ஆதி உயிர்கள்
வரலாறு
Back
ஆதி உயிர்கள்
ந.சி. கந்தையா
1. ஆதி உயிர்கள்
2. தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
3. அகம் நுதலுதல்
4. நூலறிமுகவுரை
5. கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
6. பதிப்புரை
ஆதி உயிர்கள்
ந.சி. கந்தையா
நூற்குறிப்பு
நூற்பெயர் : ஆதி உயிர்கள்
ஆசிரியர் : ந.சி. கந்தையா
பதிப்பாளர் : இ. இனியன்
முதல் பதிப்பு : 2003
தாள் : 16.0 கி. மேப்லித்தோ
அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 11 புள்ளி
பக்கம் : 20 + 164 = 184
படிகள் : 2000
விலை : உரு. 80
நூலாக்கம் : பாவாணர் கணினி
2, சிங்காரவேலர் தெரு,
தியாகராயர் நகர், சென்னை - 17.
அட்டை வடிவமைப்பு : பிரேம்
அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட்
20 அஜீஸ் முல்க் 5வது தெரு
ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006
கட்டமைப்பு : இயல்பு
வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம்
328/10 திவான்சாகிப் தோட்டம்,
டி.டி.கே. சாலை,
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே.
‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’
என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர்.
ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:-
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார்.
ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார்.
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின.
ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம்.
அகராதிப் பணி
தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை.
ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார்.
இலக்கியப் பணி
புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள்.
பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர்.
தமிழ்மொழி - தமிழினம்
தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை.
திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும்
தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:-
திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார்.
பிற
மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார்.
“ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.”
வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்!
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன்.
அன்பன்
கோ. தேவராசன்
அகம் நுதலுதல்
உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம்.
உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது.
தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது.
தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம்.
எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள்.
இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது.
எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை.
வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது.
அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன.
உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும்.
இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது. மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது.
சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி.
அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம்.
உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது.
நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம்.
அன்பன்
புலவர் த. ஆறுமுகன்
நூலறிமுகவுரை
திரு. ந.சி. கந்தையா பிள்ளை 1930-40களில் தமிழ், தமிழிலக்கியம், தமிழ்மொழி, தமிழர் வரலாறு, திராவிட வரலாறு, தமிழ்நாட்டுக் குடிகள் போன்ற பல விடயங்கள் பற்றி அக்காலத்துச் சாதாரண தமிழ் வாசகர் நிலையில் பெரிதும் வாசிக்கப்பட்ட நூல்களை எழுதினார். பண்டைய இலக்கியங்களான அகநானூறு, கலித்தொகை, பரிபாடல் போன்ற வற்றினை உரைநடையில் எழுதி மக்களிடையே சங்க இலக்கியம் பற்றிய உணர்வினை ஏற்படுத்தினார். திருக்குறளுக்கான ஒரு சொல்லடைவைத் திருக்குறள் அகராதி என்னும் பெயரில் வெளியிட்டவர். இவை யாவற்றுக்கும் மேலாக உலக வரலாற்று நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காலவரிசைப்படுத்தித் தந்தார். செந்தமிழ் அகராதி என்றவோர் அகர முதலியையும் தொகுத்தார்.
இன்று பின்னோக்கிப் பார்க்கும் பொழுது 1940-50களில் இளைஞர் களாக இருந்த பல தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றிய தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கான வாசிப்பு விடயங்களை அளித்தவர். இவருடைய பெரும்பாலான படைப்புக்கள் அக்காலத்திற் பிரசுரிக்கப் பட்ட ஒற்றுமை என்னும் இதழின் அலுவலகத்தாலேயே வெளியிடப் பெற்றன. இவர் வெளியிட்டனவற்றுள் பல ஒற்றுமை இதழில் வெளிவந் திருத்தல் வேண்டும். ஆனால், அதனை இப்பொழுது நிச்சயமாக என்னாற் சொல்ல முடியவில்லை. ஒற்றுமை அலுவலகம் இவற்றைப் பிரசுரித்தது என்பதை அறிவேன். ஏனெனில் இலங்கையில் தமிழாசிரியராக இருந்த எனது தகப்பனாரிடத்து இந்நூல்களிற் பெரும்பாலானவை இருந்தன.
திரு ந.சி. கந்தையா பிள்ளையின் பெயர் தமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படுமளவுக்கு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியுள்ளது. அங்கு அவர் அத்துணைப் போற்றப்படாதிருப்பதற்குக் காரணம் ஏறத்தாழ அவர்களது எல்லா நூல்களுமே தமிழகத்திலேயே வெளியிடப் பெற்றன.
இந் நூல்களின் பிரசுரப் பின்புலம் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அவற்றின் பொருளியல் அம்சங்கள் பற்றிய தரவுகளும் இப்பொழுது தெரியாதுள்ளன.
ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிற்கூட இவரது பெயர் முக்கியப் படுத்தப் பெறாது போயுள்ளது. மிகுந்த சிரமத்தின் பின்னர் அவரைப் பற்றிக் கிடைத்துள்ள தகவல்கள் பின்வருமாறு:
சுவாமி ஞானப் பிரகாசர், ந.சி. கந்தையா பிள்ளை போன்ற அறிஞர்களின் தமிழ்ப் பங்களிப்புக்கள் தமிழகத்தில் போற்றப்படுகின்றமை ஈழத்தவர்க்குப் பெருமை தருகின்றது. இவர் எழுதிய நூல்களின் பெயரை நோக்கும்பொழுது தமிழ் வாசகர்களுக்கு உலக நிலைப்பட்ட, தமிழ்நிலைப் பட்ட தரவுகளைத் தொகுத்துத் தருவதே இவரது பெருஞ்சிரத்தையாக இருந்தது என்பது புலனாகின்றது. இப்பதிப்பகத்தின் பணியினை ஊக்குவிக்க வேண்டியது தமிழ்சார்ந்த நிறுவனங்களினதும் தமிழ்ப் பெரியோர்களினதும் கடமையாகும். உண்மையில் இதனை ஒரு அறிவுப்பசிப் பிணித் தீர்வாகவே நான் காண்கிறேன்.
2/7, றாம்ஸ்கேட், அன்புடன்
58, 37ஆவது ஒழுங்கை,
கார்த்திகேசு சிவத்தம்பி
வெள்ளவத்தை, தகைசார் ஓய்வுநிலை பேராசிரியர்
கொழும்பு - 6 யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.
கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மூலவர்களில் யாழ்ப்பாணம் தந்த பேரறிஞர் ந.சி. கந்தையாவும் ஒருவர். உண்மையான அறிஞர்களைக் காலங்கடந்து அடையாளம் காண்பதும் அவர்தம் படைப்புக்களைத் தேடிப் பிடித்துப் புரப்பதும் தமிழினத்தின் பழக்கங்களில் ஒன்று.
தமிழின், தமிழரின் தொல்பழங்கால வரலாறு தொடர்பாகத் தமிழில் நூல்கள் மிகக் குறைவு. ஓர் ஆயிரம் நூல்களாவது தமிழின் தமிழரின் தொல்பழங்கால வரலாறுபற்றி வெளிவரவேண்டும். விரிவாக எழுதப்பட வேண்டிய தமிழ், தமிழர் வரலாற்று வரைவு முயற்சிக்கு வழிகாட்டும் கருவி நூல்களை வரைந்திருப்பவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.
உலகம் முழுவதும் உற்றுக் கவனிக்க வேண்டிய வரலாற்றிற்கு உரியவர்கள் தமிழர்கள். அவர்களே உலக மொழிகளை ஈன்ற மூலமொழிக்குச் சொந்தக்காரர்கள். அவர்களே உலக நாகரிகங்களின் பிறப்பிற்குக் காரணமான உலக முதல் நாகரிகத்தைப் படைத்தவர்கள். இந்த உண்மைகளைத் தமிழர்களும் அறியவில்லை உலகமும் அறியவில்லை.
தமிழர் சரித்திரம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந் தமிழர், தமிழர் யார், உலக நாகரிகத்தில் தமிழர்பங்கு, சிந்துவெளித் தமிழர், தமிழ் இந்தியா, தமிழகம், மறைந்த நாகரிகங்கள் ஆகியன ந.சி. கந்தையாவின் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும்.
உலக முதல் நாகரிகம் என இன்று உலகம் நம்பிக்கொண்டிருக்கக் கூடிய நீல ஆற்றங்கரை நாகரிகம் (Nile Civilisation) தமிழ் நாகரிகத்தின் அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் வழிப்பட்ட நாகரிகமே என்பதை ஏராளமான சான்றுகளால் விளக்குபவை மேலைய நூல்கள்.
மொழிநிலையில் தமிழின் உலக முதன்மையைப் பாவாணர் நிலைநாட்டினார் என்றால் இன நிலையில் தமிழின உலக முதன்மையை ந.சி. கந்தையா நிலைநாட்டினார் என்று உரைக்கலாம்.
நீல ஆற்றங்கரை நாகரிக முடிவின்பின் நண்ணிலக் கடற் பகுதியில் உருவான பிறிதொரு வழிநாகரிகமே கிரேக்க நாகரிகம். கிரேக்க நாகரிகத் தின் உடைவில் தெறிப்பில் பிறகு மலர்ந்தவையே இன்றைய மேலை நாகரிகம். உலகின் எல்லா நாகரிகங்களையும் தாங்கிநிற்கும் தாய் நாகரிகமே தமிழ் நாகரிகம்.
தமிழ் நாகரிகத் தொன்மையைச் சங்க நூல்களுக்கு அப்பால் சிந்துவெளி அகழ்வாய்வும் உலக வரலாற்றாசிரியர்கள் உலக முதல் நாகரிகம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் நமக்கு மேலும் விளக்கும் பகுதிகளாகத் திகழ்கின்றன. இங்கெல்லாம் சென்று நுண்மாண் நுழைபுல முயற்சியால் தமிழின வரலாறு எழுதியவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.
ந.சி. கந்தையா பெருமகனார் நூல்களைத் தமிழரின் தொல்பழங்கால வரலாற்றைக் கற்கும் முயற்சியில் நான் ஈடுபடத்தொடங்கியபோது தேடிக் கற்றேன். பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் சென்ற ஆண்டு இயற்கையெய்திய வரலாற்றுப் பேரறிஞர் கோ. நிலவழகனார் ந.சி. கந்தையா அவர்களைச் சென்னையில் அவர் வாழ்ந்த நாளில் சந்தித்தது பற்றியும் அவரின் பன்னூற்புலமை பற்றியும் எம்மிடம் மகிழ்ந்து கூறுவார். ந.சி. கந்தையா அவர்களின் நூல்கள் பலவற்றையும் அவர் வைத்திருந்தார். அருகிய பழைய நூல்களைப் பேணுவாரிடத்திலும் நூலகங்கள் சிலவற்றிலும் மட்டுமே ஒடுங்கிக்கிடந்த ந.சி. கந்தையா நூல்களை மீண்டும் அச்சில் வெளியிடுவார் இலரே என்று கவலையுற்றேன். அமிழ்தம் பதிப்பகம் இவரின் நூல்களை வெளியிடுகின்றது. உண்மைத் தமிழ் நெஞ்சங்கள் இந் நூல்களை உச்சிமோந்து வாரியணைத்துப் புகழ்ந்து கற்றுப் பயனடைவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.
பேரா. கு. அரசேந்திரன்
பதிப்புரை
வளம் சேர்க்கும் பணி
“குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம்.
இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன.
ந.சி. கந்தையா
இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது.
தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர்.
தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது.
தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர்.
நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள்
1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன.
வாழும் மொழி தமிழ்
தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம்.
ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா?
தமிழர்களின் கடன்
இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன்.
மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள்.
எழுச்சிக்கு வித்திட…
உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது.
இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிப்பகத்தார்
ஆதி உயிர்கள்
முன்னுரை
இவ்வுலகில் உயிர்கள் எல்லாம் இன்று காணப்படுவன போல் திடீர் எனத் தோன்றவில்லை. அவை கோடிக்கணக் கான ஆண்டுகளின் முன் தோன்றி வாழ்ந்த கண்ணுக்குப் புலப்படாத அணுப் போன்ற சிற்றுயிர்களிலிருந்து படிப் படியே வளர்ச்சியடைந்துள்ளன என மேல்நாட்டு அறிஞர் ஆராய்ந்து சான்றுகள் காட்டி விளக்கியுள்ளார்கள். உயிர்கள் கீழ்நிலையிலிருந்து அறிவு வளர்ச்சித் தரங்களுக்கேற்பப் படிப்படி மேலான பிறவிகளை அடைகின்றன என்பதே தமிழ் மக்கள் மிகப் பழங்காலம் முதல் கொண்டிருந்த கொள்கையாகும். தமிழர் கொண்டது உயிர்களின் தகுதிக் கேற்பக் கடவுள் அவைக்கு ஏற்ற உடலை அளிக்கின்றார் என்பது. அவை வாழ முயலும் வகைகளால் அவைக்கு உருவ மாற்றம் உண்டாகின்ற தென்பது மேல் நாட்டறிஞர் கருத்து. இவ் விரண்டு கொள்கைகளில் எது ஏற்றது என்பதை இந் நூலைப் படிப்பவர்களே முடிவு செய்து கொள்ள வேண்டியது. உயிர்களின் கிரம வளர்ச்சி(Evolution)யைப் பற்றிய வரலாறு கற்பதற்கு மிக இன்பம் பயப்பதாயும், அறிவு வளர்ச்சிக்கு உகந்ததாயும் உள்ளது. இக் கருத்துகள் ஆங்கில நூல்களிற் கூறப்பட்டவற்றைத் தழுவி எழுதப்பட்டவை.
சென்னை
10.1.1949
ந.சி. கந்தையா
ஆதி உயிர்கள்
தோற்றுவாய்
இவ்வுலகு ஞாயிற்றினின்றும் தெறித்து விழுந்த ஒரு துண்டு. இதன் வெப்பம் ஆறுதற்கு எண்ணில்லாத ஆண்டுகள் கழிந்தன. இப் பூமி குளிர்ந்து கடலும் நிலமுமாக மாறியபோதே பூமியில் உயிர்கள் தோன்றி வாழலாயின. ஆதியில் இன்று நாம் காண்பவை போன்ற உயிர்கள் தோன்றி வாழவில்லை. கண்ணுக்குத் தெரியாத மிகமிக நுண்ணிய உயிர்களி லிருந்தே இன்று நீரிலும் நிலத்திலும் வாழும் எல்லா உயிர்களும் வளர்ச்சி யடைந்துள்ளன. இக் கூற்றுக் கேட்பதற்கு மிக வியப்பைத் தரலாம். தொல் லுயிர்களைப் பற்றி ஆராய்ச்சி நடத்திய பேரறிஞர் ஆதியில் இவ் வுலகில் தோன்றி வாழ்ந்த சிற்றுயிர்கள் எவ்வாறு படிப்படி வளர்ச்சி அடைந்துள்ளன வென்பதை நன்கு ஆராய்ந்து காட்டியுள்ளார்கள். இவ் வுலகில் காணும் ஒவ்வோர் உயிரும் கீழ் உயிரிலிருந்து தோன்றிற்று என்று கூறுதற்கு ஏற்ற பல ஆதாரங்கள் உள்ளன. பல்வேறு காலத்தில் தோன்றிய பூமியின் பாறை அடுக்குகளில் ஒன்றின் தொடரில் மற்றொன்று தோன்றியது என்று கூறுதற் கேற்பத் தொல்லுயிர்களின் கற்படி உருவங்கள் (Fossils) காணப்படுகின்றன. உலகில் எவ்வாறு உயிர்கள் தோன்றி வளர்ச்சியுற்றன என்பதைப்பற்றி இந் நூலிற் சிறிது படிப்போம்.
