கோமளத்தின் கோபம்
சிறுகதைகள்
Backகோமளத்தின் கோபம் (+6 சிறுகதைகள்)
அறிஞர் அண்ணா (கா. ந. அண்ணாதுரை)
Source:
கோமளத்தின் கோபம் (சிறுகதைகள்)
பேரறிஞர் டாக்டர் சி. என். அண்ணாதுரை, எம்.ஏ.
பூம்புகார் பிரசுரம் பிரஸ் 63, பிராட்வே சென்னை - 600001
விலை ரூ. 7-90
வெளியீடு எண் : 171 முதற் பதிப்பு : ஆகஸ்ட், 1982
உரிமை : திருமதி ராணி அண்ணாதுரை
அச்சிட்டோர் : பூம்புகார் பிரசுரம் பிரஸ், சென்னை - 600001.
-------------
பொருளடக்கம்
- முன்னுரை
1. கோமளத்தின் கோபம் [குடியரசு, 16-7-1939 முதல் 6-8-1939 வரை ]
2. தங்கத்தின் காதலன் (குடியரசு 9-7-1939)
3. வாலிப விருந்து (குடியரசு)
4. புரோகிதரின் புலம்பல் (குடியரசு : 1939)
5. கொக்கரகோ (ஆனந்த விகடன் 11-2-1934)
6. அவள் மிகப் பொல்லாதவள் (குடியரசு 1939]
7. கபோதிபுரக் காதல் குடியரசு. (12-11-1939 முதல் 3-3-1940 வரை)
-------------
முன்னுரை
தமிழ்ச் சமுதாய அமைப்பிலே காணப்படும் சீர்கேடுகள், சீரழிக்கும் மூடநம்பிக்கைகள், சாதி வேற்றுமை, பார்ப்பனீயம் விதைத்துள்ள நச்சுக் கருத்துக்கள், பொருளாதார ஏற்ற தாழ்வுகள், கடவுள் பெயரால் நடைபெறும் கருத்துக்கும் - அறிவுக்கும் பொருந்தா சடங்குகள், விழாக்கள் தமிழ் மக்களை வாட்டி வதைத்து அவர்தம் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டைகளாக அமைந்து அணு அணுவாக உயிர் குடித்து வரும் நோய்கள் என்பதனைக் கண்டு, அவற்றை ஒழித்துச் சமுதாயம் நலம் பெற அண்ணா செய்த மருத்துவ முறைகளில் ஒன்று கதைவழி கருத்தூட்டல். தமிழ்நாட்டைப் பிடித்த பீடைகள் ஒழிய வேண்டுமாயின் "நோய் நாடி நோய் முதல் நாடி, அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்" என்று வள்ளுவர் வகுத்த மருத்துவ முறையைத் தயங்காது தமிழர் கையாளுதல் வேண்டும் என்பது அண்ணாவின் கொள்கை' என்று சொல்லின் செல்வர், பேராசிரியர் ரா. பி. சேதுப் பிள்ளை குறிப்பிடும் கருத்து எண்ணத்தக்கது. உயர்ந்த ஒப்பற்ற தமிழ்ப் பண்பாடு உணர்த்தும், தமிழ்ப் பற்றூட்டும், நாட்டுப் பற்றளிக்கும், இனப்பற்றை இதயத்தில் தேக்கும் கருத்துக்களைக் கதை வழி, நாடக வழி தரும் போது மக்கள் எளிதில் ஏற்றுக் கொள்வர் என்று அவர் வழங்கிய இலக்கியச் செல்வங்கள் எண்ணில. அவற்றுள், அவர் தொடக்க காலத்தில் எழுதிய படைப்புகளின் தொகுப்பாக அமைவது இவ்வேடு. அண்ணா எழுதிய முதல் சிறு கதை கொக்கரகோவும், முதல் குறும்பு தினம் கோமளத்தின் கோபமும் முதன்முதலாக நூல்வடிவில் கொண்டு வரப்பட்டுத் தமிழறிந்தோர்க்கு விருந்தளிப்பது இந் நூலின் தனிச் சிறப்பாகும்.
கொக்கரகோ. (11.2.1934). சௌமியன் என்னும் புனைப் பெயரில் அண்ணா கல்லூரிப் பருவத்தில் எழுதிய முதற் படைப்பு. ஆனந்த விகடன் இதழில் (மாலை : 9 : மணி 6. பக். 55-59) வெளியிடப் பெற்றது.
பரிதாபம்!... வாரமும் முறைப் பத்திரிகை நடத்தித் தோல்வியடைந்து, பிறகு மாத-மிருமுறைப் பத்திரிகை போட்டு மூளை இழந்து, கடைசியில் பைத்தியக்காரனாகிக் கீழ்ப்பாக்கத்தில் வசித்து வரும் விஷயம் பிறகே தெரிய வந்தது. (பக். 59). என்று முடிவது கதை.
இதழ் நடத்த வேண்டும் என்னும் அரிப்புக்கு உட்பட்டு, இன்னல்களை ஏற்று, இருந்த கைப்பொருளையும் இழந்து, இறுதியில் அறிவு நிலை கலங்கிச் சமுதாயத்துக்குக் கருத்தூட்ட வந்தவன் கதியற்ற பைத்தியமானவன் ஓவியம் கொக்கரகோ. இக்கதை வெளிவந்த காலத்தில் இதில் கையாளப்பட்டுள்ள இலக்கியத் திறன் எவரும் கையாளாத ஒன்று. பைத்தியம் தன் நண்பனுடன் உரையாடுவது, காவலர் இறுதியில் அழைத்துச் செல்வது; அதன்வழி அவள் நிலையினைக் கதையிறுதியில் கூறிப் படிப்பவரை வியப்பில் ஆழ்த்துவதாகும். இக்கதையின் உயிர்ப்பான பகுதி இறுதிப் பத்தி என்பதை எவரும் உணர முடியும். அண்ணாவின் மறைவிற்குப் பின் ஆனந்தவிகடன், இறுதி இரு பத்திகளை நீக்கி வெளியிட்டது. அந்த அமைப்பிலேயே கொழும்பிலிருந்து வெளி வரும் தமிழோசையும் பதிப்பித்தது. 1979இல் தமிழ்நாடு அரசு செய்தித் துறை நடத்தும் தமிழரசு இதழும் அவ்வாறே வெளியிட்டுள்ள குறைபாட்டினைக் களைந்து இக்கதை 1934இல் வெளியிடப் பெற்ற வடிவில் தரப்படுகிறது என்பதனைக் குறிப்பிடுவதில் பெருமை கொள்கிறேன்.
கோமளத்தின் கோபம் : 'பரதன்' என்னும் புனைபெயரில் குடி அரசு இதழில் 16.7.39 முதல் 6.8.39 முடிய தொடர் ஓவியமாக வந்த 'கற்பனைச் சித்திரம்', இது 16.3.75 முதல் 4.5.75 முடிய காஞ்சி இதழில் மறுபதிப்பாக மலர்ந் தது. எனினும் நூல் வடிவில் இதுநாள் வரை தமிழ் மக்களுக்குக் கிடைக்கவில்லை. அக்குறை போக்கப்படுகிறது.
பார்ப்பனீயத்தில் கைப்பொருள் இழந்து, கைகட்டிப் பணியாற்றும் கூலியாகி, கோமளம் எனும் பார்ப்பனத்தியின் மோக வலையில் சிக்கி, கொலைகாரனாகிக் கொடுஞ்சிறை சென்று விடுதலை பெற்று வந்த லிங்கத்தைச் சமுதாயம் தற்கொலை செய்து கொள்ளத் துரத்துகிறது. சிங்கப்பூரில் அவன் உடன் பிறந்தாள் விட்டுச் சென்ற ஒரு கோடி செல்வம், லிங்கத்தை வாழ வைக்கிறது. தன்னைப் பழித்த பழிகாரி கோமளத்தை லிங்கம் பழிக்குப் பழி வாங்க, அவள் செல்வம், மதிப்பு இழந்து, விலைமகளாகிவிடும் முடிபினைக் காட்டுவது இக்கதை. பொருளையும் போகத்தையும் பெற்றுத் துய்ப்பதற்காகப் பார்ப்பனீயம் செய்யும் சூழ்ச்சிகள் படம் பிடித்துக் காட்டப் பயன்படுவது இக் கருத் தோவியம்.
லிங்கம் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்யும் காட்சியில் அவன் பேசும் தனிமொழியின் நாடகப் பண்பு மனித உள்ளத்தினை எழுத்தில் வடித்துத்தரும் அண்ணாவின் படைப்புத் திறனை விளக்குவதாகும். 'தற்கொலை செய்து கொள்வதே நல்லது, நான் ஏன் இருக்க வேண்டும், பொருள் இழந்தேன், பொன் இழந்தேன், பெற்றோரை இழந்தேன், கொலை செய்தேன், சிறை புகுந்தேன், இன்று சீந்து-வாரில்லை. மண் தின்று வாழ்வதா? பிச்சை எடுத்துப் பிழைப்பதா? என் செய்வது, அலையில் அகப்பட்ட சிறு குழந்தை, நெருப்பில் விழுந்த புழு, ஆடிக் காற்றில் சிக்கிய பஞ்சு போலவன்றோ எனது நிலை இருக்கிறது. ஏன் நான் வாழ வேண்டும்? இறப்பதே நல்லது. இன்றிரவே, இந்தச் சாவடியே சரியான இடம். இதோ இக்கயிறே போதும், என் வகையற்ற வாழ்வை ஒரு முடிவுக்குக் கொண்டு வர.
அவன் உள்ளத்தில் பொங்கி வரும் இன்னலின் கொடுமையினைத் தெளிவுபடுத்த, உவமைகளை அடுக்கித் தரும் அண்ணாவின் ஆற்றல் தமிழுக்குப் புதுவரவு. இக் குறும்பு தினத்தைப் புதினம் என்று மயங்குவர் திரு. மெய் கண்டான்.
கபோதிபுரக் காதல் : 'பரதன்' என்ற புனைபெயரில் குடி அரசு இதழில் 12.11.39 முதல் 3.3.40 முடிய தொடர் ஓவியமாக வந்த குறும்புதினம். இளமை நலமும் மணமும் கமழும் எழிலரசியைச் சருகாகிவிட்ட பழுத்த கிழத்துக்கு மணமுடித்து, அவள் காதலைக் கருக்குவதோடு, விபசாரி ஆக்கிடும் புண்ணுற்ற சமுதாயத்தைக் கருத்துக் கண்ணுள்ளோர் காணச் செய்வது இக் கதை. கண்ணிழந்த பின்னமும் காதல் ஒளி வீச, கற்பிழந்தாளெனினும் காதலிக்கு வாழ்வு தரும் புரட்சிப் பொறி வீசும், கருத்துக்கதிர் பரப்பும் பரந்தாமன் வாழ்க்கைப் பாதையை வரைகின்றது இக் குறும்புதினம்.
தங்கத்தின் காதலன் : 9.7.39. குடி அரசு இதழில் வரையப் பெற்ற சிறுகதை. கருத்தொருமித்த காதலன் போலக் கன்னியரைக் கைப்பிடித்து, பொருளாசை கொண்டு, கைப்பிடித்த பெண்ணைக் கடுந்துயரில் மூழ்கவிட்டு, கையில் குழந்தையுடன் காப்பாற்ற துணையின்றிப் பொய்யே துணையாக மெய் வேடம் போடும் போலி உலகத்தைக் கண்டு கலங்கும் நிலையில் விட்டு, செல்வர் மகளைச் சேர்ந்து, உண்மைக் காதலுக்கு கொள்ளி வைக்கும் கொடிய நஞ்சுள்ளம் கொண்டவரை நாடறியச் செய்வது இது.
'இன்னொருவர் அமைத்துத் தரும் பாதையிலேயே நடந்து நடந்து நாம் பழக்கப்பட்டுப் போயிருக்கிறோம். காதல் பாதை என்பது, அவரவர்களின் சொந்த அமைப்பாக இராமல் பெற்றோர் குறித்தது, சோதிடர் கணித்தது என்பனபோன்று ஏற்பட்டு விடுவதாலேயே, வாழ்க்கைச் சிக்கல் ஏற்படுகிறது. சிலர் 'சகிப்புத் தன்மை' என்ற கொள்கையின் பேரில் பாரத்தைப் போட்டு விடுவர் சிலர். 'அவன் விட்ட வழி' என்று கூறிவிடுவர். சிலர் மட்டுமே, என் வாழ்க்கை சிக்கலற்றதாகவும், சுவையுள்ளதாகவும் இருக்கும் விதமாக அமைத்துக் கொள்ளும் உரிமை எனக்கு உண்டு என்று கூறிடுவர் - காரியமுமாற்றுவர். அவர்கள் குற்றவாளிகளா, அல்லவா, - தீர்ப்பளிப்பது 'உங்கள் உரிமை' (அண்ணா -- காதல் பாதையில்) மோகனா, ஏமலதா, சரசா மூவரும் காதல் பாதை தேடினவர்கள் - காதல் பாதை அமைத்துக் கொண்டவர்கள். அவர்களை இனங்காட்டிப் பெண்ணடிமை போக்க முயல்வன வாலிப விருந்து, புரோகிதரின் புலம்பல், அவள் மிகப் பொல்லாதவள் என்னும் சிறுகதைகள்.
அறிஞர் அண்ணா எந்த நோய்கள் தீர்க்கப்பட வேண்டும் என்று நாள்தோறும் எழுதியும் பேசியும் வந்தாரே அந்த நோய்கள் மீண்டும் தமிழ்ச் சமுதாயத்தைப் பற்றிடும் கொடுமை தெரிகிறது. எனவே அந் நோய்களைப் போக்க இந்நூல் மருந்தூட்டும் என்ற நம்பிக்கையில் தொகுத்தளிக்க படுகிறது. கருத்துக் கோப்பை உங்கள் கையில்!
அண்ணாவின் இவ்வரிய படைப்புகளைத் தொகுத்து முன்னுரையும் வழங்கும் வாய்ப்பினை நல்கிய பூம்புகார் பிரசுர நிறுவனத்தார்க்கு என் அன்பு கலந்த நன்றி.
சென்னை -28. ப. ஆறுமுகம் / தொகுப்பாசிரியர்
-------------------
1. கோமளத்தின் கோபம்
"நம்மை எல்லாம் மறந்து விட்டாலும், நாராயணனை மாத்திரம் மறக்கமாட்டான். அவங்க இரண்டு பேரும் வந்த நாளா ஜோடி போட்டுக்கிட்டாங்க. என்னமோ சூது இருக்கு."
"நாராயணன் மந்திரக்காரனாச்சே! ஏதாகிலும் மந்திரம் கிந்திரம் கற்றுக் கொடுத்திருப்பான்."
"மந்திரமாவது தந்திரமாவது! மந்திரம் தெரிந்தவன். இங்கே யேண்டா வந்து மாட்டிக்கிட்டு கம்பி எண்ணிக்கிட்டு கிடக்கிறான்"
"இங்கேன்னா என்னடாப்பா! இந்தே பெரிய வூடு உங்க அப்பங் காலத்திலே கண்டெயா? நம்ம ராணியம்மா சத்திரத்திலே மணியடிச்சா சோறு ; மயிர் முளைச்சா மொட்டை"
-
"தன்னானே தானென்ன
தன்னான தன்னானே."
"சாலையிலே ரெண்டு மரம்
சர்க்காரு வைத்த மரம்..."
சிறையிலே எல்லா வார்டரும், கைதிகளும் மனிதர்கள் தானே என்றா எண்ணுவார்கள். வீடுவாசல், குழந்தை குட்டி, பெண்டுகளை விட்டுப் பிரிந்து தனித்து வந்து இருப்பவர் ஏதோ பேசிப் பாடி ஆடி, பொழுதைப் போக்கட்டும் என்று விட்டு விடுவார்களா?
அதிலும், சீப் வார்டராக வேண்டுமென்ற ஆசை 9-க்கு அதிகம். ஆகவே, ஏகதடபுடல். அதிகாரம்! கைதிகளை மிகக் கண்டிப்பாக நடத்துவது வாடிக்கை.
லிங்கத்துக்கு அன்று விடுதலை! முக்கா போர்டிலே பேர் விழுந்தது. ஐந்து வருடம் தண்டனை அவனுக்கு. உள்ளே வந்து மூன்று வருஷமாச்சு. இரண்டு வருஷ-மிருக்கும்போதே ஒரு அதிர்ஷ்டம். விடுதலை! அப்பா! இனி சூரியனையும், சந்திரனையும், வானத்தையும், நட்சத்திரத்தையும் பார்க்கலாம் ! வீதியிலே உலாவலாம்! கடை வீதி செல்லலாம். கீரையுந்தண்டுமே மூன்று வருஷமாகக் கண்டு சலித்துப் போனவன் இனி வாய்க்கு ருசியாக எதையாவது உண்ணலாம். ராஜா அவன் இனி மேலே! விடுதலை வந்து விட்டது. அதோ வந்து விட்டான் வார்டர்.
"டே லிங்கம் ! எங்கே எடு படுக்கையை சுருட்டு! கம்பளியை" என்றான் லிங்கம். ஒரு படுக்கையைச் சுருட்டினான்; குதித்தான். கம்பளியை எடுத்துக் கொண்டான். அவனைச் சுற்றிலுமிருந்த கைதிகளை நோக்கினான் ஒரு முறை. அவர்கள் தலையை ஆட்டினார்கள். இவன் பல்லைக் காட்டினான்.
மூலையில் உட்கார்ந்து கொண்டிருந்த நாராயணன் தள்ளாடி நடந்து வந்தான் லிங்கத்திடம்! நாராயணன். கிழவன் பாபம். ஜென்ம தண்டனை! உள்ளே வந்து எட்டு வருடத்திற்கு மேலாயிற்று. உலகத்தை அவன் மறந்தே விட்டான். லிங்கத்திடம் அவனுக்கு ஒரு ஆசை. லிங்கத்துக்கும் அப்படியே.
"லிங்கம் ! இனிமேலே புத்தியா பிழை. பார்த்தாயே. இங்கே படறபாட்டை" என்றான் நாராயணன்.
லிங்கம் பதில் சொல்ல எண்ணினான். ஆனால் துக்கம் தொண்டையை வந்து அடைத்துவிட்டது.
"வருகிறவனெல்லாம் இப்படித்தான் போறப்பொ புத்தியோடு இருப்பதா பேசுவான்! புத்தியாவது வருவதாவது" என்றான் வார்டர்.
'மார்ச்' என உத்திரவிட்டான் 9.
மூன்று வருஷமாக வார்டர் எத்தனையோ தடவை, உத்திரவிட்டிருக்கிறான். அப்போதெல்லாம் தோன்றாத ஒரு புதிய சந்தோஷம் இந்த உத்திரவைக் கேட்டதும் வந்தது.
மார்ச்! புறப்படு ! போ வெளியே!
எங்கே? உலகத்துக்கு! சிறைக்கதவு திறந்து விட்டது. கூண்டைவிட்டுக் கிளம்பு. போ வெளியே! பார் உலகை! நீ பல நாளும் பார்க்காது மனம் வெந்து, மண்ணைத் தின்று கொண்டிருந்தாயே, இனி உலகத்துக்குப் போ! உன் மக்களைப் பார் ! என்றல்லவோ அந்த உத்தரவு சொல்லுகிறது.
பார்க்கும்போதே யமன் போலத் தோன்றும் 9-ம் நம்பர் கூட அன்று லிங்கத்துக்கு தோழனாகத் தோன்றினான்.
ரொம்ப குஷாலாகத்தான் நடந்தான். வார்டர் பொழுது போக்க வேண்டி, "டே! லிங்கம் யாராவது வந்திருப்பார்களா வெளியே உன்னைப் பார்க்க" என்று கேட்டான்.
லிங்கத்துக்கு துக்கம் பொங்கிற்று! கைகால்கள் நடுங்கின. கோமளத்தை எண்ணினான். கண்களில் நீர் ததும்பிற்று.
மாதச் சம்பளத்திற்கு மாரடிக்கும் அந்த வார்டருக்கு லிங்கம் கொலைக்கேசில் சம்பந்தப்பட்டு, 5 வருஷம் தண்டிக்கப்பட்ட கைதி என்பது தெரியுமே தவிர லிங்கத்தின் உள்ளம் என்ன தெரியும்? லிங்கத்தின் மனதை அந்த நேரத்தில் கலக்கிய அந்த கோமளத்தைப் பற்றித்தான் என்ன தெரியும்.
உங்களுக்குத்தான் என்ன தெரியும்? லிங்கம் ஒரு கைதி! ஆகவே அவன் வெறுக்கப்பட வேண்டியவன் என்று வாதாடுவீர்களே தவிர, லிங்கம் ஏன் கைதியானான், எது அவனை அந்த நிலைக்குக் கொண்டு வந்தது என்பது உங்களுக்கு என்ன தெரியும்?
என்ன உலகமிது? ஏழைக்கு உலகமா? ஏழையின் மனம் புண்பட்டால், அதை ஆற்றும் உலகமா? அல்ல! அல்ல! ஏழையின் துயரைப்பற்றி எள்ளத்தனை சிந்தனையும் செய்யாது ஏழை மீது ஏதேனும் பழி சுமத்தப்பட்டாலும் "ஆமாம் அவன் துஷ்டன்! செய்துதான் இருப்பான்" என்று சாதிக்கும் உலகமாச்சே.
# # #
அன்று, ஒரே கருக்கல்! இருட்டுடன் மேகம், அடிக்கடி இடி, காது செவிடுபடும்படி. மின்னல் கண்களைக் குத்துவது போல. பிசுபிசுவெனத் தூறல். லிங்கம் மாட்டுக் கொட்டிலுக்குப் பக்கத்திலே தனக்கென விடப்பட்டிருந்த அறையிலே படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான். அந்த நேரத்திலே கோமளத்தைப் பற்றித்தான் கனவு கண்டு கொண்டிருந்தான். இரவு 12 ஆயிற்று. அவன் அறையின் கதவு மெதுவாகத் திறக்கப்பட்டு, கருப்புக் கம்பிளியால் தன்னை முழுதும் மறைத்துக் கொண்டிருந்த ஒரு உருவம் உள்ளே நுழைந்தது. அதுதான் கோமளம்.
மிஸ். கோமளம் சார், மிஸ் கோமளம். லிங்கத்தின் சின்ன எஜமானி! வக்கீல் வரதாச்சாரியின் சொந்தத் தங்கை ரொம்ப அழகி, மகா கைகாரி! சூதுவாது அறியாத லிங்கத்துக்கு மோகமெனும் அபினியை நித்த நித்தம், சிரிப்பாலும், சிமிட்டலாலும் ஊட்டிவந்தவள்.
லிங்கம் ஒரு காலத்தில் அந்த ஊருக்கே பெரிய தனக்காரராக இருந்த மண்டி மகாதேவ முதலியாரின் மகன். கோமளத்தின் தகப்பனார்தான் முதலியார் வீட்டுக்குப் புரோகிதர். புரோகிதம் செய்து சேர்த்த பணந்தான், வரதாச்சாரியை வக்கீலாக்கிற்று. புரோகிதச் செலவுடன் புது சாத்திரம் கட்டுதல், கோதானம் அளித்தால், கும்பாபிஷேகம் செய்தல் முதலிய கைங்கரியங்களை 20 ஆண்டு விடாமல் செய்து தான் மண்டி மகாதேவ முதலியார், 10000 ரூபாய் சொத்தும் இருபதனாயிரம் கடனும், மகன் லிங்கத்துக்கு வைத்து விட்டு இறந்தார். போனால் போகிறது என்று வக்கீல் வரதாச்சாரி, வேலையின்றி திண்டாடிக்கொண்டிருந்த லிங்கத்துக்கு கட்டுத் தூக்கும் வேலை கொடுத்து தன் வீட்டிலேயே சோறும், மாட்டுக் கொட்டிலுக்கு மறு அறையில் அவனுக்கு இடமும் கொடுத்தார். லிங்கத்தின் தாய், மகனுடைய நிலை, புரோகிதர் மகனுக்கு போக்குவரத்து ஆளாக மாறும் வரை இல்லை. அந்த அம்மை அகிலாண்ட நாயகியின் அனுக்கிரகத்தால் கணவனுக்கு முன்னதாகவே இறந்து விட்டாள். அப்போது கூட இருபது பிராமணாளுக்கு வேஷ்டி வாங்கி தானம் செய்தார். லிங்கத்தின் தகப்பனார்.
உள்ளே நுழைந்த கோமளம் மெல்ல தட்டி எழுப்பினாள் லிங்கத்தை ! எப்படி இருக்கும் அவனுக்கு. தான் கண்டு கொண்டிருந்த கனவில் அதுவும் ஒரு பகுதிதானோ என்று எண்ணினான். மிரள மிரள விழித்தான். கண்களைத் துடைத்துக் கொண்டு பார்த்தான். நிஜமான கோமளம், நிஜமாகவே தன் எதிரில் நிற்கக் கண்டான்.
லிங்கத்துக்கு கோமளத்தின் மீது அளவற்ற ஆசை! உழைத்து அலுத்து படுக்கப் போகும் நேரத்திலும் கோமளம் 'லிங்கம்' என்று கூப்பிட்டால் போதும்; ஓடுவான், அவள் என்ன வேலை சொன்னாலும் செய்ய.
முதலிலே அவன், சினிமாவிலே தோன்றும் பெண்களைப் பார்த்து சந்தோஷப்படுகிற அளவுக்குத்தான் இருந்தான். கோமளமும், எந்த சினிமாக்காரியின் சாகசம் சல்லாபத்திலும் குறைந்தவளல்ல.
'டால்' அடிக்கிறது உடம்பிலே என்பார்களே, அதை லிங்கம் கோமளத்திடம் தான் கண்டான். "கண்ணாலே மயங்கி விடுவார்கள் பெண்கள்" என்று லிங்கம் கதையிலே படித்தது, கோமளத்தைக் கண்ட பிறகுதான் அவனுக்கு உண்மையாகப்பட்டது.
கோமளம், சிவந்த மேனியள் ! சிங்கார உருவம்! சிரிப்பும் குலுக்கும் அவளுடைய சொந்த சொத்து! பேச்சோ, மிக சாதுர்யம் ! ஆடை அணிவதிலோ ஒருதனி முறை! கோமளம், லிங்கத்துக்குச் சரியான மயக்க மருந்தைக் கொடுத்து விட்டாள். லிங்கமும் எட்டாத கனி என்று முதலிலே எண்ணியவன், "இல்லை! இல்லை! கோமளத்திற்கு என் மீது கொஞ்சம் ஆசைதான். இல்லாவிட்டால் ஏன் என்னிடம் அடிக்கடி கொஞ்சுவது போல் இருக்கிறாள். என்ன இருந்தாலும் நான் என்ன பரம்பரை ஆண்டியா! பஞ்சத்து ஆண்டிதானே ' என்று எண்ணத் தொடங்கினான்!
அவன் மீது குற்றமில்லை ! அவள் மீது கூட அவ்வளவு குற்றமில்லை. பருவம் ! அதன் சேட்டை அது! லிங்கத்துக்கு உலகம் தெரியாது பாபம். அதிலும் கோமளத்தின் உலகம்
தெரியாது!
கோமளத்தின் உலகம், மிக பொல்லாதது. ஆனால் பார்ப்பதற்கு ஜொலிக்கும். எரிகிற நெருப்பிலே இல்லையா ஒரு ஜொலிப்பு ! விஷப்பாம்பிலே தலைசிறந்த நல்லபாம்புக் இல்லையா ஒரு தனி வனப்பு! அதைப்போல கோமளத்தின் உலகம்.
அவள் கண் பார்வை, ஒரு மாய வலை. யார் மீது விழுந்தாலும் ஆளை அப்படியே சிக்க வைக்கும். அதிலும் லிங்கத்தின் மீது ஒவ்வொரு நாளும் எத்தனையோ முறை விழுந்தபடி இருந்தது. என் செய்வான் லிங்கம் ! ஏமாந்தான் அவளிடம்.
தன் காதலைப்பற்றி ஒரு நாளாவது ஒரு வார்த்தையாவது அவளிடம் பேசியதும் கிடையாது. அவன் தன்னிடம் அப்படியே சொக்கிக் கிடக்கிறான் என்பதைக் கோமளம் தெரிந்து கொள்ளாமலும் இல்லை. அதனைத் தடுக்கவும் இல்லை. மாறாக, வேண்டுமென்றே அதனை வளர்த்தாள். தன் அழகைக் கொண்டு அவனை அறிவிலி-யாக்கினாள். தன் பிரகாசத்தால் அவன் கண்களை மங்கச் செய்தாள். அடிமை கொண்டாள் அவனை. தன் இஷ்டப்படி ஆட்டி வைத்தாள்.
ராவ் பகதூர் ராமானுஜாச்சாரியார் மட்டும் இவ்விதம் தன்னிடம் அடிமைப்பட்டிருந்தால் கோமளம் ஏன் பிறந்த வீட்டிலேயே இருக்கப் போகிறாள். எத்தனையோ பேருக்கு ஏக்கத்தைக் கொடுத்த அவள் அழகும், சல்லாபமும், அவள் கணவன், ராமானுஜாச்சாரிக்கு ஒரு மாற்றத்தையும் கொடுக்கவில்லை. அவர் உண்டு, கீதை உண்டு, ஜெர்மன் நிபுணரின் வீரிய விருத்தி மருந்து கேட்லாக் உண்டு.
ஊடலிலிருந்து, உள்ளபடி சண்டையாகி, பிரதிதினம் சண்டை என வந்து, "இனி உன் முகத்திலேயே நான் விழிக்க மாட்டேன் போ" என கண்டிப்பாகச் சொல்லிவிட்டு, வீடு வந்த கோமளம், ராவ்பகதூரை பிறகு கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை. அவரும் யோகத்தில் இறங்கிவிட்டார். கீதையின் சாரத்தில் மூழ்கிவிட்டார்.
# # #
"லிங்கம்" என்றாள் மெல்ல, அந்த மாது. குல தேவதையை நோக்குவதைப் போலப் பார்த்தான் லிங்கம்!
"கோபமா? இந்த நேரத்தில் இங்கு ஏன் வந்தேன் என்று" எனக் கேட்டாள் கோமளம். "கோபமா! எனக்கா! வருமா கோ..." அதற்கு மேல் அவனால் பேசமுடியவில்லை ; நாக்கிலே ஒருவிதமான பிசின் வந்துவிட்டது.
"சரி! நான் ஒன்று சொல்கிறேன் கேட்கிறாயா, கேட்பாயா, மாட்டாயா?" என்று கொஞ்சினாள் கோமளம்.
தலையை அசைத்தான். தன்னை மறந்த லிங்கம். காதிலே மந்திரம் ஓதுவதைப் போல ஏதோ சொன்னாள் மாது. லிங்கத்தின் முகத்திலே ஒரு மருட்சி ஏற்பட்டது. "பைத்யமே! பயமா?" என்று புன்சிரிப்புடன் கேட்டாள் கோமளம்.
அந்த புன்சிரிப்பு, அவனை ஒரு வீரனாக்கிவிட்டது.
"எனக்கா பயம்?" எனக் கூறினான், "நான் போகட்டுமா. அண்ணா எழுந்துவிடுவாரோ என்று பயம்" என்றாள் கோமளம், லிங்கத்தின் தவடையைத் தடவிக் கொண்டே.
கண்கள் திறந்திருந்தும் லிங்கத்துக்குப் பார்வை தெரியவில்லை.
'செய்" என்று ஈனக்குரலில் பதில் சொன்னான். சரேலென கோமளம் வெளியே சென்றுவிட்டாள். லிங்கம் மறுபடியும் கண்களைத் துடைத்துக்கொண்டு பார்த்தான், அவ்வளவும் கனவா நினைவா என்று. தாடை சொல்லிற்று அவனுக்கு நடந்தது கனவல்ல, உண்மைதான் என்று! அந்தக் கொடி இடையாள் கோமளம், அவன் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டுப் போனாள். அந்த முத்திரை இருந்தது அவன் கன்னத்திலும்; அதைவிட அதிகத் தெளிவாக அவன் மனதிலும்.
உலகம் ஒரு துரும்பு இனி! ஆபத்து ஒரு அணு அவனுக்கு. கோமளத்தின் முத்தம் அவனுக்கு ஒரு கவசம் ! ஒண்டி ஆளாக இருப்பினும், உலகம் முழுவதையும் எதிர்க்கலாம் என்ற தீரம் வந்துவிட்டது.
மங்கையரின் மையல், மனிதனுக்கு உண்டாக்கும் மன மாற்றந்தான் என்னே!
என்ன சொல்லிவிட்டுப் போனாள் தெரியுமோ கோமளம் ! தனது கணவனை எப்படியாவது அடித்துக் கொன்று விட வேண்டுமென்று சொன்னாள். ஏன்? ராவ்பகதூர் உயில் எழுதி வைத்திருந்தார்; தனக்குப் பிறகு தன் சொத்து, கோமளத்துக்கு என்று. சொத்து கிடக்கிறது; ஆனால் ராவ் பகதூர் செத்தபாடில்லை. கோமளம் எப்படியாவது அவரை ஒழித்துவிட்டால், பணம் கிடைக்கும். படாடோபமாக வாழலாம் என்பது கோமளத்தின் எண்ணம். அதற்காக தனது கணவனைக் கொல்ல லிங்கத்தையே கத்தியாக உபயோகித்தாள்.
"அவர் ஒருவர் குத்துக்கள் போல் இருப்பது தான் நமக்குள் தடையாக இருக்கிறது. அவர் ஒழியட்டும்; உடனே நாம் உல்லாசமாக வாழலாம்" என்று கூறினாள் கோமளம்.
லிங்கம் அது கொலையாயிற்றே. அதைச் செய்தல் தவறாயிற்றே, ஆபத்தாயிற்றே என்பதைப் பற்றி எண் ணவே யில்லை.
கோமளம் மிக அழகி! தன்னை விரும்புகிறாள். ஆகவே அவள் சொல்வதைச் செய்ய வேண்டும் என்று மட்டுமே எண்ணினான்.
கொலை! குலை நடுங்கும் சொல்லாயிற்றே! ஆமாம்; ஆனால் கோமளமல்லவா சொன்னாள், அந்தச் சொல்லை! அதிலே பயமென்ன இருக்கிறது.
"இவ்வளவுதானா நீ! கையாலாகாதவனே! இதோ நான் என்னை எடுத்துக் கொள் என்று சொன்னேன். என்னை உன்னிடம் வாழவொட்டாது தடுக்கும் ஒரு தடைக்கல்லை நீக்கு என்று சொன்னேன். அது முடியவில்லையே உன்னால்! நீயும் ஒரு ஆண்பிள்ளையா" - என்றல்லவோ கோமளம் கேட்பாள். அவள் பேச்சின் 'குத்தலை'ச் சொல்லவா வேண்டும்.
கோமளம், நமக்கேன் இந்தத் தொல்லை? போலீசில் மாட்டிக் கொண்டால் வீண் தொந்திரவுதானே. நீயும் நானும் சிங்கப்பூர் போய்விடலாமே. அங்கு என் தங்கை புருஷன் பெரிய பணக்காரர். அவரிடம் எனக்கு வேலை கிடைக்கும். நாம் சுகமாக இருக்கலாமே -- என்று கோமளத் திடம் கூறவேண்டுமென எண்ணினான் லிங்கம்.
அதை எண்ணும் போதே அவனுக்கு ஒரு இன்பம். நீல நிறக் கடல்! கப்பல் அசைந்து ஆடிச் செல்கிறது! அவனும் கோமளமும் சிங்கப்பூர் செல்கிறார்கள். லிங்கம் மோகன ராகம் பாடுகிறான். கோமளம் புன்சிரிப்புடன் அவனை நோக்குகிறாள்.
இதெல்லாம் அவனுடைய மனக்கண் முன்பு தோன் றிய படக்காட்சி. சரி! ஒருமுறை கோமளத்திடம் இந்த ஏற்பாட்டைச் சொல்லிப் பார்ப்பது என்று எண்ணினான். இப்போதே சொல்வது என எண்ணம் தோன்றிற்று. எழுந்தான், நேராக கோமளத்தின் படுக்கை அறைப்பக்கம் சென்றான்.
கோமளம் சிரித்த சத்தம் கேட்டது! மணி ஓசை போன்ற குரல்.
"மாட்ட வைத்துவிட்டாய் லிங்கத்தை" என்று மற்றொரு குரல் பேசுவதும் கேட்டது.
திகைத்து அப்படியே நின்றுவிட்டான் லிங்கம். படுக்கை அறையிலே அந்தப் பாதகி, பரந்தாமன் என்னும் வக்கீலின் மோட்டார் டிரைவருடன் கொஞ்சுகிறாள். "அந்தக் கிழத்தின்மீது இந்தக் கிறுக்கனை ஏவி விட்டேன். இவனுக்கு தலை கால் தெரியவில்லை. அவ்வளவு ஆசை இந்தத் தடியனுக்கு என் மேலே. உனக்குத்தான் என் மேலே அவ்வளவு ஆசை கிடையாது" என்றாள் கோமளம்.
"பாவி! பாதகி! பழிகாரி! குடிகெடுக்கும் கோமளம் - திறடீ கதவை -- ஐய்யா! வக்கீலய்யா, எழுந்திருங்கள்! வாருங்கள் ; இங்கேவந்து பாருங்கள், இந்த நாசகாரி செய்யும் வேலையை. டேய், பரந்தாமா, வாடா வெளியே! மோட்டார் ஓட்டறயா மோட்டார். கோமளம்! நான் தடியனா, கிறுக்கனா, வெறியனா, திற கதவை. ராவ் பகதூரைக் கொல்லச் சொன்னாயே உன் கழுத்தை ஒடித்துவிட்டு மறு வேலை பார்க்கிறேன்..." என லிங்கம் ஆவேசம் வந்தவன் போல் அலறினான். வீடு பூராவும் அமர்க்களமாகி விட்டது. அண்டை எதிர்வீட்டுக் கதவுகள் திறக்கப்பட்டன. அறையைத் திறந்துகொண்டு பரந்தாமன் பயந்து கொண்டே வெளியே வந்தான். அங்கொரு கட்டை கிடந்தது. தூக்கினான லிங்கம் அதனை. கொடுத்தான் ஒரு அடி பரந்தாமன் தலைமேல், இரத்தம் குபீரென வெளியே வந்தது. கோமளம் கோவெனக் கதறினாள். வக்கீல் வாயிலே அறைந்து கொண்டார். தெரு மக்கள் கூடிவிட்டனர்.
ஆ! ஆ! என்ன அநியாயம் ! அடே லிங்கம், கொலை காரா! பிடி, உதை, அடி! போலீஸ், போலீஸ்!!
எல்லோரும் லிங்கத்தின் மீதே பாய்ந்தனர்.
# # #
"நான் விடியற்காலை வெளியே போகவேண்டுமென மோட்டார் டிரைவரை இங்கேயே இரவு படுத்திருக்கச் சொன்னேன் அவனை அநியாயமாக இந்தத் தடியன் அடித்துப் போட்டு விட்டானே" என்றார் வக்கீல்.
"நடு இரவில் என்னை வந்து எழுப்பி, தகாத வார்த்தைகள் பேசினான். நான் கூவினேன்; பரந்தாமன் ஓடி வந்தான். இந்தப் பாவி அவனை அடித்து விட்டான்" என்றாள் கோமளம்.
பரந்தாமன் கோர்ட்டுக்கு வர முடியவில்லை. அடிபட்ட 25 நாளில் அவன் அந்த லோகம்' போய்விட்டான். லிங்கம் ரிமாண்டில் இருந்தான்.
வழக்கு முடிந்தது. ஐந்து வருடம் கடுங்காவல் தண்டனை கிடைத்தது லிங்கத்துக்கு. அந்த நேரத்தில் கோர்ட்டில் வந்திருந்த கோமளத்தை அவன் பார்த்த பார்வை அவளை அப்படியே அலற வைத்துவிட்டது.
சிறையினின்று வெளிவரும் போது, லிங்கம் என்னென்ன எண்ணினான். அவன் மனம் இருந்த நிலை என்ன என்பதைப்பற்றி விவரிப்பதென்பது முடியாது. அது மிக மிகக் கஷ்டம். கூண்டிலிருந்து விடுபட்ட கிளி, நீரில் மூழ்கிக் கரை ஏறியவன், சிறையினின்று வெளிவந்தான் ஆகி யோரின் மனநிலையைப் படமெடுப்பது முடியாத காரியம்.
கடலூர் மூன்று ஆண்டுகளுக்குள் எப்படி எப்படி மாறி விட்டதோ ! வக்கீல் என்ன ஆனாரோ! அந்த வம்புக்காரக் கோமளம் என்ன ஆனாளோ? பாபம் ! பரந்தாமனின் குடும்பம் என்ன கதியில் இருக்கிறதோ? தனது நண்பர்கள் என்ன எண்ணுகிறார்களோ, பேசுவார்களோ, கொலைகாரன் ஜெயிலுக்குப்போய் வந்தவன் என்று தன்னிடம் பேசவும் வெட்கப்படு வார்களோ என்று எண்ணினான்.
இனி பிழைப்பிற்கு வேறு மார்க்கம் வேண்டுமே. ஏதாவது கூலி வேலை செய்தாவது பிழைக்க வேண்டும். வயறு ஒன்று இருக்கிறதே, என்ன செய்வது. ஆனால், யார். கொலை செய்த, ஜெயிலுக்குப் போய்வந்த லிங்கத்தை நம்பி வேலைக்கு வைத்துக் கொள்ள முடியும்.
செத்த மனிதனாக்கிவிட்டாளே பாவி. என் தந்தை தன் பொருளை புரோகிதப் புரட்டுக்கு அழுதார், நான் என் வாழ்வை இந்தப் பொல்லாத கோமளத்தின் பொருட்டு பாழாக்கிக் கொண்டேனே. அவள் பார்வையே எனக்கு நஞ்சாகி விட்டதே என லிங்கம் எண்ணி எண்ணிப் பரதவித் தான், பாபம் ! அவன் நிலை தான் உள்ளபடி என்ன? அன்று பொழுது போவதற்குள், கடலூரை ஒரு சுற்று சுற்றினான். பல பழைய நண்பர்கள் பார்த்தான். சேதிகள் சொன்னார்கள். ஆனால் ஒருவர்கூட, தோழமை கொள்ளவில்லை.
"அடே! பாவி, லிங்கம். வெளியே வந்துவிட்டாயா? சரி! இனிமேலாகிலும், ஒன்றும் தப்பு தண்டா செய்யாமல், ஏதாகிலும் வேலை செய்து பிழை" என்றும்,
"ஜாக்ரதை லிங்கம், ஊரிலே இனி எங்கே என்ன நடந்தாலும் உன்பாடுதான் ஆபத்து. போலீசார் உன் மீது எப்போதும் ஒரு கண் வைத்தபடிதான் இருப்பார்கள்" என்றும்,
"நீதான் அந்த லிங்கமா ! மறந்துவிட்டேன். சரி! கொஞ்சம் ஜாலியாக நான் வெளியே போகிறேன். என் வீட்டுக்கு மட்டும் வராதேயப்பா' என்றும்,
"வேலையாவது, கீலையாவது, மாடு போலே உழைக்கிறேனென்றாலும் வேலை எங்கேயப்பா இருக்கிறது. என்னைப் போன்றவனுக்கு வேலை கிடைக்கவில்லை என்றால் உன்னை யார் கூப்பிடப் போகிறார்கள்" என்றும், அவரவர் எண்ணத்திற்கு ஏற்றபடி பேசினர். ஒரு சிலர் காசு கொடுத் தனர். அன்றையப் பொழுது போயிற்று. தனது உற்றார் உறவினர் முகத்தில் விழிக்க அவனுக்குத் துணிவில்லை. அன்றிரவு சாவடியில் படுத்துக் கொண்டு, தான் கேட்ட சேதிகளை எண்ணிப் பார்த்தான்.
என்ன அச் சேதிகள்?
வக்கீல் வரதாச்சாரி, எங்கோ பெரிய உத்தியோகத்திற்குப் போய்விட்டார். ராவ்பகதூர் தமது சொத்தை கோமளத்துக்கே எழுதி வைத்துவிட்டு கண்ணன் திருவடி சேர்ந் தார். கோமளம், தனிப்பங்களா எடுத்துக் கொண்டு எங்கோ, சென்னையில் இருப்பதாகவும், கோமளத்தின் படம் அடிக்கடி பத்திரிகையிலே வருவதாகவும் சேதி. பரந்தாமன் வீட்டார் பரிதாப நிலைமையில் இருப்பதாகவும் கேள்விப்பட்டான்.
அன்று இரவு முழுவதும் புரண்டு புரண்டு படுத்தான். மணிக்கு மணி வார்டர் கூப்பிடுவது போன்ற கவனம்.
பொழுது புலர்ந்ததும், நேராக பரந்தாமன் இருந்த வீட்டிற்குச் சென்றான்.
பரந்தாமனின் குழந்தைகள் வெளியே புழுதியில் புரண்டு கொண்டிருந்தன. அந்த ஏழைக் குழந்தைகளுக்கு அதுதான் விளையாட்டு. கடையிலே பொம்மைகளும், ஊது குழலும் இருக்கின்றன. ஆனால் அம்மா காசு கொடுத்தால் தானே!
அம்மாவைக் காசு கேட்டால்தான் போட்டு அடித்து தம்மை அழவைத்துவிட்டு தானும் அழுகிறார்களே. காசு இல்லாத விளையாட்டுச்சாமான், கல்லும், மண்ணுந்தானே! ஆகவேதான் குழந்தைகள் புழுதியில் புரண்டு விளையாடின். பரந்தாமன் இறந்த பிறகு அவனுடைய மனைவி மரகதம் சிறு பலகாரக்கடை வைத்துக் கொண்டு காலந்தள்ளி வந்தாள்.
"அம்மா! யாரோ ஒரு ஐய்யா வந்தாங்க" என்று கூவினான் குப்பன். அவன்தான் மரகதத்தின் மூத்த மகன்.
"யாரய்யா! என்ன வேண்டும்? இட்டிலி சூடா இருக்கிறது" என்று கூறிக்கொண்டே வெளியே வந்த மரகதம், லிங்கத்தைக் கண்டாள். அப்படியே ஸ்தம்பித்து நின்றாள் ஒரு விநாடி. உடனே கோவென ஆத்திரத்துடன் கத்தினாள். "ஆ! பாவி! என் முகத்திலும் விழிக்க வந்துவிட்டாயா! என் குடியைக் கெடுத்தவனே. இங்கேன் வந்தாய்? டே குப்பா, சின்னா, சரசு, அங்கே போக வேண்டாம். அந்தக் கொலை காரப்பாவி, நம்மையும் ஏதோ செய்யத்தான் இங்கே வந் தான். ஜெயிலிலே இருந்து ஓடிவந்து விட்டான். கூப்பிடு போலீசை" எனக் கூக்குரலிட்டாள்.
லிங்கம் அந்தச் சோகக் காட்சியைக் கண்டு தானும் அழுதான். பாவி நான் செய்த பாபத்தின் பயனாக, இந்தப் பாவையும் அவள் மக்களும் வாடுகின்றனரே, என் செய்வேன்! என்னைச் சித்திரவதை செய்தாலும் தகுமே என எண்ணினான் லிங்கம். பிறகு, மரகதத்தை நோக்கி, "அம்மா! நான் செய்தது தப்புதான்....." என்று சமாதானம் சொல்வதற்குள், மரகதத்தின் கூச்சலைக் கேட்டு அங்கு கும்பல் கூடிவிட்டது. "இங்கேண்டா வந்தாய். என்னா தைரியண்டா இவனுக்கு. போடா வெளியே. கூப்பிட்டு போலீசு கிட்ட கொடுக்கணும்" என்று பலர் மிரட்டினார்கள். லிங்கம் பதிலுக்கு ஒரு வார்த்தை பேசவில்லை. சிலர் அடித்தார்கள். பதிலுக்குக் கையைத் தூக்கவுமில்லை. அவர்கள் துரத்தத் துரத்த ஓடினான். அந்த இடத்தைவிட்டு ஓடி, பழையபடி சாவடியில் படுத்தான். படுத்து கண்கள் சிவக்குமளவு, தலை பளு வாகு மட்டும் தன் நிலையையும், தன்னால் பரந்தாமன் குடும்பம் பரிதவிப்பதையும் எண்ணி எண்ணி அழுதான். அழுது பயன் என்ன? அவனைத் தேற்ற யார் இருக்கிறார்கள். ஆம்! ஒரே ஒரு தங்கை, சிங்கப்பூரில் சீமாட்டியாக இருக்கிறாள்.
கொலைகார லிங்கத்துக்கு, ஒரு தங்கை இருப்பதைக் கூட உலகம் ஒப்புமோ ஒப்பாதோ! மேலும், தங்கை மணம் செய்து கொண்டு சிங்கப்பூர் போனது முதல் வீடு வருவது மில்லை. கடிதம் போடுவதுமில்லை. தகப்பனார் இறந்த போது சேதி கூட அனுப்பப்படவில்லை. "தெரியாமல் ஆச் சாரமற்ற அந்தப் பயலுக்கு கிளியை வளர்த்துப் பூனையிடம் பறி கொடுத்ததைப் போலத் தந்துவிட்டேன். அவனும் என் முகத்தில் விழிக்கக்கூடாது. அந்தப் பெண்ணும் வரக்கூடாது, என் பிணத்தருமே" என்று கூறிவிட்டு இறந்தவர் லிங்கத்தின் தகப்பனார். அவருடைய புரோகிதப் பித்து, சீர்திருத்த வாதியான சுந்தரத்துக்குப் பிடிக்கவில்லை. சுந்தரம் மாமனாரைக் கடிந்து பேசலானான். 'போக்கிரிப்பயல்! என்னமோ எல்லாம் தெரிந்தவன் போலப் பேசுகிறான்!' என்று மாம னார் ஏசுவார்; காந்தா பாடு மிகக் கஷ்டமாகிவிடும். யார் பக்கம் பேசுவது. தகப்பனார் கூறும்போது, தன் கணவர் குற்றம் செய்வதாகத்தான் தோன்றுகிறது. கணவர் விஷயத்தை விளக்கும் போதோ, தகப்பனார் செய்வது ஆபாசம் எனத் தெரிகிறது. இந்தச் சில்லறைச் சண்டை முற்றி, கடைசியில் ஒருவர் முகத்தில் ஒருவர் இனி விழிப்பதில்லை என்று சண்டை போட்டுக் கொண்டு சுந்தரம், தன் மனைவி காந்தாவுடன் சிங்கப்பூர் சென்று, வியாபாரம் செய்து பெரும் பொருள் சேர்த்தான். கடைசிவரை விரோதம் நீங்கவில்லை; அவர்கள் தனியாகவே வாழ்ந்தனர்.
