ஆதவன் சிறுகதைகள்
சிறுகதைகள்
Back
ஆதவன் சிறுகதைகள்
தொகுப்பு: இந்திரா பார்த்தசாரதி
Source:
அனைத்திந்திய நூல் வரிசை
வங்கச் சிறுகதைகள்
தொகுப்பு : அருண்குமார் மகோபாத்யாய்
வங்கத்திலிருந்து தமிழாக்கம்: சு.கிருஷ்ணமூர்த்தி
நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா
ISBN 81-237-2140-4
முதற்பதிப்பு 1997 (சக 1919)
©: அந்தந்த ஆசிரியருக்கு
தமிழாக்கம் © நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா 21
Bengali Short Stories (Tamil)
ரூ.46.00
வெளியீடு: இயக்குநர்,நேஷனல் புக் டிரஸ்ட்,
இந்தியா ஏ-5, கிரீன் பார்க், புதுதில்லி 110016
பொருளடக்கம்
முன்னுரை
நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தார் இந்திய வாசகர்களுக்காக, இந்திய அரசியல் சட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்திய மொழிகளில் சிறுகதைத் தொகுப்புகள் வெளியிடவும் மற்ற இந்திய மொழிகளில் அவற்றின் மொழி பெயர்ப்புகளைப் பிரசுரிக்கவும் "ஆதான்-பிரதான்" என்ற பெயரில் ஒரு திட்டம் வகுத்தனர். அந்தத் திட்டத்திற்கேற்பத் தயாரிக்கப்பட்டது இந்தச் சிறுகதைத் தொகுப்பு. நமக்கு அறிமுகமான காலத்தைச் சேர்ந்த மனிதர்கள், சமூகம் இவற்றின் சித்திரம் இந்தத் தொகுப்பில் கிடைக்கும்.
வங்கச் சிறுகதைத் துறையில் முதற்பெருங் கலைஞர் ரவீந்திரநாத் தாகூர். அவரது கையில்தான் சிறுகதை உயிர் பெற்றது, வியக்கத்தக்க வளர்ச்சி பெற்றது. சிறுகதையின் பல்வேறு அம்சங்களிலும் அவரது கலைத்திறன் ஒளிர்கிறது. காதல், இயற்கை, சமூகப் பிரச்சினைகள், தத்துவம், காவியத்தன்மை, புனைவியல், வரலாறு, கேலி போன்ற பல துறைகளிலும் அவர் அனாயசமாக நடமாடினார். 1890 ஆம் ஆண்டு முதல் 1940 ஆம் ஆண்டுவரை ஓர் அரை நூற்றாண்டுக் காலம் அவர் சிறுகதைகள் எழுதினார்.
ரவீந்திரரின் காலத்தில் த்ரிலோக்யநாத் முகோபாத்தியாய், பிரபாத் குமார் முகோபாத்தியாய், சரத் சந்திர சட்டோபாத்தியாய், பிரமத சௌதுரி முதலியோர் வங்கச் சிறுகதைக்கு வளம் சேர்த்தனர்.
இந்தத் தொகுப்பில் நமக்குப் பரிச்சயமான காலத்தைச் சேர்ந்த சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளன. ரவீந்திரரும் சரத் சந்திரரும் நமக்கு அறிமுகமான காலத்தைச் சேர்ந்தவர்களல்லர். இவர்களுக்குப் பிற்பட்ட காலத்தில், கடந்த நாற்பதாண்டுகளில் சிறுகதைகள் வங்காளி மனப்போக்கின் பல்வேறு படிமங்கள் இடம் பெற்றுள்ளன. ஆகவேதான் இந்தத் தொகுப்பில் சரத் சந்திரருக்குப் பிற்பட்ட காலம் முதல் தற்காலம் வரையில் வெளிவந்துள்ள பல்வகைப் பட்ட சிறுகதைக் கருவூலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
வங்க இலக்கியத்தில் ரவீந்திரர்-சரத்சந்திரருக்கு அடுத்த காலம் 'கல்லோல் யுகம்'., இந்தக் காலத்தின் அளவு 1923 முதல் 1939 வரை. இந்தக் காலத்தில் உலகளாவிய பொருளாதார மந்தமும், இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கிளர்ச்சியும் இருந்த போதிலும் 'கல்லோல்', 'காலிகலம்' பத்திரிகைகளில் சிறுகதைகள் எழுதிய எழுத்தாளர்கள் மொத்தத்தில் அமைதியான சூழ்நிலையில் இலக்கியம் படைத்தனர். இந்தப் பருவத்தில் தோன்றியவர்கள் தாரா சங்கர் பந்த்யோபாத்தியாய், அசிந்த்ய குமார் சென் குப்தா, பிரமேந்திர மித்ரா, புத்ததேவ போஸ், மனீஷ் கட்டத்(ஜுவனாஸ்வ), பிரபோத் குமார் சன்யால், பவானி முகோபாத்தியாய் ஆகியோர். விபூதி பூஷண் முகோபாத்தியாய், மாணிக் பந்தயோபாத்தியாய், அன்னதா சங்கர்ராய், பனஃபூல், விபூதி பூஷண் பந்த்யோ பாத்தியாய, சரதிந்து பந்த்யோபாத்தியாய், ரவீந்திர நாத் மித்ரா, பரிமல் கோஸ்வாமி, சஜனிகாந்த தாஸ், பிரமாங்குர் ஆதர்த்தி, சரோஜ் குமார் ராய் சௌதுரி, பிரமதநாத் பிஷி, கஜேந்திர குமார் மித்ரா, ஆஷாபூர்ணாதேவி, மனோஜ் போஸ், பிமல் மித்ரா முதலியோர் 'பிசித்ரா', 'சனிபாரேர் சிட்டி பத்திரிகைகளில் எழுதினார்கள். இந்தக் காலத்தில்தான் ராஜசேகர் போசும் பரசுராம் என்ற புனைபெயரில் கேலியும் ஹாஸ்யமும் ததும்பும் சிறந்த சிறுகதைகள் எழுதினார்.
இரண்டாவது உலகப்போரின் தொடக்கத்திலிருந்து இந்தியா விடுதலை பெற்ற காலம் வரை- அதாவது 1939 முதல் 1947 வரை உள்ள காலத்தைக் 'கல்லோலுக்குப் பிற்பட்ட யுகம்' என்று கூறலாம். இந்தக் காலம் வங்காள நாட்டிலும் சமூகத்திலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்த காலம். பஞ்சம், விமானத் தாக்குதல், விலைக் கட்டுப்பாடுகள், உணவுப் பங்கீடு, ராணுவத்துக்காகக் கொள்முதல், கறுப்புச் சந்தை, சமூக வாழ்வில் சீரழிவு, பொருளாதாரச் சீர்குலைவு, ஒழுக்கம் பற்றிய மதிப்பீடுகளின் அழிவு, வகுப்புக் கலகங்கள்,நாட்டு விடுதலை, நாட்டுப் பிரிவினை, அகதிகளின் வெள்ளம் இவை போன்ற பெரும் மாற்றங்களும் விபரீதங்களும் இந்தக்காலகட்டத்தில்தான் நிகழ்ந்தன.
இந்தக் காலத்தில் எழுதத் தொடங்கியவர்கள் தங்களுக்கு இலக்கிய உணர்வு பிறந்தது முதலே குறிப்பிடப்பட்ட மாற்றங்கள் பற்றிய நேரடி அனுபவம் பெற்றிருந்தார்கள். இந்தக் காலத்தின் சமூகச் சூழ்நிலை அமைதியற்றதாகவும் குழப்பம் மிகுந்ததாகவும் இருந்தது. இந்தச் சூழ்நிலை அவர்களது பார்வையைக் கூர்மையாக்கியதோடு குழப்பவும் செய்தது. கல்லோல் காலத்து ரொமான்ட்டிக் சூழ்நிலை, நாடோடி மனப்பாங்கு, தறிகெட்ட காதல் வேகம் இவையெல்லாம் இந்தக் காலத்துச் சிறுகதைகளில் இல்லை. இந்தக் காலகட்டத்தில் நமது சமூகத்திலும் எண்ணற்ற மாறுதல்கள் விரைவாக நிகழ்ந்தன. சமூகத்திலும் தனி மனித வாழ்விலும் எண்ணற்ற சிதைவுகள், ஆக்கங்கள், பிரச்சினைகள், அசாதாரண விதிவிலக்குகள், இவையெல்லாம் இணைந்த புரட்சியின் தீவிர வேகம்--சிறுகதை எழுத்தாளனின் அறிவுப் பசியையும் உணர்வுத் திறனையும் கூர்மையாக்கின. நிலை பெற்றிருந்த சட்டங்களும் விதிகளும் தளர்ந்து போயின தறிகெட்ட உணர்வுகளும் இயற்கைக்கு மாறான போக்குகளும் தோன்றின பல நுண்மையான அதிருப்திகள் மனிதனைப் பீடித்தன ரசனை சீர்கெட்டதால் பல்வேறு புதிய அனுபவங்களை ருசிப்பதில் ஆர்வம் பிறந்தது புதிய உறுதிகள், புதிய நம்பிக்கைகள் வாழ்க்கைப் போராட் டத்துக்கு ஓர் அலாதியான உருவம் கொடுத்தன இவையெல்லாம் இரண்டாம் உலகப் போருக்குமுன் நினைக்கக்கூட முடியாதவை யாகும். போர் ஒரு பயங்கர பூகம்பம் போல நேர்ந்தது. அதன் விளைவாகக் கண்ணியத்தின் போர்வை, நீதி நியாயம் என்ற கவசம், குடும்ப கௌரவம், அன்பு-பரிவு, கீழ்ப்படிந்து நடக்கும் தன்மை, மத நம்பிக்கைகள், சடங்குகள் இவையெல்லாமே மண்ணோடு மண்ணாகிவிட்டன. இதற்கு நடுவில் ஒரு புதிய சமூகத்தைப் படைக்கும் கனவு பிறந்தது. கனவை நனவாக்குவதாக உறுதிமொழி ஒலித்தது.
சுபோத் கோஷ், சதிநாத் பாதுரி, சந்தோஷ்குமார் கோஷ், நாராயண் கங்கோபாத்தியாய், நரேந்திர நாத் மித்ரா, நபேந்து கோஷ், நனி பௌமிக், சுசீல் ஜானா, ஜோதிரிந்திர நந்தி ஆகியோரின் சிறுகதைகளில் இந்த மாறுதல்கள் பிரதி பலித்தன. ஜகதீஷ் குப்தா, மாணிக் பந்த்யோபாத்தியாய், அசிந்த்ய குமார் சென் குப்தா, பிரபோத் குமார் சன்யால், முதலிய கல்லோல் யுக எழுத்தாளர்களும், விபூதி பூஷண் பந்த்யோபாத்தியாய். தாராசங்கர் பந்த்யோபாத்தியாய், மனோஜ் போஸ், சரோஜ்குமார் ராய்சௌதிரி, ஆஷா பூர்ணா தேவி, பிரமதநாத் பிஷி, பரிமல் கோஸ்வாமி, பனஃபல், சுசீல்கோஷ், வாணிராய், சாருசந்திர சக்ரவர்த்தி முதலிய 'பிசித்ரா' 'சனிபாரேர் சிட்டி எழுத்தாளர்களும் மேலே கூறப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவர்கள்.
இந்தக் கால கட்டத்தைத் தொடர்ந்து வந்தது துண்டுபட்ட சுதந்திரம் கூடவே வந்தது அகதிகளின் வெள்ளம். இன்னும் பெரிய அளவில் சமூகத்தின் சமநிலைக்குக் கேடு. சுதந்திரத்தின் தோரண வாயிலில் ஒலித்த நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் எல்லாமிழந்த அகதிகளின் அழுகையொலி அமுக்கிவிட்டது. அப்போது இந்தக் குழப்பம் நிறைந்த, இரத்தத்தில் தோய்ந்த நாட்டில் சிறுகதை எழுத்தாளர்களின் இன்னொரு குழு தோன்றியது - சமரேஷ் பாசு, பிமல்கர், ரமாபத சௌதிரி, சையது முஸ்தபா அலி, ஹரிநாராயண் சட்டோபாத்தியாய், பிரபாத் தேவ் சர்க்கார், சாந்தி ரஞ்சன் பந்த்யோபாத்தியாய், ஸ்வராஜ் பந்த்யோபாத்தியாய், பிராணதோஷ் கட்டக், சுதீர் ரஞ்சன் முகோபாத்தியாய், சுசீல் ராய், ரஞ்சன், சசீந்திர நாத் பந்த்யோபாத்தியாய், சுலேகா சன்யால், கௌர் கிஷோர் கோஷ், ஆசுதோஷ் முகோபாத்தியாய், சத்தியப்பிரிய கோஷ், ஆசீஷ் பர்மன், அமியபூஷண் மஜும்தார், கமல்குமார் மஜும்தார், கௌரிசங்கர் பட்டாச்சார்யா, தீபக் சௌதுரி, மகாசுவேதாதேவி இன்னும் பலர்.
இந்தக் காலத்துக் கதாசிரியர்கள் இதற்கு முந்தைய காலத்து எழுத்தாளர்கள் போலவே செயல்பட்டனர். உண்மையில் இந்த இரு காலத்து எழுத்தாளர் குழுக்களை வெவ்வேறாகப் பிரித்துவிட இயலாது. நரேந்திரநாத் மித்வாடி, நாராயண் கங்கோபாத்தியாய், சந்தோஷ்குமார் கோஷ், நனி பௌமிக், சுசீல் ஜானா, சாந்திரஞ்சன் பந்த்யோபாத்யாய், ஸ்வராஜ் பந்தியோபாத்தியாய், பிராணதோஷ் கட்டக், ஆசுதோஷ் முகோபாத்தியாய் இவர்கள் எல்லாருமே 1916 ஆம் ஆண்டிலிருந்து 1922ஆம் ஆண்டுக்குள் பிறந்தவர்கள். இரண்டாம் உலகப்போர் தொடங்கிய சமயத்தில் - கல்கத்தாவும் வங்காளம் முழுதுமே ஒரேயடியாக மாறிக் கொண்டிருந்த குழப்பமான நேரத்தில் - இவர்கள் தங்கள் இளமைப் பருவத்தில் காலெடுத்து வைத்தனர். அன்று முதல் இன்று வரை இவர்கள் உறுதியோடு எழுதிக்கொண்டு வருகின்றனர். 1940க்கும் 70க்கும் இடைப்பட்ட முப்பதாண்டுக் காலத்தில் சமூக வாழ்க்கையிலும் தனிப்பட்ட மனித வாழ்விலும் நிகழ்ந்த பல்திறப்பட்ட மாற்றங்கள் இவர்களுடைய சிறுகதைகளில் பிரதிபலிப்பதைக் காணலாம்.
இந்த நூற்றாண்டின் பின்பாதியில் வங்கச் சிறுகதையின் இன்னொரு பருவம் தோன்றியுள்ளது. இந்தப் பருவத்தைச் சேர்ந்த இளம் கதாசிரியர்கள் 1930 முதல் 1940க்குள் பிறந்தவர்கள். இவர்கள் புதிய தலைமுறை எழுத்தாளர்கள் - சையது முஸ்தபா சிராஜ், மதி நந்தி, சுநீல் கங்கோபாத்தியாய், சியாமல் கங்கோபாத்தியாய், பரேன் கங்கோபாத்தியாய், சீர்ஷேந்து முகோபாத்தியாய், பிரபுல்ல ராய், திப்யேந்து பாலித், அதீன் பந்த்யோபாத்தியாய், தீபேந்திர நாத் பந்த்யோபாத்தியாய், தேபேஷ் ராய், சந்தீபன் சட்டோபாத்தியாய், கவிதா சின்ஹா, லோக்நாத் பட்டாச்சார்யா, சங்கர் ஆகியோர் இந்தப் பருவத்து எழுத்தாளராவர்.
இந்தப் பருவத்து எழுத்தாளர்கள் முற்றிலும் ஒரு புதிய வகையைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்குள்ளும் இவர்களுக்கு முந்தைய பருவத்து எழுத்தாளர்களுக்குமிடையே எவ்வித ஒற்றுமையுமில்லை. இவர்கள் தங்களுக்கு முற்பட்ட காலத்தில் நிகழ்ந்த எதையும் பார்க்கவில்லை, எந்தவிதமான பாரம்பரியத்திற்கும் நன்றி பாராட்டவில்லை; அதைப் பற்றிய நினைவுகூட இவர்களுக்கு இல்லை. இருட்டடிப்பு, பஞ்சம், வகுப்புக் கலவரம், இரத்தம் தோய்ந்த சுதந்திரம் இவையெல்லாம் நிகழ்ந்து சிறிது காலத்துக்குப் பின், அகதிக் குடியிருப்புகளின் ஓரங்களிலோ அல்லது அவற்றுக்கு வெளியிலோ இவர்கள் வாழ்ந்து வளர்ந்தார்கள். இவர்களுக்கு முற்பட்ட எழுத்தாளர்களுக்கு இவர்கள் முற்றிலும் அன்னியப் பட்டவர்களாகத் தோன்றினார்கள். இவ்விரு பிரிவினருக்குமிடையே எவ்விதப் பிணைப்புமில்லை. இளைய பருவத்தினர் வளரத் தொடங்குவதற்கு முன்னேயே கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் இதமான மாளிகை இடிந்து தூள் தூளாகிவிட்டது. மரியாதை, பக்தி போன்ற உணர்வுகள் வெறும் உபதேசங்களாகி விட்டன. ஆண்-பெண் உறவு மாறிப்போய்விட்டது. அதாவது அடிப்படை உந்துதல்கள் அப்படியே இருந்தாலும் அவற்றைச் சூழ்ந்திருந்த கற்பனைப் போர்வை இல்லை. தங்களுக்கு எதிரான கலகத்தில், வாழ்வதற்காக ஒன்றிணைந்தோ அல்லது ஒன்றிணைவது போல் பாசாங்கு செய்தோ அவர்கள் தங்களைத் தயார் செய்து கொள்கிறார்கள்; உண்மையில் அவர்கள் முன்னைவிடத் தனியர்கள், அமைதியற்றவர்கள், இயற்கைக்கு மாறான வழிகளிலோ நரம்புக் கிளர்ச்சியிலோ அமைதி காண முயல்பவர்கள் - இவ்வாறுதான் முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் இந்தத் தலைமுறை எழுத்தாளர்களைப் பார்க்கிறார்கள். இந்த இரு தலைமுறை எழுத்தாளர்கள், தனித்தனித் தீவுகளாவர்.
"கல்லோல்" யுக எழுத்தாளர்கள், இரண்டாம் உலகப்போர்க்கால எழுத்தாளர்கள், இளைய தலைமுறை எழுத்தாளர்கள் என்னும் இந்த மூன்று பிரிவுகளில் முதலிரண்டு பிரிவினருக்கிடையேயுள்ள வேற்றுமையைவிடப் பின்னிரண்டு பிரிவினருக் கிடையேயுள்ள வேற்றுமை பல மடங்கு அதிகம். கல்லோல் யுகத்துக்குப் பிற்பட்ட பருவத்தில் கல்லோல் யுகத்தின் ரொமான்ட்டிக் தன்மை இல்லாவிடினும் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், நீதி - நியாயம் போன்ற மரபு நெறிகளிடம் மரியாதையும் இருந்தது. இது இன்றைய எழுத்தாளர்களிடம் இல்லை. இந்த விஷயத்தில் இவர்களிடையே உள்ள பிளவு கடக்க முடியாதது.
இந்தப் பிளவு மனப்போக்கில் மட்டுமல்ல, மொழியிலும் கட்டமைப்பிலும் கூடத்தான்; வாழ்க்கையை நோக்கும் பார்வையில் மட்டுமல்ல, வாழ்க்கைச் சாதனங்களைப் புதுமையான முறையில் கையாள்வதிலும் இந்தப் பிளவு பிரதிபலிக்கிறது. வங்கச் சிறுகதை ரவீந்திரரின் படைப்பிலேயே கொடுமுடியை எட்டிவிடவில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது. வங்கச் சிறுகதை மேலும் மேலும் முன்னேறியுள்ளது, அதன் திருப்பு முனைகளைக் குறிக்கும் மணி பல தடவைகள் ஒலித்துள்ளது, அதில் சோதனை முயற்சிகள் குறையவில்லை, வாழ்க்கையைப் புதிய நோக்கில் பார்க்கும் ஆர்வம் ஒருபோதும் வற்றிவிடவில்லை.
சில குறிப்பிட்ட நிபந்தனைகளுக்குட்பட்டு, ஒரு குறிப்பிட்ட பக்க எல்லைக்குள், ஒரு குறிப்பிட்ட எண்ணுள்ள சிறுகதைகளைத் தேர்ந்தெடுக்கும்போது அத்தொகுப்பு எல்லாருக்கும் திருப்தியளிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் பல நிபந்தனைகளுக்கும் எல்லைகளுக்கும் உட்பட்டால் இது தவிர்க்க முடியாதது.
ரவீந்திரர்-சரத்சந்திரருக்குப் பிற்பட்ட மூன்று பருவங்களின் சிறுகதைகள் பல்திறப்பட்டவை, வளம் செறிந்தவை. அவற்றிலிருந்து செய்யப்படும் எந்தத் தொகுப்பும் திருப்தியளிக்காது. ஆகையால் வாசகரின் அனுதாபத்தையும் தாராள மனதையும் நம்புவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.
தற்கால வங்க இலக்கியத்தின் இரண்டு தலைசிறந்த எழுத்தாளர்கள் விபூதிபூஷண் பந்த்யோபாத்தியாயும் மாணிக் பந்த்யோபாத்தியாயும் ஆவர். ஓராண்டு முயற்சி செய்தும் பதிப்புரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாததால் முன்னவரின் 'ஆஹ்வான்' சிறுகதையையும் பின்னவரின் 'நமூனா' சிறுகதையையும் இறுதி நேரத்தில் இத்தொகுப்பிலிருந்து விலக்கிவிட நேர்ந்தது. நான் விரும்பாமலே நேர்ந்துவிட்ட இந்தக் குறைக்காக வாசகர்களின் மன்னிப்பைக் கோருகிறேன்.
அருண்குமார் முகோபாத்தியாய்
வங்கமொழி-இலக்கியத்துறை,
கல்கத்தா பல்கலைக் கழகம்.
------------
1. இறுதி வார்த்தை
பூரவசக் தாலூகாவில் பரத்பூர் கிராமம் பெரிய சொத்த. அங்கே மரங்களின் இலைகள் முறம் மாதிரி இருக்கும், கிளைகள் உலக்கை மாதிரி இருக்கும். மண், அரைத்த சந்தனம் மாதிரி. அதை உடலில் தடவிக்கொண்டால் உடல் குளிர்ந்து விடும். விதைகளைத் தெளித்துவிட்டால் போதும், வெகு விரைவில் பயிர் செழித்து வளர்ந்துவிடும். பரத்பூரில் என்னதான் கிடையாது? மண்ணில் தங்கம் என்பார்களே, அது வெறும் பேச்சு அல்ல. உண்மையில் முன்பெல்லாம் அங்கே ஆற்றங்கரை மணலிலிருந்து தங்கம் எடுப்பதுண்டு. மண்ணுக்குக் கீழே தங்கம் இருந்தது. கிராமத்து மக்களோ முட்டாள் கூட்டம். விவசாயம் செய்து பிழைப்பு நடத்துகிறார்கள்; அடித்தால் கோபம் வராது; "நீ அடிச்சாப் பரவாயில்லை, நீ என்ன வேத்து மனுசனா" என்பார்கள். கரையில்லாத அகலக் கட்டைத் துணி கட்டுவார்கள்; நெற்றியில் சந்தனத்தால் நாமம், கழுத்தில் துளசிமணி மாலை, கறுப்பு நிறம். இதிலிருந்தே அவர்கள் முட்டாள்கள் என்று தெரிகிறது. எல்லாரும் விவசாயிகள்; ஜமீந்தாரின் ஆட்கள் அவர்களைக் "குடியானவப் பசங்க" என்பார்கள். முன்காலத்தில் வயலை உழுவார்கள், பயிரிடுவார்கள், தூங்குவார்கள். இப்போது காலம் மாறிவிட்டது; கலி முற்றிவிட்டது. ஆகையால் இப்போது அரை வயிறு சாப்பிடுகிறார்கள், நோயால் அவஸ்தைப்படுகிறார்கள், எப்படியோ சிரமப்பட்டு விவசாயம் செய்கிறார்கள்; சிலர் கடவுளிடம் முறையிடுகிறார்கள், சிலர் முறையிடுவதில்லை -- அதாவது சிலர் அழுகிறார்கள், வேறு சிலர் பல்லைக் கடித்துக் கொள்கிறார்கள்.
பத்மா நதிக்கு மறுகரையில் வசிக்கும் சாஹுக்களின் குடும்பந்தான் இப்போது பரத்பூரின் ஜமீந்தார். இதற்குமுன் கிராமம் மியான் குடும்பத்தின் வசத்திலிருந்தது. அப்போது சாஹுக்கள் இந்த பக்கம் வந்து தொழில் தொடங்கினார்கள். மியான் குடும்பத்தினரிடையே பூசல் ஏற்பட்டபோது அவர்கள் சாஹுக்களிடம் கடன் வாங்கினார்கள். கடன் ஆயிரம் மடங்காக வளர்ந்தால் கடன்காரர்கள் என்ன செய்வார்கள? அத்துடன், நீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது கிராம மக்களின் தலைவன் சாஹுக்களுக்கு ஆதரவாக சாட்சியம் சொன்னான்.
