நபிகள் நாயகம்
வரலாறு
Back
நபிகள் நாயகம்
கி. ஆ. பெ. விசுவநாதம்
நபிகள் நாயகம்
முத்தமிழ்க் காவலர், கலைமாமணி,
டாக்டர் கி. ஆ. பெ. விசுவநாதம் டி. லிட்,
பாரி நிலையம்
184.பிராட்வே, சென்னை-600108
முதற் பதிப்பு : அக்டோபர், 1974
இரண்டாம் பதிப்பு : ஜனவரி, 1983
மூன்றாம் பதிப்பு : டிசம்பர், 1988
நான்காம் பதிப்பு : ஆகஸ்டு. 1994
விலை : ரூ. 7.00
கவின்கலை அச்சகம்,
2/141, 2வது தெரு,
கந்தசாமி நகர், பாலவாக்கம்
சென்னை-600041 தொலைபேசி 41 71 41.
முன்னுரை
சென்ற ஆண்டு கும்பகோணத்தில் நடைபெற்ற அகில இந்திய மீலாத் விழாவில் நான் பங்கு பெற்றுப் பேசிய பேச்சு இது. இப்பேச்சை இஸ்லாமியப் பெருமக்கள் பலரும், இஸ்லாமியப் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் சிலரும் பாராட்டியிருந்தனர்.
இதை நூல் வடிவில் வெளியிட வேண்டுமெனப் பல அன்பர்கள் வற்புறுத்தி எழுதியிருந்தனர். இன்னும் சிறிது விரிவுபடுத்தி, ஒரு பெரிய நூலாக வெளியிட எண்ணியும், என்னால் முடியவில்லை. இந்த அளவுக்கேனும் வெளியிட முடிந்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.
இதை எழுதுவதற்கு எனக்குத் துணை புரிந்த கோயமுத்துர் வேளாண்மைப் பல்கலைக் கழகத் துணைத் தமிழ் ஆசிரியர் அன்பர் திரு கந்தசாமி எம். ஏ., அவர் களுக்கும், இதனை ஒப்பு நோக்கி உதவிய திருச்சி ஜமால் முகமது கல்லூரித் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர் ஜனாப் சி. நயினார் முகம்மது எம். ஏ அவர்களுக்கும், எவ்வளவோ வேலைகளிருந்தும், நூல் முழுவதையும், நன்கு ஆராய்ந்து படித்து, திருத்தங்களும் செய்து உதவி, மதிப்புரையும் எழுதி வழங்கிய மாண்புமிகு சென்னை உயர்நீதி மன்ற நீதிப்தி ஐஸ்டிஸ் எம். எம். இஸ்மாயில் எம். ஏ., பி. எல் அவர்களுக்கும், இந்நூலின் எழுத்துப் பிரதியை முழுதும் படித்துப் பார்த்து, நூலை வெளியிட ஒப்புதலும் அளித்து, பாராட்டுரையும் வழங்கி உதவிய திருச்சி நகர காஜியார். ஆவி ஜனாப் மெளல்வி முன்ஷி பாசில் சையத் அப்துல் கனி அவர்களுக்கும் என் நன்றியறிதலையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
இந்நூலை நல்ல முறையில் அச்சிட்டு உதவிய சென்னை மாருதி அச்சகத்தாருக்கும், விரைவில் வெளியிட்டு உதவிய சென்னை பாரி நிலைய உரிமையாளர் திரு. அ. செல்லப்பன் அவர்களுக்கும் என் நன்றி. இதை இஸ்லாமியப் பெருமக்கள் மட்டுமின்றி, எல்லாச் சமய மக்களும் படித்து, வாழ்க்கைக்குப் பயன்படுத்திப் பலனடைவது நல்லது.
தங்களன்பிற்குரிய
கி. ஆ. பெ. விசுவநாதம்
திருச்சிராப்பள்ளி-8
1-10-1974
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி
மாண்புமிகு ஜஸ்டிஸ் M. M. இஸ்மாயில் அவர்கள்
மதிப்புரை
திரு. கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள் சாதி, சமய பேதமின்றி தமிழர்கள் அனைவருடைய அன்புக்கும், மதிப்புக்கும், மரியாதைக்கும் பாத்திரமானவர்கள். அவர்களுடைய பகுத்தறிவுப் பற்று இஸ்லாத்திடத்திலும், அதன் திருத்தூதரான முஹம்மது நபி அவர்களிடத்திலும் உண்மையான ஈடுபாட்டை உண்டாக்கிற்று. சுமார் 50 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் முஹம்மது நபி அவர்களுடைய பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக நடக்கும் 'மீலாது' விழாக்களில் பெருமளவு அவர்கள் பங்கு கொண்டு நபிகள் நாயகமவர்களுடைய வாழ்க்கையைப் பற்றியும் போதனைகளைப் புற்றியும் விரிவாகப் பேசி வருகிறார்கள். 'அகில இந்திய மீலாது விழா' என்று அண்மையில் கும்பகோணத்தில் நடந்த விழா ஒன்றில் அவர்கள் பேசிய பேச்சு, இப்புத்தக வடிவில் வெளியிடப்படுகிறது.
நபிகள் நாயகம் அவர்களுடைய வரலாறு, அவர்கள் செய்த செயற்கருஞ் செயல்கள், அவர்கள் உணர்த்திய சகோதரத்துவம், அவர்களுடைய அருங்குணங்கள், அவர்கள் கையாண்டு போதித்த சிக்கனம், பிறருடைய குற்றங்களை மன்னிக்கும் கருணை உள்ளம், அவர்கள் நபித்துவம் பெற்றது, அவர்கள் இறைவனிடமிருந்து பெற்று உலகுக்கு வழங்கிய திருக்குர்-ஆன், நபிகள் நாயகமவர்கள் உலகிலே நிலை நிறுத்திய சீர்திருத்தங்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையின் பல துறைகளிலே காட்டிய பெருந்தன்மை, உணர்த்திய குறிக்கோள்கள் ஆகியவற்றோடு இஸ்லாத்தின் அடிப்படைத் தத்துவங்கள், அதன் ஐம்பெருங் கடமைகள், முஹம்மது நபியவர்கள் இறுதி தீர்க்கத்தரிசி என்ற கொள்கை ஆகியவையும் சுருக்கமாகக் கூறப்பட்டிருக்கின்றன.
நூல் முழுவதிலும் ஆசிரியர் அவர்களுடைய நல்லெண்ணமும், சிரத்தையும், இஸ்லாத்திடத்தும், முஹம்மது நபியவர்களிடத்தும், முஸ்லிம்களிடத்தும் அவர்களுக்குள்ள விசுவாசமும், மிகத் தெளிவாகத் தெரிகின்றன. இத்தகைய நல்லெண்ணத்திற்காகவும், முஸ்லிம்கள் திரு. கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்களுக்கு என்றும் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள்.
இந்நூலில் சரித்திர ஆதாரமில்லாமல் கர்ண பரம்பரையாக வழங்கி வருகின்ற நிகழ்ச்சிகள் சிலவும், சில தவறுகளும் இடம் பெற்றிருக்கின்றன. சில அச்சுப் பிழைகளும் காணப்படுகின்றன. இவை அடுத்த பதிப்பில் தவிர்க்கப்படவேண்டும் என்பது என் நோக்கம். இப்பதிப்பிலும் அவை எடுத்துக் காட்டப் பெற்று, இந்நூலின் இறுதியியில் பிழை திருத்தம் என ஒரு குறிப்பும் வெளி வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
ஆசிரியர் அவர்களுடைய இந்த முயற்சியும், பணியும் எல்லோருடைய போற்றுதலுக்கும், பாராட்டுதலுக்கும் உரியன. இஸ்லாத்தைப் பற்றியும், நபிகள் நாயகமவர்களைப் பற்றியும் சாதாரண மக்களிடையே நிலவும் தவறான சில எண்ணங்களைத் திருத்தக்கூடிய கருத்துகளும் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன. இத்தகைய கருத்துகளை அகமார்ந்த ஆர்வத்தோடு வெளியிட்டிருக்கும் திரு. கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுதலையும், நன்றியையும், மரியாதையையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மு. மு இஸ்மாயில்
சென்னை-28
20-09-74
மதிப்புரை
ஆலி ஜனாப் மெளல்வி பாசில்
சையத் அப்துல் கனி அவர்கள்
திருச்சி நகர காஜி, திருச்சிராப்பள்ளி
"மதிப்பிற்குரிய முத்தமிழ்க் காவலர் திரு. கி. ஆ. பெ. விசுவநாதம்" அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. நாடறிந்த நாவலர். தமிழ்க் காவலர். வாதத்திறமை பெரிதும் உடையவர். முதுமைப் பருவம் எய்திய மூதறிஞர்.
75 ஆண்டுகளை எட்டிப் பிடித்த பெரியவர். பற்பல சமயங்களைத் தர்க்க முறையில் ஆராய்ந்து அறிந்தவர்.
அப்பெரியவர் செய்து வரும் தமிழ்த் தொண்டும், சமூகத் தொண்டும், சமயத் தொண்டும் பொதுவாக எல்லாச் சமயத்தினராலும், சிறப்பாக இஸ்லாமிய மக்களாலும் மறக்க முடியாதவையாகும். தமிழகம் முழுவதுமிருந்து வருகின்ற முஸ்லீம் மக்களுடன், அவர் நீண்ட காலமாக நெருக்கமான தொடர்பு கொண்டவர். இஸ்லாமிய சமூகத்தில் அவருக்கு மிகுந்த செல்வாக்கும், நல்ல மதிப்பும் உண்டு. இஸ்லாமிய இலக்கியங்களையும், சமய உண்மைகளையும் நன்கறிந்தவர். இன்றைய இஸ்லாமியத் தலைமுறையினரில் சிலர் கூட அவர் மூலம் இஸ்லாத்தைப் பற்றித் தெரிந்துகொண்டார்கள் என்பது மிகையாகாது.
சென்ற ஆண்டு கும்பகோணத்தில் நடைபெற்ற அகில இந்திய மீலாத் விழாவில் நபி மணி[ஸல்-அம்] அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும், நற்றொண்டுகளையும் குறித்து அவர் கொடுத்த குரல் ஒலி, நாடு முழுதும் நன்கு பரவியது. இன்று அது நூல் வடிவில் வெளிவருகிறது, இது அருமையும் பெருமையும் வாய்ந்ததாகும்.
இந்நூலை நான் பார்வையிட்டு மகிழ்ந்தேன். கருத்துகள் சுவையும், நயமும் கலந்து மிளிர்கின்றன. செய்திகள் ஆதாரத்தோடு விளக்கம் பெற்றிருக்கின்றன. நாயகம் அவர்களைப் பற்றி நாவலர் விசுவநாதம் அவர்கள் எவ்வளவு ஆராய்ந்திருக்கிறார்கள் என்பதற்கு இந்நூலே ஒரு சான்று.
அண்ணல் நபி [ஸல்-அம்] பற்றி அறிந்து கொள்ள ஆசையுள்ளவர்களுக்கு இச்சிறிய நூல் போதுமானது என்று கூறும் அளவிற்கு எனக்குத் துணிவு ஏற்படுகிறது.
பொதுவாக தமிழக மக்களும், குறிப்பாக இஸ்லாமிய மக்களும் இந்நூலை ஆழ்ந்து படித்து எம்பெருமானார் கலைமறை முகம்மது [ஸல்-அம்] அவர்களின் வரலாற்றினையும், போதனைகளையும் நன்கறிந்து, தமது வாழ்க்கைக்குப் பயன்படுத்திப் பயனடைய வேண்டுமெனவும், இதன் ஆசிரியர் இது போன்று இன்னுஞ் சில நூல்களையும் எழுதி, நமக்கு உதவி ஊக்கமளிக்க வேண்டுமெனவும் எல்லாம் வல்ல ஆண்டவனாகிய அல்லாஹவை வணங்கி வேண்டிக் கொள்கிறேன்.
தங்களன்புள்ள
சையத் அப்துல் கனி
திருச்சிராப்பள்ளி
29-03-74
உள்ளுறை
நபிகள் நாயகம்
1. வரலாறு
2. செயற்கருஞ் செயல்கள்
3. சமத்துவம்
4. சகோதரத்துவம்
5. தீர்க்கதரிசி
6. திருக் குர்-ஆன்
7. இஸ்லாத்தின் வளர்ச்சி
8. கடைசி நபி
9. அருங்குணங்கள்
10. தெய்வ பக்தி
11. சிக்கனம்
12. நாயகம் அவர்களின் போதனை
13. பாவமன்னிப்பு
14. கடைசி ஹஜ்
15. குறிக்கோள்
16. முடிவுரை
நபிகள் நாயகம்
அவைத்தலைவர் அவர்களே! மெளல்விமார்களே! தாய்மார்களே! பெரியோர்களே! அன்பர்களே! உங்கள் அனைவருக்கும் இந்த மாலைப் பொழுதில் என்னுடைய தாழ்மையான வணக்கம்.
கும்பகோணத்தில் கூடியுள்ள பெருமக்களாகிய உங்கள் முன்பு, இன்றைய தினம் அகில இந்திய மீலாத் விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விழாவிலே பங்கு பெறுகின்ற பேறு எனக்கும் கிடைத்தமை பற்றி அதிக மகிழ்ச்சி அடைகிறேன். நாயகம் அவர்களுடைய பிறந்த நாள் விழா நடப்பது குறித்து 45 ஆண்டுகளுக்கு முன்னே மாறுபட்ட கருத்தும் தோன்றியதுண்டு. மெளல்விமார்கள் அன்று அதை மறுத்தார்கள் பண்டிகைகளைப் போல இவ்விழாவைக் கொண்டாடக் கூடாது என்று.
முதன் முதலாக இந்த விழாவைக் கொண்டாடியது திருச்சிராப்பள்ளியில், 45 ஆண்டுகளுக்கு முன்னே. திருச்சிராப்பள்ளியில் பெரிய கடை வீதியில் பேகம் பள்ளி வாசலில் முதன் முதலாகக் கொண்டாடப்பெற்ற விழாவில், பங்கு பெற்ற நான், இந்த விழாவிலும் பங்கு பெறுவது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். நாயகம் அவர்களுக்குப் பிறந்த நாள் விழாவா? என்ற ஒரு கேள்வியும் கிளம்பியது அன்று. நாயகம் அவர்களுக்கும் பிறந்தநாள் விழாவா என்றால், அவர் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடக் கூடாது என்ற பொருளில் கேட்கப்பட்ட கேள்வி அது.