அவர்களை எண்ணினான் லிங்கம், அந்தச் சாவடியில் படுத்துக்கொண்டு.
எவ்வளவு பெரிய மாளிகையோ. என் தங்கை புருஷனுக்கு என்ன அழகான மோட்டாரோ, எத்தனை குழந்தைகளோ, ஒன்றும் எனக்குத் தெரிய மார்க்கமில்லையே! நான் அங்கு செல்லலாமா? சென்றால் என்னைக் கவனிப்பார்களோ, அன்றி கொலை செய்தவனுடன் கோடீசுவரனான நான் பேச முடியாது என் சுந்தரம் சொல்லிவிட்டால் என்ன செய்வது என்றும் எண்ணினான்.
மேலே பார்த்தான் ஒரு கயறு கட்டித் தொங்கவிடப் பட்டிருந்தது. அவனையும் அறியாது அவன் கைகள் நெஞ்சருகே சென்றன.
தற்கொலை செய்து கொள்வதே நல்லது. நான் ஏன் இருக்க வேண்டும்? பொருள் இழந்தேன், பொன் இழந்தேன், பெற்றோரை இழந்தேன். கொலை செய்தேன், சிறை புகுந்தேன். இன்று சீந்துவாரில்லை. வேலையில்லை, வாழ வகையில்லை. மரியாதை கிடைப்பதில்லை. மண் தின்று வாழ்வதா! பிச்சை எடுத்துப் பிழைப்பதா? என் செய்வது? அலையில் அகப்பட்ட சிறு குழந்தை, நெருப்பில் விழுந்த புழு, ஆடிக் காற்றில் சிக்கிய பஞ்சு போலவன்றோ எனது நிலை இருக்கிறது. ஏன் நான் வாழவேண்டும்? இறப்பதே நல்லது. இன்றிரவே இந்தச் சாவடியே சரியான இடம். இதோ இக்கயறே போதும், என் வகையற்ற வாழ்வை ஒரு முடிவுக்குக் கொண்டு வர!
கோமளம், பங்களாவிலே வாழுகிறாள்; அவள் தூண்டு தலால் கெட்ட நான் சாவடியில் புரளுகிறேன்.
பரந்தாமன் ஏன் அடிபட்டு இறந்தான். அவன் குடும்பம் படும்பாட்டைப் பார்த்தால் வயிறு 'பகீரென' எரிகிறது.
வக்கீலாம், வக்கீல். கோமளத்தின் சேட்டைகளைத் தெரிந்தும் கண்டிக்காது இருந்து வந்தார். அவருக்குப் பெரிய உத்தியோகம் கிடைத்ததாம். எனக்கோ வேலை யில்லை.
'நான் ஒரு கொலைகாரன் ! ஜெயில் பறவை! தீண்டா தான். நடைப்பிணம் ! கண்டவர் வெறுக்க, காலந் தள்ளுவதா? ஏன் இந்தப் பிழைப்பு, இன்றே முடித்துவிடுகிறேன் என் சோகமான வாழ்க்கையை' என்று தீர்மானித்தான். விநாடிக்கு விநாடி அவனது உறுதி பலப்பட்டது. வாழ்க்கையில் வெறுப்பு அதிகரித்தது. அது மட்டும் பகற் பொழுதாக இல்லாதிருந்தால், அவன் அப்போதே தற்கொலை செய்து கொண்டிருந்திருப்பான். பாழாய்ப்போன சூரியன் எப்போது மறைவானோ, என் வாழ்வும் எப்போது மறையுமோ என்று வாய்விட்டுக் கூறினான். படுத்துப் புரண்டான் சாவடிப் புழுதியிலே. சிவந்த கண்களைத் தூக்கம் பிடித்து ஆட்டியது. நீர் தளும்பிய கண்களிலே நித்திரை புகுந்தது. அயர்ந்து தூங்கிவிட்டான், துர்ப்பாக்கியமே உருவென வந்த லிங்கம்.
மணி பனிரெண்டுக்கு மேலாகிவிட்டது. நாகரிக உடை அணிந்த ஒரு ஆள் அங்கு வந்தான். படுத்துக் கிடக்கும் லிங்கத்தைத் தட்டி எழுப்பினான். கண்களைத் திறந்தான் லிங்கம். தனது நண்பர்களிலே ஒருவனும், முன்னாள் தன்னை வீட்டுக்கும் வரவேண்டாமெனக் கடிந்துரைத்தவனுமான, வீரப்பன் சிரிப்புடன் நிற்பதைக் கண்டான்.
"லிங்கம்! எழுந்திரு. இது என்ன, புழுதியிலே படுத்துப் புரளுகிறாயே. இதோ பார் ! நான் உனக்கொரு நல்ல சேதி கொண்டு வந்திருக்கிறேன் ! இனி நீ பெரிய சீமான்" என்றான்.
லிங்கத்துக்கு அவ்வளவு சோகத்திலும் சிரிப்புத்தான் வந்தது. "இவன் யாரடா பித்தன்!" என்று எண்ணினான்.
"உன் தங்கை புருஷர் சிங்கப்பூரிலே இறந்துவிட்டா ராம். அதற்கு இரண்டு மாதத்திற்கு முன்பே உன் தங்கையும் பிரசவ வேதனையால் இறந்துவிட்டதாம். ஒரு கோடி ரூபாய்க்கு மேற்பட்ட சொத்தை உனக்கு எழுதி வைத்திருக்கிறார் சுந்தரம் பிள்ளை. இதோபார், பத்திரிகையை" என்று வீரப்பன் கூறினான். பத்திரிகையைப் பிடுங்கிப் பார்த்தான் லிங்கம்.
'உண்மைதான்! வீரப்பன் சொன்னது நிஜமே!' என்பது விளங்கிற்று.
ஒரு கோடி ரூபாய்க்கு மேற்பட்ட சொத்து வந்து விட்டது, கைதி லிங்கத்திற்கு! கொலைகார லிங்கம் கோடீசுவரர் இனி!
பணம்! பணம்! பஞ்சையாய், பதராய், பலராலும் தூற்றப்பட்டு, பட்டினி கிடந்து படுத்துப் புரண்ட லிங்கம் இனி பணக்காரன். ஒரு கோடி ரூடாய்! ஒரு முழங்கயிற்றால் உயிரைப் போக்கிக் கொள்ள முடிவு கட்டிய நேரத்திலே, ஒரு கோடி ரூபாய் வருகிறது. கயிறு ஏன்? கவலை ஏன்? வெறுப்பு ஏன்? தற்கொலை ஏன்?
இதோ ஒரு கோடி ரூபாய். உலகம் இனி உன் காலடியில். உற்றார் உறவினர் இனி உன் சொற்படி நடப்பர். இதோ உன்னை ஒரு நாளைக்கு முன்பு வெறுத்த வீரப்பனைப் பார் ! விஷயம் அறிந்ததும் வந்துவிட்டான், உன்னைத் தேடிக் கொண்டு.
எழுந்திரு! எழுந்திரு லிங்கம்! நான் இருக்கிறேன் உனக்குத் துணை. இந்த நானிலம் முழுதும் இனி உன் அடிமை என்று கோடி ரூபாய் சொல்லாமற் சொல்லிற்று.
கோடி ரூபாய்க்குச் சொந்தக்காரனான லிங்கம் வீரப்பனுடன், சாவடியை விட்டுக் கிளம்பினான்.
ஊரார் துரத்தப்பட்டு ஓடிவந்து சாவடியில் படுத்த லிங்கம் ஒரு கோடி ரூபாயின் சொந்தக்காரனாகி, வீரப்பனுடன் சாவடியை விட்டுப் புறப்பட்டு வீரப்பன் மாளிகை சென்றான்.
வீரப்பன் வீடு சென்ற லிங்கம் அங்கு தங்கியபடியே, சிங்கப்பூர் சேதியின் முழுவிபரமும் தெரிந்து கொண்டான். பிரபல வக்கீல்கள் வலிய வந்து, எப்படி, அந்த சொத்தை எடுத்துக் கொள்வதென்பதையும், என்ன செய்வதென்பதையும், சிரித்த முகத்துடன் கூறினர். வீரப்பன், வக்கீலை அழைத்துக் கொண்டு தானே சிங்கப்பூருக்குச் சென்று வருவதாகச் சொன்னான். சரி என ஒப்பினான் லிங்கம். ஆனால் உடனே ஒரு பத்தாயிரம் தேவை என்றான். சேட்ஜி அழைக்கப் பட்டார். "பத்தாயிரம் போதுமா பிள்ளைவாள், இருபதினாயிரம் தரட்டுமா" என்று கேட்டபடியே, ஒரே கையெழுத்தைப் பெற்றுக்கொண்டு, பத்தாயிரம் ரூபாய் தந்தான்.
ஆமாம்! ஒரு கையெழுத்து என்றாலும் அது ஒரு கோடீசுவரரின் கையெழுத்தல்லவா?
வீரப்பா, இனி மாத மொன்றுக்கு உனக்கு 200 ரூபாய் சம்பளம். பரந்தாமன் குடும்பத்துக்கு மாதா மாதம் 100 ரூபாய் தரவேண்டும். கோடி ரூபாயோ, இரண்டு கோடியோ, எந்த இழவோ அது எனக்குத் தெரியாது. அதனை மேனேஜ் செய்ய வேண்டியது நீ. நான் கேட்கும் போது எனக்குப் பணம் வேண்டும்," என்று லிங்கம் கூறினான்.
வீரப்பனும் ஒரு வக்கீலுமாக சிங்கப்பூர் சென்றனர், செல்வத்தைத் திரட்டிக் கொண்டு வர.
லிங்கம், பத்தாயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு சென்னை சென்று, தனி விடுதியில் சமையற்காரன், வேலை ஆள் அமர்த்திக் கொண்டு வாழலானான். மோட்டார் வாங்கியாகிவிட்டது.
வாழ்க்கையின் இன்பத்திற்கு வேண்டிய சாதனங்கள் எல்லாம் இருந்தன. உண்ண உணவும், இருக்க இடமும் இன் றித் தவித்தவன், கோடீசுவரனானதும் அதிக ஆனந்தம் அடைவதே இயல்பு என்ற போதிலும், லிங்கத்துக்கு மனோ பாவம் அப்படியாக வில்லை.
அடிக்கடி பெருமூச்சு விடுவதும், 'இது என்ன உலகம்! மின்னுவதைக் கண்டு மயங்குகிறது. மோசக்காரர் வலையில் இலேசாக விழுகிறது. பாடுபடுவோரைப் பாதுகாப்பதில்லை' என்று முணுமுணுப்பான்.
எங்கே அந்தக் கோமளம்? அவளைக் காண வேண்டும். கண்டு, பழிக்குப்பழி வாங்கி, பாதகி என்று கேட்க வேண்டும். பரந்தாமனின் மனைவியின் பாதத்தில் இவள் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஏன் இதைச் செய்ய முடியாது? கோடி ரூபாய் இருக்கும் போது இது கூடவா கஷ்டம். பார்க்கிறேன் ஒரு கை என்று தீர்மானித்தான் லிங்கம்.
ஒரு தினம், வழக்கப்படி லிங்கம் தனது அழகிய மோட்டா ரிலே மாலைக் காற்று வாங்கப் போனான். காற்றிலும் கடு வேகமாக வேறொரு மோட்டார் வந்தது. தனது மோட் டாரை நொடியில் தாண்டிற்று. பார்த்தான் லிங்கம்.
"டிரைவர், யாருடைய கார் அது?" என்று கேட்டான். "அது குமாரி கோமளாதேவி என்பவரின் கார்" என்றான்.
"விடு வேகமாக அதன் பின்னால். உம்! சீக்கிரம்" என்று உத்திரவிட்டான்.
கோமளத்தின் காரைத் துரத்திக் கொண்டு கோடீசுவரனின் மோட்டார் ஓடிற்று. மோட்டார் டிரைவர் அலுக்கிற நேரத்திலே, கோமளத்தின் கார் ஒரு சாலை ஓரமாக நின்றது. லிங்கத்தின் காரும் நிறுத்தப்பட்டது. கோமளம், காரிலிருந்து இறங்கினாள். கூடவே ஒரு குச்சு நாய் குதித்தது. கோமளம் கீழே இறங்கிய உடனே புன்னகையோடு, அங்கு மிங்கும் நோக்கினாள்.
தன் மோட்டாரில் அமர்ந்தபடியே லிங்கம் அவளைப் பார்த்தான். மூன்று ஆண்டுகள் அவள் அழகையும் அலங்காரத்தையும் அதிகப்படுத்தினதைக் கண்டான். மூன்று ஆண்டுகள் ஆயினவே யொழிய அவள் பருவத்திலே மூன்று அல்ல; பத்து ஆண்டுகள் குறைந்தவள் போலவே காணப்பட் டாள்.
கடலூரில் இருந்ததைவிட அதிக அலங்காரம்! குலுக்கு நடையிலே விசேஷ அபிவிருத்தி. கொடி போல வளைந்து நிற்பதிலே ஒரு புது முறை கற்றுக் கொண்டிருந்தாள் கோமளம். மோட்டார் கதவின் மீது சாய்ந்தபடி நின்றாள். அந்த குச்சு நாய், அவளுடைய தொடை மீது தாவிப் பாய்ந்தது. 'சீச்சி, சோமு ! கீழே படு. உம்.... ஜாக்ரதை' என்று கொஞ்சினாள் கோமளம். குச்சுநாய் மேலும் ஒரு குதி குதித்து அவள் முகத்தைத் தொட்டது.
'சோமு ! கண்ணான சோமு!' என்று மறுபடியும் கொஞ்சி அதனை முத்தமிட்டாள் கோமளம்.
அதே நேரத்தில், லிங்கம் அவள் எதிரில் வந்து நின்றான்!
"ஒரு முத்தம் என்னைக் கெடுத்தது போல, சோமையும் கெடுத்துவிடப் போகிறது" என்று கூறினான் சிரித்துக் கொண்டே.
கோமளத்துக்குத் தூக்கிவாரிப் போட்டது போலாகி விட்டது. நாயைக் கீழே போட்டுவிட்டு, மிரள மிரள லிங்கத்தைப் பார்த்தாள்.
"யார்..! லிங்கமா.. நீயா....?' என்று கேட்டாள்.
"நானேதான் தேவி! உன் லிங்கந்தான். உன் அழகால் மதிமோசம் போனவனே" என்று புன்சிரிப்புடன் லிங்கம் கூறினான்.
அவன் மிரட்டி இருந்தால், கோபித்துக் கொண்டிருந்தால், அடிக்க வந்திருந்தால் கூட கோமளம் பயந்திருக்க மாட்டாள். ஆனால் அவனது புன்சிரிப்பு அவளுடைய மனதிலே ஈட்டி போலப் பாய்ந்தது. துளியும் கடுகடுக்காது, மிக சாவதானமாக அவன் பேசிய பேச்சு அவளுக்குப் பெரும் பயத்தை உண்டாக்கிவிட்டது. தன்னால் சிறைக்கு அனுப்பப்பட்டவன் தன்மீது சீறி விழாது, தன் எதிரில் நின்று சிரிக்கும் போது இது லிங்கமா? அவனது ஆவியா' என்று சந்தேகிக்கும்படி தோன்றிற்று.
முகத்திலே பயங்கரமும், அசடும் தட்டிற்று. நாக்கிலே நீரில்லை. தொண்டையிலே ஒரு வறட்சி. தன்னையும் அறியாமல் கைகால்கள் நடுங்கின.
சோமு, கோமளத்தின் காலடியில் படுத்தது. சோமு "என்னைப் போலவே உன்னிடம் மிக அடங்கி இருக்கிறான். பாபம்! அவனுக்கு என்ன கதியோ" என்றான் லிங்கம்.
கோமளத்தின் கண்களிலே நீர் ததும்பிற்று. "குமாரி கோமளா தேவி! வருந்தாதே இதற்குள். நான் உன் காதலன் லிங்கமல்லவா! நான் உன்னுடைய எத்தனையோ காதலரில் நானும் ஒருவன். என் பேச்சு உனக்கு கசப்பாக இருக்கிறதா? இதோ பார்! என்னிடம் பணமும் இருக்கிறது. உன்னுடைய நாகரிக வாழ்க்கைக்குப் பணம் வேண்டாமா! அதற்குத்தான் என் போன்றவர்களிடம் பணம் வந்து சேருகிறது. என்ன வேண்டும் உனக்கு. புதுமோஸ்தர் டோலக்கு, வைரத்தில் தேவையா? பூனாகரை பட்டு சேலை வேண்டுமா? உதட்டுக்கு உன்னதமான சாயம் வேண்டுமா, பாரிஸ் நகரத்து செண்ட், லண்டன் நகரத்து சோப், ஜெர்மனி மோட்டார், அமெரிக்க தேசத்து அத்தர், எது வேண்டும் கோமளம்? முன்பு நான் உன் வீட்டு வேலைக்காரனாக இருந்தேன். எனவே என் காதலுக்காக என் இதயத்தை, உழைப்பை, உணர்ச்சியை உனக்கு தத்தம் செய்தேன். இன்று நான் பணக்காரன். மானே, ஒரு கோடிக்கு மேல் என்னிடம் இருக்கிறது. கொட்டுகிறேன் உன் காலடியில். அதன் மீது நீ தாண்டவமாடு . என் மனதை மிதித்து என் வாழ்வைத் துவைத்த கோமளம் இன்று நீ எப்படி குமாரி கோமளா தேவியானாயோ அதைப்போலவே கைதியாக இருந்த நானும் கோடீஸ்வரனாகி விட்டேன். என் நேசம் வேண்டுமா உனக்கு . நேரமிருக்குமா என்னையும் கவனிக்க. இதுவரை எத்தனை பேரை அடிமை கொண்டாயோ" என்று அடுக்கிக் கொண்டே போனான் லிங்கம். கோமளம் அழுதாள். கண்ணீர் தாடை வழியாக ஓடி வந்தது.
"அழாதே தேவி! மாலை எவ்வளவோ கஷ்டப்பட்டு முகத்தை நீ செய்து கொண்ட அலங்காரம் கெட்டுவிடும். உன் முக அலங்காரத்தை நம்பி, இங்கு எத்தனையோ பேர் வருவார்கள். அவர்கள் நல்ல காட்சியைப் பார்ப்பதைக் கெடுத்துவிடாதே . கண்களைத் துடைக்கட்டுமா?" என்று கிட்டே நெருங்கப்போகும் சமயம், "ஹலோ கோமளாதேவி' என்ற குரல் கேட்டது. கண்களை அவசர அவசரமாகத் துடைத்தபடியே, கோமளம் திரும்பினாள். லிங்கமும் பார்த்தான்! ஆங்கில உடையுடன் வாயில் சிகரெட்டுடன், முகத்தில் புன்னகையுடன், 25 வயதுள்ள சீமான் வீட்டு வாலிபன் நிற்கக் கண்டான்.
"ஏதாவது இரகசியமா? நான் கெடுத்துவிட்டேனா?" என்றான் வாலிபன் கோமளத்தை நோக்கி. எப்படியோ புன்சிரிப்பை வரவழைத்துக் கொண்டு கோமளம், "ஒன்றுமில்லை பாஸ்கர், இதோ இவர் என் நண்பர், மிஸ்டர் லிங்கம் என்று வந்தவனுக்கு லிங்கத்தை அறிமுகப்படுத்தி வைத்தாள். "இவர், சிங்காரச் சோலை ஜெமீன்தார் பாஸ்கர் ; எனக்கு நண்பர்" என்று லிங்கத்திடம் கூறினாள் கோமளம்.
"ரொம்ப சந்தோஷம்" என்றான் லிங்கம். அந்தச் சொல், கோமளத்தின் இருதயத்தைப் பிளந்தது. பாஸ்கரின் முகத்தை மாற்றிவிட்டது. சிறிது நேரம் மூவரும் மௌனமாக நின்றனர். திடீரென, லிங்கம் உரக்கச் சிரித்தான். இருவரும் திடுக்கிட்டுப் போனார்கள்.
"மிஸ்டர் பாஸ்கர் ! நாளை மாலை பார்க்கிறேன். குமாரி கோமளம்! நான் விடைபெற்றுக் கொள்கிறேன். உனக்குத் தான் தெரியுமே நான் 'பழிக்குப்பழி கொட்டி' என்ற நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று. திடீரென ஒரு கருத்து வந்தது. உடனே போய் அதை எழுத வேண்டும்" என்று கூறி விட்டு, அவர்களை விட்டுப் பிரிந்து, காரில் ஏறிக் கொண்டான். மோட்டாரும் அவன் தங்கியிருந்த விடுதியில் போய்ச் சேர்ந்தது.
ஒரு வாரம் வரையில், லிங்கம், பழைய பத்திரிகைகளைப் படிப்பதும், ஏதேதோ குறிப்பு புத்தகத்தில் எழுதிக் கொள்வதுமாக இருந்தான். யாராரோ அவனிடம் வந்து பேசிக் கொண்டிருந்தனர். ஒரு வாரத்திற்குப் பிறகு சரி! இனி பழிதீர்க்கும் படலம் நம்பர் 1 ஆரம்பமாக வேண்டியது தான் என்று எண்ணினான்.
அன்றிரவு 10 மணிக்கு மேல் ஒரு முரட்டு மனிதன், லிங்கத்தைத் தேடிக் கொண்டு வந்தான். இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். 100 ரூபாய் பெற்றுக் கொண்டு அவன் போய்விட்டான்.
# # #
கடலூரை விட்டு சென்னைக்கு வந்த கோமளம், தனது கணவன் வைத்துவிட்டுப் போன சொத்தை முதலாக வைத்துக்கொண்டு ஆடம்பர அலங்கார வாழ்வு வாழ்வதையும் தனது தளுக்கால் பல பெரிய இடத்து மைனர்களை, ஜெமின் தாரர்களை மயக்கிப் பணம் பறித்து பெரும் செல்வம் தேடிக் கொண்டதோடு, பெரிய மனிதர்களின் பழக்கத்தால் சமுதாயத்திலே மிக மதிக்கப்பட வேண்டியவர்களிலே ஒருத்தியாகக் கருதப்பட்டு, பத்திரிகைக்காரர்களால் புகழப்பட்டு அரசியல் தலைவர்கள், பாங்கிக்காரர்கள், பெரிய வியாபாரிகள் ஆகியோருடன் சரிசமமான அந்தஸ்துடன் பழகத் தொடங் கிய சாதாரண கோமளம், குமாரி கோமளா தேவி எனக் கொண்டாடப்-பட்டு சமூகத்தின் மணியாக ஜொலிக்கலானாள் என்பதைத்தான், லிங்கம் அந்த ஒரு வார காலத்தில் பல ஆதாரங்களைக் கொண்டு கண்டு பிடித்தான். பல ஒற்றர்களை ஏற்படுத்தி அவளுடைய மூன்று ஆண்டு அலுவலர்களையும் திரட்டி குறித்து வைத்துக் கொண்டான். பழைய பத்திரிகைகள் மூலமாக அவள் எவ்வளவு மதிப்புக்குரியவளாகக் கருதப்பட்டாள் என்பதும் தெரியவந்தது.
# # #
வாரந்தவறாது அவளது படம் ! எந்த விருந்திலும் அவளுக்கு இடம் ! எந்த அரசியல் கூட்டத்திலும் அவளுக்குச் செல்வாக்கு.
குமாரி கோமளா தேவிதான் சென்னைச் சீமாட்டிகள் சங்கத்தின் தலைவி, கலாபிமான மண்டலியின் காரியதரிசி, கீழ்த்திசைக் கலைக் கல்லூரியின் கௌரவ ஆசிரியை, 'விழி மாதே' என்னும் பத்திரிகையில் உதவி ஆசிரியை. ஆம்! அவள் இல்லாத இடமே இல்லை. அவளைக் கொண்டாடாத பேர் வழியில்லை .
பரந்தாமனின் கள்ளக் காதலி லிங்கத்தை சிறைக்கு அனுப்பிய காதகி, சென்னையின் சீமான்கள் - சீமாட்டிகள் உலகிலே ஜொலிக்கிறாள்.
லிங்கம், அவளுடைய உண்மை உருவை வெளிப்படுத் துவதென்பதே அசாத்தியம். யார் நம்புவார்கள். சொன்னால் இவன் ஒரு பித்தன் என்று கூறிவிடுவார்கள். அவ்வளவு உயர்ந்த இடத்தில் தங்கி நின்றாள், உருவத்தால் பெண்ணா கவும், உணர்ச்சியால் பேயாகவும் வாழ்ந்து வந்த கோமளம்.
# # #
அவளுடைய செல்வமும் செல்வாக்கும் அழிக்கப்பட்டா லொழிய, கோமளத்தை, என்னால் பழிக்குப்பழி வாங்க முடியாது. எனவே எனது முதல் வேலை, கோமளத்தின் பணக் கொட்டத்தை அடக்குவதுதான்.
ஆம்! முள்ளை முள் கொண்டேதான் எடுக்க முடியும். பணத்தை பணங் கொண்டே அடக்க முடியும். பார்க்கிறேன் ஒருகை. அவளைப் பராரியாக்கினால் தான் அவள் ஒரு பாதகி என்பது விளங்கும். இல்லையேல் நான்தான் பித்தனெனப் பேசப்படுவேன். எனவே பொறு மனமே பொறு என்று எண்ணி, ஒரு முடிவுக்கு வந்தான், வஞ்சந் தீர்த்துக் கொள்ள வேண்டுமென சென்னைக்கு வந்த லிங்கம்.
எனக்கும் அவளுக்கும் வயது எவ்வளவோ வித்தியாசந்தான்! என்னைவிடக் குறைந்தது 10 ஆண்டுகளாவது அவள் பெரியவளாகத்தான் இருப்பாள். என்றாலும் எனக்கென் னவோ அவள் மீது ஆசை அவ்வளவு இருக்கிறது.
"எதைக் கண்டு நீ ஆசைப்பட்டாய் தம்பி!"
"எதைக் கண்டா ? என்ன அப்பனே, அப்படிக் கேட்கிறாய்? உனக்குக் கண்ணில்லையா! அவளுடைய பார்வை எப்படிப் பட்டது? வாட்டுகிறதே என்னை. அவள் மேனி என் மனதை உருக்குகிறதே . அவள் நடையழகை என்னென்பேன். உடை அழகை என்னென்பேன்? உடற்கட்டு உள்ளத்திலே கொள்ளை எண்ணத்தைக் கிளப்புகிறதே . அவள் பேச்சு எனக்குத் தேனாக இருக்கிறதே. நீ பேசிப்பார், அவளோடு. தெரியும் உனக்கு அந்த இன்பம். வேண்டாம் நண்பா, பேசக்கூடாது. என் கண் எதிரே வேறு ஆளுடன் அவள் பேச நான் சகியேன். கண்களைச் சற்று குறுக்கிக் கொண்டு கருத் துத் திரண்டு வளைந்துள்ள புருவத்தை சிறிதளவு அசைத்த படி அவள் பேசும்போது நீ கண்டால் தெரியும், அந்தக் காட்சியின் அழகை! என்னை அந்தச் சிங்காரி சொக்க வைத்து விட்டாள்."
"ஆம்! அதிலே அவள் மகா கைகாரி!"
"நண்பா, அப்படிச் சொல்லாதே! அவளை அடைய நான் பட்டபாடு உனக்கென்ன தெரியும். இவ்வளவு பழக்கம் ஏற்பட நான் எத்தனை நாட்கள், வாரங்கள் காத்துக் கொண்டிருந்தேன் தெரியுமோ. மான் குட்டி போலவன்றோ அவள் துள்ளி ஓடினாள்! நான் முதன் முதல் அவள் கைக ளைப் பிடித்து இழுத்தபோது அதை எண்ணும்போதே என் உள்ளம் எப்படி இருக்கிறது தெரியுமா?"
"வேதாந்தம் பேசாதே நண்பா!'
"வேதாந்தம் அல்ல தம்பி, அனுபவம்! நான் பட்ட பாடு. உனக்கு வர இருக்கும் ஆபத்து கேள் தோழா! அவளை நம்பாதே. அவள் சிரிப்பிலே சொக்கி வீழ்ந்து சிதையாதே, அவளைத் தீண்டாதே . அவள் ஒரு விபச்சாரி. விபச்சாரியின் தன்மையோடு கொலைகாரியின் மனம் படைத்தவள் அவள்"
பாஸ்கரன், 'பளீர்' என ஒரு அறை கொடுத்தான் லிங்கத்தின் தாடையில்.
"கோமளத்தைக் குறை கூறும் குண்டனே. உன்னைக் கொல்வேன். என் எதிரில் பேசாதே ! இனி முகத்தில் விழிக் காதே . போ வெளியே எழுந்து."
லிங்கம் சிரித்துக் கொண்டே, பாஸ்கரன் வீட்டினின் றும் வெளியேறினான்.
நான் கூண்டிலே போவதற்கு முன்பு இருந்த நிலையில் இருக்கிறான் பாஸ்கரன், இவனாவது அடித்தான் தாடை யில். இந்தக் கோமளத்தின் மையலால் சிக்கிய நான் ஆளை அடித்துக் கொன்றே விட்டேனே! பாதகி, அப்படித்தான் ஆளை அடியோடு தன் அடிமையாக்கிக் கொள்கிறாள். ஆட வர் அழியவே அழகைப் பெற்றாள்" என்று எண்ணினான் லிங்கம்.
பாஸ்கரன் என்ற சீமான் வீட்டு மகன், கோமளத்தைக் கண்டு அவள் மையலில் சிக்கியதைக் கடற்கரையிலேயே கண்ட லிங்கம், ஒருநாள், பாஸ்கரன் வீட்டுக்குச் சென்று அவனைத் தடுக்க எண்ணினான். இருவரும் பேசிய சம்பா ஷணையே மேலே தரப்பட்டது. சம்பாஷணையின் போது கோமளத்தைப் பற்றிய உண்மையை எடுத்துச் சொன்ன லிங்கத்தைத்தான், பாஸ்கரன் அடித்தான்.
# # #
காதலால் கருத்தை இழந்த காளையின் கோபத்தைக் கண்டு லிங்கம் வருத்தப்பட-வில்லை. அவனுக்கே தெரியு மன்றோ அந்த ஆத்திரம், ஆவேசம் பரந்தாமன் மீது பாய்ந்த போது, மனம் இருந்த நிலை! எனவே கோபம் வரவில்லை லிங்கத்துக்கு; யோசனைதான் வந்தது. என்ன செய்வது, இந்த இளைஞனுக்கு வர இருக்கும் ஆபத்தை. எப்படி கோமளத்தின் நாகரிகப் போர்வையைக் கிழித்தெறிந்து, அவளுடைய நாசகாலத் தன்மையைக் காட்டுவது என்பதிலேயே லிங்கத் தின் யோசனை இருந்தது.
# # #
கோமளத்தின் செல்வத்தைச் சிதைத்தாலன்றி செல்வாக்கைச் சிதைக்க முடியாதென்பது லிங்கத்துக்கு நன்கு தெரியும். பணந்தானே, பராரியாக பாழுஞ்சத்திரத்திலே உயிரை மாய்த்துக் கொள்ள இருந்த தன்னை, பட்டினத்துக்குப் புது குபேரனாக்கிற்று. லிங்கத்துக்குப் பணத்தின் சக்தியா தெரியாது? எனவே அந்தப் பாதகிக்கு பணமெனும் பலம் இருக்கும் வரையில் அவளைப் பகைத்து ஒன்றும் செய்ய முடியாது என்று எண்ணியே வேறு ஏற்பாடுகளைச் செய்து கொண்டு வந்தான். இடையே பாஸ்கரனின் கவலை வந்து விட்டது. பாபம் பாஸ்கரன் ! கோமளத்தையே தனது உயி ராக எண்ணினான். தனது குடும்ப சொத்து மிக விரைவா கவே கரைத்துக் கொண்டும் வந்தான். இந்த ஆபத்தைத் தடுக்க வேண்டும் என்று எண்ணினான் லிங்கம். தன் வார்த்தை பாஸ்கரன் காதில் ஏறுமென எண்ணியே அவன் மாளிகை சென்று மந்திராலோசனை கூறினான். ஏறுமா இவன் சொல்! தலையணை மந்திரம் ஏறிய பிறகு பிறிதொரு மந்திரம் செல்ல இடமுமுண்டோ ? தையலின் மையலில் சிக்கிய பிறகு, நண்பன் மொழி என்ன செய்யும், நல்லோர் வார்த்தை எதுக்கு! மன்மதனிடம் மண்டியிட்ட பிறகு மகேஸ்வரனாலும் மீட்க முடியாதே அந்த அடிமையை!
# # #
ஒரு முரட்டு மனிதனை அழைத்து 100 ரூபாய் கொடுத்தனுப்பினான் லிங்கம் என முந்திய இதழில் குறிப்பிட்டிருந் தோமல்லவா! அவன் லிங்கத்தின் சொற்படி கோமளத்தின் தோட்டக்காரனாக வேலைக்கமர்ந்தான்.
அவன்தான் லிங்கத்துக்கு ஒற்றன். கோமளத்தின் வீட் டில் நடக்கும் ஒவ்வொன்றையும் விடாது கவனித்து சேதி சொல்பவன். விநாடிக்கு விநாடி கோமளம் என்ன செய்கிறாள், யாரைக் காண்கிறாள் என்பதெல்லாம் லிங்கத்துக்குத் தெரியும். கோமளம் இதை அறியாள். லிங்கத்திடம் அவ ளுக்குப் பயமிருந்தது. ஆனால் தன் மீது வஞ்சம் தீர்த்துக் கொள்ள அவன் விரும்புவது மட்டும் அவளுக்குத் தெரியாது. அவன் மட்டும் 'ஜாடை' காட்டி இருந்தால் போதும், கோமளம் அவனுடன் கூடிக்குலாவத் தயாராக இருந்தாள். அவளுக்கென்ன அந்த வித்தை தெரியாதா ? பழக்கமில்லையா! அழகு இருக்கிறது, அதைவிட அதிகமாக 'சாகசம்' இருக்கிறது. பாழாய்ப் போன பருவம் மாறிவிடுகிறதே என்ற கவலைதான்! அவளுக்கு பவுடரும், மினுக்குத் தைலமும் எத்தனை நாளை-குத்தான் பருவத்தை மறைத்து பாவையாக்கிக் காட்ட முடியும்? இளமை மட்டும் என்றுமே இருக்குமானால் இகத்திலே இவளுக்கு இணை யாருமில்லை என்று ஆகிவிடுவாள் கோம ளம். அவ்வளவு கைகாரி! ஆனால் லிங்கம் தன்னை அலட்சியம் செய்வதைக் கண்டாள். மேல்விழுந்து செல்ல மட்டும் பயமாகத்தான் இருந்தது. மேலும், பாஸ்கரன் இருந்தான், பணத்துடன், பித்தம் தலைக்கேறி.
# # #
'சம்போ ! சதாசிவம்!' - என்று உருக்கமாகக் கூறிக் கொண்டே, ஜடைமுடியுடன் நெற்றியில் நீறு துலங்க, நீண்ட தொரு காவியாடை அணிந்து, ஒரு சாமி, கோமளத்தின் வீடு சென்றார். பிச்சை போட வேலைக்காரி வந்தாள். அரிசியைக் கொட்டினாள் பையிலே. "அபலையே! இந்தா அருட் பிரசாதம்" என்று கூறியபடி, தன் வெறுங்கையை நீட்டினார் சாமி. வேலைக்காரி விழித்தாள். "ஏன் விழிக்கிறாய், திற வாயை' என்றார் சாமி. திறந்தாள். கையை வாயருகே கொண்டு போனார். எங்கிருந்தோ சீனி வந்தது. சுவைத்தாள் வேலைக்காரி. சாமியின் அற்புதத்தை ஓடோடிச் சென்று கோமளத்துக்கு கூறினாள். கோமளம் சாமியை நாட, சாமி பலவித அற்புதங்களைச் செய்து காட்டினார்.
"சாமி! தங்களுக்கு வேறு என்னென்ன தெரியும்" என்றாள் கோமளம். "ஆண்டவனின் அடிமைக்கு அனந்தம் அற்புதம் செய்யத் தெரியும். கைலையங்கிரியான் கடாட்சத்தால் காணாத பொருளைக் கண்டெடுப்பேன் - இல்லாத பொருளை உண்டாக்குவேன் - ஆகாத காரியத்தை ஆக வைப்பேன் - பேயோட்டுவேன் - பித்தம் தெளிவிப்பேன் - இரசவாதம் செய்யவும் வல்லேன். ஆனால் அதை மட்டும் அடிக்கடி செய்வதில்லை - என்று சாமியார் கூறினார்.
"எல்லாச் சாமிகளுந்தான் இரசவாதம் செய்யமுடியு மெனக் கூறுவது. ஆனால் ஏமாற்றந்தான்" என்றாள் கோமளம்.
"இருக்கலாம் அணங்கே! என் பேச்சு சரியோ, தப்போ! பிறகு பார்ப்போம். நான் இன்று ஒரு ஆரூடம் சொல்கிறேன். நாளை வரச்சொன்னேன். ஆண்டவன்றிய வருகிறேன். நான் சொன்னது நடக்கிறதா இல்லையா என்று பாரும் அப்போது என்று சாமியார் சொன்னார் .
"சொல்லும்" என்றாள் கோமளம்.
"சுகமும் துக்கமும் மாறிமாறி வரும். அது இயற்கை அம்மையே! இன்று சுகமாக இருக்கும் உன் தமையன் நாளை கைது செய்யப்படுவான். இலஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக --" என்றான் சாமியார் என்ன? என் அண்ணா கைது ஆவதா?' என்று திகைத்துக் கேட்டாள் கோமளம்.
பாபம் ! நெஞ்சிலே பயம். குலை நடுக்கம்! மாதரசி மனம் நொந்து, "என்ன பயம்? நடப்பன நடக்கும் நானிலத்திலே. இதுவே முறை" என்றார் சாமியார்.
"சுவாமி! என்னை சோதிக்க வேண்டாம்" என்று கெஞ்சினாள் கோமளம். "மாதே! நான் ஏன் சோதிக்க வேண்டும். சோமேசன் என்னையன்றோ சோதிக்கிறார்" என்றார் சாமியார்.
"என்ன அது?" என்றாள் கோமளம்.
"உன் அண்ணனைக் காப்பாற்றி உன் மனதைக் குளிர வைக்க வேண்டுமென்று ஒரு எண்ணமும் என் உள்ளத்திலே எழுகின்றது. அதே நேரத்திலே அடாது செய்தவர் படாதபாடு படுவதன்றோ முறை! நாம் ஏன் அதிலே குறுக்கிட வேண்டு மெனவும் தோன்றுகிறது. ஆண்டவன் என்னை சோதிக் கிறான்" என்றார் சாமியார்.
"சுவாமி! எப்படியேனும் என் அண்ணாவைக் காப்பாற்றும். அவர் ஆபத்திலே சிக்கிக்கொண்ட தென்னமோ உண்மைதான். என்ன செய்வது அதற்கு' என்றாள் கோமளம்.
"மாதே! ஒன்று செய். உன் அண்ணனை இங்குவரச் சொல். நாளை நாம் மூவருமாகச் செல்வோம். இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் இடுகாட்டில் எம் அண்ணல் ஏகாந்தனுக்கு ஒரு பூஜை நடத்துவோம். அவர் காப்பாற்றுவார். உமது அண்ணன் தான் இதுவரை செய்த தவறை ஒன்று விடாது எழுதி அதை இலிங்கேசன் பாதத்திலே வைத்து வணங்கவேண்டும். ஆண்டவன் அருள் புரிவார்" என்று கூறிவிட்டு விடைபெற்றுக் கொண்டு போனார் சாமியார் .
# # #
கவலையுடன் உள்ளே சென்ற கோமளம், தனது படுக்கை யறையில் ஒளிந்து கொண்டிருந்த தனது அண்ணன் வக்கீல் வரதாச்சாரியிடம் சாமியாரைப் பற்றிச் சொல்ல, அவனும் ஏற்பாட்டுக்கு ஒப்பினான்.
மறுநாள் இரவு 10 மணிக்கு சாமியார் வந்தார். வரவேற்று இருவரும் வணங்கினர். 'எழுதி விட்டீரோ ஆண்டவனுக்கு விண்ணப்பத்தை' என்று கேட்க, 'ஆம்' என்று சொல்லி ஒரு கடிதத்தைக் கொடுத்தார். வக்கீலாக இருந்த பிறகு ஒரு ஜெமீனில் திவானாக இருந்து கள்ளக் கையொப்பம், இலஞ்சம் முதலிய பல செய்து, விஷயம் வெளிவந்துவிடவே சென்னைக்கு ஓடிவந்து தங்கையிடம் சரண் அடைந்த வரதாச்சாரி. சாமியார் அதை வாங்கி படித்துக்கூடப் பார்க்கவில்லை. சிறிது நேரம், மூவரும் ஆண்டவனைத் தொழுதனர்.
மணி பனிரெண்டடித்தது. மூவரும் சுடுகாடு செல்லப் புறப்பட்டனர். வீட்டு வாயிலை அடைந்ததும், எங்கிருந்தோ போலீசார் திடீரெனத் தோன்றினர். வரதாச்சாரியைக் கைது செய்தனர். சாமியிடமிருந்த பையையும் பிடுங்கிக் கொண்டனர். அதிலே தான் வரதாச்சாரி தன் குற்றம் பூராவையும் எழுதி வைத்திருந்த கடிதம் இருந்தது. வரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துக் செல்லப்பட்டனர். அங்கு போலீஸ் கமிஷனரே இருந்தார்.
"மிஸ்டர் லிங்கம்! சபாஷ்! சரியான வேலை செய்தீர். ஆசாமி அகப்படாமலே மூன்று மாதமாகத் தலை மறைந்து கிடந்தான்" என்று கூறி சாமியாரைத் தட்டிக் கொடுத்தார். ஜடைமுடியுடன் விளங்கி சாகசமாக கோமளத்தைச் வரதாச் சாரியையும் ஏய்த்த லிங்கம் சிரித்தான். சொல்ல வேண்டுமா கோமளத்தின் கோபத்தை. தோட்டக்காரனாக நடிக்கும் ஒற்றன் மூலமாக வரதாச்சாரி மீது பலவித குற்றமிருப்பதைக் கோமளம் கேள்விப்பட்டு வருந்தின சேதியும், வரதாச்சாரி தப்பு தண்டா செய்துவிட்டு தலை மறைந்த சேதியும், திருட்டுத்தனமாக வீடு வந்த சேதியும் கேள்விப்பட்டு, சாமிவேடம் பூண்டு, லிங்கம், வரதாச்சாரியைச் சிக்க வைத்தான். கோமளத்தின் கொட்டம் அடங்கும் இனி என்று எண்ணி மகிழ்ந்தான்.
# # #
வரதாச்சாரியின் வழக்கு ஆரம்பமானதும், கோமளத்தைக் கொண்டாடி வந்த கூட்டம் கொஞ்சங் கொஞ்சமாகக் குறைந்து விட்டது. அண்ணனைப் போலத்தான் இவளும் இருப்பாள் என்று பேசிக் கொண்டனர். பாஸ்கரன் மட்டும். அவளையும், அவளுக்காக வரதாச்சாரியையும் கூடப் புகழ்ந்தே பேசினான்.
வழக்கு காரணமாக, கோமளத்தின் பணம் பஞ்சாய் பறந்தது. அலைச்சல், மனக்கலக்கம், எவ்வளவு பணத்தை வாரி வீசியும் ஒன்றும் பயனில்லாமலே போய்விட்டது. வரதாச்சாரிக்கு ஏழு வருடக் கடுங்காவல் தண்டனை விதிக் கப்பட்டது.
# # #
வழக்கு முடிந்த மறுதினம்...
"குமாரி கோமளா தேவியின் அண்ணன் வரதாச்சாரிக்கு மோசடி குற்றத்திற்காக 7 வருடம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது" என்ற சுவரொட்டி சென்னை முழுவதும் ஒட்டப்பட்டது. அதற்காக லிங்கத்துக்குச் செலவு இருநூறு ரூபாய். ஆனாலும் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேலாகச் செலவிட்டாலும் வராத அளவு ஆனந்தம். பழி தீர்த்துக் கொண்டோம். இனி அவள் வெளியே தலை நீட்ட முடியாது. ஒழிந்தது அவள் பணம். மீதமிருப்பது அவளுடைய டம்பத்துக்குக் காணாது; செல்வாக்கு அற்றுவிட்டது. செத்தாள் அவள் - என்று எண்ணி எண்ணி மகிழ்ந்தான்.
# # #
இவ்வளவு நடந்தும் பாஸ்கரனின் மனம் மாறவில்லை. முன்னைவிட மோகம் அதிகரித்தது. கோமளமும், உலகம் தன்னை இனி வெறுத்து ஒதுக்கும் என்பதை நன்கு தெரிந்து கொண்டதால் பாஸ்கரனையும் விட்டு விட்டால் வீதியில் திண்டாட வேண்டி வரும் என்பதைத் தெரிந்து கொண்டு, அவனிடம் அளவற்ற ஆசை கொண்டவள் போல நடித்தாள். குடும்பமோ பெருத்துவிட்டது. வரதாச்சாரியின் மனைவி, குழந்தைகள், கோமளத்திடம் வந்து விட்டனர். இந்நிலையில் பாஸ்கரனின் தந்தை இறந்துவிட்டார். இந்த துக்கச் சேதி கோமளத்துக்கு புதிய ஆனந்தத்தைக் கொடுத்தது. ஏனெ னில், பாஸ்கரன் தந்தையின் கீழ் பிள்ளையாக இருந்ததால் அதிக தாராளமாக பணத்தை இறைக்க முடியாதிருந்தான். தந்தை போனபின், பாஸ்கரனே ஜெமீன்தார். எனவே இனி கோமளம் ஒரு ஜெமீன் தாரணியன்றோ ! பாஸ்கரன் கோமளத்தை ரிஜிஸ்தர் மணம் செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்ய ஆரம்பித்துவிட்டான். இச்சேதி கேட்டு லிங்கம் துடிதுடித்தான். எந்தப் பாடுபட்டாவது இந்த மணம் நடக்க ஒட்டாது தடுத்தே தீரவேண்டும் எனத் தீர்மானித்தான். பாஸ்கரனோ யார் வார்த்தையையும் கேட்கமாட்டான். தன்னை ஒரு பகைவனாகவே கருதிவந்தான். என் செய்வது?
கோமளத்தின் கெட்ட காலம் மாறி மறுபடியும் அவள் சீமாட்டியாக வாழ்வதைக் கண்ணால் காண்பதைவிட, தான் பழையபடி பஞ்சையாகிப் போவதே மேல் என்று எண்ணினான். ஆனால் வீரப்பன், கணக்குப்படி, எவ்வளவோ செலவிட்டும், லிங்கத்தின் பணம் குறையவில்லை . வீரப்பன் லிங்கத்தின் சொத்தைக் கொண்டு ஆரம்பித்த வியாபாரம் நல்ல லாபத்தைத் தந்தது. எனவே பணத்துக்குப் பஞ்சமில்லை! ஆனால் பாதகி கோமளம் மறுபடியும் சீமாட்டியாவதா. அதுதானே கூடாது என்று எண்ணி எண்ணி வாடினான் லிங்கம். அந்த பாஸ்கரன் மட்டும் அவளை கைவிட்டால் போதும், அவள் கொட்டம் அடியோடு அடங்கும். அவனோ அவளைக் கலியாணம் செய்து கொள்கிறானாமே. இதற் கென்ன செய்வது என்று ஏங்கினான்.
# # #
ஒரு நாள் இரவு தோட்டக்கார ஒற்றன் ஓடோடி வந்து ஏதோ சேதி சொல்லிவிட்டுப் போனான். உடனே மோட்டாரை ஓட்டிக் கொண்டு லிங்கம் நகரின் கோடியில் இருந்து ஒரு சிறு தெருவுக்குச் சென்றான். ஒரு வீட்டினுள்ளே போனான்.
ஒரு நடுத்தர வயதுடைய மாது "வாங்கய்யா, உட் காருங்கோ ! எங்கிருந்து வருகிறீர். அம்மா, அம்புஜம் ஏதோ வெட்கப்படாதே - தாம்பூலம் எடுத்துவா" என்றாள். அது ஒரு தாசி வீடு. அம்புஜம் என்ற பெண் தாம்பூலத்தை எடுத்து வந்து வைத்துவிட்டு வெட்கப்பட்டாள். அது அவளுடைய வாழ்க்கை வித்தையிலே ஒரு முக்கியமான பாகம்.
"அம்மா! நான் வந்த விஷயம் வேறு. நீங்கள் எண்ணுவது வேறு. அம்புஜம், நாட்டியம் ஆடுமென்று கேள்விப் பட்டேன். பிரபலமான கலா மண்டபத்திலே பயிற்சியாமே! எனக்கு நாட்டியக் கலையிலே கொஞ்சம் ஆசை" என்றான் லிங்கம். நாட்டியம் ஆடும்; ஆனால் குழந்தைக்கு இப்போது கொஞ்சம் உடம்பு சரியில்லை என்றாள் தாய்.
'கலா மண்டபத்திலே நல்ல பயிற்சிதானோ?' - என்று கேட்டான் லிங்கம்.
'பயிற்சிதான்' என்று இழுத்தாற்போல் பதில் கூறினாள் அம்புஜம்.
'ஆயிரம் ரூபாய் இப்போதே தருகிறேன் அம்புஜம், கலா மண்டபத்தின் மர்மத்தை எனக்குச் சொல்லு. உங்களுக்கு ஒரு ஆபத்தும் வராதபடி நான் பார்த்துக் கொள்கிறேன். கோமளம் செய்த கொடுமைகளை மட்டும் சொல்லு எனக்கு. நீ நேற்று அவள் வீடு சென்று அழுதவரைக்கும் விஷயம் தெரியும். ஆகவே ஒன்றையும் ஒளிக்காதே. நான் உன்னை சிக்க வைக்கமாட்டேன்; நடந்ததைக் கூறு' என்று கேட்டான் லிங்கம்.
வெகு நேரம் வரையில் விஷயத்தைக் கூற அம்புஜம் ஒப்பவில்லை. பிறகு சொல்லிவிட்டாள்.
"அந்தப் பாவி கோமளம், எங்களை எல்லாம் வீணாக வஞ்சித்து, பெரிய ஆட்களுக்கு அந்த கலாமண்டபத்தை விபசார விடுதியாக்கி பணம் சேர்த்தாள். இப்போது அதைக் கலைத்து விட்டாள். நாங்கள் கஷ்டப்படுகிறோம். அவள் அதுமட்டுமா செய்தாள். எத்தனையோ பெண்களை, எங்கே வடநாட்டிலே ஒரு ஊர் இருக்கிறதாம். அங்கு விற்று வந்தாள். அவள் செய்த கொடுமை கொஞ்சமல்ல" என்றாள் அம்புஜம்.