அந்தப் பழைய கதை கிடக்கட்டும். இப்போது மக்கள் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு .. அந்தக் கதையும் கிடக்கட்டும். பழைய குப்பையைக் கிளறிப் பிரயோசனமில்லை. எல்லா விவரங்களையும் சொல்வதானால் பெரிய புராணமாகி விடும். இந்தக் காலத்து நடப்பைச் சொல்வதுதான் சரி. இப்போது சாஹுக்கள்தான் ஜமீந்தார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு ஆபீஸ், ஒவ்வொரு ஆபீசிலும் ஒரு நாயப் (மானேஜர்), தலைமை ஆபீசில் பெரிய நாயப். இதைத்தவிர, சாஹுக்கள் பத்மாவின் மறுகரையிலிருந்த தங்கள் ஊரிலிருந்து அடியாட்களைக் கொண்டு வந்து ஒவ்வொரு கிராமத்திலும் வைத்துப் பக்கா ஏற்பாடு செய்திருந்தார்கள். மேலும் சாஹுக்களின் உறவினர் பலர் ஜமீந்தாரியில் பல இடங்களில் கடைகள் வைத்து நன்றாகத் தொழில் செய்து வந்தார்கள். பலர் தொழிற்சாலைகளும் அமைத்திருந்தார்கள். கிராமத்த மக்கள் அவற்றிலும் உழைத்தார்கள். இந்தத் தொழிலாளிகளிலும் சிலர் பல்லைக் கடித்துக் கொண்டார்கள். சிலர் அழுதார்கள். பல்லைக் கடித்துக் கொண்டோ அழுதோ எப்படியோ காலம் கழிந்து கொண்டிருந்தது நல்லதும் கெட்டதுமாக, கிராம மக்கள் மரங்கள் மேல் உரிமை கொண்டாடி ஜமீந்தாரின் ஊழியர்களுடன் சச்சரவு செய்தார்கள். நில உரிமை விஷயமாகத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். ஜமீந்தாரின் அடியாட்களுடைய பராமரிப்புச் செலவைக் கொடுக்க மறுத்தார்கள். உப்பு, துணி, எண்ணெய் இவற்றின் விலையில் பேரம் பேசிக் கடைக்காரர்களுடன் வாக்குவாதம் செய்தார்கள். தொழிலாளர்கள் கூலிக்காக முதலாளிகளுடன் தகராறு செய்தார்கள் - இவ்வாறு சண்டை சச்சரவுகளோடு காலம் கழிந்து கொண்டிருந்தது. கண்கள் முற்றிலும் மூடப்பட்ட செக்குமாடுகள் கொம்புகளை ஆட்டிக் கொண்டு செக்கு இழுப்துபோல் எல்லாம் நடந்து கொண்டிருந்தது. செக்கு ஆடி எண்ணெய் வந்து கொண்டிருந்தது, அதை எடுத்துக் கொண்டான் வணிகன்; பிண்ணாக்குக் கிடைத்தது மாடுகளின் பங்குக்கு.
திடீரென்று பூகம்பம் நேர்ந்தாற்போல் எல்லாம் தலை கீழாகிவிட்து. பயங்கரமான மாற்றம்! சாஹுக்களுக்கும் ஹல்திபாரி ஜமீந்தார்களான சாயி குடும்பத்தினருக்குமிடையே நிலவிஷயமாகத் தகராறு ஏற்பட்டுவிட்டது. அவ்வளவுதான்; முன்னறிவிப்போ எச்சரிக்கையோ இல்லாமல் திடீரென்று ஒரு நாள் சாயிக்களின் அடியாட்கள் காடு, வயல்களைத் தாண்டிக் கொண்டு தடிகள் ஈட்டிகளுடன் பரத்பூருக்குப் பக்கத்துக் கிராமமான தர்மபூரின்மேல் படையெடுத்தார்கள். அவர்கள் அந்த ஊர் ஜமீன் ஆபீசுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை அடித்துப் போட்டு ஆபீசைக் கைப்பற்றிக் கொண்டார்கள். அதுமட்டுமல்ல, அவர்களுடைய நடவடிக்கைகளைப் பார்த்துப் பரத்பூருக்கும் கவலை ஏற்பட்டது. சாயிக்களின் ஆட்கள் தங்கள் தடிகளுக்கு எண்ணெய் தடவி மேலும் அடிதடிக்குத் தயார் செய்து கொண்டிருந்தார்கள். ஆகையால் அவர்கள் பரத்பூரிலும் நுழைந்து தாக்குவார்கள் என்பது குறித்து ஒருவருக்கும் சந்தேகமில்லை. எங்கும் களேபரமாகிவிட்டது. பரத்பூர் ஜமீன் ஆபீஸ்களிலும் போராட்ட ஆயத்தங்கள் தொடங்கின.
கிராமத்து மக்கள் திடுக்கிட்டார்கள். இரண்டு எருதுகள் சண்டை போட்டால் அவற்றின் காலடியிலுள்ள நாணலுக்குத் தான் சேதம் அதிகம். மக்களின் நிலை அந்த நாணலின் நிலையை ஒத்திருந்தது. அவர்களுக்குக் கவலை ஏற்பட்டது.
கிழவன் லால்மோகன் பாண்டேதான் விவசாயிகளின் தலைவன். குட்டையாக வெட்டப்பட்ட தலைமுடி; பற்கள் விழுந்துவிட்டன; மிகவும் மெதுவாகப் பேசுவான், இதமாகச் சிரிப்பான். கிழவன் குழம்பிப்போய்த் தலையைத் தடவிக் கொண்டான். பரத்பூர் குடிமக்கள் அங்கு வந்து அவனைச் சூழ்ந்து கொண்டு உட்கார்ந்தார்கள். கிழவன் மரியாதையோடு அவர்களைக் கும்பிட்டான்; தாயின் மடியில் தவழும் குழந்தை தன் அப்பா, சித்தப்பா, அக்கா, அண்ணனைப் பார்த்துச் சிரிக்குமே, அந்த மாதிரி சிரித்துக் கொண்டு அவர்களிடம் "வாங்க, பஞ்சாயத்தாரே" என்றான்.
எல்லாரும் உட்கார்ந்தனர். பிறகு "தலைவரே!" என்ற ஒரேயொரு வார்த்தையைச் சொன்னார்கள். அவர்கள் சொல்ல விரும்பியதையெல்லாம் அந்த ஒரு வார்த்தையிலேயே சொல்லிவிட்டார்கள். தலைவனுக்கும் எல்லாம் புரிந்துவிட்டது. கிழவன் இன்பத்திலும் சிரிப்பான், துன்பத்திலும் சிரிப்பான், சிந்திக்கும்போதும் சிரிப்பான். அவன் சிந்தித்துக்கொண்டே சிரிக்கத் தொடங்கினான்.
கௌர்பூரைச் சேர்ந்த ஒருவன், "சாஹுங்கதான் நம்ம நில உரிமையை ஒப்புத்துக்கலியே! நாம ஏன் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கக் கூடாது? சாஹுங்களும் ஜமீந்தார், சாயிங்களும் ஜமீந்தார். சாயிங்க நிலத்திலே நம்ம உரிமையை ஒத்துக் கிட்டாங்கன்னா, அவங்களுக்கு ஆதரவா சாட்சி சொல்லுங்க தலைவரே" என்று சொன்னான்.
கிழவன் தலையை ஆட்டிக் கொண்டு சொன்னான், "ஊஹூம், அது பாவம்!"
அப்படீன்னா நாமும் அடிதடிலே இறங்குவோம்"
"ஊஹூம்..."
"ஏன் பயமாயிருகஜ்கா?" ஓர் இளைஞன் ஏளனமாகக் கேட்டான். கிழவன் சிரித்தான், அந்தச் சிரிப்பில் இளைஞன் குறுகிப்போனான். "பயமில்லேப்பா, அது பாவம்" என்று சொன்னான் கிழவன்.
"அப்ப என்ன செய்யப் போறே? என்ன செஞ்சாப் பாவம் வராது? சொல்லு!"
கொஞ்சம் பொறுத்துக்க. என் மனசைக் கேட்டுக்கறேன், மனசு பகவானைக் கேக்கட்டும், அப்பத்தான் .. "
ரத்தன்லால் சொன்னான், "என்ன செய்யணுங்கறதை சீக்கிரம் நிச்சயம் பண்ணு, தலைவரே! நீ சொல்றபடி நான் செய்யறேன்"
கிழவன் சிரித்தான். ரத்தனிடம் அவனுக்கு ரொம்ப நம்பிக்கை. மிகவும் நல்ல பையன் அவன்; அீத மாதிரி துணிவும் அதிகம் அவனுக்கு.
***
"நாயப் பாபு, வணக்கங்க" என்று சொல்லிக்கொண்டே கிழவன் ஜமீன் ஆபீசுக்குள் நுழைந்தான்.
"யாரு? லால்மோகனா? வா வா" என்றான் நாயப்.
"ஆமா வந்தேன்.."
"சும்மா வந்தேன் - போனேன்னு சொல்லாதே! எல்லாரும் கச்ச கட்டிக்கிட்டு எறங்கிடுங்க கோதாவிலே! அந்த ராஸ்கல் சாயிக்களை அடிச்சு நொறுக்கிடணம்! ஒரேயடியா வெட்டிப் போடணும்!"
கிழவன் சிரித்தான், "என்ன சொல்றீங்க, நாயப் பாபு"
"ஏன்?"
"வெட்டிப்போட்டா ரத்தம் சிந்தாதா? ஜனங்க செத்துப் போக மாட்டாங்களா? அதெல்லாம் பாவமில்லையா?" கிழவனின் கண்களிலிருந்து நீர் பெருகத் தொடங்கியது.
கிழவனின் இந்த ஆ ஷாடபூதித்தனத்தைப் பார்த்து உடம்பெல்லாம் எரிந்தது நாயபுக்கு. ஆனால் கிழவன் கௌரவப் பட்டவன். ஆகையால் நாயப் தன் கோபத்தை அடக்கிக் கொண்டு நிதானமாகச் சொன்னான், "உம், புரியுது. அவங்க இரத்தம் சிந்துமேன்னு உன் கண்ணிலே தண்ணி வருது. எல்லாம் புரியுது எனக்கு!" என்று சொல்லிவிட்டுக் காகிதத்தில் சில வரிகள் எழுதினான். பிறகு தொடர்ந்து சொன்னான், "அவங்க நம்ம ஆளுங்களை அடிச்சு ரத்த விளாறா ஆக்கிட்டாங்களே, அது..."
கிழவனின் உதடுகள் துடித்தன. கண்ணீர் இருமடங்கு பெருகியது. "அடக் கடவுளே! அதைக் கேட்டதிலேருந்து அழுதுக் கிட்டே இருக்கேன் நாயப் பாபு... ஐயோ, ஐயோ! அவங்களுக்கு அடிபட்டதை நெனச்சுப் பார்த்தா அந்த அடியெல்லாம் என் மாரிலே விழுந்தமாதிரி இருக்குங்க...!"
நாயப் கிழவனை உற்றுப் பார்த்தான். கிழவன் வெறும் பாசாங்குக்காரனா அல்லது உண்மையிலேயே நல்ல மனிதன்தானா? செம்மறியாட்டின் கொம்போடு மோதிக்கொண்டால் வைரத்தின் கூர்மையும் மழுங்கிப் போகும். அதுபோல் நாயபின் கூரிய அறிவால் கிழவனின் மழுங்கிய அறிவைத் துளைக்க முடியவில்லை. நாயப் வெகுநேரம் கிழவனின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, "அப்படீன்னா என்ன செய்யணும்?" என்று கேட்டான்.
"அதுதான் உங்ககிட்டே சொல்றேன்..." கண்ணீருக்கிடையே சிரித்துக்கொண்டு சொன்னான் கிழவன்.
"என்ன சொல்றே?"
"நெலத்துலே எங்க உரிமையை நீங்க ஒப்புத்துக்கங்க, உங்க அடியாளுங்களைக் கூட்டிக்கிட்டுப் போயிடுங்க... நாங்க சாயிங்களை எதுத்து நிக்கறோம்..."
"எதுத்து நிப்பீங்களா...? அடிதடி, கிரிமினல் கேஸ்னா என்னன்னு தெரியுமா உங்களுக்கு? வயலை உழுது சாப்பிடறவங்க நீங்க. தடிபிடிக்கத் தெரியுமா உங்களுக்கு? ஈட்டி எறியத் தெரியுமா?"
கிழவன் சிரித்தான்.
"என்ன சிரிக்கிறே?"
"ஒங்க பேச்சைக் கேட்டுச் சிரிப்பு வருதுங்க... நாங்க தடியும் எடுக்க மாட்டோம், ஈட்டியும் எறிய மாட்டோம்."
"பின்ன எப்படி எதுப்பீங்க?"
"அவங்க தாக்க வந்தாங்கன்னா நாங்க அவங்களுக்கு முதுகைக் காட்டி "தடியிலே அடிங்க"ன்னு சொல்லுவோம், எங்க நெஞ்சைக் காட்டி "ஈட்டியாலே குத்துங்க"ன்னு சொல்லுவோம். எங்க ரத்தம் மண்ணிலே கொட்டும், மண்ணு செவக்கும், நாங்க செத்துப் போவோம். அப்போது அவங்களுக்குப் புத்தி வரும், அவங்க நெஞ்சு வலிக்கும், அவங்க கண்ணுலே தண்ணி வரும். அப்போ கடவுள் அவங்களுக்கு அறிவைக் குடுப்பார். அவங்க வெக்கப்பட்டுக்கிட்டுத் திரும்பிப் போயிடுவாங்க..."
ஹோஹோவென்று சிரித்தான் நாயப். "இதுதான் உன் அறிவா?"
கிழவன் ஓர் அதிசயப் பிறவி, அவன் சற்றும் நிலை குலையவில்லை. அவனுடைய பொக்கை வாயில் சிரிப்பு மலர்ந்தது. குழந்தையின் கள்ளங் கபடமற்ற சிரிப்பு. "இந்த வழி பலிக்கும், நிச்சயம் பலிக்கும்! என் மனசு கடவுளைக் கேட்டது. கடவுள்தான் இப்படிச் சொன்னார். ஒங்க மனசு கடவுளை ஒண்ணும் கேக்கறதில்லே. அது கேட்டா நீங்க நான் சொல்றதைப் புரிஞ்சுக்கிட்டிருப்பீங்க..."
***
தேவனுக்கேற்ற தேவி-பைத்தியக்காரக் கிழவனுக்கேற்ற பைத்தியக்காரப் பெண்டாட்டி!
எல்லாவற்றையும் கேட்டுக் கிழவிக்கும் கவலை ஏற்பட்டது. கிழவனைப்போலவே, நாயபுக்காகக் கவலை!
"இது ரொம்ப சாதாரண விசயமாச்சே? இது ஏன் நாயப் பாபுவுக்குப் புரியலே? ஏன் கிழவா?"
"அதுதானே, கிழவி!"
"இப்போ என்ன செய்யப் போறே?"
"நானா?" கிழவன் வெகுநேரம் யோசித்துவிட்டுச் சிரித்தான். "நான் தீர்மானம் செஞ்சுட்டேன்."
"என்ன?"
"நான் சாகப்போறேன்"
"சாகப்போறியா?"
"ஆமா, சாகப் போறேன். நான் செத்துப்போனா அவங்க வருத்தப்படுவாங்க. கடவுள் அவங்களுக்கு அறிவு கொடுப்பார். அப்போ நம்ம பேச்சு அவங்களுக்குப் புரியும்."
கிழவி சற்றுநேரம் யோசித்தாள். யோசித்துப் பார்த்ததில் மகிழ்ச்சி ஏற்பட்டது அவளுக்கு. அவள் சிரித்துவிட்டுப் பல தடவைகள் தலையை அசைத்துக்கொண்டே சொன்னாள், "ஆமா, நீ சொல்றது சரிதான்."
"சரிதானே?" என்று கேட்டு அவள் பக்கம் திரும்பிச் சிரித்தான் கிழவன்.
"ஆமா. நீ செத்துப்போ. செத்துப் போய் அவங்களுக்குப் புத்தி சொல்லு."
வெளியிலிருந்த ரத்தன்லால் கூப்பிட்டான், "தலைவரே!"
"வாப்பா, வா!" கிழவன் மலர்ந்த முகத்துடன் சொன்னான். ரத்தன்லால் சிரித்த முகத்துடன் உள்ளே வந்து, "தலைவரே, எல்லாரும் வந்து நின்னுக்கிட்டிருக்காங்க. நாங்க என்ன செய்யணும் சொல்லு" என்று சொன்னான், தீச்சுடர் போல் பிரகாசித்தான் அவன்.
கிழவன் வெளியே வந்து கைகூப்பி, "பஞ்சாயத்தாருக்கு வணக்கம்!" என்றான்.
இதற்குள் ஒரு விபத்து நேர்ந்துவிட்டது. சாஹுக்களின் ஆட்கள் வந்து அவர்களைச் சூழ்ந்து கொண்டார்கள். சாஹுக்களின் தலைமை நாயப் சாரு சீல், துணிந்த கட்டை. அவன் யாருக்கும் பயப்பட மாட்டான். பைத்தியக்காரக் கிழவனைப் பிடித்து அடைத்து வைக்கும்படி அவன் உள்ளூர் நாயபுக்கு உத்தரவிட்டான்-கிழவனை மட்டுமல்ல, அவனுடைய சீடர்கள் ரத்தன்லால் உள்பட எல்லாரையும்.
கிழவன் புன்சிரிப்புடன் ஜமீன் ஆட்களிடம் "சரி, வாங்க என்றான்; ரத்தன்லாலிடமும் மற்ற சீடர்களிடமும் சொன்னான், "வாங்க குழந்தைகளா!"
கிழவி சிரித்தவாறே முன்வந்து "நான்?" என்று கேட்டாள்.
"ஆமா நீயுந்தான்!" என்று சாஹு ஆட்கள் சொன்னார்கள்.
"கொஞ்சம் இருப்பா! கிழவனோட கோவணம், என்துணி, தண்ணி குடிக்கற லோட்டா எல்லாம் எடுத்துக்கிட்டு வந்துடறேன். அந்த லோட்டாவிலே தண்ணி குடிக்காட்டி என் தாகம் தீராது" என்று கிழவி சொன்னாள்.
கிழவன் புன்சிரிப்புடன் தலையசைத்தான்.
என்னதான் இருந்தாலும் பெண்பிள்ளைதானே! லோட்டாவிடம் உள்ள பாசத்தை விடமுடியவில்லை அவளால்.
***
சாஹுக்கள் கிழவனை அடைத்துவைத்தாலும் அவனை நன்றாகத்தான் கவனித்துக் கொண்டார்கள். அந்த விஷயத்தில் அவர்கள் ஒரு குறையும் வைக்கவில்லை. அடைத்து வைக்கப்பட்ட நிலையிலும் கிழவனின் மலர்ச்சி குறையவில்லை. அவன் கடவுளை அழைத்தான், நிறையச் சிந்தித்தான். தனக்குள்ளேயே கடவுளிடம் பேசினான், "கடவுளே என்ன செய்யணும்? நான் சாகவா? நான் செத்தா அவங்க வருத்தப்படுவாங்களா? நீ அவங்களுக்கு அறிவைக் கொடுப்பியா?"
கிழவி அடைபட்டிருந்த வீட்டிலேயே வளைய வந்தாள். அவள் கிழவனுக்காக சமையல் செய்தாள், அவனுடைய படுக்கையை- அதாவது கம்பளியை- உதறிவிட்டு விரித்தாள், லோட்டாவை பளபளவென்று தேய்த்து வைத்தாள். அவளுக்கு இந்த வாழ்க்கை பிடித்துப் போய்விட்டது. ஏனென்றால், இப்போதுதான் அவளுக்குக் கிழவனுடன் நெருங்கி வாழ வாய்ப்புக் கிடைத்திருந்தது. கிழவன் வெளியிலிருந்தபோது அவனுக்கு ஆயிரம் வேலை; அவளிடம் நாலு வார்த்தை குடும்பத்தைப் பற்றிப் பேச அவனுக்கு நேரமில்லை. அவன் பேசிக்கொண்டிருந்ததெல்லாம் பரத்பூரைப் பற்றிய பேச்சுத்தான், மக்களைப் பற்றிய பேச்சுத்தான். இன்றைக்கு இங்கே, நாளைக்கு இன்னோரிடம்; இவன் வருவான், அவன் வருவான், ஜனங்கள் எப்போதும் அவனைச் சூழ்ந்திருப்பார்கள். இங்கே வந்தபிறகு கிழவிக்கு அவனுடன் இருக்க முடிகிறது. பேச முடிகிறது.
ஆனால் சில நாட்களில் கிழவியின் பிரமை தெளிந்துவிட்டது. கிழவன் மாறவில்லை. இப்போது அவனைச் சுற்றிக் கூட்டம் இல்லை, இருந்தாலும் அவனுடைய மூளையில் சிந்தனைகளின் கூட்டம் குறையவில்லை. "கிழவன் மனசு கல்" என்று ஜனங்கள் சொல்வார்கள். அவர்களுடைய கருத்து சரிதான் என்று தோன்றியது கிழவிக்கு.
அவள் "கிழவா!" என்று கூப்பிட்டாள்.
கிழவன் அவள் பக்கம் திரும்பி "உம்" என்றான். ஆனால் அவனுடைய பார்வை அவள் மேல் இல்லை என்று அவளுக்குத் தோன்றியது. எங்கோ தொலைவில், அதோ அந்த மலையுச்சியில் இருந்த கோவிலின் கும்பத்தில் அவனுடைய பார்வை நிலைத்திருப்பது போல் தோன்றியது.
"என்ன யோசிச்சுக்கிட்டிருக்கே?"
"யோசனையா?" கிழவன் சிரித்தான்.
"சிரிக்காதே கிழவா! உன் சிரிப்பு எனக்குப் பிடிக்கலே."
"உம்..." அந்த 'உம்'முடன் வாயை மூடிக்கொண்டான் கிழவன்.
கிழவி பயத்தாலும் வியப்பாலும் மௌனியாகிவிட்டாள். அவள் தனக்குள் சொல்லிக்கொண்டாள், "கடவுளே, கிழவனைக் காப்பாத்து! இல்லேன்னா யாரு ஜனங்களுக்காக கவலைப்படுவாங்க?"
***
திடீரென்று ஒருநாள் கிழவன், "நான் சாகப் போகிறேன்" என்று சொன்னான்.
கிழவிக்கு நெஞ்சு வெடித்துவிடும் போலிருந்தது. ஆனால் அவளுடைய பயத்தை வெளிப்படுத்த வழியில்லை. அவள் பயத்தை வெளிப்படுத்தினால் கிழவன் சிரிப்பான், "சீ!" என்பான். அந்த அவமானத்திலே கிழவி செத்துப் போய்விடுவாள்.
"நீ ஏன் சாகணும்?" என்று மட்டும் கேட்டாள் அவள்.
"நான் சாகப்போகிறேன் .. நான் அடிதடி செய்யச் சொல்லி வெளியில் இருக்கிற ஜனங்களைத் தூண்டிவிட்டதா சாஹு பாபுமார் சொல்றாங்க. நம்ம ஆளுங்க பாபுக்களோட ஆளுங்களை அடிச்சுட்டாங்க, பாபுக்களுக்கு ரொம்ப நஷ்டம் பண்ணிட்டாங்க. இதெல்லாம் நான் சொல்லித்தான் நடந்ததுன்னு பாபுமார் சொல்றாங்க.."
"அதுக்குப் பதிலா அவங்களுந்தான் நம்ம ஆளுங்களை நல்லா அடிச்சிட்டாங்களே!" ரத்தன் சொன்னான்.
புன்சிரிப்புடன் தலையை அசைத்தான் கிழவன். "அது மட்டும் இல்லே ரத்தன், நம்ம ஆளுங்க அடிச்சது பாவம். நான் செத்துக் கடவுள்கிட்டே போய் "கடவுளே, மன்னிச்சுக்கோ! எங்க ஆளுங்களோட பாவத்தை மட்டுமில்லை, பாபுமாரோட ஆளுங்களோட பாவத்தையும் மன்னிச்சுக்கோ-! அப்படீன்னு சொல்லப் போறேன் .. அப்பறம்.."
"அப்புறம் என்ன?"
கிழவன் சிரித்தான்.
"அப்பறம் பாபுமாருக்குப் புரியும் நான் பாவியில்லேன்னு.."
***
கிழவன் சாகும் விரதம் தொடங்கிவிட்டான். அவன் சாப்பிடாமல் கொள்ளாமல் மௌனமாகப் படுத்துக் கிடந்தான்.
கிழவியின் பேச்செல்லாம் தீர்ந்து போய்விட்டாற் போலிருந்தது. அவள் பேசாமல் உட்கார்ந்து பார்த்துக் கொண் டிருந்தாள். ஐயோ, அவளோட கிழவன் காணாமல் போயிட்டான். அவள் பக்கம் திரும்பிப் பார்க்கக்கூட அவனுக்கு நேரமில்லை. அழுவது வெட்கக்கேடு; ஆகையால் அழக்கூட முடியவில்லை அவளால்.
அவர்கள் அடைபட்டிருந்த வீட்டுக்கு வெளியிலிருந்த மக்களின் கூப்பாடு கேட்டது, "கடவுளே, எங்க தலைவனைக் காப்பாத்து!
ரத்தன்லாலும் அவனுடைய தோழர்களும் சோர்ந்து போய் விட்டனர். கிழவியால் சும்மா இருக்க முடியவில்லை. கிழவனிடம் ஏதாவது சொல்லவும் துணிவில்லை அவளுக்கு. அவள் மனதுக்குள் கடவுளை வேண்டிக் கொண்டாள், "இவ்வளவு ஜனங்களுக்காக, எனக்காக, கிழவனைக் காப்பாத்து, கடவுளே!"
