விடியாத இரவுகள்
சிறுகதைகள்
Backவிடியாத இரவுகள்
கோவிலூர் செல்வராஜன்
-------------------------------------------------
ஈழத்திலே பாடகராய், நடிகராய், வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளராய், கலைத்
துறையிலும் கவிஞராய், கதைஞராய், நாடகாசிரியராய், பத்திரிகையாளராய்
இலக்கியத் துறையிலும் தமது படைப்பு ஆற்றல்களை ஊன்றிய கோவிலூர் செல்வராணன்
இன்று நோர்வே நாட்டிலே வாழ்கிறார். இருப்பினம் தமிழ் உணர்வுகளினதும்
ஆக்கங்களினதும் நிரந்தர உபாசகராகவே தம்மை நிறுவியுள்ளார். நோர்வே நாட்டு
வாழ்க்கைக் கோலங்கள் அதிலே தமிழர் எதிர்நோக்கும் அவலங்கள் ஆகியவற்றை நல்ல
சிறுகதைகளாகப் படைத்துள்ளார். 'விடியாத இரவுகள்' அத்தகைய படைப்புகளையும்
உள்ளடக்கிய அவருடைய முதலாவது சிறுகதைத் தொகுதியாகும்.
எஸ்.பொ.
இவ்வாறு அறிமுகமாகும்
கோவிலூர் செல்வராஜனின்
விடியாத இரவுகள்
-------------------------------------------------
விடியாத இரவுகள்
கோவிலூர் செல்வராஜன்
இந்த பதிப்பு இந்தியா மற்றும் இலங்கையில் மட்டுமே விற்பனைக்கு உரியது.
அட்டை அமைப்பு
கு. புகழேந்தி
மித்ர வெள்யீடு
_____________________________
சிட்னி-சென்னை-மட்டக்களப்பு
Mithra & Books
Copyright Mithra Publications 1997
All rights reserved
Apart from any fair dealing for the purpose of private study, research,
criticism or review as permitted under the Copyright Act, no part may be
reproduced, stored in a retrieval system, or transmitted, in any form,
or any means, electronic machanical or photocopying, recording or
otherwise without prior written permission from the author
National Library of Australia
Cataloguing in Publication data
VADIYATHA IRAVUKAL
A Collection of Short-Stories in Tamil
ISBN 1876 195 185
First Publiched in Mithra Books
18th February 1997
Cover design by K. PUGAZHENTHI
Published by Dr. Dr. PON ANURA
Mada in India by Mithra Book Makers
மித்ர வெளியீடு 23
முதலாவது பதிப்பே மித்ர நூலாக வெளிவருவது
18, பிப்ரவரி 1997
விலை: ரூ.40 பக்கங்கள்: 146
வடிவமைப்பு: இளம்பிறை ரஹ்மான்
-----------------------------------------------------
என்னுள்
என்றும்
ஆதர்ச ஜோதியாய்
வாழும்
என் அப்பா
கணபதிப்பிள்ளை இராசையா
அவர்களின்
மாறாத நினைவுகளுக்கு
இந்நூல்
படைப்பு
----------------------------------------------------------
பொருளடக்கம்
புதிய தலை முறை...16
அச்சங்கள்...29
கூண்டுக்கு வெளியே...42
தொடரும் போராட்டங்கள்...54
இரு கட்சிக்கும் பொது...63
திருப்பி வந்தமை...87
கனவுலகச் சுகங்கள்...93
விடியாத இரவுகள்...108
அப்பா...129
--------------------------------------------------------------------
பதிப்புரை
'புலம்பெயர்ந்தோர் தமிழ் இலக்கியம்' என்பது, இப் பொழுது, தமிழ் இலக்கிய
உலகில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகி விட்டது. இருப்பத்தியோராம்ட நூற்றாண்டின்
தமிழ் இலக்கிய வளத்திற்கு இது புதிய சுருதியும் பரிமாணமும் சேர்க்கும்
என்கிற நியாயமான எதிர்பார்ப்பும் வளர்ந்து வருகின்றது.
இந்நிலையில் புலம் பெயர்ந்தோருடைய புதிய புனைவுகள் நூலுருப் பெற்றுத்
தாராளமாகக் கிடைத்திடல் வேண்டும், புதிய புனைவுகள் மட்டுமின்றி,
புதியவர்களுடைய படைப்புகளும் பெருகிடல் வேண்டும். இதனைக் காரிய
சாதனையாக்கும் நிறுவணமாக 'மித்ர வெளியீடு' வளர்ந்து வருகின்றது.
மேற்கு ஐரோப்பிய நாடுகளிலே வதிவிடம் பெற்று வாழும் ஈழத்தமிழர்கள்
மத்தியிலே, புனைகதைத் துறையிலே ஆர்வம் காட்டி உழைப்பவர்களுடைய எண்ணிக்கை
ஆண்டு தோறும் பெருகி வருதல் உவகைக்குரியது, நோர்வே நாட்டினைப்
பகைப்புலமாகக் கொண்டு எழுதப் பட்ட 'அழிவின் அழைப்பிதழ்' என்னும் நாவல்
தமிழ் வாசகர்கள் மத்தியிலே நியாயமான வரவேற்பினைப் பெற்றது. இப்பொழுது,
நோர்வே நாட்டிலே வாழும் கோவிலூர் செல்வராஜனின் 'விடியாத இரவுகள்' என்னும்
சிறுகதைத் தொகுதியை வெளியிடுவதில் மகிழ்கின்றோம்.
'காதல், பாசம், பிரமை, பந்தம் என்பதெல்லாம் ஜ“ன்கள் தம்மைப் பாதுகாத்துக்
கொள்ளும் சுயநலத்தினால் போடும் தூண்டில்கள்...' என்று ரிச்சட் டாக்கின்ஸ்,
The Selfish Gene என்கிற தமது நூலில் 1976 இல் எழுதினார். இவை எவ்வளவுதூரம்
புலம்பெயர்ந்த தமிழர்களுடைய வாழ்க்கையிலே பொருந்தும்? இத்தகைய ஒரு
பிரக்ஞையுடன் 'விடியாத இரவுகள்' கதைகளை வாசித்தல் சுவாரஸ்யமானதாக
இருக்கும்.
டாக்டர். பொன். அநுர
mithra Publicaitons
1/2 Murra Street
Eastwood 2122
AUSTRALIA
Ph (02) 868-2567
-------------------------------------------------------------
முன்னுரை
வாழ்க்கைப் பற்றிய மதிப்பீட்டமைப்பு (Value System) பரிபூரணமாக, எல்லா
கலாச்சாரத்துக்கும் ஒத்த நிலையிலும், கால ஓட்டத்துக்கு ஈடு கொடுக்கும்
அளவிலும், இருக்க இயலாது இந்தக் கருத்துடன் மாறுபடும்போதுதான், சிக்கல்கள்
ஏற்படுகின்றன.
இச்சிக்கல்களைச் சித்திரித்து எழுதப்பட்டுள்ள கதைகள்தாம் இச்சிறுகதைத்
தொகுதி.
ஆசிரியர் நோர்வேயிலிருக்கிறார். புலம்பெயர்ந்த தமிழர், விரும்பிச்
சென்றவரல்லர்; அரசியலும் வரலாறும் சேர்ந்திழைத்த கொடுமையினால்
வெளியேறியவர். அங்கு இவரைப் போன்றவர்கள் பல்லாயிரம் பேரிருக்கின்றார்கள்.
குடும்பங்களுடன் வாழ்கின்றனர்.
தமிழர்களுக்குப் பொதுவாகவே வேர்ப்பற்று அதிகம்; காரணம், அந்நாகரிகத்
தொன்மை. இப்பழைமையே அதன் பலமாகவும், பலகீனமாகவும் அமைந்து விடுகின்றது
என்பதுதான் சரித்திரத் துயரம். பலம், தொடர்ந்து நீடிக்கும் அரசியல் நோக்கு,
ரசனை, பலகீனம், காலமாறுதல்களை எதிர்கொண்டாக வேண்டுமென்று ஏற்றுக் கொள்ள
மறுக்கிற பிடிவாதம். இதுவே தலைமுறைகளின் பண்பாடு பற்றிய கருத்து
முரண்பாடுகளுக்கு நிலைக் களன்களாக அமைந்து விடுகின்றன.
இத்தொகுதியிலுள்ள கதைகளுக்கு இதுவே பகைப் புலன்.
'குடும்பப் பந்தம்' என்பது வாழையடி வாழையாக நம் ரத்தத்தில் ஊறியிருக்கும்
'ஒரு புனித உணர்வு' என்பது தமிழ்க் கலாச்சார சித்தாந்தம். மேல் நாடுகளில்
உள்ளவர்களால், இவ்விளக்கத்தைப் புரிந்து கொள்ள முடியாது. அவர்கள் நாட்டில்
பருவ நிலைகள் அடிக்கடி மாறுகின்றன. எதுவும் நிரந்தரமில்லை. நேற்று
கிளையிழந்து, மலரிழந்துமொட்டையாக நிற்கும் மரம், இன்று புதுப் பெண்போல்
திடீரென்று பூத்துக் குலுங்குகின்றது. ஆகவே அவர்களுக்குப் பரிபூரணமாக
மதிப்பீடுகளில் அக்கறை இருக்க இயலாது. நம்முடைய கலாச்சார அளவுக் காய்களை
வைத்துக் கொண்டு, அவர்கள் பண்புகளை அளவிட முயல்வதும் தவறு.
'புதிய தலைமுறையில்' வரும் பெண், ஸ்டெல்லா, அவள், தமிழ்ப்பெண்ணா,
நோர்வேஜியப் பெண்ணா என்ற அடையாளக் குழப்பம் ஏதுமில்லாமல், நோர்வேஜியப்
பெண்ணாகவே தன்னை உணர்ந்து கொண்ட பெண் அப்படி அவள் உணர்வதற்கும் அவள்
பெற்றோர்கள் உறுதுணையாக இருக்கிறார்கள். ஆனால் திடீரென்று ஒருநாள் 'அவர்கள்
குடும்பம் தமிழ்க் குடும்பம்' என்ற பிரக்ஞை அவள் தந்தையைத்
தாக்கும்போதுதான், சிக்கல் ஏற்படுகின்றது. மகளை அடிக்கின்றார். மகளுக்கோ
'என்ன தவறு செய்தோம்' என்று புரியவேயில்லை. அவள் அவரை அக்கணத்தில்
தந்தையாகவே நோக்கவில்லை. தன்னுடைய மனித உரிமையில் குறுக்கிட்ட வேறொரு ஆள்
என்றே கொண்டு, போலீசுக்கு ஃபோன் செய்கின்றாள். 'குடும்ப பந்தம்', 'வாழையடி
வாழை', 'புனிதம்' என்ற சொற்களுக்கெல்லாம், அச்சூழ்நிலையில் அர்த்தமேயில்லை.
சிக்கலான மன உணர்வுகளைச் சிக்கலில்லாமல் ஆசிரியர் கோவிலூர் செல்வராஜன்
சொல்லியிருப்பதே கதையின் வெற்றி.
'அப்பா' என்ற கதையில், யதார்த்தத்தை அற்புதமாகப் படம் பிடித்துக்
காட்டுகிறார். 'தற்காப்பு' என்பது பொற்றோரிடத்துப் பாசம், நாட்டுப் பற்று
எல்லாவற்றைக் காட்டிலும், வலுவான விலங்கினப் பாரம்பரிய உணர்வு, விமலன்
தன்னைக் காத்துக் கொள்ள நோர்வேயில் தஞ்சம் புகுகின்றான். ஆனால் அப்பாவைப்
பற்றியோ, சொந்த ஊரைப் பற்றியோ அவனால் நினைக்காமலிக்க முடியவில்லை. அவற்றை
விஸ்கி மயக்கத்தில் ஒஸ்லோவில் அவனால் அசை போட முடிகின்றதே தவிர, வேறொன்றும்
செய்ய இயலவில்லை. இந்நிலையில், அவன் தந்தை இறந்துவிட்டார் என்ற செய்தி
வருகின்றது. அவன் அழுது தீர்ப்பதற்கு ஓர் அறையைத் தேடுகின்றான்.
இக்கதைகளில் நிகழ்வுகள், ஓவியக்காட்சிகளாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
ஆசிரியர் கோவிலூர் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. ஆசிரியர் கோவிலூர்
செல்வராஜன் எதனையும் இலட்சியப்படுத்திக் காட்டவில்லை. பக்குவமான பார்வை
என்று இதைச் சொல்ல வேண்டும்.
அன்புத் தம்பி கோவிலூர் செல்வராஜனிடமிருந்து மிகச் சிறந்த படைப்புக்களை
நாம் வருங்காலத்தில் எதிர் பார்க்கலாம்.
-இந்திரா பார்த்தசாரதி
248(ஏ), டி.டி.கே.சாலை,
சென்னை-600 018.
-----------------------------------------------------------------
என்னுரை
சமூக அக்கறைகள், இலக்கியக் கோட்பாடுகள் ஆகியன பற்றிய பக்குவங்கள்
கைவரப்பெறாதவனாக, சாதாரண அனுபவங்களுக்கு இலக்கிய உருவங்கள் கொடுக்கும்
ஆர்வத்தில் எழுத்துத் துறையில் பிரவேசித்தேன் பொதுசனத் தொடர்பு சாதனங்களிலே
எனக்கு ஏற்பட்டிருந்த தொடர்புகளினால், அவை மக்கள் மன்றங்களைச் சென்றடைந்தன.
இசைமீது எனக்கிருந்த அடிப்படைக் காதலினால், மெல்லிசை நிகழ்ச்சியிலே
இசைக்கப் படத்தக்க பாடல்களை இயற்றுவதிலே கணிசமான அங்கீகாரம் கிடைத்தது.
இன்று திரும்பிப் பார்க்கும் போது அவை இலக்கியத்தரத்தினை அடைந்தனவா என்கிற
நியாயமான சந்தேகம் எனக்கே உண்டு பத்திரிகையில் வேலை பார்க்கும்
சந்தர்ப்பமும் கிடைத்ததால் கதைகள் எழுதும் வாய்ப்பு ஏற்பட்டது.
பேச்சுவழக்கின் சுருதிகளையும், சுருதி பேதங்களையும் மனப்பதிவு செய்வதிலே
எனக்கு அலாதிமோகம் எப்பொழுதும் உண்டு. இந்த ஆர்வத்தினால் வானொலி
நாடகங்களிலே நடிக்க முடிந்தது.
முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகள் பிறந்து முத்தமிழ் வளர்த்த மண்ணிலே
பிறந்தவன் என்கிற உரிமையுடன், என் ஆரம்ப கால எழுத்துக்கள் முத்தமிழையும்
தழுவி நின்றதனால் மகிழ்ந்தேன். இந்த ஆர்வங்களை ஆற்றல்களாக
வளர்த்தெடுப்பதற்கு மிகுந்த பயிற்சியும், கடினமான பிரயாசையும் தேவை என்பதை
நான் அறிவேன். இவற்றிற்கு என்னைத் தயார் செய்து கொள்ளவேண்டும் என்கிற
தீவிரம் என்னுள் வளர்ந்த காலத்தில் தாய்நாட்டில்--இலங்கையில் வன்முறைக்
கலாச்சாரம் அங்கீகரிக்கப்பட்டு வளரலாயிற்று. இத்தகைய சூழ்நிலையில் நான்
பரதேசியானேன். வடதுருவத்துக்கு அண்மையிலுள்ள, வளமான மேற்கு ஐரோப்பிய நாடு
நோர்வே. இதுவே இந்தப் பரதேசியைத் தத்தெடுத்துக் கொண்டது. தாய்நாட்டிலே
முகிலைக் கண்டேன். கடலைக் கண்டேன். மலையைக்கண்டேன். இவை என் உள்ளத்திலே
கிளர்ச்சியை ஏற்படுத்துவன. புகுந்த நாட்டிலும் முகில் கண்டேன். கடல்
கண்டேன், மலைகண்டேன். ஆனால் இலங்கையில் காணாத அனுபவிக்காத பனியையும்,
பருவகாலச் சூழ்நிலைகளையும் கண்டேன். எனக்கு கிளர்ச்சி யூட்டிய
தென்னஞ்சோலைகளையும் பனங்காடுகளையும் நோர்வேயில் காண முடியவில்லை. பிறந்த
மண்ணும், புகுந்த மண்ணும் எத்தனையோ விசயங்களிலும் விதங்களிலும்
வேறுபட்டும், மாறுபட்டும் இருப்பதை உணர்ந்தேன். பழைய கற்பனைகளுக்கும் புதிய
அனுபவங்களுக்குமிடையில் பாரிய முரண்பாடுகள் இருப்பதை உணர்ந்தேன்.
சமூகப் பிரக்ஜைகளும், புதிய சமூக அக்கறைகளும் என் மனசினை அலைக்கழிப்பதையும்
உணரலானேன். முரண்பாட்டு மோதல்களுக்கு மத்தியிலே என் பேனா உறங்கிக்
கிடந்தது. இந்த உறக்கத்திற்கு இன்னொரு காரணமும் இருந்தது. புதியதொரு
சமுதாயத்தின் அங்கத்தவனாகிக்கொண்டிருந்ததுதான் அது. நான் இலங்கைத் தமிழனா?
ஈழத்தமிழனா? மண்ணின் நிகழ்வுகளுடனும், அவர்களுடைய அவல அனுபவங்களுடனும்
அந்நியப்பட்டு நிற்கும் நான் எப்படி ஈழத்தமிழன் ஆவேன்? அதே சமயம் நான்
வெள்ளைத் தோலன் அல்லன். காகத்தைக் குளிப்பாட்டிக் கொக்காக்கும்
வியர்த்தத்திலும் நான் ஈடுபடவில்லை. நான் ஒரு புலம்பெயர்ந்த தமிழன்.
தமிழ்மொழியினாலே என் தனித்துவ அடையாளங்களைத் தக்கவைக்க வேண்டிய புதிய ஜாதி.
அந்நிய மொழிச் சூழலிலே உழைத்து, அந்நிய தொழில் கலாச்சாரத்திலே இணைந்து,
அந்நிய நாகரிகங்களினதும், விழுமியங்களினதும் விநோத ஜாதிதான் புலம்பெயர்ந்த
தமிழன். இவர்களுடைய இலக்கியப் பார்வையும், இலக்கியப் படைப்பு முயற்சிகளும்
புதிய சமூக அக்கறைகளுடன் பின்னிப் பிணைந்து வளர்வதையும் நான்
அவதானிக்கலானேன். இவற்றை முழுமையாக உள்வாங்கி, அக்கறைகளுடன் இலக்கியம்
படைக்கும் பக்குவம் வரும் வரையிலும் என்பேனா மூடிக் கிடப்பதுதான் நல்லது என
நினைத்தேன்.
புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் படைப்புக்களையும், அவர்களுடைய படைப்பு
ஆன்மாவையும் கூர்ந்து அவதானித்தேன். ஈழத்தமிழ் மண்ணில் இடம் பெறும்
அழிபாடுகளும், அவலங்களும் அவர்களைப் பாதிக்கின்றன. தாய்நாட்டின் ஏக்கம்
அவர்களின் நெஞ்சங்களிலே நிரம்பி வழிகின்றது. புதிய வளங்களைக் கண்டு திசை
மாறிப்போய்விட்ட தமிழர்களுடைய செயல்கள் அவர்களுக்கு ஆத்திரம் ஊட்டுகின்றன.
போலியான-மேலோட்டமான வாழ்க்கைக்கும், தமிழர்தம் ஆன்மீக தேடலுக்கும் இடையிலான
போராட்டங்கள் அவர்களுடைய எழுத்துக்களிலே பிரதானம் பெறுகின்றன.
இந்தப் பதிவுகள் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஓர் இலக்கிய கௌரவத்தையும்,
அங்கீகாரத்தையும் சம்பாதித்துத் தருகின்றன. இந்தத் தெளிவுகளுடன் நான்
மீண்டும் எழுதத் துவங்கியுள்ளேன். என்னுள் ஏற்பட்டது மீள் பிறப்பு! அந்தக்
கதைகளிலே ஒன்பதைத் தொகுத்து 'விடியாத இரவுகள்' என்கிற தலைப்பிலே
வெளியிடுகின்றேன். புதிய எழுச்சிகளின் படைப்புகளில் இதுவும் ஒன்று என்று
நீங்கள் அங்கீகரித்தால் அதுவே போதும்.
எஸ்.பொ.வுக்கு என் அறிமுகம் தேவையில்லை. ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக, மூன்று
தலைமுறைகளாக ஈழத்தமிழர்களுடைய எழுத்து ஓர்மங்களுக்கு ஓர் அங்கீகாரத்தையும்,
கௌரவத்தையும் வென்றெடுப்பதற்க தமிழ் ஊழியம் செய்துவருகின்றார் இந்தச்
சிறுகதைத் தொகுதியினை இந்த உருவத்திலும், அமைப்பிலும் வெளியிடுவதற்கு
அவருடைய ஆலோசனைகள் பெரிதும் உதவின. இதனை என் எழுத்துலக வாழ்க்கையின்
பெரும்பேறாக நான் கருதுகிறேன்.
தற்கால இலக்கியத்திலே, நாவல்-சிறுகதை-நாடகம் ஆகிய துறைகளிலே, தமது ஆழுமையை
ஆழமாகப் பதித்து, எல்லா வட்டத்தினராலும் மிகவும் மதிக்கப்படும் தமிழக
எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள். அவர் பேராசிரியர், பல
நாடுகளிலும் பயணம் செய்து தமது அனுபவங்களை விசாலமாக்கிக் கொண்டவர். நளினமான
சிந்தனையாளர். இத்தகைய ஒரு பெரியார் என் முதலாவது சிறுகதைத் தொகுதிக்கு
முன்னுரை வழங்கியுள்மை என் எழுத்து வாழ்க்கையில் கிட்டியுள்ள பிறிதொரு
பாக்கியமாகும். நோர்வே நாட்டின் கோலத்தினை அட்டையில் கொண்டுவர வேண்டும் என
விரும்பினேன். என் விருப்பத்தைப் பூர்த்தி செய்து தந்துள்ளார் சென்னை
ஓவியக் கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரியும் ஓவியர் புகழேந்தி அவர்கள்.
தரமான தமிழ் நூல்களை வெளியிடுவதைத் தமது வாழ்க்கை இலட்சியமாக வரித்துள்ள
டாக்டர் பொன். அநுர தமது மித்ர வெளியீடாக இதனைப் பிரசுரித்து என்னைக்
கௌரவித்தமைக்கு என் நன்றிகள். வடிவமைப்பதில் உதவிகள் செய்த என் இனிய
இலக்கிய நண்பர் இளம்பிறை எம்.ஏ. ரஹ்மான் அவர்களுக்கும் என் நன்றிகள்.
இந்த நூலினை ஆதரித்து என் இலக்கிய முயற்சிகளுக்கு ஆதரவு தரும் அனைத்துத்
தமிழ் அபிமானிகளுக்கும் என் நன்றிகள். உங்களுடைய நேர்மையான விமர்சனங்கள்
என் இலக்கியப் பயணத்திற்கு உதவுமென்று நம்புகின்றேன்.
FINNMARK GATE-44 அன்புடன்
0563 OSLO போவிலூர் செல்வராஜன்.
NORWAY
T.F. 47-22-192582.
--------------------------------------------------------------------
புதிய தலைமுறை
சோபாவுக்குள் சுருண்டு படுத்த ஜோன்பாபுவுக்கு, தூக்கம் வரவில்லை. மனநிம்மதி
இழந்து உழன்றான்.
நேற்றிரவு நடந்த சண்டையும், காட்சிகளும் மாறி மாறி மனசை வதைத்தன.
'வளர்ந்த மகளைக் கைநீட்டி அடிச்சது சரியில்லை' என்று மனசு நெருடிற்று.
'அடியாத மாடு படியாது. கெறு பிடிச்சவன்' என்பது அறிவின் சமாதானம்.
ஆளுக்கு ஆள் தங்களுடைய நியாயங்களைத் தான் சொன்னார்கள். மனைவி ரஞ்சிக்கு தன்
நியாயங்கள். ஸ்டெல்லாவுக்கு தன் நியாயங்கள். தமிழ் மண்ணிலே பிறந்து வளர்ந்த
தன் நியாயங்களுக்கு இந்த மண்ணிலே இடமில்லையா?
மனம் வலிக்க மறுபக்கம் திரும்பினான்.
'அலார்ம்' மணிக்கூடு அடிக்கத் துவங்கியது.
அதனை நிறுத்துவதற்கு மனைவி ரஞ்சி படுக்கை அறையிலிருந்து விரைந்து வந்தாள்.
அதற்கிடையில் பாபுவே எழுந்து அதை நிறுத்தினான். ரஞ்சியின் கண்கள்
சிவந்திருந்தன. முகத்தில் சோர்புடன் கூடிய வாட்டம் அவளும் தன்னைப்போல
தூக்கமின்றித் தவித்திருக்கக் கூடும் என்று தோன்றியது. இந்தச்
சிந்தனைகளுக்கெல்லாம் இடம் கொடுக்காமல் அவன் அவசரமாக பாத்ரூமுக்குள்
நுழைந்தான். அவன் ஆறு மணிக்கு வேலைக்குப் போக வேண்டும். அவசரமாகப்
புறப்பட்டால்தான் முடியும்.
பாத்ரூமிலிருந்து வெளியே வந்த பாபு, அறைக்குள் சென்று அவசர அவசரமாக உடைகளை
மாற்றிக் கொண்டிருந்தான்.
ரஞ்சி கோப்பி கலந்து எடுத்து வந்து டைனிங் மேஜையில் வைத்தாள்.
வேலைக்குச் செல்லும் உடைகள் அணிந்து, பாபு அறைக்கு வெளியே வந்தர்ன்.
நேற்றிரவு வீட்டிலே நடந்த சச்சரவுக்கு பின் மயான அமைதி நிலவியது.
'கோப்பி போட்டிருக்கிறேன்...குடியுங்கோ!' என்றாள். அமைதியைக் குலைத்து சகஜ
நிலையை மீட்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பேச்சுக் கொடுத்தாள்.
பாபு பேசாமல் கோப்பியைக் குடிக்கத் துவங்கினான்.
சடுதியாக, அந்த அதிகாலை வேளையில், வீட்டு அழைப்பு மணி ஒலித்தது.
'இந்த நேரத்தில் யாராக இருக்கும்?' என்கிற கேள்வி தொக்க, இருவரும் ஒருவர்
முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
பாபு கதவைத் திறந்தான்.
இரண்டு நோர்வேஜிய போலீஸ்காரர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.
பாபுவும் ரஞ்சியும் உறைந்தார்கள்.
'குமோர்ண். வீ.ஆர் பொலித்தி கான்ஸ்டபிள் ஓக் கொம்மர் பிரா ஓஸ்லோ பொலித்தி
ஸ்ரசூன்...' என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.
(அவர்களுக்கிடையில் நோர்வேஜிய மொழியில் நடந்த உரையாடல் வருமாறு:)
'இங்க ஸ்டெல்லா என்ற பெண் இருக்கிறாளா?'
'ஆம். அவள் என் மகள்.'
'நல்லது. அவள் இரவு கொடுத்த முறைப்பாட்டின்படி உங்களை அழைத்துச் செல்ல
வந்திருக்கிறோம்.
'என்ன? என் மகள் முறைப்பாடு செய்தாளா?'
'பாபு, நேற்றிரவு நீங்கள் உங்கள் மகளை மோசமான முறையிலே
அடித்திருக்கிறீர்கள். கொடுமைப்படுத்தியிருக்கிறீர்கள். இதுபற்றி ஸ்டெல்லா
முறைப்பாடு செய்திருக்கிறாள்.'
இந்த உரையாடல் பாபுவுக்கு ஞானத்தை ஏற்படுத்தியது.
நேற்றிரவு நடந்த சச்சரவில், 'அடியாத மாடு படியாது' என்று மகள்
ஸ்டெல்லாவுக்கு இரண்டு தட்டுத் தட்டினான் பாபு. அவள் அதனை ஆட்சேபிப்பதுபோல,
'து ஹார் லோ ஓ ஸ்லோ மை' என்று நோர்வேஜிய மொழியில் ஆத்திரமாகப் பேச முற்பட,
பாபுவின் கோபம் கட்டுங்கடங்காது போனது. தன்னை மறந்து பாபு அவளைத் தாறுமாறாக
அடிக்கவும், ஓடிச் சென்று தன் அறைக்குள் கதவைச் சாத்திக் கொண்டான். இடையிலே
புகுந்த ரஞ்சிக்கும் நல்ல அடி.
போலிஸ்காரர்கள் மிகப் பண்பாக விசாரித்து, அவர்களுடைய அனுமதியுடன்
ஸ்டெல்லாவின் அறைக்குள் நுழைந்தார்கள்.
அந்த இடைவெளியைப் பயன்படுத்துவது போல, ஜோன்பாபு அவனுடைய வாழ்வின் சில
முக்கிய பக்கங்களைப் புரட்டினார்.
பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர், ஜோன்பாபு ஒரு வெள்ளைக்கார சுவாமியாரின்
உதவியால், நோர்வே நாட்டுக்கு ஒரு மாணவனாக வந்து சேர்ந்தான். முதலில் நோர்வே
மொழி கற்று, பின்னர் அதே மொழியில் தொழிற் கல்விப் பட்டமும் பெற்றான்
கல்வித் தராதரத்துக்கு ஏற்ற வேலையும் கிடைத்தது. நோர்வே பெண் ஒன்றைக்
கல்யாணம் செய்யும் வாய்ப்பினைத் தவிர்த்து, தமிழ் அடையாளத்தைத் தன்னுடன்
கல்லறைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற தாகத்துடன், விடுமுறையில்
ஊருக்குச் சென்று, ரஞ்சியைக் கல்யாணம்செய்து கொண்டான்.
ரஞ்சி ஊரிலேயே நர்ஸ் வேலை பார்த்தால், ஓஸ்லோ வந்து சேர்ந்ததும், அவளுக்கு
வேலையில் சேர்வது கஷ்டமாக இருக்கவில்லை. ஒன்பது மாதத்திலேயே மொழியைக் கற்ற,
முதியோர் வைத்திய இல்லம் ஒன்றில் வேலை தேடிக் கொண்டாள்.
கணவன்-மனைவி இருவருமே வேலை செய்ததால், வீடு-கார்-மற்றும் ஆடம்பர பொருள்கள்
சேர்த்து வசதிகளுடன் கூடிய வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்டார்கள்.
ஸ்டெல்லா பிறப்பை ஒட்டி, ரஞ்சி மூன்று மாதம் பிரசவ விடுப்பில் நின்றாள்.
தொடர்ந்து வேலை செய்தால் வளத்தினைப் பெருக்கிக் கொள்ளலாம் என்பது
தீர்மானமாகவே, குழந்தை ஸ்டெல்லாவைப் பார்த்துக் கொள்ள ஒரு டாக் மம்மா (Dag
mamma) தேவைப்பட்டது. அவளுடன் வேலை செய்யும் நோர்வேஜிய நர்சுகள், டாக்
மம்மாவாகப் பல குழந்தைகளைப் பராமரிக்கும் ஒரு நோர்வேஜியப் பெண்மணியை
அறிமுகஞ் செய்து வைத்தார்கள். ஸ்டெல்லாவை அவளுடைய பராமரிப்பிலே சேர்ப்பதில்
எவ்வித சிரமமும் இருக்கவில்லை. வேலைக்குச் செல்லும் பொழுது டாக் மம்மாவிடம்
குழந்தையை ஒப்படைத்து, வேலையை விட்டு வரும்பொழுது குழந்தையை அழைத்து வருவது
ரஞ்சிக்கும் வசதியாக இருந்தது ஸ்டெல்லாவும் நோர்வேஜிய டாக் மம்மாவின்
பராமரிப்பில் வளர்ந்தாள். பின்னர் 'பாண ஹாகென்' (BARNEHAGEN)
என்றழைக்கப்படும் குழந்தைகள் கூடத்திலே சேர்க்கப்பட்டாள். இப்பொழுது
'உண்டம்' ஸ்கூலில் சேர்ந்து, இன்று எட்டாவது படிக்கிறாள்.
ஸ்டெல்லா இவ்வாறு நோர்வேஜிய பராமரிப்பிலும், சூழலிலும் வளர்வது
அவர்களுக்குப் பெருமையாகவும் இருந்தது. இருவரும் வேலை செய்து வளத்தைப்
பெருக்கிக் கொள்ளவும் அது தோதாக இருந்தது. நோர்வேயில் வாழும்
சகதமிழர்களுக்கு தங்களுடைய அந்தஸ்தினைப் பறைசாற்றி விருந்துக் கேளிக்கைகளை
வார இறுதி சிலவற்றிலே நடத்தி மகிழவும் வாய்ப்பு ஏற்பட்டது. எல்லாமே மகா
சுமூகமாக நடைபெறுகின்றன என்று ஜோன்பாபு தம்பதிகள் கட்டிய கோட்டைதான் நேற்று
மாலை நடந்த சம்பவம் ஒன்றினால் தகர்ந்தது.
நேற்று வேலையிலிருந்து திரும்பும்பொழுது, இரண்டு தமிழ் வீடியோ படங்களை
எடுத்து வரலாம் என்று கடைக்குப் பாபு சென்றான். அவன் அங்கு நிற்பதைச் சட்டை
செய்யாத இளவட்டக் கும்பல் ஒன்று அரட்டையில் ஈடுபட்டிருந்தது.
'ஆரு மச்சான், அந்த வெள்ளப் பொடிச்சி? முழு எடுப்பும் உந்த
நோர்வேஜியன்காரியளைப் போல, விழுந்து விழுந்து, ஸோ சோஷல்! என்னாலை நம்ப
முடியேல்லை மச்சான்!'
'எனக்கெண்டாப் போலை? அவளைத் தமிழ் பெட்டை எண்டே சொல்ல முடியாதாம். அவள்
இங்கைதான் பிறந்து வளந்தவளாம். எங்கடை தமிழ்ப் பொடிச்சியளோடை பழக
மாட்டாவாம். எல்லாம் நோர்வேஜிய பெடியன்களும் பெட்டையளுந்தான் அவவின்ரை
பிரண்ஸ்மாராம்.'
'அவவின்ரை அப்பர் இங்கை ஸ்ருண்டாக வந்து, இங்கேயே படிச்சவர் எண்ட எடுப்பு.'
'உமக்கு இன்னொரு விஷயம் தெரியுமே? அவை வீட்டிலையும் தமிழிலை
கதைக்கிறேல்லையாம். நொஸ்கிலைதான் குசுவும் விடுகினமாம், மச்சான் என்று
ஊத்தை பகிடியை விட்டுக் கடகடத்துச் சிரித்தான்.
'அவளின்ரை பெயர் என்ன மச்சான்?'
'ஸ்டெல்லாவாம்...என்ரை அண்ணனின்ரை மகள்கூட இவள் படிக்கிற
'உண்டம்'ஸ்கூலிலதான் படிக்கிறாள். இன்னும் ரெண்டு மூண்டு தமிழ்ப்
பிள்ளையளும் அங்கை படிக்கினம். அவங்களோடை இவள் கதைக்கவும் மாட்டாளாம்.'