அவர்கட்கு அன்று நாங்கள் பதில் சொன்னோம். பிள்ளைகள் பிறந்த நாளைப் பெற்றோர்கள் கொண்டாடுவது ஒரு மரபு. பெற்றோர்களுடைய பிறந்த நாளைப் பிள்ளைகள் கொண்டாடுவது ஒரு வழக்கம். ஒரு நாட்டுத் தலைவன் பிறந்த நாளை அந்த நாட்டு மக்கள் கொண்டாடுவது ஒரு பழக்கம். ஒரு சமயத் தலைவர் பிறந்த நாளை அந்தச் சமயத்தைச் சார்ந்த மக்கள் எல்லாரும் கொண்டாடுவது ஒரு வழக்கம். ஒரு சேனைத் தலைவன் பிறந்த நாளை அச்சேனையைச் சார்ந்த போர் வீரர்கள் எல்லாரும் கொண்டாடுவது ஒரு பழக்கம். ஒன்றிற் சிறந்த ஒரு காரணத்திற்காக ஒருவருக்குப் பிறந்த நாள் விழாக் கொண்டாடுவது சரியாக இருக்குமானால், ஒரே ஒருவர் நாட்டின் தலைவராகவும், சமயத்தின் தலைவராகவும், சமூகத்தின் தலைவராகவும், அரசியல் தலைவராகவும், போர்வீரர்கள் தலைவராகவும் இருந்த நாயகம் அவர்கட்கு விழாக் கொண்டாடாமல் வேறு யாருக்கு விழாக் கொண்டாடுவது? என்று அன்று முழக்கினோம். எதிர்ப்பு ஒழிந்தது. நாம் மட்டும் இங்கு விழாக் கொண்டாடவில்லை. இன்று உலகம் முழுதும் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. கொண்டாடுவதின் நோக்கம் உத்தமன் பிறந்த நாள், உலகம் சிறந்த நாள் என்பதே.
1. வரலாறு
பிறந்த நாள் விழாக் கொண்டாடுகின்ற இந்தக் காலத்தில், பேசவேண்டிய பேச்சு அவருடைய வரலாறு ஒன்றுதான். வேறு எதையும் பேசுவதற்கு இந்த மேடையில் இடமில்லை. நாயகம் அவர்களுடைய வரலாற்றைக் கூறுவதற்கு ஒரு நிமிடம் போதும். இது நாள் வரை பேச்சாளர்கள் பலர் பேசியதையும், இப்போது இங்கு பேசப்பெற்ற நல்லறிஞர்கள் பேசிய பேச்சுகளையுமெல்லாம் தொகுத்தால், அவருடைய வரலாறு ஒரு நிமிடத்தில் முடிந்து விடும்.
நாம் போற்றுகிற எம்பெருமானார் நபிகள் நாயகம் அவர்கள், 1446 ஆண்டுகளுக்கு முன்னே, நாம் வாழுகின்ற இதே ஆசியாக் கண்டத்தின் மேலைக் கோடியில் பிறந்தார்கள். அவர்கள் பிறந்த நகரம், அவரைப் பெற்றதனால் பெயரும் புகழும் பெற்ற மக்கா நகரம். அவர்கள் பிறந்து 63 ஆண்டுகள் இந்த நிலவுலகில் வாழ்ந்தார்கள். பிறந்த ஆறு ஆண்டுக்குள்ளாகவே பெற்றோர் இருவரையும் இழந்தார்கள். பெரிய தந்தையாராலே வளர்க்கப் பெற்றார்கள். முன்னைய 40 ஆண்டுகள் குடும்பத்திற்காக, வணிகத்திற்காக என்றே கழிந்தன. அக்காலத்திலும் கூட, சாதாரண மக்களிடத்தில் காணப் பெறாத அரிய செயல்கள், அவர்களிடத்திலே காணப் பெற்றன. பின்னைய 23 ஆண்டுகள், உலக மக்களுக்காக என்றே வாழ்ந்தார்கள். இந்த 63 ஆண்டுகளிலே, அவர்கள் செயற்கரும் செயல்களைச் செய்து சீர்திருத்தத்தைப் புகுத்தி, தம் காலத்திலேயே வெற்றியும் பெற்றார்கள். பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து புனிதத் திருமறையை நமக்கு இறக்கித் தந்தார்கள்; நம்மைவிட்டு மறைந்தார்கள்; என்பதுதான் அவர் களுடைய வரலாறு. (கைதட்டல்). இது போதுமானது. அவர்களுடைய வரலாற்றைக் கூறுவதற்கு.
அரேபியா நாடு
ஒரு மணி நேரம் பேசவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். ஒரு நிமிடத்தில் வரலாறு முடிந்தது. இன்னும் 59 நிமிடங்கட்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் அவர் தொடர்பான செய்திகளைப் பேசுவதற்கு ஆண்டுக் கணக்காகும். அவர் பிறந்த நாடு அரேபியா நாடு. அவர்கள் பிறந்த காலத்தில், அந்நாட்டு மக்கள் குடி, கூத்தி, கொள்ளையிடுதல் ஆகியவற்றைச் செய்து கொண்டிருந்தார்கள். மேல்நாட்டுப் பேரறிஞன் சொன்னான் "நாயகம் அவர்கள் பிறந்த பொழுது அராபிய நாடு கார்காலத்து இருளைப் போல் இருந்தது" என்று. என் உள்ளம் அதை ஒப்பவில்லை. கார்காலத்து இருளிலாவது அடிக்கடி மின்னல் தோன்றும். மக்கள் வழி நடக்க அது துணை செய்யும். அன்றைய அரேபிய மக்களிடத்தில், அந்த மின்னல் கூடத் தோன்றவில்லை. அவ்வளவு இருள் கவ்வி இருந்தது. அதற்கு ஒரு சான்று சொன்னால் போதுமானது. அடுத்த வீட்டுக்காரன் ஆடு வளர்த்தான். எதிர்த்த வீட்டுக்காரன் அவரைக் கொடி வளர்த்தான். அடுத்த வீட்டுக்காரனுடைய ஆடு எதிர் வீட்டு அவரைக் கொடியைத் தின்றுவிட்டது. அவ்வளவுதான் செய்தி. இதற்காக, அவரைக் கொடி வளர்த்தவர் ஆடு வளர்த்தவரையும், ஆடு வளர்த்தவர் அவரைக் கொடி வளர்த்தவரையும் ஏழு தலைமுறைகள் வரை வெட்டிக் கொண்டு மடிந்தார்கள். அவ்வளவு புத்திசாலித்தனம் அக்கால அரேபியர்களிடம் இருந்தது. அப்படிப்பட்ட மக்களின் நடுவில் பெருமானார் தோன்றி அவர்களைச் சீர்த்திருத்தினார்கள் என்றால், இது எந்த மக்களாலும் எண்ணிப் பார்க்க முடியாத ஒரு அருஞ்செயலும், பெருஞ்செயலும் ஆகும் எனக் கொள்ள வேண்டும். இன்றைய அரேபிய மக்கள் உலகத்தில் சிறந்த விஞ்ஞானிகளாக இருக்கிறார்கள். விஞ்ஞானிகளிலே மிகச் சிறந்த விஞ்ஞானிகள் இன்றைய அரேபியர்கள். அவ்வளவு இருள் கவ்விய அந்தச் சமூகம் இன்றைக்கு ஒளி வீசக் கூடிய அளவுக்கு வளர்ந்து இருக்கிறது என்றால், இந்த நல்ல நாளில் அவர்கள் செய்த தொண்டு எவ்வளவு பெரியது என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
இஸ்லாமிய மாணிக்கம்
இதனால்தான் ஒரு மேலை நாட்டு அறிஞன் சொன்னான்! “உலகம் முழுவதும் ஒளி வீசக் கூடிய ஒரு இஸ்லாமிய மாணிக்கம் அரேபிய நாட்டில் கண்டெடுக்கப் பெற்றது” என்று. இந்தச் சொற்றொடருக்கு எவ்வளவு பொருள்! நாயகம் ஒரு மாணிக்கம் என்றும், அது இஸ்லாமிய மாணிக்கம் என்றும், அவருடைய போதனை உலகம் முழுதும் ஒளி வீசுகிறது என்றும், அது கண்டெடுக்கப்பட்ட நாடு அரேபிய நாடு என்றும் அவன் வர்ணித்தான். ஆகவே, இதை இஸ்லாமிய மக்கள் உள்ளத்தே வைத்து நாள் தோறும் பெருமைப்பட வேண்டும்.
இஸ்லாம்
நாயகம் அவர்கள்தாம் இஸ்லாமிய சமயத்தைத் தோற்றுவித்தார்கள் என்று சிலர் எழுதியிருக்கிறார்கள். அது தவறு. இஸ்லாம் என்றும் உள்ளது. அதை நாயகம் அவர்கள் சீர் திருத்தினார்கள். அவ்வளவுதான். இஸ்லாம் என்ற சொல்லுக்கு அமைதி, முத்தி என்று பொருள்.
2. செயற்கரும் செயல்கள்
இனி, பேச வேண்டிய பேச்சு எல்லாம் அவர்கள் செய்த செயற்கரும் செயல்களே. இந்த நல்ல நாளில் அவர்கள் பிறந்த நாளை எண்ணிப் போற்றுவது நல்லது. செயற்கரும் செயல், பிறராலே செய்ய முடியாத அரிய பெரிய செயல்கள். அதில் ஐம்பெருங் கடமைகள் முதலிடம் பெற்றவை.
ஐம் பெரும் கடமைகள்
ஐம் பெருங்கடமைகள் என்பவை நாயகம் அவர்கள் செய்த செயல்களில் எல்லாம் மிகப் பெரும் செயற்கருஞ் செயல்கள். அவற்றில் முதலிலே உள்ளது கலிமா. "லா இலாஹ இல்லல்லாஹ முகமது ரசுலில்லாஹி" என்பது. "வணக்கத்துக்குரியவன் ஆண்டவன் ஒருவனே. அவனது திருத்தூதரே முகமது நபி" என்பது அதன் பொருள். இது ஒரு போர் வீரன், படையின் உள்ளே நுழையும் போது எடுத்துக் கொள்ளுகின்ற ஒரு சத்திய வாக்குப் போன்றது. சட்டசபைக்கு செல்கின்ற உறுப்பினர்கள் எல்லாம் ராஜ விசுவாசப் பிரமாணம் எடுத்துக் கொள்வது போன்றது. இந்த உறுதிப்பாட்டை ஒப்புக் கொள்ளாதவர்களுக்கு இஸ்லாத்தில் இடமில்லை. ஆகவே, இதை முதலாக வைத்தார்கள். அது எண்ணி, எண்ணி மகிழக் கூடியதொன்று. நம்பிக்கை, உறுதி, கட்டுப்பாடு ஆகிய அத்தனையையும் சேர்த்துப் பின்னப் பெற்றது இந்தக் கலிமா. வேறு ஒரு வகையாகச் சொல்ல வேண்டுமானால், தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் என்ற நான்கையும், நான்கு தூண்களாக வைத்தால், இந்தப் புனித கலிமா இதனுடைய கோபுரமாக இருந்து ஒளி வீசக் கூடியது என்று கூறலாம். அதைத் தாங்கி நிற்கும் தூண்களில் ஒன்று தொழுகை.
தொழுகையை எல்லாரும் செய்கிறார்கள். எல்லாச் சமயத்தினரும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்று நாம் பார்க்கிறோம். ஆனால், பிற சமயத்தாருடைய தொழுகைக்கும், இஸ்லாத்தினுடைய தொழுகைக்கும் வேறுபாடு உண்டு. நாயகம் அவர்கள் தொழுகையைப் புகுத்தியதற்கு உயர்ந்த கருத்தும் ஒன்று உண்டு. கிறித்துவர்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் தொழுகிறார்கள். இந்துக்களில் பலர் கார்த்திகைக்கு ஒரு தரம், அமாவாசைக்கு ஒரு தரம், ஏகாதசிக்கு ஒரு தரம் தொழுகிறார்கள். சிலர் ஆண்டுக்கு ஒரு முறை தொழுகிறார்கள். இஸ்லாத்தில் அப்படி இல்லை. நாள்தோறும் தொழ வேண்டும். அதுவும் ஒரு முறை அல்ல, ஐந்து முறை தொழ வேண்டும். அதிகாலை, பகல், மாலை, அந்தி, இரவு ஆகியவைகளில் ஐந்து முறை தொழவேண்டும் என்ற ஒரு கட்டுப்பாடு அவர்களால் விதிக்கப் பெற்றது. அதனுடைய கருத்து என்னவென்றால், அடிக்கடி இறைவனோடு தொடர்பு வைத்துக் கொள்கிறவன் தீயவற்றை எண்ண மாட்டான். அவன் உள்ளத்திலே அதற்கு இடம் இராது. மனம்தான் அனைத்துக்கும் இருப்பிடம். மனம் தூய்மையாகி விட்டால் எண்ணமும், செயலும் தானே தூய்மையாகி விடும். அடிக்கடி உள்ளத்தை இறைவனிடத்திலே வைத்துக் கொண்டிருந்தால் தீய எண்ணங்கள், தீய செயல்களுக்கு இடமே இராது என்று அவர்கள் கண்டார்கள். அதைச் சமூகத்திலே புகுத்தினார்கள். இதைச் சொல்லுவதற்கு அவர்களுடைய வாழ்க்கையிலேயே நடந்த ஒரு நல்ல நிகழ்ச்சியைக் குறிப்பிடலாம்.
ஒரு யூதன் குடிகாரன். நாயகம் அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது, 'எனக்கு இஸ்லாத்தில் இடமுண்டா?' என்று கேட்டான். ஹஜரத் அபுபக்கர் அவர் கள் பக்கத்திலே இருந்து கொண்டு 'இஸ்லாத்தில் குடிகாரனுக்கு இடம் இல்லை' என்று சொன்னார்கள். நாயகம், அவர்களைக் கை அமர்த்தி வெகு அமைதியாக 'உனக்கும் இஸ்லாத்தில் இடம் உண்டு' என்று சொன்னார்கள். 'அப்படியா! இனி நான் இஸ்லாத்தில் சேரலாமா?’ என்றான். 'கட்டாயம் சேரலாம். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை. இறைவனைத் தொழப் போகும் போது மட்டும் நீ குடிக்கக் கூடாது'. அதற்கவன் அப்படியே செய்வதாக ஒப்புக் கொண்டான், கலிமா சொல்லப் பெற்றது; இஸ்லாத்தில் சேர்ந்தான், அவன் தொழப் போகும் போது குடிக்க இயலாதவன் ஆனான்,
கொஞ்ச நாள் ஆனதும், காலையில் மட்டும் தொழுதால் போதாது, மாலையிலும் தொழ வேண்டும் என்றார்கள். இரண்டு நேரம் போனான். இரண்டு நேரம் குடிக்காமல் இருந்தான். அப்புறம் பகலிலும், அப்புறம் அந்தியிலும், அப்புறம் இரவிலும், ஐந்துமுறை தொழ வேண்டுமென்று அவனிடம் கூறப் பெற்றது. ஐந்து முறையும் தொழப் போக ஆரம்பித்தான். ஐந்து நேரமும் குடிக்க முடியாமற் போய் விட்டது. அப்புறம் ஒரு நாள், இறைவனைத் தொழப் போகும் போது மட்டும், குடிக்காமல் இருந்து பயனில்லை; தொழுது விட்டு வந்த பிறகும் குடிக்காமல் இருக்க வேண்டும் என்றார்கள். அதற்கும் ஒப்புக் கொண்டான். கடைசியில் அவனுக்குக் குடிக்கவே நேரமில்லாமற் போய் விட்டது. தொழ வேண்டிய நேரம் ஐந்து என்று வைத்து, பிறகு, இறைவனைத் தொழப் போகும் போது குடிக்கக் கூடாது. பிறகு, வந்ததும் குடிக்கக் கூடாது என்று வைத்தால், பிறகு எந்த நேரம் குடிப்பான்? இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது? இறைவனோடு அடிக்கடி தொடர்பு வைத்துக் கொண்டவர்கள். தீய சொற்களைச் சொல்ல மாட்டார்கள்; என்பதை அவர்கள் அன்றே எண்ணி, வரையறுத்துக் காட்டினார்கள். குறைவில்லாத நிறை மனமே, இறைவனின் இருப்பிடம் என்பது அவர்களது வாக்கு.