கிழவனின் மனதைவிடக் கடவுளின் மனது மிருதுவானது என்று கிழவிக்குத் தோன்றியது.
கடவுள் சிரிக்கிறார் என்று நினைத்தாள் கிழவி.
***
கிழவன் சாகவில்லை. சாவுக்கான அறிகுறிகள் எல்லாம் தோன்றின. சாஹுக்கள் மருத்துவர்களை அனுப்பினார்கள். அவர்கள் "எங்களால் முடியாது! மனுசன் சாப்பிடலேன்னா பொழைக்க மாட்டான், பொழைக்க முடியாது" என்று சொன்னார்கள். ஆனால் ஆச்சரியம், கிழவன் பிழைத்து விட்டான்! அதைவிட ஆச்சரியம், கிழவனின் கள்ளங்கபடமற்ற, குழந்தைத் தனமான புன்சிரிப்பு அவனுடைய முகத்திலிருந்து ஒருகணங்கூட மறையவில்லை. கொஞ்சங் கொஞ்சமாகக் கிழவனின் மரண அறிகுறிகள் மறைந்துவிட்டன. குழம்பியிருந்த கண்கள் தெளி வடைந்த அவற்றில் வெண்தாமரையிதழ்களின் ஒளி மலர்ந்தது; தாயின் மடியில் இருக்கும் குழந்தைநயின் முகம்போல் கிழவனின் முகம் பிரகாசமாயிற்று. கிழவன் சொன்னான், "நான் பொழைச் சிட்டேன். நான் பாவம் செய்யலேன்னு கடவுள் என் மனசுகிட்டே சொல்லிட்டார்"
கிழவியின் முகத்தில் புன்சிரிப்பு,
"நான் இப்போ சாகப் போறேன்!" என்றாள் அவள்.
"ஏன்?"
"எனக்கு ஒடம்பு ஒரு மாதிரியா இருக்கு, தவிர.."
"தவிர என்ன?"
கிழவி பதில் சொல்லவில்லை. சும்மா சிரித்து மழுப்பினாள்.
அவள் உண்மையிலேயே இறந்து போனாள். சாதாரணக் காய்ச்சல்தான். அந்தக் காய்ச்சலில் இறந்து போனாள் அவள். சாகும் தருணத்தில் அவள் கண்ணிமைக்காமல் கிழவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
மக்கள் சொல்வது சரிதான், கிழவனின் மனம் கல்.
இல்லை, ஜனங்கள் சொல்வது சரியில்லை, சரியில்லை -- காரணம், கிழவனின் கண்களில் கண்ணீர்!
ஆம், கிழவனின் கண்களில் கண்ணீர்!.
கிழவி "கிழவா!" என்று கூப்பிட்டாள்.
கண்களில் நீர் பளபளத்த நிலையிலும் கிழவனின் முகத்தில் புன்சிரிப்பு. "கிழவி, என்ன சொல்றே?" என்று அவன் கேட்டான்.
"சாவு ரொம்ப அழகாயிருக்கு, கிழவா! சாவு ரொம்ப அழகு!"
கிழவன் சிரிக்கத் தொடங்கினான். அவனது கண்ணீர் டப் டப்பென்று கிழவியின் நெற்றியின் மேல் விழுந்தது. அவன் அதைத் துடைக்கப் போனான்.
"ஊஹூம், அது இருக்கட்டும்" என்றாள் கிழவி.
(சனி பாரேர் சிட்டி. 1944)
2. ஓட்டர் சாவித்திரிபாலா
அவனுக்கு ஒரு விசித்திரப் பெயர் -- ரிபுநாஷ். அவனுடைய அண்ணன் பெயர் தமோநாஷ். ஆனால் காலத்தின் கோலம், அவர்களில் எவராலும் எதையும் நாசம் செய்ய முடியவில்லை; அவர்களேதான் நாசமானார்கள். தமோஷ்நாஷ் என்றால் இருளை அழித்தவன் என்று பொருள். ஆனால் ஒரு சிறுதுளி அளவு ஒளி கூட அவனது வாழ்வில் நுழையவில்லை. அவன் "அ, ஆ" கூடக் கற்காமல் முழு முட்டாளாயிருந்தான். அவர்கள் பிராமணப் பையன்கள் என்பதால் அவர்களுக்கு சமஸ்கிருதப் பெயர்கள் இடப்பட்டிருந்தன. அவர்களுடைய தகப்பனார் மோகநாஷ் தர்க்கதீர்த்தா ஒர திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர். எல்லாரம் அவரைச் சுருக்கமாக "மோகன் பண்டிதர்" என்று அழைத்தார்கள். இந்தக் காலத்தில் சமூகத்தில் சமஸ்கிருதப் பண்டிதர்களுக்கு முன்போல் மதிப்பு இல்லை. அவர் பரம ஏழை. புரோகிதம் செய்து வாழ்க்கை நடத்தி வந்தார். அவர் இறந்தபோது தமோ நாஷுக்கு ஆறு வயது, ரிபுநாஷுக்கு வயது மூன்று.
குழந்தைகளின் தாய் சமையல் வேலை செய்து வயிறு வளர்த்தாள். பதினாறு வயதிலேயே தமோயாஷ் பழுத்த விட்டான். ஒர போக்கிரிக் கூட்டத்துக்குத் தலைவனாகி விட்டான். அவன் பெயர் "தம்னா" ஆகிவிட்டது. அவன் ரவுடித்தனம் செய்து ஏதோ கொஞ்சம் சம்பாதித்தான். சம்பாதித்ததில் ஒரு பகுதியைத் தாயிடம் கொடுத்துவிட்டு மிச்சத்தைக் கொண்டு குஷாலாகக் காலங்கழித்தான். ஆனால் இது நீண்டகாலம் தொடரவில்லை. ஓரிடத்தில் ரவுடித்தனம் செய்யப்போய் கத்திக் குத்துப்பட்டு இறந்துபோனான். ஒரு நாள் அவனது சவம் சிறிது நேரம் நடை பாதையில் கிடந்தது. பிறகு போலீசார் சவப்பரிசோதனைக்காக அதைச் சவக்கிடங்குக்கு எடுத்துச் சென்றார்கள். மருத்துவர்கள் அந்த உடலைத் தாறுமாறாகக் கிழித்தார்கள். பிறகு சவம் தோட்டிகளின் கைக்கு வந்தது. தமோஷின் அம்மா சவத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்யவில்லை. சவத்தை எடுத்து வந்து, ஆட்களைக் கூட்டிப்போய் அதை எரிக்க அவளிடம் பணமில்லை. அவளுக்கு ஏற்கெனவே நான்கு பக்கங்களிலும் கடன், இன்னும் கடன்சுமையை அதிகமாக்கிக்கொள்ள இஷ்டமில்லை அவளுக்கு. தோட்டிகள் சவத்தின் எலும்புகளை எடுத்துக் கழுவி, "உடற்கூறு" கற்கும் மாணவர்களுக்கு அவற்றை விற்றுக் கொஞ்சம் காசு சம்பாதித்தார்கள். இதோடு தமோநாஷின் வரலாறு முடிந்து விட்டது.
தமோநாஷின் தாய் சாவித்திரி அதிகம் அழக்கூட இல்லை. அவளுடைய முகத்தில், கண்களில் நெருப்பு உள்ளூரக் கனன்றது. அது வார்த்தைகளில் வெளிப்படாத, பார்வைக்குப் புலப்படாத, ஆனால் தீவிரமான ஜுவாலை. சாவித்திரி சமையல் வேலை செய்த வீட்டுக்காரர், தமோநாஷின் மரணத்துக்குப் பிறகு அவளுடைய சம்பளத்தை இரண்டு ரூபாய் உயர்த்துவதாகச் சொன்னார். சாவித்திரி அதற்கு இணங்கவில்லை. "தேவையில்லை" என்று சுருக்கமாக மறுத்து விட்டாள்.
ரிபுநாஷ் தெருக்களில் சுற்றித் திரிந்தான். வீட்டில் இட மில்லாதவர்கள், தெருவில் சுற்றியவாறே காலங்கழிப்பவர்கள், ஏதாவதொரு கிளர்ச்சி, சண்டை, மோட்டார் விபத்து ஏற்பட்டால் அதைப் பார்க்கக் கூட்டங் கூடுபவர்கள், இவர்களே ரிபுநாஷின் தோழர்கள். அவர்கள் அவனை "ரிபுன்" என்ற அழைத்தார்கள்.
ஆனால் ரிபுன் தம்னாவைப் போல் பலசாலி அல்ல, நோஞ்சான். அவன் மார்க்கெட் வட்டாரத்தில் சுற்றிக் கொண் டிருப்பான்; மூட்டை தூக்கி ஏதோ சம்பாதித்தான்; பீடி பிடிக்கக் கற்றுக்கொண்டான். தினம் ஒர கட்டு பீடி வாங்கக் காசை எடுத்துக்கொண்டு மிச்சத்தைத் தாயிடம் கொடுப்பான்.
அவனுக்குப் பதினாறு பதினேழு வயதாயிருந்தபோது ஒரு விபத்து நிகழ்ந்தது. ஒருநாள் அவன் ஒரு கூடை கோசு தூக்கிக் கொண்டு வந்து ஒரு மோட்டாரின் பின்புறப் பெட்டியில் அவற்றை அடுக்கி வைக்கும்போது அவனக்குத் தொண்டை கமறியது. அவன் இருமத் தொடங்கினான். மோட்டார்க்காரர் அவனுக்குரிய முக்கால் ரூபாய்க் கூலியைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். ரின் நடைபாதையில் உட்கார்ந்துகொண்டு இருமத் தொடங்கினான். திடீரென்று இருமலுடன் ஒரு கட்டி இரத்தம் வெளிவந்தது. ரிபன் அதைச் சிறிது நெரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டுப் பிறகு வீடு திரும்பினான். சாவித்திரி பக்கத்து மருத்துவரிடம் ரிபுனைக் கூட்டிச்சென்றாள். அவர் அவனைப் பரிசோதித்து விட்டு, "இவனுக்குக் காசநோய் வந்திருக்கு. எனக்கு நீ பீஸ் ஒண்ணும் தரவேண்டாம், ஆனா மருந்து வாங்கிக் குடுக்கணும். ஊசி மருந்து போடணும். முட்டை, வெண்ணெய், மீன், மாமிசம், பழம் இந்த மாதிரி புஷ்டியான சாப்பாடு குடுக்கணும் .." என்றார்.
சாவித்திரி பேசாமல் மருத்துவரின் முகத்தைப் பார்த்துக் கொண்டு நின்றாள். கண்ணுக்குப் புலப்படாமல் அவள் முகத்தில் கனன்று கொண்டிருந்த நெருப்பை அவர் உணர்ந்த கொண்டார் போலும். "ஒன்னாலே முடியலேன்னா பையனை ஆஸ்பத்திரி யிலே சேர்த்திடு. நான் ஒனக்கு ஒரு சீட்டு எழுதித் தரேன். நீ அதை எடுத்துக்கிட்டு ஆஸ்பத்திரிக்குப் போ" என்று அவர் சொன்னார்.
சாவித்திரி சீட்டை எடுத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக் கூட்டத்தில் ஒரு வாரம் முயன்று பார்த்தாள். ஒரு பலனுமில்லை. ஒரு நோயாளி அவளிடம், "இங்கேயும் பைசா இல்லாமே ஒண்ணும் நடக்காத. லஞ்சம் குடுக்கணும்" என்று சொன்னான்.
ரிபுன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படவில்லை, சாவித்திரியிடம் காசு ஏது? சிகிச்சையின்றியே காலங் கடத்தினான் ரிபுன். மறுபடியும் மூட்டை தூக்கவும் தொடங்கினான். ஒருநாள் அவ னுடைய கூட்டாளியொருவன் அவனிடம் சொன்னான், "எனக்கு ஒரு நல்ல யோசனை தோணுது. நீ எப்படியாவது அலிபூர் ஜெயில்ல ஆறுமாசம் இருந்தால் உன் வியாதி குணமாயிடும் .."
"ஜெயில்லே இருந்தா வியாதி குணமாயிடுமா? என்ன சொல்றே நீ?" கூட்டாளியின் பேச்சை நம்பவே முடியவில்லை ரிபுனால்.
கூட்டாளி சொன்னான்,"ஹரு ஜெயிலுக்குப்போய் வியாதி குணமாகித் திரும்பி வந்திருக்கான். அவனுக்கும் காசநோய்தான் வந்திருந்தது. அங்கே நல்ல ஆஸ்பத்திரி இருக்கு. எலவசமா சிகிச்சை செய்யறாங்க. நீ ஜெயிலுக்கப் போயிடு!"
சில நாட்களுக்குப் பிறகு ரிபுன் ஒரு டிராமில் பிக்பாக்கெட் செய்யப்போய்க் கையுங்களவுமாகப் பிடிபட்டான். அங்கிருந்த வர்கள் அவனை நன்றாக அடித்துவிட்டுப் போலீசில் ஒப்படைத் தார்கள்.
நீதிமன்றத்தில் நீதிபதி அவனிடம் சொன்னார், "நீ உன் கட்சியை எடுத்துச் சொல்ல ஒரு வக்கீல் வச்சுக்கலாம். வக்கீல் வைக்க உனக்கு வசதியில்லேன்னா சர்க்காரே உனக்கு ஒரு வக்கீல்.."
ரிபுன் கைகூப்பிக்கொண்டு சொன்னான், "வேண்டாம் சாமி, எனக்கு வக்கீல் வேண்டாம். என்மேல் சுமத்தப்பட்ட குத்தம் உண்மைதான். நான் திருடறதுக்காகத்தான் அந்தப் பிரயாணியோட சட்டைப்பையில் கையைவிட்டேன்."
"ஐம்பது ரூபாய் அபராதம், அதைச் செலுத்தாவிட்டால் ஒரு மாதம் ஜெயில்" என்று தீர்ப்பளித்தார் நீதிபதி. ரிபுன் கை கூப்பியவாறு வேண்டிக்கொண்டான், "ஐயா, என்னாலே அபராதம் செலுத்த முடியாது, ஆனா எனக்கு ஒரு மாச ஜெயில் தண்டனைக்குப் பதிலா ஆறு மாச தண்டனை கொடுங்க!
நீதிபதிக்கு ஆச்சரியமாகிவிட்டது. "ஏன் ஆறுமாச தண்டனை கேக்கிறே?" என்று அவர் வினவினார்.
"எனக்குக் காச நோய் வந்திருக்கு. அலிபூர் ஜெயில்லே காசத்துக்கு நல்ல சிகிச்சை செய்யறாங்களாம். ஆறுமாசத்திலே குணமாயிடுமாம். அதனாலதான்.."
ஆனால் நீதிபதி தன் தீர்ப்பை மாற்றவில்லை. ஜெயில் ஆஸ்பத்திரியில் ரிபுனின் நோய் குணமாகவில்லை. அவன் ஒரு மாதத்துக்குப் பிறகு இருமிக்கொண்டே சிறையிலிருந்து வெளியே வந்தான். அதற்குப்பின் ஒரு மாதந்தான் உயிருடனிருந்தான். அம்மாவின் காலடியிலேயே இரத்த வாந்தியெடுத்து உயிரை விட்டான், பாவம்!
திகைத்துப்போய் உட்கார்ந்திருந்தாள் சாவித்திரி. அவ ளுடைய கண்களிலிருந்து தீப்பொறிகள் பறந்தன.
ஆனால் ஒரு சொட்டுக் கண்ணீர்கூட விடவில்லை அவள்.
இதற்கு இரண்டு மாதங்களுக்குப்பின் தேர்தல் வந்தது. சாவித்திரிபாலாவும் ஒரு வாக்காளர். மதிப்புக்குரிய ஒரு பெரிய மனிதர் அவளிடம் ஓட்டுக் கேட்க வந்தார். சாவித்திரி அவரைச் சுட்டெரிப்பதுபோல் உற்றுப் பார்த்துக் கேட்டாள், "ஒங்களுக்கு ஓட்டுப் போடணுமா? நீங்க எனக்கு என்ன ஒபகாரம் செஞ்சிருக் கீங்க? என் புருசன் ஒரு பண்டிதர். நீங்க பதவியிலே இருந்தபோது அவர் ஒரு சாதாரணப் பிச்சைக்காரன் மாதிரி செத்துப் போனார். என்னால என் பெரிய புள்ளெயப் படிக்க வைக்க முடியலே. அவன் ரவுடியாத் திரிஞ்சு கடைசியில் கத்திக் குத்துப்பட்டு செத்துப் போனான். சின்னப் பையன் காசநோயிலே செத்தான். அவனுக்கு சிகிச்சை செய்ய முடியலே. எங்கே போனாலும் லஞ்சம் கேக்கறாங்க.. ஒங்களுக்கு எதுக்கு ஓட்டுப் போடணும்? நான் யாருக்கும் ஓட்டுப் போடமாட்டேன்..!"
வேட்பாளர் பேசத் தொடங்கினார், "இதோ பாருங்க ஜனநாயகத்திலே.."
ஆனால் சாவித்திரி அவரைப் பேச்சை முடிக்க விடவில்லை அவள் உரத்த குரலில், "வெளியே போங்க!" என்று கத்தினாள்.
விரைவாக வீட்டைவிட்டு வெளியேறினார் வேட்பாளர்.
படாரென்று கதவைச் சாத்தினாள் சாவித்திரி..
(தேஷ், 1971)
3. சாரங்க்
அம்மா நசீமை அடித்துவிட்டாள்.
அம்மா அடித்தால் அடிக்கட்டும், அவனும் ஏன் அடிக் கணும்? அடிக்க அவன் யார்?
நான் ஆடு மாடு வளக்கறேன், வளக்கலே, பயிர் செய்யறேன், செய்யலே, அதிலே அவனுக்கென்ன? நெலம் தரிசாக் கிடந்தா அவனுக்கென்ன? வீட்டுக் கூரையை மாத்தணுமா வேணாமாங் கறது எங்க கவலை. கூரையொழுகினா நாங்க - அம்மாவும் பிள்ளையும் நனைஞ்சிட்டுப் போறோம். யாரும் அவனை வந்த கொடை பிடிக்கக் கூப்பிடப்போறதில்லே.
கோல்பானு - அதாவது அம்மா - "இனிமே கஹ்ராலி எல்லாத்தையும் கவனிச்சுக்குவாரு" என்று சொன்னாள்.
"கஹ்ராலி யாரு?" என்று வெடித்தான் நசீம்.
"அவரு பசையான ஆளு. அஞ்சு ஏக்கர் நெலம் இருக்கு அவருக்கு. கணக்கு வழக்கு, கோர்ட் கேஸ் நெறைய இருக்கு"
"அதனால நமக்கு என்ன வந்தது?"
"அவரை அண்டியிருந்தா நம்ம நெலத்தை நல்லபடி கவனிச் சுக்கலாம், உண்ண உடுக்க கஷ்டப்பட வேண்டாம்.. வீட்டுக்கு ஓலைக் கூரைக்குப் பதிலாத் தகரக்கூரை போட்டுக்கலாம்."
"நமக்கு அதெல்லாம் வேணாம், இந்த ஓட்டைக் குடிசையே நமக்குத் தேவலை. நாம கீரை, கொடிகளைச் சாப்பிட்டுப் பொழைச்சுக்கலாம். நீ அவனை வெரட்டி விட்டுடு."
கஹ்ராலி நசீமை நன்றாக அடித்துவிட்டான். கோல்பானுவும் அவனுடன் சேர்ந்துகொண்டாள்.
அப்பன் மட்டும் உயிரோடிருந்தால் நசீமை இப்படி யாராவது அடிக்க முடியுமா? அவனுடைய அப்பன் வயலில் போய் வேலை செய்யும்படி அவனை ஒருபோதும் கஸ்டாயப்படுத்த மாட்டான். நசீம் வலையை எடுத்துக்கொண்டு குளங்குட்டைகளில் மீன்பிடிக்கப் போய்விடுவான். "கடைத்தெருவிலே ஒனக்கு ஒரு துணிக்கடை வச்சுத் தந்துடறேன்" என்ற சொல்வான் தகப்பன்.
"அதுக்குப் பதிலா எனக்கு ஒரு படகு வாங்கிக் குடுத்துடு. நெலத்தைவிடத் தண்ணிதான் எனக்கு ரொம்பப் பிடிக்கும்." என்பான் நசீம்.
ஆனால் அப்பனுக்குப் படகு வாங்க வசதியில்லை. படகை வாடகைக்கு எடுத்து ஓட்டிப் பணம் சம்பாதிக்கும் அளவுக்குப் பெரியவனாகவில்லை நசீம்.
நசீமின் வலை அறுந்துபோய் வெகுகாலமாகிவிட்டது. இருந் தாலும் அதன் பாசம் அவனை விடவில்லை. அவன் ஆற்றங் கரையில் மௌனமாக மணிக்கணக்கில் உட்கார்ந்திருப்பான். கண்ணீர் அவனுடைய கன்னங்களில் வழிந்தோடும்.
அம்மா கஹ்ராலியை நிக்காஹ் செய்துகொள்ளப் போவ தாகக் கேள்விப்பட்டான் அவன். அவர்களிருவரும் ஒரே அறையில் இருப்பார்கள். நசீமுக்கு இடம் எங்கே? வாசல் திண்ணை அல்லது புறக்கடைதான். அவனுடைய அம்மாவிடம் யாராவது "இவன் யாரு?" என்று கேட்டால், அவள் "என் முதல் புருஷனோட புள்ள" என்று சொல்வாள். யாராவது அவனை "உனக்கு யாரு சோறு போடறாங்க?" என்று கேட்டால் "கஹ்ராலி" என்று சொல்லவேண்டும் அவன். நசீமுக்கு நெஞ்சு பற்றியெரிந்தது.
அங்கிருந்து சுமார் ஒரு மைல் தூரத்தில் சணல் வயல்களுக்கு அருகில் நீராவிப் படகு வந்து நிற்கும். படகுத்துறை எதுவும் கட்டப்பட்டிருக்கவில்லை. கரையிலுள்ள வாதா மரத்தின் அடித் தண்டையொட்டி, ஆனால் அதனுடன் மோதிக்கொள்ளாமல், படகு நிற்கும். படகிலிருந்து கரையைச் சேர்க்கப் படிக்கட்டை இறக்குவார்கள். படிக்கட்டின் ஒரு மூலையிலிருந்து மறு மூலைக்கு ஒரு மூங்கில் தடியைப் பிடித்துக்கொண்டு இரண்டு படகு ஊழியர்கள். பிரயாணிகள் படிகள் வழியே ஏறி இறங்குவார்கள். டிக்கெட் குமாஸ்தா வாதா மரத்தடியில் ஒரு தகரப் பெட்டியில் டிக்கெட்டுகளை வைத்துக்கொண்டு விற்பான்; படகிலிரந்த இறங்குபவர்களிடமிருந்து டிக்கெட்டுகளை வாங்கிக் கொள்வான், டிக்கெட்டில்லாமல் பிரயாணம் செய்தவர்களோடு பேச்சு வார்த்தை நடத்திக் கொள்வான்; பிறகு படகுக்குள் வந்த கணக் கனிடம் டிக்கெட் வசூல் கணக்குக் கொடுப்பான். அவன் படகிலிருந்து இறங்கிப்போகும் வரையில் படிக்கட்டு கரையில் இறக்கப்பட்டிருக்கும். ஆனால் அவனுக்கு மூங்கில் கழியைப் பிடித்துக்கொள்ளத் தேவையில்லை. தாழ்வான நிலம் எப்போதும் நீரில் மூழ்கியிருக்கும்; அடிமரம் மட்டும் உறுதியாக வேரூன்றி யிருக்கும். படகிலிருந்து இறங்கும் பிரயாணிகள் தண்ணீரில் நடந்து கிராமத்துப் பாதைக்கு வந்து சேர்வார்கள். அவர்களிடம் மூட்டை முடிச்சுகள் இருந்தால் அவற்றை ஒரு தோணியில் வைத்துக் கையால் தள்ளிக்கொண்டே தண்ணீரைக் கடப்பார்கள். குழந்தை குட்டிகளைத் தோளில் வைத்துக் கொள்வார்கள். பெண்டாட்டி, உருவத்தில் சிறியவளாயிருந்தால் அவளை அப்படியே அலாக்காகத் தூக்கிக்கொண்டு தண்ணீரைக் கடப் பார்கள்...
"படியைத் தூக்கு!" மேல்தட்டிலிருந்து உத்தரவிடுகிறான் சாரங்க் -- படகின் தலைவன்.
படகுத்துறைக் குமாஸ்தா இன்னும் இறங்கவில்லையா?
இறங்கிவிட்டான், கோணல் மாணலாகக் கால்வைத்து இறங்கிவிட்டான். படிக்கட்டு படகின் மேலேறியது. தடிமனான சங்கிலியில் பிணைக்கப்பட்டிருந்த நங்கூரம் மடமடவென்று மேலே ஏறத் தொடங்கியது.
ஒரு ஆள் இந்த அவசரத்தில் இறங்க முடியவில்லை போலிருக்கிறது. யார் அவன்? பத்து -- பன்னிரெண்டு வயதுப் பையன். பிரயாணியா? யார் கண்டார்கள்? படகைப் பார்க்க அதில் ஏறியிருக்கிறான். அப்படியானால் அடுத்த துறையில் இறங்கிக்கட்டும். அங்கேயிருந்து சின்னத் தோணியிலே வீடு திரும்பிக்கலாம். அதற்குள் இருட்டிப் போயிடும். இருட்டிலே எப்படி வீட்டுக்குப் போய்ச் சேருவான்? பாவம், அவனோட அப்பா அம்மா எவ்வளவு கவலைப்படுவாங்க!