'நான் கேள்வி மச்சான், இவள் நோர்வேஜிய பொடியளோடை சேர்ந்து பியரும்
அடிக்கிறவளாம். அவள் வளையம் வளையமாப் புகை விடுறதைப் பார்த்து நாங்கள்
பிச்சை எடுக்க வேணும் மச்சான்...'
இதற்கு மேல் அவர்களுடைய சம்பாஷனையைக் கேட்டுக் கொண்டிருக்க ஜோன் பாபுவால்
முடியவில்லை. பொடியன்கள் இவருடைய மகளைப் பற்றித்தான் 'கமெண்ட்'
அடிக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்ட வீடியோக் கடைக்காரன் மசிந்தினான்.
பாபுவுக்கு உலமெல்லாம் இருண்டு வருவது போல தான் கட்டிக் காத்த கௌரவம்
எல்லாம் றோட்டிலே அடிக்கப்பட்ட சிதறுதேங்காயைப் போல...வீடியோ படமும்
எடுக்காமல் உடனேயே திரும்பிவிட்டான்.
எங்கேயோ பிழை நடந்துவிட்டது!
எத்தகைய ஒரு மகத்தான வாழ்க்கையை அவன் தனது குடும்பத்துக்கு அமைத்துக்
கொடுக்க உழைத்து கொண்டிருக்கின்றான்.
இந்த அந்நிய நாட்டிலிலும் கௌரவமாகப் பரம்பரை பரம்பரையாக வாழலாம் என்கிற
இனிய கனவுகள், காற்றிலே கலைந்த கடுதாசிக் கூட்டமாளிகை போல...
அவன் மனம் துர்வாச முனிவனாக மாறியது...நெஞ்சிலே கனன்று கொண்டிருந்த
அக்கினியை யார் மீதாவது கொட்டித் தீர்க்க வேண்டும்...
இரவு ஏழு மணிக்கு ரஞ்சி வேலையிலிருந்து வீடு திரும்பினாள். அவள் வந்து
கால்கூட ஆறவில்லை.
'ஏன்? ஏன்னவாம்?' என்று அசிரத்தையுடன் கேட்டான்.
'தமிழ்ப் பொடிச்சளுக்குத் தேவையான அச்சம்-மடம்-நாணம்-பயிர்ப்பு வேண்டாம்.
கொஞ்சம் அடக்க ஒடுக்கமாவது வேண்டாமா?'
'அவளுடைய போக்குக்கு எப்பவும் நீங்கள்தானே 'சப்போர்ட்'. இப்ப என்ன வந்தது?'
'றோட்டிலை நிண்டு கண்டவன் நிண்டவன் எல்லாம் பேசுறான். பியர்
குடிக்கிறாளாம். சிகரெட்டாய் ஊதித் தள்ளுறாளாம். நோர்வேஜிய மனுஷ’ எண்ட
நினைப்பிலை குதிக்கிறாளாம்...'
'உங்களுக்கு கூழுக்கும் ஆசை. மீசைக்கும் ஆசை. வேலைக்குப் போகாமல் அவளைக்
கவனிக்கலாம் எண்டு நான் சொன்னன். நர்சு வேலையிலை பொல்லாலையடிச்ச காசு
வருகிதெண்டு நீங்கள்தான் சொன்னியள். பணம், பணம் எண்டு சேர்த்தீர்கள்.
நொக்ஸ’லை அவள் விண்ணியானால் போதுமெண்டு குதிச்சீங்கள். இப்ப என்ரை
வளர்ப்பைப் பற்றிப் பேச வந்திட்டியள்...' அவளும் தன் பங்குக்குப்
பாய்ந்தாள். வேலைக்குப் போய் அவள் படும் சிரமம் அவளுக்குத் தெரியும்.
ஜோன் பாபுவுக்கும் ரஞ்சிக்கும் இடையில் வாய்த்தர்க்கம் சூடேறிக்
கொண்டிருந்த பொழுது, ஸ்டெல்லா வீட்டுக்குள் மெதுவாக நுழைந்தாள்.
'உதிலை நில்லும் நோனா. ஸ்கூல் விட்டு எவ்வளவு நேரம்? இவ்வளவு நேரமும் எங்கை
உலாத்திப் போட்டு வாறாய்?' என்று ஸ்டெல்லாமீது பாய்ந்தான்.
தகப்பனிடமிருந்து இந்தத் தாக்குதலை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
ஏற்றுக்கொள்ளக்கூடியதான பதிலும் அவளிடம் இருக்கவில்லை. எதுவுமே
நடக்காததுபோல தன்னுடைய அறைக்கு சென்றாள்.
'வாடீ இங்கை, அப்பா கேட்டுக் கொண்டு நிக்றிறார். கேட்டதுக்குப் பதில்
சொல்லன்டீ!' என்று கத்தினான் ரஞ்சி.
'வா சோம் சேட் போர் தேர இடாக்' என்று நொஸ்கிலே பேசிக் கொண்டு ஸ்டெல்லா தன்
அறையிலிருந்து வெளியே வந்தாள்.
பாபுவுக்கு அவள் பேச்சையும் போக்கையும் தாங்க முடியவில்லை.
'தமிழிலை பேசுடி. நொஸ்கில பேசுறாளாம் நொஸ்கில! நீ என்ன நொஸ்கனுக்குப்
பிறந்தவளா?' என்று இரைந்தான்.
'ஏன்? என்ன நடந்தது? புதினமா தமிழ், நொக்ஸ் என்று பேசுறியள்? இன்றைக்கு
என்ன வந்திச்சு?'
'ஊரிலை சந்திக்குச் சந்தி நிண்டு, நீ நோர்வேஜிய பெடி பெட்டையளோடை அடிக்கிற
கும்மாளத்தை பற்றித்தான் பேசுறாங்கள். அதுதான் கேக்கிறான். ஏன் இவ்வளவு
நேரம் பிந்தி வீட்டுக்கு வாறாய்?'
'ஓ, அதுவா? அதுதானே பார்த்தன். இரண்டு பேரும் காலையில் எழுந்து வேலைக்கு
ஓடுறீர்கள். வீட்டுக்குத் திரும்பினால்,
சமையல்-ரி,வி-வீடியோ-சாப்பாடு-உறக்கம்! எனக்குப் பேச-பழக-சிரிக்க-எல்லாம்
ஸ்கூல் பிரண்ஸ்தான்! இது தெரியேல்லையா?' என்று ஏளனத் தொனியில் சொன்னாள்.
'பொத்தடி வாயை. உனக்கு நாக்கு நீண்டு போச்சு' என்று பாய்ந்து,
ஸ்டெல்லாவுக்கு ஓர் அறை விட்டான் பாபு.
இதனை ஸ்டெல்லா சற்றும் எதிர்பார்க்க வில்லை.
'ஸ்ரொப். து ஹார் இக்க லோ ஓ ஸ்லோ மை' என்று வலி தாங்கமாட்டாது கத்தினாள்
ஸ்டெல்லா.
பாபு தன்வசம் இழந்தான். கைகளாலும், கால்களாலும் ஸ்டெல்லாவைத் துவைக்கத்
துவங்கினான். விலக்குப் பிடிக்க இடையிலே புகுந்த ரஞ்சியும் வாங்கிக்
கட்டிக் கொண்டாள்.
மழை ஓய்ந்தது.
ஸ்டெல்லா தன் அறைக்குள் புகுந்து கொண்டாள். அவள் விசும்பும் சத்தம் நீண்ட
நேரமாகக் கேட்டது.
சோபாவில் வந்து அமர்ந்த பாபுவுக்கு நிதானம் திரும்பியது. அவளுக்கு
இப்பொழுது பன்னிரண்டு வயது. தந்தை தாயாக அவர்கள் ஸ்டெல்லாவுடன் செலவு செய்த
நேரம் பற்றிய கணக்கெடுப்பும் நடந்தது. பிழை தங்கள்மீதும் உண்டு என்பது
இலேசாக உறைக்கலாயிற்று பணம் சம்பாதிப்பதிலே காட்டிய ஆர்வம், சில விஷயங்களை
விட்டுக் கொடுக்கச் செய்துவிட்டது.
சாப்பிடவில்லை. யாருடனும், பேசவில்லை. சோபாவில் சுருண்டு படுத்துவிட்டான்.
இப்பொழுது கோப்பி குடிக்கும் பொழுது போலீஸார் வந்துவிட்டனர்.
நோர்வேஜிய சட்டம் ஜோன் பாபுவுக்குத் தெரியாததல்ல. அச்சட்டத்தின்படி யார்
யாரையும் அடித்துத் துன்புறுத்துவதற்கு இடமில்லை. கட்டிய மனைவி, பெற்ற
பிள்ளை ஆகியவர்களைக்கூட அடித்துத் துன்புறுத்த முடியாது. யாராவது
முறைப்பாடு செய்தால் சட்டம் தன் கடமையைச் செய்யும்.
ஸ்டெல்லா நோர்வேயில் பிறந்தவள். வளர்ந்தவள். புதிய தலைமுறையைச் சேர்ந்தவள்.
சட்டத்தின்படி பாதுகாப்பினைத் தேட அவளுக்கு உரிமை உண்டு.
அந்த உரிமையை எடுத்துக் கொண்டுள்ளாள்.
ஸ்டெல்லாவின் அறைக்குள் சென்ற போலீஸார் திரும்பினார்கள். அவளிடமிருந்து
முறைப்பாட்டினை எழுதி வாங்கியிருக்க வேண்டும்.
'யே பாத நோ கான் விட்ரா தில் பொலித்தி ஸ்டசூன்' என்றான் ஒருவன்.
தான் வேலைக்குச் செல்ல வேண்டும், அன்றேல் வரமுடியாது என்று அறிவிக்க
வேண்டும் என்று பாபு தயங்கினான்.
அதனை ஸ்டேஷனிலே ஒழுங்கு செய்ய முடியும் என்று அவர்கள் நாகரிகமாகச்
சொன்னார்கள்.
ரஞ்சியால் எதுவே பேச முடியாமல் பிரமை பிடித்தவளைப் போல நின்றாள்.
ஸ்டெல்லா அறையைவிட்டு வெளியே வரவில்லை.
'ஸ்கால் வீ' என்று போலீஸார் சொன்னதும், இயந்திர இயக்கத்தில் அவர்களைப்
பின்தொடர்ந்தான் பாபு.
புலம் பெயர்ந்த புதிய நாடுகளிலே புதிய தலைமுறை ஒன்றும் உருவாகி வருகின்றது
என்கிற ஞானத்தினைப் பரப்பும் முன்னோடியா ஸ்டெல்லா?
அச்சங்கள்
ஒற்றைப் பலகை திறந்த சில கடைகள்
ஓய்ந்து வெறிச்சோடிய வீதிகள்
இடையில்,
'புக்காரா' விமானங்களின் இரைச்சல்
புகையெழுப்பித்தொடர் வெடிகுண்டுச்சத்தங்கள்
இவற்றைப் பார்த்துக் கொண்டு
போதிமரத்தின் கீழே விழிமூடி
புத்தர் நீள்தியானத்தில் அமர்ந்திருக்கிறார்...
இப்படியான சங்கதிகளைக் கோர்த்து ஒரு கவிதை எழுதும் ஆசையுடன் நாற்காலியில்
அமர்ந்து கொண்டான் விஸ்வம்.
தோதான, பதமான வார்த்தைகள் பற்றிய கற்பனையிலே சஞ்சரித்துக் கொண்டிருந்த அவனை
தொலைபேசியின் அலறல் நிச உலகிற்குக் கொண்டு வந்தது.
'ஹலோ...'
'ஹலோ...குரல் தெரியுதல்லே?...ஏதும் வைச்சிருக்கிறியா?' மறுமுனையில்
விஸ்வத்தின் நண்பன் தாமோ பேசுகிறான்.
'என்ன?'
'உன்ர கற்பனைகள என்னில சொருகாத...நாளைக்கு ஒரு போத்தில் விஸ்கி பிறியா
கிடைக்குமெண்டு சொல்லேல்லயா?'
'அது கிடச்சதுதான். அதைச் சனிக்கிழமைக்குப் பாப்பம்...'
'இஞ்ச...தேவல்லாத கதய விட்டிட்டு, அதயும் எடுத்துக் கொண்டு கீழே
இறங்கு...நான் ஐஞ்சு நிமிஷத்தில வந்து 'பிக்'அப் பண்ணுறன். ஓ.கே?'
'....'
'என்ன மிரடு முறிக்கிறாய்?'
'ஓ.கே! வந்து துலை...'
தொலைபேசியை அதன் தொட்டிலில் வைத்தான்.
அவள் விருப்பின்படி
முருகையில் ஏறி, முறிந்து
விழுந்தேன்.
'அந்தோ! வந்த அருங்கவி
இந்த அமளிகண் டெங்கோ மறைந்ததே!'
என்கிற நீலவணன் கவிதையின் வரிகளை முணுத்தபடி, தாமோவைச் சந்திப்பதற்கான
புறப்பாட்டில் ஈடுபட்டான்.
வானம் முழுவதும் இருண்டு விரிந்து...மழை பொடு பொடுத்துக் கொண்டிருந்தது.
குளிர் காற்றும் சாரலும் காரைத் தோய்த் தெடுத்தன.
நெடுஞ்சாலையிலே கார் சீரான வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தது.
விஸ்வம்த-ஈமோ இருவருடைய நட்பும் ஒரே சீராக ஓடிக் கொண்டிருப்பதும்
விநோதமே...
ஒரே ஊர்க்காரர். ஒரே பள்ளியில் படித்தார்கள். ஒன்றாகவே வேலை பார்க்கும்
அரிய வாய்ப்பும் கிட்டியது. உத்தியோகம் பார்த்த இடத்தில் தமிழர்களாகப்
பிறந்த ஒரேயொரு காரணத்திற்காக ஒரே வகையான பிரச்சினைகளுக்கு முகங் கொடுக்க
நேரிட்டது. இந்தப் பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு, நிம்மதியான புதுவாழ்வு
தேடி வெளிநாடு போகலாம். என்று இருவருமே ஒன்றாக முடிவெடுத்தார்கள். எத்தனையோ
எத்தனங்கள்; எத்தனையோ தோல்விகள். திடீரென்று விஸ்வத்துக்கு நோர்வே
செல்வதற்கான வழி பிறந்தது. வெளிநாடு செல்வதற்கான வழிகளையும் ரூட்டுகளையும்
நம்மவர்கள் பரம இரகசியமாக வைத்துக் கொள்வது வழக்கம். ஆனால், விஸ்வம் அந்த
இரகசியம் முழுவதையும் தாமோவுக்குச் சொன்னான். 'மச்சான் நான் முந்திப்
போனாலும், நீ எப்பிடியும் வந்து என்னோடை சேர்ந்து கொள்வாய். இது உறுதி'
என்று சொன்னான். விஸ்வத்தின் நம்பிக்கை போலவே, தாமோவும் வந்து சேர்ந்தான்.
இருவருடைய நட்பும் நோர்வே மண்ணிலும் செழிக்கின்றது. தாமோ தன் குடும்பத்தை
நோர்வேக்கு அழைத்துப் 'பெரிய குடும்பி'யாக வாழ்கிறான். ' ஆனால்,
விஸ்வத்தின் குடும்பம் தமிழ் நாட்டில். இங்கே ஒருவகை 'பச்சிலர்' வாழ்க்கை.
'என்ன மச்சான்...நம்மட ஊர் மார்கழி மாசப் 'பவ்வல்' மாதிரி விடமாட்டன்
எண்ணுது மழை' என்று மௌனத்தைக் கலைத்தான் தாமோ.
'...அந்த அடை மழையிலயும், எங்கட சனம் வயல்-வரப்பு, தோட்டம்-துரவு எண்டு
எப்பவும் ஓடி ஓடிப் பாடுபட்டவங்கதானே? பிறகு கூத்தும் பாட்டும் எண்டு
சந்தோஷமா இருந்தவங்கதானே...இப்ப ஆமிக்காரனும், அதிரடிப்படையும்,
போதாக்குறைக்குத் தலையாட்டிகளும்...என்று விஸ்வம் முடிப்பதற்கு முன்னரே--
'உனக்கிட்ட ஏதாவது ஒன்றைப் பற்றி பேச்சுக் கொடுத்தாப் போதும், நாட்டோட
இணைச்சுப் பேசாம விடமாட்டா...அதெல்லாம் விட்டுப் போட்டு நீ முதல்ல
'பெல்ட'ப் போடு பாப்பம்...இல்லையெண்டா ஐ நூறு குரோனா வெச்சிரிக்கியோ
'பொலித்தி'க்குக் கட்ட?' என்றான் தாமோ.
தான் 'பெல்ட்' போடாமல் இருப்பதை அப்பொழுதுதான் விஸ்வம் உணர்ந்தான்.
அதனைச் சரிசெய்து கொண்டே,
'இந்த மழைக்கும்
ஈனேவாறே கூதலுக்கும்
சொந்தப் புருஷனென்றால்
சுணங்குவாரோ வட்டையில'
என்று தன் கிராமத்துக் காற்றிலே தவழ்ந்து வரும் நாட்டார் பாடல் ஒன்றினை
மனம் ஒன்றிப் பாடலானான்.
நெடுஞ்சாலையிலோ கார் சீரான வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தது...
அப்பாவையும் மாமாவையும் கண்டவுடன் தாமோவின் பிள்ளைகளுக்கு ஒரே குதூகலம்.
சின்னவள் சந்தாவுக்குத்தான் அதிகம். அவள் மகா சுட்டி. நடுவிலாள் ரூபா
குறும்புக்காரி. ஆனால், முகத்தை மட்டும் சம்மனசுபோல வைத்திருப்பாள்.
மூத்தவள் சீதா 'மிரிச்ச இடத்துப் புல்லும் சகா!' அவ்ளவு அமைதியான சுபாவம்.
தாமோவின் மனைவி விஸ்வத்துக்கும் சேர்த்து சாப்பாடு தயார் செய்யத்
துவங்கினாள்.
தாமோ இரண்டு கிளாஸ”களைக் கொண்டு வந்து, விஸ்வம் கொண்டு வந்து வைத்த
விஸ்கிப் போத்தலுக்கு அருகில் வைத்தான். பிரிஜிலிருந்து கோலா போத்தலை
எடுத்துத் திறந்து கொண்டே, 'ம்...எடு மச்சான்...இந்தா சண்டிக்கு
'கோலா'...இப்ப துவங்கினாத்தான் சாப்பாட்டு நேரத்துக்குக் கணகணப்பா
இருக்கும்...' என்றான்.
'சமா' துவங்கியது. விஸ்வத்தைத் சாப்பாட்டுக்கு என்று அழைத்தால் அருக்கணியம்
பண்ணுவான். இப்படி ஒரு 'மாட்டு'ப் போட்டாத்தான் நடக்கும். மற்றும்படி
இருவரும் குடியின் பரம பக்தர்களல்லர்.
'மச்சான், மறந்து போனேன். கம்யூட்டரில ஒரு சின்ன பணிவிட, பாத்திட்டு
வந்துடுறன்.'
தாமோ கணினியின் முன் அமர்ந்து தன் வேலையை அவசரமாக முடுக்கி, செய்து
கொண்டிருந்தான். 'பிறிண்ட் அவுட்' எடுக்கும் பொழுது, மூத்தவள் சீதா
தாமோவின் காதைக் கடிப்பதுபோல ஏதோ பேசிக் கொண்டிருந்தாள். அவள் சுபாவமே
அப்படித்தான்.
திடீரென்று, 'நோ! நீ போக முடியாது' என்று தாமோ வெடித்தான். சீதா
திகைப்புடன் விழித்தாள்.
எல்லோர் கவனமும் அத்திசையிலே திரும்பிற்று.
'நான் கேட்ட ஒரு கேள்விக்காவது நீ ஒழுங்கான பதில் சொன்னயா?'
'இல்லை...' என்று சீதா தலையைக் கவிழ்த்து மெதுவாகச் சொன்னாள்.
'எல்லாருக்கும்-விஸ்வம் அங்கிளும் எங்க மனுஷன்தானே-கேட்கட்டும். நீ பதில்
சொல்லு. உன்னோட படிக்கிற எல்லாப் பிள்ளைகளும் போறாங்களா?'
'இல்லை.'
'உன்ர வகுப்பில படிக்கிற பாகிஸ்தான் பிள்ளைகள் போகுதுகளா?'
'இல்லை.'
'எல்லா நேர்வேஜிய பிள்ளைகளும் வர்றாங்களா?'
'தெரியாது.'
'உங்கட பள்ளிக்கூடத்தால ஒழுங்கு செய்யப்பட்டதா?'
'என்னெண்டு தெரியாது.'
'ஒன்றுமே தெரியாது. "நான் போகயா அப்பா?" என்று கேட்டால் எப்படி?'
அவன் மேஜைக்கு வந்து, தன் பங்குக்கு ஊற்றி வைத்திருந்த கிளாஸைக் காலி
செய்தான்.
'அவளுக்கு 'பாஸ்கட்பால்' விளையாட விருப்பமாக இருக்குதாம். உங்ககிட்ட
முதலிலயும் கேட்டவளாம். நீங்க ஒன்றும் சொல்லேல்லயாம்...' சமயலை விட்டு,
எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த தாய் சமாதானமான குரலிலே சொன்னாள்.
'நீ ஒன்றும் விளங்காமல் பேசுறாய்...செல்லம் கொடுத்து நீ பிள்ளைகளைப்
பழுதாக்கப் போறாய்... நான் கேட்ட ஒரு கேள்விக்கும் அவள் சரியான பதில்
சொல்லேல்ல...தெரியுமா உனக்கு? பாஸ்கட்பால்' விளையாட பள்ளிக்கூடத்தைவிட்டு,
தனியான இடத்துக்கு அவன் போவதை நான் அனுமதிக்க மாட்டன்...இங்க பலபேர் பல
மாதிரி நடக்கலாம்...ஆனா...என்ர பிள்ளைகள்...மரியாதையாகத்தான் நடக்க
வேண்டும்.... அப்படி உங்களுக்கு இஷ்டமில்லாமல், உங்கட விருப்பத்திற்கு
நடக்கிறதெண்டால்; இங்க ஒருவரையும் வைச்சிருக்கமாட்டன்; உடனே எல்லோரையும்
ஊருக்கே அனுப்பிடுவேன்" ...தாமோ வழக்கத்துக்கு மாறாக உணர்ச்சி வசப்பட்டுப்
பேசினான்.
'இது ஏன்? இப்படியெல்லாம் கதைக்கிறீங்க...அவள் விருப்பப்பட்டுக்
கேட்டால்...நமக்குப் பிடிக்கவில்லையென்றால் விடவேண்டியதுதானே?' என்றாள்
தாய்.
ஏதோ ஆவேசமாகக் கதைக்க முயன்று, பின்பு கதைக்காமல் அதே ரென்சனில் திரும்பி,
'என்னடாப்பா விசு! நீ பேசாமல் இருக்கிறாய்?' என்று நண்பனை விவகாரத்திற்குள்
இழுத்தான்.
'நான் என்ன பேச இருக்கு? முதல்ல நீ கொஞ்சம் உணர்ச்சி வசப்படாம இரு
பாப்பம்...'
'இல்ல மச்சான்...இந்த நாட்டுல பிள்ளைகளை வளர்க்கிறது லேசுப்பட்ட
காரியமில்லை. கண்ணுல எண்ணெய் ஊற்றிக் கொண்டிருக்கவேண்டும். முதலிலும் நான்
ஒரு விசயத்தில் அனுபவப்பட்டு...நல்லாப் பட்டுத் தேர்ந்தவன்; அது
உனக்குக்கூடத் தெரியாது. 'பாஸ்கட்பால்' விளையாட எல்லாப் பிள்ளைகளும்
போகாமல், இவ எப்பிடிப் போகலாம்? பள்ளிக்கூடம் என்றால் பரவாயில்லை. இது,
வேறு எங்கேயோ...ஒரு பிறிதீட் ஹோலில் நடக்குதாம்...இதை யார் ஒழுங்கு செய்தது
என்று ஒன்றுமே தெரியாது; ஒரு வயது பிள்ளைய தனியா அனுப்ப நான் விரும்ப இல்ல.
பாகிஸ்தான் பிள்ளைகள்... தங்கட கலாச்சாரத்தின் படி தனியாக வெளியில
செல்வதில்ல...நமக்கும் ஒரு கலாச்சாரம் இருக்குத்தானே. அதை ஏன் நாம கடை
பிடிக்க முடியாது? நோர்வேஜியப் பள்ளிக்கூடத்தில் படிச்சாப்போல...நாம
அவர்களப்போல மாறிடலாமா? இன்றைக்கு பாஸ்கட்பால் விளையாடப் போனால்; நாளைக்கு
டிஸ்கோ தேக்குக்கு வாறியா என்று கூப்பிடுவாங்க. மறுநாள்...மற்ற
விசயங்களுக்கும் கூப்பிடுவாங்க...இது நமக்குத் தேவையா?'
'சரி சரி!! விடு. விடு...சீதா நல்ல பிள்ளை...அவள் ஏதோ ஆசைப்பட்டுக்
கேட்டுட்டாள்...'
'அதுதானே! இவருக்கு சாந்தமாகவே பேசத் தெரியாது...பாவம் சீதா அறையில்
இருந்துகொண்டு அழுதுகொண்டே இருக்கிறாள்...'அப்பா, இப்படி ஆத்திரப்படுவார்
என்றால், நான் கேட்டே இருக்க மாட்டன்...' என்று சொல்லுறாள்...' என்று
சொல்லிய தாய் சமையலைக் கவனிக்கத் திருபினாள்.
'இஞ்சே! நீ சும்மா இருக்கணும்...நான் பேசும் போது, நீ
குறுக்கால--பிள்ளைகளுக்குச் சார்பாகப் பேச வராதே...ஒரு தகப்பனும்
பிள்ளைகளைத் தண்டிப்பதற்கு சந்தர்ப்பத்தைக் கொடு. அப்படி இல்ல, இங்கு
இருக்கிற ஒரு சில தாய் தகப்பன் மாதிரி நீயும் பிள்ளைகள் வளர்க்கப்
பிரியப்பட்டால், அதுக்கு நான் தயாரில்ல...நீங்க எல்லோரும் நாட்டுக்குத்
திரும்புங்க...அங்கே போய் என்ன கஸ்டப்பட்டாலும் மரியாதையா வாழுங்க. இங்க
என்னால இதை ஜ“ரணிக்க முடியாது. விளங்குதா உனக்கு?' என்று சீறி முடித்தான்
தாமோ.
சிறிதுநேர அமைதிக்குப் பின்; விஸ்வம் தன் கருத்தைச் சொன்னான்.
'தாமோ சொல்வதிலும் அர்த்தமிருக்கிறது...நானும், இங்கு ஒரு சில வீடுகளில்
நடக்கும் சம்பவங்களை அறிந்திருக்கிறேன்! நண்பர்கள் சிலர் சொல்லக்
கேட்டுமிருக்கிறேன்...சில பிள்ளைகள் தாய்-தகப்பனுக்கே எதிர்த்துப்
பேசுதுகள்...தாயும், தகப்பனும் வேலைக்குப் போகும் வீடுகளில், பிள்ளைகள்
தங்கள் விருப்பத்திற்குத் தகுந்த மாதிரி நடக்க முயற்சிக்கிறாங்க...ஐரோப்பிய
கலாச்சாரத்திற்கு அடிமையாகி, எமது பண்பாட்டுக் கோலங்களை அழித்துக்
கொள்கிறார்கள். பிள்ளைகளின் சூழல் இப்படியான தவறுகள் நடப்பதற்கு
வழிவகுத்தாலும், பெற்றோர்களின் கவனக்குறைவும், அசிரத்தையுமே...இவர்கள்
தான்தோன்றித் தனமாக நடப்பதற்கு பாதை அமைத்துக் கொடுக்கின்றது. சில
வீடுகளில் பெற்றோரே தறி கெட்டு நடக்கும்போது பிள்ளைகள் எம்மாத்திரம்...பல
குடும்பங்கள்; எமது பண்பு, பழக்கங்களிலிருந்து பாதை மாறினாலும், ஒரு சில
குடும்பங்கள் மானத்தோடும் மரியாதையோடும் கௌரவமாகவும் வாழ நினைப்பதே எவ்வளவோ
மேலான விசயம்...இந்த நாட்டிலே பருவ வயதுப் பிள்ளைகளை படிப்பித்து,
ஆளாகும்போது, பல சோதனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது...' என்று விஸ்வம்
பெரிய நியாய விளக்கம் சொன்னான்.
'சொல்லு மச்சான்! நல்லாச் சொல்லு...உன்ர பாணியில நல்லா எடுத்துச் சொல்லு'
இடையிலே குறுக்கிட்டான் தாமோ...ஏற்கனவே அடிச்சிருந்த விஸ்கி அவனுக்கு
இறங்கிவிட்டதுபோல இருந்தது குரல் சமநிலைக்கு இறங்கி விட்டது.
'ஆண், பெண் இருபாலாரும் படிக்கும்....'கோ எடிக்கேசன்' பள்ளிக்கூடம்
என்றபடியால் இங்குள்ள நோர்வேஜியப் பெடியன்கள் வெளிநாட்டுப் பெண்
பிள்ளைகளிடம் 'சேட்டையும்', 'நக்கலும்' விடுவதும், வம்புத்தனம் செய்வதும்
தவிர்க்க முடியாததொன்றாக இருக்கிறது. இதை நமது பிள்ளைகள் நன்றாக உணர்ந்து,
அதற்குத் தகுந்தபடி நடக்க வேண்டும். இந்த நாட்டுச் சட்டம் கொடுத்திருக்கிற
சுதந்திரத்தை நமது பிள்ளைகள் துர்ப்பிரயோகம் செய்யக்கூடாது கண்டியளோ?
இவர்களை நோர்வேஜியக் கலாச்சாரத்தில் வளர்ப்பதா? இல்லை, நமது கலாச்சாரத்தில்
வளர்ப்பதா? என்று ஒரு தீர்மானம் எடுக்காமல் பெரிய தர்மசங்கடத்தில்
மாட்டிக்கொண்டுள்ள ஒரு சில பெற்றோரை நான் அறிவேன். நமது நாட்டில்
மட்டுமல்ல, இங்கும்தான். ஒரு தாய்தான் பிள்ளைகளை நெறியாக வளர்க்கமுடியும்.
அதுவும் இந்த நாட்டைப் பொறுத்தவரையில்--ஒரு தாய் தவறு விட்டால்--பிள்ளைகள்
தரம் கெட்டுப் போவதை யாரும் தடுக்கமுடியாது...' என்று விஸ்வம் தனது
ஞானத்தையும், உள்ளே சென்றிருக்கும் நீதவானின் நியாயத்தையும் குழைத்துப்
பேசினான்.
'ஐயோ! அப்படி ஒரு நிலை வந்தால், நானே எல்லோருக்கும் நஞ்சு கொடுத்துவிட்டு,
எல்லோரும் செத்தபிறகு நானும் குடித்துச் செத்திடுவன்' என்று தாமோவின் மனைவி
அழத் துவங்கினாள்.
'நீங்கள் ஏன் ரென்சன் ஆகிறியள்? கொஞ்சம் சும்மா இருங்கோ...அப்படியெல்லாம்
ஏன் நடக்கப் போகிறது? நீங்கள் ஒழுங்காக இருந்தால் எல்லாம் நல்லபடியாக
நடக்கும். எனக்கு ஒரு சந்தோஷம் என்ன தெரியுமா?' என்று கேள்வி கேட்டு
நிற்பாட்டிய விஸ்வம், நண்பனும் மனைவியும் தன்னிலே கவனம் குவித்திருப்பதை
உணர்ந்து சொன்னான்:
இங்கே எப்படியும் வாழலாம் என்று எண்ணும் ஒரு சிலரின்
மத்தியிலே...இப்படித்தான் வாழவேண்டும் என்று ஒரு வரையறை வகுத்து வாழும்
தாமோவைப்போல் உள்ளவர்களை நான் பாராட்டுகிறேன்' என்று சொல்லி, தாமோவை
அன்புடன் தட்டி, 'டேய், நீயும் பிள்ளைகளிடம் அன்பாகவும், சாந்தமாகவும்
நடந்து கொள்ளப் பழக வேண்டும். மச்சான், கண்டிப்பு என்பது சத்தம்
போடுறதில்ல. பிஞ்சு மனம் பாதிக்கப்பட்டால், உளரீதியான தாக்கம் ஏற்பட
வாய்ப்பு இருக்கிறது... நல்லது கெட்டதுகளைப் பக்குவமாக எடுத்துச் சொல்ல
வேண்டும். என்ன நான் சொல்றது விளங்குதா? கூப்பிடு...சீதாவைக் கூப்பிட்டு
அமைதியாச் சொல்லு...அதுக்கு எல்லாம் விளங்கும். இந்தா ஒரு 'பெக்' அடி, உன்ர
ரென்ஷனில அடிச்சது எல்லாம் நியூற்றலாயிருக்கும்' என்று சிரித்துக் கொண்டே,
இரண்டு கிளாஸ்களிலும் விஸ்கியை ஊற்றினான் விஸ்வம்.
'சீதா, சீதா!! இங்க வா மகள்...' என்று அழைத்தான் தாமோ, பயத்துடன் அவனிடம்
வந்த சீதாவை ஆதரவுடன் அணைத்துக் கொண்டான்.
'அப்பா உங்கட நன்மைக்காத்தான் எதுவும் சொல்லுவன்...நமக்கு வேணாம் மகள்.
இந்த மண்ணின்ர எடுப்புகள் வேணாம். நமது நாட்டுப் பிரச்சினையளால ஊரில இருக்க
முடியாமல் இந்த நாட்டுக்கு வந்திட்டம். சிங்களப் பீத்தலன்கள் கௌரவமாக
வாழவிட மாட்டான்கள் என்றுதானே உங்களை இங்க கூட்டி வந்த? இல்லாட்டி இந்தக்
குளிரில வந்து செத்துக் கொண்டிருப்பமே? நீ வளந்த பிள்ளை. சரி-பிழையை
விளங்கிற அறிவு இருக்கு. இல்லையா? நீ ஒழுங்கா இருந்தாத்தானே உன்ர
சகோதரிகளும் ஒழுங்கா வளரும்...'
'எனக்கு விளங்குதப்பா!' என்று சீதா சிரித்தான். வாடியதாகத் தோன்றிய மலர்,
அன்பு நீரும், நியாய வெளிச்சமும் கண்டு என்ன பிரகாசமாக மலர்ந்தது!
அம்மாவுக்கு உதவும் கடமை உணர்வுடன் சீதா அடுக்களை சென்றாள்.
