடை தேடுகிறது.
ஏன் என்ற வினாவை எழுப்பினால் நாம் வரலாற்றில் காணும் விளக்கம் மிகுதியாயிருக்கும்.
வட ஆரிய அதாவது வட இந்து - ஐரோப்பிய இனம், தென் இந்து- ஐரோப்பிய இனம் ஆகியவற்றின் நாகரிக வாழ்வுக்கு இடையே இரண்டாயிர ஆண்டுகளுக்கு மேற்பட்ட இடைவெளி காணப்படுவானேன்? அந்தத் தென் ஆரிய நாகரிகமும் கீழ்த்திசை நோக்கிச் செல்லுந்தோறும் பொதுவாகப் பழமையிலும் வளர்ச்சியிலும் மேம்படுவானேன்? இப்பொதுப் போக்குக்கு ஏதேனும் அடிப்படைக் காரணம் இருக்கக்கூடுமா? இருக்கக் கூடுமானால், அப்பொதுப் போக்குக்கு மாறான செய்திகளை எப்படி விளக்கலாம்?
நடுக் கடலக நாகரிகத்தின் தொடர்பாலேயே இந்து - ஐரோப்பிய இனம் நாகரிகப் பண்புற்றது என்பதை முதற் கேள்வி சுட்டிக்காட்டுகிறது. ஆனால் இரண்டாவது கேள்வி பொதுப் போக்கின் அடிப்படை, அதற்கு மாறான தனிச் செய்திகள் ஆகிய இரண்டையுமே விளக்கவல்லது. பொதுப்போக்கு அதன் பொது விதியாகவும், சிறப்புச் செய்திகள் அதன் விலக்குகளாகவும் இரண்டுமே விளக்கம்பெறும்.
படர்கொடியின் வேர்முதல்
மேடு பள்ளமாகக் கிடந்த ஒரு பெருநிலப் பரப்பில் கொடிகள் படர்ந்து கிடக்கின்றன. பரப்பு பல தோட்டப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கொடிகள் எங்கும் கிட்டத்தட்ட ஒரே பருவத்தில் பூத்துக் காய்த்துக் கனிவளம் தருகின்றன. அவ்வத் தோட்டத்திற்குரியோர் அவ்வத் தோட்டத்தின் கனிவளத்தைப் பெறுகின்றனர்.
எவ்வளவு நீரும் உரமும் இட்டும் சில பகுதிகள் படுகின்றன. எதுவும் செய்யாமலே சில வளம் பெறுகின்றன. ஒவ்வொரு கொடி பட்டாலும் ஒவ்வோரிடத்தில் வேறு சில கொடிகள் படாமல் தழைக்கின்றன. ஆனால் பொதுவாக ஒவ்வொரு தோட்டமாகக் கொடிகள் வெம்பி வெதும்புகின்றன. ஒருசில பகுதிகளில் மட்டும் சில தோட்டங்களில் கொடி படாதிருக்கின்றன. அவற்றுள்ளும் ஒரு பகுதியில் வளர்ச்சி நீடிக்கிறது. ஒரு பகுதியில், நடுப்பகுதியிலல்ல வென்றாலும் நடுப்பகுதியிலிருந்து சற்று விலகிய இடத்தில், ஒரே ஒரு தோட்டத்தில், அது கடைசிவரை படாமல் நின்று, அடுத்த மழையில் மீண்டும் தழைக்கிறது. மற்ற இடங்களில் மழை பெய்தும் கொடி தழைக்கவில்லை. ஆனால் தழைத்த ஒரு தோட்டத்தின் பக்கமிருந்து, கொடிகள் மெல்ல மெல்லப் படர்ந்து தழைக்கின்றன.
கொடி வளர்ச்சியை ஆராய ஒரு குழு அமைக்கப்படுகிறது.
தோட்டங்கள் பல. மேடு பள்ளம், சூழ்நிலைகள் பல. கொடியின் படர்தண்டுகளும் பலவாறு ஒன்றை ஒன்று தாண்டியும் சுற்றிப் பின்னியும் செல்கின்றன. ஆனால் கொடி ஒன்றே. அதன் வேர்மூடு ஒன்றே. ஆகவே அந்த வேர்முதலும் அதனுடன் தொடர்புடைய தண்டுகளும் நீடித்து வாழ்கின்றன. இது கொடி ஆராய்ச்சிக் குழுவின் விளக்கம்.
அடித் தண்டுகள் நிலத்தினடியில் படர்ந்ததனாலேயே ஒரு கொடி பல கொடிகளாகக் கருதப்பட்டது என்பதையும் குழு எடுத்துக்காட்டிற்று.
நடுநிலக் கடலக நாகரிகம் உட்பட வரலாற்றுக்கு முற்பட்ட உலக நாகரிகம் இத்தகைய படர்கொடி போன்றது. அதன் வேர் முதல் தமிழகம். இந்த வேர் முதலிலிருந்தும், அதனுடன் தொடர்புடைய அடித்தண்டுகளி லிருந்துமே, எல்லா உலக இயக்கங்களும், தேசிய இயக்கங்களும், மலர்ச்சி மறுமலர்ச்சி இயக்கங்களும் உலகில் பரவியுள்ளன, பரவுகின்றன.
திசைமாற்றம்: புதுப்போக்குகள்
ஐரோப்பாவின் பெரும் பகுதியிலும் நடுநிலக்கடலக நாகரிகத்தின் உயிர்த்துடிப்பும், அதனால் ஏற்பட்ட வளமும் தெற்கிருந்து வடக்கே, கிழக்கிருந்து மேற்கே படர்வதாகக் காண்கிறோம். ஆனால் இன்று வளர்ச்சி தொடங்கிய பகுதிகள் பட்டுவிட்டன. வளர்ச்சிக்குக் காரணமான நடுநிலக் கடலக நாகரிகமும் பட்டு விட்டது. நீடித்த வளர்ச்சியும் மேம்பாடும் திசை மாறியுள்ளது. அது தெற்கிலிருந்து அழிகிறது. வடக்கே வளர்கிறது. கிழக்கே இருந்து அழிகிறது. மேற்கே வளர்கிறது.
தென்கிழக்கில் எழுந்த நாகரிக ஞாயிறு நேர் எதிர் திசையான வடமேற்கு வானிலே சென்று ஒளிவிடுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
தென்கிழக்கில், கிரீசில் நாகரிகம் தொடங்கிற்று.
வடமேற்கில் இங்கிலாந்தில், அது நீடித்து நிலவிற்று, நிலவுகிறது. இங்கிலாந்தை அடுத்து ஃபிரான்சிலும், செருமனியிலும் அது நீடித்து நிலவிற்று, நிலவுகிறது.
இவ் வளர்ச்சியின் போக்கில், நாம் இப்போது ஒரு புதுத் திருப்பத்தையே அடைந்து வருகிறோம் என்பதும் கவனிக்கத்தக்கது.
வடமேற்காகச் சென்ற போக்கில், இரண்டு ’தளிர் வளைவு’கள் காணப்படுகின்றன.
வடமேற்கிலிருந்து வளர்ச்சி வடகிழக்காக, வடக்காக ஒருபுறம் திரும்புகிறது. ஜெர்மனி, டென்மார்க், நார்வே, ஸ்வீடன், சோவியத் ரஷ்யா பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியி லிருந்து உலகின் தேசிய அரசியல்கள், இலக்கியங்கள், கலைகள், பண்பாடுகள் புது வளர்ச்சியடைந்து வரும் போக்கு இது.
இன்னொருபுறம் வடமேற்கிலிருந்து நாகரிகத்தின் ஒரு தளிர்க்கொடி மேற்கு நோக்கித் திரும்பியுள்ளது. அமெரிக்கா புதிய வல்லரசாக, புது நாகரிகமாக உலகில் தலைமையிடம் பெறத் தொடங்கி யுள்ளது.
இப்புதுப் போக்குகள் ஏன் எவ்வாறு எழுந்தன?
தென்றலும் வாடையும்
நடுநிலக் கடலக நாகரிகம் ஐரோப்பாவில் தென்கிழக்கி லிருந்து, தெற்கிலிருந்து வீசிய தென்றல். அதன் வாழ்வில் அடிக்கடி வடகிழக்கிலிருந்து, வடக்கிலிருந்து ஒரு வாடைக் காற்று குறுக்கிடுகிறது.
தென்றல் வாழ்வில் நாம் நான்கு அலைகளைக் காணலாம்.
முதல் அலை உயிர் அலை, தென்றலின் உயிர் வாழ்வுக் கால அலை. தென் கிழக்கோரத்தில் அது வடக்கே செல்ல முடியவில்லை. வாடைக்காற்று கருக் கொண்டிருந்த இடம் இது. அது மேற்கு நோக்கி ஸ்பெயின்வரை, வடமேற்கு நோக்கி பிரிட்டிஷ் தீவுகள், ஐஸ்லாந்து தீவுவரை சென்று, மீண்டும் கிழக்காக வளைந்து வடகோடியில் நார்வே, ஸ்வீடன், டென்மார்க்கு, லாப்லாந்து, வட ரஷ்யா ஆகிய பகுதிகளெங்கும் பரவிற்று. ஆனால், மேற்கே, வடமேற்கே, வடக்கே செல்லுந் தோறும் அதன் ஆற்றல் குறைந்தது. ஆயினும் தொலை செல்லச் செல்ல, புது வளர்ச்சிக்கு இடமில்லாமலிருந்தாலும், தென்றல் மணத்தின் திவலைகள் தங்கு தடையின்றி நீடித்து நின்று நிலவின. தென்றல் தொடங்கிய இடத்தை அழித்த வெப்பலைகள் அத்தொலைவிடங்கள் வரை சென்று எட்டவில்லை! புது வளர்ச்சியின் கருவை அவை அழியாது வளர்த்தன.
வாடைக் காற்றின் முதல் அலை மூவாயிரம், மூவாயிரத்தை நூறு ஆண்டுகட்கு முற்பட்ட அலை. அது தென் ஐரோப்பா முழுவதிலும் அழிவு செய்தது. மேலை ஆசியாவைச் சிறிது தீண்டிற்று. ஆனால் மேலை ஆசியாவின் பெரும்பகுதியிலும் வட ஆப்பிரிக்காவிலும் தென்றல் வாழ்வு நீடித்தது. ஐரோப்பாவில் தென்றல் மணம் வீசிய உயிர்நிலம் அழிந்து பட்டாலும், ஆசியா ஆப்பிரிக்காவில் நிலவிய தென்றல் மணமும், அழிந்த நாகரிகங்களின் பட்ட மணமும் சேர்ந்து, வாடையிலிருந்து புதுத்தென்றல் உண்டுபண்ணிற்று. இதுவே கிரேக்க உரோம நாகரிகங்களாகப் புது வளர்ச்சியுற்றது. வாடையாக வந்து, தென்றலாக வாழ்ந்து, மீண்டும் வாடைக்கு இரையாகிய பண்டைய ஐரோப்பிய நாகரிகங்கள் இவை.
வாடைக்காற்றின் இரண்டாவது அலை ஆயிரத்தைந்நூறு ஆண்டுகள் கழித்து, கி.பி. 5ஆம் நூற்றாண்டில் முழு வேகத்துடன் வீசியடித்தது. தென்றலின் மறுமலர்ச்சியாக வாழ்ந்த கிரேக்க வாழ்வு, உரோம வாழ்வு அழிவுற்றன. ஆனால் மீண்டும் அவற்றின் பட்ட மணம் இரண்டு அலைகளாகப் பிரிந்து இயங்கின. ஒன்று உரோம நாகரிக அழிபாட்டு மணம். மற்றொன்று கிரேக்க நாகரிக அழிபாட்டின் மணம்.
தென்றலின் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது அலைகள் மறுமலர்ச்சி, புதுமலர்ச்சி அலைகள். இரண்டாவது அலை உரோம நாகரிக அழிபாட்டிலிருந்து வடக்கு நோக்கிற்று. மேலை ஐரோப்பிய நாகரிகத்தின் அடிப்படை இதுவே. அதை வளர்க்க இரு வேறு அலைகள் உதவின. ஒன்று முதல் வாடை அலையில் அழியாமல் இருந்த ஆசிய, ஆப்பிரிக்க உயிர்த் தென்றல் அலை. அது இஸ்லாமிய நாகரிகமாக 12 ஆம் நூற்றாண்டில் தென் ஐரோப்பா முழுவதும் வீசி, ஸ்பெயினிலிருந்து வடதிசை திரும்பி ஃபிரான்சு, பிரிட்டன் வரை தன் ஆற்றலால் புத்துயிர் எழுப்பிற்று. இன்றைய மேனாட்டுப் பல்கலைக்கழகங்கள் - மாட்ரிட், சார்போன், பாரிஸ், பிரேக், ஸ்பெயின், ஆக்ஸ்போர்டு, கேம்ப்ரிட்ஜ், எடின்பர்க்? பல்கலைக் கழகங்கள் அதன் அறிவொளி நிலவின் விளைவே. மூன்றாவது அலை கிரேக்க நாகரிக அழிபாட்டின் அலை. இதுவே 16 ஆம் நூற்றாண்டின் மறுமலர்ச்சி இயக்கம் தாண்டி, தற்கால ஐரோப்பிய நாகரிகமாக இயங்குகின்றது.
உரோம அழிபாட்டலையும் கிரேக்க நாகரிக அழிபாட்டின் அலையும் மறுமலர்ச்சி அலைகள். ஆனால் இஸ்லாமிய அலை மறுமலர்ச்சியலையல்ல. புதுமலர்ச்சி அலை. வாடையால் அழியாத தென்றல் வாழ்வின் கடைசி அலைவீச்சு அது.
அகமும் புறமும்
இந்த மூன்றலைகளும் நடு ஐரோப்பாவில் செயலாற்ற வில்லை. கிரேக்க எல்லையிலிருந்து நேர் வடக்கே திரும்பவில்லை. இதற்கு வாடையின் கரு கிழக்கு ஐரோப்பாவில் தோன்றிப் படர்ந்ததே காரணம் ஆகும்.
