வளரும் தமிழ்
கட்டுரைகள்
Back
வளரும் தமிழ்
கா. அப்பாத்துரையார்
மூலநூற்குறிப்பு
நுற்பெயர் : வளரும் தமிழ் (அப்பாத்துரையம் - 1)
ஆசிரியர் : கா.அப்பாதுரையார்
தொகுப்பாசிரியர் : முனைவர் கல்பனா சேக்கிழார்
பதிப்பாளர் : கோ. இளவழகன்
முதல்பதிப்பு : 2017
பக்கம் : 30+314 = 344
விலை : 430/-
பதிப்பு : தமிழ்மண் பதிப்பகம், எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை 600 017, தொ.பே.: 24339030, செல்: 9444410654
மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in
தாள் : 16.0 கி. மேப்லித்தோ, அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 11.5 புள்ளி, பக்கம் : 312
கட்டமைப்பு : இயல்பு படிகள் : 500
நூலாக்கம் : கோ. சித்திரா
அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)
அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.
நுழைவுரை
தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர்.
பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம்.
தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும்.
தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம்.
தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார்.
அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன.
இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும்.
தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள்
கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலை
யிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர்
திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன்,
திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர்.
இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய ‘கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும்’சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி.
நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
“ஆக்கத்தை எனக்கிந் நாட்டார்
அளித்திட்ட அறிவை யெல்லாம்
தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே
செலவிடக் கடமைப் பட்டேன்.”
- பாவேந்தர்
கோ. இளவழகன்
தொகுப்புரை
மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்!
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின.
“அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார்.
பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார்.
சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன.
- தனித்தமிழ் இயக்கத் தோற்றம்
- நீதிக் கட்சி தொடக்கம்
- நாட்டு விடுதலை உணர்ச்சி
- தமிழின உரிமை எழுச்சி
- பகுத்தறிவு விழிப்புணர்ச்சி
- இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர்
- புதிய கல்வி முறைப் பயிற்சி
- புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம்
இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன.
“தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது!
அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்!
பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக,
- உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல்.
- தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல்.
- தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல்.
- தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல்.
- திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல்.
- நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல்.
இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது.
பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது.
உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன.
1. தமிழ் - தமிழர் - தமிழ்நாடு
2. வரலாறு
3. ஆய்வுகள்
4. மொழிபெயர்ப்பு
5. இளையோர் கதைகள்
6. பொது நிலை
பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும்.
இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின்
உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன.
கல்பனா சேக்கிழார்
நூலாசிரியர் விவரம்
பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார்
இயற்பெயர் : நல்ல சிவம்
பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989
பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி
பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி)
உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர்
மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு
வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா
தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி
பள்ளிக் கல்வி : நாகர்கோவில்
கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம், இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி ‘விசாரத்’, எல்.டி.
கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி)
நூல்கள் : 120 (ஆங்கிலம், 5)
இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை.
பணி :
- 1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர்.
- 1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர்.
- பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு.
- 1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி
- 1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர்.
- 1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர்
அறிஞர் தொடர்பு:
- தொடக்கத்தில் காந்திய சிந்தனை.
- 1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு
விருதுகள்:
- மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது,
- 1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் சான்றோர் பட்டம்’, ‘தமிழன்பர்’ பட்டம்.
- 1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் ’கலைமாமணி’.
- 1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய ’திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம்.
- மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய ’பேரவைச் செம்மல்’ விருது.
- 1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர்.
- 1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார்.
- இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது.
பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்:
- அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005.
- பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007.
பதிப்பாளர் விவரம்
கோ. இளவழகன்
பிறந்த நாள் : 3.7.1948
பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625,தஞ்சாவூர் மாவட்டம்.
கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு
இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல்
ஆற்றியுள்ள பொதுப்பணிகள்
1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர்.
பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் ’ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர்.
உரத்தநாட்டில் ’தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர்.
பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ’உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர்.
தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும்,
19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர்.
பொதுநிலை
தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர்.
தொகுப்பாசிரியர் விவரம்
முனைவர் கல்பனா சேக்கிழார்
பிறந்த நாள் : 5.6.1972
பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம்.
கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர்
இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
ஆற்றியுள்ள கல்விப்பணிகள்
- அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி.
- திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு.
- புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர்.
- பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார்.
- பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார்.
- 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
- மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார்.
- இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார்.
- செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார்.
நூலாக்கத்திற்கு உதவியோர்
தொகுப்பாசிரியர்:
- முனைவர் கல்பனா சேக்கிழார்
கணினி செய்தோர்:
- திருமதி கோ. சித்திரா
- திரு ஆனந்தன்
- திருமதி செல்வி
- திருமதி வ. மலர்
- திருமதி சு. கீதா
- திருமிகு ஜா. செயசீலி
நூல் வடிவமைப்பு:
- திருமதி கோ. சித்திரா
மேலட்டை வடிவமைப்பு:
- செல்வன் பா. அரி (ஹரிஷ்)
திருத்தத்திற்கு உதவியோர்:
- பெரும்புலவர் பனசை அருணா,
- திரு. க. கருப்பையா,
- புலவர் மு. இராசவேலு
- திரு. நாக. சொக்கலிங்கம்
- செல்வி பு. கலைச்செல்வி
- முனைவர் அரு. அபிராமி
- முனைவர் அ. கோகிலா
- முனைவர் மா. வசந்தகுமாரி
- முனைவர் ஜா. கிரிசா
- திருமதி சுபா இராணி
- திரு. இளங்கோவன்
நூலாக்கத்திற்கு உதவியோர்:
- திரு இரா. பரமேசுவரன்,
- திரு தனசேகரன்,
- திரு கு. மருது
- திரு வி. மதிமாறன்
அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு:
- வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14.
பேரறிஞர் அண்ணா மணிவிழா வாழ்த்துரை
பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் அவர்களின் மணி விழாவிலே கலந்து கொள்வதில் நான் மிகுந்த உற்சாகம் அடைவதற்கும், இதனை ஒரு நல்ல வாய்ப்பாகக் கருதுவதற்கும் காரணம் - பல ஆண்டுகளாக அப்பாத்துரையார் அவர்களுடன் நெருங்கிப் பழகி அவரை அறிந்தவன்; அவருடைய தமிழ்த் தொண்டால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நற்பயனை உணர்ந்தவன்; அவர்கள் குடும்பத்தில் நெருங்கிய தொடர்பு கொண்டவன் என்பதுதான்.
ஒருவரை நாம் மதிக்கிற நேரத்தில் மாற்றுக் கருத்துக் கொண்டவர்களும் மதிக்கிறார்கள் என்பதை அறியும்போது ஏற்படுகிற இனிமையை விட வேறு ஓர் இனிமை இருக்க முடியாது.
அப்பாத்துரையாரை நாம் எந்தக் கோணத்திலிருந்து பாராட்டுக்கிறோமோ அதையல்லாமல், அவருடைய தனித் திறமையை அறிந்த மற்றவர்கள் அவருடைய தொண்டின் மேன்மையை உணர்ந்து. பல்வேறு கோணங்களில் பாராட்டிப் பேசுவதைக் கேட்கும்போது, நாம் மேலும் மகிழ்ச்சி அடைகிறோம்.
நம்முடைய அப்பாத்துரையார் அவர்கள் ஆசிரியராகத் தம் பணியைத் தொடங்கிய காலத்திலிருந்து, அறப் போராட்டங் களில் ஈடுபட்ட கட்டம் வரை அவரது தனித் திறமையை நாம் நன்கு அறிவோம்.
தமிழின் மூலத்தை ஆய்ந்தவர்
அவர், தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர்; தமிழ் இனத்தின் வரலாற்றைத் துருவித் துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்துக்கும் மற்ற இனத்துக்கும் இடையே பகைமூட்ட அல்ல - தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார். அவர் அறிந்த அனைத்தையும் எழுதி ஏடாக்கினால், அவை இந்த மண்டபமே நிறையும் அளவுக்கு இருக்கும்.
நம் அப்பாத்துரையார் அவர்கள், எந்த நேரத்தில் பார்த்தாலும், சிந்தனை - படிப்பு - எழுத்து என்று சிறப்பாகக் கழித்திருக்கிறார்.
மற்ற நாடுகளில் அறிவாளர்கள் ஒன்று சொன்னால், அதை ஏற்றுக் கொள்வதற்கு அங்கே ஒருவரோடு ஒருவர்போட்டி போட்டுக் கொள்வார்கள். ஆனால் இந்த நாட்டில் ஒருவரை ‘அறிவாளி’ என்று சொன்னாலே ஆபத்து; “அவன் என்ன பெரிய அறிவாளியா? என்ன அறிவு?”…. பெரிய அறிவு!" என்று கேட்பதன் மூலம் தங்களிடம் அறிவு இருக்கிறது எனக்காட்டிக் கொள்ளச் சிலர் முனைவார்கள்!
இத்தகைய அறிவுப் பணி புரிவதே பெரிய சிக்கல்தான்; ஆனால் சிக்கலிலேதான் சுவையும் இருக்கும். மேனாடுகளில் எந்த அளவு இப்பணியில் ஈடுபடுகிறார்களோ அந்த அளவுக்கு எழுத்துத்துறையானாலும், பேச்சுத் துறையானாலும், வேறு எந்தத் துறையானாலும் இங்கே உற்சாகமாக ஈடுபடுவது என்பது மிகமிகக் கடினம். இப்படிப்பட்ட கடினமான தொண்டை முப்பது - முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்கி, பன்மொழிப்புலவர் அப்பாத்துரையார் நிறைவேற்றி வருகிறார். அவர், தம் வாழ்க்கையைக் கரடு முரடான பாதையில் நடத்தி, அதே வேளையில் மிகத் தெளிவான தமிழறிவைத் தமிழகம் ஏற்கும் அளவுக்குப் பணி புரிந்திருக்கிறார்.
சுதிக்குள் பாடும் இசைவாணர்
அப்பாத்துரையாரது வாழ்க்கை, ஒரு பூந்தோட்டமா? இல்லை! வறுமைச் சூழலிலே தம் குடும்பச் சூழலை அமைத்துக் கொண்டு இருப்பவர் அவர். எனினும் பண்பட்ட உள்ளத்தோடு மாற்றாரின் இழிமொழிகளையும் ஏசல்களையும் தாங்கிக் கொண்டு - தம் பணிகளைச் செய்திருக்கிறார்.
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் சொன்னது போல், அவர் விரும்பியிருந்தால் ஒரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக ஆகியிருக்க முடியும். ஆனால் அவர் அப்படிச் செய்து கொள்ளவில்லை. எந்தெந்த வகையில் எல்லாம் தமிழுக்குத் தொண்டாற்றலாம் - எந்தெந்த வழிகளில் எல்லாம் தமிழ் நாட்டுக்குப் பணியாற்றலாம் என்று எண்ணி எண்ணி, அந்ததந்த நேரங்களில் அருந்தொண்டு ஆற்றியவர் அப்பாத்துரை யார்.
ஒவ்வொன்றையும் பற்றி ‘இப்படிச் செய்வது சரியா?’ என்ற கேள்வி அவருடைய எண்ணத்தில் ஊடுருவி நிற்கும். ஆகவே, சிறிது காலம் பள்ளி ஆசிரியராக இருப்பார்; பிறகு அது பிடிக்காமல் பத்திரிகை ஆசிரியர் ஆவார்; அதன் பிறகு, தமிழ்ப் பாதுகாப்புப் பணியில் குதிப்பார். பின்னர், போராட்டத்தினால் பயனில்லை என்று கருதி, ஏடுகளை எழுதி அளிக்கஎண்ணுவார். இவ்வாறு அந்தந்த நேரத்தில் தோன்றுவதில் ஈடுபடுவார்.
இசை நிகழ்ச்சியில் பாடுபவர் - பல வகையான பண்களை ஏற்ற இறக்கத்தோடு பாடினாலும் - பல்வேறு இசை நுணுக்கங் களைக் கையாண்டாலும் - ஒரு சுதிக்குள்ளே நின்றுதான் பாடுவார்.
அதுபோலவே, அப்பாத்துரையாரும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டாலும் ஒரு சுதிக்குள்ளாகவே - ‘தமிழ் வாழ வேண்டும் தமிழ் வளர வேண்டும்’ என்ற ஒரு குறிப்பிட்ட கொள்கை வட்டத்தில் நின்று தொண்டாற்றியவர்.
மாறுபட்ட கருத்துடையவர்களும் தமிழ் மொழியின் பாதுகாப்பைப் பொறுத்து இன்று ஒன்றுபடுகிறார்கள்.
நானும் குன்றக்குடி அடிகளாரும் தோற்றம் - போக - நடவடிக்கைகள் - இருக்கும் இடம் - ஆகியவற்றில் மாறுபட்ட வர்கள்; என்றாலும், எங்கள் இருவரையும் தமிழ் ஒன்றுபடுத்தி இருக்கிறது. இதுதான் நாம் கையாள வேண்டிய சுதி! இதற்குள் நாம் எல்லா வற்றையும் காட்டலாம்; இந்த நிலை ஏற்பட, தமிழ் நாட்டில் முப்பது ஆண்டுகளுக்குமேல் பாடுபட வேண்டியிருந்தது!
இந்தச் சுதியை நமக்கு அமைத்துக் தந்தவர்களில் அப்பத் துரையாரும் ஒருவர், அப்படிப்பட்ட முறையில் அமைவதுதான் அடிப்படையான தொண்டு.
கடன்பட்டுக் குடிமாறும் புத்தக ஆசிரியர்கள்
மேலை நாடுகளில் ஒரே ஒரு புத்தகம் எழுதினாலே, ஒருவர் தம் வாழ்நாளை வசதியாகக் கழித்துவிட முடியும் - அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு! அப்படிதான் ஓர் எழுத்தாளர் தாம் எழுதிய புத்தகத்தின் வருவாயைச் செலவழிப்பதற்காக - ஓராண்டுக் காலம் ஓய்வில் இருந்தே செலவழிப்பதற்காக - தென்அமெரிக்காவுக்குச் சென்று அங்கே வாழ்ந்தாராம்!
இங்கோ… … ஓர் ஆசிரியர், ஒரு புத்தகத்தை எழுதி வெளி யிட்டார் என்றாலே, குடியிருந்த வீட்டை மாற்றுவதைப் பார்க்கிறோம். அந்தப் புத்தகத்தை அச்சிடுவதற்குத் தாம் பட்ட கடனை அடைக்க முடியாமல், கடன்காரர்களுக்கு அஞ்சி, தென் சென்னையில் வீடு இருந்தால் வட சென்னைக்கும், வடசென்னை யில் வீடு இருந்தால் தென் சென்னைக்கும் அவர் குடிபோவார்! அப்படிப்பட்ட நிலையே இங்கு இருக்கிறது!
இங்குப் புத்தகம் எழுதுவதும் அதன் மூலம் வருவாய் தேடுவதும் அவ்வளவு கடினம்!
புத்தகம் வாங்கும் பழக்கம் எல்லோருக்கும் ஏற்பட வேண்டும்.
அப்பாத்துரையின் நூல்களை - ஏடுகளை - வீடுதோறும் வாங்கி வைக்க வேண்டும்.
அப்பாத்துரையார் எழுதிய நூல்களில் ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ என்னும் நூல் என்னை மிகவும் கவர்ந்த ஒன்றாகும். அந்த நூலின் ஒரே ஓர் ஏட்டை எழுத, அவர் எத்தனை ஆயிரம் ஏடுகளைத் தேடிப் பார்த்திருக்க வேண்டும் - எத்தனை ஆயிரம் கவிதைகளை, இலக்கியங்களைத் திரட்டிப் பார்த்திருக்க வேண்டும் - என்பதை எண்ணி எண்ணி வியந்தேன்.
புத்தகம் எழுதுவோரை மற்ற நாடுகளில் எல்லாம் வித்தகர் களாகப் போற்றுகிறார்கள். இந்த நாட்டிலோ, ‘புத்தகம் எழுதி இருந்த பணத்தைப் பாழாக்கிக் கொண்டவர்கள்’ என்கிற பழிச் சொல்தான் கிடைக்கும் எழுத்தாளர்களுக்கு!
இந்த நிலையிலும் நம்முடைய அப்பாத்துரையார் அவர்கள், தமிழ்மொழிக்கு ஏற்றம் தரும் பல அரிய நூல்களை எழுதியிருக்கிறார்.
மறதி ஆகும் மரபு
நம்மால் மதிக்கத் தக்கவர்களின் வாழ்க்கை வரலாறு முழு அளவுக்குத் தமிழகத்தில் இல்லை.
‘தனித்தமிழ் இயக்கம்’ கண்ட மறைமலையடிகள், ‘தமிழ்த் தென்றல்’-திரு.வி.க. நீதிக்கட்சித் தலைவர் சர்.பி.தியாகராயர் போன்றவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளைக் குறிப்பெடுத்துத் தொகுத்து, நூல்கள் ஆக்கித் தருவதில் இன்றைய புலவர் பெருமக்கள் ஈடுபட வேண்டும்.
தமிழ் பெரும்புலவர்களின் - வாழ்க்கை வரலாறுகள் நம் மிடத்திலே இல்லை. அப்படிப்பட்ட பெரியார்களின் வரலாற்றை மறந்துவிட்டால், நம்முடைய ‘மரபு’ பிறகு நமக்குக் கிடைக்காது.
‘மரபு’ என்பதே இப்போது ‘மறதி’ என்று ஆகிவிட்டது.
பண்டைத் தமிழ் மன்னர்களைப் பற்றிச் சரியாக எந்த நூலிலும் குறிப்பிடப் படவில்லை.
நம்முடைய பள்ளிச் சிறுவர்களின் பாடநூலைப் பார்த்தால் - இராசராச சோழனுக்கு இராசேந்திர சோழன் மகன் என்று சொல்வாரும் உண்டு; தம்பி என்பாரும் உண்டு’ என்று இருக்கும்! ஒரு புத்தகத்தில் கரிகாலனைப் பற்றியத் செய்தி வருகிற இடத்தில் ஒரு நட்சத்திரக் குறி இட்டிருப்பார்கள். அதற்கு விளக்கம் கடைசிப் பக்கத்தில் இருக்கும். ‘கரிகால் வளவன் உரையூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டான் என்பது உண்மை என்பாரும் உண்டு; இல்லை என்பாரும் உண்டு’ என்று இப்படித்தான் அந்த விளக்கம் எழுதப்பட்டிருக்கும்!
உண்மை வரலாறு உருவாகட்டும்
இப்படி ஐயப்பாடுகளுக்கு இடம் கொடுக்கும் போக்கினை நீக்கி, உண்மையான தமிழக வரலாற்றை உருவாக்கும் பணியினை வரலாற்று ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.
கல்வெட்டுகளில் காணப்படுவதையும், இலக்கிய ஏடுகளில் உள்ளவற்றையும், இன்ன பிற சான்றுகளையும் திரட்டி, தமிழக வரலாற்றைத் தொகுத்துக் கொடுக்கும் பணியைத் தமிழ் மக்கள் - தமிழ்ச் சான்றோர்கள் - ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இன்னும் சில திங்கள்களில் (1968- சனவரித் திங்கள் முதல் வாரத்தில்) இரண்டாம் உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கருத்தரங்கு மாநாடு சென்னையில் நடைபெற விருக்கிறது. அதற்குள் இந்தப் பணியைச் செய்து முடித்தால், வெளிநாடுகளி லிருந்து வருபவர் கட்கு, “இது தான் எங்கள் நாட்டு வரலாறு” என்ற எடுத்துக் காட்டமுடியும்.
இத்தகைய பணியை செய்து முடிக்கக்கூடிய குழு ஒன்று அமைக்கப்பட்டால், அதற்குத் தலைமை - ஏற்றுப் பணியாற்று வதற்கு முழுத் திறமை பெற்றவர் - பன்மொழிப் புலவர் அப்பாத் துரையாரே ஆவார் என்பதை இங்கு நான் தெரிவித்துக் கொள் கிறேன்.
(சென்னையில் 20-9-1967 அன்று நடைபெற்ற பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் அவர்களின் மணி விழாவுக்குத் தலைமை தாங்கி அன்றைய முதல்வர் - பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய பாராட்டுரை. நன்றி - ‘நம் நாடு’ நாளிதழ் - : 22-9-1967.)
அப்பாத்துரையார் எனும் அறிவாட்சி அடங்கியதே!
தப்பாய்த் தவறாய்த் தமக்காய்ப்
படிக்கும் தரகரிடை
உப்பாய் உணவாய் உடம்பாய்த்
தமிழை உயிர்த்திருந்து,
‘முப்பால் ஒளி’யாய் முகிழ்த்து
’மணிவிளக்’ காய்எரிந்த
அப்பாத் துரையார் எனும்அறி
வாட்சி அடங்கியதே!
ஒப்பாய்த் தமிழ்கற்(று) உரைவிற்(று)
உயிர்வாழ உடல்களிடை
மப்பாய்த் திரண்டு மழையாய்ப்
பொழிந்து தமிழ்வளர்த்துக்
கொப்பாய்க் கிளையாய் மலராய்க்
கனியாய்க் குலம்புரந்த
அப்பாத் துரையார் எனும்தமிழ்
மூச்சிங் கொடுங்கியதே!
செப்போ இரும்போ மரமோ
மணலோ எதுதரினும்
எப்போ திருந்தமிழ் மாறி
உயிர்வாழ் இழிஞரிடை
முப்போ திலுந்தமிழ் ஆய்ந்தே
களைத்த மொழிப்புலவர்
அப்பாத் துரையார் எனும்மூ
தறிவும் அயர்ந்ததுவே!
ஒருமொழிப் புலமை உறற்கே
வாணாள் ஒழியுமெனில்,
இருமொழியன்று, பன் மூன்று
மொழிகள் இருந்தகழ்ந்தே
திருமொழி எனநந் தீந்தமிழ்த்
தாயைத் தெரிந்துயர்த்திக்
கருவிழி போலும் கருதிய
கண்ணும் கவிழ்ந்ததுவே!
குமரிஆரல்வாய் குமிழ்த்தமுத்
தம்மைக்குக் காசிநாதர்
திமிரிப் பயந்தஅப் பாத்துரை
என்னும் திருவளர்ந்து
நிமிர்த்துத் தமிழ்மொழி நீணில
மெங்கும் நிலைப்படுத்தும்
அமரிற் படுத்திங் கயர்ந்ததே
ஆரினி ஆந்துணையே!
செந்தமிழ் ஆங்கிலம் இந்தி
பிரெஞ்சு செருமனுடன்
வந்தச மற்கிரு தம்ருசி
யம்சப்பான் என்றயல்சார்
முந்துபன் மூன்று மொழிபயின்
றேபன் மொழிப்புலமை
வெந்துநீ றானதே, தாய்ப்புலம்
விம்ம வெறுமையுற்றே!
- பாவலரேறு பெருஞ்சித்திரனார், கனிச்சாறு (பக். 158-59)
கா. அப்பாத்துரை
** நேரிசை வெண்பா**
எப்பாத் துறைக்கும் இவனோர் பழம்புலவன்
அப்பாத் துரையறிஞன் ஆழ்ந்தகன்ற - முப்பால்போல்
நூலறிவு! நூறு புலவர்கள் சேரினிவன்
காலறிவு காணார் கனிந்து. 1
ஆங்கிலத்தை அண்டை மொழிகளினைப், பண்டைநாள்
பாங்குற வாழ்ந்த பலமொழியை - ஈங்கிவனே
செந்தமிழ்க்குச் சேர்க்கும் குருதியெனச் சேர்க்கின்றான்
சிந்தனையில் யாவும் செரித்து. 2
விருந்தெனும் நூலை வெளிநாட் டமிழ்தை
அருந்தெனத் தந்தான் அருந்திச் - செருக்குற்றேன்
எத்தனை எத்தனை எண்ணித் தொகுத்தீந்தான்
அத்தனையும் முத்தமிழர்க்குச் சொத்து! 3
சின்னஞ் சிறுவர்முதல் சிந்தனையில் தோய்ந்தாயும்
பென்னம் பெரியர்வர்க்கும் பித்தாக்கும் - வண்ணம்
அருநூல்கள் ஈவான் கலைக்களஞ்சி யம்போல்
வருநூலைப் பாத்துவப்பேன் நான்! 4
ஆங்கிலத்தில் என்பாட்டை ஆரும் வியக்குவணம்
பாங்குறச் செய்தான் படித்தவர் பாராட்டி
வைய இலக்கியத்தில் வாழும்என் பேரென்றார்
ஐயமில்லை அப்பாத் துரை! 5
** குறள்வெண்பா**
அப்பாத் துரைகொண்டே ஆயிரம்நூல் செய்க
தப்பா துயரும் தமிழ்!
** -பாரதிதாசன்,**
பாவேந்தம்-18 - பக். 200
தமிழ்மண்
வளரும் தமிழ்
முதற் பதிப்பு 1964
இந்நூல் 2001 இல் தமிழ்மண் பதிப்பகம், வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது.
வளரும் தமிழ்
தமிழ் மொழியை வண்டமிழ், தண்டமிழ், கன்னித் தமிழ், கன்னித் தாய்த் தமிழ், மூவா முதன்மொழி எனத் தமிழ்க் கவிஞர் சிறப்பிப்பதுண்டு. இக் கூற்றுகளைக் கவிஞர் புனைந்துரை என்றோ, தாய்மொழிப் பற்றின் ஆர்வ உரைகள் என்றோ கூறிவிடத்தோன்றும். புராண மரபுக் கூற்று என்று கூறிவிடக்கூட இடமில்லாமலில்லை. ஏனெனில், தமிழிலும் புராணங்கள் உண்டு. இக் கூற்றும் புராணங்களிலேயே மிகுதியும் காணப் படுகிறது.
ஆயினும், இக் கூற்று முழுதும் கவிதைப் புனைவோ, ஆர்வப் புனைந் துரையோ, புராண உரையோ அன்று, ஏனெனில், சமற்கிருத மொழியிலும் பிற மொழிகளிலும் புராணங்கள் எழுதியவர் இதே புனைந்துரையை அம் மொழிகளுக்குச் சார்த்தவில்லை. மொழிக்கு அதைச் சார்த்த முடியாமை யறிந்தே அவர்கள் இதே புனைந்துரையைத் தம் சமயத்துக்கும் (சனாதன தர்மம்-என்று முள்ள சமயம்), நாட்டுக்கும் (புராதன பாரதம்) உரிமைப்படுத்தினர். மொழி யெல்லை கடந்து நாட்டிலும் சமயத்திலும் மட்டும் அப்பண்பு மாநிலத்தில் பரவியிருந்தது.
தமிழின் இப்புராண மரபின் மூலத்தைப் புராண காலத்துக்கு முற்பட்ட இலக்கியக் காலம், சங்க காலங்களில் காணலாம்.
தமிழ் என்ற சொல்லுக்கு இனிமை என்ற பொருள் இலக்கியக்கால முழுவதிலும் வழங்கியுள்ளது.
தமிழ் என்பதற்கு ‘அறிவு’ என்ற பொருள் இன்னும் பழைமையானது. ‘தமிழறிவோர்’, ‘நூலோர்’ என்ற வழக்குகள் ‘ஆய்ந்துணர்ந்த அறிவுடைய பெரியோர்’ என்ற பொருளில் நீதி நூல்களில் வழங்கியுள்ளது.
‘தமிழ்’ என்ற சொல் மொழிப் பெயராக மட்டுமன்றி, நாடு, இனம், மக்கள் பெயராகவும் சங்க இலக்கியத்தில் பெரிதும் வழங்குகிறது.
தமிழர் தம் மொழியுடன் அறிவும் கலையும் வளர்த்து, கலைப் பண்பையும், அறிவுப் பண்பையும், இனப் பண்பையும் மொழியுடன் இணைத்து மொழிப் பண்பாகப் பேணினர். தமிழ் அயல் மொழிகளைப் போல, உலகின் மற்றப் பண்புடைய, தொல்பழங்கால மொழிகளைப் போல, வழக்கிறவாமல், வளமிழக் காமல் நிலவுவதற்கு இதுவே காரணம்.
தமிழ்ப் பண்பு தளர்ந்துவரும் காலத்தில் வாழ்ந்த தமிழர், புராண காலத் தமிழர். தன்னிகரில்லாத பழந்தமிழ் சமற்கிருதத்துடன் ஒப்பாகத் தாழ்ந்து, வடமொழி, தென்மொழி என்ற ஒப்பீட்டுக்கு இலக்காவதை அவர்கள் கண்முன் கண்டனர். சமற்கிருதம் தேவமொழியாகி, தமிழ் தாய்மொழிகளுள் ஒன்றாகத் தணிவதையும் அவர்கள் கலங்கிய கண்களுடன் நோக்கினர். ‘தானாடா விட்டாலும் தன் தசையாடும்’ என்ற முதுமொழிக்கிணங்க, அவர்கள் தமிழ்ப் பற்று ஆட்டங் கண்டது. அதனை மீட்டும் உறுதிசெய்ய, வலியுறுத்தவே, அவர்கள் தளர்ச்சிக்கு ஆறுதலாகக் ’கன்னித் தாய்’ப் பண்பு கண்டு பராவினர்! ’தெய்வத் தமிழ்’க் கூறு கண்டு பாசுரம் பாடினர்! தம்மிடையே தோன்றித் தமிழிலே படர்ந்த தளர்ச்சி, தமிழ் மொழியின் ஆழ்ந்த தனிப் பண்பைக் கெடுத்துவிடாது என்று அவர்கள் தமக்குத் தாமே ஆறுதல் கூறிக்கொண்டனர்.
சமற்கிருத மரபும், ஆங்கில மரபும், இந்தி மரபும் தழுவத் தொடங்கியுள்ள இக்கால ஆதிக்கவாதத் தமிழர், தம் பிறமொழி சார்ந்த உயர் பதவிக் கோட்டைகளில் இருந்துகொண்டு, இதே ஆறுதலைத் தம் மனச்சான்றுக்கு அளிக்கத் தொடங்கியுள்ளனர். பிற மொழி தழுவுதலும், பிறமொழிச் சொற்கள் கலத்தலும் இன்றியமையாதன என்ற தம் வயிற்றுப் பிழைப்புக் கொள்கைக்கு இவ்வகையி லேயே ஆதரவும் திருத்தமும் ஒருங்கே தேடுகின்றனர். கலப்பினளவும் தழுவலளவும் தமிழின் தனிப் பண்பினைக் கெடுக்கும் அளவில் செல்லக்கூடாது; செல்ல வில்லை என்று காட்டி அவர்கள் சிறிது மகிழ்வும் எய்துகின்றனர். ஆறுதல் பெற்று ஆறுதலும் தருகின்றனர். இனத்தினின்று ஒதுங்கி அதற்கெட்டாத உயர்வாழ்வில் குளிர் காயச் சென்ற இடங்களில் கூட, தமிழ்ப் பண்பு இவ்வாறு அவர்கள் நாடி நரம்புகளில் அதிர்கின்றது.
தமிழர் ‘கன்னித் தாய்மொழி’யைப் புகழ்வதற்கு நெடுநாள் முன்னரே, அதைத் ’தெய்வப் பண்பு, ’முயற்சியற்ற இயற்கைப் பண்பு’ என்று எண்ணி இறுமாப்புக் கொள்வதற்கு முன்னரே, ஆற்றாமை ஆறுதல் அடைவதற்கு முன்னரே, மனித அடிப்படையில், அறிவடிப்படையில், கலையடிப்படையில், அந்தக் ‘கன்னித் தாய்ப் பண்பும்’ அத்தெய்வீகப்பண்பின் அப்பெயர்கள் குறிக்கப் படாமலே உருவாக்கப்பட்டிருந்தன. அவ்வடிப்படைப் பண்புகளின் பல கூறுகள் வடஇந்தியாவில் பரவியதனாலேயே, உபநிடத, புத்த, சமண கால வடஇந்திய வாழ்விலும், இறந்துபட்ட வடஇந்தியத் தாய்மொழி வாழ்வுகளிலும், தொடக்கக் கால சமற்கிருத வாழ்விலும், உலக வாழ்விலும் தமிழ்ப் பண்போ டொத்த பல நல்ல உயிர்க்கூறுகளைக் காண்கிறோம். இவ்வுயிர்க் கூறுகளே ஆரிய நச்சுக் காற்று எட்டாத மேலை உலகக் கோடியில் நாகரிகமும் அறிவியலும் வளர்ந்துள்ளது. ஆயினும், ஆரியத் தொடர்பிலிருந்து நெடுந்தொலைவு விலகிய இன்றைய உலக நாகரிக மய்யமான மேலைஉலகு, தமிழ்த் தொடர்பிலிருந்தும் அதுபோலவே விலகியுள்ளது. தான் தேய்ந்த போதும் உலகுக்கு ஒளிதரத் தவறாத திங்கள்போல, தான் ஆரிய நோயால் நலிவுற்ற போதும் உலக நாகரிகத்தை இரண்டாயிர ஆண்டு வளர்த்துள்ள தமிழன் ’கன்னித் தாய்’ப் பண்பு, ’தெய்வப் பண்பு இடைக்காலக் களங்கம் நீக்கித் துலக்கப்படின், அது இன்னும் உலகுக்கு மீண்டும் ஒரு புதுவாழ்வு தரப் போதிய வளம் உடையது. தமிழகத்துக்கு அது புதுவாழ்வல்ல, புதுப் பெருமையே தரப் போதியதாயிருக்கும் என்று கூறத் தேவையில்லை.
அக் கன்னித் ‘தாய்ப் பண்பு’, ‘தெய்வப் பண்பு’ ஆகியவற்றின் கூறுகளில் தமிழர், தமிழறிஞர், தமிழ் மாணவ மாணவியர் கருத்துச் செலுத்துதல் வேண்டும்.
அவற்றை இங்கே சுருக்கமாக வகுத்துக் கூறுவோம்.
1. சிந்துவெளி நாகரிகத்தைக் குறிப்பிட்டு விளக்கம் கூறும் இடத்தில், இந்தியாவின் தேசிய முதல்வர், பண்டித ஜவஹர்லால் நேரு சுட்டிக் காட்டும் உண்மை, சிந்துவெளி கால இந்தியாவுக்கு மட்டுமன்றி, சங்ககாலத் தமிழகத்துக்கும், புத்தர் கால வடஇந்தியாவுக்கும், பொருந்துபவை. அவர் ஆளும் இன்றைய தமிழகத்துக்கோ இந்தியாவுக்கோ பொருந்தாதவை.
பிறப்பாலும் மரபாலும் வடஇந்தியராயினும் வளர்ப்பாலும் அறிவாலும் மேலை உலக நாகரிகத்தின் பகுத்தறிவுச் செல்வ வளம் உடையவர் நேரு. அத்தகையவர் கண்கள் காணும் உண்மையையாவது தமிழர் கண் திறந்து காணுதல் வேண்டும்!
இன்றைய இந்தியாவின் பொதுமக்களுடைய சமய வாழ்வின் அடிப்படைக் கூறுகள் அத்தனையையும் சிந்து வெளியில் காண்கிறோம். இக்கால மூட நம்பிக்கைகள் பலவற்றைக்கூட, புராணக் கதைகள் சிலவற்றைக்கூடக் காண் கிறோம். ஆனால், அய்யாயிர ஆண்டுகட்கு முற்பட்ட அன்றைய இந்திய நாகரிகம் இன்றைய இந்திய நாகரிகத்தைவிட, இன்றைய பல நாடுகளின் நாகரிகங் களைவிட, அடிப்படை மேம்பாடு உடையது. ஏனெனில், அந்நாளைய மக்கள் சமயம் மக்கள் வாழ்வின் பல கூறுகளுள் ஒரு கூறாய் இருந்தது. இன்றிருப்பது போல், மக்கள்வாழ்வு சமயத்தின் ஒரு கூறாய் இல்லை. எனவே, அன்று புரோகிதர் புரோகிதராக மட்டும் இருந்தனர். அவர்கள் இன்றிருப்பதுபோல், சமுதாயம், கல்வி, அரசியல் ஆகிய எல்லாவற்றையும் ஆட்கொண்டு, புரோகித இன ஆட்சி நடத்த வில்லை. மக்கள் வளர்ச்சியை எல்லாத் துறைகளிலும் தடுக்கும் ‘பேரருளாளராக’ அவர்கள் விளங்கவில்லை!
2. உழவுக்குத் தமிழர் மதிப்புக் கொடுத்தனர். உழவரை ஆரியர் ஆக்கியது போலத் தமிழர் கடைசி வருணம் ஆக்க வில்லை. அத்துடன் ஏரிகள், குளங்கள், கால்வாய்கள், அணைகள் கட்டி உழவை வளர்த்த முதல் இனம் தமிழினமே. காடு வெட்டிக் கழனியாக்க, காட்டாற்றுக்குக் கரைகட்ட அரசியல் முறையில் திட்டமிட்ட முதல் நாடும் தமிழகமே. ஆனால், அதே சமயம் ஆங்கிலேயர் வரும்வரை, தமிழகம் இன்றைய தமிழகம் போலக் கிராம தேசமாகவோ, வெறும் உழவு நாடாகவோ இல்லை. உலகத்தின் வாணிகக் களமாக, செல்வச் சிகரமாக, தொழில் மய்யமாகத் தமிழகம் விளங்கிற்று. மக்களுள் மிகப் பெரும்பாலோர் வாணிகத்திலும் தொழிலிலும் ஈடுபட்டுப் பெரிய நகரங்களில் வாழ்ந்தனர்!
அவர்கள் எளிய வாழ்வின் பண்பை அறிந்திருந்தனர். ஆயினும், ஏழடுக்கு மாளிகையிலும், பட்டு மஞ்சத்திலும் பொன்னணி மணி யாடை புனைந்து ஒய்யார வாழ்வே வாழ்ந்தனர். ஒரு சில துறவிகள் வலிந்து மேற்கொண்ட வறுமையன்றி, பொருளியல் சார்ந்த வறுமை தமிழகத்தில் அன்று இல்லை-தமிழகம் சூழ்ந்த நாடுகளில்கூட அன்று கிடையாது. அது தமிழகத்துக்குத் தொலைவிலிருந்து பின்னாள்களில் வந்த அயலுலக இறக்குமதிச் சரக்கேயாகும்.
‘தமிழர் அன்று இன்றுபோல்’ அடுக்களைப் பூச்சிகளாகவோ உள்நாட்டுப் பூச்சிகளாகவோ இராமல், உலகெலாம் சென்று வாணிகம், தொழில், கலை, குடியேற்றம், அரசு ஆகியவை பரப்பினர்.
கீழைஉலகில் தமிழகத்துக்கு மட்டுமே, எகிப்தியர், ஃபினீஷியர், கிரேக்கரைப்போலக் கடற்படை இருந்தது. பதிற்றுப் பத்திலும் பரிபாடலிலும், பிற சங்க இலக்கியங்களிலும், காணும் கடற்போர், கடல் வாழ்வுக் குறிப்புகளைப் போல, தமிழ் தவிர்த்த ஏனைய பண்டைய உலக மொழி இலக்கியங்களிலோ, தற்கால உலகமொழி இலக்கியங்களிலோகூட எதுவும் காணமுடியாது.
3. கல்வியைப் பரப்ப இன்று மேனாட்டு நாகரிக வாய்ப்புகள் எண்ணற்றவை ஏற்பட்டுள்ளன. பண்டைத் தமிழருக்கு இவ்வாய்ப்பு மிகமிகக் குறைவே-சீனம் கண்ட அச்சுத் தொழிலும், சீனமும் வட இந்தியாவும் பயன்படுத்திய தாளும்கூடப் பண்டு இங்கு இல்லை. பனை ஓலை கடந்து தமிழர் இத் துறை ஒன்றில் மட்டும் தாமாக முன்னேறவே இல்லை! ஆயினும், தமிழர் கல்வியில் அடைந்த முன்னேற்றம் வியப்புக்குரியது. அன்றைய உலகம் மட்டுமல்ல, இன்றைய உலகமும், இன்றைய அறிஞரும் காணாதது. அது ‘கண்ணின்றிக் காண்பவன் திறம், அரங்கின்றி வட்டாடிய திறம்’ என்னலாம்.
இது வகையில் அவர்கள் பயன்படுத்திய கருவிகள் எவை? இன்று நாம் அல்லது உலகம் அவற்றைப் பயன்படுத்தினால், அவர்களைக் கடந்து வளர முடியும் என்பதில் ஒரு சிறிதும் அய்யமில்லை. கண்ணில்லாமல் அவர்கள் கண்டதை, காலில்லாமல் அவர்கள் ஓடியதை, கண்ணுடனும் காலுடனும் நாம் காண முடியாது. ஓடமுடியாது!
முதலில் அவர்கள் அடைந்த முன்னேற்றத்தையே இன்று நாம் அறிவதில்லை!
சங்க காலத்தில் கிட்டத்தட்ட தமிழர் அனைவரும், அன்று தமிழராகவே இருந்த மலையாளிகளும், கன்னடியரும், தெலுங்கரும் உட்படக் கிட்டத்தட்ட நூற்றுக்கு நூறு பேராக-ஆடவரும் பெண்டிரும்-எழுத வாசிக்கப் படித்திருந்தனர். கண்ணைத் திறந்து-மரத்தால் செய்யப்பட்ட ஆரியக் கண்ணாடியோ, மேலை நாட்டுக் கண்ணாடியோ போட்டுக் கொள்ளாமல்-சங்க இலக்கியத்தின் பக்கம் பார்வையைத் திருப்புபவர்களுக்கு இது தென்படாமல் போகாது. யார் யாரெல்லாம் புலவராகியுள்ளார்கள்-தொகுப்பு நூல்களின், திரட்டுகளில் இடம்பெறும் அளவுக்கு அவர்களுள் எத்தனை பேர்-எத்தனை வகுப்பினர்-தொழிலினர்-ஊரினர்-நாட்டினர்-கல்வி ஒளிபெற்றிருக்கிறார்கள் என்று கண்டால், அது இன்று நாம் நம்பக் கூடிய ஒரு செய்தியாயில்லை! மேனாட்டினர் கூட இதை அறிந்தால் எளிதில் நம்பமாட்டார்கள்-ஏனெனில், அது அவர்கள் இன்றும் கனவு காணாத ஒன்று!
இன்றைய அமெரிக்காவும், இரஷ்யாவும், பிரிட்டனும் கண்டு பொறாமைப் படத் தக்க கல்வி வளர்ச்சி, பகுத்தறிவுப் பண்பு, சங்க இலக்கியத்தில் மிகத் தாழ்ந்த நிலையிலுள்ளவர் களிடம்கூட இருந்தது!
நம்ப முடியாத இம் முன்னேற்றங்களுக்குரிய நம்ப முடியாத கருவிகள் யாவை?
முத்தமிழ்! பொது மக்களிடம் கல்வி பரப்புவதற்காக மிகப் பழங் காலத்திலேயே தமிழர் கண்டுபிடித்த-உலகு இன்றும்-காணாத ஒரு கருவி!
முச்சங்கம்! அது இக்காலச் சங்கங்களுள் ஒன்று என்று கூடப் பலர் நம்பத் தயங்குகின்றனர். ஆனால், அது நாம் கொள்ளும் பொருளிலுள்ள சங்கம் அன்று. ஏனெனில்,அது உலகில் எந்நாடும் இன்றுவரை கண்டிராத, கேட்டிராத, எண்ணிப் பார்த்திராத முழு நிறை தேசியச் சங்கம்-அதுவே இலக்கியம் ஆக்க, திரட்ட, தொகுக்க, தணிக்கை செய்ய, சான்றளிக்க, பிரச்சாரம் செய்ய, இலக்கியப் புகழ் பரப்ப அமைந்த தமிழுலகின் ஒரே அமைப்பு. மூவரசரையும் திறை கொண்ட ஒரே பாவரசர் செல்வம்!
கல்லூரி, பல்கலைக் கழகம் போன்ற நாட்டுக் கல்வி நிலையங்கள், கலை நிலையங்களின் நடு இணைப்பான, பல்கலைக்கழகக் கூட்டுறவு அமைப்பு அதுவே! பள்ளிகளாகிய பரந்து சிதறிய வேர்த்துய்களை ஒருபுறமும், உலக வாழ்வாகிய உச்சிக் கொடியை ஒருபுறமுமாக, ஒவ்வொரு தமிழர் வாழ்வுடனும் அக்கால உலக நாகரிக வாழ்வை இணைத்த அரசியல் சாராத அரசியல் பேரமைப்பு மரம் அது!
4. சங்ககால வாழ்வுக்கு ஆதாரம் அதன் செல்வவளம். அச் செல்வ வளத்துக்கு ஆதாரம் அதன் தொழில் வளம், வாணிக வளம், கடல் வளம், கடல் வாணிக வளம், சுரங்க வளம், காட்டு வளம்! இத்தனைக்கும் ஆதாரம் அது கண்ட-இன்று நாம் அயல் மரபாகக் கருதும்-அறிவு நூல் வளம்! இந்த அறிவு நூல் வளத்துக்கு ஆதாரம்-இன்றைய தமிழர் இதைக் காதில் கொள்ளுமுன் தங்கள் காதுகளைத் ‘தயார்’ செய்து கொள்ளுதல் வேண்டும்-இத்தனைக்கும் ஆதாரம், தமிழர் சமய அறிவொளி!
‘தமிழர் சமய அறிவொளி’ என்றவுடன் சமயவாணர் கிளர்ச்சியுறக் கூடும். சீர்திருத்த வாதிகள் சீற்றமடையக் கூடும். ஆனால், அதன் உண்மை கண்டால் இருவருமே பெருமைப் படுதல் வேண்டும். ஆத்திகர் போற்றும் ஒரு நாத்திகர் சான்றே அதற்கு உண்டு-இங்கும் தேசிய முதல்வர் பண்டித நேரு சான்றே அதைச் சுட்டிக்காட்டுகிறது. அவர் பண்டை இந்தியா பற்றிக் கூறும் சான்று அது - தமிழகத்துக்கு அது முற்றிலும் பொருந்தும்!
இந்தியாவின் மிகப் பழைமையான சமய நூல்களில் கூட நாத்திகம்-நாத்திகத்தின் பல்வேறு வகைகள்-கண்டிக்கப் படுகின்றன. உலோகாயதம், சூனிய வாதம், கணவாதம், அணுவாதம், சாங்கியவாதம், நியாயவாதம்-இத்தனை நாத்திக நெறிகள் கண்டிக்கப்படுகின்றன-சுட்டிக் காட்டி, விளக்கப்பட்டு, வரிவரி யாக மறுக்கப்படுகின்றன!
கண்டிக்கப்படும் கொள்கைகளில், இன்றைய மேனாடுகளும் கண்டு வியக்கத்தக்க புத்தம் புதிய இயக்க, எதிர் இயக்கக் கருத்துகளை-ஹீடனிசம், இப்சனிசம், மார்க்சிசம், சோஷலிசம், ராஷனலிசம் ஆகிய அத்தனையையும்-தமிழகத்தின் பகுத்தறி வியக்கம், தன்மான இயக்கம் ஆகியவற்றையும்-நேரடியாக இல்லா விட்டாலும் மறைமுகக் கண்டன வடிவத்திலாவது காண்கிறோம்!
அந் நாத்திகத்தைக் கண்ட முதல்வர் பிருக°பதி, கபிலர், கணநாதர் ஆகியோர் பின்னாளில் ரிஷிகளுடன் சேர்த்து எண்ணப்பட்டனர். நாத்திகத்தின் முடிசூடா மன்னர் பிருக°பதி ஒரு ரிஷியாக்கப்படவில்லை-தேவனாகக்கூட ஆக்கப்படவில்லை-ஒரு பகவான் ஆனார்-பகவான் என்று முதல் முதல் அழைக்கப் பட்டவர் அவரே. ஒரு நாத்திக முதல்வர் மட்டுமன்றி, நாத்திகர் வேதம், வேதாந்தம், சாத்திரங்கள் எல்லாம்-ஒரு முழு உலக இலக்கியமே இருந்ததாகத் தெரியவருகிறது!
நேரு இது கண்டு வியக்கிறார்; ஒரு கணநேரம் அவர் பாரதக் கனவின் ஒளியிடையே நிழலாக அல்லது பாரதக்கனவின் நிழலிடையே ஒளியாக அது குறுக்கிடுகிறது.
நேரு கண்ட மின்னொளியை ஆராய்ந்து விளக்குகிறார் மற்றொரு வடநாட்டு அறிஞர், எம்.என்.ராய் தம் ‘பொருளியல் வாதம்’ (Registered Parcel) என்ற நூலில்!
உலகங் கடந்து இந்தியாவும், இந்தியா கடந்து தமிழகமும் நாகரிகத்திலும், சமய, அறிவு, கலைத்துறைகளிலும் முற்பட்டு முன்னேறியதற்குரிய உயிர்க் காரண விளக்கம் இதுதான்-இந்த நாத்திகர் பொது ஆராயா நம்பிக்கைகளை-பழக்க வழக்கங்களை-பழங்கொள்கைகளை எதிர்த் தெதிர்த்து எல்லாவற்றையும் உள்ளூர அறிவுப் பண்பாக மாற்றிவந்தனர்.