நோன்பு
தொழுகையை அடுத்தது நோன்பு. எங்கள் பாட்டி ஒருத்தி நோன்பு இருப்பார்கள். நான்கு இட்லி, மூன்று தோசை, இரண்டு கப் உப்புமா, ஒரு கப் பால் குடித்து விட்டு நோன்பு இருப்பாள். சோறு மட்டும் உண்பதில்லை. அது ஒரு வகையான நோன்பு. இஸ்லாத்தின் நோன்புக்கும், மற்றவர்கள் நோன்புக்கும் பெரிய வேறுபாடு உண்டு. வரையறுக்கப்பட்ட சில காலத்திலாவது, குடல் சுத்தமாக இருக்க வேண்டும். அதற்கு ஓய்வு வேண்டும் என்பதை நாம் பார்க்கிறோம். எத்தனையோ ஆலைகள் ஓய்வு பெறாமல் ஓடிக் கொண்டே இருக்கின்றன. தேய்ந்து விடுகின்றன. ஓய்வு கொடுக்கிறோம். கடிகாரங்கள் ஓடுகின்றன. அதில் உள்ள கருவிகள் தேய்கின்றன. நாம் என்றைக்காவது எண்ணிப் பார்த்தோமா? ஆண்டவன் அமைத்த நமது உடலுறுப்புகள் தேய்வில்லாமல், நூறாண்டுகள் ஆடிக் கொண்டும் ஓடிக் கொண்டும் இருக்கின்றன என்பதைச் சிந்தித்துப் பார்த்தோமா? சிந்தித்துப் பார்க்க வேண்டும். கடிகாரத்திலுள்ள நுணுக்கமான கருவிகளை விட, நம் வயிற்றில் அதிக நுணுக்கமான கருவிகள் இருக்கின்றன. எந்திரங்கள் செய்கின்ற வேலையை விட, அதிக வேலைகளை இவை செய்கின்றன. கடிகாரங்கள் எல்லாம் சாவி கொடுத்து ஓடுகின்றன. நமது உறுப்புகள் எல்லாம் சாவி கொடுக்காமலேயே, ஓடிக் கொண்டிருக்கின்றன. ஆலைகள் அனைத்தும் மின்சாரத்திலே ஓட்டப் பெறுகின்றன. நமது உறுப்புகள் எல்லாம் அது இல்லாமலே ஓடுகின்றன. ஆக, இத்தகைய குடல்களுக்கும், உறுப்புகளுக்கும் வரையறுக்கப்பட்ட சில காலத்திலாவது ஓய்வு இருக்க வேண்டும் என்று எண்ணினார்கள். நீண்ட நாள் உயிர் வாழ உடல் நலத்திற்குத் துணை செய்கின்ற ஒன்று இது.
மற்றொன்று, சமயத் தொடர்பானது. குடல் சுத்தமாகும் போது, உடல் சுத்தமாகிறது. உடல் சுத்தமாகும் போது, எண்ணம் சுத்தமாகிறது. எண்ணம் சுத்தமாகும் போது, ஆன்மா சுத்தமாகிறது. சுத்தமடைந்த ஆன்மாதான், ஆண்டவன் அருளுக்குப் பாத்திரமாகிறது என்பதைப் பின்னிப் படிப்படியாக அமைத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. நோன்பிலிருந்து இறையருள் பெறுவது வரை. இது அவர்கள் புகுத்தியது.
ஜக்காத்
நான்காவது ஜக்காத். நான் எத்தனையோ மொழி பெயர்ப்பாளர்களிடம் இந்த ஜக்காத் என்ற சொல்லுக்குப் பொருள் யாது எனக் கேட்டேன். சரியான பொருள் கிடைக்கவில்லை. வடமொழியில் சொன்னால், தர்மம் என்கிறார்கள். நான் தமிழில் மொழி பெயர்த்தேன் கொடை என்று. ஒன்றும் பொருந்தவில்லை. இந்த ஒரு அரேபியச் சொல்லுக்கு, எந்த மொழியிலும் சரியான சொல் இல்லை. சொல்லவும் முடியவில்லை. ஏதேனும் சொல்ல வேண்டும். ஏழை மக்களுக்குப் பணக்காரன் கொடுத்துத் தீரவேண்டிய ஒரு கட்டாய வரி என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.
தன் சொத்தில் 40ல் ஒரு பங்கு உளமகிழ்ந்து வழங்குகின்ற இது பரிசுத்தத் தன்மை வாய்ந்தது. அதாவது அதன் மூலம் தன் சொத்தைத் தூய்மைப் படுத்திக் கொள்வது. இப்படிப் பிறர்க்கு வழங்குவதன் மூலம் 40ல் ஒரு பங்கு வரி கொடுத்து விட்ட பிறகு, இதனால் மற்ற 39 பங்கு தூய்மையாகிறது என்பது பொருள். 4 ஆயிரம் வைத்திருப்பவன் 100 ரூபாய், 40 ஆயிரம் வைத்திருப்பவன் 1 ஆயிரம் கொடுக்க வேண்டும். இது கட்டாய வரி. அது மட்டும் கருத்தில்லை. இந்த ஜக்காத், பணக்காரன் இரும்புப் பெட்டியிலே வைத்திருக்கும் பச்சை நோட்டுகளும், பணமும் ஏழையின் குடிசைக்கும், தகரக் குவளைக்கும் வந்து சேர, ஒழுங்காக வெட்டப்பட்டுள்ள ஒரு கால்வாய் மாதிரியும் தெரிகிறது. உலகம் முழுதும் உள்ள மக்கள் இம்முறையைக் கையாண்டு வருவதானால், பொதுவுடைமை இயக்கமே தேவையில்லை என நான் கருதுகிறேன். நாயகம் அவர்கள் தம்முடைய உள்ளத்தில் இதை எண்ணியே புகுத்தி இருக்கிறார்கள்.
ஹஜ்
கடைகியாக 'ஹஜ்'. 'ஹஜ்'ஜுக்கு நான் போனதில்லை. போக விரும்பியும் முடியவில்லை. ஆனால், நான் சிங்கப்பூரில் இருந்தேன். அங்கே ஒரு சைனா நண்பர். 'ஹஜ்'ஜுக்குப் போய் வந்தவர். அவருக்குத் தமிழ் தெரியாது. எனக்கு சீனம் தெரியாது. இரண்டு பேரும் மலாய் மொழியில் சிறிது உளறிக் கொள்வோம். அவர் சொன்னதை நான் கொஞ்சம் அறிந்து கொண்டு, இங்கு வந்த பிறகு அதை விசாரித்தறிந்து பார்த்தால், மக்களாகப் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் அங்குச் சென்றாக வேண்டும் எனத் தெரிய வருகிறது. ஆண்டு தோறும் அங்கு இலட்சக் கணக்கான மக்கள் தொழுகைக்காகக் கூடுகிறார்கள்.
கஃபா பள்ளி
தொழுமிடம் மக்கா நகரிலுள்ள கஃபா பள்ளி. மிகச் சிறிய பள்ளி. அதை ஹஜரத் இப்ராகீம் அவர்கள் கட்டினார்கள் என்பது வரலாறு. ஆனால் உண்மையான வரலாறு, அவர்களாலும் கட்டப்படவில்லை என்பது. 'அவருக்கு முன்பும் அந்த வணக்க ஸ்தலம் இருந்தது. ஹஜரத் இப்ராகீம் அவர்கள் அதைப் பழுது பார்த்துச் செப்பனிட்டார்கள்’ என்று இத்தாலி தேசத்து வரலாற்று ஆசிரியர் ஒருவர் எழுதி இருக்கிறார். அப்பள்ளிக்கு ஒரு பெரிய சிறப்பு உண்டு. மனிதனுக்குத் தெய்வ உணர்ச்சி உண்டானதும், அவன் ஆண்டவனைத் தொழுவதற்கு முதன் முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் அது. அது அவ்வளவு தொன்மையானதும் பரிசுத்தமானதுமான இடம். பிறகு அதைப் பல்வேறு அரசர்கள் பழுது பார்த்து வந்திருக்கின்றனர். ஐந்து கண்டங்களிலும் உள்ள மக்கள் அனைவரும் ஆண்டுதோறும் அங்கு வந்து ஒன்று கூடுகிறார்கள்.
நாம் நினைத்திருக்கிறோம், இஸ்லாமியர் எல்லாம் மேற்கு நோக்கித் தொழுகிறார்கள் என்று. அதுதான் இல்லை, இந்தியாவில் உள்ளவர்கள் எல்லாம் மேற்கு நோக்கித் தொழுகிறார்கள். துருக்கியில் இருக்கிறவர்களெல்லாம் தெற்கு நோக்கித் தொழுகிறார்கள். தென் ஆப்பிரிக்காவில் உள்ளவர்கள் எல்லாம் வடக்கு நோக்கித் தொழுகிறார்கள். வட ஆப்பிரிக்காவில் இருக்கிறவர்கள் எல்லாம் கிழக்கு நோக்கித் தொழுகிறார்கள். இப்படி உலகம் முழுதும் உள்ள மக்கள் இம்மாதிரித் தொழுகிறார்கள் என்றால், உலகத்தின் ஐந்து கண்டத்தில் உள்ள இஸ்லாமிய மக்கள் அனைவரும் அந்த ஒரே புண்ணியத் தலத்தை நோக்கியே தொழுகிறார்கள் என்பது பொருள். நாம் இருக்கும் இடத்திற்கு அது மேற்கே இருப்பதால், நாம் மேற்கு நோக்கித் தொழுகிறோம்.
பத்து லட்சத்திற்கு மேல் உள்ள மக்கள் ஆண்டு தோறும் அங்கு கூடுகிறார்கள். நாடு வேற்றுமையோ, மொழி வேற்றுமையோ, நிற வேற்றுமையோ அங்கு இல்லை. அனைவருக்கும் ஒரே நேரத்தில் உணவு, ஒரே மாதிரியான உடை. ஆண்களுக்குத் தையல் இல்லாத உடை. இடுப்பில் ஒன்று, மேலே ஒன்று. ஒரே மாதிரியான நிறம். ஒரே நேரத்தில் ஒதுச் செய்வது. ஒரே நேரத்தில் தொழுகை, ஒரே ஒலி, 'அல்லாஹும்ம லப்பைக்' [கை தட்டல்]. "ஆண்டவனே உனது முன்னிலையில் நிற்கிறோம்" என்ற ஒரே ஒலி. இக்கண் கொள்ளாக் காட்சியை உலகத்தில் வேறு எந்த நாட்டிலும், எந்த இடத்திலும் மக்கள் காண இயலாது. இதனால் நல்லறிஞர்கள் பலர், இதைச் 'சமத்துவம் விளைவிக்கும் ஒரு பெருஞ் சந்தை' என்று சொல்லியிருக்கிறார்கள்.
வசதி படைத்த மக்கள் எல்லோரும் ஏன் ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டுமென்றால், அனைவரும் அங்கு சென்று பார்த்து, எல்லாரும் ஒன்று என்பதை அங்கு கண்ணாற் கண்டு, ஆண்டவனைத் தொழுது, அவரவர் நாட்டுக்குச் சென்ற பிறகு, அவர்கள் இக்கொள்கையை ஆங்காங்கு அழுத்தமாகக் கடைப்பிடித்துப் பரப்பத் துணை செய்யும் என்று எண்ணியே அமைத்து இருக்கிறார்கள். கடைகளிற் போய்ப் பல சரக்குகளையும், வயல்களிற் போய் தானியங்கனையும் கொள்வது போலச் சமத்துவ மனப் பான்மையையும் மக்கள் கொள்ள வேண்டுமானால், அங்கு சென்றுதான் கொள்ள வேண்டியிருக்கும்.
ஜம் ஜம் தீர்த்தம்
ஜம் ஜம் என்ற ஒரு தீர்த்தம் அங்கு உண்டு. அது ஒரு சிறிய கிணறு. மிகப் பெரிய, கடுமையான அந்தப் பாலைவனத்தில் இருக்கிறது, அங்கு வேறு நீர் ஊற்றுகள் கிடையா. இங்கு ஓடுவது மாதிரி ஆறோ, குளமோ, வாய்க்காலோ இல்லை. இந்த சிறிய கிணறு 10 இலட்சம் மக்களுக்கு, வற்றாத ஊற்றாக இருந்து நீர் வழங்கிக் கொண்டிருக்கிறது. அது ஒரு பெரும் வியப்பு. 1941ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளன் ஒருவன் அக்கிணற்றின் நீரைக் கொண்டு போய் ஆராய்ச்சி செய்து, அதில் தங்கச் சத்து இருக்கிறதென்று கூறியிருக்கிறான். இது ஆராய்ச்சியாளர்கள் சமயத்துறைக்கு அப்பாற்பட்டுச் சிந்திக்கவேண்டிய அரிய செய்தி.
ஆகக் கலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் ஆகிய ஐந்தையும் இஸ்லாமியர்கள் அனைவரும் கட்டாயம் கைக்கொள்ள வேண்டும். அது மக்களின் பெருங்கடமை. ஆகவே இதை ஐம்பெருங் கடமைகள் என வைத்திருக்கிறார்கள். இஸ்லாமியர் என்றால், இவற்றைச் செய்தாக வேண்டும். இல்லையானால், அவர்கள் உண்மையான இஸ்லாமியர் ஆக மாட்டார். நோய் வாய்ப்பட்டால், வறுமை வாய்ப்பட்டால், சூழ்நிலை அமையாதிருந்தால், அவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு. செல்வமும் இருந்து, உடல் நலமும் நன்றாக இருந்து, அவர்கள் அந்தக் கடமையிலிருந்து தவறுவார்களேயானால், அவர்களுக்கு விதி விலக்கு இல்லை. கட்டாயம் செய்து தீர வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது.
இஸ்லாமியப் பெருமக்களுக்கு ஒரு ஐயப்பாடு உண்டு என்பதை நான் பல இடங்களில் கண்டிருக்கிறேன். இந்துகள் இஸ்லாத்தை அழிக்கிறார்கள்; அல்லது அழிக்க முற்படுகிறார்கள். கிறித்துவர் இஸ்லாத்துக்குப் புறம்பான காரியங்களைச் செய்கிறார்கள்; பேசுகிறார்கள். இதனால் இஸ்லாம் அழிந்துவிடுமோ என்று ஐயப்படுகின்றவர்கள் சிலரை நான் பார்த்து இருக்கிறேன். அத்தகைய சொற்கள் என் காதிலே விழுந்திருக்கின்றன. இஸ்லாமியப் பெருமக்கள் இந்த ஐம்பெருங் கடமைகளைச் சரிவரச் செய்து கொண்டு வருவார்களேயானால், உலகத்தின் எந்தச் சக்தியாலும் இஸ்லாத்தை அழிக்க முடியாது என்று நான் உறுதியாகக் கூறுகிறேன் [கை தட்டல்]. அந்த அளவிற்குப் பிணைக்கப் பட்டிருக்கின்றன நாயகம் அவர்கள் விதித்த ஐம்பெருங் கடமைகள்.