ஆதி உயிர்கள்
ஆதியில் உயிர்கள் நிலத்தில் தோன்றவில்லை; கடலிலே தோன்றின. இவை கண்ணுக்குத் தெரியாத அணுத்தன்மை யுடையவை; தாவர இனத்தைச் சேர்ந்தவை. இவைக்கு ஒரு கண்ணறை உடலுண்டு. கண்ணறை என்பது நடுவே ஒரு கருவும் கருவைச் சூழ்ந்து வழுவழுப்பான பொருளும், வழுவழுப்பான பகுதியைச் சுற்றிச் சவ்வு போன்ற அல்லது ஆடை போன்ற போர்வையு முள்ளது. இச் சிற்றுயிர்கள், காற்றிலும் நீரிலுமுள்ள மிருதுவான பொருள்களி லிருந்து தமது ஒரு கண்ணறை உடலை மூடியிருந்த தோலினால் உணவை உறிஞ்சிக் கொண்டன. வெளித்தோலே அவற்றின் வாயாக விருந்தது; பின்பு உணவை உள்ளே யிழுப்பதற்கு அவை ஒரு குழாயை வளர்த்துக் கொண்டன. உறிஞ்சி உணவை ஓரிடத்திற் சேர்த்து வைத்துச் சீரணிப்பதற்காக அவை ஒரு பிரிக்கும் உறுப்பையும் உண்டாக்கிக் கொண்டன. அல்கே (algae) என்னும் இத் தாவர உயிர்கள் தண்ணீரில் வளர்ந்து பெருகின. அவை நீந்திக் கொண்டு வாழும்போது புதிய கண்ணறைகள் வளர்ந்தன. சில அவைகளின் சொந்தத் தேவைக்குப் பயன்பட்டன; சில தம்மைப் போன்ற உயிர்களைத் தோற்றுவிப்பதற்குப் பயன்பட்டன. அவையிடத்துப் புதிய கண்ணறைகள் வளர்ந்து பிரிந்து புதிய தாவர உயிர்களாகப் பெருகின. இவ்வாறு தோன்றிய புதிய தாவர உயிர்களும் அவ்வாறே சந்ததியைப் பெருக்கின. இவ்வாறு கடல்நீரில் தோன்றிய தாவர உயிர்கள் பெருகின. உணவின் பொருட்டுப் போராட நேர்ந்தமையின் அவை பலவகைத் தாவ ரங்களாக வளர்ச்சியடைந் தன. இச் சிறிய தாவர உயிர்களே கடற் சாதாழை முதல் பெரிய நிழல் மரங் களுக்கெல்லாம் தாய் களும் தந்தைகளும் ஆகும். ஒரு சிறிய தாவர உயிருக்கு 1,000,000 பிள்ளைகள் வரையில் இருந்தன. ஒவ்வொரு தாவர உயிரும் கிட்ட உள்ள மற்றத் தாவர உயிரிலும் பார்க்க முன்னேற முயன்றது. காற்றிலுள்ள கரி வாயுவை அல்லது சூரிய ஒளியிலிருந்து கரிவாயுவைப் பெறும் பொருட்டு உடலின் அல்லது கண்ணறையின் வடிவை மாற்றிக்கொள்ள மாட்டாத உயிர்கள் சந்ததிகள் பலவற்றைத் தோற்றுவிக்கும்படி நீண்டநாள் வாழ வில்லை.
ஒன்றின் பக்கத்தே ஒன்றாக நின்று வளரும் இரண்டு தாவரங்கள் வளர்ந்து ஒன்றை ஒன்று மறைத்துச் சூரிய ஒளியைப் பெறமுயன்றன. இதனாலேயே இலைகள் வளர்ச்சியடைந்தன. இலைகள் தாவரங்களின் வாய்கள். சூரியஒளி படாவிடில் இலையின் மேற்கண்ணறைகள் காற்றிலிருந்து உறிஞ்சிய வாயுவை, கீழே உள்ள பச்சை நிறக் கண்ணறைகள் இழுத்துப் பயன்படுத்த முடியாது.
தாவரங்கள் வாழ்க்கையின் பொருட்டுப் போராடிக் கொண்டிருந்தன. அதிக உணவைப் பெறக்கூடிய நிலத்தையும், சூரிய ஒளியையும் அடையக் கூடிய கெட்டித்தனமுள்ள வலிய தாவரங்களே பிழைத்தன. வலியற்ற வைக்குக் கருணை காட்டப்படவில்லை. வலிய தாவரம் அயலே நின்ற வலி குறைந்த தாவரத்தின் உணவைத் தனது வேர் வழியாகக் கவர்ந்தது. வலிவுடையது நிலைபெறுதல் என்னும் இயற்கைவிதி மிகக் கொடியதாகத் தோன்றிற்று.
அல்கே என்னும் தாவர உயிரிலிருந்து கடற்சாதாழை, கடற்பாசி, ஓலை போன்ற இலையுடைய தாவரங்கள் (Ferns) முதலியவை தோன்றின. இவை விதையில்லாத தாவரங்கள். எரிமலைக் குழப்பங்களால் பலமுறை கடல் நிலமாகவும் நிலம் கடலாகவும் மாறின. அப்பொழுது கடலாழத்தில் சென்று பல்லாயிர ஆண்டுகளாகக் கல், மண் முதலியவைகளாற் புதை யுண்டு கிடந்த அக்காலக் காடுகளின் தாவரங்களே இன்று நிலக்கரியாக நமக்குக் கிடைக்கின்றன.
அசையும் உயிர்கள் (ANIMALS)
நீரில் நீந்திக்கொண்டிருந்த ‘அல்கே’ நீரில் மிதந்த உயிரில்லாப் பொருள்களிலிருந்து உணவை இழுத்தது. ஒரு நாள் அவ்வகையான ஓர் உயிர் உயிருள்ள ஒன்றிலிருந்து தனது உணவை இழுத்தது. இவ்வகை உயிர் அமீபா (amoeba) எனப்படும். இச் சிற்றுயிரிலிருந்து தாவரமல்லாத உயிர்கள் பெருகின. இவைகளும் தாவர உயிர்களாகிய அல் கேயைப் போலவே வளர்ந்து இரண்டாகப் பிரிந்து சந்ததியைப் பெருக்கின. இவற்றின் உடல் சளி போன்று வழுவழுப்புடையதா யிருந்தது. காலங் கடந்தது. இவை மாற்றமடையத் தொடங்கின. சில கடற்பஞ்சாக மாறின. கடற் பஞ்சு அன்று முதல் இன்றுவரை கடற் பஞ்சா கவே இருக்கின்றது. அது வேறு மாற்றம் அடைய வில்லை. சில சொறி மீன்களாக வளர்ந்தன; அவை பின் பல குடும்பங்களாகப் பிரிந்தன. சில பவளப் பூச்சிக ளாக மாறின. இவை நிலத்தில் ஊர்ந்து திரிவதற்குப் பதில் அளவில்லாத தலைமுறைகளாகச் சுண்ணாம்புப் படைகளைக் கட்டி எழுப்பிக் கொண்டு இறந்துபோன தம் முன்னதுகளின் உடல்களில் வாழ்கின்றன. அவ் வுடல்கள் நாளடைவில் சுண்ணாம்புப் பாறைகளாக மாறுகின்றன. இவ்வா றமைந்த சுண்ணாம்புப் பாறைகள் ஒரு நாள் கடல் அலைகளுக்கு மேலே தோன்றுகின்றன. பறவைகள் பறந்து செல்லும் போது விதைகளை அங்கே போடுகின்றன; கடல் நீரோட்டம் தேங்காய்களைக் கொண்டுவந்து மணலில் புதையும்படி விடுகின்றது. சில காலத்தே அங்கு ஒரு பசுந்தரை காணப்படு கின்றது. பவளப்பூச்சிகளுக்கு முதுகெலும் பில்லை. ஆகவே அவை அன்றுமுதல் இன்று வரையும் நீரில் வாழும் பூச்சிகளாகவே இருக்கின்றன.
நத்தை, சிப்பி முதலிய ஓடுள்ள கடல் உயிர்கள் இரையைத் தேடி மணலில் ஊர்ந்து திரிவதைக் காண்கிறோம். எல்லா உயிர்களின் ஓடுகளும் சுண்ணாம்பினால் கட்டப்பட்டவை. முதுகெலும்பில்லாத இவ்வுயிர்கள் ஊர்ந்தும் மிதந்தும் செல்கின்றன. இவை களின் வளர்ச்சி இவ்வளவோடு நின்று விடுகின்றது. இப் பொழுது முதுகெலும்பில்லாத எல்லா உயிர்களின் உடலும் மென்மையுடையது.
கடல் முட்பந்துகள்(sea-urchins) என்பவை உயி ருள்ள முட்பந்துகளே. இவ்வுயிர் தோலில் முள் வளர்ந்த சிறுபை போன்றது. கடல் முட்பந்துகள், நட்சத்திர மீன், கல் அல்லி (stone lilies) என்பவை பவளப்பூச்சிக்கு மேற்பட்டவை. இவைக்கு ஒருவகையான வயிறு உண்டு. இவற்றின் விருப்பமான உணவு ‘அல்கே’. இவைக்கு அடுத்தபடியில் ‘வுட் லைஸ்’ (Wood-Lice) என்னும் நண்டுபோன்ற ஓர் உயிர் தோன்றிற்று. இது நிலஉயிர் நீர்உயிர் என்னும் இரண்டுக்கும் இடைப்பட்டது. அதற்கு அடுத்தபடியில் நண்டு தோன்றிற்று. இது கடலி னின்றும் வெளியேறி நிலத்தில் வாழப் பழக்கமடைந்தது. இதன் உறுப்புகள் பொருத்துகளுடையவை. பொருத்து களில் உறுப்புகளை வளரச் செய்கின்ற எல்லா உயிர்களும் பூச்சி வகையில் அடங்கும். இவ்வகையில் பல உயிர்கள் தோன்றின. இவைகளுக்கு முதுகெலும்பில்லை. இந்திய பசிபிக் கடற்கரைகளில் வாழும் திருடன் நண்டு (Robber-crab) உணவைத் தேடி பனை மரங்களில் ஏறுகின்றது.
இப் பூச்சி இனங்களிலிருந்து வேறு இனங்கள் தோன்றவில்லை. கடற் பூச்சிகளிலிருந்து தரைப் பூச்சிகள் உண்டாயின. அவைகளின் உடல் அமைப்பும் அதே வகையாக விருந்தது. அவற்றுக்கு முதுகெலும்பில்லை; பொருத்துகள் இருந்தன; அவைக்கு ஒருவகை இருதய மும், மூளைபோல் ஒரு பகுதியும் உண்டு.
சொறிமீன்கள்(Jelly fish) போன்ற சில பூச்சிகள் தமது அறைகளை நீண்ட நூல் போல் வளர்த்தன. இவைகளிலிருந்து முதுகெலும்பு உடையது போன்ற தோற்றமுடைய புழுக்கள் தோன்றின. இவ்வாறு தோன்றிய உயிர்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஒன்றை ஒன்று பிடித்து உண்டு வாழும் போது அவைகளுக்கு, நகங்கள், இறக்கைகள், அலகுகள், மீசைகள் வளர்ந்தன.
மேலும் இலட்சக்கணக்கான ஆண்டுகள் கடந்தன. அப்பொழுது முதுகெலும்புள்ள உயிர்கள் கடலுள் தோன்றலாயின. புழுவாக வளர்ந்த பூச்சி மீனாக மாறுதலடைந்தது. முதல் முதல் தோன்றிய மீனுக்கு துவாரம் போன்ற வாயுண்டு; அலகுகள் தோன்றவில்லை. இதற்கு அடுத்தபடியில் விலாங்கு(Eel) என்னும் மீன் தோன்றிற்று. இதற்கு அலகுகள் உண்டு. ஆனால் அதன் முதுகெலும்பு வலியுடையதன்று. முதுகெலும்பு பெற்ற உயிர்கள் சில மிக மிகப் பெரியனவாய் வளர்ந்தன. அவைகளுக்கு முள் நிறைந்த கரகரப்பான தோலும் சுறாமீனுக் கிருப்பவை போன்ற பற்களு மிருந்தன. விலாங்கு மீனுக்கு மேற்படியிலுள்ளதே உண்மை யான மீன். அதன் முட்கள் வயிரமடைந்துள்ளன. மிதக்கும் வாய்ப்பின் பொருட்டு அதன் உடலுள் காற்றுப்பை உண்டாயிருந்தது. அதன் உதவியைக் கொண்டு அது கடலில் நீந்தவும் கடலின் வெவ்வேறு அளவுள்ள நீரில் மிதந்து திரியவும் இயன்றது. உணவின் பொருட்டு மீன் கரைக்கு வந்தது. கடலுள் மீன்கள் பெருகின. வாழ்க்கைப் போராட்டம் கடுமை ஆயிற்று. இதனால் பல மாறுதல்கள் உண்டாயின.
கடலுயிர்கள் தரைவாழ் உயிர்களாயின
நிலத்தில் உயிர்கள் தோன்றிப் பெருகின. அப்பொழுது தரையில் வாழும் உயிர், நீரில் வாழும் உயிர்கள் என உயிர்கள் இரண்டாகப் பிரிந்தன. நிலத்தில் வாழும் உயிர்களிற் சில கடற்கரைகளில் உலாவின; பின்பு அவை கடலிற் சென்று வாழ விரும்பின; தரையில் வாழ்தற்கு வாய்ப்பான உறுப்புக் களைப் போக்கிக் கொண்டு நீரில் வாழ்ந்தன. இவ்வாறு இலட்சக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்தபின் அவை மறுபடியும் தரையில் வாழ விரும்பின. தரையில் வாழ்ந்தபின் கடலிற் சென்ற உயிர்களிற் சில திமிங்கிலம் போல வாழ்ந்தன. திமிங்கிலத்தின் இரத்தம் வெப்பமானது. மீன் குளிர்ந்த இரத்த முடையது. முன் தரையில் வாழ்ந்த உயிர்களினின்றும் பிரிந்து கடலுக்குச் சென்றமையால் திமிங்கிலத்திற்கு வெப்பமான இரத்தமுண்டு. கடற்பசு என்னும் கடல் விலங்கு காணப்படு கின்றது. இதன் எலும்புக் கோவை, முதுகெலும்பு, சந்ததியைப் பெருக்கு வது, கன்றை ஈன்பது முதலியன வெல்லாம் தரையில் வாழும் பசுவுக் குடையவை போன்றன.
எல்லா உயிர்களையும் போல மீன்களும் மூச்சுவிட்டு வாழவேண்டும். அவை செவுள் வழியாக மூச்சு விட்டன. அவை நீரிலிருந்து காற்றைப் பிரித்து எடுத்துக்கொண்டன. முது கெலும்பிலிருந்து துடுப்புகள் வளர்ந்தன. முன்புறம் வளர்ந்திருந்த துடுப்புகள் முன்னங்கால்கள் போலவும், பின்னேயிருந்த துடுப்புகள் பின்னங்கால்கள் அல்லது பாதங்கள் போலவும் இருந்தன. இவைகளின் துடுப்புகள் பூச்சிகளின் கால்கள் போலப் பொருத்துடையனவல்ல.