"எனக்கு ருஜு வேண்டுமே" என்று கேட்டான் லிங்கம்.
"இதை எப்படி ருஜு செய்வது. நேற்று கூட இவளால் விற்கப்பட்ட பெண் எனக்கு கடிதம் எழுதியிருக்கிறாள்" என் றாள் அம்புஜம்.
"அதுவே போதுமே! எங்கே எடு அக்கடிதத்தை" என் றான் லிங்கம்.
அதிலே, 'பாவி கோமளம் என்னைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி குடிகாரனுக்கு விற்றுவிட்டாள். நான் இங்கு தவிக்கிறேன். அவள் என்னை கன்னிகை என்று சொல்லி ஏமாற்றி, 2000 ரூபாய்க்கு விற்று விட்டாளாம். நான் கன் னிகை அல்ல என்று அவனுக்குத் தெரிந்து விட்டது. என்னைக் கொல்லுகிறான் குடிகாரன்.'
என்று அந்த அபலை தன் கதையை எழுதியிருந்தாள். ஆயிரம் ரூபாயைக் கொடுத்து, அக்கடிதத்தை வாங்கிக் கொண்டான் லிங்கம். இனி தீர்ந்தது கோமளத்தின் வாழ்க்கை என குதித்தான்; வீடு வந்தான்.
# # #
"மிஸ்டர் பாஸ்கர் ! பேசுவது லிங்கம். அடடே, கொஞ்சம் இருப்பா. விஷயம் முக்கியமானது. கோபிக்காதே! உனக்கு எப்போது கலியாணம்."
"உனக்கு அதைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை"
"மிஸ்டர் பாஸ்கர் ! இன்றிரவு கோமளம் என்னிடம் கொஞ்சி விளையாடி முத்தமிடுவதை நீ கண்டால் என்ன பரிசு தருவாய்..?"
"துப்பாக்கியால் அவளையும் உன்னையும் சேர்த்துச் சுடுவேன்."
"துப்பாக்கி இல்லையானால்---"
"விளையாடாதே."
"கேள் பாஸ்கர் ! நாளை இரவு பத்து மணிக்கு, நீ இங்கு வர வேண்டும். இங்கு நான் சில காட்சிகளைக் காட்டு கிறேன். பிறகு தாராளமாகக் கோமளத்தைக் கலியாணம் செய்து கொள்ளலாம்.
"சரி! வருகிறேன்"
இந்த டெலிபோன் சம்பாஷணைக்குப் பிறகு, …..
"கோமளந்தானே பேசுவது."
"ஆமாம், நீங்கள்."
"பழைய காதலன் ......"
"நான்சென்ஸ்…."
"உன் கலியாணத்துக்கு ஏதாவது பரிசு தர வேண்டாமா? லிங்கத்தின் பரிசு வராமல் கலியாணம் நடக்கலாமா ......"
"என்னிடம் வீண் வார்த்தை பேச வேண்டாம்."
"இதேதான் கலா மண்டலி அம்புஜம்கூடச் சொன்னாள்.'
"என்ன? அம்புஜமா? அது யார்?"
"அவள் தான் உனது கலா மண்டல நட்சத்திரம். கல்வி மண்டபத்தில் கெட்டவள். அவளுக்கு நீ விற்ற பெண் கடிதம் எழுதினாள். ஆயிரம் ரூபாய்க்கு அதை விலைக்கு வாங்கினேன். பாஸ்கரனுக்கு அதைத்தரப் போகிறேன். இன்றிரவு 9 மணி முதல் 10 மணிவரை நீ என்னுடன் தனித்திருக்கச் சம்மதித்தால் - கடிதம் கொளுத்தப்படும். 'இல்லையேல் கொடுக்கப்படும். 'லிங்கம் .... லிங்கம் .... ஹலோ!'. டெலிபோனைக் கீழே வைத்துவிட்டு லிங்கம் சிரித்தான்.
# # #
இரவு 9 மணிக்கு லிங்கத்தின் வீடு நோக்கி கோமளம் வந்தாள். என் செய்வாள் பாபம். அந்த ஒரு கடிதம் அவளுக்கு எமனன்றோ ?
மலர்ந்த முகத்துடன் வரவேற்றான் லிங்கம்.
அவளுக்கு முகத்தில் ஈயாடவில்லை . பயம், நடுக்கம், கண்களிலே நீர் ததும்பிற்று. நேரே இருவரும் படுக்கை அறை சென்றனர். கடிதத்தைப் படித்துக் காட்டினான் லிங்கம். கோமளம் அழுதாள்.
"லிங்கம்! போதாதா நீ என்மீது வஞ்சந்தீர்த்துக் கொள்வது? இந்த உதவி செய். கடிதத்தைக் கொளுத்தி விடு. பாஸ்கரனை நான் மணக்காவிட்டால் என் வாழ்வு பாழாகி விடும்.
"கோமளம்! உனக்கு பாஸ்கரன் மீது காதலா?" என்று கேட்டான் லிங்கம்.
"ஆம்! தடையில்லாமல் . கடைசிவரை கெட்டவளாகவா இருப்பேன். எனக்கு புத்தி வந்துவிட்டது" என்றாள் கோமளம்.
"அதைப் போலவே உன்மீதும் எனக்கு ஆசை வந்து விட்டது. அதோ உன் அழகிய உதடு என்னை அழைக்கிறது. முத்தம் வேண்டும் கோமளம் ! மூன்று முத்தங்கள் கொடு, இக்கடிதத்தை உன்னிடம் கொடுத்து விடுகிறேன்" என்றான் லிங்கம்.
"நிஜமாகவா! உள்ளபடி என் முத்தம் உமக்கு வேண்டுமா" என்று கேட்டாள் கோமளம்.
"ஆமாம்; கொடு! ஆசையுடன் கொடு!" என்று ஆவேசம் வந்தவனைப்போலக் கேட்டான் லிங்கம்.
அவன் மீது பாய்ந்து விழுந்தபடி கோமளம், ஒன்று, இரண்டு, மூன்று நான்கு ஐந்து என முத்தங்களை கொடுத்த வண்ணமிருந்தாள்.
"போதுமடி உன் முத்தம்" என்று கூறியபடி பாஸ்கரன் அவள் மயிரைப் பிடித்து இழுத்தான். லிங்கம் சிரித்தான். கோமளத்தின் கோபம், எப்படித்தான் இருந்ததென்று யாராலும் சொல்லமுடியாது. வாயில் வந்தபடி திட்டிக் கொண்டே ஓடிவிட்டான். பாஸ்கரன். "எனக்கு நீதான் குரு" என்று லிங்கத்தின் அடி பணிந்தாள்.
கோமளத்தின் வாழ்க்கை, கிடுகிடுவெனக் கீழே வந்து விட்டது. கடைசியில் அவள் பகிரங்கமான விபசாரியாகி விபசார சட்டத்தின்படி தண்டிக்கப்பட்டாள்.
லிங்கம் தனது வியாபாரத்தையும், சொத்தையும், ஒரு பகுதி பரந்தாமன் குடும்பத்துக்கும், மற்றொரு பகுதி விபசாரிகள் மீட்பு சங்கத்துக்கும் ஒதுக்கி வைத்துவிட்டு தனது நண்பர்களிடம் விடை பெற்றுக்கொண்டு தானாகப் பொருள் தேட சிங்கப்பூர் சென்றுவிட்டான்.
--------------
2. தங்கத்தின் காதலன்
"ஆம்; நான் பேசவில்லையே தவிர, என் கண் பார்வை அதை விளக்கவில்லையா ! உம்மை நோக்கும்போது அந்தக் கண்கள் எவ்வளவு பசியோடு உம்மைப் பார்த்தன. உம்மைக் கண்டவுடன் பசி எவ்வளவு விரைவில் தீர்ந்துவிட்டது. நீர் என் மீது காட்டிய பிரேமையைக் காணும்போது என் நெஞ்சு எவ்வளது துடித்தது ! என் மார்பு எவ்வளவு படபடவென அடித்துக் கொண்டது.
'உனது புன்னகை எனக்கொரு பூந்தோப்பாகவன்றோ இருந்தது ! உமது மொழி எனக்குக் கற்கண்டாக இருந்தது. உமது ஸ்பரிசம் என்னை களிப்புக் கடலில் கொண்டு போயல்லவா ஆழ்த்திற்று. காதல் எனும் சுவையை எனக்களித்த கண்ணாளா ! நீயே எனக்குக் காதலையும் தருகிறாய். என்னைத் தழுவிய கரங்கள் இனி என் பிணத்தைத்தான் தழுவும். அதுவும் ஊரார் அனுமதித்தால் என்னை கட்டில் மீது தூக்கிப் போட்டு கலகலவென நகைத்த நீர், இனி என்னைச் சவக் குழியில் தள்ளி, சரசரென மண்ணைத் தூவ வேண்டும்.
உம்மால் தான் உலகைக் கண்டேன். உம்மாலேயே உலகை இழக்கிறேன்.
-
இப்படிக்கு
உமது காதலியாகவே கடைசிவரை இருந்த, இறந்த,
தங்கம்.
அவனுக்கு அன்றுதான் மணமாயிற்று. பெரியக்குடி பெண் கொஞ்சம் அழகும் கூட. அதைவிட அதிகமான செல்வம்! அவனை சீமைப் படிப்புக்கு அனுப்ப, பணம் தரப் பெண் வீட்டார் முன்வந்தனர். பொன்னம்பலம் பி. ஏ. இனி மிஸ்டர் பொன்னம்பலம் ஐ.சி.எஸ் ஆகவேண்டும் என்பதும் கந்தசாமி, பிள்ளையின் மகள் கதம்பம் கலெக்டரின் மனைவியாக வேண்டும் என்பதும் பெண் வீட்டாரின் எண்ணம். அவர்களுக்குப் பொன்னம்பலம், தங்கம் என்ற உபாத்தியாயினிடம் நேசமாய் இருந்தது தெரியும். தங்கம், கதம்பத்தைக் காட்டிலும் அழகி என்பது தெரியும். பொன்னம்பலம் யார் என்ன சொன்னாலும், தங்கத்தைத்தான் மணம் செய்து கொள்வான் என்று அவர்கள் பயந்த காலம் உண்டு. தங்கம் இவர்கள் ஜாதி அல்ல; அவள் ஒரு அபலை. யாரோ பெற்றார்கள்! யாரோ வளர்த்தார்கள். எப்படியோ ஏழை விடுதியில் சேர்ந்து படித்து உபாத்தியாயினி ஆனாள். ஏனோ ஆண்டவன் அவளுக்கு அவ்வளவு அழகை - பொன் போன்ற குணம் படைத்த பொன்னம்பலத்தைக்கூட மயக்கி விடக் கூடிய அவ்வளவு அழகைக் கொடுத்தான்.
பொன்னம்பலம் காலம் சென்ற தாண்டவராய பிள்ளையின் ஒரே மகன். மிராசுதாரர், ஊர் பூராவிற்கும் அவர் வீடு சத்திரம் போல் இருந்தது. பொன்னம்பலம் படித்துக் கொண்டிருக்கையில், பருவத்தின் சேட்டைகளில் ஈடுபடாமல் தான் இருந்தான். உணர்ச்சியோ, சந்தர்ப்பமோ இல்லாததால் அல்ல! ஊரார் தம்மிடம் வைத்திருக்கும் 'மதிப்பு' கெட்டு விடுமே என்பதற்காக உணர்ச்சியைக் கூட அடக்கிக் கொண்டு இருந்தான். ஏதாவது மனதை மயக்கும் காட்சிகள் காண நேரிட்டாலும் 'சேலை கட்டிய மாதரை நம்பலாகாது' என்ற பாட்டை உச்சரித்துக் கொண்டே தன் வழியே போய் விடுவான்.
இவனுடைய பி.ஏ. வகுப்பின் போதுதான் தங்கம், அந்த ஊர் பெண் பள்ளியில் ஆசிரியராக வந்தது. எப்படியோ இருவரும் சந்திக்க நேரிட்டது. அன்று என்னமோ பொன்னம்பலத்திற்கு வழக்கமாக வரும் பாட்டு வரவில்லை. அவன் தங்கத்தைப் பார்த்தான். அவள் கண்களைக் கண்டான்! ஏதோ ஒருவித உணர்ச்சி மயக்கம் வந்தது. தங்கம் தன் வழி சென்றாள் பயத்துடன். அவளுக்கு பொன்னம்பலத்தைத் தெரியும். ஆகவேதான், ஊரார் என்ன சொல்வார்களோ என்ற அச்சம். பள்ளிக்கூடத்திலேயே, ஆசிரியைகள் அதற்குள் தங்கத்தைப் பற்றிப் பொறாமை கொண்டிருந்தார்கள்.
"தங்கம் தளுக்குக்காரி! கூந்தலைப் பார், எத்தனை கோணல்!" என்பாள் ஒரு ஆசிரியை.
"கோணல் அல்லடி கோமளம்! கர்ல்ஸ் (curls) மாடர்ன் பேஷன் Modern Fashion என்பாள் பிறிதொரு மாது. உண்மையில் அது கர்ல்லுமல்ல, பேஷனு மல்ல! இயற்கையாக வளர்ந்து, கருத்து, மினுக்கி, சுருண்டு, அடர்ந்த கூந்தல் தங்கத்துக்கு! அதைக்கண்டு மற்ற பெண்கள் கண்ணாடி முன் நின்று கொண்டு கைவலிக்க சீவித்தான் பார்த்தார்கள்! அந்த 'சுருள் அழகு' அவர்களுக்கு வரவில்லை ; அந்த வயிற்றெரிச்சலால் வம்பு பேசலாயினர்.
தங்கமும் இவற்றை நன்கு அறிவாள். தன் அழகை பரிமளிக்கச் செய்ய பணம் இல்லை என்பதும், தன்னைச் சமூகத்தில் அறிமுகப்படுத்தி வைக்க நல்ல 'ஜாதி' தனக்கு இல்லை என்பதும் தெரியும். ஆகவே, தங்கம் சற்று ஒதுங்கியே வாழ்ந்து வந்தாள். மாதம் முப்பது ரூபாய் கிடைத்தது பள்ளியில். முனியம்மா என்ற மூதாட்டி வீட்டுக் காரியங்களை கவனித்துக் கொண்டாள்.
தங்கத்தின் பொல்லாத வேளையோ, என்னமோ இதே முனியம்மாள் தான் பொன்னம்பலத்தைத் தூக்கி வளர்த்து வந்தாள். அந்தக் காலத்தில் அவள் சொல்லித்தான் தங்கத்திற்குப் பொன்னம்பலத்தைப் பற்றித் தெரியும்.
"ஆயா, நான் பெண் ஜாதி" என்று தங்கம் கூறுவாள். 'யாருக்கு – பொன்னம்-பலத்திற்காக?' என்று குத்தலாகக் கிழவி கேட்பாள். கேட்டதும் அவளுடைய பொக்கை வாயைப் பிடித்து இடிப்பாள் தங்கம் புன்சிரிப்புடன்.
ஒருமுறை சந்தித்து பிறகு, பலமுறை சந்தித்தாகி விட்டது இருவரும். புன்னகைகள் அங்கிருந்து இங்கும், இங்கிருந்து அங்கும் போய் போய் வந்தன. கண்கள் தமது கடமையை குறைவறச் செய்துவிட்டன. காதல் முற்றிவிட்டது. மனம் உண்டானால் மார்க்கமா உண்டாகாது. தங்கத்தின் அழகு, பொன்னம்பலத்திற்கு பாதையைக் காட்டிவிட் டது. இருவரும் வீணையும் நாதமும் ஆயினர். கரையில்லா களிப்பு ! எல்லையில்லா இன்பம் ! ஈடில்லா மகிழ்ச்சி! தங்கமும் - பொன்னும் ஒன்றுதானே . இருவரும் ஒருவராயினர்.
ஊர் ஒன்று இருக்கிறதே, வம்பளக்க! "என்ன சார், நம்ம பொன்னம்பலம், அந்த வாத்தியார் பெண் இருக்காளே, அந்த வீதி வழியாக அடிக்கடி போகிறாள்" என்று ஆரம்பமான வம்பளப்பு, "யார் என்ன சொன்னாலும் கேட்கமாட்டேன்" என்கிறானாம். தங்கத்தைத் தீண்டிய கையால் இன்னொருவளைத் தொடமாட்டானாமே! அவள் கர்ப்பங்கூடவாம் !!" என்று வந்து முடிந்தது.
உள்ளபடி பொன்னம்பலத்திற்கு உறுதி அவ்வளவு இருந்தது. காதல் உலகில் குடியேறி இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதே இல்லை என்ற முடிவிற்குத்தான் வந்தனர். அவர்களின் காதல் கனிந்தது. தங்கம் கர்ப்பவதியானாள். இன்னும் ஒரு மாதத்தில் காதலின் விளைவு, களிப்பின் உருவம் பிறக்கப் போகிறது. அந்த நிலையில் தான் பொன்னம்பலத்திற்கு, பெண் கொடுக்க வந்து சேர்ந்தார் கந்தசாமி பிள்ளை. அவர் பொன்னம்பலத்தின் மாமன்! குடும்பத்தின் ஆண் திக்கு!
பொன்னம்பலம் ஏதேதோ சொன்னான் முறைத்தான்; மிடுக்கினான்! தங்கம் கர்ப்பவதி என்பதைக்கூட சொல்லி விட்டான். கந்தசாமிப்பிள்ளை ஒன்றைக்கூட காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
"ஏதோ நடந்தது நடந்து விட்டது. நீ ரொம்ப நல்ல பிள்ளை என்றுதான் நான் எண்ணியிருந்தேன். எப்படியோ அந்தப் பெண் உன்னை மயக்கி விட்டாள். போகட்டும். அவளுக்கு ஒரு ஆயிரம் ரூபாய் கொடுத்து விடுகிறேன். அடுத்த ஊர் பள்ளிக்கு மாற்றி விடுகிறேன்" என்று கந்த சாமி பிள்ளை கூறினார்.
'முடியாது' என்றான் பொன்னம்பலம். மாமன் தன் மீசையை முறுக்கினான். ஒரு சிரிப்பு சிரித்துக்கொண்டே ஒரு கடிதத்தை நீட்டினான் பொன்னம்பலத்திடம். வாங்கி படித்ததும், பொன்னம்பலத்தின் முகம் கருத்து விட்டது. பயங்கரமான நடுக்கம் ஏற்பட்டது. பேச நா எழவில்லை . மாமனை நோக்கிபடியே நின்றான்.
"என்ன சொல்லுகிறாய் ? சம்மதந்தானே!" என்று மாமா கேட்டார். ஆமெனத் தலையசைத்தான், ஆபத்தில் சிக்கிய பொன்னம்பலம்.
மணம் நடந்தது. தங்கமும் அன்றுதான் ஒரு பெண் மகவை பெற்றாள். அது தங்கத்தின் வயிற்றில் உதித்த 'வைடூரியமா 'கப் பிரசாசித்தது. ஒரு கடிதத்தை எழுதி, முனியம்மா மூலம் பொன்னம்பலத்திற்கு அனுப்பினாள் தங்கம். அந்தக் கடிதந்தான் மேலே தீட்டப்பட்டது. அதைப் படித்தே பொன்னம்பலம் மூர்ச்சையாகி கீழே வீழ்ந்தான். கடிதத்தைத் தந்துவிட்டுச் சென்றாள் கிழவி. தங்கம் பிணமாகத் தொங்குவதாகக் கண்டாள். ஒரு முழக் கயிறு, தங்கத்தின் அழகை, இளமையை, வாழ்க்கையை அப்படியே பாழாக்கிவிட்டது. பாழாய்ப் போன கயிற்றுக்குக் கண்ணில்லை - தங்கத்தின் அழகையும், இளமையையும் நோக்க! அந்தோ இறந்தாளே இளமங்கை! காதல் பாதையில் சென்றவள். காதல் எனும் குழியில் விழுந்தாள்.
"லேடிஸ் அண்டு ஜென்டில்மேன்! இன்றைய தினம் நாம் இந்த ஊரில் எதற்காகக் கூடியிருக்கிறோம்? இந்த விபச்சார தடைச் சட்டத்தைச் சரியானபடி அமுல் நடத்த வேண்டும் என்பதற்காகவும், அதைப் பொதுமக்கள், பிரபலஸ்தர்கள் படித்தவர்கள் ஒரு கமிட்டியாக இருந்து, தமது கடமையைச் செய்ய வேண்டும் என்று நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன் (கைதட்டல்) கைதட்டி விட்டால் மட்டும் போதாது. நாம் காரியத்தில் காட்ட வேண்டும்" என்று கலெக்டர் பொன்னம்பலம் அழகாக பிரசங்கம் செய்தார். கூட்டத்திற்கு வந்திருந்த ஜரிகைத் தலைப்பாகைகள் எல்லாம், கலெக்டர் தங்களைப் பார்க்கும்போது கைதட்ட வேண்டும் என்பதற்காகத் தயாராக கைகளைச் சேர்த்து வைத்துக் கொண்டபடியே இருந்தனர்.
இது இருபது வருஷங்களுக்குப் பிறகு! பொன்னம்பலம் இடையில் சீமைக்குப் போய் ஐ.சி.எஸ். தேறி, பல இடங்களில் கலெக்டராக இருந்துவிட்டுத் தலைமயிர் கூட சற்று நரைத்துவிட்டு, தஞ்சாவூரில் கலெக்டராக வந்த சமயத்தில், விபசார சட்டத்தை அமுலுக்குக் கொண்டுவர, நகர பிரமுகர்களைக் கொண்ட ஒரு கமிட்டி நிறுவப்பட்டது. அந்தக் கூட்டத்தில் தலைமை வகித்துதான் கலெக்டர் பொன்னம்பலம் இதைப் பேசினார்.
விபசாரத்தால் வரும் கேடு, சமூகத்தில் அதனால் விளையும் ஆபத்து என்பதைப் பற்றிப் பலர் பேசினர்.
அவர்களிலே அநேகர் அன்றிரவே தமது வைப்பாட்டி. மாரிடம் விபசாரத்தின் கேட்டைப் பற்றியும், அதைத் தாங்கள் ஒழிக்கக் கங்கணம் கட்டிக் கொண்டதைப் பற்றியும் பேசுவார்கள் என்பதென்னமோ நிச்சயம்.
பலர் பேசி முடிந்த பிறகு, ஒரு இளமங்கை எழுந்தாள். அவள் அழகாக இருந்ததுடன் சற்று அவசரக்காரி போலவும் தோன்றினாள். ஆங்கிலம் படித்த மாது என்பதும், சற்று நல்ல நிலையில் இருப்பவள் என்பதும், நடையிலும் உடையிலும் விளங்கின.
"தலைவர் அவர்களே! பெரியோர்களே! விபசாரம் ஏன் ஏற்பட்டது என்பதைப் பற்றி யோசித்து ஆராய்ந்தா லன்றி அதனை ஒழிக்க முடியாது. விபசாரம் நடக்கும் இடத்தை மட்டும்தான் மாற்ற முடியும். விபசாரம் உண்டாவதற்குக் காரணம் ஏழ்மை முதலாவது. ஆனால், அது மட்டும் தான் என்று எண்ண வேண்டாம். பண ஆசைகூட விபசாரம் செய்யும்படித் தூண்டும். அத்தோடு, ஆடவரின் ஆணவச் சேட்டைகள் தான் விபசாரம் உற்பத்திக்கே காரணம். இதைக் கூறும் போது மற்றவர்களுக்கு வருவதைவிட, தலைவர் அவர்களுக்கு அதிக கோபம் வரலாம். ஆமாம்! சும்மா என்னை விறைத்துப் பார்க்காதீர்கள். காதல் மணங்கள் நிகழ்ந்து, ஜோடிகள் சரியாக அமைந்து, காதலுக்கு ஜாதியோ - பீதியோ மற்ற ஏதோதடையாய் இல்லாதிருப்பின், உள்ளபடி நாட்டில் விபசாரம் வளராது.
மணம் செய்து கொள்வது மாடு பிடிப்பது போல இருக்கும்வரை, வாழ்க்கையில் பூரா இன்பத்தையும் நுகர முடி யாது. அதனால் காதல் இன்பம் சுவைத்தறியாத ஆடவரும், பெண்டிரும், காமச் சேற்றில் புரள்கிறார்கள். அதில் விளையும் முட்புதரே விபசாரம்.
ஜாதி சனியனைக் கண்டு மிரண்ட எத்தனையோ பேர் தமக்கு உகந்தவரை மணம் புரிந்து கொள்ளாது, அவர்கள் வாழ்வைக் கெடுத்து, அவர்களை விபசாரிகளாக்கினர். தலைவர் அவர்களே! உமது தங்கத்தின் மகள் அப்படியே ஒரு விபசாரியானாள். என் செய்வாள் அந்த அபலை? உம்மால் காதலிக்கப்பட்டு மணம் செய்து கொள்ளாது பிணமாக்கப்பட்ட தங்கத்தின் மகள், நீர் சீமை சென்று நாட்டை ஆளும் வித்தையை கற்றுக் கொண்டிருந்த காலத்தில் ஒரு விபசாரியிடம் வளர்ந்தாள். ஆடல், பாடல், கற்றாள். அவளை ஒரு பிரமுகர் காதலித்துக் கலந்து வாழ்கிறார். அவளை மணக்க மறுக்கிறார். போகம் வேண்டுமாம் அவருக்கு ! பொறுப்பு மட்டும் கூடாதாம்; இன்று நீர் போடும் கமிட்டி ஜரூராக வேலை செய்தாலும் அவளை அசைக்க முடியாது. ஏன்? சுந்தரி எனும் அந்த மங்கையை வைப்பாட்டியாக வைத்துக் கொண்டிருப்பது. நீர் நிறுவியுள்ள கமிட்டியின் தலைவர் திருமலைசாமிதான்! ஆகவேதான், அவள் அகப்பட மாட்டாள். உமக்கு அந்த நாள் கவனம் வருகிறது போலும் ! தங்கம் என்ன ஜாதியோ என்பதால், மருண்டு யார் பேச்சையோ கேட்டு மயங்கி தங்கத்தைப் பிணமாக்கினீர் . ஆம்! இன்று நீர் பேசுகிறீர், பொன்போன்ற மொழிகளை!" என்று ஆத்திரத்துடன் அந்தப் பெண் பேசினாள்.
"அம்மா! என்னைக் கொல்லாதே! நான் பாதகன். என் தங்கத்தை இழந்தேன். ஆனால் ஜாதியைப்பற்றி கவலைப்படவில்லை. என் மாமன் காட்டிய பீதிக்குத்தான் பயந்தேன்" என்றார் கலெக்டர். "தெரியுமே எனக்கு அதுவும் தங்கம் ஒரு கிறிஸ்துவ மாது. அவளை மணம் செய்து கொண்டால் குடும்பச் சொத்தில் காலணாவும் பெற முடியாதபடி உமது தகப்பனார் உயில் எழுதி வைத்தார். அதைக் காட்டித்தானே உமது மாமன் உன்னை மிரட்டினார். சொத்துப் போய்விடும் என்ற உடனே நீர் சோர்ந்து விட்டீரே ! தங்கம் உமக்குச் சொத்தாகத் தெரியவில்லையோ" என்றாள் அந்த மங்கை.
"மாதே! என்னை மீண்டும் கொல்லாதே. நான் அன்று ஜாதிப்பேயிடம் சிக்கினேன். அதனாலேயே என் இன்பத்தை இழந்தேன்" என்று கூறி கலெக்டர், "தங்கத்தைப் பற்றியும், என்னைப் பற்றியும் இவ்வளவு தெரிந்து கொண்டுள்ள நீ யார்?" என்று கேட்டார்.
"நான்தான் சுந்தரி!" என்றாள் அம்மங்கை. "ஆ! என் மகளே! தங்கம் தந்த மணியே! உன் தாய் எனக்கு இன்பம் தந்தாள். நீ எனக்கு அறிவு தந்தாய்" என்று கூறி, மகளை அருகில் அழைத்து உட்கார வைத்துக் கொண்டார், கலெக்டர் பொன்னம்பலம். அடுத்த வாரத்தில் மிஸ். சுந்தரிக்கும், மிஸ்டர் திருமலைசாமிக்கும், கலெக்டர் பொன்னம்பலம் சுயமரியாதைத் திருமணம் நடத்தி வைத்தார்.
-------------------
3. வாலிப விருந்து
இந்தச் சிங்கார ஜோடனையிலே, அந்த சொகுசுக்காரி சிற்பிகள் சிந்தனையையும் கவிகளின் கருத்தையும் கிளறிவிடும் அழகுடன் உலவினாள். ஐயரின் ஆனந்தத்திற்கு அளவில்லை. 'மோகனா!' என்று மும்முறை கூப்பிடுவார், மூன்று ஸ்தாயியில் ! அவள் ஒரு முறை புன்முறுவல் பூத்ததும் பூரித்துச் சோபாவில் சாய்வார். இரு வரின் இன்ப வாழ்வு இரண்டாண்டுகள் தங்கு தடையின்றி நடைபெற்று வந்தது. ஆனால் இளமை மெருகும் எழில் மணமும் வீசிட அவள் உலவினாள். இவர் காலத்தால் கசக்கப்பட்டு, முதுமை என்னும் முற்றத்திலே கிடந்தார். ஐயருக்கு மட்டும் அறுபது வேலி நிலமும், அரை இலட்சம் ரொக்க லேவாதேவியும் இல்லாவிட்டால், இந்தப் பேத்தி, பெண்டாகியிருக்க முடியாது. மோகனாவுக்குத் தன் புருஷனின் முதுமை, தன் இளமை இவைகள் தோன்றவில்லை. அவள் உண்டு, ஆனந்தம் உண்டு. அவ்வளவுதான்! வேறு அறியாள் அந்த வனிதை. வாழ்க்கை என்றால் இதுதான் என்று எண்ணினாள். மனதிலே அலை மோதாத நிலை! கருத்தும் கண்ணும் கட்டுக்கடங்கிய காலம் ! அதைக் கொடுத்த ஐயருக்கு வந்தது ஜுரம். ஜுரம் கண்டவுடனே. நல்ல டாக்டராக வரவழைக்கவில்லை. எவன் வருவானோ என்ற சந்தேகத்தால் ஜுர வேகத்தால் கண் திறக்க முடி யாத நிலையிலும், கஷ்டப்பட்டு விழித்துக் கொண்டிருப்பார், மோகனாவைத் தூங்கச் செய்யும்வரை.
பிறகு ஒரு முறை அவளழகைப் பார்த்து, பெருமூச்சுவிட்டு விட்டு, 'கொடி ரம்மியமாக வளர்கிறது. மரம் வளைகிறது, வயோ திகத்தால்' என்ற நினைப்பு நெஞ்சை உறுத்த, கவலை கொண்டு கண்ணை மூடுவார்; தூக்கம் வராது. இதனால் சாகாரண ஜுரம் டைபாயிட் ஜுரமாகி, டாக்டர் ரகுராமன், சிகரெட்டும் சிரிப்பும் உடனிருக்க, உள்ளே நுழைந்து ஐயரின் நோயைத் தீர்க்க மருந்தும், அவளுக்கு நோயூட்ட பார்வைப் பாகும் தரும் நிலை வந்துவிட்டது. டாக்டர் ரகுராமன் வைத்தியக் கல்லூரியிலே கற்ற எத்தனையோ பாடங்களை மறந்துவிட்டான். ஒன்று மட்டும் மறக்கவில்லை. அதுதான் நாசுக்காக இருப்பது, பேசுவது. அதை மோகனா அதுவரை கண்டதில்லை! அதுவரையிலே ஐயர் வாயால் பேசினதைக் கண்டாளே தவிர கண் பேசுவதைக் கண்ட தில்லை. டாக்டர் ரகுராமனின் கண்கள் ஏதேதோ பேசலாயின!
"ஐயர்வாள் ! ஒரு ஆறுமாதம் ஓய்வாக இருக்க வேண்டும். வயதாகிவிட்டது பாருங்கள்" என்றான்.
வயதாகிவிட்டது! மோகனாவின் சிந்தனைக்குப் புது வேலை கிடைத்துவிட்டது. கிழவர், நம் கணவர் என்ற செய்தி அவளைச் சோகத்திலாழ்த்தத் தொடங்கிற்று.
"ஓய்வாகத்தானே இருக்கிறார், அவருக்கென்ன குறை? ஆள் அம்பு இல்லையா, வேலை என்ன இருக்கு?" என்று பதிலுரைத்தாள் மோகனா.
டாக்டர் ரகுராமன் சிரித்துவிட்டு, "விளையாட்டுப் பருவம். ஒன்றும் புரியவில்லையம்மா உங்களுக்கு" என்றான். விளையாட்டுப் பருவம் ! ஒன்றும் புரியவில்லை! மோகனாவின் சிந்தனைக்கு வேலை அதிகரித்துவிட்டது. வயதாகிவிட் டது, விளையாட்டுப் பருவம் என்ற இருவாசகங்களும் மாறி மாறி மனதிலே தாண்டவமாடின.
டாக்டர் "வயதுக்கேற்ற வேலை செய்யவேண்டும். இரத்த ஓட்டத்திற்கு ஏற்றவிதமாக வாழ்க்கை இருக்க வேண்டும். ஐயர் தமது உடம்பை ரொம்ப அலட்டிக் கொண்டு விட்டார். காய்ச்சலுக்குக் காரணமே அதுதான். குடும்ப பாரத்தைத் தாங்கும் சக்தி வேண்டுமே" என்றான்.
மோகனா ஓரளவு புரிந்து கொண்டாள். நோயின்றி இருந்தால் பிரதிதினம் முகச் க்ஷவரம் நடக்கும்; நரை முகத்தை நாசமாக்காது; முடுக்காகவே நடப்பார்; முதியவர் என்பதை சிதைக்க, ஒழுங்காக உடுத்திக் கொள்வார். வாலிப வாடை வீசட்டும் என்று. படுத்த படுக்கையாக இருக்கவே, இந்த 'மேக்கப்' செய்து கொள்ள முடியவில்லை. வயோதிகம் மோகனாவின் கண்களுக்கு நன்கு தெரிந்தது. ஐயரும் அதை எண்ணி நொந்தார். வயதாகிவிட்டது பாருங்கள்! என்ற அந்த இன்ஜெக்ஷன், மோகனாவுக்கு டாக்டர் ரகுராமனால் தரப்பட்டது அல்லவா! அதி வேலை செய்யத் தொடங்கிற்று. "இதெல்லாம் ஏனடி! மோகனா! இந்தக் கிழங்கள் இப்படித்தான் சொல்லும். விளக்கேற்ற வேணும், விரதம் இருக்க வேணும் என்று. கோயிலோ அருகில் இல்லை. மூன்று தெரு தாண்டிப் போகவேண்டும். நாற்பது நாள் நீ போய் விளக்கேற்ற வேண்டுமென்றால் சிரமம். யாராவது வேலைக்காரரிடம் சொல்லலாம்" என்று புருஷனின் ஆயுள் விருத்திக்காக தேவி கோவிலுக்கு நாற்பது நாள் திருவிளக்கு ஏற்ற வேண்டுமென்று யாரோ சொன்னதைக் கேட்டுக் கொண்டு, அதுபோலவே செய்ய வேண்டுமென்று கூறிய மோகனாவை வேண்டாம் என்று தடுத்துவிட ஐயர் பேசினார்; முடியவில்லை. மோகனா கையிலே, பூக்கூடையுடன் தேவி பூஜைக்குப் போய்வரத் தொடங்கினாள். மோகனா தரிசனத்துக்குப் போய்வரத் தொடங்கினாள். மோகனா தரிசனத்துக்கு, மூன்று தெருக்களிலும், கோயிலிலும் பக்தர்கள் கூடிவிட்டனர். தேவியின் திருவருள் கிடைக்குமுன்னம், மோகனாவுக்கு பக்தர்கள், பார்வைப் பிரசாதம், அர்ச்சனை கண்கனிவு ஆகிய பலவகைகளைத் தரலாயினர். நாற்பது நாட்களுக்கும் இந்த 'ரசம்' மோகனாவுக்கு ஒருவிதமான புது இன்பத்தைக் கொடுத்துவிட்டது. மோகனா என்ன, தேவியைப் போல் கல்லுருவா ! காந்தியுடன் கூடிய மாது!
கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, சந்தான விருந்திக்குச் சூரணம் தந்தார் சித்த வைத்தியர் . மோகனா வேண்டாமென மறுத்தாள். அவர் வற்புறுத்திச் சாப்பிட வைத்தார். பசித்த உள்ளம், பயம் நிறைந்த கண்கள், பருவ கெருவமுள்ள அங்காதிகள் ! அப் பாவைக்கு சூரணம், சந்தானத்துக்கு உதவி செய்யவில்லை. ஆனால் ஆளை உருக்க ஆரம்பித்தது. மேனியின் மெருகு மங்கத் தொடங்கிற்று. எலும்பும் தோலுமானாள் மோகனா. மோகனாவுக்குச் சந்தேகம் வலுத்துவிட்டது. ஐயர் இல்லாத நேரத்திலே, ஒரு பொட்டலம் சூரணத்துடன் டாக்டரிடம் சென்று தன் பயத்தைக் கூறினாள். டாக்டர் அவளது நாடியைப் பிடித்துப் பார்த்தார். கண்களை திறந்து, இரத்தம் சரியாக ஓடுகிறதா என்று கவனித்தார். ஆசை ததும்பிக் கிடந்த அளவு, அந்தக் கண்களிலே இரத்த ஓட்டம் இல்லை! கன்னத்தைத் தடவினார். பெருமூச்செறிந்தார். தனி அறை! அவளது நோய் டாக்டருக்குத் தெரிந்துவிட்டது. மருந்து அபூர்வமானது. அவரிடம் இருந்தது. ஒரு 'டோஸ்' கொடுத்தார். கட்டி அணைத்து ஓர் முத்தம் ! விரிந்த இதழுடன், ஆச்சரியப் பார்வையுடன். மோகனா டாக்டரைப் பார்த்து, "இதென்ன அக்ரமம்" என்று கேட்டாள். ஆனால் அவள் முகத்திலோ தொனியிலோ கோபம் இல்லை. 'உன் நோய் போக இனி இதுதான் மோகனா மருந்து' என்று கொஞ்சினார் டாக்டர். சூரணத்தைக் காட்டி, இது ஊமத்தை கலந்தது, மெள்ள மெள்ளச் சாகடிக்கும். உனக்கிருக்கும் வாலிய உணர்ச்சியைப் போக்க எவனோ ஒரு நாட்டு வைத்தியனிடமிருந்து இதைப் பெற்றார், உன் கணவர். உன்னைக் கொல்ல மருந்திட்டதாகக் கேஸ்தொடுத்தால் பத்தாண்டுகள் ஜெயில் கிடைக்கும்" என்றுரைத்தார். அவள் பயந்தே போனாள். "விஷமா ! கிழட்டுப் பாவி என்னைக் கொல்லவா துணிந்தான். டாக்டரே! என்னை நீர்தான் காப்பாற்ற வேண்டும்" என்று கெஞ்சினாள். "உன்னை இனி நான் கைவிடப் போவதில்லையே" என்று டாக்டர் கொஞ்சினார். கம்பவுண்டருக்கு அன்று லீவ் தரப்பட்டது. டாக்டர் வெளியே போயிருக்கிறார் என்ற போர்டு தொங்கவிடப்பட்டது.
ஐயர், அலுத்து வீடுவந்தார் ! மோகனா காணப்பட வில்லை. தோட்டம் சென்று பார்த்தார். அண்டை அயல் வீடுகளில் விசாரித்தார். கிடைக்கவில்லை. அச்சம் பிறந்து விட்டது. டாக்டர் மீது தான் கவனம் சென்றது. அவசர அவசரமாக அங்கு சென்றார் . வாயிற்படியிலே கால் வைக்கும் போதே உள்ளே இருந்து ஒரே சிரிப்பு, சரசப்பேச்சு, காதிலே நாராசம் போல விழுந்தது. ஆத்திரம் உள்ளே போகத் தூண்டிற்று. வெட்கமும், என்ன நேருமோ என்ற பயமும், வெளியே போய்விடு! இனி நீ மோகனாவை மீட்க முடியாது' என்று கூறிற்று. கொஞ்ச நேரம் ஸ்தம்பித்து மோகனாவின் குரல்! ஐயர் ஓடிவிட்டார் வீட்டுக்கு - வெட்கி, வியர்த்து, மருண்டு!
அவள் நெடுநேரம் கழித்து வந்தாள். "எங்கே போயிருந்தாய் இவ்வளவு நேரம்?" என்று அதிகாரத்துடன் அவர் கேட்டார். "டாக்டர் வீட்டுக்கு" என்று அவள் துணிவாகப் பதில் கூறினாள். 'ஏன்?' என்று கேட்க அவருக்குத் தைரியம் பிறக்கவில்லை.
இந்தச் சம்பாஷணை பிறகு பிரதி தினமும் நடக்க ஆரம்பித்தது. வாலிப விருந்தை அவள் ரசித்துக் கொண்டிருந்தாள்! வயோதிகர் என்ன செய்வார் ?
------------
4. புரோகிதரின் புலம்பல்
"முதலியார் வாள் ! கோர்ட்டுக்குப் போக வேண்டாமா ! காலையிலே பத்து மணிக்குள் காரியத்தை முடித்துவிடுகிறேன். கரி நாள் என்று சொல்வா, அது ஒன்றும் செய்யாது. ஏன் தெரியுமா? முதலியாருடைய ஜாதகமிருக்கிறதே அது அப்படிப்பட்டது. சனிகூட சுக்கிர காரியம் செய்யும்" என்பார் சமயத்தைத் தெரிந்து. வைதீகப் பித்தரிடம் சென்றாலோ, நாள் செய்வதை நல்லவாள் செய்யமாட்டான்னு பெரியவா வீணுக்கா சொன்னாள். விஷக்கடி வேளை கூடாது பாருங்கோ. தருமபுத்ரர், சொக்கட்டான் ஆட உட்கார்ந்தாரே சகுனியுடன், அந்த வேளை எவ்வளவு பொல்லாதது தெரியுமோ ! சனி பார்வை பார்த்தான்! தருமரின் ராஜ்யம், சொத்து, திரௌபதி சகலமும் போச்சு. சகுனியா செய்தான். சனியன் வேலை. விடியற்காலமே தான் முகூர்த் தம்! ஜாம் ஜாமென இருக்கும்' என்று கூறுவார்.
ஒவ்வோர் ரகத்துக்கும் இஷ்டமான ரகம் கனபாடிகளுக்குத் தெரியும். அதற்கேற்றபடிதான் நாள், கிழமை, நட்சத்திரம், சடங்கு ஆகியவைகள் அமைப்பார். ஆகவே, பிரமபுரத்திலே அவருக்கு செல்வாக்கு இல்லாவிட்டால், புரோகிதரின் ஏக புத்திரி ஏமலதாவை ஒரு எஞ்சினியரின் மகனுக்குக் கலியாணம் செய்து வைத்து, சீர் சம்பிரமமாகச் செய்ததுடன், எல். எம். பி. படிக்க, கனபாடிகள் பணம் தந்திருக்க முடியுமா? ஏமலதா, ஆமதாபாத் சேலையும், ஆர்கண்டி ஜாக்கெட்டும். கெம்பு வளையும், பச்சை மூக்குத்தியும், வைர லோலாக்கும் போட்டுக்கொண்டு, வாலிபர்களின் விழிகளுக்கு விருந்தாக இருந்திருக்க முடியுமா? அவர் வைதீகர். ஆனால், அது வாட்டமா அவருக்குத் தந்தது? தோட்டமும் துறவும், நில புலன்களும் தந்தது. அவர் ஏன் பின்பு அதைவிடப் போகிறார்?
அவருடைய குற்றமல்ல, எல். எம். பி. மாப்பிள்ளை திடீரென்று இறந்துவிட்டது. அதனால் ஏமலதாவின் அழகொன்றும் போய்விடவில்லை. அமங்கலையானாளே என்று அப்பாவுக்கு வருத்தந்தான். பாவம், அந்த மங்கையும் ஒரு சுகமும் காணாமல் மூலையில் உட்கார்ந்திருக்க 'விதி' நேரிட்டது. வேதனைதான் தந்தது. தாயும் இல்லை, அந்த சாய்ந்த தளிருக்கு! பெண்ணின் பருவ வளர்ச்சியும் எழிலின் வளர்ச்சியும், கனபாடிகளுக்கு, அவளுக்குத் தாலி மட்டும் இருந்துவிட்டால் பரமானந்தமாக இருக்கும். அமங்கலை அழகாகவும், இளமையாகவும், நாகரிகமாகவும் இருந்தால் அப்பாவுக்கு அச்சந்தானே! இச்சைதான் பொல்லாத நச்சர வாயிற்றே! எந்தப் புற்றிலே எந்தப் பாம்பு இருக்குமோ யார் கண்டார்கள். காலம் கெட்டுப் போச்சு என்று பல எண்ணிப் புலம்பினார் கனபாடிகள். அவளோ எண்ணி விம்மினாள் சில காலம். பிறகு வீதிவழியே செல்லும் "கண் சிமிட்டிகள், போலோ காலர்கள், புன்சிரிப்புப் பாண வீரர்கள், புதுப் பார்வையினர்" ஆகியோரைக் கண்டு காலந் தள்ளினாள். கண்டதும் கெட்ட எண்ணம் கொண்டு விடவில்லை. அவரைப் பார்த்தால், என் ஆத்துக்காரர் போலே இருக்கு; அதோ அதே மாதிரி காலர்தான் அவர் போடுவார்' என்று தான் முதலிலே எண்ணினாள். பிறகு, அந்தப் பொல்லாத உணர்ச்சி இருக்கிறதே அது ஆட்சி செய்ய ஆரம்பித்தது. அந்தப் பேதை அதற்கு அடிமையானாள்.
கனகசுந்தரம் கட்டு இல்லாத காளை. பெற்றோர் சிறு பிராயத்திலே இறந்துவிட்டனர். எப்படியோ, படித்து யாரையோ அடுத்து, ஒரு பள்ளியில் ஆசிரியராக அமர்ந்தான். சாப்பாட்டு விடுதியிலே ஜாகை. அந்த ஜாகையின் ஜன்னல் வைதீகத்தின் கெட்ட காலமோ என்னமோ ஏமலதாவின் தோட்டத்துக்கு நேராக இருந்தது. முதலிலே லஜ்ஜை; பிறகு ஒருவிதமான சந்தேகம் ! அதற்கடுத்தபடி ஒரு வகையான சந்தோஷம்! பிறகு கண்டதும் முகமலர்ச்சி; காணாவிட்டால் கவலை. பிறகு, கண் கடிதம். பின்னர் கடிதமே புறப்பட்டுவிட்டது, அமங்கலை ஏமலதாவுக்கும், வாலிபன் கனகசுந்தரனுக்கும்! பாழாய்ப்போன பள்ளிக் கூடம் ஒன்று இல்லையானால் ஜன்னலும் அவனும் இணைப் பிரிந்திருக்கமாட்டார்கள் ! ஜலம் மொள்ளும் வேலை ஏமலதாவுக்கு எப்போதும் இருந்தபடியே இருக்கும்.
அந்த பச்சை நிறப் பத்திரிக்கையும் அவனுக்குக் கிடைத்துவிட்டது. கட்டுகளை அறுத்தெறி, சிறையை விட்டு வெளியே வா, நாட்டாரின் மூட ஏற்பாட்டை நீ மதியாதே என்றெல்லாம் ஒரு கிழவர் கூறினால், ஒரு காளைக்கு உணர்ச்சி பொங்காமலா இருக்கும்? கடிதத்துடன் சேர்த்துக் குடி அரசுக் கட்டுரைகளையும் அனுப்பலானான். காதலுடன் காலக் கண்ணாடியையும் பெறவே ஏமலதா காதல் உள்ளத்துடன் அச்சத்தைத் துடைத்த அணங்கு மானாள். இளைய உலகில் நடக்கும் இவை. கிழ வைதீக கனபாடிக்குத் தெரியாது. விதவைத்தனம் அவளிடம் தங்கி விட்டது என்று நம்பினார். அவள் அந்தச் சிறையை விட்டுத் தப்பித்துக்கொண்டு செல்லச் சிறகுகளை அடித்துக் கொண் டிருக்கும் கிளி என்பது அவருக்குத் தெரியாது. "சம்போ ! மகாதேவா! எனக்கு சகல சம்பத்தும் தந்தாய். ஒரே ஒரு குறையை மட்டும் தந்துவிட்டாய் தேவா! ஏமலதாவின் கதியை எண்ணினால், என் சொத்து சுகம் எல்லாம் சுடு நெருப்பாகிறதே! சர்வேஸ்வரா! ஏனோ எனக்கிந்த தண்டனை!" என்று கூறி ஆயாசப்படுவார். ஏமலதாவின் அலங்காரங்களைக் கண்டால் அவருக்குச் சந்தேகம் வளரும். என் செய்வார் ?
சந்தியாவந்தனத்தை முடிக்கப் போகும் சமயம் தன்னை நோக்கி ஒரு வாலியன் வருவதைக் கண்டதும், திறந்த கண்களை மறுபடியும் மூடிக் கொண்டார் புண்ய கோடீஸ்வரர். அது அவர் முறை! தியானத்திலே ஐயருக்கு எவ்வளவு அக்கரை தெரியுமோ என்று ஊரார் பேசிக் கொண்டது அந்தத் தந்திரத்தின் பயனாகத்தான். வந்த வாலிபன் பத்து நிமிடங்களுக்கு மேல் ஐயர் எதிரிலே நின்ற பிறகு, "பரமேஸ்வரா! தயாநிதே" என்ற பேச்சுடன், கண்களைத் திறந்தார் கனபாடிகள். வாலிபனைக் கண்டார். புதுமுகம் அவருக்கு! இருந்தாலென்ன. புது வாடிக்கை பிடிக்க வேண்டுமே! அதற்காக வாஞ்சையுடன் வாலிபனை நோக்கினார்.
"அடுத்த கிராமம் நான் வசிப்பது . நாளைக்கு முகூர்த்தம். எனக்குத்தான். பெண் என்னைவிட உயர்ந்த ஜாதி. அவள் என்னைக் காதலிக்கிறாள். எனக்கும் இஷ்டந்தான். ஆனால், சாஸ்திர சம்மதமாகாதே என்பதற்காகச் சஞ்சலப் படுகிறேன். முகூர்த்தம் உங்களைக் கொண்டே நடத்த வேண்டுமென்று என் பெற்றோர் பேசிக் கொண்டனர். அதைக் கேட்டு நான் ஓடோடி வந்தேன். நீங்கள் இந்தச் சாஸ்திர சம்மதமற்ற கலியாணத்துக்கு வரக்கூடாது என்று கேட்டுக் கொள்ளவே இங்கு வந்தேன். கிருபை செய்ய வேணும்" என்றான் வாலிபன்.