இவர்கள் பெயர்களுள் ஒருசிலவே-சித்தர் முனிவர் பெயர்களாக-நமக்குக் கட்டுக்கதை வடிவில் வந்து எட்டியுள்ளன. ஒருவர் நூலேனும், வாசகமேனும் நேரடியாக நமக்கு வந்து சேரவில்லை. அவர்களும் அவையும் இருட்டடிக்கப் பட்டன. ஆனால், அவர்கள் பண்பு இருட்டடிக்கப்படவில்லை. எதிர்த்தவர்களே கொள்கைகளையும் பண்புகளையும் கொண்டு நமக்குத் தந்துவிட்டுப் போயுள்ளனர். நம் இடைக்காலத் தேசிய இருளுக்குள் மறைந்த தேசிய ஒளிப்பண்பு—நம் இடைக்காலச் சமயப் புகைக்குள் மின்னும் அறிவுப் பொறி அதுவே.
சில சித்தர் நூல்கள் தமிழில் கண்ணாடித்தாள் பொதிந்து நமக்கு வந்து எட்டியுள்ளன. ஒரு பெருஞ்சித்தர்-புதியதோர் ஆத்திகமே வகுத்துக் கொடுத்த சித்தர்-திருவள்ளுவரின் திருக்குறள்-அப்பழங்கால உலகு வருங்கால உலகுக்கு நம் கால உலகாகிய அஞ்சல் துறைமூலம் அனுப்பும் பதிவுசெய்யப்பட்ட அஞ்சல் சிப்பமாக (சுநபளைவநசநன ஞயசஉநட) நம் தமிழக அஞ்சல் சேவகர் கையில் இருக்கிறது!
இந்தியாவின் பேரருளாளர்-மேல் நாட்டு டால்°டாய், ரோமேன் ரோலண்டு முதலியோர்-அருள்மரபின் மூல முதல்வர் அவரே என்று ஜெர்மன் அறிஞர் ஆல்ஃபிரட் ஷ்வைட்ஸர் உணர்ந்து குறிப்பிடுகிறார்.
காந்தியார் மரபை ஈன்று மறந்தது தமிழகம்-அவர் உடலை ஈன்று மறந்தது குஜராத்து-உடல் கொன்று மறந்தது மராட்டியம்-மரபும் உடலும் ஈனாமல் - கொலையிலும் மறதியிலும் பங்கு கொள்ளாமல்-உலகில் அறிவுச் செல்வரை ஒருபுறமும் அறிவு வீரரை மற்றொருபுறமும், பெற்றுப் பெருக்கும் அறிவரக்க நாடாகிய ஜெர்மனி-தான் பெறாத ஷேக்°பியரை, தான் ஈனாத காளிதாசனை உலகுக்குணர்த்திய விசித்திரப் பிறவியான ஜெர்மனி-இதோ, இத் திருவள்ளுவரையும் உலக அரங்குக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறது!
கோமாளிகளைக் கண்டு சிரிக்கும் உலகம், அயலாடை, அயற்பண்புகள்-பழைமையுருவில் வந்தாலும், புதுமையுருவில் வந்தாலும்-ஒருங்கே போற்றும் தமிழகம், திரையில் ஒளிநிழல் கண்டு, திரையே ஒளி என நம்பிப் போற்றும் இந்தியா-ஜெர்மனியின் இப் புத்தொளியை எப்படி வரவேற்குமென்று பொறுத்துப் பார்ப்போம்!
முற்கால, பிற்காலத் தமிழ் வழங்கும் எல்லைகள்
தெலுங்கு, கன்னடம், துளு, மலையாளம், தமிழ் எனப் பலவாகக் கூறப்படும் மொழிகள் உண்மையில் ‘தமிழ்’ என்ற ஒரே அடிப்படை மொழியின் வகைத் திரிபுகளே. இதனைப் புலவருலகம் ஊன்றிக் கவனித்தல் வேண்டும். ஏனெனில், தமிழகத்துக்கு மட்டுமன்றி உலகுக்கே பயன்படத்தக்க பல ஆராய்ச்சித் துறைகளுக்கு இது தூண்டுகோலாகத் தக்கது. இது வகையில் மொழி, தமிழ் நாட்டெல்லை ஆகியவை பற்றிய கீழ்வரும் செய்திகளை அறிஞர் உலகம் கவனித்தல் வேண்டும்.
இன்று ‘தமிழ்நாடு’ என்ற சொல் இந்திய உபகண்டத்தில் தமிழ் பேசப்படும் ஒரு பகுதிக்கு மட்டுமே வழங்கப் பெறுகிறது.
ஆயினும் பழந்தமிழகம் இதுமட்டுமன்று. அரசியல் துறையில் விழிப்புற்ற தமிழர் தென் திருவாங்கூர் பகுதி தமிழகமே என்பதைச் சுட்டுகின்றனர். ஆனால், திருவாங்கூர், கொச்சி முழுவதிலுமே, சிறுபான்மையாகவோ, பெரும்பான்மை யாகவோ தமிழரில்லாக் கூற்றங்கள் (தாலுக்காக்கள்) இல்லை. இத் தமிழர் குடியேறிய தமிழர்கள் அல்லர். பண்டைப் பழந்தமிழ்க் காலத்தி லிருந்து மாறுபடாதிருந்து வரும் எஞ்சியுள்ள பழந்தமிழரே என்பதை அரசியல் சார்ந்த இன்றைய எக்கட்சியினரும் கவனிப்பதில்லை.
புத்த மதத்தின் மூலம் வடநாட்டுப் பண்பாடு புகுந்து சிங்களமொழி வேறுபடுவதற்கு முன்னிருந்தே, இலங்கை தமிழகமாயிருந்தது. சிங்களம் வேறுபட்ட பின்னும் வட இலங்கை தமிழ் நாட்டைவிடத் தொன்மை மிக்க தமிழக மாகவே இருந்து வருகிறது. ஈழ நாட்டாராகிய வட இலங்கைத் தமிழர் தமிழ் நாட்டிலிருந்து குடிபுகுந்தவருமல்லர். தமிழ் நாட்டுத் தமிழர் ஈழநாட்டிலிருந்து குடியேறியவரும் அல்லர். ஈழநாட்டுத் தமிழர் சிங்களவரினும் பழைமையான இலங்கை நாட்டு மக்களே.
பழைய நூல்களில் கிழக்கும், மேற்கும் கடல் என எல்லை வகுக்கப்பட்டது. நன்னூல் (12ஆம் நூற்றாண்டுக்) காலத்திலிருந்து தான் ‘குண கடல்’ (Bay of Bengal) குமரி, குடகம் (Western Ghats) ‘வேங்கடம்’ என எல்லை கூறப் பட்டது. 12ஆம் நூற்றாண்டுக்குப் பின்தான் மலையாளத்தில் மலையாள இலக்கியம் ஏற்பட்டுள்ளது. அதற்கு முந்திய ஆயிர ஆண்டுகளுக்கு மேற்பட்ட மலையாள நாட்டு இலக்கியம் தமிழ் இலக்கியமாயிருப்பதும் காணலாம். குலசேகராழ்வார் பதிகங்கள், சேரமான் பெருமாள் பாடல்கள் (7,8ஆம் நூற்றாண்டு) சிலப்பதிகாரம், பதிற்றுப்பத்து முதலிய சங்க கால நூல்கள் (2-3 நூற்றாண்டு) ஆகியவை இத்தகைய மலைநாட்டுத் தமிழ் நூல்கள்.
சங்க காலத் தமிழ் வேளிருள் நன்னன் கன்னட நாட்டுத் தமிழ்க் குறுநில மன்னன். சங்க நூல்களில் கூறப்படும் எருமையூர் உண்மையில் மைசூரே (எருமையூர்: வடமொழி மஹிஷபுரி-மைசூர்). கொடுந்தமிழ் நாடுகளில் ஒன்றாகக் கூறப்படும் புன்னாடு கன்னட நாட்டிலும் பண்டைக் கன்னட நாட்டுப் பகுதியாகவே (புன்னாடு) கூறப்படுகிறது. வேங்கடத்துக்கப்பாலும் தமிழ் வேளிர் (சிற்றரசர்) இருந்தனர். பல்லவர் அல்லது திரையர் உண்மையில் இவர் வழிவந்தவர்களே என்பதற்குப் பல குறிப்புகள் உள்ளன. பல்லவர்க்கு இழிவு கற்பிக்கும் புராணக் கதைகளினா லேயே, இவற்றின் பக்கம் ஆராய்ச்சியாளர் நோக்கம் நாடாமல் இருந்து வருகிறது. இப்பல்லவர் ஆந்திரருடனும், கன்னட நாட்டுக் கங்கருடனும், சோழருடனும் இரண்டற்ற தொடர்புடையவர்கள். பிற்காலத்தில் கலிங்க நாட்டிலும் தெலுங்கு நாட்டிலும் சோட (சோழ) மரபினர் ஆண்டு வந்தனர்.
தமிழ் என்ற சொல்லுக்கு இனிமை என்று பொருள். தெலுங்கு, தெனுகு என்பதற்கும் (தேன்) இனிமை, மணம் என்றுதான் பொருள். கன்னடம் என்பதற்கு (கம்-வாசனை; கன்னல்-கரும்பு) இனிமை என்பதுவே பொருள் ஆகும்.
மிகப் பழைமைவாய்ந்த மலையாள கன்னட நூல்கள் கிட்டத்தட்ட தமிழாகவேயுள்ளன. மலையாள நூல்களில் ஆசிரியர் தாம் தமிழில் எழுதுவதாகவே கூறினர். 7ஆம் நூற்றாண்டில் பழைய மலையாள கிறித்தவர் தம் மொழியைத் தமிழ் என்று கூறியதுடன் தமிழில் எழுதி முதன்முதலாகத் தமிழ் நூல்களை அச்சிடவும் செய்தனர்! முதல் தமிழ் ‘அகராதி’ மலபார் மொழி அகராதி என்ற பெயருடனேயே அச்சிடப் பட்டுள்ளது. ‘உயர்குலத் தமிழர்’ தங்கள் மொழியை வேறுபடுத்தி விட்டபின்னும் (இழிந்தவராகக் குறிக்கப்பட்ட) பழந்தமிழ்க் குடியினர் தமிழராகவே இருந்தனர். இன்றும் இருந்து வருகின்றனர். இவர்கள் ‘மக்கள் வழி’ (குயவநசயேட ஐnhநசவையnஉந) உடையவர்கள்.
‘தீண்டப்படாத’ மக்கள் எல்லா நாடுகளிலும் இன்றும் தம்மை ஆதித் திராவிடர், ஆதிக் கேரளர், ஆதி ஆந்திரர் என்றே கூறுகின்றனர்.
12ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டினுள்ளேயே பாண்டித் தமிழ், சோழத் தமிழ் என்ற வேறுபாடு தலைகாட்டிற்று. இரண்டுக்கும் வெவ்வேறு எழுத்துகள் கூட ஏற்பட்டன. இன்றைய தமிழ் எழுத்து சோழ எழுத்தேயாகும். இது சேர எழுத்து எனவும் கூறப்பட்டது. ஆனால், பழைய பாண்டி எழுத்தான வட்டெழுத்து பாண்டி நாட்டில்தான் இன்று மறைந்துவிட்டது. வடமலையாளத்திலும் தென் கன்னடம், குடகு ஆகிய இடங்களிலும் அது இன்றும் ‘கோல் எழுத்து’ என்ற பெயருடன் வழங்குகிறது. ‘யார் செய்த நல் வினையோ’ இன்று பழந்தமிழ் எழுத்து மாறுபட்டு விட்டாலும், தமிழ் மொழியானது பாண்டி, சோழம் என இரு மொழிகளாகிவிடாமல் ஒரு மொழியாகவே இருந்து வருகிறது.
கடைசியாக, பழந்தமிழ் எல்லை இன்றைய தமிழ்நாடும் மலையாள நாடும் அதற்குச் சற்று அப்பாலும் இப்பாலும் மட்டுமன்று. நெடுந்தொலை பரவியிருந்த தென்பது தமிழ் நூல்களாலேயே விளக்கப்படக் கூடும். ஆயினும் பகுத்தறிவு, ஆராய்ச்சிக்கண் அப் பக்கம் இன்னும் நாடாததால் விளக்கம் பெறாதிருந்து வருகிறது.
இவ்வகையில் புலவர்கட்குப் பெருந்தடையாய் இருந்து வருவது ‘தமிழ்’ என்பது சொல்லின் பலகால மாறுபட்ட வழக்கெல்லையே யாகும்.
முதலில் ‘தமிழ்’ என்பது தென்னாட்டில் வழங்கப்பட்ட மூலத் திராவிட மொழியின் பெயராக இருந்தது. இது முத்தமிழ் (முன்னையதமிழ் அல்லது மூன்று தமிழ்) எனப் பிற்காலத்தில் வழங்கப்பட்டது. இன்று இதனையே நாம் திராவிடம் என்று குறிக்கிறோம்.
இதன் வகை பேதங்கள் கொடுந்தமிழ்கள் என்றும் இதன் திருந்திய இலக்கிய வடிவம் செந்தமிழ் என்றும் வழங்கப்பட்டது. சங்க காலத்தில் மங்களூருக்கும் வேங்கடத்துக்கும் தெற்கிலுள்ள தீவக்குறை முழுவதும் செந் தமிழ் நாடாகவும், அதன் வடக்கு கொடுந்தமிழ் நாடாகவும் இருந்தது. மேற்கி லுள்ள மொழி குடகு (குடக்கு - மேற்கு) எனப்பட்டதுபோல், வடக்கு மொழி வடுகு எனப்பட்டது. கன்னடமும் தெலுங்கும் உண்மையில் 10ஆம் நூற்றாண்டு வரை இத்தகைய ஒரே எழுத்துடைய ஒரே கொடுந் தமிழ் மொழியாயிருந்து, பின் இரண்டாகப் பிரிந்தவையே.
தேவாரக் காலத்துக்குள் (7ஆம் நூற்றாண்டுக்குள்) செந்தமிழ்நாடு பின்னும் குறுகிற்று. சில காலம் அது பாண்டி நாடாகவும், சில காலம் வடபாண்டி, தென்சோழ நாடுகளாகவும் கொள்ளப்பட்டது. பெரிய புராணத்தில் சோழ நாட்டிலிருந்து பாண்டிநாடு செல்லும் சம்பந்தர் தென்னாடு அல்லது தமிழ் நாட்டுக்குப் போவதாகவே கூறுகிறார். இவ்விடத்தில் தமிழ்நாடு என்பது செந்தமிழ்நாடு என்ற பொருளிலேயே வழங்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
தொல்காப்பியர் கூறிய தமிழ்நாட்டெல்லை உண்மையில் செந்தமிழ் நாட் டெல்லையேயன்றி செந்தமிழ், கொடுந்தமிழ் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய முழுத்தமிழ் (திராவிட) நாட்டெல்லையன்று. ஏனெனில் அவர் தெற்கெல்லை யாகக் கூறிய குமரி, குமரிமுனையோ கடலோ அன்று. குமரியாறுதான் என்று குறித்தனர் உரையாசிரியர்கள். அதன் தெற்கிலிருந்த பஃறுளியாறு, குமரி நாடுகள் ஆகியவை தமிழ்ப் பெரு நாடாகவேயிருந்தாலும், செந்தமிழ்நாடு அல்லவாதலால் அவை விலக்கப்பட்டன என்று தோன்றுகிறது. தெற்கெல்லை, செந்தமிழ் நாட்டெல்லை எனவே, வடக்கெல்லையும் அதுவே யாதல் தெளிவு. “வடவேங்கடம் தென் குமரியாயிடைத் தமிழ் கூறு நல்லுலகத்து” என்ற தொல்காப்பியத் தொடர் இவ் வேறுபாட்டைக் குறிக்க எழுந்ததேயாகும். தொல்காப்பியர் எக்காரணங் கொண்டோ செந்தமிழை வேறுபடுத்தி அதையே தமிழ் எனக் கொண்டு எல்லை வகுத்து, அதை ஏற்றுக் கொண்டதன் மூலம் தமிழ்நாடு `செந்தமிழ்’ பேணிற்று; கொடுந் தமிழைக் கொடுமைக்கு ஆளாகக் கைவிட்டுத் தமிழகத்தைக் குறுக்கிற்று.
செந்தமிழும் கொடுந்தமிழும் ஒருதமிழ் ஆதல் வேண்டும் என்று அரசியல்துறை எழுச்சி பெற்றவர்களனைவரும் விரும்புகின்றனர். புலவர்கள் உடனிருந்து ஒத்துழைப்பார்களா? அவர்கள் தமிழ் இலக்கியப் பற்று, தமிழ்ப் பற்று, தமிழ் மக்கள் பற்று, தமிழ்நாட்டுப் பற்று பெருந் தமிழுலகப் பற்று ஆக விரிவுபடுமா?
நாட்டுக் கல்வியும் - தாய்மொழியும்
அறிவு வளர்ச்சிக்கான வாய்ப்புகள் எல்லாவற்றையுமே பொதுப்படக் கல்வி என்று கூறலாம். ஆயினும், பள்ளிகளின் வாயிலாகக் கிடைக்கும் வாய்ப்பு ஒன்றை மட்டுமே சிறப்பாகக் கல்வி என்று கூறுகிறோம். இதற்கும் காரணம் இது ஒன்றே செயற்கை முறையான வாய்ப்பு. திட்டப்படுத்தி வளர்ச்சி உண்டு பண்ணுவது பள்ளிக் கல்வியில் மட்டுமே எளிது.
பள்ளியறிவுக்கு முன்னும் பின்னும் உள்ள அறிவு வளர்ச்சியை இயற்கை யறிவு வளர்ச்சி அல்லது இயற்கைக் கல்வி என்னலாம். பள்ளிக்கு முற்பட்ட இயற்கைக் கல்வியும், பள்ளி அல்லது கல்லூரிக்குப் பிற்பட்ட இயற்கைக் கல்வியும், குடும்ப, சமூக வாழ்க்கையினிடையே ஏற்படும் கல்வியாதலால், இரண்டும் வாழ்க்கை மொழியாகிய தாய்மொழியிலன்றி வேறெதிலும் நடைபெற முடியாது என்பது தெளிவு. முதற்படியும் இறுதிப்படியும் ஆன இவ்விரண்டுடன் ஒத்து, அவற்றை இணைக்கத்தக்கதான பள்ளிக் கல்வி அவற்றைப்போல் தாய்மொழி மூலமான கல்வியாயிருந்தாலல்லாமல், அது நாட்டுக் கல்வியாயும் இராது என்று கூறத் தேவையில்லை.
பிறமொழி, தாய்மொழியைவிட மிகச் சிறந்ததாய் அமையக்கூடும் இடங் களில் கூட, பிற மொழிக் கல்வியினால் வீண்கால அழிவு ஏற்படுகிற தென்பதில் ஐயமில்லை. ஏனெனில் தாய்மொழி மூலம் ஓர் ஆண்டில் கற்கப்படும் கல்வியைப் பிறமொழி மூலம் மூன்றாண்டுகளில் கூடக் கற்கமுடியாது. அதோடு கற்ற அள விலும் அது தாய்மொழி போலச் செரித்து அறிவுணவாய் மேலும் வளர்ச்சிக் குரியதாகாமல், தாளால் புனையப்பட்ட செடிகொடி போல் செயலற்ற தாகவே இருக் கும். நம் தமிழ்நாட்டில் ஆங்கிலம் ஒன்று நீங்கலாக எந்தப் பிற மொழியும் தாய் மொழியைவிட எத்துறையிலும் சிறப்புடைய தன்றாதலால், பிறமொழிக் கல்வி பயனற்றது மட்டுமன்று; தீமை தருவதும் ஆகும் என்று கூறத் தேவையில்லை.
பள்ளிக்கு முற்பட்ட கல்வி
பள்ளிக்கு முற்பட்ட கல்வியிலும் மூன்று படிகள் உண்டு. முதற்படி இயற்கையாய் ஏற்படுவது. உயிர்கள் வளர்ச்சிப் படியில் (Evolution) பல ஊழிகளாக அடைந்த முன்னேற்றம் முழுவதும் மரபுரிமை (பரம்பரை)யாகக் குழந்தைக்கு இயற்கையாகவே சில மாதங்களில் வந்துவிடுகிறது. பசித்தபோது அழுதல், பால் குடித்தல், குடித்த பால் செரிக்கும் வகையில் கை கால்களை ஆட்டி விளையாடுதல் ஆகியவை இத்தகையன. கண்ட பொருள்களைப் பிடித்தல், வாயில் வைத்துச் சுவைபார்த்தல், கூர்ந்து நோக்குதல் முதலியவை உடல் வளர்ச்சிக்கும் பொருள்கள் பற்றிய இயற்கையறிவு வளர்ச்சிக்கும் உதவுகின்றன.
இரண்டாவது படி தாயின் தொடர்பால் ஏற்படுவதாகும். தாயின் செயலில்லாவிட்டால் விலங்கு நிலையில் கீழ்ப்படியிலேயே குழந்தை இருக்க வேண்டி வரும். உணவு நாடும் குழந்தைக்குத் தக்க உணவைத் தாய் கால வாய்ப்பறிந்து உதவுவது போலவே, அறியும் விருப்பம் மட்டும் உடைய குழந்தைக்கு விரைவில் அறிவு வளர்ச்சி ஏற்படத் தாய் உதவுகிறாள், தாயுடன் குடும்பமும் உதவுகிறது.
குடும்பத்துக்குக் குடும்பம் குழந்தைகள் அறிவு வளர்ச்சி வேறு படுவதற்குத் தாயின் அறிவு நிலை, குடும்ப நிலை, இரண்டிடத்தும் உள்ள கல்வி, பண்பாடு ஆகியவையே காரணம் ஆகும். தாயின் அறிவு குறைவுற்ற சமூகங்களிலும், குடும்ப வாழ்க்கைத்தரம் தாழ்வுற்றிருக்கும் சமூகங்களிலும் குழந்தைகள் பிற்காலத்தில அறிவு குன்றியிருப்பதற்கு இதுவே காரணம்.
இயற்கைக் கல்வியின் மூன்றாவது படி பிற குழந்தைகள் கூட்டுற வினாலேயே ஏற்படும் அறிவு ஆகும். ஒரு சில ஆண்டு வளர்ச்சி பெற்ற குழந்தை தாய் உறவினும் தன்னொத்த குழந்தைகள், சில சமயம் தனக்கு மூத்த அல்லது இளைய குழந்தைகள் (பாப்பாக்கள்) கூட்டுறவை நாடுவது காணலாம். ஆகவே, குடும்பத்தினுள்ளும், சூழ்ந்துள்ள குடும்பத்திலும் உள்ள குழந்தைகளின் அறிவு நிலையே இந்தப் படியில் குழந்தையின் வளர்ச்சி வேகமாகிறது.
நம் நாட்டில் தாயின் அறிவு குடும்பத்தின் அறிவாகவும், குடும்பத்தின் அறிவு நிலை, சாதி, சமூகம், இனம் ஆகியவற்றின் அறிவு நிலையாகவும் இருப்பதால்தான் குழந்தையின் அறிவும் நாட்டின் அறிவும் பெரிதும் பெரும்பான்மை இனத்தின் அறிவுநிலையாய்விடுகிறது. நாட்டின் அறிவை வளர்ப்பவர்கள் இப் பெரும்பான்மை இனத்தையும், அதனைச் சார்ந்த பிற்பட்ட சாதி சமூகங்களையும் தனிப்படத் திருத்த முற்பட்டாலல்லாமல், குழந்தை வளர்ச்சியும் நாட்டு வளர்ச்சியும் தடைப்பட்டே இருக்கும்.
பள்ளிக்குப் பிற்பட்ட கல்வி
பள்ளிக்குப் பிற்பட்ட கல்வியும் முற்பட்ட கல்வியைப் போலவே சமூக, இனப் பண்பாட்டினளவில் நிற்க வேண்டிய தாகிறது. அத்தோடு மற்றும் இருவகை களிலும் பள்ளிக்குப் பிற்பட்ட கல்வி இனவளர்ச்சியின் அடிப்படையைத் தழுவிய தாகிறது. பள்ளிக்கு முற்பட்ட கல்வியைவிடப் பள்ளிக்குப் பிற்பட்ட கல்வியில் வாழ்க்கைத் தரம், வாழ்க்கைப் பொருளாதார வசதிகள், நல்ல மணவாழ்வு, சமூக அறிவுநிலை ஆகியவை மிகுந்த இடத்தைப் பெறுகின்றன. வாழ்க்கை மொழி யாகிய தாய் மொழியின் நிலை, தாய்மொழிக் கல்வி ஆகியவை வாழ்க்கையை யும் வளர்ச்சியையும் பாதிக்கும் பருவமும் இதுவே.
பள்ளிக் கல்வி
நம் நாட்டில் இன்று பள்ளிக் கல்வி மூன்று படிகளாக வகுக்கப்பட்டுள்ளன. அவை தொடக்கக் கல்வி (1-5 வகுப்பு அல்லது 1-8 வகுப்பு) இடைநிலைக் கல்வி, உயர்கல்வி (கல்லூரிக் கல்வி) என்பவை. தொடக்கக் கல்வி உண்மையில் இயற்கைக் கல்வியின் பிற்பட்ட படிகளான குடும்ப, சமூகக் கல்விக்குத் துணைதரும் கல்வியேயாகும். இதுமட்டுமே எல்லா மனிதர் களுக்கும் உரியதெனக் கொள்ளப்படுகிறது. ஆனால், நம் நாட்டில் எல்லா மனிதர்க்கும் உரிய இம் மனிதத்தன்மை மிகவும் குறுகியிருக்கிறது.
(அ) ஆண்களுக்கு அறிவு உரிமை, ‘பெண்களுக்கு அடிமை உரிமைதான்’ என்று இந்நாட்டில் கருதப்பட்டுவருகிறது. உண்மைநிலையும் அப்படித் தான் இருந்துவருகிறது. உயர் வகுப்புகளில்கூடப் பெண்கள் தாழ்ந்த வகுப்பினராகவே உள்ளனர் என்பது மறக்கத் தக்கதன்று. மேல் நாடுகளில் பெண்களுக்குக் கல்வி உரிமை இருந்தும்கூட வாழ்க்கையில் உள்ள அடிமைப் பண்பு அறிவுத்துறையில் அவர்களை முற்றிலும் விட்ட பாடில்லை என்று காணலாம். அப்படியிருக்க, பெண்களுக்கு உரிமையும் வசதியும் அளிக்கப்படாத இந்நாட்டில், பெரும்பாலான பெண்கள் சமூகத்திலும் பிற்பட்டு, பெண்கள் என்ற நிலையிலும் பிற்பட்ட இரட்டிப்பு அடிமை நிலையிலுள்ளார்கள். ஆதலால், இங்குப் பெண்கள் பிற்பட்டிருப்பதில் வியப்பில்லை.
(ஆ) வாழ்க்கையில் பிற்பட்ட இனத்தவர்கள் செல்வநிலையிலும் பிற்பட்டுத் தொடக்கக் கல்விகூடப் பெறாததால், முற்பட்ட ஓரிரு வகுப்புகளும் முற்பட்ட இனமும் மட்டுமே அனைவர்க்கும் உரிய கல்வியை அடைந்து வருகிறது. வரிகொடுக்கும் இனம் பிற்பட்ட இனமாகவும், கல்வி கற்கும் இனம் பிறிதொரு சிறுபான்மை இனமாகவும் இருக்கும் நாடு நம்நாடு தவிர உலகில் வேறு எங்கும் இருக்காதென்று கூறலாம்.
(இ) செல்வநிலை பிற்படாத இடத்திலும் சமூக இன வாழ்க்கைப் பண்பாடு தொடக்கக் கல்வியைக்கூடப் பாதிக்காதிருக்க வில்லை. ஏழை வீட்டுநோய் செல்வர் வீட்டிலும் பரவுவதுபோல் ஏழையின் அறியாமை அதே சமூகத்தி லுள்ள செல்வர் பண்பாட்டையும் கெடுத்தே வருகிறது.
மூன்று வகைக் கல்விகள்
மேற் குறிப்பிட்ட பொது வசதிக் குறைவு மட்டுமல்லாமல், கல்வி மூவகைப்பட்டிருப்பதனால் வேறு ஒரு பெருங்கேடும் நாட்டு மக்களுக்கு உண்டு. எல்லாருக்கும் உரிய கல்வி தொடக்கக் கல்வி; இடைத்தர வகுப்பார்க்கு இடைக்கல்வி (SecondaryEducation) உயர் (சோம்பல்) வகுப்பார்க்கு உயர் கல்வி என்றிருக்கும் வகுப்பு முறை ஏழைகளுக்கு உதவாத முறை மட்டுமல்ல, அவர்களைப் பூண்டோடு வளர்ச்சியில்லாது அழுத்திவைப்பதும் ஆகும். ஏனெனில் படிப்படியாக மாணவர் சம்பளம் உயர்வது ஒன்றே, ஏழையை அங்கங்கே தடைசெய்யப் போதிய அணையாயிருக்க, அது போதாமல் ஒவ்வொரு படியிலும் ஒருபெரிய தேர்தல் (பரீக்ஷை); ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு தேர்தல்; போதாக் குறைக்குத் தேர்வு (Selection) ஆகியவற்றால், நாட்டின் செல்வத்துக்குக் காரணமான ஓர் இனம், அரிப்புகள் கொண்டு அரித்துத் தள்ளப்பட்டுச் சுரண்டும் இனம் அதன் செல்வத்தின் உதவியால் தானே செல்வ வளர்ச்சியும் அறிவு வளர்ச்சியும் பெறுகிறது.
இம்மூவகைக் கல்வியிலும் படிப்படியாகப் பிற மொழிகள் புகுத்தப் படுவதும், மிகுதியாக்கப்படுவதும் ஒரு புறம் நாடு அழிய உதவுவதுடன், மறுபுறம் நாட்டு வாழ்வுக்குத் தொடர்பற்ற, நாட்டுச் செல்வத்தை உண்டு பண்ணுவதில் ஈடுபடாத, உழைக்காத ஓர் இனம் வளர மட்டும் உதவுகிறது.
பிற மொழி
பிறமொழிகளுள் தற்கால நூல் முறை அறிவு (Science) தரும் ஆங்கில அறிவுகூடப் பாமர மக்களிடையே தொழிலறிவு, பகுத்தறிவு வளர உதவவில்லை. காரணம் நாட்டுப் பொது மக்களிடையே எவரும் அதனையடைய வழியே இருப்பதில்லை. படித்தாலும் பிறமொழியறிவு பிறமொழியாளருடன் ஊடாட உதவுமேயன்றித் தாமே சிந்திக்க, தம் இனத்தார், தம் மக்கள் வளர்ச்சிக்கு உழைக்க உதவாது. தவிர அரசியல் உயர்வு, நாகரிக உயர்வுக்குப் பிறமொழிக் கல்வி உதவும் வரை, பிறமொழி அறிவுடையார்க்கே உயர் சம்பளம் என்றிருக்கும் வரை, உயர் குடியினர் எனத் தருக்கி அரசியல் சூதாட்டமாடும் சோம்பல் வகுப்புகள் அன்றி, நாட்டு மக்கள் எவரும் முன்னேற முடியாது.
ஆகவே ‘நாட்டுக்கல்வி’ உண்மையில் ‘நாட்டுக்கல்வி’ ‘நாட்டு மக்கள் கல்வி’ ஆதல் வேண்டுமானால் அது முழுவதும் தாய்மொழி அடிப்படையில் அமைவது இன்றியமையாதது ஆகும். பிறமொழிக் கல்வி, பிறநாட்டுத் தொடர்பு வேண்டும். அளவு உயர்ந்துவிட்ட இனத்தவர்க்கு, நாட்டுக்கல்விக்கு மேற்பட்ட ஒரு துணையாக முடியுமேயல்லாமல், நாட்டுக் கல்வியின் ஒரு பகுதியாக முடியாது.
இலக்கிய உலகில் தமிழன்
இன்றைய உலகம் விரைந்து ஓருலகம் ஆகிக்கொண்டு வருகிறது. ஆனால், நமக்கு அது ஓருலகம் ஆனால் போதாது. அது நம் உலகமும் ஆதல்வேண்டும். அதாவது நாம் அதை ஆக்கும் பொறுப்பிலும் இயக்கும் பொறுப்பிலும் பங்குகொண்டு அதன் மதிப்பு வாய்ந்த ஓர் உறுப்பு ஆதல்வேண்டும்
உலக நாகரிகப் போட்டியில் நாம் முந்திக்கொண்டிந்த காலம் உண்டு. ஆனால், வரவர நாம் பிந்திவிட்டோம். இன்று நாம் கிட்டத்தட்ட கடைசி வரிசை யில் கடைசியாகப் பிந்தித்தானிருக் கிறோம். இந் நிலையில் நாம் முன்பு முந்திக் கொண்டிந்தோம் என்பதையே எவரும் நம்பமுடியாமலாகியுள்ளது. நாம் என்றாவது முந்திக்கொண்டிருந்தோம் என்பது உண்மைதானா, உண்மையா யிருக்கமுடிமா என்று இன்று கேட்கப்பட்டால், அதில் வியப்பில்லை. இது உண்மை என்பதுகூட இன்று ஆராய்ந்து முடிவுகட்டக்கூடிய ஒரு செய்தியாகத்தான் இருக்கிறது. இதுபோலவே நாம் பிந்திவிட்டோம் என்பதும் ஆராய்ச்சிக்குரிய செய்தியாகவே உள்ளது. நாம் இன்று பிற்பட்டிருக்கிறோம் என்பதை எவரும் எளிதில் ஒப்புக்கொள்வர். ஆனால், நாம் பிந்திக்கொண்டுதான் வந்திருக்கிறோம், நெடுங்காலமாகப் பிந்திக்கொண்டுதான் வந்திருக்கிறோம் என்பதைப் பலர் எளிதில் உணரமாட்டார்கள். ஏனென்றால், முன்பு முந்திக்கொண்டிருந்தோம் என்பது உண்மையானால் தானே, நாம் இன்றைய நிலைமைவரைப் பிந்திக் கொண்டு வந்திருக்கிறோம் என்று கூறமுடியும்? நாம் என்றுமே பிற்பட்டு இருந்து வந்திருக்கலாம் அல்லவா?
நாம் ஒரு காலத்தில் மேம்பாடடைந்திருந்தோம் என்று சிலர் பெருமை பேசி நாள் கழிக்கிறார்கள். உண்மையில் இன்றைய நிலையைப் பார்க்க, இது பெருமைக்குரிய செய்தியன்று; சிறுமைக்குரிய செய்தியேயாகும். வேறு பலர் பழைமையில் கருத்துச் செலுத்தாது புதுமையிலேயே முனைந்து செல்ல விழைகின்றனர். இது சீரிய முயற்சியே. ஆனால், பழைமையின் வேரில்லாத விடத்தில் புதுமை வளம் பெறாது, மலர்ச்சியுறாது, பிற நாடுகளின் புதுமை அவ்வந் நாடுகளின் பழைமையில் பூத்த புதுமலர்ச்சிகளே. பழைமைவெறுத்துப் புதுமையுட் புகுவோர் தம்மையுமறியாமல் தம் பழைமையை அல்லது பண்பைக் கைவிட்டு அயலார் பழைமை அல்லது பண்பையே நாடுபவர்கள் ஆகிறார்கள். ஏனெனில், பிறநாடுகளிலிருந்து அவர்கள் மேற்கொண்டு பின்பற்றும் புதுமை, அந் நாடுகளின் பழைமையில் வந்த புதுமலர்ச்சியே. மேலும் அயல்நாடுகளினிட மிருந்து பின்பற்றும் இப் புதுமை உண்மையில் புதுமலர்ச்சியாகாது: போலிப் புதுமையேயாகும்! பழைமை அல்லது பழம் பண்பிலிருந்து புதுமலர்ச்சி ஏற்படுவது இயல்பே. ஆனால், அயற்பண்பி லிருந்து இப் புதுமை எளிதில் மலர்ச்சியுறாது.
மேனாடுகளில் கிரேக்க உரோம இலக்கியங்களிலிருந்து புதுமலர்ச்சி ஏற்பட்டதே என இக்கூற்றுக்கு எதிர்க் கூற்று எழுப்பப்பெறக் கூடும். கிரேக்க, உரோமப் பண்பாடுகள் வடக்கு மேற்கு அய்ரோப்பாவில் புதுமலர்ச்சி ஏற்படுத்தி யது உண்மையே. ஆனால், இப் புதுமலர்ச்சிக்கு கிரேக்க, உரோமப் பண்பாடுகள் மட்டுமே காரணம் என்று கூறமுடியாது. ஏனெனில், அப் பண்பாடுகள் கிரேக்கமும் உரோமும் அழிவுறாமல் காக்கவில்லை. அந்நாடுகள் அய்ரோப்பாவிலேயே இருந் தாலும், அவற்றில் அம் மறுமலர்ச்சி முழுதும் ஏற்படவுமில்லை. வடக்கிலும் மேற்கிலும் உள்ள பகுதிகளிலேயே அவை புதுமலர்ச்சி தூண்டின. வடக்கும் மேற்கும் பண்படாப் பகுதிகள். தெற்கும் கிழக்கும் பண்பட்டவை. ஆனால், வளர்ச்சிக்குரிய ஏதோ ஒரு பண்பு பண்படாப் பகுதிகளில் இருந்தது. அப் பண்பு பண்பட்ட பகுதிகளில் குன்றிவிட்டது. ஆனால், வளர்ச்சி குன்றிய பண்பட்ட பகுதி வளர்ச்சிக் கூறுடைய வடபகுதிக்குத் தூண்டுதல் தந்தது. மறுமலர்ச்சியின் மறைதிறவு இதுவே. நற்பண்பு அயற்பண்பாயினும் பிறர் பண்பாட்டு மலர்ச்சியைத் தூண்டவல்லது. நம்மிடையே இன்று ஆங்கிலப் பண்பாடு அத்தகைய தூண்டுதலே தந்துள்ளது. நாம் நம் பண்பில் நின்று அதன் தூண்டுதல் பெற்றால், புதுமலர்ச்சியின் வேகம் இன்னும் மிகுதியாகும் என்பது உறுதி.
எல்லா மொழிகளிலும் உள்ளார்ந்த நற்பண்புகளும் உண்டு. உள்ளார்ந்த அல்பண்புகளும் உண்டு. அல்பண்பு தேய, நற்பண்பு வளருமானால், அம் மொழியில் வளர்ச்சி ஏற்படும். நற்பண்பு வளராவிட்டால் அல்பண்பே வளர்ந்து வளர்ச்சி தடைப்படும். அல்லது அது அழிவுறும். அயற்பண்புகள் ஒருமொழிக்குச் செய்யக் கூடியதெல்லாம், நற்பண்பைத் தூண்டி வளர்ப்பதோ, அல் பண்பைத் தூண்டி அழிப்பதோ மட்டுமே. அயற்பண்பு ஒரு மொழியின் பண்பாக இரண்டு வழியிலும் வளர்ச்சி தளர்ச்சி பெறமாட்டா.
தமிழின் தனிப் பண்புகள் எவை: அப் பண்புகளிலும் நற்பண்புகள் எவை, அல்பண்புகள் எவை என்று நாம் அறிந்திட வேண்டுவது இன்றியமையாதது. இவை இரண்டையும் தற்கால உருவிலேயே நாம் காணக் கூடுமானாலும், அவற்றின் முழு விளக்கத்தையும் இயல்புகளையும், தோற்ற வளர்ச்சி தளர்ச்சி வரலாறுகளையும், அவற்றின் பழைமையிலேயே நாம் காணலாகும். பழம் பண்பிலூறிய மொழியின் இக் குணங்களையும் குறைகளையும் நன்கறியாமல், மொழியின் வருங்கால வளர்ச்சிக்குத் திட்டமிடுவது எளிதன்று. நம்மில் இன்று பழம் பெருமைகள் பாடுபவர் உண்டு. அதன் இன்றைய குறைபாடுகளை எடுத்துரைப்பவர் உண்டு. ஆனால், தமிழின் தனிப்பண்புகளை அதாவது அதன் தனிச்சிறப்புகளையும் அதன் தனிக்குறைபாடு களையும் ஆராய்ச்சி முறையில், வரலாற்று முறையில், உலகப் பின்னணியின் ஒப்பீட்டு முறையில் விளக்கமாக உணர எவரும் முயற்சி செய்வதில்லை. இனியேனும் இதில் நாம் கருத்துச் செலுத்துதல் வேண்டும்.
நம் சிறப்புகளை நாம் அறிவது எதற்காக? நம்மை நாமே புகழ்ந்து கொள் வதற்காகவா? அன்று! அல்லது வேலிக்கு ஓணான் சான்று கூறுவதுபோல நமக்கு நாமே சான்று கூறுவதற்கும் அன்று. நம் சிறப்புகளை அறிவதன் மூலம் நாம் உலகில் முன்பு முந்திக்கொண்டிருந்ததன் காரணங்களை அறிந்து, அவற் றுக்குத் தக்க சூழ்நிலையமைத்து மீண்டும் செயலாற்ற வைத்து நம் மொழியை வளர்ப்பதற்காகவே. இதுபோலவே நாம் நம் குறைபாடுகளை அறிந்துகொள்வதும் அவற்றை வாளா ஏற்று நம் தலையிலடித்துக் கொள்வதற்காக அன்று. முதன்மை நிலையிலிருந்து கடைமை நிலைக்கு நம்மைக் கொண்டுவந்தது இக் குறைபாடுகளே யாதலால், அவற்றை உணர்ந்து திருந்துவதன் மூலம் நாம் மீண்டும் முதன்மை நிலை நோக்கி முன்னேறலாம். இதனால், நாம் முன்னைய முதன்மை நிலையையும் தாண்டிச் செல்ல முடியும் என்று துணிந்து கூறலாம். ஏனென்றால், முன்னைய முதன்மை நிலை தோழமையற்ற முதன்மை நிலை-அது ஒரு தனிக்கொடுமுடியாயிருந்தது. இன்று நாம் அடையக்கூடும், முதன்மை நிலை தோழமையோடு, துணையோடு கூடியது. உலகு இமயமாக, நாம் அதன் ‘தவளகிரி’ கௌரிசங்கர் (எவரெ°ட்) முகடுகளாக விளங்க நாடுவதே நம் வருங்காலக் குறிக்கோளாக இருத்தல் வேண்டும். அதுமட்டுமன்று. அது ஒரு வளராத மலைக் கொடுமுடியா யிராமல், வளரும் உயிர் முகடாயிருத்தல் வேண்டும். அதாவது உலகை வளர்த்து நாமும் அதனுடன் வளர்தல் வேண்டும்.
சிலர் குறைபாடுகளில் கவனம் செலுத்த விரும்ப மாட்டார்கள். வேறு சிலர் சிறப்புகளில் கவனம் செலுத்த விரும்ப மாட்டார்கள். ஆனால், உண்மையில் இவ்விரண்டும் ஒன்றோ டொன்று இணைந்தவையே. நம் குறைபாடுகள் நம் சிறப்புகளுடன் கூட உடன் பிறப்பாகவே வளர்ந்துள்ளன. குறைபாடறிந்தே குணம் பெருக்க முடியும். குணமறிந்துதான் குறைபாடு குறைக்க முடியும். எனவேதான் குணம் குறை நாடி, உவப்புவர்ப்பின்றி ஆராய்தல் இன்றியமையாததாகிறது.
குணங் குறை இரண்டிலும் உலகில் நம் இடத்தை நாம் வரையறுத்து உணர வேண்டுமானால், நம் சூழ்நிலைகளை நாம் எந்த அளவுக்கு மாற்றி யமைக்க உதவியுள்ளோம், அல்லது எந்த அளவுக்கு நாம் நம் சூழ்நிலைக்கு இயைய மாறியுள்ளோம் என்பதை நாம் உணர்தல் நலம். அதாவது உலக மொழிகளில், நாகரிகங்களில், பண்புகளில் நாம் இதுவரையிலும் ஒரேயடியாகத் தனித்து வாழ்ந்துள்ளோமா, பிற இனங்களுடன் தொடர்பு கொண்டு படிப்படியாக மாறியோ, மாற்றியோ வந்திருக்கிறோமா? மாறி, அல்லது மாற்றி வந்திருந்தால் அதன் இன்றைய விளைவுகள் யாவை? அதன் பலாபலன்கள், நம் பலாபலன்கள், உலகுக்குரிய பலாபலன்கள் எவை என்றும் நாம் காணுதல் வேண்டும்.
உலகில் நாம் தனித்து வாழவில்லை. இனங்களுடன் தொடர்பு கொண்டே வந்துள்ளோம், என்பது தெளிவு. உலக நிலப்படத்தை ஒரு கையிலும் உலக வரலாற்றுப் படத்தை மற்றொரு கையிலும் வைத்துப் பார்த்தால், இது நன்கு விளங்கும். தமிழ் பேசப்படும் நாட்டைச் சுற்றிலும் உள்ள எல்லைப் புறங்களை நோக்கினால் தமிழ் மொழியும் பண்பும் தமிழக எல்லை கடந்து பரவியுள்ளதையும், இன்னும் பரவி வருவதையும் காணலாம். தமிழ் மொழியும் தமிழ்ப் பண்பும் பரவுதல் என்று அங்கு நாம் கூறும்போது நாம் தமிழர்க்கும் பிறர்க்கும் பொதுவாயுள்ள பண்புகளைக் குறிக்கிறோமேயன்றி; தமிழர்க்கு மட்டுமேயுரிய பண்புகளைக் குறிக்கவில்லை. அப் பண்புகள் தமிழரிடமிருந்து பிறர்க்குச் சென்றனவா, பிறரிடமிருந்து தமிழர்க்கு வந்தனவா என்பதையும் இவ் வகையில் நாம் முடிவுகட்ட வேண்டியதில்லை. தமிழர்க்கும் பிறர்க்கும் பொதுப் பண்புடன், பொது வளர்ச்சிகள் உண்டா என்பது மட்டுமே நாம் இப்போது எழுப்பியுள்ள வினா!
தமிழகத்தைச் சூழ்ந்து மூன்றுபுறம் கடலும், ஒரு புறம் நிலமும் எல்லையாகின்றன. இன்று மேற்கிலும் கூடச் சிறிதளவு நிலம் உண்டு-அதுவே மலையாளப் பகுதி. வடபால் கன்னடம், துளு, தெலுங்குப் பகுதிகள், நில எல்லை ஆகின்றன. நில எல்லையில் அண்டையிலுள்ள இப்பகுதிகளுடன் தமிழ் மொழி, இலக்கியம், கலை ஆகியவை மிக நெருங்கிய தொடர்புகள் உடையதாயிருக்க வேண்டுவது இயல்பாக எதிர்பார்க்கக் கூடியதே. அவ்வகைத் தொடர்பு இல்லையானால், அல்லது அது குறைந்ததானால், அதில் தமிழகத்தில் குறைபாடோ, அதன் சூழ்நிலையின் வழுவோ ஏதாவது ஒன்று இருக்க வேண்டும் என்பதை யாவரும் ஒத்துக்கொள்வர். இந்நாட்டு மொழிகள் தமிழுடன் நெருங்கிய ஒற்றுமையுடையவை. கலைகளும் இலக்கியமும் கூடப் பேரளவில் ஒற்றுமை யுடையவையே. அதாவது அவற்றுடன் தமிழ்க்கிருக்கும் வேற்றுமை மற்றெல்லா மொழிகளுடனும் தமிழ்க்குள்ள வேற்றுமையைவிடக் குறைவே. இம்மொழிகள் அனைத்தும் இந்திய மாநில மொழிகளுள் தனிப்பட்டதொரு மொழிக்குழு என வகுக்கப்பட்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள்-அதற்கு வடமொழியாளரும் அவர்களைப் பின்பற்றி மேனாட்டவரும் நாகரிக உலகும் கொடுத்த பெயரே திராவிடம் என்பது.