இத் துடுப்புகள் அல்லது செட்டைகளே உறுப்புகள் வளர்வதற்கு முதற்படியிலுள்ளவை. கரையிலே வளர்ந்த நாணல்களிலும் புதர்களிலும் பலவகைப் பூச்சிகள் இருந்தன. கரைக்கு வந்த மீன் களால் மூச்சுவிட முடியவில்லை. செவுள்கள் நீருள் மூச்சு விடுதற்கேற்ற அமைப்புடையன. தரையிலுள்ள காற்றுச் செவிள் வழியாக உள்ளே செல்லமுடியாமல் இருந்தது. ஆகவே அவை செவிள்களை அப்படியே இருக்கவிட்டுத் தொண்டையில் காற்றுப் பையை வளர்த்துக் கொண்டன. இம் மூச்சுப் பையின் உதவி யைக்கொண்டு அவை தரையில் மூச்சு விடவும் நீரில் மிதக்கவும் முடிந்தது. இப்பொழுது அவை தரையில் சிறிதுநேரம் தங்கிப் பூச்சிகளை உணவாகப் பிடித்து உண்ண முடிந்தது.
கடலில் நீந்தும் மீன்கள் இவை ஒன்றையும் கருத்திற் கொள்ள வில்லை. அவைகளின் சிறிய துடுப்புகள் அல்லது சிறகுகள் பெரிதாக வளர்ந்தன. மூச்சுப் பையுடைய மீன்களால் கடற்கரையில் நீந்திச்செல்ல முடியாது. அவை தவழ்ந்து சென்றன. மீன்கள் தவழப் பழகாவிட்டால் மனிதன் நடக்கப் பழகியிருக்கமாட்டான். அவைகளின் முன் துடுப்புக் களும் பின் துடுப்புகளும் வயிரமேறி நுனியில் மடிப்பு உண்டாயிற்று. அது சப்பையான கையிணைப்புடைய மணிக்கட்டுப் போன்றது. ஆயிரக்கணக் கான ஆண்டுகளாக அவை துடுப்புகளைக் கரையிலுள்ள சேற்றிலும் மணலிலும் ஊன்றித் திரிந்தமையால் அவை அவ்வாறு ஆயின. அவை, துடுப்புகளின் முனையை அழுத்தி விரித்துப் பயன்படுத்தினமையால் அது பிரிந்து விரல்கள் போலாயிற்று. ஒவ்வொரு துடுப்பிலும் ஐந்து விரல்களுக்கு மேல் தோன்றவில்லை.
தரையில் வாழ்ந்த மீன்கள் மூச்சுப்பையில் திருத்தம் செய்து கொண்டன. அவை நிலத்தில் வாழவேண்டுமென்னும் விருப்பங்கொண்ட போதே பெரிய மாற்றம் உண்டாயிற்று. அவை, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மேலும் திருத்தமுடைய சந்ததிகளைத் தோற்றுவித்தமை யால் தரையில் வாழும் நாற்காலுடைய உயிர்கள் தோன்றின.
நாற்காலுடைய உயிர்களின் முதுகெலும்பு உறுதி உடையது. அவைக்கு மூச்சுப்பையும் கைகளும் கால்களும் உண்டு. அவற்றின் உறுதி யான மண்டையில் பற்கள் அமைந்திருந்தன. மீனுடைய பல் தொடக்கத்தில் செதிலாக விருந்தது. பின்பு செதில்கள் எலும்புத் தன்மை அடைந்து வாய் அலகுகளில் வலிபெற்றிருந்தன. பயன்படுத்தப்படாத செதிற் பற்கள் மறைப்புப் போன்றிருந்தன. இவற்றின் வாலிலிருந்த சிறகுகள் மறைந்து போயின. அவற்றின் பின்புறம் ஒழுங்கான வாலாக மாறிற்று.
இதன்பின் பாதி நீரிலும் பாதி நிலத்திலும் வாழும் உயிர்கள் தோன்றின. இவ் வுயிர்கள் வாலினாலும் முன்கைகளாலும் நீந்திச்சென்று சிறிய மீன்களையும் பூச்சிகளையும் உண்டன; தரைக்கு வந்தபோது அவை மண்புழுக்களையும் பூச்சிகளையும் தின்றன. இவை செவுள்களையும் மூச்சுப் பையையும் பயன்படுத்தக்கூடியனவாயிருந்தன. பின்பு அவை தவளைகளைப் போலத் தமது வாலைப் போக்கிக்கொண்டன. அவற்றின் முன்கால்கள் நீளமாக வளர்ந்திருந்தன.
இவ் வுயிர்கள் நிலத்தில் வாழவேண்டியிருந்த போதும் நீரிலேயே பிறந்தன. முட்டைகளை நீரிலேயே இட்டன. முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளியே வந்தபோது அவை செவுள்களைப் பயன்படுத்தின; மூச்சுப்பையைப் பயன்படுத்தவில்லை. அவை வாலோடு இருந்து வாலில்லாத தவளையாக வரும்போது செவுள்கள் மறைந்துபோகின்றன. வால் உள்ளே நுழைந்து மறைந்து போகின்றது. பின்னங்கால்கள் வெளியே வருகின்றன. அது உடனே தனது மூச்சுப் பையைப் பயன்படுத்து கின்றது. குறிக்கப்பட்ட ஓர் அளவு நேரத்துக்குமேல் அவைகளால் நீருள் இருக்கமுடியாது. தவளையின் கைகளில் விரல்கள் இருந்தன. தொண்டை யால் சத்தமிடும் நரம்புகள் தவளைக்கே முதல்முதல் தோன்றியிருந்தன. சில விஞ்ஞானிகள் தொண்டையால் சத்தமிடும் நரம்புகள் முதலைக்கே முதலில் தோன்றியிருந்தனவென்று கூறுவர். முதலை முட்டைக்குள் இருக்கும் குஞ்சு விநோதமான சத்தமிடும். அச் சத்தத்தைக் கேட்ட முதலை, முட்டைகள் புதைக்கப்பட்டிருக்குமிடத்திற்குச் சென்று முட்டைகளை வெளியே கிளறி எடுக்கும்.
ஓட்டோடு கூடிய முட்டை
வழுவழுப்பான சொறி மீன்களிலி ருந்து பூச்சி இனங்கள் உண்டான வகையைப்பற்றி அறிந்தோம். பூச்சி வகைகளுள் நூல் போன்ற முதுகெலும்பு வளர்ச்சியடைந்தது. உடம்பின் முடிவு போன்ற தலையுடையதே புழு. மிருதுவான உடம்பின் முடிவு அல்லது முனை நாளடைவில் மண்டை ஓடாக வளர்ந்தது. துவாரம் போன்ற வாய் திறக்கவும் மூடவும் கூடிய அலகுகளைப் பெற்றது. அலகுகளின் ஓரங் களிலுள்ள தோலில் வளர்ந்த பற்கள் அலகுகளில் ஊன்றின. முதுகெலும்பி லிருந்து விலாவெலும்புகள் வளர்ந்தன. முன் துடுப்புகள் போன்றிருந்த செட்டைகள் புயங்களாகவும், விரல்களோடு கூடிய பகுதிகளாகவும் மாறின. கைகளின் இறுதியான வளர்ச்சி விரல்களைப் பெற்றிருப்பது. ஆரம்ப உயிர்களுக்குப் புதிதாக நினைக்கும் ஆற்றல் இல்லை. அவை இயற்கை அல்லது பரம்பரை அறிவையே (instinct) பயன்படுத்தின.
ஒவ்வொரு உயிரும் தனது செயல்களில் முன்னேற முயன்று வந்தது. இதனால் அவை பற்பல இனங்களாகப் பிரிந்தன. தாவர வகையில் சிறிய ‘அல்கே’ எப்படிப் பெரிய நிழல் மரங்களாக வளர்ந்ததோ அப்படியே ஊர்ந் தும் தவழ்ந்தும் திரிந்த உயிர்களே பல்வகைத் தோற்றங்களாக வளர்ச்சி யடைந்தன. ‘தகுதியுடையது நிலைபெறுதல்’ என்னும் இயற்கை, விதிக் கிணங்க, அவை உணவு தேடுவதற்குப் போராடியபோது, நீந்தும், தவழும், ஊரும் உயிர்கள் வளர்ச்சிப் பாதைகளில் விடுபட்டன. ‘தாழ்ந்துபோ அல்லது நீந்து’, ‘உயிர்வாழ் அல்லது இறந்துபோ’ என்னும் விதிகள் எல்லாம் உணவின் பொருட்டே யன்றி விடுதலையின் பொருட்டன்று. உணவு பெற முடியாத உயிர்கள் அழவேண்டியதில்லை; ‘எனக்கு மரணத்தைத் தா’ எனக் கேட்பதே இயற்கை விதி. இயற்கை இவ் வேண்டுதலைக் கவனித்தது. உயிர்கள் நிலைபெறுவதற்கு ஒரே வழி உணவு. பதினாயிரக்கணக்கான உயிர் இனங்கள் இவ் வுலகில் அடியழிந்துபோயின. இவைகளுக்குப்பின் பல தோன்றின; அவைகளும் மறைந்தன. இவ்வாறு பல தோற்றங்களும் மறைவுகளும் உண்டாயின.
இப்பொழுது பூச்சியினத்தைப் பற்றிச் சிறிது கவனிப்போம். பூச்சிகள் மிகமிகப் பெரிய கூட்டங்களாகப் பெருகின. அவை நீரில் வாழ்தல் அளவில் நில்லாமல் நிலத்திற்கு வந்தன. கடல் தேள் நிலத் தேளாகவும், கடல் தெள்ளு(lice) மரத் தெள்ளாக வும் மாறின. நண்டுகள் பல குடும்பங் களாகப் பிரிந்தன. நீர்ச்சிலந்தி தரைச் சிலந்தியாக மாறிற்று. அது வலை பின்ன இன்னும் அறிந்து கொள்ள வில்லை. உயரப் பறப்பவைகளுள் தும்பி அரசனாக விருந்தது. அது சிறகுகளை விரித்தால் ஒரு முனையிலிருந்து மற்ற முனைக்குள்ள நீளம் முப்பது அடி அளவிலிருந்தது. பச்சை, சிவப்பு, மஞ்சள், கறுப்பு நிறமுடைய பறக்கும் உயிர்களால் வானம் நிறைந்திருந்தது. அவை நீரில் மிதக்கும் மீன்களின் முட்டைகள், புழுக்கள், நீர்ப்பூச்சிகள் முதலியவைகளை உண்டு வாழ்ந்தன.
அவற்றிற்கு நீரில் வாழும் விருப்பும் உண்டு. சிறியனவாயிருக்கும் போது அவற்றிற்குச் செவுள்கள் உண்டு. தவளை முட்டைகளைப் போலத் தும்பிகளின் முட்டை தண்ணீரில் பொரிக்கும். சிறிய தும்பிகளுக்குச் செவுள்கள் உண்டு. அவை செவுள்களால் மூச்சுவிடும். மூர்க்கமுள்ள இவை ஒன்றை ஒன்று பிடித்து உண்டன. தும்பியின் செட்டைகள் உறுதியானவை யல்ல. வாலுள்ள தவளைக் குஞ்சுகள் வாலை நீக்கிவிட்டுத் தவளையாக மாறும்போது செவிள் மறைந்துவிடுகின்றது; அது போலச் செட்டை முளைக்கும்போது சிறு தும்பிகளுக்குச் செவுள்கள் மறைந்துபோகின்றன. தும்பிகளின் செட்டைகளை உண்மையான செட்டைகள் என்று சொல்ல முடியாது. நண்டு காலத்துக்குக் காலம் தனது ஓட்டை மாற்றிக்கொள்வது போல இவையும் காலத்துக்குக் காலம் தமது தோலை மாற்றிக்கொண்டு புதிய தோலுடன் வெளிவருகின்றன.
பார்வைக்கு வெறுப்புத் தரும் இன்னொரு பூச்சியும் அங்குக் காணப்பட்டது. அதற்குப் பெரிய செட்டைகள் உண்டு; ஆனால் அவை பறப்பதற்காக அமைந்தவையல்ல. அது இரைந்து கொண்டு புதர்களில் இருந்தது. அது நிலத்திற் குதித்த போது விரை வாக ஓடிற்று. அது கரப்பான் பூச்சி (cockroach) எனப்படும். அது தும்பியிலும் பார்க்கப் பெரியது; வான்கோழிச் சேவலளவு பருமையுடையது. அதன் சந்ததியில் வந்தவை களே பத்திலட்சக்கணக்கான ஆண்டுகளின் பின் நமது அடுக்களைகளிற் காணப்படுகின்றன.
பூச்சிகளின் உள்ளுடல் மிருதுவானது. அவைகட்கு எலும்புகள் இல்லை. அவற்றின் பகுதி பகுதியான உடலமைப்பின் பொருத்துகளுக்கு வெளியே உறுப்புகள் வளர்ந்தன. அவற்றின்மேல் உடலை வயிரமான கவசம் மூடியிருந்தது. பூச்சிகள் தம் வாழ்க்கையின் பொருட்டு மற்ற உயிர் களோடு போராடிய தன்மைகளால் அவற்றின் வடிவம் நிறம் முதலியன மாறுதலடைந்தன.
அவற்றிற்கு அடுத்தபடியில் ஊரும் பிராணிகள் தோன்றின. நீரிலிருந்து வெளியே வந்த மீன்கள் பாதி மீனும் பாதி மீனல்லாதவுமாகிய மூச்சுப் பையினால் மூச்சுவிடும் உயிர்களாக மாறின; இவையே முதல் தோன்றிய நாற்கால் உயிர்கள். இவ்வாறு, பகுதி நீரிலும் பகுதி நிலத்திலும் வாழும் உயிர்களே ஓடுள்ள முட்டைகளை இட்டன.
வெளியிலே குஞ்சு பொரிக்கும் முட்டை போன்றவைகளை எல்லாம் நாம் முட்டைகள் என்று நினைக்கிறோம். நீரில் வாழும் உயிர்களின் முட்டைக்கும் தரையில் வாழும் உயிர்களின் முட்டைக்கும் வேறுபாடு உண்டு. பல்லிகள் அல்லது ஊர்வன முட்டையிடத் தொடங்கியபின் பல ஊரும் உயிர்க் குடும்பங்கள் தோன்றின. தவளையிலிருந்து சலமான்டர் போன்றவை தோன்றின. பலவகைப் பல்லிகள், பாம்புகள், முதலைகள், நீரிலும் நிலத்திலும் வாழும் ஆமைகள் இன்று காணப்படாத இன்னும் மிகப் பல உயிர்கள் வாழ்ந்தன. சலமான்டர்1 அல்லது தவளைதான் ஓட்டோடு கூடிய முதல் முட்டையை இட்டிருத்தல் வேண்டும். நீரில் இடப்படும் முட்டைக்கு மெல்லிய வெளிச்சவ்வு மாத்திரமுண்டு. நீரில் இடப்பட்ட முட்டைகளில் தோன்றிய உயிர்கள் முன்னேற்றமடையவில்லை. ஓட்டோடு கூடிய முட்டை என்பது காய்ந்த தரையில் குஞ்சு பொரிக்கக்கூடியதே. முட்டைகளிலிருந்து பொரித்த குஞ்சுகள் மூச்சு விடுவதற்குச் செவிள்கள் வேண்டியதில்லை.