3. சமத்துவம்
எம்பெருமானார் செய்த செயற்கரும் செயல்களில் ஒன்று சமத்துவம் என்பது. சமத்துவம் இந்துக்கள் கோயில்களிலே கிடையாது. கிறித்துவர்களின் ஆலயங்களில் கிடையாது. தன்னுடைய வேலைக்காரன் தொழுகைக்கு முன்னே சென்று விட்டால், எஜமானன் பின்னே சென்றால், அவனுக்கும் பின்னே இருந்துதான் தொழ வேண்டும். கிறித்துவர்கள் கோயிலில் அமைச்சருக்கு இடம், அரசனுக்கு இடம், அரச குடும்பத்திற்கு இடம், மந்திரிகளுக்கு இடம், உத்தியோகத்து கலெக்டர்களுக்கு இடம், மக்களுக்கு இடம் என்றெல்லாம் நாற்காலிகள் ஒழுங்கு படுத்தி இருப்பார்கள். இந்துக் கோயில்களிலே அர்ச்சகர் போகிற இடம் வேறு. ஜமீன்தார்கள் போகிற இடம் வேறு. பணக்காரர்கள் இடம் வேறு, ஏழைகள் இடம் வேறு. கடைசியாகத் தாழ்த்தப் பட்டவர்களுக்குக் கொடிக் கம்பத்தருகில் இடம் என ஒதுக்கப் பெற்றிருக்கும். பள்ளிவாசலில் அது இல்லை. அப்கன் அரசர் அமீர், ஐதராபாத் நிஜாம், துருக்கித் தலைவர் இனூனு, ஈரான் மன்னர், அரேபிய அரசர் யாராக இருந்தால்தான் என்ன? வேலைக்காரன் முன் சென்று முன் வரிசையில் இருந்தால், இந்த மன்னர்கள் அவனுக்கு அடுத்த வரிசையில் இருந்துதான் ஆண்டவனைத் தொழ வேண்டும். இன்னும் ஒரு படி தாண்டிச் சொல்கிறேன், தன் வேலைக்காரனுடைய காலடியில்தான் மன்னாதி மன்னர்கள் தங்கள் முடியை வைத்து ஆண்டவணைத் தொழ வேண்டும். [கை தட்டல்] அவ்வளவு தூரம் சமத்தவம் வற்புறுத்தப் பெற்றிருக்கிறது.
இம்மாதிரியான காட்சியைப் பிற சமயத்தினரிடத்தில் காண இயலாது. என்னுடைய நண்பர் கான் பகதூர் பி. கலிபுல்லா சாயபு அவர்கள் நபிகள் நாயகம் விழா ஒன்றில் பேசும் பொழுது, இஸ்லாத்திலே சமத்துவம் சொல்லப்பட்டிருக்கிறது என்று கூறினார்கள். எனக்குச் சிறிது வருத்தம் உண்டாயிற்று. நான் அவர்கள் பேசிய பின்னால் பேசினேன். நான் சொன்னேன்: 'அவர்கள் பேசியதை மறுக்கிறேன். இஸ்லாத்திலேதான் சமத்துவம் சொல்லப்பட்டிருக்கிறதா? மற்ற மதங்களிலே சமத்துவம் சொல்லப்படவில்லையா? அவர்கள் சொன்னது தவறு. மறுக்கிறேன்' என்றேன். அவர் என்னை வியப்போடு பார்த்தார். 'ஆமாம்! நீங்கள் சொன்னது பெரிய தவறு' என்றேன். 'என்ன?' என்றார். "இஸ்லாத்தில் மட்டும் சமத்துவம் சொல்லப்படவில்லை; எல்லாச் சமயங்களிலும் சமத்துவம் சொல்லப்பட்டு இருக்கிறது, ஆனால், இஸ்லாத்தில் மட்டும்தான் 'சமத்துவம் செய்யப்பட்டிருக்கிறது’" என்றேன். அதுதான் உண்மை. அம்மாதிரி பிற சமயங்களில் செய்யப்படாமல், சொல்லப்பட்டு மட்டும் இருக்கிறது. ஆகவே, இனிமேல் சொல்லும் போது இஸ்லாத்திலே சமத்துவம் சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்லாமல், இஸ்லாத்தில் சமத்துவம் செய்யப்பட்டிருக்கிறது என்று சொல்லவேண்டும்" என்றேன் [கை தட்டல்]. ஒத்துக்கொண்டார்கள். உண்மையும் அதுதான்.
4. சகோதரத்துவம்
சகோதரத்துவம்: அது மக்கள் அனைவரும் உடன் பிறந்தோர் என்பது. கறுப்பு அடிமை பிலால், வீரத் தலைவர் சையது, பணக்கார அபுபக்கர், பலசாலி உமர், வாலிப வீரர் அலி, ஆகிய இவ் ஐவரின் வரலாறு எல்லாம் உங்களுக்கு நன்கு தெரியும், படித்து இருப்பீர்கள். ஒன்றுக்கொன்று மலைக்கும், மடுவுக்கும் உள்ள வேற்றுமை. இவர்கள் அத்தனை பேரையும் ஒரு மேடையில், ஒரு வரிசையில் நிறுத்தித் தோளோடு தோள் சேர்த்துச் சகோதரனாக்கி வைத்தது இஸ்லாம். இது நாயகம் அவர்களுடைய போதனை. இதை அவர்களைத்தவிர வேறு எவராலும் செய்ய முடியாது. வேறு எச்சமயத்திலும் காண முடியாது. இது ஒன்று போதும் சகோதரத்துவத்தைப் பற்றிக் கூறுவதற்கு.
5. தீர்க்கதரிசி
தீர்க்கதரிசி என்றால், பின்னால் வருவதை முன்னால் அறிபவர் என்றாகும். நபி என்றால், இறைவனுடைய திருத்தூதர் என்றாகும். எத்தனையோ தீர்க்கதரிசிகள், நபிமார்கள் உலகத்தில் தோன்றினார்கள் என்று எல்லாச் சமயத்தினரும் கூறுகிறார்கள். ஆனால் தீர்க்கதரிசி என்ற சொல்லுக்கு உரியவர்கள் நம்முடைய நபிகள் நாயகம் ஒருவர்தான். இது என்னுடைய முடிபு. ஞானி ஒருவன் பின்னாலே வரப் போகின்ற செய்திகளை முன்னாலே அறியும் ஆற்றல் படைத்தவத்தவன். அந்தப் பேராற்றல் நாயகம் அவர்களுக்கு முழுதும் இருந்தது.
பெண் கல்வி
இப்பொழுது பாருங்கள். அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்று இன்னும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே ஆணுக்கும், பெண்ணுக்கும் படிப்புத் தேவை என்று நாயகம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். அவர்கள் தீர்க்கதரிசியா இல்லையா என்று எண்ணிப் பாருங்கள்.
சொத்துரிமை
பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்ற சட்டம் இப்பொழுதுதான் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டுமென்று சட்டம் செய்திருக்கிறாரே அவர் தீர்க்கதரிசியா அல்லவா என்று எண்ணிப் பாருங்கள்.
விதவை மணம்
விதவைகளுக்கு மறுமணம் தேவை என்ற சட்டம், சட்டசபையில் இன்றைக்கு உள்ளே போகிறது, வெளியே வருகிறது. இன்னும் இழுபறியாக இழுத்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே, விதவைகளுக்கு மறுமணம் தேவையெனச் சட்டம் செய்திருக்கிறாரே! அவர் தீர்க்கதரிசியா அல்லவா? என்பதை எண்ணிப் பாருங்கள்.
மது விலக்கு
நம் நாட்டில் இப்பொழுதுதான் மதுளிலக்குச் சட்டம் நிறைவேறியது. அதுவும் மாறி மறைந்து கொண்டிருக்கிறது. ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே மது விலக்குச் சட்டம் நிறைவேற்றியிருக்கிறார் என்றால், அவர் தீர்க்கதரிசியா அல்லவா? என்பதை எண்ணிப் பாருங்கள்.
ஆலயப் பிரவேசம்
நம் நாட்டில் இராஜாஜி அவர்கள் காலத்தில்தான், ஆலயப் பிரவேசச் சட்டம் செய்து கோவில்கள் அனைவருக்கும் திறந்து வைக்கப் பெற்றிருக்கின்றன. ஆனால் நாயகம் அவர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்பே, பள்ளி வாசல்களுக்குக் கதவுகளே இல்லாமல் எல்லோருக்கும் திறந்து வைக்கச் செய்திருக்கிறார்கள். அவர்கள் தீர்க்கதரிசியா? அல்லவா என்பதை எண்ணிப் பாருங்கள்.
6. திருக்குர்ஆன்
எம்பெருமானார் நபிகள் நாயகம் அவர்கள் படிக்கவில்லை, அப்படிப் படிக்காத ஒருவர் வாயிலிருந்து நமது திருமறையாகிய திருக்குர்ஆன் தோன்றியுள்ளது. இது நடக்கக்கூடிய காரியமா? நீங்கள் இதை ஒப்புக் கொள்கிறீர்களா என்று என்னையே பலர் கேட்டிருக்கிறார்கள். நான் அவர்களுக்குக் கூறிய விடை பைபிளில் உள்ள ஒரு கதைதான்.
சாலமோன் ஞானி என்று ஒரு பெரியவர் இருந்தார் என்பதை பைபிளைப் படித்த எவரும் நன்கறிவார்கள். அவர் வேறு யாரும் அல்லர். அவர் நமது 'ஹஜரத் சுலைமான்’ அவர்கள் தாம். திருக்குர்ரானையும் பைபிளையும் படிப்பவர்களுக்கு இரண்டிலும் காணப்படுகின்ற பெயர்கள் ஒரே பெயராகத் தோன்றும். திருக்குர்ரானில் யாக்கூப், தாவுத், இப்ரகீம், மூசா, சிக்கந்தர், சுலைமான் என்று வரும் பெயர்களெல்லாம் பைபிளில் ஜேகப், டேவிட், ஆப்ரகாம், மோசே, அலெக்சாந்தர், சாலமோன் என வரும்,
சாலமோன் மிகப் பெரிய ஞானி, அவருக்கு ஒரு ஐயப்பாடு தோன்றியது. "நல்லவன் வறுமை வாய்ப்பட்டுத் துன்பப்படுகிறானே ஏன்! கெட்டவன் செல்வம் படைத்து மகிழ்ச்சியோடு வாழ்கிறானே ஏன்? செல்வம் படைத்த பலருக்குக் குழந்தை இல்லையே ஏன்? அவர்கள் விரும்பியும் வேண்டியும் குழந்தை பிறக்காதது ஏன்? வறுமை வாய்ப்பட்ட ஏழை மக்களுக்கு அதிகப் பிள்ளைகள் பிறந்திருப்பதேன்? அவர்கள் விரும்பா விட்டாலும் அதிகமான குழந்தைகள் பிறக்கின்றனவே! அது ஏன்? இது கடவுள் செயலா? சாத்தான் செயலா? கடவுள் செயல் என்றால் அது நியாயமாகுமா? சாத்தான் செயல் என்றால் கடவுளின சக்திக்கு மீறியும் சில செயல்கள் நடக்க முடியுமா?" என்பதே அவரது ஐயம்.
இதை அவர்கள் எண்ணி எண்ணிப் பார்த்தார்கள். ஒன்றும் புரியவில்லை. பல நாள் சிந்தித்தார்கள். ஒன்றும் விளங்கவில்லை. வீட்டிலிருந்தும், வீதியிலிருந்தும் நடந்தும், கிடந்தும் ஆலோசித்துப் பார்த்தார்கள். ஒன்றும் தோன்றவில்லை.
கடைசியாகக் கடற்கரைக்குச் சென்று, காலையிலிருந்து மாலை வரை கடல் அலை நீர் காலிற் படும்படிக் கரையோரமே நடந்து உலாவி யோசித்துப் பார்த்தார்கள். விடை கிடைக்கவில்லை.
சாலமோன் ஞானி தம் முயற்சியைக் கை விடவில்லை. எப்படியாகிலும் இதற்கு விடை கண்டே தீருவேன் என்று உறுதி பூண்டார். காலையில் எழுந்ததும், கடற்கரைக்குச் செல்வதும், அங்கு இது பற்றி ஆலோசிப்பதும், மாலையில் வீடு திரும்புவதுமாகிய இப்பணி பல நாட்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் அவர் கடற்கரையில், இது பற்றி எண்ணி உலாவிக் கொண்டிருந்த பொழுது, ஒரு சிறுவன் தன் கையிற் சிறிய கொட்டாங்கச்சியை வைத்துக் கொண்டு கடல் நீரை முகந்து, மணலில் ஊற்றி விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார். ஞானி தெற்கேயிருந்து வடக்கே போகும் போதும், வடக்கேயிருந்து தெற்கே வரும் போதும், அச்சிறுவன் கிழக்கும் மேற்குமாக நடந்து, கடல் தண்ணீரை ஊற்றி விளையாடிக் கொண்டிருந்தான். ஞானி அதைப் பொருட்படுத்தாமல், தம் சிந்தனையிலேயே ஆழ்ந்து நடந்து கொண்டிருந்தார். ஒரு வித முடிவும் தோன்றவில்லை.
மாலைப் பொழுது மறையவே வீடு திரும்பலானார். சிறிது தூரம் நடந்ததும், கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் நினைவு வந்தது. அங்கிருந்தே அவனைக் கூப்பிட்டார். சிறுவன் அதைச் சிறிதும் காதில் வாங்காமல் மேலும் விளையாடிக் கொண்டிருந்தான். சாலமோன் ஞானி அவனிடமே சென்று, "தம்பி பொழுது இருட்டுகிறதே. வீடு திரும்பவில்லையா?" எனக் கேட்டார். அதற்கு அவன் "ஹஜ்ரத், உங்கள் வேலை முடிந்து விட்டது போல் இருககிறது. நீங்கள் போகிறீர்கள். என் வேலை இன்னும் முடியவில்லை. அதை முடித்த பிறகுதான், நான் வீடு திரும்புவேன்" என உறுதியாகக் கூறினான். "தம்பி! அது என்ன வேலை?" எனக் கேட்டார். அதற்கு அவன், "கடல் தண்ணீர் முழுவதையும் இந்தக் கொட்டாங்கச்சியால் இறைத்துக் கரையில் ஊற்றுகின்ற வேலை" என்றான். ஞானி வியப்புடன் சிரித்து, "தம்பி! நீ எவ்வளவு! கடல் தண்ணீர் எவ்வளவு! உன் கையில் உள்ள கொட்டாங்கச்சி எவ்வளவு! இதைக் கொண்டு அதை எப்படி இறைத்து, ஊற்ற முடியும்" எனக் கேட்டார். சிறுவன் சொன்னான், "ஹஜரத்! நீங்கள் எவ்வளவு! ஆண்டவன் எவ்வளவு!உங்கள் மூளை எவ்வளவு! இதைக் கொண்டு அவன் செயலை அறிய முடியுமானால், இந்தக் கொட்டாங்கச்சியைக் கொண்டு இக்கடல் தண்ணீரை இறைத்து விட முடியாதா? நீங்களும் முயற்சி செய்யுங்கள்; நானும் முயற்சிக்கிறேன்" என்று மறுபடியும் ஓடிக் கடல் தண்ணீரை முகக்கத் தொடங்கினான்.
சாலமோன் ஞானிக்கு விடை கிடைத்து விட்டது. கிடைத்த விடை என்ன? மனிதன் தன் மூளையைக் கொண்டு, ஆண்டவனுடைய செயல்களை அளக்க முயற்சிப்பது, கொட்டாங்கச்சியைக் கொண்டு கடல் தண்ணீரை இறைத்து விட முயற்சிப்பது போன்றது என்பதே. ஞானிக்கு ஐயம் மறைந்தது. அதே வினாடியில் சிறுவனும் மறைந்தான்.