தென்மொழிக்குக் குழுவின் எல்லை கடந்து வடநாட்டில் வடமேற்கில் பலூச்சி, நடுப்பகுதியில் கோண்டு, வடகீழ்ப் பகுதியில் இராஜமகாலி ஆகிய மொழிகள் தென்மொழிக் குழுவுடன் பொதுவாகத் தொடர்புகளுடையன. மொழியறிஞர் கூற்றுப்படி தென்மொழிக் குழுவிலும் அண்டையிலுள்ள தெலுங்கு கன்னடத்தைவிட இம் மொழிகள் தமிழுடன் நெருங்கிய ஒற்றுமையுடையவை. தென்மொழித் தொடர்பின் பரப்பைவிடத் தமிழ்மொழித் தொடர்பின் பரப்புப் பெரிது என்பதற்கு இது ஒரு தெளிவான நற்சான்று ஆகும். பிற வடநாட்டுத் தாய் மொழிகளிலும் ஒவ்வொரு தனிமொழியும் குழுவும் பெருங்குழுவும் தத்தமக்குள் அணிமை காரணமாக நெருங்கிய ஒற்றுமையும் சேய்மை காரணமாக வேற்று மையும் உடையன. இது இயல்பே. ஆனால், அணிமையல்லாத தென்மொழிக் குழுவுடனும், அதிலும் அணிமை குறைந்த தமிழ் மொழியுடனும் ஒவ்வொரு தனி மொழியும் குழுவும் பெருங்குழுவும் தனித்தனித் ஒற்றுமைத் தொடர்புடையவை யாயிருக்கின்றன. இத்துடன் குப்தர் கால இலக்கிய மொழியாகிய உலக வழக்கற்ற வடமொழி யொருபுறமும் இப்பெருங் குழுவின் பிறமொழிகள் மற்றொரு புறமும் தனித்தனி தொடர்பு ஒற்றுமைகள் உடையவையாய் இருக்கின்றன. பண்டை ஆரியர் பாஞ்சாலத்தில் வழங்கிய வேத மொழியைவிட இப் பண்டைய ஆரிய இலக்கியமொழி தென்மொழிக் குழுவுக்கும் தமிழ்க்கும் நெருங்கிய தொடர்புடையதாக இருப்பது தமிழ்ச் செல்வாக்கின் பண்டைய இந்தியப் பரப்பை நன்கு விளக்குகிறது.
நில எல்லையை விட்டுக் கடலெல்லையில் நெருங்கினால் அணிமைக் கடல் கடந்த பகுதியாகிய இலங்கையின் வட பகுதி இன்றும் தமிழ்மொழி பேசப் படும் பகுதியாயுள்ளது. அத் தமிழ், தமிழ்நாட்டுத் தமிழினும் பழைமையும் பெருமை யும் குறைந்ததா யில்லை. பிற கடல்கடந்த நாடுகளான பர்மா, மலாயா, இந்துசீனா, பிஜி, முதலிய பகுதிகளிலும் இன்று தொழிலும் வாணிகமும் காரணமாகத் தமிழரே மிகப் பெரும்பான்மை யினராய்ச் சென்று பரந்துள்ளனர். இப் பரப்பு பெருமைக்குரியதென்று கொள்ளப் படலாம். சிறுமைக்குரியதென்றும் கொள்ளப்படலாம். பரப்பும் தொடர்பும் இன்றுள்ளன என்பதை மட்டுமே இங்கே குறிப்பிடுகிறேன். மேற்கிலும் தென் ஆபிரிக்கா, மொரிசியசு, கயானா, ஜமாய்க்கா ஆகிய இடங்களில் தமிழர் பரந்துள்ளனர். இத்தொடர்பும் பரப்பும் இன்றேபோல் பண்டும் வளர்ந்து இருந்தது-பரப்பு இன்றைவிட முன்பு மிகுதி என்பதைக் கல்வெட்டு, வரலாறு, பழம் பொருளாராய்ச்சி ஆகிய மூன்றுமே காட்டுகின்றன. பாண்டிய சோழ மன்னர் சீனப் பேரரசருடனும், உரோமப் பேரரசருடனும், அரசியல், வாணிக உறவு கொண்டிருந்தனர். அராபியரும் கிரேக்கரும் தமிழக வாணிகத்தில் கலந்துகொண்டிருந்தனர். உரோமர் காலத்தில் உலகின் தங்கத்தில் பெரும்பகுதி தமிழகத்தில் வாணிகம், தொழில் ஆதிக்கமும் வந்து குவிந்தது-இன்றும் பல உரோமப் பேரரசர் கால உரோம நாணயங்கள் தமிழகத்தில் பெருவாரியாகக் காணப்படுகின்றன. இன்னும் பழைமையான வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில்-3000,4000 ஆண்டுகளுக்கு முன்-ஆரியர் பெயர் உலகில் கேட்கப்படாத காலத்தில்-தமிழகம் சால்டியா வுடனும், பால°தீனத்துடனும், டயர் ஸைடனுடம், எகிப்துடனும் தொடர்பு கொண்டிருந்தது. இன்னும் ஆயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன்பே ஆரியர்க்கு முற்பட்ட இந்தியா உலக நாகரிகத்தில் தலைமையும் முதன்மையும் தாங்கியிருந்த தென்பதைச் சிந்துவெளி நாகரிகம் காட்டுகிறது.
எனவே, தமிழர் தனித்து வாழ்ந்தவர் அல்லர்; தம் சூழ்நிலையில் படிப்படி யாய்ப் பரந்த மொழி, நாகரிக, கலை, வாணிகத் தொடர்பு பண்டிருந்தே உலக முழுமையிலும் தமிழர்க்கு இருந்ததென அறிகிறோம். உலகில் மனித வகுப்பின் முதல் நாகரிகமாக மேனாட்டினரால் கருதப்படுவது நடு உலக நாகரிகம் அல்லது நடுநிலக் கடல் நாகரிகமே. தமிழ் நாகரிகம் அதனுடன் நெருங்கிய தொடர் புடையது என்பதை யாவரும் ஒப்புக்கொள்கின்றனர். அதில் இனத் தொடர்பும் நாட்டுத் தொடர்பும் மொழித் தொடர்பும் எந்த அளவுக்கு இடம் பெற்றன என்பது தெரிய வாராவிட்டாலும் நாகரிகத் தொடர்பு கட்டாயம் இருந்தது-கிட்டத்தட்ட ஓரினம் என்று கூறத்தகும் அளவுக்கு நாகரிகத் தொடர்பு இருந்தது என்பதும் யாவரும் ஒப்ப முடிந்த உண்மையேயாகும்.
இத்தொடர்பில் கொடுக்கலும் வாங்கலும் நிறைய இருந்திருக்க இடமுண்டு-கட்டாயம் இருந்திருத்தல் வேண்டும். ஆனால், எக்காரணத்தாலோ மற்ற நாடுகள், நாகரிகங்கள், மொழிகள் யாவும் பழம்பொருள் ஆராய்ச்சிக்கு மட்டுமே உரியவையாய் விட்டன. அவை அழிந்துவிட்டன. இயற்கையான தளர்ச்சியாலும் ஆகியிருக்கலாம்-அயல் நாகரிகங்கள் படையெடுப்பினாலும் ஆகியிருக்கலாம். ஆனால், அவற்றைப் பின்பற்றி அவற்றின் பின் ஏற்பட்ட, அவர்களை வென்று அடக்கிய நாகரிகங்கள் அவர்கள் தொடர்பில்லாத வடபுல நாடுகளில் பிந்துற்றன. அவர்கள் தொடர்புடைய தென்பால் நாடுகளில் முந்துற்றன. அதே சமயம் இன்று தென்பால் நாடுகள் தாழ்ந்துள்ளன. வடபால் நாடுகள் உயர்ந்துவிட்டன. தென்பால் நாடுகளுள்ளும் கீழ்ப்பால் நாடுகள் முந்தியிருந்தன. மேற்பால் நாடுகள் பிந்தின. ஆனால் வரவரக் கீழ்ப்பால் தாழ்ந்தது. மேற்பால் உயர்ந்தது. இந்தியாவினுள் தென்பால் நாடுகளும் கீழ்ப்பால் நாடுகளும் வடகோடி நாடுகளும் முந்தியிருந்தன. ஆனால், இவை பிந்துற அணிமைக் காலங்களில் வடபால் முந்தியுள்ளது. மேற்பால் பாகிஸ்தானாகி ஆட்சி ஆதிக்க உரிமை பெற்றுள்ளது.
தமிழகம் உலகப் பரப்புடையது மட்டுமன்று, காலப் பரப்பும் மிகுந்தது. பண்டை மொழிகளுள் எஞ்சியது இது ஒன்றே. இதனிலிருந்து பல தலைமுறை கடந்த மேற்கு ஐரோப்பிய மொழிகள் அதற்குக் கொள்ளுப்பேரன் அல்லது ஏழாம் கொள்ளுப்பேரன் முறையுடையவை. அப் புத்தம் புது மொழிகளுடன் அது இன்றும் வாழ்கிறது - வாழ்வது போதாது, போட்டியிடுதல் வேண்டும் என்றும் நாம் எண்ணுகிறோம். போட்டியிட முடியாமல், வாழமட்டுமே செய்தால்கூட, அது உலக மொழிகளில் மிகுதி உயிர்ப்பண்பும் உள்ளுரமும் உடைய மொழி என்பதில் ஐயமில்லை. உலகின் எல்லா நாகரிகத் தலைமுறைகளிலுள்ள மொழி நாகரிகங்களுடனும் அது தொடர்பு கொண்டு அவற்றைத் தாண்டி இன்றும் வாழ்கிறது.
தமிழின் தனிச் சிறப்புகளுள் உலகப் பரப்பு, காலப் பரப்பு ஆகிய இவ்விரண்டுமே யன்றி மற்றும் ஒரு தனிச்சிறப்பும் உண்டு. அதுவே உலகின் முதல் முதல் பண்பட்டமொழி-முதல் முதல் இலக்கண இலக்கியமுடைய மொழி, இதற்கு வேறு சான்று வேண்டா. அதன் எழுத்தமைப்பு இன்னும் எல்லா உலக மொழிகளையும் தாண்டி நிற்கின்றது. உயிர் எழுத்து-மெய் எழுத்து; உயிரில் குறில், அதற்கிசைந்த நெடில், இரண்டு இணையுயிர் (Diphthongs); மெய்யில் வலி, மெலி, இடை ஆகிய இப்பாகுபாடுகள் எழுத்திலும் சரி, இலக்கணத்திலும் சரி இன்றும் மற்ற நாடுகளில் இல்லை. தமிழிலும் தமிழ்த் தொடர்புடைய இந்திய மாநில மொழிகளிலும் மட்டுமே உண்டு.
முதல் முதல் எண் வகுத்தமொழி எது என இன்று அறுதியிடப்பட்டு விடவில்லை. ஆனால், எண் இலக்கங்கள் உடைய மொழிகள் இன்றும் அரபு, வடமொழி, தமிழ் ஆகியவை மட்டுமே. அரபுமொழி காலத்தால் பிந்தியது. அது வடமொழியிலிருந்தும் பினீஷியரிடமிருந்தும் இலக்கம் எடுத்திருக்கக்கூடும். ஆனால் 9 இலக்கமும் 0-ம் இந்தியாவுக்கே உரியது என அறிகிறோம். இந்தியாவுக்குத் தனிப்பட உரிய அப்பண்பும் தனி இந்திய மொழியாகிய தமிழ்க்கே உரியது என்று கூறத் தேவையில்லை. இது ஏலாவிடினும்கூட, தமிழ்க்குத் தனி இலக்கமுண்டு-அதில் 0 இல்லாவிடினும் பதின் கூற்றுத் தொகைக்குறிப்பு (Decimal notation) உண்டு என்பதும்; இன்றும் எம்மொழியிலும் இல்லாத கீழ்வாய் (fraction) இலக்கம் உண்டு என்பதும் அதன் முதன்மையையும் தனிமையையும் வற்புறுத்தும்.
இலக்கிய இலக்கணம் தமிழில் இந்திய மாநில மொழிகள் எதனையும் விடப் பழமையானது. வடமொழி இலக்கணத்தில் இன்றுமில்லாத பொருட்பால், தொடக்கத்திலில்லாத யாப்பு, அணி தமிழில் தொன்றுதொட்டு உண்டு. இவை மட்டுமல்ல, இன்றும் உலகில் எம்மொழியும் வகுக்காத இசையிலக்கிய இலக்கணம், நாடக இலக்கிய இலக்கணம் தமிழில் வகுக்கப்பட்டிருந்தது. மொழி சார்ந்த கலைகள் மூன்றே - இயல், இசை, நாடகம்-என்ற உண்மை-தமிழர் 3000 ஆண்டுகட்கு முன்னரே அறிந்த உண்மை-உலகிற்கு-உங்களுக்கு இன்னும் புதிதே என்று நீங்களே காணலாம்.
இலக்கியம் கற்பனை, இயற்கை ஆகிய இரு சார்புடையது. இவை பொருட் சார்பு, இதன் வடிவம் கலை வடிவம். ஆகவே இலக்கியத்தைக் கற்பனை இலக்கி யம் (Romantic literature), வாய்மை யிலக்கியம் (Realistic literature) என்று இரு கூறாகவும்; இயற்கையிலக்கியம், கலை இலக்கியம் (Classical literture) என்று இரு கூறாகவும் வகுக்கலாம். கற்பனை இலக்கியமே உலகில் எந்நாட்டிலும் மிகுதி. இதுவும் பெரும்பாலும் செயற்கைக் கற்பனை இலக்கியமே. இதன் வாழ்வே செயற்கைக் கற்பனை, அதாவது மரபு நெறியுடையது. இச்செயற்கை மரபையே தமிழர் புலநெறி வழக்கு என்றனர். தமிழர் புலநெறி வழக்கு நாளாவட்டத்தில் இயற்கைநிலை திரிந்து வரவரச் செயற்கையாகக் கம்பர் காலம் முதல் வாழ்வுடன் இம்மியளவும் தொடற்பற்ற முகில் மண்டலக் கற்பனையாகிவிட்டது. (Ultra Romanticism) உலகம் முழுதும் அணிமைக் காலம்வரை பரந்தது இந்தச் செயற்கைக் கற்பனைகளே -பாரசீக இலக்கியத்தின் கவிதை, மங்கை, தேறல்-இலக்கியக் கற்பனை, ஆறு மலைகள்-பாற்கடல், நெய்க்கடல் ஆகிய ஏழு கடல்கள் -ஹோமரால் சிறு தீவான ஐதாக்கா பெருந்தடந்தீவாகக் காட்டப்படல்-ஷேக்°பியரின் நில இயல், வரலாற்று மயக்கங்கள் திணை மயக்கங்கள்-தாந்தே யின் மூவுலக நாடகம்-கெதயின் மெபி°டாபிலி°-டெனிஸனின் மாய உலகம் இவை யாவற்றையும் கடந்து சங்க இலக்கியத்துக்கு வந்து பாருங்கள்; பின் இதுபோன்ற இலக்கியப் பண்பு எங்கெங்கு உள்ளன என்று காணுங்கள். தற்கால இரஷ்ய, டேனிய, இலக்கியத்தில்-பண்டை கிரேக்க இலக்கியத்தில்-காளிதாசர் கால வடமொழி இலக்கியத்தில்-புத்த சமயகால வடவரிலக்கியத்தில்-பெருங் கதையில்-மட்டுமே இதே பண்பைக் காணலாம். பலபடி குறைந்த அளவிலேனும், இன்று இந்திய இலக்கியத்தில் இதே பண்பு புகுந்து வருவது கண்கூடு. இப் பண்பு யாது?
அரசர் அரசி வாழ்விலிருந்து மக்கள் வாழ்வு.
கற்பனையிலிருந்து இயற்கை.
வானுலகிலிருந்து மண்ணுக்கு.
காணாப் பொருளின் உவமை உருவகத்திலிருந்து.
கண்டபொருளின் உவமை உருவகம்.
சமய நெறியிலிருந்து சமய சமரசம்.
இவை தவிர கற்கண்டெனத் திட்பம் வாய்ந்த கிரேக்க இலக்கியத்தின் கலைப் பண்பை அதனிலும் பேரளவில் சங்க இலக்கியத்தில் காணலாம்.
உலக நாடக இலக்கிய இலக்கண வரலாறு பின்னோக்கிச் சிலப்பதிகார நாடகத்தில் சென்று முடிவது காணலாம். உலக நாகரிகத்தில், நாடக வரலாற்றில் விளங்காத பல புதிர்களைச் சிலப்பதிகாரம் விளக்கும்.
தமிழிலக்கியத்தின் பிற சிறுதிறச் சிறப்புகள் மொழிச்சார்பில் தனித்தமிழ் பேணப்படல், கலைச்சொல் விரிவு; பாடல் சார்பில் தொடர்பாக்கள், எதுகை மோனையற்ற பாக்களின் செல்வாக்கு மிகுதி; ஒழுக்க இலக்கியம், காதல் வீர இலக்கிய முதன்மை; உலா அந்தாதி முதலிய செயற்கை நாடகக் கலைச் சின்னங்கள் ஆகியவற்றைக் கூறலாம். பிற்கால இலக்கியத்திலும் சமயப் பாடல், பக்திப் பாடல் தமிழ்க்கே உலக மொழிகளில் முதன்மை தருவதாகும். திருவாசகம், அப்பர் தேவாரம், நாச்சியார் திருமொழி ஆகியவற்றுக்கு வடமொழியில்கூட ஒப்பிடத்தக்க பாடல்கள் மிகமிகச் சில. பிறமொழிகளோ போட்டிக்கு முன் வரவேமாட்டா.
இத்தனை பரப்பு, முதன்மை, உரம் உடைய மொழி தளர் வானேன்-தளர்ந்து நலிவானேன்?
இதனை ஆராயுமுன் இதன் இன்றைய குறைபாடுகளையும் சுருக்கி முதலில் கூறுவேன்.
தமிழில் உரைநடை பெரும்பாலும் இல்லை. (இன்று ஏற்பட்டு வருகிறது.)
நாடகம் கிட்டத்தட்ட இல்லை. (இன்னும் இதில் கவனம் செலுத்தப் பெறவில்லை.)
அறிவியல் வளர்ச்சி தொடங்கவே இல்லை. கலைச் சொல் லாக்கம் கூட உண்மையான உணர்ச்சியுடன் தொடங்கப் பெறவில்லை.
கதை இல்லை. புனைகதையும் கட்டுரையும் இதழகத் துறையும் மற்றும் இன்றைய வளர்ச்சிகளாகக் காணலாம்.
வரலாறு இல்லை.
இலக்கிய வரலாறு இல்லை.
இலக்கிய ஆராய்ச்சி இல்லை.
கால ஆராய்ச்சி மட்டும் தான் உண்டு.
மொழியாராய்ச்சி தொடங்கி வருகிறது.
இலக்கியமொழி வேறு, பேச்சுமொழி வேறு என்ற நிலை வளர்வது.
தமிழில் ஏன் இக்குறைபாடுகள் வந்தன? இவை இயற்கைக் குறைபாடுகளா?
சிலப்பதிகாரக் காலத்துக்குப் பின் நாடகம் கைவிடப் பட்டது. இதில் ஓர் ‘அதிசயம்’ வடமொழியில் நாடகம் வானுற ஓங்கி வளர்ந்துள்ளது. இருமொழிப் புலவர்கள் இந்தியாவெங்கும் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆண்டுகள் வட மொழியைப் பார்த்துப் பின்பற்றிப் பின்பற்றி இலக்கியம் வகுத்தும் ஒரு நாடகம் கூடத் தமிழிலோ தாய்மொழிகளிலோ எழுத முடியவில்லை-எழுத முயன்ற தாகக்கூடக் காணோம்!
வடமொழியின் சிறப்பில் அணியிலக்கணம் தலை சிறந்தது-தமிழனாகிய தண்டியே அதன் ஒப்பற்ற தலைவன்-முதல்வன். ஆனால், தமிழில் தண்டிக்குப் பின் அது வளர்ச்சியடைவில்லை. தமிழரே அதனை வளர்த்தனர்- ஆனால் வடமொழியில்!
உரைநடை தமிழில் பழைமையுடையது. தமிழ் உரையாசிரியர் இந்தியா முழுவதிலும் உள்ள கவிதை இலக்கிய ஆசிரியரைவிடப் பழைமையானவர். சிலப்பதிகாரமோ பாட்டிடையிட்ட உரையுடைச் செய்யுள். ஆனால், உரைநடை அணிமைவரை ஏனோ இல்லை. ஏட்டில் எழுதும் மரபு இதற்குக் காரணமா? இதே ஏட்டில் இதே தமிழ் நாட்டில் சங்கரர் வடமொழிக்கு உரைநடை வகுத்தனரே. அதற்கும் முற்பட உபநிடதங்கள் உரைநடையிலிருந்தனவே?
வரலாறு கண்ட இலக்கியம்-வரலாற்றுத் தொடர்பும் வாழ்க்கைத் தொடர்பும் உடைய இலக்கியம் தமிழிலக்கியம் ஒன்றே. பதிற்றுப் பத்து ஒரு சேர நாட்டு வரலாறு. இடைக் காலத்திலும் பாட்டில் கல்வெட்டுகள் உண்டு. சோழன் மெய்க்கீர்த்திகள் உண்டு. ஆனால், வரலாறு வளர்க்கப்பட வில்லை. வரலாற்று மரபுகள் இருந்திருத்தல் வேண்டும். புராணங்களாக அவை திரிக்கப்பட்டன. கவிஞர் புகழுரை வரலாறு சமயப் புராண வரலாறாயிற்று. இதற்குச் சிபிச் சோழன், மனுச் சோழன் வரலாறுகள் சான்றாகும்.
மேலும் முத்தமிழ் ஒரு தமிழாயிற்று.
பண்டைத் தமிழக எல்லை தேய்ந்து தேய்ந்து குறுகி வந்துள்ளது.
தமிழ்க்கும் தமிழின அயல் மொழிகளுக்கும் உள்ள அடிப்படை மொழித் தொடர்பு மறக்கப்பட்டும் மறக்கடிக்கப் பட்டும் வந்துள்ளது. அவற்றின் இலக்கிய மரபில் வடமொழி மரபு வளர்ந்து தென்மொழி அல்லது தாய்மொழி மரபு அதாவது தமிழ்த் தொடர்பு குறைந்து வந்துள்ளது-வருகிறது. ஆனால், இதே அளவுக்கு நாட்டுத் தொடர்பு, மக்கள் தொடர்பு, இயற்கைத் தொடர்புகளும் குறைந்துதான் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இவற்றால் தமிழ்ப் பண்பும், தமிழினப் பண்புத் தொடர்பு களும், தமிழர் நாகரிகமும் ஒருங்கே தேய்ந்து வந்துள்ளது காண்கிறோம். எந்நாட்டாராலும் அணிமை வரை ஆளப்படாத தமிழர்-எம் மொழிக்கும் எந்தக் காலத்துக்கும் வளைந்து கொடாத தமிழ்-எவ்விலக்கியத்துக்கும் எக்காலத்திலும் முற்பட்டும் முந்தியும் இருந்த தமிழிலக்கியம் உள்ளுயிர் மாளாவிடினும் ஒளியற்று, பேணுதலற்றுத் தளர்ந்துவந்துள்ளது என்பதில் ஐயமில்லை.
இது ஏன்?
இலக்கியத் தளர்ச்சிக்குரிய காரணங்கள் வரலாற்று மாணவர் விளக்கத்தக்கவையே.
1. சமய நூல்களுக்கு முதன்மை ஏற்பட்டது.
2. சமய வேறுபாடு இலக்கியத்தில் கட்சி வேறுபாடு புகுத்தியது.
3. பிறமொழி உயர்வும் அதன் மொழி பெயர்ப்பும் செல்வாக்கும் பெருகிற்று.
4. அரசர்கள் தமிழைவிடப் பிற மொழி உயர்வில் நம்பிக்கை யுடையவராய், பிற மொழிப்பற்று மிக்கவராயிருந்தனர். பல்லவர், சோழர் நாயக்க மன்னர் காலங்களிலே இது மிகுதியாயிற்று.
5. மொழிப் பற்று வேறு, சமயப் பற்று வேறு, மக்கட் பற்று வேறு என வேறுபாடு விரிவுற்றது.
6. பிற மொழியாளர், நாட்டாளர் ஆட்சிச் சரடு பிடித்து உயர்ந்து, பழந் தமிழர் படிப்படியாக அடிமையாயினர்.
7. வடமொழிச் சொல், இலக்கியப் பண்பு பேணும் முயற்சி.
8. சாதி வேறுபாடு-பிற மொழிக்குரிய உயர் வகுப்பினர் அப்பிற மொழியிலும் தனியுரிமை கொண்டது-கன்னட நாட்டில் சமற்கிருதம் புலமையில் ஒரு குல நீதி இன்றும் அரசியலாராலேயே காட்டப்பட்டு வருகிறது.
9. தமிழின மொழித் தொடர்பு அறுக்கப்பட்டது.
தென்னாட்டின் கலை வாழ்வு
தமிழகம் பல துறைகளிலும் மிக விரைவாக முன்னேறி வருகிறது. தமிழரே அறியாத அளவு முன்னேறுகிறது என்று கூடக் கூறலாம். பல காலமாகப் பல காரணங்களால் அமுக்கப் பட்டுக் கிடந்த தமிழகத்தின் உள்ளாற்றல் படிப்படியாக வெளிப்பட்டு வளர்ச்சிக்குத் தூண்டுதல் தருகின்றது. வளர்ச்சியின் கருநிலை யறிந்து தக்க உரமிட்டு வளர்த்தால், தமிழகம் உலகில் மதிப்புக்குரிய ஓரிடம் பெறும் என்பதில் ஐயமில்லை. அவ்வகையில் தமிழர் செய்தல் வேண்டும் ஆக்க முயற்சிகள் சிலவற்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.
முதலாவது தமிழகத்தின் வாழ்வு நலியத் தொடங்கு முன் இருந்த-நலிவுற்றும் வெளித் தோன்றாமல் மறைந்தும் இருக்கும் பண்புகளை அறிந்து அவற்றை உயிர்ப்பித்தல் வேண்டும்.
இரண்டாவதாக, தமிழகம் எவ்வளவு விரைவாக முன்னேறினாலும் தமிழகத்தை அடுத்துள்ள பிற தென்னாட்டுப் பகுதிகளும் பிற நாடுகளும் இன் னும் விரைவாகப் பல துறைகளில் முன்னேறுகின்றன என்பதை மறுக்க முடியாது. தமிழறிஞர் அவற்றை ஊன்றிக் கவனித்து ஆவன கொண்டு தமிழகத்தை வளப் படுத்துதல் வேண்டும். இவ்வகையில் சிறப்பாகத் தென்னாட்டில் பிறபகுதி களையும் மேனாடுகளையும் கூறுதல் வேண்டும். தென்னாட்டில் பிறபகுதிகளில் தமிழகத்தில் நலிவுற்ற சில துறைகள் நலிந்தொழியாதும் வளர்ந்தும் வருகின்றன. மேனாடுகளில் அறிவியல், பொறியியல் துறைகளில் எட்டிப் பிடிக்கமுடியாத முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
மூன்றாவதாகத் தமிழர் தம் தனித் தன்மை (Individuality) யையும் தற்புதுமையையும் (Originality) வளர்த்தல் வேண்டும். வெளிநாடுகள் வழி காட்டி யாகவும் தூண்டுதலாகவும் இருக்க முடிமேயன்றி வேறல்ல. அவற்றைப் பின்பற்றி மட்டும் செல்வதால் உண்மை வளர்ச்சியும் ஏற்படாது. தேசிய மதிப்பும் அதனால் பெருகாது.
கலைத்துறையில் தமிழர் மறைந்த பண்பாடுகள்-இன்று பலர் மறந் திருக்கும் பண்பாடுகள் பல. கிராம வாழ்வும் உழவும் எளிய வாழ்வுமே கீழ் நாட்டுக்குரிய பண்பாடுகள் என்று பலரால் இலேசாகக் கூறப்பட்டு வருகிறது. இதனைப் போற்றுதலாகக் கொள்பவரும் உண்டு; புறக்கணிப்பாகக் கொள்பவரும் உண்டு. ஆனால், சங்க இலக்கியத்தை ஒரு சிறிது புரட்டினாலும் கூடத் தமிழர் நகர வாழ்விலும், வாணிக - கைத்தொழில் வளர்ச்சியிலும், கடற்படை, கல்வி ஆகியவற்றிலும், ஆட்சி முறையிலும் உயர் வாழ்க்கைத் தரத்திலும் மேம்பட் டிருந்தனர் என்று காணலாம். நறுமணப்பொடி (Face Powder), வண்ணக் குழம்புகள் (Paints &lipsticks), நல்லாடை, துணிமணிகள் ஆகியவற்றில் சங்க காலத் தமிழன் அறிந்த வகைகள் தொகைகள் இன்றைய அமெரிக்க மேனாட்டின ரையும் நாணச் செய்யும். திட்டமிட்ட நகரமைப்பு முறை மொகெஞ் சதாரோ காலத்திலிருந்து அணிமை வரை தமிழர் மரபாயுள்ளது. கிராம வாழ்க்கையில் கவிஞர் அமைதியைக் காணலாம். உழவில் ஒழுக்க நூலார் உயர்வு காணலாம். ஆயினும் கலைகள், அறிவியல்கள் பெருகுவது நகர்களிலேயே, தமிழர் நாகரிகம் மருதநிலப் பேரூர்களிலும் நெய்தல் நிலப் பட்டினங்களிலும் வளர்ந்ததேயாகும்.
மனித நாகரிகம் குறிஞ்சி (மலை) நிலத்தில் தோன்றி, முல்லையில் (காட்டில்) படர்ந்து மருதம், நெய்தல் (ஆற்றுப் பாங்கு கடற்கரை) களில் முதிர்ந்தது. உலகில் ஏனைய மக்கள் குறிஞ்சியளவில், முல்லையளவில், அணிமை வரை நின்றனர். தமிழர் பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்பே மருத, நெய்தல் நாகரிகம் அடைந்திருந்தனர். துறைமுக நகர்களுக்குப் பட்டினம் என அவர்கள் பெயரிட்டது ஒன்றே இதனைக் காட்டும்.
2000 ஆண்டுகட்கு முன் இயல், இசை, நாடகம் என முத்திறம் வளர்த்த நாடு தமிழகம் ஒன்றே. அவற்றைக் கட்டமைத்துப் பேணக் கழகம் அமைத்த பண்பு வேறு எந்நாட்டிலும் இல்லை. ஆயினும், இடையில் (ஆரிய புராணக் காலத்தில்) இசை நலிந்துவிட்டது. நாடகம் நடைபெற்ற தடத்தையே காணோம். சிலப்பதிகார நூல், அதன் உரை ஆகியவற்றிலிருந்து பண்டை வளங்களை மட்டும் அறிகிறோம்.
பா, பாவினம் என்று தமிழில் இருவகைப் பாட்டுகள் இருந்தன. இவற்றுள் பாக்களுக்கு மட்டுமே இயல் துறை இலக்கணம் உண்டு. அதிலும் வஞ்சி கலிப்பாக்களுக்கு விளக்கமான இலக்கணமில்லை. இவையும் பாவினங்களும் இசை நாடகங்களையே பெரிதும் சார்ந்தவை. இப்பாவினங்களும் நாடகமும் இன்று மலையாள நாட்டில் எப்படியோ இறவாது நிற்பதுடன், நாடக மரபு புது வளர்ச்சி பெற்று உலகப் புகழ் கண்டுள்ளது. ஆனால், சிலப்பதிகாரமே ஒரு நாடகம் என்றும், மலையாளிகளின் சாக்கையர் கூத்தாக அது நடிக்கப்படவே அமைந்த தென்றும் தமிழர் அறியாதிருக்கின்றனர். மலையாளத்தின் நாட்டுப் பாடல்களும், நாடகமும் தமிழறிஞரால் சிலப்பதிகார முன்மாதிரியுடன் தழுவியாக்கப்படு மானால், தமிழகம் மேம்படுவதுடன் அவற்றால் மலையாள நாட்டுக்கும் புத்தாக்கம் ஏற்படும்.
தென்னாடு, வடநாடு ஆகியவற்றின் கலைகளையும், கிரேக்க நாடு மேலை நாடு ஆகியவற்றின் கலைப் பண்புகளையும் கண்டுணர்ந்து தமிழர் தமிழின் எதிர்கால வளர்ச்சியில் முனைதல் வேண்டும். அரசியல் காரணமாக ஏதோ ஒரு இந்திய மொழியையும், ஏதோ ஓர் மேனாட்டு மொழியையும் கற்பதுடன் தமிழர் அமையாமல் பரந்த மொழியறிவுடன் உலகக் கலை, உலக அறிவு ஆகியவற்றுடன் இணையும்படி பலதிற மொழிகளும் பயிலுதல் வேண்டும்.
தென்னாடும் சரி, வடநாடும் சரி, நெடுங்காலமாகப் பாரத, இராமாயணப் புராணங்களிலும் வாழ்க்கைத் தொடர்பற்ற கலைச் சுவையற்ற கண்கட்டுக் கற்பனைகளிலும் உழல்கின்றன. வடமொழி இலக்கியங்கள் பெரும்பாலும் இவ்வடிமைப் பண்பிலேயே நின்றுள்ளன. தமிழர்களுக்குப் பண்டைத் தமிழகச் சங்க இலக்கியமும் மேனாட்டிலக்கியமும் நல்ல வழிகாட்டி களாகும். ஆனால், இவற்றைக்கூடக் குருட்டுத்தனமாகப் பின்பற்ற வேண்டுவதில்லை. அவற்றின் அடிப்படையில் புத்துரு ஆக்கலே சால்புடையது.
நாடகத்தைவிடப் படக்காட்சி, பேசும் படம் உயிர்ப் பண்பு நிறைந்தது. அத்துடன் நாடகத் துறையைவிட இவை நிலையான பயனுடையவை. மக்கள் அறிவு வளர்ச்சி, கல்வி ஆகிவற்றுக்குப் படக்காட்சியை ஒத்த நல்ல கருவி வேறில்லை. ஆனால், அதில் கலைப் பண்பு இன்னும் ஏற்படவில்லை. வாழ்க்கைத் தொடர்போ மருந்துக்கு மில்லை. புராணப் படங்கள் புராணங்களைக்கூடக் கெடுத்துவிடத் தக்கவையாயுள்ளன. அண்மையில் இவ்வகையில் தனிப்பட்ட ஒரு சிலர் முயற்சியால் முன்னேற்றம் ஏற்பட்டுப் பட்டினத்தார், சிட்டாடல் ஞான சௌந் தரி முதலிய படங்கள் தோன்றியுள்ளனவாயினும் வாணிகக் கலைஞர், போலிச் சமயவாதிகள் ஆகியவர்களின் ஆதிக்கம் கலையுலகில் இன்னும் விட்டபாடில்லை. பாரதி பாடல்போலவே தமிழிலக்கியத்தின் பிற பாடல்களும் உணர்ச்சியுடன் புது மெட்டுக்களோடிணைந்து கலையில் இடம் பெறுதல் வேண்டும். பழைமையே புதுமைக்கு உரம் என்னும் உண்மையைத் தமிழர் மறக்கவிடக்கூடாது.
என்.எ°.கேயின் ‘கிந்தனார்’ நாடகக் களத்தில் ஒரு புதுத்துறை, இதுபோன்ற புதுத்துறைகளை மக்கள் ஆதரித்தல் வேண்டும். கலைப் பண்பை மறந்து வேறு சில வசதிகளையும் சோம்பல் வாழ்வையும் எண்ணி மக்கள் தவறான படங்களை ஆதரிக்காதவாறு கலைஞர், அறிஞர் அவர்கட்கு வழி காட்டுதல் வேண்டும்.
முத்தமிழும் முறையாக விரவிய நாடகம், படக் காட்சி தமிழகத்துக்கு மறுமலர்ச்சியும் உலகுக்குப் புதுமையும் தரும்.
கலைத் துறையில் கூடிய மட்டும் தனித் தமிழ் பேணலின் இன்றியமை யாமை இன்று நன்கு உணரப்படவில்லை. தமிழ் இன்று சற்று நலிந்திருப்பினும் உலகின் மற்றெல்லா மொழி களையும்விட நுட்பமான சிறப்புகள், உள்ளார்ந்த வளர்ச்சி வித்துகள் அதில் மிகுதி உண்டு. மொழியிலும் தேசியம் பேணித் தேசியத் தமிழாகிய தனித்தமிழ் வளர்த்தால் தமிழகத்தில் இன்று கனவில் கூடக் காணமுடியாத புது வளர்ச்சி ஏற்படுவது உறுதி.
தமிழியக்கமும், தமிழர் சமய வாழ்வும்
‘உலகின் மிகப் பழைய நாகரிகம் தமிழக நாகரிகமே; தொன்மை மிக்க மொழி தமிழே; சமயம், கலை, அறிவியல் ஆகியவற்றில் உலகுக்கு வழிகாட்டியாய் நின்றதும், நெடுநாள் உலகில் தலைமை வகித்து நின்றதும் தமிழகமே’ என்று தமிழர் தொன்று தொட்டு நம்பி வந்திருக்கின்றனர்.
பிற நாட்டாராய்ச்சியாளர் இதனைத் தாய்மொழிப் பற்றுக் காரணமான புகழ்ச்சி என்று புறக்கணித்தல் இயல்பே. புறக்கணித்தும் வந்துள்ளனர். இன்றும் ஆராய்ச்சியாளர் இப் புகழுரையை அப்படியே ஏற்கின்றனர் என்று கூற முடியாது. ஆனால், ஆராய்ச்சிகளால் ஏற்படும் உண்மை வெளிப்பாட்டின் போக்குத் தமிழரின் இப் பெருமையை ஆதரிக்கும் முறையிலேயே சென்று கொண் டிருக்கிறது.
தாயன்பு காரணமாகத் தமிழர் கூறும் இப் புகழுரைகளை வருங்காலத்தில் தாய்ப் பண்பு பற்றிய அறிவு காரணமாகத் தமிழர் கொள்ளக் கூடும்.
ஆராய்ச்சியின் இப் போக்குக் கண்டு தமிழர் எழுச்சியும் மகிழ்ச்சியும் கொண்டால் அது இயல்பேயன்றி வேறன்று. அது மட்டுமன்று, மலையாளிகள், தெலுங்கர், கன்னடர், துளுவர் முதலியவர்கள் நாடுகள் தமிழகத்தை அடுத்துள்ளவை. அவர்கள் மொழிகள் தமிழுடன் பிறந்த மொழிகள் என்று கூறப் படுகின்றன. அவர்களும் இப் பெருமையில் பங்கு கொள்ளத்தானே செய்வர்!
இந்தியா ஒரு ‘நாடு’ என்று பலரும் கொள்கின்றனர். தமிழ்நாடு இந்திய மாநிலத்தின் ஓர் உறுப்புத்தானே! உறுப்பின் பெருமை உடலின் பெருமை ஆகாதா? ஆகவே இந்தியரும் இதில் பெருமை கொண்டால் வியப்பில்லை. மலையாள நாட்டில் பிறந்த சங்கராச்சாரியையும், தமிழ் நாட்டில் பிறந்த இராமானுஜாச் சாரியையும், கன்னடத்தில் பிறந்த மத்துவாச்சாரியையும், வங்கத்தில் பிறந்த சைதன்னியரையும் இந்தியா முழுவதுமே வேற்றுமையின்றிப் போற்றவில்லையா?
ஆனால், தமிழைப் பற்றி மட்டில் இப்பரந்த மனப்பான்மை எங்கோ ஒளிந்தது. மேன்மேலும் ஒளிந்துகொண்டே வருகிறது.
தமிழ் நாட்டின் திருவள்ளுவர்-அவரைவிட உயர்ந்த ஒழுக்க நூலாசிரியர் பிற இந்திய மொழிகளில் மட்டுமல்ல, வடமொழியில் மட்டுமல்ல, உலகில் எந்த மொழியிலுமே, எக்காலத்திலுமே, இருந்ததில்லை, ஒரு வேளை இருக்கப் போவதுமில்லை என்பதை எல்லாரும் ஒத்துக்கொள்கின்றனர். ஆனால், காசியிலும், கள்ளிக் கோட்டையிலும், பூனாவிலும், விசாகப்பட்டினத்திலும் முழங்கும் நூல் அதுவா? நேர்மாறாகக் கீதையும் ஒரு நூல், அதனை ‘அங்கிங் கெனாதபடி எங்கும்’-தமிழகத்திலேயும் காவிரிக்கரை, வைகைக்கரை, தாமிர வருணிக்கரை எங்கும் தவறாமல் ‘பாராயணம்’ செய்வதைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும்!
வள்ளுவர் நூலின் ஒழுக்கம் அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், சங்க இலக்கியங்கள், நாடகக் காவியமான சிலம்புச் செல்வம், கற்பனைக் களஞ்சியமான சிந்தாமணி, பக்திப் பாசுரங்களான தேவார, திருவாசகங்கள். வைணவப் பாசுரங்களான திருவாய்மொழி முதலிய நாலாயிரந் தமிழ், பக்திக் காவியங்களான பெரியபுராணம் கம்பராமாயணம் இவை கங்கைக் கரையிலும் கோதாவரிக் கரையிலும் பேசப்படவாவது செய்வதுண்டா?
இவையெல்லாம் பழைமையுடையவை யல்லபோலும்! அதனால்தான் பிறமொழியாளர் போற்றவில்லை என்றால் ஓரளவு மனஅமைதி யடையலாம்.
இறந்த இலக்கியம் போக இன்றிருக்கும் தமிழிலக்கியத்தில் பெரும் பகுதி வடமொழியில் இலக்கியமே ஏற்படாத காலத்தைச் சேர்ந்தது. சங்க இலக்கியம் (அதுவும் கடைச்சங்க இலக்கியம் மட்டும்தான்) அளவிலும் பண்பிலும் உலகின் ஒரு தனி இலக்கியத்துக்கு ஒப்பானது. அது அத்தனையும் வடமொழியின் முதற் பெருங் கவிஞன் காளிதாசன் காலத்துக்கு முந்தியது.
தமிழின் பல நூல்கள் வடமொழி பிறப்பதற்கே முந்திய நூல்களா யிருக்கக் கூடும்!
தமிழ் நாட்டார் தம் தற்பெருமையால் அண்டை அயலிலுள்ள தெலுங்கர், மலையாளிகள் ஆகியவரைப் பகைத்துத் தம் பெருமையைக் குறைத் திருக்கலாமா?
ஒருவேளை இருக்கலாம் என்று நாம் நினைக்க இடமுண்டு. தமிழருக்குக்கூடத் தம் மொழியைத் தாழ்த்திப் பேசினால் அவ்வப்போது சினம் ஏற்படுகிறதே! அவர்களுக்கு ஏற்படாதா?
18ஆம் நூற்றாண்டுவரை, திருவாங்கூர், கொச்சி, கள்ளிக்கோட்டை ஆகிய இடங்களின் அரசர் அரசியல் மொழி தமிழ். மலையாள நாட்டில் கம்ப ராமாயணம் அணிமைவரை-இன்றும் நாடகமாக நடிக்கப்பட்டு வருகிறது. சிலப் பதிகாரம் மலையாளிகளால் தம் நாட்டுப் பழைய இலக்கியமாகப் போற்றப் படுகிறது. பழைய மலையாள நூல்கள் தமிழ் எழுத்தில், அதாவது வட மொழிச் சிறப்பெழுத்துகள் விலக்கி, தமிழ்ச் சொல் பண்பு பிழையாமல் எழுதப்பட்டுள்ளன.
தெலுங்கில் நாச்சியார் திருப்பாவை எழுத்தெழுத்தாய் ஓதி உரை விளக்கப் படுகிறது. காசி கேதாரம் வரை வைணவக் கோவில்களில் பாடப்படுகிறது. பல நாயன்மார்கள் கதைகள் சேக்கிழாருக்கு முன்பே தெலுங்கில் எழுதப்பட்டன. ஆண்டாள் சரிதை விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயராலே தெலுங்கில் காவிய மாக எழுதப்பட்டது. பழைய மலையாள, சிங்கள, இராமாயண பாரதங்கள் வட மொழியிலிருந்து மொழி பெயர்க்கப்படவில்லை. தமிழிலிருந்தே மொழி பெயர்க் கப்பட்டன. சிங்களத்தில் 5ஆம் நூற்றாண்டிலேயே (காளிதாசன் காலத்திலேயே) சிலப்பதிகாரம் மொழி பெயர்க்கப்பட்டது!
சங்கராச்சாரியர் (8ஆம் நூற்றாண்டில்) தம் வட மொழி நாவாரச் சம்பந்தர், கண்ணப்பர், சாக்கியர் ஆகிய மூன்று நாயன்மார்களையும் வணங்கியிருக்கிறார். பெரிய புராணமும் திருவிளையாடற் புராணமும் சிவஞான போதமும் மட்டுமேனும் தமிழிலிருந்து வடமொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
தமிழர் பெருமையை ஏற்று எல்லா நாட்டினருமே கடன் பெறத் தயங்கிய தில்லை. ஆனால், இக் கடன்கள் மறக்கப்பட்டன, இன்றும் மறைக்கப்படுகின்றன ஏன்?
வடமொழி தெய்வமொழி அல்லது தற்கால முறையில் சொல்லப் போனால் சமயமொழி. அதனாலே தமிழ் மொழியின் சிறப்புப் பேணாது வடமொழிக்கு எல்லா நாட்டவரும் வணங்கினர் என்று கூறப்படக் கூடும்.
வடமொழியில் வேதம், பிராமணம், உபநிடதம், பாரத ராமாயணம், கீதை, சுமிருதிகள், வேத அங்கங்கள் ஆகியவை உண்டு. இவை இந்துகளின் சமய நூல்கள். இவை வடமொழியில்தானே உள்ளன?
ஆம்; ஆனால், வடமொழி வேதத்தில் கண்ட சமயம் இந்து மதமா? இல்லை. இந்துகள் பெரும்பாலாக வணங்கும் சிவன், திருமால் பெயர்கள்கூட அங்கு மருந்துக்கும் கிடையாது. பிற்காலத்தில சைவரும் வைணவரும், அதில் சொல்லப்பட்ட உருத்திரரையும் சூரியரையும் சிவ விஷ்ணுக்களாகக் கொண்டு மனமமைந்தனர். இந்துகளின் பிறப்பிறப்புக் கொள்கை, ஆ பேணல் முதலிய பழக்க வழக்கங்கள் எதுவும் அதிலில்லை. இவையெல்லாம் வடமொழிச் சமய நூல்களில் படிப்படியாகவே காணப்படுகின்றன. இன்றைய இந்து மதத் தத்துவங்களை ஒருங்கே காண வேண்டினால் ஓரளவு இராமாயணத்துக்கும், மகா பாரதத்துக்கும் வருதல்வேண்டும். இவையும் அவ்வப்போது எழுதிச் சேர்க்கப்பட்ட பகுதிகளே.
ஆனால், தற்கால இந்து மதத்தில் இடைக் காலத்தில் எழுந்த கறைகளான சாதி வேறுபாடு, தீண்டாமை, முதலிய நீங்கலாக எல்லா அடிப்படைப் பண்புகளையுமே தமிழிலக்கியத் தொடக்கக்கால நூல்களிலிருந்து காணலாம். இங்கும் வளர்ச்சி இல்லாமலில்லை. ஆனால், இங்குள்ள வளர்ச்சி உருவளர்ச்சி, உறுப்பு வளர்ச்சியல்ல. தொடக்கத்தில் (பரிபாடல்) சிறுபிள்ளையாகக் காணப்படும் கருத்துகள் நாலாயிரத்திலும், தேவாரத்திலும், மெய்யறிவு நூல்கள் பதினான்கிலும் பருவ மங்கையாகக் காட்சியளிக்கின்றன. வடமொழியிலோ முதலில் ஒருகால், பின் ஒரு கை, பின் வயிறு, தோள் என்றே வளர்ச்சி காணப்படும். காரணம் வட மொழியில் இச்சமய வளர்ச்சி கடன் வாங்கிய வளர்ச்சி, தமிழில் வாழ்வில் மலர்ந்த வளர்ச்சி என்பதேயாகும்.
இந்திய சமய வாழ்வின் அடிப்படைக் கருத்துகள் யாவும் திராவிடச் சார்பானதே என்பதை மோகெஞ்சதாரோ ஆராய்ச்சியாளர் எடுத்துரைக் கின்றனர். அங்கே இந்திய சமயத்தின் கருநிலை காணப்படுகிறது.
வடமொழி தேவமொழி என்ற கருத்து, கம்பர் காலத்துக்குமுன் தமிழிலும் இல்லை. வடமொழியிலுமில்லை.
கம்பர் காலத்தில் வடமொழி இலக்கியத்திலும் தமிழிலக்கியம் பரந்ததா யிருந்திருத்தல் வேண்டும். இடைச் சங்க, தலைச்சங்க நூல்கள் அவர் காலத்தில் அழியவில்லை என்று தமிழுரையாசிரியர் கூற்றுகளால் அறியலாம்.
இந்து மதம் சிவநெறியும், திருமால் நெறியும் சேர்ந்த முழுநெறி என்று மக்கள் எண்ணுகிறார்கள். சிவ நெறி நூல் முற்றிலும் தமிழிலேயும் மீந்தவை சில கன்னடத்திலும்தா னிருக்கின்றன. திருமால் நெறி நூல்களோ தமிழில் மட்டுமே உண்டு. வடஇந்திய வைணவ இயக்கம் ஆழ்வார்களைப் பின்பற்றிய இராமானுசர் சீடரின் சீடர் வழிமரபால் வந்ததே.
இங்ஙனம் சமய முறையிலும் தமிழே முதன்மை வகிக்க வேண்டியிருக்க, அதற்கு இரண்டாமிடமும் மூன்றாமிடமும் பத்தாமிடமும் மறுக்கப்படுவானேன்? தமிழர்கள் எண்ணிப் பார்த்தல் வேண்டும்?