சிறிய படகு. மேல் தட்டில் மூன்றாம் வகுப்பு மட்டுந்தான். முன்பக்கம் புறாக்கூண்டு மாதிரி முதல் வகுப்பு அறைகள் இரண்டு. அவற்றுக்கு முன்னால் திறந்தவெளி மூலையில் சாரங்கின் சுக்கான். நசீம் நேரே அங்கே போய்ச் சேர்ந்தான்.
முதலில் யாரும் அவனைப் பொருட்படுத்தவில்லை. படகின் இயந்திரங்கள் இயங்குவதை வேடிக்கை பார்க்க யாரோ வந்திருக் கிறான் என்று நினைத்தார்கள். ஆனால் பையன் அங்கிருந்து நகரவில்லை.
காலில் செருப்பும் தலையில் படகுபோன்ற தொப்பியும் அணிந்துகொண்டு ஹுக்கா பிடித்தவாறு நின்று கொண்டிருந்த சாரங்க் திரும்பி அவனைக் கேட்டான். "என்ன வேணும்?"
"ஒங்களுக்கு ஒரு வேலைக்காரன் தேவைப்பட்டா என்னை வச்சுக்கலாம்."
"நீ எந்த ஊரு?" சற்றுநேரம் அவனைப் பார்த்துவிட்டுக் கேட்டான் சாரங்க்.
"இந்தப் பக்கந்தான் - கனக்தியா."
"அப்பா அம்மா இருக்காங்களா?"
"ஒருத்தரும் இல்லே."
சாரங்க் இன்னும் சிறிது நேரம் அவனைப் பார்த்துக் கொண்டே நின்றான். பிறகு "ஒன்னால வேலை செய்ய முடியுமா?" என்று கேட்டான்.
"என்னென்ன வேலைங்க?"
"சமையல் செஞ்சு பரிமாறுவது, படகைத் தொடச்சுப் பெருக்கிறது, துணி துவைக்கிறது, பாத்திரம் தேய்க்கிறது இதெல்லாந் தான். முடியுமா? அப்படீன்னா இருந்துக்க. எலவசமா வேலைக்கு ஆள் கிடைச்சா நல்லதுதானே!" என்று சொல்லிவிட்டு சாரங்க் சுக்கானை இயக்கிக் கொண்டிருந்த இயாத் அலியைத் திரும்பிப் பார்த்தான்.
"கொறஞ்சது ஹூக்காவிலே புகையிலை போட்டுக் குடுப்பான், தேவைப்பட்டாக் கைகால் பிடிச்சுவிடுவான்.."
"சம்பளம் ஒண்ணும் கிடையாதா?" இயாத் அலி கேட்டான்.
"சம்பளம் வேறயா?" என்று சீறினான் சாரங்க். "பாசியைக் கொண்டு கறி சமைக்கணுமா? அப்படி யொண்ணும் அவசியமில்லே எனக்கு! இருக்கறதுன்னா இருக் கட்டும், இல்லேன்னா கீழே எறக்கி விட்டுடுவேன் - ஏய் டிக்கெட் இருக்கா?"
"இல்லீங்க. எனக்குச் சம்பளம் வேணாம்!"
படகில் இடம் கிடைத்ததே பெரிய காரியம் நசீமக்கு. அப்பன் இல்லே, சித்தப்பன் இல்லே, முதலாளி இல்லே, யாரோ ஒரு வேத்து மனிதன்கிட்டே அடிவாங்கிக்கிடடு வாயை மூடிக் கிட்டு இருக்கறதைவிட எவ்வளவோ தேவலை இது. முற்றிலும் புதிய அனுபவம் கிடைக்கிறதே, அதுவே ஒரு சுகந்தான்.
நன்றாக வேலை செய்தால் ஒருநாள் படகிலேயே நிரந்தரமாக வேலை கிடைத்துவிடும். முதலில் படிக்கட்டை ஏற்றி இறக்கும் வேலை, பிறகு மேல் தட்டுப் பொறுப்பு, அதற்கப்பிறகு பட கோட்டும் வேலை, கடைசியில் சாரங்க்! இப்படி நடக்காதென்று யார் சொல்ல முடியும்? முதலில் சம்பளமில்லாத வேலைக்காரன், கடைசியில் படகுக்கே தலைவன்!
சாரங்க் அடர்த்தி குறைந்த தன் வெண்தாடியை உருவி விட்டுக்கொண்டான்.
ஆனால் முதல் நாளிரவே நசீமுக்கு நல்ல உதை கிடைத்தது சாரங்கிடம். அவன் கவனக்குறைவாக ஒரு கண்ணாடி ஜாடியை உடைத்துவிட்டான். பிறகு அவ்வளவுதான்! அவன் எதிர்பாராத விதமாக அவன் முகத்தில், தலையில், முதுகில் பளார் பளார் என்று அடிகள் விழுந்தவண்ணம் இருந்தன. ஹோவென்று அழுதுவிட்டான் நசீம். ஆனால் அவன் கைகால்களைக் கட்டி ஆற்றின் கறுப்புத் தண்ணீரில் அவனை எறிந்து விடுவான்.
நசீமுக்கு வருத்தத்தைவிட ஆச்சரியந்தான் அதிகம் ஏற்பட்டது. ஆனால் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இந்தப் படகு வாழ்க்கையில் இதுதான் வழக்கம். எல்லாரும் சாரங்கிடம் அடிவாங்கத்தான் வேண்டும். படிக்கட்டு இறக்கி ஏற்றுபவர்கள், மேல்தட்டைக் கழுவுபவர்கள், சமையல் பணியாளர், கயிறு இழுப்பவர்கள், விளக்குக் காட்டுபவர்கள் இவர்களுடைய வேலை யில் ஒரு சிறிய தவறு நேர்ந்தாலும் அவர்களுக்கு அடி உதைதான்.
படகின் கீழ்ப்பகுதியில் இயந்திரங்கள் இருக்கும். கரி போடுபவன், நெருப்பை வளர்ப்பவன், இயந்திரம் இயக்குபவன் இவர்களெல்லாரும் கீழேதான் இருப்பார்கள். எல்லாரையும் கண்காணிக்கும் பொறுப்பு சாரங்குக்கு. யாராவது தவற செய்து விட்டால், ஒரு இயந்திரத்துக்கு பதிலாக வேறொரு இயந்திரத்தை இயக்கிவிட்டால், ஒரு கழிக்குப் பதிலாக இன்னொரு கழியை இழுத்துவிட்டால் அவன் கதி அதோ கதிதான்! அடி உதை, மட்டமான வசவுகள், செருப்படி கூட விழும் அவனுக்கு. இவ்வளவும் போதாவிட்டால் வேலையே போய்விடும்.
காரணம், படகுக் கம்பெனிக்கு சாரங்கை மட்டுந்தான் தெரியும். மற்ற ஊழியர்களுடன் அதற்கு எவ்விதத் தொடர்பும் இல்லை. சாரங்க்தான் படகுக்கு மாஜிஸ்டிரேட் மாதிரி. எல்லாப் பொறுப்பும் அவனுடையதுதான். படகு செல்லும் வழியில் ஒரு தோணியுடன் மோதி அதை மூழ்கடித்துவிட்டால் அதற்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டியவன் சாரங்க்தான். மழை புயலில் அடி பட்டு அந்தப் படகே முழுகினாலும் பொறுப்பு சாரங்க்தான், கம்பெனி முதலாளிகளல்லர். படகு சம்பந்தமாக எழும் எல்லா வழக்குகளுக்கும் அவன்தான் பொறுப்பு. அதேபோல் படகு பெரும் புயலிலிருந்து தப்பிக் கரைக்குப் பத்திரமாக வந்து சேர்ந்து விட்டால் சாரங்குக்குப் பரிசு உண்டு. படகின் மற்ற பணி யாளர்கள் எவ்வளவுதான் கடினமாக உழைக்கட்டும், எவ்வளவு தான் சாமர்த்தியத்தைக் காட்டட்டும், அவர்களுக்கு இந்தப் பரிசின் ஒரு துளிகூடக் கிடைக்காது. எல்லா சன்மானங்களும் மெடல்களும் சாரங்கின் கழுத்தில்தான் விழும்.
"என்ன ஆச்சு?"
நீராவிப்படகு மணலில் சிக்கிக்கொண்டு விட்டது. மூடுபனி யில் மணல்மேடு புலப்படவில்லை. படகின் அடிப்பகுதி மணலில் நன்றாக மாட்டிக்கொண்ட விட்டது. அதை விரைவில் மணலி லிருந்து விடவிக்க முடியுமென்று தோன்றவில்லை. ஒரு தோணியைப் படகிலிருந்து இறக்க வேண்டும். ஒருவன் அந்தத் தோணியில் போய், தந்தி வசதியுள்ள படகுத்துறையில் செய்தி தெரிவிக்க வேண்டும். அத்தகைய படகுத்துறையெதுவும் அருகில் இல்லை. பெரும்பாலான துறைகள் மரத்தடிகள் அல்லது வயல் வெளிகள்தாம். இன்றைக்குக் குறைந்தது ஏழெட்டு மணிநேரம் படகு தாமதப்படும். வழியில் உள்ள துறைகளிலெல்லாம் பிரயாணி கள் இரவு முழுதும் படகுக்காகக் காத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்குத் தொலைவில் புகை தெரியும், படகின் ஊதல் ஒலி கேட்கும், ஆனால் படகு வராது.
குற்றம் யாருடையது?
மாலுமியின் குற்றம், இரண்டாவது, 'மேட்'டின் குற்றம். ஆனால் இவர்கள் கட்டுமஸ்தான உடல்வாகு கொண்டவர்கள். இவர்களை அடி்பது சுகமில்லை, அடிப்பவனுக்குத்தான் கை கால் புண்ணாகும். ஆனாலும் இவர்கள் தப்பமுடியாது. இவர் களுடைய சம்பளம் முழுவதும் பறிமுதலாகிவிடும். இவர்கள் தங்கள் சாப்பாட்டைக்கூடக் காசு கொடுத்து வாங்கிக்கொள்ள வேண்டும்.
சாரங்க் படகை நிரந்தரமாகக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டவன் மாதிரி. படகுக்கான தளவாடச் செலவுகள், கரிக்கான செலவு, ஊழியர்களின் சம்பளம் இவற்றையெல்லாம் கணக்கிட்டு ஒரு மொத்தத் தொகையைக் கம்பெனி சாரங்கிடம் கொடுத்துவிடும். அதைக்கொண்டு சம்பளப் பட்டுவாடாவும் மற்ற செலகளும் செய்துகொள்வான் சாரங்க். அவன் தன்னிஷ்டத்துக்கு சம்பளம் கொடுப்பான், அபராதம் விதிப்பான், சாப்பாட்டை நிறுத்துவான்; தன்னிஷ்டத்துக்கு ஆட்களை வேலையைவிட்டு நீக்குவான். அவனுக்கெதிராக எந்தப் புகாரும் எடுபடாது, அப்பீலும் இல்லை. படகின் உள்துறை நிர்வாகத்தைப் பற்றிக் கம்பெனிக்குக் கவலையில்லை. படகு, ஆட்களையும் சரக்குகளையும் ஏற்றிக்கொண்டு போகவேண்டும், கணிசமான தொகை லாபம் காட்டவேண்டும் என்பதில்தான் அதற்கு அக்கறை.
ஆகையால் படகு ஊழியர்களுக்கு சாரங்கின் வார்த்தைதான் வேதவாக்கு. அவர்கள் அவனுடைய அடிமைகள். அவன் வெறும் சாரங்க் அல்ல, பெரிய வைசிராய்.
"அழுது பிரயோசனமில்லேப்பா" பக்கத்திலிருந்த மக்பூல் சொன்னான். "இது மாதிரி இன்னும் எவ்வளவோ அடிவாங்க வேண்டியிருக்கும். அடிவாங்கி வாங்கித்தான் வேலை உயர்வு கிடைக்கும்."
மக்பூலும் முதலில் வேலைக்காரனாகத்தான் படகில் சேர்ந்தான். சமையல் வேலையல்ல; துணிச்சலவை, செருப்புத் தைக்கும் வேலை. மூன்றாண்டுகளுக்குப்பிறகு அவனுக்குப் படிக்கட்டு ஏற்றி இறக்கும் வேலை கிடைத்தது. பிறகு மேல் தட்டில் வேலை, அதன்பின் கயிறு இழுக்கும் வேலை. அடி வாங்காவிட்டால் படகில் பதவி உயர்வுக்கு வழியில்லை.
"சாரங்க் துரையோட நல்ல பார்வை படலேன்னா ஒண்ணும் பிரயோசனமில்லே. பத்துப் பன்னெண்டு வருசம் ஒழைச்ச பிறகு துரைக்குத் தயவு வந்தா சான்றிதழ் கொடுப்பாரு. பிறகு அந்த சான்றிதழை வச்சுக்கிட்டு சாரங்க் பரீட்சை எழுதலாம்" என்று சொன்னான் மூன்றாவது மேட் அப்சாருதீன், அந்தச் சான்றிதழ் இல்லேன்னா எல்லா ஒழைப்பும் வீண் .. அதனாலே சாரங்கோட காலிலே அழுத்தமா எண்ணெய் தடவிக்கிட்டு இருக்கணும். பரீச்சை மட்டும் பாஸ் பண்ணீட்டா அப்புறம் கட்டிப்பிடிக்க முடியாது. அப்புறம் நீதான் ஜமீந்தார், நீதான் பொக்கிஷதார், நீதான் எல்லாம்!"
"ஆனா இதிலே இன்னொரு விசயம் இருக்கு. 'சிட்டகாங்' ஆளுங்கன்னா சாரங்குக்கு ரொம்பப் பிரியம்" என்ற தாழ்ந்த குரலில் சொன்னான், பாய்லரில் வேலை செய்யும் விலாயத் அலி. "சாரங்கோட சொந்த ஊர் சிட்டகாங். 'சிட்டகாங்கைத்தவிர வேறே எங்கே நல்ல சாரங்க் கிடைப்பான்?' அப்படீன்னு சொல்லுவாரு. 'சாரங்க், மீன், வத்தல், தர்கா இந்த மூணும் சேர்ந்தது சிட்டகாங்' அப்படீன்ன ஒரு பழமொழியே இருக்கு. அதே மாதிரி இன்னொரு பழமொழி 'நெல், கொள்ளைக்காரன், வாய்க்கால் இந்த மூணும் சேர்ந்தது பரிசல்..!' சாரங்க் வேலை கொள்ளைக்காரன் வேலையில்லியே!"
"ஏண்டா பயலே, ஒன் ஊரு எது?" என்று எல்லாரும் கேட்பார்கள், "இந்தப் பக்கந்தான்" என்று சோகமாகப் பதிலளிப் பான் நசீம். அவன் கண்கள் நீரால் மல்கும். அவன் முன்னே நிற்பவர்கள் மங்கலாகத் தெரிவார்கள்.
மறுநாள் அப்துலுக்கு செமை அடி கிடைத்தது. அவன் தண்ணீரின் ஆழத்தை அளக்கும்போது இரும்புக் கம்பியைத் தண்ணீரில் போட்டுவிட்டான்.
சாரங்க் யாரையாவது அடித்தால் அடிபட்டவனை விலக்க யாரும் முன்வர மாட்டார்கள். அடிபடுவது எல்லாருக்கும் பழகிப்போன விஷயம், அன்றாட நிகழ்ச்சி. இருந்தாலும் அடி பட்டவன் அழத்தான் செய்வான்.
அப்துல் ஆற்றுநீரில் கண்களைத் துடைத்தவாறு விம்மினான், "குச்சியோட வெலையையும் அதுக்கான வட்டியையும் சம்பளத்தி லேருந்து எடுத்துக்கப் போறாரு, அதோடே இந்த அடி வேறே அடிக்கறாரு!"
அப்படியும் சாரங்கை எதிர்த்துப் பேச முடியாது. தனக்கு சாதகமாக இரண்டு வார்த்தை சொல்ல முடியாது. அடிக்கும்போது திமிற முடியாது.
இவர்களெல்லாருமே தன்னைப்போல் தந்தை - தாயில்லாத அனாதைகள் போலும் என்று நினைத்தான் நசீம்.
படகின் படிக்கட்டு வேலையிலிருந்து தொடங்கிப் பதவி உயர்வு வேண்டுபவர்கள்தாம் எல்லாரும். அவர்கள் எல்லாருக்கும் சாரங்கின் சான்றிதழ் தேவை. சாரங்க் அடிப்பதை அனுமதிக்கா விட்டால் அவன் ஏன் பேனாவைக் கையிலெடுத்து சான்றிதழ் எழுதித் தரவேண்டும்.
ஆகவேதான் அன்றொரு நாள் நசீம் மக்பூலுடன் வேடிக்கை யாகப் பேசிக்கொண்டவாறு தவறுதலாக ஒரு வாளியைத் தண்ணீரில் போட்டுவிட்டதற்காக நன்றாக உதைபட்டபோது அவனுக்கு வெட்கம் ஏற்படவில்லை. அவமான உணர்வு துளிக்கூடத் தோன்றவில்லை அவனுக்கு. மாறாக அவன் மனதில் மற்ற ஊழியர்களுடன் தோழமையணர்வு ஏற்பட்டது.
"ஒனக்கென்ன சம்பளம் கிம்பளம் கிடையாது. சும்மா அடி யோட சரி" என்று அழுதுகொண்டே சொன்னான் மக்பூல். "வாளியோட வெலைக்காக என் சம்பளம் பூராவையும் எடுத் தக்குவாரு, எனக்குச் சோத்துக்கு காசு வேணும்னா, தன் கிட்டேயிருந்து கடன் வாங்கிக்கன்னு சொல்வாரு. ரூபாய்க்கி ரெண்டணா வட்டி படகிலே ஒக்காந்துகிட்டே லேவாதேவி செய்யறாரு .. உம், நம்மளைக் கவனிக்க ஆளில்லே" என்று சொல்லி ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தான் மக்பூல் - கடவுளிடம் புகார் செய்வதுபோல்.
"நீ வேற படகுக்குப் போயிடக் கூடாதா?" நசீம் கேட்டான்.
"நீ எந்த உலகத்தில் இருக்க? ஒரு படகைவிட்ட வெலகினா வேறெந்தப் படகிலேயும் வேலை கெடைக்காது. சாரங்குகளுக் குள்ளே ரொம்ப ஒத்துமை உண்டு. அதனால்தான் வாயை மூடிக்கிட்டு அடியை வாங்கிக்கிட்டு வேலை நெலைக்கணுமேன்னு கிடக்கேன். ஒரு தடவை வேலை போயிருச்சின்னா வேறே வெனையே வேண்டாம். தண்ணியை விட்டுட்டுப் போய்க் கலப்பையைக் கட்டிக்கிட்டு அழவேண்டியதுதான்!"
"தவிர எந்தப் படகுக்குப் போவே நீ?" பக்கத்திலிருந்த இயாத் அலி கேட்டான். "எல்லாப் படகிலயும் இதே வழக்கந்தான்.
"ஓடிப்போயிட முடியாதா?" நசீமின் கேள்வி.
இதைக்கேட்டு எல்லாரும் சிரித்துவிட்டார்கள். படகின் படிக்கட்டில் தொடங்கி மேலும் மேலும் உயரும் முயற்சியில் தீவிரமாக இருப்பவர்களுக்கு இந்தக் கேள்வி அசட்டுத்தனமாகத் தானே தோன்றும்!
"ஓடிப்போறது அப்படியொண்ணும் சுலபமில்லேப்பா" சீரியஸாகப் பதிலளித்தான் இரண்டாவது மேட்.
"ஒம் பேரு விலாசம் எல்லாம் சாரங்க் துரையோட நோட்டுப் புஸ்தகத்தில் எழுதி வச்சிருக்கு. நீ ஓடிப்போனா ஒம்பேரிலே போலீசுக்குப் புகார் போகும்... நீ சாரங்கோட பையிலிருந்து பர்சைத் திருடிட்டதா, கடிகாரத்தைத் திருடிட்டதா ... கம்பெனி சாரங்கைத்தான் ஆதரிக்கும். கடைசியில் நீ படகிலேருந்து ஜெயிலுக்குப் போகவேண்டியதுதான்!"
அப்படியானால் இப்படியேதான் - அலப்பைத் தரும் அலை யோசையைக் கேட்டவாறு - காலங்கழிக்க வேண்டுமா அவன்? சம்பளமில்லை, பற்றிக்கொள்ள எதுவுமில்லை, இப்படியே இரவும் பகலும் அவன் மிதந்துகொண்டே போகவேண்டியதுதானா?
"தொரையைக் குஷிப்படுத்து எப்படியாவது! படிக்கட்டு வேலை கிடைக்குமா பாரு"
இன்னும் எப்படித்தான் துரையைக் குஷிப்படுத்துவது? அவன் தினம் சாரங்கின் கை கால் உடம்பை அமுக்கி விடுகிறான், சாரங்குக்கு உடலில் எண்ணெய் தடவி விடுகிறான், தலைவாரிச் சீவி விடுகிறான். கைகால் அயரும் வரை வேலை செய்கிறான். சமையலில் மாலுமியும் அவனுக்குக் கொஞ்சம் உதவி செய்வதால் தான் இன்னும் தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கிறான் அவன். அப்படியும் சம்பளம் இல்லை, சாரங்குக்குத் திருப்தியில்லை. மாறாக அவனுக்கு அபராதம் போடமுடியவில்லையே என்று வருத்தம் சாரங்குக்கு! அதற்காகத்தான் அவன் சில சமயம் நசீமை பட்டினி போட்டு வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் மிச்சப்படுத்துகிறான்.
படகில் அரிசி, உப்பு, வெங்காயம், மிளகாய் இவற்றைத் தருவது சாரங்கின் பொறுப்பு. மற்றவற்றை - எண்ணெய், மசாலா, மீன், காய்கறி - அவரவர் தங்கள் செலவில் போட்டுக் கொள்ள வேண்டும். மாதம் முடிந்தபின் அரிசி, உப்பு,வெங்காயம், மிளகாயின் விலை ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடித்துக் கொள்ளப்படும் - அதுவும் சாரங்கின் இஷ்டப்படிதான்.
"சாரங்கைக் குஷிப்படுத்தனுமின்னாத் திருட்டிலே இறங்கு!" யாரோ நசீமின் காதில் கிசுகிசுத்தான்.
சில சமயம் இந்தப் படகோடு சரக்குத் தோணியொன்றை இணைத்து விடுவார்கள். அந்தத் தோணி நிறைய அரிசி, உப்பு, மிளகாய் போன்ற சரக்குகள் இருக்கும். அத்துடன் சில ஆட்களும் இருப்பார்கள். அவர்களுக்கும் இந்தப் படகின் சாரங்குக்கு மிடையே ஏதாவது ஏற்பாடு இருக்கும்.. படகுக்கு வேண்டிய சரக்குகள் வாங்கிப் போடுவதிலும் கொஞ்சம் பணம் மிச்சப் படுத்துவான் சாரங்க்.
நசீமுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. படகில் வேலை செய்வதில் அவனுக்கு ஒரு பிரயோசனமும் இல்லை. படகு ஒருநாள்விட்டு ஒருநாள் ஒரே வழியில் பயணிக்கும். அந்தி நேரத்தில் வந்து சேர வேண்டிய இடத்துக்கு வந்து சேர ஒவ் வொரு சமயம் நள்ளிரவு ஆகிவிடும், ஒவ்வொரு சமயம் மறுநாள் பொழுது புலர்ந்துவிடும். இது ஒன்றுதான் இந்த பயண வாழ்க்கையில் நேரும் மாறுதல். மற்றபடி எல்லாமே அலுப்பைத் தரும் ஒரே மாதிரியான நிகழ்ச்சிகள்தான். - தண்ணீரின் சலசலப்பு, பயணிகளின் கூட்டம், நங்கூரம் இறங்கி ஏறும் கடகட ஒலி, படிக் கட்டு போடப்படும் போதும் கயிறு இழுக்கப்படும்போதும் எழும் கூக்குரல்கள்..
நசீமுக்கு ஒன்றும் பிடிக்கவில்லை. படகு சில நாட்களுக் கொருமுறை கனக்தியாவுக்குப் போய்வரும். ஆறு இவ்வளவு சிறியதாக இருக்கும், அதன் தண்ணீர் இவ்வளவு குறைவாக இருக்கும் என்று அவன் நினைத்ததே இல்லை. ஆறு ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குப் போகும், இப்படி வெகு தொலைவ போய்க் கடைசியில் கடலில் சேரும் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தான் அவன்.
இருட்டில் தனியாக உட்கார்ந்துகொண்டு தண்ணீரைப் பார்த்துக் கொண்டிருந்தான் நசீம். கறுப்புத் தண்ணீரில் மின் மினிகள் போல் பளபளப்பு.. இன்று நள்ளிரவும் படகு கனக்தியா வுக்கு வந்திருந்தது. நசீமுக்குத் தன் வீடு நினைவு வந்தது. ஊஹூம், அவனுக்கு வீடு வாசல் ஏது? அவனுடைய வீடு வாசலாயிருந்தது இப்போது பிசாசு இருக்குமிடம். பழைய நினைவுகள் வந்தன. அம்மாவின் முகம். "எனக்கு அம்மா இல்லை" என்று அவன் நினைத்துக் கொண்டான். அவனுடைய அம்மா எப்போதோ செத்துப் போய்விட்டாள். இந்தக் கறுப்பு நீரில் தெரியும் நிலவு அவனுடைய அம்மாவின் வெளிறிய முகத்தை நினைவூட்டுகிறது..
பெரிய திருட்டு எதுவும் செய்யமுடியாவிட்டாலும் சின்னஞ் சிறு பொருள்களைத் திருடலாமே அவன்..!