** ஓடுள்ள முட்டையில் தோன்றிய உயிர்கள்**
பல்லி இனங்களிற் சில தமது கால்களைச் சிறிது சிறிதாக உள்ளுக்கு இழுத்துக்கொண்டன. இறுதியில் அவை வெளியே தெரியாதபடி மறைந்து போயின. பின்பு கால் இல்லாத பல்லிகள் தாம் விரும்பிய அளவுக்கு உடலை வளர்த்துக் கொண்டன. அவை பாம்புகளாயின. பெரிய உயிர் களுக்கு அகப்படாதபடி புதர்களில் வளைந்து சென்று மறைந்து கொள்வ தற்கு இவ்வகை உடல் ஏற்றதாக விருந்தது. இன்றும் சில பாம்புகளுக்குக் கால்களின் அடையாளங்கள் காணப்படுகின்றன. பாம்பாக மாறிய பல்லிகள் எல்லாம் உயிர் பிழைக்கவில்லை; சுறுசுறுப்பும் வலிமையும் உள்ளவையே பிழைத்தன. கடலில் மிகப் பெரிய மீன் பல்லிகள் வாழ்ந்தன. இவை நாளடைவில் மறைந்துபோயின. கடற் பல்லிகள் வயிற்றினுள்ளே முட்டை யைப் பொரித்துக் குட்டியை வெளியே ஈன்றன.
குட்டிக்குப் பால் கொடுக்கும் விலங்குகள் பல்லிகள் போன்ற ஊரும் உயிர்களிலிருந்து பிறந்தன. ஊரும் உயிர்கள் முட்டைகளை இட்டுக் குஞ்சு பொரிக் கும்படி அவைகளை வெய்யில் வெப்பத்தில் விட்டன. குட்டிக்குப் பால்கொடுக்கும் விலங்கோடு ஊர்வதை ஒப்பிட்டால் பின்னது குட்டிகளுக்கு வளர்ப்புத்தாய் போன்றது. குட்டிக்குப் பால் கொடுத்து வளர்க்கும் விலங்கே உயிர்களுக் கெல்லாம் உண்மையான தாய். ஊரும் உயிர் சிலவற்றுக்கு நல்ல இரத்தத்தைக் கெட்ட இரத்தத்திலிருந்து பிரிக்கக்கூடிய இருதயம் வளர்ந்தது.
குட்டிக்குப் பால் கொடுக்கும் ஆதி உயிர்கள் சிறியனவாயிருந்தன. பெரிய ஊரும் உயிர்கள் இவைகளை வேட்டையாடி உண்டன. தகுதி உடையது நிலைபெறுதல் என்னும் இயற்கை விதிக்கேற்ப அவை வாழ்தற்கு மிக முயன்றன. வெய்யிற் சூட்டினால் முட்டையிலிருந்த குஞ்சு பொரிக்கும் ஊர்வனவுக்கு ஞாபக சக்தி குறைவு. தாய்ப் பால் கொடுத்து வளர்க்கும் விலங்குகளுக்கு தம் மினத்துக்குரிய ஞாபகம் அதிகம் உண்டு. ஒரு பல்லியை அல்லது ஒரு பாம்பைக் காணும்போது நமக்கு வெறுப்புணர்ச்சி உண்டாகின்றது. ஊர்வனவெல்லாம் பாலூட்டி வளர்க்கப்படும் உயிர்களுக்கு ஒரு காலத்தில் பகையாயிருந்தன என்னும் பழைய ஞாபகம் நமக்கு இருப்பதுதான் இதற்குக் காரணம்.
முற்காலத்தில் மிகமிகப் பெரிய ஊர்வன குளங் குட்டைகளில் உலாவித் திரிந்தன. நாங்கள் நினைத்துப் பார்க்கமுடியாத அவ்வளவு பயங்கரமாக அவைகளின் வடிவு இருந்தது.
எல்லாவற்றிலும் மேற்படியிலுள்ள உயிர்களைத் தவிர மற்றவை எல்லாம் ஒவ்வொரு வகை உணவை உண்டு வாழத் தொடங்கின. கண்ட வற்றை எல்லாம் உண்டு வாழ்ந்த ஆதி உயிர்களின் வாழ்க்கை இலகுவாக விருந்தது. ஒவ்வொரு வகை என்றது பூச்சிகள், நத்தைகள், இறைச்சி முதலிய வைகளைக் குறிக்கும். முற்காலக் கடற்பல்லி அக்காலத்தில் தோன்றியிருந்த பெரிய கணவாய் மீன்களை மாத்திரம் உண்டு வாழ்ந்தது. ஒவ்வொரு வகை உணவையே உண்டு வாழ்ந்த உயிர்கள் அவ்வகை உணவு கிடையாதபோது மறைந்து போயின.
பெரிய உயிரினங்கள் தாவரம் ஊன் என்பவைகளில் ஒன்றை உண் கின்றன. பாம்பு பூச்சிகளை உண்கின் றது; புல்லை உண்பதில்லை. முற் காலத்தில் வாழ்ந்த மிகப்பெரிய உயிர்கள் தாவரங்களையே உண்டன. முற்காலத்தில் இடியேற்றுப்பல்லி (Thunder lizard) என்னும் ஒருவகை உயிர் வாழ்ந்தது. அதன் வாலின் நீளம் முப்பதடி; உடலின் நீளம் எண்பதடி. இன்று இடியேற்றுப்பல்லிகள் காணப்படவில்லை. அவை குளங்களுக்குக் கீழே வளர்ந்த நீர் அல்லிகளை உண்டு வாழ்ந்தன.
இகுவானோடன்(Igunanodon) என்னும் ஒருவகைப் பல்லியும் தோன்றி வாழ்ந்தது. இதன் கழுத்துக் குறுகியது. இதன் மூளையும் அற்பமானது. இடியேற்றுப் பல்லிக்கும் இகுவானோடன் என்னும் பல்லிக்கும் மூளை வாலில் வளர்ந்திருந்தது. இடியேற்றுப்பல்லி பின்னங்காலில் நின்று மரங்களின் இலைகளை உண்டது. முதுகிலே வாள் போன்ற சதை வளர்ந்த பல்லிகளும் வாழ்ந்தன. மேல் வாயில் கொம்புகளுடைய பல்லிகளும் வாழ்ந்தன. சில பல்லிகளுக்குத் தோல் அழுத்தமாக விருந்தது. மீன்களை உண்டு வாழும் பல்லிகளுக்கு நன்கமைந்த பற்களிருந்தன.
தாவரங்களை உண்டு வாழ்ந்த பல்லிகளுக்குப் பாரமான எலும்புகள் அமைந்திருந்தன. அவைகளின் பல ‘டன்’ பாரமுள்ள உடலைத் தாங்கு தற்கு அவ்வகை எலும்புகளே தேவை. ஊனுணவை உண்ணும் பல்லிகளின் எலும்புகள் பாரங் குறைந்தனவா யிருந்தன. பாம்புபோல் நீண்டு வளர்ந்த பல்லிகள் தமது கால்களைத் துடுப்புகள் போல ஆக்கிக்கொண்டன. இவை களிலிருந்து முதலைகள் தோன்றின.
மரங்கள்மீது பறக்கும் முதலை கள் காணப்பட்டன. இவை சிறிய பல்லி இனங்களிலிருந்து வளர்ச்சி யடைந்தவை. பூச்சிகள் மரநுனிகளில் பறந்து திரிந்தன. ஆமைகளைப் போன்று கவசம் பெற்ற பல்லிகள் சில மரத்தின் அடிமீது உடலைச் சார்த்தி மரத்தின்மீது ஏறிப் பழங்களை உண்டன. இப் பல்லிகள் மரத்தினின்றும் குதித்து அபாயத்துக் குள்ளாதல், பகைகளுக்கு இரையாதல் போன்ற ஆபத்தினின்றும் தப்பிக் கொள்வதற்காக விரல்களின் இடைகளில் சவ்வை வளரச்செய்தன. முன்னங்காலில் வளர்ந்த சவ்வு பின்னங்காலோடு இணைக்கப்பட்டிருந்தது. மரத்தில் வாழும் பல்லிகள் இச் சவ்வைச் சிறகு போல் விரித்துக்கொண்டு மரத்திலிருந்து நிலத்திற்கு இறங்கிப் பகைகளி னின்றும் தப்பக் கூடியதாக இருந்தது. மரத்தினின்றும் குதிப்பதாலுண்டாகும் அபாயம் அதற்கு நீங்கிற்று. இவ்வாறு தப்பிப் பிழைத்தவைகளுள் வலியுடை யவை பெரியவைகளாக வளர்ந்தன. இவை வெப்ப மண்டலங்களில் வாழ்ந் தமையால் பறக்கும் முதலைகளாக மாறின. பெரிய உடம்பை மேலே ஆகா யத்தில் மிதக்கச் செய்வதற்குப் பெரிய செட்டைகள் தேவையாயிருந்தன.
பறக்கும் முதலைகள் வெளவாலின் செட்டைகள் போன்ற செட்டைகளுடன் இருபது அடி நீள முடையனவாயிருந்தன. இவை மேலே பறந்து திரியும் பூச்சி களைப் பிடித்து உண்டன. அவைகட்குப் பற்கள் இல்லை. பறக்கும் முதலை தனது வாலைப் போக்கிக்கொண்டது; பின்னங் கால்களையும் உடலுக்குள் இழுத்துக் கொண்டது. அதற்குப் பின்னங்கால்கள் தேவைப்படவில்லை. அதன் எலும்புகள் உள் துளை உடையனவாய் பாரம் குறைந்தவை. தடித்த தோலுக்குப் பதில் பட்டுப் போன்ற மெல்லிய தோல் உண்டாயிற்று. இப் பறக்கும் முதலை செட்டைகளை விரித்தபோது இருபதடி நீளமுள்ளதாயிருந்தது. இப் பறக்கும் முதலை விரைவில் மறைந்துபோயிற்று.
சவ்வு போன்ற செட்டையை வளர்த்துக் கொண்ட எல்லாப் பல்லி களும் முற்காலப் பறக்கும் முதலை போலிருக்கவில்லை. இவைகளில் மிகவும் வெறுப்புத் தருவது பல்லி வெளவாலே. இது தனது பல்லைப் போக்கிக் கொள்ளவில்லை.
** கடலாழத்தில்**
முதன்முதல் மூச்சுப்பை யுள்ள மீன்கள் கரைக்கு வந்தன. இயற்கை அவற்றின் உடலை வயிர மடையச் செய்தது. புகைமயமான அலைகள் மறைந்தன. பவளப் பாறைகளில் பச்சை, கருஞ்சிவப்பு, சிவப்பு முதலிய நிறங்களுடைய கடற்சாதாழைகள் வளர்ந்தன. கடற்பூ(Sea anemones), கடற் சிவப்பு(Sea pinks) என்பவை பாறை அடிகளிற் செழித்து வளர்ந்தன. இவை பாதி தாவரமும் பாதி அசையு முயிராகவும் இருந்தன. இவை ஊர்வது போன்ற அசைவுடன், பாம்பு ஆயிரந் தலைகளை நீட்டுவது போலத் தமது விரல்களை உணவின் பொருட்டு நீட்டிக்கொண்டிருந்தன. வியப்பான கடல் அல்லிகள் ஒன்றோடு ஒன்று பின்னிக் கூட்டமாகக் கடலின் கீழ் வாழ்ந்தன. ஞாயிற்றின் ஒளி அப் பூக்கள் மீது பட்டவுடன் அவை அசைந்தன. பாறைகளின் வெடிப்புகளில் பல சிறிய உயிர்கள் தங்கி வாழ்ந்தன. சிறிய கணவாய் மீன்கள் வில்லிலிருந்து விடுபட்ட அம்பைப் போலப் பின்னோக்கி நீந்திச் சென்றன. சுருள் வடிவான ஓடுடைய நத்தை இனங்களும் வாழ்ந்தன. இவை நான்கு அல்லது ஐந்து அடிச் சுற்றள வுடையன. இவை, வானவில், வெள்ளி, பொன் நிறங்களுள்ள மீன்கள் வருவதை வட்டமான கண்களால் பார்த்துக்கொண்டு திறந்த வாய்களுடன் மறைவிற்கிடந்தன. அங்குமிங்கும் கூட்டமாகக் கடற் சாதாழைகள் கிடந்தன. ஒரு கடற்சாதாழைக் கூட்டத்திலிருந்து இன்னொரு கடற் சாதாழைக் கூட்டத்துக்குக் கடற் பாம்புகள் விரைவாக நீந்திச் சென்றன.
சிறிது விறைப்பான முதுகெலும்புடைய புழுக்களிலிருந்து சுறா, திருக்கை முதலிய மீன்கள் தோன்றின. முற்காலத்தில் மிகமிகப் பெரிய சுறா மீன்கள் வாழ்ந்தன. அவைகளுட் பெரியது நாற்பத்தைந்தடி நீளமுள்ளது. அதன் பருமைக்கு ஏற்றதாக வாயுமிருந்தது. இவ் வகைச் சுறா மீனிலிருந்து பல்லில்லாத மீன்களும் பல்லிகளும் தப்பிப் பிழைப்பது கடினமாயிருந்தது.
சுறா மீன்களுக்குப் பின் வாள்மீன்கள் தோன்றின. தமது மூக்கை நீண்ட குத்தும் ஆயுத மாக வளர்த்துக்கொண்ட சுறாமீன் களே வாள்மீன்களாகும். அவற் றின் வாள் ஐந்தடி நீளமுள்ளதாக விருந்தது. அவை திமிங்கிலம் போன்ற பெரிய மீன்களைத் தாக்கி அவற்றின் குடலை உண்டன. கடலுள் பெரிய திருக்கை மீன்களும் உலாவித் திரிந்தன. இவைகளின் உடல் வட்டமாகவும் அழுத்தமாகவும் இருந்தது. மின்சாரஅலை வீசும் மீன்கள் பல வாழ்ந்தன. இம் மீன்களின் நரம்புகளில் மின்சக்தி இருந்தது. அவை மின்சக்தியைச் செலுத்திக் கிட்ட வரும் சிறிய மீன்களைக் கொல்லத்தக்க ஆற்றல் பெற்றிருந்தன. திருக்கை மீன்களின் வாலில் முட்கள் இருந்தன. அது வாலை வீசி மீன்களை வெட்டிற்று. பசாசு மீன்(Devil Fish) எனப்பட்ட பெரிய திருக்கை மீன்கள் வாழ்ந்தன. இவை இருபது அடிக்குமேல் நீள முடையன. இவைகளின் வால் வீச்சு ஆழமாக வெட்டக்கூடியது இவை கடல் ஆழத்தில் சுழி ஓடிச்சென்றன; மறுபடியும் தமது 1,500 அல்லது 2,000 இராத்தல் சுமையுள்ள பாரமான உடலோடு கடலுக்கு மேலே சில அடிகள் எழும்பிக் கீழே விழுந்தன. இதனால் பக்கங்களில் பெரிய அலைகள் உண்டாயின. இவ்வாறே திருக்கை மீன்கள் இந்தியக் கடல்களிலும் ப்ளாரிடா(Florida) கடற்கரைகளிலும் விளையாடுகின்றன.
இதன்பின் கணவாய்மீன் குடும்பங்கள் வருகின்றன. கணவாய் மீனுக்கு உறிஞ்சும் வழுவழுப்பான பத்துக் குழாய்கள் உண்டு. அது இவை களால் தான் உண்ணக்கூடிய இரையைப் பிடித்து வாய்க்குக் கொண்டுவரு கின்றது. அது கடலாழத்திலே மணல் பரந்த தரையின் கிட்டச் செல்லும் போது அங்கு உலாவும் சிறிய கணவாய் மீன்களையும் பிற சிறிய மீன்களை யும் பிடிக்கின்றது. தனக்கு ஆபத்து நேரும்போது அது ஒரு வகை மையைக் கக்குகின்றது. இம் மை அதனைத் துரத்திவரும் மீனுக்கும் அதற்கும் திரை மறைப்புப் போலப் பயன்படுகின்றது. அதனைத் தொடர்ந்து வந்த மீன் அதனைப் பார்க்கமுடியாமையால் திரும்பிச் செல்கின்றது.