தமிழில் அன்புகொண்ட தமிழர்கள் மனத்தில் மேற்கூறிய கொதிப்புகள் 2000 ஆண்டுகளாக எழுந்திருத்தல் வேண்டும். பல தடவை தமிழர் ஏமாந்தனர், தவறினர். ஆனால், எல்லாரும் தவறவில்லை. நல்ல காலமாக இன்று தமிழர் குறைகூறும் அளவு தமிழ்ப் பண்பில் நழுவிய கவிஞர்கள்கூடப் பல இடங்களிலும், தலைமறைந்து எழுந்த வடமொழியலையை எதிர்த்து ஆங்காங்கே தமிழ்ப்பண்பு பேணியிருக்கின்றனர். சேக்கிழார், கம்பர், ஆழ்வார்கள் பாடலுக்கு உரையெழுதிய பெரியவாச்சான் பிள்ளை ஆகியோர் சமயங் காரணமாக ஆயிரந் தடவை தமிழுக்கு மாறுசெய்தும் ஆங்காங்குக் குத்தும் கத்தியைத் தாக்கும் புழுப்போலப் பகைப்பண்பை எதிர்த்துத் தாக்கி யிருக்கின்றனர். அவர்கள் இன்று பிறந்திருந்தால் தம் நூலைத் தாமே பாழ்நூல் என்று கூறியிருப்பர்!
தமிழர் போற்றும் மாநிலம், தமிழர் பின்பற்றும் மொழி, தமிழர் மேற்கொண்ட சமயம், தமிழரிடைத் தவழ்ந்துவந்த மாயப் பழக்க வழக்கங்கள் யாவும் தமிழர்க்கு ஊறு தருவதையும்; தமிழரிடையே தமிழாராய்ச்சி விட்டதாகக் காணப்படும் சிலர் உணர்ச்சியால் தமிழரல்லாதாராயிருப்பதும் கண்டு, தமிழுக்கு முதலிடம் என்ற கிளர்ச்சியையும், தமிழர்க்கே தமிழகம் என்ற கிளர்ச்சியையும், அறிவும் உணர்ச்சியும் வீரமும் மிக்க தமிழர் தோற்றுவித்தனர்.
இவ்வியக்கம் மிகப் பழந்தமிழ்க் கொள்கையையும், பண்பாட்டையும் மீண்டும் ஏற்படுத்த முயல்வது, பழைமைப் பற்றால் அன்று. அப்பழைமையில் கலந்துள்ள பெருமை நோக்கியும், அதில் அமைந்த தமிழர் உயிர் நிலைத் துடிப்பையும் ஊக்கத்தையும் கண்டுமேயாகும். அது புதுப் புரட்சி வேகத்துடன் எழுந்து கருத்து வேற்றுமைகள், சமய வேற்றுமைகள், கட்சி வேற்றுமைகள் ஆகிய எல்லாக் கரைகளையும் உடைத்துப் பெருவெள்ளமாகப் பொங்கிவருகிறது. அதனைத் தடைப்படுத்த யாராலும்-இவ்வீரத் தமிழரால்கூட இனி ஆகாது.
தமிழர் மொழியை அவர்கள் செம்மைப்படுத்த எண்ணினர். எதிர்ப்பு இருந்தது. தமிழகஞ் சார்ந்த அயல் நாடுகள் இத்தகைய எதிர்ப்புகளால் குலைந்தே தமிழ்ப் பண்பினின்று நழுவின என்பதை அம்மொழியின் வரலாறுகள் காட்டுகின்றன. ஆனால், தமிழின் நல்ல காலம்; மொழி செப்பமுற்றே வருகிறது. தமிழர் கண் குளிர, எதிர்ப்பவர் கண்ணீர் உண்ணீராக ஒடுங்கத் தழைத்தே வருகிறது.
தமிழர்க்குத் தமிழியக்கத்தார் அரசியல் விழிப்பையும் எழுச்சியையும் ஊட்டினர். எதிர்ப்பு மிகுந்தது. பிளவுகள் மலிந்தன. ஆனால், இங்கும் தமிழன்னை அருளால் தமிழ் மக்கள் உள்ளூர ஒற்றுமையடைந்து வருகிறார்கள்.
சமயத் துறையிலே தமிழியக்கம் தலையெடுத்தது. ’நம்மை வளர்த்த மொழியை நாம் செப்பம் செய்தோம்; நாம் வளர்த்த அரசியலை அடிமை நிலையி லும் செப்பம் செய்து வருகிறோம். நாமே படைத்து வளர்த்த நம் சமயத்தையும் இனிச் செப்பம் செய்வோம் என்றெழுந்தனர் வீரத்தமிழ் மரபினர்.
மொழிக் கோட்டை மண் கோட்டை; அதில் பகைவர் பதுங்க இடமில்லை. அரசியல் கோட்டை முள் கோட்டை. அதில் வீரத்தமிழன் கால் கிழிய நடந்தான். பகைவர் முள் மேல் கால் வைக்க அஞ்சி வழிவிட்டு வருகின்றனர். ஆனால், சமயக்கோட்டை மதிலும், ஞாயிலும், சுரங்க அறைகளும் உடையது. கோட்டை யினுள் இருப்பவர்க்கு மாறா வெற்றி தரும்படி அமைந்தது. ஆயின். அந்தோ இன்று கோட்டைக்குரியவர் உள்ளிருக்க வில்லை. நண்பர் சிலரை நம்பிப் பாதுகாக்க விட்டு விட்டு வெளித் தங்கியுள்ளனர். கோட்டை மதில்கள் போலி நண்பர் எறிபடைகள் வீசும் இடமாயின. சுரங்கங்கள் படைக்கலங்கள் அவர்கள் கையில்! கோட்டையின் கொடிகள்கூட இன்று அவர்கள் கொடிகள்! தமிழியக்கத் தார் இம்முறையில் போராட வேண்டியிருக்கிறது.
தமிழியக்கத்தார் தமிழர் சமய வாழ்வைச் செப்பம் செய்ய முயன்று சோர்வுற்று வருகின்றனர். தம் கோட்டை தம் எதிரி வசமானால் அதை அழிக்கத் தானே வேண்டும் என்கின்றனர் சில இனமறவர். ஆனால், ஆண்டு முதிர்ந்த சிலர், அந்தோ நம் பிள்ளைகள், நம் மாதர் கோட்டையினுள் உள்ளனரே. அவரைக் கருதியேனும் அழிவு தவிர்த்தல் வேண்டுமே என்று கவல்கின்றனர்.
தமிழர் சமயம் மாசேறியுள்ளது. கழுவினால் மாசு போகும். ஆனால், கழுவும் நிலை கடந்துவிட்டது. மாசு படிப்படியாய் ஏறி உடலில் நோய்ப் புழு மலிந்து விட்டது. நோய் தோல் கடந்து, தசை கடந்து, குருதியில் பரவி, எலும்பில் தோய்ந்து விட்டது. பல உறுப்புகள் புற்றேறின. நேரத்தில் கழுவாதவற்றை ஊசியிட்டு மாற்றி யிருக்கலாம்; காலத்தில் ஊசியிடாதவற்றை அறுவைசெய்து மாற்றி யிருக்கலாம். இப்போது ஒன்றிரண்டு உறுப்பேனும் அறுத்தெறியப்படுதல் வேண்டும் நிலையி லிருக்கிறது. உறுப்பை அறுத்தெறிவதா? என்று ஆர அமர்ந்து செல்வர் தயங்கி னால், போவது இனி உறுப்பன்று, உயிர்ப்புத்தான்.
தமிழர் சமயத்தின் மாசா? எது மாசு, எது உடல்?
தமிழியக்கத்தார் தமிழர் சமயம் எது என்று காணும் வகையில் ஒற்றுமைப் படவில்லை. ஒற்றுமைப் படவும் முடியாது. தமிழர் சமயம் எது என்று கண்டு அதனை ஆக்கும் வேலை வேண்டுவதில்லை. தமிழர் சமயத்தில் ஆவன கொண்டு அல்லன நீக்கி அவரவர் முயன்றால் போதும்!
ஆயின் ஆவன கொள்ள யாரும் தடைசெய்யவில்லை. ’உனக்கு முருகனா வேண்டும்! யார் தடுக்கிறார்கள்? காளியா வேண்டும்! யார் தடுக்கிறார்கள்? இவ்வாக்க வேலைக்கு விளம்பரம் போதும்; போர் வேண்டுவதில்லை.
ஆயின்; அல்லன விலக்குதல் அப்படியல்ல. ஒருவனுக்கு ஆவது, அடுத்த வனுக்கு ஆனாலும், ஆகாவிட்டாலும் கெடுதலில்லை. ஆயின், அல்லன வற்றை நீக்குதல் வேண்டுமானால் அனைவரும் நீக்குதல் வேண்டும்.
வீட்டுக்கு ஒரு மாடி, இரு மாடி, ஏழு மாடி வைப்பதால் அயலானுக்குக் கேடில்லை. ஆனால், இடிந்து விழும்படி கட்டினால்?
எது சமயம் என்பதில், தமிழரிடையே, தமிழியக்கத் தாரிடையேகூட ஒற்றுமையில்லை. சிவம் தமிழ் என்பார் ஒருவர், அன்றென்பார் மற்றொருவர். ஆனால், இது தாவில்லை (கேடில்லை)! எது தமிழர் சமயம் அன்று என்பதில் தமிழறிஞர் எல்லாருமே ஒற்றுமைப்பட்டுள்ளனர். கீழ்க்காணும் செய்திகளில் முதல் நான்கு தமிழர் (கிறி°வர் முகம்மதியர் உள்பட) யாவரும் ஒப்புக் கொள்ளத் தக்கவை. மற்ற இரண்டு உணர்ச்சி மேலீடுள்ள சிலர் (நல்லெண்ணத் துடனேயே) மறுக்கக் கூடியவையாகலாம்.
1. தமிழரிடையே பிறப்பினால் உயர்வு தாழ்வு கிடையாது.
உயர்வு தாழ்வுகள் இயற்கையாய் ஏற்படுவதுண்டு. இயற்கையாகவும் முயற்சியாலும் அவை போகும். ஆனால், இன்று தமிழரிடையே ஏற்பட்டுள்ள உயர்வு, இவர்கள் இன்றைய சிவன் கோவில், பெருமாள் கோவில் தாழ்வு முற்றி லும் இயற்கையானது என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அது இயற்கையாய் அழிவதையும் முயற்சியால் அழிக்கப்படுவதையும் எதிர்ப்பவர்கள் இருக்கிறார்கள்.
2. தமிழரிடையே இன்று ஏற்பட்டிருக்கும் உயர்வு தாழ்வு தமிழரில் ஒரு சாராரே ஏற்படுத்திய உயர்வு தாழ்வல்ல. ஏனெனில், தமிழ்ப் பண்பு குறைந்து அடிமைத் தன்மை மிகுந்தோறும் உயர்வு தரப்படுகிறது. தமிழ்ப் பண்பு மிகுந்தோறும் அடிமை உணர்ச்சி குறையும் தோறும் தாழ்வு ஏற்படுகிறது.
தமிழ் நாட்டுப் பழம் பாணர் குடியே வீரரைப் பாடாமல் கடவுளைப் பாடி அவர் பெயராகிய திரையில் மறைவிலிருந்து வாழும் நச்சரவை அண்டித் தேவரடியாளாய் தேவடியாள் குடியாயிற்று. பக்தருக்கு மறுபதமான தேவரடியார், தாசர் என்பவற்றின் பெண்பாலே தேவடியாள் தாசி என்றாகியிருப்பதும்; தமிழ் நாட்டிலும் சரி, இந்திய மாநிலத்தின் வேறெந்த நாட்டிலும் சரி, பக்த வகுப்பாரன்றி மற்றவர்கள் ‘தாசர்’ என்று பெயர் கூட வைத்ததில்லை என்பதும் காண்க.
அரசர்க்கு அமைச்சராயிருந்த வள்ளுவர் குடியே-தெய்வப் புலமைத் திருவள்ளுவர் பிறந்த திருக்குடியே-இன்றைய பறையர் குடி; அவர்கள் இன்று தீண்டப்படாதவர்.
இன்னும் இதுபோல் பிற ஆய்ந்துணரலாம்.
3. தொழிலால் ஏற்பட்ட நால் வகுப்பான அந்தணர், அரசர். வணிகர், வேளாளர் என்பவருள் நால்வரும் பிறப்பால் ஒரே வகுப்பினரே. வேளாளர் என்ற சொல்லின் வேராகிய ‘வேள்’ கடவுளையும், போர்ப்படையையும், உழுபடையையும், குறித்தலால், வேள்வி வழிபாட்டையும், வேளாளர் அந்தணரையும் வேளிர் அரசரையும், வேளாளர் வணிகரையும், உழவரையும் உணர்த்தும் சொல்லாகின்றது.
வேளாளரே சமயத்தீக்கைபெற்று அந்தணராவர். போர் வெற்றியால் அரச மரபினர் ஆவர். தொழிலால் வணிகரும் உழவரும் ஆவர். எனவேதான் வேளாளர் உயர்வாகக் கூறப்பட்டனர். இது பிறப்பாலன்று. தொழிலால். (இன்று வேளாள ரிடையே செல்வ நிலையிலுள்ளார் நான்காம் வகுப்பினராகவும் உழுது வாழ்பவர் ஐந்தாம் வகுப்பினராகவும் ஆகியிருத்தல் கவனிக்கத்தக்கது.)
4. துறவோர், அந்தணர் என்பவர்கள் தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர். (பிறப்பொட்டிய எவ்வகுப்பினரும் அல்லர்; அதிலும் கொலை வேள்வி செய்தலை ஆதரித்துச் சாதி வேற்றுமையை அறமாகவும் சமய அடிப்படைக் கொள்கையாகவும் கொண்ட வகுப்பினர் அல்லவே அல்லர்!)
துறவறம் இல்லறத்துக்கு மாறானதன்று. இல்லறந் துறந்த அறமும் அன்று. தன்னலம் துறந்த துறவறமேயாகும். தம் இல்லத்தின் கடமை முற்றுற்றபின் உலகுக்கு உழைக்க வந்தவர்தாம் துறவோர். தம் இல்வாழ்வில் நின்றே உலகு பேணலை மேற்கொண்டவர் அந்தணர். பிற்காலத்தில் கோவில் வழிபாடு முதலிய பொதுக்கடனாற்றும் ஊழியன் பார்ப்பான் எனப்பட்டான். குருக்கள், இவர்கள் பிறப்பால் தமிழராகிய வேளாளராதலாலும், கொலை வேள்வி செய்யாதவராதலாலும் வேளாப் பார்ப்பனர் என்றும் வழங்கப்பட்டனர். இன்றும் இவர்களுடன் பிராமணர் உண்ணுவதும் மணஉறவு கொள்வதும் இல்லை. அவர்கள் மந்திரங்களும் பிராமணர் மந்திரங்கள் அல்ல. வேளாளர் தீக்கை பெறும்போது ஓதும் மந்திரங்களே. குருக்கள் பெயராகிய பார்ப்பான் என்ற சொல்லே தவறுதலாய்ப் பிற்காலத்தில் பிராமணனுக்கு வழங்கிற்று. அச்சொல் குறித்த தமிழர் மதிப்புப் பிராமணர்க்குப் போயிற்று, தமிழர் குடியைக் குறித்த அச்சொல்லைப் பிராமணர் விரும்பாது ஏளனம் செய்ததால் அது குருக்களை இழிவுபடுத்தும் சொல்லாய் அது மாறிற்று.
5. இரப்பது இழிவு. ஈகை சிறந்தது.
குறிப்பு: இவ்விரண்டும் ஒன்றுடன் ஒன்று பொருந்தா நீதிகள். திருக்குறள் முதலிய நூல்களில் இரண்டு நீதிகளும் தரப்படுகின்றன. ஆனால், எவரும் இரத்தல் கூடாது, இரத்தல் இறைவன் படைப்பிலேயே இருத்தல் தகாது என்று வள்ளுவர் பெருமான் கூறுவதனால் ஈகை இடமறிந்து உதவுதல் என்ற பொருளே தரும். அதாவது பொருளீட்ட முடியாதவன், முயன்றும் பெறாதவன், இடுக்க ணுற்றவன், பிறர்க்கென உழைத்துத் தன்னைப் பேணாதவன், பொது நலம் பேணி ஆளும் அரசன் ஆகியவர்க்கு ஈதலையே தமிழர் ஈகை என்று கொண் டிருத்தல் வேண்டும். சோம்பர், இரத்தலைத் தொழிலாகக் கொண்டவர். இறைவன் பேர் சொல்லிப் பிழைக்கும் எத்தர், இரத்தல் உயர்வெனக் கொள்பவர், மக்களிடையே வேற்றுமை விளைவிப்பவர் ஆகியவர்கட்குக் கொடுத்த, கொடுத்து வரும் தவற்றினாலேயே தமிழர் நலிந்தனர், நலிகின்றனர்.
6. கடவுள் ஒருவரே, அவர் உருவமற்றவர், சமயங் கடந்தவர் (எனவே எச் சமயத்துக்கும் அவர் உரியவர் அல்லர்) அவர் குணம், குறி, ஊர், பேர் அற்றவர் (எனவே ஆண் பெண் பால்வேறுபாடு, சாதி வேறுபாடு ஆகியவை அவர் பெயரால் ஏற்படமுடியாது. அவர்க்குத் தனியாக ஒரு தாய்நாடும் தாய்மொழியும் கிடையாது.)
குறிப்பு 1 :- இக் கடவுட் கொள்கை உயர்ந்ததேயாயினும், இக் கடவுளின் அருள் நிலையைத் தாமும் கொண்டுதான் போலும் தமிழர் தம் பண்பிழந்து பிறர் பண்பு பேணி யழிவுற்றது என்று எண்ணாதிருக்க முடியவில்லை. ‘அருளும் அருளுடையார் கண்ணதே’ என்பதைத் தமிழர் ஓராதிருந்தனர், இருக்கின்றனர்.
குறிப்பு 2:- தமிழர்க்குச் சமயம் இல்லை என்று கூறுவோர் சொற்கள் பழந்தமிழர் கடவுட் கொள்கைக்கு அவ்வளவு முரணாயில்லை என்பது காண்க. அரசியலில் ‘ஆளாத அரசியலே நல்ல அரசியல்’ என்பர். ‘சமயத்திலும் சமயமாகாத சமயமே உயர் சமயம்’ என்னலாகும்.
சங்க இலக்கியத்தில் ஆழ்ந்த சமயப் பற்று உண்டு. சமயப் பற்றிலாழ்தல் இல்லை. துறவியாகிய இளங்கோ எல்லாச் சமயமும் பாடி நடுநிலை நின்றமை இக்காலத்துறவியரால் முடியுமா? துறவியல்லாதவரால்தான் முடியுமா?
7. கடவுளுக்குப் பிறப்பும் இறப்பும் வாழ்வும் இல்லை. அவர் அருள்வலியால் (தற்கால மொழியில் இயற்கை யாற்றலால்) உயிர்களும் உலகங்களும் நடைபெறுவதன்றி அவர்களை அல்லது அவற்றைத் தோற்றுவிப்பது மில்லை, அழிப்பதும் இல்லை (சமய மொழியில் கூறினால் அவர் சாட்சி மாத்திரமாய் நின்று இயக்குகிறார்.) உயிர்களுக்கு அவர் செய்வதெல்லாம் துன்பத்தினின்று விடுதலைபெற உதவுவதுதான்.
இக்கருத்துகளுக்கு மாறுபட்ட சமயம் தமிழர் சமய மாகாது. மாறுபட்ட கருத்துகளும் தமிழர் சமயக் கருத்துகளாகா.
இன்றைய தமிழர் சமயத்தில் மேற்கண்ட கருத்துகள் இல்லை என்று யாரும் சொல்லமாட்டார்கள். ஏனெனில், அச்சமய நூல்களிலிருந்தே இவை எடுக்கப்பட்டன.
ஆனால், இவற்றுக்கு மாறான கருத்துகளும் இன்றைய தமிழர் சமயத்தில் எண்ணற்றவை. அவற்றுள் சில, சாதி வேறுபாடு, தீண்டாமை ஆகியவற்றின் ஆதரவு, வடமொழி தெய்வமொழி எனல், வடமொழி மந்திரம் ஓதுதல், சோம்பர்க்கும், எத்தர்க்கும் ஈதல், தமிழர் சமயத்துக்கு எதிரான கொள்கை யுடைய பிராமணர்கட்குக் கோவிலில் நுழைவுரிமை மட்டுமன்றித் தலைமையும் கொடுத்தல் ஆகியவை. தமிழ் நூல்களில் பார்ப்பனர் குடியிருப்புச் சேரி என்று கூறப்பட்டிருக்கிறது. ஊருக்குப் புறம்பே புல் வீடுகளில் வாழ்ந்தனர் அவர்கள். கோவிலை அவர்களுக்கு விட்டுப் பக்தர் (தேவரடியார்)களுக்குப் பாதுகாப்பாக அவர்களை முதல் தெருவிலும் விட்ட செயலுக்குத் தமிழர் எதுவும் படல் வேண்டும்!
இச் செயல் செய்தவர் தமிழ் அரசரே-சிறப்பாகப் பிற்காலச் சோழர், நாயன்மார் காலத்திலும் சேக்கிழார் காலத்திலும் இருந்த சோழரே என்பதை நோக்க அவர்கள் வீரத்தைப் புகழ்வதா, வீண் வம்புக்கு இகழ்வதா என்று கூறமுடியாத நிலையிலிருக்கிறோம்.
இந்து மதம் என்று இன்று கூறப்படுவது சிவ நெறியையும் திருமால் நெறியையும் சேர்த்துதான். ஆனால், இவை கலப்பற்ற சிவ நெறியும் திருமால் நெறியும் அல்ல. அவற்றுடன் கலந்து நிற்கும் மூன்றாம் நெறி யொன்று உண்டு. அந்நெறி சில வகையில் சிவ, திருமால் நெறியை விடச் சிறந்தது. அந்நெறியில் ஒரே ஒரு சாதிதான் உண்டு. (ஆயினும் அந்நெறியில் சேராத சிவ நெறியாளர் திருமால் நெறியாளர்களிடையே சாதி வேறுபாட்டை ஏற்படுத்தி வளர்ப்பது அவர்கள் உயிர்நிலைக் கடமை) அந்நெறிக் கென்று கோவிலும் உருவமும் கிடையாது. (ஆனாலும் தனக்கெனக் கூடில்லாமல் தான் முயன்று ஊட்டாமல், காக்கையின் கூட்டில் காக்கை ஊட்ட வளர்வதாகக் கூறப்படும் குயில் குஞ்சுகள் போல, சைவர் வைணவர் செலவில் எழுப்பப்பட்ட கோவில்களில் அவர்கள் உருவினையே வைத்துக் கொண்டு அவர்கள் செலவில் வாழ்ந்து அவர்கள் தெய்வத்தின் பெயரை வைத்தே அவர்களை என்றென்றைக்கும் அடிப்படுத்த வழி கண்டவர்கள் அந்நெறி யாளர்கள்). பொருளும் உயிரும் உள்ள சிவ, திருமால்நெறி வேதங்களை ஓதுபவர்களை இழிவு படுத்தித் தம் பொருளற்ற, பிதற்றல் வேதத்தை வைத்து அந்நெறிச் செல்வர் பணமும் பறித்து அவர்களை அவமதிக்கவும் வழிசெய்வர்.
இம் மூன்றாம் நெறிக்குப் பெயர் வழங்குவதில்லை. ஆனால், பெயர் உண்டு. அதுவே சுமார்த்தம் என்பது.
சாதி வேறுபாட்டைப் பேணுதல், வடமொழிக்கு எல்லா வகையிலும் உயர்வு காத்தல் இவை இவர்கள் தொழில்.
சுமார்த்தர் திருநீறிட்டும் இடாமலும் சிவன் கோவிலை ஆளாமல் ஆள்வர். அவர் தம்மைச் சிவப் பிராமணர் என்றுகூடக் கூறிக்கொள்வதில்லை. சைவர்கள் அத்தகைய திருமண் பாவைகள் என்று அவர்கள் எண்ணியிருத்தல் வேண்டும்.
ஆனால், வைணவர் கோவிலில் செல்லும் சுமார்த்தர் தம்மைச் சுமார்த்தர் என்று கூறிக்கொள்வதில்லை. வைணவர் என்பர். நாமம் கட்டாயம் இட்டுக் கொள்வர். ஆனால் அவர் ‘கலை’யால் அவரையறியலாம். வடமொழி பேணும் அவர்க்கு ’வடகலை’ என்ற பெயர் பொருத்தம் தானே!
வைணவத்தில் கோவில் குருக்களாகிய தென்கலையான் விவரம் தெரிந்தோ தெரியாமலோ இன்னும் வடகலையை எதிர்ப்பான். சைவம் பணிவல்லவா? சைவக் குருக்கள் சிவமாகிய பிராமணரில் ‘ஐக்கியமாய்’ ஒன்றாகி வேறாகி நிற்கிறார்போலும்!
சைவரும் வைணவரும் சுமார்த்த நெறியையும் வட கலையையும், ஒழித்தாலன்றி அவர்கள் நெறி பழைய தமிழ்நெறி யாகாது.
இவற்றை ஒழித்தால் கோவில் தமிழ் வேதங்களே பாடப்படும். தமிழ் மந்திரங்கள் ஓதப்பட வழி ஏற்படும். வடமொழி வேதம் ஒழிக்கப்பட வழியுண்டு. சாதி, தீண்டாமையை ஒழிக்க முற்படலாம்.
சுமார்த்தர்களிடம் கோயிலை விட்டுவிட்டு, நல்ல உணர்ச்சி மிக்க தமிழர் நாஸ்திகரானால், ‘கடவுளே, இந்த நாஸ்திகர் பக்கம் நின்று ஆஸ்திகப் பூண்டை அழி என்றுதான்’ தமிழர் வேண்டிக்கொள்ளல் தகுதி.
தமிழ்ச் சொற்களும் தமிழ்ப் பண்பாடும்
சொற்கள் உலகப் பொருள்களின் குறியீடுகள் மட்டுமல்ல; கருத்துகளின் குறியீடுகளும் கூட. பொருள்களைக் குறிக்கும் சொற்கள் அச்சொற் பொருளை அறிந்த மக்கள் உள்ள நாட்டு மொழிகளிலெல்லாம் இருக்கும். ஆனால், கருத்துகளைக் குறிக்கும் சொற்கள் எல்லா மொழிகளிலும் ஒரே நிலையில் இருப்பதில்லை. எடுத்துக்காட்டாக, கொடுத்தல், தருதல், ஈதல்; நாம், நாங்கள்; வணக்கம், வழிபாடு, தொழுகை ஆகிய நுட்ப வேறுபாடுகள் ஆங்கிலத்தில் இல்லை. கனவு, நனவு, என்ற மாறுபாடும் காய், கனி ஆகிய வேறுபாடும் ஆங்கி லத்திலும் மற்றெம் மொழியிலும் இல்லை. இன்றைய பல ஆங்கிலக் கருத்துக் குறிகளுக்கும் இதுபோலத் தமிழில் பல சமயம் நேர் தனிச்சொல் இல்லாம லிருப்பதுண்டு. இங்ஙனம் கருத்துக் குறிக்கும் சொல் வளத்தின் வேறு பாட்டா லேயே மொழிகளிடையே பண்பாட்டு வேறுபாடும், உயர்வு தாழ்வும் மதிக்கப்படும். தமிழ் இவ்வகையில் தனித் தன்மையும் உயர்வும் உடைய தென்பது ஆராய்ச்சி வகையால் காணவேண்டுவதொன்று.
மொழியில் என்ன இருக்கிறது என்றும் சொல்லில் என்ன இருக்கிறது, எந்த மொழிச்சொல்லை எந்த மொழியில் வழங்கினால் என்ன என்றும் இப்போது பல அரைகுறை மதியினர் ஆராயாது கூறுவதுண்டு. சொற்கள் கருத்துகளைக் குறிப்பவை; தமிழில் எல்லாச் சொல்லும் கருத்துக் குறிப்பவை; கருத்து அறிவியல் முறைப்படி கூறினால், நீடித்த வாழ்வுடைய ஓர் உயிரியக்கமுடைய பொருள் என்பதுபோன்ற உண்மைகளைக் கவனிப்பவர் இவ்வாறு கொள்ள முடியாது. மொழியின் சொல்லில் அம்மொழியாளரின் இறந்தகால வாழ்க்கைக் கருத்து முற்றிலும் கருவூலமாகச் சேமிக்கப்பட்டுள்ளது.
தமிழ்ச் சொற்களின் பொருள் பல கால மாறுபாட்டால் பொருள் திரிந்திருப்பதுண்டு. அறிஞர் தேவநேயப்பாவாணர் போன்ற ஆராய்ச்சியாளர் பலர் அத்தகைய மாறுபாடுகளில் பலவற்றை எடுத்துக்காட்டியுள்ளனர். வளைதல் என்ற பொருளில் மட்டுமே சங்க இலக்கியங்களில் ‘வாங்கு’ என்ற வழங்கும் இச்சொல் கை வளைந்து பெறுதல் என்ற குறிப்பில் ‘பெறு’ என்னும் பொருளில் இன்று வழங்குகிறது. இது இத்தகைய மாறுதலுக்கு ஓர் எடுத்துக்காட்டு.
மேற் குறிப்பிட்டது போன்ற சொற்பொருள் மாறுபாடு காலவேறுபாட்டை மட்டுமே குறிக்கும். ஆனால், பண்பாட்டு மாறுபாட்டைக் குறிக்கும் சொற்களும் பல உண்டு. இம்மாறுபாடுகளிற் பல உண்மையில் தமிழ்ப் பற்றுடையவர் உள்ளத்தை அறுக்கும் மாறுபாடுகள் ஆகும். ஏனெனில், அச் சொற்களின் பழம் பொருளும் புதுப்பொருளும் தமிழன் முன்னைய உயர்வையும் இடைக்கால வீழ்ச்சியையும் அளந்து காட்டுபவையாயுள்ளன.
இத்தகைய சொற்களில் நூல், பாட்டு, பட்டினம், பொன் என்பன சில.
நூல்
நூல் என்ற சொல் இப்போது பெரும்பாலும் சுவடி அல்லது புத்தகம் என்ற பொருளில் வழங்கப்படுகிறது. திருக்குறள் ஒரு நல்ல நூல், இது சங்க நூல் என்றெல்லாம் வழங்குகிறோம். ஆயினும் வானநூல், கணக்குநூல் என்று சொல்லும்போது நாம் கொள்ளும் பொருள் வேறு. இங்கே அது அறிவுநூல் என்றோ, அறிவுநூல் துறை என்றோ பொருள்படும். இப்பிந்திய பொருளிலேயே முற்காலத்தில் இச்சொல் பயன்பட்டது. நூல், நூலோர், கணக்காயர் முதலிய சொற்கள் முற்கால இலக்கிய வழக்கில் இலக்கியத்தையோ இலக்கிய ஏடுகளையோ குறித்ததாகக் காட்டவே முடியாது. ஏனெனில் அது ஆராய்ச்சி முடிவுகளை மட்டுமே குறித்தது. இவ்வகையில் ‘நூல்’ என்ற பழந்தமிழ்ச் சொல்லின் பொருள் அறிவியல் (Science) என்ற ஆங்கிலப் பொருளே ஆகும். தமிழரிடையே ஆராய்ச்சி பழங்கதையாகப் போனபின்னரே இது சுவடி எனும் பொருளில் பயன்பட்டிருத்தல் வேண்டும். இங்ஙனம் பொருள் இழிவுபட்டத னாலேயே இன்று இக்கருத்தை (Science)க் குறிக்கத் தமிழ்ச் சொல்லுக்குத் திண்டாடுகிறோம். வட மொழியில்கூட இதற்குச் சரியான சொல் கிடையவே கிடையாது. சா°திரம் என்பது சட்டம் அல்லது விதிகளின் தொகுப்பு என்றே பொருள்படும்.
நூல், நூற்பா என்ற சொற்களிரண்டும் தொடர்புபட்டவை. நூலின் இலக்கணம் கூறும் நன்னூல் இழைத்த நூலின் பண்பையும், மரக்கோட்டம் அறுக்கும் நூலின் பண்பையும் உவமை கூறியுள்ளது. இதிலிருந்தே நூல் என்பது, கணக்கு வானிலைஆய்வு, இயற்பொருளாய்வு, மொழியினிலக்கணம் முதலிய அறிவுத் துறைகளை மட்டுமே குறிக்கும் என்பது தெரியவரும்.
இதற்கேற்ப நூற்பா என்ற சொல்லும் நூலுக்கான ‘பா’ எனப் பொருள்படுகிறது. சிலப்பதிகாரப் பாக்களும் பத்துப்பாட்டுப் பாக்களும் பாக்கள் மட்டுமே; நூற்பாக்கள் அல்ல. இதிலிருந்தே சிலப்பதிகாரமும் பத்துப்பாட்டும் நூல்கள் அல்ல, இலக்கிய ஏடுகள் மட்டுமே என்று காணலாம்.
நூல் (Science) கிட்டத்தட்ட இறந்துவிட்ட காலத்தில் தோன்றிய வடமொழி நாகரிகம் நூற்பாவைச் சூத்திரம் என வழங்கிற்று. இச்சொல் (ஸூத்ரம்) உண்மையில் நூல் என்பதன் மொழிபெயர்ப்பு. நூலின் பண்பு இழக்கப்பட்ட காலத்தவர் அதன் பா வடிவத்துக்கு மட்டும் இதனைப் பயன் படுத்தினர். வடமொழியில் சூத்திரம் என்பது ஒரு பாவகை, ஒரு நடைவகை, ஆனால், தமிழில் அது ஒரு தனி வகைப்பட்ட துறைக்கான செய்யுள் வகை, வடமொழி முறைப்படி திருக்குறளின் குறட்பாக்களைச் சூத்திரம் என்னலாம். ஆனால், தமிழில் அது சூத்திரமும் அல்ல, நூற்பாவும் அல்ல. குறட்பாவே.
மக்களுக்கு இலக்கியம், ஆராய்ச்சியாளர்க்கு நூல். நூலாராய்ச்சிக்கும் அப்பால் சென்று அனுபவ மெய்ம்மை கண்டவர்கள் அறிவுமறை, மறை என்பது நூன்முடிபு, மெய்யுணர்வு (Philosophy, Mysticism) ஆகியவற்றைக் குறிக்கும்.
சங்க இலக்கியங்களுக்கும் முற்பட்ட, ஒரு வேளை, தொல்காப்பியத் துக்கும் முற்பட்ட காலத்திலிருந்தே தமிழர்களிடையே ஆராய்ச்சித்துறை குன்றி ‘நூல்’ என்ற சொல்லில் மாறாட்டமும் குழப்பமும் ஏற்படத் தொடங்கியிருத்தல் வேண்டும். ஆயினும், இலக்கண நூலோர் அச் சொல்லைப் பெரும்பாலும் பிற ழாமல் வழங்குகின்றனர். உரையாசிரியர்களும் இவ்வேறுபாடு குறித்துள்ளனர்.
இப் பொருள் வேறுபாடு முற்றிலும் மறக்கப்பட்ட காலம் எது என்று கூறமுடியாதாயினும் வடமொழியாளர்களால் தமிழ்ப் பண்பாடு அறியப்படு முன்னரே இச் சொற்குழப்ப மேற்பட்ட தென்னலாம். திருவள்ளுவமாலையில் நூலெல்லாம் வள்ளுவர்செய் நூலாமோ என்று குறித்திருத்தல் காண்க.
பாட்டு
இப்போது பாட்டு, பா, செய்யுள் எல்லாம் ஒரு பொருளில் வழங்குகின்றன. இவற்றின் எதிர்ச்சொல் ஆக வழங்குவது உரைநடை.
உரையென்பது பாட்டுக்கு உரை என்ற பொருளில் பிற்காலத்து வழங்கியதும் உண்டு. பண்டைத் தமிழ் நூல்கள் உரைநடையை உரைச் செய்யுள் என்றன. இதிலிருந்தே செய்யுள் என்பது உரைக்கு எதிரிடையல்ல என்று காணலாம். உரை என்பது பேச்சு. அந் நடையில் இலக்கண இலக்கிய வரம்பமையச் செய்யப்பட்டது உரைச் செய்யுள். யாப்பமைதியும் அமைந்தால் அது யாப்பு அல்லது பாவகை ஆகும். ஆகவே செய்யுள் என்பது இன்று நாம் ‘இலக்கியம்’ என்று கூறும் பொருளில் வழங்கியதாயிருத்தல் வேண்டும் என்று கூறலாம். பாவகையில் பாவேறு, பாவினம் வேறு என்றும் வகுக்கப்பட்டன.
அறிவு சான்ற கருத்துகள் நூலாக நூற்பாவில் எழுதப்பட்டது போல; அறிவும் உணர்ச்சியும் அழகும் சான்ற கருத்துகள் பாக்களாக எழுதப்பட்டன. சிலகால் பாவினங்களாகவும் எழுதப்பட்டன. இவற்றின் ஓசையின் இசைநயம் மிக்கதான முறையே பாடல், அல்லது பாட்டு எனப்பட்டது. ஆகவே பாவேறு, பாட்டு வேறு ஆகும். சிலப்பதிகாரம் பாக்களாலானது. தேவாரம் பாட்டுகளாலானது. இப் பாட்டுகள் பாவாகவும் பாவினமாகவும் இருக்குமாயினும், பாவினங்கள் பெரும்பாலும் இசைப்பாட்டுகளிலேயே வழங்கின. தேவாரம் இசைப்பாடல் தொகுதி என்பதை மறந்து இசையுணர்வு கெட்ட பிற்காலத் தமிழகம் அதைக் காவியத்துக்கும் பயன்படுத்திற்று. இலக்கியம் என்ற பொருளுடைய செய்யுள் எனும் சொல் பொருள் மாறுபட்டதனாலேயே செய்யுளும் நூலும் சேர்ந்தது; இயல் என்னும் எண்ணம் மறந்துபோயிற்று. பழம் முத்தமிழ்ப் பகுப்பின் பரப்பை ஆங்கிலக் குறியீடுகளுடன் 47ஆம் பக்கம் உள்ள விளக்கப் படிவத்தில் காண்க.
விருத்தங்கள் வட மொழியிலிருந்து வந்தவை என்பது பலர் கருத்து. இது தவறான கருத்து. தமிழில் அது பாவினமாய் இசையில் மட்டும் வழங்கியது. கலிப்பா உறுப்புகளில் வரும் வகைகள் விருத்தங்களே. பலவகை அடிகளிலும் எழுதப்பட்ட அவை நாளடைவில் நான்கடி என்று வழங்கின. தமிழரே இதனை அளவடி (Standard number of feet) என்றனர். அடி, கால் ஆகியவற்றின் மொழிபெயர்ப்பாகவே வடமொழி அடி (பாதம்) அமைந்திருப்பதும் காணலாம். வடமொழியிலேயே விருத்தமுறை பிற்பட்டது. அவற்றில் எதுகை மோனை அமைந்தது தேவாரக் காலத்துக்கும் பிற்பட்டுதான். வேத இதிகாசக் கால வடமொழி யில் மூன்றடி, இரண்டடியே மிகுதி.
பட்டினம்
தமிழர் வழக்கில் பட்டினம் என்பது கடற்கரையிலுள்ள துறைமுக நகரம் எனப் பொருள்படும். தமிழர் நிலத்தை ஐந்திணையாக்கி ஒவ்வொரு திணையிலும் சிற்றூருக்கும் பேரூருக்கும் தனித்தனிப் பெயர்கள் வழங்கினர். இவ்வேறுபாடு உலகில் வேறு எம் மொழியிலும் கிடையாது. இவ்வேறுபாடு அழிவுற்ற பின்னரே வடமொழி இலக்கிய வளர்ச்சி ஏற்பட்டிருத்தல் வேண்டும். ஏனெனில், இதன் சுவட்டை வடமொழியில் காணமுடியவில்லை. வடமொழிப் பண்பாடு பிந்திய தென்பதற்கு இவ்வெதிர் மறைச்சான்று மட்டுமன்று; நேர்முகச் சான்றும் உண்டு. பட்டினம் என்ற சொல் கடற்கரைப் பேரூர் என்ற பொருள் கெட்டதுடன் எழுத்து உருவமும் குறைவுற்றுப் பட்டணம் என இன்றும் வழங்குகிறது. இது பிற்பட்ட வழக்கு என்று கூறத் தேவையில்லை. வடமொழியில் இப்பிற்பட்ட வழக்கும் பிற்பட்ட வடிவுமே காணப்படுகின்றன. அத்தோடு அது பிறமொழி (தமிழ்)ச் சொல்லாதலால் பட்டணம், பட்டனம், பத்தணம், பத்தனம் எனப் பலவாறாகவும் எழுதப் பட்டது. இவ்வழக்கும் மிக அருகலானதும் பிற்காலத்ததும் ஆகும்.
தமிழர் குறித்த பொருளில் பட்டினம் என்ற சொல் இன்றைய தமிழ் நாட் டெல்லையில் மட்டுமன்றிப் பண்டைத் தமிழ்ப் பண்பாட்டின் முழு எல்லையையும் காட்டி இந்தியா எங்கும் அக்குறிப்பு மாறாமலே இடப் பெயர்களில் வழங்கப் படுகிறது. நெய்தல் நிலச் சிற்றூராகிய பாக்கம், மருதநிலத்துப் பெயராகிய ஊர் ஆகியவற்றைப்போலவே பட்டினம் என்னும் பெயரும் இந்தியாவெங்கும் துறைமுகப்பட்டினங்களின் பெயர் ஈற்றிலேயே இருப்பது காணலாம். காயல் பட்டினம், குலசேகரன்பட்டினம், நாகப்பட்டினம், சேரப்பட்டினம், சதுரங்கப் பட்டினம், சென்னைப்பட்டினம், மசூலிப்பட்டினம், விசாகப்பட்டினம் ஆகியவை காண்க. கங்கைக் கரையிலுள்ள பாட்னா ஆற்றுத் துறைமுகப்பட்டினம் ஒன்றைக் குறித்த பெயரேயாகும்.
பொன்
தமிழில் இன்று உலோகங்களைக் குறிக்கும் பொதுச் சொல் இல்லை என்று தோற்றும். ஆனால் ஐம்பொன் என்ற வழக்கும் வெண்பொன் (வெள்ளி) என்ற வழக்கும் உண்மையில் இப்பொருளுடைய சொல் ‘பொன்’ என்பதே என்று காட்டும். இப்பொதுச் சொல் தங்கத்தின் பெயராய்க் குறிக்கப்பட்ட காலம் எதுவோ அறிகிலோம். ஆனால், இப் பெயரிலிருந்தே பெரும்பாலான உலோகப் பெயர்கள் வந்துள்ளன என்று காணலாம். வங்கம், ஈயம், தங்கம், பித்தளை என்ற நான்கு உலோகங்களுக்கும் தமிழர் தனிப் பெயரிட்டனர். இவையே அவர்களுக்கு முதலில் அறியவந்த உலோகங்கள் என்றுகூட எண்ணலாம். இவற்றைப் பொதுவாகக் குறிக்க அவர்கள் பொன் (பொலிவுடையது) என்ற சொல்லை வழங்கினர். மற்ற உலோகங்களை அவர்கள் நிறம்பற்றியும் பண்பு பற்றியும் காரணப் பெயராகக் குறித்தனர். செம்பொன் (Copper) சிவப்பு நிறமுடைய பொன், செம்பொன் என்பதே செம்பு எனக் குறுகிற்று. வெண்பொன்(Silver) இதுபோல் வெள்ளி யாயிற்று. இரும்பொன் (இருமை=கறுப்பு) கருமை நிறமுடைய பொன். இது இரும்பு எனக் குறுகிற்று. தங்கம் பைம்பொன் அல்லது பசும்பொன் (பசுமை அல்லது மென்மை உடையது) எனப்பட்டது. தங்கம் என்ற சொல் இருப்பதாலும், பொன் என்பதே பொருள் குறுகி அதன் பெயராய் வழங்கியதாலும் இதில் சொல்குறுக்கம் ஏற்படவில்லை.
தமிழர் தங்கத்தில் பலவகைத் தங்கத்தைக்கூட அறிந்திருந்தனர்.
வடசொற்களென மயங்க இடந்தரும் தமிழ்ச்சொற்கள்
மொழிப்பற்று, நாட்டுப்பற்று, சமயப்பற்று முதலியவை மக்கள் வாழ்க்கை யின் வளர்ச்சிக்குச் சிறந்த தூண்டுதல்களாய் இருந்து வருகின்றன. ஆனால், பலர் அவற்றை நேர்மையற்ற குறுகிய முறையில் மேற்கொண்டு அவற்றையே நாகரிக வளர்ச்சிக்கும் சிறப்பாக நடுநிலை ஆராய்ச்சிக்கும் முட்டுக்கட்டை களாக வழங்கி வருகிறார்கள். அதிலும் இவ்வகையில் நம் நாட்டில் காணப்படும் நிலைமை மிகமிகப் புதுமையானது. பொதுவாக உலகில் ஆராய்ச்சிக்குத் தடை யாகக் கருதப்படும் மொழிப்பற்று மக்கள் உணர்ச்சிக்குத் தாயகமான தாய் மொழிப் பற்றேயாகும். ஆனால், தமிழ்நாட்டின் ஆராய்ச்சியில் காணப்படும் பிற்போக்குத் தாய்மொழிப் பற்றால் அன்று, பிறமொழிப் பற்றாலேயே ஆகும். இது வியப்புக் கிடமன்றோ?
தமிழ்மொழியும் வடமொழியும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இவ்விந்தியக் கண்டத்தில் ஒருங்கே வளர்ச்சி யடைந்து வருகின்றன. எனவே அவற்றுள் ஒன்றன் பண்புகள், சொற்கள், கருத்துகள் முதலியவை இன்னொன் றிலும் இடம்பெறக் கூடும் என்று எதிர்பார்த்தல் இயற்கையே. ஆனால், தமிழில் வடசொற்களையும் வடவர் பண்புகளையும் கருத்து களையும் தேடித் துருவித் தொகுப்பதில் சளைக்காத அறிஞர் பலர் வட மொழியில் உள்ள தமிழ்ச் சொற்கள், கருத்துகள், பண்புகள் ஆகியவற்றைத் தேட எண்ணுவதுகூட இல்லை. மேலைநாட்டறிஞர் அல்லது வட நாட்டறிஞர் அவற்றைத் தேடி அறிவித்தால்கூட அன்னத்தின் இறகுகளில் அல்லது தாமரை யிலையில் பட்ட நீரால் அவை ஈரமடையாததுபோல, அவர்கள் கருத்தையும் செயலையும் அது சற்றும் தாக்காமல் புறக்கணித்துத் தள்ளப்படுகிறது.
வடமொழிப் பண்டிதர்களும் அவர்களைப் பின்பற்றித் தமிழ்ப் பண்டிதர் பலரும் இடைக்காலத்தில் தமிழிலக்கணம், இலக்கியம் ஆகிய எல்லாம் வடமொழி வரவுகள்தாம் என்று நிலைநாட்ட முயன்றனர். “அன்றியும் ஐந்தெழுத்தால் ஒரு பாடையென்றறையவே நாணுவர் அறிவுடையோரே” என்று தமிழை இழிவு படுத்தித் தம்மைப்போன்ற தமிழறிஞரையும் அறிவிலாதவர்கள் என்று கூறிய இலக்கணக் கொத்து ஆசிரியர் இவ்வகுப்பையே சேர்ந்தவர் ஆவர். மேல் நாட்டா ரது பகலொளி கதிர் எரிக்கும் இந்நாள்களில் இப் ’பழம்பாடை’க் கருத்துகள் பட்டப் பகல் நிலவுபோல் பொலிவிழந்து போயின. ஆயினும் சூரப்பன்மன் ’திருவுரு’கள் போல் அவை பல்வேறு உருவில் இன்னும் வந்து நம்மை மருட்டுவதுண்டு.
தற்போது தமிழினமும் ஆரிய இனமும் வேறு வேறான தனிப்பேரினங்கள் என்ற கொள்கை எங்கும் ஒப்புக் கொள்ளப்பட்டுவிட்டது. எனவே, தமிழினின்று ஆரியம் வந்ததென்றோ ஆரியத்தினின்று தமிழ் வந்ததென்றோ எவரும் கூற இடமில்லை. எனவே இவ்விரு மொழிகளின் உறவெல்லாம் ஒத்துவாழும் காலத்தில் ஏற்பட்ட நட்புறவுகளாயிருக்கக் கூடுமே யல்லாமல், ஒன்றுக்கொன்று தாயகமான உறவு எதுவும் இருக்க முடியாது.