பக்கத்துக் கிராமத்திலிருந்து ஒருவன் இளநீர் விற்க வந்தான். நசீம் அவனிடமிருந்த சாரங்குக்காக இரண்டரையணாவுக்கு இரண் இளநீர் வாங்கினான். நசீம் படகில் ஏறியபிறகு படிக்கட்டு தூக்கப்பட்டது. நசீம் சாரங்கிடமிருந்து ஓரணா வாங்கிக் கரையிலிருந்த இளநீர்க்காரனிடம் எறிந்தான்.
"இன்னும் ஒண்ணரையணா?"
நசீம் வாயைக் கோணி அழகு காட்டினான். இளநீர்க் காரன் ஆற்றங்கரைச் சேற்றையள்ளி நசீம் மீது எரிந்தான். அதற்குள் படகு நகர்ந்துவிட்டது. சேற்றின் ஒரு துளிகூட நசீமின் மேல் படவில்லை. சாரங்கும் நசீமும் சிரித்தார்கள்.
இதே மாதிரி பான்ஸ் பாதாமீனும் கய்ராமீனும் விற்பனைக்கு வரும். அதிலும் கொஞ்சம் திருடுவார்கள். பால்காரன் பானையில் பால் எடுத்து வருவான். மூங்கில் உழக்கால் அளந்து தருவான். நசீம் கரைக்குப்போய் அதை வாங்கிக்கொண்டு படகிலேறுவான். படகிலிருந்து பணங்கொடுப்பதாகச் சொல்வான், கொடுக்காமல் ஏமாற்றிவிடுவான். வயலிலிருந்து பிஞ்சு வெள்ளரிக்காய் கூடை கூடையாக விற்பனைக்கு வரும். அதை மீனோடு சேர்த்துச் சமைக்கலாம், அல்லது தனியாகப் பச்சையாகவே தின்னலாம். "நான் சாரங்கோட வேலைக்காரன். ஒன் காசைக் கொடுத் துடுவேன்" என்று சொல்லி நசீம் வெள்ளரிக்காய் வாங்கிக் கொண்டு படகில் ஏறிவிடுவான். ஆனால் காசு கொடுக்க மாட்டான்.
இவ்வளவு காலத்துக்குப்பின் சாரங்க் அவனுக்கு ஒரு அரைக்கை சட்டை கொடுத்தான். லுங்கி எப்போது கொடுப்பானோ?
ஒருநாள் நசீம் சாரங்கிடம் ஓரணா கேட்டுவிட்டான்
இதுவரை யாரும் துணிந்து சாரங்கிடம் காசு கேட்டதில்லை. சாரங்க் புருவத்தை உயர்த்திக்கொண்டு கேட்டான், "என்ன காசா?"
அசட்டுத் துணிச்சலில் ஒரு பயங்கரத் தவறு செய்துவிட்ட உணர்வு ஏற்பட்டது நசீமுக்கு. அவன் பயத்துடன் விழித்தான்.
"எதுக்கு காசு?" "ஒரு மண்குடுவை டீ குடிக்க.."
உடனே ஒரு பலமான அறை விழுந்தது நசீமின் கன்னத்தில். அவன் நிலைகுலைந்து கீழே விழுந்தான்.
சாரங்க் கர்ஜித்தான், "என்ன அதிகப் பிரசங்கித்தனம்! எங்கிட்டே பீடிக்குக் காசு கேக்கறானே..! பீடி வாங்கணுமாம், பீடி ..! இன்னொரு நாள் கள்ளு போத்தல் வாங்கணும்பான்..! இந்த மாதிரி திமிரு பண்ணினா ஆத்துக்குள்ளே தூக்கி எறிஞ்சிருவேன், ஆமா!"
அழுகையினூடே அம்மாவின் நினைவு வந்தது நசீமுக்கு. அவன் இருட்டில் தண்ணீரைத் பார்த்தவாறு அம்மா செத்துப் போனபின் அவளுடைய முகம் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்ய முயற்சி செய்தான். இந்தக் கற்பனை அவனுக்குத் தெம்பளித்தது. அடியைத் தாங்கிக்கொள்ளத் திராணி ஏற்பட்டது. "அம்மா" என்று கூவியழக்கூட வழியில்லை அவனுக்கு. அந்த நிலையில் விழும் அடியையெல்லாம் வாங்கிக்கொள்ளத்தானே வேண்டும்!
ஆனாலும் இந்தக் கொடுமைக்குள்ளானவர்கள் சாரங்குக் கெதிராக ஒன்று சேர்வதில்லை. அவர்களுடைய புகாரெல்லாம் கடவுளிடந்தான். படகிலிருந்து விடுதலையும் கிடைக்காது அவர்களுக்கு. எப்போது படிக்கட்டு வேலை கிடைக்கும், எப்போது மேல்தட்டு வேலை, கயிறு இழுக்கும் வேலை, நங்கூரம் பாய்ச்சும் வேலை அல்லது இயந்திர வேலை கிடைக்குமென்று எல்லாரும் காத்திருந்தார்கள்.
சாரங்குக்கு வட்டி கொடுத்தோ, லஞ்சம் கொடுத்தோ, அவனுக்காகத் திருடியோ, அவனிடம் அடிவாங்கியோ அவனிடம் நல்ல பெயர் வாங்கிக்கொள்ள அவர்களெல்லாருக்கும் ஆசை.
சாரங்கின் ஆட்சித்திறமை அபாரந்தான்!
நசீம் அன்றிரவே ஒரு பிரயாணியின் செருப்புகளைத் திருடினான். ஆனால் சாரங்க் அவற்றைத் தண்ணீரில் எறிந்த விட்டான். "ஆகா, என்ன மூளை ஒனக்கு! நான் அந்தச் செருப்பைப் போட்டுக்கிட்டேன்னா போலீஸ் என்னைப் பிடிக்காதா?" என்று கேட்டான்.
மறுநாள் நசீம் ஒரு பிரயாணியின் தகரப் பெட்டியைத் திருடினான். ஆனால் அதிலிருந்தவை ஏதோ கோர்ட்டு வழக்கு சம்பந்தப்பட்ட காகிதங்கள், பத்திரங்கள், வரவு செலவுக் கணக்கு நோட்டுகள் இவைதாம். அந்தப் பெட்டியும் ஆற்றில் எறியப்பட்டது.
என்ன செய்தும் சாரங்கின் நன்மதிப்பைப் பெறமுடிய வில்லை அவனால். "உன்னால முடியும், முயற்சி செஞ்சுக் கிட்டேயிரு!" என்று சாரங்க் தன் பார்வையால் அவனுக்கு ஊக்கமூட்டுவதாகத் தோன்றியது. சாரங்க் நசீமின் அசட்டுத்தனத் துக்காக அவனைக் கோபித்துக் கொண்டாலும் அவனை இப்போதெல்லாம் அடிப்பதில்லை. இதுவே உற்சாகமளித்தது நசீமுக்கு.
படகில் வெளிச்சம் மங்கல்; மழை பெய்தால் பயணிகள் நனையாதிருக்கக் கித்தான் கூரையில்லை; ஆண்களும் பெண்களும் தனித்தனியாகத் தங்க அறைகள் இல்லை; ஆனால் தூக்கம் எல்லாருக்கும் வருகிறது. அந்தப் படகில் பிரயாணம் செய்பவர்கள் சீட்டாடியோ, பாட்டுப் பாடிக்கொண்டோ, அரட்டையடித்துக் கொண்டோ இரவைக் கழிக்கும் நடுத்தர மக்கள் அல்லர்; அவர்கள் விவசாயிகள், கூலி வேலை செய்பவர்கள். அவர்கள் பகலில் கடுமையாக உழைத்துவிட்டு இரவில் மரக்கட்டைபோல் தூங்கு வார்கள்.
அலங்கோலமாகக் கிடந்து தூங்கும்போது ஒரு பிரயாணியின் மடியிலிருந்த பணமுடிச்சு வெளியே வந்து தொங்கிக் கொண்டிருக்கும். நசீம் அதை லாவகமாக எடுத்து விடுவான். அதில் எவ்வளவு பணம் இருக்கிறதென்பதை எண்ணிப் பார்க்கலாம் என்று நினைப்பான். அடுத்த துறையில் இறங்கி ஓடிப் போய்விடலாம் என்று எண்ணுவான். ஆனால் இறுதியில் ஏதோ மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவன்போல் அதை எடுத்துப்போய் சாரங்கிடம் கொடுத்துவிடுவான். புலியின் வாயில் போய் விழும் மாடுபோல, சாரங்க் அவனை எப்போதும் அடிக்கிறான், உதைக் கிறான்; அவனோடு சிரித்த முகத்துடன் பேசுவதில்லை; அவனுக்குக் கிடைக்கவேண்டிய உரிமையெதுவும் அளிப்பதில்லை. அப்படியும் அவனுக்கு சாரங்கைத் திருப்திப்படுத்துவதில் அவ்வளவு ஆர்வம். சாரங்க் ஊழியர்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொள்ளத் தூண்டுகிறான், அவர்களுக்கெதிரான கோள்களைக் காது கொடுத்துக் கேட்கிறான்; அப்படியும் அவனை குஷிப்படுத்த ஊழியர்களிடையே எவ்வளவு போட்டி! சாரங்கின் அன்பைப் பெறுவதில் ஒருவரையொருவர் மிஞ்சிவிட முயற்சி!
"ஏழு ரூவா ஒம்பதரையணாதானா?" மக்பூல் சொன்னான். "இதை வச்சுக்கிட்ட என்ன செய்ய முடியும், கொறஞ்சது நாப்பத்தேழு ரூவாயாவது சேர்றவரையில பிரயோசனமில்லேன்ன நம்ம சாரங்க் துரை சொல்லுவாரு.."
துணிமணி திருடுவதைவிடப் பணங்காசு திருடுவது மேல். தங்கம், வெள்ளி, நகை திருட மடிந்தால் அதைவிட நல்லது. இந்தக் காலத்திலே அவற்றுக்குத்தான் மதிப்பு. அவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தக் காகிதப் பணம் வெறும் குப்பை!
இவ்வளவு நாட்களுக்குப் பிறகு நசீமுக்கு ஒரு லுங்கி கிடைத்தது. குடியானவப் பெண்களிடம் நகைகள் ஏது? அதிகமாகப் போனால் மூக்குத்தி, மோதிரம் .. கையில் கண்ணாடி வளையல், தங்கம் கிங்கம் இல்லை.
இல்லையில்லை, ஒருத்தியிடம் நகை நிறைய இருக்கிறது. ஒரு புதுமணப்பெண் புக்ககம் போய்க்கொண்டிருக்கிறாள். அவள் கழுத்தில் தங்க நெக்லஸ், கையில் கங்கணம், காலில் வெள்ளிக் காப்பு, கால் விரலில் மெட்டி. அரக்கு நிறப் புடைவையணிந்த அவள் முக்காடு போட்டுக்கொண்டு ஒரு பக்கம் தூங்குகிறாள். கலியாணத்துக்கு வந்திருந்தவர்கள் ஆளுக்கொரு பக்கம் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். யார் எங்கேயிருக்கிறார் என்று தெரிந்து கொள்ள வழியில்லை. இன்று படகில் ஒரே கூட்டம். இந்த கூட்டத்தில் சரியான தருணம் பார்த்துக் காத்திருந்தான் நசீம்.
அவன் மணப்பெண்ணின் மிருதுவான கழுத்தில் கை வைத்தான். அவனுடைய விரல்கள் நடுங்கவில்லை.
ஒரே இழுப்பில் நெக்லஸைப் பறித்துவிட்டான்.
"திருடன், திருடன்!"
நசீம் கூட்டத்தில் முண்டிக்கொண்டு கொஞ்சம் முன்னேறுவதற்குள் பிரயாணிகள் அவனைப் பிடித்து விட்டார்கள். எல்லாரும் அவனை அடிக்கத் துவங்கினர். சரியான அடி. அங்கு வந்து "என்ன விஷயம்?" என்று விசாரிப்பவன் ஒவ்வொருவனும் தன் பங்குக்கு நசீமை உதைத்தான். மணப்பெண் போட்ட கூச்சலில் அவன் நகையை அவளுடைய படுக்கையோரத்திலேயே போட்டுவிட்டான். அதனாலென்ன? பெண்பிள்ளையின் உடம்பில் கை வைத்திருக்கிறான்! அவளுடைய நகையைப் பறித் திருக்கிறான்! அடி, உதை! முறை போட்டுக்கொண்டு உதை!
"ஐயோ!" ஓலமிட்டு அழுதான் நசீம்.
நீண்ட அங்கியணிந்த சாரங்க் தலையில் படகுத் தொப்பியும் காலில் செருப்புமாக அங்கே வந்து "என்ன ஆச்சு? எம்புள்ளயை ஏன் அடிக்கிறீங்க?" என்று கேட்டான்.
புள்ளயா? எல்லாரும் திடுக்கிட்டனர். சாரங்கோட புள்ளயா?
"ஒங்க புள்ளெயா? வேலைக்காரன்னு நெனச்சோம்!" ஒருவன் சொன்னான்.
"வேலைக்காரனா? பொய்! அவன் என் சொந்தப் புள்ளெ! அம்மா இல்லே அவனுக்கு, அவனை அடிச்சது யாரு?"
"அவன் மணப்பெண்ணோட கழுத்து நகையைப் பறிச் சிருக்கான்.."
"பொய்! நிச்சயம் பொய்தான்! வாங்க, நானே போய்க் கேக்கறேன் அந்தப் பொண்ணை!"
சாரங்க் அந்தப் பெண்ணிடம் போய்க் கேட்டான், "ஒங்க நெக்லஸை யாராவது பறிச்சாங்களா?"
மணப்பெண் முகத்தை மூடிக்கொண்டு தாழ்ந்த குரலில் சொன்னாள், "இல்லே. தூக்கக் கலக்கத்திலே அது நழுவி கீழே விழுந்துடுச்சு.."
லதாபாரி படகுத்துறை நெருங்கிவிட்டது. மாப்பிள்ளை வீட்டார் அங்குதான் இறங்கவேண்டும். படகின் வேகம் குறைந்தது. நங்கூரம் கடகடவென்று கீழே இறங்கியது. துறையில் ஒரு மரத்தோடு கயிறு கட்டப்பட்டது.
"படியை இறக்கு! படியை இறக்கு..! நசீம் எங்கே? அவன் இன்னிக்குப் படிக்கட்டைப் பிடிச்சுக்கட்டும்!" சாரங்க் கத்தினான்.
படகு ஊழியர்களிடையே ஒரே பரபரப்பு. இவ்வளவு சீக்கிரமாக நசீமுக்கு முறையான வேலை கிடைத்துவிட்டதே! திருடி அகப்பட்டுக் கொண்டதில் அதிருஷ்டம் வந்தவிட்டது பயலுக்க! அகப்பட்டுக் கொள்ளாமல் திருடிக் கொண்டிருப் பவர்கள் இன்னும் திணறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இன்னும் படிக்கட்டிலிருந்து மேல் தட்டுக்குப் பதவி உயர்வு கிடைக்கவில்லை. இந்த நசீம் இன்றைக்குப் படிக்கட்டு, நாளைக்கு மேல்தட்டு, அதற்கு மறுநாள் சுக்கான் - அப்புறம் ஒரேயடியாக சாரங்காக - படகுத் தலைவனாக ஆகி விடுவான்!
"பிடிச்சுக்கங்க, பிடிச்சுக்கங்க..! அவன் சின்னப் பையன். அவனால ஒண்டியாத் தூக்க முடியுமா? எல்லாரும் கூடப் பிடியுங்க!" மேலேயிருந்து அழுத்தந் திருத்தமாக ஆணையிட்டான் சாரங்க்.
சுழல் விளக்கின் ஒளியில் நசீமின் கண்களில் நீர்த்துளிகள் பளபளத்தன.
மணப்பெண் லதாபாரியில் இறங்கப் போகிறாள். அவள் மெட்டி குலுங்க நடந்து வருகிறாள்.
படகின் வெளிச்சம் மரஞ்செடிகளுக்கு மேலே வெகு தொலைவு வரை பரவியிருக்கிறது. நசீம் படிக்கட்டோடு இணைந்த மூங்கிலைப் பிடித்துக் கொண்டிருக்கிறான்.
அவன் மணப்பெண்ணிடம் சொன்னான்,"மூங்கிலைப் பிடிச்சுக்குங்க! இல்லாட்டித் தடுமாறி விழுந்துடுவீங்க."
"வேண்டாம்" என்று சொல்லிவிட்டு மூங்கிலைப் பிடித்துக் கொள்ளாமலேயே முன்னேறினாள் மணப்பெண்.
பின்னாலிருந்து யாரோ நசீமை இடித்தான். திடுக்கிட்டுத் திரும்பினான் நசீம். அவனை நையப் புடைத்தவன்தான் அங்கே நின்று கொண்டிருந்தான். விளக்கொளியில் அவனை அடையாளம் கண்டு கொண்டான் நசீம். அவன் தான் கஹ்ராலி!
கோல்பானு - மணப்பெண்- வெளிச்சம்படாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தாள். போர்த்தியிருந்த போர்வையால் முகத்தை நன்றாக மூடிக்கொண்டிருந்தாள். படகுத் துறையில் வேற்று மனிதர்களின் நடமாட்டம் அதிகம்.
படிக்கட்டை ஒவ்வொரு படியாகத் தூக்கத் தொடங்கினான் நசீம். கரையையடுத்த, குழம்பிய தண்ணீரின் நிழலில் தாயின் வெளிறிய முகத்தைப் பார்த்தான் அவன்.
மேற்புரத்தில் நின்றுகொண்டு சாரங்க் அவனைத் தாராளமாகப் பாராட்டிக் கொண்டிருந்தான். சாரங்கின் வெள்ளை அங்கியும் வெண்தாடியும் காற்றில் அசைந்து கொண்டிருந்தன. சூரியன் மாதிரி பளபளத்தது சாரங்கின் முகம்...
(முதல் பிரசுரம், 1946)
4. ராணி பசந்த்
வெகுநாட்கள் காத்திருந்தபின் நீராவிப் படகு கிடைத்தது. சில இடங்களை மேற்பார்வையிடுவது பாக்கியிருந்தது. ஆண்டு முடிவதற்குள் இந்த வேலையை முடித்தாக வேண்டும். இருபுறமும் ஆற்றங்கரைக் காட்சிகள்; முன்னால் ராங்கா மாட்டிப் பிரதேசத்தின் மலைவரிசை; கர்ணபூலி ஆற்றில் பயணம் தொடங்கும்போது ரொமான்டிக் உணர்வு ஏற்பட்டது. காகிதமும் பேனாவும் கையோடு எடுத்து வந்திருந்தேன். வெகுநாட்களுக்குப் பிறகு கவிதை எழுதத் திட்டம். படகின் சாரங்க், மாலுமி, மற்ற ஊழியர்கள், என் வேலைக்காரன், சமையல்காரன் இவர்கள்தாம் என் சக பிரயாணிகள். அவர்கள் யாரும் என்னைத் தொந்தரவு செய்யக்கூடாதென்று அவர்களுக்கு கடுமையாக உத்தரவிட் டிருந்தேன். மேல்தட்டில் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு நங்கூரம் தூக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அவசர அவசரமாக ஓடிவந்தார் போலீஸ் இன்ஸ் பெக்டர். அவரது கையில் ஒரு கடிதம்.
என்ன விஷயம்? மறுபடி என்ன விபத்து நேர்ந்து விட்டது? இவர்கள் என்னை இங்கிருந்து நகர விடமாட்டார்களா என்ன?
கடிதத்தைப் பிரித்துப் பார்த்தேன். அப்படியொன்றுமில்லை. கல்கத்தாவிலிருந்து ஒரு பெரிய போலீஸ் அதிகாரி வந்திருக் கிறாராம். அவருக்கும் அவசரமாக ராவுஜான் போகவேண்டுமாம். நான் அவரை என்கூட அழைத்துப் போகலாமா? எனக்கு அசௌகரியம் இருக்கிறதா? போலீஸ் இலாகாப் படகு நாளைதான் வரும். என்னுடன் வரவில்லையென்றால் அந்தப் போலீஸ் அதிகாரி ஒருநாள் இங்கேயே காத்திருக்க வேண்டும்.
இந்த ஏற்பாட்டால் எனக்கு அசௌகரியம் ஏற்படத்தான் செய்யும். ஆனால் இதை எழுத்தில் தெரிவிக்க முடியுமா? நான் கவிதை எழுதி வாழ்ந்தேன்! மனதுக்குள் அந்த அதிகாரியைச் சபித்துக்கொண்டு, போலிச் சிரிப்பு சிரித்தவாற "ஆகா, இது என் நல்லதிருஷ்டமல்லவா?" என்று சொன்னேன். இன்ஸ்பெக்டர் குதிகாலோடு குதிகாலைச் சேர்த்து ஒரு அழுத்தமான சலாம் செய்துவிட்டுப் போனார்.
நான் நாற்காலியில் சாய்ந்தவாறே எண்ணத் தொடங்கினேன். "மறுத்திருந்தால் என்ன பெரிய பண்புக் குறைவு நேர்ந்திருக்கும்? அந்த அதிகாரி ஒருநாள் தாமதித்தால் வேலை கெட்டுப் போய் விடுமா..?"
வந்த அதிகாரி கான் பகதூரைப் பண்பில் யாரும் விஞ்ச முடியாது. எனக்கு நன்றி கூறப் பொருத்தமான வார்த்தைகள் அவருக்கு வங்காளியில் கிடைக்கவில்லை. ஆகையால் ஆங்கிலத் தையும் உருதுவையும் பயன்படுத்தினார். அவர் ஒரு பஞ்சாபி முஸ்லீம். என்னைவிட வயதில் மிகவும் பெரியவர். மீசை தாடி வைத்துக் கொள்ளாததால் சற்று வயது குறைந்தவராகத் தோற்ற மளித்தார். கலகலப்பான மனிதர். நான் ஒரு எழுத்தாளன் என்பதை இதற்குள் தெரிந்துகொண்டிருந்தார்.
"உங்களைச் சந்தித்துப் பேசணும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை. அந்த ஆசை இப்படித் தீரும்னு யாரு எதிர்பார்த்தாங்க? ஆனா ஒங்க தனிமையைக் கெடுக்க நான் விரும்பவேயில்லே. நான் ஒரு நாள் காத்திருக்கத்தான் நெனைச்சிருந்தேன். எஸ்.பி.தான் வலுக்கட்டாயமா அனுப்பிட்டார் ஒங்களோட படகுக்கு... செய்தி கேள்விப்பட்டிருப்பீங்களே?" என்றார் கான் பகதூர்.
நான் வியப்புடன் கேட்டேன், "என்ன செய்தி?"
"ரொம்ப மோசமான செய்தி," அவர் என் காதருகில் சொன்னார். "இல்லாட்டி நான் டிரங்க் கால்லே செய்தியைக் கேட்டதும் இப்படி கல்கத்தாவிலிருந்து ஓடி வந்திருப்பேனா..? சீ, வெட்கக்கேடு!"
விஷயம் என்ன என்று தெரிந்துகொள்ள எனக்கு மிகவும் ஆவல்தான். ஆனால் எப்படியும் கான் பகதூர் தாமாகவே விஷயத்தைச் சொல்லிவிடுவார் என்று தெரியுமாதலால் எனக்குப் பிறர் பற்றிய வம்பில் அக்கறையில்லாதது போல் பாசாங்கு செய்தேன். "நீங்க இலக்கியவாதிகள். அடிக்கடி 'சத்தியம், சிவம், சுந்தரம்'னு சொல்லுவீங்க. ஆனா சத்தியமாயிருக்கறது சிவமா, அதாவது மங்களமா இல்லே; சுந்தரமாயிருக்கறதும் சிவமில்லே-- இதுதான் நான் என் நாப்பத்தஞ்சு வருஷ அனுபவத்திலே அறிஞ்சுக்கிட்டது. நான் என்னிக்காவது ஒரு புஸ்தகம் எழுதி னேன்னா என்ன எழுதுவேன், தெரியுமா? 'அழகான பெண்கள் அநேகமாகக் கெட்டவங்களாயிருப்பாங்க, கெட்ட பெண்கள் பெரும்பாலும் அழகாயிருப்பாங்கன்னு எழுதுவேன்' என்று சொல்லிவிட்டு ஹாஹாவென்று சிரித்தார் கான்பகதூர்.
நானும் சிரித்துவிட்டேன்; இருந்தாலும் கூடவே "எங்க வங்காளத்திலே மட்டும் இப்படியில்லே" என்று சொன்னேன்.
கேலியாகப் பேசினார் கான்பகதூர், "உம், வங்காளத்திலே இல்லையாக்கும்! வங்காளத்திலே வேலை பார்த்துப் பார்த்துத் தலை நரைச்சுப் போச்சுங்க.. நான் இப்போ போயிக்கிட் டிருக்கேனே ராவுஜானுக்கு. அந்த ராவுஜான் வங்காளத்துக்கு வெளியில இருக்கா?"
உரையாடல் சுவாரசியமாகத் தொடர்ந்தது. நான் என் சமையற்காரனைக் கூப்பிட்டேன். அதற்குள் அவர் என்னை இடைமறித்து, "இல்லேயில்லே நீங்க என்னோட விருந்தாளி!" என்றார்.
நல்ல வேடிக்கை! பார்க்கப்போனால் படகே என்னுடையது, நான் எப்படி அவருடைய விருந்தாளி ஆவேன்? ஆனால் என் பேச்சு எடுபடவில்லை. அவரே மாலை நேரச் சிற்றுண்டிக்கு ஆர்டர் கொடுத்தார். இதற்குள் படகு துறையைவிட்டுக் கிளம்பி விட்டது.