விஸ்வம் விஸ்கியைக் கையில் எடுத்துக் கொண்டு, 'மச்சான், எங்களை அச்சங்கள்
துரத்திக் கொண்டே இருக்கின்றன. உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்
என்கிற பயங்களினால் விரட்டப்பட்டு, தாங்கள் வாழக் கனவுகள் காணாத
நாடுகளிலும் குடியேறி வாழுகிறோம். உயிரைப் பற்றிய பயங்கள் போனதும், தனமு
இனத்துவ அடையாளங்களை இழந்துவிடக்கூடாது என்று அச்சங்களுடன்
வாழ்கிறோம்...இந்தப் பயங்கள் நீங்கிய விடியல் எங்கட இனத்துக்கு எப்ப
வருமோ?...' என்று தத்துவார்த்தமாக பேசிய விஸ்வம், 'எங்களைப்
போன்றவர்களுக்குப் பயங்களைப் போக்குவதற்கு ஒரு மருந்து இருக்குத்
தெரியுமோ?' என்று கேட்டு நிறுத்தினான்.
'அது என்ன மச்சான்?' என்று தாமோ ஆவலுடன் கேட்டான்.
'அது விஸ்கிதான்!' என்று சொல்லி, விஸ்வம் மிக நிதானமாக தன் கிளாஸ’ல் இருந்த
விஸ்கியைக் குடிக்கலானான்!
கூண்டுக்கு வெளியே...
ரமணன் நேர காலத்துடன் வேலைக்குச் சென்று விட்டான். வேலை என்பது எந்திர
வாழ்க்கையுடன் ஒன்றி விடுவதுதான்.
துளசி ஒருவகை வெறுமை உணர்வுகளுடன் படுக்கை அறைக்குள் நுழைந்தாள்.
அவள் ஓஸ்லோவுக்கு வந்து ஒரு வாரந்தான் ஆகிறது இந்த ஒரு
வாரத்துக்கிடையில்...
ஆறு ஆண்டுப் பிரிவின் பின்னர் கணவனைக் கண்டபொழுது அவள் மனம் உணர்ச்சிகளைக்
கட்டுப்படுத்த இயலாது என்னமாய் துள்ளியது!
மகள் தர்ஷ’னியை கர்ப்பமாக இருந்தபொழுது போனவன். மகளாய், உருவமாய், அன்பின்
இணைப்பாய், உறவின் முத்தாய், தேவதைக் குஞ்சாய்த் தோன்றிய தர்ஷ’னியை அப்பா
ரமணன் அள்ளி அணைத்து முத்த மழையினால் வர்ஷ’த்தபொழுது, மனசிலே ஏற்படும்
அந்தக் குதூகலத்துக்குப் பெயர் என்ன?
அப்புறம், சந்தர்ப்ப வசத்தால் தத்தெடுத்துள்ள தாய்நாடான நோர்வேயின்
காட்சிகள்...ஒஸ்லோ மாநகரின் எழில்மிகு தோற்றம், அவர்கள் குடியிருக்கும்
புறநகர் பகுதியிலேயுள்ள நெடிதுயர்ந்த மரங்கள், மேடு-பள்ளங்களாக அமைந்த
Landcape கள், தொடர் மலைகள், வேலிகளையும் கடப்புகளையும் துறந்து தனித்துவ
சுயாதீனம் சுகிக்கும் தனியார் வீடுகள், மாறாக வானுயர எழுந்து நிற்கும்
தொடர் மாடிகள்...இவற்றின் மத்தியிலே ஓர் ஒழுங்கும்; ஓர் அமைதியும்!
இவற்றின் ஊடாகச் சஞ்சாரஞ் செய்வது கனவுலகிலே பயணிப்பது போலவும் தோன்றியது.
இவை எல்லாம் கரைந்து விட்டன.
ரமணன் வேலைக்குப் போய்விட்டால், மகா ஆய்க்கினையான தனிமை.
படுக்கை அறைக்குள் நுழைந்த துளசிக்கு மனசில் உற்சாகமில்லை.
கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த மகள் தர்ஷ’னியின் பக்கத்தில் அமர்ந்து
கொண்டு, அவளுடைய தலைமுடியைத் த்‘ய்மையுடன் கோதினான்.
ஊர் நினைவுகள் மன ஊஞ்சலிலே ஏறி ஆடத் துவங்கின.
மகள் தர்ஷ’னி தூங்கிக் கிடப்பாள். 'மண்ணிடை இரவுக் கன்னியின் ஆட்சி
முற்றாகத் தேயாத' விடியற்காலை. விளக்குமாற்றினை எடுத்து முற்றமும்
கடப்படியும் பெருக்குவாள். அதை ஒதுக்கி, கோழிக் கூட்டடி, கிணற்றடி ஆகிய
பகுதிகளில் எல்லாம் கூட்டி அள்ளிய குப்பை கூழங்களை எல்லாம் முறை வைத்து
ஒவ்வொரு தென்னை மரத்தினடியும் கொட்டிப் புதைப்பாள். பின்னர் அடுக்களையைக்
கூட்டி, அடுப்புச் சாம்பல் அள்ளித் துப்பரவு செய்து, பாத்திரங்களை எல்லாம்
எடுத்துக் கிணற்றடி கதலி வாழைக்குக் கீழேயுள்ள குடத்தடியில் போட்டுச்
சாம்பலும் தும்பும் கொண்டு நன்றாகத் தேய்த்துக் கழுவி, பக்கத்திலுள்ள
பரணில் பரப்பி வைப்பாள். மீண்டும் அடுக்களை வந்து, அடுப்பில் வீரவிறகும்
தேங்காய் மட்டையும் சொருகி அடுப்புப் பற்ற வைத்து, அதிலே 'தேத்தண்ணி'
போடுவதற்குக் 'கேத்த'லில் தண்ர் வைத்து, இடுப்பை நிமிர்த்தும் போதுதான்
அப்பா வாய் கொப்பளிக்கும் சத்தம் கேட்கும். அந்தச் சத்தந்தான் அம்மா
எழும்புவதற்கான கொக்கரக்கோ'
பல்விளக்கி, முகம் கழுவி, வாசலிலே பூத்து நிற்கும் செல்வரத்தம் பூக்களும்,
மல்லிகைப் பூக்களும் பறித்து வந்து சாமிக்கு வைத்துக் கும்பிட்டு, விபூதி
தரித்துக் கொண்டு, அடுக்களைக்கு மீண்டும் வந்தால் கேத்தல் தண்ர்
'மலமல'த்துக் கொதிக்கும். எல்லோருக்கும் தேத்தண்ணி கலந்து கொடுத்துவிட்டு,
தர்ஷ’னிக்கு 'லக்ஸ்பிறே' கரைத்து எடுத்து மேஜை மீது ஆறவைத்துவிட்டு, தனது
தேநீர்க் கோப்பையை எடுத்து வந்து குடிப்பாள்.
பம்பரமாகச் சுழன்றாலும், இவை வேலைகள் போலவும் தோன்றா. இவை அணைத்துமே உடல்
இயக்கத்தின் மிக இன்றியமையாத பயிற்சிகளைப் போல ஒட்டிக் கொண்டன.
இந்த வேலைகள் இன்றி, ஒரு சோம்பல் குணமும், அதனுடன் இணைந்து ஒரு 'மூதேசி'த்
தன்மையும் தன்னுள் புகுந்து கொள்வதான பதைபதைப்பு துளசிக்கு!
இந்தப் பனிநாட்டு வாழ்க்கையின் தினசரி விடியலிலே எத்தனை மாற்றம்? விடியலை
அறிவிக்கக் கீழ் வானம் சிவப்பத்தில்லை. காகங்கள் கரைவதில்லை. மணிக்கூடு
நிர்ணயிக்கும் நேரங்களை வைத்துத்தான் நாள் புலர்ந்ததை மடடிட வேண்டிய அவலம்.
கடிகார முட்களின் நகர்வுகளிலே மட்டும் உருவாகும் பகலும் இரவும்! 'காய் காய்
சூச்சு...' என்று காகங்களை விரசி, சூரிய நிலைகளைப் பார்க்க முடிய வில்லை.
ஊரிலே, பசுமாடுகள் கத்தும் சத்தமும், மாட்டு வண்டில்களில் 'கட கட' ஒலியும்,
'பொங்கும் பூம்புனல்' நிகழ்ச்சியில் இலங்கை வானொலி பரப்பும் சினிமாப்
பாடல்களும், ஒன்றை ஒன்று தின்று சுவைக்கும் சப்த சுருதிகள் இங்கு இல்லை.
தர்ஷ’னி தூக்கத்தில் எழுப்பும் மெல்லிய-மிக மெல்லிய-குறட்டை ஒலி. அதனை
விழுங்குவது போல சுவர்க் கடிகாரத்தின் 'டிக் டிக்' ஒலியின் அகங்காரம்!
அவர்களுடைய குடியிருப்பு, பல மாடிகள் கொண்ட அந்தப் பாரிய கட்டடத்தின்
பத்தாவது மாடியிலே இருந்தது. படுக்கை அறை, அடுக்களை, கக்கூசு, குளியல்,
முற்றம், விறாந்தை, கொல்லை, என்று எல்லாமே இந்த அறுநூறு சதுர அடிப்
பரப்பிலே இறுக்கப்பட்டுக் கிடக்கிறது. காலை ஆறு மணிக்கு ரமணன் வேலைக்குப்
புறப்பட்டுச் செல்வான். வேலையிலிருந்து திரும்ப இரவு ஒன்பது மணியாகிவிடும்.
இரவு சாப்பாடு மட்டுமே வீட்டில். அவர் வருவதற்கு முன்பே தர்ஷ’னி தூங்கி
விடுவாள். Time zone difference ஸோ, சுவாத்திய மாற்றமோ கழுவிய சீலையைப்போல
சோர்ந்துபோய்க் கிடக்கிறாள் ரமணன் வந்ததும் குளியல், சாப்பாடு, டி.வி.,
கந்தோர், புதினம், ஊர்ப் புதினம், ரெண்டொரு டெலிபோன் உரையாடல, இருள்,
தூக்கம், இருளிலே விழித்து, இன்னொரு நாள் புலர்ந்து விட்டதாக வேலைக்கு
ஓட்டம்!
'சிங்களவங்கடை அக்கிரமம், ஆய்க்கினை, மனித குலத்தின் அடிப்படை உரிமைகள்
மீறல் எல்லாவற்றிலும் இருந்து விடுதலை பெற்ற புத்தம் புதிய சுதந்திர
வாழ்க்கை இந்தப் பத்தாம் மாடியின் இந்தக் குறுகிய சுவர்களுக்கிடையிலே
சிறைபட்டுக் கிடப்பது' போன்ற ஓர் உணர்வு துளசியின் மனசிலே அடிக்கடி
எழுவதுண்டு.
இந்தச் சிறையிலிருந்து அடுத்த சனிக்கிழமை விடுதலை கிடைக்கலாம்.
'சனிக்கிழமை கட்டாயம் கடைக்குப் போக வேணும். உனக்கும் தர்ஷ’னிக்கும் நல்ல
'வின்டர்' உடுப்புகள் வாங்க வேண்டும். இங்க நல்ல 'வின்டர்' உடுப்புகள்
இல்லாமல் வெளியாலை போக ஏலாது. சனிக்கிழமைதான் எல்லாத்துக்கும் வசதி' என்று
ரமணன் இரண்டு மூன்று தடவை அக்கறையுடன் சொல்லியிருக்கிறான்.
ரமணனைக் குற்றமாக நினைக்கவும் முடியவில்லை. 'பாவம், அவர் எனக்கும் என்ர
குஞ்சுக்கு மாகத்தானே இப்பிடி மாடு போல உழைக்கிறார்' என்று
நினைக்கும்பொழுது, அவனை அறியாமலே துளசியின் கண்களிலே நீர் சுரக்கும்.
இருப்பினும், புதிய சூழலுக்கு வசக்கி எடுக்கப்படுவதை அவள் மனசு ஏனோ
திமிறியது.
ஊரில் நிலைமைகள் வேறு...
ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தாலும், அக்கம் பக்கம் வீடுகளுக்கு வேலியில்
வைத்துக் கொள்ளும் சிறு கடப்பால் தாண்டிப் போய் வந்து விடுவார்கள் ஊர் ஒரு
பெரிய கூட்டுக் குடும்பம் போன்ற வாழ்க்கை அமைத்து, அனைத்துப்
பிரச்சினைகளிலும் உயிர்ப்புடன் பங்கு கொள்ளுகின்றது.
ஊர்ப் பிரச்சினைகள் அனைத்தும் அவர்கள் பிரச்சினைகள். ஒருவர் துன்பத்திலே
மானசீகமாகப் பங்கு கொண்டு அதன் கடுமையைக் குறைக்கும். சந்தோஷத்திலே பங்கு
கொண்டு, மகிழ்ச்சியின் அளவைப் பெருக்கும்.
ராணுவத்தின் அட்டூழியங்களைப் பற்றிப் பலவாறு பேசி வயிற்றெரிச்சலைத்
தணித்துக் கொள்வார்கள். பெடியன்களின் பதிலடிகளிலே ஏற்படும் வெற்றிகளைத்
தங்களுடைய சொந்த வெற்றிகளாகப் பாராட்டி மகிழ்வார்கள். இரவும்-பகலும் போல,
வெயிலும்-மழையும் போல, அவர்களுடைய வாழ்கையிலே இன்பமும்-துன்பமும் இழையோடும்
ஒரு வாழ்க்கையாக இருந்தது.
ஆனால், இங்கே, மகா மாசனப் பேரமைதியின் மத்தியிலே வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ
என்று கூட துளசி நினைக்கும் சந்தர்ப்பங்கள் கூட உண்டு.
இந்த 'வெறு வாக்கிலுங்' கெட்ட நினைவுகளிலிருந்து விடுபட அவள் மேற்கொண்ட
பணிவிடையில், வசந்தியைப் பற்றிய நினைவுகள் அவள் மனசிலே மேலோங்கின.
பயணம் செய்வதற்கு முதல் நாள் மத்தியானம். 'ஊரில இருக்கிற பளாய்ச் சாமான்களை
எல்லாம் எடுத்துக் கொண்டு வராதை. உனக்கும், தரிஷ’னிக்கும் பிடித்தமான நல்ல
உடுப்புகளை மட்டும் கொண்டு வா. இங்க தமிழர்களுடைய கூட்டங்களில் போடலாம்
கயலான்கடைச் சாமான்களை எல்லாம் இங்க கொண்டு வந்தால், அவற்றோடு சேர்த்து
உன்னையும் 'ஷெல்லரி' வைதான் போடுவன்' என்று ரமணன் படிச்சுப் படிச்சுச்
சொல்லியிருந்தான். 'எவற்றைக் கொண்டு போவது, எவற்றை விட்டுச் செல்வது'
என்கிற யோசனைகளிலே ஆழ்ந்திருந்தவளை, 'துளசி, துளசி!' என்கிற கூப்பிடும்
சத்தம் நிச உலகிற்குக் கொண்டு வந்தது.
வேகா வெயிலில் நடந்து வந்து, மாமரத்து நிழலின்கீழ் கிடந்த வாங்கில்
அமர்ந்து, சேலைத் தலைப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டிருந்த வசந்தி
தெரிந்தாள். வசந்தி அவளுடைய உயிர்ச் சிநேகிதி. 'துளசி சீக்கிரமே
நோர்வேக்குச் சென்று ரமணன் அண்ணனுடன் சந்தோஷமாக வாழவேண்டு'என்று எத்தனையோ
நேர்த்திக் கடன்களை நிறைவேற்றிய நல்ல பிறவி.
'என்ன வசந்தி? இந்த வேகா வெய்யிலில...கொஞ்சம் சாஞ்ச பிறகு
வந்திருக்கலாமல்லவா?' என்று கேட்ட துளசி மாமரத்தடிக்குச் சென்றாள்.
'வாவன், உள்ளுக்க...தோடம்பழம் கரைச்சுத்தாறன்.'
'அது ஒண்டும் வேண்டாம் துளசி. உனக்கப் பம்பலா வேலை இரிக்கும். நீ நாளைக்கு
விடிய வெள்ளெணப் போயிடுவாய் எண்டு, கல்முனைச் சந்தைக்குள்ள நிண்ட இவரிட்ட
கதிரமலை மாமா சொன்னவராம்...பறந்தடிச்சுக் கொண்டு வந்து விசளத்தைச்
சொன்னார். நீ போனா, இனி எப்ப வரப் போறா?...அதோட சாஞ்ச நேரத்திலே வந்து போற
மாதிரியா ஊர் இரிக்கி?...ஆறுமணியோட றோட்டில ஒரு காக்கா குருவிகூடக் காண
முடியாது. அதுதான் துளசி இப்பவே வந்திட்டன்....'
'காலாறிச் சாப்பிட்டுப் போகலாம் வசந்தி' என்று துளசி வாத்ஸல்யத்துடன்
சொன்னாள்.
'நான் உன்னப் பாத்துப் பேசிவிட்டு உடன வந்திடுறன் எண்டு சொல்லி,
பிள்ளையக்கூட இவரிட்ட கொடுத்திட்டு வந்திட்டன்' என்று சொல்லிக் கொண்டே,
தன்னுடன் கொண்டுவந்த கைப்பையை எடுத்துத் துளசியிடம் கொடுத்தாள்.
'இதென்ன வசந்தி?'
'இதில கச்சான கொட்டைப் பாகும், முந்திரிப் பருப்பும், பயத்துறுண்டையும்
இரிக்கி. ரமணன் அண்ணனுக்கு இதெல்லாம் பிடிக்கும் எண்டு உனக்குத் தெரியாதா?
பயண அவதியில இதெல்லாம் செய்தெடுக்க உனக்கு நேரமில்லை. இதுதான்
செய்தெடுத்துக் கொண்டு ஓடியாறன். ஒரு மாசமானாலும், இதுகள்
கெட்டுப்போகாது....'
அவள் கைப்பையைப் பெற்றுக்கொண்டாள். வசந்தி எப்பொழுதும் அப்படித்தான்.
துளசிக்கு ஏதாவது நன்மை செய்ய வேணும் என்று துடிப்பாள்.
'நாளைக்கு எத்தனை மணிக்குப் புறப்படுறீங்க?' என்று வசந்தி ஆவலுடன்
கேட்டாள்.
'காலையில் ஆறுமணிக்கு மருதமுனையில் இருந்து ஒரு மினிபஸ் அம்பாறை,
மகியங்கணை, கண்டி வழி
யாகப் போகுதாம். அப்பா நேற்றே 'சீற்' இரண்டு 'புக்' பண்ணிப் போட்டார்.'
'மாமா மட்டுந்தான் வாறாரா? மாமி வரலையா?'
'அம்மாவைக் கூட்டிக்கொண்டு கொழும்புக்குப் போறதெண்டா சும்மாவா வசந்தி?
அவவுக்குக் கண்ணும் கொஞ்சம் புகைச்சல். காலிலும் வாதக் குணம் நடை
மருந்து...'
'உண்மைக்கு அது கரைச்சல்தான். நேற்றெண்டாப்போல இரிக்கி...சவளக்கடை 'Cap'
அடிச்சதிலதானே ஆமிக்காரன் ரமணன் அண்ணனைத் தேடினது...'
'மெய்யாத்தான்...அப்ப இவள் தர்ஷ’னி என்ற வயித்திலா மூன்று மாசம்...'
தர்ஷ’னி முணகிக் கொண்டு மறுபக்கம் திரும்பிப் படுத்தாள். அவளுடைய தலைமயிரை
ஆதரவாகக் கோதிவிட்டாள்.
வசந்தி பற்றிய நினைவுகள் அந்தரத்திலே தொங்க, ரமணனை ஆமிக்காரன் தேடிய அந்தப்
பயங்கர நாள்களைப் பற்றிய நினைவுகள் அவள் மனசை வலம் வந்தன.
சவளைக்கடை Camp அடிக்கப்பட்டது ஊரிலே மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது.
'எங்கட பொடியன்களும் துணிஞ்சிட்டாங்கள்...' என்று 'பெரிசு'கள்
குசுகுசுத்தன. அதிரடிப் படைக்காரங்களும் இரத்தப் பலி கேட்கும் பேய்களைப்
போல அயல் கிராமங்களைக் கலக்கித் திரிஞ்சாங்கள். தமிழர்களுக்குள் ஓர்
ஈனச்சாதியைச் சிங்களவங்கள் வலு கெட்டித் தனமாக உருவாக்கிப் போட்டான்கள்.
அவங்கள் 'தலையாட்டியள்' இந்த மூதேசிகள் பணத்துக்காகவும், பதவிக்காகவும்,
மற்றும் சில்லறை சொகுஸ”களுக்காகவும் தமிழனையும், அவன் இனமானத்தையும்
மட்டுமல்ல, கட்டின பெண்டிலைக்கூட காட்டிக் கொடுக்கிற தப்பிலிகள். வம்பில
பிறந்ததுகள். இதுகளிலை ஒண்டுதான் சவளைக்கடை முகாமை அடிச்சதிலை ரமணனுக்குப்
பெரும் பங்கு இருந்தது என்று காட்டிக் கொடுத்திருப்பான்.
ரமணன் நல்ல குடும்பம் வட்டவிதானை மகன். ஏ எல் பரீட்சையிலே நல்லாகவும்
செய்திருந்தான். யூனிவேர்சிட்டிக்கு எடுபடுவான் என்றுதான் அவனைப்
படிப்பித்த ஆசிரியர்களும் நம்பியிருந்தார்கள். தமிழனாகப் பிறந்ததினால் அந்த
வாய்ப்பு நழுவி விட்டது. எழுதுவினைஞனாக வேலைக்குச் சேர்ந்தான். கல்முனை
கல்விக் கந்தோருக்கு நியமனம் கிடைத்தது. ஊருக்குக் கிட்ட என்பதினால்
வசதியாக இருந்தது. கதிரமலையரோ விடாப்பிடியாக விரசி, துளசிக்கு அவனை
மாப்பிள்ளையாக எடுத்து விட்டார்.
இப்பொழுது முதலுக்கே மோசம் வந்ததுபோல...சமணன் தலைமறைவாகி விட்டான். துளசி
அழுது கரைந்தாள். அவளுக்குக் கருச்சிதைவு ஏற்பட்டு விடுமோ என்று
டாக்டர்கூடப் பயந்தார். இந்தக் கட்டத்திலே கதிரைமலையர் தடாலடியான
நடவடிக்கைகள் சிலவற்றை எடுத்தார். சம்மாந்துறை எம்.பி. மஜ“த் அவருக்கு நல்ல
பழக்கம். மஜ“த் 'முஸ்பாத்தி'யும் பண்ணுவார். இதனால், தமிழர்களுடன்
சுமூகமாகப் பழகுவார். அவருடைய உதவியால் ரமணனைப் பாதுகாப்பாகக் கொழும்புக்
கொண்டு வந்தார். துளசியின் கண்ரும், எத்தனையோ புத்திமதிகளும் ரமணனின்
வைராக்கியத்தைக் கரைத்தது கடல் கடந்து போகச் சம்மதித்தான். சேனைக்
குடியிருப்புப் பகுதியிலே அவருக்கு இருந்த மூன்று ஏக்கர் காணியை 'அறா'
விலைக்கு விற்றுக் காசக்கி, ஏஜன்ஸ’க்காரனைக் குளிர்வித்தார். விஷயங்கள்
எல்லாம் மின்னல் வேகத்தில் நடந்தன. சுயமாகச் சிந்திக்கும் சக்தியை ரமணன்
மீளப் பெற்ற பொழுது, தான் நோர்வே நாட்டிலே இருப்பதை உணர்ந்தான்!
நோர்வே நாட்டிலே ரமணன் பட்ட கஷ்டங்களை மூன்று நாள்களுக்கு முன்னர்
வந்திருந்த லிங்கம் அண்ணன் சொன்னபொழுது உண்மையிலே துளசிக்கு அழுகை
வந்துவிட்டது. போர்க்களம் விட்டுக் கோழையைப்போல ஓடிவந்து விட்டோமே என்கிற
குற்ற உணர்வுகளினால் ரமணன் நீண்ட காலம் வருந்தினான் தர்ஷ’னி பிறந்த
செய்திகள் வந்து, அவளுக்கு அப்பாவாக வாழ வேண்டிய கடமையும் இருக்கின்றது
என்கிற அக்கறை புதிய வீரியம் பெற்ற பொழுதுதான், அவன் வேலை தேட வேண்டும்
என்கிற நிர்ப்பந்தத்தையும் சிரமப்பட்டான். 'சோசியல்' காசை எடுத்து,
சிக்கனமாக வாழ்ந்து, அதில் மிச்சம் பிடித்துத்தான் துளசிக்கு அனுப்பினான்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் ஒரு மாதிரியாக நிரந்தர வேலை கிடைத்தது.
வங்கிக் கடன் எடுத்து, இந்தப் பத்தாம் மாடி 'அப்பாட்மென்'ரை யோசனையுடன்
வாங்கினான். ஒரு செக்கெண்ட்ஹாண்ட் கார் நல்ல விலைக்குப் பொருந்தி வந்தது.
இதன்பிறகு தன் மனைவி துளசியையும் மகள் தர்ஷ’னியையும் வரவழைக்க நோர்வேஜிய
குடிவரவு-குடியகல்வு திணைக்களத்துக்கு விண்ணப்பித்தான்.
இதோ, அவர்கள் வந்துவிட்டார்கள்.
தர்ஷ’னி தூக்கம் கலைந்து எழுந்தாள். அவளுடன் கிச்சனுக்கு வந்தாள் துளசி.
ஊரிலே புலரும் 'மண்ணிடை இரவுக் கன்னியின் ஆட்சி முற்றாகத் தேயாத' விடிகாலை
பற்றிய எண்ணங்கள் மீண்டும் எழுந்தன...
ஊரிலே ரமணன் வாழ்ந்த அந்தக் கூட்டைப் பிய்த்தெறிந்தது யார்?
தொடரும் போராட்டங்கள்
'அனுப்பாதே, அனுப்பாதே!'
'திருப்பி அனுப்பாதே!!'
ஈழத் தமிழர்களை...'
'திருப்பி அனுப்பாதே!'
'உண்ணாவிரதமிருக்கும் தமிழ் இளைஞர்களுக்கு...'
'வதிவிட உரிமை கொடு!'
ஒஸ்லோ மாநகர ரயில் நிலையத்துக்கு முன்னால், மேற்படி கோஷங்கள் உரத்து
ஒலித்துக் கொண்டிருந்தன.
மார்கழி மாதக் குளிரையும் பொருட்படுத்தாமல், ஆண்கள்-பெண்கள்-இளைஞர்-சிறுவர்
என்று கணிசமான தமிழர்கள் திரண்டிப்பதைக் காணக் கூடியதாக இருந்தது.
ரயில் நிலையத்திற்கு முன்பாகச் செல்லும் 'திரிக்' வண்டியில் பயணித்துக்
கொண்டிருந்த அர்ஜுன், 'இதென்ன கூட்டம்? எனக்குத் தெரியாதே' என்று
யோசித்துக் கொண்டு, ரயில் நிலைய ஸ்ரொப்பில் திரிக் வண்டி நின்றதும்
இறங்கிக் கொண்டான்.
இத்தகைய கூட்டங்களிலே கலந்து கொள்வதை அவன் தனது தார்மீகக் கடமையாக
வரித்திருந்தான்.
ஒஸ்லோவிலுள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழு இத்தகைய எழுச்சிக் கூட்டங்கள்
பலவற்றை ஏற்பாடு செய்திருக்கிறது. அந்தக் கூட்டங்களிலெல்லாம் அவன்
கடமையுணர்வுடன் கலந்து கொள்ளுவான். ஒஸ்லோவில் சுமார் மூவாயிரம் தமிழர்கள்
வாழ்கிறார்கள். ஆனால், இத்தகைய எழுச்சிக் கூட்டங்களுக்கு முந்நூறு
தமிழர்கள் கூடினாலே பெரும்பாடு இங்கு வாழும் அத்தனை தமிழர்களுக்கும் தாய்
நாட்டிலே சொந்தபந்தங்கள் உண்டு; இரத்த உறவுகள் உண்டு.
யாழ்ப்பாணம்-வவுனியா-மட்டக் களப்பு-திருக்கோணமலை என்று எந்தப்
பகுதியிலிருந்து வந்த தமிழர்களாக இருந்தாலும், தாய் நாட்டிலே அவர்களுடைய
இரத்த உறவுகள் நிதம் நிதம் பேரின வாதிகளின் சிங்கள ராணுவத்தினால்
பாதிப்புக்கு உள்ளாகி நகர வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள்
படும் வேதனைகளையும் அவலங்களையும் வெளிச்சமிட்டுக் காட்டி, நீள்
துயரங்களுக்கு ஒரு விடிவு காண்பதற்கு உலகிலே வாழும் மனித நேயம்
படைத்தவர்களுடைய கவனத்தையும் அநுதாபத்தையும் பெறுவதுதான் இத்தகைய எழுச்சிக்
கூட்டங்களின் நோக்கம். இது எல்லாத் தமிழர்களுக்கும் தெரியும். 'நானும் என்
இங்குள்ள குடும்பமும் மட்டும் வசதியாக வாழ்ந்தால் போதும் என்று
மனக்குறுக்கத்துடன் இவர்களாலே எப்படி வாழ முடிகின்றது' என்று அர்ஜுன்
கொதிப்பான்.
'அகதி என்று சொல்லி இந்த நாட்டிலே அண்டிக் கொண்டு, சோக்கும் குஷாலும்
பண்ணிக் கொண்டிருக்கிறாங்கள். இங்குள்ள பீத்தமிழன்களுக்குத் தமிழ் சொரணை
வரவிட்டால், அங்கையிலுள்ள சிங்களவன் எங்கடை சனங்களை மிதித்துத் துவைப்பான்
தானே? இந்த மூதேசியளுக்கு விடியோவிலை. ஒரு சல்லிக்கு உதவாத தமிழ்ப்படம்
பா‘க்கவேணும், இல்லாட்டில் ஏதோ பிறந்த நாள் என்று சொல்லி தங்களின்ரை
பவிசுகளைக் காட்ட வேணும்?' தாய் நாட்டுப் பற்றும், இனமான உணர்வும் கொண்ட
நண்பர்கள் மத்தியிலே அர்ஜுன் இப்படி ஆத்திரத்துடன் வார்த்தைகளைக்
கொட்டுவான்.
'ஒரு காலத்தில பல குழுக்களிலே சேர்ந்து இளைஞர்கள் போராடினார்கள். சிங்களப்
பேரினவாதத்திலிருந்து தமிழினம் விடுதலை பெறவேண்டும் என்பதை எல்லாக்
குழுக்களும் தாரக மந்திரமாகக் கொண்டிருந்தன பின்னர் திசைகள் மாறின.
குழுக்களின் உடனடித் தேவைகள் மாறின. வல்லமை பெற்ற சூத்திரதாரிகளின்
குற்றேவல் செய்யவும் சிலர் தயாராகினர். பல்வேறு குழுக்களிலே இருந்தவர்களும்
இங்கே இருக்கிறார்கள். பழசுகளை நினைவுபடுத்தி இங்கே சண்டை பிடித்துக்
கொண்டிருப்பதிலே என்ன அர்த்தம்? எழுச்சிக் கூட்டங்கள் ஈழத் தமிழினத்தின்
முழு அவலங்களையும் ஒற்றுமையாக பிரதிபலிப்பனவாக இருக்க வேண்டும்...' என்று
மானசீனமாகக் கேட்டுக் கொள்வான்.
இந்த நினைவுகள் அவன் மனசிலே குறுக்கும் நெடுக்குமாக நடை பயில, எட்டி நடை
போட்டு, கோஷம் எழுப்பும் அந்தக் கூட்டத்துடன் சேர்ந்து கொண்டான்.
அங்கே பல தெரிந்த முகங்கள். அர்ஜுனைப் பார்த்ததும் சில தலைகள் அசைந்தன; சில
முகங்கள் சிரித்தன.
சுலோகத் தட்டிகள் நோர்வேஜிய மொழியிலும் தமிழ் மொழியிலும்
எழுதப்பட்டிருந்தன.
அவனிடமும் சுலோகத் தட்டி ஒன்று கொடுக்கப்பட்டது.
அந்தக் கூட்டம் மெதுவாக நகரத் துவங்கியது.
அணியின் பின்னால் வந்து கொண்டிருந்த சந்திரன், அவனைக் கண்டதும்,
மற்றவர்களுக்கு முன்னால் நகர்ந்து வந்து அர்ஜுனுடன் இணைந்து கொண்டான்.
'என்ன மச்சான், இப்பதான் வாறீராக்கும்.'
'ஏண்டாப்பா. எனக்கு இந்தக் கூட்டம் இருக்கு எண்டு தெரியாது. இதால வாற
'திரி'கில் வந்து, இந்தக் கூட்டத்தைக் கண்டோடனை இறங்கி வாறன்.'
'ஒருத்தருக்கும் பெரிசாய்த் தெரிவிக்கேல்லைத் தான். அவசரத்திலை ஒழுங்கு
பண்ணினது.'
'இந்த உண்ணாவிரதம் இருக்கிற இளைஞர்களைப் பற்றிய முழு விபரமும் எனக்கு
தெரியேல்லை மச்சான்.'
'ஏண்டாப்பா, நேற்று ரி.வி. இரண்டில் காட்டினவங்கள்தானே? பார்க்கேல்லையே?'
'உண்மையிலை எனக்குத் தெரியாது. நான் ரி.வி. 2 இல் நியூஸ் பார்க்கவும்
இல்லை. நான் நேற்று வேலையாலை வர நேரமாயிட்டுதடாப்பா. நீ‘யவது போன் பண்ணிச்
சொல்லியிருக்கலாம்தானே?'
'இனி நான் உன்ர 'மொபீல்' ரெலிபோனுக்கெல்லே அடிச்சுச் சொல்லவேணும் ஏற்கனவே
ரெலிபோன் றைனிங் வந்து கிடக்கு; அதுவும் இன்னும் கட்டேல்லை. நீ வேலையிலை
இருந்து வீட்டுக்கு அடிச்சிருக்கலாம்தானே?'
'இஞ்சை, நிப்பாட்டு பாப்பம் உன்ரை தரித்திரக் கதைகளை. எப்ப பார்த்தாலும்,
அந்த றையினிங் கட்டேல்லை...இந்த றையினிங் கட்டேல்லை... இந்த நாட்டுக்கு
வந்தும் உன்ரை தந்திரம் துலையேல்லை என்றான் அர்ஜுன்.
உரிமையுடன் அவன் சொன்னாலும், சந்திரனுக்கு உரிமை சிறுத்துவிட்டது. இதைப்
பார்த்ததும், அவனுக்குச் சங்கடமாகி இருந்தது. இதனைச் சமாளிப்பதற்காக,
'அதைவிடு மச்சான். மெய்யே, பொடியள் வழமையான முறையிலை பொலித்திக்குச்
சென்று, அகதி அந்தஸ்துக்கு விண்ணப்பித்தவர்கள்தானே?' என்று நட்புக்
குழைத்துக் கேட்டான்.