** குளிர்காலம் வந்தபோது**
இன்று இவ்வுலகில் வாழ்கின்ற உயிர்களெல்லாம் உலகில் தோன்றிய பெரிய குளிர் காலத்திற்குப் பிழைத்து வந்தவையே.
வெப்ப காலம் பத்திலட்சக்கணக்கான ஆண்டுகள் இருந்தது. வெப்பமான கடலுள் உயிர்கள் நிறைந்திருந்தன. அவை சுறா, திருக்கை, திமிங்கிலம், பாம்பு, பல்லி போல்வன. கடலில் மிதக்கும் முட்டைகளை நீரோட்டங்கள் ஆயிரக்கணக்கான மைல்களுக்கப்பால் கொண்டு சென்றன. கடற்கரைகளில் அவை குஞ்சு பொரிப்பதற்கு ஆயத்தமாக இருந்தன. கோடிக்கணக்கான அம் முட்டைகளுள் சிலவே குஞ்சு பொரித்தன. நீரிலும் தரையிலுமுள்ள பூச்சிகள் அம் முட்டைகளிற் பெரும்பகுதியை உண்டன. பூச்சிகள் பூச்சிகளையும் ஊரும் உயிர்களையும் உண்டன. முடிவில்லாத போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. நாணல், பாசி, செடிகள் முதலியவை கீழே வேரைச் செலுத்தி ஒன்றை ஒன்று அமுக்கிக் கொன்றன. இறக்கை உள்ள பூச்சிகள் வானத்தில் தமது இரையைத் துரத்திச் சென்றன. ஊர்வன ஒன்றை ஒன்று பிடித்துத் தின்றன. இவ்வாறு முடிவில்லாத கொலை நடைபெற்றது; நடைபெறுகின்றது. தாவரங்கள் இறந்தவைகளின் என்பு சதைகளிலிருந்து உணவை இழுத்து வளர்கின்றன; தாவரங்களை உண்டு வாழும் உயிர்கள் மறுபடியும் அவற்றை உண்டு வாழ்கின்றன.
பத்து லட்ச ஆண்டுக்கணக்கான கோடை காலத்தில் உயிர்கள் எல்லாம் உண்ணக்கூடிய அளவு உணவு நிறைந்திருந்தது. உயிர்கள் நெருக்கமடைந்தன. இப் பூமி ஒரே கொலைக் களம்போல் மாறுதலடைந்தது. பற்களும் நகங் களும் ஒன்றை ஒன்று கிழிப்பதில் ஓயவில்லை. இரத்தந் தோய்ந்த நிலத்திலிருந்து புதிய உயிர்கள் தோன்றின.
மாரி வந்தது. பல்லாயிர ஆண்டுகளாக குளிர் அலை அலையாக வந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு அலையும் முன்னதிலும் பார்க்கக் குளிராக விருந்தது. பல ஆயிரம் அடி உயர முள்ள மலைத்தொடர்கள் தோன்றியிருந்தன. பூமியைச் சுற்றியிருந்த நீராவிமயமான போர்வை மறைந்தது. நிலத்திலிருந்தும் பயிர் பச்சை களிலிருந்தும் நீராவியாக மாறிய நீர் முகிலாக மிதந்தது. முகில் மறுபடியும் நீரை மழையாகப் பொழிந்தது. நீர் வற்றியிருந்த நீர்நிலைகள் நீரால் நிறைந் தன. மலைகளினின்றும் வடிந்து ஓடும் நீர் பெரிய ஆறுகளை உண்டு பண்ணின. தேங்கிக் கிடக்கும் நீருக்குப் பதில் நீர் ஓட்டங்கள் இருந்தன.
பெரிய காடுகள் நடுங்கின; குளிர் அலைகளால் எண்ணில்லாத உயிர்கள் மடிந்தன. குளிரைத் தாங்கும் வன்மையுடைய உயிர்கள் நிலை பெற்றன. முதற்குளிர் அலையைத் தொடர்ந்து இன்னொரு குளிர் அலை வந்தது. உணவு சுருங்கிற்று. வாழ்க்கை கடுமையாயிற்று. அங்கும் இங்கும் சில முரடான உயிர்கள் குளிரைத் தாங்கும் பழக்கம் அடைந்தன. அவை குளிர் காலத்தை இயற்கை நிகழ்ச்சியாக வரவேற்றன. சில உயிர்கள் வெப்ப மான இடங்களை நாடி நீண்ட பயணஞ் செய்தன. இறுதியில் அவை வெப்ப முள்ள இடங்களை அடைந்தன. இவ் வுலகின் எல்லா இடங்களிலும் ஒரே காலத்திற் குளிர்காலம் இருக்கவில்லை. மலைகளிலிருந்து உறைபனி கீழே வந்தது. அது கீழே நிலத்தில் பரவிச் சென்றது. இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா முதலிய நாடுகள் ஒருகாலத்தில் உறைபனியால் மூடுண் டிருந்தன. உறைபனி மூடாத இடங்களில் கோடைகாலம் இருந்தது. வெப்ப இடங்களுக்குச் சென்ற மீன்கள், ஊர்வன, நத்தைகள், நீரிலும் நிலத்திலும் வாழும் உயிர்கள் பிழைத்தன.
அசையும் உயிர்களுக்கு என்ன நிகழ்ந்ததோ அதே தாவர உயிர் களுக்கும் ஆசியாவில் நிகழ்ந்தது. ஆஸ்திரல் ஆசியாவில் பழங்கால உயிர்கள் சில இன்றும் காணப்படுகின்றன. நியுசிலாந்தில் இன்று பாசி, பூண்டுக் (fern) காடுகள் காணப்படுகின்றன. முதற் குளிர்காலம் உண்டானபோது தாவரங்கள் அசைய முடியாமல் இருந்தன. ஒரு குளிர்காலத்திற்குப்பின் மறு குளிர்காலம் வந்தது. அப்பொழுது அவை வயிரமடைந்து உரம் பெற்றன. பத்து இலட்சம் ஆண்டுகளாக ‘வேண்’(fern) என்னும் பூண்டுகள் மட்டம் விட்டுக் கிளைத்தன. விதை தோன்றாத காலத்தின் பின் பல்லாயிரக்கணக் கான தாவரங்களில் விதைகள் தோன்றின. நியுசிலாந்தில் பழங்காலத்து வேண்(fern) பூண்டுகளும் ஊர்வனவும் பிழைத்திருத்தல் தகுதியுடையது நிலைபெறும் என்பதற்கு எடுத்துக்காட்டாகின்றது.
தாயன்பு
முதற் குளிர் காலத்திற்குப் பிழைத்திருந்த பூச்சிகளும் மீன்களும் மற்றும் உயிர்களும் தமது இனங்களைப் பெருக்கின. நீரிலிருந்து வெளியே வந்த பல்லிகள் இப்போது முட்டையிடாது குட்டி யீனும் உயிர்களாக மாறின. ஊர்வனவுக்கு மூன்று அறைகளுள்ள இருதயமுண்டு. குட்டியீனும் உயிர்களுக்கு நான்கு அறையுள்ள இருதயமுண்டு. மூன்று அறை இருதய முள்ள ஊர்வன குளிர்ந்த இரத்தமுடையன. ஊர்வன வாழ்ந்து பெருகுவதற்கு வெளியில் வெப்பம் வேண்டும்.
குளிர்காலம் மறைந்ததும் வெப்பகாலம் வந்தது. குளிரினால் வாடிக் கொண்டிருந்த தாவரங்கள் உயிர்பெற்றன. குளிருக்குப் பிழைத்திருந்த பூண்டுகள் வளர்ந்தன. பூமியின் பெரும் பகுதி நீருள் மறைந்தது. அங்கு மிங்கும் வெளியே தெரிந்த பகுதிகளில் வளர்ந்த பச்சை நிறச் செடிகளில் பூக்கள் உண்டாயின. வெப்ப காலத்தில் ஊரும் உயிர்கள் நன்றாக வாழ்ந்து பெருகின. மறுபடி குளிர்காலம் வந்தபோது வாழத் தகுதியுடையவை சில இருக்க மற்றவை மறைந்துபோயின. பனிக்காலம் மறைதலும் இன்னும் ஒருமுறை ஊரும் உயிர்கள் பெருகின. குளிருள்ள இடங்களில் வாழ்ந்த உயிர்களிற் சில சுறுசுறுப்புடையனவாய் நிலத்தைத் துளைத்துச் சென்றும், மரங்கள் மீதேறியும் வாழ்ந்தன. இவை வெப்ப இரத்தமுள்ள உயிர்களாக மாறின. தோலில் மயிர் வளர்ந்தது. மயிர் அவைகளுக்கு வெப்பமளித்தது. மயிர்களைச் சுற்றி மயிர்த் துவாரங்கள் தோன்றின. மயிர்த்துவாரங்களி லிருந்து தாய், குட்டிக்கு பால் கொடுக்கும் உறுப்புகள் வளர்ந்தன. உடம்பில் மயிருள்ள உயிர்களிலிருந்து உண்மையான தாய்மை உண்டாயிற்று. இன்றும் மனிதக் குழந்தை பிறப்பதற்கு மூன்று மாதத்திற்கு முன்தொட்டு அதன் உடம்பில் மயிர்கள் தோன்றுகின்றன.
மயிர்த் துவாரங்கள் எப்படிப் பால் கொடுக்கும் உறுப்புகளாக வளர்ந்தன? படிப்படியே மேல்நிலை அடைந்த உயிர்களிற் பல இவ்வுலகிற் காணப்படுகின்றன. குட்டிக்குப் பால் கொடுக்கும் உயிர்களில் மிகக்கீழ் நிலையிலுள்ளவை தாராச் சொண்டுடைய நீர் அகழான் (Duck**illed water mole.), முள் மயிருள்ள எறும்பு தின்னி (Porcupine ant-eater) என்பவை. இவ்விரண்டு வகை உயிர்களும் ஆஸ்திரேலியாவிற் காணப்படுகின்றன. இவைகளின் கழிவுப் பொருள்கள் வெளியே செல்வதற்கு ஒரு வாயில் மாத்திரம் உண்டு. இவ்வுயிர்களில் ஒன்றுக்கு மயிருண்டு; மற்றதுக்கு முள் உண்டு. இவை முட்டை இடுகின்றன. அம் முட்டைகள் ஊரும் பிராணிகளின் முட்டைகளைப் போலவே வெய்யில் வெப்பத்தால் பொரிக்கின்றன. குஞ்சுகள் முட்டைக்குள் இருந்து வெளியே வந்தபின் தாய் முதுகைக் கீழே திருப்பிக்கொண்டு கிடக்கின்றது. குட்டிகள் தோலிலுள்ள பெரிய சில துவாரங்கள் வழியாக உணவை உறிஞ்சுகின்றன. அத் துவாரங்களின் கீழ் உணவுச் சத்துப்பொருள் உள்ளது. இத் துவாரங்களிலிருந்தே குட்டிகள் பால் உறிஞ்சும் முலைக்காம்புகள் தோன்றின. வேறு உயிர்கள் இதற்கு அடுத்த படியிலுள்ள வளர்ச்சியைக் காட்டுகின்றன. தென்னமெரிக்காவில் ஒப்பாசும் (Opossum) என்னும் அணில் போன்ற உயிரும் எறும்பு தின்னிகளும் வாழ் கின்றன. சிறிய எலி, முயல், அணில், தாஸ்மேனிய ஓநாய், கங்காரு முதலியவை குளிர்கால முடிவில் பிழைத்திருந்த குட்டிக்குப் பால் கொடுக் கும் விலங்குச் சந்ததியிலுள்ளவை. அவைகளுட் சில மரத்திலும், சில நிலத்திலும் வளை தோண்டியும் வாழ்ந்தன. இவைகட்குக் குட்டிக்குப் பால் கொடுக்கும் உறுப்புகள் வளர்ந்தன. அவை அதற்குப்பின் முட்டையிட வில்லை. தாயின் வயிற்றினின்றும் வெளியே வந்தவுடன் தாமாக உணவு தேடி உண்டு வாழக்கூடிய நிலையில் அவை குட்டிகளை ஈனவில்லை. குட்டிகள் தாய் வயிற்றினின்றும் உதவியற்ற நிலையில் வெளியே வந்தன. ஒரு வெள்ளாட்டின் பருமையுள்ள கங்காருவின் குட்டி ஒரு அங்குலப் பருமையுடையது. குட்டி தாயின் வயிற்றிலுள்ள பைக்குள் விழுந்தது. வெளியே பாயக்கூடிய பலம் அடையும் வரையும் அது இருந்தது. ஒரு அங்குலப் பருமையுடைய கங்காருக் குட்டி தாயின் பைக்குள் இருந்து பால் குடித்து வளர்கின்றது. இவ் வகை விலங்குகளின் முலைக் காம்பு பெரிதாய் வளர வளர விலங்குகளும் மேல் நோக்கி வளர்ந்தன.
விலங்குகளின் குட்டிகள் தாய்ப்பாலோடு தமது குலமுன்னோர் பயின்றிருந்தவைகளை எல்லாம் இயற்கை உணர்ச்சி(instinct) ஞாபகமாக உறிஞ்சுகின்றன. தாயினாலேயே மூளை வளர்ச்சியடைந்தது. அவ் வளர்ச்சி அவைகளின் இனத்திடத்துப் பற்றை உண்டாக்கிற்று. தாயன்பு காரணத்தி லிருந்தே விலங்குகள் பொதுப் பாதுகாப்பின் பொருட்டுக் கூட்டமாகத் திரிகின்றன.
** பாதையில் பிரிவு**
கடலிலும் குட்டிக்குப் பால் கொடுக்கும் விலங்குகள் வாழ்கின்றன. அவை கடல் நாய்(seals), திமிங்கிலம், வால்ரஸ்(walrus) என்பன. வால்ரஸ் நீர்நாய் இனத்தைச் சேர்ந்தது. இதற்கு யானையின் தந்தங்கள் போல வளர்ந்த பற்களுண்டு. இவைகளால் அது புற்றுகளை நன்றாகத் தோண்டி நண்டு களையும், நத்தைகளையும் பிடித்துத் தின்னவும், பனிக்கட்டிமேல் ஏறவும் தன் இனத்தவைகளோடு எதிர்த்துச் சண்டையிடவும் முடியும். கடற்பசு சூடான நாடுகளிலுள்ள ஆழமற்ற பரந்த வாவிகளிலும், குடாக்கடலிலும் ஆறுகளிலும் வாழும். பசுமாடுகள் புல்வெளிகளில் புல் மேய்வதுபோல இவை கடலின் கீழுள்ள தாவரங்களை உண்கின்றன. வட பசிபிக் கடலில் வாழ்ந்த கடற் பசுக்கள் அவற்றிலிருந்து கிடைக்கும் எண்ணெயின் பொருட்டுக் கொல்லப்பட்டன.
தண்ணீரில் வாழும் விலங்குகளில் மிகப் பெரியது திமிங்கிலம். இது மீனினத்தைச் சேர்ந்தது என்று சிலர் நினைக்கின்றனர். மாடு அல்லது குதிரை எப்படி மீன்களல்லவோ அப்படியே திமிங்கிலமும் மீனன்று.