இன்றைய தமிழிலக்கியத்தின் தோற்றக்காலமுதலே அதாவது நமக்குக் கிட்டியுள்ள பழந்தமிழிலக்கியக் காலமுதலே ஒரு சில வடசொற்களேனும் தமிழிலக்கியத்தில் காணப்படுவ தோடு அவை வரவரப் பெருகியும் வந்துள்ளன. திருநாலா யிரத்துக்கு உரை எழுதப்பட்ட காலத்திலும் சைவ சித்தாந்த நூல் களுக்கு விளக்க உரைகள் எழுந்த சைவமடங்கள் காலத்திலும் வண்டிக் கணக்கில் வடசொற்களை மொத்த இறக்குமதி செய்யும் முயற்சிகள் செய்யப் பட்டன. ஆனால், யார் பெற்ற பேறோ அம்முயற்சிகள் பயனற்றுப் போயின. தமிழிலே மட்டுமன்றி, தமிழினத்தின் பாற்பட்ட அயல் மொழிகளிலும் ஒவ்வொரு காலத்தில் இத்தகைய “மணிப் பிரவாள” நடை தோற்றுவிக்க முயற்சிகள் நடந்து இங்கேபோல் அங்கும் அவை தோல்வியுற்றன என்பது கவனிக்கத்தக்கது.
இராமாயணக் கால முதல் இலக்கியம் என்ற பெயரால் மொழி பெயர்ப்புகள் தமிழ்நாட்டில் புகுத்தப்பட்டன.
இதுகாறும் கூறியவை தமிழ்மீதும் தமிழர்மீதும் ஆரியத் தாக்குதலால் ஏற்பட்ட மாறுதல்கள். இவை பலவிடத்தும் மிகைப்படுத்தப்பட்டுப் பாமரத் தமிழ் மக்கள் காதில் நன்றாக உறைக்கும்படி எடுத்துக் கூறப்படுகின்றன. ஆனால், இதனை ஒட்டித் தமிழர் தாக்குதலால் ஆரியம் மாறுபட்டிருக்கிறதா என்ற கேள்வி எழுவதுமில்லை; எழுமானால் மறைக்கவும்படுகிறது.
வடமொழி தமிழ்மொழி உறவில் வடமொழியினால்தான் தமிழ்மொழியில் மாறுதல்கள் ஏற்பட்டன. தமிழ்மொழியினால் வடமொழியில் மாறுதல் ஏற்பட வில்லை என்று வடமொழியின் பண்டிதர்கள் தமிழ்ப் பண்டிதர்கள் முதற்கொண்டு எண்ணி வருகின்றனர். ஆனால், மொழி, இலக்கியம், சமயம், நாகரிகம், கலை ஆகிய எந்தத் துறையிலும் உண்மை இதற்கு நேர்மாறான தென்பதை வரலாறும், ஆராய்ச்சியும் வரவர விளக்கி வருகின்றன. மொழியைப் பற்றிய மட்டில் வடமொழியினால் தமிழில் ஏற்பட்ட மாறுதல்கள் சில சொற்களின் வரவு மட்டுமே. நாட்டு ஆர்வமும் மொழியார்வமும் மேம்பட்டு வரும் காலங்களில் இவை யெல்லாம் எளிதில் விலக்கிவிடத்தக்க சில்லறை மாறுதல்களேயாகும். ஆனால், தமிழ்மொழியின் தாக்கினாலும் தமிழின மொழிகளின் தாக்கினாலும் வடமொழியும் வட இன மொழிகளும் அடைந்துள்ள மாறுதல்கள் அடிப்படையான வையும் விலக்கப்படாதவையும் ஆகும். ஏனெனில், அம் மாறுதல்கள் வெறும் சொல் ஆட்சி மட்டிலும் அன்று. ஒலி, இயல்பு, சொல்முறை, கருத்துத் தெரிவிக்கும் முறை ஆகியவற்றையும் பற்றியதாகும்.
வடமொழிக்கு இனமான வெளிநாட்டு மொழிகளாகிய பாரசீகம், கிரேக்கம், இலத்தீனம், ஜெர்மானிய, கெல்டியக் குழுக்கள் ஆகியவற்றில் ள,ண,ட ஆகிய ஒலிகள் இல்லை. வடமொழியில் இவை வர வர மிகுதியாகி இன்றைய வட இன மொழிகளில் பெரிதும் மலிந்து கிடக்கின்றன. இம்மிகுதி தமிழினத்தை யடுத்துப் பேசப்படும் மராத்தியிலும், பீகாரியிலும், வங்காளியிலுமே கூடுதலா யிருப்பது கூர்ந்து நோக்கத் தக்கது.
வடமொழியில் பெரும்பாலும் ள,ண,ட ஆகிய இவ்வொலிகள் ல, ன, த ஆகிய எழுத்துகள் திரிந்து ஏற்பட்டவையே. ஆயினும், இவற்றினிடையேயும் பல சொற்கள் அத்தகைய மாறுதல்களுக்கு இடமில்லாத முதற் சொற்களாகும். இம்முதற் சொற்களில் பல தமிழ் அல்லது தமிழினச் சொற்களே ஆயிருக்கக் கூடும். ட என்ற எழுத்து வகையில் பல சொற்களில் இவ்வுண்மையைத் தெளிவாகக் காணலாம். இரண்டு எடுத்துக்காட்டுகள் இவ்வகையில் தருவோம். கடம் என்பது குடம் என்ற தமிழ்ச் சொல்லின் இன்னொரு வடிவம். இதைவிடத் தெளிவாகத் தமிழ்ச்சொல் பட்டணம் என்பதாகும். இச்சொல் தமிழில் பட்டினம் என்றும் பட்டணம் என்றும் வழங்கும். இதன் உண்மையான பொருள் கடற் கரையிலுள்ள துறைமுக நகரம் என்பதாகும். தமிழ் நாட்டில் பட்டணம் என்று முடியும் பெயர்களாகிய சென்னைப் பட்டணம், காயல் பட்டணம், நாகப்பட்டணம் ஆகியவையும் தெலுங்கு நாட்டிலுள்ள விசாகப்பட்டணம்கூடக் கடற்கரையிலேயே இருப்பது கவனிக்கத்தக்கது. உலக வழக்கத்தில் இந்த நுட்பத்தை மக்கள் கவனிப்பதில்லை. வடமொழியாளரும் இந்நுட்பம் அறியாமல் அதனை நகரம் என்ற பொருளிலேயே வழங்குகின்றனர். இச்சொல் பட்டணம், பட்டநம், பத்தநம் என்று பலவாறாக எழுதப் பெறுவதும், வடமொழி காஞ்சி அரசர்களால் வளர்க்கப் பட்ட காலத்தில் வாழ்ந்த தண்டிக்குப் பிற்காலத்திலேயே இது வடமொழியில் ஆளப் பெறுவதும் அது புது வரவு என்பதை வலியுறுத்தும். மேலும் பட்டி (ஊர்) என்ப துடன் இச்சொல் இணைவுடையது.
ண என்ற எழுத்து வருமிடங்களில் பெரும்பாலும் நகரம் மாறியே ணகர மாகும். அப்படி மாறாத இடங்களில் அச் சொற்களும், தமிழ் அல்லது தமிழினச் சொற்களேயா யிருக்கக்கூடும்.
இவை தவிர வேத காலத்துக்குப்பின் முன் வழக்கு இல்லாத பல சொற்கள் வடமொழியில் வந்து குவிந்தன. இவற்றுள் பலவற்றை வடமொழி உரை யாசிரியர்களே தேசி அல்லது நாட்டுச் சொற்கள் என்று ஒத்துக் கொண்டனர். நாம் அறிந்தவரை குறைந்தது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்வரை வடமொழி இந்நாட்டில் பேசப்பட்டதாகத் தெரியவில்லை. ஆகவே, அதன் சொற்களெல்லாம் நூல் வழக்கிலேயே பாதுகாக்கப்பட்டிருத்தல் வேண்டும். வேதவழக்கு முழுவதையும் யாஸ்கர் என்பவர் நிருக்தம் என்ற நூலிற் தொகுத்துக் கூறி யிருக்கிறார். அவர்க்குப் பிற்பட்ட பாணினியும் தம் காலத்துச் சொற்களை ஆராய்ந்து அவற்றின் சொல் மூலங்கள் அல்லது தாதுக்களைத் தொகுத்தார். இவ்விரண்டு தொகுப்புகளுக் கிடையிலும் புதிதாக வந்த சொற்களிலும் பாணினிக்குப் பின் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த தண்டி காலம்வரை வந்த சொற் களிலும் பெரும்பாலானவை தமிழினச் சொற்களே. “காஞ்சி”க் காலத்துக்குப் பின் சைவ சித்தாந்தக் கருத்துகள் வடமொழியில் புகுந்ததை யொட்டிப் பல தமிழ்ச் சொற்களும் நேரிடையாகவோ கருத்து மொழி பெயர்ப்பாகவோ வட மொழியில் சென்று ஏறின. ஈசன் என்பதற்குப் பதியும் ஆன்மா என்பதற்கு பசுவும் மற்றும் மாயை, பாசம், மலம் முதலிய சொற்களும் வடமொழியில் கையாளப் பட்டன.
பல சொற்கள் வடமொழியில் கலவாமல் வட இனமொழியாகிய இந்து° தானி முதலியவற்றில் வழங்கினதுண்டு. எடுத்துக்காட்டாக, திரும்பு அல்லது வளை என்ற பொருளில் இந்து°தானியில் வழங்கும் மோட் (மோடு) என்ற பகுதி இவ்வகையில் தமிழ் முடங்கு, முடக்கு என்பவற்றுடன் இயையு என்று காணலாம். வேறு பல சொற்கள் நேரிடையாக வட மொழிக்குச் செல்லாமல் பாளி, பாகதம் முதலிய நாட்டு மொழிகளின் வாயிலாக வடமொழி சென்றன. இவற்றுள் சிலவற்றை வரும் பகுதிகளில் ஆராய எடுத்துக் கொள்வோம்.
சொற்களின் போக்கிலும், இலக்கண அமைப்பிலும், வாசக ஒழுங்கிலும், வடமொழி தமிழாலடைந்த மாற்றம் கொஞ்ச நஞ்சமன்று. தமிழில் பெயர்ச்சொல் ஒருமையிலும், பன்மையிலும் ஒரே படியான உருபு ஏற்கும். வடமொழியில் தெளிவான உருபு இல்லாமல் பெயர்ச் சொல் சிதைந்து மாறும். ஆனால், நாளடைவில் வட மொழியிலும் ஒருமை, பன்மைகளில் ஒரே படியான உருபுச் சொற்கள் தோன்றின. நான்காம் வேற்றுமை உருபினிடமாக கிருதே (ஆக) என்ற சொல்லும் ஐந்தாம் வேற்றுமை உருபினிடமாக த° (இருந்து) என்ற உருபுச் சொல்லும் இத்தகையவை. தமிழினத்தின் கூட்டுறவால் வடமொழியில் முன் உருபுகள் (Preposition) அருகி இறுதியில் ஒழிந்தன; இணை இடைப் பெயர்கள் (Relative Pronoun) அருகி வினையாலணையும் பெயர் புதிதாக உண்டு பண்ணப்பட்டது. உம்மை இடைச் சொல்லால் (ச) இணைத்துத் தொடுத்த வினை முற்றுகளின் இடமாக வினை எச்சங்கள் பெயர் எச்சங்கள் பெருகின. சொல் ஒழுங்கிலும் பண்டை வட இன மொழியாகிய தொடுப்பு முறை (Analytic Sequence) நீங்கித் தமிழின முறையாகிய அடுக்குமுறை (Synthetic arrangement) ஏற்பட்டது.
ஆகவே, வடமொழி தமிழ்மொழி ஆகியவற்றினிடையில் ஒரு சொல்லோ பண்போ பொதுவாகக் காணப்பட்டால் உடன், தானே இலக்கணக் கொத்து ஆசிரியராகிய சுவாமிநாத தேசிகரைப் போல அது வட மொழியைத்தான் சார்ந்திருத்தல் வேண்டும் என்று கொள்வது அறிவுமாகாது; மனித நேர்மையான மொழிப் பற்றுமாகாது என்று காணலாம். ஆராய்ச்சியாளர் அவ்வியற்கையான மொழி உணர்ச்சிக்குக்கூட ஆளாகாமல் உண்மையை அறியும் அவாவை மட்டுமே கடைப்பிடித்தல் வேண்டும்.
அத்தகைய ஆராய்ச்சிக்குத் தூண்டுதல் தரும் வகையில் வரலாற்றுக் காலத்துக்கு முந்திய பொதுச் சொற்கள், இடைக்காலத்தில் வடமொழியில் சென்று வழங்கியதனால் வட சொற்களென்று கொள்ளப்பட்ட தமிழ்ச் சொற்கள் ஆகியவற்றுள் சிலவற்றை இங்கே ஆராய எடுத்துக்கொள்வோம்.
உலகில் எல்லா மொழிகளுக்கும் ஒரு முதல் தாய் மொழி இருந்திருத்தல் வேண்டும் என்று பல நாட்டுமக்களும் அறிஞரும் கருதி வந்திருக்கின்றனர். இந்நம்பிக்கையால் பொதுப்பட மொழியாராய்ச்சிக்குப் பல குந்தகங்கள் நேர்ந்திருக்கின்றன. மேனாட்டார் விவிலிய நூலின் பேபல் கோபுர வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு பல்லூழிகளுக்கு முன் யூதரின் தாய்மொழியாகிய ஏபிரெயமே உலகத் தாய்மொழியாயிருந்தது என்று நம்பி வந்தனர். ஆனால், ஆராய்ச்சி இந்நம்பிக்கைக்குச் சற்றும் இடம் தரவில்லை. வடநாட்டார் உலகின் தாய்மொழி வடமொழி என நம்பினர். ஓரளவுக்கு வடநாட்டு மொழியாராய்ச்சியும் மேலைநாட்டு மொழியாராய்ச்சியும் இதற்கு உதவின. ஏனெனில், வடநாட்டு மொழிகள் யாவும் உலகின் வேறுபல மொழிகளும் உண்மையில் ஒரே ஆரிய இனமொழிகளாதலால் பெரிதும் ஒப்புமை உடையவையா யிருந்தன. ஆனால், அவ்வினத்துக்கும் வடமொழி தாய் மொழியல்ல; பிற ஆரிய இனமொழிகளிலும் முந்தி இலக்கிய வடிவம் பெற்ற முதல் மொழி வடமொழியே என்று நாளடைவில் தெளிவாயிற்று.
தென்னாட்டில் தமிழ்மொழி மேற்கூறிய இரண்டு மொழிகளைப் போலவே உலகத் தாய்மொழி என்று பழந்தமிழரால் கொள்ளப்பட்டிருந்தது. வடமொழிப் பற்றுதலால் பண்டிதர்கள் சில நாள் இதனை ஏளனம் செய்து புறக்கணித்தனர். ஆனால், ஆராய்ச்சி இதனை முற்றிலும் ஏற்கும் நிலைமையி லில்லையாயினும் இதனை ஒருவாறு விளக்கும் பல சான்றுகள் தருகின்றது. அறிஞர் கால்டுவெல் தமிழினத்தின் இன்றைய மொழிகளாகிய தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு முதலிய பண்பட்ட பெருமொழிகளிடையேயும் பண்படாத பல மொழிகளிடையேயும் பிறமொழிகள் அல்லது மொழி உட்குழுக்கள் ஒன்றை ஒன்று தழுவுவதைவிடத் தமிழ் அவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஒவ்வொரு வகையில் தழுவி நிற்கும் நடுநாயக இணைப்பு மொழியாயிருக்கிறது என்று விளக்கினார். அதுமட்டுமன்று உலகின் பிற இனங்களாகிய ஆரிய இனம், செமித்திய இனம், மங்கோலிய இனம், ஆ°திரிக இனம், ஆப்பிரிக்க - அமெரிக்க இனங்கள் ஆகியவற்றுடனும், அவற்றின் தனி உறுப்புகளுடனும் தமிழ் பற்பல ஒற்றுமைகள் உடையது என்பதை அறிஞர்கள் பலர் எடுத்துக்காட்டியுள்ளனர். இத்தனை மொழிகள், இத்தனை இனங்களுடன் தமிழ் பின்னிக்கிடக்க அவை, தம்முள் இவ்வளவு பின்னல்களுக்கும் இடையே தமிழுடன் அடிப்படைத் தொடர்பு கொண்டு கிடப்பதைக் காண, தமிழ் உலகத் தாய்மொழியாய் இராவிடினும் இன்று அத்தாய் மொழிக்கு மிகவும் அருகிலிருக்கும் தலைமொழியும் எல்லா மொழி களின் இணைப்பு மொழியும் ஆகும் என்று அறிஞர் கால்டுவெல் முதலியோர் கூறினர்.
இற்றைக்குப் பல்லாயிரம், அல்லது பன்னூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்தே ஏற்பட்ட இவ்வுறவுகளில் சிலவே, சிலசமயம் தமிழையும் வடமொழியையும், சில சமயம் தமிழையும் ஆரியப் பொது மொழிகளையும், சில சமயம் தமிழையும் வடமொழி நீங்கலான பிற ஆரிய இன மொழிகளையும் இணைக்கின்றன. தமிழுக்கும் ஆரிய இன முழுமைக்கும் பொதுமையான பண்புக்கு உகரச் சுட்டை எடுத்துக்காட்டாகக் கூறமுடியும். இது தமிழில் அண்மையும் சேய்மையும் அல்லாத எல்லா உறவுகளையும்-இடைப்பட்ட தொலை, பின்புறம், மேல், கீழ், உள், மறைந்த நுண்பொருள் ஆகிய அனைத்தையும் குறிக்கும். வடமொழியிலும் ஆரிய இனத்திலும் உச்சம், உபரி, உத்-. முதலிய சொற்களிலும், சொற் பகுதிகளிலும் இது மேல் என்ற பொருளில் வழங்குகிறது.
தமிழ் பழைய, புது என்ற சொற்கள் வடமொழியிற் காணவில்லை. ஆனால், பண்டைய ஆரிய இன மொழியாகிய கிரேக்க மொழியில் உள்ளன. (ஆங்கிலத்தில் Palaeology பழைமையாராய்ச்சி என்ற சொல் இதிலிருந்து வந்ததாகும்.) இன்னும் அரிசி, நாவாய் முதலிய சொற்கள் (கிரேக்க மொழியின் ஒரிசா, நாவியா) இத்தகைய பழங்கால உறவுகள் அல்ல என்றும் அலெக் ஸாண்டர் படையெடுப்பின் பின் ஏற்பட்ட கிரேக்கர்-தமிழர் வாணிப உறவாலென் றும் கொள்ளப்படுகிறது. எப்படியும் பழைய, புது போன்ற சொற்கள் இவ்வாறு ஏற்பட்டிருக்க முடியாது. ஆகவே, ஆரியரான கிரேக்கர் கிரேக்க நிலம் வருமுன் அண்மை மேனாடுகளில் பரவியிருந்த ஈஜிய வகுப்பினர் தமிழருடன் கொண்ட தொடர்பின் பயனாகவே இவ்வுறவுகள் ஏற்பட்டிருக்கலாம்.
அரசர், இடையர் (அல்லது பசு மேய்ப்பவர்) என்று இருமைப்பட்ட பொருளில் ‘கோ’ என்ற சொல்லும் ‘ஆர்’ (நிறைவு) என்ற சொல் மூலத்தினுடன் தொடர்புடைய ஆரியன் (ஆன்றோன்) என்ற சொல்லும் வடமொழிக்கும் தமிழ்க்கும் பொதுவான இத்தகைய முதல் உறவுச் சொற்களாம். சுற்று, சூழ் என்பவற்றுடன் உறவுடைய சுன்னம், சூரியன் என்பவையும் இவற்றின்பாற்படும்.
எனவே தமிழ்க்கும் வடமொழிக்கும் பொதுவான சொற்களின் ஒரு பகுதி மனித நாகரிகத் தொடக்கக் காலத்தில் எல்லா மொழிகளுக்கும் தாயகமாக ஒரு தமிழின மொழி இருந்த காலத்தைச் சார்ந்ததென்பதும், அவ்வொரு மொழியின் நேர்வழி மொழியாய் இன்று இயங்குவது தமிழென்பதும், அத்தகைய தமிழுடன் இப்பண்டைய உறவு கொண்ட மொழி வடமொழி மட்டுமல்ல, பிற ஆரிய இன மொழிகளும், பிற இன மொழிகளும் கூடவே என்பதும் அறியக் கிடக்கின்றன.
இப் பழங்கால உறவைவிட்டு வரலாற்றுக் காலத்தில் தென் மொழியி லிருந்து வடமொழியாளர் எடுத்துக் கொண்ட சொற்களில் தமிழ்ச் சொல் என்று இன்று காட்டத்தகும் சொற்கள் சிலவற்றை முறைப்படி இனி ஆராய்வோம்.
தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவான சொற்கள் எல்லாம் வட சொற்கள் என்று கொள்ளப்படுவது தவறு என்று முன்னைய பகுதிகளில் காட்டிய செய்திகள் தெளிவு படுத்தும், பிறநாட்டு வட இனமொழிகளில் காணாமல் வேதகால வடமொழியில் மட்டும் காணப்படும் சொற்கள், வேதகால வடமொழியில் காணாமல் பிற்கால வடமொழியில் காணப்படும் பல்லாயிரக் கணக்கான சொற்கள், வடமொழியில் காணாமல் பாளி, பாகதம் முதலிய பண்டைப் பேச்சு மொழிகளிலும் இந்தி, வங்காளி, குஜராத்தி, மராத்தி முதலிய தற்காலப் பேச்சு மொழிகளிலும் காணப்படும் கணக்கற்ற சொற்களில் பெரும்பகுதி ஆகியவை. தமிழிலிருந்து நேராகவோ தமிழின மொழிகளிலிருந்தோ எடுக்கப்பட்டு வடமொழியியற்கைப்படி மாறின சொற்களே யாகும். இங்ஙனம் மாறிய மாற்றம் இருவகைப்படும். ஒன்று சொல்லின் பொருளை மொழி பெயர்த்தல், மறைக்காடு என்பதற்கு வேதாரண்யம் என்றும், திருமலை என்பதற்கு ஸ்ரீபர்வதம் என்றும் மொழி பெயர்த்துக் கொள்வது இவ்வகை. இன்னொருவகை தமிழ் ஒலிகளை அப்படியே வைத்தும் திரித்தும் வழங்கல், பொதிகை மலை வட மொழியில் மலயம் என்று பெயர் பெற்றிருப்பது திரிபு மிகுதி பெறாத வழக்கு. காவிரி என்ற தமிழக ஆற்றின் பெயர் காவேரி என்று மாறுபட்டதும் வைகை வேகவதி என்று மாறுபட்டதும் பலவகையில் ஒலியை மாற்றித் திரித்துக் கொண்ட திரிபு வழக்குகள். இத்தகைய சொற்கள் வடமொழியில் சென்றன என்பதை நிலை நாட்டச் சில சான்றுகள் சொற்களைத் தருவோம்.
அகில் உலகில் இன்றுகூட வேறெங்கும் விளையாது பொதிகை மலை யடிவாரம் ஒன்றிலேயே விளையும் ஒரு வகைச் சந்தனமாம். இது குழம்பாய் அரைப்பதற்கு மட்டுமன்றிச் சாம்பிராணி போல் புகைப்பதற்கும் வழங்கப்படுவது. பெண்கள் அகிற்புகையை ஊட்டித் தலைமயிர்க்கு மணமூட்டுவர். தமிழிலக்கியத் திலும் வடமொழி இலக்கியத்திலும் இது பெரிதும் குறிக்கப்பட்டுள்ளது. இது வளர்வது பொதிகை யிலென்று வடமொழி நூல்களே குறிக்கின்றன. வடமொழி யில் இதன் பெயர் அகரு என்பதாகும். தென்னாட்டு மலையின் பொருள் தென் மொழியிலிருந்து முதலில் தோன்றியிருத்தல் வேண்டும். வடமொழியில் சிறிது மாறுதலுடன் இது கையாளப்பட்டது.
யானை இந்தியாவில் மேற்குத் தொடர் மலைப்புறத்திலும் பர்மாவிலும் ஆப்பிரிக்காவிலும் மட்டுமே காணப்படும் விலங்கு. இதற்குச் சரியான இடுகுறிப் பெயர் வடமொழியில் கிடையாது. கரி, ஹ°தி முதலிய பெயர்களெல்லாம் கையுடைய விலங்கு என்று பொருள்தரும் இடுகுறிக் காரணப் பெயர்களேயாகும். இன்றும் யானை பழக்கும் பாகர் பெரும்பாலும் தமிழ்நாட்டை யடுத்த மலையாள நாட்டினரே. ஆனால், யானைநூல் இன்றும் சங்க காலத்திலும்கூட வடமொழி யிலேயே இருந்ததாம். இந்நூலும் பிற நூல்களும் தமிழினின்றுதான் வட மொழிக்குச் சென்றிருத்தல் வேண்டுமெனக் கொள்ளுதல் இயல்புதானே. அங்ஙனம் சொல்லும்போது அவற்றின் சொற்கள் பல மேற்கூறியபடி நேராகவும் மொழி பெயர்த்தும் திரித்தும் வடமொழி புகுந்தன என்பதும், பழைய நூல்கள் தமிழில் அழிக்கப்பட்ட பின் அவை வட மொழிக்கு உரிமையாக்கப் பட்டன என்றும் கூறுதல் வேண்டும்.
சைவ சமயம் இன்னும் முற்காலத்தும் தமிழ்நாடு மட்டிலுமன்றி இந்தியா எங்கும் பரந்திருந்த தென்பது யாவரும் அறிந்ததொன்றே. ஆயினும் ஆராய்ச்சி முறையில் சைவ சிந்தாந்தம் நிலைபெற்று வளர்ச்சி யடைந்தது தென்னாட்டில் தான். அதன் நூல்கள் வட மொழியிலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்டன என்று அண்மைவரைப் பலர் கூறிவந்தனர். சைவப் பெருந்தலைவரும் ஆராய்ச்சி அறிஞருமான அருள்திரு மறைமலையடிகள் அந்நூல்கள் மெய்கண்டார் முதலிய தமிழறிஞர்களால் தமிழில் செய்யப்பட்டதை வட மொழிப் பற்றாளர் சிலர் வடமொழியில் பின் மொழிபெயர்த்துக் கொண்டனர் என்பதைக் காட்டியுள்ளனர். மேலும் இவ் வடமொழி தென்மொழி நூல்களுக்கு நெடுநாள் முன்னரே தமிழ் நாட்டில் சைவ சித்தாந்த உண்மைகள் நன்கு பரவியிருந்தன என்பதை 10ஆம் நூற்றாண்டிலும் 8ஆம் நூற்றாண்டிலுமுள்ள சோழர் பல்லவர் கல்வெட்டுகள் காட்டுகின்றன. 5ஆம் நூற்றாண்டில் எழுதப் பெற்றதாகக் கொள்ளப்படும் திருமூலர் திருமந்திரமும் இதனை வலியுறுத்தும். வடமொழியிற் சென்ற இச் சைவ சித்தாந்தத்துடனும் அதன் கிளைகளான சங்கரர் மாயாவாதத்துடனும், இராமானுஜர், மத்துவர், நீலகண்டர் முதலியவர் நெறிகளுடனும் பல தமிழ்ச் சொற்கள் வடமொழியில் பயிலலாயின. அவற்றை மேலே விவரித்துக் கூறுவோம்.
பெரிய புராணக் கதைகள், திருவிளையாடற் புராணக் கதைகள், தமிழர் கதைகள் ஆகிய யாவும் வட மொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டன என்று வடமொழியின் மொழிபெயர்ப்புகளை மூலமாகக் கொண்டு கூறுவது எவ்வளவு பேதைமை?
பொதுப்பட இவ்விலக்கிய நூல்களெல்லாம் வடமொழிக்குப் புது வரவு என்று காட்டும் சான்றுகள் ஆராய்பவர்க்குக் கிட்டாது போகவில்லை. நாயன் மார்கள், ஆழ்வார்கள் பெயர்கள் சில சமயம் போதிய தமிழறிவில்லாத வடமொழிப் புலவரால் தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. பாரதத்தில் பாண்டியன் தலை நகர் மணவூர் என்று கூறப்படுகிறது. உண்மையில் அவ்வூரின் பெயர் மணலூர் ஆகும். தமிழில் ஏட்டெழுத்தில் லகரம் வகரமாகக் காணப்பட்டது. மொழி பெயர்ப்பவர் தமிழறிஞராயிருந்தால் இத்தகைய சிறு தவறுகளுக்கு இடமிராது.
இன்னுமொரு சிறு சுவைதரும் உண்மை இலக்கிய அறிவு தெற்கினின் றும் வடக்கே சென்றதென்பதை வலியுறுத்தும். தமிழில் செயற்பாட்டுவினை படு, பெறு, உண் என்ற மூன்று பகுதிகளின் சேர்க்கையால் பெறப்படும். அடிக்கப் பட்டான், அடிக்கப்பெற்றான், அடியுண்டான் எல்லாம் ஒரே பொருள். நோய்வாய்ப் படுவதையும் இதேபோல் நோயுண்டான் என்பது வழக்கம். தமிழர் செடிகளின் நோய்க்குப் புதுமையான பெயர் கொடுத்துள்ளனர். தேங்காயின் நோய் தேரை: விளாங்காயின் நோய் ஆனை: தொடராக வரும்போது தேரையுண்ட தேங்காய் என்று வருவதனால் தேரை என்ற உயிரினம் தேங்காயை உண்டது என்ற மயக்கம் ஏற்படுகிறது. பண்டைத் தமிழர் இது வெறும் மயக்கம் என்பதை அறிந்திருந்தனர் என்பதை நாலடியாரில் “தேங்காயுண்ணாத தேரைக்கு உண்ட குற்றம் ஏற்படுவதுபோல” என வரும் குறிப்பினால் காணலாம். வடமொழி யாளரும் அவர்களைப் பின்பற்றிய எல்லாப் பிற மொழியாளரும் தமிழின் இத் தனிச்சிறப்பு அறியாது அதனை மொழிபெயர்த்து உலகிலில்லாத ஒரு செய்தியை உள்ளதாகக் கருதி மயங்கினர்.
தமிழரின் பண்டைய வரன்முறை உரிமை தாய்வழியில் என்பது அறிஞர் முடிவு. இன்று வரை அது மலையாளத்திலும் பழந்தமிழ் நாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்த வங்கக்கடல் தீவுகளிலும் நிலைபெற்றுள்ளது. இன்று பொருள் வரன்முறை உரிமை குறிக்கும் தாயபாகம் என்ற சொல்லில் முதற் பகுதியாகிய தாயம்-இப்பழைய உரிமையினை நினைவூட்டுவது. தாய்வழி வரவே தாயம் எனப்பட்டது. இது இன்று சொல்லின் முதற் பொருளிழந்து வடமொழியில் குருட்டுத்தனமாக வழங்கப் பெறுகிறது.
பூசை, பூசி என்ற சொற்கள் பூக் கொண்டு செய்வது, பூசுவது என்ற குறிப்புடையவை என்பர் அறிஞர் கால்டுவெல். இந்நூல் வேத மொழியிலில்லா வழக்கு. பிற ஆரிய இனமொழிகளிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாயை என்பது உலகத் தத்துவத்தைக் குறிக்கும் சொல். தொடக்கத்தில் உலகம் அழிவது அல்லது திரிவது என்ற உண்மை தோன்ற மாய்-என்ற பகுதியி லிருந்து மாயை, மாய்கை என்ற சொற்கள் எழுந்தன. (இன்றும் இதனை மாயை, மாய்கை என்று எழுதுவது உண்டு) மாயாவாதிகள் இதனைப் பெரு வழக்காக வழங்கி வடமொழிக்குக் கொண்டு சென்றனர். மாய் என்ற பகுதியுடனேயே தொடர்புடைய இன்னும் இரு பகுதிகள் மா, மால் என்பனவாம். இவை கருமை, மயக்கம் என்றும் பொருள் தரும். திருமால் மாயா உருவினன் என்று பாடப் படுவதும், கரிய உருவினன் என்பதும், உமை வடிவினன் எனப்படுவதும் சேர்த்து நோக்கினால் சமய அடிப்படைக் கருத்துடைய இவ்வொப்பு மைகள் அனைத்தும் தமிழர் கருத்தினின்றும் தமிழ் மொழியினின்றுமே தோற்றின என்பது விளங்கும்.
உடலில் 72000 நாடிகளுள் 10 தலைமையுடைன என்றும், அவற்றுள்ளும் சிறப்புடையவை. இடைகலை, பின்கலை, சுழிமுனை என்றும் எல்லாவற்றுக்கும் நடுநாயகமானது சுழிமுனை என்றும் கூறப்படும். இவற்றுள் சுழிமுனை உந்திச் சுழிமுதல் நெற்றிமுனை வரை செல்வது. உந்திச்சுழி பிறப்புக்குக் காரணமாகிய அறிதுயில் நிலையையும், நெற்றிமுனை பிறப்பறுக்கக் காரணமான மெய்யறி வையும் உணர்த்தும். எனவே சுழிமுனை என்பதிலுள்ள சுழி-எதனை உணர்த்தும் என்று கண்டோம். இச் சுழியின் வடிவத்தையே ஓங்காரம் என்றும் பிள்ளையார் சுழி என்றும் கொள்கிறோம். மேலும் அறிதுயில் சுழுத்தி எனப்படும். வடமொழி யாளர் சுழி முனையை ஸுஷீம்நா என்றும் சுழுத்தியை ஸுஷீப்ரிதி என்றும் திரித்துக்கொண்டனர். புத்தகத்தைத் திருடிக் கொண்டு போனவனுக்கு அதை அறியும் அறிவையுமா திருடிக்கொண்டு போக முடியும்? வடமொழியாளர் ’ஈயடித்தான் காப்பி’களிடையே சொற்களின் உயிர்கள் போய்விட்டன.
நெடுங்காலமாகத் தமிழரும் இந்தியாவில் பிற தாய் மொழிகள் பேசும் மக்களும் தாய்மொழியிலும் இந்தியப் பழங்குடியினமான தமிழினத்திலும் (நான்காம் ஐந்தாம் வருணத்தவரிடத்திலும்) பற்றுதலின்றி அவ்வின மொழி களைப் பேணாது விட்டதன் பயனாக அவற்றின் சொற்கள் எவை, வட சொற்கள் எவை என்ற வேறுபாடு தெரிவதற்கிடமில்லாம லிருந்தது அந்நிலையில் வடமொழியாளர் தம் இலக்கியத்தில் ஒரு சொல்லை வழங்கிவிட்டால் ஆளில்லாத இடத்தில் அகப்பட்ட தெல்லாம் உடைமை தாம் என்பதுபோல் அது அவர்களுடை தென்று கொள்ளப்பட்டது. பாணினி போன்ற இலக்கண அறிஞர் சொற்களை ஆராய்ந்து சொல் மூலங்கள் தொகுப்புகள் கண்டதுபோல் பிறமொழிகட்கு யாரும் தொகுப்புச் செய்யவில்லை. தமிழில் தொல்காப்பியர் காலம்முதல் மொழி இலக்கணம் ஏற்பட்டபோதிலும் சொல்தொகுப்பு மிகப் பிற்பட்ட காலத்திலேயே ஏற்பட்டது. அப்போதும் இலக்கிய வழக்குக்கு வெளியேயுள்ள உலகவழக்குச் சொற்களை யாரும் தொகுக்க முன் வரவில்லை. இந் நாள்வரை எவரும் எண்ணவுமில்லை. இலக்கியமும் சமய சச்சரவுகளால் பெரும் பகுதிகளும் சிதைந்து ஒரு பகுதியே நமக்கு வந்து சேர்ந்துள்ளதனால் ஆராய்ச்சி செய்வோர். நெடுங்காலம் வடமொழியாளர் சொல்லையே மந்திர மொழியாகக் கொண்டு மயங்கினர்.
யாம் தமிழெனக் கொள்ளும் சொற்கள் இன்னும் பலவற்றை எமக்குத் தோன்றிய காரணங்களுடன் மேலே ஆராய்வோம். தமிழர் ஒருசார்பை-அதிலும் தாய்மொழிக் கெதிரான ஒருசார்பை அகற்றி நேர்மையாக முன் முடிவு எதுவுமின்றி ஆராய ஒருப்பட இவை உதவுமாயின் எம் முயற்சி வீண் முயற்சியன்று என்ற நிறைவு அடைவோம்.
இலக்கியம், இலக்கணம் என்ற சொற்கள் வட சொற்கள் என்றும் லக்ஷியம், லக்ஷணம் என்பவையே அவற்றின் வடமொழி உருவங்கள் என்றும் பலரால் கொள்ளப்பட்ட காலம் உண்டு. இன்றும் பலர் அப்போலி வாதத்தை நம்பக்கூடும். ஆகவே, அவை வடசொற்கள் அல்ல என்று நாம் கொள்வதற்கான காரணங்களை இங்கே விளக்குவோம்.
தமிழில் இலக்கியம், இலக்கணம் என்ற சொற்கள் அவை இன்று வழங்கும் பொருள்களிலேயே வரலாற்றுக் கெட்டிய காலந்தொட்டு வழங்கி வந்திருக் கின்றன. இக்கருத்துகளை விளக்க வேறு சொற்கள் வழங்கியதாகவும் தெரிய வில்லை. (இயல், இசை, நாடகம் என்ற மூன்றில் இயல் என்பதை இலக்கியம் எனச் சிலர் தவறாகக் கொள்கின்றனர். இயலில் இலக்கணம் ஒரு பகுதி என்பதையும் இசை, நாடகம் ஆகியவற்றுள் இலக்கியமும் உண்டு, இலக்கணமும் உண்டு என்பதையும் கவனித்தல் வேண்டும்.)
தமிழில் இச்சொற்கள் வடமொழியிலிருந்து வந்தன வென்றால் இங்கே முன் வேறு சொல் இருந்திருத்தல் வேண்டும். அங்ஙனமில்லாததால் இச் சொற்கள் தமிழில் வழங்கிய சொற்களே. இன்னும், வடமொழியிலிருந்து இச் சொற்கள் வந்தன என்று நிலைநிறுத்த விரும்புவோர் முதலில் அச்சொற்கள் வடமொழியில் வழங்கினவா வழங்குகின்றனவா என்று பார்த்தல் வேண்டும். வட மொழியில் அன்றும் இன்றும் இலக்கியம், இலக்கணம் என்ற சொற்களினிடமாக லக்ஷியம், லக்ஷணம் என்ற சொற்கள் வழங்கப்பட்டதேயில்லை. சாஹித்யம், வ்யா கர்ணம் என்ற சொற்களே அவற்றைக் குறிக்கின்றன.
அப்படியாயின் இலக்கியம், இலக்கணம் ஆகியவற்றின் பகுதி எது? இலக்கு என்பதேயாம். இதனை இன்றும் தமிழ் நாட்டில் இடம் என்ற பொருளில் செட்டிநாட்டார் வழங்கு கின்றனர். இலகு, இலங்கு என்பன இதன் மூலப் பகுதிகள். செல்லுமிடம் என்ற பொருளில் வழங்கப்பட்டுப் பின் குறிக்கோள், கருத் தியல் குறிக்கோள், பொருள்களில் இச்சொல் வழங்குகிறது. கட்டு என்ற சொல்லிலிருந்து கட்டியம் (கோமாளித்தனம்) அமைந்தது போல் இலக்கு என்பதி லிருந்து குறிப்பு வினை யடியாகப் பிறந்த அம் ஈற்றுப் பண்புப்பெயரே இலக்கியம் ஆகும்.
இலக்கணம் என்பது இலக்கு என்ற பகுதியுடன் வண்ணம் என்ற சொல்லின் மூலமாகிய அணம் என்ற பண்புவிகுதி சேர்ந்த சொல். இன்னணம் என்ற தொடரில் இது முழுச் சொல்லாய் வருவது காண்க.
வாழ்க்கைக் குறிக்கோளை எடுத்துக் காட்டும் உறுதி நூல்கள் இலக்கியம். அவற்றின் பண்புகளை ஆராய்வது இலக்கணம். இவ்வளவு தெள்ளிய உயரிய கலைப்பண்புடைய சொற்கள் இலக்கியத்துக்கும் இலக்கணத் துக்கும் எந்தப் புதியமொழியிலும் பழம்மொழியிலும் இல்லை. உண்மையில் பிறமொழிகளில் இவற்றுக்கான சொற்களின் முதற்பொருள் நகைப்புக்கிடமாவன. வடமொழியின் இலக்கியம், இலக்கணம் என்பவற்றுக்குச் சரியான சொற்களின் முதற்பொருள் உடனிருத்தல், விளக்கம் என்பனவாம். ஆங்கிலம் முதலிய மேனாட்டு மொழிகளில் இலக்கியம் என்பது எழுதப்படுவ தென்றும், இலக்கணம் என்பது சொற்பயிற்சி என்றுமே பொருள் படுகின்றன. சொல்லாட்சியில் மட்டுமன்றிப் பொருளாட்சியிலும் இத்தகைய உயர்வுடைய தமிழர் செல்வக் குவைகளை அவற்றை என்றுமறியா மூங்கை மொழியாகிய வடமொழியின் மீது சுமத்தல் என்ன அறியாமை!
இவ்விரு சொற்களோடு தொடர்புடைய சொல் இலக்கம் என்பது, பத்தும் நூறும் எண்ணலளவாயிருந்த காலம் திராவிட மொழிகள் பிரியாத காலம் என எண்ணப்படுகிறது. அதன்பின் ஒருபடி கூட்டி ஒன்பது நூற்றுக்குப் பின் பத்து நூறு ஆகமுடியும் என்ற பொருள்பட ‘ஆய் இறும்’ அல்லது ‘ஆயிறும்’ என்ற தொடரே ஆயிரமாயிற்று. பின்னும் கணக்கு வளர்ச்சியும் கணக்கர் வளர்ச்சியும் ஏற்பட்டபின் கிட்டத்தட்ட அதே பொருளில் இலக்கம், கோடி என்ற பொருள் களையும் அமைத்தனர். இலக்கம் என்பது இலக்கு ஆயது என்பது, இன்னும் சிறு செல்வர் ஆயிரத்தையும், பதினாயிரத்தையும் பெருஞ் செல்வர் ஆக விரும்பு வோர் முதற்கண் இலக்க (நூறாயிர) த்தையே இலக்காகக் கொள்ளுதல் காணலாம். கோடி ஒரு தனிமனிதன் செல்வ எல்லையைக் காட்டிற்று. கோடி வகுத்தவர் கொடி கட்டி வாழ்ந்தனர். அக்கொடி கோடியைக் குறித்த சொல்லே யாதலும் கொடிநிலை, கொடுக்கு ஆகிய சொற்களில் அது அப் பொருளில் வருதலும் காணலாம்.
கொடி, கோடி ஆகியவற்றுடன் தொடர்பு கொண்ட பகுதி கோடு-கோணு என்பதாம். இதனடியாகப் பிறந்த இரண்டு சொற்கள் கோணம் என்பதும் கோட்டை என்பதும் ஆகும். இவற்றுள் முன்னது வடமொழியில் மட்டுமன்றி ஆரியமொழிகள் பலவற்றுள்ளும் காணப்படும் சொற்களுள் ஒன்று. இரண்டாவது வட மொழியில் அருகலாகவே வழங்குகிறதாயினும் கன்னட, மராட்டிய நாடுகளில் பெருவழக்கமாய் வழங்கிற்று. வரலாற்று மாணவர், பெரும் போர் நிகழ்ந்த இடமாகிய தலைக் கோட்டை யையும் வடஇந்தியத் தனியரசாகிய இராவு கோட்டையையும் கவனிக்க.
வைசியர் என்ற சொல்லும் கருத்தும் வகுப்பும் வடநாட்டைச் சார்ந்தன. அதற்கிணையாகக் கொள்ளப்படும் சொல்லாகிய வணிகர் என்ற சொல்லும் பொருளும் வகுப்பும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவை. வணிகர் என்ற சொல் வடமொழியில் வழங்கப்படினும் அது வடசொல் அன்று, தமிழ்ச் சொல்லேயாம் என்று காட்டுவோம்.
ஆரியர் இந்தியாவுக்கு வரும்போதும் நெடுநாள் பின்னரும், வாணிகம் செய்திலர். மேலும் கடல் கடந்த வாணிகம் பண்டும் இன்றும் வடநாட்டினரை விடத் தென்னாட்டினராலேயே மிகுதியும் பயின்று வரப்பெறுகிறது. பாண்டியன் சோழன் ஆட்சியில் கடற்றுறைப் பட்டினங்கள் பற்றிக் கேள்விப்படுவது போல் வடநாட்டில் என்றும் (முகலாயர் ஆட்சியில் கூட) நாம் கேள்விப்படவில்லை. எனவே வணிக வகுப்புத் தோன்றி வளர்ந்த பகுதி தமிழ் நாடேயாதலால் அச்சொல் தமிழேயாதல் வேண்டும் என்க.
வணிகர் என்ற சொல்லின் பகுதி வண்மை என்பது. வேளாளர் நிலச் செல்வமிக்கவர், விருந்தோம்புவர். வணிகர் கலச் செல்வமிக்கவர், வண்மையால் வழங்குபவர்.
தமிழ்மக்களிடையே வணிகர் செழித்தோங்கியிருந்ததற்கு இருக்கு வேதமே சான்று பகரும். தமிழராகிய த°யூக்கள் அந்நாள் நகர்களும் அரண்களும் துறைமுகங்களும் உடையவராயிந்தனர் என்றும், அவர்களிடையே வணிகர் பணிகர் என்ற வகையினர் இருந்தனர் என்றும் இருக்குவேதம் உரைக்கிறது. இவ்விடத்தில் பணி என்ற வடசொல்லின் பகரம் தமிழுக்குப் பொதுவான வல்லெழுத்துப் பகரமேயன்றி மெலிந்த பகரம் அன்று. வல்லெழுத்துப் பகரமும் வகரமும் தமிழில் போலியாக மாறும். வடமொழியில் மென் பகரம் அங்ஙனம் மாறும். ஆகவே முற்காலத்தில் பணி, பணிகர் என்றும் பின் வணிகர் என்றும் வழங்கிய சொற்கள் தமிழின் கிளைச் சொற்களேயாம் என்க.
இன்றும் மலையாளத்தில் கைத்தொழில் முதலாளி வகுப்பினர் பணிக்கர் எனப்படுதல் காண்க.
நீர், மீன், கலை, நிலையம் ஆகிய சொற்கள் தமிழினின்று வடமொழி புக்கதெனத் தெளிவாக விளங்கும் சொற்களெனக் கால்டுவெல் காட்டியுள்ளனர். அவற்றின் பகுதி நீர்மை, மின்னுதல், கல் (கற்றல்),நில் என்பனவாம். அன்றியும் இவ்வகையைச் சேர்ந்த தமிழ்ச் சொல்லாம் அதனுடனொத்த புனல் தமிழ்ச் சொல்லாதலும் அதனுடன் தொடர்புடைய கனல், கனலுதல் ஆகியவற்றையும் காண்க.
மேற் கூறிய சொற்களுடன் சேர்த்தெண்ணத்தக்க ஆரிய தமிழ்ச் சொல் வலயம் ஆகும். வல் என்ற பகுதி ஆற்றலையும் வலம் ஆற்றலுடைய வலக்கை யையும் அதனால் படும் வெற்றியையும் கொடியையும் குறிக்கும். சுற்றி வருபவர் வலப்புறமாக வருவதால் வலம் சுற்றுதல் என்றும் வலயம் சுற்று என்றும் ஆயிற்று. இதன் இன்னொரு வடிவம் வளையம். உண்மையில் இது வளை என்ற பகுதியிலிருந்து வந்தது. வடமொழியில் இப்பொருட் சிறப்பு களின்றி இப்பெயர் இடு குறியாக எடுத்துக்கொள்ளப்பட்டது. (வெற்றியைக் குறிக்கும் சங்கின் வாய் வலப்புறமாயமைந்த தாதலின் அது வலம்புரியாயிற்று).
நட என்பதிலிருந்து நடனமும், நாடு என்பதிலிருந்து நாடகமும் நாட்டியமும் தோன்றின. வடமொழியில் இச்சிறப்புகள் இல்லாததோடு எல்லாம் நடனம் என்ற பொதுப் பொருளுடனேயே வழங்கின.
தாண்டவம் ஒருகால் ஒருகால்மீது தாண்டி நிற்கும் நிலைகுறிக்கும் தண்டம், தடி என்ற சொல்லுடன் இயைபுடையது. அதனால் அடித்துத் தண்டியதே தண்டனையின் முதற்படி ஆதலால் தண்டனை என்ற சொல்லும், ஆற்றலுடையவர் பாதுகாப்பில் சென்று பணிந்து பொருள் தருதல் தண்டம் வழங்கல் என்றும், பாதுகாப்பில் ஒருவன் தன்னை ஒப்புவித்தல் தண்டனிடுவதென்றும் வழங்கியது கவனிக்கத்தக்கது.
பசு, பாசம், பசுமை, பசை என்ற சொற்களும் நயம், நசை என்ற சொற்களும் நயப்பு, நைப்பு (நைப்பாசை) நெய், நெசவு என்பவற்றுடன் ஒப்பிட்டு நோக்கத்தக்க தமிழ்ச் சொற்கள். வடமொழியில் அவற்றுக்குப் பகுதியில்லை.