படிக்காத ஒருவர் வாயிலிருந்து 'திருக்குரான்' எப்படித் தோன்றியிருக்க முடியுமென்று என்னைக் கேட்பவர்களுக்கு நான் கூறுகிற விடை சாலமோன் ஞானியினுடைய கதைதான்.
7. இஸ்லாத்தின் வளர்ச்சி
கி. பி. 611ல் இஸ்லாம் சமயத்தைச் சீர்திருத்தி, அதன் ஒரே தலைவராகத் தனித்து நின்றவர் நாயகம் அவர்கள், 614ல் நாற்பது பேர் சேர்ந்தனர். 624ல் அதன் எண்ணிக்கை முந்நூறாகி, 625ல் ஆயிரமாக உயர்ந்து: 634ல் ஒரு இலட்சம் பேராகக் காட்சியளித்தனர். இன்று இஸ்லாமிய சமயத்தினர் எண்ணிக்கை தொண்ணுறு கோடியாக உயர்ந்திருக்கிறது. அதாவது, இன்றைய உலக மக்களின் எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பங்கு. நூறு மக்களில் 20 பேர் இஸ்லாமிய சமயத்தைத் தழுவி நிற்பவர். இது நபிகள் நாயகத்தின் பேராற்றலையும், இஸ்லாமிய சமயத்தின் தத்துவத்தையும் விளக்கிக் காட்டுவதாகும்.
8. கடைசி நபி
இஸ்லாமியப் பெருமக்களின் அழுத்தமாள கொள்கைகளில் ஒன்று எம்பெருமான் முகம்மது நபி அவர்களைக் கடைசி நபி எனக் கருதுவது. நபி என்ற சொல்லுக்கு இறைவனுடைய தூதர் என்று பொருள்.
மக்களுக்கு நன்மை செய்ய ஆண்டவன் விரும்பி, அவ்வப்போது தன் திருத்தூதர்களை அனுப்புவது வழக்கம் என்றும், இந்து சைவ, வைணவ, பெளத்த, சமண, கிறிஸ்தவ சமயங்களில் காணப்படுகின்ற, கூறப்படுகின்ற அவதார புருஷர்கள் என்பவர்களெல்லாம், உண்மையில் இவ்வுலகுக்கு இறைவனால் அனுப்பப்பட்ட திருத்தூதர்களாகிய நபிமார்களே எனவும், இஸ்லாம் ஒப்புக் கொள்கிறது. இது, அதன் பரந்து விரிந்த மனப்பான்மையையே காட்டுவதாகும். இம்முறையில் இறைவனால் கடைசியாக அனுப்பப்பட்ட திருத்தூதர் முகமது நபி அவர்கள் என்பதே இஸ்லாமியக் கோட்பாடுகளில் தலை சிறந்தது. இவ்வுலகில் இதுவரை தோன்றியுள்ள எல்லா நபிகளுக்கும்
8. கடைசி நபி
இஸ்லாமியப் பெருமக்களின் அழுத்தமாள கொள்கைகளில் ஒன்று எம்பெருமான் முகம்மது நபி அவர்களைக் கடைசி நபி எனக் கருதுவது. நபி என்ற சொல்லுக்கு இறைவனுடைய தூதர் என்று பொருள்.
மக்களுக்கு நன்மை செய்ய ஆண்டவன் விரும்பி, அவ்வப்போது தன் திருத்தூதர்களை அனுப்புவது வழக்கம் என்றும், இந்து சைவ, வைணவ, பெளத்த, சமண, கிறிஸ்தவ சமயங்களில் காணப்படுகின்ற, கூறப்படுகின்ற அவதார புருஷர்கள் என்பவர்களெல்லாம், உண்மையில் இவ்வுலகுக்கு இறைவனால் அனுப்பப்பட்ட திருத்தூதர்களாகிய நபிமார்களே எனவும், இஸ்லாம் ஒப்புக் கொள்கிறது. இது, அதன் பரந்து விரிந்த மனப்பான்மையையே காட்டுவதாகும். இம்முறையில் இறைவனால் கடைசியாக அனுப்பப்பட்ட திருத்தூதர் முகமது நபி அவர்கள் என்பதே இஸ்லாமியக் கோட்பாடுகளில் தலை சிறந்தது. இவ்வுலகில் இதுவரை தோன்றியுள்ள எல்லா நபிகளுக்கும் தலைவர் என்ற பொருளில்தான், நபிகள் நாயகம் என்ற பெயரே அமைந்திருக்கிறது.
9. அருங்குணங்கள்
இனி இவரது அருங்குணங்கள் சிலவற்றை ஆராய்வோம்.
ஏழைகள் மீது கருணை
எம்பெருமானார் அவர்கள் கருணையுள்ளம் படைத்தவர்கள். அதிலும் அவர்கள் ஏழைகளிடத்தில் காட்டும் கருணை அளவு கடந்ததாகும். அதற்கு எடுத்துக்காட்டு ஒன்று கூறுகிறேன்.
நாயகம் அவர்கள் தமக்கென்று இரண்டு ஆடைகளையும், இரண்டு தாழம்பாய்களையும் வைத்துக் கொண்டு மற்றவற்றையெல்லாம் இல்லாத மக்களுக்கு வழங்கினார்கள் என்று தான் நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் இத்தாலி தேசத்துப் பேராசிரியர் ஒருவர், அதில் ஒரு நயத்தைப் புகுத்தி எழுதியிருக்கிறார். அது, தமக்கென்று இரண்டு தாழம்பாய், இரண்டு ஆடைகளை வைத்துக் கொண்டு, மற்ற எல்லாவற்றையும் இல்லாத மக்களுக்கு வழங்கிப் பெற்றுக் கொண்ட மக்களின் முகம் மகிழ்ச்சி அடைவதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார் என்பதே. இது நம் உள்ளத்தைத் தொடவில்லையா? பெற்றுக் கொண்டவர்களுடைய முகம் மகிழ்ச்சி அடைவதைக் கண்டு அவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள் என்பதைப் படிக்கும் போதே, நமக்கு வியப்பையையும் மகிழ்ச்சியையும் ஒருங்கே அளிக்கிறது. இது எவ்வளவு பெரிய கருணை என எண்ணிப் பார்க்க வேண்டும்.
பெண்ணுக்குப் பெருமை
ஒரு சமயம் நாயகம் அவர்களை அவரது தாயார் பார்க்க வந்தார்கள். அதுவும் பெற்ற தாயல்ல; செவிலித்தாய்; வளர்த்த தாய். உடனே தம் மேலாடையை எடுத்து விரித்து அதில் உட்கார வைத்துப் பேசி அனுப்பி வைத்தார்கள். பெண்ணுக்கு அவர்கள் தந்த பெருமைக்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?
எளிமை
நாயகம் அவர்களைப் பல அறிஞர்கள் சூழ்ந்து கொண்டு, 'நீங்கள் தேவனா?' எனக் கேட்டார்கள். 'இல்லை’ என்றார்கள். 'தேவகுமாரனா?' எனக் கேட்டார்கள். 'இல்லை நான் உங்களைப் போன்று ஒரு மனிதன்' என்றார்கள். இது அவர்களிடம் காணப்பெற்ற எளிமைக்கு ஒரு சான்று தங்களையே கடவுள் என்று சொல்லிக் கொண்டு வாழ்ந்தவர்களையெல்லாம் நாம் பாத்திருக்கிறோம். தங்களைக் கடவுளுடைய குமாரன் என்று சொல்லிக் கொண்டவர்களுடைய வரலாறு நமக்குத் தெரியும். கடவுளுடைய அவதார புருஷர்கள் என்று சொல்லிக் கொண்டவர்கள் பலர். நாயகம் அவர்களிடத்தில் இந்தச் சொல், அவர்கள் வாயிலிருந்து வந்ததே இல்லை. இத்தகைய பெருந்தன்மையை மற்றவர்களிடத்தில் காண முடியுமா? எண்ணிப் பாருங்கள்.
ஜீவகாருண்யம்
ஜீவகாருண்யத்தில் நாயகம் அவர்களுக்கு அதிகப் பற்றுண்டு. பல பேர் நினைக்கிறார்கள். இஸ்லாமியர் எல்லாம் இரக்கமில்லாது, உயிர்களைக் கொல்லுகின்றவர்கள் என்றும், அவ்வாறு அவர்களுக்கு நாயகம் போதித்திருக்கிறார்கள் என்றும். இது தவறு. அவர்களுடைய சீடர்களிலே ஒருவர் "நேற்றுப் பத்துப் பேருக்கு விருந்து பண்ணினேன்" என்றார். நாயகம் அவர்கள் "என்ன செய்தாய்?" என்றார். "10 குருவிகளைச் சமைத்தேன்" என்றார். "அடப் பாவமே! ஒரு கோழியைச் சமைத்திருக்கலாமே!” என்றார். 10 உயிர்கள் கொல்லப்படுகிறதை விட ஒர் உயிர் கொல்லப்படுவது இரக்கம், அவர்களுடைய கருணை. மற்றொரு நாள், வேறொருவர் வந்து "ஐந்து ஆடுகளை அறுத்து 200 பேருக்கு விருந்தளித்தேன்" என்றார். "அடப் பாவமே! ஒரு மாட்டை அறுத்திருக்கலாமே!" என்றார். எவ்வளவு ஜீவகாருண்யம் பாருங்கள்! உண்ணுவதற்கு வேறெதுவும் விளையாத அப்பாலைவனங்களில் பல உயிர்களைக் கொன்று உண்பதை விட, 'ஓர் உயிரைக் கொன்றிருக்கலாமே' என இரக்கங்காட்டி இருக்கிறார்.
சகிப்புத் தன்மை
அவர்களுடைய சகிப்புத் தன்மைக்கு ஒரே ஒரு சான்று. நாள்தோறும் அவர்கள் பள்ளிவாசலுக்குப் போவார்கள். அவர்கள் மீது வெறுப்புக் கொண்ட ஒருவன், குப்பை கூளங்களை எடுத்து வைத்துக் கொண்டு மாடி மீதிருந்து நாயகம் அவர்கள் தலை மேலே கொட்டுவான். ஒரு நாளாகிலும் நின்று, அது யார் என்று அவர்கள் கேட்டதில்லை. சத்தம் போட்டதில்லை. வெறுத்ததில்லை. பல நாள் அது நடை பெற்று வந்தது. அவர்கள் சகிப்புத் தன்மையோடு அதைத் துடைத்துக் கொண்டு பள்ளிவாசலுக்குப் போய் ஒதுச் செய்து தொழுது வருவார்கள். போகும் போது கொட்டாவிட்டால், வரும் போது கொட்டுவான் என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்கள் அதற்கும் தயாராக வருவார்கள். ஒரு நாள் பள்ளிவாசலுக்குப் போகும் போதும் குப்பை விழவில்லை. தொழுது திரும்பி வரும் போதும் விழவில்லை. அவர்கள் கால் எட்டிப் போகவில்லை. நடை வரவில்லை. நின்று விட்டார்கள். அந்த வீட்டைத் திரும்பிப் பார்த்தார்கள். ஆனால் ஒருவன் எதிர்த்த வீட்டிலிருந்து சொன்னான். "நீங்கள் செல்லுங்கள், ஹஜ்ரத். அவன் விளையாட்டுக்காரப் பையன். அவன் ஏதோ தெரியாமல் செய்து விட்டான்" என்று. அதற்கு நாயகம் அவர்கள், "நாள்தோறும் நான் வரும் போதெல்லாம் இது நடக்குமே? இன்றைக்கு ஏன் நடக்கவில்லை? என்று தெரிந்து கொண்டு போகலாமென்றுதான் கேட்டேன்" என்றார்கள். "இல்லை ஹஜ்ரத்! அவன் பெரிய சுரத்தினாலே அவதிப்படுகிறான். எழுந்திருக்க முடியாது" என்றான். இதைக் கேட்ட நாயகம் அவர்கள் மனங்கலங்கி அவ்வீட்டின் கதவைத் தட்டி, கோஷா எச்சரிக்கை செய்து, உள்ளே நுழைந்தார்கள். அவன் படுக்கையிற் படுத்துக் கொண்டு அலறிக் கொண்டிருந்தான். என்ன நடந்தது? என்ன நடக்கும்? நம் அறிவுக்கு எட்டாதது அங்கு நடந்தது. உடனே சென்று அவனைத் தூக்கி மடிமேல் வைத்துக் கொண்டு, ஆண்டவனிடத்தில் துவா கேட்க ஆரம்பித்தார்கள். "ஓ ஆண்டவனே! நாள் தோறும் நான் வருகின்ற வழி மேல் விழி வைத்துக் காத்திருந்த என்னுடைய அரிய நண்பனுக்கா இந்த நோய்?" என்று துவாக் கேட்க ஆரம்பித்தார்கள். துவாக் கேட்கப் பட்டது. நோய் நீங்கியது அவன் ஒரு நல்ல சீடனானான்.
கிறித்தவர்களுக்குத் தொழ இடம்
ஒரு சமயம் கிறித்துவப் பாதிரியார் நாயகம் அவர்களைப் பார்க்க வந்தார். நாயகம் அவர்கள் அப்போது ஒரு பள்ளிவாசலில் இருந்தார்கள். பேச்சு வெகு நேரம் நடந்தது. பாதிரியாருக்கு ஜபம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதால், தாம் வேறிடத்திற்குச் சென்று ஜபம் செய்து விட்டு, மீண்டும் வருவதாக நாயகம் அவர்களிடம் கூறினார்கள். நாயகம் அவர்கள் மிக அமைதியாக "இந்த வெய்யிலில் வெளியிற் போய் வர வேண்டாமே! உங்கள் ஜபத்தை இங்கேயே செய்யலாமே" என்று, பள்ளிவாசலின் ஒரு மூலையைக் காட்டினார்கள். பாதிரியார் அங்கு ஜபம் செய்துகொண்டிருந்தார். இந்நிகழ்ச்சி நாயகம் அவர்களோடு இருந்த சிலருக்கு மனப் புழுக்கத்தையும் வெறுப்பையும் உண்டாக்கியது. அவர்கள் நாயகம் அவர்களிடம் வந்து, "பள்ளிவாசலின் தூய்மை கெட்டு விட்டதே" என வருந்திக் கூறினார்கள். நாயகம் அவர்கள், "இரண்டு ஆண்டவன் இல்லை. பாதிரியார் வணங்கும் ஆண்டவனும், நாம் வணங்கும் ஆண்டவனும் ஒருவனே" எனக் கூறி அவர்களை அமைதிப்படுத்தினார்கள். இது, 'எல்லாச் சமயத்தினரும் வணங்குகின்ற கடவுள் ஒருவனே' என எண்ணும் நாயகம் அவர்களின் பரந்து விரிந்த உள்ளத்தை நமக்குப் படம் பிடித்துக் காட்டுவதாகும்.