கனபாடி யோசித்தார்! "அடுத்த கிராமமா! யார் வீடு?" என்று கேட்டார். இடத்துக்கேற்றபடிதானே அவருடைய முகூர்த்தம், சடங்கு எல்லாம்!
"நாங்கள் சென்னை! இங்கே வந்து ஒரு வாரந்தான் ஆகிறது. என் அப்பாவுக்கு வியாபாரம். ஆண்டவன சகல சம்பத்தும் கொடுத்திருக்கிறான். பங்களா, மோட்டார், சின்ன ஜமீன், இவ்வளவும் உண்டு' என்றுரைத்தான் வாலிபன். ஐயருக்கு நெஞ்சிலே நமைச்சல் ஏற்பட்டுவிட்டது. பெரிய இடத்துக் கலியாணம், தட்சணை சன்மானம் ஏராளமாகக் கிடைக்குமே என்ற எண்ணம்.
"இப்படி உட்கார் தம்பி ! சாஸ்திர விரோதம், தர்ம விரோதம், ஆசார விரோதம் ஆகியவைகள் பாபக் கிருத் தறியந்தான். ஆனால் அவைகளுக்குப் பிராயச்சித்தமும் உண்டு, நிவர்த்தியும் உண்டு. கொஞ்சம் செலவாகும். ஆனாலும் பாதகமில்லை ! பகவத் பிரீதி ஏற்பட்டுவிடும். மேலும் அந்தப் பெண் உயர்ந்த ஜாதி என்கிறாய். காதலுக்கு ஜாதி ஏது! சந்தனுவின் சரசத்துக்குச் சொந்தமான சுந்தராங்கி மீன் பிடிப்போர் குலம். மச்சகந்தியே பிறகு பரிமளக்கந்தி யாகிவிடவில்லையா! பெண்ணுக்கேற்றது ஆணுக்குந்தான். ஆகையால் நீ ஆயாசப்படாதே' என்று கனபாடிகள் சாஸ்திரோக்தமான பதிலே கூறினார். வாலிபன் பூரிப்புடன் "மற்றுமோர் விசேஷம் ! எங்களுக்குள் காந்தர்வ விவாகமும் நடந்துவிட்டது" என்று சொல்லித் தலை குனிந்தான். கனபாடிகள் "பலே! கைகார ஆசாமிதான்! குட்டியுங் கெட்டிக் காரிதான்! இன்னமும் சாஸ்திரமும் கீஸ்திரமும் குறுக்கே நிற்பானேன்? அதை நான் சரி செய்து விடுகிறேன். 150 ரூபாய் பிடிக்கும். இங்கேயே செய்ய முடியாது. வீட்டிலே தான் செய்ய வேணும்" என்றார். வாலிபன் நோட்டுக்களைத் தந்தான். கனபாடி களிப்போடு வீடு சென்றார். விடியற்காலை மூன்று மணிக்கு முகூர்த்தம்! ஐயர் இரண்டு மணிக்கே எழுந்துவிட்டார். ஏமலதா வெந்நீர் தயாராக வைத்திருந்தாள். ஐயர் குளித்தார். போர்க்கோலம் பூண்டார்; புறப்பட்டார். "புறக்கடைக் கதவும், தெருக் கதவும் தாள் போட்டுண்டு இரு அம்மா ! எட்டு மணிக்கு வந்து விடுகிறேன்" என்று ஏமலதாவிடம் கூறிவிட்டுக் கலியாண வீடு சென்றார்.
கலியாண வீட்டிலே ஆனந்தம் ! புரோகிதரும் அதிலே கலந்து கொண்டார். அரை மணி நேரத்திற்குப் பிறகு, மோட்டாரில் பெண்ணும் மாப்பிள்ளையும் வந்து இறங்கினர். "சரிதான்! ஏற்கெனவே காந்தர்வம் நடந்தவள் ! இப்படி வருவதுதான் முறை. மேலும் நேற்றிரவு நான் இதற்கெல்லாம் சேர்த்தே பிராயச்சித்தம் செய்துவிட்டேன்" என்று கனபாடி கூறினார். மேளம் காது செவிடுபடக் கிளம்பிற்று .
"இவ்வளவு நாகரிகமாகக் கலியாணம் செய்யறவா, மாப்பிள்ளைக்கும், பெண்ணுக்கும் இடையே திரை போடுவானேன்? சுத்த கர்நாடக மன்னோ !" என்று கனபாடியே சீர்திருத்தம் பேசலானார். "அது எங்கள் குல தர்மம்" என்று கலியாண வீட்டார் கூறினார். கலியாண வீட்டிலே கனபாடிகளுக்குத் தெரிந்தவர்கள் பலர் இருந்தனர்.
"காலம் போகிற போக்கின்படி செய்ய முன்வந்தீர். இதுதான் முறை" என்றும், "ஜாதிபேதம் ஒழியத்தானே வேண்டும். கலப்பு மணம் பரவவேண்டும். கனபாடிகளே இதற்குச் சம்மதித்த பிறகு, ஒரு வைதீகனாவது இனி வாய் திறக்க முடியுமா" என்றும், "ஆசைக்குத்தானே சார் நாயகி, ஆசாரத்துக்காக வேண்டி ஒரு அழுமூஞ்சியையா கட்டிக் கொள்வது" என்றும், பலரும் கலப்பு மணத்தை துவக்கி வைக்க முன்வந்த கனபாடிகளைப் பாராட்டினர். 150 ரூபாய் கிடைத்தது. இப்போது 10 ரூபாயாவது படும் என்ற கணக்கில் கனபாடி களித்தார். ஓமம், மணமக்கள் மனதிலே கொழுந்து விட்டெரியும் காதல் ஜுவாலையைப் போல கிளம்பிற்று. இராகபாவத்துடன் மந்திரங்களைக் கூறினார் புரோகிதர். மாங்கல்யதாரணம் நடந்தது. கெட்டி மேளம் நடந்தது. திரையும் நீங்கிற்று. மணப்பெண் "அப்பா! நமஸ்கரிக்கிறேன்" என்று கூறினாள். 'ஆ! யார் ? ஏமுவா? என்று அலறினார் புரோகிதர்; மயக்கமுற்றார்.
'அப்பா! அப்பா!' என்ற அன்பு மொழியும், மாமா! மாமா!' என்ற கனிவான மொழியும், குளிர்ந்த நீர் தெளிக்கப் பட்டபின் புரோகிதர் எழுந்தார். நடந்ததை நினைத்தார். நெஞ்சு நெருப்புக்கூடாயிற்று. நீர் பெருகும் கண்களுடன், "பாதகி! கல்லைப் போட்டாயே தலையிலே! உன்னைப் போல விதவைகள் இப்படியா காரியம் செய்கின்றனர்? இலை மறை காயாக ஏதோ நடப்பதுண்டு. இப்படி விவாகமா ! அதற்கு நான் புரோகிதமா! என்ன துணிவு! எவ்வளவு அக்ரமம் ! என் மதிப்பு என்ன ஆவது ! மதம் என்ன ஆவது! பிழைப்பும் போச்சேடி பேதையே! இந்தத் தடிப்பயல் 150 ரூபாய் கொடுத்து என்னை மயக்கிவிட்டானே! இதற்கு உடந்தையா! மண்டையை உடைத்துக் கொண்டு இங்கேயே சாகிறேன்! நாக்கைப் பிடுங்கிக் கொள்கிறேன்" என்று துடித்தார். |
"சாஸ்திரோக்தமாக நீரே இருந்து திவ்வியமாகத் திருமணம் நடந்துவிட்டது. இனி விசனப்படுவானேன்! உடைந்த பாண்டம் என்று எண்ணிக் கொள்ளுங்கள்" என்ப தாகச் சமாதானங் கூறினர்.
அதற்கு அவர், "போக்கிரிகளே! துஷ்டர்களே! என்னை ஏய்த்து விட்டீர்களே, நான் விடமாட்டேன். ஏமலதாவுக்கு நடந்தது விவாகமல்ல!" என்று கதறினார்.
"காந்தர்வ மணம் முதலிலே! இப்போது அக்னி சாட்சியாக, பிரமபுரத்துப் பிரபல புரோகிதர் முன்னிலையில் திருமணம் நடந்தேறியது" என்றான் மாப்பிள்ளை கனக சுந்தரம். மணப்பெண் ஏமலதாவோ, "இனிக் கிணற்றங் கரைக்குப் போவதும் வருவதுமாக இருக்கத் தேவையில்லை. கண்ணுக்கும் கருத்துக்கும் இசைந்த கண்ணாளன் கிடைத்தான் ; குலதர்மம் கெட்டுவிட்டால் குடியா முழுகிவிடும், இயற்கை தர்மம் நிலைத்தது" என்று எண்ணி மகிழ்ந்தாள்.
"நீ யாரடா, என் குடி கெடுத்தவன்?" என்றார் கோபத்துடன் கனபாடி. மனம் போல் மாங்கல்யம் கிடைத்ததால் மகிழ்ந்த ஏமலதா, "நம்ம ஊர் பள்ளிக்கூடத்துத் தமிழ் வாத்தியாரப்பா அவர். இருபது ரூபாய் சம்பாதிக்கிறார். முதலியார் வகுப்பு. வேறு மனுஷா கிடையாது" என்றாள்.
"வாத்தியா ! இருபது சம்பளமா! அடபாவி! ஜமீன் இருக்கு, பங்களா இருக்கு, மோட்டார் இருக்கு என்றாயே. அதுவும் இல்லையா ! பஞ்சைப்பயதானா?" என்று கூறிப் பிரலாபித்தார். "பெண் போச்சு! பிழைப்பு போச்சு ! மதிப் புப் போச்சு ! பணமும் இல்லை இந்தப் பயலிடம்" என்று கூறி அழுதார்.
"பணத்திற்கு குறை ஏதப்பா! நம்மிடம் இல்லையா?" என்று ஏமலதா கூறினபோது கனபாடியின் இருதயமே வெடித்துவிடும் போலிருந்தது.
"ஒரு காசு காணமாட்டீர்கள் ! எல்லாம் ஈஸ்வரன் கோயிலுக்கு எழுதி வைத்துவிடுவேன், ஜாக்கிரதை" என்று மிரட்டினார் கனபாடிகள்.
"இரண்டு ஜீவன்களுக்கும் இருபது ரூபாய் போதும்" என்றான் கனகசுந்தரம்.
"அட! பாவிப்பயலே! என் மானத்தை வாங்க வேண்டாம். இந்த ஊரை விட்டு இவளையும் இழுத்துக் கொண்டு எங்காவது தொலை. இருநூறு ரூபாய் தந்து விடுகிறேன். இந்த க்ஷணம் போய்விடவேண்டும். நான் சிவனே என்று இங்கேயே கிடக்கிறேன். என் மகளோடு திருப்தி அடை மானத்தையும் பறிக்காதே. பிராமணன் நான்; உன்னிடம் கெஞ்சுகிறேன்" என்றார் கனபாடி.
"அப்படியே செய்கிறேன் மாமா! மோட்டார் அதற்காகத்தான் ஏற்பாடாகி இருக்கிறது. நேற்று மாலையே புரோகிராம் போட்டுவிட்டோம். பெங்களூர் போகிறோம்" என்றான் மாப்பிள்ளை.
"இருநூறு ரூபாய் வேண்டாமப்பா. எனக்காக நீங்கள் செய்துவைத்த நகைகள் 2000 தாளுமே! அது போதும்" என்றாள் மகள். "அதுவும் போச்சா!" என்று அழுதார் புரோகிதர். அவரது புலம்பலை யார் கேட்கிறார்கள்? ஊர் முழுவதும் வம்பளப்புத்தான்! அவர்கள் பெங்களூரில் சரச மாக வாழ்ந்து வந்தனர்.
அப்பாவுக்கு அடிக்கடி கடிதம் போடுகிறாள் ஏமலதா. கனபாடிகளும் வழக்கப்படி, புரோகிதம் செய்கிறார். பேரன் பிறந்தான் என்று கேட்டும் பூரித்தார் . சேருகிற சொத்து யாருக்கு ! எல்லாம் அந்தப் பையனுக்குத்தானே ! பேரப் பிள்ளையைப் பார்க்க வேண்டும் என்பது கனபாடிகளின் விருப்பம், யாரும் அறியாமல் போய்ப் பார்க்க வேண்டும் என்று எண்ணினார்.
பெங்களூரில் குழந்தையைத் தொட்டிலிட்டு, ஏமலதா தாலாட்டும் போது, "தாத்தா வருவார் ! தங்கமல்லவா தூங்கு! உனக்கு பட்சணம் வாங்கித் தருவார், பட்டுச் சொக்கா எடுத்து வருவார் ! தங்கச் சங்கிலி போடுவார்" என்று கொஞ்சுகிறாள்.
புண்ணிய கோடீஸ்வரரின் புதல்வி பெங்களூரில் இருப்பது பற்றி, யாரேனும் துடுக்குத்தனமாகப் பேசினால், புரோகிதர், "அவ தலையெழுத்து அதுபோலிருந்தா, யாராலே தடுக்க முடியும்" என்று சமாதானம் கூறுவார். மனதிலே என்னவோ திருப்திதான்.
சீர்திருத்தப் பிரசாரம் பலமாக நடக்க ஆரம்பித்தது. புரோகிதப் புரட்டு, மத ஆபாசம், பொருந்தா மணம், விதவை மணத்தின் அவசியம் ஆகியவற்றைப் பற்றிப் பலமான பிரசாரம் நடந்தது. அது புரோகிதரின் மனதைப் புண்ணாக்கிற்று. "காலம் எவ்வளவு கெட்டு விட்டது பார்த்தேளோ ! ஆசாரம் கெட்டுப் போச்சு! மதத்தின் மதிப்பு போகிறது. ஜாதி உயர்வு தாழ்வு பற்றிய சம்பிரதாயம் போயிண்டிருக்கு! கலியின் கூத்து" என்று கூறிப் புலம்புகிறார். பெங்களூர் நினைப்பு வந்தால் மட்டும் புன்னகை.
-----------
5. 'கொக்கரகோ'
"வைஸ்ராயைப் பார்த்தாயோ, இல்லையோ?" என்று கேட்டுக் கொண்டே யாரோ என் முதுகில் ஒரு தட்டுத் தட்டவே, கண்விழித்துத் திரும்பிப் பார்த்தேன். பல மாதங்களாக என் கண்களில் தென்படாதிருந்த என் நண்பன் சுந்தரம் சிரித்துக்கொண்டே நின்றான்.
"இல்லை, சுந்தரம். நீ பார்த்தாயோ?" என்று நான் வினவினேன்.
"அவர் என்னைப் பார்க்காமல் கூட இருப்பாரா? போனவாரத்தில் கூட 'வீரர் வில்லிங்டன்' என்று முதல் தரமான தலையங்கமொன்று எழுதினேனே, தெரியாதா?" என்றான்.
எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. சுந்தரம் டிப்டி கலெக்டராக இருப்பதாகச் சொன்னால் கூட நான் நம்பத் தயார். ஆனால் பத்திரிகாசிரியராக இருப்பதாகச் சொன்ன போது கொஞ்சங்கூட நம்ப முடியவே இல்லை.
"தலையங்கம் யார் எழுதினது?" என்று நான் வினவினேன்.
"அரெரே! சமாசாரமே தெரியாதா?" என்று பீடிகை போட்டுக் கொண்டு, சுந்தரம் தன் சுயசரிதையைத் தொடங்கினான். அதற்குள் எனக்கு அறிமுகமான ஒரு பேர்வழி அவ்வழியே போக, நான் அவருக்கு ஒரு சலாம் போட்டுக் கொஞ்சம் பற்களை வெளியே காட்டினேன்.
"யார் அந்த ஆசாமி?" என்று கேட்டான் சுந்தரம்.
"கரன்சி ஆபீசில் 600 ரூபாய் சம்பளத்திலிருக்கிறார். அவர் பெரிய பேர்வழி" என்றேன்.
"உஷ்! இவர்களைப் பார்த்தாலே எனக்குப் பிடிப்பதில்லை" என்று கூறிக் கொண்டே, அந்த உத்தியோகஸ்தர் போன திக்கை நோக்கிச் சுந்தரம் காறி உமிழ்ந்தான்.
"கொடுத்து வைத்த ஆசாமிகள் ! அந்தக் காலத்திலே சுலபமாக அகப்பட்ட வேலையின் பயனாக இன்று கொழுத்த சம்பளம் வாங்குகிறார்கள். இந்தக் காலத்திலே வேலை ஏது? வெட்டி ஏது? இருக்கும் பணத்தையும் படிப்பிற்கு அர்ப்பணம் செய்து விட்டு, வரட்டு நிலம் முரட்டு மனைவியுடன் காலட் க்ஷேபம் செய்வது எவ்விதம் என்ற கவலை எனக்கு உண்டாயிற்று. வெகுநேரம் வேதனைப்பட்டுக் கடைசியில் பத்திரி காசிரியர் ஆகலாம் என்று தீர்மானித்தேன்."
சுந்தரம் இந்த இடத்தில் தன் சரிதத்தைச் சற்று நிறுத்தி விட்டுக் கொஞ்சம் பொடி போட்டுக் கொண்டான். அவன் திடீரென்று எப்படி மேதாவியானான் என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன். மறுபடி ஆரம்பித்தான் கதையை.
"எவ்வளவோ பத்திரிகைகள் ! எங்கே திரும்பினாலும் பத்திரிகைகள். இருந்தாலும் என் பத்திரிகையின் பெயரைக் கேட்டாலுமே போதும். உன்னால் அதை வாங்காமலிருக்க முடியாது. நல்ல சுபதினமாகப் பார்த்து அதை ஆரம்பித்தேன். தாளின் தலையிலே ஒரு சேவல்! அதன் வாயினின் றும் வருகிறது 'கொக்கரகோ' என்னும் சப்தம். அதுவே பத்திரிகைக்கும் பெயர். சப்தச் சுவை ஒரு பக்கம் கிடக்கட்டும். அதில் வெளியாகும் விஷயங்களின் பொருட்சுவையின் நயத்தை என்னால் சொல்ல முடியாது."
"சுந்தரம், ஒரு கேள்வி. அது என்ன, மாதப் பத்திரிகையா .... வாரப் பத்திரிகையா, அல்லது தினசரியா?" என்று நான் கேட்டேன்.
"அதை நான் ஏன் கூற வேண்டும்? விஷயம் முழுவதையும் கேட்டு விட்டுப் பிறகு நீயே சொல்லு. மற்றப் பத்திரிகை ஆசாமிகளைப்போல, ரிசர்வ பாங்கி மசோதா, வெள்ளைக் காகிதத் திட்டம், பிரிட்டிஷ் சாம்ராஜ்யம், சாஸ்திரியார் சாசனம் என்றெல்லாம் நான் எழுதுவது கிடையாது. 'கொக்கரகோ' வில் வெளிவரும் முக்கியமான விஷயங்கள் என்னவென்றால், திடுக்கிடும் சம்பவங்கள், ஆவேசத்தை தரக்கூடிய ஆச்சரிய மர்மங்கள், விநோத விசித்திரங்கள் தாம். ஆனால் ஓரொரு சமயம் பல சிக்கலான பிரச்னைகளைப்பற்றிக் கூட நான் விவாதிப்பதுண்டு.
"உதாரணமாக மனிதனுக்கு ஒரு தலை போதுமா?" என்ற தலைப்பின் கீழ் ஒரு ரசமான கட்டுரை எழுதியிருந்தேன். இவ்விஷயமாக இதுவரை ஒருவரும் கவனியாது இருப்பது சுத்தப் பிசகென்றும், அறிவுள்ளோர் இதன் உண்மையை தெரிந்து கொண்டு, பாமரருக்குக் கூற வேண்டுமென்றும், ரெவரண்டு ராம்சிமித் பிரசங்கம் செய்ததாக எழுதிவிட்டேன். அவ்வளவுதான். அந்த வாரம் பூராவும் அதைப்பற்றி விருத்தி உரைகளும், வியாக்கியானங்களும், ஆராய்ச்சிகளும் 'கொக்கரகோ' வில் வெளிவந்தன. பிறகு ..."
"ஆமாம் சுந்தரம், ராம்சிமித் யார்?" என்று நான் கேட்டேன்.
சுந்தரம் கதை சொல்லும் உற்சாகத்தில் என் கேள்வியைக் கவனிக்கவேயில்லை. மேலே சொல்லிக் கொண்டே போனான்.
"மறுவாரம் மன்னிக்கவும்" என்ற தலைப்பின் கீழ், "ராம்சிமித் மனிதனுக்கு ஒரு தலை போதுமா?" என்ற பிரச்னையைக் கிளப்பவே இல்லையென்றும், 'மனிதனுக்கு இருக்கும் ஒரு தலையே போதும். இதை அறிவுள்ளோர் கவனித்துப் பொது மக்களுக்குக் கூறுவது நலம்' என்று மட்டுமே அவர் கூறினதாகவும் வெளியிட்டு, தப்பாகச் செய்தி அனுப்பின நிரூபரை வேலையை விட்டு விலக்கி விட்டதாகக் 'கொக்கரகோ'வில் பிரசுரம் செய்தேன்."
எனக்குச் சிரிப்பு பொங்கிற்று. சுந்தரம் அவ்வளவு சாமர்த்தியமாகக் காரியங்களைச் செய்வான் என்று நான் எதிர்பார்க்கவே யில்லை.
"பேஷ்! பேஷ்!" என்று சொல்லிக் கொண்டே, அவன் முதுகைத் தட்டிக் கொடுத்தேன் . 'தட்டுவது பிறகு ஆகட்டும் சங்கரா! விஷயத்தைக் கேள்' என்று சுந்தரம் கதையை மேலே சொல்லத் தொடங்கினான்.
"தத்தி விளையாடி, குழந்தைப் பருவத்தைக் கடந்து, 'கொக்கரகோ' வாலிபப் பருவத்தை யடைந்தது. பல்லாயிரக் கணக்கான ஜனங்கள் 'கொக்கரகோ'வைப் பார்க்காமல் தூங்குவதில்லை. நானும் விநோத விஷயங்களை வெளியிட்ட வண்ணமாகவே இருந்தேன். அதற்காக நான் செய்த யுக்திகள் எவ்வளவு ! ஒரு தினம் விந்தையான விஷயம் ஒன்றும் அகப்படவில்லை. ஒரு பக்கங்கூட அச்சாகவில்லை. மணியோ மூன்று, நான்கு என்று வளர்ந்து கொண்டே சென்றது. ஐந்து மணிக்கெல்லாம் பத்திரிகை அச்சடித்தாக வேண்டும். என் நிலையில் நீ இருந்தால் என்ன செய்திருப்பாய்?" என்று சுந்தரம் கேட்டான். ஆனால் நல்ல காலமாக என் பதில் வருமுன்னமேயே தன் சரிதத்தை ஓட்டினான்.
"கேள் சங்கரா! சுற்றி வளைத்துப் பார்த்தேன். திடீரென்று ஒரு யுக்தி கிளம்பிற்று. எடுத்தேன் பேனாவை. 'ஹிட்லர் பட்லரானால்?' என்று கேள்வி ஒன்று கிளப்பினேன். மறுதினம் எனது சித்திரக்காரரைக் கொண்டு, ஹிட்லருக்குப் பட்லர் வேஷம் போட்டு, அவர் ஐரோப்பாவிற்குச் சாப்பாடு எடுத்துக் கொண்டு போவது போலவும், சாப்பாட்டுப் பண்டங்கள், துப்பாக்கி, பாம், புகை முதலியவைகளோடும், ஒரு படம் பிரசுரம் செய்தேன்.
"விற்பனை பலத்தது. 32 பி. ஏக்களை நிருபர்களாகவும் பார்சல் குமாஸ்தாக்களாகவும் வைத்துக் கொண்டேன். நீயும் வருவதானால் 33 பி.ஏக்களுக்கு நான் தலைவனாக்குவேன். என் மனைவி மரகதம் பெண்கள் பகுதியை வெகு திறமை யாக நடத்திக் கொண்டு வந்தாள். ஓர் அழகிய சிறிய பங்க ளாவை விலைக்கு வாங்கி அதில் குடியேறினேன். அடுத்த பங்களாவில், கார்த்திகேயன் அடியார் கூட்டத் தலைவரும், கங்காணிகள் சங்கத்துப் பொக்கிஷதாரருமான ஸ்ரீமான் கருணப்பிள்ளை, தன் மனைவி கமலாம்பிகையுடன் கூடி வசித்து வந்தார். பலமுறை நான் அவரை அணுகி, 'என் பத்திரிகையைப்பற்றி உம் அபிப்பிராயம் என்ன? அதற்கு ஏதாவது விஷயம் தரக் கூடாதோ?' என்று கேட்டுக் கேட்டு என் பாடு போதுமென்றாகி விட்டது. எத்தனையோ பெரிய ஆசாமிகள் விஷயதானம் செய்திருக்கிறார்கள். இந்தக் கரு ணைப் பிள்ளைக்கு மட்டும் ஏன் கடுகளவு கருணையாவது இருக்கக்கூடாதென்று எண்ணி ஏங்கினேன். ஆனால் விட் டேனா ஆசாமியை! மரகதமும் நானும் கலந்து யோசித்து அவரைத் தண்டிக்க ஓர் ஏற்பாடு செய்தோம்.
"ஏற்பாட்டின்படி கமலாம்பிகையை என் மனைவி சிநேகம் செய்து கொண்டாள். ஒரு தினம் இருவரும் வழக்கம் போல் சந்தித்து வம்பளந்து கொண்டிருந்தனர். இருந்தாற் போலிருந்து மரகதம் விழுந்து விழுந்து சிரித்தாள். கமலாம்பி கையின் முகத்தில் அசடு தட்டிற்று. 'ஏன் சிரிக்கிறாய்? கார ணத்தைச் சொல்லிவிட்டுச் சிரிக்கக் கூடாதோ?' என்று கெஞ்சினாள். மரகதம் சிரிப்பை நிறுத்திவிட்டு, ஒன்றுமில்லை என் வீட்டுக்காரர் என்னிடம் அதிக அன்புள்ளவர். நான் சொல்வதைத் தட்டுவதே கிடையாது. நேற்று நான் வேண்டு மென்றே அவருடைய அன்பைச் சோதிக்க எண்ணி, ஒரு பாவாடையைக் கட்டிக் கொண்டு நடனம் செய்யச் சொன் னேன். அவரும் தடை சொல்லாது ஆடினார். ரொம்ப தமாஷாக இருந்தது. அதை நினைத்துக் கொண்டு தான் சிரிக்கி றேன்' என்று கூறினார்.
"அன்று மாலை நான் ஆபீசிற்குச் செல்லாது, கருணைப் பிள்ளை வீட்டுத் தோட்டத்தில் காமிராவுடன் ஒளிந்து கொண்டிருந்தேன். அவரும் அவர் மனைவியும் தோட்டத் திற்கு வந்தனர்.
"இது என்ன முட்டாள் தனம்! ஆசையிருந்தால் ஆட வேண்டுமா?" என்று பிள்ளை கேட்டார். கமலாம்பிகை கண்களைப் பிசைந்து கொண்டே 'ஆமாம். ஆடு என்றால் ஆடத்தான் வேண்டும். பாடு என்றால் பாடத்தான் வேண்டும்; பக்கத்து வீட்டு ஆசிரியர் முட்டாளா? அவருடைய மனைவி அவரை ஆடச் சொன்னாள். அவர் ஆடினார். கொடுத்து வைத்த புண்யவதிகளுக்கு மனங்கோணாது நடக்கும் புருஷர்கள் வாய்க்கிறார்கள்' என்று கூறிக் கொண்டே விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள்.
"சரி" என்று சொல்லிக் கருணைப் பிள்ளை ஒரு பாவாடை தரித்து வந்து நடனம் செய்தார்.
"நடனம் மிக அற்புதமாக இருந்தது. கருத்துப் பெருத்த உருவம், உருண்டைத் தொந்தி, மொட்டைத் தலை - நடனம் நன்றாகத்தானே இருந்திருக்கும்! நான் மறைந்திருந்து அவர் ஆடியதைப் போட்டோ பிடித்துக் கொண்டு பிறகு அவர் எதிரில் திடீரென்று வந்தேன்.
"பரத நாட்டியத்தைப் பற்றித் தங்கள் அபிப்பிராயம் என்ன?" என்று நான் கேட்டேன். ஆள் அப்படியே ஸ்தம்பித்துப் போய்விட்டார். அன்றைய 'கொக்கரகோ'வில் ----
-
கருணைப்பிள்ளை நர்த்தனம்
பரதநாட்டியம் ஒரு பழங்கலை
உடனே மாறு வேடம் பூண்டு, பிராட்வே முனையில் நின்று கொண்டு, 'கொக்கரகோ - காலணா' என்று கூவிக் கூவி விற்றேன்."
"சுந்தரம் ! நிறுத்து, நிறுத்து. உன் சரிதம் கிடக்கட்டும்; அந்த மாதிரிப் பத்திரிகையை நான் பார்த்ததேயில்லையே, கேள்விப்பட்டது கூட இல்லையே" என்று நான் கேட்டேன்.
"நீ எப்படி பார்த்திருக்க முடியும்? இந்த ஊரில் போட்டால்தானே, உனக்குத் தெரியப் போகிறது?' என்றான் சுந்தரம்.
"இந்த ஊரில் போடவில்லையா? எந்த ஊரில் போடுகிறாய்?' ' என்று நான் வினவினேன்.
"உங்களுக்குத் தெரியாதா கீழ்ப்பாக்கம் பத்திரிகாசிரியரை?" என்று பின்னால் ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். ஒரு போலீஸ்காரன் என் நண்பன் கரத்தைப் பற்றிக் கொண்டான். என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டு அவனை இழுத்துக் கொண்டு போனான்.
"சங்கர் ! வைஸ்ராய் ஏதோ பேச வேண்டுமென்று கூப்பிட்டனுப்பி இருக்கிறார். நான் போய்விட்டு நாளை மாலை உன்னைப் பார்க்கிறேன். இன்றைய 'கொக்கர கோ'வை அவசியம் படி' ' என்று கூறினான் சுந்தரம்.
# # #
பரிதாபம் ! என் நண்பன் சுந்தரம், இரண்டு தரம் வார மும்முறைப் பத்திரிகை நடத்தித் தோல்வியடைந்து, பிறகு மாதமிருமுறைப் பத்திரிகை போட்டு மூளை இழந்து, கடைசியில் பைத்தியக்காரனாகிக் கீழ்ப்பாக்கத்தில் வசித்து வரும் விஷயம் எனக்குப் பிறகே தெரிய வந்தது.
----------------
6. அவள் மிகப் பொல்லாதவள்
"ஆனால், சரசா, நல்ல அழகு ! தங்கப்பதுமை போன்றவள்! தாய்க்கு ஒரே மகள் ! தகப்பனுமில்லை, பாவம்! அவர்கள் சொத்தைப் பார்த்துக் கொள்ள, சரசாவிற்குப் புருஷன் எந்தச் சீமையிலிருந்து வருவானோ தெரியவில்லை" என்றாள் அன்னம்மாள்.
சரசுவின் கண்களைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு சினிமாவிலே, யாரது, அந்த தேவிகாராணியோ என்னமோ பேர் சொல்கிறார்களே, அதே கவனம் வருகிறதடி" என்றாள் சொர்ணம்.
"தேவிகையோ, ரேணுகாம்பாவோ, எனக்கு என்ன தெரியறது, அந்த இழவெல்லாம். சொர்ணம், கொஞ்சம் படிச்சவ."
"இவளுக்குத் தெரியுது" என்றாள் குப்பம்மாள்.
"என்றைக்காவது சரசா, குளத்துக்கு வந்தால், எனக்கு ஒரு பாட்டு கவனத்துக்கு வருவதுண்டு" என்றாள் சொர்ணம்.
'அது என்ன பாட்டம்மா, கொஞ்சம் சொல்லேன்" என்று எல்லோருமாகக் கேட்டனர்.
சொர்ணம், "தாமரை பூத்த குளத்தினிலே முகத் தாமரை தோன்றிட வந்தவளே!" என்று பாட ஆரம்பித் தாள் !
"பாட்டைப் பார்த்தியா, ரொம்ப ருசியா இருக்கிறதே" என்றனர் யாவரும்.
"ஆமாம், ஆமாம்! சீக்கிரம் வீடு போனால் தான் வீட்டிலே சாப்பாடு ருசியாக இருக்கும். எடுங்கள் குடத்தை. போவோம். சரசா பேச்சைப் பேசுவதென்றால் பொழுது போவதே தெரியாது" என்று அன்னம் கூறிட எல்லோருமாக குடங்களை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றனர்.
உள்ளபடியே சரசாவின் பேச்சை யார் பேச ஆரம்பித்தாலும் அன்னம் கூறியபடி பொழுது போவதே தெரியாது.
நடுத்தர உயரம்! கண் கவரும் சிகப்பு! காதுவரை நீண்டு செவ்வரி படர்ந்த சிங்காரக் கண்கள் ! கன்னங்கள், கண்ணாடி; புருவங்களோ, மதனன் வில்லே-யென்னலாம்! கொவ்வை இதழ் ! அக்கோமளவல்லிக்கு, முத்துப் பற்கள் அவை எப் போதோ சில சமயங்களே வெளியே தெரிந்து காண்போரை மயக்கிவிட்டு, மாயமாக மறைந்துவிடும்!
இன்பத்தின் உருவம் ! இயற்கையின் சித்திரம்! ஆனந்த ஒளி! என்றெல்லாம் சரசாவைப் பற்றிப் பேசிப் புகழாதவர்களே இல்லை எனலாம்.
அந்த சிற்றூருக்கு, சரசாதான் தாஜ்மகால்.
அவர்கள் குடும்பத்தின் கோகினூர் சரசாவே. சரசா விற்கு வயது 18. இருக்கும். தகப்பனார் சரசா சிறு பெண்ணாக இருக்கும்போதே இறந்துவிட்டார். தாய் சரசாவைக் கண்டு கண்டு பூரித்து தன் வாழ்வைத் தள்ளி வந்தாள்.
சரசாவின் அழகு வளர்ந்து கொண்டே வந்தது போலவே, அறிவும் வளர்ந்து கொண்டே வந்தது. அறிவு என்றால், அல்லி அரசாணி மாலையும், நல்லதங்காள் புலம்பலும், அந்தகனை மணந்த அற்புத வள்ளியின் கதையும் படிப்பது என்றல்ல பகுத்தறிவு!
பாவை பொன்போல இருந்தாள் ! அவளுடைய அறிவு, வைரம் போல மின்னிக் கொண்டிருந்தது. தாய் அந்தக் காலத்து நடத்தை, பழங்காலப் பேச்சு பேசிவருவாள். மகள், சிறு நகையுடன், 'அம்மாவே அம்மா ! எங்கள் அம்மா கிரேதாயுகத்திலே பிறந்து வளர்ந்தவர்கள். ஏனம்மா! அண்டை வீட்டு அகிலாண்டம், எந்த அரச மரத்தை சுற்றினார்கள். எனக்கு காட்டமாட்டீர்களா? பக்கத்து வீட்டு பாலம்மா, புற்றுக்கு பால் ஊற்றவே ஒரு மாடு வாங்கலே என்று கேட்டு கேலி செய்து சிரிப்பாள், சரசா.
"நீ போடி அம்மா ! போக்கிரி! அரசமரம், ஆலமரம் இதெல்லாம் என்ன என்று உனக்கென்னடி தெரியும். பவுடரும், ரிப்பனும் வாராத காலத்திலே, வேப்ப மரத்துப் பெருமை எல்லோருக்கும் தெரிந்துதான் இருந்தது. உங்க அப்பா, இருக்கச்சே, இந்த வீடு, கோயில் மாதிரி இருக்கும் தெரியுமா ! நீ பிறந்துதான் அவரையும் உருட்டிவிட்டே. யாரும் இப்போ இங்கே வரக்கூடப் பயப்படுகிறார்கள். வெலாத் தம்மன் கோயில் பூஜாரி, நேத்து நீ தூங்கிக் கொண்டிருக்கும் போது வந்தான். இளநீர் அபிஷேகம் செய்யணுமாம், அம்மாவுக்கு" என்றான்.
"கொடுத்தனுப்பினாயா அம்மா! பத்தா, ஐந்தா? எவ்வளவு ரூபாயம்மா கொடுத்தாய்' ' என்பாள் சரசா.
"சரசா, பொல்லாத பெண். அது என்னென்னமோ புத்தகம் படித்துவிட்டு, எதுக்கு பார்த்தாலும் காரணம் கேட்கிறாள்" என்று சரசாவின் தாயார், புரோகிதர் சுப்பய்யரிடம் சொல்வதுண்டு.
சுப்பய்யர், அந்த ஊர் புரோகிதர். அந்த வட்டாரத்திலே இருந்த எல்லா பணக்காரக் குடும்பமும், அவருடைய பஞ்சாங்கத்தினுள்ளே சுருட்டி மடக்கி வைத்துக் கொண்டிருந்தார். எஸ்ட்டேட் விஷயம் முதற்கொண்டு, வீட்டிலே எருமை வாங்குகிற விஷயம் வரையிலே, சுப்பு சாஸ்திரியைக் கலக்காமல் ஒரு காரியமும் நடப்பதில்லை. ஐயருக்கு அவ் வளவு செல்வாக்கு.
காலையிலே குளித்துவிட்டு விபூதி பூசி, கட்கத்திலே பஞ்சாங்கக் கட்டை வைத்துக் கொண்டு ஐயர் வெளியே கிளம்பினால் வீடு திரும்பி வரும் போது 12- மணிக்கு மேலே ஆகும். மடியிலே இரண்டோ மூணோ பணமும் இருக்கும்.
"கமலம்! அடி அம்மா கமலம்! தூங்கிட்டயோ ' என்று கதவைத் தட்டுவார், இருபத்தைந்து வயதான, அவளுடைய ஒரே மகள் - விதவை. கொட்டாவி விட்டுக் கொண்டே வந்து கதவைத் திறப்பாள்.
# # #
சரசாவைப்பற்றி, சிங்கார வேலுப்பிள்ளை கேள்விப் பட்டிருக்கிறார். பார்த்துமிருக்கிறார். சந்தைப் பேட்டை ஜெமீன்தாரர், சிங்கார வேலருக்கு சரசாவின் பேச்சை எடுத்தாலே, காயகல்பம் சாப்பிட்டது போல இருக்கும். எப்படி யாவது சரசாவைக் கலியாணம் செய்து கொள்ள வேண்டு மென்பது அவர் எண்ணம். மனைவி வைசூரியால் மாண்டு போன நாள் முதற்கொண்டு அவர் இதே எண்ணத்தில் இருந்தார். அவருக்கு வேதவல்லி வைப்பு! இருந்தாலும் வேதவல்லிக்கு வயது நாற்பதாகிவிட்டது!
சரசாவைப்போல சின்னஞ்சிறு குட்டி, தனக்கு மனைவியாக இருந்தால், இந்திர லோகத்திலும் இல்லாத ஆனந்தமாக இருக்கலாம் என்று அவர் எண்ணினார். வழக்கப்படி இதை புரோகிதரிடமும் சொன்னார்.
"குட்டி ரொம்ப அழகுதான்! ஆனால், பொல்லாத குட்டி. என் தலையைக் கண்டதும். வந்தாரம்மா புரோகிதர் ! வாழைக்கோ, வெண்டைக்காய்க்கோ என்று கேலி செய்யும். அவ, அம்மாவுக்கு நல்ல பக்தி. திதி திவசத்தின் போது மனங் குளிர தருமம் செய்வாள். நேமநிஷ்டை தவறுவதில்லை. அவ அம்மாகிட்ட நானும் ஏற்கனவே சொல்லியு-மிருக்கிறேன். உம்ம ஜாதகமும் இப்ப நன்னா இருக்கு! உமக்கு ஒரு புது பெண்ணாவது, புது மாடாவது, புது வேஷ்டியாவது, இன்னும் கொஞ்ச நாளிலே தானா வந்து சேரணும்" என்று புரோகிதர் சிங்கார வேலருக்கு தேன் மொழி கூறிவந்தார்.
"சாமி! அந்த அம்பிகையை நான் இந்த ஐம்பது வருஷமா மறந்ததில்லை. கும்பாபிஷேகம் ஒரு தடவைகூட செய்யாது விட்டதுமில்லை. பார்ப்போம், அம்பிகையின் அருள் எப்படி இருக்குமென்று" என்பார்.
"நாளைக்கு நானும் உம்ம பேருக்கு ஒரு இலட்சார்ச் சனை செய்யறதுன்னு நினைச்சுண்டே இருக்கேன்" என் பார் புரோகிதர்.
கணக்குப் பிள்ளையைக் கூப்பிட்டு, "ஐயருக்கு வேண்டியதைக் கொடு" என்று சிங்காரவேலு பிள்ளை கூறிவிட்டு நல்ல நரைமயிர் கருக்கும் தைலம் எங்கு விற்கிறது என்ற ஆராய்ச்சியிலே இருப்பார்.
எப்படியாவது இந்த இரண்டு குடும்பங்களையும் பிணைத்து விட்டால் தன்பாடு, கொண்டாட்டம் என்பது சாஸ்திரிகளின் எண்ணம். இரண்டு குடும்பத்திற்கும் ஏஜண்டாகவல்லவோ அவர் இருப்பார்.
ஒருநாள் மாலை சாஸ்திரியார், சரசாவின் தாயாருக்கு தூபம் போட்டுக் கொண்டிருந்தார். ஜாதகப் பலனைப் பற்றி சரமாரியாகக் கூறிக் கொண்டிருக்கையில், பொல்லாத சரசா வந்துவிட்டாள் அங்கே. "உமது ஜாதகக் கணிதத்தில், கமலா, கலியாணமான இரண்டாம் மாதம் தாலி அறுப்பாள் என்பது தெரியாமல் போனதேன்?" என்று இடித்தாள். சாஸ்திரிகள், பச்சைச் சிரிப்புடன், "விதிவசம் அம்மா ; ஆண்டவன் கூற்று" என்றார் . "உமது மகளுக்கு நடக்கவிருந்த வியத்தையே உம்மால் கண்டு பிடிக்க முடியாதபோது, என் ஜாதகப் பலனைப் பார்த்துச் சொல்ல வந்து விட்டீரே" என்று குத்தலாகக் கூறினாள் மங்கை.
"என்னமோ! நடந்தது நடந்துவிட்டது. என் மகள் கமலம், இப்போது ஏதோ, ஆண்டவனைத் துதித்துக் கொண்டு, சிவனே என்று காலந்தள்ளுகிறாள். அவள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்" என்று சற்று வருத்தத்துடன் கூறினார் சாஸ்திரி.
"பாபம்! கமலாவைப்பற்றி எண்ணினால் எனக்கு துக்கம் தொண்டையை அடைக்கிறது. பெண்ணின் குணத்திற்கென்ன! ரூபத்திற்கென்ன! எலுமிச்சம் பழம் போல இருக்கிறது குழந்தை ' என்றாள் சரசாவின் தாய்.
சரசா, புன்சிரிப்புடன், "அப்புறம், இன்னம் கொஞ்சம் வர்ணியுங்கள், கமலாவைப்பற்றி. அவள் கண்டது இது தானே." என்றாள்.
"போடி, போக்கிரி சிறுக்கி! கமலா எவ்வளவு ஆச்சார அனுஷ்டானம் தவறாது இருக்கிறாள் பார்! ஒரு நாளாவது இவள் கோயில் போய் பூஜை செய்யாது இருக்கிறாளா? நீ நான் அந்த சங்கத்திற்குப் போகிறேன் ! இந்த சேரிக்குப் போகிறேன்" என்று குலத்தையே கெடுத்துக் கொண்டு வருகிறாய்" என்றாள்.
"கமலா, என் தோழி! அவள் விஷயத்தில் உங்களுக்கு இருப்பதைவிட எனக்கு அக்கரை அதிகம். நாளை மாலை மூன்று மணிக்கு, நான் உங்களுக்கு ஒரு 'காட்சி' காட்டப் போகிறேன் சாஸ்திரிவாள். நீர் இரவு முழுதும் குத்து விளக்கடியில் உட்கார்ந்து கொண்டு உமது பஞ்சாங்கக் கட்டை எல்லாம் புரட்டிப் புரட்டிப் பார்த்தாலும், நாளை என்ன காட்டப்போகிறேன் என்பதைக் கண்டு கொள்ள முடியாது. 'கமலா, அழகி! கமலா ஒரு யுவதி! கமலா, ஒரு விதவை! அவள் என் அருமைத் தோழி! அவளை நீங்கள் முற்றும் தெரிந்து கொள்ளவில்லை. நான் தெரிந்து கொண்டேன் இன்று போய், நாளை வாரும்! உமது மனம் முதலில் மருண்டு பிறகு குளிரும் காட்சியைக் காண்பீர்' என்று சரசா கூறி விட்டு, பெண்கள் முன்னேற்ற சங்கத்திற்குப் போய் விட்டாள்.
"இதோ பாருங்கள் ! கப் சிப்" என்று இந்த அறையில் இருக்க வேண்டும். நான் அறையை வெளிப்பக்கம் பூட்டி விடப்போகிறேன்" என்று கூறி சரசா சாஸ்திரிகளை ஒரு அறையில் பூட்டி விட்டாள். மறுநாள் மாலை சாஸ்திரிகளுக்கு கொஞ்சம் பயம், இந்தப் 'போக்கிரிப்பெண்' என்ன சூது செய்வாளோ என்று. சிறிது நேரத்திற்குப் பிறகு பக்கத்து அறையிலிருந்து இரு மங்கைகள் மகிழ்ச்சியுடன் சிரிக்கும் சத்தம் கேட்டது. உற்றுக் கேட்டார் . ஆம்! சந்தேகமில்லை. தன் மகள் கமலாவின் சிரிப்புதான். இதுவரை, கமலா அப்படி சிரித்தது, அவர் கேட்டதில்லை. விதவைக்கு சிரிப்பும், களிப்பும் ஏது?
"கண்ணே சரசா, நான் இன்றே பாக்கியசாலியானேன். உன்னை நான் என்றும் மறவேன்" என்றாள் கமலம்.
"என்னை மறந்தாலும் மறப்பாய் கமலா! 'எதுகுல காம்போதி'யை மறப்பாயோ" என்றாள் சரசா.
"போ, கமலா உனக்கு எப்போதும் கேலி செய்வது தான் வேலை. எங்களவர், "எதுகுல காம்போதி" ஆலாபனம் செய்வதை ஒரு முறை கேட்ட யார்தான் மறந்துவிடுவார்கள்" என்றாள் கமலா.
"பிளேட்டிலே கொடுத்து விடச் சொல்லு . அவர் வெளியிலே போய் விட்டாலும், நீ போட்டுக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்" என்றாள் சரசா.
பக்கத்து அறையிலே இருந்த சாஸ்திரியாருக்கு ஒன்றுமே விளங்கவில்லை. நட்சத்திர பலன், நாழிகைக் கணக்கு, தர்ப்பையின் மகிமை தெரியுமே தவிர, எதுகுல காம்போதி, என்ன தெரியும்?
என்னடா சனியன், எதுகுல காம்போதி! எங்களவர் கிராமபோன் பிளேட் என்று எதை எதையோ குட்டிகள் பேசுகின்றனவே என்று எண்ணித் திகைத்தார்.
"சரசா, என் விஷயம், எல்லா பேப்பரிலுமா போட்டு விடுவார்கள்" என்று கேட்டாள் கமலம்! "தடையில்லாமல்! பிரபல சாஸ்திரியின் மகள் ஸ்ரீமதி கமலத்திற்கும், சிவன் கோயில் நாதஸ்வர வித்வான் சுப்பிரமணியப் பிள்ளைக்கும் சீர்திருத்தமணம். ஸ்ரீமதி சரசாவின் முயற்சியால் இனிது நடந்தேறியது. அதில் ஜில்லா முன்சீப், தோழர் கதிரேசன் அவர்கள் தலைமை வகித்தார்." எனக் கொட்டை எழுத்தில், போட்டோவுடன் வெளிவரும்" என்று சரசா கூறி முடிப்பதற்குள், சாஸ்திரிகள், 'அடிபாவி! குடிகெடுத்தாயே! நான் என்ன செய்வேன். கமலா, என்ன வேலையடி செய்தாய்" என்று ஓவென அலறினார்.
"ஒன்றுமில்லை! பயப்படாதே கமலா! உங்க அப்பா, சீர்திருத்தத்தைக் கண்டு பயந்து அலறுகிறார். அவ்வளவு தான். கொஞ்ச நேரம் சென்று சரியாகிவிடும். சட்டப்படி உன்னை ஒன்றும் செய்ய முடியாது" என்று சரசா கூறினாள். பக்கத்து அறையில் கதவை, படேர் படேர் என உதைத்தார் சாஸ்திரிகள். 'நாசகாரப் பெண்ணே, திற கதவை . நாதஸ்வரக்காரனைக் கட்டிக் கொண்டாயா! இதற்குத்தானா நாள் தவறாமல் நீ சிவன் கோயில் போனாய். நாசமாய்ப் போனவளே! எங்காவது குளத்திலே, குட்டையிலே விழுந்து சாகக்கூடாதா! கொண்டுவந்து வைத்தாயே என்குடும்பத்தில் கொள்ளியை" என்று கோவெனக் கதறினார்.
"சாஸ்திரியாரே! சாந்தமடையும். எல்லாம் ஆண்டவன் செயல்' என்றாள் சரசா.
"போதும்மா, உன் பேச்சு. நீ ரொம்ப நல்லவள். பிறந்தாயே இந்த ஊரில், என் குடி கெடுக்க" என்றார் சாஸ்திரியார்.
"ஓய் சாஸ்திரியாரே, உமது மகள் செய்ததில் என்ன தவறு கண்டுவிட்டீர்? அவள் வேறு ஜாதியாளை மணந்து கொண்டதற்காக இங்கு மல்லுக்கு நிற்கிறீரே, உமது சங்கம் என்ன! கமலாவுக்குத் தெரியாது - எனக்குமா தெரியாது என்று எண்ணுகிறீர். எங்கள் சங்கத்து வேவுகாரரிடம் உமது "ஜாதகம்' அத்தனையும் இருக்கிறது. பேசுவது, வேத
வேதாந்தம்! வேஷமோ, சனாதனம். நடத்தை எப்படி? ஏன் சாஸ்திரிகளே, உமது வைப்பாட்டி வள்ளி, யார், எந்த இனம்! சொல்லட்டுமா கமலாவுக்கு!" என்று கோபத்துடன் கேட்டாள் சரசா. சாஸ்திரியார், "சிவ! சிவ! சம்போ மகாதேவா! உனக்கு என்ன அபசாரம் பண்ணினேனோ, என் தலையிலே இப்படி இடி விழுகிறதே" என்று அழுதார்.