இவற்றைப்போலவே வீரம் என்ற சொல் வீறுடனும், திடம் என்பது திட்பம், திட்டம், திண்ணம் என்பவற்றுடனும் மாரணம், மாறு என்பதனுடனும், கேளிக்கை, கேலி, கேள், கேள்மை என்பவற்றுடனும் நானா (வகை) என்பது (நாலா) பக்கம் என்பதனுடனும் உறவுடைய தமிழ்ச் சொற்கள்.
பாலன் பால்குடி மாறாச் சிறு பருவத்தினன் என்ற கருத்தில் எழுந்தது. வால் என்பது வெண்மை. தூய்மைப் பொருளுடையது. இளங்குருத்தைக் குறிப்பாகக்கொண்டு இளமை குறித்தலால் வாலிபன் இளைஞனுக்கேற்ற சொல்லாயிற்று.
துண்டம் என்ற சொல் துண்டு என்ற தமிழ்ச் சொல்லேயாம். துணி என்ற வினையுடன் உறவுடையது. இதேபோல் பிண்டமும் தமிழ்ச்சொல்லேயாம். பிளவு பட்ட துண்டே பிண்டம். இதற்கு எதிர்ச்சொல்லான அண்டம், அளைத்து என்ற பகுதியுடன் இயைபுடைய தமிழ்ச் சொல் ஆகும்.
வடமொழியில் சிந்தை, கவலை ஆராய்ச்சி இவ்விரண்டையும் குறிக்கும், தமிழில் ஆராய்ச்சியைக் குறிக்கும் சிந்துதல், சிதறுதல் ஆகியவற்றுடன் இது தொடர்புடையது. செய்தியைப் பிரித்து அறியும் அறிவை இது குறிப்பதால் நல்ல தமிழ்ச் சொல்லேயாகும்.
சாரம், சாறு என்ற சொல்லுடனும் வாக்கு, வாசகம் வாய் என்ற சொல்லுட னும் சார்பு கொண்டவை. கலயம் கலத்தின் பிறிதொரு வடிவம். கலகம் கலவரம் என்ற தமிழ்ச் சொல்லைப் போல் கல என்ற பகுதியடியாகப் பிறந்தது.
கு என்பது வளைவு என்ற கருத்துடைய பகுதி. வடமொழி யிலும் இவ் விடைச் சொல் இப்பொருளில் வழங்குகிறதாயினும் அது அருகலான வழக்கே. அதனை ஒட்டிய சொற்கள் தமிழில் பெருவாரியானவை; சொல்லின் இன்றி யமையாப் பகுதியானவை. வடமொழியில் இவ்விடை என்றும் தனித்துச் சொல் லுக்குப் புற அடையாகவே நிற்கிறது. (எ-டு) ரூபம் கு-ரூபம்; தர்க்கம் கு-தர்க்கம் என்பனபோல. தமிழில் குவை, குவி. குடம். குலை, குப்பம், குவடு, கும் முதல் ஆகிய சொற்களில் பிரிக்க முடியா அளவு சொல்லுடன் ஒன்றுபட்டுக் காணப்படுகிறது. ஆகவே, இவ்விடைச் சொல்லாகிய சொல்மூலம் தமிழே என்றல் தெளிவு.
இம் மூலத்தின் திரிபுகளுள் ஒன்றே குகை என்பது. இதன் இன்னொரு வடிவம் குவை. அறுகம் புல்லுக்கு வடமொழி யிலுள்ள பெயராகிய குசை என்பதுகூட இதனுடன் தொடர்புடைய தமிழ்ச் சொல்லேயாயிருக்கக்கூடும். ‘கு’ என்னும் இடைச் சொல்லின் நெடிலுருவத்திலிருந்து கூர்மை, கூடு, கூவு முதலிய சொற்கள் தோன்றின. இச்சொற்களுடன் இணைப்பு உடையதே கூவல் என்பது. இதன் திரிபு கூவம், கூபம் என்றாம். இறுதி வடிவமே வடமொழியில் காணப்படு வது. வடமொழி புக்க தமிழ்ச் சொற்களுள் ஒன்றாகவே இதனைக் கொள்ளலாம்.
தமிழ் அல்லது திராவிடமொழிச் சார்புடையதாகக் கொள்ளக்கூடிய இன்னொரு சொல் சூடாமணி, ஆபாதசூடம் என்ற வடசொற்றொடர்களில் வரும் சூடா என்ற சொற்கள் ஆகும். வடமொழியில் இதன் பொருள் தலை என்பதாகும். தமிழில் தலையில் அணி என்ற பொருளுடைய சூடு என்ற சொல்லும், தெலுங்கில் முகங்கொண்டு பார் என்ற பொருளில் வரும் சூடு என்ற சொல்லும், இதனுடன் தொடர்புடையன. சுடிகை (பாம்பின் படமும்) இதனைச் சார்ந்த இன்னொரு சொல், தமிழில் தலை என்ற பொருளில் இது வழக்கிலிருந்திருக்கக் கூடும். வடமொழியில் இது பிற்கால வழக்கேயாதலாலும் இதன் சார்புச் சொற்களான தமிழ்ச் சொற்களும் பெரு வழக்காய்த் தொன்றுதொட்டு வழங்கி வருவதாலும் வடமொழிக்கினமான பிற மொழிகளில் இதன் சார்பான சொற்களின்மையாலும் இது திராவிடச் சொல்லேயாமெனத் தெளியலாம்.
காலம், கால் (ஒளி வீசு) என்ற மூலத்தை உடையது. ஒளிவீசும் கதிரவற் காகி அதன் மூலம் தெரியப்படும் காலத்துக்காயிற்று. கால் காற்றின் பெயருமாகி, காற்று என்ற சொல்லின் பகுதியுமாயிற்று.
ஒளியின் எதிர்மறையாகிய நிழலும் தமிழர் மரபில் ஒருவகை ஒளியாகவே கொள்ளப்பட்டதனால் இரண்டும் ஒன்றுக்கொன்று சொல் மாற்றாகத் தமிழில் வழங்கின. அதன் வழி நிழல் ஒளி எனப் பொருள்பட்டது போல, காலம், காளம், நிழல், கருமை எனப் பொருள்பட்டு கரிய உருவினளாகிய உலகத்தாய் காளி எனப் பட்டாள். கரியநஞ்சு கக்கும் பாம்பு காளிங்கன் எனப்பட்டது. வடமொழி இதனைப் பெரு வழக்காகக் கொண்டு தனதாக்கிக் கொள்ளினும் அதன் உடன்மொழிகளில் இச்சொல் பயிலாததனால், அது இந்தியர் முதல்-தாய்மொழியாம் பழந்தமிழ் அல்லது திராவிட மொழியேயாம் என்பது தெளிவாகும்.
படை படுத்தல்-கொல்லுதல் என்ற பொருள் தரும் தொழிற்பெயர். இது ஆகுபெயராய்ப் படுக்கும் கருவியையும், பொருளாகு பெயராய்ப் படுக்கும் மனிதத் தொகுதியையும் காட்டிற்று. படன் என்ற வடசொல் இதன் திரிபேயாகும் எனக் கொள்ளலாம்.
கரு என்பது உரி என்பது போன்ற உரிச்சொல்லடி, இயற்கையில் பிறப்பிலிருந்தே வரும் இயல்பைக் கரு என்றும் பின்வரும் வளர்வை உரி என்றும் தமிழர் கூறிப் பொருள்களைக் கருப்பொருள் என்றும் உரிப்பொருள் என்றும் வகுத்தனர். இதனுடன் தொடர்புடைய பிற தனித் தமிழ்ச் சொற்கள் கருது, கருத்து என்பன. (கருமம் என்ற சொல்கூட வட மொழியினத்தில் இல்லாத வடசொல் ஆதலால் இவற்றுடனொத்த இயற்கைச் சொல் எனக் கொள்ளப் படலாம்). பிறப்பில் இயல்பாய் வரும் பண்புகள் ஏற்படுவது அன்னை வயிற்றில் ஆதலின், அது கரு என்றும். பிள்ளை வளரும் பை கருப்பை என்றும் கூறப்பட்டது. வடமொழி ‘கர்ப்பம்’ என்ற சொல் மூலமற்ற சொல்; அது தமிழ்ச் சொல்லின் திரிபேயாதல் வேண்டும்.
குவிதலின் இன்னொரு வடிவம் கவிதல். இத்துடன் தொடர்புடைய சொற்கள் கவிகை, கவிழ், கவர், கவடு முதலியவை ஆகும்; இவற்றினின்று தோன்றிய இரு சொற்கள் கவிஞன், கவிதை என்பன; கவர்ச்சியுடையன கவிதை ஆகும்.
கவடு என்பது இரு பிளவான கொம்பு. கவர் என்றும் உலக வழக்கு உண்டு. அதன் சொற்போலித் திரிபு கபடு. இரண்டக நெஞ்சத்தை, அதாவது வஞ்சத்தைக் காட்டும் வடமொழிச் சொல் கபடம் இதன் திரிபு.
மேற்கூறிய வகையில் சொற்கள் பலவும் பெருக்கிக் கொண்டே போகலாம். சொல்லாராய்ச்சித் துறையில் முனைபவர்கள் இவற்றை ஒரு பொது எல்லைக் கோடாக மட்டும் கொண்டு ஆராய்ந்தால் வடமொழியினும் பல்லூழி தொன்மை யும்; இன்று காணப்பெறும் சிற்றிலக்கியம், சிற்றளவு கடந்து பேரளவும் உடைய தமிழ் மொழிப் பற்றிப் பலப்பல உண்மைகள் காண்டல் ஆகும்.
இன்றும் ஆழ்ந்து ஆராய்ந்தால் வடமொழியில் இடு குறியாகக் காணப்படும் சொற்கள் தமிழில் அழகிய திட்பமுடைய காரணச் சொற்களோ என்று ஐயுறுதற்கிடமிருப்பது காணலாம். தில்லையம்பலத்தின் பேர் சிதம்பரம் எனப்படு கிறது. சித் அம்பரம், என்று பிரிக்கப்பட்டு சித்-உயிர், அம்பரம்-வான்; உயிராகிய வானில் உலவுவது என்று கொள்ளப்படுகிறது. தமிழர் இதனைச் சிற்றம்பலம் என எழுதுதல் மரபு என்பது யாவரும் அறிந்த செய்தி. இது தமிழர் பண்டைய தவறுகளுள் ஒன்றோ என இந்நாளில் ஐயுறுவார் உண்டு. ஆனால், அது தவறன்று. ஏனெனில், சிற்றம்பலத்தின் எதிர்ச்சொல் பேரம்பலம். எனவே, எல்லா உயிர்க்கும் பொதுவான பொது வெளியைப் பேரம்பலம் என்றும், ஓர் உயிரின் உள்ள வெளியைச் சிற்றம்பலம் என்றும் தமிழர் கூறியிருத்தல் கண்கூடு. உயிரி லும் பொது உயிராகிய இறைவனைப் பேருயிர் என்றுந் தனி உயிர்களைச் சிற் றுயிர்கள் என்றும் அழைத்தனர். சிற்றுயிர் என்பதே வடவர் மொழியில் ‘சித்’என வழங்கப்பட்டதோ என எண்ண இடமுண்டு. இவ்வுயிரின் நுண் உருவம் ’வெள்ளி பொன் மேனிய தொக்கும்’ என்றார் யோகக் குறள் கண்ட ஒளவையார். அதற் கேற்ப அடியார் இதயத்திலிறைவன் நடமிடுவது பொன்னம்பல நடிப்பு என்னப் படும்.
இன்னும் சித்திரம் என்பது ஓவியத்தின் மறுபெயர் என்றும், வடசொல் என்றும் கொள்ளப்படுகிறது. ஆனால் அவன் சித்திரமாகப் பேசுகிறான் என்ற உலக வழக்கில் அழகாகப் பேசுகிறான் என்ற பொதுப் பொருளைவிட, நுணுகி நுணுகிச் சின்னஞ் சிறு நயந் தோன்றப் பேசுகிறான் என்பதே தெள்ளத் தெளியக் காணப் பெறுகிறது. எனவே சித்திரம் என்பது “சிறு திறம்” ‘சிற்றுத்திரம்’ என்பவற்றின் பண்டைய மரூஉவோ என்று எண்ணலாம். திறம் இங்ஙனம் திரம் ஆயிற்று எனக் கொள்வோமானால் ‘சூ°திரம்’ ‘சூத்திரம்’ என்ற வடசொற்கள் ‘சூழ்ச்சித்திறம்’ ‘சூள்திறம்’ என்பவற்றின் மரூஉவோ என்றும், வேத்திரம் (பிரம்பு) என்பது வேய்த்திறமோ என்றும் ஐயுறலாகும்.
மேற்கூறிய இடங்களிலெல்லாம் தமிழர் இத்தமிழ்ச் சொல் மூலங்கள் வகுக்காமல் இருக்க வடமொழியாளர் மட்டும் வகுத்தது ஏன் என்று கேட்கலாம். இலக்கியத் தொடக்கக் காலம் தொட்டு ஒரு வகையில் தமிழ் இலக்கியத்திலும் இலக்கணத்திலும் வடமொழியாளரின் நச்சுக்கொடி படர்ந்து அதன் முன்னைய செழுமையையும் தன்னாண்மையையும் படிப்படியாய் உறிஞ்சி வந்திருப்பது காணலாம். ஆனால், ஆராய்ச்சி நோக்குடன் நோக்குவார்க்கு அதனிடையேயும் தமிழின் தொல்நிலையை விளக்கும் தொலைவறிகுறிகள் தோற்றாமல் போகா. தமிழர் ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்று தொல்காப்பியர் காலத்திலேயே கொண்டிருந்தனர். ஆனால், புத்தர் சமணர் தோன்றியவிடத்தன்றி இந்தியாவில் எங்கும் தாய்மொழி வளம் பெற்றதில்லை. தமிழில் புத்தர் சமணர் தோன்றுமுன் வளம் பெற்றிருந்த இலக்கிய இலக்கணம் புத்தர் சமண ஆரியர் கைப்பட்டு அவர்கள் வடமுறைகளுக்கிசைய வகுக்கப்பட்டது. அவ்வண்ணம் வகுக்கப்பட்ட நூல்களே போற்றப்பட்டு முன்னைத் தனித் தமிழ்ப் பெரு நூல்கள் அழிந்தன, அழிக்கப்பட்டன. அப்பெருந் தமிழ் நூல்களில் இலக்கணப் பெருமைக்கு ஒரு தொல்காப்பியமும் வாழ்க்கைப் பெருமைக்கு ஒரு திருக்குறளும் இலக்கியப் பெருமைக்கு ஒரு சிலப்பதிகாரமும் நமக்கு மீந்தன. அச்சிறு பல கணிகள் மூலம் முன்னைய பெருமையிற் பலவற்றை நாம் உய்த்தறியலாம். எனவே தொல்காப்பியம் மொழியாராய்ச்சிக்கு ஓரளவு பயன்படும். உலக வழக்குச் சொற்கள் இலக்கியத்தில் பிற்காலத்தார் ஒதுக்கிய பழஞ் சொற்களே யாதலால் அவையும், தமிழின் உடன் மொழியாகிய தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலியவையும், அவற்றிலும் சிலவகையில் தூயவையாயிருக்கக் கூடும். வடநாட்டு மலைவாழ் குடிகள், பலூச்சிகள் மொழிகளும் முன்னைய தமிழ்த் தொல்வடிவங்களை விளக்கவும் சொல் மூலங்களை முடிவு கட்டவும் உதவும் என்னலாம்.
எழுத்துச் சீர்திருத்த முறைகள்
இந்திய மக்களிடையே மிகவும் பரந்து காணப்படும் அறியாமையைப் போக்குவதற்கான திட்டங்களுள் நாட்டின் பழைய எழுத்து முறைகளுக்குப் பதிலாக ரோமன் எழுத்து முறையைப் பரப்புவதும் ஒன்றாகும் என அரசாங்கத்தார் கருதி அதை நடைமுறைக்குக் கொண்டுவர ஏற்பாடுகள் செய்வதாகக் கொஞ்ச நாள்களுக்கு முன்பு ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தனர். அதன்படி “மதறா° காலிங்” என்ற மாதமிரு முறைப் பத்திரிகை யுடன் ரோமன் எழுத்தில் அச்சிடப் பட்ட துண்டுப் பிரசுரம் ஒன்றும் வெளியிடப்படுமென்று அறிவிக்கப் பட்டிருந்தது.
தற்கால நிலைமைக்குத் தக்கபடி தமிழ் எழுத்துகளில் சீர்திருத்தம் ஏற்படுத்துதல் வேண்டுமென்று பல முயற்சிகள் செய்யப்பட்டு வந்திருக்கின்றன. ஆனால், இவை தற்போது கருதப்படுவது போல் தமிழ் எழுத்து முறையை முற்றி லும் விலக்கிப் புதுமுறை வகுக்கும் முயற்சிகள் அல்ல. ஆகவே, இத்தகைய புது எழுத்து முறை அவசியமா என்பதையும், அதனால் ஏற்படும் ஆதாய இழப்புகள் எவை என்பதையும் ஆராய்ந்து பார்க்கவேண்டியது இன்றியமையாதது ஆகும்.
திட்டம் தமிழ் மொழியை மட்டுமே யல்லாமல் இந்தியத் தாய் மொழிகள் எல்லாவற்றையுமே பாதிப்பதாயினும் தமிழ் மொழியைப் பற்றி மட்டிலுமே சிறப்பாக இங்கே அதனை ஆராய்வோம்.
ஆதாயங்கள்
இம்முறையை ஆதரிப்பவர்கள் கருத்தில் கொண்ட ஆதாயங்கள் மிகத் தெளிவானவை. அவற்றுள் மிக முக்கியமானது அது அனுபவமாகக் கல்வி கற்பதை மிகவும் எளிதாக்கும் என்பதே.
தமிழ் அரிச்சுவடியின் மொத்த எழுத்துகள் நன்னூல் கணக்குப்படி 369 ஆகிறது. பள்ளிக்கூடங்களில் கற்பிக்கப்படும் அரிச்சுவடியிலுள்ளபடி இவ் வெண்ணிக்கை 247 ஆகும். ஆனால், ரோமன் முறையில் எழுத்துகளின் எண்ணிக்கை 26 தான்.
இன்னும் வேறு பல ஆதாயங்களும் இம்முறையில் இருப்பதாகக் கருதப்பட்டு வருகிறது. அச்சுக் கோப்பவர்களுக்கும் கையச்சு (டைப்) அடிப்பவர் களுக்கும் எழுத்துகளின் எண்ணிக்கை குறைவினால் எவ்வளவோ நன்மையும் வசதியும் உண்டு. கையச்சு அடிக்கும் இயந்திரமும் மிகச் சுருங்கிய அளவில் அமைக்கப்படு வதுடன் அச்சு நிலையங்களிலும் அச்சுகள் தொகை குறையும்.
மேலும் இந்தியாவிலுள்ள எண்ணற்ற மொழிப் பேதங்களை வரிவடிவிலேனும் இது மிகவும் குறைக்கும். ஒரு மொழியாளர் பேசுவதையோ கருது வதையோ மற்ற மொழி பேசுபவர் அறியமுடியாவிட்டாலும், ஊர்ப் பெயர்களும், ஆள்களின் பெயர்களும் எல்லா மொழிகளுக்கும் பொதுவாய் விட்ட சினிமா, மோட்டார், கவர்னர் முதலிய சொற்களும் பேச்சில் எப்படிப் பொதுவாய் இருக்கின் றனவோ, அப்படியே எழுத்திலும் எளிதில் எல்லா மொழியாராலும் பொதுவாக அறியப்படும் சொற்களாய்விடும். புதிதாக மொழி கற்பவர் ஒரு சில சொற்களை யறிந்தவுடன் பொதுவரிவடிவங்களை வாசித்து உணரக் கூடும்.
ரோமன் முறையில் அச்சுக்கொத்த அச்சு எழுத்து, எழுதுவதற்குரிய கையெழுத்து என்றும் இருவகை உண்டு. இன்னும் இத்தகைய பல ஆதாயங் களும் ரோமன் எழுத்து முறைக்கு ஆதாரமாகக் கூறப்படுகின்றன.
நடைமுறையிலேற்படும் சிக்கல்கள்
மேற்கூறியவற்றில் பிந்திக் கூறப்பட்ட சில்லறை ஆதாயங்கள் உண்மையிலேயே ஆதாயங்கள்தாம் என்பதை மறுப்பதிற்கில்லை. அச்சுக்கும் கையச்சு அடிப்பதற்கும் இன்றைய நிலையில் தாய் மொழியின் எழுத்துகள் தொகையிலும் வடிவிலும் சிக்கலுடையவையே. தமிழைப் பற்றிய மட்டில் அது ரோமன் எழுத்தை விட மிகுதியாயினும் பிற இந்திய மொழிகளை நோக்கத் தொகை குறைந்ததே என்று கூறலாம். மேலும் தமிழ் எழுத்துகளுக்குச் சிறிதளவு சீர்திருத்தம் செய்து இச்சில்லறைக் குறைகளைக் கூடப் போக்கவும் முடியும்.
இத்தகைய சீர்திருத்தங்களைவிட ரோமன் எழுத்து முறையை உயர்வாகக் கருதுவோர் அதில் அதிகப்படியாய் இருப்பதாக எண்ணும் ஆதாயங்கள் இரண்டு தாம்: அவை எழுத்து எண்ணிக்கைக் குறைவு. எல்லா மொழிகளின் வரிவடிவும் ஒன்றுபடுதல் ஆகியவையே யாகும்.
எழுத்துக் குறைவு
முதலாவதாக எழுத்துக் குறைவை எடுத்துக் கொள்வோம். ரோமன் எழுத்து முறையில் 26 எழுத்துகள் என்று கூறும்போது நாம் ஆங்கில மொழிக்குத் தேவையான ஆங்கில அரிச்சுவடியின் எழுத்துகளையே எண்ணுகிறோம். இவற்றுள் (ஒ, க, ண, b, ப, ன, ளூ, ற, ஆகிய) 8 எழுத்துகள் தமிழுக்குத் தேவை யில்லை. ஆனால் இதற்கு மாறாகத் தமிழ் அரிச்சுவடியில் உள்ள எழுத்துகளில் ரோமன் எழுத்து முறையில் இல்லாத எழுத்துகள் பல. உயிர்களின் நெடில்கள் 7-ம் வல்லினத்தில் ச, ட, ற என்ற 3-ம் மெல்லினத்தில் ங,ஞ, ண, ன ஆகிய 4-ம் இடை எழுத்தில் ழ, ள, ஆகிய 2-ம் ஆக 16 எழுத்துகள் ரோமன் முறையில் இல்லை.
மேற்கூறியபடி தமிழில் அதிகமாயுள்ள எழுத்துகளை ரோமன் முறையில் இரண்டு வகையாக எழுதலாம். ஒன்று அவற்றில் சில குறியீடுகளைச் சேர்த்துக் கொள்வது: உதாரணமாக (n) எழுத்தின் மேல் புள்ளியிட்டால் ‘ங்’ என்றும் அதன்கீழ் புள்ளியிட்டால் ‘ண்’ என்றும் கொள்ளலாம். ஆனால், இம்முறை எழுத்து மயக்கத்தையும் எழுத்துப் பிழைகளையும் மலியச் செய்வதுடன், ஒலிகளையும் மயங்க வைக்கும்.
எழுதுவதிலும், வாசிப்பதிலும் இது மிகவும் சிரமத்தை உண்டு பண்ணுவதுடன் ரோமன் முறையின் ஆதாயங்களுள் ஒன்றாகக் கூறப்படும் எழுத்துச் சுருக்கத்தையும் இது அறவே ஒழித்துவிடும். ஏனெனில், அரிச்சுவடியில் வெளிப் பார்வைக்கு (n) என்ற ஒரே எழுத்தேயிருந்தாலும், அச்சுக்கும், கையச்சுக்கும் குறியீடுகளுடன்கூடிய அத்தகைய பல எழுத்துகள் உண்மையிலே தேவைப்படும்.
தமிழிலுள்ள அதிகப்படி எழுத்தைக் குறைக்க இன்னொரு முறை கையாளப்படலாம். தமிழில் தேவையற்ற எழுத்துகளை அதிகப்படி எழுத்துகளின் குறியீடுகளாக வழங்கலாம். இப்படி வழங்கினால் ரோமன் எழுத்தின் முக்கிய மான ஆதாயம் இரண்டாவது பொய்யாய்விடும். தமிழுக்கு வேண்டாத எழுத்துகள் மற்றத் தாய்மொழிகளுக்குத் தேவையானவையாகும். ஆகவே, ஒலி ஒற்றுமை கெட்டுப்போகும். மேலும் தேவையற்ற எழுத்துகள் 8 தாம்: அதிகப்படி எழுத்துகள் தமிழிலேயே 16. மற்றத் தாய்மொழிகளில் இன்னும் மிகுதி.
எழுத்துப் பெருக்கத்தால் ஏற்படும் அருவருப்புகள்
இது தவிர, ரோமன் எழுத்துகளில் அரிச்சுவடியில்தான் எழுத்துகளில் எண்ணிக்கை குறைவு. எழுதும்போது சொற்களை அமைப்பதற்கான எழுத்துகள் விரிவாகப் பக்கக் கணக்கில் நிறைத்து அருவருப்பையே உண்டாக்கும். இருக்கிறது என்ற சொல்லை எழுத ஐசரமமசையவர எனக் குறைந்தது 10 எழுத்துகள் தேவைப்படும். இது எழுதுவதற்கும் தொல்லை, படிப்பதற்கும் எளிதன்று. குறியீடுகளுடன் சேர்ந்து எழுதுவதானாலும் தொல்லை இன்னும் பன்மடங்காகும்.
மேலும், உயிரும் மெய்யும் சேர்ந்து தமிழில் ஒரே எழுத்தாக எழுதப் படுகிறது. ரோமன் முறையில் இவற்றைப் பிரித்தெழுதுதல் வேண்டும். தமிழரிடையேயும் பிற இந்தியத் தாய்மொழி யாளரிடையேயும், படித்தவர் களுக்குக்கூட உயிர் மெய் எழுத்தை உயிரும் மெய்யுமாகப் பிரித்துணர்வ தென்பது கல்லில் நாருரிப்பது போல் கடினமான காரியம். ஐரோப்பாவில் சிறுபிள்ளைப் பருவத்திலிருந்தே பெரிதும் உருவேற்றப்பட்டு விடும் இந்த முறையை இந்தியரனைவரும்-அதிலும் சிறப்பாகக் கிராமங்களில் வாழும் பாமர மக்கள் எளிதில் பின்பற்ற மாட்டார்கள் என்பதை அவர்களிடையே ஆசிரியர்களா யிருந்து போதனை நடத்தியவர்கள்தாம் எளிதில் அறிவார்கள்.
மேற்கூறிய செய்திகளால் ரோமன் முறையிலிருப்பதாகச் சொல்லப்படும் ஆதாயங்கள் ஆராய்ந்து பார்க்கப் போனால் ஆதாயங்களேயல்ல. அது மட்டு மன்று. அதில் இழப்புக்கள்கூட மிகுதியாயுள்ளன என்று காணலாம். சிறப்பாகக் கட்டாயக் கல்விக்கு உதவியாக அது சற்றும் பயன்படாதென்றே தோற்றுகிறது. அவ்வகையில் ரோமன் முறையை விட நாம் மேலே குறிப்பிட்ட சில்லறைச் சீர்திருத்தங்கள் மிகுதியான பயன் தரும் என்றும் கூறலாம்.
சில்லறைச் சீர்திருத்தங்கள்
தமிழ் எழுத்துக்குப் புறம்பான ரோமன் முறை அல்லது நாகரிக முறை ஆகியவற்றின் உதவியில்லாமலே தமிழில் பல சீர்திருத்தங்களும் செய்யப்பட்டு வருகின்றன. இவற்றுள் சில எழுத்துகள் புதிதாய்ப் படிப்பவர்க்கு அதை எளிதாக்குவதுடன், அச்சுக்கும் வேண்டியபடி எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் தன்மையுடையவை. மலாய் நாட்டிலும் இந்தியாவிலும் வெளியிடப் படும் சில முற்போக்கான தமிழ்ப் பத்திரிகைகள் ஆகிய எழுத்துகளை லை, னை, ணை, ளை எழுதி வருகின்றன. இது புரட்சிகரமான மாறுதல் என்று சொல்வதற்கில்லை. புதிதாய்ப் படிப்பவர்கள் நிலையிலிருந்தும், வெளிநாட்டார் நிலையிலிருந்தும் பார்த்தால் இத்திருத்தம் இயல்பாகத் தோற்று கிறது வழக்கமான வடிவங்களே புதுமையாகவும் சிக்கல் வாய்ந்தவையாகவும் இருக்கின்றன. இன்னும் ஆகிய எழுத்துகளும் இதே முறையில் அப் பத்திரிகைகளில் னா, றா, ணா என்று எழுதப் பெறுகின்றன. அச்சகத்துக்கும் கையச்சுக்கும் இதனால் ஏற்படும் ஆதாயம் கொஞ்சமன்று. ஏனெனில் இவற்றுக்கென அமைக்கப்பட்ட 8 அச்சுகள் மீந்துவிடுகின்றன. இதே சீர்திருத்தத்தை இன்னும் சற்று விரிவுபடுத்துவதானால், மெய்யுடன் உ, ஊ சேருமிடங்களில் வரும் குறியீட்டையும் ஒரே வழிப்படுத்தலாம். கூடுமானால் வடவெழுத்துகளான ஷு, ஹு என்பவற்றிலும் ஸூ, ஷூ, ஹூ என்பவற்றிலும் கையாளப்படும் வடிவத்தையே மேற்கொண்டு விட்டால் அச்சுகளில் இருபதுக் கதிகமாகக் குறைவு ஏற்படும். சுழியிடாத ‘உ’, சுழியிட்ட ‘உ’ ஆகியவற்றைத் தலைகீழாக்கி ‘உ, ஊ’ உயிர் மெய் குறியீடுகளாக்கிவிட்டால், ஆதாயம் இன்னும் மிகும். உருவமும் செயம் உடையதாகும். படிப்பவர்களுக்கும் எழுதுபவர்களுக்கும் எகரத்திற்கான கொம்புக் குறியீட்டை எழுத்துகளுக்கு முன்னால் சேர்ப்பதற்குப் பதில் பின்னால் சேர்த்துக் கெ என்பதற்கும் பதில் கb என்றெழுதுவது கூட இயற்கை நெறியை ஒட்டிய சீர்திருத்தமேயாகக் கூடும் என்று எண்ணு கிறோம்.
பிறமொழி ஒலிகள்
இறுதியாக ரோமன் முறையில்லாத ஒலிகளுக்குக் குறியீடுகள் சேர்த்துப் புது ஒலிகளைக் குறிக்கக் கூடுமாயின், தமிழ் அரிச்சுவடியிலில்லாத புது ஒலிகளுக்கு அங்ஙனம் செய்யமுடியும் என்பது தெளிவே. பெரும்பாலும் தமிழ் எழுத்துகள் ஒவ்வொன்றும் தமக்கெனத் தெளிவான ஒலி வேறுபாடுகளை உடைய வையாயிருக்கின்றன. இவ்வகையில் ரோமன் முறை தமிழ் எழுத்து முறையையும், பிற இந்தியத் தாய்மொழிகளின் எழுத்து முறைகளைவிட எவ்வளவோ பிற்பட்டதேயாகும். ஏனெனில், ஆங்கிலத்தைப் பற்றிய மட்டில் உயிர்களில் நெடில் குறில் வேற்றுமையில்லை. அது போக ஒவ்வோர் உயிரும் அவ்வப்போது ஒலியில்லாது வீணே வழங்கப்படுவதுடன், வெவ்வேறான 10 அல்லது 12 ஒலிகள் உடையவையாயிருக்கின்றன. இதுபோக மெய்களிலும் பல ‘ஒலிகள்’ ஓர் எழுத்தாலும், பல எழுத்துகளால் ஓர் ஒலியும் குறிக்கப்பட்டு எல்லையற்ற குழப்பம் விளைகிறது. தமிழ் முதலிய நாட்டு எழுத்துகளைச் சீர்திருத்தி வழங்கினால் இத்தகைய குழப்பங்களுக்கு இடமில்லை. இம்முறையில் தமிழர் அறியும்படி தமிழில் இல்லாது, ஆங்கிலம் முதலிய மேல்நாட்டு மொழிகளிலும், வடமொழி இந்து°தானி ஆகிய வடநாட்டு மொழிகளிலும் உள்ள ஒலிகளையும் தேவைப் பட்ட இடங்களில் குறித்துக்கொள்ளலாம்.
தமிழும் தமிழின மொழிகளும்
பேராசிரியர் சுந்தரம் பிள்ளை ‘கன்னடமும், களி தெலுங்கும், கவின் மலையாளமும், துளுவும், உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்று பல ஆயின’ என்று தமிழ்மொழியை நோக்கிக் குறிப்பிட்டுள்ளார்.
ஆயினும், அரசியல் தலைவர் சிலரும், தமிழ்ப் புலவர் சிலரும் இதைக் கூறத் தயங்கி வருகிறார்கள். இதற்குக் காரணம் தமிழனுக்கு நெடுநாளாக ஏற்பட்டிருக்கும் தோல்வி மனப்பான்மையையும், ‘அஞ்சி அஞ்சிச் சாகும்’ அச்சத்தையும் பலர் பயன்படுத்திக் கொண்டதே யாகும். “தமிழர் இப்படித் தம் புகழ் பாடி என்ன பயன்?” ‘சரியான புலமையெனில் பிற நாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்’ `இச்செய்தியை ஏற்றுக்கொள்ளும் மலையாளி, கன்னடியன், தெலுங்கன் யார்’ என்று அவர்கள் கேட்கிறார்கள்.
இதை ஒப்புக்கொள்ளும் மலையாளி, கன்னடியர், தெலுங்கர் உண்டு. அதுவும் பொதுப்படையான ஆட்கள்கூட அல்லர். கல்லூரியும், பல்கலைக்கழக மும் ஒப்பும் முதல்தரத் தலைவர்கள். அத்தகையோர் உரைகளில் சிலவற்றைக் காண்போம்.
முதலில் ஒரு மலையாள அறிஞர் உரையைக் கீழே தருகிறோம்.
திருவிதாங்கூர் அரசரின் மலையாள மொழியாசிரியரான ஏ. கிருஷ்ண பிஷாரடி 1927 மார்ச்சில் சென்னைப் பல்கலைக்கழக ஆதரவில் ‘மலையாள மொழியும், இலக்கியமும்’ என்ற ஆராய்ச்சிச் சொற்பொழிவிடையே மலையாள மொழியில் கூறியதைத் தமிழ் எழுத்தில் அப்படியே தருகிறோம்.
மலையாளச் சொற்பொழிவு
“தெலுங்கு, தமிழ், கர்ண்ணாடகம், மலையாளம் எந்நீவக த்ரமிட பாஷகள் ஒரு த்ரமிட மூல பாஷக்கு தந்நே காலக்ரமத்திலுண்டாய பரிணாம பேதங்களாயி வருவானே தரமுள்ளு; எந்நு மாத்ரமல்ல, அங்ஙனே ஒரு மூலபாஷ உண்டா யிருந்து வெந்நும், ஆ மூலபாஷக்குண்டாயிருந்ந பேராணு தமிழ் எந்நுள்ள தெந்தும் ….தெளியிப்பான் சில லக்ஷ்யங்கள் தந்நேயு உண்டு. ஒந்நாம தாயி, மலயாள பாஷக்கு ‘மலநாட்டுத் தமிழ்’ எந்நும், கர்ண்ணாடக பாஷக்குக் ‘கரிநாட்டுத் தமிழ்’ எந்நும், சோழ பாண்டிய நாடுகளிலே பாஷக்கு ‘சோழத் தமிழ்’ எந்நும், ‘பாண்டித் தமிழ்’ எந்நும் பறஞ்சு (கூறப்பட்டு) வந்நிருந்நதாயி பழைய தமிழ் க்ரந்தங்களிலும் மலயாள க்ரந்தங்களிலும் காணுந்நது கொண்டு தந்நே தமிழ் எந்நதுத்ரமிட பாஷகளுக் கெல்லாம் பொதுவாய பேர் ஆணு எந்நும், விசேஷத்தேக் காணிப்பானாணு மலநாட்டுத் தமிழ், கரிநாட்டுத் தமிழ், எந்த மட்டில் ஒரே விசேஷணம் (அடைமொழி) சேர்த்துப் பறயுந்நது எந்நும் உள்ளது ஸ்பஷ்மாணு…. ‘தமிழ் நாட்டு ஐ வேந்தரும் வந்தார்’ எந்நிங்ஙனே, சோழம், பாண்டியம், கேரளம், கர்ணாடகம், தெலுங்கு, ஈ அஞ்சு ராஜாக்கள்மாரே தமிழின்றே ப்ரதி ஸ்தாபகன்மாராயி (தமிழை நிலை நிறுத்தியவராய்) கணிச்சும் கொண்டு செந்தமிழ் க்ரந்தங்களில் ப்ரதிபாதிச் சிட்டுள்ளதும் (ஆராய்ந்து நிறுவியுள்ளதும்) மலயாள பாஷயிலே ப்ராசீன (பண்டைய) க்ரந்தங்ஙளாய ‘அமரம் தமிழ்,’ ‘நம்பியாருடே தமிழ்’ முதலாய பேருகள் காணுந்நதும், இதின்னுதா ஹரங்ஙளானு……லீலா திலகம் எந்ந ப்ராசீன க்ரந்த காரனா கட்டே, மணிப் பிரவாள லக்ஷண ப்ரஸ்தாவத்தில் மலயாள பாஷயும், சமஸ்க்ருதவும் கூடிச் சேர்த் துண்டாக்கிய காவ்யத்தினாணு மணி ப்ரவாளமெந்நு பறஞ்ஞு வருந்ந தெந்நுள்ளதின்னு ப்ரமாணமாயி (மேற்கோளாய்) ‘தமிழ் மணி, சம்ஸ்க்ருதம் பவழம்’ எந்நும் மற்றும் பல ப்ரயோகங்களும் காணிச்சு அவயிலே தமிழ் சப்தத்தினு (சொல்லுக்கு) மலயாள பாஷ எந்நது த்ரமிட பாஷகளுக் கெல்லாம் பொதுவாய பேராணு எந்நும் ஸ்பஷ்டமாயி பறஞ்ஞிட்டு முண்டு.”
மேற்காட்டிய மேற்கோள் மலையாளமாயிருந்தும் தமிழருக்குப் புரிவதுதான் என்று காணலாம். உண்மையில் தமிழிலக்கணம் தெரிந்தவர் எழுதும் தமிழை விட, தமிழன் பேசும் தமிழுக்கு இம் மலையாளம் மிகவும் அடுத்திருப்பது கவனிக்கத்தக்கது.
தெலுங்கு மொழியிலும் வடமொழிச் சொற்கள் புகுத்தப்பட்ட வரலாறு; வடசொற்களைக் கலந்தபின் அச்சொற்கள் மட்டுமன்றித் தூய தெலுங்குச் சொற்களையும் வடசொல் எனச் சாதிக்கச் செய்யப்படும் முயற்சி ஆகியவற்றைப் பற்றி ஒரு தலைசிறந்த தெலுங்கு மொழியறிஞர் கூற்றுகளைக் கீழே தருகிறோம்.
சென்னைப் பல்கலைக் கழகத்தில் தெலுங்கின் முதன்மை ஆய்வுரை யாளரான கொரடா ராமகிருஷ்ணய்யா எம். ஏ. அவர்கள் திராவிட மொழி நூலாராய்ச்சிகள் (1935) என்ற நூலிலும் திராவிட மொழிப் பொதுச் சொற்கள் (1944) என்ற நூலிலும், கீழ்வருமாறு ஆங்கிலத்தில் குறிப்பிடுவதைத் தமிழில் மொழிபெயர்த்துத் தருகிறோம்.
திராவிட மொழி நூலாராய்ச்சிகள் (பக்.42) தெலுங்கில் முதல் கவிஞன் நன்னயரே யாயினும் அவர் வடமொழிப் பற்றாளரானமையால் (வடமொழி கலந்த) கடுநடையில் 100-க்கு 75 வடசொற்களுடன் பாரதத்தை மொழி பெயர்த்தார். ஆயினும் அவர் பின் வந்த கவிஞர்கள் பலர், சிறப்பாகச் சைவப் புலவர்கள் இத்தகைய பெருவாரியான வடமொழி இறக்குமதியைக் கண்டித்து ‘ஜானு’ தெலுங்கு (தூய தெலுங்கு) நடையை ஆதரித்தனர். இத்தகைய தெலுங்கையே நாட்டுப் பொது மக்கள் எளிதாக உணர்ந்துகொள்ள முடியும் என்பது பல்குறிகி சோமநாதர் கோட்பாடு… மேலும் திக்கணர் ‘வழங்காத புதுச்சொற்களை’ வழங்குவது தவறு என்று கூறியவரே யாயினும், உள்ளார்ந்த தேசிய மனப் பான்மை உடையவரா யிருந்தமையால் நன்னயரைவிட மிகுதியான தூயதெலுங்கு அல்லது தேசிய மொழிச் சொற்களை வழங்கினார். ஆயினும், வட சொல் வழக்கு மிகுதி காரணமாக இத்தேசியச் சொற்கள் மேலும் வழங்காது போனதனால் இன்று திக்கணரின் தேசிய நடை கடுமையாகவும், நன்னயரின் கடு வடமொழி நடை எளிதாகவும் காணப்படுகிறது.
தமிழின மொழிப் பொதுச் சொற்கள்
இந்தியாவில் பேசப்படும் எல்லா மொழிகளுமே வடமொழி அல்லது ஆரிய மூலங்களிலிருந்து தோன்றின என்ற நம்பிக்கை பொதுவாக இந்திய (ஆரிய) அறிஞரிடையேயும் இலக்கணப் புலவரிடையேயும் இருந்து வருகிறது. உண்மையில் தென்னிந்திய மொழிகளில் பெருவாரியாக வடமொழியிலிருந்து வந்த சொற்கள் உள்ளன என்பது உண்மையேயாயினும், தேசியப் பகுதி (தூய தாய்மொழிப் பகுதி)யே அதில் முனைந்த பகுதியாயுள்ளது; இதனை இலக்கண நூலாரும் ஒத்துக் கொள்கின்றனர். இந்நிலையிலும், தெலுங்கு மொழியிலும், பிற தென்இந்திய மொழிகளிலும் உள்ள சொற்களெல்லா வற்றையும் வடமொழி அல்லது பிராகிருதத்திலிருந்து வருவித்துக் காட்டவும், அதன் மூலம் வடமொழி, பிராகிருதம் ஆகியவற் றிலிருந்தே இம்மொழிகள் தோன்றியிருத்தல் வேண்டும் என்ற, தங்கள் மனத்திலூறிக்கிடக்கும் எண்ணத்தை வலுப்படுத்தவும் அவர்கள் முயல்கின்றனர். வடமொழியிலுள்ள சொல் மூலங்கள் (Roots) பல்வேறு முன் இடைச்சொற்களுடன் பல்வேறுபட்ட பொருள் கொள்ளத் தக்கவையாயிருப்பதால் எந்த மொழிச் சொல்லையும் அது எவ்வுருவமுடையதாயினும், பொருளுடைய தாயினும் வடமொழிக்கிணையத் திரித்துக் குழப்பமுடிகிறது. வடமொழியிலிருந்து பிறமொழிகளை வருவிக்க எடுத்துக் கொள்ளப்படும், இம்முயற்சியின் பிழை பாட்டை கி.பி.7ஆம் நூற்றாண்டிலிருந்த வடமொழி யறிஞரான குமாரிலபட்டர் கண்டித்து எச்சரித்துள்ளார்.
குமாரிலபட்டர் கூறுவதாவது: தூய திராவிடச் சொற்களாகிய சோறு, பாம்பு, வயிறு, அதர் (பாதை) முதலியவற்றை வடமொழிப் பகுதிகளின் ஒலியுடனும் அவற்றின் பொருளுடனும் ஒட்டவைத்து வருவிக்க எண்ணுவது பொருத்த மற்றது. (அவர் வடமொழிக் கூற்றை அப்படியே தமிழில் தருகிறோம்).
தத்யதோ ஒதனம் சோறு இத்யுக்தே சோர பத்வாச்யம் கல்பயந்தி; பந்தாநம் அதர் இத்யுக்கே ‘அதர’ இதி கல்பயித்வா ஆஷூத் சத்யம் து°த்ரவாத் அதர ஏவபந்தாஇதி. ததா பாம்பு சப்தம் பகாராந்தம் சர்ப, வசனம் அநாராந்தம் கல்பயித் வாசத்யம் பாப ஏவ அங்கள இதி வதந்தி; ஏவம் வயிறு சப்தம் ரேபாந்தம் உதரவசனம் வைரி சப்தே நப்ரத் யாம் நாயவதந்தி.
மேலும் தெலுங்கில் மோவி (-முன்வாய் அல்லது உதடு), மோகாலு (-முழங்கால் அல்லது முட்டு), பொக்கிலி (பொக்குள் அல்லது கொப்புள்-பொற் குழி), கோவலு (கோயில்-கோ-இல்; இறைவன் வீடு), சிலுவா (சிலு-வாய்-வாயில் நஞ்சுடையது; பாம்பு), இனுமு (இரும்பு-பொன்-கரிய உலோகம்) என்ற சொற்கள் பிரிக்க முடியாது மாறிவிட்டபடியினால் பழந்தமிழ்ப் பொருளிழந்து விட்டன என்றும் அறிஞர் இராமகிருஷ்ணையா காட்டியுள்ளார்.
வடசொல்லை முதலில் புகுத்தி அதன்பின் எல்லாம் வடசொல் என்று கூற முனையும் வடஆரியர் சூழ்ச்சியை இத்தெலுங்கறிஞரும் வடமொழி யறிஞரும் கண்டிப்பது போலவே மலையாள மொழியை ஆராய்ந்த மேனாட்டு அறிஞர் டாக்டர் குண்டர்ட்டும் கண்டித்துள்ளார். அவர் கூறுவதாவது: “திராவிட மொழிச் சொற்கள் முழுவதையும்-ஏன் அதில் கலந்துள்ள அரபுமொழி, ஐரோப்பிய மொழிச் சொற்களையும் கூட-எல்லாம் வட மொழியிலிருந்து திரிந்து வந்தவையே என்று கூறும் இந்தியப் ‘புலவர்கள்’ எத்தனையோ பேரைக் காணலாம். ஆயினும் வடமொழியில் திராவிடச் சொற்கள் கலந்துள்ளன என்பதை ஒத்துக்கொள்ளும் இந்தியப் புலவர்களை எங்கும் காணமுடியவில்லை.”
குண்டர்ட் அந்நாள் இந்தியரிடம் கண்ட குறைகள் அறிஞரிடையே குறைந்து வருகிறது. ஆனால், பொது மக்களிடையே அறிஞர் அறிவு இன்னும் பரவ விடாது ஆரியப் பள்ளிகள், ஆரியப் பத்திரிகைகள், ஆரிய நிலையங்கள் தடுத்து வருகின்றன.
திருக்குறளும் வடமொழி நூல்களும்
திருவள்ளுவர் தமிழுலகுக்கு அளித்த முப்பாலமிழ்தம் எல்லாச் சமயத்துக்கும், எல்லா நாட்டு மக்கட்கும் மட்டுமன்றி முக்காலத்துக்கும் பொதுவான முழு முதல் தமிழ் நூல். இத்தகைய சீரிய சிறப்புடைய நூல் உலகில் வேறெம்மொழியிலும் இல்லை என்பது கண்டு, தமிழர் களிப்படைகின்றனர்.
‘வெறெம்மொழியிலும்’ என்பதில் வடமொழியும் அடங்கித்தான் கிடக்கிறது. அதை மறுப்பாரும் இல்லை. வேறெம்மொழியிலும் எப்புலவர்க்கும் தரப்படாத ‘தெய்வப் புலவர்’ என்ற புனை பெயரும் திருவள்ளுவர்க்கே சிறப்பான பெயராய் வழங்கப்படுகிறது. தெய்வ மொழி என்று தன்னாலும், பிற பலராலும் கொள்ளப்பட்ட வடமொழியிலிருந்து அதற்கு-அல்லது-அதில் கண்ட கருத்துக்கு மூலம் தேடப் பெரும்பாடுபட்ட உரையாசிரியர் பரிமேலழகரே தம்மையும் மீறித் தம் நாவார, உளமார அவரைத் தெய்வப் புலவர் என்று கூறிக் கைகூப்பி வணங்கியிருக்கின்றார்.
திருவள்ளுவர் திருக்குறளின் மாண்பைப் பிற்காலத்தவர் எளிதில் உணரும்படி ‘மணி உரை’ எழுதிய பரிமேலழகப் பெரியார்க்குத் தமிழகம் எவ்வளவோ கடமைப்பட்டிருப்பது உண்மை. ஆனால், அவர் தேடிய வடமொழி மூலங்கள் உண்மையில் திருவள்ளுவர்க்கு மூலங்கள் ஆயிருக்கக் கூடுமா?-அல்லது-அது முற்றிலும் அவர் வடமொழிப் பற்றின் விளைவா-? என்பதைத் தமிழன்பர் ஆராய்தல் அமைவுடையதே.