நாங்களிருவரும் சாய்வு நாற்காலிகளைப் போட்டுக்கொண்டு மலைவரியைப் பார்த்தவாறு அருகருகே வசதியாக உட்கார்ந்தோம். கான் பகதூர் பேசத் தொடங்கினார்..
"அவன் சாதாரண ஆளில்லே. ஒரு சர்க்கிள் இன்ஸ்பெக்டர். ஒரு காலத்திலே நான் அவனோட சூபரின்டென்டாயிருந்தேன், அவனோட வெலையைப் பாராட்டியிருக்கேன். அவன் கிறுக்கு இல்லே, கவி இல்லே - நான் சொல்றதுக்கு மன்னிக்கணும் ஒழுங்கான நடத்தையுள்ளவன்னு நல்ல பேரும் இருந்தது அவனுக்கு. இப்படிப்பட்டவன் திடீர்னு வெலையைத் துறந்துட்டு, குழந்தை குட்டிகளை மறந்து - நல்லவேளை, அவனோட மனைவி உசிரோட இல்லே - காணாமப் போயிட்டான்-!"
"காணாமப் போயிட்டானா?" நான் திடுக்கிட்டேன்.
அந்த வெக்கக்கேட்டை ஏன் கேக்கறீங்க!" கான் பகதூர் பட்டுக் கைக்குட்டையால் தன் முகத்தைத் துடைத்துக் கொண்டு தொடர்ந்தார்.: "ஒரு கொலையைப் பத்தி விசாரிக்கப் போயிருந்தான். கொலை செய்யப்பட்டவன் ஒரு வங்காளி முஸ்லீம். அவன் ரங்கூன்லேருந்து ஒரு பர்மாக்காரியைக் கலியாணம் பண்ணி கூட்டிக்கிட்டு வந்திருந்தான். அவ ஒரு பிசாசுதான். ரொம்ப அழகாயிருப்பாளாம்; பர்மாவிலேயே அவ மாதிரி அழகி இல்லையாம்.. புருசனோட இங்கே வந்தவ அவனுக்கு ஏற்கெனவே கலியாணமாயிருக்குன்னு தெரிஞ்சதும் புருசனோட கழுத்திலே கத்தியாலே குத்திட்டா!"
"அப்படியா? நான் இதைப் பத்திக் கேள்விப்படலியே!"
"முதல்லே புலன்விசாரணைக்கு இன்ஸ்பெக்டர்தான் போனான். ஆனா பர்மாக்காரிக்கு வங்காளி தெரியாதுங்கறதுக்காக இந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டரும் போக வேண்டியதாச்சு. இந்த விசாரணைதான் அவனுக்குக் கேடா முடிஞ்சது.. ஒரு நாளாச்ச, ரெண்டு நாளாச்சு, புலன் விசாரணை முடியலே.. கடைசியிலே ஒரு நாள் குத்தவாளியையுங் காணோம், விசாரணைக்குப் போன அதிகாரியையுங் காணோம்! ஹா ஹா ஹா ..!"
இது சிரிப்புக்குரிய விஷயமல்ல. பெண்கள் கடத்தப்படுவதை அறவே வெறுப்பவன் நான். ஆகவே சற்றுக் கோபத்துடன் அவரைக் கேட்டேன், "பின்னே இவ்வளவு நாள் நீங்க என்ன பண்ணிக்கிட்டிருந்தீங்க? ஏன் அவனைக் கைது செய்யலே? இது போலீஸ் இலாகா மட்டும் சம்பந்தப்பட்ட விஷயமில்லே, இதிலே கோர்ட்டுக்கும் சம்பந்தமிருக்கே!" கான் பகதூர் சற்றுக் கடுமை யான குரலில் சொன்னார், "கோர்ட்டுக்கு இதிலே சம்பந்தம் இருக்காங்கறது சந்தேகந்தான். அந்த பர்மாக்காரி வயது வந்தவ, விதவை. ஆகையால் அவளை ஆசை காட்டிக் கடத்திக்கிட்டுப் போனதாக் குத்தஞ் சாட்ட முடியாது. குற்றச் சட்டத்திலே எந்தப் பிரிவின் கீழே அவனைக் கைது செய்வீங்க, சொல்லுங்க!"
என்னிடம் பதிலில்லை.
அவர் குறும்பாகச் சிரித்துக்கொண்டு தொடர்ந்தார். "அப்புறம்.. அவங்க கலியாணம் பண்ணிக்கிட்டிருந்தாங்கன்னா..? உம், அவ்வளவு எளிசான விஷயமில்லீங்க இது. அவனை வேலையைவிட்டு நீக்கலாம்... கல்கத்தாவிலே இதுக்கான ஏற்பாடு செய்வாங்க. ஆனா அதுக்கு மேலே அவனுக்குத் தண்டனை கொடுக்கணும்னா சட்டத்தை நல்லாப் படிச்சுப் பார்க்கணும்."
அவர் கூறியது உண்மைதான்.. பெரிய மீன் ஒன்று தூண்டிலில் அகப்பட்டுக் கொள்ளாமல் நழுவிப் போய்விட்டால் மீன் பிடிப்பவனுக்கு எப்படி இருக்கும்? அப்படியிருந்தது எனக்கு.
ஆனால் இதற்காக வருத்தப்படவில்லை கான் பகதூர். அவர் சொன்னார், "அவங்க சிட்டகாங் மலைப் பிரதேசத்திலே ஒளிஞ்சுகிட்டிருக்கறதாகக் கேள்வி. அங்கேயிருந்து நடந்தே பர்மா போவாங்க போலிருக்கு.. அதுக்கப்புறம் அவனுக்கு எவ்வளவு நாள் பர்மிய அழகியோட தயவு இருக்குமோ, யார் கண்டாங்க! அவ அவனைக் கொஞ்சநாள் குரங்காட்டம் ஆட்டிப்பிட்டுப் பிறகு கொன்னு போடுவாளோ, அல்லது உதைச்சு விரட்டப் போறாளோ..! நான் அழகான முகத்தைப் பார்த்தா, தூரத்தி லிருந்தே அதற்கு ஒரு சலாம் போட்டுட்டு நகர்ந்து போயிடுவேன்."
என்னிடம் அப்போது சட்டப் புத்தகம் எதுவுமில்லை. ஆகையால் ஒரு குற்றவாளி தப்பியோட உதவுபவனுக்குச் சட்டத்தில் தண்டனையேதும் உண்டா என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியவில்லை என்னால். ஆனால் உள்ளூரச் சங்கடப் பட்டேன். இதைக் கவனித்த கான் பகதூர் சொன்னார், "நான் போலீஸ்காரனாயிருக்கறதாலே போலீஸ்காரன் மேலே எனக்கு அனுதாபம், நான் முஸ்லீமாயிருக்கறதாலே இன்னொரு முஸ்லீம் மேலே எனக்குப் பரிவுன்னு நீங்க நினைக்கலாம். ஆனா அப்படி யில்லே. அவன் ஒரு ஆம்பளைங்கறதால அவன்மேலே அனுதாபப் படறேன்.. அந்தப் பொண்ணுதான் அவனைக் கடத்திக் கிட்டுப் போயிருக்கா!"
நான் இயற்கையிலேயே பெண்களிடம் அனுதாபங் கொண்டவன். ஆகவே அவரது கூற்றை மறுக்காமலிருக்க முடிய வில்லை என்னால். நான் சொன்னேன்," பெண்களிடம் சிறிதாவது மதிப்புள்ள எவனும் அவங்களைக் குத்தஞ் சொல்ல முடியாது. எப்போதும் குத்தம் ஆண்களோடதுதான்.. ஆனால் சில சமயங்களிலே ஆண் மேலயும் குத்தமில்லாமே, பெண் மேலயும் குத்தமில்லாமே இருக்கலாம். அப்போது சொல்ல வேண்டியது இயற்கையைத்தான், விதியைத்தான்."
"ஆமா, ஆமா, அது சரி! விதிதான் குத்தவாளி!" கான் பகதூர் மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டார். "இதே மாதிரி விதியின் விளையாட்டு ஒண்ணை நான் என் இளம்வயசிலே பார்த் திருக்கேன். என் சிநேகிதன் ஒருத்தன் வாழ்க்கையிலே.. அவன் இந்து. அடே, இதென்ன? இந்துவும் முஸ்லீமும் நண்பர்களா, என்று நீங்க நினைக்கலாம். ஆனா இப்போ இருக்கிற மோசமான சூழ்நிலை இருபது வருஷத்துக்கு முன்னாலே இல்லே. நாங்க முதல் உலக யுத்தம் முடிஞ்சப்புறம் மிலிட்டரியை விட்டு வந்து போலீஸ் வேலையிலே சேர்ந்தபோது இந்து முஸ்லீம் பாகுபாடு கிடையாது. அந்தக் காலம் திரம்பி வராதா..?"
அவருடைய குரலில் உண்மையான வருத்தம் தொனித்தது. அவர் நினைவுப் பாதையில் இருபதாண்டுகள் பின்னோக்கிப்போய் விட்டார். பிறகு ஏதோ நினைவுகளை அசைபோட்டவாறே சொன்னார், "ரொம்பப் பழைய காலக்கதை. நானே மறந்து போயிட்டேன். இப்போ திடீர்னு ஞாபகம் வருது நல்லா ஞாபகம் வருது.. கண்ணுக்கு முன்னால நடக்கற மாதிரி தெளிவாகத் தெரியுது.."
அவர் பக்கம் திரும்பிப் பார்த்தேன். அதே மனிதர்தானா, அல்லது வேறு யாராவதா..? ஓர் இளைஞன் நாற்காலியில் சாய்ந்தவாறு கனவு காண்கிறானா..?
காற்று நன்றாக வீசுகிறது, காற்றைத் தள்ளிக் கொண்டு முன்னேறுகிறது படகு. துணி கிழிபடுவது பொல படகின் இரு பக்கமும் தண்ணீர் கிழிபடுகிறது. பின்னால் தங்கிவிடுகின்றன அலைகள். அந்த அலைகளின்மேல் மேலுங் கீழுமாக ஊசலாடுகிறது பின்னால் வரும் தோணி. கான் பகதூர் கதை சொல்லத் தொடங்கினார்..
***
மேகர்பான் சிங் ராஜபுத்திர இனத்தைச் சேர்ந்தவன். என் முன்னோர்களும் ராஜபுத்திரர்கள்தான். ரத்த பாசம் என்று ஒன்று இருக்கிறது. எனக்கு மற்ற முஸ்லீம்களைவிட ராஜபுத்திரர் களிடம் அதிக ஈடுபாடு உண்டு. ஆனால் இந்து மதத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. மத விஷயத்தில் நான் ஒரு தீவிர முஸ்லீம். மதத்தைப் பொருத்தவரையில் இந்த முஸ்லீம் சாரங்க், மாலுமி, வேலைக்காரன், சமையற்காரன் எல்லாரும் என் சொந்த மக்கள், மேகர்பான் சிங் ஒரு சிநேகிதன் மட்டுமே.
ஆனால் அந்தக் காலத்தில் அவனைப் போன்ற நண்பன் எனக்கு இல்லை. நாங்களிருவரும் தினம் சந்திப்போம். மணிக் கணக்காகப் பேசுவோம், பகற்கனவு காணுவோம். எங்களிரு வருக்கும் விளையாட்டில் ஆர்வம் உண்டு. வேட்டையிலும் நாட்டம் உண்டு. அந்தக் காலத்தில் இப்போதிருப்பதுபோல சினிமா கிடையாது. நாங்கள் வேலை செய்த இடத்தில் எப்போ தாவது ஒரு தடவை ஒரு டூரிங் டாக்கீஸ் வந்து சில நாட்கள் திரைப்படக் காட்சிகள் நடத்தும். அந்த நாட்களில் நாங்கள் சேர்ந்தே சினிமாவுக்குப் போவோம். நாங்கள் மற்ற போலீஸ் அதிகாரிகளைப் போல் பாட்டுக் கேட்கத் தொழில் முறைப் பாடகிகளின் வீடுகளுக்குப் போவதில்லை. நாங்கள் இந்த விஷயத்தில் பழைய கட்டுப்பாடுகளை மதிப்பவர்கள்.
மேகர்பானுக்குத் திருமணப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. என் மனைவி பிறந்தகம் போயிருந்தாள். மேகர்பான் படித்த பெண்ணாகத் தேடிக் கொண்டிருந்தான். அந்தக் காலத்தில் பெண்கள் கல்வி கற்கும் வழக்கம் இல்லை.
நாங்கள் இருந்தது பஞ்சாபில் ஒரு கண்டோன்மென்ட் நகரம். அங்கே ஒரு பட்டாளத்துக் காண்டிராக்டர் இருந்தான். பெரிய லட்சாதிபதி.. நாங்கள் அங்கு போய்க் சேர்வதற்குச் சிறிது காலம் முன்புதான் அவன் இறந்து போயிருந்தான். அவனுடைய சொத்தை அவனுடைய இரண்டு மனைவிகளும் பகிர்ந்து கொண்டார்கள். இருவருக்கும் குழந்தைகள் இல்லை. மூத்தவள் எப்போதும் பூஜை புனஸ்காரங்களில் ஈடுபட்டிருந்தாள். இளையவளோ கேளிக்கை, விளையாட்டுகளில் பொழுது போக்கினாள். இருவரும் அவரவர் மாளிகைகளில் தனித்தனியே வாழ்ந்து வந்தனர். தனித்தனி வேலைக்காரர்கள், தனிவண்டிகள். அவர்களுடைய கணவனுக்கு "ராஜா" பட்டம் கிடைத்திருந்ததால் அவர்கள் "பெரிய ராணி", "சின்ன ராணி" என்றழைக்கப் பட்டார்கள்.
சின்ன ராணியின் பெயர் சூரஜ்பான். அவள் போன்ற அழகி உலகத்திலேயே இல்லை என்று நாங்கள் கேள்விப்பட்டோம். ஆனால் அவளது நடத்தை அவ்வளவு சரியில்லையாம். அவள் பர்தா வழக்கத்தைக் கடைப்பிடிக்கவில்லை. கிளப்புக்குப் போவாள், வெள்ளைத் துரைகளுடன் நடனமாடுவாள், ஊரிலுள்ள அதிகாரிகளை அழைத்து விருந்து வைப்பாள். அவள் ஒரு சேலையை இரண்டாம் முறை அணிந்து யாரும் பார்த்த தில்லை. அவளிடம் குறைந்தது ஐந்தாறு ஜோடி செருப்புகள் இருக்குமாம். அவள் பாலாடையை உடம்பில் தேய்த்துக்கொண்டு பால் தொட்டியில் குளிப்பாளாம். பின்னர் அந்தப் பால் ஊரில் விற்பனைக்கு வருமாம்.
யாராவது ஒருவனை - அவன் யாராயிருந்தாலும் சரி - அவளுக்குப் பிடித்துவிட்டால் அவனுடைய எல்லா ஆசை களையும் தீர்த்து விடுவாளாம். அவளுக்குப் பணம் தேவையில்லை, பரிசு தேவையில்லை; அவனை அவளுக்குப் பிடித்திருக்கவேண்டம் என்பதுதான் ஒரே நிபந்தனை. ஆனால் அவளுக்கு யாரையும் எளிதில் பிடித்து விடாது. நாங்கள் அந்த ஊருக்கு வந்து சில நாட்களுக்குப் பிறகு எனக்கு சூரஞ்பானிடமிருந்து அவள் நடத்தும் விருந்து ஒன்றுக்கு அழைப்பு வந்தது. அவளுடைய பூங்காவில் விருந்து. மேகர்பானைக் கேட்டால் அவன் தனக்கும் அழைப்பு வந்திருப்பதாகச் சொன்னான். ஆனால் அவன் போகப்போவ தில்லையாம். நான் வேடிக்கையாகச் சொன்னேன், "ஒருவகை மாம்பழம் இருக்கு, அதுக்குப்பேர் 'ராணி பசந்த்', அதாவது 'ராணிக்குப் பிடித்தது..' உனக்கு 'ராணி பசந்த்' ஆக இஷ்ட மில்லையாக்கும்!"
"நான் மாம்பழமில்லே. எனக்குத் தன்மானம் இருக்கு. பலகாலமா ஆண்பிள்ளைதான் தனக்குப் பிடித்த பெண்ணைத் தேர்ந்தெடுத்துக்கிட்டு வந்திருக்கான். தேர்ந்தெடுக்கற உரிமை ஆணுக்குத்தான். இங்கே விஷயம் நேர்மாறாயிருக்கு. சூரஜ்பான் என்னைத் தனக்குப் பிடிச்சிருக்கான்னு பார்க்கணுமா?" பேசும் போதே மேகர்பானின் இரத்தம் கொதித்தது.
"ஏன் சுயம்வர வழக்கம் இல்லியா? அதுவும் ராஜபுத்திரர் களிடம் உண்டே!"
"உண்டுதான். ஆனா, சுயம்வரத்திலே பெண்ணால் தேர்ந் தெடுக்கப்படாதவங்க சண்டைபோட்டு வலுக்கட்டாயமாக அவளைத் தூக்கிட்டுப் போற வழக்கமும் உண்டே..! தவிர, அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? குமரிப்பெண்ணோட சுயம்வரம் எங்கே, நடத்தை கெட்டவளோட காமவேட்டை எங்கே?"
இதற்குப் பிறகு நான் மேகர்பானைத் தொந்தரவு செய்ய வில்லை. நான் தனியாகவே விருந்துக்குப் போனேன். சூரஜ்பான் உண்மையிலேயே பிரமாத அழகிதான்! அவளை எப்படி வருணிப்பேன் நான்! நான் உங்க மாதிரி கவியில்லே. இருண்ட இரவில் வாணவேடிக்கை பார்க்கிறோம். வானத்தை ஒளிமய மாக்கிக் கொண்டு பல நிற நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறு கின்றன. இது வெறும் கந்தகம், வெடியுப்பு போன்ற பொருள்களின் விளையாட்டுதான் என்பதை நாம் கணநேரம் மறந்து மெய் மயங்கிப் போகிறோம். அது மாதிரிதான் இருந்தது. அந்தப் பூங்கா விருந்தில் சூரஜ்பானின் வருகை. அங்கிருந்தவர்கள் கிளர்ந்து சிலிர்த்துக் கொண்டார்கள். கண்ணாடி கிடைத்தால் அவர்கள் அதில் தங்கள் முகங்களைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். தங்களை ராணிக்குப் பிடிக்குமா என்று கவலைப்பட்டிருப்பார்கள்.
அதன்பிறகு அழைப்புக் கிடைத்தபோதெல்லாம் நான் அவளுடைய விருந்துகளுக்குப் போயிருக்கிறேன் - 'ராணி பசந்த்' ஆவதற்காக அல்ல, 'வாண வேடிக்கை' பார்ப்பதற்காக. ஆனால் மேகர்பான் ஒர பிரச்சினையாகி விட்டான். அவனக்கு விருந்து களில் கலந்து கொள்ள இஷ்டமில்லை. ஆனால் போகாமல் ஒதுங்கியிருக்கவும் முடியவில்லை. மாற்றல் வாங்கிக்கொண்டு வேறோரிடத்துக்கு ஓடிப்போகவும் முடியவில்லை. அவனுடைய அகம்பாவம் அவனை ஓடவிடவில்லை. சூரஜ்பானைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலோ அவனை ஒதுங்கியிருக்கவிடவில்லை. கடமையுணர்வு அவனை ஓடிப்போக அனுமதிக்கவில்லை. அவன் உள்ளூறத் துடித்துக் கொண்டிருப்பது எனக்குத் தெரிந்தது.
"நீ லீவு எடுத்துக்கிட்டு ஊருக்குப் போய்க் கலியாணம் பண்ணிக்கிட்டு வா!" என்று நான் அவனிடம் சொன்னேன். அவன் பேசாமல் கேட்டுக் கொண்டான்; பதில் சொல்லவில்லை.
ஒருநாள் சூரஜ்பான் என்னிடம் "மேகர்பான் சிங் உங்க சீநேகிதர்தானே? அவர் ஏன் என் பார்ட்டிக்கெல்லாம் வர்ற தில்லே? நீங்க அவரைக் கூட்டிக்கிட்டு வரக்கூடாதா?" என்று கேட்டாள்.
நான் அவளிடம் உண்மையை எப்படிச் சொல்வது "எப்போதும் உண்மையே பேசவேண்டும்" என்ற உபதேசம் பாடப் புத்தகத்துக்குத்தான் பொருந்தும். ஆகையால் எதையோ சொல்லி மழுப்பினேன்.
பிறகு மேகர்பானிடம் இந்த விஷயத்தைச் சொன்னேன். இதைக்கேட்டு அவன் சஞ்சலமடைந்தான். மகிழ்ச்சியடைவதா அல்லது கோபித்துக் கொள்வதா என்று புரியவில்லை அவனக்கு. அவன் என்னை விட்டுவிட்டுத் தனியே உலவப் போய்விட்டான்.
சூரஜ்பான் அளித்த அடுத்த விருந்துக்கு கேர்பானும் வந்திருந்தான். நான்தான் அவனை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். எனக்குக் கண்ணாடி கிடைத்திருந்தால் அதை மேகர்பானின் முகத்துக்கு நேரே நீட்டியிருப்பேன். ஆனால் கண்ணாடி எதற்கு! சூரஜ்பானின் கண்களேதான் கண்ணாடியாக இருந்தனவே? அவளுடைய அழகிய கருத்த கண்களில் அவன் தன் சிவந்துபோன முகம் பிரதிபலிக்கக் கண்டான்.
ஒன்றிரண்டு கணங்களில் எவ்வளவு பெரிய நிகழ்ச்சியொன்று நடந்துவிட்டது! அதை யாரும் கவனிக்கவில்லை - என்னைத் தவிர.
மேகர்பானைக் கேலி செய்து அவனுக்குக் கோபமூட்ட நினைத்தேன்! ஆனால் துணியவில்லை. அவனுடைய முகத் தோற்றத்தைப் பார்த்துப் பின்வாங்கினேன். அவன் இயந்திரம் போல் தன் கடமைகளைச் செய்தான், நல்ல முறையில் செய்தான். என்னுடன் எப்போதும்போல் பழகவும் செய்தான்; ஆனால் உள்ளூர மாறிக் கொண்டிருந்தான். நானும் வலியப்போய் அவனுடன் பேசுவதில்லை. அவன் ஏதாவது சொன்னால் கேட்டுக் கொள்வேன், அவ்வளவுதான். அவனுடைய உடல் முழுதும் ஒருத்திக்காக ஏங்கிக் கொண்டிருந்தது. அவனுடைய மனமுந்தான். ஆனால் அவன் இந்த உண்மையை ஒப்புக் கொள்ளவில்லை. அவன் பேசியது வேறு. "நான் அவளை வெறுக்கிறேன். அவ ஒழுக்கங் கெட்டவ. அவ ஒரு தேவடியாதானே! பணம் வாங்கிக்காத தேவடியா! எனக்குத் தேவைப்பட்டா நேரடியா ஒரு தேவடியாகிட்டே போவேன். நான் இஷ்டப்பட்டவகிட்டே போவேன். காசு கொடுத்து அவளை அனுபவிப்பேன். நான் ஏன் சூரஜ்பான்கிட்டே போகணும்? நான் அவகிட்டே போனா அவ இஷ்டந்தான் ஜெயிக்கும். அவ விலைகொடுத்து என்னை அனுபவிப்பா. நான் என்ன ராணி பசந்தா?
இந்த மாதிரி ஒவ்வொரு நாளும் என்னிடம் சொல்லிக் கொண்டிருப்பான் மேகர்பான். அவனுள்ளே ஒரு போர் நடந்த கொண்டிருந்தது. அவனுக்கு அமைதியில்லை. சுரஜ்பான் அவன் மனதைக் கவர்ந்தவிட்டாள் என்ற உண்மையை அவன் என்னிடம் ஒப்புக்கொள்ள விரும்பவில்லை. எனக்கு எல்லாம் புரிந்திருந்தது. ஆனால், நான் புரிந்திருப்பதாகக் காட்டிக் கொள்ளவில்லை.
"யாரும் உன்னை அவகிட்டே போகக் கட்டாயப்படுத்தலே.
நீ போகலேன்னா யாரும் ஒண்ணும் நினைச்சுக்கப் போறதில்லே. அவ எல்லாரையும் விருந்துக்கு அழைக்கற மாதிரி உன்னையும் அழைச்சிருக்கா. அவ தனக்கு யாரைப் பிடிச்சிருக்கு, யாரைப் பிடிக்கல்லேன்னு விளம்பரம் பண்றாளா? அதையெல்லாம் ஜாடை மாடையா உணர்த்திடுவா. அவ தனக்குப் பிடிச்ச ஆளை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வரச் சொல்லுவா. அங்கே அவளோட கார் வந்து அவனைக் கூட்டிக்கிட்டுப் போகும். யாரும் அதைக் கவனிக்க மாட்டாங்க. அப்புறம் அவனை இன்னொரு இடத்திலே இறக்கி விட்டுடுவா..." என்று நான் சொன்னேன்.
"மோசக்காரி! முண்டை! ராட்சசி! பிசாசு!" என்றெல்லாம் கெட்ட வார்த்தைகளால் திட்டுவான் அவன்.
"நீ ஏன் இப்படி அசிங்கமாத் திட்டறே அவளை? அவ உனக்கு என்ன கெடுதல் பண்ணினா? நீ ஏன் இவ்வளவு அநாகரீகமா நடந்துக்கறே?" என்று அவனைக் கடிந்து கொள்வேன்.
ஒரு நாள் மேகர்பான் என்னிடம் சொன்னான், "எல்லாம் ஜாடைமாடையா ஏற்பாடாயிடும்னு நீ சொன்னியே. என்ன ஜாடைமாடை? கடையிலே மட்டரகப் புத்தகம் விக்கறாங்களே, அந்தப் புத்தகத்திலே இந்த ஜாடைமாடையெல்லாம் எழுதி யிருக்கு."