ஊர்வன முட்டையிலிருந்து வெளியே வந்தவுடன் மேல்காற்றை அடைய விரும்புகின்றன. அவை விரும்பியவாறே ஒரு வகையில் அடைந் தன. பறக்கும் பல்லிகளும் பறக்கும் முதலைகளும் சவ்வு சம்பந்தமான செட்டைகள் உடையனவாயிருந்தன. அவை வளைந்து வளைந்து பறப்பதும் செட்டையை அடித்துக் கொள்வதும் உண்மையான பறத்தல் ஆகமாட்டாது.
விலங்குத் தன்மையுள்ள உயிர்களிற் பல முட்டைகள் இட்டுக் கொண்டிருந்தன. அவை உண்மையான விலங்குகளாக மாறுவதற்கு உடம்பில் மயிர்த்துவாரங்களை உண்டாக்க முயன்று கொண்டிருந்தன. ஒப்பாசம், எலி, அகழான், முயல் என்பவை குளிர்கால முடிவிலிருந்து வாழ்வதற்கு மிக முயன்றுகொண்டிருந்தன. உண்மையான பல்லிகள் மிகச் சுறுசுறுப் படைந்தன. ஊர்வனவிற் சில பறக்கும் பல்லியைப் போல ஆகாயத்துக்குத் துரத்தப்பட்டிருக்கலாம். அவை பறக்கும் பூச்சிகளை அல்லது பறக்கும் மீன்களைப் பிடித்து உண்ண அல்லது தமது பகைகளிலிருந்து தப்பிக்கொள்ள அவ்வாறு செய்திருக்கலாம். வானத்திற் பறந்த பல்லிகளிலிருந்து முதன்முதற் பறவைகள் தோன்றின. முதல்முதல் தோன்றிய பறவை பல்லிக்கும் விலங்குக்கும் இடைப்பட்டதாயிருந்தது. பறக்கும் பல்லிகள் விரல்களிடையே சவ்வை வளர்த்திருந்தன. பறவைக ளாக மாறிய ஊர்வன முன்னங்கால்களைச் செட்டைகளாக மாற்றிக் கொண்டன.
விலங்குகள் உடலில் மயிரை எவ்வாறு வளரச் செய்தனவோ அவ்வாறே பறவைகளும் இறக்கைகளை வளரச் செய்தன. பல்லிகளின் உடலிற் கிடந்த செதில்கள் பிரிந்து மெதுவடைந்து மிருதுவான தூவிகள் அல்லது இறகுகளாயின. மிகப் பழங்காலப் பறவைக்கு ஊர்வனவுக்குப் போல கீழ்மேல் வாய்களிற் பற்களுண்டு. பல்லியாயிருக்கும் போது இருந்த அதன் கால்கள் செட்டைகளின் வெளியே தெரிந்தன; அது பறவையிலும் பார்க்கப் பல்லி போன்ற தோற்றமுடையது. இத் தோற்றம் அது பறவையை யும் பல்லியையும் பிரிக்கும் தோற்றத்தைக் கடந்தமையைத் தெளிவாகக் காட்டுகின்றது.
பறவைகளின் இருதயம் பல்லிகளின் இருதயத்திலும் பார்க்கத் திருத்தமுடையது. பல்லிக்கு மூன்று அறைகளுடைய இருதயமுண்டு. ஆனால் அது நன்றாக இரத்த ஓட்டஞ் செய்வதில்லை. பறவையின் இருதயம் இரண்டறையுள்ளது. அவ்வாறிருந்தபோதும் அது நன்றாக இரத்த ஓட்டஞ் செய்கின்றது. இருதயத்தின் இரண்டு பகுதிகளும் வெவ்வேறாக இருக்கின்றன. நரம்புகளின் இரத்தமும் நரம்புக் குழாய்களின் இரத்தமும் கலக்கமாட்டா. பறவை விலங்கைப்போல விவேகத்தை வளர்த்துக்கொள்ள முடியாது; குட்டியீனாது முட்டையிடுவதே அதற்குக் காரணம். அதற்குப் பால் கொடுக்கும் உறுப்புகள் இல்லையாயினும் அது பல்லிகளிலும் பார்க்க அதிகம் தாயன்பை வளர்த்துள்ளது. பறவை தன் குஞ்சுகளுக்கு இரைதேடிக் கொடுத்தல், அவைகளுக்காக எதிரிகளுடன் போராடுதல் போன்றவை பறவைகளின் தாயன்புக்கு எடுத்துக்காட்டுகளாகும். பறவைக்கு ஊரும் உயிர்களுக்குடையவை போன்ற கண்களுண்டு. பாம்பு தனது பார்வை யினால் பறவைகளை மயக்கும்(hypnotize). பறவையின் கண்கள் விலங்கு களின் கண்களிலும் பார்க்க விரைவும் கூர்மையும் உடையன.
குட்டிக்குப் பால் கொடுக்கும் உயிர்களுக்கு அண்மையிலுள்ளது மாடப்புறா. குஞ்சு பொரித்ததும் தாய் தந்தை என்னும் இரண்டும் குஞ்சு களுக்குத் தமது தொண்டையிலுள்ள பையிலிருந்து வரும் ஒருவகைப் பால்போன்ற இரையை ஊட்டுகின்றன. உணவு கொடுக்கப்படும் பருவத்தில் புறாக் குஞ்சு இறந்துவிட்டால் அவை அவ் வுணவுப் பொருளை வெளியே உகுத்துவிடுகின்றன. கன்றுக்குட்டி இறந்துவிட்டால் தாய்ப் பசுவின் மடி விம்மி எப்படி வேதனை உண்டாகின்றது? இத் தன்மையினாலேயே பறவைகள், பல்லிகளும், விலங்குகளுமல்லாத புதுவகை உயிர்கள் என்று கூறுகின்றோம்.
ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் காற்று, பறவை, விலங் குகள் மூலம் விதைகளைப் பரப்பக்கூடிய அளவுக்குத் தாவரங்கள் வளர்ந் தன. கடல்களுக்கு அப்பாலுள்ள இடங்களுக்குப் பறவைகள் விதைகளைக் கொண்டு சென்று பரப்பின. ஆனால் தாவரங்கள் இடம்விட்டுப் பெயர வில்லை. தாவரங்களின் விரி வளர்ச்சி(evolution) ஒரே இடத்தில் நின்று உண்டானது.
பறவைகளின் விரிவளர்ச்சி தாவர வளர்ச்சி முறைக்கு மாறு பட்டது. இதனை ‘அசைவு விரி வளர்ச்சி’ எனக் கூறலாம். ஆதி கால ‘அல்கே’ பாதி அசையும் உயிர்(animal) ஆகிப் பின் முழு அசையும் உயிராக மாறிற்று. தாவரம் தாவரமாகவே வளர்ச்சி யடைந்தது. பகுதி தாவரமும் பகுதி அசையும் உயிருமாக மாறிய உயிர் அசையும் உயிர்ப் படியைப்பற்றி வளர்ந்தது. பல்லிகள் வால்களுடன் செட்டைகளைப் பரப்பி ஆகாயத்தில் பறந்த போது பறவைகள் விலங்கு களின் தொடர்பை விட்டுப் பிரிந்தன. பறவையும் விலங்கும் ஒரே ஊர்வனவிலிருந்து, தோன் றியபோதும் விலங்குகள் பறவை களிலிருந்து தோன்றவில்லை.
பழங்காலப் பறவைகளுக்குப்பின் செட்டைகளில்லாத பறவைகள் தோன்றின. அவை தீப் பறவையைப்போலக் குறுகிய செட்டைகளும் வால்களு முடையவனவாய்ப் பறப்பதற்குப் பதில் ஓடின. இப் பறவைகள் சிலவற்றுக்கு ஆமைகளுக்கிருப்பன போன்ற பற்களிருந்தன. முற்காலத்தில் வாழ்ந்த மிகப் பெரிய பறவைகள் பறப்பதற்குப் பதில் ஓடின. இக்காலத் தீக் கோழியை முற்காலப் பறவையோடு ஒப்பிட்டால் முற்காலப் பறவை கோழியும், தீப்பறவை அதன் குஞ்சும் போன்றதாகும். ஓடும் பறவை களுக்குக் கால்கள் வளர்ச்சியடைந்தன. பின்பு இன்று காணப்படுவன போன்ற சிறிய பறவைகள் தோன்றின.
** நகமும் பல்லுமுள்ள உயிர்கள்**
குளிர்காலத்திற்குப்பின் தோன்றிய கோடைகாலம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளின்பின் மறைந்தது. கோடைகாலத்தில் கடலிலிருந்த உயிர்கள் பல வெளியே வந்து வாழ்ந்தன. முன் காணப்பட்ட ஊர்வனவுக்குப் பதில் இப்போது விலங்குகள் தோன்றியிருந்தன. தாவரங்கள் பல குடும்பங்களாகப் பிரிந்து அழகிய பூக்களைப் பூத்தன. பூக்கள் தோன்றுதலும் வண்ணாத்திப் பூச்சிகளும் தேனீக்களும் தோன்றின.
தாவரம் மீன் ஊர்வன பறவை என்பவற்றைப் போல ஒன்றுக்குப்பின் ஒன்றாகப் படிமுறையான விரிவளர்ச்சி விலங்குகளிடையும் தோன்றின. இவ்வாறு தோன்றிய புதிய இனங்கள் குளம்பும் நகமும் பெற்றிருந்தன.
விலங்குகளைப்போன்ற உயிர்கள் வெப்பகாலத்தில் நன்றாக உண்டு கொழுத்து வளரும். இவைகளுள் மிகக் கீழ்ப்பட்ட இனங்கள் ஆஸ்தி ரேலியாவிலேயே பரவின.
ஒருகாலத்தில் ஆஸ்திரேலியாவும் ஆப்பிரிக்காவும் பிரிக்கப்படாத கண்டமாயிருந்தன. சடுதியாக எரிமலைகள் குமுறி நிலம் நடுங்கிற்று. அப்பொழுது ஆஸ்திரேலியாவும் ஆப்பிரிக்காவும் இரண்டு கண்டங்களாகப் பிரிந்துபோயின.
முட்டையிட்டவும், முற்றாத குட்டிகளை ஈன்றவும் விலங்குகளும் ஆஸ்திரேலியாவில் தனித்து விடப்பட்டன. ஆப்பிரிக்காவிலும் ஆசியா விலும் தனித்து விடப்பட்ட விலங்குகள் ஆஸ்திரேலியாவுக்குப் போக முடியவில்லை. பல்லிகள் எப்படி விலங்குகளாக மாறும் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஆஸ்திரேலிய விலங்குகள் இன்று உள்ளன.
பல்லிகள் விலங்குகளாக மாறியபோது அவை மரங்களில் வாழும் சிறிய உயிர்களாக விருந்தன. கோடைகாலம் வந்தபோது பூச்சிகள் அதிகம் பெருகின.1 மிகப் பெரிய சிலந்திகளும் தோன்றி வாழ்ந்தன; அட்டை, மயிர்ப் புழு, புழு முதலிய எண்ணிறந்த உயிர்கள் இருந்தன. பூச்சிகளை உண்ணும் விலங்குகள் பெரியனவாய் வளரத் தொடங்கின. பெரியனவாக வளர்ந்த விலங்குகளுட் சில மரத்தைவிட்டு இறங்கி நிலத்தில் வாழ்ந்தன. சில விலங்குகள் ஆரம்ப முதல் தாவர உணவு கொள்வனவாயிருந்தன; சில புல் மேய்ந்தன; சில பழங்களையும் விதைகளையும் உண்டன. அக் காலத்தில் ஈரப்பலா, தெங்கு, வெப்ப மண்டலங்களில் வளரும் பழ மரங்கள் முதலியன சிலவற்றுக்கு உணவளித்தன.
ஒருநாள் விலங்கு ஒன்று பூச்சிபோற் காணப்பட்ட ஒன்றைப் பிடித்தது. அது பூச்சியன்று; ஒரு அகழான். அது அவ் வகழானை வாய்க்குள் வைத்து மென்றது. அது உருசியாக விருந்தது. அது முதல் சில விலங்குகள் ஊனுணவை விரும்பின. இப்பொழுது தாவரமுண்ணும் விலங்குகள் ஊன் உண்ணும் விலங்குகள் என்னும் பிரிவுகள் உண்டாயின. பல்லிகள் தோன்றி யிருந்த காலத்தைய வரலாறு இன்னுமொரு முறை நிகழ்வதாயிற்று. ஊனுண்ணும் விலங்குகள் தாவரம் உண்ணும் விலங்கு களை வேட்டையாடின. சிலவற்றின் உடம்பு பெரிதாக வளர்ந்தது. அவைகளுக்குக் காண்டாமிருகத்துக்குக் கொம்பும், யானைக்குத் தந்தமும் இருப்பது போல ஆயுதங்கள் இருந்தன. விலங்குகளுக்குக் கால்கள் ஓடவும், நடக்கவும், நிற்கவும் பயன்பட்டன. விரிவளர்ச்சி முறையில் கால்கள் விரைவாக ஓடக்கூடியனவாக வளர்ந்தன. பல்லும் நகமுமுள்ளவைகளுக்கு அவை பலமடைந்தன. அவைகளின் தேவையில்லாத விரல்கள் மறைந்து போயின. ஊனுண்ணும் விலங்குகளை விட்டு மற்றைய விலங்குகள் தூரத்தே ஓடிச் சென்றன. ஆகவே ஊனுண்ணும் விலங்குகள் தமது உணவை அதிக பிரயாசையுடன் பெறவேண்டு மென்றுணர்ந்தன.
முற்காலத்தில் சடுதியாகப் பெரிய மலைகள் தோன்றின; கண்டங்கள் மறைந்தன; புதிய நிலங்கள் தோன்றின. அக் காலத்தில் இவ் விலங்குகள் கண்டங்கள்தோறும் அலைந்து எங்கும் பரவி வாழ்ந்தன.
ஊர்வன தோன்றி வாழ்ந்த செழிப்பான காலத்தில் முதலை இனங்களும், மலைப்பாம்புகளும், பெரிய பாம்புகளும் தோன்றின. ஊன் உண்ணும் விலங்குகளுக்குத் தப்பி ஓடும் தாவரமுண்ணும் விலங்குகள் தாம் இலகுவில் ஒடக்கூடியதாகத் தமது ஐந்து விரலுள்ள பாதங்களின் வடிவை மாற்றிக் கொண்டன. தாவரம் உண்ணும் விலங்குகள் நாலு கால்களில் உலாவுவன; அவை விரல்களை உள்ளுக்கு இழுத்துக் கொண்டன.