தமிழர் இதனை ஆராய்வதில் மிகுதி அக்கறை காட்டாதது இயல்பே. பாலமிழ்தம் கண்டவிடத்து அதை உண்பதை விட்டு, அது யார் சமைத்தது என்று அறியக் காத்திருப்பவன் அறிவாளியாகமாட்டான். தமிழர்க்கு அறிவொழுங்கு காட்டிய திருவள்ளுவரும்.
"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும், அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு’’
என்று தமிழனுக்கு அறிவுரை கூறியுள்ளார். ஆயினும் இவ் வடமொழி மூலச் செய்தி அடிக்கடி தமிழன் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தலை நீட்டி வருகிறது. அண்மையில் தமிழ்த்துறையில் பெரும் பொறுப்பிலிருந்த பெரியார் ஒருவர் இவ் வடமொழி மூலச் செய்தியைப் பெரிதுபடுத்தி வலியுறுத்தி யதுடன் நில்லாது திருவள்ளுவர், இளங்கோ, சீத்தலைச்சாத்தனார் முதலியவர்களின் காலவரையறையையும் அக்கருத்துக்கேற்ப மாற்ற விழைவதால் இச்செய்தியைத் தமிழன் மீட்டும் ஆராய்ந்து உண்மை எது எனக் காணுதல் இன்றியமையாதது.
ஆனால், இவ்வாராய்ச்சியில் புகுமுன் தமிழர்கள் ஒரு செய்தியை மறவா திருத்தல் வேண்டும். இவ்வாராய்ச்சி முடிபு எதுவாயினும் அது திருவள்ளுவர் பெருமையை ஒரு சிறிதும் அசைத்துவிடாது. வடமொழியிலாயினும் சரி, வேறெம் மொழியிலாயினும் சரி, இதனைப் போன்ற-இதனை யொத்த நூல் திருக் குறளுக்கு முன்னோ, பின்னோ சமகாலத்திலோ (அதாவது முக்காலத்திலும்) கிடையாது என்ற நிலை எல்லாருமொப்ப முடிந்த முடிபேயாகும்.
முதலில் பரிமேலழகர் உரையில் கண்ட செய்திகளை எடுத்துக் கொள்வோம்.
பரிமேலழகர் திருக்குறளை ஒப்புயர்வற்ற முழு முதல் நூல்-அல்லது-முதனூல் என்று கொண்டாரேயன்றி வழி நூல் என்று கொண்டார் என்று கூறமுடியாது. குறளாசிரியரை அவர் தெய்வப்புலவர் என்றார். அது வழி நூலானால் அதன் முதனூலாசிரியர்களைத் திருவள்ளுவரை விடச் சிறப்பித்துக் கூறியிருத்தல் வேண்டும். அங்ஙனம் அவர் கூறவில்லை என்பது தெளிவு.
பரிமேலழகர் குறிப்பதெல்லாம் திருக்குறளின் கருத்துகளிற் பல மனுநூல். சாணக்கியர் பொருள்நூல், காமாந்தக நீதி நூல் ஆகியவற்றிற் காணப்படு கின்றன என்பதே. கால ஆராய்ச்சி ஏற்படாத அக்காலத்தில் வடமொழி நூல்கள் எல்லாம் மிகப் பழையன என்று நம்பப்பட்டு வந்தன. அது அக்காலச் சமயக் கொள்கை என்று கூடக் கூறலாம். எனவே, அரும்பாடுபட்டு இவ் வடமொழி ஒருமைப்பாடுகளைக் கண்ட பரிமேலழகர், திருவள்ளுவர் இந்நூல்களைக் கற்றுணர்ந்திருத்தல் வேண்டும் என்றெண்ணினர். பிற்காலத் தமிழர் பலர் எண்ணுவது போல், அவர்க்கு இது திருவள்ளுவரிடம் மதிப்புக் குறைந்த காரணத்தால் அல்ல; பரிமேலழகர் காலத்தில் புலவர் என்ற சொல் வடமொழிப் புலவர்க்கே முதலுரிமை யாயிருந்தது. எனவே, திருவள்ளுவரிடம் பரிமேலழகர் கொண்ட பற்றுதலின் காரணமாகவே அவர் பெரிய வடமொழிப் புலவராகவும் இருந்திருத்தல் வேண்டும் என்று அவர் எண்ணினார்.
பரிமேலழகர் காட்டிய இவ்வொப்புமைகளைச் சாக்காகக் கொண்டு இக்கால ஆராய்ச்சியாளர் சிலர் திருக்குறளுக்கு அவ்வடமொழி நூல்கள் மூலங்கள்-அல்லது-முதனூல்கள் என்று அவர் எண்ணியதாக மனப்பால் குடிக்கின்றனர். தமிழர் கருத்துப்படி முதனூல் எழுதத்தக்கவர் கடவுள்-அல்லது-கடவுள் நிலையிலுள்ள முனிவர்கள். வழிநூல் எழுதுபவர் அவர்வழி நிற்கும் அறிஞர் ஆகிய மனிதர்களே. வழி நூலாசிரியர் முதனூற் கருத்துகளைச் சுருக்கியும், விரித்தும், எளிமைப்படுத்தியும் புதுமுறைப்படுத்தலாம். முதனூலுக்கு மாறுபடவோ, மிகைப் படவோ அவர் எழுதார். முதனூலாசிரியரினும் அவர் சிறந்த வராகக் கொள்ளவும் படார். இந்நிலையில் வைத்துப் பார்த்தால் பரிமேலழகர் எண்ணம் தெளிவாகும். திருவள்ளுவர் புலமைக்குப் பாராட்டாகவே இவ்வொப்புமைகள் தரப்பட்டன. ஆனால், வழிநூல் அல்ல என்ற எண்ணத்தை வற்புறுத்தவே அவர் ‘தெய்வப் புலவர்’ என்ற பெயரை வலியுறுத்தி எடுத்தாண்டார். உரைப்பாயிரத்தில் அவர் மொழியை உற்று நோக்குவார்க்கு இது புலனாம்.
“இவற்றுள் (அதாவது அறத்தின் பிரிவுகளாகிய ஒழுக்கம், வழக்கு, தண்டம் ஆகிய மூன்றனுள்) வழக்கும், தண்டமும் உலக நெறி நிறுத்துதற் பயத்த(ன) வாவதல்லது, ஒழுக்கம் போல மக்களுயிர்க்கு உறுதிபயத்தற் சிறப்பில வாகலானும், அவைதாம் நூலானேயன்றி உணர்வு மிகுதியானும், தேயவியற் கையானும் அறியப்படுதலானும்; அவற்றை ஒழித்து, ஈண்டுத் தெய்வப் புலமைத் திருவள்ளுவரால் சிறப்புடைய ஒழுக்கமே அறமென எடுத்துக் கொள்ளப்பட்டது.”
முதனூல், வழிநூல் இயல்புகளை உன்னிக் கவனிப்பவர்க்கு முதனூலே உறுதிபயப்பதும், பொது நூலுமாம் என்பதும், உணர்வு மிகுதியானும், தேயவியற்கையானும் அறியப்படத்தக்க செய்திகளை ஒட்டிக் கூறுபவையே வழி நூல், சார்பு நூல்களாம் என்பதும் விளங்கும். ஆகவே, காலவரையறையை நீக்கிப் பார்த்தால் பரிமேலழகர் கூறும் இயல்புகளின்படியும், திருவள்ளுவர் நூலே முதனூல் என்பதற்கு அட்டியில்லை. திருவள்ளுவர்நூலைக் கால இயற்கைக்கும், தேயவியற்கைக்கும் தக்கபடி விரித்த சோமேசர் முதுமொழி வெண்பாப் போன்ற நூல்கள் திருவள்ளுவர் நூலுடன் எத்தகைய உறவுடையவையோ அத்தகைய உறவுதான் இவ் வடமொழி நூல்களுக்கும். அவை காலத்தால் திருக்குறளுக்கு முந்தியவையாமே என்னின் அதனைக் கீழே ஆராய்வோம்.
இதற்கிடையில் தமிழர்களிடையே இன்னொரு வினா எழலாம்: ‘பரிமேலழகர் திருக்குறளையே முதனூலாகக் கொண்டாராயின் வடமொழிக் கருத்து மூலங்களை இத்தனை அரும்பாடுபட்டுத் தேடுவானேன்-?’ என்பதே அக்கேள்வி.
பரிமேலழகர் வடமொழியிற் சிறந்த புலவர். இவ்வொப்புமைகள் தரப்பட்டதே அதனைக் காட்டும். புலவர்கள் தம் புலமை விரிவைப் பயன்படுத்தி ஒப்புமை காட்டல் இன்றும் புதிதல்ல. சங்க நூல்களிற் பலவற்றை உரையுடனும், உரையின்றியும் பதிப்பித்த அறிஞர்-உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் பிற சங்க நூல்கள்,சிந்தாமணி, கம்பராமாயணம், பாரதம் ஆகியவற்றிலிருந்து ஒப்புமைக் குறிப்புகள் தந்திருக்கிறார் என்பது யாவரும் அறிந்ததே.
ஆனால், அறிஞர்-உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் போல ஒப்புமை தந்த துடன் பரிமேலழகர் நிறுத்திக் கொள்ளவில்லை என்பது உண்மையே. வடமொழிக் கருத்துகள் திருக்குறளுக்கு முந்தியவை என்ற தம் இயற்கை எண்ணத்தையும் தெரிவித்திருக்கிறார்.
‘இயற்கை எண்ணம்’ என்று குறித்ததன் காரணம் இக்கால ஆராய்ச்சியாளர்போல், அவ்வெண்ணத்தைப் புதிதாக நிலைநாட்ட அவர் முயன்றவரல்லர் என்பதற்கே.
இவ்வியற்கை எண்ணம்-அல்லது-நம்பிக்கையால் தூண்டப் பட்ட அவர், ஒப்புமை காட்டியது அவர் புலமையின் காரணமாக மட்டுமன்று என்பது அவர் கால நிலைமைகளை அறிபவர்க்கு மட்டுந்தான் விளங்கும்.
பரிமேலழகர் காலம் சைவ, வைணவ சமய மறுமலர்ச்சியும், வடமொழி மேலாண்மையும் ஒருங்கே மேலோங்கிய காலம். சைவ, வைணவ சமயங்களின் பழைய வரலாற்றைக் கவனித்தால் அவை வேதநெறிக்குப் புறம்பாக, பல இடங்களில் எதிராகக்கூட வளர்ந்தவை என்று காணலாம். ஆனால், புத்த, சமண சமயங்கள் அவற்றையும் தாண்டி வேதநெறியை எதிர்த்தபோது, வேத நெறியாளர் சைவ, வைணவரை அணைத்துக் கொண்டு புத்த, சமண சமயத்தை அழிப்பதில் அவர்கள் ஒத்துழைப்பைப் பெற்றனர். பெற்றாலும், வேத நெறிக்கு முதலிடம் பெற்றுவிடுதல் வேண்டும் என்ற காரியத்திலும் கண்ணாயிருந்து அதற்கு அவ்வப்போது சைவ, வைணவப் போட்டியைப் பயன்படுத்திக் கொண்டனர்.
தமிழரிடையே புத்தம், சமணம் மேலோங்கியபோது வேத நெறிக்குத்தான் இழுக்கு நேர்ந்ததேயன்றித் திருக்குறளுக்கு இழுக்கு நேரவில்லை. புத்த நூலாகிய மணிமேகலையின் ஆசிரியர் அவர் குறளொன்றை மேற்கோளாகக் காட்டி, அவரைப் ‘பொய்யில் புலவன்’ என்று குறித்திருக்கிறார். புத்தரையே குறிக்கும்போதுகூட ஆசிரியர் இதற்கு மேற்பட்ட புகழுரை தரமுடியாது. சமண நூல்கள் இன்னும் ஒருபடி போய் அவரைத் தங்கள் ஆசிரியருள் ஒருவராகக் கொள்கின்றன.
சைவ, வைணவ மறுமலர்ச்சியிலும் திருவள்ளுவர் புகழுக்குக் குறைவில்லை. சைவர் அவரைப் பொய்யடிமை யில்லாத புலவர்களுள் இடந் தந்ததுடன் நில்லாது 64 நாயன் மாருள்ளும் அவரை ஒருவராக்கினர். வைணவ ஆழ்வார்களும் அவரைப் பாராட்டப் பின்வாங்கவில்லை. தமிழ்நாட்டில் தமிழரிடையே எழுந்த எந்தக் கலையிலும் முழுப் பொலிவுடன் ஓங்கியுயர்ந்து மிதந்த புகழ் திருக்குறளினுடையது.
திருவள்ளுவரின் இப்புகழை வேதநெறியாளர் கொள்ளவும் முடியவில்லை. தள்ளவும் முடியவில்லை. அவர்கள் அதனை ஏற்றிருந்தால் திருவிளையாடலையும், பெரிய புராணத்தையும் ஆழ்வார்கள் சரிதைகளையும் சிவஞான போதத்தையும், தமிழ் முந்தியோ-வடமொழி முந்தியோ என்று மயங்கும்படி மொழிபெயர்த்த அவர்கள் திருக்குறளை மொழிபெயர்க்கா திருக்க மாட்டார்கள். வேதநெறியைத் தழுவிய தமிழர்களோ புத்தர், சமணர்களுக்குப் பின்னடையாமல் அதனை உச்சி மேற்கொண்டுவிட்டனர். இந்நிலையில் தமிழர் பலர் வேதநெறி, திருவள்ளுவர் நெறிக்கு மாறானதோ என்ற ஐயமும், வேதநெறி ‘வைதீகரிடையே’ திருவள்ளுவர் நெறி வேத நெறிக்கு மாறாய் நின்று அதன் புகழைக் கெடுக்குமோ என்ற ஐயமும் நிலவின. இதனால், இருசாராரிடையேயும் உட்பிணக்குத் தோன்றாமலும், திருவள்ளுவர் நெறிக்கு எதிர்ப்பு ஏற்படாமலும் காக்கவே பரிமேலழகர் அருமுயற்சி செய்து திருவள்ளுவர் நெறி வேதநெறியின் நற்சாறே என்று விளக்க முன் வந்தார் என்று தோற்றும்.
ஆயினும், திருக்குறள் வடமொழி நூல்களின் மேம்பட்ட நூல் என்பதை அவர் மறுக்கவில்லை. வாயார வற்புறுத்தாமலும் இல்லை என்பது கவனிக்கத் தக்கது. தெய்வமொழி என வேதநெறியாளர் கொண்ட வடமொழி நூல்கள், மக்களுக்கு மக்கள் எழுதிய அறிவு நூல்கள், மனித மொழியாகிய தமிழில் எழுதப் படினும், திருவள்ளுவர் நூல் தெய்வ நிலையில் நின்று எழுதப்பட்ட அருள் நூலே என்று அவர் கூறவந்த கருத்துக்கு அப்பாற்சென்று தாமே குறித்துள்ளார்.
பரிமேலழகர், வள்ளுவர் முதற் கருத்துக்கு மாறாக வலியுறுத்திப் பொருள் கொண்டதும் ‘கால நிலை’ யால் ஏற்பட்ட இன்றியமையா வேண்டுதல்களேயன்றி வேறன்று.
பரிமேலழகர் உரைபற்றிய செய்தியை இத்துடன் நிறுத்தி விட்டு அதனைத் ’தொக்காக’க் கொண்ட தற்கால வேதமொழிப் பற்றாளர் ஆராய்ச்சிகளை அடுத்துக் கவனிப்போம்.
வடமொழி தென்மொழிக் கால வரையறை தெரியாத காலத்தில் பரிமேலழகர் உரை எழுந்தது. தற்கால ஆராய்ச்சி யாளர் ஆராய்ச்சிகட்கு இத்தகைய தடங்கல் மிகுதியில்லை. இன்று வடமொழி என்று போற்றப்படுவது இலக்கியக் கால மொழியாகிய திருந்திய மொழியைத்தான். திருந்திய இலக்கியத் தமிழ் செந்தமிழ் எனப்படுவது போலத் திருந்திய வடமொழி ‘சமற்கிருதம்’ எனப்படும் இம்மொழியில் பாரதம், இராமாயணம், பகவத்கீதை, புராணங்கள், ஸ்மிருதிகள், இலக்கணங்கள் ஆகியவை நீங்கலாக எல்லா நூல்களும் கி.பி. முதல் நூற்றாண்டுக்குப் பிந்தியவையே. இவற்றுள்ளும் புத்த சமயத்தவர் எழுதிய புத்தசரிதம் என்ற காப்பியமும் ‘மண்ணியல் சிறுதேர்’ (ம்ருச்சகடிகா) என்ற நாடகமும் மட்டுமே கி.பி. 5ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவை.
திருவள்ளுவர் காலம் கி.மு. முதல் நூற்றாண்டு என்று சமணர் கூறுகின் றனர். கி.பி. முதல் நூற்றாண்டென்பதே பலர் முடிபு. இவ்விரண்டுக்கும் அது முற்பட்டதாகவே இருக்க இடமுண்டாயினும், இங்கே பிந்திய முடிபையே நாம் கொள்வோம். சங்கநூல்களில் இதற்கும் முந்திய பகுதிகள் பல. மிகப் பிந்திய பகுதி கி.மு. 3ஆம் நூற்றாண்டினது. சைவ வைணவ வேதங்கள் கி.பி. 7ஆம் நூற்றாண்டுக்கும் 10ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டவை. சிந்தாமணி, கம்பன், கூத்தர், சேக்கிழார் காலம் 12ஆம் நூற்றாண்டுக் குட்பட்டது.
வடமொழியில் புத்தர் நூல் நீங்கலாக வேத நெறியாளர் ஏற்கத்தக்க முதல் இலக்கிய நூல்கள், காளிதாசன் நூல்களே. வள்ளுவர் காலம் இதற்கு 500 ஆண்டுகள் முற்பட்டது. எனவே, வடமொழி இலக்கியம் எதினின்றும் வள்ளுவரோ, சங்ககாலப் புலவர்கள் எவருமோ கடன்பெற அங்கு இலக்கியம் எதுவுமே இருந்ததில்லை என்று காணலாம்.
இலக்கியம் இல்லாவிட்டாலும்; இதிகாசம், புராணம், இலக்கணம், பழைமை வாய்ந்த வேத மொழியிலுள்ள வேத நூல்கள் ஆகியவை உண்டு. இவற்றுள் வேதங்கள் கால வரையறைப்படுத்தப்பட்டவை யல்லவாயினும் மிகப் பழைமை யானவையே. திருக்குறளுக்கும் அவற்றுக்கும் ஒப்புமை காண எவரும் கனவு கூடக் காணவில்லை. அவை வேறுவேறு இனம், வேறுவேறு உலகம் சார்ந்தவை.
வடமொழி இலக்கியத்திலேயே திருக்குறள் போன்ற முப்பால் நூல் உண்டு. அதுவும் மிகச் சிறந்த ஒரு கவிஞரால் எழுதப்பட்டதே. வள்ளுவர் நூலுக்குப் பொருளாலும், கவிதைச் சிறப்பாலும், கருத்தாலும் மிக நெருங்கிய ஒப்புமை உடைய நூல் இதுவே. திருவள்ளுவர் திருக்குறளுக்கு வடமொழியில் ஒப்புமை தேடிய எவரும் பர்த்ருஹரி என்பவர் எழுதிய முந்நூறு (த்ரிசதகம்) என்ற இந்த நூலை ஒப்புமைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. இதற்கு உண்மையான காரணம் வேறு எதுவுமில்லை. பர்த்ருஹரியின் காலம் கி.பி.7ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டது என்பதை எவரும் அறிவர் என்பதே.
இறுதியாகத் திருவள்ளுவர் நூலுக்கு ஒப்புமையாக இன்று ஆராய்ச்சியாளர்க்குப் படும் நூல்கள் அன்று பரிமேலழகர் குறிப்பிட்ட நூல்களை யன்றி வேறில்லை என்ற முடிவுக்கு வருகிறோம். பரிமேலழகர் காட்டும் ஒப்புமைகளில் பெரும் பகுதி மனுநூல், காமாந்தக நீதிநூல், சாணக்கியர் பொருள்நூல் என்பவையே. ஒரு சிலர் பாரதத்தின் சில பகுதிகளையும் பகவத்கீதையையும் குறிப்பிடுகிறார்கள்.
பர்த்ருஹரியின் நூல்களைப்போல் தெளிவாய்ப் பிற்பட்ட நூலானால் ஆரியப் பற்றாளர் ஆராய்ச்சி எழுந்திருக்காது என்று கூறலாம். நேர்மாறாக அவை முற்பட்டவை என்று தெளிவுபடக் கூடுமானால் பரிமேலழகர் முடிபுடன் நின்றிருக்கலாம்.
மேற்கூறிய நூல்களில் பாரதம் பரதகண்டத்தின் மிகப் பழங்கதை. இக்கதை நிகழ்ந்தகாலம் கி.மு. 1000 ஆயிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். ஆனால், இன்றைய வடமொழிப் பாரதம் கி.மு.1000-க்கும் கி.பி.500-க்கும் இடையே எழுதப்பட்டதென்பது தவிர அது யாரால், எப்பொழுது, எவ்வளவு எழுதப்பட்டது என்று யாரும் கூறுவதற்கில்லை. இன்னொரு வகையாகச் சொன்னால் இந்தியா வெங்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான எழுத்தாளர் கைச்சரக்குகளின் கோவை அது. காலம்பற்றிய ஆராய்ச்சியில் இத்தகைய கூட்டுச் சரக்குக்கு இடமில்லை என்று கூறவேண்டுவ தில்லை. பகவத்கீதையின் காலமும் இதுபோல் வரையறுக்கக் கூடாததே. கி.பி 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்கராச்சாரியார் இதற்கு உரை எழுதினார். அதற்குமுன் எப்போது அது எழுதப்பட்டது என்று கூறுவதற்கில்லை. கி.மு. 7ஆம் நூற்றாண்டு என்று சிலரும் கி.பி. 2 அல்லது 3ஆம் நூற்றாண்டு என்று சிலரும் கூறுவர். சங்கராச்சாரியருக்கு முன் வட மொழி இலக்கியத்தில் இதுபற்றிய குறிப்பு எதுவுமில்லை. அதன் கால வரையறை திட்டமாகுமுன் ஒப்புமை ஆராய்ச்சிக்கு அது உகந்ததல்ல. ஒப்புமையும் திருக்குறளைப் பற்றியமட்டில் தற்செயலான பொதுக் கருத்துகளன்றி வேறில்லை.
எனவே ஒப்புமை வகையால் ஏதேனும் நாட்ட வேண்டுபவர் நாட்டஞ் செலுத்தத் தக்க நூல்கள் மற்ற மூன்றுமே.
காமாந்தக நீதிநூல் காலமறியப் படாதது. மேலும் அது சாணக்கியர் பொருள் நூலின் மறுபதிப்பேயாகும். அதன் பொருள் ஒழுங்கு, குறளை ஒட்டியதானால், அது குறளைப் பின்பற்றி ஏற்பட்டதாகக்கூட இருக்கக்கூடும். பிறமொழியாளர் வடமொழியைப் பின்பற்றியிருந்தால் அதைப் பெருமையுடன் கூறுவதே மரபு. ஆனால், வடமொழி வடவர்க்குப் பொதுமொழியாதலால் எம் மொழியினரும் தம் கருத்தை-தாம் அறிந்த கருத்தை வடமொழி உலகுக்குப் புதியதாக அதனைத் தரலாம். அங்ஙனம் தரும்போது பெயர் குறிக்கும் மரபு கிடையாது. மேலும் வடமொழியிலிருந்து புதுக்கருத்துப் பெறுங் காலம் வள்ளுவர்க்கு நெடுநாள் பிந்திய காலம். வடமொழியில் அக்காலத்தில் இலக்கிய வளம் ஏற்படாத காலம் என்று மேலே கூறினோம்.
மனுநீதி என்று இப்போது வழங்கும் நூல் ஆதி மனுநூல் அன்று என்று அந்நூலே குறிப்பிடுகின்றது. ஆதி மனுநூலின் கருத்துகளைத் தொகுத்துப் பிற்காலத்தார் எழுதிய நூல்வரிசையில் அது ஒன்றேயாகும். அதன் இறுதிப் படிவம் கி.பி.5ஆம் நூற்றாண்டுக்குச் சற்றுமுன் ஏற்பட்டதென வின்ஸன்ட் °மித் கூறுகிறார். இதன் பகுதிகள் சில பழைமையாயிருக்கக் கூடுமாயினும் இன்றைய வடிவிலிருந்து நூலாராய்ச்சி-வரலாற்றாராய்ச்சி பயன்படாதது.
கடைசியாகச் சாணக்கியர் செய்தியை எடுத்துக் கொள்வோம். இவர் கி.மு. 4ஆம் நூற்றாண்டினிறுதியில் வட இந்தியா முழுவதையும் வென்றாண்ட பேரரசன் சந்திரகுப்தனின் அமைச்சன் என்று கூறப்படுகிறது. இது உண்மை யானால், அவர் காலம் திருக்குறளின் காலமாக ஒப்புக்கொள்ளப்பட்ட கி.பி. முதல் நூற்றாண்டுக்கு 500 ஆண்டுகள் முந்தியதாயிருத்தல் வேண்டும். ஆனால், சாணக்கிய சூத்திரம் அல்லது பொருள் நூலை வட மொழியில் பதிப்பித்த பதிப் பாசிரியர்கள், அது சாணக்கியர் எழுதியது அன்று என்றும், அவர் கொள்கைகளையோ அவர் எழுதிய நூலையோ பின்பற்றி கி.பி. 5ஆம் நூற்றாண்டுக்கு முன் யாரோ எழுதிய நூலாகவே இருத்தல் வேண்டும் என்றும் கூறுகிறார்கள். பொருள் நூலின் காலம் கி.மு. 4ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பதை அடிப்படையாய்க் கொண்டு பாணினியின் காலத்தை கி.மு. 4ஆம் நூற்றாண்டின் தொடக்கத் துக்கு முன் என்று கொண்ட முடிபுகூட இப்போது இம்மறுப்பின் பின் பயனற்றுவிட்டது என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும் சாணக்கியர், சந்திரகுப்தன் அமைச்சன் என்று குறிப்பிடும் மரபுரையே அவர் தென்னாட்டவர் என்றும் குறிப்பிடுகிறது. அவர் கூறும் அரசியல் முறைகள் சோழ பல்லவர் ஆட்சிமுறை பற்றிக் கல்வெட்டுகளால் தெரிபவற்றுடன் மிகவும் ஒத்தே காணப்படுகிறது.
மேற்கூறியவற்றால் சாணக்கியர் நூலின் ஒப்புமையும் கால வரையறைப் படாத ஒற்றுமை என்றாகிறது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக வடமொழி நூல்கள் அக்கால அறிஞர்களின் கூட்டுச் சரக்கு என்பதையும், தமிழிலக்கியத்தினும் வட மொழியின் திருந்திய இலக்கியம் பிற்பட்டது என்பதையும், சமயம், கலை, அறிவியல் ஆகியவற்றில் அது தமிழுலகுக்குப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறது என்பதையும், தமிழ் நூல்கள்போல் காலம், இடம், ஆசிரியர் குறிப்பற்றது என்பதையும் ஆராய்ச்சியாளர் நினைவில் வைத்தல் வேண்டும்.
நாம் மேற்குறிப்பிட்ட ஆராய்ச்சிப் பெரியார் இவ்வொப்புமை ஆராய்ச்சியில் முனைந்ததுடன் திருவள்ளுவர், இளங்கோ காலங்களையும் ஐயுற முற்படுகிறார். தமிழ்ப் புலவர்கள் அவருக்கு விடையிறுக்கக் கூடுமாயினும் அவரை ஓர் ஆராய்ச்சியாளர் என்று கருதாததால் விடையிறுத்திலர். அவர் கொள்கை வரலாற்றுக் கண்ணை மூடிக்கொண்டு தடவும் முயற்சி என்பதைக் காட்ட இரண்டு செய்திகள் மட்டும் கூறுவோம்.
‘சிலப்பதிகாரம்’ கயவாகு என்ற இலங்கையரசன் காலம். இலங்கையில் இரண்டு கயவாகுகள் ஆண்டனர். முதலாமவன் கி.பி. 2ஆம் நூற்றாண்டினன். இரண்டாமவன் கி.பி. 6ஆம் நுற்றாண்டுக்குப் பிந்தியவன். சிலப்பதிகாரமும் சங்க நூல்களும் முதல் கயவாகு காலத்தவையல்ல, இரண்டாமவன் காலத்தது என்பது அப்பெரியார் கூற்று.
அப்பர் சம்பந்தர் 7ஆம் நூற்றாண்டவர் என்பது மறுக்க முடியாத உண்மை. அவர்கள் தேவாரங்கள் சங்க காலத்தைப் பழங்காலமாகக் குறிப்பது பெரியார் கூற்றுக்கு முரண்படும்.
சிங்கள மொழியில் சிலப்பதிகாரம் கி.மு. 5ஆம் நூற்றாண்டிலேயே மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பெரியார் கூற்று இதனால் முற்றிலும் அடிபடுகிறது.
ஆரிய மொழிச் செருக்கு புதுவெள்ளமாய் ஓடிய பரிமேலழகர் காலத்தில் மங்காத வள்ளுவர் பெருமை, எப்பெரியார் காலத்தும் மங்காதெனவும், எவ் ஒப்புமைக்கும் ஈடு செலுத்தும் எனவும், காலப்பழைமை இல்லாதவிடத்தும் அதன் முதன்மை மாறாதெனவும் தமிழுலகம் உறுதியாக நம்பலாம்.
நாடகத் தமிழ்
கொற்கை நண்பன் ஒருவன் என்னுடன் உயர்தரப் பள்ளியில் பயின்று வந்தான். அவன் கிழிந்த ஆடைகளையே உடுப்பான். ஆனால் , அவன் ஆடைகள் ஒன்றும் அழுக்காயிருந்த தில்லை. அவனுக்கு வருவாய் மிகக் குறைவு. ஆனால், அவன் பிறர்க்கு உழைப்பதிலும் கையிலுள்ளவற்றைப் பிறர்க்குக் கொடுப்பதிலும் குறைபாடற்றவன். பெருந்தன்மையும் அன்பும் அவனிடம் இயல்பாகவே குடி கொண்டிருந்தன. பரம்பரைச் செல்வரும் அவன் செல்வப் பண்புகளுக்கு முன் நாணமுற்றனர்.
கொற்கை நண்பன் பிறப்பிடத்துக்கும் ஒரு நாள் சென்றிருந்தேன். அது ஊர் என்று சொல்வதற்குகூடப் பொருந்தாத நிலையிலிருந்தது. ஆனால், அங்கங்கே சில தெருக்கள் தேரோடும் வீதிகளை நினைவூட்டின. சில வீடுகளில் சிதைந்த சுவர்கள் கோட்டைச் சுவர்கள் போன்றிருந்தன. குப்பைக் கூளங்களிடையே அழகிய சிலைகளின் பகுதிகள், அரும்பொருள்கள் காணப்பட்டன. நண்பன் வீட்டுப் பழம் பொருள்களில் ஒன்று எல்லாரையும் பல நாள் மலைக்கச்செய்தது. அது ஒரு கடிகாரம் போன்றிருந்தது. அது அக்காலக் கடிகாரமோ என்று எண்ணினோம். ஆனால், அதில் கடிகாரத்தின் தெளிவான குறிகள் எதுவுமில்லை. நெடுநாள் கழித்துப் படைவீர நண்பன் ஒருவன் அதைக் கண்டு, “இது உங்களுக்கு எப்படிக் கிடைத்தது. இது வடக்கு நோக்கிக் கருவியாயிற்றே!” என்றான். ஆம். கொற்கை நகரத்தார் கப்பலோட்டிய காலத்தின் ஒரு நினைவூட்டு அது என்று அறிந்தோம்.
கொற்கை நண்பன் செல்வப்பண்பு, அவன் குடியின் பழஞ்செல்வம் நினைவூட்டுகிறது. கொற்கையின் அரும் பொருட்குவைகள் அதன் பழம் பெருமையைக் காட்டுகின்றன. இவற்றைப் போன்றே தமிழர் புதையல் நீதியாகிய சிலப்பதிகாரமும் தமிழர் பண்டைய முத்தமிழ் வளத்துக்கு ஒரு சான்றாக விளங்குகிறது. ஆயினும் கொற்கையிற் கண்ட வடக்கு நோக்கியின் தன்மையைப் படைவீர நண்பன் விளக்கும்வரை நாம் அதன் உயர்வை அறிய முடியாதிருந்தது போலவே, இச்சிலம்புச் செல்வத்தின் தன்மையும் நமக்கு முற்றிலும் விளங்கா திருக்கின்றது. படைவீர நண்பன் அனுபவ அறிவு நமக்குத் துணை செய்வது போல், இங்கு, பழந்தமிழர் மரபுகளை அறிந்தவர்களிடமிருந்து நாம் துணை பெறுதல் அவசியம்.
தமிழுரையாசிரியர்கள் ஓரளவு சிலப்பதிகாரத்தை உணர நமக்குப் பேருதவி செய்திருக்கின்றனர். ஆனால், அவர்கள் காலத்திலிருந்த தமிழ்ப் பண்பும் தமிழ் மரபும் கூட இன்று சிதைந்துவிட்டது. அவர்கள் துணையும் அவ்வளவுக்கு நமக்கு மலைப்பையே உண்டுபண்ணுகின்றது. அவர்கள் இதனை முத்தமிழ்க் காப்பியம், நாடகக் காப்பியம் என்று அழைத்துப் போயினர். நாமும் அதனைப் பின்பற்றி அதனை அவ்வாறே அழைக்கின்றோம். ஆனால், எங்கே முத்தமிழ், எங்கே நாடகம் என்று தேடாதிருக்க முடியவில்லை. வரிப்பாட்டுகள் அங்கங்கே பாடப்படுவதனால் இசைத்தமிழ் ஓரளவு உண்டு என்னலாம்.
கூத்துப்பற்றி ஒன்றிரண்டு இடங்களில் குறிப்பு வருகிறது. அதனால் அது நாடகக்காப்பியம் ஆகும் என்று கூறி அமைதி பெறவேண்டுமா! இவற்றின் விரிவுகூட உரையாசிரியர்கள் தருவதன்றி வேறன்று. ஆகவே, அது நாடகக் காப்பியம் என்று கூறுவது வெறும் உபசார வழக்கு மட்டும்தானா?
இன்று சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம் என்று கூறுவது ஒருவகையில் உபசார வழக்கேயாகும். நாடகம் என்றால் கூத்து அல்லது நடனம் என்று கொண்டால்கூட, நாடகக் காப்பியம் என்று வழங்கப்படும் அளவுக்கு அது அவ் வகைகளில் நிறைவுடையதாயில்லை. ஆயினும், அது பழங்கால நாடக இயல்பை அறிய உதவுவது; அதன் சின்னங்களை உடையது என்பதில் ஐயமில்லை. அச்சின்னங்களின் மூலம் அதன் பழைய நிலையை ஆராய்ந்து பின் நாடகக் காப்பியம் என்ற பெயருக்கு அது எவ்வளவு தூரம் தகுதியுடையது என்று காண்போம்.
நாடகம் என்பது உரையும் பாட்டும் கூத்தும் கதையும் விரவிவருவது. கேள்விக்கும் காட்சிக்கும் விருந்தளிப்பது. இன்று தமிழ் நாட்டில் நாடகங்கள் நடிக்கப்படுகின்றனவாயினும், அவை பழந்தமிழ் மரபுடன் தொடர்பு அற்றுப் போயிருக்கின்றன. ஆகவே, மிகப் பழையகால நாடக நிலையை அறிய அவை உதவ வில்லை. சிலப்பதிகார உரைக் குறிப்புகளும் மேற்கோள்களும் அந்நாளைய இசை, கூத்து ஆகியவற்றின் உயர் நிலையையும் விரிவையும் பெருக்கத்தையும் குறிக்கின்றன. ஆயின், இவ்வகல் விரிவுடைய கலைப்பண்பு எங்கே போயிற்று? முற்றிலும் அழிந்துவிட்டதா? சிலப்பதிகாரத்தை அறியும் அளவுக்கேனும் அவற்றை உய்த்தறிய முடியாதா என்று ஆராய்வோம்.
சிலப்பதிகாரத்தில் காணப்பட்ட இசைப்பண்பு அழியாது பல நூற்றாண்டுகள் நிலவியது என்பதற்குத் தேவாரம் சான்றுதரும். தேவாரத்தில் சிதைந்த பதிகங்கள் போக, மீந்தவற்றுள் பழைய பண்கள் பல இடம் பெறு கின்றன. இப்பண்களைப் பழங்காலத்தில் பயிலப் பாணர் என்ற தனி மரபினர் இருந்ததாக அறிகிறோம். சம்பந்தர் காலத்தில் பதிகங்களை யாழிற் பாடிய திருநீல கண்டயாழ்ப்பாணரும், தேவாரத்துக்குப் பண் வகுத்த நங்கையும் இம்மரபின ராவர். இம்மரபினர் பெயரை இலங்கை நாட்டு யாழ்ப்பாணம் இன்னும் நினை வூட்டுகிறது. சோழப் பேரரசர் தேவாரம் பாட அமர்த்திய ஓதுவார் மரபினர், பெரிதும் இம்மரபினர் தோன்றல்களாகவே இருந்திருக்கக்கூடும்.
பாட்டுப் பாடும் பாணமரபினர் சங்ககால முதல் சோழர் காலம்வரை காலத்துக்கேற்ப மாறிப் பின் அழிந்துபட்டனர். சங்க நாள்களில் பாணருடன் கூத்துப் பயின்ற மக்கள் விறலியர் எனப்பட்டனர். சிலப்பதிகாரத்தில் கூத்தின் ஒருவகை சாக்கையர் கூத்து என்று கூறப்படுகிறது. சாக்கையர் என்பவர் கூத்து வல்லுநர் என்று அறிகிறோம். பிற்காலத் தமிழகத்தில் இம்மரபும் பாணர் மரபைப் போலவே அற்றுப் போயிற்று. இவ்விருமர பினருமே பழங்காலத் தமிழ் அந்தணர் மரபுபோலும்! தமிழ் நாட்டில் இம்மரபு இன்று காணப்படவில்லையாயினும் மலையாள நாட்டில் அவர்கள் இன்றும் உள்ளனர். இன்றும் அவர்கள் பழந்தமிழ்ப் பெயரால் ‘சாக்கியர்’ என்றும் ‘சாக்கர்’ என்றும் வழங்கப்படுகின்றனர். அவர்கள் இன்றும் அந்தணராகவே கணிக்கப்படுகின்றனர். அவர்கள் தொன்றுதொட்டு சேர அரசர்களாலும் அவர்களது பிற்காலத் தோன்றல்களாலும் பேணப்பட்டு இன்றும் நாடக ஆசிரியராய் விளங்குகின்றனர். அவர்கள் நாடகம் இன்று மலைநாட்டுத் தமிழின் தோன்றலான மலையாளத்தில் ‘சாக்கியார் கூத்து’ என்றும், ஓட்டம் துள்ளல் என்றும் வழங்கப்படுகிறது. இதுவன்றி மலையாள நாட்டில் பழந்தமிழ் மரபின் இன்னொரு கலையாகிய பாவைக்கூத்து (பொம்ம லாட்டம்) தெலுங்கு நாட்டிலும் கதைகளி, ஊமைக்கூத்து முதலிய பல தமிழ்நாடக வகைகள் சிதைந்தும் உருத்திரிந்தும் மலையாள நாட்டிலும் நடமாடுகின்றன.
பழந்தமிழ் நாடக இயல்பை அறியச் சிலப்பதிகார உரைக் குறிப்புகளுடன் இச்சிதைந்த தமிழ் நாடக முறைகளையும் வைத்து ஒப்பிட்டு நோக்குதல் வேண்டும். தமிழரின் பழஞ்சொத்தாகிய நாடகத்தமிழில் நாடக உருவம் இங்ஙனம் கொடுந்தமிழ் நாடுகளிலும், அதன் இலக்கிய வடிவம் ஓரளவு தமிழிலும் மீந்துள்ளது. அதாவது அச்செல்வத்தின் உடல் தமிழகத்திலும், உயிர் மலையாள முதலிய நாடுகளிலும் உள்ளது. எதெதற் கெல்லாமோ பணத்தை வாரியிறைக்கத் தயங்காத தமிழ்ச் செல்வர், இவ்வுடலையும் உயிரையும் இணைப்பின் தமிழ் நாடகம் இந்நாளைய உயிரற்ற இரவல் நடிப்பாயிராமல் உயிருள்ள, வளரும் தமிழ்க் கலையாய்விடும் என்பதில் ஐயமில்லை.
தமிழிசை முற்றிலும் சிதையாமல் தேவாரத்தால் சிலகாலம் காக்கப்பட்டது போல், நாடகம் முற்றிலும் சிதையாமல் திருவாசகத்தில் காக்கப்பட்டிருக்கிறது. அதிலுள்ள திருப்பொன் னூசல், திருப்பொற்சுண்ணம், திருவெம்பாவை முதலியவையும், காப்பியங்களில் காணப்படும் கந்துகவரியும் உண்மையில் நாடக உறுப்புகளேயாகும்.
பழந்தமிழ் நாடக இயல்பை அறிய இன்னோர் உதவி, பிறநாட்டு நாடக வரலாறுகள் ஆகும். சிலப்பதிகாரத்தில் பொருளற்ற பல சிறு செய்திகள், அவற்றால் பொருளுடையவை யாகக் காணப்படும் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறோம்.
சிலப்பதிகாரத்தில் ஒவ்வொரு காதையும் ‘என் அல்லது என’ என்று முடிகின்றது. இது ஒரு ‘குருட்டு விதி’ என்று எண்ணப்படுகிறது. ஆனால், பழைய நாடக இயலில் இது ஓர் அரிய பொருளைக் குறித்தது. வட நாட்டிலும், இங்கிலாந்தில் ஷேக்°பியர் காலங்களிலும்கூட நாடக மேடைக்கு முன் திரைகள் கிடையா. எனவே, ஒரு காட்சி முடிந்து மறுகாட்சி வருவதைக் குறிக்க ஆசிரியனே ஏதாவது முறையைக் கையாளவேண்டி யிருந்தது. வடமொழியில் இதற்காகவே ஒவ்வோர் அங்க முடிவிலும் சூத்திரதாரன் ஒரு முடிவுரை கூறுவான், ஒவ்வோர் அங்கத் தொடக்கத்திலும் ஒரு முன்னுரை கூறுவான். இது மிகப் பழங்கால முறை. ஷேக்°பியர் காலத்தில் இதற்குப் பதில், பாட்டிலேயே ஒரு புதுவகை அடியையோ எதுகையையோ பயன்படுத்தினர். தமிழர் என், என என்ற சொல்லால் காட்சி மாற்றம் குறித்தனர்.
சிலப்பதிகாரத்தை நாடகம் என்று நாம் கூறுவது உபசார வழக்கே என்று தோன்றுவதற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றுள் ஒன்று, அதில் வருணனை மிகுந்திருப்பது. காளிதாசன், ஷேக்°பியர் முதலிய நாடக ஆசிரியர்களும் இவ்வகையிலேயே அதிக வருணனைக்கு இடங்கொடுத் துள்ளனர். காரணம் அக்காலத்தில் திரைகள் அதிகம் பயன்படாமையே. பண்டைத் தமிழகத்தில் பலவகை எழினிகள் இருந்தனவாயினும், அவை சில சிறப்பான கட்டங்களுக்கு மட்டுமே பயன்பட்டன. மேலும் அவை கூத்து அரங்கிற்கே சிறப்பாக வழங்கின. சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் அரங்குகள் பெரும்பாலும் கூத்தரங்குகளே யாகும். ஏனெனில் நாடக அரங்குகள் பின்கட்டு இல்லாது நாற்புறமும் திறந்து இருந்தன. கிரேக்க நாடகங்கள் இவ்வகையில் தமிழ் நாடக இயலை ஒத்திருந்தன. இக்காரணத்தால் அக்காலம் உடைமாற்றம் உரு மாற்றம் இல்லை. இசையிலும் கூத்தில் பல நடிகர் இருந்தபோதிலும் நாடகத்தில் பெரும்பாலும் ஒருவரே நின்று கதையை அவிநயம் செய்தனர். இதனால்தான் சிலப்பதிகாரத்தில் நாடகம் உரையாடல் முறையில் அமையாமல், கதை கூறும் முறையில் அமைந்திருக்கிறது. இசைப் பாட்டுகள் மட்டும் தனித்தனி நடிகர் கூற்றாய் அமைந்துள்ளன.
தமிழில் உரைப்பாட்டு மடை, வடமொழி சூத்திரதாரர் கூற்றை ஒக்கும்.
இன்றைய சாக்கியர் கூத்து நாடகத்தைக் காண்போர், சிலப்பதிகாரம் உண்மையில் சாக்கியர் கூத்துப் போன்ற ஒருவகை நாடகத்துக்கென எழுதப்பட்டதென்பதை உணர்வர். சாக்கியர் கூத்தில் ஒரே நடிகர். அவர் ஆடும் மேடை, நடுவில் அமைந்து கேட்போர் நாற்புறமும் இருப்பர். எனவே, முகபாவங்களைவிட அவிநயம் இந்நாடகத்தில் முக்கியமானது. சிலப்பதிகாரத்தி லுள்ள உரையாடலும் சரி, வருணனையும் சரி, பாவங்களைவிட அவிநயங் களுக்கே ஏற்றமுறையில் அமைந்திருப்பதைக் காணலாம். இன்று ஒவ்வொரு காதையும் ஒரு நீண்ட வாக்கியமாய் அமைந்திருப்பது இன்றைய மாணவர்க்கு மலைப்பைத் தரலாம். ஆனால், அவிநயத்தில் அது உண்மையில் தொடர்ந்து பொருளையும் நயத்தையும் கொண்டது என்பதைச் சிலப்பதிகாரத்தைச் சாக்கியர் கூத்தாக மலையாளச் சாக்கியர்களைக் கொண்டு நடிக்கவிட்டுப் பார்த்தால் அறியலாம்.
பழந்தமிழ் நாடகம், ஆதரவற்ற நிலையில் குறவஞ்சிப் பாட்டாகவும், தெருக் கூத்தாகவும் அணிமைக் காலம் வரை ஓரளவு பயின்றே வந்திருக்கிறது. அயலார் ஆட்சியில் அயல்நாட்டுப் பண்பில் மயங்கிய செல்வரும், உயர் வகுப்பாரும், அவற்றைக் குறையுடையதாகக் கருதி, அவற்றைச் சிதைய வைத்தனரேயன்றி வேறன்று. புறக்கணிப்பு நஞ்சு ஏறி மலையாள நாடகத்தைக்கூட அழிக்க விருக்கிறது. தமிழன்பரும் மலையாள, தெலுங்கன்பரும் ஒத்துழைத்தால் அதனைச் சீரமைத்தல் ஒருவாறு கூடும். இவ்வகையில் வடமொழி நாடகமும் பெரிதும் பயன்படுவது என்றே எண்ணலாம். வடமொழி நாடகம் சமயச் சார்பற்ற தாக வளர்ந்ததையும், பண்டைய நாடகப் புலவர் பெரும்பாலும் புத்தராகவோ, சமணராகவோ, தாழ்ந்த வகுப்பினராகவோ இருந்து வந்திருப்பதும் நோக்க வடநாட்டில் பயின்ற அக்கலையும் உண்மையில் வடநாட்டுப் பழந் திராவிடக் கலையின் ஒரு தேய்ந்து திரிந்த வளர்ச்சியேதான் என்று எண்ண இடமுண்டு. தொலை நாடுகளான கிரீசு, இங்கிலாந்து நாடுகளின் நாடக வளர்ச்சிகூடத் தமிழ்நாடக வளர்ச்சி முறை காண உதவுமென்பது உறுதி.
திராவிடமொழி யன்பர்களும், திராவிடச் சார்பு மலிந்த வட இந்திய மொழி அறிஞர்களும், ஒன்றுபட்டு ஆராயின், இந்நாட்டின் பழங்கலைச் செல்வங்களில் பல புதையுண்ட பண்புகளை உயிர்பெறக் காணலாம். இவ்வகையில் வேறெந்நூலினும் பேருதவிபுரியும் பண்டைப் பெருநூல் சிலப்பதிகாரம் என்பது மிகையாகாது. அந்நூல் மூலம் வடமொழி நாடகக் கலையின் பிறப்பு வளர்ப்புப் பற்றிய பல செய்திகள் கூட விளக்கமடையக் கூடும்.
தமிழக அறிவியல் வளர்ச்சி
தமிழக அறிவியல் வளர்ச்சி என்றதுமே எவரும் தமிழகத்துக்கும் அறிவியலுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்றுதான் கேட்கக்கூடும்! ஆம், இன்றைய தமிழக நிலை அதுதான்! ஆனால், இதே நிலைமை என்றும் இருக்க முடியுமா? இந்நிலை மாற வேண்டாவா? அதற்கான கனவுகளாவது காண வேண்டாவா? திட்டம் தீட்ட வேண்டாவா? இவை பற்றித் தமிழகத்தில் கருத்துள்ள தமிழர் சிந்திக்காமலிருக்க முடியாது. சிறப்பாகத் தமிழகப் பணியில் முனையும் இளைஞர்கள் இத்துறையில் இன்னும் நெடுநாள் அசட்டையாய் இருக்க முடியாது.