"அதைப்பத்தி உனக்கென்ன? நீதான் அவகிட்டே போகப் போறதில்லையே..! இல்லே, போகப்போறியா?"
"நான் போவேனா அந்தத் தேவடியாகிட்டே! அது நடக்காது! என் பேரு மேகர்பான் சிங். நான் சௌஹான் வம்சத்து ராஜபுத்திரனாக்கும்! காலக்கோளாறு, போலீசிலே வேலை பார்க்க வேண்டியதாயிருக்கு. அதுக்காக நான் தாழ்ந்து போவேனா? நீ கூட என்னைப் புரிஞ்சுக்கலியே!"
நான் மௌனமாகக் கேட்டுக் கொண்டேன். அவன் நாளுக்கு நாள் பைத்தியமாகிக் கொண்டிருந்தான். அவனுக்கு உள்ளூற ஏற்பட்டிருந்த ஆசையைத் தீர்த்துக் கொள்வதானால் அவனது கௌரவமும் அழிந்துவிடும். ஆனால் அந்த ஒழுக்கங் கெட்டவளோ அவனைப் பலமாகத் தன்பக்கம் ஈர்க்கிறாள். அவள் விரும்பிய யாரும் அவளிடமிருந்து தப்பியதில்லை; அவள் அவனைக் காந்தம்போல் இழுத்துக் கொண்டுவிடுவாள்.
அவள் என்னை விரும்பவில்லை என்பது என் அதிருஷ்டந் தான். அவள் மேகர்பானுக்கு வசிய மருந்து போட்டு விட்டாள். அதற்கு முன் எனக்கு வசியக் கலையில் நம்பிக்கையில்லை. இப்போது கொஞ்சங் கொஞ்சமாக நம்பிக்கை வந்தது. மேகர்பான் என் விடுதிக்குப் பக்கத்து விடுதியில் வசித்தான். நான் அவனுடைய நடமாட்டங்களைக் கவனிக்கத் தொடங்கினேன்.
அவன் இரவு பத்துமணிக்கு வெளியே போவான். விடியு முன்னர் திரும்பி வருவான். அலங்கோலமாகத் தோற்றமளிப்பான் அவன். பைத்தியக்காரனின் பார்வை. தொடர்போ ஒழுங்கோ இல்லாமல் ஏதேதோ வேசுவான். அவன் பேச்சில் அசிங்கமான திட்டுக்களைத் தவிர வேறெதுவும் புரியாது. கூடைகூடையாய்க் கெட்ட வார்த்தைகள். நாளுக்குநாள் அவை பெருகுவதைக் கவனித்தேன்.
அவன் வீட்டாருக்குத் தகவல் அனுப்பிக் குடும்பத்துப் பெரியவர் யாரையாவது வரவழைக்கத் தொன்றியது எனக்கு. விவகாரம் இன்னும் முற்றிவிடவில்லை. மோசம் நிகழ்ந்து விட வில்லை இன்னும். நல்ல அழகான ஒரு பெண்ணாகப் பார்த்து அவனுக்கு கலியாணம் செய்து வைத்துவிட்டால் ஒரே நாளில் அவனுடைய அசட்டுப் பைத்தியம் தெளிந்துவிடும். அதன் பிறகு சியால்கோட்டிலிருந்து லாகூருக்கோ அமிருதசரசுக்கோ மாற்றலாகிப் போய்விட்டால் சூரஜ்பானின் நினைவு வாண வேடிக்கைபோல் அணைந்து போய்விடும்.
ஆனால் மேகர்பானின் குடும்பத்துக்குச் செய்தியனுப்பத் துணிவு ஏற்படவில்லை எனக்கு. அவன் கோபித்துக் கொள்வானே என்ற பயம். அவன் சாதாரணமாக நிதானமானவன்தான். ஆனால் கோபம் வந்துவிட்டால் கண்மண் தெரியாது அவனுக்கு.
இதன்பிறகு ஒரு நாள் சூரஜ்பான் அளித்த விருந்துக்கு நானும் போனேன், அவனும் போனான். அன்றே எல்லாம் ஜாடை மாடையாக ஏற்பாடாகி விட்டது.
சில நாட்களுக்குப் பிறகு ஒருநாள் நான் அணிவகுப்புக்குப் போக உடையணிந்து கொண்டிருந்தபோது மேகர்பான் அங்கே வந்தான். அவனது உடலுறுப்பு ஒவ்வொன்றிலும் மகிழ்ச்சிக் கிளர்ச்சி. ஆனால் அவன் அதை மறைத்துக் கொண்டு வருத்தக் குரலில் "நான் செத்துப் போயிட்டேன்!" என்றான்.
அவன் என்ன சொல்கிறான் என்று நான் புரிந்து கொண்டாலும் புரியாதவன்போல, "என்ன ஆச்சு?" என்று கேட்டேன்.
"நான் ராணிபசந்த் ஆயிட்டேன்" என்றான் சோகக் குரலில்.
"நீ செய்யறது சரியில்லே. அதுக்கு அடையாளம் நீ இப்போ அணி வகுப்புக்கு மட்டம் போடறதுதான். இப்படிப் பண்ணினா உனக்கு வேலை போயிடும்!" நான் சொன்னேன்.
அவன் பெருமூச்சு விட்டுக்கொண்டு சொன்னான், "எனக்கு வேற வழியிலே. விதி என்னை எங்கேயோ இழுத்துக்கிட்டுப் போகுது.. நீ என் சிநேகிதன், எனக்கு ஒரு யோசனை சொல்லுவியா?"
"என்ன யோசனை?" அவனுக்காக அனுதாபம் ஏற்பட்டது எனக்கு.
"நான் அனுபவிச்சதுக்கு விலை கொடுக்க ஆசைப்படுகிறேன்," ஒடுங்கும் குரலில் சொன்னான் அவன், "விலை கொடுக்கலேன்னா நான் அவளோட அடிமையாயிடுவேன். என் கௌரவம் போயிடும்."
நான் சற்றுச் சிந்தித்துவிட்டுச் சொன்னேன்," அவகிட்டே என்ன இல்லே? உன் பணம் அவளுக்கு எதுக்கு? நீ அம்பது ரூபாய் மதிப்புள்ள பரிசு கொடுத்தா, அவ உனக்கு ஐயாயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசு தருவா."
"நான் அவளுக்கு ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பரிசு தருவேன்!" அழுத்தந் திருத்தமாகப் பதிலளித்தான் மேகர்பான். "ஆனா அவ்வளவு பணம் எங்கே கிடைக்கும். சர்க்கார் கஜானா வைக் கொள்ளையடிக்கட்டுமா?"
கேட்டுத் திடுக்கிட்டேன் நான். உடனே அவன் வீட்டாருக்குக் கடிதம் எழுதினேன் மூடி மறைத்துக் குறிப்பாக விஷயத்தைத் தெரிவித்தேன். அவனை ஜாக்கிரதையாகக் கண்காணிக்கவும் செய்தேன். கிறுக்குத்தனமாக எங்காவது கொள்ளையடித்து விடுவானோ என்ற பயம் எனக்கு.
அவன் அணிவகுப்புக்குப் போவதைத் தவிர்ப்பதற்காக ஒரு சான்றிதழ் வாங்க டாக்டரிடம் போனான். அவனை ஆஸ்பத்திரி யில் சேர்த்துவிடும்படி நான் டாக்டரிடம் சொல்லி வைத்தேன். அவனை ஊருக்கு அழைத்துப் போக அவனுடைய அண்ணன் வந்தார். லீவு கிடைக்காமல் ஊருக்குப் போவது எப்படி? லீவுக்கு மனு செய்தான். லீவு அனுமதிக்கப்படும்வரை காத்திருக்க நேர்ந்தது.
இதற்கிடையில் ஒர விபரீதம் நிகழ்ந்துவிட்டது. ஒரு நாள் காலையில் மேகர்பானைக் காணவில்லை. விசாரித்துப் பார்த்ததில் சூரஜ்பானையும் காணோம் என்று தெரியவந்தது.
ஊரெங்கும் தூற்றுப் பேச்சு. சூரஜ்பானின் பக்தர்கள் வருத்தப்பட்டார்கள் மேகர்பானுக்காக - "பாவம், தற்காலிகமான வெறிக்கு ஆட்பட்டுத் தன் வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டானே மனுஷன்!" என்று ஒரு சிலர் வேடிக்கையாகப் பேசிக் கொண்டார்கள் - "ராஜகுமாரியும் பாதி ராஜ்யமும் கிடைச்சா நாங்களும் ஓடிப்போகத் தயார்..! சூரஜ்பானும் கெட்டிக் காரிதான்! அவளோட காதலன் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவன், நல்ல அழகனுங்கூட!"
எனக்குத் தாங்கமுடியாத வருத்தம். மேகர்பானின் அண்ணன் அழுதுகொண்டே ஊர் திரும்பிச் சென்றபோது அவருக்கு விடையளிக்க நானும் சிறிது தூரம் சென்றேன். "எல்லாம் அதிருஷ்டம்" என்றார் அவர். "ஆமா, எல்லாம் கிஸ்மத்துதான்" என்றேன் நான். நாம் இந்துவானாலும் சரி, முஸ்லீமானாலும் சரி, விதியை நம்புபவர்கள். விதி விதிப்பது நடந்தே தீரும்.
மாதங்கள் கழிந்தன. மேகர்பானைப் பற்றிச் செய்தி எதுவுமில்லை. சூரஜ்பானின் வீடு இருண்டு கிடந்தது. அவள் எங்கிருக்கிறாள் என்று அவளுடைய வேலைக்காரர்களுக்குத் தெரியவில்லை.
ஓராண்டுக்குப்பின் அஜ்மீரிலிருந்து அவனுடைய கடிதம் கிடைத்தது. "அஜ்மீருக்கு யாத்திரையாக வாயேன்!" என்று எழுதியிருந்தான். அவனுக்கு என் யோசனை தேவை என்று உணர்ந்தேன். லீவு எடுத்துக்கொண்டு அஜ்மீர் பொனேன். அவன் என்னைச் சந்தித்துத் தன் இருப்பிடத்துக்குக் கூட்டிக்கொண்டு போனான். அவர்களிருவரும் சந்தோஷமாகக் குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தார்கள்.சூரஜ்பான் குடும்பப்பெண் மாதிரி நடந்து கொண்டாள். என்னிடம் கூட ஓரளவு பர்தா முறையைக் கடைப்பிடித்தாள்.
அவர்கள் சியால்கோட்டிலிருந்து ஓடிவந்த பின் வெவ்வேறு ஊர்களுக்குப் போனார்களாம். அவர்கள் எங்கே போனாலும் அவர்கள் யார்? அவர்கள் புருஷன் பெண்சாதியா? என்ற கேள்வி அவர்களை எதிர் கொண்டது. சுரஜ்பான் "ஆமா" என்று சொல்லி விடுவாள்.ஆனால் மேகர்பான் வாயை மூடிக் கொண் டிருப்பான். அவளைத் தன் மனைவி என்று ஏற்றுக் கொள்ள அவனுக்குத் தயக்கம். அப்படிச் சொல்வது பொய் மட்டுமல்ல; அவனுக்குப் பிடிக்காத விஷயமுங்கூட. ஆனால் அவர்கள் தங்களைக் கண்வன்-மனைவி என்று சொல்லிக் கொள்ளா விட்டால் அவர்களுக்கு வீடு கிடைக்காது, வேலைக்காரன் கிடைக்க மாட்டான், சமூகத்தின் உதவியோ அங்கீகாரமோ கிடைக்காது. வேசிகளின் குடியிருப்பில் போய் வாழ வேண்டி யிருக்கும். இதற்கு இணங்குவாளா சூரஜ்பான்? தன்மானம் மிக்கவள் அவள். அவள் என்ன சாதாரண வேசியா!
ஆனால் அவர்கள் போகுமிடங்களிலெல்லாம் சி்றிது காலத் துக்குப் பிறகு அவர்களைப் பற்றிய உண்மை வெளியாகி விட்டது. அதன் பிறகு அங்குள்ள இளவட்டங்கள் சூரஜ்பானின் இளமையையும் அழகையும் பங்கு போட்டுக் கொள்ள முற்பட் டனர். மனைவியல்லாத ஒருத்தியின் அழகை ஒருவனே அனுப விப்பதை மற்றவர்கள் பொறுத்துக் கொள்வதில்லை. அவர்கள் காதலரிருவரையும் தொந்தரவு செய்யத் தொடங்கினர். போலீசிடம் உதவிக்குப் போய் பயன் இல்லை. போலீசார் கலியாணம் நடந்ததற்கான ருசு கேட்பார்கள் அல்லது பெரிய தொகையை லஞ்சமாகக் கேட்பார்கள். அழகைப் போட்டியின்றி அனுபவிக்க வேண்டுமென்றால் அதைக் கைப்பற்றினால் மட்டும் போதாது. அதன்மேல் சட்டப் பூர்வமான உரிமையும் இருக்க வேண்டும் என்று மேகர்பான் புரிந்து கொண்டான். சூரஜ்பான் தன் மனைவி என்பதற்கான சான்றைக் காட்ட வேண்டும்.
குழம்பித் தவித்தான் அவன். ராஜபுத்திரனான அவன் ஒரு வியாபாரியின் விதவையைக் கலியாணம் செய்து கொள்வதா? அதுவும் நடத்தை கெட்ட சூரஜ்பானை! அவனுக்கு இதயம் வெடித்துவிடும் போலிருந்தது. ஏற்கெனவே அவனுக்குத் தலைகுனிவு ஏற்பட்டுவிட்டது. இனி அவனது மானம் மண்ணோடு மண்ணாகி விடும். தப்பியோடவும் வழியில்லை என்று கண்டான் மேகர்பான். இனி வேலை கிடைக்காது. சொந்த ஊருக்குப் போய் விவசாயம் செய்வதானால் இரண்டு வேளையும் பெரியவர்களின் ஏச்சைக் கேட்டுக் கொள்ள வேண்டும். அவனை யார் கலியாணம் செய்து கொள்வார்கள்? கலியாணம் இல்லாவிட்டால் பெண் துணைக்கு என்ன செய்வது? இந்த வயதிலேயே அவன் சன்னியாசியாக வேண்டுமா?
அவன் எங்கும் ஓடாமலிருப்பதென்றால் ஒன்று, சூரஜ் பானைக் கலியாணம் செய்துகொள்ள வேண்டும், அல்லது அவளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இரண்டு வழிகளுமே பிடிக்கவில்லை மேகர்பானுக்கு. சூரஜ்பானுக்கு இந்த இரண்டுமே பிடித்திருந்ததாக அவனுக்குத் தோன்றியது.
பகிர்ந்துகொள்வதைவிடச் சாவது மேல். ஆகையால் கலியாணந்தான் ஒரேவழி. கலியாணப் பேச்செடுத்தாலே அவனது கண்களில் நீர் பெருகியது. இதயம் தவித்தது. அவனது குலப் பெருமைக்கு இழுக்கு, ஆண்மைக்கு அவமானம்..
இந்த மாதிரி ஒரு கட்டாய நிலை ஏற்படாவிட்டால் அவன் கலியாணம் செய்துகொண்டிருக்கமாட்டான். ஒரு வைசியப் பெண்ணை, அதுவும் நடத்தை கெட்டவளைக் கலியாணம்! பங்கு கேட்பவர்களின் தொல்லை தாங்கமுடியாமல், அவள்மேல் தன் உரிமையை நிலைநாட்டிக் கொள்வதற்காக, அவளைப் போட்டியின்றி அனுபவிப்பதற்காகக் கலியாணம் செய்துகொண்டு விட்டான் கடைசியில். கலியாணமானபின் சூரஜ்பான் பர்தா முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வற்புறுத்தினான். சூரஜ்பான் இதற்குத் தயாராயில்லை இருந்தாலும் கலியாண மானதில் அவளுக்குத் திருப்திதான். ஒரு உயர்ந்த குலத்தைச் சேர்ந்த ராஜபுத்திரனைத் திருமணம் செய்து கொள்வது அவளது சிறு பிராயக் கனவு. அந்தக் கனவு நனவாகியதற்காக அவள் சில தளைகளைப் பொறுத்துக்கொள்ள இணங்கினாள். மனைவியைப் பர்தாவுக்குள் வைத்தபின் சற்றுக் கவலை குறைந்தது மேகர் பானுக்கு. இப்போது அவன் வாழ வழி தேடவேண்டும். அதற்காகப் பஞ்சாபுக்கு வெளியே போகத் தீர்மானித்தான் அவன். அங் கெல்லாம் ஒளிவு மறைவாக வாழ வேண்டிய அவசியமில்லை. உண்மையான முறையில் அவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளலாம்.
அவன் எங்கெங்கோ சுற்றிவிட்டுக் கடைசியில் அஜ்மீர் வந்து சேர்ந்தான். தன் ராணுவ அனுபவத்தைக் காட்டி ரயில் வேயில் ஒரு வேலை தேடிக் கொண்டான். சம்பளம் அதிகமில்லை, இருந்தாலும் சொந்த சம்பாத்தியம்.
இப்போது ஒரு புதிய பிரச்சினை தலையெடுத்தது. இந்த வேலையில் அவன் மாதத்தில் இருபது நாட்கள் வெளியூர்களில் பிரயாணம் செய்ய வேண்டியிருந்தது. போகுமிடமெல்லாம் மனைவியைக் கூட்டிப்போக முடியாது. தனியாக விட்டுவிட்டுப் போகவும் மனமில்லை. இப்பேர்ப்பட்ட விலை மதிப்பற்ற மாணிக் கத்தை வீட்டில் வைத்துவிட்டு அவன் வெளியூரில் இரவுகளைக் கழித்தால் யாராவது வீட்டில் கன்னம் வைத்து விடுவானே! நகை, துணிமணி, பாத்திரம் பண்டம் திருடப்பட்டதாகப் போலீஸ் ரிகார்டில் எழுதப்படும். ஆனால் உண்மையில் திருடு போன பொருளை எழுதி வைக்க முடியாதே! அந்தப் பொருளுக்கு உரிமையுள்ளவன் வெளியூரில் சுற்றிக் கொண்டிருப்பான்.
மேகர்பான் என்ன செய்வான், பாவம்! அவன் வீட்டைக் கவனிப்பானா, வெளி வேலையைக் காப்பாற்றிக் கொள்வானா? சூரஜ்பானுக்கு இந்தப் பிரச்சினை எதுவுமில்லை. அவள் தன் கனவு நனவாகி விட்டதில் திருப்தியடைந்திருப்பதாகத் தோன்றியது. ஆனால் இந்த முடிவையா மேகர்பான் கனவு கண்டான்!
இந்த சமயத்தில்தான் அவன் என்னிடம் யோசனை கேட்க என்னை அஜ்மீருக்கு அழைத்தான்.
அவர்கள் திருமணம் செய்து கொண்ட செய்தி கேட்டு எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. நான் முஸ்லீம். இந்த மாதிரிக் கலியாணத்தில் எனக்கு அருவருப்பு இல்லை. மேகர்பான் கோபித்துக் கொள்வானோ என்று பயந்துதான் நான் முன்னமேயே அவனுக்குக் கலியாண யோசனையைச் சொல்லவில்லை. என் யோசனையைக் கேட்காமலேயே இந்தச் சரியான காரியத்தை அவன் செய்ததில் எனக்குத் திருப்திதான். ஆனால் இனியும் மனைவியைச் சந்தேகிப்பது! இது அசட்டுத் தனம். வாழ்நாள் முழுதும் குடும்பம் நடத்த வேண்டிய மனைவியிடம் இந்த மாதிரி சந்தேகப்படலாமா?
நான் அவனைக் கடிந்து கொண்டபோது அவன், "ஆனா அவ ரொம்ப அழகாச்சே! அவ அவலட்சணமாயிருந்தா சந்தேகப்பட மாட்டேன்.."
மனைவியின் அழகுக்குத்தான் அவன் பயப்படுகிறான் என்று புரிந்தது எனக்கு. இந்த பயம் எப்படித் தெளியும்? அவளுக்கு ஏழெட்டுக் குழந்தைகள் பிறந்தாலா? அல்லது தீராத நோய்வாய்ப் பட்டாலா? அல்லது அவளது இளமை கழிந்த பிறகா?
ஆனால் இவற்றுக்கெல்லாம் நிறைய நேரமிருந்தது. சூரஜ்பான் எங்கள் வயதுதான். அகாலத்தில் கிழமாகும் எண்ணம் அவளுக் கில்லை.
"மனைவி அவலட்சணமாயிருக்கணும்ன ஆசைப்படாதே! உன் ஆசை நிறைவேறினா அப்புறம் கஷ்டப்படப் போறவன் நீதான்!"
அமிலத்தைக் கொட்டி அவளை அவலட்சணமாக்கலாமா என்றுகூட நினைத்தான் அவன்! ஏதோ தற்செயலாக நிகழ்ந்த மாதிரி அமிலத்தைக் கொட்டி விடுவது! நான் திடுக்கிட்டேன். அவனைக் கடுமையாகக் கடிந்து கொண்டேன். "அப்படீன்னா அவளை விவாகரத்து பண்ணிடு, அல்லது அவளை விட்டுட்டுப் போயிடு!" என்றேன்.
அதற்கும் தயாரில்லை அவன். "நான் போலீஸ் வேலையிலே இருந்திருந்தா சம்பளமும் பென்ஷனுமா சில லட்சங்கள் சம்பாதிச்சிருப்பேன். செலவெல்லாம் போக ஒரு லட்ச ரூபாயாவது மிச்சப் படுத்தியிருப்பேன். பார்க்கப்போனா, அந்த ஒரு லட்ச ரூபாயை சீதனமாகக் கொடுத்துத்தான் இவளை கலியாணம் பண்ணிக்கிட்டிருக்கேன், இலவசமா இல்லே. நான் ஏன் விவாகரத்து பண்ணிக்கணும்? விட்டுட்டுப் போகணும்? விதி எங்களை ஒண்ணாப் பிணைச்சிருக்கு."
சட்டென்று எனக்கு ஒரு யோசனை தோன்றியது. "அது சரி, அவ உனக்கு ஒரு லட்ச ரூபாய் தந்தா நீ அவளை விட்டுடுவியா?" என்று கேட்டேன்.
அவன் திடுக்கிட்டான்; சற்ற நேரம் என்னைப் பார்த்து மலங்க மலங்க விழித்தான்; "கேலி செய்யறியா?" என்று கேட்டான்.
"இல்லே, சீரியஸாத்தான் சொல்றேன், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு இது ஒண்ணுதான்!" என்றேன்.
"நீ அவகிட்டே இதைச் சொன்னா, அவ உடனே ஒரு லட்ச ரூபாயை உன்கிட்டே விட்டெறிவா. நான் அவளோட அடிமை யாயிடுவேன் - ராணி பசந்த்!"
சூரஜ்பான் தனக்கு எசமானியாவதை அவன் விரும்ப வில்லை. தானே அவளுக்கு எசமானனாக இருக்க விரும்பினான்.
அத்துடன் அவள் அழகான யுவதியாக இருக்கக் கூடாது, அவலட்சண மனைவியாக இருக்க வேண்டும். அப்படியிருந்தால் அவன் கவலையில்லாமலிருக்கலாம். ஆனால் இவ்வாறு வெளிப் படையாக அவளிடம் சொல்ல முடியாதே!
நான் காஜா சாயபுவின் தர்காவில் பிரார்த்தனை செலுத்திவிட்டு அஜ்மீரிலிருந்து திரும்பினேன். அதற்குச் சில நாட்களுக்குப்பின் திடீரென்று ஒருநாள் சூரஜ்பானின் வீட்டில் விளக்குகள் பிரகாசமாக எரிவதைக் கண்டு வியப்பு ஏற்பட்டது. என்ன விஷயம்..? ராணி திரும்பி வந்து விட்டாள்..! கூட யாராவது வந்திருக்கிறார்களா..? இல்லை, வேறு யாரும் வரவில்லை..
***
கான் பகதூர் தொடர்ந்து கூறினார், "அதுக்கப்புறம் மேகர் பானோடு சந்திப்பு ஏற்படலே. கடிதப் போக்குவரத்தும் இல்லே. நான் பஞ்சாபிலேருந்து வங்காளத்துக்கு மாற்றலாயிட்டேன். இரகசியப் புலன் விசாரணை இலாகாவில் போட்டுவிட்டார்கள். அதிலேருந்து இங்கேயே இருக்கேன். கதை இத்தோட முடிஞ்சது."
"முடிஞ்சு போச்சா?" என் ஆவல் தீரவில்லை. "அப்புறம் என்ன ஆச்சு? சூரஜ்பான் என்ன ஆனா? மேகர்பான் என்ன ஆனார்?" நீராவிப் படகு நீரைக் கிழித்துக் கொண்டு விரைந்தது. நீர்த்துளிகள் எங்கள்மேல் விழுந்தன. சிற்றுண்டி அருந்தி வெகு நேரமாகிவிட்டது. நான் இரவுச் சாப்பாட்டுக்கு ஆர்டர் கொடுத்தேன். இப்போது கான்பகதூர் என் விருந்தினர். "சொல்லக் கஷ்டமாயிருக்குங்க.. மனிதர்களைப் புரிந்து கொள்வதிலேயே காலங் கழிஞ்சிடுச்சு. கிழவனாயிட்டேன். ஆனா அப்போ எனக்கு இவ்வளவு தெரியாது. அதனால்தான் திடுக்கிட்டுப் போயிட்டேன்."
"ஏன், ஏன்?" நான் ஆவலடங்காமல் கேட்டேன்.