ஆனால் மறுமலர்ச்சி தோன்றிய தென் ஐரோப்பாவைவிட வட ஐரோப்பாவும், வடமேற்கு ஐரோப்பாவும் உலகின் ஒரு மூலையாய் இருந்தும், புதுவாழ்வில் இன்று முன்னேறக் காண்கிறோம். இன்றைய இத்தாலியும் கிரீசும் பழைய உரோம, கிரேக்க புகழில் முனையக் காணோம். இவற்றின் புகழைத் தமதாக்கி ஓங்கிய இஸ்லாமிய உலகு, வேலை ஆசியா, வட ஆப்பிரிக்காகூட இன்று தளர்ந்துவிட்டன. வடமேற்கு ஐரோப்பா மட்டும் புதுமலர்ச்சியில் நீடிக்கிறது. இது ஏன்?
தென்றலின் முதல் அலை வாடை அலைக்கு எட்டாத தொலைவில் நீடித்து நிலவி, அடுத்த மூன்றலைகளுடன் அளாவும் இடம் வடமேற்கு, வட ஐரோப்பாவே. அப் பகுதி இன்று உலகின் மூலையிலிருந்த போதிலும் முன்னேறுவதற்குரிய மறைதிறவு இதுவே.
ஐரோப்பா மேற்கு நோக்கிய ஒரு கோணம். யூரல் மலையும் ஆறும் அதன் அடித்தளம் ஸ்பெயின் அதன் மேற்கு முகடு. நாகரிகம் அதன் அடித்தளத்தில் இன்றுவரை பிற்பட்டேயுள்ளது. சோவியத் பூங்காவின் ஒளி ஒன்றே அதை இன்று நாகரிக உலகில் பங்குபெறச் செய்துள்ளது. ஆயினும் உலக வரலாற்றில் வாடையின் கரு அல்லது கருவை அடுத்த இடம் இதுவே என்பதை நாம் எளிதில் காரணம். தென்றல் அலை அதைச்சுற்றி தெற்கு, மேற்கு வடக்குத் திசைகளில் வளைந்து, பிறைவடிவாய் இயங்குவதே இதற்குச் சான்று ஆகும்.
ஐரோப்பாவின் அடிப்படை நாகரிக வேறுபாடு தெற்கு வடக்கல்ல, கிழக்கு மேற்கல்ல. இவ் வேறுபாடுகள் யாவும் ‘அகம், புறம்’ என்ற வேறுபாட்டின் கூறுபாடுகளே. அகம் வாடையின் கருவும் அது சுழன்றடித்த திசைகளும் ஆகும். புறம் வீச்சிலிருந்து தப்பி, அல்லது அதன் அழிவை அளாவி, தென்றல் சென்று வளரும் திசையாகும்.
வாடையின் கரு ஐரோப்பாவின் வடக்கே, கிழக்கெல்லை அடுத்திருந்தது.
அது முற்றிலும் ஐரோப்பாவிலில்லை. ஆனால் அது ஐரோப்பாவைத் தென்திசையிலிருந்தும், தென்கீழ்த் திசையி னின்றும், கீழ்த் திசையினின்றுமே இயக்கிற்று.
வரலாற்றில் ஆப்பிரிக்கா
தென்றல், வாடை இரண்டும் ஐரோப்பிய வாழ்வைப் போலவே, ஆப்பிரிக்கா, ஆசியாவின் வாழ்வுகளையும் பாதித்தன. அவற்றைக் காண்போம்.
ஐரோப்பாவில் வீசிய முதல் தென்றல் அலை ஆப்பிரிக் காவின் வடதிசை முழுவதும் படர்ந்து வீசியிருந்தது. ஆனால் ஐரோப்பாவில் தென்திசை முழுதும் அது நீடித்து நிலவி, அலையழிந்த பின்னும் மறுமலர்ச்சி அலைகளைப் பிறப்பித்தது. வட ஆப்பிரிக்காவிலோ கீழ்க் கோடியிலுள்ள எகிப்து நீங்கலாக, வேறு எங்கும் தென்றல் ஒரு தடவைக்குமேல் வீசவில்லை.
தென்றல் சென்ற வழியில் வனமல்லிகை மலர்கள் சிதறின. சிதறிய இடத்தில் மலர்கள் மணம் வீசின. ஆனால் விரைவில் இதழ்கள் வாடின மணம் மட்டுமே நீடித்தது. இஸ்லாமியப் புதுமலர்ச்சி யலையில் மணம் மீண்டும் சிறிது கமழ்ந்தது பின்னர் தென்றல் வாழ்வை நாம் இங்கே மீட்டும் காணவே முடியவில்லை.
தமிழகமும் சீனமும் நீங்கலாக, உலகின் வேறெந்தப் பகுதிக்கும் எகிப்தளவு நீண்ட தென்றல் வாழ்வு வாய்த்ததில்லை. கி.மு. 3000-க்கு முன்னிருந்தே தொடங்கி கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரையும் அது தொடர்ச்சியான பழம்பெரு வாழ்வு உடையதாக நிலவிற்று. இந்த 4000 ஆண்டுக் காலத்திலும் அதற்குக் கிடைத்துள்ள வரலாற்றாதாரங்களும் பழம்பொருளாராய்ச்சித் துணையும் வேறெந்த நாட்டையும்விட மிகுதி. அதன் பழமை, பெருமை, அறிவாழம் ஆகியவை இன்றைய ஐரோப்பிய மக்கள் வியப்பார்வத்தை மட்டுமன்றி, பண்டைய உரோம கிரேக்கரின் வியப்பார்வத்தையும் தூண்டியிருந்தன. அத்துடன் இன்றைய உலகின் இயல்கள், கலைகள், சமய சமுதாய அரசியல் வாழ்வின் மூல உருவங்களை நாம் எகிப்தில் காண்கிறோம். கிட்டத்தட்ட மனித நாகரிகத் தொடக்க நிலையிலிருந்து நாகரிக கால நிலைவரை அவை படிப்படியாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் அடைந்துவந்த மாறுபாட்டு வளர்ச்சியையும் நாம் அதன் வரலாற்றில் காண்கிறோம்.
மேற்கண்ட காரணங்களால் எகிப்தே மனித நாகரிகத்தின் தொட்டில், தென்றலின் கரு என்று மேனாட்டினர் நீண்டநாள் கருதிக் கொண்டிருந்தனர். இன்னும் கருதுபவர் உண்டு. இக் கருத்து முற்றிலும் தவறானதுமல்ல. ஏனெனில் தென்றலின் கரு எதுவாயினும், அதனுடன் எகிப்து நெருக்கமான, நேரடியான தொடர்புடையதாயிருந்ததென்பதில் ஐயமில்லை. ஆனால் கொடியின் மூலமுதல் அதுவல்ல என்பதை கி.பி. 3 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னுள்ள அதன் நிலை சுட்டிக்காட்டுகிறது. இஸ்லாமிய அலை வீசிய நாளில் எகிப்தையும் கிரேக்க உரோம எல்லைகளையும் கடந்தே அது மேலை ஐரோப்பா சென்றது. ஆனால் அவ்வுயிரலை மேலை ஐரோப்பாவுக்குப் புத்துயிர் கொடுத்த அளவு எகிப்துக்கோ, கிரேக்க உரோம எல்லை களுக்கோ புத்துயிர் ஊட்டவில்லை. இவை தென்றலலைகள் பலவற்றின் பாதையில் கிடந்தாலும், அதன் உயிர்ப் பாற்றலை நாளடைவில் இழந்து விட்டன என்பதை இது காட்டும்.
புதைபொருளாராய்ச்சிகளினாலும் இந்த உண்மை வலுப் படுகிறது. எகிப்தில் காணும் பழமை, பெருமை, வளர்ச்சிப்படி ஆகியவை யாவும் அதனினும் முற்பட்டு, அதனினும் மிச்சமாக சுமேரிலும், சிந்து வெளியிலும் காணப்படுகின்றன. பழமையிலும் முனைப்பிலும் எகிப்தை சுமேரும், சுமேரைச் சிந்துவெளியும் விஞ்சியுள்ளன. தவிர, தொலைவில் சீனா எகிப்தைப் போலவே பழமை, பெருமை, படிப்படி வளர்ச்சி ஆகிய யாவும் இணையாக அமையப் பெற்றுள்ளது.
மனித இனப் பழமையாராய்ச்சியாளர் மனித இனப் பழமையை தென் ஆப்பிரிக்கா, தென்னகம், தென்கிழக்காசியா ஆகியவை உள்ளடக்கிய தென்மா கண்டத்தில் காண்கின்றனர். மேலும் எகிப்தைப் போல அது இடையே நின்றுவிடாமல் இன்றுவரை வாழ்வு பெற்று உள்ளது.
எகிப்தின் உண்மைப் பெருமை அது தென்மா கண்டப் பகுதிகளாகிய தென் ஆப்பிரிக்கா, தென்னகம் ஆகிய இரண்டனும் தொன்றுதொட்டே நேரடித் தொடர்புடையதா யிருந்தது என்பதே. கி.மு. 3000-லிருந்தே இத்தொடர்பு காணப்படுகிறது. கூர்ங் கோபுரங்களில் கண்ட தேக்கு, மல்மல் ஆடை, மணப்பொருள்கள் இதை வலியுறுத்துகின்றன.
தவிர, பண்ட் என்ற நாட்டுடனும், தங்கம் ஏற்றுமதியாகும் ஒஃவிர் என்ற துறைமுகத்துடனும் உள்ள எகிப்தியர் வாணிகத் தொடர்பை கி.மு. 3000-லிருந்தே எகிப்தியர் வரலாறு விளக்குகிறது. பண்ட் நாடே தங்கள் மூலத் தாயகம் என்றும் அப்பண்டை எகிப்தியர் கருதியதாக அறிகிறோம்.
பண்ட் என்பது பாண்டி நாடே என்றும், ஒஃவிர் என்ற துறைமுகம் உவரியே என்றும், அதன் தங்கம் கோலாரிலும் மதுரையருகிலும் காவிரிக் கரையிலும் எடுக்கப்பட்ட தங்கமே என்றும் தெளிவாகக் காணத்தக்கதாயுள்ளது. பண்ட் நாடு சந்தனம் விளையும் நாடு என்பதும் அது பாண்டி நாடே என்பதை உறுதிப் படுத்துவதாயுள்ளது.
மேலை நாட்டினர் முற்கோள் இங்கே இயல்பான கண்கண்ட முடிவைக்கூட ஏற்க மறுக்கிறது. தானாக வலிந்து அது ஒரு கற்பனையைப் படைத்து, உண்மைக்கெதிராகக் கற்பனையை வலியுறுத்த முனைகிறது. பண்ட், ஒஃவிர் ஆகியவை தென் ஆப்பிரிக்காவிலேயே இருந்திருக்க வேண்டும் என்றும், ஆனால் பாண்டிநாட்டுத் தங்கமும் சந்தனமும் அவ்வழியாகவே, எகிப்துக்குச் சென்றிருக்க வேண்டுமென்றும் அவர்கள் இட்டுக்கட்டாராய்ச்சி செய்துள்ளனர். ஆனால் இந்தக் கற்பனைகூட மெய்ம் முடிவை ஒத்திப்போடுகிறதே தவிர, அதை மறுக்கவில்லை. ஏனெனில் தென் ஆப்பிரிக்காவிலும் தென்னகத் திலும் ஒரே நாட்டுப் பெயர், துறைமுகப் பெயர் உள்ளன என்பது அவற்றின் தொடர்பை இன்னும் வலியுறுத்துகிறது. இவற்றுள் தென்றலின் கரு தென்ஆப்பிரிக்கா அல்ல என்பது தெளிவு. ஏனெனில் அதில் தொன்மையைத்தான் காண்கிறோம், நீடித்த உயிர்ப் பண்பையல்ல. எகிப்தில், கிரேக்க நாட்டில் காணப்படும் உயிர் ஆற்றலை நாம் இங்கே காணமுடியாது.
மேலை ஆசியா
நடுநிலக் கடலகத்தின் வேறு எப்பகுதியையும்விட டைக்ரிஸ், யூப்ரட்டிஸ் ஆற்று நிலம் அதாவது இன்றைய ஈராக் பகுதி மறைந்த உலகம் என்ற பெயருக்கு மிகவும் உரியதாகும். நாகரிகத்துக்கு மேல் நாகரிகமாக, அரசு பேரரசுக்குமேல் அரசு பேரரசாக, இங்கே பல நாகரிக அடுக்குகள் பல்லாயிர ஆண்டு களாக வாழ்ந்தன. இவற்றின் வாழ்வை நாம் புதை பொருளாராய்ச்சியால் மட்டுமே காண்கிறோம், கண்டு வருகிறோம். கி.மு. 3000 முதல் கி.மு. 7 ஆம் நூற்றாண்டு வரை சுமேரியா, அக்கேடியா, பாபிலோனியப் பேரரசு, ஹிட்டைட் பேரரசு, அசீரியப் பேரரசு என்று பல அரசியல் மாறுதல்கள் ஏற்பட்டன. இறுதியில் அசீரியப் பேரரசு எகிப்தையும் உட்கொண்டது. அசீரியரைச் சால்டியரும் பாரசீகரும் வென்றனர். பாரசீகரைக் கிரேக்க அலெக்ஸாண்டர் கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் வென்றபின் கிரேக்கப் பேரரசில் மேலை ஆசியாவும் எகிப்தும் உட்பட்டன. கிரேக்கருக்குப் பின் வந்த உரோமப் பேரரசில் இவை அனைத்தும் மீண்டும் ஓர் உறுப்பாயின.
மேலையாசியாவில் பல இனங்களின் கூட்டுறவைக் காண முடிகிறது. செமித்திய இனமே இவற்றில் பெரும்பான்மை. கி.மு. 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மித்தான்னியர் ஆரியத் தெய்வங் களை வணங்கியதாகத் தெரிகிறது. ஆரியர் இவ் வழியாகவே இந்தியா சென்றனர் என்று ஒரு சாராரும், இந்தியா வந்தபின் இவ்வழி திரும்பினர் என்று மற்றொரு சாராரும் கூறுகின்றனர். ஆரியர் வரலாற்றுக்கு இதுமிகவும் உயிர்நிலையானது. ஏனென்றால் மித்தான்னியர் இந்தியாவிலிருந்து வந்தனர் என்றால், இந்தியாவுக்கு அவர்கள் வருகை கி.மு. 2000-க்கு முந்தியதாதல் வேண்டும். இந்தியாவுக்கு அவ்வழி வந்தனர் என்றால், அவர்கள் வருகை கி.மு. 1500-க்கு பிற்பட்ட தாதல் வேண்டும். மித்தான்னியரும் இந்திய ஆரியரும் ஆரிய ரல்லாத ஓர் ஆசிய இனத்தவரிடமிருந்து தம் வழிபாட்டுத் தெய்வங்களைப் பெற்றிருந்தனர் என்பதே நிலைமைக் கேற்ற ஊகமாகும். வருங்கால ஆராய்ச்சிகளே இவற்றைத் தெளிவுபடுத்த வேண்டும்.