இன்று தமிழ் மாணவர்களிடையே தமிழார்வத்தை ஊட்டிவிட்டோம். அத் தமிழார்வம் தமிழறிவை ஊட்டிவிட்டது. அத்துடன் நிற்கவில்லை. அவர்கள் தமிழ்ப் பணியை விரிவுபடுத்தித் தமிழிலக்கியப் பணியுடன் நிறுத்தாமல், தமிழர் பணியில் இறங்கிவிட்டனர். தமிழரைப் பண்டைத் தமிழர், முழுத் தமிழ்ப் பண்பாடுடைய திராவிடர்களாக்க முனைந்த திராவிட இயக்கத்தையும், தன்மான இயக்கத்தையும் பகுத்தறிவியக்கத்தையும், சீர்திருத்த இயக்கத்தையும், தன்மான திராவிட நாடு காணும் ஆர்வத்தையும் இத் தமிழார்வம் தலை நின்று பரப்பிவிட்டது. இவற்றை முழு அளவில் பயன்படுத்தி நாட்டு வாழ்வை உயர்த்த வேண்டுமானால், இளைஞர் ஆக்கப் பணியில் இறங்குதல் வேண்டும். தமிழர்க்கு, திராவிட இயக்கத்தவர்க்கு ஆக்கத் துறையில் முதல் முன்னணியாயிருக்க வேண்டிய துறை அறிவியல் வளர்ச்சி பற்றிய திட்டங்கள் தீட்டுவதே.
தென்னாட்டில் இதுவரையில் ஏற்பட்டுள்ள சீரிய முயற்சிகள் இரண்டே இரண்டுதான். திட்டம் தீட்டுமுன் அவற்றில் கருத்துச் செலுத்துதல் வேண்டும். அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். ஒன்று அறிவியல் வளர்ச்சிக் கான ஆக்கக் கருவிகள் செய்யும் தொழில். ஆந்திர நாட்டில் இதற்காக ஆந்திர அறிவியல் கழகம் நிறுவப்பட்டு நடைபெறுகிறது. திராவிடப் பண்பாட்டடிப் படையுடன், திராவிட நாட்டு நோக்குடன் இது அமையப் பெறவில்லை யானாலும், இது திராவிட நாட்டில் இருப்பதே. இது போன்ற கழகங்கள் தமிழகத்திலும், பிற தென்னாட்டுப் பகுதிகளிலும் அமைதல் வேண்டும்.
இரண்டாவது அறிவியலுக்கு உதவும் தொழில் துறைகளான ஆலைகள், பொறியூர்திகள் செய்யும் தொழில் முதலியவையே, இத் துறையில் முதலாளியாக மட்டுமன்றிப் புத்தாராய்ச்சியாளராகவும், புது ஆக்க முயற்சியாளராகவும் அறிஞர் ஜி.டி. நாயுடு அவர்கள் விளங்குகிறார்கள். பகுத்தறிவியக்கம் அறிவியலியக்கமாக வளருமானால், அத்தகையோர் இன்று இத்துணை அல்லற்படத் தேவையிராது, திராவிடநாடு பெறும் வரை அவர்கள் வாளா இருத்தல் வேண்டும் என்பதில்லை, சிறு அளவிலாவது அவர்கள் உழைப்பை பயன்படுத்தலாம்.
திட்டந் தீட்டுவதன் அவசியம் இது. திட்டத்துக்கான கூறுகள் என நாம் நினைப்பவற்றைத் தற்காலிகமாக ஐந்து கூறுகளாக வகுக்கலாம்.
1. மொழித்துறையில் அதற்கான பழஞ்சொற்களைப் புகுத்துதல், புதுச் சொற்களை ஆக்குதல்.
2. மேடைப் பேச்சுகளிலும், பத்திரிகைக் கட்டுரைகளிலும், இயக்க நடைமுறைகளிலும் அமைப்புகளிலும், அறிவியல் தலைப்புகளுக்கும், பிரசாரங்களுக்கும் வழிவகுத்தல்.
3. அறிவியல் கருத்துகளை மக்களிடம் பரப்பும், சிறு வெளியீடுகளைப் பெருக்குதல், அறிவியல் வளர்ச்சிக்குக் குந்தகமாக இருக்கும் பழைய மூட நம்பிக்கை மனப்பான்மையை ஈவிரக்கமின்றிச் சாட இளை ஞர்கள் பலரை ஊக்கி, நூல்கள் எழுதுவித்தல்.
4. தொழிலாளர்களுக்குச் சிறப்பாகவும் பொதுமக்களுக்குப் பொது வாகவும் அறிவியல் வளர்ச்சியாலும் தொழில்துறை அறிவாலும் அனுபவத்தாலும் ஏற்படும் நாட்டுப் பொருள் துறை மேம்பாட்டையும் தனி மனிதர் வருவாய் மேம்பாட்டையும் விளக்கி, தொழிலாளர்களை யும், தொழில் முதலாளிகளையும் ஒருங்கே அத்துறையில் உழைக்க, அறிவு செலுத்த, முதலீடு செய்யத் தூண்டுதல்.
5. தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் பிள்ளைகளுக்கும் தொழிற் பள்ளிக்கூடங்களை இயக்கச் சார்பிலேயே தொடங்கி, அரசாங்க ஆதரவை எதிர்பார்த்தும் பாராமலும் தொழில்கள் நடத்தக்கூடிய வகையில் தொழிற்கல்வி ஏற்படுத்தல், தொடக்கத்தில் தற்காலிகமாக ஆங்கில அறிவியல் துறைச் சொற்களையே கையாண்டு தமிழில் கற்றுக் கொடுக்கலாம். அறிஞரைவிடத் தொழிலாளிகள் நல்ல சொற்களை ஆக்கிக் கொள்வார்கள். அவர்கள் அனுபவ உலகத்தில் இருப்பவர்களாதலால் அவர்களின் உதவியுடன் அதை எளிதில் செய்ய முடியும். தொடக்கத்தில் நாட்டவர் ஆதரவு தேடியும் மிக எளிதில் விரைவில் தொழில் மூலம் வருவாயையே உண்டு பண்ணியும் மக்கள் ஆர்வத்தைப் பெருக்கலாம்.
இவற்றுள் முதலாவது மொழித்துறை. இதனால் இன்று ஏற்பட்டிருக்கும் பெருஞ்சிக்கல் தூயதனித் தமிழைத்தான் வழங்குதல் வேண்டுமா? அல்லது ஆங்கிலச் சொல்லையே வழங்கலாமா என்பதே. இதில் தமிழ்ப்பண்பு மிக்கது எது என்பதைப் பற்றித் தமிழர்க்குள் இரண்டு கருத்து இருக்க முடியாது. ‘தமிழில் முடியுமானால்’ தனித்தமிழே சிறந்தது; அதனையே கூடிய மட்டும் வழங்குதல் சிறப்புடையது. தனித்தமிழே வழங்கப்படல் வேண்டும் என்பதைத் தமிழரும் மறுக்க மாட்டார். பிறமொழியாளரும் அவர் தமிழின் பகைவராயிருந்தால் அன்றி மறுக்கமாட்டார். தமிழில் சொல் இல்லாமல், அல்லது காணமுடியாமல் போனால் பிற மொழிச்சொல்லை வழங்குவது சரி என்பது கொள்கையளவில் ஏற்கக் கூடியதே. ஆனால், காரியத்தில் இது சரியன்று, ஏனெனில், உண்மையில் மற்றெம் மொழியையும்விடத் தமிழில் இவ்வாய்ப்பு மிகுதியே. இன்றில்லாவிட்டாலும் தமிழ்ப் புலவர், பொதுமக்கள், தொழிலாளர் ஆகிய மூவரும் அறிவியலறிவுபெறும் காலத்தில் எல்லாக் கருத்துகளும் தமிழில் அமைந்துவிடுவது உறுதி. அக்காலத் தில், தமிழ் பிற இந்திய மொழிகளுடனும் வட மொழியுடனும் மட்டுமன்றி, மேனாட்டு மொழிகளுடனும்கூடப் போட்டியிடும் தன்மையுடையது என்பது மொழியாராய்ச்சி யாளர் கண்டுவரும் முடிவு. அன்றியும் தமிழைவிட வளம் குறைந்த பிறமொழிகளில்கூட வடமொழிச் சொற்கள் புகுத்தி இத்தாய் மொழிச் சொற்கள் ஒழிக்கப்படாமலிருக்குமானால், அவற்றிலும் போதிய சொற்கள் வளர்ச்சியடையும் என்பதை மலையாள மொழியும், கன்னடமொழியும், இராயல சீமாத் தெலுங்கு மொழியும் பயில்பவர் அறிவர். வடமொழியை இன்று புகுத்த முனைபவர் பிறமொழிக் கலப்பு வேண்டுமென்று பொதுவாகக் கூறுபவர்போல் பிரச்சாரம் செய்வது உண்மையில் வடமொழிக் கலப்புக்கு மட்டுமேயாகும். இத்தகையோர் பிறமொழிப் பசப்புப் பசப்புவதை விட்டுத் தாய்மொழிப் பற்றுடையவராய்த் தங்கள் வடமொழியிலேயே அறிவியல் நூல்கள் எழுதி மேனாட்டவர்க்கு வழி காட்டட்டுமே என்று நேரிடையாக அறைகூவல் விடுக் கிறோம்! வடமொழியில் முடியாத ஒன்றைத் தாய்மொழியில் புகுத்து வானேன்? தங்கள் தாய்மொழியாய் இயங்கும் தன்மை கூட அற்ற ஒருமொழியின் சாக்காட்டுநோயை உயிருள்ள தாய்மொழிகளிலும் குத்திச் செலுத்தி அவற்றைச் சாகடிக்க முயல்வானேன்? பிற மொழிச்சொல் இன்றியமையாது தேவைப்பட்டால் அறிவியல் வளமும் உலக வழக்கும் உடைய ஆங்கிலம் முதலிய மேனாட்டு மொழிச் சொற்களை எடுக்கலாமே? இந்தியாவில் ஒற்றுமை வேண்டுமானால் எல்லாத் தாய்மொழிச் சொற்களையுமே பயன்படுத்தலாமே! தாழ்த்தப் பட்ட நாட்டு மக்களுக்குப் புரியாமல் தமக்கு மட்டுமே புரிந்ததாகக் காட்டிக்கொள்ளும் அறிவு வரம்பற்ற மொழியின் புரியாச் சொற்களைப் புகுத்திக் குழப்புவானேன்!
தொழிலாளர்களைப் பற்றியவரை அவர்கள் இன்று முடிந்தமட்டும் தங்கள் வழக்காற்றிலுள்ள தனித்தமிழ்ச் சொற்களுடன் தற்காலிகமாகவேனும் ஆங்கிலச் சொற்களை வழங்குவதே அவர்கள் விரைந்த அறிவியல், தொழில்கல்வி வளர்ச்சிக்கேற்றது ஆகும்.
மொழித் துறைக்கு அடுத்தது பிரசாரத்துறை. இதில் ஆக்கவேலைக்கு முன்னீடான சூழ்நிலை மக்களிடையே சமயத்துறையில் உள்ள போலிச் சமயப் பண்புகளான மூடநம்பிக்கைகள், சோதிடம், மந்திரம், சகுனப்பலன், இராகுகாலம், குறி முதலியவை பார்த்தல் ஆகியவற்றினால் ஏற்படும் மூட மனப்பான்மையை அகற்ற மேடை, பத்திரிகை, பள்ளிக்கழகங்கள், தமிழ் இலக்கியக் கழகங்கள் ஆகிய எல்லாவற்றையும் பயன்படுத்துதல் வேண்டும். சங்க இலக்கியக் கால அறிவிய லாக நமக்கு எந்நூலும் எட்டவில்லையாயினும் அக்கால உயர் அறிவியல் பொது அறிவை அவ்விலக்கியம் காட்டுவதுடன், பகுத்தறிவுச் சூழ்நிலையை உலகின் வேறெவ் விலக்கியத்தையும்விட அது மிகுதியாகக் கொண்டுள்ளது என்பதை இலக்கியக் கழகங்கள் எடுத்து விளக்கலாம்.
தமிழ்நாட்டுச் செல்வர்கள் தங்கள் செல்வத்தின் பெரும்பகுதியைத் தமிழ்நாட்டுக்குப் பயன்படாத துறைகளில் செலவிடுவதைக் கண்டித்துக் கல்வி அறிவியல் முதலிய நற்றுறைகளில் அவர்கள் கவனத்தைச் செலுத்துதல் வேண்டும். அறம் என்றும் புண்ணியம் என்றும் சாக்குக் காட்டிச் சோம்பேறிகளுக் கும் ஊதாரி உண்டிக்காரர்க்கும் கொடுக்கும் பணம் அறமுமன்று, புண்ணியமு மாகாது. நாட்டுமக்களால் பழிக்கத்தக்க ஒரு தீச்செயல் என்று அவர்கள் காது செவிடுபட எடுத்துக்காட்டுதல் வேண்டும். தவிர அறிவியல் வளர்ச்சியில் பங்கு கொண்டால் அமெரிக்கா போன்று செல்வமும், இரஷ்யா போன்று நாட்டு வளமும் பெருக்கலாம் என்ற எண்ணத்தையும் அவர்களுக்கு ஊட்டுதல் வேண்டும்.
தொழிலாளர்களும் சிறு தொழில் முதலாளிகளும் தாமே அறிவியல் வளர்த்து அறிவியலாளராகும்படி அவர்களுக்கு ஊக்கமும் உதவியும் தரத் தற்காலிகமாக ஆங்கிலச் சொற்களுடனோ, முடிந்தவிடத்துத் தமிழ்ச் சொற்களுடனோ அறிவியற் கல்விதர அறிஞரும் மாணவரும் முன் வரவேண்டும். ஏனெனில் ஆங்கிலம் கற்றவர் அறிவு ஆங்கிலங் கல்லாத தமிழர்க்குக் கொடுத்த பின்தான் நாட்டின் அறிவாகும். அயல்மொழியில் படித்த அறிவு என்றும் ஏட்டுச் சுரைக்காயாகவே இருக்கும். ஒரு புத்தாராய்ச்சியாளரைக்கூட அது கொண்டு தரும் தன்மையுடையதன்று. வடநாட்டில் உள்ள ஜே.ஸி. போ°, பி.ஸி.ரே, தென்னாட்டு சி.வி. இராமன் ஆகியவர்கள் புத்தாராய்ச்சிகள் யாவும் பாலைவன மலர்களே, நாட்டு மக்கள் வாழ்வுக்கும் அறிவு வளர்ச்சிக்கும் உதவ முடியவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஆங்கிலநாட்டுப் பற்றும் கல்விகற்ற வகுப்பினர் அடிமை மனப்பான்மையுமே அவர்களிடம் அறிவு வளர்ச்சியுடன் தாய்மொழி வளர்ச்சியும் நாட்டுப் பற்றும் ஒன்றுபடாமல் செய்துள்ளது. அதுவே அறிவியற் படைப்பாற்றலையும் தடுக்கிறது.
தாய்மொழி, அறிவியல், தொழிலுலகு மூன்றும் சேர்ந்த அறிவியலே நாட்டு அறிவியல் ஆகும். வளர்க நாட்டறிவியல். வாழ்க தமிழ்.
உயர் தனிச் செம்மொழி**
ஒரு நாடு உலகை நோக்க, பிற நாடுகளைப் பார்க்கப் பெரிதாகவோ அல்லது சிறிதாகவோ இருத்தல் கூடும். ஆனால், எந்த நாடும் அந்த நாட்டு மக்களுக்கு மிகச் சிறிதாகத் தோற்றும் அளவுக்குச் சிறுமையுடையதாகாது! உலகில் மிகச் சின்னஞ் சிறிய நாட்டிலும் அந்நாட்டின் மக்கள் தம் நாட்டைப் பொன்னெனப் போற்றாதிரார். மொழியின் நிலையும் இதுவே. ஆனால், இந்தியப் பெருநிலப் பரப்பில் எங்கும் வாழ்ந்த தமிழ் மக்கள்-தம்மொழி, தம்இனம், தம் நாடு ஆகியவற்றின் பெயரைக்கூட ஏற்க நாண மடைந்து வந்திருக்கின்றனர். அதன் பயனாகத் தமிழினத்தவர் பலர் படிப்படியாகத் தம்மை வேறினத்தவர் என்று கொள்ளலாயினர். தமிழகத்திலும் உயர்வகுப்பார் என்று தம்மைக் கூறிக் கொள்பவர் பலர். தாம் தமிழர் அல்லர் ஆரியர் என்று கூறிக்கொள்ளவும், தம் பெயரைப் பிறமொழிகளில் கொண்டும் பிற நாட்டுமக்கள் ஒலிமுறை, சொற்கள், மொழிகள் ஆகியவை பேணியும், தமக்கு மேம்பாடு தேடுவாராயினர், அறிவூழியாகிய இவ்வூழியில், தம்மினம் மறுத்த பிற மொழியாளர்கூடத் தம்மொழியைப் பேணி அதிலேயே எழுதவும் பேசவும் முனையும் நாளில், தமிழர் மட்டும், அந்தோ, பிறமொழி பேசுதலும் எழுதுதலும் உயர்வென்று கொண்டு வயிற்றுக்காகத் தன்மதிப்பை விற்கும் நிலையிலிருக்கிறார்கள்!
தமிழ், தமிழகம், தமிழ்ப்பண்பு ஆகியவை பற்றி இன்று பழிப்பவர் மட்டுமேயன்றிப் புகழ்பவர்கள் கூட அதன் உள்ளார்ந்த மதிப்பையும் வளத்தையும் நன்கு உணர்வதில்லை! உலக மக்கள் நோக்கில், தமிழ் இன்னும் சிறுமைப்பட்டே காணப்படுகிறது. இதற்குக் காரணம் அவர்கள் தமிழின் இன்றைய நிலையையும், தமிழர் இன்றைய நிலையையும் கொண்டு அதனை மேற்போக்காக மதித்து விடுகின்றனர். இன்று உலகில் பெரும்பாலாகப் பேசப்படும் மொழிகள் ஆங்கிலம். சீனம், இந்தி, வங்கம் முதலியவை. தமிழ் பேசுவோர் தொகை இவற்றினும் மிகக் குறைவு. பேசப்படும் இடமும் மிகக் குறுகிய இடம். எனவே, இந்நிலையிலுள்ள பல மொழிகளுடன் வைத்தே தமிழ் எண்ணப்படுகிது. வழங்கா மொழியாகிய வடமொழி இம்முறையில் எண்ணப்படுவதில்லை! வரலாற்று முறையிலும் இலக்கியப் பண்பாட்டு முறையிலும் அதன் உயர்வு உணரப்படுவது இதற்குரிய காரணம் ஆகும். தமிழ்க்கும் இத்தகைய உயர்பண்பாடு உண்டென்பதை இன்றைய தமிழர் நிலையும்-தமிழ் நிலையும்- தமிழர் புறக்கணிப்பும்-திரையிட்டு மறைக்கின்றது. ஒரு வேளை தமிழும் வடமொழிபோல் வழங்காதிருப்பின் இவ்வுள்ளார்ந்த பண்புகள் மதிப்புப் பெறக்கூடும் என்றுகூடக் கூறலாம். ஆகவே, காய்தலுவத்த லின்றித் தம்மொழியில் கருத்தூன்றும் தமிழ் இளைஞர்க்கும் பிறநாட்டு நல்லார்க்கும் தமிழின் வளம், தனிச் சிறப்புகள் ஆகியவற்றை அறிவியல் வரலாற்று முறைகளில் பிறழாது எடுத்துக் கூறுவது பயனுடைய தாகும்.
தற்கால மொழி என்ற முறையில் பெறப்படாத உயர்வு தமிழ்க்குத் தொன்மொழி-என்ற நிலையில் பெறப்படலாம் என்று நாம் கருதக்கூடும். தொன் மொழிகளில் மக்கள் வாழ்க்கைக்கு நிலையான பயனுடையவையாய், முக்காலத் தும் அதன் வழிகாட்டிகளாய் இயங்கும் மொழிகள் உயர் தனிச் செம்மொழிகள் (ஊடயளளiஉயட டயபேரயபநள) எனப்படும். கிரேக்க மொழியும் இலத்தின் மொழியும் ஐரோப்பியரால் உயர்தனிச் செம்மொழிகள் எனப் போற்றப்படுகின்றன. இன்று வடமொழியும் அவற்றுடன் ஒப்ப உயர்தனித் செம்மொழி என்று ஏற்கப்பட்டிருக் கிறது. உலகின் பல்கலைக் கழகங்கள் பலவற்றில் கிரேக்க இலத்தின் துறைகளுடனொப்ப வடமொழிக்கும் தனித்துறை வகுக்கப்பட்டுள்ளது. இம் முதன் மொழிகளுக்கும் அடுத்தபடியாக உலகப் பெருஞ் சமயங்களின் தாயக மொழிகளாகிய ஏபிரேயம், அரபு முதலியவையும் பாரசிகமும் இடம்பெறுகின்றன. உயர்தனிச் செம்மொழிகள் நிலையிலன்றா யினும் வரலாற்றுச் சிறப்பும், இடச் சிறப்பும் உடையவையாக ஐ°லாண்டிக், காதிக், பழம்பாரசிகம் முதலிய சில்லறைத் தொன் மொழிகள் இயங்குகின்றன.
நாட்டு வரலாற்றாராய்ச்சியும் இலக்கிய வரலாற்றா ராய்ச்சியும் தொடக்க நிலையிலிருந்த காலத்தில் தமிழ் இலக்கியம் மற்ற வட இந்திய, தென் இந்திய மொழிகளிலும் பழைமையுடையது என்பது பொதுவாக ஒப்புக் கொள்ளப் பட்டது. ஆனால், அது எவ்வளவு தொலைவு பழைமையுடையது என்பது உணரப்படாமலே இருந்தது. தமிழில் பெரும்பற்றுடைய கால்டுவெல், போப் ஆகியவர்கள்கூட இன் றிருக்கும் தமிழிலக்கியத்தின் மிகப் பழைமை வாய்ந்த திருக்குறள், சங்க இலக்கியம் ஆகியவற்றின் காலம் எட்டாம் நூற்றாண்டு என்றே கருதியிருந்தனர். அவை கி.பி. முதலிரண்டு நூற்றாண்டுகளைச் சார்ந்தவையென்பதும், தொல்காப்பியம் அவற்றினும் மிகத்தொன்மை வாய்ந்ததென்பதும் இப்போது தெளிவு பட்டுள்ளது. தமிழில் இக்காலத்துக்கு முன் இலக்கியமே இல்லை என்று கொண்டால்கூட இந்தியாவில் வடமொழி உட்பட எல்லா மொழி இலக்கியங்களுக் கும் தமிழ் ஆயிர ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் முற்பட்டதாகும். இக்காலத் திலும் பழைமை யுடைய உலக இலக்கிய மொழிகள் உயர்தனிச் செம்மொழிகளுள் முதல் இரண்டு மொழிகளும் எபிரேயமும் மட்டுமேயாகும்.
ஆனால், தமிழில் தொன்மை மிக்கவை என்று நாம் கொள்ளும் நூல்களுள் எதுவும் கலைப் பண்பாட்டு வகையில் தொடக்கப்படி இலக்கியத்தைச் சார்ந்த நூலாகக் காணவில்லை. தொடக்கப்படி நாகரிகத்தைக் குறிப்பதாகவும் இல்லை. முதல் இலக்கிய நூலான திருக்குறள், அன்றும் இன்றும் தமிழகத்தில் மட்டுமன்றி உலகிலேயே ஒப்பும் உயர்வுமற்ற தனிப்பெருநூல். தொல்காப்பியமும் இன்றிருக்கும் இலக்கணங்களுள் பழைமை யுடையதாயினும் பிற்கால இலக்கண நூல்கள் அனைத்தையும் விட விரிவானது. சங்க இலக்கிய நூல்களும் முற்ற வளர்ந்த ஓர் இலக்கியத்தின் சிதறிய துணுக்குகளின் தொகைகளேயாம். மேலும் தொல்காப்பியத்துக்கு முன்னும் விரிந்த இலக்கண இலக்கியங்கள் இருந்தன என்பதை அதில் காணப்படும் அகச் சான்றுகளாலேயே உய்த்தறியலாம். மரபுரையோ இதற்கு நெடுங்கால முன்னதாகவே இருபெருஞ் சங்கங்கள் இருந்ததாகவும், இன்றிருக்கும் இயல்பகுதி மட்டுமன்றி அக்காலத்தில் இசை, நாடகம் என்ற இருவேறு பெரும் பிரிவுகளிருந்ததாகவும் குறிப்பதுடன், அத்தகைய நூல்கள் பலவற்றின் பெயர்களும் பகுதிகளும் மேற்கோளுரைகளும் தருகின்றன. இவற்றை ஒருசார்பின்றி நோக்கினால் தமிழிலக்கியம் உண்மையில் வடமொழி இலக்கியத்தினும் மற்றெவ்விலக்கியத் தினும் மிக்க தொன்மை யுடையதாய் இருந்திருத்தல் வேண்டும் என்பதைக் காணாதிரார்.
ஆகவே, தமிழில் தொன்மை ஒன்றை நோக்கினாலும் உயர் தனிச் செம்மொழிகளுள் அது இடம்பெறத் தக்கது என்பது தெளிவு. ஆனால், அதன் தனிச்சிறப்பு இதனுடன் நின்றுவிட வில்லை. இலக்கியப் பரப்பிலும் இலக்கியச் சிறப்பிலும் அதற்குத் தனி உரிமைகள் உண்டு. அத்தோடு பிற உயர்தனிச் செம் மொழிகள் அனைத்தும் இறந்துபட்ட மொழிகளாயிருக்க, தமிழ் ஒன்றுமட்டும் இன்றும் உயிருடனியங்குவதுடனன்றி, இன்னும் எத்தனையோ தடங்கல்களையும் புறக்கணிப்புகளையும் பூசல்களையும் தாண்டி வளம்பெற்று வளரத்தக்க நிலையை உடையதாகவே இருக்கிறது.
தமிழ், தமிழகம், தமிழிலக்கியம் ஆகியவை பற்றி அறிஞர் உலகில் கூடப் பல தப்பெண்ணங்களும் அறிவுக் குழப்பங்ளும் உண்டு. நாட்டு வரலாறுகள், மொழி ஆராய்ச்சி, பழம் பொருள் ஆராய்ச்சி தற்கால வாழ்வியலாராய்ச்சி (Sociology) ஆகியவற்றின் முடிபுகள் ஒருமுகப்படுத்தப்படின் இவற்றைப் பற்றிய உண்மைகள் விளக்கம் பெறக்கூடும். ஆனால், தமிழகத்திலும் இந்திய மாநிலத்தின் பிற பகுதிகளிலும் பொது மக்களிடையே ஆராய்ச்சி முடிவுகள் எளிதில் சென்றெட்டுவ தில்லை. தமிழர்களின் இன்றைய அவல நிலையும் தமிழகத்தின் அடிமைச் சூழ்நிலைச் செறிவும் இவ்வகையில் அறியாமைத் திரையோடு மேலும் இருட்டடிப்புத் திரையிட்டு வருகின்றன.
மேனாட்டினர் உள்ளத்தில் இலக்கிய வளமுடைய மொழி என்றாலும் தாய்மொழி என்றாலும் அது தற்காலப் புதுமொழி என்றே பொருள்படும். ஏனெனில், உலகில் தற்கால மொழிகள் கிட்டத்தட்ட அனைத்தும் இலக்கிய அளவில் ஒன்றிரண்டு அல்லது நான்கு நூற்றாண்டுக் கால வாழ்வே உடையவை. நேர்மாறாகப் பண்டைய மொழிகள் எனப்படுபவை ஆயிரமாண்டு முதல் மூவாயிரமாண்டுவரை முற்பட்ட மொழிகள். ஆனால், இவை யாவும் (சீனமொழி நீங்கலாக) இறந்துபட்ட மொழிகளே. ஆகவே, பண்டை இலக்கிய மொழி அல்லது உயர் தனிச் செம்மொழி (Classical Langauge) என்றால் இறந்துபட்ட மொழி யாகவே இருக்கும் என்ற தப்பு எண்ணம் ஏற்பட்டுள்ளது. இத் தப்பெண்ணத்துக்கு ஆளான மொழி தமிழ் ஒன்றே!
இரண்டு உலகுகளை இணைக்கும் பாலம்
உலக மொழிகளிடையேயும் சரி, இந்திய மாநில மொழிகளிடையேயும் சரி, தமிழ் பல வகைகளிலும் தனித் தன்மையுடையது. பண்டைய வேத மொழிக்கும் கிரேக்க உரோம நாகரிகங்களுக்கும் முற்பட்ட எகிப்திய பாபிலோனிய நாகரிகங்க ளுடன் தோழமைபூண்டு, அவற்றினும் முற்பட்டதும் மேம்பட்டதும் ஆனதென்று அறிஞரால் கொள்ளப்படும் மொகெஞ்சதாரோ நாகரிகத்துடன் இணைந்த நாகரிகப் பழைமையுடைய மொழி தமிழ். ஆகவே, இம்மொழி உண்மையில் இறந்துபட்ட ஒரு பேருலக நாகரிகத்துக்கும் சென்ற 2000 ஆண்டுக்குள் அதன் அழிபாட்டின் மீது புதுவதாக வளர்ந்த இன்றைய உலக நாகரிகத்துக்கும் இடையே அமைந்த ஒரு பாலமாகும். மனித நாகரிகத் தோற்ற வளர்ச்சிகளை ஆராய விரும்பும் உலகப் பற்றாளர்களுக்குத் தமிழகம் ஒரு வற்றா உயிர் ஒழுக்குடைய கருவூலமே என்னலாம்.
வரலாற்றுக்கு முற்பட்ட உலக மொழிகளான ஈபுரு, அரபு முதலிய செமித்திய இனமொழிகளுடன் திராவிடமொழி யினத்துக்கு உறவு உண்டு. அவ்விரு சார்பு மொழிகளையும் ஒருங்கே ஆராயும் ஆராய்ச்சி இன்னும் ஏற்படவில்லை. ஆனால், பண்டிருந்தே அந்நாடுகளுடனும் கிழக்காசிய நாடு களுடனும் தமிழகம் வாணிக, அரசியல், ஆட்சித் தொடர்புகள் கொண் டிருந்தது. இன்றும் ‘ஏழு கடல்களிலும்’ கடல்கடந்த நாடுகளிலும் தமிழர் மட்டுமே பரவி யுள்ளதும் இவ் வுள்ளார்ந்த தொடர்பின் பயனே என்று காணலாம். கடல் கடந்த இந்தியர் மிகப் பெரும்பாலோர் தமிழரே என்பதும், கடல் கடந்து பேசப்படும் இந்திய மொழி தமிழ் ஒன்றே என்பதும் ஆராய்ச்சியாலறியப்பட வேண்டாத பொது அறிவுச் செய்திகளாயினும், பொது மக்களிடையே எக்காரணத்தாலோ அறிவிக்கப்படாத செய்திகளாகவே உள்ளன.
தமிழிலக்கிய வாழ்வின் தனிச் சிறப்புகளைக் கழக வாழ்வு, முத்தமிழ்ப் பாகுபாடு, பொருள் முதன்மை (டீசபைiயேடவைல), நாட்டு வாழ்க்கைத் தொடர்பு, ஐந்திணை வாய்மை, சமய ஒப்புரவு எனத் தொகுத்துக் கூறலாம்.
கழக வாழ்வு
தமிழில் முதல் இடை கடை என முச்சங்கங்கள் இருந்தன என்பதும் முதலது கடலுட்பட்ட குமரி-பஃறுளி நாடுகளிலமைந்த தென் மதுரையிலும், இடையது அதேயிடத்தில் கவாடபுரத் திலும், மூன்றாவது வைகைக்கரை மதுரையிலும் ஆயிரக் கணக்கான ஆண்டுகள் வாழ்வுபெற்றிருந்தன என்பதும் நெடு நாளைய தமிழ்நூல் மரபு. இவற்றைப் பலர் ஒப்புக்கொள்ள முடிவதில்லை, ஒப்புக்கொள்ள முடியாமைக்கான காரணங் களாவ ன: (1) சங்கம் என்பது வட சொல் (2) சங்கங்கள் பற்றிய விவரங்கள் ஆயிரம் பதினாயிரக் கணக்கான ஆண்டு, புலவர் தொகையுடையதாய், மிகைப்பட்டதாய், வட்டத் தொகை உடைய தாய்க் காணப்படுகிறது. (3) 7ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டுச் சங்கம் பற்றிய செய்திகள் இல்லை.
சங்க வாழ்வின் மெய்ம்மையை ஒப்புக்கொள்ள விரும்பாதவர் இன்னொரு காரணமும் கூறுகின்றனர். இலக்கிய வளர்ச்சிக்குச் சங்கம் அமைப்பதென்பது மிக ‘நவீன’ கால மரபாயிற்றே, இது ‘அக்காலத்திலேயே’, ‘தமிழரிடையே’ இருந்திருக்க முடியுமா? என்கின்றனர் அவர்கள்!
கடைப்பட்ட இக் கேள்விக்கு விடை எளிது. அக்காலத்தில் மட்டுமென்ன? இக்காலத்தில்கூட ‘நவீன’ மேல் நாடுகளில் பிரான்சு தவிர எங்கும் திட்டமமைந்த இலக்கிய மொழிக் கழகங்கள் இல்லைதான்! தமிழர் குறிப்பிடும்படியான கழகம் முக்காலத்திலும் இதுவரை வேறெங்கும் உண்மையில் இருந்ததாகத் தெரிய வில்லை. இதனால் அது தமிழ்க்கே சிறப்பு எனப்படத் தக்கதேயாகும்.
மேலும் இது ‘நவீனம்’ என்பவர்களே, முன்னுக்குப்பின் முரணாக, ‘ஒருவேளை சமணர் சங்கங்களை யெண்ணி இம்மரபு தோற்றியிருக்கலாம்’ என்கின்றனர். சமணர்க்குத் தோற்றக் கூடியது தமிழர்க்குத் தோற்ற முடியாது போலும்!
சங்கம் என்ற சொல் வடசொல் என்பவர் பட்டி, மன்றம், கழகம், கூடல் முதலிய சொற்களும் வழங்குவதை மறந்தனர், சங்கக் கட்டடமே பட்டி மண்டப மெனப்பட்டது. மேலும் சங்கம் வடசொல் என்பவர் அது வடமொழிச் சொல்தானா என்று ஆராய்வார்களாக! வடமொழியோடொத்த பிற ஆரிய மொழிகள் எதனிலும் அச்சொல் இல்லை. எனவே தூய ஆரியச் சொல் அல்லாத பெரும்பான்மை வடமொழிச் சொற்களில் அது ஒன்று என்பதை அவர்கள் அறிவார்களாக! கழகம் என்பதைக் கலகம் என்று எள்ளிப் பேசியும் வடமொழிக் ‘கடிகா’ வின் சிதைவே என்று இன்பக் குழப்பம் எய்தி உழல்பவர்கட்கும் இதுவே தக்க விடையாயமையும். ஏனெனில் ‘கல’ என்பதே அதன் பகுதியாகும்.
‘சங்க’ மரபுரைகள் மிகைப்பட்டிருப்பதும், ஏழாம் நூற்றாண்டுக்குப் பின் அதாவது தேவார, பெரியபுராண, கம்ப ராமாயண காலங்களில் அடிபடுவதும் உண்மையே. ஆனால், இவ் ஆரியமாயைக் காலத்திலிருந்த தமிழிலேயே தமிழ் இலக்கியம், கலை ஆகியவற்றையும் உண்மைத் தமிழ்ப் பண்பையும் காணும் இவ்வன்பர்கள் இவ்வொன்றில் மட்டும் தங்கள் முன்னோர்களிடம் அவ நம்பிக்கை கொள்வதேனோ! இது தவிர மற்ற எதில் அவ்விடைக் காலத்தவர் மிகைப்படுத்தவோ போலி உண்மைகள் புகலவோ இல்லை? உண்மைச் செய்தி யாதெனில் இப்பொய்ம்மைக் காலத்தின் பொய்கள் பலவற்றையும் விரும்பித் தழுவும் இவர்கள் பொய் கலந்த இம்மெய்யில் தாம் விரும்பாத மெய்யும் கலந்து விட்டதே என்றுதான் வருந்துகின்றனர்! பாலில் நீர் கலந்துவிட்டதே என்று அழுபவர்போல, நீரில் பால் கலந்துவிட்டதே என்று அழுந் தொழிலாளரும் உண்டல்லவா?
தலைச்சங்கம் இடைச்சங்கம் பொய்ச் செய்திகளல்ல
ஒரு சார்பின்றி ஆய்பவர்கட்கு சங்ககால வாழ்வின் தன்மை மலை மேலிட்ட விளக்கம் ஆகும். இரண்டு தலைமுறைகளில் இயற்றப்பட்ட கடைச்சங்க இலக்கியமே பன்னூறாக, பல்நாடு, பல்வகுப்பு, பல்தொழில் ஆன பல்வகைப்பட்ட புலவர்களை உடையது. தொகை மிகுந்ததனால் தன்மை குறையவும் இல்லை. சங்கச் செய்யுள்களில் ஒரு சிறு செய்யுள் நூறு பெரிய புராணத்துக்கும் ஆயிரம் கம்பராமாயணத்துக்கும் மேம்பட்டது என்பது யாவரும் அறிந்ததே.
கடைச்சங்க இலக்கியத்தில் காணப்படும் வரலாற்றுச் செய்திகள், இலக்கியமுறை, மொழிநிலை, பண்பாடு, கலைவளம் ஆகிய அனைத்தும் பிற்காலத் தமிழிலக்கியம் எதனினும் காணப்படாத புதிய உலகம் ஆகும். இஃது ஒன்றே கடைச்சங்க மிருந்ததென்பதற்குச் சான்று ஆகும். இதனை இன்று மறுப்பவர்களும் மிகக் குறைவு. கடைச் சங்க காலத்ததாயினும் கடைச் சங்க நூல்களுள் சேராத சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றின் மூலமும் இடைச் சங்கநூல் எனப்படும் தொல்காப்பிய மூலமும் புறநானூறு, முத்தொள்ளாயிரம் முதலியவற்றின் மூலமும் நாம் அறியும் மொழி, கலைப் பண்பாடுகள் கடைச்சங்க நூல்களில் காணாப் புது உலகமே யாகும். எனவே இடைச்சங்க வாழ்விருந்ததும் மெய்ம்மையே என்னலாம். மேலும், அடியார்க்கு நல்லார், பெருங்கதை எழுதிய கொங்குவேள் ஆகியவர் காலம்வரை இடைச்சங்க நூல்களான குருகும் பெருநாரையும் வெண்டாளியும் இருந்ததாகத் தெரிகிறது. ஏனெனில், அவற்றைக் கற்றே கொங்குவேள் பெருங்கதை யாத்ததாக அடியார்க்கு நல்லார் கூறுகின்றார். பெருங்கதை மொழி வழக்கும் செய்யுள் வழக்கும் கடைச்சங்கத்தின் வழக்கின் வேறாயிருப்பதை டாக்டர் உ.வே. சாமிநாதையர் எடுத்துக்காட்டி இக்கருத்தை வலியுறுத்துகிறார். உயர் திரு. வையாபுரிப் பிள்ளை அவர்கள் வெளியிட்டுள்ள புறத்திரட்டிலும் உரைகளின் மேற்கோள் களிலும் வரும் இறந்துபட்ட நூல்களின் பெயர்களும் செய்யுள்களும் தலை இடைச்சங்க நூல்கள் முடிவுக்கும், பிற நூல்கள் முடிவுக்கும் சான்று பகரும்.
சங்ககாலம் பற்றிக் குறிப்பிடும் அதே நூன்மரபு தொல்காப்பியத்துக்கு முன் அவிநயம், அகத்தியம் முதலிய இலக்கண நூல்கள் இருந்ததாகவும் அகத்தியம் தொல்காப்பியம் போல் இயல் தமிழ்க்கு மட்டு மிலக்கணமன்று, இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்க்கும் இலக்கணம் என்றும் கூறுகின்றன. அறிஞர் பலர் அகத்தியர், அகத்தியம் கட்டுக்கதை என்கின்றனர். இஃது எப்படி யாயினும் ஆகுக. தொல்காப்பியத் துக்கு முன் இலக்கிய இலக்கணம் தொல்காப்பியத்தினும் விரிவாக இருந்ததென்பதைத் தொல்காப்பிய மூலமும் உரைகள், மேற்கோள்கள் மூலமும் காண்டலாகும். அத்தோடு அகத்தியம் போன்ற முத்தமிழ் இலக்கணம் கிடைக்காவிடினும் சிலப்பதிகாரம் போன்ற முத்தமிழ் இலக்கியம் இருந்ததென்பது வெள்ளிடை மலை. அம்முத்தமிழ் கடைச்சங்கக் காலத்திலேயே பாராட்டுதல் இல்லாமையால் பெரிதும் மங்கிவிட்டது. சோழப் பேரரசர் ஆட்சிக்குள் அழிந்து தடமற்றுப் போயிற்று. கடைச்சங்க இலக்கிய காலம்கூடப் பண்டைத் தமிழிலக்கிய வாழ்வின் நிறைவுக் காலமன்று, நலிவு தொடங்கிவிட்ட கரும்பொற் காலமே என்றும், அதற்குமுன் வெண்பொற்காலமும் செம்பொற் காலமும் இருந்திருத்தல் வேண்டும் என்றும் அறியலாம்.
முத்தமிழ் வாழ்வு
பண்டைத் தமிழர் போற்றிப் பெருமை கொண்ட முத்தமிழில் ஒரு தமிழான இயலை மட்டுமே இன்று நாம் போற்றிப் பெருமை கொள்கிறோம். இதுவும் சங்ககாலத்துக்கு முன்னிருந்தே தேய்ந்து வந்துள்ளதேயன்றி வளர்ந்து வரவில்லை. பின்னாளைய இலக்கணப் புலவர்கள் தமிழிலக்கணத்தை ஐந்திலக் கணமாக வகுத்தனர். அவ்வைந்து: எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பது. தொல்காப்பியத்தில் பிரிவுகள் மூன்றாயினும் இவ்வைந்து பகுதிகளும் உள்ளன, ஆனால், வடமொழியில் அகத்தியத் தோடிணையாகச் சைவப் புலவர் களால் குறிக்கப்படும் பாணினியத்தில் எழுத்தும் சொல்லுமே உண்டு. வடமொழி யாளர் தமிழகத் தொடர்பு கொண்ட பின்னரே, யாப்பியலும் அணியியலும் விரிக்கப் பட்டன வாதலால் அவை பாணினி மரபில்வந்த இலக்கணத்துக்குப் புறம்பாக யாக்கப்பட்டன. தமிழகத் தொடர்பு ஏற்படுமுன் வேத மொழியில் சில சமயநூல்கள் இருந்தனவேயன்றி வடமொழி என்ற இலக்கிய மொழியும் இலக்கியமும் தோன்றவில்லை யாதலால் பாணினிக்குப் பேச்சு மொழியின் இலக்கணமாகிய எழுத்தும் சொல்லும் மட்டுமே தேவைப்பட்டது. எழுது, எழுத்து என்ற சொல்லே பாணினிக்கு முன் கையாளப்படவில்லை என்பது அறிஞர் கூற்று.
உயர்கலைப் பண்பு
சங்க இலக்கியத்தின் இன்னொரு மாண்பு உயர்கலைப் பண்பாடு. கிரேக்க இலக்கியத்தின் வடிவமைப்பும் செறிவும் தூய்மையும் இதில் களிநடம்புரிகின்றன. இன்று இது உலகில் அறியப்படாதது சங்ககாலத் தமிழின் குற்றமன்று; இன்றைய ‘அறிவுலகின்’ குற்றம். கிரேக்க இலக்கியம் இருட்கால மேனாட்டில் பட்டபாடுதான் இன்று தமிழ்ச் செம்மைக்கால இலக்கியம் இக்காலத்தில்படுகிறது.
கலைக்கோப்பும் கட்டுப்பாடும் உடைய கவிதை பாலை நீர் ஊற்று போல் எளிதாகவோ பாறை நீரூற்றுப்போல் அரும்பெறலாகவோ இருக்கலாம். சங்க காலத்தில் பழம் பாடல்கள் பல முந்திய வகை. பிற பிந்திய வகை. ஆனால், இரண்டிலும் உயர்கலைப் பண்பு உண்டு. இடைக்காலத் தமிழ் நூல்கள் கற்பவர் அறிவு நிலைக்கோ, இடைக்கால மொழியாகிய வடமொழி கற்பவர் அறிவு நிலைக்கோ இது எட்டாதது. தற்கால வட ஐரோப்பியக் கலைஞர்கள் நெறி களையும் கிரேக்க இலக்கிய நெறிகளையும் கற்றுத் தீட்டப்பட்ட கலைப் பண்பாட் டுடன் செல்பவர்க்கு அவை யெல்லாம் கோபுரவாயில்களாகவும், தமிழ் இலக்கியம் கோவிலாகவும் காணப்படும். இவ்வுயரிய கட்டுக்கோப்பின் ஆராய்ச்சியே ஐந்திணை நெறியாக இலக்கணங்களில் வகுக்கப்பட்டது. இது முழு அளவில் தமிழ்க்கே சிறப்பானது. கிரேக்க மொழியின் பண்பில் இதன் ஒரு கூற்றைக் காணலாம். பாட்டின் உவமையும் சொல்லும் வாழ்க்கையுடனும் இயற்கை யுடனும் இயைந்ததாயிருத்தல் வேண்டும் என்பதே திணைநெறியின் அடிப்படையாகும்.
சமய ஒப்புரவு
இன்றைய உலகுக்கு, சிறப்பாக இந்திய வாழ்வுக்குத் தமிழிலக்கியம் மற்றொரு படிப்பினை தருகின்றது. இந்தியாவின் சமய வாழ்வைப் படம் பிடித்து எல்லாச் சமயங்களையும் எல்லாச் சமய இயக்கங்களையும் உட்கொண்ட இலக்கியம் தமிழிலக்கியம் ஒன்றே. இவ்வகையில் இதனோடு ஒருபுடைச் சார்பேனும் உடையது கன்னடம் ஒன்றே. தவிர சமயங்களனைத்துக்கும் இன்றும் பொது மறையாயிருக்கும் திருக்குறளும் சமயச் சார்பற்ற பெரும் பான்மை இலக்கியமும் உடையது தமிழ் மொழி ஒன்றே. சமயத் துறையிலும் சங்ககாலச் சமயம், பிற்காலச் சமயம் போல் அருள் நெறியின் பெயரால் மருள் நெறியாகிய வகுப்பு வேற்றுமைக்கும், புரோகித ஆட்சிக்கும் சப்பைக்கட்டு கட்டாமல் உண்மையிலேயே தன்னலமகற்றிய நடுநிலையருள் நெறி பேணியதென்று காணலாம்.
சுருங்கக் கூறின் தமிழிலக்கியம் தமிழ் நாட்டவர்க்கும் தமிழுலகுக்கும் மட்டுமே யன்றி, பெருந் தமிழகமாகிய திராவிடமொழிக்குழு நாட்டுக்கும் அதன் பண்டைப் பழம்பதியாகிய இந்திய மாநிலத்துக்கும் பொது உரிமையுடைய ஓர் ஒப்பற்ற கருவூலம் ஆகும். கீழ் நாடுகளுக்கே தமிழிலக்கியம் ஓர் எச்சரிக்கை தரப்போதியது. போலித் துறவறம், கிராம வாழ்க்கையில் நிறைவு பெறல், மூடப்பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை ஆன்மிகம் என்றும் கீழைநாட்டுப் பண்பாடென்றும் தழுவி ஏமாந்து மேனாட்டின் சுரண்டலை விரும்பி ஏற்கும் இவ்வடிமை ‘அரை உலகு’ (ழநஅளையீhநசந)க்குத் தமிழக இலக்கியம் ஒரு பெருமித மறுப்பு ஆகும். ஏனெனில் கீழ் நாட்டின் பொற்காலத்தில் திட்டமிட்ட நகரங்கள், துறைமுகப் பட்டினங்கள் உயர்தர வாழ்க்கை வசதிகள் ஆகியவை பெருகியே இருந்தன.
உலகின் சீனமொழி யொன்றுக்கு அடுத்தபடியாக உலகில் மிக நீண்ட நாள் வாழ்நாள் உடைய இலக்கிய மொழி தமிழே யாகும். கடை இடை தலைச் சங்கநூல்கள் அழியாதிருந்தால், அல்லது இனி அகப்பட்டால் சீனத்தினும் அது நீண்ட வாழ்வுடையதாயிருக்கக்கூடும்.
கருத்துகள்
கருத்துரையிடுக