"சரி, கேளும், மேலும் சில சேதியை. கமலாவும் சுப்பிரமணியமும் இன்றிரவே புறப்பட்டு சென்னை போகிறார்கள். அங்கேதான் குடி இருப்பார்கள். நானும் அடுத்தவாரம் அங்கே போகிறேன்" என்றாள் சரசா.
"ஏண்டி, சரசு! இது என்னடி பெரிய வம்பாகிவிட்டது' என்று கூறிக் கொண்டே, சரசாவின் தாயார், சாஸ்திரியாரை அறையை விட்டு வெளி ஏற்றினார். கமலாவை திரும்பிக்கூட பார்க்காது, அவர் வீடு சென்றார்.
அன்றிரவே கமலாவும் அவளுடைய காதற் கணவன் சுப்பிரமணியமும் சென்னை சென்றனர்.
சரசா புன்சிரிப்புடன், தாயை நோக்கினாள். "ஏனம்மா, விதவைக்கு மணமுடித்து வைக்கிற திறமை எனக்கு இருக்கும் போது, என்னை ஒரு கிழவனுக்குக் கொடுக்க, ஏற்பாடு செய்தாயே" என்று கேலி செய்துவிட்டு, "இதோ பாரம்மா படத்தை ! இவரைத்தான் நான் அடுத்த வாரம் மணம் செய்து கொள்ளப் போகிறேன்" என்று கூறிக் கொண்டே, ஒரு 'போட்டோ' வைக் காட்டினாள்.
சரசாவின் தாய், அதைப் பார்த்தாள். "படம்! ஒரு வசீ கரமான இளைஞனுடையது! நாகரிகமான உடை! நல்ல தோற்றம். "
"யாரம்மா இது? என்ன ஜாதி" என்றாள் தாயார்.
"இவர் தானம்மா எனக்கு கணவராக வரப்போகிறவர். ஜாதி, ஆண் ஜாதிதான் -- எனக்கு அவ்வளவுதான் தெரியும்" என்று கூறிக் கொண்டே தாயின் கன்னத்தை அன்போடு கிள்ளினாள்.
"நீ செய்வது எனக்கொன்றும் பிடிக்கவே யில்லை. குலத்தைக் கோத்திரத்தை எல்லாம் கெடுக்கிறாய்" என்றாள் தாய்.
"எதைக் கெடுத்தேனும் நான் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்பதுதானே அம்மா உன் ஆசை ' என்று கொஞ் சினாள் சரசா.
தாயாரால் ஒன்றும் பதில் சொல்ல முடியவில்லை.
"போடி பொல்லாத சிறுக்கி! நீ எப்படியோ சுகமாக இரு. பார்த்து மகிழ்கிறேன் நான்" என்று கூறினாள் தாயார்.
--------------
7. கபோதிபுரக் காதல்
"உம்! கொஞ்சம் வேகமா நட. வேகற வெய்யில் வர்ரதுக்குள்ளே ஊர் போவோம்."
ஜல் ஜல், ஜல் ஜல, ஜல் ஜல், ஜல ஜல.
"சும்மா போகமாட்டாயே, நீ. உன் வாடிக்கையே அதுதான் ! சவுக்கடி கொடுத்தால் தானே போவே உம்....."
"வேண்டாமப்பா, பாவம், வாயில்லாத பிராணி, வெயில் வேளை. போகட்டும் மெதுவா. அடிக்காதே" என்று வேதவல்லி சொன்னாள், மாட்டை சவுக்கால் சுரீல் என அடித்து வாலைப் பிடித்து ஒடித்து வண்டியை ஓட்டியவனைப் பார்த்து. மணி காலை பதினொன்று ஆகிறது. ஒரு சாலை ஓரமாக வண்டி போகிறது. வண்டியிலே இரு மாதர்', தாயும் மகளும், தலைக் குட்டையும், சந்தனப் பொட்டும். பொடி மட்டையுடன் ஒரு ஆடவர் . வேதவல்லியின் புருஷர் வீராசாமிப் பிள்ளை. ஆக மூவரும் செல்லுகின்றனர். வண்டி மாடு செவிலி நிறம். ஓட்டுகிற ஆளும் சிகப்பு . மீசை கருக்கு விட்டுக் கொண்டிருக்கிற பருவம். 'என்னமோம்மா; நீங்க பாவ புண்ணியத்தைப் பார்க்கறீங்க! மாட்டை அடிச்சு ஓட்டாதேனு சொல்றீங்க. சில பேரை பார்க்கணுமே, 'என்னடா, மாடு நகருது, அடிச்சு ஓட்டேன். கொடுக்கிறது காசா மண்ணா' என்று கோபிப்பார்கள்" என்றான் வண்டிக் காரன்.
"சிலபேரு அப்படித்தான். ஓட்டமும் நடையுமா போனா கூட, பனிரெண்டு மணிக்குள்ளே போயிடலாமே! மாரிக்குப் பத்துக்கு உச்சி வேளை பூஜைக்குப் போய்ச் சேர்ந்துட லாமே" என்று வேதவல்லி கூறினாள்.
"அதுக்குள்ளே பேஷா போகலாம். அடிச்சு ஓட்டினா அரை மணியிலே போகலாம். எதுவும் அப்படித்தான். அடிச்சி ஓட்டாத மாடும், படிச்சி வழிக்கு வராத பிள்ளையும் எதுக்கு உதவப் போவுது. என் சேதியைக் கேட்டா சிரி சிரின்னு சிரிப்பீங்கோ! நான் படிச்சதும் பிழைச்சதும் அப்படி" என்றான் வண்டி ஓட்டி.
"நீ படிக்கவே யில்லையாப்பா" என்று கேட்டாள் வேதவல்லி. "படிச்சேன், ஆறாவது வரையிலே. அதுக்கு மேலே ஆட்டமெல்லாம் ஆடினேன். இப்போ மாட்டு வண்டி ஓட்டற வேலைதான் கிடைச்சுது. அதுவும் நம்ம சிநேகிதர் ஒருவர் காட்டினார். இந்தப் பிழைப்பையாவது. உம்! எல்லாம் இப்படித்தான். அந்த சினிமாவிலே கூட பாட றாங்களே, 'நாடகமே உலகம். நாளை .... என்று மெல்லிய குரலிலே பாடலைப் பாடினான் பரந்தாமன் - அது தான் அவன் பெயர். 'நாடகமே உலகத்திலிருந்து ... மாயப் பிரபஞ்சத்துக்கு வந்தான். அதிலிருந்து 'ராதே உனக்குக் கோபம் ஆகாதடி' ஆரம்பித்தான். வீரசாமிப்பிள்ளை கனைத்தார். 'தம்பி பாட்டு பிறகு நடக்கட்டும்; ஓட்டு வண்டியை' என்றார். வேதவல்லி, 'ராதா ! என்னம்மா மயக்கமா இருக்கா ' என்று தன் மகளைக் கேட்டான்.
அப்போதுதான் பரந்தாமனுக்குத் தெரிந்தது, வீராசாமிப் பிள்ளை கனைத்ததற்குக் காரணம். தமது பெண்ணின் பெயர் ராதா! வண்டிக்காரன், ராதே உனக்குக் கோபம் ஆகாதடி பாடினால், சும்மா இருப்பார்களா? தனக்குத் தானே சிரித்துக் கொண்டான் பரந்தாமன்.
கொஞ்ச நேரம் சென்றதும் வண்டிக்குள்ளே நோக்கினான். சாரதா, வேதவல்லியின் தோள் மீது சோர்ந்து படுத்துக் கொண்டிருந்தாள். ஒருமுறை அவளைக் கண்டான்; ஓராயிரம் தடவை, 'ராதே உனக்குக் கோபம் ஆகாதடி.' என்று பாடலாமா என்று தோன்றிற்று. பரந்தாமன் உள்ளத்தை அந்தப் பாவை கொள்ளை கொண்டாள். கண்கள் மூடித்தான் இருந்தன; ஆனாலும் அதிலும் ஒரு வசீகரம் இருந் தது. காற்றினால் அங்குமிங்குமாக அலைந்தது. கருப்பு பொட்டு அந்த சிகப்புச் சிங்காரியின் நெற்றியிலே வியர்வையில் குழைந்து ஒருபுறம் ஒழுகிவிட்டது. ஆனால் அதுவும் ஒரு தனி அழகாகத்தான் இருந்தது. "மாதே உனக்குச் சோகம் ஆகாதடி" என்று பாட எண்ணினான். சோகித்துச் சாய்ந்திருந்த அந்த சொர்ண ரூபீயை நோக்கி, "ஆ! நான் வண்டியை ஓட்டுபவனாக வன்றோ இருக்கிறேன். எனக்கு இவள் கிட்டுவாளா?" என்று எண்ணினான்; ஏங்கினான். மாடு தள்ளாடி நடந்தது. பரந்தாமனுக்கு அதைத் தட்டி ஓட்ட முடியவில்லை. இஷ்டங்கூட இல்லை. அந்த ரமணி எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக வண்டியில் இருக்கிறாளோ, அவ்வளவு ஆனந்தம். வண்டியோட்டுகிற வேளையிலும் இப்படிப்பட்ட சம்பவம் இருக்கிறதல்லவா என்று கூட எண்ணினான்.
ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ஆறாவது மைலில் மாரிக் குப்பம் ! அங்கு ஆடி வெள்ளிக்கிழமையிலே, குறி சொல்வதும், பிசாசு ஓட்டுவதும், குளிச்சம் கட்டுவதும், முழுக்குப் போடுவதும் வழக்கம். சுற்றுப் பக்கத்து ஊரிலிருந்து திரளான கூட்டம் வரும். மாரிக்குப்பம் கோயில் பூசாரி, மாடி வீடு கட்டியதும், அவன் மகன் மதறாசிலே மளிகைக்கடை வைத் ததும் அந்த மகமாயி தயவாலே தான். எத்தனையோ ஆயிரம் குளிச்சம் கட்டியிருப்பான் பூசாரி. அவனைத் தேடி எத்தனையோ ஆயிரம் பேர் வந்திருப்பார்கள். எவ்வளவோ பேரைப் பார்த்தவன். எத்தனையோ பிசாசை ஓட்டினவன். அந்தப் பேர்வழியைக் காணவும், ராதாவுக்கு அடிக்கடி வருகிற சோகம், ஏதாவது காத்து சேஷ்டையாக இருக்கலாம். அதுபோக ஒரு குளிச்சம் வாங்கிப் போகலாமென்றும் தான் ஐம்பது அறுபது மைல் தாண்டி அழகாபுரியை விட்டு வீராசாமிப்பிள்ளை மனைவியையும் மகளையும் அழைத்துக் கொண்டு வந்தார்.
ஆவணியிலே ராதாவுக்குக் கலியாணம் நிச்சயமாகிவிட்டது. நல்ல பெரிய இடத்திலே ஏற்பாடு. நூறு வேலிக்கு நிலம் ; ஆடும் மாடும், ஆளும் அம்பும், வண்டி யும் அதிகம். அந்த அழகாபுரிக்கே அவர்தான் ஜமீன்தார் போல . வயது கொஞ்சம் அதிகம்தான். அறுபது என்று சொல்லுவார்கள். ஆனால் ஆள் நல்ல உயரம், பருமன், மீசை மயில் ராவணனுக்கு படத்திலே இருப்பது போல. ஆசாமி பேசினால் இடி இடித்த மாதிரிதான். அழகாபுரி யிலே மாரியப் பிள்ளை என்றால் போதும்; கிடுகிடுவென நடுங்குவார்கள். அவருக்கு மூன்றாந்தாரமாக, ராதா ஏற்பாடாகிவிட்டது. ராதாவுக்கு வயது பதினாறுகூட நிரம்ப வில்லை . அவள் அழகு, அழகாபுரிக்கே அழகு செய்தது. நல்ல பஞ்சவர்ணக்கிளி என்றாலும் சோலையில் பறக்க விடுகிறார்களா? தங்கக் கூண்டிலே போட்டுத்தானே அத்துடன் கொஞ்சுவார்கள். அதைப் போலத்தான் ராதாவுக்கு, மாரியப்ப பிள்ளை கூண்டு. அவருடைய பணம் பேசுமே தவிர வயதா பேசும்? அதிலும் வீராசாமிப் பிள்ளை வறட்சிக்கார ஆசாமி. கடன் பட்டுப் பட்டுக் கெட்டவர். இந்த சம்பந்தத்தினால் தான் ஏதாவது கொஞ்சம் தலை எடுக்க முடியும். வேதவல்லிக்குக் கொஞ்சம் கசப்புத்தான். இருந்தாலும் என்ன செய்வது?
ராதாவுக்குத் தெரியும், தனக்குப் பெற்றோர்கள் செய்கிற விபரீத ஏற்பாடு. அதனை எண்ணி எண்ணி ஏங்கினாள், வாடினாள். மாரியப்ப பிள்ளையை மனதாலே நினைத்தாலே பயமாக இருந்தது, அவளுக்கு. எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணியதால் உடல் இளைக்க லாயிற்று. ஐயோ அந்த ஆர்ப்பாட்டக்காரக் கிழவனுக்கு வாழ்க்கைப்பட்டு நான் எக்கதியாவது? என்று எண்ணி நடுங்கினாள் அந்தப் பெண். தனது குடும்பத்திலுள்ள கஷ்டமும் அந்தக் கஷ்டத்தைப் போக்கிக் கொள்ளவே, தன்னை கிளியை வளர்த்து பூனையிடம் தருவதுபோல, மாரியப்ப பிள்ளைக்கு மணம் செய்து கொடுக்கத் துணிந்ததும், அவளுக்குத் தெரியும். தனது குடும்பக் கஷ்டத்தைப் போக்க வேண்டு மென்பதிலே ராதாவுக்குத் திருப்திதான். ஆனால் கிழவனுக்குப் பெண்டாக வேண்டுமே என்றெண்ணும் போது, குடும்பமாவது பாழாவது- எங்கேனும் ஒரு குளத்தில் விழுந்து சாகலாமே என்று தோன்றும். இது இயற்கைதானே!
இப்படிப்பட்ட பொருத்தமில்லாத ஜோடிகளைச் சேர்ப்பதற்காக யார் என்ன செய்கிறார்கள்? ஊரார் கேலியாகப் பேசிக் கொள்வார்களேயொழிய, இவ்விதமான வகையற்ற காரியம் நடக்கவொட்டாது தடுக்கவா போகிறார்கள். கல்லென்றாலும் கணவன், புல்லென்றாலும் புருஷன் என்று பழமொழி இருக்க, கல்லோ, புல்லோ அல்லாத மாரியப்ப பிள்ளைகள் ராதாவை மணமுடித்துக் கெடுக்காது இருப்பார்களோ!
அதிலும் மாரியப்ப பிள்ளை ஒரு ஏழையாக இருந்தால் கிழவனுக்கு எவ்வளவு கிறுக்கு பார்த்தீர்களா! காடு வாவா என்கிறது; வீடு போ! போ! என்கிறது; கிழவன் சரியான சிறுகுட்டி வேண்டுமென்று அலைகிறானே. காலம் கலிகால மல்லவா என்று கேலி செய்வார்கள் . மாரியப்ப பிள்ளையோ பணக்காரர். எனவே அந்த ரமணி, ராதா, சமூகத்தில் வளர்த்துவிடப்பட்ட பழக்கத்துக்குத் தனது அழகையும் இளமையையும் பலி கொடுக்கப் போகிறாள். இவ்விதம் அழிந்த அழகுகள்' எவ்வளவு! தேய்ந்த இளமை எத்துணை? அந்தோ ! அறிவற்ற மணங்கள், எத்தனை நடக்கின்றன.
ராதாவுக்குப் பிசாசு பிடித்துக் கொண்டது என்று அவளின் பெற்றோர் எண்ணினார்கள். அவளுக்கா பிசாசு பிடித்தது? அல்ல! அல்ல! மாரியப்ப பிள்ளை பிடித்துக் கொள்ளப் போகிறாரே என்ற பயம் பிடித்துக் கொண்டது. பாவை அதனாலேயே பாகாய் உருகினாள். அதைத்தவிர வேறு என்ன செய்ய முடியும்? அவள் புரட்சிப் பெண்ணல்ல; புத்துலக மங்கையல்ல!
மாரி கோயிலுக்கு மாட்டு வண்டி வந்து சேர்ந்தது. அம்மன் தரிசனமாயிற்று. அந்தப் பூசாரி, ஏதோ மந்திரம் செய்தான். மடித்துக் கொடுத்தான் மாரி பிரசாதத்தை வாரத்திற்-கொருமுறை முழுக்கு, ஒரு வேளை உணவு, ஒரு நாளைக்கு ஒன்பது முறை அரசமரம் சுற்றுவது, என்று ஏதேதோ நிபந்தனை' போட்டான். கோயிலில் விற்ற சோற்றைத் தின்றார்கள். மிச்சம் கொஞ்சம் இருந்தது. 'பாபம்! வண்டிக்கார பிள்ளையாண்டா-னுக்குப் போட லாமா' என்றாள் வேதவல்லி. ஆமாம், பாபம்" என்றாள் ராதா.
ஒவ்வொரு உருண்டையாக உருட்டி வண்டியோட்டும் பிள்ளையாண்டான் கையிலே, ராதா கொடுத்தாள். அந் நேரத்திலே அவள் தந்தை வெகு சுவாரசியமாகப் பூசாரி யுடன் பேசிக் கொண்டிருந்ததால், அதுவும் நடக்க முடிந்தது. அவர் மட்டும் அதைப் பார்த்திருந்தால், ஒரு முறைப்பு; ஒரே கனைப்பு; உடனே ராதா நடுநடுங்கிப் போயிருப்பாள்.
ராதா, வண்டியோட்டிக்குச் சோறு போட்டதாக அவன் கருதவில்லை . அமிருதம் கொடுத்தாள் என்றே கருதினான். அந்த மங்கையின் கையால் கிடைத்த உணவு, அவனுக்கு அவ்வளவு இன்பமாக இருந்தது. அவளும் அவனுக்கு வெறும் சாதத்தைப் போடவில்லை. ஒவ்வொரு பிடியிலும், தனது காதல் ரசத்தைக் கலந்து பிசைந்து தந்தாள். இவரைப் போன்றன்றோ என் புருடன் இருக்கவேண்டும் என்று எண்ணினாள். அந்த எண்ணம் திடீரெனத் தோன்றியதால் துணிவும் ஏற்பட்டது அந்தத் தையலுக்கு . எனவே அவனுக்கு சாதம் போட்டுக்கொண்டே புன்சிரிப்பாக அவனைப் பார்த்துச் சிரித்தாள். பூந்தோட்டத்தின் வாடை போல அந்தப் புன்சிரிப்பு பரவிற்று. வாலிபன் நாடி அத்தனையிலும் அது புகுந்தது. இந்தக் காதல் காட்சியைக் கடைக்கண்ணால் கண்டாள் வேதவல்லி ; பெருமூச்சுவிட்டாள்.
மாரி பிரசாதம் பெற்றாள் ராதா ! இனி நோய் நீங்கு மென வீராசாமிப் பிள்ளை எண்ணினார். ராதா முன்போல் முகத்தைச் சுளித்துக் கொள்ளாமல், சற்றுச் சிரித்த முகமாக இருப்பதைக் கண்டு, வீராசாமிப் பிள்ளை தம் மனைவி வேத வல்லியை அருகே அழைத்து, "வேதம்! பார்த்தாயா பெண்ணை ! பூசாரி போட்ட மந்திரம் வேலை செய்கிறது. முகத்திலே தெளிவு வந்துவிட்டது பார்" என்று கூறினார். வேதவல்லிக்குத் தெரியும், ராதாவின் களிப்புக்கு காரணம். பூசாரியுமல்ல, அவன் மந்திரமுமல்ல; ஆனால் புதிதாகத் தோன்றிய பரந்தாமனும், அவன் ஊட்டிய காதலும், பெண்ணின் உள்ளத்திலே ஆனந்தத்தைக் கிளப்பிவிட்ட தென்பது.
மறுபடி அவர்கள், அதே வண்டியிலேறி ரயிலடிக்கு வந்தனர். வண்டியோட்டியிடம் கூறிவிட்டு, ரயிலேறும் சமயம், வேதவல்லி, பரந்தாமனைப் பார்த்து, 'ஏன் தம்பி, எங்க ஊருக்கு வாயேன் ஒரு தடவை" என்று அழைத்தாள். ராதா வாயால் அழைக்கவில்லை. கண்ணால் கூப்பிட்டாள். வேதவல்லி வாயால் கூப்பிட்டது, பரந்தாமன் செவியில் புகவில்லை. ராதாவின் கண்மொழி, அவனுடைய நரம்பு அத்தனையிலும் புகுந்து குடைந்தது. 'மாடாவது, வண்டி யாவது, மாரிக்குப்பமாவது, பேசாமல் ராதாவைப் பின் தொடர்ந்து போகவேண்டியது தான் என்று நினைத்தான்! "எனைக்கணம் பிரிய மனம் வந்ததோ? நீ எங்குச் சென்றாலும் உன்னை விடுவேனா, ராதே' என்ற பாட்டை எண்ணினான்.
மணி அடித்துவிட்டார்கள் ! வீராசாமிப் பிள்ளை களைத்துவிட்டார். வேதவல்லி உட்கார்ந்தாகிவிட்டது. ராதாவின் கண்கள், பந்தாமனை விட்டு அகலவில்லை. பரந்தாமன், பதுமைபோல் நின்றான்.
வண்டி அசைந்தது. ராதாவின் தலையும் கொஞ்சம் அசைந்தது. அவளுடைய செந்நிற அதரங்கள் சற்று அசைந்தன. அலங்காரப் பற்கள் சற்று வெளிவந்தன. அவளையும் அறியாமல் புருவம் வளைந்தது கண் பார்வையிலே, ஒருவிதமான புது ஒளி காணப்பட்டது. வண்டி சற்று ஓட ஆரம்பித்தது. பரந்தாமனின் கண்களில் நீர் ததும்பிற்று. வண்டி ரயிலடியைவிட்டுச் சென்றுவிட்டது. பரந்தாமன் கன்னத்தில் இரு துளி கண்ணீர் புரண்டு வந்தது. நேரே, வண்டிக்குச் சென்றான். வைக்கோல் மெத்தை மீது படுத்தான். புரண்டான். ராதாவை நான் ஏன் கண்டேன்? கலங்குவது ஏன்? என்று மனதைத் தேற்றினான்.
ராதா, நீ ஏன் அவ்வளவு அழகாக இருக்கிறாய்? என் கண்களை ஏன் கவர்ந்துவிட்டாய் அழகி! என் மனதைக் கொள்ளை கொண்டாயே, என்னைப் பார்த்ததோடு விட் டாயா? எனக்கு அமிர்தம் அளித்தாயே . ரயில் புறப்படும் போது என்னைக் கண்டு சிரித்தாயே. போய்வருகிறேன் என்று தலையை அசைத்து ஜாடை செய்தாயே. நீ யார்? ஏன் இங்கு வந்தாய் ? வண்டியோட்டும் எனக்கு ஏன் நீ . எதை எதையோ எண்ணும்படிச் செய்துவிட்டாய். ராதா! உன்னை நான் அடையத்தான் முடியுமா? எண்ணத்தான் படுமோ? என்று எண்ணினான். இரண்டு நாட்கள் பரந் தாமனுக்கு வேறு கவனமே இருப்பதில்லை. எங்கும் ராதா! எல்லாம் ராதா! எந்தச் சமயத்திலும் ராதாவின் நினைப்பு தான்! இளைஞன படாதபாடுபட்டான். பஞ்சில் நெருப் பென காதல் மனதில் புகுந்து அவனை வாட்ட ஆரம்பித்து விட்டது. அதிலும் கைகூடும் காதலா? வண்டியோட்டும் பரந்தாமன் அழகாபுரி முதலாளி மாரியப்பபிள்ளைக்கு வாழ்க்கைப்பட இருக்கும் ராதாவை அடைய முடியுமா?
அழகாபுரி வந்து சேர்ந்த அழகிக்கு, பரந்தாமன் நினைப்புதான்! பரந்தாடினின் வாட்டம் ராதாவுக்கு வர மற் போகவில்லை. ராதாவின் கவலை பரந்தாமனைவிட அதிகம். பரந்தாமனுக்கேனும் ராதா கிடைக்கவில்லையே இன்பம் வராதே - என்ற கவலை மட்டுமேயுண்டு. ராதாவுக்கு இரு கவலை. பரந்தாமனைப் பெறமுடியாதே; இன்டர் வாழ்வு இல்லையே என்பது ஒன்று. மற்றொன்று மாரியப்ப பிள்ளையை மணக்க வேண்டுமே - துன்பத்துக்கு அடிமைப்பட வேண்டுமேயென்பது. எனவே ராதாவின் சோகம்' குறைய வில்லை ; அதிகரித்தது.
மாரியப்ப பிள்ளைக்கு ஆத்திரம் அதிகமாகிவிட்டது. 'ஆச்சு! ஆவணி பிறக்கப் போகிறது. இந்தப் பெண், சோகம், சோகம்' என்று படுத்தபடி இருக்கிறாள். இவள் சோகம் எப்போது போவது? என் மோகம் எப்போது தணிவது?' என்று கோபித்துக் கொண்டார்.
அழகான பெண்ணாக இருக்கிறாளே என்று பார்த்தால் இப்படி 'சீக்' பேர்வழியாக இருக்கிறாள். உடல் கட்டை மட்டும் கவனித்தால், உருட்டி எடுத்த கிழங்குகள் போல் இருக்கின்றன' என்று கவலைப்பட்டான். ராதாவுக்கு வைத்தியத்தின் மேல் வைத்தியம். ஒரு மந்திரவாதி உபயோக மில்லை என்று தெரிந்ததும், மற்றொரு மந்திரவாதி என்று சிகிச்சை நடந்துவந்தது. ஆனால் அவளுடைய மனநோய் மாறினால் தானே சுகப்படும்.
வீராசாமிப் பிள்ளைக்கு விசாரம்! வேதவல்லிக்கு விஷயம் வெளியே சொல்ல முடியாது. ஒரு நாள் மெதுவாக ராதாவிடம் மாரியப்ப பிள்ளையை மணந்து கொண்டால் படிப்படியாக நோய் குறைந்துவிடும் என்று கூறினாள். "யார் நோய் குறையுமம்மா? அப்பாவிக்குள்ள பணநோய் குறையும். அந்தக் கிழவனுக்கு ஆத்திரம் குறையும்" என்று அலறிச் சொன்னாள் ராதா. பிறகு அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. தனக்கு எங்கிருந்து இவ்வளவு தைரியம் வந்தது என்று. நோய் தானாகப்போகும். கலியாணத்துக்கு நாள் குறிப்பிடவேண்டியதுதான் என்று மாரியப்ப பிள்ளை கூறி விட்டார். நாள் வைத்துவிட்டார்கள். கலியாண நோட்டீசுகள் அடிக்கப்பட்டு, உறவினருக்கும், தெரிந்தவர்களுக்கும் அனுப்பப்பட்டன. இரண்டே நாட்கள் தான் இருக்கின்றன கலியாணத்துக்கு. அந்த நேரத்தில் தான் மாரியப்ப பிள்ளைக்கு, தனது பேரனுக்கு அழைப்பு அனுப்புவதா வேண் டாமா என்ற யோசனை வந்தது. ஆகவே, தமது காரியஸ்தர் கருப்பையாவை அழைத்துக் கேட்டார்.
"ஏ! கருப்பையா! அந்தப் பயலுக்குக் கலியாணப் பத்திரிகை அனுப்பலாமா, வேண்டாமா?"
"யாருக்கு எஜமான்?" என்றான் கருப்பையா.
"அதாண்டா அந்த தறுதலை, பரந்தாமனுக்கு" என்றார் மாரியப்ப பிள்ளை.
"ஒண்ணு அனுப்பித்தான் வைக்கிறது! வரட்டுமே" என்று யோசனை சொன்னான் காரியஸ்தன்.
இந்தச் சம்பாஷணைகளைக் கேட்டுக் கொண்டிருந்த வீராசாமிப் பிள்ளை, மேற்கொண்டு விசாரிக்கலானார். அப்போது சொன்னார், மாரியப்ப பிள்ளை தனது பூர்வோத் திரத்தை.
"எனக்கு 15 வயதிலேயே கலியாணம் ஆகிவிட்டது. மறு வருஷமே ஒரு பெண் பிறந்தது. ஐந்து ஆறு வருஷத்துக் கெல்லாம் என் முதல் தாரம் என்னிடம் சண்டை போட்டு விட்டு குழந்தையுடன் தாய்வீடு போனாள். நான் வேறே கலியாணம் செய்து கொண்டேன். என் பெண் பெரியவளானாள். அவளுக்கு 12 வயதிலேயே கலியாணம் ஆயிற்று. நான் அதற்குப் போகவேயில்லை. அவர்களும் அழைக்கவில்லை. அந்தப் பெண் மறுவருஷமே ஒரு பிள்ளையைப் பெற்று ஜன்னிகண்டு செத்தாள். கோர்ட்டில் ஜீவனாம்சம் போட்டார்கள். அவர்களால் வழக்காட முடியுமா? என்னிடம் நடக்குமா? ஏதோ கொஞ்சம் பணம் கொடுத்து விடுதலைப் பத்திரம் எழுத வாங்கிவிட்டேன். இப்போது அவன், அந்த ஊரிலே ஏதோ கடைவைத்துக் கொண்டிருக்கிறான் என்று கேள்வி" என்று கூறிவிட்டு மாரியப்ப பிள்ளை, "கருப்பையா ! பையனுக்கு இப்போ என்ன வயதிருக்கும்" என்று கேட்டார் ஏறக்குறைய 20ஆவது இருக்கும்" என்று வீராசாமிப் பிள்ளை பதில் கூறினார். "உனக்கெப்படி தெரியும்?" என்றார் மாரியப்ப பிள்ளை . "அந்தப் பிள்ளை யாண்டான் மாரிக் குப்பத்துக்கு நாங்கள் போனபோது வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தான்" என்றார், வீராசாமிப் பிள்ளை. பிறகு வேறு விஷயங்களைப் பேசிவிட்டு, வீராசாமிப்பிள்ளை வீடு வந்தார். வேதவல்லியைத் தனியே அழைத்து விஷயத்தைச் சொன்னார் . ராதா காதில் விழுந்தால் அவள் ஒரே பிடிவாதம் செய்வாள். கல்யாணத்துக்கு ஒப்பவே மாட்டாள். சொல்ல வேண்டாம். என்று வேதவல்லி யோசனை கூறினாள். எனவே ராதாவுக்குத் தான் மணக்கப் போவது தன் காதலனின் தாத்தா என்பது தெரியாது. விசாரத்துடன் மாரிகுப்பத்துக்கும் ரயில்வே ஸ்டேஷனுக்கும் இடையே வண்டியோட்டிக் கொண்டு வாழ்ந்து வந்த பரந்தாமனுக்கும் தெரியாது. தன் காதலியே தனக்குப் பாட்டி ஆனாள் என்பது தெரிந்தால் அவன் மனம் என்ன பாடுபடும் !
"என்னடா பரந்தாமா! ரொம்ப குஷியாக இருக்கிறாய்? சம்பாத்தியம் ரொம்ப ஜாஸ்தியா?" என்று மற்ற வண்டிக்காரர்கள் பரந்தாமனைக் கேட்டனர்.
"நான் அழகாபுரிக்குப் போகப் போகிறேன். அங்கே ஒரு கலியாணம். டேய், யாரும் சிரிக்கக் கூடாது. எங்க தாத்தாவுக்குக் கலியாணம் . கார்டு வந்தது வரச் சொல்லி"
என்றான் பரந்தாமன்.
"பலே! பேஷ்! சரியான பேச்சு பேசினானப்பா பரந்தாமன்! தாத்தாவுக்குக் கலியாணமாம். பேரன் போகிறானாம்!" என்று சொல்லிச் சிரித்துக் கேலி செய்தார்கள்.
பரந்தாமனும் கூடவே சிரித்தான். அவனுக்கு உள்ளபடி மாரியப்ப பிள்ளைக்கு அறுபதாம் கலியாணம் நடக்க வேண்டி இருக்க, நிஜமான கலியாணமே செய்து கொள்ளப் போவதாகவும், அதற்கு வரும்படியும், காரியஸ்தன் கருப்பையா கார்டு போட்டதைக் கண்டதிலிருந்து சிரிப்புதான்! அழகாபுரியிலேதானே அந்த ராதா இருக்கிறாள். கலியாண சாக்கிலே, அவளைக் காணலாமே என்று எண்ணித்தான், தன் தாத்தா கலியாணத்துக்குப் போக முடிவு செய்தான்.
விஷயத்தைச் சொன்னாலே, எல்லோரும் சிரிக்கிறார்கள்! எவ்வளவோ சொன்னான். விழுந்து விழுந்து சிரித்தார்களே தவிர, ஒருவர்கூட நம்பவில்லை . கடைசியில், மடியில் வைத்திருந்த கார்டை எடுத்து வேறு ஆளிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னான். பிறகுதான் பரந்தாமன் சொல்வது உண்மை எனத் தெரிந்தது. உடனே சிரிப்பு போய்விட்டது. ஒவ்வொருவரும், கண்டபடி பேசலாயினர். "என்ன கிறுக்குடா கிழவனுக்கு? கல்லுப் புள்ளையார் போலப் பேரன் இருக்கச்சே மூணாம் தாரம் செய்கிறானாமே" என்று ஒரு வனும், 'இதாண்டாப்பா கலிகாலம்' என்று மற்றொருவனும், "சே! என்னா இருந்தாலும் இந்த மாதிரி அநியாயம் கூடாது" என்று பிறிதொருவரும் கூறி, எல்லோரு மாக, 'நீ போகதேடா, அந்தக் கலியாணத்துக்கு" என்று சொன்னார்கள். "நான் போறது அந்தக் கலியாணத்துக்கு மாத்திரமில்லை; வேறு சொந்த வேலை கொஞ்சம் இருக்கிறது" என்று பரந்தாமன் சொன்னான்.
# # #
தூக்கம் தெளியாத நேரம்! முகூர்த்தம் அந்த வேளையில் தான் வைக்கப்பட்டிருந்தது! கோழி கூவிற்று. கூடவே வாத்தியம் முழங்கிற்று. ராதா ! கண்களிலே வந்த நீரை அடக்கிக் கொண்டு "கலியாண சேடிகளிடம் தலையைக் கொடுத்தாள்! அவர்கள் தைலம் பூசினார்கள் ! சீவி முடித்தார்கள் ! ரோஜாவும் மல்லியும் சூட்டினார்கள் ! புத்தாடை தந்தார்கள் ! பொன் ஆபரணம் பூட்டினார்கள்! முகத்தை அலம்பச் செய்தார்கள். பொட்டு இட்டார்கள்! புறப்படு என்றார்கள் ! மாரியப்ப பிள்ளைக்கு மாப்பிள்ளை வேடத்தைக் காரியஸ்தர் கருப்பையா செய்து முடித்தார் ! மேளம் கொட்டினார்கள், மணப்பந்தலுக்கு ராதா வந்தாள். பரந்தாமன் அங்கொரு பக்கம் உட்கார்ந்திருப்பதைக் கண்டாள். அவள் கால்கள் பின்னிக் கொண்டன. கண் மங்கிவிட்டது. சோகம் மேலிட்டது. சுருண்டு கீழே விழுந்து விட்டாள். எல்லோரும் 'என்ன, என்ன?' என்று கேட்டுக் கொண்டு ஓடினார்கள் ராதா அருகில், பரந்தாமன் உட்கார்ந்தவன் உட்கார்ந்தவன்தான். அவனால் அசையக் கூட முடியவில்லை. அவ்வளவு திகைப்பு! என் ராதா மணப் பெண்! என் காதலியா, இந்தக் கிழவனுக்கு ! பாட்டியாகிறாளே என் பாவை! இந்தக் கோலத்தையா நான் காண வேண்டும் என்று எண்ணினான்.
அவனால் ஏதும் செய்ய முடியாது தவித்தான். யாரிடம் பேசுவான்! என்ன பேசுவது! யார் இவன் பேச்சைக் கேட்பார்கள்! எப்படி இவனால் தடுக்க முடியும், மெள்ள எழுந்து ராதா படுத்திருந்த பக்கமாகச் சென்றான். வேதவல்லி கண்களைப் பிசைந்து கொண்டே, "தம்பி, போய் ஒரு விசிறி கொண்டுவா!" என்றாள். விசிறி எடுத்துக் கொண்டு வந்தான். "வீசு" என்றாள் வேதவல்லி. வீசினான். சில நிமிடங்களில் ராதா கண்களைத் திறந்தாள். வீசுவதை நிறுத்திவிட்டான். இருவர் கண்களும் சந்தித்தன. பேச வேண்டியவைகள் யாவும் தீர்ந்துவிட்டன! மெல்ல எழுந்தாள் மங்கை! தூர நின்றான் பரந்தாமன். வாத்தியங்கள் மறுபடி கோஷித்தன. புரோகிதர் கதறலானார். கருப்பையா வந்தவர்களை உபசரித்தபடி இருந்தார். 'பலமாக மேளம்' என்றனர். பக்கத்தில் அமர்ந்திருந்த பதுமை போன்ற ராதாவுக்கு, பரந்தாமனின் பாட்டன், அவன் கண் முன்பாகவே, தாலி கட்டினான். எல்லோரும் 'அட்சதை' மணமக்கள் மீது போட்டனர்!
பரந்தாமனும் போட்டான்! போடும்போது பார்த்தான் ராதாவை! அவள் கண்களில் நீர் ததும்பியபடி இருந்தது.
"புரோகிதர் போட்ட புகை கண்களைக் கலக்கி விட்டது" என்றாள் வேதவல்லி. "அல்ல, அல்ல! பாழும் சமூகக் கொடுமை, அந்தக் கோமளத்தின் கண்களைக் கலக்கி விட்டது," என்று எண்ணினான் பரந்தாமன்.
ஆம்! ராதாவை அவன் காதலித்தான். அவளும் விரும்பினாள். அவளே, அவன் பாட்டியுமானாள். என் செய்வான் ஏங்கும் இளைஞன்?
# # #
ராதாவின் சோகம், பரந்தாமனின் நெஞ்சம் பதறினது. வேதவல்லியின் வாட்டம் -- இவைகளைப்பற்றி மாரியப்ப பிள்ளைக்குக் கவலை ஏன் இருக்கப் போகிறது?
வீட்டிலுள்ள கஷ்டத்தினால் - கழுத்தில் அணியும் நகையை விற்றுவிட்டால், வாங்குகிறவர்கள், விற்றவர்களின் வாட்டத்தை எதற்காகக் கவனிக்கப் போகிறார்கள். அந்த நகையைத் தாங்கள் அணிந்து கொண்டால் அழகாக இருக்கும் என்ற எண்ணம் மட்டுந்தானே இருக்கும். அதைப்போலவே மங்கை மனவாட்டம் கொண்டாலும், தனக்கு மனைவியானவளல்லவா அதுதான் மாரியப்ப பிள்ளைக்கு வந்த எண்ணம். தம் இரண்டாம் மனைவி இறந்தபோது காரியஸ்தன் கருப்பையா தேறுதல் கூறும் போது "எல்லாம் நல்லதுக்குத்தான்; வருத்தப் படாதீர்கள்" என்று கூறினான்.
அன்றலர்ந்த ரோஜாவின் அழகு பொருந்திய ராதாவை அடையத்தான் போலும், அந்த விபத்து நேரிட்டது என்று கூட எண்ணினார் மாரியப்ப பிள்ளை, கலியாணம் முடிந்து. விருந்து முடிந்து, மாலையில் நடக்கவேண்டிய காரியங்கள் முடிந்து ஒருநாள் 'இன்பம்' பூர்த்தியாயிற்று. அன்றிரவு வேதவல்லி, விம்மி விம்மி அழும் ராதாவுக்கு, என்ன சொல்லி அடக்குவது என்று தெரியாது விழித்தாள் . பரந்தாமன் பதைபதைத்த உள்ளத்தினனாய் படுத்துப் புரண்டான்.
மறுதினம், ராதாவுக்குக் காய்ச்சல் வந்துவிட்டது. இரவு முழுதும் அழுது அழுது கண்கள் சிவந்துவிட்டன. இருமலும் சளியும், குளிரும் காய்ச்சலுமாக வந்துவிட்டது. மறுநாள் நடக்க வேண்டிய சடங்குகள் முடிந்து, உறவினர் கள் ஒவ்வொருவராக விடை பெற்றுக் கொண்டு போயினர். பரந்தாமனுக்கும் போக எண்ணந்தான். ஆனால் ராதா வுக்குக் காய்ச்சல் விட்ட பிறகு போகலாம். காய்ச்சலாக இருக்கும்போதே ஊருக்குப் போய்விட்டால், எப்படி இருக்கிறதோ, என்ன ஆயிற்றோ என்று கவலைப்படத்தானே வேண்டும் என்று எண்ணியதால், அவன் அங்கேயே தங்கி விட்டான்.
மாரியப்ப பிள்ளை மகிழ்ச்சியின் மேலிட்டால் பரந்தாமனை, "டேய் பயலே! அங்கு போய்த்தான் என்ன செய்யப் போகிறாய். இங்கேயே இருப்பதுதானே . பத்துப் பேரோடுபதினொன்றாக இரு. இங்கே கிடைக்கிற கூழோ தண்ணியோ, குடித்துவிட்டு காலத்தைத் தள்ளு. ஏதோ வயல் வேலையைப் பார்த்துக் கொள். வண்டி பூட்ட, ஓட்ட ஆள் வைத்திருக்கிறேன். அவனையும் ஒழுங்காக வேலை வாங்கு. இரு இங்கேயே" என்று கூறினார். காரியஸ்தன் கருப்பையாவும், இந்த யோசனையை ஆதரித்தான். வேதவல்லியும் இது நல்ல யோசனை என்றாள் . பரந்தாமன், "சரி, பார்ப்போம்" என்று கூறினான். அவனுக்குத் தான் காதலித்த ராதா, ஒரு கிழவனின் மனைவியாக இருப்பதைக் கண்ணாலே பார்த்துக் கொண்டிருக்க இஷ்டமில்லை. ராதாவுக்கு உடம்பு சரியாகுமட்டும் இருந்துவிட்டு, ஊர் போய்ச் சேருவது என்று முடிவு செய்தான்.
ராதாவுக்கு ஒரு நாட்டு வைத்தியர் மருந்து கொடுத்து வந்தார். ஜுரம் குறையவில்லை.
இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் ஜுரம் விட்டது. ஆனால் களைப்பும், இருமலும் அதிகமாக இருந்தது. அன்று மருந்து வாங்கிக் கொண்டு வர, பரந்தாமனையே அனுப்பினார்கள். வைத்தியர் வீட்டை விசாரித்துக்கொண்டு வந்து சேர்ந்தான். வைத்தியர், சற்று வெறியில் இருந்தார். அவர் கொஞ்சம் "தண்ணீர்" சாப்பிடும் பேர் வழி. எனவே, அவர் கிண்டலாகப் பேசினார். இது பரந்தாமனுக்குப் பிடிக்கவில்லை.
"வாய்யா, வா! என்ன, மருந்துக்கு வந்தாயா! யாருக்கு, ராதாபாய்க்குத்தானே' என்று ஆரம்பத்திலேயே கிண்டலாகப் பேசினான்.
'ஆமாம் வைத்தியரே, பாவம் கலியாணமானதும் காய்ச்சல் இப்படி வந்துவிட்டது ராதாவுக்கு" என்றான் பரந்தாமன்.
"ஏனப்பா வராது, ஏன் வராது? சொல்லு! பெண்ணோ பதுமைபோல ஜிலு ஜிலுன்னு இருக்கிறாள். பருவமோ ஜோரான பருவம். புருஷனாக வந்த ஆளோ ஒரு கிழம். இதைக் கண்ட பெண்ணுக்கு வருத்தம் இருக்காதா?" என்றான் வைத்தியன். "இதெல்லாம் நமக்கேன் வைத்தியரே. எல்லாம் ஆண்டவன் எழுதி வைத்தபடிதானே நடக்கும்" என்றான் பரந்தாமன். ஆண்டவனை ஏனப்பா இந்த வேலைக்கு அழைக்கறே. அவர் தன் வரைக்கும் சரியாகத்தான் செய்து வைத்துக் கொண்டார். பார்வதி பரமசிவன் ஜோடிக்கு என்ன குறை? லட்சுமி -விஷ்ணு இந்த ஜோடிதான் என்ன இலேசானதா? சாமிகளெல்லாம் பலே ஆசாமிகளப்பா ! அவர்கள் பேரைச் சொல்லிக் கொண்டு நாம்தான் இப்படி இருக்கிறோம்" என்று வைத்தியன் சொன்னான்.
பரந்தாமனுக்கு இந்த வேடிக்கைப் பேச்சு சிரிப்பை உண்டாக்கியது. பரந்தாமன் சிரித்ததும், வைத்தியருக்கு மேலே பேச்சு பொங்கிற்று. உள்ளேயும் "அது" பொங்கிற்று !
"கேளப்பா கேளு ! இந்த மாதிரி ஜோடி" சேர்த்தால் காரியம் ஒழுங்காக நடக்காது. என்னமோ, மாரியப்ப பிள்ளைக்குப் பணம் இருக்கிறதே என்று ஆசைப்பட்டு, அந்த வேதவல்லி இந்த மாதிரி முடிச்சுப்போட்டுவிட்டாள். பணமா பெரிசு ! நல்ல ஒய்யாரமான குட்டி ராதா . அவளை ஒரு ஒடிந்து விழுந்து போகிற கிழவனுக்குப் பெண்டாக்கினால், அந்தக் குடும்பம் எப்படியாவது? உனக்கு தெரியாது விஷயம். மாரியப்ப பிள்ளை, ஆள் ரொம்ப முடுக்காகத் தான் இருப்பாரு . ஆனால், இந்த பொம்பளை' விஷய மென்றால், நாக்கிலே தண்ணி சொட்டும், அந்த ஆளுக்கு. ரொம்ப சபலம், ரொம்ப சபலம்! எப்படியோ பார்த்து, போட்டுட்டான் சரியான பெண்ணை, தன் வலையிலே என்றான் வைத்தியன்.
பரந்தாமன் பார்த்தான் ; மேலே பேச்சு வளர ஆரம்பிக்கிறது; வைத்தியர் ரொம்ப வாயாடி என்பது தெரிந்து விட்டது. "நேரமாயிற்று. மருந்து கொடு வைத்தியரே, போகிறேன்" என்று கேட்டான். வைத்தியர், "மருந்து கொடுக்கிறேன். ஆனால் மருந்து மட்டும் வேலை செய்தா போதாது. அந்த பெண்ணுக்கு மனோவியாகூலம் இருக்கக்கூடாதே . அதுக்காக என்ன மருந்து தரமுடியும். நான் ஜுரம் தீர மருந்து தருவேன். குளிர்போக குளிகை கொடுப்பேன். காய்ச்சல் போக கஷாயம் தருவேன். ஆனால், ராதாவின் மனவியாதியைப் போக்க நான் எந்த மருந்தைக் கொடுப்பது. தம்பி, சரியான ஜோடி நீதான். ராதாவுக்கு மருந்தும் நீயே" என்றான் வைத்தியன்.
தன் ராதாவைப் பற்றி இவ்வளவு கிண்டலாக ஒரு வைத்தியன் பேசுவதா? அதிலும் தன் எதிரிலே பேசுவதா என்று கோபம் வந்துவிட்டது பரந்தாமனுக்கு. ஓங்கி அறைந்தான் வைத்தியனை.
"படவா! மருந்து கேட்க வந்தால் வம்புந்தும்புமா பேசுகிறாய். யார் என்று என்னை நினைத்தாய்" என்று திட்டினான்.
வைத்தியன், வெறி தெளிந்து "அடே தம்பி! நான் வேடிக்கை பேசினேன். கோபிக்காதே. இந்தா மருந்து" என்று சொல்லிவிட்டு மருந்து கொடுக்கச் சென்றான்.
வைத்தியனை கோபத்திலே பரந்தாமன் அடித்து விட்டானே தவிர, அவனுக்கு நன்றாகத் தெரியும், வைத்தியன் சொன்னதிலே துளிகூட தவறு இல்லை என்று. ராதாவின் நோய் மனவியாதிதான் என்பதிலே சந்தேகமில்லை. அது அவனுக்கும் தெரிந்ததுதான். பிறர் சொல்லும்போது தான் கோபம் வருகிறது. அதிலும் ராதாவைக் கிண்டல் செய்வதுபோலக் காணப்படவேதான் கோபம் மிக அதிகமாகிவிட்டது. ஆழ்ந்து யோசிக்கும்போது, அந்த வைத்தியார் மட்டுமல்ல, ஊரில் யாரும் அப்படித்தானே பேசுவார்கள். நேரில் பேச பயந்து கொண்டு இருந்துவிட்டாலும் மறைவில் பேசும்போது இதைப்பற்றிக் கேலியாகவும், கிண்டலாகவுந்தானே பேசுவார்கள் என்று எண்ணிய பரந்தாமன், "ஆ! இந்த அழகி ராதாவுக்கு இப்படிப்பட்ட கதி வந்ததே! ஊர் முழுவதும் இனி இவளைப் பற்றித்தானே பேசுவார்கள். என்னிடம் வைத்தியன் கிண்டலாகப் பேசியதே எனக்குக் கஷ்டமாக இருந்ததே. ராதாவின் காதில், இப்படிப்பட்ட கேலி வார்த்தைகள் விழுந்தால், மனம், என்ன பாடுபடுமோ! பாவம் எங்கெங்கு இதே வேளையில் கிழவனை மணந்தாள் என்று கேலி செய்யப்படுகிறதோ, எத்தனை கணவன்மார்கள், தமது மனைவியிடம் "நான் என்ன மாரியப்ப பிள்ளையா?" என்று கிண்டலாகப் பேசுகிறார்களோ ! எத்தனை உணர்ச்சியுள்ள பெண்கள், "நான் குளத்தில் குட்டையில், விழுந்தாலும் விழுவேன்; இப்படிப்பட்ட கிழவனைக் கலியாணம் செய்து கொள்ள மாட்டேன்" என்று பேசுகின்றனரோ? சேச்சே! எவ்வளவு கேலி பிறக்கும்; கிண்டல் நடக்கும். இவ்வளவையும் என் பஞ்சவர்ணக்கிளி, எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும். நான் அவள் கருத்தைப் போக்க என்ன செய்ய முடியும். எனக்கோ அவள் பாட்டி!" என்று எண்ணிப் பரந்தாமன் வாட்டத்துடன் வீடு வந்து, வேதவல்லியிடம் மருந்தைக் கொடுத்தான்.