தற்காப்பின் பொருட்டுத் தோலை அல்லது கொம்பை வளர்த்துக் கொள்ளாத விலங்குகள் மோப்பம் பிடிக்கும் உணர்ச்சியை வளர்த்துக் கொண்டன. மான், ஒட்டகம், காட்டுக்குதிரை, ஆடு, மாடு, பன்றி முதலியவை தமது விரல்களைப் போக்கிக்கொண்டன. புல் மேயாத விலங்குகளுக்கு நான்கு விரல்களும், ஐந்து விரல்களுமிருந்தன. புல் மேயும் விலங்குகளின் பாதங்கள் வட்டவடிவும் கொம்புத் தன்மையும் வேகமா யோடக் கூடியனவு மாயின. இவ் விலங்குகள் பெரியன பெரியனவாய் வளர்ந்தன. மிக முற்காலத் தில் பன்றி போன்றிருந்த விலங்கு யானை. தொடக்கத்தில் இதற்குத் தும்பிக்கை இல்லை; நீண்ட மூக்கு மாத்திரம் இருந்தது. இவ் விலங்கு விரைவிற் பெரிதாக வளர்ந்தது. பின்பு அதற்கு அச்சம் விளைக்கக்கூடிய தந்தங்கள் வளர்ந்தன; அது விலங்குகளுக்குப் பயந்து ஓடவில்லை; அது தனது ஐந்து விரல்களையும் போக்கிக் கொள்ளவில்லை. காண்டாமிருகம் போன்ற விலங்குகள் உடம்பில் கேடகம் போன்ற தோலை வளர்த்துக் கொண்டன; அவைகட்கு மண்டையில் மூன்று கூரிய கொம்புகளும் வளர்ந்திருந்தன. அவை தமது விரல்களைக் குளம்பாக மாற்றிக் கொண்டன. காண்டாமிருகம் எதிரிக்குப் பயந்தோடுவதற்குப் பதில் அதனை எதிர்த்துத் தாக்கும். சீல் (seal) என்னும் கடல் நாய் கரடிக்கு இன முடையது. இது கடலில் இறங்கி மீன்களை உண்ண விரும்பிற்று. இது கடலில் நீந்திச் செல்லும் பொருட்டு முன்னங் கால்களைத துடுப்புகள் போல மாற்றிக் கொண்டது.
பன்றியிலிருந்து ஹிப்படமஸ் என்னும் நீர் யானை, தபிர்(Tapir) முதலிய மற்றைய இனங்கள் தோன்றின. இவைகட்குத் தடித்த தோல் உண்டு. நீர் யானை நீரில் தங்கி ஊனுண்ணும் விலங்குகளுக்குத் தப்பிக் கொண்டது.
ஊனுண்ணும் விலங்குகள் மிகக் கொடியவை. அவைகளுக்குத் திருந்திய பற்களும் நகங்களும் வளர்ந்தன. அவைகளின் எலும்புகள் இலேசாக விருந்தன. ஆகவே அவை இரைமீது பாய்ந்து அதனைப் பிடிக்கக் கூடியதாக விருந்தன.
கோடைகாலத்தில் தும்பிக்கை இல்லாத யானைகள் வெப்ப மண்டலக் காடுகளில் தங்கி நிலைத்தன. மூன்று கொம்புடைய காண்டா மிருகங்கள் ஆப்பிரிக்கக் காடுகளில் வாழ்ந்தன. ஊன் உண்ணும் விலங்குகள் பயங்கர மான வடிவை அடைந்தன. ஒட்டகம், குதிரை, பன்றி முதலியன இவை களின்றும் பிரிந்து வாழ்ந்தன. முற்காலத்தில் பாதி நாயும் பாதி கழுதைப் புலியும் போன்ற ஒரு வகை மிகப் பெரிய விலங்கு வாழ்ந்தது. இதிலிருந்து நாய் தோன்றியிருக்கலாம்.
பூனையின் முன்னதுகளான பெரிய விலங்கினங்கள் பல இன்றும் வாழ்கின்றன. இன்றைய விலங்குகளின் முன்னதுகளான வேறு பல விலங்கு களும் வாழ்ந்தன. ஊனுண்ணும் விலங்குகள் மிகப் பலவாகப் பெருகின. இவைகளிலிருந்து பிழைப்பதற்குத் தமது ஓட்டத்தை நம்பியிருந்த விலங்குகள் அதனைக் கைவிட்டன. அகழான், முயல், எலி இனங்கள் போன்றவை நிலத்துள் மறைந்து வாழ்ந்தன. ஒப்போசும்(opossum), சிலாத் (Sloth) என்னும் கரடி போன்றவை மரங்களில் வாழ்ந்தன. வெளவால் தனது பாதுகாப்பை விரும்பி இராக்காலத்தில் சஞ்சரித்தது. கடல்நாய் இனங்கள் நீருள் மறைந்தன. நீர் யானை, பீவர்(beaver) முதலியவை ஆறுகளில் புகுந்தன. விரல் பெற்றிருந்த விலங்குகளால் நின்று போரிட முடியவில்லை. ஆகவே அவை விரல்களைக் குளம்புகளாக மாற்றிக் கொண்டு ஓடின. வாழ்க்கை முன்போல் போராட்டமுடையதாக மாறிற்று. விலங்குகள் பல்லி இனங்களினும் பார்க்க விவேகமுடையன. அவை நூறு வகையாக வேட்டை யாடவும், வேட்டையாடுவனவினின்றும் தப்பி ஓடவும் தமது விவே கத்தைப் பயன்படுத்தின. விலங்குகளின் உலகம் இவ்வாறு இரத்தக்கறை படிந்ததாகவிருந்தது.
வேட்டையாடும் விலங்குகளுள் நாயும் பூனையும் வெவ்வேறு குடும்பங்களாகப் பிரிந்தன. நாய்க் குடும்பத்திலிருந்து கரடி, ஓநாய், நரி, கழுதைப்புலி, நீர்நாய் முதலியவை தோன்றின. சிங்கம், புலி, சிறுத்தை, கீரி முதலியவை பூனைக் குடும்பத்தைச் சேர்ந்தவை. விலங்குகள் ஒன்றை ஒன்று கொன்று வாழும் காலத்தில் அவை மோப்பம் பிடிக்கும் உணர்ச்சியை வளர்த்துக் கொண்டன. அப்பொழுது சில விலங்குகள் கஸ்தூரி புனுகு போன்ற மணமுள்ள பொருள்களைத் தமது உறுப்புகளினின்றும் வெளிப் படுத்தின. இம் மணப்பொருள்கள் தொலைவிலிருக்கும் தமது கூட்டத் துக்குத் தாமிருப்பதை அறிவித்தற்குப் பயன்பட்டன. உலகில் பற்பல நிறங் களுள்ள தாவரங்கள் வளர்ந்தன. இப்பொழுது தேவாங்கு, குரங்கு முதலிய சிறிய விலங்குகள் தோன்றலாயின.
பல்லாயிரக்கணக்கான விலங்கு களும், ஊர்வனவும் பூச்சிகளும் பெரு கின. பூனைக் குடும்பத்திலிருந்து சிங்கம், புலி என்னும் இருவகை விலங் குகள் தோன்றி வாழ்ந்தன. சிங்கத்தின் வாலும், சிவந்த மயிரும், மிகப் பெரிய உடலுமுடைய ஒருவகைப் புலிகள் தோன்றியிருந்தன. இவை தாவர முண்ணும் விலங்குகளைப் பெரிதும் கொன்று தொலைத்தன. இறுதியில் எல்லாத் தாவரமுண்ணும் விலங்குகளும் விரல்களை உள்ளுக்கிழுத்துக் குளம்பை வளர்த்துக் கொண்டன. அவை இப்பொழுது நன்றாக ஓடின. சிங்கப் புலிக்கு உண்ண உணவு கிடைக்க வில்லை. ஆகவே அது இறந்து மறைந்துபோயிற்று. அவ் விலங்கின் வாடை தூரத்தில் வீசிற்று. அதனைத் தூரத்தே நின்று மேய்ந்துகொண்டு நின்ற விலங்குகள் மோப்பம் பிடித்து ஓடி மறைந்தன. தகுதியுடையது நிலைபெறும் வழிகளில் இதுவும் ஒன்று.
விலங்குகள் நான்கு கண்டங்களிலும் அலைந்து திரியும்போது யானைக்குத் தும்பிக்கையுண்டாயிற்று. முன்பு இதற்கு நீண்ட மூக்கு மாத்திரம் இருந்தது. யானை பன்றிக் குடும்பத்தைச் சேர்ந்தது. அது மூக்கை நீட்ட முயன்று வந்தபோது மூக்கு தும்பிக்கையாக வளர்ந்தது. யானைக்கு உணவு காடுகளிற் கிடைத்தது.
விலங்குகள் எல்லாவற்றுள்ளும் யானை புத்திக் கூர்மையுடையது. அது கூட்டமாக வாழும் அறிவை வளர்த்தது. அதற்குத் தந்தங்களும் வளர்ந்தன. பின்பு வாலில்லாக் குரங்கு போன்ற ஒரு விலங்கு தோன்றிற்று. இதன் ஒரு சந்ததி வாலில்லாக் குரங்கு; மற்றது மனிதன். கருப்பத்திலிருக்கும் குழந்தைகளுக்கு உடலில் மயிரும் வாலும் தோன்றுகின்றன. குழந்தை பிறப்பதற்கு முன் வால் மறைந்து போகின்றது. இவ்வாறு அணுவிலிருந்து அல்கேயும், அல்கேயிலிருந்து மீனும், மீனிலிருந்து நீரிலும் நிலத்திலும் வாழ்வனவும் பல்லிகளும், பல்லி களிலிருந்து விலங்குகள் பறவைகளும் தோன்றின; பின்பு விலங்கிலிருந்து மனிதன் தோன்றினான். மனிதன் தோன்றி வளர்ச்சியடைந்து இன்றைய மனிதன் ஆனான் என்பதை விளக்கும் வரலாறு ஆதிமனிதன் என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது.
** உயிர்களின் வாழ்க்கைப் போராட்டமும் அதற்கேற்ற வாய்ப்புகளும்**
உயிர்களின் வாழ்க்கை இடைவிடாத போராட்டம் மலிந்த தாயிருக்கின்றது. போராட்ட மென்பது ஈண்டு வருந்தி உழைத் தலைக் குறிக்கும். உயிர்கள் போதிய உணவைப் பெறும் பொருட்டு இடைவிடாது முயல்வ தோடு தம்மைப் பிற உயிர்கள் கொன்று தின்றுவிடாதபடியும் காப்பாற்றிக்கொள்ள வேண்டி யிருக்கின்றது. அவை, தம்மை வாழுமிடங்களின் வெப்ப தட்ப நிலைகளுக்கேற்பவும் சூழல்களுக் கேற்பவும் தகுதிப்படுத்திக் கொள்ள வும் வேண்டும். இவ்வகைப் போராட்டங்களுக்கு உதவும் பாதுகாப்புகளை இயற்கையாகிய அன்னை தனது குழந்தைகளாகிய உயிர்களுக்கு அளித்திருக்கின்றது.
இயற்கை இடைவிடாது உயிர்களிடையே மாற்றங்களை உண்டாக்கி வருகின்றது. அம் மாற்றங்கள் மிகத் தாமதப்பட்டு நிகழ்வதால் அவைகளை அறிந்து கொள்வதற்கு மனிதனின் வாழ்நாள் போதாமல் இருக்கின்றது. இன்று வாழும் சில உயிர்களின் முற்சந்ததிகளை நோக்குவோமாயின் இக் காலத்தன எவ்வெம் மாற்றங்களை அடைந்திருக்கின்றனவென்று நாம் எளிதில் அறிந்துகொள் வோம். முற்கால உயிர்கள் தமது வரலாறுகளைக் கற்பாறைகள் மீது விட்டுச் சென்றிருக்கின்றன. ஒவ்வொரு இன உயிர்களும் வாழ்க்கைக்குத் தகுதியு டையனவா யிருக்கும்படி ஒவ்வொரு சந்ததியின் தந்தை தாய்களை எவ்வாறு இயற்கை தெரிவு செய்கின்றது? ஒவ்வொரு உயிரும் இவ்வுலகில் நிலைத்திருப்பதற்கு முயன்று வருதலினாலேயே இத் தெரிவு செய்யப்படு கின்றது. பெருந்தொகை உயிர்கள் பிறக்கின்றன; ஆனால் அவைகளுட் சந்ததியைப் பெருக்கக்கூடிய பருவம் எய்தும்வரை பிழைத்திருப்பன சிலவே. வலிமையும், கெட்டித்தனமும், சாக்கிரதையும் உள்ள உயிர்கள் வாழ்தற்குத் தகுதியும், உணவைப் பெறுவதில் அனுகூலமும், அபாயத்தைத் தடுக்கும் வல்லமையும் உடையனவாகின்றன. ஆகவே இவ்வுயர்ந்த பண்புக ளுடைய உயிர்கள் நீண்டகாலம் வாழ்ந்து தமது மேலான தன்மைகளைத் தமது சந்ததிகளுக்கும் அளிக்கின்றன. அவைகளே தங் குழந்தைகளுக்கு நல்லுணவு கொடுத்து வளர்க்கக்கூடியன. ஆகவே அக் குழந்தைகள் நல்வாழ்க்கையைத் தொடங்கும்.
இது எப்பொழுதும் உண்மையானதன்று. மிகப் பலமும், போர்க்குண மும் உடைய விலங்குகள் இன்னொரு இன விலங்குகளாற் கொல்லப்பட லாம். சுற்றிடங்களிலே சடுதியில் உண்டான வெப்பதட்பநிலை மாற்றம் தகுதியுடையவைகளையும் தகுதியற்றவைகளையும் ஒரு சேர அழித்தும் விடலாம். ஆனால் பெரும்பாலும் வாழ்க்கைக்குத் தகுதி யுடையது எது? அதுவே நிலைபெறுகின்றது. ஒவ்வொரு இன உயிர்களும் நீண்டகாலம் ஊறு இன்றி வாழ்தற்கேற்ற வழியில் முயன்று, வாழ்தற் பொருட்டு மேலும் மேலும் தகுதியுடையனவாய் வந்திருக்கின்றன.
வாழ்க்கைப் போராட்டமென்பது துன்பமின்றி இன்பமாய் வாழ்தற்குச் செய்யப்படும் எத்தனமாகும். விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் இரை யாகும் உயிர்கள் தமக்கு நேரவிருக்கும் ஆபத்தை உணர்வதில்லை. ஆபத்து அணுகும் வரையில் அவை பயம் அடைவதும் இல்லை. மரணம் அவைகளை விரைவாகவும், சடுதியாகவும், அணுகி நோவின்றிக் கொன்று விடுகின்றது.
பயப்படும் இயல்புடைய முயல்கள் ஆபத்துக்கள் பலவற்றின் இடையே மாலை நேரங்களில் கொல்லைப்புறங் களிலிருந்து விளையாடி மகிழ்வதை நாங்கள் பார்த்திருக்கின்றோம். ஒரு சோடிப் பறவைகள் அதிக நேரம் தேடிப் பூச்சி புழுக்களை எடுத்துக்கொண்டு தமது பசியுள்ள குஞ்சுகளிடம் வருதலைப் பார்க்கின்றோம். அவை தமது கடிய உழைப்பிலும் பார்க்க மகிழ்ச்சியையே பெரிதாகக் கொள்கின்றன என்று தெரிகின்றது.
இன்னும் வாழ்க்கையில் பல போராட்டங்கள் இருக்கின்றன. இவை களை விளங்கிக் கொள்வதற்கு, இயற்கை, உயிர்களுக்கு அளித்திருக்கும் எதிர்ப்புத், தற்காப்பு ஆயுதங்களைப்பற்றி நாம் சிறிது சிந்தித்துப் பார்த்தல் வேண்டும். அவை ஊன் உண்ணும் உயிர்களின் பயங்கரமான பற்களும், நகங்களும், இரைகளைப் பிடிக்கும் பறவைகளின் வளைந்த அலகும் கூரிய நகங்களும், பாம்புகளின் நச்சுப் பற்களும், சிலந்தியின் வாயும், பூச்சிகளின் கொடுக்குகளும், இன்னும் இவைபோன்ற ஆயிரக்கணக்கானவைகளு மாகும்.