'ஓமோம். ஒரு மாசம் இருக்குமாம். 'தொல்க்' வைச்சு அங்குள்ள பொலித்திக்குச்
சென்று நாட்டுப் பிரச்சினை எஜன்ஸ’க்குப் பெருந்தொகை காசு கொடுத்துக்
கஷ்டப்பட்டது. இங்கு கொண்டு வந்து இறக்கப்பட்டது, எல்லாம் சொல்லி அடைக்கலம்
தர வேண்டும் என்று கேட்டவங்களாம்...'
'எல்லாம் சரியாத்தானே சொல்லியிருக்கிறாங்கள்....'
'ஆனால், "எந்தக் காரணம் கொண்டும், உங்களுக்கு அனுமதி தரமுடியாது. உடனடியாக
உங்களை நாடுகடத்த அரசு உத்தரவிட்டுள்ளது" என்று பொலித்தி கூறியதைக்
கேட்டுப் பொடியளுக்கு அதிர்ச்சி பக்கத்திலை இருந்த தேவாலயம் ஒண்டிலை
தஞ்சமடைஞ்சிருக்கிறார்கள். அங்குள்ள குருவானவர் நல்லவர். இரக்கமுள்ளவர்.
அவர்களை அங்கே தங்க அனுமதிக்கிறார்....'
'உந்தக் கதையை இதுவரயிலும் நானும் கேள்விப்பட்டனான் மச்சான். பிறகு
என்னவாம்?'
'திரும்பவும் நோர்வே பொலித்தி தேவாலயத்துக்குச் சென்று, பொடியளைக் கைது
செய்து திருப்பி அனுப்பப் போறதாகச் சொல்லியிருக்கிறான்கள். வேறை
வழியில்லாமல், பொடியள் உண்ணாவிரதப் போராட்டத்திலை குதிச்சிருக்கிறான்கள்.
பொடியன்களுக்கு ஆதரவாக இப்ப ஒரு மகஜர் கொடுக்கப் போறாங்கள். அதுக்காகத்தான்
இந்த எழுச்சிக் கூட்டம் திடீரென ஒழுங்கு செய்யப்பட்டது...'
'சரியான சமயத்திலை நானும் வந்து சேர்ந்தன். இதுகளிலை நாங்கள் எல்லாரும்
கடமையாக வந்து பங்கு பற்ற வேணும்....'
பேரணி ஓர் இடத்திலே தரித்தது.
பேரணியின் நோக்கத்தினை சரவணன் விளங்கப்படுத்தத் துவங்கினார்:
'சிங்கள இனவெறி அரசு எங்களைப் புகலிட நாடுகளிலிருந்தும்
விரட்டியடிக்கப்படுவதற்குத் தன்னாலான தகடு தத்தங்கள அனைத்தையும் செய்து
கொண்டிருக்கிறது. 'இனப் பிரச்சினையைக்காரணம் காட்டி, தமிழர்கள் பெருந்
தொகையில் வளமான மேற்கு நாடுகளில் தஞ்சம் புகுகிறார்கள் அவர்கள் பொருளாதார
அகதிகளே அல்லாமல், அரசியல் அகதிகளல்லர். அகதி நிலை கோருவோரைத் திருப்பி
அனுப்பினால், நாங்கள் அவர்களுடைய உயிருக்கு உத்தரவாதம் தருகின்றோம்' என்று
பிரசாரம் செய்கிறார்கள். சிங்களவன்கள் கொடுத்த கயிற்றை இங்குள்ள சில
அரசியல்வாதிகளும் விழுங்கி விட்டார்கள். 'அகதிகளைத் திருப்பி அனுப்புவோம்'
என்கிற கோஷம் சுவிஸ், ஜெர்மனி போன்ற நாடுகளிலேதான் முதன்முதலிலே கேட்டது.
இந்த வியாதி இப்பமேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் பரவப் பார்க்கிறது. நமது
தாயகத்திலே இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை ஏற்படுத்த இந்த நாடுகள்
முன்வர வேண்டும். அது வரையிலும் ஈழத்தமிழ் அகதிகள் அனைவரும் அரசியல்
அகதிகளே என்பதை வற்புறுத்த வேண்டும். இவற்றை விரிவாக எழுதி ஒரு மகஜராகச்
சமர்ப்பிக்கவுள்ளோம்....இப்பொழுது உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு
தீப்பந்தம் தரப்படும். ஒவ்வொரு வரும் தீப்பந்தம் ஏந்தி, நோர்வே
நாடாளுமன்றம் நோக்கி நடப்போம். அங்கு வைத்து நமது மகஜரைச் சமர்ப்பிப்போம்.
இனி, நமது பேரணி பாராளுமன்றத்தை நோக்கி நகரட்டும்....'
ஒரு கையில் சுலோக அட்டையும், மறுகையில் தீப்பந்தமும் ஏந்திக் கொண்டு,
அர்ஜுன் அந்தப் பேரணியின் ஓர் அங்கமாக நகரத் தொடங்கினான்.
'அனுப்பாதே அனப்பாதே!'
'திருப்பி அனுப்பாதே!!'
பேரணி நாடாளுமன்றக் கட்டத்தின் முன் நின்றது.
அரச பிரதிநிதி நாடாளுமன்றக் கட்டத்திலிருந்து வெளியே வந்தார். மகணர்
சமர்ப்பிக்கப்பட்டது இச் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்பொழுது,
அந்தச் சடங்குகளிலிருந்து தன்னை அந்நியப்படுத்திக் கொண்டு, அர்ஜுன் தன்
கையிலிருந்த தீப்பந்தத்தினைப் பார்த்துக் கொண்டே, தன் வயமான சிந்தனைகளிலே
ஈடுபட்டான்.
'...விதியே, விதியே, தமிழ்சாதியை
என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ...?
'தமிழ் ஈழத்திலே நிலை கொண்டுள்ள சிங்கள ராணுவத்துக்கு ஒவ்வொரு தமிழனும்
புலியே. ஐந்து ராணுவத்தினர் செத்தால், பதினைந்து அப்பாவித் தமிழர்களைக்
கொன்று, அவர்களைப் புலிகளாகச் சோடித்து சிங்கள ராணுவ மேன்மையையும்
வெற்றியையும் லங்காபுவத்தின்மூலம் தினம் அறிவிக்கவேண்டும் இந்தக்
கோரங்களிலிருந்து தப்ப, நீண்ட பயணம்...ஊரிலிருந்து கொழும்புக்கு வந்து
சேர்வதற்கிடையில் உயிரை மட்டுமே பணயம் வைக்கலாம்...பின்னர் லட்சக்கணக்கில்
ரூபாய்களை ஏஜண்டுக்கு அழவேண்டும். நாடுக்கு நாடு மாற்றி, குற்றுயிராக்கி,
ஒவ்வொரு நாளையையும் கேள்விக் குறியாக்கி, அகதி அந்தஸ்து கோரும் நாட்டிற்கு
மானம் இழந்த நடைபிணமாக தமிழன் வருகின்றான்....உயிரைக் கையில் பிடித்துப்
புதுநாட்டுக்கு வந்த அவனுக்கு 'பொருளாதார அகதி' என்று சீல் குத்தி திருப்பி
அனுப்பி வைக்கும் கைங்கரியம் அரசியல் என்கிற பெயரால் ந'டக்கின்றது. மனித
நேயத்தை விழுங்கிக் கொழுக்கும் சாத்தான்தான் அரசியலா?...ஈழத் தமிழரின்
நெஞ்சங்களிலே கனன்று கொண்டிருக்கும் மான உணர்வு இந்த வெளியிலே சுடர்ந்து
கொண்டிருக்கும் தீப்பந்தங்களா? அலங்கார அணிக்குப் பின் அவிந்து போகுமா?
அன்றேல், தமிழ் மக்களுக்கு கௌரவத்துடன் வாழும் வாழ்க்கையை நோக்கிய
பயணத்திலே என்றும் துணையாக இருக்கப் போகும் தீப்பந்தமா?'
இந்த நினைவுகளுடன் தீப்பந்தத்தைப் பார்த்துச் சிலையாக நின்றான் அர்ஜுன்.
'என்னடாப்பா அர்ஜுன்? அப்படியே சிலையாய் நிக்கிறாய். எல்லாரும் போறாங்கள்.
வாருமன் நாங்களும் போவம். குளிர்வேறை குத்துது' என்று சந்திரன் அவனை
உசுப்பினான்.
'அர்ஜுன் ஒன்றும் பேசவில்லை. 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' என்று
அவன் உதடுகள் அசையாது மனசு முணுமுணுத்தது.
இரு கட்சிக்கும் பொது!
I
ஊருக்குத் திரும்பிய தணிகாசலத்தாரினால், அவருக்காகக் காத்திருந்த செய்தியை
நம்ப முடியவில்லை.,
'நாலு நாள்களுக்கு முந்தி தம்மையா வாத்தியாரின் வீட்டுக்குள் ஆமிக்காரங்கள்
நுழைஞ்சவன்கள். அவரிட்டை ஏதோ கேட்டு ஆமிக்காரங்கள் அடிச்ச அடியிலே அந்த
இடத்திலையே செத்துப் போயிட்டார். கொள்ளி வைக்கவும் மகனில்லாமல் அவருடைய
காரியங்கள் நடந்துவிட்டன. அந்த வீட்டில் இருக்கிற பெண் சீவன்கள் படுற
அந்தரத்தைக் கண்கொண்டும் பார்க்க ஏலாது...'
'அட அறுவானே, உப்பிடி ஆமிக்காரன் கையாலை அநியாயமாச் சாகிறதுக்குத்தான்
விழுந்தடிச்சுக் கொண்டு ஊருக்கு வந்தனியோ? உன்ரை மோன் கனடாவுக்குச்
சுகமாய்ப் போய்ச் சேர்ந்திடான் எண்ட செய்தியைக்கூட அறிஞ்சு கொள்ளாமல்,
போய்ச் சேந்திட்டியே! நீ இல்லாமல் தவிக்கிற அந்தப் பொட்டைக் குஞ்சுகளை நான்
என்னத்தைச் சொல்லித் தேத்துவன்?' என்கிற எண்ணங்களுடன் இடிஞ்சுபோய்
உட்கார்ந்திருந்தார்.
தம்பையாவின் நேர்மையையும் உழைப்பையும் தம்முடைய மன அமைதிக்காகத்
தணிகாசலத்தார் நினைவு கூர்ந்தார்.
II
தம்பையா பயிற்றப்பட்ட ஆசிரியராகப் பணியைத் துவங்கினார். 'நல்ல வாத்தியார்;
தம்மிடம் படிக்கும் பிள்ளைகள் எல்லாம் வாழ்க்கையிலே முன்னேற வேண்டும் என்று
மிகவும் அக்கறை எடுக்கும் பண்பாளர்' என்கிற பெயரைச் சீக்கிரமே
சம்பாதித்தார். பெரிய வளவினையும் அதில் எழுந்து நின்ற சின்ன ஓட்டு
வீட்டையும் தன்னுடைய சீதனமாகப் பெற்று அவருக்கு மனைவியாக பரமேஸ்வரி வந்து
சேர்ந்தாள். அவள் பிறத்தியாளுமல்லள். சொந்தத்திற்குள் அவருடைய
உத்தியோகத்தைப் பெரிதுபடுத்தாமல், அவருடைய தங்கக் குணத்துக்காகத்தான் அவரை
மாப்பிள்ளையாகத் தேர்ந்தெடுத்தவர்கள்.
பரமேசு வஞ்சகமில்லாமல் தம்பையரின் வாழ்க்கையின் காரியங்கள் யாவிலும் கை
கொடுத்தாள். ஆனாலும், ஒரு சின்னக் குறை. அடுத்தடுத்து மூன்றும் பெண்
பிள்ளைகளாகப் பிறந்தன. அப்பனுக்குக் கொள்ளி வைக்க ஒரு ஆண் குழந்தையை இந்த
மணிவயிற்றிலே பெற்றுக் கொடுக்கவில்லையே' என்கிற குறையை மனசிலே சுமந்து,
அரிய விரதங்கள் இருந்து, நான்காம் காலாக மகேசனைப் பெற்றெடுத்து, வம்ச
விருத்திக்கு 'மங்களம்' பாடி முடித்தாள்.
'பெண் வளர்த்தியோ பீர்க்கு வளர்த்தியோ' என்கிற கவலை தம்பையருக்கு
ஏற்பட்டது. ஆனாலும், கலங்கவில்லை. வீட்டைச் சுற்றியிருந்த செம்பாட்டுக்
கலட்டி அவருக்கு நம்பிக்கை தந்தது. கைகளிலே ரத்தம் வடிந்து புண்ணாகி,
காய்ந்து, தமக்காரனின் உரம் பெற்ற கைகளாக மாறும் வரையில் உழைத்து,
அற்புதமான தோட்டமாக்கினார். எந்த வேலையிலும் எப்பொழுதும் பரமேசு உதவிதான்.
அவருடைய வீட்டைச் சுற்றி வளங் கொழித்து நின்ற கமத்தைப் பார்த்த ஊரவர்கள்
மூக்கில் விரல் வைத்தார்கள். பிள்ளைகளும் படிப்பும், கமத்தில் உழை பபு
என்று ஒத்தாசை செய்தனர். குடும்ப ஒற்றுமைக்கு, உழைப்புக்கும் அந்தக்
கிராமத்திலேயே தம்பையர் குடும்பம் முன்மாதிரியாகத் திகழ்ந்தது.
எல்லாப் பிள்ளைகளையும் டாக்டராகவும் என்ஜினியராகவும் படிப்பித்து
எடுத்துவிட வேண்டும் என்கிற பேரராசைகளையும் அவர் வளர்த்துக் கொள்ளவில்லை.
பெண் பிள்ளைகளைப் பெரிய படிப்புப் படிப்பித்த பிறகு, அந்தப் படிப்புக்கு
ஏற்ற மாப்பிள்ளையைக் கண்டுபிடிக்கிறதுக் கிடையிலை பாதிச் சீவன் அடங்கிப்
போகும் என்கிற உலக ஞானமும் அவரை நிதானப்படுத்தியது. பாத்திரத்திற்கு ஏற்ற
பிச்சை! அது போதும். மூத்த மகள்கள் இருவரும், ஒரே அமர்வில், கல்விப்
பொதுதராதரம் சாதாரண நிலையில் மூன்று Distinctionsராலு Creditsமளும் பெற்று
சித்தி பெற்றார்கள். கிறெடிற் எடுத்த பாடங்களுள் ஒன்று ஆங்கிலம். மெடிக்கல்
என்ரர் செய்வதற்கும் தகுதி. உயர்தர வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும்
பொழுதே, பாராளுமன்ற உறுப்பினர் கோட்டாவில் ஓர் ஆசிரியர் வேலையையும், ஓர்
எழுதுவினைஞர் வேலையும் அவர்களுக்குப் பெற்றுட்க கொடுத்துவிட்டார். அதுக்கு
அவர் பட்ட பாடுகளையும் ஓடிய ஓட்டங்களையும் அந்தக் கதிர் காமத்தான் தான்
அறிவார். வேலையில் இருந்து கொண்டே மேலும் படித்து முன்னேறுவது அவரவர்
யோகத்தையும் முயற்சியையும் பொறுத்தது என்று சொல்லி விட்டார். வேலைக்குச்
செல்ல ஆரம்பித்த பெண்களுக்கு நல்லா சம்பந்தங்கள் வீடு தேடி வந்தன. ஆறப்
போடாமல் அவற்றை ஒவ்வொரு வருஷ இடைவெளிவிட்டுச் செய்து முடித்தார்.
கொஞ்சம் அங்கினை இங்கினை கைமறித்தான். இரண்டாம். 'பொடிச்சி'யின் கல்யாணம்
நடந்தது. இரண்டு மூன்று வருஷம் கமத்திலை பாடுபட்டால் அது பெரிய கடனில்லை.
விசாலி, மூத்ததுகள் இரண்டுக்கும், நாலு வருஷ இடைவெளிக்குப் பிறகுதான்
பிறந்தவள். அவள் வயிற்றிலை இருந்த காலத்தில், ஆண்தான் பிறக்கும் என்று
பரமேஸ்வரி நம்பியிருந்தாள். வயிற்றையும் சாங்கங்களையும் பார்த்த
மருத்துவச்சிக் கிழவிகூட அப்படித்தான் என்று நம்பிக்கையும் ஊட்டினார்கள்.
ஆனால், எல்லாருடைய எதிர்பார்ப்புகளையும் பொய்யாக்கி விசாலி துருதுருவென்று
வடிவான பெண்குட்டியாகப் பிறந்தாள்.
அவளுக்கும் கடைக்குட்டி மகேசனுக்கும் ஒன்றரை வயசுதான் வித்தியாசம்.
III
1981 ஆம் ஆண்டில் ஜுன் மாசத்திலே யாழ்ப்பாண நூல் நிலையம் எரிந்தது. அந்த
ஆண்டின் டிசம்பர் மாசந்தான் அவள் ஜி ஸ’ ஈ ஓ எல் எழுதியவள். ஆறு பாடங்களில்
distinctions ஆக ஆங்கிலத்திலும், சமய பாடத்திலும் மட்டுமே credits
எடுத்திருந்தாள். படிப்புப் படிப்பு என்று புத்தகங்களைக் கட்டிக் கொண்டு
மாரடிக்கிறதும் இல்லை. விளையாட்டுத் துறைகளிலும் 'வலு விண்ணி' என்று பெயர்
எடுத்திருந்தாள். அவளுடைய பெறுபேறுகளைப் பார்த்த அதிபரும், ஆசிரியர்களும்
அவளை அடையில் நிற்பாட்டாது, யூனிவேர்சிட்டிக்கு அனுப்பிப் படிக்க வைக்க
வேண்டும் என்று தம்பையருக்குக் குழையடித்துச் சம்மதிக்கச் செய்து
விட்டார்கள்.
கல்லூரிக்குப் போவதற்கும், டியூஷன் வகுப்புகளுக்குப் போவதற்கும் சைக்கிள்
ஒன்று வாங்கிக் கொடுத்தார். அவளும் தம்பி மகேசனும் அக்கா-தம்பி போலில்லாமல்
நல்ல நண்பர்களைப் போல பழகியது கிராமத்தில் புதுமையாகவும் வேடிக்கையாகவும்
இருந்தது.
விசாலியின் அழகு தனி. அவளுடைய அறிவின் வீச்சும் தனி. இதனால், எத்தனையோ
இளைஞர்கள் அவளை வட்ட மடித்ததும் உண்டு. 'ஊர் இருக்கிற இருப்பிலை, நாடு போற
போக்கிலை, உங்களுக்கு இப்ப காதல் மட்டும்தான் பாக்கி 'டூயட்' பாட
வேணுமெண்டால், அகதி என்று சொல்லிக் கொண்டு இந்தியாவுக்குப் போங்கோ!
சினிமாக் கனவுகளிலே வாழ்றவை அங்கைதான் இருக்கினமாம்' என்று நக்கலடித்து,
அவர்களை நாணச் செய்வாள் 'விசாலி ஒரு நெருப்பு' என்கிற அவிப்பிராயம் பரவி,
இளைஞர் பலர் அவளுக்குத் தனி மரியாதை கொடுத்தார்கள்.
1983 ஆம் ஆண்டு, ஜுலை மாச இனப்படுகொலை இலங்கை வரலாற்றிலே பாரிய மாற்றங்களை
ஏற்படுத்தியது. இளைஞர்கள் கொதித்தெழுந்தார்கள். கல்லூரிகளின்
உயர்வகுப்புகளிலே, இதன் எதிரொலி இருந்தது. எத்தனையோ இளைஞர்கள் படிப்புக்கு
குட்பை சொல்லிக் 'காணாமல்' போனார்கள். இவற்றால், பாதிப்படைந்த விசாலியால்,
அந்த ஆண்டு 'ஏஎல்' எழுத முடியவில்லை. அதனால் அடுத்த ஆண்டு எழுதினாள்.
'தரப்படுத்துதல்' என்கிற பொறிக் கிடங்கில் அவளும் வீழ்ந்தாள். மெடிசின்
செய்யத் தேர்ந்தெடுக்கப்படுவாள் என்று எதிர்பார்த்திருந்த அவளுக்கு 'பயோ
கோர்ஸ்' கிடைத்தது. அதற்குப் போக அவளுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும்,
குடும்ப நிர்ப்பந்தங்களுக்கு முக்கியமாக தம்பி மகேசனுடைய எதிர்காலத்துக்கு
முன்னுரிமை கொடுத்து, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படிக்கத்
துவங்கினாள்.
அந்தக் காலத்திலோன், இந்திய அமைதி பாதுகாப்புப் படை ஈழத் தமிழ் மண்ணிலே
தண்டிறக்கியது. இந்தியாவின் மூத்த சகோதரர்கள் வந்திறங்கியதும்,
தமிழர்களுக்கு அமைதி வாழ்வும், சுயாதீன வாழ்வும் கிடைக்கும் என்று எத்தனையோ
கனவுகளைச் சுமந்து அவர்களை தமிழ்மக்கள் உற்‘சகமாக வரவேற்றார்கள். இந்த
எதிர்பார்ப்புகள் அனைத்தும் கனவாயின! சிங்களப் படையின் Proxy ஆக
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அயலிலேயே இந்திய ஜவான்கள் தமிழர் ரத்தங்களை
வீதியிலே சிந்தினார்கள். அறிக்கை மிக்க வேலிகளாலும், காலங்காலமாக பயின்ற
வைதீக நம்பிக்கைகளாலும் பதிக்கப்பட்ட தமிழ்ப் பெண்களுடைய கற்பு
சிங்களப்படைகளின் பதிலிகளினால் குதறி எறியப்படுவதாயிற்று! காந்தி பிறந்த
மண்ணிலிருந்து சமாதானத் தூதுவர்களெனக் கோலங் காட்டி வந்த ஜவான்களின் இந்த
வெறியாட்டங்கள் அனைத்துமே, ராஜதந்திரம் என்னும் போர்வையில் வெளியுலகுக்குத்
தெரியாது மூடி மறைக்கப்பட்ட கொடூரத்தைப் பார்த்து விசாலி பொருமினாள்.
உயர்கல்வி-கல்யாணம்-வாழ்க்கை அனைத்துமே அர்த்தமற்றவை என்கிற மனோநிலை அவளை
இலகுவாகப் பற்றிக் கொண்டது.
IV
இந்திய பாதுகாப்புப் படை, இந்தியாவிலும் இலங்கையிலும் இடம் பெற்ற ஆட்சி
மாற்றங்களினால், லாபஸானது. இந்திய ராஜதந்திரம் என்பது, தமிழர்களுடைய
சுபாதீன ஆசைகளை ஒடுக்கி, நசுக்கி--இவற்றின் மூலம் இந்து சமுத்திரப்
பிராந்தியத்திலே ஒரு 'பிராந்திய வல்லரசாக'த் தன்னை நியமித்துக்
கொள்ளுவதுதான் என்று விளங்கிக் கொண்டாள். காந்தியும், நேருவும் மிகவும்
கனிவுடன் வளர்த்த மனித நேயங்கள் எவ்வாறு இன்றைய ஆட்சியாளர்களினால்
பகிரங்கமாக விதையடிக்கப்பட்டது என்பதைக் கண்டு விசாலி திகைத்தாள்.
பின் ஓராண்டு காலம், இலங்கை அதிபர் பிரேமதாணுவுக்கும் விடுதலைப்
புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட கைச்சாத்திடப்படாத ஒப்பந்தத்தினால், அமைதி
நிலவியது. விடுபட்ட இடத்திலிருந்து சகஜ வாழ்க்கை துவங்கியது.
மகேசனின் குழம்பிய வாழ்க்கையில் மீண்டும் ஒழுங்கு நிலை ஏற்படுவதாயிற்று.
அவன் 'ஏஎல்' பரீட்சை எழுதினான். விசாலியின் அன்பினாலும் அரவணைப்பினாலும்,
மிகக் கெட்டித்தனமாக, நல்ல பெறுபேறுகள் கிடைக்கும் என்கிற நம்பிக்கையை
வளர்க்கத் தக்கதாகப் பரீட்சை எழுதினான்.
தம்பையரின் வீடு கட்டுவனில் இருந்தது. பலாலி விமானத் தளத்துக்கு உயலிலே
வாழ்வது மிகவும் ஆபத்தானது என்பதை உணர்ந்து கொண்டபோதிலும், தன் கைகளினால்
கலட்டி அழித்துக் கமமாக்கப்பட்ட பூமியை விட்டுச் செல்ல தம்பையருக்கு மனம்
வரவில்லை. 'நிலவுக்கு ஒளிச்சுப் பரதேசம் போகலாமோ?' என்று தமது ஏலாமை
மறைத்து அடிக்கடி சொல்லிக் கொள்வார்.
இந்தக் கட்டத்தில் தம்பையர் வேலையிலிருந்தும் ஓய்வும் பெற்றார்.
'மகேசனை விதற விடாமல் பார்த்துக் கொள்ள வேணும். விசாலிக்கு எப்படியும் ஒரு
மாப்பிள்ளை பார்த்து கட்டி வைச்சுப்போட வேணும்' என்கிற இரண்டுவிஷயங்கள்
மட்டுமே, அவருடைய இலட்சியங்களாக வளரலாயின.
V
பிரேமதாஸ அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையில் நிலவிய தேநிலவு
சடுதியாக முற்றுப் பெற்றது.
சிங்களப் படைகள் மூர்க்கம் கொண்டு அலையலாயின.
பாதுகாப்புக் கருதிய சிங்களப் படைகள் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள
பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடவேண்டும் என்று
மூர்க்கம் கொண்டன.
சிங்கள ராணுவம் முன்னேறி வருவதான கதைகள் காட்டுத்தீ போல பரவலாயின.
சந்தியடிக்கு வந்தாற்றான் புதினங்கள் அறியலாம். இரண்டு மாதங்களுக்கு
முன்னர் முச்சந்திக்குப் புதினம் பொறுக்க வந்த பொழுதுதான் தமது நீண்ட கால
நண்பர் தணிகாசலத்தைத் திடீரெனப் பார்த்தார்.
'எங்கட தணிகாசலமே? என்னப்பா ஊரிலை தான் இருக்கிறீரோ?'
'இது பெரிய புதினந்தான். மூத்தவன் ரகுநாதன் கொழும்பிலைதானே வேலை? அவனும்
கல்யாணம் கட்டி...ஓமோம், அவன்ரை மனுஷ’க்கும் கொழும்பிலைதான் வேலை. இவ
பார்வதியும் போனபிறகு, "ஏன் ஊரிலை இடத்து மாள்றியாள், எங்களோட வந்து
இருங்கோ" எண்டு கரைச்சல் தரத் துவங்கினான். ஏன்தான் அவன்ரை ஆசையையும்
விட்டு வைப்பான் என்று நினைச்சுக் கொழும்பிலை போய்க் கொஞ்சக்காலம்
இருந்தனான்....'
'அப்ப இப்ப கொழும்பாராயிட்டியள் எண்டு சொல்லுங்கோவன்...'
'கொழும்பார் எண்டு கெப்பர் பேசின காலம் மலையேறிட்டுது எப்பவும்
கரைச்சல்தான். தமிழன் எண்டு தெரிஞ்சோடனை, 'இவன் கொட்டியா' எண்டுதான்
ஒவ்வொரு சிங்களவனும் ஐமிச்சப்படுகிறான். கொழும்பிலை சீவிக்கிறது,
நெருப்பிலை இருக்கிறதுபோல. பாத்துப் பாத்து இருந்திட்டு, ரகுநாதன் தன்ரை
குடும்பத்தோடை கனடா போய்ச் சேர்ந்திட்டான். நித்தம் செத்துக்
கொண்டிருக்காமல், நிம்மதியாக வாழலாம்.'
'இப்ப ஏதாவது ஒரு வெளிநாடு போய்ச் சேர்ந்தால் தான் கொஞ்சம் ஆறுதல். நானும்
இவன் மகேசனை என்ன செய்யிறது எண்டு தெரியாமல் முழிச்சிக் கொண்டிருக்கிறன்.'
'இப்ப நீர் என்னை கண்டது கடவுளின்ரை செயலப்பா. இஞ்சாலை நிழலுக்க
வாருங்கோ...என்ர ரெண்டாம் பொடியன் இன்பநாதன் இங்கினை மாட்டுப்பட்டிட்டான்.
அவனைப் பிடிச்சு கனடாவுக்கு அனுப்பி வைக்கிறதுக்கு மூத்தவன் நல்ல ஏஜன்ஸ’
ஒண்டோடை தொடர்பு கொண்டிருக்கிறான் மூன்று நாளு நாளிலை நான் இன்பனைக்
கூட்டிக் கொண்டு கொழும்புக்குப் போக இருக்கிறன். நீரும் மகேசனைக் கூட்டிக்
கொண்டு வந்தால், அதே ஏஜன்ஸ’யைப் பிடிச்சு ஏதாவது செய்யலாமோ எண்டு
பார்க்கலாம்...காதும் காதும் வைச்சாப்போல நடக்க வேணும். உண்ணானை உமக்கு
எண்டபடியாத்தான் உண்மையைச் சொன்னனான்...'
'உது பின்னை எனக்குத் தெரியாதே?...செலவு சித்தாயங்கள்...'என்று தம்பையர்
இழுத்தார்.
'இப்ப உள்ளது ஒரேயொரு கேள்விதான். மகேசனைக் காப்பாத்துறது முக்கியமோ, காசு
கனஞ்சு முக்கியமோ?'
'புரியுது...எல்லாத்தையும் அடுக்குப் பாத்துக் கொண்டு நாளைக்குக் காலமை
உங்களை வீட்டிலை வந்து சந்திக்கிறன்...'
'சரி ஆனால், விஷயம் அங்காலை இங்காலை புசியக் கூடாது...'
'எனக்கு நல்லா விளங்கும். அப்ப வாறன்...'
VI
கணிகாசலம், தம்பையர், இன்பநாதன், மகேசன் ஆகிய நால்வரும் கொழும்பு வந்து
சேர்ந்தார்கள்.
ஏஜன்ஸ’காரன் சரியான 'எவிச்சோல்'. எல்லா விஷயங்களையும் தன் 'பொக்கெற்'றில்
வைச்சிருக்கிறது போலைதான் அவன் கேக்கிற காசை மட்டும் விட்டெறிஞ்சால்,
இந்திரலோகத்தைக்கூட அவன் தன் மேசைக்குக் கொண்டுவந்து விடுவான்போல!
அத்துடன், கனடாவிலிருந்து தணிகாசலத்தார் மகன் ரகுநாதனும் சரியான முறையிலே
'வைன்' கொடுத்துக் கொண்டிருந்தான்.
கண்மூடி முழிக்கிறதுக்கிடையில் ஒரு மாசம்.
இன்பநாதனும், மகேசனும் ஒன்றாக ஒரே பிஃலைட் எடுத்தார்கள் அவர்களை
வழியனுப்பிய பின்னர், அந்த இரண்டு யாழ்ப்பாணத்து வயோதிகத் தந்தைமாரும்,
தமது கடமையைச் செல்வனே செய்து முடித்தது போல ஒரு நிம்மதி பெற்றார்கள்.
அது ஒருகாலம். பெண்களைக் கட்டிக்கொடுத்து மாப்பிள்ளை வீட்டுக்குப் பிச்சல்
பிடுங்கல் இல்லாமல் அனுப்பி வைப்பதுதான் நிம்மதி. இந்தக் காலம்.
பொடியன்களைக் கூட்டி வந்து, கட்டிக்காத்து, வெளிநாட்டுக்கு பிளேனிலை
அனுப்பி வைச்சாத் தான் நிம்மதி. ஓர் இனத்தின் மேலாதிக்க ஆசைகள். ஒரு
சிறுபான்மை இனத்தின் விழுமியங்களை எப்படி எல்லாம் மாற்றி அமைத்துவிட்டது.
தணிகாசலத்தார் கொழும்பில் வாழ்ந்து பழக்கப்பட்டவர். றோட்டுகள் எல்லாம்
தண்ர்பட்ட பாடு. அவருக்குத் தலையும் பஞ்சுபோல நரைச்சிருந்தபடியால், 'செக்
பொயின்ரு'களிலும் வில்லங்கம் இருக்கவில்லை. அவருக்குச் சிங்களமும் நல்லாத்
தெரிஞ்சிருந்ததும் நல்ல பிளஸ் பொயின்ற! பொடியன் கனடாவுக்குப் பத்திரமாகப்
போய்ச் சேர்ந்த செய்தி ரகு நாதனிடமிருந்து வரும் வரையிலும் கொழும்பை விட்டு
அசையமாட்டன் என்று தணிகாசலத்தார் சொல்லிவிட்டார். அவர் ரகுநாதனிடமிருந்து
ஒரு draft ஐயும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
ஆனால், தம்பையர் ஊர் வரத்துடித்தார். அவர் மனைவி பரமேசுவைத் தனியேவிட்டு,
இவ்வளவு நாள்கள் வெளியூரில் தங்கியதில்லை அத்துடன் விசாலியின் கவலைகள்.
என்ன இருந்தாலும், அவள் ஒரு குமர்ப்பிள்ளை. கூப்பிட்ட குரலுக்கு ஆண் துதணை
தேவை. எனவே, மகனை அனுப்பி வைத்த கையோடு அவர் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார்.
VII
ஆமிக்காரன் வசாவிளான் வரை பிடித்துக் கொண்டான். கட்டுவனையும் அவங்கள்
எடுத்துப் போடுவான்கள் எண்டுதான் ஊருக்குள் பேச்சாக இருந்தது.
கட்டுவன்வாசிகள் சிலர், சாவகச் சேரிக்கும் பருத்தித் துறைக்கும் என்று
வாழச் சென்று விட்டார்கள்.
தம்பையன் ஊர்வந்து சேர்ந்த இரண்டாம் நாள். அவர் எங்கேயும் அசையவில்லை.
தணிகாசலத்தார் எப்போ வருவாரோ எண்டு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். பேசின
சாங்கத்தைப் பார்த்தால், எப்படியும் ஒரு வாரமாவது ஆகும். வந்தால் உடன்
வந்து சொல்லுவார். தணிகாசலத்தார் எப்பொழுது வீட்டுக்கு வருவார் என்பது
தான்அவரது முழுக்கவனமும்.
இரவு, வெளியில் வளர்பிறையின் ஊமை வெளிச்சம் பரவிக் கிடந்தது. படலையிலே
நாய்கள் குரைத்துக் கொண்டிருந்தன.
விசாலியுடனும், பரமேசுவுடனும் பேசிக்கொண் தம்பையர் படலையை எட்டிப்
பார்த்தார்.
படலையை உதைத்துத் தள்ளிக் கொண்டு வளவுக்குள் வந்து, ஆமிக்காரன்கள் அவருடைய
வீட்டுக்குள் புகுந்தான்கள்.
'எங்கடா உண்ட மவன்...மகேசன்...அவனுதான் வேணுங்...அவன் பெரிய கொட்டிய...'
'அவன் எங்கை எண்டு தெரியாது மாத்தயா...' தம்பையர் கெஞ்சினார்.
'உம்ம கொட்டியாகே தாத்தே!'
'உத்திக புத்த!'
இந்த இரண்டு வசனங்களை மாறி மாறி மந்திரம் போல ஜெபித்துக் கொண்டு, அவரைப்
பிடித்து நிலத்திலே வீழ்த்தி, உதைத்து, துவக்குச் சோங்கால் அடித்தார்கள்.
பத்து நிமிஷத்து அமளி.
தப்பையரின் உயிரல்ல உடல் நிலத்திலே கிடந்தது. 'புலி அல்லது புலியைப் பெத்த
ஒரு பெரிசு முடிஞ்சுது' என்கிற திருப்தியுடன் ஆமிக்காரன்கள் வெளியேறி
விட்டார்கள்.
VIII
கணிகாசலத்தாரைக் கண்டதும் கதறி அழத் துவங்கினாள். அவளைத் தாங்கிப்
பிடித்துக் கொண்டு, 'அம்மா, அழாதேயுங்கோ. அழுதாப் போல அப்பாவின்ரை உயிர்
வந்திடப் போகுதா? என்று விசாலி நிதானமாகத் தேற்றினாள். அவளுடைய குரல் மிகத்
தெளிவாக இருந்தது. அவளுடைய கண்களிலே ஒரு அசாதாரண ஜொலிப்பு. நிமிர்ந்து
பார்க்கத் தணிகாசலத்துக்குத் துணிச்சலும் வரவில்லை.
மகேசன் கனடாவுக்குச் சுகமாகப் போய்ச் சேர்ந்ததையும், அவனுடைய குரலைத் தான்
நேரிலே கேட்டதையும் சொன்னார். தமது மகன் ரகுநாதன் அங்கு நல்ல நிலையில்
இருப்பதினால் ஒரு பிரச்சினையும் இல்லை என்றார். ஆமிக்காரன்கள் மகேசனின்
உயிரைப் பலி கேட்டுத்தான் வந்தவர்கள். அவன் கையிலே சிக்கவில்லை என்கிற
ஆத்திரத்தில், பாவம் தம்பையரை பலி வாங்கிட்டான்கள் என்றார். இப்படிப் பல
விஷயங்களைப் பேசி, அந்த வீட்டிலே ஒரு சகஜ நிலையை ஏற்படுத்துவதில் வெற்றி
பெற்றார்.
அவர்களை அடிக்கடி வந்து பார்ப்பதாகவும் ஆறுதல் கூறி விடைபெற்றுச் சென்றார்.
IX
ஒரு நாள்
மூத்தவளும் வந்திருந்தாள். அவளை வந்துபோகும் படி பரமேசு கடிதம்
எழுதியிருந்தாள். நல்லவேளை வழக்கமாகச் சொல்லாமல் கொள்ளாமல் வெளியே
போய்விடும் விசாலி அன்றைக்குப் பார்த்து வீட்டிலேயே நின்றாள்.
'என்னம்மா, ஊர் இருக்கிற இருப்புக்குள்ளை அவசரமாக வந்து பார்க்கச்
சொன்னியள்...'
'இப்ப இந்த வீட்டுக்கு நீயும் அவருந்தானே எல்லாம். உங்களிட்டைச் சொல்லாமல்,
எப்படி?'
'என்ன விஷயம்?'
'தணிகாசலத்தார் நல்ல மனுஷன். அவர்தானே, தம்பி மகேசனைக் கொண்டு போய்க்
கனடாவுக்கு அனுப்பினவர்...'
'அது தெரியும்தானே அம்மா...'
'இல்லை. அவர் இங்கினை அண்டைக்கு வந்தாப் போல, எங்கட உத்தரிப்பைப் பார்க்க
ஏலாமல் அழுது போட்டார். விசாலியை அவருக்குப் பிடிச்சுப் போச்சு. இவள் தன்ர
மகன் இன்பநாதனுக்கு ஒரு வயசு இளையவள் எண்டு பிறந்த நாள் விபரம் எல்லாம்
சொல்லுறார். எங்களுக்கு விருப்பம் எண்டால், அடுத்த முறை கொபம்புக்குப்
போகும் பொழுது போனிலை விஷயத்தைப் பேசி முடிச்சிடலாமாம். அவங்கள் விசாலியை
ஸ்பொன்ணுர் செய்து அழைச்சுக் கொள்ளுவாங்களாம். அங்கை இருக்கிற மகேசனுக்கும்
விசாலி போனால் உதவியா இருக்கும் எண்டும் சொல்லுறார்...'
'உப்பிடி இந்தக் காலத்திலை ஆரம்மா செய்யப் போகினம்? ஒண்டுக்குள்ளை ஒண்டு
எண்டாலும் இப்பிடி வலிய வரமாட்டினம். உண்மையிலை தணிகாசலத்தார் கடவுளைப்
போல. அவர் விருப்பப் படி எல்லாம் நடக்கட்டும்...இந்த வீடும் வளவும்
விசாலிக்குத்தான் எண்டு சொன்னீங்களே.'
'அது அவருக்குத் தெரியும். இதுக்கே அவர் ஆசைப்பட்டவர். 'இப்ப சொத்துப்
பத்து எல்லாம் பெரும் சுமை மோனை. பொசிப்பிருக்கிறவங்கள ஆளட்டும்...அது
எல்லாம் வேண்டாம். விசாலிக்கும் மதம் எண்டால் போதும்' என்று மனுஷன்
சொல்லிப் போட்டார்.'
'பேந்தென்ன? எனக்குச் சம்மதம். நான் சம்மதம் சொன்னால், இவரும் சரியெண்டு
சொல்லிப் போடுவார். கொழும்பு போய் மற்ற மற்ற ஏற்பாடுகள் செய்யச்
சொல்லுறதுதானே?'
'எனக்கு விருப்பம் உனக்கம் விருப்பம். ஆனால், இவள் விசாலி ஒண்டும் பேசாமல்
திரியிறாள். அது தான் எனக்குப் பயமாய் இருக்குது.'
'அவள் சின்னப் பொட்டைதானே? 'ஓம்' எண்டு சொல்ல வெக்கப்படுறாளாக்கும்...நான்
கேக்கிறன். இஞ்ச வா விசாலி...'
அக்காவுக்கும் அம்மாவுக்கும் இடையில் நடைபெற்ற உரையாலைப் பேசாமல் கேட்டுக்
கொண்டிருந்த விசாலி, தலையை நிமிர்த்தினாள்.
'என்னக்கா!'
'நாங்கள் பேசறது விளங்குதல்லே?'
'.......' பதில் பேசாது, மோகனமாகச் சிரித்தாள்.
'உப்பிடித்தான் மோனே...எதைக் கேட்டாலும் ஒரு சிரிப்பு அவருமோ ஒரு கோசுக்கு
ரெண்டு கோசு ஒரு முடிவுக்காக அலைஞ்சு திரியிறார்...இண்டைக்கு இவள் விசாலி
கட்டாயம் ஒரு முடிவு சொல்ல வேணும்' என்றாள் தாய். அவளுடைய குரலில் ஏலாமை
தொனித்தது.
'தங்கச்சி விசாலி, நானும் உன்ர முடிவை அறியிறதுக்குத்தான் இவ்வளவு தூரம்
உயிரைக் கையில பிடிச்சுக் கொண்டு வந்திருக்கிறன். வாயைத் திறந்து ஒரு பதில்
சொல்லெணை...' அக்காவின் குரல் கெஞ்சியது.
விசாலியின் வாய் திறந்தது:
'தேடிச் சோறு நிதந் தின்று - பல
சின்னஞ்சிறு சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப் ப்ருவமெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?'
இந்தப் பாரதி பாடலை உணர்ச்சிப் பிரவாகம் பொங்க, கரென்ற குரலிலே பாடிச்
சடுதியாக நிறுத்தினாள்.
அந்தப் பாட்டின் அர்த்தம் பரமேசுவுக்கு விளங்க வில்லை. அவள் பாடிய தொனி.
ஏதோ ஒரு வித்தியாசமான முடிவுக்கு அவள் வந்து கொண்டிருக்கிறாள் என்பதை
உணர்த்தியது. அவள் குரல் எழுப்பி அழத் துவங்கினாள்.
'நொடிகள் போடாமல், அம்மாவுக்கு விளங்கிற மொழியிலை சொல்லண்டீ' என்றாள்
அக்கா.
'நான் நொடிகள் போடவில்லை. நான் எல்லாவற்றையும் பேசுவதற்கான
சந்தர்ப்பத்தைத்தான் பார்த்துக் கொண்டிருந்தன். இப்ப எல்லாத்தையும்
சொல்லுறன். அக்கா, நீ வந்த பிறகுதான் இதை அம்மாவுக்குச் சொல்லவேணும்
எண்டுதான் இருந்தனான். நீ அம்மாவை உன்னுடன் அழைச்சுக்கொண்டு போய் வைச்சிரு.
எனக்காக அப்பா தேடிவைச்ச அத்தனை சொத்துக்களையும் நீயே எடுத்துக் கொள்.
அம்மாவை வைச்சுப் பராமரிக்கிறதுக்கு உதவும்...'
அக்கா ஆத்திரத்துடன் குறுக்கிட்டாள். 'உனக்கு மட்டுமல்ல. அவ எனக்கும்
அம்மாதான். அவவை வைச்சுப் பராமரிக்கிறதுக்காக எனக்கு உன்ர சொத்துத்
தேவையில்லை நீ கல்யாணம் செய்து கனடாவுக்குப் போனால், நான்தானே அவவை
வைச்சுப் பராமரிக்கிறதுக்கு ஏர்வைப்பட்டிருக்கிறன். அவ வாழ்றதுக்கு அப்பா
விட்டிட்டுப் போன பெஞ்சனேபோதும் நீ கல்யாணம் கட்டுறதுக்கும், இதுக்கும்
என்னடி சம்பந்தம்?'
ஆத்திரம் ஆழுகையாக மாறிவிடுமோ என்கிற அவலமும்.
'நீங்கள் யாரும் ஆத்திரப்படக்கூடாது. அழக் கூடாது. நான் சொல்லுறதைக்
குறுக்கால பேசிக் கெடுக்காதேயுங்கோ. உங்களோட இப்படிப் பேசுறதுக்கு
இன்னுமொரு சந்தர்ப்பம் கிடைக்குமோ கிடைக்காதோ என்பதை நான் அறியமாட்டன்.
அதனால பொறுமையாகக் கேளுங்கோ. தம்பி மகேசுக்கு வெளிநாட்டுக்குப் பொறதுக்குக்
கொஞ்சமும் விருப்பமில்லை. அப்பாவின் ஏக்கங்கள், அம்மாவின் அழுகைகள்
எல்லாவற்றையும் பார்த்து நான்தான் போகச் சொன்னனான். அவனுக்கு ஒரு வாக்குக்
குடுத்திருக்கிறன். அதுக்காகவுந்தான் நான் கல்யாணம் செய்யப் போறதில்லை.
யாரும் இது பற்றித் துக்கப்பட வேண்டாம்....'
நிறுத்தித் தாயையும் தமக்கையையும் பார்த்தாள். அவர்கள் இருவரும் உறைநிலை
அடைந்தவர்கள்போலக் காணப்பட்டார்கள்.
விசாலி தொடர்ந்தாள்:
'எங்களுடைய ஆண்பிள்ளைகளை ஆயிரம் அழுகை மூலம் புடிச்சு வெளிநாட்டுக்கு
அனுப்பி வைச்சிடுறியள். "பொடியனை ஆமிக்காரனிட்ட இருந்து காப்பாத்திப்
போட்டம்" என்கிற புளுகம். இந்தப் புளுகத்தைக் கொண்டாட அப்பா எத்தனை நாள்
உயிரோடை இருந்தார்? ஒவ்வொரு குடும்பமும், தங்கள் தங்கள் ஆம்பிள்ளைப்
பிள்ளைகளை வெளிநாட்டுக்குப் பிடிச்சு அனுப்பி வைச்சால், இந்தச்
சிங்களவன்கள் செய்யிற அநியாயங்களுக்குப் பதில் சொல்லுறது யார்? பிடிச்சு
வெளிநாட்டுக்கு அனுப்புற பெடியன்களுக்கு காதிலை தோடுகளும், மூக்கிலை
மூக்குக் குத்தியும் போட்டுத்தான் அனுப்பி வைக்க வேணும். மற்றவங்களுடைய
பிள்ளைகள் தான் போராடி உங்களுக்குச் சுதந்திரம் பெற்றுத் தர வேணுமா? இப்படி
நினைக்கிறது மகா கேவலம் எண்டுதான் எனக்குப் படுகுது. 'உம்ப கொட்டியாகே
தாத்தா...' என்று கேட்டுக் கேட்டு, 'நீ புலியின் அப்பன்!' என்று கேட்டுக்
கேட்டுத்தானே உதைத்துச் சாக்காட்டினவங்கள். 'உத்திக்க புத்தா' எண்டா என்ன
தெரியுமா? வேசை மோன்! அவங்களுக்கு ஒவ்வொரு தமிழ்ப் பெம்பிளையும் வேசை!
எங்கடை கண் முன்னாலை நடந்தது. நான் நிரூபிப்பன் என்ரை அப்பா
புலிக்குட்டியைப் பெத்தவர் என்று. 'தம்பி நீ போடா! களத்திலை உனக்குப் பதிலா
நான்போராடுவேன்' என்று சொல்லித்தான் அவனை அனுப்பினனான். எங்கட அப்பாவைக்
கொன்ற அந்தச் சிங்களவங்களை எனக்குத் தெரியும். அவங்கள் இலங்கையில் எந்தப்
பாகத்துக்குப் போனாலும், அவங்களுக்கு என்னாலேதான் சாவு. நான்தான்
அவங்களுக்கு எமன்! இந்தச் சபதத்தை நான் நிறைவேற்றாமல் சாகவும் மாட்டேன்.'
'எடியே, ஒரு பெண்பிள்ளையைப்போல பேசு ஆண் மூச்சுக கொண்டு உன்னை அழிச்சுக்
கொள்ளாதே...' என்று அக்கா அழுகைக்கும் கெஞ்சுதலுக்கும் இடைப்பட்ட குரலிலே
பேசினாள்.
'இது இன்று நேற்று எடுத்த முடிவல்ல. இந்திய ஜவான்கள் எத்தனை
பெண்களின்--தமிழ்ப் பெண்களின்--கற்புகளைக் குதறி எறிந்தார்கள்? நான்
யூனிவேர்சிட்டியிலை படிக்கும் பொழுது ஒவ்வொருநாளும் இந்தக் கதைகள்தான்.
காந்தி பிறந்த நாட்டின் உத்தம சீலர்களின் கைங்கரியம். சீ, இந்தப் பெண்
உடல்கள் எல்லாம் ஆண்கள் அனுபவிச்சுத் தூக்கி எறிவதற்கான வெறும் மாமிசக்
கூடுதானா என்று கூசிக் குறுகி இருக்கிறன். தொடரும் இந்தக் கொடுமைகள்
வேண்டாம். ஆமிக்காரன் நக்கி எறியும் எச்சில் இலைகளாகத் தமிழ்ப் பெண்கள்
வாழக்கூடாது. எப்பொழுதாவது செத்துப்போகும் உடல், அது எங்களுடைய இனத்தின்
விடுதலைக்காக மட்டும் பயன்படு வேண்டும்! எங்களைப் போன்ற பெண்புலிகள் உலக
விடுதலை இயக்கத்தில் ஒரு வீர காவியம் படைக்கும். இது உறுதி.'
அவள் மௌனமானாள்.
தாயும் அக்காவும் வார்த்தைகளை இழந்த சிலைகளாக அவளையே பார்த்துக் கொண்டு
நின்றார்கள்.
'இன்று தமிழ்நாட்டிலும் பெண்ணியம் பற்றி எல்லாம் வாய்கிழியப்
பேசுகிறார்கள். அவர்கள் பெண்ணியத்துக்கு என்ன இலக்கணம் வைச்சிருக்கிறார்களோ
தெரியவில்லை. மரபு ரீதியாக உடலுறவிலிருந்து விடுதலை பெறுவதைப்
பேசுகிறார்களோ தெரியாது. அவர்களிலே சிலராவது Free Sex தான் பெண்ணியம் என்று
நினைக்கிறார்கள். புதுயுகக் கவிஞன் பாரதியை எனக்குப் பிடிக்கும். ஆனால்,
அவனுடைய வரியிலே ஒன்றைத் திருத்தி எழுதவேண்டும் 'கற்பு நிலையென்று சொல்ல
வந்தார், இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்.' கற்பு என்பது
பெண்களுக்கு, அதனை ஆண்களுக்கும் Extend பண்ணவேண்டும் எண்டு கவிஞர்
சொல்றார்போல! ஆண்மை என்றால் என்ன? பெண்மை என்னறால் என்ன? இந்த
வித்தியாசத்தினை துடைத்தெறிந்து, வீரம் என்றால், விடுதலைப் போர் என்றால்,
இனமானப் போரிலே திகாயம் செய்தல் என்றால், சுருக்கமாக மனித குலத்தின்
அனைத்து கல்யாண குணங்களையும் ஆண்-பெண் என்கிற இரு கட்சிக்கும் பொதுவில்
வைப்போம். அம்மா, உன் பெயரும் அப்பா பேரும் துலங்க வேணும். அதுதான் என்
ஆசை. நீ நல்ல ரோஷமுள்ள வீரமுள்ள ஒரு தமிழ்ப் பிள்ளையை உந்நத
வாழ்க்கைக்காகத் தத்துக் கொடுக்கின்றாய் என்று சந்தோஷப்படு அம்மா. உனக்காக
நான் சுமங்கலியாகவே இந்த வீட்டை விட்டு வெளியேறுகிறேன்...' என்றாள்.
தாயை அணைத்து வணங்கினாள். அக்காவை அணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டாள்.
'நான் ஏற்றுள்ள கொள்கையின் அடையாளமான மங்கல நாணை நான் தரித்துக்
கொள்ளுகின்றேன்.'
சயனைட் குப்பி தொங்கிய கயிற்றினைக் கழுத்திலே அணிந்துகொண்டு, மந்தகாசமாக
சிரித்துக் கொண்டே, அவள் வீட்டை விட்டு வெளியேறினாள்.
வீட்டை விட்டு, வெளியே உள்ள களத்தை நோக்கி, அந்த வீரம் புறப்பட்டது!
IX
பின் குறிப்பு:
இந்தக் கதைக்கு முத்தாய்ப்பாக இந்தப் பின் குறிப்பு அவசியம். இந்த
விசாலிகளைப் போன்ற வீராங்கனைகளுடைய வரலாறுதான் கவிஞர் இங்குலாப்பை
பின்வரும் கவிதை எழுதத் தூண்டியதா?
இலேசாய்க் கருதி
நுழைந்த எதிரி
எடுத்து வைத்த
ஒவ்வோர் அடியையும்
புல்லும் எதிர்த்துப்
போர்க் கோலம்
பூண்டது...
பூவும் நெருப்புப்
பொறியாய் பொசுக்கியது
அந்தக் கணங்களில்
எமது களங்களில்
பொன்னை உதறியும்
பூவை விலக்கியும்
மானுடப் பாதி
மறுபடி எழுந்தது.
ஏந்திய ஆயுதமும்
உயர்த்திய பதாதையும்
வீழ்ந்து படாமல்
வீரத்தோள் கொடுத்தது
எதிரியின் இலக்கு
இன ஒடுக்குமுறை மட்டுமல்ல
பாலியில் வகையிலான வன்முறையுந்தான்
துருப்பிடித்த நினைவுகளோடு
நுழைந்த எதிரிக்கு
வளைத்துப் பிடிக்கும்
கொடிகளாய் இல்லை...
பறித்துக் கசக்கும்
மலர்களாய் இல்லை...
எதிர்க்கும் பெண்புலிகள்
என்பதை நிறுவினீர்
இறந்து வாழும்
வாழ்க்கையை மெய்ப்பித்தீர்...
மரணத்தில்
தன்மான வாழ்க்கையை நிச்சயித்த
வீராங்கனைகளே
உமக்கிது காணிக்கை.
இத்தகைய விசாலிகளுடைய வீரம் இன்குலாப் போன்ற இனமானக் கவிஞர்களுக்கு ஓர் ஆர்
ஆதர்சமாக விளங்கும் என்பது உண்மையே. ஆனால், கவிஞரின் காணிக்கைக்கு விசாலி
முற்றிலும் உரித்தாளியல்லள். ஏனெனில், விசாலி இன்னமும் ஈழத்துக் களங்களிலே
போராடிக் கொண்டிருக்கிறாள் என்பதுதான் இந்தக் கதை சொல்லிக்குக்குக்
கிடைத்துள்ள கடைசிச் செய்தி.
திருப்பி வந்தமை
அந்த நிமிஷம் வரையில் தன் மனத்திலிருந்து சலிப்பு, விரக்தி, துயரம், கோபம்
என்பனவற்றில் எந்த உணர்வென்று முத்தையருக்கே நிச்சயமில்லை. இவை
எல்லாமாகவேகூட இருந்திருக்கலாம்.
பார்வையில் விரிந்த காட்சியில் நெஞ்சு குழைந்து ஒருமுறை குலுங்கப்
பார்த்தது. விழியோரங்களில் ஈரம் கசிந்தது. உதடுகள் இறுகியிருந்தன. தொண்டைக்
குழியில் ஓர் அடைப்பு.
இடிந்து விழுந்து கிடந்த மதிற்சுவர்கள்; சிதிலமாகி நின்ற தென்னை மரங்கள்,
பலாமரங்கள், மா மரங்கள், கபளீகரமடைந்து கிடந்த வீடு; இவையே அல்லது,
இவற்றின் பின்னாலிருந்து செயல் அல்லது, அந்தச் செயலின் பின்னாலிருந்த
காரணங்கள்--அவரை அந்த நிலைமைக்கு ஆளாக்கியிருக்கலாம். அந்த வளவு,
வீடெல்லாம் வெறும் முயற்சியின் பிரத்தியட்சங்களல்ல. அவற்றின் பின்னால்
பகீரத எத்தனங்களே இருந்தன.
சூரியகதிர்-ஒன்று காரணமாய் தன் ஊரைவிட்டு வன்னிப் பகுதிக்குப் புலம்
பெயர்ந்து, ஒரு கட்டாயத்தின் பேரில் இப்போது வீடு திரும்பியிருப்பவர் தான்
முத்தையர். அவர் மருமகனை, சொந்த மகன்களையென்று எதையெதையோ இழந்திருக்கிறார்
அது வரையில். அப்போதெல்லாம் அந்தச் சோகங்களின் பின்னர் பட்டது பெருமைதான்.
ஆனால், இப்போது அவர் படுவது...?
அவருக்கே தெளிவில்லாத ஓர் உணர்வு.
மெல்லிய நியாயம் இருந்ததுபோலத்தான் தெரியந்தது அந்தக் குழப்பத்தில்.
முந்திய இழப்புகளையும் அப்போதைய இழப்புகளையும் ஒரே தட்டில் வைக்க
முடியவில்லை அவரால்.
வீடு...அவரளவில் வாழ்வின் அடையாளம். அது எவரளவிலும் அந்த மாதிரியேதான்
இருக்கும். யாழ்ப்பாண கலாசாரமே 'வீ'ட்டிலிருந்துதான் தொடக்கம் காண்கிறது.
வயலிலும், தோட்டத்திலும் வியர்வை சிந்த இராப்பகலாக உழைத்து வாழ்க்கையில்
முன்னுக்கு வந்தவர் அவர். ஒண்டிக் கட்டையாக இருந்து உழைத்துத் தேடிய
பின்பே, செல்லம்மாவை வாழ்க்கைத் துணையாகத் தேடினார். இரண்டு மகன்கள், ஒரு
மகள் பிறந்ததும் அந்த வீட்டில்தான். அந்த மகன்களை இழந்ததும் அங்கே
இருந்தபோதுதான். ஆனால், அது ஏதோஒன்றின் அடையாளமாகி நின்றதால், அதன் அழிவில்
அவர் வருந்துவது நியாயம்.
நேரம் ஆக ஆக, 'தான்', 'தனது', என்பவைகளிலான கவனம் சற்றுக் குறைந்து
ஊர்பற்றிய மொத்த நிலைமைகளில் மனம் படிந்தது.
வீடுபோலவே ஊரும் ஆகிப்போயிருந்தது.
எங்கும் அழிச்சாட்டியத்தின் விஸ்வரூபம்.
லௌகீக நிலைமைகளன்றி, பௌதீகமும் ஒரு போரினால் மாறுமோ? மாறும்! அதற்கு அவரது
ஊரே அத்தாட்சி. அவர் வீட்டைத்தான், எந்தத் தெருவைத்தான் சுலபத்தில்
அடையாளம் காண முடிகிறது?
பள்ளிக்கூடத்துக்குப் பக்கமிருந்ததால், இவரது வீட்டை இவரால் கண்டுபிடித்தல்
சாத்தியமாயிற்று. அந்த இடிபாட்டான் பெரிய வெளிதான் பள்ளிக்கூடமென்பதை
எவரும் சுலபமாக இனங்காணல் கூடும் தான். பலரும் அந்த வெளியையே மையமாகக்
கொண்டுதான் தத்தமது வீடுகளையும் அடையாளம் கண்டிருப்பர் என்று தோன்றியது
முத்தையருக்கு! அத்தனை அழிபாடு!
எல்லாவற்றையும் விட்டுச் சென்றதுடன், இனி ஒரு 'நிச்சய'மான நிலைமை தோன்றாமல்
அங்கே திரும்புவதில்லை என்ற திண்ணத்தோடுதான் அவர் வன்னி சென்றார். கூட
மனைவி, மகள், பேரன், பேரன் அத்த மகளின் மகன்தான். மருமகனைத்தான் ஏற்கனவே
பலி கொடுத்துவிட்டாரே!
பலபேர் சேர்ந்து போயிருந்தனர். 'இதெல்லாம் தேவையா? யுத்தம் வேண்டுமா?'
என்று அவர் காது படவே சிலர் முணுமுணுத்தனர். 'தமது' என்ற எல்லைக்கு வெளியே
வாழ்ந்தறியாத சிலர் இன்னும் ஏதேதோ சொன்னார்கள்.
அப்போது முத்தையராலும் ஆறுதலும், கண்டிப்பும் சொல்ல முடிந்தது. "சாதி,
மதம், உயர்வு, தாழ்வு என்று பார்த்த காலமெல்லாம் மலையேறிப் போய்விட்டது
கண்டியளோ! இப்ப எல்லாரும் ஒரே சாதி, ஒரே மதம் என்ற கட்டுக்கோப்புக்குள்ள
வாழுறமாக்கும்! எங்கட மண்ணில எருவாகிப்போன இளம்பிள்ளைகள் எத்தனை! புத்தகம்
தூக்க வேண்டிய கைகளிலே துவக்கு தூக்குறானுகள், ஏன்? மணமாலையும் கழுத்துமாக
நிற்க வேண்டிய வயசில, எங்கட பொம்பிளைப் பிள்ளையள் கழுத்தில நஞ்சு மாலையைத்
தொங்கவிட்டுக் கொண்டு காடுமேடென்று திரியுதுகள், ஏன்? எங்களுக்காத்தானே!
அதால, அதுகளின்ர மனம் தளராத மாதிரி நாங்கள் இருக்க வேணும்!"
கொஞ்சம் மனம் ஆறிவரும் வேளையில் 'சூரியக் கதிர் இரண்டு' தொடங்கியது.
வன்னியில் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.
அவரவர் இடங்களுக்கு மக்கள் திரும்பலாம் என அரசாங்கம் அறிவித்தல் விட்டது.
மீண்டுமா?-பலரும் திகைத்தனர். ஆனாலும், பயணம் தொடங்கியது.
முத்தையரும் குடும்பமும்தான்.
வன்னியிலிருந்து தென்மராட்சிக்கூடான பயணம் மிக்க 'வரண்'ட தாயிருந்தது.
முன்பு அதனூடாகச் சென்றபோது, தென்மராட்சியில் அந்த மக்களின் அவஸ்தை காரணமான
'ஈரம்' இருந்தது நிஜம்.
திரும்பி வருகையில் அது இஸ்லாமலிருந்தது ஆச்சரியம் அல்ல.
எப்படியோ திரும்பி வந்தாகிவிட்டது.
பலருக்கும் மனம் இடிந்துபோனது. கண்டகாட்சியில், முத்தையரைப் பொறுத்தவரை
அவரே இடிந்து போனார்.
ஆனாலும், சுதாரித்தார்.
சிந்தனை, தனது இழப்புகள் பற்றியதாயிருந்தது, ஊர்ப் பொதுபற்றியதாகத்
திரும்பியது.
சலிப்பு, விரக்தி, துயரம், கோபமென்று குமைந்து கிளம்பிய
கலப்புணர்விலிருந்து மீண்டு, மனம் கோபமென்கிற உணர்வில் மையங் கொண்டது.
அந்த சிவப்பு மண்ணூரில் இருந்தது இருந்தபடி இல்லை. பள்ளிக்கூடமா...?
முச்சந்திப் பிள்ளையார் கோவிலா....? அம்மன் கோவிலடி ஆலமரமா? அம்மன்
கோவிலைப்பற்றிச் சொல்ல வேண்டாம். அம்மியே பறந்திருக்கிற காற்றில்
அப்பளத்தைப்பற்றி என்ன சொல்வது! இந்த உருவெளித் தோற்றம் மட்டுமல்ல,
மொத்தத்தில் அந்த ஊர் இழந்திருப்பது வாழ்வினுக்குத் தேவையான காலம் என்கிற
களத்துன் 'நிச்சய'த் தன்மையையும் என்பது கொஞ்சம் கொஞ்சமாய் புரிய...
மின்னலாய் ஒரு பேருண்மை வெடித்தது; காலத்தின் அநித்தியம் என்கிற களத்திலும்
பார்க்க மனித இருத்தலுக்கான ஒரு தளம் மிகமிக முக்கியமானது. இதுவே
ஊர்...பாரம்பரிய பிரதேசம்...! இன்னும்...தேசம்...!
இந்தக் கோணத்தின் வழி பார்த்தால், எப்பேர்ப்பட்ட அழிவுகளோடாயினும் அந்த
மண்ணின் மீட்சி மகத்தானதாகப்பட்டது அவருக்கு. மண்ணிருந்தால் வீடு
வரும்...மக்கள் வருவர்... அவர்களிலிருந்து மாவீரர்கள் தோன்றுவர்!
வாழ்வுக்கு முற்றுமுழுதான நித்தியத் தன்மையை நாளை அடைவதற்கான நம்பிக்கை
பிறக்கிற இடமல்லவா தளம்!
நிர்ப்பந்தத்திலேயே செய்திருந்தாலும், அதன் விவேகத் தன்மையை நினைக்க,
மனவுறுத்தலும், மறைந்தது.
மீதியாய்த் தொக்கிய கோபத்தில் மகாநியாயம் ஒன்று இருந்ததால், முத்தையர்
அதைமட்டும் தக்க வைத்துக் கொண்டார்.
கனவுலகச் சுகங்கள்
விழிப்பு நிலை வந்துவிட்டது. இமைகளைத் திறப்பதற்குக்கூடச் சோம்பலாக
இருந்தது. விழுந்தடித்து எழும்பிச் செல்வதற்கான அவசர அலுவல் எதுவும் இல்லை.
இன்று சனிக்கிழமை, வீவு நாளில் சுகமே, நீண்ட நேரம் படுக்கையிலே
ஒட்டிக்கொண்டு கிடப்பது தான். தூக்கம் சுகம் மட்டுமல்ல, அற்புதமா
மருந்தும்!
இப்பொழுது இந்தச் சுகமான நீண்ட தூக்கத்திற்குப் பிறகு, உடம்பு எவ்வளவு
இலேசாக இருக்கிறது?
என்ன நேரம் இருக்கும்? சட்! ஐந்து நாள்களும் கடிகார முள்ளின்
இராக்கத்திற்குள் அரைபட்டது போதும். இன்றாவது கடிகாரத்தின் முட்கள்
எனக்குச் சலாம் செய்யப்படும்...நேரம்பற்றிய கவலை இல்லை.
மறுபக்கம் திரும்பிப் படுத்தேன்.
இனி உருண்டு உருண்டு படுக்கலாம். ஆனால், என் உடல் நித்திரைக் கணிகையின்
வசீகரங்களைத் திமிறுவதை உணர்கின்றேன்.
நேற்று நான் சுவைத்த ஒரு கவிதையின் வரிகள், இலேசாய், யாரோ செவிகளிலே
குசுகுசுப்பது போல...
'வெடித்துச் சிதறும்
இதயங்கள் அங்கே
விம்மி இசைத்திடும்
விடுதலைக்கானம்
துடிக்கும் இதயம்
உனக்கிருந்தால்-உன்னைத்
தூங்கவிடாது
ரத்தகானம்...'
இதனைப் பாடிய கவிஞன் யார்? கவிஞரின் பெயரா முக்கியம்? கவிதையின் சாரந்தான்
முக்கியம்!
நான் பெரிய இலக்கிய மேதையைப்போல சிந்திக்கிறேனே என்று என்னுள் சிரிப்பும்
வந்துவிட்டது.
நான் இப்படி என்னுள் சிரிப்பதைப் பார்த்து முரளி என்ன நினைப்பான்? அவன்
எதிர்க்கட்டிலிலே தானே படுத்துக் கிடக்கிறான்? அவன் கனவு காண்கிறானா?
விழித்து விட்டானா?
என் கண்கள் இலேசாகத் திறக்கின்றன.
எதிரே கிடந்த கட்டில் வெறுமையாகக் கிடக்கின்றது. அதிலே தான் அவன் படுப்பது.
போர்வைகள் எல்லாம் அலங்கோலமாகக் கிடக்கின்றன. அவனை எங்கே போனாய் என்று
கேட்க முடியாது. வீட்டுப் பாரங்களை இங்கிருந்தே சுமக்கின்றான். வயசு
முப்பதையும் தாண்டிவிட்டது. அவனுக்குக் கல்யாணம் கட்டி வைக்கும் என்ணம்
வீட்டிலுள்ளவர்களுக்கு இன்னமும் எழவில்லை. வயசு அதமே கரைவதா? இந்த நாட்டின்
சுக லளிதங்களிலே மிதக்க அவனுக்கு உரிமையுண்டு.
'மச்சான், நீ வாசித்த அந்த ரத்தகானத்தைப் பற்றி நாங்கள் சிந்திக்கக்கூடாது.
பல்கலைக் கழகங்களிலே படித்து, ஊரிலே பெரிய உத்தியோகம்
பார்த்தவர்கள்...புதிய வாழ்வும் பணமும் பவிசும் தேடி வந்தவர்கள்...இங்கே
சாப்பாட்டுத் தட்டுகள், எச்சில் பாத்திரங்கள்-இவற்றைச் சுறண்டிச் சுறண்டிக்
கழுவிக் கொண்டிருக்கிறார்கள்...மனசுக்கள் புழுங்கிச் செத்துக் கொண்டே,
'இந்த நாட்டிலதான் Dignity of Labour என்பதற்குச் சரியான அர்த்தம் இருக்கு'
என்று பூசி மெழுகி வாழ்கிறார்கள்...எனக்கு ஒருத்தரைத் தெரியும். அவர்
ஊரிலே, 'படிக்கிறன்' என்ற கெப்பரிலை கமத்தில இறங்கித் தன் தகப்பனுக்கு
ஒத்தாசை செய்யமாட்டான். இங்கை காலை நேரத்து கடுங்குளிரையும் பார்க்காமல்,
மரக்கறி வெட்டுறான்... இதுகள் செய்தால் வெட்கம் இல்லை. ஆனால், இங்குள்ள
ககங்களை அனுபவிச்சால், எங்கடை ஒழுக்க மரபுகள் கிழிஞ்சு போகும்! மாமிசத்தின்
தன்மை எல்லாருக்கும் ஒண்டுதான். மச்சான், தோலின் நிறந்தான் வித்தியாசம்.'
என்று பெரிய பிரச்சங்க மழை பொழிந்து தன்னுடைய செயல்களை நியாயப்படுத்திப்
போடுவான்.
கடினமாக உழைக்கின்றான். அவனைப் போல தான் எல்லாரும் உழைக்கிறார்கள்.
பிறகு?...
ஓமோம் தூங்க வேணும். நித்திரை பிரதானம்...
இடைக்கிடை கனவு காணவேண்டும்.
சே, நேற்று நான் கனவு காணவில்லை....
விழி பபு நிலையிலும் கனவுகள் காணலாம்.
முரளி விழிப்பு நிலையில் கனவு காண எங்கேயாவது போயிருப்பான்...பாவம், அவன்
போக்கிலும் நியாயம் இருக்கலாம்...
கனவு, பணம்...
இதில் எது முக்கியம்?
* * *
ஐன்ஸ்டீன் பாணியில் ஏதோ பாரிய கண்டு பிடிப்பா?
பணம் இல்லாதவன், சதா பணம் பண்ணுவதைப் பற்றிக் கனவு கண்டு
கொண்டிருக்கலாம்... இவை பகற் கனவுகள்...
பணம் இருந்தால், எல்லாவகையான கனவுகளையும் அநுபவிக்கலாம்...தூக்கத்திலே
காணும் கனவுகள் வேறு. பகற் கனவுகள் வேறு...
'புலம் பெயர்ந்தவர்கள்'என்று சொல்லிக் கொண்டு, இடையிடையே
தமிழ்நாட்டுக்குச்சென்று, ஊரிலுள்ள உறவுகளை அங்கு வரவழைத்து, அந்த உறவுகளை
மகிழ்விக்கச் செலவு செய்வதும் ஒரு வகைக்கனவே.
செலவுகள் செய்யும் லாவகத்தினைப் பார்த்து, 'எங்கடை இவன் காசுகள் காய்க்கும்
மரத்துக் கீழே தான் படுத்துக் கிடக்கிறான்' என்று கிறங்கடிக்கச் செய்வதும்
கனவுதான்!
புலம் பெயர்ந்த நாடுகளிலே ஓர் ஐந்து வருடம் வாழ்ந்துவிட்டால் போதும்,
எதற்காகப் புலம் பெயர்ந்தோம் என்பதையே மறந்துவிடுகிறார்கள். இந்த மறதிகூட
ஒருவிதக் கனவுதான்!
தன் சொந்த உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, உண்மையில் அகதியாக அலைந்து
திரிந்து ஒரு நாட்டிலே தஞ்சம் புகுந்தவனாக இருக்கலாம். பிறகு, 'புலம்
பெயர்ந்த தமிழன்' என்று புதிய 'லேபல்' ஒட்டிக் கொள்ளுவான். ஊரிலே எத்தனையோ
பேர் செத்துப் போவதாகச் செய்தி வரும். எந்தச் சலனமும் ஏற்படாது. எங்கேயோ,
ஏதோ நடக்கிறது....உணர்வுகள் மரத்துப் போய்விட்ட இந்த நிலைகூடக் கனவுதான்...
'நாங்கள் வெளிநாட்டில் வாழ்கிறோம். அந்த நாட்டு Passport எடுத்துவிட்டோம்.
இனி, எது எங்கள் சொந்த நாடு? அப்படி ஒன்று இருந்தாலும் திரும்பிப் போகவா
போறம்?' இப்படிக் கேட்டு சகல ஏலாமைகளுக்கும் பரிகாரம் தேடிவிட்டதுபோல
நடிப்பதும் ஒருவகைக் கனவுதான்.
அந்தக் காலத்தில், விடலைப் பருவத்திலே வீட்டுக்குத் தெரியாமல் சினிமாப்
பார்த்து, பாதி தூக்கத்திலே சினிமாவிலே குலுக்கி நடமாடிய ஒருத்தி
பக்கத்திலே வந்து...அந்தக் கனவுகளிலே சஞ்சரிக்கும் பொழுது இடையிலே
துண்டிக்கப்பட்ட பொழுது...கனவுகளே நிஜவாழ்க்கையிலும் சுகமானவை என்கிற
நினைவுகள்...
வெளிநாட்டிலே வாழ்வதால் பந்தா காட்டுவது எதனால்? என்ன வேலை செய்கிறோம்
என்று மற்றவன் கேட்கக் கூடாது. Dignity of Labour என்பதின் அர்த்தத்தினை
அறியாத அப்பாவிகளுக்கு விளங்காது. எனவே, பணத்தாலே பந்தா போட்டுப் பவனி
வரவேண்டும். இதுகூடக் கனவுதான்!
கனவுகளின் தாற்பரியங்களைப் பற்றி நான் வியாக்கியானம் செய்ய முனைகின்றேனா?
அல்லது கனவு கண்டு கொண்டிருக்றேனா?
என் தாய்நாட்டைப் பற்றிய இனிமையான நினைவுகளிலே சஞ்சரிப்பதுதான் இன்று
எனக்கு இனிமையான கனவுகள்.
வயசைப் பொறுத்தும், அல்லது வரித்தகொள்கைகளைப் பொறுத்தும், கனவுகள் அல்லது
கனவு மயமான சிந்தனைகள் மோகனமானவை என்பதும் உண்மை.
'இராணுவத்தினர் போராளிகளுடைய முகாம்களைக் குண்டுமாரி பொழிந்து
அழித்தார்கள். ஐம்பது போராளிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று
நம்பப்படுகின்றது' என்கிற செய்தியை அறிந்ததும், ஏதோ சொந்த இழப்புப்போல என்
மனம் சிறிது நேரமாவது துக்கத்தில் தொங்கிக் கொண்டிருக்கும்.
'போராளிகள் ஒரு இராணுவ முகாமைத் தாக்கி முற்றாக அழித்தார்கள்! நூறு
இராணுவத்தினர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது' என்கிற செய்தி
எதிர்மாறான உணர்ச்சியை ஏற்படுத்துகிறது. மனம் துள்ளுகிறது. சொந்த வெற்றி
போல ஓர் எக்காளம்.
உயிர்கள் போயின. சிங்கள உயிர்கள் போகும் பொழுது மனநிலை வேறு. தமிழ்
உயிர்கள் போகும் பொழுது மனநிலை வேறு. அடுத்த மூச்சுலே மனித நேயம் பற்றிப்
பேசுவோம். குழம்பிப் போன கனவுகள் போலதான் இவையெல்லாம்...
ஏதோ கனவுகளை பற்றிய சிந்தனைகளிலே தொற்றி என் மனசையே காயப்படுத்திக் கொண்டது
போன்ற ஓர் அவஸ்தை.
'பேசாமல், எதுவும் யோசிக்காமல், கண்களை மூடிக் கொண்டு படுப்பம்...' என்று
மறுபக்கம் புரண்டு கண்களை இறுக்கி மூடிக் கொள்ளுகிறேன்.
'ரிங்ங்...ரிங்ங்...' தொலைபேசியின் அலறல்.
தொலைபேசிகளும் நமக்குத் தொந்தரவுதான். இரவு தூங்கப் போகும்பொழுது அலறும்.
எடுத்துப் பேசினால், 'என்ன மச்சான் தூங்கீட்டியே...இங்கை ஒரு'பெற்'
பிடிச்சானான். என்ன தெரியுமே? சின்னத் தம்பிப் படத்திலைதான் குஷ்புவுக்கும்
பிரபுவுக்கும் தொடர்பு ஏற்பட்டது என்று நான் சொல்லுறன். சந்திரன்
இல்லையாம். நீ என்ன மச்சான் நினைக்கிறாய்?' இதுக்கு என்ன பதில் சொல்லுறது?
இந்த விஷயத்துக்குத் தீர்வு காணவிட்டால் அவனுக்கு மண்டை வெடிச்சுப் போகும்.
நடுச்சாமம் என்கிற இங்கிதம் தெரியாத ஒரு வெறி!
இப்படி எத்தனையோ...
'இப்ப யார் அறுக்கப் போறான்?' என்கிற பயத்துடன் தொலைபேசியை எடுத்தேன்.
'என்ன மச்சான்...நான் ரவி பேசுறன்...எழும் பிற்றியோ? இப்ப பதினொரு
மணியாகுது...'
'....'
'என்ன பேச்சுமூச்சைக் காணன். சொறிமச்சான். பிறகு எடுக்கிறன்...'
'என்ன பேச்சுமூச்சைக் காணன். சொறிமச்சான். பிறகு எடுக்கிறன்...'
'ஒண்டுமில்லை. ஏதோ யோசினைகள். நி சொல்லு மச்சான் நான் எழும்பித்தான்
இருக்கிறன்.
இன்றைக்கு நான்தான் சமையல். சும்மா இருந்தால் இங்கால வாவன். முரளியும்
இல்லை...'
'என் மேச்சலுக்கோ?'
'அப்படித்தான் நினைக்கிறன். நீ வந்தால், கொஞ்சம் முஸ்பாத்தி செய்து
சாப்பிடலாம்.'
'இல்லை மச்சான். கணேஷ் அங்கிள் சாப்பாட்டுக்குக் கூப்பிட்டிருக்கிறார்.
அன்ரி நல்லாச் சமைப்பா...'
'ஓமோம். தெரியும். நீ எனக்குக் காது குத்தாதை. வாணி ரூட்டைக்
கெட்டித்தனமாத்தான் கிளியராக்கிக் கொண்டிருக்கிறா...என்
வாழ்த்துக்கள்...இந்தப் புதினம் சொல்லத்தானோ எடுத்தனி?'
'இல்லை மச்சான்... இண்டைக்கு 'இந்தியன்' படம் காட்டுறாங்களாம். உண்மைச்
சொல்லுறன். நாலு மணி ஷோவுக்கு கணேஷ் அங்கிள் குடும்பமும் போகுதாம்...நீயும்
வாறது எண்டால், நானும்போகலாம்...'
'ஏன் நானும் வாறது எண்டா...'
'இந்தக் குசம்புதானே வேணாம் என்கிறது நான் தனியப் போனா தங்களுக்காகத்தான்
வந்ததெண்டு 'சீப்'பாக மதிப்பினம். உனக்குப் படம் பாக்கிறது அவ்வளவு
விருப்பமில்லை எண்டு எனக்குத் தெரியும்...இது வித்தியாசமான படமாம் மச்சான்
கமலுக்குச் செய்த 'மேக்அப்' பார்க்கலாமாம்...சினிமாவுக்கு அப்பால், அதில
இணைக்கப்பட்டிருக்கிற கலையை நிரசிப்பாய்...என்ன சொல்லுகிறாய்?'
'சுத்தி வளைக்காமல் சொல்றன். உனக்கு நான் வாறது உதவியாக இருக்கும் எண்டா
வாறன். ஒரு நண்பனுக்கு உதவி செய்யிறது கடமை...'
'தாங்ஸ் மச்சான். மூணேகாலுக்கு ரெடியாக நில். நான் 'பிக்அப்' பண்ணுறன்....'
'சரி.'
போனை வைத்துவிட்டு, மணியைப் பார்த்தேன்.
பதினொன்று தாண்டிவிட்டது.
'இன்றைக்கு நல்லாத்தான் நித்திரை மூசியிருக்கிறன்' என்கிற நினைவுடன் என்
காலைக் கடன்களைச் செய்வதற்கு ஆயத்தமானேன்.
தியேட்டரில் நல்ல கூட்டம்.
எல்லாரும் எங்கள் தமிழர் கூட்டம்.
பென்ஸ், பி. எம் டபிள்யூ, மஸ்டா, ஹொண்டா, டோயோட்டா...என்று அனைத்து ரக
கார்களிலிருந்து இறங்கினார்கள். இவை பயண வசதி செய்யும் ஊர்திகளல்ல.
அவர்களுடைய அந்தஸ்தைப் பறை சாற்றும் தம்பட்டம்.
பெண்கள் கூட்டத்தினர் 'இதைவிட்டால் வேறு ஒரு சந்தர்ப்பம் கிடைக்காது'
என்கிற மனோபாவத்துடன் காஞ்சிபுரம் , சின்னாளுப்பட்டு, பெனாரிஸ், மணிப்பூரி
என்று (அனைத்துப் பெயர்களும் ஞாபகம் வரவும் இல்லை) ஜரிகைப் பட்டுகளிலே
மிதக்கிறார்கள். அவர்களுடைய கழுத்துக்களிலும் கைகளிலும் பூட்டப்பட்டிருந்த
சிங்கப்பூர் தங்க நகைகள் ஒஸ்லோ வின் மாலை வெயிலில் 'டால்' அடித்தன!
மனைவிகளையும், மகள்களையுமல்ல...குட்டிக் குட்டி நகைக் கடைகளை இங்கு அழைத்து
வந்ததுபோல...
இந்தச் சனங்களை இந்தக் கோலங்களிலும், இந்த எடுப்புகளிலும் பார்க்கும்
யாராவது அகதிகள் என்று சொல்வார்களா? இவர்களுடைய உடன் பிறப்புகளும், ரத்த
உறவுகளும் பிறந்த மண்ணிலே வீடிழந்து, சகலமும் இழந்து, அடுத்த வேளைக்
கஞ்சிக்கும் வழியின்றி, ஏன் நோய்க்கு மருந்துக்கும் வழியின்றி, மர
நிழல்களிலே உறங்கும் நாடோடிக் கும்பலாக வாழ்கிறார்கள் என்று சொன்னால்
யாராவது நம்புவார்களா?
அந்தக் கவிஞனின் 'ரத்தகானத்'தின் இன்னொரு பகுதி என் நினைவிலே உடைப்புக்
கண்டு பீச்சியடித்தது'
குடிசைகளோடு
குழந்தைகள் கருகின
குவிந்த அறிவுச்
சுவடிகள் கருகின
போதிக் கிளைகளில்
மனித மாமிசம்
பொசுங்கியதோ
புத்த ஜ“வகாருண்யம்
கானம்...ரத்த
கானம்
இந்தக் கவிதையின் அர்த்தங்களிலே நான் ஆழ ஆழமாக இறங்கிக் கொண்டிருந்த
பொழுது, 'வா மச்சான் ரிக்கற் எடுத்திட்டன்' என்றான் ரவி.
திரையரங்கு நிரம்பி வழிகின்றது.
பலருக்கு 'டிக்கற்' கிடைக்கவில்லையாம். அடுத்த 'ஷோ'வும் இருக்காம். இனி,
அவர்கள் வீட்டுக்குப் போய் திரும்பி வருவது எல்லாம் கரைச்சல். கமல்
செய்யப்போகும் திரைசாகஸங்களைப் பார்ப்பதற்கு இன்னும் மூன்று மணிநேரம்,
வெளியே காத்துக் கொண்டிருப்பது பெறுமதியானதுதாகும்.
இதே திரையரங்கிலே, தாயக நிகழ்வுகளிலே மக்களுக்கு ஒரு பிணைப்பினை
ஏற்படுத்தும் நோக்கத்துடன், நம் கலைஞர்கள் எத்தனையோ நிகழ்ச்சிகளை
நடத்தியிருக்கிறார்கள். இப்படிச் சனங்கள் அடித்துப் பிடித்துக் கொண்டு
வருவது கிடையாது. அந்த நிகழ்ச்சிகள் மனச்சாட்சியினை அழுத்தும். சில
நியாயமான சமூகப் பிரச்சினைகளை அவர்களுக்கு முன் வைக்கும். அவை யாருக்கு
வேணும்? வேண்டுவதெல்லாம், கனவுலக சுகங்கள்!
லஞ்ச ஊழலை ஒழிக்கும் தனிமனிதப் போராட்டத்திலே கிழவன் 'கெட் அப்'பில் (சாயி,
என்ன மாதிரி சூ பபரான மேக்கப் போட்டிருக்கிறாங்கள் கமலுக்கு? திறந்த
வாய்களை மூடாமல் ரஸ’க மகா ஜனங்கள் கனவுலகங்களிலே சஞ்சரிக்கத் துவங்கி
விட்டார்கள்...) முதலாவது கொலையைச் செய்து விட்டார்!
வர்மக கலையைப் புதைக் குழியிலிருந்து தோண்டி எடுத்து ஷங்கர் என்னமாய்த்
திரைக்காவியம் எழுதுகிறார்!
என்னால், திரைக் கதையுடன் ஒன்ற முடியவில்லை...
என் மனத்திரையிலே வேறு விதமான படங்கள்.
சூரியக் கதிர்-ஒன்று, சூரியக்கதிர்-இரண்டு என்று யாழ்ப்பாணம் வாழ் தமிழ்
மக்களைத் தமது சொந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கும் இராணுவ நடவடிக்கைகள்.
கட்சியில் நம்பர் Two ஆக உயர்வதற்கு இவை அவசியம் என்று கணித்துச்
செயல்படும் ஓர் அமைச்சர். அவர் மாமா! மேலே அவர் மருமகள்.
உடுத்த உடைகளுடன்...கைக்குழந்தைகளைக் கைகளிலே ஏந்திக் கொண்டு...என் தாய்
என்ன செய்வாள்? அவள் பாரிச வாதத்தினாலே பாதிக்கப்பட்டவள்... இப்படி எத்தனை
கிழடு கட்டைகள்...பாலுக்கும் வழியின்றி, பசலைக் கால்கள் பதித்து நீண்ட
பயணம் மேற்கொண்டுள்ள சிறுவர்...ஒரு லட்சத்திற்கும் மேல்...இரண்டு லட்சம்
இருக்கும்...சாரை சாரையாக...அண்மை வரலாற்றிலே இப்படிப்பட்ட மானிட வதையும்,
புலப் பெயர்வும் நடந்ததில்லை...சொந்த மண்ணிலிருந்து சொந்த வீடுகளிலிருந்து
விரட்டப்படுடிகறார்கள்...வன்னிக்காடுகளின் மரங்களே தஞ்சம்...மழையிலே
நனைந்து, வெயிலிலே உலர்ந்து, அடுத்தவேளை உணவு பற்றிய நிச்சயமற்ற
நிலையிலே...இத்தனைக்கும் அவர்கள் செய்த குற்றம்? தமிழர்களாகப் பிறந்தது1
அது மட்டுமா?
சமத்துவம் கேட்டோம்
இல்லை என்றார்கள்
மாநிலம் கேட்டோம்
மறுதலித்தார்கள்.
விடுதலை கேட்டோம்
வெகுண்டெழுந்தார்கள்
வெறியில மனிதநிலை
பிறழ்ந்தார்கள்
கானம்...ரத்த
கானம்
திரையிலே, அட்டகாசமான, பிரமாண்ட செலவில் அவுஸ்ரேலிய மண்ணிலே படிப்பிடிப்பு
நடத்தப் பட்ட 'டூயட்' பாட்டு ஓடுகிறது.
'ரெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா
மெல்பேர்ன் மலர்போல் மெல்லிய மகளா...
டிஜிடலில் செதுக்கிய குரலா எலிசபெத் டெயிலரின் மகளா'
தமிழின் பெயராலும், தமிழ்க் கலை மேம்பாட்டின் பெயராலும் 'சூப்பர் ஆக்டர்'
கமல்ஹாஸன், அழகிய அவுஸ்ரேலிய லோக்கேஷன்களிலே, மனிஷா கொய்ரேலா என்கிற
நேப்பாள மூஞ்சியுள்ள நடிகையை மெதுமையான சப்பாத்தி செய்ய நினைப்பவர்போல
பிசைந்தெடுக்கிறார்.
ஆகா...என்ன அழகான படிப்பிடிப்பு... இந்தக் காட்சி சொர்க்கத்தின்
விளிம்புக்குத் தமிழ் ரஸ’கர்களைக் கொண்டு செல்லும் என்கிற கற்பிதத்தில்,
எத்தனை இரவுகள் டைரக்டர் ஷங்கர் தூக்கம் கெடுத்து, தமது மூளையைக் கசக்கித்
திட்டமிட்டிருப்பார்!
ஆனாலும், கமலஹாஸன் உதடுகள் பொருத்தி ஒரு 'தேவலோக கிஸ்' கொடுத்து, பரவச
வெள்ளத்திலே மூழ்கடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு நிராசையாகத் தொங்கிக்
கொண்டிருக்க...
கிழவன் 'கெட் அப்'பில் வரும் கமலஹாஸன் என்னமாய் லஞ்சப் பேர் வழிகளை
வெட்டிச் சாய்த்துக் கொண்டு போகிறார்!
மூன்று மணி நேரம் ஒரே இடத்தில் இருந்ததால், இடுப்பு
லேசாகவலிப்பதுபோல...இல்லை, இல்லை...என் மன உளைச்சல்களினாலும் உடல்
சோர்வுற்றது.
வெளியே வந்தேன்.
இந்தியன் படத்தில் லஞ்சம் வாங்குபவர்களை கமல் தாத்தா குத்திக் கொலை
செய்வதைப் போல தமிழ் இனத்தைக் காட்டிக் கொடுப்பவர்களையும்
அழிப்பவர்களையும்...அவர்களை மட்டுமல்ல, இங்கே 'அகதிகள்' என்று தஞ்சம் கோரி
வாழ்ந்து, இனமான உணர்வுகளை முற்றாக மறந்து, புதய வளங்களைக் கண்டு
அடிபணிந்து, புதிய 'பவிசு' வாழ்க்கை வாழ்பவர்களையும்...இனங்கண்டு,
ஒவ்வொருவராகக் குத்திச் சாய்த்து...
என் மனமும் கனவுலகிலே சஞ்சரிக்கின்றதா?
'மனிஷா கொய்ரேலா பாடுற 'மாயா மச்சிந்திரா மச்சம் பார்க்க
வந்தீரா...மாயங்கள் காட்டி மோசம் செய்யும் மாவீரா" பிரமாதமாக இருந்துது
இல்லையா'என்று ரவி கேட்டான்.
இன்று இந்தியன் படம் பார்த்து மீளும் எத்தனை பேர்களுடைய கனவுகளிலே கமலஹாஸன்
அணைத்துக் கொண்டு 'டூயட்' பாடப் போறாரோ?
இன்னும் எத்தனை பேர்களுடைய நித்திரையை ஊர்மிளாவும் மனிஷா கொய்ரேலாவும் மாறி
மாறித் தோன்றி குழப்பிக் கொண்டிருக்கப் போகிறார்களோ!
இத்தகைய கனவுச் சுகங்களை மனங்களிலே எழுப்புவதற்காகத்தானே விழுந்தடித்துக்
கொண்டு இந்தப் படங்களைப் பார்க்கிறார்கள்!
அங்கே, தாய்நாட்டில், வன்னிக் காடுகளிலே நகர அவஸ்தைகளை அநுபவித்துக்
கொண்டிருக்கும் இரத்த உறவுகள் இவர்களுடைய நினைவுகளிலேயோ கனவுகளிலேயோ
தோன்றப் போவதில்லை.
'விசர் கனவுகள் காண எனக்கு விருப்பம் இல்லை மச்சான்' என்று முணுமுணுத்துக்
கொண்டே, ரவியின் காரை நோக்கி விரைந்தேன்!
விடியாத இரவுகள்
அடிவானிலே சூரியன் மறைந்து வாரங்கள் ஆகிவிட்டன. இந்தப் பனிகாலத்தில்
பகல்கள் மகா சிறியன. நரைத்த சிவப்பு ஒளிஜாலம் மட்டுமே பகல் பொழுதினை
வேறுபடுத்திக் காட்டும்.
குளிர். பனிக்கட்டிகள் விழுந்து...
கார் நிதானமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாதையிலே கவனத்தைக் குவித்து காரை
ஓட்டிக் கொண்டிருந்தாலும், மனசிலே பல நினைவுகள் குதியாட்டமிட்டுக்
கொண்டிருக்கின்றன.
நோர்வே நாட்டின் தலைநகரான ஓஸ்லோவில் குமரன் வாழ்கின்றான். முப்பது கிலே-‘
மீட்டர் தொலைவிலுள்ள ஓஸ்சில் வேலை. இது ஒரு புறநகர் பகுதி. வேலைக்குக்
காரிலே சென்று திரும்புவான். இப்பொழுது வேலையிலிருந்து திரும்பிக்
கொண்டிருக்கிறான்.
இன்று வெள்ளிக்கிழமை நோர்வேகாரர்கள் இந்த வெள்ளி மாலைக்காகவே, ஐந்து
நாள்களும் வேலை செய்கிறார்களோ என்றுகூட குமரன் யோசிப்பதுண்டு உழைக்கும்
பணம் முழுவதையும் அன்றைக்கே செலவு செய்ய வேண்டும் என்கிற
ஆவேசத்தீர்மானத்துடன் செலவு செய்கிறார்களோ என்று கூடத் தோன்றும். வெள்ளி
மாலையில் ஒஸ்லோ நகரம் ஜனத்தொகைநிரம்பி வழியும். ஆசிய நகரம் ஒன்றைப்போல
ஜனக்கூட்டம் உள்ளதாகத் தோன்றும். பப்புகள், ரெஸ்ரோரண்டுகள், டிஸ்கோ
தேக்குகள் எல்லாம் மக்கள் கூட்டத்தினால் நிரம்பி வழியும்.
'பூமிப் பந்தின் வட துருவத்துக்கு அருகில், வெண்பனிப் பரப்பிலே பிறந்த
நோர்வேஜியர்கள் மகா வித்தியாசமானவர்கள். நாடும் அப்படியே. நவம்பர்
நடுப்பகுதியில் அடிவானுக்குக் கிழே சூரியன் போய் விட்டால், பெப்ரவரி மாத
முடிவிலேதான் மீண்டும் உதயமாகும்...விடியாத இரவுகளைக் கொண்ட குளிர்மிகு
'வின்றர்' காலம். ஜூலை ஜூலை மாதங்கள் 'சமர்' இந்தக் கோடை காலத்திலே,
சூரியன் அஸ்தமனமாவதில்லை என்றே சொல்லலாம். அவை அஸ்தமிக்காத பகல்களா?...இந்த
நாட்டின் மக்கள், வாழ்க்கை அநுபவித்து மகிழ்வதற்கு என்று
நினைப்பவர்களைப்போல, ஆவேசமாக அநுபவிப்பவர்கள் உண்பது-உடுப்பது-கலவியில்
மகிழ்வது எல்லாமே அநுபவங்களின் சில சுருதிகளே என்று நினைக்கிறார்கள். நாளைய
தேவைகள் என்று கவலைப்படாமல், இன்றைய அநுபவங்கள் என்று மகிழ்ந்து வாழும்
இயல்பினர். அடுத்தவனுடைய தாழ்விலேதான் தன்னுடைய எழுச்சி உண்டு என்கிற
குறுக்குப் பாதைகளிலே பயணிக்காத பண்பாளர் ஏற்ற-தாழ்வுகளைப்
பூஜிக்காதவர்கள். தனிமனித சுதந்திரத்தை அஞ்சலி செய்பவர்கள். மனித நேயம்
என்பது மொழி-மதம்-தோலின் நிறம் ஆகியவற்றைக் கடந்த உந்நதம் என்பதையும்
வாழ்க்கையின் அர்த்தமாக எற்றக் கெண்டவர்கள்...'
இப்படியெல்லாம் நோர்வேஜியர்களைப் பற்றி நினைத்துப் பாராட்டியவன்தான்
குமரன்.
ஆனால், இப்பொழுது...?
அவனுடைய எண்ணங்களில்-விழுமியங்களில்-நம்பிக்கைகளில் ரசவாதம் நிகழ்ந்து
கொண்டிருக்கிறது.
கார் வீடு நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது.
முன்னர் இதே வீதியில் வீடு நோக்கிய பயணம் எவ்வளவு சுகமாக இருக்கும்! எத்தனை
சின்னச்சின்ன நினைவுகளும், ஆசைகளும் பின்னிப் பிணைந்து மனசிலே வலம்
வரும்... அந்த சுக நினைவுகளிலே முப்பது கிலோ மீட்டர்களும் ஒரு சிறிய
'எட்டு'க்குள் இருப்பதாகத் தோன்றும்...
எந்த நனைவுகளிலிருந்து தன்னை அந்நியப்படுத்திக் கொள்ளக் கடந்த ஆறு
மாதங்களாக முயன்று கொண்டிருக்கிறானோ, அதே நினைவுகள் மீளவும் மனசிலே எட்டிப்
பார்த்தது. ஒல்லித் தேங்காயைத் தண்ருக்குள் அமுக்கும் பிரயத்தனம். அதன்
சுபாவம் நீர் மட்டத்திலே மிதப்பதுதான்.
வலோற்காரமாகத் த்ன் நினைவுகளை வேறு வழியிலே திருப்பும் முயற்சி. காரினுள்
இருந்த 'கசட் பிளேயரை' 'ஓண்' பண்ணினான்.
'சொந்தநாடு என்றாலே சொர்க்கபுரிதான்...'
பொன். சுபாஷ்சந்திரனின் 'என் மனசு பாடுது' இசைத்தட்டிலிருந்து ஓடியோவில்
பதிவு செய்திருந்த பாடல் கம்பீரமாக ஒலிக்கத் துவங்கியது.
'சொந்த நாடு' என்ற பல்லவிகூட...
பாடல் ஒலித்துக் கொண்டே இருந்தது.
ஒல்லித் தேங்காய் நீர் மட்டத்துக்கு வந்தது!
வண்ணார்பண்ணையில் சிவலிங்கப் புளியடியிலிருந்து ஒட்டுமட்டத்துக்குக்
கிளைவிடும் தெருவிலிருந்து, உள் வளைந்து செல்லும் ஓர் ஒழுங்கையிலே தான்
குமரின் வீடு இருந்தது. அவனுடைய அண்ணன் செவ்வேள் யாழ்ப்பாணம் இந்துக்
கல்லூரியிலே படிக்கும்பொழுது குடாநாட்டின் முன்னணி உதை பந்தாட்டக்காரனாகத்
திகழ்ந்தான். படிப்பிலும் கெட்டிக்காரன். அவனுடைய விவேகமும் விடா
முயற்சியும் தாழ்ந்து கிடக்கும் தங்கள் குடும்பத்தினுடைய பொருளாதாரத்தினை
மேன்மைப்படுத்தும் என்கிற இனிய கனவுகளிலே அவனுடைய பெற்றோர்கள் சுகித்துக்
கொண்டிருந்தார்கள்.
வண்ணை ஆனந்தன், இன்பன் ஆகியோர் போலீஸாரினால் தேடப்படும் முக்கிய புள்ளிகளாக
இருந்த காலத்தில், இன்பனின் நெருங்கிய நண்பன் என்கிற கோதாவில் செவ்வேளும்
தேடப்பட்டான். ஒருநாள் நள்ளிரவில் போலீஸார் வந்து வீட்டுப்படலைத்
தட்டினார்கள். செவ்வேளை ஜ“ப்பிலே ஏற்றினார்கள். இன்பனின் இருப்பிடத்தை
அறிவதற்காகத்தான் வெவ்வேளை அழைத்துச் செல்வதாகவும், விடிவதற்கிடையில்
செவ்வேளைப் பத்திரமாக வீடு கொண்டுவந்து சேர்த்துவிடுவதாகவும் போலீஸார்
பவ்வியமாகச் சொல்லிச் சென்றார்கள்.
அம்மா விடிவிளக்கு ஏற்றி வைத்து, ஜ“ப் சத்தம் ஒழுங்கை வளைவிலே கேட்கிறதா
என்பதற்குச் செவிகளை நிலத்தில் புதைத்துக் காத்திருந்தாள். அன்றிரவு
ஒரேயொரு கனகலிங்கம் சுருட்டைப் புகைத்து முடிப்பதற்குத் தன் அப்பா இரண்டு
நெருப்பும் பெட்டிகள் செலவு செய்தது குமரனுக்கு எப்பொழுதும் பசுமையாக
நினைவில் இருக்கும்.
விடிந்தது. அன்றைய நாள் ஜவ்வாக நீண்டு மாலையும் ஆனது. மறுபடியும் வீட்டிலே
விளக்கேற்றப்பட்டது. ஆனால், செவ்வேள் மட்டும் வீடுதிரும்பவில்லை.
மறுநாள் காத்திருப்பதில் பயனில்லை என்பதை உணர்ந்து இந்துக் கல்லூரி
ஆசிரியர் சிவராமலிங்கம் அவர்களிடம் அப்பா சென்று முறைப்பாடு செய்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவன் அவருடைய மாணவனாய் இருந்தவன். அவர்மீது அபிமானம்
உள்ளவன். அவன் மூலம் விஷயங்களை அறிந்து சொல்வதாக சிவராமலிங்கம்
வாக்களித்தார். அவர் செவ்வேள் மறைந்த மாயத்தைத் துலக்கும் பணியை
முடுக்கிவிட்டார்.
இரட்டைப் பனையடியடியில் ஓர் இளைஞனின் பிரேதம் அனாதரவாகக் கிடக்கின்றது
என்று செய்தி வந்து, ஓட்டுமடத்துப் பெரிசு'கள் அந்த இடத்தை நோக்கி
விரைந்தார்கள். அப்பாவும் அவர்களுடன் 'விடுப்பு'ப் பார்க்கும் ஒரு
மனோபாவத்துடன்தான் சென்றார். அங்கே, சிதைப்பப்பட்ட செவ்வேளின் உடல்
பிணமாகக் கிடந்தது. அவர் தலைமீது திடீரென்று இடியேறு விழுந்ததுபோல!
அந்தச் சோகத்திலிருந்து அப்பா மீளவேயில்லை. குமரனுக்கு ஒரு அக்கா, ஒரு
தங்கை, இந்த இரண்டு 'குஞ்சு'களையும் எப்படிக் கரைசேர்ப்பது என்கிற
ஏக்கத்தில் அவர் நடைபிணமானார். அவரைச் சட்டென்று பார்ப்பவர்கள்
'பைத்தியக்காரன்' என்று நினைக்கும் அளவுக்கு அவருடைய கோலம் மாறியது.
அரசியல் நிகழ்வுகள் துரிதமாயின. 1983 ஆம் ஆண்டின் கறுப்பு ஜூலை வந்து
சென்றது. போராட்டக் குழுக்களின் நடவடிக்கைகள் அதிகரித்தன. இவற்றை எல்லாம்
முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்கிற அவதியிலே ஜனாதிபதி ஜே. ஆர்.
ஜயவர்த்தனா இராணுவத்தை யாழ்ப்பாணத்திலே குவித்தார். 'டிசம்பர்
மாதத்திற்குள் வடபுலத்திலே முகங்காட்டும் பயங்கரவாதத்தினைத் துடைத்தெறிந்து
வரவும்' என்கிற சர்வ அதிகாரங்களும் இராணுவ அதிகாரியிடம் ஒப்படைத்து அனுப்பி
வைத்தார்.
'பயங்கரவாதி செவ்வேளின் தம்பி குமரனைப் பிடிக்கும்' பணிகள் முடுக்கப்பட்டன.
எத்தனை இடங்களுக்கு அவன் ஓடி ஒளிய வேண்டியிருந்தது! பத்தாம் வகுப்புப்
பரீட்சைக்குக்கூட அவனாலே தோன்ற முடியவில்லை. ஒரு வீட்டின் மோட்டுக்கும்
சீலிங்குக்கும் இடைப்பட்ட வளைகளிலே பலகைகள் பரப்பி, ஒரு வாரம் அந்த
இடத்திலே வாழ்ந்தான்.
அந்த ஒரு வாரம் நீண்ட பயங்கர இரவாகக் கழிந்தது...
இளமைக்கால நினைவுகள் வேகமாக வலம் வர அவன் நெஞ்சு வலித்தது.
'கசட்ட பிளேயரி'லே வந்து கொண்டிருந்த பாட்டுகளின் வரிகளிலே, அவனுடைய மனம்
ஒன்றவில்லை.
நடை பிணமான அப்பா பிணமானார். போராளிக் குழு ஒன்றின் உதவியுடன்தான்
தகப்பனுக்குக் கொள்ளி வைக்க முடிந்தது.
இனமா, குடும்பமா என்கிற மனப்போராட்டத்திற்கு அவனால் தீர்வு காண
முடியவில்லை...
இனவிடுதலைப் போரிலே ஆகுதியாக வேண்டும் என்கிற முனைப்பு ஒரு பக்கம்...
அம்மா, அக்கா, தங்கச்சி ஆகிய மன்று பெண் ஜ“வன்களைக் காப்பாற்ற வேண்டிய
குடும்பத் தலைவன் என்கிற கடமை உணர்வு மறுபக்கம்...
எது என்று தீர்மானிப்பதற்கு முதலில் உயிரைக் காப்பாற்ற வேண்டும்...
கடல் கடந்து இந்திய மண்ணுக்கு வந்து கொண்டிருந்த இளைஞர்களுள் ஒருவனாய்,
தமிழ்நாடு போய்ச் சேர்ந்தான்.
கார் நிதானமாக ஓடிக் கொண்டிருக்கிறது...
தமிழ்நாட்டுச் சூழ்நிலை சீக்கிரமே வெறுப்பினை ஊட்டியது.
போராளிக்குழுக்களுக்கிடையில் மட்டுமல்லாமல், தன்னைப் பிணைத்துக் கொண்ட ஒரு
குறிப்பிட்ட போராளிக் குழுவுக்குள்ளேயே நடைபெற்ற சகோதரப் படுகொலைகள் அவனைத்
திகைப்பில் ஆழ்த்தின. பதவிகளை மட்டுமல்ல, வெளியிலிருந்து போராட்டத்திற்குத்
தேவையான ஆயுதங்களை வாங்குவதற்கான நன்கொடைகள் சில தலைவர்களுடைய சொந்த
நிதியம்போல கையாளப்படுவதற்காகவும் கொலைகள் நிகழ்ந்தன.
இவற்றில் வெறுப்படைந்த ஒரு சிறிய குழு அவர்களிலே ஒரு சிலரேனும் தமது
உயிருக்கு ஆபத்து உண்டு என்பதை நியாயமாக ஊகித்து உணர்ந்தார்-பாகிஸ்தானூடாக,
நீண்ட தரை மார்க்கப் பயணத்தை மேற்கொண்டு ஐரோப்பிய நாடு ஒன்றினை அடைந்து
அரசியல் அகதி நிலை கோரிப் புதிய வாழ்க்கையை மேற்கொள்ளத் திட்டமிட்டது.
நியாயமான இன விடுதலைப் போரிலே உயிர்த்தியாகம் செய்தல் தக்கது. ஆனால், வீண்
சந்தேகங்களுக்கு உள்ளாகி, கோழைகளின் சதியிலே வீழ்ந்து படாது.
பிரச்சினைகளிலிருந்து அந்நியமாதல் நேர்மையானதாகக் குமரனுக்குத் தோன்றியது.
இதனால், பாகிஸ்தானுக்குப் பயணமான குழுவுடன் அவனும் ஒட்டிக் கொண்டான்.
அவனுடன் சேர்த்து அந்தக் குழுவில் பதினாறு பேர் இருந்தார்கள்.
சென்றடையும் இடம் எதுவென்று திட்டமிடப்படாத, தெரியாத, நிச்சயமற்ற அந்தப்
பயணத்திலே, குமரன் பெற்ற அநுபவங்கள் ஒரு பாரிய நூலுக்கான சங்கதிகளாக
அமையும்.
அந்த அநுபவங்களை மட்டும் இரைமீட்டிப் பார்ப்பதை அவன் எப்பொழுதும் புத்தி
பூர்வமாகத் தவிர்த்தான். இப்பொழுதும் அப்படியே.
கார் நிதானமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
ஐரோப்பாவை அடைந்ததும் அந்தக் குழு, நான்கு குழுக்களாக உடைந்தன.
தெரிந்தவர்கள் உள்ள நாடுகளுக்குள் நுழைவது வசதியானது என்பது ஒரு நோக்கம்.
நாட்டின் எல்லைகளுக்குள் சர்வதேச பயணத்திற்கான ஆவணங்கள் இல்லாதோர் சிறு
குழுக்களாக இயக்குதல் வசதியானது என்பதையும் அவர்கள் அறிந்திருந்தார்கள்
மேற்கு ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் செல்லத் திட்டமிட்ட நால்வருக்கு அமலன்
தலைமை தாங்கினான். அவனுடைய துணிவும், விவேகமும், ஆற்றலும் குமரனைக் கவரவே,
அவனுடன் ஐந்தாம் ஆளாக அவன் ஒட்டிக் கொண்டான். குமரனுடைய பரிதாபமானகதைகளை
அறிந்திருக்க அமலன் அவனைத் தன்னுடன்சேர்த்துக் கொண்டான்.
அந்த ஐவரும், டென்மார்க் நாட்டினை அடைந்தார்கள். அமலனும் இருவரும் அங்கே
தங்கிக் கொள்ள, குமரன் சீலனுடன் நோர்வே நாட்டினை வந்தடைந்தான். சீலன்
அரியாலையில் பிறந்தவன். அங்கு அவனுடைய பெரியம்மாவின் மகள் வாழ்கிறாள். அவள்
ஒரு நர்ஸாகவும், கணவன் தமிழ்ச் சமூகத்தின் ஒரு பெரும் புள்ளியாகவும்
வாழ்கிறார்கள் என்பதுடன், அவர்களுடைய முகவரியும் அவனுக்குத் தெரியும்.
சீலனுடன் தொற்றிக் கொண்டு குமரன் நோர்வே நாட்டுக்கு வந்து சேர்ந்தான்.
நோர்வே நாட்டில் அவன் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக வாழ்ந்து வருகிறான்.
டிரபிக் சிக்னலில் தரித்த கமரனின் கார், மீண்டும் நிதானமாக ஓடிக்
கொண்டிருக்கிறது...
நாட்டிற்கும், இனத்தின் தன்மானக் கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காகவும்அவனால்
துக்கும் வாழ முடியவில்லை. அண்ணன் செவ்வேளின் மரணத்துடன் சிதிலமாகிய தன்
குடும்பத்தையாவது சீராக நிமிர்த்தி வைப்போம் என்கிற எண்ணத்தில்
உழைக்கலானான்.
தன் அக்காவுக்குப் பேசப்பட்டு வந்த சம்பந்தங்கள் பல. 'தம்பிப் பொடியன்
வெளிநாட்டிலை உழைக்கிறானாம். நல்லாகச் சீதனம் கறக்கலாம்' என்கிற
நோக்கத்திலே கல்யாணத் தரகர்கள் போட்டி போட்டார்கள் என்பதை அவன் உள்ளூர
அறிந்த போதிலும், அம்மாவுக்கும் அக்காவுக்கும் விருப்பம் என்று தெரிவித்த
இடத்துக் கல்யாணத்தை ஆடம்பரமாகச் செய்து முடிக்க 'கைநிறைய' காசு
அனுப்பிவைத்தான்.
விடுமுறைகளிலே டென்மார்க் சென்று வந்தபடியால், அமலனுடனும் அவனுடன்
வந்தவர்களுடன் சுமூக உறவுகளைத் தக்க வைத்துக் கொண்டான் அவர்களுள் இருவர்
கல்யாணத்துக்குப் பெண் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஒரு
சந்தர்ப்பத்திலே, 'குமரன் உன்ர தங்கச்சியின்ரை படம் ஒன்றை எடுப்பியும்.
கையிலை வெண்ணெய் வைச்சுக் கொண்டு நெய்க்கு ஏன் அலைவான்? பத்தோடு,
பதினொன்றாக உன் தங்கச்சியின்ரை படத்தையும் பார்க்கட்டும்' என்று அமலன்தான்
சொன்னான். குமரனின் தங்கச்சியின் படமும் வந்து சேர்ந்தது. விக்கனமின்றி,
சுமூகமாகப் பேச்சு வார்த்தைகள் நடந்து, நரேனுக்கும்-குமரன் தங்கச்சிக்கும்
சென்னையில் விவாகம் நடந்தேறியது.
அது அவன் குடும்பத்தின் ஒன்றுகூடலாகவும் இருந்தது. அம்மாவும், அக்காவும்,
அக்கா புருஷனும் சென்னை வந்திருந்தார்கள். அவன் நண்பர்களிடமும்
வங்கியிடமும் கடன் வாங்கித்தான் எல்லாச் செலவுகளையும் பார்த்தான். ஆனாலும்,
மனசுக்குப் பரம திருப்தி. தான் ஒருவனே உழைத்து, தன் குடும்பம்
தாழ்ந்துவிடாது பார்த்துக்கொண்டது அவனுக்குக் கர்வமாகவும் இருந்தது.
சென்னையிலிருந்து அம்மா புறப்படும்பொபது அழுது விட்டாள்.
"மோனே நீ உன்ரை பிஞ்சுக் கைகளாலை உழைச்சு எல்லாரையும் நிமித்திவிட்டாய். நீ
என் மகனில்லை நீ என்ரை தெய்வமடா. இஞ்சை பார், உன்ரை உடம்பு எப்பிடித்
தேய்ஞ்சு உருக்குலைஞ்சு போயிருக்கு எண்டு. நீ செய்தது போதும். இனி, நீ
உனக்கென்று ஒருத்தியுடன் வாழவேணும்."
"அம்மா நான் இப்ப ரெண்டு வேலை பார்க்கிறன். நித்திரை கொள்ளக்கூட ஆனமான
நேரம் கிடையாது. கொஞ்சம் கடன் கப்பிகளும் இருக்கு. அதை முடிச்சுப் போட்டு,
வாறவளுக்கும் சீவிக்கிறதுக்கு ஒரு வீடு வாங்கிக் கொண்டுதான்..."
"அதுக்கிடையில் வழுக்கைத் தலைதான் பாக்கி இருக்கும்..." என்று சலித்துக்
கொண்டாள்.
கடைசியாக, இரண்டு வருஷம் கழிச்சு அம்மாவும் அக்காவும் பார்த்துப் பேசி
வைக்கிற பொண்ணைக் கல்யாணம் செய்வதாக வாக்குக் கொடுத்தான்.
அதைக் கேட்டுக் கண்ர் ஒட்டியிருக்கும் அம்மாவின் கண்களிலே மின்னிய
மகிழ்ச்சியிலே குமரன் தன்னை மறந்தான். அந்த மகிழ்ச்சியை அம்மாவின்
கண்களிலும் மனசிலும் தக்க வைக்கவேண்டும் என்று உறுதி பூண்டான்.
அம்மாவின் ஒவ்வொரு கடிதமும் குமரன் சீக்கிரம் கல்யாணம் முடிக்க வேண்டும்
என்கிற கோரிக்கையை பிரதானமாக வைத்தது. அக்காவும் தன் பங்கிற்கு
அம்மாவுக்குப் பக்க வாத்தியம் வாசித்தாள். அவர்கள் பொதுவாகப் பேசுவதை
விடுத்து, பவானி என்கிற பெண் நல்ல பொருத்தம் என்று பிரேரிப்பு வைத்தார்கள்.
வசதியாக இருந்து முட்டுப்பட்டுப் போன குடும்பம். இருந்தாலும் ஊக்கத்துடன்
படித்துப் பட்டதாரியாகிவிட்டாள். அயலில ஒரு 'பிரைவேற்' பள்ளிக்கூடத்தில
படிப்பிக்கிறாள். நல்ல வடிவு குணமும் நல்லது. இத்தகைய நீண்ட
முகாந்திரங்களுடன் பவானியின் படம் வந்து சேர்ந்தது.
ஒரு தரத்திற்கு மூன்று தரம் திருப்பிப் பார்க்கக் கூடியதான ஓர் அபூர்வ பெண்
அழகு அந்தப் புகைப் படத்திலே ஒட்டிக் கொண்டிருப்பதைக் குமரன் சட்டென்று
உணர்ந்தான். அன்று முழுவதும் அந்தப் புகைப்படத்தினையும், தன் முகத்தைக்
கண்ணாடியிலுமாக மாறி மாறிப் பார்த்து மனச் சலனங்களுடனும் சஞ்சலங்களுடனும்
அவதியுற்றான்.
அப்பொழுது டென்மார்க்கிலிருந்து நரேன் தொலைபேசியில் தொடர்பு கொண்டான்.
'மச்சான், குமரனா?'
'ஓம்.'
'இந்தக் கொழும்பு டெலிபோன் நம்பரைக் குறிச்சுக் கொள்.'
'...உம்...சொல்லு...'
'684292...இந்த நம்பரிலே பவானி காத்துக் கொண்டிருக்கு...விருப்பமோ
விருப்பமில்லையோ...நேரிலை பேசிக் கொள். பவானி படிச்ச பிள்ளை. எல்லாம்
விளங்கிக் கொள்ளுவா...'
'என்ன மச்சான் கிடுக்கிப் பிடி பிடிக்கிறியள்...'
'இதிலை மச்சான் ஆறினகஞ்சி பழங்கஞ்சி. நிக்கிறதோடை பேசீட்டா நல்லது. உன்ரை
அக்காதான் இந்த நம்பரைத் தந்து பேசச் சொன்னவ...'
'அக்காவுக்கும் நிக்கிறவோ?'
'அவ என்ன டெலிபோனுக்குள்ள பூந்து கேக்கப் போறாவா? சரி மச்சான் சுணங்காமல்
கதை...'
கார் இன்னொரு சிக்னல் லைட்டில் நின்றது.
'ஹலோ! நான் குமரன்...நோர்வேயிலிருந்து பேசுறன்...பவானியோட பேசலாமோ?'
'பவானிதான் பேசுறன்...'
'நான் எடுப்பன் எண்டு தெரியுமே?'
'நரேன் சொன்னவர் நீங்கள் எடுப்பியள் எண்டு...நான் ஒரு மணித்தியாலமாக
காத்துக் கொண்டிருக்கிறன்...'
'அப்பிடியா? உங்க போட்டோ பார்த்தனான். உண்மையில் படத்தில வடிவாத்தான்
இருக்கிறீர்...'
'நேரில வடிவில்லாமல் இருப்பனோ எண்டு ஐமிச்சப்படுறியளா?'
'நோ...நோ...நான் உம்முடைய வடிவுக்குஏற்ற ஆள்தானோ எண்டுதான் ஐமிச்சம்...'
'இல்லை...உங்களுடைய போட்டோ ஒன்று காட்டினவை...'
'அது சின்ன வயசுப்படமாக இருக்கும்...இப்ப என்ரை தலையில உள்ள மயிரை எண்ணிப்
போடலாம்... கிளீன் வழுக்கை...'
'என் இப்பிடிப் பேசுறியள்?... வடிவைக் கரைச்சே குடிக்கிறது? அம்மா, அக்கா,
தங்கச்சி எல்லாரையும் நீங்கள் நல்ல நிலமைக்குக் கொண்டு வந்திருக்கிறியள்.
இந்தக் காலத்தில இப்பிடி நல்ல மனசுள்ள ஆம்பிள்ளை யார் இருக்கினம்?'
'அப்ப நீங்கள் என்ரை மனசைத்தான் விரும்பிறியள்?'
'ஓம்...'
'அப்பிடி எண்டா நீங்களும் உங்க மனசை அல்லோ எக்ஸரே எடுத்து அனுப்பி
இருக்கவேணும்!'
'மனசை நீங்கள் அல்லோ எக்ஸ்ரே எடுக்க வேணும்...'
'உங்களுக்கு இனிமையான குரலும்...வடிவாக் கதைக்கவும் தெரிஞ்சு
வைச்சிருக்கிறியள்...சரி, அம்மா நிக்கிறவோ?'
'ஓம்.'
'அவவிட்ட ரெலிபோனைக் குடுங்கோ...'
கார் மீண்டும் நிதானமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
ஒஸ்லோ விமான நிலையத்தில் பவானி வந்திறங்கிய பொழுது குமரனுக்கு இன்ப
அதிர்ச்சி. போட்டோவிலும் பார்க்க அவள் நேரில் மிக அழகாக இருந்தாள்.
பவானியைக் கல்யாணம் செய்துகொள்வது என்று ஸ்பொன்ஸர் செய்யத் துவங்கியபொழுதே,
சொந்த வீடு, கார், வீட்டுக்கான அனைத்துத் தளபாட சாமான்கள் என்று தனது
வசதிகளைப் பெருக்கிக் கொண்டான்.
கல்ணாயத்திற்குத் தேவையான தாலி, கூறை எல்லாவற்றையும் இந்தியாவுக்கும்
சிங்கப்பூருக்கும் சென்ற நண்பர்கள் மூலம் வாங்கி வைத்துக் கொண்டான். நரேன்
இந்தக் கல்யாணத்திலே விசேட அக்கறை எடுத்தது மகா ஆறுதலான விஷயம். கல்யாண
நாள் குறித்ததும், குமரனுடைய தங்கையையும் கூட்டுக் கொண்டு நரேன் ஒஸ்லோ
வந்து சேர்ந்தான். அவனுடைய ஏற்பாட்டின் பேரிலே டென்மார்க்கிலிருந்து
புரோகிதரும் வந்து சேர்ந்தார்.
குமரன்-பவானி திருமணம் வைதீக முறைப்படி மிகச் சிறப்பாக நடைபெற்ற இந்துத்
திருமணம் என்று பலராலும், பலகாலம் பேசப்பட்டது!
'இப்பிடி ஒரு இந்துக் கல்யாணத்தை இதுவரை யாரும் ஒஸ்லோவில் நடத்தியதுமில்லை;
இனியும் இப்பிடி ஒன்று நடைபெறுமோ என்பதும் ஐமிச்சம் தான்' என்று நரேன்
சொன்னது இப்பொழுதும் குமரனுக்குச் செவிப்பறைகளிலே ஒலித்துக் கொண்டிருந்தது.
கார் நிதானமாக ஓடிக் கொண்டிருக்கின்றது...
தனக்கு ஒரு புதிய வாழ்வு அருளிய கொடையாளன் என்கிற ஓர் உயர்ந்த இடத்திலே
குமரனை வைத்துத் தன் குடும்பக் கடமைகளைச் செய்தான். 'ரிஷகுண்டம்...' என்று
ஏதோ சொல்வார்களே. அது போல, கல்யாணம் முடிந்த மூன்றாம் மாதமே கருத்தரித்து
விட்டாள்.
வந்த அடுத்த தினத்திலிருந்து 'நொக்ஸ்' மொழி கற்பதிலே அலாதி ஆர்வம்
ஊன்றியிருந்தாள். மொழி கற்றல் அவளுக்கு இயல்பாக அமைந்த கொடை என்று கூடச்
சொல்லலாம். சில மாதங்களிலேயே, நோர்வேஜியர்களைப் போலவே நொக்ஸ் மொழி பேசி
எல்லோரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தாள். கர்ப்பிணியாக இருந்த காலத்திலே
பராக்காகவும் இருக்கும் என்று சமூக சேவை அலுவலகத்திலே பயிற்சியாக வேலையில்
சேர்ந்தாள்.
அவளுடைய திறமையை மெச்சுவதுபோல, அந்த அலுவலகத்தில் அவளுக்கு நிரந்தரமான
வேலையும் கிடைத்தது. அந்த வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுதுதான் ஒரு மகன்
பிறந்தான் அவன் தாயை உரித்து வைத்ததுபோல, 'வடிவான குட்டி'யாகப் பிறந்த
பொழுது, குமரன் தலைகால் தெரியாமல் கூத்தாடினான். தனக்கு அத்தனை பேறுகளையும்
ஆண்டவன் தாராளமாகவே தந்ததாக அவன் மகிழ்ந்தான்.
ஆனால், இப்பொழுது?...துரத்தும் நினைவுகளிலிருந்து விடுபட அவனுக்கு
மார்க்கம் தெரியவில்லை.
கார் நிதானமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
மீண்டும் கஸட் பிளேயரை 'ஓண்' செய்தான்.
'சொந்த நாடு என்றாலே சொர்க்கபுரிதான்' என்று பொன் சுபாஸ் சந்திரனின் பாடல்
மீண்டும் ஒலிக்கத் துவங்கியது. Volume ஐ குறைத்துவிட்டான்.
பிரசவத்துக்குப் பின்னர் வீட்டோடு நின்று இரண்டு வருடங்களுக்காவது மகனை
வளர்க்க வேண்டும் என்று குமரன் விரும்பினான். ஆனால், கிடைத்த வேலையை உதறித்
தள்ள பவானி விரும்பவில்லை. ஆனால், கிடைத்த வேலையை உதறித் தள்ள பவானி
விரும்பவில்லை. அவளே டாக் மம்மா ஒருவளைத் தேடிப் பிடித்தாள். இந்த
ஏற்பாட்டின் பின்னர் அவன் வேலைக்குப் போகத் துவங்கினாள்.
இதிலிருந்து இலேசு இலேசாக, ஆனாலும் நிச்சயமாக, விரிசல் ஏற்படலாயிற்று.
'வேண்டாப் பெண்டாட்டி கைபட்டால் குற்றம் கால்பட்டால் குற்றம்' என்பது
தலைகீழாக நடக்கத் துவங்கியது.
மூன்று வருடமாக எல்லா அவமானங்களையும் தாங்கி வாழ்ந்த குமரனைப் பார்த்துச்
சிலர் அநுதாபப்பட்டார்கள். 'பெண்ணுக்கு வீங்கி', 'பொண்னையன்' என்று அவன்
காதுபடவே ஏளனம் செய்தவர்களும் உண்டு.
ஒருநாள். பொறுமை எல்லையைக் கடந்தது. மிரண்டெழுந்த சாதுவாகக் குமரன் வீடு
வந்தான்.
விடு வந்த குமரனைப் பார்த்தும் பார்க்காதவளைப்போல சோபாவில் அமர்ந்து,
காலுக்கு மேல்கால் போட்டு, ரி வி. பார்த்துக் கொண்டிருந்தாள், பவானி.
'பவானி! நிப்பாட்டும் ரிவியை' என்று கத்தினான் குமரன்.
இதனைச் சற்றும் எதிர்பார்க்காத பவானி, 'ஏன்? என்ன விஷயம்? எதற்கு ரிவியை
நிறுத்த வேணும்?' அதே சுருதியிலும் தொனியிலும் கத்தினாள்.
'நிப்பாட்டடீ ரிவியை!' என்று சொல்லிக் கொண்டு, தானே சென்று ரிவியை 'ஓவ்'
செய்தான். பிறகு பவானியை நேராகப் பார்த்து, 'உம்மைப் பற்றி இந்த ஒஸ்லோ
முழுவதும் கதைப்பது உண்மையா?' என்று கேட்டான்.
என்றாவது இந்த விவகாரம் இப்படி எழும்பும் என்று எதிர்பார்த்தவளைப் போல,
ஆனாலும் அதனைத் தான் எதிர்பார்க்காதது போன்ற பாவனையுடன், முகத்தில்
வலோற்காரமான சிரிப்பினை வரவழைத்துக் கொண்டு, 'என்ன? என்னைப் பற்றி என்ன
கதைக்கினம்?' என்று கேட்டாள்.
'அதையும் என்ரை வாயால சொல்ல வேணுமா? சரி பச்சையாகவே கேக்கிறன். உமக்கும்
உம்மோடை வேலை செய்யிற நொஸ்கனுக்கும் கள்ளத் தொடர்பு இருக்கிறதாம்டீ! அவனோடை
பப்புக்கும் பார்க்குக்கும் எண்டு சுத்தித் திரியிறியாம்!'
'ஒம் போனனான்தான். இதில் என்ன தப்பு இருக்கு? இந்த நாட்டில், இதெல்லாம்
சர்வ சாதாரணம்தானே? ஏன் இதைப் பெரிதுபடுத்திக் கதைக்கினம்? எங்கடை
சனங்களுக்கு நாகரீகமாக நடக்கவும் தெரியாது. நடக்கிறவையைக் கண்டால்
பிடிக்கவும் மாட்டுது...' என்று அவள் அலங்காரமாகப் பேசி வாய் மூடுவதற்கு
முன்பே, 'பளார்' என்று கன்னத்திலே ஓங்கி அறைந்தான். அவள்
நிலைகுலைந்துதரையிலே விழுந்தாள்.
'கொழும்பிலை வழியில்லாமல் கிடந்த பறை நாயை ஒஸலோவுக்குக் கொண்டுவந்து
குளிப்பாட்டி நடுவீட்டிலை வைச்சிருந்தால், இப்ப என்னைக் கடிக்க
வருகுது...படுதோறை!' என்று இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட ஆத்திரங்கள்,
அவமானங்கள், இழப்புகள் அனைத்துமே ஒன்று திரண்ட மூர்க்கத்திலே, கால்களாலும்
கைகளாலும் அவளை துவைத்தெடுத்தான்!
குமரனின் இந்தத் தாக்குதலை எதிர்பார்க்காத அவள், கூரல்எழுப்பிக் கத்தினாள்.
'Han dreper meg' என்று, தன்னைக் கொல்லுகிறான் என்று, கத்தினாள்.
அவளுடைய அவலக் குரலைக் கேட்ட அயலவர்கள் நல்ல குடிமக்களைப்போல, அவசர அவசரமாக
போலீஸாருக்கு போன் செய்து தகவல் கொடுத்தார்கள்.
போலீஸ் வந்து சேர்ந்தது.
தன்னை அடித்துத் துன்புறுத்தும் தன் கணவனுடன் தனக்கு வாழ இஷ்டமில்லை
என்றும், தான் அவனிடமிருந்து விடுதலை பெற்றுத் தனித்து வாழ
விரும்புவதாகவும் அவள் போலீஸ”க்கு முறைப்பாடு செய்தாள்.
பிறகு பிரிவினை துரித கதியிலே நடந்தது.
குமரனிடமிருந்து பிரிந்து வாழ அவளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
பவானி தனி வீடு வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வருகிறாள் மகன் அவளுடன்தான்
வாழ்கிறான்.
வாரத்திலே ஒரு நாள் மகனைப் பார்க்கவும், அவனுடன் ஒரு பகல் பொழுதைக்
கழிக்கவும் குமரனுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
அவளுடைய வீட்டிலே இப்பொழுது அவளுடைய நோர்வேஜிய காதலனும் குடியேறி விட்டான்.
எக்கபெல்லரான-Ekteller (De Jure)?--குமரனைப் பிரிந்து, அந்த நோர்வேஜிய
காதலனுடன் சம்பூவராக--SAMBOER (De Facto)வாக வாழ்கிறாள்.
இத்தகைய வாழ்க்கை முறைமைகளை நோர்வே நாடு நாகரிகமான வாழ்க்கை நெறியாகச்
சட்டப்படி ஏற்றுக் கொள்ளுகின்றது. Fitte Penger என்கிற ஜ“வனாம்சமோ, Berne
Penger என்கிற பிள்ளைக் காசோ குமரனிடம் கோராமல் மிகவும் நாகரிகமாக வாழ்வதாக
நேர்வேஜிய நண்பர்கள் பவானியைப் பாராட்டத் தவறுவதில்லை.
கார் ஒஸ்லோ நகருக்குள் நிதானமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
பொன் சுபாஸ் சந்திரனின் பாடல் இலேசாக ஒலித்துக் கொண்டிருக்கின்றது.
இடையில் பாரதியின் பாடல் ஒன்று குமரனின் மனசிலே எதிரொலிக்கின்றது.
'காத வொருவனைக் கைப்படித்தே, அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து,
மாத ரறக்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச் செய்து வாழ்வமடி!'
பழையைக் காட்டிலும் மாட்சி பெறச் செய்து தமிழரின் குடும்ப மனையறம் பேணுவாள்
பவானி என்கிற நம்பிக்கையிலேதான், லட்சக்கணக்கான ரூபாய்களைச் செலவு செய்து,
ஊரிலிருந்து வரவழைத்து, ஒஸ்லோத் தமிழர்கள் எல்லாம் மூக்கிலே விரல் வைக்க
ஆடம்பரமாக விவாகம் செய்து, பிள்ளை ஒன்று பெற்ற பின்னர்....
ஆனாலும், ஒஸ்லோ வாழ் தமிழர்கள் அவன்மீது காட்டும் அநுதாபம் அவனை
எரிச்சலடையச் செய்கிறது.
அவனுடைய வீட்டுக்கு முன்னால் கார் நிற்கின்றது.
வீடு, விளக்குகள் எரியாது, இருளிலே மூழ்கிக் கிடக்கின்றது.
'நமது நாட்டில் வாழ்ந்த போது வசந்தகாலந்தான்
நாம் நாடு கடந்து வந்தபோது புதியவேஷந்தான்
நாளுக்கொரு வேஷமிங்கு நமது வாழ்க்கைதான்--அந்த
வேஷம் கலைந்த பின்னாலே பழைய பாதைதான்'
இறுதிச் சரணத்தைப் பாடி முடித்த பொன் சுபாஷ் சந்திரன், மீண்டும் 'சொந்தநாடு
என்றாலே சொர்க்கபுரிதான்' என்று பல்லவிக்கு தாவியிருந்தான்.
பிளேயரை 'ஓவ்' செய்து, காரிலிருந்து இறக்கினான் குமரன்...அவன் இன்னொரு
விடியாத இரவினைக் கழிக்க, கடுங்குளிரின் ஊடாக நடக்கலானான்.
அப்பா
விமலன் வேலை விட்டு வீடு வந்து சேர்ந்தான்.
சமையலறையிலே சங்கரப்பிள்ளை அண்ணன் சமைத்துக் கொண்டிருக்கும் நேரமது. எனவே
சமையலறையை எட்டிப் பார்த்தான். ஊசாட்டத்தைக் காணோம்.
வழக்கத்திற்கு மாறாக அவனுடைய மனம் பதட்ட நிலையில் இருந்தது. காரணங்களிலே
தொங்காத ஓர் ஊமைச் சோகம் உள்ளத்திலே ஊர்வதைப் போலவும். அதற்குச்
சரணாகதியடையாத ஒருவிதத் தீர்மானத்துடன், தன் அறைக்குள் சென்று, உடைமாற்றிக்
கொண்டு ஹோலுக்கு வந்தான்.
அவனுடைய பெயருக்கு வந்த இரண்டு கடதங்கள் கிடந்தன. வழக்கமான கடிதங்கள் ஒன்று
'டெலிபோன் பில்' மற்றையது 'பாங் ஸ்டேற்மன்ட்'. அவற்றைப் பிரித்துக் கணக்கு
விபரங்களையும் மனசிலே பதித்துக் கொண்டான்.
உடல்கூட அசதியாக இருந்தது. 'பணம் உழைக்கும் மெஷ’னாக வாழ்ந்தால்
இப்படித்தான்' என்று மனஞ் சலித்துக் கொண்டது. இரண்டு வேலைகள். ஒரு வேலை
காலை ஐந்து மணி தொடக்கம் மாலை மூன்று மணி வரை. ஒரு மணித்தியாலத்திற்கு வீடு
வந்து, மீண்டும் தயாராகி நாலு மணிக்குத் துவங்கும் வேலைக்கு ஓடுவான். அந்த
வேல€ இரவு பதினொரு மணிக்குத்தான் முடியும். 'உடம்பில தென்பிருக்கிற நேரம்
உழைக்க வேணும்' என்கிற உற்சாகத்திலே வேலை செய்கின்றான். ஆனால் கடந்த இரண்டு
தினங்களாக உடல் 'ஆத்தாது' என்று கெஞ்சுவதுபோல அவனுக்குத் தோன்றியது. இன்று
'சிக்' லீவ் எடுத்துக் கொண்டு நேரத்துடன் வந்துவிட்டான்.
'அப்பாவுக்கு எப்படி இருக்கு...' என்கிற ஏக்கமே இந்த அசதிகளுக்கும்,
பதட்டங்களுக்கும் காரணம் என்பதை அவன் உள்மனம் ஏற்றக் கொண்டாலும், ஒன்றுமே
நடக்காததுபோலவே அவன் வாழ விரும்பினான். 'அப்பாவின் அருளுக்கும் ஆண்மைக்கும்
முன்னல், எமன் வருவதற்குச் சரியாக யோசிப்பான்' என்று அவன் தன் மனசிலே
ஏற்படுத்திக் கொண்ட கற்பிதம் குழந்தைத்தனமானது.
பரவாயில்லை. விமலன் எப்பொழுதும் 'அப்பாவின் குழந்தை'யாக இருப்பதையே
விரும்பினான்.
* * * Iravukal * * *
'சோறுடைத்துச் சோழவள நாடு' என்று ஒரு காலத்திலே பேசினார்கள். ஆனால்,
அவர்கள் மட்டக்களப்பு மாநிலத்தின் தென்சீமையை அறியாத காலத்திலேதான்
அவ்வகையான ஒரு சொலவடையை ஏற்படுத்தியிருப்பார்கள். 'மீன் பாடும் தேனாடு'
என்று அழைக்கப்படும் மட்டக்களப்புத் தமிழகத்தின் அனைத்து வளங்களின்
திரட்சித் திருக்கோவிலாக விளங்குவதினாலேதான், அந்தக் கிராமத்தைத்
திருக்கோவில் என அழைப்பதாகச் சிறுவயசிலே விமலன் மிரட்சி கொண்டிருக்கிறான்.
அப்பா அவனுக்குத் திருக்கோவில் பற்றிய தலவரலாறு சொல்வதற்கு என்றுமே
சலித்தது கிடையாது. சூரபத்மனை வதம் செய்தபோது ஸ்ரீமுருகன் வீசிய வேல்
வாகூரக் கல்லைப் பிளந்து, ஒரு வெள்ளை நாவல் மரத்தில் வந்து தங்கியது அந்த
இடத்தில் எழுந்தருளியிருப்பது தான் ஸ்ரீசித்திர வேலாயுத ஸ்வாமி கோயில்
என்று சொன்னார். ஆரம்பத்திலே இந்தக் கோவில் மேற்கு நோக்கி இருந்ததாகவும்
திருச்செந்தூர் முருகன் ஆலயத்தைப் போன்று இதுவும் கிழக்கு நோக்கிய கோவிலாக
இருப்பதுதான் சிறப்பானதாக இருக்கும் என்று குருக்களும் பக்தர்கள் பேசிக்
கொண்டார்களாம். மறுநாள் அவர்கள் வந்து பார்த்த பொழுது பக்தர்களுடைய
பிரேரிப்பினை ஏற்றுக் கொண்டது போல, இப்பொழுதுள்ளது போல, வாயில் கிழக்கு
நோக்கி மாறி இருந்ததாக அப்பா சொன்ன கதையைக் கேட்டு, அஃது எப்படிச்
சாத்தியமாயிற்று என்று பல இரவுகள் தூக்கத்தைக் கெடுத்து
யோசித்திருக்கிறான். திரும்பிய கோவில் என்பதுதான் காலப்போக்கில்
திருக்கோவிலென வழங்கலாயிற்று என்கிற அப்பாவின் விளக்கத்தினை அவனால் ஏற்றுக்
கொள்ளாமலும் இருக்க முடியவில்லை. கடலையே தீர்த்தக்கரையாகக் கொண்டு
திகழ்வதினால், ஈழத்துத் திருச்செந்தூர் என்கிற புகழ் முற்றிலும் நியாயமானது
என்பதை ஏற்றுக் கொண்டான். இந்தத் தலபுராணப் பெருமைகளுக்கு அப்பாலான ஓர்
ஈடுபாடு அந்தப் பிறந்தமண் மீது விமலனுக்கு எப்பொழுதும் உண்டு உதய சூரியன்
திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத ஸ்வாமியைக் கும்பிட்டு எழும் காட்சி
அவனைப் பரவசப்படுத்தும். கடற்கரையிலே அடர்ந்து கிடக்கும் தாழை, இராவணமீசை,
அடம்பன் ஆகியன கடற்கரையின் சுகத்தினை அநுபவிப்பதற்கு விமலனுக்கு என்றும்
தடையாக இருந்ததில்லை. சின்ன வயசிலே கடற்கரையின் ஒவ்வொரு குறுணி மணலையும்
அவன் அடியளந்திருக்கிறான். திருக்கோவிலின் கிழக்குப் பகுதி நெய்தல் அழகு
சிந்த, மேற்குப் பகுதியில் காடு! அதன் காவல் கோபுரங்கள்போல சங்கமாங் கண்டி,
உகந்தமலை, மொட்டையாகல் மலை ஆகியன ரம்மியமாகத் தெரியும். அந்தக் காட்டுக்கு
இப்ப ஏதோ புதுப் பெயர். ஆனால், அப்பா அதனைப் பூமுனைக்காடு என்றுதான்
அழைப்பார். கடற்கரை சார்ந்த பகுதியிலே எத்தனை ஆயிரம் தென்னை மரங்கள்!
அளகபாத்தினை உலர்த்தும் இளம் பெண்களின் கோலத்திலே, வங்கக் கடலின் சீதளத்தை
அள்ளிவரும் தென்றலிலே சுகிக்கும் அழகே அழகு! திருக்கோவிலுக்குச் சொந்தமான
நன்செய் வயல்கள் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விஸ்தீரணத்திலே பரந்து
கிடக்கின்றது. மண்ணின் மைந்தரின் உழைப்புக்கு அவை போதவில்லை. காடுகளை
அழித்துச் சேனைகளாக்கினார்கள். அக்கினி நாளிலே நெருப்பு வைக்கும்
நிகழ்ச்சியை விமலன் சிறு வயசில் ஆவலுடன் ரசிப்பான். சேனையாகத் திருந்தாத
அந்தக் காட்டிலே நாட்டுக் கட்டைகள் குத்தபட்டு நிற்கும். அந்த நிலையில்
அந்த நிலத்திலே சோளன் நன்றாக வளரும். பின்னர் கச்சானுக்கும், ஏனைய சேனைப்
பயிர்களுக்கும் வாகான பூமியாக அவர்கள் உழைப்பு அதனை மாற்றிவிடும். மண்ணின்
மைந்தருடைய உழைப்புகளின் ஓர்மை மிகுந்த ஓர் உந்நத உருவமாக எப்பொழுதும்
விமலனுடைய அப்பா அவன் நெஞ்சிலே குடியிருக்கிறார். திருக்கோவில் வீடுகளிலே
உள்ள உணவுத் தட்டுகளிலேதான் எத்தனை சுவையான உணவுகள் கொலுவிருக்கும்? கடலிலே
கிடைக்கும் மச்சம். கோரைக்களப்பு வாவியிலே கிடைக்கும் நண்டுக்கும்
றாலுக்கும் தனிச்சுவையுண்டு என்று இன்றும் விமலனின் நாக்குப்
பொச்சடிக்கும்! பற்களின் ஊத்தை கழற்ற இறைச்சி தின்ன விரும்பிக் காட்டுக்கு
வேட்டையாடச் சென்ற யாரும், இன்றுவரை வெறும் கையுடன் திரும்பயதில்லை. பாலும்
தேனும் அவர்களுடைய உணவுத் தட்டுகளிலே வழியும்! யாரே ஓர் எழுத்தாளன் தான்
பிறந்த கிராமத்தை நினைவு கூர்ந்தபொழுது, 'சொர்க்கத்திலிருந்து ஒழுகி
விழுந்த ஒரு துளி'யாகப் பாராட்டி அதிசயித்திருக்கிறார். இத்தகைய ஒரு
கற்பிதத்திலே தான் பிறந்த ஊரின் வனப்பு எப்பொழுதும் விமலனின் நனவுகளிலே
பவனி வரும் அதன் எழிலுக்கும் வளத்துக்கும் ஆண்மை சேர்க்க அவதரித்த ஒரு
மாமனிதர் என்கிற வியப்புக் கலந்த பக்தி எப்பொழுதும் அவனுக்கு அவன்
அப்பாமீது உண்டு.
அந்த அப்பா இப்பொழுது முடங்கிக்கிடக்கிறார் என்பதை அவனாலே நம்ப
முடியவில்லை. உண்மையை ஆசைகள் விழுங்கிக் கொண்டிருக்கும் ஒரு நிச்சயமற்ற
நிலையிலே விமலனின் மனசு தளும்பியது.
அப்பாவுக்கு ஐந்து பிள்ளைகள்; மூன்றுமகன்கள். இரண்டு மகள்கள் அவன் அநேகமாக
சின்னம்மாவுடன் தங்கிவிடுவான். சின்னம்மாவின் அன்பும், ஆதரவும்,
காருண்யமும் அவனுடைய பிஞ்சு மனசிலே ஆழமான பதிவுகளை விட்டிருந்தன. அந்த
சின்னம்மாவின் செல்வாக்கின் காரணமாகவே தான் கலை-இலக்கியத் துறைகளிலே
ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் வளர்த்துக் கொண்டதாக ஒருவகை நன்றியறிதல்
உணர்ச்சியுடன் நினைவு கூருவான். மெல்லிசைப் பாடல் நிகழ்ச்சிகளிலே பங்கு
கொண்டு பெயர் பிரபலமானமை, கலையையும் இலக்கிய ஆர்வங்களையும்
வளர்த்தெடுக்கூடிய விதத்திலே கொழும்பில் உத்தியோகம் கிடைத்தபொழுது விமலன்
மனம்கொள்ளாச் சந்தோஷத்திலே மூழ்கினான். சின்னம்மாவின் கலாரீதியான
செல்வாக்கினாலேதான் இது சாத்தியமாயிற்று என விமலன் நினைத்துக் கொள்ளுவான்.
1983 ஆம் ஆண்டில், இலங்கையில், சிங்களப் பேரின வாதிகளினால்,
அரங்கேற்றப்பட்ட இனப் படுகொலை ஈழத்திலே வாழ்ந்த அத்தனை தமிழர்களுடைய
வாழ்க்கையிலும் ஏதோ வகையில் ஒரு பாதிப்பினை ஏற்படுத்தியிருக்கின்றது.
விமலனின் வாழ்க்கையிலும் அத்தகைய மாற்றம் ஏற்பட்டது. கொழும்பு உத்தியோகத்தை
உதறித் தள்ளிவிட்டு, ஊர் வந்து சேர்ந்தான்.
அந்தக் காலத்திலேதான் அவனுக்குத் திருமணம் நடந்தேறியது. வீட்டார் பேசிக்
செய்த கல்யாணந்தான். மனைவி படித்தவளாகவும் உத்தியோகம் பார்ப்பவளாகவும்
இருந்தாள். குடும்ப வாழ்க்கையின் நிறைவுக்கும், மகிழ்ச்சிக்கும் சான்றாக,
ஒரு பெண்ணும் ஒரு ஆணுமாக இரண்டு குழந்தைகள் கிடைத்தார்கள். அப்பா எப்படித்
தன் பிள்ளைகளை உருவாக்கி ஆளாக்கி வைத்தாரோ, அதே போன்று தானும் தன்
பிள்ளைகளை உருவாக்கி வளர்க்க வேண்டும் என்கிற ஆசை ஒரு வெறியாகவே
மாறலாயிற்று.
நாட்டிலே ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு முகங் கொடுக்கும் அவலத்திலே, விமலனின்
தம்பி வெளிநாடு சென்று, அலைந்து திரிந்து, ஈற்றில் நோர்வே நாட்டிலே வாழத்
தலைப்பட்டான் அவனுடைய உதவியாலும், அவன் எடுத்த சாதுர்யமான
நடவடிக்கைகளினாலும், விமலன் நோர்வே நாட்டிற்கு வந்து வாழத் தலைப்பட்டான்.
நாடு புதிது. அதற்குரிய பருவ காலங்கள் புதிது. அவர்கள் பேணிய
விழுமியங்களும் நாகரிகங்களும் புதிது. இந்த நிலையிலே குடும்பத்தை அழைத்து,
இந்நாட்டிலே ஒரு குடும்ப வாழ்க்கையை நிரந்தரமாக அமைத்துக் கொள்வதிலுள்ள
சாதக பாதகங்களை நீண்ட காலமாகச் சிந்தித்தான். ஈற்றில் தன் மனைவியையும்
இரண்டு குழந்தைகளையும் தமிழ் நாட்டுச் சூழலிலே வாழ ஏற்பாடு செய்தான்.
மூன்று கேந்திரங்களுக்கிடையில் அவனது மனசு ஊசலாடியது. அவனுடைய இளம்
குடும்பம் தமிழ் நாட்டில்.
அவனுடைய அப்பா-அம்மா-வளர்த்து ஆளாக்கிய சின்னம்மா ஆகியோர் திருக்கோவிலில்.
அவன் மட்டும், ஒரு வகையில் பணம் உழைக்கும் எந்திரமாக நோர்வே நாட்டிலே
வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு அவன் அப்பா நோய்வாய்ப்பட்டு, கொழும்புக்குக்
கொண்டு வரப்பட்டார் என்கிற செய்தி கிடைத்தது.
'அப்பாவுக்கு ஒப்பரேஷன் ஒண்டு செய்யனுமாம் மனே' என்று அம்மா தொலைபேசியிலே
சொன்ன பொழுது ஆடிப் போனான்.
அவன் அறிவறிந்த பருவத்திலிருந்து அப்பா ஒரு தடுமன், காய்ச்சல் என்றுகூட
வைத்தியசாலைக்குச் சென்றதில்லை. அவருக்கு ஆப்பரேஷன் செய்யக் கூடியதாக என்ன
நோய்?
அடுத்த நாள் மீண்டும் ஒரு செய்தி தொலைபேசியிலே கிடைத்தது.
'ஒப்பரேஷன் செய்வதற்கு அப்பாவின் உடல் நிலை ஏற்றதாக இல்லை என்று டாக்டர்கள்
அபிப்பிராயப் படுகிறார்கள். எனவே, ஊருக்கே திரும்பிக் கொண்டு போறம். இனி
நாட்டு வைத்தியம் ஏதாவது செய்து பார்க்கலாம்.'
விஞ்ஞான ரீதியான மேலைநாட்டு வைத்திய முறையினால் குணப்படுத்த இயலாத
வியாதியை, நாட்டு வைத்தியன் மாந்திரீகத்தின் மூலமா குணப்படுத்தப்
போகின்றான்?
எந்த நேரமும் ஏதாவது செய்தி வரும் என்று மனம் பயந்தது.
அந்தச் செய்தியைத் தாங்க மிகந்த பிரயாசைப்பட்டு மனசைப் பக்குவப்படுத்த
வேண்டும் என்கிற நினைவே ஆக்கினை நிறைந்ததாக இருந்தது.
இடைக்காலத்தில் இரண்டாவது வேலையை விட்டுவிடலாமோ என்றும் விமலன் யோசித்தான்.
இரவில் தூங்க முடியவில்லை. இளமைக் காலத்திலே அப்பாவுடன் செலவு செய்த அந்த
இனிய நிகழ்ச்சிகள் மனசிலே குமைந்து குமைந்து எழுந்தன. அவை கனவா நனவா என்று
நிதானிக்கவும் முடியவில்லை.
அப்பா தன்னுடைய மனசிலும் இரத்த ஓட்டத்திலும் இவ்வாறு பின்னிப் பிணைந்து
வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை அவன் முன்னரெப்போதும் உணர்ந்ததும் இல்லை.
நண்பர்களும், வேலையிடத்தின் சகாக்களும் 'என்ன சுகமில்லையா? என்று கேட்கவும்
செய்தார்கள்? ஏன் இப்படி எல்லாம்?
மனம் குழம்பிப் போய்க் கிடந்தது. உடம்பிலே அவனாலே நிதானிக்க இயலாத
ஒடுக்கமும்-.உறக்கமும்!
வெளிக் கதவு திறக்கப்படுவது போன்ற சத்தம்.
'யாரு? அண்ணனா?' என்று குரல் கொடுத்தான்.
'ஓமோம்...' என்று சொல்லிக் கொண்டே சங்கரப்பிள்ளை அண்ணன் நுழைந்து
கொண்டிருந்தார்.
'அது' முடிஞ்சு போச்சு. அதுதான் 'வீன்மொன போ'லுக்கு போய் வாங்கி
வந்தனான்...' என்று சொல்லி, 'தெரியாதே?' என்கிற குழு ஊக்குறிக்குள் சொல்ல
விரும்பாத விஷயங்களை மூடினார்.
சங்கரப்பிள்ளை அண்ணன் பாவம். வயசு ஐம்பதாகிறது. வீட்டைக் காப்பாற்றும்
கடமையிலே, நோர்வேக்கு வந்து, இந்த வயசில் ஒண்டிக்கட்டையாக வாழ்ந்து
கொண்டிருக்கிறார். அவருக்குக் கொழுவியுள்ளதோ இரவு வேலை. கணகணப்புக்குக்
கொஞ்சம் 'விஸ்கி' வயிற்றுக்கள் போட்டுக் கொண்டால்தான் இயக்கங்கள் நேர்சீராக
இருக்கும் என்கிற நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அவர் சாவகாசமாகத் தன்னுடைய அலுவல்களை முடிப்பதற்கு இடமளித்து, விமலன்
ரி.வி. ஸ்ராண்டின் கீழ்த்தட்டிலே இருந்த ஈழநாடு பத்திரிகையை எடுத்து மேயத்
துவங்கினான். அந்தப் பத்திரிகையை ஏற்கெனவே நாலஞ்சு தடவைகள் விமலன் வாசித்து
விட்டான். இருந்தாலும்...
சங்கரப்பிள்ளை அண்ணன் தான் வாங்கி வந்த 'அப்ப ரென்' விஸ்கியை, அதற்குரிய
சடங்கு முறைகளை மிகவும் பவ்வியமாக அநுசரித்து ஒரு 'பெக்' குடித்து
முடித்து, ஏதோ அவஸ்தையிலிருந்து விடுபடுபவரைப் போல செருமினார்.
அந்த ஈழ நாட்டின் தலைப்புச் செய்தி 'கொழும்பில் எண்ணெய்க் குதங்கள்
தீப்பிடித்து எரிந்தன. எனப் பளிச்சிட்டது! அப்பாவைக் கொபம்புக்குக் கொண்டு
வந்த அன்றோ, அல்லது மறநாளோ அது நடைபெற்றது அதனைத் தொடர்ந்து கொபம்பில்
நிலவிய பதட்ட நிலையினால் அப்பாவை ஊருக்கக் கொண்டு போக அவசரப்பட்டார்களோ?
அல்லது நாட்டு வைத்தியமே சர்வ பரிகாரம் என்று முடிவெடுத்தார்களோ? உண்மைத்
தகவல்கள் மறுமுனையிலிருந்து கிடைப்பது அரிதாக இருப்பதாகவே விமலனுக்குத்
தோன்றியது.
சட்டென்று அவன் மனசிலே அப்பாவுடன் சம்பந்தப்பட்ட இளவயசு நினைவுகள் ஊர்கோலம்
வந்தன.
அறுவடை காலத்திலே அடம் பிடித்து, அப்பாவுடன் வயற்காட்டுக்குப்
போய்விடுவான். பள்ளிக் கூடம் இல்லாத நாட்கள் என்றால், நீர்ப் பாய்ச்சும்
காலங்களிலும், உரம் போடும் காலங்களிலும் விமலன் அப்பாவின் வயலுக்குச்
செல்வான். அப்பாவின் வயலிலே வேலை செய்யும் அனைவருக்கும் விமலன் மகா
செல்லம். விமலனை 'பள்ளியான்...பள்ளியான்...' என்று செல்லமான பட்டப் பெயர்
சூட்டி அழைப்பார்கள்.
'நீங்க போய் நிழலில் இருங்க தம்பி' என்று அவர்கள் சொல்லுவார்கள். ஆனால்
அப்பா, அப்படி அல்ல. வயல் முழுதும் வரப்புகளில் எல்லாம் மகளை அழைத்துச்
செல்வார். அவனுடைய குஞ்சுக்கால்கள் அந்த வயலிலே படுவதை அவர் விரும்பினார்.
அது ஏன் என்று விமலனுக்குப் புரிவதில்லை.
நெல் செய்கையை ஒரு தொழிலாக, பொருளீட்டும் உபாயமாக அப்பா நோக்கவில்லை என்பதை
விமலன் இலகுவாகப் புரிந்து கொண்டான். அதனை அவர் பக்தி பூர்வமாக
மேற்கொண்டார் வளர்ந்த பின்னர், கிருஷ’கப் பகுதியினர் நெறிப்படுத்திய புதிய
முறைகளையும் யுக்திகளையும் பிரயோகிக்கவேண்டும் என்று விமலன் ஆர்வம்
காட்டினான். அவனுடைய ஆர்வங்களை அப்பா வேளாண்மைச் செய்கையிலோ புகுத்துவதில்
மகிழ்ந்தார். விளைச்சல் அமோகமான பொழுது, அப்பா வார்த்தை கண்டுபிடிக்கத்
திணறி, மனசும் முகமும் மாபெரும் சிரிப்பாக மாறும் அந்தக் காட்சியை விமலன்
என்றுமே மறந்ததில்லை.
யானைக்காவல், பன்றிக்காவல் என்று அப்பா செல்வதுண்டு. அவற்றிற்கும்
வரப்போவதாக விமலன் அடம் பிடிப்பான் கடைசியிலே விமலனின் பிடிவாதங்களுக்கு
மசிந்து கொடுப்பதுதான் அப்பாவின் சுபாவமாக மாறியது.
காட்டோரம் பரண் அமைத்து, அதிலே படுக்கையும் அமைத்து, யானை வரும் வழியில் தீ
மூட்டி 'ஹாய்...கூய்...' என்று காவல் காப்பதை விமலன் எப்பொழுதுமே வீர
சாகஸன் நிறைந்த விளையாட்டாகச் கற்பனை செய்து கொள்ளுவான். காவல் இருக்கும்
பொழுது, பெரிய புரையிலிருந்து, 'தப்பி, மகன்...கவனம்...' என்று அவர்
சொல்லிக் கொண்டே இருப்பார் அவர் எப்பொழுதும் விமலனைக் குழந்தையாகவே
தரிசிக்கிறார் என்பதை விமலன் நினைத்துச் சிரித்துக் கொள்ளுவான்.
காலையிலே விமலன் சற்றே கண்ணயர்ந்து போவதுண்டு. அவனை எழுப்பாது,
காட்டுக்குள் சென்று கணபதியின் சேனையில் பிஞ்சு சோளக் கதிரும், அவித்த
கச்சானும் எடுத்து வந்து சூடாகத் தேநீரும் தயாரித்த பிறகே விமலனை
எழுப்புவார். அப்பாவின் கரிசனையிலே விமலன் பூரித்துப் போனாலும், காவலுக்கு
வந்த இடத்தில் தூங்கி விட்டோமே என்று விமலன் வெட்கப்படுவதும் உண்டு.
இந்த நினைவுகளிலிருந்து சற்றே விடுபடுவது போல, 'சரியண்ணே, சமையல் ஒன்றும்
செய்யலியா?' என்று விமலன் கேட்டான்.
'இண்டைக்கு அடுப்பு மூட்டிச் சமையல் செய்ய வேண்டாம் எண்டு யோசிச்சன
'பிச்சா'வுக்கு ஓடர் கொடுத்துச் சாப்பிடுவம். ஒரு மாற்றத்துக்கு நல்லது'
என்று சொல்லிக் கொண்டே அவர் இரண்டாவது 'ரவுண்ட்' விஸ்கி எடுப்பதற்கு
அடுக்குப் பார்க்கலானார்.
சங்கரப்பிள்ளை அண்ணர் வழக்கத்திற்கு மாறாக நடப்பது போல விமலனுக்குத்
தோன்றியது அதைப் பற்றி யோசிப்பதற்கிடையில், அவனுடைய மனசிலே அப்பா பற்றிய
வேறு நினைவுகள் மொய்த்துக் கொண்டன.
கொழும்பில் உத்தியோகம் பார்த்த காலங்களில் மாதமொரு முறையாவது வீட்டுக்கு
வந்து விடுவான். அப்பா தன்னுடைய மகிழ்ச்சியை மற்றவர்கள் அறிந்து
கொள்ளக்கூடாது என்கிற எச்சரிக்கையுடன், துள்ளல் நடைபோடுவது அவனை
மகிழ்விக்கும். இரண்டும் நாள்கள்தான் ஊரிலே நிற்பான். புறப்படுவதற்கு
முன்னர் அப்பா விமலனைத் தன்னுடைய காய்கறித் தோட்டத்துக்குள் அழைத்துச்
செல்வார். திறமான காய்கறிகளை ஆய்ந்து ஒரு பையிலே போடுவார். மரவள்ளித்
தோட்டத்தில், மரங்களைப் பிடிங்கி, 'ஒத்த வேர் கிழங்குகளை மட்டும்
சீர்செய்து கொண்டே, 'நல்ல மாக்கிழங்கு மகன். ஒரு அவியலுடன் அவிந்துவிடும்'
என்று சொல்லும் பொழுதே, விமலனுக்கு நாக்கில் நீர் ஊறும்.
எப்பொழுதும் உற்சாகமாக வயல், வரம்பு, சடை, கண்ணி என்று இருந்தவருக்கு,
எங்குமே சென்று எதுவுமே செய்ய முடியாத நிலையை நாட்டுப் பிரச்சினைகள்
ஏற்படுத்திய பொழுது, வீட்டிலேயே அடைபட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இளைய மகன்
பிய்ச்சுக் கொண்டு வெளிநாடு போய்ச் சேர்ந்தான். அவருக்கு அது சந்தோஷம்
தந்தது. ஆனால், விமலன் வெளிநாடு செல்வதை அவர் விரும்பவில்லை.
நாட்டின் இனப்பிரச்சனை நாளாக நாளாக முற்றி, மோசமடையலாயிற்று எத்தனையோ
இழப்புகளை அப்பா அடுக்கடுக்காகச் சந்திக்க நேர்ந்தது. இவற்றின் மத்தியிலே
விமலன் வெளிநாடு செல்வதை அவர் தடுக்க விரும்பவில்லை. விரும்பம் வேறு,
நிர்ப்பந்தம் வேறு என்பதை அவர் அறிந்து கொண்டார். அரசு ஆதரவுடன்
வளர்க்கப்பட்ட வன்முறைத் தொடரில் அப்பா மூத்த மகனையும் இரண்டாவது மகளையும்
பறிகொடுத்தார். அந்த இரண்டு இழப்புகளும் அவரைப் பாதி மனிதனாக மாற்றியது.
நோர்வே நாட்டில் வாழ்ந்த விமலன், குடும்ப ஒன்று கூடல் போல, தன் தம்பிக்கு
தமிழ்நாட்டில் கல்யாணம் நடத்த ஏற்பாடு செய்தான். 'படித்த குடும்பம்.
பையன்கள் வெளிநாட்டிலே வேலை செய்கிறார்கள். கலை-இலக்கியங்களிலே மிகுந்த
ஆர்வம் உள்ளவர்கள். மகளுக்கு வெளிநாட்டிலே வரன் தேடுகிறார்கள். கல்யாணச்
செலவுகளையும் தாராளமாக ஏற்கக் கூடிய வசதியும் உள்ளவர்கள்' என்கிற
அறிமுகத்துடன் வந்த திருமணப் பேச்சு விமலனுக்குப் பிடித்ததாக இருந்தது.
'அண்ணா நீங்கள் பார்த்துச் செய்தால் எனக்கு எல்லாம் சம்மதம்' என்று தம்பி
சொல்லி விட்டான்.
திருமணத்தின்போது எத்தனை எதிர்பார்ப்புகளும், எத்தனை ஏமாற்றங்களும்!
பணத்திற்காக மனிதனுடைய பண்புகள் இவ்வளவு அதல பாதாளத்துக்கு இறங்கிவிடுமா?
இதனைச் சம்பந்தி வீட்டார் 'சாமர்த்தியம்' கெட்டிக்காரத்தனம்' என்று
பாராட்டி மகிழ்ந்தது அவன் மனசை கூனிக் குறுகச் செய்தது ஏமாந்தது அல்ல. அந்த
ஏமாற்றத்தின் எக்காளங்களால் அப்பா அடைந்த வேதனைகளைத் தான் விமலனால்
ஜ“ரணிக்க முடியவுமில்லை; தாங்கிக் கொள்ள முடியவுமில்லை.
சென்னையிலே விமலனின் மனைவியும் குழந்தைகளும் வசித்து வந்த வீட்டின் மொட்டை
மாடியிலே அப்பா விமலனைச் சந்தித்தார். அவனுடைய கைகளைப் பாசமுடன் கட்டிக்
கொண்டார். அவர் குரல் அடைந்திருந்தது. நா தளதளத்தது. 'மகனே, நீ எவ்வளவு
மனக் கஷ்டப்படுகிறாய் என்பது எனக்குத் தெரியும் யாரை மகன் நோவது? சிறிசுகளை
வாழவிட்ட பெரிய மனசு மகன் உன்னுடையது எல்லாம் அவரவர் தலைவிதி...' என்றார்.
யார் யாரைத் தேற்றுவது? அப்பாவுக்கு எப்பவும் மிகப் பெரிய மனசு.
இன்னொரு சந்தர்ப்பத்திலே அப்பாவுக்கும் அவனுக்கும் இடையில் நடந்த சம்பாஷனை
விமலனின் மனசிலே விஸ்வரூபம் எடுத்தது.
தாய்நாடுக்குச் செல்வதற்கு மட்டும் மிகப் பெரிய சிரமங்கள். அகதி நிலை
பெற்றுவிட்டால் மற்ற நாடுகள் எல்லாவற்றுக்கும் போகலாம், சொந்த நாட்டினைத்
தவிர! இதன் நியாய அநியாயங்களைப் பட்டி மன்றம் வைத்துப் பேசுவதிலும்
பயனில்லை. நியாங்கள் எப்பொழுதும் தர்மங்களாய் அமைவதும் இல்லை. பெரும் பணம்
செலவு செய்து, பல ஆபத்துக்களை ஏற்றுக்கொள்ளும் துணிச்சலுடன் தாய்நாடு
சென்று, அப்பா முன் விமலன் தோன்றினான்.
'எனக்குத் தெரியும் என் மகன் என்னைப் பார்க்க வருவார்' என்று ஓராயிரம்
தடவைகள் சொல்லியும் அவர் மனசிலே புரண்டோடிய மகிழ்ச்சியை அவராலே வெளியிட
முடியாது தவித்தார்.
பிரியும்பொழுது மட்டும் அப்பாவினால் தன்னுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த
முடியவில்லை. ஏதோ உள்ளுணர்வுகள் அவர் மனசிலே குமைந்து கொண்டிருந்திருக்க
வேண்டும்.
'மகன் திரும்பவும் போகப் போறியா? ஊரோட குடும்பத்தோட இருந்திடன். நான்
கண்மூடினால், கொள்ளி வைக்கவோ அல்லது ஒருபிடி மண்போடவோ ஆர் இருக்கினம்?'
'அப்பா, உங்களுக்கு இப்ப என்ன வந்திட்டுது? இன்னும் இரண்டு மூண்டு வருஷம்,
உழைச்சுக் கொண்டு ஊரோட வந்திடுறன். பிறகு உங்கள் கண் பார்வை எட்டும்
இடத்திலதான் வாழுவன்' என்று கண்ர் மல்க விமலன் கூறினான்.
அப்பாவின் நெடிய உருவம்; விபூதிக்கு அழகு சேர்க்கும் அகன்ற நெற்றி;
கலகலப்பான பேச்சு; உலகின் வஞ்சகமற்ற அன்பு முழுவதையும் குழைத்து வைத்தது
போன்ற சிரிப்பு...
நாட்டு வைத்தியர் அப்பாவை, விமலன் நாடு திரும்பு மட்டும் காப்பாற்றி
வைப்பாரா?
விஸ்கியின் அநுசரணையிலே சங்கரபிள்ளை அண்ணன் சமநிலை அடைந்தார்.
'விமலன், நான் வெளியால போறதுக்கு முந்தி உனக்கு ஊரில இருந்து ஒரு 'ரெலிபோன்
கோல்' வந்தது...'
'என்னவாம்? யார் பேசினது? அப்பாவுக்கு ஏதும்? என்று விமலன் பரபரத்தான்.
'உன்ரை மைத்துனர்தான் எடுத்துப் பேசினவர். விஷயம் எதுவும் அவர்
சொல்லேல்லை...விமலன் எப்ப வருவான் எண்டு கேட்டவர்...'
'நீங்கள் என்ன சொன்னனீங்கள்?'
'தம்பி இன்னும் ஒன்றரை மணி நேரத்திலை வீட்டிலை நிற்பான் எண்டு
சொன்னன்...'அப்ப அந்த நேரம் எடுக்கிறம். ஆளை வீட்டிலை நிக்கச் சொல்லுங்கள்.
அவசியம் பேச வேணும் எண்டு சொன்னார்...இப்ப அவை எடுக்கக்கூடிய நேரத்தான்...'
'நீங்கள் வேலைக்குப் போகேல்லையே...கூடக்குறைய எடுக்கிறியள்...'
'நான் இண்டைக்கு வேலைக்குப் போகேல்லை. 'சிக்' போட்டுத்தான் வெளியிலை
போனனான்.'
விமலன் அவரை உற்றப் பார்த்தான்.
'மூப்பு, பிணி, சாக்காடு ஆரைத்தான் விட்டது?'
'என்னண்ணை, தத்துவம்...'
'தத்துவமோ? புத்தர் போதித்த போதனைகள்...விஸ்கி உள்ளே போக ஞானம்
புறப்படுகிறது....'
விமலன் ஏதோ சொல்ல வாய் உன்னியபொழுது டெலிபோன் மணி சிணுசிணுத்தது.
'இஞ்ச விமலன், நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்பட வேண்டாம். நான் இருக்கிறன்'
'நான் ஊரில் இருந்தால், அப்பாவுக்கு என்னனென்ன செய்வனோ, அத்தனையும்
செய்யுங்கள்.'
'எங்களுக்கும் கடமைகள் இருக்கு அவர் என்னை சொந்தப் பிள்ளை போலதான் நேசித்து
நடத்தியவர். நாங்கள் எந்தக் குறையும் விடமாட்டம். ஒண்டுக்கும்
யோசிக்காதேயுங்கோ... விஷயங்கள் முடிஞ்ச பிறகு, விரிவாகக் கடிதம்
எழுதுறம்...
'வேறை என்ன?
'ஒன்றுமில்லை. நீங்கள் எதுக்கும் கவலைப்படாமல் இருங்கோ சரி வைக்கிறன்'
விமலன் போனை வைத்தான்
சங்கரப்பிள்ளை அண்ணன் ஏன் புத்தரின் தத்துவம் பேசினார் என்பது இப்பொழுது
விளங்கியது.
மற்றைய இரு நண்பர்களும் வீடு வந்து சேர்ந்தார்கள். சங்கரப்பிள்ளை அண்ணர்
அறிவித்ததின் பேரிலே அவர்கள் வீவு எடுத்துக்கொண்டு வந்திருக்கிறார்கள்...
சங்கரப்பிள்ளை அண்ணர் 'யாருக்கும் வேணுமோ?' என்று கேட்பதுபோல, 'அப்பர்
ரென்' விஸ்கிப் போத்தலை மேஜையிலே எடுத்து வைத்தார்.
விமலன் அழவேண்டும் போன்ற உணர்வுடன் தன் அறைக்குள் ஓடினான்.
* * முற்றும் * *
ஆசிரியர் குறிப்பு
_____________
ஈழத்திலே பாடகராய், நடிகராய், வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளராய் கலைத்
துறையிலும், கவிஞராய், கதைஞராய், நாடகாசிரியராய், பத்திரிகையாளராய்
இலக்கியத் துறையிலும் தமது படைப்பு ஆற்றல்களை ஊன்றிய கோவிலூர் செல்வராஜன்,
இன்று நோர்வே நாட்டிலே வாழ்கிறார். இருப்பினும், தமிழ் உணர்வுகளினதும்
ஆக்கங்களினதும் நிரந்தர உபாசகராகவே தம்மை நிறுவியுள்ளார். நோர்வே நாட்டு
வாழ்க்கைக் கோலங்கள், அதிலே தமிழர் எதிர்நோக்கும் அவலங்கள் ஆகியவற்றை நல்ல
சிறுகதைகளாகப் படைத்துள்ளார். 'விடியாத இரவுகள்' அத்தகைய படைப்புகளையும்
உள்ளடக்கிய அவருடைய முதலாவது சிறுகதைத் தொகுதியாகும்.
எஸ். பொ.
கருத்துகள்
கருத்துரையிடுக