"தம்பி! நீயே இந்த வேளை, உன் கையாலேயே மருந்தைக் கொடு. நீ கொடுக்கிற வேளையாவது, அவளுக்கு உடம்பு குணமாகட்டும்" என்று கூற மருந்து கொடுக்க பரந்தாமன், ராதா படுத்துக் கொண்டிருந்த அறைக்குச் சென்றான்.
நல்ல அழகான பட்டு மெத்தை ! அதன் மீது ராதா ஒருபுறமாகச் சாய்ந்து கொண்டு படுத்திருந்தாள். அவள் படுத்துக் கொண்டிருந்த பக்கமாக, தலையணை, சிறிதளவு நனைந்து கிடந்தது, கண்ணீரால் ! "ராதா ! கண்ணே ! இதோ இப்படித் திரும்பு . இதோ பார் ! பரந்தாமன் மருந்து எடுத்து வந்திருக்கிறார்" என்று வேதவல்லி கூறிக் கொண்டே, ராதாவை எழுப்பினாள்.
ராதா, தாயின் குரலைக் கேட்டுத் திரும்பினாள். கண்களைத் திறந்தாள் ; பரந்தாமன், மருந்துடன் எதிரில் நிற்பதைக் கண்டாள். அந்த ஒரு விநாடிப் பார்வை, ராதாவின் உள்ளத்தில் புரண்டு கொண்டிருந்த கருத்துக்கள் அத்தனையையும் காட்டி விட்டது. கைநடுக்கத்துடன் மருந்துக் கோப்பையைப் பிடித்துக்கொண்டு பரந்தாமன் நின்றான். "வேதம் ! வேதம்" என்று வெளியே வேதவல்லியின் புருஷர் கூப்பிடும் சத்தம் கேட்டது. வேதவல்லி, "இதோ வந்தேன்" என்று கூறிக் கொண்டே வெளியே போனாள். காதல் நோயால் கட்டில் மீது படுத்துள்ள மங்கையும், அவளைக் காதலித்துக் கிடைக்கப் பெறாது வாடிய பரந்தாமன், கையில் மருந்துடனும் இருவருமே அங்கு இருந்தனர்.
அந்த அறை ஒரு தனி உலகம்.
அங்கு இன்பத்திற்குத் தடை இல்லை! கட்டு இல்லை! காவல் இல்லை! பெண்டு கொண்டேன் என அதிகாரம் செலுத்த மாரியப்ப பிள்ளை இல்லை. 'மகளே, என்ன வேலை செய்கிறாய்' என்று மிரட்ட வேதவல்லி இல்லை ; கனைத்து மிரட்ட ராதாவின் தகப்பன் இல்லை.
காவலற்ற, கட்டற்ற உலகம் ! காதலர் இருவர் மட் டுமே இருந்த உலகம்.
"மருந்தைக் குடி, ராதா" என்றான் பரந்தாமன்.
ராதா வாயைக் கொஞ்சமாகத் திறந்தாள். மருந்து நெடியினால் முகத்தைச் சுளித்தாள். கட்டில் ஓரத்தில் உட்கார்ந்தான் பரந்தாமன். "ராதா, திற வாயை, இதோ மருந்து குடித்துவிடு" என்று மருந்தை ஊற்றிவிட்டு வாயைத் துடைத்தான். அந்தத் 'தீண்டுதல்' ராதா அதுவரை கண்டறியாத இன்பத்தை அவளுக்குத் தந்தது. முகத்திலே ஒருவித ஜொலிப்பு, கண்டு கொண்டான் பரந்தாமன். குனிந்து, அவளுடைய கொஞ்சும் உதடுகளில் ஒரு முத்தம் கொடுத்தான்.
"ஆ ! என்ன வேலை செய்தாயடி கள்ளி! என்ன வேலையடா செய்தாய் மடையா" என்று கர்ஜித்தார், மாரியப்ப பிள்ளை வாயிற்படியில் நின்று கொண்டு.
"மடையா!" என்ற சொல் காதில் விழுந்த உடனே, பரந்தாமன், காதல் உலகை விட்டுச் சரேலெனக் கிளம்பி, சாதாரண உலகுக்கு வந்தான். மணமான ராதாவை, கணவன் காணும்படி, முத்தமிட்டதும், பேரன் செய்த செயலைப் பாட்டன் கண்டதும் அவள் நினைவுக்கு வந்தது. அவனோ, ராதாவோ, மேற்கொண்டு எண்ணவோ, எழவோ நேரமில்லை! 'மடையா!' என்று கர்ஜித்துக் கொண்டே மாரியப்ப பிள்ளை, எருது கோபத்தில் பாய்வதுபோல, பரந்தாமனின் மீது பாய்ந்தார். அவன் கழுத்தைப் பிடித்தார். அவன் கண்கள் சிவந்தன. மீசை துடித்தது. கைகால்கள் வெடவெடத்தன.
மாரியப்பப் பிள்ளையின் பிடியினால், பரந்தாமனின் கண்கள் பிதுங்கி வெளி வந்து விடுவது போலாகிவிட்டது. பரபரவெனப் பரந்தாமனை இழுத்து எறிந்தார். மாரியப்ப பிள்ளையின் கரத்துக்குப் பரந்தாமன் எம்மாத்திரம்! அடியறுத்த மரம் போல, சுருண்டு சுவரில் மோதிக் கொண்டான் பரந்தாமன். குபீரென மண்டையிலிருந்து ரத்தம் பெருகிற்று. ஐயோ! என்று ஈனக்குரலில் அலறினாள் ராதா! 'என்ன! என்ன!' என்று பரபரப்புடன் கேட்டுக்கொண்டே வேதவல்லியும், அவள் புருஷனும், கருப்பையாவும் வந்தனர்.
பரந்தாமன், இரத்தம் ஒழுக நிற்பதையும், ராதா கண்ணீர் பெருக நடுங்குவதையும், கோபத்தின் உருவமென, பிள்ளை உருமிக் கொண்டிருப்பதையும், கண்டவுடன் வந்தவர்களுக்கு விஷயம் ஒருவாறு விளங்கிற்று.
"நடடா, நட! உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் பாதகா! நட! இங்கு நிற்காதே" என்று மாரியப்ப பிள்ளை கூறிக்கொண்டே பரந்தாமனின் தலைமயிரைப் பிடித்து இழுத்து அறையைவிட்டு வெளியே கொண்டு வந்தார்.
"எஜமானருக்குத்தான் சொல்கிறேன். இவ்வளவு உரக்கக் கூவாதீர்கள். அண்டை அயலார் காதில் கேட்கப் போகிறது" என்று கருப்பையா கூறினான்.
"கேட்பதென்ன, செய்வதென்ன, என் போறாத வேளை ஒரு வெட்கங்கெட்ட சிறுக்கியைத் தேடிப் பிடித் துக் கட்டிக் கொண்டேன். என் சோறு தின்றுவிட்டு சோரம் செய்கிறாள், இந்தக் கள்ளி. இன்று இருவரும் கொலை! ஆமாம் ! விடமாட்டேன்! எடுத்துவா, அரிவாளை! இரண்டு துண்டாக இந்தப் பயலையும் துண்டு துண்டாக அந்தக் கள்ளியையும் வெட்டிப் போடுகிறேன். விடு, கருப்பையா! கையை விடு. டே கிழ ராஸ்கல்! நல்ல பெண்டுடா! என் எதிரே யாரும் நிற்க வேண்டாம் ! யார் நின்றாலும் உதை, குத்து, வெட்டு, கொலை! ஆமாம் ! விடமாட்டேன்" என்று மாரியப்ப பிள்ளை, இடி முழக்கம் போலக் கத்தினார். அவர் ஆயுளில், அதைப்போல, அவர் கத்தியதில்லை.
காரியஸ்தன் கருப்பையா விடவில்லை. அவர் கரங்களை, "எஜமான்! எஜமான் ! சற்று என் பேச்சைக் கேளுங்கள். ஊர், நாடு தெரிந்தால் நமக்குத்தானே இழிவு. டே, பரந்தாமா போய்விடுடா வெளியே! வேதம்மா! நீங்களும் போங்கோ" என்று மிகச் சாமர்த்தியமாகக் கூறிக்கொண்டே துடித்துக் கொண்டு கொலைக்கும் தயாராக நின்று கொண்டிருந்த மாரியப்ப பிள்ளையை, மெதுவாகத் தோட்டத் துக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.
மாரியப்ப பிள்ளை போன உடனே, வேதத்தின் புருஷர், பரந்தாமனை, நையப் புடைத்து. "பாவி! ஒரு குடும்பத்தின் வாயிலே மண் போட்டாயே" என்று அழுதான்.
"புறப்பட்டி! போக்கிரிச் சிறுக்கி. போதும் உன்னாலே எனக்கு வந்த பவிசு" என்று ராதாவை கட்டிலிலிருந்து பிடித்து இழுத்து மூவருமாகத் தமது வீடு போய்ச் சேர்ந்தனர்.
பரந்தாமன், இன்னது செய்வதென்று தோன்றாது ஊர்க் கோடியில் இருந்த பாழடைந்த மண்டபத்தில் புகுந்து கொண்டான். அன்றிரவு ஊரில் லேசாக வதந்தி பரவிற்று ! "ராதா வீட்டாருக்கும், அவள் கணவனுக்கும், பெருத்த தகறாராம் ! ராதாவைக் கணவன் வீட்டைவிட்டு துரத்திவிட்டார்களாம்" என்று பேசிக் கொண்டனர்.
வீடு சென்ற ராதா, நடந்த காட்சிகளால், நாடி தளர்ந்து, சோர்ந்து படுத்து விட்டாள். ஜுரம் அதிகரித்து விட்டது. மருந்து கிடையாது. பக்கத்தில் உதவிக்கு யாரும் கிடையாது. அவள் பக்கம் போனால் உன் பற்கள் உதிர்ந்து விடும்; இடுப்பு நொறுங்கிவிடும்" என்று வேதத்துக்கு அவள் கணவன் உத்தரவு.
எனவே தாலி கட்டிய புருஷன் தோட்டத்தில் தவிக்க, காதலித்த கட்டழகன் மண்டை உடைப்பட்டு, பாழ்மண்ட பத்தில் பதுங்கிக் கிடக்க பாவை ராதா படுக்கையில் ஸ்மரணையற்றுக் கிடந்தாள்.
இரவு 12 மணிக்குமேல், மெள்ள மெள்ள, நாலைந்து பேர், பரந்தாமன் படுத்திருந்த மண்டபத்தில் வந்து பதுங்கினர். சந்தேகத்தைக் கொடுத்தது. வந்தவர்களிலே ஒருவன், மெதுவாக, பரந்தாமன் அருகே வந்து தீக்குச்சியைக் கொளுத்தி முகத்தைப் பார்த்தான். பரந்தாமன் கண்களை இறுக மூடிக் கொண்டிருந்தான்.
"எதுவோ, பரதேசி கட்டை போலிருக்கு" என்று சோதித்த பேர்வழி, மற்றவர்களுக்குக் கூற வந்தவர்கள் மூலையில் உட்கார்ந்து கொண்டு கஞ்சா பிடித்துக் கொண்டிருந்தனர். அந்த நெடி தாங்கமாட்டாது பரந்தாமன் இருமினான். வந்தவர்கள் குசுகுசுவெனப் பேசினர்.
அதே நேரத்தில், 'டார்ச் லைட்' தெரிந்தது. "ஆ! மோசம் போனோமடா முத்தா. சின்ன மூட்டையை மடியிலே வைத்துக் கொள். பெரிசை அந்தப் பயல் பக்கத்திலே போட்டுடு, புறப்படு, பின் பக்கமாக," என்று கூறிக்கொண்டே ஒருவன், மற்றவர்களை அழைத்துக் கொண்டு, இடிந்திருந்த சுவரை ஏறிக்குதித்து ஓடினான். பரந்தாமன் பாடு, பெருத்த பயமாகிவிட்டது. ஓடினவர்கள், கள்ளர்கள் என்பதும், சற்று தொலைவிலே டார்ச் லைட் தெரிவதும், போலீசாரின் ஊதுகுழல் சத்தம் கேட்டதும், புலியிடமிருந்து தப்பி பூதத்திடம் சிக்கி விட்டோம்' என்று பயந்து என்ன செய்வதெனத் தெரியாது திகைத்தான். கள்ளர்களோ ஒரு மூட்டையைத் தன் பக்கத்திலே போட்டு விட்டுப் போயினர். அது என்ன என்றுகூட பார்க்க நேர மில்லை. டார்ச் லைட் வரவர கிட்டே நெருங்கிக் கொண்டே வரவே வேறு மார்க்கமின்றி திருடர்கள், சுவரேறிக் குதித்ததைப் போலவே தானும் குதித்து ஓடினான். கள்ளர்கள் தனக்கு முன்னால் ஓடுவதைக் கண்டான். அவர்கள் செல்லும் பாதை வழியே சென்றான். அது ஒரு அடர்ந்த சவுக்கு மரத்தோப்பிலே போய் முடிந்தது. கள்ளர்கள் எப்படியோ புகுந்து போய்விட்டனர். பரந்தாமன் சவுக்குத் தோப்பில் சிக்கிக் கொண்டு விழித்தான். அதுவரையில் போலீசாரிடம் சிக்காது தப்பினதே போதுமென்று திருப்தி கொண்டான். தன் நிலைமையைப் பற்றிச் சிறிதளவு எண்ணினான். அவனையும் அறியாமல் அவனுக்குச் சிரிப்பு வந்தது.
"என் பாட்டிக்கு ஜுரம். நான் அவளுக்கு மருந்து கொடுப்பதை விட்டு முத்தம் கொடுப்பது, பாட்டன் என் மண்டையை உடைப்பது, அவருக்குப் பயந்து, பாழும் மண்டபத்துக்கு வந்தால் கள்ளர்கள் சேருவது, அவர்கள் கிடக்கட்டும் என்று இருந்தால் போலீசார் துரத்துவது, அதனைக் கண்டு அலறி ஓடிவந்தால் சவுக்குத் தோப்பில் சிக்கிக் கொள்வது, நரி ஊளையிடுவதைக் கேட்பது, நல்ல பிழைப்பு என் பிழைப்பு!" என்று எண்ணினான். சவுக்கு மரத்திலிருந்து ஒரு சிறு கிளையை எடுத்துத் தயாராக வைத்துக் கொண்டான் கையில் . ஏனெனில், தூரத்தில் நரிகள் ஊளையிடுவது கேட்டது. அவைகள் வந்துவிட்டால் என்ன செய்வது என்றுதான். சவுக்கு மலார் வைத்துக் கொண்டு உட்கார்ந்தபடி இருந்தான். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அவன் கண்களை தானாக மூடிக் கொண்டன. அவன் தூங்கி விட்டான் அலுத்து.
அதே நேரத்தில் கணவனுக்குத் தெரியாமல், வேதவல்லி மெதுவாக எழுந்து ராதா படுத்திருந்த அறைக்குச் சென்றாள். ராதாவின் நெற்றியிலும், கழுத்திலும் வியர்வை முத்து முத்தாகச் சொட்டிக் கொண்டிருந்தது. ஜாக்கெட் பூராவும் வியர்வையில் நனைந்துவிட்டது. ஜுரம் அடித்த வேகம் குறைந்து வியர்வை பொழிய ஆரம்பித்திருப்பதைக் கண்ட வேதம், தன் மகளின் பரிதாபத்தை எண்ணி, கண்ணீர் பெருகிக் கொண்டே தன் முந்தானையால் ராதாவின் முகத்தையும், கழுத்தையும் துடைத்தாள். ராதா கண்களைத் திறந்தாள். பேச நாவெடுத்தாள் ; முடியவில்லை. நெஞ்சு உலர்ந்து போயிருந்தது. உதடு கருகிவிட்டிருந்தது. ஓடோடிச் சென்று கொஞ்சம் வெந்நீர் எடுத்து வந்தாள். அந்நேரத்தில் அதுதான் கிடைத்தது. அதை ஒரு முழுக்கு ராதாவுக்கு குடிப்பாட்டினாள் . ராதாவுக்கு பாதி உயிர் வந்தது.
தன்னால் வந்தவினை இதுவெனத் தெரியும் ராதாவுக்கு. ஆகவே அவள் தாயிடம் ஏதும் பேசவில்லை . தாயும் ஒன்றும் கேட்கவில்லை. வேறு இரவிக்கையைப் போட்டுக் கொண்டாள். "என் பொன்னே! உன் பொல்லாத வேளை இப்படி புத்தி கொடுத்ததடி கண்ணே" என்று அழுதாள் வேதம். ராதா படுக்கையில் சாய்ந்துவிட்டாள். தாயின் கரத்தைப் பற்றிக்கொண்டு, அம்மா! நான் என்ன செய் வேன்? நான் எதை அறிவேன். என் நிலை உனக்கு என்ன தெரியும்" என்று மெல்லிய குரலில் கூறினாள். தாய் தன் மகளைத் தொட்டுப் பார்த்துவிட்டு, "காலையில் ஜுரம் விட்டுவிடும். இப்போதே வியர்வை பிடிக்க ஆரம்பித்து விட்டது,' என்று கூறினாள்.
"என் ஜுரம் என்னைக் கொல்லாதா! பாவி நானேன் இனியும் உயிருடன் இருக்க வேண்டும்? ஊரார் பழிக்க, உற்றார் நகைக்க, கொண்டவர் கோபிக்க, பெற்றவர் கைவிட, நான் ஏன் இன்னமும் இருக்கவேண்டும்? ஐயோ ! அம்மா! நான் மாரி கோவிலில் கண்ட நாள் முதல், அவரை மறக்க வில்லையே; எனக்கு அவர்தானே மணவாளன் என நான் என் மனதில் கொண்டேன். என்னை அவருக்கு நான் அன்றே அர்ப்பணம் செய்துவிட்டேனே! அவருக்குச் சொந்தமான உதட்டை நீங்கள், வேறொருவருக்கு விற்கத் துணிந்தீர்கள். அவர் கேட்டார், அவர் பொருளை ; நான் தந்தேன், அவ்வளவுதான். உலகம் இதை உணராது; உலகம் பழிக்கத் தான் பழிக்கும். என்னைப் பெற்றதால் நீங்கள் ஏன் இப் பாடு படவேண்டும். அந்தோ மாரியாயி, மகேஸ்வரி, நீ சக்தி வாய்ந்தவளாக இருந்தால் என்னை அழைத்துக்கொள். நான் உயிருடன் இரேன், இரேன், இரேன்" என்று கூறி அழுதாள்.
நாட்கள் பல கடந்தன. வாரங்கள் உருண்டன. மாதங்களும் சென்றன. ராதாவின் ஜுரம் போய் பிட்டது. ஆனால் மனோ வியாதி நீங்கவில்லை. அவளைக் கணவன் வீட்டுக்கு அழைத்துக் கொள்ளவில்லை. பரந்தாமன் மனம் உடைந்து தொழிலைவிட்டுப் பரதேசியாகி ஊரூராகச் சுற்றினான். ராதாவின் தாயார், தனது மருமகப் பிள்ளையைச் சரிப் படுத்த எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.
இந்நிலையிலே, ராதாவைப்பற்றி ஊரிலே பழித்தும் இழித்தும் பேசத் தொடங்கினார்கள். இதுவும் அவள் காதில் விழுந்தது. அவள் கவலை அதிகமாகி விட்டது.
கடைசியில், காரியஸ்தன் கருப்பையாதான் கை கொடுத்து உதவினான். மெள்ள மெள்ள, மந்திரம் ஜெபிப்பதுபோல ஜெபித்து, "ஏதோ சிறு பிள்ளைத்தனத்தில், துடுக்குத்தனத்தில் நடந்துவிட்டது. இனி ஒன்றும் நடவாது. ராதாவை அவள் வீட்டிலேயே விட்டுவைத்தால் ஊரார் ஒரு மாதிரியாகப் பேசுகிறார்கள்" என்று மெதுவாக ராதாவின் புருஷனிடம் கூறினான். ராதாவின் கணவன் உள்ளபடி வருந்தினான். வருத்தம் போக மருந்து தேடினான். அவனுக்கு அபின்தின்னும் பழக்கம் கற்றுக் கொடுக் கப்பட்டுவிட்டது! மாலையில் அபினைத் தின்றுவிட்டு மயங்கி விழுந்துவிடுவான். இரவுக் காலத்தில் கவலையற்றுக் கிடக்க, அபினே அவனுக்கு உதவிற்று.
கருப்பையாவின் முயற்சி கொஞ்சம் கொஞ்சமாகப் பலிக்க ஆரம்பித்தது . 'ஊரில் திருவிழா வந்தது. திருவிழாக் காலத்தில் உறவினர்கள் வருவார்கள். அந்த நேரத்தில் ராதா வீட்டில் இல்லாவிட்டால், கேலியாகப் பேசுவார்கள்," என்று கூறினான். ஆனால் 'நீயே போய் அவளை அழைத்து வா' என்று கூறினான். காரியஸ்தன் கருப்பையா ராதாவை அழைத்துவந்து வீட்டில் சேர்த்தான். ராதாவும் மிக அடக்க ஒடுக்கமாகப் பணிவிடைகள் செய்து கொண்டு வந்தாள். புருஷனுக்கு மனைவி செய்ய வேண்டிய முறையில் துளியும் வழுவாது நடந்தாள்.
ராதா வீடு புகுந்ததும், வீட்டிற்கே ஒரு புது ஜோதி வந்துவிட்டது. சமையல் வேலையிலே ஒரு புது ரகம். வீடு வெகு சுத்தம். தோட்டம் மிக அலங்காரமாக இருந்தது. மாடு கன்றுகள் நன்கு பராமரிக்கப்பட்டன. பண்டங்களைப் பாழாக்குவதோ, வீட்டு வேலையாட்களிடம் வீண் வம்பு வளர்ப்பதோ, ராதாவின் சுபாவத்திலேயே கிடையாது. ராதாவின் நடவடிக்கையைக் கண்ட அவள் புருஷன், இவ்வளவு நல்ல சுபாவமுள்ள பெண், அன்று ஏன் அவ்விதமான துடுக்குத்தனம் செய்தாள். எவ்வளவு அடக்கம், எவ்வளவு பணிவு, நான் நின்றால் உட்கார மாட்டேனென்கிறாள். ஒரு குரல் கூப்பிட்டதும், ஓடோடி வருகிறாள். வீட்டுக் காரியமோ, மிகமிக ஒழுங்காகச் செய்கிறாள். இப்படிப் பட்டவள் அந்தப் பாவியின் துடுக்குத்தனத்தால் கெட் டாளே தவிர, இவள் சுபாவத்தில் நல்லவள்தான்," என்று எண்ணினான்.
ஆனால் ராதா வெறும் யந்திரமாகத்தான் இருந்தாள். வேலையை ஒழுங்காகச் செய்தாள். ஆனால் பற்றோ பாசமோ இன்றி வாழ்ந்தாள். வாழ்க்கையில் அவளுக்கு இன்பம் என்பதே தோன்றவில்லை. புருஷனுக்கு அடங்கி நடப்பதுதான் மனைவியின் கடமை என்பதை உணர்ந்து அவ்விதம் நடந்தாளே தவிர புருஷனிடம் அவளுக்கு அன்பு எழவில்லை . பயம் இருந்தது! மதிப்பு இருந்தது! கடமையில் கவலை இருந்தது ! காதல் மட்டும் இல்லை! காதலைத்தான் அந்தக் கள்ளன் பரந்தாமன் கொள்ளை கொண்டு போய்விட்டானே! அவள் தனது இருதயத்தை, ஒரு முத்தத்துக்காக, அவனுக்குத் தத்தம் செய்துவிட்டாள்.
சிரித்து விளையாடிச் சிங்காரமாக வாழ்ந்த ராதா போய்விட்டாள். இந்த ராதா வேறு. பயந்து வாழும் பாவை. இவள் உள்ளத்திலே, காதல் இல்லை. எனவே வாழ்க்கை ரசம் இல்லை .
இதை இவள் கணவன் உணரவில்லை. எவ்வளவுக் கெவ்வளவு அடக்கமாக இருக்கிறாளோ அவ்வளவு அன்பு என்று எண்ணிக்கொண்டான். உலகில் இதுதானே பெரும்பாலும் பெண்கள் கடமை என்றும், புருஷனுக்கும் பெண்டுக்கும் இருக்க வேண்டிய அன்பு முறை என்றும் கருதப்பட்டு வருகிறது.
"பெண் மகா நல்லவள்; உத்தமி. நாலு பேர் எதிரே வரமாட்டாள். நாத்தி மாமி எதிரே சிரிக்க மாட்டாள். சமயற்கட்டைவிட்டு வெளிவரமாட்டாள். புருஷனைக் கண்டால் அடக்கம். உள்ளே போய்விடுவாள். கண்டபடி பேசிக் கொண்டிருக்கமாட்டாள்' என்று பெண்ணின் பெருமையைப் பற்றிப் பேசப்படுவதுண்டு. அந்தப் பேதைகள், வாழ்க்கையில் ரசமற்ற சக்கைகளாக இருப்பதை உணருவ தில்லை. வெறும் இயந்திரங்களாகக் குறிப்பிட்ட வேலை களை, குறித்தபடி செய்து முடிக்கும், குடும்ப இயந்திரம் அந்தப் பெண்கள். ஆனால் காதல் வாழ்க்கைக்கு அதுவல்ல மார்க்கம்.
செடியில் மலர் சிங்காரமாக இருக்கிறது. அதனைப் பறித்துக் கசக்கினால், கெடும். வண்டு ஆனந்தமாக ரீங்காரம் செய்கிறது! அதனைப் பிடித்துப் பேழையிலிட்டால் கீதம் கிளம்பாது. கிளி, கூண்டிலிருக்கும் போது, கொஞ்சுவதாகக் கூறுதல், நமது மயக்கமே தவிர வேறில்லை. கிள்ளை கொஞ்ச வேண்டுமானால், கோவைக் கனியுள்ள தோப்பிலே போய்க் காணவேண்டும். மழலைச் சொல் இன்பத்தை மற்றதில் காணமுடியாது. அதுபோன்ற இயற்கையாக எழும் காதல், தடைப்படுத்தப் படாமல், அதற்குச் சுவர் போடப்படாமல், அது தாண்டவமாடும் போது கண்டால், அதன் பெருமையைக் காண முடியுமே தவிர வேறு விதத்தில் காண முடியாது.
நமது குடும்பப் பெண்களிலே எவ்வளவோ பேர் தங்கள் மன விவகாரத்தை மாற்ற முகத்தில் மஞ்சள் பூசி, குங்குமமிட்டு வாழுகின்றனர். எத்தனை பெண்கள், வாழ்க்கையின் இன்பம் என்றால், சமயற்கட்டில் அதிகாரம் செலுத்துவதும், கட்டிலறையில் விளக்கேற்றுவதும், கலர் புடவை கல்கத்தா வளையல், மங்களூர் குங்குமம், மயில் கழுத்து ஜாக்கெட் ஆகியவைகளைப் பற்றிப் புருஷனிடம் பேசுவதும், தொட்டிலாட்டுவதுந்தான் என்று கருதிக்கொண்டு வாழுகின்றனர். ரசமில்லாத வாழ்க்கை, பாவம்!
அப்படிப்பட்ட வாழ்க்கைதான் ராதாவுக்கு. புருஷனோ அபின் தின்று ஆனந்தமாக இருந்தான். இந்நிலையில் தான் காரியஸ்தன் கருப்பையாவுக்கு ராதாவின் மீது கண் பாய்ந்தது. ராதாவின் தற்கால வாழ்வுக்குத் தானே காரணமென்பதும் அவனுக்குத் தெரியும். அதுமட்டுமல்ல! ராதாவைத் தன் வலையில் போடுவதும் சுலபமென எண்ணினான். நாளாவட்டத்தில், பேச்சிலும் நடத்தையிலும் தன் எண்ணத்தை, ராதாவுக்கு உணர்த்த ஆரம்பித்தான்.
தாகமில்லாத நேரத்திலும், ஒரு டம்ளர் தண்ணீர் வேண்டும் என்பான். ஓய்வு கிடைக்கும் நேரத்தில் வலியச் சென்று பேசுவான். தோட்டத்துப் பூவைப்பறித்து வந்து கொடுப்பான். விதவிதமான சேலை வகைகளைப் பற் றிப் பேசுவான். ராதாவின் அழகை அவர்கள் புகழ்ந்தார்கள், இவர்கள் புகழ்ந்தார்கள் என்று கூறுவான்.
"உன் அழகைக் காண இரு கண்கள் போதாதோ" என்று பாடுவான். ராதாவைக் கண்டதும் ஒரு புன்சிரிப்பு
இவனுடைய சேட்டைகள் எதுவும் ராதாவின் புருஷனுக்குத் தெரியாது. ராதா உணர்ந்து கொள்வதற்கே, சில நாட்கள் பிடித்தன. உணர்ந்த பிறகு திகைத்தாள். விஷயத்தை வெளியில் சொல்லவோ பயமாக இருந்தது. "மகா யோக்கியஸ்திதான் போடி! கலியாணமான உடனே, எவனையோ கட்டி முத்தமிட்டாய். பாவம், அந்த காரியஸ்தன் உனக்காக எவ்வளவோ பாடுபட்டு, கணவனுடன் சேர்த்து வைத்தான். இப்போது அவன் மீது பழி போடுகிறாய்," என்று தன்னையே தூற்றுவார்கள் என்று ராதா எண்ணினாள். அதுமட்டுமா ! காரியஸ்தனைக் கோபித்துக் கொண்டால், தன் கணவனிடம் ஏதாவது கூறி, அவர் மனதைக் கெடுத்துவிடுவான் என்று பயந்தாள். இந்த பயத்தை ராதாவின் தாய் அதிகமாக வளர்த்துவிட்டாள். எனவே கருப்பை யாவின் சேட்டையை முளையிலேயே கிள்ளிவிட, ராதாவால் முடியவில்லை. கருப்பையா பாடு கொண்டாட்டமாகிவிட் டது. "சரி! சரியான குட்டி கிடைத்துவிட்டாள்," என்று அவன் தீர்மானித்துவிட்டான்.
அவனுடைய வெறி வினாடிக்கு வினாடி வளர்ந்தது. ராதா "நம்மைக் கவனிக்க மாட்டாயே, தயவு இல்லையே" என்று கேட்டான், சிரித்துக் கொண்டே. "என்ன வேண்டும் கருப்பையா, சொல்லேன்," என்பாள் ராதா. கருப் பையா பெருமூச்சு விடுவான், "கொஞ்சம் தாகந்தீர, உன் கையால் தண்ணீர் கொடம்மா" என்பான். ராதா விசாரத்துடன் நீர் தருவாள். "ஏனம்மா முகம் வாட்டமாக இருக்கிறது" என்பான். "ஒன்றுமில்லையே" என்று கூறுவாள் ராதா . "அம்மா! நீ முகத்தை ஒரு மாதிரியாக வைத்துக் கொண்டால், என் மனம் படாதபாடுபடுகிறது" என்று தன் அக்கரையைக் காட்டுவான் காரியஸ்தன்.
"உன்னுடைய சிகப்பு மேனிக்கு அந்த நீலப்புடவை கட்டிக் கொண்டு, வெள்ளை ஜாக்கட் போட்டுக்கொண்டு, ஜவ்வாது பொட்டு வைத்து நிற்கும் போது, அசல் ரவிவர்மா பிக்சர் போல இருக்கிறது என் கண்களுக்கு" என்பான்.
இவ்விதமாக, கருப்பையா, மிக விரைவில் முன்னேறிக் கொண்டே போனான். ஆனால் ஜாடை செய்து, ராதாவைப் பிடிக்க அதிக நாட்களாகும் என்பதைத் தெரிந்து கொண்டு, வாய்திறந்து கேட்டுவிடுவதே மேல் என எண்ணினான். அதற்கும் ஒரு சமயம் வாய்த்தது.
முதலாளி பக்கத்து ஊருக்குப் போனார். ஒரு பாகப் பிரிவினை மத்தியஸ்தத்துக்காக . வர இரண்டு நாட்கள் பிடிக்கும், அந்த இரண்டு நாட்களில் காரியத்தை எப்படியாவது முடித்துவிடத் தீர்மானித்து விட்டான், கருப்பையா.
மாலை நேரம் ! தோட்டத்திலே ராதா பூப்பறித்துக் கொண்டிருந்த சமயத்தில், கருப்பையா அங்குப் போனான். ராதாவுடன் பேச ஆரம்பித்தான். சற்று தைரியமாகவே "ராதா! நீ நல்ல சாமர்த்தியசாலி" என்றான்.
"நானா! உம்! என்ன சாமர்த்தியம் கருப்பையா, என் சாமர்த்தியம் தெரியாதா! எட்டு மாதம் சீந்துவாரற்றுக் கிடந்தவள்தானே"
"சீந்துவாரற்றா! அப்படிச் சொல்லாதே ! உன் அழகைக் கண்டால் அண்ட சராசரத்தில் யார்தான் சொக்கிவிட மாட்டார்கள்."
"போ, கருப்பையா, உனக்கு எப்போதும் கேலிதான்"
"கேலியா இது! நீ கண்ணாடி எடுத்து உன் முகத் தைக் கண்டதில்லையா?"
"சரி! சரி! நாடகம் போல் நடக்கிறதே."
"ஆமாம் நாடகந்தான். காதல் நாடகம்."
"இது என்ன விபரீதப் பேச்சு கருப்பையா. யார் காதிலாவது விழப் போகிறது"
"நான் சற்று முன் ஜாக்ரதை உள்ளவன். தோட்டக்கார முனியனை, நாலு மணிக்கே அனுப்பிவிட்டேன் கடைக்கு."
"நீ ஏதோ தப்பு எண்ணம் கொண்டிருக்கிறாய், கருப்பையா. தயவு செய்து அதனை விட்டுவிடு. நான் அப்படிப் பட்டவளல்ல."
"ராதா ! நான் இனி மறைக்கப் போவதில்லை. உன்னை எப்படியாவது கூட வேண்டுமென நான் தவங்கிடந்து வந்தேன். இன்றுதான் தக்க சமயம்."
இப்படி கூறிக் கொண்டே ராதாவின் கரத்தைப் பிடித்துக் கொண்டான். ராதா திமிறினாள். பூக்கூடை கீழே விழுந்தது. மலர்கள் சிதறின. ராதாவின் கண்களிலே நீர் பெருகிற்று, கருப்பையாவின் கரங்கள் அவள் உடலைக் கட்டிப் பிடித்துக் கொண்டன. அவனுடைய உதடுகள், அவள் கன்னத்தில் பதிந்தன. அந்த முத்தங்களின் ஓசை கேட்டு, பறவைகள் பறந்தன. ராதா, கருப்பையாவிடம் சிக்கி விட்டாள்.
"ராதா, ஜென்மம் இப்போதுதான் சாபல்யமாயிற்று. அடி பைத்தியமே, ஏன் இவ்வளவு நடுங்குகிறாய்? பயப் படாதே. இந்த கருப்பையாவைச் சாமான்யமாக எண்ணாதே. நான் இந்த இன்பத்துக்காக எவ்வளவு பாடுபட்டேன். எத்தனை நாள் காத்துக் கொண்டிருந்தேன் தெரி யுமா? தேனே! நான் இதற்காகத்தானே உன்னை தாய் வீட்டிலிருந்து இங்கு வரும்படி செய்தேன்" என்று களிப்பாய், கருப்பையா கூறினான். ராதாவின் ஆடையைப்பற்றி இழுத்தான். கன்னங்களைக் கிள்ளினான். ஒரே ஒரு முத்தம் இன்னம் ஒன்று - ஆம்! இப்படி, பலே பேஷ்", என்று கொஞ்சினான்.
ராதா மயக்கத்தில் ஈடுபட்டவள் போல, அவன் இஷ்டப்படி நடந்தாள். அன்று தோட்டத்தில் ராதா தனது மூன்றாவது பிறப்புப் பெற்றாள்.
அவளுடைய கன்னிப் பருவம் காதலைக் கண்டது; அது கருவிலேயே மாண்டது. அவளுடைய இரண்டாம் பிறப்பு, கணவனுக்கு மனைவியாக வாழ்க்கையில் ரச மின்றி, இயந்திரம் போல இருந்தது. அன்று தோட்டத்தில் சாகசக்கார கருப்பையாவிடம் சிக்கியதால் அவள் மூன்றாம் பிறப்பு. வெளிக்குக் கற்புக்கரசியாகவும், மறைவில் பிறருக்குப் பெண்டாகவும் இருக்கும் வாழ்வைப் பெற்றாள்.
கணவனுக்கும் அவளுக்கும் மணமாயிற்று என்பதைத் தவிர வேறு பிணைப்பு இல்லை. அவன், அவள் கழுத்தில் தாலியைக் கட்டினானே தவிர, மனதிலே அன்பு என்ற முத்திரையைப் பதியவைக்கவில்லை. எனவே அவள் கணவனிடம் கலந்து வாழ்வதைத் தனது கடமை, உலகம் ஏற்படுத்திய கட்டு எனக் கொண்டாளே தவிர, அதுவே தன் இன்பம் என்று கொள்ளவில்லை.
பரந்தாமனை மணந்திருந்தால், அவளைப் பதைக்கப் பதைக்க வெட்டினாலும் பாழும் கிணற்றில் தள்ளினாலும் பயப்படமாட்டாள். பிறருடைய மிரட்டலுக்குக் காலடியில் கோடி கோடியாகப் பணத்தைக் குவித்தாலும், நிமிர்ந்து நோக்கியிருக்கமாட்டாள் மற்றொருவனை. அவள் காதற் செல்வத்தைப் பெறவில்லை. இவள் இன்பக் கேணியில் புகவில்லை. எனவே அவள் வாழ்க்கையில் இவனிடம் எளிதில் வழுக்கி விழுந்தாள்.
உலகம் தன் குற்றத்தைத் தெரிந்து கொள்ளாதிருக்கு மட்டும் கவலை இல்லை என்று எண்ணினாள்.
"இனி, இந்த உலகில், ஜோராக வாழவேண்டும். சொகுசாக உடுத்தி நல்ல நல்ல நகைள் போட்டுக் கொண்டு கணவர் கொண்டாட, ஆனந்தமாக வாழவேண்டும். அதற்குக் காரியஸ்தன் தயவிருந்தால், கணவனைச் சரிப்படுத்த முடியும். காரியஸ்தனோ தன் காலடியில் கிடக்கிறான். இனித் தனக்கென்ன குறை!" என்று எண்ணினாள் ராதா. ராதா புது உருவெடுத்தாள். உடையிலே, தேடித் தேடி அணிந்தாள். நகைகள் புதிதாகப் போட்டாள். ஒரு நாளைக் குப் பத்து முறை முகத்தை அலம்புவாள், நிமிடத்திற்கொரு
முறை கண்ணாடி முன் நிற்பாள். வலியச்சென்று, புருஷனிடம் கொஞ்சுவாள். அவள் சரஸம் புரியத் தொடங்கினாள். கிழக்கணவன், அவள் வலையில் வீழ்ந்தான். கேட்டதைத் தந்தான். ராதாவோ கண்கண்ட தெய்வம் என்றாள். ஆனால் அவன் அறியான், பாபம், அவள் கற்பை இழந்த சிறுக்கியானாள் என்பதை !
மயிலும் மாதரும் தமது அழகைப் பிறர் காணவேண்டு மென்ற எண்ணத்துடன் இருப்பதாகக் கவிகள் கூறுவர். மயிலின் தோகை அவ்வளவு வனப்புடன் இருக்கும் போது அது பிறர் கண்களுக்குத் தெரியாமல் மறைந்து கிடப்பின் பயன் என்ன? கண்டோர் மனதில் களிப்பை உண்டாக்கும் ஒப்பற்ற பணியை அழகு செய்கிறது. அந்த அழகு, அன்றலர்ந்த பூவிலுண்டு ! அந்தி வானத்திலுண்டு. அதரத்தில் தவழும் அலங்காரப் புன்சிரிப்பிலுண்டு, கிளியின் கொஞ்சு தலில், குயிலின் கூவுதலில், மயிலின் நடனத்தில், மாதரின் சாயலில் உண்டு ! சிற்பத்தில் உண்டு. ஆனால் அதன் சிறப்பை முழுவதும் காணவல்லார் மிகச்சிலரே. ஆனால் மாந்தரின் எழில் அத்தகையதன்று. அது கண்டவரை உடனே களிக்கவைக்கும் தன்மையது. "காற்று வீசும்போது குளிர்ச்சி தருகிறேன் பாரீர்" எனக் கூவுமா? அதன் செயல் நமக்கு அந்த இயற்கையான எண்ணத்தை உண்டாக்கும். அது போலவே, எந்த மாதும் என் அழகைக் கண்டாயோ' எனக் கேளார். ஆனால் தம் அழகைப் பிறர் கண்டனர், களித் தனர், என்பது அவர்களுக்குத் தெரியும். அதிலே பூரிப்பும், பெருமையும் அடையாத பெண்கள் மிகமிகச் சொற்பம்.
ஆனால், அழகு, களிப்பதற்கு எங்ஙனம் உதவுகிறதோ அதைப்போலவே பிறரை அழிக்கவும் செய்கிறது; எனவேதான், புலவர்கள், மாதர்களின் விழியிலே அமிர்தமும் உண்டு; நஞ்சும் உண்டு என்றனர்.
இசைந்த உள்ளத்தை எடுத்துக்காட்டும் விழி, அமிர்தத்தை அள்ளி அள்ளி ஊட்டும்! 'இல்லை போடா ! மூடா! எட்ட நில்!' என்ற இருதயத்துக்கு ஈட்டி போன்ற பதிலைத் தரும் விழிகள், நஞ்சுதரும்! ஆம்! அமிர்தம் உண்டு ஆனந்தப்பட்டவர்களுமுண்டு. நஞ்சு கண்டு நலிந்தவர்களுமுண்டு! ஒரே பொருள், இருவகையான, செயலுக்குப் பயன்படுகிறது! ஆனால் ராதாவின் கண்கள், அமிர்தத்தையும் ஊட்டவில்லை, நஞ்சையும் தரவில்லை! இயற்கையாக எழும் எண்ணத்தை அடக்கி மடக்கி, மாற்றிக் காட்ட அவளது கண்கள் கற்றுக் கொண்டன!
உண்மையான அன்பு கனிந்திருந்தால் அக்காரிகை, தன்னைக் காதலன் நோக்கும் போது, தலைகுனிந்து நிற்பாள் ; பளிங்குப் பேழையின் மூடியை மெதுவாகத் திறப்பாள். கண் சரேலெனப் பாயும் காதலன் மீது! நொடியில் மூடிக் கொள்ளும் ! இடையே ஒரு புன்சிரிப்பு - மின்னலெனத் தோன்றி மறையும் !
காதலற்று, வேறு எதனாலேனும், பொருள் காரணமாகவோ, வேறு போக்கு இல்லை என்ற காரணத்தாலோ, கட்டுப்பட்ட காரிகை, தன்னுடன் பிணைக்கப்பட்டுள்ளவன் தன்னைக் காணும்போது, உள்ளத்தில் களிப்பு இருப்பினும் இல்லாது போயினும், பற்களை வெளியே காட்டியும், அவன் அப்புறம் சென்றதும், முகத்தில் மெருகு அற்று சோர்வதும் உண்டு, தானாக மலர்ந்த மலருக்கும், அரும்பை எடுத்து அகல விரித்ததற்கும் உள்ள வித்தியாசம் இங்கும் உண்டு.
ராதா, மலராத மலர் ! அரும்பு! முள்வேலியில் கிடந்தது. கருப்பையா, அதனை அகல விரித்தான்! அவன் ஆனந்தமடைந்தான். ராதா ஆனந்தமடைந்ததாக் நடித்தாள் ! அந்நடிப்பே அவனுக்கு நல்லதொரு விருந்தாயிற்று! நடிப்பும் ஒரு கலை தானே!
கருப்பையாவுக்கும் ராதாவுக்கும் கள்ள நட்பு பெருகி வருவதைக் கணவனறியான். நல்ல தோட்டம், அழகான மாடு கன்று இருப்பது கண்டும், பெட்டியைத் திறந்ததும் பணம் நிரம்பி இருப்பதைப் பார்த்ததும் பெருமை அடை வதைப் போலவே தன் அழகிய மனைவி ராதாவைக் கண்டு பெருமை அடைந்தான்.
"என் ராதா குளித்துவிட்டு, கூந்தலைக் கோதி முடிக்காது கொண்டையாக்கி, குங்குமப் பொட்டிட்டு, கோயில் போகும்போது லட்சுமியோ, பார்வதியோ என்று தோன்றுகிறது. பூஜா பலன் இல்லாமலா எனக்கு ராதா கிடைத்தாள்" என்று அவள் கணவன் எண்ணினான்.
அந்த லட்சுமி தனது செல்வத்தை, இன்பத்தை, கருப்பையாவுக்குத் தருவதை அவன் அறியான். அறியா வொட்டாது அபின் தடுத்தது. நாளுக்கு நாள் அபினின் அளவும் அதிகரித்தது. கள்ள நட்பும் பெருகிவந்தது. இவ்வளவு சேதியும் பரந்தாமன் செவி புகவில்லை.
அவன் செவியில்,
"காயமே இது பொய்யடா! நல்ல காற்றடைத்த பையடா," என, கருணானந்தயோகீசுரர் செய்துவந்த கானமே, பரந்தாமன் ஒரு பாலசந்யாசியாகக் காலந்தள்ளி வந்தான். காதலைப் பெறமுடியவில்லை. கருத்திலிருந்து ராதாவை அகற்ற முடியவில்லை. அன்று மருண்டு, ஊரை விட்டோடி, பாழும் சத்திரத்தில் படுத்துப் புரண்டு, கள்ளரைக் கண்டு கலங்கி, கடுகி நடந்து, தோப்புக்குள் புகுந்து துயின்ற நாள் தொட்டு, பரந்தாமன் ஊர் ஊராக அலைந்தான் ! காவி கட்டியவர்களை எல்லாம் அடுத்தான்! "சாந்தி வேண்டும் சுவாமிகளே ! உலக மாயையினின்றும் நான் விடுபட அருளும் என் ஐயனே! உண்மை நெறி எது வெனக் கூறும் யோகியே" என்று கேட்டான் பலரிடம்.
கருணானந்த யோகீசுரர், "தமது சீடராக இருப்பின், சின்னாட்களில், கைலைவாழ் ஐயனின் காட்சியும் காட்டுவோம்" எனக் கூறினார். பரந்தாமன், சிகை வளர்த்தான். சிவந்த ஆடை அணிந்தான். திருவோட்டைக் கையிலெடுத்தான்.
'சங்கர சங்கர சம்போ . சிவ சங்கர சங்கர சம்போ என்று கீதம் பாடியாடி, கிராமங் கிராமமாக யோகீசுரருடன் சென்றான்.
# # #
"ராதா! ஒரு விசேஷம்!"
"என்ன விசேஷம்!"
"நம் வீட்டுக்கு விருந்தாளிகள் வருகின்றனர் நாளைக்கு!"
"யார் வருகிறார்கள்!"
"சென்னையிலிருந்து எனது உறவினர் ஒருவர் வருகிறார். சிங்காரவேலர் என்பது அவர் பெயர் . அவருடன் கோகிலம் என்ற அவர் தங்கை வருகிறாள். அவர்கள் மகா நாசுக்கான பேர் வழிகள். பெரிய ஜமீன் குடும்பம்."
"வரட்டுமே, எனக்கும் பொழுது போக்காக இருக்கும்."
"கோகிலத்தை நீ கண்டால் உடனே உன் சிநேகிதி யாக்கிக் கொள்வாய். நன்றாகப் படித்தவள் கோகிலம்."
"படித்தவளா ! சரி, சரி ! எனக்கு அல்லியரசானி மாலை தவிர வேறு என்ன தெரியும்? என்னைப் பார்த்ததும் அந்தம்மாள், நான் ஒரு பட்டிக்காட்டுப் பெண்" என்று கூறி விடுவார்கள்."
"கட்டிக் கரும்பே! நீயா பட்டிக்காட்டுப் பெண்" என்று கூறிக்கொண்டே ராதாவின் ரம்மியமான. கன்னத்தைப் பிடித்துக் கிள்ளினான் கணவன்.
"இதுதானே உங்கள் வழக்கம் ! இது என்ன தவடை யாரப்பர் பந்தா, இப்படிப் பிடித்துக் கிள்ளுவதற்கு. வரட்டும் அம்மா, சொல்லுகிறேன், நீங்கள் செய்த வேலையை ....." என்று கொஞ்சினாள் ராதா.
"அடடா! பாபம் ! கன்னம் சிவந்துவிட்டதே ! ராதா, கிள்ளினதற்கே இப்படிச் சிவந்துவிட்டதே ...."
"போதும் நிறுத்துங்கள் விளையாட்டை. நான் பூப்பறிக்கப் போக வேண்டும்" என்று கூறிவிட்டு, ராதா, தன் கணவன் தன்னிடம் வசியப்பட்டு இருப்பதை எண்ணிப் பெருமை அடைந்தபடியே தோட்டத்துக்குச் சென்றாள். அங்குக் கருப்பையா காத்துக் கொண்டிருந்தான்.
"ஏது ரொம்ப குஷிதான் போலிருக்கு!" என்று கூறிக் கொண்டே, ராதாவின் கரங்களைப் பிடித்து இழுத்தான். "இது என்ன வம்பு! விடு கருப்பையா, அவர் வந்துவிட்டால் என்ன செய்வது" என்று கூறி கையை இழுத்துக் கொண்டாள். அந்த வேகத்தில் வளையல் உடைந்தது, கீறிக் கொண்டதால், பொன்னிற மேனியில், செந்நிற இரத்தம் துளியும் வந்தது.
"பார்! நீ செய்த வேலையை" என்று கரத்தைக் காட்டினாள்.
"சூ மந்திரக்காளி ! ஓடிப்போ" என்று கூறிக்கொண்டே, கருப்பையா, அந்தக் கரத்திற்கு முத்தமிட்டான். அவன் அறிந்த மந்திரம் அது!
"ஒரு சங்கதி! கருப்பையா, நாளைக்கு விருந்தாளிகள் வருகிறார்கள், நாம் சற்று ஜாக்ரதையாக நடந்து கொள்ள வேண்டும். யாரோ ஜமீன்தாராம் ! அவர் தங்கையாம்! இருவரும் வருகிறார்களாம்" என்று எச்சரித்தாள்.
அன்றிரவு ராதாவுக்கு நாளைக்கு எந்தக் கலர்புடவை உடுத்திக் கொண்டால் அழகாக இருக்கும். கார்டு கலர்ச் சேலையா, ரிப்பன் பார்டர் சேலையா, மயில் கழுத்துக் கலரா, மாதுளம் பழநிறச் சேலையா, ஜவ்வாது இருக் கிறதா, தீர்ந்துவிட்டதா என்ற யோசனைதான்.
மாதுளம்பழ நிறச் சேலை கட்டிக் கொண்டால் தான் நன்றாக இருக்கும் என முடிவு செய்தாள். உடனே முகம் மாறிற்று. ஆம்! முதன் முதலில் பரந்தாமனைக் காணும் போது மாதுளம் பழ நிறச் சேலை தான் கட்டிக் கொண்டிருந்தாள் ராதா!
பழைய நினைவுகள், தோணி ஓட்டையில் நீர் புகுவது போல விரைவிற் புகுந்தன. தோணி கடலில் அமிழ்வதைப் போல, அவள் துக்கத்தில் ஆழ்ந்தாள். தலையணையில் நீர். கண்கள் குளமாயின! அவளது வாசனை திரவியப் பூச்சுவேலை சேறாகிவிட்டது. ராதா தனது உண்மைக் காதலை நினைத்து உள்ளம் கசிந்தாள். உறக்கமற்றாள் ! மறுநாள் காலை முகவாட்டத்துடன் விருந்தாளிகளை வர வேற்றாள்.
சிங்காரவேலுக்கு, அந்த முக வாட்டமே ஒரு புது மோஸ்தர், அழகாகத் தெரிந்தது. கோகிலம், கத்தரிப்பூக் கலர் சேலைதான் ராதாவுக்கு ஏற்றது என்று யோசனை கூறினாள். விருந்தாளிகள் வந்து ஒரு மணி நேரத்திற்குள் ராதாவிடம் வருஷக்கணக்கில் பழகினவர்கள் போல் நடந்து கொண்டனர். ஒரே பேச்சு ! சிரிப்பு ! கோகிலத்தின் குட்டிக் கதைகளும், சிங்காரவேலனின் ஹாஸ்யமும், ராதாவுக்குப் புதிது! அவைகள் அவளுக்குப் புதியதொரு உலகைக் காட்டிற்று. அதிலும் அந்த மங்கை புகுந்தாள்.
ஒருமுறை வழி தவறிவிடின் பிறகோ எவ்வளவோ வளைவுகளில் புகுந்தாகத்தானே வேண்டும்.
அத்தகைய ஒரு வளைவு! சிங்காரவேலர்-- கோகிலா பிரவேசம்!
கோகிலா அழகியல்ல! ராதா அதைத் தெரிந்து கொண்டாள். என்றாலும், கோகிலத்தின் நடை உடை பேச்சில் ஒரு தனி வசீகரம் கண்டாள். கோகிலத்தின் கண்கள் சில மணி நேரங்களில் ராதா கருப்பையா நட்பைக் கண்டுவிட்டன. அவள் வாய், ஒரு நொடியில் விஷயத்தைச் சிங்கார வேலருக்குக் கூறிவிட்டது. அவனது மூளை உடனே சுறு சுறுப்பாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது.
சிங்காரவேலரும், கோகிலமும் செல்வக்குடி பிறந்தோர். செல்வத்தை வீண் ஆட்டத்தில் செலவிட்டுப் பிறகு, உல்லாசக் கள்ளராயினர் ! கோகிலம் தம் கணவன் வீட்டுக்கு வரவே கூடாது எனக் கண்டிப்பாக உத்தரவிட்டு விட்டவள்! சிங்காரவேலர் முதல் மனைவி பிரிந்த துக்கத்தை மறைக்க முடியுமா என்பவர் . தாரமிழந்தவர், இருவருமாக பழைய ஜமீன் பெருமையைக்கூறி, ஊரை ஏய்ப்பதும் உலவுவது மாகவே இருந்தனர்.
ராதா கருப்பையா உறவு நல்லதொரு தங்கச் சுரங்கம் என்று சிங்காரவேலன் எண்ணினான். அவனுடைய சிந்தனையில் சூதுவலை உடனே வளர்ந்தது; கோகிலத்திடம் கலந்தான்.
"பேஷான யோசனை அண்ணா! சரியான யோசனை!"
"நம் யோசனை எது சரியானதாக இராமற் போய் விட்டது கோகிலம்?"
"இந்த விடுமுறை வியாபார தோரணையில் நமக்கு மிகச் சிறந்தது."
"ஆமாம்! நாம் போடப்போகும் 'முதல் தொகை' மிகச் சொற்பம். கோடாக் நாதனின் கருணையால், நமக்குக் குறைவே ஏற்படாது" என்றான் சிங்காரவேலன்.
கோகிலம் அண்ணனின் சமர்த்தை எண்ணிச் சிரித்தாள்.
அண்ணனும் தங்கையுமாகச் சிரிக்கும் நேரத்திலே, ராதா, அங்கு வந்தாள். "சிரிக்கும் காரணம் என்னவோ?" என்று கேட்டாள்.
"நாங்களா ! சிரிப்பதா ! ஏன் அண்ணா நாம் எதற்காகச் சிரித்தோம்" - என்று கோகிலம் கேட்டாள். அவள் கேட்ட கேள்வியும், பேசிய விதமும், ராதாவுக்கும் சிரிப்பை உண்டாக்கிவிட்டது.
மூவருமாக, விழுந்து விழுந்து சிரித்தனர் ! "பேதைப் பெண்ணே, சிக்கினாயா" என்று சிங்காரவேலன் எண்ணினான்!!
"குட்டி மகா கெட்டிக்காரியாக இருக்கிறாள். எங்கே நமது கண்களுக்கு விஷயம் தெரிந்துவிடுகிறதோவென்று மிக ஜாக்ரதையாக நடந்து கொள்கிறாள். அவனாவது பரவாயில்லையென்று எண்ணிக்கொண்டு சில சமயங்களில் அவளை நோக்கிச் சிரிக்கிறான், கொஞ்சுகிறான். இருவரும் கைப்பிடியாகக் கிடைக்கவேண்டும். அது போட்டோ எடுக்கப்பட வேண்டும். அதுதான் என் பிளான். சமயம் வாய்க்க வில்லையே' என்றான் சிங்காரவேலன், கோகிலத்திடம்.
"அண்ணா! பெண்கள் எப்போதும் நிறைகுடம் போன்றவர்கள். உணர்ச்சியைத் ததும்பவிடமாட்டார்கள். ஆண்கள் அப்படியல்லவே, நிழலசைந்தாலும், அவள் அசைந்தாள் என்று எண்ணிக் கொண்டு அவதிப்படுவார்கள். இது இயற்கைதானே" என்றாள் கோகிலம்.
"அது எப்படியாவது தொலையட்டும். நமக்கு வேண்டியது நடக்க வேண்டுமே" என்றான் வேலன். "இது ஒரு பிரமாதமா! நாளை மாலை, ராதா, கருப்பையாவின் தோளைப் பிடித்திழுத்து முத்தமிடும் காட்சியை நீங்கள் போட்டோ எடுக்கலாம். அந்தக் காட்சியை நான் டைரக்டு செய்கிறேன்" என்றாள் கோகிலம்.
சிங்காரவேலன் முகம் சற்றுச் சுளித்தது. கோகிலம் சிரித்துக்கொண்டே, "ஏன் அண்ணா, உமக்கும் ராதா மீது ...." என்று கேலி செய்தாள்.
"தூ! தூ! நான் பெண்கள் மீது ஆசைவைப்பதை விட்டு வருஷங்களாகிவிட்டன" என்றான் வேலன்.
"சரி! நான் நமது சினிமா காட்சிக்கு வேண்டிய ஏற்பாடு செய்கிறேன்" என்று சொல்லிவிட்டுக் கோகிலம் கருப்பையாவைத் தேடிக் கொண்டு தோட்டத்துக்குச் சென்றாள்.
"கருப்பையா ! நாளைக்கு நாங்கள் ஊருக்குப் போகிறோம் ' என்று சம்பாஷணையைத் துவக்கினாள்.
"ஏனம்மா ! எங்கள் ஊர் பிடிக்கவில்லையோ ", என்று கருப்பையா கேட்டான்.
"பிடிக்கவில்லையா ! சரிதான், ரொம்ப அதிகமாகப் பிடித்துவிட்டது. இன்னும் கொஞ்சநாள் போனால் என் அண்ணனுக்குப் பித்தம் பிடித்துவிடும் போல் இருக்கிறது" என்றாள் கோகிலம்.
"நீங்கள் சொல்வது எனக்கொன்றும் விளங்கவில்லையே" என்றாள் கருப்பையா.
"கருப்பையா, நீ எங்கும் வெளியே சொல்லக் கூடாது. மிக ரகசியம். வெளியே தெரிந்தால் தலை போய்விடும்" என்றாள் கோகிலம்.
"என்ன இரகசியம்?" என்று கேட்டாள் கருப்பையா.
கோகிலம், அவன் காதில் 'குசுகுசு' வென ஏதோ கூறினாள். கருப்பையாவின் கண்களில் தீப்பொறி பறந்தது.
"அதனால்தான் கருப்பையா, வம்பு வளருவதற்குள் நாங்கள் போய்விடுகிறோம். அவளோ பாவம்! கிழவனின் மனைவி! என் அண்ணனோ, மகா ஷோக் பேர்வழி. பஞ்சு அருகே நெருப்பை வைத்துவிட்டு, பற்றி எரிகிறதே என்று பிறகு நொந்து கொள்வதில் என்ன பயன்." என்று வேதாந்தம் பேசிவிட்டு, விஷயத்தை எங்கும் மூச்சுவிடக்கூடாது என்று கோகிலம் கேட்டுக் கொண்டாள். கருப்பையாவுக்குக் கவலை அதிகரித்து விட்டது. 'அடடா! மோசம் வந்து விடும் போலிருக்கிறதே,' என்று கலங்கினான். ராதா மீது அளவு கடந்த கோபம் அவனுக்கு. 'சும்மா விடக்கூடாது; கேட்டுத் தீரவேண்டும். சிறுக்கி இவ்வளவு தூரம் கெட்டு விட்டாளா!' என்று எண்ணி ஏங்கினான்.
கோகிலத்துக்கு தான் மூட்டிவிட்ட கலகம் வேலை செய்யுமென்று தெரிந்துவிட்டது. தன் சாகசப்பேச்சில் கருப்பையா போன்ற காட்டான் ஏமாறுவது சுலபந்தானே என எண்ணி, அண்ணனிடம் தன் வெற்றியைக் கூறவும், ராதாவும், கருப்பையாவும் தனியாகச் சந்திக்கும் நேரத்தில், ரசமான காட்சி நடந்தே தீருமெனச் சொல்லவும் சென்றாள்.
செல்வம் ஒருவருக்கு இருந்து மற்றொருவருக்கு இல்லாது போவது அவ்வளவு அதிகமான பொறாமையைக் கிளப்புவதில்லை. அது கொடுத்து வைத்தவள்", "ஆண்டவன் அருள்", "பூர்வ ஜென்ம புண்ய பலன்" என்ற சமாதானங்களால் சாந்தியாகிவிடும். ஆனால் காதல் செல்வத்தின் விஷயம் அங்ஙனம் அன்று.
'உருகி, உடல் கருகி, உள்ளீரல் பற்றி விடும்' காதல், சம்மதக் கண்ணொளியால் தணிக்கப்பட்டு, காதல் விளை யாட்டுகளால் சாந்தியாக்கப்பட்டு இன்ப வெள்ளத்தில் மூழ்கி இருக்கும் ஒருவருக்குத் தன் காதலில் பிறனொருவன் புகவோ, கெடுக்கவோ கண்டால், கோபமும், கொதிப் பும் உள்ளத்தின் அடிவாரத்திலிருந்து கிளம்பும்.
பசியினால் களைத்துப் படுத்துத் துயிலும் புலியின் வாலை வேண்டுமானாலும் வளைத்து ஓடிக்கலாம். ஆனால் காதல் நோயில் சிக்கிக் கொண்டவனைத் தொந்தரவு செய்தால், அவன் புலியினும் சீறுவான்; எதுவுஞ் செய்வான், எவர்க்கும் அஞ்சான், எதையுங் கருதான். ஆம்! இன்னமும் மனிதன் மாட மாளிகை கூடகோபுரத்தைவிட, மங்கையின் அன்பையே பெரிதென எண்ணுகிறான். பொன்மணி பொருளைவிடத் தனது பிரியையின் புன்சிரிப்பே பெரிதெனக் கருதுகிறான். எதையும் இழப்பான்; காதலை இழக்கத் துணியான். எது இல்லாமற் போய்விடினும், இதுதான் நம் நிலை, என் செய்வது," எனத் தன்னைத்தானே தேற்றிக் கொள்வான். ஆனால் மனதில் குளிர்ச்சி ஊட் டும் மனோகரி ஒருவள் இல்லையெனில் அவன் செத்த வாழ்வு வாழ்வதாகவே கருதுவான். பருவமும், பழக்க மிகுதியால் வரும் சலிப்பும் ஒரு சிறிது இக்குணத்தைக் குறைக்கலாம். அடியோடு மாற்றுவதென்பதோ, அந்தக் குணமே வரவொட்டாது தடுத்துவிடுவதென்பதோ முடியாத செயல் ஆகும். கிடைக்காவிட்டால் கிலேசப்படும் உள்ளம், கிடைத்ததைக் கெடுக்க யாரேனும் முற்பட்டால், அவர்களைக் காலடியில் போட்டு மிதித்துத் துவைத்துவிடவே எண்ணும்.
கருப்பையா அந்நிலையில் தான் இருந்தான். அவன் கொண்ட நட்பு, கள்ளத்தன-மானதுதான். துரோகத்தின் மீது தோற்றுவிக்கப்பட்டதுதான் ; மருண்ட இளமனதை மிரட்டிப் பெற்றதுதான் என்றாலும் 'தான் பெற்ற இன்பம்' பிறனுக்குச் செல்வதென்றால் அவமானம் பொறுக்க வில்லை. சிங்காரவேலனுக்கும் ராதாவுக்கும் ஏதோ நடக்கும்போலத் தோன்றுகிறது எனக் கோகிலம் கயிறு திரித்தாள். அது கருப்பையாவின் மனதைக் கலக்கிவிட்டது.
மறுநாள் மாலை! தோட்டத்தில் கோகிலம் குறிப்பிட்டபடியே ஊடல் காட்சி ஆரம்பமாயிற்று. கருப்பையா கருத்து, வியர்க்கும் முகத்துடன் பெருமூச்சு விட்டுக் கொண்டு, வேலியைச் சரிப்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில் ராதா வந்தாள். அவள் கோகிலம் செய்துவிட்டுப் போன குட்டிக் கலகத்தையும் அறியாள். கோடியில் மர மறைவில் கோடாக் குடன் ஒளிந்து கொண்டு சிங்கார வேலன் இருப்பதையும் அறியாள். அன்றெல்லாம் கருப்பையா முகத்தைக் கோணலாக்கிக் கொண்டும், சிடுசிடு வெனப் பேசிக் கொண்டும் இருந்தது கண்டு ஒன்றும் புரியாது தத்தளித்தாள். அதனை விசாரிக்கவே அங்கு வந்தாள்.
"கருப்பையா "
பதில் இல்லை .
"கருப்பையா ...... "
"கந்தன் ஒரு வேலையும் சரியாகச் செய்ய மாட்டேன்" என்கிறான். ஆமாம் அவனுக்கு நிலைமை மாறிவிட்டது. புது கிராக்கி" என்று தோட்டக்காரக் கந்தனை சாக்காக வைத்துக் கொண்டு கருப்பையா பேசினான். ராதாவுக்கு அப்போதுதான் கருப்பையா ஏதோ தன் மீது சந்தேகங் கொண்டிருக்கிறான் என்பது தெரிந்தது. உடனே கோபமும் வந்தது. இருவரும் கோபித்துக் கொண்டே இருந்தால் என்ன செய்யமுடியும்! அதிலும் அவள் ஒரு பெண்! வழி தவறி நடந்த பெண்!! எனவே, பணிந்து போக வேண்டியவள் தானே என எண்ணினாள்.
அந்த ஒரு விநாடியில் அவள் மனக்கண் முன்பு, தனது முன்னாள் நிலையாவும் படமெடுத்தது போல் தோன்றிற்று.
ஒருமுறை தவறினாள் - பெற்றோர்கள் தவறவிட்டார் கள் - அதுமுதல் சருக்கு மரத்தில் செல்வது போல, நழுவி நழுவி, வழுக்கி வழுக்கி கீழுக்கு வந்து, கடைசியில் திருட்டுத்தனமாகப் பெற்ற ஒரு முரட்டு ஆளுடன், கொஞ்ச வேண்டிய நிலையும் வந்ததல்லவா. காரணமின்றி அவள் கொண்ட கோபத்துக்கும் சமாதானம் கூற வேண்டி வந்த தல்லவா - என்று எண்ணியதும் ராதாவின் கண்கள் தானாகக் கலங்கின.
மெள்ள நடந்து கருப்பையாவை அணுகினாள். அவள் அங்கு மரமென நின்றான். "சொல்லு கருப்பையா! என் மீது ஏன் உனக்குக் கோபம். நான் என்ன செய்தேன்" என்று வீட்டு எஜமானி ராதா காரியஸ்தன் கருப்பையாவைக் கேட்டாள் - காதலால் கட்டுப்பட்டு அல்ல, அவனிடம் கண்முடித்தனத்தால் கட்டுண்ட காரணத்தால்.
"எனக்கென்னம்மா உங்கள் மீது கோபம். நீங்கள் வீட்டு எஜமானியம்மா. நான் கணக்கு எழுதி காலந்தள்ளு. பவன்" என்று எரிகிற நெருப்பை ஏறத்தள்ளினான் கருப்பையா.
"இதோ, இப்படிப்பார். விஷயத்தைச் சொல்லு. வீணாக என் மனத்தைப் புண்ணாக்காதே" என்றாள் ராதா, கருப்பையாவின் தோளைப் பிடித்து இழுத்துக் கொண்டே.
கோடியில் இருந்த சிங்காரவேலன், பதுங்கியபடிச் சற்று அருகிலிருந்த மரத்தின் பின்புறம் நின்று கொண்டு, கோடாக்கைச் சரிப்படுத்திக் கொண்டான்.
"மனம் புண்ணாகுமா! மகராஜி நீ. நான் இங்கு மாதச் சம்பளத்துக்கு இருப்பவன். என் கோபம் உன் மனதைப் புண்ணாக்குமா" என்றான் கருப்பையா.
"விஷயத்தைச் சொல்லுகிறாயா? நான் விழுவதற்கு குளம் குட்டை தேடட்டுமா" என்று உறுதியுடன் கேட்டாள் ராதா .
"ஐயோ! அம்மா! அப்படி ஒன்றும் செய்துவிடாதே! சிங்காரவேலருக்கு யார் சமாதானங் கூறுவது" என்று கிண்டல் செய்தான் கருப்பையா.
ராதாவுக்கு விஷயம் விளங்கிவிட்டது. தனக்கும் சிங்காரவேலுவுக்கும் ஏதோ தொடர்பு ஏற்பட்டதாக எண்ணிக் கொண்டுதான் கருப்பையா கோபித்தான் என்பது தெரிந்து விட்டது. அவளையும் அறியாமலே சிரிப்பு வந்தது.
"கருப்பையா! விஷயம் தெரிந்து கொண்டேன். நீ நினைப்பது தவறு. ஆண்டவன் அறியக் கூறுகிறேன். சிங்காரவேலுவுக்கும் எனக்கும் துளியும் நேசம் கிடையாது. நீ இதனை நம்பு. வீண் சந்தேகம் வேண்டாம்' என்றாள் ராதா உறுதியுடன்.
துளியும் தட்டுத் தடங்கலின்றி நிதானமாக ராதா கூறியதைக் கேட்ட கருப்பையாவுக்கு பாதி சந்தேகம் போய் விட்டது.
"கோகிலம் சொன்னாளே ...." என்று ஆரம்பித்தான்.
"கோகிலம் குறும்புக்குச் சொல்லி இருப்பாள்" என்று கூறிக்கொண்டே, ராதா, கருப்பையாவின் இரு தோள் பட்டைகளையும் பிடித்துக் கொண்டே அவன் முகத்தை நோக்கியபடி, "கருப்பையா! நான் ஏதோ இப்படிக் கெட்டுவிட்டேனே தவிர, நான் சுபாவத்தில் கெட்டவளல்ல" என்றாள். கருப்பையாவின் மனம் இளகிற்று; ராதாவின் தலையைத் தடவினான்.
"ராதா ! கண்ணே, உன்னை நான் இழக்க மாட்டேன். உயிர் எனக்கு நீதான்" என்று கொஞ்சினான். ராதா சிரித்தாள். கருப்பையா அவளை அருகிலிழுத்து முத்தமிட்டான்.
"கடக்" என்ற சப்தமும், 'சபாஷ்' என்ற பேச்சும் கேட்டு இருவரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தனர். கையில் காமிராவுடன் சிரித்தபடி சிங்காரவேலன் நிற்கக் கண்டனர்.
"ஆ ! ஐயோ ."
"என்ன! நீயா?"
"பதற வேண்டாம்."
பெருமூச்சுடன் கருப்பையா நின்றான். உடல் துடிக்க ராதா நின்றாள். சிரித்துக் கொண்டே சிங்கார வேலன் நின்றான்.
"நான் உல்லாசப் பிரயாணம் செய்வதே, இவ்வித மான அழகு ததும்பும் காட்சிகளை போட்டோ எடுப்பதற்குத் தான். இயற்கையின் அழகுகள் எனக்கு மெத்தப் பிரியம். அதனைவிட உணர்ச்சிதரும் உல்லாசக் காட்சிகள் என்றால் நான் விடவேமாட்டேன். மலர் அழகுதான். போட்டோ எடுத்தாலும் அழகாகத்தான் இருக்கும். ஆனால் அந்த மலரிடம் வண்டு பறந்து சென்று தேன் உண்டு களிக்கும் காட்சி இருக்கிறதே, ஆ! நான் என்ன சொல்வேன், அதன் ரம்மியத்தை ..." என்று வேலன் பிரசங்கம் செய்ய ஆரம்பித்தான்.
சிவபூசையில் கரடி புகுந்ததுடன், கவி வேறு பாடினால் எப்படி இருக்கும்!
"ராதா, இந்த ஒரு தோட்டக் காட்சிக்கு மட்டும், நியூ தியேட்டர்சார், பத்தாயிரம் கொடுப்பார்கள். கதாநாயகனைத்தான் மாற்றவேண்டும். காட்சியில் குற்றமில்லை; நீ மிக அழகு பட நடித்துள்ளாய்? திகைக்கவேண்டாம். கருப்பையா, முட்டாளுக்கு முத்து கிடைத்ததைப்போல உனக்கு இந்த மங்கை கிடைத்தாள். நீ அதிருஷ்டசாலிதான். ஆனால் உன்னைவிட அதிர்ஷ்டசாலி நா. உறுமாதே . ஊரார் அறியும்படி இந்தப் படத்தை வெளியிட்டால் உன் கதி என்னாகும்? இந்த உல்லாசியின் நிலை என்னாகும்?
"கப்சிப்!! இங்கே நிற்கவேண்டாம். அதோ யாரோ வரும் காலடிச்சத்தம் கேட்கிறது. இன்று இரவு 12 மணிக்கு ராதா, நீ என் அறைக்கு வரவேண்டும். வேண்டாம், வேண்டாம்! நீ வரவேண்டாம்; உன்னை நான் தனியாகச் சந்திக்க மாட்டேன். கருப்பையா, நீ வா, சில நிபந்தனைகள் கூறுகிறேன். அதன்படி நீங்கள் நடக்க வேண்டும்" என்று கண்டிப்பாகக் கூறிவிட்டுச் சிங்காரவேலன் போய்விட்டான்.
ராதாவும் கருப்பையாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர்.
"விதியே! தலைவிதியே!" என்று ராதா விம்மினாள்.
"ராதா ! யாரோ வருகிறார்கள். கவலைப்படாதே. நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று கூறினான் கருப்பையா.
"என்னடி! மெத்த தளுக்குக் காட்டுகிறாய்" என்று இனிய குரலில் இசைத்துக்கொண்டே கோகிலம் அங்கு வந்து சேர்ந்தாள்.
இரவு கருப்பையா, சிங்காரவேலன் அறைக்குச் சென்றான். மடியில் கூரான ஈட்டியுடன், ராதாவின் மானத்தையும் தன் மரியாதையையும் வாழ்வையும் அழிக்கக் கூடிய அந்த வேலனின் உயிரைப் போக்கிவிடுவது என்ற முடிவுடன்.
ஒரு கொலை செய்வதற்கு வேண்டிய அளவு உறுதி அவன் முகஜாடையில் காணப்பட்டது.
வேலன், "வா கருப்பா! சொன்னபடி வந்துவிட் டாயே" எனத் துளியும் தடுமாற்றமின்றி பேசினான்.
கருப்பையாவின் கரம், மடியில் சொருகி வைக்கப்பட்டிருந்த ஈட்டி மீது சென்றது.
வேலனின் கூரிய பார்வை, ஏதோ ஆபத்து இருக்கிறது என்பதை உணர்த்திற்று. ஆனால் அவன் துளியும் அசையவில்லை; படுக்கை மீது உட்கார்ந்தபடியே ஒரு முடிவுக்கு வந்தான்.
சாமர்த்தியமாக கருப்பையாவை ஏமாற்ற வேண்டும்.
"ஓ! கோகிலா, வாயேன் உள்ளே ' ' என்று கூறினான். கோகிலம் வருவதைப்போல பாசாங்கு செய்து கொண்டே.
முரட்டுக் கருப்பையா, சரேலெனத் திரும்பினான். கதவுப் பக்கம். வேலன் புலிபோல அவன் மீது பாய்ந்து மடி யில் இருந்த ஈட்டியைப் பிடுங்கிக் கொண்டான்.
சட்டை கிழிந்துவிட்டது கருப்பையாவுக்கு. தான் முட்டாள் தனமாக நடந்து கொண்டதை எண்ணினான்.
வேலன் இளித்தான். "கருப்பையா! நான் சொல்வதைக் கேள். என்னிடம் உன் முரட்டுத்தனம் பலிக்காது. மூடு கதவை . இப்படி உட்கார்" என்று கட்டளையிட்டான்.
பெட்டியிலிட்ட பாம்பென அடங்கிய கருப்பையா மிகப் பரிதாபத்துடன், "ஐயா, என்னைப் பற்றிக்கூட கவலையில்லை. அந்தப் பெண்ணின் மானம், அதைக் காப்பாற்றும். அவசரப்பட்டு எதுவும் செய்யவேண்டாம்" என்று கெஞ்சினான்.
"கருப்பையா, நான் அவசரப்படுகிற வழக்கமே கிடையாது. தோட்டத்தில் உங்கள் சல்லாபத்தைக் காண எவ்வளவு நேரம் பொறுமையாக இருந்தேன் தெரியுமா? இன்றுந்தான் என்ன, ஈட்டிமுனைக்கு எதிரில் கூட நான் அவசரப் படவில்லையே என்றான் வேலன்.
"அந்தப் போட்டோ - அதனைக் கொடுத்துவிடு. உனக்குக் கோடி புண்ணியம் உண்டு . உன் பிள்ளைக் குட்டிகளுக்குப் புண்ணியம். ஒரு குடும்பத்தைக் கெடுக்காதே" என்று கருப்பையா வேண்டினான். "உளறாதே கருப்பையா ! குடும்பத்தை நானா கெடுத்தேன்" என்று கோபித்தான் வேலன்.
கருப்பையா, வேலன் காலில் விழுந்தான். வேலன், "சரி. சரி, சர்வமங்களம் உண்டாகட்டும்! எழுந்திரு . நான் சொல்வதைக் கேள். முடியாது என்று சொல்லக் கூடாது. நாளைக் காலைக்குள் எனக்கு ஆயிரம் ரூபாய் வேண்டும். கொடுத்தால் நாங்கள் போய்விடுகிறோம். இல்லையேல் நீயும் ராதாவும் போக வேண்டிய இடத்துக்குப் போகத்தான் வேண்டும்" என்றான் வேலன்.
"ஆயிரம் ரூபாயா ... என்னிடம் இருப்பதே கொஞ்சந் தானே," என்றான் கருப்பையா.
"கிடைத்தற்கரிய செல்வத்தைப் பெற்ற நீயா ஒரு ஆயிரம் ரூபாய்க்கு அஞ்சுவது," என்றான் வேலன்.
"சரி," என ஒப்புக் கொண்டான் கருப்பையா. ஆனால் ஆயிரம் ரூபாய் தந்ததும் போட்டோவைத் (நெகடிவுடன்) தன்னிடம் தந்துவிட வேண்டுமெனப் பேரம் பேசினான்.
"அது முடியாது. ஆயிரம் ரூபாய், நான் வெளியே போவதற்கு ! படத்தை நான் வெளியிடாதிருப்பதற்கு, மாதா மாதம் 200 ரூபாய், தவறாமல் என் சென்னை விலாசத்துக்கு அனுப்பிக் கொண்டு வரவேண்டும். நான் கண்டிப்பான பேர்வழி. ஒருமுறை பணம் வருவது தவறினாலும், படம் வெளிவந்தால், என்ன ஆகும் என்பது உனக்கே தெரியும். ராதா கர்ப்பவதியல்லவா! அவள் பிள்ளை தெருவில் அலைய வேண்டித்தான் வரும்" என்று வேலன் கண்டிஷன்கள்" போட்டான்.
"ஐயா! உனக்குக் கருணை இல்லையா" என்று கெஞ்சி னான் கருப்பையா.
"கருணை இருந்தது சில வருஷங்களுக்கு முன்பு. இப் போது கருணை இல்லை. இப்போது உலகமும் உல்லாசமும் எதிரே இருக்கிறது," என்றான் அந்த உல்லாசக் கள்ளன்.
வேறு வழியின்றி கருப்பையா ஒப்புக் கொண்டான்.
மறுதினம் ஆயிரம் ரூபாய். (பாங்கியில் அவன் போட்டு வைத்திருந்த பணம் அதுதான்) கொடுத்தான்.
உல்லாசக் கள்ளர்கள், வீட்டில் எல்லோரிடமும் விடை பெற்றுக்கொண்டு, ஊருக்குப் பிரயாணமாயினர்.
வேலனோ, கோகிலமோ, பேச்சிலோ, நடவடிக்கையிலோ, ராதா கருப்பையா, மர்மக் காதலைப் பற்றிக் கண்டு கொண்டதாக, ராதாவின் புருஷனுக்குக் காட்டிக் கொள்ளவே யில்லை.
"கண்ணே ராதா, போய்வரட்டுமா? ஆண் குழந்தை பிறந்தால் பிரபாகரன் என்று பெயரிடு; பெண் பிறந்தால் பிருந்தா ! கவனமிருக்குமா," என்று கொஞ்சினாள் கோகிலம் ராதாவிடம்.
ராதாவின் புருடன், விருந்தாளிகளை மிக மரியாதையுடன் அனுப்பிவைத்தார். பின் உலகில் அலையும் அவருக்கு மர்ம சம்பவங்கள் என்ன தெரியும், பாபம்!
# # #
கருப்பையாவுக்கும், ராதாவுக்கும் மாதாமாதம் 200 ரூபாய் சேகரிப்பது தவிர வேறு வேலை கிடையாது.
கருப்பையா ஓய்ந்த வேளையில் எல்லாம், எந்தக் கணக்கை எப்படி மாற்றுவது, எப்படி சூது செய்வது என்ற யோசனையிலேயே இருந்தான்.
வீட்டில் தன் புருஷனின் பரம்பரைச் சொத்துக்களைக் கொஞ்சங் கொஞ்சமாக கணவனுக்குத் தெரியாமல் திருடித் திருடி கருப்பையாவிடம் தந்து வந்தாள் ராதா.
செக்கு இழுத்து இழுத்து மாடுகெட, எண்ணெயைத் தடவித் தடவிப் பிறர் மினுக்குவதைப் போல ராதாவும் கருப்பையாவும் பாடுபட்டு, திருடி, சூது, சூழ்ச்சி செய்து பணம் சேர்த்துச் சேர்த்து அனுப்பி அதனை வைத்துக் கொண்டு ஆனந்தமாக விஸ்கியும் பிராந்தியும் வாங்கிக் குடித்துச் சிரித்தான் சிங்காரவேலன்.
"இப்படியும் எனக்குத் தொல்லை வருமா? நீ செய்த வேலைதானே! பாவி! உன்னால் தானே நான் இப்பாடுபடுகிறேன். திருடுகிறேன் ! அவர் என்றைக்கேனும் கண்டுவிட்டால், எங்கே பச்சைக்கல் பதக்கம் என்று கேட்க ஆரம்பித்தால் நான் என்ன செய்வேன்" என்று சிந்தை நொந்து கருப்பையாவைக் கேட்பாள். அவன் பலமுறை சாதகமாகவே பதில் கூறினான். சஞ்சலமும் சலிப்பும் அவனுக்கும் ஆத்திரத்தை மூட்டி விடுமல்லவா? "சரி ! என்னைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். அவன் படத்தைக் காட்டி விடட்டும். நான் ஒன்றும் சந்நியாசி அல்ல! உனக்குத்தான் ஆபத்து. ஓடவேண்டியதுதான் நீ வீட்டை விட்டு" என்று மிரட்டினான்.
"படுபாவி! என்னைக் கெடுத்ததுமின்றி, மிரட்டியுமா பார்க்கிறாய். நீ நாசமாய்ப் போக; உன் குடிமுழுக", என்று ராதா தூற்றினாள். ஆனால், மாதம் முடிகிறது என்றதும், இருவரும் தகராறுகளை விட்டுவிட்டு, பணத்தைச் சேர்த்து அனுப்புவதிலே அக்கரையாக இருப்பார்கள். ஏன்! வயிற்றிலுள்ள குழந்தை வாழ்க்கையில் இழிச்சொல்லோடு இருக்கக்கூடாதே ! அதற்குத்தான்!
"பாவி, படத்தைக்காட்டி, என் முரட்டுக் கணவன் என்னைத் துரத்திவிட்டால் என் குழந்தையின் கதி என்னவாகும். கண்டவர் ஏசுவார்களே! அதோ, அந்தப் பிள்ளை வீட்டைவிட்டு ஓடிவிட்டாளே ராதா, அவள் பிள்ளை," என்றுதானே தூற்றுவார்கள்.
"நான் செய்த குற்றம், என் குழந்தையின் வாழ்க்கையைக் கெடுக்குமே' என்று எண்ணும்போது ராதாவின் நெஞ்சு "பகீர்" என்றாகும். மாதங்கள் ஆறு பறந்தன. மாதம் தவறாது பணம் போய்ச் சேர்ந்தது. ஒரு ஆண் குழந்தையும் ராதாவுக்குப் பிறந்தது. கருப்பையாவின், கணக்குப் புரட்டுக்களும், ராதாவின் திருட்டுகளும் அதிகரித்தன. இருவருக்கும் இடையே சச்சரவுகள் அதிகரித்தது. இவர்களின் நல்ல காலத்திற்கு அடையாளமாக, ராதா புருஷனின் அபின் தின்னும் வழக்கம் அதிகமாகிக் கொண்டே வந்தது.
இதே நேரத்தில் கருணாநந்த யோகீசுரருக்கும், பரந்தாமனுக்கும் சச்சரவு வளர்ந்தது. மனசோகத்தை மாற்ற காவியணிந்த யோகியின் சேவையை நாடிய பரந்தாமன் காவி பூண்டு கருணாநந்தன், காசாசை பிடித்த கயவன் என்பதை உணர்ந்தான். அவனுக்குத் தன் நிலைமையில் வெறுப்பு ஏற்பட்டது.
யோகியைக் கண்டிக்கத் தொடங்கினான். 'ஊரை ஏய்க்க, உருத்திராட்சமா? கண்டவரை மயக்க காவியா? விபூதி பூசிக் கொண்டு, விபரீதச் செயல் புரிவதா?' என்று கேட்க ஆரம்பித்தான். யோகி ஒரு திருட்டு போகி என்பது பரந்தாமனுக்குத் தெரிந்தாலும் இப்படிப்பட்டவனிடம் சிக்கி, வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டோமே, வீணுக்கு உழைத்தோமே' என்று வருந்தினான்.
நான் என் நிலைமையைப் பற்றி மட்டுமே கவனித்தேன். என் சுகம் மன ஆறுதல்! என் அமைதியைப் பற்றி அக்கரை கொண்டேனேயன்றி, என்னிடம் காதல் கொண்டு கட்டுகளில் சிக்கிக் கலங்கிய காரிகையின் கஷ்டத்தைப் போக்க நான் என்ன செய்தேன். அவள் எக்கதியானாள்? அவள் பக்கத்தில் அல்லவா நான் நின்று பாதுகாத்திருக்க வேண்டும்? அதுதானே வீரனுக்கு அழகு. நான் ஒரு கோழை! எனவேதான், கோணல் வழி புகுந்தேன்" என்று மனங் கசிந்தான்.
நாளாகவாக, பரந்தாமனுக்குக் கருணா நந்த யோகியினிடம் வெறுப்பும் கோபமும் வளர்ந்தது. உலகின் முன் அவனை இழுத்து நிறுத்திவிட வேண்டுமென்று எண்ணினான்.
இந்நிலையில், சென்னை வந்து சேர்ந்தார் கருணா நந்தர் . தமக்கெனப் புதிதாகத் தயாரிக்கப்பட்டிருந்த மடத்தில் தங்கினார்.
சென்னை, நாகரிகத்திலும் படிப்பிலும் மிக முன்னேறிய நகரமாயிற்றே, இங்கு யோகியின் தந்திரம் பலிக்காது என்று பரந்தாமன் எண்ணினான். ஆனால் சென்னையைப் போல கருணாநந்தருக்கு ஆதரவு தந்த ஊரே இல்லையெனலாம். அவ்வளவு ஆதரவு தந்துவிட்டது சென்னை.
சீமான்களெல்லாம் சீடர்களாயினர். மேனாட்டுப் படிப்பில் தேறியவர்கள், கல்லூரி ஆசிரியர்கள், பத்திரிகைக் காரர்கள் யாவரும் சீடர்களாயினர்.
கருணாநந்தரின் தோழரொருவர், ஒரு பிரபல பத்திரிகையில் இருந்தார் . அவர் யோகியின் குணாதிசயங்களைப் பற்றி, கட்டுரைகள் வெளியிட்டார். அவருடைய 'தத்துவமே உலகில் இனி ஓங்கி வளரு மென்றார். அவர் சர்வ மத சமாஜத்தை உண்டாக்குவார்' என்று கூறினார்கள் பலர்.
'அவருடைய கொள்கைக்கும், அரவிந்தர் கொள்கைக்கும் அதிக வித்தியாசமில்லை' என்று வேறொருவர் கூறினார்.
மடத்தின் வாயிலில் மணி தவறாது மோட்டார்கள் வரும். விதவிதமான சீமான்கள் அவருடைய பக்தி மார்க்கத்தைக் கேட்டு ஆனந்திப்பர்.
பரந்தாமன் திடுக்கிட்டுப் போனான். சென்னையின் நாகரிகம் அதன் கட்டடங்களிலும், மக்கள் உணவிலும் உல்லாச வாழ்விலும் காணப்பட்டதேயன்றி, உள்ளத்திலே மிக மிக குருட்டுக் கொள்கைகளே இருப்பதைக் கண்டான். உலகை ஏமாற்றும் ஒரு வஞ்சகனிடம் "வரம்" கேட்க பலர் வருவது கண்டு சிந்தை மிக வெந்தான்.
! ஆ ! பகட்டு வேஷத்துக்குப் பாழும் உலகம் இப்படிப் பலியாகிச் சீரழிகிறதே' என்று வாடினான். இனி இந்த வஞ்சக நாடகத்தில் தான் பங்கு கொள்ளக்கூடாது என்று தீர்மானித்தான். நாள் முழுவதும் அத்தீர்மானம் வளர்ந்து வலுப்பட்டது. ஒருநாள் நடுநிசியில் பரந்தாமனின் உள்ளம் பதைபதைத்தது.
நேரே போகியின் அறைக்குச் சென்று, எச்சரித்துவிட்டு மடத்தைவிட்டு விலகிவிடுவது என்று முடிவு செய்து கொண் டான்.
கோபத்துடன் எழுந்தான்! கொத்துச்சாவியை எடுத்தான். பெட்டியைத் திறந்தான். இரண்டு வெள்ளை வேட்டிகளை எடுத்துக் கொண்டான். காவியைக் களைந்து வீசினான். வெள்ளை வேட்டிகளைக் கட்டிக் கொண்டான். உருத்திராட்ச மாலைகளை எடுத்தெறிந்தான்.
நேரே யோகி படுத்துறங்கும் அறைக்குச் சென்றான். கதவு சாத்தப்பட்டிருந்தது. ஆனால் கதவிடுக்கில் வெளிச்சம் தெரிந்தது.
அடிமேல் அடி எடுத்து வைத்து, கதவருகே சென்று உள்ளே நடப்பதை நோக்கினான்.
யோகி, மங்கையொருவளுடன் சல்லாபித்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.
"கோகிலா ! நீ உன்னை உதவாக்கரை என்று ஒதுக்கித் தள்ளினாயே பார் இப்போது" என்று யோகி கூறிட, 'இவ்வளவு சமர்த்து உமக்கு இருப்பதைக் காணவே நான் உம்மை முன்னம் வெறுத்தேன்" என்று கோகிலம் என்று அழைக்கப் பட்ட பெண் கூறினாள்.
பரந்தாமனுக்கு ஆத்திரம் பொங்கிற்று. கதவைக் காலால் உதைத்து உள்ளே சென்று யோகியின் கன்னத்தில் அறையலாமா என்று தோன்றிற்று. "பொறு, மனமே பொறு" என்று நின்றான்.
"அழகாபுரி உமக்குத் தெரியுமோ" என்றாள் கோகிலம்.
"அங்கே என்ன அதிசயம்" என்றார் யோகி.
"அங்கே, ராதா என்றொரு பெண் ..." என்று கோகிலம் கூறலானாள்.
தன் காதலி ராதாவின் பெயர் உச்சரிக்கப்பட்டவுடன் பரந்தாமன் மிக ஜாக்ரதையாக உள்ளே என்ன பேசுகிறார்கள் என்பதை உற்றுக் கேட்கத் தொடங்கினான். யோகியின் மடி மீது சாய்ந்தபடியே, அவள் ராதாவின் ரசமுள்ள கதையைக் கூறலானாள்.
கோகிலம், ராதாவின் சேதி பூராவையும், ஒன்று விடாது கூறினாள். ஒரு "போட்டோ" மூலம் தன் அண்ணன், அவளை மிரட்டுவதைக் கூறியபோது, 'இது ஒரு பிரமாதமா? இருப்பதைக் காட்டி உன் அண்ணன் மிரட்டுகிறான். யாரவள், ராதாவா, கட்டழகி" என்று கொஞ்சினான் யோகி வேடம் பூண்ட போகி.
"உன் சமர்த்தை உரைக்க ஒரு நாக்கும் போதாதோ" என்று இசைத்தாள் கோகிலம் கிண்டலாக.
"கேள் கோகிலா! இருப்பதைக் கண்டு மிரள்வது இயல்பு. இல்லாததைக் கண்டு மிரள்வதை என்னென்பேன் பேதை மக்களிடம்
பிடிப்பான், அடிப்பான், கடிப்பான், உதைப்பான்
பேசினாயா நமச்சிவாயா. என்பான்
பூசினையோ திருநீறு எனக்கேட்பான்.
என்று கேட்டு, பற்களை நறநறவெனக் கடித்து, மீசைகள் படபடவெனத் துடிக்க, அந்த நரகலோகத் தூதர்கள், சிவ பக்தி அற்றவனின் சிரத்தில் குட்டி, கரத்தில் வெட்டி, எரிகிற கொப்பரையில் எறிந்து, சுடுகின்ற மணலில் உருட்டி, செந்தேள் கருந்தேள் விட்டுக் கொட்டவைத்து சித்திரவதை செய்வார். எனவே மெய்யன்பர்களே.
"மந்திரமாவது நீறு; வானவர் மேலது நீறு"
என்ற மணிமொழிப்படி, விபூதி ருத்திராட்ச மணிந்து வில்வா பிஷேகனை வேண்டிட வேண்டும்" என நான் நரகலோக காட்சி பற்றி பிரசங்கிக்கும் போது அட்டா, இந்த மக்கள் தான் எவ்வளவு நம்புகிறார்கள். எத்தனைப் பயம்! இதை விட ராதாவின் பயத்தை நான் கண்டு ஆச்சரியப்பட்டேன்' - என்றான் யோகி.
"அதுவுஞ் சரிதான்" என்றாள் கோகிலம்.
"ஆகவே நீ என்னை அணைத்திட வாடி.
அணைத்திட வாடி ஆனந்தத் தோடி பாடி"
என்று யோகி ஜாவளி பாடினான்; சரசமாடினான்; ஜடையைப் பிடித்திழுத்தான். அவள் இவன் ருத்திராட்ச மாலையைப் பிடித்திழுத்தாள். பொட்டைக் கலைத்தான் இவன். அவள் திருநீறைத் துடைத்தழித்தாள். கிள்ளினான்! கிள்ளி னாள்; நெருங்கினான்! நில் என்றாள். சிரித்தான்! சீறு வதுபோல் நடித்தாள். எழுந்தான்! அவள் படுத்தாள்.
எட்டி உதைத்தான் கதவைப் பரந்தாமன், ஆத்திரம் தாளமாட்டாது!! "மட்டி மடையா!" எனத் திட்டினான். மாது கோகிலம் மருண்டாள் . மானத்தைப் பறித்திடுவேன், உன் சூது மார்க்கத்தை அழித்திடுவேன், ஊரை இதோ எழுப்பிடுவேன், உன் சேதி உரைத்திடுவேன்" என்று கோபத்துடன் கூறினான் பரந்தாமன்.
"பரந்தாமன் ! பொறு பொறு! பதறாதே! ஏதோ நடந்தது நடந்துவிட்டது. இவள் என் சொந்த மனைவி கோகிலம் ! கூறடி உள்ளதை. நான் குடும்பம் நடத்த முடியாது திகைத்தேன்; பாடுபட முயற்சித்தேன். உலகம் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே இவ்வேடம் பூண்டேன். என் மானத்தைக் காப்பாற்று. உன் காலடி விழுவேன்" என்று கருணாகரன் அழுதான்.
மடத்துக்கென வரும் காணிக்கையை எண்ணினான்! "ஐயோ, அது வராவண்ணம் இப்பாவிப் பரந்தாமன் செய்திடுவானே, என் செய்வது" என்று பயந்தான்.
"மோசக்கார வேடதாரியே கேள் ! இனி உன் முடிவு காலம் கிட்டிவிட்டது. நீ பிழைக்க வேண்டுமானால், அந்த ராதா போட்டோவை என்னிடம் தந்துவிட ஏற்பாடு செய். இல்லையேல் உன்னை, கரும்புள்ளி, செம்புள்ளி குத்திக் கழுதை மீது ஏற்றி ஊர்வலம் வரும்படிச் செய்வேன், உஷார்" என்றான் பரந்தாமன்.
"ராதாவின் போட்டோவிலே என்ன ரசம் கண்டீர்" எனச் சாகஸமாகக் கேட்டாள் கோகிலம்..
" அதிரசம்" என்று அலட்சியமாகப் பதிலளித்தான் பரந்தாமன்.
யோகி, மங்கையின் மலரடி தொழுதான். அவள் முதலில் மறுத்தாள். பிறகு திகைத்தாள். கடைசியில் அண்ணனிடமிருந்து அப்படத்தைத் திருடிக் கொண்டு வருவதாகக் கூறினாள்.
"புறப்படு" என்றான் பரந்தாமன்.
"போவோம்" என்றாள் கோகிலம்.
நள்ளிரவு! கோகிலமும் பரந்தாமனும் மெள்ள, சிங்காரவேலன் ஜாகை சென்றனர்.
கோகிலம், படத்தை அதன் "நெகடிவ்" உள்பட, திருட்டுத்தனமாக எடுத்து, பரந்தாமனிடம் கொடுத்து விட்டு, "நீ மிரட்டினதற்காக நான் இதனைத் தருவதாக எண்ணாதே . முன்னாளில் நீ ராதாவிடம் கொண்ட காதல் இவ்வளவு காலத்துக்குப் பிறகும் அணையாதிருப்பது கண்டு, மகிழ்ந்தே இதனைத் தருகிறேன். நான் அறிவேன் உன் சேதி யாவும். அன்றொருநாள் தோட்டத்தில் அவள் எல்லாம் என்னிடம் கூறினாள். ஆனால் நான் நீ காதல் இழந்ததுடன், வேறு வாழ்வில் புகுந்திருப்பாய் என்றே எண்ணினேன். இன்றுதான் கண்டேன், அன்று அவள் தீட்டிய சித்திரம் இன்னமும் இருப்பதை" என்று மிகுந்த வாஞ்சையுடன் கூறினாள்.
பரந்தாமனின் கண்களில் பல துளி நீர் சரேலென வந்தது.
"ஐயையோ! புளிய மரத்தைப் பாருடா பொன்னா" என்று அலறினான் பொம்மன்.
"பிணம் தொங்குதேடா, பிடிடா ஓட்டம் தலையாரி வீட்டுக்கு" என்று கூறினான் பொன்னன். கரியா, வராதா காத்தா, முத்து எனக் கூக்குரல் கிளம்பிற்று. அமிர்தம், கமலம், ஆச்சி, அகிலாண்டம் என்கிற படைகள் வந்தன. மரத்திலே தொங்கிய பிணம், காற்றிலே ஊசலாடிற்று. அதைக் கண்டவர்களின் குடல் பயத்தால் நடுங்கிற்று.
கூவாதே ! கிட்டே போகாதே!' என்றனர் சிலர்.
"அடி ஆறுமாதம் கர்ப்பக்காரி. அகிலாண்டம் இதைப் பார்க்கக் கூடாது," என்று புத்தி புகட்டினாள் ஒரு மாது.
"ஐயையோ! இது என் அக்கா புருஷனாச்சே' ' என்று அலறினாள் வேறொரு வீரி.
"ஆமாம்! ஆமாம்! கருப்பையாதாண்டா ! அடடா! இது என்னடா அநியாயம்?" என்றான் பொம்மன்.
தலையாரி வந்தான். ஊர் கூடிற்று. கருப்பையாவின் மனைவியும், மக்களும், மார்பிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு கூடிவிட்டனர்.
கருப்பையா புளியமரத்துக் கிளையில் பிணமாகத் தொங்குவது கேட்ட ராதாவின் முகம் வெளுத்துவிட்டது.
அவள் புருஷன் அழுதேவிட்டான்.
ஊர் முழுவதும் ஒரே அமர்க்களந்தான்.
ஏன் கருப்பையா தற்கொலை செய்துகொண்டான் என்பதை ஊர் அறியாது.
வருட முடிவில், வீட்டுக்கணக்குப் பார்ப்பார். அதிலே ஆயிரத்துக்கு மேலே துண்டு விழுந்துவிட்டது. தன் மோசம் வெளிக்கு வரும். தன்பாடு பிறகு நாசந்தான். இந்நிலையில் மாதக் கப்பம் கட்டத் தவறிவிட்டது. மருட்டி உருட்டிக் கடிதம் வந்தது. ராதா கைக்கு எப்பொருளும் சிக்கவில்லை. இருவருக்கும் சண்டையோ நிற்கவில்லை. ராதா, சற்று கடுமையாகப் பேசிவிட்டாள். கருப்பையாவின் சித்தம் கலங்கிவிட்டது. "ஒரு முழம் கயிறுக்குப் பஞ்சமா. ஊரில் ஒரு மரமும் எனக்கில்லையா" என ராதாவிடம் வெறுத்துக் கூறினான். அப்படியே செய்தும் விட்டான். பிணமானான்! இரண்டொரு மாதத்தில் புளிய மரத்துப் பிசாசுமாவான்.
ராதாவின் நிலைமைதான் என்ன! சிங்காரவேலனின் மிரட்டல் கடிதம் அவளைச் சிதைக்கத் தொடங்கிற்று.
ஊர்க்கோடியில் ஒரு மாந்தோப்பு. அதில் உள்ள கிணறு ஆழமுள்ளது. அதுதான் தனக்குத் துணை என முடிவு செய்தாள் ராதா. அந்த முடிவு செய்தது முதற்கொண்டு அவள் முகத்தில் வேதனை தாண்டவமாடிற்று. விதி என்னை இப்படியும் வாட்டுமோ என்றெண்ணுவாள். வேதனைக்கோ நான் பெண்ணாய்ப் பிறந்தேனோ என்பாள். கணவன் தன் மனைவியின் கலக்கத்தை அறியான்; அவள் உடல் இளைப் பது கண்டு, மருந்து கொடுத்தான்.
# # #
பரந்தாமன் போட்டோவை எடுத்துக்கொண்டு அழகா புரிக்குப் புறப்பட்டான். இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்தான். இடியும் மழையும் இணைபிரியாது அழகாபுரியில் அவதி தந்தது. குளம் குட்டை நிரம்பி வழிந்து ஓடிற்று. பெருங்காற்று அடித்தது. சாலை சோலையை அழித்தது. மரங்கள் வேரற்று வீழ்ந்தன. மண்சுவர்கள் இடிந்தன. மாடு கன்றுகள் மடிந்தன . வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிற்று. ஊர் தத்தளித்தது. வந்துள்ள வெள்ளம், தன்னைக் கொள்ளை கொண்டு போகவேண்டும் என ராதா மாரியை வேண்டினாள்.
இருட்டும் வரை ஊர்ப்புறத்தே ஒளிந்திருந்து, பிறகு மெள்ள நடந்து ராதாவின் தாய்வீட்டை அடைந்தான் பரந்தாமன்.
நரைத்து நடை தளர்ந்துபோன அம்மாது, விதவைக் கோலத்துடன் இருந்தாள்.
கருத்து மிரட்டும் கடு மழையில் "எங்கிருந்து தம்பி நீ வந்தாய்" என்றாள். "வந்தேன் ஒரு முக்கியமான வேலையாக. நான் ராதாவைப் பார்க்க வேண்டும்," என்றான் பரந்தாமன்.
"ராதாவையா? நீ பழைய ராதாவென எண்ணாதே யப்பா . அவள் என் மகள் தான். ஆனாலும் பெரிய பாவியானாள். அவள் முகத்தில் நான் விழிப்பதே இல்லை. ஊர் சிரித்துவிட்டது" என்று சலிப்புடன் தாய் கூறினாள்.
"ராதா என்ன செய்தாள்?" என்றான் பரந்தாமன்
"என்ன செய்தாளா? நல்ல கேள்விதான்!" என்று வெறுத்துக் கூறினாள் தாய்.
"இதோ, இதைப்பார். இதைத்தானே நீ கூறுகிறாய் என்று கூறிக்கொண்டே, போட்டோவைக் காட்டினான் தாயிடம்.
'ஆ! படமும் எடுத்தார்களா!" என்று திகைத்தாள் தாய்.
"பயப்படாதே அம்மா, இதனைக் காட்டத்தான் நான் ராதாவைப் பார்க்க வேண்டும்" என்றான் பரந்தாமன் "அநியாயம்! நீயாவது இந்தப் படத்தையாவது அவளிடம் காட்டுவதாவது, வெட்கக்கேடு" என்றாள் தாய்
"அம்மா! நீ விஷயமேதுமறியாய். இந்தப் படத்தை ஒரு போக்கிரி வைத்துக்கொண்டு, ராதாவை மிரட்டிக் கொண்டிருந்தான். பாவம், நம் ராதா, எவ்வளவு பயந்தாளோ, பதைத்தாளோ, அழுதாளோ, நமக்கென்ன தெரியும். என்னிடம் இது தற்செயலாகச் சிக்கிற்று. இதனை ராதாவிடமே கொடுத்துவிட்டால் அவள் மனம் நிம்மதியாகும்!" என்றான் பரந்தாமன்.
"தம்பி, பரந்தாமா! உனக்குத்தான் அவள் மீது எவ்வளவு ஆசை. உம்! உன்னைக் கட்டிக் கொண்டிருந்தால் அவளுக்குப் பாடும் இல்லை, பழியும் இல்லை " என்றாள் தாய்.
"ஆமாம்! எனக்கு ராதா கிட்டாது போனதால் தான் வாழ்வுமில்லை, வகையுமில்லை' என்று அழுதான் பரந் தாமன்.
"நாளைக் காலையில் நான் சேதிவிடுத்து, அவளை இங்கு வரவழைக்கிறேன். நீ உடையைக் களைத்துவிட்டு, வேறு துண்டு உடுத்திக்கொண்டு படுத்துறங்கு" என்று வேதவல்லி யம்மை கூறினாள்.
"ஆகட்டும்" என்றான்; ஆனால் அழுத கண்களுடனும் நனைந்த ஆடையுடனும் படுத்துப் புரண்டான். அலைச்சலாலும், அடைமழையில் நனைந்ததாலும், மன மிக நொந்ததாலும், பரந்தாமனுக்குக் காய்ச்சல் வந்துவிட்டது. கண் திறக்கவும் முடியாதபடி காய்ச்சல். ஊரில் மழையும் நிற்க வில்லை. உடலில் சுரமும் நிற்கவில்லை . ஆறுகள் பாலங் களை உடைத்துக் கொண்டு ஓடின! வயல்கள் குளமாயின. செயல் மறந்து படுத்திருந்தான் பரந்தாமன்.
ஜுரம் முற்றிற்று. உடலும் திடீரென சிவந்தது. வேத வல்லி தனக்குத் தெரிந்த சில்லரை வைத்தியமெல்லாம் செய்து பார்த்தாள். ஒன்றுக்கும் ஜுரம் கேட்கவில்லை.
பரந்தாமன் அலற ஆரம்பித்தான். வேதம் அழுது கொண்டிருந்தாள். ராதாவுக்குச் சொல்லி அனுப்பிப் பயனில்லை. 'எப்படி நான் அவர் முகத்தைப் பார்ப்பேன்' என்று இடிந்து போனாள் ராதா. பரந்தாமனுக்கு ஜுரம் குறைந்தது போல் காணப்பட்டது. ஆனால் அம்மை வார்த்துவிட்டது. சிவந்த அவன் மேனியில் சிவப்புச் சித்திரங்கள் பல நூறு ஆயிரம் திடீர் திடீரெனத் தோன்றின. மயக்கமும், மருட்சியும் அதிகரித்தன. குளறலும் குடைச்சலும் ஆரம்பமாயிற்று. புரண்டு புரண்டு படுத்ததால் அம்மை குழைந்துவிட்டது. பார்க்கவே பயங்கரமாக இருந்தது பரந்தாமனை.
வேதவல்லி வேப்பிலையும் கையுமாக அவன் பக்கத்தில் வீற்றிருந்தாள்.
அம்மையின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க, பரந்தாமனின் நிலை மோசமாகிக் கொண்டே வந்தது. வேதவல்லி வேப்பிலை கொண்டு வீசி, உபசாரம் செய்தாள். மாரியோ கேட்கவில்லை; பரந்தாமனின் மேனியில் துளி இடங்கூடப் பாக்கி இல்லை. எங்கும் சிகப்புப் பொட்டுகள், பூரித்துக் கொண்டிருந்தன. பரந்தாமனின் உடல் எரிச்சல் சொல் லுந்தரமன்று. அவன் அம்மைத் தழும்புகளைத் தேய்த்து விடுவான், தழும்புகள் குழைந்துவிடும். வேதவல்லி "ஐயோ அபசாரம், அபசாரம் மாரி ! கோபிக்காதே- மகன் மீது சீறாதே. மாவிளக்கு ஏற்றுகிறேன்" என்று வேண்டுவாள். மாரிக்கு என்ன கவலை.
இரவு பத்து மணிக்கு, ஒரு உருண்டை அபினெடுத் தாள் ராதா. பாலில் கலக்கினாள். நேரே படுக்கையறை சென்றாள். பாதி மயக்கத்தில் படுத்திருந்த அவள் கணவன் 'ராதா! எனக்கேண்டி கண்ணே இவ்வளவு பால்! நீ கொஞ்சம் சாப்பிட்டால் தான்" என்று கூறினான் ; கெஞ்சினான். "வேணாமுங்கோ, சொல்றதைக் கேளுங்க. நான் இப்போதான், பெரிய டம்ளர் நிறைய பால் சாப்பிட்டேன்' என்று சாக்குக் கூறினாள் ராதா.
அந்த நேரத்திலே அவனுக்கு ஏதோ குஷி! விளையாட வேண்டுமென்று தோன்றிவிட்டது.
"நீ குடித்தால் தான் நான் குடிப்பேன்" என்று கூறி விட்டான்.
"பால் ஆறிப்போய் விடுகிறதே"
"ஆறட்டுமே, யாருக்கென்ன?"
"விளையாட இதுதானா சமயம்."
"சரசத்துக்குச் சமயம் வேண்டுமோ"
"சின்ன பிள்ளைபோல் விளையாட வேண்டாம். எனக்குத் தூக்கம் வருகிறது. நீங்கள் பால் குடித்துவிட்டால் படுத்துத் தூங்கலாம்."
"தூங்க வேண்டுமா! ஏன் நான் ஆராரோ ஆராரிரோ பாடட்டுமா ! தொட்டிலிலே படுக்க வைக்கட்டுமா" என்று கூறிக்கொண்டே ராதாவைத் தூக்க ஆரம்பித்துவிட்டான், கணவன். ராதாவுக்குத் தன்னையும் அறியாமலே ஒரு சிரிப்பு வந்துவிட்டது.
"ஐயையோ! இதேது இவ்வளவு சரசம். என்ன சங்கதி! பால்யம் திரும்பிவிட்டதோ" என்று கேட்டுக் கொண்டே "இதோ பாருங்கள் இப்படி. என் மீது உமக்கு ஆசை தானே' என்றாள்.
தலையை வேகமாகக் கிழவன் அசைத்தான்.
"சத்தியமாக, ஆசைதானே" என்று கேட்டாள் ராதா.
"சாமுண்டி சாட்சியாக நிஜம்" என்றான் கிழவன்.
"அப்படியானால் நான் சொல்வதைக் கேட்க வேண்டும். பாலைக் குடித்துவிட்டுப் பிறகு பேசுங்கள்" என்றாள் ராதா.
"ஊ... ஊம் நான் மாட்டேன். நீ கொஞ்சமாவது குடிக்க வேண்டும்" என்றான் கிழவன். சொல்லிக் கொண்டே பால் செம்பை, ராதாவின் வாயில் வைத்து அழுத்திக்கொண்டே விளையாடினான். கொஞ்சம் பால் உள்ளேயும், கொஞ்சம் அவள் மேலாடையிலும் விழுந்தது.
"இப்போ சரி! உன் உதடுப்பட்ட உடனே இந்த பால் அமிர்தமாகிவிட்டது. இனி ஒரு சொட்டுப் பால் கூட விட மாட்டேன்" என்று கிழவன் கொஞ்சுமொழிக் கூறிக் கொண்டே பாலைக் குடித்தான். பக்கத்தில் படுத்த ராதாவை நோக்கிச் சிரித்தான்.
"ஆலமர மறங்கக் குட்டி அடிமரத்தில் வண்டுறங்க, உன் மடிமேலே நானுறங்க. குட்டி என்ன வரம் பெற்றே னோடி" என்று பாடத் தொடங்கினான். ராதா, தனக்குத் தூக்கம் வருவதாகக் கூறினாள். "பார்க்கலாமா ! யார் முதலில் தூங்குவதென்று' என்று பந்தயங் கட்டினான் கணவன்.
இரண்டொரு விநாடிகளில் ராதா குறட்டை விட்டாள். அது வெறும் பாசாங்கு . கிழவன் அவள் பாசாங்கு செய்வதைக் கண்டு கொண்டான். அவளுடைய காதில் சிறு துரும்பை நுழைத்தான். அவள் சிரித்துக்கொண்டே எழுந்து விட்டாள்!
"என்னை ஏமாற்ற முடியுமோ குட்டி, என்னிடம் சாயு மோடி என்று பாடினான். இரண்டொரு விநாடியில் குறட்டை விட்டான். பாசாங்கு அல்ல! நிஜம். பாலில் கலந்திருந்த அபின் வேலை செய்யத் தொடங்கிவிட்டது. ராதா, கணவனைப் புரட்டிப் பார்த்தாள். எழுந்திருக்க வில்லை. பிறகு, அவள் படுக்கையை விட்டு எழுந்து, பெரிய பச்சை சால்வையொன்றை எடுத்துப் போர்த்திக் கொண்டு புறக்கடை கதவைத் திறந்து கொண்டு, கழனிப் பக்கம் நடந்தாள். இருட்டு! தவளையின் கூச்சல் காதைத் துளைத்தது. சேரும் நீரும் கலந்த வழி! தொலை தூரத்தில் நரியின் ஊளை. ஆங்காங்கு, வீட்டுப் புறக்கடைகளில் கட்டி வைக்கப் பட்டிருந்த மாடுகள் அசைவதால் உண்டாகும் மணி ஓசை, மர உச்சியில் தங்கி ஆந்தை கூச்சலிட்டது. ராதா பயத்தையும் மறந்து நடந்தாள். கணவனின் பிடிவாதத்தால், பாலைக் கொஞ்சம் பருகியதால், அபின் அவளுக்கு மயக்கத்தைத் தந்தது. அதையும் அவள் உணர்ந்தாள். ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் நடந்தாள். எங்கே ? தன் தாய் வீட்டுக்கு . ஏனெனில் பரந்தாமன் பிழைப்பதே கஷ்டம். அவன் உயிர் போகும் முன்னம் ராதா வந்து பார்த்துவிட்டுப் போனால் தான் போகிற பிராணனாவது சற்று நிம்மதியாகப் போகும் என ராதாவுக்கு அவள் தாய் சேதி விடுத்திருந்தாள். எனவேதான் ராதா பதைத்துக் கணவனுக்கு அபின் கலந்த பால் கொடுத்துவிட்டுப் பறந்தாள், தன் காதலனைக் காண.
"ராதா வரவில்லையே, ராதாவுக்கு என் மீது கோபமா? ஆம்! நான் அவள் வாழ்விற்கே ஒரு சகுனத் தடைபோல வந்தேன். ராதா என் மனதைக் கொள்ளை கொண்ட ராதா" என்று பரந்தாமன் அலறிக் கொண்டிருந்தான்.
கண் இரப்பை மீதும் அம்மை இருந்ததால் பரந்தாம னுக்குக் கண்களைத் திறப்ப-தென்றாலும் கஷ்டம். திறந்ததும் வலிக்கும். வலித்ததும் மூடுவான். "வந்தாளா ராதா?" என்று கேட்பான்.
"தம்பி, வருவாள் பொறு; சற்றுத் தூங்கு" என் பாள் ராதாவின் தாய்.
"தூக்கம் ! எனக்கா? அம்மணி நான் சொல்கிறேன். ராதா இங்கு வரமாட்டாள்; நானே அங்கு செல்கிறேன்."
"போனால் என்ன! அவள் கணவன் என்னைக் கொல்வானா! கொல்லட்டுமே! நான் செத்துதான் பல வருஷங்க ளாயிற்றே.
"எனக்கு இல்லாத சொந்தம் அவனுக்கா?"
"தாலி கட்டியவன் அவன் தான்! ஆனால் அவளுடைய கழுத்தின் கயிறுதானே அது! நான் அவள் இதயத்தில் என் அன்பைப் பொறித்துவிட்டேன். எனக்கே அவள் சொந்தம்"
"ஓ! ஊரைக்கேள், ராதா யார் என்று என்பானோ! ஊரைக் கேட்டால், ஊராருக்கு என்ன தெரியும்? உள்ளத் தைக் கேட்டுப் பார்க்கட்டுமே! ஏதோ இங்கே வா அம்மா இப்படி. நீயே சொல், ராதா எனக்குச் சொந்தமா? அந்தக் கிழவனுக்கா ?"
"யாருக்கம்மா சொந்தம் ! கொண்டுவா ராதாவை! ஒரு க்ஷணம் விட்டு வைக்க மாட்டேன். என் ராதா, என்னிடம் வந்தே தீரவேண்டும்" என்று பரந்தாமன் அலறினான். கப்பல் முழுகுவதற்கு முன்பு, கடல் நீர் அதிகமாக உள்ளே புகும். அதுபோல, பரந்தாமன் இறக்கப் போகிறான்; ஆகவே தான் அவன் எண்ணங்களும் மிக வேகமாக எழுகின்றன என வேதவல்லி எண்ணி விசனித்தாள்.
ராதாவைப் பெற்றவள் அவள். அவளே ராதாவை கிழவனுக்குக் கலியாணம் செய்து கொடுத்தாள் . பரந்தாமனோ, 'ராதா யாருக்குச் சொந்தம் கூறு' எனத் தன்னையே கேட்கிறான். வேதவல்லி என்ன பதில் சொல்வாள்?
"கதவைத் தட்டுவது யார்?"
"அம்மா! நான்தான் ராதா! "
"வந்தாயா! கண்ணே வா, வந்து பாரடி அம்மா பரந்தாமனின் நிலையை" என்று கூறி, ராதாவை வேதவல்லி அழைத்து வந்தாள்.
பரந்தாமனைக் கண்டாள் ராதா ! அவள் கண்களில் நீர் பெருகிற்று.
உள்ளம், ஒரு கோடி ஈட்டியால் ஏககாலத்தில் குத்தப் பட்டது போல் துடித்தது. குனிந்து அவனை நோக்கினாள்.
அந்த நேரத்தில் பரந்தாமனின் எண்ணம், அன்றொரு நாள் ஜுரமாக இருந்தபோது ராதாவுக்கு முத்தமிட்ட காட்சியில் சென்றிருந்தது. அதனை எண்ணிப் புன்சிரிப்புடன், அவன் மீண்டும் உளறினான். "ராதா! நான் உன்னைக் காதலிக்க, நீ என் பாட்டனுக்குப் பெண்டானாயே, உன்னை விடுவேனோ ! ஒரு கயறு உன்னை என்னிடமிருந்து பிரித்து விடுமா ! என்னைவிட அக்கயறு என்ன பிரமாதமா? வா! ராதா ! வந்துவிடு!" என்று உளறினான்.
"'தம்பி பரந்தாமா, இதோ இப்படிப் பார். ராதா வந்திருக்கிறாள்" என்று வேதவல்லி கூறினதும், பரந்தாமன், "யார் ராதாவா, இங்கேயா" என்று கேட்டுக் கொண்டே கண்களைத் திறந்தான், ராதாவைக் கண்டான். படுக்கையிலிருந்து தாவி, தன் கரங்களால் ராதாவை இழுத்தான். ராதா தழுதழுத்த குரலுடன் கண்களில் நீர் ததும்ப, "வேண்டாம், வேண்டாம் ! என்னைத் தொடாதீர்கள்" என்றாள்.
பரந்தாமனின் விசனம் அதிகமாகிவிட்டது. கரங்களை இழுத்துக் கொண்டான். "மறந்துவிட்டேன் ராதா ! அம்மை தொத்து நோய் என்பதை மறந்துவிட்டேன். என் பிரமையின் பித்தத்தில், எனக்கு எதுதான் கவனத்துக்கு வருகிறது" என்று சலிப்புடன் கூறினான். ராதா பதைபதைத்து, "பரந்தாமா, தப்பாக எண்ணாதே. நான் உன்னைத் தொட்டால் அம்மை நோய் வந்துவிடுமென்பதற்காகக் கூற வில்லை. நீ தொடும் அளவு பாக்கியம் எனக்கில்லை. நான் ஒரு பாவி" என்றாள். புன்னகையுடன் பரந்தாமன் "நீயா பாவி? தப்பு, தப்பு. ராதா நான் பாவி, நான் கோழை, என்னால் தான் நீ துயரில் மூழ்கினாய்" என்று கூறிக்கொண்டே சிங்காரவேலனிடமிருந்து வாங்கிக்கொண்டு வந்த போட்டோவை ராதாவிடம் கொடுத்தான். ராதா சிறிதளவு திடுக்கிட்டுப் போனாள் . பரந்தாமனைப் பார்த்து "இந்தப் படத்தைக் கண்ட பிறகுமா, என் மீது உனக்கு இவ்வளவு அன்பு. நான் சோரம் போனதைக் காட் டும் சித்திரங்கூட உன் காதலை மாற்றவில்லையா" என்று கேட்டாள் .
"ராதா, கல்லில் பெயர் பொறித்துவிட்டால், காற்று அதனை எடுத்து வீசி எறிந்து விடுமா!" என்றான் பரந்தாமன். அவனுடைய இருதய பூர்வமான அன்பு கண்ட ராதாவால் அழுகையை அடக்க முடியவில்லை. இவ்வளவு அன்பு கனியும் பரந்தாமனிடம் வாழாது வாழ்க்கையைப் பாழாக்கிக் கொண்டு வழுக்கி விழுந்ததை எண்ணினாள். ஆனால் அவள் என் செய்வாள்?
சமுதாயத்தில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக உருக்கி ஊற்றப்பட்டிருக்கும் பழக்க வழக்கம் சமூகத்தை ஒரு சருக்கு மரமாக்கிவிட்டது. அதில் தம்மிஷ்டப்படி செல்ல விரும்பிச் சருக்கி விழுந்து சாய்ந்தவர், கோடி கோடி! இதில் ராதா ஒருத்தி.
"ராதா ஒரே ஒரு கேள்வி. என் மீது கோபிப்பதில்லை யானால் கேட்கிறேன்" என்றான் பரந்தாமன்.
"குணசீலா, உன் மீது எனக்குக் கோபமா வரும்? கேள், ஆயிரம் கேள்விகள்" என்றாள்.
"அந்தப் படத்திலுள்ள கருப்பையாவுடன் நீ காதல் கொண்டிருந்தாயா?' என்று சற்று வருத்தத்துடன் கேட்டான் பரந்தாமன்.
"கருப்பையாவிடம் காதலா ! வலை வீசும் வேடன் மீது புள்ளிமான் ஆசை கொண்டா வலையில் விழுகிறது" என்றாள் ராதா.
"தெரிந்து கொண்டேன். ஆம்! நான் எண்ணியபடி தான் இருக்கிறது. நீ அவன் மீது காதல் கொள்ளவில்லை. அவன் உன் நிலை கண்டு உன்னைக் கொடுத்தான். நீ என்ன செய்வாய்? பருவத்தில் சிறியவள்' என்று பரந்தாமன் கூறிக் கொண்டே ராதாவின் கரத்தைப் பிடித்துத் தன் மார்பின் மீது வைத்துக் கொண்டு, "ராதா! நீ இதனுள்ளே எப்போ தும் இருந்து வந்தாய். அன்று உன்னை முந்திரிச்சோலையில் கண்டபோது உன் முத்திரை என் இருதயத்தில் ஆழப் பதிந்தது. அதனைப் பின்னர் அழிக்க யாராலும் முடிய வில்லை. நாளொன்றுக்கு ஆயிரம் தடவை அரகரா சிவசிவா! அம்பலவாணா' என்று சொல்லிப் பார்த்தேன் . உன் கவனம் மாறவில்லை. தில்லை, திருவானைக்-காவல், காஞ்சி எனும் ஸ்தலங்களெல்லாம் சென்றேன். என் காதல் கரையவில்லை; எப்படிக் கரையும்? "உமை ஒரு பாகன்' 'இலட்சுமி நாராயணன்' ' 'வள்ளி மணாளன் முருகன்" "வல்லபை லோலன்" என்றுதான் எங்கும் கண்டேன். நான் தேடிய உமை நீதானே!' என்று பரந்தாமன் பேசிக் கொண்டே இருந்தான்.
கேட்கக் கேட்க ராதாவின் உள்ளம் தேன் உண்டது. ஆனாலும், கடுமையான அம்மையின் போது, பேசி, உடம்புக்கு ஆயாசம் வருவித்துக் கொள்ளக்கூடாதே என்று அஞ்சி, 'பரந்தாமா போதும்; பிறகு பேசுவோம். உன் உடம்பு இருக்கும் நிலைமை தெரியாது பேசிக் கொண்டிருக்கிறாயே" என்று கூறி ராதா அவன் வாயை மூடினாள்.
"உடம்பு ஒன்றும் போய்விடாது. போனாலும் என்ன! உன்னைக் கண்டாகிவிட்டது. உனக்கு இருந்துவந்த ஆபத்தைப் போக்கியுமாகி விட்டது. இனி நான் நிம்மதியாக .....' என்று கூறி முடிப்பதற்குள் ராதா மீண்டும் அவன் வாயை மூடி, "அப்படிப்பட்ட பேச்சு பேசக்கூடாது. நான் சாகலாம், ஆனால் உங்களுக்கு ஒரு கெடுதியும் சம்பவிக்கலாகாது" என்று கூறினாள். ராதாவைக் கண்ட ஆனந்தம் அவளிடம் பேசியதால் ஏற்பட்ட களிப்பு பரந்தாமனின் மனதில் புகுந் தது. அயர்வு குறைந்தது. பேசிக் கொண்டே கண்களை மூடினான். அப்படியே தூங்கிவிட்டான்.
அவன் நன்றாகத் தூங்கும் வரை பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தாள் ராதா. மெல்ல குறட்டை விட்டான் பரந்தாமன். ராதா மெதுவாக எழுந்தாள். தாயை அழைத்தாள். இருவரும் சமயலறை சென்றனர். அடுப்பில் நெருப்பை மூட்டினர். பரந்தாமன் தந்த போட்டோவை எரியும் நெருப்பில் போட் டுக் கொளுத்தி விட்டனர். பின்னர் ராதா மெல்ல நடந்து வீடு சென்றாள். படுத்துறங்கும் கணவன் பக்கத்தில் படுத்தாள் பூனை போல், சில நிமிடங்கள் வரை ராதாவின் கவனம் முழுவதும் பரந்தாமன் மீதே இருந்தது. திடீரென அவள் திடுக்கிட்டாள். ஏன்? தன் கணவன் குறட்டைவிடும் சத்தமே கேட்கவில்லை. என்றுமில்லாத அதிசயமாக இருக்கிறதே என்று எண்ணி மெதுவாகக் கணவன் மீது ஒரு கையை வைத்தாள் ! பனிக்கட்டி போல ஜில்லென இருந்தது. அலறிக் கொண்டே, அவர் உடலைப் பிடித்து அசைத்தாள். பிணம் அசைந்தது. அபின் அதிகம் ; மரணம்.
ராதா விதவையானாள். குங்குமம் இழந்தாள் . கூடின பந்துக்கள் தமது அனுதாபத்தை தெரிவித்தனர். வேதவல்லி தன்னைப் போலவே ராதாவும் ஆனது கண்டாள்; மனம் நொந்தாள்.
ராதா விதவையானாள்; பரந்தாமன் குருடனானான். அம்மையிலிருந்து அவன் தப்பித்துக் கொண்டான். ஆனால் அவனது கண்கள் தப்பவில்லை. பார்வையை இழந்தான், பரந்தாமன். ராதாவுக்கு நேரிட்ட விபத்தைக் கேட்டான். மனம் நொந்தான். ஏன்? ராதாவுக்கு இதனால் மனக்கஷ்டம் வருமே என்பதனால் . அம்மை போயிற்றே தவிர, எழுந்து நடமாடும் பலம் பரந்தாமனுக்கு வருவதற்கு ஒரு மாதத்துக்கு மேல் பிடித்தது.
ஒரு மாதத்துக்குப் பிறகு பரந்தாமன் ராதாவைக் காணச் சென்றான். கண் இழந்தவன் கபோதி . எனினும் அவளைக் காணமுடியும் அவனால். கண் இழந்தான்; கருத்தை இழக்கவில்லையல்லவா!
ராதா, தாலியை இழந்தாள் ; பிறரால் பிணைக்கப் பட்ட கணவனை இழந்தாள்; தன் வாழ்க்கையில் அதனை ஒரு விபத்து எனக் கொண்டாள். ஆனால், அதனாலேயே தன் வாழ்க்கையில் இருந்து வந்த இன்ப ஊற்று உலர்ந்து விட்டதாகக் கருத முடியவில்லை.
துக்கம் விசாரிக்க வந்தவர்களெல்லாம், தனக்கும் மாண்டு போன தன் கணவருக்கும் இருந்த பொருத்தம், ஒற்றுமை, நேசம் முதலியவைகளைப் பற்றிப் பேசினர். அது வாடிக்கையான பேச்சுத்தானே! யாருக்குத் தெரியும் - தன் காதலனைக் காணப் போக வேண்டும் என்பதற்காகக் கணவனுக்கு அபின் ஊட்ட, அது அளவுக்கு மீறிப் போனதால், அவன் இறந்தான் என்ற உண்மை.
தன் கணவனைத் தானே கொன்றதை எண்ணும்போது ராதாவுக்கு இருதயத்தில் ஈட்டி பாய்வது போலத்தான் இருந்தது. நான் அவர் சற்று தூங்க வேண்டும் என்று அபின் கொடுத்தேனே யொழிய அவர் இறக்க வேண்டும் என்றா கொடுத்தேன். இல்லை! இல்லை! நான் எதைச் செய்தாலும் இப்படித்தானே "வம்பாக" வந்து முடிகிறது. என் எழுத்து போலும்" என்று கூறி தன்னைத்தானே தேற்றிக் கொண்டாள்.
தன் வீட்டின் கடனைத் தீர்க்கத்தான், ராதாவின் தகப்பன் பணக்காரனுக்குத் தன் பெண்ணை மணம் செய்து கொடுத்தார். வேதவல்லியும் தன் மகள், நல்ல நகை நட்டுடன் நாலு பேர் கண்களுக்கு அழகாக வாழவேண்டும் என்ற விருப்பத்துக்-காகத்தான் ராதாவை மணம் செய்ய ஒப்பினாள். ஆனால் அந்த மணம் மரணத்தைத்தான் கணவனுக் குத் தந்தது. என் செய்வது? ஓட்டைப் படகேறினால் கரை ஏறு முன்னம் கவிழ்ந்தாக வேண்டுமல்லவா! ராதாவுக்கு அவள் பெற்றோர்கள் அமைத்துக் கொடுத்த வாழ்க்கைப் படகு ஓட்டையுள்ளது. அதில் எத்தனை நாளைக்குச் செல்ல முடியும். அந்த ஓட்டை படகுக்கு கருப்பையா ஒட்டுப் பலகை! ஆனால் ஒட்டுப் பலகைதான் எத்தனை நாளைக்குத் தாங்கும். அதுவும் பிய்த்துக் கொண்டு போய் விட்டது ஒருநாள். பிறகு படகே கவிழ்ந்துவிட்டது. கண வனே மாண்டான்! இனி ராதா கரைசேருவது எப்படி முடியும்?
"முடியுமா? முடியாதா?"
"நான் என்ன பதில் கூறுவேன்"
"உன் உள்ளத்தில் தோன்றுவதை, உண்மையைக் கூறு. ஊரார் ......."
"ஊரார் ! பாழாய்ப்போன ஊராருக்குப் பயந்து பயந்துதானே நாம் இக்கதிக்கு வந்தோம். அறுபட்டதாலி, பொட்டையான கண், மரத்தில் தொங்கிய பிணம் இவை கள் ஊரார் ஊரார் என வீண் கிலி கொண்டதால் வந்த விளைவுகள் என்பது ஊராருக்குத் தெரியுமா? உன் காரியத்துக்கு, ஊரார் ஒருவரையும் பாதிக்க முடியாதா? உன் காரியத்தை நீ செய்து கொள். உன் உள்ளம், உனக்கு அதிகாரியா, ஊராரா? ஊராருக்கென்ன ராதா? இது ஆகுமா அடுக்குமா? தாலி அறுத்த முண்டைக்குக் கண் இழந்த கபோதியா?" என்றுதான் கூறுவர், ஏளனம் செய்வர், எதிர்ப்பர். நீ ஏழைப் பெண்ணாக இருந்தால், உன்னை சமூகம் பகிஷ்காரம் செய்வர். ஆனால், அதனைப் பற்றி நீ ஏன் கவலை கொள்ளவேண்டும். ராதா, கேள் நான் சொல்வதை! நான் கண்ணிழந்தவன்; ஆனாலும், உனக்குப் பார்வை தெரிந்த காலத்தில் நான் கண்ட காட்சிகள் இந்தச் சமூதாயத்தின் சித்திரங்கள். எனக்குப் புகட்டும் பாடம் இது தான் ! சமூகம் திடமுடன் யார் எதைச் செய்யினும் பொறுத்துக் கொள்ளும். தயங்கிப் பதுங்கினால் அவர்கள் மீது பாய்ந்து, அவர்களைப் பதைக்க வைக்கும்."
"ராதா, கழுதையின் பின்புறம் நின்றால் உதைக்கும்; முன்னால் சென்றால் ஓடிவிடும்."
"பழக்கவழக்கமெனும் கொடுமையைத் தீவிரமாக எதிர்த்தால் தான் முடியும்" - எனப் பரந்தாமன் ராதாவிடம் வாதாடினான், தன்னை மறுமணம் செய்துகொள்ளும்படி.
ராதாவுக்கு, மறுமணம் - தான் தேடிய பரந்தாமனை நாயகனாகப் பெறுவது என்ற எண்ணமே அமிர்தமாகத்தான் இருந்தது. அவள் மனக்கண் முன்பு எதிர்கால இன்பச் சித்திரங்கள் அடுக்கடுக்காகத் தோன்றின. அவனுடைய அன்பு தன்னைச் சூழ்ந்து தூக்கிவாரி இன்ப உலகில் தன்னை இறக்குவதாகக் கண்டாள். அவனுடைய கருவிழந்த கண்களில் காதல் ஒளி வெளிவரக் கண்டாள். சிங்காரத் தோட்டத்தில் அவன் கைப் பிடித்து நடக்க, காலடி சத்தம் கேட்டு, மரக்கிளைகளில் அமர்ந்திருந்த கிளி, கொஞ்சுமொழி புகன்று, பறக்கக் கண்டாள். அவள் ஏதேதோ கூறவும் அவை. அணைப்பு, அவன் முத்தம், அவன் கொஞ்சுதல், அவன் கூடிவாழ்தல், அவனுடன் குடும்பம் நடத்துதல் இவை யாவும், அவள் மனக்கண் முன்பு தோன்றின.
"ராதா, இதோ உன் உலகம். நீ தேடிக் கொண்டிருந்த தேன் ஓடும் தேசம் ! நீ நடந்து சென்று வழி தவறி, சேர முடியாது தத்தளித்தாயே, அதே நாடு. காதல் வாழ்க்கை, பரந்தாமனுடன் இணைந்து வாழும் இன்பபுரி . போ, அவ் வழி அந்த நாட்டில்! ஒருமுறைதான் தவறிவிட்டாய். அதற்குக் காரணம் உன் தந்தை. இம்முறை தவறவிடாதே"
"முன்பு நீ பேதைப் பெண்! உன்னை அடக்க மடக்க பெற்றோரால் முடிந்தது. இப்போது நீ உலகைக் கண்டவள். இம்முறை உணர்ச்சியை அடக்காதே . நட இன்பபுரிக்கு! சம்மதங்கொடு, பரந்தாமனுக்கு. அவன் உனக்குப் புத்துலக இன்பத்தை ஊட்டுவான். அவனுக்கு நீ தேவை ; உனக்கு அவன். நீங்கள் இருவரும் தனி உலகில் வாழுங்கள். சாதாரண உலகைப்பற்றிக் கவலை ஏன்? பழிக்கும் சுற்றத் தார், இழித்துப் பேசும் பழைய பித்தர்கள், கேலி செய் யும் குண்டர்கள், கேவலமாக மதிக்கும் மறையோர், என் சொல்வாரோ என்பதைப் பற்றி நீ கவலைப்படாதே."
"அவன் கபோதிதான்! ஆனால் அவனுக்குத்தான் தெரியும், உன்னை இன்பபுரிக்கு அழைத்துச் செல்ல. பிடித் துக்கொள், அவன் கரத்தை. அவன் குருடன்! எனவே உலகின் காட்சிகள் எதுவும் அவனுக்கு இனித் தெரியாது. ஆனால் உன்னை மட்டும் அவன் அறிவான். பிறவற்றைப் பார்க்க வொட்டாதபடித் தடுக்கவே பார்வை அவனை விட்டுச் சென்றுவிட்டது" - என ராதாவுக்கு விநாடிக்கு விநாடி காணும் காட்சிகள் யாவும் உணர்த்துவித்தன.
விதவை ராதாவுக்கும் விழியிழந்த பரந்தாமனுக்கும் மணம் நடந்தேறியது.
வீதி மூலைகளில் வீணர்கள் வம்பு பேசினர். சமையற் கட்டுகளில் பெண்டுகள் சகலமும் தெரிந்தவர்கள் போலக் கேலி செய்தனர். வைதீகர்கள் வந்தது விபரீதம் எனக் கைகளைப் பிசைந்தனர். உற்றார் உறவினர் உறுமினர். ஆனால் கபோதிபுரக் காதலை, இனி யாராலும் தடுக்கமுடியாது. அவர்கள் இன்பபுரி சென்று இன்பத்துடன் வாழ்ந்து வரலாயினர்.
---------xxx-------------
பேரறிஞர் அண்ணாவின் வாழ்க்கைக் குறிப்புகள் :
15-9-1909 - தோற்றம்: சி. என். அண்ணாதுரை
தந்தை : நடராசன்
தாய் : பங்காரு அம்மாள்
சிறிய தாயார் (தொத்தா) ராஜாமணி அம்மையா
பிறந்தகம் - சின்ன காஞ்சிபுரம்
வாழ்க்கைத்துணை - இராணி அம்மையார்
தொழில் - நாட்டுத் தொண்டு - எழுத்தாளர்
புனைபெயர் : சௌமியன், வீரன், சமதர்மன், குறிப்போன், சம்மட்டி, ஒற்றன், சாவடி, ஆணி, பரதன்
1929-1934 -- சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பி. ஏ . ஆனர்சு பட்டப்படிப்பு
26-5-1933 - கோவை மாவட்டம் காங்கேயத்தில் முதலாவது செங்குந்தர் இளைஞர் மாநாட்டில் திருச்சி சி. என். சீனி வாசன் தலைமையில் தந்தை பெரி யார் துவக்க உரை ஆற்ற, அறிஞர் அண்ணா - மாணவர் அண்ணாதுரை சொற்பொழிவு நிகழ்த்த, கேட்டு வியப்புற்று, கண்டு பேச தந்தை பெரியார் முயன்று இயலாது போனமை
(குடி அரசு 23-7-1933)
11- 2-1934 - முதல் சிறுகதை "கொக்கரகோ" ஆனந்த விகடனில் வெளியிடப் பட்டது
1-2-1936 - சென்னை பச்சையப்பன் மண்டபத் தில் கல்வி அமைச்சர் குமாரசாமி ரெட்டியார் தலைமையில் பார்ப்பனர் அல்லாதார் இயக்கமும் காங்கிரசும் பற்றிச் சொற்பொழிவு.
ஆகஸ்டு 1936 - தந்தை பெரியாருடன் வடார்க்காடு மாவட்டச் சுற்றுப் பயணம் மேற் கொள்ளல்
1936 - சென்னை மாநகராட்சித் தேர்தலில் நீதிக்கட்சி உறுப்பினராக நிற்றல்.
1937 - நவயுகம் ஆசிரியர்.
3-1-1937 - சென்னைத் தன்மான இயக்க இளைஞர் மன்ற ஆண்டுவிழாத் தலைமை ஏற்றல்
11-4-1937 - நீதிக்கட்சி செயற்குழு உறுப்பினராதல், நீதிக்கட்சி பிரச்சாரக் குழு உறுப்பினராதல்.
1937 - விடுதலை, குடி அரசு இதழ்களில் துணை ஆசிரியர் பணி ஏற்றல்.
29-8-1937 - முசிரி தாலுக்கா தன்மான இயக்க மாநாட்டுத் தலைமை உரையாற்றல்
9-12-1937 - முதற்கவிதை, 'காங்கிரஸ் ஊழல்' விடுதலையில்
2-9-1938 - முதல் மடல் பரதன் பகிரங்க கடிதம்', விடுதலை.
26-9-1938 - இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மக்களைத் தூண்டிவிட்ட குற்றம் சாட்டி எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி குன்னி கிருஷ்ணநாயர் நான்கு மாத வெறுங்காவல் தண்டனை வழங்கினார். இராணி அம்மையார் சிறை செல்லும் அண்ணாவை வாழ்த்திய வாழ்த்துச் செய்தி குடி அரசு, விடுதலையில் வெளி வந்தது.
13-1-1939 - தமிழுக்காக உயிர்நீத்த நடராசன் இறுதி ஊர்வல நாள் - அண்ணா இரங்கற் கூட்டத்தில் உரை.
18-1-1939 - தமிழர் திருநாள் - சென்னை உயர் நீதிமன்ற கடற்கரையில் டாக்டர் சி. நடேசனார் படம் திறந்து வைத்தல்.
10-2-39 -- சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் இந்தி எதிர்ப்புச் சொற்போர்
1939 - முதல் குறும்புதினம் "கோமளத்தின் கோபம்" தொடக்கம் - குடி அரசில்
6-1-1940 - பம்பாயில் பெரியார் அம்பேத்கார் உரையாடல்; மொழிபெயர்ப்பு
23-3-1940 - முதல் புதினம், ' 'வீங்கிய உதடு" தொடக்கம் குடி அரசில்.
2-6-1940 - காஞ்சியில் திராவிட நாடு பிரிவினை மாநாடு
8-11-1940 - விடுதலையில் தி. க. சண்முகம் நடித்த "குமாஸ்தாவின் பெண்' நாடகத் திறனாய்வு.
7.3-1942 - திராவிடநாடு கிழமை இதழ் தொடக் கம். தலையங்கம் ' 'கொந்தளிப்பில் புரட்சிக் கவிஞர் 'தமிழுக்கு அமு தென்று பேர்' எனும் பாடல் முகப்பில்.
14-3-1943 - சேலத்தில் நாவலர் பாரதியார் உடன் அண்ணா கம்பராமாயணச் சொற் போர்.
5-6-1943 - சந்திரோதயம்' நாடகம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தலைமையில் நடத்தல்.
19-8-1944 - சேலம் நீதிக்கட்சி மாநாடு - அண்ணா துரைத் தீர்மானம் - நீதிக்கட்சி, திராவிடர் கழகம் எனப்பெயர் மாற் றம் பெற்று மக்கள் இயக்கமாக மலர்தல்.
15-12-1945 - சென்னை செயின்ட் மேரி ஆலில் சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடக அரங்கேற்றம் - அண்ணா காகப்பட்டராக நடித்தல்.
13-1-46 - "பணத்தோட்டம்" கட்டுரை.
மே 1946 - கருஞ்சட்டைப்படை மாநாடு - தந்தை பெரியாருடன் கருத்து மாறுபாடு முகிழ்ப்பு.
29-7-46 - நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் பாவேந்தருக்குப் பொற் கிழி அளித்தல்.
25-4-47 - "வேலைக்காரி' திரை நாடகம்.
1-6-47 - "நீதிதேவன் மயக்கம்" நாடகம்.
15-8-47 - திராவிட நாட்டில் ஆகஸ்டு பதினைந்து' ' கட்டுரை - தந்தை பெரியார் 'துக்கநாள்' எனல் பொருந்தாது - அது 'விழாநாளே' எனக் கருத்து விளக்கம் தருதல் .
29-8-47 - தந்தை பெரியார் 69வது பிறந்த நாள் விழா சிறப்புக் கட்டுரை "இப் படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்."
14-1-48 - 'நல்ல தம்பி' திரையிடல்.
4/18 4-48 - திராவிட நாடு கட்டுரை கட்குத் தண்டனை ரூ 3000. இதன் விலை மூவாயிரம்" நூலாதல்.
18-6-49 - தந்தை பெரியார் மணியம்மை திரு மணம். அண்ணா பிரிந்து நிற்றல்.
10-8-49 மாலைமணி' - முதல் நாளிதழ் ஆசிரியர்
17-949 - தி.மு.க. தோற்றம் "ஒட்டு மாஞ் செடி" தி.மு.க. துவக்க உரை. ராபின்சன் பூங்கா, ராயபுரம்.
18-9-49 - திராவிட நாடு இதழில் 4, 18-4--48 இல் வரைந்த கட்டுரைக்காக வழக்கு. நான்கு மாதச் சிறைத் தண்டனை ஏற்றல். எதிர்ப்பு கண்டு பத்தாம் நாள் விடுதனல .
12-1-50 - நாடெங்கும் பொங்கல் விழா - அறுவடை விழா - உழவர் விழா எடுக்க அறிக்கை விடல்
1951 - திருச்சிச் சிறையில் 'இலட்சிய வரலாறு' எழுதுதல்.
1951 - 'ஆரிய மாயை' நூலுக்குத் தடை
17-9-51 - திராவிட நாடு பிரிவினை நாள் எடுத்தல்.
13/16-12-51 - தி.மு.க. முதல் மாநில மாநாடு, சென்னையில்
1-8-52 - இந்தி எதிர்ப்பு அறப்போர் - இந்தி எழுத்துக்களை அழித்தல்.
25-4-53 - திருச்சி மாவட்ட மாநாட்டில் காதல் ஜோதி' நாடகம் அரங்கேற்றம்.
15-6-53 - 'நம்நாடு ' நாளிதழ் தொடக்கம்.
18-7-53 - மும்முனைப் போராட்டம் --முன் முனைப் போராட்டத் தூண்டிய குற்றம் சாட்டி மூன்று மாதம் சிறையிடல்
15-7-53 - மும்முனைப் போராட்டம் - கழகத் தலைவர்கள் தொண்டர்கள் கைதாதல்.
3-5-54 - மொழிவழி மாநில அமைப்பு அறிக்கை வெளியிடல்
14-1-55 - சொர்க்கவாசல் திரையிடல்
20-2-55 - தேவிகுளம் பீர்மேடு இணைப்புக்காகப் பொதுவேலை நிறுத்தம்.
29-4-57 - தமிழ்நாடு சட்டமன்ற தி. மு. கழகத் தலைமை ஏற்று, எதிர்க்கட்சித் தலைவர் ஆதல்.
9-6-57 - 'ஓம் லேண்டு ஆங்கிலக் கிழமை இதழ் தொடங்கல்
3-1358 - அண்ணா கைதாதல் தி.
2-3-58 - தி .மு.கழகத்தினை மாநிலக் கட்சியாகவும் உதயசூரியன் சின்னமாகவும் இந்திய அரசு ஒப்புதல் அளித்தல்.
24-4-59 - அண்ணாவின் தம்பியர் சென்னைப் பெருநகர் மன்ற ஆட்சிப் பொறுப்பினைப் பெறல்.
1-8-60 - இந்தி எதிர்ப்பு மாநாடு செங்கை யில் அண்ணா தலைமை உரை நிகழ்த்தல்.
1962 - 'சம்பத் ' விலகல் குறித்து அண்ணா வருந்தி அறிக்கை வரைதல்.
25- 2-62 - சட்ட மன்றத்திற்குத் தம்பியர் ஐம்ப தின்மர் செல்ல, அண்ணா, பாராளுமன்ற மேலவை உறுப்பினராதல்.
2-8-62 - விலைவாசி உயர்வுப் போர் - வேலூர் சிறையில் பத்து வாரம்.
7-1-63 - சீனப்போர் குறித்துச் சென்னை வானொலியில் ஆங்கிலப் பேருரை.
17-11-63 - கட்டாய இந்தி - 17வது மொழிப் பிரிவு சட்டம் எரித்தல் - 16-11-63 அன்றே கைதாகி, ஆறுமாதம் சிறைத்தண்டனை ஏற்றல்.
1-3-67 - தமிழ்நாட்டுச் சட்ட மன்றத்தில் தம்பியருடன் 138 பேர் அமர்ந்திட, அண்ணா தமிழக முதல்வர் பொறுப் பேற்றல் (6-3-67)
14-3-67 - முதலமைச்சர் வானொலிச் சொற்பொழிவு
14-4-67 - தமிழ்நாடு' பெயரிட்டுப் பெருமை தரல் –
10-1-68 - இரண்டாவது உலகத்தமிழ் மாநாடு எடுத்து உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் நிற்றல்.
8-9-68 - அண்ணாமலைப் பல்கலைக் கழகம் பேரறிஞர் அண்ணாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி பெருமை பெறல்.
4-1-69 - கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் நடிகள் சிலை திறப்பு விழாவில் பொழிந்த சிறப்புப் பொழிவு.
2-2-69 - தமிழ் மக்கள் பேரறிஞர் அண்ணாவை இழந்து துன்பக்கடலில் மூழ்கல்
------------
கருத்துகள்
கருத்துரையிடுக