எதிர்ப்புக்குரிய பல ஆயுதங்கள் இருப்பன போலவே தற்காப்புக் குரிய பல ஆயுதங்களும் இருக்கின்றன. இயற்கை, பாரபட்சமின்றி எல்லா உயிர்களுக்கும் தாயாக விருக்கின்றது. அழுங்குக்கு எலும்புபோன்ற வயிரமான கவசமிருக்கினறது. முட்பன்றிக்கு வயிரிய ஈட்டிபோன்ற முட்கள் இருக்கின்றன. வட அமெரிக்காவில் பூனையின் பருமையுடைய இஸ்கங்கு (Skunk) என்னும் ஒருவகை விலங்கு உண்டு. அதனை எதிரிகள் துரத்திச் சென்றால், அல்லது அணுகினால் அது எவரும் அணுகமுடியாத மிக்க கொடிய நாற்றமுடைய ஒருவகை நீரை வெளியே கொப்பளிக்கின்றது. இலாமா என்னும் இன்னொரு தென்னமெரிக்க விலங்கு தனக்குத் தொந்தரவு கொடுப்பவர்மீது அதிக எச்சிலை உமிழ்கின்றது. தேரை போன்றவைகளின் மாமிசம் கசப்பாயிருப்பதால் அவற்றை மற்றைய உயிர்கள் அதிகம் உண்பதில்லை. நண்டுகளின் குறடு போன்ற கால்கள் மற்ற உயிர்களுக்கு அச்சம் விளைக்கத் தக்கன. அவைகளை வயிரமான கவசம் மூடியிருக்கின்றது. அவைகளின் ஓடு வளரத்தக்கதன்று. நண்டு, வளரும் போது ஓட்டை உடைத்துக்கொண்டு வெளியே வருகின்றது. அப்பொழுது அதன் மேற்புறம் மென்மையாகவும், பாதுகாப்பில்லாமலும் இருக்கின்றது. தபதி நண்டு(Hermit Crab) என ஒரு வகை நண்டு உண்டு. அதன் பின்பாகம் வயிரமான ஓட்டினால் மறைக்கப்பட்டிருக்கவில்லை. இன்னொரு கடலூரி யின் ஓட்டுக்குள் நுழைந்து கொள்ளாவிடின் அது மற்ற உயிர்களுக்கு எளிதில் இரையாகிவிடும். அது தான் நுழைந்து வாழும் ஓட்டையும் செல்லும் இடங்களுக்கெல்லாம் கொண்டு செல்கின்றது. ஆபத்துக் காலங் களில் தனது சொந்த ஓட்டுக்குள் நுழைவதுபோல் அது அவ் வோட்டினுள் புகுந்து மறைந்து கொள்கின்றது.
வாழ்க்கைப் போராட்டத்தில் வேட்டையாடுவனவும், வேட்டை யாடப்படுவனவுமாகிய உயிர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பன சூழல்களின் நிறத்தை ஒப்ப உள்ள அவைகளின் நிறங்களேயாகும். இவ்வாறு அவற்றின் நிறம் அமைவதால் அவை இலகுவில் எதிரியாற் காணக்கூடாதனவாய் பல ஆபத்துக்களினின்றும் பிழைக்கின்றன.
எப்பொழுதும் பனிக்கட்டியுள்ள துருவ நாடுகளில் வாழும் உயிர் களின் நிறம் பெரும்பாலும் வெண்மையாயிருக்கும். துருவக் கரடியின் நிறம் வெண்மை அல்லது மங்கிய வெண்மை. மற்றைய இடங்களில் வாழும் கரடிகள் கறுப்பு அல்லது கபில நிறமுடையன.
எல்லாக் காலங்களிலும் மழையில்லாதனவும், சிறிய தொலைவி லுள்ளனவுமாகிய இடங்களில், பருவ காலங்களுக்கு ஏற்றவாறு உயிர்களின் நிறங்கள் மாறுகின்றன. துருவநரி, மலை முயல் முதலியவைகளின் கோடை கால நிறம் நரை அல்லது கபிலம். இந் நிறங்கள் மாரிக்காலத்தில் வெண்மை அடைகின்றன. அவ் விடங்களிற் காணப்படும் சில உயிர்களுக்கு ஆண்டு முழுமையும் கோடைகால நிறம் மாத்திரம் உண்டு. ஆனால் அவை வேறு வகையில் நன்றாகப் பாதுகாக்கப்படுகின்றன. ‘சேபிள்’ என்னும் ஒருவகை விலங்கு மரக்கொம்புகளில் இருந்து வாழ்கின்றது. அதன் கபில நிற மயிரி லும் பார்க்க வெண்ணிறம் எதிரிகளுக்குச் சடுதியில் தோன்றத்தக்கதாக விருக்கும்.
வனாந்தரங்களில் வாழும் உயிர்கள் மண் நிறமுடையன; மண் நிறம் மாத்திரமல்லாமல் இடையிடையே வேறு நிறங்களும் காணப்படும். சிறிது தொலைவில் நின்று அவ்வுயிர்களைப் பார்த்தல் முடியாது. பிறெம்(Brehm) என்பவர் புறாவின் பருமையுள்ள ஒருவகைப் பறவைகள் வனாந்தரங்களில் மனிதனின் வருகையைப் பொருட்படுத்தாது நின்று மேய்தலைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அது பின்வருமாறு: “பறவைகள் மேய்ந்துகொண்டு நிற்பதைக் காணும் அனுபவம் இல்லாத பிரயாணி துப்பாக்கியை எடுத்துக் கொண்டு அவைகளை நோக்கிச் செல்கின்றான். அவை அவனுடைய கண்ணெதிரில் மறைந்து விடுகின்றன. நிலம் அவைகளை விழுங்கிவிட்டது போற் றோன்றுகிறது. தங்களுடைய இறக்கைகளுக்கும் நிலத்துக்குமுள்ள நிற ஒற்றுமையை நம்பி அப் பறவைகள் பதுங்கி இருக்கின்றன. ஒரு கணத்தில் அவை கற்குவியல்களாகவும் கற்களாகவும் மாறிவிட்டன.”
மணல் நிறம் பொருந்திய மேற்பாகம் சில சமயங்களில் நரை நிறமாக வும், சில வேளை ஒளி பொருந்திய மஞ்சள் நிறமாகவும், வரிசையாகப் பிரிந்து ஒடுங்கிய வரைகளும் மெல்லிய கீறும் புள்ளியும் உடையதாகவும் இருக்கும். இவ்வகை நிறம் தொலைப் பார்வைக்குப் புலப்படக் கூடுமென்று ஒருவர் நினைக்கலாம். ஆனால் அந்நிறம் நிலத்தின் நிறமேயாகும். நிலம் பறவையைத் தனது பகுதியாக்கி அதனைப் பாதுகாத்தல் வியப்பன்று.
இவ் வகைப் பாதுகாப்பு நிறமுடைய பூச்சிகள் பலவுண்டு. பல புழுக்கள் தாம் உணவைப் பெறும் மரங்களின் நிறங்களைப் பெற்றிருக் கின்றன. சில பூச்சிகள் உலர்ந்த இலை அல்லது பாசித்துண்டு போல் இருத்தலும் ஆச்சரியப்படத்தக்கது.
ஒருவகை வண்ணாத்திப் பூச்சியின் இறக்கைகளின் மேற்புறம் பிரகாசமான நிறமுடையது. பறக்கும்போது அது நன்றாகக் கண்ணுக்குப் படும். இறக்கைகளை நிமிர்த்திக்கொண்டு மரப்பட்டையில் இருக்கும்போது அதன் கீழ்ப்புறம் வாடிய இலையின் நிறமுடையதாயிருக்கும்.
வண்ணாத்திப் பூச்சிகளிலும் பல வகைகளுண்டு. சில வண்ணாத்திப் பூச்சிகள் உண்பதற்கு விரும்பத்தகா சுவை உடையனவாயிருத்தலின் அவைகளைப் பறவைகள் உண்பதில்லை. ஆகவே அவைகளுக்குப் பாது காப்பு நிறம் வேண்டியதில்லை. ஆகவே அவை கண்ணுக்குப் புலப்படக் கூடிய நிறமுடையனவாயிருக்கின்றன. அவை காணக்கூடியனவாயிருத்த லின், பறவைகள், அவை உண்ணத்தகாதன என்று விரைவில் அறிந்துகொள் கின்றன. பறவைகளால் உண்ணப்படாத வண்ணாத்திப் பூச்சிகள் உள்ள இடங்களில் இன்னொரு இனம் காணப்படுகின்றது. சில சமயங்களில் பல இனங்களும் காணப்படுகின்றன. இவை முன்கூறப்பட்ட வண்ணாத்திப் பூச்சிகளின் நிறத்தைப் பெற்றிருக்கின்றன. ஆனால் இவை முன் இனத்தைச் சேர்ந்தவைகளல்ல. இவ்வகை வண்ணாத்திப் பூச்சிகள் பறவைகள் உண்ப தற்கு நல்லன; ஆனால் பறவைகள் இவைகளை முன்னைய இனத்தினின்றும் பிரித்தறிய மாட்டாமையால் உண்ணாது விடுகின்றன.
ஒவ்வொரு உயிரும் உணவுக்காக ஆடும் போராட்டம் மிகக் கடுமை யானது. சில வண்ணாத்திப் பூச்சிகளின் புழுக்கள் மரங்களில் நெருங்கி யிருந்து இலைகளை உண்கின்றன. இலைகளைத் தின்று ஒழித்தபின் இன்னொரு மரத்தில் ஏறுதற்கு அவை பந்துபோலச் சுருண்டுகொண்டு நிலத்தில் விழுகின்றன. பல நெருங்கியிருந்து உண்கின்றமையின் மிகச் சுறுசுறுப்பும் வலிமையுமுள்ள புழுவே அதிக உணவைப் பெறுகின்றது. பல புழுக்களுக்கு அற்ப உணவு மாத்திரம் கிடைக்கின்றது. அதனால் அவை வண்ணாத்திப் பூச்சிகளாக வளரமாட்டா.
இவ்வகைப் போட்டியைத் தடுப்பதற்கு இயற்கை பலவகை வழிகளை அறிந்திருக்கிறது. ஒன்றோடு ஒன்று இனமுடைய உயிர்கள் வெவ்வேறு வகை உணவை உண்பதால் அவை, ஒரேவகை உணவை உண்ணும் உயிர்களைவிடப் பெருங்கூட்டமாக ஒரே இடத்தில் வாழ்தல் கூடும். இவ் வகை வெவ்வேறு உணவு கொள்ளும் இனங்கள் எலிகளிலும் பறவைகளி லும் அதிகம் காணப்படுகின்றன.
பல உயிர்களுக்கு வாழ்க்கைப் போராட்டம் மிகவும் இலகுவாக்கப் பட்டிருக்கின்றது. குளிர்காலம் தொடங்குதலும் உணவு அருமை ஆகின்றது. அப்பொழுது பல உயிர்கள் உறக்கத்துக்குச் செல்கின்றன. இவை களின் உறக்கம் பல அளவாக உண்டு. நித்திரை போகாதவை சுறுசுறுப்பை இழந்து அடங்கிக்கிடக்கின்றன. அதனால் அவைகளுக்கு முன்னையிலும் குறைவான உணவு போதுமானதாயிருக்கும்.
நித்திரை கொள்ளும் பிராணிகள் வெப்பமான நாளொன்றில் விழித் தெழுந்து சிறிது உணவை உண்டபின் மறுபடியும் தூங்கும். சில பிராணிகள் மாரிகாலத்துக்கென்று உணவைச் சேமித்து வைக்கின்றன. அற்ப நித்திரை கொள்ளும் உயிர்களுள் அணில் ஒன்று. அது, தான் சேமித்து வைத்த விதை களை உண்பதற்கு இடையிடையே விழித்தெழுகின்றது. மர எலி மாரிகாலம் முழுவதும் பசியுடன் உறங்குகின்றது. எலிகள் தானியம் விளைந்திருக்கும் காலங்களில் தானியக் கதிர்களைச் சேகரித்து வைக்கின்றன.
அதிக நித்திரை செய்யும் உயிர்கள் உணவைச் சேகரித்து வைப்ப தில்லை. கோடைகால இறுதியில் அவை அதிக உணவை உண்கின்றன. அதனால் குளிர்காலம் வரும்போது அவை மிகக் கொழுப்படைகின்றன. பின்பு அவை உறங்குவதற்கு மறைவிடங்களைத் தேடிச்செல்லும். துருவக் கரடி பனிக்கட்டியில் குழிதோண்டி அதில் உறங்குகின்றது. முட்பன்றி இலைகளாற் செய்த கூடுகளுள் மறைந்து கிடந்து உறக்கம் கொள்ளும். வெளவால் இருண்ட குகைகளுக்குள் தலைகீழாகத் தொங்கும். தவளை சேற்றுள் மறைந்து வாயையும் மூக்கையும் மூடிக்கொண்டு தோல்வழியாக மூச்சுவிடும். அதிக நித்திரை கொள்ளும் இவ்வகை உயிர்களின் வாழ்க்கை இப்பொழுது அமைதி அடைகின்றது. அவை ஆறுதலாக மூச்சுவிடுகின் றன. இருதயம் மெல்லென அடிக்கின்றது. அம் மிருகங்களின் ஆற்றல் அற்பமாகச் செலவழிகின்றது. கழிவுப்பொருள் உடம்பினுள் திரளுகின்றது. உறக்கத்தில் இருக்கும் விலங்குகள், வெளிச்சமும் சூடும் கெடாதிருந்து, காற்றுப்பட்டதும் மூண்டெரியக்கூடிய சாம்பல் பூத்த நெருப்புப் போன்றன.
இலை துளிர்காலங் கிட்டுதலும் இவை முன் சேமித்துள்ள கொழுப்புச் செலவழிந்துபோகின்றது. நித்திரை கொள்ளும் உயிர்கள் இலைதுளிர்காலத் தில் விழித்துத் தங்கள் மறைவிடங்களினின்றும் வெளியே வருகின்றன. தமக்கு விருப்பமான பழங்களும் கிழங்குகளும் அதிகம் இருக்கும்போதே அவை விழிக்கின்றன. பசியின் கொடுமையால் அவை எதிர்ப்படும் எதை யும் எவரையும் எதிர்க்கும்.
உணவு அருமையான காலத்தில் வாழ்வதற்கேற்ற வழியைப் பறவைகள் கண்டுபிடித்துள்ளன. உணவு சுருங்கும்போது அவை கூட்ட மாகத் திரளுகின்றன; வட்டமிட்டுப் பறந்து தமது பலத்தைச் சோதிக்கின் றன. இறுதியில் அவை எப்பொழுதும் வெய்யிலுள்ள தென் தேசங்களுக்குப் பறந்து செல்கின்றன. அங்கே உணவு பெரிதும் கிடைக்கின்றது. இளம் பறவைகள் முன்னே பறக்க முதிய பறவைகள் பின்னாற் பறந்து செல்லும் உணவின் பொருட்டு அவை வழியில் பல முறை தங்கும். பழக்காலம் முடி வதன்முன் அவை தமது இடங்களை மாற்றிக் கொள்ளும். இவ்வாறு உயிர் களின் வாழ்க்கைப் போராட்டம் நிகழ்ந்து வருகின்றது. இவ்வாறு உயிர்கள் வாழ்க்கைப் போராட்டத்தில் முயலும் முயல்வினாலேயே ஒவ்வொரு உயிரினங்களிலும் பற்பல கிளை இனங்கள் தோன்றுகின்றன. ஆடு, மாடு, நாய், புறா போன்றவைகளிலும் மரஞ் செடி முதலியவைகளிலும் சிறிது சிறு தோற்றத்தில் மாறுபட்ட வெவ் வேறு கிளை இனங்களைக் காண்கின்றோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக