புதிய சீனா
வரலாறு
Back
புதிய சீனா
வெ. சாமிநாத சர்மா
1. புதிய சீனா
1. மின்னூல் உரிமம்
2. மூலநூற்குறிப்பு
3. வெ. சாமிநாத சர்மாவின் சாதனைகள்
4. சர்மாவின் பொன்னுரைகள்…….
5. பதிப்புரை
2. நாட்டு அமைப்பும் மக்கள் பண்பும்
3. ஆரம்ப சரித்திரம்
4. நன்னெறி காட்டிய ஞானியர்
5. எழும்பிய சுவரும் எரிந்த நூல்களும்
6. வரிசையில் வந்த அரச வமிசங்கள்
7. முடியரசுக்கு முற்றுப்புள்ளி
8. அடங்கிவந்த ஐரோப்பியர்
9. பணிய மறுத்த பிரிட்டன்
10. அபினியைத் திணித்து அடக்க முயற்சி
11. அந்நியர் புகுதல் என்ன நீதி?
12. கீழ் நாட்டில் ஏகாதிபத்தியச் சூரியன்
13. கலகம் செய்து கண்ட பயன்
14. ருஷ்ய - ஜப்பானிய யுத்தம்
15. குடியரசின் உதயம்
16. தொடக்கத்திலேயே கிரகணம்
17. ஐரோப்பியப்போரும் இளைஞர் இயக்கமும்
18. இருவகைப்பட்ட அரசாங்கங்கள்
19. பொதுவுடைமையினரின் புனித யாத்திரை
20. மஞ்சூரியாவில் ஜப்பான்
21. பிடிப்பட்ட தலைவனை விடுவித்த வீரம்
22. முழங்கால் முறிய அடிக்க முயற்சி
23. கோமிண்டாங் கட்சி
24. அரசாங்க அமைப்பு
25. சம அந்தது பெற்ற வல்லரசு
26. ஆக்க வேலைகள்
27. இன்றைய சீனா
1. அனுபந்தம் - 1
2. அனுபந்தம் - 2
மூலநூற்குறிப்பு
நூற்பெயர் : புதிய சீனா
தொகுப்பு : வெ. சாமிநாத சர்மா நூல்திரட்டு - 17
ஆசிரியர் : வெ. சாமிநாத சர்மா
பதிப்பாளர் : இ. இனியன்
முதல் பதிப்பு : 2006
தாள் : 16 கி வெள்ளைத் தாள்
அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 10.5 புள்ளி
பக்கம் : 32 + 312 = 344
நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்)
விலை : உருபா. 215/-
படிகள் : 1000
நூலாக்கம் : பாவாணர் கணினி, தி.நகர், சென்னை - 17.
அட்டை வடிவமைப்பு : இ. இனியன்
அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை -14.
வெளியீடு : வளவன் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017., தொ.பே. 2433 9030
வெ. சாமிநாத சர்மாவின் சாதனைகள்
தமிழ் மொழியின் உரைநடை நூல்களின் வளம் பெருகத் தொடங்கியக் காலக்கட்டத்தில், தரமான உயர்ந்த நூல்களை எழுதியும், மொழிபெயர்த்தும் வெளியிட்டதன் மூலம், தமிழ்ப் பணியாற்றிய பெருமக்கள் பலர். இன்றும், என்றும் நாம் நன்றியுடன் நினைவு கூற வேண்டியவர்களில் பெரும் பங்காற்றியச் சிறப்புக்கு உரியவர், திரு. வெ. சாமிநாத சர்மா அவர்கள். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என போற்றப்பட்டவர். மூன்று ஆண்டுகள் திரு. வி. க. நடத்திய தேச பக்தன் நாளேட்டிலும், பன்னிரெண்டு ஆண்டுகள் நவசக்தி கிழமை இதழிலும், இரண்டாண்டுகள் சுயராஜ்யா நாளேட்டிலும் உதவியாசிரியராகப் பணியாற்றினார். சென்னை தமிழ் எழுத்தாளர் சங்க வெளியீடான பாரதியில் ஓராண்டு ஆசிரியராக இருந்தார். திரு. ஏ.கே. செட்டியார் அயல் நாடு சென்றிருந்தபோது அவரது குமரி மலர் மாத இதழுக்கு ஆசிரியராய்ப் பொறுப்பேற்றிருந்த பெருமையும் இவருக்கு உண்டு.
தமிழ்த் தென்றல் திரு. வி. க.; மகாகவி பாரதியார், பரலி சு. நெல்லையப்பர், வீர விளக்கு வ. வே. சு. ஐயர், தியாகச் செம்மல் சுப்பிரமணிய சிவா, அக்ரஹாரத்து அதிசய மனிதர் வ. ரா. பேராசிரியர் கல்கி, உலகம் சுற்றிய தமிழர் திரு. ஏ.கே. செட்டியார் முதலான தமிழ் கூறும் நல்லுலக மேதைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் சர்மாஜி.சர்மாவின் நூல்களை வெளியிடுவதற்காகவே இரங்கூனில் தோற்றுவிக்கப்பட்ட பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம், பின்னர் புதுக்கோட்டைக்கு மாற்றப்பட்டது. வரலாறு என்பது உண்மை களை மட்டுமே தாங்கி நிற்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தவர் சர்மாஜி. உலகத் தலைவர்கள், இராஜதந்திரிகள், புரட்சி வீரர்கள், தீர்க்க தரிசிகள்; அறிவியல் அறிஞர்கள் முதலானோரின் வாழ்க்கை வரலாற்றையும், அவர்தம் சாதனைகளையும் உள்ளது உள்ளபடி, மிகச் சரியானபடி தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர். இன்றளவும் இச்சிறப்பில் இவருக்கு இணை இவரே என்பது மிகையல்ல! ஆங்கில மொழி அறியாத அல்லது ஆங்கிலத்தில் போதிய பரிச்சயம் இல்லாத தமிழர்களுக்கு உலக நாடுகளின் அரசியல், தத்துவங்கள், வரலாறு தொடர்பான ஆங்கில நூல்களை எளிய, அழகுத் தமிழில் மொழிபெயர்த்து அளித்தார். மொழி பெயர்ப்புகள் நீங்கலாக மற்ற நூல்களை எழுதும் போதும் தனது விமர்சனங்களையும், அபிப்பிராயங்களையும், கற்பனை களையும் ஒருபோதும் கலந்து எழுதியவரல்ல! இப்பண்பே அவரது நூல்களின் மிகச் சிறந்த அம்சமாகும்.
சர்மாவின் மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழ் மக்களிடையே மிகவும் புகழ்ப் பெற்றவை. சாதாரன வாசகனுக்கும் புரியக் கூடியவை. மூல நூலின் வளத்தைக் குறைக்காதவை. ஆக்கியோன் உணர்த்த நினைத்ததை சற்றும் பிசகாமல் உள்ளடக்கி, மொழியின் லாவகத்தோடு சுவைக் குன்றாமல் பெயர்த்துத் தரப்பட்டவை. ‘பிளாட்டோவின் அரசியல்’, ‘ராஜதந்திர யுத்தகளப் பிரசங்கங்கள்’, ரூஸ்ஸோவின் ‘சமுதாய ஒப்பந்தம்’, மாஜினியின் ‘மனிதன் கடமை’, இங்கர்சாலின் ‘மானிட சாதியின் சுதந்திரம்’, சன்யாட்சென்னின் ‘சுதந்திரத்தின் தேவைகள் யாவை? முதலான நூல்களைப் படித்தவர்களுக்கு இது நன்கு விளங்கும்.
காரல் மார்க் வாழ்க்கை வரலாறு பற்றி அநேக நூல்கள் இதுவரை வெளிவந்திருந்தாலும், முதன் முதலாக மிக விரிவாக எழுதப்பட்டதும், மிகச் சிறப்பானதென்று எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டதும் சர்மாஜியினுடையதே!
எழுபதுக்கும் மேற்பட்ட மணி மணியான நூல்களை சர்மாஜி எழுதினார். ‘The Essentials of Gandhism’ என்ற ஆங்கில நூலும் அவற்றில் அடங்கும். நாடகங்கள் எழுதுவதில் அவருக்கிருந்த ஆர்வத்தையும், ஆற்றலையும் அவர் எழுதிய லெட்சுமிகாந்தன், உத்தியோகம், பாணபுரத்து வீரன், அபிமன்யு ஆகிய நாடக நூல்கள் வெளிப்படுத்துகின்றன. எண்பத்தி மூன்று வயது வரை வாழ்ந்து, தமிழ்ப் பணியாற்றி மறைந்த சர்மாஜியின் நூல்களை இன்றைய தலைமுறையினர் படித் தறிந்து கொள்வது அவசியம். ஏற்கனவே படித்து அனுபவித்த வர்கள் தங்கள் அனுபவத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இவற்றிற்கு ஏதுவாக பதிப்பகம் மீண்டும் அவற்றை பதிப்பித்துத் தனக்குப் பெருமை சேர்த்துக் கொள்ளும் வகையில் தமிழ்ப் பணியாற்றியுள்ளது போற்று தலுக்கு உரியது. இதன் பொருட்டு திரு. கோ. இளவழகன் அவர்களுக்கும், அவர்தம் மகன் இனியனுக்கும் நாம், தமிழர் என்ற வகையில் நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளோம். பதிப்புத் துறையில் வரலாறு படைத்து வரும் கோ. இளவழகன் வரலாற்றறிஞர் சர்மாவின் நூல்களை வெளி யிடுவது பொருத்தமே!
6, பழனியப்பா நகர், திருகோகர்ணம் அஞ்சல், ஞானாலயா பி. கிருஷ்ணமூர்த்தி, புதுக்கோட்டை - 622 002.
டோரதி கிருஷ்ணமூர்த்தி
சர்மாவின் பொன்னுரைகள்…….
- மாந்தப்பண்பின் குன்றில் உயர்ந்து நில். ஒழுக்கத்தையும் தன்னம்பிக்கையையும் கைவிடாதே.
- பிறரிடம் நம்பிக்கையுடனும்; நாணயத்துடனும் நடந்து கொள். அது உன்னை உயர்த்தும்.
- உழைத்துக் கொண்டேயிரு; ஓய்வுகொள்ளாதே;உயர்வு உன்னைத் தேடி வரும்.
- பொய் தவிர்; மெய் உன்னைத் தழுவட்டும்; பெண்மையைப் போற்றி வாழ்.
- மொழியின்றி நாடில்லை; மொழிப் பற்றில்லாதவன்,நாட்டுப்பற்றில்லாதவன். தாய்மொழியைப் புறந்தள்ளி அயல் மொழியைப் போற்றுவதைத் தவிர்.
- தாய்மொழியின் சொல்லழகிலும் பொருளழகிலும் ஈடுபட்டு உன் அறிவை விரிவு செய். பெற்ற தாய்மொழியறிவின் விரிவைக் கொண்டு உன் தாய் மண்ணின் உயர்வுக்குச் செயல்படு.
- உயர் எண்ணங்கள் உயர்ந்த வாழ்க்கைக்கு அடித்தளம் முயற்சி- ஊக்கம் - ஒழுக்கம் - கல்வி இவை உன் வாழ்வை உலகில் உயர்த்தும் என்பதை உணர்ந்து நட.
- ஈட்டிய பொருளை அனைவருக்கும் பகிர்ந்தளித்து வாழக் கற்றுக் கொள். உதவா வாழ்க்கை உயிரற்ற வாழ்க்கை.
- கடமையைச் செய்; தடைகளைத் தகர்த்தெறி; விருப்பு-வெறுப்புகளை வென்று வாழ முற்படு.
- ஒழுக்கமும் கல்வியும் இணைந்து வாழ முற்படு; ஒழுக்கத்திற்கு உயர்வு கொடு.
- எந்தச் செயலைச் செய்தாலும் முடிக்கும் வரை உறுதி கொள். தோல்வியைக் கண்டு துவளாதே;
- உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் ஒரே நிலையில் வாழக் கற்றுக்கொள்.
- நாட்டுக்குத் தொண்டு செய்வது தரிசுநிலத்தில் சாகுபடி செய்வது; கண்ணிழந்தவர்களுக்குக் கண் கொடுப்பது.
- விழித்துக் கொண்டிருக்கும் இனத்திற்குத்தான் விடுதலை வாழ்வு நெருங்கிவரும். விடுதலை என்பது கோழைகளுக்கல்ல; அஞ்சா நெஞ்சினருக்குத்தான்.
புதிய சீனா
சில செய்திகள்……
- ஒரு இனத்தின் விடுதலை உணர்ச்சி மக்களோடு மக்களாக இரண்டறக் கலக்குமானால் அந்த விடுதலை உணர்ச்சியை எந்த வல்லாதிக்க அரசுகளாலும் அடக்க முடியாது என்பதைக் கண் களுக்குக் கண்ணாடி போல் காட்டும் வரலாறு.
- உலகில் வாழ்விழந்து நிற்கும் இனங்களுக்கும், வாழத்துடிக்கும் இனங்களுக்கும் பாடமாக அமைந்த இனத்தின் வரலாறு.
- மக்களுக்காக மக்களே முன்னெடுக்கும் புரட்சியே நிலைத்து நிற்கக் கூடியது என்பதை உலகுக்கு காட்டும் உண்மை வரலாறு.
- மக்களின் பலத்தை மக்கள் மொழியில் பேசி விடுதலை உணர்வை உயிர்ப்பு நிறைந்த வேகத்தோடு உலக வல்லரசுகளின் பலத்துக்கு இணையாக வளர்த்தெடுத்த நாட்டின் வீரவரலாறு.
- பள்ளியுண்டு படிப்புண்டு என்றிருந்த சீன மாணவர்கள் படிப்பைத் தூக்கியெறிந்து விட்டு படையில் சேர்ந்து புதிய சீனா எனும் புரட்சி மாளிகையைக் கட்டியமைத்த வரலாறு.
- குமுகாயச் சீரழிவுகளின் இருப்பிடமாக இருந்த பிற்போக்குக் கூடாரத்திலிருந்து, முற்போக்கு எண்ணங்கொண்ட இளஞ்சீனர்கள் செயல் செய்யப் புறப்பட்டு மெய்ப்பித்துக் காட்டிய புதிய சீனா வின் வரலாறு.
- பழமையும் - புதுமையும் இணைந்த சீனப் பேரினத்தை உலக வல்லரசுகளின் நடுவில் தலை நிமிர்ந்து நடக்க வைத்த இளையர் இயக்கத்தின் வீரவரலாறு.
- உயிர்த்துடிப்பும், உன்னத வாழ்வும் வாழ்ந்து, உழைப்புக்கு உயர்வு தந்து உலகத்துக்கு முன்னோடியாக வாழும் பழம்பெரும் இனத்தின் வரலாறு.
- பழம் பெருமை பேசிப்பயனில்லை; விழிப்புடனிருக்கும் இனத்துக்குத்தான் வாழ்வுண்டு என்பதை உணர்த்தும் மூத்த இனத்தின் வரலாறு.
- வல்லாதிக்க நாடுகளின் கையாட்டிப் பொம்மையாக இருந்த சீன முடியரசுக்கு எதிராக மக்களுக்கு அரசியல் அறிவை ஊட்டி குடியரசு மாளிகையை எழுப்பிய புதியசீனா எனும் பெருநிலம் எழுந்த வரலாறு.
- துரத்திவரும் பீரங்கிப் படைகளையும், வான்படைகளையும் துச்சமெனமதித்து இலட்சியப் பயணத்தில் ஒருமித்தக் குரலுடன் கைகோர்த்து நின்று வீரப்போர் புரிந்த இனத்தின் வரலாறு.
- ஒரு நாட்டின் விடியலுக்கு நூலறிவும் - உடல் வலிவும் தேவை என்பதை உணர்ந்து, கல்வி அறிவோடு புத்துணர்ச்சியைக் குழைத்து ஊட்டிய புதுமலர்ச்சி இயக்கத் (இளஞ்சீனரியக்கம்) தின் வரலாறு.
- அகவாழ்விலும் புறவாழ்விலும் பழம்பெருமைமிக்க சீன நாகரிகம் சிதைவுற்றபோது அதன் மறு வாழ்வுக்கு வழியமைத்து புத்தெழுச்சி ஊட்டிய புதிய சீனாவின் வரலாறு.
- கல்வி, அச்சு, தாள், பீங்கான், பட்டு, வெடிமருந்து, காந்த ஊசி, போன்றவற்றை உருவாக்கி உலக நாகரிகத்துக்கு முன்னோடியாகத் திகழ்ந்த புதிய சீனாவின்வரலாறு.
- நாட்டில் நல்லவர்களும் உண்டு. தீயவர்களும் உண்டு. கெட்டவர் களை ஓங்க விடாமல், நல்லவர்களை உயரச் செய்வதற்காக எழுதப் பட்ட நாட்டு வரலாறு.
- ஒரு இனம் தன் உரிமைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்கு சொல்லொணாத் துன்பங்களை நீந்தித்தான் ஆகவேண்டும் என்பதைக் காட்டும் வரலாறு.
- ஆண்ட இனத்துக்கும் (மஞ்சு இனம்) ஆளப்பட்ட …… சீன இனத்துக்கும் ஏற்பட்ட மோதல்களும், பழமை படிந்த தனது நாட்டின் மீது புதுமை எண்ணங்கள் மூலம் அரசியல் பால் புகட்டிய சன்யாட்சென் மாபெரும் தலைவனாகவும், தந்தையாகவும் போற்றப்பட்ட வரலாறு.
- இனப்பற்றும் - மொழிப்பற்றும் - நாட்டுப் பற்றும் - தியாக உணர்வும் - சீலவாழ்க்கையும் நிரம்பியவர்கள் எண்ணிக்கையில் குறைந்தவர் களாக இருப்பினும், அரும்பெரும் செயலைச் செய்ய முடியும் என்பதை உலகுக்குக் காட்டும் வரலாறு.
- பல்வேறு அடிமை ஒப்பந்தங்களால் பிரிட்டன், பிரான்சு, செருமனி, உருசியா, அமெரிக்கா, சப்பான் ஆகிய வல்லாட்சிச் சுரண்டல் நாடுகள் சீனப்பேரினத்தை சீரழித்தநிலையில் அவ்வினம் விழித்
தெழுந்து நாட்டை மீட்டெடுத்த வரலாறு
பதிப்புரை
‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும்; கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்! என்ற இந்திய தேசியப் பெருங் கவிஞன் பாரதியின் உணர்வுகளை நெஞ்சில் தாங்கி உலகெங்கும் கொட்டிக் கிடந்த அறிவுச் செல்வங்களைத் தாய்மொழியாம் தமிழுக்கு கொண்டு வந்து சேர்த்த பெருமையர் சாமிநாத சர்மா. பல்துறை அறிஞர்; பன்முகப் பார்வையர்; தமிழக மறுமலர்ச்சிச் சிந்தனையாளர்களில் ஒருவர்; தமிழ் கூறும் நல்லுலகம் புதியதோர் கருத்துக்களம் காண உழைத்தவர்; தமிழுக்கு உலகச் சாளரங்களைத் திறந்து காட்டிய வரலாற்று அறிஞர்.
அவர் காலத்தில் நிகழ்ந்த உலக நிகழ்வுகளை தமிழர்களுக்குப் படம் பிடித்துக் காட்டியவர். அரசியல் கருத்துகளின் மூலம் புத்துணர்ச்சியும் விடுதலை உணர்ச்சியும் ஊட்டி வீறு கொள்ளச் செய்தவர். உலக அரசியல் சிந்தனைகளைத் தமிழில் தந்து தமிழிலேயே சிந்திக்கும் ஆற்றலுக்கு வழிகாட்டியவர். தாம் வாழ்ந்த காலத்து மக்களின் பேச்சு வழக்கையே மொழிநடையாகவும், உத்தியாகவும்கொண்டு நல்ல கருத்தோட்டங்களுக்கு இனிய தமிழில் புதிய பொலிவை ஏற்படுத்தியவர்.
தமிழ் மக்களுக்கு விடுதலை உணர்வையும்; தேசிய உணர்வையும்; சமுதாய உணர்வையும் ஊட்டும் வகையில் அரும்பணி ஆற்றியவர். தமிழ்ப்பண்பாட்டின் சிறப்புக்களை போற்றியவர்; பொருளற்ற பழக்க வழக்கங்களைச் சாடியவர். தமிழ் மட்டுமே தெரிந்த தமிழர்களும் உலகளாவிய அரசியல் பார்வையைப் பெறுவதற்கு வழி அமைத்தவர். மேலை நாட்டுஅறிஞர்களின் தத்துவச் சிந்தனைகளை எளிய இனிய தமிழில் தந்தவர். வரலாற்று அறிவோடு தமிழ்மொழி உணர்வை வளர்த்தவர். அரசியல் தத்துவத்தை அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ் நாட்டுத் தலைவர்களுக்குக் கற்றுத் தந்தவர். தமிழகத்தின் விழிப்பிற்கு உழைத்த முன்னோடிகளில் ஒருவர்.
கல்வியில் வளர்ந்தால்தான் தமிழர்கள் உலகில் உயர்ந்து நிற்க முடியும் என்பதை தம் நூல்களில் வாயிலாக உணர்த்தியவர். நன்மையும் தீமையும் இருவேறுநிலைகள்; தீமையை ஓங்கவிடாமல் நன்மையை ஒங்கச் செய்வதே மக்களின் கடமையென்று கூறியவர்.
சாதிப்பித்தும், சமயப்பித்தும், கட்சிப்பித்தும் தலைக்கேறி தமிழ்க் குமுகாயத்தைத் தலைநிமிரா வண்ணம் சீரழித்து வருகின்றன. மொழி இன நாட்டுணர்வு குன்றிக் குலைந்து வருகிறது. இச்சீரழிவில் இருந்து தமிழர்களை மீட்டெடுக்க வேண்டும். இழிவான செயல்களில் இளம் தலைமுறையினர் நாட்டம் கொள்ளாத நிலையை உருவாக்குவதற்கும், மேன்மை தரும் பண்புகளை வளர்த்தெடுப்பதற்கும், அதிகாரப் பற்றற்ற - செல்வம் சேர்க்க வேண்டுமென்ற அவாவற்ற - செயல் திறமையைக் குறிக் கோளாகக் கொண்ட - பகுத்தறிவுச் சிந்தனையை அறிவியல் கண்கொண்டு வளர்த்தெடுக்கும் உணர்வோடு இந்நூல்களைத் தந்துள்ளோம்.
தன் மதிப்பும், கடமையும், ஒழுங்கும், ஒழுக்கமும், தன்னல மின்றி தமிழர் நலன் காக்கும் தன்மையும், வளரும் இளந்தலை முறைக்கு வேண்டும். இளமைப் பழக்கம் வாழ்நாள் முழுவதும் உதவும். விடாமுயற்சி வெற்றி தரும்; உழைத்துக் கொண்டே இருப்பவர்கள் எந்தச் செயலிலும் வெற்றி பெறமுடியும் எனும் நல்லுரைகளை இளம் தலைமுறை தம் நெஞ்சில் கொள்ள வேண்டும் என்ற மனஉணர்வோடு இந்நூல் தொகுதிகள் வெளியிடப்படுகின்றன.
சர்மா தாம் எழுதிய நூல்களின் வழியாக மக்களிடம் பேசியவர். இவர் நூல்களைப் படிப்பவர்களுக்கு அந்தந்த நூல்களின் விழுமங்களோடு நெருக்கம் ஏற்படுவது உறுதி. இவரின் உரைநடை நீரோட்டம் போன்றது. தமிழ் உரைநடைக்குப் புத்துயிர் ஊட்டிப் புதுவாழ்வு அளித்தவர். வேம்பாகக் கசக்கும் வரலாற்று உண்மைகளை சர்க்கரைப் பொங்கலாக தமிழ்க் குமுகாயத்திற்குத் தந்தவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என்று போற்றப்பட்ட இவரின் நூல்கள் தமிழ்க் குமுகாயத்திற்கு வலிவும், பொலிவும் சேர்க்கும் என்ற தளராத உணர்வோடு தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம்.
முன்னோர்கள் சேர்த்து வைத்த அறிவுச் செல்வங்களைத் தேடித் தேடி எடுத்து நூல் திரட்டுகளாக ஒரு சேர வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தொகுப்பு நூல் பதிப்பகம் என்பதை நிலை நிறுத்தி வருகிறோம். சாமிநாத சர்மா 78 நூல்களை எழுதியுள்ளார். இதில் நாட்டு வரலாற்று நூல்கள் 12 இப்பன்னிரண்டையும் 8 நூல் திரட்டுகளில் அடக்கி வெளியிடு கிறோம். ஏனைய நூல்களையும் மிக விரைவில் தமிழ் கூறும் உலகுக்கு வழங்க உள்ளோம்.
இவரின் தமிழ் நூல்கள் வெளிவந்த காலம் வடமொழி ஆளுமை ஒங்கியிருந்த காலமாகும். அந்தக் காலப் பேச்சு வழக்கையே மொழி நடையின் போக்காக அமைத்துக் கொண்டு நூலினை உருவாக்கியுள்ளார். மரபு கருதி உரை நடையிலும், மொழி நடையிலும், நூல் தலைப்பிலும் எந்த மாற்றமும் செய்யாது நூலை அப்படியே வெளியிட்டுள்ளோம்.
தமிழ் இளம் தலைமுறைக்கும், எதிர்வரும் தலைமுறைக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காக சர்மாவின் நூல்களைப் படைக்கருவிகளாகத் தந்துள்ளோம். தமிழ்க் குமுகாயம் வலிமையும், கட்டமைப்பும் மிக்கப் பேரினமாக வளர வேண்டும்; வாழவேண்டும் என்ற உணர்வோடு இந்நூல் தொகுப்புகளை உங்கள் கைகளில் தவழவிடுகிறோம்.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற இந்தியத் தேசியப் பெருங்கவிஞன் பாரதியின் குரலும், ஒற்றுமையுடன் தமிழர் எல்லாம் ஒன்று பட்டால் எவ்வெதிர்ப்பும் ஒழிந்து போகும், என்ற தமிழ்த்தேசிய பெருங்கவிஞன் பாரதிதாசனில் குரலும் தமிழர்களின் காதுகளில் ஓங்கி ஒலிக்கட்டும். உணர்வுகள் ஊற்றாகப் பெருகி நல்ல செயல்களுக்கு வழிகோலட்டும்.
நாட்டு வரலாற்றுத் தொகுதிகளுக்கு தக்க நுழைவுரை வழங்கி பெருமைப்படுத்தியவர் ஐயா. பி. இராமநாதன் அவர்கள். இப்பெருந்தகை எம் தமிழ்ப்பணிக்கு பெரிதும் உதவியாக இருந்து வருகிறார். அவருக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் உரித்தாக்கக் கடமைப்பட்டுயுள்ளேன்.
பதிப்பாளர்
புதியசீனா
1. சீனாவில் 01.10.1949 இல் மாசேதுங் தலைமையில் பொது வுடைமை ( கம்யூனிசுடு ) ஆட்சி நிறுவப்பட்டது வரையுள்ள அந்நாட்டு வரலாற்றை இந்நூலில் சாமிநாத சர்மா அருமையாகத் தந்துள்ளார். அதற்குப் பின்னர் கடந்த 57 ஆண்டுகளில் நடந்தவற்றைப் பற்றிச் சுருக்கமாகச் சில செய்திகளைக் காண்போம்.
2. 1950-53இல் நடைபெற்ற கொரியப் போரில் வடகொரியாவுக்கு ஆதரவாக சீனா போரிட்டு அமெரிக்க அரசின் வல்லாண்மையைத் தடுத்து நிறுத்தியது. 1950 லேயே சீனா திபேத் நாட்டிற்குள் தன் படையை அனுப்பி தன் நேரடி ஆட்சிக்குள் கொண்டு வந்தது. (1959இல் தலாய் லாமா இந்தியாவிற்கு ஓடி வந்து விட்டார்). 1957-58 லிருந்து சீனாவுக்கும் உருசியாவுக்கும் இணக்கமான உறவு அற்றுவிட்டது. 1960க்குப்பின் உருசிய வல்லுநர்கள் சீனாவை விட்டுச் சென்றுவிட்டனர்.
3. 1958-1962 ஆண்டுகளில் முன்னேற்றப் பெரும்புரட்சியை Great Leap Forward சீன அரசு செயல்படுத்தியது. 1930களில் உருசியாவில் டாலின் செய்தது போல் வேளாண்மையில் கூட்டுப் பண்ணை அதாவது கொம்யூன் முறை (ஒவ்வொன்றும் சுமார் பத்தாயிரம் ஏக்கர்; 5000 குடும்பங்கள்) புகுத்தப்பட்டது. நமது நாட்டுக்குப் பொருத்தம் நாமே நடத்தும் கூட்டுப் பண்ணை விவசாயம் என்ற உன்னிப்பில் புகுத்தப்பட்ட இம்முறை உருசியாவில் வெற்றியடையாதது போலவே சீனாவிலும் வெற்றியடையவில்லை. (1980க்குப் பின்னர் மீண்டும் உழவர்களின் தனியுரிமைகளை மதிக்கும் செயற்பாடுகள் சீனாவில் தொடங்கி 1990க்குப்பின் மேலும் விரிவாகியுள்ளன). முன்னேற்றப் பெரும் புரட்சிக் காலத்தில் உணவுப்பற்றாக்குறை காரணமாகவும் பிற காரணங்
களினாலும் சீனாவில் இறந்தவர் தொகை சுமார் 3 கோடியாகும். எனினும் இக்கால கட்டத்தில் ஓரளவு தொழில், பொருளாதாரத் துறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டதும் சீனா வல்லரசு ஆனதும் உண்மைதான்.
4. 1962 இல் சீனா இந்தியாவின் வடகிழக்கில் அருணாசலப் பிரதேசப் பகுதி மீது படையெடுத்தது. ஆயினும் விரைவில் போர் நிறுத்தம் ஏற்பட்டது. அண்மை ஆண்டுகளில் இந்தியாவின் வடகிழக்குப் பகுதி, காசுமீரின் லடாக் பகுதிகள் பற்றி இந்தியாவுக்கும் சீனாவிற்கும் இடையேயுள்ள சச்சரவைத் தீர்க்க முயற்சிகள் நடந்து வருகின்றன. புத்தரை ஈன்ற நாடும், பெரும் எண்ணிக்கையில் புத்த சமயத்தவர் வாழும் நாடும் நம் காலத்திலாவது இணக்கத்துடன் வாழ முற்படுமா? என்பது நமது ஏக்கமாகும்..
5. முன்னேற்றப் பெரும்புரட்சியானது மேலிருந்து கீழே (அதாவது பொதுவுடைமைக் கட்சித் தலைமையும் அரசும் கட்டளை யிட்டு) செயல்படுத்தப்பட்டது. இதற்கு நேர்மாறாக கீழிருந்து மேல் ( தலைமையை நொறுக்கு: Bombard the Headquarters) என்ற கோட்பாட்டில் மாபெரும் பண்பாட்டுப் புரட்சியை ( GREAT CULTURAL REVOLUTION) 1966 மே முதல் 1969 ஏப்ரல் முடிய மூன்று ஆண்டுகளில் செயல்படுத்தினார் தலைவர் மாசேதுங். கட்டவிழ்த்து விடப்பட்ட செங்கொடி ஏந்திய இளைஞர்களுக்கு (Red guards) முழு அதிகாரம் தரப்பட்டது. அறிவு, அனுபவம், கட்டுப்பாடு எதுவும் இல்லாத இந்த விடலையர்கள் கையில் சிக்கி பலகோடி சீனர் அடி, உதை, சித்திரவதை, சாவு, பொருள் இழப்பு ஆகியவற்றுக்கு ஆளாயினர். குரங்குக் கைப் பூமாலை போல் அரசிலும், கட்சியிலும், ஆட்சியிலும் நாடு முழுவதும் பெருங்குழப்பம் ஏற்பட்டது. இராணுவம் மட்டுமே பாதிக்கப்படாமல் இருந்தது. இக்கால கட்டத்தில் இப்புரட்சியின் நேரடி மற்றும் மறைமுகப் பாதிப்பால் ஏறத்தாழ 4 கோடி சீனர்கள் மடிந்தனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
6. அமெரிக்கக் குடியரசுத் தலைவர் நிக்சன் சார்பில் 1971 இல் கிசிங்கர் சீனா சென்று மாசேதுங்கைச் சந்தித்தார். 1972இல் நிக்சனே மாசேதுங்கை சந்தித்தார். அதற்குப் பின் படிப்படியாக சீனா-அமெரிக்கா உறவு வளர்ந்து வந்துள்ளது.
7. மாசேதுங் 09.09.1976இல் இறந்த பின்னர், மாசேதுங்கின் மனைவி ஜியாங்குயிங் மற்றும் அவருடைய மூன்று நண்பர்கள் ஆகிய நால்வர் கும்பலை (gang of Four) கைது செய்து அடக்கிவிட்டு டெங் சியாபிங் Deng Xiaping கிற்கு சாதகமானவர்கள் ஆட்சியைப் பிடித்தனர். இதில் இராணுவத் தலைவர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. 1977 நடுவிலிருந்து 1993 வரை டெங் சியாபிங் தலைமையின் கீழ் பொதுவுடைமைக் கட்சி தலைமை அமைப்பின் (Standing Committee of Politbureau ) நிலைக்குழு உறுப்பினர் அறுவர் இடம் ஆட்சியின் தலைமை அதிகாரம் இருந்தது.
8. படிப்படியாக சீனா மேலை நாடுகளுடன் பொருளாதார வாணிக உறவுகளைப் பெருக்கி வருகிறது. அந்நாடுகளுடன் சீன வாணிக மதிப்பு 1973இல் இருந்ததை விட 1987ல் இருபது மடங்கு பெருகியது. 1987க்குப் பின்னரும் மேலும் வளர்ந்த வண்ணம் உள்ளது. இங்கிலாந்தின் காலனியாக இருந்த ஹாங்காங் பகுதி 1997இல் சீனாவுடன் சேர்க்கப்பட்டது. (ஹாங்காங்கின் பொருளாதார -சமூக முறைகளை 2047 வரை மாற்றாமல் இருக்க சீனா இசைந்துள்ளது.) 1980-களிலிருந்தே அமெரிக்க, ஐரோப்பிய கம்பெனிகள் உள்ளூர் நிலங்கள்; உள்ளூர்த் தொழிலாளர் உழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் முழு உரிமையுடன் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் Special Economic Zones அமைத்து தொழில் தொடங்கி நடத்தி வர சீன அரசு அனுமதித்து வருகிறது. இந்தியாவிலும் பொதுவுடைமைக் கட்சி ஆளும் மாநிலங்களிலும் இதே அடிப்படையில் அத்தகைய மண்டலங்கள் இப்பொழுது அமைக்கப்படுவதைக் காணலாம்.
9. 1989இல் பீகிங் நகரத்தில் தியனான்மன் சதுக்கத்தில் சில இலக்கம் மாணவர்கள் பொதுவுடைமை அரசின் வல்லாண்மைக் கொள்கைகளுக்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டம் வன்முறையால் அடக்கப்பட்டது. சில ஆயிரம் மாணவர்கள் உயிரிழந்தனர். எனினும் அம்மாணவர்கள் கோரிக்கைகள் சிலவற்றை 1989க்குப் பின்னர் சீன அரசு செயல்படுத்தி வருகிறது.
10. டெங் சியாபிங்கிற்குப் பின் 1993க்குப்பின் ஜியாங் செமின் (Jiang zemin ) தலைமையிலான சீனப் பொதுவுடைமை அரசும் சியாபிங் கொள்கைகளையே பின்பற்றி வருகிறது. 1980களிலிருந்து சீன அரசு கண்டிப்பாகச் செயல்படுத்திய குடும்பத்துக்கு ஒரு குழந்தை மட்டும் என்னும் கொள்கை காரணமாக சீனமக்கள் தொகை இன்று 130 கோடி அளவில் இருந்து வருகிறது. (1949இல் சீன மக்கள் தொகை 46 கோடி.) சீனாவின் மொத்தப்பரப்பு 37 லட்சம் சதுரகற்கள் ஆகும். (முன்னர் பார்மோசா என்று அழைக்கப்பட்ட தாய்வான் நாட்டில் 14000 சதுரகற்கள் தனி அரசாக ஆளும் சியாங்கே ஷேக் அரசின் வாரிசுகள் ஆட்சியில் உள்ள 2 கோடி சீனர்கள் எண்ணிக்கை தனி.)
11. சீனாவின் மக்கள் தொகையில் 92சதவீதம் ஹான் (Han) இனத்தவர். ஏனைய சிறுபான்மையினருள் அடங்கியவர்கள் தென்மேற்கு சீன யூனான் இனத்தவர் (1 1/2 கோடி; மஞ்சு இனத்தவர் 1 கோடி; உய்குர் இசுலாமியர்கள் 0.8 கோடி; மியாவோ Miao இனத்தவர் 0.8 கோடி; மங்கோலியர் 0.5 கோடி; திபேத்தியர் 0.5 கோடி, முதலியவர்கள் ஆவர். பெரும்பான்மை ஹான் இனமக்கள் பேசும் மொழிகள் சுமார் பத்து என்றாலும் அவை அனைத்துக்கும் சீன எழுத்து முறை பொதுவானது. மொத்தம் 40000 படவெழுத்து வடிவங்களைக் கொண்டது இம்முறை. குறைந்தது 5000 எழுத்து வடிவங்களையாவது கற்றால்தான் சீன மொழியை எழுதப் படிக்க இயலும்.
12. உலகில் நாகரிகம் தொடங்கிய ஒரு சில மையங்களில் சீனாவும் ஒன்று. இன்றைய அறிவியல் தொழில் நுட்பவியல் கண்டு பிடிப்புகளுள் அடிப்படையான பலவும் முதலில் சீனாவில் உருவானவையே ஆகும். இன்று சீனா உலகின் வல்லரசுகளில் ஒன்றாக உள்ளது. பிற நாடுகளைப் போலவே அந்நாட்டின் மக்கள் வரலாற்றிலும் கடந்த சில ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றிலும் அவலம் நிறைந்த பகுதிகள் பல உண்டு. எனினும் சீன மக்கள் அவற்றை வென்று தொடர்ந்து உலகில் சிறப்பான இடம் பெற்று வருகின்றனர். பொதுவுடைமை ஆட்சி நடக்கும் சீனா இன்றைய வல்லரசுகளில் ஒன்றாக விளங்குகிறது.
நூலாக்கத்திற்குத் துணை நின்றோர்
_நூல் கொடுத்து உதவியோர்_ _ஞானாலயா_ கிருட்டிணமூர்த்தி வாழ்விணையர், பெ.சு. மணி,
_புலவர்_ கோ. தேவராசன், முனைவர் இராகுலதாசன், முனைவர் இராம குருநாதன், முத்தமிழ்ச் செல்வன் க.மு., ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
_நூல் உருவாக்கம்_ _நூல் வடிவமைப்பு_ செ. சரவணன்
_மேலட்டை வடிவமைப்பு_ இ. இனியன்
_அச்சுக்கோப்பு_ _முனைவர்_ செயக்குமார், மு. கலையரசன், சு. மோகன், குட்வில் செல்வி, கீர்த்தி கிராபிக் பட்டு, விட்டோபாய்
_மெய்ப்பு_ _முனைவர்_ செயக்குமார், வே.மு. பொதியவெற்பன், கி. குணத்தொகையன், உலோ. கலையரசி, அ. கோகிலா, கு. பத்மப்பிரியா, நா. இந்திராதேவி, இரா. நாகவேணி, சே. சீனிவாசன்
_உதவி_ அரங்க. குமரேசன், வே. தனசேகரன், நா. வெங்கடேசன், மு.ந. இராமசுப்ரமணிய இராசா
_எதிர்மம் (Negative)_ பிராசசு இந்தியா (Process India)
_அச்சு மற்றும் கட்டமைப்பு_ வெங்கடேசுவரா மறுதோன்றி அச்சகம் (Venkateswara Offset Printers)
இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . .
நாட்டு அமைப்பும் மக்கள் பண்பும்
உலகத்திலேயே, பகைவருக்கு நகைமுகங்காட்டி, நல்வரவு கூறி, அவர்களைத் தங்களிடம் ஐக்கியப்படுத்திக் கொண்டுவிடுகிற சக்தி வாய்ந்த தாய்மார் இருவர். வாழ்க பாரதமாதா! வாழ்க சீனத்தாய்!
இந்தியாவும் சீனாவும், பூமாதேவியின் மூத்தபெண்கள்; இரட்டைக் குழந்தைகள். இவ்விருவரும் அழியாத கன்னியர்; குன்றாத வனப்பினர்; குறையாத வளத்தினர். இவர்கள், எத்தனையோ நாடுகளுக்கு நாகரிகப் பால் புகட்டினார்கள்; எத்தனையோ இடங் களுக்கு ஞானவிளக்கை ஏந்திச் சென்றார்கள். நாகரிகத்தையும் ஞானத்தையும் மட்டுமா கொண்டு சென்றார்கள்? இல்லை, இல்லை; உணவையும் உடையையுங் கூடக் கொண்டு சென்றார்கள். மற்றவர் களுடைய வந்தனத்தையோ நன்றியையோ எதிர்பார்த்து இவர்கள் இங்ஙனம் செய்யவில்லை; தங்கள் கடமையாகக் கருதியே செய்தார்கள்.
இன்று உலகத்தில் சத்தியமென்றும் தருமமென்றும் பேசப்படு கிறதென்று சொன்னால் அவை யாவும் இந்த இரண்டு நாடுகளி லிருந்து பிறந்தவைதான். யந்திர நாகரிக வெறி முற்றியுள்ள இந்த இருபதாவது நூற்றாண்டிலே, மேற்படி சத்தியத்திற்கும் தருமத் திற்கும் மதிப்பு வைத்துப் பேசுவது இந்த இரண்டு நாடுகளுந்தான். சத்தியத்தையும் தருமத்தையும் தாங்கள் கவசமாக அணிந்து கொண்டி ருக்கிறவரையில் தங்களுக்கு அழிவே கிடையாது என்ற திட நம்பிக்கையுடனிருப்பதும் இந்த இரண்டு நாடுகள்தான்.
ஆனால் - இந்த ஆனால் என்ற வார்த்தையை மிகுந்த மன வேதனையுடனேயே உபயோகிக்கிறோம் - இவ்விரண்டு நாடுகளும் எவ்வளவுக் கெவ்வளவு அமைதியிலேயே இன்பம் துய்த்து வந்தனவோ, துய்க்கும் ஆற்றல் பெற்றிருந்தனவோ அவ்வளவுக் கவ்வளவு இப்பொழுது யுத்தச் சுழலில் அகப்பட்டுக்கொண்டு அமைதியை இழந்து நிற்கின்றன. இப்படி அமைதியை இழந்து நிற்கின்ற காலத் திலும், ஒன்றுக்கொன்று அநுதாபத்தோடு பார்த்துக் கொள்கின்றன. இரண்டு நாடுகளுக்கும் பரம்பரையான தொடர்புண் டல்லவா? நெருங்கிய நட்புண்டல்லவா? உயிருக்காகப் போராடிக் கொண்டி ருக்கும் சீனாவே! உரிமைக்காகப் போராடிவரும் இந்தியா, தனது மனப்பூர்வமான அநுதாபத்தை உனக்குத் தெரிவிக்கிறது.
சீனா என்பது அந்நியர்கள் அழைக்கிற பெயர். சீனர்கள் தங்கள் நாட்டை இந்தப் பெயரிட்டு அழைப்பதில்லை; சுங் - ஹுவா அல்லது சுங் - குவோ என்று தற்பெருமையோடு அழைக் கிறார்கள்; பெரும்பாலும் இரண்டு பெயர்களையும் சேர்த்தே, அதாவது டாசுங் - ஹுவாமின் - குவோ என்று அழைக்கிறார்கள். சுங் என்றால் மத்தியிலுள்ள, ஹுவா என்றால் புஷ்பம் அல்லது புகழ் நிறைந்த வாழ்வையுடைய, குவோ என்றால் நாடு. பூமியின் மத்தியிலுள்ள புஷ்பம்போன்ற அல்லது புகழ் நிறைந்த நாடு என்று பொருள். அதாவது, இயற்கையோடு உறவு பூண்டு நல்வாழ்வு நடத்துவதற்கேற்ற இடம் என்று சொல்லலாம். யாருக்கும் தங்கள் தாய் நாட்டைப்பற்றி ஒரு பெருமை இருப்பது சகஜம். ஆனால் சீனர்கள் பெருமை பாராட்டுவதில் அர்த்தமிருக்கிறது; உண்மை யிருக்கிறது. ஏனென்றால் அவர்களுடைய நாகரிகம் அவ்வளவு பழமையானது.
இப்பொழுது சீனாவின் வடமேற்கிலுள்ள கான்ஸு, ஷென்ஸி என்ற இரண்டு மாகாணங்களும் சேர்ந்த ஒரு பிரதேசத்தை ஒரு காலத்தில் சௌ என்ற ஒரு வமிசத்தினர் ஆண்டுவந்தனர். இந்தப் பிரதேசத்திற்கு அப்பொழுது சின் என்று பெயர். மேற்படி வமிசத் தினர், தங்கள் புயவலியால், சுற்றுப்புறமுள்ள பிரதேசங்களைத் தங்கள் சுவாதீனப் படுத்திக் கொண்டனர்; அனைத்தையும் சேர்த்து சின் என்ற பெயரால் அழைத்தனர். நாளாவட்டத்தில் இந்தப் பெயரானது சீனாவென்று மருவியது. சுமார் இரண்டாயிரம் வருஷ காலமாக இந்தச் சீனா என்ற பெயரே நிலவி வருகிறது. நமது ராமாயணம், பாரதம் போன்ற இதிகாசங் களிலும், சங்க நூல் களிலும் சீனம் என்றும் சீனர் என்றுமே வழங்கப் படுகின்றன.
பூகோள சாதிர ரீதியாகப் பார்க்கிறபோது, சீனா ஒரு கண்டம். இதன் எல்லைப்புறமானது கொரியா, சைபீரியா, ருஷ்ய துருக்கிதானம், ஆப்கனிதானம், இந்தியா, பர்மா, இந்தோ-சீனா ஆகிய நாடுகளையும் பசிபிக் மகாசமுத்திரத்தையும் தழுவிக் கொண்டிருக்கிறது. இதன் விதீரணம் 43,14,097 சதுர மைல்; ஜனத் தொகை 45,07,93,390. ஆசியா கண்டத்தில் நான்கில் ஒரு பகுதி சீனா. உலகத்தில் பதினைந்தில் ஒரு பகுதி சீனா. உலகத்திலே வசிக்கிற மொத்த ஜனங்களில் ஏறக்குறைய நூற்றுக்கு இருபத்து மூன்று பேர் சீனாவில் வசிக்கிறார்கள்.
ஒரு காலத்தில் உலகத்திலேயே மிகப்பெரிய ஏகாதிபத்தியமாக இருந்தது சீனா. கொரியா, போர்மோஸா, அன்னாம், சையாம், பர்மா, பூட்டான், நேபாளம் முதலிய நாடுகள் இதன் ஆதிக்கத்திற் குட் பட்டிருந்தன. இப்பொழுது இதனை அழித்து விடக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் ஜப்பான் கூட, இதற்கு ஒரு காலத்தில் கப்பங்கட்டிக் கொண்டு வந்தது. ஜப்பானிய அரசன் ஒருவன், சீனச் சக்ரவர்த்தி ஒருவனால் அளிக்கப் பெற்ற கௌரவப்பட்டத்தை ஏற்றுப் பெருமை யடைந்தான். ஆனால் பிற்காலத்தில் இது மஞ்சூ அரச பரம் பரையினருடைய நிருவாகத்தின் கீழ் வலுவிழந்துவிட்டது; ராஜ் யத்தின் எல்லையும் சுருங்கிவிட்டது.
பூகோள சாதிரிகள், சீனாவை வடக்கு சீனாவென்றும், தெற்கு சீனாவென்றும், மத்திய சீனாவென்றும் மூன்று பிரிவுகளாகப் பிரிக் கிறார்கள். சீதோஷ்ண திதி, மண்வளம், பொருளுற்பத்தி, ஜனங்கள் வாழ்கிறவிதம் முதலியயாவும், இந்த மூன்று பிரிவுகளிலும் வெவ் வேறு விதமாக இருக்கின்றன. ஒவ்வொன்றையும் ஒவ்வொரு நாடு என்று கூறுதல் பொருந்தும். இங்ஙனம் பல நாட்டுப் பண்புகள் அமைந் திருப்பதனாலேயே சீனாவை ஒரு கண்டமென்று அழைக் கிறார்கள்.
வடக்கு சீனா, பட்டணங்கள் குறைந்த, கிராமங்கள் நிறைந்த களிமண் பூமி. புன்செய் தானியங்களின் விளைவு அதிகம். நிலக்கரி, இரும்பு முதலிய சுரங்கப் பொருள்கள் ஏராளமாக உண்டு. ஆனால் இவை உபயோகத்திற்குக் கொண்டு வரப்படாமல் பூமிக்குள்ளேயே புதைந்து கிடக்கின்றன. இந்தப் புதை பொருள்களை மேலுக்குக் கொணர்ந்து ஜனங்களுக்குப் பயன்படுத்துகிறோ மென்று சொல்லிக் கொண்டுதான், ஜப்பான், இந்த வடக்கு சீனாவின் மீது தனது ஏகாதிபத்தியப் பார்வையைச் செலுத்தியிருக்கிறது.
தெற்கு சீனா என்பது பெரும்பாலும் மலைப் பாங்கான பிரதேசம். ஆனால் கடற்கரை யோரமாகவுள்ள இடங்களிலும், மலைக் கணவாய் களிலும் அதிகமான நெல்விளைவு உண்டு. வருஷத்தில் மூன்று போகங்கூடச் சில இடங்களில் சாகுபடி செய் கிறார்கள். மலைச்சரிவு களில் தேயிலை, காப்பி முதலியவை உற்பத்தி செய்யப் படுகின்றன. இந்தத் தெற்குச் சீனாவில் சிறிய நகரங்களும் துறை முகப்பட்டினங்களும் அதிகம். ஜனங்களும் நெருங்கி வசிக்கிறார்கள். பல வகைப்பட்ட பாஷைகள் பேசு வோரையும், பல வகைப்பட்ட பழக்க வழக்கங் களையுடையோரையும் இங்கே காணலாம்.
மத்திய சீனா, நீர்வளமும், நிலவளமும் நிறைந்த பிரதேசம். இவ் விரண்டுமுடைய இடத்தில் குடிவளம் ஓங்கியிருக்கிறதென்பதைச் சொல்லவும் வேண்டுமோ? உலகத்திலேயே அதிகமான உணவுப் பொருள்கள் உற்பத்தியாவது இங்கேதான். நெல் முதல் பருத்தி வரையில், கோதுமை முதல் தேயிலை வரையில் இங்கே விளைகின்றன. இந்த விளைவுக்கு அனுகூலமாகவே சீதோஷ்ண நிலையும் சமமாக இருக்கிறது. இவையெல்லாம் சேர்ந்த இடத்தில், பலவகைப்பட்ட தொழிற் தாபனங்கள் நிறைந்திருக்கின்றன. வியாபாரம் நன்றாக நடக்கிறது. வர்த்தகர்கள் அதிகமாயிருக்கிறார்கள். பணப்புழக்கத் திற்குக் குறைவே யில்லை. சீனாவின் மொத்த ஜனத்தொகையில் ஏறக்குறைய பாதி ஜனத்தொகை இந்த மத்திய சீனாவில்தான் இருக்கிறது. அப்படியே சீனாவின் மொத்த வியாபாரத்தில் ஏறக் குறைய பாதி இங்கேதான் நடைபெறுகிறது. மத்திய சீனாவிலுள்ள ஷாங்காய் நகரம், சர்வ சீனாவுக்கும் வியாபாரத்தைப் பொறுத்த மட்டில், தலைவாசல் மாதிரி இருக்கிறது.
உலகத்து நீண்ட நதிகளுள் இரண்டு, ஹோயாங்கோவும், யாங்க்ட்ஸீகியாங்கும் சீனாவில் ஓடுகின்றன. ஹோயாங்கோ நதியை சீனாவின் துக்கக் கண்ணீர் என்று சீனர்கள் அழைக்கிறார்கள். ஏனென்றால் இதில் அடிக்கடி வெள்ளம் வந்து பயிர்களையும், ஆற்றோரமாக வசிக்கும் ஜனங்களின் வீடு வாசல்களையும் அழித்து விடுகிறது. மற்றும் இதன் போக்கில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படு கின்றன. இதனால் விவசாயி களுக்கு அதிக கஷ்டம் உண்டாகிறது. இந்த ஹோயாங்கோ நதிக்கே மஞ்சள் நதி என்று பெயர். மஞ்சள் நிறமுடைய வண்டல் படிவதால் இந்தப் பெயர் வந்தது. இந்த நதியின் நீளம் 2,580 மைல்.
யாங்கட்ஸீகியாங் நதிக்கு பெரிய நதியென்று சீனர்கள் பெயர் கொடுத்திருக்கிறார்கள். இதன் நீளம் 2,850 மைல். சீனாவின் தெற்குப் பிரதேசம் வளம் பெற்றிருப்பதற்கு இந்த நதியே முக்கிய காரணம்.
இந்த இரண்டு நதிகள் மூலமாகவும், இவைகளின் உபநதிகள், கிளைநதிகள் மூலமாகவும், சீனாவின் உள்நாட்டு வியாபாரத்தின் பெரும் பகுதி நடைபெறுகிறது. ஜனங்களுடைய விவசாய ஜீவனத் திற்கு இவை பெரிதும் துணை செய்கின்றன. இந்தியாவைப் போலவே சீனாவும் ஒரு விவசாய நாடு. சீனாவில், நூற்றுக்குச் சுமார் எழுபத்தைந்து பேர் விவசாயத்தையே ஜீவனோபாயமாகக் கொண்டிருக்கிறார்கள்.
சீனாவை மொத்தம் இருபத்தெட்டு மாகாணங்களாகப் பிரித்திருக்கிறார்கள். இவை தவிர, சீனாவின் ஆதிக்கத்தை அங்கீகரித்துக் கொண்டிருக்கிற, ஆனால் சுயேச்சையுடைய இரண்டு பிரதேசங்கள் உண்டு. இவையே மங்கோலியா, திபேத்து. இவற்றின் விதீரணம், ஜனத்தொகை முதலிய விவரங்களை முதலாவது அனுபந்தத்தில் காண்க.
மேற்படி மாகாணப் பிரிவினைகளைத் தவிர்த்து சீனாவுக் குள்ளேயே மூன்று விதமான விசேஷப் பிரதேசங்கள் உண்டு. இவை முறையே, (1) சர்வதேசத் துறைமுகப் பட்டினங்கள் (2) அந்நியர்கள் சலுகைபெற்று வாழும் பிரதேசங்கள் (3) குத்தகைக்கு விடப்பெற்ற பிரதேசங்கள்1 என்பனவாம்.
இவற்றில் சர்வதேசத் துறைமுகப்பட்டினங்கள் என்பவை பெரும்பாலும் சமுத்திரக்கரையோரமாகவுள்ளன; சில, ஆற்று மார்க்கத்திலும் இருக்கின்றன. இங்கு அந்நிய நாட்டார் பலரும் தாராளமாக வியாபாரஞ் செய்யலாம். ஏற்றுமதி இறக்குமதி விவகாரங்களில் இங்கே எவ்வித நிர்ப்பந்தங்களும் அந்நியர்களுக்கு இல்லை. சீனாவுக்கும் மற்ற வல்லரசுகளுக்கும் ஏற்பட்ட ஒப்பந் தங்களின் பலனாகவே இவை தோன்றின என்று ஐதிகம். அதாவது சீனர்களே மனமொப்பி, அந்நியர் களுக்கு, இத்துறைமுகங்களில் வியாபாரஞ் செய்ய இடங்கொடுத்திருக் கின்றனராம். ஆனால் உண்மையில் சீனர்கள், இத்துறைமுகப்பட்டினங் களை அனுமதித் திருப்பது, தங்களுடைய ராஜ்ய அந்ததுக்குக் குறை வென்றே கருதுகிறார்கள். எப்படியென்றால், சென்ற நூற்றாண்டில் சீன அரசாங்கம் பலவீனப்பட்டுக்கிடக்கையில் அந்த பலவீனத்தைப் பயன் படுத்திக் கொண்டு அந்நிய வல்லரசுகள் இந்தத் துறைமுகங் களைப் பெற்றன. இவற்றால் சீனாவின் பொருளாதார வாழ்க்கை எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டிருக்கிற தென்பதை நாம் சொல்லத் தேவையில்லை. சீனாவிலேயே முக்கிய வியாபார தலங்களென்று கருதப்படக்கூடியவை சுமார் நூறு இருக்கும். இவற்றில் ஏறக்குறைய எழுபதுக்கு மேல் இந்த மாதிரியான துறைமுகங்களாகவே இருக்கின்றன.
அந்நியர்கள் சலுகை பெற்று வாழும் பிரதேசங்களென்று சொன்னோமே இவைகளுக்கு கன்ஸெஷன்கள் என்றுபெயர். இவை துறைமுகப்பட்டினங்கள் மாதிரிதான். இங்கே வசிக்கும் அந்நியர்கள், சீன அரசாங்கத்தின் ஆதிக்கத்துக்குட்பட்டவர் களல்லர். சீன அரசாங்கத்தின் சட்டதிட்டங்கள் இங்கே செல்லுபடி யாகா. எந்தப் பிரதேசத்தில் எந்த நாட்டார் வசிக்கின்றனரோ அந்த நாட்டாரே, அந்தப் பிரதேசத்தின் நீதி நிருவாகங்களைக் கவனித்துக் கொள்கின்றனர். சில சில துறைமுகப் பட்டினங்களில் இந்த மாதிரியான கன்ஸெஷன்கள் சுமார் இருபது வரையில்கூட இருக்கின்றன.
குத்தகைப் பிரதேசங்களென்பவை, துப்பாக்கி முனையைக் காட்டிப் பயமுறுத்தி, சீன அரசாங்கத்திடமிருந்து குத்தகையாகப் பெற்ற இடங்கள். குத்தகைப் பிரதேசங்களென்று பெயரே தவிர, எந்த நாட்டார் குத்தகையாகப் பெற்றிருக்கிறார்களோ அந்த நாட்டாருடைய ஆதிக்கமே இங்கு நிலவுகின்றது. பெரும்பாலான பிரதேசங்கள் தொண்ணூற் றொன்பது வருஷ குத்தகைக்கு விடப் பட்டிருப்பவை. இந்தக் குத்தகைக் காலம் முடிந்துவிட்டுக்கூட சில பிரதேசங்கள், திரும்ப சீனாவிடம் வந்து சேரவில்லை. உதாரண மாக, போர்ட் ஆர்தர், டேரியன்பே முதலிய துறைமுகப் பட்டினங்களை, தொண்ணூற்றொன்பது வருஷ குத்தகைக்குப் பெற்ற ஜப்பான், குத்தகைத் தவணை முடிந்த பிறகுகூட, சீனாவிடம் திருப்பி ஒப்படைக்கவில்லை.
மேலே சொன்ன மூன்று வகையான பிரதேசங்களில், ஒரு சமுதாயத்தைச் சீரழிக்கக்கூடிய தீமைகள் என்னென்ன உண்டோ அவையாவும் அடைக்கலம் பெறுகின்றன. சுருக்கமாகச் சொல்லு மிடத்து, இவை சீனாவின் சுயமதிப்பைப் பாதிக்கக்கூடியனவாக இருக்கின்றன. ஆனால் 1912-ஆம் வருஷம் குடியரசு ஏற்பட்ட பிறகு, சிறப்பாக 1937-ஆம் வருஷம் சீன - ஜப்பானிய யுத்தம் தொடங்கிய பிறகு, பலாத்காரத்தின் மீது அக்கிரமமாக நிறைவேற்றிக் கொள்ளப் பட்ட அநேக ஒப்பந்தங்களை சீன அரசாங்கம் நிராகரித்திருக்கிறது; கன்ஸெஷன் பிரதேசங்களில் அந்நியர்கள் அனுபவித்துவந்த சில விசேஷ சலுகைகளையும் ரத்து செய்திருக்கிறது. என்றாலும், சீனாவைச் சேரவேண்டிய சில பிரதேசங்கள் அதனிடம் இன்னமும் திருப்பிக் கொடுக்கப்படவில்லை.
சீனாவில் பல மதங்களுண்டு; பல பாஷைகளுண்டு. சுமார் இரண்டாயிரத்தைந்நூறு வருஷங்களுக்கு முன்னர் கன்பூஷிய1 என்ற ஒரு மகான் அவதரித்தான். இவன், மனிதனுடைய நல்வாழ்வுக் கான சில அற நெறிகளை வகுத்துவிட்டுப் போனான். பழமையைப் போற்றுதல், முன்னோர்களின் நற்குணங்களைப் பின்பற்றுதல், மற்றவர் துன்பத்துக் கிரங்குதல், சன்மார்க்கத்தைக் கடைப்பிடித்தல் முதலியன இவனுடைய உபதேசசாரம். பிற்காலத்தில் இந்த உபதேசங்களே மதக்கோட்பாடுகளாகக் கருதப்பட்டு இவற்றைப் பின்பற்றுவோர் பலராயினர். இவர்களுக்குக் கன்பூஷியர்கள் என்று பெயர். இவர்கள், தங்களை ஒரு தனி மதத்தினராகவே கருதிக் கொண்டிருக்கிறார்கள்.
லாவோத்ஸே2 என்பவன் ஒரு ஞானி. இவன், புதிய மத மொன்றை நடைமுறையில் கொணர்ந்தான். இதற்கு டாவோயிஸம்3 என்று பெயர். தன்னடக்கம், தன் முனைப்பின்மை, எளிமை, கருணை முதலியவை களை இந்த மதம் வலியுறுத்துகிறது. இதனைப் பின்பற்றுவோர் பலர் சீனாவில் இருக்கிறார்கள்.
சீனாவில் புத்த மதத்திற்கு அதிகமான செல்வாக்கு உண்டென்று சொல்வது மிகையேயாகும். புத்த மதத்தின் பல பிரிவினரும் இங்கு இருக்கிறார்கள். பௌத்த பிக்ஷுக்கள், பிக்ஷுணிகள் மட்டும் சுமார் 7,38,000 பேர் இருக்கிறார்கள்; 2,67,000 புத்தர் கோயில்கள் இருக்கின்றன.
இந்த மதங்கள் தவிர, இலாமிய, கிறிதுவ மதங்களும் சீனாவில் ஆழமாக வேரூன்றியிருக்கின்றன. சுமார் ஒன்றரை கோடி இலாமியர்களும், பத்து லட்சம் கிறிதுவர்களும் இருக் கிறார்கள். சீனாவின் தற்போதைய அதிநாயகனாக விளங்கும் சியாங்கை ஷேக்1 ஒரு கிறிதுவன்; அரசாங்க நிருவாகத்திலும் ராணுவத்திலும் உயர்பதவிகள் வகிப்பவர் சிலர் முகம்மதியர்.
இங்ஙனம் பல மதங்கள் விரவியிருந்த போதிலும், பொது வாகவே சீனர்கள் மதத் துவேஷமில்லாதவர்கள்; சமரஸ மனப் பான்மை யுடையவர்கள். தேசநலன் என்கிற பிரச்னை வருகிறபோது, தங்களுடைய மதப்பற்றை ஒதுக்கி வைத்துவிட்டு, தேசத்திற்காகத் தங்களுடைய சர்வத்தையும் அர்ப்பணம் செய்ய முன்வருவார்கள்.
இந்தச் சமரஸ மனப்பான்மை தவிர, சீனர்களிடம் முக்கியமாகக் காணப்படுகிற ஒரு விசேஷகுணம், அவர்கள், தங்கள் மூதா தையர்களிடம் கொண்டுள்ள பக்தி. இறந்துபோன முன்னோர்களை தெய்வங்களாக வழிபடுவார்கள். பிரதியொரு சீனனும் தான் பிறந்து வளர்ந்த குடும்பத்திற்குக் கௌரவம் தேடிக்கொடுக்க வேண்டு மென்பதில் முனைந்து நிற்பான். பெற்றோர்களிடம் மரியாதையாக நடந்து கொள்ளுதல், முன்னோர்களின் பழக்க வழக்கங்களை ஒழுங்காக அனுசரித்தல் ஆகிய இந்த இரண்டு தன்மைகளையும் ஏறக்குறைய பிரதியொரு சீன குடும்பத்திலும் காணலாம்.
சீன சமுதாய வாழ்விலே அவிபக்த குடும்பத்திற்கு அதிக மதிப்பு உண்டு. மூன்று அல்லது நான்கு தலைமுறையினர் ஒன்றாக வாழ்தல் சர்வ சாதாரணம். குறைந்த பட்சம் ஒரு குடும்பத்தில் பத்து பேராவது இருப்பர். நூற்றுக்கணக்கான பேர்களடங்கிய குடும் பங்கள் பல. இத்ததைய பெரிய குடும்பத்தினர், தனித்த ஒரு சமுதாயம் போலவே வாழ்க்கையை நடத்துவார்கள். சில வருஷங்களுக்கு முன்னே சீனப் பத்திரிகைகளில் ஒரு பண்டிதனுடைய போட்டோ வெளியாகியிருந்தது. படித்த பண்டிதன் என்பதற்காக இவன் போட்டோ வெளியாகவில்லை. பெரிய குடும்பதன் என்பதற் காகவே வெளியாயிற்று. லீசிங் யுன் என்ற இந்தப் புலவன் 1660-ஆம் வருஷம் பிறந்தான்; 258 வருஷம் வாழ்ந்தான்; 14 தடவை விவாகம் செய்துகொண்டான். இவனுக்கு மொத்தம் 180 குழந்தைகள். இத்தனை குழந்தைகளோடும் இவன் ஏக குடும்பமாக வசித்து வந்தான். இதற்காகவே இவன் கௌரவிக்கப்பட்டான். ஷாங்காய் நகரத்தில் ஒரு குடும்பத்தினரின் வரலாற்றைக் கேளுங்கள். இந்த குடும்பத்தில் சுமார் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இருந்தார்கள். இவர்கள், தங்கள் குடும்பத்தை ஒரு ராஜ்யநிருவாகம் போலவே நடத்திவந்தனர். இவர்களுக்குள்ளேயே, போலீ சிப்பந்திகளென்ன, பத்திரிகையென்ன முதலிய எல்லாம் இருந்தன; சட்டசபைக் கூட்டங்கள் மாதிரி அடிக் கடி குடும்ப நிருவாகக் கூட்டங்கள் நடைபெற்று வந்தன. இங்ஙனம் பல குடும்பங்களைச் சீனாவிலே இன்னமும் காணலாம். தவிர, குடும்பம் ஏககுடும்பமாக இருந்தபோதிலும், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பிரதியொரு நபருக்கும், அவரவருடைய அறிவுக்கும் உழைப்புச் சக்திக்கும் தகுந்தபடி ஆண் பெண் அனைவருக்கும், கடமைகள் உண்டு; உரிமைகளும் உண்டு.
சீனாவில் பெண்கள், வீட்டுக்குள்ளேயே அடைத்து வைக்கப் பட்டு அடிமைகளைப்போல் நடத்தப்படுகிறார்கள் என்று, சீனாவை நன்கு அறிந்து கொண்டிருப்பதாகக் கருதிக் கொண்டிருக்கும் மேனாட்டு அறிஞர் சிலர் கூறுகின்றனர். இஃது உண்மையல்ல வென்று சீனர்கள் மறுக்கின்றனர். குடும்பப் பொறுப்பு அனைத்தையும் பெண் மக்களிடம் ஒப்படைத்துவிட்டு, ஆண் மக்கள், வெளி விவகாரங் களைக் கவனிப்பதுவே, சீனாவில் தொன்றுதொட்டு அனுஷ்டிக்கப் படும் வழக்க மாயிருந்து வருகிறது. யீ - சிங் என்ற புராதன சீன கிரந்தமொன்று, பெண்களின் நியாயமான தானம் குடும்பத்திற் குள்ளே; ஆண்களின் நியாயமான தானம் குடும்பத்திற்கு வெளியே என்று கூறுகிறது. ஒரு சீன அறிஞன் சொல்கிறான்: சீனாவில் ஒரு குடும்பத்தின் தலைமை அதிகாரி யாயிருக்கப்பட்டவள் மனைவி. அவள் செலுத்தும் அதிகாரம் உண்மையிலேயே அதிகமானது; விடுதலையடைந்துள்ள மேலைநாட்டுப் பெண்கள் செலுத்தும் அதிகாரத்தைக் காட்டிலும் அதிகமானது. வீட்டில் மனைவியினுடைய சொல்லுக்குக் கட்டுப்பட்டே கணவன் நடக்கிறான். சீனாவில் நாங் களெல்லோரும் மனைவியின் சொல்லைக் கேட்கிற புருஷர்கள்தான். வெளியிலே வீரச்சிங்கங்கள் மாதிரி நடந்து கொள்கிற அநேக புருஷன்மார்கள், வீட்டுக்குள்ளே வந்ததும் ஆட்டுக் குட்டிகளாக மாறிவிடுகிறார்கள். யுத்தகளத்தில் லட்சம் பேரை நடத்திச் செல்வது சுலபமான காரியம்; ஆனால் வீட்டில் ஒரு மனைவியைக் கட்டியாள்வது மகாகடினம் என்பது சீனப் பழமொழி.
இவ்வளவெல்லாம் இருந்தாலும், சமுதாய வாழ்வைப் பொறுத்த மட்டில் பெண்கள் சிறிது தாழ்வாகவே கருதப்பட்டு வந்திருக்கிறார்கள். ஆனால் சென்ற கால் நூற்றாண்டாக இந்த நிலைமை அடியோடு மாறியிருக்கிறது. முன்போல், பெண்களின் கால்கள் இரும்பு பூட்சுகளினால் நெருக்கப்பட்டுக் குறுக்கப் படுவதில்லை. சட்டத்தின் முன்னர் ஆண்களும் பெண்களும் சமமாகவே கருதப்படுகிறார்கள். உயர்தரக் கல்வி பயிலவும் அரசியல் விவகாரங்களில் கலந்து கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறார்கள். இப்பொழுது அநேக பெண்கள் அரசாங்க உத்தியோகதர்களா யிருக்கிறார்கள்; ராணுவ சேவைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
சீனர்கள், புராதன காலந்தொட்டே அறிவுக்கும் அமைதிக்கும் முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கிறார்கள். சமுதாயத்தை எந்த வகையாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள் என்பதைக் கொண்டே இதனை நாம் நன்கு தெரிந்து கொள்ளலாம். முதலில் அறிஞர்கள்; இரண்டாவது விவசாயிகள்; மூன்றாவது தொழிலாளர்கள்; நான்காவது வியாபாரிகள். சீன சரித்திரத்தின் ஆழத்தை நாம் சிறிது தோண்டிப் பார்த்தோமானால் பிரதியொரு சீன அரசனும், ஏதோ ஒருவகையில் அறிஞனாக இருந்திருக்கிறான்; அல்லது அறிஞர் களை ஆதரித்து வந்திருக்கிறான். கி. பி. ஆறாவது நூற்றாண்டில் ஆண்ட ஸூயி அரச வமிசத்தினர் வசத்தில் சுமார் 3,70,000 நூல்கள் இருந்தன. கி. பி. 1005-ஆம் வருஷத்தில், ஸுங் வமிசத்தினர் ஆண்ட போது, ஆயிரம் பகுதிகளைக் கொண்ட ஒரு பேரகராதி தயாரிக்கப் பட்டது. யுங்க்லோ என்ற மன்னன் (கி.பி. 1403 - 1424) 22,877 நூல்களைச் சேகரித்துவைத்தான். இதேமாதிரி பல உதாரணங் களைச் சொல்லிக் கொண்டு போகலாம். சீனர்கள், படிப்புக்கு எவ்வளவு புனிதத்தன்மை கொடுத்திருக்கிறார்கள் என்பதற்கு ஒரு சிறிய உதாரணம். அவர்கள் எந்த ஒரு துண்டுக் காகிதத்தையும், அதில் ஏதேனும் எழுதப் பட்டிருந்தால், அதனை அலட்சியமாக வீசி எறிய மாட்டார்கள்; அதனை அசுத்தப்படுத்தக்கூட மாட்டார்கள். ஜாக்கிரதையாக அந்தத் துண்டுக் காகிதங்களை யெல்லாம் ஒன்று சேர்த்து ஒரு பள்ளிக்கூடத் திற்கோ அல்லது கோயிலுக்கோ கொண்டு போய் பயபக்தியோடு எரிப்பார்கள். பொதுவாகவே சீன சமுதாயத்தில் படித்தவர்களுக்கு அதிகமான மதிப்பு உண்டு. பொன்னையும் மணியையும் விட ஞானத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது, உலகத்திலேயே சீன ஜாதி ஒன்றுதான் என்று பெர்ட்ராண்ட் ரஸல் என்ற அறிஞன் கூறுகிறான்.
சீனாவில் எத்தனையோ வகையான வேற்றுமைகள் இருந்த போதிலும், அறிவுத்துறையில் மட்டும் ஒருவகை ஒற்றுமை நிலவு கிறது. அதாவது அனுஷ்டிக்கிற மதம், பேசுகிற பாஷை முதலிய விஷயங்களில் அநேக வேற்றுமைகள் இருக்கலாம். ஆனால் கலாசார பரம்பரையிலும், முக்கியமான பழக்க வழக்கங்களிலும் ஏறக்குறைய எல்லாச் சீனர்களும் ஒன்று பட்டவர்களே. இந்த ஒற்றுமைக்கு அடிப்படையான காரணம் ஒன்றுண்டு. அதனை நாம் தெரிந்து கொள்வது நல்லது.
சீனாவில் பல பாஷைகள் பேசப் படுகின்றன வென்று மேலே சொன்னோமல்லவா? இங்ஙனம் பல பாஷைகள் பேசப்பட்டாலும், இவற்றிற் கெல்லாம் அடிப்படையாயுள்ள எழுத்து ஒன்றுதான். அதாவது பாஷைகளின் ஒலியிலே வேற்றுமையுண்டே தவிர வடிவிலே வேற்றுமை இல்லை. வடக்கு சீனனும் தெற்கு சீனனும் சந்தித்தால் ஒருவன் பேசுவதை மற்றொருவன் புரிந்து கொள்ள மாட்டான்; ஆனால் ஒருவன் எழுதுவதை மற்றொருவன் தெரிந்து கொள்வான். இப்பொழுது சிறிது காலமாக, இந்த ஒலி வேற்றுமை களைக் குறைப்பதற்காக முறைகள் வகுக்கப்பட்டு அனுஷ்டா னத்தில் இருந்து வருகின்றன. இதனால் பாஷை வேற்றுமைகள் கூட இனி இல்லாமற் போகும் என்று நம்பப்படுகிறது.
சீனர்கள், அமைதியை விரும்புகிறவர்கள்; அதாவது சமா தானப் பிரியர்கள்; போர்க்குணத்தை வெறுக்கிறவர்கள். நல்ல இரும்பை ஆணியாகச் செய்கிறோமா? இல்லையே? அப்படியே நல்ல மனிதர்களைப் போர்ச் சேவகர்களாக்கலாமா? கூடாது என்பது சீனாவில் சர்வ சாதாரணமாக வழங்குகிற ஒரு பழமொழி. மேலே சொல்லப்பட்ட நால்வகைச் சமுதாயப் பிரிவினைகள் எதிலும் போர்ச் சேவகர்கள் சேர்க்கப்படவில்லையென்பது குறிப் பிடத்தக்கது. பிழைப்புக்கு வேறு வழியில்லாதவர்கள் தான் ராணு வத்தில் சேருகிறார்கள் என்பது சீனர்களின் சாதாரண நம்பிக்கை.
சீனர்களிடம் காணப்படுகின்ற இன்னும் சில விசேஷ குணங்கள் என்னவென்றால், சகிப்புத்தன்மை, விடாமுயற்சி, செயலின் பயனைப் பற்றிக் கவலைப்படாதிருத்தல், இயற்கை வாழ்விலே இன்பம் துய்க்கும் ஆற்றல், கிடைத்ததைக் கொண்டு திருப்தியடைதல், சூழ்நிலைக்குத் தக்கபடி அதாவது கால தேச வர்த்தமானங்களை யொட்டி நடந்து கொள்ளுதல், லௌகிக வாழ்க்கையையும் பாரமார்த்திக வாழ்க்கையையும் சமமாக நோக்குதல் முதலியனவாம்.
மேலே சொன்ன யாவும், தனி மனிதர்களுடைய வாழ்வைப் பொறுத்த மட்டில் நற்குணங்களேயானாலும் இவையே பிற்காலத் தில் சமுதாய வாழ்வை அரித்து விடும் கரையான்கள் மாதிரி ஆகிவிட்டன. சீனர்கள், படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பது வாதவம். ஆனால் அந்தப் படிப்பு, நாளா வட்டத்தில் ஏட்டுச் சுரைக்காயாகிவிட்டது. சாமாதானப் பிரியர்கள்தான். ஆனால் அந்தச் சமாதான விருப்பம், கோழைத்தனத்திலல்லவோ கொண்டுவிட்டது? செயலின் பயனைக் கருதாத சுபாவமானது, அசிரத்தையாக மாறிவிட்டது. திருப்திகொள்ளும் மனப்பான்மை யானது, முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாகி நின்றது. இயற்கை யிலே இன்பம் காணும் சுபாவமானது, செயற்கைச் சக்திகள் நிறைந்த நவீன நாகரிகத்தோடு போட்டி போடமுடியாமல் அதன் முன்னர் தலைகுனிய வேண்டியதாயிற்று. ஜனங்களுடைய பொறுமைக் குண மானது, ஒரு சிலர் அவர்களைச் சுரண்டுவதற்குத் தூண்டு கோலா யிருந்தது.
1937-ஆம் வருஷத்து ஜப்பானியப் படையெடுப்புக்கு முன்னர், சீனாவைப் பார்த்தவர்கள், ஐயோ! சரித்திரப் பிரசித்தியுடைய இந்த நாடு இப்படிச் சீரழிந்துகொண்டு வருகிறதேயென்று வருத்தப் பட்டார்கள்; இதற்கு விமோசனம் ஏற்படுமா என்று ஏக்கத்தோடு கேட்டார்கள். உள்நாட்டுக் குழப்பம், சகோதரத் துரோகம், ஆதிக்கத்திலுள்ளவர்களின் சுரண்டல் ஆகியவெல்லாம் சேர்ந்து சீன மக்களின் வாழ்க்கையிலே ஒரு சூனியத்தை உண்டுபண்ணி விட்டிருந்தன. லின்யூடாங் என்ற சீன அறிஞன் மனம் நொந்து கூறுகிறான்:-
நவீன உலகத்தில் மிகத் திகைப்படையச் செய்வது, மயங்கச் செய்வது சீனா. அதனுடைய பழமையோ, பூகோளப் பெருமையோ மட்டும் இதற்குக் காரணமல்ல. உலகத்தில் உயிர் வாழ்ந்து கொண்டி ருக்கும் தேசங்களில் மிகப் பழமையானது அது. உலகத்திலேயே அதிகமான ஜனத்தொகையுடைய நாடு சீனாதான். ஒரு காலத்தில் அஃது உலகத்திலேயே மிகப் பெரிய ஏகாதி பத்தியமாக விளங்கியது; அநேக நாடுகளை வெற்றிகொண்டது; அநேக புதிய விஷயங்களைக் கண்டு பிடித்து உலகத்திற்கு அளித்தது. இலக்கியம், தத்துவ ஞானம், வாழ்க்கை முறை முதலியன அதற்கென்று சுயமாக உண்டு. கலையு லகத்தில் மற்றவர்கள் தங்கள் சிறகுகளை அடித்துக் கொண்டு மேலெழும்ப முயற்சி செய்துகொண்டிருந்த போது, அஃது உயர மாகப் பறந்து கொண்டிருந்தது. இப்படி யெல்லாம் ஒரு காலத்தில் அது சிறப்புப் பெற்றிருந்தும் இப்பொழுது அதன் நிலைமை யென்ன? எவ்வித சந்தேகமுமில்லாமற் சொல்லலாம். உலகத்திலுள்ள எல்லா நாடுகளைக் காட்டிலும் அதுதான்- சீனாதான் - அதிக குழப்பம், கேவலமான கொடுங்கோல் ஆட்சி இவை களுக்குட்பட் டிருக்கிறது; மிகப் பரிதபிக்கத்தக்கதாயும், எவ்வித ஆதரவில்லா மலும் இருக்கிறது; ஒற்றுமையாயிருந்து முன்னேற முடியாமல் தத்தளிக்கிறது. உலகத்திலேயே முதல்தரமான தேசமாக சீன இருக்க வேண்டுமென்று கடவுள் - கடவுள் என்ற ஒருவர் இருப் பாரானால் - கருதினார். ஆனால் அது சர்வதேச சங்கத்தில், குவாட் டெமாலா1 என்ற ஒரு சிறிய தேசத்துடன் பின்னாலிருக்கப்பட்ட தானமென்றில் அமர்ந்து கொள்ளத் தீர்மானித்தது. சர்வதேச சங்கமெல்லாம் ஒன்று சேர்ந்து, மிகுந்த நல்லெண்ணத்துடன் உதவி செய்வதாயிருந்தாலும், அதனுடைய உள்நாட்டு நிலைமையை ஒழுங்குபடுத்த முடியாது போலிருக்கிறது; அதனுடைய பண்டிதர் களிடமிருந்து, ராணுவ தளகர்த்தர்களிட மிருந்து, புரட்சிக்காரர் களிடமிருந்து, அரசியலில் ஊடாடும் பெரிய மனிதர்களிடமிருந்து அதனைக் காப்பாற்ற முடியாதுபோலிருக்கிறது. இதில் ஆச்சரியப் படத்தக்க விஷயமென்னவென்றால், அது - சீனா - தன்னுடைய விமோசனத்தைப் பற்றிச் சிறிதுகூடக் கவலைப்படா மலிருப்பது தான். சீனா, ஒரு முதல்தரமான தேசமாவதற்குக் கடவுளால்கூட உதவிசெய்ய முடியுமோ என்னவோ தெரியாது.
இவையெல்லாம் இப்பொழுது, அதாவது 1937-ஆம் வருஷ ஜப்பானிய யுத்தத்திற்குப் பின்னர் அடியோடு மாறிவிட்டன. சீனாவின் உட்பிணக்குகள் யாவும் இப்பொழுது மறைந்துவிட்டன. அதனுடைய ஜனங்கள் ஒரே குரலில் பேசுகிறார்கள். உயர் வமிசத் திலே பிறந்த ஒருவன், ஏதோ துரதிருஷ்டவசத்தினால் கீழான நிலையை அடைந்து விட்டபோதிலும் அவனுக்கு ஆபத்து ஏற்படுகிற காலத்தில், தனது பரம்பரைப் பெருமைக்குத் தகுந்தாற் போல கண்ணியமாக நடந்து கொள்கிறானல்லவா, அதைப் போல் இன்றைய சீனா, தன்மீது படிந்திருந்த மாசு மறுக்களை யெல்லாம் உதறித் தள்ளிவிட்டு புதிய வாழ்வை நோக்கி நிமிர்ந்து நிற்கிறது. ஐந்நூறு ஆண்டுகளிலே ஏற்படக்கூடிய ஒரு மாற்றம் அங்கே ஐந்து ஆண்டுகளிலே நிகழ்ந்திருக்கிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டு மானால், ஜப்பானிய படையெடுப்புக்கு முந்திய சீனா வேறு; பிந்திய சீனா வேறு. முந்திய சீனாவைக் கொண்டு பிந்திய சீனாவை அளந்து பார்ப்பது, கட்டை வண்டியில் ஏறிக்கொண்டு ஆகாய விமானத்தின் வேகத்தைக் கணிப்பதாகும்.
ஆரம்ப சரித்திரம்
பழமையிலே முதன்மையாயுள்ளது சீனா. காலத்தினால் அரிக்கப்படாமலும், அந்நியப் படையெடுப்புகளினால் சீர் குலைந்து போகாமலும், அது வெகுகாலம் வரையில் வாழ்ந்து கொண்டிருந்தது. பிற்காலத்தில் புதுமையின் பிரதிநிதிகளென்று சொல்லிக்கொண்டுவந்த மேற்கித்திய வல்லரசுகள் அதனை அழிக்கப்பார்த்தன. முடியவில்லை. அது மீண்டும் மீண்டும் தலை தூக்கிக்கொண்டு நிற்கிறது. அழித்தும் அழிபடாத தேசம் சீனா. அதன் தனிப்பெருமை இது.
சீனாவை அழித்து வீழ்த்திவிடும் முயற்சியிலே மேற்கித்திய வல்லரசுகள் ஈடுபட்டது அவ்வளவு ஆச்சரியமில்லை. ஏனென்றால், மதம், பரம்பரை, பழக்கவழக்கங்கள் முதலிய எல்லாவற்றிலுமே வேறுபட்ட ஒரு ஜாதியினர், மற்றொரு ஜாதியினரை அடக்கியாள வேண்டுமென்று முனைந்த வரலாறுகளை உலக சரித்திரத்தில் நாம் பலபடக் காண்கிறோம். ஆனால் மதம், பரம்பரை, பழக்க வழக்கங்கள் முதலிய எல்லாவற்றிலுமே ஏறக்குறைய ஒன்றாயி ருக்கிற ஜப்பான், சீனாவைத் தாக்குவதுதான், அழிக்க முற்படு வதுதான், ஆச்சரியமான விஷயம்.
இரண்டும், பக்கத்துப் பக்கத்து நாடுகள். ஜப்பானில் முதன் முதலாக நாகரிகத்தைக் கொண்டு புகுத்தியது சீனாதான். அதன் கலைவாழ்வை உரமிட்டு வளர்த்தது சீனாதான். ஒரு காலத்தில் ஜப்பானிலிருந்து அநேக இளைஞர்கள் சீனாவுக்கு வந்து அங்குள்ள சர்வகலாசாலைகளிலும் நூல் நிலையங்களிலும் பயின்று, தங்கள் அறிவை விருத்திசெய்துகொண்டு போயிருக்கிறார்கள். ஜப்பா னுடைய பொருளாதாரத் தேவைகளைக்கூட சீனாதான் அவ்வப் பொழுது பூர்த்திசெய்து வந்திருக்கிறது. இங்ஙனம் பல வகைகளிலும் சீனாவுக்குக் கடமைப்பட்டிருக்கிற ஜப்பான், அதன்மீது துவேஷங் கொண்டு அதனை அழித்துவிடப் பார்ப்பது ஆச்சரியமான விஷய மல்லவா?
சீனாவுக்கு இப்பொழுது அந்நியர்கள் சத்துருக்களல்ல; அண்டை யிலுள்ள ஜப்பான்தான் பரம சத்துரு. சீனா, இதுகாறும் அந்நியர்களோடு போராடிப் போராடி சில பொருளாதார பந்தங்களுக்குட்பட்டது; ஆனால் அரசியல் உரிமைகளை இழக்க வில்லை. அதற்கு ஒரு தனிப்பட்ட, சுயாதீனமுள்ள ராஜ்ய அந்ததைக் கொடுத்தே அதனைச் சுரண்டி வந்தார்கள் மேலை நாட்டார். அப்படி ராஜ்ய அந்ததைக் கொடுத்தபோது, அதற்குக் கீழான இடம் கொடுத்திருக்கலாம்; அதன் வார்த்தைகளை அலட்சியப் படுத்தியிருக்கலாம். அது வேறு விஷயம். ஆனால் அதற்கு ஒரு தானம் இருந்து வந்திருக்கிறதென்பதை யாரும் மறுக்கமுடியாது. இப்பொழுது ஜப்பானோ, அதனுடைய தனித்துவத்தையே நசுக்கி விட முயல்கிறது; சீன ஏகாதிபத்தியம் என்ற பெயரை மண்ணிலே போட்டுப் புதைத்துவிட்டு அந்த இடத்தில் ஜப்பானிய ஏகாதி பத்தியம் என்ற பெயருடைய ஒரு பலகையைத் தொங்கவிடப் பார்க்கிறது. இதனைச் சரித்திரத் துரோகம் என்று ஒரு மேனாட்டுச் சரித்திராசிரியன் கூறுகிறான். இந்தத் துரோகத்தைச் சீனர்கள் எப்படிச் சகித்துக்கொண்டிருப்பார்கள்? சென்ற சில பத்து வருஷங்களுக்கு முன்னாடி வரை எங்களிடம் கற்றுச் சொல்லியாக இருந்த ஜப்பான், இப்பொழுது திடீரென்று திரும்பி எங்களுக்கு ஆசிரியராயிருக்கப் பார்க்கிறது. இந்தத் தலைகீழான சம்பந்தத்திற்கு இணங்குவதென்பது எங்களுக்குச் சுலபமாயிருக்குமா? இராது. ஒரு காலத்தில் எங்களுடைய அரச சபைக்கு வணக்கத்தோடு காணிக்கை எடுத்துக் கொண்டுவந்த இந்தச் சிறிய நாடு, இப்பொழுது எங்களுடைய சந்நிதானத்திற்கு, ஒரு சர்வாதிகாரியாக வருகிறது! நாங்கள் சும்மாயிருக்க முடியுமா?1 என்று சீனர்கள் கேட்கிறார்கள்.
இங்கே நாம் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். 1937-ஆம் வருஷம் ஜூலை மாதம், ஜப்பான், முன்பின் அறிவிப்பின்றி, சீனா மீது யுத்தந்தொடுத்ததல்லவா, அதுதான் இரண்டு நாடுகளுக்கும் முதன் முதலாக ஏற்பட்ட யுத்தம் என்று யாரும் கருத வேண்டாம். சென்ற ஆயிரத்து முன்னூறு வருஷங்களுக்கு முன்னாடியிருந்தே இரண்டு நாடுகளும் பகைமை பாராட்டி வந்திருக்கின்றன. ஆனால் இந்தப் பகைமை யானது போர்க்களத் தளவோடுதான் நின்றது. மற்ற விவகாரங்களில் ஏதோ ஒரு வகையான தொடர்பு இருந்து வந்தது. அறிஞர்கள், ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்குப் போய்க் கொண்டும் வந்துகொண்டு மிருந்தார்கள். வியாபாரம் நடைபெற்று வந்தது. காவியத் துறையிலா கட்டும், ஓவியத்துறையிலாகட்டும் இரண்டு நாடுகளும் ஒன்று சேர்ந்தே நீராடின. 1937-ஆம் வருஷ யுத்தந் தொடங்கினதற்குப் பிறகு இந்த மாதிரியான சம்பந்தங்களே அற்றுவிட்டன. இதுதான் இந்த யுத்தத்தின் விசேஷம். சீனாவின் வாழ்வை அடியோடு இல்லாமற் செய்துவிட வேண்டுமென்ற ஆத்திரம் ஜப்பானுக்கு ஏற்பட்டுவிட்டிருக்கிறபோது, என்ன விதமான சம்பந்தம் இருக்க முடியும்?
சீனா, இங்ஙனம் அழித்தும் அழிபடாத தேசமாயிருப்பதற்கு அதனுடைய சரித்திரமே சிறந்த சாட்சியாயிருக்கிறது. அதனுடைய சரித்திரம், ஆழங் காணமுடியாத ஒரு சுரங்கம். எப்படி ஒரு சுரங்கத்தில் மண்ணும் பொன்னும் கலந்திருக்குமோ அதைப்போல் சீன சரித்திரச் சுரங்கத்திலும், தங்கக்குணம் படைத்த மன்னர்கள், மன்பதைகளைத் தங்கள் மக்கள்போல் பரிபாலித்து வந்திருக் கிறார்கள்; மண்ணைச் சுரண்டுவது போல் பிரஜைகளைச் சுரண்டி வந்த அரசர்களும் அதிகாரஞ் செலுத்தி வந்திருக்கிறார்கள். அமைதியான வாழ்க்கையும் ஆரவாரமான புரட்சியும் அதில் மாறி மாறி ஏற்பட்டிருக்கின்றன. தெய்வ பக்தி, தேச பக்தி, ராஜ பக்தி என்ற மூன்று வித பக்திகளும் அதில் சங்கமமாகி யிருக்கின்றன. இப்படிப் பட்ட சரித்திரச் சுரங்கத்தில் நாம் சிறிது இறங்கிப் பார்ப்போம்.
மற்ற நாட்டுச் சரித்திரங்களைப் போல் சீனாவின் புராதன சரித்திரமும் அநேக புராணக்கதைகளால் மூடுண்டு கிடக்கிறது. இருந்தாலும் இவற்றிலிருந்து சில உண்மைகள் நமக்குத் தெரிகின்றன. அதாவது, ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்னிருந்தே சீனர்கள், இயற்கையோடியைந்த ஒரு பண்பட்ட வாழ்க்கையை நடத்தி வந்தார்கள். விவசாயத்தை ஒரு கலையாக்கி அதனை நன்கு பயன்படுத்திக் கொண்டார்கள், எழுத்துக்களைக் கண்டு பிடித்தார்கள், காலத்தை நாளென்றும் நாழிகையென்றும் பல பிரிவுகளாகக் கணித்தார்கள், பண்ட மாற்றலுக்கனுகூலமாகச் சந்தைகள் ஏற்படுத்திக் கொண்டார்கள், விதவிதமான மூலிகைகளைக் கண்டுபிடித்து அநேக நோய்களைக் குணப்படுத்தினார்கள் ஆகிய இவைபோன்ற விவரங்கள் மேற்படி புராணக் கதைகளிலிருந்து நமக்குக் கிடைக் கின்றன. இவையெல்லாம் ஒரே காலத்திலோ அல்லது ஒரே மனிதன் மூலமாகவோ நடைபெற்றன வென்று சொல்ல முடியாது. அநேக நூற்றாண்டுகளின் அனுபவங்கள் இவை.
சரித்திர திருஷ்டிக்குட்பட்டு நமக்கு முதன்முதலாகக் காட்சி யளிக்கிற மன்னன் ஹுவாங்தீ என்பவன். இவன் கி. மு. 2697-ஆம் வருஷத்தில்- அதாவது இன்றைக்கு 4640 வருஷங்களுக்கு முன்னர்-சிங்காதனம் ஏறினான் என்று சொல்வர். இவனுக்கு மஞ்சள் சக்ரவர்த்தி என்ற ஒரு பெயருண்டு. சீன நாகரிகத்தின் பிதாமகன் யாரென்று கேட்டால் இவனையே சுட்டிக் காட்டுவார்கள் சீனர்கள். ஏனென்றால், நாகரிக வாழ்க்கைக்குரிய சாதனங்கள் என்று இப்பொழுது நாம் எவை எவைகளைக் கருதுகிறோமோ அவை களிற் பல, இவனால் அல்லது இவன் காலத்தில் கண்டுபிடிக்கப் பட்டதாகச் சீனர்களுக்குள் ஐதிகம். இவன், தன் ராஜ்யத்தைப் பல மாகாணங்களாகப் பிரித்து, ஒவ்வொரு மாகாணத்துக்கும் ஒவ்வோர் அதிகாரியை நியமித்து, கடைசியில் எல்லா மாகாணங்களையும் ஒரு மத்திய அரசாங்கத்தின் நிருவாகத்திற்குட் படுத்தினான். ஒழுங்கான தொரு ராஜ்ய அமைப்பு இவன் காலத்திலேயே ஏற்பட்டதென்று சொல்லவேண்டும். இது தவிர, இவன் நிலங்களை அளவை செய்தான்; கோயில்கள், அரண்மனைகள் முதலியன கட்டு வித்தான்; தரைமீதும் நீர்மீதும் சுலபமாகப் பிரயாணம் செய்வதற்கான வாகனாதிகள் கண்டுபிடித்தான்; நாளுங்கிழமையும் தெரிவிக்கிற காலெண்டர் என்ன, நாணயச் செலாவணி என்ன, அலங்காரமான உடை களென்ன, திசையறிகருவி என்ன, இவையெல்லாம் இவன் கண்டு பிடித்தவைதான். சுருக்கமாகச் சொல்கிறபோது, இவன் காலத்தில், சீனர்கள் நாகரிகமாக வாழத் தொடங்கிவிட்டார்கள்.
சீனா, பட்டுத் தொழிலுக்குப் பிரசித்திபெற்ற தென்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இந்த ஹுவாங்தீ மன்னனுடைய மனைவிதான் முதன் முதலாகப் பட்டுப் பூச்சியிலிருந்து நூலெடுத்து அதனை ஆடையாக நெய்து உடுத்திக்கொள்ள முடியுமென்று கண்டு பிடித்தவள். இவள் காலத்திற்குப் பிறகு, பட்டு உற்பத்தித் தொழில் சீனாவில் வெகுவேகமாக முன்னேறியது; வெளிநாடு களுக்கெல்லாங் கூட ஏற்றுமதி செய்யக்கூடிய பெருமையை யடைந்தார்கள் சீனர்கள்.
இந்த ஹுவாங்தீ மன்னனுக்குப் பிறகு, யௌ, ஷுன் என்ற இரண்டு மன்னர்கள் ஆண்டார்கள். இவர்கள், சீனர்களால் பெரிதும் போற்றப் படுகிறார்கள். இவ்விருவருடைய ஆட்சிக்காலம் கி.மு. 2350 முதல் 2250 வரை. இவர்கள், ஜனங்களின் குறைநிறைகளை நேரில் தெரிந்துகொண்டு, வேண்டுவன செய்தார்கள். ஷுன் என்பவனுக்கு எத்தனை விதமான மந்திரிகள் இருந்தார்க ளென்பதைப் பாருங்கள். (1) மராமத்திலாகா மந்திரி (2) விவசாய மந்திரி (3) காட்டிலாகா மந்திரி (4) கல்வி மந்திரி (5) குற்ற இலாகா மந்திரி (6) தேவாலயங்களைப் பரிபாலிக்கும் மந்திரி (7) சங்கீத மந்திரி (8) போக்குவரத்து மந்திரி (9) இவர்களெல்லோருக்கும் மேலாகப் பிரதம மந்திரி ஆகிய இத்தனை பேர் இருந்தார்கள். சங்கீத மந்திரிக்கு ஷுன் இட்டிருந்த கட்டளையைக் கேளுங்கள்:- மந்திரி ! உமது போதனை எப்படி இருக்கவேண்டுமென்றால், பிள்ளைகள், சத்தியமாக, ஆனால் சாந்தமாக நடந்து கொள்ளவேண்டும்; அடக்கமாக ஆனால் பெருந் தன்மையோடு நடந்துகொள்ள வேண்டும்; பலமுள்ளவராக ஆனால் கடினமில்லாதவராக இருக்கவேண்டும்; சுறுசுறுப்பாக, ஆனால் கர்வங் கொள்ளாமல் காரியங்களைச் செய்யவேண்டும். சங்கீதத்தின் மூலமாக எல்லா ரையும், எல்லாப் பொருள்களையும் ஐக்கியப்படுத்திவிடலா மல்லவா? சுமார் 4500 வருஷங்களுக்கு முன், சீனர்களுடைய அரசியல் - சமுதாய வாழ்க்கை எத்தகைய பண்பாடு பெற்றிருந்தது!
ஷுன்னுக்குப் பிறகு பட்டத்துக்கு வந்தவன் யூ என்பவன். இவன் ஹியா என்ற வமிசாவளியின் தாபகன். இவன், சீனாவின் பெரிய நதிகளான ஹோயாங்கோ, யாங்க்ட்ஸீகியாங் ஆகிய நதிகள் வெள்ளப் பெருக்கெடுத்து ஜனங்களுக்குச் சேதமுண்டு பண்ணாம லிருக்கும் பொருட்டு ஆங்காங்கு அணைகள் கோலியும், புதிய கால்வாய்கள் வெட்டியும், பழைய கால்வாய்களை ஆழமாக்கியும் அநேக நற்காரியங் களைச் செய்தான். இதற்காக இவன் சுமார் பதின்மூன்று வருஷகாலம் ஓயாமல் உழைத்தான் என்று சொல்வர். ஒரு சமயம், இவன், வேலை களை மேற்பார்வை செய்ய ஓரிடத்தி லிருந்து மற்றோரிடத் திற்குப் போய்க்கொண்டிருந்தான். அரண் மனை வாசல் வழியாகவே போக வேண்டியிருந்தது. அப்பொழுது இவன் மனைவி - ராஜ்யத்தின் சக்ரவர்த்தினி - பிரசவ வேதனைப் பட்டுக் கொண்டிருந்தாள்; குழந்தையும் பிறந்து அதன் அழுகுரலும் கேட்கிறது. ஆயினும் இவன் அரண்மனைக்குள் நுழையவில்லை; நேரே வேலை மீது சென்றுவிட்டான். ஜனங்களுடைய க்ஷேமந்தான் இவனுக்குப் பெரிதாகப் பட்டது; தனது சந்தோஷத்தை இவன் பெரிதாகக் கருதவில்லை.
யூ மன்னனுக்குப் பிறகு பட்டத்துக்கு வந்தவர்கள் மொத்தம் பதினேழுபேர். இவர்கள் அத்தனை பேரும், ஏதோ ஒரு வகையில் தாங்கள் அமர்ந்த சிங்காதனத்துக்குக் களங்கத்தை உண்டு பண்ணி விட்டு மாண்டார்கள். இவர்களில் கடைசி அரசனாகிய ஷீ என்பவன் மிகக் கொடியன். இவனுக்கேற்ற ஒரு ராட்சஸி மனைவி யாக வாய்த்தாள். இருவரும் சேர்ந்துகொண்டு ஜனங்களைப் பலவித இம்சைகளுக் குட்படுத்தினர். ராஜ்யத்தில் பஞ்சமும் பிணியும் மலிந்தன. ஜனங்கள் நலிந்துபோனார்கள். ஓ சூரியனே! நீ சாசு வதமாக அதமித்துவிட மாட்டாயா? நாங்கள் செத்து போனால் தான் இந்த அரசன் செத்துப் போவான் என்றால், நாங்கள் செத்துப் போகத் தயாராயிருக்கிறோம். எப்படியும் இவன் தொலைந்தால் போதும் என்று சாபமிட்டார்கள். எங்கும் அராஜகம் தாண்டவ மாடியது. டாங் என்ற ஒரு சிற்றரசன், கலகத் திற்குக் கிளம்பினான். ஷீயைத் தொலைத்தான்; ஹியா வமிசம் முற்றுப் பெற்றது: 439 வருஷகால வாழ்வு!
ஹியா வமிசந்தான், முதன்முதலாக பரம்பரை பாத்திய தையைக் கொண்டாடிக்கொண்டு, அதாவது தந்தைக்குப் பின் மகன் பட்டத்திற்கு வரவேண்டுமென்ற உரிமையுடன் சீனாவை ஆளத் தொடங்கியது. யூ மன்னன்தான், பரம்பரை உரிமையோடு கூடிய மன்னராட்சியை முதன் முதலாக ஏற்படுத்தினவன். இவன் ஏற்படுத்தின ஹியா வமிசத்திற்குப் பிறகு அநேக அரச பரம்பரைகள், சீன சிங்காதனத்தில் தொடர்ச்சியாக அமர்ந்தும், காலக் கிரமத்தில் மறைந்தும் போயிருக்கின்றன. யூ மன்னனிடமிருந்து தொடங்கிய இந்த மன்னராட்சி முறை 1912-ஆம் வருஷம் வரை, சுமார் நாலாயிர வருஷகாலம் அனுஷ்டானத்தில் இருந்தது. உலகத்திலேயே வேறெந்த நாட்டிலும் இவ்வளவு நீண்ட காலம் மன்னராட்சி, தொடர்ந்து நடைபெற்றது கிடையாது.
ஷீ மன்னனைத் தொலைத்த டாங், தானே சிங்காதனம் ஏறினான். இவன் ஷாங் என்ற ஜாதியைச் சேர்ந்தவன். இந்த ஷாங்கர்கள், யானை களைக்கட்டி உழுது பயிர் செய்தார்கள்! மிருகங்களின் வால்களைக் கத்தரித்து அவைகளைப் பதன்படுத்தி எழுதுகோல்களாக உபயோகித்துக் கொண்டார்கள்! நிரம்ப முரடர்கள். இந்த ஜாதியைச் சேர்ந்தவன் தான் டாங். இதனால் இவன் வமிசாவளிக்கு ஷாங் வமிசாவளி என்ற பெயர் வந்தது. இந்த வமிசாவளியில் மொத்தம் இருபத்தெட்டு மன்னர்கள் 644 வருஷ காலம் (கி.மு. 1766 - 1122) ஆண்டார்கள். இவர்களின் கடைசி அரச னாகிய ஷௌ என்பவன், ஹியா வமிசத்தைச் சேர்ந்த ஷீயைப் போலவே மிகக் கொடியனாயிருந்தான். ராஜ்யத்தில் கலகம் கிளம்பியது. சௌ என்ற ஒரு ஜாதியைச் சேர்ந்த பா என்ற ஒரு பிரபு இதற்குத் தலைமை பூண்டான். ஷௌ மன்னன் வீழ்ந்துபட்டான். ஷாங் வமிசம் முற்றுப் பெற்றது.
வெற்றிகண்ட பா சிங்காதனம் ஏறினான். இவனுடைய வமிசா வளிக்கு சௌ வமிசாவளி என்ற பெயர். சௌ வமிசத்தில் மொத்தம் முப்பத்தேழு அரசர்கள், 867 வருஷகாலம் (கி.மு. 1122-255) ஆண்டார்கள். சீன சரித்திரத்திலேயே இந்த வமிசந்தான் நீண்ட காலம் நிலைத்திருந்தது.
சௌ வமிசத்தினர் ஆண்டகாலம் சீன சரித்திரத்தில் தங்க மான காலம். எத்தனை ஞான சூரியர்கள் அவதரித்தார்கள்! எத்தனை கலை நிபுணர்கள் தோன்றினார்கள்! நாகரிகத் துறைகள் பலவும் எவ்வளவு செழுமையுற்றிருந்தன! இன்றைக்குக்கூட சில சீனர்கள், இந்தப்பழைய காலத்தை நினைத்துக்கொன்டு’ இனியும் அந்த மாதிரியான காலம் வருமா?’ என்று பெருமூச்சு விடுகிறார்கள்.
சீனாவில், ப்யூடலிஸம்1 என்கிற நிலச்சுவான்தார் ஆட்சி முறை ஏற்பட்டது இந்த சௌ வமிசத்தினர் காலத்தில்தான். ராஜ்ய மானது ஒன்பது மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு மாகாணமும் பல பகுதிகளாக - அதாவது ஜில்லாக்கள் மாதிரி - பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு பிரபு நியமிக்கப் பட்டான். இந்தப் பிரபுக்களிலே ஐந்து தரத்தினர் உண்டு; இங்கி லாந்திலே லார்ட் என்றும், எர்ல் என்றும் வைகவுண்ட் என்றும் பிரபுக்களிலேயே பல பிரிவுகள் இல்லையா, அதே மாதிரி சீனா விலும், எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னரே பிரிவு ஏற்படுத்தியிருந்தார்கள். இந்தப் பிரிவினைகள், அவரவர்களுக் கென்று வகுத்துக் கொடுக்கப்பட்டிருந்த பூமி விதீரணத்தைப் பொறுத்திருந்தது.
1. சுமார் 166 சதுரமைல் விதீரணமுள்ள பூமியை யுடையவன் குங்;
2. சுமார் 133 சதுரமைல் விதீரணமுள்ள பூமியை யுடையவன் ஹௌ;
3. சுமார் 100 சதுரமைல் விதீரணமுள்ள பூமியை யுடையவன் போ;
4. சுமார் 67 சதுரமைல் விதீரணமுள்ள பூமியை யுடையவன் தூ;
5. சுமார் 33 சதுரமைல் விதீரணமுள்ள பூமியை யுடையவன் நான்.
இவர்களனைவருக்கும் சேர்த்துத் தொகுப்பான பெயர் சூ- ஹௌ. இவர்களுக்குப் பூரணப் பொறுப்பாட்சி கொடுக்கப்பட்டி ருந்தது. ஆனால் வருஷத்திற் கொருமுறை சக்கரவர்த்தியின் சந்நிதானத்திற்கு வந்து, தங்களுடைய நிருவாகம் எப்படி நடை பெறுகிற தென்பதைப் பற்றித் தெரிவிக்கவேண்டும். சக்ரவர்த்தியும், ஐந்து வருஷத்திற்கொரு முறை, ராஜ்ய முழுவதையும் சுற்றிப்பார்த்து வந்தான். அரசனுடைய பரிசோதனை தவிர, பரிசோதகர்கள் என்றே தனியான உத்தியோகதர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். அரசன், தனது சுற்றுப் பிரயாணத்தின் போது, ஆங்காங்குள்ள அறிஞர் களையும் வயதானவர்களையும் வரவழைத்து, ராஜ்ய நிருவாகத்தைப் பற்றி அவர்களுடைய ஆலோசனைகளைக் கேட்பான். ஒவ்வொரு பகுதியிலும் என்னென்ன பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன வென்று விசாரித்து அவைகளுக்குக் கிராக்கி உண்டாகுமாறு செய்வான்; ஜனங்களைக் கூப்பிட்டு நாட்டிலே வழங்கும் பாடல்களைப் பாடச்சொல்லிக் கேட்பான். இந்தமாதிரியான வகை களிலே, அரசர்கள் ஜனங்களுடன் நேரான தொடர்பு வைத்துக் கொண்டி ருந்தார்கள், மூவாயிரம் வருஷங்களுக்கு முன்னே சீனாவில்!
மேற்படி நிலச்சுவான்தார் முறையில், விவசாயிகளின் நன்மையை முன்னிட்டு ஒருவித பொதுவுடைமை முறையும் கலந்திருந்தது. இதற்கு சிங்ட்டீன் என்று பெயர். நிலங்கள் யாவும் தேசீயப்பொதுச் சொத்தாக்கப் பட்டது. பின்னர் அவரவருடைய தேவைக்குத் தகுந்த படி நிலங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டன. இருபது வயதுக்கு மேல் அறுபது வயது வரையில் யாரும் இந்த நிலத்தில் உழுது பயிரிட்டுச் சாப்பிடலாம். பின்னர் தக்க வாரிசு இல்லாமற்போனால் நிலத்தை அரசாங்கத்திற்குத் திருப்பிக் கொடுத்து விட வேண்டும். அரசாங்க நிலமென்று ஒரு பகுதி ஒதுக்கி வைக்கப்பட்டது. இதனைப் பிரதியொரு குடியானவனும் முறை போட்டுக் கொண்டு உழுது பயிரிடவேண்டும். இதிலிருந்து கிடைக்கிற மகசூல், அரசாங்கத்தைச் சேர்ந்தது. இதுவே அரசாங்கத்திற்கு ஜனங்கள் செலுத்துகிற தீர்வை. உதாரணமாக ஒரு சதுர லீ,1 ஒன்பது பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு எட்டு குடும்பங்களுக்கு வினி யோகிக்கப்பட்டது. ஒன்பதாவது பகுதி அரசாங்கச் சொத்து. இதனை இந்த எட்டு குடும்பத்தினரும் மாறிமாறிப் பயிரிட்டு, கிடைக்கிற தானியத்தை அரசாங்கத்திற்குத் தீர்வையாகச் செலுத்த வேண்டும். இந்த முறை யினால், சக்தியுள்ள வர்கள், உழைத்துப் பிழைப்பதற்குச் சந்தர்ப்பங்கள் இருந்தன; வேலை கிடைக்கவில்லை, அல்லது பயிரிட்டுச் சாப்பிட நிலமில்லை யென்று சொல்லிச் சும்மா உட்கார்ந்திருக்கவில்லை. எல்லோரும் உழைத்தார்கள். ஏராளமான பொருள்கள் உற்பத்தியாயின. ராஜ்யம் சுபிட்சமாயிருந்தது.
அறுபது வயதுக்கு மேற்பட்ட ஆண் பெண் அனைவரையும், அரசாங்கத்தார் தங்கள் செலவில் காப்பாற்றி வந்தனர். மற்றும் தேக பலமில்லாதவர், அங்கவீனர், நோயாளிகள் முதலியோர், அரசாங்கத் தாருடைய பராமரிப்பிலேயே வாழ்ந்துவந்தனர்.
விவசாயம் தவிர வேறு பல கைத்தொழில்களும் செழுமை யுற்றிருந்தன; வியாபாரமும் அபிவிருத்தி அடைந்திருந்தது. மர வேலை செய்வோரில் மட்டும் ஏழு பிரிவினர் இருந்தனர் என்றும், இங்ஙனமே பல தொழில் நிபுணர்கள் இருந்தார்களென்றும் ஒரு வரலாறு கூறுகிறது. மட்பாண்டங்களில் சித்திரங்கள் வரையுந் தொழில் இந்த சௌ ஆட்சியின் போது மிகவும் முன்னேறியிருந்தது. வியாபாரமும் கைத் தொழில்களும் அபிவிருத்தி யடைந்திருந்த காரணத்தினால் புதிய புதிய நகரங்கள் அநேகம் தோன்றின. போக்கு வரத்து சாதனங்கள் அதிகமாயின. நாடக மேடைகளென்ன, இலக்கிய சபைகளென்ன, வியாபாரச் சங்கங்களென்ன, இங்ஙனம் பல படித்தான துறைகளிலும் ஒருவித உயிர்த்துடிப்பு இருந்தது. ஆனால் துரதிருஷ்ட வசமாக இந்த உன்னதவாழ்வு நீடித்த காலம் நிலைத்திருக்கவில்லை; நான்கு நூற்றாண்டுகளுக்குப் பிறகு அசைய ஆரம்பித்துவிட்டது.
நிலச்சுவான்தார் ஆட்சி முறையிலே மத்திய அரசாங்கத்திற்கு - அதாவது சக்ரவர்த்திக்கு - எவ்வளவு பாதுகாப்பு இருந்ததோ அவ்வளவு ஆபத்தும் இருந்தது. நிலச்சுவான்தார்கள் ஐந்து தரத்தின ராகப் பிரிக்கப்பட்டிருந்தனரல்லவா? அந்தது வித்தியாசம் ஏற்படுத்தப்பட்ட காரணத்தினால் இவர்களுக்குள் பரபரம் பொறாமை உண்டாயிற்று. பொறாமை, பகைமையில் கொண்டு விட்டது. இந்தப் பகைமை எங்கே போய்த்தாக்கும்? சக்ரவர்த்தியின் சிங்காதனத்தைத் தானே? அந்தச் சிங்காதனத்தில் அமர்ந்திருக் கிறவன் வலுவுள்ளவனா யிருக்கிற வரையில் அஃது ஆட்டங் கொடாதுதான். ஆனால் ஒரு பலவீனனோ அல்லது ஒரு கொடுங் கோலனோ அதில் அமர்ந்திருந்தால், சுற்றுப்புற முள்ள சிற்றரசர்கள் தங்கள் பகைமையை பகிரங்கமாக வெளிக் கொணர்வார் களல்லவா?
சௌ வமிசத்தின் முதல் பதினோரு மன்னர்கள், தங்கள் செங் கோலை உறுதியாகப் பிடித்துக் கொண்டு ஆண்டார்கள். ராஜ்யம் வளர்ந்து கொண்டுவந்தது. பன்னிரண்டாவது மன்னனாக யூ என்பவன், சிங்காதனத்தில் அமர்ந்தான். தேய்பிறை வாழ்வுதான்!
இந்த யூ மன்னனுக்கு ஓர் அழகான வைப்பாட்டி இருந்தாள். அவள் மீது அரசன் அதிகமான மோகம் வைத்திருந்தான். அவளுக்கு விநோத மான ஓர் ஆசையுண்டு. பட்டுத்துணிகளைக் கிழித்தால் ஒரு வித ஓசை உண்டாகுமே அந்த ஓசையை எப்பொழுதும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டுமென்பது அவள் ஆசை! இதற்காக அரசன், பட்டுத்துணிகளை வரவழைத்து, அவள் கேட்கும்படியாகக் கிழிக்கச் செய்வான்! பட்டு உற்பத்தி எவ்வளவு அதிகமாயிருந்தால் இந்த மாதிரி ஓர் அரசன் செய்வான் என்பதை ஊகித்துப்பாருங்கள்.
இங்ஙனம் அரசன் அவளைச் சந்தோஷிப்பிக்க முயன்றாலும் அவள் முகத்திலே சிரிப்பென்பது வருவதே கிடையாது. அவள் சிரிக்கா மலிருந்தது மன்னனுக்கு அழுகையாயிருந்தது. இதற்காக ஒரு யுக்தி செய்தான். ராஜ்யத்திற்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டு, சிற்றரசர்கள் தங்கள் சேனை சகிதம் திரண்டு வரவேண்டுமென்றால், அரண்மனையிலிருந்து ஒரு பெரிய வெளிச்சத்தைக் காட்டுவது வழக்கம். இந்த வெளிச்சத்தை ஒரு நாள் காட்டும்படி யூ மன்னன் ஏற்பாடு செய்தான். சிற்றரசர்கள் பலரும் படை திரட்டிக் கொண்டு ஓடி வந்தார்கள். வந்து பார்த்து, வெறும் வேடிக்கைக்காக இப்படிச் செய்யப்பட்டதென்று தெரிந்து திகைத்துப் போனார்கள். இவர்கள் திகைத்து நிற்பதைக் கண்டு அவள் - அந்த வைப்பாட்டி - கொல் லென்று உரக்கச் சிரித்துவிட்டாள். வந்திருந்தவர் களுக்கு அவமான மாகப் போய்விட்டது.
பின்னர் ஒரு முறை நிஜமாகவே மேற்குப் பக்கத்திலிருந்து ஒரு முரட்டுஜாதியார் படையெடுத்து வந்தார்கள். அரண்மனையில் வெளிச்சம் உண்டு பண்ணப்பட்டது. ஆனால் உதவிக்குச் சிற்றர சர்கள் யாரும் வரவில்லை. பகைவர் ராஜதானிக்குள் நுழைந்தனர். அரசன் கொலை யுண்டான். அந்த அழகியைத் தூக்கிக்கொண்டு போய்விட்டார்கள். ஓர் அழகியின் சிரிப்பு ராஜ்யத்திற்கு நெருப் பாகிவிட்டது. என்பது ஒரு சீனப் பாட்டு. இந்தச் சம்பவம் நடந்தது கி.மு. 771-ஆம் வருஷத்தில்.
இதற்குப் பிறகு வந்த அரசர்கள் வெறும் அலங்காரப் பொம்மை களாகவே கொலு வீற்றிருந்தார்கள். சிற்றரசர்களின் பூசல்கள் வளர்ந்தன; உள்நாட்டுக் குழப்பங்கள் பெருகின. ஜனங் களுக்கு மன நிம்மதி என்பது இல்லாமலே போய்விட்டது; உலக வாழ்விலே ஒரு விரக்திகூட ஏற்பட்டு விட்டது. போரிட்டுக் கொண்ட சிற்றரசர்களோ, தனித்தனியாக ராஜ்யத்தை தாபித்துக் கொண்டு, அரசர்களென்றும், சக்ரவர்த்திகளென்றும் தங்களை அழைத்துக் கொண்டார்கள். கடைசியில் இவர்களிலே வல்லமை பொருந்திய சின் என்ற பிரதேசத்தைச் சேர்ந்த அரசன், கி.மு. 221-ஆம் வருஷம் சௌ வமிசத்துக் கடைசி மன்னனை அப்புறப்படுத்தி விட்டு, தானே சீன சக்ரவர்த்தியென்று முடி சூட்டிக் கொண்டான். சௌ வமிசம் முடிந்தது; சின் வமிசம் தொடங்கியது.
நன்னெறி காட்டிய ஞானியர்
விரக்தியிலிருந்து ஞானமும், ஏக்கத்திலிருந்து முயற்சியும், திகைப்பிலிருந்து வீரமும் உண்டாவது இயல்பு. மனிதர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் இதனை நாம் நன்றாகப் பார்க்கிறோம். ஒரு தேசத்திற்கும் இது பொருந்தும். சௌ வமிச ஆட்சியின் பிற் பகுதி குழப்பமாயிருந்ததல்லவா? இந்தச் சுமார் நானூறு வருஷ காலத்தை சீன சரித்திரத்தின் குழப்பகாலம் என்றே சரித்திரக்காரர் கூறுவர். ஆனால் இந்தக் குழப்பத்தில் தெளிவும் காணப்பட்டது. குழப்பங்கள் அடிக்கடி உண்டான காரணத்தினால் ஜனங்களுக்கு வாழ்க்கையிலேயே ஒரு கசப்பு ஏற்பட்டது. அவர் களுடைய மனம் ஞானமார்க்கத்தில் சென்றது. இந்த வழியைக் காட்டினவர்கள்தான் லாவோத்ஸேயும் கன்பூஷியஸும். இவ் விருவரையும் பற்றிச் சொல்லாவிட்டால் சீன சரித்திரம் பூர்த்தியாகாது.
சீனாவைப் பற்றி அதிகமாகத் தெரியாத வெளியாருக்குக் கன்பூஷியஸின் பெயர்தான் நன்றாகத் தெரியும். ஏனென்றால் அவனுடைய பெயர் உலகப் பிரசித்தியாகிவிட்டது. ஆனால் கன் பூஷியஸைக் காட்டிலும் லாவோத்ஸேதான் மூத்தவன். இருவரும் ஏறக்குறைய சமகாலத்தவர்.
சீனாவின் தெற்குப் பாகத்திலுள்ள சூ என்ற மாகாணத்தில் ஏறக்குறைய கி.மு. 607-ஆம் வருஷம் லாவோத்ஸே பிறந்தான். அப்பொழுது சௌ வமிசத்து அரசர்கள், லோயாங் என்ற ஊரைத் தலை நகரமாக்கிக் கொண்டு ஆண்டு வந்தார்கள். லாவோத்ஸே கொஞ்சம் வயது வந்ததும் மேற்படி ஊருக்குச் சென்று அங்கிருந்த ஒரு புத்தகசாலையில் உத்தியோகதனாக அமர்ந்தான். அமைதியாக இருந்து படிப்பதற்கும் ஆராய்ச்சி செய்வதற்கும் நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. இப்படி அநேக வருஷங்கள் கழிந்தன. சௌ வமிசத்திற்கு முடிவு காலம் சமீபித்து விட்டதென்று இவனுக்குச் சூட்சுமமாகத் தெரிந்தது. எனவே அந்த ராஜ்யத்திற்குள் இருக்க விரும்பவில்லை. வெளியே புறப்பட்டுவிட்டான். வழியில் இவனை ஓர் அரசாங்க அதிகாரி சந்தித்து, ஐயா! பெரியவரே! எங்களெல் லோரையும் நல்வழிப்படுத்தும் பொருட்டு ஏதேனும் ஒரு நூல் எழுதக்கூடாதா? என்று கேட்டான். அதற்கு லாவோத்ஸே ஆகட்டு மென்று சொல்லி சிறிய நூலொன்று எழுதினான். இவனால் உலகத்திற்கு அளிக்கப்பட்ட பெரிய நன்கொடை இது.
இவன் கூறிய நல்வழிக்கு டாவோ என்று பெயர். அதாவது, எல்லா வற்றிற்கும் மூலாதாரமா யிருக்கப்பட்ட பரம்பொருளை அடையும் மார்க்கம் என்று ஒருவாறு கூறலாம். அந்தப் பரம் பொருளை அறிந்து அதன்படி வாழ்க்கையை நடத்துகிறவன் சன் மார்க்கத்தில் செல்கிறான் என்பது இவன் கோட்பாடு. பரம் பொருளுண்மையை இவன் பின்வருமாறு வருணிக்கிறான்:-
அஃது எவ்வளவு மகத்தானது! அதனைக் காணமுடியாது; கேட்க முடியாது. அதற்குப் பெயருமில்லை. எவ்வளவு மௌனமா யிருக்கிறது அது! அதற்கு உருவமில்லை. ஆனால் அஃது எங்கும் வியாபித்திருக்கிறது. எல்லாப்பொருள்களும் அதனையே தங்கள் உயிராகக் கொண்டிருக் கின்றன. அவைகளை அது மறுப்பதில்லை. எல்லா உயிர்களையும் அது நேசிக்கிறது; போஷிக்கிறது; ஆனால் எதனையும் தன்னுடையதென்று சொந்தமாக்கிக் கொள்வதில்லை. எல்லாப் பொருள்களும் எல்லா உயிர் களும் அதனிடத்தில் தோன்று கின்றன; அதனிடத்திலேயே போய் ஒடுங்கு கின்றன. ஆனால் அஃது எதனையும் எஜமானனாக இருந்து ஆள்வ தில்லை. அஃது அணுவைக்காட்டிலும் அணுவாகவும், மகத்தைக் காட்டிலும் மகத்தாயும் இருக்கிறது; அந்தர்யாமியாயுள்ளது; அதற்குப் பெயர் சொல்ல முடியாது. ஆனால் எப்பொருளையும் அது மாற்ற முடியும்; பூரணத்துவம் பெறச் செய்ய முடியும்.
இந்தப் பரம்பொருளுண்மையை அறிந்து கொண்டு அதன் படி எவன் வாழ்க்கையை நடத்துகிறானோ அவனுக்குப் பகைமை யில்லை; போராட்டமில்லை. அவன் உலகச் சுழலிலே அகப்பட்டுக் கொள்ள மாட்டான்; சும்மாயிருப்பதிலே சுகத்தைக் காண்பான். சடங்குகளைச் செய்வதன் மூலமாகக் கடவுள் நெறியில் செல்ல முடியாது. இயற்கையோ டியைந்த வாழ்விலேதான் உண்மையான இன்பம் இருக்கிறது. இந்தமாதிரியான கொள்கைகளையே லாவோத்ஸே வலியுறுத்துகிறான். இவனுடைய உபதேசங்களில் இன்னும் சிலவற்றைக் கேளுங்கள்:-
கருவிகளிலே, போர்க்கருவிகள் வெற்றியைத் தருகின்றன என்றாலும் அவைகளை நாம் கொண்டாடுகிறோமா? இல்லை. யுத்தத்தில் வெற்றியடைந்து விட்டோம் என்று மகிழ்ச்சியடை கிறவன், அநேகம் பேரைக் கொன்றதிலே மகிழ்ச்சியடைகிறவ னாகிறான். கொலையிலே மகிழ்கிறவன், ராஜ்யத்தை சாசுவதமாக ஆள முடியாது.
“கருணையோடுள்ளவன்தான் பலசாலி.”
“கடினமாகவும் முரட்டுத்தனமாகவுள்ள பொருள்கள் மரண ராஜ்யத்தைச் சேர்ந்தவை; மென்மையாகவும் பலவீனமாகவுள்ள பொருள்களே வாழ்ந்து கொண்டிருப்பவை.”
“சன்மார்க்கம் என்பது, வில்லை வளைப்பதுபோல. அஃது, உயர்ந்தவர்களைத் தாழ்த்துகிறது; தாழ்ந்தவர்களை உயர்த்துகிறது.”
“சன்மார்க்கம் என்பது ஞான பாட்டை. ஆனால் ஜனங்கள் சந்துபொந்துகளிலே நுழைந்து போகத்தான் பார்க்கிறார்கள்.”
வடக்கு சீனாவில் லூ என்பது ஒரு பிரதேசம். இப்பொழுது ஷாண்டுங் மாகாணத்திலுள்ள சூபூ என்ற நகரந்தான் இது. இங்கே சுமார் இரண்டாயிரத்தைந்நூறு வருஷங்களுக்குமுன்னே - இந்தியாவில் ஏறக்குறைய புத்தர்பிரான் வாழ்ந்த காலத்திலே - பரம்பரையான போர் வீரர் குடும்பமொன்று வாழ்ந்து வந்தது. குங் என்பவன் இந்தக் குடும்பத்திற்கு எஜமானனாயிருந்தான். இவனுக்கு ஒன்பது பெண்கள். ஆண் சந்ததி இல்லையேயென்று குங்கும் அவன் மனைவியும் வருத்தப்பட்டார்கள்; தெய்வத்தை நோக்கிப் பிரார்த்தனைச் செய்தார்கள். இந்தப் பிரார்த்தனையின் பயனாக கி.மு. 551-ஆம் வருஷம் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. இதுவே பிற்காலத்தில் கன்பூஷிய என்ற பெயரால் பிரசித்தியடைந்தது.
கன்பூஷியஸுக்கு மூன்று வயது. தகப்பன் இறந்துவிட்டான். குடும்பத்தைக் காப்பாற்றுவார் யாருமில்லை. எனவே மிகவும் ஏழ்மை நிலையை யடைந்துவிட்டது. ஆனால் பாலிய கன்பூஷியஸுக்கு இது நல்ல பாடமாயிருந்தது. தன்னம்பிக்கையும் விடா முயற்சியுமுடை யவனானான். அநேக சிரமங்கள் பட்டு குடும்பத்தைக் காப்பாற்றி வந்தான். பத்தொன்பதாவது வயதில் விவாகம் செய்து கொண்டு ஓர் உத்தி யோகத்தில் போய்ச் சேர்ந்தான். என்ன உத்தியோகம்? தானியக் களஞ்சியங்களை மேற்பார்வை செய்வது. இதில் இவன் நல்ல பெய ரெடுத்ததனால், தோட்டங்கள், கால் நடைகள் முதலியவைகளை மேற்பார்வை செய்யும் உத்தியோகதனாக நியமிக்கப்பட்டான். இந்த உத்தியோகத்திலிருக்கிறபோழ்து, இவன் ராஜ்யத்தின் குழப்ப நிலைமையை நேரில் காண முடிந்தது. ஜனங்கள் பலவித கஷ்டங் களுக்குட்பட்டார்கள். பணக்காரர்களும், அதிகாரபலமும் படைத்தவர் களும் ராஜ்யத்தின் சட்டதிட்டங்களைச் சிறிது கூடப் பொருட்படுத்தாமல் தங்களிஷ்டப்படி காரியங்கள் செய்துவந் தார்கள். பண பலமோ, அதிகாரபலமோ இல்லாதவர்கள், எப் பொழுதும் ஒருவித கவலை யுடனேயே வாழ்ந்துவந்தார்கள். ஒழுங் கானவாழ்வு நடத்துவதென்பது அரிதாகிவிட்டது. இவைகளை யெல்லாம் கன்பூஷிய நேரில் பார்த்தான்; பரிகாரம் தேடுவது தனது கடமையெனக் கொண்டான். ஒரு சிறிய பள்ளிக் கூடம் ஆரம்பித்தான். அப்பொழுது இவனுக்கு வயது இருபத்திரண்டு.
பள்ளிக்கூடத்தில் வந்துசேர்ந்த இளைஞர்களுக்கு இவன், ஒழுங்கு, ஒழுக்கம் முதலியவற்றைக் கற்பித்தான். அநேக குடும்பத்தினர், இவன் படிப்புச் சொல்லிக்கொடுக்கிற மாதிரியைப் பாராட்டி, தங்கள் பிள்ளை களை இந்தப் பள்ளிக்கூடத்தில் கொண்டுவந்து சேர்ப்பித் தனர். ஆனால் கன்பூஷிய, பணக்கார குடும்பத்துப் பிள்ளைகளிட மிருந்து மட்டுமே கட்டணம் வாங்கினான்; ஏழைப்பிள்ளைகளுக்கு இலவசமாகவே பாடஞ் சொல்லிக்கொடுத்தான். இங்ஙனம் பள்ளிக்கூடத்தை நடத்தி வந்ததோடு, தன் உத்தியோகத்தையும் ஒழுங்காகச் செய்து வந்தான்; நிருவாக ஊழல் களைக் களைந்து, ஜனங்களுக்கு நன்மைகளை உண்டுபண்ணினான். இதனால் இவனுடைய பெயர் பிரசித்த மாயிற்று.
இப்படி இருக்கையில் லூ ராஜ்யத்தில் ஒரு பெரிய கலகம் உண்டாயிற்று. அரசன், உயிர்தப்பி ஓடவேண்டியதாயிற்று. அவன், பக்கத்திலிருந்த த்ஸி என்ற ராஜ்யத்தில் போய் அடைக்கலம் புகுந்தான். கன்பூஷிய பெரிய ராஜவிசுவாசி. எனவே தானும் அரசனுடன் மேற்படி த்ஸி ராஜ்யத்திற்குச் சென்றான். அங்கே இவனுக்கு உத்தியோகம் கொடுப்பதாகச் சொன்னார்கள். ஆனால் அந்த ராஜ்யத்து அரசன், தன்னை கண்ணியமாக நடத்தமாட்டா னென்பதைத் தெரிந்து கொண்டு, உத்தியோகத்தை மறுத்துவிட்டு, திரும்பவும் தனது லூ தேசத்திற்கே வந்த விட்டான். வந்து, பழைய மாதிரி தன் பள்ளிக்கூடத்தைத் தொடங்கி நடத்தினான். நூற்றுக் கணக்கான மாணாக்கர்கள் இவனுடைய பள்ளிக் கூடத்தில் வந்து சேர்ந்தார்கள். சுமார் பதினைந்து வருஷ காலம் இப்படி நடந்து வந்தது.
இதற்குள் ராஜ்யத்தில் மாறுதல் ஏற்பட்டது. புதிய அரசன் ஒருவன் சிங்காதனத்தமர்ந்தான். அவன், கன்பூஷியஸின் நியாய புத்தியை நன்கு அறிந்திருந்தவன். எனவே, இவனை, ராஜ்யத்தின் பிரதம நீதிபதியாக நியமித்தான். அப்பொழுது இவனுக்கு வயது ஐம்பத்திரண்டு. இந்த உத்தியோகத்தை இவன் திறம்படச் செய்து வந்தானாதலின், வெகு சீக்கிரத்தில், அரசன், இவனைப் பிரதம மந்திரியாக நியமித்தான்.
பிரதம மந்திரி கன்பூஷியஸின் நிருவாகத்தின் கீழ், லூ ராஜ்யம், மற்ற ராஜ்யங்களுக்கு ஒரு முன்மாதிரியாயிருந்தது. சுமார் இரண்டாயிர வருஷங்களுக்குப் பின்னாடி உலகத்து நாகரிக ராஜ்யங்கள் என்னென்ன சீர்திருத்த முறைகளைக் கையாண் டனவோ அவைகளையெல்லாம், கன்பூஷிய ஒரு தீர்க்க தரிசி போலிருந்து, தனது லூ ராஜ்யத்தில் செய்தான். சாமான்களின் விலைவாசிகளை ஒரு கட்டுப்பாட்டுக்குட்படுத்தினான்; அவரவர் களுடைய தேகபலத்திற்கும் அறிவுத்திறமைக்கும் தகுந்தபடி உத்தியோகங்கள் கொடுத்தான்; உணவுப் பரீட்சைசெய்து அவர வருடைய உழைப்புக்குத் தகுந்தபடி ஆகாரவகைகளை நிர்ணயித்து யாவருக்கும் சுலபமாகக் கிடைக்குமாறு செய்தான்; பணக்காரர்கள், ஏழைகளைச் சுரண்டாதபடி தடுத்தான்; ஏழையென்றும் பணக்கார னென்றும் வித்தியாசம் பாராட்டாமல் எல்லோருக்கும் ஒரேமாதிரி நீதி வழங்கினான்.
இவையெல்லாம் நல்ல சீர்திருத்தங்கள்தான். ஆனால் பணக் காரர்களும் பெரிய நிலப்பிரபுக்களும் இந்தச் சீர்திருத்தங்களை விரும்ப வில்லை. ஏனென்றால் தங்களுடைய ஏகபோக உரிமைக்கு இவை பெரிய தடையாக இருந்தன. எனவே, பக்கத்து த்ஸி ராஜ்ய அரசனோடு சேர்ந்துகொண்டு, கன்பூஷியஸுக்கு விரோதமாகச் சூழ்ச்சி செய்தார்கள். இந்தச் சூழ்ச்சிகளின் விளைவாக கன்பூஷிய பிரதம மந்திரிப் பதவியிலிருந்து விலக்கப்பட்டுவிட்டான். சுமார் நான்கு வருஷத்தோடு இவன் உத்தியோகம் முடிந்துவிட்டது. இனி, இந்த ராஜ்யத்தில் இருக்கக்கூடாதென்று சொல்லி, நாட்டைவிட்டு வெளியேறிவிட்டான்.
இவனுடன் இவனுடைய சிஷ்யர் பலரும் பின் தொடர்ந் தார்கள். கன்பூஷியஸும், தன் சிஷ்யர்களுடன் பல இடங்களிலும் சுற்றித் திரிந்தான். தனது சேவையை எந்த அரசனேனும் ஏற்றுக் கொள்வானா வென்று பார்த்தான். ஏற்றுக்கொள்வார் யாருமில்லை. இஃது எதைக் காட்டுகிறதென்றால், தேசமெங்கணும் நியாயத் திற்கும் தருமத்திற்கும் மதிப்பில்லையென்பதையே காட்டுகிறது; தேசம், அவ்வளவு ஒழுங்கற்ற நிலைமையிலிருந்ததென்பதையே நிரூபிக் கிறது. கன்பூஷிய, இங்ஙனம் சுமார் பதின்மூன்று வருஷ காலம் வீணாகச் சுற்றித்திரிந்துவிட்டுக் கடைசியில் லூ ராஜ்யத்திற்கே திரும்பிவந்து சேர்ந்தான். அப்பொழுது இவனுக்கு வயது அறுபத்தொன்பது. இதற்குப்பிறகு சுமார் நான்கு வருஷ காலம், தனது சிஷ்யர்களுக்கு உபதேசங்கள் செய்துகொண்டிருந்து, எழுபத்து மூன்றாவது வயதில் கண் மூடிக்கொண்டுவிட்டான்.
உலகக் கண்கொண்டு பார்க்கிறபோது, கன்பூஷியஸின் வாழ்வு, வெற்றிகரமான வாழ்வு என்று சொல்ல முடியாது. அவன் காலத்தில் அவனை யாரும் சரியாகத் தெரிந்துகொள்ளவில்லை. ஆனால் பிற்காலத்தில் அவனுடைய உபதேசங்கள்தான், சீன சமுதாய வாழ்க்கைக்கு அதிவாரமா யமைந்தன. அவனுடைய நூல் களைப் படிப்பதுதான் உண்மையான படிப்பு என்று கருதப்பட்டது. அதைப் படித்துப் பரீட்சையில் தேறியவர்களே அரசாங்க உத்தியோகத்திற்கு நியமிக்கப் பட்டார்கள். ஒருவனைப் பார்த்து இவன் ஒரு பெரிய மனிதன் அல்லது கனவான் என்று சொன்னால், அவன் கன்பூஷியஸின் கிரந்தங்களை நன்றாகப் படித்தறிந்தவன் என்பதுவே அர்த்தம்.
சீன சமுதாய வாழ்க்கையில் கன்பூஷிய சிரஞ்சீவியாக வாழ் வதன் ரகசியமென்ன? அவன் புதிய மதமொன்றையும் தாபிக்க வில்லை; புதிய தத்துவமெதனையும் கண்டு பிடிக்கவில்லை. ஆனால் அவன், மனித சுபாவங்களை நன்றாக அறிந்தவன். மனிதவாழ்க்கை, பண்பட நடைபெறு வதற்கு சில முறைகளைச் சொன்னான். இந்த முறைகளைப் பரிசோதனை செய்து பார்க்கிற போது, அனுபவத்திற்கு ஏற்றதாக இருந்தன. எனவே, ஜனங்கள் அவனுடைய உபதேசங் களின்படி தங்களுடைய அன்றாட வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள்.
கன்பூஷிய ஒரு சிந்தனையாளன்; உபதேசகன்; தீர்க்கதரிசி யல்ல. காணாத கடவுளைப்பற்றி அவன் ஒன்றுஞ் சொல்லவில்லை. கண் முன்னே நடமாடும் மனிதர்களுக்குத் தொண்டு செய்யாமல், காணாத பொருளுக்கு எப்படித் தொண்டு செய்ய முடியும் என்பது அவன் கேள்வி. உலகத்திலே பிறந்து விட்டு, உலக விவகாரங்களிலே ஈடுபடாமல், உலகத்தை விட்டு ஓடிவிடுவதில் அர்த்தமென்ன இருக்கிறது என்று அவன் கேட்டான். இப்படி அவன் உலக ரீதியாக உபதேசிக்க வேண்டியது அந்தக் காலத்தில் அவசியமாயிருந்தது. ஏனென்றால் அவனுடைய காலத்தில், தேச முழுமையிலும் அரசனுக்கும் குடிகளுக்கு முள்ள சம்பந்தம், உற்றார் உறவினர்களுக் குள்ள சம்பந்தம் முதலியவையெல்லாம் வரன் முறையின்றி ஒரே குழப்பமாயிருந்தன. இதனாலேயே கன்பூஷிய, மனித வாழ்க் கைக்குத் தேவையான பல அமிசங்களைப் பற்றியும் கூறினான். கல்வி முறை, அரசியல் முறை, சடங்குகளைச் செய்யும் முறை, கலைகளை வளர்க்கு முறை முதலிய பலவற்றைப் பற்றியும் அவன் திட்டங்கள் வகுத்திருக்கிறான்.
லாவோத்ஸேயின் உபதேசங்களுக்கும் கன்பூஷியஸின் உபதேசங் களுக்கும் நேர்மாறான வித்தியாசங்கள் உண்டு. லாவோத்ஸே, உலகத் தைத்துறந்து வாழச் சொன்னான்; கன்பூஷிய, உலகத்திலிருந்து வாழச் சொன்னான். கன்பூஷியஸுக்கு, லாவோத்ஸேயினிடத்தில் மதிப்பு உண்டு. வயதிலே மூத்தவனல்லவா? அறிவிலுந்தானென்ன? ஒரு சமயம், கன்பூஷிய சுற்றுப் பிரயாணஞ் செய்துகொண்டிருந்த போது, லாவோத்ஸேயைச் சந்தித்தான். அப்பொழுது இருவரும் நடத்திய சம்பாஷணைகள் மிகவும் சுவையுள்ளவை. இவை நூல்வடிவாக்கப் பட்டிருக்கின்றன. மேற்படி சந்திப்பின் போது, புராதன காலத்திலிருந்து அனுஷ்டிக்கப்பட்டு வருகிற சடங்கு களைப் பற்றி உங்களுடைய அபிப்பிராயம் என்ன? என்று கன்பூஷிய, லாவோத்ஸேயைக் கேட்டான். இந்தச் சடங்குகளை யார் ஆரம்பித்தார்களோ அவர்களுடைய எலும்பு களெல்லாம் மண்ணோடு மண்ணாகிவிட்டன. எஞ்சியிருப்பன அவர் களுடைய வார்த்தைகள். இந்தப்போலி விவகாரங்களையெல்லாம் விட்டு விடுங்கள். அவைகளினால் எவ்வித பிரயோஜனமுமில்லை. இதுதான் என்னுடைய உபதேசத்தின் சாரம் என்று லாவோத்ஸே கூறினான். இருவருக்கு முள்ள வேற்றுமையை இதனின்று தெரிந்து கொள்ளலாம்.
இருவரும் ஒவ்வொரு நோக்கத்தைக் கொண்டு ஒவ்வொரு விதமாக உபதேசம் செய்தார்கள். ஆனால் பிற்காலத்தில் இவை திரித்துக் கையாளப்பட்டன. இதனால் நேர்மாறான பலனே ஏற்பட்டது. லாவோத்ஸேயின் உபதேசங்கள், உலகவாழ்வைப் பற்றிய ஒருவித அசிரத்தையை ஜனங்களிடத்திலே உண்டு பண்ணி விட்டன. கன்பூஷியஸின் உபதேசங்களின் விளைவாக ஜனங்கள், சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அன்றாடக் கடமைகளை மறந்து விட்டார்கள். சமுதாயப் பொதுவான விஷயங்களில் சிரத்தை குறைந்தது. அடிமை மனப்பான்மை வளர்ந்தது. உலகத்திலே அவதரித்த பல மகான்களுடைய உபதேசங்களும், ஏறக்குறைய இந்த மாதிரியான மாறுபட்ட பின்விளைவு களை உண்டுபண்ணி யிருக்கின்றன. இஃதொரு சாபம் போலும்!
லாவோத்ஸே, கன்பூஷிய ஆகிய இவ்விருவரையும் தவிர, சௌ வமிச ஆட்சிக் காலத்தில் இன்னும் சில மகான்கள் தோன்றினார்கள். மோத்ஸே1 என்ற ஒருவன். இவன், கன்பூஷியஸின் காலத்திற்குச் சிறிது பிற்பட்டவன். கன்பூஷியஸின் உபதேசங் களுக்கும் இவனுடைய உபதேங்களுக்கும் அநேக அமிசங்களில் வித்தியாசம் உண்டு. பிரதியொரு மனிதனும், தனது பெற்றோர்களி டத்திலும் குடும்பத்தினரிடத்திலும் அதிக விசுவாசத்துடன் நடந்து கொள்ள வேண்டுமென்று கன்பூஷிய கூறினான். குடும்பத்தின ரிடத்தில் மட்டுமென்ன, உலகத்திலுள்ள எல்லா மக்களிடத்திலும் ஒரே மாதிரியான விசுவாசம் வைக்கவேண்டுமென்று மோத்ஸே கூறினான். உன்னைப் போலவே உனது நண்பர்களையும் நடத்து; உனது பெற்றோர்களிடத்தில் நீ எப்படி விசுவாசத்துடன் நடந்து கொள்வாயோ அப்படியே மற்றவர்களுடைய பெற்றோர்களிடத்திலும் நீ விசுவாசமாக நடந்து கொள். ஒரு மனிதன் பட்டினியா யிருந்தால் அவனுக்குச் சோறு போடு; அவன் குளிரோடு அவதைப் பட்டால் போர்வையைக் கொடு; நோயாயிருந்தால் சிகிச்சை செய்; செத்துப் போனால் குழிதோண்டிப் புதைத்துவிடு இவை மோத் ஸேயின் உபதேசங்கள்.
கன்பூஷிய, சடங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துப் பேசிவந்தான். மோத்ஸே, சடங்குகளிலே காலத்தையும் பணத்தையும் செலவழிப்பதைக் கண்டித்து வந்தான். ஓர் அரசன், சடங்குகளைச் செய்வதன் மூலம் தனது பிரஜைகளுக்கு நன்மையைச் செய்வதாகக் கருதுவானாகில் அவன் அதைவிட ஒரே நாளில் எல்லா ஜனங் களையும் கட்டாரியால் குத்திக் கொன்றுவிடுவதே நல்லது. ஏனென்றால் அவர் களுடைய துன்பகரமான வாழ்க்கை நீடித்துக் கொண்டிரா தல்லவா? என்பது மோத்ஸேயின் கேள்வி.
சங்கீதம், மனிதனுடைய மனதைத் தூய்மைப்படுத்தி, அவன் நல்வழிப்படுவதற்குத் துணை செய்கிற தென்று கன்பூஷிய சொல்லி வந்தான். மோத்ஸேயோ, சங்கீதத்தைக் கண்டித்து வந்தான். நீரின் மீது செல்வதற்குப் படகுகள் தேவை; தரைமீது செல்வதற்கு வண்டிகள் தேவை. சங்கீதம் எதற்குத் தேவை? ஜனங்கள் பட்டினி கிடக்கிறார்கள்; குளிரினால் அவதைப் படுகிறார்கள்; வேலை செய்து அலுத்துப் போயிருக்கிறவர் களுக்கு ஓய்வு கிடைப்பதில்லை. இப்படிப்பட்டவர்களுக்குச் சங்கீதத் தினால் ஏதேனும் சகாயம் செய்யமுடியுமா? அல்லது வலியார், மெலியாரைத் தாக்கினாலும், அந்நியர் படையெடுத்து வந்தாலும், கள்ளர்கள் திருடிக் கொண்டி ருந்தாலும், குழல் ஊதியோ அல்லது வேறு வாத்தியங்கள் வாசித்தோ இவைகளை யெல்லாம் தடுத்துவிடமுடியுமா? என்று கேட்டான் மோத்ஸே. பொதுவாக, வாழ்க்கைக்கு எவை உபயோக மில்லையோ அவை யெல்லாம் தேவையில்லையென்பது மோத்ஸேயின் கருத்து.
இங்ஙனம் இவன் ஒரு பிரயோஜனவாதியாக இருந்த போதிலும், சமாதானவாதி; யுத்தத்தை அடியோடு வெறுத்து வந்தான். 1914-ஆம் வருஷத்து ஐரோப்பிய யுத்தத்திற்குப் பிறகல்லவோ, மேலை நாட்டறிஞர் சிலர், ஆயுதப் பரிகரணத்தைப் பற்றிப் பேசத்தொடங் கினார்கள்? ஆனால் இரண்டாயிரத்தைந் நூறு வருஷங்களுக்கு முன்னாடியே மோத்ஸே, சீனாவில் ஆயுதப் பரிகரணத்தைப்பற்றிப் பிரசாரம் செய்துவந்தான்! வெற்றியே தோல்வி யென்பதை இவன் அழகாக நிரூபிக்கிறான். கேளுங்கள்:- யுத்தத்தில், வில்லும் கொடியும் கவசமும் மற்ற ஆயுதங் களும் எல்லாம் சுக்கு நூறாகிவிடுகின்றன; அல்லது அழிந்துபடுகின்றன. எருதுகளும் குதிரைகளும் யுத்தகளத் திற்குப் போகிற போது கொழுத்துப்பருத்துப் போகின்றன; திரும்பி வருகிறபோது இளைத்துச் சிறுத்துவருகின்றன; அல்லது திரும்பி வருவதே கிடையாது. வேகமாக முன்னேறிச் செல்வதனாலேயோ அல்லது பின்னடைவதனாலேயோ அல்லது வியாதிகளினாலேயோ அல்லது கொலைகளினாலேயோ படை முழுவதும் நாசமாகப் போய் விடுகிறது. கடைசியில், யுத்தத்தினால் ஏற்படுகிற நஷ்டம், அதனு டைய லாபம் இவ்வள வென்பதைத் தெரியாமல் செய்துவிடுகிறது.
பிற்காலத்தில் சீனாவில் பிரசாரம் செய்யவந்த கிறிதுவப்பாதிரி மார்கள், மோத்ஸேயினுடைய உபதேசங்களுக்கும் யேசுநாத ருடைய உபதேசங்களுக்கும் அநேக ஒற்றுமைகள் இருக்கின்றன வென்று எடுத்துக் காட்டினார்கள். இதில் ஆச்சரியமொன்று மில்லை. ஏனென்றால் இருவரும் உலக சகோதரத்துவத்தைப்பற்றிப் பேசினார்கள்; சமாதானத்தை உபதேசித்தார்கள்; அனுபவ வாழ்க்கைக்கு ஒட்டிய நீதிகளையே போதித்தார்கள்.
ஹான்பை1 என்பவன் இந்தக் காலத்து மற்றொரு ஞானி. இவன், புது வாழ்வு வேண்டுமென்று கோரியவன்; சட்டத்திற்குப் புனிதத் தன்மை கொடுத்தவன். சட்டத்திற்கு முன் எல்லாரும் சமம் என்பது இவன் கோட்பாடு. பழமையென்றும் சம்பிரதாயமென்றும் விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருந்தால் மனிதர்கள் முன்னே றுவது எக்காலம் என்று இவன் கேட்டுவந்தான். இந்த மாதிரி புதுமையான எண்ணங்களை இவன் துணிச்சலாக வெளியிட்டு வந்ததன் காரணமாகச் சிறையிடப்பட்டு அங்கேயே இறந்து போனான்.
மென்ஷிய2 என்ற மற்றொரு ஞானி. இவன், கன்பூஷிய இறந்த சுமார் நூறு வருஷங் கழித்துப் பிறந்தான். இவனுடைய காலத்திலும் ராஜ்யம் அல்லோலகல்லோலமாயிருந்தது. இவன், கன்பூஷியஸின் உபதேசங்களை அனுசரித்து நாடு முழுவதிலும் சுற்றிப் பிரசாரஞ் செய்துவந்தான். அநேக சிற்றரசர்களின் ஆதான மண்டபங்களுக்கும் சென்று, அரசநீதி இன்னபடி இயங்குதல் வேண்டுமென்று உபதேசித்தான். ஆனால் ஏற்பட்ட பலன் ஒன்று மில்லை. இவன் கி.மு. 289-ஆம் வருஷம் இறந்துபோனான்.
இப்படிப்பட்ட மகான்கள் தோன்றி நல்லுபதேசங்களைச் செய்து வந்ததனால், ஜனங்கள், சௌ வமிச முடிவைப் பற்றி வருந்த வில்லை.
எழும்பிய சுவரும் எரிந்த நூல்களும்
சௌ வமிசவிளக்கு அணைந்துபோய்க் கொண்டிருக்கும் தறுவாயில், ராஜ்யமானது பல பிரிவுகளாகப் பிரிந்துகிடந்தது. ஒவ்வொரு பிரிவையும் ஒவ்வோர் அரசன், தனக்குத்தானே பெரியவன் என்று நினைத்துக் கொண்டு இஷ்டம்போல் ஆண்டுவந்தான். இந்தப் பிரிவு களிலே ஒன்று சின் ராஜ்யம். இது சீனாவின் வடமேற்கி லுள்ள ஒரு பிரதேசம். இதன் அரசன் அகம்பாவம் பிடித்தவன்; ஆனால் வல்லமை படைத்தவன். இவன், மெதுமெதுவாகத் தன்னைச் சுற்றியுள்ள அரசர்களை ஒவ்வொருவராகத் தனக்கு அடிபணியும்படிச் செய்துவிட்டான். கடைசியில் சௌ வமிசத் திற்கும் முடிவுகட்டினான். அதன் அரசன், இவனுடைய படை பலத்தையும் போர்த்திறத்தையும் கண்டு பயந்துபோய், தனது சிங்காதனத்தைக் காலிசெய்து கொடுத்தான். இதனோடு சௌ வமிச விளக்கு அணைந்துவிட்டது. சின் மன்னன், சர்வ சீனாவுக்கும் தானே சக்ரவர்த்தி என்று முடி சூட்டிக்கொண்டான். இவன் பெயர் சின் ஷி ஹுவாங் தீ. ஹுவாங் தீ என்றால், சீன பாஷையில் தெய்விகச் சக்ரவர்த்தி என்று அர்த்தம்.
ஹுவாங் தீ, சக்ரவர்த்தியாக முடி சூட்டிக்கொண்டான் என்று ஒரு வாக்கியத்தில் இங்கே சொல்லிவிட்டோம். ஆனால் இதற்காக இவன் எத்தனைபேருடைய கண்ணீரையும் செந்நீரையும் கடக்க வேண்டி யிருந்தது தெரியுமா? சுமார் பதினைந்து லட்சம்பேர் யமபுரத்திற்குச் சென்ற பிறகுதான், இவன் சௌ வமிச சிங்கா தனத்தை அடையமுடிந்தது; இத்தனை பேருடைய உயிர்த் துடிப்பின் மீதுதான் இவனுடைய ஆசனம் திரப்பட்டது. ஆனால் இவன், அதற்காகச் சிறிதுகூடக் கவலைப்பட வில்லை. ஏனென்றால், தனது மனச் சாட்சியை அப்புறப்படுத்தி வைத்து விட்டல்லவோ இவன் இந்தக் காரியத்தில் இறங்கினான்?
ஹுவாங்தீ, சந்திர சூரியர்கள் உள்ளவரையில் தனது வமிசத்தினர் சீனாவை ஆண்டுகொண்டிருக்க வேண்டும் என்று கருதினான். ஆனால் இவனுடைய அடுத்த தலைமுறையிலேயே சின் வமிசக்கொடி அற்று விட்டது. சின் வமிசவாளி என்று சொல்லக் கூடியதெல்லாம் மொத்தம் நாற்பத்தொன்பது வருஷந்தானே! இவன், தான் ஒரு சிருஷ்டிகர்த்தனாக இருக்கவேண்டுமென்று விரும் பினான்; ஆனால் சம்ஹார கர்த்தனாகவும் ஆகிவிட்டான்! இவன், ஆக்கியதும் சாசுவதமாயிருக்கிறது; அழித்ததும் சாசுவதமா யிருக்கிறது. சீன சரித்திரத்தில் இவனுடைய பெயர் கறைபட்ட பெயர்தான்; ஆனால் நிரந்தரமான பெயர். உலகத்தினர், சீனாவை என்றென்றும்நினைத்துக் கொண்டிருக்கும்படியாகச் செய்து விட்டுப் போனான் இவன்.
சௌ ஆட்சியின்போது, நிலாச்சுவான்தார் ஆதிக்கம் இருந்த தல்லவா? இந்த நிலச்சுவான்தார்கள், தங்கள் தங்கள் அதிகார எல்லைக்குள் படை பலத்தைப் பெருக்கிக் கொண்டு அடிக்கடி ஒருவரோ டொருவர் போரிட்டு வந்தனர்; ராஜ்யத்தில் எப் பொழுதும் குழப்பம் இருந்துகொண்டிருந்தது. ஏதேனும் ஒரு வகை யில் அமைதியுண்டாகாதா வென்று ஜனங்கள் ஏங்கிநின்றார்கள். ஹுவாங் தீ, இந்த நிலச்சுவான்தார் ஆதிக்க முறையை ஒழித்து விட்டான்; ராஜ்யத்தை முப்பத்தாறு மாகாணங்களாகப் பிரித்து ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒவ்வோர் அதிகாரியை நியமித்தான். இவர்களெல்லாரும் இவனுக்குக் கீழ்ப் பட்டவர்களே. சர்வ அதிகாரங்களையும் இவன் தன்னிடமே வைத்துக் கொண்டான். இந்த முறையினால், ஜனங்கள் எதிர்பார்த்த அமைதி நாட்டில் உண்டாயிற்று. ஆனால் இவன் சர்வாதிகாரியானான்; ஜனங் களுக்கு எவ்வித உரிமையு மில்லாமற் செய்துவிட்டான். அப்பொழுதைய நிலையில், ஜனங்கள், உரிமையைப்பற்றிக் கவலைப்படவில்லை; அமைதியைத் தான் விரும்பினார்கள்.
இங்ஙனம் உள் நாட்டில் அமைதி ஏற்பட்டதேயானாலும், வெளிச் சத்துருக்கள் இல்லாமற் போகவில்லை. தார்த்தாரியர் களுடைய உபத்திரவம் அப்பொழுது மிகவும் அதிகமாயிருந்தது. சௌ வமிச ஆட்சியின் கடைசி காலத்தில் ராஜ்யத்தில் ஏற்பட்டிருந்த அமைதி யின்மையை ஆதாரமாகக்கொண்டு இந்தத் தார்த்தாரி யர்கள், வடக்கே யிருந்து திடீர் திடீரென்று சமுத்திர அலைபோல் வந்து, சூறையாடிவிட்டுப் போனார்கள். ஹுவாங்தீ பட்டத்திற்கு வந்தபிறகு, ஒரு பெரியபடையை வடக்குப் பக்கம் அனுப்பி இவர்களை விரட்டியடிக்குமாறு செய்தான். ஆனால் நிரத்தரமாக இவர்களை வரவொட்டாதபடி செய்ய முடிய வில்லை. ஒரு காவல் காரனை நிறுத்திவைத்து ஓ; வெள்ளமே! நீ இனி வராதேயென்று சொல்லித் தடுத்தால், அந்த வெள்ளம் வராமலிருக்குமா? எனவே ஹுவாங்தீ ஒரு யுக்தி செய்தான். சீனாவின் வடக்கெல்லை முழுமைக்கும் ஒரு நீண்ட சுவர் எழுப்பத் தீர்மானித்தான். இதுதான், இன்றளவும் உலகத்தினரால் வியந்து பாராட்டப்படுகிற, உலகத்து ஏழு அதிசயங்களுள் ஒன்றான சீனப் பெருஞ் சுவர். இதன் நீளம் சுமார் ஆயிரத்தறு நூறு மைல். இதனைக் கட்டி முடிக்கச் சுமார் மூன்று லட்சம்பேர் வேலை செய்தனர். சிறைப்பட்ட கைதிகள், அரசனுடைய வெறுப்புக்கு ஆளானவர்கள் முதலிய பலரும் இந்த வேலையைச் செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டனர். இந்தச் சுவர் கட்டிமுடிக்கப் பல வருஷங்கள் பிடித்தன. இதற்காக ஜனங்கள் பல தொந்திரவுகளுக்காளாயினர். ஆனால் ஹுவாங் தீ இவைகளைப் பொருட்படுத்தவில்லை. தார்த்தாரியர்களைத் தற்காலிகமாகவாவது நிறுத்திவிட்டோமே யென்பதற்காக இவன் திருப்தியடைந்தான். இந்தச் சுவர் தவிர, இவன் ராஜ்யத்தின் பலபாகங் களையும் இணைக்கக்கூடிய மாதிரி அகன்றபாதைகள் போட்டான்; கால்வாய்கள் வெட்டினான்; பாலங்கள் கட்டினான்.
ஹுவாங் தீ, தான் சக்ரவர்த்தியாகப் பட்டந்தரித்துக் கொண்ட ஏறக்குறைய எட்டாவது வருஷம் - அதாவது கி.மு. 213-ஆம் வருஷம் - தனது ராஜாதானியில் பெரிய விருந்தொன்று நடத்தினான். ராஜ்யத்தின் பல பாகங்களிலிருந்து எல்லோரும் வந்திருந்தனர். சக்ரவர்த்தியைப் பாராட்டிப் பலர் பேசினர். ஹுவாங்தீயும், இந்தப் பாராட்டுதல்களுக் கெல்லாம் தான் உரியவன் என்கிறமாதிரியாக இவைகளையெல்லாம் கேட்டுக் கொண்டி ருந்தான். இவனைப் புகழ்ந்து பேசிய சிலர், பழைய மன்னர்களையும் இவனையும் ஒப்பிட்டுப் பேசினர்; அவர்களுடைய வழியைப் பின்பற்றி நடந்து கொள்ள வேண்டுமென்று இடித்துக் கூறினர். இவனுடைய மந்திரிகளில் ஒருவன், தன் எஜமானனைத் திருப்தி செய்யும் பொருட்டுப்பின் வருமாறு கூறினான்:- இவர்கள் புகழ்ந்து பேசுகிற அளவுக்குப் பழைய மன்னர்கள் அவ்வளவு புத்திசாலிகளா யிருக்க வில்லை. சக்ரவர்த்தியாகிய தாங்கள்தான் சரியானபடி ராஜ்யபாரம் நடத்துகிறீர்கள். ராஜ்யம் இப்பொழுது எவ்வளவு அமைதியாயிருக்கிறது பாருங்கள்! இவர்கள் பழைய கிரந்தங் களைப் படித்துவிட்டு, முந்திய காலம் மாதிரி இப்பொழுது வருமா என்று சொல்லிக்கொண்டிருக் கிறார்கள்; அதே தோரணையில் தங்களுடைய ஆட்சியைக்குறை கூறுகிறார்கள். எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. பழைய கிரந்தங் களையெல்லாம் எரித்து விட வேண்டும்; பழமையைப் பாராட்டிப் பேசுகிறவர்களையும், நிகழ்காலத்தைக் குறைகூறுகிறவர்களையும் மரண தண்டனைக்குட் படுத்திவிட வேண்டும்.
ஹுவாங் தீக்கு இந்த யோசனை நிரம்பப் பிடித்தது. ஏற்கனவே இவனுக்கு, தானே எல்லாவற்றையும் சிருஷ்டித்ததாக இருக்க வேண்டு மென்ற யோசனை இருந்ததல்லவா? எனவே, சின் வமிச வரலாறுகள், வைத்திய நூல்கள், மந்திரசாதிரங்கள், விவசாய சம்பந்தமான கிரந்தங்கள் ஆகிய இவற்றைத் தவிர்த்து மற்றப் பழைய புதகங்கள் அனைத்தையும் தலைநகருக்குக் கொணர்ந்து பகிரங்கமாக எரிக்குமாறு உத்திரவு செய்தான். அப்படிப்பழைய கிரந்தங்களைத் தலைநகருக்குக்கொணர முப்பது நாட்கள் தவணை கொடுத்தான். கொணராதவர்கள் முகத்தில் சூடுபோட்டு, வடக்கே அப்பொழுது கட்டப்பெற்று வந்த சுவர் வேலைக்கு அனுப்பப் பெற்றனர். சிலர், சில நூல்களை ஒளித்துவைத்தனர். பலர், நூல்களை எரிக்கச் சம்மதியாமல் உயிரைக் கொடுத்தனர். ஆயினும் ஆயிரக் கணக்கான நூல்கள் தீக்கிரையாயின; நாட்கள் கணக்காக இந்தத் தீ எரிந்தது.
ஹுவாங் தீ, ஆடம்பரப்பிரியன்; பகட்டான காரியங்களைச் செய்து புகழ்பெறவேண்டுமென்பதில் ஆசையுள்ளவன். சிற்றரசர்களை வென்று சக்ரவர்த்தியாக முடி சூட்டிக்கொண்ட பொழுது, ராஜ்யத்தின் பல பாகங்களிலுமிருந்த எல்லா ஆயுதங்களையும் கொணரச்செய்து உருக்கி, மணிகளாகவும் உருவச்சிலைகளாகவும் நிர்மாணித்தான். ஜனங்களை எவ்வளவு அழகாக நிராயுதபாணி களாக்கி விட்டான் பாருங்கள்! தான் வெற்றிகொண்ட ஒவ்வொரு ராஜ்யத்தின் அடையாளமாகவும் ஒவ்வோர் அரண்மனை கட்டு வித்தான். தலைநகருக்குச் சமீபத்தில், அரசனுடைய உபயோகத்திற் கென்று ஓர் உத்தியானவனமும், அதன் நடுவில் ஓர் அழகான அரண் மனையும் நிர்மாணித்தான். இந்த அரண்மனையைக் கட்டுவதற்கு, சிறைப்பட்டிருந்த சுமார் ஏழு லட்சம் கைதிகள் வேலை செய்தார் களாம்! ராஜதானியைச் சுற்றிச் சுமார் எழுபதுமைல் விதீரணத் திற்குள் சுமார் இருநூற்றெழுபது அரண்மனைகள் கட்டப்பெற்றன வென்று சொன்னால், இவனுடைய ஆடம்பர வாழ்வுக்கு வேறு என்ன அறிகுறி வேண்டும்?
புராதன கிரந்தங்களை எரிக்கிற ஒரு கைங்கரியத்திலே ஹுவாங் தீ ஈடுபட்ட பிறகு, இவனுடைய மனத்தை ஒரு பீதி பிடித்துக் கொண்டது. அநேகரைக் கொன்ற பாவம் தன்னைச் சூழ்ந்து கொண்டிருப்பதாக இவன் மருண்டான்; மரண பயத்தினால் வேதனையடைந்தான்; எனவே, சாகாமலிருக்க ஏதேனும் மூலிகைகள் அகப்படுமாவென்று தேடிப்பார்க்க பல இடங்களுக்கும் ஆட்களை அனுப்பினான். சென்ற ஆட்கள் திரும்பி வரவேயில்லை. இவர்கள் ஜப்பானுக்குச் சென்றார்களென்றும் அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார்களென்றும் சொல்லப் படுகின்றன. இவர்கள் தான், இன்றைய ஜப்பானியர்களின் மூதா தையர்கள் என்று சீனர்கள் சொல்லிக் கொள்கிறார்கள்.
ஹுவாங் தீக்குச் சாகாமூலிகை அகப்படவேயில்லை. கடைசி காலம் நெருங்கியது. தன்னைச் சுற்றியுள்ளவர் மீது சந்தேகப் பட்டான்; எவரைப் பார்த்தாலும் இவனுக்கு ஒரு வெறுப்பு ஏற்பட்டது; தன் சொந்தமகனைக் கூட வெறுத்தான். இந்த வெறுப்பு, வேதனை, அச்சம் முதலியவைகளிடையே மூழ்கினவனாய் கி.மு. 210-ஆம் வருஷம் இறந்து போனான்.
இவனுக்குப் பிறகு இவனுடைய மகன் பட்டத்திற்கு வந்தான். இவன் ஓர் அறிவீனன். தகப்பனுடைய தீய குணங்களெல்லாம் உருவெடுத்தாற் போன்றிருந்தான். இப்படிப்பட்டவன், சிங்காத னத்தில் நீடித்து அமர்ந்திருக்க முடியுமா? இவனுக்கு விரோதமாகப் பலர் கலகத்திற்குக் கிளம்பினர். சீன சரித்திரத்தில் இது வழக்கமான சம்பவம். ஒரு வமிசாவளி முற்றுப் பெறுவதற்கும் மற்றொரு வமிசாவளி தோன்றுவதற்கும் மத்தியில் புரட்சிகள் நிகழ்வதைச் சீன சரித்திரத்தில் தொடர்ந்து கண்டு வருகிறோம். கடைசியில் கி.மு. 206-ஆம் வருஷம் ஹுவாங்தீயின் மகன் கொலை செய்யப்பட்டான். சிரஞ்சீவியாக வாழ இருந்த சின் வமிசம், இரண்டாவது தலை முறையிலேயே அழிந்து விட்டது: ஆனாலும் தன் பெயர் சாசுவதமாக இருக்கும் படிச் செய்து விட்டுப்போயிற்று. சீனா என்ற பெயரால் இந்த நாடு அழைக்கப்பட்டது. இந்த சின் வமிசாவளியின் போதுதான். இந்த வமிசத்தின் கீழ்தான் பல பிரதேசங்களாகப் பிரிந்திருந்த சீனா, ஐக்கிய சீனாவாகியது; இந்த ஐக்கிய சீனாவின் விதீரணம், ஏறக்குறைய 1937-ஆம் வருஷத்துச் சீனா அவ்வளவு இருந்தது.
சின் வமிசத்துக் கடைசி மன்னனை அப்புறப்படுத்தி விட்டுப் பட்டத்துக்கு வந்தவன் லியுபாங் என்ற ஒரு சாதாரண குடியானவன். இவன் தலைமுறையிலிருந்து ஹான் வமிசம் தொடங்குகிறது. இந்த வமிசத்தினர் கி.மு. 206-ஆம் வருஷம் முதல் கி.பி. 220-ஆம் வருஷம் வரையில் சுமார் நானூறு வருஷத்திற்குமேல் சர்வ சீனாவையும் சேர்த்து ஆண்டு வந்தனர். இந்த வமிசத்தைச் சேர்ந்த மன்னர் மொத்தம் இருபத்தாறு பேர்.
ஹான் வமிசம், சீன சரித்திரத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்றது; சீனர்களுடைய அன்றாட வாழ்க்கையிலும், சமுதாய தாபனங்களிலும் சாசுவதமான சில அடையாளங்களைச் செய்து விட்டு மறைந்தது. இந்த வமிசத்தைப் பற்றிச் சீனர்கள் பெருமை கொள்கிறார்கள். தங்களை ஹான் வமிசத்துப் பிள்ளைகள் என்று சொல்லிக் கொள்வதில்தான் இவர்களுக்குத் திருப்தி. தாங்கள், தனி அந்ததுடைய ஒரு ஜாதியாராக - அதாவது நாகரிகமுள்ள ஒரு சமுதாயத்தினராக - அழைக்கப்பட்டதெல்லாம் இந்த ஹான் வமிச காலத்திலிருந்துதான் என்று இவர்கள் சொல்லுகிறார்கள்.
ஹான் வமிச தாபகனான லியு பாங், சாதாரண ஜனங்களின் துணை பெற்றுப் புரட்சி செய்து சின் வமிச சிங்காதனத்தைக் கைப்பற்றிக் கொண்டான். உலகத்திலேயே முதன்முதலாக நடை பெற்ற, வெற்றி கரமாக முடிந்த ஜனப் புரட்சி இதுதான் என்று சீன சரித்திரக் காரர்கள் கூறுகிறார்கள். இவன், பழையபடி நிலச் சுவான்தார் ஆதிக்க முறையைச் சில மாற்றங்களுடன் புதுப் பித்தான்; ராஜ்யத்தின் தலைநகரத்தை சாங்கான் என்ற ஊருக்கு மாற்றினான். சாங்கான் என்றால் சாந்தி நகரம் என்று அர்த்தம். விவசாயியல்லவா? தனது ராஜ்யத்தில் என்றும் சாந்தி நிலவ வேண்டுமென்பதே இவன் கோரிக்கையாயிருந்தது. இவனுக்குப் பின் வந்த சில அரசர்கள், ஜனங்களுக்கு நன்மை செய்வதையே லட்சிய மாகக் கொண்டு ஆட்சி புரிந்தார்கள். நிலவரியை ரத்து செய்தார்கள்; பழைய மன்னர் சிலர் வகுத்த சில அநீதியான சட்டங் களை அகற்றி விட்டார்கள்; மற்றும் தங்களுடைய சொந்த வாழ்க்கையிலும் ஆடம்பர மற்று இருந்தார்கள். வென் என்ற ஓர் அரசன். (கி.மு. 179 - 156) அரண்மனையின் ஒரு பாகம் மிகவும் கிலமாகிக்கிடந்தது. அதனை அப்புறப்படுத்திவிட்டு அதன் இடத்தில் புதிய கட்டிடம் ஒன்றைக் கட்டவேண்டு மென்று மந்திரிகள் கூறினார்கள். இதற்கு எவ்வளவு செலவு பிடிக்கும்? என்று கேட்டான் அரசன். நூறு பொற்காசுகள் என்று பதில் வந்தது. நூறு பொற்காசுகளா? பத்து ஏழைக் குடும்பங்களல்லவோ இதில் பிழைக்கும்? ஜனங்களுடைய பணத்தை எடுத்து என் சொந்த சுகத்திற்குச் செலவழிப்பதா? வேண்டவே வேண்டாம் என்று சொல்லிவிட்டான். இப்படிப்பட்ட மன்னர்கள் ஆண்ட காலத்தில் ராஜ்யம் சுபிட்சமாயிருந்தது. ஒரு சரித்திராசிரியன் இந்தக் காலத்து நிலையைப் பின்வருமாறு வருணிக்கிறான்:-
அரசாங்கத்திற்கும் தனிப்பட்டவர்களுக்கும் சொந்தமான தானியக் களஞ்சியங்கள் யாவும் நிரம்பியிருந்தன; அப்படியே பொக்கிஷங்களும் நிரம்பியிருந்தன. நாணயங்கள் பாசிபடிந்து விடக்கூடிய மாதிரியாகவும், தானியங்கள் கெட்டுப் போய்விடக் கூடிய மாதிரியாகவும் அவ்வளவு அதிகமாயிருந்தன. ஏழை ஜனங்கள் கூட குதிரைகளை வைத்துக் கொண்டிருந்தார்கள். வயல் வரப்பு களின் மீது ஆடுமாடுகள் கும்பல் கும்பலாகச் சென்றன. பொதுஜன நடமாட்டமுள்ள இடங்களில், பழைய வழக்கம் மாதிரி பசுவின் மீதோ எருமையின் மீதோ யாராவது ஏறிக் கொண்டு வருவானாகில் அவனைப்பரமதரித்திரன் என்று எல்லோரும் இகழ்வார்கள். குதிரை வைத்துக்கொள்வதுதான் பெரிய மனிதனுக்கு அடையாள மாகக் கருதப்பட்டது. சாதாரண கிராமவாசி, நல்ல அரிசியோடு நிறையக் கறிகாய்களையும் சேர்த்துச் சாப்பிட்டான். சுமார் எழுபது வருஷ காலம் சீன மக்கள் இங்ஙனம் சௌக்கியமாக வாழ்ந்தார்கள்.
இந்த எழுபது வருஷ சுபிட்சமான வாழ்வுக்குப் பிறகு வூ என்ற ஓர் அரசன் பட்டத்துக்கு வந்தான். சுமார் ஐம்பது வருஷத்திற்கு அதிகமாக (கி.மு. 140 - 87) இவன் ஆண்டான். இவன் ஆடம்பரப் பிரியன். ராஜ்யத்தின் செல்வமெல்லாம் குன்றிவிட்டது. விவசாயிகள் பழைய வறுமை திதிக்கு வந்துவிட்டார்கள். ஆனால் வியாபா ரிகள் விருத்தியடைந்தார்கள். இந்த வூ மன்னன், ராஜ்யத்தை விசாலப் படுத்தினான். வடக்கே மங்கோலியா, மேற்கே துருக்கிதானம், தெற்கே அன்னாம் முதலிய நாடுகளெல்லாம் சீன ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டன. இங்ஙனம் ராஜ்யத்தின் விதீரணம் பெருகி னாலும், ஜனங்களுடைய வாழ்க்கையில் தரித்திரம் தாண்டவ மாடியது. இதற்கு எதிரொலி ஏற்படாமலிருக்குமா? ஒரு சிறிய புரட்சி ஏற்பட்டது. வூ மன்னனும் இறந்துவிட்டான். வேறொரு படைத் தலைவன், சிறிது காலம் வரை சிங்காதனத்தைக் கைப்பற்றிக் கொண்டிருந்தான். ஆனால் ஹான் வமிச பக்தர்கள், இவனை நீண்ட காலம் சிங்காதனத்தில் இருத்தி வைக்க வில்லை; இறக்கி விட்டார்கள்; யமலோகத்திற்கு அனுப்பியும் விட்டார்கள். பழைய ஹான் வமிசத்தைச் சேர்ந்த குவாங் வூ என்ற அரசன் சிங்காதனத்தில் அமர்ந்தான் (கி.பி. 25).
குவாங் வூ மன்னன், கன்பூஷிய கிரந்தங்களில் பெரிய புலவன். இவன் காலத்தில் கல்விக்குச் சிறப்பு அளிக்கப்பட்டது. நாட்டின் பல பாகங்களிலிருந்து புலவர்களும் கவிஞர்களும் வரவழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள். ஒரு சர்வ கலாசாலை தாபிக்கப் பட்டது. இதுதான் சீனாவில் முதன் முதலாக ஏற்பட்ட சர்வகலா சாலை. இது தவிர ஆங்காங்குக் கல்விச்சாலைகள் தாபிக்கப் பட்டன.
குவாங்வூக்குப் பின்னர் வந்த அரசர்கள், வெளிப்பகட்டிலே ஈடுபட்டு விட்டார்கள். இதனால் தங்களுடைய வமிசத்திற்கும், ராஜ்யத்திற்கும் அழிவு தேடிக்கொண்டார்கள். அரசாங்கத்துச் சாதாரண சிப்பந்திகள்கூட பட்டுடை யென்ன, பொன்னாபரண மென்ன இப்படி யெல்லாம் தங்களை அலங்கரித்துக்கொண் டார்கள். ஓர் அரசன், பொற்பாத்திரங்களையே எப்பொழுதும் உபயோகித்து வந்தான். இவனுடைய அரண்மனையில் சதா ஓசை உண்டாகிக் கொண்டிருக்குமாம். ஏன்? பொற்கம்மியர்கள் ஓயாமல் வேலை செய்துகொண்டிருப்பார்கள்! அரசனுடைய அரண்மனை யில் என்ன, புயற்காற்றடிக்காமலே எப்பொழுதும் இடி இடித்துக் கொண்டிருக் கிறதே யென்று ஜனங்கள் சாதாரணமாகச் சொல்லிக் கொள்வார்கள்.
சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் ஹான் வமிச ஆட்சி யின் முற்பகுதி ஏற்றமாக இருந்தது; பிற்பகுதி இறக்கு முகத்தில் சென்றது. ஆனாலும் ஒரு தொகுப்பாகப் பார்க்கிறபோது, இந்த ஆட்சி அநேக அமிசங்களில் சிறப்புடையதாகவே இருந்ததென்று சொல்லவேண்டும். எப்படியென்றால், இந்தக்காலத்தில்தான் சீனாவுக்கும் வெளி நாடு களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டா யிற்று; ஒரு துறையிலே மட்டுமல்ல, பல துறைகளிலும், சீனாவின் செல்வச் செழிப்பு, அரசர்களின் ஆடம்பர வாழ்க்கை முதலிய, அந்நிய நாட்டாரின் கவனத்தை ஈர்த்தன. அநேகர், விதவிதமான காணிக்கைகளை எடுத்துக்கொண்டு சீன மன்னர் சபைக்கு வந்தனர். மத்திய ஆசியப் பிரதேசங்களிலிருந்து ஒரு ஜாதியார், குதிரை ஈரல்கல் என்ற ஒரு விநோதமான பொருளைக் காணிக்கையாகக் கொண்டு வந்தனர். இதனை உட்கொண்டால் ஒரு வருஷத்திற்குப் பசி, தாகம் முதலியன ஒன்றும் எடுக்காதாம்! நரைத்துப் போன மயிர் கருப்பாகி விடுமாம். இந்த மாதிரி பல ஆச்சரியமான பொருள்கள் சீனாவில்வந்து குவிந்தன.
இங்ஙனமே சீனர்களும் வெளிநாடுகள் பலவற்றிற்கு யாத்திரை யாகச் சென்றனர். இந்த யாத்திரீகர்களிலே மிகப் பிரசித்திய டைந்தவன் சாங்சீன் என்ற ஒருவன். இவன் கிரேக்கர்களுடைய ஆளுகைக்குட் பட்டிருந்த அநேக நாடுகளுக்குச் சென்று வந்தான். இவன், பாக்ட்ரியா தேசத்திலுள்ள ஒரு நகரத்தில் தங்கியிருந்த போது, அங்குக்கடைத் தெருவில், சணலினாலும் மூங்கிலினாலும், தயாரிக்கப்பட்ட ஒருவகைப் பொருளைக் கண்டான், இஃது எங்கிருந்து வருகிறதென்று விசாரித்தான். இந்தியாவிலிருந்து என்று சொன்னார்கள். இந்தப்பொருளை எடுத்துக்கொண்டு சாங்சீன், சீனாவுக்குத் திரும்பிவந்தான். அப்பொழுது வூ மன்னன் ஆண்டுகொண்டிருந்த காலம். (கி.மு. 140-87) சாங்சீன் சொன்ன வரலாற்றைக் கேள்வியுற்ற அரசன், இந்தியாவுக்கு வழி கண்டு பிடித்து அதனோடு நெருங்கிய தொடர்பு கொள்ளவேண்டுமென்று தீர்மானித்தான். உத்தியோகதர்களும் துவிபாஷிகளும் அடங்கிய ஒரு கூட்டத்தினரை கடல் மார்க்கமாக அனுப்பினான். இவர்கள், சில கப்பல்களைத் தயாரித்து, அவைகளில் பொன்னையும் பட்டையும் நிரப்பிக்கொண்டு புறப்பட்டார்கள். எங்குவந்து சேர்ந்தார்களென்று நினைக்கிறீர்கள்? சென்னைக்குச் சுமார் ஐம்பது மைல் தூரத்திலுள்ள காஞ்சிபுரத்திற்கு! இதற்குச் சீன பாஷையில் ஹுவாங்சீ என்று பெயர். இந்த நகரம், அந்தக் காலத்தில் சிறந்த வியாபார தலமாயிருந்தது. இங்கு நவரத்தினங்கள், முத்து, பவழம் முதலிய பொருள்கள் அதிகம். பொன்னையும் பட்டையும் கொடுத்து விட்டு, மேற்படி ரத்தின வகைகளைப்பெற்றுச் சென்றனர் சீனர். இந்தப் பிரயாண விவரங்கள், ஹான் வமிச சரித்திரத்தில் விதரித்துக் கூறப்பட்டிருக் கின்றன. இந்தக் காலத்திலிருந்து, அதாவது சுமார் இரண்டாயிரம் வருஷங் களுக்கு முன்னிருந்து இந்த இரண்டு நாடுகளுக்கும் அநேக விதமான சம்பந்தங்கள் இருந்து வருகின்றன.
சாங்சீன் வழியைப் பின்பற்றி வேறு சில சீனர்கள் வட மேற்கு நோக்கிச் சென்றார்கள். இவர்கள் மூலமாக, அக்காலத்தில் சிறந்த ஏகாதி பத்தியமாக விளங்கிய ரோமாபுரிக்கும் சீனாவுக்கும் நட்பு ஏற்பட்டது. ரோம அரசர்களும் சீன மன்னர்களும் அநேக விலை யுயர்ந்த பொருள்களைப் பரபரம் பரிமாறிக்கொண்டார்கள். மார்க்க அரேலிய1 (கி.பி. 121 - 180) என்ற ரோம சக்ரவர்த்தி, ஹுவான் தீ என்ற சீன சக்ரவர்த்திக்கு, கி.பி. 166-ஆம் வருஷத்தில் அன்னாம் அரசாங்கத்தின் மூலமாக தந்தம், ஆமை ஓடு முதலிய பல பொருள்களைச் சன்மானமாக அனுப்பினான். ரோமாபுரியி லிருந்து வாசனைப் பொருள்கள், நவரத்தினங்கள் முதலியன சீனாவுக்கு வந்தன. சீனாவிலிருந்து ஏராளமான பட்டு, ரோமாபுரிக்குச் சென்றது. இதே பிரகாரம், சீனாவுக்கும் பிறநாடுகளுக்கும் இந்த ஹான் வமிச காலத்தில் வியாபாரத் தொடர்புகள் உண்டாயின.
மற்றும் இந்த ஹான் வமிசத்தின் பிற்பகுதியில் இந்தியா விலிருந்து புத்தமதம் சீனாவுக்குள் பிரவேசித்தது. கி.பி. 65-ஆம் வருஷம், மிங் என்ற ஒரு சக்ரவர்த்தி ஆண்டு கொண்டிருக்கையில், புத்தருடைய உருவ மொன்றும், சில பௌத்த கிரந்தங்களும் சீனாவுக்குக் கொண்டுவரப் பட்டன. இவற்றோடு சில பௌத்த பிக்ஷுக்களும் வந்தார்கள். இவர்கள் அநேக பௌத்த நூல்களைச் சீனபாஷையில் மொழிபெயர்த்தார்கள். இதற்குப் பிறகு புத்த மதத்தின் செல்வாக்கு வரவர வளர்ந்துகொண்டு வந்தது.
இங்ஙனம் வெளிநாடுகளுடன் தொடர்பு கொண்டதன் விளைவாக வியாபாரப் பெருக்கமும் ஞானப் பெருக்கமும் ஏற் பட்டதோடல்லாமல், உள்நாட்டிலும் அநேக அனுகூலங்கள் ஏற் பட்டன; புதிய புதிய பொருள்களைக் கண்டுபிடிக்கிற முயற்சியில் ஜனங்கள் அதிகமாக ஈடுபட்டார்கள். இந்த வெளிநாட்டுத் தொடர்பை, சீனா, வலுப்படுத்திக் கொண்டும், விருத்தி செய்து கொண்டுமிருந்தால் எவ்வளவோ நன்மை களை அடைந் திருக்கக் கூடும்; நன்மைகளை அடையாவிட்டாலும், நவீன நாகரிக சக்தி களின் ஆதிக்கத்துக்கு உட்படாமலாவது இருக்கமுடியும். ஆனால் அது - சீனா - வேறு விதமாக நினைத்துவிட்டது. ஹான்வமிச ஆட்சி யின்போது, தன் கதவுகளைத் தாராளமாகத் திறந்து விட்ட சீனா, வெகு சீக்கிரத்தில் அந்தக் கதவுகளை இறுக மூடிக் கொண்டு விட்டது. பின்னர் அந்நியர்கள் வந்து அந்தக்கதவுகளை இடித்துத் திறக்க வேண்டிய தாயிற்று. அதன் பலனைத்தான் இப்பொழுது அனுபவித்துக் கொண்டு வருகிறது. நிற்க, ஹான்வமிச ஆட்சியின் போது, வெவ்வேறு நிறமும் வெவ்வேறு போக்குமுடைய கங்கையும் யமுனையும் ஒன்றுகூடுவது போல, மேனாட்டு நாகரிகமும் கீழ்நாட்டு நாகரிகமும் சீனாவில் சந்தித்தன. பிற்காலத்தில் இந்தச் சந்திப்பு பல சந்தர்ப்பங்களில் தடைப் பட்டதேயானாலும் இஃது அடியோடு முறிந்துபோகவில்லை; வெவ்வேறாக விலகிப் போகவுமில்லை.
உள் நாட்டில் ஏற்பட்ட சாதகங்கள் என்னவென்பதைச் சிறிது கவனிப்போம். போக்குவரத்துக்குச் சௌகரியமாகப் புதிய புதிய பாதைகள் போடப்பட்டன; புதிய கால்வாய்களும் தோண்டப் பட்டன. பாதை நெடுக, பிரயாணிகள் தங்குவதற்கென்று மூன்று மைலுக்கொன்று விகிதம் சத்திரங்கள் கட்டப்பட்டன. இந்தச் சத்திரங்களில், வியாபாரிகள், தங்கள் சரக்குகளை நிர்ப்பயமாகப் போட்டுவைத்துக் கொள்வதற்கு பந்தோபதான இடங்கள் இருந்தன. கால் நடைகளுக்கு வேண்டிய தீவனமும் வைத்திருந் தார்கள். இங்ஙனம் சகலவிதமான வசதிகளும் இங்கே யாத்திரிகர் களுக்குச் செய்து தரப்பட்டன.
இந்தச் சத்திரங்கள் தவிர, மூன்று அல்லது மூன்றரை மைலுக்கு ஒன்று விழுக்காடு தபாலாபீசுகள் இருந்தன. ஒரு தபாலாபீசிலிருந்து மற்றொரு தபாலாபீசுக்குக் குதிரைகள் மீது தபால்கள் ஏற்றிக்கொண்டு சென்றார்கள். இந்தத் தபாலாபீசு களிலும் பிரயாணிகள் தங்குவதற்கென்று வசதிகள் செய்து தரப் பட்டிருந்தன.
ஹான்வமிச காலத்தில் பீங்கான் கண்டுபிடிக்கப்பட்டு, இதிலிருந்து அநேக பொருள்கள் தயார்செய்யப்பட்டன. இவற்றின் மீது அநேக சித்திரங்கள் வரைந்தார்கள். வெளி நாட்டார் இவைகளைக் கண்டு ஆச்சரியப்பட்டு ஏராளமாக விலைக்கு வாங்கிச் சென்றனர். இன்னும் கி. பி. முதலாவது நூற்றாண்டில் காகிதம் செய்கிற முறை கண்டுபிடிக்கப் பட்டது. உலகத்திலேயே முதன் முதலாகக் காகிதத்தை உற்பத்திசெய்து அதில் எழுதத் தொடங்கியவர்களும், அதன்மீது அச்சடித்து புதக உருவ மாகக் கொணர்ந்தவர்களும் சீனர்கள்தான். எழுதுவதும் அச்சடிப்பதும் சுலபமாகி விட்டபடியால் புதிய புதிய நூல்கள் வெளிவரத் தொடங்கின. இந்தக் காலத்தில்தான், தொடர்ச்சியான சீன சரித்திரம் எழுதப்பெற்றது. கவிஞரும் ஓவியரும், தங்கள் மனத்தைத் திறந்து விட்டார்கள். இவர் களுடைய கற்பனையிலிருந்து எழுந்த காவியங் களும் ஒவியங்களும் இன்றளவும் புத்துணர்ச்சி கொடுத்துக் கொண்டிருக்கின்றன. பொதுவாக, ஹான்வமிச காலத்தில், சீனாவின் கலை வாழ்வு உரமிடப்பெற்று வளர்ந்தது.
பகலை யொட்டி இரவு தொடர்ந்து வருவது சகஜமல்லவா? அதைப்போல் ஹான்வமிசத்திற்குப் பிறகு சுமார் நானூறு வருஷ காலம் சீனா முழுவதும் ஒரே குழப்பமாயிருந்தது. ஆங்காங்கு சுயநலமுள்ள அநேக சிற்றரசர்கள் தோன்றி சுயேச்சையாக ஆண்டு வந்தார்கள். ஒருவருக்கொருவர் இடைவிடாமல் சச்சரவிட்டுக் கொண்டிருந்தார்கள். இந்தக் காலத்தில்தான், வடக்கு சீனா என்றும், தெற்கு சீனா என்றும் தனித்தனி ராஜ்யங்கள் பிரிந்தன. இந்தப் பிரிவினை, பிற்காலத்தில் குடியரசு ஏற்பட்ட பிறகுகூட எதிரொலி கொடுத்துக் கொண்டிருந்தது. இங்ஙனம் தேசமானது பலபடச் சிதறுண்டு கிடந்ததால், தார்த்தாரியர்கள் சுலபமாகப் படை யெடுத்துவந்து, வடக்கு சீனாவின் பெரும் பகுதியை ஆக்ரமித்துக் கொண்டார்கள். ஆனால் நாளாவட்டத்தில் இவர்கள் சீன நாகரிகத் திலே ஈடுபட்டு சீனர்களோடு கலந்துவிட்டார்கள்.
இந்த நானூறு வருஷ காலத்தில் சில நன்மைகளும் உண்டாயின. ராஜ்யப் பிரிவினைகளும் அரசியல் குழப்பங்களும் ஏற்பட்டு வந்த போதிலும், சர்வ சீனாவையும் புத்த மதம் ஐக்கியப் படுத்திக் கொண்டு வந்தது. புத்த மதம் சீனாவில் தீவிரமாகப் பரவியது இந்தக் காலத்தில்தான். அநேக சிற்றரசர்கள் பௌத்த பிக்ஷுக்களா னார்கள். ஞானிகள் அரசாண்டதை இந்தக் காலத்தில் காணலாம். தெற்கு சீனாவில் லியாங் என்ற பிரதேசத்தை ஆண்டுவந்த வூ என்ற ஒரு மன்னன் (கி.பி. 502 - 540) மகா பண்டிதன். அநேக பௌத்த கிரந்தங்களுக்கு உரை எழுதியிருக்கிறான். சிறந்த பக்தன். புத்தர் எப்படி ஒரு துறவியாக வாழ்ந்தாரோ அப்படியே தானும் வாழ வேண்டுமென்று தீர்மானித்து அதன்படியே வாழ்ந்து வந்தான். தினம் ஒருவேளை ஆகாரம். இறைச்சி, வெள்ளைப்பூண்டு முதலிய வை களைத் தொடமாட்டான். தன் ராஜ்யத்திலே மிருக பலி கூடா தென்று தடுத்துவிட்டான். குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கக்கூடாதென்று உத்திரவு போட்டான்.1 இந்த மாதிரி இன்னும் பலர் தோன்றி பௌத்த மதம் பரவுவதற்குத் தூண்டுகோலா யிருந்தார்கள்.
மேலே சொன்ன வூ மன்னனுடைய காலத்தில்தான், இந்தியா விலிருந்து போதிதர்மன் என்ற ஒரு பௌத்த பிக்ஷு, சீனாவுக்கு வந்து அநேக சீனர்களை பௌத்தர்களாக்கினான்; சீன பாஷையில் அநேக நூல்களியற்றினான். இந்த மாதிரி, இந்தியாவிலிருந்து பல பௌத்த பிக்ஷுக்கள் சீனாவுக்கு வந்து பௌத்த மதத்தை வேரூன்றச் செய்தார்கள்.
சீனாவிலிருந்தும் பலர், பௌத்த மதத்திலே ஞான பரிபக்குவ மடையவேண்டி இந்தியாவுக்குச் சென்றது இந்தக் காலத்தில்தான். பேஹியான் என்ன, இச்சிங் என்ன, ஹ்யூன்த்ஸாங் என்ன, இவர் களெல்லோரும் இந்தக் காலத்து யாத்திரிகர்களே. இந்திய சரித்திரத்தைப் படிக்கிறவர்களுக்கு இவர்களுடைய பெயர் புதிதல்ல. ஹ்யூன் த்ஸாங் என்பவன், சீனாவுக்குத் திரும்பிச் செல்கிறபோது அநேக புத்தமதக் கிரந்தங்களை எடுத்துக் கொண்டு போனான். இன்றளவும் சீனாவில் இந்த யாத்திரிகர்களை பக்தி சிரத்தையோடு போற்றுகிறார்கள்.
வரிசையில் வந்த அரச வமிசங்கள்
நானூறு வருஷ காலம் தொடர்ந்து நடைபெற்ற பிணக்கு களினாலும் பூசல்களினாலும் ஜனங்கள் சலித்துப்போய் நிலையான தொரு வல்லரசு ஏற்படாதா என்று ஏங்கிநின்றார்கள். இந்த ஏக்கத்திலிருந்து பிறந்ததே டாங் வமிசம். இந்த வமிசம் (கி.பி. 618 -907) இருநூற்று எண்பத்தொன்பது வருஷ காலம் நிலைத்து நின்றது; இருபத்துமூன்று மன்னர்கள் ஆண்டார்கள். இந்த டாங் வமிச ஆட்சி, சீன நாகரிகச் சிகரங்களிலே ஒன்று. சீன சரித்திரத்திலேயே இதற்குமுன் இல்லாத வகையில் கவிஞர்களென்ன, கலை நிபுணர் களென்ன, ராஜ தந்திரிகளென்ன முதலிய பலர் இந்த ஆட்சியின் போது தோன்றினார்கள். சீனாவுக்குப் புறத்தேயுள்ளவர்கள், இந்த டாங் ஆட்சியைத்தான் சிறப்பாகச் சொல்வார்கள். ஏனென்றால் இந்த டாங் காலத்துச் சிற்பங்களும் காவியக் கிரந்தங்களும் வெளிநாட்டுப் பொருட்காட்சி சாலைகளையும், புத்தக சாலை களையும் முறையே அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. இவை களை ஓர் அளவையாக வைத்துப் பொதுவாக சீன நாகரிகத்தையும், சிறப்பாக டாங் ஆட்சியையும் அந்நியர்கள் அளந்து பார்க்கிறார்கள். மற்றும், டாங் வமிசத்தின் அரசியல் வாழ்வைவிட கலைவாழ்வுதான் பிரகாசமாயிருக்கிறது. அரசியலைக் காட்டிலும் கலை சாசுவதமான தன்றோ?
டாங் வமிசத்தின் முதல் மன்னன் தைத்ஸுங் என்பவன். சுத்த வீரன்; பேரறிஞன். இவன் அரசாங்க நிருவாகத்தில் அநேக சீர்திருத்தங்கள் செய்தான். குறிப்பிட்ட சில பரீட்சைகளிலே தேறிய வர்கள்தான் அரசாங்க உத்தியோகதர்களாக வரமுடியுமென்று ஏற்கனவே இருந்த ஏற்பாட்டை ஒழுங்கு படுத்தினான். இதனால் ராஜ்யத்தில், பணத்தினால் செல்வாக்குப் பெறலாமென்பதுபோய் அறிவுத்திறமையினால்தான் முன்னுக்கு வரமுடியும் என்பது ஏற்பட்டது. இந்த தைத்ஸுங் மன்னன், அடிக்கடி பண்டித சபைகள் கூட்டி, நாட்டின் பல பாகங்களிலிருந்தும் புலவர்களை வரவழைத்து தர்க்கவாதங்கள் நடத்துவான். இவன் மட்டுமல்ல, இவனுக்குப் பின்னால் வந்த அரசர்களும் இந்த முறையைப் பின்பற்றினர். ஹுவான்த்ஸுங் என்ற ஓர் அரசன், கலைக்கழகமொன்று தாபித்து, நாட்டியம், சங்கீதம், சிற்பம் முதலியவைகளைத் தானே பலருக்குக் கற்பித்துவந்தான். ஆனால் சில மன்னர்கள் - இந்த ஹுவான்த்ஸுங் உள்பட - கலையழகு என்று சொல்லிக்கொண்டு திரீ மோகத்திலே ஈடுபட்டு விட்டனர். இதனால் ஒருபுறம் கலைகள் வளர்ந்து வந்தன; மற்றொருபுறம் ராஜ்யத்தின் அரசியல் அமைப்பு அழுகிக்கொண்டுவந்தது. இப்படி அழுகிக்கொண்டு வந்ததற்கு முக்கிய காரணமாயிருந்தவர்கள் அரண்மனை அந்தப்புரத்துப் பெண்கள். இவர்களுடைய சூழ்ச்சிகளினால் கொலைகள் நடை பெற்றன; கலகங்கள் கிளம்பின. கடைசியில், சுமார் முந்நூறு வருஷ வாழ்வோடு டாங் வமிசம் முடிந்துவிட்டது.
டாங் காலத்தில் தேயிலை கண்டுபிடிக்கப்பட்டு ஒரு பானமாக உபயோகிக்கப்பட்டது. தேத்தண்ணீர் பருகுவதற்குபயோகமான பீங்கான் சாமான்கள் புதிய புதிய மாதிரி செய்யப்பட்டன. இது காரணமாகத் தொழில் விருத்தியாயிற்று.
டாங் ஆட்சியின்கீழ் சீனாவின் எல்லை விரிந்தது. வடக்கே கொரியா வரையில், வடமேற்கே மத்திய ஆசியா வரையில் சீன மன்னர்களின் ஆதிக்கம் சென்றது. மத்திய ஆசியாவிலிருந்து புதிய மதத்தினர் பலர் வந்து சீனாவில் குடியேறினார்கள். கிறிதுவமதம் இந்தக் காலத்தில்தான் சீனாவில் நுழைந்தது.
டாங் வமிசத்திற்குப் பிறகு ஸுங் வமிசம். கி.பி. 960 முதல் 1279-ஆம் வருஷம் வரை முந்நூற்றுப்பத்தொன்பது வருஷகாலம் முப்பத்தாறு மன்னர்கள் இந்த வமிசத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு ஆண்டார்கள். இவர்களில் முதல்வன் சாவோகுவாங்யின் என்பவன். இவன்தான் ஸுங்வமிச தாபகன். இவன் அரசபதவிக்கு வந்ததே ஒரு விநோதம். டாங் வமிசம் வீழ்ந்துபட்டு, ராஜ்யத்தின் மூலைமுடுக்கு களிலெல்லாம் கலகங்கள் கிளம்பிக் கொண்டிருந்த காலத்தில் இந்த சாவோகுவாங்யின் என்பவன், மறைந்து போன சௌ வமிசத்துச்சிற்றரசன் ஒருவனுடைய சேவையில் அமர்ந்தி ருந்தான். அப்பொழுது வடக்கிலிருந்த சில ஜாதியார் கலகத்திற்குக் கிளம்பினர். அதனை அடக்க இவன் அனுப்பப்பட்டான். போர்க் களத்தில் ஒருநாள், ஒரு படைத் தலைவன், ஆகாயத்தில் மற்றொரு சூரியன் உதித்திருப்பதாகவும், அதைத் தான் பார்த்ததாகவும், இதன் சூசகம் என்னவென்றால் மற்றொரு சக்ரவர்த்தி தோன்றி சர்வ சீனாவையும் ஆள்வான் என்றும் தெரிவித்தான். உடனே படைவீரர் அனைவரும் ஒன்று சேர்ந்து, சாவோகுவாங்யின்னுக்கு அரச உடை அணிவித்துக் குதிரை மேலேற்றி ஊர்வலமாக அழைத்து வந்தார்கள்; அரசமரியாதைகளைச் செலுத்தினார்கள்; வாழ்க எமது மன்னன் என்று வாழ்த்தினார்கள்! மறுநாள், புதிய அரசனைத் தலைவனாகக்கொண்டு, கலகத்தை அடக்குவதற்காக அனுப்பப் பட்ட படையானது தலை நகரத்திற்கு ஆரவாரத்தோடு திரும்பிவந்து விட்டது. மேற்படி சௌ வமிசத்துச் சிற்றரசன் பயந்து ஓடிவிட்டான். சாவோகு வாங்யின் தைத்ஸு என்ற புதிய பட்டப்பெயரைத் தரித்துக் கொண்டு சர்வ சீனாவுக்கும் சக்ரவர்த்தியானான். ஸுங் வமிச தாபனம்!
ஸுங் வமிச ஆட்சிக் காலத்தில் குறிப்பிடத்தக்க சம்பவம் எதுவும் நிகழவில்லை. ஏதோ அரசர்கள் ஆண்டார்கள், இறந்தார்கள் என்கிற மாதிரியாகவே இந்த வமிசம் கழிந்தது. கலகங்கள் கிளம்புவதும் அடக்கப் படுவதும் சம்பிரதாயமாக நடைபெற்றன. ஆனால் தேசத்தின் கலை வாழ்வு உரம்பெற்றது. சிறப்பாக ஓவியக் கலை உச்சதானத்தை யடைந்தது. இலக்கியத்தில், உரைநடைக்கு அடிகோலப் பட்டது. இந்த மாதிரியான சில சில்லரைச் சீர்திருத் தங்களோடு ஸுங் வமிச வாழ்வு முற்றுப் பெற்று விட்டது.
ஆனால் இந்த ஸுங்வமிச ஆட்சியின் போது தோன்றிய ஒரு பிரபல சீர்திருத்தவாதியைப் பற்றி மட்டும் இங்கு நாம் குறிப்பிடாம லிருக்க முடியாது. ஸுங் வமிச ஆட்சி ஏற்பட்டுச் சுமார் நூறு வருஷம் ஆயிற்று. தேசத்தில் பணக்காரர்களுடைய அட்டூழியம் சகிக்க முடியவில்லை. செல்வமும் செல்வாக்குமுள்ள நிலச்சுவான் தார்கள், ஏழைகளின் நிலங் களைப் பறித்துத் தங்களுடையதோடு சேர்த்துக் கொண்டார்கள். அதிக வட்டிக்குக் கடன் வாங்கி ஜீவனத்தை நடத்துவதும், பிறகு அந்தக் கடனுக் காகத் தங்கள் நிலங் களைப் பறி கொடுப்பதும் சாதாரண சம்பவங் களாயின. அரசாங்கமோ, வரியைக் கூட்டிக்கொண்டே வந்தது. எந்த வகையிலேனும் ஒரு பரிகாரம் ஏற்படாதாவென்று மக்கள் ஏங்கி நின்றார்கள். இந்த நிலைமையில் மேற்படி சீர்திருத்தவாதி தோன்றினான். இவன் பெயர் வாங் ஆன்ஷி; கி.பி. 1068-ஆம் வருஷ முதல் 1076-ஆம் வருஷம் வரையில், ராஜ்யத்தின் பிரதம மந்திரியாக உத்தியோகம் பார்த்தவன்.
அரசாங்க நிருவாக விஷயத்தில் இந்த வாங் ஆன்ஷி கையாண்ட சீர்திருத்த முறைகளைச் சுமார் தொள்ளாயிரம் வருஷங் களுக்குப் பிறகு இப்பொழுது பார்த்தால் கூட, அவை, தற்கால அரசியல் முறைகளோடு எவ்வளவு ஒட்டியிருக்கின்றன வென்பது நன்கு புலப்படும். இருபதாவது நூற்றாண்டிலே போற்றப்பட வேண்டிய ஒரு சிறந்த ராஜதந்திரியாகவே வாங் ஆன்ஷி நமது மதிப்பில் இடம் பெறுகிறான்.
இப்பொழுது சட்டசபைக் கூட்டங்களில் வரவு செலவுத் திட்டத்தைப் பற்றி அடிக்கடி கேள்விப்படுகிறோம். உத்தேச வருமானம் இவ்வளவு, உத்தேச செலவு இவ்வளவு, நிகர வரவு இவ்வளவு, நிகர செலவு இவ்வளவு என்று பொக்கிஷ மந்திரிகள் திட்டம் போட்டுக் காட்டுகிறார்கள். இவையெல்லாம் மேனாட்டு அரசியல் பண்டிதர்கள் காட்டிய வழிகள் என்று கருதுகிறோம். ஆனால் வாங் ஆன்ஷி என்ற இந்தச்சீன அரசியல் பண்டிதன்தான் முதன்முதலில் அரசியல் வரவு செலவுத்திட்டத்திற்கு வழி காட்டியவன். இவன், (1) ராஜ்யத்தின் வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதற் கென்று ஒரு கமிஷனை நியமித்தான். இந்தக் கமிஷன் தயாரிக்கிற திட்டப்படியே ராஜ்யத்தின் வரவு செலவுகள் நடைபெற வேண்டுமென்று கண்டிப்பான விதி ஏற்படுத்தினான். இதனால் செலவினங்களிலே நூற்றுக்கு நாற்பது விகிதம் மிச்சம் ஏற்பட்டது: (2) விவசாயிகளுக்கு, நாற்று நடவு காலத்திலே அரசாங்க பொக்கிஷத் திலிருந்து கடன் கொடுத்து, திரும்ப சாகுபடி காலத்திலே அதை, நூற்றுக்கு இருபது விழுக்காடு வட்டியுடன் செலுத்திவிடுமாறு ஏற்பாடு செய்தான். இதனால் விவசாயிகள், இதுகாறும் தரிசாகப் போட்டிருந்த நிலங்களைச் சாகுபடிக்கு லாயக்குள்ளதாகக் கொணர்ந்தார்கள். தேசத்தின் பொருளுற் பத்தி அதிகமாயிற்று; அரசாங்கத்தின் வருமானமும் அதிகப்பட்டது: (3) நில சர்வே செய்து ஒவ்வொருவருக்கும் இவ்வளவு இவ்வளவு விதீரணமுள்ள பூமி இருக்கிறதென்று ததாவேஜுகளிலே பதிவு செய்யும்படி ஏற்பாடு செய்தான். இதன் பிரகாரமே வரி விதிக்கப்பட்டது: (4) கட்டாயச் சேவகம் என்பதை ரத்து செய்துவிட்டான். அதாவது, இன்னின்னார், தேச நன்மைக்காகவுள்ள வேலைகளைக் கட்டாயமாகச் செய்ய வேண்டு மென்ற ஒரு விதி முன்னர் இருந்தது. இப்பொழுது அது ரத்து செய்யப்பட்டு விட்டது. அதற்குப் பதில் அவர்கள் - கட்டாய வேலைகளின்று விலக்கப் பட்டவர்கள்- குறிப்பிட்ட ஒரு தொகையை வருஷந்தோறும் அரசாங்கத் திற்குச் செலுத்திவர வேண்டுமென்று நிர்ணயிக்கப்பட்டது: (5) ஒரு குடும்பத்திற்கு இத்தனை பெயர் விகிதம் என்று பொறுக்கி யெடுத்து ஜனங்களுக்கு ராணுவப்பயிற்சி அளித்தான்; இவர்களையே தேசப்பாது காப்பாளர்களாக ஏற்படுத்தினான். இதனால் ஜனங்களுக்குத் தற்காத்துக் கொள்ளுஞ் சக்தி உண்டாயிற்று.
இந்த மாதிரியான சீர்திருத்தங்களை வாங் ஆன்ஷி செய்ய முற்பட்டானே யானாலும், நாட்டிலுள்ள ஏகபோக உரிமைக்காரர், இவைகளை அனுஷ்டானத்திற்குக் கொண்டுவராதபடி எல்லாவித முட்டுக்கட்டைகளையும் போட்டனர்; அரசாங்க உத்தியோகதர் களும் இந்தச் சீர்திருத்தங்களுக்கு விரோதமாயிருந்தனர்; வாங் ஆன்ஷிக்கு விரோதமான கிளர்ச்சிகளைத் தூண்டிவிட்டனர். கடைசியில் வாங் ஆன்ஷி, சக்ரவர்த்தியின் விசுவாசத்தை இழந்து, தனது பிரதம மந்திரிப் பதவியை ராஜீநாமா செய்துவிட்டான். இதற்குப் பிறகு, தேசம், வரவர க்ஷீணதசை அடைந்து வந்ததென்றே சொல்லவேண்டும். மூலைக்கொரு வராய் தன்னரசு செலுத்தத் தொடங்கினர். இதன் விளைவு என்ன? ஜனங்களுக்குக் கஷ்டம்.
இங்ஙனம் துண்டு துணுக்குகளாக ஒரு ராஜ்யம் சிதறுண்டு கிடக்குமானால், அந்நியர்களுக்கு, அது நல்லதொரு தருண மல்லவா? அதிலும் கொள்ளையிலும் கொலையிலும் சந்தோஷ மடைகிறவர் களுக்கு? இப்படிப் பட்டவர்கள்தான் மங்கோலியர்கள். மிகவும் முரடர்கள்; ராட்சஸ பலமுடையவர்கள். இவர்கள், சீனாவுக்கு வடக்கேயுள்ள விதீரணமான பிரதேசத்தை ஆண்டு வந்தனர். இதற்கு மங்கோலியா என்று பெயர். இவர்கள், சீனாவின் குழப்ப நிலையை ஆதாரமாகக்கொண்டு இதன் மீது படை யெடுத்து வந்தனர். இப்படிப் படையெடுத்து வந்தவன் ஜெங்கிகான் (கி.பி. 1213). வடக்கு சீனாவில் பெரும்பகுதி இவனுடைய ஆதிக்கத்திற்குட் பட்டது. இதற்குப் பிறகு நூற்றறுபத்திரண்டு வருஷ காலம் சீனாவை மங்கோலியர்களே ஆண்டுவந்தார்கள். இந்த வமிசத்தைச் சேர்ந்த மன்னர் மொத்தம் பதினைந்துபேர். இவர்களிலே சிறந்தவனென்று அழைப்பதற்குத் தகுதியுடையவன் குப்ளாய்கான் (கி.பி. 1260 - 1293) என்பவன். இவன்,அரச தன்மையும் ஆண்டகைமையும் உடையவன். இவன், கொரியா, இந்தோ - சீனா, பர்மா முதலிய நாடுகளை வெற்றி கொண்டு, சீன ஏகாதிபத்தியத்தின் எல்லையை விதரித்தான். சீனாவுக்கு யுவான் என்று பெயர் கொடுத்தான். இதற்குப் பெருந் தகைமை என்று அர்த்தம். தனது தலைநகரத்தை பீகிங்குக்கு மாற்றினான். இவனுடைய அதிகார சோபையிலே ஈடுபட்ட அந்நிய நாட்டார் பலர் இவனுக்குக் காணிக்கை கொண்டுவந்து செலுத்தினர். இவன் காலத்தில் மேலை நாட்டுக்கும் சீனாவுக்கும் போக்குவரத்து அதிகமாயிற்று. மார்க்கோ போலோ1 என்ற இத்தாலிய யாத்திரி கன், குப்ளாய்கானுடைய சேவையில் சிறிது காலம் இருந்தான். இவன் எழுதிவைத்துப்போன பிரயாண நூல் தான், பிற்காலத்தில் கீழைநாட்டிற்கு அநேக ஐரோப்பியர்கள் வருவதற்கு வழி காட்டியாயிருந்தது
குப்ளாய்கானுக்குப் பிறகு வந்த அரசர்கள் வெறும் அலங் காரப் பிரதிமைகள்தான். குப்ளாய்கான், எந்த ஆடம்பரத்தோடு வாழ்ந்து விட்டுப் போனானோ அந்த ஆடம்பரத்தின் நிழலிலே தங்கள் வாழ்நாளைக் கழித்துவிட்டுப் போனார்கள். இவர்களிலே கடைசி மன்னனாகிய ஸுன்தீ என்பவன் ஒரு பலவீனன்; சிற்றின்பப் பிரியன். கேட்க வேண்டுமா ராஜ்யத்தின் அழிவுக்கு? அந்தப்புரவாசி கள்தான் ராஜ்யத்தை ஆண்டார்கள். மங்கோலிய வமிசம் முற்றுப் பெறு வதற்கு அறிகுறிகள் தோன்றி விட்டன. எங்குப் பார்த்தாலும் ரகசியச் சங்கங்கள்! அந்நிய ஆதிக்கத்தை ஒழிக்கச் சூழ்ச்சிகள்! மற்ற விஷயங்களில் முதன்மை தானம் வகிப்பதுபோல, ரகசியச் சூழ்ச்சிகள் செய்து அந்நிய ஆதிக்கத்தை ஒழித்துவிட்டத்திலுங் கூட சீனா முதன்மை தானம் வகிக்கிறது.
கி.பி. பதினான்காவது நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றின இந்த ரகசிய தாபனங்கள் நாடு முழுவதும் பரவின. அந்நிய ஆதிக்கத்திற்கு விரோதமான ஒரு தேசீய இயக்கமே உருப்பெற்றதென்று சொல்ல வேண்டும். இந்த ரகசியச் சங்கங்களை தாபித்தவர்கள் மதப்போர்வையைப் போர்த்துக்கொண்டு தங்கள் வேலைகளைச் செய்துவந்தார்கள். தங்களை வெண்தாமரையினர் என்று அழைத்துக் கொண்டார்கள். துஷ்ட நிக்ரக சிஷ்ட பரி பாலனம் செய்ய புத்தர்பிரான் பூலோகத்தில் மறுபடியும் அவ தரிக்கப் போகிறாரென்றும், அப்பொழுதுள்ள அரசியல் சமுதாய அமைப்புகளெல்லாம் அடியோடு மாறிவிடப் போகின்றன வென்றும் இவர்கள் பிரசாரஞ் செய்து வந்தார்கள். எங்கும் இவர் களுக்கு அதிகமான ஆதரவு கிடைத்தது. எந்த நிமிஷத்திலும் கலகம் நிகழக்கூடிய நிலைமை ஏற்பட்டது. கலகப்படைகளும் திரண்டன.
சூ யுவான் சாங் என்ற ஒருவன். இவன் ஒரு விவசாயியின் மகன். கொடுங்கோலாதிக்கத்தினால் விளைகிற பசி நோயையும் வறுமைப் பிணியையும் நேராக அனுபவித்தவன்; நன்றாக அனுப வித்தவன். இவன், மேற்படி கலகப் படைகளையெல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு மங்கோலிய ஆதிக்கத்தை எதிர்த்தான். மத்திய சீனா முழுவதும் இவன் வசமாயிற்று. நான்கிங்கைத் தலைநகரமாகக் கொண்டு புதிய அரசாங்க மொன்றை தாபித்துக் கொண்டான். இந்தப் புதிய பலத்தை ஆதாரமாக வைத்துக்கொண்டு பீகிங் நகரத்தின் மீது படையெடுத்தான். ஸுன்தீ என்ன செய்வான்? தனது துர்மந்திரிகளோடும் அந்தப்புர அழகியர்களோடும், தனது பாரம்பரிய வாசதலமாகிய மங்கோலியப் பாலைவனத்திற்கு ஓடிவிட்டான். இவனோடு, சீனாவில் மங்கோலிய வமிச ஆட்சி அதமித்துவிட்டது. சூ யுவான் சாங் 1368-ஆம் வருஷம், தானே சர்வ சீனாவுக்கும் சக்ரவர்த்தியென்று முடி சூட்டிக்கொண்டான்.
மங்கோலியர்களுடைய ஆட்சியை ஒரு தொகுப்பாகப் பார்க்கிறபோது, அன்புடைய ஆட்சியென்று சொல்லமுடியாது. அந்நியர்களுடைய ஆட்சி எப்படி அன்புடைய ஆட்சியாக இருக்க முடியும்? சுரண்டுகிற நோக்கத்தைத் தவிர அதற்கு வேறெந்த நோக்கம் இருக்க முடியும்? மங்கோலியருடைய ஆட்சி, சீனாவில் சுரண்டியதோடு மட்டு மல்லாமல், சீனர்களையே இல்லாமற் செய்து விடுவதற்கான முறை களையும் கையாண்டது. சீனர்களைத் தாழ்ந்த ஜாதியினராகவே நடத்தி வந்தது. அரசாங்க உத்தியோகங்களைப் பெறுகிற விஷயத்திலே யாகட்டும், எல்லாருக்கும் பொதுவான நீதியைக் கோருகிற விஷயத்திலே யாகட்டும், மங்கோலியர்கள் வேறாகவும் சீனர்கள் வேறாகவும் நடத்தப்பட்டார்கள். மங்கோலி யர்கள், பெரியகுற்றம் செய்தால் குறைந்த தண்டனை! சீனர்கள் சிறிய குற்றஞ்செய்தால் அதிக தண்டனை! சீனர்கள், குதிரைகள் வைத்துக் கொள்ளக்கூடாது; ஆயுதங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. இந்த மாதிரியான முறைகளையெல்லாம் கையாண்டார்கள் மங்கோ லியர்கள். இவர்களுடைய ஆட்சியிலே வெறுப்புக்கொண்டு, இவர்களுக்கு விரோதமாகச் சீனர்கள் கலகத்திற்குக் கிளம்பினார்க ளென்பதில் என்ன ஆச்சரியம்?
சூ யுவான் சாங், சக்ரவர்த்தியானதும், தன் பெயரை தைத்ஸு என்று மாற்றிக் கொண்டான். இவன் காலத்திலிருந்து மிங் வமிச ஆட்சி தொடங்கியது. இதன் காலம் இருநூற்றெழுபத்தாறு வருஷம். (கி.பி. 1368 - 1644). மொத்தம் பதினேழு மன்னர்கள் ஆண்டார்கள். இந்த வமிசத்தினரிட மிருந்து அதிகமான நன்மையை ஜனங்கள் எதிர்பார்த்தார்கள். அந்நிய ஆதிக்கத்தினால் அவதிப்பட்டுக் கிடந்த வர்களல்லவா? இதனால் அதிக ஆவல் இருந்தது. ஆனால் இந்த வமிசமும், மற்றவமிசங்களைப்போல் ஆரம்பத்தில் பிரகாசமாகத் தொடங்கி, பிறகு வரவர ஒளி மழுங்கி மறைந்துவிட்டது. சூ யுவான் சாங் அரசபீடத்தில் அமர்ந்திருந்த வரையில், தேசத்தில் கட்டுப் பாடும் ஒழுங்கும் இருந்தன. பிறகு வந்த அரசர்கள் வழக்கம்போல் சுகபோக வாழ்க்கையிலே ஈடுபட்டுச் சீரழிந்து போனார்கள். மூன்றாவது தலைமுறைக் காலத்திலேயே வடக்கிலுள்ள சில சிற்றரசர்கள் கலகத்திற்குக் கிளம்பிவிட்டார்கள். இவர்கள் ஒருவிதமாக அடக்கப்பட்டார்களென்றாலும், நான்கிங்கிலே கொலு வீற்றிருந்த மிங் வமிச சக்ரவர்த்தி என்ற பதவிக்கிருந்த மதிப்பு போய் விட்டது. இதனால் மூன்றாவது சக்ரவர்த்தியாக முடிசூட்டிக் கொண்ட செங்த்ஸு என்பவன், தனது ராஜதானியை, நான்கிங்கிலிருந்து பழைய மாதிரி பீகிங்குக்கு மாற்றிக்கொண்டு விட்டான். அது முதற்கொண்டு 1926-ஆம் வருஷம் வரை, சுமார் அறுநூறு வருஷ காலம், கடைசி காலத்தில் பெயரளவிற்கேனும், பீகிங்கே, சீன ஏகாதிபத்தியத்தின் தலைநகரமாக இருந்துவந்தது. எந்த ஊரை ராஜதானியாக்கிக் கொண்டாலென்ன? முதுகெலும்பு பலவீனப்பட்டுவிட்டால் உடலின் மற்றப் பாகங்கள் யாவும் தாமாகவே பலவீனப்பட்டுவிடுமல்லவா?
மிங் வமிச ஆட்சியின் கடைசி காலத்தில், இயற்கையென்றும், அழகு என்றும், கவிதை இன்பம் என்றும் பேசிக்கொண்டிருந்த புலவர்கள் கூட அரசியலில் சிரத்தை காட்டத் தொடங்கினார்கள்; அரசாங்கத்திற்கு விரோதமான சங்கமொன்றை அமைத்துக் கொண்டு, சொல்லாலும் எழுத்தாலும் அரசாங்கத்தைத் தாக்கி வந்தார்கள். அரசியலின் உண்மை யான லட்சணமென்ன, நோக்க மென்ன என்பவைகளைக் குறித்து அநேக நூல்கள் வெளியாயின. பலவீனப்பட்டுக்கிடந்த அரசாங்கமோ, தனக்கு விரோதமாகப் பேசியும் எழுதியும் வந்த புலவர்களைச் சிறைக்குள்ளே தள்ளியது; தூக்குமேடையிலே ஏற்றியது; ஆனால் தனது சவக் குழியையும் தானே தோண்டிக் கொண்டது! புலவர்களுக்கு ஜனங்களின் ஆதரவு இருந்தது. அரசாங்கத்திற்கு அந்தப்புரத்தைக் காவல் செய்யும் பேடிகளின் ஆதரவு இருந்தது!
அரசாங்கம் இப்படி உட்புறத்தில் அழுகிக்கொண்டு வருகையில், தேச முழுவதிலும் என்றுமில்லாத ஒரு பஞ்சம் ஏற்பட்டது. ஜனங்கள், புல் வேரையும், மரப் பட்டையையும் தின்று ஜீவித்து வந்தார்கள்! அநேக இடங்களில் மண்ணைக்கூடத் தின்றார்கள். இப்படியிருந்தும், அரசாங்க மானது, கொஞ்சங்கூடக் கருணையில்லாமல், ஜனங்களிடமிருந்து வரி வசூலித்துத் தன் ஆடம்பர வாழ்க்கையை நடத்திவந்தது! இதனால் ஜனங்களிலே அநேகர், கொள்ளைக்கூட்டத்தினராக மாறி வயிற்றுப் பிழைப்பு நடத்தி வந்தார்கள். இந்தக் கொள்ளைக்கூட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவந்தன. நாடு முழுவதும் ஒரே அல்லோலகல்லோல மாயிருந்தது.
இந்தச் சமயத்தில், ஜப்பானியர்கள் சீன ஆதிபத்தியத்திற்குட் பட்டிருந்த கொரியாவின்மீது படையெடுத்து வந்து தொந்திரவு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் தவிர, வடகிழக்கிலுள்ள மஞ்சூரியாவி லிருந்து மஞ்சூரியர்கள், சீனர்கள் எல்லைப்புறத்தி லிருந்துகொண்டு சூறையாடியும், ஜனங்களுக்குப் பலவிதமான இம்சைகளைச் செய்து கொண்டும் வந்தார்கள். அதுமட்டுமல்ல; பயிற்சி பெற்ற ஒரு பெரும் படையைத் திரட்டிக்கொண்டு பீகிங் நகரத்தை நோக்கிப் புறப்பட்டு வந்துகொண்டுமிருந்தார்கள். இவர்களை எதிர்த்துப் போராடுவதற்காக, தளபதி வூ என்ப வனுடைய தலைமையில் மிங் அரசாங்கத்துப் பெரும் படை யொன்று வடக்கே சென்றது. இதனுடைய விளைவு என்னவாயிற் றென்றால், பீகிங் நகரம் போதிய பந்தோபதில்லாமற் போய் விட்டது.
இதுதான் தருணமென்று, ராஜ்யத்தின் பல பாகங்களிலும் அட்டூழியங்கள் புரிந்துகொண்டுவந்த கொள்ளைக் கூட்டத்தினர் பலரும் லீ என்பவனுடைய தலைமையில் ஒன்றுதிரண்டு பீகிங் நகருக்குள் நுழைந்தனர்; உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் விளை வித்தனர். பார்த்தான் மிங் அரசன். என்ன செய்வதென்று தெரிய வில்லை. தனக்கு ஆலோசனை சொல்லியும் தன்னைப் பாதுகாத்தும் வந்த பேடிகளுக்கு ஆயுதங்களைக் கொடுத்து, கலகக் காரர்களை விரட்டியடிக்குமாறு கூறினான். நடக்கிற காரியமா இது? கலகக் காரர்கள் வெகு வேகமாக முன்னேறி வந்து அரண்மனைக் குள்ளேயே நுழைந்துவிட்டனர். அரசன், அருகாமையிலிருந்த மலைக்கு ஓடிவிட்டான். அங்கிருந்து பார்த்தான் நகரத்தை. எங்கும் ஒரே நெருப்புப் பற்றி எரிகிறது! இதனைக் காணச் சகியாத வனாய் ஒரு மரத்திலே தூக்குப்போட்டுக்கொண்டு இறந்து விட்டான். கலகத் தலைவனாகிய லீ, தானே சக்ரவர்த்தி என்று பிரகடனம் செய்து கொண்டான். அப்படிச் செய்துகொண்டதோடல்லாமல், அரண் மனையில் அப்பொழுது இருந்தவளும், மகா அழகியும், வடக்கே மஞ்சூக்களை எதிர்த்துப் போராடச் சென்றிருந்த வூ வின் காதலியு மான ஒருத்தியைக் கள்ளத்தனமாக அபகரித்து, தன்னுடைய படைத் தலைவன் ஒருவனிடம் கொடுத்தான். இப்படி அவன் செய்தபோது மிகவும் அலட்சியமாகவே செய்திருக்கவேண்டும். ஆனால் இதன் பின் விளைவுகளை அவன் ஊகித்திருக்கக்கூட முடியாது.
வடக்கே சென்றிருந்த வூவுக்கு, இந்தச் செய்திகள் யாவும் எட்டின. ஆத்திரம் கொண்டான். இந்த ஆத்திரத்தின் முன்னணியில் எப்படியாவது லீயைத் தொலைத்துவிடவேண்டுமென்ற ஒரே எண்ணந்தான் நின்றது. ஆனால் தன் ஒருவனாலேயே இந்த எண்ணத்தை நிறைவேற்ற முடியாதென்பதையும் தெரிந்துகொண்டி ருந்தான். இதனால், இந்த ஆத்திர மிகுதியினால், தான் யாரை எதிர்த்துப் போராடச் சென்றானோ அவர் களுடைய, சத்துருக் களான மஞ்சூக்களினுடைய உதவியை நாடினான். தன்னோடு பீகிங் நகரத்திற்கு வந்து கலகக் காரர்களைத் துரத்திவிடுமாறு கூறினான். மஞ்சூக்கள், இந்தமாதிரியான அழைப்பை எதிர்பார்க்கவே இல்லை. இந்த நல்ல சந்தர்ப்பத்தை விட்டு விடுவார்களா? உடனே வூவை வழிகாட்டியாகக் கொண்டு பெரும் படையுடன் பீகிங் நகரத்தை நோக்கி வந்தார்கள்; அதிக எதிர்ப்பில்லாமல் நகரத்தைக் கைப்பற்றிக் கொண்டார்கள்; தங்கள் தலைவனைச் சிங்காதனத்தி லேற்றினார்கள். வூ நினைத்தது ஒன்று; நடந்தது ஒன்று. மஞ்சூக்கள், இவனைமாகாண அதிகாரியாக நியமித்து மரியாதையாக அப்புறப் படுத்திவிட்டார்கள்! மஞ்சூ வமிசம் தோன்றியது.
மிங் வமிசத்துச் சுமார் முந்நூறுவருஷகால ஆட்சியை (கி.பி. 1368 - 1644) அதிகமாகச் சிறப்பித்துச் சொல்ல முடியாது. ஆனால், சீனாவின் எதிர்கால வாழ்வுக்கு, இந்த ஆட்சியின்போது அடி கோலப்பட்டதென்று சொல்ல வேண்டும். இதனால், சீனா, நன்மை களையும் அடைந்திருக் கிறது, தீமைகளுக்கும் உட்பட்டிருக்கிறதென்று சொன்னால் அது வேறு விஷயம். ஆனால், மிங் ஆட்சி, சீனாவின் சரித்திரப் போக்கை வேறொரு வழியில் திருப்பிவிட்டதற்குக் காரண மாயிருந்ததென்பதை யாரும் மறுக்க முடியாது.
மிங் ஆட்சியின்போது, ஏற்கனவே சீனாவுக்கும் அந்நிய நாடு களுக்கும் இருந்த தொடர்பானது வலுப்பட்டது. சீனர்கள் புதிய மாதிரியான கப்பல்களைத் தயாரித்து உபயோகிப்பதிலே நிபுணர் களானார்கள். இந்தக் கப்பல்களின்மூலம் சென்று தென்கடற் பிரதேங்கள் பலவற்றில் குடியேறினார்கள். இங்ஙனம் சீனர்கள் அதிகமாக வெளிநாடுகளுக்குச் செல்ல முற்பட்டதால், வெளி நாட்டார் பலரும் சீனாவுடன் தொடர்பு வைத்துக்கொள்ள விழைந்தார்கள். சிறப்பாக ஐரோப்பியர்கள், அப்பொழுதுதான் புதிது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டு வந்த விஞ்ஞான உண்மை களைச் சீனாவுக்குக் கொண்டுவந்தார்கள். இப்படிக் கொண்டு வந்தவர்கள் பெரும்பாலும் கிறிதுவப் பாதிரிமார்கள். இவர்களைத் தொடர்ந்தாற்போல் தான் பிற்காலத்தில் ஐரோப்பிய வியாபாரி களும், இந்த வியாபாரிகளைப் பாதுகாக்கப் போர் வீரர்களும் வரிசைக்கிரமமாக வந்தார்கள். சுருக்கமாகச் சொல்வோ மானால், ஐரோப்பிய வல்லரசுகளின் ஏகாதிபத்தியப் பசி, சீனாவைப் பொறுத்தமட்டில், இந்த மிங் ஆட்சி யிலேயே ஆரம்பமாயிற்று. ஐரோப்பிய வல்லரசுகளுக்கு மட்டுமல்ல, அண்டையிலுள்ள ஜப்பானுக்குக் கூட ஏகாதிபத்தியப் பார்வை உண்டானது, இந்த மிங் ஆட்சியின் போதுதான்.
முடியரசுக்கு முற்றுப்புள்ளி
மிங் வமிசத்திற்குப் பிறகு மஞ்சூ வமிசம். பத்து மன்னர்கள் இருநூற்று அறுபத்தெட்டு வருஷகாலம் (கி.பி. 1644 - 1912) இந்த வமிசத்தில் ஆண்டார்கள். இவர்களுடைய காலத்தில் சீனா, உன்ன தமான வாழ்வையும் கண்டது; ஆழமான பள்ளத்திலும் இறங்கியது. மஞ்சூ வமிசாவளிக்கு வேறெந்தப் பெருமை உண்டோ இல்லையோ, ஆயிரக் கணக்கான வருஷங்களாகத் தொடர்ந்து நடைபெற்றுவந்த முடியரசு முறைக்கு முற்றுப்புள்ளியிட்டு விட்ட பெருமை அதற்கு உண்டு.
மஞ்சூக்கள், லீ என்கிற கலகத் தலைவனைத் தொலைத்து விட்டு பீகிங் நகரத்தைக் கைப்பற்றிக் கொண்டார்களல்லவா? இதன் மூலமாக வடசீனாவின் பெரும் பகுதி இவர்களுடைய ஆதிபத்தியத் திற்குட்பட்டது. ஆனால், மிங் வமிசத்தைச் சேர்ந்த சிலர், தெற்கு சீனாவிலிருந்து கொண்டு மஞ்சூக்களின் ஆதிக்கத்தை எதிர்த்து வந்தார்கள். சிறிது காலப் போராட்டத்திற்குப் பிறகு இந்த எதிர்ப்பு குலைந்துவிட்டது. மஞ்சூக்களின் கை ஓங்கிநின்றது. எனவே இவர்களின் அரசன், ஷித்ஸு என்ற பெயருடன் சர்வ சீனாவுக்கும் சக்ரவர்த்தியானான். இவனைத்தான் மஞ்சூ வமிசத்தின் முதல் சக்ரவர்த்தியென்று சொல்லவேண்டும்.
சீனர்கள், அந்நியர்களாகிய மஞ்சூக்களின் ஆதிக்கத்தை வேண்டா வெறுப்புடனேயே ஏற்றுக்கொண்டார்கள்; அப்படி ஏற்றுக் கொள்வதைத் தவிர இவர்களுக்கு வேறுவழியில்லை. ஆளுஞ் சாதியாருக்கும் ஆளப்படுஞ் சாதியாருக்குமிடையில் ஏற்படக்கூடிய மனக்கசப்புகள், இந்த மஞ்சூ ஆட்சி முழுவதிலும் பரவிப் படிந்திருந்தது. இந்த மனக்கசப்பை அகற்ற மஞ்சூ மன்னர்கள் கூடிய வரையில் முயன்றனர் என்பது வாதவம். இதற்காகச் சீன நாகரிகத்தோடும் சீன கலா சாரங்களோடும் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டனர் என்பதும் உண்மை. ஆனால் இவர்கள், தாங்கள் ஆளுஞ்சாதியார் என்பதை மறந்துவிடவில்லை. ஆளப்படுஞ் சாதியினராகிய சீனர்களை, தேவையான அளவுக்கு உபயோகித்துக் கொண்டு, மற்ற விஷயங்களில் அலட்சியமாகவே நடத்திவந்தனர். மற்றும், சீனர்களுடைய மனதில் நாம் அந்நியர்களால் ஆளப்பட்டு வருகிறோம் என்ற எண்ணம் சதா உறுத்திக்கொண்டிருக்கும் படியான சில காரியங்களையும் செய்தனர். ஒரே ஓர் உதாரணம்.
சென்ற தலைமுறைவரை, அதாவது சுமார் முப்பது வருஷங் களுக்கு முன்னர் வரை, சீனர்கள், தங்கள் தலையின் முன் பாகத்தை க்ஷவரம் செய்துகொண்டு, பின் பாகத்திலுள்ள குடுமியை நீண்ட பின்னலாகப் பின்னித் தொங்கவிட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த வழக்கம் மஞ்சூ ஆட்சியின் ஆரம்பத்தில் ஏற்பட்டது. சீனர்கள், தாங்களாகவே வலிய மனம் விரும்பி இந்த வழக்கத்தை ஏற்றுக் கொள்ள வில்லை. ஆள்வோரால் கட்டாயப்படுத்தப்பட்டனர். அதுதான் இதிலுள்ள விசேஷம். சீனர்கள் தங்கள் தலைமயிரைப் பின்னிச் சுருட்டிக் கொண்டை போட்டுக் கொள்வது வழக்கம். மங்கோலியர்கள் வந்ததும், சீனர்கள் தங்களுக்கு அடிமைப் பட்டவர்கள் என்பதைக் காட்டும் பொருட்டு அவர் களுடைய தலைமயிரை இரண்டு பின்னல்களாகப் பின்னித் தொங்க விட்டுக் கொள்ள வேண்டுமென்று உத்திரவிட்டனர். மங்கோலிய ஆட்சி முடிந்து மிங் ஆட்சி ஏற்பட்டதும், சீனர்கள் பழையமாதிரி கொண்டை போட்டுக் கொண்டார்கள். மிங் ஆட்சி, சீனர் களுடைய ஆட்சியாக இருந்ததுவே இதற்குக் காரணம். மிங் ஆட்சிக்குப்பிறகு மஞ்சூரிய ஆட்சி தொடங்கியதும், முதல் சக்ரவர்த்தியான ஷித்ஸு, சீனர் களெல்லோரும் ஆளப்படுவதன் அறிகுறியாகத் தங்கள் தலை மயிரை (மங்கோலியர் காலத்திலிருந்ததைப் போல் இரட்டைப் பின்னலாக இல்லாமல்) ஒற்றைப் பின்னலாகப் பின்னித் தொங்க விட்டுக்கொள்ள வேண்டுமென்றும், அப்படிச்செய்ய மறுக்கிறவர் களுக்கு மரண தண்டனை விதிக்கப்படு மென்றும் ஓர் உத்திரவு பிறப்பித்தான். சீனர்கள் சுலபமாக இந்த உத்திரவை ஏற்றுக்கொள்ள வில்லை; தாங்கள் அடிமைகளென்று பிரித்து காட்டுகிற, தங்கள் மனிதத் தன்மையிலே ஒரு நிரந்தர களங்கத்தை ஏற்படுத்துகிற இந்த உத்திரவை எதிர்த்தார்கள். எதற்கும் அடங்கிப் போகும் சுபாவ முடைய விவசாயிகள் கூட இந்த உத்திரவுக்குக் கீழ்ப்படிய மறுத்து விட்டார்கள். எங்கும் கலகம் உண்டாயிற்று. மஞ்சூக்கள், ஆளுஞ் சாதியார் என்ற அகம்பாவத்தினால், மேற்படி உத்திரவைக்கட்டாயம் அமுலுக்குக் கொண்டுவர வேண்டுமென்று முனைந்து நின்றனர். சீனர்களைப் பார்த்து உங்களுக்குத் தலை வேண்டுமா தலைமயிர் வேண்டுமா? என்று கேட்டனர். சீனர்களோ மிக உறுதியாக எங்களுக்குத் தலைமயிர்தான் வேண்டும்; தலை போனால் போகிறது என்று கூறினார்கள். அவ்வளவு தான். அரசாங்க உத்திரவு கண்டிப்பான முறையில் அனுஷ்டானத்திற்குக் கொண்டு வரப் பட்டது. தலை மயிருக்கா எத்தனை பேர்தங்களுடைய தலையைக் கொடுத்தார்கள்? அநேக இடங்களுக்கு, அரசாங்கத்தார், இந்த உத்திரவை அமுலுக்குக் கொண்டுவர, பெரும்படைகளை அனுப்ப வேண்டியதாயிருந்தது. ஜனங்களும் பலவகை ஆயுதங்கள் தாங்கிக் கொண்டு அரசாங்கப்படைகளுடன் போராடினார்கள். சியாடிங் என்பது ஒரு சிறிய நகரம். இந்த நகரவாசிகள் புதிய உத்திரவுக்குக் கீழ்ப்படிய மறுத்து விட்டார்கள். அரசாங்கப்படைகள் வந்து நகரத்தை முற்றுகையிட்டன. எண்பது நாள் வரை முற்றுகையைச் சமாளித்து நின்றார்கள் நகரவாசிகள். கடைசியில் முடியாமல்போய் சரண டைந்து விட்டார்கள். விளைவு என்ன? சுமார் ஒன்றே முக்கால் லட்சம்பேர் அரசாங்கத் துருப்புகளால் கொலை யுண்டார்கள்! இதற்குப் பிறகு நாட்டின் பல பகுதியினரும் அரசாங்க உத்திரவுக்குக் கீழ்ப்படிந்துவிட்டனர். எங்கும் நீண்ட பின்னல்கள் காட்சியளித்தன. இங்ஙனம் மஞ்சூ வமிசத்தினர், தங்களுடைய ஆதிக்க விதையை ரத்தச் சேற்றிலேதான் ஊன்ற வேண்டியதாயிற்று.
ஷித்ஸுவுக்குப் பிறகு வந்த மன்னர்கள் கூடியவரையில் ராஜ தந்திரத்துடனேயே நடந்து கொண்டார்களென்று சொல்ல வேண்டும். சீனர் களுடைய புராதன பழக்க வழக்கங்களுக்கு மதிப்புக் கொடுத்தும், அவை களைத் தாங்களே அனுஷ்டித்தும் வந்தார்கள். சீன இலக்கியத்தையும் சீனக்கலையையும் போற்றி வளர்த்தார்கள். மிங் அரச குடும்பத்தினர் பலருக்கும், பொறுப்பில்லாத ஆனால் கௌரவமான உத்தியோகங்கள் கொடுத்து அவர்களைத் திருப்தி செய்வித்து வந்தனர். இருந்தாலும் அந்நிய ஆட்சிக்கு அடிமைப் பட்டிருக்கிறோமென்ற உணர்ச்சி ஜனங்களிடையே ஆங்காங்கு புகைந்து கொண்டுதான் இருந்தது.
ஷித்ஸுவுக்குப் பிறகு வந்த மன்னர்களிலே பிரசித்தமான வர்கள் இரண்டு பேர். ஒருவன் காங்ஹ்ஸி (1661 - 1722); மற்றொருவன் சின்லுங் (1735 - 1795). இருவரும் ஏறக்குறைய அறுபது வருஷம் ஆண்டார்கள். இருவர் காலத்திலும் சீனாவின் கிரகம் உச்சத்தை யடைந்தது; ஆனால் அதே சமயத்தில் அந்நியர்கள், சீனாவைச் சுரண்டுவதற்கு அதிவாரம் போட்டுக்கொண்டார்கள்.
காங்ஹ்ஸி, சிறு வயதிலிருந்தே ஆளுங்கலையை நன்கு பயின்றி ருந்தான். இவனோடுகூடப் பிறந்தவர்கள் மூன்று பேர். இவன் கடைசி மகன். இவர்களின் தகப்பன் ஷித்ஸு மரணப் படுக்கையில் கிடக்கிற போது, தனக்குப் பின்னால் பட்டத்திற்கு வரத் தகுதியுடையவர் யார் என்பதைப் பற்றி, மூன்று பிள்ளைகளையும் வரவழைத்து ஆலோசனை கேட்டான். மூத்த மகன், செங்கோலைப் பிடிக்கும் சக்தி தனக்கில்லை யென்று பஷ்டமாகச் சொல்லிவிட்டான். இரண்டாவது மகன் மௌனமாயிருந்தான். மூன்றாவது மகனாகிய காங்ஹ்ஸி, அரசபதவிக்குத்தான் தகுதியுடையவன் என்று உணர் வதாகத் தெரிவித்தான். அப்பொழுது இவனுக்கு வயது எட்டு. ஷ்த்ஸு இறந்ததும் இவனே முடிசூட்டப் பட்டான். தன்னம்பிக்கை யுடையவர்கள் நிச்சயமாக வெற்றியடைகிறார்கள். இவன் சிறுவனா யிருந்தபடியால், சுமார் ஐந்து ஆறு வருஷ காலம் ராஜ்யம், சில பெரியோர்களின் மேற்பார்வையில் இருந்து வந்தது. அதற்குள் காங்ஹ்ஸி, அரசியல் நுட்பங்களையெல்லாம் நன்று தெரிந்து கொண்டுவிட்டான். பின்னர் தானே நேரில் ராஜ்ய நிருவாக சூத்திரக் கயிற்றைப் பிடித்துக் கொண்டான். அப்பொழுது இவனுக்கு வயது பதினான்கு.
காங்ஹ்ஸி, அரசனாக ஆண்டதோடு அறிஞனாகவும் வாழ்ந்தான். தூங்காமை, கல்வி, துணிவுடமை இம்மூன்று நீங்கா நிலனாள் பவற்கு1 என்ற லட்சணப்படி அரசாண்டானென்று சுருக்கமாகச் சொல்லலாம். ஒரு நாள் இவன் வேட்டை நிமித்தம் குதிரைமீது சென்று கொண்டி ருந்தபோது, ஒரு குடியானவன் பாதையோரமாக உட்கார்ந்து அழுது கொண்டிருப்பதைப் பார்த்தான். உடனே குதிரையினின்று இறங்கி என்ன சமாசாரம் என்று விசாரித்தான். அந்தக் குடியானவனுக்கு இவன் அரசனென்று தெரியாது. அவன் சொன்னான்:- ஐயா, எனக்குப் பிதிரார்ஜித மாகக் கொஞ்சம் நிலம் இருந்தது. அதில் நானும் என் மகனும் சேர்ந்து உழைத்து உங்கள் ஜீவனத்தை ஒருவாறு நடத்தி வந்தோம். ஆனால் எங்களுடைய ஜில்லா அதிகாரி, எனது நிலம் பண்பட்டிருக்கிற தென்று சொல்லி அதனைத் தமது உபயோகத்திற்கு எடுத்துக் கொண்டுவிட்டார். எனது மகனைக்கூட என்னிடமிருந்து பிரித்து தமது வேலைக்காரனாக அமர்த்திக்கொண்டு விட்டார். அப்படியா? என்னோடு குதிரை மீது ஏறிக்கொண்டுவா; அதிகாரி யிடம் போவோம். உனது நிலத்தை உனக்கு நான் திருப்பிவாங்கித் தருகிறேன். என்றான் அரசன். இவன் யாரோ ஒரு பெரிய மனிதன் என்று நினைத்து விவசாயியும் இவனைப் பின்தொடர்ந்தான். இருவரும் அதிகாரியின் வீட்டுக்குப் போனார்கள். காங்ஹ்ஸி, தான் எங்கே வெளியில் சென்றாலும் தன்னுடன் சில அரச அடையாளங்களை எடுத்துச் செல்வது வழக்கம். அந்த அடையாளங்களை மேற்படி அதிகாரிக்குக்காட்டி, தான் சக்ரவர்த்தியென்பதை அவனுக்கு நிரூபித்துக்காட்டிவிட்டுப்பிறகு, குடியானவனுடைய நில விஷய மென்னவென்று கேட்டான். அதிகாரி, பயந்துபோய் தான் செய்தது பிழை யென்று மன்னிப்புக் கேட்டான். ஆனால் அரசன், அவனை உத்தியோகத்தினின்று விலக்கிச் சிரச் சேதமும் செய்துவிட்டான்; குடியானவனுக்கு அவன் நிலத்தைத் திருப்பிக் கொடுக்கச் செய்தான். இந்த மாதிரி சில கடுமையான முறைகளை அனுஷ்டித்து காங்ஹ்ஸி அரசாங்க நிருவாகத்தில் ஊழல்களைக் களைந்தான்; ஒழுக்கத்தைப் புகுத்தினான்.
இவன் இங்ஙனம் கண்டிப்பாக நிருவாகம் செய்வதைச் சிலர் விரும்பவில்லை. ராஜ்யத்தின் எல்லைப்புறங்களில் கலகங்கள் கிளம்பின. காங்ஹ்ஸி இவைகளை யெல்லாம் தானே நேரில் சென்று அடக்கினான். இவன் காலத்தில் மஞ்சூரியா, மங்கோலியா, போர் மோஸா தீவு முதலிய நாடுகள் சீனாவின் ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டு ஒழுங்காகக் கப்பங் கட்டிவந்தன. வெளி நாடுகளி லிருந்து வந்த கிறிதுவப் பாதிரிமார்களை இவன் கௌரவமாக நடத் தினான்; அவர்களிடமிருந்து விஞ்ஞான சாதிர சம்பந்தமாக அநேக புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டான்; தனது பிரஜை களுக்கும் கற்பிக்கச் செய்தான். அப்பொழுது ருஷ்யாவை ஆண்டு வந்த மகாபீட்டர்1 மன்னன் (1672 - 1725) தனது பிரதிநிதிகளிற் சிலரை, சீன சக்ரவர்த்தியின் சந்நிதானத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று அனுமதி கோரினான். காங்ஹ்ஸியும் அனுமதி கொடுத்து, ருஷ்யப் பிரநிதிகளை அன்புடன் வரவேற்று உபச ரித்தான். இந்தக்காலத்தில் ருஷ்யாவுக்கும் சீனாவுக்கும் எல்லை வகுக்கப்பட்டது. ருஷ்யாவிலிருந்து அநேக பாதிரிமார்கள் சீனாவில் மதப் பிரசாரம் செய்தார்கள். அநேக மாணக்கர்கள் பீகிங் சர்வ கலாசாலையில் பயின்றார்கள். இங்ஙனமே சீனாவிலிருந்தும் அநேகர் ருஷ்யாவுக்குச் சென்று பல புதிய விஷயங்களைக் கற்றுக் கொண்டு சீனாவுக்குத் திரும்பிவந்து அந்தப் புதிய அறிவைப் பரப்பினார்கள்.
காங்ஹ்ஸியின் பேரன் சின்லுங். இவன் காலத்தில் சீனாவின் எல்லை இன்னும் அதிகமாக விரிந்தது. அன்னாம், பர்மா, நேபாளம், பூட்டான், திபேத்து முதலிய நாடுகள் சீனாவின் ஆதிபத்தியத்தை ஏற்றுக் கொண்டன. அறிவையும் பொருளையும் நாடி வெளிநாட் டாருடைய வருகை இன்னும் அதிகமாயிற்று. ஆனால் இங்ஙனம் வந்த அந்நியர்களிற் பெரும்பாலோர் சீனாவைச் சுரண்ட வந்தனரே தவிர, அறிவைப் பெறவோ கொடுக்கவோ வரவில்லை. சீனர்கள், இவர்களைக் காட்டுமிராண்டிகள் என்றும் அந்நியப் பேய்கள் என்றும் அழைத்ததில் என்ன ஆச்சரியம்?
காங்ஹ்ஸியைப் போலவே சின்லுங்கும் சிறந்த அறிஞன். இதனால் அறிஞர்களை ஆதரித்தான்; கலை வளர்ச்சிக்குப் பாடு பட்டான். இவன் காலத்தில் சீன பாஷையில் பேரகராதியொன்று தயாரிக்கப்பட்டது. இன்றளவும், இதுதான் மற்ற அகராதிகளுக்கும், பிற நூல்களுக்கும் முன்மாதிரியாயிருக்கிறது. புதிய நூல்கள் பல தோன்றுவதற்கும் இவன் துணை செய்தான். இங்ஙனம் இவன் ஒரு பக்கத்தில் புதிய சிருஷ்டிகளுக்கு ஆதரவு கொடுத்துவந்தா னென்றாலும், பழைய இலக்கியங்களை அழித்தும் வந்தான். இந்த விஷயத்தில் இவன் ஷி ஹுவாங் தீயின் அடிச்சுவடுகளை அப்படியே பின்பற்றினான்.1 அந்நிய ஆதிக்கத்தை எதிர்க்கிற முறையில் எந்த விதமான பழைய நூல்கள் இருந்தாலும் சரி, புதிய நூல்கள் எழுந்தாலும் சரி, அனைத்தையும் அக்கினி பகவானுக்கு ஆகுதி செய்துவிடுமாறு தனது உத்தியோகதர்களுக்கு ஆணை யிட்டான். கேட்கவேண்டுமா உத்தியோகதர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு? ஆயிரக் கணக்கான நூல்கள் எரியில் விழுந்தன. நூல்களை எரியிலே தள்ள மறுத்தவர்கள் சிறையிலே தள்ளப்பட்டார்கள். ஆக்க வேலையோடு அழிவு வேலையும் தொடர்ந்தாற்போலவே நடை பெற்றது! மஞ்சூ ஏகாதிபத்தியத்தின் உன்னத வாழ்வுக்கு ஒரு புறத்தில் உரமிட்டுக்கொண்டு வந்த சின்லுங் மன்னன், மற்றொரு புறத்தில் அதன் அழிவுக்கும் அடிகோலிக்கொண்டு வந்தான்!
சின்லுங்குக்குப் பிறகு வந்த மன்னர்கள், பழைய பெருமையின் நிழலிலே வாழ்ந்துவிட்டு இறந்துபோனார்கள். ராஜ்ய சக்தி, மெது மெதுவாகப் பலவீனப் பட்டுக் கொண்டுவருவதை இவர்களால் உணரக் கூட முடியவில்லை. அந்நியர்களுடைய ஆதிக்க சக்தி கொஞ்சம் கொஞ்ச மாகச் சீனாவை நெருக்கிக் கொண்டுவருவதை இவர்களால் தடுக்கமுடிய வில்லை. ஜனங்களிடத்திலே அதிருப்தி புகைந்துகொண்டிருந்தது; சில இடங்களில் கலக நெருப்புகளும் கிளம்பி தேசத்தை அவாந்தரையாக்கி விட்டன. இப்படிப்பட்ட அவாந்தரங்களிலே ஒன்றுதான் சரித்திரப் பிரசித்திபெற்ற தைப்பிங் கலகம். இந்தக் கலகத்திற்குப் பூர்வ பீடிகை மாதிரி, சின்லுங் கினுடைய ஆட்சியின் கடைசிகாலத்தில் ஒரு பெரிய புரட்சி ஏற் பட்டது. முன்சொன்ன வெண்தாமரைக் கட்சியினரே2 இதனைத் தொடங்கினர். அந்நிய ஆட்சியாகிய மஞ்சூ ஆட்சியை ஒழித்து, சீன ஆட்சியாகிய மிங் ஆட்சியை மீண்டும் நிலைக்கச் செய்ய வேண்டு மென்ற நோக்கத்துடன் இவர்கள் இந்தப் புரட்சியை ஆரம்பித் தார்கள். இதற்காக இவர்கள் பழைய மாதிரி மதப் போர்வையைப் போர்த்துக் கொண்டார்கள். 1793-ஆம் வருஷம் - அதாவது எந்த வருஷத்தில் இங்கிலாந்து மன்னனாகிய மூன்றாவது ஜார்ஜின் பிரதிநிதியாக லார்ட் மெக்கார்ட்னி என்பவன் சீனாவில் பிரிட்டிஷாருக்கு வியாபார உரிமை வேண்டுமென்று சொல்லிக் கொண்டும், அறிமுகக் கடிதம், சன்மானங்கள் முதலியன எடுத்து கொண்டும் பீகிங் நகரத்தை வந்தடைந்தானோ அதே வருஷத்தில்3- தொடங்கின இந்தப் புரட்சி, சுமார் எட்டு வருஷ காலம் கொரில்லா சண்டை மாதிரி நடைபெற்றது. சீனர்கள் இந்தக் கொரில்லா சண்டையில் திறமையுடையவர்களென்றும், இப்பொழுது நடைபெற்று வருகிற சீன - ஜப்பானிய யுத்தத்தை இவர்கள் இந்த முறையைக் கையாண்டே பெரும்பாலும் சமாளித்து வருகிறார் களென்றும் சொல்லப் படுகிறதல்லவா? இதற்கு - இந்தக் கொரில்லா போர் முறைக்கு - அடிகோலப்பட்டது இந்த புரட்சியின்போதுதான். சாமர்த்தியசாலியான சின்லுங் மன்னனாலேயே இந்தப் புரட்சியை அடக்க முடியவில்லை. அவன் கண்மூடிய பிறகே இஃது அடங்கியது. இதில் மாய்ந்த உயிர்கள் லட்சக்கணக்கில்! இதற்காகச் செலவழிந்த தொகையோ சுமார் பத்துக் கோடி!
இந்தப் புரட்சிக்குப் பிறகு சுமார் ஐம்பது வருஷங் கழித்து - 1850-ஆம் வருஷம் - தைப்பிங் கலகம் உண்டாயிற்று. அப்பொழுது மஞ்சூ அரசாங்கமானது, ஐரோப்பிய வல்லரசுகளுடன் போர்க் களத்திலே யாகட்டும், ராஜதந்திர மேடையிலேயாகட்டும் சரிசமான மாக நின்று சமாளிக்க முடியாமல் ஒரு தோல்விக்குப்பின் மற்றொரு தோல்வியாக, ஓர் அவமானத்திற்குப்பின் மற்றோர் அவமானமாக அடைந்துகொண்டு வந்தது. இதனால் ஜனங்களுக்கு அரசாங்கத்தின் மீது அதிக நம்பிக்கை யில்லாமற் போய்விட்டது. சீன மக்களாகிய நாங்கள் எங்கள் அதிகாரி களுக்குப் பயப்படுகிறோம். ஆனால் எங்கள் அதிகாரிகளோ, கடல் கடந்து வந்திருக்கும் (அந்நியப்) பேய்களுக்குப் பயப்படுகிறார்கள். என்று ஜனங்கள் தெருவிலே பாடிக் கொண்டுசெல்வது சர்வ சகஜமான காட்சியாயிருந்தது. பொதுவாக அந்நியர்கள் மீது ஜனங்களுக்கு இருந்த இந்தத் துவேஷத்தைச் சிலர் உபயோகித்துக் கொண்டனர். இதன் விளைவே தைப்பிங் கலகம். இதற்கு மூல காரணமாகவும் தூண்டுதல் போலவும் இருந்தது கிறிதுவப் பாதிரிமார்களின் பிரசாரம். இந்தப் பிரசாரத்தின் செல்வாக்கு பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் சீனா முழுவதிலும் பரவியிருந்தது.
ஹுங் ஹ்ஸியு சுவான் என்ற ஒருவன், பாதிரிமார்களின் பிரசாரத்திலே பெரிதும் ஈடுபட்டிருந்தான். இவன் சாதாரண இரு விவசாய குடும்பத்திலே பிறந்தவனானாலும் நிரம்ப வாசாலக முடையவன்; ஜனங்களுடைய உணர்ச்சியைக் கிளப்பிவிட்டு அவர்களைத் தன் பக்கம் இழுத்துக் கொள்ளும் வசீகர சக்தி யுடையவன். இவன் பைபிளை நன்றாகப் படித்து அதனை ஜனங் களுக்கு, அவர்கள் புரிந்து கொள்கிற பாஷையிலே போதித்து வந்தான். இப்படியிருக்கையில் ஒருநாள் இவனுக்கு ஆவேசம் வந்தது. சிறிது நேரம் மூர்ச்சையாகி விட்டதுபோல் கிடந்தான். பிறகு தெளிந் தெழுந்து, தான் கிறிதுவர்களின் கடவுளை நேரில் கண்ட தாகவும்,அவர், ஜனங்கள் விக்கிரகாராதனை செய்வதை நிறுத்தி விட்டுத் தம்மைத் தொழாவிட்டால் உலகத்திற்கே பெரிய நாசம் ஏற்படக்கூடுமென்று எச்சரிக்கை செய்ததாகவும் பிரகடனம் செய்தான். தவிர, யேசுநாதர் கடவுளின் மூத்த குமாரரென்றும், தான் இளைய குமார ரென்றும், பூலோகத்தில் தம்முடைய ராஜ்யத்தை தாபிப்பதற்காகவே கடவுள் தன்னை அனுப்பியிருக்கிறாரென்றும் கூறினான். கடவுள் கட்சி என்ற ஒரு கட்சியை ஏற்படுத்திக் கொண்டு அதற்குத் தலைவனானான். ஜனங்கள் இவன் வார்த்தைகளை நம்பினார்கள். இவனுக்கு ஆள்பலம் சேர்ந்தது. இந்தப் பலத்தை வைத்துக் கொண்டு இவன், சீனாவின் தென் பாகத்திலுள்ள க்வாங்ஸி மாகாணத்திலிருக்கும் ஒரு சிறிய ஊரில் தன்னுடைய ராஜ்யத்தை தாபித்தான்; இதற்கு தைப்பிங் தீன் குவோ என்று பெயர் கொடுத்தான்; தன்னை இந்த ராஜ்யத்திற்கு அரசன் என்று அழைத்துக் கொண்டான். பூலோகத்தில் கடவுள் ராஜ்யம் தாபித மாயிற்று! தைப்பிங் என்றால் அமைதியென்று அர்த்தம். சாசுவத மான அமைதியை நிலை நாட்டுவதே இந்த ராஜ்யத்தின் நோக்கம். இவன் பதவியேற்றுக் கொண்டதும் முதன் முதலாக வெளியிட்ட சில அறிக்கைகளிலிருந்து இவனுடைய நோக்கம் இன்னதென்று தெளிவாயிற்று.
சர்வவல்லமையுள்ள கடவுள், தமது புனிதமான ஆக்ஞையை எனக்கு இட்டிருக்கிறார். எனது பரமபிதாவாகிய அவரும், எனது மூத்த சகோதரராகிய யேசுநாதரும், நான் பூலோகத்திலே அவதரித்து, சர்வசாம்ராஜ்யத்திற்கும் உண்மையான அரசனாக இருந்து ஆண்டு வர வேண்டுமென்று உத்திரவு செய்திருக்கிறார்கள். . . மஞ்சூக்களை அடியோடு அழித்துவிட்டு, உண்மையான அரசன் என்ற முறையில் ஏகாதிபத்தியத்தை வீகரித்துக் கொள்ளவேண்டுமென்றும் எனக்கு தேவாக்கினை பிறந்திருக்கிறது.
மஞ்சூ அரசாங்கத்தின்மீது ஏற்கனவே ஜனங்களுக்கு அதிக அதிருப்தி இருந்தபடியால், அந்த அதிருப்தியிலேயே இந்த இயக்கம் வெகு விரைவாக வளர்ந்தது. கட்சிக் கொடியின் கீழ் பெரும் படை யொன்றும் திரண்டது. இந்தப்படை பலத்தைக் கொண்டு ஹுங் ஒவ்வொரு பிரதேச மாகக் கைப்பற்றிக் கொள்ளத் தொடங்கினான். சுமார் மூன்று வருஷத் திற்குள் பதினைந்து மாகாணங்கள் - தெற்கு சீனாவும் மத்திய சீனாவின் பெரும்பகுதியும் - இவனுடைய ஆதிக்கத்துக்குட்பட்டு விட்டன. கடவுள் ராஜ்யத்திற்கு நான்கிங் தலைநகரமா யமைந்தது. இங்கிருந்து ஹுங் உத்திரவுக்குமேல் உத்திரவாகப் பிறப்பித்துக் கொண்டுவந்தான். சீன சம்பிரதாயங்களை அனுசரித்து, அரசாங்க நிருவாகமானது, புதிய முறையில் மாற்றி யமைக்கப்பட்டது. அபினி தின்பது, மதுபானஞ் செய்வது, விபசாரம் செய்வது இவையெல்லாம் கடுந்தண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்பட்டன. பெண்கள், தங்கள் கால்களைக் குறுக்கிக் கொள்ளக் கூடாதென்றும், ஆண்கள், தங்கள் தலை மயிரைப் பின்னலாகத் தொங்கவிட்டுக் கொள்ளக்கூடாததென்றும் உத்திரவுகள் பிறந்தன. ஆண்களைப் போலவே பெண்களுக்கும் எல்லா விஷயங்களிலும் சம உரிமையுண்டென்பது அங்கீகரிக்கப்பட்டது. இந்த உத்திர வுகளை யெல்லாம் கண்ட ஜனங்கள், தங்களுக்கு நிச்சயம் விடுதலை கிடைத்துவிட்டதாகவே கருதினார்கள். உண்மையில் தைப்பிங் கலகம் ஒருவிதமான விடுதலை இயக்கந்தான். அவன் - ஹுங்- சுதந்திரம், சமத்துவம் என்ற யுத்த முழக்கத்துடன், தேசத்தின் அரசியலைச் சீர்திருத்தவும், பொருளாதார, சமுதாய அமைப்பை புனர்நிர்மாணஞ் செய்யவும் முயன்றான் என்று ஓர் அறிஞன் கூறுகிறான்.1
ஆரம்பத்தில் இந்த இயக்கத்தை மஞ்சூ அரசாங்கத்தார் அலட்சியமாகவே கருதி வந்தனர். சில இடங்களில் இந்த இயக்கத்தை அடக்குவதற்காக அனுப்பப்பட்ட அரசாங்கப் படைகள் தோல்வி யுற்றுக்கூடத் திரும்பிவந்தன. இதனால், மஞ்சூ அரசாங்கத்தில் நிருவாக ஊழல் எவ்வளவு இருந்ததென்பது நன்கு புலப்படும். தவிர, இந்தச் சமயத்தில் சீனாவில் தங்களுடைய ஆதிக்கத்தை ஊர்ஜிதம் செய்துகொள்ளவேண்டி போட்டா போட்டி போட்டுக் கொண்டி ருந்த ஐரோப்பிய வல்லரசுகள், ஒரு புறத்தில் கலக இயக்கத்திற்குச் சலுகை காட்டியும் மற்றொரு புறத்தில் மஞ்சூ அரசாங்கத்தோடு பேரம் பேசியும் வந்தன. கலகத்தின் ஆரம்ப காலத்தில் வல்லரசுகள் இப்படி இரண்டு பக்கத்து டமாரம்போல நடந்து கொண்டுவந்த போதிலும், பின்னர், சிறிது காலம் நடு நிலைமை வகித்துக் கொண்டி ருந்து விட்டு, தைப்பிங்குகளால் தங்களுடைய வியாபார உரிமை களுக்குப் பாதகம் ஏற்படக் கூடுமென்று தெரிந்ததும், இவர்களை அடக்கிப் போட மஞ்சூ அரசாங்கத்திற்குத் துணை புரிந்தன. மஞ்சூ அரசாங்கத்திடமிருந்து அநேக சாதகங்களையடைவதற்கு இப்படித் துணை செய்வதும் வல்லரசுகளுக்கு அவசியமாயிருந்தது.
அந்நியர்களுடைய இந்தத் துணையுடன் மஞ்சூ அரசாங்க மானது, தைப்பிங் படைகளை, அவைகள் ஆக்கிரமித்துக் கொண்டி ருந்த பிரதேசங்களிலிருந்து விரட்டியடித்தது. 1864-ஆம் வருஷம் நான்கிங் நகரம் திரும்பவும் கைப்பற்றிக் கொள்ளப்பட்டது. இதி லிருந்து ஜனங்களுடைய ஆதரவும் இந்த இயக்கத்திற்கு வரவரக் குறைந்து கொண்டுவந்தது. பின்னர் க்ஷீண தசையடைய வேண்டியது தானே? இயக்கத்தின் தலைவன், தேவ குமாரனான ஹுங், விஷ முண்டு இறந்துவிட்டான். இதற்குப் பிறகு இரண்டு வருஷமாயிற்று, இந்த இயக்கத்தை அடியோடு அடக்குவதற்கு. ஏனென்றால், தைப்பிங்குகள் தங்களுடைய தெய்விக ஆட்சிக் காலத்தில் சுமார் அறுநூறு நகரங்களைக் கைப்பற்றிக்கொண்டு ஆதிக்கஞ் செலுத்தி வந்தார்கள். இவைகளை ஒவ்வொன்றாக மீட்டு, அரசாங்கத்திற்கு எதிர்ப்பில்லாமற் செய்ய இரண்டு வருஷ காலம் பிடித்தது. 1866-ஆம் வருஷத்தோடு கடவுள் ராஜ்யம் அதமித்துவிட்டது.
அந்நிய ஆட்சியை ஒழிக்கத்தோன்றிய தைப்பிங் இயக்க மானது, கடைசியில், சீன சமுதாய வாழ்வில் ஒரு பெரிய கலக்கத்தை உண்டுபண்ணிவிட்டு ஒடுங்கியது. சுமார் இரண்டு கோடி ஜனங்கள், இந்த இயக்கத்தின் விளைவாக, யமலோக யாத்திரை சென்றார்கள். இது தவிர, பொருட்சேதம் ஏராளம். இந்த இயக்கத்தினால் மஞ்சூ அரசாங்கத்தின் பலவீனம் நன்றாகப் புலப்பட்டது. இந்தப் பலவீனம் ஐரோப்பியவல்லரசுகளின் ஏகாதிபத்திய ஆசையை வளர்த்தது. இந்த ஆசைத் தீயிலிருந்து உடன்படிக்கைகள் என்ற பெயரால் எத்தனை தளைகள் உருப்பெற்று சீனாவைச் சுற்றிக் கொண்டன! சீனர்களுடைய அறிவை மயக்க என்னென்ன சூழ்ச்சிகள் செய்யப்பட்டன! இவையெல்லாம் கறை படிந்த கதை. இந்தக் கறை படியப்படிய மஞ்சூ அரசாங்கமும் அழுகிக்கொண்டு வந்தது. அழுகிப் போன உடலில் புரைப்புண்கள் உண்டாவது போல ராஜ்யமெங்கணும் ரகசிய இயக்கங்களும் பகிரங்கக் கலகங்களும் தோன்றின. இப்படிப்பட்ட கலகங்களிலே ஒன்றுதான், மேலை நாட்டாரால் பிரமாதப்படுத்திச் சொல்லப்படுகிற பாக்ஸர் கலகம். இந்தக் கலகத்திற்கு நெய்வார்த்து வளர்த்து, அதே சமயத்தில் மஞ்சூ அரசாங்க விருட்சத்தின் அடிவேரில் வெந்நீரை ஊற்றி, அந்த விருட்சத்தை அடியோடு வீழ்த்தியவள் ஒரு பெண்! ஆம், பெண் தன்மையில்லாத ஒரு பெண்ணுருவந்தான்!
யெஹோனலா என்ற இயற்பெயருடைய இவள், மஞ்சூ அரசபீடத்தில் அமர்ந்திருந்த வென்த்ஸுங் (1850 - 1861) என்ற மன்னனுடைய வைப்பாட்டியாக அரண்மனைக்குள் புகுந்தவள். அதற்குப் பிறகு அபார சாமர்த்தியத்தினால் நாளுக்கு நாள் தனது செல்வாக்கை வளர்த்துக்கொண்டு சுமார் நாற்பத்தேழு வருஷகாலம் ராஜ்யபாரத்தைத் தாங்கிவந்தாள். வென்த்ஸுங் 1861-ஆம் வருஷம் ஆகட் மாதம் உயிர்துறந்தான். இவனுக்கு அடுத்தாற்போல் பட்டத்திற்கு வரவேண்டிய மூத்ஸுங் என்ற பெண் அப்பொழுது ஐந்து வயதுக் குழந்தை. இதனால் யெஹோனலா, அநேக சூழ்ச்சி களுக்குப் பிறகு, தானே ரீஜண்டாக அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டு தன் பெயரை த்ஸுஹ்ஸி என்று மாற்றிக் கொண்டாள். அதற்குப் பிறகு இந்தப் பெயராலேயே இவள் அழைக்கப்பட்டு வந்தாள்.
த்ஸு ஹ்ஸியின் அதிருஷ்ட வசமாக மூத்ஸுங், பத்தொன்ப தாவது வயதிலேயே இறந்துவிட்டாள். அப்பொழுது அவள் கர்ப்பமாயிருந்தாள். த்ஸு ஹ்ஸி, அவளுடைய உரிமைகளைப் புறக்கணித்துவிட்டு, தனது சகோதரி ஒருத்தியின் இரண்டு வயதுக் குழந்தையை அரசபீடத்தில் அமர்வித்து, தானே மறுபடியும் ரீஜண்டானாள். எனவே, இரண்டு தலைமுறை காலத்திலும் இவளே சர்வாதிகாரி போலிருந்து ஆண்டு வந்தாள். இவள், தனது பதவியை திரப்படுத்திக்கொள்ளும்பொருட்டு அவ்வப்பொழுது செய்த சூழ்ச்சிகளும், செய்வித்த கொலைகளும் பல. மகா பிடிவாதக் காரி. தான் என்ற அகம்பாவம் படைத்தவள்; புதுமையை விரும்பாதவள். இதனால் அந்நியர்களைத் துவேஷித்துவந்தாள்; அவர் களுடைய துவேஷத்திற்கும் ஆளானாள். இவளுடைய ஆட்சிக் காலத்தில், சீனா, ஒன்றன்பின் ஒன்றாக அநேக அவதிகளுக்குட் பட்டது. இதனால் ஜனங்கள் அதிக ஆத்திரமடைந்தார்கள். இவளைத் தொலைக்க அநேக சூழ்ச்சிகள் நடை பெற்றன. இந்தச் சூழ்ச்சிகளொன்றில், தான் யார் பொருட்டு ரீஜண்டாயிருக் கிறாளோ அந்த தேத்ஸுங்கே சம்பந்தப் பட்டிருப்பதாகச் சொல்லி அவனைத் தனியான ஓரிடத்தில் சிறைமாதிரி வைத்துவிட்டாள். இதற்குப் பிறகு பதினோரு வருஷங் கழித்து, 1908-ஆம் வருஷம் நவம்பர் மாதம் பதினான்காம் தேதி, தேத்ஸுங் தனது தனிமையிலே இறந்துவிட்டான். இவன் இறந்து, விடுபடாத ஒரு புதிர். ஆனால் மறுநாளே (15-11-1908) த்ஸுஹ்ஸியும், தனது அரண்மனையில் இறந்துகிடந்தாள். அப்பொழுது இவளுக்கு வயது எழுபத்துமூன்று.
இவள் தனது கடைசி மூச்சு இருக்கிறவரை சிறிது கூட உடல் சோர்வோ, மனத் தளர்ச்சியோ அடையாமல் ராஜகாரியங்களைக் கவனித்துக்கொண்டுவந்தாள். தான் இறந்துபோவதற்கு முந்திய நாள்-அதாவது தேத்ஸுங் இறந்த அன்று (14-11-1908)- மாலை பூயி என்ற மூன்று வயதுடைய ஓர் அரசிளங் குமரனை வரவழைத்து, அவனுக்குச் சக்ரவர்த்திப் பட்டம் சூட்டி, அவனுடைய தகப்பனை ரீஜண்டாக நியமித்தாள். பூயி, உடனே ஹுவான் டுங் என்ற பட்டப் பெயருடன் சிங்காதனத்தில் அமர்த்தப்பட்டான். ஆனால் இவன் ஆளவேயில்லை. முதிய புத்தர் என்று அழைக்கப்பட்ட த்ஸு ஹ்ஸியுடனே மஞ்சூ வமிச முடிந்துவிட்டதென்று சொல்ல வேண்டும்.
பொதுவாகச் சுமார் முந்நூறு வருஷத்து மஞ்சூ ஆட்சியானது அந்தக் காலத்தவருடைய மதிப்புப்படி சிறப்புடையதாக இருந்த தென்றே சொல்லவேண்டும். உள்நாட்டில் ஏதோ ஒருவிதமான அமைதி இருந்தது; எல்லைப்புறங்களில் அதிகமான பாதுகாப்பு இருந்தது. ஜனங்களுடைய வாழ்க்கை அந்தது உயர்ந்துவந்தது. நகரங்களில் பணக்கார வகுப்பினர் அதிகப்பட்டு வந்தனர். இவர்கள் மூலமாக கலையழகு நிரம்பிய பொருள் களுக்கும் ஆடம்பர வதுக்களுக்கும் அதிக கிராக்கி உண்டாயிற்று. குடியானவர் களுடைய வாழ்க்கை எப்பொழுதும்போல் ஒரே விதமாக இருந்தது. இவர்களுடைய வாசதலங்கள் ஏறக்குறைய பொந்துகள் மாதிரியே இருக்கின்றன; பணக்காரர்களுடைய வீடுகளோ ஆடம்பர மாகவும், காற்றுவாட்ட முள்ளதாகவும் சித்திர வேலைப்பாடுகள் நிறைந்த தாகவும் இருக்கின்றன. ** பணக்காரர்கள் பகட்டான பட்டாடை களை உடுத்திக்கொண்டு போகிறார்கள். படித்தவர்கள், தங்கள் கை நகங்களை நீளமாக வளர்த்துக்கொண்டு, கைவேலையில் தங்களுக் குள்ள வெறுப்பைக்காட்டிக்கொள்ளுகிறார்கள். பெண்கள், பட்டுச் சராய்களைப் போட்டுக்கொண்டும், காகிதத்தினால் செய்யப்பட்ட பூக்களினாலும் நகைகளினாலும் தங்களை அலங்கரித்துக் கொண்டும் ngh»wh®fŸ** ஜனங்களுடைய முக்கிய ஆகாரம் அரிசி. இதனோடு இன்னும் பல மாமிச வகைகளைச் சேர்த்துச் சாப்பிடுகிறார்கள். ** கலை, இலக்கியம் முதலியன வளர்ந்துவந்தன. பெரிய புதக சாலைகள் பல திறக்கப்பட்டன.
இங்ஙனம் மஞ்சூ ஆட்சியானது வாழ்வோடு தாழ்வையும் அடைந்து, ஆட்சி முறையையே மாற்றிவிடக்கூடிய ஒரு மகத்தான புரட்சிக்குச் சாமக்கிரியைகளை யெல்லாம் சேர்த்துவைத்துவிட்டு மறைந்தது.
அடங்கிவந்த ஐரோப்பியர்
சீனாவுக்கு வந்த மேனாட்டாரை, தரை வழியாக வந்தவ ரென்றும் கடல் வழியாக வந்தவரென்றும் இரு வகையினராகப் பிரிக்கலாம். ஐரோப்பிய வல்லரசுகளுக்கு நாடுபிடிக்கவேண்டிய ஆசையும் அவசியமும் ஏற்பட்டு, அவை காரணமாக கி.பி. பதினைந்தாவது நூற்றாண்டில் கொலம்ப, கிழக்குப் பக்கமுள்ள நாடுகளைக் கண்டு பிடிப்பதாகப் புறப்பட்டு மேற்குப்பக்கமாகப் போனானல்லவா, அதற்குப் பின்னர் சீனாவை நோக்கி வந்த ஐரோப் பியர்கள் கடல் மார்க்கத்தையே உபயோகித்தார்கள். அதுவரை -அதாவது கி.பி. பதினைந்தாவது நூற்றாண்டுவரை - ஐரோப்பியர்கள் மத்திய ஆசியப் பிரதேசங்களின் வழியாகவே சீனாவுக்கு வந்து கொண்டிருந்தார்கள். இப்படி வந்தவர்களில் பெரும்பாலோர் வியாபாரிகள்; சிறுபான்மையோர் கிறிதுவப் பாதிரிமார்கள். இவர்கள் நடை பிரயாணிகளாகவே வரவேண்டியிருந்த தனால், ஆங்காங்கு தங்கி அந்தந்த நாட்டு மக்களோடு பழகவும், அவர் களுடைய கலாசாரங்களை அறிந்துகொள்ளவும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. சரக்குப் பிடிக்கிற இடத்தில் வியாபாரிகள் நாணய மாகவும், மதத்தைப் பிரசாரம் செய்கிற இடத்தில் பாதிரிமார்கள் மரியாதையாகவும் முறையே நடந்து கொண்டார்கள். இவர்கள், பொருள்களை யாகட்டும் அறிவை யாகட்டும், மரியாதையாகக் கொடுத்து மரியாதையாக வாங்கத் தெரிந்து கொண்டிருந்தார்கள். இதனால் சென்ற இடமெல்லாம் இவர்களுக்குச் சிறப்பு ஏற்பட்டது. அந்தந்த நாட்டு அரசர்களும் இவர்களை ஆதரித்தார்கள். சீனா விலும் இவர்களுக்கு இந்த ஆதரவு குறையாமலே இருந்தது. குப்ளாய் கான் (1260 - 1293) என்ற மங்கோலிய மன்னன், மார்க்கோ போலோ என்ற இத்தாலிய வியாபாரியைப் பதினேழு வருஷகாலம் தனது சேவையில் அமர்த்திக்கொண்டிருந்தான். மஞ்சூ வமிசத்தின் முதல் மன்னனாகிய ஷித்ஸு (1644 - 1660) ஆடம்ஷால்1 என்ற ஜெர்மானிய ககோள சாதிரியைக் கொண்டு புதிய பஞ்சாங்கமொன்றைக் கணிக்கச் செய்தான்; அவனையே தனது நட்சத்திர ஆபீசுக்குப் பொறுப்புள்ள அதிகாரி யாகவும் நியமித்தான். காங்ஹ்ஸி என்ற மன்னன், பெர்டினாந்து வெர்பியெட்2 என்ற பெல்ஜிய பண்டி தனிடம், விஞ்ஞான சாதிரமும் கணித சாதிரமும் கற்றுக் கொண்டான். இவனுடைய உத்திரவின் பேரில், மேற்படி வெர்பியெட் என்பவனும் பிரைர்ட்1 என்ற பெயின் தேசத்து விஞ்ஞான பண்டிதனும் சேர்ந்து, பீகிங் நகரத்தில் பெரிய தூர திருஷ்டிக் கண்ணாடியை நிர்மாணம் செய்தார்கள். காங்ஹ்ஸி மன்னன், தனது ராஜ்யத்தில் சுற்றுப்பிரயாணம் செய்கிறபோது இந்த இரண்டு வானநூற் புலவர்களையும் - இருவரும் பாதிரிமார்கள்தான் - கூடவே அழைத்துக் கொண்டு போவான். இவர்களைக் கொண்டு சீனா முழுவதையும் சர்வே செய்வித்தான். இதன் விளைவாக ரேகாம்ச, அட்சாம்சங்களோடு கூடிய சீனாவின் பூகோள படம் (மாப்) ஒன்று தயாரிக்கப்பட்டது. இதுதான் சீனாவின் பிற்காலத்துப் பூகோள படங்களுக்கெல்லாம் மூலாதார மாயிருக்கிறது.
மாட்டியோ ரிக்கி2 என்ற இத்தாலியப் பாதிரி ஒருவன். இவன், ரோமாபுரியில் கணித சாதிரமும் வான சாதிரமும் பயின்றவன்; பல பாஷா விற்பன்னன். இவன் (போர்த்துகேசியர் வசமிருந்த) மாக்கோ3 தீவுக்கு 1582-ஆம் வருஷம் வந்தான். அடுத்த வருஷம் இவனும் ருக்கேரிய4 என்ற பாதிரியும், காண்டன் நகரத் திற்கருகாமையிலுள்ள சாவோசிங் என்ற இடத்தில் வசிக்க அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் முதலில் கிறிதுவ மதப் பிரசாரம் செய்யாமல், புத்த சன்னியாசிகள் மாதிரி உடை தரித்துக் கொண்டு, சீன பண்டிதர்களுடையவும் அதிகாரிகளுடையவும் நட்பைப் பெற்றார்கள்; இங்ஙனம் அவர்களுடைய நட்பையும் மதிப்பையும் பெற்றுக் கொண்ட பிறகே மெதுவாகக் கிறிதுவ மதப்பிரசாரத்தை நுழைத்தார்கள். இந்தப் புதிய தந்திரம் சுலபமாக வெற்றி பெற்றது. . சிறிது காலங்கழித்து, ரிக்கி பாதிரி, சன்னியாசி உடைக்குப் பதில் பண்டித உடையைத் தரித்துக் கொண்டான். இதனால் இவனுடைய அந்தது உயர்ந்தது. கடைசியில் 1601-ஆம் வருஷம் பீகிங் நகரத்தி லேயே வசிக்கவும் பிரசாரம் செய்யவும் அனுமதிக்கப்பட்டான். அரசாங்கத்தார் இவனுக்கு, வசிக்க ஒரு வீடும் செலவுத் தொகையும் கொடுத்துவந்தனர். இவனுடைய கணீரென்ற குரலும், புராதன சீனக் கிரந்தங்களிலே இருந்த பயிற்சியும், விஞ்ஞான, யந்திர சாதி ரங்களின் அறிவும், எல்லாவற்றிற்கும் மேலாக அனைவரிடத் திலும் மரியாதை தெரிந்து பழகுகிற சாமர்த்தியமும், இவை யாவும் சேர்ந்து பீகிங்கில் வசித்துக்கொண்டிருந்த பிரமுகர்களுக்கு ஒரு பிரமிப்பை உண்டுபண்ணின. ஹான்லின் கலைக் கழகத்தைச் சேர்ந்த5இரண்டு அங்கத்தினர்களும், ஓர் அரசிளங்குமரனும், இவனுடைய பிரசா ரத்தின் பயனாகக் கிறிதுவர்களானார்கள்.
இன்னும் பல வழிகளிலும் இந்தக் கிறிதுவப் பாதிரி மார்கள் சீன மன்னர்களுக்கும் சீன அரசாங்கத்திற்கும் உதவி செய்து கொண்டிருந்தார்கள். ஒன்று, வைத்தியத் துறையில். பாதிரிமார் பலர் சிறந்த வைத்திய நிபுணர்களாயிருந்தார்கள். புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்ட வைத்திய முறைகளை இவர்கள் கையாண்டார்கள். மற்றொன்று ராஜதந்திர விவகாரங்களில்… உடன்படிக்கைகள் முதலியவற்றை லத்தீன் பாஷையில் சாமர்த்தியமாக எழுத இவர் களுக்குத் தெரிந்திருந்ததனால், சீனாவுக்கும் ருஷ்யாவுக்கும் மத்திய தர்களாயிருந்து சமரஸம் செய்து வைக்க இவர்களால் முடிந்தது. கடைசியாக, இந்தப் பாதிரிமார்கள், பீரங்கிகளைத் தயார்செய்து கொடுப்பதில் நிபுணர்களாயிருந்தார்கள். கட்சிப் பிரதி கட்சிகள் பாராமல் எல்லோருக்கும் இந்தப் பீரங்கிகளைத் தயார் செய்து கொடுத்தார்கள். இங்ஙனம் கிறிதுவ மதப்பிரசாரகர்கள் பீரங்கிகள் செய்துகொடுப்பதில் தலைசிறந்தவர்களா யிருந்தார்க ளென்பது சிறிது ஆச்சரியமாயிருக்கலாம். ஆனால் பத்தொன்ப தாவது நூற்றாண்டுப் பாதிரிமார்கள், தங்கள் பிரசாரத்திற்குப் பீரங்கிகளின் துணையை நாடியதுபோல், பதினேழாம் நூற் றாண்டுப் பாதிரிமார்கள் நாடவில்லை1
கடல் மார்க்கமாக வந்தவர்களில் முதன்மையானவர் போர்த் துகேசியர் (1517). பின்னர் பெயின்காரர் (1575), ஹாலந்துக்காரர் (1604), ஆங்கிலேயர் (1637), பிரெஞ்சுக்காரர் (1660), அமெரிக்கர் (1784) ஆக இப்படி ஒருவர் பின் ஒருவராக வந்தனர். ருஷ்யாவுக்கும் சீனாவுக்கும் ஏற்கனவே தரை மார்க்கமாக 1567-ஆம் வருஷத்தி லிருந்து தொடர்பு இருந்துவந்தது. இவர்கள் தவிர, இத்தாலியர், ஜெர்மானியர், பெல்ஜியர், தென்னமெரிக்கர் முதலிய பலரும் அவ்வப்பொழுது ஏகதேசமாகச் சீனாவுடன் வியாபாரத் தொடர்பு வைத்துக்கொண்டிருந்தார்கள்.
இங்ஙனம் கடல் மார்க்கமாக வந்த மேனாட்டாருக்கு ஒரே ஒரு நோக்கந்தான் இருந்தது. அதுதான் கொள்ளை கொள்ளையாக வியாபாரம் செய்யவேண்டு மென்பது. கி.பி. பதினாறாவது நூற் றாண்டில் சீனாவுக்கு வந்த போர்த்துகேசியர் மிகவும் வெட்கக் கேடான முறையில் நடந்து கொண்டார்கள். அவர்கள் எல்லாச் சட்டங்களையும் மீறினார்கள்; ஜனங் களுடைய கோபத்தைக் கிளப்பிவிட்டார்கள். சீன அதிகாரிகளின் உத்திரவுக்குக் கீழ்ப்படிய மறுத்தார்கள். ஒரு சமயம் ஒரு சீனன், தங்களை ஏமாற்றி விட்டான் என்று சொல்லி, அடுத்தாற்போலிருந்த ஒரு கிராமத் ற்கு ஆயுத பாணிகளாகத் தங்களிலே சிலரை அனுப்பி, கொள்ளையடிக்கச் செய்தார்கள். அங்கிருந்த சில திரீகளையும் இளம் பெண்களையும் தூக்கிக்கொண்டு வந்தார்கள். இப்படிப்பட்ட காரியங்களினால் அவர்கள், ஜனங்களுடைய கோபத்திற்காளானார்கள். இதன் விளைவாகச் சுமார் எண்ணூறு போர்த்துகேசியர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அவர் களுடைய கப்பல்களில் சுமார் முப்பத் தைந்து எரிக்கப்பட்டன.
இந்தக் காலத்திலிருந்தே சீனாவில் அந்நியர்கள் மீது துவேஷம் துளிர்க்கத் தொடங்கிவிட்டது. அந்நியர்களைக் கூடியமட்டில் வர வொட்டாமல் தடுப்பது, அல்லது அவர்களை ஓரிடத்தில் ஒதுக்கி வைப்பது என்று சீனர்கள் தீர்மானித்தார்கள். இதே சமயத்தில் அந்நிய நாகரிகத் திற்கும் கலைகளுக்கும் - சிறப்பாக மேனாட்டு நாகரிகத் திற்கும் கலை களுக்கும் - விரோதமாகத் தங்கள் மனக்கதவையும் பூட்டிக் கொண்டு விட்டார்கள். இங்ஙனம் தங்கள் வியாபாரக் கதவை யும் மனக் கதவையும் பூட்டிக் கொண்டுவிடுவது சீனர்களுக்குச் சாத்தியமாகவே இருந்தது. ஏனென்றால், சீனாவில் மனிதனுடைய அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான எல்லாப் பொருள்களும் உற்பத்தியாயின. அவர்களுடைய வாழ்க்கையோ இயற்கையோடி யைந்த வாழ்க்கை. செயற்கை இயந்திரங்களின் உதவியில்லாமலே அழகான அநேக பொருள்களை அவர்கள் தயாரித்துக் கொண்டார்கள். வெளி நாடுகளிலிருந்து சாமான்கள் வந்துதான் பிழைப்பு நடக்க வேண்டுமென்ற அவசியமே அவர்களுக்கு உண்டாகவில்லை. அவர்களுடைய நாகரிகமோ, லௌகிகத் தையும் பாரமார்த்திகத்தை யும் இணைத்துச் செல்லும் தன்மையது. மேனாட்டாரால் கொண்டு புகுத்தப்பட்ட விஞ்ஞான சாதிரத்தின் துணை பெற்று அவர் களுடைய வாழ்க்கை பண்படவேண்டிய நிலையில் இல்லை. முதன் முதலாக வெடிமருந்தைக் கண்டுபிடித் தவர்கள் சீனர்களே யானாலும் அவர்கள், அதைத் திருவிழாக் காலங்களிலேதான் உபயோகப்படுத் தினார்களே தவிர, சத்துருக்களைக் கொல்வதற்காக அல்லவென்ற ஒரு விஷயத்தைக் கொண்டே அவர்களுடைய நாகரிகம் எவ்வளவு பண் பாட்டைந்திருந்த தென்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. விஞ்ஞான சாதிரமென்றும், இயந்திரப் பயிற்சி யென்றும் மேனாட்டார் பெருமையடித்துக் கொள்ளலாம்; ஆனால் இவை யெல்லாவற்றையும் விட மேலான தரும சாதிரத்திலும், மனித வாழ்க்கையின் லட்சியமென்ன என்பதைக் கண்டு தெளிகிற பயிற்சி யிலும் சீனர்கள் சிறந்தவர்களாயிருந்தார்கள். கி.பி. பதினெட்டாவது நூற்றாண்டிலே வாழ்ந்த பிரெஞ்சு அறிஞனாகிய வால்ட்டேர் (1694 - 1778) என்பவன்2 சீனர்கள், தரும சாதிரத்தைப் பண்படுத்தி யிருக்கிறார்கள். அதுதான் எல்லாச் சாதிரங்களுக்கும் முதன்மை யானது என்று கூறுகிறான். சீனா வின் சட்டதிட்டங்களை மற்ற நாடுகள் அனுஷ்டிக்கத் தொடங்குமானால், உலகம் எவ்வளவு சீர்பட்டுவிடும் என்று மற்றொரு பிரெஞ்சு அறிஞன் கூறுகிறான். சீனர்கள், ஒருவிதமான வாழ்க்கைப் போக்கைக் கண்டுபிடித்து அதனை நூற்றாண்டுகள் கணக்காக அனுஷ்டித்து வருகிறார்கள். அதனை உலகமெல்லாம் பின்பற்றுமானால், சர்வ உலகமும் சந்தோஷமாயிருக்கும்1 என்பது பெர்ட்ராண்ட் ரஸல் என்ற ஆங்கில அறிஞனுடைய கருத்து.
இத்தகைய பொருட் பெருக்கும் கலைப்பண்பும் நிறைந்த சீனா, ஐரோப்பாவிடமிருந்து ஒன்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஐரோப்பா, சீனாவை எதிர்பார்க்க வேண்டியிருந்தது. ஏனென்றால் கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டுத் தொடக்கத்திலிருந்தே அங்கு இயந்திரப் பொருள்களின் உற்பத்தி அதிகமாகிக்கொண்டு வந்தது. இந்த அதிகப் பொருள்களுக்கு வெளிநாடுகளில் மார்க்கெட்டுகள் தேடவேண்டியது அவசியமாயிருந்தது. அதிகமான விதீரணமும் ஜனத் தொகையுமுடைய இந்தியாவிலும் சீனாவிலும் சாமான்களை ஏன் கொண்டு திணிக்கக் கூடாது, அப்படித் திணிப்பதற்கு அவசியமான அதிகார பலத்தை ஏன் பெறக்கூடாது என்று தொழில் முதலாளிகள் கேட்டார்கள். இது தவிர, சீனாவில் அபரிமிதமாக உண்டாகும் பட்டும் தேயிலையும், அப்பொழுது வெகு வேகமாக வளர்ந்துகொண்டுவந்த முதலாளி வர்க்கத்தின் பகட்டான வாழ்க்கைக்குத் தேவையாயிருந்தது. இவைகளை வரவழைத்து விற்றவர்களுக்கு ஏராளமான லாபம் கிடைத்து வந்தது. உதாரண மாக 1691-வருஷத்தில் கீழை நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட சுமார் நாலாயிரம் ரூபாய் பெறுமான பட்டு ஏறக்குறைய பன்னிரண்டாயிரம் ரூபாய்க்கு விற்றது. இங்ஙனமே தேயிலை வியாபாரத்திலும் நல்ல லாபம் கிடைத்தது. சீனாவிலிருந்து 1769-ஆம் வருஷத்திலிருந்து 1772-ஆம் வருஷம்வரையில் சுமார் நான்கு வருஷகாலத்தில் காண்டன் துறைமுகத்திலிருந்து மட்டும் இங்கீலிஷ் கப்பல்களின் மூலமாக 1,06,19,900 பவுண்டுகளும், மற்ற பிரெஞ்சு, டச்சு முதலிய நாட்டுக் கப்பல்களின் மூலமாக 1,23,79,000 பவுண்டு களுமாகத் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது. அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் தேயிலை ஒரு பவுண்ட், ஐந்து பவுன் முதல் பத்து பவுன்வரை விற்கப்பட்டது! இத்தகைய காரணங்களினால் பலாத்காரத்தை உபயோகித்தாவது, சீனாவின் வியாபாரக் கதவையும் மனக் கதவையும் திறக்க வேண்டியது ஐரோப்பாவுக்கு அவசிய மாயிற்று.
போர்த்துகேசியர் முதலான ஐரோப்பியர், எப்பொழுது கடல் மார்க்கமாக வந்து சீனாவுக்குள் நுழைந்தனரோ அப்பொழுதிருந்தே சீனாவின் அமைதியான வாழ்க்கைக்கும் பொருளாதார சுதந்திரத் திற்கும் ஆபத்து ஆரம்பித்துவிட்ட தென்று சொல்லலாம். தன்னுடைய மருந்து விற்கவேண்டுமென்ற ஒரே நோக்கமுடைய வைத்தியன், நோயே இல்லாத ஒருவனுக்கு வலிய மருந்தைக் கொடுத்து, அவனைப் புதிய புதிய வியாதிகளுக்காளாக்கி, அந்த வியாதிகளைப் போக்க வேறு வேறு மருந்துகள் கொடுத்து, அவனை எப்படித் தனக்கு உடன்பட்டவனாக ஆக்கிக்கொள்கிறானோ, அதே சமயத்தில் தனது மருந்துகளை விற்பனையாக்கிக் கொள் கிறானோ அதைப் போன்றிருந்தது ஐரோப்பிய - சீன வியாபாரத் தொடர்பு. 1514-ஆம் வருஷம் போர்த்துகேசியர் முதன் முதலாகச் சீனாவின் கடலோரப் பிரதேசங்களில் நுழைந்தார்களே அது முதல் பதி னெட்டாவது நூற்றாண்டின் கடைசிவரை, ஐரோப்பிய நாட்டார் பலரும் தரை வழியாகவும் கடல் வழியாகவும் சீனாவைச் சுற்றிக் கொண்டனர். இப்படிச் சுற்றிக்கொண்டதோடல்லாமல் மெது மெதுவாக நெருக்கிக் கொண்டும்வந்தனர். பதினெட்டாவது நூற்றாண்டின் கடைசியில் பார்க்கிறபோது, சீனாவின் நிலைமை எப்படி இருந்த தென்றால், மதிற் சுவர்களுடைய ஒரு நகரம் முற்றுகையிடப்பட்டிருக்கிற மாதிரி இருந்தது. வெளியே முற்றுகை யிட்டிருந்தவர்கள், சுவர்களை இடித்துக்கொண்டு உள்ளே நுழையக் கூடிய பலசாலிகளாயில்லை; உள்ளேயிருக்கிறவர்கள், முற்றுகை யிட்டிருக்கிறவர்களை விரட்டி யடிக்கத் தீவிரமான முயற்சியும் எடுத்துக்கொள்ளவில்லை. நகரத்தின் மத்தியில் தேவகுமாரன் (அரசன்) மிகக் கம்பீரமாகவும் ஆடம்பரத்தோடும் ஆண்டு கொண்டிருந்தான்; தனக்குச் சமதையான வேறு அரசர்கள் உலகத்திலே இருக்கிறார்கள் என்பதை அங்கீகரிக்க மறுத்து விட்டான். பீகிங் நகரத்திற்கு வந்த ஐரோப்பியப் பிரதிநிதிகளோ, இவனுடைய இந்த உரிமையை-அதாவது தனக்குச் சமதையான அரசர்கள் உலகத்திலே இல்லையென்று சொல்லிக்கொள்வதை - ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார்கள். இதனால், ஐரோப்பிய வல்லரசுகள் தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்ட ஒரு பரபரத் தொடர்புக்குப் புறம்பானதாகவே சீனா இருந்தது. ஐரோப்பியர் ஏதோ சில இடங்களில் அநேக நிர்பந்தங்களுடன் வியாபாரஞ் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தனர்; பரபர உடன்படிக்கையின் பேரிலல்ல; உத்தியோகப்பற்றற்ற முறையில்.1 அதாவது, அரசாங்க அதிகாரிகளின் தயவைப் பொறுத்தே இந்த வியாபாரம் நடை பெற்றுவந்தது.
போர்த்துகேசியரும் பானிஷ்காரரும் முதலாவதாக வந்தார் களாயினும் அவர்களுடைய வியாபாரம் அவ்வளவு பிரபலமடைய வில்லை. ஏகாதிபத்தியப் பின்பலம் அவர்களுக்கு இருந்தால்தானே? பின்னாடி வந்த ஆங்கிலேயர், அமெரிக்கர் ஆகிய இருவருடைய வியாபாரமும் செல்வாக்கும் விறுவிறென்று வளர்ந்தன. இவர்களை யொட்டினாற்போலவே ருஷ்யர், பிரெஞ்சுக்காரர், ஜெர்மானியர் முதலாயி னோருடைய வியாபாரம் நடைபெற்றதென்று சொல்ல வேண்டும். ஆனால் இவர்களெல்லோரைக் காட்டிலும் பிரிட்டனுக்குத்தான், சீனாவில், தன் வியாபாரத்தைப் பெருக்கிக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஓர் ஆசிரியன் கூறுகிறான்:
_சிறப்பாக இங்கிலாந்து, மற்ற நாடுகளைக்காட்டிலும் அதிக பொருளுற்பத்தி சக்தியுடையதாக இருந்தது. அங்கு வேலையில்லாத வருடைய எண்ணிக்கை அதிகமாயிற்று; புதிய மார்க்கெட்டுகள் தேவை என்ற கூக்குரல் வலுத்தது. இங்கிலாந்தைப் பொறுத்த மட்டில் சீன வியாபாரமானது, வெளிநாடுகளிலிருந்து பணந் திரட்டிக் கொண்டு வரவேண்டுமென்பதற்காக அல்லாமல், உள் நாட்டில் வேலையில்லாதவர் களுக்கு வேலை தேடிக் கொடுக்க வேண்டுமென்ற நோக்கமுடையதாயிருந்தது._
சீனாவுக்கும் பிரிட்டனுக்கும் எந்தவகையில் வியாபாரத் தொடர்பு ஏற்பட்டது என்பதைப்பற்றிச் சொல்வதற்கு முன்னர், பொதுவாக ஐரோப்பியர்கள் சீனாவில் எந்த விதமாக வியாபாரஞ் செய்ய அனுமதிக்கப் பட்டிருந்தார்களென்பதைப் பற்றிச் சுருக்க மாகக் கூறுவோம்.
வியாபார நிமித்தம் வந்த ஐரோப்பியர்களை அழையா வீட்டுக்குள் நுழைந்த சம்பந்திகளாகவே சீனர்கள் கருதினார்கள். மற்றும் ஆரம்பத்தில் வந்த சில வியாபாரிகள், முரட்டுத்தனமாகவும் சீன அரசாங்கத்தைச் சிறிதுகூட மதியாமலும் நடந்துகொண் டார்கள். இதனால் இவர்களுடைய வியாபாரத்திற்குச் சில கட்டுப் பாடுகள் ஏற்படுத்தப்பெற்றன. காண்டன் என்பது தெற்கு சீனாவி லுள்ள ஒரு துறைமுகப்பட்டினம். காண்டன் நதிக்கரையின்மீது உள்ளது. இந்தத் துறைமுகத்திற்குத்தான் ஐரோப்பியர்கள் தங்கள் சரக்குக் கப்பல்களைக் கொண்டுவரலாம். கப்பல்களும் இஷ்டப்படி வரவோ போகவோ கூடாது. ஆற்றங்கரை யோரமாகச் சில கட்டிடங்கள் இருக்கும்.2 இந்தக் கட்டிடங்களுக்கு ஹாங்குகள் என்று பெயர். அதாவது கிடங்கு (கிட்டங்கி, குதாம்பு) என்று அர்த்தம். இந்த ஹாங்குகளில் ஐரோப்பிய வியாபாரிகள், தங்கள் சரக்குகளைக் கொண்டு இறக்குவார்கள். மொத்தமாகச் சீன வியாபாரி களுக்கு விற்பார்கள். இப்படி எல்லா வியாபாரிகளுக்கும் விற்கக்கூடாது. சீன அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்ற குறிப்பிட்ட சில வியாபாரிகளுக்கு மட்டுமே விற்கவேண்டும். இந்த வியாபாரி களுக்கு ஹாங்கு வியாபாரிகள் என்று பெயர். (இந்த வியாபாரிகள், நாளாவட்டத்தில், தங்களை ஒரு சங்கமாக அமைத்துக்கொண் டார்கள்) இந்த ஹாங்கு வியாபாரிகளிடமே சரக்குகளை விற்க வேண்டும்; தேவையான சரக்குகளை வாங்கிக்கொள்ளவேண்டும். இவர்கள் மூலமாகவே அரசாங்க அதிகாரிகளுக்குத் தங்கள் குறை நிறைகளைச் சொல்லிக்கொள்ள வேண்டும். காண்டன் நகரத் துக்குள் நுழைந்து ஜனங்களுடன் பழகவோ, வேறு விதமான தொடர்புகள் வைத்துக்கொள்ளவோ கூடாது. இவர் களுடைய -இந்த ஐரோப்பியர்களுடைய - சரக்குகள் பத்திரமா யிருப்பதற்கும், இவர்களுடைய உயிருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாமலிருப் பதற்கும், இவர்களுடைய நன்னடத்தைக்கும் மேற்சொன்ன ஹாங்கு வியாபாரிகளே பொறுப்பாக்கப்பட் டிருந்தார்கள்.
அந்நிய வியாபாரிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த நிபந்தனை களில் முக்கியமானவற்றை, சீன அரசாங்கத்தார் அவ்வப்பொழுது விடுத்துவந்த உத்திரவுகளின் வாயிலாகவே இங்கு வரிசைப்படுத்திக் காட்ட விரும்புகிறோம்.
1. அந்நியர்களுடைய யுத்தக் கப்பல்கள், துறைமுகத்திற்குள் வரக்கூடாது; துறைமுகத்திற்கு வெளியிலேயே இருக்கவேண்டும்.
2. சரக்குகளைக் கொண்டுவைத்திருக்கிற கிடங்குகளுக்கு திரீகளை அழைத்துக்கொண்டு வரக்கூடாது. இங்ஙனமே பீரங்கி, ஈட்டி முதலிய ஆயுதங்களெவற்றையும் கொண்டுவரக் கூடாது.
3. ஹாங்கு வியாபாரிகள், அந்நியர்களுக்குக் கடன் பட்டவர் களாயிருக்கக்கூடாது; அதாவது அந்நியர்களிடமிருந்து கடன் வாங்கக்கூடாது.
4. அந்நிய வியாபாரிகள், சீனர்களை வேலையாட்களாக அமர்த்திக்கொள்ளக்கூடாது.
5. அந்நியர்கள், டோலிகளில் ஏறிக்கொண்டு செல்லக் கூடாது (நடந்தே செல்லவேண்டும். சீனர்கள், தூக்குவோராகவும் அந்நியர்கள் தூக்கப்படுவோராகவும் இருக்கக்கூடாதென்பதே இந்த விதியின் நோக்கம்போலும்)
6. (காண்டன்) நதியில் அந்நியர்கள், வேடிக்கைக்காகப் படகுகள் விட்டுக்கொண்டு செல்லக்கூடாது. மாதத்தில் மூன்று நாட்கள் மட்டுமே (அதாவது 8, 18, 28-ஆம் தேதிகளில்) ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பூந்தோட்டத்திற்குச் சிறு சிறு கூட்டத்தினராகச் சென்று உலாவலாம். அப்படிச் செல்கிறபோது, கூட ஒரு துவி பாஷியை அழைத்துச் செல்லவேண்டும். இந்தத் துவிபாஷியே, மேற்படி கூட்டத்தினர் ஏதேனும் தாறுமாறாக நடந்துகொண்டால் அதற்குப் பொறுப்பாளி.
7. அந்நியர்கள், எந்த விதமான மகஜர்களும் எழுதி (சீன அதிகாரிகளிடம்) சமர்ப்பிக்கக் கூடாது. ஏதேனும் தெரிவித்துக் கொள்ள வேண்டியிருந்தால், ஹாங்கு வியாபாரிகள் மூலமாகவே தெரிவித்துக் கொள்ள வேண்டும்.
8. அந்நிய வியாபாரிகள் தங்கள் சரக்குகளுடன் ஹாங்கு வியாபாரிகள் கிடங்குகளில் வசித்துக்கொண்டிருக்கிறபோது, ஹாங்கு வியாபாரிகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டும்; அவர்கள் மூலமாகவே சரக்குகளை வாங்கவேண்டும். (மோசக்கார சீனர்களின் வலையில் விழாதபடி அந்நியர்களைக் காப்பாற்றவே இந்த விதி ஏற் படுத்தப்பட்டதென்று சொல்லப்பட்டது.)
9. வியாபார காலங்களைத் தவிர மற்றக் காலங்களில் அந்நியர்கள் காண்டன் நகரத்தில் வசிக்கக் கூடாது. சரக்குகளை விற்று விட்டு, தேவையான சரக்குகளை வாங்கி கப்பல்களில் ஏற்றிக் கொண்டதும் உடனே அவரவர்கள் ஊருக்குச் சென்று விட வேண்டும்; அல்லது மாக்கோ தீவுக்குச் சென்றுவிட வேண்டும். (வியாபாரக் கப்பல்கள் துறைமுகத்திற்கு வருவதாயிருந்தாலும் துறைமுகத்திலிருந்து புறப்படுவதாயிருந்தாலும், சுங்க வரியாக ஒரு தொகை செலுத்த வேண்டும். புறப்படுகிறபோது பிரதியொரு கப்பலுக்கும் சுமார் ஆயிரத்தைந்நூறு ரூபாய் சுங்க வரியாக வசூலிக்கப்பட்டது.)
காண்டனில் நடைபெற்று வந்த அந்நியர்களுடைய வியாபா ரத்தைக் கவனிப்பதற்கென்று தனியாக ஒரு சீன அதிகாரி நியமிக்கப் பட்டிருந்தான். இவனுக்கு ஹோப்போ என்று பெயர். இவன் சக்ர வர்த்தியின் நேரான பிரதிநிதி. ராஜ்யத்திற்கு அதிகமான வருமானத்தைச் சம்பாதித்துக் கொடுப்பது இவனுடைய திறமையைப் பொறுத் திருந்தது. அந்நிய வியாபாரிகள் இவனுடைய தயவுக்கு எப்பொழுதும் காத்துக் கொண்டிருந்தார்கள். இவனுடைய கருணை விரிய விரிய, இவனுடைய பணப்பையும் விரிந்தது. இவனுடைய உத்தியோக காலம் மூன்று வருஷந்தான். ஆனால் இந்தச் சொற்ப காலத்திற்குள் இவன் ஏராளமாகச் சம்பாதித்தான். இந்தச் சம்பாத்தியத்தில் ஒரு பகுதி, பீகிங்கிலுள்ள சக்ரவர்த்திக்கும் சென்றது. இதனால்தான் இவன் சக்ரவர்த்தியினால் நேராக நியமிக்கப்பட்டான் போலும்! அது மட்டு மல்ல, இவன் மஞ்சூ ஜாதியினனாகவும் இருந்தான். சீன ஜாதியினரை இந்த உத்தியோகத்திற்கு நியமிப்பதில்லை.
பணிய மறுத்த பிரிட்டன்
சீன அதிகாரிகள் விதிக்கும் நிர்ப்பந்தங்களுக்குட்பட்டும் அவர்கள் தயவை அனுசரித்தும் வியாபாரம் நடத்துவதை அந்நியர்கள் விரும்ப வில்லை. அடிக்கடி இவர்களுக்கும் சீன அதிகாரிகளுக்கும் மனதாபங்கள் ஏற்பட்டுக்கொண்டு வந்தன. இந்த விஷயத்தில் அந்நியர்கள் ஒரு கட்சியினர்போலவே நடந்து வந்தனர். ஆரம்பத்தில் சிறிது காலத்திற் காவது அந்நியர்களுக்குள் இந்த ஒற்றுமை நிலவிவந்தது. சீன அதிகாரி களோடு நடத்துகிற இந்தப் போராட்டங்களுக்கெல்லாம் முன்னின்றவர் பிரிட்டிஷார். ஏற்கனவே சொல்லப்பட்ட காரணங்களுக்காக இவர்கள் முன்னிற்க வேண்டியது அவசியமாயிருந்தது. இவர்கள் - பிரிட்டிஷார் - சீன அரசாங்கத்தோடு நேரான வியாபார ஒப்பந்தம் செய்துகொண்டு அதன் மூலமாகத் தங்கள் வியாபாரத்தைப் பெருக்கவும், ஊர்ஜிதம் செய்து கொள்ளவும் முயன்றனர்.
1715-ஆம் வருஷம், பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியார், சீனாவில் தங்களுடைய வியாபாரத்தைத் தொடர்ந்தாற்போல் நடத்திக்கொண்டு வரவேண்டுமென்பதற்காக, காண்டன் துறை முகப்பட்டினத்தில் சாசுவதமான ஒரு தாபனத்தை நிறுவத் தீர்மானித்தனர். இதற்காக மேலே சொன்ன ஹோப்போ என்ற அதிகாரியுடன் ஒப்பந்தம் செய்துகொண்டனர். இந்த ஒப்பந்தம் காகிதத்தளவோடுதான் நின்றதே தவிர, அனுஷ்டானத்தில் கொண்டு வரப்படுவதற்குச் சீன அதிகாரிகள் எல்லாவித இடைஞ்சல்களையும் செய்து வந்ததாக ஆங்கிலேய வியாபாரிகள் கூறினார்கள். மேலே சொல்லப்பட்ட நிர்ப்பந்தங் களுடனேயே சில வருஷ காலம் வியா பாரம் நடைபெற்று வந்தது. இந்த நிர்ப்பந்தங்களை விலக்க வேண்டுமென்றும், இன்னும் சில வியாபார உரிமைகளை அளிக்க வேண்டுமென்றும் சீன அரசாங்கத்தினிடம் அதிகமாக வற்புறுத்திக் கேட்க கிழக்கிந்தியக் கம்பெனியார் விரும்ப வில்லை. ஏனென்றால், சீன அரசாங்கம் கோபங்கொண்டு, அந்நிய வியாபாரமே வேண்டா மென்று தடுத்துவிட்டால் என்ன செய்வதென்று அஞ்சினர். கொள்ளை லாபம் கிடைக்கிறபோது ஏன் நிர்ப்பந்தங் களுக்குட்பட மாட்டார்கள்! ஆயினும் நிர்ப்பந்தங்களை எதிர்த்தே போராடி வந்தார்கள்.
கடைசியில், பிரிட்டிஷ் அரசாங்கத்தைத் தூண்டி, அரசாங்க தோரணையில் ஒரு தூதுகோஷ்டியை நேரே சீன சக்ரவர்த்திக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர் இந்தக் கிழக்கிந்தியக் கம்பெனியார். வியாபாரச் சலுகைகள் பெற வேண்டுமென்பதே இவர்களின் நோக்கம். அப்பொழுது மூன்றாவது ஜார்ஜ் மன்னன் (1738 - 1820) ஆண்டு கொண்டிருந்தான். இவன், பிரிட்டிஷாருக்குச் சில வியாபார உரிமைகள் கோரி சீன சக்ரவர்த்திக்கு ஒரு கடிதம் எழுதினான். இந்தக் கடிதத்தை எடுத்துக்கொண்டு, லார்ட் மெக்கார்ட்னி என்ப வனுடைய தலைமையில், சுமார் நூறு பேரடங்கிய ஒரு தூது கோஷ்டி, மூன்று கப்பல்களில் 26-9-1792-ல் இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு 5-8-1793-ல் பீகிங் நகரத்திற்கு நுழை வாயில் போலிருக் கிற டீண்ட்ஸின் துறைமுகத்திற்கு வந்துசேர்ந்தனர். என்ன ஆடம் பரம்! சீன மன்னனை மயக்க எத்தனை பரிசில்கள்! தூது கோஷ்டி யில் ராணுவ நிபுணர்களென்ன, வைத்தியர்களென்ன, விஞ்ஞான சாதிரிகளென்ன, சங்கீத வித்வான்களென்ன, இப்படிப் பலதிறப் பட்டவரும் இருந்தனர். இவர்கள் கொண்டுவந்த சன்மானப் பொருள்களை - சிறிய கடிகாரம் முதல் பெரிய வில் வண்டி வரை யில், சின்னஞ்சிறு பீரங்கிகள் உள்பட அநேக விதமான பொருள் களை -அரச சந்நிதானத்திற்கு எடுத்துச் செல்ல, தொண்ணூறு பெரு வண்டிகளும், நாற்பது கைவண்டிகளும், இருநூறு குதிரைகளும், மூவாயிரம் கூலிகளும் தேவையாயிருந்தன!
சீன அரசாங் அதிகாரிகளும் மிகுந்த ஆடம்பரத்துடன் இந்தத் தூதுகோஷ்டியை வரவேற்றார்கள். பரபர மரியாதைப் பேச்சுக்களென்ன, அறுசுவை விருந்துகளென்ன, ஒன்றுக்கும் குறைவில்லை. டீண்ட்ஸினி லிருந்து பீகிங்குக்கு ஆற்று மார்க்கமாகச் செல்லவேண்டும். இரு கரைகளிலும் வழிநெடுக அலங்காரங்கள்! பிரகாசமான விளக்குகள்! இவைகளுக்கு நடுவே, மெக்கார்ட்னி கோஷ்டியை அரச சந்நிதானத்திற்கு அழைத்துக்கொண்டு போனார்கள் சீன அதிகாரிகள். இப்படி உபசரித்தார்களே தவிர, முக்கியமான மூன்று விஷயங்களில் மட்டும் உறுதியாக இருந் தார்கள். அதாவது (1) வியாபார விஷயத்தில் எவ்வத விசேஷ சலுகை களும் கொடுத்து விடக்கூடாதென்பது, (2) சக்ரவர்த் திக்குக் கப்பங் கட்டும் ஒரு சிற்றரசனின் பிரதிநிதியாகவே மெக்கார்ட்னியைக் கருதவேண்டுமென்பது; (3) சக்ரவர்த்தி முன்னர் மண்டியிட்டு வணங்கவேண்டு மென்பது. மெக்கார்ட்னியை அழைத்துக் கொண்டு போன படகின்மீது, இங்கிலாந்திலிருந்து கப்பஞ் செலுத்த வந்த தூதர் என்ற வாக்கியம் பொறித்த கொடி நுடங்கிக் கொண்டி ருந்தது. மெக்கார்ட்னிக்கு இது தெரியும். ஆனால் கண்டு கொள்ளா தவன் போலிருந்துவிட்டான். காரியம் ஆகவேண்டுமல்லவா?
தூதுகோஷ்டி பீகிங் நகரம் அடைந்தது. சக்ரவர்த்திக்கு வணக்கஞ் செலுத்துகிற விஷயத்தைப் பற்றிப் பேச்சுவார்த்தைகள் எழுந்தன. சீன அதிகாரிகள் கெளடெள செய்யவேண்டுமென்று சொன்னார்கள். இந்த கெளடெள என்பது மன்னனின் திருமுன்னர் மண்டியிட்டு வணங்குகிற முறைக்குப் பெயர். நூற்றாண்டுகள் கணக்காகச் சீனர்கள் இந்தச் சம்பிரதாயத்தை அனுஷ்டித்து வருகின்றனர். கெளடெள என்ற சொற்றொடருக்கு மூன்று முறை மண்டியிடுதல், ஒன்பது முறை தரையிலே நெற்றி படும்படி முட்டுதல் என்று அர்த்தம். அதாவது, முதலில் இரண்டு முழங்கால் களையும் மடித்து மண்டியிட்டுக்கொள்ள வேண்டும். பிறகு முதுகு வளையக் குனிந்து பூமியிலே நெற்றி படும்படி மூன்று தடவை வணங்கவேண்டும். இப்படி மூன்றுதரம் மண்டி யிடவேண்டும்; ஒவ்வொரு மண்டிக்கும் மூன்று வணக்கங்கள் விகிதம் ஒன்பது வணக்கங்கள் செலுத்த வேண்டும். மேலான அரசனுக்குக் கீழான பிரஜைகள் காட்டுகிற ராஜபக்திக்கு அடையாளமாகவே இந்த வணக்கமுறை அனுஷ்டிக்கப்பட்டு வந்தது. இதற்கு முன்னர் வந்த பிற நாட்டுத் தூதர்களும், கிறிதுவப் பாதிரிமார்களும் இந்த கெளடெள முறைப்படியே வணக்கம் செலுத்தி வந்திருக் கிறார்கள். ஆனால் மெக்கார்ட்னி, இப்படிச் செய்ய மனமொப்ப வில்லை. சீன சக்ரவர்த்திக்குச் சமதையான அந்ததுள்ள பிரிட்டிஷ் மன்னனின் பிரதிநிதியாகத் தான் வந்திருப்பதாகவும், அந்த மன்னனுடைய கௌரவத்திற்குக் குறைவு வராமல் நடந்துகொள்வது தனது கடமையென்றும் கூறினான். சீனப் பிரதிநிதிகள், நயத்தாலும் பயத்தாலும் தங்கள் கட்சியை வற்புறுத்தினார்கள். மெக்கார்ட்னி இணங்கிக்கொடுக்கவில்லை. கடைசியில் இருசாராரும் ஒரு சமரஸத்திற்கு வந்தார்கள். சீன அரசாங்கத்தின் உயர்தர உத்தியோ கதன் ஒருவன், மூன்றாவது ஜார்ஜ் மன்னனுடைய உருவப் படமொன்றுக்கு முதலில் வணக்கஞ் செலுத்துவதென்றும், பின்னர் மெக்கார்ட்னி, தனது அரசனுக்கு எப்படி ஒரு முழந்தாளை மட்டும் மண்டியிட்டுக்கொண்டு வணக்கஞ் செலுத்து வானோ அப்படியே சீன அரசனுக்கும் வணக்கஞ் செலுத்துவதென்றும் தீர்மானிக்கப் பட்டன.
இனி அரசனைப் பேட்டி காண வேண்டும். சின்லுங் மன்னன் - இவனே அப்பொழுது ஆண்டு கொண்டிருந்தவன் - வடக்கே ஜிஹோல் நகரத்தில் முகாம் போட்டிருந்தான். மெக்கார்ட்னி கோஷ்டியினர் அங்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அரசன் இவர்களை அன்போடு வரவேற்றான்; இனிய மொழிகள் புகன்றான். மெக்கார்ட்னி, ஜார்ஜ் மன்னனிடமிருந்து தான் கொண்டுவந்த கடிதத்தை அழகான ஒரு பேழையிலே வைத்துச் சமர்ப்பித்தான்; தான் கொண்டுவந்துள்ள பரிசுகளைப் பற்றியும் கூறினான். இருவரும் பரபர உபசரணைகள் செய்துகொண்டு பிரிந்தார்கள்.
சின்லுங் மன்னன் சிறந்த ராஜதந்திரி. சில நாட்கள் கழித்து பீகிங் நகரத்திற்குத் திரும்பிவந்தான்; தனக்கு வந்திருக்கும் பரிசுகளை யெல்லாம் பார்த்துக் களிப்படைந்தான். இதற்குள் பிரிட்டிஷ் மன்னனுடைய கடிதத்திற்குப் பதில் கடிதம் தயாரிக்கப்பட்டு விட்டது. இதனை மிகவும் மரியாதையோடு மெக்கார்ட்னியிடம் கொடுக்கும் படிச் செய்தான் சின்லுங். தவிர, சீனாவில் கிடைக்கக் கூடிய அரிய பொருள்கள் பல, பிரிட்டிஷ் மன்னனுக்குப் பதில் மரி யாதையாக அனுப்பப்பட்டன. தூதுகோஷ்டியைச் சேர்ந்த ஒவ்வொரு வருக்கும் தனித்தனியாகப் பரிசுகள் அளிக்கப்பட்டன. விருந்து களுக்குக் குறைவேயில்லை. தாங்கள் வந்த காரியம் பலிதம டைந்து விட்டதாகச் சந்தோஷப்பட்டுக்கொண்டு மெக்கார்ட்னி கோஷ்டி யினர், சின்லுங் மன்னன் கொடுத்த கடிதத்துடன் இங்கிலாந்து திரும்பினர்.
இந்தக் கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது?
_ஓ அரசனே! அநேக கடல்களுக்கப்பால் தொலைதூரத் திலுள்ள ஒரு நாட்டில் நீர் வசிக்கிறீர். இருந்தாலும் எங்களுடைய நாகரிகத்தின் நலன்களை ஓரளவு அடையவேண்டுமென்று ஆசைப் பட்டு எமக்கு ஒரு கடிதம் எழுதி அதை ஒரு தூதுகோஷ்டியின் மூலம் அனுப்பியிருக்கிறீர். அவர்களும் உமது கடிதத்தை மரியாதை யாகக் கொண்டுவந்து எம்மிடம் சேர்ப்பித்தார்கள். எம்மிடத்திலே உமக்கிருக்கிற பக்தி விசுவாசத்திற்கறி குறியாக உமது நாட்டுப் பொருள்களைக் காணிக்கையாக அனுப்பி யிருக்கிறீர்._
_எமது வமிசத்தின் சிறந்த குணங்கள் பூலோகத்திலுள்ள எல்லா நாடுகளுக்கும் எட்டியிருக்கின்றன. எல்லா நாட்டு மன்னர்களும் தரை வழியாகவும் கடல்வழியாகவும் தங்கள் தங்களுடைய காணிக்கைப் பொருள்களை அனுப்பியிருக்கிறார்கள். எம்மிடத்தில் எல்லாப் பொருள் களும் இருக்கின்றன. நூதனமான விலையுயர்ந்த பொருள் களிலே நமக்கு விருப்பம் கிடையாது. உமது நாட்டுப் பொருள்கள் நமக்குத் தேவையில்லை. மிகுந்த பக்தி சிரத்தையோடு அனுப்பியிருக்கிறீரே என்பதற்காகத்தான் உமது காணிக்கைப் பொருள்களை ஏற்றுக்கொண்டோம்._
_உமது கடிதத்தைப் படித்துப் பார்த்தோம். அதில் உமது அடக்கம் நன்கு புலனாகிறது. உமது பிரதிநிதிக்கு அதிக சலுகை காட்டினோம்; உபசரித்தோம்; அநேக பரிசில்களும் கொடுத்தோம். உமக்கும், ஓ அரசனே! அநேக அரிய பொருள்களைச் சன்மானமாக_ அனுப்பியுள்ளோம். அவைகளுக்கு ஒரு ஜாபிதா இதனுடன் இணைத்திருக்கிறது. அவைகளை மரியாதையுடன் ஏற்றுக் கொள்வீராக!
_எமது தெய்விக சந்நிதானத்தில் உமது பிரதிநிதியாக ஒருவர் வசிப்பதற்கு அனுமதியளிக்க வேண்டுமென்று கோரியிருக்கிறீர். அதற்கு நாம் அங்கீகாரம் கொடுக்க முடியாது. பீகிங் நகரத்தில் வசிக்கும் எந்த ஓர் ஐரோப்பியரும் சீனாவுக்கு வெளியே செல்லவோ, தமது தேசத்திற்குக் கடிதங்கள் எழுதவோ கூடாது. ஆதலின் உமது பிரதிநிதி யொருவரை இங்கே அனுப்புவதால் நீர் அடையக்கூடிய லாபம் ஒன்றுமில்லை. மற்றும், உம்மைப் போல் பல ஜாதியினர் ஐரோப்பாவில் வசிக்கிறார்கள். அவர்களெல்லோரும் எமது சந்நிதா னத்திற்கு வரவேண்டுமென்று கோரினால் நாம் எப்படி அனுமதி யளிக்க முடியும்? நீவிர் கேட்கிறபடி செய்யவேண்டு மென்பதற்காக, எமது வமிசத்தின் பழக்கவழக்கங்களை யெல்லாம் மாற்றிக் கொள்ள முடியுமா என்ன?_
_காண்டனைத் தவிர வேறு சில துறைமுகங்களிலும் வியா பாரம் செய்ய நாம் அனுமதியளிக்கவேண்டு மென்பது உமதி பிரதிநிதியின் கோரிக்கை. மற்றத் துறைமுகங்களில் ஹாங்குகளும் இல்லை; துவிபாஷிகளும் இல்லை. ஆகையால் உமது அநாகரிக வியாபாரிகள் அங்கெல்லாம் வியாபாரஞ் செய்ய முடியாது. இது வரையிலாகட்டும், இனியாகட்டும், உமது வேண்டுகோள் மறுக்கப் படுகிறது. காண்டனில் மட்டுமே உமது வியாபாரத்தை நடத்தச் செய்யலாம்._
_உமது வியாபாரிகள், பீகிங் நகரத்தில் சரக்குகள் பிடித்து வைத்துக்கொண்டு வியாபாரம் செய்வ தென்பதும் முடியாத காரியம். உலகத்தின் நானா பக்கங்களையும் ஒன்று கூட்டுகிற மைய தான மாக எமது ராஜதானி இருக்கிறது. அதன் சட்டங்கள் மிகக் கண்டிப்பானவை. அந்நியர் வியாபாரஞ் செய்ய இங்கே இது வரையில் அனுமதிக்கப் பட்டதில்லை. ஆகையால் இந்த வேண்டு கோளும் நிராகரிக்கப்படுகிறது._
_இங்கே சீனாவில் உமது மதத்தைப் பிரசாரஞ் செய்ய உமது பிரதிநிதி அனுமதி கோருகிறார். சரித்திர ஆரம்ப காலத்திலிருந்து, அறிஞர்களான அரசர்களும் முனிவர்களும் சிறந்ததொரு மதத்தை எமக்கு அளித்துவிட்டுப் போயிருக்கிறார்கள். லட்சக்கணக்கான எம்முடைய பிரஜைகள் இதனை அனுஷ்டித்து வருகிறார்கள். எமக்கு அந்நியருடைய போதனை எதுவும் தேவையில்லை. ஆகை யால் உமது வேண்டுகோள் நியாய மற்றது._
_நாகரிகத்தின் நலன்களையடைய வேண்டுமென்று கோரி எமக்குக் காணிக்கைகள் கொண்டுவரும் எல்லாத் தூது கோஷ்டி களிடமும் நாம் அன்பு காட்டி வந்திருக்கிறோம். தூரத்தில் வசிக்கும் ஓ அரசனே! மற்ற நாட்டினரைக் காட்டிலும் உம்மிடத்தில் நாம் அதிகமான அன்பு காட்டியிருக்கிறோம். ஆனால் உமது கோரிக் கைகள், எமது வமிசப்பழக்க வழக்கங்களுக்கு முரணாயிருக் கின்றன. உமது கோரிக்ககைளுக்கு அங்கீகாரம் கொடுப்பதனால் எவ்வித நன்மையும் உண்டாகாது. இதனாலேயே உமது கோரிக்கை களுக்கு விவரமான பதில் அளித்திருக்கிறோம். எனவே எமது மனோ நிலையை அறிந்து கொண்டு, நாம் கூறிய புத்திமதிகளை அனுசரித்து எப்பொழுதும் நடந்து கொள் வீராயின், நித்தியமான சாந்தியை அனுபவித்துக் கொண்டிருக்கலாம்._
பிரிட்டிஷ் அரசாங்கத்தார், மெக்கார்ட்னி கோஷ்டியை அனுப்பு வித்ததன் நோக்கங்கள் ஒன்று கூட நிறைவேறவில்லை. காண்டனில், வியாபாரஞ் செய்வதற்கு ஏற்பட்டிருந்த நிர்ப்பந் தங்களைத் தளர்த்திவிட வேண்டுமென்று கேட்டனர். இதற்காக ஒரு யுத்தம் நடைபெறுகிற வரையில் இந்த நிர்ப்பந்தங்கள் இருந்து கொண்டேயிருந்தன. காண்டனைத் தவிர, டீண்ட்ஸின் நிங்க்போ, சூஸான் முதலிய சில இடங்களில் வியாபாரஞ்செய்ய அனுமதி வேண்டுமென்று கேட்டனர்; மறுக்கப்பட்டது. தூதுகோஷ்டியை அனுப்பியதனால் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு ஒருவிதமான சாதகமும் உண்டாகவில்லை. தூது கோஷ்டியினர் அதிக மரியாதை யோடு வரவேற்கப்பட்டனர்; அதிக ஆடம்பரமாக உபசரிக்கப் பட்டனர்; அதிக ஜாக்கிரதையுடன் பாதுகாவல் செய்யப்பட்டனர். அதிக வினயத்தோடு வழியனுப்பப் பட்டனர். எல்லாம் அதிகந்தான். ஆனால் காரியத்தில்?
பிரிட்டிஷ் அரசாங்கத்தார் மறுபடியும் விடாப்பிடியாக வியாபார உரிமைகள் கோரி, லார்ட் ஆம்ஹெர்ட்1 என்பவ னுடைய தலைமையில் 1861-ஆம் வருஷம் ஒரு பிரதிநிதி கோஷ்டியை அனுப்பினர். அந்நியர்கள், காண்டன் துறைமுகத்தில்தான் வந்திறங்கவேண்டும்.; மற்றத் துறைமுகங் களில் இறங்கக் கூடாது. சீன அரசாங்கத்தார் அனுஷ்டித்துவந்த பொதுவிதி இது. ஏகதேசமாக இதற்கு விலக்குச் செய்துவந்தனர். ஆம்ஹெர்ட் கோஷ்டியினர் காண்டன் துறைமுகத்திலே வந்திறங்காமல், மெக்கார்ட்னி காட்டிய வழியைப்பின்பற்றி டீண்ட்ஸினில் வந்திறங்கினர். இதை ஒரு வியாஜமாக வைத்துக்கொண்டும், இன்னும் சில போலிக் காரணங் களைச் சொல்லியும் சீன அதிகாரிகள், ஆம் ஹெர்ட் கோஷ் டியைத் திருப்பி அனுப்பிவிட்டார்கள். சக்ரவர்த்தியை (அப்பொழுது சியா சிங் என்பவன் சக்ரவர்த்தியா யிருந்தான்) பார்ப்பதற்குக் கூட இடங்கொடுக்கவில்லை. இந்தக் காலத்திலிருந்தே பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கும் சீன அரசாங்கத்திற்கும் மனதாபங்கள் துவங்கிவிட்டனவென்று சொல்ல வேண்டும்.
காண்டன் நகரத்திஙன் மூலமாகச் சீனாவில் நடைபெற்று வந்த பிரிட்டிஷ் வியாபாரத்தின் சர்வ உரிமைகளையும் இதுகாறும் கிழக்கிந்தியக் கம்பெனியாரே அனுபவித்து வந்தனர். இது காரண மாக, காண்டன் நகரத்தில் வசிக்கும் பிரிட்டிஷ் பிரஜைகளின் நடவடிக்கைகள் அனைத்திற்கும் கம்பெனியாரே பொறுப்பாளி களாயிருந்தார்கள். இவர்கள், தங்களுடைய வியாபாரத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்பட்டு விடக் கூடாதே யென்பதற்காக, சீன அதிகாரிகள் அவ்வப்பொழுது பிறப்பித்த உத்திரவுகள், விதித்த நிர்ப்பந்தங்கள் முதலிய அனைத்திற்கும் விரும்பியோ விரும் பாமலோ கட்டுப்பட்டு நடந்துவந்தனர். பிரிட்டிஷ் அரசாங்கமும் வேறு வழியின்றி இதற்குச் சம்மதம் காட்டி வந்தது. 1833-ஆம் வருஷம், பிரிட்டிஷ் பார்லிமெண்டில், கிழக்கிந்தியக் கம்பெனி யாரின் மேற்படி வியாபார உரிமையை ரத்துசெய்துவிட்டதாக ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்குப் பிறகு, காண்டன் நகரத்தில், பிரிட்டிஷாருடைய வியாபார நலன்களைக் கவனிப்பதற்கென்று கம்பெனியின் பிரதிநிதி இருப்பது போய், பிரிட்டிஷ் அரசாங் கத்தின் நேர்முகமான பிரதிநிதியே நியமிக்கப்பட வேண்டிய தாயிற்று. லார்ட் நேப்பியர்1 என்பவன், இந்தப் பதவிக்கு நியமிக்கப் பட்டு மாக்கோ வழியாகச் சில உத்தியோகதர்களுடன் (25-7-1834) காண்டன் வந்து சேர்ந்தான். கம்பெனி உத்தியோகதர்களைச் சீன அரசாங்கம் எந்த அந்ததிலே வைத்து நடத்திவந்ததோ, அந்த அந்ததிலே - அதாவது தாழ்வான அந்ததிலே - தான் நடத்தப் பட இவன் விரும்பவில்லை. அந்நியர்கள், ஹாங்கு வியாபாரிகள் மூலமாக அரசாங்கத்துடன் சம்பந்தம் வைத்துக்கொள்ள வேண்டு மென்றல்லவோ இருந்தது? அதை இவன் எதிர்த்து, சீன அரசாங்கத் திற்கும் தனக்கும் நேர் முகமான தொடர்பு இருக்கவேண்டுமென்று வற்புறுத்தினான். சீன அதிகாரிகள் இதனைக் கண்டிப்பாக மறுத்து விட்டனர். அந்நியர்களைத் தங்களுக்குச் சமதை யானவர்களென்று கருத இவர்கள் விரும்பவில்லை. லார்ட் நேப்பியரை, மாக்கோ தீவுக்குச் திரும்பிச் சென்று விடுமாறு உத்தரவிட்டனர். இவன் சம்மதிக்கவில்லை. பிரிட்டிஷ் வியாபாரத்தைப் பகிஷ்கரித்தனர் சீன அதிகாரிகள். பிரிட்டிஷார் இரண்டொரு போர்க் கப்பல்களைத் துறைமுகத்தில் கொணர்ந்து நிறுத்திப் பயமுறுத்திப் பார்த்தனர். விபரீதமே விளையும் போலிருந்தது. பேசாமல் பின்வாங்கிக் கொண்டனர். லார்ட் நேப்பியர், தனது பரிவாரங்களுடன் மாக்கோ தீவுக்குத் திரும்பிவிட்டான். அங்கேயே (11-10-1834) இறந்தும் போய்விட்டான்.
எனவே பிரிட்டிஷ் அரசாங்கத்தாருக்கு மூன்றுவிதமான வழிகள்தான் இருந்தன. ஒன்று, சீன அதிகாரிகள் அவ்வப்பொழுது விதிக்கிற நிர்ப்பந்தங்களுக்குட்பட்டு வியாபாரத்தை நடத்திக் கொண்டு போவது; அல்லது அடியோடு வியாபாரத்தை நிறுத்தி விடுவது; அல்லது பலாத்காரத்தை உபயோகித்து சீன அரசாங்கத்தை வழிக்குக் கொண்டு வருவது. இந்தக் கடைசி வழியைத்தான் பின் பற்றினர் பிரிட்டிஷார். இதில் வெற்றியும் பெற்றனர் என்று சொல்ல வேண்டும். ஆனால் இந்த வெற்றியிலே அபினிக் கறை படிந்திருந்தது.
அபினியைத் திணித்து அடக்க முயற்சி
பத்தொன்பதாவது நூற்றாண்டு ஆரம்பித்தது. சீனாவின் இறக்கு முக வாழ்வும் ஆரம்பித்து விட்டது. உள்நாட்டுக் கலகங்கள் கிளம்பி, தைப்பிங் புரட்சியிலே கொண்டு விட்டன. இந்தப் பெருங் கலகத்தைச் சீன அரசாங்கம் அடக்கிவிட்டது உண்மைதான். ஆனால், இதன் காரணமாக மிகவும் பலவீனமடைந்து விட்டது. ஐரோப்பிய வியாபாரிகளின் நெருக்குதல்கள் வேறே. இவைகளுக்கு மத்தியிலே அபினி வந்து நுழைந்தது. இல்லை, இல்லை; அபினி கொண்டுவந்து திணிக்கப்பட்டது. ஐரோப்பியர் - சிறப்பாகப் பிரிட்டிஷார் - சீனாவைத் தங்களுக்கிணங்கும்படி செய்வதற்கு நேரடியாக ஆயுதபலத்தை உபயோகித்திருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. ஏனென்றால் சீனாவின் சக்தி யிலே அவர்களுக்கு அப்பொழுது - பத்தொன்பதாவது நூற்றாண்டு வரை - ஒரு பிரமை இருந்தது. இதனாலேயே முதன் முறையாக, சாம, தான உபாயங்களைக் கையாண்டனர். இவற்றில் அதிக பலன் காணாமற் போகவே, பேத உபாயத்தைப் பிரயோகித்தனர். இதுவும் சரியான பலனைக் கொடாமற் போகவேதான், கடைசி பட்சமாக தண்டோபாயத்தைக் கையாண்டனர். பலன் கிடைத்தது. பேத உபாயத்தின் ஓர் அமிசந்தான் அபினித்திணிப்பு. எதிரியின் புத்தி யிலே ஒரு பேதத்தை உண்டு பண்ணுவதற்கு அபினியைவிடச் சிறந்த சாதனம் என்ன இருக்கிறது?
இந்த மாயப்பிசாசத்தின் சண்ட தாண்டவத்தைப் பற்றிக் கூறுவதற்கு முன்னர், ஒரு முக்கியமான விஷயத்தை விளக்கி விட விரும்புகிறோம். சீனர்கள், பரம்பரையாக அபினிப் பழக்கமுடைய வர்கள் என்ற ஒரு கட்டுக் கதையை மேனாட்டார் கட்டிவிட்டிருக் கின்றனர். இதற்குச் சிறிது கூட ஆதாரம் இல்லை. பைத்தியம் என்று ஒரு நாய்க்குப் பெயர்கட்டி விட்டு, பிறகு அதன் மீது கல்லெறிந்தால், எறிகிறவனை யாரும் குறைகூற மாட்டார்களல்லவா? அதைப் போல்தான், சீனர்களுக்கு அபினிப் பிரியர்கள் என்ற பட்டம் கட்டி விடப் பட்டதும்.
சீனாவுக்கு, அபினி அந்நிய வது. சீனாவின் அறநூல்கள், லாகிரி வதுக்களை உபயோகிக்கக் கூடாதென்று கண்டிப்பாகக் கூறுகின்றன. சீன மன்னர் பலர், சுருட்டு முதலியனவற்றைக் கூடப்பிடிக்கக் கூடாதென்று அதிகார தோரணையில் உத்திரவு விடுத்திருக்கிறார்கள். 1729-ஆம் வருஷம் யூங் செங் என்ற மன்னன், புகைப்பதற்கான அபினியை விற்பனை செய்யக் கூடாதென்றும், அபினி தின்று மயங்கிக் கிடப்பதற்கு இடங்கொடுக்கிற தா பனங்கள் நடைபெறக் கூடாதென்றும், இவைகளுக் கெல்லாம் கடுமையான தண்டனை விதிக்கப் படுமென்றும் குறிப்பிட்டு அபினித் தடைச் சட்ட மொன்று அமுலுக்குக் கொண்டு வந்தான். இந்த உத்திரவுகளுக்கு ஜனங்கள் கீழ்ப்படிந்து நடந்தார்களா இல்லையா வென்பது வேறு கேள்வி. இப்பொழுது கூட சீனர்களில் பெரும்பாலோர் சுருட்டுப் பிடிக்கிறார்கள். இதற்காக அவர் களுடைய மதமோ, அரசாங்கச் சட்டமோ இந்த வழக்கத்தை அங்கீ கரிக்கிறது என்பது அர்த்தமா என்ன? மருந்துக்காக ஓரளவு இந்த அபினி உபயோகிக்கப்பட்டு வந்ததென்பது வாதவம். சீன வைத்தியக் கிரந்தங்களில் இதனை மருந்தாக எப்படி உபயோகிக்க வேண்டும், எந்த அளவுக்கு உபயோகிக்க வேண்டுமென்ற விவரங் களும் கூறப்பட்டிருக்கின்றன. ஆனால் இதனைச் சீனர்கள் ஒரு பழக் கமாகக் கொள்ளவில்லை; அந்நியர்களால் பழக்கப் படுத்தப் பட்டனர்.
சீனாவில் முதன் முதலாக அபினியைக் கொண்டு புகுத்தியவர் போர்த்துகேசியர். பிறகு டச்சுக்காரர், ஆங்கிலேயர், பிரெஞ்சுக் காரர், அமெரிக்கர் முதலிய எல்லாரும் தங்களுக்குக் கிடைத்த அபினியைக் கொண்டுவந்து திணித்தனர். அமெரிக்கர், துருக்கியி லிருந்து இந்தச் சரக்கை வாங்கிக் கொண்டு வந்து சீனாவில் விற்றனர்! எவ்வளவு லாபம் கிடைத்திருக்கும் என்பதை நாம் ஊகித்துக் கொள்ளலாமல்லவா? ஆனால், இதனால் சீனர்களுக்கு எவ்வளவு தீமையை உண்டுபண்ணினார்கள் என்பதை இந்த அந்நியர் யாரும் கருதவேயில்லை.
இப்படி அந்நியர் பலரும் கொண்டுவந்து வியாபாரம் செய்த போதிலும், மொத்தம் சீனாவில் வருஷமொன்றுக்குச் சுமார் இருநூறு பெட்டி1 அபினியே செலவழிந்து வந்தது. இது 1729-ஆம் வருஷத்துக் கணக்கு. இதற்குப் பிறகு ஒவ்வொரு வருஷமும் அபினி இறக்குமதி கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்பட்டுக் கொண்டு வந்தது. 1780-ஆம் வருஷம் வரையில் இப்படிப் பல நாட்டாரும் சீனாவில் அபினியை இறக்குமதி செய்துகொண்டு வந்தனர். இந்த இறக்குமதியின் பெரும்பாகம் இந்தியாவிலிருந்தே வந்தது. ஆனால், இந்தியாவிலுள்ள பல நாட்டுக் கம்பெனிகளின் ஏஜெண்டுகளுக் குள்ளும், இந்த வியாபார விஷயத்தைப் பற்றி அடிக்கடி சச்சரவுகள் நடைபெற்றுவந்தன. எனவே, மேற்படி 1780-ஆம் வருஷத்தில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியார், வங்காளம், பீஹார், ஒரிஸா ஆகிய மூன்று மாகாணங்களிலும் உற்பத்தியாகிற அபினியின் வியாபார உரிமைகளனைத்தையும் தாங்களே எடுத்துக் கொண்டு விட்டனர். இதற்குப் பிறகு பிரிட்டிஷ் வியாபாரிகள் காட்டின சுறுசுறுப்பு இருக்கிறதே அது வியக்கத்தக்கது. நூற்றுக் கணக்கிலே இறக்குமதியாகிக் கொண்டிருந்த பெட்டிகள் ஆயிரக் கணக்குக்கு அதிகப்பட்டன. 1790-ஆம் வருஷத்தில் மொத்தம் 4,054 பெட்டிகள் இறக்குமதியாயினவென்று ஓர் அறிக்கை கூறுகிறது. ஒரு பெட்டி யின் விலை சுமார் ஆயிரத்தைந்நூறு ரூபாய். வெள்ளி நாணயங் களினாலேயே இந்தப் பணம் கொடுக்கப்பட வேண்டுமென்ற ஏற்பாடு இருந்தது. இதனால் பிரதி வருஷமும் சீனாவிலிருந்து ஏராளமான வெள்ளி வெளியேறி வந்தது! இதற்குப் பிரதியாக சீனா பெற்றது என்ன? போதை வது!
காண்டன் நகரம் ஒன்றே அப்பொழுது அந்நிய வியாபாரி களின் இறங்கு துறையாக இருந்தபடியால் மேற்படி நகரத்தில் இந்த அபினிப் பழக்கம் தொத்து நோய் மாதிரி விரைவில் பரவியது. தங்கள் நாட்டின் நலனை நாடும் சீனர்கள் இதைக் கண்டு திகிலடைந் தார்கள். காண்டன் மாகாண அதிகாரி, ஏற்கனவேயுள்ள அபினி தடைச் சட்டத்தை இன்னும் கண்டிப்பாக அமுலுக்குக் கொண்டு வரும்படி சக்ரவர்த்திக்கு விண்ணப்பஞ் செய்து கொண்டான். இதன் பேரில் 1796-ஆம் வருஷம், மேற்படி சட்டம், இன்னும் கடுமையான தண்டனைகளுடன் புதுப்பிக்கப்பட்டது. தண்டனை களை ஏற்றுக் கொண்டும் அநேகர் இந்த அபினிப் பழக்கத்திற்கு இரையாகி யிருந்தார்கள்; இவர்களுடைய எண்ணிக்கை குறையவில்லை. எனவே 1800-ஆம் வருஷம் கியா கிங் என்ற சக்ரவர்த்தி, இனி வெளிநாடுகளி லிருந்து அபினி இறக்குமதி செய்யப்படக் கூடா தென்றும், உள்நாட்டில் கஞ்சாச் செடியைப் பயிரிடக்கூடா தென்றும் ஒரு சட்டம் பிறப்பித்தான். இதுகாறும் மற்றப் பொருள் களைப்போல் அபினியும் காண்டன் துறைமுகத்தில் பகிரங்கமாக வந்து இறங்கிக் கொண்டிருந்தது. இந்தச் சட்டத்திற்குப் பிறகு பகிரங்க இறக்குமதி நின்றது: ரகசியமாக வர ஆரம்பித்தது. கிழக் கிந்தியக் கம்பெனியார், நேரடியாக இந்த வியாபரத்தில் தலை யிடாமல் தனிப்பட்ட வியாபாரிகளுக்கு லைசென் கொடுத்து வந்தனர்! மற்றச் சரக்குகளோடு அபினியையும் ஏற்றிக் கொண்டு வருகிற கப்பல், துறைமுகத்திற்கு வெளியிலேயே ஓரி டத்தில் நின்று விடும். அபினியை மட்டும் அந்த இடத்தில் இறக்கி விடுவார்கள். மற்றச் சரக்குகளோடு கப்பல், துறைமுகத்திற்கு வந்து வழக்கம்போல் சரக்குகளை இறக்கிவிட்டு மாற்றுச் சரக்குகளை ஏற்றிக்கொண்டு போகும். துறைமுகத்திற்கு வெளியே இறக்கப்பட்ட அபினியை, இராக்காலங்களில், துறைமுகக் காவலர்களுக்குத் தெரிந்தும் தெரியாமலும் சிறிய படகுகளில் கரைக்குக் கொண்டு வந்து, சீன வியாபாரிகளுக்கு ரொக்கத்திற்கு விற்றுவிடுவார்கள். எப்படியோ அபினி வியாபாரம் வெகு மும்முரமாக நடைபெற்று வந்தது. கொண்டு வந்த அந்நிய வியாபாரிகளும், கள்ளத் தனமாக விற்பனை செய்து வந்த சீன வியாபாரிகளும் கொழுத்த பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு நடுவே அரசாங்க உத்தியோக தர்களுக்கு லஞ்சத்தின் மூலமாகக் கிடைத்துக் கொண்டிருந்த தொகையோ ஏராளம். கள்ளச் சரக்கல்லவா? கிராக் கியும் அதிகப் பட்டு வந்தது. விலையும் விஷம் போல் ஏறியது. சீனர்கள் மதிமயங்கிப் போனார்கள். அபினிப் பிரியர்களின் எண்ணிக்கை அதிகமாயிற்று. சட்டத்தில் கூறப்பட்ட நூறு கசையடி, மூன்று வருஷக் கடுங்காவல் முதலிய தண்டனைகளை அனுபவிக்க இவர்கள் தயாராயிருந் தார்களே தவிர, அபினிப் பழக்கத்தை விட்டுவிடத் தயாராயில்லை. இப்படிப்பட்டவர்கள் இருக்கிறபோது, அபினியில் வியாபார மந்தம் ஏற்படுமா என்ன? பிரதி வருஷமும் இறக்குமதி அதிகப்பட்டு வந்தது. 1821-ஆம் வருஷத் திலிருந்து. 1828-ஆம் வருஷம் வரையில் சராசரி வருஷமொன்றுக்கு 9,708 பெட்டிகள் இறக்குமதியாகிக் கொண்டு வந்தது, 1828 - 1835-ஆம் வருஷங்களில் சராசரி வருஷ மொன்றுக்கு 18,712 பெட்டிகளாக அதிகப்பட்டது; 1835 - 1839-ஆம் வருஷங்களில் வருஷமொன்றுக்குச் சராசரி 30,000 பெட்டிகள்!
இங்ஙனம் இந்தத்தீமை வரவர அதிகரித்துக் கொண்டு வந்ததால் விவசாயிகள் வறியர்களானார்கள். சீனாவில் நிலவரியை வெள்ளி நாணயத்தின் மூலமாகவே செலுத்த வேண்டுமென்ற விதி இருந்தது. வெள்ளி நாணயத்தின் மதிப்போ வரவர உயர்ந்தது. ஏனென்றால் அந்நிய நாட்டு வியாபாரிகள் அபினியைக் கொடுத்து விட்டு வெள்ளி நாணயங் களையல்லவோ அள்ளிக்கொண்டு போகிறார்கள்? இதனால் அரசாங்கத்தின் நிலவரி வருமானம் குறைந்து கொண்டுவந்தது. ஒரு சிலர், பணக்காரர் களானார்கள்; பலர், பொருளாதார பலத்திலும் தேகபலத்திலும் மனோபலத் திலும் குன்றிக்கொண்டு வந்தார்கள். இவைகளைப் பார்த்த அரசாங்க அதிகாரிகள் சிலருக்குக் கூட மனக்கொதிப்பு உண்டாயிற்று. அரசாங்க மந்திரிகளிலே ஒருவன் இந்த அபினி வியாபாரத்தைக் கட்டோடு ஒழித்துத் தொலைக்கவேண்டு மென்று சக்ரவர்த்திக்கு ஒரு மகஜர் சமர்ப்பித்தான். இதில், அபினிப்பழக்க முடையவர் களுக்கு ஒரு வருஷ தவணை கொடுத்து அதற்குள் அந்தக் கொடிய பழக்கத்தை விட்டு விட வேண்டுமென்றும், அதற்குப் பிறகும் பிடிவாதமாய்க் கையாண்டு வருகிறவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டு மென்றும், இந்தமாதிரியான சிலபரிகாரமுறை களைக் குறிப்பிட்டிருந்தான். அப்பொழுது சக்ரவர்த்தியா யிருந்தவன் டாவோகுவாங் (1820 - 1850) என்பவன்.
தனது ராஜ்யத்தில் ஒழுங்கையும் ஒழுக்கத்தையும் நிலை நாட்ட வேண்டுமென்று ஆசைகொண்டவன். ஆனால் இவன் ஆட்சிக் காலத்தில்தான் ராஜ்யத்தில் ஒழுங்கு குலைந்தது! ஒழுக்கம் குறைந்தது! இவன் என்ன செய்வான் பாவம்! அந்நியர்களின் சூழ்ச்சிகள், இவனுடைய அதிகாரிகளிற் சிலருடைய மனத்தை, உணர்ச்சியற்ற மரம்போலாக்கி விட்டிருந்தன. ஏதோ ஏகதேசமாக ஓரிரண்டு அதிகாரிகளுக்கும் சக்ரவர்த்திக்கும் மட்டுமே, தேசத்தி லிருந்து அபினியைத் தொலைக்க வேண்டுமென்ற எண்ணம் உள்ளூர இருந்தது.
மேலே சொன்ன மகஜரை, சக்ரவர்த்தி அங்கீகரித்து எல்லா மாகாண அதிகாரிகளுக்கும் அனுப்பினான். லின்த் ஸேஹ்ஸு என்ற ஒரு மாகாண அதிகாரி. இவன் மனச்சாட்சி படைத்தவன்; இரண்டொரு மாகாணங் களுக்குத் தலைமை அதிகாரியாயிருந்து திறமைசாலியென்று பெயர் பெற்றிருந்தான். இவனைச் சக்ரவர்த்தி, தனது விசேஷ அதிகாரியாகத் தெரிந்தெடுத்து காண்டன் நகரத்திற்கு அனுப்பினான். இவன் 1839-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் பத்தாந் தேதி காண்டன் நகரம் வந்து சேர்ந்தான். வந்து ஒரு வாரம் வரையில் உள்ள நிலைமையைப் பரிசீலனை செய்தான்; என்னென்ன நடவடிக் கைகள் எடுத்துக் கொள்ள வேண்டுமென்பதற்கு ஒரு திட்டம் வகுத்துக் கொண்டான். காண்டன் துறை முகத்தில் அரண்கள் பல கட்டச் செய்தான்; துருப்புகளைக் கொண்டு நிறுத்தினான்; யுத்த தள வாடங்கள் பலவற்றையும் சேகரித்து வைத்துக் கொண்டான். பொதுவாக அந்நிய வியாபாரிகள் பலாத்கார எதிர்ப்புக்காட்டினால் அதனைச் சமாளிக்க என்னென்ன ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டுமோ அவையனைத்தையும் செய்து கொண்டான். உடனே, 18-3-1839 தேதியிட்டு அந்நிய வியாபாரிகள் அனைவருக்கும் ஒரு தாக்கீது விடுவித்தான். இதில் அந்நியர்களுக்கு எவ்வளவோ சலுகைகள் காட்டி வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்த தென்றும், ஆனால் அவர்கள் இந்த அனுமதியை துர் உபயோகப் படுத்துகிறார்களென்றும், சீனாவிலிருந்து தேயிலையையும் பட்டை யும் பெற்றுக்கொண்டு அவைகளுக்குப் பதிலாக விஷத்திற்குச் சமமான அபினியைக் கொண்டுவந்து திணிக்கிறார் களென்றும், இந்த அபினி இறக்குமதி, ஏற்கனவே தடைசெய்யப் பட்டிருந்தும் இதனைக் கள்ளத்தனமாகக் கொண்டு புகுத்துவது கொஞ்சங்கூட நியாயமில்லையென்றும், இதனை இன்னமும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதென்றும், இந்த உத்திரவு பிறந்த மூன்று நாட்களுக்குள் எல்லா அந்நிய வியாபாரிகளும் தங்கள் தங்கள் வசத்திலிருக்கும் அபினியைத் தன்னிடம் கொண்டு வந்து ஒப்ப டைத்து விடவேண்டுமென்றும் கண்டிருந்தான். இதற்கு அந்நிய வியாபாரிகள் உடனே இணங்கவில்லை. ஏதேதோ சாக்குப் போக்குகள் சொல்லிப் பார்த்தார்கள்; காலங்கடத்தினார்கள். இவர் களுக்கு முதல்வனாயிருந்து எதிர்ப்புக் காட்டியவன் பிரிட்டிஷ் தானீகன். ஏனென்றால் பிரிட்டிஷ் வியாபாரிகளுடைய சரக்குத் தான் அதிகமாயிருந்தது; லின்னினுடைய உத்திரவு பிரிட்டி ஷாரையே அதிகமாகப் பாதித்தது. அப்பொழுது பிரிட்டிஷ் தானீ கனாயிருந்த காப்டன் எல்லியட்1 என்பவன், லின்னினுடைய உத்திரவுக்கு இணங்க முடியாதென்றும், அப்படி இயங்குவதனால் அந்நிய வியாபாரிகளுக்கு நஷ்டமுண்டா குமென்றும், ஏதேதோ சமாதானங்கள் கூறிப் பதில் விடுத்தான். ஆனால் லின், இவைகளுக் கெல்லாம் மசிகிறவனாயில்லை. அந்நிய வியாபாரிகள் வசித்துக் கொண்டிருந்த பிரதேசத்தைச் சுற்றி முற்றுகை போடுகிற மாதிரி சீனக்காவற் படை களைக் கொண்டுவந்து நிறுத்திவிட்டான். அந்நியர் யாரும் தங்களிருப் பிடத்தை விட்டு வெளியே போக முடிய வில்லை. வெளியிலிருந்து யாரும் உள்ளே வரமுடியவில்லை. காவல் கைதிகள் மாதிரி ஆகி விட்டார்கள். உணவுப் பொருள்கள் வர முடிய வில்லை; தண்ணீரில்லை; வேலைக்காரர்களில்லை. பார்த்தான் எல்லியட். வேறு வழியில்லை. மார்ச்சு மாதம் இருபத்தெட்டாந் தேதி, பிரிட்டிஷாருக்குச் சொந்தமான 20,283 அபினிப் பெட்டி களை லின் வசம் ஒப்புவித்துவிட்டான். இதே பிரகாரம் மற்ற நாட்டு வியாபாரிகளும், தங்கள் தங்களிடமிருந்த சொற்பச் சரக்கையும் ஒப்புக்கொடுத்து விட்டார்கள். பிரிட்டிஷார் பறிகொடுத்த அபினியின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் என்று அப்பொழுது கணக்கிடப் பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட இந்த அபினியைக் கொண்டு லின், தனது நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல பாடங் கற்பிக்கத் தீர்மானித்தான். கடலோரமாக வசிக்கிறவர்களல்லவோ கள்ள அபினி இறக்குமதி யாவதற்குத் துணை செய்கிறார்கள்? எனவே இந்த அபினி அனைத் தையும் கடற்கரையோரமாகவுள்ள ஓரிடத்திற்குக் கொண்டு போகச் செய்தான். சுமார் நூற்றைம்பது சதுர அடி சுற்றளவுள்ள இரண்டு பெரிய பள்ளங்கள் தோண்டி அதில் உப்பு நீர் நிரப்பச் செய்தான். அந்த நீரில் அபினியைத் துண்டு துண்டாக்கிப் போட்டு சுண்ணாம் பையும் கலந்து விடச் செய்தான். இந்தக் கலப்பினால் தண்ணீர் கொதித்து அபினியைக் கரைத்தது. இந்த இரண்டு பள்ளங் களிலிருந்து, சமுத்திரத்திலே சென்று சேரும்படியாகக் குழாய்கள் போடப்பட்டிருந்தது. இந்தக் குழாய்கள் வழியாக அபினித் தண்ணீரானது சமுத்திரத்திலே போய்ச் சேர்ந்தது. துளி அபினிகூட தங்கியிருக்கக் கூடாதென்பதற்காக, பள்ளங்களில் சுத்த ஜலத்தை விட்டுக் கழுவி சமுத்திரத்திலே கொண்டு சேர்ப்பித்துவிட்டார்கள். இந்தக் காட்சி யைக் காணத் திரள் திரளாக ஜனங்கள் வந்தார்கள். அபினியைப்பற்றி அரசாங்கத்தார் என்ன அபிப்பிராயம் கொண்டி ருக்கின்றனர் என்பது அவர்கள் மனதில் நன்கு பதிந்திருக்குமென்று லின் கருதினான்.
இதற்குப் பிறகு, அந்நியர் யாரும் இனி அபினியைக் கொண்டு வந்து வியாபாரம் செய்யக்கூடாதென்றும், அப்படிக் கொண்டு வருகிறவர் களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுமென்றும், அபினியைத் தவிர்த்து மற்றச் சரக்குகளை வழக்கம் போல் கொண்டு வந்து வியாபாரஞ் செய்யலாமென்றும் லின் ஒரு பிரகடனத்தை வெளியிட்டான். ஆனால் ஒரு நிர்ப்பந்தத்திற்குட்படுத்திக் கொண்டு வியாபாரம் செய்வதை பிரிட்டிஷார் விரும்பவில்லை. இதனால் மற்றச் சரக்குகளின் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் கொஞ்சம் மந்தமாகியது. சீன அதிகாரிகள் இதை எதிர்பார்க்கவில்லை.
இஃது இப்படியிருக்கையில், 1839-ஆம் வருஷம் ஜூலை மாதம் ஹாங்காங் துறைமுகத்திற்கு ஒரு பிரிட்டிஷ் கப்பல்வந்து நங்கூரம் பாய்ச்சியது. இதன் மாலுமிகள் சிலர், கரைக்கு வந்து ஊர் சுற்றுகையில், இவர்களுக்கும் சில சீனர்களுக்கும் கைகலந்த சண்டை உண்டாயிற்று. பார்க்கப் போனால் குடிவெறியினால் ஏற்பட்ட சண்டை இது. இதில் லின்வைஹி என்ற ஒரு சீனன் இறந்து போய் விட்டான். இவன் மரணத்திற்குக் காரணமாயிருந்த மாலுமிகளை உடனே தங்களிடத்தில் ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று சீன அரசாங்க அதிகாரிகள், பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு ஒரு தாக்கீது விடுத்தார்கள். ஆனால் இறந்துபோன சீனனுடைய குடும்பத்திற்குத் தாங்கள் நஷ்டஈடு கொடுத்து விட்டதாகவும், மாலுமிகளைச் சரண் கொடுக்க முடியாதென்றும் பிரிட்டிஷ் அதிகாரிகள் தெரிவித்து விட்டார்கள். இதைப் பார்த்து லின்னுக்குக் கோபம் உண்டாயிற்று. இனி பிரிட்டிஷ் வியாபாரக் கப்பல் எதுவும் காண்டன் துறைமுகத் திற்குள் வரக்கூடாதென்றும், சீனர் யாரும் பிரிட்டிஷாரோடு வியாபாரம் செய்யக்கூடாதென்றும் 1840-ஆம் வருஷத் தொடக் கத்தில் ஓர் ஆணை பிறப்பித்தான். பிரிட்டிஷார் ஆத்திரமடைந் தனர். மாக்கோ தீவைத் தங்குமிடமாக வைத்துக்கொண்டு அங்கிருந்து, வேற்று நாட்டார் மூலம் வியாபாரம் நடத்த முயன்றனர். பலிதமடைய வில்லை. பலாத்காரத்தை உபயோகிப்பதைத் தவிர வேறு வழியில்லை யென்ற முடிவுக்கு வந்தனர். 1840-ஆம் வருஷம் ஜூன் மாதக் கடைசியில், 540 பீரங்கிகளையும் ஆயிரக்கணக்கான துருப்புகளையும் தாங்கிக் கொண்டு பதினாறு யுத்தக்கப்பல்கள் மாக்கோ தீவு ஓரத்தில் வந்து நின்றன. அதாவது காண்டன் துறைமுகம், வெளிப் போக்குவரத்தின்றி அடைக்கப்பட்டுவிட்டது. இதற்குப் பிரதியாக, சீன அதிகாரிகள், பிரிட்டிஷ் கப்பல்கள் எங்கே காணப்பட்டாலும் அவை நாசமாக்கப்பட வேண்டு மென்றும், பிரிட்டிஷ் போர்வீரர்களும் கண்டவிடத்தில் கைதியாக்கப் படுவார்களென்றும், இந்த நாசவேலையைச் செய்கிறவர்களுக்கு இனாம் அளிக்கப்படுமென்றும் பிரகடனங்கள் விடுத்தனர். இதன் தாத்பரியம் என்ன? பிரிட்டிஷாருக்கும் சீனர்களுக்கும் யுத்தம் தொடங்கிவிட்டது. இதுவே முதல் அபினி யுத்தம்.
பிரிட்டிஷ் போர்க் கப்பல்கள், முதலில் காண்டன் துறை முகத்தின் தெற்குப் பாகத்தைத் தாக்கின. ஆனால், லின், ஏற்கனவே இங்குச் செய்திருந்த பந்தோபது பலமாயிருந்தது. எனவே, இவை வடக்கு நோக்கிச் சென்று, யாங்க்ட்ஸீகியாங் நதியின் முகத்து வாரத்திலுள்ள கோட்டை கொத்தளங்களைத் தாக்கின. எதிர்ப்புக் காட்டிய சீனப்படைகள் பின்வாங்கின. பிரிட்டிஷார், முகத்து வாரத்திற் கருகாமையிலுள்ள சில சிறிய தீவுகளையும், நகரங் களையும் கைப்பற்றிக் கொண்டனர். இதைக் கேட்டு, பீகிங் நகரத்து அரண்மனைச் சுவர்களுக்குள் அமைதியாகக் கொலுவீற்றிருந்த மஞ்சூ சக்ரவர்த்தியும் அவனுடைய அமைச்சர்களும் நடுங்கிப்போய் விட்டார்கள். தங்களுடைய தெய்விக ராஜ்யத்தின் சக்தி, இப்படி அநாகரிக அந்நியர் முன்னால் குன்றி வருவதற்குக் காரணம் என்னவென்று யோசித்தார்கள். யாராவது ஒருவனை, தங்களுடைய காரணத்திற்குப் பலிகொடுக்க வேண்டுமல்லவா? எவன் அந்நியர் களின் அகம்பாவத்தைக் குலைத்துச் சீனர்களின் சுயமரியாதையைக் காப்பாற்றினானோ அவனுடைய - அந்த லின் என்பவனுடைய - ராஜதந்திரமற்ற நடவடிக்கைகளே, ஏகாதிபத்தியத்தின் கௌரவ ஹானிக்குக் காரணம் என்று தீர்மானித்தார்கள். எனவே அவனை வேலையினின்று விலக்கிவிட்டு, அவனுடைய தானத்தில் சீஷான் என்ற ஒரு மஞ்சூ ஜாதியினனை நியமித்து, பிரிட்டிஷாரோடு சமாதானம் செய்யுமாறு அனுப்பினார்கள்.
சமாதானம் செய்யவே வந்தவனல்லவா சீஷான்? அதனைப் பிரிட்டிஷார் முன்னாடியே தெரிந்துகொள்ள வேண்டுமென்று தீர்மானித்து, இவன், காண்டன் துறைமுகத்தில் பந்தோபதிற்காக லின் கட்டிவைத்துப் போயிருந்த அரண்கள், மற்றப் பாதுகாப்பு தலங்கள் முதலிய அனைத்தையும் தகர்த்துத் தரைமட்டமாக்கி விட்டான். பின்னர் பிரிட்டிஷாருக்கு சமாதான தூது விடுத்தான். யுத்தம் நிற்கவில்லை; அதன் பாட்டுக்கு நடந்து கொண்டிருக்கிறது. பிரிட்டிஷ் அதிகாரிகள், உடனே சமாதான தூதுக்குப் பதில் அனுப்பினர். ஹாங்காங் தீவை பிரிட்டிஷாருக்குக் கொடுத்துவிட வேண்டும்; காண்டன் துறைமுகத்தில் எவ்வித நிர்ப்பந்தமும் இல்லாமல் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்; பிரிட்டி ஷாருடைய அபினியைப் பறிமுதல் செய்ததற்காக அறுபது லட்சம் சீன டாலர் நஷ்ட ஈடாகக்கொடுக்க வேண்டும் இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால்தான் யுத்த நிறுத்தம் ஏற்படும் என்று இந்தப் பதில் கூறியது. எப்படியாவது சமாதானஞ் செய்து கொள்ள வேண்டுமென்ற ஒரே நோக்கத்துடனிருந்த சீஷான், பீகிங்கிலுள்ள தலைமை அரசாங்கத்தின் அங்கீகாரத்தைப் பெறாமலே, மேற்படி நிபந்தனைகளுக்குச் சம்மதம் கொடுத்து விட்டான். யுத்தம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதற்குள் இந்தச் சமாதான நிபந்தனைகள் பீகிங்குக்குத் தெரிவிக்கப்பட்டன. அவர்கள், இவைகளை ஏற்றுக்கொள்ள முடியா தென்று சொல்லி சீஷானுடைய நடவடிக்கையைக் கண்டித்தனர். மறுபடியும் யுத்தம் மும்முரமாகத் துவங்கி விட்டது. லின்னின் பாதுகாப்பு தலங்கள் ஏற்கனவே அழிக்கப்பட்டு விட்டபடியால், பிரிட்டிஷ் படைகள் சுலபமாக முன்னேற முடிந்தது. இவர்கள் கையில் சீனர்களுடைய சுமார் ஐந்நூறு பீரங்கிகள் சிக்கின. இதற்குப் பிறகு பிரிட்டிஷார், காண்டன், அமாய், ஷாங்காய் முதலிய பல துறைமுகப் பட்டினங் களைக் கைப்பற்றிக் கொண்டனர். சீனர்களுக்கு உயிர்ச் சேதமும் பொருட் சேதமும் ஏராளம். யாங்க்ட் ஸீ கியாங் நதிக்குள்ளேயே பிரிட்டிஷ் கப்பல்கள் பீரங்கிகளை முழக்கிக்கொண்டு நுழைந்து விட்டன. நான்கிங் நகரத்திற்கு ஆபத்து ஏற்படும் போலிருந்தது. பீகிங் அரசாங்கம் பயந்துபோய் சமாதானம் கோரியது. இந்தக் கோரிக்கையின் பலன்தான் 1842-ஆம் வருஷம் ஆகட் மாதம் 29-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட நான்கிங் உடன் படிக்கை. நவீன ராஜதந்திர உலகத்தில், முதன் முதலாக நிறைவேற்றப் பட்ட ஏற்றத் தாழ்வான உடன்படிக்கை இதுதான் என்று நடு நிலைமையிலுள்ள அறிஞர்கள் கூறுகிறார்கள்.
இந்த உடன்படிக்கையின் மூலம், சீனா, தன்னுடைய பிற்கால வாழ்வையே பிறருக்கு எழுதிக்கொடுத்துவிட்டது; தன்னுடைய அரசியல் சுதந்திரத்தையும் பொருளாதார சுதந்திரத்தையும் அந்நியர்கள் நிர்ணயிப்பதற்கு இடங்கொடுத்துவிட்டது. இதன் ஷரத்துக்களைப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும். ஷரத்துக் களின் முக்கியமான அமிசங்கள் வருமாறு:
_1. பறிமுதல் செய்யப்பட்ட அபினிக்கும், யுத்தச் செலவு முதலியவை களுக்குமாக, சீன அரசாங்கம் 210 லட்சம் டாலர் நஷ்ட ஈடு செலுத்த வேண்டும். இந்தத் தொகையை, மூன்றரை வருஷத் தவணைக்குள் வெள்ளி நாணயங்களாகவே கொடுக்க வேண்டும்._
_2. ஹாங்காங் தீவு, பிரிட்டிஷ் அரசாங்கத்திற்குச் சாசுவத மாகக் கொடுக்கப்பட்டது._
_3. காண்டன், அமாய், பூச்சௌ, நிங்க்போ, ஷாங்காய் ஆகிய ஐந்து துறைமுகப் பட்டினங்களில் பிரிட்டிஷார், பகிரங்க மார்க் கெட்டில் வியாபாரம் செய்யலாம்; மற்ற அந்நிய நாட்டு வியா பாரிகள் தங்களுடைய வாசதலங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம். அந்நிய வியாபாரிகள், சீன ஹாங்குகள் மூலமாகவே தங்கள் வியாபாரத்தை நடத்த வேண்டுமென்றிருந்த ஏற்பாடு ரத்து செய்யப் பட்டது._
_4 ஏற்றுமதி, இறக்குமதியாகிற பொருள்களில் இன்னின்ன பொருள்களுக்கு இவ்வளவு இவ்வளவு வரி விதிக்கப்பட வேண்டும் என்று ஒரு திட்டம் வகுப்பட்டு அதன் பிரகாரமே வியாபாரம் நடை பெறவேண்டும். ஓர் ஒப்பந்தத்தின் மூலம் இந்தச் சுங்க வரித் திட்டம் ஊர்ஜிதம் செய்யப்பெறவேண்டும். வரி விகிதங்களில் ஏதேனும் மாற்றஞ் செய்ய வேண்டுமானால், அதற்குப் பிரிட்டிஷ் அரசாங்கத் தின் முன் சம்மதம் வேண்டும்; இல்லாவிட்டால் எவ்வித மாற்றமும் செய்யக் கூடாது._
_5. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பிரதிநிதிகளைச் சீன அரசாங் கத்தார், சம அந்ததிலேயே வைத்து நடத்துவர். இரண்டு நாட்டுப் பிரதிநிதிகளும் சம அந்ததிலுள்ளவர்களாகவே தங்கள் விவகா ரங்களை நடத்துவார்கள்._
இப்படிப் பொதுவான சில அமிசங்கள் மட்டுமே இந்த நான்கிங் உடன்படிக்கையில் காணப்பட்டன. இவற்றை அனுஷ்டா னத்திற்குக் கொண்டு வருகிறபோது என்னென்ன புதிய அனுப வங்கள் அல்லது சங்கடங்கள் ஏற்படுகின்றனவோ அவற்றை அவ்வப்பொழுதைய சூழ்நிலையை அனுசரித்துத் தனித்தனி உப. ஒப்பந்தங்களின் மூலமாகச் சமாளித்துக் கொள்ளலாமென்று இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர். இதையொட்டி அடுத்த வருஷம் (1843) வேறோர் ஒப்பந்தம் நிறைவேற்றிக் கொள்ளப்பட்டது. இதற்கு போக் ஒப்பந்தம்1 என்று பெயர். இதில் ஒரு ஷரத்தின் மூலம் வியாபார விதிகள், சுங்கவரி விகிதங்கள் முதலியன நிர்ணயிக்கப் பட்டன. மற்றொரு பிரிவின் மூலம் விசேஷப் பிரதேச உரிமை2 என்று அரசியல் பரிபாஷையில் வழங்கப்படுகிற ஒரு விநோதமான உரிமை சிருஷ்டிக்கப்பட்டது. இதுதான் நான்கிங் ஒப்பந்தத்தின் பின் விளைவுகளிலே மிக முக்கியமானது. இந்த போக் ஒப்பந்தத்தில் இது பொதுப்படையாகக் கூறப்பட்டதேயானாலும், பின்னாடி நிறை வேற்றிக் கொள்ளப்பட்ட உப ஒப்பந்தங்களில் இது லேசுலேசாக விரிவடைந்து, சீன அரசாங்க நிருவாகத்தில் அநேக கேடுகளை உண்டு பண்ணக்கூடிய சக்தி பொருந்தியதாகிவிட்டது. இந்த உரிமையின் சாரம் என்னவென்றால், வியாபாரத்திற்கென்று திறந்து விடப்பட்ட துறைமுகப் பட்டினங்களில் வசிக்கும் பிரிட்டிஷ் பிரஜைகள், சீன அரசாங்கத்தின் எல்லைக்குள் வசித்துக் கொண்டி ருக்கிறவர்களா யிருந்தாலும், பிரிட்டிஷ் சட்ட திட்டங்களுக்குட் பட்டவர்களே; சீன சட்ட திட்டங்களுக்குட்பட்டவர்களல்லர். இவர்கள் குற்றஞ்செய்து விட்டால், பிரிட்டிஷ் சட்டப்படி பிரிட்டிஷ் நீதிபதிகளே விசாரணை செய்து தண்டிக்க வேண்டும். இந்த ஒரு ஷரத்துக்கு ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டு விட்டதன் காரண மாகப் பின்னாடி என்ன விபரீத பலன்கள் உண்டாகக் கூடு மென்பதை அப்பொழுதைய சீன அதிகாரிகள் உணரவே யில்லை. அந்நியர்கள் - அதாவது பிரிட்டிஷார் - மேற்சொன்ன ஐந்து துறை முகப் பட்டினங்களோடுமட்டும் தங்களுடைய விவகாரங்களை வரையறுத்துக் கொண்டிருப்பார்களென்றும், இவர்களோடு அடிக் கடி தகராறு செய்து கொள்ளாமலிருப்பதற்கு, இவர் களுடைய விவகாரங்களை இவர்களே கவனித்துக் கொள்ளும்படி தனியாக விட்டுவிடுவதே நல்லதென்றும் கருதினார்கள். ஆனால் இது கரு வேப்பிலைக்காரன் கதையாக முடிந்தது. மேற்படி துறைமுகப் பிரதேசங்களல்லாத மற்ற சீன அரசாங்க நிருவாகத்திற் குட்பட்ட பிரதேசங்களில் குற்றஞ்செய்துவிடுகிற பிரிட்டிஷ் பிரஜை கூட இந்த உரிமையின் கீழ் தஞ்சம் புகுந்து கொள்ள முடிந்தது.
சீனாவில் எங்கு ஓர் அந்நியன் சென்றாலும் அவனுடன் இந்த விசேஷப் பிரதேச உரிமையும் கூடவே சென்றது. தேசத்தின் பொதுவான சட்டத்திற்கு அவன் புறம்பான வனாகிவிட்டான். அக்கிரமஞ் செய்கிற அந்நியனுக்கு, சீனா ஒரு சொர்க்கலோகம் மாதிரியாகி விட்டது. ஏனென்றால் அவன், சீனச் சட்டத்தையோ, தனது நாட்டுச் சட்டத்தையோ அலட்சியப்படுத்திவிட்டு, தன் அக்கிரமத் தொழில்களை நடத்திக் கொண்டிருக்க முடிந்தது1
இந்த விசேஷப் பிரதேச உரிமை யோடு மற்றொரு விநோத மான உரிமையையும் அந்நியர்கள் சீன அரசாங்கத் திடமிருந்து பறித்துக் கொண்டார்கள். அதாவது ஓர் அந்நிய அரசாங்கத்திற்கு ஏதேனும் விசேஷ சலுகை காட்டப்பட்டால் அது மற்ற எல்லா நாடுகளுக்கும், அவை கேட்டாலும் சரி, கேளாமலிருந்தாலும் சரி, விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி, முறையே காட்டப் படவேண்டும். இதனுடைய பலன் என்ன வாயிற்றென்றால், சீனா விடமிருந்து ஏதேனும் சாதகங்கள் பெறவேண்டுமானால் எல்லா அந்நிய வல்லரசுகளும் ஒன்று சேர்ந்துகொண்டன. தங்களுடைய நடவடிக்கைகளின் மூலம் ஏதேனும் பாதகம் உண்டாகுமென்று தெரிந்தால், அவை அவையும் தனித்தனியாக ஒதுங்கிக் கொண்டன. ஓர் ஆசிரியன் கூறுகிற மாதிரி இந்தச் சலுகையானது, ஒன்று சேர்ந்து சீனாவை நெருக்குவதற்கும், ஆனால் தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதற்கும் வல்லரசுகளுக்கு உதவி யாயிருந்தது.2
இந்தச் சலுகையை அனுசரித்து, பிந்திய வருஷங்களில், மேனாட்டு வல்லரசுகள் ஒவ்வொன்றும், தங்கள் தங்கள் பிரதிநிதிகள் மூலம், மேலே சொன்ன விசேஷப் பிரதேச உரிமைகளென்ன, வியாபாரச் சலுகைகளென்ன, எல்லாம் கோரின. சீன அரசாங்கமும் இவை ஒவ்வொன்றுக்கும் இணங்கிக் கொடுக்கவேண்டி யதாயிற்று. அமெரிக்கா (3-7-1844), பிரான் (24-10-1844), நார்வே வீடன் (20-3-1847), இப்படி ஒன்றன் பின்னொன்றாக நீட்டிய உடன் படிக்கைக் காகிதத்தில் அது கையெழுத்திட்டது. சீன அரசாங் கத்தின் அதிகார எல்லைக்குட்பட்டு மாக்கோதீவில் இதுகாறும் வியாபாரஞ் செய்து வந்த போர்த்துகேசியர்கூட, மேற்படி மாக்கோதீவில் சீனர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லையென்று சொன்னார்கள்! ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்குச் சுலபந்தானே?
அந்நியர் புகுதல் என்ன நீதி?
அபினி காரணமாகச் சண்டை உண்டாகி நான்கிங் ஒப்பந் தத்தில் வந்து முடிந்தது. ஆனால் அபினி வியாபார மென்னவோ குறையவில்லை. இந்த நான்கிங் ஒப்பந்தத்திலோ, இதையனுசரித்துப் பின்னர் நிறை வேற்றப்பட்ட உப ஒப்பந்தங்களிலோ, இந்த அபினி விஷயத்தைப்பற்றி அந்நிய நாட்டுப் பிரதிநிதிகள் ஒன்றுமே குறிப்பிடாமல் மௌனமாயிருந்து விட்டனர். சட்டத்தின் மூலமாக அபினி இறக்குமதி, தடை செய்யப்பட்டிருக்கிற தென்று நினைத்துக் கொண்டு சீனா அரசாங்கத்துப் பிரதிநிதிகளும் சும்மாயிருந்து விட்டனர். ஆனால், நான்கிங் ஒப்பந்தத் திற்குப் பிறகு, அந்நியர்கள், அதிக துணிச்சலோடு கள்ளத்தனமாக அபினியை இறக்குமதி செய்து வந்தனர். ஏனென்றால் விசேஷப் பிரதேச உரிமையின் கீழ் இப்பொழுது தப்பித்துக் கொள்ளலாமல்லாவா? 1840-ஆம் வருஷத் திற்கும் 1858-ஆம் வருஷத்திற்கும் மத்தியில் அபினி இறக்குமதி யானது ஒன்றுக்கு மூன்று மடங்கு அதிகரித்துவிட்டது. இதற்குப் பெரிதும் துணையாயிருந்தார்கள் அந்நியர்கள்.
பத்தொன்பதாவது நூற்றாண்டின் மத்தியில் தென்னமெரிக்கா முதலிய பிரதேசங்களில், ஐரோப்பியர் பலர் சென்று தோட்டப் பயிர் முதலாயின செய்துவந்தார்கள். இவர்களுக்குக் குறைந்த செலவில் அதிகமான ஆட்கள் தேவையாயிருந்தது. இதற்காக, சீனாவிலிருந்து ஏராளமான கூலியாட்களை, ஐரோப்பிய வியாபாரிகள் சிலர், தங்க ளுடைய கப்பல்களில் ஏற்றிக்கொண்டுபோய், அங்கே அமெரிக்காவில், இவர்களைக் கூட்டங் கூட்டமாகத் தோட்ட முதலாளிகளுக்கு விற்றுக் கொழுத்த லாபஞ் சம்பாதித்தார்கள். தரகர்களின் ஆசைவார்த்தைகளை நம்பிக் கப்பலேறிச் சென்ற இந்தக் கூலிகள், கப்பல் பிரயாண காலத்திலும், சென்ற பிறகு தோட்டங்களிலும் அனுபவித்த கஷ்டங்களோ சொல்லி முடியாது. உதாரணமாக 1847-ஆம் வருஷத்திற்கும் 1857-ஆம் வருஷத்திற்கும் மத்தியில் ஹாங்காங் துறைமுகத்திலிருந்து க்யூபா தீவுக்கு மட்டும் ஏற்றுமதி செய்யப்பட்ட 23,928 கூலிகளில் சுமார் 3,000 பேர், கப்பல் பிரயாணத்தின்போதே இறந்து போய்விட்டனர். தங்களுடைய பிரஜைகளை, அவர்களுடைய வறிய நிலையை ஆதாரமாகக் கொண்டு, அந்நியர்கள் துர் உபயோகப்படுத்தி வருவது சீன அரசாங் கத்தின் மனத்தில் உறுத்திக் கொண்டேயிருந்தது.
சீனாவின் தெற்குக் கடலோரங்களில் கொள்ளைக் கூட்டத் தினர் மலிந்திருந்தனர். இவர்கள் வருகிற, போகிற சிறிய கப்பல்களை வழிமறித்துக் கொள்ளையடித்து அதிகமான சேதத்தை உண்டு பண்ணி வந்தனர். சீனக் கப்பல் வியாபாரிகளுக்கு இது பெரிய தொந்திரவா யிருந்தது. இவர்களுக்கு போர்த்துகேசியர் முதலாயின அந்நியர்கள், தங்களுடைய ஆயுத பலத்தின் மூலம் பாது காப்புக் கொடுத்து, அதற்கென்று ஒரு கட்டணம் வசூலித்துக் கொண்டு வந்தார்கள். சீனக் கப்பல் வியாபாரமானது, இந்த அந்நியர்களின் தயவைப் பொறுத்த விஷய மாகிவிட்டது. இவர்கள் இஷ்டப்படி கட்டணம் வசூலித்துக் கொள்ளை லாபம் சம்பாதித்தார்கள். கடல் கொள்ளைக்காரர்களை விரட்டியடிக்காமல் அவர்களுக்கு ஆதரவு காட்டுவதுபோலவே இவர்களுடைய செயல் இருந்தது. சீன அரசாங்கத்தின் மனம் புண்படாமலிருக்குமா?
இவையெல்லாம் சேர்ந்து அந்நியர்கள் மீது ஒரு வெறுப்பை வளர்த்தன. வேண்டாத விருந்தினனாக வந்து, காலையும் ஊன்றிக் கொண்டுவிட்ட அந்நியனை எவ்வளவு தூரம் ஒதுக்கிவைக்க வேண்டுமோ அவ்வ ளவு தூரத்தில் ஒதுக்கிவைப்பதே நல்லதென்று சீனப் பொதுஜனங்கள் கருதினார்கள். சீன அரசாங்க அதிகாரிகளோ, உடன் படிக்கைகள் நிறைவேற்றப்பட்டாலென்ன, அவற்றில் கையெழுத் திட்டாலென்ன, அவைகளின் ஷரத்துக்களை அப்படியே அனுஷ்டிக்க வேண்டுமென்பது என்ன கட்டாயம் என்கிற மனப் போக்கில் இருந்தனர். ஆனால் அந்நியர்களோ, நான்கிங் உடன்படிக்கை ஷரத்துக்களை இன்னும் நன்றாக வலுப்படுத்திக் கொண்டு, சீனாவிலேயே சாசுவதமான உரிமை களைப் பெற வேண்டு மென்பதில் முனைந்திருந்தனர். உடன்படிக்கை களை அனுஷ்டானத்திற்குக் கொண்டு வருகிறபோதுதான் அவைகளின் குறைநிறைகள் தெரியும் என்கிற ஒரு முகாந்திரத்தை வைத்துக் கொண்டு, உடன்படிக்கை ஷரத்துகள் சரியாக நிறைவேற்றப்பட வில்லை யென்றும், சீன அரசாங்கத்தார் தங்களைச் சம அந்ததிலே வைத்து நடத்த வில்லை யென்றும், தங்களுடைய உரிமைகளையும் சலுகைகளையும் அனுபவிக் கிற விஷயத்தில் அநேக நிர்ப்பந் தங்களை உண்டுபண்ணி வருகிறார் களென்றும், ஏதேதோ புகார் களைக் கிளப்பிவிட்டுக் கொண்டேயிருந் தார்கள். இதற்குகேற்றாற் போல் நான்கிங் ஒப்பந்தப்படி, காண்டன் துறைமுகப்பட்டினம் இவர்களுடைய வியாபாரத்திற்குத் திறந்துவிடப்பட வேண்டுமல்லவா, அது திறக்கப்படவில்லை. காண்டன் வாசிகளின் எதிர்ப்பு இதற்கு முக்கிய காரணமாயிருந்தது. பிரிட்டிஷ் தானீகன், தன் பரிவார சகிதம் துறைமுகத்திற்குள் நுழைய முயன்று முடியாமல் திரும்பி விட்டான். தங்களுடைய சுயமரியாதைக்குப் பங்கம் ஏற்பட்டு விட்டதாகப் பிரிட்டிஷார் கருதினர். நான்கிங் உடன்படிக்கையை அனுஷ்டானத்திற்குக் கொண்டுவருகிற விஷயத்தில் சீன அரசாங்கம் தவறிவிட்டதாக அதன்மீது குறைகூறினர். 1844-ஆம் வருஷம் அமெரிக்காவும் பிரான்ஸும், சீனாவுடன் செய்து கொண்ட உடன்படிக்கை களில்1 பன்னிரண்டு வருஷங்களுக்குப் பிறகு இவை - இந்த உடன்படிக்கைகள் - திரும்பவும் பரிசீலனை செய்யப்பட வேண்டுமென்று ஒரு விதி சேர்க்கப்பட்டிருந்தது. ஒரு தேசத்தாருக்கு அளிக்கப்பட்ட சலுகை, மற்ற தேசத்தாருக்கும் முறையே அளிக்கப் பட வேண்டுமென்ற நியதிப்படி,2 தங்களுடைய உடன் படிக்கையும் இதே மாதிரி பரிசீலனை செய்யப்பட வேண்டுமென்று பிரிட்டிஷார் வற்புறுத்திக் கொண்டேயிருந் தனர்.
இங்ஙனம் இரு தரப்பார் மனத்திலும் துவேஷம் புகைந்து கொண்டே யிருந்தது. இது நெருப்பாகப் பற்றுவதற்கு ஒரு சிறு பொறியே தேவையா யிருந்தது. இப்படிப்பட்ட சிறுபொறிகள் பிரான்ஸுக்கும் பிரிட்டனுக்கும் முறையே அகப்பட்டன.
நான்கிங் உடன்படிக்கைக்குப் பிறகு பொதுவாகவே அந்நி யர்கள், சீன அதிகாரிகளை மதியாமலும், சீன சட்ட திட்டங்களை லட்சியப்படுத் தாமலும் நடந்துவந்தார்கள். அந்நியர்கள், தங்கள் விவகாரங்களைத் துறைமுகப் பிரதேசங்கள் அளவோடு வரை யறுத்துக்கொள்ள வேண்டு மென்றல்லவோ மேற்படி நான்கிங் ஒப்பந்தம் கூறியது? இதைமீறி ஒரு பிரெஞ்சுப் பாதிரி, உட்பிர தேசங்களிலே சென்று பிரசாரம் செய்யத் தொடங்கினான். அப் பொழுது தைப்பிங் கலகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிற காலம். பாதிரிமார்களுக்கும் இந்தக் கலகத்திற்கும் சம்பந்தம் உண்டு என்ற எண்ணம் சில சீன அதிகாரிகளுக்கு இருந்த தல்லவா? எப்படியோ, சீனாவின் துரதிருஷ்டவசமாக, இந்தப் பாதிரி சீன அதிகாரி யொருவனால் விசாரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டு விட்டான். அந்நியர்களின் விசேஷப் பிரதேச உரிமைக்குப் பங்கம் ஏற்பட்டு விட்டதென்ற கூக்குரலைக் கிளப்பிக் கொண்டு, பிரான், சீனாவைப் பழிவாங்கத் தீர்மானித்தது.
இதேமாதிரி பிரிட்டிஷாருக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. கள்ளச் சரக்குகளை ஏற்றிக்கொண்டு வருவதற்கு அனுகூலமா யிருக்கும் பொருட்டு, சில சீன வியாபாரிகள், தங்கள் கப்பல்களை, பிரிட்டிஷாருக்குச் சொந்தமான ஹாங்காங் தீவில் பதிவு செய்து கொண்டும், பிரிட்டிஷ் கொடியைப் போட்டுக்கொண்டும், துறைமுகங்களில் நுழைந்து தங்கள் சரக்குகளை இறக்குமதி செய்து விட்டுப் போய்க் கொண்டிருந்தனர். இப்படிப்பட்ட ஆரோ என்ற கப்பலொன்று (8-10-1856) காண்டன் துறைமுகத் தினருகே வந்து கொண்டிருந்தது. இதில் கள்ளச் சரக்கும் சில கடற் கொள்ளைக் காரர்களும் இருப்பதாகத் துறைமுக அதிகாரிகள் சந்தேகித்து இதனைப் பரிசோதனை செய்தனர்; மாலுமிகளிற் சிலரைக் கைதி யாக்கினர்; கப்பலின் மீது பறந்துகொண்டிருந்த பிரிட்டிஷ் கொடியைக் கீழே இறக்கிவிட்டனர். இது பிரிட்டிஷ் அதிகாரிகளுக்குக் கோபத்தை உண்டுபண்ணியது. கைது செய்யப்பட்டவரை உடனே தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும், கொடியை இறக்கியதற் காக உத்தியோக முறையில் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்றும் காண்டன் மாகாண அதிகாரிக்கு ஒரு தாக்கீது விடுத்தனர். அவன் சரியான பதில் சொல்லவில்லையென்ற காரணத்தைச் சொல்லிக் கொண்டு பொதுவாக காண்டன் நகரத்தின் மீது - சிறப்பாக மேற்படி மாகாண அதிகாரியின் மாளிகைமீது - தங்கள் கப்பல் பீரங்கிகளைத் திருப்பினர்.
பிரிட்டிஷாரின் இந்தப் போர் முழக்கத்தைக் கேட்ட காண்டன் வாசிகளுக்கு ஆத்திரமுண்டாயிற்று. கலகம் கிளம்பியது. கலகக்காரர் களிற் சிலர், அந்நியர்களுடைய வியாபார தலங் களைத் தீக்கிரை யாக்கினர்; இன்னும் பல சேதங்களை விளைவித் தனர். இதற்குப் பதிலாக பிரிட்டிஷ் படையினர், சீனர்களுடைய வாசதலங்களை அக்கினிக்கு அர்ப்பணஞ் செய்தனர். சீனர்களால் சேதமாக்கப்பட்ட பொருள்களில் பிரெஞ்சுக்காரருடையதும் சேர்ந்திருந்தன. இதற்குப் பரிகாரம் பெறுவதாகிற முகாந்திரத்தை வைத்துக்கொண்டு, பிரெஞ்சுக் கப்பற் படையொன்று காண்டன் துறைமுகத்தை நண்ணியது. கடைசியில் இரண்டு தேசத்துப் படை களும் வெற்றி முழக்கஞ் செய்துகொண்டு காண்டன் நகரத்திற்குள் (5-1-1858) பிரவேசித்தன. காண்டன் வாசிகள் காட்டிய எதிர்ப்பு பயனில்லாமற் போயிற்று. அந்நியப் படைகளின் வரவு குறித்து அசிரத்தையாயிருந்த மாகாண அதிகாரி, அந்த அந்நியர் களாலேயே கைது செய்யப்பட்டு கல்கத்தாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விட்டான்.
பிரெஞ்சுப் பாதிரியின் கொலை, ஆரோ சம்பவம் ஆகிய இரண்டும், சீன அரசாங்கத்திற்குப் புத்திபுகட்டுவதற்கு நல்ல வியாஜங்களாக அகப்பட்டன. இதற்குள் நான்கிங் உடன் படிக்கையைப் புனராலோசனை செய்து சரியான முறையில் ஒப்பந்தம் செய்துகொள்ளவும், இதற்காக பீகிங் அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தைகள் நடத்தவும், இங்கிலாந்தி லிருந்து லார்ட் எல்ஜினைத் தலைமையாகக் கொண்ட ஒரு பிரிட்டிஷ் தூது கோஷ்டியும் பிரான்ஸிலிருந்து க்ரோ பிரபுவைத் தலைமையாகக் கொண்ட ஒரு பிரெஞ்சு தூது கோஷ்டியும் முறையே காண்டன் நகரத்திற்கு வந்துசேர்ந்தன. ஏற்கனவே இந்த நகரம் பிரிட்டிஷ் - பிரெஞ்சுப் படைகளின் வசத்தில் இருந்தது. எவ்வளவு முன்னேற் பாடு! பிரிட்டிஷ் - பிரெஞ்சு பிரதிநிதிகளோடு, அமெரிக்காவின் பிரதிநிதியும், ருஷ்யாவின் பிரதிநிதியும் சேர்ந்துகொண்டு, நான்கிங் உடன்படிக்கையைப் பரிசீலனை செய்யவேண்டியதன் அவசியத்தை வற்புறுத்தி பீகிங் அரசாங்கத்திற்கு ஒரு தாக்கீது விடுத்தனர். இது விஷயத்தில் தாங்கள் நால்வரும் ஒரேவித அபிப்பிராயமுடையவர் களா யிருப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால் பீகிங் அதிகார வர்க்கத்தினரோ, காண்டன் மாகாண அதிகாரியோடு சமரஸப் பேச்சுகள் நடத்துமாறு திருப்பி பதில் சொல்லிவிட்டனர். நேசக் கட்சியினர் - அதாவது பிரிட்டிஷ் - பிரெஞ்சு - அமெரிக்க - ருஷ்யப் பிரதிநிதிகள் - இதைப் பொருட்படுத்தாமல் வடக்கு நோக்கிச் சென்று, யாங்க்ட்ஸீ நதியின் முகத்துவாரத்தில் இருக்கும் பைஹோ என்ற இடத்தை அடைந்தனர். இது சிஹ்லி மாகாண எல்லைக்குட் பட்டது. இதனால் இந்த மாகாண அதிகாரி, இவர்களோடு சமரஸம் பேசத் துவங்கினான். இவனுக்குச் சமரஸம் பேச அதிகாரமில்லை யென்று சொல்லிக்கொண்டு, நேசக்கட்சியினர், டீண்ட்ஸின் நகரத்திற்குத் தாங்கள் செல்ல விரும்புவதாகவும் (ஏனென்றால் இங்கிருந்துதான் பீகிங்குக்குப் போகவேண்டும்.) இடையில் தங்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாதிருக்கும் பொருட்டு, வழியி லிருக்கும் தக்கூ என்ற துறைமுகத்தி லிருக்கும் கோட்டை கொத்தளங்களைத் தங்கள் வசம் ஒப்புவிக்க வேண்டுமென்றும் கேட்டனர். இது மறுக்கப்பட்டது. உடனே அதனைத் தாக்கித் தங்கள் வசப்படுத்திக்கொண்டு மேலும் சென்று டீண்ட்ஸின் நகரத்தை அடைந்தனர். இது தெரிந்த பீகிங் அரசாங்கம், சமரஸம் பேச இரண்டு பிரதிநிதிகளை அனுப்பியது. சமரஸப் பேச்சுகள் பேசி ஒருவாறு சமாதானம் ஏற்பட்டது. ஒவ்வோர் அரசாங்கத்தாரும் (13-6-1858 - ல் ருஷ்யாவும், 18-6-1858-இல் அமெரிக்காவும், 26-6-1858-இல் பிரிட்டனும், 27-6-1858-இல் பிரான்ஸும் முறையே) சீனாவுடன் தனித்தனியாக ஒப்பந்தம் செய்து கொண்டனர். இதற்குத்தான் டீண்ட்ஸின் ஒப்பந்தம் என்று பெயர். இதன் முக்கிய அமிசங்கள் வருமாறு:
_1. அந்நிய நாட்டு தானீகர்கள், பீகிங் நகரத்தில் நிரந்தரமாக வசிப்பார்கள். இவர்களைத் தனக்குச் சமதையான அந்ததுடைய வர்களாக நடத்துவதோடு இவர்களுக்குப் போதிய பாதுகாப்பும் அளிப்பதாகச் சீன அரசாங்க உறுதிகூறுகிறது._
_2. கிறிதுவ தர்மத்தை உபதேசிக்கிறவர்களுக்கும் அந்த மதத்தை அனுஷ்டிப்பவர்களுக்கும் போதிய பாதுகாப்பு அளிப்பதாகவும், அவர்களுடைய விவகாரங்களில் தலையிடுவ தில்லையென்றும் சீன அரசாங்கம் உறுதி கூறுகிறது._
_3. அந்நிய நாட்டுப் பிரஜைகள், வியாபார நிமித்தமாகவோ வேறு காரணமாகவோ உள் நாட்டில் எங்குவேண்டுமானாலும், தக்க_ _அனுமதிச் சீட்டுடன் செல்லலாம். அவர்கள் யாராவது குற்றஞ் செய்தால் அவர்களை அவர்களுடைய நாட்டு தானீகர் வசம் ஒப்புவிப்பதாகச் சீன அரசாங்கம் உறுதி கூறுகிறது._
_4. யாங்க்ட்ஸீ நதியின் மூலமாக அந்நியர்கள் தங்கள் கப்பல் களைச் செலுத்திக்கொண்டு வியாபாரம் செய்யலாம். இன்னும் சில துறைமுகப்பட்டினங்களில் அந்நியர்கள் தாராளமாக வியாபரம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்._
_5. சீன அதிகார எல்லைக்குள் குற்றஞ்செய்கிற அந்நியப் பிரஜைகள், அந்தந்த அந்நிய நாட்டுச் சட்டப்படி தண்டிக்கப் பட வேண்டுமென்ற விசேஷப்பிரதேச உரிமையென்பது இன்னும் விரிவு செய்யப்பட்டது._
_6. ஒரு தேசத்திற்குக் காட்டப்படுகிற சலுகைகள், மற்றத் தேசங்களுக்கும் முறையாக உண்டு என்ற பிரிவும், வரிவிகிதங்களைத் தேவையான போது பரிசீலனை செய்கிற பிரிவும் இந்த ஒப்பந்தங் களில் இருந்தன._
இந்த டீண்ட்ஸின் ஒப்பந்தத்தின் விசேஷம் என்னவென்றால் அபினி வியாபாரம் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டதுதான். இதற்கு முக்கிய காரணர்களா யிருந்தவர் பிரிட்டிஷார். 133 பவுண்டு அபினிக்கு 45 டாலர் விகிதம் (சுமார் 70 ரூபாய்) இறக்குமதித் தீர்வை விதிக்கப்பட வேண்டுமென்று நிர்ணயிக்கப்பட்டது. இதற்குப் பிரிட்டிஷார் என்ன சமாதானம் கூறினரென்றால், சீன அரசாங்கம் அபினி இறக்குமதியைத் தடை செய்திருந்த போதிலும் அது கள்ளத் தனமாக வந்து கொண்டிருக்கிறது; வர வர அதிகப்பட்டும் வந்தி ருக்கிறது. அப்படியிருக்க, பிரிட்டிஷ் அதிகாரிகளும் சீன அரசாங் கத்தோடு சேர்ந்துகொண்டு, அபினி இறக்குமதி கூடாது என்று சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது? ஆகையால் அதனைப் பகிரங்கமாகவே இறக்குமதி செய்ய அனுமதித்து, அதற்கு ஒரு வரியையும் விதித்தால், அதன் விலை உயரும், அதிக விலை கொடுத்து வாங்கி உபயோகிப்பவர் குறைந்து விடுவர். இதே சமயத்தில் அரசாங் கத்திற்கு நிரந்தரமாக வருமானமும் கிடைத்துக் கொண்டிருக்கும். ஆக, சீன அரசாங்கத்தின் நன்மையை முன்னிட்டுத்தான், இந்த அபினி இறக்குமதியைச் சட்டரீதியாக அங்கீகரிக்க ஏற்பாடு செய்தனர் பிரிட்டிஷார்! சீன அரசாங்கத்தினரும் வேறு வழியின்றி, இந்த நன்மையை ஏற்றுக்கொண்டனர். இது முதற் கொண்டு, வெளி நாட்டிலிருந்து அபினி இறக்குமதியாகி வந்ததோடு, வெளி நாட்டுச் சரக்குக்குப்பதில் சுதேசி சரக்கையே உபயோகிக்கலாமென்ற முறையில் சீனாவிலும் கஞ்சாச் செடி பயிராகத் தொடங்கியது! இதற்குப்பிறகு சுமார் ஐம்பது வருஷகாலம், எவ்வித தங்கு தடையுமின்றி, இந்த வியாபாரத்தைப் பிரிட்டிஷார் உற்சாகத்தோடு நடத்தி வந்தனர். 1906-ஆம் வருஷம், இந்த அபினி இறக்குமதி நிறுத்தப்பட வேண்டுமென்று கிளர்ச்சி ஏற்பட்ட காலத்தில் ஒரு கணக்கு எடுத்துப் பார்க்கிறபோது, ஜனத்தொகையில் சுமார் நான்கில் ஒரு பங்கினர் அபினிப் பழக்கத்திற்கு இரையாகியிருந் தார்கள்! எந்தச் சரக்கை வேண்டாமென்று சீன அரசாங்கம் மனப்பூர்வமாக வெறுத்து, அதற்காகக் கடுமையான நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டதோ அந்தச் சரக்கை - அபினியை - அதன் மீது மிகுந்த ராஜதந்திரத்துடன் திணித்துவிட்டதுதான் இந்த டீண்ட்ஸின் ஒப்பந்தத்திற்குச் சிகரம் போன்றது!
டீண்ட்ஸின் ஒப்பந்தம் கையெழுத்திடப் பெற்றது. ஆனால் இது பீகிங்கில் ஊர்ஜிதம் பெறவேண்டியிருந்தது. இதற்காக, ருஷ்யப் பிரதிநிதி மட்டும் முன்கூட்டியே தரைமார்க்கமாக பீகிங்குக்குச் சென்று தன்காரியத்தை முடித்துக் கொண்டு விட்டான். மற்ற மூன்று நாட்டுப் பிரதிநிதிகளும், தங்கள் தங்கள் போர்க் கப்பல்களில் ஆற்று மார்க்கமாகவே செல்வதென்று தீர்மானித்தார்கள். இதற்குச் சீன அதிகாரிகள் சம்மதப்படவில்லை. வேறு வழியில் பீகிங்குக்குச் செல்லு மாறு கூறினர். இது காரணமாக இரு தரப்பாருக்கும் சண்டை நடை பெற்றது. சீனர்கள் வெற்றியடைந்தனர். நேசக் கட்சியினரின் நான்கு கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. எனவே, இவர்கள் - நேசக் கட்சியினர் - ஷாங்காய்க்குத் திரும்பிவந்து, அங்கு இன்னும் அதிக படைகளைச் சேர்த்துக் கொண்டு மீண்டும் டீண்ட்ஸின் வழியாக பீகிங்குக்குச் சென்றனர்; நகரத்தையும் கைப்பற்றிக் கொண்டனர். சீனப் படைகள் இவர்களை எதிர்க்க முடியாமல் பின்வாங்கின. இப்படிப் பின் வாங்குகிறபோது பிரிட்டிஷ் தூதனாகச் சென்ற லார்ட் எல்ஜினின் அந்தரங்கக் காரியதரிசி உள்பட அந்நியர் சிலரைக் கைதியாக்கிக் கொண்டு சென்றன. இவர்கள் கொடுமை யாக நடத்தப் பட்டார்களென்பதைக் காரணமாக வைத்துக் கொண்டு லார்ட் எல்ஜின், பீகிங்குக்கு ஐந்து மைல் இப்பாலுள்ள சக்ரவர்த்தியின் கோடை கால அரண்மனையைச் சுட்டெரித்து விடும்படி உத்திரவிட்டான். பிரிட்டிஷ் - பிரெஞ்சுப் படைகள், நகரத்தை வேறே கொள்ளையிடத் துவங்கிவிட்டன. சக்ரவர்த்தி, தன் குடும்பத்துடன் வடக்கே ஜிஹோல் மாகாணத்திற்கு ஓடிவிட்டான். சீன அரசாங்கம் எந்த விதமான நிபந்தனைகளுக்கும் இணங்கத் தயாராயிருந்தது. இந்த நிலைமையில் இருசாராருக்கும் - அதாவது மஞ்சூ அரசாங்கத்தாருக்கும் நேசக் கட்சியினருக்கும் - மத்தியதம் செய்து வைப்பதாக ருஷ்ய அரசாங்கத்தின் பிரதிநிதி முன் வந்தான். என்ன அக்கரை!
கடைசியில் சமாதான ஒப்பந்தம் 24-10-1860-இல் பிரிட்ட னுடனும், மறுநாள் பிரான்ஸுடனும் நிறைவேறியது. இதற்கே பீகிங் ஒப்பந்தம் என்று பெயர். இதன் படி,
_1. ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட டீண்ட்ஸின் ஒப்பந்தம் ஊர்ஜிதம் செய்யப்பட்டது._
_2. ஹாங்காங்குக்கு எதிரேயுள்ள கௌலூன் தீபகற்பம், பிரிட்டிஷாருக்குக் குத்தகைப் பிரதேசமாகப் போய்ச் சேர்ந்தது._
_3. டீண்ட்ஸின் உடன்படிக்கையில் குறிப்பிடப் பெற்ற துறை முகப் பட்டினங்களோடு டீண்ட்ஸினையும் சேர்த்து மொத்தம் பதினோரு துறைமுகங்கள் பரிட்டிஷ் - பிரெஞ்சு வியாபாரத்திற்குத் திறக்கப்பெற்றன._
_4. பிரிட்டிஷ் - பிரெஞ்சு வியாபாரிகள் கொண்டுவரும் சரக்கு களுக்கு விதிக்கப்பட்டு வந்த இறக்குமதித் தீர்வை குறைக்கப் பெற்றது._
_5. சீனர்கள், அந்நியர்களுடைய சேவையில் அமரக்கூடா தென்று இதுகாறும் தடுக்கப் பட்டிருந்தனர். இந்தத் தடை ரத்து செய்யப்பட்டு சீனர்கள் அந்நியர்களின் கீழ்வேலை பாக்க அனுமதிக்கப்பட்டனர்._
_6. சீனக்கூலிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்ததைச் சீன அரசாங்கம் தடுத்திருந்தது. அந்தத் தடையை நீக்கி கூலி ஏற்றுமதியைச் சட்ட ரீதியாகச் செய்தனர்._
_7. பிரிட்டிஷாருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் மஞ்சூ அரசாங்கம் நஷ்ட ஈடாக ஒரு தொகை கொடுக்கவேண்டு மென்று நிர்ணயிக்கப்பட்டது._
_8. கிறிதுவப் பாதிரிமார்கள், தங்களுடைய தேவாலயங்கள் முதலியவைகளுக்காக நிலம், சொத்து முதலியன வாங்கிக் கொள்வ தற்கு அனுமதிக்கப் பட்டார்கள்._
இந்த பீகிங் ஒப்பந்தத்திற்கு ருஷ்யாவின் பிரதிநிதி மத்தியதம் செய்துவைத் தானல்லவா? அவன் தன் மத்தியதத்திற்குக் கூலி விரும்பினான்! யாரிடமிருந்து? அதிக சாதகங்கள் பெற்ற நேச கட்சியாரிடமிருந்தல்ல; நீட்டிய காகிதத்திலே கையெழுத்துப் போடுகின்ற நிலைமைக்கு வந்திருந்த சீன அரசாங்கத்திட மிருந்து! இவனுடைய உருட்டல் மிரட்டல் பேரில், உஸுரி நதிக்குக் கிழக்கேயுள்ள பிரதேசமும் ஆமூர் மாகாணமும் ருஷ்யாவுக்கு (1861 - ஆம் வருஷம் நவம்பர் மாதம்) அளிக்கப்பட்டது. இந்த வருஷத்தில் தான் வ்ளாடிவாடாக் நகரம் காணப்பட்டது கூட.
டீண்ட்ஸின் - பீகிங் ஒப்பந்தங்களுக்குப் பிறகு, பொதுவாக அந்நிய வல்லரசுகளுக்கு, சீன ராஜதந்திர மேடையில் எந்த ஒரு சிறிய சம்பவத்தையும் மிகைப்படுத்திக் காட்டினால் அதிலிருந்து அதிக மான சாதகங்களையடையக் கூடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. இவைகளுக் கனுகூலமாகவே அவ்வப்பொழுது சிறுசிறு சம்பவங்களும் நடைபெற்றுக் கொண்டு வந்தன. இதுதான் ஆச்சரியம்.
அந்நியர்களுடைய ஆக்கிரமிப்புக்கு முன்னணிப் படையினர் போல் சென்ற கிறிதுவப் பாதிரிமார்கள், மேற்படி ஒப்பந்தங் களிலுள்ள ஷரத்துக் களைத் தங்களுக்குப் பாதுகாப்பு அரண்களாக வைத்துக்கொண்டு, சீனாவின் உட்பிரதேசங்களில் நுழைந்து முன்னைக்காட்டிலும் அதிதீவிர மாகக் கிறிதுவ மதத்தைப் பிரசாரம் செய்துவந்தார்கள். இவர்களுடைய பிரசாரத்தில், சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், தன் முனைப்பு இருந்தது. சீனர்களைத் தாழ்வாகப் பேசியும் நடத்தியும் வந்தார்கள் தாங்கள் மேலான நாகரிகத்தின் பிரதிநிதிகளென்றும், சீனர்களை நாகரிகப் படுத்துவதற்காகவே தாங்கள் வந்திருப்பதாகவும் இவர்கள் பேசிவந் தார்கள். இவர்கள், பலவந்தமாக ஜனங்களைக் கிறிதுவ மதத்தில் சேர்த்து வருகிறார்களென்ற எண்ணம் சீனர்களின் மனதில் உண்டாகிவிட்டது. ஏற்கனவே அந்நியர்கள்மீது ஒருவிதமான துவேஷம் இருந்துகொண்டு வந்ததல்லவா? இவையெல்லாம் திரண்டு டீண்ட்ஸின் நகரத்தில் 1870-ஆம் வருஷம் ஒரு கலகமாக உருப்பெற்று, பின்னர் சீனாவின் பல பாகங்களுக்கும் பரவியது. கிறிதுவப் பாதிரிமார்களின் சொத்துக்களுக்கு அநேக இடங்களில் சேதம் உண்டாயிற்று; அந்நியரிற் சிலர் உயிரிழந்தனர். ஆனால் குற்றவாளிகளாகக் கருதப்பட்ட சீனர் பலர், மரண தண்டனை யடைந்தனர். பிரிட்டிஷ் - பிரெஞ்சு அதிகாரிகள் இதில் திருப்திய டையவில்லை. சீன அரசாங்கத்தை, நஷ்டஈடு கொடுக்க வேண்டு மென்று வற்புறுத்தினர். பிரெஞ்சு தானாதிபதியின் காரியால யத்துச் சிப்பந்திகள் சிலருடைய முரட்டுத்தனமான நடவடிக்கைகள் காரணமாகவே இந்தக் கலகம் முதலில் ஆரம்பித்ததென்றாலும், சீன அரசாங்கத்திடமிருந்து மன்னிப்பு, நஷ்டஈடு முதலியன கேட்கிற விஷயத்தில் எல்லா ஐரோப்பிய அரசாங்கப் பிரதிநிதிகளும் ஒன்று சேர்ந்து கொண்டனர். சுமார் பத்து லட்சம் ரூபாய் நஷ்டஈடாகக் கொடுத்தது, மன்னிப்பும் கேட்டுக்கொண்டது சீன அரசாங்கம். இந்தத் தொகையைக் கொண்டு பிரெஞ்சுக்காரர்கள், சீனர்களை வஞ்சம் தீர்ப்பது போல, எந்தெந்த தலங்களை அவர்கள் புனித மாகக் கருதிக் கொண்டிருந்தார்களோ அந்தந்த தலங்களில் கிறிதுவக் கோயில்களைக் கட்டினர்.
ஆனால் பிரெஞ்சுக்காரரோ, மற்ற அந்நியரோ இந்த மன்னிப்பு, நஷ்டஈடு முதலியவைகளோடும் திருப்தியடையவில்லை. அதுதான் ஆச்சரியம். சீனாவின் கொழுப்பை அடக்க வேண்டுமென்ற தோரணையில் தான் பேசிவந்தனர். தங்களுடைய உரிமைகளை இன்னும் அதிகமாக வலுப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும், இதுகாறுமுள்ள ஒப்பந்தங் களின் ஷரத்துக்களை மாற்றியமைக்க வேண்டுமென்றும் கூச்சல்போட்டு வந்தனர். ஒரு பிரெஞ்சுக்காரன் கூறினான்: பலவானே நியாயவான் என்கிற வாசகத்தைச் சீனா விஷயத்தில் மிகவும் கண்டிப்பாக அனுஷ்டிக்க வேண்டும். அப்படிச் செய்யமுடியவில்லையென்றால், மூட்டை முடிச்சுகளுடன் ஊருக்குத் திரும்பி விடுவோம். ஓர் ஆங்கிலேயன் சொன்னான்: பாதிரி மார்களை முன்னணிப் படையாகக் கொண்டுள்ள அந்நியர்களுக்கு விரோதமாகச் சீனர்கள் தொடர்ந்து நடத்திவரும் சண்டைக்குச் சரியான தண்டனை பெறாமல் லோசாகத் தப்பித்துக் கொண்டார்கள். 1870-ஆம் வருஷத்தில் பிரெஞ்சு தானாதிபதி, சீனர்கள் கொடுத்த குற்றவாளிகளின் தலைகள், நஷ்டஈட்டுத் தொகை ஆகியவைகளை மறுத்துவிட்டு, பைஹோ துறைமுகத் திற்குப் பிரெஞ்சுக் கப்பற்படை வருகிறவரையில் காத்திருந்தால், எந்த இடத்தில் கலகம் நடைபெற்றதோ அந்த இடத்தைச் சுட் டெரித்துத் தரைமட்டமாக்கி, பிரெஞ்சுக்காரர் வசிப்பதற்கான கன்ஸெஷன் பிரதேசத்திற்கென்று பறிமுதல் செய்திருந்தால், சீன அரசாங்கம் இந்த மாதிரி மற்றொரு கலகம் வராதபடி ஜாக்கிரதை யுடனிருக்கும் என்பது ஓர் அமெரிக்கனுடைய அபிப்பிராயம்.1
பிரிட்டிஷார் சம்பந்தப்பட்ட மற்றொரு சம்பவம் 1875-ஆம் வருஷம் நடைபெற்றது. அப்பொழுது, பர்மாவின் வட பிரதேசம் பிரிட்டிஷாரின் ஆதீனத்துக்குட்பட்டிருந்தது. இதனால் பிரிட் டிஷார், தங்களுடைய எல்லையை, சீனாவின் மேற்கிலுள்ள யுன்னான் மாகாணம் வரையில் தள்ளிப்போட்டனர். தள்ளிப் போட்டதோடல்லாமல், புதிய எல்லைப் பிரதேசத்தைப் பரிசீலனை செய்து பார்க்க ஒரு பிரதிநிதி கோஷ்டியை அனுப்பினர். இதற்கு உதவியாக, பீகிங் நகரத்திலிருந்து அனுப்பப்பெற்ற ரேமண்ட் மார்க்கேரி2 என்ற ஒரு துவிபாஷியும் சில சீன ஆட்களும் இருந் தார்கள். இவர்கள் யுன்னான் மாகாணத்தில் வந்து கொண்டிருக் கையில் அங்கு யாரோ சில சீனர்கள், இந்த மார்க்கேரியையும் இவனுடைய ஆட்களையும் கொலை செய்துவிட்டார்கள். இது போதுமல்லவா சீன அரசாங்கத்தை மிரட்டி இன்னும் சில உரிமைகளைப் பறிப்பதற்கு? மார்க்கேரி கொலைக்குப் பரிகாரம் தேடிக் கொடுக்கும்படி பீகிங்கிலுள்ள பிரிட்டிஷ் தானாதிபதி, சீன அரசாங்கத்திற்குத் தாக்கீது விடுத்தான். சுமார் ஒன்றரை வருஷ காலம் இது சம்பந்தமாகப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. கடைசியில் 13-9-1876-ல் சேபூ என்ற இடத்தில் ஓர் ஒப்பந்தம் நிறை வேறியது. இதற்கே சேபூ ஒப்பந்தம்3 என்று பெயர். இதன் சாரம் வருமாறு:
_1. பர்மாவுக்கும் யுன்னானுக்கும் சரியான முறையில் வியா பாரம் நடைபெறுவதற்கான திட்டங்கள் வகுக்கப்படவேண்டும். இந்தியாவி லிருந்து மற்றொரு பிரதிநிதி கோஷ்டி யுன்னானுக்கு வருவதற்கும் இன்னும் ஐந்து வருஷம் யுன்னானில் பிரிட்டிஷ் உத்தியோகதர்கள் தங்கியிருப்பதற்கும் சீன அரசாங்கம் சம்மதிக்கிறது._
_2. கொலை செய்யப்பட்டவர்களுக்கு நஷ்டஈடாகவும், தூது கோஷ்டி சம்பந்தமான மற்றச் செலவுகளுக்காகவும் சுமார் பத்து லட்சம் ரூபாய் சீன அரசாங்கம் கொடுக்கவேண்டும்._
_3. பிரிட்டிஷ் அரசாங்கத்தினிடம் மன்னிப்புக் கோரி ஒரு கடிதத்தை, சீனப் பிரதிநிதி கோஷ்டி யொன்று லண்டனுக்கு எடுத்துச் செல்லவேண்டும்._
_4. அந்நிய அரசாங்கத்துப் பிரதிநிதிகளை எப்படி எப்படி வரவேற்று மரியாதையாக நடத்த வேண்டுமென்பது குறித்துச் சில ஒழுங்கு முறைகள் வகுப்பட வேண்டும்._
_5. அந்நியர்களுடைய வியாபாரத்திற்கென்று இன்னும் புதிதாக நான்கு துறைமுகங்கள் திறந்துவிடப்பட வேண்டும். இவை தவிர, யாங்க்ட்ஸீ ஆற்று மார்க்கத்தில் அந்நியர்களுடைய வியா பாரக் கப்பல்கள் தங்கிச் செல்வதற்கென்று ஆறு துறைமுகங்களில் இடங்கொடுக்க வேண்டும்._
_இந்த சேபூ ஒப்பந்தத்திற்குப் பின்னர், மற்ற ஐரோப்பிய வல்லரசு களிற் சில, சீனாவைப் பல மூலைகளிலிருந்தும் நெருக்கி லாபமடைந்தன. சீனாவின் வடமேற் கெல்லையில் தோன்றிய ஒரு கலகத்தை அடக்குவதாகச் சொல்லிக் கொண்டு, ருஷ்யா, அந்தப் பிரதேசத்தை ஆக்ரமித்துக் கொண்டது; தனக்கு நஷ்ட ஈடாக ஒரு பெருந்தொகை கொடுத்தாலன்றி, தான் அந்த இடத்தை விட்டு நகர முடியாது என்று கூறியது. கடைசியில் சீனா நஷ்ட ஈடாக ஒரு பெருந் தொகையையும், எல்லைப்புறத்தில் வியாபாரம் நடை பெறு வதற்கான சில சலுகைகளையும் கொடுத்து (1881) ருஷ்யாவைத் திருப்தி செய்தது. சீனாவின் ஆதிக்கத்துக்குட்பட்டிருந்த அன்னாம் பிரதேசத்தை பிரான் ஆக்ரமித்துக் கொண்டுவிட்டது (1884)._
_சீனாவின் இந்தக் காலத்து நிலையை (1883) லீ ஹுங் சாங் என்ற சீனப் பிரபலதன் பின்வருமாறு வருணிக்கிறான்:-_
_சீனாவுக்கு நண்பர்கள் என்று சொல்லக்கூடியவர் யாருமே இல்லை. ருஷ்யா, வடக்கேயிருந்துகொண்டு அதனை நெருக்கி வந்தது. அதன் ஆதிக்கத்துக்குட்பட்ட வாடோவின் மீது ஜெர்மனி படையெடுத்து வந்தது. ஜப்பான், லூச்சூ தீவுகளைச் சுவாதீனப் படுத்திக்கொண்டு விட்டது. இங்கிலாந்து, ஹாங்காங்கைத் தன் பிடியிலே வைத்துக் கொண்டு, அதன் மூலமாகச் சீன மக்களுக்கு வறுமையையும் அழிவையையும் தேடித் தருகிற அபினியைத் திணித்துவந்தது. சீன ஏகாதிபத்தியத்தைத் துண்டு துணுக்கு களாக்கிவிட பிரான், ஒரு பெரும் படையை அனுப்பியது. அமெரிக்கா தன்னுடைய நாட்டெல்லையில் சீன மக்களுக்கு உரிமையில்லை யென்று ஒரு சட்டம் பிறப்பித்தது.1_
_இங்ஙனம் சீனாவின் பலவீனத்தை உபயோகித்துக் கொள்கிற முறையில், அந்நியர்கள், அநீதமான உடன்படிக்கைகளை நிறை வேற்றிக் கொண்டு, பெருவாரியான தொகைகளை நஷ்டஈடாக வசூலித்துக் கொண்டு, இவைகளுக்குப் பிற்காலத்தில் எவ்வளவு நொண்டிச் சமாதானங்கள் சொல்லி வந்தார்களாயினும்2 இவைகளின் மூலமாகச் சீனர்களின் துவேஷத்தைச் சம்பாதித்துக் கொண்டு விட்டார்கள்; இதன் பிற்காலத் தோற்றந்தான் பாக்ஸர் கலகம்._
கீழ் நாட்டில் ஏகாதிபத்தியச் சூரியன்
ஜப்பானுக்கு நிப்பன் என்ற பெயருண்டு. சீனர்கள் வைத்த பெயர்தான் இது. நிப்பன் என்றால் உதய சூரியன் என்று அர்த்தம். சீனாவுக்குக் கீழக்கே ஜப்பான் இருக்கிறபடியால், காலைச் சூரியன் இந்தத் தீவிலிருந்தே உதிப்பதுபோல முற்காலத்துச் சீனர்களுக்குத் தோன்றியது. இதனாலேயே உதய சூரியன் உதிக்கிற நாடு என்று பொருள்பட நிப்பன் என்ற பெயரால், தங்களுக்குக் கிழக்கேயுள்ள தீவுத்தொகுதியை அழைத்தனர்.
ஜப்பானுடைய எழுத்து முதல் ஓவியம் வரையில், தொழில் பயிற்சி முதல் மத அனுஷ்டானம் வரையில் எல்லாம் சீனாவிட மிருந்து இரவல் வாங்கியதுதான். இரவல் வாங்கி அதனை அப்படியே நகல் செய்து தங்களுடையதாக்கிக்கொள்கிற சக்தி ஜப்பானியர் களுக்குப் பரம்பரையாகவே உண்டு. இந்தச் சக்தியை இப்பொழுது அது மேனாட்டாரிடமே பிரயோகித்து வருகிறது. சீனாவிடமிருந்து கற்ற பாடத்தைச் சீனாவுக்கே திருப்பிப் படித்துக் காட்டியதுபோல, இப்பொழுது மேனாட்டாருக்கே திருப்பிக் கற்பிக்கிறதென்றால் அதில் ஆச்சரியமே யில்லை. சீனாவில் ஜப்பான் செய்து வருகிற காரியங்களின் பொறுப் பனைத்தும், கடைசியில், அதனுடைய வெள்ளைக்கார ஆசாரியார் களையே போய்ச் சேரும்1 என்று பெர்ட்ராண்ட் ரஸல் கூறுகிறா னென்றால், அஃது உண்மையை அழகு படுத்திக் கூறியதாகுமே தவிர வேறொன்று மில்லை.
கி.பி. பதின்மூன்றாவது நூற்றாண்டுவரை, சீனாவுக்கும் ஜப்பானுக்கும் அடிக்கடி தொடர்புகள் இருந்து கொண்டிருந்தன. யுத்தகளத் திலும் சந்தித்தன; கலைக் கோயிலிலும் கலந்து கைதொழு தன. பதின்மூன்றாவது நூற்றாண்டில் சீனாவை ஆண்டு வந்த மங்கோலிய மன்னனான குப்ளாய்கான், ஜப்பானையும் தன்னுடைய ஏகாதிபத்தியத் தோடு சேர்த்துக்கொள்ள முயன்றான். ஆனால் வெற்றி பெறவில்லை. இதற்குப் பிறகு சீனாவுக்கும் ஜப்பானுக்கும் அதிக மான தொடர்புகள் இருக்கவில்லை. ஜப்பானியக் கடற் கொள்ளைக் காரர்கள் அவ்வப்பொழுது சீனக் கடலோரப் பிரதேசங்களுக்கு வந்து கொள்ளையடிப்பதும், அவர் களைச் சீன அதிகாரிகள் விரட்டி யடிப்பதும் வழக்கமாக நடைபெற்று வந்தன. பின்னர் பதினாறாவது நூற்றாண்டில் ஜப்பானியப் பிரதம மந்திரியான ஹிதெயோஷி என்பவன், உலகத்தையெல்லாம் வெற்றி கொள்ள வேண்டுமென்ற பேராசைகொண்டு, சீனாவின் மீது தன் பார்வையைச் செலுத்தினான். இதற்கு முதலில் கொரியாவைச் சுவாதீனப் படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாய் இருந்தது. ஏனென்றால் அப்பொழுது கொரியா, சீனாவின் ஆதிக்கத்துக் குட்பட்டிருந்தது. மற்றும், காலை ஊன்றிக் கொண்டு, சீனாவின் மீது பாய்வதற்கு அஃதொரு சிறந்த படிக்கல் மாதிரியாகவும் இருந்தது. இந்த நோக்கத்துடன் 1592-ஆம் வருஷம், இரண்டு லட்சம் பேரைக் கொண்ட ஒரு பெரும் படையை கொரியாவுக்கு அனுப்பினான். அப்பொழுது சீனாவில் மிங் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலம். ஹிதெயோஷியின் படை களை எதிர்க்க, சீனாவிலிருந்து ஏராளமான துருப்புகள் கொரியா வுக்குச் சென்றன. ஆக இரண்டு நாடுகளுக்கும் மத்தியில் கொரியா யுத்த பூமி யாகியது. பிற்காலத்திலே கூட இந்தத் தர்ம சங்கடமான நிலைமையில் தான் கொரியா அடிக்கடி அகப்பட்டுக்கொண்டு தத்தளித்து வந்திருக்கிறது. உலகத்தில் சில நாடுகளுக்கு இந்தமாதிரி யான விதியே லபிக்கிறது போலும்! ஐரோப்பாவில் பெல்ஜியத்தைப் போல் ஆசியாவில் கொரியா! ஹிதெயோஷியின் படையெடுப்பு, கோரிய பலனைக் கொடுக்கவில்லை. அவனே 1598-ஆம் வருஷம் இறந்து விட்டான். கொரியா, கஷ்டப்பட்டதும் நஷ்டப்பட்டதுமே மிச்சம். ஆனால் ஹிதெயோஷியின் இந்தப் படை யெடுப்பானது, சீனர்களுக்கும் கொரியர்களுக்கு முள்ள நட்பை வலுப்படுத்தியது. இப்பொழுது நடைபெறுகிற சீன - ஜப்பானிய யுத்தத்திலும், சீனர் களும் கொரியர்களும் தோளோடு தோள் சேர்ந்து சண்டை போடு கிறார்கள். இதனை, ஆபத்துக் காலத்தில் ஏற்பட்ட சிநேகம் என்று லேசாகச் சொல்லி விடக்கூடாது.
இந்த ஹிதெயோஷியின் காலத்தில் ஜப்பானுடைய வெளி நாட்டுச் சம்பந்தத்திலும் ஒரு மாற்றம் ஏற்பட்டது. சீனாவில் கிறிதுவப் பாதிரிமார்கள் எப்பொழுது நுழைந்தார்களோ ஏறக் குறைய அதே காலத்தில் ஜப்பானுக்குள்ளும் நுழைந்து பிரசாரம் செய்துவந்தார்கள். இவர்களுக்கு முதலில் ஜப்பானியர்கள் எதிர்ப்புக் காட்டவில்லை; ஆதரவும் கொடுத்துவந்தார்கள். ஆனால் இந்தப் பாதிரிமார்கள் வரவர ஜப்பானின் உள்நாட்டு அரசியல் விவகாரங் களிலே தலையிட ஆரம்பித்தார்கள்; தாங்கள் எந்த நாட்டின் பிரதி நிதியாக வந்திருக்கிறார்களோ அந்த நாட்டின் ஏகாதிபத்திய ஆசைக்கு ஜப்பானை இரையாக்க அடிகோலிக் கொண்டு வந்தார்கள். பார்த்தான் ஹிதெயோஷி. இந்த ஆபத்தை முளையிலேயே கிள்ளிவிடவேண்டுமென்று தீர்மானித்து, பாதிரிமார்களை நாட்டைவிட்டு வெளியேற்றிவிட்டான்; இவர்களால் மதமாற்றப் பட்ட ஜப்பானியர்களுக்கும் அதிக சங்கடங்களை உண்டு பண்ணினான். இவனுக்குப் பின்னால் அதிகார பதவிக்கு வந்தவனும், ஜப்பானியக் கிறிதுவர்களை அநேக தொந்திரவுகளுக்குட் படுத்தினான். 1637-ஆம் வருஷம் ஒரு பெரிய கலகம் கூடக் கிளம்பி விட்டது. ஆபத்தை வருவித்துக் கொண்டு பிறகு அதைச் சமாளிக்க முயலுவானேன் என்று நினைத்து, இந்த ஆபத்தையே வர வொட்டாதபடி தடுத்து விடுவதென்று ஜப்பான் தீர்மானித்தது. அந்நியர் யாரையும் தனது எல்லைக்குள் வரவொட்டாமல் தடுத்து விட்டது. இதற்குப் பிறகு உலக ஆசைகளைத் துறந்த ஒரு துறவி வாயிற் கதவைத் தாழ்ப்பாளிட்டுக்கொண்டு மடத்துக் குள்ளே சென்று விடுவதுபோல், தன்னை உள்ளுக்கு இழுத்துக் கொண்டு விட்டது. சுமார் இருநூறு வருஷகாலம் இப்படித் தனிப்பட்ட வாழ்க்கையை நடத்திக்கொண்டு அதில் திருப்தியடைந்திருந்தது. அரசனுக்கும் குடிகளுக்கும் சம்பந்தமில்லாத ஓர் ஆட்சிமுறை இந்தக் காலத்தில் இங்கே நடந்துவந்தது. படைபலமுடைய ஒருசில நிலச்சுவான்தார்களின் வசத்திலேயே அரசாங்க நிருவாகம் இருந்தது. இவர்களெல்லோருக்கும் மேற்பட்டவன் ஷோகுன். ஷோகுன் என்பது பட்டப் பெயர். மாபெருந் தலைவன் என்பதே இதன் பொருள். அரசர்கள், பரம்பரை பாத்தியதை கொண்டாடிக் கொண்டு ஆண்டு வந்ததைப் போல், இந்த ஷோகுன்களும் பரம்பரை உரிமையுடன் நிருவாகத்தை நடத்தி வந்தார்கள். இவர்கள் இட்டதே சட்டம். பொதுவாக ராணுவ தோரணையிலேயே அரசாங்க நிருவாகம் நடைபெற்றுக்கொண்டு வந்ததென்று சொல்லவேண்டும்.
1853-ஆம் வருஷம் ஜூலை மாதம் எட்டாந் தேதி. உலகத்திலே இனி, தான் ஒதுங்கி வாழ்ந்துகொண்டிருக்க முடியாது என்ற உணர்வு ஜப்பானுக்கு உண்டாகும்படியான ஒரு சம்பவம் நடை பெற்றது. அன்று, மாத்யு கால் ப்ரெயித் பெர்ரி1 என்ற அமெரிக்கக் கடற்படைத் தலைவனொருவன், நான்கு யுத்தக் கப்பல்கள் சகிதம் டோக்கியோ அருகில் வந்து பீரங்கி முழக்கம் செய்தான். அதன் மூலம் தன் வருகையைத் தெரிவித்துவிட்டு கரையிலே இறங்கி அரசாங்கத் தலைவர்களைப் பார்க்கவேண்டுமென்று அதிகார தோரணையிலே கேட்டான். அப்படியே அதிகாரிகளைப் பார்த்து, அமெரிக்க மாலுமிகளிற் சிலரை ஜப்பானியர்கள் கொடுமைப் படுத்தினார்களென்று குறைகூறி, இதற்கு பரிகாரம் தேடுகிற முறையில், ஜப்பானில் தனக்கு வேண்டிய சாமான் களை வாங்கவும் விற்கவும் உரிமை வேண்டுமென்றும், இதைப்பற்றிச் சக்ரவர்த்தி யோசித்து அடுத்த வருஷத்திற்குள் பதில் சொல்ல வேண்டுமென்றும் கூறிவிட்டுப் போய்விட்டான். ஜப்பானியர்கள் பயந்து போனார்கள். ஆழங்காண முடியாத சமுத்திரத்தில் தானே இயங்கிக்கொண்டு வந்தது பூதமோ பிசாசோ என்று அஞ்சினார்கள். தனது நாட்டிற்குப் புதிதாக வந்திருக்கும் இந்த ஆபத்தை எப்படியாவது நீக்க வேண்டு மென்று சக்ரவர்த்தி, கடவுளை நோக்கிப் பிரார்த்தனைகள் பல செய்தான். கடவுள் கண்திறக்கவில்லை. ஆனால் சொன்னபடி அடுத்த வருஷமே தளபதி பெர்ரி, இன்னும் அதிகமான படை பலத்துடன் வந்துவிட்டான். இனி என்ன செய்வது? அமெரிக்கா விரும்பியபடி சில துறைமுகப் பட்டினங்களை அதற்குத் திறந்து விட்டது ஜப்பான். எதற்காக இந்தப் பகுதியை மட்டும் சிறிது விளக்கிச் சொன்னோ மென்றால், இன்றைக்குச் சரியாக தொண்ணூறு வருஷங்களுக்கு முன்னாடி, கப்பல்களைப் பார்த்து பூதமோ பிசாசோ என்று பயந்து கொண்டிருந்த ஜப்பானியர், இப்பொழுது - மூன்று தலைமுறை களுக்குள்ளாக - கடலாதிக்கம் செலுத்தப் பார்க்கிறார்களென்பதைச் சுட்டிக்காட்டு வதற்குத்தான்!
அமெரிக்காவுக்குப் பிறகு பிரிட்டன், ருஷ்யா, பிரான், ஹாலந்து, ஜெர்மனி, விட்ஜர்லாந்து, இத்தலி, பெல்ஜியம், ஆதிரியா - ஹங்கேரி, பெயின், டென்மார்க், ஹவாய், நார்வே - வீடன், போர்த்துகல், பெரு முதலிய நாடுகள் வரிசைக் கிரமமாகப் புகுந்து, ஒப்பந்தத் துறைமுகங் களென்ன, விசேஷப் பிரதேச உரிமைகளென்ன, வியாபாரச் சலுகை களென்ன, இப்படி எல்லா வற்றையும் முறையே பெற்றன. சீனாவில் என்னென்ன காட்சிகள் நடித்துக் காட்டப்பட்டனவோ அந்தக் காட்சிகள் யாவும் இங்கே ஜப்பானிலும் நடித்துக் காட்டப்பட்டன. ஆனால் சீனர் களைப் போல் ஜப்பானியர்கள் இந்தக் காட்சிகளைச் சும்மா கைகட்டிக் கொண்டு பார்த்து வரவில்லை. இவர்களுடைய இருதயத்திலே ஒரு பெரிய புரட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. புதிய நிலை மைக்குத் தகுந்தபடி தங்களை மாற்றிக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தார்கள். தங்கள் அரசாங்க அமைப்பைப் புதிய முறையில் சீர்திருத்தி அமைத்துக் கொண்டார்கள். ஷோகுன்களின் செல்வாக்குப் போய்விட்டது. சக்ரவர்த்தியினிடமே சர்வ அதிகாரங் களும் ஒப்படைக்கப்பட்டு அவன் மூலமாகவே ராஜ்ய விவகாரங்கள் நடைபெற வேண்டுமென்று நிர்ணயிக்கப்பட்டது. இந்தக் காலத்தில் சக்ரவர்த்தியாயிருந்தவன் மெய்ஜி என்பவன். இவன் 1867-ஆம் வருஷம் பட்டத்திற்கு வந்தான். இவன் காலத்திலிருந்தே ஜப்பானின் புதிய வாழ்வு தொடங்குகிறது. மெய்ஜி சகாப்தம் என்று பிரசித்திப் படுத்திச் சொல்லக் கூடிய அளவுக்கு இவன் காலத்தில் ஜப்பான் முன்னேற்ற மடைந்தது. மேனாட்டாரைப் பின்பற்றி, தொழில் தாபனங்கள் தோன்றின; இவற்றிலிருந்து உற்பத்தியாகும் பொருள்கள் மேனாட்டுப் பொருள் களுக்குப் போட்டியாக வெளி நாடுகளில் கொண்டு திணிக்கப்பட்டன. ஏகாதிபத்திய ஆசை வளர்ந்தது. யுத்த முதீப்புகள் செய்துகொள்ளப்பட்டன. சுமார் ஒரு தலைமுறைக்குள்ளாகவே, யுத்தகளத்திலே, வியாபார உலகத்திலே, ராஜதந்திர மேடையிலே, எல்லாத் துறைகளிலும் ஐரோப்பிய வல்லரசுகளுக்குச் சமதையான தானத்தில் நின்றுகொண்டு அவைகளோடு போட்டிபோட ஆரம்பித்துவிட்டது ஜப்பான். இந்தச் சக்தியை இதற்குத் தேடிக் கொடுத்தவர் இருவர். யாமகாடா என்பவன், ஜப்பானின் ராணுவ பலத்திற்கு அடிகோலியவன்; ஈட்டோ1 என்பவன், அதன் அரசியல் வாழ்வைப் பண்படுத்திக் கொடுத்தவன். இவ்விருவரும் ஜப்பானின் நவயுக சிருஷ்டி கர்த்தர்கள்; மெய்ஜி அரசனுக்குப் பக்கபலமாயிருந்தவர்கள்.
மெய்ஜி சகாப்தத்தின் ஆரம்பத்தில் - அதாவது ஏறக்குறைய 1868-ஆம் வருஷத்தில் - ஜப்பான் என்று சொன்னால் அது நான்கு முக்கிய தீவுகள் அடங்கியதுதான். ஹோன்ஷு அல்லது ஹோண்டோ (87 ஆயிரம் சதுர மைல்), கியூஷு (14 ஆயிரம் சதுர மைல்), ஷிக்கோகு (7 ஆயிரம் சதுர மைல்), யேஜோ அல்லது ஹொக்கைட (32 ஆயிரம் சதுர மைல்) இவைகளை யொட்டி னாற்போல் சில சில்லரைத் தீவுகள், ஆக எல்லாம் சேர்ந்து சுமார் 148 ஆயிரம் சதுர மைல் விதீரணமுள்ள பிரதேசம்; ஏறக்குறைய சென்னை மாகாணத்தளவு.
சீனாவுக்குக் கிழக்கேயுள்ள கடல் பிரதேசத்தில் அநேக சில்லரைத் தீவுகள் இருப்பதைப் பூகோள படத்தில் பார்க்கலாம். இவற்றில் ஒரு தொகுதிக்கு லூச்சூ தீவுத் தொகுதி என்று பெயர். சுமார் ஐம்பத்தைந்து சிறிய தீவுகள் சேர்ந்த இந்தத் தொகுதியின்மீது அநேக நூற்றாண்டுகளாக சீனாவும் ஜப்பானும் மாறி மாறி ஆதிக்கஞ் செலுத்திவந்தன. இந்தத் தீவு வாசிகள், இரண்டு நாடு களுக்கும் கப்பங் கட்டிக்கொண்டு வந்தார்கள். இதைப் போலவே, சீனாவுக்குத் தெற்கே போர்மோஸா என்பது ஒரு தீவு. இதன் விதீரணம் சுமார் பதினாலா யிரம் சதுர மைல். இது, சீனாவின் ஆதிபத்தியத் திற்குட்பட்டிருந்தது; ஆனால், சம்பிரதாயமான ஆதிபத்தியந் தான். 1871-ஆம் வருஷம், லூச்சூ தீவு வாசிகளில் சுமார் அறுபது பேர், போர்மோஸா தீவு ஓரமாகக் கப்பலில் சென்று கொண்டிருந்த போது, தற்செயலாகக் கப்பல் கரை தட்டிவிட்டது. மேற்படி அறுபது பேரும், கரை சேர்ந்ததும், அங்கிருந்த காட்டுமிராண்டிகள் சிலர் இவர்களைக் கொன்று விட்டார்கள். இந்தச் சம்பவத்தை ஜப்பான் ஒரு வியாஜமாக வைத்துக் கொண்டு, போர்மோஸா தீவின் தெற்குப் பாகத்தை ஆக்கிரமித்துக் கொண்டது; இப்படி ஆக்கிரமித்துக் கொண்டதோடல்லாமல், மேற்படி சம்பவத்திற்குப் பரிகாரம் தேடித்தரும்படி கேட்டது சீனாவை!
போர்மோஸா தீவு சீன ஆதிக்கத்துக்குட்பட்டதல்லவா? அதன் ஜனங்களின் நடவடிக்கைக்கு அது தானே பொறுப்பு? லூச்சூ தீவு வாசிகள் தன்னுடைய பிரஜைகள்: இவர்கள் கொலையுண்டது, தன்னுடைய ஆதிக்கத்திற்கு ஊறு ஏற்பட்ட மாதிரி. இந்த மாதிரி முறையில் ஜப்பான் வாதம் செய்தது. ஐரோப்பிய வல்லரசுகளின் நெருக்குதல்களினால் அப்பொழுது பிரமையடைந்திருந்த சீனா, ஜப்பானின் இந்தக் கன்னி ராஜதந்திரப் பேச்சுகளுக்கு வெகு எளிதில் இணங்கிவிட்டது. எப்படியோ, லூச்சூ தீவுகள், ஜப்பானுடைய பரிபூரண ஆதிக்கத்துக்கு வந்துவிட்டன; போர்மோஸா தீவில் நடைபெற்ற சம்பவத்திற்கு ஒரு பெரிய தொகை அதற்கு நஷ்ட ஈடாகக் கிடைத்தது. இந்த ஷரத்துக்களைக் கொண்ட ஓர் ஒப்பந் தத்தில் (1871) இரண்டு நாடுகளும் கையெழுத்திட்டன. இதுதான் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் முதன்முதலாக ஏற்பட்ட ஒப்பந்தம்.
சீனா, இப்படி விட்டுக்கொடுத்தது, ஜப்பானுடைய ஏகாதி பத்திய ஆசையைத் தூண்டிவிட்டது போலாயிற்று. கொரியாவின் மீது தன் பார்வையைச் செலுத்தியது. மஞ்சூரியாவுக்கு அடுத்தாற் போலுள்ளதும், சுமார் 85 ஆயிரம் சதுரமைல் விதீரண முடையது மான இந்தத் தீபகற்பத்திற்கும் ஜப்பானுக்கும் மத்தியில் 120 மைல் அகலமுள்ள ஒரு ஜலசந்தி மட்டுமே இருக்கிறது. எனவே, ஜப்பானுக்கும் ஆசியா கண்டத்திற்கும் நடுவிலுள்ள ஒரு பாலம் மாதிரி இந்தக் கொரியா. இது பெயரளவுக்கு சீன ஆதிபத்தி யத்துக்குட்பட்டிருந்ததேயாயினும், சுய அரசுடையதாகவே இருந்தது. ஜப்பானுக்கும் இதற்கும் அடிக்கடி வியாபாரத் தொடர்புகள் இருந்து கொண்டிருந்தன. சில சமயங்களில் இந்தத் தொடர்பு அற்றும்போயிருந்தது. இப்படியிருக்கையில், ஜப்பானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், கொரியாவுக்கு ஒரு தூது கோஷ்டியை அனுப்பி, தன்னோடு சிநேக ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டு மென்று கோரியது. ஆனால் கொரியா, இந்தக் கோஷ்டியைச் சரியானபடி வரவேற்கவில்லை. ஜப்பான், மேனாட்டு நாகரிகத்தை அப்படியே பின்பற்றியிருக்கிற தென்றும், இதனால் அதனோடு சம்பந்தம் வைத்துக் கொள்ள முடியாதென்றும் கூறி மேற்படி தூது கோஷ்டியைத் திருப்பி அனுப்பிவிட்டது. இதற்குப் பிறகு மூன்று முறை தூது கோஷ்டிகள் அனுப்பப்பெற்று, சரியன படி வரவேற்கப் படாமல் திரும்பி வந்துவிட்டன. ஜப்பானுக்கு இஃது ஆத்திரத்தை உண்டுபண்ணியது.
மேலே சொன்ன (1871) சீன - ஜப்பானிய ஒப்பந்தம் ஊர்ஜிதம் செய்யப்படுவதற்காக இரண்டு நாட்டுப் பிரதிநிதிகளும் சிறிது காலத்திற்குப் பின்னர் ஒன்று சந்தித்தபோது, கொரியர்களின் நடத்தைக்குச் சீனா என்ன சமாதானம் சொல்கிறதென்று ஜப்பா னியப் பிரதிநிதிகள் கேட்டார்கள். கொரியா, தனக்குக் கப்பங் கட்டுகிற ஒரு தேசமாயிருந்த போதிலும், அதனுடைய உள்நாட்டு விவகாரங்களில் தான் தலையிட முடியா தென்றும், அந்நிய வல்லரசுகளோடு யுத்தந் தொடுக்கவோ, சமாதானம் பேசவோ அதற்குப் பூரண உரிமையுண்டென்றும் சீனப் பிரதிநிதிகள் சொல்லி விட்டார்கள். ஜப்பானுக்கு இது மிகவும் நல்ல தாயிற்று. தன்னுடன் நேரான சம்பந்தம் வைத்துக் கொள்ள வேண்டு மென்று மறுபடியும் கொரியாவைக் கேட்டது. கொரியாவும் இதற்கு முதலில் சம்மதம் தெரிவித்தது. ஆனால் ஜப்பானிடமிருந்து ஒரு தூது கோஷ்டி வந்ததும், அதனை வரவேற்க கொரிய அரசாங்கம் மறுத்து விட்டது. இதனோடு கூட, பரிசோதனை பார்க்கிறதாக ஒரு வியாஜத்தை வைத்துக்கொண்டு கொரியாவின் முக்கிய நதியின் முகத் துவாரத்தை நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு ஜப்பானிய யுத்தக் கப்பலின் மீது பீரங்கிப் பிரயோகம் செய்தது. இந்த ஜப்பானிய யுத்தக் கப்பல் ஏன் கொரியா வண்டை வந்தது? இந்தக் கேள்வியைக் கேட்க கொரியர் களுக்கு அவகாசங் கொடுக்கவில்லை ஜப்பானியர். சில துருப்புகளோடு இறங்கி, கரையோரமாக இருந்த சில கோட்டை கொத்தளங்களை நாசமாக்கி விட்டுத் திரும்பினர். திரும்புகிறபோது, அந்நிய நாடுகளுடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டியது அவசிய மென்றும் இதைப்பற்றித் தீர்க்காலோசனை செய்யுமாறும், மறுபடியும் ஒரு தூது கோஷ்டியை அனுப்புவதாகவும் எச்சரிக்கை செய்து விட்டுப் போயினர். அமெரிக்கர், தங்களிடம் காட்டிய வித்தையை, ஜப்பானியர், கொரியர்களிடம் திருப்பிக் காட்டினர்!
ஜப்பான் செய்துவிட்டுப் போன எச்சரிக்கையைப்பற்றி சீனாவின் ஆலோசனையைக் கேட்டது கொரியா. ஜப்பானுக்கு இணங்கிப் போவதுதான் நல்லதென்று சீனா கூறியது. ஆற்றிலே முழுகிக் கொண்டிருக்கிறவனைப் பார்த்து என்னைக் கரையேற்றி விடு என்று கேட்டால், அவன் என்ன பதில் சொல்வான்? நீயும் முழுகிப்போ என்றுதான் கூறுவான்! சொன்னபடி அடுத்த வருஷமே, சில யுத்தக் கப்பல்களுடனும், சுமார் எண்ணூறு போர் வீரர்களுடனும் ஜப்பான் வந்தது. இதன் விளைவு என்ன? ஜப்பானிய- கொரிய சிநேக ஒப்பந்தம் (26-2-1876). இதன்படி, கொரியா, ஜப்பானைப்போல் சர்வ சுதந்திர முள்ள ஒரு நாடாக அங்கீகரிக்கப் பட்டது. இரண்டு நாடுகளும் சமநிலையிலே இருந்து கொண்டு தொடர்புகள் வைத்துக் கொள்ள வேண்டுமென்று தீர்மானிக்கப் பட்டது. ஜப்பானுடைய வியாபாரத்திற்கென்று சில துறை முகப் பட்டினங்கள் திறந்துவிடப் பட்டன. ஜப்பானுக்கு விசேஷப் பிரதேச உரிமை அளிக்கப்பட்டது. கொரியாவில் அபினியை இறக்குமதி செய்வதில்லையென்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்த ஷரத்துக் களிலே, கொரியாவின் சுதந்திரத்தை ஜப்பான் அங்கீகரித்ததுதான் மிகவும் முக்கியமானது. ஏனென்றால், ஒருசில வருஷங்களுக்குப் பின்னாடி இந்த ஷரத்தைக்கொண்டே சீனாவைத் தாக்க முற் பட்டது ஜப்பான்!
ஜப்பான் இங்ஙனம் சிநேக ஒப்பந்தம் செய்துகொண்டதைப் பார்த்த ஐரோப்பிய வல்லரசுகள் ஒன்றன்பின்னொன்றாக - (அமெரிக்கா - 1882; பிரிட்டன் - 1882; ஜெர்மனி - 1883; இத்தலி - 1884; பிரான் - 1886) - கொரியாவுடன் அதற்கு ஒரு சுதந்திர நாடு என்ற அந்தது கொடுத்து - சிநேக ஒப்பந்தங்கள் செய்து கொண்டன. எல்லாம் வியாபாரச் சுரண்டலுக்குத்தான்!
அந்நிய நாடுகளுடன் கொரியா எப்பொழுது சம்பந்தம் வைத்துக் கொள்ளத் தொடங்கியதோ அப்பொழுதிருந்தே அங்கு உள்நாட்டுச் சண்டைகள் கிளம்பிவிட்டன. சீன ஆதிக்கத்தை அங்கீகரிக்கிற கட்சி யென்றும், ஜப்பானிய ஆதிக்கத்தை வரவேற்கிற கட்சியென்றும், இரண்டு முக்கிய கட்சிகள் தோன்றி, நாட்டைப் பலவித அல்லல்களுக்குட்படுத்தின. இரண்டு கட்சியினரும் சீனா வின் துணையையும் ஜப்பானின் துணையையும் முறையே நாடினர். இரண்டு நாடுகளும் துருப்புகளை அனுப்பின. கொரியா, தன் ஆதிக்கத்திற்குட்பட்ட நாடு என்ற நினைப்பிலேயே சீனா, துருப்பு களை அனுப்பியது. மற்ற வல்லரசுகள், அதனுடைய தனித்துவத்தை அங்கீகரித்துக் கொண்டிருப்பதைப் பற்றி சீனா லட்சியம் செய்ய வில்லை; கவலைப்படவுமில்லை.
கொரியாவைக் காப்பாற்றச் சென்ற சீனா - ஜப்பானியத் துருப்புகள் தங்களுக்குள்ளேயே சண்டைபோட்டுக் கொள்ளும் படியான நிலைமை ஏற்பட்டது. சீனத் துருப்புகள், ஜப்பானியத் துருப்பு களுக்கு அதிக சேதத்தை உண்டுபண்ணி கடற்கரைக்கு விரட்டிவிட்டன. உடனே ஜப்பான், இதற்குப் பரிகாரம் தேடிக் கொள்ளும் பொருட்டு, இரண்டு தூதுகோஷ்டிகளை, ஒன்று கொரியாவுக்கும், மற்றொன்று சீனாவுக்குமாக அனுப்பியது. கொரியாவுக்குச் சென்ற தூதுகோஷ்டி, வழக்கமான நஷ்ட ஈடு, மன்னிப்பு முதலியவைகளைப் பெற்றுக்கொண்டு திரும்பிவிட்டது. சீனாவுக்குச் சென்ற பிரதிநிதி கோஷ்டியின் தலைவன் ஈட்டோ என்பவன்; மகா ராஜதந்திர நிபுணன். சீனாவின் சார்பில் லீ ஹுங்க் சாங். இருவரும், சாமர்த்தியமான பல பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், ஒருவித ஒப்பந்தத்திற்கு வந்தனர். இதற்கு டீண்ட்ஸின் ஒப்பந்தம் (1885) என்று பெயர். இந்த ஒப்பந்தத்தில், கொரியாவின் சுதந்திரத்தை, சீனாவைக் கொண்டு அங்கீகரிக்கச் செய்ய ஈட்டோ எவ்வளவோ பிரயத்தனப்பட்டான். ஆனால் லீ ஹுங்க் சாங், உடன் படிக்கை மூலம் இதனை ஊர்ஜிதம் செய்ய விரும்பவில்லை. ஈட்டோவும் இதைப் பற்றி அதிகமாக வற்புறுத்தாமல் விட்டு விட்டான். ஒப்பந்தத்தின் மற்ற ஷரத்துகள்படி, இரண்டு நாடுகளும் தங்கள் தங்கள் துருப்புகளைக் கொரியாவிலிருந்து வாப வாங்கிக் கொள்வதாக ஒப்புக் கொண்டன. அப்படி கொரியாவில் மறுபடியும் தொந்திரவுகள் ஏற்பட்டு துருப்புக்களை அனுப்பவேண்டிய அவசியம் ஏற்படுமானால், ஒன்றுக்கொன்று முன் கூட்டியே தெரிவித்துவிட்டு அனுப்புவதென்று தீர்மானித்துக் கொண்டன.
இந்த டீண்ட்ஸின் ஒப்பந்தத்திற்குப் பிறகு, லீ ஹுங் சாங் சும்மாயிருக்கவில்லை. கொரியா விஷயத்தில் என்றுமில்லாத ஒரு சிரத்தை காட்டத் தொடங்கினான். இன்னும் அது, சீனாவின் ஆதிக்கத்துக்குட்பட்டிருக்கிற தென்பதைக் காட்டிக் கொள்ள வேண்டுமல்லவா? இதற்காக யுவான் ஷி காய்1 என்பவனை தானீகனாகத் தெரிந் தெடுத்து கொரியாவுக்கு அனுப்பினான். கொரிய அரசாங்கத்திற்கு அவ்வப்பொழுது ஆலோசனைகள் சொல்லி, அதனை ஒழுங்கான பாதையில் செலுத்திக்கொண்டு போவது யுவானின் கடமையென்று சொல்லப்பட்டது. ஆனால் இந்த யுவானோ, சூழ்ச்சிகள் பல செய்து, கொரியாவுக்கும் மற்ற அந்நிய நாடுகளுக்கும் இருந்த தொடர்பில் ஒரு கசப்பை உண்டு பண்ணிவிட்டான். அந்நிய நாடுகளின் செல்வாக்கு இல்லாமற் செய்துவிட்டால், கொரியா எப்பொழுதும் சீனாவுக்கு அடங்கிக் கிடக்கும் என்பது இவன் எண்ணம். இதற்காக, கொரியாவுக்கு நன்மைகள் செய்து காட்டுகிற மாதிரி, சீனப் பணத்தைக் கொண்டு, தந்திப் போக்குவரத்துகள் ஏற்படுத்தினான். இன்னும் சில காரியங் களையும் செய்தான். சுமார் ஏழு வருஷ காலத்தில் (1885 - 1892) சாப்பிடுவதற்குப் பக்குவமாயுள்ள ஆகாரம் மாதிரி கொரியாவை ஆக்கிவிட்டான்.
இவையனைத்தையும் ஜப்பான் சும்மா பார்த்துக் கொண்டி ருந்தது: ஆனால் மனம் புழுங்கிக்கொண்டுதான் இருந்தது. ஏதேனும் ஒரு காரணம் வேண்டுமல்லவா பகிரங்கமாக யுத்த கோஷம் செய் வதற்கு? அப்படிப்பட்ட காரணமும் ஒன்று அகப்பட்டது. 1893-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் கொரியாவில் அந்நியர்களுக்கு விரோதமான ஒரு கலகம் ஏற்பட்டது. அதனை அடக்க, படை உதவி செய்ய வேண்டுமென்று ஒரு முறைக்கு இரு முறை, கொரிய அரசாங்கம் சீனாவைக் கேட்டது. உடனே சீனா (6-6-1894-இல்) ஆயிரத்தைந்நூறு பேர்கொண்ட ஒரு படையை அனுப்பிவிட்டு, டீண்ட்ஸின் ஒப் பந்தப்படி இந்தத் தகவலை ஜப்பானுக்குத் தெரிவித்தது. ஜப்பான் சும்மாயிருக்குமா? யுவான் ஷி காயின் திருவிளையாடல்களைக் கவனித்துக்கொண்டிருந்த தல்லவா? உடனே தானும் ஒரு படையை, கொரியாவின் தலை நகரான சிவோலுக்கு அனுப்பியது. ஒரு நாட்டை உதவிக்குக் கூப்பிட்டால், இரண்டு நாடுகள் வலிய உதவி செய்ய முன்வருவதைப் பார்த்த கொரிய அரசாங்கம் பிரமித்துப் போய்விட்டது. சீனாவை வாப வாங்கிக் கொள்ளுமாறு கூறியது. முதலில் ஜப்பான் வாப வாங்கி கொள்ளட்டும் என்று அது கூறியது. ஜப்பானைக் கேட்டால் முதலில் வந்த சீனாதான் முதலில் வாப வாங்கிக் கொள்ள வேண்டுமென்று சொல்லியது. இரண்டு நாட்டுப் பிரதிநிதிகளும் சேர்ந்து கொரியாவில் என்னென்ன சீர் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமென்று யோசனை சொல்லட்டும் என்று ஜப்பான் ஒரு சமரஸப் பேச்சை விடுத்தது. இதற்கு சீனா இணங்கவில்லை. கொரியாவின் உள்நாட்டு விஷயங்களில் தான் தலையிட விரும்ப வில்லையென்று தட்டிக்கழித்தது. பிறகு இரண்டு நாடுகளுக்கும் மனதாபங்கள் முற்றிப் போராக (1894 ஜூலை) மூண்டது. கொரியா, சுதந்ததிர நாடா அல்லது சீனாவின் ஆதிக்கத் துக்குட்பட்டதாவென்பதுதான் பிரச்னை. இதைத் தீர்க்க சீனாவும் ஜப்பானும் சண்டை போட்டன. சண்டை துவங்கின மறு மாதமே, ஜப்பான், கொரியாவுடன் தனித்து பரபர சிநேக ஒப்பந்தம் செய்து கொண்டது, சீனாவின் வலையில் அது மறுபடியும் சிக்கிக் கொள்ளாமலிருப்பதற்காக.
சீனா, இந்த யுத்தத்திற்குத் தயாராக இல்லை. ஜப்பான் இப்படி வந்து தாக்கும் என்று எதிர்பார்க்கவுமில்லை. யுத்தம் துவங்கின இரண்டொரு மாதங்களுக்குள், சீனப்படைகளை ஒன்றுகூட இல்லாமல் கொரியாவி லிருந்து விரட்டியடித்துவிட்டது ஜப்பான். கடல் மூலமாகத் தாக்கவந்த சீனக் கப்பற்படையும் சிதறிப் போய் விட்டது. சீனாவின் நான்கு யுத்தக் கப்பல்களை ஜப்பான் மூழ்கடித்து விட்டது. இதனால் கொரிய விரிகுடாவின் ஆதிக்கம் ஜப்பானுக்கு ஏற்பட்டது. இதன்மூலம் லியோடுங் தீபகற்பத்தின் தெற்கிலுள்ள போர்ட் ஆர்தர் துறைமுகத்தைக் கைப்பற்றிக் கொண்டது. இதற்குப் பிறகு வெகுதுரிதமாக சீனாவின் உட்பிரதேசத்தில் முன்னேறிச் செல்லமுடிந்தது. 1895-ஆம் வருஷம் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஷாண்டுங் மாகாணத்தின் வடக்கேயுள்ள வைஹைவை துறைமுகம் முதலிய சில இடங்கள் ஜப்பானுடைய சுவாதீனத்திற்கு வந்து விட்டன. வழக்கம் போல பீகிங் அரண்மனையில் பரபரப்பு; பயம்; பணிந்து போவதைத் தவிர வேறு வழியில்லையென்ற நிர்க்கதியான நிலைமை. ஐரோப்பிய வல்லரசுகளின் உதவியை நாடியது சீனா. அந்த வல்லரசுகளும் மத்தியதம் செய்துவைப்பதாக ஜப்பானுக்குக் கூறின. ஆனால் ஜப்பானோ, சீனாவுடன், தான் நேரில் சமரஸம் பேசிக் கொள்வதாகக் கூறிவிட்டது. கடைசியில் சீனா பணிந்து போயிற்று. யுத்தம் நின்றது. சமரஸப் பேச்சுகள் துவங்கின. இந்தப் பேச்சுக்களை ஐரோப்பிய வல்லரசுகள், ஒருபுறம் சந்தோஷத்தோடும் மற்றொருபுறம் கவலை யோடும் கவனித்துக் கொண்டிருந்தன. சமரஸப் பேச்சுக்களின் விளைவாக, இன்னும் சில துறைமுகங்கள் வியாபாரத்திற்குத் திறக்கப்படு மென்பதற்காகச் சந்தோஷம். ஆனால், இதே சமயத்தில் ஜப்பானுடைய செல்வாக்கு அதிகமாக ஓங்கிவிடப் போகிறதே என்பதைப் பற்றிக் கவலை. இந்தச் சமரஸப் பேச்சுகள் சம்பந்தமாக மற்றொரு ருசிகரமான விஷயம் என்ன வென்றால், சீனாவின் கட்சியில் ஆலோசகர்களாக அமர்ந்தி ருந்தவர்களும் அமெரிக்கர்கள்தான்; ஜப்பானின் கட்சியில் ஆலோசகர் களாக அமர்ந்தவர்களும் அமெரிக்கர்கள்தான்.
சமரஸப் பேச்சுக்கள் முடிந்து, கடைசியில் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் ஒப்பந்தம் நிறைவேறியது. இதற்கு ஷிமோனேஸெகி ஒப்பந்தம் (17-4-1895) என்று பெயர். இதன் முக்கிய அமிசங்கள் வருமாறு:-
_1. கொரியாவின் சுதந்திரத்தைச் சீனா அங்கீகரிக்கிறது._
_2. சீனாவின் தென்கிழக்கிலுள்ள போர்மோஸா தீவு, பெ காடோரெ தீவுத் தொகுதி ஆகியவைகளையும், தெற்கு மஞ்சூரியா விலுள்ள லியோடுங் தீபகற்பத்தையும் (போர்ட் ஆர்தர் துறைமுகம் உள்பட) ஜப்பானுக்குக் கொடுத்துவிட சீனா சம்மதிக்கிறது._
_3. யுத்த நஷ்ட ஈடாக, சுமார் இருபது கோடி ரூபாயை, நூற்றுக்கு ஐந்து விகிதம் வட்டியுடன் ஏழு வருஷத்திற்குள் சீனா கொடுக்கவேண்டியது._
_4. ஜப்பானியர்களின் வியாபாரத்திற்கும் வாசத்திற்குமாக நான்கு துறைமுகப்பட்டினங்கள் திறந்துவிடப்பட வேண்டும். ஒரு தேசத்திற்கு அளிக்கப்பட்ட உரிமை, மற்ற எல்லாத் தேசங்களுக்கும் அளிக்கப்பட்டதாகக் கருதப்படும் என்ற விதிப்படி, இந்தத் துறை முகங்களில் மற்ற வல்லரசுகளும் வியாபாரம் செய்ய உரிமை பெறு கின்றன. இதே பிரகாரம், புதிதாக ஒரு வியாபார ஒப்பந்தம் ஏற்படு கிறவரையில், மற்ற தேசங்களுக்கு அளிக்கப்படுகிற உரிமைகள் ஜப்பானுக்கும் உண்டு.ள_
இந்த ஒப்பந்தம், ஜப்பானுக்குப் பலவிதங்களிலும் வெற்றியே யாகும். ஆனால் இஃது ஐரோப்பிய வல்லரசுகளின் மத்தியில் பெரிய பரபரப்பை உண்டுபண்ணிவிட்டது. இதற்கு முக்கிய காரணம், ஜப்பான், போர்ட் ஆர்தர் துறைமுகத்தில் இடம் பெற்றுக் கொண்டு விட்டதுதான். ருஷ்யா, பிரான், ஜெர்மனி ஆகிய மூன்று நாடு களும் ஒன்றுசேர்ந்துகொண்டு, ஷிமோனேஸெகி ஒப்பந்தம் நிறை வேற்றப்பட்ட ஒரு வார காலத்திற்குள் (23-4-1895) ஜப்பானுக்குப் புத்தி சொல்கிற முறையில் ஓர் அறிக்கையை விடுத்தன. லியோடுங் தீபகற்பத்தை (இதன் தெற்குப் பாகத்தில்தான் போர்ட் ஆர்தர் துறைமுகம் இருக்கிறது.) ஜப்பான் வீகரித்துக் கொள்ளு மானால், அது சீனாவின் தலைநகரமாகிய பீகிங்குக்குப் பெரிய ஆபத்தாக எப்போதும் இருந்து கொண்டிருக்குமென்றும், மற்றும் கொரி யாவின் சுதந்திரத்தைச் சீனா அங்கீகரித்துக் கொண்டதற்கு அர்த்தமே இல்லாமற் போய்விடு மென்றும், எனவே, கீழ்நாட்டின் சமாதானத்தை முன்னிட்டு, சீனாவுக்குரிய பிரதேசத்தை அதனிடமே கொடுத்துவிடுவது நல்லதென்றும் இதில் காணப்பட்டிருந்தன. கீழ்நாட்டில் சமாதானம் நிலைத்திருக்க வேண்டுறுமென்கிற விஷயத்தில், ஐரோப்பிய வல்லரசு களுக்கு எவ்வளவு சிரத்தை! அழகான பாஷையினால் மூடப்பெற்ற இந்தப் பயமுறுத்தல் அறிக்கையின் அர்த்தம் இன்னதென்று ஜப்பான் புரிந்துகொண்டு விட்டது; யுத்தத்தினால் தனக்கேற்பட்டுள்ள சோர்வையும் உணர்ந்து கொண்டது. எனவே லியோடுங் தீப கற்பத்தைச் சீனாவிடம் திருப்பிக் கொடுத்துவிடுவதாக ஒப்புக் கொண்டு இதற்கு நஷ்ட ஈடாக, இன்னும் பதினைந்து கோடி ரூபாய் அதிகம் கொடுக்க வேண்டு மென்று கேட்டது. அதற்கென்ன ஆட்சேபனை? கொடுக்க வேண்டியது சீனாதானே? அதன் தலைமீது இந்தக் கூடுதல் தொகை திணிக்கப்பட்டது!
சீனாவுக்கு, அதனுடைய பிரதேசத்தைத் திருப்பிவாங்கிக் கொடுத்துவிட்டனவல்லவா மூன்று நாடுகளும்? இதற்கு எந்த வழியில் தங்களுக்கு நன்றி செலுத்தப்போகிறதென்று சீனாவைக் கேட்டன. கைமேல் பலன் கிடைத்தது. அன்னாம் பிரதேசத்தின் எல்லை, சீனாவின் பக்கம் தள்ளிவந்துவிட்டது. அதாவது சீனாவின் மூன்று பிரதேசங்கள், பிரெஞ்சுக்காரரின் ஆதிக்கத்துக்குப் போய்ச் சேர்ந்தன. யுன்னான், குவாங்ஸி, குவாங்டுங் ஆகிய மூன்று மாகாணங் களில், சுரங்கங்கள் முதலியன தோண்டி பலன் அனுபவிக்க பிரெஞ்சு முதலாளிகள் அனுமதிக்கப்பட்டார்கள். அன்னாமிலிருந்து சீனா வுக்கு ரெயில் போட்டுக்கொள்ள பிரான் உரிமை பெற்றது. இவை யடங்கிய ஓர் ஒப்பந்தம் (9-5-1895) சீனாவுக்கும் பிரான்ஸுக்கும் ஏற்பட்டது. இங்ஙனம் பிரான்ஸுக்குக் கிடைத்துவிட்டதைப் பார்த்து, மற்ற வல்லரசுகள் ஒவ்வொன்றாக ஒப்பந்தத்தை நீட்டின. சீனா, எல்லாவற்றிலும் கையெழுத் திட்டது. சீனா, ஜப்பானுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டியிருந்ததல்லவா? இதன் முதல் தவணையைத்தான் கடனாகக் கொடுப்பதாகவும், நூற்றுக்கு நான்கு விகிதம் வட்டியும், சுங்க வருமானத்தை அடமானமாகவும் தனக்குக் கொடுத்தால் போதுமென்றும் ருஷ்யா சொல்லி, கடன் பத்திரத்தில் சீனாவிடமிருந்து கையெழுத்து வாங்கிக்கொண்டது. சீனாவுக்கு இப்படிக் கடன் கொடுத்து அதனை நிர்ப்பந்தத்திற்குள்ளாக்கக் கூடாதென்று பிரிட்டனும் ஜெர்மனியும் ஆட்சேபித்தன. ஆனால் அடுத்த வருஷமே (23-8-1896) இரண்டு நாடுகளும் சேர்ந்து, மேற்படி சுங்க வருமானத்தையே இரண்டாவது அடமானமாக வைத்துக் கொண்டு, 1,60,00,000 பவுன் கடன் கொடுத்தன! இதற்குப் பிறகு, சீனாவுக்குப் பணமுடை இருப்பதாக நினைத்துக்கொண்டு அதற்குப் பலவந்தமாக உதவி செய்கிற விஷயத்தில் ஐரோப்பிய வல்லரசு களுக்குள் பலத்த போட்டி ஏற்பட்டுவிட்டது. ஒன்றுக் கொன்று தெரியாமல், ஒன்றுக்கொன்று விரோதமாகச் சீனாவுடன் ரகசிய ஒப்பந்தங்கள் செய்துகொண்டன. வட மஞ்சூரியா வழியாக வ்ளாடிவாடாக் நகரத்திற்கு ரெயில் போட்டுக் கொள்ள ருஷ்யா அனுமதி பெற்றது. இதற்குப் பிரதியாக, கொரியா, சீனா, கிழக்கு சைபீரியா ஆகிய பிரதேசங்களுக்கு ஜப்பானால் ஏதேனும் ஆபத்து ஏற்படுமானால் அப்பொழுது சீனாவும் ருஷ்யாவும் பரபரம் உதவி செய்துகொள்ள வேண்டுமென்று இரண்டு நாடுகளும் - ருஷ்யாவும் சீனாவும், ஜப்பானுக்கு விரோதமாக - (3-6-1896) ஒரு ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டன. இந்த மாதிரியான ரகசிய ஒப்பந்தம் தங் களுக்குள் இல்லையென்று இரண்டு நாடுகளும் 1922-ஆம் வருஷம் வரையில் மறுத்துவந்தன. இதுதான் ஆச்சரியப்படத்தக்க விஷயம். 1896-ஆம் வருஷத்து இந்தச் சீன - ருஷ்ய ரகசிய ஒப்பந்தந்தான், 1904-ஆம் வருஷம் நடைபெற்ற ருஷ்ய - ஜப்பானிய யுத்தத்திற்குக் காரணமாயிருந்தது.
ருஷ்யா இப்படி சலுகைமேல் சலுகை பெற்றுக்கொண்டு வருவதைப்பார்த்த ஜெர்மனி சும்மாயிருக்குமா? ஏதோ ஒரு காரணத்தைத் கற்பித்துக் கொண்டது. இரண்டு ஜெர்மன் பாதிரி மார்கள் கொலை செய்யப்பட்டார்கள். இதற்குப் பரிகாரம் தேடிக் கொள்கிற முறையில் ஒரு தொகையை நஷ்ட ஈடாக வசூலித்துக் கொண்டது. ஷாண்டுங் மாகாணத்திலுள்ள கியாசௌ துறைமுகத் தையும், அதைச் சுற்றியுள்ள சிறு பிரதேசத்தையும், தொண்ணூற் றொன்பது வருஷ குத்தகைக்குப் பெற்றது; (6-3-1898) ஷாண்டுங் மாகாணத்தில் ரெயில் போடவும் நிலக்கரிச் சுரங்கங்கள் தோண்ட வும் உரிமைபெற்றது. ஜெர்மனிக்கு இங்கே செல்வாக்கு ஏற்படுவதை ருஷ்யா விரும்பவில்லை. எனவே, மறுபடியும் போர்ட் ஆர்தர் துறைமுகத்தை- ஜப்பானிடமிருந்து பிடுங்கி சீனாவுக்குக் கொடுத்த அதே போர்ட் ஆர்தர் துறைமுகத்தைத்தான் - இருபத்தைந்து வருஷ குத்தகைக்கு (1898) பெற்றது; தனது கப்பல் படைகளை வைத்துக் கொள்ள வசதிகள் செய்து கொண்டது. பிரிட்டன் சும்மா யிருக்குமா? ஹாங்காங்குக்கு எதிரேயுள்ள கௌலூன் தீபகற்பத்தை ஏற்கனவே 1860-ஆம் வருஷம் பெற்றுக்கொண்டிருந்ததல்லவா, இதைத் தொடர்ந்தாற் போன்ற சுமார் 376 சதுர மைல் விதீரண முள்ள ஒரு பிரதேசத்தைப் (1898) பெற்றது. பிரான் பார்த்தது. 1895-ஆம் வருஷத்தில் தான் பெற்றுக்கொண்ட சலுகைகள் போதா வென்று இதற்குத் தோன்றிவிட்டது. ஹாங்காங்குக்குத் தென்மேற்கிலுள்ள குவாங்சௌ விரிகுடாவையும் இதிலுள்ள இரண்டு சிறிய தீவுகளையும் தொண்ணூற்றொன்பது வருஷ குத்தகைக்குப் பெற்றது. இங்ஙனம் குத்தகையாகவும் இனாமாகவும் பெற்ற பிரதேசங்கள் போக ஐரோப்பிய வல்லரசுகள், செல்வாக்குப் பிரதேசங்கள் என்று சொல்லி, சீனாவை தங்களுக்குள் துண்டு துண்டாகப் பங்கு போட்டுக் கொண்டன. செல்வாக்குப் பிரதேசம் என்றால், எந்தப் பிரதேசம் எந்த வல்லரசுக்கு செல்வாக்குப் பிரதேசமாக வரை யறுத்துக் கொடுக்கப் பட்டிருக்கிறதோ அந்தப் பிரதேசத்தில், சம்பந்தப்பட்ட வல்லரசு, வியாபாரச் சலுகைகளென்ன, லேவா தேவித் தொழில் நடத்துவதென்ன, தொழிற் சாலைகள், ரெயில் வேக்கள் முதலியவைகளின் தாபனம், நிருவாகம் முதலியன வென்ன, ஆகிய எல்லா விஷயங்களிலும் முதல் பாத்தியதை கொண் டாட, விசேஷ பாத்தியதை கொண்டாட உரிமை பெற்றிருக்கிற தென்பது அர்த்தம். இதன்படி தெற்கு சீனாவை பிரான்ஸும், மத்திய சீனாவை பிரிட்டனும், வட கிழக்கு சீனாவை ஜெர்மனியும், மஞ்சூரியாவை ருஷ்யாவும் செல்வாக்குப் பிரதேசங்க ளென்று சொல்லிக் கொண்டு பங்கு போட்டுக் கொண்டன. அமெரிக்கா மட்டும் இந்தப் பங்குபோட்டுக் கொள்ளும் வேலையில் ஈடுபட வில்லை.
இந்தச் சம்பவங்களையெல்லாம் நாம் தொடர்ச்சியாகப் பார்க்கிறபோது ஓர் உண்மை வெளியாகிறது. அதாவது, பத்தொன் பதாவது நூற்றாண்டின் இடைக்காலத்தில், வியாபார நோக்கங் கொண்டு சீனாவுக்குள் புகுந்த ஐரோப்பிய வல்லரசுகள் மெதுமெது வாக உரிமைகள் பல பெற்று, பத்தொன்பதாவது நூற்றாண்டு முடிகிற தருணத்தில் தங்கள் மூலதனத்தை இங்கே கொண்டு போட்டு, சாசுவதமான தொழில்களை தாபித்து, சீனாவைத் தங்களுடைய ஆக்கிரமிப்புக்குட்பட்ட நாடாகப் பங்கு போட்டுக் கொள்வதில் முனைந்திருந்தன என்பதுவே அந்த உண்மை.
கலகம் செய்து கண்ட பயன்
கி.பி. பத்தொன்பதாவது நூற்றாண்டின் இடைக்காலத்தி லிருந்தே - அதாவது நான்கிங் உடன்படிக்கை நிறைவேற்றப்பட்ட பிறகே - சீன மக்களுக்குத் தங்கள் அரசாங்கத்தின் பலவீனம் நன்கு புலப்பட்டுவிட்டது. நேற்றுப் பிறந்த ஜப்பான் கையில் தோல்வியுற்ற பிறகு கேட்க வேண்டுமா? அரசாங்கத்தினிடம் இவர்களுக்கிருந்த நம்பிக்கை போய்விட்டது; தன்னம்பிக்கையும் இழந்துவிட்டார்கள். அந்நியநாட்டுப் பொருள்கள் வந்து குவிந்தன. அந்நியநாட்டு முதலாளிகள், தங்கள் மூலதனத்தைக் கொண்டு போட்டு புதிய புதிய தொழிற்சாலைகள் தொடங்கினார்கள். சுதேசத் தொழில்கள் நசித்துப் போயின. அபினி வியாபாரம் சுறுசுறுப்பாக நடை பெற்றது. ஜனங்கள், அபினி மயக்கத்தில் தங்கள் வறுமையை மறந்திருந் தார்கள். பத்தொன்பதாவது நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப் பாவும் சீனாவும் எப்படியிருந்தன என்பதை ஒப்பிட்டுப் பேசுகிற ஓர் ஆசிரியன் ஐரோப்பா, நாளொரு வண்ணமாக வாழ்ந்துவந்தது; சீனாவோ, பொழு தொரு பிறப்பாக உயிரைப் பிடித்துக் கொண்டி ருந்தது என்று கூறுகிறான். வறுமையானது, வாழ்க்கையைப் பண் படுத்தி மனிதனை தெய்வ நிலைக்கு அழைத்துக்கொண்டு போகிற தென்று சொன்னால், சீனாவிலே யுள்ள நாற்பது கோடி மக்களும் தேவர்கள்தான்!
மஞ்சூ அரசாங்கமோ, உள்ள நிலையிலேயே திருப்தி யடைந் திருந்தது. அதன் அதிகாரிகள், கன்பூஷியக் கிரந்தங்களில் மனம் லயித்துப் போனவர்களாய், சீனா, ஓர் அசைக்க முடியாத மலை யென்றும், அதனை அந்நியக் காற்று வந்து ஒன்றும் செய்து விட முடியாதென்றும் சொல்லிக் கொண்டு கனவு உலகத்திலே வாழ்ந்து கொண்டிருந்தார்கள். சாங் சீ டுங் என்ற ஒரு சீன அறிஞன் பின்வரு மாறு கூறுகிறான்:-
_உலகத்திலுள்ள மற்ற நாடுகளைவிட சீனா ஒன்றுதான், இந்த ஐம்பது வருஷகாலமாக மகா முட்டாள்தனத்தோடு கூடியதாய் இருந்து வருகிறது . .. . அரசாங்க உத்தியோகதர்கள் பலர் கர்விகள்; சோம்பேறிகள்; இந்த ஆபத்தான காலத்தைச் சமாளித்துக் கொண்டு செல்ல, பழைய முறைகளும் சம்பிரதாயங்களுமே போதுமென்ற திருப்தியோடிருக் கிறார்கள் . . . . . . . . . எங்களுடைய உத்தியோகதர்களில் கூர்ந்து பார்க்கிற சக்தியுடைய ஒருவர் கூட இல்லை. வெளிநாடுகளில் சீனாவுக்குச் சரியான பிரதிநிதிகள் இல்லை; உள்நாட்டிலோ சரியான பள்ளிக்கூடங்கள் இல்லை. ஊக்கம் அளிக்கின்ற, உறுதி பயக்கின்ற, குறைகளைப் போக்கி நிறைவுகளைச் செய்கிற எவ்வித சக்தியும் இல்லாமையினால், ஏக்கத்திலும் துக்கத்திலும் மூழ்கி இறந்து போவதைத் தவிர சீனாவுக்கு வேறு வழியில்லை._
ஆனால் இந்தக் காலத்தில், அழிவிலே ஆக்கம் உண்டு, தீமையிலே நன்மை யுண்டு என்று சொல்லப்படுவதைப் போல, சீனாவின் எதிர்கால வாழ்வுக்கான சில நம்பிக்கை ரேகைகளும் விடத் தொடங்கின. சீனாவுக்குப் பிரசார நிமித்தம் வந்த கிறிதுவப் பாதிரிமார்களிற் சிலர், மேனாட்டு ஞானத்தையும் கொண்டு புகுத்தினார்கள். மேனாட்டு முறையில் அமைந்த கல்விச்சாலைக ளென்ன, ஆபத்திரிகளென்ன, இப்படி பல வகையான தாபனங் களை ஆங்காங்கு நிறுவினார்கள். இவை களின் மூலமாக, ஜனங்கள், தங்கள் பழமையிலுள்ள சிறுமையையும், மேனாட்டுப் புதுமையி லுள்ள பெருமையையும் உணரலானார்கள். அநேக இளைஞர்கள் மேனாடுகளுக்குச் சென்று புதிய முறையில் கல்வி பயின்று வந்தார்கள். இவர்கள், பரம்பரை, வழக்கம், சம்பிரதாயம் முதலியவை களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, புதிய வழியிலே செல்வதற்குத் துணிவு கொண்டார்கள். பழைய நம்பிக்கைகள் நிறைந்து சோர்வினால் மூடப் பட்டிருந்த சீனர்களின் உள்ளத்தில் ஒரு புதிய சக்தியை உண்டு பண்ணுவதென்றால் அப்பொழுது லேசாக இருக்கவில்லை. சீர்திருத்தம் என்று வாய்திறந்தால் அதிகாரிகளின் சீறல் வேறே. அரசபீடத்தை இறுகப் பிடித்துக் கொண்டு இஷ்டம் போல் ஆட்டிவைத்துக் கொண்டிருந்த ரீஜண்டான த்ஸுஹ்ஸி,1 பணத்தை, நாட்டின் ராணுவ பலத்தை நவீன முறையில் அமைப்பதற்காகச் செலவழிப்பதற்குப் பதில், பகட்டான அரண்மனைகளைக் கட்டுவதில் செலவழித்துக் கொண்டிருந்தாள். இல்லாவிட்டால் சிறிய ஜப்பானிடம் பெரிய சீனா தோல்வியுற்றிருக்குமா? ஆனால் இந்தத் தோல்வியானது, மேனாட்டுக் கல்வி பயின்ற இளைஞர்களுக்குச் சீர்திருத்தத்தின் அவசியத்தை அதிகமாக உணரும்படி செய்தது.
சீன - ஜப்பானிய யுத்தம் தொடங்குவதற்குச் சிறிது காலத்திற்கு முன்னர், தெற்கு சீனாவிலுள்ள இளைஞர்கள், ஸன் யாட் ஸென் னுடைய தலைமையில், அரசாங்க நிருவாகத்தில் அநேக சீர் திருத்தங்கள் செய்யவேண்டுமென்று கோரி ஒரு மகஜர் தயாரித்து பீகிங் அரசாங்கத்திற்கு அனுப்பினர். இதற்குப் பின்னர், ஷிமோனே ஸெகி ஒப்பந்தம் நிறைவேறிய பிறகு, அதனைக் கண்டிக்குமுகத்தான், காங் யூ வெய் என்பவன், மற்றொரு மகஜர் தயாரித்து, அதில் ஆயிரக்கணக்கான அறிஞர்களுடைய கையெழுத்து வாங்கி அரச சந்திதானத்திற்கு அனுப்பினான். இந்த இரண்டு மகஜர்களும், மஞ்சூ அரசாங்கத்தைக் கொஞ்சங்கூட அசைத்துக் கொடுக்கவில்லை.
இந்த இடத்தில் ஸன் யாட் ஸென் யார், காங் யூ வெய் யார் என்பதைச் சுருக்கமாகத் தெரிந்துகொண்டு விடுவோம். ஏனென்றால் இவ்விருவரும் சீனாவின் எதிர்கால நல்வாழ்வுக்கு அடிகோலி யவர்கள்; சீனர்களின் இருதயத்தில் சாசுவதமாகக் குடிகொண்டிருக் கிறவர்கள்.
_ஸன் யாட் ஸென் சாதாரண ஒரு விவசாய குடும்பத்தில் 1866-ஆம் வருஷம் பிறந்தவன். இவனுடைய தகப்பனார் காலத்தி லேயே இவனுடைய குடும்பம் கிறிதுவ மதத்தைத் தழுவியது. இளமையி லிருந்தே ஸன்னுக்கு தேசபக்தியும் சுதந்திர உணர்ச்சியும் நிரம்பி யிருந்தன. சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையாக இராமல் எதையும் சுயமாக ஆராய்ச்சிசெய்து ஒரு முடிவுக்கு வர வேண்டுமென்ற ஆவல் இவனுக்கு இருந்தது. சுமார் பன்னிரண் டாவது வயதில், அமெரிக்கா பக்கமுள்ள ஹாவாய் தீவுக்குச் சென்று அங்கே ஹோனோலூலுவில் பாதிரிமார்களின் ஆதரவில் இவன் கல்வி பயின்றான். சிறப்பாக ஆங்கில மொழியில் நல்ல பரிச்சயம் ஏற்பட்டது. பின்னர் தாய் நாட்டிற்குத் திரும்பிவந்து, ஹாங்காங் கிலுள்ள வைத்தியக் கல்லூரியில் சேர்ந்து படித்து 1892-ஆம் வருஷம் டாக்டர் பட்டம் பெற்றான். பின்னர் மாக்கோ தீவுக்குச் சென்று வைத்தியத் தொழிலை ஆரம்பித்தான். அப்பொழுதுதான் இவன் அரசியலில் ஈடுபட்டது. 1892-ஆம் வருஷம் மாக்கோவிலேயே புனருத்தாரண சீன சங்கம் என்ற பெயரால் ஒரு சங்கத்தை தாபித்து நடத்திக்கொண்டு வந்தான். இந்தச் சங்கத்தின் கிளை தாபனங்களை, ஹோனோலூலுவில் ஒன்றும், ஹாங்காங்கில் ஒன்றும், அமெரிக்காவில் ஒன்றுமாக முறையே நிறுவி, வெளிநாடுக ளிலுள்ள சீனர்களின் உதவியை, சீனாவின் புனருத்தாரணத்திற்காக நாடினான்._
இவன் முதன்முதலாக 9-9-1895-ல் காண்டன் நகரத்தில், மஞ்சூ அரசாங்கத்திற்கு விரோதமாகப் புரட்சியை நடத்தினான். ஏனென்றால், காண்டன் வாசிகள்தான், மற்ற ஊர்வாசிகளைக் காட்டிலும், அந்நிய ஆதிக்கத்தின் அவதிகளை அதிகமாக அறிந்த வர்கள். ஆனால் ஸன்னினுடைய இந்த முதல் புரட்சி தோல்வி யடைந்துவிட்டது. இதே பிரகாரம் 1900, 1902, 1904-ஆம் வருஷங் களில் இவன் ஆரம்பித்த புரட்சி களும் வெற்றியடையவில்லை. இவைகளுக்குப் பின்னரே, இவனுக்கு, ஒழுங்கான திட்டங்களும் அவற்றை நிறைவேற்றுவதற்குக் கட்டுப் பாடான தாபனங்களும் இல்லாமல் எந்தப் புரட்சியும் வெற்றிபெறாதென்ற உண்மை புலப் பட்டது. சீனாவிலும் வெளிநாடுகளிலும் சீன சுதந்திரத்தை லட்சிய மாகக் கொண்ட ரகசியச் சங்கங்கள் பலவற்றை தாபித்தான். இதற்காக உலகத்தின் பல பாகங்களுக்கும் சுற்றுப் பிரயாணஞ் செய்தான். இந்தப் பிரயாணத்தின் போதுதான் இவன் ஸான் மின் ஜூயி என்ற ஜனங்களின் மூன்று வாழ்க்கைத் தத்துவங்களைப் பற்றியும், சீன அரசியல் எப்படி இருக்க வேண்டு மென்பதைப் பற்றியும் சில திட்டங்கள் வகுத்துக் கொண்டான். பின்னர் ஜப்பானுக்குப் போந்து அங்கே டோக்கியோ நகரத்தில், சீனப் புரட்சிவாதிகள் பலரையும் ஒன்று கூட்டுவித்து சுங் குவோ டுங் மென்ஹுயி என்ற ஒரு ரகசிய தாபனத்தை ஏற்படுத்தினான். இதுவே பின்னர் கோமிண்டாங் கட்சியாகப் பரிணமித்தது. 1905-ஆம் வருஷம் இந்தச் சங்கம் தாபிதமானதிலிருந்து 1911-ஆம் வருஷம் வரை ஸன் யாட் ஸென் சுமார் பதின்மூன்று புரட்சிகளுக்கு ஏற்பாடுசெய்து ஒவ்வொன்றிலும் தோல்வியடைந்து வந்தான். இந்தக் காலத்தில் இவன் உயிருக்கு ஏற்பட்ட ஆபத்துகள்தான் எத்தனை? மஞ்சூ அரசாங்கம் இவனை உயிரோடு பிடித்துக் கொண்டு வருவோருக்கு அல்லது இவன் தலையைக் கொண்டு வரு வோருக்கு அதிக சன்மானத்தை அளிப்பதாகக் கூடப்பிரகடனப்படுத்தியது. அதுவும் இந்த விஷயத்தில் தோல்வியே யடைந்து வந்தது. கடைசியில் 1911-ஆம் வருஷத்துப் புரட்சி வெற்றி பெற்றது. முடியரசு முடிந்தது; குடியரசு தாபிதமாயிற்று. ஆனால், ஆரம்பத்திலிருந்தே இதற்குப் பல இடையூறுகள் ஏற்பட்டன. இவைகளைச் சமாளிக்க ஸன் அநேக பாடுகள் பட்டான். இவைகளைப் பின்வரும் அத்தியாயங்களில் உரிய இடங்களில் காண்க. ஸன் 12-3-1925-இல் இறந்து போனான்.
காங் யூ வெய் என்பவன் ஒரு காண்டன் வாசி; 1858-ஆம் வருஷம் பிறந்தவன். இவன் தீவிரமான சீர்திருத்தவாதி; ஆனால் புரட்சி வாதியல்ல. இவன் சீன முறையிலேயே கல்வி பயின்றவ னாயினும், ஜப்பானின் வேகமான முன்னேற்றத்தையும், தனது நாட்டின் மந்த கதியையும் ஒப்பிட்டு நோக்கி, இந்த வேற்றுமைக்குக் காரணமென்ன வென்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்யத் தொடங் கினான். வெளிநாடுகளில் நடைபெறு கிற விஷயங்களையும், அவை முன்னுக்கு வந்த வரலாற்றையும் தனது நாட்டு மக்களுக்கு நூல்கள் மூலம் தெரிவித்தான். இவன் முடியரசு வாதி; ஸன் யாட் ஸென் குடியரசு வாதி. காங் யூ வெய், சீனாவின் பழமையையொட்டினாற் போலவே அதன் முன்னேற்றம் இருக்க வேண்டுமென்று கருதினான். இவனை சீனாவின் நவயுக ஞானி என்று இன்றளவும் சீனர்கள் போற்றுகிறார்கள்.
ஸன் யாட் ஸென்னும் காங் யூ வெய்யும் அனுப்பிய மகஜர்கள், எவ்விதமான பலனையும் கொடுக்கவில்லை யென்று மேலே சொன்னோமல்லவா? இதற்குப் பிறகு நாட்டில், சீர்திருத்த நோக்கங் கொண்டு அநேக சங்கங்கள் தோன்றின. இவை பலவற்றில் அரசாங்க உயர்தர உத்தியோகதர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். ஆனால் அரசாங்கம் இவைகளை யெல்லாம் அடக்குமுறை கொண்டு அடக்கிவிட்டது. எனவே இவைகளில் அநேகம் ரகசியச் சங்கங்களாக உருமாறிக்கொண்டு, ஜனங்களின் மத்தியிலே தீவிர மாக வேலை செய்துவந்தன. சீன சரித்திர பரம்பரைக்கும் ரகசியச் சங்கங்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டல்லவா?
காங் யூ வெய், சீர்திருத்த நோக்கமுடையவனாயிருந்தும், ஸன் யாட் ஸென்னைப் போல் அரசாங்கத்தை விரோதித்துக் கொள்ள வில்லை யாதலால், இவனுக்கு பீகிங்கில் ஓர் உயர்தர உத்தியோகம் கிடைத்தது. இவன், அப்பொழுது மஞ்சூ அரச பீடத்தில் கொலு வீற்றிருந்த தேத்ஸுங் மன்னனின் நெருங்கிய நண்பனானான். தேத்ஸுங், மன்னனாயிருந்தும் அவனை ஆட்டிவைத்தவள் த்ஸுஹ்ஸி.1 தேகபலமும் மனோபலமு மில்லாத தேத்ஸுங் மன்னன், சீர்திருத்த நோக்கமுடைய இளைஞர் களால் உற்சாகமூட்டப் பெற்று, அவனுக்குரிய அதிகாரத்தைச் செலுத்து மாறு தூண்டப்பட்டான்.
இங்ஙனம் தூண்டியவர் பெரும் பாலோர் தெற்கு சீனவாசிகள்; அந்நியர்களோடு நெருங்கிப் பழகி அவர்களுடைய தன்மைகளை நன்கு அறிந்திருந்தவர்கள். இவர்கள் தெற்கித்தியார் என்று அழைக்கப்பட்டார்கள். இவர்களுக்கு விரோதமாக, முதியோர்களெல் லோரும் - அதாவது பழமையே நிலைத்திருக்க வேண்டுமென்ற பிடி வாதமான கொள்கை யுடைய வரும், அந்நியர்களுள்பட அந்நியமா யுள்ள எதனையும் வெறுத்து வந்தவரும்,ஆனால் அந்நியர்கள் முன்னே அடங்கிப் போகிறவருமான பணக்காரர், உயர்தர உத்தியோகதர், ஏகபோக உரிமைக்காரர் முதலியோர் - ஒரு கட்சியினராகச் சேர்ந்து கொண்டனர். இவர்களிற் பெரும் பாலோர் வட மாகாணங்களைச் சேர்ந்தவர்கள். வடக்கித்தியார் என்று அழைக்க ப்பட்ட இவர்கள் அரசாங்க ஆதரவு நிழலிலேயே தங்கள் ஆயுட்காலத்தை யெல்லாம் கழித்தவர்கள். இவர்கள் தேத்ஸுங் மன்னனுக்கு விரோதமாக ரீஜண்டான த்ஸுஹ்ஸியைச் சேர்ந்து கொண்டார்கள். எனவே, அரசாங்க அதிகாரக் கோட்டைக் குள்ளேயே முதியவர்- அல்லது வடக்கித்தியார் கட்சியென்றும், இளையவர் அல்லது தெற்கித்தியார் கட்சியென்றும் முறையே இரண்டு கட்சிகள் ஏற்பட்டு ஒன்றுக்கொன்று விரோதமாக வேலை செய்துவந்தன.
1898-ஆம் வருஷம் ஜூன் மாதம் தேத்ஸுங் மன்னன், இளைய கட்சியினரால் ஊக்கப்பெற்று, அரசாங்க நிருவாகத்தில் அநேக சீர்திருத்தங்கள் செய்து உத்திரவுகள் மேல் உத்திரவுகளாக விடுத்தான். ஜூன் மாதம் இருபதாந் தேதி முதல் செப்டம்பர் மாதம் பதினாறாந் தேதிக்குள் முப்பத்தெட்டு உத்திரவுகள் பிறந்தன. சர்வ கலாசாலை தாபிதம் முதல் தொழிலாளர் நலனைப் பாதுகாப்பது வரையில், கப்பல் கட்டுந் தொழிலை ஆரம்பிப்பது முதல் அலங்கார பதவிகளாயிருந்த சில உத்தியோகங்களை வேண்டாமென்று சொல்வது வரையில் பல விஷயங்கள் இந்த உத்திரவுகளிலே அடங்கியிருந்தன. ஆனால் இந்தச் சீர்திருத்த உத்திரவுகளின் வாழ்வெல்லாம் நூறுநாள் வாழ்வுதான்!
கொரியாவில் ஏற்கனவே விசேஷ தானீகனாயிருந்து சிறந்த ராஜதந்திரியென்று பெயர் வாங்கியவனும், ராணுவ நிபுணனென்று கருதப்பட்டவனுமாகிய யுவான் ஷி காயிடம், ராணுவ நிருவாகச் சீர்திருத்தத்தின் பொறுப்பை, அரசன் ஒப்புவித்தான். சீர்திருத்தக் காரர்கள் இவனிடத்தில் நம்பிக்கை வைத்து, தங்களுடைய அந்தரங்கத் திட்டங்களிற் சிலவற்றை இவனிடம் தெரிவித்தார்கள். இவற்றிலே ஒன்று, சீர்திருத்தங்களுக்குப் பரம விரோதியாயிருக்கின்ற ரீஜண்டையும் அவளுடைய முக்கிய ஆலோசகனாகிய ஜுங் லூ என்பவனையும் கைது செய்துவிடுவதென்பது. ஏனென்றால் அப் பொழுதுதான் சீர்திருத்தத் திட்டங்களைத் தங்கு தடையின்றி அனுஷ்டானத்திற்குக் கொண்டு வருதல் சாத்தியாமகுமென்று இவர்கள் எண்ணினார்கள். ஜுங் லூ என்பவன், யுவான் ஷிகாயின் மேலதிகாரி. இவனிடத்தில் யுவான், சீர்திருத்தக்காரர்களுடைய மேலே சொன்ன யோசனையைத் தெரிவித்தான். இதனுடைய பலன் என்ன? சக்ரவர்த்தியே ரீஜண்டினால் சிறைப் படுத்தப்பட்டு விட்டான்! அது மட்டுமல்ல, ரீஜண்டே சக்ரவர்த்தி பதவியிலிருந்து இனி ராஜ்ய நிருவாகத்தை நடத்துவாள் என்று அறிக்கையும் விடும் படி செய்யப்பட்டான்! பின்னர், சக்ரவர்த்தினியின் பெயரால், முன் விடுக்கப் பெற்ற சீர்திருத்த அறிக்கைகளையெல்லாம் ரத்து செய்து, மாற்று அறிக்கைகள் விடுக்க பெற்றன; விலக்கப்பட்டிருந்த பழைய உத்தியோகதர்கள் பழையபடி அமர்த்தப் பெற்றார்கள்; சீர்திருத்தக் காரர்கள் மரண தண்டனைக்காளாகியோ, தேசப் பிரஷ்டர் களாகியோ போனார்கள். மீண்டும் ராஜ்யத்தில் பிற்போக்குச் சக்தி தலைவிரித்து ஆட ஆரம்பித்துவிட்டது.
இந்தப் பிற்போக்குச் சக்தியுடன் அந்நியத் துவேஷமும் கலந்து கொண்டது. இதற்கு, பீகிங் அரண்மனையிலிருந்து அந்தரங்கமான ஆதரவும் கிடைத்துக் கொண்டிருந்தது. துறைமுகப் பிரதேசங்களில், அந்நிய வியாபாரிகளும் சீனர்களும் அந்நியோந்நியமாய்ப் பழகி வந்தார் களென்றாலும், உட்பிரதேசங்களில், ஏற்கனவே அந்நியர்கள் மீதிருந்த வெறுப்பு வளர்ந்து வந்தது. இந்த வெறுப்பு, சீன அதிகாரி களால் அந்தரங்க மாக ஆதரிக்கப்பட்டும் வந்தது. ஆனால் இதைக் குறித்து ஆச்சரியமே படத் தேவையில்லை. ஏனெனில், அந்நியர்கள் சீனாவைப் பங்குபோட்டுக் கொள்கிற விஷயத்தில், இந்தக் காலத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார் களல்லவா? இதே சமயத்தில், சீனர்களை மயக்கி ஆட்கொள்ள, அபினியைச் சட்ட ரீதியாகக் கொணர்ந்து திணித்துவந்த தொழிலை வருஷத்திற்கு வருஷம் பெருக்கிக் கொண்டு வந்தார்கள். மேனாட்டு முறையில் தாபிக்கப்பட்ட தொழிற்சாலைகள், ஜனத்தொகையில் ஒரு சிறு பகுதியினருக்கு வேலை கொடுத்துவந்தன வென்றாலும், பெரும் பாலோருடைய பொருளாதாரக் கஷ்டங்கள் அதிகரித்து வந்தன. பாதிரி மார்களின் பிரசாரம் ஆக்கம் பெற்றுவந்தது. இவற்றோடு வெள்ளப் பெருக்கும் பஞ்சப் பாழும் கலந்து கொண்டன. கேட்க வேண்டுமா அந்நியர் மீது துவேஷத்திற்கு? அந்நியர்களை அப்புறப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்துடன் கட்டுப்பாடான ரகசிய தாபனங்கள் பல தோன்றின. இவைகளிலே ஒன்று ஐஹோ சுவான் என்ற தரும - சாந்தி தாபன மல்லர் சங்கம். இந்தச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பாக்ஸர்கள் என்று அந்நியர்களால் அழைக்கப்பட்டார்கள். முஷ்டி யுத்தம், கத்தி விளை யாட்டு முதலியவைகளில் பயிலுவிப்பதே தங்கள் நோக்கம் என்று இவர்கள் சொல்லிக் கொண்டார்கள். இவர்கள் நாடோடி வாழ்க்கை நடத்துகிறவர்களாகவே வெளிக்குக் காணப்பட்டார்கள். ஆனால் இவர்கள், இந்த நாடோடி வாழ்க்கையை மேற்கொண்டதற்குக் காரணம், ஆங்காங்குச் சுலபமாகச் சென்று தங்களுடைய தாபனத்தை நிறுவி அவைகளின் மூலமாக அந்நிய துவேஷப் பிரசாரத்தைச் செய்யமுடியும் என்பதுதான். இவர்களுக்கு எவ்வித நிர்ணயமான அரசியல் கொள்கையும் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனாலும் இவர்களுடைய இயக்கம் நாடெங்கணும் பரவியது. தங்களிடத்தில் தெய்வ சக்தி வந்து குடிகொண்டிருக்கிற தென்றும், அந்நியர் களுடைய வெடிகுண்டு, பீரங்கி முதலிய எதுவும் தங்களை ஒன்றுஞ் செய்யாதென்றும், அந்நியர் களுடைய கப்பல்களைக் கூட சீனாவுக் குள் வரவொட்டாதபடி தங்கள் மந்திர சக்தியினால் தடுத்துவிட முடியும் என்றும், இந்த மாதிரியான நம்பிக்கைகளைப் பாமர ஜனங்களிடத்தில் உண்டுபண்ணி, அவர்களிட மிருந்து ஆள் பலமும், பொருள் பலமும் சேர்த்துக் கொண்டார்கள். இவர் களுடைய கட்சியில் சேர்ந்ததற்கு அடையாளமாக, சிவப்புத் தலைப்பாகை கட்டிக் கொள்ள வேண்டும், சில மந்திர தந்திரங்களை அனுஷ்டிக்க வேண்டும் என்று இப்படிப்பட்ட சில கட்டுப்பாடுகளை விதித்தி ருந்தார்கள். எப்படியோ இவர்களுடைய இயக்கம் வலுத்து, 1900-ஆம் வருஷத் தொடக்கத்தில் பெரிய எரிமலையாக வெடித்தது. இதுவே பாக்ஸர் கலகம்.
சில சில மாகாண அதிகாரிகள், தங்கள் எல்லைக்குள் இந்த அந்நியத் துவேஷ இயக்கம் தீவிரமாகப் பரவிவிடாதபடி ஆரம் பத்திலேயே அடக்கிவிட்டாலும், பொதுவாக இதற்கு பீகிங் அரசாங்கத்தினுடைய, சிறப்பாக ரீஜண்ட் சக்ரவர்த்தினியுடைய மறைமுகமான ஆதரவு இருந்து வந்தது. இதனை இவர்கள் - பாக்ஸர்கள் - தெரிந்து கொண்டு விட்டார்கள். கேட்க வேண்டுமா அட்டகாசத்திற்கு? மஞ்சூ அரசாங்கத்தை ஆதரியுங்கள்; அந்நியப் பேய்களை விரட்டுங்கள் என்பது இவர்களுடைய மந்திர வாக்கிய மாகிவிட்டது. இதைப் பகிரங்கமாகவும் கோஷிக்கத்தொடங்கி னார்கள். அந்நிய உயிர்களுக்கும் பொருள்களுக்கும் பல இடங்களில் ஏராளமான சேதம் உண்டாயிற்று. கிறிதுவர்களாக மதம் மாறின சீனர் பலர் கொலையுண்டனர். அந்நியப் பேய்கள் கொண்டுவந்து புகுத்திய ரெயில், தந்தி, மின்சாரம், தபால் முதலிய தாபனங்கள் நாசமாக்கப்பட்டன; தீக்கிரையாக்கப்பட்டன.
இந்த ஏராளமான சேதங்களைப் பார்த்து பாக்ஸர்கள் வெற்றிபெற்று வருகிறார்களென்று ரீஜண்ட் சக்ரவர்த்தினி நினைத்துக் கொண்டு விட்டாள்; பகிரங்கமாகவே இவர்களுக்கு ஆதரவு காட்டினாள். அந்நியநாட்டு தானீகர்கள் இனிச் சும்மா யிருக்க முடியுமா? தங்கள் தங்கள் நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தார்கள்; உட்பிர தேசங்களில் சிதறிக்கிடந்த அந்நியர் அனைவரையும் ஒன்றுகூட்டி முக்கியமான நகரங்களுக்குக் கொணர்ந்து தகுந்த பந்தோபதில் வைத்தார்கள். இவர்களுக்குப் பாதுகாப்பாக, யாங்க்ட்ஸீ நதியின் முகத்துவாரத்தில் வைக்கப்பட்டிருந்த சில போர்க்கப்பல்களும் நகர்ந்தன. இந்தச் செய்திகள் யாவும் ரீஜண்ட் சக்ரவர்த்தினிக்குத் தெரிந்தது. இதற்கேற்றாற்போல், ஷாங்காயில் வெளியான ஓர் ஆங்கிலப் பத்திரிகை பீகிங் அரசாங்கத்தையும் சக்ரவர்த்தினியையும் பலமாகத் தாக்கி ஒரு தலையங்கம் எழுதியிருந்தது. இது, சக்ரவர்த் தினிக்கும் அவளுடைய பிற்போக்கான ஆலோசகர்களுக்கும் அதிகமான ஆத்திரத்தை உண்டு பண்ணிவிட்டது. மறுநாளே - 1900 ஆம் வருஷம் ஜூன் மாதம் இருபதாந் தேதி - பீகிங்கிலுள்ள அந்நிய நாட்டு தானீகர் அனைவருக்கும், இருபத்து நான்கு மணி நேரத்திற்குள் பீகிங் நகரத்தை விட்டு வெளியேறிவிட வேண்டு மென்று ஓர் உத்திரவு பிறப்பித்தாள். அவர்கள் ஒன்று சேர்ந்து இந்த உத்திரவுக்கு இணங்க முடியாதென்று மறுத்துவிட்டார்கள். உடனே அவர்கள் மீது யுத்தந் தொடுத்திருப்பதாக அரண்மனையிலிருந்து மறு உத்திரவு பிறந்தது. அரசாங்கத்து மந்திரிகளை நேரில் கண்டு பேசுவதாகப் புறப்பட்ட ஜெர்மன் தானாதிபதியைப் பட்டப் பகலில் நடு வீதியிலேயே, ஒரு சீனப் போர்வீரன் துப்பாக்கியினால் சுட்டுக் கொன்றான். அந்நியர்கள் வசித்துக் கொண்டிருந்த இடத்தை அரசாங்கப் படைகள் முற்றுகை இட்டன. சுமார் எட்டு வாரகாலம் இந்த முற்றுகை நீடித்தது. இந்த விஷயம் உலகத்தின் பல பாகங் களுக்கும் உடனே தெரிந்து விட்டது. அந்தந்த நாட்டு அரசாங்கங் களும், தங்கள் தங்கள் பிரஜைகளைக் காப்பாற்றும் பொருட்டுப் படைகளை அனுப்பின. பிரிட்டன், பிரான், ருஷ்யா, ஜெர்மனி, ஜப்பான், அமெரிக்கா, இத்தலி, ஆதிரியா ஆகிய எட்டு நாட்டுப் படைகளும் பீகிங் வந்து முற்றுகையை விடுவித்தன. இப்படி விடுவித்த துருப்புகளிலே இந்தியத் துருப்புகளும் சேர்ந்திருந்தன என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. முற்றுகையை விடுவிக்க வந்த இந்தப் பெரும்படையை எதிர்த்து நிற்க முடியாமல் சீனப் படைகள் ஓட்டம் பிடித்தன. சக்ரவர்த்தினி, சக்ரவர்த்தியுடனும் முக்கியமான சில பரிவாரங்களுடனும் மாறுவேஷம் தரித்துக் கொண்டு, அரண் மனையை விட்டு வெளியேறி விட்டாள். நகரம் ஒரே அல்லோல கல்லோலம். அரசாங்கமே ஓடிப்போய் விட்டால், பிரஜைகளின் கதி என்னவாகு மென்பதை நாம் சொல்லவேண்டியதில்லையல்லவா? அந்நியத் துருப்புகள் நகரத்திற்குள் பிரவேசித்ததும் இஷ்டப்படி சூறையாடி அநேக அக்கிரமங்களைச் செய்தன. பாக்ஸர்களுடைய அட்டூழியத்தைக் காட்டிலும் அந்நியத் துருப்புகளின் அட்டூழியம் மிகவும் அதிகமாயிருந்த தென்பது அப்பொழுது நேரில் பார்த்தவர் களுடைய அபிப்பிராயம். பீகிங் தவிர மற்ற இடங்களுக்கும் - அதாவது அந்நியர்கள் எங்கெங்கு சிக்கிக்கொண்டு விட்டார்களோ அங்கெல்லாம் - அந்நியப் படையினர் அனுப்பப்பட்டனர். சில மாதங்களோடு இந்த பாக்ஸர் கலகம் ஒருவாறு நின்றது.
இந்தக் குற்றத்திற்கு - அதாவது அந்நியர்களுக்கு விரோத மாகக் கலகஞ் செய்ததற்கு, சீனா தக்க தண்டனை பெற வேண்டுமல்லவா? அந்நிய நாட்டுப் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றுகூடி இது சம்பந்த மாக ஆலோசனை செய்தார்கள்; சீன அரசாங்கப் பிரதிநிதிகளோடு பேச்சு வார்த்தைகள் நடத்தினார்கள். சுமார் ஒரு வருஷ காலமாயிற்று இவை முடிவதற்கு. கடைசியில் 7-9-1901-இல் ஓர் ஒப்பந்தம் நிறை வேறியது. இதற்கு பாக்ஸர் ஒப்பந்தம் என்று பெயர். இதன் முக்கிய ஷரத்துகள் வருமாறு:-
_1. ஜெர்மன் தானீகன் ஒருவன் கொல்லப்பட்டு விட்டானல்லவா, அதற்குச் சீன அரசாங்கம் தனது செலவில் ஒரு ஞாபகச் சின்னம் கட்ட வேண்டும்; மன்னிப்புக்கோரி ஜெர்மனிக்கு ஒரு தூது கோஷ்டியை அனுப்ப வேண்டும்._
_2. கலகத்திற்கு உடந்தையாயிருந்த உத்தியோகதர்களைத் தண்டனைக்குட்படுத்த வேண்டும்._
_3. இந்தக் காலத்தில் ஜப்பானிய தானீகன் ஒருவன் கொல்லப் பட்டுவிட்டான்: அவன் பொருட்டு நஷ்ட ஈடு, மன்னிப்பு முதலியன கொடுக்கப் பெறவேண்டும்._
_4. இரண்டு வருஷ காலத்திற்கோ அல்லது வல்லரசுகள் விதிக்கிற கால அளவுவரையிலோ, சீனா, வெளிநாடுகளிலிருந்து எந்தவிதமான ஆயுதங்களையும் இறக்குமதி செய்யக்கூடாது._
_5. சீனா, எல்லா வல்லரசுகளுக்குமாக மொத்தம் சுமார் நூறு கோடி ரூபாய், நூற்றுக்கு நான்கு விகிதம் வட்டியுடன் சேர்த்து நாற்பது வருஷத் தவணையில் நஷ்ட ஈடாகக் கொடுக்க வேண்டியது. இந்தத் தொகைக்கு அடமானமாக, இன்னும் பாக்கியுள்ள சுங்க வருமானம், உப்பள இலாகா வருமானம் முதலியவைகளை வைக்க வேண்டும். (1940-ஆம் வருஷம் வரை இந்தத் தொகை செலுத்தப் பட்டு வந்தது.)_
_6. பீகிங்கில் அந்நிய தானீகர்களின் வாசத்திற் கென்று தனியான இடம் ஒதுக்கப்பட வேண்டும். இதற்குக் காவல் செய்ய ஒரு படையும் அனுமதிக்கப்பட வேண்டும்._
_7. அந்நியப் படைகள் பீகிங்குக்குத் தங்குதடையின்றி வருவ தற்கு அனுகூலமாக, (யாங்க்ட்ஸீ முகத் துவாரத்திலிருந்து) வழியி லுள்ள எல்லாக் கோட்டை கொத்தளங்களையும் இடித்துத் தகர்த்து விட வேண்டும். இந்த வழியில் அந்நியத் துருப்புகள் காவல் செய்ய இடம் பெற வேண்டும்._
_8. அந்நியர்களுக்கு விரோதமாக ஏதேனும் அட்டூழியங்கள் நடைபெறுமானால் அவை கண்டிப்பாக அடக்கப்படும் என்றும், மாகாண அதிகாரிகள் இது விஷயத்தில் எச்சரிக்கையாயிருக்க வேண்டுமென்றும் பீகிங் அரசாங்கம் பகிரங்க அறிக்கை வெளியிட வேண்டும்._
_9. ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ள வியாபார ஒப்பந் தங்கள் மீண்டும் பரிசீலனை செய்யப்பட வேண்டும்._
சென்ற இரண்டு நூற்றாண்டுகளுக்குள் உலகத்தில் ராஜதந்திர ஒப்பந்தங்கள் எத்தனையோ நிறைவேற்றப்பட்டிருக்கின்றன; சில கடுமையான ஷரத்துக்களும் அவற்றின் அடங்கியிருக்கக்கூடும். ஆனால் இந்த பாக்ஸர் ஒப்பந்தத்தைப் போல் கடுமையான ஷரத்துக் களடங்கிய ஒப்பந்தம் வேறெதுவுமே இல்லையென்பதுதான் நடு நிலைமையுள்ள ராஜதந்திரிகளின் அபிப்பிராயம். இந்த ஒப்பந்த நிறைவேற்றத்தில் ஒரு வேடிக்கை யென்னவென்றால், இதில் இரு சாராரும் கையெழுத்திடு வதற்கு முன்னரேயே இதன் ஷரத்துக்களில் பல நிறைவேற்றப்பட வேண்டுமென்று ஐரோப்பிய வல்லரசுப் பிரதி நிதிகள் வற்புறுத்தியதுதான்! 1900-ஆம் வருஷத்திற்குப் பிறகு, யாங்க்ட் ஸீ முகத்துவாரத்திலிருந்து பீகிங் வரையில் வழி முழுவதும் அந்நிய நாட்டுத் துருப்புகள் நடமாடாத நாட்களே கிடையாது. பீகிங் நகரத்தில் மட்டுமென்ன? அங்கும் இந்த ராணுவக் கோலந்தான். பாக்ஸர் ஒப்பந்தம் நிறைவேறின அடுத்த வருஷம் - 1902-ஆம் வருஷம் ஜனவரி மாதம் - வெளியூருக்கு ஓடிப் போய்விட்ட ரீஜண்ட் சக்ரவர்த்தினி தனது அரச பரிவாரங் களோடு பீகிங் நகரத்திற்குத் திரும்பிவந்தாள். சுடுகாட்டிலிருந்து திரும்பி வருகிற ஊர்வலம் மாதிரி இருந்தது இது. ஆம்; மஞ்சூ அரச பரம்பரையின் கௌரவமெல்லாம் புதைக்கப்பட்டுவிட்டதல்லவா? எஞ்சியிருப்பது என்ன? சீன ஏகாதிபத்தியம் என்கிற வெறும் பெயர் மட்டும்தான்: பார்வை யில்லாத கண்மாதிரி.
ருஷ்ய - ஜப்பானிய யுத்தம்
பிரான், ஜெர்மனி, ருஷ்யா ஆகிய மூன்று ஐரோப்பிய வல்லரசுகளும் சேர்ந்து வற்புறுத்தியதற் கிணங்க, லியோடுங் தீபகற்பத்தையும், போர்ட் ஆர்தர் துறைமுகத்தையும் ஜப்பான் திருப்பிச் சீனாவுக்கே கொடுத்து விட்டதல்லவா? இதற்குப் பிறகு அதனுடைய - அதாவது ஜப்பானுடைய - அரசியல் சிந்தனையில் ஒரு பெரிய மாறுதல் ஏற்பட்டது. ஐரோப்பா வேறே, ஆசியா வேறே என்ற எண்ணம் அதற்குத் தோன்றிவிட்டது. ஐரோப்பிய வல்லரசுகள், தங்களுக்குள் எந்த விதமான பிணக்குகள் இருந்தபோதிலும், போராட்டங்கள் நடத்திக்கொண்ட போதிலும், வேறு கண்டத்தவர், வேறு நிறத்தவர் என்ற பிரச்னை வருகிற போது, அவை யாவும் ஒன்று சேர்ந்துகொண்டு விடுகின்றன என்ற உண்மையை ஜப்பான் அப் பொழுது உணர்ந்து கொண்டது. பிற்காலத்தில், ஆசியா, ஆசியாக் காரர்களுக்கே என்ற கோஷத்தைக் கிளப்பிக்கொண்டு ஜப்பான் வீறிட்டெழுந்ததற்குக் காரணமென்னவென்று நாம் சிறிது ஆராய்ச்சி செய்து பார்த்தோமானால், இந்த ஷிமோனேஸெகி ஒப்பந்தத்திற்குப் பிறகு, ஐரோப்பிய வல்லரசுகள் ஏகோபித்து ஜப்பான் விஷயத்தில் நடந்து கொண்ட மாதிரிதான் என்பது நன்கு தெரியவரும். ஆசியா, ஆசியாக்காரர் களுக்கே என்று ஜப்பான் சொல்வதை யாரும் ஆட் சேபிக்கவில்லை; ஆட்சேபிக்கவும் முடியாது. ஆனால் ஆசிய கண்ட மனைத்திற்கும் தானே ஏகப் பிரதிநிதியென்று அது சொல்லிக் கொள்வதையே எல்லோரும் ஆட்சேபிக்கிறார்கள். தானே ஏகப் பிரதிநிதியாக இருக்கவேண்டுமென்ற எண்ணம், ஜப்பானுக்கு ஏற்பட்டது இந்த ஷிமோனேஸெகி ஒப்பந்தத் திற்குப் பிறகுதான். இது நிற்க.
மேலே சொன்ன மூன்று ஐரோப்பிய வல்லரசுகளும் சேர்ந்து சீனாவுக்கு அதனுடைய சொத்தை வாங்கிக் கொடுத்துவிட்டன வென்று சொன்னாலும் இதற்கு முக்கிய காரணமாயிருந்தது ருஷ்யாதான். ருஷ்யா சுயநலத்திற்காகவே இப்படிச் செய்தது என்பதை ஜப்பான் வெகுசீக்கிரத்தில் உணர்ந்து கொண்டுவிட்டது. ஏனென்றால், மூன்று வருஷங் கழித்து (1898) மேற்படி லியோடுங் தீபகற்பத்தையும், போர்ட் ஆர்தர் துறைமுகத்தையும், இருபத்தந்து வருஷ குத்தகைக்குச் சீனாவிடமிருந்து ருஷ்யா பெற்றுக்கொண்டதல்லவா?’ இதற்குப் பிறகு, ஜப்பானுக்கு, ருஷ்யா மீது ஆத்திரம் வளர்ந்துவந்தது. ருஷ்யாவை என்றைக்காவது ஒரு நாள் எதிர்த்துப் போராட வேண்டியிருக்குமென்பதை அறிந்து அதற் கேற்றபடி தன் பலத்தை விருத்தி செய்து கொண்டு வந்தது.
பாக்ஸர் ஒப்பந்தத்திற்குப் பிறகு, சீனாவின் பலவீனத்தை நன்கு உணர்ந்துகொண்ட ருஷ்யா, தெற்கு மஞ்சூரியாமீது தன் திருஷ்டியைச் செலுத்தியது. அங்கேயே தன்னை ஊன்றிக் கொண்டு விட வேண்டுமென்ற ஆசை இதற்கு இருக்கிறதென்பதை எல்லா வல்லரசுகளும் பல ஹேஷ்யங்களினால் ஊகித்துக்கொண்டன. எப்படியென்றால், அப்பொழுதைய ருஷ்யா, ஏகாதிபத்திய ஆசை யில் மூழ்கிக் கிடந்தது. அதனுடைய ராஜதந்திரிகளும் முதலாளி வர்க்கத்தினரும் மண்ணையும், பொன்னையும் முறையே பெருக்கு வதை லட்சியமாகக்கொண்டு அதற்கான எல்லா முறைகளையும் கையாளத் தயாராயிருந்தார்கள். இந்த மாதிரியான முயற்சிகளிலே ஒன்றுதான், மஞ்சூரியாவில் ரெயில் போட்டு, அதை நிருவாகம் செய்கிற உரிமையைப் பெற்றது. தவிர, சீனாவும் ருஷ்யாவும், ஜப்பானுக்கு விரோதமாக ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டிருக் கின்றனவென்பதை ஜப்பானுட்பட எல்லா வல்லரசு களும் தெரிந்து கொள்ளாமலில்லை. இதனால் ருஷ்யா மீது ஒருவித அவநம்பிக்கை ஜப்பானுக்கு இருந்துகொண்டிருந்தது. இதற்குத் தகுந்தாற் போலவே ருஷ்யாவின் நடவடிக்கைகளும் இருந்தன.
பாக்ஸர் கலகமானது, மஞ்சூரியா முதலிய சீன ஆதிக்கத் துக்குட்பட்ட எல்லாப் பிரதேசங்களிலும் பரவியிருந்த தல்லவா? இதனை அடக்கவும், தங்கள் தங்கள் பொருள்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் ஐரோப்பிய வல்லரசுகள் துருப்புகளை அனுப்பி யிருந்தன. கலகம் அடங்கி பாக்ஸர் ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, மேற்படி வல்லரசுகள் தங்கள் துருப்புகளை வாப வாங்கிக் கொண்டன. ஆனால் ருஷ்யா மட்டும் ஏதோ சாக்குப்போக்குகள் சொல்லிக் கொண்டு, தன் துருப்புகளை மஞ்சூரியாவி லிருந்து வாப வாங்கிக்கொள்ளாமல் இருந்தது. வாப வாங்கிக் கொள்ளாமல் இருந்ததோடுமட்டுமல்ல, புதிய துருப்புகளையும் அங்குக் கொண்டுவந்து சேகரித்தது. மஞ்சூரியாவைத் தன் செல்வாக்குப் பிரதேச மாக்கிக் கொள்வதற்கான நிபந்தனைகளைக் கோரி, அந்தக் கோரிக்கைக்குச் சீனா இணங்குகிறவரையில் மஞ்சூரியாவிலிருந்து தான் விலகிக் கொள்ள முடியாதென்றும் கூறியது. ருஷ்யாவின் இந்த ஆக்கிரமிப்பு எண்ணம், பொதுவாக ஐரோப்பிய வல்லரசுகளுக்கும், சிறப்பாக ஜப்பானுக்கும் சந்தேகத்தை உண்டு பண்ணியது. ருஷ்யாவின் பிடிவாதத்தை அமெரிக்கா, ஜப்பான் முதலிய நாடுகள் கண்டித்தன.
1894 - 95-ஆம் வருஷத்துச் சீனா - ஜப்பானிய யுத்தத்திற்குப் பிறகு, மஞ்சூரியா விஷயமாகவும் கொரியா விஷயமாகவும் ருஷ்யா வுடன் ஒரு சமரஸத்திற்கு வர ஜப்பான் பல தடவைகளில், குறிப்பாக 1896 - 1898 - 1901-ஆம் வருஷங்களில் முயன்றது. ஜப்பான் கேட்ட தெல்லாம் என்னவென்றால், மஞ்சூரியாவை ருஷ்யா சுரண்டுகிற விஷயத்தில் தனக்கு எவ்வித ஆட்சேபமுமில்லை; ஆனால், அதே பிரகாரம் தான் கொரியாவைச் சுரண்டுகிற விஷயத்தில் ருஷ்யா ஆட்சேபிக்கக் கூடாது என்பதுதான்.1 ஆனால் ருஷ்யாவோ, கொரியாவிலும் தனக்குச் சுரண்டுகிற உரிமை சாசுவதமாக இருந்து கொண்டிருக்க வேண்டுமென்ற தோரணையில் பேசியது. ருஷ்யா, இப்படி ஏகாதிபத்தியத் திமிர்கொண்டு பேசுவதையும், பாக்ஸர் ஒப்பந்தத்திற்குப் பிறகுகூட தனது துருப்புகளை மஞ்சூரியாவி லிருந்து வாப வாங்கிக் கொள்ளாம லிருப்பதையும் பார்த்த ஜப்பான், தற்காப்பு நிமித்தம் ஐரோப்பிய வல்லரசுகளில் ஏதேனும் ஒன்றுடனாவது நெருங்கிய நட்புக் கொள்ள வேண்டுமென்று ஆசைப் பட்டது. இதன் விளைவுதான் 1902-ஆம் வருஷத்து ஆங்கிலோ - ஜப்பானிய ஒப்பந்தம். பிரிட்டனோ ஜப்பானோ முறையே சீனாவிலும் கொரியா விலும் தங்களுடைய உரிமை களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக வேறொரு வல்லரசுடன் போரிட நேரிட்டால், அப்பொழுது ஒன்றுக்காக மற்றொன்று நடுநிலைமை வகிக்க வேண்டுமென்றும், எந்த வல்லரசுடன் போர் தொடுக்கிறதோ அந்த வல்லரசுடன் சேர்ந்துகொள்ளக்கூடா தென்றும், ஒரு வல்லரசுக்குப் பதில் பல வல்லரசுகள் சேர்ந்து போர் தொடுக்குமானால் அப்பொழுது இந்த இரண்டு ஒப்பந்த நாடுகளும் ஒன்று சேர்ந்து கொள்ள வேண்டுமென்றும் இந்த ஒப்பந்தத்தின் ஷரத்துகள் கூறின. ருஷ்யாவினுடைய செல்வாக்கு, மஞ்சூரியா வழியாகச் சீனாவில் பரவிவிடக் கூடாதென்பதற்கு ஒரு முன் ஜாக்கிரதை மாதிரியாகவே, பிரிட்டன், ஜப்பானுடன் சேர்ந்து இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இங்ஙனம் மேனாட்டு வல்லரசுகளின் அநுதாபத்தைச் சம்பாதித்துக் கொண்ட பிறகு மீண்டும் ஜப்பான், ருஷ்யாவுக்கு ஓர் அறிக்கை விடுத்தது. கொரியா, ஜப்பானின் சுரண்டல் பிரதேசமாக இருப்பதை ருஷ்யா அங்கீகரிக்க வேண்டும்; அப்படியே, மஞ்சூரியா, ருஷ்யாவின் சுரண்டல் பிரதேசமாக இருப்பதை ஜப்பான் அங்கீக ரிக்கிறது என்கிற பழைய பாடந்தான் இந்த அறிக்கையில் காணப் பட்டிருந்தது. தனது பெருமிதத்தில் திளைத்திருந்த ருஷ்யா, ஜப்பானுடைய இந்தக் கோரிக்கைகளைக் கொஞ்சம் கூட லட்சியஞ் செய்யாமல் புறக்கணித்துவிட்டது. இப்படி புறக்கணித்து விடுமென்பதை ஒருவாறு ஊகித்துக் கொண்ட ஜப்பானும், யுத்தத் திற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தது. கடைசி யில் 1904 - ஆம் வருஷம் பிப்ரவரிமாதம் இரு நாடுகளுக்கும் யுத்தம் மூண்டது. ஒரு பக்கத்தில் ஏகாதிபத்தியச் சிலம்ப வித்தையில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்கிற ருஷ்யா! மற்றொரு பக்கத்தில், மேற் படி வித்தையில் கற்றுக் குட்டியென்று சொல்லத்தகுந்த ஜப்பான்! ஆனால் கற்றுக்குட்டிக்கு வெற்றியும், பயில்வானுக்குத் தோல்வி யுமே ஏற்பட்டன! இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. ருஷ்யாவுக்குக் கடற்படையிலும் தரைப்படையிலும் ஏராளமான சேதம் உண்டா யிற்று. கடைசியில் சுமார் ஒன்றரை வருஷ யுத்தத்திற்குப் பிறகு, ஜப்பானைத் தன் இஷ்டப்படி ஆட்டுவிக்க வேண்டுமென்று நினைத்த ருஷ்யா, அந்த ஜப்பான் சொன்ன நிபந்தனைகளுக்கே உடன்படும் படியாக நேரிட்டது. இரண்டு நாடு களுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் - இதற்கு போர்ட் மவுத் ஒப்பந்தம் என்று பெயர்: 5-9-1905ல் நிறைவேற்றப்பட்டது _- முக்கிய ஷரத்துக்கள் வருமாறு:-_
_1. கொரியாவில், அரசியல், ராணுவ, பொருளாதார நல உரிமைகள் பல ஜப்பானுக்குப் பிரத்தியேகமாக இருக்கின்றன வென்பதை ருஷ்யா அங்கீகரித்துக் கொள்கிறது._
_2. லியோடுங் தீபகற்பத்தில் தான் அனுபவித்து வந்த உரிமைகளை ஜப்பானுக்கு மாற்றிவிட ருஷ்யா சம்மதிக்கிறது._
_3. மஞ்சூரியாவின் தென் பிரதேசத்திலுள்ள ரெயில்வேயும், சகாலின் தீவின்1 தெற்குப் பாகமும் ஜப்பானுக்குச் சேரும்._
_4. ருஷ்யாவும் ஜப்பானும் தங்கள் துருப்புகளை மஞ்சூரியா விலிருந்து வாப வாங்கிக் கொள்ளச் சம்மதிக்கின்றன._
_5. மஞ்சூரியாவில் வர்த்தகம், தொழில் இவைகளின் அபி விருத்திக்காக, எல்லா நாடுகளுக்கும் பொதுவான நடவடிக் கைகளை சீனா எடுத்துக்கொள்ளுமானால், அதை ருஷ்யாவோ ஜப்பானோ ஆட்சேபிக்கக் கூடாது._
_6. மஞ்சூரியாவிலுள்ள ரயில்வேக்களை வியாபாரத்திற் காகவும் வர்த்தகத்திற்காகவுமே உபயோகிக்கலாமே தவிர, ராணுவ நோக்கங் களுக்காக உபயோகப்படுத்தக்கூடாது._
ருஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் இந்த யுத்தம் நடைபெற்ற தாயினும், இரண்டு நாட்டெல்லைக்குள்ளும் இது நடைபெற வில்லை; சீன ஆதிக்கத்துக்குட்பட்ட பிரதேசத்திலேயே நடை பெற்றது. ஆனால் சீனா நடு நிலைமை வகித்தது. நடுநிலைமை வகிப் பதைத்தவிர வேறு வழியில்லை இதற்கு. அவ்வளவு பலவீன மடைந்திருந்தது. ருஷ்ய - ஜப்பானிய யுத்தத்தின் ஒரு முக்கியமான விசேஷம் இது. மற்றொரு விசேஷம் என்ன வென்றால், சீன ஆதிக்கத்துக்குட்பட்ட நாடுகளை, அதனுடைய சம்மதமோ, மறைமுகமான ஆதரவோ பெறமலேயே ருஷ்யாவும் ஜப்பானும் செல்வாக்குப் பிரதேசங்களாகப் பங்கு போட்டுக் கொண்டது தான். இந்த யுத்தத்திற்குப் பிறகு, ஜப்பானுக்கு, ஐரோப்பிய வல்லரசு களுக்குச் சமதையான ஒர் அந்தது கிடைத்தது. ஐரோப்பிய வல்லரசுகளும் ஜப்பானோடு தோழமைபூண்டு சீனாவைச் சுரண்டுவதில் முனைந்து நின்றன.
ருஷ்யாவுடன் போர் செய்து வெற்றிகொண்ட பிறகு, 1905 ஆம் வருஷம் முதல் 1914-ஆம் வருஷத்து ஐரோப்பிய மகாயுத்தம் வரையில் ஜப்பானின் ஏகாதிபத்திய விதரிப்புச் சரித்திரத்தை இந்த அத்தியாயத்திலேயே சுருக்கமாகக் கூறிவிடுவோம். ஏனென்றால் பின்னாடி பல சந்தர்ப்பங்களில் சீனா விஷயத்தில் ஜப்பான் எப்படி நடந்து கொண்டதென்பதை அறிந்து கொள்வதற்கு, இந்தச் சுமார் பத்துவருஷ காலத்து விதரிப்புச் சரித்திரம் ஒரு முகவுரை போன்றிருக்கிறது.
ருஷ்ய - ஜப்பானிய யுத்தத்திற்குப் பிறகு, ஜப்பானுக்கும் ஐரோப்பிய வல்லரசுகளுக்கும் புது மாதிரியான சம்பந்தங்கள் பல ஏற்பட்டன. இந்தச் சம்பந்தங்கள் சீனாவை முன்னிட்டுத் தான்! அது தான் வேடிக்கை! தங்கள் தங்கள் செல்வாக்குப் பிரதேசங்களுக்கு அடுத்தாற்போலுள்ள சீனப்பிரதேசங்களில் அமைதி குலையாமல் பாதுகாத்துக் கொள்ளும் விஷயத்தில் பரபர உதவி செய்து கொள்ள வேண்டுமென்ற ஷரத்தை முக்கிய அடிப்படையாகக் கொண்டு ஜப்பானும் பிரிட்டனும், ஜப்பானும் பிரான்ஸும் முறையே புதிய ஒப்பந்தங்கள் செய்துகொண்டன. இவை தவிர, ருஷ்யாவும் ஜப்பானும், சீனாவுடன் தாங்கள் செய்து கொண்டி ருக்கிற ஒப்பந்தங்களுக்கு எவ்வித ஊறும் நேராவண்ணம் பாது காக்கிற விஷயமாக, பகிரங்கமாகவும் ரகசியமாகவும் பல ஒப்பந்தங்கள் செய்து கொண்டன. அதிக பகைமை, நெருங்கிய நட்பை உண்டுபண்ணியது. எல்லாம் சீனாவைச் சுரண்டுவதற்குத்தான்! கொரியாவையும், மஞ்சூரி யாவையும், மங்கோலியாவையும்1 தங்கள் தங்கள் செல்வாக்குப் பிரதேசங்களாக திரப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும், இதற்கு விரோதமாக வேறு வல்லரசு ஏதேனும் நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளுமானால், அப்பொழுது தங்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள, தாங்கள் இருவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டுமென்றும் ருஷ்யாவும் ஜப்பானும் பலவிதமான ரகசிய ஒப்பந்தங்கள் செய்து கொண்டன. 1907 - ஆம் வருஷத்திலிருந்து 1916 - ஆம் வருஷம் ஜூலைமாதம் வரை, இந்த மாதிரி பல ரகசிய ஒப்பந்தங்களின் மூலமாகவே ருஷ்யாவும் ஜப்பானும் தங்கள் சிநேகத்தை வளர்த்து வந்தன. எல்லாம் சீனாவைக் குறிக்கோளாகக் கொண்டுதான்!
மேனாட்டு வல்லரசுகளுக்குச் சமதையான அந்ததும் அவைகளின் ஆதரவும் தனக்கு இருக்கிறதென்ற தைரியம் வந்து விட்டது ஜப்பானுக்கு. இதற்குப்பிறகு, கொரியாவை மெது மெது வாகத் தன்னுடைய சுவாதீனத்திற்குக் கொண்டு வந்துவிட்டது. ருஷ்யாவோடு யுத்தம் முடிந்ததும், 1905 - ஆம் வருஷம், கொரியாவின் அந்நிய நாட்டு விவகாரங் களை ஜப்பான், தானே நேரில் ஏற்றுக் கொண்டு இதற்காக ஒருதனி அதிகாரியை கொரியாவில் நிரந்தர மாக நியமித்தது. இந்த அதிகாரியே, இரண்டுவருஷங் கழித்து, கொரியாவின் சர்வாதிகாரியானான். இந்தச் சர்வாதிகாரப் பதவியை வகித்துவந்த ஈட்டோ என்பவன் 1909- ஆம் வருஷம் கொலை செய்யப்பட்டுவிட்டான். இந்தக் காலத்தில் கொரியாவில் அந்நிய ஆதிக்கத்துக்கு விரோதமான கிளர்ச்சிகள் வலுத்திருந்தன. இவைகளை அடக்குவதற்காக ஜப்பானியர் கையாண்ட முறைகளோ, ஏகாதி பத்திய வாதிகள் சர்வசாதாரணமாக அனுஷ்டிக்கிற முறைகளுக்குச் சிறிதுகூடக் குறைந்தனவாயில்லை. கொரியர்களுக்குத் தேசீய உணர்ச்சி இல்லாமற் செய்ய என்னென்ன செய்யலாமோ அவை யெல்லாம் செய்யப்பட்டனவென்று சுருக்கமாகச் சொல்லி விடலாம். கடைசியில் மேற்பட ஈட்டோவின் கொலையையே வியாஜமாக வைத்துக்கொண்டு, 1910-ஆம் வருஷம் ஆகட் மாதம் இருபத் தொன்பதாந்தேதி, கொரியா, ஜப்பானிய ஏகாதிபத்தியத்தோடு சேர்த்துக் கொள்ளப்பட்டுவிட்டது. கொரியாவின் தனித்துவத்திற்கு முற்றுப்புள்ளி இடப்பெற்றுவிட்டது.
கொரியாவில் இங்ஙனம் தன்னை ஊன்றிக்கொண்டு விட்ட ஜப்பான், இனி, மஞ்சூரியா விஷயத்தில் சிரத்தை காட்ட ஆரம் பித்தது. புதியபுதிய ரெயில்வேக்கள் போட்டுக்கொள்ள சீனாவிட மிருந்து சலுகைகள் பெற்றுக் கொண்டது. தன்னுடைய மூலதனத்தைக் கொண்டுவந்து போட ஏதேனும் ஒரு காரணம் வேண்டுமல்லவா? இதைப்பார்த்து, பிரிட்டன், பிரான், ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய மேனாட்டு வல்லரசுகள், மஞ்சூரியாவில் தொழில் அபி விருத்தியும் வியாபார அபிவிருத்தியும் செய்ய வேண்டியது அவசிய மென்று சீனாவைத் தூண்டி, அதற்காகத் தாங்கள் நால்வரும் சேர்ந்து கடன் கொடுப்பதாகக் கூறின. தாங்களும் கடன்கொடுத்து உதவுகிற தொண்டிலே ஏன் சேரக் கூடாதென்று ருஷ்யாவும் ஜப்பானும் கேட்டுக்கொண்டு அப்படியே - சீனாவில் குடியரசின் வீழ்ச்சிக்குப் பிறகு- மேற்சொன்ன நான்கு வல்லரசுகளுடனும் சேர்ந்து கொண்டு கடன் கொடுத்து உதவின. இப்படி வலிய உதவி பெறுகிற துர்ப்பாக்கிய நிலைமை, பத்தொன்பதாவது நூற்றாண்டின் இடைக்காலத்திலிருந்தே சீனாவுக்கு இருந்து வருகிறது.
குடியரசின் உதயம்
ருஷ்ய - ஜப்பானிய யுத்தத்தில், ஜப்பான் வெற்றி பெற்றது சீன சமுதாயத்தில் ஒரு பெரிய அதிர்ச்சியை உண்டுபண்ணியது. நேற்றுத் தோன்றிய ஜப்பான், ஒரு பெரிய ஐரோப்பிய வல்லரசாகிய ருஷ்யாவை வெகுசுலபமாகத் தோற்கடித்துவிட்டதென்று சொன்னால் அதற்குக் காரணம் என்னவென்று சீனர்கள் யோசிக்கத் தொடங்கினார்கள். சிறப்பாக மேனாடுகளுக்குச் சென்று திரும்பிய இளைஞர்கள் மத்தியில் இந்த யோசனை வலுத்தது; முணு முணுக்கவும் ஆரம்பித்தார்கள். மகா சாமர்த்தியசாலியான ரீஜண்ட் சக்ரவர்த்தினி இதனையறிந்து, சில சீர்திருத்தங்களை வழங்க முன் வந்தாள். பாக்ஸர் ஒப்பந்தத்தில் எப்பொழுது சீன அரசாங்கப் பிரதிநிதிகள் கையெழுத்திடும் படியாக நேரிட்டதோ அப்பொழுதே மஞ்சூ அரசபீடத்தின் ஆணிவேர் அறுந்துவிட்ட தென்பதை இவள் தெரிந்துகொண்டேயிருந்தாள். ஆயினும் கடைசி பிரயத்தனமாக, சில சீர்திருத்தங்களைக் கொண்டு அந்தப் பீடத்திற்கு முட்டுக் கொடுத்து அதனைக் காப்பாற்றப் பார்த்தாள். பழமையான தனது நாட்டின் மீது புதுமையான எண்ணங்கள் படிந்துவருவதைத் தான் பெரிதும் வரவேற்பதாகப் பிரகடனப்படுத்தினாள். மேனாட்டு முறையில் கல்விபோதிக்கும் கலாசாலைகளை நிறுவச் செய்தாள். ஜனங்களுக்கு அரசியலில் பங்கு இருக்கவேண்டுமென்று சொல்லி, மாகாண சட்டசபை களென்ன, சர்வ சீனாவுக்கும் பொதுவான மத்திய சட்டசபை என்ன முதலிய மேனாட்டு அரசியல் சம்பிர தாயங்களைக் கொண்டு புகுத்தினாள். ஆனாள் ஜனங்களுக்குத் திடீரென்று அரசியல் ஞானம் உதயமாகி விடாதல்லவா? இதற்காக படிப்படியாக அவர்களுக்கு அரசியலறிவை ஊட்ட வேண்டு மென்று ஒன்பது வருஷத் திட்டமொன்று வகுத்தாள். ஆயிரக் கணக்கான வருஷங்களாக அரசியல் கடலிலேயே திளைத்துக் கொண்டிருக்கிற சீனர்களுக்கு, அந்நிய ஜாதியைச் சேர்ந்த ஒரு திரீ - அவள் சக்ரவர்த்தினியா யிருந்தாலென்ன? - அரசியல் பாலைப் புகட்ட முன் வந்தாளென்று சொன்னால், அஃது, அதிகார சக்தியின் துணிச்சலே தவிர வேறென்றுமில்லை. அதிகார சக்தியானது, தன்னை ஊர்ஜிதம் செய்து கொள்ளும் பொருட்டு, எப்பொழுதுமே தன்னுடைய ஆதிக்கத்திற் குட்பட்டிருக்கிறவர்களை ஞான சூனியர் களாகவே வைத்துப்பார்க்கிறது. இந்த அரசியல் திருத்தங்களோடு, சில சமுதாயச் சீர்திருத்தங்களையும் செய்ய முன் வந்தாள் த்ஸுஹ்ஸி. ஆளுஞ் சாதியினராகிய மஞ்சூக்களுக்கும் ஆளப்படுஞ் சாதியினராகிய சீனர்களுக்கும் விவாக சம்பந்தங்கள் கூடாவென்று முன்னர் தடுக்கப்பட்டிருந்தது. இந்தத் தடையை நீக்கி, இதன் மூலமாகச் சீனர்களின் நல்லெண்ணத்தைச் சம்பாதித்துக் கொள்ளப் பார்த்தாள். இந்த மாதிரியான சில சில்லரைச் சீர்திருத்தங்களைக் கொடுத்துவிட்டால், ஜனங்கள் சாந்தமடைந்து போவார் களென்பது இவள் கருத்து. ஆனால் பாவம், இதில் ஏமாற்ற மடைந்தாள். அதோடு கூட, இவளே இந்தச் சீர்திருத்தங்கள் அனுஷ்டானத் திற்குக் கொண்டு வரப்படுகிற தருணத்தில் - 1908-ஆம் வருஷம் நவம்பர் மாதம் - இறந்துவிட்டாள். இவள் இறப்பதற்கு முந்தியதினமே, பெய ரளவுக்குச் சக்ரவர்த்தியாயிருந்த தேத்ஸுங்கும் இறந்துவிட்டான்.
இவர்களுக்குப் பின்னால் அரச பீடத்திற்குப் பாதுகாவலர்களா யமைந்தவர்கள் பலவீனர்களாகவும், காலவேகத்தோடு ஒட்டிப் போக முடியாதவர்களாகவும் இருந்தார்கள். இவர்கள், பழைய மாதிரி சீர்திருத்த அறிக்கைகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியிட்டு வந்தார்களாயினும், அப்படி வெளியிடுவதோடு தங்கள் காரியம் முடிந்துவிட்டதாகக் கருதினார்கள். தேசத்தின் சக்திகளை ஒருமுகப் படுத்தி ஒழுங்காகக் கொண்டுசெலுத்தக்கூடிய தலைவன் மத்திய அரசாங்கத்தில் யாரு மில்லை. வலுவுள்ள ராஜதந்திரியென்று கருதப்பட்ட யுவான் ஷிகாயும், அரச பீடத்தின் பிரதிநிதிக்கும் அவனுக்கும் ஏற்பட்ட பிணக்குக் காரணமாக அரசியல் வாழ்வி னின்று ஒதுங்கியிருந்தான். பொதுவாக ரீஜண்ட் சக்ரவர்த்தினி இறந்த பிறகு, பீகிங் அரசாங்க நிருவாகத்தில் ஒருவித குழப்ப நிலை மையே இருந்துவந்தது. இது தேசத்திலும் பிரதிபலிக்கு மல்லவா?
ஏற்கனவே ஜனங்களுக்கு மஞ்சூ ஆட்சியின் மீது - அஃது அந்நிய ஆட்சியா யிருக்கிறதென்ற ஒரே காரணத்தினால் - அதிருப்தி இருந்து வந்தது. இந்த அதிருப்திக்கு ஒரு சிறிய உதாரணம்: 1644-ஆம் வருஷம் மிங் வமிசம் விழுந்துவிட்டது. அப்பொழுது, லின் எர்ஹ் த்ஸு என்னும் ஒரு பிரபல ராஜதந்திரி பீகிங்கில் தற்கொலை செய்து கொண்டான். தற்கொலை செய்துகொள் வதற்கு முன்னர், ஷாண்டுங் மாகாணத்திலுள்ள வேறோர் ஊரில் வசித்துக் கொண்டிருந்த தனது குடும்பத்தினருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டுப்போனான். அதில், மஞ்சூ வமிசம் ஆட்சியிலிருக்கிற வரையில், தனது குடும்பத்தினர் யாரும் அந்த ஊரை விட்டு வெளியே வரவேண்டாமென்று கண்டிருந்தான். அங்ஙனமே இவனுடைய சந்ததியார் சுமார் இருநூற்றைம்பது வருஷ காலம் வரை, அந்த ஊரை விட்டு வெளியில் வராமலேயே இருந்தனர். 1911-ஆம் வருஷம் மஞ்சூ ஆட்சி விழுந்துபட்ட பிறகு, இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மேற்படி ஊருக்கு வெளியே, தங்களுடைய மூதாதையர் களுக்காக இதுகாறும் காட்டப்படாமல் இருந்த சுமார் முந்நூறு சமாதி களைக் கட்ட, தங்களுடைய பிதிரார்ஜித வீட்டை விற்றார்கள்.
மஞ்சூ அரச வமிசத்தினர், ஒரு சில மன்னர்களைத் தவிர்த்து, பெரும்பாலும் பலாத்காரத்தின் துணைகொண்டே ஆட்சி முறையை நடத்தி வந்தார்கள். பலாத்காரம் பலாத்காரத்தைத் தூண்டிவிடு மென்பது ஒருபுறமிருக்க, அந்தப் பலாத்கார சக்தி ஓங்கி நிற்கிறவரையில்தான், ஜனங்கள் அதற்கு அடங்கியிருப்பார்கள்; அது தாழ்ந்து விடுகிறபோது, ஜனசக்தியின் கை ஓங்கிவிடுவது சரித்திர உண்மையல்லவா? இருபதாவது நூற்றாண்டுத் தொடக்கத்திலிருந்து - சிறப்பாக பாக்ஸர் ஒப்பந்தத்திற்குப் பிறகு - மஞ்சூ அரசாங்கம் கலையிழந்த சந்திரன் போலாகிவிட்டதை ஜனங்கள் நன்கு தெரிந்துகொண்டுவிட்டார்கள். அரசாங்கத்தின்மீது ஓர் அலட்சிய புத்தி ஏற்பட்டு விட்டது.
மஞ்சூ வமிசத்தினரின் கடைசி தலைமுறையினருக்குப் பலாத்கார சக்தியின் துணைகொண்டு ஆளமுடியாமற்போன போதிலும், ஜனங் களுடைய அன்பைச் சம்பாதித்துக்கொண்டு ஆளவும் தெரிய வில்லை. ஆளுஞ்சாதியினராகிய மஞ்சூக்களை ஒரு விதமாகவும், ஆளப்படுஞ் சாதியினராகிய சீனர்களை வேறு விதமா கவும் நடத்திவந்தனர். அரசாங்க உத்தியோகதர்களை நியமிக்கிற விஷயத்திலாகட்டும், சட்டசபைக்கு அங்கத்தினர்களைத் தெரிந் தெடுக்கிற விஷயத்திலாகட்டும் பாரபட்ச மாகவே நடந்து வந்தனர். உதாரணமாக, புதிய சீர்திருத்தத்தின் பெயரால் 1911-ஆம் வருஷம் பன்னிருவர் அடங்கிய ஒரு மந்திரிச் சபைஅமைந்தது. அதில் எண்மர் மஞ்சூக்கள்; நால்வரே சீனர். எந்த நாட்டில் ஆளுஞ் சாதியினர், ஆளப்படுஞ் சாதியினரைத் தங்களுக்குச் சமதையாக நடத்தாமல் ஏற்றத் தாழ்வாக நடத்துகிறார்களோ, அந்த நாட்டில் ஆளுஞ் சாதியினர்மீது எப்பொழுதும் அதிருப்தி இருந்து கொண்டி ருக்கும். இதனால் சீனாவில் உயர்தர உத்தியோக தர்களாயிருந்த சீனர்களே அரசாங்கத்திற்கு விரோதமாயிருந்தார்கள்.
மற்றும் ஓர் அரசாங்கம் எப்பொழுது பலவீனப்பட்டு விடுகிறதோ அப்பொழுது அதன் உத்தியோகதர்களும் ஒழுக்க ஹீனர்களாகி விடுகிறார்கள்;ஜனங்களைச் சுரண்ட முற்படுகிறார்கள். ஜனங்கள், இந்தச் சுரண்டுதலுக்கு மௌனமாக உட்படுகிறார் களாயினும், அவர்களுடைய உள்ளத்தில் அரசாங்கத்தின் மீது ஒருவித துவேஷம் உண்டாகி வளர்கிறது. இருபதாவது நூற் றாண்டின் ஆரம்ப தசையில் சீனா, இந்த திதியிலேதான் இருந்தது.
தைப்பிங் கலக காலத்திலிருந்தே சீனாவில் மஞ்சூ ஆட்சிக்கு விரோதமாகப் பல ரகசியச் சங்கங்கள் தோன்றி வேலைசெய்து வந்தன என்பது நேயர்கள் அறிந்த விஷயம்.1 இவை பெரும்பாலும் உள் நாட்டிலேயே இருந்து வேலை செய்து வந்தன. ஆனால் பத்தொன்பதாவது நூற்றாண்டின் பிற்பகுதியில் சீனாவிலிருந்து இளைஞர் பலர், அந்நிய நாடுகளுக்குக் கல்வி பயிலச் சென்றபிறகு, இந்த ரகசிய தாபனங்கள் வெளிநாடுகளிலும் பரவின. ஐரோப்பிய வல்லரசுகளின் பிடிப்பினின்றும், அந்த வல்லரசுகளின் கைக்கருவி யாயிருக்கும் மஞ்சூ ஆட்சியினின்றும் சீனாவை விடுதலை செய்ய வேண்டுமென்றே உணர்ச்சி, வெளிநாடுகளில் பரவியிருந்த சீன இளைஞர்களின் மனதில் நன்றாகப் பதிந்தது. இந்த உணர்ச்சியை ஆதாரமாக வைத்துக் கொண்டுதான் ஸன் யாட் ஸென், உலகத்தின் பல பாகங்களிலும் சுற்றித்திரிந்துவிட்டுக் கடைசியில் 1905-ஆம் வருஷம் டோக்கியோ நகரத்தில் டுங் மெங் ஹுயி என்ற ஒரு சங்கத்தை தாபித்தான். அப்பொழுது இவனுக்குப் பக்கபலமாக நின்றவர்கள் மொத்தம் பதினைந்துபேர்; தாய் நாட்டின் விடு தலைக்கு எல்லாத் தியாகங்களையும் செய்யச் சித்தமானவர்கள். இவர்கள் தான் சீனப் புரட்சிக்கு வித்திட்டவர்கள்.
மேற்படி டுங் மெங் ஹுயி சங்கத்தின் கிளை தாபனங்கள், சீனாவின் பல பாகங்களிலும் ஏற்பட்டன. இந்த தாபனங்களை வலுப்படுத்தியவர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்து திரும்பிவந்த இளைஞர்கள்.2 இவர்களுக்கு ஜனங்களுடைய அதிருப்தி உணர்ச்சியை வளர்க்கக்கூடிய சக்தி இருந்தது. இவர் களுடைய உபதேசங்களை அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடிய மனோநிலைமையில் ஜனங்களும் இருந்தார்கள் அப்பொழுது, 1908-ஆம் வருஷத்திற்குப் பிறகு. ஏன் என்று கேட்கிறீர்களா?
(அ) 1910-11-ஆம் வருஷத்தில் மத்திய சீனாவில், யாங்க்ட்ஸீ நதியில் ஒருபெரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதன் பயனாகப் பயிர்கள் அழிந்தன. லட்சக்கணக்கான பேர் வீடுவாசலிழந்து தவிக் கலானார்கள். பெரிய பஞ்சம் ஏற்பட்டது. சுமார் முப்பது லட்சம் ஜனங்கள் இந்தப் பஞ்சத்திற்கு இரையானார்கள். உயிரிழந்த வர்கள்போக உயிர் பிழைத்தவர்கள் போதிய ஆகாரம் கிடைக் காமலும் வேலையில்லாமலும் திண்டாடினார்கள். இருக்கப்பட்ட நிலையிலிருந்து வேறு நிலைக்குச்செல்ல எதுவும் செய்வதற்கு இவர்கள் தயாராயிருந்தார்கள்.
(ஆ) பஞ்சத்தினால் இப்படி ஏராளமான ஜனங்கள் மாண்டு போன போதிலுங்கூட, மொத்தத்தில் சீனாவின் ஜனத்தொகை அதிகப்பட்டே வந்தது. உதாரணமாக 1885-ஆம் வருஷத்தில் சுமார் முப்பத்தேழு கோடியா யிருந்தது, 1911-ஆம் வருஷத்தில் சுமார் நாற் பத்திரண்டு கோடிக்கு அதிகப் பட்டது. இந்த ஜனப் பெருக்கத்திற்குத் தகுந்தபடி உணவுப்பொருள்களின் உற்பத்தி அதிகப்படவில்லை. நியாயமான விலை கொடுத்து ஆகாரப் பொருள்களை வாங்குவது ஜனங்களுக்கு மிகவும் கடினமாகிவிட்டது. இதனால், தங்கள் கஷ்டங்களை மறப்பதற்கு என்ன வழி என்று அவர்கள் மனம் தேடிக் கொண்டிருந்தது.
(இ) வெள்ளப்பெருக்கு, உணவுப்பொருள் பஞ்சம் இவை களுக்கு மேலாக அரசாங்கத்தின் வரிவிகிதமும் வருஷத்திற்கு வருஷம் ஏறிக் கொண்டே வந்தது. ஷிமோனே ஸெகி ஒப்பந்தம், பாக்ஸர் ஒப்பந்தம் முதலியவைகளில் கண்ட நஷ்ட ஈட்டுத்தொகை, புதிய சீர்திருத்தங்களை அனுஷ்டானத்திற்கு கொண்டு வருவதற் கான செலவு வகைகள் முதலியவைகளை அரசாங்கத்தார் எப்படி சமாளிப்பர்? புதிய வரிகளை விதித்துத்தானே சமாளிக்க வேண்டும்? அரசாங்கத்தின் மீது ஜனங்களுக்கு அதிருப்தி ஏற்பட்டதில் என்ன ஆச்சரியம்?
(ஈ) படிப்படியாக ஜனங்களுக்கு அரசியல் அறிவு புகட்டு வதென்கிற மேலே சொன்ன ஒன்பது வருஷத்து அரசியல் திட்டப் பிரகாரம், 1909-ஆம் வருஷம் மாகாணங்கள் தோறும் சட்ட சபைகள் ஏற்பட்டன. இவைகளுக்கு மத்திய அரசாங்கத்தின் - அதாவது பீகிங் அரசாங்கத்தின் நடவடிக்கை களில் தலையிடுவ தற்கோ, அல்லது மாகாண அரசாங்கத்தின் நிருவாகத்தை நடத்து விப்பதற்கோ அதிகாரமில்லையானாலும், இவை சிறந்த பேச்சு மண்டபங்களாகத் திகழ்ந்தன. இவற்றின் அங்கத்தினர்கள் தங் களுடைய பேச்சுரிமையைத் தாராளமாக உபயோகித்து, அரசாங் கத்தைப் பலபடக் கண்டித்தார்கள்; அரசாங்கத்தின் மீது ஜனங்கள் கொண்டுள்ள அருவருப்பை நன்கு எடுத்துக்காட்டினார்கள். இவர் களுடைய செல்வாக்கு நாளுக்கு நாள் வளர்ந்தது. மாகாண நிருவாகம் முழுவதும் கூடிய சீக்கிரத்தில் இவர்கள் சுவாதீனத்திற்கு வந்துவிடக் கூடிய நிலைமை ஏற்பட்டது. ஜனங்களுடைய மனத்தைப் புரட்சிப் பாதையிலே செல்லவிடக்கூடாதென்பதற்காக அசாங்கத்தார் இந்த மாகாணச் சட்டசபைகளை ஏற்படுத்தினார்கள். ஆனால் இவை, புரட்சியின் வருகையைத் துரிதப்படுத்தின!
(உ) ஜனங்களை அரசியல் முன்னேற்றத்திற்குப் பக்குவப் படுத்திவிடுவதோடு, தேசத்தின் பொருளாதாரத்தையும் அபிவிருத்தி செய்யவேண்டுமென்ற நோக்கத்துடன் அரசாங்கத்தார் சில புதிய திட்டங்களை அனுஷ்டானத்திற்குக் கொண்டுவரத் தீர்மானித்தனர். இவைகளில் ஒன்று பல மாகாணங்களையும் இணைக்கக்கூடிய மாதிரி புதிய ரெயில் பாதைகளை அரசாங்கத்தாரே போடவேண்டு மென்பது, போக்குவரத்து வசதிகள் அதிகமானால் வியாபாரம் செழிக்குமல்லவா? பாக்ஸர் கலகத்திற்கு முந்திவரை, புதிய ரெயில் கம்பெனிகளின் தாபிதமும் அவைகளின் நிருவாகமும் ஏறக் குறைய அந்நியர் வசத்திலேயே இருந்தன. தேசமுழுவதிலும் அந்நியர் களுடைய செல் வாக்கு தீவிரமாகப் பரவுவதற்கு இவை பெரிய துணைக் கருவிகளா யிருந்தன. இங்ஙனம் அந்நியர்களின் செல் வாக்கும் ஆதிக்கமும் வளர்ந்து வந்ததே, பாக்ஸர் கலகத்திற்கு முக்கிய காரணமாயிருந்தது. இந்தக் கலகத்திற்குப் பிறகு, இனிப் புதிதாகப் போடுகிற ரெயில் பாதைகள் யாவும் தங்களுடைய சுவாதீனத்திலேயே இருக்கவேண்டுமென்று (மஞ்சூ) அரசாங்கத்தினர் தீர்மானித்தனர். இந்தத் தீர்மானத்தின் படி எந்தெந்த மாகாணங்களில் புதிய ரெயில் பாதைகள் போடப்படுகின்றனவோ அந்தந்த மாகாண வாசிகளிட மிருந்தே கடனாகப் பணம் பெற்று வேலையைத் தொடங்கினர். ஆங்காங்கு வேலைகள் நடைபெற்றுக் கொண்டுவந்தன. இந்தத் தருணத்தில் அந்நியநாட்டு முதலாளிகள், மேற்படி ரெயில் பாதை களைத் தாங்கள் போட்டுக் கொடுப்பதாகவும், இதற்கான பணத்தைச் செலவழிக்கத் தாங்கள் தயாராயிருப்பதாகவும், எனவே புதிய ரெயில் பாதைகளைப் போடும் உரிமைகளைத் தங்களுக்கே கொடுத்துவிட வேண்டுமென்றும் பீகிங் அரசாங்கத்தை நெருக்கினார்கள். பீகிங் அரசாங்கமோ மாகாண முதலாளிகள் கொடுத்திருக்கிற கடன் தொகையையும், அதுகாரணமாக அவர்களுக்ளகிருக்கிற உரிமை களையும் அலட்சியப் படுத்திவிட்டு, பிரிட்டன், பிரான், ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நான்கு வல்லரசுகளின் முதலாளிகளடங்கிய ஒரு கூட்டு தாபனத்திற்கு ரெயில் பாதைகள் சம்பந்தமான உரிமை களைக் கொடுத்துவிட்டது.1 தங்களுடைய உரிமைகளை இப்படி அந்நியர்களுக்கு விற்றுவிட்டதைக் கண்ட மாகாண முதலாளிகள் ஆத்திரங் கொண்டார்கள்; கிளர்ச்சி செய்தார்கள். மேற்குப் பக்கத்திலுள்ள ஷெக்கு வான் மாகாணத்தில் இந்தக் கிளர்ச்சி வலுத்து, ஒத்துழையா இயக்கமாகப் பரிணமித்தது. கடைகள் மூடப்பட்டன; தொழிலாளர்கள் வேலை நிறுத்தஞ் செய்தார்கள்; மாணாக்கர்கள் பள்ளிக்கூடங்களுக்குச் செல்லாமல் நின்று விட்டார்கள்; விவசாயிகள் வரிகொடுக்க மாட்டோமென்று சொன்னார்கள். இதைக் கண்டு பீகிங் அரசாங்கம் சும்மாயிருக்குமா? அடக்குமுறையை உபயோகித்து இயக்கத்தை நசுக்கிவிட்டது. ஆனால் ஷெக்குவான் மாகாணத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவம் மற்ற மாகாணங்களிலும் உடனே எதிரொலி கொடுத்தது.
(ஊ) தேசத்தின் பல பாகங்களிலும் மஞ்சூ அரசாங்கத்தின் மீது பொதுவாக ஏற்பட்டிருந்த அதிருப்தியானது ராணுவத்திலும் பரவியது. புதிய சீர்திருத்தத்தின்கீழ் ஏற்படுத்தப்பெற்ற சீனப் படைகளை, அரசாங்கம் தனது பாதுகாப்புக்கென்று நம்பமுடிய வில்லை. மஞ்சூ ஜாதியினர் மட்டும் அடங்கிய படைகளே ராஜ் யத்தின் ரட்சணிய சேனையாக நின்றது. இதைமட்டும் நம்பிக் கொண்டு ஓர் அரசாங்கம் எவ்வளவு காலம்தான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கமுடியும்?
டுங் மெங் ஹுயி சங்கத்தைச் சேர்ந்த - அதாவது ஸன் யாட் ஸென்னைப் பின்பற்றிய - புரட்சி இயக்கம் வளம் பெறுவதற்கு இந்தச் சம்பவங்கள் சிறந்த உரங்களாயிருந்தன. இந்தக் காலத்தில் ஸன் யாட் ஸென் வெளிநாடுகளில் சுற்றுப் பிரயாணம் செய்து, புரட்சிக்கு நிதிதிரட்டியும் ஆதரவு தேடியும் வந்தான். இவனுடைய தூண்டு தலினாலும் மறைமுகமான தலைமையிலும் சீனாவில் மஞ்சூ ஆதிக்கத்துக்கு விரோதமாக அவ்வப்பொழுது புரட்சிகள் நடை பெற்றுத் தோல்வியடைந்தனவென்பதை ஏற்கனவே கூறியுள்ளோம். தோல்வி யினால் சோர்வு கொள்வது புரட்சிவாதிகளின் சுபாவமல்ல. முடியாட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த புரட்சி நடைபெறுவதற்குச் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர்கூட, - சரியான தேதியைச் சொல்லவேண்டு மானால் 1911-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் இருபத் தொன்பதாந் தேதி - ஸன் யாட்ஸென் கோஷ்டியினர், காண்டன் நகரத்தில் ஒரு புரட்சியை நடத்தி எழுபத்திரண்டு இளைஞர்களைப் பலிகொடுத்தனர். இவர் களுடைய பிரேத அடக்க தலம், இப் பொழுதுகூட சீன மக்களுக்கு யாத்திரை தலமாக விளங்குகிறது. இப்படி எழுபத்திரண்டு பேரைப் பலிகொடுத்துவிட்டோமே என்று இவர்கள் தங்கள் முயற்சியில் சிறிதேனும் தளர்ச்சி காட்டினார்களா? இல்லவே இல்லை. அதி சீக்கிரத்தில் மற்றொரு புரட்சிக்குத் தயாரானார்கள்.
இப்படி ஊக்கத்தோடு வேலை செய்துவந்தபோதிலும் இவர்கள் ஒரு காரியக் கிரமத்தை வகுத்துக் கொள்ளவில்லை. ருஷ்யப் புரட்சி வாதி களைப்போல அல்லது ஐரிஷ் புரட்சிவாதி களைப் போல ஒரு நாளைக் குறிப்பிட்டு, அந்த நாளில் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி புரட்சியைத் தொடங்க வேண்டு மென்கிற மாதிரியான திட்டங்களையும் ஏற்படுத்திக் கொள்ள வில்லை. அகமாத்தாக ஏற்பட்ட ஒரு சம்பவம் இவர்களைப் புரட்சியிலே இழுத்து விட்டுவிட்டது. அதற்குப் பிறகே இவர்கள் புரட்சி சக்திகளை யெல்லாம் ஒன்று திரட்டினர்; ஒழுங்குபடுத்தினர். எனவே, புரட்சி ஏற்பட்டதன் பயனாகவே மஞ்சூ ஆட்சி விழுந்து விட்டதென்று சொல்லமுடியாது. மஞ்சூ ஆட்சி விழுந்து போகுந் தறுவாயிலிருந்தது. அந்தச் சமயத்தில் புரட்சியும் ஏற்பட்டது. இரண்டும் ஒன்று சேர்ந்தன. இப்படித்தான் கூறவேண்டும். மற்ற நாடுகளில் நடைபெற்ற புரட்சிக்கும் சீனப்புரட்சிக்கும் இஃதொரு முக்கியமான வித்தியாசம்.
மற்றும், எந்தத் துறைமுகப் பிரதேசங்கள் - அதாவது அந்நிய நாட்டார் உரிமையோடு வசிப்பதற்கென்று தனித்தனியாக அமைத்துக் கொண்ட கன்ஸெஷன்கள் - சீன சமுதாயத்தை அழிக்கக்கூடிய சக்திகளுக் கெல்லாம் இடங் கொடுத்தனவோ, அந்தத் துறைமுகப் பிரதேசங்களே, மஞ்சூ அரசாங்கத்தை அழிப்பதற்காக ஏற்பட்ட புரட்சி சக்திகளுக்கும் இடங்கொடுத்தன. புரட்சிவாதிகள், அந்நிய நாட்டாருடைய கன்ஸெஷன் பிரதேசங்களில்தான், சீன அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு அகப்படாமல் கூடியவரை யில் தாராளமாக வேலை செய்ய முடிந்தது. இதற்குமுன் தோல்வி யடைந்துபோன புரட்சிகளில் பல, அந்நியர் களுடைய இந்த உரிமை தலங்களிலேயே நடைபெற்றிருக்கின்றன. கடைசி புரட்சியும் ஒரு கன்ஸெஷன் பிரதேசத்திலேயே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. சீனப் புரட்சியின் விநோதமான அமிசம் இது.
மத்திய சீனாவில் யாங்க்ட்ஸீ நதிக்கரையின் மீது ஹாங்கோ என்ற ஒரு பெரிய பட்டினம் உண்டு. இஃது அந்நியர்கள் உரிமை யோடு வசிப்பதற்கென்று ஏற்பட்ட ஒப்பந்தத் துறைமுகங்களிலே ஒன்று. இங்கு ருஷ்யர்கள் வசிக்கும் கன்ஸெஷன் பகுதியில் ஒரு சிறிய வீடு. 1911-ஆம் வருஷம் அக்டோபர் மாதம் பத்தாந் தேதி, பகல் நேரம், திடீரென்று இந்த வீட்டிலிருந்து ஒரு வெடிகுண்டு சப்தம் கேட்டது. என்னவென்று ஜனங்கள் பரபரப்புடன் விசாரித்துக் கொண்டிருக்கையில் போலீஸார் வந்து வீட்டைப் பரிசோதனை செய்தனர். ஒரு புரட்சிக் கூட்டத்தின் தலைமைக் காரியாலயம் இது! இங்கே வெடிகுண்டுகள் தயார் செய்யப்பட்டு வந்தன! இந்த இடத்தை மேலும் போலீஸார் பரிசோதித்துப் பார்க்கையில் அவர்கள் கைக்குப் புரட்சி வாதிகளின் விலாசம் முதலியன அடங்கிய சில தத வேஜுகள் அகப்பட்டன. அவ்வளவுதான். ஓரிரண்டு மணி நேரத்திற்குள் சில புரட்சிவாதிகள் கைது செய்யப்பட்டுத் தலை வாங்கப் பட்டனர். இந்தச் செய்தி, ஆற்றுக்குத் தென்கரையிலுள்ள வூசங் நகரத்திற்குப் பரவியது. இது சீனர்கள் வசிக்கும் இடம். இங்கே நகரக்காவலுக்கென்று சுமார் மூவாயிரம் பேரடங்கிய ஒரு சீனப் படை வைக்கப்பட்டிருந்தது. இந்தப் படையினருக்கு மேற்படி செய்தி எட்டியது. இவர்கள் ராணுவத்தைச் சேர்ந்தவர்களா யிருந்தாலும் சீனர்கள்தானே? தவிர, இவர்கள் மத்தியில், ஏற்கனவே புரட்சி எண்ணங்கள் புகுந்திருந்தன. தங்கள் சகோதரர்கள் - தாய் நாட்டுக்கு விடுதலை தேடித்தர வேண்டுமென்ற புனித நோக்கத்துடன் உழைத்து வந்த இளைஞர்கள் - அநியாய மாகக் கொலை செய்யப்பட்டார் களென்று கேள்விப்பட்டதும், இந்தப் படையினர் அப்படியே கலகத்திற்குக் கிளம்பினர். புரட்சி ஆரம்பித்துவிட்டது!
அன்று மாலை எங்குப் பார்த்தாலும் நெருப்பு! துப்பாக்கிச் சப்தம்! துருப்புகளின் நடமாட்டம்! அரசாங்கத் துருப்புகளே அர சாங்கத்திற்கு விரோதமாகக் கிளம்பிவிட்டன என்று சொன்னால் கேட்கவேண்டுமா ஜனங்களிடத்திலே பரபரப்புக்கு? அரசாங்கக் காரியாலயங்கள், உயர்தர உத்தியோகதர்களின் வாசதலங்கள் முதலியன ஒன்றன்பின்னொன்றாகத் தாக்கப் பட்டன. மாகாண அதிகாரியும், ராணுவத்தின் பிரதம தளகர்த்தனும் உயிர் தப்பினால் போதுமென்று ஓடிவிட்டார்கள். கலகப்படைக்கோ, அரசாங்கத் திற்கோ சரியான தலைவனில்லை. பார்த்தார்கள் கலகக் காரர்கள். லீ யுவான் ஹுங் என்ற ஒரு முக்கிய ராணுவ அதிகாரியின் வீட்டுக்குச் சென்றார்கள். அப்பொழுது நல்ல நிசி நேரம். பரம சாதுவான அவன் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான். எழுப்பினார்கள் அவனை. துப்பாக்கி முனையை அவன் முன்னே நீட்டிக் காட்டினார்கள். தங்களுடைய தலைவனாயிருக்கும் படி கூறினார்கள்! என்ன செய்வான் அவன்? வேறு வழியின்றித் தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்டான். கால வேகத்தை அனுசரித்துப் போகிற சாமர்த்தியம் அவனுக்கு இருந்தது. இதனால், முடியரசின் கீழ் எவ்வளவு பக்தி விசுவாசத்துடன் சேவை செய்து வந்தானோ அவ்வளவு பக்தி விசுவாசத்துடன் குடியரசின் கீழும் சேவை செய்ய முன் வந்தான்.
லீ யுவான் ஹுங், தலைமை ஏற்ற சில மணிநேரத்திற்குள் கலகப்படையினை ஒழுங்குபடுத்திக் கொண்டு ஹாங்கோ, வூசங், ஹான்யாங் ஆகிய மூன்று நகரங்களிலுமுள்ள1 முக்கியமான இடங்களை யெல்லாம் தன் சுவாதீனப்படுத்திக் கொண்டான். சில சில இடங்களில் எதிர்ப்புகள் இருந்தன. அவைகளைச் சுலபமாக அடக்கினான். தேசத்தின் நன்மைக்காகவே புரட்சி ஏற்பட்டிருக்கிற தென்பதை ஜனங்கள் உணரும்படி செய்தான்.
வூசங்கில் புரட்சி ஆரம்பித்துவிட்டதென்ற செய்தி காட்டுத்தீ போல் நாலா பக்கங்களிலும் பரவியது. சுமார் ஐம்பது நாட்களுக்குள் பதினான்கு மாகாணங்களில் புரட்சிக் கொடி பறந்தது! மஞ்சூ அரசாங்கத்தின் அதிகாரம் இப்படி மாயமாய் மறைந்துவிடுமென்று ஜனங்கள் எதிர்பார்க்கவில்லை. அந்தந்த மாகாணத்திலுள்ள மஞ்சூ அதிகாரிகள், தங்கள் பொறுப்பைச் சிறிதுகூட உணராமல் புரட்சியின் வருகையைக் கண்டு ஓடிவிட்டார்கள்; ஓடாதவர்கள் விரட்டப் பட்டார்கள். ஆங்காங்குப் புரட்சி அரசாங்கங்கள் அமைந்தன. அரசாங்கத் துருப்புகள் புரட்சித் துருப்புகளாக மாறின. இந்தத் துருப்புகளைக் கொண்டும் பொதுஜனத் தொண்டர் படைகளைக் கொண்டும் மேற்படி புரட்சி அரசாங்கங்கள் பொது ஜன அமைதியைக் காத்து வந்தன. இந்தப் புரட்சிக் காற்று, பீகிங் நகரத்திலே கூட வீச ஆரம்பித்தது. மஞ்சூ அரசாங்கம் பீதியடைந்து, புரட்சியை ஒடுக்க முற்பட்டது. இது நிற்க.
வூசங்கிலே தொடங்கிய புரட்சியானது பல இடங்களில் பரவிய போதிலும், ஆங்காங்குப் புரட்சி அரசாங்கங்கள் அமைந்த போதிலும், ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமலே விவகாரங்கள் நடைபெற்றுவந்தன. வூசங்கிலுள்ளவர்கள், தாங்கள்தான் புரட்சி யின் பிரதிநிதிகளென்றும், தாங்களே புரட்சியின் சார்பாகப் பேசத் தகுதியுடைவர்களென்றும் கூறினார்கள். இப்படியே ஒவ்வொரு மாகாணத்தவரும் உரிமை கொண்டாடினார்கள். சிறப்பாக ஷாங்காயில் புரட்சி செய்தவர்கள், இது விஷயத்தில் சிறிது உரத்தே தங்கள் உரிமையை வலியுறுத்தினார்கள். இவர்கள் அத்தனை பேரும் காண்டன் வாசிகள்; பரம்பரையாகச் சுதந்திர உணர்ச்சியிலே வளர்ந்தவர்கள். வூசங் வாசிகளிடத்தில் புரட்சியின் நிருவாகத்தை ஒப்படைத்துவிட்டால் அவர்கள் எங்கே, நல்ல தருணத்தில் பீகிங் அரசாங்கத்துடன் சமரஸத்திற்கு வந்து புரட்சியைச் சீர்குலைத்து
விடுவார்களோ என்ற பயம் இவர்களுக்கு இருந்தது. இதை மனதில் வைத்துக் கொண்டு இவர்கள், ஷாங்காயில் புரட்சி அரசாங்கத்தை தாபித்ததும், அதன்பெயரால், அந்நிய வல்லரசுகளின் ஆதரவைக் கோரி ஓர் அறிக்கைவிடுத்தார்கள்! என்ன வேடிக்கை! உள்ளே யிருக்கும் வியாதியைப் போக்கிக்கொள்ள, வெளியிலிருந்து பல வியாதிகளை வரவழைத்து உடலுக்குள்ளே திணித்துக் கொள்வது போல இருக்கிறது இது. இந்த இரண்டு சாராருக்கும் ஏற்பட்ட இந்தப் பிணக்கு வரவர முற்றிக் கொண்டு வந்தது. ஆனால், நல்ல வேளையாகக் கடைசி சமயத்தில் வூசங் புரட்சிக்கட்சியின் தலைவ னான லீ யுவான் ஹுங், ஷாங்காய் கட்சிக்கு விட்டுக்கொடுத்து விட்டான். புரட்சியை ஆரம்பித்தவன் லீ யுவான் ஹுங். ஆனால் புரட்சியின் சார்பாகப் பேசும் அதிகாரத்தை மற்றொருவருக்கு விட்டுக் கொடுத்தான். இஃது இவனுடைய சிறந்த தியாக புத்தியையே காட்டுகிறது. இவன் இப்படி செய்திராவிட்டால், குடியரசு தாபிக்கப் பட்டதற்குப் பிறகு தொடங்கிய உள்நாட்டுக் கலகம் அதற்கு முந்தியே தொடங்கியிருக்கும்; சீனாவின் சரித்திரப் போக்கும் வேறுவிதமாகத் திரும்பியிருக்கும். ஒவ்வொரு நாட்டுச் சரித்திரத் திலும் இப்படிப்பட்ட தியாகிகள் சிலர் அவ்வப்பொழுது தோன்று கிறார்கள். இவர்களைப் பெரிய மனிதர்களென்று இவர்களுடைய சமகாலத்தவர் போற்றாவிட்டாலும் இவர்கள் செய்கிற தியாகம் மிகவும் அற்பமானதாக அப்பொழுது கருதப்பட்டாலும், இவர் களுடைய இந்தச் சிறிய காரியந்தான், அந்தத் தேசத்தின் சரித்திரத் திருப்பங்களிலே ஒன்றாயிருக்கிறது.
மஞ்சூ அரசாங்கம், பீதியடைந்து, புரட்சியை ஒடுக்க முற்பட்ட தல்லவா? ஒடுக்கி விடுவதென்றால் லேசான காரியமா? சரியான தலைவன் வேண்டாமா ? இதற்காக, தன்னோடு பிணங்கிக் கொண்டு ஒதுங்கியிருந்த யுவான் ஷி காயைத் திரும்பவும் வர வழைத்து, ராணுவத்தின் பிரதம சேனாதிபதியாக நியமித்தது. ஏனென்றால், யுவானுடைய பெயர்தான் சீனர்களுக்கு நன்றாகத் தெரிந்தபெயர். ராஜ தந்திரத்திலும் போர்த்திறத்திலும் சிறந்தவன் என்று இவன் பெயரெடுத் திருந்தான். எனவே, இவனுடைய தலைமையை உபயோகித்துக்கொண்டு புரட்சியை ஒடுக்கி விடலா மென்று பார்த்தது. ஆனால், தன்னுடைய ஒடுக்கத்திற்கு இவன் ஒரு முக்கிய காரணனாயிருப்பான் என்று அதற்குத் தெரியவில்லை.
யுவான் ஷி காய், ஒரு பெரும்படையுடன் பீகிங்கிலிருந்து புறப்பட்டான். இவனுடைய கைதேர்ந்த படைக்கு முன்னே, அனுபவ மில்லாத புரட்சிப்படைகள் எம்மாத்திரம்? போர்க் களத்தில் வெறும் உற்சாகம் மட்டும் இருந்தால் போதுமா? ஹாங்கோ நகரம் வீழ்ந்தது; எரிக்கப்பட்டுச் சாம்பலாகியது. இதற்குப் பிறகு இன்னும் சில இடங்களிலும் புரட்சிப் படைகள் தோல்வியடைந்தன. ஆனால் யுவான் இந்தத் தோல்விகளைத் தனக்கு வெற்றியாக உபயோகித்துக் கொள்ள வில்லை. வேண்டு மென்றே போரை நீடித்துக்கொண்டு போனான். இதன் மூலமாக மஞ்சூ அரசாங்கத்தையும் புரட்சிவாதி களையும் தன் விருப்பத்திற் கிணங்கும்படி செய்யலாமென்பது இவன் நோக்கம், இவனுடைய விருப்பம் என்ன? தானே சர்வதி காரியாயிருந்து சர்வ சீனாவையும் தன் பிடிக்குள் வைத்துக் கொண்டிருக்க வேண்டு மென்பதுதான்.
இந்தச் சந்தர்ப்பத்தில், புரட்சியிலே ஈடுபட்டிருந்த பல மாகாணப் பிரதிநிதிகளும் லீ யுவான் ஹுங்கின் முயற்சியின் பேரில் நான்கிங் நகரத்தில் ஒன்றுகூடித் தங்களை ஒரு தேசீய சபையாக அமைத்துக் கொண்டார்கள். பின்னர் இந்தச் சபையினர், குடியரசு முறையைத் தழுவிய ஒரு தற்காலிக அரசாங்கத்தை தாபித்து அதற்கு ஸன் யாட் ஸென்னைத் தற்காலிக பிரசிடெண்டாகத் தெரிந்தெடுத்தார்கள். புரட்சியின் தந்தை யல்லவா ஸன் யாட் ஸென்? அப்பொழுது இவன் அமெரிக்காவில் சுற்றுப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். சீனாவில் புரட்சி தொடங்கிவிட்ட தென்று கேள்வியுற்றதும் திரும்பித் தாய்நாட்டிற்கு வந்துசேர்ந்தான். தான் கண்ட கனவு, நனவானது குறித்து மனம் பூரித்தான். தனக்களிக்கப் பட்ட பிரசிடெண்ட் பதவியைத் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு பொறுப்பாக ஏற்றுக்கொண்டான். பீகிங்கிலேயுள்ள முடியரசுக்குப் போட்டியாக நான்கிங்கில் 1912-ஆம் வருஷம் ஜனவரி மாதம் முதல் தேதி குடியரசு தாபிக்கப்பட்டது. தற்காலிகமாக ஒரு மந்திரிச் சபையும் அமைந்தது. குடியரசு ராஜ்யத்தின் அரசியல் திட்டத்தை நிர்ணயிக்க சீக்கிரத்தில் சர்வஜன சபையொன்று கூட்ட வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது.
ஆனால் ஸன் யாட் ஸென், புரட்சியை வெற்றிகரமான முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமானால், தான் தொடர்ந்து பிரசிடெண்ட் பதவியை வகித்துக்கொண்டிருக்கக் கூடாதென்று தீர்மானித்தான். புரட்சிக்கு விதை யூன்றியவன் ஸன் யாட் ஸென் என்றாலும், இவனைச் சீனப் பொது ஜனங்களுக்கு அவ்வளவு நன்றாகத் தெரியாது. தவிர இவனுக்கு அதிகமான பணபலமோ, படைபலமோ இல்லை. இவைகளை அதிகமாக உடைய யுவான் ஷி காய்க்கே பிரசிடெண்ட் பதவியைக் கொடுத்து, அவனைத் தன் கட்சிக்கு இழுத்துக்கொண்டுவிட்டால், தேசத்தில் குடியரசுக்கு எதிர்ப்பே இல்லாமற் போகுமென்றும், முடியரசு தானாகவே விழுந்துவிடு மென்றும் இவன் எண்ணினான். இந்த நோக்கத்துடன் யுவானோடு ரகசியமாகச் சமரஸம் பேசினான். மஞ்சூ ஆட்சியை ஒழிப்பதற்கும் குடியரசு லட்சியத்தை ஏற்றுக்கொள்வதற்கும் யுவான் சம்மதிப்பானாகில், தான் பிரசிடெண்ட் பதவியைத் துறந்துவிடுவ தாகவும், அந்தப் பதவியை அவனுக்கு அளிக்க ஏற்பாடு செய்வ தாகவும் இவன் - ஸன் யாட் ஸென்- தெரிவித்தான்.
யுவான் ஷி காய் சிறந்த ராஜதந்திரியென்றாலும் அதற்கு மேலாக அதிகார ஆசைப்பட்டவன். அவனுடைய பதவி மோகத் துக்கு முன்னே, லட்சியம், கொள்கை முதலியனவெல்லாம் வலு விழந்து நின்றன. பிரசிடெண்ட் பதவியை ஏற்றுக்கொண்டால் சர்வ சீனாவுக்கும் தான் சர்வாதிகாரியாக இருந்து ஆண்டு கொண்டிருக் கலாமென்று தீர்மானித்தான். முடியரசுக்கு முடிவுகட்டிவிடு வதாகவும், குடியரசு லட்சியத்தை ஏற்றுக்கொள்வதாகவும் ஸன் யாட் ஸென்னுக்கு வாக்குக் கொடுத்தான். உடனே அரச பீடத்தில் பொம்மையாகக் கொலுவீற்றிருந்த பூயீ மன்னனுக்கு ஓர் அறிக்கை விடுத்தான். அதில், சீன மக்கள் குடியரசையே விரும்புகிறார் களென்றும், ஜனங்களுடைய விருப்பத்தைப் பூர்த்திசெய்வதே அரசனுடைய கடமையென்றும், ஆதலின் முற்காலத்து மன்னர் களைப் போல் வலிய முடி துறந்துவிடுதல் சாலச் சிறந்ததென்றும் குறிப்பிட்டிருந்தான். இப்படி பகிரங்கமாக அறிக்கை விடுத்து விட்டு, அந்தரங்கமாக அரச அதிகாரத்தையெல்லாம் தனக்கே மாற்றிவிடுமாறும் ஏற்பாடு செய்துகொண்டான். பூயீ மன்னன் 1912-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் பன்னிரண்டாம் தேதி முடிதுறந்தான். முடிதுறந்த பிறகு இவன், ஓர் அந்நியநாட்டு அரசனுக்கு என்ன மரியாதையுண்டோ அந்த மரியாதை யுடன் நடத்தப்பட வேண்டு மென்றும், வருஷந்தோறும் இவனுக்குச் செலவுத் தொகையாக நாற்பது லட்சம் டாலர் கொடுத்துவர வேண்டு மென்றும், ஏற்கனவே யுள்ள அரச பரிவாரங்கள், அரச விருதுகள் முதலியவைகளை இவன் வைத்துக்கொள்ளலாமென்றும் ஏற்பாடுகள் செய்யப் பட்டன. மஞ்சூ அரச பரம்பரை பரிபூர்ணமாக அதமித்து விட்டது.
பூயீ மன்னன், முடிதுறந்துவிட்டுப் போகிற தருணத்தில் யுவானுடைய தூண்டுதலின் பேரில், யுவான் ஷி காய், சர்வ அதிகாரங் களுடன் ஒரு தற்காலிகக் குடியரசு அரசாங்கத்தை அமைத்து, குடியரசுச் சேனையுடன் அதாவது புரட்சிவாதிகளுடன் கலந்து ராஜ்யத்திற்கு அமைதியையும் சேக்ஷமத்தையும் உண்டு பண்ணட்டும் என்று ஓர் அதிகாரப் பத்திரத்தைப் பிரகடன ரூப மாகக் கொடுத்து விட்டுப்போனான். இதை ஸன் யாட் ஸென் ஆட்சேபித்தான். மஞ்சூ அரசனால் அளிக்கப்பட்ட அதிகாரத்தைக் கொண்டு யாரும் குடியரசு அரசாங்கத்தை தாபிக்க முடியா தென்றும் அப்படி யாராவது தாபிக்க முற்பட்டால் அதனால் அதிகத் தொந்திரவுகளே உண்டாகுமென்றும் கூறினான். யுவான், பிரகடனத்தி லுள்ள வாசகத்தைப் பொருட்படுத்த வேண்டா மென்றும், தான் அதன்படி நடக்கப்போவதில்லையென்றும் சமாதானம் கூறினான். இதனை ஸன் ஒப்புக்கொண்டான். யுவானுடைய மனஆழத்தை இவன் அப்பொழுது அறியவில்லை.
ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தபடி புதிய அரசியல் திட்டத்தை நிர்ணயிக்க நான்கிங் நகரத்தில் சர்வ ஜன சபை கூடியது. ஜனங்களுக்காக ஜனங்களுடைய ஆட்சியே இனி சீனாவில் நடைபெறுமென்பதையும், எல்லா ஜனங்களும் சம உரிமை உடையவர்களென்பதையும் அடிப்படை யாகக் கொண்ட ஒரு தற்காலிக அரசியல் திட்டத்தை அது நிறைவேற்றியது. ஸன் யாட் ஸென், சம்பிரதாயமாக தனது பிரசிடெண்ட் பதவியை ராஜீநாமா செய்தான். அவனுடைய விருப்பப்படி மேற்படி சர்வ ஜன சபையானது யுவான் ஷி காயை, சீனக் குடியரசின் முதல் பிரசி டெண்டாகத் தெரிந்தெடுத்தது. இஃதொரு சமரஸ ஏற்பாடுதான். சர்வ ஜன சபையிலிருந்த பெரும்பாலோர் தெற்கு மாகாணங் களைச் சேர்ந்தவர்கள். இவர்கள்தான் புரட்சியில் அதிகமாக ஈடுபட்டு அதனை வெற்றிக்குக் கொணர்ந்தவர்கள்; குடியரசு லட்சியத்தில் உறுதியுடையவர்கள். இவர்கள் யுவான் ஷி காயைப் பூரணமாக நம்பவில்லை. யுவான் ஷி காயின் பலமெல்லாம் வடக்கே. இவன் குடியரசு லட்சியத்தில் பரிபூரண நம்பிக்கை வைத்து பிரசிடெண்ட் பதவியை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தப் பரபர அவநம்பிக்கை, பிரசிடெண்ட் தேர்தல் நடைபெற்ற உடனேயே வெளிப் பட்டது. குடியரசுவாதிகள், சீனக் குடியரசின் தலைநகரம் இனி நான்கிங்கே இருக்கவேண்டுமென்றும், யுவான், தனது பிரசிடெண்ட் பதவியை நான்கிங் நகரத்திலேயே ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் வற்புறுத் தினார்கள். இதை யுவான் அவ்வளவாக விரும்பவில்லை. தன்னூர் யானை அயலூர் பூனையல்லவா? பெரும்பாலோருடைய விருப்பத்தைச் சாமர்த்தியமாகப் புறக் கணித்துவிட்டு 1912-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் பத்தாந் தேதி பீகிங் நகரத்திலேயே தனது புதிய பதவியை ஆடம்பரத்துடன் ஏற்றுக் கொண்டான். தெற்கு மாகாண வாசிகளுக்கு இது மனக் கரகரப் பாகவே இருந்தது. இந்தக் காலத்திலிருந்தே சீன அரசியல் வாழ்வைக் களங்கப்படுத்தக் கூடிய வடக்கித்தியார் என்றும் தெற்கித்தியார் என்றும் பிரிவினைகள் ஏற்பட்டன. யுவான் ஷி காய் பிரசி டெண்டாகத் தெரிந்தெடுக்கப்பட்ட மறுநாள் (11-3-1912) தற்காலிக அரசியல் திட்டம் அனுஷ்டானத்திற்கு வந்தது. சீனாவில் குடியரசு உதயமாயிற்று.
தொடக்கத்திலேயே கிரகணம்
யுவான் ஷி காய் பிரசிடெண்ட் பதவியை ஏற்றுக் கொண் டதும் தன் சுய ரூபத்தை வெளிப்படுத்தினான். அதிகாரம் கைக்கு வந்தபிறகு அரசியல்வாதிகள் எப்படி மாறிவிடுகிறார்கள் என்பதற்கு யுவான் ஒரு நல்ல உதாரணம். நான்கிங் சபையினால் நிறைவேற்றப் பட்ட தற்காலிக அரசியல் திட்டப்படி பார்லிமெண்டைக் கூட்டுவதும், இந்தப் பார்லிமெண்டைக் கொண்டு, குடியரசின் நிரந்தரமான அரசியல் திட்டத்தை நிர்ணயிப்பதும் அவசியமாயின. இந்தச் சம்பிரதாயங்களைக் கொஞ்சங்கூட வழுவாமல் யுவான் செய்வித்தான். பார்லிமெண்டுக்குத் தேர்தல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
இந்தச் சமயத்தில் ஸன் யாட் ஸென், தன்னுடைய டுங் மெங் ஹுயி கட்சியை வலுப்படுத்தி, குடியரசு நோக்கத்தை ஆதரிக்கிற மற்றக் கட்சிகளையும் அதில் ஐக்கியப்படுத்தினான். இதுவே பின்னர் சில மாற்றங் களுடன் கோமிண்டாங் கட்சியாயிற்று. இந்தக் கட்சியினர் இதுகாறும் ரகசியமாக வேலைசெய்து வந்தனர். குடியரசு ஏற்பட்ட பிறகு இவர்கள் பகிரங்கமாக அரசியல் விவகாரங்களில் கலந்துகொண்டார்கள். இந்தக் கட்சியின் பெரும்பாலோர் தெற்கித்தியார்.
இந்தக் கட்சிக்குப் போட்டியாகவும், தனக்குப் பக்க பலமா கவும் இருக்க, யுவான் ஷி காய் முன்னேற்றக் கட்சி என்ற பெயருடன் ஒரு கட்சியை ஏற்படுத்தி அதற்கு ஆதரவு காட்டி வந்தான். இந்தக் கட்சி, வடக்கித்தியாரையே பெரும்பான்மை யோராகக் கொண்டிருந்தது. வட மாகாண வாசிகளான நிலச்சுவான் தார்கள், ராணுவ தளகர்த்தர்கள், மஞ்சூ ஆட்சியின் கீழ் உடம்பு நோகாமல் உத்தியோகம் பார்த்து ஏராளமான ஊதியம் சம்பாதித் தவர்கள் முதலியோரே இதில் அங்கத்தினர்கள். இவர்கள் சமுதாயத் திலேயோ அரசியலிலேயோ எவ்வித மாற்றத்தையும் விரும்பா தவர்கள்; உள்ள நிலைமையில் திருப்தியடைகிறவர்கள். இந்த இரண்டு பிரிவுகளையும் நாம் தூலமாகத் தெரிந்துகொள்வது, சீனாவின் உள்நாட்டுச் சண்டைகளைத் தெரிந்துகொள்வதற்குத் திறவுகோல் மாதிரி.
புதிய பார்லிமெண்டில் கோமிண்டாங் கட்சியினர் அதிக மான தானங்களைக் கைப்பற்றினர். இது யுவானுக்குப் பிடிக்குமா? தன்னிஷ்டப் படி அரசாங்கத்தை நடத்திக்கொண்டு போக முடியா தென்பதை நன்கு உணர்ந்தான். இதற்குத் தகுந்தபடி, பார்லிமெண்ட் கூடியதும், நிரந்தரமான அரசியல் திட்டத்தைப் பற்றிய பிரச்னை வாதத்திற்கு வந்தது. பிரசிடெண்டினுடைய அதிகாரம் வரை யறுக்கப்படவேண்டுமென்றும், பார்லிமெண்டின் சம்மதத்தைப் பெற்றுத்தான் எந்த விதமான சட்டமும் அமுலுக்குக் கொண்டு வரப்பட வேண்டுமென்றும் பெரும்பா லோரான அங்கத் தினர்கள் வற்புறுத்தினார்கள். பார்த்தான் யுவான். எதிர்க் கட்சியினரைப் பலாத்காரத்தினால் அடக்கிவிடுவதென்று தீர்மானித் தான். பல கொலைகள் நடைபெற்றன. எங்கும் ஒரு பயங்கரத்தை உண்டு பண்ணினான். கடைசியில் (1913-ஆம் வருஷம் மத்தியில்) கோமிண்டாங் கட்சியைச் சட்டவிரோதமான கட்சியென்று சொல்லி அதனைக் கலைத்து விட்டான். இதன் மூலம் தனக்கு எதிர்ப்பே இல்லாமற் செய்துகொண்டு, பிறகு தன்னிஷ்டம்போல் நிருவாகத்தை நடத்து வதற்கு அனுகூலமாக அரசியல் திட்டத்தை மாற்றிக் கொண்டு விட்டான். அரசாங்கச் செலவினங் களுக்காக ஐரோப்பிய வல்லரசு களிடமிருந்து கடன் வாங்கி, அதைத் தன் ராணுவ முதீபுக்காகச் செலவழித்தான். ஐரோப்பிய வல்லரசுகளும், இவனுடைய அரசாங்கந்தான் நியாயமான அரசாங்கமென்று அங்கீகரித்து இவனுக்குக் கடன் கொடுக்கத் தயங்கவில்லை. அப்படி கடன் கொடுப்பதிலும் போட்டாபோட்டி வேறே!
யுவான் ஷி காயின் இந்தச் சுயேச்சாதிகாரத்தைக் கண்டித்து காண்டன், நான்கிங், ஷாங்காய் முதலிய பிரதேசங்களில் 1913-ஆம் வருஷம் ஜூலை மாதம் ஸன் யாட் ஸென்னுடைய தூண்டுதலின் பேரில் ஒரு புரட்சி நடைபெற்றது. ஆனால் யுவானின் படைபலம் இதனை உடனே அடக்கிவிட்டது. ஸன் யாட் ஸென், ஜப்பானுக்குத் தப்பியோடி விட்டான். அங்கே சென்று டோக்கியோ நகரத்தில் கோமிண்டாங் கட்சியைப் புதுப்பித்து, மறுபடியும் சீனாவில் ஒரு புரட்சியை நடத்தி யுவானை அப்புறப்படுத்தி விடுவதற்கு ஏற்பாடு செய்துகொண் டிருந்தான்.
இந்தப் புரட்சியையே காரணமாக வைத்துக்கொண்டு, யுவான், பார்லிமெண்டைக் கலைத்து, புதிய அரசியல் திட்டத்தையும் ரத்து செய்துவிட்டு சர்வாதிகாரியாக ஆண்டுவந்தான்.
யுவானுடைய இந்தச் சர்வாதிகார ஆட்சியை அந்நிய வல்ல ரசுகள் ஆதரித்தே வந்தன. ஜப்பான், ஒரு புறத்தில் ஸன் யாட் ஸென்னுக்குத் தஞ்சம் கொடுத்துவிட்டு, மற்றொரு புறத்தில் யுவான் ஷி காயின் முதுதைத் தடவிக்கொடுத்துக்கொண்டு வந்தது. இந்த ஆதரவின் மத்தியில் யுவானின் அதிகார ஆசையும் வளர்ந்தது. தான் ஏன் பரம்பரை உரிமையோடுகூடிய சக்ரவர்த்தியாகப் பட்டஞ் சூட்டிக் கொள்ளக்கூடாது என்ற எண்ணம் இவனுக்கு உண்டா யிற்று. இந்த எண்ணத்திற்கு அனுசரணையாக டாக்டர் பிராங் குட்நௌ1 என்ற ஓர் அமெரிக்கன், சீனா குடியரசுக்குத் தகுதியடைய வில்லை யென்றும் அங்கு முடியரசுதான் நீடித்து நிலைக்கமுடியு மென்றும் சொல்லி ஓர் அரசியல் திட்டத்தை வகுத்து யுவானிடம் சமர்ப்பித்தான். இந்தத் திட்டத்தை ஆதரிக்கிற முறையில் பல கட்சிகள், சங்கங்கள் தோன்றின. முடியரசை ஆதரித்து பலத்த பிரசாரம் நடைபெற்றது.
இப்படி நடைபெற்றுக்கொண்டிருக்கிற தருணத்தில் ஐரோப்பிய மகாயுத்தம் தொடங்கியது. 1914-ஆம் வருஷம் அக்டோபர் மாதம் ஐந்தாந்தேதி, ஜப்பான், சீனாவிலுள்ள ஷாண்டுங் மாகாணத்தில் ஜெர்மனிக்குச் சொந்தமாயிருந்த துறைமுகப்பிர தேசங்கள் முதலிய வற்றைத் தன் சுவாதீனப்படுத்திக்கொண்டுவிட்டது. சர்வாதிகாரி யான யுவான் இதனைத் தடுக்கமுடியவில்லை. இதற்குப் பிறகு 1915-ஆம் வருஷம் ஜனவரி மாதம், சீனாவின் சுய உரிமைகளைப் பாதிக்கக்கூடிய மாதிரி இருபத்தோரு கோரிக்கைகள் அடங்கிய ஒரு தாக்கீதை ஜப்பான் சமர்ப்பித்தது2 இவைகளில் பலவற்றைச் சீனாவின் சார்பாக யுவான் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. இவைகளை யொட்டி சீனாவுக்கும் ஜப்பானுக்கும் பலவித ஒப்பந்தங்கள் ஏற்பட்டன. இந்த ஒப்பந்தங்களையும் ஜப்பானின் ஆக்கிரமிப்பையும் கண்டித்து சீனாவில் பலத்த கிளர்ச்சிகள் நடைபெற்றன.
இந்தக் கிளர்ச்சிகளை யுவான் மிகுந்த சாமர்த்தியத்துடன் தனக்குச் சாதகமாக உபயோகித்துக்கொண்டான். தன்னிடத்தில் சர்வாதிகாரம் இருக்கும் பட்சத்தில் ஜப்பானுடைய இந்த ஆக்ரமிப்புச் செயலை, தான் தடுக்க முடியுமென்கிற மாதிரியான பிரசாரங்கள் நடைபெறச் செய்வித் தான். கடைசியில் பொது ஜனங்களுடைய கோரிக்கைகளுக்கு, தான் இணங்குவதாகக் காட்டிக்கொண்டு, 1915-ஆம் வருஷம் டிசம்பர் மாதம், சர்வ சீனாவுக்கும் தானே சக்ரவர்த்தியாக முடிசூட்டிக்கொள்ளத் தீர்மானித் தான். இதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்றன. இவை களை யறிந்து, தொலைதூரத்தில் தென்மேற்கிலுள்ள யுன்னான் மாகாணவாசிகள் கலகத் திற்குக் கிளம்பினார்கள். இந்தக் கலகம் தெற்கிலுள்ள மற்ற மாகாணங் களுக்கும் பரவியது. தன்னுடைய எண்ணம் ஈடேறாது என்று யுவானுக்கு நிச்சயமாகத் தெரிந்து விட்டது. கலகத்தை அடக்குவதற்கென்று சில படைகளை அனுப்பினான். அவை தோல்வியுற்றுத் திரும்பி வந்து விட்டன. இவனிடம் விசுவாசம் காட்டிவந்த சில ராணுவத்தலைவர்கள், இவனைக் கை விட்டுவிட்டுத் தங்கள் படைகளுடன் பிரிந்து விட்டார்கள். யுவானுக்கு ஆத்திரம் பொங்கியது. இந்த ஆத்திரத்தில் தனது ஆசை நாயகியைக்கூடக் கொலை செய்துவிட்டான். கடைசியில் மனமுடைந்துபோய் 1916-ஆம் வருஷம் ஜூன் மாதம் ஆறாந்தேதி இறந்து போனான்.
யுவான் ஷி காய்க்குப் பிறகு பீகிங் அரசாங்கத்தின் பிரசி டெண்ட் பதவியை வகித்தவன் லீ யுவான் ஹுங். 1911-ஆம் வருஷம் அக்டோபர் மாதம் வூசங்கில் புரட்சி ஏற்பட்டபோது இவன் தலைவனாகத் தெரிந்தெடுக்கப் பட்டான் என்பது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கும். இவன் ஒரு ஜனநாயகவாதி. பதவி ஏற்றுக் கொண்டதும் யுவானால் கலைக்கப் பட்ட பார்லிமெண்டைக் கூட்டுவித்தான். தற்காலிகக் குடியரசுத் திட்டத்தை மறுபடியும் அமுலுக்குக் கொண்டுவந்தான். தேசத்திற்கு விமோசனம் ஏற்படும் போலிருந்தது. ஆனால் இவனைச் சுற்றியிருந்த மந்திரிக் கூட்டம் இவனுடைய எண்ணத்தை ஈடேற விடாமல் செய்து வந்தது. மந்திரிகளுக்குள் பொறாமை, பிணக்கு எல்லாம் தலை விரித்தாடின. இந்தக் காலத்தில் பிரதம மந்திரியாயிருந்தவன் துவான் சீ ஜுயி என்பவன். இவன் 1917-ஆம் வருஷத் தொடக்கத்திலிருந்து சுமார் மூன்று வருஷ காலம் பீகிங் அரசாங்கத்தை ஆட்டிவைத்தான் என்று சொல்லலாம். இவன், பார்லிமெண்டில் ஒரு கட்சிக்குத் தலைவன். இந்தக்கட்சி பலத்தைக் கொண்டு இவன் தன் செல்வத்தையும் செல்வாக்கையும் பெருக்கிக்கொள்ளப் பார்த்தான்; அந்நிய வல்லரசுகளின் கைக்கருவியாகி விட்டான். ஐரோப்பிய யுத்தத்தில், ஆரம்பகாலத்தி லிருந்து நடுநிலைமை வகித்துவந்த சீனா, 1917-ஆம் வருஷம் ஆகட் மாதம் மேற்படி யுத்தத்தில் பிரவேசிப்பதற்கு அந்நிய வல்லரசுகளின் நெருக்குதல் ஒரு முக்கிய காரணமாயிருந்த போதிலும், இந்த துவானுடைய சூழ்ச்சியும் அந்தக் காரணத்திற்குத் துணைசெய்தது. எந்த ஓர் அந்நிய வல்லரசின் மீது யுத்தந் தொடுப்பதாயிருந்தாலும் பார்லிமெண்டின் சம்மதம் வேண்டு மென்பது சட்டம். பார்லிமெண்டின் அங்கத்தினர் பெரும் பாலோர் சீனாவை யுத்தத்தில் இழுத்து விடச் சம்மதப்படவில்லை. எனவே துவான், பார்லிமெண்டைக் கலைக்கச் செய்தான். சீனா, ஜெர்மனி மீது யுத்தந் தொடுத்திருப்பதாக பீகிங் அரசாங்கம் பிரகடனம் செய்தது. கலைக்கப்பட்டுபோன பார்லிமெண்ட் அங்கத்தினர்கள் - அதாவது யுத்தத்திற்கு விரோதமாயிருந்தவர்கள் - தெற்கே வந்து தங்களை ஒரு விசேஷ பார்லிமெண்டாக அமைத்துக் கொண்டார்கள். இவர்கள், அப்பொழுது ஜப்பானிலிருந்து திரும்பி வந்துவிட்டிருந்த ஸன் யாட் ஸென்னைத் தலைவனாகத் தெரிந்தெடுத்து, தேசத்தின் சர்வ அதிகாரங்களுக்கும் மூலமாயிருப்பது தங்களுடைய பார்லி மெண்டே என்று பிரகடனம் செய்தார்கள். இது நிற்க.
துவான் பிரதம மந்திரியாயிருக்கையிலேயே அவனைத் தனக்குச் சாதகமாக உபயோகித்துக்கொள்ளத் தீர்மானித்தது ஜப்பான். ஷாண்டுங் மாகாணத்தில், ஜெர்மனி, (1914-ஆம் வருஷ ஐரோப்பிய) யுத்தத்திற்கு முன்னர் அனுபவித்துவந்த ரெயில்வே சம்பந்தமான உரிமைகளை யெல்லாம் ஜப்பானுக்குச் சீன அரசாங்கம் சந்தோஷத்துடன் கொடுக்கச் சம்மதிக்கிறது என்னும் வாசகங்கள் அடங்கிய ஒரு ரகசிய ஒப்பந்தத்தை 1918-ஆம் வருஷம் செப்டம்பர் மாதம்-அதாவது சீனா, ஐரோப்பிய யுத்தத்தில் பிரவேசித்த மறுவருஷம் - இவனுடன் செய்துகொண்டது. அதற்குப் பதிலாக இவனுக்கு ஏராளமான தொகையைக் கடனாகக் கொடுத்தது. சீனா, தானே வலிய மனப்பூர்வமாக மேற்படி ஷாண்டுங் மாகாண ரெயில்வே சம்பந்தமான உரிமைகளைத் தன்னிடம் ஒப்படைத் திருப்பதாகப் பின்னாடி பாரி சமாதான மகாநாட்டில் ஜப்பான் வாதஞ் செய்வதற்கு அனுகூலமாக அமைந்தது, இந்த ரகசிய ஒப்பந்தம். அப்படியே வாதஞ்செய்தனர் ஜப்பானியப் பிரதிநிதிகள் மேற்படி மகாநாட்டில். இந்த வாதந்தான் செல்லுபடியாயிற்று. ஷாண்டுங் மாகாண சம்பந்தமான ரெயில்வே உரிமைகளை ஜப்பான், சீனாவைக் கட்டாயப்படுத்தி வாங்கிக் கொண்டதென்று சீனப் பிரதிநிதிகள் வாதஞ்செய்தபோது, மேற்படி ரகசிய ஒப்பந்தத்தைச் சுட்டிக்காட்டி, சந்தோஷமாகக் கொடுத்த உரிமையைக் கட்டாயப் படுத்தி வாங்கிக்கொண்டதாக எப்படி சொல்ல முடியுமென்று நேசவல்லரசுப் பிரதிநிதிகள் கையை விரித்து விட்டார்கள்!
துவானுடைய இந்தத் துரோகம் பல விரோதிகளை இவனுக்குச் சம்பாதித்துக் கொடுத்தது. இவனுக்கு விரோதமாக வூ பை பூ என்பவன் கிளம்பினான். துவான் படைகளுக்கும் வூ பை பூ படைகளுக்கும் பல போர்கள் நடைபெற்றன. கடைசியில் 1920-ஆம் வருஷம் துவான் முறியடிக்கப்பட்டான். இவனுடைய செல்வாக்கு மங்கியது. இவனுக்குப் பிறகு பீகிங்கில் ஆதிக்கம் வகித்தவர் யாரும் இவனைவிட சிரேஷ்ட மானவ ரல்லர்; எல்லோரும் பலாத்காரத்தின் துணையொன்றையே நம்பினவர்கள். வூ பை பூவுக்கு விரோதமாக சாங்க் ஸோ லின் கிளம்பினான்; தோல்வி யடைந்தான். மறுபடியும் இருவருக்கும் 1924-ஆம் வருஷத்தில் சண்டை. ஆக, யுவான் ஷி காயின் மரணத்திற்குப் பிறகு 1926-ஆம் வருஷம் வரையில் பீகிங்கில் அரசாங்க லட்சணங்களோடு கூடிய ஓர் அரசாங்கம் இருந்ததென்று சொல்லமுடியாது. இதனுடைய அதிகாரம் அரண்மனைச் சுவர் களுக்கு அப்பால் செல்லவில்லை. அரண்மனைக் காவலர்களைக் கட்டுப்படுத்தக்கூடிய அதிகார சக்திகூட இந்த அரசாங்கத்தின் பிரசிடெண்டுக்கு இல்லையென்று ஒரு மேனாட்டு ஆசிரியன் பரிகாச தோரணையில் கூறுகிறான். இருந்தாலும் இந்த அரசாங் கத்துக்குத்தான் - இந்த அரசாங்கச் சாயலுக்குத்தான் - அந்நிய வல்லரசுகள் மரியாதை செலுத்திவந்தன. தங்களுடைய சுரண்டும் உரிமைகளுக்குப் பாதகம் ஏற்படாவண்ணமிருக்க இப்படிச் செய்து கொண்டிருப்பது இவைகளுக்கு அவசியமாயிருந்தது.
வலுவுள்ள மத்திய அரசாங்கம் இல்லாத காரணத்தினால் இந்தப் பத்துவருஷ காலமும் (1916-1926) நாட்டில் ஒரே குழப்பம். யுவான் உயிரோடிருந்த வரையில் ஒருவாறு அடங்கியிருந்த ராணுவத் தலைவர்கள், அவனுடைய மரணத்திற்குப் பிறகு, தங்கள் படை களுடன் ஆங்காங்குக் கிளம்பி ஊரைச் சூறையிட ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு வருக்கும் சர்வ சீனாவின் சர்வாதிகாரியாக - ஏன்? மஞ்சூ அரச பரம்பரையின் வாரிசாகக் கூட - வந்துவிட வேண்டுமென்ற ஆசை. இந்த ஆசையினால் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டார்கள்; ஜனங்களைப் பலவித இம்சைகளுக் குட்படுத் தினார்கள்; அவர்களிட மிருந்து அநீதமாக வரிகளை வசூலித்துத் தங்களை அண்டியிருக்கும் போர்ச் சேவகர்களுக்கு அள்ளிக் கொடுத்ததோடு, தாங்களும் குடியிலும் கூத்திலுமாகச் செலவழித் தார்கள். மிகுதிப்படுகிற அற்ப சொற்பப் பணத்தை, அந்நியநாட்டு முதலாளிகள் நடத்தும் பாங்கியில் சேமித்து வைத்தார்கள்! இதுதான் வேடிக்கையான அமிசம். ஓர் ஆசிரியன் கூறுகிறான்: காண்டன், ஹாங்க்சௌ, ஷெக்குவான், முக்டென் முதலிய பிரதேசங்களிலும் இவைகளுக்கு நடுவிலுள்ள பிரதேசங்களிலும் சுயேச்சை அரசாங் கங்கள் அடிக்கடி தோன்றின. இவைகளுக்குக் காரணமாயுள்ள ராணுவத்தலைவர்கள், சிற்றரசர்கள் மாதிரி நகரத்திற்கு நகரம் தூதர்களை அனுப்பிக்கொண்டிருந்தார்கள். சூழ்ச்சி, லஞ்சம், விவாக சம்பந்தம், யுத்தம் இவைகளின் மூலமாகத்தான் இந்தக்காலத்து அரசியல் விவகாரங்கள் நடைபெற்றன. தேசத்தைப் புனர்நிர்மாணம் செய்வதற்கான சந்தர்ப்பங்கள் பல ஏற்பட்டும் அவை கை நழுவ விடப்பெற்றன. தேசத்தின் செல்வம் வீணாக்கப்பட்டது. இளைஞர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் ஏங்கி நின்றார்கள்.
யுவான் ஷி காயினுடைய சுயேச்சாதிகாரத்தின் விளைவாக ஸன் யாட் ஸென் ஜப்பானுக்குத் தப்பிச்சென்று அங்கே கோமிண்டாங் கட்சியைப் புனர் நிர்மாணஞ் செய்து கொண்டிருந் தானல்லவா? இவனுடைய தூண்டுதலின் பேரில்தான், யுவான் ஷி காய், சர்வ சீனாவுக்கும் சக்ரவர்த்தியாக முடிசூட்டிக் கொள்வதற்கு விரோதமாக யுன்னான் மாகாணத்தில் கலகக்கொடி தூக்கப் பட்டதாகச் சொல்லப் பட்டது. எப்படியோ புரட்சி நெருப்பு அணையாமல் பாதுகாத்து வந்தான் ஸன்.
யுவானுடைய மரணத்திற்குப் பிறகு இவன் சீனாவுக்குத் திரும்பி வந்தான். வந்த சில மாதங்கள் கழித்து, காண்டன் நகரத்தில் கூடியிருந்த விசேஷ பார்லிமெண்ட் அங்கத்தினர்கள், இவனைத் தங்கள் தலைவனாகத் தெரிந்தெடுத்தார்கள்.1 பின்னர் இவனுடைய தலைமையில் ஒரு தேசீய அரசாங்கம் அமைந்தது. ராணுவ தோரணையில் அமைக்கப்பட்ட இந்த அரசாங்கத்தைப் புரட்சி அரசாங்க மென்று சொல்வர். ஏனென்றால், புரட்சியின் நோக்கம் நிறைவேறு வதற்காக இந்த அரசாங்கம் பாடுபட்டு வந்தது. சுருக்க மாக பீகிங் அரசாங்கம் பிற்போக்குச் சக்திகளின் பிரதிநிதியாகவும், இந்தக் காண்டன் அரசாங்கம் முற்போக்குச் சக்திகளின் பிரதிநிதி யாகவும் ஒரே சமயத்தில் இரண்டு அரசாங்கங்களாக இயங்கிக் கொண்டு வந்தன. 1917-ஆம் வருஷம் ஆகட்மாதம் சீனாவின் பெயரால் பீகிங் அரசாங்கம், ஐரோப்பிய யுத்தத்தில் பிரவேசித்தது. அதே சீனாவின் பெயரால் காண்டன் அரசாங்கம் இதை ஆட்சேபித்தது. இந்தப் பிந்திய அரசாங்கம் புறக்கணிக்கமுடியாத ஒரு சக்தியாக வளர்ந்துவந்தது. இதற்கு அத்தாட்சி என்னவென்றால், ஐரோப்பிய யுத்தத்தின் முடிவுக்குப் பிறகு கூடிய சமாதான மகாநாட்டிற்கு இந்த காண்டன் அரசாங்கத்திலிருந்தும் பிரதிநிதிகள் சென்றதுதான்.
ஸன் யாட் ஸென் மேற்படி புரட்சி அரசாங்கத்தை அவ்வப் பொழுது புனர் நிர்மாணஞ் செய்தும் கட்டுப்பாட்டுக்குட்படுத்தியும் வந்ததோடு கோமிண்டாங் கட்சியையும் கூடவே வலுப்படுத்திக் கொண்டுவந்தான்.
பாரி சமாதான மகாநாட்டில் சீனா ஏமாற்றமடைந்தது. இது சீன இளைஞர்களின் மத்தியில் ஒரு பெரிய கிளர்ச்சியை உண்டு பண்ணியது. 1919-ஆம் வருஷம் மே மாதம் முதல் வாரத்தில் தொடங்கிய இந்த இளைஞர் கிளர்ச்சியானது2 வார்சேல் சமாதான ஒப்பந்தத்தில் சீனப் பிரதிநிதிகளைப் கையெழுத்திட வொட்டாமல் செய்தது. இவைகளுக் கெல்லாம் மூல காரணமாயிருந்தது கோமிண் டாங் கட்சி. இந்தக் கட்சி, பெயரளவுக்கு இளைஞர் கட்சியாக இருந்த போதிலும் இதுகாறும் இதில் முதியவர்களே அங்கத்தினர் களாயிருந்துவந்தார்கள். மேற்படி கிளர்ச்சிக்குப் பிறகு இளைஞர்கள் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளப் பட்டார்கள். இவர் கள் மூலமாக தேசத்தில் ஒரு புதுமலர்ச்சி இயக்கம் ஏற்பட்டது.
அப்பொழுது ருஷ்யாவின் செல்வாக்கு, சீன இளைஞர் சமுதாயத்தின்மீது வெகு வேகமாகப் படிந்துவந்தது. ஏட்டளவிலே இருந்த கார்ல் மார்க்ஸின் சமதர்ம சித்தாந்தம், லெனினுடைய தலைமையின்கீழ் அங்கே நடைமுறையில் கொணரப் பெற்று வெற்றிகரமாக இயங்கிக் கொண்டு வருவதைப் பார்த்து உலகமே பிரமித்துப்போய் நின்ற காலம் அது. ஸன் யாட் ஸென்னைப் பொறுத்தமட்டில், சீன சமுதாயத்திற்குச் சமதர்ம சித்தாந்தம் ஏற்றதல்ல வென்ற கொள்கைதான் இருந்துவந்தது. ஆனாலும் அந்தச் சமதர்ம இயக்கமானது, ஜார் ஆட்சிக்குப் பிறகு ருஷ்ய சமுதாயத்தில் உண்டுபண்ணியிருக்கிற மாறுதல்களையும் அடைந் திருக்கும் வெற்றிகளையும் பார்த்து அதை அதிசயித்துப் பாராட் டினான். 1918-ஆம் வருஷக்கடைசியில், ருஷ்யப் புரட்சி வெற்றி கரமான முடிவுக்கு வந்தவுடனேயே லெனினைப் பாராட்டி ஸன் ஒரு தந்தி கொடுத்தான். இங்ஙனம் பாராட்டியவன் ஸன் ஒருவன் மட்டுமாக இருக்கவில்லை. புதுமலர்ச்சி இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர் பலரும் ருஷ்யாவின் மீது கவனஞ் செலுத்தினார்கள். அநேகர் ருஷ்யாவுக்கு நேரே சென்று அங்குப் பொதுவுடைமை இயக்கம் எப்படி வேலை செய்துகொண்டு வருகிற தென்பதைத் தெரிந்துகொண்டு சீனாவுக்குத் திரும்பி வந்தார்கள். இதன் பயனாக அநேக பொதுவுடைமை ஆராய்ச்சிக் கழகங்கள் தோன்றின. 1920-ஆம் வருஷம் சீனப் பொதுவுடைமைக் கட்சியொன்று நிறுவப் பட்டது. அப்பொழுது இதில் ஐந்நூறு அல்லது அறுநூறு அங்கத் தினர்களுக்குமேல் இல்லை.
ருஷ்யாவில் சோவியத் அரசாங்கம் ஏற்பட்டுச் சிறிது நிலை பெற்றதும் (1919-20-ஆம் வருஷம்) அது, தனக்கு இனி நாடு பிடிக்கிற ஆசை யில்லையென்றும், சீனாவில் இதுகாறும் ருஷ்ய ஆதிக்கத் துக்குட் பட்டிருந்த பிரதேசங்களை யெல்லாம் சீனாவுக்கே திருப்பிக் கொடுத்து விடுவதாகவும், விசேஷப் பிரதேச உரிமைகள், ஒப்பந்தத் துறைமுக உரிமைகள் முதலியவற்றையெல்லாம் துறந்து விடு வதாகவும், சமத்துவ முறையில் இருநாடுகளுக்கும் வியாபாரத் தொடர்பு இருக்கவேண்டு மென்று கோருவதாகவும் சீனாவுக்குத் தெரிவித்தது. சீனா விஷயமாக பாரி சமாதான மகாநாட்டில் மேற்கு ஐரோப்பிய வல்லரசுகள் நடந்து கொண்டதற்கும் இப்பொழுது சோவியத் ருஷ்யா நடந்து கொள்வதற்கும் உள்ள வித் தியாசத்தைச் சீனப் பொதுமக்கள் நன்கு தெரிந்து கொண்டார்கள். பீகிங் அரசாங்கத்திற்கும், சோவியத் ருஷ்யாவுக்கும் சமரஸம் ஏற்படாதபடி இடையிலே வல்லரசுகள் சில சூழ்ச்சிகளைச் செய்தன. அவற்றின் விவரம் இங்குத் தேவையில்லை. பொதுவாக சோவியத் ருஷ்யாவின் கொள்கைகளுக்குச் சீன இளைஞர்கள் அதிகமான ஆதரவு காட்டத் தொடங்கினார்கள். இளைஞர்களின் ஆவல் களுக்கும் அபிலாஷைகளுக்கும் பிரதிநிதிபோலிருக்கிற காண்டன் அரசாங்கத் திற்கும் ருஷ்ய சோவியத் அரசாங்கத்திற்கும் வரவர நட்பு வளர்ந்தது. இந்த நட்பை வலியுறுத்தி 1923-ஆம் வருஷம் இரண்டு அரசாங்கங்களும் சேர்ந்து ஓர் அறிக்கை வெளியிட்டன. போரோடின்,1 காலென்2 என்ற இரண்டு ருஷ்ய அறிஞர்கள் காண்டன் அரசாங்கத்திற்கு ஆலோசகர்களாக வந்து சேர்ந்தார்கள். முன்னவன் பிரசார நிபுணன்; சீனர்களின் அரசியல் அறிவை எப்படி அபிவிருத்தி செய்ய வேண்டுமென்பதைப் பற்றி ஸன் யாட் ஸென்னுக்குச் சில திட்டங்கள் வகுத்துக்கொடுத்தான். பின்னவன் ராணுவ நிபுணன். இவனுடைய ஏற்பாட்டின் பேரில் ஹுவாங்பூ3 என்ற இடத்தில் ஒரு ராணுவக்கழகம் தாபிக்கப்பட்டது. சியாங் கை ஷேக்கை, இந்தக் கழகத்தின் பிரதம அதிகாரியாக நியமித்தான் ஸன் யாட் ஸென். தனக்குப் பின்னால் சீனாவின் தலையெழுத்தை எழுத வேண்டியவன் இவனே என்பதை அப்பொழுதே ஸன் நன்றாகத் தெரிந்து கொண்டிருந்தான். நவீன முறைகளில் பயிற்சி பெற்ற ஒரு ராணுவம் இந்தக் கழகத்தில் தயார் செய்யப்பட்டது.
இதே பிரகாரம், சீன மக்களுக்கு அரசியல் அறிவையும் பொது அறிவையும் ஊட்டுவதற்குத் தகுதியுடைய பிரசாரகர்களைத் தயாரிப் பதற்கென்று ஒரு கழகத்தை போரோடின் ஏற்பாடு செய்தான். இதன் விளைவுதான் குவாங்டுங் தேசீய சர்வகலாசாலை. மற்றும், இந்த போரோடின்னுடைய தூண்டுதலின்பேரில், ஸன் யாட் ஸென், தனது புரட்சிக் கொள்கைகளை ஒழுங்கு படுத்திப் பிரசங்கங்கள் வாயிலாக வெளியிட்டான். இவையே பின்னர் ஸான் மின் ஜுயி என்ற பிரசித்தி யான பெயரால் நூல் வடிவாகப் பரிணமித்தன. ஸன், ஏற்கனவே இந்தக் கொள்கைகளை ஒரு திட்டமாக வகுத்து வைத்திருந்தானாயினும், இவை ஒரு சிலருக்கே தெரிந்திருந்தன. இவை, அனைவருக்கும் நன்றாகத் தெரிய வேண்டு மென்பதற்காகவே போரோடின் இந்த ஏற்பாடு செய்தான்.
ஸான் மின் ஜுயி என்பது, சீன அரசியல் வாதிகளுக்கு ஒரு வேத புத்தகம். சீனப் பள்ளிக் கூடங்களிலே படிக்கிற ஒவ்வொரு மாணாக் கனும் இதன் முக்கிய அமிசங்களை மனப்பாடமாக ஒப்புவிப்பான். ஸான் மின் ஜுயி என்றால் ஜனங்களுடைய மூன்று கொள்கைகள் என்று அர்த்தம் கூறலாம். 1. தேசீயம் 2. ஜனநாயகம் 3. வாழ்க்கைத் தத்துவம் என்பவை தான் இந்த மூன்று கொள்கைகள்.
முதலாவது தேசீயம். இதன்படி சீனர்கள், தங்கள் குடும்பத் தினிடமும் மூதாதையர்களிடமும் பரம்பரையான பக்தியுடையவர் களல்லவா? இந்தப் பக்தியை தேச பக்தியாக மாற்றிக்கொள்ள வேண்டும்; சீனாவிலுள்ள பல்வகைச் சமூகத்தினரும் ஒன்றுபட்டு, அரசியல், பொருளாதார, சமுதாய விஷயங்களில் ஒரே மாதிரியான உரிமைகளை அனுபவிக்கவேண்டும்; இப்படி அனுபவிப்பதற்கு முடியாமல் தடையா யிருக்கிற அந்நிய ஆதிக்க சக்திகளை அப்புறப் படுத்தி, உலக வல்லரசுகளின் மத்தியில் சீனா, சமதையான தானத்தைப் பெற வேண்டும்.
இரண்டாவது ஜனநாயகம். இதன்கீழ், ஜனாதிக்க சக்தியின் மகத்துவம் விளக்கப்படுகிறது; ஜனங்களுக்காக ஜனங்களுடைய ஆட்சி நடைபெற வேண்டுமென்பதே சீனாவின் லட்சியம் என்பது வலியுறுத்தப் படுகிறது.
மூன்றாவது வாழ்க்கைத் தத்துவம். சமுதாயத்தின் கீழ்ப்படியி லேயுள்ள விவசாயிகள், தொழிலாளர்கள் முதலியவர்களை மேல் படியிலுள்ளவர்கள் சுரண்டாமலிருக்க, தக்க பாதுகாப்புச் சட்டங் களை இயற்றல், அவர்களுடைய வாழ்க்கையில் தேவையென்பதை உணரா மலிருக்கும்படி செய்தல்; அவர்களுக்கு இலவசமான கல்வி வசதி, வைத்திய வசதி முதலியன ஏற்பாடு செய்தல்; சுருக்கமாக, சமுதாயத்திலேயுள்ள எல்லோருக்கும் எல்லா வகையிலும் ஒரே மாதிரியான நீதி கிடைக்குமாறு செய்தல் முதலிய பலவும் இதன் கீழ் சொல்லப்படுகின்றன.
இந்த மூன்று கொள்கைகளும் நடைமுறையில் வர வேண்டு மானால், அதாவது புதிய சீனா நிர்மாணமாக வேண்டுமானால், மூன்று விதமான படிகளைக் கடக்க வேண்டியது அவசியமென்பதை இதே சமயத்தில் ஸன் யாட் ஸென் வலியுறுத்தினான். முதல் படி என்ன வென்றால், புதிதாகத் தயாரிக்கப்படுகிற ராணுவத்தின் துணை கொண்டு, தேசத்தின் ஒற்றுமைக்கு விரோதமான சக்திகளை யெல்லாம் அழிக்க வேண்டும் என்பது. இரண்டாவது படி, பயிற்சி பெற்ற பிரசாரகர்களைக் கொண்டு, கோமிண்டாங் கட்சியின் லட்சியத்தை ஜனங்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களுக்கு அரசியல் அறிவைப் புகட்ட வேண்டுமென்பது. இந்த இரண்டு படிகளின் காலத்திலும் ஜனங்களுக்காக அரசாங்கம் நடை பெற்றுக் கொண் டிருக்கும். மூன்றாவது படியின் கீழ், ஜனங்கள் பூரண அரசியல் அறிவு பெற்றவர்களாகவும், தங்களுடைய விவகாரங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ளுகிற சக்தியுடையவர்களாகவும் ஆகிவிடு கிறார்கள். அப்பொழுது ஜனங்களுடைய அரசாங்கம் நடைபெறு வதற்குச் சாத்தியமாகிறது. ஜனங்களுக்காக ஜனங்களுடைய ஆட்சி நடைபெறுவது தானே குடியரசு என்பது.
இங்ஙனம் படிகளை வகுத்ததோடு ஸன் யாட் ஸென் நிற்க வில்லை. முதலாவதாக, புரட்சி சக்திகளையெல்லாம் மறுபடியும் ஒன்று திரட்டினான். இந்தக் காலத்தில் பொதுவுடைமை வாதிகள் பலரும் கோமிண்டாங் கட்சியில் அங்கத்தினர்களாகச் சேர்த்துக் கொள்ளப் பட்டார்கள். கட்சியின் கோட்பாடுகள், விதிகள் முதலியன ராணுவ தோரணையில் திருத்தியமைக்கப்பட்டன. ஸன் யாட் ஸென், சர்வாதிகார முடைய தலைவனாக நியமிக்கப்பட்டான். இதனை அனுசரித்து காண்டன் தேசீய அரசாங்கமும் ராணுவ ஒழுங்குக்குட் படுத்தப் பெற்றது. ஒழுங்கு படுத்தப்பெற்ற இந்த அரசாங்கத்திற்கு ஸன் யாட் ஸென்னே மறுபடியும் பிரசிடெண்டாகத் தெரிந் தெடுக்கப்பெற்றான். இந்த அரசாங்கத்தில் சில பொதுவுடைமை வாதிகளுக்கும் இடம் கொடுக்கப்பட்டது. இவைகளுக் கெல்லாம் காரணம், போரோடின்னுடைய செல்வாக்குக்கு ஸன் ஆட்பட்டி ருந்ததுதான் என்று சிலர் கூறுகின்றனர். இஃது எப்படி யிருந்த போதிலும் பொதுவுடைமைச் சாயல் படிந்த இந்தப் புதிய தேசீய அரசாங்கத்தை, காண்டனிலுள்ள முதலாளிகள் எதிர்த்து நின்றார் கள். இதன் மூலமாக ஒரு குழப்பம் எற்படும்போலிருந்தது. அப் பொழுது ஸன் உடல் நோயினால் வேறே அவதைப்பட்டுக் கொண்டி ருந்தான். இருந்தாலும் அதனை லட்சியஞ் செய்யாமல், குழப்பம் ஏற்படாதபடி தடுத்தான். கூடவே வட மாகாணங்களில் அட்டூழியம் செய்துவருகிற ராணுவ தளகர்த்தர்கள் மீது படை யெடுப்பதற்கும், பீகிங் நகரத்தில் அரசாங்கமென்று சொல்லிக் கொண்டு வருகிற பலவீனமான தாபனத்தை அப்புறப்படுத்திவிட்டு, அதன் தானத்தில் சர்வ சீனாவுக்கும் பொதுவான ஒரு மத்திய அரசாங் கத்தை தாபிப்பதற்கும் வேண்டிய பலமான ஏற்பாடுகளைச் செய்துவந்தான். 1924-ஆம் வருஷத்தில் நடைபெற்ற சம்பவங்கள் இவை.
இந்தச் சமயத்தில், வடக்கில் பரபரம் சண்டை போட்டுக் கொண்டு வந்த ராணுவத் தலைவர்கள் சிலர், பீகிங் நகரத்தில், என்றும்போல் சாசுவதமான ஓர் அரசாங்கத்தை தாபிக்க வேண்டுமென்று ஆவல் காட்டினார்கள்; இது விஷயமாகக் கலந்தாலோசிப்பதற்கு ஸன்னை பீகிங் நகரத்திற்கு வருமாறு அழைத்தார்கள். எப்படியாவது தேசத்தில் ஒற்றுமை நிலவி, ஒரே அரசாங்கம் ஏற்படவேண்டுமென்று ஆவல் கொண்டிருந்த ஸன், இந்த அழைப்பிற்கிணங்கி காண்டனிலிருந்து ஜப்பான் வழியாக பீகிங்குக்குச் சென்றான். ஆனால் சீன மக்களின் துரதிருஷ்டவசமாக அங்குச் சென்று பேச்சு வார்த்தைகள் தொடங்குவதற்கு முன்பு, 1925-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் பன்னிரண்டாந் தேதி மரணத்தைத் தழுவிக் கொண்டுவிட்டான். சீனா முழுவதும் துக்கக் கண்ணீர் வடித்தது.
ஸன் யாட் ஸன் சிறந்த ராஜதந்திரியல்ல; ஆனால் உயர்ந்த மனிதன். இவன் செய்த புரட்சிகள், ராஜதந்திரமின்மையால் தோல்வியடைந்தன; ஆனால் இவனிடத்தில் நிறைந்திருந்த மனிதத் தன்மையானது, தோல்வி களில் சோர்வைக் கொடாமல் மேன் மேலும் இவனுக்கு ஊக்கத்தை அளித்துவந்தது. இவன் சீனாவின் எதிர்காலத்தில் தன் மனத்தை ஈடுபடுத்திக்கொண்டுவிட்டான். இதனால் நிகழ்கால சீனாவின் மீது இவன் பார்வை செல்லவில்லை. இவன் கடைசி மூச்சு இருக்கிறவரை ஒற்றுமைக்காகப் பாடு பட்டான். ஆனால் இவன் காலத்தில், இவனுக்குப் பிறகுகூட, வேற்றுமைச் சக்திகள்தான் தலையோங்கி நின்றன. இவனுடைய சமகாலத்தவர் இவனுடைய நிஜப் பெருமையை அறியவில்லை; ஆனால் இவன் இறந்த பிறகு சீன மக்கள் இவனை ஒரு தெய்வமாகக் கொண்டாடுகிறார்கள்; இவன் காட்டிய வழியைப் பின்பற்றி நடக்கிறார்கள்.
யுவான் ஷி காயின் மரணத்திலிருந்து ஸன் யாட் ஸென் மரணம் வரை சுமார் பத்து வருஷ காலம் சீனாவின் அரசியல் வாழ்வில் அநேக கறைகள் படிந்துவிட்டபோதிலும், அவன் எதிர்கால வாழ்க்கையில் ஜனங் களுக்கு ஒரு வித நம்பிக்கை ஏற்பட்டு வந்தது. புதிய எண்ணங்கள், புதிய சக்திகள் முதலியன சீனாவுக்குள் பிரவேசித்தன. தொழில், கலை, இலக்கியம் முதலிய எல்லாத் துறை களிலும் அநேக மாற்றங்கள் உண்டாயின. ஜனங்களுக்குப் புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவல் அதிகரித்தது. சிறப்பாக இளைஞர்கள் தேச விவகாரங்களில் அதிக பங்கெடுத்துக் கொண்டார்கள். இவ்வளவுக்கும் முக்கிய தூண்டு தலாயிருந்தது 1914 - ஆம் வருஷத்து ஐரோப்பிய மகாயுத்தம். இந்த யுத்தத்தில் சீனா தலையிட்டது, நம்பிக்கை வைத்தது, கடைசியில் ஏமாற்றமடைந்தது முதலியவற்றை அடுத்த அத்தியாயத்தில் கவனிப்போம்.
ஐரோப்பியப்போரும் இளைஞர் இயக்கமும்
சீனக்குடியரசு ஏற்பட்ட முதல் பத்து வருஷகாலம், முந்திய அத்தியாயத்தில் சொன்னபடி மிகச்சங்கடமான காலம். இந்தக் காலத்தில் தான் ஐரோப்பிய மகாயுத்தம் தொடங்கி, நடைபெற்று, முடிந்துவிட்டது. இந்த யுத்தத்திற்கும் சீனாவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. ஆனால் இதில் சீனா இழுத்துவிடப் பெற்றது. சீனா இந்த யுத்தத்தில் கலந்து கொள்ளக்கூடாதென்று ஆரம்பத்தில் ஜப்பான் ஆட்சேபித்தது. ஆனால் அதுவே, பின்னாடி, சீனாவை, யுத்தத் தீயிலே தள்ளுவதற்குத் துணை செய்தது. இந்தக் காலத்திலும், இதற்குப் பின்னர் வார்சேல் சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப் பெற்ற போதும், ஐரோப்பிய வல்லரசுகளும் ஜப்பானும் சீனா விஷயத்தில் நடந்துகொண்டமாதிரி இருக்கிறதே அது மகா கேவலம். வேறெந்த பாஷையில் இதைச் சொல்வது? நாகரிகம், ஜனநாயகம், உலக சமாதானம், சுய நிர்ணய உரிமை முதலிய புனிதமான சப்தங்களை உச்சரித்துக்கொண்டு இவை செய்த சூழ்ச்சிகள், மீறின வாக்குகள், நிறைவேற்றிய ரகசிய ஒப்பந்தங்கள் முதலியன அம்மம்ம! இழிவு இழிவு எந்தஞான்றும்!
1914 - ஆம் வருஷம் ஆகடு மாதம் முதல்வாரம் ஐரோப்பிய மகாயுத்தம் மூண்டது. மூன்றாவது வாரம் ஜப்பான், ஜெர்மனியின் மீது தான் யுத்தந் தொடுத்திருப்பதாக அறிக்கை வெளியிட்டுவிட்டு, சீனாவில் ஜெர்மனிக்குக் குத்தகையாக விடப்பட்டிருந்த கியாசௌ பிரதேசத்தின் மீது படையெடுத்து ஸிங்டோ துறைமுகத்தைக் கைப்பற்றிக் கொண்டது.1 தலையிலேயடித்தால், காலிலே கட்டை விரல் நகம் பெயர்ந்த கதையாக இருக்கிறதே இது என்று நேயர்கள் கேட்கலாம். ஆம், அப்படித்தான் இருக்கிறது. ஆனால் ஏகாதிபத்திய வெறியானது, சந்தர்ப்பத்திற்காகக் காத்துக் கொண்டிருப்பது மட்டுமில்லை, சந்தர்ப்பத்தைத் தேடிக் கொண்டும் செல்கிறது என்ற உண்மையை நாம் உணர்ந்து கொண்டு விட்டால், ஜப்பானுடைய இந்தச் செயல் நமக்கு ஆச்சரியமாகவே தோன்றாது. இதைச் சிறிது விதரித்துச்சொல்ல ஆசைப்படுகிறோம்.
1911 - ஆம் வருஷம் புதுப்பிக்கப்பட்ட ஆங்கிலோ - ஜப்பானிய ஒப்பந்தப்படி உபய கட்சியினருள் யாராவது ஒருவருடைய ராஜ்ய உரிமைகள் எதிர்பாராத விதமாகத் தாக்கப்பட்டு, அந்த உரிமை களைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டுச் சண்டையில் இறங்கும்படி நேரிட்டால், அப்பொழுது பரபரம் இரு சாராரும் உதவி செய்து கொள்ள வேண்டும்; பரபர சம்மதத்தின் பேரிலேயே இருவரும் சேர்ந்து எதிரியுடன் சமாதானம் செய்துகொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தத்தை ஜப்பான், 1914 - ஆம் வருஷ யுத்தத்தின் போது தனக்கு அனுகூலமாக உபயோகித்துக் கொண்டது. ஜெர்மனி யினால் தாக்கப்பட்டுவிட்ட பிரிட்டனுக்குத் தான் உதவி செய்ய முன்வந்திருப்பதாகச் சொல்லிக்கொண்டது. ஆனால் பிரிட்டன் இதை அவ்வளவாக விரும்பவில்லை. ஜப்பானுடைய உதவி தனக்கு இந்தச் சமயத்தில் தேவையில்லை என்று சொல்லவும் பிரிட்டனுக்கு தைரியம் வரவில்லை. ஆகட் மாதம் நான்காந்தேதி பிரிட்டன், ஜெர்மனியின் மீது யுத்தந் தொடுத்திருப்பதாகப் பிரகடனஞ் செய்ததல்லவா? எட்டாந்தேதி, ஜப்பானிய யுத்தக்கப்பல்கள் ஸிங்டோ துறைமுகத்தில் வந்து நின்றுகொண்டன. பத்தாந்தேதி, தன்னுடைய உதவியைக்கோரும்படி ஜப்பான், பிரிட்டனுக்கு யோசனை கூறியது. தன்னுடைய உதவியை எதிர்பார்க்க, மேற்படி 1911 - ஆம் வருஷ ஒப்பந்தப்படி பிரிட்டன் கடமைப் பட்டிருக்கிற தென்கிற மாதிரியாகவே இந்த யோசனையின் வாசகம் இருந்தது. ஆனால் வலிந்து வருகிற இந்த உதவியினால் உண்டாகக்கூடிய பலாபலன்களை பிரிட்டன் நன்றாகத் தெரிந்துகொண்டிருந்தது. சீனாவிலிருந்த பிரிட்டிஷாரும் ஜப்பானுடைய இந்த உதவியை விரும்பவில்லை. எனவே, பிரிட்டன், ஜப்பானின் யோசனைக்கு ஒன்றும் பதில் சொல்லாமல் சும்மாயிருந்துவிட்டது. ஆனால் ஜப்பான் இதற்காகச் சும்மாயிருக்கவில்லை. தன்னுடைய சொந்தப் பொறுப்பில் (1914) ஆகட் மாதம் பதினைந்தாந்தேதி, ஜெர்மனிக்கு ஒரு தாக்கீடு விடுத்தது. அதில், ஜெர்மனி, ஷாண்டுங் மாகாணத்தில் குத்தகையாகப் பெற்ற உரிமைகளையெல்லாம் தன்னிடத்தில், செப்டம்பர் மாதம் பதினைந்தாந்தேதிக்குள் ஒப்படைத்துவிட வேண்டுமென்றும், சீனாவின் பிரதேசங்களைச் சீனாவிடம் திருப்பிக் கொடுத்துவிட வேண்டு மென்பதற்காகவே தான் இப்படி கேட்பதாகவும், ஒரு வாரத்திற்குள் இந்தத் தாக்கீதுக்குப் பதில் சொல்ல வேண்டுமென்றும் கண்டித்திருந்தது. ஒரு வாரம் வரையில் ஜெர்மனியிடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்க வில்லை. ஆகவே இருபத்து மூன்றாந்தேதி, ஜெர்மனியின் மீது தான் யுத்தந் தொடுத் திருப்பதாக ஜப்பான் பிரகடனஞ்செய்தது. ஜப்பான் இப்படிப் போரில் இறங்கியது புதிய நாடுகளை ஆக்ரமித்துக் கொள்ள வேண்டு மென்ற ஆசையினாலல்லவென்றும், கீழ் நாட்டில் அமைதியை நிலை நாட்டுவதற்காக வேயென்றும், அப்பொழுது ஜப்பானின் அந்நியநாட்டு மந்திரியாயிருந்த கௌண்ட் ஒக் கூமா உலகத்திற்குப் பகிரங்கப் படுத்தினான்.
இதற்குப்பிறகு ஜப்பானியப்படைகள், கியாசௌ பிரதேசத்தை ஆக்ரமித்துக்கொண்டன. இப்படி ஆக்ரமித்துக் கொள்கிறபோது, சீன ஆதிக்கத்திற்குட்பட்ட பிரதேசங்களைக்கடந்து செல்லவேண் டியிருந்தது. சீனாவோ, இந்த ஐரோப்பிய யுத்தத்தில் அப்பொழுது கலக்கவேயில்லை. யுத்தம் ஆரம்பித்தவுடனேயே, தான் நடுநிலைமை வகிப்பதாகத் தெரிவித்துக்கொண்டுவிட்டது. எனவே தன்னுடைய அதிகார எல்லைக்குள் ஜப்பானியப்படைகள் யுத்த சன்னாகத்துடன் பிரவேசிப்பது, அத்துமீறிய செயலாகுமென்று ஆட்சேபித்தது. ஆனால் ஜப்பான் இதை லட்சியம் செய்யவேயில்லை. வேறு வழி யின்றி சீனா யுத்த தலம் என்று ஒரு பிரதேசத்தை வரையறுத்து அதற்குள்ளேயே ஜப்பான் தன்னுடைய காரியங்களைச் செய்து கொள்ள வேண்டுமென்று ஏற்பாடு செய்தது. சீனா, தன்னுடைய திருப்திக்காகத்தானே செய்து கொண்ட ஏற்பாடு தான் இது.
ஜப்பானியர்கள், ஷாண்டுங் மாகாணத்தில் ஜெர்மானியர் களால் நடத்தப்பட்டுவந்த ரெயில்வேக்களென்ன, சுரங்கங்களென்ன, வியாபாரங் களென்ன முதலிய அனைத்தையும் தங்கள் சுவாதீனப் படுத்திக் கொண்டார்கள்; ஸிங்டோ துறைமுகத்தைக் கைப்பற்றிக் கொண்டு, அங்கே ஒரு ஜப்பானிய கவர்னர் - ஜெனரலை நியமித்தார் கள்; தங்களுடைய நலன்களையும் உரிமைகளையும் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு நிரந்தரமான ஒரு ராணுவத்தையும் வைத்துக் கொண்டு விட்டார்கள். சுருக்கமாக, ஷாண்டுங் மாகாணத்தில் ஜெர்மானியர் அனுபவித்து வந்த உரிமைகள் யாவும் ஜப்பானியரிடம் போய்ச்சேர்ந்தன.
இந்த ஆக்ரமிப்புக்குப் பிறகு, ஜப்பானிய பார்லிமெண்டில் கேள்வி பிறந்தது, சொன்ன வாக்குப்படி ஏன் கியாசௌ பிரதேசம் சீனாவிடம் திருப்பி ஒப்படைக்கப்பட வில்லையென்று? இதற்கு அந்நிய நாட்டு மந்திரி கூறிய சமாதானம் என்ன தெரியுமா? ஜப்பான், கியாசௌ பிரதேசத்தைச் சீனாவிடம் திருப்பிக் கொடுப்பதாகச் சொன்ன வாக்கு இனி செல்லுபடியாகாதென்றும், ஏனென்றால் ஜெர்மனி, தான் எதிர்பார்த்தபடி சமாதான முறையில் மேற்படி பிரதேசத்தைத் தன்னிடம் கொடுக்க வில்லையென்றும், அப்படிக் கொடாததினால், அதிக பணத்தையும் ஆட்களையும் செலவிட்டே, தான் ஆக்ரமித்துக் கொள்ளவேண்டி யிருந்ததென்றும், இதனால் புதிய நிலைமை ஏற்பட்டுவிட்டபடியால் பழைய வாக்கு செல்லா தென்றும் வாய் கூசாமல் சமாதானம் கூறப்பட்டது.
ஷாண்டுங் மாகாணத்தில் ஜெர்மானியர்களுக்கு எவ்வித செல்வாக்கும் இல்லாதபடி செய்துவிட்டு, ஜப்பானே பூரணப் பொறுப்பையும் வகித்துக் கொண்டு விட்டபடியால், தான், முன்னர் யுத்ததலமாக வகுத்த எல்லையை இப்பொழுது ரத்து செய்து விட்டதாகவும், கியாசௌ பிரதேசம் தவிர, ஷாண்டுங் மாகாணத்தின் மற்றப் பிரதேசங்கள் யாவும் முன்போல் தனது நடுநிலைமைக் கொள்கைக்கு உட்பட்டதாகக் கருதப்படுமென்றும் சீன அரசாங்கம், 1915-ஆம் வருஷம் ஜனவரி மாதம் ஏழாந்தேதி ஜப்பானிய அரசாங் கத்துக்குத் தெரிவித்தது. அப்பொழுது சீனக் குடியரசு அரசாங்கத்தின் தலைவனாயிருந்தவன் யுவான் ஷி காய் என்பதை வாசகர்களுக்கு ஞாபகப்படுத்தி விட்டு மேலே செல்கிறோம்.
சீனா, இப்படித்தெரிவித்தது ஜப்பானுக்கு அதிகக் கோபத்தை உண்டுபண்ணிவிட்டது; தனக்கு விரோதமாக எடுத்துக் கொண்ட நடவடிக்கையாகவே இதனைக் கருதியது! அடுத்த வாரமே - அதாவதுஜனவரிமாதம் பதினைந்தாந்தேதி - இருபத்தோரு கோரிக்கைகள் அடங்கிய ஒரு தாக்கீதை சீனாவுக்கு விடுத்தது. ஜப்பானின் பேராசைக்கு எடுத்துக் காட்டாயுள்ளது இந்தத் தாக்கீது; ஏகாதிபத்திய விதரிப்புச் சரித்திரத்தில் கறை நிறைந்த தாக்கீது இது.
இந்தத் தாக்கீதை இந்தச் சந்தர்ப்பம் பார்த்து ஜப்பான் விடுத்ததற்கு இரண்டு காரணங்களுண்டு. ஒன்று, சீனாவில், குடியரசு, குழந்தைப் பருவத்திலேயேயிருக்கிறது; அதனைக் கொன்று விடுவதற்கு முயற்சிகள் வேறே அங்கு நடைபெறுகின்றன. உள்நாட்டுக் கலகங் களினாலும் போட்டா போட்டிகளினாலும் பலவீனப்பட்டுக் கிடக்கிற சீனாவை இந்தச் சந்தர்ப்பத்திலே உருட்டி மிரட்டினால் தான், அதனைத் தனது சுரண்டும் பிரதேசமாக உபயோகித்துக் கொள்ளலாம் என்பது. மற்றொன்று, சீனாவில் பலவித உரிமை களையும் சலுகைகளையும் பெற்று அதனைச் சுரண்டி வந்த ஐரோப்பிய வல்லரசுகள் இப்பொழுது கோரமான போரிலே ஈடுபட்டி ருக்கின்றன; அவற்றின் கவனமெல்லாம் சீனாவினின்று திரும்பியிருக் கிறது; இந்தச் சமயத்தில் சீனாவைத் தனக்கிஷ்டமானபடி ஆட்டுவித்து ஆட்படுத்திக் கொள்ள வேண்டுமென்பது.
இந்த இருபத்தோரு கோரிக்கைகளின் சாரந்தான் என்ன?
1. யுத்தத்திற்குமுன் ஷாண்டுங் மாகாணத்தில் ஜெர்மனி அனுபவித்து வந்த உரிமைகளைப் பற்றி இனி - அதாவது யுத்தம் முடிந்த பிறகு - ஜெர்மனியும் ஜப்பானும் எந்தவிதமான ஒப்பந்தத் திற்கு வந்தாலும் அதை அப்படியே அங்கீகரிப்பதாகவும், ஷாண்டுங் மாகாணத்தைச் சேர்ந்த எந்தத் துறைமுகப் பிரதேசத்தையும் வேறு வல்லரசுகளுக்குப் பராதீனப் படுத்துவதில்லை யென்றும், ரெயில்வே சம்பந்தமாகவும் வியாபார சம்பந்தமாகவும் ஜப்பானுக்குச் சில விசேஷ உரிமைகளை அளிப்பதாகவும் சீனா, முன்கூட்டியே வாக்குறுதி கொடுக்க வேண்டும்.
2. தெற்கு மஞ்சுரியாவிலும் கிழக்கு மங்கோலியாவிலும் ஏற்கனவே ஜப்பான் அனுபவித்துவந்த உரிமைகளை இன்னும் விசாலித்துக் கொடுக்கவேண்டும். அதாவது இன்னும் அதிகமான துறைமுகங்களை ஜப்பானுடைய வியாபாரத்திற்குத் திறந்து விட வேண்டும்; புதிய ரெயில்கள் போட்டுக் கொள்ள உரிமை கொடுக்க வேண்டும். தெற்கு மஞ்சூரியாவில் ஜப்பானியப் பிரஜைகள் நிரந்தர மாக வசிக்கவும் வியாபாரஞ் செய்யவும் சுரங்கங்கள் தோண்டவும் உரிமைபெற வேண்டும். மேற்படி மஞ்சூரியா, மங்கோலியா பிர தேசங்களில் ஜப்பானைக் கலக்காமல் சீனா எந்த விதமான அரசியல், பொருளாதார, ராணுவ ஆலோசகர்களையும் நியமிக்கக் கூடாது. வேறு மூன்றாவது வல்லரசுப் பிரஜைகள் யாருக்கும் இந்தப் பிர தேசங்களில் ரெயில் போடுதல் முதலிய உரிமைகளைக் கொடுக்கக் கூடாது.
3. மத்திய சீனாவிலுள்ள முக்கியமான இரண்டு இரும்புக் கம்பெனிகளில் சீனாவுக்கும், ஜப்பானுக்கும் உள்ள உரிமைகள் இன்னின்னவையென்று நிர்ணயிக்கப் படவேண்டும்.
4. சீனா, தனது ராஜ்யக் கட்டு குலையாமலிருக்க, வேறு எந்த ஒரு வல்லரசுக்கும், துறைமுகத்தை அல்லது தீவை அல்லது வேறு எதனையும் குத்தகையாகவோ வேறு விதமாகவோ கொடுக்கக் கூடாது.
5. சீனா, தனது ராஜ்ய நிருவாக விஷயத்தில் ஜப்பானிய நிபுணர்களை ஆலோசகர்களாக நியமித்துக்கொள்ள வேண்டு மென்றும், முக்கியமான சில இடங்களில் போலீ நிருவாகத்தை சீனர்களும் ஜப்பானியர்களும் சேர்ந்து நடத்தவேண்டுமென்றும், யுத்த தளவாடங்கள் வாங்குகிற விஷயத்திலும், புதிய ரெயில்கள் போடுகிற விஷயத்திலும் தனக்கு - ஜப்பானுக்கு - அதிக சலுகைகள் காட்டப்பட வேண்டுமென்றும் ஜப்பான் விரும்புகிறது.
இந்தக்கோரிக்கைகளை ஜப்பான் சம்பிரதாயப்படி சீன அந்நிய நாட்டு மந்திரிக்கு அனுப்பாமல் நேரே பிரசிடெண்ட் யுவான் ஷி காய்க்கே அனுப்பியது. அனுப்பியதோடு, இந்தக் கோரிக்கைகளைப்பற்றிப் பேச்சு மூச்சு விடக் கூடாதென்றும், ஒரு சமரஸ ஒப்பந்தம் ஏற்படுகிற வரையில் இவை ரகசியமாகவே வைத்திருக்கப்பட வேண்டுமென்றும் ஆணை யிட்டது! யுவான், தனக்கு விரோதியென்பது ஜப்பானுக்கு நன்றாகத் தெரியும். இதனாலேயே அவனை இப்படி அச்சுறுத்தித் தன்வசப்படுத்த முயன்றது. ஆனால் இவை ரகசியமாகவே இருக்கமுடியா? மெது மெதுவாக அமெரிக்காவுக்குத் தெரிந்தது; சீனாவில் எந்த ஒரு வல்லரசும் விசேஷ உரிமைகளோ சலுகைகளோ பெறக் கூடா தென்றும், எல்லா வல்லரசுகளும் ஒரே மாதிரி உரிமைகளுடனேயே வியாபாரஞ் செய்ய வேண்டுமென்றும், ஏற்கனவே 1899-ஆம் வருஷம் அமெரிக்கா வகுத்த ஒரு முறைக்கு மற்ற வல்லரசுகள் உடன் பட்டிருக்கின்றனவென்பதை ஜப்பானுக்கு ஞாபகமூட்டுவதாகவும், இப்பொழுது அதை மீறி ஜப்பான், சீனாவிடம் தனியாக ஒப்பந்தம் செய்துகொண்டு விசேஷ சலுகைகள் பெறப்பார்ப்பது கூடா தென்றும் எச்சரிக்கை செய்தது. இதற்குப் பிறகு ஜப்பான், தனது ஆசையை சிறிது அடக்கிக் கொண்டு, மேற்படி இருபத்தோரு கோரிக்கைகள் சம்பந்தமாகச் சீனாவுடன் பேரம் பேசுகையில், கொஞ்சம் விட்டுக் கொடுக்கிற மனப்பான்மையைக் காட்டியது. ஆனால் பிரிட்டனோ? தனக்கு ஒன்றுமே தெரியாதென்று கண்ணை இறுக மூடிக்கொண்டிருந்தது. இதை வார்சேல் சமாதான மகா நாட்டின் போது கவனிப்போம்.
இந்த இருபத்தோரு கோரிக்கைகள் சம்பந்தமாக இரண்டு நாடுகளும் - சீனாவும் ஜப்பானும் - சமரஸப் பேச்சுகள் நடத்திக் கடைசியில் 1915-ஆம் வருஷம் மே மாதம் இருபத்தைந்தாந் தேதி பல வகையான உடன் படிக்கைகளில் கையெழுத்திட்டன. இந்த உடன் படிக்கைகளின் மூலம், ஜப்பான், தன்னுடைய கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை நிறை வேற்றிக் கொண்டது. ஓர் உடன் படிக்கையின் மூலம், ஷாண்டுங் மாகாண சம்பந்தமாக ஜெர்மனி யுடன் தான் செய்து கொள்ளப் போகிற ஒப்பந்தத் திற்குச் சீனாவின் சம்மதத்தை முன்கூட்டியே பெற்றுக்கொண்டது; மேற்படி மாகாணத்தில் இன்னும் சில துறைமுகங்களைத் தனது வியாபாரத் திற்கென்று திறந்துவிட்டுக் கொண்டது; வேறு எந்த வல்லரசுக்கும் எந்தத் துறைமுகத்தையும் திறந்து விடுவதில்லையென்று சீனாவிட மிருந்து உறுதி வாங்கிக்கொண்டது; இவைகளுக்கெல்லாம் பிரதியாக, யுத்தம் முடிந்த பிறகு சில நிபந்தனைகளுடன் கியாசௌ பிரதேசத்தைச் சீனாவுக்குத் திருப்பிக் கொடுத்து விடுவதாகக் கூறியது. மற்றோர் உடன்படிக்கையின் மூலம், லியோடுங் தீபகற்பம், தெற்கு மஞ்சூரியாவின் சில ரெயில்வேக்கள் முதலியவற்றை தொண்ணூற் றொன்பது வருஷ குத்தகைக்குப் பெற்றது; தெற்கு மஞ்சூரியாவில் ஜப்பானியர்கள் நிரந்தரமாக வசிக்கவும் வியாபாரஞ் செய்யவும் உரிமை பெற்றது; அந்நியர்களை ஆலோசகர்களாக அமர்த்திக் கொள்வதில்லை யென்றும், அந்நியக் கம்பெனிகளுக்கு ரெயில் போட்டுக்கொள்கிற உரிமை கொடுப்பதில்லையென்றும், தெற்கு மஞ்சூரியா முதலிய பிரதேசங்களில் ஏதேனும் அபிவிருத்தித் திட்டங்களை அமுலுக்குக் கொண்டு வருவதா யிருந்தால் அதற்கு அந்நிய வல்லரசுகளிடமிருந்து கடன் வாங்குவ தில்லை யென்றும் சீனாவிடமிருந்து உறுதிமொழி வாங்கிக் கொண்டது.
ஐரோப்பிய யுத்தம் தொடங்கின காலத்திலேயே சீனாவைத் தன்னுடைய ஆதிக்கத்திற் குட்படுத்திக் கொள்ள இந்த ஐரோப்பிய யுத்தத்தை ஒரு சாதனமாக உபயோகித்துக் கொள்ளப் போகிறது ஐப்பான் என்று யுவான் ஷி காய் கூறினான். அடுத்த வருஷமே இது நிஜமாகி விட்டது. யுவான் ஷி காயே இதற்குச் சாட்சியாயிருக்கும் படி நேரிட்டது.
ஜப்பான், மேற்படி ஒப்பந்தங்களின் மூலம் சீனாவில் தன் காலை நன்றாக ஊன்றிக் கொண்டு விட்ட பிறகு, தனது ராணுவ முதீப்புக்களை அதிகரித்து வந்ததோடு, ஐரோப்பிய வல்லரசு களுடன் பேரம்பேசத் தொடங்கியது. 1917-ஆம் வருஷ ஆரம்பம். ஐரோப்பிய யுத்த அயரங்கத்தில் நேசக் கட்சியாருடைய கை சளைத்துக் கொண்டுவந்தது. ஜெர்மனி, நீர் மூழ்கிக் கப்பல்களின் மூலம் நேசக் கட்சியாருக்கு ஏராளமான சேதத்தை உண்டு பண்ணிக் கொண்டிருந்தது. இதனைச் சமாளிப்பதற்காக ஐப்பானின் கப்பற் படை உதவியை நாடினர் நேசக்கட்சியார். ஜப்பானும் ஒப்புக் கொண்டது. ஆனால் இதற்குப் பிரதியாக, ஜெர்மனியிடமிருந்து பறித்துத் தற்காலிகமாகத் தான் அனுபவித்து வரும் ஷாண்டுங் மாகாண சம்பந்தமான உரிமைகளென்ன, பூமத்திய ரேகைக்கு வடக்கேயுள்ள தீவுகளென்ன, இவைகளை யெல்லாம் தனக்கே சாசுவதமாக ஒப்புக்கொடுத்துவிட வேண்டுமென்ற கோரிக்கையை, யுத்தத்திற்கு பிறகு கூடும் சமாதான மகாநாட்டில் தான் கிளத்தினால் அதனை நேசக்கட்சியார் ஆதரிக்கவேண்டுமென்று ஜப்பான் கோரியது. இதற்கு நேசக்கட்சியாரும் - அதாவது பிரிட்டனும் பிரான்ஸும் - இணங்கினர். அதே சமயத்தில் பூமத்தியரேகைக்குத் தெற்கே ஜெர்மானிய ஆதிக்கத்துக் குட்பட்டிருந்த தீவுகளைத் தான் சுவாதீனப்படுத்திக் கொள்வதை ஆதரிக்க வேண்டு மென்று பிரிட் டனும், நடு நிலைமையாயுள்ள சீனாவை யுத்தத்திலே நேசக் கட்சியின் பக்கம் சேருமாறு தூண்டத் துணைசெய்ய வேண்டு மென்று பிரான்ஸும் முறையே ஜப்பானைக் கேட்டன. இவை யனைத் திற்கும் ஜப்பான், சரி, சரியென்று தலையசைத்தது. இவை களையொட்டி 1917-ஆம் வருஷம் பிப்ரவரி - மார்ச்சு மாதங்களில் ரகசியமாகப் பலவித ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டன. இங்ஙனமே இத்தலியும் அமெரிக்காவும் தனித்தனியே ஜப்பானுடன் ஒப்பந் தங்கள் செய்து கொண்டன. சீனாவில் தனக்குச் சில விசேஷ உரிமைகளுண்டு என்பதை இப்படி முன்னெச்சரிக்கையாக திரப் படுத்திக் கொண்டுதான் ஜப்பான் பின்னாடி வார்சேல் சமாதான மகா நாட்டில் வந்து உட்கார்ந்து கொண்டது. இஃது இப்படியிருக்க, முதலில் நடுநிலைமை வகித்த சீனா பின்னர் எப்படி யுத்தத்திலே பிரவேசித்ததென்பதைக் கவனிப்போம்.
யுத்த ஆரம்ப காலத்திலேயே சீனாவை யுத்தத்திலே இழுத்து விட ஐரோப்பிய வல்லரசுகள் முயன்றன. ஆனால் ஜப்பான் இந்த முயற்சியை எதிர்த்துவந்தது. சீனா யுத்தத்தில் பிரவேசித்து மற்ற வல்லரசுகளுடன் சம அந்தது பெற்றுவிடுமானால், பின்னாடி அந்த வல்லரசுகளின் அதரவு அதற்குக் கிடைத்துவிடுமென்றும், இதனால் தன்னிஷ்டப்படி சீனாவைச் சுரண்டுவது அசாத்தியமாகி விடுமென்றும் ஜப்பான் கருதியது. உதாரணமாக 1915-ஆம் வருஷம் நவம்பர் மாதம், டோக்கியோ நகரத்தி லிருந்த பிரிட்டிஷ் - பிரெஞ்சு - ருஷ்ய தானீகர்கள் ஒன்றுகூடி, சீனா, நேசக் கட்சியுடன் சேர்ந்து கொள்ள வேண்டுமென்று தாங்கள் செய்கிற பிரயத்தனத்தில் ஜப்பானும் சேர்ந்துகொள்ள வேண்டுமென்று ஜப்பானிய அரசாங் கத்திற்கு ஒரு கோரிக்கை விடுத்தார்கள். அதற்கு ஜப்பானிய அரசாங் கத்தின் சார்பாக வைகவுண்ட் இஷி என்பவன் பின்வருமாறு கூறினான்:- சீனாவில் நடைபெறுகிற நடவடிக்கைகள் யாவும் தனக்கு முக்கியமானவையென்று ஐப்பான் கருதுகிறது. அங்கு நம்முடைய பிடியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பது அவசியமாகும். யுத்தத்திலே கலந்துகொள்ளக்கூடிய மாதிரி திறமை யுள்ள ஒரு ராணுவம் அங்கே - சீனாவில் - ஏற்படுவதை ஜப்பான் சும்மா பார்த்துக்கொண்டிருக்க முடியாது; அப்படியே நாற்பது கோடி (சீன) மக்களின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஒரு விடுதலை ஏற்படுமானால் அதனையும் மனச் சஞ்சலமின்றி நாம் கவனித்துக் கொண்டிருக்க முடியாது. ஜப்பான் இப்படி எதிர்ப்புக்காட்டவே, நேசக் கட்சியினர், சீனாவை யுத்ததில் இழுத்துவிடும் முயற்சியி லிருந்து ஒதுங்கிவிட்டனர். 1917-ஆம் வருஷம் ஆகட் மாதம் வரை சீனா, தனது நடுநிலைமைக் கொள்கையை ஒழுங்காக அனுசரித்து வந்தது. தானே தனித்து யுத்தத்தில் பிரவேசித்து, கிடைத்தமட்டில் லாபம் சம்பாதிக்கிற துணிச்சலோ மனமோ இதற்கு இல்லை. சேர்ந்தாற்போல் இதனுடைய பொக்கிஷமும் வறண்டு கிடந்தது.
1917-ஆம் வருஷத் தொடக்கத்தில், அமெரிக்கா, யுத்தத்தில் நேச நாடுகள் பக்கம் சேர்ந்து கொண்டது. இதற்குப் பிறகு அது, தன்னைப்போல் இதுகாறும் நடுநிலைமை வகித்து வந்த எல்லா நாடுகளையும் யுத்தத்தில் இறங்குமாறு தூண்டியது. சீனாவும் இந்தத் தூண்டுதலுக்குட்பட்டது. ஆப்பொழுது சீனாவில், அமெரிக்காவின் செல்வாக்கு அதிகம். இதை ஆதாரமாகக் கொண்டு அஃது - அமெரிக்கா - ஜெர்மனியின் சப்மரீன் அட்டூழியங்களைக் கண்டித்து அதற்கு - ஜெர்மனிக்கு - ஓர் எச்சரிக்கை விடுக்கும்படி சீனாவை வற்புறுத்தியது. இதன்படி சீனா 1917-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் ஒன்பதாந் தேதி, ஜெர்மனிக்கு ஓர் எச்சரிக்கைக் கடிதம் விடுத்தது. பதில் இல்லை. பின்னர் மார்ச்சு மாதம் பதினான்காம் தேதி அதன் தொடர்பை அறுத்துக்கொண்டுவிட்டது. இப்படி அறுத்துக் கொண்டுவிட்டால் மட்டும் போதுமா? யுத்தம் தொடுத்திருப்பதாக அறிக்கைவிட வேண்டாமா? இந்த அறிக்கை விடுக்கும்படி சீனாவைத் தூண்டுவதற்கு வல்லரசுகள் சுமார் ஐந்து மாத காலம் நயத்தையும் பயத்தையும் உபயோகிக்க வேண்டிய தாயிற்று. சீனாவின் மூலப் பொருள்களும் கூலியாட்களும் நேச நாட்டினருக்கு அவசியமாகவும் அவசரமாகவும் தேவையாயிருந்தது. சீனாவோ, இவைகளையெல்லாம் கொடுத்து, தானும் யுத்தத்தில் இறங்குவதா யிருந்தால் தனக்கு என்ன சாதகம் கிடைக்கப் போகிறதென்று கேட்டது. சீனா இப்படித் தங்களுடைய நெருக்கடியில் பேரம் பேசுவதை நேச வல்லரசுகளின் ராஜதந்திரிகள் விரும்பவில்லை. ஆனால் இப்படிக் கேட்பதிலே நியாமிருக்கிற தென்பதை இவர் களால் மறுக்கவும் முடியவில்லை. என்றாலும் முன்னாடி உதவி செய்; பின்னாடி உனக்கு நியாயம் தேடித் தருகிறோம் என்கிற தோரணையிலே இவர்கள் பேசினார்கள். இவர்களுக்கு அனுசரணை யாகச் சீனாவிலேயே, யுத்தத்திலே சேரவேண்டுமென்றும் சேர வேண்டா மென்றும் இரண்டு கட்சிகள் தோன்றிவிட்டன. ஜப்பானும் இந்தச் சந்தர்ப்பம் பார்த்து சீனா யுத்தத்தில் பிரவேசிப்பதைப் பற்றித் தனக்கு ஆட்சேபமில்லை யென்று சங்கேதமாகத் தெரிவித்தது. அதுதான், தனக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளையெல்லாம் ஏற்கனவே ஒப்பந்தங்கள் மூலம் வல்லரசுகளிடமிருந்து பெற்றுக் கொண்டு விட்டதே? மற்றும், சீனாவை யுத்தத்திலே இறங்க விட்டு விட்டு, அங்கே உள்நாட்டுச் சச்சரவுகளைக் கிளப்பிவிட அஃது உத்தேசித்த தென்று சொல்லப்படுகிறது, எப்படியோ நேசக் கட்சி யினருடைய ராஜதந்திரம் வென்றது. 1917-ஆம் வருஷம் ஆகட் மாதம் பதினான்காம் தேதி சீனா, நேசக் கட்சியின் சார்பாக யுத்தத்தில் பிரவேசித்தது. இதன் பயனாக, நேசக் கட்சியினருக்குச் சீனாவிலிருந்து அதிகமான யுத்த மூலப்பொருள்களும் கூலியாட் களும் கிடைத்தனர். மற்றும், சீனா நடுநிலைமை வகித்த காலத்தில் அதன் துறைமுகங்களில் தஞ்சம் புகுந்திருந்த கப்பல்கள் யாவும் இப்பொழுது நேசக் கட்சியாருடைய உபயோகத்திற்கு வந்தன. நேசக் கட்சியினரும், சீனா, யுத்தத்திலே சேர்ந்ததற்குச் சன்மானம் கொடுப்பது போல், பாக்ஸர் ஒப்பந்தத்தின் பயனாக ஏற்பட்ட வியாபார வரி விகிதங்களில் சில மாற்றங்கள் ஏற்படுத்திக் கொடுத்தனர்; ஒப்பந்தத் துறைமுகங்களில் ஜெர்மானி யர்களும் ஆதிரியர்களும் வசித்து வந்த பிரதேசங்களின் நிருவாகத்தைச் சீன அரசாங்கத் தின்வசமே திருப்பி ஒப்புவித்தனர். இவை யாவும், சீனா, யுத்தத்தில் பிரவேசித்தவுடன் ஏற்பட்ட விளைவுகள்.
யுத்தம் நடைபெற்று நேசக் கட்சியினர் பக்கம் வெற்றி ஏற்பட்டது. 1919-ஆம் வருஷ ஆரம்பத்தில் பாரிஸில் சமாதான மகாநாடு கூடியது. இந்த மகாநாடு கூடுகிற காலத்தில் சீனாவில் வடக்கே பீகிங்கில் ஓர் அரசாங்கமும், தெற்கே காண்டனில் மற்றோர் அரசாங்கமுமாக நடைபெற்றுக்கொண்டுவந்தன என்பதை நேயர்கள் ஞாபகப்படுத்திக் கொள்ளவேண்டும். மற்றும் பீகிங் அரசாங்கம் ஜப்பானின் கைக்கருவியாக இருந்ததென் பதையும், காண்டன் அரசாங்கம் ஜப்பானுக்கு விரோதியாக இருந்ததென்பதையும் இங்கே நாம் மறந்துவிடக்கூடாது. இப்படி இரண்டும் முரண்பட்ட கொள்கையுடையனவாயிருந்தாலும் சமாதான மகா நாட்டிற்குச் சீனாவிலிருந்து பிரதிநிதிகளை அனுப்புகிற விஷயத்தில் எதோ ஒருவித சமரஸ ஏற்பாடு செய்து கொண்டு, இரண்டு அரசாங்கங் களும் சேர்ந்தாற்போல் ஒரு பிரதிநிதிக் கோஷ்டியைத் தெரிந் தெடுத்தனுப்பின. இந்தக் கோஷ்டி யினர் கூடியவரையில் ஒற்றுமை யுடனும் தைரியமாகவும் சீனாவின் உரிமைகளுக்காகப் பாடுபட்டனர் என்று சொல்ல வேண்டும்.
சமாதான மகாநாட்டில் சீனா எதிர்பார்த்ததெல்லாம் வெறும் நியாயத்தைத்தான். ஆனால் அதுமட்டும் அதற்குக் கிடைக்க வில்லை. ஷாண்டுங் மாகாண சம்பந்தமான உரிமைகள், கியாசௌ பிரதேசம் முதலியனவெல்லாம் தனக்கே திரும்பச் சேர வேண்டு மென்று சீனா கூறியது. ஜெர்மனிக்கு விரோதமாக எப்பொழுது தான் யுத்தந் தொடுத்ததோ, அப்பொழுதே, அதனுடன் சமாதானமா யிருந்த காலத்தில் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் யாவும் ரத்தாகி விட்ட தாகத்தானே அர்த்தம்? எனவே மேற்படி ஷாண்டு ங்மாகாண சம்பந்தமாக ஜெர்மனி யுடன் செய்துகொண்ட பழைய ஒப்பந் தங்கள் யாவும் ரத்து செய்யப் பட்டுவிட்டதாகக்கருதிக் கொண்டு, மேற்படி உரிமைகளையும் பிரதேசத்தையும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டியதே நியாயம் என்றெல்லாம் வாதம் செய்தது. கேட்பார் யார்? மேற்படி ஷாண்டுங் மாகாண சம்பந்தமாக, இருபத்தோரு கோரிக்கைகள் சம்பந்தமாக, யுவான் ஷி காயுடன் 1915-ஆம் வருஷம் மே மாதம் இருபத்தைந்தாந் தேதி1 தான் செய்துகொண்ட ஒப்பந்தங்கள், 1917-ஆம் வருஷம் பிப்ரவரி - மார்ச்சு மாதங்களில் தனக்கும் ஐரோப்பிய வல்லரசுகளுக்கும் ஏற்பட்டிருக்கிற ரகசிய ஒப்பந்தங்கள், 1918-ஆம் வருஷம் செப்டம்பர் மாதம், பீகிங் அரசாங் கத்தின் பிரதம மந்திரி துவான் சீ ஜூயியுடன் செய்துகொண்ட ஒப்பந்தம்1 முதலியவைகளையெல்லாம் ஜப்பான் எடுத்துக்காட்டி, தனது உரிமைகளை வற்புறுத்தியது. இந்தச் சந்தர்ப்பத்தில்தான், லாயிட் ஜார்ஜ், ஜப்பானின் இருபத்தோரு கோரிக்கைகளைப் பற்றித் தான் இதுவரையில் கேள்விப்படவே இல்லையேயென்று வியப்புக் காட்டிக் கூறினான்!2
மகாநாடு ஒருவாறு முடிந்தது. சமாதான ஒப்பந்தம் தயாரிக்கப் பெற்றது. ஷாண்டுங் மாகாணத்தில் ஜெர்மனி முன்னர் அனுபவித்து வந்த உரிமைகள் யாவற்றையும் பறித்து ஜப்பானுக்குக் கொடுத்து விடுவதென்று ஐரோப்பிய வல்லரசுகள் தீர்மானித்துவிட்டிருந்தன. இனி யார் அதைத் தடுக்க முடியும்? ஜெர்மனி, தனது மேற்படி உரிமைகளை (தன்னிச்சையாக?) ஜப்பானுக்கு விட்டுக் கொடுக்கிற தென்றும், அவைகளை இனி ஜப்பான் அனுபவித்து வருவ தென்றும்3 சமாதான ஒப்பந்தத்தில் சில ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டன. யுத்தத்தில் பிரவேசித் ததற்காக, சீனாவுக்கு எதோ சில அனுகூலங்கள் செய்ததாக இருக்கவேண்டுமல்லவா? (1) பாக்ஸர் ஒப்பந்தப்பிரகாரம் ஜெர்மனிக்கு சீனா செலுத்தவேண்டிய நஷ்ட ஈட்டுத் தொகை முதலியன தள்ளுபடி செய்யப்பட்டன; (2) சீனாவில் ஜெர்மன் அரசாங்கத்திற்குச் சொந்தமா யிருந்த பொதுச் சொத்துக் கள் யாவும் சீனாவிடமே திருப்பி ஒப்படைக்கப் பட்டன; (3) ஜெர்மானியப் பிரஜைகளையும் ஜெர்மானியக் கப்பல்களையும், யுத்தம் நடை பெறுகிற வரையில் சீனா பிடித்துவைத்திருந்ததல்லவா, அதனால் ஏற்படக் கூடிய பொறுப்புக்களினின்றும், சீனா விலக்கப்பட்டு விட்டது; (4) குப்ளாய் கான் காலத்தில் பீகிங் நகரத்தில் தாபிக்கப் பட்டவான நூலாராய்ச்சி சம்பந்தமான கருவிகளை, பாக்ஸர் கலகத் திற்குப் பிறகு, ஜெர்மானியர்கள், தங்கள் நாட்டுக்கு எடுத்துக் கொண்டு போயிருந்தார்கள்; அதை இப்பொழுது சீனாவுக்குத் திருப்பிக்கொடுத்து விடவேண்டும். வார்சேல் சமாதான ஒப்பந்தத் தினால் உலகத்திற்கு ஏதேனும் ஒரு நன்மை ஏற்பட்டிருக்கிற தென்றால், அஃது இந்த வான நூலாராய்ச்சி சம்பந்தமான கருவிகளைச் சீனாவுக்குத் திருப்பிக்கொடுத்துவிட வேண்டு மென்று சொன்னதுதான் என்று பெர்ட்ராண்ட் ரஸல் என்ற அறிஞன் கூறுகிறான்.4
சீனா சம்பந்தப்பட்ட இந்த மாதிரியான ஷரத்துக்களடங்கிய சமாதான ஒப்பந்தத்தைச் சீனப் பிரதிநிதிகள் முன் நீட்டினார்கள், மகாநாட்டின் சூத்திரதாரிகளான லாயிட் ஜார்ஜும் கிளமென் ஸோவும், ஷாண்டுங் மாகாண சம்பந்தமான உரிமைகளைப் பற்றிச் சீனப் பிரதிநிதிகள் மறுபடியும் மறுபடியும் வற்புறுத்தினார்கள். ஜப்பானுடன் நேராகப் பேசிக்கொள்ளுங்கள் என்று வாய் மொழி யாக பதில் வந்தது. சீனாவை யுத்ததிலே இழுத்து விட்டு, அதன் உரிமைகளுக்குப் பங்கம் ஏற்படாமல் பாதுகாப்பதாகச் சொன்ன அமெரிக்காவின் பிரசிடெண்ட் வில் ஸனோ மௌனஞ்சாதித்து விட்டான். தன்னுடைய சர்வ தேச சங்க மணல்கோட்டை எங்கே இடிந்து விழுந்து விடப்போகிறதோ என்ற கவலை அவனுக்கு. ஏனென்றால், சீனாவில் தாங்கள் கோரும் உரிமைகள் அங்கீகரிக்கப் படாவிட்டால், சர்வ தேச சங்கத்தில் தாங்கள் சேர்ந்து கொள்ளப் போவதில்லை யென்று க்ஷணத்திற்கு க்ஷணம் பயமுறுத்திக் கொண் டிருந்தார்கள் ஜப்பானியப் பிரதிநிதிகள். கடைசியில் ஒப்பந்தத்தில் கையெழுத் திடும்படியான நிலைமை வந்தது. ஷாண்டுங் மாகாண சம்பந்தமான ஷரத்தைத் தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைக் கண்டு, ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாகச் சீனப் பிரதி நிதிகள் கூறினார்கள். அந்தமாதிரி ஒரு நிபந்தனையைப் போட்டுக் கொண்டு கையெழுத்திட நேச வல்லரசுப் பிரதிநிதிகள் இடங் கொடுப்பார் களா? அதுவும் வெற்றி வெறி முற்றியிருக்கிற தருணத்தில்? ஜெர் மானியர் பணிந்திருக்கிற சமயத்தில்? எவ்வித நிபந்தனையுமின்றி, பரி பூரண சம்மதம் தெரிவித்துக் கையெழுத்துப் போட சீனப் பிரதி நிதிகள் மறுத்து விட்டார்கள். வார்சேல் ஒப்பந்தம் சீனப் பிரதிநிதி களின் கையெழுத் தில்லாமலே சமாதான தேவதையின் சந்நி தானத்தில் வைக்கப்பட்டது. சீனப் பிரதிநிதிகளுக்கு இந்தத் தைரியத்தையும் தன்மதிப்பு உணர்ச்சியையும் ஊட்டியவர்கள் சீனாவின் இளைஞர்கள்! பள்ளிக் கூடத்திலே படிக்கிற மாணாக் கர்கள்! இளைஞர்கள் அரசியலிலே கலந்து கொள்ளக்கூடாதென்று சொல்கிறவர்களுக்குப் புத்தி புகட்டுவது போலிருந்தது இவர்கள் இந்தக் காலத்திலே செய்த அற்புதமான கிளர்ச்சி!
சமாதான மகாநாட்டில் சீனப் பிரதிநிதிகளின் கோரிக்கைகள் மறுக்கப்பட்டுவிட்டன என்ற செய்தி 1919-ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் முப்பதாந்தேதி சீனாவுக்கு எட்டியது. வல்லான் வகுத்ததே வாய்க்காலாகி விட்டதே? நியாயம் என்பது ஒன்றில்லையா? என்று கேட்டுக்கொண்டு சீன இளைஞர்கள் சினந்தெழுந்தார்கள். இவர்களுடைய கோபம் பீகிங் அரசாங்கத்தின் மீது திரும்பியது. ஏனென்றால் இந்த அரசாங்கந்தான் ஜப்பானின் கையாட்டிப் பொம்மையாக இருந்துவந்திருக்கிற தென்றும், இப்பொழுது சமாதான மகாநாட்டில் ஐரோப்பிய வல்லரசுகள் செய்கிற எந்த முடிவுக்கும் தலையசைக்கக் காத்துக்கொண்டிருக்கிற தென்றும் இவர்களுக்குத் தெரியும். எந்த இடத்திலே பிற்போக்குச் சக்தி வேரூன்றிக் கொண்டிருக்கிறதோ அந்த இடத்திலிருந்துதான் முற் போக்கான சக்திகள் கிளம்பும் என்ற சரித்திர உண்மைக்கிணங்க பீகிங் நகரத்திலுள்ள இளைஞர்கள்தான் முதன்முதலாகக் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தார்கள்.
1919-ஆம் வருஷம் மே மாதம் நான்காந்தேதி, பீகிங் நகரத் திலுள்ள சர்வகலாசாலை மாணாக்கர்களில் சுமார் மூவாயிரம் பேரடங்கிய பொதுக் கூட்டமொன்று நடைபெற்றது. அதில், சீனா, அலட்சியப்படுத்தப் பட்டதைப் பற்றிக் கண்டித்து ஒரு தீர்மானம் நிறைவேறியது. இளைஞர்களுக்குள்ளே ஒரே உற்சாகம். இந்த உற்சாக மேலீட்டால் இவர்கள் ஒன்று திரண்டு, பீகிங் அரசாங்கத்து மந்திரிகளில் சிலருடைய வாசதலங்களுக்கு ஊர்வலமாகச் சென்று உள்ளேபுகுந்து அங்கிருந்த தட்டுமுட்டுச் சாமான்களை யெல்லாம் தவிடுபொடி யாக்கினார்கள். ஒரு மந்திரியின் மாளிகை நெருப்புக் கிரையாயிற்று. ஜப்பானுக்குச் சீனாவை பந்தகப்படுத்தி விடுகிற கைங்கரியத்தைச் செய்து வந்த ஒரு மந்திரி நன்றாகத் தாக்கப் பட்டுவிட்டான். நகரத்தில் ஒரே அமளிகுமளி. எந்த அரசாங்கந்தான் இதைச் சும்மா பார்த்துக் கொண்டிருக்கும்? அஃது எவ்வளவு பலவீன முள்ள அரசாங்கமாகத்தான் இருக்கட்டுமே? கலகத்திற்குக் காரணர்களென்று கருதப்பட்ட இளைஞர் சிலரைக் கைது செய்தது. இது பீகிங் வாசிகளின் ஆத்திரத்தைக் கிளப்பியது.
இந்த ஆத்திரம் நாடெங்கணும் பரவியது. மாணாக்கர்கள், பள்ளிக்கூடங்களிலிருந்து வெளியே வந்துவிட்டார்கள், தொழிலா ளர்கள், வேலைக்குச்செல்ல மறுத்து விட்டார்கள்; வியாபாரிகள், தங்கள் கடைகளை மூடிவிட்டார்கள்; ஜப்பானியச் சரக்குகளை, எல்லா ஜனங் களும் சேர்ந்து பகிஷ்கரித்தார்கள்; பகிஷ்கரித்ததோடு மட்டுமல்லாமல், அகப்பட்ட ஜப்பானியச் சாமான்களைத் தீக்கிரை யாக்கினார்கள்; ஜப்பானியச் சரக்குகளை வைத்து வியாபாரஞ் செய்கிற சீனர்களைத் தேசத்துரோகிகளென்று கூறி அவமானப் படுத்தினார்கள். ஜப்பானியச் சரக்குகளின் இறக்குமதி குறைந்து விட்டது. எங்குப் பார்த்தாலும் கலகங்களும் குழப்பங்களும் அதிகரித்தன. சமுதாய வாழ்வு சீர்குலைந்து விட்டது. இந்த நிலையில், ரெயில்வே தொழிலாளர்கள், தாங்களும் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக பீகிங் அரசாங்கத்திற்கு அறிவித் தார்கள். இந்த அறிவிப்புக்கு அது பயந்துவிட்டது. பணிய வேண்டியதைத் தவிர வேறு வழியென்ன? இதுகாறும் ஜப்பானுக்கு உடந்தையாயிருந்த மந்திரிச் சபை ராஜீநாமா செய்துவிட்டது. புதிதாக அமைந்த மந்திரிச் சபையானது, சமாதான மகா நாட்டுக்குச் சென்றிருந்த சீனப் பிரதிநிதி களை, சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டா மென்று உத்தர விட்டது. இந்த உத்திரவுக் கிணங்கியே சீனப் பிரதி நிதிகள், சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டார் கள். இப்படி இவர்கள் மறுத்து, சீனாவின் தன்மதிப்பைக் காப்பாற்றி யதற்குக் காரணமாயிருந்த இந்த மாணாக்கர்களின் கிளர்ச்சி மே மாதத்து நாலாந் தேதி இயக்கம் என்ற பெயருடன் சீன தேசீய சரித்திரத்தில் புனிதமான ஓர் இடம் பெற்றிருக் கிறது.
சமாதான ஒப்பந்தத்தில் சீனப் பிரதிநிதிகள் கையெழுத்திட மறுத்துவிட்டது தங்களுக்கு ஒரு வெற்றியென்று கொண்டு இளைஞர்கள் திருப்தியடைந்து விடவில்லை; தங்களிடத்தில் எத்தகைய மகத்தான சக்தி இருக்கிற தென்பதைத் தெரிந்து கொள் வதற்குரிய ஒரு சந்தர்ப்பமாகவே இதனைக் கருதினார்கள்; இந்தச் சந்தர்ப்பத்தைத் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டார்கள். இது விஷயத்தில் இவர்கள் தீர்க்கதரிசிகள் போலவே நடந்து கொண்டார் களென்று சொல்ல வேண்டும்.
இது வரையில் இளைஞர்கள், தங்கள் பள்ளிக்கூட முண்டு, பாட புத்தகங்களுண்டு என்ற அளவோடுதான் இருந்தார்கள்; இந்த அளவுக் குட்பட்டே உலகத்தைப் பார்த்தார்கள். சமாதான ஒப்பந்தத் திற்கு விரோதமான மேற்படி கிளர்ச்சியில் ஈடுபட்ட காலத்தில்தான், கிராம விவசாயிகள், நகரத் தொழிலாளர்கள் முதலிய சமுதாயத்தின் பலதரத்தினரோடும் பழகுகிற சந்தர்ப்பம் இவர்களுக்கு ஏற்பட்டது. விரிந்த உலகம் இவர்கள் அகக்கண்ணுக்கு முன்னே காட்சி யளித்தது. ஜனசக்தியின் மகத்துவத்தை உணர்ந்தார்கள். ஆனால் இந்த ஜன சக்தி வெறும் பிண்டமாகவல்லவோ கிடக்கிறது? இதனை ஜீவன் நிறைந்த ஒரு சக்தியாகத் துடிதுடிக்கச் செய்யவேண்டாமா? அப்படிச் செய்வதற்கு முதல்படியாக, பொது ஜனங்களுக்குப் புதிய முறையில் கல்வியறிவைப் புகட்டுவது அவசியம். எனவே இளைஞர்கள், மேற்படி கிளர்ச்சி ஓய்ந்தபிறகு, இந்தத் தொண்டிலே இறங்கி னார்கள். முடியரசிலிருந்து குடியரசுக்கு மாறிவிட்டதி னாலேயே சீனாவுக்குக் கதி மோட்சம் ஏற்பட்டு விடாதென்றும், காலவேகத் தோடு ஒட்டிப் போனால்தான் உலக வல்லரசு களிலே ஒன்றாக வாழ முடியுமென்றும் ஜனங்களுக்கு எடுத்துக்காட்டுவது இவர்களுடைய தொண்டின் முக்கிய அமிச மாயிருந்தது. இதற்காக ஜனங்களுக்குப் புரிகிற பாஷையிலே அவர்களுக்குத் தேவையான விஷயங்களைக் கொடுத்தார்கள். இலக்கியத்தில் ஒரு புது மலர்ச்சி ஏற்பட்டது. மேனாட்டு அறிஞர்களான டால்டாய், பைரன், ஷெல்லி, மார்க், குரோபோட்கின் முதலியோருடைய நூல்களெல்லாம் மொழி பெயர்த்து வெளியிடப் பெற்றன. நாடகம், ஓவியம், காவியம் முதலிய துறைகளிலும் புதுமலர்ச்சியின் வாசனை வீசியது. புதுப்புது கவிஞர்கள் தோன்றி, தங்கள் கவிதைகளின் மூலம் ஜனங்களுக்கு அறிவையும் உணர்ச்சி யையும் குழைத்து ஊட்டினார்கள்.
சில இளைஞர்கள், படித்த படிப்பு போதுமென்று புதகங் களை யெல்லாம் கட்டிப்போட்டுவிட்டு, தேசீய ராணுவத்திலே சேர்ந்து கொண்டார்கள். ஒரு தேசத்தின் விமோசனத்திற்கு நூல றிவுமட்டும் துணைசெய்யாது, தேக பலமும் அவசியமென்பதை இவர்கள் உணர்ந்தே இப்படிச் செய்தார்கள். இப்பொழுது சீனாவின் ராணுவபலத்திற்கு முக்கிய தூண்கள் மாதிரி இருக்கிற பலரும் இந்த 1919-ஆம் வருஷ புது மலர்ச்சி இயக்கத்தினின்று தோன்றியவர் கள்தான்.
இன்னுஞ் சில இளைஞர்கள், சென்ற அத்தியாயத்தில் கூறிய படி ருஷ்யாவுக்குச் சென்று திரும்பி வந்து, சீனாவில் பொது வுடைமை இயக்கம் பரவுவதற்குக் காரணர்களா யிருந்தார்கள்.
இந்தப் புதுமலர்ச்சி இயக்கத்தின் போது இளைஞர்கள் செய்த சேவையை ஓர் அறிஞன் பின்வருமாறு வருணிக்கிறான்:-
_இளைஞர்கள் முதலில் தேசத்தைக் கிளப்பிவிட்டார்கள்; வார்சேல் ஒப்பந்தத்தில் (சீனப் பிரதிநிதிகள்) கையெழுத்திடாதபடி தடுத்தார்கள்; ஜப்பானியச் சரக்குகளை பகிஷ்கரிக்கிற விஷயத்தில் வியாபாரிகளுக்குத் துணையாக நின்றார்கள். இவையெல்லாம் நிறை வேறின பிறகு, இவர்கள், தங்களைவிடக் குறைவான கல்வியறிவு பெற்றிருக்கிற சகோதர சகோதரிகளுக்கு விழிப்பை உண்டு பண்ணு கிற விஷயத்திலே தங்கள் சக்திகளைத் திருப்பினார்கள். உதார ணமாக உள்நாட்டு வெளிநாட்டு விவகாரங்கள் ஜனங்களுக்கு நன்றாகப் புரிகிறமாதிரி நூல்கள் பல வெளியிட்டார்கள்; பிரசங் கங்கள் செய்தார்கள். தங்களுடைய சொந்தப் பணத்தைப் போட்டு ஆங்காங்கு இலவசப் பள்ளிக்கூடங்கள் தாபித்தார்கள்; தாங் களே கல்வியும் போதித்தார்கள். இவர்களுடைய இந்த அற்புதமான தியாகத்தின் பயனாக, சுமார் ஐம்பதினாயிரம் குழந்தைகள் கல்வி யறிவு பெற்றிருக்கின்றன._
பொதுவாக இந்தப் புது மலர்ச்சி இயக்கமானது, பொது அறிவை, பொது ஜனங்களுக்கு, பொதுவான பாஷையில் வழங் கியது. சீனாவில் எத்தனையோ புரட்சிகள் உண்டாயிருந்த போதிலும், அவை, இந்தப் புதுமலர்ச்சி இயக்கத்தின் பரிணாமமாக ஏற்பட்ட எண்ணப் புரட்சிக்கு ஈடாகா என்பதே அறிஞர்களின் அபிப்பிராயம்.
பாரி சமாதான மகாநாட்டில் சீனாவைக் கைவிட்டு விட்டதல்லவா அமெரிக்கா? இதற்குப் பிராயசித்தம் செய்து கொள்கிற மாதிரியாக 1921-ஆம் வருஷம் நவம்பர் மாதம் பதினோராந்தேதி வாஷிங்க்டன் நகரத்தில் ஒரு மகாநாட்டைக் கூட்டியது. வல்லரசுகளின் கடற்படை பலத்தைக் குறைத்து அதன் மூலம் உலகத்தில் இனி யுத்தங்கள் ஏற்படாமல் தடுக்கும்பொருட்டே இந்த மகாநாடு கூட்டப் படுகிறதென்று காரணம் சொல்லப்பட்டது. ஆனால் இந்த ஒரு காரணத்திற்காகவே மகாநாடு கூட்டப் படவில்லை. பசிபிக் பிரதேசத்தில் ஜப்பானுக்கு அதிக செல்வாக்கு ஏற்பட்டுக் கொண்டு வருவதை அமெரிக்கா அவ்வளவாக விரும்ப வில்லை. அப்படி வளர்ந்துவருவது, தன்னைக் கட்டாயம் பாதிக்கு மென்றும், அடுத்து ஒரு யுத்தம் ஏற்படுமானால் அது நிச்சயமாக பசிபிக் பிரதேசத்தில்தான் நடைபெறுமென்றும், அப்பொழுது, பலவீனப்பட்டுக் கிடக்கிற சீனா, யுத்தபூமியாகக் கூடுமென்றும் அது நன்றாக உணர்ந்திருந்தது. அந்த நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னர், பசிபிக் பிரதேசத்தில் சிரத்தையுள்ள வல்லரசுகள் கலந்துபேசி ஒருவித சமரஸ ஏற்பாட்டுக்கு வருவது நல்லதென்றும், சீனாவை ஒரு தேசத்தின் தனிப்பட்ட சுரண்டலுக்கு விடாமல் தடுத்து, அங்கு எல்லாரும் சென்று ஒரே மாதிரியான முறையில் வியாபாரஞ்செய்ய வேண்டுமென்ற தனது நீண்ட காலக் கொள்கையை மீண்டும் வலி யுறுத்திக் காட்டவேண்டு மானால், அதற்கு முதற்படியாக சீனாவின் பரிபூர்ண சுதந்திரத்தை, வல்லரசுகளைக் கொண்டு அங்கீகரிக்கச் செய்ய வேண்டுமென்றும், இப்படிச் செய்வதன் மூலம் பொதுவாக உலகத்திலே - சிறப்பாகக் கீழ்நாட்டிலே - மற்றொரு கோரயுத்தம் உண்டாகாமல் தடுப்பது சாத்திய மாகுமென்றும் அஃது - அமெரிக்கா - கருதியது. இதன் விளைவுதான் மேற்படி வாஷிங்க்டன் மகாநாடு.
இந்த மகாநாட்டுக்கு வருமாறு பசிபிக் பிரதேசத்தில் சம்பந்தப் பட்டிருந்த பிரிட்டன், பிரான், இத்தலி, ஹாலந்து, போர்த்துகல், பெல்ஜியம், சீனா, ஜப்பான் ஆகிய எல்லா நாடுகளுக்கும் அழைப்பு அனுப்பப்பெற்றது. ஆனால் சோவியத் ருஷ்யா மட்டும் அழைக்கப் படவில்லை. ருஷ்யாவைப்பற்றி அந்தக்காலத்தில் மேற்கித்திய வல்லரசுகள் எந்தவிதமான மனப்பான்மை கொண்டிருந்தன என்பதற்கு இஃதொரு சிறந்த உதாரணம்.
வாஷிங்க்டன் மகாநாடு கூடப் போகிறது, அதில் சீனாவின் உரிமைகள் சம்பந்தமான பிரச்னைகள் வாதத்திற்கு வரப் போகின்றன என்று தெரிந்தும் ஜப்பான், ஷாண்டுங் மாகாண சம்பந்தமாகச் சீனாவுடன் நேரே சமரஸம் பேசி ஒருவித முடிவுக்கு வரப்பார்த்தது! வல்லரசுகளின் முன்னிலையில் தன்னுடைய ராஜ தந்திர சாயம் வெளுத்துவிடப் போகிறதேயென்ற கவலை இதற்கு. கூட, அமெரிக்காவின் அநுதாப மெல்லாம் சீனாவின் பக்கம் இருக்கிறதென்றும், தன் பக்கம் இல்லை யென்றும் இதற்குத் தெரியும். சீனாவிலும் தனக்கு விரோதமான எண்ணம் வளர்ந்து வருவதை இஃது உணர்ந்திருந்தது. இதனால்தான் தனித்த முறையில் ஒரு தினுசாக சமரஸம் செய்து கொண்டுவிட முயன்றது. ஆனால் சீனா இதற்கு இணங்கவில்லை. ஷாண்டுங் மாகாண சம்பந்த மான உரிமைகளை எவ்வித நிபந்தனையுமின்றி ஜப்பான் விட்டுக் கொடுத்துவிட வேண்டுமென்ற ஒரே உறுதியுடனிருந்தது. சீனா வுக்குச் சுயமரியாதை உணர்ச்சி ஏற்பட்டுவிட்ட தென்பதற்கு இஃதொரு நல்ல அறிகுறி!
வுஷிங்க்டன் மகாநாடு, வல்லரசுகளின் கடற்படை பலத்தை எந்த விகிதாசாரப்படி நிர்ணயித்தது, அதன் மூலமாக மற்றொரு யுத்தம் எற்படாமல் எந்த அளவுக்குத் தடுத்தது என்ற விஷயங்களைப் பற்றிய ஆராச்சி இங்குத் தேவையில்லை. சீனாவைப் பொறுத்த மட்டில் என்ன நடவடிக்கைகள் எடுத்துக்கொண்ட தென்பதைப் பற்றி மட்டும் இங்குக் கவனிப்போம்.
_1. அமெரிக்காவும் பிரிட்டனும் சேர்ந்து செய்த மத்திய தத்தின் பேரில், கியாசௌ பிரதேசத்தையும் ஷாண்டுங் மாகாண ரெயில்வே சம்பந்தமான உரிமைகள் முதலியவற்றையும் சீனாவுக்கே திருப்பிக் கொடுத்துவிட ஜப்பான் சம்மதித்தது. இதற்கு ஈடாக சீனா, சுமார் மூன்று கோடி ரூபாயைப் பதினைந்து வருஷத் தவணையில் ஜப்பானுக்குக் கொடுக்க வேண்டு மென்றும், இந்தத் தொகையை ஜப்பானிடமிருந்தே கடனாகப் பெற்றுக் கொள்ள வேண்டு மென்றும் தீர்மானிக்கப்பட்டன. மேற்படி பிரதேசத்தில், தான் எவ்வித விசேஷ பாத்தியதைகளையும் கொண்டாடுவதில்லை யென்று ஜப்பான் உறுதி கூறியது. - 4-2-1922-இல் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் ஏற்பட்ட தனி ஒப்பந்தம்._
_2. பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான், பிரான், இத்தலி, ஹாலந்து, பெல்ஜியம், போர்த்துகல், சீனா ஆகிய ஒன்பது வல்லரசு களும் சேர்ந்து, சீனாவின் பரிபூர்ண ராஜ்ய உரிமையை அங்கீகரிப்ப தாகவும், அது, தன்னிஷ்டப்படி தன் ராஜ்யத்தை ஒழுங்குபடுத்திக் கொள்ளவோ, அரசாங்கத்தை அமைத்துக் கொள்ளவோ உரிமை யுடையதென்றும், அங்கு இனி எந்த வல்லரசும் விசேஷ சலுகைகள் பெற்று வியாபாரம் செய்யக் கூடாதென்றும், அங்குள்ள உள்நாட்டு நிலைமைகளை உபயோகித்து எந்த வல்லரசும் எந்த விதமான சாதகத்தையும் அடைய முயற்சி செய்யக் கூடாதென்றும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டன. இதற்கே ஒன்பது வல்லரசுகளின் ஒப்பந்தம் என்று பெயர். இது 6-2-1922-இல் கையெழுத்திடப் பெற்றது.1_
_3. இனி ஏதேனும் ஒரு யுத்தம் ஏற்படுகிறபோழ்து சீனா, நடுநிலைமை வகிக்கவேண்டுமென்று விரும்பினால் அதனுடைய இந்த உரிமையை மற்ற வல்லரசுகள் கௌரவிப்பதாக ஒப்புக் கொண்டன._
_4. சீனாவில் நடைபெறும் நீதி இலாகா விவகார முறைகளைப் பரிசீலனை செய்ய ஒரு கமிஷனை நியமிக்க வேண்டுமென்று மகாநாடு தீர்மானித்தது._
_5. சீன ஆதிக்க எல்லைக்குள் இதுகாறும் இருந்த அந்நிய தபாலாபீகளை யெல்லாம் எடுத்துவிடுவதென்று தீர்மானிக்கப் பட்டது._
_6. அந்நியர்களுடைய நிருவாகத்திலிருந்தே ரேடியோ நிலையங்கள் சீன அரசாங்கத்தின் நிருவாகத்திற்கு மாற்றப்பட வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது._
_7. பீகிங் அரசாங்கம், அவசியமென்று கருதினால், அந்நிய வல்லரசுகள், சீன எல்லைக்குள் வைத்திருக்கும் தங்கள் துருப்புகளை வாப வாங்கிக் கொண்டு விடவேண்டும்._
_8. சீனாவில் இதுகாறும் அனுஷ்டானத்தில் இருந்துவந்த சுங்க வரி முறைகளிலே சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்._
ஆக, வாஷிங்க்டன் மகாநாட்டினால் சீனா அடைந்த நன்மை களெல்லாம் எதிர்மறையான நன்மைகளே. அதாவது இதற்கு முந்தி நடைபெற்ற மகாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தங்களின் விளைவாக அது தன் பிரதேசங்களையும் உரிமைகளையும் இழந்த தைப்போல், இந்த மகாநாட்டில் ஒன்றும் இழந்துவிட வில்லை. சாதகங்கள் பெறாவிட்டாலும், பாதகமடையவில்லையே, அதற் காக சீனா சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டாமா? இப்படித்தான் வல்லரசுகள் கருதின. மேலே எடுத்துக்காட்டப்பட்ட மாதிரி சில சில்லரை நிர்ப்பந்தங்கள் தளர்த்திவிடப்பட்டன வென்று சொன்னாலும், பொதுவாக சீனாவின் மீது தாங்கள் வைத்திருந்த இரும்புப் பிடியை வல்லரசுகள் சிறிது கூட அசைத்துக் கொடுக்க விரும்பவில்லை. வாஷிங்க்டன் மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அனுஷ்டானத்திற்குக் கொண்டுவருகிற விஷயத்தில் எவ்வளவு அலட்சியமாயிருந்தன, அசிரத்தை காட்டின என்பவைகளைக் கொண்டே இந்த வல்லரசுகள், சீனா விஷயத்தில் எந்த மனப் பான்மையுடனிருந்தன வென்பது நன்கு புலனாகும். சீனாவின் பிரதேசங்களைச் சீனாவிடம் திருப்பிக் கொடுக்கவோ, அங்கே தாங்கள் அனுபவித்து வந்த விசேஷ சலுகைகளை விட்டுக் கொடுக்கவோ வல்லரசுகளுக்கு லேசிலே மனம் வரவில்லை. இதற்காகச் சீனா மறுபடியும் ஒரு பெரிய கிளர்ச்சியை நடத்த வேண்டியிருந்தது. இதைப் பின்னர்க் கவனிப்போம்.
இருவகைப்பட்ட அரசாங்கங்கள்
ஏகாதிபத்திய சக்திக்கு எதிர்ப்பாகவும், அந்தச் சக்தியின் விளையாட்டுப் பொம்மையாக இருக்கும் பீகிங் அரசாங்கத்திற்கு விரோதமாகவும் உள்ள தேசீய சக்திகளையெல்லாம் ஒன்று திரட்டி உருவகப் படுத்த வேண்டுமென்ற நோக்கத்துடன் ஸன் யாட் ஸென், 1924-ஆம் வருஷம், பொதுவுடைமை வாதிகளை, அவர்களுடைய தனிப்பட்ட முறையில் கோமிண்டாங் கட்சியில் சேர்த்துக் கொண்டான். அவர்களும் சேர்ந்து கொண்டார்கள். ஆனால், தங்களுடைய பொதுவுடைமைக் கட்சியைக் கலைத்துவிடவில்லை. அதனைத் தனிப்பட வளர்த்தே வந்தார்கள். அதன் அங்கத்தினர் எண்ணிக்கையும் வர வர அதிகப் பட்டுக் கொண்டு வந்தது.
ஆனால், பொதுவுடைமை வாதிகளை கோமிண்டாங் கட்சியில் சேர்த்துக்கொண்டது, அந்தக் கட்சியிலேயே சிலருக்கு - பழமையிலேயே ஊறிப் போயிருந்தவர்களுக்குப் பிடிக்கவில்லை. அப்பொழுதே - ஆரம்பத்திலேயே - பலவித ஆட்சேபங்களைக் கிளப்பினார்கள். ஆனால், ஸன் இவைகளைப் பொருட்படுத்த வில்லை. புதிய சீனாவை நிர்மாணம் செய்வதற்குத் தான் வகுத்திருந்த மூன்று படிகளில் முதல் இரண்டு படிகளைக் கடக்க வேண்டு மானால், அதாவது தேசத்திற்கு விரோதமா யுள்ள உள்நாட்டு வெளிநாட்டுச் சத்துருக்களை அடக்கி ஒடுக்கி ஜனங்களுக்கு அரசியல் அறிவைப் புகட்ட வேண்டுமானால், அஃது ஒரே ஒரு கட்சியின் மூலமாகத்தான் முடியுமென்று ஆட்சேபித்தவர்களுக்குச் சமாதானம் கூறினான். ஆட்சேபித்தவர்களும் எதிர்த்துப் பேச முடியாமல் அடங்கிவிட்டார்கள். அப்பொழுது அடங்கிவிட்டார் களாயினும் உள்ளுக் குள்ளே மட்டும் பொறாமை புகைந்து கொண்டிருந்தது.
பொதுவுடைமை வாதிகள், கோமிண்டாங் கட்சியில் சேர்ந்து கொண்டு எப்பொழுதும் போல், பாமரர்களென்று புறக்கணிக்கப் பட்டு வந்த ஜன சமுதாயத்தின் பெரும்பாலோருக்கு அரசிய லறிவைப் புகட்டினார்கள்; தன்மதிப்பு உணர்ச்சியை ஊட்டி னார்கள். தொழிலாளர் சங்கங்களென்ன, விவசாயிகள் சங்கங்க ளென்ன இப்படிப்பட்ட தாபனங்கள் ஆங்காங்குத் தோன்றின. தொழிலாளர், விவசாயிகள் முதலியோருடைய நலன்களைக் கவனிப்பதற்கென்று கோமிண்டாங் கட்சியிலேயே ஒரு தனி இலாகா தாபிக்கப்பட்டது பொதுவாக கோமிண்டாங் கட்சியில் பொதுவுடைமை வாதிகளின் செல்வாக்கும், தேசத்தில் கோமிண்டாங் கட்சியின் செல்வாக்கும் முறையே வளர்ந்து வந்தன. இந்தச் செல்வாக்கைக் கண்டு, கோமிண்டாங் - பொதுவுடைமைச் சேர்க்கையைக் கண்டு, ஏகபோக உரிமைச் சக்திகள் வெருண்டன; தங்களுடைய அதிவாரம் அசைக்கப் படுவதாக உணர்ந்தன. இந்த நிலைமையில் தான் ஸன் யாட் ஸென் இறந்து போனான்.
அவனுடைய மரணத்திற்குப் பிறகு, கோமிண்டாங் கட்சியில், அதுகாறும் அடங்கிக்கிடந்த தனிப்பட்டவர்களின் பொறாமைகள், பூசல்கள் முதலியன தலைகாட்டின; பதவிப் போட்டி ஏற்பட்டது; பொது வுடைமையா, சீனாவின் விடுதலையா, எதற்கு முதன்மை தானம் கொடுத்து வேலை செய்ய வேண்டும், பொதுவுடைமை வாதிகளுக்கும் கோமிண்டாங் கட்சிக்கும் இனி எந்தவிதமான தொடர்பு இருக்கவேண்டும் என்பன போன்ற பிரச்னைகள் கிளம்பின. இவை யெல்லாம் சேர்ந்து எங்கே கட்சியின் ஒற்றுமையைக் குலைத்துவிடுமோ, திரண்டுவந்த தேசீய சக்திகள் எங்கே சிதறிப் போகுமோ என்று கட்சியிலே முக்கியதராயிருந்த சிலர் - தேசபக்தர்கள் - அஞ்சிக் கொண்டிருந்தார்கள். ஆனால் நல்ல வேளையாக ஷாங்காய் நகரத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம், கட்சியின் உட்பிணக்குகளைத் தள்ளி வைத்தது; தேசத்தின் கவனத்தை, அந்நிய ஆதிக்கத்திற்கு விரோதமாகத் திருப்பியது.
மேற்படி ஷாங்காய் நகரத்தில் 1925-ஆம் வருஷம் மே மாதம் முப்பதாந் தேதி - அதாவது ஸன் யாட் ஸென் இறந்த சுமார் எழுபது நாட்களுக்குள் - சில ஜப்பானிய முதலாளிகளுக்குச் சொந்தமாக ஒரு பஞ்சு ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த சீனத் தொழிலா ளர்கள், தங்களுடைய வேலை நேரம், கூலி விகிதம் இவைகள் சம்பந்தமாகச் சில குறைகளை, எண்மர் அடங்கிய ஒரு பிரதிநிதிக் கோஷ்டி மூலம் மேற்படி ஆலையின் முதலாளிகளுக்குத் தெரிவித்துக் கொண்டார்கள், என்ன துணிச்சல் இவர்களுக்கு? ஆலை மானேஜ ருக்குக் கோபம் வந்துவிட்டது. தன் கைத் துப்பாக்கியை எடுத்து, பிரதிநிதிக் கோஷ்டியின் தலைவனைச் சுட்டுக் கொன்று விட்டான்; மற்ற ஏழு பேரையும் உடனே கைது செய்யுமாறு பிரிட்டிஷ் போலீஸைக் கூப்பிட்டான். அவர்களும் அப்படியே வந்து கைது செய்து விட்டார்கள். இது மற்றத் தொழிலாளர்களுக்கு ஆத்திரத்தை உண்டுபண்ணியது. கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று கோரி ஒரு பெரிய ஊர்வலம் நடத்தினார்கள். ஊர்வலத்தில் பொதுஜனங்களும் மாணாக்கர்களும் கலந்திருந் தார்கள். பிரிட்டிஷ் கன்ஸெஷன் - பிரிட்டிஷார் வசிக்கும் பகுதி - வழியாக ஊர்வலம் சென்றது. பிரிட்டிஷ் போலீஸார் இதன் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். ஏழு பேர் இறந்து போனார்கள்.
இந்தச் செய்தி சீனாவின் பல பாகங்களுக்கும் பரவியது. அந்நியர் களுக்கு விரோதமாக எங்கும் கிளர்ச்சி நடைபெற ஆரம்பித்துவிட்டது. ஹாங்காங் தீவில் அந்நிய முதலாளிகளின் தாபனங்களில் கூலி வேலை செய்து கொண்டிருந்த சுமார் ஒரு லட்சம் சீனர்கள், மேற்படி தீவிலிருந்து வெளியேறி காண்டன் நகரத்திற்குச் சென்றுவிட்டார்கள், காண்டனிலோ வேலை நிறுத்தம், அந்நியச் சாமான் பகிஷ்காரம் முதலியன மும்முரமாக நடை பெற்றன. வல்லரசுகளுக்குக் கோபம் வந்துவிட்டது. சீனர்களுக்குப் பாடங்கற்பிக்க வேண்டுமென்று தீர்மானித்தன. பிரிட்டிஷ், பிரெஞ்சு, போர்த்துகேசிய, ஜப்பானிய யுத்தக் கப்பல்கள், காண்டன் துறைமுகத் திற்குள் பிரவேசித்து நங்கூரம் பாய்ச்சிக் கொண்டு, கிளர்ச்சிக்காரர் களென்று கருதப்பட்டவர்கள்மீது தங்கள் பீரங்கி களைத் திருப்பின. எராளமான உயிர்ச்சேதம் உண்டாயிற்று. இது சீனர்களுக்கு இன்னும் அதிக ஆத்திரத்தை உண்டு பண்ணியது. இந்த ஆத்திரம் குறிப்பாக பிரிட்டிஷார் மீது திரும்பியது. பிரிட்டிஷ் சாமான் பகிஷ்கார இயக்கம் வலுத்தது. பிரிட்டிஷ் தொழிற் சாலைகளில் வேலை செய்யச் சீனர்கள் மறுத்துவிட்டார்கள். பிரிட்டிஷ் பிரஜைகளுக்கும் சீனர்களுக்கும் அடிக்கடி கைகலந்த சண்டைகள் - சுமார் இரண்டு வருஷ காலம் வரை - நடைபெற்றுக் கொண்டு வந்தன.
இந்தக் காலத்தில் அந்நியர்களுடைய மதம், சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள் முதலிய எல்லாவற்றின் மீது சீனர்களுக்கு ஒரு விரோத உணர்ச்சி ஏற்பட்டு விட்டது. கிறிதுவப் பாதிரிமார்கள் நடத்திவந்த பள்ளிக்கூடங்களிலிருந்து சீன மாணாக்கர்கள் கும்பல் கும்பலாக வெளியே வரத் தொடங்கினார்கள். ஊர்வலங்களுக்கும் கூட்டங்களுக்கும் கணக்கு வழக்கேயில்லை. ஏற்றத் தாழ்வான ஒப்பந்தங்கள் ஒழிக, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் வீழ்க, பாசிட் டுகள் அழிக என்பன போன்ற சுவரொட்டி விளம்பரங்கள் எங்கணும் காட்சியளித்தன. தங்கள் சொந்த நாட்டிலே தங்களுக்கு உரிமை இல்லாமலிருக்க, அந்நியர்களுக்குமட்டும் விசேஷ உரிமைகள் ஏன், விசேஷ சலுகைகள் ஏன் என்று சர்வ சீனர்களும் சேர்ந்து ஒரு குரலால் கேட்டார்கள். அந்நியர் என்றால் அலட்சியம்; அந்நியச் சாமான் என்றால் அருவருப்பு; பொதுவாக அந்நியப் போர்வை போர்த்திக் கொண்டுள்ள எதன்மீதும் ஓர் அவமதிப்பு. பாக்ஸர் கலகத்தின் போதுகூட இவ்வளவு துவேஷம் அந்நியர்கள் மீது ஏற்படவில்லை யென்று, இந்தக் காலத்துச் சம்பவங்களுக்குச் சாட்சியாயிருந்த ஓர் அறிஞன் கூறுகிறான். பாக்ஸர் கலகம் அந்நிய ஆதிக்கத்திற்கு விரோத மாக எழுந்தது; 1925-26-ஆம் வருஷத்து இயக்கமோ அந்நிய நாகரிகத்திற்கே விரோதமாகத் தோன்றியது. முன்னதில் அந்நியர்களுடைய உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டது; பின்னதில் அந்நியர்களுடைய வியாபாரத்திற்கு நஷ்டம் உண்டாயிற்று.
இங்ஙனம் ஒரு புறத்தில் அந்நியர்களுக்கு விரோதமான இயக்கம் நடைபெற்றுக் கொண்டு வந்தபோதிலும், இஃது எதிர் மறையான பலனைக் கொடாமலிருக்க மற்றொரு புறத்தில் தேசீய உணர்ச்சி வளர்ந்தும், வலுத்தும் வந்தது. இதற்குத் துணையாகவே, இறந்துபோன ஸன் யாட் ஸென் மீது ஜனங்களின் கவனம் திருப்பப்பட்டது. உயிரோடிருந்த வரையில் அவனைத் தலைவனாகப் பின் பற்றினார்கள் தெற்கு மாகாண வாசிகள். இறந்த பிறகு அவனைத் தெய்வமாகக் கொண்டாட ஆரம்பித் தார்கள் சர்வ சீனர்களும். அவனுடைய பேச்சுக்கள், எழுத்துக்கள் எல்லாம் சேர்ந்து ஸன் யாட் ஸீயம் என்ற தேசீய மதமாக உருக்கொண்டன. வீடு தோறும் அவனுடைய உருவப் படங்கள்! சதுக்கந்தோறும் அவனுடைய உருவச் சிலைகள்! பள்ளிக் கூட மாணாக்கர்கள் அவனுடைய உபதேசங்களை மனப்பாடஞ் செய்தார்கள்! அவன் கடைசி காலத்தில் எழுதி வைத்துப் போனதாகச் சொல்லப்படுகிற உயிலை,1 அவனுடைய சிஷ்யர்கள் பூஜையிலே வைத்து திங்கட்கிழமைதோறும் அதற்குக் கும்பிடு போட்டார்கள்! இப்படி யெல்லாம் செய்வது, அவன் இருந்த காலத்தில் திரண்டு வந்த தேசீய சக்திகள், அவன் இறந்த பிறகு சிதறிப் போகாமல் பாது காப்பதற்கு அவசியமாயிருந்தது.
இங்ஙனம் கோமிண்டாங் கட்சியின் கவனமும் தேச மக்களின் கவனமும் வெளிவிவகாரங்களில் சென்றுவிட்டபடியால், கட்சிக் குள்ளே புகைந்து கொண்டிருந்த பொறாமைகள், பூசல்கள் எல்லாம், தற்காலிக மாகவேனும் தலைகாட்டாமலிருந்தன. தேசத்தின் அபிலாஷைகளைப் பிரதிபலித்துக் காட்டுகிற கட்சி கோமிண்டாங் கட்சி ஒன்றுதான் என்ற எண்ணம் பொதுஜனங்களிடத்தில் பரவி யிருந்தது. பொதுவுடைமை வாதிகள் இந்த எண்ணத்தை உறுதிப் படுத்திக் கொண்டு வந்தார்கள்.
இவைகளுக்கு மத்தியில், காண்டன் நகரத்தில் ஏற்கனவே நடைபெற்றுக்கொண்டிருந்த தேசீய அரசாங்கம், ஸன் யாட் ஸென் மரணத்திற்குப் பிறகு குடியரசு முறையில் திருத்தி யமைக்கப் பட்டது. ஸன் யாட் ஸென்னின் முக்கிய சிஷ்யர்களில் ஒருவனும் சிறந்த நாவலனுமான வாங் சிங் வெய் என்பவன் இதற்குத் தலைவனாகத் தெரிந்தெடுக்கப்பட்டான் (1-6-1925). இவனை வாசகர்கள் ஞாபகத் தில் வைத்துக் கொள்வது அவசியம்.
ஸன் யாட் ஸென் இறந்து போவதற்கு முன்னர், வட மாகாணங்களில் அட்டூழியம் புரிந்து கொண்டுவந்த ராணுவப் பிரபுக்களை ஒழித்து, பீகிங் நகரத்தில் பழைய மாதிரி சர்வ சீனாவுக்கும் பொதுவான ஒரு மத்திய அரசாங்கத்தை தாபிப் பதற்கு வேண்டிய ஒரு திட்டத்தை வகுத்திருந்தானல்லவா? இந்தத் திட்டத்தை நிறைவேற்றி வைப்பதற்காக மேற்படி தேசீய அரசாங்கத் தினால் ஒரு மகாநாடு கூட்டப் பெற்றது. இந்த மகாநாட்டில், வட மாகாணங்களின் மீது படை யெடுத்துச் சென்று வெற்றி காணும் பொறுப்பு சியாங் கை ஷேக்கிடம் ஒப்படைக்கப்பட்டது. அதாவது, சியாங் கை ஷேக், தேசீய ராணுவத்தின் சேனாதிபதியாக நியமிக்கப் பட்டான். இதுகாறும் இவன் வாம் போவா ராணுவக் கழகத்தின் மேலதிகாரியாக மட்டும் இருந்தான். இப்பொழுது, தேசத்தின் ஆவலை நிறைவேற்றிவைக்கும் புனிதமான பொறுப்புடைய தலைவனானான். இந்தக் காலத்திலிருந்து இவனுடைய கிரகம், சீன அரசியல் வானில் உச்சி நோக்கி ஏற ஆரம்பித்தது. இந்த சியாங் கை ஷேக் யார்?
சீனாவின் கிழக்கே கடலோரமாகவுள்ள பெங் ஹுவா என்ற ஒரு சிறிய ஊரில் 1887 - ஆம் வருஷம் சியாங் கை ஷேக் பிறந்தான். இவனுடைய தகப்பனார் ஒரு சில்லரை வியாபாரி; தாயார் உழைக்கிற சக்தியும் உலக ஞானமும் நிறைந்தவள். தனது ஒன்பது வயதிலேயே தந்தையைப் பறிகொடுத்த சியாங், தாயாரின் போஷணையிலே வளர்ந்தான். அவள், மகனைப் பள்ளிக் கூடத்திற்கு அனுப்பியும், வீட்டிலேயே நல்ல போதனைகளைச் செய்தும் ஒழுங்காக வளர்த்து வந்தாள். தனது வாழ்க்கை பண்பட அமைவ தற்குத் தன் தாயாரே முக்கிய காரணம் என்று சியாங் பல தடவை களில் கூறியிருக்கிறான்.
பாக்ஸர் கலகத்திற்குப் பிறகு, யுவான் ஷி காயின் மேற் பார்வையில் நவீன சாதனங்களுடன் கூடிய ராணுவப் பயிற்சிக் கழகங்கள் சீனாவின் பல பாகங்களிலும் தாபிக்கப்பட்டன. இவற்றிலே ஒன்று பாவோடிங் என்ற ஊரில் தாபிக்கப்பட்டிருந்த ராணுவப் பயிற்சிப் பள்ளிக்கூடம். இதில் போய்ச் சேர்ந்து கொண்டான் சியாங் தனது பதினெட்டாவது வயதில். இங்கு இவனுக்கு யுவான் ஷி காயின் தொடர்பு ஏற்பட்டது. அவனுடைய சூழ்ச்சித் திறன், அதிகார தோரணை முதலியவற்றையெல்லாம் இவன் நன்றாகக் கற்றுக் கொண்டான். பின்னர் 1907-ஆம் வருஷத்திலிருந்து 1910-ஆம் வருஷம் வரை ஜப்பானுக்குச் சென்று அங்கே நவீன யுத்த தந்திரங்களை யெல்லாம் நன்கு பயின்றான். ஜப்பானில் இருந்த காலத்தில் இவன், ஸன் யாட் ஸென் முயற்சியின் பேரில் தாபிக்கப்பட்ட டுங் மெங் ஹுயி என்னும் சீனப் புரட்சிக் கட்சியில் சேர்ந்தான்.
1911-ஆம் வருஷம் சீனாவில் புரட்சி தொடங்கியதும், ஜப்பானி லிருந்து திரும்பிவந்து புரட்சி சைனியத்தில் சேர்ந்து கொண்டு, யுவான் ஷி காயினால் அனுப்பப்பெற்ற மஞ்சூ அரசாங்கப் படைகளோடு பல இடங்களில் போரிட்டான். இதற்குப் பின்னர் 1913-ஆம் வருஷம் ஜூலை மாதம் ஷாங்காய் நகரத்திற்குச் சென்று அங்கே அப்பொழுதிருந்த ஸன் யாட் ஸென்னின் அந்தரங்கக் காரியதரிசிகளில் ஒருவனானான். அது முதற்கொண்டு 1923-ஆம் வருஷம்வரை இவனுடைய பொதுவாழ்க்கை, ஸன் யாட் ஸென்னு டைய வாழ்க்கையோடு ஒட்டியே சென்றது. ஸன்னுடன் சீனாவின் பல மாகாணங்களுக்கும் சுற்றுப் பிரயாணஞ் செய்தான். ஜனங் களின் அரசியலறிவு, பொருளாதார வாழ்க்கை முதலியவை களை யெல்லாம் ஒருவாறு கணித்துக் கொண்டான். ஸன்னுக்கு இவனிடத் தில் அத்தியந்த விசுவாசம். இவனைத் தன் மகன் போலவும், முக்கிய சிஷ்யர்களிலே ஒருவனாகவும் நடத்தி வந்தான். அவனுடைய கடைசி காலத்தில் அவன் உயிருக்கு ஆபத்தே ஏற்படக்கூடிய மாதிரி சில சூழ்ச்சிகள் நடைபெற்றன. அப்பொழுதெல்லாம் சியாங் அவனுக்குப் பக்கபலமாயிருந்து காப்பாற்றியிருக்கிறான்.
1924-ஆம் வருஷம் காண்டன் அரசாங்கத்திற்கும் ருஷ்ய சோவியத் அரசாங்கத்திற்கும் நட்பு ஏற்பட்டு, போதனை செய்வதற்கு அறிஞர் களையும் பயிற்சி பெறுவதற்கு இளைஞர்களையும் பரபரம் ஒன்றுக் கொன்று அனுப்பிக் கொண்டபோது, ஸன் யாட் ஸென், சியாங்கை ருஷ்யாவுக்கு அனுப்பி, அங்கே ட்ரோட்கி1 என்ற நிபுணன், எப்படி எப்படி செம்படையை அமைத்திருக்கிறான், அஃது அநேக விதமான எதிர்ப்புகளை எப்படி சமாளித்து வருகிறது, பொதுவுடைமைக் கட்சியின் ராணுவ சம்பந்தமான கொள்கை யென்ன முதலியவைகளையெல்லாம் அறிந்து கொண்டு வருமாறு செய்தான். இப்படி இவன் சென்றது, இவனுடைய வாழ்க்கையின் முக்கியமான திருப்பங்களிலே ஒன்று. போரோடின், காலென் என்ற ருஷ்ய அறிஞர்கள், காண்டன் அரசாங்கத்திற்கு ஆலோசகர் களாக வந்தபோது, சீனப்படைத் தலைவர்களில் சியாங் ஒருவன் தான், ருஷ்யச் செம்படையின் அமைப்பு விவரங்களையெல்லாம் அறிந்தவனா யிருந்தான். இதனாலேயே இவன் வாம்போவாவில் (1924-ஆம் வருஷம் மே மாதம்) தாபிக்கப்பட்ட ராணுவக் கழகத்திற்குப் பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டான்.
1925-ஆம் வருஷத் தொடக்கத்தில், கோமிண்டாங் கட்சியில் பொது வுடைமை வாதிகளின் செல்வாக்கு வளர்ந்துவருவதைக் கண்டு, காண்டனுக்குத் தெற்குப் பிரதேசங்களிலுள்ள சில நிலப் பிரபுக்கள் வெருண்டு கலகத்திற்குக் கிளம்பினார்கள். சியாங், வாம் போவா கழகத்தில் தன்கீழ் பயின்று கொண்டிருந்த ராணுவ இளைஞர்களின் துணை கொண்டு கலகத்தை அடக்கி விட்டான். இளைஞர் சமுதாயத்தின் மத்தியிலே, சிறப்பாகப் பொதுவுடைமை வாதிகளின் மத்தியிலே இவனுடைய செல்வாக்கு விருத்தியடைந்தது. வாம்போவா கழகத்திற்குத் தலைவனாகத் தெரிந்தெடுக்கப்பட்ட மறுவருஷம், கோமிண்டாங் கட்சியின் நிருவாகசபையில் ஓர் அங்கத்தினனாகத் தெரிந்தெடுக்கப் பட்டான். கட்சியின் முக்கிய தர்களிலே ஒருவனானான். ராணுவ சம்பந்தமான விஷயங்களில் இவனுடைய யோசனைக்குத்தான் கட்சியினர் மதிப்புக் கொடுத்தனர். சீனாவின் அரசியல் சரித்திரத்தில் எத்தனையோ பேர் அதிகாரத்தைக் கைப்பற்ற முயன்றிருக்கிறார்கள். ஆனால் யாருக்கு ராணுவத்தின் பின்பலம் இருக்கிறதோ அவர்கள்தான் வெற்றியடைந் திருக் கிறார்கள். இந்த நியதிக்குப் புறம்பாகவில்லை சியாங்கை ஷேக், ஸன் யாட் ஸென்னுக்குப் பிறகு, போட்டியில்லாத தலைவனாக சியாங் கை ஷேக் ஏற்றுக் கொள்ளப்பட்டா னென்றால், அதற்கு முக்கிய மான காரணம் இவனுடைய ராணுவ பலந்தான்.
பொதுவுடைமை வாதிகளின் மத்தியில் இவனுடைய செல்வாக்கு விருத்தியடைந்து கொண்டு வந்தது என்று மேலே சொன்னோமல்லவா? இந்தச் செல்வாக்கை இவன், தன் தலைமைப் பதவிக்குச் சாதகமாக எவ்வளவு தூரம் உபயோகித்துக்கொள்ள வேண்டுமோ அவ்வளவு தூரம் உபயோகித்துக் கொண்டுவிட்டு, பின்னர், அந்தத் தலைமைப் பதவியில் தான் எவ்வித சகாயமுமில் லாமல் நன்றாக ஊன்றிக் கொண்டு விடமுடியும் என்று தெரிந்ததும், அந்தச் செல்வாக்கை, பொதுவுடைமை வாதிகளையேகூட அப்புறப்படுத்திவிடத் துணிந்தான். பொதுவுடைமைக் குதிரையின் மீது ஏறிக் கொண்டு தலைமை தானத்தை அடைந்த பிறகு, அந்தக் குதிரையையே குழிதோண்டிப் புதைக்க ஆரம்பித்தான் என்பதே சியாங்கைப்பற்றிப் பொதுவுடைமை வாதிகள் கொண்டுள்ள அபிப்பிராயம். சியாங்குக்காகப் பரிந்து பேசுகிற யாரும் இந்த அபிப்பிராயத்தில் உண்மை யில்லையென்று சொல்லவும் துணிய வில்லை. சியாங்கின் தலைமைப் பதவிக்குப் பிற்காலத்தில் கொடுக்கப்பட்ட மெருகின் பிரகாசத்திலே, இவன் அந்தப் பதவிக்கு எப்படி வந்தான், யார் மூலமாக வந்தான் என்ற வரலாறுகள் மறைந்து போயிருக்கலாம்; மறைந்துபோகும்படி செய்யப்பட்டி ருக்கலாம். ஆனால் சரித்திரத்தின் ஆழத்தில் உண்மை புதைந்தே இருக்கிறது.
வட மாகாணங்களின் மீது படையெடுத்துச் செல்லும் பொருட்டு சியாங் கை ஷேக் பிரதம சேனாதிபதியாக நியமிக்கப் பட்டானல்லவா? அப்படித் தெரிந்தெடுக்கப்பட்டது, மகா நாட்டினர் தாங்களே மனமொப்பிச் செய்த காரியமல்ல, திரை மறைவில் நடைபெற்ற பல சூழ்ச்சிகளுக்குப் பிறகு தான் என்று பொதுவுடைமை வாதிகள் கூறுகிறார்கள். ஸன் யாட் ஸென் உயிரோடிருந்தபோதே வட மாகாணங்களின் மீது படையெடுத்துச் செல்ல வேண்டுமென்ற அவனுடைய திட்டத்தை போரோடின்னும் அவனுடைய பொதுவுடைமைச் சகாக்களும் எதிர்த்துவந்தார்கள். பொது வுடைமைக் கொள்கையை நாடு முழுவதிலும் பரப்புவது முதன்மையான வேலையென்று இவர்கள் கூறினார்கள். ஆனால் பொதுவுடைமை வாதிகளைக் கோமிண்டாங் கட்சியில் சேர்த்துக் கொள்ளக் கூடாதென்று முதலிலிருந்து ஆட்சேபித்து வந்தவர்கள் - இவர்கள் தங்களை தேசீயவாதிகளென்று அழைத்துக் கொண் டார்கள் - உள்நாட்டு விரோதங்களை முதலில் அகற்றவேண்டு மென்றும், வட மாகாணங் களின் மீது ஒரு பெரும் படையை அனுப்ப வேண்டியது அவசியமென்றும் வற்புறுத்தி வந்தார்கள். கோமிண்டாங் கட்சிக்குள் இந்தக் கருத்து வேற்றுமைகள் இருந்த போதிலும் ஸன் உயிரோடிருந்தவரையில் இவை தலைகாட்ட வில்லை; இறந்த பிறகு தலைதூக்கின. வாம்போவா ராணுவக் கழகத்தின் பின்பலத்தைப் பெற்றிருக்கிற சியாங் கை ஷேக், தேசீய வாதிகளின் கட்சியை ஆதரித்தான். அந்தப் படையெடுப்புக்குத் தான் தலைமை வகித்து நடத்தி, அதன் மூலமாகப் பெயரும் புகழும் சம்பாதிக்கவேண்டுமென்ற எண்ணம் இவனுக்கு இருந்ததோ என்னவோ தெரியாது. இவன் இப்படி தேசீயவாதிகளின் கட்சியை ஆதரித்த போதிலும், போரோடின் கட்சியின் அபிப்பிராயத்திற்கே -அதாவது வட மாகாணங்களின் மீது படையெடுத்துச் செல்லக் கூடாதென்ற அபிப்பிராயத்திற்கே - அதிக செல்வாக்கு இருந்தது. எனவே சியாங், தனது கட்சியைச் சாதித்துக் கொள்ள ரகசியச் சூழ்ச்சி செய்ய வேண்டியது அவசியமாயிற்று. பெங்ஹு சியாங் (கிறிதுவ தளபதி என்று இவனுக்குப் பெயர்) என்பவனை கோமிண்டாங் கட்சியில் சேருமாறு தூண்டுவதற்குப் போரோடின், காண்டன் நகரத்தை விட்டு வெளியே சென்றிருக்கையில், (அதாவது அவன் இல்லாத சமயம் பார்த்து) 1926-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் இருபதாந் தேதியன்று, சியாங் கை ஷேக், சில ருஷ்யர்களையும் பல பொதுவுடைமைவாதிகளையும் கைது செய்தான். பின்னர் வேலை நிறுத்தம், பிரிட்டிஷ் பகிஷ்காரம் ஆகியவை சம்பந்தமாக காண்டனுக்கும் ஹாங்காங்குக்கும் ஏற்பட்டிருந்த தகராறுகளைத் தீர்த்துவைக்கும் முயற்சியிலே ஈடுபட்டிருந்தான். ** சீனப் பொது வுடைமை வாதிகள் பலர் தலைமறைவாகச் சென்றுவிட்டார்கள். இன்னும் சிலர் கட்சியினின்றே விலகிக்கொண்டுவிட்டார்கள். பொதுவுடைமை விரோதிகளுக்கு எக்களிப்பு; போரோடின், காண்டனுக்குத் திரும்பிவந்தால் என்ன ஆகப் போகிறதென்ற வியப்பு பலருக்கு, அவன் திரும்பி வருவானென்றே பொதுவுடைமை வாதிகள் நம்பியிருந்தார்கள்.
மே மாதம் ஐந்தாந் தேதி அவன் திரும்பியே வந்து விட்டான். சியாங்கும் போரோடின்னும் ஒரு சமரஸ ஏற்பாட்டுக்கு வந்தார்கள். வட மாகாணப் படையெடுப்புக்கு ருஷ்யர்கள் ஆதரவு கொடுப்பதாகக் கூறினார்கள். பொதுவுடைமை வாதிகளை விடுதலை செய்து அவர்கள் பழைய மாதிரி தானங்களை வகிப்பதற்கு சியாங் சம்மதித்தான். இதற்குப் பிறகு போரோ டின்னும் சியாங் கை ஷேக்கும் பரபர அவநம்பிக்கையுடைய வர்களாகவே இருந்தார்கள்.
உள்ளுக்குள்ளே நடைபெற்ற இந்தச் சமரஸ ஏற்பாட்டுக்குப் பிறகுதான், சியாங், தேசீய மகாநாட்டில் பிரதம சேனாதிபதியாக நியமிக்கப்பட்டான். இந்த நியமனத்திலிருந்தே சீனாவின் இரண்டாவது புரட்சி தொடங்கியதென்று சொல்லவேண்டும். இந்தப் புரட்சியின் நோக்கம் இருவகைப்பட்ட தென்று மேற்படி மகாநாட்டிலேயே வரையறுக்கப் பட்டது. ஒன்று, அந்நிய ஏகாதி பத்திய சக்திகளின் பிடியினின்று சீனாவை விடுதலை செய்து சுதந்திர அரசை நிலைநாட்டப் போராடுவது; மற்றொன்று, ராணுவப் பிரபுக்கள், அதிகார வர்க்கத்தினர், முதலாளிகள் முதலியோருடைய செல்வாக்கை அழித்து விடுவது.
இந்த நோக்கங்களை நிறைவேற்றி வைப்பதற்காக சியாங், வாம்போவா ராணுவக் கழகத்தில் தன் கீழ் பயிற்சிபெற்ற இளைஞர் களை உதவி தளகர்த்தர்களாகக் கொண்டு ஒரு பெரிய தேசீய ராணுவத்துடன் 1926-ஆம் வருஷம் ஜூன் மாதம் வடக்கு நோக்கிப் புறப்பட்டான். இவர்களுக்கு முன்னால், பிரசாரக் கூட்டம் ஒன்று ஜனங்களை மேற்படி ராணுவப் பிரபுக்கள், முதலாளி வர்க்கத்தினர் இவர்களுக்கு விரோதமாகத் தூண்டிவிட்டுக் கொண்டு சென்றது. இதன் பயனாக, தேசீய ராணுவத்திற்கு அதிக எதிர்ப்பு இல்லாமற் போய்விட்டது. இந்தப் பிரசார வேலையில் பொதுவுடைமை வாதிகள்தான் அதிக ஊக்கத்துடன் ஈடுபட்டார்க ளென்பதைக் குறிப்பிட வேண்டும்.
சியாங்கின் தேசீயப் படையானது சில மாதங்களுக்குள், குவாங்டுங்2 மாகாணத்திற்கு வடக்கேயுள்ள ஹ்யூனான், கியாங்க்ஸி ஆகிய இரண்டு மாகாணங்களைக் கைப்பற்றிக் கொண்டு மேலே ஹ்யூப்பே மாகாணத்தில் நுழைகையில், மத்திய சீனாவில் அப் பொழுது அதிக செல்வாக்குப் பெற்றிருந்த வூ பை பூ3 என்ற ராணுவப் பிரபுவின் படைகள், இவன் முன்னேற்றத்தைத் தடுத்து நின்றன. இருவருடைய படைகளுக்கும் சுமார் நான்கு நாட்கள் வரை மும் முரமான யுத்தம் நடைபெற்றது. வூ பை பூவின் படைகள் அப்படியே அழிந்துபட்டன. 1926-ஆம் வருஷம் அக்டோபர் மாதம் - அதாவது படையெடுப்பு தொடங்கிய மூன்று நான்கு மாதங்களுக்குள் - ஹாங்கோ நகரம் சியாங்கின் சுவாதீனமாயிற்று. இந்த நகரம், மத்திய சீனாவின் முக்கிய பட்டினம். 1911-ஆம் வருஷத்துப் புரட்சி இங்குதான் முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டது. இங்கும், இதனோடு ஒட்டினாற் போலுள்ள வூசங், ஹான்யாங் என்ற நகரங்களிலும்1 விசேஷமான தொழிற்சாலைகள் இருக்கின்றன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இங்கே வசிக்கிறார்கள். இந்தப் பிரதேசத்தை சியாங் கைப்பற்றிக் கொண்டது. காண்டன் அரசாங் கத்தில் அப்பொழுது அதிக செல்வாக்குப் பெற்றிருந்த பொதுவு டைமை வாதிகளுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பமாயிற்று. ஏனென்றால், தங்களுடைய பொதுவுடைமைக் கொள்கையைச் சுலபமாகப் பரப்புவதற்கு ஹாங்கோ நகரமும் அதைச் சுற்றியுள்ள பிரதேசங்களும் ஏற்ற இடங்களல்லவா? மற்றும், தேசீய அரசாங்கத்தின் எல்லை விதரித்துக்கொண்டுபோக விதரித்துக் கொண்டு போக, அதற்குத் தகுந்தாற்போல், அரசாங்கத்தின் தலைநகரமும் மையமான ஓர் இடத்திற்குச் செல்லுதல் நல்லதல்லவா? இந்த மாதிரியான உத்தேசங்க ளைக் கொண்டுபோலும் வாங் சிங் வெய் தலைமையின் கீழ் இயங்கிக் கொண்டு வந்த தேசீய அரசாங்க மானது, தனது தலைநகரத்தை காண்டனிலிருந்து ஹாங்கோவுக்கு 1926-ஆம் வருஷம் நவம்பர் மாதம் - அதாவது சியாங்கின் சுவாதீனத்திற்கு மேற்படி நகரம் வந்த மறு மாதம் - மாற்றிக் கொண்டது. இதற்கு இனி வூஹான் அரசாங்கம் என்று பெயர்.
இப்படி வூஹானுக்கு அரசாங்கம் வந்துவிட்ட பிறகு, இந்த அரசாங்கத்தின் ஆதீனத்துக் குட்பட்ட பிரதேசங்களில், பொதுவு டைமை வாதிகள் தங்கள் கொள்கையைத் தீவிரமாகப் பிரசாரம் செய்யலானார்கள். இந்தப் பிரசாரம் வூஹான் அரசாங்கத்தின் பெயராலேயே நடைபெற்றது. நிலச்சுவான்தார்களென்ன, தொழில் முதலாளிகளென்ன இவர்களுக்கு விரோதமான இயக்கம் கொப்பளித்து எழுந்தது. ஏற்கனவே அந்நியர்கள்மீது துவேஷம் பரவியிருந்ததல்லவா? இவை இரண்டும் சேர்ந்துகொண்டன. எங்குப் பார்த்தாலும் வேலை நிறுத்தங்கள், முதலாளி களுக்கு விரோதமான பலாத்காரச் செயல்கள் இப்படியாக ஆரம்பித்து விட்டன. இவற்றோடு முன்னே சொன்ன கிறிதுவர்களுக்கு விரோதமான இயக்கமும் சேர்ந்துகொண்டது. ஒருவித பயங்கர ஆட்சி நடைபெற்ற தென்று சொல்ல வேண்டும். ஜனங்களுக்கு மன நிம்மதி யில்லாமற் போய்விட்டது. கோமிண்டாங் கட்சியினால் தங்களுக்கு விமோசனம் கிடைக்கப் போகிறதென்று கருதி அவர் களுக்கு மரியாதை செலுத்திவந்த பாமர ஜனங்கள், இப்பொழுது அதே கோமிண்டாங் கட்சியினரைக் கண்டு பயப்படலானார்கள். அந்நியப் பிரஜைகளும் சீன முதலாளிகளும், ஹாங்கோ போன்ற முக்கியமான துறைமுகப்பட்டினங்களிலிருந்து சென்று ஷாங் காயில் அடைக் கலம்புகுந்து கொண்டார்கள். வூஹான் அரசாங்கத்தைக் கண்டு ஒரு திகைப்பு, ஒரு பயம் எல்லோருக்கும் ஏற்பட்டுவிட்டது. இந்த நிலையில், பிரிட்டன், தன்னுடைய வியாபாரம் கட்டோடு நின்று போகாமலிருக்க வூஹான் அரசாங்கத்துடன் சமரஸம் பேசியது. இந்தச் சமரஸப் பேச்சுக்களின் பயனாக 1927-ஆம் வருஷம் மார்ச்சு மாதம், ஹாங்கோ, கியு கியாங் என்ற இரண்டு ஒப்பந்தத் துறை முகப் பட்டினங்களில், தன்னுடைய அனுபவத்திலிருந்த கன்ஸெஷன் களைச் சீனாவுக்கே திருப்பிக் கொடுத்துவிட பிரிட்டன் சம்மதித்தது. இதற்குப் பிறகு தான் மற்ற வல்லரசுகளுக்கு, தங்கள் தங்களுடைய விசேஷ உரிமைகளை விட்டுக்கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் உண்டாயிற்று; அவசியமும் நேரிட்டது. இதைப் பின்னர் கவனிப்போம்.
பிரிட்டன், இந்த கன்ஸெஷன்களைத் திருப்பிக் கொடுத்துப் பணிந்து போனது வூஹான் அரசாங்கத்திற்குப் பெரிய வெற்றி. அதன் அங்கத்தினர் களுக்குத் தலை கால் தெரியவில்லை. இந்த உற்சாகமேலீட்டால் பொதுவுடைமை வாதிகளாயுள்ளவர்கள் நிதானந் தவறி நடந்துகொள்ள ஆரம்பித்தார்களென்று சொல்லப் படுகிறது. பணக்காரர்கள், முதலாளிகள் முதலியோருக்கு விரோத மான பிரசாரம் முன்னைவிட மும்முர மாகியது. போரோடின், ஒரு சர்வாதிகாரி போலவே காரியங்களை நடத்தி வந்தான். இவனுக்கும் சியாங் கை ஷேக்குக்கும் ஏற்கனவே இருந்த பரபர அவநம்பிக்கை யானது, சியாங்கை நன்றாக உபயோகித்துக் கொண்டாய் விட்டது; இனி அவன் எதற்கு என்ற கேள்வியாகப் பரிணமித்தது. இவை யெல்லாம் வூஹான் அரசாங்கத்தின் நிதானதர்களாயுள்ள அங்கத்தினர் களுக்குப் பிடிக்கவில்லை. விளைவு என்ன? அரசாங் கத்திற்குள்ளேயே இரண்டு கட்சிகள் தோன்றிவிட்டன. இஃது இப்படி இருக்கட்டும்.
சியாங் கை ஷேக், ஏற்கனவே தான் போட்ட திட்டப்படி, தனது தேசீயப் படையுடன் வட கிழக்கிலுள்ள ஷாங்காயை முன்னோக்கிச் சென்று கொண்டிருந்தான். ஏனென்றால் இந்த நகரந்தான் அந்நிய ஆதிக்கத்திற்கு ஆணிவேர் போலவும், சீன முதலாளிகள், தங்கள் பணத்தையும் சொத்தையும் பத்திரமாகப் போட்டு வைப்பதற்குரிய இரும்புப்பெட்டி போலவும் இருந்தது. இந்த நகரத்தைச் சுவாதீனப் படுத்திக் கொண்டுவிட்டால், மத்திய சீனாவின் பெரும் பகுதியைச் சுவாதீனப் படுத்திக் கொண்டது போலத்தான். இந்தக் காரணங்களினாலேயே சியாங், ஷாங்காயை நோக்கிச் சென்று அந்த நகரத்தை 1927-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் இருபதாந்தேதி கைப்பற்றிக் கொண்டான்; இருபத்துநான்காந்தேதி நான்கிங் நகரமும் இவன் சுவாதீனத்திற்கு வந்தது. இந்த இடத்தில் தன்னுடைய தலைமையில் தனியாக ஓர் அரசாங்கத்தை தாபித்துக் கொண்டான்.1 இப்படி இவன் நான்கிங்கில், வூஹான் அரசாங்கத் திற்கு விரோதமாக வேறோர் அரசாங்கத்தை தாபித்துக் கொண்ட தற்குத் தூண்டுகோலாகவும், துணையாகவும் இருந்தவர்கள் ஷாங்காய் நகரத்துச் சீன முதலாளிகள் என்று சொல்லப்படுகிறது.2 இவர்கள் பொதுவுடைமை வாதிகளின் அட்டூழியத்தை அடக்கி, நாட்டில் ஒழுங்கையும் சமாதானத்தையும் நிலைநாட்ட வேண்டிய தன் அவசியத்தை முன்னிட்டு, சியாங்குக்குச் சுமார் நாலரை கோடி ரூபாய் கொடுத்து உதவினார் களென்றும், இந்தப் பலத்தைக் கொண்டுதான் சியாங், ஸன் யாட் ஸென்னின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதாகக் காரணத்தைச் சொல்லிக் கொண்டு நான்கிங்கில் ஓர் அரசாங்கத்தை தாபித்தானென்றும் ஒரு வரலாறு கூறுகிறது. எப்படியோ 1927-ஆம் வருஷம் ஏப்ரல் மாதந் தொடங்கிச் சில மாத காலம் வரையில் சீனாவில் வூஹான் அரசாங்க மென்றும், நான்கிங் அரசாங்கமென்றும் இரண்டு பட்ட தேசீய அரசாங்கங்கள் நடை பெற்றன. இவை தவிர, ஆங்காங்கு ராணுவப் பிரபுக்களினுடைய ஆதிக்கத்தின்கீழ் நடைபெற்றுவந்த மாகாண அரசாங்கங்கள் வேறே.
சியாங், ஷாங்காயையும் நான்கிங்கையும் சுவாதீனப்படுத்திக் கொள்வதற்கு முன்னாடியிருந்தே அந்த இரு நகரங்களிலும் பொது வுடைமை வாதிகளின் பிரசாரம் அதிகமாயிருந்தது. என்றைய தினம் நான்கிங் நகரம் சியாங்கின் வசப்பட்டதோ அன்றைய தினமே பொதுவுடைமை வாதிகளின் செல்வாக்குக் குட்பட்டிருந்த ராணு வத்தின் ஒரு பகுதி, மேற்படி நகரத்திலுள்ள அந்நியர்களின் தாபனங்கள் பலவற்றையும் சூறையாடியது. அந்நியர் சிலர் மாண்டனர். பலருக்குக் காயம். இதனைத் தடுப்பதாகக் காரணஞ் சொல்லிக் கொண்டு, பிரிட்டிஷ், அமெரிக்க யுத்தக் கப்பல்கள் துறை முகத்திற்குள் வந்து நகரத்தை நோக்கிப் பீரங்கிப் பிரயோகம் செய்தன. இவைகளுக்கெல்லாம் காரணர்கள் பொதுவுடைமை வாதிகளல்லவா? மற்றும், தான் வடக்கு நோக்கிப் படையெடுத்து முன்னேறிச் சென்று கொண்டிருக்கையில், பொதுவுடைமை வாதிகள், தேசீய அரசாங்கத்தை காண்டனிலிருந்து வூஹானுக்கு மாற்றிவிட்டார்களல்லவா என்றெல்லாம் சிந்திக்கத் தொடங் கினான் சியாங். நான்கிங்கில் அரசாங்கத்தை தாபித்துக் கொண்டதும் இவனுடைய சிந்தனை, பொதுவுடைமை வாதிகளின் மீது ஆத்திர மாகத் திரும்பியது. அவ்வளவுதான். இவனுடைய ஆதிக்கத் திற்குட் பட்டிருந்த பிரதேசங்களில் கடுமையான அடக்குமுறை ஆரம்பித்து விட்டது. பொதுவுடைமை வாதிகள் படுகொலை செய்யப் பட்டார்கள். பொதுவுடைமை இயக்கத்தில் சம்பந்தப்பட்டிருப்பது, மரண தண்டனைக்குரிய ஒரு குற்றமென்று நான்கிங் அரசாங்கம் ஒரு சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வந்தது. சோவியத் ருஷ்யாவில் செம்படைகளுக்கு விரோதமாக வெண்படைகளின் பயங்கர ஆட்சி எப்படி நடைபெற்றதோ ஏறக்குறைய அதைப்போல, வூஹான் அரசாங்கத்துப் பொதுவுடைமை வாதிகளின் பயங்கர ஆட்சியை அடக்கி ஒடுக்க, நான்கிங் அரசாங்கத்தின் பெயரால் சியாங் மற்றொரு பயங்கர ஆட்சியை நடத்தினானென்பர்.
சியாங், இங்ஙனம் நான்கிங்கில் ஒரு போட்டி அரசாங்கத்தை தாபித்துக்கொண்டு, பொதுவுடைமை வாதிகளை ஒடுக்கி வருவதைக் கண்ட வூஹான் அரசாங்கம், அவனை - சியாங்கை - கோமிண்டாங் கட்சியிலிருந்து விலக்கிவிட்டது. ஆனால் அந்தக் கட்சிக்குள்ளேயே, ஏற்கனவே படிந்து கொண்டுவந்த மனக்கசப்பு இப்பொழுது வெளியே தோன்ற ஆரம்பித்தது. பொதுவுடைமை வாதிகள் அதி தீவிரமாகச் செல்கிறார்களென்று ஒரு சாரார் அபிப்பிராயப்பட்டனர். அரசாங்கத்தின் தலைவனாக வாங்சிங் வெய்யும் அவனுடைய சகாக்களும் ஒரு பிரிவினராகவும், போரோடின்னின் செல்வாக்கிலே ஈடுபட்டிருந்த பொதுவுடைமை வாதிகள் வேறொரு பிரிவினராகவும் பிரிந்தார்கள். இதற்கு அடிப் படையான காரணம் என்னவென்றால் முன்னவர் - வாங் சிங் வெய் கட்சியினர் - பணமும் நிலமும் உடைய பெரியதனக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மேனாட்டுக் கல்வி பயின்றதன் பயனாக இவர் களுக்குப் பொதுவுடைமைக் கொள்கையில் அநுதாபம் இருந்தது. ஆனால் புரட்சிகரமான சீர்திருத்தங்களைக் கொண்டு வந்து புகுத்தி சமுதாயத்திலே ஒருவித கலக்கத்தை உண்டு பண்ண இவர்கள் விரும்பவில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், இவர்கள் நகரங்களிலே இருந்து கொண்டு நாகரிகமாக ஏழை மக்களுக்குத் தொண்டு செய்வதிலே திருப்தி அடைந்தவர்கள். பின்னவரோ - பொதுவுடைமை வாதிகள் - ருஷ்யப் புரட்சியின் வெற்றி யிலே மயங்கிப் போனர்கள்; பொதுவுடைமைச் சமுதாயத்தைச் சீனாவிலே தாபித்து விட வேண்டுமென்ற பெரு நோக்கங் கொண்டவர்கள்; விவசாய சீர்திருத்தத்திலே முனைந்தவர்கள். இவர்களிற் பெரும்பாலோர், மேனாட்டு அரசியல், சமுதாய சம்பிரதாயங்களை நன்கு அறிந்தவர்களா யிருந்தாலும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்; வாழ்க்கையின் கஷ்ட நிஷ்டூரங்களை ஓரளவு அனுபவித்தவர்கள். இந்த இரு சாராருக்கும் மத்தியில் பரபர சந்தேகங்களுக்கும் சூழ்ச்சிகளும் வளர்ந்தன. கடைசியில் வாங் சிங் வெய் கட்சியினர், வூஹான் அரசாங் கத்தின் பெயரால், பொதுவுடைமை வாதிகளின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டனர். சிலர், கைது செய்யப் பட்டனர்; பலர், அடுத்தாற் போன்றிருந்த கியாங்க்ஸி மாகாணத்திற்குத் தப்பியோடினர். போரோடின்னும் அவனுடைய ருஷ்ய சகாக்களும் கோமிண்டாங் கட்சியிலிருந்து விலக்கப்பட்டு, துருக்கி தானத்தின் மூலம் ருஷ்யாவுக்குத் தப்பிச் சென்றனர்.
இங்ஙனம் பொதுவுடைமை வாதிகளின் மீது நடவடிக்கை எடுத்துக்கொண்டதோடுகூட, வூஹான் அரசாங்கமானது, சோவியத் ருஷ்யாவின் தொடர்பையும் அறுத்துக் கொண்டுவிட்டது. இனி கோமிண்டாங் கட்சிக்குள் வலதுசாரியென்றும் இடதுசாரி யென்றும், அல்லது பொதுவுடைமை வாதிகளென்றும் தேசீயவாதிகளென்றும் கட்சிப் பிரிவினைகள், கொள்கை வேற்றுமைகள் இருக்க வேண்டிய தில்லையல்லவா? எல்லோரும் தேசீயவாதிகள் தானே? எனவே, வாங் சிங் வெய்யை தலைவனாகக் கொண்ட வூஹான் அரசாங் கத்திற்கும், நான்கிங் அரசாங்கத்திற்கும் சமரஸம் ஏற்பட்டது. இந்தச் சமரஸ ஏற்பாட்டில் யாருக்கும் எந்தவிதமான மனக்கரகரப்பும் இருக்கக் கூடாதென்பதற்காக, சியாங், நல்லெண்ணமுடைய சில நண்பர் களின் யோசனையின் பேரில் நான்கிங் அரசாங்கத்துத் தலைமைப் பதவி யினின்றும், பிரதம சேனாதிபதிப் பதவியினின்றும் விலகிக் கொண்டு 1927-ஆம் வருஷம் ஆகட் மாதம் ஜப்பானுக்குச் சென்று விட்டான். அடுத்த மாதம் - செப்டம்பர் - நான்கிங்கில் ஐக்கியப் பட்டதொரு தேசீய அரசாங்கம் தாபிக்கப்பட்டது.
இங்கே சியாங்கின் சொந்த வாழ்க்கையைப் பற்றிச் சில வார்த்தைகள். ஆகட் மாதம் ஜப்பானுக்குச் சென்ற சியாங், டிசம்பர் மாதம் திரும்பி ஷாங்காய் நகரத்திற்கு வந்துவிட்டான். அங்கே, இவனுக்கும் மெய் லிங் ஸுங் என்ற தீரிக்கும் விவாகம் நடைபெற்றது. சியாங்குக்கு இஃது இரண்டாவது விவாகம். ஏற்கனவே இவன் சீன சம்பிரதாயப்படி ஒரு தீரியை மணந்து கொண்டு அவளோடு இனிதாக இல்லற வாழ்க்கையை நடத்தி வந்தான்; புத்திரப் பேறும் இருந்தது. ஆனால் என்ன காரணத்தி னாலோ இவன் மறு விவாகம் செய்து கொள்ளத் தீர்மானித்தான். தான் ஏற்றுக் கொண்டுள்ள புதிய பதவிக்கு ஏற்றாற்போல், தன்னோடு கூட இருந்து பொது விவகாரங்களைக் கவனிக்கக்கூடிய ஆற்றல் வாய்ந்த ஒரு சகபாடி இவனுக்குத் தேவையாயிருந்த தென்றும், அதனாலேயே மெய் லிங் ஸுங்கைக் கல்யாணம் செய்துகொண்டானென்றும் இவனுடைய பக்தர்கள் சமாதானம் கூறுகிறார்கள். இஃது எப்படியாயினும் இருக்கட்டும். இந்த விவாகம் சீன சம்பிரதாயத்தில் ஊறிப்போயிருந்தவர்களுக்கு ஒரு புதுமையாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. முதல் மனைவியின் மனம் எந்த நிலையில் இருந்ததோ யாருக்குத் தெரியும்? அந்த அம்மாள் 1940-ஆம் வருஷம் மத்தியில் ஒரு ஜப்பானிய ஆகாய விமானக் குண்டு பட்டு, சியாங் எந்த இடத்தில் பிறந்தானோ அந்த இடத்திலேயே - நிங்க்போவுக்கு அருகாமையில் - இறந்து போய்விட்டாள்.
சியாங் கை ஷேக்குக்கு இரண்டாவது மனைவியாக வாய்த்த மெய் லிங் ஸுங்கின் வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்வோம். சீனாவில் ஒய்.எம்.சி.ஏ. தாபிதமாவதற்குக் காரணம யிருந்தவர் களுள் ஒருவன் சார்ல ஜோன் ஸுங் என்பவன். இவன் கிறிதுவ மதத்தில் அதிகப் பற்றுடையவன். வியாபாரம் செய்து ஏராளமான பொருள் திரட்டினான். இவனுக்கு மூன்று பிள்ளைகளும் மூன்று பெண்களும் உண்டு. பிள்ளைகளின் பெயர் முறையே 1. டி.வி. ஸுங் 2. டி.ஏ. ஸுங் 3. டி.எல். ஸுங். இந்த மூவரும் சீனாவிலேயே இப்பொழுது செல்வமும் செல்வாக்கும் நிறைந்த வர்களாயிருக் கிறார்கள். பெண்களில் மூத்தவளான எய் லிங் என்பவள், டாக்டர் எச்.எச். குங் என்ற ஒரு செல்வச் சீமானை மணந்துகொண்டிருக்கிறாள். இந்த குங், சீனாவின் பொக்கிஷ மந்திரியாகவும், பிரதம மந்திரியாகவும் முறையே இருந்திருக்கிறான். இரண்டாவது பெண் சிங் லிங் என்பவள் ஸன் யாட் ஸென்னின் மனைவி. விதவையாகிவிட்ட பிறகும் தேசீய விஷயங்களில் அதிகமாக ஈடுபட்டுத் தன் புருஷ னுடைய நற்பெயரைக் காப்பாற்றி வருகிறாள். மூன்றாவது மகளான மெய் லிங்தான், சியாங் கை ஷேக்கின் இப்பொழுதைய மனைவி. அமெரிக்காவில் சென்று கல்வி பயின்றவள். மேனாட்டு மொழிகள் பல தெரிந்தவள். தன் புருஷனுக்குப் பல வழிகளிலும் உதவியாயிருக் கிறாள். இவள் கிறிதுவ குடும்பத்தைச் சேர்ந்தவள். இவளுடைய தூண்டுதலின் பேரில் சியாங்கும் 1930-ஆம் வருஷம் கிறிதுவ மதத்தில் சேர்ந்து கொண்டான். புதிய காதல், பழைய மதத்தை வென்றுவிட்டது!
நான்கிங்கில் ஐக்கியப்பட்ட தேசீய அரசாங்கம் தாபிக்கப் பட்ட சில மாதங்களுக்குள், சியாங்கின் சேவை அதற்குத் தேவையா யிருந்தது. எனவே அவன் திரும்பவும் வரவழைக்கப்பட்டு 1928-ஆம் வருஷம் ஜனவரி மாதம், பழைய மாதிரி பிரதம சேனாதிபதியாக நிய மிக்கப்பட்டான். நியமிக்கப்பட்டவுடன், சியாங், தனது பெருஞ் சேனையுடன் வடக்கு நோக்கிச் சென்று அநேக வெற்றிகளைக் கண்டான்; எதிரிட்ட ராணுவப் பிரபுக்கள் பலர் தொலைந்தனர். ஆனால் பீகிங் நகரம் மட்டும் சிறிது காலம் எதிர்ப்புக் காட்டியது. இதற்கு முக்கிய காரணம் ஜப்பானின் சூழ்ச்சிதான். சியாங்கின் தேசீயப் படையானது, பீகிங்கை நோக்கி வருமானால், ஷாண்டுங் மாகாணத்திலும் மஞ்சூரியாவிலும் தான் அனுபவித்துவரும் சலுகைகளுக்கு ஆபத்து ஏற்படக்கூடுமென்று அஞ்சி, அஃது, ஒரு படையை சியாங்குக்கு விரோதமாக அனுப்பியது. பீகிங்குக்குத் தெற்கே இரண்டு படைகளும் சந்தித்தன. சியாங்கின் படை, சிறிது தெற்குப் பக்கமாகப் பின்வாங்கிக் கொள்ளும்படி நேரிட்டது. இந்தக் காலத்தில் பீகிங் நகரம், ஏற்கனவே மஞ்சூரியாவைத் தன் செல் வாக்குக்குட்படுத்திக் கொண்டிருந்த சாங்க் ஸோ லின் என்ற ராணுவப் பிரபுவின் வசம் இருந்தது. இவன் ஜப்பானின் நண்பன். இவனை நம்பியே, ஜப்பான், தனது படையை பீகிங் நோக்கிய னுப்பியது. ஆனால் இந்த சாங் ஸோ லின், நல்ல சமயம் பார்த்து, ஜப்பானின் நட்பைப் புறக்கணித்துவிட்டு, தனது படையுடன் வடக்கே மஞ்சூரியாவுக்குப் போய்விட்டான். ஆனால் அப்படிப் போய்க்கொண்டிருக்கிறபோது இவன் ஏறிச்சென்ற ரெயில் வண்டியானது, வெடிமருந்தினால் நொறுங்கிப் போய்விட்டது. இதற்கு ஜப்பானின் சூழ்ச்சிதான் காரணம் என்று சொல்லப்படு கிறது. இவனுக்குப் பிறகு இவனுடைய மகனான சாங் ஸுயே லியாங் என்பவன், ஜப்பானின் பயமுறுத்தல்களையெல்லாம் பொருட்படுத்தாமல், நான்கிங் அரசாங்கத்துடன் ஒரு சிநேக ஒப்பந்தம் செய்து கொண்டான். இதற்குப் பிறகு பீகிங் நகரம் சுலபமாக சியாங்கின் வசப்பட்டுவிட்டது. சாங் ஸுயே லியாங்கின் ஆதீனத்திற்குட்பட்ட மஞ்சூரியாவில் சீனக் குடியரசின் கொடி பறந்தது. 1928-ஆம் வருஷம் ஜூலை மாதத்திற்குள் இவையெல்லாம் முடிந்துவிட்டன. சியாங்குக்கோ முன்னைக்காட்டிலும் இப் பொழுது அதிகமான செல்வாக்கு ஏற்பட்டதென்பதைச் சொல்ல வேண்டுவதில்லை. 1928-ஆம் வருஷம் அக்டோபர் மாதம் பத்தாந் தேதி புரட்சி விழாவன்று,1 நான்கிங் தேசீய அரசாங்கத்தின் தலை வனாகத் தெரிந்தெடுக்கப்பட்டான்.
இந்த நான்கிங் அரசாங்கத்தில் தொழிலாளர் பிரதிநிதி களுக்கோ, விவசாயிகளின் பிரதிநிதிகளுக்கோ இடங்கொடுக்கப் படவில்லை. ஆனால் இவர்கள்தான் சியாங்கின் வெற்றிகளுக் கெல்லாம் முக்கிய காரணர்களாயிருந்தவர்கள்; ஷாங்காய் முதலாளி களல்ல. ஆனால் முதலாளிகளும் நிலப்பிரபுக்களும், ராணுவத் தலைவர்களுமே இந்த நான்கிங் அரசாங்கத்தில் அதிக இடம் பெற்றார்கள். இந்த நான்கிங் அரசாங்கத்திற்கும், 1911-ஆம் வருஷத்துப் புரட்சிக்குப் பிறகு பீகிங்கில் ஏற்பட்ட பொம்மை அரசாங்கத்திற்கும் என்ன வித்தியாசமென்றால், பிந்தியது ராணுவப் பிரபுக்களினுடையவும், அந்நிய வல்லரசு களினுடையவும் ஆடற் கருவியாக இருந்தது. நான்கிங் அரசாங்கமோ, சீனாவின் புதிய, பழைய பணக்காரக் கூட்டத்தினுடையவும், தொழில் முதலாளிகள், வியாபாரிகள், ராணுவத் தலைவர்கள் முதலியோர் களுடையவும் பிரதிநிதியாக இருந்தது. இவர்கள் எப்படியோ ஒரு வகையில், இந்த நான்கிங் அரசாங்கத்திலும், கோமிண்டாங் கட்சியிலும், ராணுவத்திலும், உயர்தர உத்தியோகங்களிலும் பிரதிநிதித்துவம் பெற்றிருந் தார்கள். அரசாங்க முழுவதுமே அந்நிய வல்லரசுகளின் நெருக்குதலுக்குச் சுலபமாக இணங்கக் கூடியதாயிருந்தது.2
பொதுவுடைமையினரின் புனித யாத்திரை
வூஹான் அரசாங்கத்தின் கைக்கு அகப்படாமல் பொது வுடைமை வாதிகள் பலர், கியாங்க்ஸி மாகாணத்திற்குத் தப்பிச் சென்றார்களென்று முன்னே சொன்னோமல்லவா? இவர்களோடு நான்கிங் அரசாங்கத்தின் பயங்கரமான அடக்கு முறைக்கு ஆட் படாமல், பல இடங்களிலிருந்து தப்பிவந்த பொதுவுடைமை வாதிகள் பலரும் சேர்ந்து கொண்டார்கள். இவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து மேற்படி கியாக்ங்ஸி மாகாணத்தில் பழைய மாதிரி தங்கள் பொதுவுடைமைக் கட்சியை ஒழுங்குபெற அமைத்துக் கொண்டார்கள்; சோவியத் முறையில் ஒரு செம்படையைத் தயாரித்துக் கொண்டார்கள். ஒளிமறைவாயிருந்து போர் செய்யும் முறையில் இந்தப் படை நன்கு பழக்கப்பெற்றது. இந்தப் படைக்கு ராணுவப் பயிற்சியோடு மற்றப் பொதுவான கல்விப்பயிற்சியும் அளிக்கப்பட்டது. இதனால் இந்தப் படையைச் சேர்ந்தவர்கள் சிறந்த போர் வீரர்களாயிருந்ததோடு திறமையான பிரசாரகர்களாயும் அமைந்தார்கள். இவர்களைக் கொண்டு கியாங்க்ஸி மாகாணத்தின் பல பாகங்களிலும் பொதுவுடைமைக் கொள்கையைப் பரப்பிய தோடு, 1931-ஆம் வருஷம் ஒரு சீன சோவியத் குடியரசு அரசாங்கத்தையும் தாபித்துக் கொண்டார்கள், பொதுவுடைமைக் கட்சித் தலைவர்கள். கியாங்க்ஸி மாகாணத்தின் தென்கிழக்கு எல்லையிலுள்ள ஜூயிசின் என்ற ஊர், இந்த அரசாங்கத்தின் தலைநகரமா யமைந்தது. இப்படி அமைத்துக் கொண்டது வரையில் இவர்கள் மீது நான்கிங் அரசாங்கம் அதிகமாகக் கவனஞ் செலுத்த வில்லை. வட மாகாணங்களில் ராணுவப் பிரபுக்களால் அவ்வப்பொழுது ஏற்பட்டுக் கொண்டு வந்த இடைஞ்சல்களைச் சமாளிப்பதிலும், தனது நிருவாகத்தைச் சீர்திருத்தி ஒழுங்குபடுத்து வதிலுமே அதனுடைய கவனமெல்லாம் திரும்பி யிருந்தது. ஏதோ ஏகதேசமாகச் சில படைகளை இந்தப் பொதுவுடைமை வாதிகளுக்கு விரோதமாக அனுப்புவதும் பிறகு வாப வாங்கிக் கொள்வதுமாகவே இருந்தது. இதனால் பொதுவுடைமை வாதிகள், தங்கள் கொள்கைகளை அனுஷ்டானத் திற்குக்கொண்டு வருகிற விஷயத்தில் அதிகமான எதிர்ப்பைப் பெறாமலிருந்தார்கள். இந்தக் காலத்தில் இவர்கள் கிராமங்கள் தோறும் சென்று செய்த அற்புத மான வேலையும், அதன் பயனாகச் சீன சமுதாயத்தின் வாழ்க்கை யிலேற்பட்ட மாறுதல்களும் ஒரு கட்டுக்கதை மாதிரியாகவே இருக்கின்றது. 1927-ஆம் வருஷத்திலிருந்து 1937-ஆம் வருஷம் சீன - ஜப்பானிய யுத்தம் தொடங்கியவரை சுமார் பத்து வருஷ காலம், சீனாவில், பொதுவுடைமை வாதிகள் பட்ட கஷ்டங்கள், செய்த சேவைகள், வெற்றி கண்ட போர்கள் முதலியவற்றைப் பற்றி விதரித்துத் தனியாக ஒரு சரித்திரமே எழுத வேண்டும். இந்தச் சரித்திரம் நிச்சயம் தியாகிகளின் சரித்திரமாக இருக்கும். சமுதாய நலன் ஒன்றையே லட்சியமாகக் கொண்டவர்கள் என்ன மாதிரியான வாழ்க்கையை நடத்தவேண்டி யிருக்கிறது, அவர்களுக்கு என்னென்ன துன்பங்கள் குறுக்கிடுகின்றன, அந்தத் துன்பங்களை அவர்கள் எப்படி புன்சிரிப்போடு வரவேற்றுத் தங்களுடையன வாக்கிக் கொள்கிறார்கள், எளிய வாழ்வு என்றுசொல்லப் படுகிற இயற்கையோ டியைந்த வாழ்வுக்கும் அதிகார பதவிக்கும் எவ்வித முரண்பாடு மில்லை என்பன போன்ற உண்மைகளுக்கு மேற்படி சரித்திரம் சிறந்த அத்தாட்சியாயிருக்கும்.
ராணுவ முறையிலும் பிரசார முறையிலும் பயிற்சி பெற்ற பொதுவுடைமை வாதிகள், கிராமங்களிலே சென்று விவசாயி களுக்கு, அவர்களுடைய நிலையென்ன, அவர்கள் எப்படி சுரண்டப் படுகிறார்கள், அவர்கள் சுரண்டப்படாமலிருக்கத் தாங்கள் - பொது வுடைமை வாதிகள் - காட்டுகிற வழியென்ன, செய்யப்போகிற ஏற்பாடுகளென்ன ஆகிய இவை களைப் பற்றி விதரித்துச் சொல்லி வந்தார்கள். ஏழைக் குடியானவர்கள், வறுமையிலே உழன்று கொண்டிருக்கிற விவசாயிகள், இவர்களுக்கு நல்வரவு கூறி இவர் களை ஆதரித்ததோடு மட்டுமல்லாமல் பின்பற்றவும் செய்தார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? இங்ஙனம் சமுதாயத்தின் கீழ்ப்படியிலுள்ளவர்களுடைய பேராதரவைப் பெற்றுக் கொண்டு கியாங்க்ஸி மாகாணத்திலேயே தங்கி யிருந்தது, சீன சோவியத் அரசாங்கம் 1934-ஆம் வருஷம் வரையில்.
இந்தக் காலத்தில், இது - சோவியத் அரசாங்கம் - தனது ராணுவ பலத்தை ஒன்றுக்கு நான்காகப் பெருக்கிக் கொண்டது. இந்த ராணுவத்தில் சேர்ந்தவர்கள் யார்? வாழ்க்கையின் கரடு முரடான பாதைகளை நன்கு அறிந்த விவசாயிகள்! பொது வுடைமை வாதிகளை அடக்கி ஒடுக்க அவ்வப்பொழுது நான்கிங் அரசாங்கத்தினால் அனுப்பப் பெற்ற படைகளி லிருந்து தப்பி வந்தவர்கள்! ஆக இந்தச் சீனச் செம்படையினர் கூலிக்கு மாரடிக் கிறவர்களல்லர்; தேச பக்தியும், தியாக உணர்ச்சியும், சீல வாழ்க்கை யும் நிரம்பிய வீரர்கள். இதனால் இவர்கள், எண்ணிக்கையில் குறைந்தவர் களாயிருந்தும், நவீன யுத்த சாதனங்கள் எதனையும் பெறாமலிருந்தும், நான்கிங் அரசாங்கத் துருப்புகளின் கைக்கு அகப் படாமலேயே அநேக அரிய பெரிய காரியங்களைச் சாதித்துக் கொண்டு வந்தார்கள். இவர்களை நான்கு பக்கத்திலுமாகச் சூழ்ந்து கொண்டு அப்படியே கூட்டுக்குள் அகப்படுத்தினாற்போல் அகப் படுத்தி நசுக்கிவிட நான்கிங் அரசாங்கம் பல தடவைகளில் முயற்சி செய்த போது, இவர்கள் கடல் தொடர்பே இல்லாத கியாங்க்ஸி மாகாணத்திலிருந்து வாட்டோ, அமாய் முதலிய துறைமுகங் களின் மூலம் வெளியுலகத்துடன் சகஜமான தொடர்பு வைத்துக் கொண்டிருந்தார்கள். இவர்களை வழி மறிக்க அனுப்பப் பெற்ற நான்கிங் துருப்புகள், அநேக சமயங்களில் இவர்களுக்கு வழி காட்டின! இவர்களுக்குத் தேவையான ஆயுதங் களையும் கொண்டு கொடுத்தன! சில சந்தர்ப்பங்களில், நான்கிங் துருப்புகளுக்கு அகப் படாமல் இந்தச் செம்படையினர் தப்பித்து ஓட வேண்டியிருக்கும். அப்பொழுது வழியிலுள்ள கிராமவாசிகள் இவர்களை ஒளித்து வைத்துக் காப்பாற்றுவார்கள். ஒளிமறைவாயிருந்து சண்டை செய்வதிலே இந்தச் செம்படையினர் தேர்ச்சி பெற்றவர்களாதலின், தாங்கள் அதிகமான சேதத்திற்கு ஆட்படாமல் எதிரிகளுக்கு மிகுதியான சேதத்தை உண்டு பண்ணிக்கொண்டுவர இவர்களால் முடிந்தது. பொதுவாக இவர்கள் ஜனங்களோடு ஜனங்களாக இருந்து, ஜனங்களுடைய அன்பையும் அதரவையும் பெற்று, ஏகபோக உரிமைச் சக்திகளை எதிர்த்துப் போராடிக் கொண்டே பொது வுடைமையை வளர்த்து வந்தார்கள்; பொதுவுடைமை அரசாங் கத்தைத் திறம்பட நடத்தி வந்தார்கள்.
1928-ஆம் வருஷம் கியாங்க்ஸி மாகாணத்தில் முதன்முதலாக இந்தச் சீனச் செம்படை துவக்கப்பட்ட போது இதில் மொத்தம் சுமார் பதினாயிரம் போர் வீரர்களே இருந்தார்கள்; ஆனால் 1930- ஆம் வருஷம் சுமார் முப்பதினாயிரம் பேராகவும் 1934-ஆம் வருஷம் ஒரு லட்சத்து இருபதினாயிரம் பேராகவும் அதிகப்பட்டனர். கியாங்க்ஸி மாகாணத்தில் 1931 - ஆம் வருஷம் சோவியத் குடியரசு தாபிக்கப்பட்ட போது, பத்தொன்பது ஜில்லாக்கள் இதன் நிருவாகத்திற்குட் பட்டிருந்தன. பொதுவுடைமைக் கட்சி, சட்டவிரோதமான கட்சி யென்று தடுக்கப் பட்டிருந்த போதிலும், இவர்கள் - இந்தப் பொது வுடைமை வாதிகள் - மறைமுகமாக இருந்துகொண்டு நகரங்களில் தொழிலாளர் சங்கங் களையும், கிராமங்களில் விவசாய தாபனங் களையும் விடாமல் நடத்திக்கொண்டு வந்தார்கள். தொழிலாளர் தினமென்று சொல்லப்படுகிற மே தினக் கொண்டாட்டத்தைக்கூட கொண்டாடி வந்தார்கள். நாளுக்கு நாள் தங்கள் சோவியத் ஆட்சியைப் பல மாகாணங்களுக்கும் விதரித்துக் கொண்டு சென்றார்கள். கிழக்கேயுள்ள பூக்கியென் மாகாணத்திலிருந்து வடமேற்கேயுள்ள ஹோனான், ஷென்ஸி, ஷெக்குவான் ஆகிய மாகாணங்கள் வரை, பல இடங்களிலும் இவர்கள் அவ்வப்பொழுது சோவியத் அரசாங்கங்களை ஏற்படுத்தி, சமதர்ம விளக்கு அணையாமற் படிக்குப் பாதுகாத்து வந்தார்கள்.
முதலாளித்துவத்திற்கும் அந்நிய அதிக்கத்திற்கும் விரோதமாக உள்நாட்டிலேயே வளர்ந்து கொண்டுவரும் இந்த ஜனசக்தியை - பொதுவுடைமை இயக்கத்தை - சீன சோவியத் அரசாங்கத்தை - அடியோடு அழித்துவிட பகீரதப் பிரயத்தனங்கள் செய்தான் சியாங். இந்தக் கைங்கரியத்தில் இவனுக்கு ஐரோப்பிய வல்லரசுகள் துணை செய்தன; புதிய புதிய யுத்த தந்திரங்களைக் கற்றுக் கொடுத்தன. ஜனநாயகம் என்ற மந்திரத்தைப் பல பேரறிய உரத்துச் சொல் கிறவர்கள், உலகத்திலே எந்த மூலையிலாவது ஜனசக்தி என்பது துளிர்விட ஆரம்பிக்குமானால் உடனே அதனை மிதித்து மண்ணோடு கலந்து விடுவதற்கோ அல்லது காற்றிலே பறக்க விடுவதற்கோ முதலாவதாக வந்து நிற்கிறார்கள் என்ன ஆச்சரியம்?
கியாங்க்ஸி செம்படைக்கு விரோதமாக சியாங் கை ஷேக், 1930 -ஆம் வருஷத்திலிருந்து 1934-ஆம் வருஷத்திற்குள், ஏறக்குறைய நான்கு வருஷ காலத்தில் ஆறு தரம் படையெடுத்திருக்கிறான்; இந்தப் படையெடுப்பு களிலே ஆறு லட்சம் துருப்புகளை உபயோகித்திருக்கிறான். ஆகாய விமானங்கள், யந்திர பீரங்கிகள், டாங்கிகள் முதலிய நவீன யுத்தக் கருவிகள் பலவும் இந்தப் படை யெடுப்புகளின்போது கையாளப்பட்டன. ஆயினும் இவனால் வெற்றி காணமுடியவில்லை. செம்படைகளின் கொரில்லாப் போர்த்தந்திரங்களுக்கு முன்னால் இவனுடைய நவீன நாகரிக யுத்த தந்திரங்கள் செல்லுபடியாகவில்லை. எனவே 1934-ஆம் வருஷம் அக்டோபர் மாதம், கியாங்க்ஸி மாகாணத்தையே சுற்றி வளைத்துக் கொள்ளும்படி தன் படைகளுக்கு உத்திரவிட்டான். வெம்படை யினருக்கு ஆயுதம், ஆகாரம் முதலிய எதுவுமே செல்லாதபடி தடுத்துவிட்டான். பட்டினிபோட்டு அவர்களைச் சரணடையும் படி செய்ய வேண்டுமென்பது இவன் நோக்கம்.
ஆனால் செம்படையினர் சரணடையவில்லை; சியாங் கை ஷேக் கட்டிய மனிதக் கோட்டைக்குள்ளும் அகப்பட்டுக் கொள்ள வில்லை. 1934-ஆம் வருஷம் நவம்பர் மாதம் கியாங்க்ஸி மாகாணத் திலிருந்து கால்நடையாக வெளியேறி விட்டார்கள். சுமார் நான்கு வருஷகாலம் ஒரு கட்டுக்கோப்பாக அமைந்து வந்த அரசாங்கம் - பொதுவுடைமை அரசாங்கம் - திடீரென்று கலைந்து, தனது பரி வாரங்களோடும், சகல விதமான தளவாடங்களோடும் கால் நடை யாகப் புறப்பட்டு விட்டதென்று சொன்னால், அப்படிப் புறப்பட்ட வர்களுக்கு எவ்வளவு மன உறுதி இருக்க வேண்டும்? எதிரியின் கையில் சிக்கிக்கொள்ளக் கூடாதென்ற ஒரு சங்கல்பத்துடன் கிளம்பின இவர்களை, அந்த எதிரியின் படைகள் துரத்திக் கொண்டே வந்தன. அந்தப் படைகளுக்கு அகப்படாமல் இந்தச் செம்படையினர் சுமார் ஆறாயிரம் மைல் தூரம் நடை பிரயாண மாகச் சென்றனர். எந்த நிமிஷத்திலும் ஆபத்து! எந்த இடத்திலும் ஆபத்து! வழியிலே கடக்க வேண்டிய மலைகள் எத்தனை! ஆறுகள் எத்தனை! 1 இவைகளுக்கு நடுவே உடற்சோர்வும் உள்ளச் சோர்வும் அடைந்து மடிந்தவர் எத்தனை பேர்? ஆனாலும் செம்படையினர் இந்த இடை யூறுகளை யெல்லாம் பொருட்படுத்தாமல் சுமார் ஒரு வருஷகாலம் வரை நடந்து சென்று கடைசியில், இனியும் நான்கிங் துருப்புகளால் துரத்திக் கொண்டு வர முடியாது, அவர்கள் கைக்கு நாமும் அகப்பட மாட்டோம் என்று நிச்சயமாகத் தெரிந்ததும், வட மேற்கேயுள்ள ஷென்ஸி மாகாணத்தில் பிரவேசித்து, அங்கு யேனான் என்ற ஊரைத் தலைநகரமாகக் கொண்டு பழைய மாதிரி பொது வுடைமை அரசாங்கத்தை தாபித்துக் கொண்டனர். இப்படி ஒரு வருஷ காலத்தில் சகல முதீப்புகளோடும் ஆறாயிரம் மைல் நடந்து சென்று யேனானில் மீண்டும் தங்களை தாபித்துக் கொண்டது பெரிதல்ல; இவர்கள், நடைவழியில் கிராமங்கள்தோறும் தங்கள் பொதுவுடைமைக் கொள்கையை இடைவிடாமல் பிரசாரஞ் செய்து, ஜனங்களுடைய வாழ்க்கையிலே ஒரு புதிய ஜீவசக்தியைப் புகுத்திக்கொண்டு வந்திருக்கிறதே அதுதான் பெரிது; மகா அற்புதம்.
செம்படையினர் இந்த ஆறாயிரம் மைல்களையும் நடந்தே கடந்தனர் என்று சொன்னால், வாடிய முகமும், சூனிய மனமும் உடைய தனி மனிதர் பலர் கையை வீசிக் கொண்டோ அல்லது கோலை ஊன்றிக் கொண்டோ சென்றனர் என்பது அர்த்தமல்ல. அநேக ஆபத்துக்களின் நடுவே ஆயிரக்கணக்கான, இல்லை, இல்லை, லட்சக்கணக்கான தியாகிகள் அடங்கிய ஒரு ஜன சமுதாயமே திரண்டு சென்றது என்பதுதான் அர்த்தம். அரசுக்குரிய அங்கங்களென்ன, ஒரு சமுதாயத்தின் தேவை களைப் பூர்த்தி செய்யக் கூடிய தொழிற்சாலைகளென்ன, தாக்குதலுக்கும் தற்காப்புக்குமான படைகளென்ன, மனிதனுடைய மேலான உணர்ச்சி களை வளர்க்கிற கலைக்கழகங்கள், நாடக சாலைகள் என்ன, ஆகிய இவையாவும் இந்த நடை சமுதாயத்தில் அடங்கியிருந்தன. முன்னே உயர்ந்த மலைகள் அல்லது ஆழ்ந்த பள்ளத்தாக்குகள் அல்லது அகன்ற நதிகள்; பின்னே பீரங்கிகளை முழக்கிக்கொண்டு துரத்துகிற நான்கிங் அரசாங்கப் படைகள்; மேலே குறிபார்த்துக் குண்டுபோட வட்டமிடும் ஆகாய விமானங்கள். இவைகளுக்கு மத்தியில், சூட்சும மாயுள்ள ஜன சக்தியின் தூல வடிவமான இந்தச் செம்படையினர், ஆண் பெண் வித்தியாசமின்றி, படித்தவன் பாமரன் என்ற வேற்றுமையில்லாமல், ஏழை பணக்காரன் என்ற பாகுபாடற்று, ஒரே மனம், ஒரே உணர்ச்சி, ஒரே லட்சியமுடையவர்களாய், ஒரே குரலில்,
"எழுக! அடிமைகளாயிருக்க விரும்பாதவர்
அனைவரும் எழுக!
நமது சதையும் ரத்தமும் சேர்ந்து ஒருபெருஞ்
(சீன) சுவர்எழுப்பும்"
என்று ஆரம்பிக்கிற நடை பயிலும் கீதத்தைப் பாடிக் கொண்டு சென்ற காட்சி, சீன இதிகாசத்திலேயே ஒரு புனிதமான படலம்; சமதர்ம சித்தாந்தத்திற்கே ஒரு வெற்றி.
இந்தப் பொதுவுடைமை வாதிகள் என்னென்ன வேலை களைச் செய்தனர், இவர்களுடைய அரசாங்கம் எந்த மாதிரி இயங்கிக்கொண்டு வந்தது என்பவைகளைப் பற்றிச் சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம். இவர்கள் ருஷ்ய சோவியத் அரசாங்க அமைப்பையும், ருஷ்யப் பொது வுடைமைக் கட்சியின் அமைப்பை யும் அப்படியே நமூனா எடுத்துக் கொண்டு விட்டனர் என்று சாரமாகச் சொல்லலாம். இந்தச் சீன சோவியத் அரசாங்கம், தொழிலாளர், விவசாயிகள், செம்படையினர் ஆகிய இவர் களுடைய குடியரசு அரசாங்கம். இவர்களுடைய அதிகாரத்தின் பிரதி நிதியாக இருந்தே இஃது இயங்குகிறது. இவர்களுடைய அதிகாரம் செல்லு படியானதாக இருக்கவேண்டுமென்பதற்காக, சமுதாயத்திலுள்ள உழைப்பாளிகள் அனைவருக்கும் ஓட்டுரிமை உண்டு. நிலச்சுவான் தார்களும் தொழில் முதலாளிகளும் உழைப்பாளிகளல்லவாதலால் அவர்களுக்கு ஓட்டுரிமை இல்லை. எல்லா ஜாதியினருக்கும் - மங் கோலியர், திபேத்தியர், கொரியர் முதலிய சீனாவில் வசிக்கும் சகல ஜாதியினருக்கும் - சுய நிர்ணய உரிமை உண்டு. பேச்சுரிமை, சங்க மாகக் கூடும் உரிமை, மத உரிமை முதலிய எல்லா உரிமைகளும் எல்லா பிரஜைகளுக்கும் உண்டு. ஆண்களுக்குச் சமமாகப் பெண் களுக்கு எல்லா உரிமைகளும் உண்டு. எல்லாப் பிரஜைகளுக்கும், அரசாங்கத்திடமிருந்து கல்விபெற உரிமையுண்டு. இந்தப் பொதுவுடைமை அரசாங்கத்தின் நோக்கம், ஏகாதிபத்தியத்தின் தளையிலிருந்து சீனாவை விடுதலை செய்வது, சீனாவின் பரிபூரண சுதந்திரத்தை நாடுவது, ஏற்றத் தாழ்வான உடன்படிக்கைகள், கன்ஸெஷன்கள், விசேஷப்பிரதேச உரிமைகள், சீனாவில் அந்நிய வல்லரசுகள் தங்கள் துருப்புகளை வைத்துக் கொள்வதற்கான உரிமை ஆகிய இவைகளையெல்லாம் ரத்துசெய்வது முதலி யனவாம். அந்நிய நாட்டு முதலாளிகள், இந்தச் சீன சோவியத் அரசாங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு இணங்கி நடக்கச் சம்மதிப் பார்களானால், அவர்களுடைய தொழில் தாபனங்களுக்குப் புதிய குத்தகைச் சீட்டெழுதிக்கொண்டு அனுமதி அளிக்கப்படும். நிலப் பிரபுக்கள், ராணுவ தளகர்த்தர்கள் முதலியோருடைய பெரு வாரியான நிலங்களைப் பறிமுதல் செய்து, நிலமில்லாத ஏழை விவசாயிகளுக்குப் பகிர்ந்து கொடுக்கப்படும். இந்த நிலப்பங்கீடு ஒரே மாதிரியாயில்லாமல் அவரவருடைய குடும்பத்தேவை, உழைப்புச் சக்தி, நிலத்தின் தரம் இவைகளை அனுசரித்தே இருக்கும். தொழிலாளர் வேலை நேரம் எட்டு மணியாக இருக்கும். ஆபத்தான தொழில்களில் குறைவான வேலை நேரமே அனுமதிக்கப்படும். பதினான்கு வயதுக்கு மேற்பட்டவர்தான் எந்தத் தொழிற் தாப னத்திலும் தொழிலாளியாகச் சேர்த்துக் கொள்ளப்படலாம். மற்றபடி இன்ஷ்யூரன் திட்டம், நோயாகப்போனால் ரஜா, பெண்களுக்குப் பிரசவ ரஜா முதலிய தொழிலாளர் சம்பந்தப்பட்ட உரிமைகள் யாவும் சட்டபூர்வமாக அங்கீரிக்கப்பெறும். ஜீவா தாரமான தொழில்கள் யாவும் தேசீய மயமாக்கப்பெறும். ஆனால் சொந்த முறையில் நடத்தப் பெறுகிற தொழில் தாபனங்களுக்குச் சில நிபந்தனைகளுடன் அனுமதியளிக்கப்படும். கூட்டுறவு தாபனங்களுக்கு அதிக ஆதரவு கொடுக்கப்படும். தேசீய பாங்கி ஒன்று தாபிக்கப்பெறும். லேவாதேவித் தொழில் ரத்து செய்யப் பெறும். பலவகைப்பட்ட வரிகள் நீக்கப்பட்டு அவரவருடைய பொருளாதார நிலைமைக்குத் தகுந்தபடி தரவாரியாக ஒரே வரி விதிக்கப்பெறும். இவைதான் சீன சோவியத் அரசாங்கத்துச் சட்ட திட்டங்களின் சுருக்கம்.
இந்தச் சட்ட திட்டங்களை ஏட்டிலே பார்க்கும் அளவோடு திருப்தியடையவில்லை பொதுவுடைமை வாதிகள். கியாங்க்ஸி மாகாணத்தில் தங்களுடைய நிருவாகத்தை அமைத்துக் கொண் டதும், இவைகளை வரிசைக் கிரமமாக அனுஷ்டானத்திற்குக் கொண்டு வருவதில் அதிக சிரத்தை காட்டினார்கள். நிலச் சுவான் தார்கள் பெரு வாரியான நிலங்களுக்கு அனுபவ பாத்தியதை கொண்டாடிக் கொண்டு வந்ததை ரத்துசெய்து, அவர்களுடைய நிலங்களை, நிலமில்லாத விவசாயிகளுக்கு அவர்களுடைய தேவையை அனுசரித்தும் தரவாரியாகவும் பிரித்துக் கொடுத்தார்கள். பணக் காரர்கள் தேவைக் கதிகமாக வைத்திருந்த பணத்தையெல்லாம் பறிமுதல் செய்து, தங்களுடைய அரசாங்கச் செலவுக்கு உபயோ கித்துக் கொண்டார்கள். இதனால், விவசாயிகளை, முதலிற் சிறிது காலம் நிலவரி கட்ட வேண்டா மென்று சொல்லிவிட்டார்கள். அவர்களுக்கு இது சந்தோஷந்தானே? இந்த அரசாங்கத்தின் மீது விசுவாசமுடையவர்களா யிருப்பார்களல்லவா? பின்னர் சிறிது காலங்கழித்து, குடியானவர்கள், தங்கள் நெல் மகசூலில் நூற்றுக்கு ஐந்து முதல் பதினைந்து வரை நெல்லாகவே கொடுத்துவிட வேண்டுமென்று சொல்லப் பட்டார்கள். செம்படைச் செலவு களுக்காகப் பிரதியொரு ஜில்லாவிலும் ஒரு பகுதி விளை நிலம் ஒதுக்கி வைக்கப்பட்டது. கட்டாயச் சேவை முறையை அனுஷ்டித்து இதிலிருந்து மகசூல் எடுக்கப்பட்டது. இவைபோன்ற விவசாய சம்பந்தமான சீர்திருத்தங்கள் பல அமுலுக்குக் கொண்டு வரப் பட்டன.
பொதுவுடைமை வாதிகள், ஜனங்களின் கல்வியறிவைப் பெருக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் பெரிதும் பாராட்டத் தக்கவை. விவசாயி களுக்குக் கல்வி ஞானத்தைக் கொடாமலிருக் கிறவரை அவர்கள் சாதிரீய முறையில் விவசாயஞ்செய்து, அதிக பொருள்களை உற்பத்திசெய்ய முடியாதென்பதைப் பொதுவு டைமை வாதிகள் தெரிந்துகொண்டு அதற்கேற்றபடி கல்வித் திட்டத்தை வகுத்தார்கள். இந்தத் திட்டத்தின்படி இளைஞர் களுக்கும் வயதானவர்களுக்கும் அவரவர்களுடைய நிலைமைக்கும், பக்குவத்திற்கும் தகுந்தபடி கல்வி போதிக்கப்பட்டது. பாட்டுகள், பிரசங்கங்கள், நாடகங்கள் ஆகிய இவைகளின் மூலமாக ஜனங் களுக்குச் சமுதாய அறிவும் உலக ஞானமும் புகட்டப்பட்டன. சுருக்கமாக, சமதர்மம் என்பது ஒரு கட்சியல்ல, ஒரு கொள்கையல்ல, அஃதொரு புதிய வாழ்க்கையென்று ஜனங்கள் மனதில் நன்கு பதியும் படியாக இந்தக் கல்வி முறை இருந்தது. வாழ்க்கையில், ஒழுங்கிற்கும் ஒழுக்கத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
இந்தப் பொதுவுடைமை இயக்கத்தின் அதி நாயகர்களாக இருக்கப் பட்டவர்கள் பொதுவாக நல்ல படிப்பினையுடையவர்கள்; பலர், பொருளையும் பதவியையும் அனுபவித்துத் துறந்தவர்கள்; சீலமும் எளிமையும் நிறைந்த வாழ்க்கையுடையவர்கள். இவர்களில் மூன்று தலைவர்களுடைய வாழ்க்கையைப்பற்றி மட்டும் இங்கே சுருக்கமாகக் கூற விரும்புகிறோம். ஏனென்றால் இந்த மும்மூர்த்தி களின் கண்டிப்பான நிருவாகமும், தீர்க்க திருஷ்டியும், ராஜ தந்திரமும் இல்லாவிட்டால், சீனாவில் பொதுவுடைமை இயக்கம் இவ்வளவு உன்னத தானத்தை அடைந்திராது.
இந்த மூவரில் சௌ என் லாய் சிறந்த ராஜ தந்திரி; பொது வுடைமை அரசாங்கத்தின் பிரதம அதிகாரியாக ஆரம்பத்திலிருந்து இருந்தவன். இவனுடைய முன்னோர்கள் மஞ்சூ அரசாங்கத்தில் பரம்பரையாக உத்தியோகம் வகித்தவர்கள். இவனும் அப்படிப் பட்ட அரசாங்க உத்தியோகத்திற்கே இளமையில் பழக்கப்படுத்தப் பெற்றான். ஆனால் இவனுடைய பசுமனம் புரட்சியிலே படிந்து அதிலேயே பண்பட்டு வளர்ந்தது. 1925-ஆம் வருஷம் ஷாங்காய் நகரத்தில் பெரிய தொழிலாளர் வேலை நிறுத்தம் நடைபெற்ற தென்று மேலே சொல்லியிருக்கிறோமல்லவா?1 அதற்கு இவனே காரண புருஷனாகவும் அதனை வெற்றிக்குக் கொணர்ந்த வீர புருஷனா கவும் இருந்தான். இவன் நிதானதன்; உணர்ச்சி வசப்படாதவன். இந்தச் சிறந்த, நிதானமுள்ள, உண்மையான மனிதனை - சௌ என் லாயை- திறமையுள்ளவனென்று மதிக்கிறேன். இவன் சுங்கிங்கிலே வசிக்கிறான்; ஹ்ஸின் ஹுவா ஜிஹ்பாவோ என்ற பொது வுடைமைப் பத்திரிகை நடைபெறுவதற்குத் துணை செய்து கொண்டிருக்கிறான்; சீனாவின் யுத்தகால சட்டசபை யாகிற ஜன அரசியல் சபையில் பூரணபங்கெடுத்துக் கொள்கிறான். இந்தச் சபையில் இவனும் இவன் மனைவியும் அங்கத்தினர்கள். இவனைப்போல் சீனப் பொதுவுடைமை வாதிகள் எல்லாரும் இருப்பார்களானால், இவர்களுடைய பொதுவுடைமை இயக்கம், சர்வதேச சூழ்ச்சியாக அல்லது தொழிலாளர் சூழ்ச்சியாகக் கருதப் படாமல் தேசீய அல்லது விவசாயிகளின் விழிப்பு இயக்கமாகவே கருதப்படும் என்ற எண்ணமே இவனைப் பிரிகிறபோது எனக்கு உண்டாயிற்று என்று இவனை 1942-ஆம் வருஷம் சந்தித்த வெண்டெல் வில்கி கூறுகிறான்.2
இரண்டாவது மா த்ஸே துங். இவன் சீனாவின் லெனின் என்று அழைக்கப்படுகிறான். இவன் பொதுவுடைமைக் கட்சியின் காரியதரிசி யாகவும், பொதுவுடைமை அரசாங்கத்தின் தலைவ னாகவும் பல வருஷகாலம் இருந்திருக்கிறான். இவன் கூர்மையான அறிவுடையவ னென்றும், சமதர்ம சித்தாந்தத்தின் நுட்ப திட்பங் களைச் செவ்வனே உணர்ந்திருப்பதோடு அதனை மற்றவர்களுக்குப் புரியும்படி எடுத்துச் சொல்வதிலே வல்லவனென்றும் பெயர் பெற்றிருக்கிறான். நிருவாக சாமர்த்தியமுடையவன். எளிய பழக்க வழக்கங்களுக்கும், தூய வாழ்க்கைக்கும் இருப்பிடமானவன். இவனும் இப்பொழுது, மேலே சொன்ன ஜன அரசியல் சபையில் ஓர் அங்கத்தினனாயிருக்கிறான்.
மூன்றாமவனான சூ தேஹ், பெரிய போர்வீரன்; சிறந்த சேனாதிபதி. இவன் ஒரு பணக்கார நிலச்சுவான்தார் குடும்பத்தைச் சேர்ந்தவன். இதனால் சிறு வயதிலேயே போகங்கள் பலவற்றையும் அனுபவித்தவன். ஆனால் தன் மனோபலத்தினால் இவற்றை விட்டொழித்து புரட்சியிலே சேர்ந்து கொண்டான். செம்படையின் பிரதம சேனாதிபதியாக இருந்து அதனைத் திறம்பட வளர்த்தவன். இவனுடைய கொரில்லாப்படைகள் பிரசித்தமானவை. செம் படையினர் இவனிடம் அத்தியந்த விசுவாசம் வைத்திருக்கின்றனர். இவன் இப்பொழுது நடைபெறும் சீன ஜப்பானிய யுத்தத்தில் எட்டாவது படையின் தளகர்த்தனாக இருக்கிறான்.1 இவனுடைய சம்பளம் என்ன தெரியுமா? மாதம் சுமார் ஒன்பது ரூபாய்! இவனுக்கு அடுத்தபடியாகவுள்ள பெங் தெஹ் வைக்கு மாதம் சுமார் ஏழரை ரூபாய்!
1935-ஆம் வருஷம் அக்டோபர் மாதம் யேனானை வந்தடைந்த பொதுவுடைமை வாதிகள் அங்கே, மீண்டும் பொது வுடைமை அரசாங்கத்தை தாபித்துக் கொண்டு அதனை நாளது வரை தனிப்பட்டதோர் அரசாங்கமாக நடத்தி வருகிறார்கள். சியாங் கை ஷேக்கின் தேசீய அரசாங்கம், இந்தப் பொதுவுடைமை அரசாங்கத்தை அங்கீகரித்துக் கொண்டிருக்கிறது. யேனானில், தூய அறிவும் வாழ்க்கையுமுடைய பொதுவுடைமை வாதிகள் வசிக்கி றார்கள். பழைய செம்படையினர் இப்பொழுதைய எட்டாவது படையினராக மாறி, ஜப்பானியர்களுக்கு விரோதமாக அடைந்து வரும் வெற்றிகளினால் வசீகரிக்கப்பட்டவர் களாய், போர் முறையிலும், நவீன இலக்கியப் பண்பாட்டிலும் கற்றுக்கொள்ள வேண்டிய அமிசங்கள் பல இங்கே இருக்கின்றன என்பதை உணர்ந்து இங்கே யேனானுக்கு- பலர் வந்து கூடுகின்றனர்.
மஞ்சூரியாவில் ஜப்பான்
சியாங் கை ஷேக்கினுடைய சர்வதிகாரத்தின் கீழ் அமைந்த நான்கிங் அரசாங்கம், பொது ஜனங்களின் குறை நிறைகளை அப்படியே பிரதிபலித்துக் காட்டுகிற அரசாங்கமாக இல்லை யென்பது உண்மை. அதனுடைய அதிகாரம், மத்திய சீனாவில்தான் அதிகமாகச் செல்லுபடியாகிக் கொண்டு வந்ததே தவிர, வடக்கிலும் தெற்கிலும் அவ்வளவாகச் செல்லுபடியாகவில்லை யென்பது வாதவம். ஆனால் அதற்கு , சீனா முழுவதையும் ஒரு கொடியின் கீழ் ஐக்கியப் படுத்திவிட வேண்டும் என்ற ஆவல், இதற்கான வகையில் பல சீர்திருத்தங்களை அனுஷ்டானத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் இருந்ததென்பதை யாரும் ஒப்புக் கொள்ள வேண்டும்; இதற்கான முயற்சிகளிலே ஈடுபட்டது என்பதை அங்கீகரிக்க வேண்டும். தவிர அதன் பொறுப்பு மகத் தானது; எப்படிப்பட்டவரையும் திகைக்கச் செய்யக்கூடியது. இந்தத் திகைப்பான நிலைமையில்தான் சியாங், ஐரோப்பிய நிபுணர் பலரையும் வரவழைத்து, தனது அரசாங்கத்திற்கு ஆலோசகர்களாக அமர்த்திக் கொண்டான்; ரெயில், ரோட்டு முதலிய போக்கு வரத்து களை விருத்தி செய்யத் திட்டங்கள் போட்டான்; புதிய தொழிற் சாலைகள் அமைக்க ஏற்பாடு செய்தான். ஆனால் துரதிருஷ்ட வசமாக இவை யெல்லாம், அரசாங்கத்தின் ராணுவ பலத்தை அதிகப்படுத்திக் கொள்கிற மாதிரியாகவே இருந்தன.
இப்படி ஒரு புறம் சீர்திருத்தங்களை அமுலுக்குக் கொண்டு வருகிற முயற்சியிலே ஈடுபட்டுக் கொண்டு, மற்றொரு புறத்தில் பொதுவுடைமை வாதிகளை அடக்கி ஒடுக்கும் முயற்சியிலே ஈடுபட்டிருந்தான் சியாங். ஆனால் இந்த அடக்கு முறையில் இவன் வெற்றி பெறவில்லை. இதனால் இவனுடைய செல்வாக்குக்கு ஓரளவு ஊனம் ஏற்பட்டது. மற்றும், நான்கிங் அரசாங்கத்திற்குள்ளேயே இவனுடைய சகபாடிகளிற் சிலர் இவன் மீது பொறாமை கொண்டு இவனை அப்புறப் படுத்திவிடப் பார்த்தனர். உதாரணமாக, வாங் சிங் வெய்2 என்பவன், ஒரு சிலரைச் சேர்த்துக் கொண்டு. சியாங் கை ஷேக்குக்கு விரோதமான ஓர் இயக்கத்தை ஆரம்பித்தான். இவனோடு, வடக்கே யிருந்த சில ராணுவப் பிரபுக்களும் சேர்ந்து கொண்டனர். இது காரணமாக, வடக்கே, நான்கிங் அரசாங்கத்திற்கு விரோதமாக ஒரு கலகம் கிளம்பியது. இதே பிரகாரம் தெற்கேயுள்ள குவாங்க்ஸி, குவாங்டுங் மாகாணங்களில் எப்பொழுதுமே கோமிண்டாங் கட்சியின் மீது அதிருப்தி கொண்டிருந்த நிலப் பிரபுக்கள், ராணுவ தளகர்த்தர்கள் முதலியோர், தேசீய அரசாங்கம், காண்டனிலிருந்து நான்கிங்குக்குச் சென்றுவிட்ட பிறகு, அதன் அதிகார நிழல், தொலை தூரத்திலுள்ள தங்கள் மீது படியா தென்பதையே வியாஜமாக வைத்துக்கொண்டு, மேற்படி அரசாங்கத் திற்கு விரோதமாக அடிக்கடி தொந்திரவு செய்து கொண்டிருந்தனர். இவைகளை யெல்லாம் சியாங் அடக்கி விட்டானாயினும், இவன், தன்னுடைய கவனத்தையும் சக்தியையும் பல முகங்களில் சிதறவிட வேண்டியதாயிற்று. போதாக் குறைக்கு, 1931-ஆம் வருஷம் ஹோயாங்கோ நதியிலும், யாங்க்ட்ஸீ கியாங் நதியிலும் என்று மில்லாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு லட்சக்கணக்கான குடும்பங்கள் நாசமாகப் போய்விட்டன. வெள்ளம் வடிந்த பிறகு பட்டினியால் மாண்டவர்கள் லட்சக்கணக்கான பேர். இந்தக் கஷ்ட நிவாரண வேலையில் வேறே நான்கிங் அரசாங்கம் ஈடுபட்டிருந்தது.
இந்த உட்கலகங்கள், கட்சிச் சண்டைகள், வெள்ளப் பாழ் முதலியன யாவும் ஜப்பானுக்கு நல்ல சந்தர்ப்பங்களாயின; தன் னுடைய ஏகாதிபத்தியச் சிறகை விரிக்கத் தொடங்கியது. ஏற்கனவே இதற்கு, சியாங் கை ஷேக்கினுடைய ராணுவம், பீகிங் நகரத்தைக் கைப்பற்றிக் கொண்டு விட்டதைப் பற்றியும், சாங் ஸுயே லியாங், நான்கிங் அரசாங்கத்தோடு சமரஸம் செய்து கொண்டு மஞ்சூரியா முழுவதிலும் சீன தேசீயக்
கொடியைப் பறக்க விட்டதைப்பற்றியும்1 ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தது. இதற்குப் பிறகு, பலாத்காரத்தை உபயோகித்தாவது மஞ்சூரியாவைத் தன்னுடைய சுவாதீனத்திற் குட்படுத்தி விடுவதென்று தீர்மானித்து, அதற்கான முதீப்பு களையும் செய்து கொண்டு வந்தது. இதற்கு முன்னரேயே மஞ்சூரியாவில், ஜப்பான், சில விசேஷ உரிமைகளை அனுபவித்துக் கொண்டு வந்ததல்லவா?2 இந்த அனுபவ பாத்தியதையை வைத்துக் கொண்டு அது, மஞ்சூரியாவில் தனது முதீப்புகளைச் சுலபமாகச் செய்து கொள்வதற்குச் சாத்தியமாயிருந்தது.
மஞ்சூரியாவின் மீது ஜப்பானுக்கு ஏன் கண் விழுந்த தென்ப தற்குச் சில காரணங்களுண்டு. முதலாவது, மஞ்சூரியாவில், தொழில பிவிருத்திக்குத் தேவையான மூலப்பொருள்கள் ஏராளமாக உண்டு; விவசாயத்திற்குத் தகுதியுள்ள நிலங்களும் ஏராளம். சீனாவில் கிடைக்கக் கூடிய மொத்த இரும்பில் நூற்றுக்கு எண்பத்தைந்து சதவிகிதம் இங்கே கிடைக்கிறது; நிலக்கரிக்கோ சொல்லத் தேவையில்லை. 1931-32ல் ஜப்பான், மஞ்சூரியவை ஆக்கிரமித்துக் கொண்ட பிறகு, அதனுடைய சுவாதீனத்திற்கு எட்டு கோடி ஏகரா விவசாய நிலங்களும், அறுபது லட்சம் டன் நிலக்கரியும், நாற்பது கோடி டன் இரும்பும், கோடிக் கணக்கான டன் நிறையுள்ள மரங்களும், ஏராளமான தங்கமும் வந்தனவென்றால், அதனுடைய செழிப்பைச் சொல்லவும் வேண்டுமா? இப்படிப்பட்ட செழிப்புள்ள பிரதேசத்தைத் தனது களஞ்சியமாகவும் மார்க்கெட்டாகவும் உபயோகித்துக் கொள்ள ஜப்பான் தீர்மானித்தது. இரண்டாவதாக, ஜப்பானுடைய ஆதிக்கத்துக்குட்பட்டு விட்ட கொரியாவுக்கும், ருஷ்யாவின் தென்கிழக்கு எல்லைக்கும் மத்தியில் மஞ்சூரியா இருந்தது. சீனாவில் பொதுவுடைமை வாதிகளின் செல்வாக்கு வர வர வளர்ந்து கொண்டு வந்ததால், இந்தச் செல்வாக்கைத் தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பாக எண்ணிக்கொண்டு, ருஷ்யா, தென் கிழக்கே இறங்கி வருமானால், அது, ஜப்பானுக்கு ஆபத்தல்லவா? அதற்காக மஞ்சூரியாவைத் தன்னுடைய ஆக்கிரமிப்புக்குட் படுத்திக் கொண்டு விட்டால், ருஷ்யாவின் படையெடுப்பை அங்கேயே மஞ்சூரியாவிலேயே - தடுத்துவிடலா மென்று ஜப்பான் கருதியது. மூன்றாவதாக ஏற்கனவே ஜப்பான், மஞ்சூரியாவில், தான் அனுபவித்துக் கொண்டு வருகிற விசேஷ உரிமைகள் சம்பந்தமாக ஏராளமான பணத்தை அங்கே இறைத்திருந்தது; அநேக உயிர் களைப் பலி கொடுத்திருந்தது. இவைகளை யெல்லாம் வீணாக்கி விட ஜப்பான், விரும்பவில்லை. நான்காவதாக, இதுகாறும், மஞ்சூரியா, பெயரளவுக்குச் சீன ஆதிக்கத்துக்குட்பட் டிருந்ததே யாயினும், அங்கு ஜப்பானிய அரசாங்கத்தின் ஆலோசனைகளை அவ்வப்பொழுது கேட்டு அதன் பிரகாரம் நடந்து வந்த சீன அதிகாரிகளே அநேகமாக இருந்து வந்தனர். இப்பொழுதோ, சாங் ஸுயே லியாங், நான்கிங் அரசாங்கத்தோடு ஐக்கியமாகி விட்டான். நான்கிங் அரசாங்கம், ஜப்பானிய ஆக்கிரமிப்பு எண்ணத்திற்கு விரோதமாயிருக்கிற தென்பது தெரிந்த விஷயம். ஆகையால், இனியும் தாமதித்தால், மஞ்சூரியாவில் நான்கிங் அரசாங்கத்தின் செல்வாக்கு அதிகரித்துக் கொண்டு போகும். அப்படி அதிகரித்துக் கொண்டு போகாமலிருப்பதற்குள் அதனை - மஞ்சூரியாவை - தன் ஆதீனத்திற்குட்படுத்திக் கொண்டுவிட வேண்டுமென்று ஜப்பான் தீர்மானித்தது.
இந்தத் தீர்மானத்தை அனுசரித்தே, ஜப்பான் 1928-ஆம் வருஷத்தி லிருந்து 1931-ஆம் வருஷம் வரை, மஞ்சூரியாவை ஆக்கிர மித்துக் கொள்வதற்காக ரகசியமாகவும் பகிரங்கமாகவும் அநேக முதீப்புக்களைச் செய்து கொண்டுவந்தது. ஜப்பானிலிருந்து பலர் மஞ்சூரியாவில் வந்து குடியேறி ஜனங்களுடைய ஒழுக்கத்தைக் கெடுக்கக்கூடிய வியாபாரங் களில் இறங்கினார்கள். ஜப்பானிய உளவாளிகள் பலர் நாடெங்கணும் சுற்றித் திரிந்து, ஜனங்களுக்குத் துரோக எண்ணத்தை உண்டுபண்ணி வந்தார்கள். சுருக்கமாக, தேசத்தின் அகவாழ்விலும் புறவாழ்விலும் அநேக மாசுக்களைப் படியச் செய்தார்கள். இப்படிப் படியச் செய்து கொண்டே ஒரு நல்ல சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது ஜப்பான். அந்தச் சந்தர்ப்பந்தான் மேலே சொன்ன பிரகாரம் 1931-ஆம் வருஷத்தில் ஏற்பட்டது.
எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் உபயோகித்துக் கொள்ள ஒரு காரணம் வேண்டுமல்லவா? அந்தக் காரணத்தையும் ஜப்பான் உண்டுபண்ணிக் கொண்டது. 1931-ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் பதினெட்டாந்தேதி இரவு முக்டென் நகரத்திற்கு அருகாமையில், ஜப்பானியருக்குச் சொந்தமான தெற்கு மஞ்சூரியா ரெயில்வேயின் பாலம் ஒன்று உடைந்துவிட்டது. சாங்ஸுயே லியாங்கின் படை வீரர்கள் தான், வெடிமருந்து வைத்து இந்தப் பாலத்தை உடைத்திருக் கின்றனர் என்று ஜப்பானியர் கூறிக் கொண்டு, உடனே மேற்படி லியாங்கின் துருப்புகள் தங்கியிருந்த இடத்தை அன்றிரவே தாக்கி, அனைவரையும் நாசப்படுத்திவிட்டனர்; முக்டென் நகரத்தையும் கைப்பற்றிக் கொண்டனர். மிகுந்த முன்னேற்பாட்டுடனேயே ஜப்பானியர் இந்த மாதிரி செய்தனர் என்று சொல்லப்படுகிறது. இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த ஓர் ஆசிரியன் பின்வருமாறு கூறுகிறான்:- இந்த (பாலம் உடைந்து போகிற) சம்பவத்திற்கு முந்திய தினம், லியோயாங்க், யிங்க்கௌ, பெங்ஹு வாங்செங் ஆகிய ஊர்களில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த ஜப்பானியத் துருப்புகளுக்கு, மறுநாள் செப்டம்பர் மாதம் பதினெட்டாந் தேதி பிற்பகல் மூன்று மணிக்குச் சரியாக முக்டென் நகரத்தை நோக்கிச் செல்ல வேண்டு மென்று உத்திரவு கிடைத்தது. பாலம் உடைந்து போவதற்கு ஏழு மணி நேரத்திற்கு முன்னாடியே, எந்த இடத்தில் பாலம் உடைந்ததோ அந்த இடத்திற்கு ஜப்பானியத் துருப்புகள் புறப்பட்டன. மறுநாள் பத்தொன்பதாந் தேதி விடியற்காலை நான்கு மணிக்கெல்லாம் முக்டென் நகரமுழுவதிலும் ஜப்பானியருடைய சுவரொட்டி விளம்பரங்கள் காணப்பட்டன. இந்த விளம்பரத்தில் மஞ்சூரிய அரசாங்கத்தைப் பலமாகக் கண்டித்து, ஜப்பானிய ரெயில்வேயைத் தாக்குமாறு அதுதான் உத்திரவிட்டதென்று எழுதப்பட்டிருந்தது. ஜனங்கள் அமைதியாயிருக்கவேண்டுமென்று சொல்லப்பட் டார்கள். சம்பவம் நடைபெற்ற ஆறுமணி நேரத்திற்குள், உண்மையை விசாரித்து அறிக்கைகள், விளம்பரங்கள் முதலிய வற்றைத் தயாரித்து வெளியிடுதல், மனித யத்தனத்தினால் முடியாத காரியம்.
முக்டெனுக்கு அருகாமையில் சீன ஆகாய விமான நிலையம் ஒன்று இருந்தது. இதுவும், இதில் வைக்கப்பட்டிருந்த சுமார் ஐந்நூறு விமானங்களும், எவ்வித எதிர்ப்புமில்லாமல் ஜப்பானியர் வசம் போய்ச் சேர்ந்தன. மறுநாளே - செப்டம்பர் மாதம் பத்தொன்பதாந் தேதிக்குள்ளாகவே - சுமார் பதினெட்டு நகரங்கள் ஜப்பானியர் வசப்பட்டன வென்று சொன்னால் அவர்கள் எவ்வளவு முன்னேற்பாடு செய்திருக்க வேண்டுமென்பதை நாம் சுலபமாகத் தெரிந்து கொள்ளலாமல்லவா? அடுத்த ஒரு பதினைந்து தினங் களுக்குள், மஞ்சூரியாவின் தெற்கு மாகாணங்களாகிய லியோ னிங்கும், கிரீனும் ஜப்பானியர் வசம் போய்ச் சேர்ந்தன.1
ஜப்பானின் இந்த வரம்பு மீறிய செயலுக்கு எதிராக நான்கிங் அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் எடுத்துக் கொள்ளவில்லை. அதற்கு மாறாக சாங் ஸுயே லியாங்குக்கு அவனுடைய படை களுடன் பின்வாங்கிக் கொண்டுவிடுமாறு உத்திரவிட்டது. இப்படி உத்திரவிட்டு விட்டு, சர்வதேச சங்கத்திற்கு விண்ணப்பித்துக் கொண்டது. சர்வதேச சங்கத்தில் அங்கத்தினராயுள்ள ஒரு வல்லர சுக்கும் மற்றொரு வல்லரசுக்கும் தகராறு ஏற்படுமானால், அதை அந்தச் சர்வதேச சங்கத்தின் மூலமாகவே சமரஸமுறையில் தீர்த்துக் கொள்ள வேண்டு மென்கிற நியாயமான விதியை அனுசரித்து சீனா விண்ணப்பஞ் செய்து கொண்டது. சர்வதேச சங்கத்தில் சீனாவும் ஜப்பானும் அங்கத்தினர்களல்லவா?2 ஜப்பானுடன் நேருக்கு நேர் சண்டை போட்டுக்கொள்ள வேண்டா மென்றும் சர்வதேச சங்கத் திற்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறும் நான்கிங் அரசாங்கத்திற்கு - ஆம், சியாங் கை ஷேக்குக்குத்தான் - ஆலோசனை கூறியவர்கள் ஐரோப்பிய வல்லரசுகளின் பிரதிநிதிகள்!
சர்வதேச சங்கமோ தயங்கியது. அதனுடைய முக்கிய அங்கத் தினர்கள் - அதாவது பிரிட்டிஷ் பிரெஞ்சுப் பிரதிநிதிகள் - ஜப்பா னோடு மனதாபப்பட்டுக்கொள்ள விரும்பவில்லை. மஞ்சூரி யாவை ஆக்கிரமித்துக் கொள்ள வேண்டுமென்பது தனது நோக்க மில்லை யென்று ஜப்பான், தனது பிரதிநிதிகள் மூலம் சொல்லிக் கொண்டிருந்தது. ஆனால் அதே சமயத்தில் அதனுடைய படைகள், மஞ்சூரியாவின் பலபாகங் களையும் கைப்பற்றிக் கொண்டு வந்தது. சீனாவோ, சர்வதேச சங்கம் நியாயமான தீர்ப்பையே செய்யும் என்று நம்பிக்கொண்டிருந்தது.
சர்வதேச சங்கம் இப்படித் தயங்கிக் கொண்டிருக்கிறபோது, சீனாவுக்கு நியாயந் தேடிக்கொடுப்பதற்காக, பிரிட்டன், தன்னுடைய கடற்படையை அனுப்பச் சம்மதிக்கு மானால், தானும் தன்னுடைய கடற்படையை உடனே அனுப்புவதற்குத் தயார் என்று அமெரிக்கா கூறியது. ஆனால் பிரிட்டனோ இதற்குச் சம்மதிக்க வில்லை. சர்வதேச சங்கக் கூட்டங்களுக்கிடையிலே இந்த மாதிரியான வழவழத்த பேச்சுகள் நடைபெற்றுக் கொண்டி ருக்கையில், ஜப்பானியப் பிரதிநிதிகளின் யோசனையின் பேரில், மஞ்சூரியா விஷயமாக மத்தியதம் செய்து வைக்கும் பொருட்டு ஒரு சர்வ தேசக் கமிஷனை நியமிப்பதென்ற தீர்மானம் நிறைவேறியது. லார்ட் லிட்டன் என்ற ஒரு பிரிட்டிஷ் பிரபு இந்தக் கமிஷனுக்குத் தலைவனாகத் தெரிந்தெடுக்கப் பட்டான்.
இந்த மத்தியதக் கமிஷன் கடல்காற்று வாங்கிக் கொண்டு மெதுவாக 1932-ஆம் வருஷம் மேமாதம், கிரீன் மாகாணத்திலுள்ள ஹார்பின் என்ற துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது. இந்தக் கமிஷன் வருவதற்குள், ஜப்பான், பாக்கியுள்ள ஹைலுங்கியாங் என்ற வடக்கு மாகாணத்தையும் ஆக்கிரமித்துக்கொண்டு விட்டது. அதனோடு நிற்கவில்லை; தன்னுடைய மேற் பார்வையில் ஒவ்வொரு மாகாணத் திலும் பொம்மை அரசாங்கங் களை தாபித்துக் கொண்டிருந்தது.
லிட்டன் கமிஷன் வந்தது; விசாரித்தது; சென்றது. இப்படித் தான் சுருக்கமாகச் சொல்லிவிட வேண்டும். ஏனென்றால் இதனு டைய தீர்ப்பு, அழுதவன் கண்ணைத் துடைக்கிற தீர்ப்பாகவே இருந்தது. ஆனால் ஜப்பானுக்கு இது கூடப் பொறுக்கவில்லை. சிறிது காலங்கழித்து, சர்வதேச சங்கத்திலிருந்தே விலகிக் கொண்டு விட்டது. இனி அந்தச் சங்கத்தினுடைய, தீர்ப்போ, யோசனையோ எதுவுமே தன்னைக் கட்டுப் படுத்தாதென்ற தைரியத்துடன் ஜப்பான், தனது ஏகாதிபத்தியக் கால்களை நீட்டிவைக்க ஆரம்பித்தது. இதற்குப் பிறகு சர்வதேச சங்கத்திற்கு மதிப்பே போய்விட்டது. வல்லரசுகள் தங்கள் நாட்டாசையைப் பூர்த்தி செய்து கொள்ள பலாத்காரத்தை உபயோகிக்கத் தொடங்கின. இத்தலி, எத்தியோப் பியாவின் மீது அக்கிரமமாகப் படையெடுத்தது, பெயின் குழப்பம் முதலியவைகளெல்லாம், ஜப்பானின் மஞ்சூரிய ஆக்கிரமிப்புக்குப் பிறகு பிறந்த பலாத்காரக் குழந்தைகளே. ஆனால் இது வேறு கதை. ஜப்பானின் திருவிளையாடலை நோக்குவோம்.
சர்வதேச சங்கக் கூட்டத்தில் சீனாவுக்கு ஜப்பானுக்கும் மத்தியதம் செய்து வைக்கிற பாவனையில் பிரசங்கங்கள் நடை பெற்றுக் கொண்டிருக் கிறபோது, 1932-ஆம் வருஷம் ஜனவரி மாதம், ஷாங்காய் நகரத்தில் ஜப்பான், தனது பலாத்கார சக்தியைக் காட்டி யது. இதற்குக் காரணமென்ன வென்றால், ஜப்பானின் மஞ்சூரிய ஆக்கிரமிப்பைப் பற்றியும், இது விஷயத்தில் சீன அரசாங்கம் எவ்வித கண்டிப்பான நடவடிக்கையையும் எடுத்துக் கொள்ளாமல் சர்வதேச சங்கத்தின் தீர்ப்புக்குக்காத்திருப்பதைப் பற்றியும் சீனர்களுக்கு அதிக ஆத்திரம் உண்டாயிற்று. ஜப்பானியச் சாமான்கள் பகிஷ்கரிக்கப்பட்டன. ஜப்பானியர்களுக்குச் சாமான் களை விற்க மறுத்து விட்டார்கள் கடைக்காரர்கள்; ஜப்பானியக் கம்பெனிகளோடு பணப்புழக்கம் வைத்துக்கொள்ள முடியா தென்று சீன பாங்கி முதலாளிகள் கூறினார்கள். இளைஞர் கூட்டம், பலத்த கிளர்ச்சி செய்து வந்தது. சீனாவின் பல பாகங்களிலும் இந்த மாதிரி ஜப்பானுக்கு விரோதமான இயக்கம் நடைபெற்றுக் கொண்டுவந்ததாயினும், ஷாங்காய் நகரத்தில்தான் இது வெகு மும்முரமாயிருந்தது.
இங்கு, மேலே சொன்ன ஜனவரி மாதம் ஒரு நாள் சில சீனர்களும் ஜப்பானியர்களும் ஏதோ பேச்சு வாக்கில் சண்டை போட்டுக் கொண்டார்கள். இந்த வாய்ச்சண்டை கைச்சண்டையாக முற்றிவிட்டது. தங்களுடைய சரக்குகள் விற்பனையாக வில்லை, பகிஷ்கரிக்கப் படுகின்றன என்ற ஆத்திரம் ஜப்பானியர்களுக்கு இருந்ததல்லவா? அதற்கு இப்பொழுது பழிதீர்த்துக் கொண்டு விடத் தீர்மானித்தனர். பெரும் ஜப்பானியக் கூட்டமொன்று, சீனர்கள் நடத்தி வந்த ஒரு சுதேசத் தொழிற் சாலையைத் தாக்கித் தவிடு பொடியாக்கியது. இந்தத் தொழிற்சாலையில் உற்பத்தியான சாமான்கள்தான் ஜப்பானியச் சாமான்களுக்குப் போட்டியாக மார்க்கெட்டிலே வந்து இடம் பெற்றிருந்தன. மேற்படி தொழிற் சாலை நாசமாக்கப்பட்டதையே காரணமாகக்கொண்டு, ஜப்பான் தன்னுடைய யுத்தக்கப்பல்கள் சிலவற்றை ஷாங்காய்க்கு அனுப் பியது. இந்தக் கப்பல்களோ, தங்கள் பீரங்கிகளை, சீனாவின் பிரபல புதக சாலைகள் சிலவற்றின் மீது திருப்பி, நூற்றாண்டுகள் கணக்காக பாதுகாக்கப்பட்டு வந்த அநேக நூல்களையும் கையெ ழுத்துப் பிரதி களையும் நாசமாக்கின. இதனோடு ஜப்பான் திருப்தி யடையவில்லை. தன்னுடைய படைகளைக் கொண்டு வந்திறக்கி ஷாங்காய் நகரத்தையே கைப்பற்றிக் கொண்டு விடப்போவதாகப் பயமுறுத்தியது. அப்படியே சில படைகளும் வந்திறங்கின. நான்கிங் அரசாங்கம் இதனைத் தடுக்க எவ்வித ஏற்பாடும் செய்யாமல், சர்வ தேச சங்கத்தின் இருப்பிடத்தை நோக்கிக் கும்பிடு போட்டுக் கொண்டிருந்தது.
ஆனால் ஷாங்காயில் அப்பொழுது நிறுத்தி வைக்கப் பட்டிருந்த சீனப்படையானது, நான்கிங் அரசாங்கம் அதனைப் பின் வாங்கிக் கொண்டு விடுமாறு உத்திர விட்டிருந்த போதிலும் அதனைப் பொருட்படுத்தாமல், அந்த உத்திரவைப் புறக்கணித்து விட்டு, ஜப்பானியப் படைகளை எதிர்த்துப் போராடியது. இரண்டு படைகளுக்கும் சிறிது காலம் போராட்டம் நடை பெற்றது. ஆனால் சீனாவோ, ஜப்பானோ, இந்தப் போராட்டத்தைப் பெரிய யுத்த மாக்கித் தங்கள் பரபர பலத்தை பரீட்சை செய்து பார்க்க விரும்ப வில்லை. பிரிட்டிஷ் பிரதிநிதி யொருவனுடைய மத்தி யதத்தின் பேரில் இரண்டு அரசாங்கங்களும் யுத்தஞ் செய்வதை நிறுத்திக்கொண்டன. ஜப்பான், தன் படைகளை வாப வாங்கிக் கொண்டது. இதற்கு முக்கிய காரணம், தனது கவனமனைத்தையும் வடக்கே மஞ்சூரியா பக்கம் செலுத்தி, ஏற்கனவே அடைந்த வெற்றி களை நன்றாக ஊர்ஜிதம் செய்துகொள்ள வேண்டு மென்பதுதான்.
இதற்காக, மஞ்சூரியாவின் மூன்று மாகாணங்களையும் - அதாவது ஹைலுங்கியாங், கிரீன், லியோனிங் என்ற மூன்று மாகாணங்களையும் - ஒன்று சேர்த்து, அதற்கு மஞ்சூகோ என்ற புதுப்பெயர் கொடுத்தது ஜப்பான். இந்த மஞ்சூகோவாசிகள் சுதந்திரமாயிருக்க விரும்புவதாகவும், அந்த விருப்பத்தைத்தான் பூர்த்தி செய்துவைப்பதாகவும் வெளியுலகத்திற்குக் காட்டிக் கொண்டது. சீனாவில் கடைசியாக ஆண்ட மஞ்சூ அரச பரம்பரையின் கடைசி வாரிசாக இருந்து முடி துறக்கும்படி செய்யப்பட்ட பூயீ என்பவனை1 இந்த மஞ்சூகோவின் அரசனாக்கியது; சக்ரவர்த்தி என்ற பட்டத்தைக் கூட சூட்டியது (1932- ஆம் வருஷம் மார்ச்சு மாதம் ஒன்பதாந் தேதி).
இங்ஙனம் தனது கையாட்டிப் பொம்மையாக ஓர் அரசாங் கத்தை தாபித்துக் கொண்டு, பிறகு ஜப்பான், தனது ஆசைப் பார்வையைச் சீனாவின் மீது திருப்பியது. சீனப்பெருஞ்சுவருக்கு வடக்கிலும் லியோனிங் மாகாணத்திற்கு மேற்கிலுமாக உள்ளது ஜிஹோல் என்ற மாகாணம். பெயரளவிலேனும் இது நான்கிங் அரசாங்கத்தின் ஆதீனத்திற்குட் பட்டிருந்தது. ஆனால் இதன் மாகாண அதிகாரி - கவர்னர் - ஒரு கோழை. தனது தாய் நாட்டுக்காக எல்லாத் தியாகங்களையும் செய்யச் சித்தமாயிருப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தான். ஆனால் ஜப்பானியப் படைகள், ஏதோ ஒரு வியாஜத்தை வைத்துக்கொண்டு ஜிஹோல் மாகாணத்தை நோக்கி வருகையில், (1932-ஆம் வருஷம் ஜூலை மாதம்) இவன், உயிருக்குப் பயந்து தனது பெண்டு பிள்ளைகளுடனும் ஏராளமான பணத்து டனும் தப்பியோடி விட்டான். ஜப்பானியர் அதிக சிரமப்படாமல் இந்த மாகாண முழுவதையும் கைப்பற்றிக் கொண்டனர். 1933-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் இந்த மாகாணம், மஞ்சூகோ ராஜ்யத்துடன் ஐக்கியப் படுத்தப்பெற்றது. இதே சமயத்தில்தான் (1933-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் இருபத்தேழாந் தேதி) ஜப்பான், சர்வதேச சங்கத்திலிருந்து தான் விலகிக்கொண்டு விட்டதாகப் பிரகடனம் செய்தது.
ஜிஹோல் மாகாணம் தங்கள் கைக்கு வந்த பிறகு ஜப்பா னியருடைய ஆசை வளர்ந்ததே தவிர குறையவில்லை. ஆசையே இப்படித்தானே? ஜப்பானியப்படைகள், ஜிஹோல் மாகாண எல்லையி லிருந்து தாண்டிவந்து அடுத்தாற்போல் தெற்கேயுள்ள ஹோப்பை மாகாணத்திற்குள் பிரவேசித்து, பெருஞ்சுவரைக் கடப்ப தற்காக நிர்மாணிக்கப்பட்டிருந்த முக்கியமான நுழைவாயில்களைக் கைப்பற்றிக் கொண்டுவிட்டன. ஜிஹோல் மாகாணத்திற்குச் சீனத் துருப்புகளால் ஆபத்து ஏற்படாமல் தடுக்கும் பொருட்டே தாங்கள் இந்தப் பெருஞ்சுவரின் முக்கியமான அரண்களைச் சுவாதீனப் படுத்திக் கொண்டிருப்பதாக ஜப்பானியர் சமாதானங் கூறினர். ஆனால் உண்மை யென்னவென்றால், ஜிஹோல் மாகாண ஆக் கிரமிப்பின் போது, நான்கிங் அரசாங்கம், ஜப்பானைத் தீவிரமாக எதிர்த்துப் போராடாமல் அதற்குக் கொஞ்சங் கொஞ்சமாக விட்டுக் கொடுத்து வந்தது; ஜப்பானோடு சமரஸமாகப் போக வேண்டு மென்ற எண்ணமே இதற்கு வலுத்திருந்தது. இருந்தாலும், பெருஞ்சுவர்ப் பாதுகாவலுக்கென்றும் மாகாணப் பாதுகாவலுக் கென்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சீனப்படைகள், ஜப்பானியப் படைகளைப் பலமாக எதிர்த்து வந்தன. மும்முரமான சண்டை நடைபெற்று வந்தது. 1933-ஆம் வருஷம் மே மாதம் முதல் வாரத்தில், ஜப்பானியப் படைகள், பீகிங் நகரத்திற்குப் பதினான்கு மைல் தொலைவில் வந்துவிட்டன. பார்த்தது நான்கிங் அரசாங்கம்; ஜப்பானோடு இணங்கிப் போகத் தீர்மானித்தது. மே மாதம் முப்பத்தோராந் தேதி சீனாவுக்கும் ஜப்பானுக்கும் ஒரு யுத்த நிறுத்த ஒப்பந்தம் - இதற்கு டங்க்கூ ஒப்பந்தம்1 என்று பெயர் - ஏற்பட்டது. இதன்படி சுமார் ஐயாயிரம் சதுர மைல் விதீரணமுள்ள பிரதேசம் ஜப்பானுடைய சுவாதீனத்திற்குட்பட்டது. அதாவது பீகிங் நகரத் திற்குக் கிழக்கே சிறிது தூரம் வரை ஜப்பானியருடைய ஆதிக்கம் பரவி வந்தது என்று சொல்லலாம்.
ஜப்பான் இப்படி ஒரு பக்கத்தில் டங்க்கூ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது; மற்றொரு பக்கமாக வட சீனாவில் உட் கலகங்களைக் கிளப்பிவிட்டுக் கொண்டிருந்தது. சாஹார், ஸுயி யுவான், ஷான்ஸி, ஹோப்பை, ஷாண்டுங் ஆகிய இந்த ஐந்து மாகாணங்களும் சீனாவின் வட பாகத்தில் இருக்கின்றன. இந்த ஐந்து மாகாணங்களையும் ஒன்று சேர்த்துப் பார்த்தால் சுமார் நான்கு லட்சம் சதுர மைல் விதீரணம் இருக்கும்; அதாவது சீனாவின் மொத்த விதீரணத்தில் பத்தில் ஒரு பாகம். இதில் ஸுயியுவான், சாஹார் என்ற இரண்டு மாகாணங்களில் சில இடங்கள் தவிர, மற்றவையாவும் ஏராளமான பொருள்கள் உற்பத்தியாகக்கூடிய செழிப்பான பூமி. நெல், கோதுமை முதலிய உணவு தானியங்கள் இங்கே அதிகமாக உற்பத்தியாகின்றன. பருத்தியும் கம்பள மயிரும் நிறையக் கிடைக்கும். நிலக்கரி, இரும்பு இவை இரண்டுக்கும் மற்ற உலோகப் பொருள்களுக்கும் இந்த வட மாகாணங்கள் பிரசித்தி பெற்றவை. சீன அரசாங்கத்திற்குக் கிடைக்கிற மொத்த உப்பு வரி, சுங்க வரி வருமானத்தில், நான்கில் ஒரு பங்கு, இந்த ஐந்து மாகாணங் களில் உற்பத்தியாகிற உப்பினின்றும், பொருள்களை ஏற்றுமதி செய்வதினின்றுமே கிடைக்கின்றது என்று சொன்னால் இவற்றின் செழிப்பை நாம் ஒருவாறு தெரிந்துகொள்ளலாமல்லவா? ஓர் ஆசிரியன் கூறுகிற மாதிரி மஞ்சூரியாவும், இந்த ஐந்து வட மாகாணங்களுமின்றி சீனா ஒரு பெரிய வல்லரசாக இருந்திருக்க முடியாது.
இவ்வளவு செழுமையுள்ள பிரதேசத்தில் ஒரு பகுதியை- மஞ்சூரியாவை - கபளீகரித்துக் கொண்டுவிட்ட ஜப்பான், மிகுதியை யும் விழுங்கிவிட வேண்டுமென்று ஆசைப்பட்டதில் என்ன ஆச் சரியம்? இதற்காக அது கையாண்ட முறைகள் அனந்தம். ஆனால் எதிர்ப்பார்த்தபடி அதற்குச் சுலபமாகவும் சீக்கிரமாகவும் பலன் கிட்டவில்லை. ஏனென்றால் சீனாவில் தேசீய உணர்ச்சி வலுத்து விட்டது. பணத்துக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு நாட்டைக் காட்டிக் கொடுத்த ராணுவப் பிரபுக்களின் காலம் மலையேறி விட்டது. புரட்சி சகாப்தத்தில் பிறந்து வளர்ந்த இளைஞர்கள், அந்நியர்களுக்கு ஓர் அங்குல நிலத்தைக்கூட விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று உறுதியாக நின்றார்கள். பொதுவுடைமை வாதிகளுடைய பிரசாரத்தின் பயனாகக் கிராமவாசிகளுக்கு ஒரு தன் மதிப்பு உணர்ச்சி ஏற்பட்டிருந்தது. ஜனங்களைப் பொறுத்த மட்டில் அவர்களுடைய இருதயம், எத்தனையோ அவதைகள் பட்டி ருந்தும், அழுகாமலிருந்தது. ஆனால் அவர்கள், அரசாங்க பலமில் லாமல் என்ன செய்வார்கள்?
வாங் சிங் வெய் என்பவன் இந்தக் காலத்தில் (1933 முதல் 1935 நவம்பர் வரை) நான்கிங் அரசாங்கத்தின் பிரதம மந்திரியாகவும் அந்நிய நாட்டு மந்திரியாகவும் இருந்தான். இவன் ஸன் யாட் ஸென்னின் சிஷ்ய பரம்பரையைச் சேர்ந்தவனாயினும், தேசீயப் போர்வை போர்த்திக் கொண்டிருந்த போதிலும், சீன அரசாங்கத்தில் தனது சகபாடிகளாயிருக் கிறவர்களோடு அடிக்கடி பிணங்கிக் கொள் வதிலும் அதே சமயத்தில் ஜப்பானுக்கு இணங்கிக் கொடுப்பதிலும் கெட்டிக்காரனா யிருந்தான். இவனும், சியாங் கை ஷேக் முதலிய தலைவர்களும், ஜப்பானுக்குக் கோபம் உண்டாகாதபடி நடந்து கொள்வதில்தான் அதிக சிரத்தை காட்டினர். இதனால் என்ன நிலைமை ஏற்பட்ட தென்றால், சீனப் பொதுஜனங்களின் எதிர்ப்பைச் சமாளித்துக் கொண்டு ஜப்பானும், அதிவேகமாகச் சீனாவுக்குள் பிரவேசித்து ஆக்கிரமிப்புச் செய்ய முடியவில்லை; சீன அரசாங்கமும், தன்னுடைய ஜனங்களுக்கிருக்கும் தேசீய உணர்ச்சிக்குப் பயந்து ஜப்பான் கேட்டதை யெல்லாம் கொடுத்து விடாமல் அற்ப சொற்பமாக எதிர்ப்புக் காட்டி வந்தது. முன்னுக்கும் பின்னுக்கு மாய்ப் போய் வந்து கடைசியில் நின்ற நிலைக்கே வருகின்ற ஒரு தேக்க நிலையே சுமார் நான்கு வருஷ காலம் 1933-ஆம் வருஷத் திலிருந்து 1937-ஆம் வருஷம் வரை - இருந்ததென்று சொல்ல வேண்டும். ஆனால் இந்தத் தேக்கநிலையிலுங்கூட ஜப்பான்தான் அதிக சாதக மடைந்ததென்று சொல்ல வேண்டும். எப்படி யென்று பார்ப்போம்.
மேலே சொன்ன சீனாவின் வட மாகாணங்கள் ஐந்தையும் நான்கிங் அரசாங்க ஆதிக்கத்தினின்று பிரித்து மஞ்சூகோவுடன் சேர்த்துவிட வேண்டுமென்ற நோக்கம் ஜப்பானுக்கு. அப்படிச் சேர்த்துவிட்டு அங்கே தன்னுடைய ஆதிக்கம் ஊர்ஜிதப்பட்டு விடுமானால், வடக்கே ருஷ்யாவுக்கும் தெற்கே சீனாவுக்கும் மத்தியில் தான் இருந்து கொண்டு, ருஷ்யாவின் பொதுவுடைமைச் செல்வாக்கு ஆசியாவின்மீது படியாமல் பார்த்துக் கொள்ளலாமல்லவா! அப்படிப் படியாமல் பார்த்துக் கொள்வதிலேயே தனது ஏகாதி பத்திய விதரிப்பு இருக்கிறதென்பதை ஜப்பான் நன்கு உணர்ந் திருந்தது. மேலே சொன்ன ஐந்து மாகாணங் களையும் நான்கிங் அரசாங்க ஆதிக்கத்தினின்று பிரிக்க ஜப்பான் சில சூழ்ச்சிகளைச் செய்தது.
1935-ஆம் வருஷம் செப்டம்பர் மாதம், மஞ்சூரியாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜப்பானிய ராணுவத்தின் பிரதம தளகர்த்தர்களா யிருந்த தளபதி தாடா என்பவனும், தளபதி தாய்ஹாரா என்பவனும் சேர்ந்துகொண்டு மேற்படி ஐந்து மாகாண கவர்னர் களோடும் தனியாகப் பேச்சு வார்த்தைகள் நடத்தினார்கள்; வட சீனாவில் இவர்களுக்கென்று சுதந்திரமாக ஓர் அரசாங்கத்தை ஏற்படுத்திக் கொடுப்பதாக ஆசை காட்டினார்கள். ஆனால் இந்த முயற்சி பலிக்கவில்லை. சியாங் கை ஷேக்கினுடைய தலையீட்டின் பேரில் இந்த ஐந்து மாகாண கவர்னர்களும் ஜப்பானிய அதிகாரிக ளோடு பேச்சு வார்த்தைகள் நடத்துவதை நிறுத்திக் கொண்டு விட்டார்கள். ஆனால் ஜப்பான் இதற்காகச் சளைக்கவில்லை. 1935-ஆம் வருஷம் நவம்பர் மாதம் பீகிங் நகரத்திற்குக் கிழக்கே, ஹோப்பை மாகாணத்தின் ஒரு பகுதியில் ஒரு சுதந்திர அரசாங்கத்தை தாபித்து, யின் ஜூ கெங் என்ற ஒரு துரோகியை இதன் அரசனாக நியமித்தது. இந்தக் கிழக்கு ஹோப்பை சுதந்திர ராஜ்யத்தின் மூலம், அபினி முதலிய போதை வதுக்களையும், பட்டு, சர்க்கரை முதலிய பொருள்களையும் கள்ளத் தனமாகச் சீனாவுக்குள் கொண்டு வந்து திணித்தது. சீனாவுக்குள் வரும் ஜப்பானியச் சரக்குகளுக்கு இறக்குமதித் தீர்வை விதிப்பது வழக்கம். அப்படியே பல வருஷங்களாக அனுஷ்டிக்கப்பட்டு வந்தது. ஆனால் ஜப்பான் இதனை இப்பொழுது லட்சியம் செய்யவில்லை. இந்தக் கள்ள வியாபாரத்தினால், சீனாவின் சுங்கவரி வருமானம் வரவரக் குறைந்து கொண்டு வந்தது.1 1937- வருஷம் ஜூலை மாதம் சீன ஜப்பானிய யுத்தம் ஆரம்பிக்கிற வரையில் இந்தக் கள்ள வியாபா ரத்தை ஜப்பான் விடவே யில்லை. இந்தக் கள்ள வியாபாரத்தைக் கண்டுபிடிப்பதற்காகவும், தடுப்பதற் காகவும் அனுப்பப்பெற்ற சீன அதிகாரிகள் பலர், ஜப்பானியர் களால் கொலை செய்யப்பட்டார் களென்று சொல்லப்படுகிறது.
இங்ஙனம் கிழக்கு ஹோப்பை சுதந்திர ராஜ்யத்தை தாபித்து விட்டதோடு நிற்கவில்லை ஜப்பான். ஹோப்பை மாகாணத்தின் மற்றப் பகுதியிலும், வடக்கேயுள்ள சாஹார் மாகாணத்திலும் சில துரோகிகளைத் தூண்டி விட்டு, 1935-ஆம் வருஷம் டிசம்பர் மாதம் மூன்றாவது வாரம், ஒரு சுதந்திர ராஜ்யத்தை தாபிக்கும்படி செய்தது. முதலில் தான் உத்தேசித்த படி ஐந்து வட மாகாணங்களையும் ஒன்று சேர்த்து விழுங்கி விடுதல் சாத்தியமில்லை என்று தெரிந்த பின்னரே ஜப்பான், இந்த மாதிரி சிறுசிறு கரையான் ராஜ்யங்களை தாபிக்கச் செய்து, எல்லைப் புறச் சண்டைகளைக் கிளப்பிவிட்டுக் கொண்டிருந்தது. எல்லைப் புறச் சண்டைகளைக் காரணமாகக் காட்டிப் போர் முழக்கம் செய்வது நவீன யுத்த தந்திரங்களில் ஒன்று. ஜப்பான் இந்த யுத்த தந்திரங்களில் கைதேர்ந்திருந்தது. எல்லைப் புறச் சம்பவங்களைக் காரணமாக வைத்துக்கொண்டு, 1935-ஆம் வருஷத்தில் மட்டும் ஜப்பான், சாஹார், ஸுயியுவான் மாகாணங்களில், மங்கோலிய எல்லைப்புறமாகவுள்ள ஆறு ஜில்லாக்களைத் தன் வசப் படுத்திக் கொண்டது.
ஜப்பான் இப்படி வட மாகாணங்களில் சீனாவுக்கு விரோத மான சக்திகளை வளர்த்துக் கொண்டு வந்ததோடு, தெற்கு மாகா ணங்களிலும் தனது திருஷ்டியைச் செலுத்தியது. தெற்கேயுள்ள குவாங்க்ஸி, குவாங்டுங் என்ற இரண்டு மாகாணங்களில் எப்பொழுதுமே - ஸன் யாட் ஸென் உயிரோடிருந்த காலத்தி லிருந்தே - தேசீய இயக்கத்திற்கு விரோதமான சக்திகள் இருந்து கொண்டிருந்தன வல்லவா? இவை அடிக்கடி தலைதூக்குவதும் பிறகு அடக்கப்படுவதுமாக இருந்தன வென்பது வாசகர்களுடைய ஞாபகத்தில் இருக்கும்.2 இந்த இரண்டு மாகாணங்களின் ராணுவத் தலைவர்கள், ஜப்பானியர்களுடைய தூண்டுதலின் பேரிலும், ஆதரவின் பேரிலும் 1936-ஆம் வருஷம் ஜூன் மாதம் நான்கிங் அரசாங்கத்திற்கு விரோதமாகக் கிளம்பினார்கள். இவர்களில் குவாங்க்ஸி ராணுவத் தலைவன், சியாங் கை ஷேக் மீது கொண்ட ஆத்திரத்தினால் அவனுக்கு விரோதமாகப் படையெடுத்துச் சென்றான். இதற்குச் சுயநலங் காரணமல்ல. 1930-ஆம் வருஷத் திலிருந்து, ஜப்பானுக்கு இந்த சியாங்கை ஷேக் விட்டுக் கொடுத்துக் கொண்டு வருகிறானே, அதனை எதிர்த்துப் போராடவல்லவோ வேண்டும், அப்படிப் போராடாமல் தயங்கிக் கொண்டிருக்கும் இவனைத் தண்டிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டுதான், தேசபக்தி மேலீட்டால்தான், இந்த குவாங்க்ஸி தலைவன் சியாங் கை ஷேக்குக்கு விரோதமாக ஆயுதம் தூக்கினான்! தேசத்தில் ஜப்பானுக்கு விரோதமான உணர்ச்சி, தயங்கித் தவித்த நான்கிங் அரசாங்கத்தின் மீது அதிருப்தி எவ்வளவு வலுத்திருந்த தென்பதற்கு இது நல்ல உதாரணம். கடைசியில் நான்கிங் அரசாங்கத்திற்கு விரோதமாக அனுப்பப்பட்ட இந்த இரண்டு மாகாணப் படை களும், நான்கிங் அரசாங்கத்திற்கே தங்கள் விசுவாசத்தைத் தெரிவித்துக் கொண்டன. இவைகளுக்கு ஜப்பான் உதவியிருந்த யுத்த தளவாடங்கள், நான்கிங் அரசாங்கத்திற்கு உதவியாயின!
தெற்கு சீனாவில் தன்னுடைய சூழ்ச்சி பலிக்காமற் போகுமோ என்று சந்தேகம் ஏற்பட்டவுடன் ஜப்பான், மறுபடியும் வடக்குப் பக்கம் தன் கவனத்தைத் திருப்பியது. வட கிழக்கு மாகாணங்களில் ஏற்கனவே இது சில முயற்சிகளைச் செய்து அதிக பலனைக் காணமுடியவில்லை யல்லவா? கிழக்கு ஹோப்பையிலும், சாஹார் மாகாணத்தின் ஒரு பகுதியிலும் ஏதோ சிறுசிறு ராஜ்யங்களை தாபிப்பதோடு இது திருப்தி யடையவேண்டியதாயிருந்தது. இதனால் இந்தத் தடவை வட மேற்கு மாகாணங்களில் தனது ராஜதந்திர சரடுகளை விட ஆரம்பித்தது. சீனாவின் மேற்குப் பாகத்தில், திபேத்துக்கு வடக்கே, மங்கோலியாவுக்குத் தெற்கே ஸிங்கியாங், சிங்ஹாய், கான்ஸு என்ற மூன்று மாகாணங்களுண்டு. இந்த மூன்று மாகாணங்களையும் சேர்த்து, தனது ஆதிக்கத்தின் கீழ் ஒரு மங்கோலிய ராஜ்யத்தை தாபித்து அதனை, தனது ஆசிய விதரிப்புக்கு ஒரு படியாக உபயோகித்துக் கொள்ளலாமென்று ஜப்பான் கருதியது. இந்தக் கருத்துடன் தேஹ் என்ற ஒரு மங்கோலிய ராணுவப் பிரபுவைத் தனது கையாளாக அமர்த்திக் கொண்டது. அவனை மங்கோலிய சக்ரவர்த்தி யாக்குவதாக ஆசை வார்த்தைகள் கூறியது. ஏற்கனவே, சீன அரசாங்கத்தின் மீது அவனுக்குக் கொஞ்சம் அதிருப்தி இருந்தது. இந்த அதிருப்தியை ஜப்பான் வளர்த்தது. அவனுக்குப் படை பலம் கொடுத்து, ஸுயியுவான், சாஹார் மாகாணங்களின் மீது படையெடுக்கச் செய்தது.
இந்தப் படையெடுப்புக்கு நான்கிங் அரசாங்கம் எந்த விதமான எதிர்ப்பையும் காட்டக்கூடா தென்பதற்காக, அதனோடு சமரஸம் பேசிக் கொண்டிருக்குமாறு தன்னுடைய பிரதிநிதிகளிற் சிலரை அனுப்பியது ஜப்பான். சமரஸமாவது என்ன? ஒன்று, சீனா, பொருளாதாரத் துறையில் ஜப்பானோடு ஒத்துழைக்க வேண்டும்; அதாவது ஜப்பானியச் சரக்குகளுக்குச் சீனா தனது மார்க்கெட் டைத் திறந்துவிட வேண்டும். மற்றொன்று, சீனாவில் வளர்ந்து வரும் பொதுவுடைமைக் கொள்ளை நோயை அழித்து ஒழிக்க வேண்டும்.1 இந்த இரண்டுக்கும் சீனா சம்மதிக்கு மானால் அதற்கு ஜப்பானால் எந்த விதமான தொந்திரவும் இராது. சீனாவின் அமைதி, ஜப்பானின் தயவைப் பொறுத்திருக்கிறதென்பதுதான் இதனுடைய தாத்பரியம். சீனாவும் இந்தச் சமரஸப் பேச்சுக்கு ஒரு மதிப்புவைத்து இதில் ஈடுபட்டது. இஃது இப்படி இருக்கட்டும்.
ஸுயியுவான், சாஹார் மாகாணங்களின் மீது தொடங்கிய படையெடுப்பு, ஜப்பான் எதிர்பார்த்தபடி அவ்வளவு வெற்றிகரமாக இல்லை. நான்கிங் அரசாங்கம், தனது வடக்கித்திய படைகளுக்கு, தற்காப்பிலேயே இருந்து கொள்ளுமாறு உத்திரவிட்டிருந்த போதிலும், அவை தங்களைத் தாக்க வந்த மேற்படி மங்கோலியப் படைகளைத் திருப்பித் தாக்கிப் பல இடங்களில் முதுகு காட்டும் படி விரட்டியும் விட்டன; சத்துருக்களின் வசப்பட்டுப் போன சில இடங்களைத் திரும்பவும் கைப்பற்றிக் கொண்டன. 1936 - ஆம் வருஷம் நவம்பர் மாதம் இந்த நிலைமை இருந்தது.2 ஜப்பான், இந்த நிலைமையை எதிர்பார்க்கவே யில்லை. ஜப்பானுக்கு விரோதமான கூக்குரல் சீனாவில் உரத்து எழுந்தது. அதனுடைய ஆக்கிரமிப்பு முறை, சீனாவின் பரம்பரையான பொறுமைக் குணத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டது.
பிடிப்பட்ட தலைவனை விடுவித்த வீரம்
ஜப்பானுடைய ஆக்கிரமிப்பைக் கொஞ்சங்கூட எதிர்த்துப் போராடாமல் அதற்கு லேசுலேசாக இடம் விட்டுக்கொண்டு வந்தது நான்கிங் அரசாங்கம். இதனால் சீனர்களுடைய தன் மதிப்பு உணர்ச்சிக்குப் பங்கம் ஏற்பட்டு வருவது ஒரு புறமிருக்க, சீனாவின் வியாபாரத்திற்கும் அதிக பாதகம் உண்டாயிற்று. முன் அத்தியா யத்தில் கூறியபடி வடக்குப் பக்கத்திலிருந்து கள்ளத்தனமாக ஜப்பானியச் சரக்குகள் ஏராளமாக வந்து நுழைந்து கொண்டிருந்த படியால், சீன வியாபாரிகளுக்குப் பெருநஷ்டம் ஏற்பட்டு வந்தது. எனவே லாபத்திலே குறியாயுள்ள வியாபாரிகள் முதல், தேசத்தின் விடுதலையில் குறியாயுள்ள பள்ளிக்கூட மாணாக்கார்கள் வரை ஏறக்குறைய எல்லோரும் நான்கிங் அரசாங்கத்தின்மீது அதிருப்தி காட்டினர். இந்த அதிருப்தி காரணமாக இளைஞர் பலர் பொது வுடைமைக் கட்சியில் போய்ச் சேர்ந்து கொண்டனர். ஏனென்றால் அந்தக் கட்சிதான் அந்நிய ஆதிக்கத்தின், ஜப்பானிய ஆக்கிரமிப்பின் பரம விரோதியா யிருந்தது.
ஜப்பானை எதிர்த்துப் போராடக்கூடிய நிலைமையில் நாடு தயாராக இல்லை யென்பது நான்கிங் அரசாங்கத்தின் கட்சி. நாம் பலவீனர்களா யிருக்கிறோம். நாமாக வலிய சண்டைக்குப் போகக் கூடாது என்று சியாங் கை ஷேக் அடிக்கடி சொல்லிக் கொண்டு வந்தான். இப்படி ஜப்பானை எதிர்த்து நிற்பதற்கு இவன் தயக்கங் காட்டினானே தவிர, பொதுவுடைமை வாதிகளை நிர்மூலமாக்கி விட வேண்டுமென்கிற தொண்டில் அதிக உற்சாகங் காட்டினான். ஜப்பானுக்கு இணங்கிப் போக வேண்டுமென்கிற விஷயத்திலும், பொதுவுடைமைக் கட்சியைப் படுசூரணமாக்கிவிட வேண்டு மென்கிற விஷயத்திலும் ஐரோப்பிய வல்லரசினர், சியாங் கை ஷேக்குக்கு உடந்தையாயிருந்தனர்; இதே சமயத்தில் ஜப்பானின் ஆக்கிரமிப்பு முறையைச் சில சமயங்களில் மறைமுகமாக ஆதரித்தும் வந்தனர். மஞ்சூரிய விஷயமாகச் சர்வதேச சங்கக் கூட்டங்களில் நடைபெற்ற வாதப் பிரதிவாதங்களைக் கவனித்தாலே இந்த உண்மை புலனாகும். முன்னே கிரேட் பிரிட்டன் என்ன செய்து கொண்டி ருந்ததோ அதையே இப்பொழுது ஜப்பான் செய்து கொண்டு வருகிறது. ஜப்பானுக்குத் தன்னை விதரித்துக் கொள்ள வேண்டியது அவசியமாயிருக்கிறது. இப்பொழுது தொந்திரவு என்னவென்றால், எந்தச் சரித்திர பரம்பரையின் சக்திகள் நம்மை இந்தியாவுக்குள் அழைத்துச் சென்றனவோ, இப்பொழுது ஜப்பானை மஞ்சூரியா வுக்குள் அழைத்துச் செல்கின்றனவோ, அவைகளுக்குச் சர்வதேச சங்க சட்டதிட்டங்களில் போதுமான அளவு இடங்கொடுக்கப் படவில்லை என்று பிரிட்டனின் அந்நிய நாட்டு மந்திரியாயிருந்த ஸர் ஜான் ஸைமன் கூறினான். 1934 - ஆம் வருஷம், அதாவது, ஜப்பான் வட சீனாவில் தனது ஏகாதிபத்திய வலையை வீசிக் கொண்டிருந்த போது, பிரிட்டிஷ் தொழில் முதலாளிகள் சங்கத்தார், மஞ்சூகோவுக்கு, தங்களுடைய நல்லெண்ணத்தைத் தெரிவிப்பதாக ஒரு தூது கோஷ்டியை அனுப்பினர். பிரிட்டிஷ் முதலாளிகளுக்கு இப்படித் திடீரென்று மஞ்சூகோவின் மீது நல்லெண்ணம் ஏற்படுவானேன்? இதன் மர்மம் என்னவென்பது சீனர்களுக்குத் தெரியாதா? தவிர, சீனாவின் ஆதீனத்திற்குட் பட்டிருந்த மஞ்சூரி யாவை ஜப்பான் விழுங்கி விட்ட போது, சீனாவின் பரிபூர்ண சுதந் திரத்தைப் பாதுகாப்பதாக வாஷிங்க்டன் மகாநாட்டில் ஒப்பந்தம் செய்துகொண்ட ஒன்பது வல்லரசுகள் என்ன செய்தன? சும்மா பார்த்துக் கொண்டிருந்தன வென்பதைச் சீனர்கள் இவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட்டார்களா?
இப்படிப்பட்ட வல்லரசுகளின் பேச்சை இன்னமும் நம்பிக் கொண்டு, ஜப்பானை எதிர்த்துப் போராடாமல் இருக்கிற நான்கிங் அரசாங்கத்தின்மீது ஜனங்கள் அதிருப்தி காட்டியதில் என்ன ஆச்சரியம்? இந்த அதிருப்தி, ஜப்பானின் மஞ்சூரிய ஆக்கிர மிப்புக்குப் பிறகு வரவர அதிகரித்துக் கொண்டு வந்தது. 1934 - ஆம் வருஷம் ஆகட் மாதம், ஸன் யாட் ஸென்னுடைய தரும பத்தினி யின் தலைமையில் பிரபல சீனர் பலர் ஒன்று சேர்ந்து, ஜப்பானுக்கு இதுவரையில் விட்டுக் கொடுத்தது போதும்; இனியும் விட்டுக் கொடுக்கக்கூடாது. ஜப்பானுக்கு விரோதமாயுள்ள எல்லாத் தேசீய சக்திகளையும் ஒன்று திரட்டி இந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக நிறுத்த வேண்டும் என்று நான்கிங் அரசாங்கத்திற்கு விண்ணப்பஞ் செய்து கொண்டனர். தேசீய சக்திகளை ஒன்று திரட்டுவதென்றால், பொது வுடைமை வாதிகளின் மீது தொடுத்திருக்கிற போரை நிறுத்த வேண்டு மல்லவா? இந்தப் போரை நிறுத்த வேண்டுமென்ற இயக்கமும் வலுத்தது. சீனர்கள், சீனர்களையே கொல்லக்கூடாது என்ற கூக்குரல் எழுந்தது. 1919 - ஆம் வருஷம் தோன்றி வளர்ந்து வந்த இளைஞர் இயக்கமானது, இந்தக் காலத்தில் அற்புதமான வேலை செய்தது. கூட்டங்கள் போட்டும் ஊர்வலங்கள் நடத்தியும் ஜனங்களுடைய ஆத்திரத்தைக் கிளப்பி விட்டார்கள் இளைஞர்கள். எத்தியோப்பியாவை ஐரோப்பிய வல்லரசுகள் எப்படிக் கைவிட்டு விட்டன பாருங்கள்; எவ்வித நவீன யுத்த தளவாடங்களின் உதவியும் இல்லாமல் அஃது எப்படித் தனியாக நின்று இத்தலியை எதிர்த்துப் போராடி வருகிறதென்பதை நோக்குங்கள் என்றெல்லாம் சொல்லி ஜனங்களை ஊக்கப்படுத்தினார்கள். ராணுவத்தினரும் போலீ ஸாரும் இவர்களுக்கு அநுதாபம் காட்டினார்கள். ஜனங்களுடைய ஆத்திரம் பொங்கிவர ஆரம்பித்தது. 1935-ஆம் வருஷம் நவம்பர், மாதம், நான்கிங் அரசாங்கத்தின் பிரதம மந்திரியாகவும் அந்நிய நாட்டு மந்திரியாகவும் இருந்த வாங் சிங் வெய், துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டுக் காயமடைந்தான். இவன் ஜப்பானுக்கு ஆதரவாயிருக்கிறா னென்பதுதான் இதற்குக் காரணம். இவனுக்குப் பிறகு, சியாங் கை ஷேக்கே, தனது பிரதம சேனாதிபதி பதவியோடு அரசாங்கத்தின் தலைமைப் பதவியையும் ஏற்றுக்கொண்டான்.
ஜனங்களுடைய ஆத்திரம் இப்படிப் பலாத்காரத்தில் திரும்பி விட்டதென்பதைத் தெரிந்துகொண்ட பிறகுகூட, நான்கிங் அரசாங்கம், அடக்கு முறையில் தான் வைத்திருந்த நம்பிக்கையை இழக்கவில்லை. முன்னைக்காட்டிலும் இன்னும் தீவிரமாக அடக்குமுறையைப் பிர யோகித்தது. பொதுவுடைமை வாதிகளை அடக்குவதற்கு இன்னும் அதிகமான ஏற்பாடுகளைச் செய்தது. ஆனால் இதே சமயத்தில் ஜப்பானோடு சமரஸம் பேசுவதில், அதனுடைய ஆக்கிரமிப்புக்கு இணங்கிக் கொடுப்பதில் சிறிதுகூடச் சலிப்புக் காட்டவில்லை. உதாரணமாக, 1936-ஆம் வருஷத்தில்மட்டும், நான்கிங் அரசாங்கத் திற்கும் ஜப்பானிய அதிகாரிகளுக்கும் சுமார் ஏழு தடவை சமரஸப் பேச்சு நடைபெற்றிருக்கிறது. இப்படி ஒருபுறம் சமரஸம் பேசிக் கொண்டுதான், ஜப்பானியர்கள் மற்றொரு புறம் வடமாகாணங்களில் தங்கள் காலை ஊன்றிக் கொண்டு வந்தார்கள்.
இஃது இப்படியிருக்க, ஆரம்பத்திலிருந்தே ஜப்பானிய ஆக்கிரமிப்பை ஒரு கட்டுப்பாடாக இருந்து எதிர்த்து நின்றவர்கள் பொதுவுடமை வாதிகள். இவர்கள், பல தடவை, ஜப்பானை எதிர்த்துப் போராடுவதாயிருந்தால், தாங்கள் நான்கிங் அரசாங் கத்தோடு ஒத்துழைக்கத் தயார் என்று தெரிவித் திருக்கிறார்கள்; நான்கிங் அரசாங்கம், தங்கள் மீது காட்டிவரும் ஆத்திரத்தை ஜப்பானின் மீது திருப்புமாறு பலமுறை விண்ணப்பித்துக் கொண்டி ருக்கிறார்கள். சீனர்களே, சீனர்களைத் கொல்லாதீர்கள் என்ற கோஷத்தை முதன்முதலாகக் கிளப்பியவர்கள் இவர்கள்தான். ஆனால் நான்கிங் அரசாங்கம், இவைகளுக்குப் பிரதியாக இவர் களைக் கொள்ளைக்கூட்டமென்று சொல்லி இவர்களை வேட்டை யாடுவதில் தான் அதிக சுறுசுறுப்பைக் காட்டிவந்தது. இந்த வேட்டையில், இரு தரப்பிலும், 1927-ஆம் வருஷத்திலிருந்து 1937-ஆம் வருஷம் வரை சுமார் பத்து வருஷத்தில் லட்சக்கணக்கான உயிர்கள் பலியிடப்பெற்றன; கோடிக்கணக்கான பணம் வீணாகச் செலவழிக்கப்பட்டது.1 பொதுவுடைமை வாதிகளோ, தங்களுக்கு விரோதமாக இப்படி நான்கிங் அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டு வருவதைப் பொருட் படுத்தாமல், வட மேற்கில் தாங்கள் தாபித்திருந்த பொதுவுடைமை அரசாங்கத்தை வலுப் படுத்திக்கொண்டும், அதன் அதிகார எல்லையை விதரித்துக் கொண்டும் வந்தார்கள். சமுதாயத்தின் கீழ்ப்படியில் உழன்று கொண்டிருக்கிறவர்களுடைய ஆதரவு இவர்களுக்கு அதிகமாகக் கிடைத்துவந்தது. இவர்களுடைய ஆதரவைப் பெற்று இந்தப் பொது வுடைமை அரசாங்கமானது, வட மாகாணங்களில் ஜப்பா னியர்களுடைய செல்வாக்கு அதிகமாக ஓங்கவிடாமல் தகைந்து வந்தது. முன்னே சொல்லப்பட்ட ஸுயியுவான் முதலிய மாகாணங் களில் ஜப்பான், தான் எதிர்பார்த்தபடி சுலபமாக வெற்றிகாண முடியாமற்போனதற்குப் பொதுவுடைமை வாதிகள் காட்டிய எதிர்ப்புதான் முக்கிய காரணம்.
இந்த நிலைமையில் 1936-ஆம் வருஷக் கடைசியில் சீனாவே திடுக்கிட்டுப் போகும்படியான ஒரு சம்பவம் நடைபெற்றது. மஞ்சூரியா, ஜப்பானிய ஆக்கிரமிப்புக்குட்பட்டு விட்டபிறகு அங்கிருந்த சாங் ஸுயே லியாங், தனது படைகளுடன், நான்கிங் அரசாங்கத்தின் உத்தரவுக்கிணங்க பெருஞ் சுவருக்குத் தெற்கே பின் வாங்கிக் கொண்டுவிட்டானல்லவா?1 அதற்குப் பிறகு இவனுடைய படைகள், சீனாவின் வடகிழக்கு மாகாணங்களின் பாதுகாவலுக் கென்று பீக்கிங் நகரத்திற்குத் தெற்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்தப் படையினரிற் பெரும்பாலோர் மஞ்சூரியாவையே தங்கள் தாய் நாடாகக் கொண்டவர்கள். இவர்களுடைய நில புலங்கள், வீடு வாசல்கள், எல்லாம் அங்கேதான் இருந்தன. அவை யாவும் இப்பொழுது ஜப்பானியருடைய பேராசைக்கு இரையாகி விட்டன வல்லவா? இதனால் இவர்கள், அப்பொழுதிருந்தே ஜப்பானியரைப் பழி வாங்க ஆவல் கொண்டிருந்தார்கள்; அவர் களை எதிர்த்துப் போராடி முறியடித்து விரட்டி விட வேண்டு மென்று துடித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் நான்கிங் அரசாங் கம் இவர்களைப் பின்வாங்கிக்கொண்டு விடுமாறல்லவோ உத்தர விட்டுவிட்டது? இது, முதற்கொண்டு, இவர்கள், ஜப்பானி யரை எதிர்த்துப் போராடத் தங்களுக்குச் சந்தர்ப்பம் கொடுக்கப்பட வில்லையே யென்பதற்காக நான்கிங் அரசாங்கத்தின் மீது ஆத்திரப் பட்டுக் கொண்டிருந்தார்கள். இவர்களுடைய ஆத்திரத்தை அதிகரிக்கிற மாதிரியாகவே ஜப்பானுடைய ஆக்கிரமிப்பும் வரவர அதிகரித்துக் கொண்டுவந்தது; நான்கிங் அரசாங்கமும் இந்த ஆக்கிரமிப்பைச் சகித்துக்கொண்டு வந்தது.
இப்படி ஆத்திரத்தில் துடித்துக்கொண்டிருந்த இந்தப் படைகளுக்கு. 1936-ஆம் வருஷக் கடைசியில் நான்கிங் அரசாங்கம், வடமேற்கிலுள்ள கான்ஸு மாகாணத்தில் செல்வாக்கடைந்து வருகிற பொதுவுடைமை வாதிகள் மீது படையெடுத்துச் செல்லு மாறு உத்தரவிட்டது. இந்தப் படை யினருடைய விருப்பத்திற்கு நேர்மாறாக இருந்தது இந்த உத்தரவு. இருந்தாலும் உத்தரவுக்குக் கீழ்ப்படிய வேண்டுமல்லவா? எனவே சாங்ஸுயே லியாங்கின் தலைமையின் கீழ் இவர்கள் மேற்கு நோக்கிச் சென்று ஸியான் என்ற ஊரைத் தலைமைப்படை தலமாக ஏற்படுத்திக் கொண்டு, மேல் நடத்தவேண்டிய நடவடிக்கைகளைப் பற்றித் திட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். கான்ஸு மாகாணம் இவர்களுக்கு அந்நிய நாடு மாதிரி. அங்குப் பொதுவுடைமை வாதிகள் செய்து கொண்டிருக்கிற பந்தோபதோ மிக அதிகம். இந்த நிலையில் இரு சாராருக்கும் சில தொடர்புகள் ஏற்பட்டன. இந்தத் தொடர்பின் மூலமாக, நான்கிங் அரசாங்கம் கருதுகிறபடி, பொதுவுடைமை வாதிகள் கொள்ளைக் கூட்டத்தினரல்லர், அரசியல் நுட்பங்களை நன்கு உணர்ந்தவர்கள், தேச நலத்தையே பிரதானமாகக் கருதுகிறவர்கள் என்று தெரிந்து கொண்டனர் சாங் ஸுயே லியாங் படையினர். பொதுவுடைமைத் தத்துவத்தில் இவர்கள் மனம் ஈடுபட்டது. இரு சாராரும் சண்டை போட்டுக் கொள் வதற்குப் பதில் அரசியல் உண்மைகளைப் பரிமாறிக்கொண்டனர்! உள்நாட்டுச் சண்டையினால் அனுகூல மடைகிறவர்கள் அந்நியர்கள்; துன்பமும் துயரமும் அனுபவிக்கிற வர்கள் நாட்டு மக்கள். பெயின் குழப்பத்தினால் உண்டான பலன் என்ன? அசைக்க முடியாத இந்த உண்மையை நான்கிங் அரசாங்கம் இன்னமும் உணராமலிருப்பது குறித்து, இரு சாராரும் ஆச்சரியப் பட்டனர். ஆரம்பத்தில் சிறிது காலம் வரை, அதாவது ஜப்பானின் மஞ்சூரிய ஆக்கிரமிப்பு வரை பொதுவுடைமை வாதிகள் கோமிண்டாங் கட்சியினர் மீது சிறிது வெறுப்புக்காட்டி வந்தார் களாயினும், பின்னர் இந்த வெறுப்பெல்லாம் திரண்டு ஜப்பான் மீது திரும்பியது. ஜப்பானை, சீனாவினின்றும் அப்புறப்படுத்திவிட வேண்டுமென்ற ஒரே நோக்கந்தான் இவர்களுடைய பிரசாரத்தின் முன்னணியில் நின்றது. ஆனால் நான்கிங் அரசாங்கந்தான், இந்தப் பிரசாரத்தைத் துணையாக வைத்துக் கொண்டு, ஜப்பானின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடாமல், ஐரோப்பிய வல்லரசு களின் சுயநல யோசனை களுக்கெல்லாம் காது கொடுத்துக்கொண்டு, தன்னுடைய க்ஷாத்திரத்தைப் பொதுவுடைமை வாதிகள்மீது காட்டி வந்தது. பொதுவுடைமை வாதிகள், ஜப்பான்மீது எந்த அளவுக்குத் துவேஷங் கொண்டிருந்தார்களோ அந்த அளவுக்கு நான்கிங் அரசாங்கம் பொதுவுடைமை வாதிகள் மீது துவேஷங் கொண்டி ருந்தது. ஆனால், இதே அளவுக்கு நான்கிங் அரசாங்கத்தின் மீது பொதுவுடைமை வாதிகளுக்குத் துவேஷம் இருந்ததா வென்பது சந்தேகம். இவர்களுக்கு, நான்கிங் அரசாங்கம் தங்கள்மீது காட்டிவரும் வன்மத்தை ஜப்பான் மீது திருப்ப மாட்டேனென் கிறதே என்ற வருத்தம் இருந்ததே தவிர, நான்கிங் அரசாங் கத்தையோ, அல்லது அதனை ஆதரித்து வரும் கோஷ்டியையோ அடியோடு நிர்மூலமாக்கி விட்டுத் தாங்கள் அதிகார பதவியைக் கைப்பற்றிக் கொண்டு தனியரசு செலுத்த வேண்டுமென்ற நோக்கம் இல்லை. ஜப்பானை எதிர்த்துப் போராடுகிற விஷயத்தில் இவர்கள் - பொதுவுடைமை வாதிகள் - நான்கிங் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க எந்த நிமிஷத்திலும் தயாராயிருந்தார்கள்; அப்படித் தயாரா யிருப்பதாகப் பல முறை தெரிவித்துக் கொண்டு மிருக் கிறார்கள். ஆனால் நான்கிங் அரசாங்கந்தான் இந்த ஒத்துழைப்பை மறுத்து வந்திருக்கிறது.
பொதுவுடைமை வாதிகளும், அவர்களுக்கு விரோதமாக அனுப்பப்பெற்ற சாங் ஸுயே லியாங்கின் படையினரும் இப்படிக் கட்டித் தழுவிக்கொண்டு பரபர க்ஷேமலாபங்களை விசாரித்துக் கொண்டிருப்பார் களென்று நான்கிங் அரசாங்கம் எதிர்பார்க்க வில்லை. சாங் ஸுயே லியாங்கிடமிருந்து எவ்வித தகவலும் சரியாகக் கிடைக்கவில்லையே, அவனுடைய படைகள் எவ்வித முன்னேற்றத் தையும் அடைந்ததாகத் தெரிய வில்லையே, இதற்கு என்ன காரணம் என்று அது கவலைப்பட்டுக் கொண்டிருந்தது. பிரதம சேனாதிபதி என்ற முறையில் சியாங் கை ஷேக் , தானே நேரில் போர்முனைக்குச் சென்று உள்ள நிலைமையைத் தெரிந்து கொண்டுவர வேண்டு மென்று தீர்மானித்தான். அப்படியே சில ராணுவ தளகர்த்தர் களுடன் 1936-ஆம் வருஷம் டிசம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில், சாங் ஸுயே லியாங்கின் தலைமை தானமாகிய ஸியானுக்குச் சென்றான். ஏற்கனவே இந்தப் பகுதிகளுக்கு, சமாதானத்தை நிலை நாட்டுவதற்கான படை யென்ற பெயராலும் கொள்ளைக் கூட்டத் தினரை அடக்கும் படையென்ற பெயராலும், சிறந்த தளகர்த்தர் களின் தலைமையில் சில படைகள் அனுப்பப்பட்டிருந்தன. எல்லாம் பொது வுடைமை வாதிகளை அழித்து ஒழிப்பதற்குத்தான்! இந்தப் படைகளும் அப்பொழுது ஸியானில் முகாம் போட்டிருந்தன.
ஸியானுக்கு வந்த சியாங், படைத் தலைவர்களைக் கண்டு பேசினான். எல்லோருக்கும் ஒருமுகமாக ஜப்பானை எதிர்த்துப் போராட வேண்டுமென்ற விருப்பத்தையே தெரிவித்தார்கள்; பொது வுடைமை வாதிகளை எதிர்த்துப் போராட மறுத்தார்கள். ஆனால் சியாங், தன்னுடைய உத்தரவுப்படி நடக்கவேண்டுமென்று வற்புறுத் தினான். இருதரப்பினருக்கும் வாக்கு வாதம் நடைபெற்றது. சியாங்கோ பிடிவாதங் காட்டினான். இவனை எப்படியாவது தங்கள் வழிக்குத் திருப்ப வேண்டு மென்று தீர்மானித்த படைத் தலைவர்கள், தங்கள் படை வீரர்களுடைய ஏகமனதான அபிப்பிராயத்தைத் துணையாகக் கொண்டு, சியாங்கை, அவனுடைய பரிவார சகிதம் சிறைப்படுத்தி விட்டார்கள்; சிறையிலே வைத்துக்கொண்டு, தங்களுடைய சில கோரிக்கைகளுக்கு இணங்குமாறு சியாங்கைக் கேட்டார்கள். இந்தக் கோரிக்கைகள் என்ன? ஒன்று, பொது வுடைமை வாதிகளோடு சமரஸமாகப் போவது; இரண்டு, நான்கிங் அரசாங்கத்தை சர்வ கட்சியினரும் அடங்கிய விதமாகப் புனர் நிர்மாணம் செய்வது; மூன்று, ஜப்பானிய ஆக்கிரமிப்பை எதிர்த்து நிற்பது; நான்கு, ஜனங்களுக்குப் பேச்சுரிமை, எழுத்துரிமை முதலியன அளிப்பது; ஐந்து, அரசியல் கைதிகளை விடுதலை செய்வது; ஆறு, சீனாவின் சுதந்திரத்தை ஆதரிக்கிற நாடுகளுடன் சிநேக ஒப்பந்தங்கள் செய்து கொள்வது முதலியன. இந்தக் கோரிக்கைகளை சாங் ஸுயே லியாங்கே கிளத்தினான். தன்னை இப்படிச் சிறைப்படுத்தி வைத்துக்கொண்டு, இந்த மாதிரியான கோரிக்கைகளுக்கு இணங்குமாறு சொல்வது சட்டத்திற்கும் நீதிக்கும் விரோதமென்று சொல்லி, சியாங் கண்டிப்பாக மறுத்து விட்டான். தன் உயிருக்கு ஆபத்தேற்படக் கூடு மென்பது தெரிந்தும் இவன் அதை லட்சியஞ் செய்யவில்லை. இந்தச் சமயத்தில் இவன் காட்டிய உறுதியும், இவன் மிகப்பெருந்தன்மையுடன் நடந்து கொண்டதும், இவனுடைய வாழ்க்கையில் மிக பிரகாசமான அமிசங்கள். இவன் இதுகாறும் சீனாவின் ஒற்றுமைக்காகப் பாடுபடாமல் இருந்த குற்றமெல்லாம், இந்தச் சம்பவத்தினால் மறைந்து போய் விட்டது. சர்வ சீனாவுக்கும் அதி நாயகனாக இவன் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு இந்த சம்பவம் ஒரு தூண்டுதலா யிருந்தது.
சியாங், பிடிவாதங் காட்டுவதைக் குறித்து படைத் தலைவர் களுக்குள் அபிப்பிராய வேற்றுமைகள் உண்டாயின. நீண்ட கால மாகவே சியாங்கினிடம் விரோதம் பாராட்டியவர்கள் சிலர் இருந்தார்கள். இவர்களைப் போன்ற சிலர், சியாங்கைக் கொன்று விட வேண்டுமென்று சொன்னார்கள். மற்றவர்கள், கூடாதென்றார் கள். கடைசியில் இருசாராரும் சேர்ந்து பொதுவுடைமை வாதிகளின் ஆலோசனையைக் கேட்டார்கள். அவர்கள், சியாங்கை உடனே விடுதலை செய்ய வேண்டு மென்றும், வேறு எந்தவிதமான நடவடிக்கை யெடுத்துக் கொண்டாலும், அது நாட்டிலே பிளவை உண்டு பண்ணி, ஜப்பானிய ஆக்கிரமிப்புக்குத் துணைசெய்வதாகு மென்றும் கூறினார்கள். தங்களை அடியோடு ஒழித்து விட வேண்டு மென்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிற, அதற்காகவே ஸியானுக்கு வந்திருக்கிற சியாங்கை, அவன் தங்கள் வசப்பட்டுக் கிடக்கிற காலத்திலும் அவனைப் பழி வாங்க விரும்பவில்லை பொதுவுடைமை வாதிகள்! அப்படிச் செய்வது, தேச நன்மைக்கு விரோத மென்பதை அவர்கள் நன்கு தெரிந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடைய இந்தப் பெருந்தகைமை, சியாங் கை ஷேக் காட்டிய மனோ தைரியத்தைக் காட்டிலும் ஒருபடி உயர்ந்த தென்றே சொல்ல வேண்டும்.
சியாங் சிறைப்படுத்தப்பட்டு விட்ட செய்தி நான்கிங்குக்கு எட்டியது. அரசாங்க அதிகாரிகளுக்குள் சிலர், ஜப்பானின் அந்தரங்க பக்தர்கள்; சியாங்கின் உயிர் போனாலும் போகட்டும், ஸியான் நகரத்தை ஆகாயப் படையினால் தாக்கித் தரையோடு தரையாக்கிவிட வேண்டுமென்று உரக்கக் கத்தினார்கள். அவ்வளவு ஆத்திரம் இவர்களுக்குப் பொது வுடைமை வாதிகள் மீது! சியாங்கை விடுதலை செய்ய வேண்டுமென்று சொன்ன பொதுவுடமை வாதிகள் மீது! ஆனால் நல்ல வேளையாக இவர் களுடைய யோசனை, செயலில் வராமல் நின்றுவிட்டது. சியாங்கை விடுதலை செய்து கொண்டுவர, அவனுடைய மனைவியும், மைத்துனனாகிய டி.வி. ஸுங்கும் (அரசாங்க மந்திரிகளில் ஒருவன்) ஆகாய விமானத் தின் மூலம் ஸியானுக்குச் சென்றார்கள். அப்படியே டிசம்பர் மாதம் இருபத்தைந்தாந்தேதி விடுதலை செய்து கொண்டு நான்கிங் வந்து சேர்ந்தார்கள். எங்கும் ஒரு குதூகலம்! சியாங்குக்கு வாழ்த்து!
ஸியான் சம்பவம், தேசத்தின் எண்ணப்போக்கையே மாற்றி விட்டது. பொதுவுடைமை வாதிகள் பெருந்தன்மையாக நடந்து கொண்டது, அவர்களிடத்திலே சிலருக்கிருந்த துவேஷத்தை அகற்றி விட்டது. அப்படியே சியாங் காட்டிய மனோ உறுதி, அவனுடைய தலைமையில் எல்லோருக்கும் ஒரு நம்பிக்கையை உண்டு பண்ணியது. நான்கிங் அரசாங்கமும் பொதுவுடமை வாதிகளும் ஒற்றுமைப் பட்டுப் போக வேண்டுமென்ற கூக்குரல் எங்குப் பார்த்தாலும் எழும் பியது; ஒற்றுமைக் கூட்டங்களும் ஊர்வலங்களும் நடைபெற்றன; தீர்மானங் களுக்கு மேல் தீர்மானங்களாக நான்கிங் அரசாங்கக் காரியாலயத்தில் வந்து குவிந்தன. இந்த நிலைமையில் 1937-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் கோமிண்டாங் கட்சியின் நிருவாகக் கூட்டம் கூடியது. இந்தக் கூட்டத்திற்குப் பொதுவுடைமைக் கட்சியினர், தேசம் ஒற்றுமைப் பட்டுச் செல்வ தற்கான சில கோரிக்கைகளை அனுப்பி யிருந்தனர். இவை யென்னவென்றால், பொதுவுடைமை இயக்கத்தின் மீது தொடுக்கப் பட்டிருக்கும் யுத்தத்தை நிறுத்தவேண்டும், ஜப்பானிய ஆக்கிரமிப்பை ஆயுதபலங் கொண்டு எதிர்க்க வேண்டும், பேச்சுரிமை, கூட்டங்கூடும் உரிமை முதலிய ஜீவாதாரமான உரிமைகள் எல் லோருக்கும் வழங்கப்பட வேண்டும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும், தேசீய புனருத்தாரணத்திற் காக ஒரு மகாநாடு கூட்டி, ஜனங்களுடைய வாழ்க்கை அந்ததை உயர்த்தக் கூடிய மாதிரியான திட்டங்களை வகுக்க வேண்டும் முதலியன வேயாம். இதே பிரகாரம், கோமிண்டாங் கட்சியில் இதுகாறும் மிதவாதம் பேசி வந்த தலைவர்களும் ஒற்றுமைப்படு வதற்கான முயற்சிகளைச் செய்தார்கள். ஆனால் இந்தக் கூட்டத்தில், பொது வுடைமைக் கட்சியைக் கண்டனம் செய்கிற மாதிரியான ஒரு தீர்மானமே நிறைவேற்றப்பட்டது.1 ஆனாலும் பொதுவுடைமை வாதிகள், ஒற்றுமைக்கான முயற்சிகளைச் செய்வதில் சிறிதுகூடச் சலிப்புக் காட்ட வில்லை. இவர்களுடைய பிரதிநிதிக் கோஷ்டி யொன்று சியாங் கை ஷேக்கை நேரில் பேட்டி கண்டு, ஒற்றுமைக் கான காரியங்களைச் செய்யுமாறு வேண்டிக்கொண்டது; இந்த ஒற்றுமைக்காக எந்தெந்த அமிசங்களில் தாங்கள் இணங்கிப் போக முடியும் என்பவைகளையும் தெரிவித்தது. அதாவது, செம்படையை தேசீய ராணுவத்தில் ஐக்கியப் படுத்திக் கொள்வதற்கும், இதுவரை தங்களுடைய ஆதீனத்திற்குட் பட்டிருக்கிற சோவியத் பிரதேசத்தை நான்கிங் அரசாங்க நிருவாகத்திற் குட்பட்ட எல்லைப்புறத்து விசேஷ மாகாணமாக அமைத்துக்கொள் வதற்கும் சம்மதித்தது. இந்த எல்லைப் புறத்து விசேஷ மாகாணத்தில், ஜப்பானுக்கு ஆதரவு காட்டுகிற நிலச்சுவான்தார்களுடைய நிலங்களைத் தவிர மற்ற நிலச்சுவான்தார்களுடைய நிலங்களைப் பறிமுதல் செய்யாமலிருப்ப தற்கும், இதுகாறும் நிலச்சுவான் தார்களுக்கு மறுக்கப் பட்டு வந்த ஓட்டுரிமையை இனி அவர்களுக்கு வழங்குவதற்கும் ஒப்புக் கொண்டது. இந்த மாதிரி பொதுவுடைமை வாதிகள், தங்களுடைய முறைகளிற் சிலவற்றை தேச ஒற்றுமைக்காக விட்டுக்கொடுக்க முன்வந்தது, கோமிண்டாங் கட்சியிலும் நான்கிங் அரசாங்கத்திலும் இவர்களுக்கு எதிராக இருந்த கட்சியின் பலத்தைக் குறைத்து விட்டது.
எனவே நான்கிங் அரசாங்கம், பொதுவுடைமை வாதிகளின் இந்த விட்டுக் கொடுக்கிற தன்மைக்குப் பிரதியாக ஒன்றுஞ் செய்யாமல் சும்மாயிருக்க முடியுமா? ஜப்பானுக்கு ஆதரவாக இருந்த உயர்தர அதிகாரிகளை ஒருவர் பின் ஒருவராக விலக்கியது; கொள்ளைக் கூட்டத்தினரை அடக்குவதற்கென்று அனுப்பப் பெற்ற படையை - அதாவது பொதுவுடைமை வாதிகளுக்கு விரோதமாக அனுப்பப்பெற்ற படையை - கலைத்துவிட்டது; சோவியத் ஆதிக்கத் திலிருந்த வடமேற்கு மாகாணங்களுக்கு யாரும் போகக்கூடா தென்று பிறப்பித்திருந்த தடை உத்திரவை ரத்து செய்துவிட்டது.
இதே பிரகாரம் கோமிண்டாங் கட்சியும், பொதுவுடைமைக் கட்சியோடு இணங்கிப் போகத் தயாராயிருந்தது. சென்ற பத்து வருஷகால மாகத் தேசத்தை அலங்கோலப் படுத்திவந்த உள் நாட்டுச் சண்டை, ஜப்பானுக்கு எவ்வளவு தூரம் ஆக்கங் கொடுத் திருக்கிற தென்பதை இக்கட்சியிலுள்ளவர்கள் இப்பொழுது நன்கு உணர ஆரம்பித்தார்கள். மேலும், ஜப்பானின் ஏகாதிபத்திய எண்ணங்கள் இவர்களுக்கு இப்பொழுதே ஒருவாறு புலப்பட ஆரம்பித்தது.
இப்படிச் சீனா ஒற்றுமைப் பட்டுக்கொண்டு வருவதை ஜப்பானால் சும்மா பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. எப்படிப் பார்த்துக் கொண்டிருக்க முடியும்? அதனுடைய ஏகாதி பத்திய ஆசைக்கு இந்த ஒற்றுமை பெரிய இடையூறல்லவா? மேலும் நான்கிங் அரசாங்கம், 1937-ஆம் வருஷத் தொடக்கத்தில், தனது முக்கிய மந்திரிகளில் ஒருவனான டாக்டர் எச். எச். குங் என்பவனை அந்நிய நாடுகளுக்கு அனுப்பி, யுத்த தளவாடங்களும், கடனாகப் பணமும் பெறுவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தது; இதே சமயத்தில் உள் நாட்டில் ராணுவத் தற்காப்பு ஏற்பாடுகள் சிலவற்றையும் செய்து வந்தது.
பார்த்தது ஜப்பான்; இனியும் தாமதிக்கக் கூடாதென்று தீர்மானித்தது. சீனா நன்றாக ஒற்றுமைப்படுவதற்கு முன்னர், அது தன்னை நன்றாகப் பலப்படுத்திக் கொள்வதற்கு முன்னர், அதனைத் தாக்கி வீழ்த்திவிட சங்கல்பம் செய்துகொண்டது. இப்படிச் சங்கல்பம் செய்துகொண்டுதான் 1937-ஆம் வருஷம் ஜூலை மாதம் ஏழாந்தேதி சீனாவை வலுச் சண்டைக்கிழுத்தது.
இந்தச் சண்டையினால் சீனாவின் ஒற்றுமை உரம் பெற்றதே தவிர தளர்ச்சியடையவில்லை. பொதுவுடைமைக்கட்சிக்கும் கோமிண்டாங் கட்சிக்கும் சமரஸம் ஏற்பட்டது. ஜப்பானை எதிர்த்துப் போராடி வெற்றி காண்கிற விஷயத்திலும், புதிய சீனாவை நிர்மாணம் செய்கிற விஷயத்திலும் இருகட்சியினரும் ஒன்று சேர்ந்து வேலை செய்வதாகப் பிரதிக்ஞை செய்துகொண்டனர். இப்படியே நான்கிங் அரசாங்கமும், பொதுவுடைமைக் கட்சியினர் ஏற்கனவே கிளத்தியிருந்த சமரஸ கோரிக்கைகளுக்குத் தனது சம்மதத்தைத் தெரிவித்தது. அதாவது சோவியத் செம்படை, எட்டாவது படையென்று பெயர் கொடுக்கப் பெற்று, தேசீய ராணுவக் கவுன்சில் என்னும் பிரதம ராணுவ தாபனத்தின்
நிருவாகத்திற் குட்படுத்தப் பெற்றது. இந்தப் படைக்கு சூதேஹ் என்ற பொதுவுடைமைக் கட்சித்தலைவன் சேனாதிபதியாக நியமிக்கப் பட்டான்.1 சோவியத் துக்களின் ஆட்சிக்குட்பட்டிருந்த வடமேற்கு மாகாணங்கள், வடமேற்கு எல்லைப்புற விசேஷ நிருவாகப் பிரதேசம் என்ற பெயருடன் நான்கிங் அரசாங்க நிருவாகத்திற் குட்படுத்தப் பெற்றன.
இங்கே நாம் ஒரு விஷயத்தைக் குறிப்பிடவேண்டும். என்ன வென்றால், கோமிண்டாங் கட்சிக்கும் பொதுவுடைமைக் கட்சிக்கும் சமரஸம் ஏற்பட்ட போதிலும், இரண்டும் சேர்ந்து ஜப்பானை எதிர்த்துப் போராடி வெற்றி காணவும், புதிய சீனாவை நிர்மாணம் செய்யவும் உறுதி செய்து கொண்ட போதிலும், எந்தக் கட்சியும் தன்னுடைய தனித்து வத்தை இழந்து விடவில்லை; ஒன்றிலே மற்றொன்று ஐக்கியப் பட்டுப் போக வில்லை. இரண்டு கட்சிகளும் தனித்தனியாக எப்பொழுதும் போல் வேலை செய்து கொண்டிருக்கும். சென்ற பத்து வருஷ காலமாக நடைபெற்றதைப் போல் ஒன்றையொன்று அழிக்க முற்படாது.2
நான்கிங் அரசாங்கம், இங்ஙனம் பொதுவுடைமைக் கட்சி யினரின் ஒத்துழைப்பைப் பெற்றதன் மூலம், ஜனங்களின் நல்லெண்ணத் தைச் சம்பாதித்துக் கொண்டது. இதே சமயத்தில், இதுகாறும் சிறையிலே வைக்கப்பட்டிருந்த அரசியல் வாதிகளென்ன, தொழிலாளர் தலைவர் களென்ன முதலிய பலரையும் விடுதலை செய்தது; ஜப்பானி யருக்கு விரோதமாகப் பிரசாரஞ் செய்யக் கூடாதென்று விதிக்கப்பட்டி ருந்த தடை யுத்தரவை ரத்து செய்தது. இந்தக் காரியங்களின் மூலம் தனது சொல்வாக்கை வளர்த்துக் கொண்ட நான்கிங் அரசாங்கத்திற்கு ராஜ்யத்தின் நானாபக்கங்களி லிருந்தும், ராணுவப் பிரபுக்கள் முதலா யினோரிடமிருந்தும் ஆதரவு கிடைத்தது. சுருக்கமாக, ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு விரோதமாக எல்லாத் தேசீய சக்திகளும் ஒன்று திரண்டன. இந்தத் திரட்சிக்கு ஐக்கிய தேசீய முன்னணி என்று பெயர் . இந்த முன்னணியின் முதல் தலைவன் சியாங் கை ஷேக்.
சீன ஜப்பானியப் சண்டை தொடங்கிய பிறகு கூட, நான்கிங் அரசாங்கத்தில் சிலர், ஜப்பானை எதிர்த்துப் போராட வேண்டியது அவசியமாவென்ற கேள்வியைக் கேட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் இவர்களுடைய கேள்விக்குப்பதில் சொல்வார் யாருமில்லை. ஜப்பானை எதிர்த்துப் போராடவேண்டு மென்ற உறுதி ஜனங் களிடத்தில் ஓங்கி நின்றது. இதுகாறும் எங்கள் குடும்பத்திற்காக வியர்வையைச் சிந்திக் கொண்டிருந்தோம்; இனி தேசத்திற்காக ரத்தத்தைக் கொட்டுவோம் என்று ஜனங்கள் உருத்தெழுந்தார்கள். சுருக்கமாக புதிய சீனா உதயமாயிற்று.
முழங்கால் முறிய அடிக்க முயற்சி
மஞ்சூரியா, ஜப்பானின் ஆக்கிரமிப்புக்குட்பட்ட பிறகு, சீனாவின் வடமாகாணங்களில் எல்லைப்புறச் சம்பவங்களென்ற பெயரால், ஜப்பானியப் படைகளும், சீனப்படைகளும் அடிக்கடி கைகலப்பது வழக்கம். இந்த எல்லைப் புறச் சம்பவங்களைச் சிருஷ்டித்து அவைகளின்மூலம் சாதகம் தேடிக்கொள்வதில் ஜப்பான் மிகவும் சாமர்த்தியங்காட்டிவந்தது. இப்படிப்பட்ட எல்லைப்புறச் சம்பவம் ஒன்றை இப்பொழுது - 1937-ஆம் வருஷம் மத்தியில் - சிருஷ்டிக்க வேண்டியது அதற்கு அவசியமாயிற்று. ஏனென்றால் முந்தின அத்தியாயத்தில் கூறியபடி, சீனா, ஒற்றுமைப் பட்டுக்கொண்டும் பலப்பட்டுக்கொண்டும் வருவது, அதனுடைய ஏகாதிபத்திய நோக்கத்திற்கு முட்டுக்கட்டை மாதிரி யல்லவா?
மேற்படி 1937-ஆம் வருஷ மத்தியில் வடக்கே ஹோப்பை மாகாணத்தில், சீனப் பாதுகாப்புப் படையொன்று தளபதி ஸுங் செ யுவான் என்பவனுடைய தலைமையில் நிறுத்திவைக்கப்பட்டி ருந்தது. இதன் தலைமை தாபனம் பீகிங். 1933-ஆம் வருஷம் கிழக்கு ஹோப்பை மாகாணத்தில் ஜப்பானியர் முன்னோக்கி வந்த போது, அவர்களை எதிர்த்து நின்றது இந்தப் படைதான். இந்தப் படையினரில் பெரும்பாலோர் சம்பளத்திற்குச் சேவகஞ் செய்யும் போர்வீரர்களல்லர்; உண்மையான தேசபக்தர்கள்; தங்களுடைய அரசாங்கம், ஜப்பானியர்களுக்கு விட்டுக் கொடுத்துக் கொண்டு வருகிறதே யென்று மனக்கொதிப்படைந் திருந்தவர்கள். இவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகாமையில், சிறிது காலமாக, ஜப்பானியப் படைகளின் ஒருபகுதி முகாம் போட்டுக்கொண்டி ருந்தது. சீனாவுக்கும் ஜப்பானுக்கும் அவ்வப்பொழுது ஏற்பட்டு வந்திருக்கிற ஒப்பந்தங்களில், ஜப்பான், இப்படிச் சீன அதிகார எல்லைக்குள் தனது துருப்புகளைக் கொண்டுவந்து நிறுத்திக் கொள்ள உரிமை பெற்றிருக்கிற தென்று ஜப்பானிய ராஜதந்திரிகள் சாதிக்கிறார்கள். இந்தச் சாதனைகளுக்கு ஆதாரமேயில்லை என்று சீனா மறுத்து வந்திருக் கிறது. இஃது எப்படியிருந்தபோதிலும் இரண்டு பக்கத்துப் படையினரும் நட்பு முறையில் நடந்து கொண் டிருந்தால் எவ்வித சங்கடமும் ஏற்பட்டிராது. ஆனால், ஜப்பானியப் போர்வீரர்கள், தங்களுக்கு எட்டினாற் போலிருக்கும் சீனப் படையினரை உதாசீனமாக நடத்திவந்தார்கள்; சீனர்களா? பின் முதுகு காட்டுவதில் வல்வர்களல்லவோ? என்கிற மாதிரி யாகவே அலட்சியப் படுத்தி வந்தார்கள். இவைகளையெல்லாம் சீனர்கள் பொறுமையுடன் சகித்து வந்தார்கள். ஏனென்றால், சீன அதிகாரிகள், பதிலுக்குப் பதில் செய்ய வேண்டாமென்றும், அப்படிச் செய்வது ஜப்பானோடு சமரஸமாகப் போவதற்கு இடையூறாயிருக்கு மென்றும் இவர்களுக்குத் தெரிவித்திருந்தார்கள். இப்படியே மாதங்கள் பல கழிந்தன.
1937-ஆம் வருஷம் ஜூலைமாதம் ஆறாந் தேதியன்று இரவு, பீகிங் நகரத்திற்குச் சமீபத்திலுள்ள வான்பிங் என்ற இடத்தில் ஜப்பானியப் துருப்புகள் கவாத்து பழகி விட்டு, மறுநாள் உதய மானவுடன் தங் களுடைய முகாமுக்குத் திரும்பிச் சென்றனர். அப் பொழுது ஆஜர் எடுத்துப் பார்த்ததில் தங்களிலே ஒருவன் காணாமல் போய்விட்டா னென்று சொல்லி, அவனை நிச்சயமாகச் சீனர்கள்தான் களவாடிக் கொண்டு போயிருப்பார்களென்று சாதித்தார்கள். சில மணி நேரங் கழித்து இந்தக் காணாமல் போன மனிதன் திரும்பிவந்து ஆஜர் கொடுத்துவிட்டான்! ஆனாலும் இரண்டுபக்கத்துச் சைன்னியங் களுக்கும் அடிக்கடி ஏற்பட்டு வருகிற தகராறுகளை நிரந்தரமாகத் தீர்த்துவைக்க, சீனப் பிரதிநிதிகளும் ஜப்பானியப் பிரதிநிதிகளும் அடங்கிய ஒரு மத்தியத கமிட்டியை நியமிக்கவேண்டுமென்று ஜப்பானியர்கள் கோரினார்கள். இதனோடு கூட, சீனத்துருப்புகள், வான்பிங் என்ற இடத்தைக் காலிசெய்துவிட்டுப் பின்னுக்குப் போக வேண்டுமென்று கூறினர். இதற்குச் சீனப்படையினர் சம்மதிக்கவில்லை. இதையே காரணமாக வைத்துக்கொண்டு ஜப்பானியர்கள் வான்பிங் கிக்குச் செல்லும் வழியில் உள்ள மார்க்கோ போலோ வாராவதிமீது - இதற்கும் இதைச் சேர்ந்தாற்போல் இருக்கும் கிராமத்திற்கும் லுக் கௌசியோ என்று பெயர். - இங்கே முகாம் போட்டுக் கொண்டிருந்த சீனத்துருப்புகள் மீது 1937-ஆம் வருஷம் ஜூலை மாதம் ஏழாந்தேதி துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள். சீனப்படையினரும் இதற்குப் பதில் துப்பாக்கிப்பிரயோகம் செய்தார்கள். ஜப்பான் ஆவலோடு எதிர் பார்த்துக் கொண்டிருந்த யுத்தம் ஆரம்பித்துவிட்டது.1
ஒரு பெரிய யுத்தம் நடைபெறுவதற்கான எல்லா முன்னேற் பாடு களையும் செய்துகொண்டே, ஜப்பான், இந்த லுக்கௌசியோ சம்பவத்தைச் சிருஷ்டித்தது. இதனை அகமாத்தாக ஏற்பட்ட ஒரு சம்பவம் என்று சொல்லவே முடியாது. இதற்கு ஆதாரம் என்ன வென்றால், ஜூலை மாதம் பதினோராந்தேதி, ஜப்பான், சீனாவி லுள்ள தனது தானீகர்களுக்கு அனுப்பிய ஓர் உத்தரவில், நிலைமை முற்றிவிடுமானால் ஆங்காங்குள்ள ஜப்பானியர்களைப் பத்திரமாக அப்புறப்படுத்துவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து தயாராக வைத்திருக்க வேண்டுமென்று கண்டிருந்தது. அன்றே, மேற்படி ஜூலைமாதம் பதினோராந்தேதி யன்றே, மஞ்சூரி யாவிலிருந்து இரண்டாயிரம் ஜப்பானியத் துருப்புகள் டீண்ட்ஸின் துறைமுகப் பட்டினத்தில் வந்திறங்கின. நவம்பர் மாதக் கடைசிக்குள் சுமார் மூன்று லட்சம் ஜப்பானியத் துருப்புகள் சீன எல்லைக்குள் வந்து முகாம் போட்டுக்கொண்டுவிட்டன.
இப்படி ஒருபக்கம் துருப்புகள் வந்திறங்கிக்கொண்டிருக்க, மற்றொரு பக்கம் ஜப்பானிய ராணுவ தளகர்த்தர்கள், வட சீனாவின் மாகாண அதிகாரிகளோடு சமரஸம் பேசிக்கொண்டிருந்தார்கள். இடையிடையே இரு தரத்துத் துருப்புகளுக்குள்ளும் சில்லரைச் சண்டைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்தக் காலத்தில் ஜப்பான் பெரிய யுத்தம் நடத்து வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் ஒழுங்காகச் செய்து கொண்டது. இதற்காகவே சமரஸப் பேச்சுக் களென்று சொல்லி காலங் கடத்தியது. சமரஸமாகப் போக வேண்டு மென்ற எண்ணம் அதற்கு இருந்ததாகத் தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால் டீண்ட்ஸினுக்குப் படைகளைக் கொண்டு வந்து இறக்கியிராதன்றோ? லுக்கௌசியோ சம்பவத்தை அது கடவுள் அனுக்கிரகமாகவே கொண்டது. இந்தச் சமயத்தில் யோமி யூரி ஷிம்புன் என்ற ஜப்பானியப் பத்திரிகை பின்வருமாறு எழுதியது:- வட சீனாவின் குழப்ப நிலைமையை ஒரு விதமாகத் தீர்த்துக் கொள்ள இதுதான் நமக்கு நல்ல சந்தர்ப்பம். இது தீர வேண்டுமென்று நாம் பல வருஷங்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். (சீன அரசாங்க ஆதிக்கத் திற்குட்பட்ட) ஹோப்பை - சாஹார் கவுன்சில், நான்கிங் மத்திய அரசாங்கம் ஆகிய இந்த இரண்டு தடைகளையும் அப்புறப்படுத்தக்கூடிய உறுதி நமக்கு இப்பொழுது இல்லாமற் போனால், கடவுளால் அனுக்கிர கிக்கப் பட்ட இந்தச் சந்தர்ப்பத்தைக் கைநழுவ விடுவோமானால், விபரீத பலன்கள்தான் உண்டாகும். ஜப்பான் பார்லிமெண்டில், அப்பொழுது பிரதம மந்திரியாயிருந்த கோனோயி, சீன - ஜப்பானியப் பிரச்னைகளுக்கு நிரந்தரமான ஒரு பரிகாரம் ஏற்படவேண்டும் என்று கூறினான். இந்த வாசகங்களின் கருத்தென்ன? இதுகாறும் ஜப்பான் நயமான முறைகளை உப யோகித்து, சீனாவில் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிக்கொண்டு வந்தது. இனி இந்த முறை பலிக்காது, சீனா விழித்துக்கொண்டு விட்டது என்று தெரிந்ததும், பலாத்காரத்தை உபயோகித்துத்தான் தனது காரியத்தைச் சாதித்துக்கொள்ள வேண்டுமென்று தீர்மானித்தது.
ஜப்பானின் ஏகாதிபத்திய லட்சியம் இன்னதுதான் என்று வகுத்துரைக்கும் தனகா யாதாதில்1 பின்வரும் வாசகங்கள் காணப் படுகின்றன:- நமது வியாபார விருத்தியை மட்டும் நாம் நம்பிக் கொண்டிருந்தோமானால், கடைசியில் நாம் பிரிட்டனாலும், அமெரிக்கா வினாலும் தோற்கடிக்கப்பட்டு விடுவோம். நம்மை மிஞ்சிய பொருளாதார சக்திகள் இருக்கின்றன. இதனால் நாம் அடைகிற லாபம் ஒன்றுமில்லை. இதைவிடப் பெரிய ஆபத்து என்னவென்றால், சீனா என்றைக்காவது ஒரு நாள் விழித்துக் கொண்டு விடும்.
இந்த தனகா யாதாதுதான், ஜப்பானின் ஏகாதிபத்தியச் சட்டம். இந்தச் சட்டத்தை அனுசரித்தே அது தனது நடவடிக் கைகளை நடத்திக்கொண்டு வந்திருக்கிறதென்பது, 1927-ஆம் வருஷத்திலிருந்து நாளதுவரை அதனுடைய போக்கைக் கவனித்துக் கொண்டு வந்திருப்பவர்களுக்கு நன்கு புலனாகும். இது நிற்க.
சீனா மீது பெரிய யுத்தந்தொடுத்து அதனை முழங்கால் முறிய அடக்க வேண்டும் என்ற எண்ணம் ஜப்பானுக்கு இருந்ததாயினும், அதற்கான ஏற்பாடுகளை அது நீண்ட நாட்களாகச் செய்து கொண்டு வந்ததாயினும், 1937-ஆம் வருஷம் ஜூலைமாதம் இருபத்தெட்டாந்தேதி தனது படைகளைத் திரட்டிப் பகிரங்கமாக பீகிங் நகரம் நோக்கி அனுப்பு வதற்கு முன்னால், அது யுத்ததர்மம் எதனையும் அனுசரிக்கவில்லை; அதாவது போர் தொடுக்கப் போவதாக முன்னாடியே அறிவித்தல், சத்துரு தேசத்தின் தானீ கர்களுக்கு விடைகொடுத்து அனுப்புதல் முதலிய எந்த விதமான சம்பிரதாயங்களையும் அனுஷ்டிக்கவில்லை. குழப்ப நிலை யிலுள்ள ஒரு பிரதேசத்தில் அமைதியை உண்டுபண்ணுவதாகிற ஒரு காரியத்தையே, தான் செய்வதாகக் கூறிக் கொண்டு ஜப்பான் இந்த யுத்தத்தைத் தொடுத்திருக்கிறது. சீனாவை, சம அந்ததுடைய ராஜ்யமாக அது கருதவேயில்லை. சம அந்ததுடைய ராஜ்யத் துடனல்லவோ யுத்த சம்பிரதாயங்களை அனுசரித்து யுத்தந் தொடுக்கவேண்டும்; சீனா, அப்படிப்பட்ட ஒரு ராஜ்யமல்ல; அஃது, உள்நாட்டுச் சண்டைகள் மலிந்த, ஜனக்கும்பல் நிறைந்த ஒரு பிரதேசம். ஆகவே, அதன் விஷயத்தில் யுத்த சம்பிரதாயங்களை அநுசரிப்பது, தனக்கு மிகக் கேவலம். இது தான் ஜப்பானின் கட்சி. சீனாவின் மீது தொடுத்திருக்கும் யுத்தத்தை அது, நாளதுவரையில் சீன சம்பவங்கள் என்றுதான் அழைத்துவருகிறது. சீனாவை, தூலத்திலும் சூட்சுமத்திலும் மிகப் பெரிய சீனாவை, எல்லா வற்றிலும் மிகச் சிறிய ஜப்பான், எவ்வளவு துச்சமாகக் கருதுகிறது! ஏகாதிபத்தியங்களுக்கே, தாங்கள் ஆட்படுத்திக் கொண்டிருக்கும் அல்லது ஆட்படுத்த விரும்பும் தேசங்களைப் பற்றி இந்தமாதிரி யான மனப்பான்மைதான் இருக்கும் போலும்! இருக்கட்டும். இனி ஜப்பானின் யுத்த முழக்கத்தைக் கேட்போம்.
1937-ஆம் வருஷம் ஜூலை மாதம் இருபத்தெட்டாந்தேதி, ஏற்கனவே திரண்டு தயாராக இருந்த ஜப்பானியப் படைகள் பீகிங் நகரத்தைக் கைப்பற்றிக்கொள்ளப் புறப்பட்டன. ஜப்பான் பெரிய யுத்தத்திற்கு அடி கோலுகிறதென்பதை இப்பொழுது நான்கிங் அரசாங்கம் நன்றாகத் தெரிந்து கொண்டு விட்டது. ஆரம்பத் திலேயே அதனை எதிர்த்துப் போராடக்கூடிய சக்தி தனக்கு இல்லை யென்பதையும் உணர்ந்துகொண்டது. எனவே பீகிங்கைத் தலைமை தானமாகக் கொண்டிருந்த தனது வடக்கித்தியப் படைகளுக்கு, பீகிங் நகரத்தைக் காலிசெய்துவிட்டு தெற்கு நோக்கிப் பின்வாங்கிக் கொண்டுவிடுமாறு உத்திரவிட்டது. இந்தப்படைக்குத் தலைவனா யிருந்தவன் முன்னே சொன்ன ஸுங் செ யுவான். இவன் முதலில் சிறிது தயங்கினான், ஜப்பான் பக்கம் போய்ச் சேர்ந்துவிடலாமா என்றுகூட யோசித்தான் என்று சொல்லப்படுகிறது. இவனைப் போலவே இன்னும் சில படைத் தலைவர்கள் தயங்கினார்கள். சீன ஜப்பானியச் சண்டை தொடங்கிய பிறகு கூட நான்கிங் அரசாங்கத் தில் சிலர், ஜப்பானை எதிர்த்துப் போராட வேண்டியது அவசியமா வென்ற கேள்வியைக் கேட்டுக்கொண்டிருந்தனர் என்று முந்திய அத்தியாயத்தின் கடைசியில் கூறினோமல்லவா? இந்தக் கேள்விதான், மேலே சொன்ன படைத் தலைவர்களின் தயக்கத்திற்குக் காரணம். இதனுடைய பலன் என்ன வாயிற்றென்றால் இவர்கள் கீழிருந்த படைவீரர்கள், ஒரு பக்கம் எஜமான விசுவாசத்தினாலும் மற்றொரு பக்கம் தேசபக்தியினாலும் அலக்கழிக்கப்பட்டு யுத்த சந்நத்தர் களாகாமலிருந்துவிட்டார்கள். இதனால், ஜப்பானியப் படை வெள்ளத்திற்கு முன்னே இவர்கள் மடமட வென்று பின்வாங்கிக் கொண்டுவிட வேண்டியதாயிற்று. சொற்பகாலத் திற்குள், எதிர் பார்த்ததைவிட அதிகமான வெற்றிகள் ஜப்பானுக்குக் கிடைத்தன; முக்கியமான நகரங்கள் அவர்கள் வசம் போய்ச் சேர்ந்தன. ஆயுதங் களை எப்பொழுதும் துருப்பிடிக்காமல் வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற முதுமொழியை யார் புறக்கணிக்கிறார்களோ அவர்களுக்கு இந்தக் கதிதான்!
ஜூலை மாதம் இருபத்தொன்பதாந் தேதி இரவு ஸுங் செ யுவான், தனது படைகளுடன் பீகிங் நகரத்தைக் காலி செய்துவிட்டு, தெற்கே எண்பது மைல் தொலைவிலுள்ள பாவோடிங் என்ற ஊருக்கு வந்து சேர்ந்தான். ஜப்பானியர் அன்றே எவ்வித எதிர்ப்பு மின்றி பீகிங் நகரத்தை ஆக்கிரமித்துக் கொண்டனர்.
பீகிங் நகரத்தை விடாப் பிடியாகப் பிடித்துக்கொண்டி ருந்தால் அதனை அழிக்க முற்படுவர் ஜப்பானியர் என்பது சீனர் களுக்குத் தெரியும். ஆனால் அந்த நகரம் அழிபடுவதற்கு யாரும் விரும்பவில்லை. ஏனென்றால் அது சீனர்களுக்கு மிகவும் புனிதமான ஊர். நூற்றாண்டுகள் கணக்காக அங்கே சீன மன்னர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். தவிர, சீனர்களின் கலைச் செல்வமெல்லாம் அங்கே திரண்டு கிடக்கின்றன. ஞானவீரர்கள், சமுதாயத் தொண் டர்கள், அரசியல் தலைவர்கள் முதலிய பலரும் பிரகாசமடைந்தது அங்குதான். தவிர, சீனாவின் பல பாகங்களுக்கும் செல்லக்கூடிய ரெயில் பாதைகள், ரோட்டுகள் எல்லாம் அங்கிருந்து ஆரம்பிக் கின்றன; அங்கே வந்து கூடுகின்றன. யுத்த தந்திரிகளும் ராஜ தந்திரி களும் தங்கள் திறமையைக் காட்டுவதற்கேற்ற இடம். இதனாலேயே பீகிங் யாருடைய சுவாதீனத்திலிருக்கிறதோ அவருடைய சுவாதீனத்திலேயே சர்வ சீனாவும் இருக்கிறது என்ற பழமொழி தோன்றியது. இதனால் தான் ஜப்பானியரும் அந்த நகரத்தைக் கைப் பற்றிக் கொள்வது தங்கள் முதல் வெற்றியென்று கருதினார்கள். ஆக இரு பக்கத்தினருடைய கோபத்திற்கும் ஆளாகாமல் பீகிங் தப்பியது.
ஜப்பானியர்கள் பீகிங்கைச் சுவாதீனப்படுத்திக் கொண்டு விட்ட பிறகு, தங்கள் படைகளை மூன்று பகுதிகளாகப் பிரித்து மேற்கே, தெற்கே, தென்கிழக்கே இப்படியாக அனுப்பினார்கள். எந்தெந்த இடங்களுக்கு ரெயில் சென்றதோ அந்தந்த இடங்களுக்கு இவர்களால் சுலபமாக முன்னேற முடிந்தது. சில முக்கியமான நகரங்கள் இவர்கள் கைவச மாயின. இப்படி வட மாகாணங்களில் ஜப்பானியர்களுடைய தரைப்படை முன்னேறிக் கொண்டிருக்க, ஆகட் மாதம் பதின்மூன்றாந் தேதி அவர் களுடைய கடற்படை ஷாங்காய் நகரத்தைத் தாக்கியது. இங்கே சீனர்கள் சுமார் இரண்டு மாதகாலம் தீவிரமாகப் போராடினார்கள். ஆனால் ஜப்பானியர் களுடைய ஆயுத பலம், எண்ணிக்கை பலம் இவைகளுக்கு முன்னே இவர்கள் ஒன்றுஞ் செய்ய முடியாமல் பின்வாங்கிக் கொண்டு விட்டார்கள். நவம்பர் மாதம் பதினோராந் தேதி இந்த நகரம் சீனர்கள் வசமாயிற்று. இந்த யுத்தத்தில் மட்டும் ஏற்பட்ட உயிர்ச் சேதம் இருதரப்பிலும் லட்சக்கணக்கில். ஷாங்காய் நகரம் விழுந்த அடுத்த மாதம் (டிசம்பர் மாதம் பதின்மூன்றாந் தேதி) சீன அரசாங் கத்தின் தலைநகரமான நான்கிங், ஜப்பானியர் கைவசமாயிற்று. இதற்கு முன்னாடியே சீன அரசாங்கம் முன் ஜாக்கிரதையுடன் தனது தலை நகரத்தை மேற்கே ஷெக்குவான் மாகாணத்திலுள்ள சுங்கிங்குக்கு மாற்றிக் கொண்டுவிட்டது.
நான்கிங்கைக் கைப்பற்றிக் கொண்ட ஜப்பானியர்கள், மேற் கேயுள்ள பிரபல தொழிற்சாலைகள் நிறைந்த ஹாங்கோ நகரத்தை நோக்கிச் சென்றார்கள். இங்கும் சீனர்கள் எதிர்ப்புக் காட்டினார்கள். பயனில்லை. கடைசியில் 1938-ஆம் வருஷம் அக்டோபர் மாதம் இருபத்தைந்தாந் தேதி பின்வாங்கிக் கொண்டுவிட்டார்கள்.
ஒரே சமயத்தில் பல திசைகளிலிருந்தும் வந்து தாக்க வேண்டு மென்பது ஜப்பானியரின் யுத்தத்திட்டம். இதன்படி, வடக்கிலும் மேற்கிலு மாகத் தாக்கியதோடு தெற்கேயிருந்தும் தாக்க ஏற்பாடு செய்தார்கள். தெற்கேயுள்ளவை ஹாங்காங், காண்டன் நகரங்கள். இங்கு பிரிட்டிஷாருடைய ஆதிக்கம் அதிகம். இந்த நகரங்களைத் தாக்கினால் பிரிட்டிஷாருக்குக் கோபம் உண்டாகுமே யென்று முதலில் யோசித்தார்கள் ஜப்பானியர்கள். ஆனால் 1938- ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் நடைபெற்ற ம்யூனிக் மகாநாட்டில் பிரிட்டிஷார், பணிந்துபோகும் தன்மையிலேயே இருந்தனர்; யாருடனும் சண்டைக்குப்போகக் கூடாதென்ற மாதிரியிலேயே இவர்களுடைய பேச்சு வார்த்தைகள் இருந்தன. இதனால் ஜப்பானியர்களுக்குத் துணிவு ஏற்பட்டது. தெற்குப் பிரதேசத்தில் தாங்கள் படையெடுத்தால் பிரிட்டன் தடுக்காது என்பதை நிச்சயமாகத் தெரிந்து கொண்டனர். தமது கடற்படை சகிதம் வந்து (1938-ஆம் வருஷம் அக்டோபர் மாதம் இருபத்தைந்தாந் தேதி) காண்டனைக் கைப்பற்றிக்கொண்டனர். இவர்கள் எதிர் பார்த்தபடி பிரிட்டன், செயலளவில் எவ்வித ஆட்சேபமும் செய்யவில்லை!
இப்படி யுத்தம் தொடங்கின சுமார் பதினைந்து மாதங் களுக்குள், வடக்கேயுள்ள ஹோப்பை, ஷான்ஸி, ஷாண்டுங் முதலிய சில மாகாணங் களும், பீகிங், டீண்ட்ஸின், ஷாங்காய், நான்கிங், ஹாங்கோ, காண்டன் முதலிய முக்கியமான நகரங்களும் சுலபமாகத் தங்கள் வசமாகி விட்டதும், ஜப்பானியர், இன்னும் சொற்ப காலத்திற்குள் சீனா முழுவதும் தங்கள் வசப்பட்டுவிடும் என்று கருதினார்கள். ஆனால் சீனர்கள் அவ்வளவு சுலபமாக விட்டுக் கொடுக்கவில்லை. வேண்டு மென்றே, அதாவது தங்களுடைய படைபலம், ஆயுத வசதிகள் முதலியவைகளின் வரம்பை அறிந்தே, மேலே சொன்ன மாகாணங்களிலிருந்தும், முக்கிய நகரங்களிலிரு ந்தும் பின்வாங்கிக்கொண்டனர். சத்துருக்களை உள்பக்கம் இழுத்துக் கொண்டு வந்து, பிறகு அவர்கள் திரும்பிப் போகக்கூடாத நிலையில் அவர்களைத் தாக்கி முறியடிக்கவேண்டுமென்பது சீனர் களுடைய நோக்கம். தவிர, எந்தெந்த இடங்களில் ரெயில் வசதிகள் இருந்தனவோ அந்தந்த இடங்களில்தான் ஜப்பானியர்கள் முன்னேறி யிருந்தனர். இன்னும், யாங்க்ட்ஸீ நதிக்கரையோரமாக வுள்ள சில ஊர்களையும் அவர்கள் கைப்பற்றிக்கொண்டிருந்தனர். அவர்களுக்குக் கப்பற் படை பலம் இருந்ததனால் இது சாத்தியமா யிற்று. இவைகளை யெல்லாம் நன்கு தெரிந்துகொண்டிருந்த சீனர்கள், ரெயில் போக்கு வரத்துள்ள இடங்கள், கடற்கரையிலுள்ள துறை முகப்பட்டினங்கள், ஆற்றோரப் பிரதேசங்கள், திறந்த வெளிகள் ஆகிய இப்படிப்பட்ட இடங்களில் அதிகமாக எதிர்ப்புக் கொடாமல், ஆனால் முடிந்தமட்டில் ஜப்பானியர்களுக்கு உயிர் நஷ்டமும் பொருள் நஷ்டமும் உண்டுபண்ணிவிட்டுப் பின்வாங்கிக் கொண்டனர்.
ஜப்பானோடு போராடி வெற்றிபெற வேண்டுமானால் மூன்று படிகளைக் கடக்கவேண்டுமென்று ஏற்கனவே பொதுவுடைமை வாதிகள், யுத்த தந்திர திட்டமொன்றை வகுத்துவைத்திருந்தார்கள்.1 இந்தத் திட்டப்படியே சீன அரசாங்கம் இப்பொழுது யுத்தத்தை நடத்திவருகிறது. முதலாவது படி, சத்துருக்களின் முன்னேற்றத்திற்கு இடங்கொடுத்துக் கொண்டே பின்வாங்குதல். அப்படிப் பின்வாங்கு கிறபோது, சத்துருக் களுக்கு எந்த விதமான உதவியும் கிடைக்காத படி செய்துவிட்டுப் பின் வாங்க வேண்டும். இந்தப் பின்வாங்குகிற காலத்தில், நமது படைபலத்தை விருத்தி செய்து கொள்ள வேண்டும். இரண்டாவது படி, ஒளிமறைவா யிருந்து சத்துருப் படைகளைத் தாக்கி அதிகமான சேதத்தை உண்டு பண்ணுதல். இந்தக் காலத்தில், முன்னேற்றமடைந்த சத்துருக்கள், அவர்கள் கைப்பற்றிக்கொண்ட பிரதேசங்களில் நிலைத்துவிடாதபடி தடுக்க வேண்டும். ஜப்பானியர்களுடைய யந்திரப் படைகளை எதிர்த்துப் போராடுவதற்கு, சீனர்களிடத்தில் சமதையான யந்திரப் படை பலமில்லை. எனவே ஒளிமறைவாயிருந்து சண்டைபோடுவதன் மூலந்தான் இதனைச் சமாளிக்க வேண்டும். சீனாவின் பூகோள அமைப்பு, இந்த ஒளிமறைவுச் சண்டைக்கு மிகவும் ஏற்றதான படியாலும், இந்தச் சண்டையில் படைவீரர்களல்லாத கிராம விவ சாயிகள், ஆண், பெண் முதலிய பலரும் கலந்து கொள்ள முடியு மானதாலும் இந்த இரண்டாவது படி அவசியமெனக் கருதப் பட்டது. தவிர, இந்தக் காலத்தில், ஆயுத பலத்தைக் கொண்டு சத்துருக்களைத் தாக்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொள்ளலாம். மூன்றாவது படி, ஜப்பானியர்களை முன்னோக்கிச் சென்று தாக்குவது. சீனர்கள் இந்தப் படியை அடைவதற்குள், ஜப்பானியர், படையிலும், பொருளாதாரத்திலும் மிகவும் பலவீனப் பட்டுப்போய் விடுவார்கள். அப்பொழுது அவர்கள் சீனர்களுடைய தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் அழிந்தொழிவார்கள். இதுவே சீனர்களின் யுத்தத் திட்டம்.
சீனர்களைப் பொறுத்தமட்டில் ஹாங்கோ நகரத்தை என்றையதினம் காலிசெய்துவிட்டுப் பின்வாங்கிக் கொண்டார் களோ அன்றைய தினத்தில்-1938-ஆம் வருஷம் அக்டோபர் மாதம் இருபத்தைந்தாம் தேதி - முதற்படியைக் கடந்து இரண்டாவது படிக்கு வந்துவிட்டார்கள். 1943-ஆம் வருஷ மத்தியில் மூன்றாவது படியை எட்டிப் பார்க்க ஆரம்பித்திருக் கிறார்கள் என்று ஒருவாறு சொல்லலாம். ஆனால் இந்த மூன்றாவது படிப் போராட்டம் மிகவும் மும்முரமாகவும் நீடித்தும் நடக்கும் என்பது யுத்த தந்திரிகளின் அபிப்பிராயம்.
பொதுவாக ஹாங்கோ வீழ்ச்சிக்குப் பிறகு, ஜப்பானியர் களுடைய முன்னேற்றம் சீனாவில் அவ்வளவு துரிதமாயில்லை. இதற்கு முக்கியமான காரணம், சீனர்கள் அனுஷ்டித்துவரும், ஒளிமறை வாயிருந்து சண்டைபோடுகிற, கொரில்லாப் போர் முறை தான். செம்படையினராகிய எட்டாவது படையினர் இந்தப் போர்முறையில் மிகவும் வல்லவர்கள். ஹோப்பை, ஷான்ஸி, சாஹார், ஷாண்டுங், கியாங்க்ஸு, தெற்கு ஷான்ஸி, வடக்கு ஹோனான் முதலிய மாகாணங் களில் இந்தக் கொரில்லாப் படையினர் ஜப்பானியர்களுக்கு விளைவித் திருக்கும் சேதம் கொஞ்சநஞ்சமல்ல. உதாரணமாக இவர்களிலே ஒரு பகுதியினர், ஷாண்டுங் மாகாணம், கியாங்ஸு மாகாணத்தின் வட பாகம் ஆகிய இரண்டு பிரதேசங்களில் மட்டும் 1941-ஆம் வருஷம் ஜூலை மாதத்திலிருந்து 1942-ஆம் வருஷம் ஜூலை மாதம் வரை ஒரு வருஷகாலத்தில் ஜப்பானியர்களோடு இரண்டாயிரத்து நானூறு தடவை சண்டை செய்திருக்கிறார்கள்; இருபத்தையாயிரம் ஜப்பா னியப் படைவீரர் களைக் கொன்றிருக்கிறார்கள்.
இந்தக் கொரில்லாப் போர் வீரர்கள், ஜப்பானியர்களுடைய ஆக்கிரமிப்புக்குட்பட்ட பிரதேசங்களில் திடீர் திடீரென்று புகுந்து சத்துருக்களில் பலரைக் கொன்றும் அவர்களுடைய பொருளைக் கொண்டு போவார்கள். ரெயில்வே பாலங்களை உடைப்பார்கள். ரெயில் களைக் கவிழ்த்துவிடுவார்கள். சத்துருக்களின் படைவீடு களுக்கு ரகசிய மாகச் சென்று அவர்களுடைய யுத்த தந்திரங்களை யெல்லாம் உளவு அறிந்து கொண்டு வந்து, அதே தந்திரங்களைக் கையாண்டு அவர்களைத் திருப்பித் தாக்குவார்கள். இவர்கள் எத்தனையோ தடவை பீகிங் நகரத்திற் குள்ளேயே நுழைந்து பல ஜப்பானியர்களைக் கொன்றிருக்கிறார்கள். இவர்களுடைய சாகஸச் செயல்களைத் தனிச் சரித்திரமாகவே எழுத வேண்டும்.
சீனர்களுடைய யுத்ததந்திரம் இப்படியிருக்க, ஜப்பானியர்கள், தாங்கள் ஆரம்பத்தில் ஒருவருஷ காலத்திற்குள் பெற்ற வெற்றி களோடு, ஆக்கிரமித்துக்கொண்ட மாகாணங்களோடு திருப்தி யடையவில்லை. ஆக்கிரமித்துக் கொண்ட பிரதேசங்களை அடித் தளமாக வைத்துக் கொண்டு, சீனாவைப் பல கோணங்களிலிருந்தும் தாக்கி அதனை ஒடுக்கி விட முயற்சி செய்துவந்திருக்கிறார்கள். 1939- ஆம் வருஷத்தி லிருந்து 1942-ஆம் வருஷம் வரை இந்த மாதிரியான முயற்சிகளில்தான் இவர்கள் ஈடுபட்டார்கள். இந்தக் காலத்தில் இவர்கள் (1941-ஆம் வருஷம் டிசம்பர் மாதம் எட்டாந்தேதி) பிரிட்டனுடனும் அமெரிக்காவுடனும் போர் தொடுத்து, அது காரணமாக தாய்லாந்து, மலேயா, பர்மா, தென்கடல் தீவுகள் முதலிய பல இடங்களுக்கும் தங்கள் படைகளைப் பங்கு பிரித்து அனுப்ப வேண்டிதாயிருந்தாலும், சீனாவில், தாங்கள் இட்டுக்கொண்ட காலை எடுக்கவில்லை; எடுக்கவும் முடியவில்லை. மேலே சொன்ன மூன்று வருஷகாலத்தில் இவர்கள் சுமார் பத்து கோணங்களிலிருந்து போர் நடத்தியிருக்கிறார்கள். அதாவது ஒரே காலத்தில் பத்து போர் முகங்களில் தொடர்ந்து போர் நடைபெற்றிருக்கிறது. ஆகாயப் படை, தரைப்படை, கடற்படை எல்லாம் சேர்ந்து தாக்கியிருக் கின்றன. வெற்றியும் தோல்வியும் மாறிமாறிக் கிடைத்திருக்கிறது. ஆனாலும், ஆரம்பத்தில் ஜப்பானிய ராஜ தந்திரிகள் பெரு மிதமாகச் சொல்லிக் கொண்டபடி சீனாவை முழங்கால் முறிய அடிக்க முடியவில்லை.
ஜப்பானியர்கள் இப்படிப் பல கோணங்களிலிருந்து சீனாவைத் தாக்கியதோடு நிற்கவில்லை; தாங்கள் ஆக்கிரமித்துக் கொண்ட பிரதேசங்களில் தங்களை திரப் படுத்திக்கொள்ள, சாம, தான, பேத, தண்டம் என்னும் சதுர்வித உபாயங்களையும் கையாண்டு வந்தார்கள். யுத்த ஆரம்பத்திலிருந்தே இவர்கள் சில துரோகிகளைக் கொண்டு, வெற்றி பெற்ற இடங்களில் பொம்மை அரசாங்கங்களை தாபித்து அவைகளின் மூலம் தங்களுடைய ஆதிக்கத்தை நாசூக் காகத் திணித்து வந்திருக் கிறார்கள். 1937-ஆம் வருஷம் டிசம்பர் மாதம் பதினைந்தாந் தேதி, பீகிங் நகரத்தைத் தலைநகராகக் கொண்ட சீனக் குடியரசின் தற்காலிக அரசாங்கம் ஒன்று தாபிக்கப்பட்டது. இதற்கு வாங் கே மின் என்பவன் தலைவனாக நியமிக்கப் பட்டான். இதே பிரகாரம் 1938-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் இருபத்தெட்டாந்தேதி நான்கிங் நகரத்தைத் தலைநகராகக் கொண்ட சீனக்குடியரசின் சீர்த்திருந்திய அரசாங்கம் ஒன்று அமைக்கப் பட்டது. இதற்கு லியாங் ஷி என்பவன் தலைவன். இவ்விருவரும், பழைய ராணுவப் பிரபுக்களின் வருக்கத்தைச் சேர்ந்த வர்கள்; ஜப்பான் மோகத்திலே ஈடுபட்டவர்கள். வட சீனாவின் நிரு வாகத்திற்காக பீகிங் அரசாங்கமும், மத்திய சீனாவின் நிருவாகத் திற்காக நான்கிங் அரசாங்கமும் என்று தனித்தனியாக இவை நிறுவப் பட்டன. இவைகளின் மூலம் சீனர்களின் விசுவாசத்தைச் சம்பாதித் துக் கொள்ள முடியும் என்று ஜப்பான் கருதியது. ஆனால் இந்த இரண்டு அரசாங்கங்களும், ஆட்டுவார் ஆடும்பாவையாக இருந்தன. இவற்றின் தலைவர்கள் நீண்ட காலமாகவே துரோகிகளாக இருந்து வந்திருக்கிறார்கள் என்பது சீனர்களுக்கு நன்றாகத் தெரியும். இவைகளுக்கு எந்தவிதமான செல்வாக்கும் இல்லாமலிருந்தது. எனவே, இந்த இரண்டு அரசாங்கங்களையும் ஒன்று பிணைத்து, மத்திய அரசாங்கம் என்ற பெயரால் ஓர் அரசாங்கத்தை தாபிக்க ஜப்பான் பகீரதப் பிரயத்தனம் செய்தது; இதற்கென்று ஒரு தலை வனையும் தேடிக் கொண்டிருந்தது. சியாங் கை ஷேக்கின் பரமவைரியும், பழைய ராணுவப் பிரபுக்களில் ஒருவனுமான வூ பை பூ என்பவனை அணுகி தலைமைப் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டது. ஆனால் அவன் தேசத் துரோகியாக இருக்க மறுத்துவிட்டான்; சிறிது காலங் கழித்து இறந்தும் விட்டான். ஜப்பானியர் இவனை விஷம் வைத்துக் கொன்றதாகச் சொல்லப்படுகிறது. எப்படியும் இவன் சீனர் களுடைய நன்றியில் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
ஜப்பான் இப்படி ஒரு பக்கம் துரோகிகளைத் தேடும் முயற்சி செய்துகொண்டு, மற்றொரு பக்கம், சுங்கிங் அரசாங்கத்திற்குப் பணிந்து விடுமாறு தூது விடுத்தது. நயமும் பயமும் கலந்த இந்தச் சமாதானக் கோரிக்கையை, சுங்கிங் அரசாங்கம், கொஞ்சங்கூட லட்சியஞ் செய்யாமல் நிராகரித்துவிட்டது. ஆனால் இந்த அரசாங்கத்தில், முக்கிய அங்கத்தினனாக இருந்த ஒருவனுக்கு மட்டும், ஜப்பானை எதிர்த்துப் போராடுவது வீண் என்ற எண்ணம் இருந்தது. இவன்தான் வாங் சிங் வெய். இவன் கட்சி மாறுவதிலே கைதேர்ந்தவன் என்பது வாசகர்களுக்குத் தெரியுமல்லவா? இவன் சுங்கிங்கிலிருந்து ரகசியமாகத் தப்பிச் சென்று சத்துருக்கள் பக்கம் போய்ச் சேர்ந்துகொண்டு விட்டான். இவனைத் தலைவனாகக் கொண்ட மத்திய அரசாங்கம் ஒன்று, சீனக்குடியரசின் தேசீய அரசாங்கம் என்ற பெயரால் 1940-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் முப்பதாந் தேதி நான்கிங்கில் தாபிக்கப் பட்டது. இதனுடன் முந்தி தாபிக்கப் பட்ட வாங்கே மின் அரசாங்க மும் லியாங்ஷி அரசாங்கமும் ஐக்கிய மாயின. வாங் சிங் வெய் அரசாங் கத்திற்கும் ஜப்பானிய அரசாங்கத் திற்கும், சீனாவுக்கும் ஜப்பானுக்கும் எந்த வித அடிப் படையான தொடர்புகள் இருக்க வேண்டுமென் பதைப் பற்றி 1940-ஆம் வருஷம் நவம்பர் மாதம் முப்பதாந் தேதி ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன்படி வாங் சிங் வெய், சீனாவின் பொருளா தார சக்திகளை விருத்தி செய்வதற்கும், பொதுவுடைமை இயக்கத்தைச் சீனாவிலிருந்து ஒழிப்பதற்கும் ஜப்பானியத் துருப்புக்கள் சீனாவில் தங்கியிருப்பதற்கும் இணங்கினான். இந்த அடிப்படையான தொடர்பு களைநிர்ணயிக்கிற ஒப்பந்தம் நிறை வேறின சுமார் மூன்று வருஷங் கழித்து 1943-ஆம் வருஷம் அக்டோபர் மாதம் முப்பதாந்தேதி மற்றொரு சிநேக ஒப்பந்தம் இரண்டு அரசாங்கங் களுக்கும் நிறைவேறியது. அதாவது, இதன்மூலம் சீனாவின் பரிபூர்ண சுதந்திர அந்ததைத் தான் கௌரவிப்பதாக ஜப்பான் காட்டிக் கொள்ள விரும்பியது.1
ஜப்பானின் கைக்கருவியாக இருக்கிற இந்த வாங் சிங் வெய், பதினைந்து வருஷங்களுக்கு முந்தி, பொதுவுடைமைவாதிகளின் ஆதரவைப்பெற்ற வூஹான் அரசாங்கத்திற்குத் தலைவனாயிருந்தான் என்பது வாசகர்களுக்கு நினைவிருக்கும். அறம் என்கிற அடிப்படை யில்லாத அரசியல் வாதிகளின் போக்கே இப்படித்தான் போலும்!
வாங் சிங் வெய் இப்படித் துரோகியாக மாறி விட்டானென்று தெரிந்ததும், இவனும் இவனுடைய சகாக்களிற்சிலரும் கோமிண் டாங் கட்சியிலிருந்து பிரஷ்டம் செய்யப்பட்டனர். நான்கிங்கில் இப்படி ஒரு போட்டி அரசாங்கம், இல்லை, பொம்மை அரசாங்கம் ஏற்பட்டதனால், சுங்கிங் அரசாங்கத்தின் உறுதி குலையவில்லை; இதன் அந்தது குறைய வில்லை. ஐரோப்பிய வல்லரசுகள், குறிப் பாக பிரிட்டனும் அமெரிக்காவும், வாங் சிங் வெய்யின் அரசாங் கத்தை, சீனாவின் நியாயமான அரசாங்கமென்று அங்கீகரிக்க மறுத்துவிட்டன.
ஜப்பான் இதற்காகச் சலிப்புக் காட்டவில்லை; சீனா, அதன் சுய அந்ததை அடையப்பார்ப்பதே தன்னுடைய நோக்கமென்று பகிரங்கப் படுத்திவந்தது. சீனா விஷயத்தில் தனக்கிருக்கும் நல்லெண் ணத்தைக் காட்டிக் கொள்வதற்காக, வாங் சிங் வெய்யின் அரசாங்கம் நான்கிங்கில் தாபிதமானவுடனே, ஜப்பானிய ராணுவத்தின் வசமிருக்கும் சீனர் களுடைய சொத்து சுதந்திரங் களையெல்லாம், ஜப்பானிய ஆட்சியை ஆதரிக்கும் (அவைகளின்) சொந்தக் காரர்களுக்குத் திருப்பிக் கொடுத்து விடப் படுமென்று பிரகடனம் செய்தது! இது காறும் சீனாவில் தான் அனுபவித்துவந்த விசேஷப் பிரதேச உரிமைகள் முதலிய சகலவிதமான உரிமை களையும் விட்டுக் கொடுப்பதாக ஒப்புக்கொண்டது! சீனாவின் பரிபூர்ண சுதந்திரத்தைத் தான் கௌரவிப்பதற்கு அறிகுறியாகவே இப்படிச் செய்ததாகக் கூறி, இதே பிரகாரம் மற்ற வல்லரசுகளும்-அவைகளுக்குச் சீனா விஷயத்தில் நல்லலெண்ணம் இருக்கும் பட்சத்தில் - செய்யட்டுமே என்று மார்தட்டிக் கேட்டது!
இப்படி ஒரு பக்கம் சீனாவின் முதுகைத் தட்டிக் கொடுத்து வந்த ஜப்பான், மற்றொருபக்கம் அதன் குரல்வளையைப் பிடித்துக் கொண்டே அதன் மார்பிலும் முதுகிலும் துப்பாக்கி முனையினால் குத்திக் கொண்டிருந்தது. ஜப்பானியர்கள், தாங்கள் ஆக்கிரமித்துக் கொண்ட பிரதேசங்களில், சாதாரண ஜனங்கள் பயப்பட்டுப் போகும் படியாகச் செய்த அட்டூழியங்களுக்குக் கணக்கு வழக்கே யில்லை. ஒரு வரலாறு கூறுகிறது:-
_ஷாங்காய் நகரத்திற்கும் நான்கிங் நகரத்திற்கும் நடுவிலுள்ள பிரதேசங்கள், உலகத்திலேயே செழிப்புள்ள விவசாயப் பிரதேசங் களாகும். இங்கே ஆயிரக்கணக்கான கிராமங்களும் நூற்றுக்கணக்கான நகரங்களும் பரவிக் கிடக்கின்றன. சீனாவிலேயே இந்தப் பிரதேசத் தில்தான் ஜனநெருக்கம் மிக அதிகம். இந்தப் பிரதேசங்களை, சென்ற நான்கு மாத காலமாக (அதாவது யுத்த ஆரம்பத்திலிருந்து நான்கு மாத காலமாக) ஜப்பானியர் ஆகாய விமானங்களிலிருந்து குண்டு களைப் பொழிந்து வருணிக்க முடியாத சேதத்தை உண்டுபண்ணி யிருக்கிறார்கள். சரித்திரத்திலேயே இதற்கு முன்னர் நடை பெற்றிராது என்று சொல்லும்படியாக, திரள் திரளான ஜனக் கூட்டம் ஊர்விட்டு ஊர் போய்க் கொண்டிருக்கிறது. சூசௌ என்ற நகரம், ஒரு சமயம் செழிப்புள்ளதாகவும் அழகுள்ளதாகவும் இருந்தது. இதில் இரண்டரை லட்சம் சீனர்கள் வசித்திருந்தார்கள். ஜப்பானியர் இந்த நகரத்தைக் கைப்பற்றிக் கொண்ட போது இதில் ஐந்நூறு சீனர்களே இருந்தார்கள். இதற்கு மேற்கில் இருபது மைல் தூரத்தில் ஊ சீ என்ற ஒரு நகரம் இருக்கிறது. சீனாவின் கைத் தொழில் அபிவிருத்திக்கு இது தான் மூல தானம். ஆனால் இப் பொழுது இது பாலைவனம் மாதிரி இருக்கிறது. . . . . மைல் கணக் கான நிலங்களில் பயிர்கள் காய்ந்துகிடக்கின்றன. அநேக பண்ணை களும் கிராமங்களும் எரிக்கப்பட்டு சவக்குழிகள் மாதிரிதென் படுகின்றன. . . . . . சில மாதங்களாக நடைபெறும் யுத்தத்தின் விளைவு இது. இந்த யுத்தத்திற்கு என்ன காரணமென்பதை ஏழை விவசாயிகள் அறியமாட்டார்கள். ஆனால் அவர்கள்தான் அதிகமாகக் கஷ்டப் படு கிறார்கள். ஆனால் அன்ன ஆகாரமில்லாமல், பணமும் உடையு மில்லாமல் பயந்தவண்ணம் மேற்குப்புறமாக ஓடிக்கொண்டி ருக்கிறார்களே அவர்களைவிட ஆயிரக்கணக்கில் பிணமாக வீழ்ந்து கிடக்கிறார்களே அவர்கள் மகா புண்ணியசாலிகள் என்று சொல்ல வேண்டும்._
உங்களுடைய வீரத்தைப் பாதிக்கும்படியாக நீங்கள் பலாத் காரத்துடன் நடந்துகொண்டால் உலகம் உங்களை வெறுக்கும் என்று சமாதான காலங்களில் ஜப்பானியப் படையினர் உபதேசிக்கப் பட்டு வந்தார்கள். ஆனால் இவர்கள், சீனாவில் தாங்கள் ஆக்கிர மித்துக்கொண்ட பிரதேசங்களில், இருவர் இருவராக மணிக்கட்டு களை இரும்புக் கம்பிகளினால் இறுக்கிக் கட்டிச் சுட்டுக் கொன் றார்கள்; துப்பாக்கி முனையினால் குறிபார்த்துக் குத்தும் பயிற்சி பெறுவதற்காக, சிறைப்பட்ட சீனப்போர்வீரர்களின் கண்களைக் கட்டிவிட்டு அவர்களை உபயோகப் படுத்தினார்கள்; பச்சைக் குழந்தைகளை ஆகாயத்திலே தூக்கிப்போட்டுக் கீழே துப்பாக்கிக் கத்தியை நீட்டினார்கள்; கும்பல் கும்பலாகக் கூடி யிருக்கும் நிரபராதி களான ஜனங்கள் மீது ஆகாயவிமானங்களிலிருந்து குண்டுகளைப் பொழிந்தார்கள்; அந்நியர்களுடைய தொழில் தாபனங் களையும் சீனர்களுடைய தொழில் தாபனங்களையும் தீயிட்டுப் பொசுக் கினார்கள். இந்த மாதிரி எத்தனையோ அக்கிரமங்கள். ஜனங் களுக்குத் தங்களிடத்தில் ஒரு பயம் உண்டாகும்படி செய்து கொண்டார்களென்று பொதுவாகச் சொல்லலாம். பயமுறுத்தல் களின் மூலமும் பலாத்காரத்தின்மூலமும் எந்த ஏகாதிபத்தியமும் நீடித்து நிலைத் திருப்பதில்லையென்பது, இன்னும் ஜப்பானியர் கற்றுக்கொள்ளாத பாடம் போலும்!
ஜப்பானியர்கள், தாங்கள் ஆக்கிரமித்துக் கொண்ட பிரதே சங்களில் உயிரழிவையும் பொருளழிவையும் உண்டு பண்ணியது கூட அவ்வளவு கொடுமையில்லை; சீனர்களின் கலைப் பண்பையே, சீனர்களின் நாகரிக வாழ்க்கையையே அழித்துவிட முயற்சி செய்தார் களே அதுதான் கொடிதினும் கொடிது. எந்த இடத்தை இவர்கள் ஆக்கிரமித்துக் கொண்ட போதிலும், முதலில் செய்கிற வேலை பள்ளிக்கூடங்கள், புத்தகாலயங்கள் முதலியவைகளையே அழித்து வந்திருக்கிறார்கள். 1931-ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் மஞ்சூரி யாவில் முக்டென் நகரத்தை ஆக்கிரமித்துக் கொண்டபோது, அங்கிருந்த சர்வ கலாசாலைக் கட்டிடத்தைத் தங்கள், துருப்புகளின் வாசதலமாக ஏற்படுத்திக் கொண்டார்கள். 1937-ஆம் வருஷம் ஜூலைமாதம் டீண்ட்ஸின் துறைமுகப் பட்டினத்தைக் கைப்பற்றிக் கொண்டபோது, அங்கிருந்த நான்காய் சர்வ கலாசாலையை மண்ணெண்ணெ யிட்டுக் கொளுத்தி விட்டார்கள். இந்த 1937-ஆம் வருஷ யுத்தம் ஆரம்பித்த முதல் நான்கு மாதங்களில் இவர்கள் ஆக்கிரமித்துக் கொண்ட பல ஊர்களிலும் மொத்தம் நூற்றுமூன்று கல்வி தாபனங்களை நாசப்படுத்தி யிருக்கிறார்கள்; சுமார் ஏழரை கோடி ரூபாய் பெறுமானத் திற்கு நஷ்டம் உண்டாக்கி யிருக்கிறார் கள்; இந்த நாசங்காரணமாக எழுபதினாயிரம் சீனமாணாக்கர் களுக்குப் படிப்பே இல்லாமற் போய்விட்டது.
இங்ஙனம் ஜப்பானியர்கள், சீன இளைஞர் சமுதாயத்தின் மீது தங்கள் கோபத்தைக் காட்டுவதன் நோக்கமென்ன? சீனாவில் ஜப்பானியர் களுக்கு விரோதமாக ஏற்பட்ட இயக்கங்களுக் கெல்லாம் மையமா யிருந்தவர்கள் மாணாக்கர்கள். தவிர இவர் களுடைய லட்சியம், ஆவல் முதலியனவெல்லாம் ஜப்பானின் ஆக் கிரமிப்பு எண்ணத்திற்கு நேர் விரோதமாயிருக்கின்றன.3 ஜப்பான், இவர்கள் மீது சினந்தெழுவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?
இந்த யுத்தம் தொடங்கிய நான்கு வருஷ காலத்திற்குப் பிறகு சீனாவின் நிலைமையென்ன, ஜப்பானின் நிலைமையென்ன வென்பதை இந்த அத்தியாயத்தின் முடிவில் சுருக்கமாகக் கூற விரும்புகிறோம்.
_சீனாவைப் பொறுத்தமட்டில் தலைநகரம் போய்விட்டது; கடற்கரையோரமாகவுள்ள பெரும்பாலான துறைமுகப்பட்டினங் கள், உள்நாட்டில் ஜனநெருக்கமும் தொழில் பெருக்கமும் உள்ள முக்கிய நகரங்கள் ஆகிய இவையெல்லாம் போய்விட்டன. ஆயினும் சியாங் கை ஷேக்கினுடைய தலைமையில் சீனர்கள் தொடர்ந்து ஜப்பானை எதிர்த்துவந்திருக்கிறார்கள். இவர்களுடைய எதிர்ப்புச் சக்தி குறைய வேயில்லை. ஷெக்குவான் மாகாணத்திலுள்ள சுங்கிங் குக்குத் தலைநகரம் மாற்றப்பட்டுவிட்டபடியாலும், ஜப்பானிய ஆக்கிரமிப்புக்குட் பட்ட பிரதேசங்களிலிருந்து மேற்கு மாகாணங் களுக்கு ஏராளமான அகதிகள் சென்றபடியாலும், இதுவரை பண் பாடடையாத இந்தத் தொலைதூர மேற்குப் பிரதேசங்கள் இப் பொழுது ஜனப்புழக்கத்திற்குத் தகுதியுடையனவாகச் செய்யப் பட்டன. ஆக்கிரமிப்புப் பிரதேசங்களி லிருந்து வந்த யந்திர வசதி களைக்கொண்டும் தொழிலாளர்களைக் கொண்டும் இந்த மேற்குப் பிரதேசங்களில் பாதைகளும் ரெயில்களும் போடப்பட்டன; தொழில் தாபனங்கள் நிறுவப்பட்டன. இவைகளின் மூலம் சீனர்கள், அற்ப சொற்பமான தங்களுடைய ராணுவத்தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டார்கள். ஆனால் பெருவகையான யுத்த தள வாடங்கள், ஆகாய விமானங்கள், மோட்டார் லாரிகள், பெட்ரோல் முதலியவைகளுக்கு அந்நிய நாடுகளின் உதவியையே எதிர்பார்க்க வேண்டியதாயிருந்தது. வெளியுலகத்தோடு போக்குவரத்து வைத்துக் கொள்வது, இந்தப் போராட்டத்தின் முக்கிய அமிசமாயிருந்தது. சீனர் களுக்கு எவ்வித சாமான்களும் வெளிநாடுகளிலிருந்து கடல் மார்க்க மாகக் கிடைக்காதபடி ஜப்பானியர்கள் முக்கியமான துறைமுகப் பட்டினங்களை யெல்லாம் அடைத்துவிட்டார்கள். சீனர்களோ, சில்லரைத் துறைமுகங்கள் மூலம் சாமான்களை வரவழைத்துக்கொள்ள முயற்சி செய்தார்கள். ஜப்பானியர்கள், இந்தோ - சீனாவில் ஆதிக்கம் ஏற்படுத்திக் கொண்ட பிறகு, அதன் மூலம் சீனாவுக்கு வந்து கொண்டிருந்த வழியையும் அடைத்து விட்டார்கள். பர்மாவிலிருந்து வந்துகொண்டிருந்த வழி, சிலகாலம் மூடப்பட்டுப் பின்னர் திறக்கப்பட்டது. இதனை ஜப்பானியர்கள் பலமுறை ஆகாயவிமானங்கள் மூலம் தாக்கினார்கள். இருந்தும் இந்தப் பர்மா ரோட்டின் மூலம் ஓரளவு சாமான்கள் கிடைத்துக் கொண்டிருந்தன. ருஷ்யாவிலிருந்து சாமான்கள் வருவதற்கு அனுகூலமாக வடமேற்குப் பாதை செப்பனிடப்பட்டது._
உள்நாட்டு விவகாரங்களைப் பொறுத்தமட்டில், வாங் சிங் வெய்யினுடைய துரோகத்திற்குப் பிறகும், அவன் ஜப்பானியருடைய ஆதரவில் நான்கிங்கில் ஓர் அரசாங்கத்தை தாபித்துக்கொண்ட போதிலும், கோமிண்டாங் கட்சியினருக்கும் பொதுவுடைமைக் கட்சியினருக்கும் பிணக்குகள் இருந்தபோதிலும் சீனாவின் தேசீய ஒற்றுமை குலையாமலே இருந்தது. இந்தப் பிணக்குகள் இன்னமும் இருந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இரு பக்கத்துக் கட்சித் தலைவர்களும், பொதுச் சத்துருவுடன் போராடவேண்டுமென்ற உறுதியினால் பிளவு ஏற்படாமல் பாதுகாத்துவருகிறார்கள்.
ஜப்பானியர்களைப் பொறுத்தமட்டில், ராணுவ நிலைமை ஒரு தேக்கத்தில் இருந்ததென்றே சொல்லவேண்டும். அதாவது யுத்தம் தொடர்ந்து நடைபெற்றதாயினும், அநேக சந்தர்ப்பங்களில் பெரிய அளவில் நடைபெற்றதாயினும், ஜப்பானியர்கள், தங்களால் ஏற்கனவே ஆக்கிரமித்துக்கொண்ட பிரதேசங்களை விதரித்துக் கொண்டுபோக முடியவில்லை. விதரித்துக்கொண்டுபோக வேண்டு மென்பது அவர் களுடைய நோக்கமில்லைபோலும். அப்படிச் செய்வதனால் அவர்களுக்கு அதிக சிரமம் உண்டாகக்கூடும். சீன ராணுவத்தின் பெரும்பகுதியை அழித்துவிடவேண்டுமென்ற அவர் களுடைய முக்கிய எண்ணமும் கைகூடாது. அவர்களுடைய நோக்கம் என்னவென்றால், வட சீனாவில் தாங்கள் அடைந்துள்ள பொருளாதார சாதகங்களை ஒன்றுசேர்த்து திரப் படுத்திக் கொள்வது; வாங் சிங் வெய்யின் அரசாங்கத்தை ஆதரிப்பது. அப்படி ஆதரிப்பது எதற்காக என்றால் அவன் மூலமாகவோ அல்லது உட்பிணக்குக் காரணமாக சீனாவின் எதிர்ப்புச் சக்தி குன்றிவிடு வதனாலோ, அல்லது வெளிநாடுகளி லிருந்து சரக்குகள் வரும் வழியை அதற்கு அடைத்துவிடுவதனாலோ அல்லது அந்நிய வல்லரசுகளின் ஆதரவு அதற்கு நின்றுவிடுவத னாலோ, சீன சம்பவத்தை, நாட்டின் பெரும் பகுதியில் தங்களுக்குப் பொருளாதார ஆதிக்கமும் ராணுவ ஆதிக்கமும் இருக்கக்கூடிய மாதிரியான ஒரு சமாதானத்தின் மூலம், ஒருவகையாக முடித்துவிடலாமென்பதுதான். இப்படி முடித்துக் கொண்டுவிட்டால் கிழக்கு ஆசியப் பகுதியில் சர்வதேச நிலைமை காரணமாக ஏதேனும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் அந்தச் சந்தர்ப் பத்தைத் தாங்கள் உபயோகித்துக்கொள்வதற்குச் சௌகரியமா யிருக்கும் என்பதுவே ஜப்பானியர்களின் கருத்து.
கோமிண்டாங் கட்சி
சீனாவில் பரம்பரையாக நடைபெற்றுக் கொண்டுவந்த முடியாட்சி, சாசுவதமாக மறைந்து விட்டதற்கு மூலகாரணமா யிருந்தது எது? அந்த முடியாட்சி மறைந்த பிறகு, நாட்டை ஒரே அவாந்தரை யாக்கிவந்த ராணுவப்பிரபுக்களின் கொட்டத்தை அடக்கி, தேசீய ஒற்றுமையை உண்டுபண்ணி சர்வ சீனாவுக்குமான அரசாங்கம் என்று சொல்லத்தகுந்த ஒரு மத்திய அரசாங்கம் தா பிதமாவதற்குக் காரணமாயிருந்தது எது? இப்பொழுது சென்ற ஏழு வருஷ காலமாக ஜப்பானை, தனித்து நின்று எதிர்த்துப் போரா டக்கூடிய சக்தியைச் சீனாவுக்கு அளித்தது எது? கோமிண்டாங் ! கோமிண்டாங்!
1925-ஆம் வருஷம் ஸன் யாட் ஸென் இறந்துவிட்ட பிறகு, இதன் நிருவாக சூத்திரக் கயிற்றைப் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் ஓரளவு பிற்போக்குப் பாதையிலே செல்ல முற்பட்டார்களாயினும், இந்தக் கோமிண்டாங்கட்சிக்கு விரோதமான சக்திகள் தேசத்தில் எழுந்தன என்றாலும், முதலாளி வர்க்கத்தின் செல்வாக்கு இந்தக் கட்சியின் மீது படிந்து வந்திருக்கிறது என்பது உண்மையானாலும், இன்று, ஜப்பானிய ஆக்கிரமிப்புக்குப் பிறகு, தேசத்தின் ஒரு முகப் பட்ட சக்திக்குப் பிரதிநிதியாயிருப்பது இந்தக் கோமிண்டாங் கட்சி தான். இந்தக் கட்சிக் கொடியின்கீழ் தான் இன்று மற்றக் கட்சியினர் அனைவரும் ஒன்று கூடியிருக்கின்றனர். சீனாவில் இப்பொழுது கட்சியென்று சொன்னால் ஒரு கட்சிதான்; அது கோமிண்டாங் கட்சி தான். இந்த கட்சியே இன்று, ஜனங்களுக்குப் பிரதிநிதியா யிருந்து அரசாங்கத்தை நடத்துகிறது.
1905-ஆம் வருஷம் டோக்கியோ நகரத்தில் இந்தக் கட்சியை தாபித்தான் ஸன் யாட் ஸென். அப்பொழுது இதற்கு டுங் மெங் ஹுயி (சீன சகோதரத்துவ சங்கம்) என்று பெயர். அப்பொழுது சீனாவில் முடியாட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதற்குப் பக்க பலமாக நிலச்சுவான்தார் ஆதிக்கம் மிகுந்திருந்தது. நிலமில்லாத விவசாயிகளும், பயிரிடாமல் ஏராளமான நிலங்களைத் தங்கள் சுவாதீனத்தில் வைத்துக் கொண்டிருந்த நிலப்பிரபுக்களும் அதிக மாயிருந்தனர். இந்த ஏற்றத் தாழ்வை அகற்றி, எல்லாருக்கும் உழுது பயிரிடக் கூடிய நிலங்கள் கிடைக்குமாறு செய்வதும், முடியாட் சியை ஒழித்துக் குடியாட்சியை ஏற்படுத்துவதும் இந்தக் கட்சியின் நோக்கங்களாக வகுக்கப்பட்டன.1 இந்த நோக்கங் களுக்காகப் பல புரட்சிகள் நடைபெற்றன. கடைசியில் 1911-ஆம் வருஷம் அக்டோபர் மாதம் நடைபெற்ற புரட்சியின் பயனாக முடியாட்சி முடிந்தது; தற்காலிகமாகக் குடியரசு ஏற்பட்டது. இதற்குத் தலைவனாகத் தெரிந் தெடுக்கப் பட்டான் ன் யாட் ஸென். ஆனால் சிறிது காலமே இந்தப் பதவியை வகித்துவிட்டு, பிறகு யுவான் ஷி காய்க்காக ராஜீநாமா செய்து விட்டான்.
எந்த நோக்கத்திற்காக டுங் மெங் ஹூயி கட்சி தாபிக்கப் பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறிவிட்டபடியால், அதாவது குடியரசு தாபிதமாகி விட்டபடியால், ஸன், 1912-ஆம் வருஷம், கட்சியின் பெயரை கோமிண்டாங் என்று மாற்றி, மற்றச் சாதாரண அரசியல் கட்சிகளைப் போல் ஓர் அரசியல் கட்சியாக இருந்து வேலை செய்வதற்கு ஏற்பாடு செய்தான். ஆனால் குடியரசு நிலைக்க முடியாத படி பல விரோத சக்திகள் கிளம்பின. இவைகளை எதிர்த்துப் போராடுவது அவசியமா யிருந்தது. எனவே, மறுபடியும் ஜனங் களிடத்தில் புரட்சி மனப்பான்மையை உண்டு பண்ணவேண்டு மென்பற்காக, ஸன், மேற்படி தன் கட்சியின் பெயரை 1914-ஆம் வருஷம் கேமிண்டாங் (சீனப் புரட்சி சங்கம்) என்று மாற்றி யமைத் தான். குடியரசுக்கு விரோதமா யிருந்த யுவான் ஷி காய் முதலியவர் களை எதிர்த்துப் போராடினான். யுவான் ஷி காய், தானே சக்ரவர்த்தி யாக முடி சூட்டிக் கொள்ள முயன்று முடியாமற்போய், கடைசி யில் மனமுடைந்து, 1916-ஆம் வருஷம் இறந்து போனான். இதற்குப் பிறகு, பீகிங் அரசாங்கம் ராணுவப் பிரபுக்களின் ஆதிக்கத்திற் குட் பட்டது. எனவே, இதற்கு விரோதமாக ஸன், தனது சகாக்களுடன் காண்டனில் ஒரு தேசீய அரசாங்கத்தை தாபித்தான். 1919-ஆம் வருஷம், கட்சியின் பெயர், கேமிண்டாங் என்றிருந்தது, மறுபடியும் கோமிண்டாங் (சீன தேசீயக் கட்சி) என்று மாற்றியமைக்கப் பட்டது. புதிய அங்கத்தினர் பலர் சேர்த்துக் கொள்ளப் பட்டார்கள். இதன் செல்வாக்கு தேசத்தில் அதிகரித்தது. இந்த வருஷத்திலிருந்து கோமிண்டாங் என்ற பெயரே நிலவி வருகிறது.
1919-ஆம் வருஷத்திற்குப் பிறகு 1924-ஆம் வருஷம், ஸன் யாட் ஸென், கோமிண்டாங்கை மறுபடியும் கால நிலைக்குத் தகுந்தவாறு புனர் நிர்மாணம் செய்து வைத்தான். இந்த வருஷத்தில் தான் பொதுவுடைமை வாதிகள் கட்சியில் சேர்த்துக் கொள்ளப் பட்டார்கள். இந்த வருஷத்தில் தான் கட்சியின் முதல் காங்கிர கூடியது. இதற்குப் பிறகு நாளதுவரை ஐந்து காங்கிரகளும் ஒரு விசேஷ காங்கிரஸும் கூடியிருக்கின்றன. 1938-ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் ஹாங்கோ நகரத்தில் கூடிய இந்த விசேஷ காங்கிரஸில் முக்கியமான தீர்மானங்கள் பல நிறை வேற்றப்பட்டன. இதற்கு முன்னர் சியாங் கை ஷேக், கட்சியிலாகட்டும், தேசீய அரசாங்கத்தி லாகட்டும் அதிக செல்வாக்குப் பெற்று ஒரு சர்வாதிகாரி போல் காரியங்களை நடத்தி வந்தானாயினும், இந்த விசேஷ காங்கிரஸில் தான் இவன் கட்சியின் தலைவனாக உத்தியோக தோரணையில் தெரிந்தெடுக்கப்பட்டான். அப்பொழுது முதல் இன்றைய வரையில் இவன்தான் கோமிண்டாங்கின் த்ஸுங் த்ஸாய் - பிரதம நிருவாகத் தலைவன். (டைரெக்டர் ஜெனரல்.) இன்னும் இந்த விசேஷ காங்கிரஸில், ஜப்பானிய ஆக்ரமிப்பை எதிர்த்துப் போராடுவதற் காகவும், தேசீய புனர் நிர்மாணத்திற்காகவும் ஒரு திட்டம் வகுக்கப் பட்டது; பல திறப்பட்ட கொள்கையினரும் அடங்கிய ஒரு ஜன சபை தாபிக்கப்பட்டது; இளைஞர்களுக் கென்று தனியாக ஸான் மின் ஜூயி இளைஞர் படை யொன்று நிறுவப் பட்டது. இவைகளைப் பற்றிப் பின்னர் விரிவாகக் கூறுவோம்.
கோமிண்டாங் கட்சியில் ஸன் யாட் ஸென்னுக்குத் தனியான ஒரு தானம் உண்டு. அவனை ஒரு தெய்வமாகவே இப்பொழுது கட்சியினர் கொண்டாடுகிறார்கள்; அவனை ஸுங்க்லீ (தலைவன்) என்றே அழைக் கிறார்கள். பிரதியொரு திங்கட்கிழமையும் காலை ஒன்பது மணியி லிருந்து பன்னிரண்டு மணிக்குள் ஒரு மணி நேரம் எல்லாக் கட்சி, அரசாங்க, ராணுவக் காரியாலயங்களிலும் அவனு டைய ஞாபகார்த்த மாகச் சில சடங்குகள் நடைபெறுகின்றன. அப்பொழுது, கூடியுள்ளவர்கள் தேசீய கீதம் பாடுகிறார்கள்; தேசீயக் கொடிக்கும், கட்சிக் கொடிக்கும்,1 ஸன் யாட் ஸென் உருவப்படத் திற்கும் மூன்றுமுறை வணக்கஞ் செலுத்துகிறார்கள்; ஸன் யாட் ஸென், தன் கடைசி காலத்தில் எழுதி வைத்துப் போனதாகச் சொல்லப்படும் உயில் படிக்கப்படுகிறது; மூன்று நிமிஷ நேரம் மௌனம்; பிறகு நேரமிருந்தால், ஸன்னின் நூல்களிலிருந்து ஏதேனும் ஒரு பகுதி எடுத்து வாசிக்கப்படுகிறது; அல்லது கட்சிக் கூட்டமா யிருந்தால் முந்திய வாரத்தில் என்ன வேலை நடைபெற்ற தென்பதைப் பற்றிய அறிக்கை வாசிக்கப்படுகிறது. இந்த வாரக் கொண்டாட்டங்கள் தவிர, வருஷந்தோறும், ஸன்னின் பிறந்த தினமும் இறந்ததினமும் தேசீயத் திருவிழாக்களாகக் கொண்டாடப் படுகின்றன. அவன் பிறந்த நாளாகிய நவம்பர் மாதம் பன்னிரண்டாந் தேதி அரசாங்கக் காரியால யங்களுக்கு ரஜா. 1940-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் நடைபெற்ற கோமிண்டாங்கின் காரியக் கமிட்டி கூட்டத்தில், ஸன்னை இனி சீனக் குடியரசின் தந்தை என்றே அழைக்க வேண்டுமென்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது முதற்கொண்டு சீனர்கள், இந்தப் பெயரிட்டே அழைக் கிறார்கள்.
ஸன் யாட் ஸென்னுடைய உயிலை இந்த இடத்திலே வாசகர் களுக்கு அறிமுகப் படுத்திவைக்க விரும்புகிறோம். ஏனென்றால் கோமிண்டாங் கட்சியின் அமைப்பும், தேசீய அரசாங்கத்தின் அமைப்பும் இந்த உயிலையே அதிவாரமாகக் கொண்டிருக் கின்றன. உயில் வருமாறு:-
தேசீயப்புரட்சியை முன்னிட்டு நான் நாற்பது வருஷகாலமாக உழைத்து வந்திருக்கிறேன். சர்வதேசங்களுக்கும் மத்தியில் சீனாவைச் சுதந்திரமுள்ளதாகவும் சமத்துவமுடையதாகவும் உயர்த்த வேண்டு மென்பதே மேற்படி புரட்சியின் நோக்கம். இந்த நாற்பது வருஷ அனுபவத்திலிருந்து நான் தெரிந்துகொண்ட தென்னவென்றால், மேற்படி நோக்கத்தை அடைவதற்கு நாம் ஜனங்களைத் தட்டி எழுப்பவேண்டும்; நம்மைச் சமத்துவ நிலையிலே வைத்துப் பார்க்கிற உலகத்துச் சர்வ ஜாதியினருடனும் சேர்ந்து பொதுவான ஒரு போராட்டத்தில் ஈடுபட வேண்டும்.
நமது புரட்சி இன்னும் முடியவில்லை. நமது சகோதரர்கள் அனைவரும் நமது கட்சியின் முதல் தேசீய மகாநாட்டினால் வெளி யிடப்பெற்ற என்னுடைய தேசீய புனருத்தாரண திட்டங்கள், தேசீய புணருத்தாரணத்தின் அடிப்படைகள், ஜனங்களின் மூன்று வாழ்க்கைத் தத்துவங்கள் என்ற நூல்களில் கூறப்பட்டுள்ள கொள்கை களையும் முறைகளையும் பின்பற்றி அவற்றைத் தொடர்ந்து அனுஷ்டிப்ப தற்கு முயற்சி செய்வார்களாக! மற்றும், சீனாவின் சர்வ ஜனங்களின் தேசீய மகாநாடொன்று கூட்ட வேண்டுமென்பதைப் பற்றியும், ஏற்றத் தாழ்வான உடன்படிக் கைகளை ரத்து செய்யவேண்டு மென்பதைப் பற்றியும் நான் கூறிய மொழிகளை விரைவில் அனுஷ்டானத்துக்குக் கொண்டுவர முயற்சி செய்வார்களாக!
11-3-1925
(ஒப்பம்)ஸன் வென்
கோமிண்டாங் கட்சியில் இப்பொழுது சுமார் இருபது லட்சம் பேர் அங்கத்தினர்களா யிருக்கிறார்கள். ஏதோ ஒரு தொகையைச் சந்தாவாகச் செலுத்திவிட்டு அங்கத்தினராகி விடலாமென்பது இதில்முடியாது. முதலாவது, இரண்டு அங்கத் தினர்களுடைய சிபார்சு வேண்டும். பிறகு, கட்சியின் கொள்கை முதலியவற்றில் பயிற்சி பெற்றவராயிருக்க வேண்டும். பலவித பரிசோதனைகளுக்குட்பட்டு அவைகளில் வெற்றி பெற வேண்டும். கடைசியில் கட்சியினிடமும் தேசத்தினிடமும் விசுவாசத்துடன் நடந்து கொள்வதாகப் பிரமாணம் செய்யவேண்டும். இவை களுக்குப் பின்னரே, உரிமையுள்ள அங்கத்தினராகச் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அங்கத்தினராகப் பதிவு செய்து கொள்ளப் பட்டபிறகு, மாதந்தோறும் குறிப்பிட்ட சந்தாத்தொகையைச் செலுத்தி வருவதோடு, கட்சித் தலைவர்கள் அவ்வப்பொழுது இடுகிற வேலையைச் செய்ய வேண்டும்.
1935-ஆம் வருஷம் நவம்பர் மாதம் நடைபெற்ற கோமிண் டாங் கட்சியின் ஐந்தாவது தேசீயக் காங்கிரஸில், பிரதியொரு கோமிண் டாங் அங்கத்தினரும் பின்வரும் பன்னிரண்டு நியமங் களைத் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் அனுஷ்டிக்க வேண்டுமென்று தீர்மானிக்கப் பட்டது:-
_1. விசுவாசமும் தைரியமும், தேசபத்திக்கு அடிப்படை._
_2. பெற்றோரிடம் பக்திசெலுத்துவது, குடும்ப ஒழுங்கிற்கு அடிப்படை._
_3. நல்லெண்ணமும் அன்பும், சகோதர நேயத்திற்கு அடிப் படை._
_4. நம்பிக்கையும் நேர்மையும், பிரயோஜனகரமான வாழ்க் கைக்கு அடிப்படை._
_5. அமைதி, சமுதாயத்தில் ஒருவருக்கொருவர் நல்லமுறையில் பழகுவதற்கு அடிப்படை._
_6. அன்போடு கூடிய மரியாதை, நல்ல ஆட்சிக்கு அடிப்படை._
_7. கீழ்ப்படிந்து நடத்தல், பொறுப்புள்ள தன்மைக்கு அடிப் படை._
_8. சுறுசுறுப்பும் சிக்கன வாழ்க்கையும், திறமையான சேவைக்கு அடிப்படை._
_9. ஒழுங்கும் சுத்தமும், தேகாரோக்கியத்திற்கு அடிப்படை._
_10. பிறர்க்கு உதவியாயிருத்தல், சந்தோஷத்திற்கு அடிப்படை._
_11. மனித சமூகத்திற்குப் பிரயோஜனகரமாக இருக்க வேண்டு மானால் அதற்கு ஞானமே அடிப்படை._
_12. விடாமுயற்சியே, வெற்றிக்கு அடிப்படை._
ஜப்பானிய யுத்தம் தொடங்கிய பிறகு, அதனை எதிர்த்துச் சமாளிக்கு முகத்தான், கோமிண்டாங் அங்கத்தினர்கள் பின்வரும் ஏழு நியமங் களையும், மேற்கண்ட நியமங்களுடன் சேர்த்து அனுஷ் டிக்கவேண்டு மென்று, 1939-ஆம் வருஷம் ஜனவரி மாதம் நடை பெற்ற கட்சியின் நிருவாகக் கமிட்டிக் கூட்டம் தீர்மானித்தது:-
_1. யுத்தத்திற்கு முன்னரும் பின்னரும் அரசாங்கத்தார் அமுலுக்குக் கொண்டுவந்திருக்கிற எல்லாச் சட்டங்களுக்கும் கீழ்ப் படிந்து நடக்க வேண்டும்; அப்படியே கட்சியின் ஒழுங்குக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்._
_2. ஆபத்தை எதிர்த்து நிற்கிற விஷயத்தில் ஜனங்களுக்கு முன்னாடி செல்லுங்கள்; ஓய்வாகச் சுகத்தை அனுபவிக்கிற விஷயத் தில் ஜனங்களுக்குப் பின்னாலிருங்கள்._
_3. பழைய கட்சிப் பிணக்குகளை யெல்லாம் மறந்து விடுங்கள்; உணர்ச்சியிலும் செயலிலும் ஒற்றுமைப் பட்டிருங்கள்; சுகமோ துக்கமோ சேர்ந்து அனுபவியுங்கள்._
_4. யுத்த சம்பந்தமாகச் சேவை செய்யும் விஷயத்திலோ, நன் கொடை முதலியன அளிக்கும் விஷயத்திலோ ஜனங்களுக்கு வழி காட்டியாயிருங்கள்._
_5. உங்கள் பிரதேசத்திலிருக்கும் கட்சி தாபனமோ அல்லது ராணுவத் தலைவரோ அவ்வப்பொழுது விடுக்கும் உத்தரவுகளுக்கு, மறுப்புச் சொல்லாமல் கீழ்ப்படிந்து நடவுங்கள்._
_6. கட்சியின் பலத்தைப் பெருக்குங்கள்; அதில் ராணுவ ஒழுங்கை நிலைநாட்டுங்கள்._
_7. ராணுவ ரகசியங்களை வெளிவிடாமல் காப்பாற்றுங்கள்; அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்டுகிற விஷயத்தில் அதிகாரி களுக்கு உதவியாயிருங்கள்._
இந்த ஒழுங்கு நியமங்களிலிருந்து, கோமிண்டாங் கட்சியில் அங்கத்தினரா யிருப்பது பெருமைக்காகவல்ல,புனிதமான கடமையை நிறைவேற்றுவதற்காக என்பது தெளிவாகிறது,. கோமிண்டாங் கட்சியைச் சேர்ந்த பிரதியொரு நபரும், தேசீய அரசாங்கத்தின் பொறுப்பறிந்த பிரஜை; சீன சமுதாயத்தின் பெருந்தகைமைக்குப் பிரதிநிதி; அதன் நல்வாழ்வுக் காகத் தன்னையே அர்ப்பணம் செய்து விடக்கூடிய ஆற்றல் நிறைந்த தியாகி.
கோமிண்டாங் கட்சியின் அமைப்பு, ஐந்து அடுக்குகள் கொண்ட ஒரு மாளிகை மாதிரி இருக்கிறது. (1) தாலுகா சபை (2) ஜில்லா சபை (3) இரண்டு மூன்று ஜில்லாக்கள் சேர்ந்த பிரதேச சபை (4) மாகாண சபை (5) சர்வ சீனாவுக்கும் பொதுவான சபை. தாலுகா சபையானது இரண்டு வாரங்களுக் கொருமுறையும், ஜில்லா சபை இரண்டு மாதங்களுக் கொருமுறையும், பிரதேச சபை ஆறு மாதங் களுக்கொருமுறையும், மாகாண சபை வருஷத்திற்கொரு முறையும், சர்வ சீன சபை இரண்டு வருஷத்திற்கொரு முறையும், முறையே கூடுகின்றன. இந்தக் கூட்டங் களுக்கு காங்கிர என்று பெயர். இந்தக் காங்கிரகளில் நிறைவேற்றப் படுகிற தீர்மானங்களை அனுஷ்டானத்திற்குக் கொண்டுவரும் பொருட்டும், கட்சியின் அன்றாடக் காரியக் கிரமங்களைக் கவனிக்கும் பொருட்டும், பிரதியொரு காங்கிர கூட்டமும் நிருவாகக் கமிட்டி, காரியக் கமிட்டி முதலியவைகளைத் தெரிந் தெடுக்கிறது. பிரதியொரு காங்கிரஸும் அதனதன் மேல் தாபனத்திற்குக் கட்டுப்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலோக இருப்பது தான் மேலே சொன்ன சர்வ சீன தேசீய காங்கிர. கோமிண்டாங் கட்சியின் அமைப்பு ஏறக்குறைய இந்திய தேசீய காங்கிரஸின் அமைப்பு மாதிரி இருக்கிறதென்று ஒரு சீன அறிஞன் கூறுகிறான்.எனவே, இந்திய தேசீய காங்கிரஸின் அமைப்பை ஒருவாறு நமது மனப்படத்தில் வரைந்து கொண்டு விட்டோமானால் கோமிண்டாங் கட்சியின் அமைப்பு சுலபமாகப் புரிந்துவிடும்.
இரண்டு வருஷத்திற் கொருதடவை கூடும் சர்வ சீன தேசீய காங்கிர, கட்சியின் சட்ட திட்டங்களை நிர்ணயிக்கிறது; திருத்தி யமைக்க வேண்டு மானால் திருத்தி யமைக்கிறது; அவ்வப்பொழுது எழுகிற பிரச்னைகளைப் பற்றித் தீர்மானங்கள் நிறைவேற்றுகிறது; இந்தத் தீர்மானங்களை அனுஷ்டானத்திற்குக் கொண்டுவரும் பொருட்டு ஒரு நிருவாகக் கமிட்டியையும் (Central Executive Committee) ஒரு பரிசீலனைக் கமிட்டியையும் (Central Supervisory Committee) நியமிக்கிறது.
மேற்படி இரண்டு கமிட்டிகளில் நிருவாகக் கமிட்டி தான் முக்கியமானது; அதிக பொறுப்புகளுடையது. இது, தேசீய அரசாங் கத்தின் தலைவனையும், மந்திரிமார்களையும் தெரிந்தெடுக்கிறது. அதாவது தேசீய அரசாங்கத்தை இதுவே நடத்துகிற தென்று சொல்ல வேண்டும். மற்றும் தேசீய காங்கிரஸினால் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களை அமுலுக்குக் கொண்டுவருவதும், மற்றக் கட்சி தாபனங்களின் வேலை களை ஒழுங்குபடுத்திக் கொடுப்பதும் இந்த நிருவாகக் கமிட்டியின் அலுவல்களாகும்.
பரிசீலனைக் கமிட்டியானது, (1) கட்சியின் கீழ்ப்பட்ட தாபனங்களோ அல்லது கட்சியின் அங்கத்தினர்களோ, கட்சியின் ஒழுங்கை மீறி நடந்தால் என்ன விதமான தண்டனை விதிக்க வேண்டு மென்பதை நிர்ணயிக் கிறது; (2) நிருவாகக் கமிட்டியின் வரவு செலவுகளைக் கவனிக் கிறது; (3) கட்சியின் விவகாரங்கள் ஒழுங்காக நடைபெறுகின்றனவா என்று பரிசீலனை செய்கிறது; (4) தேசீய அரசாங்கம், கட்சியின் கொள்கைகள்படி நடந்து வருகின்றதா என்பதைக் கவனிக்கிறது.
நிருவாகக் கமிட்டி, பரிசீலனைக் கமிட்டி ஆகிய இரண்டு கமிட்டிகளிலும் சுமார் இருநூற்றறுபது அங்கத்தினர்கள் இருக் கிறார்கள். இரண்டும் ஆறு மாதத்திற் கொருமுறை கூடுகின்றன; இரண்டுக்கும், அன்றாட அலுவல்களைக் கவனிப்பதற்கென்று தனித் தனியாகக் காரியக்கமிட்டிகள் உண்டு; தனித் தனியாகக் காரியால யங்கள் உண்டு.
நிருவாகக் கமிட்டியின் காரியாலயம் (Central Secretariat) ஒழுங்கு பட்ட ஓர் அரசாங்கக் காரியாலயம் மாதிரியே அமைக்கப் பட்டி ருக்கிறது. இந்தக் காரியாலயத்தைத் தவிர, நிருவாகக் கமிட்டியின் கீழ், (1) கட்சியில் அங்கத்தினர்களைப் பதிவு செய்து கொள்ளுதல், அவர்களுக்குப் பயிற்சி அளித்தல் முதலிய விவகாரங்களைக் கவனிக் கிற கட்சி அமைப்பு போர்ட் (Organization Board) (2) கட்சியைப் பற்றிய தகவல்களைச் சேகரித்தல், பத்திரிகை, புதகம் முதலியன வெளி யிடுதல், பிரசாரம் நடத்துதல், விளம்பரம் செய்தல் முதலியவற்றைக் கவனிக்கிற தகவல் போர்ட் (Board of Information) (3) வெளிநாடு களிலுள்ள கட்சி அங்கத்தினர் சம்பந்தப்பட்ட விவகாரங்களைக் கவனிக்கிற வெளிநாட்டு போர்ட் (Board of Overseas) என்ற மூன்று தாபனங்களும், சந்தா வசூலிப்பது முதல் அரசாங்க நிருவாகத்தை நடத்திக் கொடுப்பதுவரை பல விஷயங்களையும் கவனிப்பதற் கென்று சுமார் பத்து கமிட்டிகளும் இருக்கின்றன. இவற்றுள் அரசாங்க நிருவாகத்தை நடத்திக் கொடுக்கிற கமிட்டி மிகவும் முக்கியமானது. இதற்கு அரசியல் கமிட்டி (Political Committee) என்று பெயர். இதன் அமைப்பு, நடைமுறை, பொறுப்பு முதலியன பல மாற்றங் களை யடைந்திருக் கின்றன. இந்தக் கமிட்டியின் வேலைகளை இப் பொழுது -1939- ஆம் வருஷம் பிப்ரவரி மாதத்திலிருந்து - பிரதம தேசீயப் பாதுகாப்புக் கவுன்சில் (Supreme National Defence Council) என்ற பெயருடைய தாபனம் செய்து வருகிறது. இதுதான் இன்று சீனா வின் மேலான தாபனம்; யுத்தகால அவசியத்தை முன்னிட்டு அமைந்திருக்கிறது. இதன் நடைமுறைகள், சட்ட திட்டங்கள் முதலியன அந்தரங்கமாகவே வைக்கப்பட்டிருக்கின்றன. இதன் தலைவனுக்கு (இப்போழுது சியாங் கை ஷேக்) தேசத்தின் பாதுகாப்பை முன்னிட்டு விசேஷ சட்டங்கள், அவசரச் சட்டங்கள் முதலியன பிறப்பித்தல், மற்ற அவசர நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளுதல் ஆகிய சகல அதிகாரங்களும் அளிக்கப் பட்டிருக் கின்றன. இந்தப் பாதுகாப்புக் கவுன்சிலில், நிருவாகக் கமிட்டி, பரிசீலனைக் கமிட்டி ஆகிய இரண்டு கமிட்டிகளினுடைய காரியக் கமிட்டிகளின் அங்கத்தினர் களும், அரசாங்க மந்திரிகள், உப மந்திரி களும், தேசத்திற்கும் சமுதாயத் திற்கும் பல துறைகளில் அரும்பணி யாற்றியவர்களும் அங்கத்தினர் களாகத் தெரிந்தெடுக்கப் படு கிறார்கள். இவர்கள் அடங்கிய இந்தப் பாதுகாப்புக் கவுன்சில் அவசியமானபோதுதான் கூடுகிறது. ஆனால் இதன் அன்றாட வேலைகளைக் கவனிப்பதற்கு, இதிலிருந்தே பதினோரு பேரைப் பொறுக்கி யெடுத்து காரியக் கமிட்டியாக ஏற்படுத்தியிருக் கிறார்கள். இந்தக் காரியக் கமிட்டி இரண்டு வாரத்திற் கொருமுறை கூடுகிறது. இதனை யுத்தகால மந்திரிச் சபை (War Cabinet) என்று ஒருவாறு கூறலாம்.
பிரதம தேசீயப்பாதுகாப்புக் கவுன்சிலுக்கு ஆலோசனை சொல்லும் அங்கமாக ஜன அரசியல் சபை (People’s Political Council) ஒன்றிருக்கிறது. ஆரம்பத்தில் மேற்படி பாதுகாப்புக்கவுன்சிலானது, அரசியல் கமிட்டியாக இருந்த போது, அதற்கு ஆலோசனை சொல்கிறமுறையில் (Advisory Council) இந்தச் சபையிருந்தது. பின்னர், ஜப்பானியப் படையெடுப்பை முன்னிட்டு, அரசியல் கமிட்டி யானது பாதுகாப்புக் கவுன்சிலாக விரிந்த போது, இந்த ஆலோசனை சபையும் ஜன அரசியல் சபையாக விரிந்தது. இதனைச் சர்வசீன சட்டசபை யென்று கூறலாம். இதில் பல கட்சிப் பிரதிநிதிகளும் அங்கத்தினர்கள். இதைப்பற்றி அரசாங்க அமைப்பின் கீழ் சிறிது விதரித்துக் கூறுவோம். ஆனால் இங்கே ஒரு விஷயத்தை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். அதாவது பிரதம தேசீயப் பாதுகாப்புக் கவுன்சிலிலும், ஜன அரசியல் சபையிலும், சீனாவின் பிரமுகர் பலர் அடங்கியிருந்தபோதிலும், இரண்டும், யுத்த கால நிலைமையைச் சமாளிக்க ஏற்பட்ட தாபனங்களாக இயங்கிக் கொண்டுவந்த போதிலும், இரண்டும் வேறு வேறு; ஒன்றுக்கொன்று முரண்பட்டதன்று.
நிருவாகக் கமிட்டியின் கீழ் பல கிளைக் கமிட்டிகள் வேலை செய்கின்றனவென்று மேலே சொன்னோமல்லவா, இவற்றுள் ஒன்று ஸான் மின் ஜூயி இளைஞர் படை சம்பந்தமான விவகாரங்களைக் கவனிக்கிற கமிட்டி. இந்த இளைஞர் படையானது, 1938-ஆம் வருஷம் ஜூலை மாதம் தாபிக்கப்பட்டது. பதினாறு வயதுக்கு மேல் இருபத்தைந்து வயதுக்குட்பட்ட ஆண் பெண் இருபால் இளைஞர்களும் இதில் அங்கத்தினர்களாகச் சேர்த்துக் கொள்ளப் படுகிறார்கள். சேர்த்துக் கொள்ளப் பட்டதும், பிரதியோர் அங்கத்தினரும் கீழ்க்கண்ட பிரகாரம் பிரமாணம் செய்து கொடுக்க வேண்டும்:-
ஸான் மின் ஜூயி தத்துவங்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பதாக வும், தலைவருடைய (தற்போது சியாங் கை ஷேக்) உத்திரவுகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதாகவும், படையின் விதிகளை உண்மையாக அனுசரிப்பதாகவும், அவ்வப்பொழுது செய்யப்படும் தீர்ப்புகளை அனுஷ்டானத்திற்குக் கொண்டுவருவதாகவும், நவ ஜீவன இயக்கத்தின் கோட்பாடுகளின்படி வாழ்க்கையை நடத்துவதாகவும் நான் இதன் மூலம் மனப்பூர்வமாகப் பிரமாணம் செய்து கொடுக் கிறேன். ராஜ்யத்திற்குச் செய்ய வேண்டிய கடமை யிலாகட்டும், ஜன சமுதாயத்தின் நலனுக்காக உழைக்கிற விஷயத் திலாகட்டும், நான் எந்தவிதமான கஷ்டங்களையும் பொருட்படுத்த மாட்டேன்; தியாகம் செய்யப் பின்வாங்கமாட்டேன். என்னுடைய இந்தப் பிரதிக்ஞைக்கு நான் பங்கம் உண்டு பண்ணுவேனாயின் எனக்கு விதிக்கப்படுகிற எந்த விதமான கடுந் தண்டனையையும் ஏற்றுக்கொள்வேன்.
இந்தப்படையின் கிளை தாபனங்கள் நாட்டின் பல பாகங்களிலும் இருக்கின்றன. சுமார் ஐந்து லட்சம் இளைஞர்கள் இதில் இப்பொழுது அங்கத்தினர்களாக இருக்கிறார்கள். ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் ஒரு கிளைப்படை இருக்கிறது. இந்த இளைஞர்படையானது, அரசாங்கத்தின் சிறந்த பிரசாரக் கருவியா யிருக்கிறது. சிறப்பாக இப்பொழுது நடைபெறுகிற ஜப்பானிய யுத்தத்தில் இந்தப் படை செய்து வருகிற வேலை, சீன சமுதாயத்தின் எதிர்கால வாழ்க்கையைப் பற்றி ஒரு நம்பிக்கையை உண்டுபண்ணு வதாயிருக்கிறது. இளைஞர்கள், சிறு சிறு கூட்டத்தினராகச் சேர்ந்து கொண்டு, சத்துருக்களின் ஆக்கிரமிப்புக் குட்பட்டிருக்கிற பிரதேசங்களில் ஒளி மறைவாகப் புகுந்து அநேக சேதங்களை உண்டு பண்ணுகிறார்கள்; தங்கள் நாட்டுச் சகோதரர்களை, சத்துருக்களின் கைக்கு அகப்படாமல் மீட்கிறார்கள். இதே பிரகாரம் ஜப்பானியர் வசப்படாத, அதாவது தேசீய அரசாங்கத்தின் ஆதீனத்திற் குட் பட்டிருக்கிற பிரதேசங்களில் இவர்கள். ஜனங்களுக்குக் கல்வியறிவு, சுகாதார அறிவு முதலியன புகட்டும் தொண்டிலே ஈடுபட்டிருக் கிறார்கள். இப்படி இவர்கள் சமுதாயத் தொண்டர்களாயிருப்ப தோடு, கூடவே தாங்களும் தொழிற் பயிற்சி பெறுகிறார்கள். ஏதேனும் ஒரு தொழிலில் நிபுணர்களாகி தேசத்தின் வருங்கால புனர்நிர்மாணத்தில் முக்கிய பங்கெடுத்துக்கொள்ள வேண்டு மென்பது பிரதியோர் இளைஞருடைய நோக்கமாயிருக்கிறது.
நவ ஜீவன இயக்கத்தின் கோட்பாடுகளின்படி நடந்து கொள் வதாக இளைஞர்கள் பிரதிக்ஞை செய்து கொள்கிறார்களே அந்த நவஜீவன இயக்கம் (New Life Movement) என்பது என்னவென்று வாசகர்கள் கேட்கலாம். இந்த இயக்கம் 1934-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் சியாங் கை ஷேக்கினால் தாபிக்கப்பட்டது. சீனாவின் பரம் பரையான கலாசாரப் பண்புகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு, தற்கால விஞ்ஞான நாகரிகத்தோடு இயைபு படுத்தி வாழ்க்கையை நடத்த வேண்டு மென்பதற்காகவே இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. அதாவது, பழமை யோடு புதுமையை இணைத்துக் கொண்டு வாழ்க்கையை நடத்துவதன் மூலந்தான் சீன சமுதாயம், தனது தனித்துவத்தை இழந்துவிடாமல், உலக வல்லரசுகளின் மத்தியில் சம அந்ததுடன் வாழமுடியும் என்ற உண்மையை அனுபவ வாயிலாக உணர்ந்து கொண்ட பின்னரே சியாங் கை ஷேக் இந்த இயக்கத்தை ஆரம்பித்தான் என்று சொல்லலாம்.
இந்த இயக்கத்தின்படி பண்பட்ட வாழ்க்கையென்று சொன்னால் அஃது ஆறு லட்சணங்களைக் கொண்டதாயிருக்கவேண்டும். (1) ஒரேமாதிரியான உடை (2) தூய்மை (3) எளிய வாழ்க்கை (4) போலித் தனமில்லாத சுபாவமான நடவடிக்கை (5) சுறுசுறுப்பாகக் காரியங்களைச் செய்தல் (6) உள்ளதை உள்ளபடி உணர்ந்து விவகாரங்களை நடத்துதல் ஆகிய இவைகளைப் பிரதியொருவரும் ஒப்புக் கொண்டு அன்றாட வாழ்க்கையில் அனுசரிக்க வேண்டும். வாழ்க்கையானது, ஒழுங்குடைய தாயிருக்கவேண்டும், சிருஷ்டி சக்தியுடையதாய் இருக்கவேண்டும், அழகுடையதாயிருக்க வேண்டும் என்பதற் காகவே மேற்படி ஆறுலட்சணங்களும் வகுக்கப் பட்டிருக்கின்றன. இந்த இயக்கத்தில் சம்பந்தப்பட்டவர் யாரும், மற்றவர்களுடைய குறைகளைக் கவனிக்க மாட்டார்; தங்களிடத்தில் என்ன குறையிருக் கிறதென்பதை அறிந்து அதனைச் சீர்திருத்திக் கொள்ள முற்படுவர்; தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற அகம் பாவம் கொள்ள மாட்டார்; பிறரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய அமிசங்கள் பலவுள என்ற பணிவோடு இருப்பர்; மற்றவர் களுடைய அபிப் பிராயங்களுக்கு மதிப்புக் கொடுப்பர். இவர்கள், தங்களுடைய சொந்தவாழ்க்கையில் கண்டிப்பாகவும் சிக்கனமாகவும் இருப்பார்கள்; ஒழுக்கத்தை உயிரினும் அதிகமாகக் காப்பாற்றி வருவார்கள்; எடுத்த காரியத்தை ஒழுங்காகவும் சுறுசுறுப்பாகவும் செய்து முடிப்பார்கள்.
இந்த இயக்கம் இப்பொழுது நாட்டின் பலபாகங்களிலும் நன்றாக வேரூன்றியிருக்கிறது. தனித்தனியான விதிகள், விவகார ரீதிகள் முதலியவைகளைக் கொண்டு பல தாபனங்கள் இந்த இயக்கத்தின் சார்பில் ஏற்பட்டு, சீன சமுதாய வாழ்க்கையைப் புதிய முறையில் திருத்தி யமைத்து வருகின்றன. இன்று, பழைய சீனா மீது புதிய சீனா நிர்மாண மாகி வருகிறதென்று சொன்னால் அதற்கு இந்த நவஜீவன இயக்கம் முக்கிய காரணம். இந்த இயக்கத்தின் விளைவாக, மதுபானம், சிகரெட் முதலியவற்றை உபயோகித்தல்,சூதாட்டம், விபசாரம் முதலிய அநேக தீமைகள் சீன சமுதாயத்தினின்று இப்பொழுது விலகிவிட்டன. இன்றை சீனத்தலைவர்கள் வெறும் அரசியலைமட்டும் நடத்திச் செல்கிறார் களில்லை; ஜனங்களின் அறவாழ்க்கையையும் பண்படுத்திச் செல் கிறார்கள். அறவாழ்க்கை வேறே, அரசியல் வாழ்க்கை வேறே என்று பிரித்துக் காட்டாமல், இரண்டையும் அணைத்துக்கொண்டு செல்வது தான் நவஜீவன இயக்கத்தின் அடிப்படையான நோக்கம்.
கோமிண்டாங் கட்சி, ஸான் மின் ஜூயி இளைஞர் படை, நவஜீவன இயக்கம் ஆகிய இவைகளைத் தவிர்த்து, சீனாவில் வேறு பல அரசியல் கட்சிகளும், இளைஞர் இயக்கங்களும், சமுதாயச் சீர்திருத்தச் சங்கங்களும் இருக்கின்றன. இவற்றுள் முக்கியமானது, சீனப் பொதுவுடைமைக் கட்சியென்பதைப் பற்றியும், ஜப்பானுக்கு விரோதமாக இன்று சீனா காட்டி வரும் எதிர்ப்புக்கு இது முதுகெலும்பு மாதிரி இருக்கிற தென்பதைப் பற்றியும் ஏற்கனவே வாசகர்கள் தெரிந்து கொண்டிருப் பார்கள். ஆனால் இந்தக் கட்சிகள், இயக்கங்கள், சங்கங்கள் முதலியன வெல்லாம், முன்னே சொன்னபடி கோமிண்டாங் கொடியின் கீழ் இப்பொழுது ஒன்று கூடியிருக்கின்றன. இந்த ஒற்றுமை ஏதோ அவசர நிமித்தம் ஏற்பட்டி ருக்கிற ஒற்றுமையாயில்லாமல், சாசுவதமான ஒற்றுமை யாயிருக்க வேண்டுமென்பதுதான், சீனாவின் எதிர்கால நல்வாழ்வில் நம்பிக்கை கொண்டுள்ளவர்களின் பிரார்த்தனை.
அரசாங்க அமைப்பு
சீனாவை ஒரு குடியரசு நாடு என்றுதான் அழைக்கிறோம். ஆனால் இப்பொழுது அங்கே நடைபெறுகிற அரசு, குடிகளி னுடைய அரசல்ல; குடிகளுக்கான அரசு. இதை நாம் மனதில் நன்றாகப் பதியவைத்துக் கொள்ளவேண்டும். ஆனால் இந்தக் குடி களுக்கான அரசு, குடிகளினுடைய அரசை ஏற்படுத்த வேண்டு மென்பதற்காகவே நடைபெறுகிறது. குடிகளின் பிரதிநிதியாகக் கோமிண்டாங் கட்சி இருந்துகொண்டு இன்றைய தேசீய அரசாங் கத்தை நடத்துகிறது. எப்படி?
சீனாவின் புனர் நிர்மாணத்திற்கு ஸன் யாட் ஸென் மூன்று படிகளை வகுத்திருந்தானல்லவா? முதலாவது, தேசீய அரசாங்க தாபனத்திற்கு விரோதமாக எழுந்த உள்நாட்டுக் கலக சக்திகளை அடக்கி ஒடுக்குவது; இரண்டாவது, ஜனங்களைச் சுய ஆட்சிக்குத் தகுதிப்படுத்துவது; மூன்றாவது, ஜன அரசியல் அமைப்பு. இந்த மூன்றாவது படியை அடைய வேண்டுமென்பதுதான் ஸன் யாட் ஸென்னின் கனவு; 1911-ஆம் வருஷத்துப் புரட்சியின் நோக்கம். இந்த மூன்று படிகளிலும் ஜனங்களை அழைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு கோமிண்டாங் கட்சியி னுடையது. இவற்றுள் முதலாவது படியை, அது 1928-ஆம் வருஷம் நான்கிங்கில் ஐக்கிய தேசீய அரசாங்கம் தாபிதமானவுடன் ஒருவாறு கடந்துவிட்டது. அதற் கடுத்த வருஷம், இரண்டாவது படியைக் கடக்க ஆறு வருஷகாலம் கெடுவு போட்டுக்கொண்டு ஜனங்களுக்கு ஆளும் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்தது. இதற்குத் தகுந்தாற்போல் அரசியல் அமைப்பும் இருக்கவேண்டுமல்லவா? எனவே, 1931-ஆம் வருஷம் மே மாதம் நான்கிங் நகரத்தில் ஒரு ஜனசபை கூட்டப்பட்டு, அதன் அங்கீகாரத் துடன் தற்காலிகமாக ஓர் அரசியல் திட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. இந்தத் திட்டப்படி அரசாங்கம் நடைபெற்றுக் கொண்டு வருகிற காலத்திலேயே, ஜனங்களுடைய அரசியல் நடைபெறுவதற்கான திட்டம் தயாரிப்பதற்குரிய வேலை 1934-ஆம் வருஷம் தொடங்கப்பெற்றது. சுமார் இரண்டு வருஷகால ஆராய்ச்சி வேலைக்குப் பிறகு ஒரு பூர்வாங்கத் திட்டம் தயாரிக்கப்பட்டு 1936-ஆம் வருஷம் மே மாதம் ஐந்தாந் தேதி பொதுஜன அபிப் பிராயத்திற்காக வெளியிடப்பெற்றது. 1937-ஆம் வருஷம் நவம்பர் மாதம் பன்னிரண்டாந் தேதி ஒரு ஜன சபையைக் கூட்டுவதென்றும், அதில், மேற்படி அரசியல் திட்டத்தை நிறைவேற்றி, பின்னர் அமுலுக்குக் கொண்டுவருவதென்றும் ஏற்பாடு செய்யப்பெற்றி ருந்தது. ஆனால் அதற்குள் ஜப்பானிய யுத்தம் தொடங்கி விட்டபடி யால், ஜனசபை கூடாமலே நின்றுவிட்டது. மறுபடியும் 1940-ஆம் வருஷம் நவம்பர் மாதம் சுங்கிங் நகரத்தில் இந்த ஜனசபை கூட்ட ஏற்பாடு செய்யப் பட்டது. சுமார் இரண்டாயிரம் பிரதிநிதிகள் இதற்கு வரவேண்டும். இத்தனை பேரும் யுத்தம் காரணமாக வரமுடியாத நிலையில், சபை தள்ளி வைக்கப்பட்டது. யுத்த மும் முரத்தின் மத்தியில் இந்த ஜன சபையைக் கூட்டவேண்டுமென்று சீனத் தலைவர்கள் ஏற்பாடு செய்தது, ஜனங்களுடைய ஆட்சியை தாபித்துவிடவேண்டுமென்கிற விஷயத்தில் அவர்கள் எவ்வளவு ஆவலுடையவர்களாயிருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.
இப்பொழுது சீனாவில் நடைபெறுகிற ஆட்சி, 1931-ஆம் வருஷத்துத் தற்காலிக அரசியல் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. இதுவும், 1938-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் ஹாங்கோ நகரத்தில் கூடிய கோமிண்டாங் விசேஷ காங்கிரஸில் நிறைவேற்றப் பட்ட கீழ்க்கண்ட ஆயுத எதிர்ப்பு - தேசீய புனருத்தாரண திட்டமும் (Programme of Armed Resistance and National Reconstruction) இன்றைய அரசியல் சட்டங்கள்:-
ஸன் யாட் ஸென்னின் புரட்சித் தத்துவங்களையும், மற்ற உபதேசங்களையும் பின்பற்றியே எல்லா யுத்த கால நடவடிக் கைகளும், தேசீயப் புனருத்தாரண வேலைகளும் நடைபெறவேண் டும். எல்லா யுத்த கால அதிகாரங்களும், சக்திகளும் கோமிண்டாங் வசமும் சியாங் கை ஷேக் வசமும் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன.
சீனா, தன்னிடம் அநுதாபம் காட்டும் எல்லா நாடுகளுடனும் எல்லா ஜாதியாருடனும் சேர்ந்துகொள்ளவும், அப்படிச் சேர்ந்து கொண்டு, உலகத்தில் நீதியும், அமைதியும் நிலவுவதற்காகப் போராடத் தயாரா யிருக்கிறது; சமாதானத்தை நோக்கமாகக் கொண்டு ஏற்பட்டிருக்கும் தாபனங்கள், ஒப்பந்தங்கள் முதலிய வைகளைப் பாதுகாக்கவும் வலுப் படுத்தவும் தயாராயிருக்கிறது; ஜப்பானிய ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு விரோதமாயுள்ள எல்லாச் சக்திகளுடனும் ஒத்துழைக்கவும், கீழ்நாட்டில் சமா தானத்தைப் பாதுகாக்கவும் தயாராயிருக்கிறது; மற்ற வல்லரசு களுடன் கொண்டுள்ள நட்பை இன்னும் விருத்தி செய்து கொள்ளவும் தயாராயிருக்கிறது.
(சீன) ராணுவத்திற்கு இன்னும் அதிகமான அரசியல் பயிற்சி கொடுக்கவேண்டும்; திடசாலிகளான இன்னும் பலருக்கு ராணுவப் பயிற்சி அளிக்கவேண்டும்; ஆயுதங்கள் வைத்துக்கொண்டிருக் கிறவர்களுக்கு, ஒளிமறைவாயிருந்து சண்டை செய்யும் பயிற்சி கொடுக்கவேண்டும்; யுத்தத்தில் காயமடைந்தவர்களுக்கும் கொல் லப்பட்டவர்களின் குடும்பத்தினர்களுக்கும் உபகாரச் சம்பளம் கொடுக்கவேண்டும்; போர்வீரர் களின் குடும்பத்தினரை அதிக அநுதாபத்தோடு பராமரிக்கவேண்டும்.
தேசீய சக்திகளை ஒன்றுபடுத்தவும், தேசத்தின் அறிஞர் களுடைய அனுபவத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளவும், தேசீயக் கொள்கைகள் இன்னவையென்று நிர்ணயித்து அவற்றை அனுஷ்டானத்திற்குக் கொண்டு வரவும் ஒரு ஜன அரசியல் சபை (People‘s Political Council) தாபிக்கப்படவேண்டும்.
தல தாபன ஆட்சியை ஏற்படுத்துவதற்கு முதலில் பிரதேசத்தையே அடிப்படையாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்.
அரசாங்க வேலைகள் துரிதமாகவும் சுலபமாகவும் நடை பெறக் கூடிய விதமாக மத்திய அரசாங்கமும் மாகாண அரசாங்கங் களும் சீர்திருத்தப்படவேண்டும். அப்பொழுதுதான் யுத்தகாலத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய விதமாக அரசாங்க நிருவாகம் திறமையாக நடைபெறும்.
தேசத்தின் பொருளாதாரத் துறையைப் புனர் நிர்மாணம் செய்ய வேண்டும்; கிராமப் பொருளாதாரத்தை முக்கியமாகக் கொள்ள வேண்டும்; கூட்டுறவு தாபனங்களை ஆதரிக்க வேண்டும்; பூமிக் குள்ளிருக்கும் உலோகப் பொருள்களை மேலுக்குக் கொணர்ந்து உபயோகிக்கச் செய்ய வேண்டும்; யுத்தகால வரிகள் விதிக்க வேண்டும்; பாங்கிங் தொழிலைக் கட்டுப்படுத்தவேண்டும்; போக்குவரத்து சாதனங்களை விருத்தி செய்யவேண்டும்; சாமான் களை லாபம் வைத்து விற்பதையும், சேகரித்து வைப்பதையும் தடுக்க வேண்டும்.
பேச்சுரிமை , எழுத்துரிமை, கூட்டங் கூடும் உரிமை முதலியன சகலருக்கும் கொடுக்கப்படவேண்டும். ஆனால் இந்த உரிமைகளை, ஸன் யாட் ஸென்னின் புரட்சிக் கொள்கைகளுக்கும் சட்டத்திற்கும் விரோதமாக யாரும் உபயோகிக்கக்கூடாது.
தேசத்தின் இளைஞர்களுக்கு நல்ல பயிற்சி கொடுக்க வேண்டும்; கல்வி முறையைச் சீர்திருத்தவேண்டும்; தொழில் நிபுணர்களாகப் பலரைப் பயிற்சி செய்து, தக்க உத்தியோகங்களில் அமர்த்த வேண்டும்.
ஜப்பான், தான் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிற பிரதேசத்தில் சிருஷ்டித்திருக்கிற எல்லாப் போலி தாபனங்களும் அவற்றின் நடவடிக்கைகளும் எவ்விதத்திலும் செல்லுபடியாகா என்று இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது.
சீனத் தலைவர்கள், அழிவுச் சக்தியை எதிர்த்துப் போராடும் வேலையைச் செய்துவருவதோடு, ஆக்க வேலையிலும் ஈடுபட்டிருக் கிறார்கள் என்பதற்கு இந்த வேலைத் திட்டம் நிதரிசனமாக இருக்கிறது. இனி, சீன அரசாங்க அமைப்புக்குள் பிரவேசிப்போம்.
ஸன் யாட் ஸென்,அதிகாரத்தை இரண்டு வகையாகப் பிரித்தான். ஒன்று அரசாங்கத்தின் அதிகாரம்; மற்றொன்று ஜனங் களுடைய அதிகாரம். இரண்டும் வரம்பு மீறிச் சென்றுவிடாதபடி ஒன்றுக்கொன்று கண்காணிப்பாக இருக்கவேண்டும். அரசாங்கத் தினுடைய அதிகாரம் அத்துமீறிச் சென்றுவிட்டால் ஜனங்களுக்கு ஆபத்து; அப்படியே ஜனங் களுடைய அதிகாரம் எல்லை கடந்து விடுமேயானால் அரசாங்கமே நடைபெற முடியாது. இதனாலேயே இரண்டையும் பிணைத்துவைத்தான் சீன அரசியல் அமைப்பில் ஸன் யாட் ஸென். இந்தப் பிணைப்பு, வெளிப் பார்வைக்குச் சிறிது சிக்கலாகத் தோன்றுவது சகஜம்.
சீன அரசாங்கத்தைப்பற்றி நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது, மறவாமல் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டியது, அது கோமிண்டாங் கட்சியின் மேற்பார்வையின் கீழ் நடைபெறுகிறது என்பதாகும். தேசீய அரசாங்கமானது, தேசத்தின் விவகாரங்களை, கோமிண்டாங் கட்சியின் உத்திரவுப்படியும் மேற் பார்வையின் கீழும் நிருவாகம் செய்யவேண்டும் என்பது சட்டத்தின் முதல் பிரிவு. அரசாங்கத்தின் தலைவன், யுவான்களின் பிரசிடெண்டுகள், வை பிரசிடெண்டுகள் ஆகிய எல்லோரும் கோமிண்டாங் கட்சியின் நிருவாகக் கமிட்டியினால் தெரிந் தெடுக்கப்பட்டு நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் கோமிண்டாங் கட்சிக்குப் பொறுப்பாளிகளே தவிர தேச மக்களுக்கல்ல. ஆனால் கோமிண்டாங் கட்சி, தேசமக்களின் பிரதிநிதியாக இருந்து அரசாங்கத்தை நடத்தச் செய்கிறது. இதுதான் இன்றைய சீன அரசியல் அமைப்பின் அடிப்படை. இந்த அடிப்படையிலிருந்து பெயர்ந்து ஜனங்களே நேராக அரசியலை நடத்துவதற்கான ஏற்பாடே 1936-ஆம் வருஷம் வெளி யிடப்பெற்ற அரசியல் அமைப்புப் பிரகடனத்தில் காணப்பட்டிருந்தது. ஆனால் மேலே சொன்னபடி, ஜப்பானிய யுத்தம், இந்தத் திட்டத்தை அமுலுக்கு வராதபடி செய்துவிட்டது. இருந்தாலும், இந்த ஜன அரசியலை லட்சியமாகக் கொண்டே இன்றைய அரசாங்கம் நடைபெறுகிறது.
அரசாங்கத்திற்கு ஒரு தலைவனுண்டு. இவன்தான் சீனக் குடியரசின் பிரசிடெண்ட். இவனுடைய உத்தியோக காலம் இரண்டு வருஷம். ஆனால் மறுபடியும் மறுபடியும் தெரிந்தெடுக்கப் படலாம். இவனுக்கு எந்த விதமான அரசியல் பொறுப்பும் கிடையாது.
தலைவனுக்கு அடுத்தபடி ஐந்து மந்திரிச்சபைகள். இந்த மந்திரிச்சபைக்கு யுவான் (Yuan) என்று பெயர். (1) நிருவாக யுவான் (Executive Yuan) (2) சட்ட நிர்மாண யுவான் (Legislative Yuan) (3) நீதி யுவான் (Judicial Yuan) (4) பரீட்சை யுவான் (Examination Yuan) (5) தணிக்கை யுவான் (Control Yuan) என்பனவே இந்த மந்திரிச் சபைகள். ஒவ்வொரு யுவானுக்கும் தனித்தனியாக பிரசிடெண்ட் என்றும், வை பிரசிடெண்ட் என்றும் இரண்டு மேலதிகாரிகள் உண்டு. இவற்றுள் நிருவாக யுவான்தான் மிகவும் முக்கியமானது. ஏறக் குறைய அரசாங்க நிருவாகம் முழுவதும் இந்த யுவான் மூலமாகவே நடைபெறுகிறதென்று சொல்லலாம். இதன்கீழ் உள் நாட்டு இலாகா என்றும், வெளிநாட்டு இலாகா என்றும், பொக்கிஷ இலாகா என்றும் பலவித இலாகாக்கள் இருக்கின்றன. ஒவ்வோர் இலாகா வுக்கும் தனித்தனியாக மந்திரி என்றும், உபமந்திரிகள் என்றும் இருக்கிறார்கள். இவை தவிர, மேற்படி நிருவாக யுவான்கீழ் பல தாபனங்கள் இருக்கின்றன.
சட்ட நிர்மாண யுவானில் பிரசிடெண்ட், வை பிரசி டெண்ட் இவர் களோடு சேர்த்து மொத்தம் தொண்ணூற்றொன்பது அங்கத்தினர்கள் இருக்கிறார்கள். இந்த அங்கத்தினர்கள், மேற்படி யுவான் பிரசிடெண்டினால் தெரிந்தெடுக்கப்பட்டு அரசாங்கத் தலைவனால் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களுடைய உத்தியோக காலம் இரண்டு வருஷம். இந்த யுவான், இரண்டு வாரத்திற் கொருமுறை கூடுகிறது. அப்பொழுது மற்ற எல்லா இலாகா மந்திரிகளும் ஆஜராகி இருப்பார்கள். புதிதாகக் கொண்டுவரப்படும் எந்த ஒரு சட்டமும் இந்த யுவானின் அங்கீகாரம் பெற வேண்டும். வரவு செலவுத் திட்டம், யுத்தம் தொடுப்பது அல்லது சமாதானம் கோருவது முதலிய விவகாரங்கள் இந்த யுவான் ஆலோசனைக்கு வரும்.
நீதி யுவான் கீழ் தேசத்தின் பிரதம கோர்ட்டும், மற்றச் சில்லரைக் கோர்ட்டுகளும் இருக்கின்றன. இந்த யுவானுக்குச் சட்டங்களை வியாக்கியானம் செய்யும் அதிகாரமும், தவறிழைக்கும் அரசாங்க உத்தியோகதர்களைத் தண்டிக்கும் அதிகாரமும் உண்டு.
பரீட்சை யுவான், அரசாங்க உத்தியோகங்களுக்கு மனுப்போடு கிறவர்களை பரீட்சைசெய்து இன்னின்னார் இன்னின்னவகையில் தகுதியுடையவர் என்பதை நிர்ணயிக்கிறது. இது நமது நாட்டில் இருக்கும் பப்ளிக் சர்வி கமிஷன் (Public Service Commission) மாதிரி. அரசாங்க உத்தியோகதர்களுக்குத் திறமை மட்டும் இருந்தால் போதாது, ஒழுக்கமும் தேவை என்பதைச் சீன அரசாங்கம் வற்புறுத்துகிறது. உதாரணமாக, பிரஜா உரிமை இல்லாதவர்கள், பொதுப் பணத்தைக் கையாடியவர்கள், லஞ்சம் வாங்கியதாகக் குற்றஞ்சாட்டப் பட்டுத் தண்டிக்கப்பட்டவர்கள், அபினி முதலிய லாகிரி வதுக்களை உபயோகிக்கிறவர்கள் ஆகியோர் அரசாங்க உத்தியோகதராக இருக்கத் தகுதியுடையவர்களல்லர்.
ஐந்தாவதான தணிக்கை யுவான், அரசாங்க நிருவாகத்தில் எந்த இலாகாவிலும் எவ்வித ஊழல்களும் நேரிடாதபடி பாதுகாக்கிறது. இந்த யுவானைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு, அரசாங்க ததவேஜூ களைத் தணிக்கை செய்யவும், சந்தேகிக்கப்பட்ட உத்தியோக தர்களை விசாரிக்கவும் அதிகாரமுண்டு. 1931-ஆம் வருஷம் இந்த யுவான் தாபிதமானதி லிருந்து 1941-ஆம் வருஷம்வரை, 1937 அரசாங்க உத்தியோகதர்கள், அவர்களுடைய வேலையை ஒழுங் காகச் செய்யவில்லையென்று கண்டிக்கப் பெற்றிருக்கிறார்கள்.
இந்த ஐந்து யுவான்களைத் தவிர, வேறு இரண்டு முக்கிய தாபனங்கள் இருக்கின்றன. ஒன்று, தேசீய ராணுவக் கவுன்சில் (National Military Council). இதில் ஏழு பேருக்குமேல் ஒன்பதுபேர் வரையில் அங்கத்தினர்கள். தேசத்தின் ஆகாயப்படை, கடற்படை, தரைப்படை முதலியவற்றின் சகலவித நிருவாகமும் இதனிடத்தில் அடங்கி யிருக்கிறது. மற்றொன்று, சீனக் கலைக்கழகம் (Academia Sinica). இதன் கீழ் விஞ்ஞானம், சரித்திரம், வானசாதிரம், பூமிசாதிரம் முதலிய பல துறை களிலும் ஆராய்ச்சி நடத்துகிற பத்து தாபனங்கள் இருக்கின்றன.
ராஜாங்கக் கவுன்சில் (State Council) என்பதொன்றுண்டு. இதில் இப்பொழுது முப்பது அங்கத்தினர்கள் இருக்கிறார்கள். இவர்கள் கோமிண்டாங் கட்சியின் நிருவாகக் கமிட்டியினால் நியமிக்கப்படு கிறார்கள். இத்தனை வருஷகாலந்தான் இந்தப் பதவியிலிருக்கலாம் என்ற வரம்பு இவர்களுக்கு இல்லை. அரசாங்கத்தின் தலைவனே இந்தக் கவுன்சிலின் தலைவன். இதற்கு அதிகமான அரசியல் பொறுப்புகள் கிடையாது. ஒரு யுவானுக்கும் மற்றொரு யுவானுக்கும் அபிப்பிராய வேற்றுமைகள் ஏற்பட்டால் அதைச் சமரஸப்படுத்தி வைப்பதுதான் இந்தக் கவுன்சிலின் முக்கியமான வேலை.
சீனாவை மொத்தம் இருபத்தெட்டு மாகாணங்களாகப் பிரித்திருக் கிறார்கள். ஒவ்வொரு மாகாணத்திலும், மேலே சொன்ன மத்திய அரசாங்க அமைப்பைத் தழுவி நிருவாகம் நடைபெறுகிறது. அந்தந்த மாகாணத்தின் விதீரணம், ஜனத்தொகை இவைகளை அனுசரித்து ஏழுபேர் முதல் ஒன்பதுபேர் வரையிலுள்ள ஒரு மந்திரிச் சபை பிரதியொரு மாகாணத்திலும் உண்டு. இந்த மந்திரிகளை தேசீய மத்திய அரசாங்கமே நியமிக்கிறது. தேசீய அரசாங்கத்தின் சட்ட திட்டங்கள், வரி விகிதங்கள் முதலியவை களுக்கு முரணில்லாதபடி, அந்தந்த மாகாணத்தின் நிலைமைக்கும் தேவைக்கும் தகுந்தபடி சட்டங்களை அமுலுக்குக் கொண்டு வரவும், வரி விதிக்கவும் இந்த மாகாண அரசாங்கங்களுக்கு அதிகாரமுண்டு. இருபத்தெட்டு மாகாணங்களில் ஏறக்குறைய பாதி மாகாணங்கள் இப்பொழுது ஜப்பானியருடைய ஆக்கிரமிப்புக் குட்பட்டிருக்கின்றன. இருந்தாலும் இந்த மாகாணங்கள் சீன தேசீய அரசாங்கத்தின் சுவாதீனத்திலேயே இருப்பதாகக் கருதிக் கொண்டு இவைகளின் அரசாங்கம், சுங்கிங்கிலோ அல்லது அடுத்தாற் போலுள்ள மாகாணத்திலோ நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
மாகாண அரசாங்கங்கள் தவிர, தல தாபனங்கள், நகர சபைகள், கிராம சபைகள் முதலியனவும் ஒழுங்காக நடைபெறு கின்றன.
மேலே சொன்ன யாவும் அரசாங்க அதிகாரத்தைப் பிரயோகம் செய்வதற்காக அமைந்த தாபனங்கள். ஜனங்களுடைய அதிகாரத் திற்குப் பிரதிநிதியா யுள்ள தாபனங்கள் வேறே உண்டு. இவற்றுள் முதலாவது மேலே சொன்ன1 ஜன அரசியல் சபை. இது தான் சீனாவின் தற்போதைய ஜனப் பிரதிநிதி சபை. இதில் மொத்தம் இருநூற்று நாற்பது அங்கத்தினர்கள். இவர்களில் நூற்று அறுபத்து நான்குபேர் அரசாங்க தாபனங்களின் பிரதிநிதிகள்; எட்டுபேர் மங்கோலியா, திபேத்து இந்த நாடுகளின் பிரதி நிதிகள்; எட்டுபேர் வெளி நாடுகளிலுள்ள சீனர்களின் பிரதிநிதிகள்; அறுபதுபேர் புலமையினாலோ, சேவையினாலோ பிரசித்தி யடைந்தவர்கள். இவர்களின் உத்தியோக காலம் ஒரு வருஷம். ஆனால் மறுபடியும் தெரிந்தெடுக்கப் படலாம். இந்தச் சபையானது ஆறுமாதத்திற் கொருமுறை கூடி பத்து நாட்கள் வரை நடைபெறுகிறது. கூட்டத் தில், அங்கத்தினர்கள், அரசாங்கத்தினரைக் கேள்விகள் கேட்கலாம்; சிபார்சு ரூபமாகத் தீர்மானங்கள் கொண்டுவரலாம். மந்திரிமார்கள், தங்கள் தங்கள் இலாகா வேலைகளைக் குறித்த அறிக்கைகளை இந்தக் கூட்டத்தில் ஆஜர் படுத்துவார்கள். இவர்கள் - மந்திரிமார்கள் - கூட்ட நடவடிக்கைகளில் கலந்து கொள்ளலாமே தவிர, ஓட்டு கொடுக்கக்கூடாது. இந்தச் சபையின் அன்றாட வேலைகளைக் கவனிப்பதற்கென்று, இருபத்தைந்து பேர் அடங்கிய ஒரு தலக் கமிட்டி (Resident Committee) இருக்கிறது.
இந்த ஜன அரசியல் சபையில் கோமிண்டாங் கட்சியினர் பெரும்பாலோராக இருக்கிறார்களாயினும் இவர்கள் மட்டுமே யில்லை; வேறுபல கொள்கையினரும் இதில் அங்கத்தினர்களா யிருக்கிறார்கள். சிறு பான்மைச் சமூகத்தினருக்கு இந்தச் சபையில் பிரதி நிதித்துவம் வழங்கப்பட்டிருக்கிறது.2
அகில சீனாவுக்குமாகவுள்ள இந்த ஜன அரசியல் சபையைத் தவிர, மாகாண ஜனப் பிரதிநிதி சபைகள் வேறே இருக்கின்றன. இந்தச் சபைகளில், அந்தந்த மாகாணத்தின் முக்கியத்துவத்திற்குத் தகுந்தாற் போல், இருபதுக்கு மேல் ஐம்பதுக்குள்ளாக அங்கத் தினர்கள் இருக்கிறார்கள். இவர்கள், அந்தந்த மாகாண அரசாங்கங் களினாலும், மாகாண கோமிண்டாங் சபையினாலும் நியமிக்கப் படுகிறவர்கள். மாகாண அரசாங்கம், எந்த ஒரு நிருவாக நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டுமானாலும்,. அதனை முதலில் இந்தச் சபை முன்னர் ஆஜர்படுத்தி இதன் தீர்மானத்திற்கு விட வேண்டும். அப்படியே, இந்தச் சபையும், மாகாண அரசாங்கம் இன்னின்ன காரியங்களைச் செய்ய வேண்டுமென்று தீர்மானங்களைக் கொண்டு வரலாம். அரசாங்க அங்கத்தினர்கள் ஆஜர்படுத்தும் அறிக்கைகளை ஏற்றுக்கொள்வதும், நிருவாக சம்பந்தமான கேள்விகள் கேட்பதும் இவர்களுடைய உரிமைகளாகும்.
இந்த மாகாண சபைகள் தவிர, தல தாபன சபைகள் பல இருக்கின்றன. மொத்தம் சீனாவில் சுமார் இரண்டாயிரும் தல நிருவாகப் பிரதேசங்கள் இருக்கின்றன. இவற்றில் ஏறக்குறைய ஆயிரம் பிரதேசங்களில் மேற்படி சபைகள் இருக்கின்றன.
இப்படிப் பலவகைப்பட்ட அரசாங்க தாபனங்கள், ஜன சபைகள் முதலியன இருந்த போதிலும், இவை யெல்லாவற்றிற்கும் மேலாக இருப்பது, முன் சொன்ன பிரதம தேசீயப் பாதுகாப்புக் கவுன்சில் என்பதை நாம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். யுத்தகால அவசியத்தை முன்னிட்டு ஏற்பட்டிருக்கிற இந்தக் கவுன்சில், அரசாங்கத்தின் கொள்கை இன்னபடிதான் இருக்க வேண்டுமென்று நிர்ணயிக்கிற தாபனம் மட்டுமல்ல, அந்தக் கொள்கையை அனுஷ்டானத்திற்குக் கொண்டு வருகிற தாபனமும் கூட. இதன் தலைவனான சியாங் கை ஷேக், சீனாவின் சர்வாதிகாரி.
சம அந்தது பெற்ற வல்லரசு
எல்லோருடனும் சமாதானமாக வாழவேண்டு மென்பதில் பரம்பரையான நம்பிக்கையுடையது சீனா. இந்த நம்பிக்கை யிலிருந்து அஃது எப்பொழுதும் மாறியதே கிடையாது; வாழ்ந்து கொண்டிருந்த காலத்திலும் சரிதான், தாழ்வுற்றிருந்த காலத்திலும் சரிதான். உதாரணமாக, முடியரசு முடிந்து குடியரசு ஏற்பட்டதும், அதன் பிரசிடெண்ட் என்ற ஹோதாவில் ஸன் யாட் ஸென் (12-1-1912-ல்) ஓர் அறிக்கை விடுத்தான். அதில் பின்வரும் வாசகங்கள் காணப் பட்டன: -
சீனாவின் சிவில், கிரிமினல், வியாபார, சுரங்க சம்பந்தமான சகலவித சட்டங்களையும், பொக்கிஷ நிலைமையையும் பரிசீலனை செய்து திருத்தியமைப்போம்;தொழில் சம்பந்தமாகவும், வியாபார சம்பந்த மாகவும் உள்ள தடைகளை நீக்குவோம்; சர்வ சமய சமரஸத்தை உண்டு பண்ணுவோம்; அந்நிய நாட்டுப் பிரஜை களோடும், அரசாங்கங்களோடும், இதற்கு முன்னிருந்ததைக் காட்டிலும் அதிகமாக உறவு கொண்டாடு வோம். இதுவரையில் எங்களிடம் தொடர்ந்து அநுதாபம் காட்டி வந்த அந்நிய வல்லரசுகள், இனி எங்களோடு இன்னும் அதிகமான உறவு கொண்டாடி வருவதோடல்லாமல், நாங்கள் உத்தேசித்திருக்கும் புனர் நிர்மாண திட்டங்கள் விஷயத்திலும், அவை சம்பந்தமாக எங்களுக்கு ஏற்படக்கூடிய பரிசோதனைகள் விஷயத்திலும் பொறுமை காட்டி வரவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். புதிய திட்டங்கள் பல வகுத்துக் கொண்டு அவைகளின்படி நாங்கள் வேலை செய்தால் நல்லது என்று எங்களை நீண்ட காலமாக வல்லரசுகள் வற்புறுத்தி வந்தன. ஆனால் அது வீணேயாயிற்று. இப்பொழுது நாங்கள் புதிய திட்டங்கள் பல போட்டிருக்கிறோம். அவைகளை நிறைவேற்றி வைக்க மேற்படி வல்லரசுகள் உதவி செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். சீனா, சர்வ தேச ஐக்கியத் திலே சேர்த்துக் கொள்ளப்படும், அப்படிச் சேர்த்துக் கொள்ளப் படுவது, அந்த ஐக்கியத்தினால் ஏற்படக்கூடிய உரிமைகளிலும் சலுகைகளிலும் பங்கு பெறுவதற்காக மட்டுமல்ல, உலக நாகரிகத் தைப் புனர் நிர்மாணம் செய்வதாகிற புனிதமான கைங்கரியத்திலே ஒத்துழைக்க வேண்டுமென்ற நம்பிக்கையுடன், சமாதானம், நல்லெண்ணம் இவைகளோடு கூடிய இந்தப் பிரகடனத்தை குடியரசு அரசாங்கம் வெளியிடுகிறது.
மனமுருக்கும் இந்த அறிக்கைப்படி நடந்து கொள்ள சீனா விடப்பட வேயில்லை. அந்நிய வல்லரசுகள் அதனை அலட்சியமாக அல்லது இரக்கப்படுகிற முறையில் நடத்தி வந்தன; அதனுடைய உள்நாட்டுச் சண்டைகளுக்குத் தூபம் போட்டுவந்தன. ஆயினும் அஃது, எல்லோருடனும் சமாதானமாகப் போக வேண்டுமென்ற நோக்கத்திலிருந்து பிறழவில்லை.
1937-ஆம் வருஷம் ஜூலை மாதம் ஜப்பானிய ஆக்கிரமிப்புத் தொடங்கியவுடன், சீனா சர்வதேச சங்கத்திற்கு விண்ணப்பித்துக் கொண்டது. அந்தச் சங்கம், பல கூட்டங்கள் கூட்டிச் சமரஸம் செய்து வைக்க முயன்றது. ஆனால் ஜப்பான் எவ்வித சமரஸத்திற்கும் இணங்கி வரத் தயாராயில்லை. சமரஸக் கூட்டங்களுக்கு வந்து தன் கட்சியை எடுத்துச் சொல்வதற்குக் கூட அது மறுத்துவிட்டது. சர்வ தேச சங்கத்தினால் ஒன்றுஞ் செய்ய முடியாதென்பது அதற்குத் தெரியும்.
பிரிட்டனும் அமெரிக்காவும் சீனாவுக்கு வாய் நிறைய அநு தாபம் காட்டின; அதே சமயத்தில் ஜப்பானுக்கு ரப்பர், பெட்ரோல், பழைய இரும்பு முதலிய யுத்தத்திற்குத் தேவையான சாமான்களை அனுப்பி வந்தன. ஜப்பானை நல்லதனப்படுத்திக் கொண்டு போக வேண்டு மென்பதே இவைகளின் கவலையாயிருந்தது. சீனாவின் கடலோரப் பிரதேசங்கள் யாவும் ஜப்பான் வசப்பட்டு விட்ட பிறகு, சீனாவுக்கு, பர்மா வழியாக வெளிநாட்டுச் சாமான்கள் சென்று கொண்டிருந்தன. இந்த வழியை, 1940-ஆம் வருஷம் ஜூலை மாதத்திலிருந்து மூன்று மாதம் அடைத்து விட்டது பிரிட்டன், ஜப்பானைத் திருப்திப்படுத்த வேண்டுமென்பதற்காக, இதைச் சீனா கண்டித்தது. கேட்பார் யார்?
1941-ஆம் வருஷம் டிசம்பர் மாதம் எட்டாந் தேதி ஜப்பான், பிரிட்டன்மீதும் அமெரிக்காமீதும் எதிர்பாராத விதமாக யுத்தந் தொடுத்தது; பசிபிக் சமுத்திரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு நாட்டுக் கடற் படை களுக்கும் அதிகமான சேதத்தை உண்டு பண்ணியது. சீனாவைப் புறக்கணித்து விட்டு ஜப்பானுக்கு உதவிய தற்குக் கைமேல் பலன் கிடைத்தது இரண்டு நாடுகளுக்கும்! மறுநாள் (9-12-1941) ஜப்பான், ஜெர்மனி, இத்தலி ஆகிய முக்கூட்டு அரசுகளின் மீது தான் யுத்தந் தொடுத்திருப்ப தாகச் சீனா பிரகடனம் செய்தது. சுமார் நான்கு வருஷப் போராட்டத்திற்குப் பிறகுதான், ஜப்பான்மீது தான் யுத்தந்தொடுத்திருப்பதாகச் சீனா அறிவித்தது குறிப்பிடத்தக்கது. ஜப்பான், யுத்த தருமங்களை அநுசரியா விட்டாலும், சீனா, இவைகளினின்று வழுவவில்லை யென்பதற்கு இஃதோர் எடுத்துக்காட்டு.
ஜப்பான், தங்கள் மீது யுத்தந்தொடுத்து விட்டபிறகு, பிரிட்ட னும் அமெரிக்காவும் சேர்ந்து சீனாவைக் கை குலுக்க ஆரம்பித்தன; சேரவாரும் தோழரே என்று கட்டியணைத்துக் கொண்டன. ஜனநாயக சக்தியைக் காப்பாற்றும் புனிதமான பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிற வல்லரசு களின் கோஷ்டியிலே சீனா சேர்த்துக் கொள்ளப் பட்டது. இதுகாறும் இந்த வல்லரசுகள் சீனாவுக்கு உதவி செய்து கொண்டுவந்தன என்பது உண்மையே. ஆனால் இந்த உதவி மிகக் குறைவாயிருந்த தென்பது ஒரு பக்கம் இருந்தாலும், தயை தாட்சண்யத்திற்குச் செய்கிற உதவியாக யிருந்தது; மேலோர், கீழோருக்குச் செய்கிற உதவியாயிருந்தது. எப்படியோ 1942-ஆம் வருஷத் தொடக்கத்தி லிருந்து, சீனாவுக்கு, சர்வதேச மேடையில் ஒரு கௌரவமான தானம் ஏற்பட்டது. இது மற்றவர்கள் பார்த்துக் கொடுத்த தானமல்ல; அதுவாக, தனது சுய முயற்சியினால், தனது தியாகத்தினால் அடைந்த தானம்.
ஜப்பான், கீழை நாட்டில் பிரிட்டன்மீதும் அமெரிக்காமீதும் யுத்தந் தொடுத்ததும், இந்த இரண்டு நாடுகளும் சீனாவும் சேர்ந்து தங்கள் ராணுவ சக்திகளை ஒருமுகப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாயிருந்தது. இதற்காக 1941-ஆம் வருஷம் டிசம்பர் மாதம் இருபத்து மூன்றாந்தேதி சுங்கிங் நகரத்தில் ஒரு மகாநாடு கூடியது. சியாங் கை ஷேக், பசிபிக் பிரதேசத்து யுத்தப் பகுதிக்கு பிரதம சேனாதிபதியாக நியமிக்கப் பட்டான். பரபர வாழ்த்துகள், பாராட்டுதல்கள் எல்லாம் நடைபெற்றன. 1942-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் சீனாவுக்கு அமெரிக்கா ஐம்பது கோடி டாலர் கடன் கொடுத்தது; இது தவிர, யுத்த தளவாடங்களை சப்ளை செய்வதாக ஒப்புக் கொண்டது. இதே பிரகாரம் பிரிட்டனும் மேற்படி (1942) வருஷத் தொடக்கத்தில் ஐந்துகோடி பவுன் கடன் கொடுத்தது; சாமான்களை அனுப்ப உதவி செய்தது. ஜப்பானிய ஆக்கிரமிப்பு (1937) ஏற்பட்ட பிறகு, 1942-ஆம் வருஷம் வரையில் பல வகைக் கடனாக அமெரிக்கா, எழுபத்து மூன்று கோடி அமெரிக்க டாலரும், பிரிட்டன், ஆறுகோடி எண்பத்தைந்து லட்சம் பவுனும் உதவியிருக்கின்றன. இவை எப்படித் திருப்பிக் கொடுக்கப் பட வேண்டுமென்ற விவரங்கள் யுத்தத்திற்குப் பிறகு நிர்ணயிக்கப்பட வேண்டியவை. ஆனால் இந்தக் கடனுக்காக இரண்டு நாடுகளும் சீனாவை, தங்களுடைய சரக்குகளைத் திணிப்பதற்குரிய ஒரு மார்க்கெட் டாக்கி விடக் கூடாதென்பதே கீழைத் தேசவாசிகளின் விருப்பம்.
பிரிட்டனும் அமெரிக்காவும், சீனாவுக்குச் சம அந்தது கொடுத்து அதற்கு இப்படி உதவி செய்திருக்கின்றன என்றாலும், அதன் எதிர்ப்புச் சக்தியை மேற்படி இரண்டு வல்லரசுகளும் சரியாக உபயோகித்துக் கொள்ளவில்லை, பாராட்டவு மில்லையென்றே சொல்லவேண்டி யிருக்கிறது. அப்படி உபயோகித்துக் கொண்டிருந் தால், ஜப்பான், யுத்தந் தொடுத்த சில மாதங்களுக்குள் மலேயா, பர்மா முதலிய பிரதேசங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்க முடியுமா என்று யுத்த தந்திரிகள் கேட்கிறார்கள். ஓர் ஆசிரியன் கூறுகிறான்:- பசிபிக் யுத்தப் பிரதேசத்திற்கு சியாங் கை ஷேக் பிரதம சேனாதிபதியாக நியமிக்கப்பட்டுவிட்ட போதிலும், சிங்கப்பூரைப் பாதுகாக்க தனது துருப்புகளை அனுப்புவதாகச் சீனா கூறியது. .இதை (ஆங்கிலோ - அமெரிக்க வல்லரசுகள்) அலட்சியம் செய்து விட்டன. சிங்கப்பூரின் தலைவிதியைப் பொறுத்துத்தான், சீனாவின் ஜீவநாடியாகிய பர்மா ரோட்டின் தலைவிதி இருக்கிற தென்பது இவைகளுக்குத் தெரிந்தே இருந்தது. பர்மாவுக்குத் தனது துருப்புகளை அனுப்புவதாகச் சீனா சொன்னபோது கூட, அதை வேண்டா வெறுப்பாகத் தான் ஏற்றுக் கொண்டன. அப்படி ஏற்றுக் கொண்ட சில வாரங்களுக்குள், இன்னும் சிறிது முன் கூட்டியே சீனத் துருப்புகளை பர்மாவுக்கு வரவழைத் திருந்தால், ஜப்பானியப் படைகள் பர்மாவை வெற்றி கொண்டிருக்க முடியாதென்ற உண்மை தெரிந்தது. இருந்தாலும், பிரிட்டிஷ் படைகள் பர்மாவி லிருந்து பின் வாங்கியபோது, அந்தப் பின் வாங்குதலுக்குத் தடை ஏற்படாமல் சீனப் படைகள் இருந்து, ஜப்பானியப் படைகளுக்குப் பல மாத காலம் வரை கொரில்லாப் போர் முறையினால் பலவித தொந்தரவுகளை உண்டு பண்ணிக் கொண்டுவந்தன.
மேலே சொன்ன பிரகாரம், பிரிட்டனும் அமெரிக்காவும் சீனாவுக்குக் கடன்கொடுத்து உதவி இருக்கின்றன என்றாலும் இந்த உதவி போதா தென்பதே சீனர்களுடைய அபிப்பிராயம். 1942-ஆம் வருஷக் கடைசியில் சீனாவுக்கு விஜயஞ்செய்த வெண்டல் வில்கி பின் வருமாறு கூறுகிறான்:- சீனர்களோடு நாம் (அமெரிக்கா) நட்புக் கொண்டிருக்கிறோமென்றால், அஃது உண்மையான தாகவும், அவர்களுக்குப் பயன் அளிக்கக் கூடிய தாதகவும் இருக்க வேண்டும். ருஷ்யாமூலமாகவோ, ஹிமாலயத்தின் மூலமாகவோ, பர்மாவை ஜெயித்து அதன் மூலமாகவோ அல்லது சேர்ந்தாற்போல் இந்த மூன்று வழிகளிலுமோ அவர்களுக்குத் தேவை யான ஆகாய விமானங்கள், யுத்த தளவாடங்கள், மூலப்பொருள்கள் முதலிய பல வற்றையும் அனுப்பவேண்டும். வாக்கியங் களிலும் கண்டனங்களிலும் சீனர்கள் கொண்டிருந்த நம்பிக்கை வரவர குறைந்து கொண்டு வருகிறது. ஆனால் 1943-ஆம் வருஷத்திலிருந்து பிரிட்டனிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் சீனாவுக்கு அதிகமான உதவி கிடைத்துக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த இரண்டு நாடுகளைத் தவிர, சோவியத் ருஷ்யாவின் உதவியும் சீனாவுக்கு அதிகமான இருந்து கொண்டிருக்கிறது.
1914 ஆம் வருஷத்து ஐரோப்பிய யுத்தம் தொடங்குகிறபோது, சீனாவில், சுமார் இருபது நாடுகள் விசேஷப் பிரதேச உரிமை களென்ன, கன்ஸெஷன் பிரதேசங்களென்ன இவைகளை யெல்லாம் அனுபவித்துக் கொண்டிருந்தன. மேற்படி யுத்தத்தின் போது, ஜெர்மனி, ஆதிரியா - ஹங்கேரி முதலிய மத்திய ஐரோப்பிய வல்லரசுகள். தங்களுடைய விசேஷ உரிமைகளை இழந்துவிட்டன, ருஷ்யா, சோவியத் ஆட்சி ஏற்பட்ட பிறகு, விசேஷ உரிமைகளைத் தானே ரத்து செய்து கொண்டு விட்டது. மற்ற வல்லரசுகள் அனுபவித்துக் கொண்டு வந்த இந்த உரிமை களை ரத்து செய்ய வேண்டுமென்று பாரி சமாதான மகாநாட்டில் சீனா கேட்டது. சமாதான மகாநாட்டிற்கும் இந்தப் பிரச்னைக்கும் சம்பந்த மில்லையென்று அப்பொழுது மகாநாட்டின் பிரமுகர்கள் சொல்லி விட்டார்கள். சீனாவுக்கு இது பெரிய புண்ணாகவே இருந்தது.
1928-ஆம் வருஷம் நான்கிங்கில் ஐக்கிய தேசீய அரசாங்கம் ஏற்பட்ட பிறகு, சீனா, மறுபடியும் இந்தப் பிரச்னையைக் கிளப்பியது; விசேஷப் பிரதேச உரிமைகள், கன்ஸெஷன் பிரதேச அனுபவங்கள் முதலியவை களை இனி அங்கீகரிக்க முடியாதென்று எல்லா வல்லரசுகளுக்கும் அறிவித்துவிட்டது. சீனாவில் தேசீய உணர்ச்சி வலுத்து வருகிற தென்பதை வல்லரசுகள் உணர்ந்து கொண்டன. இதற்குப்பிறகு ஒன்றன் பின் னொன்றாகத் தங்கள் தங்கள் உரிமைகளையும் அனுபவ பாத்தியதை களையும் விட்டுக் கொடுக்கத் தொடங்கின; சீன அரசாங்கத்தோடு வியாபார ஒப்பந் தங்கள் செய்துகொண்டன. ஆனாலும் அதனை அலட்சியப் பார்வையோடுதான் பார்த்துவந்தன வல்லரசுகளாகிய அமெரிக்கா வும் பிரிட்டனும். 1941-ஆம் வருஷம் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்த இரண்டு வல்லரசுகளின்மீது ஜப்பான் யுத்தந் தொடுத்து விடவே, சீனாவின் எதிர்ப்புச் சக்தியை உபயோகித்துகொள்ள வேண்டியது இவை இரண்டிற்கும் அவசியமாயிருந்தது. முன்னே சொன்னபடி 1942-ஆம் வருஷத் தொடக்கதிலிருந்து சர்வ தேசமேடையில் சீனாவுக்குச் சம அந்தது கொடுக்கப்பட்டது. அதனிடத்தில் தங்களுக்கு அன்பு இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் பொருட்டு இரண்டு நாடுகளும் முறையே அதற்கு - சீனாவுக்கு - நான்கு பீரங்கிப் படகுகளைச் சன்மானமாக அளித்தன (17-3-1942). சியாங்கை ஷேக்கின் திறமையான தலைமையையும், புகழ் நிறைந்த வெற்றிகளையும் பாராட்டி பிரிட்டிஷ் அரசாங்கம் அவனுக்கு ஜி.ஸி.பி. (Grand Cross of the Bath) என்ற கௌரவப் பட்டத்தை அளித்தது! சியாங் கை ஷேக் தம்பதிகள் (1942-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம்) இந்தியாவில் சுற்றுப் பிரயாணம் செய்து இந்தியா அர சாங்கத்தின் உபசாரங்களைப் பெற்றார்கள்! அன்பான வார்த்தைகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன!
சீனாவின் சுய அந்ததைத் தாங்கள் மதிப்பதற்கறிகுறியாகப் பிரிட்டனும் அமெரிக்காவும் 1943-ஆம் வருஷம் ஜனவரி மாதம் பதினோராந் தேதி, சீனாவுடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டன. இதன் பிரகாரம், இரண்டு நாடுகளும் சீனாவில் அனுபவித்து வந்த விசேஷப் பிரதேச உரிமைகள் சலுகைகள் எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்தன. இரண்டு நாட்டுப் பிரஜைகளும், சீன அரசாங் கத்தின் சட்டதிட்டங் களுக்குட்படுத்தப்பெற்றார்கள். 1901-ஆம் வருஷம் நிறைவேற்றப்பட்ட பாக்ஸர் ஒப்பந்தத்தில் கண்ட உரிமை களை1 இரண்டு நாடுகளும் ரத்து செய்துகொண்டன. சுருக்கமாக, சீனாவின் தனித்துவத்தை இரண்டு நாடுகளும் அங்கீகரித்தன என்று கூறலாம். இந்த 1943-ஆம் வருஷ ஒப்பந்தம், தற்காலிக ஒப்பந்தந்தான். யுத்தம் முடிந்த பிறகு, இரண்டு வல்லரசுகளும் புதிய முறையில் சீனாவுடன் சிநேக ஒப்பந்தம் செய்து கொள்ளப்போவதாக இந்த ஒப்பந்தத்திலேயே கண்டிருக்கின்றன. எனவே, சென்ற நூறு வருஷ காலமாக, சீனாவின் அக வாழ்வை அழுக வைத்தும், புற வாழ்வுக்குப் பங்கம் உண்டு பண்ணியும் வந்த கன்ஸெஷன்கள் முதலியன, இந்த ஒப்பந்தங்களின் மூலம் ஒருவாறு ஒழிந்தன. சம அந்ததுடைய வல்லரசாக அது மதிக்கப்பெற்றது.
ஆக்க வேலைகள்
சென்ற ஏழு வருஷ காலமாகச் சீனா, அழிவுச் சக்தியை எதிர்த்துப் போராடி வருவதோடுகூட ஆக்க வேலையையும் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறது. இது பெரிதும் பாராட்டுதற் குரியது. அதனுடைய ஆக்க வேலை, வெளிப் பார்வைக்கு அதிக மாகத் தெரியாமற் போனாலும், இதுதான் - இந்த ஆக்க வேலை தான் - அதனுடைய எதிர்ப்புச் சக்தியை உரமிட்டு வளர்த்து வருகிறது. ஆதலின் இந்த ஆக்க வேலையின் முக்கிய அமிசங்கள் சிலவற்றை இங்கே தொகுத்துக் கூற விரும்புகிறோம்.
புராதன காலந்தொட்டு உழவுக்கும் நெசவுக்கும் பெயர் போனது சீனா. உழுதுண்டு வாழ்கிறவனே சுயமரியாதையுள்ளவன். சமுதாயத்தில் அவனுக்குத் தான் கௌரவமான தானம் கொடுக்கப் பட்டு வந்தது. ஒருவன் உழாவிட்டால் மற்றொருவன் பட்டினியால் வாடுவான்; ஒருத்தி நெய்யாவிட்டால மற்றொருத்தி குளிரினால் வருந்துவாள் என்பது ஒரு சீனப் பழமொழி. அதாவது ஆண்கள் உணவையும், பெண்கள் உடையையும் முறையே உற்பத்தி செய்து வந்தார்களென்று இதனால் தெரிகிறது. முடியாட்சி நிலவியிருந்த காலத்தில், பிரதி வருஷமும் உழவுக் காலத்தில், அரசனே தனது பிரஜைகள் முன்னிலையில் பொன் கலப்பைப் பிடித்துச் சிறிது உழுது காட்டுவான். இஃதொரு சடங்காக பீகிங் நகரத்தில் ஒவ்வொரு வருஷமும் நடைபெற்று வந்தது.
சென்ற நூற்றாண்டில் மேனாட்டு நாகரிகமும் மேனாட்டு அதிக்கமும் புகுந்த பிறகு, விவசாயத் தொழிலுக்கிருந்த செல்வாக்குப் போய்விட்டது. கிராமங்கள் சுருங்கின. நகரங்கள் பெருகின. அப்படி யென்றால் என்ன அர்த்தம்? ஜனங்களின் உற்பத்தி சக்தி குறைந்தது; அவர் களுடைய தேவை அதிகரித்தது. ஒரு சிலரிடத்தில் மட்டும் பணம் குவிந்து கொண்டு வந்தது; பலர் வறியர்களாகிக் கொண்டு வந்தார்கள். சமுதாயத்திலே உள்ளவர் - இல்லாதவர் வேற்றுமை அகன்று கொண்டு வந்தது.
உழைப்புக்குச் சலிக்காதவர்கள் சீன விவசாயிகள். ஆனால் அந்த உழைப்பிலிருந்து அவர்களுக்குக் கிடைக்கிற ஊதியம் வரவரக் குறைந்து வந்தது. சிறப்பாக, குடியரசுப் புரட்சிக்குப் பிந்தியும், 1928- ஆம் வருஷம் நான்கிங்கில் ஐக்கிய தேசீய அரசாங்கம் ஏற்பட்டதற்கு முந்தியும் இவர்கள் பட்ட அவதை சொல்லி முடியாது. இவர் களுடைய நிலைமை பின்வருமாறு வருணிக்கப்படுகிறது:-
உலகத்திலுள்ள ஜீவராசிகளில் மிகவும் சாது, உழைப்பாளி யாரென்று கேட்டால் அவன்தான் சீன விவசாயி. இரண்டு மூன்று ஏகரா விதீரணமுள்ள நிலத்தில் மிகப் பழமையான முறைகளை உபயோகித்து உழைத்து, ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டி யிருக்கிற அவனுடைய வாழ்க்கை, எப்பொழுதும் இயற்கையோடு போராட வேண்டிய வாழ்க்கையாக இருக்கிறது. இந்தப் போராட் டத்தில் தோல்வி யடைந்தால் மரணம்; வெற்றியடைந்தால், இன்னொரு வருஷம் போராடுவதற்குச் சந்தர்ப்பம் கிடைக்கிறது. அவ்வளவு தான் . . . . . . . .சீனாவில் எத்தனையோ பஞ்சங்கள் உண்டா யிருக்கின்றன. இவைகளில் மடிந்தவர்கள் யார்? லட்சக்கணக்கான விவசாயிகள்தான். ஆனால் சமீபகாலமாக இந்தப் பஞ்சம், வெள்ளப்பெருக்கு முதலியவைகளைக் காட்டிலும் கொடுமை யான ஒரு தொந்திரவு இந்த விவசாயிகளைப் பற்றிக் கொண்டிருக்கிறது. அஃதென்னவென்றால், கொள்ளைக்கூட்டத்தினர் போன்ற (ராணுவப் பிரபுக்களின்) போர்ச்சேவகர்கள், கொஞ்சங்கூடக் கருணையில்லாமல் விவசாயிகளிடமிருந்து வரி வசூலிக்கிறார்கள்; அவர்களுடைய உணவுப் பொருள்களைக் கைப்பற்றிக் கொள் கிறார்கள்; அவர்களுடைய பிள்ளை களை ராணுவத்தில் வேலை செய்ய பலவந்தப்படுத்தி அழைத்துக் கொண்டுபோய் விடுகிறார்கள்.
விவசாயிகளை இந்தப் பரிதாபகரமான நிலைமையிலிருந்து மீட்க வேண்டுமென்பதே பொதுவுடைமை வாதிகளின் முக்கிய நோக்கம். இதற்காகவே இவர்கள் கோமிண்டாங் கட்சியினரோடு அடிக்கடி பிணங்கிக் கொண்டு வந்தார்கள். ஜப்பானிய ஆக் கிரமிப்பு, ஏற்பட்டு, கோமிண்டாங் கட்சியும் பொதுவுடைமைக் கட்சியும் ஐக்கிய மடைந்த பிறகு, தேசீய அரசாங்கமானது, இந்த விவசாயப் பிரச்னையை, தனது முன்னணிப் பிரச்னையாகக் கொண்டிருக்கிறது.
ஆயினும் இந்தப் பிரச்னைக்குப் பரிகாரம் காண்பதென்பது சுலப காரியமாக இல்லை. சாகுபடிக்குத் தகுதியுள்ள நிலங்களிற் பெரும் பகுதி, ஜப்பானிய ஆக்கிரமிப்புக்குட்பட்டு விட்டது. ஆக்கிரமிப்புப் பிரதேசங்களி லிருந்து சுமார் ஐந்து கோடி ஜனங்கள், மேற்கு மாகாணங்களுக்கு, அதாவது அரசாங்கம், தனது தலைமை தானத்தை எங்கு மாற்றிக் கொண்டதோ அதை யொட்டிய பிரதேசங்களுக்கு, அகதிகளாக ஓடிவந்து விட்டார்கள். இப்படி ஓடி வந்தவர்கள், விவசாயத்தின் முக்கிய சாதனங்களாகிய ஆடு மாடுகளை, தங்களுக்குப் பின்னால் விட்டு விட்டு வந்தார்கள். பண் பட்ட நிலமின்மை, அதிகமான ஜனத்தொகை, போதிய விவசாய சாதனங்களில்லாமை, இவைகளெல்லாவற்றிற்கும் மேலாக வெள்ளப் பாழ் ஆகிய இத்தனையையும் சமாளிக்க வேண்டியிருந்தது தேசீய அரசாங்கம். விவசாயிகளுக்கு அனுகூலமாக ஏதேனும் தீவிர முறைகளைஅனுஷ்டானத்திற்குக் கொண்டு வருவோமென்றால், அதற்கு நிலச் சுவான்தார்களின் எதிர்ப்பு இருந்தது. இவர்களுடைய அதிருப்திக்கு ஆளாக விரும்பவில்லை அரசாங்கம். அதிலும் யுத்த காலத்தில்? இவ்வளவெல்லாம் இருந்தாலும் தேசீய அரசாங்கமானது, விவசாயி களுக்குச் சில அனுகூலங்களைச் செய்திருக்கிறது; விவசாயப் பொருள் களின் உற்பத்தியை அதிகப் படுத்தி யிருக்கிறது.
விவசாயிகளுக்கு நடவு காலத்தில் மலிவாக விதைகள் கிடைக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அவர்களுக்குக் குறுகிய காலத் தவணையில் கடன் கொடுத்து உதவ, கூட்டுறவுச் சங்கங்கள் தாபிக்கப் பட்டிருக்கின்றன. இந்த மாதிரியான சங்கங்கள் (1942-ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் வரையில்) 1, 72, 995 இருக்கின்றன; இவற்றில் 1, 04, 73, 550 அங்கத்தினர் இருக் கின்றனர். 1937-ஆம் வருஷத்தில் இந்த மாதிரியான கூட்டுறவுச் சங்கங்கள் 46, 983 மட்டுமே இருந்தன என்பதையும், இவைகளில் 21, 39, 634 அங்கத்தினர்களே இருந்தார்க ளென்பதையும் நாம் ஞாபகப் படுத்திக் கொள்வோமானால், ஜப்பானியப் போர் தொடங்கிய பிறகு அரசாங்கத்தார் விவசாயிகளின் விஷயத்தில் எவ்வளவு சிரத்தை எடுத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது புலப்படும்.
விவசாயிகளுக்குக் கடன் கொடுத்துக் கொண்டிருந்தால் மட்டும் அவர்களுடைய கஷ்டங்கள் தீர்ந்துவிடுமா? அவர்களுக்குப் போதிய பாசன வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால் தானே அவர்கள் விவசாயம் செய்யமுடியும்? இதை உணர்ந்த அரசாங் கத்தார் கால்வாய்கள், ஏரிகள் முதலியன வெட்டியும் புதுப்பித்தும் வருகின்றனர்; இதற்காக அரசாங்க பாங்கிகளின் மூலம் விவசாயி களுக்குக் கடன் கொடுத்து உதவுகின்றனர். இந்த மாதிரி உதவி பெற்றுப் பூர்த்தியடைந்த பாசன வசதிகள் 1942-ஆம் வருஷத்தில் மட்டும் 258; இவைகளினால் சாதக மடைந்த நிலம் சுமார் மூன்றேகால் லட்சம் ஏகரா. ஒவ்வொரு வருஷமும் இந்த வசதிகள் அதிகப்பட்டு வருகின்றன.
விவசாய அபிவிருத்திக்காகச் சீன அரசாங்கத்தார் ஐந்து வகை யாகத் திட்டங்கள் வகுத்துக் கொண்டு அதன் பிரகாரம் வேலை செய்து வருகின்றனர். (1) விவசாயப் பொருள்களின் உற்பத்தியை அதிகப் படுத்தல்; (2) விவசாயிகளின் வாழ்க்கை அந்ததை உயர்த்திக் கொடுத்தல்; (3) பாசன வசதிகளை விருத்தி செய்தல்; (4) கிராம வாழ்வுக்குப் புத்துயிர் அளித்தல்; (5) நிலப்பங்கீடு விஷயத்தில் சீர்திருத்தம் செய்தல். இந்தத் திட்டங்களை நிறைவேற்றி வைக்கப் பல இலாகாக்கள் சிருஷ்டிக்கப் பட்டிருக்கின்றன. இவை, யுத்தகால நெருக்கடியைச் சமாளிப்பதற்காக ஏற்பட்ட இலாகாக்கள் அல்ல. யுத்தத்திற்குப் பிறகு, சீனா, தன்னுடைய தேவை களைத் தானே பூர்த்தி செய்து கொள்ள வேண்டுமென்ற நோக்கத்துடன் இவை வேலை செய்து வருகின்றன.
இந்த இலாகாக்களின் மேற் பார்வையில், தரிசாகக் கிடந்த நிலங்களெல்லாம் விவசாயத்திற்குத் தகுதியுடையனவாகச் செய்யப் பட்டிருக்கின்றன. விவசாயப்பொருள்களின் உற்பத்தியை அதிகப் படு வதற்காக, விஞ்ஞான சாதிரத்தின் துணை நாடப்பட்டி ருக்கிறது. உதாரணமாக நூற்று முப்பத்தைந்து நெல் வகைகளும், ஐம்பது கோதுமை வகைகளும் உற்பத்தி செய்யப் படுகின்றன. மற்றும், ஜனங்களுக்குப் போதிய உணவுப் பொருள்கள் கிடைக்க வேண்டுமென்பதற்காக, கஞ்சாச் செடியும், சாராயம் காய்ச்சு வதற்கான நெல் வகையும் இனிப் பயிரிடக் கூடாதென்று தடுக்கப் பட்டுவிட்டது. இந்த நிலங்களில் இப்பொழுது ஜனங்களுக்கு உபயோகப் படக்கூடிய நெல், கோதுமை, பருத்தி முதலியவைகளே உற்பத்தி செய்கிறார்கள். தற்போது சீன அரசாங்கத்தின் ஆதீனத்தி லிருக்கும் பிரேதங்களிலுள்ள விவசாய நிலத்தில் நூற்றுக்கு எண்பது சதவிகிதம் மேற்படி பொருள்களே உற்பத்தி செய்யப் படுகின்றன. இதனால், ஜப்பானிய யுத்தத்திற்கு முன்னர், சீனா முழுவதிலும் உற் பத்தியான உணவுப் பொருள்களைக் காட்டிலும், இப்பொழுதுள்ள எல்லை சுருங்கிய பிரதேசத்தில் கொஞ்சம் கூடுதலாகவே உற்பத்தி யாகின்றன.
1942 -ஆம் வருஷம் ஜூன் மாதத்திலிருந்து அரசாங்கத்தார், ஒரு புதிய நிலச் சீர்திருத்தச் சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வந்திருக் கின்றனர். இதன் பிரகாரம் நிலங்கள் அளக்கப்பட்டு, யாராருக்கு எவ்வளவு எவ்வளவு நிலம் இருக்கிறதென்று பதிவு செய்துகொள்ளப் படுகின்றது. நிலச் சுவான்தார்களுக்குச் சொந்தமாயுள்ள, ஆனால் அவர்களால் விவசாயம் செய்யப்படாம லிருக்கிற நிலங்களை, அரசாங்கத்தார் ஒரு விலை கொடுத்து வாங்கி, அவைகளைத் தரவாரி யாகப் பிரித்து, விவசாயம் செய்ய விரும்புகிற, ஆனால் நில மில்லாமல் தவிக்கிற விவசாயிகளுக்குச் சொற்ப விலை வைத்து விற்பதற்காகவே, மேற்படி அளவை, பதிவு முதலிய வேலைகள் நடை பெற்று வருகின்றன. சீனாவில் நிலமில்லாத விவசாயிகளும், விவசாயம் செய்யப்படாமல் நிலச் சுவான்தார்களுக்குச் சொந்தமா யுள்ள நிலங்களும் மிக அதிகம். இந்த வித்தியாசத்தைப் போக்கி, நிலங் களைத் தேவைக்கும் தரத்திற்கும் தகுந்தபடி பங்கிட வேண்டு மென்பது, ஸன் யாட் ஸென், கோமிண்டாங் கட்சியை ஆரம்பித்த நோக்கங்களில் ஒன்று. இந்த நோக்கத்தை நிறைவேற்றி வைப்பதற்குத் தான் அரசாங்கத்தார் மேற்படி சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வந்திருக்கின்றனர். இவை தவிர, யுத்த காலத்தில் உணவுப் பொருள்களின் விலை ஏறாமலும், இதன் மூலம் வியாபாரிகள் கொள்ளை லாபஞ் சம்பாதியாமலும் இருக்க, விலைவாசிகள் கட்டுப் படுத்தப் பட்டிருக்கின்றன; லாபஞ் சம்பாதிக்க முயலும் வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளப் படுகின்றன. மற்றும், விவசாயிகள், தாங்கள் செலுத்த வேண்டிய நிலவரியை விளை பொருள்களின் மூலமாகவே செலுத்தலாமென்று 1942-ஆம் வருஷத்தில் அரசாங்கத்தார் ஒரு புதிய உத்திரவு பிறப்பித்திருக்கின்றனர். தவிர, நெல், கோதுமை முதலிய தானியங்களை அரசாங்கத்தாரே விலைகொடுத்து வாங்கி ஆங்காங்குச் சேகரித்து வைத்த பிறகு, நியாயமான விலைக்கு ஜனங்களுக்குக் கிடைக்கும்படி செய்கின்றனர். உணவுப் பஞ்சம் ஏற்படாமலிருக்க வேண்டு மென்பதற்காகவே இந்த முன்னேற் பாடுகள். 1942-ஆம் வருஷக் கடைசியில் அரசாங்கத்தார் ஒரு புதிய சட்டத்தை அமுலுக்குக் கொண்டுவந்து, அதன் மூலம் தேசத்தின் பொருளாதார வாழ்வை ஒரு கட்டுப்பாட்டுக் குட்படுத்தி விட்டி ருக்கின்றனர். இதன் மூலம் ஜனங்கள் ஆடம்பரச் செலவுகள் செய்யக் கூடாதபடி தடுக்கப் பட்டிருக்கிறார்கள். இவையெல்லாம் யுத்தகால அவசியத்தை முன்னிட்டுச் செய்யப்பட்டிருக்கிற ஏற்பாடுகள்.
சீனா, தொழிற் பெருக்கமுள்ள நாடு அல்ல. அப்படி ஏதேனும் நவீன யந்திர சாதனங்களுடன் கூடிய தொழிற்சாலைகள் ஏற்பட்டி ருந்தாலும் அவை பெரும்பாலும் அந்நியருடைய ஆதிக்கத்தி லிருந்தன; அந்நியர் களுடைய செல்வாக்கு நிறைந்த துறைமுகப் பட்டினங்களிலேயே இருந்தன. ஜப்பானிய யுத்தத்திற்கு முந்தி, சிறிதும் பெரிதுமான தொழிற்சாலைகள் மொத்தம் சுமார் நாலாயிரத்திற்குட்பட்டே இருந்தன. இவற்றில் பெரும்பாலான நெசவு ஆலைகள். பெருவாரியாகப் பொருள் களைத் தயாரிப்ப தற்குத் தேவையான விசைக் கருவிகள், யந்திரங்கள் முதலியனவற்றை உற்பத்தி செய்யும் தொழிற் சாலைகள் மிகக் குறைவு; இல்லை யென்று கூடச் சொல்லாம். பூமியிலிருந்து தோண்டி யெடுக்கப் பெற்ற இரும்பு, நிலக்கரி முதலியன, அந்நிய தாபனங்களின் வசத்தில் இருந்ததோடு அந்நிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டும் வந்தன; உள்நாட்டில் இந்த உலோகப் பொருள்கள் உப யோகிக்கப் பெறவில்லை.
1936-ஆம் வருஷம் அரசாங்கத்தார் மூன்று வருஷத் தொழில் திட்டமொன்று தயாரித்து, அதன் பிரகாரம் பல இடங்களில் புதிய தொழிற்சாலைகளை தாபிக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். ஆனால் ஜப்பானிய யுத்தங் காரணமாக இந்த முயற்சி தடைப் பட்டது. யுத்தத் திற்குப் பிறகு, ஏற்கனவே இருந்த தொழிற்சாலை களிற் பல - நூற்றுக்குச் சுமார் தொண்ணூற்று மூன்று சதவிகிதம் - ஜப்பானிய ஆக்கிரமிப்புக்குட் பட்டுவிட்டன. இந்தத் தொழில் தாபனங்களைக் கைப்பற்றிக் கொண்டு விட்டால் சீனாவின் பொருளாதார வாழ்வு தம்பித்து விடுமென்றும், அப்பொழுது அதனைச் சரணடையச் செய்து விடலாமென்றும் ஜப்பான் எதிர்பார்த்தது. இதனாலேயே அது, யுத்த ஆரம்பத்தில் துறைமுகப் பிரதேசங்களில் தன் கவனத்தை அதிகமாகச் செலுத்தியது. ஏனென்றால் இந்தப் பிரதேசங்களில் தானே முன் சொன்னபடி சீனாவின் பெரும்பாலான தொழிற் தாபனங்கள் இருந்தன? ஆனால் ஜப்பான் எதிர்பார்த்தபடி சீனா அவ்வளவு சுலபமாகச் சரணடையவில்லை; அதன் தொழில் முயற்சியும் குன்றவில்லை.
ஜப்பானிய ஆக்கிரமிப்பு, வட மாகாணங்களிலும், மேற்கு கடலோரப் பிரதேசங்களிலும் பரவப்பரவ, சீன அரசாங்கத்தார், அங்கிருந்த தொழிற் தாபனங்களிற் சிலவற்றை முடிந்த மட்டில் உள் நாட்டுக்குக் கொண்டு வரச் செய்தனர். 1939-ஆம் வருஷம் முடிவதற்குள் இப்படிக் கொண்டு வரப்பட்ட தொழிற்சாலைகள் மொத்தம் அறுநூற்று முப்பத்தொன்பது; இவைகளோடு கூட வந்த கைதேர்ந்த தொழிலாளர் சுமார் பன்னிரண்டாயிரம் பேர். ஒரு தொழிற்சாலையைக் கலைத்து, அதனுடைய சாமான்களை அப்புறப்படுத்தி விடுவது சுலபம்; அவை களைப் புதிய இடத்தில் ஒன்றுகூட்டி நிறுவி வேலை செய்யச் செய்வது கடினம்; அதுவும் சத்துருக்களின் ஆகாய விமானங்கள் குண்டுகளைப் போட வட்ட மிட்டுக் கொண்டிருக்கிற போழ்து! சீன அரசாங்கத்தார், இந்த அசாதாரணமான வேலையைச் செய்யச் சிறிது கூடப் பின்வாங்க வில்லை. 1940-ஆம் வருஷ முடிவிற்குள், இத்தனை தொழிற்சாலை களும் புதிய இடத்தில் வேலை செய்யத் துவங்கிவிட்டன. சுங்கிங்கைத் தலை நகராக்கிக் கொண்டுவிட்ட பிறகு இவர்கள் செய்த வேலை, தன்னுடைய சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்ற விருப்பங் கொண்டுள்ள ஒரு ஜாதி, என்னென்ன பரிசோதனைகளுக்கு உட்படத் தயாராயிருக்க வேண்டுமென்பதற்கு ஓர் எடுத்துக் காட்டாக இருக்கிறது. இங்ஙனம் தொழிற் தாப னங்களைப் பெயர்த்து வந்ததோடு, கடல் மார்க்கம் பரிபூர்ணமாக அடைக்கப்பட்டு விட்டாலும், சாத்தியப்பட்ட வரையில் தரை மார்க்கமாக வெளிநாடுகளிலிருந்து சில யந்திர வகைகளை வர வழைத்துக் கொண்டனர் சீன அரசாங்கத்தார். இவைகளைக் கொண்டு புதிய தொழிற்சாலைகள், மூலப்பொருள்கள் கிடைப் பதை அனுசரித்து ஆங்காங்கு தாபிக்கப்பட்டன. வருஷந்தோறும் இந்தத் தொழிற்சாலைகள் அதிகப்பட்டு வருகின்றன. அரசாங் கத்தின் பண உதவி, பொருள் உதவி, நிபுணர்கள் உதவி முதலியன பெற்று தனிப்பட்ட முதலாளிகளால் நடத்தப் பெறும் தொழிற் சாலைகள் பல ஒரு புறம் அதிகப்பட்டு கொண்டுவர, அரசாங்கமே நேராகச் சில தொழிற்சாலைகளை நடத்துகிறது. இப்படிப் பட்ட தொழிற்சாலைகள் 1942-ஆம் வருஷத்தில் மொத்தம் தொண்ணூற் றெட்டு, அரசாங்கத்தார் 1936-ஆம் வருஷத்தில் தொழில் திட்டம் ஆரம்பிக்கிறபோது இந்த அரசாங்கத் தொழிற்சாலைகள் மொத்தம் பதினாறே இருந்தன. ஆறு வருஷத்தில் ஆறு மடங்கு அதிகப் பட்டிருக்கிறது.
பொருளுற்பத்திக்கான தொழிற்சாலைகள் ஒரு பக்கம் அதிகப்பட்டுக் கொண்டு வர, புதிய தொழிற்சாலையொன்றை நிறுவுவதற்கு என்னென்ன யந்திர வகைகள், கருவிகள் முதலியன தேவையோ அவைகளை உற்பத்தி செய்யக்கூடிய தொழிற் சாலைகளையும் தாபித்து வருகின்றனர் சீன அரசாங்கத்தார். ஜப்பானிய ஆக்கிரமிப்புக்குட்படாத சுதந்திர சீனாவில், அதாவது மேற்குப் பக்கமாகவுள்ள சுமார் பதினான்கு மாகாணங்களில் உள்ள இரும்புத் தொழிற் சாலைகள் (1942-ஆம் வருஷக் கடைசியில்) பதினான்கு; எஃகு உற்பத்தித் தொழிற் சாலைகள் மூன்று; ரெயில்வே இஞ்சின் உற்பத்தித் தொழிற்சாலைகள் மூன்று; (1941-ஆம் வருஷத்தில் மொத்தம் ஐம்பத்தாறு இஞ்சின்கள் தயாரிக்கப் பட்டிருக் கின்றன). கப்பல் கட்டும் தொழிற்சாலைகள் இரண்டு; யந்திரச் சமான் உற்பத்தி சாலைகள் முந்நூற்று எழுபத்தொன்பது; (இவை நூற்றிருபது வகைகளை உற்பத்தி செய்கின்றன.) காகித உற்பத்தித் தொழிற்சாலைகள் பதினான்கு; இப்படிப் பல வகையான தொழிற்சாலைகள் ஜப்பானிய யுத்தத்திற்குப் பிறகு வருஷந்தோறும் அதிகப்பட்டு வருகின்றன. வெளி நாடுகளிலிருந்து எப்பொழுதுமே இந்த மாதிரியான சாமான்களை எதிர் பார்த்துக் கொண்டி ருக்க முடியாதல்லவா? மூலப்பொருள்களைக் கொடுத்துவிட்டு, செய் பொருள்களை வாங்கிக் கொள்ளும் தேசமாகச் சீனாவை இனியும் விட்டு வைக்க இன்றைய தேசீய அரசாங்கத்தார் விரும்பவில்லை யென்பதை மேற்படி புள்ளி விவரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
தொழில் முன்னேற்றம் என்று சொல்லிக் கொண்டு, யந்திரத் தொழில்களை மட்டும் வளர்த்து வரவில்லை சீன அரசாங்கத்தார்; கூடவே சிறுசிறு கைத்தொழில்களை, கூட்டுறவு தாபனங்களின் மூலம் வளர்த்து வருகின்றனர். சீனாவின் தொழில் வளர்ச்சிச் சரித்திரத்தில் இந்தக் கூட்டுறவுத் தொழில் தாபனங்கள் 1 முக்கிய இடம் பெற்றிருக்கின்றன; அதன் எதிர்கால வாழ்வில் நிரந்தரமான பலனை அளிக்கக் கூடியன.
1938-ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் முதன் முதலாகத் தொடங்கப் பெற்ற இந்தக் கூட்டுக் கைத்தொழில் தாபனங்கள் 1942-ஆம் வருஷம் ஜூன் மாதம், அதாவது ஆரம்பித்த நான்கு வருஷங்களுக்குள் மொத்தம் 1,590 தாபனங்களாக வளர்ந்திருக் கின்றன; இவற்றில் 22,680 அங்கத்தினர்கள் இருக்கிறார்கள். ராணுவத்திற்கும் மற்றச் சாதாரண ஜனங்களுக்கும் அன்றாடம் உபயோகப்படக்கூடிய சாமான்களை உற்பத்தி செய்து நியாயமான விலையில் கிடைக்குமாறு செய்வதே இந்த தாபனங்களை ஏற்படுத்தியதன் நோக்கம். புராதன காலந்தொட்டு நடைபெற்று வந்த அநேக குடிசைத் தொழில்கள் அந்நிய நாட்டுச் சரக்குகளின் போட்டியைச் சமாளிக்க முடியாமலும், ஆதரிப்பாரின்றியும், மூலைக்கு மூலை சிதறியும் கிடந்தன. அவையெல்லாம் இந்தக் கூட்டுத் தொழில் தாபனங்கள் மூலம் இப்பொழுது புத்துயிர் பெற்று ஏழை மக்களுக்கு ஜீவனோபாயமாக விளங்குகின்றன.
இந்த தாபனங்களை மூன்று வகையாகப் பிரித்திருக் கிறார்கள். ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குச் சுலபமாகப் பெயர்த்துக் கொண்டு போகமுடியாத பெரிய தொழிற்சாலைகள் முதலாவது வகை; இவை யாவும் சத்துருக்களினால் - ஜப்பானியர் களால் - சுலபமாக அணுக முடியாதபடி உட்பிரதேசத்திலேயே இருக்கின்றன. சத்துருக்களின் ஆக்கிரமிப்புகுட் படாவிட்டாலும் அவர்களின் ஆகாய விமாகத் தாக்குதல்களுக்குட் படக்கூடிய சிறிய அளவு தொழில் தாபனங்கள் இரண்டாவது வகை. அதிக இடம், அதிக மூலதனம், அதிகமான ஆட்கள் முதலியன தேவையில்லாமல் கூடிய வரையில் மறைவிடமாக இருந்து நடைபெறக் கூடிய தாபனங்கள் இந்த வகையைச் சேர்ந்தவை. இவை பெரும்பாலும் வட மேற்கிலுள்ள கான்ஸு மாகாணத்திலிருந்து தென்கிழக் கிலுள்ள பூக்கியென் மாகாணம் வரை ஒரு பிறைக்கோடு போட்டால் அதற்குள்ளிருக்கும் பிரதேசத்தி லிருக்கின்றன. ஓரிடத்தி லிருந்து மற்றோரிடத்திற்குச் சுலபமாகப் பெயர்த்து எடுத்துக் கொண்டு போகக்கூடிய தாபனங்கள் மூன்றாவது வகை. இவைகளை கொரில்லா கூட்டுத் தொழில் தாபனங்கள் என்று வேடிக்கை யாக அழைக்கிறார்கள். இவை, யுத்தப் பிரதேசத்திலேயே, அதாவது சீனப்படைகள் எங்கெங்கு யுத்தஞ் செய்கின்றனவோ அங்கெல்லாம் அவைகளுக்குப் பின்னணி யிலேயே இருக்கின்றன. கால அவசரத்தை யும் இடத் தேவையையும் அனுசரித்து இயங்குவன இவை. இந்த மூன்று வகையான தாபனங்களும் சுமார் பத்து விதமான தொழில்களில் ஈடுபட்டிருக்கின்றன. இவற்றின் விவரம் - 1942-ஆம் வருஷத்து ஜூன் மாதக் கணக்குப்படி - பின்வருமாறு : -
என்ன தொழில்? - எத்தனை எண் தாபனங்கள்?
1. யந்திரச் சாமான்கள் முதலியன - 57
2. சுரங்களிலிருந்து - உலோகப்
பொருள்கள் எடுத்தல் - 111
3. நெசவு ஆலைகள் - 584
4. தையல் - 159
5. ரசாயனப் பொருள்கள் - 322
6. உணவுப் பொருள்கள் - 70
7. டேஷனரி சாமான்கள் - 43
8. தச்சு, கொத்து வேலைகள் - 106
9. போக்குவரத்து சாதனங்கள் - 7
10. இதர வேலைகள் - 131
மொத்தம் - 1590
இந்தக் கூட்டுத் தொழில் தாபனங்கள், நிருவாக யுவான் கீழ் ஒரு தனி இலாகா மேற்பார்வையின் கீழ் நடைபெறுகின்றன. இவைகளில் அங்கத்தினராகச் சேர்ந்துள்ளவர்களுக்குத் தகுந்த தொழிற் பயிற்சி அளிக்கப்படுகிறது. இவை, கண்ட கண்ட இடத்தில் வெறும் உற்சாக மேலீட்டால் மட்டும் ஆரம்பிக்கப்படுவ தில்லை. ஒரு சங்கத்தை ஓரிடத்தில் தாபிக்க வேண்டுமானால் முதலில் அந்த இடத்தில் அல்லது அதைச் சுற்றி என்னென்ன மூலப் பொருள்கள் அகப்படுகின்றன வென்று பரிசீலனை செய்து பார்க்கிறார்கள்: இரண்டாவது, தொழில் தெரிந்தவர்கள் எத்தனைப் பேர் அகப்படுவார்களென்று கணித்துக் கொள்கிறார்கள்: மூன்றாவது, செய்பொருள்களை விலைப்படுத்த, மார்க்கெட்டுகள், போக்கு வரத்து சௌகரியங்கள் முதலியன இருக்கின்றவாவென்று பார்க் கிறார்கள். இவைகளுக்குத் தகுந்தாற்போல் இந்தத் தொழில் தாபனங்களை ஏற்படுத்துகிறார்கள்.
ஒரே மாதிரி தொழில் அனுபவமுள்ள ஏழெட்டு பேர் குறைந்த பட்சம் சில பங்குகளை எடுத்துக் கொண்டு ஒரு சங்கமாக முதலில் சேர்ந்து கொள்கிறார்கள். பின்னர், இந்தத் தொழிற் சங்கங்களுக்குக் கடன் கொடுப் பதற்கென்றுள்ள பாங்கிகளிலிருந்து கடன் வாங்கி, அதனையே மூலதன மாக வைத்துக் கொண்டு தொழிலை ஆரம்பிக் கிறார்கள். தொழிலை நடத்துவதற்கு டைரெக்டர்கள் போர்ட் ஒன்று ஏற்படுத்தப்படுகிறது. பெரிய தொழில் தாபனமாயிருந்தால் திறமையுள்ள ஓர் அதிகாரியைத் தனியாக நியமித்து விடுகிறார்கள். தொழில் செய்கிற அங்கத்தினர்களுக்கு, வெளியிடங்களில் நியாய மாக என்ன கூலி கொடுக்கப்படுகிறதோ அதே கூலிதான் கொடுக்கப் படுகிறது. ஆனால் சில தாபனங்களில், அங்கத்தினர்கள், தங்களுக்குத் தேவையான கூலியை மட்டும் எடுத்துக் கொண்டு, மிகுதியை தாபனத்தின் மூலதனத்தோடு சேர்த்து விடுகிறார்கள். வருஷ முடிவில் எல்லோருக்கும் லாபம் பிரித்துக் கொடுக்கிறபோது, இவர்களுடைய பங்குக்குக் கொஞ்சம் கூடுதலாகவே லாபம் கிடைக்கிறது. லாபமனைத்தையும் அங்கத்தினர்களுக்குப் பிரித்துக் கொடுத்து விடுவதில்லை. க்ஷேம நிதிக்கு ஒரு பகுதி சேர்க்கப்படுகிறது. கல்வி, சுகாதாரம் முதலிய சமுதாயப் பொதுநன்மைக்குரிய வேலைகளுக்காக ஒருபகுதி ஒதுக்கப்படுகிறது. ஏறக்குறைய பாதி இப்படிப்போக, மற்றப் பாதிதான் லாபமாகப் பிரித்துக் கொடுக்கப் படுகிறது; சுருக்கமாக, அங்கத்தினர்களே தொழில் நடத்துகிறார்கள்; அதன் லாப நஷ்டப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்கள்.
இந்த தாபனங்களிலே அங்கத்தினராகச் சேருவோர் ஒவ்வொரு வரும் கையினால் உழைக்கிறவர்கள். கூடிய மட்டில் எல் லோருக்கும் ஒரே மாதிரியான கூலிதான். எந்த அங்கத்தினரும் தங்களுக்குப் பதிலாக கூலியாட்களை அமர்த்தி வேலை வாங்கக் கூடாது. தொழில் கற்றுக் கொள்ள விரும்புகிறவனுக்கு நல்ல கூலி கொடுத்து வேலை கற்றுக் கொள்ளச் செய்து அவர்களை, மற்றவர் களுக்குச் சமதையான அந்ததுடைய அங்கத்தினனாகச் சீக்கிரத்தில் சேர்த்துக் கொண்டு விடுகிறார்கள். இங்ஙனம் பொதுவாக ஜனநாயக முறையே இந்த தாபனங்களில் அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்தக் கூட்டுறவு தாபனங்கள், தொழிற்சாலைகள் மட்டு மல்ல, வியாபார நிலையங்கள் மட்டுமல்ல, சமுதாய சேவையிலீடு பட்டுள்ள தொண்டர் தாபனங்களுங்கூட. ஒவ்வொரு தாபனத் தின் ஆதரவிலும் பள்ளிக்கூடங்களென்ன, ஆபத்திரிகளென்ன, குழந்தைப் பராமரிப்புச் சாலைகளென்ன இவைகளில் ஒன்றோ சிலவோ நடைபெறுகின்றன. இங்ஙனம் இந்த தாபனங்கள் தொண்டு செய் வதோடு, இதன் அங்கத்தினர்கள் தனிப்பட்ட முறையிலும் சிறந்த தொண்டர்களா யிருக்கிறார்கள்.
இந்தக் கூட்டுறவு தாபனங்களில் கொரில்லா தாபனங் கள்தான் குறிப்பிடத்தக்கவை. இவை, போர்க்களங்களில் படை வீரர்களுக்குப் பின்னணியில் இருந்து, அவைகளுக்கு உடனுக்குடன் கொடுக்கக்கூடிய தீப்பெட்டி, உணவுப் பொருள்கள், கம்பளிகள், பூட்கள் முதலிய சாமான் களை உற்பத்தி செய்து கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இவைகளுக்கு எந்த நிமிஷத்திலும் ஆபத்து; ஆனால் எந்த நிமிஷமும் இவை வேலை செய்து கொண்டிருக் கின்றன. இவைகளின் மூலமாக இப்பொழுது சீனாவில் பலவகைத் தொழில்களும் அபிவிருத் தியடைந்து கொண்டு வருகின்றன.
இங்ஙனம் பெரிய தொழில்களும் சிறிய கைத்தொழில்களும் ஒன்றுக்கொன்று துணையாக இருந்து முன்னேற்றமடைந்து வருவதுடன், இந்தத் தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர் களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சங்கங்களும் கூடவே வளர்ச்சியடைந்து வருகின்றன. தொழிலாளர்களின் வேலை நேரம், கூலி விகிதம் முதலியன சட்டத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்டிருக் கின்றன. 1937-ஆம் வருஷத்திற்கு முன்னர் 7,43,764 அங்கத்தினர் களைக் கொண்ட 872 தொழிலாளர் சங்கங்கள் இருந்தன. 1942-ஆம் வருஷக் கடைசியில் 10,53,656 அங்கத்தினர்களை யுடைய 4,033 சங்கங்கள் இருக்கின்றன. இவையாவும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டவை.
தொழில் வளர்ச்சிக்கு இன்றியமையாத சாதனம் போக்கு வரத்து. 1937-ஆம் வருஷத்திற்குப் பிறகு, ரெயில், ரோட்டு முதலிய அநேக போக்குவரத்துக்கள் ஜப்பானியருடைய ஆக்கிரமிப்புக் குட்பட்டுவிட்டன. அநேக ரெயில் பாதைகள் ஜப்பானியருடைய வெடிகுண்டுகளினால் சேத மடைந்துவிட்டன. உதாரணமாக காண்டன் நகரத்திலிருந்து ஹாங்கோ நகரத்திற்குச் செல்லும் சுமார் முந்நூறு மைல் நீளமுள்ள ரெயில் பாதை, யுத்தம் ஆரம்பித்த இரண்டு வருஷத்திற்குள் ஏறக்குறைய எண்ணூறு தடவைகளுக்கு மேலாக ஜப்பானிய வெடிகுண்டுகளினால் தாக்கப் பட்டிருக் கின்றது! இருந்தாலும் சீன அரசாங்கத்தார் கொஞ்சங்கூடச் சலிப்படையாமல் புதிய பாதைகள் திறப்பதில் அதிக ஊக்கங்காட்டி வந்திருக்கின்றனர். யுத்தம் தொடங்கியதிலிருந்து 1942-ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் வரையில் 756 மைல் நீளமுள்ள புதிய ரெயில் பாதைகள் போடப்பட்டன; சுமார் 383 மைல் நீளத்திற்குப் புதிய ரெயில் பாதைகள் போடப்பட்டு வருகின்றன. இங்ஙனமே நூற்றுக் கணக்கான மைல் நீளமுள்ள புதிய ரோட்டுகளும், புதிய நீர்வழி களும் நிர்மாணித்திருக் கிறார்கள். சுமார் இருபத்தையாயிரம் மைல் நீளமுள்ள நல்ல ரோட்டு களும், ஐயாயிரம் மைல் நீளமுள்ள நீர் மார்க்கங்களும், ஆயிரத்தைந்நூறு மைல் நீளமுள்ள ரெயில் பாதை களும் இப்பொழுதைய சீனாவில் இருக்கின்றன.
இங்ஙனம் புதிய பாதைகள் போட்டும், தொழிற் தாபனங் களை ஏற்படுத்தியும், விவசாயப் பொருள்களின் உற்பத்தியை அதிகப்படுத்தியும் வருவதோடு சீன அரசாங்கத்தார் திருப்தி அடைந்துவிடவில்லை. இவையெல்லாம் யுத்தத்தைச் சமாளிப்பதற் காகச் செய்யப்படுகிற வேலைகள். இவற்றோடு ஜனங்களின் சுகாதாரம், அறிவு வளர்ச்சி முதலிய விஷயங்களிலும் அதிகமான கவனஞ் செலுத்தி வருகின்றனர். யுத்தத்தின் விளைவாகத் தொத்து வியாதி முதலியன பரவுவதும், இது காரணமாக ஜனங்கள் மடிவதும் சகஜம். பல தடுப்பு முறைகளை அனுஷ்டித்து இவைகளைக் கூடிய வரையில் குறைத்துவருகின்றனர் அரசாங்கத்தார். இவர்களுக்குத் துணையாகக் கிறிதுவப் பாதிரிமார்கள் அரிய தொண்டுகள் செய்துவருகின்றனர். 1941-ஆம் வருஷக் கடைசியில் எடுத்த ஒரு கணக்குப்படி சுதந்திர சீனாவில் மொத்தம் உள்ள அரசாங்க ஆபத்திரிகள் 43; கிறிதுவ மிஷன் ஆபத்திரிகள் 257. இவை தவிர அரசாங்க நிருவாகத்தின்கீழ் 11 வைத்திய பரிசோதனை சாலை களும், 751 சுகாதார நிலையங்களும் இருக்கின்றன. இவை யனைத்தை யும் அதிகப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
1937-ஆம் வருஷ யுத்தத்திற்கு முன்னர் சீனாவின் வட மாகாணங் களிலும், கடலோரப் பிரதேசங்களிலும் இருந்த கல்வி தாபனங்கள் பல, யுத்தத்திற்குப் பிறகு அரசாங்கத்தோடு மேற்கு மாகாணங்களுக்கு வந்துவிட்டன. இவைகளோடு லட்சக்கணக்கான மாணாக்கர்கள் தொடர்ந்து வந்தார்கள். ஒரு கல்வி தாபனத்திற்கு என்னென்ன வசதிகள் வேண்டுமோ அந்த வசதிகள் ஒன்றுமே இல்லாமலும், சத்துருக்களின் ஆகாய விமானத்தாக்குதலை எப் பொழுதும் எதிர்பார்த்துக்கொண்டும் இந்த தாபனங்கள் வேலை செய்துகொண்டு வருகின்றன. ஆனாலும் இவை எண்ணிக்கையில் அதிகப்பட்டிருக்கின்றன. உதாரணமாக யுத்தத் திற்கு முந்தி சீனா முழுவதிலும் இருந்த சர்வ கலாசாலைகள், தொழிற் கல்வி பயிலுவிக் கும் கல்லூரிகள் முதலிய உயர்தரக் கல்வி தாபனங்கள் மொத்தம் 108; இவற்றில் படித்த மாணாக்கர்களின் மொத்த எண்ணிக்கை 31, 188. 1943-ஆம் வருஷ ஆரம்பத்தில் கணக்கெடுத்துப் பார்க்கிற போது, ஜப்பானிய ஆக்கிரமிப்புக்குட்பட்டுள்ள பிரதேசங் களில்லாமல் சுதந்திர சீனாவில் மட்டும் இருந்த சர்வகலாசாலைகள் முதலிய மொத்தம் 133; மாணாக்கர்கள் 57,832. இங்ஙனமே உயர்தரப் பள்ளிக் கூடங்களும், ஆரம்பப் பள்ளிக்கூடங்களும் அபிவிருத்தி யடைந்திருக்கின்றன. மறுபக்கத்தில் இருக்கும் புள்ளி விவரங் களினால் இதனைத் தெரிந்து கொள்ளலாம்:-
எண் விவரம் 1937 1941
----- ------------------------------------------------ ------------- ---------------
1. செகண்டரி பள்ளிக் கூடங்களின் எண்ணிக்கை 1,896 2,819
2. இவற்றில் படிக்கிற மாணாக்கர்கள் எண்ணிக்கை 5,83,363 6,22,800
3. இவற்றிற்காக அரசாங்கம் செலவழிக்கிற தொகை (டாலர்) 3,03,96,758 6,43,56,462
4. பிரைமரி பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கை 2,29,911 2,32,145
5. இவற்றில் படிக்கிற மாணாக்கர்கள் எண்ணிக்கை 1,28,47,942 2,24,24,884
6. இவற்றிற்காக அரசாங்கம் செலவழிக்கிற தொகை 7,34,44,593 சுமார் 8 கோடி
மேற்படி செகண்டரி பள்ளிக்கூடங்களில் தொழிற்கல்விப் பள்ளிக்கூடங்களும், போதனாமுறைப் பயிற்சிப் பள்ளிக் கூடங்களும் அடங்கி யிருக்கின்றன. இவை தவிர, கிராமங்களில் வசிக்கும் ஜனங்களிடம் கல்வியறிவைப் பரப்பவேண்டி துணைப் பள்ளிக் கூடங் களென்றும், ஜனப்பள்ளிக்கூடங்களென்றும் பல வகைப் பட்ட பள்ளிக் கூடங்கள், 1941-ஆம் வருஷக் கடைசியில் மொத்தம் 1,61,772 இருக்கின்றன. ஜனங்களின் அறியாமையைப் போக்க அரசாங்கத்தார், 1940-ஆம் வருஷம் ஆகட் மாதம், ஐந்து வருஷத் திட்டமொன்று வகுத்திருக்கின்றனர். இந்தத் திட்டத்தின் பிரகாரமே மேற்சொன்ன துணைப்பள்ளிக்கூடங்கள் முதலியன தாபிக்கப் படுகின்றன 1945-ஆம் வருஷம் ஜூலை மாதத் திற்குள், நூறுமுதல் நூற்றைம்பது குடும்பங்கள் வரையுள்ள பிரதியொரு கிராமத்திற்கும் ஒரு பள்ளிக்கூடம் விகிதம் இருக்கவேண்டுமென்ற நோக்கத்துடன் மேற்படி திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. தேசத்திலே கல்வியறிவு பெறாதவர்களே இருக்கக்கூடாதென்பது இந்தத் திட்டம் வகுத்தவர் களின் ஆசை. இந்த ஆசை பூர்த்தியடையும் என்றே நம்பப் படுகிறது. இவை தவிர ஜனங்களுடைய பொது அறிவு வளர்ச்சிக்காக புத்தக சாலைகள், வாசகசாலைகள், நாடகங்கள், சினிமாக்கள், ரேடியோ தாபனங்கள், பொருட்காட்சி சாலைகள் முதலியனவும் போற்றி வளர்க்கப் படுகின்றன. 1941-ஆம் வருஷக் கடைசியில் இப்படிப்பட்ட தாபனங்களின் மொத்த எண்ணிக்கை 1,53,667.
சீனாவில் பத்திரிகைத் தொழில் முன்னேற்றமடைந் திருக்கிற தென்று சொன்னால் அதற்கு ஆச்சரியப்பட வேண்டியதே இல்லை. ஏனென்றால் பத்திரிகைத் தொழிலுக்குத் தாயகம் போன்றது சீனா. சுமார் மூவாயிரம் வருஷங்களுக்கு முன்னரே அங்குப் பத்திரிகைகள் வெளிவரத் தொடங்கிவிட்டனவல்லவா? சீனர்கள் பத்திரிகை படிப்பதிலே மிகவும் பிரியமுடையவர்கள். அதிலும் இந்த யுத்த காலத்தில் கேட்கவேண்டுமா? சுங்கிங் நகரத்தில் மட்டும் இப் பொழுது பதின்மூன்று சீன தினசரிப் பத்திரிகைகள் வெளியா கின்றன. இவை தவிர, வார, மாதப் பத்திரிகைகள். மொத்தம் சுதந்திர சீனாவில் சுமார் எழுநூறு பத்திரிகைகளுக்குமேல் வெளியா கின்றன.
இந்தத் தொழில் தாபனங்கள், கல்வி தாபனங்கள் முதலிய அனைத்திலும் ஆண்களுடன் பெண்களும் சேர்ந்து உழைக் கிறார்கள். ஒரே விதமாக ஊதியம் பெறுகிறார்கள். பெண்களின் நலனைக் கவனிப்பதற் கென்று சீனாவில் இப்பொழுது சுமார் 350க்கு மேற்பட்ட தாபனங்கள் இருக்கின்றன. இதுவரையில் சுமார் நாற்பதினாயிரம் திரீகளுக்குமேல் ஒழுங்கான ராணுவப் பயிற்சி பெற்று போரில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்களிற் பலர், வீர சொர்க்கத்தைத் தங்கள் பெண்மையினால் அழகுபடுத்தியிருக் கிறார்கள். இவற்றிற்கெல்லாம் ஊக்கமும் ஆக்கமும் கொடுத்து வருவது ஸ்ரீமதி சியாங் கை ஷேக்.
சென்ற ஏழு வருஷ காலமாக, சீனா புறச் சத்துருவோடு தீவிரமாகப் போராடி வருவதோடு, தனது அகவாழ்வின் பல துறைகளையும் தூய்மைப்படுத்திக்கொண்டு வருகிறது; அவைகளை வளர்த்துக்கொண்டு வருகிறது. நிகழ்காலத்திற்காக அஃது, இறந்த காலத்தை மறந்து விடவில்லை; எதிர்காலத்தைத் துறந்துவிடவு மில்லை.
இன்றைய சீனா
சீனா, சென்ற ஏழு வருஷகாலமாக ஜப்பானுடன் தனித்துப் போராடி வருகிறது. இஃதொன்றைக் கொண்டே அது, தனது சக்தியிலே, தனது அழியாத் தன்மையிலே கொண்டிருக்கிற அபார நம்பிக்கை நன்கு புலனாகிறது. எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது; வெற்றியென்பது சுலபமாகக் கிடைக்காதென்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் வெற்றி யடைகிறவரை நாங்கள் போராடுவோம். எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. என்று ஒரு பிரபல சீன ராணுவத் தலைவன் கூறுகிறான்.1 தன்னம்பிக்கையுடையவர் களுக்குத் தோல்வி ஏது?
இன்றைய சீனா, பழைய சீனாவல்ல; புதிய சீனா. ஆனால் இந்தப் புதிய சீனா, பழைய சீனாவின்மீதுதான் நிர்மாணம் செய்யப்பட்டு வருகிறது. பழைய சீனாவை அழித்துவிட ஜப்பானியர்கள் முயற்சி செய் கிறார்கள். ஆனால் அதிலிருந்து புதிய சீனா சிருஷ்டியாகிக் கொண்டு வருகிறது. ஏனென்றால் சீன நாகரிகம் சிருஷ்டி சக்தி யுடையது. சிருஷ்டி சக்திக்கு அழிவேது?
இந்த யுத்தத்தின் விளைவாகச் சீனாவின் எல்லை ஏறக்குறைய அரை வாசிக்குச் சுருங்கியிருக்கிறது; அதன் லட்சக்கணக்கான போர் வீரர்கள் வீர சொர்க்கத்திற்குப் போய்விட்டார்கள்; அதன் கோடிக் கணக்கான ஜனங்கள் அக்குத் தொக்கில்லாதவர்களாகி விட்டார்கள்; தங்கள் உடம்பிலிருந்து உப்பு நீரைக் கொட்டிவளர்த்த பயிர்கள் அழிந்து படுவதையும், தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்த ஊர்கள் எரிந்துபோவதையும் கண்ணாரப் பார்த்துக் கொண்டு தானிருக்கிறார்கள்; தாய் ஒருபுறம், தந்தை ஒரு பக்கம், மக்கள் ஒரு பால் இப்படி எண்ணிறந்த குடும்பங்கள் சிதறிக் கிடக்கின்றன; நேற்றுவரை, கூட இருந்து உழைந்துவந்த சகோதரர் சிலர், இன்று, பலவீனத்தினாலோ, உயிரின்மீது கொண்ட பிடிப்பினாலோ, துரோகி களாகி விட்டிருக்கிறார்கள்; அயலாரிட மிருந்து கிடைக்கிற உதவியோ மாடிமீது நிறையச் சத்தம் போடுகிறார்கள்; ஆனால் ஒருவரும் கீழே இறங்கி வரமாட்டோமென்கிறார்கள். என்னும் சீனப் பழமொழிக் கொத்ததாகவே இருக்கிறது. இவ்வளவையும் சீனர்கள் சகித்துக் கொண்டு வருகிறார்கள். ஏன்? தங்களுடைய சுதந்திர விளக்கு அணையாமலிருக்க வேண்டுமென்பதற்காக! சுதந்திரமே! நீ ஒரு பெரிய பலிவாங்கி! ஆனால் நீதான் மனிதத்தன்மையின் சுமைதாங்கி! மனிதர்களாக வாழவேண்டுமென்று விரும்புகிறவர்கள் உன்னையே சரணடைகிறார்கள்! சீன நாகரிகம் மனிதத்தன்மை நிறைந்த நாகரிகம். அதற்கு இடத்தின் எல்லையோ,காலத்தின் முடிவோ ஏது?
சீனத் தொழிலாளி யொருவன் வேலை செய்வதை உற்றுக் கவனியுங்கள். அவன் அவசரப்பட மாட்டான்; அப்படியும் இப்படியும் பார்த்துக்கொண்டு பொழுதைக் கழிக்கமாட்டான்; எடுத்துக் கொண்ட காரியத்தை முடிப்பதில் கண்ணையும் கருத்தையும் செலுத்து வான்; அவனுடைய பார்வையிலே பெருந்தன்மை இருக்கும்; பேச்சிலே உறுதி இருக்கும்; தன்னிடமுள்ள தொழில் சாதனங்கள் குறைவாக இருந்தாலும் அவைகளைப் புத்திசாலித் தனமாக உபயோகிப்பான்; வேலை செய்கிற போது பொறுமையை இழக்கமாட்டான். சிரித்துக் கொண்டிருப்பான். இந்தமாதிரியான தன்மைகள் இன்றைய சீனப் போராட்டத்தின் பின்னணியில் பதிந்துகிடப்பதை நாம் நன்றாகப் பார்க்கலாம்.
உலகத்து ராணுவங்களில் குறைவான வசதிகளுடையது சீன ராணுவம்.1 பகட்டான, இல்லை, போதுமான உடையில்லை; சரியான உணவில்லை; தலைத் தொப்பியும், கால் மிதியடியும் வைக்கோலினால் தயாரிக்கப் பெற்றவை; போர்த்திக்கொள்ள கம்பளியில்லை; பஞ்சுப் போர்வை தான். சோப், பல்விளக்க ப்ரஷ் இவை அதன் உபயோகத் திற்கு எட்டாதவை. ஒரு போர் வீரனுடைய சம்பளம்? மாதம் ஒன்றே முக்கால் ரூபாய்! இதில் ஒன்றரை ரூபாய்க்கு மேல் சாப்பாட்டுக்குக் கொடுத்துவிட வேண்டும். என்ன சாப்பாடு? இரண்டு தகரக்குவளை நிறையச் சோறு! கீரைக் குழம்பு! ஏகதேசமாக மாமிச ஆகாரம் கிடைக்கிறது.
சீன ராணுவத்தில் எட்டாவது படை யென்பது பொது வுடைமை வாதிகளடங்கியதென்பதை ஏற்கனவே நாம் தெரிந்து கொண்டிருக்கிறோ மல்லவா? 3 இந்தப் படையானது, 1937-ஆம் வருஷ யுத்த ஆரம்பத்தில், ஜப்பானியர்களை எதிர்த்துப் போராட வடமேற்குப் போர்முனைக்குச் சென்றது; சென்று கொண்டிருக்கையில் ஒரு நாளிரவு ஓரிடத்தில் முகாம் போட்டது. அன்று படையினருக்குப் போதுமான ஆகாரம் இல்லை; ஒரு பகுதியினர் பட்டினியாகவே கிடந்தனர்; ஆனால், இவர்கள் - இந்தப் பட்டினிப் போர்வீரர்கள்- முகாமின் ஒரு பாகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் உற்சாகமாகக் கலந்து கொண்ட காட்சியை, மேற்படி படையுடன் கூடச்சென்ற ஆக்னெ மெட்லி என்ற அமெரிக்க மாதின் வாக்குமூலமாக வருணித்துக்காட்ட விரும்புகிறோம்:-
_பிறகு படைஞர் பாடத் தொடங்கினர். பொதுவுடைமை வாதிகளும் அவர்களுடைய படை வீரர்களும் எங்கெல்லாம் இருக் கிறார்களோ அங்கெல்லாம் இந்தப் பாடலைக்கேட்கலாம். ராணுவத்தினர் அனுசரிக்க வேண்டிய மூன்று முக்கிய கொள்கை களையும், எட்டு உப கொள்கை களையும்1 கொண்டதே இந்தப் பாட்டு. இந்தக் கொள்கைகளைப் பாட்டிலே இசைத்துப் பாடினால் மிக இனிமையாயிருக்கிறது. ஆனால், இன்றிரவு, பட்டினி கிடக்கும் இந்தப் போர் வீரர்கள் பாடிய போதும், பிறகு மண்தரையின் மீது பரப்பப்பட்டிருக்கும் வைக்கோலின் மீது அல்லது தானியக்கதிர்கள் மீது படுக்கச் சென்றபோதும், மேற்படி பாட்டிலே அதிக அர்த்தம் இருப்பதை நான் உணர்ந்தேன். இவர்களுடைய குரல், பல தந்தி வாத்தியங்கள் சேர்ந்து முழங்குவது போலிருந்தது. இன்றுச் சாப்பிட் டிருக்கும் நான், விவசாயிகளும் தொழிலாளர்களுமான இந்தப் படை வீரர்களின் இருதயத்தில் ஆழமாகப் பதிந்துகிடக்கும் சீன விடுதலைப் போராட்டத்தின் முழு அர்த்தத்தையும் நன்றாகத் தெரிந்துகொள்ள முடியாதென்பதை உணர்ந்தேன். எட்ட இருந்து பார்க்கிறவள் தானே நான்? அப்படிப் பார்ப்பதையும் ஒரு சலுகை யோடு பார்க்கிறேன். இவர்கள் பட்டினி கிடந்தாலும் எனக்கு எப்பொழுதும் ஆகாரம் கிடைத்துக் கொண்டிருக்கிறது; இவர்கள் குளிரினால் விறைத்துப் போனபோதிலும் எனக்கு உடையும், உஷ்ணமான படுக்கையும் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. இவர்கள் யுத்தஞ் செய்வார்கள். இவர்களில் பலர் பனி உறைந்த போர்க்களத்தில் படுத்துக்கொண்டு விடுவார்கள். நான் பார்த்துக் கொண்டுதானிருப்பேன். சூழ்ந்திருக்கும் இருளோடு இவர்கள் கலந்துபோவதை நான் பார்க்கிறேன். அப்பொழுதும் இவர்கள் பாடிக் கொண்டிருப்பதைக் கேட்கிறேன். இவர்களுடைய இரு தயத்தில் நுழைந்து பார்க்கவும், எந்தப் போராட்டத்திற்காகத் தங்கள் உயிரைக்காட்டிலும் மேலானவற்றையெல்லாம் அர்ப்பணம் செய்துவிட்டிருக்கிறார்களோ அந்தப் போராட்டத்தைப் பற்றி இவர்களுடைய உறுதியான நம்பிக்கை களைப் பாடமாக வரைந்து கொள்ளவும் எனக்குச் சக்திவேண்டும். அறிவு வெளிச்சம் வேண்டு மென்று நான் ஏங்கி நிற்கிறேன்.2_
இங்ஙனம் சீனப்படை வீரர்கள், பட்டினியாலும் குளிரினாலும் அவதிப் பட்டுக்கொண்டும், பல இடுக்கண்களைச் சகித்துக் கொண்டும் போராடி வருவதன் ரகசியமென்ன? சீன அரசாங்கத்தார் சென்ற சில வருஷ காலமாகவே தங்கள் ராணுவத்திற்கு ஆயுதப் பயிற்சியோடு அரசியல் பயிற்சியும் அளித்து வருகின்றனர். கொடுங் கோன்மையையும் அடக்கு முறையையும் ஒழித்து, நீதியையும் சுதந்திரத்தையும் காப்பாற்று வதற்காகவும், எல்லா நாடுகளும் சம உரிமையுடன் கலந்துகொண்டு, தங்களுக்குள் எழும் பிரச்னை களைச் சட்டபூர்வமாகவும் சமாதான மூலமாகவும் தீர்த்துக் கொள்ளக் கூடிய ஒரு சர்வ தேச அமைப்பை தாபிப்பதற்காகவுமே சண்டை போடுவதாகப் பிரதியொரு போர் வீரனும் போதிக்கப் படுகிறான். இந்தப் போதனையை அவன் மனப்பூர்வமாக நம்பு கிறான். இதனால் சீனப் போர்வீரர்கள், உரிமையின் புனிதத்தன்மை யையும், அதனைக் காப்பாற்றுவது தங்கள் கடமையென்பதையும் உணர்ந்தே போர் செய்கிறார்கள். தாங்கள் சரணடைந்தால் தேசம் அடிமைப் பட்டு விடும் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக் கிறது. யாருமே, தங்கள் நாடு அடிமைப்படுவதை விரும்ப மாட்டார் களல்லவா?
தவிர, சீன ராணுவம், ஜனங்களின் ராணுவம்; ஜனங்களுக்காக ராணுவமல்ல. ஜனசக்தியின் பிரதிநிதியாக இருந்தே ராணுவம் போர் செய்கிறது. இந்த ராணுவத்திற்கும் ஜனங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஒத்துழைப்பு இருக்கிறது என்பதில் என்ன ஆச்சரியம்? உதாரணமாக, யுத்தத் தொடக்கத்தில் எட்டாவது படையினர் வெளியிட்ட ஓர் அறிக்கையை எடுத்துக்காட்ட விரும்புகிறோம்:-
_ஜப்பானியர்கள், சீனாவைத் தாக்கி வருகிறார்கள். அவர்கள் நமது ஜனங்களைக் கொள்ளையடிக்கிறார்கள்; கற்பழிக்கிறார்கள். நமது வீடுகளை எரிக்கிறார்கள். இப்படியெல்லாம் செய்து நம்மீது வெற்றி கொள்ளப் பார்க்கிறார்கள்; நமது ஜாதியே இல்லாமற் போக வேண்டு மென்று விரும்புகிறார்கள். மஞ்சூரியாவை இழந்து விட்டோம். இப்பொழுது வட சீனாவும், ஷாங்காயும், நான்கிங்கும் பலமாகத் தாக்கப்படு கின்றன._
_நமது ராணுவம் இப்பொழுதுதான் (1937-ஆம் வருஷம் நவம்பர் மாதம்) ஜப்பானியர்களை எதிர்த்துப் போராட ஆரம்பித் திருக்கிறது. அவர்களை நாம் அழித்துவிடவேண்டும். நாம் எதற்கும் அஞ்சோம். அவர்கள், எவை எவற்றிற்குப் பிரதிநிதிகளாயிருக்கிறார் களோ அவை யனைத்தையும் நாம் வெறுக்கிறோம். நமது ராணுவம், கண்டிப்பான விதிகளை அனுசரித்து நடக்கிறது. நமக்காகச் சாமான்கள் தூக்குமாறும், பணங்கொடுக்குமாறும், நாம் ஜனங் களைக் கட்டாயப் படுத்துவதில்லை. ஜனங்களிடத்திலிருந்து நாம் சாமான்கள் வாங்கினால், அவற்றிக்குக் கடைகளில் என்ன விலை கொடுக்கவேண்டுமோ அந்த விலையைக் கொடுத்து விடுகிறோம். நாம் யாரையும் அடிப்பதில்லை; யாரையும் கட்டாயப் படுத்தி வேலை வாங்குவதில்லை. நமது நாட்டு மக்கள், போர் வீரர்களாகிய எங்களைக்கண்டு பயப்படமாட்டார்களென்று நம்புகிறோம். நமது படை வீரர்களும் ஜனங்களும் ஒன்று சேர்ந்து யுத்தகளத்திற்குச் சென்று போர் புரிவார்களென்று எதிர்பார்க்கிறோம். ஜனங்கள், தங்களைத் தற்காத்துக்கொள்ளும் படையினராக அமைத்துக் கொள்ளட்டும். அவர்களுக்கு நாங்கள் ஆயுதங்கள் உதவுவோம். நம்மிடையே இருக்கும் துரோகிகளையும் சத்துருக்களின் உளவாளி களையும் நாம் கைது செய்துவிட வேண்டும். எங்கும் காவல் வீரர்களை நியமிக்கவேண்டும். பணமுள்ளவர்கள் பணத்தைக் கொடுக்க வேண்டும். தேவைக்கதிகமாக உணவுப் பொருள்கள் வைத்துக் கொண்டிருக்கிறவர்கள் அந்த உணவுப் பொருள்களைக் கொடுக்க வேண்டும். போலி அதிகாரம் படைத்தவர்கள், அந்த அதிகாரத்தை ஜனங்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும். துப்பாக்கி வைத்துக் கொண்டிருக்கிறவர்கள் சண்டைபோட வேண்டும். சத்துருக்களின் போக்கு வரத்து சாதனங்களுக்குத் தடை உண்டு பண்ணவேண்டும். ஆதலின் நாட்டுமக்களே! சண்டைபோட ஒன்று சேருங்கள்; வெற்றி நமதே._
இப்படி ஜனங்களுடைய ஒத்துழைப்பைப் பெற்று ராணுவம் மட்டும் யுத்தம் செய்கிறது என்பதில்லை; தேசம் முழுவதுமே திரண்டு யுத்தத்தை நடத்துகிறதென்றே சொல்லவேண்டும். இந்த யுத்தத்தின் விசேஷமான அமிசம் இது.
இந்த யுத்தமானது, சீன சமுதாயத்தின் எண்ணப் போக்கு, செயலாற்றும் முறை முதலிய அனைத்திலும் ஆச்சரியகரமான ஒரு மாற்றத்தை உண்டுபண்ணியிருக்கிறது. கால வெள்ளத்தின் கரை யிலே நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சீனா, இப்பொழுது அந்த வெள்ளத்திலே லாகவமாக நீந்திச் செல்கிறது. அதனை இகழ்ந்து வந்தவர்கள் இப்பொழுது புகழ்ந்து பேசுகிறார்கள்; அதன் குரல்வளையைப் பிடித்து நெருக்கிக் கொண்டிருந்தவர்கள் இப் பொழுது அதன் முதுகைத் தடவிக் கொடுக்கிறார்கள். எல்லாம் ஐந்தாறு வருஷத்திற்குள் ஏற்பட்ட மாற்றந்தான்! உறங்கிக் கொண்டிருக்கிற ஒரு தேசம் விழித்தெழுவதற்கு எத்தனையோ சகாப்தங்கள் பிடிக்கும் என்று சொல்லி ஒருகாரியமும் செய்யாமல் சும்மாயிருக்கும் பெயர் வழிகளுக்கு, இன்றைய சீனா சிறந்த படிப்பினையா யிருக்கிறது.
சீனாவில் முந்தி, யுத்தத்தைப்பற்றிப் பொதுவாக ஒரு வெறுப்பு இருந்து வந்தது. போர்வீரன், சமுதாய அந்ததிலே மிகவும் தாழ்ந்தவ னென்று எண்ணப்பட்டான். ஆனால் இன்றைய சீனாவில், ஜனங்கள், யுத்தச் செய்திகளை எவ்வளவு ஆவலுடன் படிக்கிறார்கள்? பணக்கார குடும்பத்துப் பிள்ளைகளும், படித்த இளைஞர்களும் ராணுவத்தில் சேர எவ்வளவு உற்சாகத்துடன் முன் வருகிறார்கள்? யுத்தத்தை ஆதரித்து எழுந்துள்ள கவிதைகளும், நாடகங்களும், பிற நூல்களுந் தான் எத்துணை? போர் வீரனுக்கு, அவன் சென்ற இடமெல்லாம் எவ்வளவு சிறப்பு நடைபெறுகிறது? யுத்தம் ஏன் செய்ய வேண்டும்? என்று இன்றைய சீனாவில் யாரும் கேட்பதில்லை; யுத்தம் எப்படிச் செய்ய வேண்டும்? என்றே எல்லோரும் கேட்கிறார்கள். ஜப்பானியர் களை எதிர்த்துப் போராட வேண்டுமென்று எண்ணிக் கொண் டிருப்பதோடு ஜனங்கள் நின்று விடவில்லை; போராடி வெற்றிகாண வேண்டுமென்று உறுதியும் பூண்டிருக்கிறார்கள்; வெற்றி காண்போம் என்ற நம்பிக்கையும் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஜாதிக்குத் தோல்வி ஏற்படுமா?.
இந்த யுத்தமானது, சீனாவில் என்றுமில்லாத ஒற்றுமையை உண்டுபண்ணி யிருக்கிறது. முந்தி, மாகாணத்திற்கு மாகாணம் வித்தியாச முண்டு. ஒரு மாகாணத்தான் மற்றொரு மாகாணத்தானை அந்நியன் போலவே கருதி வந்தான். இப்பொழுது இவையெல்லாம் மறைந்து விட்டன. இந்த யுத்தத்தினால் பல மாகாணத்தவரும் நெருங்கிப் பழக வேண்டி யிருக்கிறது. ஒருவரையொருவர் தெரிந்து கொள்கிறார்கள். எல்லோரும் சீனர் என்ற உணர்ச்சி பெற்றிருக் கிறார்கள். பாஷை ஒற்றுமை ஏற்பட்டிருக்கிறது. பரம்பரையாக அனுசரித்து வந்த அநேக பழக்க வழக்கங்கள் மாறியிருக்கின்றன. சமூகநலன், வகுப்புநலன் ஆகிய அனைத்தும் தேசநலன் என்பதில் ஐக்கியமாகி விட்டிருக்கின்றன. பணக்காரன் - ஏழை, கிராமவாசி-நகரவாசி, படித்தவன் - பாமரன் முதலிய வித்தியாசங்களெல்லாம் இப்பொழுது மிகவும் குறைந்திருக்கின்றன.
இங்ஙனம் சமுதாய ஒற்றுமை ஏற்பட்டிருப்பதோடு கூட, சீனாவில் பல அரசியல் கட்சிகள் இருந்தனவல்லவா, பொது வுடைமைக் கட்சி, தேசீய அபேதவாதக் கட்சி, அபேதவாத ஜன நாயகக் கட்சி, இளைஞர் கட்சி முதலிய கட்சிகளெல்லாம் இப் பொழுது, தற்காலிகமாகவாவது, தங்களை கோமிண்டாங் கட்சியில் ஐக்கியப் படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த அரசியல் கட்சிகளின் ஒற்றுமையைப் பற்றி ஏற்கனவே நாம் கூறியுள்ளோம்.1 ஸன் யாட் ஸென்னின் ஸான் மின் ஜூயி கொள்கைகளை இந்த அரசியல் கட்சிகள் யாவும் அங்கீகரித்துக் கொண்டிருக்கின்றன. ஜப்பானிய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடி, சீனாவின் தனி உரிமையைக் காப்பாற்ற வேண்டுமென்ற ஒரே லட்சியந் தான் இந்த எல்லாக் கட்சிகளுக்கும் இருக்கிறது. அப்படியிருக்க இவைகளுக்குள் இந்த யுத்த காலத்தில் பிளவு ஏன்? என்று ஒவ்வொரு சீன அரசியல்வாதி யும் இப்பொழுது கேட்கிறான். நாம் ஒன்றுபட்டிருந் தோமானால், இரும்புச் சங்கிலிக்கோ, துன்பத்துக்கோ பயப்பட வேண்டிய தில்லை. ஒன்று சேர்ந்து முன்னேறுங்கள். நாம் செய்கிற யுத்தம் எல் லோருக்கும் பொதுவானது, சுதந்திர பாதையில் நாம் ஒன்று சேர்ந்தே செல்வோம் என்பது ஒரு சீன தேசீயப் பாட்டு.
அரசாங்கமென்று சொன்னால், வரி வசூலிக்கும் இயந்திர மென்றும், காவல் செய்யும் போலீகாரனென்றும் ஜனங்கள் கருதி வந்தார்கள் முந்திய சீனாவில். அரசாங்கத்தைக் கண்டு ஒருவித அச்சம் ஏற்பட்டிருந்தது ஜனங்களுக்கு. அரசாங்க உத்தியோக தர்கள், தங்களை ஆளும் அதிகாரி களாக நினைத்துக் கொண்டி ருந்தார்களே தவிர, தாங்கள் ஜனங்களுக்கு நன்மை செய்யக் கடமைப் பட்டவர்கள் என்பதை மறந்திருந்தார்கள். இப்பொழுது இவையெல்லாம் அடியோடு மாறியிருக்கின்றன. ஜனங் களுக்கும் அரசாங்கத்திற்கும் அதிகமான ஒற்றுமை ஏற்பட்டிருக்கிறது. யுத்தங்காரணமாக நிலவரி, ஏறக்குறைய ஒன்றுக்கு இரண்டு மடங்கு அதிகப் பட்டிருக்கிறது; விலைவாசிகள் ஏறியிருக்கின்றன; பேச் சுரிமை, எழுத்துரிமை முதலியன ஓரளவு கட்டுப்படுத்தப் பட்டிருக் கின்றன; பொதுவாக அன்றாட வாழ்க்கை யென்பது இப்பொழுது ஒரு கடின சாதனையாக இருக்கிறது. ஆனால் ஜனங்கள் இவை களைப் பொருட் படுத்தவில்லை; தாங்களே வலிய இந்த நிர்ப்பந்தங் களை யெல்லாம் விதித்துக் கொண்டிருப்பதாகக் கருதிநடந்து கொள்கிறார்கள். அரசாங்கம், தங்களுடையதென்ற உணர்ச்சி இவர்களுக்குஏற்பட்டிருக்கிறது. இந்த உணர்ச்சியை மதித்து அரசாங்கமும் நடந்து கொள்கிறது.
சுருக்கமாக இந்த யுத்தமானது சீனர்களே ஒரே ஜாதி யினராக்கி யிருக்கிறது. அங்குப் பேசுவது ஒரே தலைவன்; இயங்குவது ஒரே அரசாங்கம்; அந்த அரசாங்கத்தை இயக்குவது ஒரே அரசியல் கட்சி - கோமிண்டாங் கட்சி.
மற்றும் இந்த யுத்தமானது, சீன சமுதாயத்தின் மீது படிந்திருந்த அநேக மாசு மறுக்களைத் துடைத்திருக்கிறது. தவறு செய்துவிட்டு அந்நிய கன்ஸெஷன் பிரதேசங்களுக்குத் தப்பிச் சென்று விடலாமென்ற எண்ணம் இப்பொழுது அடியோடு போய் விட்டது. தேசத்துரோகத்தை, கருணை என்ற மூடிபோட்டு மறைக்கிற வழக்கத்தை அரசாங்கத்தாரும் ஜனங் களும் அடியோடு கைவிட்டு விட்டார்கள். புதுமையைப் பழித்துரைத்து வந்த மனப்பான்மை மறைந்து விட்டது. உதைத்த காலுக்கு முத்தமிடுவது பெருந்தன்மை யின் அறிகுறி என்ற அடிமை எண்ணம் அகன்றுவிட்டது. இங்ஙனம் இந்த யுத்தமானது, ஆக்க வேலைகளோடு அழிவு வேலை களுக்கும் காரணமாயிருந்து, புதிய சீனாவை சிருஷ்டித்துக் கொண்டு வருகிறது.
இந்த சிருஷ்டியானது எவ்வளவு மகத்துவமுடையதாயிருக் கிறது? இந்த சிருஷ்டி நாடகத்தில் காட்சியளிக்கிற புத்திரர்களை இழந்த பெற்றோர்கள் எத்தனைபேர்? புனிதமான காதலைத் துறந்து விட்ட இளம் பெண்கள் எத்தனை பேர்? தேசத்திற்காக, தேசம் அடிமைப்படா மலிருக்கவேண்டு மென்பதற்காக, தங்களுடைய சர்வத்தையும் தியாகம் செய்துவிட்டு, இன்னும் தியாகம் செய்வதற்கு ஒன்றுமில்லையே யென்று ஏங்கி நிற்போர் எத்தனைபேர்? இவர்களிற் சிலரைப் பாருங்கள்.
சீனாவின் எங்கோ ஒரு மூலைக்காட்டில் தாயும் மகனும் அடங்கிய ஒரு சிறிய ஏழைக் குடும்பம். மகனுக்கு ராணுவத்தில் போய்ச் சேர வேண்டுமென்று ஆசை. தாயாரை உத்திரவு கேட்டான். குடும்பத்தைக் கவனிப்பார் ஒருவருமில்லையே யென்றாள் தாய். மகன் கூறுகிறான்: அம்மா வீட்டிலே கொள்ளைக்காரர்கள் வந்து நுழைந்து விட்டார்கள். இப்பொழுது நாம் செய்யக் கூடியது ஒன்று தான். அதாவது அவர்களை எதிர்த்துப் போராட வேண்டும், அல்லது அவர்களுக்கு அடிமையாக வேண்டும். நீ எதை விரும்பு கிறாயம்மா? தாயார் பதில் ஒன்றுஞ் சொல்ல வில்லை; மகனுக்கு விடைகொடுத் தனுப்பிவிட்டாள்.
பணக்கார குடும்பத்துச் சிறுவன் ஒருவன் ராணுவத்தில் சேர்ந்து யுத்த களத்திற்குச் செல்லவேண்டுமென்று துடித்துக் கொண்டிருந்தான். தகப்பனாரைக் கேட்டால் அனுமதி கிடைக் காதென்று தெரியும். எனவே, பெற்றோர்களுக்குச் சொல்லாமல் வீட்டை விட்டு ஓடிப்போய், பத்திரிகையில் ஒரு விளம்பரம் வெளியிட்டான்: என் அன்புள்ள தந்தையே! உங்கள் மீது அன்பில்லை என்பதற்காக நான் உங்களை விட்டுப் போக வில்லை. ஆனால் உங்களை விட தேசத்தைப் பெரிதாக மதிக்கிறேன். அதனா லேயே உங்களை விட்டுப் பிரிந்து போகிறேன்.
பொதுவுடைமை வாதிகளடங்கிய எட்டாவது படையைப் பற்றி முன்னமே கூறியிருக்கிறோ மல்லவா? இந்தப் படையினர் ஒரு சமயம் ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்குச் சென்று கொண்டி ருந்தபோது வழியில் ஒரு கிராமத்தில் தங்கும்படி நேரிட்டது. அந்த ஊரில் ஒரு நிலச்சுவான்தாரன் இருந்தான். அவன், படைத்தலை வனிடம் வந்து பின்வருமாறு விண்ணப்பம் செய்துகொண்டான்.:-ஐயா என் வீடு வாசல், பொருள், நிலம் எல்லா வற்றையும் உங்கள் ராணுவத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களையும் என்னையும் உங்கள் படையில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் அடிமைகளா யிருந்து உயிர் வைத்துக் கொண்டிருப்பதைவிட யுத்தஞ் செய்தாவது இறந்து போவது நல்லதல்லவா? படைத்தலைவன், இவனது இரண்டு பிள்ளைகளை மட்டும் ராணுவத்தில் சேர்த்துக்கொண்டு, நிலம், வீடு, பணம் முதலியவற்றைக் கிராமப் பாதுகாப்புக்கு உபயோகப் படுத்துமாறு கூறினான்.
சூ சௌ என்ற ஒரு நகரத்தில் ஒரு சிறிய குடும்பம். கணவனும் மனைவியும் அன்னியோன்னியமாகவே வாழ்ந்து வந்தார்கள். ஆனால் கணவன் கொஞ்சம் பண ஆசை பிடித்தவன். இதற்காகத் தேசத் துரோகமான ஒரு காரியத்தைச் செய்துவிட்டான். அதாவது, சீனத் துருப்புகள் நிறைந்த ஒரு ரெயில்வண்டி, ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்குச் சென்று கொண்டிருந்தது. இந்தத் தகவலை இவன் ஜப்பானியர் களுக்குத் தெரிவிக்க, அவர்கள், ஆகாய விமானங் களிலிருந்து குண்டு போட்டு இந்த வண்டியையும் இதிலிருந்த யுத்த தளவாடங்களையும் நாசமாக்கிவிட்டார்கள். இதனை அறிந்த மேற்படி பெண்மணி இப்படியெல்லாம் செய்யலாமா? என்று தன் புருஷனைக் கண்டித்தாள். அவன் கேட்கிற பேர்வழியாயில்லை. உடனே துரோகி, துரோகி யென்று கூச்சலிட ஆரம்பித்தாள். அண்டை அயலில் இருந்தவர்கள் ஓடிவந்து விசாரித்தார்கள்; புருஷனைக் கைது செய்வித்தார்கள். அவன், விசாரணையின் பயனாகச் சுட்டுக் கொல்லப்பட்டான். தேசத் துரோகத்திற்குத் தகுந்த தண்டனை கிடைத்துவிட்டது. பின்னர், பழக்க மான சிலபெண்கள் வந்து மேற்படி பெண்மணியைத் துக்கம் விசாரித் தார்கள். ஆனால் அவள் சிறிது கூட வருத்தங்காட்டவில்லை. உபசாரம் கூறிய பெண்களுக்குச் சொன்னாள்:- என் கணவன் இறந்துவிட்டதற்காக நான் சிறிதுகூட விசனப்படவில்லை. ஏனென்றால் நான் ஒரு கணவனை இழந்து விட்டே னென்பது வாதவம். ஆனால் எனது நாட்டாரில் பலரைக் காப்பாற்றினேனல்லவா? நான் துக்கப்படு வானேன்? இப்பொழுதே எனக்கு மனச்சாந்தி ஏற்பட்டிருக்கிறது.
பொதுவுடைமைக் கட்சியின் முக்கிய தலைவர்களாகிய சௌ என் லாய், மா த்ஸே துங், சூதேஹ் ஆகியோர் சிறந்த தியாகிகள் என்பது எல்லோரும் அறிந்த விஷயம். ஆனால் அவர்களுடைய தருமபத்தினி களின் தன்னலமற்ற சேவையைப் பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். தங்கள் கணவன்மார்களுடைய தியாகத்திற்கு எந்த விதத்திலும் தங்களுடைய தியாகம் குறைந்ததல்ல வென்பதை இவர்கள் பல சந்தர்ப்பங்களில் நிரூபித்திருக்கிறார்கள்.
சௌ என் லாயின் மனைவி டாங் யிங் சாவோ, விவாகத்திற்கு முன்னர் ஒரு பள்ளிக்கூட ஆசிரியையாக இருந்தாள்.1 பின்னர் செம் படையில் சேர்ந்து கொண்டாள். இந்தச் செம்படையினர் 1934 -ஆம் வருஷம் கியாங்க்ஸி மாகாணத்திலிருந்து நீண்ட பிரயாணம் தொடங்கிய போது2 இவள் நோய்வாய்ப்பட்டுக் கிடந்தாள். க்ஷயரோகம். இதனால் மேற்படி பிரயாணத்தின் முதல் நான்கு மாத காலம் டோலியில் வைத்து தூக்கியே செல்லப்பட்டாள். ஆனால் பின்னர், பிறருக்குத் தான் சுமையா யிருக்கக் கூடாதென்று சொல்லி நடந்தே வழி கடந்தாள். இவளுடைய பிரயாண அனுபவத்தை இவளே கூறட்டும்:- நாங்கள் ஓர் ஊரில் தங்கி எங்கள் மூட்டை முடிச்சுகளை இறக்கியவுடன், அவ்வூர்ப் பெண்களை ஒன்றுசேர்த்து ஒரு கூட்டம் போட்டு, ஜப்பானியர்கள் நாட்டின் மீது படை யெடுத்து வருகிறார்களென்றும், அவர்களை எதிர்த்துப் போராட, செம்படையானது வடமேற்கு நோக்கிச் செல்கிறதென்றும் எல்லோருக்கும் எடுத்துச்சொல்வோம். அங்குள்ள, பிறரைச் சுரண்டி வாழும் பெரிய மனிதர்களைக் கைது செய்வித்து, அவர்களுடைய குற்றங் களை விசாரிக்கச் செய்வோம். எங்கள் படையிலே காய மடைந்தவர் களுக்குச் சிகிச்சை செய்வதுதான் எங்களுக்கு மிகவும் கடினமாயிருந்தது. காயமடைந்தவர்களைத் தூக்கிக்கொண்டு வருவோர், மற்றப் படையினருடன் தொடர்ந்து வரமுடிவதில்லை. கியாங்க்ஸியை விட்டு நாங்கள் புறப்பட்டபோது, தூக்கிவரும் படையுடனேயே புறப்பட்டோம். ஆனால் க்வைசௌ பிரதேசம் வந்ததும், கூலியாட்களை அமர்த்திக் கொள்ள வேண்டிய தாயிருந்தது. அவர்களோ இடையிடையே சொல்லிக் கொள்ளாமல் ஓடிவிட்டனர். எனவே, படையைச் சேர்ந்த பெண்களே, காயம் அடைந்தவர்களைத் தூக்கிச்செல்ல வேண்டியதாயிற்று. இது மிகவும் கஷ்டமாகவே இருந்தது. தவிர, எங்கள் படையில் பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் சுமார் நூறு இருந்தன. இவைகள் நடந்தே வந்தன; ஆம், தங்களுடைய சாமான்களைத் தாங்களே தூக்கிக் கொண்டு! மற்றும், வழி நெடுக நாங்கள் நடத்திக் கொண்டு வந்த நாடகங்கள், கோஷ்டிகானங்கள் முதலியவற்றில் இந்தக் குழந்தைகள் கலந்து கொண்டன.
இவளுடைய உள்ளத்தில் உற்சாகம் ததும்பிக்கிடந்தது. இந்த உற்சாகத்தினாலேயே இவள் தனது க்ஷயநோயைப் போக்கிக் கொண்டு விட்டாள். தனது நீண்ட பிரயாணத்தின்போது இவள் பல தடவைகளில், ஆகாரம் கிடைக்காமையால் பட்டினி கிடந் திருக்கிறாள். கேளுங்கள் இவள் சொல்வதை:- வெறும் புல் நிறைந்த பிரேதசங்களில் நாங்கள் செல்கிறபோது, பத்து பன்னிரண்டு நாட் களுக்கு மேலாகச் சேர்ந்தாற் போல் எங்களுக்குப் புல்லைத் தவிர வேறு ஆகாரம் கிடைக்காது. க்வைசௌ பிரதேசத்தில், நிலங்களி லிருந்து கொஞ்சம் நெல் கிடைத்தது. ஆனால் நாங்கள் கொண்டு வந்த சமையல் பாத்திரங்களைக் கள்ளர்கள் கொள்ளை கொண்டு போய் விட்டார்கள். ஆகையால் அகப்பட்ட நெல்லைக் குத்தி சமையல் செய்து சாப்பிடமுடியவில்லை. ஆம், நாங்கள் பலதடவை பட்டினி கிடந்திருக்கிறோம். இந்தப் பட்டினியிலும் நீங்கள் சந்தோஷமாயிருந்ததன் ரகசியமென்ன? எங்களுடைய வருங் காலம் பிரகாசமாயிருந்தது! அதிலே நாங்கள் நம்பிக்கைகொண்டி ருந்தோம். நாங்கள் போகிற வழி சரியான வழியென்று எங்களுக்கு நிச்சயமாகத் தெரிந்திருந்தது. எல்லா இடையூறுகளையும் சமாளித்துக் கொண்டு விடுவோம் என்ற தைரியமும் எங்களுக்கு இருந்தது. ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்1என்ற வள்ளுவர் வாக்குக்கு இலக்காயிருக்கிறது இந்த அம்மையின் வாழ்க்கை.
மா த்ஸே துங்கின் மனைவி ஹோத்ஸே சுன் ஒரு குடியானவப் பெண். சென்ற பத்து வருஷகாலமாகச் செம்படையின் ஒரு பகுதிக்குத் தலைவியாயிருக்கிறாள். அநேகமாக ராணுவ உடையில்தான் இவளைப் பார்க்கலாம். பல போராட்டங்களில் கலந்து கொண்டி ருக்கிறாள்; வெற்றியும் கண்டிருக்கிறாள். இங்ஙனம் போர் செய்வதில் திறமைசாலி யாயிருப்பதோடு, இவள் சிறந்த தாதியாகவும் இருக்கிறாள். காயமடைந்தவர்களில் எத்தனையோ பேருக்கு இவள் சிகிச்சை செய்திருக்கிறாள்; எத்தனையோ பேரைத் தனது தோளின் மீது தூக்கிக் கொண்டுபோய் ராணுவ ஆபத்திரியில் கொண்டு விட்டிருக்கிறாள். செம்படையினரின் மேலே சொன்ன நீண்ட பிரயாண ஆரம்பத்தின் போது, இவள் தேகத்தின் இருபது இடங் களில் குண்டுத்துணுக்கு பட்ட காயங்கள் இருந்தன. இவற்றில் எட்டு காயங்கள் மிகவும் கடுமையானவை. போதாக் குறைக்கு, கர்ப்பம். இந்த நிலையில்தான் இவள் மேற்படி பிரயாணத்தில் கலந்து கொண்டாள். வழியில் பிரசவமாயிற்று. குழந்தையை ஒரு குடியா னவர் வீட்டில் விட்டு விட்டு, மேலே தொடர்ந்து பிரயாணத்தைச் செய்தாள். பிறகு சிறிது காலங் கழித்து, தன் குழந்தையைத் தன்னிடம் தருவித்துக் கொள்ள முயன்றாள். முடியவில்லை. நாளது வரையில் இவளால் தன் குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லையென்று சொல்லப் படுகிறது. தாய்மை உள்ளம் தவிக்காமலிருக்குமா? ஆனால் அதனை தேசபக்தியினால் மூடிவைத்திருக்கிறாள் இந்த வீரப் பெண்.
காங் கே சிங் என்பது சூதேஹ் மனைவியின் பெயர். பரம ஏழைக் குடும்பத்திலே பிறந்தவள். ஒரு நிலப்பிரபுவின் வீட்டில் அடிமைத் தொழில் செய்து கொண்டிருந்தாள். 1927-ஆம் வருஷம் அவ்வீட்டிலிருந்து தப்பியோடிவந்து செம்படையில் சேர்ந்து கொண்டாள். அப்பொழுது இவளுக்கு வயது பதினான்கு. யுத்த முறைகளை நன்றாகப் பயின்றாள். பொதுவுடைமை வாதிகளை அடக்க, அப்பொழுதைய அரசாங்கம் எடுத்துக் கொண்ட பல நட வடிக்கைகளை இவள் எதிர்த்துப் போராடி வெற்றி கண்டிருக் கிறாள். சூதேஹ்யை இவள் விவாகம் செய்து கொண்டது 1928-ஆம் வருஷத்தில். செம்படையில் சேர்ந்து கொண்டபோது இவளுக்கு எழுதப்படிக்கத் தெரியாது. ஆனால் 1939-ஆம் வருஷம் - இருபத் தாறாவது வயதில் - யேனான் ராணுவ சர்வகலாசாலையில் அரசியல் சாஸ்திர போதகாசிரியப் பட்டம் பெற்றாள்!1
இப்படிப்பட்ட வீர மாதர்களையும் இளைஞரேறுகளையும் கொண்ட சீனாவுக்குத் தோல்வி ஏது?
நாம் யாரையும் அடக்கியாள மாட்டோம்; ஆனால் யாரும் நம்மை அடக்கியாள அனுமதிக்க மாட்டோம். என்பது ஸன் யாட் ஸென்னின் வாக்கு. இந்த வாக்கைக் காப்பாற்றுவதற்காகவே சீனா பல வருஷகாலம் பொறுமையோடிருந்தது; இப்பொழுது சில வருஷ காலமாகப் போராடி வருகிறது. இதில் தனக்கு வெற்றியே தவிர தோல்வி யில்லையென்ற நம்பிக்கை அதற்குப் பரிபூரணமாக இருக்கிறது. அதன் கொடியிலே சூரியன் பிரகாசித்துக் கொண்டி ருக்கிற வரையில், அதன் தாய்மையிலே தூய்மை இருக்கிற வரையில், இன்றைய நாகரிகத்தை அழிவினின்று காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணம் அதன் உள்ளத்திலே இருக்கிற வரையில் அதற்குத் தாழ்வே வராது; வாழ்வு நிச்சயம். அதன் மக்கள் ஒரே குரலில் பின்வரும் தேசீய கீதத்தை முழக்கிக் கொண்டிருப்பார்கள்:-
ஸான் மின் ஜூயி
நமது கட்சியின் லட்சியம் இதுவே,
குடியரசதனை மறுபடி யாக்கவும்,
சகோதரத்துவமே சாரவும் உலகில்
முயலுமின் தோழரே முன்னணிப் படைஞராய்.
என்றும் சிரத்தை குன்றுதலின்றி
மூலாதாரம் மேலாய்க் கொள்வீர்.
முயற்சியும் தைரியமும் மொழியும் உண்மையும்
பக்தியும் இதயமும் பயிலும் எண்ணமும்
ஒரே வகைத்தாகக் குறித்தே
இறுதி வரைக்கும் எழுமின் தோழரே!
அனுபந்தம் - 1
சீனாவின் ஆதீனத்திற்குட்பட்ட பிரதேசங்கள்.
மாகாணங்கள்
1. கியாங்க்ஸீ 41,818 3,64,69,321
2. சேக்கியாங் 39,780 2,17,76,045
3. ஆன்ஹ்வை 51,888 2,27,04,538
4. கியாங்க்ஸி 77,281 1,37,94,159
5. ஹ்யூப்பே 80,169 2,46,58,988
6. ஹ்யூனான் 1,05,467 2,71,86,730
7. ஷெக்குவான் 1,66,485 4,64,03,006
8. ஸிக்காங் 1,43,457 17,55,542
9. ஷாண்டுங் 69,198 3,80,99,741
10. ஷான்ஸி 60,491 1,16,01,026
11. ஹோனான் 66,676 3,18,05,621
12. ஹோப்பை 59,341 2,86,44,437
13. ஷென்ஸி 72,334 97,99,617
14. பூக்கியென் 61,259 1,19,90,441
15. குவாங்டுங் 83,918 3,23,38,795
16. குவாங்ஸி 83,985 1,42,54,609
17. யுன்னான் 1,23,539 1,08,53,359
18. க்வைசௌ 69,278 1,04,87,367
19. கான்ஸு 1,45,930 62,55,467
20. சிங்ஹாய் 2,69,117 15,12,823
21. நிங்க்ஸியா 1,06,115 7,35,763
22. ஸிங்கியாங் 7,05,769 43,60,020
23. ஸுயி யுவான் 1,12,493 20,83,693
24. சாஹார் 1,07,677 23,05,957
25. ஜிஹோல் 74,278 21,84,723
26. லியோனிங் 1,24,224 1,52,53,694
27. கிரீன் 1,09,384 73,54,459
28. ஹைலுங்கியாங்1 1,74,554 37,49,367
விசேஷப்பிரதேசங்கள்
1. மங்கோலியா 6,25,783 8,80,000
2. திபேத்து 4,69,294 7,50,000
வெளிநாடுகளில் வசிக்கும் சீனர்கள், உத்தேசமாக: 85,46,374
சீனாவிலுள்ள சீன மொழியினர் அல்லாதார் சுமார் : 260 லட்சம்.
அனுபந்தம் - 2
சீனாவில் கொண்டாடப் பெறும் முக்கியமான
சில தேசீய திருவிழாக்கள்
ஜனவரி 1 குடியரசு தாபிதத் திருநாள்
பிப்ரவரி 5 விவசாயிகள் திருநாள்
பிப்ரவரி 19 நவஜீவன இயக்கத்தின் திருநாள்
மார்ச்சு 8 சர்வதேச திரீகள் திருநாள்
மார்ச்சு 12 ஸன் யாட் ஸென் இறந்த நாள்
மார்ச்சு 29 *åu® திருநாள்
ஏப்ரல் 4 குழந்தைகள் திருநாள்
ஏப்ரல் 5 சங்கீதத் திருநாள்
மே 1 சர்வதேசத் தொழிலாளர் திருநாள்
மே 4 இளைஞர் திருநாள்
மே 5 கவிஞர் திருநாள்
ஜூன் 3 அபினியை ஒழித்த திருநாள்
ஜூன் 6 இன்சினீர்கள் திருநாள்
ஜூலை 1 தேசீய அரசாங்க தாபனத் திருநாள்
ஜூலை சர்வதேசக் கூட்டுறவாளர் திருநாள் (முதல் சனிக்கிழமை)
ஆகட் 27 கன்பூஷியஸ் பிறந்த நாள் ஆசிரியர் திருநாள்
செப்டம்பர் 1 பத்திரிகாசிரியர் திருநாள்
தேகப்பயிற்சித் திருநாள்
அக்டோபர் 10 தேசியத் திருநாள், (அதாவது புரட்சி தொடங்கிய திருநாள்)
நவம்பர் 12 ஸன் யாட் ஸென் பிறந்த நாள்
டிசம்பர் 25 தேசீயப் புதுமலர்ச்சித் திருநாள்
இக்குறியிடப்பெற்றவை விடுமுறை நாட்கள்.
இந் நூல் எழுதுவதற்குத் துணையாயிருந்த சில நூல்கள்
1 China - Story of the Nations Series - _Robert K. Douglas_
2 China - _E.H. Parker_
3 The Pageant of Chinese History - _Elizabeth Seeger_
4 A Short History of Chinese Civilization - _Richard Wilhelm_
5 A Short History of Chinese Civilization - _Tsui Chi_
6 China in the Family of Nations - _Henry T. Hodgkin_
7 As the Chinese See Us - _T.G. Selby_
8 Out in China - _Mrs. Archibald Little_
9 The Continent of Asia - _Lionel W. Lyde_
10 China Struggles for Unity - _J.M.D. Pringle_
11 Mowrer in China - _Ansel Mowrer_
12 Modern Chinese History - Political Economic, and Social - _Prof. Tan Yun Shan_
13 Chinese Unity - Shen Shih - _Hua_
14 Foreign Notices of South India - _K.A. Nilakanta Sastri_
15 My Country and My People - _Lin Yu-tang_
16 The Chinese People - their Past, Present and Future - _A.S. Elwell-Sutton_
17 The International Relations of the Chinese Empire - 3 Vols. - _H.B. Morse_
18 Europe and China - _G.F. Hudson_
19 A History of the Far East in Modern Times
- _Harold M. Vinacke_
20 A History of the Modern and Contemporary Far East - _P.H. Clyde_
21 China Awakened - _M.T.z. Tyau_
22 Understanding China - _Harold B. Rattenburg_
23 China Changes - _Gerald Yorke_
24 Affairs of China - _Sir Eric Teichman_
25 The Reconquest of Asia - _O.D. Rasmussen_
26 The Awakening of Asia - _H.M. Hyndman_
27 Manchuria - The Cockpit of Asia
_-Col. P.T. Etherton and H. H. Tiltman_
28 The Tinder Box of Asia - _George E. Sokolsky_
29 The Problem of China - _Bertrand Russel_
30 Peasant Life in China - _Hsio T’ung Fei_
31 Village and Town Life in China _- Y.K. Leong and L.K.Tao_
32 The Chinese Revolution - _A.N. Halcombe_
33 Forty years in China - _Sir Mevrick Hewelett_
34 China’s Struggle with the Dictators - _O.M. Green_
35 The Men of the Burma Road - _Chiang Yee_
36 Future of South East Asia - _K. M. Panikkar_
37 Makers of New China - _S.S. Batliwala_
38 The Birth of New China - _Arthur Clegg_
39 China’s Millions - _Anna Louise Strong_
40 People’s War - _I. Epstein_
41 China Fights Back - _Agnes Smedley_
42 Battle Hymn of China - _Agnes Smedley_
43 War Time China as seen by Westerners
44 War Torn China - _Kamala Devi Chattopadyaya_
45 Crisis in China - _James Bertram_
46 What War Means
- _The Japanese Terror in China - H.J. Timperley_
47 The Fight for the Republic of China - _B.L.Putnam Weale_
48 My Experiences in China - _M.N. Roy_
49 A Leaf in the Storm - _Lin Yu-tang_
50 The Japanese New Order in Asia - _Paul Einzig_
51 China and Japan - _R.I.I.A._
52 Interviewing Japan - _A. Moore._
53 Japan’s Gamble in China
54 Japan’s Continental Adventure - _Ching-Chun-Wang_
55 Japan’s Kampf - _Jayadeva_
56 Chinese Handbook - _1937-1943_
57 Why the Fighting in Shanghai
58 China Builds for Democracy - _Nym Wales_
59 The International Development of China - _Sun Yat Sen_
60 China After Five Years of War
One World - _Wendell L.Willkie_
61. Chunking Diary - _D.F. Karaka_
etc., etc.
வரலாற்றறிஞர் வெ. சாமிநாத சர்மா நூல்கள்
தலைவர்கள் வரிசை
திரட்டு 1 1. மகாத்மா காந்தி
திரட்டு 2 2. பண்டித மோதிலால் நேரு
3. லோகமான்ய பாலகங்காதர திலகர்
4. காந்தி யார்
5. காந்தியும் ஜவஹரும்
6. காந்தியும் விவேகானந்தரும்
திரட்டு 3 7. நான் கண்ட நால்வர்
8. ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஒரு தீர்க்கதரிசி
திரட்டு 4 9. ஐசக் நியூட்டன்
10. எடிசன்
11.. சர்.சி.வி. இராமன்
12. ஜெகதீ சந்திரபோ
13. பிரபுல்ல சந்திர ரே
14. டார்வின்
திரட்டு 5 15. மாஜினி
16. மாஜினியின் மனிதன் கடமை
17. மாஜினியின் மணிமொழிகள்
திரட்டு 6 18. உரூசோ
19. உரூசோவின் சமுதாய ஒப்பந்தம்
திரட்டு 720.ï£y®
21. முசோலினி
திரட்டு 8 22. கார்ல் மார்க்
23. சன்யாட்சன்
திரட்டு 9 24. அபிசீனிய சக்ரவர்த்தி
25. கமால் அத்தாத் துர்க்
26. சமுதாய சிற்பிகள்
கடித வரிசை
திரட்டு 10 27. மகனே உனக்கு
28. அவள் பிரிவு
29. பிளேட்டோவின் கடிதங்கள்
30. வரலாறு கண்ட கடிதங்கள்
31. பாரதமாதாவின் கடிதங்கள்
நாடக வரிசை
திரட்டு 11 32. பாணபுரத்து வீரன்
33. அபிமன்யு
34. மனோதருமம்
35. உத்தியோகம்
36. உலகம் பலவிதம்
சுதந்திரம் வரிசை
திரட்டு 12 37. மானிட ஜாதியின் சுதந்திரம்
38. சுதந்திர முழக்கம்
39. சுதந்திரத்தின் தேவைகள் யாவை?
நாட்டு வரிசை
திரட்டு 13 40. பெயின் குழப்பம்
41. நமது ஆர்யாவர்த்தம்
42. ஆசிய உலக சமாதானம்
திரட்டு 14 43. ஜெக்கோலோவாகியா
44. பாலதீனம்
திரட்டு 15 45. சோவியத் ருஷ்யா
திரட்டு 16 46. பர்மா வழி நடைப்பயணம்
47. பிரிக்கப்பட்ட பர்மா
திரட்டு 17 48. புதிய சீனா
திரட்டு 18 49. ருஷ்யாவின் வரலாறு
திரட்டு 19 50. சீனாவின் வரலாறு
திரட்டு 20 51. கிரீ வாழ்ந்த வரலாறு
அரசியல் வரலாறு
திரட்டு 21 52. 1919 (அ) பஞ்சாப் படுகொலை
திரட்டு 22 53. பெடரல் இந்தியா
54. சமதான இந்தியா
55. இந்தியாவின் தேவை
56. பார்லிமெண்ட்
57. நமது தேசிய கொடி
திரட்டு 23 58. பிளேட்டோவின் அரசியல்
திரட்டு 24 59. அரசியல் வரலாறு
60. ஐக்கிய தேசதாபனம்
61. அரசாங்கத்தின் பிறப்பு
62. பிரஜைகளின் உரிமைகளும் கடமைகளும்
63. அரசியல் கட்சிகள்
திரட்டு 25 64. ராஜதந்திர- யுத்த களப் பிரசங்கங்கள்
திரட்டு 26 65. புராதன இந்தியாவில் அரசியல்
பொது
திரட்டு 27 66. கௌரிமணி
67. தலை தீபாவளி
68. Essentials of Gandhism
கட்டுரை இலக்கியம் (வாழ்வியல் நூல்கள்)
திரட்டு 28 69. நமது பிற்போக்கு
70. எப்படி வாழ வேண்டும்
71. நாடும் மொழியும்
72. சுதந்திரமும் சீர்திருத்தமும்
திரட்டு 29 73. நகைத்தல் நல்லது
74. பெண்மையிலேதான் வாழ்வு
75. மனிதன் யார்?
76. இக்கரையும் அக்கரையும்
திரட்டு 30 77. கட்டுரைக் களஞ்சியம்
78. உலகக் கண்ணாடி
79. நாடாண்ட நங்கையர்
திரட்டு 31 80. வெ.சாமிநாத சர்மா வாழ்க்கை வரலாறு
கருத்துகள்
கருத்துரையிடுக