வணிகம்
நாயகம் அவர்கள் முதல் நாற்பதாண்டுக் காலத்தில், ஒட்டக வணிகம் செய்தார்கள். அப்போது அவர்களிடம் 40 ஒட்டகங்கள் இருந்தன. வெளியூரிலிருந்து ஒட்டகம் வாங்க வந்த ஒருவர், நாயகம் அவர்களிடம் 40 ஒட்டகங்களுக்கும் சேர்த்து விலை கூறும்படி கேட்டார். முதலில் ஒட்டகங்களனைத்தையும் போய்ப் பார்த்து வரும்படி நாயகம் அவர்கள் கூறினார்கள். வியாபாரி போய்ப் பார்த்து வந்து, மறுபடியும் 'எல்லா ஒட்டகங்களுக்கும் சேர்த்து விலை என்ன?' என்று கேட்டார். அதற்கு நாயகம் அவர்கள் சிரித்துக் கொண்டே. "அதில் ஒரு ஒட்டகம் நொண்டி, ஒரு கால் தரையில் ஊன்றாது. மூன்று கால்களாலே தத்தி தத்தி நடக்கும். அதைப் பார்த்திரா?" என்று கேட்டார்கள். இந்தக் காலத்து வியாபாரிகளிடம் நாம் இந்த நேர்மையையும், நாணயத்தையும் காண முடியுமா? இதைக் கேட்ட வியாபாரி அஞ்சி நடுநடுங்கிப் போனார். அவரது நேர்மைக்கு வணக்கம் செலுத்தி, "அந்த நொண்டி ஒட்டகமும் மற்ற 39 ஒட்டகங்களுடன் சேர்ந்து இருக்கட்டுமே” என்று கேட்டு, வாங்கிப் போனார். எப்படி, நாயகம் அவர்களின் வணிகம்!
பெருங்தன்மை
நாட்டையும், மக்களையும், புனித இடங்களையும் காப்பாற்ற நாயகம் அவர்கள் தம்மைச் சார்ந்தவர்களோடு சேர்ந்து கொண்டு, வாளேந்திப் பகைவர்களோடு போர் புரியும் நிலைமை பல தடவை நேர்ந்தது. ஒரு சமயம், போர்க் களத்தில் நாயகம் அவர்களின் சிறிய தந்தையார் வாளேந்திய கையுடன் மடிந்து கிடந்தார். அதைக் கண்ட ஹிந்தா என்று பெயர் கொண்ட பகைவர் கூட்டத்தில் உள்ள பெண்ணொருத்தி, அவரது குடலை அறுத்தெடுத்து வாயில் வைத்துக் கடித்து 'ராட்சசி' போன்று வெறியாட்டம் ஆடினாள். நாயகம் அவர்களைச் சேர்ந்தோர் அவளைச் சிறைப்படுத்தி வைத்திருந்தனர். இறுதியில் போர் முடிந்து, நாயகம் அவர்கள் வெற்றி விழாக் கொண்டாடிய பொழுது சிறைக் கைதிகளை விடுதலை செய்தனர். இச் செய்தியைச் சிறைக் கைதிகள் அனைவரும் கேட்டு, மகிழ்ந்து வெளியில் ஓடினர். 'ஹிந்தா' என்ற அந்தப் பெண் மட்டும் தனக்கு விடுதலை கிடைக்காது என்று நம்பி. அங்கேயே இருந்தாள். சிறைக் காவலாளிகள் அவளுக்கும் விடுதலை கிடைத்திருப்பதாகச் சொல்லி வெளியே போக வற்புறுத்திய பொழுது, 'எனக்கும் விடுதலையா! எனக்கும் விடுதலையா!' என அவள் மனம் உருகி, உருகி அழுது, அழுது அரற்றிய சொற்கள் நம் உள்ளத்தை எல்லாம் உருக்குகின்றன. என்னே நாயகம் அவர்களின் பெருந்தன்மை!
10. தெய்வ பக்தி
அவருடைய தெய்வ பக்திக்கு ஒன்றென்ன, இரண்டு சான்றுகள். ஒரு தரம், அவருடைய பகைவர்கள் அவரை நெருங்கி விட்டார்கள். ஹஜ்ரத் அபூபக்கர் உடன் இருந்தார்கள். பகைவர்கள் அவர்களைத் தேடி அழிக்க 70 பேர் வந்தார்கள். 'ஏதோ இன்று நடக்கும்' என்று நாயகம் அவர்களும், அபூபக்கரும ஒரு குகைக்குள் இருந்தார்கள். பவருடைய காலடிச் சத்தம் மிக நெருக்கமாகக் கேட்கிறது. அப்பொழுது ஹஜ்ரத் அபூபக்கர், நாயகம் அவர்களை நோக்கி. "ஹஜ்ரத், 70 பேர் வருகிறார்களே! நாம் இரண்டு பேர்தானே இருக்கிறோம்?" என்றார். நீங்களானால் என்ன சொல்வீர்கள்? இரண்டு பேர் என்றுதானே? நாம்தான் என்ன சொல்லுவோம்? நாம் சொல்லாததை அவர்கள் சொன்னார்கள். உடனே அவர்கள் "நாம் இருவர் அல்லர், மூவர்" என்றார்கள். ஹஜ்ரத் அபூபக்கர் யாரோ கூட இருக்கிறார்கள் என்று குகையைச் சுற்றிச் சுற்றிப் பார்த்தார். அதைக் கண்டு நாயகம் அவர்கள். "ஆண்டவன் ஒருவன் நம்மோடு இருக்கிறான். அவனையும் சேர்த்து நாம் மூவர்" என்றார்கள். இது அவர்களின் தெய்வ பக்திக்கு ஒரு சான்று. இறுதியில் அவர்கள் கூறியவாறே நடந்தது. பகைவர்கள் வந்து குகையின் வாயிலைப் பார்த்தபோது, வாயில் முழுவதும் சிலந்தியின் நூல் வலையைப் போலக் காணப்பட்டது, அவர்கள் அதில் ஆட்கள் நுழையவில்லை என எண்ணித் திரும்பி விட்டார்கள்.
இரண்டாவது நிகழ்ச்சி இன்னும் கொஞ்சம் கடுமையானது. யூதன் ஒருவன் தன் வாளை எடுத்துக் கொண்டு இவர்களை வெட்டு ஒன்று, துண்டு இரண்டாக வெட்ட நெடுநாளாகக் காத்திருந்தான். அவனுக்கு வாய்ப்பு வரவில்லை. பல நாள் தேடிக் கொண்டிருந்தான். அப்போதும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. பலர் கூட இருப்பதால் தனித்துச் சந்திக்க முடியவில்லை. ஒரு நாள் அவன் சாலையில் வரும் பொழுது, நாயகம் அவர்கள் ஒரு மரத்தடியில் களைப்பைத் தீர்த்துக் கொள்ளப் படுத்திருந்தார்கள். அப்படியே கண்ணயர்ந்து விட்டார்கள். இதைக் கண்டுவிட்டான் யூதன். எடுத்தான் வாளை, நீட்டினான் கழுத்தண்டை. யாரும் அங்கு தடுப்பாரும் இல்லை. அவரும் அங்கு விழிப்போடு இல்லை. நல்ல உறக்கம். வாளை ஓங்கி விட்டான், வெட்டிக்கொல்வதற்கு! ஒரே வினாடிதான். உள்ளத்தில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியோடு, "ஓய் முகமதுவே! உன்னை யார் இப்போது காப்பாற்றப் போகிறார்கள்?" என்று உரக்கக் கூறி வாளை ஓங்கினான். உடனே நாயகம் அவர்கள் விழித்ததும், அவனையும் அவனது வாளையும் கண்டு ஆச்சரியப்பட்டு, "அல்லாஹ்!" என்று கையை நீட்டிக் தேக்கினார்கள். அவன் குழம்பி "உன்னை யார் காப்பாற்றப் போகிறார்கள்?" என்று கேட்ட கேள்விக்கு, "அல்லாஹ் காப்பாற்றப் போகிறார்" என்ற விடை வந்ததாக எண்ணினான். கை நழுவி, வாள் கீழே விழுந்து விட்டது. நாயகம் அவர்கள் அந்த வாளைக் கையில் எடுத்து கொண்டு, "இப்பொழுது உன்னை யார் காப்பாற்றப் போகிறார்கள்?" என்றார். அதற்கு அவன் "ஹஜ்ரத்! நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்" என்றான். அதற்கு நாயகம் அவர்கள், "அல்ல; உன்னையும் என்னையும் காப்பாற்றியவன் ஆண்டவனே!" எனக் கூறிச் சென்று விட்டார். இது அவர்களது தெய்வ பக்திக்கு மற்றொரு சான்று. தன்னைக் கொல்ல வந்த பசுவையும் கொல்லலாம் என்பது ஒரு நீதி. தன்னைக் கொல்ல வந்த மனிதனையும், கொல்லாமல் விட்டது நாயகம் அவர்களின் நீதி. என்னே, நாயகம் அவர்களின் நீதியும், தெய்வ பக்தியும்!
11. சிக்கனம்
கருமித்தனம் அல்ல
ஒரு சமயம் நாயகம் அவர்களிடம் ஒரு பெரியவர் வந்து, 'தங்கள் ஊரில் பள்ளிவாசல் இல்லை. அதைக் கட்டியாக வேண்டும். அதற்குப் பணம் தேவை, என்ன செய்யலாம்?' என்றார்கள். அதற்கு நாயகம் அவர்கள், பக்கத்து ஊரிலுள்ள ஒரு செல்வனின் பெயரைச் சொல்லி, "அவரிடம் சென்று கேளுங்கள். கொடுப்பார்" என்றார்கள். பெரியவர் உடனே அவ்வூருக்குச் சென்று அப்பணக்காரரைப் பார்க்கப் போனார். அப்பொழுது பணக்காரர் தம் வேலையாளைத் தூணிற் கட்டி வைத்துத் தம் கையை மடக்கி, அவன் முகத்தில் குத்திக் கொண்டிருந்தார். பெரியவர் பக்கத்திலுள்ளவர்களிடம் 'ஏன் இப்படி, அவனைக் குத்துகிறார்' என்று கேட்டார். 'செல்வர் வேலையாளைப் பருப்பு வாங்கி வரச் சொன்னார். பத்துப் பருப்புச் சிந்திப் போயிற்று, அதற்காக அவனைப் பத்துக் குத்துக் குத்திக் கொண்டிருக்கிறார்' என்றார்கள். அதைக் கேட்டதும், பெரியவர் பயந்து ஓட்டம் பிடித்து நாயகம் அவர்களிடம் திரும்பி வந்து விட்டார். நாயகம் அவர்கள், 'செல்வர் என்ன கொடுத்தார்?' என்றார்கள். அவர் வேலையாளுக்குக் கொடுத்த குத்துகளையே கூறினார். [சிரிப்பு]. நாயகம் அவர்கள் "மறுபடியும் நீர் அவரிடம் சென்று கேளும்" என்று கட்டளை இட்டார். மறுபடியும் பெரியவர் அச்செல்வரிடஞ் சென்றார். அப்பொழுது, அச்செல்வர் தம் மற்றொரு வேலையாளை மரத்தில் கட்டி வைத்து, சாட்டையால் அடித்துக் கொண்டிருந்தார். பெரியவர், அங்கிருந்தவர்களிடம் 'ஏன் இப்படி அடிக்கிறார்?' என்று கேட்டார். "இந்த வேலையாள் எண்ணெய் வாங்கி வரும் போது, பத்துச் சொட்டு எண்ணெய் சிந்திப் போயிற்று. அதற்காகச் சவுக்கால் பத்தடிகள் அடிக்கிறார்" என்று சொன்னார்கள். பெரியவர் மிகவும் பயந்து நடுநடுங்கி, இக்கருமியிடம் பணம் கேட்பதை விடப் பள்ளிவாசல் கட்டுவதையே நிறுத்தி விடலாமென்று எண்ணி, நாயகம் அவர்களிடம் ஓடி வந்து விட்டார். [சிரிப்பு]. நாயகம் அவர்கள் 'செல்வர் என்ன கொடுத்தார்?' எனக்கேட்டார்கள், அவர் சவுக்கடி கொடுத்த செய்தியைக் கூறி, 'அவரிடம் பணம் கேட்க என் மனம் துணியவில்லை' என்று கூறினார். 'போய்க் கேளு'மென மறுபடியும் உத்தரவு வந்தது. பெரியவர் மறுபடியும் செல்வரிடம் சென்றார். நல்ல வேளையாக எதுவும் அங்கு அப்பொழுது நடைபெறவில்லை. பெரியவர் துணிந்து செல்வரிடஞ் சென்று தனது நோக்கத்தைத் தெரிவித்தார். செல்வர், "எவ்வளவு ரூபாயில் பள்ளிவாசல் கட்டப் போகிறீர்கள்" என்று கேட்டார். அதற்குப் பெரியவர், "அதைக் கட்டி முடிப்பதற்குப் பத்தாயிரம் ரூபாய் ஆகும். நீங்கள் ஐயாயிரம் கொடுத்தால், வேறு பலரிடம் ஐயாயிரம் வாங்கி, விரைவில் கட்டி முடிக்க உதவியாக இருக்கும்” என்று கேட்டுக் கொண்டார். அதற்குச் செல்வர், "இவ்வளவு காலம் உங்கள் ஊரில், பள்ளிவாசல் இல்லாமல் இருந்ததே தவறு. இன்னும் பலரிடஞ் சென்று காலந் தாழ்ந்த வேண்டாம். நானே பத்தாயிரமும் தருகிறேன். இதற்கு உதவாமல், பணம் என்னிடம் எதற்காக இருக்கிறது?" என்று கூறி, அள்ளிக் கொடுத்தனுப்பினார். பெரியவருக்குத் தலை சுற்ற ஆரம்பித்தது. மனக்குழப்பத்தோடு, நாயகம் அவர்களிடம் வந்து, "பத்துப் பருப்புச் சிந்தியதற்காகவும், பத்துச் சொட்டு எண்ணெய் சிதறியதற்காகவும் தன் வேலைக்காரர்களைச் சவுக்கடியால் அடித்துத் துன்புறுத்தும் இவன், பள்ளிவாசல் கட்ட ஐயாயிரங் கேட்ட பொழுது, பத்தாயிரங் கொடுத்தானே இதற்கு என்ன காரணம்?" என வினவினார். அதற்கு நாயகம் அவர்கள், "கருமித் தனம் வேறு; சிக்கனம் வேறு. அவன் கருமியல்ல; சிக்கனத்தைக் கையாள்பவன். அவன் அப்படியெல்லாம் பொருள்களைப் பாழாக்காமல் சேர்த்து வைத்திருந்ததனால்தான், அப்பணம் பள்ளிவாசல் கட்டப் பயன்படுகிறது" எனக் கூறினார். நாயகம் அவர்களுடைய இந்த வாக்கு நமக்குக் கருமித் தனத்திற்கும், சிக்கனத்திற்கும் உள்ள இடைவெளியை நன்கு காட்டுகிறது.