மேலையாசிய இனங்களில் மிகப் பழமையானவர்கள் சுமேரியர். இவர்களை யடுத்துப் பாரசீகக் குடாக் கடற்கரையில் வாழ்ந்தனர் ஏலமியர். மேலை ஆசியாவின் செமித்திய நாகரிகத்துக்கு மூலமுதலாயுள்ளவர்கள் சுமேரியரேயாவர். சுமேரியர் எழுத்து முறையும் பண்பாடும் எகிப்தைத் தாண்டி பழமையும் முற்போக்கும் உடையவை. மனித நாகரிகத்தின் தொட்டில் எகிப்து என்பதை இது நிலையாக மாற்றியமைத்தது. அதே சமயம் சுமேரியர் ஆரியரும் அல்லர், செமித்தியரும் அல்லர் என்பது வரலாற்றாராய்ச்சியாளர் ஆர்வத்தைக் கூராக்கிற்று. அவர்கள் மொழி, பண்பாடு, இனக்கூறு ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புடையவர் தென்னகத் திராவிடரே என்றும் ஆராய்ச்சியாளர் கண்டனர்.
தென்னகத்துடன் எகிப்தியரைப் போலவே, சுமேரியரும், அவர்களை அடுத்துவந்த மேலை ஆசிய இனங்களும் தொடர் புடையவராயிருந்தனர்.
மேலை ஆசியாவின் மற்றொரு முக்கியமான பகுதி பீனிசியா. இப்பகுதியிலுள்ள மக்களும், கிரீட் தீவிலுள்ள பழங்குடியினரும், எகிப்தியருமே உலகின் மிகப் பழமை வாய்ந்த கடலோடிகள் என்று தெரியவந்தன. எழுத்து, எண், எண்மானம் ஆகியவற்றை முதல்முதல் வழங்கியவரும் இவர்களே என்று நெடுங்காலம் கருதப்பட்டு வந்தது. அவற்றின் மூலமுதல் சுமேரிய நாகரிகம் என்பது தெரியப்பட்டபின்னும், கடல்வாழ்வில் அவர்கள் முனைப்பு முக்கியத்துவம் உடையதாகவே இருந்தது.
சிந்துவெளி
சிந்துவெளியில் ஹரப்பாவிலும் மொகஞ்சதரோவிலும் இன்னும் இந்தியா, இலங்கை முழுவதிலும் கண்டாராயப் பட்டுள்ள பழங்கால நாகரிகச்சின்னங்கள் சுமேரிய நாகரிகத் துடன் சமகாலம் உடையவையாய் இருந்தன. சுமேரியப் பழமை தாண்டி அவை பல கூறுகளில் முன்னேறியிருந்தன. சுமேரியப் பழமை தாண்டி அவற்றின் பழமையும் சென்றன. அவற்றின் எழுத்தும் மொழியும் இன்னும் தெளிவுபட உணரப்படவில்லை. ஆயினும் எழுத்துமுறை எகிப்தையும் சுமேரியாவையும் சீனத்தையும் இணைப்பதுடன், இன்று இந்தியாவிலுள்ள எழுத்து முறைகள் அனைத்துக்கும் மூலமாகவும் உள்ளது. நாகரிகத்திலும் இது போலச் சிந்துவெளி உலகின் தொல்பழ நாகரிகங்கள் அனைத்தையும் ஒருபுறம் இணைத்து, மறுபுறம் இன்றைய இந்திய நாகரிகத்தின் மூலமாகவும் உள்ளது. அதேசமயம் மறுக்கக்கூடாத வகையில் அது இன்று சிந்து கங்கை வெளியைவிடத் தென்னக வாழ்வையே நினைவூட்டுவதாயுள்ளது.
சிந்துவெளி வாழ்வு கி.மு. 4000-க்கு முன்னிருந்து தொடங்கி, கி.மு. 2000-ல் திடுமென முடிவுறுகிறது. பாம்பியில் கண்ட அதே நிலையையே நாம் இங்கே காண்கிறோம். பேரழிவு நிகழ்ந்த ஒருகணப் போதையே புதைந்த காட்சி படம் பிடிப்பதா யிருக்கிறது. இவ்வழிவுக்குரிய நிகழ்ச்சி ஆரியர் படையெழுச்சியே என்று கருதப்படுகிறது.
சுமேருடனும் தமிழகத்துடனும் சிந்துவெளி தொடர் புடைய தாயிருந்தது.
மனித நாகரிகத் தொட்டில் எகிப்திலிருந்து சுமேரியாவுக்கும், சுமேரியாவிலிருந்து சிந்துவெளிக்கும் இப்போது மாறியிருக்கிறது. மேலை உலகினரின் பழமையாராய்ச்சி வருங்காலப் புத்தாராய்ச்சியை எதிர்நோக்கி இந்த முடிவில் நிற்கிறது.
தென்னகம்
ஆனால் நாம் மேலே கூறியபடி தென்றலின் கரு முதல் அக் கொடி வாழ்வின் வேர்முதலாய், அதன் நீடித்த நிலையான உயிர்ப் பண்பாய் இருக்க வேண்டும். சிந்துவெளி கடந்து அதன் கருமு தலைச் சுட்டும் செய்திகள் வருமாறு:
சிந்துவெளி நாகரிகச் சின்னங்கள் தென்னகத்திலும் இலங்கையிலும் கிட்டுகின்றன. சிந்துவெளி நாகரிக காலத்தில் அந்நாகரிகம் தென்னகத்திலும் இலங்கையிலும்கூடப் பரவி யிருந்தது என்பதை இது காட்டுகிறது. சிந்துவெளி எழுத்துக்கள் கொண்ட முத்திரைகள், நாணயங்கள் தமிழகத்திலும் இலங்கையிலும் காணப்படுகின்றன. சிந்துவெளியில் பயன்பட்ட தங்கம் தமிழகத்தில் கோலாரிலிருந்து சென்ற தங்கமே என்பது அதில் இயல்பாகக் கலந்துள்ள வெள்ளியின் அளவால் விளங்குகிறது.
சிந்துவெளி மொழி இன்றும் விளக்கமடையா நிலையி லுள்ளது. ஆயினும் அதன் எழுத்துக்கள் தமிழிலுள்ள 31 எழுத்துக்களே என்றும், அதில் 12 உயிர் என்றும் 18 மெய் என்றும் அறிகிறோம். திருத்தந்தை ஹீராஸ் இம்மொழி தமிழே என்று கருதுவதுடன், ஊக அடிப்படை கொண்டே எழுத்துறுதியும் செய்து, பொருள் தரும் முறையில் எல்லாவற்றையும் விளக்கியும் உள்ளார்.
எகிப்திய எழுத்துமுறையையும், சுமேரிய எழுத்து முறையையும் வரையறுக்க உதவிய நேரடிச் சான்றுகள் சிந்துவெளி எழுத்துமுறைக்கு இன்னும் வாய்க்கவில்லை. வருங்கால ஆராய்ச்சியே இதைத் தெளிவுபடுத்த வேண்டும். ஆயினும், தென்னகத்தில் பழங் கல்வெட்டுக்களில் காணப்படும் பிராமி எழுத்துக்கள் சிந்துவெளி மரபில் வந்தவையே. அவையும் தமிழின் 31 எழுத்துக்களே கொண்டு இயங்குகின்றன.
வாடையலைகள் செல்லாத இடத்தில் தென்றலின் ஒரு கூறான சீன நாகரிகம் 5000 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து இன்னும் நின்று நிலவுகிறது. தவிர, தென் ஆப்பிரிக்கா நாகரிகமும் தென்கிழக்காசிய நாகரிகமும் எகிப்திய சுமேரிய நாகரிகங்களும் தொல் பழங்காலத்துக்கு முற்பட்ட புதுக் கற்கால முதலே வளர்ந்து வருகிற ஒரு கடலோடி நாகரிகத் தொடர்பைக் காட்டுகின்றன. இந் நாகரிகம் தென்னகம் நீங்கலாக எங்கும் மாண்டு மடிந்துவிட்டது. ஆயினும் அது உலகளாவிப் பரந்திருந்தது. அதன் தடங்கள் கிட்டத்தட்ட உலக முழுதும் காணப்படுகின்றன. அதுவே இன்னும் நாகரிக உலகின் அடிப்படை இனமாயுள்ளது. இவ்வினத் தொடர்புகளை விரிவாக ஆராய்ந்து விளக்கிய பழமைப் பேரறிஞர் எலியட் சுமித் என்பார் இந்நாகரிகத்துக்கு ஞாயிற்றுக்கல் வழிபாட்டு நாகரிகம் எனப் பெயர் தந்துள்ளார்.
ஞாயிற்றுக்கல் வழிபாட்டு நாகரிகத் தொடர்பு காணாத இடங்கள் ஆரிய இனம், மங்கோலிய இனம் ஆகிய இரண்டு இனங்களின் பிறப்பிடமான ஆசிய ஐரோப்பா எல்லையிலுள்ள நடு மைய இடமேயாகும்.
நாம் மேலே கண்ட வாடையின் கருவகம் இதுவே என்பது கூர்ந்து நோக்கத்தக்கது.
அமெரிக்கப் பெருவிய, மய நாகரிகங்களும் இந்த ஞாயிற்றுக்கல் நாகரிகத்துடன் தொடர்புடையனவே யாகும்.
தென்னகம் இவ்வெல்லாத் தென்றலலைகளின் சந்திப்பு மையமாய் அமைந்துள்ளது என்பதை இன்றைய உலகப் படமே காட்டும். ஆனால் ஞாயிற்றுக்கல் வழிபாட்டு நாகரிக காலத்திய உலகம் இன்றைய உலகத்தினின்றும் வேறானது. அதில் சிந்து கங்கைவெளியே கிடையாது. ஆனால், அவ்வுலகின் பகுதிகளான ஆப்பிரிக்கா, தென்கிழக்காசியா, மேலை அமெரிக்கா, தென்னகம் ஆகியவை இன்றுபோலப் பிரிந்து கிடக்காமல் அன்று இணைந் திருந்தன. அவற்றைப் பிரித்த மாகடல்கள் தொடக்கத்தில் ஆறுகளாயிருந்து படிப்படியாக விரிந்து கடல்களாயின என்று அறிகிறோம். அவற்றின் படிப்படியான விரிவே ஞாயிற்றுக்கல் வழிபாட்டு நாகரிகத்தின் கடலோடிப் பண்பை வளர்க்க உதவியிருக்கக்கூடும்.
தென்றலின் கருமூலம் தென்னக நாகரிகமே என்பதை இன்னும் பல செய்திகள் வலியுறுத்தும். தென்றலின் பல அலைகள் அதன் கருவகத்திலிருந்து பல காலங்களில் சென்ற பலபடியான அலைகளே. ஒவ்வோரலையும் ஒவ்வொரு கால வளர்ச்சியையே கொண்டு பரப்பிற்று. அவ்வெல்லா அலைகளின் மூலமையமாகத் தென்னகம் நிலவுகிறது. அது எல்லாக் காலத்தென்றல் பண்புகளையும் ஒருங்கே கொண்டு இயங்குகிறது.
நடுக்கடலக நாகரிகத்தின் கடலோடிப் பண்பு, கிரேக்கரின் கலை இலக்கிய வளம், எகிப்தின் நீண்ட பழங்கால வாழ்வு, நீடித்து இன்றுவரை நிலவும் சீனத்தின் நிலையான உயிர்ப்பண்பு, இன்றைய மேலையுலகின் வளர்ச்சியாற்றல் ஆகிய இத்தனை தென்றல் பண்புளையும் ஒருங்கே கொண்ட தென்றல் தாயகம் தமிழகமே.
இந்திய மாநிலம்
ஐரோப்பிய உலகில் எழுப்பிய வரலாற்றின் வினாக்களையே நாம் இந்திய மாநிலத்திலும் எழுப்பலாம். இந்தியா உலகினுள் ஓர் உலகு உலகின் தென்றல் - வாடைப் போக்கே அதன் தென்றல் - வாடைப்போக்காகவும் உள்ளது.
தெற்கிருந்து வடக்கு - கிழக்கிருந்து மேற்கு - புறமிருந்து அகம்! இதுவே ஐரோப்பாவின் தென்றல் அலையின் திசை. இதுவே இந்திய மாநிலத்திலும் தென்றலின் திசை. மொழி வாழ்விலும் இலக்கிய வாழ்விலும் இதைத் தெளிவாகக் காண்கிறோம். வாடையின் திசை ஐரோப்பாவில் வடக்கிருந்து தெற்கு, கிழக்கிருந்து மேற்கு, அகமிருந்து புறம் என்று கண்டோம் மாநிலத்தில் இதில் மட்டும் சிறிது மாறுதலைக் காண்கிறோம். அது கிழக்கிருந்து மேற்கே செல்லவில்லை. மேற்கிருந்து கிழக்கே செல்கிறது. ஆனால் வடக்கிருந்து தெற்கு என்ற பொதுப்போக்கிலும், அகமிருந்து புறம் என்ற போக்கிலும் மாறுதல் இல்லை. மாநிலத்தின் உருவப்படம் கண்டால், இந்த வேறுபாட்டின் காரணம் எளிதாகப் புலப்படும். வாடையின் கருவகமாகிய ஆசிய ஐரோப்பிய நடுநிலம் தென் ஐரோப்பாவுக்கு வடகிழக்கில் இருக்கிறது. தென் ஆசியாவுக்கு, சிறப்பாக இந்தியாவுக்கு அது வடமேற்கில் இருக்கிறது. அத்துடன் இந்தியாவுக்குள் வாடையலை நுழையும் வழி வடமேற்கில் மட்டும் தான் இருக்கிறது.
அக அலை வடமேற்கிலிருந்து கல்கத்தா நோக்கிக் கங்கைக் கரை வரை வந்து, பின் தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்காகத் திரும்புகிறது. இந்த வளைவுக்கு விந்திய மலையும் அதை அடுத்த காடுகளுமே காரணம் ஆகும்.
அக அலையின் கீழ்க்கோடியே ஆரிய-இந்திய நாகரிகக் கலப்பு உச்சநிலையில் வளர்ச்சியடைந்த இடமாகும்.
அலைக்குப் புறமாக வடக்கு, கிழக்கு, தெற்கு, தென்மேற்கு ஆகிய திசைகளிலுள்ள மொழிகளே சிந்து கங்கைவெளியின் பண்பட்ட மொழிகளாக அமைகின்றன. இவற்றுள் பண்பில் குறைந்த இந்திமொழி இன்றைய வடிவில் சிந்து கங்கை வெளியின் போது பொது மொழியாக அலை முகட்டில் இயங்குகிறது. இதன் பண்டைய வடிவே. ஆரிய-இந்திய நாகரிகத்தின் உச்சநிலைக்குரிய சமற்கிருத மொழியின் மூலமுதலாய் அமைந்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
அகம், புறம் ஆகிய இரண்டினூடாகவும் அகத்தில் வாடைக் கூறினையும், புறத்தில் தென்றல் கூறினையும் காண்கிறோம். தவிர, அகம் புறம் இரண்டிலுமே வடக்கே, மேற்கே, வடமேற்கே செல்லுந்தோறும் வாடைக் கூறினையும்; கிழக்கே, தென்கிழக்கே தெற்கே செல்லுந்தோறும் தென்றல் கூறினையும் மிகுதியாகக் காண்கிறோம்.
உலகின் தென்றல் கருவகம் தென்னகமே, தமிழகமே என்ற முடிவை மாநிலத்தின் பண்பாட்டலைகளின் போக்கும் இங்ஙனம் உறுதிப்படுத்துகின்றன.
மெய்ம்மையார்வம், நாட்டுப்பற்று கடந்த இனப்பற்று
ஏன் என்ற வரலாற்றின் கேள்வியே இங்ஙனம் வரலாற்றுக்கு முற்பட்ட நாகரிக அலைகளைக் காட்டும். புதைபொருளாராய்ச்சி இதையே வலியுறுத்துகிறது. வரலாற்றின் கேள்விக்குரல் ஆரிய இன எழுச்சியாளரால் சரியாகக் கவனிக்கப்பட்டிருந்தால், உலக வரலாற்றிலும் மாநில வரலாற்றிலும் பல தப்பெண்ணங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும். ஆனால் புதைபொருளாராய்ச்சி இதை வலியுறுத்தியபின், உலக ஆராய்ச்சி இதை வலியுறுத்தியபின், உலக ஆராய்ச்சி அரங்கில் புரட்சி ஏற்பட்டு வருகிறது. ஆனால் இப்போதும் ஆரிய இன எழுச்சிப் பரப்பு இயற்கை காட்டும் போக்கை, ஆராய்ச்சி காட்டும் போக்கை மறுக்கும், புறக்கணிக்கும், மாற்றியமைக்கும் முயற்சியைக் கைவிடவில்லை.
ஆரிய இனத்தவர் இந்தியா வரும் வழியில் உள்ளவர் மித்தன்னியர் என்ற கருத்தை அவர்கள் வலியுறுத்தி, சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமே என்று நிலைநாட்ட அரும்பாடு படுகின்றனர்.
இங்கே ஆரிய இன எழுச்சியாளர்கள் நாட்டுப் பற்றால் உந்தப்பட வில்லை, இனப்பற்றால் உந்தப்படுகின்றனர். இனப்பற்று சாதிப்பற்றில் வேரூன்றியுள்ளது. தென்றலின் கருவகம் வடக்கானாலும், தெற்கானாலும், அதற்குரிய இனம் ஆரிய இனமானாலும் அன்றானாலும், அது இந்தியா முழுவதும் பரந்த ஓர் அடிப்படை இனம் சார்ந்தது; இந்திய மக்களின் பெரும்பான்மையினரைச் சார்ந்தது என்பதில் எவருக்கும் ஐயமில்லை. ஆனால் ஆரிய இன எழுச்சியாளர் இந்தியாவின் பெரும்பான்மை மக்களை இயக்கும் ஆட்சியாளர்களானாலும், அந்தப் பெரும்பான்மை மக்களிடம் பற்றுடையவர்களல்ல. சிறுபான்மையினராகிய தங்கள் உயர்சாதியுடனேயே அவர்கள் இனப்பற்று, நாட்டுப்பற்று, உலகப் பற்று, கடவுட்பற்றுக்கூட நின்றுவிடுகிறது.
‘தன் கண் ஒன்று கெட்டால்கூடக் கேடில்லை, அயலான் கண் இரண்டும் கெடவேண்டும்’ என்ற நீதி இன்றைய ஆரிய இனப்பற்றாளர் நீதியாகியுள்ளது. இந்திய நாகரிகத்தின் உயர்வைத் தனித்தோ, மேலை நாகரிகத்தை உயர்த்தியோகூடத் தென்னக நாகரிகத்தைப் புறக்கணித்தல் தங்கள் நீங்கா இனக்கடமை என்று அவர்கள் கருதுகின்றனர்.
உலகின் மேலை வானொளி கிழக்கே திரும்பும் காலம் வடக்கு நோக்கிய வாடை அவா தெற்கு நோக்கிய தென்றல் அவாவாக மாறும் என்று நாம் நம்பலாம்.
தமிழகத்தின் தனிப் பண்பு
இயல்பு, தன்மை குணம், பண்பு! இவை பொதுமையி லிருந்து தனிமை அல்லது சிறப்பு நோக்கிய வளர்ச்சி.
உயிர்கள் எல்லாவற்றுக்கும் பொதுக் கூறுகள் பல உண்டு. இவை அவ்வவற்றின் இயல்பு. உயிர்கள் எல்லாம் ஒன்றிலிருந்து ஒன்று சிறிதளவேனும் வேற்றுமை இல்லாமலிருக்க மாட்டா, பொதுமையில் சிறிது வேறுபட்ட இந்நிலையே தன்மை. பொதுமையில் இருந்து அது கொள்ளும் மாறுபாடே குணம். நீடித்த வாழ்க்கைப் பயிற்சியால் வரும் பழக்கங்கள், பல தலைமுறை கடந்த பழக்கத்தால் வரும் வழக்கங்கள் ஆகியவற்றால் தனி உயிரிலும் இனத்திலும் படிந்த படிவே பண்பு. இன வாழ்வின் மொத்த அனுபவமாய், அதன் வருங்கால வளர்ச்சிக்குரிய கொழுகொம்பாய் அது இயல்கின்றது.
மக்களினத்தின் பண்பை அவர்கள் நடையுடை பாவனைகளில்; நேசபாசப் பகைமை போட்டித் திறங்களில்; சிந்தனைகளில், விருப்பு வெறுப்புக்களில்; குறிக்கோள்களில், நடைமுறைகளில்; உள்ளார்ந்த ஒழுக்க முறைகளில், கட்டுப்பாடுகளில் ஆசாரங்களில், ஆராயா நம்பிக்கைகளில்; ஆராய்ச்சி முறைகளில், கலைத் திறங்களில்; இயல் துறைகளில், உணர்ச்சி நிலைகளில்; அறிவுக் கூறுகளில், ஆர்வங்களில் காணலாம்.
இயற்கையமைதி மாறிப் பொருள்கள் இயங்கமாட்டா எனினும் தத்தம் இயல்புக்கேற்ப, உயிர்கள் ஒரு சிறிதேனும் இயற்கையமைதி மீறி இயங்கும் திறம் உடையன. ஆனால் உயிர் களும் தத்தம் இயல்பு மீறி, தன்மை மீறி இயங்கமாட்டா. இயல்பு, தன்மை ஆகியவை இயற்கையோடொட்டிய மாறாக் கூறுகள் ஆனால் குணம், பண்பு மாறுபடும் தன்மையுடையன. குணம் தனி உயிரின் தனி வேறுபடாதாதலால், அது கூட்டு வாழ்க்கையால் மாறுபட வழியுண்டு. தெரிந்தும் தெரியாமலும் மாறுபட்டே தீரும். இம் மாறுபாடு பண்பை நோக்கி வளரும். தனி உயிரின் குணமே இங்ஙனம் தலைமுறையின் பழக்கமாய், தலைமுறை செல்லுந்தோறும் மரபு வழக்கமாய், நாளடைவில் இனப் பண்பின் கூறு ஆகிறது.
தமிழர் பண்புச் செல்வம்
குணத்தைப் போலவே பண்பும் மாறுபடும் தன்மை யுடையது. ஆனால் எளிதில் மாறுபடும் தனி மனிதன் குணத்தைப் பார்க்க, இனத்தின் நீடித்த குணமாகிய பண்பு எளிதில் மாறுபடாதது. அரிதில் மாறுபடுவது குணத்தின் மாறுபாடு நாளடைவில் பண்பை வளர்ப்பது. பண்பின் மாறுபாடு இன வாழ்வில் நன்மை தீமை மாறுபாடுகளை உண்டுபண்ணவல்லது.
இனம் தன்னியல்பாக, தன்னிச்சையாக, அறிவு நோக்கிய குறிக்கோளுடன் மாறுபட்டால், அம் மாறுபாடு பண்பின் வளர்ச்சியாய் அமையும் வலிந்தோ, இனநலனை எண்ணாமல் தனி நலன் விழைந்தோ பண்பில் மாறுபாடு உண்டு பண்ணப் பட்டால், அது பண்பின் தளர்ச்சிக்கும் நாளடைவில் இன அழிவுக்கும் வழி வகுக்கும்.
பண்பே இங்ஙனம் இனத்தின் உயிர்நிலையாய் அமைகின்றது.
பண்பின் வளர்ச்சியில் ஒவ்வொரு தலைமுறையும் அடைந்துள்ள வளர்ச்சி நிலையே பண்பாடு.
பண்பாடுதான் இனத்தின் மரபுச் செல்வம். இன வாழ்வில் இது கண்கூடு, கண்கண்ட மெய்ம்மை.
தமிழருக்குத் தனிப் பண்பாடு உண்டு. தமிழினத்துக்குத் தனிப்பண்பு உண்டு. இது தமிழருக்குத் தனித் தன்மை தருவது மட்டுமல்ல, தனிச் சிறப்பும் தருவது. ஏனெனில் தமிழர் உலகின் மற்ற எந்த இனத்தையும் விட நீடித்த, பண்பட்ட வாழ்க்கை யுடையவர்கள். கிட்டத்தட்ட பத்தாயிரம் ஆண்டுகட்கு மேற்பட்ட தமிழினத்தின் வாழ்வில், நாகரிகத்தில் ஏற்பட்ட வெற்றி தோல்விகள், இன்ப துன்பங்கள், உயர்வு தாழ்வுகள், மருட்சி தெருட்சிகளின் பயனாக, ஆழ்ந்த அனுபவம் என்னும் பாறைமீது அது கட்டமைக்கப்பட்டுள்ளது.
தமிழினத்தின் பண்பை நாம் நன்கு உணரவேண்டுமானால், அதிலுள்ள இரு கூறுகளை நாம் பிரித்துக்காண வேண்டும். ஒன்று, இனப் பொதுப்பண்பு. இது தமிழக எல்லை கடந்து தமிழினம் உலகில் பரப்பி வந்துள்ள, வருகிற, வர இருக்கிற பண்பு. இதுவே ஆங்காங்கே சில பல மாறுதல்களுடனும் திரிபுகளுடனும் மனித இனப் பண்பு அல்லது நாகரிக உலகப் பண்பு ஆகியுள்ளது. கடல் நீரில் ஆற்று நீர் போலத் தமிழன் பிற இன வாழ்வில் எளிதில் கலந்து ஒன்றுபட முடிவதன் காரணம் இதுவே.
தமிழ்ப்பண்பின் மற்ற கூறு அதன் தனித்தன்மை ஆகும். இது தமிழினத்தின் நீடித்த வாழ்வு, முழு நிறைவு, உயிர்ப்பண்பு ஆகியவற்றின் பயன். அதன் நீண்ட வாழ்வில் அது தொடர்பு கொண்டு வந்துள்ள இனங்கள் பல. தொடர்பு கொண்ட ஒவ்வோர் இனத்தின் பண்பிலும் அது பங்கு கொண்டு, அவ்வினப்பண்பு தூண்டிப் பண்பை வளர்த்துக்கொண்டு வருகிறது. அதன் முழு நிறைவுக்கு அதன் நீடித்த வாழ்வும், நீடித்த வாழ்வுக்கு உயிர்ப்பண்பும் காரணங்களாய் அமைகின்றன. ஆனால் உயிர்ப்பண்புக்கு அதன் உலக நோக்கு, இடைவிடாத நாகரிக உலகத் தொடர்பு, சமயச் சார்பற்ற அதன் வாழ்க்கை அடிப்படை, சமத்துவ ஆர்வம், பகுத்தறிவார்வம், சரிசமக் கூட்டுழைப்பு ஆகியவையே காரணம். இவற்றைப் பேணிய அளவிலேயே, நீடித்துப் பேணிய அளவிலேயே, தமிழினம் உயிர்ப் பண்புடையதாய்த் திகழ்ந்து வந்துள்ளது.
“நகர்நாடு”
தமிழர் உலக நோக்குக்கு உதவிய ஒரு பண்பை தமிழ்ச்சங்க இலக்கியத்திலும் தமிழரோடொத்த பழைய இனங்களின் வாழ் விலும் காண்கிறோம். இன்று உலகின் புதிய இனங்கள் வகுத்த வகைமுறையைப் பின்பற்றி நாம் மொழி எல்லையையும், இன எல்லையையும் நாடு என்கிறோம். தேசிய வாழ்வு என்று கருதுகிறோம். தமிழகம் உலகின் முதல் நாடு, முதல் தேசிய மாயிருந்து, இப்பண்பை உலகில் பரப்பிற்று. ஆனால் இவ்வாழ்வில் நாடு, தேசிய வாழ்வு என்ற வழக்கு பிற இனத்தவரால் வழங்கப்பட்ட வழக்கே. தமிழகம் அவ் வழக்கை ஏற்றமைந்தது. ஆனால் அது தனக்கென்று தொடக்கத்தில் ஒரு நாட்டு வாழ்வையும், தேசிய வாழ்வையும் அமைத்துக் கொண்டிருந்தது. அதுவே அதன் அடிப்படை நாட்டு வாழ்வு ஆகவும் தேசிய வாழ்வாகவும் என்றும் இயங்கி வந்துள்ளது. முதல் தேசியமாக அமைய அதற்கு உதவிய பண்பும், உலகெங்கும் அத்தேசிய வாழ்வைப் பரப்பிய பண்பும் அதுவே.
இக்காலப் புதிய தேசியம், தேசம் என்ற தொகுதியிலிருந்து, தனி மனிதன் என்ற உறுப்புக்கு இறங்கி வருகிறது. தேசியம், தேசம் உருவான பின்பே இது அமைய முடியும். ஆனால் தமிழர் வகுத்த தேசியம் தனி மனிதனிடமிருந்து தொடங்கிற்று. அதன் அடிப்படை ஊர், ஊராண்மை, ஊர்க் குடியாட்சி தொடர்புபட்ட பல ஊர்களின் வாழ்வை ஒரு பேரூர் அல்லது நகரம் பிணைத்தது. பேரூரும் ஊர்களும் சேர்ந்து நாடாயிற்று. கூடியமட்டும் நாட்டெல்லை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நானில எல்லையுடையதாக வகுக்கப்பட்டிருந்தது. குறிஞ்சி மலைப்பகுதி. இது மலைவளம் தந்தது. முல்லை காட்டுப்பகுதி. இது காட்டுவளம் ஈன்றது. மருதம் ஆற்றுப் பாசனப் பகுதி. இதுவே சிறப்பாக நாட்டு வளம் பயந்தது. நெய்தல் கடற்கரை நிலம். இது கடல் வளமும், வாணிக வளமும், வெளியுலகத் தொடர்பும் தந்தது.
நாட்டின் குடியாட்சி தமிழர் வாழ்வில் அன்று முதல் இன்றுவரை அடிப்படையாய் இருந்து வந்துள்ளது. தட்டுக் கெட்ட இடைக்கால, இன்றைய நிலையிலும் அதன் அடிப்படைப் பண்புகள் தடுமாறியுள்ளனவே தவிர அழிய வில்லை. இதே பண்புகளை நாம் வரலாற்றுக்கு முற்பட்ட நாகரிக உலகெங்கும் காண்கிறோம். நாகரிக உலகத் தொடர்பிலிருந்து மிகுதி விலகியிருந்த பண்டைய நாடோடி ஆரிய (இந்து - ஐரோப்பியர்) மங்கோலிய இனங்களைக்கூட அது ஓரளவு தாக்கியிருந்தது. கிரேக்க உரோமரிடையே ‘நகர் - நாடு’’ என்ற பெயரால் நிலவிய பண்பு இதுவே.
கிரேக்க வரலாற்றை விரிவாய் எழுதிய பேராசிரியர் குரோட்டியஸ், கிரேக்க நகர்நாட்டுப் பண்பை விளக்க அவ்வையாரின் தனிப்பாடல் ஒன்றையே தம் கிரேக்க வரலாற்று ஏட்டில் மொழிபெயர்த்துத் தந்தார். அது காஞ்சிமாநகரின் அமைப்பை வருணிக்கும் ஓர் அழகிய பஃறொடை வெண்பா. அது வருமாறு:
“வையகமெல்லாம் கழனியா, வையகத்தின்
செய்யகமே நாற்றிசையின் தேயங்கள்-செய்யகத்தே
வான்கரும்பே தொண்டைவள நாடு-வான்கரும்பின்
சாறேயந்நாட்டின் தலையூர்கள்-சாறிட்ட
கட்டியே கச்சிப் பொருப்பெலாம்-கட்டியுள்
தானேற்றமான சருக்கரை மாமணியே
ஆனேற்றான் கச்சி யகம்.”
கிரேக்க உரோம வாழ்வு மட்டுமல்ல. இன்றைய உலகின் எல்லா நாகரிக நாடுகளின் அரசியல்களும் இதே நகர்நாட்டு அரசியலையே குடியாட்சியின் உறுப்பாகக் கொண்டுள்ளன. ஆனால் தமிழருக்கும் கிரேக்கருக்கும் இது குடியாட்சியின் அடிப்படை மட்டுமல்ல, தேசிய வாழ்வின் அடிப்படை அதுவே; அரசியல் வாழ்வின் அடிப்படை மட்டுமல்ல, அரசியல், சமுதாய, சமய, குடும்ப, மொழிவாழ்வுகளின் அடிப்படை அதுவே. தமிழர் குடும்ப வாழ்வு, தேசிய வாழ்வு, உலக வாழ்வு ஆகிய எல்லாம் இதினின்றே தொடங்கின.
நகர்நாட்டு எல்லையில் தொடங்கிய தமிழர் தேசிய வாழ்வே நாம் மொழியெல்லையில் காணும் நாடு, இன எல்லையில் காணும் தேசம், அது கடந்து பண்பெல்லையில் காணும் மாநிலம் ஆகியவற்றின் அடிப்படை ஆயிற்று. நாடு என்ற குறிக்கோளை அவர்கள் தமிழகம், தமிழுலகம் என்ற பெயர்களால் குறித்தனர். இதில் அவர்கள் வளர்த்த நாட்டுப் பண்பு உலகப் பண்பே. மொழியெல்லையில் வந்தவுடன் அவர்கள் உலகு, மொழி என்ற சொற்களின் போதாமை உணர்ந்தனர். எல்லை தாண்டிய மொழி பண்படாத இன மொழி என்று கண்டனர். தம் திருந்திய மொழியைச் செந்தமிழ் என்றனர். அது கடந்த தமிழை, தமிழின மொழியை, தமிழ் என்று மட்டுமே கூறியமைந்தனர். பின்னாட்களில் இது கொடுந்தமிழ் என்று வழங்கப்பட்டது. திருந்தியமொழி எல்லை தமிழ் கூறும் நல்லுலகென்றும் சிலசமயம் ‘தமிழ்நாடு’ என்றும் வழங்கப்பட்டது.
நாட்டையே உலகு என்று கூறியதனாலே தமிழுக்கு உலகப் பண்பு அவ்வளவு எளிதாயிற்று. தனி மனிதன் வாழ்வின் உயர்வு தாழ்வற்ற கூட்டாக நகர் நாடும், நகர் நாடுகளின் சரிசமக் கூட்டுறவாக உலகம் அல்லது புதிய நாடும் எழுந்தன. அவர்கள் வகுத்த இவ்வுலகம் புதிய நாட்டினமாயிற்று. அதன் பண்பாட்டுச் சூழல் தேசம் அல்லது தேயம் எனக் குறிக்கப்பட்டது.
நாட்டையே உலகு என்று கூறியதனாலே தமிழுக்கு உலகப் பண்பு அவ்வளவு எளிதாயிற்று. தனி மனிதன் வாழ்வின் உயர்வு தாழ்வற்ற கூட்டாக நகர் நாடும், நகர் நாடுகளின் சரிசமக் கூட்டுறவாக உலகம் அல்லது புதிய நாடும் எழுந்தன. அவர்கள் வகுத்த இவ்வுலகம் புதிய நாட்டினமாயிற்று. அதன் பண்பாட்டுச் சூழல் தேசம் அல்லது தேயம் எனக் குறிக்கப்பட்டது.
குடியாட்சியின் பண்புகள்
பண்டைத் தமிழரசர் தொடக்கத்தில் நகர் நாட்டின் தலைவர் அல்லது ‘வேள்’ ஆகவே இருந்தனர். ஆட்சி ‘வேளாண்மை’, ஆள்பவர் ‘வேளாளர்’, ஆட்சித் தலைவர் ‘வேள்’. உழவு இதன் அடிப்படையாய் இருந்ததனால், இன்று வேளாண்மை என்ற சொல் முழுநிறை பொருள் தேய்ந்து, உழவுத் தொழிலின் பெயராயிற்று. ஆனால் ‘வேள்’, அதன் பன்மை யாகிய ‘வேளிர்’ ஆகிய இரு சொற்களும் சங்க காலத்திலேயே ‘முடிசூடா மன்னர்’ அதாவது குடியரசரைக் குறித்தன.
குடியாட்சித் தலைவன் மக்கள் வழிகாட்டியாகவும், நண்பனாகவும், காவல் வீரனாகவும் இருந்தான். அருஞ்செயல் வீரராயிருந்து களத்தில் மாண்ட வீரருக்கு நடுகல் இட்டுத் தமிழர் பூசித்தனர். அருஞ்செயல் கேளிர் இந்நிலை பெற்றபோது தெய்வ மாயினர். அவன் நாட்டினர் அவனுக்குப் பொதுவாகவும், அவன் மரபில் வந்த வேளிர் சிறப்பு முறையிலும் வழிபாடாற்றினர். இதனால் நாளடைவில் வேளார் புரோகிதராயினர். வேள் என்ற சொல் அரசர், தெய்வம், புரோகிதர் என்ற முப்பொருளும் கொண்டது.
‘குடி’ என்ற தமிழ்ச் சொல் ‘குடும்பம்’ என்ற பொருளையும், குடும்பம் வாழும் இடம் என்ற பொருளையும் தரும். ‘குடிமக்கள்’, ‘இனம்’ என்ற பொருள்களிலும் அதுவே வழங்கும். ‘குடியாட்சி’ என்ற சொல்லும் ‘குடிமக்கள்’ என்ற சொற்பொருளும் வேறு எவ்வினத்துக்கும் இல்லாத தமிழரின் அடிப்படைக் குடியாட்சி மரபைக் காட்டும். ஆனால் தமிழர் தேசியத்தின் அடிப்படைப் பிரிவுதான் குடும்பம் அல்லது குடி. அதன் அடிப்படைச் சிற்றுறுப்பு குடும்பம் அல்ல. குடும்ப ஆட்சிக்கு உறுப்பான தனி மனிதரே. மணமான அல்லது இருபது வயது வந்த ஆண் பெண் இருவருமே குடும்பத்திலும் குடியாட்சியிலும் சரிசம உரிமை யுடைய ஆட்சி உறுப்பினராயிருந்தனர். ‘மன்னன்’ என்ற தமிழ்ப் பெயரே இதைச் சுட்டிக் காட்டும்.
‘மன்’ என்ற வினைப்பகுதி நிலைபெறுதல் என்ற பொருளுடையது. குடியாட்சியின் நிலைபெற்ற அடிப்படை யுறுப்பான தனி மனிதனை இது குறித்தது. ‘மன்பதை, மன்மக்கள்’ உலகின் உயிரினத் தொகுதியையோ, உலக மக்களையோ, குடியாட்சிக்குரிய மக்கள் தொகுதியையோ ஒருங்கே உணர்த்தும் தமிழ்ச் சொல். எல்லா மக்களையும் ‘மன்னர்’ என்றல் பொருந்து மானாலும், குடியாட்சித் தலைவனே சிறப்பாக மன்னன் என்று குறிக்கப்பட்டான். ஆயினும் உண்மையான மன்னர் குடிகளே யாதலால், அவர்கள் ஆட்சியுரிமைக்காகக்கூடும் கூட்டம் மன்று அல்லது ‘மன்றம்’ ஆயிற்று. ‘மண்டபம்’ என்ற பிற்காலச் சொல் இதனடிப்படையில் பிறந்ததே. அதன் பொருள் மக்கள் கூடுவதற்குரிய திறந்த கட்டடம் என்பது. இன்றும் மண்டபம் நாலு தூணும் கூரையும் உடைய இடமே என்பது காண்க.
மலையாள நாட்டில் மண்டபம் ‘சவுக்கை’ என்றும் இந்தியில் ‘சௌகீ’ என்றும் சமயச் சார்பற்ற பண்டை நிலையில் இன்றும் வழங்குகின்றன.
ஆட்சிக்காக மக்கள் கூடிய இடம் தொடக்கத்தில் திறந்த வெளியாகவும் பின் திறந்தவெளி நடுவிலுள்ள மரமாகவும், இறுதியில் மரத்தோடிணைந்த மண்டபமாகவும் அமைந்தது. திறந்த வெளியாக நிலவிய காலத்தில் அது அம்பலம் என்றும், பின் மன்றம் என்றும் வழங்கப்பட்டது. மன்னன் ‘கோ’ என முல்லை நில வழக்கில் குறிக்கப்பட்டான். அதுவே கடவுளுக்கும் பெயராயிற்று. அம்பலத்தில் இருந்த மரம் தெய்விக மரம் ஆயிற்று. அது கோமரம் என்று பெயர் பெற்றது.
வீரக்கல், சிறப்பாகக் குடி முதல்வன் வீரக்கல், தெய்வ உருவாயிற்று. அம்பலமும் மன்றமும் கோயிலாயின. பூசை செய்த முதல் புரோகிதன், மன்னன் ‘அம்பலத்தாடி’, ‘மன்றாடி’, அல்லது ‘கோமரத்தாடி’ ஆனான்.
வீரம், ஆட்சி, சமுதாய வாழ்வு, சமய வாழ்வு இத்தனைக்கும் அடிப்படையான ‘அம்பல வாழ்வு’ தமிழர் குடியாட்சி மரபாய், இன்றைய உலகின் அரசியல், சமய, சமுதாய வாழ்வாய் மலர்ச்சி பெற்றுள்ளது என்று காணலாம். ‘அம்பல வாழ்வு’க்கு எதிர்ச்சொல் ’அரங்க வாழ்வு’ ஆகும். அம்பலத்தின் பொது வழிபாட்டைப் போலவே, குடும்ப அரங்கிலும் குடும்பப் பொது வழிபாடு நடைபெற்றது. குடும்பப் புரோகிதராகிய தந்தை ‘அரங்காடி’ ஆனார்.
‘அம்பலத்தாடி’யும் அரங்காடியுமே’ ’பின்னாட்களில் சிவ பிரானாகவும், திருமாலாகவும் தெய்வங்களாக உருவகிக்கப் பெற்றனர்.
கடலக வாழ்வு
குறிஞ்சி ஒரு காலத்தில் தமிழர் வாழ்வின் தலைநிலமாய் இருந்தது. அது படிப்படியாக முல்லை, மருதம் ஆகியவற்றில் வளர்ந்தது. தமிழர் மருத வாழ்வே இன்று எல்லா இனங்களிலும் நாட்டு வாழ்வின் அடிப்படையாய் இலங்குகிறது. இவ் வாழ்வில் தமிழர் எவ்வளவு நாள் அமைந்திருந்தனர் என்று கூறமுடியாது. ஆனால் நீண்டநாள் அதில் அவர்கள் தோய்ந்திருக்க வேண்டும். அதன் சின்னங்கள் உலக மொழிகள் அனைத்திலுமே காணப் படுகின்றன. ‘நகைமுக’ வாழ்வுடைய தமிழர் பேரூர் ‘நகர்’ எனப் பட்டது. அதனின்று வளர்ந்த தமிழர் பண்பாட்டின் புறப்படிவம் ‘நாகரிகம்’ ஆயிற்று. நடுநிலக் கடலக வாழ்வின் தொடர்பு பெற்ற கிரேக்க உரோமர் ‘நகரை’ ‘சிவிஸ்’ என்றனர். நாகரிகம் என்பதற் கான மேலை உலகச் சொற்களும் ஆங்கிலச் சொல்லும் (Civilization) இதனடியாகப் பிறந்ததே.
நகர வாழ்வு எவ்வளவு நீடித்த ஒன்றாய் இருந்தாலும் தமிழருக்குத் தனிச்சிறப்புத் தரும் வாழ்வு அதுவன்று, தமிழரின் மிகப் பழங்காலப் பண்பும் அதுவன்று.
கடலடுத்து மலை, மலையடுத்துக் கடல்! இவ்வாறு இன்றும் அமைந்துள்ளது மலையாள நாடு. பண்டைத் தமிழகம் முழுதும் இவ்வாறே அமைந்திருந்தது என்று ஆசிரியர் மறைமலையடிகளார் கருதுகின்றார். பண்டைத் தமிழகம் இன்றைய குமரிக்குத் தெற்கே நெடுந்தொலை பரவியிருந்தது. அதன் நடுவில் அமைந்திருந்த பாலைவனத்தின் வடகோடியே இன்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் தென்கோடியாயுள்ளது. இதைச் சுற்றிலும் தமிழர் நானிலங்களில் வாழ்ந்தனர்.
நிலத்துக்கு நிலம், நாட்டுக்கு நாடு தமிழர் பாலைவனத்தை ஒட்டகை மீது சென்று கடந்தனர். ஆனால் பாலைவனத்தைக் கடப்பதைவிட, கடலைச் சுற்றிச் செல்வது, அவர்களுக்கு எளி தாயிருந்தது. எனவேதான் குறிஞ்சி நில வாழ்வுக் காலத்திலேயே அவர்கள் நெய்தல் வாழ்விலும் ஈடுபட்டனர். கடல் செலவும் பாலைச் செலவுமே தமிழர் நாடுவிட்டு நாடு செல்லும் தலை நெறிகளாகத் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் வருணிக்கப்படு கின்றன.
நகர் ஏற்படுவதற்குள் நகருக்குப் போட்டியாகத் துறைமுக வாழ்வு எழுந்தது. நாட்டுக்கு ஓர் உள்நாட்டு நகர் மருத நிலத்தில் அமைந்ததுபோல, துறைமுக நகர் என்ற ஒன்று கடற்கரையிலும் அமைந்தது. இதுவே ‘பட்டினம்’ என்ற தமிழ்ச் சொல் குறிக்கும் பொருள். இத்தகைய ஒரு சொல் உலகின் வேறெம்மொழியிலும் இல்லை. கட்டு மரம், ஓடம், வள்ளம், பரிசல், படகு, தோணி, மரக்கலம், கப்பல் முதலிய நீர்ப்பரப்புக் கடக்கும் கலங்கள் தோன்றின. மீனும் உப்பும், முத்தும் சங்கும், கடற்பாசியும் கடல் நுரையும், வாணிக வளமும் கடலாட்சி வளமும் நாட்டுச் செல்வத்தில் பெரும் பகுதியாய் வளர்ந்தன.
தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் கடல் வாழ்வும் கப்பலும் பற்றிய செய்திகள், உலகில் வேறெம்மொழி இலக்கியத்திலும் அணிமைக் காலத்தில்கூடக் காணப்பெறாத அளவில் பெரு வழக்காகவும், பொதுமுறை வழக்காகவும் உள்ளன. மன்னனைப் புகழ்ந்த புலவர் நாட்டின் பிற வளங்களைவிட மிகுதியாக, துறைமுக வளத்தையே சுட்டினர். தலைநகர் தந்த பெருமையைவிட மன்னனுக்குத் துறைமுகம் தந்த பெருமை மிகுதியாயிருந்தது. உள்நாட்டுத் தலைநகருடன் போட்டியிட்டு அவை கடற்கரைத் தலைநகர்களாயின. பாண்டி நாட்டுக்குக் கொற்கை, சேர சோழருக்குத் தொண்டி, முசிறி ஆகியவை தலைநகர்களைக் காட்டிலும் சிறந்த நகர்களாயின, கொற்கையும் காவிரிப் பூம்பட்டினமும் உலக வாணிகக் களங்களாக நிலவின.
கடலக வாழ்வின் பழமையிலும் பீடிலும் தமிழினத்துக்கு ஒப்பான இனம் வரலாற்றில் எதுவும் கிடையாது. தொல்பழங்கால எகிப்தியர், ஃபினீசியர், தென்கிழக்காசிய மக்கள், இடைக்கால அராபியர், அணிமைக் கால வெனீசியர், டச்சுக்காரர், ஆங்கிலேயர் ஆகியோர் தமிழர் கடலக மரபைப் பின்பற்றியவரே யாவர்.
ஐயாயிர ஆண்டுகளுக்கு முற்பட உலகெங்கும் கடல்வழி பரவி வாழ்ந்த ‘ஞாயிற்றுக் கல் வழிபாட்டு’ (Helio-Lithic Culture)ஒரு கூறே தமிழினம் என்பர் எலியட் சுமித்.
கடலரசர், கடற்பேரரசர்
உலக வரலாற்றிலோ, இந்திய மாநில, தென்னக வரலாறுகளிலோ, தமிழகம் தரும் படிப்பினைகளில் தலைசிறந்தது கடற்படையின் படிப்பினையே. மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னரே தமிழர் தொலைவான மேலை உலகிலும், தென்கிழக்காசியா விலும், சீன ஜப்பான் கரைகளிலும் குடியேறினர். அந் நாளிலேயே வாணிகக் களங்கள் அமைத்தனர். பேரரசாட்சிகளும் பரப்பினர். இவற்றின் வரலாறு இன்னும் முழுதும் ஆராய்ந்து காணப் பெறவில்லை. ஆனால் சுமாத்ரா, ஜாவா, மலாயா, சயாம், கம்போடியா முதலிய இடங்களிளெல்லாம் தமிழ் மூவரசரின் குடிகள் சென்று, தமிழ் மொழியும் பண்பும் கலையும் பரப்பினர் என்பதற்கான சின்னங்கள் மிகப்பல. இத்தொடர்பே 12ஆம் நூற்றாண்டளவும் தொடர்ந்து, அதன் விளைவாகச் சோழப் பேரரசு கடல் கடந்த கடாரப் பேரரசாக நிலவிற்று.
கம்போடியாவில் சோழப் பெருமன்னர் கட்டிய பெருங் கோயில்கள் அழிந்துபட்ட இன்றைய நிலையிலும் உலகின் வியப்புக் குரியன ஆகியுள்ளன.
தமிழர் பரப்பிய சிற்பக்கலை, ஓவியக்கலை, இசை, நாடகம், இலக்கியம், மொழிப்பண்பு ஆகியவற்றை இன்றும் தென் கிழக்காசியா வெங்கும் காணலாம்.
கடற்படையும், கடற்படைத் தளங்களும் சேர சோழ பாண்டியர்களுக்கு உயிர்நிலைகளாய் அமைந்தன. நாகரிக உலகின் பெரும் பகுதியை வென்றடக்கிய சோழர்களுக்குச் சேரரே எப்பொழுதும் வென்றடக்க முடியாதவராக அமைந்தனர். அவர்கள் தளரா ஆற்றலுக்கு அவர்களது பெருங்கடற் படையும் அதன் மூலதளமாக அமைந்த காந்தளூர்ச்சாலை என்ற கடற்படைத் தளமுமே காரணம் என்பதைச் சோழர் வரலாறு விளக்குகிறது.
பண்டை உலகத்தின் கடல் வாணிகத்தில் தமிழகம் நடுவிடம் வகித்ததன் காரணம் தமிழரசர் கடற்படையேயாகும். அந் நாட்களில் தமிழரைப் போலவே தமிழக எல்லை கடந்த தமிழினத்தவரும் கடல் மறவராயிருந்தனர். ஆயினும் தமிழகம் போன்ற ஒழுங்கான ஆட்சியில்லாததால், கடல்மறவரே கடலாட்சியைக் கைக்கொண்டு கடற்கொள்ளைக்காரராயினர். மேல்கரை முசிறிக்கும் சென்னைக் கரைக்கும் வடக்கே, கடல் வாணிகமே தழைக்காதபடி அவர்கள் கடலைத் தங்கள் கொள்ளைக் காடாக்கியிருந்தனர். கிழக்கே ஆந்திர, சோழப் பேரரசரும், மேற்கே சேர பாண்டியப் பேரரசரும் கடற்கரையில் கடற்படையாட்சி நடத்தியதாலேயே, தென்னகம் உலகக் கடல் வாணிகத்தின் தளமாக ஆயிரக்கணக்கான ஆண்டு நிலவ முடிந்தது.
சேரன் கடல் மறவரான கடம்பரை அடக்கிக் கடலில் அமைதி பரப்பிய செய்தி பதிற்றுப்பத்தில் கூறப்படுகிறது.
பண்டைச் சேரர் கடல் வெற்றியையே சூரனை வென்ற முருகன் வெற்றியாகத் தமிழர் கொண்டாடினரோ என்று எண்ண இடமுண்டு.
பண்டைத் தமிழகக் கடல் வாழ்வின் ஒரு சின்னமாக, பம்பாய் நகரின் ‘மலபார்க் குன்று’ இன்றும் நிலவுகிறது. அதுவே தென்னகத்தின் மலையாளக் கரையின் கடற்கொள்ளைக்காரர் மூலதளமாக அணிமைக் காலம் வரை நிலவியிருந்தது.
சுதந்திரத்தின் காவல் வீடு
தமிழரின் கடற்படையும் கடற் பேரரசுகளும் கடல் வாணிகமும் தமிழர் சுதந்திரத்தை மட்டுமல்ல, கீழை உலகின் சுதந்திரத்தையே நீடித்துக் காத்துவந்த கருவிகள் ஆகும். வருங்காலத்தில் வரலாற்றில் தமிழகமே கீழை உலகத்துக்குரிய சுதந்திரத்தின் காவல் வீடு என்பது விளக்கம் பெறுவது உறுதி.
‘கடல் எல்லையைத்தானே கடற்படை காக்கும்! நில எல்லையை எவ்வாறு காக்கும்?’ என்று இன்று நாம் வினவக்கூடும். வரலாறு காட்டும் படிப்பினை இவ் வெண்ணம் தவறு என்பதைக் காட்டும்.
நாடோடிகளாக வடக்கிலிருந்து ஓயாது படையெடுத்து வந்த நாகரிகமற்ற இனங்களுக்கு இயற்கை தந்த, தருகிற ஆற்றல் பெரிது. செழிப்பும் வளமும் இன்ப வாழ்வும் வீரத்தைக் குறைக்கும். கடுமை மிக்க நாடோடி வாழ்வு அதை வளர்க்கும் தவிர குடிவாழ்வும் நிலையான நாடு நகர் வாழ்வும் உடையவருக்குப் போரில் தற்காப்பு அவசியம். நாடோடிகளுக்குத் தற்காப்புத் தேவையில்லை. தற்காப்பாகப் போரிடுபவர் திடீர்த் தாக்குதலை எதிர்பார்த்து எப்போதும் போருக்குச் சித்தமா யிருக்கவேண்டும். நாடோடிகள் தாம் நினைத்த நேரம் தாக்கலாம். மேலும் போர் குடிநிலை உடையவர்களுக்கு வாழ்வில் ஒரு சிறு கூறு. மற்ற தொழில்கள் அவர்களுக்கு முக்கியமானவை. அவற்றை விட்டுவிட்டே போருக்கு எழவேண்டும். நாடோடிகளுக்குப் போரும் கொள்ளையும்தான் வாழ்க்கைத் தொழில்.
எனவே நாடோடிகளாகப் படையெடுப்பவரைத் தடுத்து நிறுத்த, குடிவாழ்வு, நிலையிலுள்ள நாகரிக மக்கள் ஓயாப் புதுவளமும் கட்டுப்பாடுகளும் வலிமையும் உடையவராயிருக்க வேண்டும். நிலவரப் படை உடையவராயிருக்க வேண்டும்.
தமிழரசர்க்குக் கடற்படை புது வளம் தந்தது. நிலவரப் படைக்கு இது உதவிற்று. அத்துடன் இந்தியாவில் அன்றும், இன்றும் குதிரைகள் வளமாக வளர்வதில்லை. அது அரேபி யாவின் செல்வம். தமிழரசர் ஆண்டுதோறும் குதிரைப்படை வளர்த்துக்குக் கடலையே நம்பியிருந்தனர்.
ஹைதரும் திப்புவும் ஃபிரஞ்சுக்காரர் தயவையே குதிரைத் தளத்துக்கு நம்பியிருந்தனர். ஆனால் கடற்படை இல்லாத தாலேயே அவர்கள் விடுதலை முயற்சி வீணாயிற்று.
மேலைஉலக வணிகருக்குக் கடற்கரைகளைத் திறந்து விட்டவர்கள், சாமூதிரி அரசரும் விஜயநகரப் பேரரசருமே. விஜயநகரப் பேரரசர் தமிழர் கடற்படைகளை அழித்ததுடன் நின்றனர். கடற்படை இல்லாத முதல் தென்னாட்டுப் பேரரசர் அவர்களே. அவர்களை அடைந்த ‘மாய வெற்றி’ தமிழகத்தை மட்டுமல்ல, தென்னாட்டை, இந்தியாவை, ஆசியாவை மேலை உலகத்தின் கொள்ளைக் காடாக்கக் காரணமாய் இருந்தது.
ஆரியர் வருகைக்கு முன் சிந்து கங்கைவெளி தமிழகத்தைப் போலவே கடல்வாழ்வு உடையதாயிருந்தது. ஆரியர் வரவுக்குப் பின் அழிந்த சிந்து கங்கைவெளியின் நாகரிகம் மற்றெல்லாத் துறைகளிலும் ஓரளவு சீரமைந்து புதுவாழ்வு தொடங்கிற்று. ஆனால் கடல் வாழ்வை அது என்றும் பெறவில்லை. இன்று வரை பெற முடியவில்லை.
வடபுலப் பேரரசர் யாவரும் அசோகன், கனிஷ்கன், ஹர்ஷன், விக்கிரமாதித்தன், அலாவுதீன், அக்பர், அவுரங்கசீப் - அனைவரும் கடற்படையில்லா நிலப் பேரரசரே.
தென்னக எல்லையில் கடற்படையின் முக்கியத்துவம் உணர்ந்த ஒரே வீரன் சிவாஜி. ஆங்கிலேயர்களை அவன் பல கடற் போர்களில் முறியடித்தான். கடற்படையின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஆங்கிலேயர் கடற் பேரரசரானதற்கு சிவாஜி தந்த படிப்பினைகளே காரணம்.
வடபுலம் காத்த தமிழ் மன்னர்
இமயத்தில் வில், கயல், புலி பொறித்த செயலைப் பல வரலாற்று ஆசிரியர் வேடிக்கை அல்லது புராணக் கற்பனையாக எண்ணுகின்றனர். கோவணம் உடுத்தாதவர் வாழும் இன்றைய உலகில், கோவணம் உடுத்த தமிழன் ஒருவனே பித்துக்கொள்ளி யாக விளங்குகிறான். சிவாஜி மூலம் தமிழகத்தின் படிப்பினை கற்று உலகாண்ட ஆங்கிலேயர்கூடத் தெரிந்தோ தெரியாமலோ தமிழகக் கடல்வாழ்வில் கண் திருப்பாதது வியப்புக்குரிய செய்தியே! ஆரிய இன எழுச்சியின் திரையும், வெள்ளையர் இன இறுமாப்பும் ஒன்று சேர்ந்து கண்முன் இருப்பதை நம்பாமல், கற்பனை முற்கோள்களை நூற்று அவற்றில் இழைவதையே ஆராய்ச்சியாகக் கொண்டுள்ளன.
இமயம்வரை ஆணை செலுத்துவது ஒரு குறிக்கோள். அதை நிலையான ஆட்சியாக்கத் தமிழர்கள் நீண்ட நாள் நினைக்கவில்லை. ஆனால் அப்பரப்பின் சுதந்திரத்தையும், அதில் தம் ஆற்றலின் மதிப்பையும் பேண அவர்கள் ஓயாது முயன்றனர். கனிஷ்கன் காலத்திலும், கஜினி காலத்திலும் வடபுல வாழ்வு தமிழர்கள் காதில் கேட்குமாறு அல்லோல கல்லோலப்பட்டது. கடற்படையின் மூலவலு இருந்த காரணத்தால், பாதுகாப்பற்றுத் தவித்த சிந்து கங்கைவெளியில் தமிழர் அமைதியை நிலைநாட்ட விரும்பினர், நிலைநாட்ட முடிந்தது.
இன்றைய உலகின் கடல் வாழ்வு
இந்திய மாநிலத்தின் பேரரசர் மட்டுமல்ல, சீனப் பேரரசரும் பாரசீகப் பேரரசரும், அலெக்சாண்டரும் உரோமப் பேரரசரும் யாவரும் கடற்படை வலுவில்லாமலே வாழ்ந்தனர். கடற்படை வைத்திருந்த போதும் அதைக் கடற்கரையின் காவலுக்கான ஒரு சிறு துறையாக மட்டுமே கருதினர்.
உலகக் கடல் மரபு நடுநிலக் கடலக வழியாகப் பரவிய மரபேயாகும். பண்டைக் கிரேக்கரிடையே அதேனியரும், இடைக் காலத்தில் வெனிசியரும், அணிமைக் காலத்தில் டச்சுக்காரரும் ஆங்கிலேயரும் மட்டுமே அம் மரபு பேணி வருகின்றனர். ஐரோப்பாவை இரும்புக் கோட்டையாக்கி,வான் படையிலும் வீறுமிக்க நிலையடைந்த ஹிட்லர் கடற்படை வளர்க்காத தனாலேயே வீழ்ச்சியடைந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இங்கே குறைபாடு ஹிட்லரின் குறைபாடு மட்டுமல்ல, ஜெர்மன் தேசியத்தின் குறைபாடு.
கடல் மரபினங்களில் மிகப் பல ஆரியச் சார்பற்றன. சில ஆரிய இனம் சார்ந்தவை. ஆனால் கடற் கொள்ளைக்காரராக வாழ்ந்த டேனியரும், கடல் வணிகரான ஆங்கிலேயரும் டச்சுக்காரரும் வெனிசியரும் அதேனியரும் ஆரியர்களே. அதே இனத்தவரான ஜெர்மானியரும் உரோமரும், அதேனியரல்லாத கிரேக்கரும், ஜெர்மானியரும் கடல் வாழ்வுடையவராய் அமையவில்லை. இது ஏன்?
தமிழின, நடுக்கடலக மரபினரின் கலப்பே-பண்டைத் தென்றல் மணத்தின் உயிர் மூச்சே-இன்றும் உலகின் கடலக வாழ்வு பேணுகிறது என்று காணலாம்.
‘இந்தியாவின் கப்பல் துறையும், கடல் வாணிக வாழ்வும்’ என்ற நூலில் திரு முக்கர்ஜி இதற்குச் சான்று தருகிறார். 1840 வரை உலகின் பெரிய கப்பல்கள் தென்னிந்தியக் கப்பல்களே என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஆங்கிலேயர் தம் முதல் கப்பல் தளத்தைத் தென்னிந்தியத் தொழிலாளர்கள், பொறியாளர்கள் உதவியாலேயே பெல்ஃவாஸ்டில் அமைத்தனர். அவர்கள் தென்னாட்டிலிருந்து பெற்ற கடலாட்சியை புதிய இயந்திரத் தொழிற் புரட்சி நிலையாக்கி வளர்த்ததேயன்றி வேறன்று.
ஆட்சி முறை
தலைநகர், துறைமுகத் தலைநகர், எல்லைத் தலைநகர் என்ற முறை, அரசன் தன மூத்த புதல்வனை எல்லைத் தலைநகரில் இளவரசாக்குதல், நகர், நாடு, வட்டம், மாவட்டம், மண்டலம், அரசு, பேரரசு என்ற பகுப்பு முறைகள், ஆட்சி முறைகள், ஆட்சிய ரங்கப் பாகுபாடு, நிலவரி முறை, சுங்க முறை, நாணய முறை, தொழிற்சங்க அமைப்பு, வாணிக ஒழுங்கு முறைகள், துறைமுக ஆட்சி, நகராட்சி, நகராண்மைத் திட்டம் ஆகிய எத்தனையோ துறைகளில் உலகுக்குத் தமிழகம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வழிகாட்டியிருந்தது.
வீரம், காதல், அறம், பண்பு, கடவுள், சமயம் ஆகிய துறைகளில் இன்றைய உலக நாகரிகத்தின் பெரும் பகுதியும் தமிழகம் நேரடியாகவோ, மாண்ட நாகரிக இனங்கள் மூலமாகவோ உலகுக்கு அளித்த பரிசுகளேயாகும்.
வருங்கால வளம்
நில உலகம் தொடக்கத்தில் ஓர் எரிபிழம்பாய் இருந்தது என்று வானூலார் கூறுகின்றனர். கதிரவன் பிழம்பிலிருந்து தெறித்து 200 கோடி ஆண்டுகளாக அது கதிரவனைச் சுற்றி ஓடி வருகிறது. சென்ற 160 கோடி ஆண்டுகளாகத்தான் அது சூடாறி நிலமும் நீருமாக அமைந்துள்ளது. 80 கோடி ஆண்டுகளுக்குப் பின்னரே அதில் படிப்படியாக உயிர்கள் தோன்றி வாழ்ந்து வருகின்றன. ஆனால் மனித இனத்தை ஒத்த உயிரினங்கள் அதாவது/ குரங்கு மனிதரும் மனிதக் குரங்குகளும், பத்திலக்கம் ஆண்டுகளுக்கு முன்னிருந்து அறுபதினாயிரம் ஆண்டுகளுக்கு முன் வரைதான் உலவின. இதன் பின் ஐம்பதினாயிரம் ஆண்டுக் காலம் விலங்கு நிலையிலுள்ள மனித இனமும் அதன்பின் சென்ற பதினைந்து அல்லது பத்து ஆயிரம் ஆண்டுகளாகவே தற்போதைய மனித இனமும் வாழத் தொடங்கியுள்ளனர். இவை மண்ணுலார், புதை பொருள் ஆராய்ச்சியாளர் ஆகியோர் முடிவுகள்.
எகிப்திய, சுமேரிய, சிந்துவெளி நாகரிகங்கள் நம்மை ஐயாயிர ஆண்டுகட்கு முன்வரையும் அப்பாலும் கொண்டு செல்கின்றன.
கீழ்த் திசையிலும் தமிழகத்திலும் புதைபொருள் ஆராய்ச் சியும் பழம் பொருளாராய்ச்சியும் மேம்பாடுற்றால், இம் முடிவுகள் எந்த அளவு மாறுபடும் அல்லது உறுதிப்படும் என்று கூற முடியாது. மேலை நாடுகளில் அகழ்ந்துணரப்பட்ட அளவில் இங்கே அவை அகழ்ந்து காணப்படவில்லை. பழமையான நாகரிகங்கள் இருக்குமிடத்தில், மனித இனப் பழமை வரையறுக்கப்படுவது, அந் நாகரிகங்களுக்கு மட்டுமன்றி, உலக நாகரிகத்துக்கே பெரும்பயன் தருவதாகும். ஆயினும் தமிழகத்தைப் பொறுத்த வரையில், பழைய வரலாற்றின் அறிவு வருங்காலத் தமிழகத்தை ஆக்குபவர்களுக்கு இன்றியமையாதது. ஏனெனில் தொடக்கக் கால வரையறையே வளர்ச்சிப் படிகளையும் வளர்ச்சியையும் உள்ளவாறு உணர வழிவகுக்கும். மரபுரை களையோ, கேள்விகளையோ, இனப்பற்றுக் காரணமான ஆர்வமதிப்பீடுகளையோ இத்தகைய ஆராய்ச்சி முடிவுக்கு ஈடாகக் கொள்ள முடியாது.
நம் குறைபாடுகள்
வரலாறு எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் பழமைப்பற்றுக் காரணமாகவோ, இனப்பற்று வளர்ப்பதற்காகவோ அல்ல. தற்கால வாழ்வையும் அதன் பிரச்சினைகளையும் புரிந்து கொள்வதற்காகவும், அதை விரும்பிய திசையில் வருங்காலத்தில் செலுத்துவதற்காகவுமே! இனப்பற்று வரலாற்றின் பயன் அன்று; அதற்கான தூண்டுதலும், அதன் படிப்பினைகளைப் பயன்படுத்தி இனத்தை வளர்ப்பதற்கான தூண்டுதலுமேயாகும். எனவே தமிழினம் தன் இனப்பற்றையோ அல்லது பிற இனப்பற்றையோ வரலாற்றாராய்ச்சி மூலம் வளர்க்க எண்ணுவதுகூடாது. மக்களிடம் மெய்ம்மையார்வத்தைத் தூண்டுவதற்கும், அதை நற்பயன் விளைவிக்கும் வகையில் செயற்படுத்துவதற்குமே பயன்படுத்த வேண்டும்.
தமிழினத்தின் பழமை, நீடித்த வாழ்வு ஆகியவற்றுக்கு உதவிய நற்பண்புகளை உள்ளவாறு அறிதல் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு அவர்கள் இடைக்காலத் தளர்ச்சிக்குரிய குறைகளை உணர்வதும் முக்கியமேயாகும். புகழை ஆராய்தல் எவ்வளவு சிறப்புடையதோ, அவ்வளவு இகழ் இருந்தால் அதை அறிவதும் சிறப்புடையதேயாகும். நம் இனப்பற்று இனப் பெருமையுடன் அமைந்துவிட்டால், இனப்பற்றால் பலன் எதுவும் இல்லை. அது இனப் பெருமையை ஆக்கவேண்டும். இவ் வகையில் ஐரோப்பா நமக்கு நல்ல படிப்பினை தருவதாகும். நாகரிகத்தில் ஒரு சில ஆயிரம் அல்லது ஒருசில நூறு ஆண்டுகளுக்கு முன்வரை தம் நாடு பிற்பட்டிருந்தது என்று காண்பதில் அவர்கள் சிறிதும் புண்படுவதில்லை. நேர்மாறாக, அவ்வளவு விரைவில் பழைய நாகரிகங்களைத் தாண்டி வளர்ந்து விட்டதிலும், விரைந்து வளர்வதிலுமே பெருமை கொள்கின்றனர். தமிழருக்கு இந்த மனப்பான்மை தேவையில்லாதிருக்கலாம். ஆனால் இதை வளர்த்துக்கொள்ளுதல் நன்று. அதே சமயம் பிந்திவிட்ட இன்றைய நிலையில் பழமைபற்றிய அறிவு ஒரு தூண்டுதல் மட்டுமல்ல, ஒரு துணைகூட ஆகும்.
ஊன்றி நோக்கினால், இந்திய மாநிலம், தமிழகம் ஆகியவற்றின் பிரச்சினை, பழமையில் பெருமையா, புதுமையில் பெருமையா என்பதல்ல. இரண்டும் மேலைநாடுகளில்கூட இல்லாத பண்புகளல்ல. ஆனால் பெருமை, சிறுமை இரண்டும் அங்கே நாட்டு மக்கள் அனைவருக்கும் சரிசமமாக உரியது. எனவே பெருமை மேலும் பெருமையில் ஊக்குகிறது. சிறுமை பெருமை தூண்டுகிறது. ஆனால் கீழை உலகில் சிறுமையும் பெருமையும் நாட்டு மக்களிடையே வேறுவேறு வகை உணர்ச்சி களையும் உணர்ச்சி வேறுபாடுகளையும் உண்டுபண்ணுகின்றன. எடுத்துக்காட்டாக, ஆரிய இன எழுச்சியைப் பற்றிப் படிக்கும் இந்தியருள் ஒரு திசையினர், ஒரு சாதியினர், ஒரு மொழியினர் தாம் ஆரியர் என்று நினைத்துப் பெருமிதம் கொள்கின்றனர். மற்றொரு பகுதியினர், மொழியினர், சாதியினர் அங்ஙனம் பெருமிதம் கொள்வதில்லை. சில சமயம் ஒரே வரலாற்றை வாசிப்பதன் மூலம் மக்களிடையே ஒற்றுமை உணர்ச்சிக்கு மாறாக, வேற்றுமை உணர்ச்சியே மிகுதியாகின்றது.
வரலாற்றின் இத்தகைய பிளவுபட்ட உணர்ச்சியே இந்திய மாநிலத்தை இந்தியா-பாகிஸ்தான் எனப் பிரித்துள்ளது.
இது அரசியற் பிரிவினை மட்டுமல்ல; பிரிட்டிஷார் வருமுன் இதனைக் காட்டிலும் எத்தனையோ பிரிவினைக் கூறுகள் இருந்தன. இப்பிரிவினை அரசியற் பிரிவினைக்கு முன்னும் வேற்றுமை உணர்ச்சி வளர்த்தது. அதன் பின்னும்கூட நேச உணர்ச்சி வளரவில்லை. தமிழகம், தென்னகம் ஆகியவற்றின் நிலை இதனின்றும் வேறுபட்ட தல்ல. உண்மையில் பிரிவினை இல்லாமலும் தமிழர் தம் மொழி, பண்பாடு, கல்வி ஆகிய வகையில் தன்னுரிமையுடையவராயில்லை. பிரிவினை வந்த பின்னும் நாட்டடிப்படையான இனப்பற்று இல்லாமல் ஒற்றுமையுணர்ச்சி வளர முடியாது.
நாட்டுப்பற்று-இங்கும், அங்கும்!
மேலை உலகில் நாட்டுப்பற்று இனப்பற்றுத் தாண்டியது. சமயப்பற்று, கட்சிப்பற்றுத் தாண்டியது. இத்தகைய நாட்டுப் பற்று உலகப்பற்று அன்றாகலாம். ஆனால் கட்டாயமாக அது உலகப்பற்றுக்கு ஒரு படியாய் அமையும். சிறப்பாக, நாடுகடந்த குடும்ப உறவு, நாட்டுக்கு நாடு வேற்றுமையைப் பிறப்படிப்படை யான வேறுபாடு ஆக்காமல், வாழ்க்கை வாய்ப்படிப்படையான வேறுபாடு ஆக்குகிறது. ஆனால் கீழ்த் திசையிலும் தமிழகத்திலும் மக்கள் நாட்டுக்குள்ளேயே, ஒரே ஊருக்குள் அல்லது தெருவுக்குள்ளேகூட ஒருவருக்கொருவர் மணத்தொடர்போ ஒருங்கிருந்து உண்ணும் தோழமைத் தொடர்போகூட அற்ற பிறப்படிப்படையான வேறுபாடு உடையவராகின்றனர். இந்நிலையில் இங்கே நாட்டுப்பற்று வெறும் வாய்வேதாந்தம் ஆய்விடுகிறது.
சாதி, இனம், மதம் கடந்த நாட்டுப்பற்றும்; சரிசமமான நாட்டுரிமையும்; மொழியடிப்படையான, மொழியின அடிப் படையான தன்முடிபுரிமையும் கீழை உலகின் இன்றியமையாத் தேவைகள் ஆகும். இதனை நாடு நாடாகக் கிளர்ச்சியடிப்படையில், கிளர்ச்சிக்குப் பின் அமைப்பதால், இனத்துக்கினம் மனக்கசப்பு வளர இடமுண்டாகிறது. நாடுகடந்த உலக அடிப்படையிலே உரிமை கோரியவர்களுக்கும் கோராதவர்களுக்கும், முன்னேறிய வர்களுக்கும் முன்னேறாதவர்களுக்கும், இன எழுச்சி பெற்றவர் களுக்கும் அது பெறாதவர்களுக்கும் ஒரே சரிசமநீதி வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் பூசலற்ற, அன்படிப்படையான பிரிவினை அதாவது பாகுபாடுகள் எளிதாகும். பாகுபாட்டுக்குப் பின் நேசத் தொடர்பும், கூடுமான இடங்களில் ஒத்துழைப்பும் எளிதாகும்.
தமிழகத்தில் தமிழர் ஒற்றுமைப்பட்டு இன உணர்வு பெற்றால், தமிழக வளர்ச்சிக்குரிய பல இயற்கை வாய்ப்புக்களை நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஒரு சுதந்திரத் தமிழகம் அமையக்கூடுமானால், சுதந்திரத் தமிழகத்தை உள்ளடக்கிய தமிழின, தமிழுலகக் கூட்டுறவு ஏற்பட முடியுமானால்-வரலாற்றில் தமிழகத்தின் தொடர்புடைய தென் ஆப்பிரிக்கா, இலங்கை, தென் கிழக்காசியா முதலிய பகுதிகளிலுள்ள தமிழர்களுடன் தமிழகம் தன் பண்பாட்டுத் தொடர்பை
மிகுதி வளர்க்கமுடியும். மற்றொரு புறம் தமிழின மொழி நாடுகளான மலையாள, கன்னட, தெலுங்கு நாடுகளுடனும், பண்பாட்டினடிப்படையாகச் சிந்து கங்கை வெளியுடனும், வரலாற்றடிப்படையாக ஏனைய உலகப் பகுதிகளுடனும் படிப்படியான விரிவகற்சி வாய்ந்த தொடர்பு கொள்ளல் எளிது.
இந்திய மாநில மொழிகளிலே, தென்னக மொழிகளிலே, தமிழ் ஒன்றுதான் கடல் கடந்த பல நாடுகளிலும் பேசப்படும் உலகளாவிய மொழி. தென்னகத் தாய்நிலத்தின் எல்லையில் தமிழ் பேசுபவர் தொகை மூன்று கோடிக்கு மேற்பட்டது. இதுவன்றி இலங்கையில் இருபது இலட்சம் பேரும், மலாயா, வியட்னாம். இந்தோனேஷியாவில் பத்து லட்சம் பேரும், ஃபிஜி, மோரிசு, மடகாஸ்கர், திரினிதாது, மார்ட்டினீக் ஆகிய தீவுகளிலும் ஆப்பிரிக்காவிலும் சேர்ந்து இலட்சக்கணக் கானவர்களும் தமிழையே தாய்மொழியாகக் கொண்டவர்கள். இவ்வெல்லா இடங்களிலுமுள்ள தமிழர் ஒரே தமிழுலகமாக இணைந்து தமிழ்ப்பண்பு வளர்க்க முடியாமல் இன்று பல அரசியல்கள், ஆதிக்க இனங்கள் ஆகியவற்றினால் கட்டுண்டு பிளவுற்று நலிகின்றனர். ஒரு சுதந்திரத் தமிழகம் இவற்றிடையே குறைந்த அளவு பண்பாட்டு ஒன்றுமையையும், ஒன்றுபட்ட உலக நட்புணர்வையும் வளர்க்க முடியும்.
தமிழின் தகுதி! தமிழன் தகுதிக்கேடு!
தமிழகம் ஒரு சுதந்திர நாடாக இருந்திருக்குமானால் அல்லது குறைந்த அளவு ஒரு சுதந்திர நாட்டின் தன்னுரிமைபெற்ற உறுப்பாக அல்லது இனமாக இருந்திருக்கக்கூடுமானால்,
தமிழ் தமிழகக் பல்கலைக்கழகங்களில் மட்டுமன்றி, உலகப் பல்கலைக் கழகங்களிலும் உயர் தனிச் செம்மொழியாக இடம் பெற்றிருக்கும். ஆனால், நேர்மாறாக மொழித் துறையிலேகூட உரிமையும் மதிப்பும் பாதிக்கப்படும் அளவுக்குத் தமிழர் தம் நாட்டிலேயே அடிமைச் சூழ்நிலையில் சிக்கியுள்ளனர். உரிமையிழந்த கிரேக்க உரோம நாடுகளின் பண்டை மொழிகூட உயர்தனிச் செம்மொழிகள் என்ற காரணத்தினால் அயலினங்களால் போற்றப்படுகின்றது. ஆனால் தமிழ் மொழியின் தனிப்பெருந்தகுதியைக்கூடத் தமிழனின் தன் மதிப்பற்ற அவலநிலை கெடுத்துள்ளது, கெடுத்து வருகின்றது.
உயர்தனிச் செம்மொழியாகிய தன் மொழியை உலகில் ஆதரவற்ற நிலையில் விட்டுவிட்டு, சமற்கிருதத்தை உயர்தனிச் செம்மொழியாக ஏற்கும்படி தமிழகத்திலேயே ஆரிய இன எழுச்சியாளர் தமிழனை வற்புறுத்துகின்றனர். தமிழ்மொழியின் உரிமைகளை அதற்குப் பலியிடும்படி ஓயாது தூண்டுகின்றனர், தூண்டி வருகின்றனர். நீண்டகால அடிமைத் தனத்தின் காரணமாகத் தமிழகத்தில் பிறமொழிச் சார்பாளர், பிற இனப்பற்றாளர்கள் கையிலேயே அரசியல், சமுதாய ஆட்சி, செல்வர் ஆதரவு, பத்திரிகைகள், திரைப்படம், வானொலி முதலிய எல்லாப் பொது நிறுவனங்களும் சென்று சேர்ந்துள்ளன.
தமிழன் பழந்தகுதி! அவன் இன்றைய அவலநிலை! தமிழன் பண்டைய செயல்வீறார்ந்த உயர் வாழ்வு! அவனது இன்றைய செயலற்ற, உரிமையற்ற நிலை! இந் நிலையை துடைத்தழிக்கத் தமிழ்ப் பற்றுடையோர் எல்லா வகைத் தியாகங்களும் செய்ய வேண்டும், எல்லா வகை உழைப்பும் ஆற்ற வேண்டும் சிறப்பாக உலக மக்கள் கவனம் தமிழகத்தின் பட்டப்பகல் அநீதிகள், இன ஓரவஞ்சக ஆட்சி ஆகியவற்றின் மீது செலுத்தப்பட வேண்டும். உலக மக்கள் ஒத்துணர்வு இல்லாமல் தமிழன் தனக்கெதிராகச் சூழ்ந்து வரும் ஆரிய இன எழுச்சிச் சூழலிலிருந்து மீள முடியாது.
தமிழகம் சுதந்திரம் அடையும்வரை, தமிழினம் தமிழகத்துடன் தொடர்புகொள்ள முன்வரும் வரை, கடல் கடந்த தமிழருடன் தமிழன் மொழித் தொடர்பு கொள்ளும் உரிமை பெறும்வரை தமிழக அரசியல் தமிழர் நலங்களை, தமிழர் அவா ஆர்வங்களையே உணர்வது அருமை! தமிழ்ப் பண்பு கெடாது மீந்துள்ள செல்வர் குழாங்கள், நிலையங்கள், கட்சிகள் ஆகியவைகளே அரசியலை மட்டுமன்றி, தமிழகத்தின் தமிழ்ப் பண்பற்ற சமய, சமுதாய, அறநிலையங்களைக்கூட எதிர்க்க வேண்டி வரலாம். ஆனால் தமிழன்பு ஒரு சிறிது உடைய தமிழர் அந் நிலையங்களில் உள்ள வரை, தன்னலத்திலும் மிஞ்சிய இன நலமுடைய தமிழர் ஆதரவு அவற்றுக்குத் தேவையாயிருக்கும் வரை போராட்டம் அன்புப் போராட்டமாகவே இருத்தல் நலம்; காதல் போராட்டமாக, தியாகப் போராட்டமாக இருத்தல் இன்னும் சால்புடையது!
தமிழன் தியாகம்!
தமிழன் இன்று பிற இனங்களுக்காகத் தியாகம் செய்யத் தயங்க வில்லை, உயிரிழக்கவும் தயங்கவில்லை! ஆயினும் தமிழுக்காகத் தமிழரில் பலர் - சிறப்பாகப் படித்தவர், பிற மொழி படித்தவர், அல்லது பிற ஆதிக்க மொழி ஆதரவால் தனி நலம் பெறுபவர் - தம் தன்னலத்தைச் சிறிது தியாகம் செய்யக்கூடத் தயங்குகின்றனர். தமிழர் வீரம் இப்போது இத்தகைய தன்னலத்தின் காலடியில் கிடந்து துவள்கிறது.
தமிழில் இன்று ஏற்பட்டு வரும் மறுமலர்ச்சி தமிழர் இகழ் நீக்கி வருங்காலப் புகழ் வளர்க்கப் பயன்படத்தக்கது. ஆனால் தமிழறிவும் உலக அறிவும் இல்லாவிட்டால் மறுமலர்ச்சி ஆர்வம் பயனில்லாது போய்விடும். இரண்டையும் தமிழரிடையே பரப்பத்தக்க கழகங்கள், அறிவகங்கள், அறநிலையங்கள், தொழிலகங்கள் தமிழகத்தில் பெருகவேண்டும்.
தமிழன் உயிர்ப்பண்பு எத்தனையோ இன்னல்களைத் தாண்டியுள்ளது. ஆனால் இனச் சுதந்திரம் இழந்த பின்னும் இவ்வுயிர்ப்பண்பு நீடித்து நிலவும் என்று கூற முடியாது. அச்சுதந்திரம் நாடித் தமிழக இளைஞரும் முதியவரும், ஆடவரும் பெண்டிரும், செல்வரும் ஏழையரும் ஒன்றுகூடி எழுவார்களாக!
கருத்துகள்
கருத்துரையிடுக