காய்கறியிலும்
நாயகம் அவர்களுடைய சிக்கனக் கொள்கை ஏழைக் குடிசைகளில் மட்டும் அல்லாமல், ஆட்சித் தலைவர்களின் அரண்மனைகளிலும் கையாளப்பட்டு வந்தது. ஒரு கலிபா, தம் உணவிற்காகக் காய்கறிக்கு மட்டும் நாள் தோறும் நான்கணா மதிப்புள்ள நாணயத்தைத் தம் மனைவியிடம் கொடுத்து விடும்படி கட்டளையிட்டிருந்தார். நெடுநாள் இம்முறை கையாளப்பட்டு வந்தது. ஒரு நாள் உணவருந்தும் பொழுது, அதிகமான காய்கறிகள் பரிமாறப்பட்டிருந்தன. கலிபா ஆச்சரியப்பட்டு, "இவையனைத்தையும் நான்கணாலில் வாங்கியிருக்க முடியாதே! இது எப்படிக் கிடைத்தது?" என மனைவியிடம் கேட்டார். அதற்கு அவள், "நாள் தோறும் கொடுக்கப்படும் நான்கணாவில், காலணா வீதம் எடுத்துச் சேமித்து வைத்திருந்தேன். அது, திருநாளும் பெருநாளுமான இன்று, அதிகக் காய்கறி வாங்கிச் சமைக்க உதவியது" என்றாள். உடனே என்ன நடந்திருக்கும்? என்ன நடந்தது? நம் மூளைகளுக்கு எட்டாத ஒன்று நடந்தது. அது என்ன தெரியுமா? அடுத்த நாள் காலை அமைச்சரைக் கூப்பிட்டு, "என் இல்லத்திற்குக் காய்கறி வாங்க நாலணாத் தேவையென நினைத்தது தவறு. இப்போது மூன்றே முக்காலணாவே போதும் எனத் தெரிகிறது. ஆகவே, நாளையிலிருந்து மூன்றே முக்காலணா மட்டும் கொடு" என்பதுதான். [சிரிப்பு]
வெளிப் பயணத்திலும்
பெரும் போர் ஒன்று நடந்து வெற்றி பெற்ற சமயம். வெற்றி பெற்ற நாட்டின் 2ம் கலிபா தோல்வியடைந்த பாலஸ்தீன் நாட்டின் பொக்கிஷத்தின் சாவியைப் பெறப் புறப்பட்டான். பல படை வீரர்களும், அதிகாரிகளும் உடன் வரப் புறப்பட்டனர். மன்னன் அவர்களைத் தடுத்து நிறுத்தி விட்டு, ஒரு ஒட்டகத்தில் தான் ஏறிக் கொண்டு, மற்றொரு ஒட்டகத்தில், தனக்கும் ஒட்டகக்காரர்களுக்கும் வேண்டிய ஆடைகளையும், உணவையும், தண்ணீரையும் ஏற்றும்படி கட்டளையிட்டான். புறப்படும்போது, அதையும் தடுத்துவிட்டு, ஒரு ஒட்டகத்தில் மட்டும் உணவும் நீரும் ஏற்றிக் கொண்டு ஒட்டகக்காரனோடு புறப்பட்டு விட்டான். சிறிது தூரம் சென்றதும், அந்த ஒட்டகம் இருவரையும் சுமந்து, இருவரது சுமையையும் சுமந்து செல்வதை மன்னன் கண்டு மனம் வருந்தி, ஒட்டகத்தின் சுமையைக் குறைக்க எண்ணினான். இறுதியாக அவன் திட்டம் கையாளப்பட்டது. அது, ஒருவர் ஒட்டகத்தின் மேல் இருப்பது, மற்றவர் ஒட்டகத்தைப் பிடித்துக் கொண்டு நடத்திச் செல்வது. ஒரு மைல் தூரம் சென்ற பிறகு, இருவரும் தங்கள் வேலையை மாற்றிக் கொள்வது என்பது. பல மைல்கள் தூரம் நடந்து சென்று, இறுதியாக, அந்த நாட்டிற்குள் நுழையும் போது, ஒட்டகக்காரன் ஒட்டகத்தின் மேல் இருக்க, மன்னன் தன் கையால் ஒட்டகத்தைப் பிடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தான். பொக்கிஷத்தின் சாவியைக் கொடுக்க அங்கு திரண்டிருந்த ஊர் மக்கள், ஒட்டகத்தின் மேலிருந்தவரையும், ஒட்டகத்தைப் பிடித்து வந்தவரையும் மாறி மாறி உற்றுப் பார்த்து, "எந்த மன்னன், ஒட்டகக்காரனை ஒட்டகத்தின் மேல் வைத்துத் தான் ஒட்டகத்தைப் பிடித்துக் கொண்டு நடந்து, இந்த ஊருக்குள் நுழைகிறானோ, அந்த மன்னனிடம் இந்தச் சாவியைச் சேர்ப்பியுங்கள் என்று எங்களுக்குக் கட்டளை பிறந்திருக்கிறது" என்று கூறி, வியப்போடும் மகிழ்வோடும் ஒட்டகத்தைப் பிடித்து நடந்து வந்த மன்னனிடம் பாலஸ்தீன் நாட்டு மக்கள் சாவியைச் சேர்ப்பித்தார்கள். எப்படி? நாயகம் அவர்களின் சிக்கனக் கொள்கை, அரண்மனைகளிலும் மன்னர்களிடத்தும் பரவியிருந்தது என்பது!
12. நாயகம் அவர்களின் போதனை
வாழ்க்கைக்கு
சிக்கனமாய் இரு; ஆனால் கருமியாய் இராதே. இரக்கங் காட்டு; ஆனால், ஏமாந்து போகாதே. அன்பாய் இரு; ஆனால் அடிமையாய் இராதே. வீரனாய் இரு; ஆனால் போக்கிரியாய் இராதே. சுறுசுறுப்பாய் இரு; ஆனால் படபடப்பாய் இராதே என்பவை அவர்களுடைய போதனைகள். இவற்றின் வேற்றுமைகளை உள்ளத்தே எண்ணி, வாழ்க்கை நடத்துவது நல்லது.
பொதுத் தொண்டு
பொதுத்தொண்டு செய்கின்ற ஒவ்வொருவனும், முதலில் தன் வீட்டிலிருந்தே பொதுத் தொண்டைத் தொடங்க வேண்டும் என்பதே நாயகம் அவர்களின் கொள்கை. இதைப் பின் வரும் அவரது போதனை நமக்கு நன்கறிவிக்கிறது. அது "பள்ளிவாசலில் விளக்கேற்றி வைக்கப் புறப்படு முன் உங்கள் வீட்டில் விளக்கேற்றி வைத்துப் புறப்படுங்கள்" என்பது. வீட்டை இருளடைந்து போகும்படி செய்கிறவன் பள்ளிவாசலில் விளக்கேற்றி வைக்கத் தகுதியுடையவன் அல்லன் என்பது நாயகம் அவர்களின் கருத்து. இது பொதுத் தொண்டு செய்கிறவர்களைச் சிந்திக்கச் செய்யுமென நம்புகிறேன்.
நட்பு
'அண்டை வீட்டுக்காரர்களோடு எப்பொழுதும் நட்பாய் இருங்கள் ' என்பது அவர்களது போதனைகளிலொன்று. அதற்கு வழியும் கூறியிருக்கிறார்கள். அது, உங்கள் வீட்டில் பலகாரங்கள் பண்ணும் போதெல்லாம், அண்டை வீட்டுக்காரர்களுக்கும் அனுப்பி அவர்களை மகிழ்வியுங்கள்' என்பது. நீங்கள் எதைப் பின்பற்றாவிட்டாலும், இப்போதனையை நீங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பது, அண்டை வீட்டுக்காரர்களின் பகையால் துன்பப்பட்டுக் கொண்டிருப்பவர்களின் கருத்து.
சர்க்கரை
ஒரு முறை அவர்கள் சொற்பொழிவு செய்து கொண்டிருந்தார்கள். ஒரு கிழவி பையனைக் கொண்டு வந்து முன்னே நிறுத்தி இருந்தாள். "என்ன?" என்றார்கள். "இவன் சர்க்கரையை அதிகமாகச் சாப்பிடுகிறான். சாப்பிட வேண்டாமென்று புத்தி சொல்லுங்கள். நான் சொல்லி அலன் கேட்கவில்லை. அதற்காகத் தங்களிடம் அழைத்து வந்தேன்" என்றாள். "அப்படியா" என்று சற்று எண்ணி, "இன்னும் மூன்று நாள் கழித்து வாருங்கள்" என்றார். போய் விட்டார்கள். மூன்றாம் நாள் பல மைல்களுக்கப்பால் நாயகம் அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை அறிந்து, பையனை அழைத்துக் கொண்டு போய் பழையபடி நின்றாள். "நீங்கள் யாரம்மா?” என்றார்கள் "மூன்று நாளைக்கு முன்பே, இந்தப் பையன் சர்க்கரை சாப்பிடுகிறான்; கொஞ்சம் புத்தி சொல்லுங்கள் என்று சொன்னேனே நான்தான்' என்றாள். "ஓ அவனா? தம்பீ! இனிமேல் நீ சர்க்கரை சாப்பிடாதே! போ" என்றார்கள். அந்த அம்மாவுக்குச் சிறிது வருத்தம். இவ்வளவுதானா? இதைச் சொல்லவா மூன்று நாள்? அதை அன்றைக்கே சொல்லியிருக்கலாமே என்று நினைத்தாள். உடனே "தாயே! நீ என்ன நினைக்கிறாய் என்பது எனக்குத் தெரிகிறது. உன் பேரன் மட்டும் சர்க்கரை சாப்பிடுகிறவன் அல்லன். நானும் அதிகமாகச் சர்க்கரை சாப்பிடுகிறவன். மூன்றாம் நாள் விட முயன்றேன். முடியவில்லை. நேற்று விடப் பார்த்தேன். பாதி தான் முடிந்தது. இன்றைக்குக் காலையிலிருந்து முயன்றேன். என்னால் விட முடிந்தது. சர்க்கரையே சாப்பிடவில்லை. அதனாலே நான் அறிந்தேன். சர்க்கரை சாப்பிடுகிறதை விட முடியும் என்று. அதன் பிறகுதான் பையனுக்கு என்னால் சொல்ல முடிந்தது" என்றார்கள் [கை தட்டல்]. இது, நம் உள்ளத்தைத் தொடுகிறது. தொட்டு என்ன பயன்? நம் நாட்டிலுள்ள பேச்சாளர்களின் உள்ளத்தைத் தொட வேண்டும். எண்ணங்களை நாம் கோடிக்கணக்கில் எண்ணுகிறோம். எழுத்துகளை இலட்சக் கணக்கில் எழுதுகிறோம். பேச்சுகளை ஆயிரக் கணக்கில் பேசுகிறோம். கொள்கைகளை நூற்றுக்கணக்கில் கொட்டுகிறோம். திட்டங்களைப் பத்துக் கணக்கில் வகுக்கிறோம். ஆனால், செயலில் ஒன்றையாவது உருவாகச் செய்கிற ஆற்றல் நமக்கு இல்லை. நாயகம் அவர்களிடத்தில் இருந்தது. எதை அவர்கள் சொல்லுகிறார்களோ அதையே அவர்கள் செய்வார்கள், செய்யக் கூடியதையே சொல்லுவார்கள். மக்களால் செய்ய முடியாத எதையும், அவர்கள் ஒரு நாளும் போதித்ததில்லை. அதுதான் அவர்களிடமுள்ள ஒரு பெருஞ் சிறப்பு. அதனாலேயே அவர்களிடம் எனக்குப் பற்று அதிகம்.
வீரம்
எம்பெருமானார் அடிக்கடி 'அநீதியை எதிர்த்தும் போரிடுங்கள்' எனக் கூறுவார்கள். போரிட்டுக் கொண்டே கூறுவார்கள்.
ஹஜ்ரத் அலி அவர்கள் கூறியிருக்கிறார்கள். 'பெரும் போர் நடக்கும் பொழுதெல்லாம், அண்ணலார் அவர்களின் முதுகுப்புறத்தில்தான் நாங்கள் நின்று போராடுவோம்' என்று.
அகழ்ப் போர், பத்ருப் போர், உஹத் போர் முதலிய பல போர்கள் நடந்தன. அப்பொழுதெல்லாம் நாயகம் அவர்கள் முதல் வரிசையில் நின்று, பகைவர்களை நெருங்கிப் போராடியிருக்கிறார்கள்.
திடீரென்று பகைவர்கள் வந்து தாக்கப் போகிறார்கள் என்ற அச்சம் வந்த போதெல்லாம், இரவு நேரங்களில் தனியாகக் குதிரை ஏறிப் பல மைல்கள் சென்று வேவு பார்த்து வருவார்கள். அநீதியைப் போரிட்டு அழிப்பதில் அண்ணலார் அவர்களைப் போன்ற ஒரு சமயத் தலைவரை உலகம் கண்டதில்லை. அவரது வீரம் அத்தகையது.
விக்கிரக வணக்கம்
நாயகம் அவர்களின் காலத்தில், அரேபியா நாட்டில் விக்கிரக வணக்கம் இருந்தது. மக்கா நகரிலுள்ள கஃபா பள்ளியில் கூட விக்கிரங்கள் பல இருந்தன. விக்கிரக வணக்கம் ஆண்டவனுக்கு ஏற்றதல்ல என்று அறிவுரைகளைக் கூறி, மக்களை ஒப்பும்படி செய்து, தாமே பல விக்கிரகங்களை உடைத்து அகற்றி, அப்பள்ளியைத் தூய்மை அடையச் செய்து பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.
அபிசீனியா
பீதி அடைந்து துன்பப்பட்டுக் கொண்டிருந்த 70 பேர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும்படி அபிசீனியா. நாட்டு மன்னருக்கு எம்பெருமானார் அவர்கள் ஒரு கடிதம் கொடுத்திருந்தார்கள். அபிசீனியா மன்னன் நாயகம் அவர்களுக்குக் கட்டுப்பட்டவன் அல்ல. மாறுபட்டவன் என்றுகூடச் சொல்லலாம். அப்படி இருந்தும் நாயகம் அவர்கள் தமக்குக் கடிதம் எழுதியதை மதித்து ஏற்றுக் கொண்டு, அவர்களுக்கு அடைக்கலங் கொடுத்துக் காப்பாற்றினான். இதிலுள்ள சிறப்பு என்னவென்றால், அம்மன்னன் அக்கடிதம் வந்த நாளை, ஒரு திருநாளும் பெருநாளுமாகக் கருதி, ஆண்டுதோறும் அந்த நாளில், விழாக் கொண்டாடியதே. இதிலுள்ள வியப்பு என்னவென்றால், அம்மன்னன் இறந்து பல நூறு ஆண்டுகளாகியும், அந்நாட்டு மக்கள் இன்றும் அவ்விழாவைக் கொண்டாடிக் கொண்டிருப்பதுதான்.
தன்னம்பிக்கை
நாயகம் அவர்களின் போதனைகளில் தலை சிறந்த ஒன்று 'தன்னம்பிக்கையோடு இருங்கள்' என்று அடிக்கடி மக்களைத் தட்டி எழுப்பிக் கொண்டிருந்ததே.
தன்னம்பிக்கை என்பது தன்னை நம்புவது; தன் வலிமையை நம்புவது; தன் அறிவை நம்புவது; பிறர் துணையின்றித் தன்னைத்தானே காத்துக் கொள்வது என்றாகும்.
மனிதனிடத்தில் காணமுடியாத இத் தன்னம்பிக்கையைச் சிங்கத்திடம் காண முடிகிறது.
காட்டில் வாழ்கின்ற, கரடி, புவி, சிறுத்தை, ஓநாய் முதலிய விலங்கினங்கள் மான், முயல் முதலியவற்றை அடித்துக் கொன்று, ஒரளவு தின்று, மீதியை மறு தாளைக்கு வேண்டுமென எண்ணித் தாம் தங்குமிடத்துச் சென்று வைத்திருக்கும். இதனால் அவற்றின் இருப்பிடங்கள் சசிக்க முடியாத நாற்றம் வீசிக் கொண்டிருக்கும்.
ஆனால் சிங்கத்தின் குகை மட்டும் மிகத் தூய்மையானதாகக் காணப்படும், அக்குகையில் எலும்பையோ தோலையோ காணமுடியாது. நன்றாகப் பசியெடுக்கும் வரை, அதிலும் பசியைப் பொறுக்கும் வரை சிங்கம் அமைதியாகப் படுத்து உறங்கிக் கொண்டிருக்கும். இனிப் பசியைத் தாங்க முடியாது என்ற நிலை வந்ததும் மெதுவாக எழுந்து குகையில் நாலடிகள் நடந்து, குகைக்கு வெளியே சிறிது தலையை நீட்டி "ஆ! ஆ!" என்று கர்ஜித்துத் தன் பிடரி மயிரை ஆட்டிக் கொண்டிருக்கும். இந்தக் கர்ஜனையின் ஒலி எதிர் மலையில் தாக்கி அங்கிருந்து எதிரொலி திரும்பி வந்து, காடு முழுவதையும் அலைக்கழிக்கும். ஆங்காங்குள்ள மான், முயல் முதலியன நடு நடுங்கி 'இதோ சிங்கம்! அதோ சிங்கம்!' எனக் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக் கொண்டிருக்கும். அப்படி ஓடுவனவற்றில், சிங்கம் தன் குகையின் வழியே வருகிற ஒன்றை மெதுவாகத் தட்டி, கடித்துத் தின்று, மீதியை எறிந்து விட்டு, மெதுவாக நடந்து, அமைதியாகக் குகைக்குள் படுத்து உறங்கும்.
தனக்குப் பசி எடுத்தபோது உணவு வாயிலண்டை வரும் என்ற அவ்வளவு தன்னம்பிக்கை சிங்கத்திற்கு. பகுத்தறிவற்ற விலங்கினிடத்தில் காணப்படுகின்ற இத்தன்னம்பிக்கை பகுத்தறிவுள்ள மக்களிடத்தில் காண முடியவில்லையே என நாயகம் வருந்துவார்கள். நாம் இப்போதனையைப் பின்பற்றித் தன்னம்பிக்கையோடு வாழ வேண்டாமா என அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுகின்ற இந்த நாளிலாவது எண்ணிப் பார்ப்பது நல்லது.
13. பாவமன்னிப்பு
பாவமன்னிப்பு ஒன்று. பாவங்கள் மன்னிக்கப்படுமா என்பது ஒரு கேள்வி. எல்லாச் சமயத்தினரும் சடங்குகளை வைத்துக்கொண்டுள்ளார்கள். சில பாவங்களுக்கு மெழுகுவர்த்தி வைத்தால் போய் விடும். ஐயருக்குத் தட்சணை கொடுத்தால் போய்விடும். குளத்தில் முழுகினால் போய் விடும். அதுவும் 12 வருடங்களுக்கு ஒருமுறை, குளத்தில் மூழ்கினால் போய் விடும் என்று பல சமயத்தவர்கள் கூறுகிறார்கள். ஒருவன் 12 அணா செலவிட்டு ஒரு ஊருக்குப் போய், ஒரு குளத்தில் ழுழுகி விட்டு வந்தால் 12 வருடங்கள் செய்த பாவங்கள் போய் விடுமாறிருந்தால், அடுத்துப் பாவம் செய்ய அவன் பயப்படுவானா? எவ்வளவு பாவம் செய்தாலும் 12 அணா பணச் செலவில் போய் விடுமானால், குளித்து விட்டு மறுபடியும் புதுக் கணக்குப் போட்டுக் கொள்வான். அடுத்த 12 வருடங்களுக்கு அப்புறமும் 12 அணா செலவு செய்து விடுவான். [சிரிப்பு.]
நாயகம் அவர்களிடத்தில் போய், "மனிதன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுமா?" என்று கேட்டார்கள். "முடியாது" என்றார்கள். "அப்படியானால் பாவமன்னிப்பே இல்லையா?" என்றார்கள். "ஒன்று உண்டு. செய்த பாவத்தை எண்ணி எண்ணி இறைவனிடம் முறையிட்டு, அழுதால் அது மன்னிக்கப்படலாம்", என்றார்கள். "தட்சணை வை, குத்து விளக்குக் கொடு, சில பொருள்களைத் தா, பணத்தைக் கொடு, சடங்குகள் செய், மந்திரஞ் சொல்" என்று கூறாமல், "அழு! அழுதால் மன்னிக்கப்படும்" என்று கூறியது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது பாருங்கள்! எவ்வளவு பாவம் மன்னிக்கப்படும் என்று கேட்டதற்கு, நாயகம் அவர்கள், “நீ எவ்வளவு கண்ணீர் விடுகிறாயோ, அவ்வளவுதான் மன்னிக்கப்படும்; அதுவும் பாதிக்கப்பட்டவர்கள் மன்னித்தாலன்றி, ஆண்டவனும் மன்னிக்க மாட்டான்' என்றார்கள். ஒருவன் தவறு செய்து விட்டு, தான் செய்தது தவறு என்று வருந்திக் கண்ணீர் விடுவானானால், அவன் திரும்பவும் பாவச் செயல்களைச் செய்வானா? என்று எண்ணிப் பாருங்கள். இதையே சொன்னார் மணிவாசகரும், "அழுதால் உன்னைப் பெறலாமே" என்று. ஆக அறிந்தோ, அறியாமலோ பாவஞ் செய்தவர்கள் வருந்தி அழ வேண்டும் என்பது நாயகம் அவர்களுடைய கருத்து. இதைப் பகுத்தறிவாளர்களும் வரவேற்கிறார்கள்.
ஒட்டகப் புத்தி
மேலே கண்ட பாவ மன்னிப்பைச் சொன்னவர்கள் ஒட்டகப் புத்தி உள்ளவனை மட்டும் இறைவன் மன்னிக்க மாட்டான் என்று கூறினார்கள். திருப்பித் திருப்பிக் குர் ஆனை மொழி பெயர்ப்பிலே படித்தேன். ஒட்டகப் புத்தி என்றால் என்ன என்று விளங்கவில்லை. கொஞ்சம் தெரிந்தவர்களை எல்லாம் போய் ஒட்டகப் புத்தி என்றால் என்ன? என்று கேட்டேன். தெரியவில்லை. இதற்காக நான் டில்லிக்குப் போனேன். ஒட்டகம் வளர்க்கிற இடங்களுக்கெல்லாம் போனேன். போய்ப் பார்த்த பிறகுதான் குரானுக்குப் பொருள் அங்கே விளங்கிற்று. இந்த டில்லி முழுவதும் கருவேலங் காட்டில் இருக்கிறது. அதிலும் இப்புதிய டில்லி கருவேலங்காட்டிலேயே அமைந்திருக்கிறது. நந்தவனங்களை வைத்து அருமையாகப் பாதுகாக்கிறார்கள். அதற்குள்ளும் கருவேலஞ் செடி முளைத்துவிடுகிறது. அதைத் திராவகம் வைத்துச் சுட்டு அழிக்கிறார்கள். அப்படியும் அது முளைத்துக் கொண்டே இருக்கிறது. இந்த ஒட்டகம், நல்ல புல், உயர்ந்த கீரை முதலியவற்றை விரும்பித் தின்னாமல், இந்தக் கருவேலஞ் செடியையே விரும்பித் தின்கிறது. நாக்கைச் சுழற்றிச் சுழற்றித் தின்னும். அவ்வளவு ஆசை அதற்கு, அது தின்னும் போது முள் எல்லாம் குத்தும். நாக்கிலிருந்து இரத்தம் வெளி வரும். அதையும் சேர்த்துச் சுழற்றிச் சுழற்றிச் சாப்பிடும். கருவேலஞ் செடியை முன்னே அது தின்னும்போது, முள் குத்தும் என்பது தெரியாது. அது குத்தி, இரத்தம் வந்த பிறகேனும் 'தூ' என்று துப்ப வேண்டாமா? இதுதான் ஒட்டகப் புத்தி என்பது. தவறு செய்கிறது எளிது. அறியாமல் செய்து விடக் கூடும். ஆனால் செய்த தவறைத் தவறு என்று உணர்ந்த பிறகு, வருந்தி அழுது ஆண்டவனிடத்தில் மன்னிப்புக் கேட்ட பிறகு, மீண்டும் அத்தவறைச் செய்வது நல்லதல்ல. அது ஒட்டகத்தின் புத்தி. அப் புத்தி உள்ளவனை ஆண்டவன் மன்னிக்க மாட்டான் என்பது நாயகம் அவர்களின் வாக்கு.
14. கடைசி ஹஜ்
நம் நாயகம் அவர்கள் ஒருமுறை ஹஜ்ஜை நிறைவேற்றிய பொழுது, மக்கா நகரை நோக்கியோ அல்லது அந்த அரேபியா நாட்டை நோக்கியோ ஆசியாவை நோக்கியோ சொல்லாமல், உலக மக்களை நோக்கி, மூன்று சொற்றொடர்களைச் சொன்னார்கள். நாயகம் அவர்களுடைய பிறந்த நாள் விழாவிலே அதை நினைக்காமல் விழாவை முடிக்கக் கூடாது. முதற் கட்டளை, அன்னியனுடைய உடைமைக்கு ஆசைப் படாதே என்பது. இதைச் சாட்டையடி மாதிரி கொடுத்தார்கள். அன்னியனுடைய உடைமை என்று சொல்லும் பொழுது, அது மண்ணையும் குறிக்கிறது. பொன்னையும் குறிக்கிறது. பெண்ணையும் குறிக்கிறது. இவை மூன்றும் அன்னியனுடைய உடைமைகளாக இருப்பின், அவற்றின் மீது ஆசை கொள்ளாதே என்பதே முதற் கட்டளை.
உனது நடத்தை பிறருக்கு முன் மாதிரியாக இருக்கட்டும். நீ, அவர்களை, இவர்களைப் பார்த்து நடை போடாதே. உன்னைப் பார்த்து மற்றவர்கள் நடக்க வேண்டும். அதற்கு முன் மாதிரியாக நட என்பது இரண்டாவது கட்டளை.
ஓ! பணக்காரனே! உன்னிடத்தில் இருக்கின்ற பணம்! ஓ! பலசாலியே உன்னிடத்தில் இருக்கின்ற வலிமை! இவ்விரண்டும் உன்னை, உன் பெண்டு பிள்ளைகளைக் காப்பாற்ற மட்டும் அல்ல. இல்லாத ஏழை மக்களைக் காப்பாற்றவே உன்னிடத்தில் ஆண்டவனால் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என நினை என்பதுது மூன்றாவது கட்டளை. இக்கட்டளைகள் எவ்வளவு அருமையானவை என எண்ணிப் பாருங்கள். இவை இஸ்லாமிய மக்களை மட்டும் நோக்கிச் சொன்ன சொற்களா? இந்தியாவை மட்டும் நோக்கிச் சொன்ன சொற்களா? உலகம் முழுவதுமுள்ள எல்லாச் சமயத்தினரையும் சேர்ந்த 500 கோடி மக்களும் பின்பற்ற வேண்டிய அருமையான கட்டளைகள்,
15. குறிக்கோள்
பேச்சு முடிகிறது. நான் இரயிலுக்குச் செல்ல இருக்கிறேன். நீங்களும் எழுந்து போகப் போகிறீர்கள். விளைந்த பலன் என்ன? நாயகம் அவர்களுடைய விழாவைக் கொண்டாடியதன் மூலம் என்ன பலனைப் பெற்றோம்? ஏதேனும் ஒரு குறிக்கோள் இருக்க வேண்டாமா? செயலை முன்னே வைத்துத்தான் பேச்சு இருக்க வேண்டும். செயல் செய்ய விரும்பாதவர்கள், செயல் திறம் இல்லாதவர்கள், பேச்சைப் பேசிப் பயனில்லை; கேட்டும் பயனில்லை.
அவர்களின் விழாவைக் கொண்டாடுகிற காலத்திலே நீங்கள் எல்லாம் செய்யவேண்டியது ஒன்று உண்டு. தங்கள் ஊரில் உள்ள இளம் பையன்கள், பெண்கள் படிக்கக்கூடிய மதரசா ஒன்று வைத்து நடத்தி, மார்க்கக் கல்வியை வளர்க்க வேண்டும். ஏற்கனவே ஒன்றிருந்தால், அதை விரிவு படுத்திப் பெரிய அளவில் நடத்தியாக வேண்டும். இது நமது இன்றைய விழாவின் குறிக்கோளாக இருக்கவேண்டும்.
ஏனெனில், நாயகம் அவர்கள் கல்வியைப் பற்றியும் மூன்று கட்டளையிட்டு இருக்கிறார்கள். 'கல்வி ஆணுக்கும் பெண்ணுக்கும் தேவை என்பது ஒன்று; சிறந்த கல்வி சீனாவில் இருந்தாலும் அங்கேயும் போய்க் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது இரண்டு; படியுங்கள், படித்துக் கொடுங்கள், அல்லது படிக்கிறவர்களுக்கும் படித்துக் கொடுக்கிறவர்களுக்கும் உதவி செய்யுங்கள் என்பது மூன்றாவது கட்டளை. இம் மூன்று கட்டளைகளையும் நாயகம் அவர்களின் விழாக் கொண்டாடுகிற இந்து நல்ல நாளிலே உள்ளத்தே வைத்து மதரசா வைத்து வளர்க்கும் பணிகளில் ஈடுபடவேண்டும்.
ஜவுளிக்கடை வைத்திருப்பவர்கள் இந்தப் பிள்ளைகளுக்குத் துணி வழங்கியும், தென்னந்தோப்பு வைத்திருப்பவர்கள் கீற்றுகளை வழங்கியும், செங்கல் காளவாய் வைத்திருப்பவர்கள் செங்கற்களை வழங்கியும், நிலம் வைத்திருப்பவர்கள் நெல் வழங்கியும், செல்வம் படைத்தவர்கள் பொருள் வழங்கியும், மதரசாவை வளர்ப்பது நல்லது. நாயகம் அவர்களின் இந்த மூன்று கல்விக் கட்டளைகளை இந்த நல்ல நாளில் தங்களுக்கு நினைப்பூட்டுவதோடு, என் சொற்பொழிவை நிறுத்திக் கொள்கிறேன். அப்பொழுதுதான் இந்த விழாவை நடத்தியதில் ஒரு குறிக்கோள் இருக்கும். நான் மனமார இந்தப் பிள்ளைகளை வாழ்த்துகிறேன். அவர்கள் வெற்றி பெற வேண்டுமென்று வாழ்த்துகிறேன். அம்மாதிரியான நல்ல பணிகள் இங்கு மட்டுமல்லாமல், சுற்றியுள்ள ஊர்களிலும் நடை பெற வேண்டுமென்று பெருமக்களாகிய நீங்களும் ஆசைப்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
16. முடிவுரை
அன்பர்களே! மேலும் உங்களுடைய அருமையான காலத்தை நான் வீணாக்க விரும்பவில்லை. பலப்பல பேசினேன். கேட்பதைக் கேட்டீர்கள். சிந்திப்பதைச் சிந்தித்து, அல்லன தள்ளி, நல்லன கொண்டு, நாட்டிற்கும், மொழிக்கும், மக்களுக்கும், சமூகத்திற்கும், சமயத்திற்கும் செய்ய வேண்டிய தொண்டுகளைச் செய்து, நீங்கள் சிறப்பெய்தி வாழ வேண்டுமென்று வாழ்த்துவதோடு எனது சொற்பொழிவை முடிக்கிறேன்.
வணக்கம்
கருத்துகள்
கருத்துரையிடுக