"மேகர்பான் நிசமாகவே அவ மூஞ்சியிலே அமிலத்தைக் கொட்டப் பார்த்திருக்கான். ஒரு சில துளிகள் அவளோட கன்னத்திலோ, கழுத்திலோ விழுந்துவிட்டது. அதனாலே அவ இப்போ விருந்து வைக்கறதில்லே, வீட்டைவிட்டு வெளியே வரதில்லே. நல்லவேளை, அதிகக் கேடு ஏற்படலே, அவகிட்ட சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள் இருந்தது. அவ அதையெல்லாம் அப்படியே மேகர்பான்கிட்டே கொடுத்திட்டு ரயில்வே ஸ்டேஷனுக்கு ஓடி வந்தா. நேரே சியால்கோட் வந்து சேர்ந்துட்டா."
நான் அருவருப்பில் காதுகளைப் பொத்திக் கொண்டேன்.
இந்த அக்கிரமத்தைக் கேட்கப் பிடிக்கவில்லை எனக்கு.
மேகர்பானுக்கு நகைகளைப் பத்திரப்படுத்துவதில் கவனம், அவன் எப்படி அவள் பின்னால் ஓடுவான்? எது முக்கியம் - நகையா? அல்லது நாயகியா? நகைதான் அவனுக்கு முக்கியமாகத் தோன்றியிருக்கு.."
சூள்கொட்டினார் கான் பகதூர். அவருடைய அனுதாபம் அந்தப் பெண்ணிடந்தான் என்று தோன்றியது. காதுகளிலிருந்து கைகளைச் சற்று நகர்த்திக் கொண்டேன்.
ஆனால் என் எண்ணம் தவறு.
நன்றாக இருட்டிக் கொண்டு வந்தது. நாங்கள் போக வேண்டிய இடம் வந்து சேர வெகுநேரமாகும். இரவுச் சாப்பாட் டுக்கும் நேரமாகும். கதை முடிந்து போய் விட்டால் சாப்பாட்டு நேரம் வரையில் நாங்கள் என்ன செய்வது?
நான் கைகளைக் காதுகளிலிருந்து எடுத்துக் கொண்டேன்.
கான் பகதூர் சொன்னார்," நடந்த வரையிலே நல்லதுதான். சூரஜ்பான் நல்ல வேளையாகத் தப்பிச்சுட்டா. இது மாதிரி எத்தனையோ பார்த்து விட்டேன். மேகர்பான் அவளைக் கொன்னிருக்கலாமே! அழகிகள் மனம் சபலப் படறது இயற்கை தான். என்னிக்காவது ஒரு நாள் அவளுக்குச் சபலமேற்பட்டா அவன் அவளைக் கொன்று போட்டிருப்பான். அவ பொழைச்சு வந்தது பெரிய காரியம். அமிலம்பட்டு அவ அழகு கொஞ்சம் கெட்டுப் போச்சேன்னா, அது அவளோட பாவங்களுக்கான தண்டனைன்னு வச்சுக்கலாம்."
நான் பதில் சொல்லவில்லை. பாவ தத்துவத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. தவிர, ஒரு பாவிக்கு இன்னொரு பாவி தண்டனை கொடுப்பதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மேகர்பானும் பாவிதானே!
"யோசிச்சுப் பாருங்க!" கான் பகதூர் சொன்னார். "கடைசியிலே அந்தப் பொண்ணுக்கு என்ன பெரிய நஷ்டம் ஏற்படுது, சொல்லுங்க? நஷ்டப்பட்டவன் அவன்தான்! அவனோட நஷ்டத்துக்கு அந்த நகைகள் ஈடாகாது. வேலையிலே இருந்திருந்தா அவன் ஐ.ஜி. ஆகாட்டியும் டி.ஐ.ஜி. ஆகவாவது ஆயிருப்பான். விதி! விதிப்படிதான் எல்லாம் நடக்கும். அந்த ரயில்வே உத்தியோகமும் நிலைக்கலே அவனுக்க. லட்சரூபாய் நகை கிடைச்சதும் அவன் மூளை கெட்டுப் போச்சு. அந்த நகை களை சீதனமாக் கொடுத்து ஒரு கௌரவமான ராஜபுத்திரக் குடும்பத்திலே கலியாணம் பண்ணிக்கிட்டான். அவங்க அவனை இங்கிலீஷ்காரன்கிட்டே வேலை பார்க்க விடலே. அவங்க அவனை ஒரு சுதேச ராஜாவோட ராணுவத்திலே சேர்த்துட்
டாங்க. அந்த வேலையிலே பதவிப் பெருமையைத் தவிர வேற என்ன இருக்குங்க?"
நான் உம்மென்று உட்கார்ந்திருந்தேன். என்ன சொல்வ தென்று தெரியவில்லை எனக்கு.
"இப்போ இந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டரோட நிலை என்ன ஆச்சுன்னு பார்க்கணும். இவன் இன்னொரு ராணி பசந்த். இந்தப் பொண்ணு அபூர்வ அழகியாம். அழகாயிருந்தா நடத்தை கெட்டவளாயிருப்பாங்கறதிலே என்ன ஆச்சரியம்? எவ்வளவுக் கெவ்வளவு கெட்டவளாயிருப்பாளோ அவ்வளவுக்கவ்வளவு அழகியாயிருப்பா."
பெருமூச்சு விட்டார் கான் பகதூர்..
5. காணாமற்போனவன்
மிகவும் மோசமான நாள். குளிர்காலத்தில் மேகங்கள் கவிந் திருக்கும் நாளைப்போல் எரிச்சலூட்டும் நாள் வேறொன்றும் இருக்க முடியாது. மழையும் பெய்யவில்லை, மேகம் மூடிய வானமும் மங்கிய பூமியும் ஜீவனின்றிக் கிடந்தன. திடீரென்று சோமேஷ் அங்கு வந்திராவிட்டால் நான் எப்படித்தான் நண்பகல் நேரத்தைக் கழித்திருப்பேனோ தெரியாது.
ஆனால் அன்று சோமே ஷும் ஏனோ சுரத்தில்லாமல் இருந்தான். செய்திப் பத்திரிகையை ஓரிருமுறை புரட்டிப் பார்த்து விட்டு அவனிடம் அதை எறிந்துவிட்டுச் சொன்னேன், "ஒரு விஷயம் பார்த்தியா?"
"என்ன?"
"இன்னிப் பேப்பர்லே காணாமப் போனவங்களைப் பத்தி ஒரே சமயத்திலே ஏழு விளம்பரங்கள்!" இந்தச் செய்தியில் எவ்வித ஆர்வமும் காட்டவில்லை சோமேஷ். இயந்திரம்போல் சும்மா சிகரெட் புகையை ஊதிக் கொண்டிருந்தான். நிசப்தமான அறையில் புகை சுருள்சுருளாகக் கிளம்பி உயரே போய்க் கொண்டிருந்தது. மற்றபடி எல்லாம் சலனமற்றிருந்தது. வெளியி லிருந்த சோர்வு எங்கள் மனதிலும் தொற்றிக்கொண்டுவிட்டாற் போலிருந்தது.
இந்தச் சோர்வுமிக்க சூழ்நிலையைக் கலைத்து விடுவதற் காகவே நான் பேசத் தொடங்கினேன், இந்தக் 'காணாமற் போன' விளம்பரங்களைப் பார்த்தா எனக்குச் சிரிப்புத்தான் வருது. முக்கால்வாசி கேஸ் என்ன தெரியுமா..? பையன் ராத்திரி சினிமா பார்த்துட்டு ரொம்ப நேரங்கழிச்சு வீடு திரும்புவான். கொஞ்ச நாளா இந்த மாதிரி அடிக்கடி செய்வான். சில சமயம் சாப்பிட உட்காரும் போது அப்பா தன் மனைவியிடம் கேட்டிருப்பார்.
"ஒம்புள்ளெயெக் காணமே! எங்கே போயிருக்கான்?" மனைவி எரிந்து விழுவாள், "சும்மா அனத்தாதீங்க! இந்த மாதிரிப் புள்ளே போயிட்டாலே தேவலாம்!" அப்புறம் பெரிதாக அழுவாள் அவள்.
அப்பா பல்லைக் கடித்துக்கொண்டு பேசினாலும் உள்ளூரத் தன்னிடமுள்ள நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துவார். "அப்படிப் போய்த் தொலைஞ்சா நா பிழைச்சுப் போயிடுவேனே! பாரு, கொஞ்ச நேரத்திலே திரும்பி வந்துடுவான்! இந்த மாதிரி காசு வாங்காமே சாப்பாடு போடற ஓட்டல் வேற எங்கே கிடைக்கும்?"
அம்மா இப்போது அழுதுகொண்டே சொல்வாள், "இந்த நடுக்கற குளிர்லே, ராத்திரியிலே என்ன செய்யறானோ? என்ன பண்ணிடுவானோன்னு பயமாயிருக்கு"
"உம், என்ன பயம்?" அப்பா கேலிப் பேச்சாலேயே அவளுடைய பயத்தை உதறித் தள்ளப் பார்ப்பார். "நம் புள்ளெ ஒண்ணும் பண்ணிடல்லே. யாராவது ஒரு சிநேகிதன் வீட்டிலே மஜாவா இருப்பான். அசௌகரியம் ஏற்பட்டா உடனே வந்து சேர்ந்துடுவான்!"
அம்மாவின் அழுகை ஓயாது. "அவன் எவ்வளவு ரோசக் காரன்னு ஒங்களுக்குத் தெரியுமே!"
எரிச்சலுடன் எழுந்து போய்விடுவார் அப்பா. மாலையில் ஆபிசிலிருந்து திரும்பிவந்து, நிலைமை இன்னும் மோசமாகி விட்டதைப் பார்ப்பார். பையன் வீடு திரும்பவில்லை. அம்மாக்காரி படுத்த படுக்கையாகி விட்டிருப்பாள்.
"என்னை நிம்மதியா இருக்கவிட மாட்டியா! இதைவிட வனவாசம் மேல்!" என்று எரிந்து விழுந்துவிட்டு அப்பா நேரே செய்திப் பத்திரிகை ஆஃபிசுக்குப் போய்விடுவார்.
பத்திரிகை ஆஃபீஸ் என்பது ஒரு சிக்கலான விஷயம். அங்கே எந்த இடத்தில் என்ன இருக்கிறத என்று தெரிந்து கொள்வது மிகவும் கஷ்டம். அப்பா ஒன்றும் புரியாமல் சற்று நேரம் இங்குமங்கும் அலைந்துவிட்டுக் கடைசியில் ஓர் அறையில் நுழைந்து சாதுவாகத் தென்படும் ஒருவரைக் கேட்கத் துணிவு கொள்வார்..- "ஒங்க பேப்பர்லே.. அதாவது.. ஒர் செய்தி வெளியிடணும்.."
அந்த மனிதர் தலையை நிமிர்த்திக் கேலியாகப் பேசுவார் - "செய்தியா? ஏன் நாங்க போடற செய்தியெல்லாம் ஒங்களுக்குப் பிடிக்கல்லியா...? நாங்க இவ்வளவு நாளா ராம நாடகமா பிரசுரிச்சுக்கிட்டிருக்கோம்?"
பையனின் கெஞ்சல் தாங்காமல் அம்மா தான் திருட்டுத் தனமாகச் சேர்த்து வைத்திருக்கும் சிறுவாட்டுப் பணத்திலிருந்த கொஞ்சம் பணம் கொடுத்திருக்கிறாள் அவனுக்க. ஆகையால், பொய் பேசத் துணியாமல் கணவனின் குற்றச்சாட்டைப் பொறுத்துக் கொள்கிறாள்.
அப்பா சொல்லிக் கொண்டு போகிறார்,"இருட்டி இவ்வளவு நேரமாகியும் இன்னும் வர முடியல்லே பெரியவருக்கு! போன தடவைதான் பெரிய தயவு பண்ணிப் பரீட்சையிலே பெயிலானார். இந்தத் தடவையும் என்ன செய்யப்போறார்னு நல்லாப் புரியுது. என் காசெல்லாம் அவருக்கு ஓட்டாஞ் சல்லிதானே! அதனாலே நவாபு இஷ்டம்போல செலவு செய்கிறார்.. விரட்டிவிடப் போறேன். இந்தத் தடவை நிச்சயம் விரட்டி விட்டுடப் போறேன்!"
இந்த ஆர்ப்பாட்டத்தோடு விஷயம் முடிந்திருக்கும். ஆனால் அதே சமயத்தில் அங்கு வந்து சேர்ந்த விட்டான் அருமைப் பிள்ளை!
அப்பா இப்போது சும்மா இருக்க முடியாது. தன் கௌர வத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காவது அவர் ஏதாவது சொல்லத் தான் வேண்டும்.
ஆகவே அவர் கத்துகிறார், "இந்த மாதிரிப் புள்ளெ எனக்கு வேணாம்! நீ வெளியே போ!"
ரோசக்காரப் பிள்ளை அப்பாவின் இந்த ஆணையைக் கடைப்பிடிக்க முற்படுகிறான்.
எந்தப் பக்கம் சமாளிப்பது என்று தெரியாமல் தவிக்கும் அம்மா வேதனையோடு சொல்கிறாள், "சோறு திங்கற சமயத்திலே ஏன் இப்படியெல்லாம் சொல்றீங்க! அப்பறம் சொல்லக்கூடாதா?"
அப்பா தன் மனைவி மேல் எரிந்து விழுகிறார். "நீ செல்லங் கொடுத்தத்தான் இவன் இப்படிக் குட்டிச் சுவராப் போயிட்டான்!"
அம்மா புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொள்கிறாள், பையன் வெளியேறி விடுகிறான்.
மறுநாள் ஒரே களேபரம். அம்மா முதல் நாளிரவிலிருந்து ஒன்றும் சாப்பிடவில்லை. இன்றும் படுக்கையிலிருந்து எழுந்திருக்க மாட்டாள் போலிருக்கிறது. அப்பாவும் இரவு முழுதும் தூங்க வில்லை. ஆனால் இதை ஒப்புக்கொள்ளக் கூச்சமாயிருக்கிறது அவருக்கு.
***
செய்திப் பத்திரிகை ஆஃபீசில் அந்த மனிதரின் கேலிப் பேச்சைக் கேட்டுத் திகைத்துப் போய் இங்குமங்கும் பார்க்கிறார்.
பக்கத்தில் உட்கார்ந்திருந்த மனிதர் பார்ப்பதற்குச் சற்று முரடராகக் காணப்பட்டார். ஆனால் அவர்தான் அனுதாபத் துடன், "பாவம், இவர் ஏதோ கேக்கறார், நீ ஏன் இப்படிப் பேசேறே இவர்கிட்டே...? உக்காருங்க சார்!" என்று சொல்கிறார்.
அப்பா தயக்கத்தோடு ஒர நாற்காலியில் உட்கார்ந்த பின் அந்த மனிதர் கேட்கிறார், "என்ன செய்தி, சொல்லுங்க!"
"செய்தியொண்ணும் இல்லே.. ஒர விளம்பரம்.."
"விளம்பரமா? எந்த மாதிரி விளம்பரம்? எவ்வளவு இடம் வேணும். காப்பி கொண்டு வந்திருக்கீங்களா?"
"இல்லீங்க.. விளம்பரம் இல்லே...பாருங்க, என் பையன் வீட்டிலேருந்து ஓடிப்போயிட்டான்.."
அவர் பேசி முடிப்பதற்குள் அந்த மனிதர், "புரிஞஞசுது, காணாமற்போனகேஸ்தானே..? என்ன விளம்பரம் தரப்போறீங்க? அங்க அடையாள வர்ணனையா, இல்லே, திரும்ப வான்னு வேண்டுகோளா?" என்று கேட்கிறார்.
அப்பாவுக்கு இப்போதுதான் கொஞ்சம் தெளிவு ஏற்படுகிறது. "வேண்டுகோள்தான்.. அவனோட அம்மா அழுதுக்கிட்டே யிருக்கா.."
"புரியுது, புரியுது.. கோவிச்சுக்கிட்டுப் போயிட்டானாக்கும்?" அந்த மனிதர் அப்பாவிடம் ஒரு காகிதத்தைக் கொடுத்து விட்டுச் சொல்கிறார், "எழுதிக் கொடுங்க.."
"எழுதியா?"
அவருடைய குழப்பத்தைக் கண்டு பத்திரிகைக்காரருக்கு அனதாபமேற்படுகிறது. "சரி நாங்களே எழுதிக்கறோம். நீங்க பேரு, விலாசம் மட்டும் எழுதிக் கோடுங்க" என்று சொல்கிறார்.
பெயர் விலாசத்தை எழுதிக் கொடுத்துவிட்டுப் புறப்படும் போது அப்பா வேண்டிக் கொள்கிறார், "கொஞ்சம் நல்லா எழுதுங்க1 இவனோட அம்மா நேத்திலிருந்த ஒரு சொட்டுத் தண்ணி கூடக் குடிக்கலே.."
"அதெல்லாம் நீங்க சொல்லவே வேண்டாம். நாங்க எழுதின விளம்பரத்தைப் படிச்சுட்டு உங்க பையன் அழுது தீர்த்துடப் போறான்.. உங்களுக்குக் கவலையே வேணாம்!"
சற்று மனம் தேறி வீடு திரும்புகிறார் அப்பா.
ஆனால் விளம்பரம் வெளியாகுமுன்னரே வீடு திரும்பி விடுகிறான் பையன். வீட்டில் தங்கிவிட அல்ல, தனக்குத் தேவையான சில புத்தகங்களை எடுத்துக் கொண்டு போகத்தான்.
இப்போது அம்மாவுக்க வந்ததே கோபம்! "போறதுன்னாப் போயிக்கோயேன், குலத்தைக் கெடுக்க வந்த கோடாலிக் காம்பு!
ஒரு பிள்ளையும் அப்பாகிட்டே திட்டு வாங்கறதில்லே! நீதான் ஒரு மகாத்மாவாப் பொறந்துட்டே..! அவர் நேத்து ராத்திரி பூரா இமையை மூடல்லே, தெரியுமா உனக்கு? கவலைப்பட்டுக் கவலைப்பட்டு அவர் மூஞ்சி எப்படி ஆயிருக்குன்னு பார்த்துட்டு வா! கோவிச்சுக்கிட்டுப் போறாராம் பெரிய மனிசர்..!"
அப்பா வீட்டுக்குள் நுழைந்தவாறு மனைவியை அடக்கு கிறார், "ஏன் திட்டிகிட்டிருக்கே? விட்டுத் தள்ளு!"
இப்போது அம்மா பொரிந்து தள்ளுகிறாள்,"நீங்க சும்மா இருங்க! இவ்வளவு செல்லம் ஆகாது! ஏதோ நாலு திட்டுக் கேட்டது பொறுக்கலியாம், வீட்டைவிட்டுப் போயிடுவாராம்! என்ன திமிரு..!"
பெரும்பாலான "காணாமற்போன" விளம்பரங்களின் வரலாறு இதுதான்.." என்ற சொல்லி முடித்தேன் நான். இதற்குள் சோமேஷின் சிகரெட் தீர்ந்துவிட்டது. அவன் இவ்வளவு நேரம் என் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான் என்று தோன்றவில்லை, சற்றே அசையக்கூட இல்லை அவன்.
நான் எரிச்சலடைந்து, "உனக்கு என்ன ஆச்சு, சொல்லு! நான் பேசிக்கிட்டே இருக்கேன், நீ உம்முன்னு உக்காந்திருக்கியே!"
சோமேஷ் பதிலொன்றும் சொல்லாமல் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு தன் கெயிலிருந்த சிகரெட் துண்டை எறிந்தான். பிறகு, "இந்த மாதிரி விளம்பரங்களுக்குப் பின்னாலே பல உண்மையான சோக நிகழ்ச்சிகளும் இருக்கு, தெரியுமா?" என்று சொன்னான்.
"நான் இல்லேன்னு சொல்லலே. சில சமயம் ஓடிப் போனவன் திரும்பி வர்றதில்லே.."
சோமேஷ் சிரித்துக்கொண்டு சொன்னான், "நான் அதைச் சொல்லலே.. திரும்பி வந்ததே ஒரு சோக நிகழ்ச்சியா ஆன கதை ஒண்ணு எனக்குத் தெரியும்.."
"அப்படீன்னா..?"
"கேளு, சொல்றேன்.."
வெளியே மறுபடி மழை தொடங்கி விட்டது. ஜன்னலின் கண்ணாடிக் கதவு வழியே தெருவும் வீடுகளும் மங்கலாகத் தெரிகின்றன. நாங்களிருவரும் உலகத்திலிருந்தே விலகிப்போய் விட்ட மாதிரி ஓர் உணர்வு..
"ரொம்ப வருஷத்துக்கு முன்னால் ஒரு முக்கியமான செய்திப் பத்திரிகையிலே நாள் கணக்கிலே ஒரு விளம்பரம் வந்துக்கிட் டிருந்தத. அது வெறும் விளம்பரமில்லே, ஒரு முழு வரலாறு. அந்த விளம்பரங்களையெல்லாம் வரிசையாப் படிச்சுக்கிட்டு வந்தா ஒரு முழுக்கதை தெரியவரும். அச்சடிச்ச எழுத்திலே காது கொடுத்துக் கேட்டா உண்மையிலேயே வேதனையொலி கேக்கும்.
தொடக்கத்திலே அந்த விளம்பரத்திலே ஒரு தாய் தன் காணாமற் போன பிள்ளையைத் திரும்பி வரச் சொல்லிக் கெஞ்சறா. அதன் மொழியிலே தெளிவில்லே, வேகமில்லே, ஆன் அதுக்குள்ளே தொனித்த தேனையை அதைப் படிச்சவங்கதான் உணர முடியும். அதுக்கப்பறம் வந்த விளம்பரங்களிலே தாயோட அந்த சோக அழைப்பு கொஞ்சங் கொஞ்சமா மறைஞ்சு போச்சு. அப்பறம் வந்த விளம்பரங்களிலே தந்தையோட உணர்ச்சி கரமான -- ஆனால் கூடவே நிதானமான - வேண்டுகோள் "சோபன், திரும்பி வா! உன் அம்மா படுத்த படுக்கையாயிருக்கிறாள். உனக்குக் கொஞ்சமும் கடமையுணர்வு இல்லையா?"
"விளம்பரங்கள் இதன் பிறகும் தொடர்ந்தன. தந்தையின் சோகச் சுமையால் கனத்தாற் போன்ற, தொண்டையில் அடைத்துக் கொண்டாற் போன்ற விளம்பர வாசகங்கள்.. "சோபன், இப்போது, நீ திரும்பி வராவிட்டால் அம்மாவை உயிருடன் பார்க்க முடியாது! "இதிலும் சோபனின் மனம் இளகவில்லை போலும். விளம்பரங்கள் தொடர்ந்தன, ஆனால் தந்தையால் இன்னும் தாக்குப் பிடிக்க முடியாது போலிருந்தது. இப்போது வெளியான விளம்பரங்களில் உருக்கமான கெஞ்சல்.. நம்பிக்கையிழப்பு.. "சோபன், நாங்கள் எப்படி உயிர் வாழ்கிறோம் என்று உனக்குத் தெரியாது, உடனே வா! இனியும் எங்களைத் துன்புறுத்தாதே!"
"விளம்பரங்கள் ஓலங்களாக மாறிவிட்டன. சிறிது காலத் துக்குப்பின் அவற்றின் தன்மை முற்றிலும் மாறியது. ஒரு சாதாரண அறிவிப்பு: "இந்த வயதுள்ள இந்த மாதிரி தோற்றமுள்ள பையனை ஒரு வருடமாகக் காணவில்லை. கண்டுபிடிப்பவர்களுக்குப் பரிசு வழங்கப்படும்."
"பின் வந்த விளம்பரங்களில் பரிசுத்தொகை படிப்படியாக உயர்ந்தது: பதினாறு - பதினேழு வயதுப் பையன் - இரட்டை நாடி உடம்பு. அடையாளம் - வலது காதுக்கருகில் ஒரு பெரிய மச்சம். அவன் உயிரோடிருக்கிரானா இறந்துவிட்டானா என்பதைத் தெரிவித்தால் சன்மானம் அளிக்கப்படும்.."
சோமேஷ் சற்று நேரம் பேசாமலிருந்தான். மழைச்சாரல் பட்டு ஜன்னல் கண்ணாடிகள் முற்றிலும் மங்கலாகி விட்டன. அறைக்குள் குளிரத் தொடங்கி விட்டது. கம்பளியை எடுத்துக் கொண்டால் தேவலை என்று தோன்றியது.
"சரி, இதெல்லாம் விளம்பரம் சொல்ற கதை. நிஜமா என்ன நடந்தது?" என்று கேட்டேன்.
"சோபனை எனக்குத் தெரியும். அவன் ஏதோ ரொம்பக் கோவத்திலே வீட்டை விட்டு ஓடி வந்துட்டான்னு நினைக்காதே.
வீட்டைவிட்டு ஓடிப்போறதுங்கறது அவனுக்கு ரொம்ப சாதாரண விஷயம். ஏதாவதொரு சின்னக் காரணம் இருந்தாப் போதும். உலகத்திலே ஒரு சில பேர் இயற்கையாகவே விட்டேத்தியாக இருக்காங்க. அவங்க உண்மையிலேயே கல்நெஞ்சக்காரங்க இல்லே. அவங்க நெஞ்சிலே எண்ணெய் தடவினாப்பல இருக்கும். எதிலேயும் அவங்களுக்குப் பிடிப்பு, பாசம் இருக்காது. உனக்கு இதைக் கேக்க ஆச்சரியமாயிருக்கலாம் -- விளம்பரங்கள் வந்துக் கிட்டிருக்கறது அவனுக்குத் தெரிஞ்சாலும் அவன் அதையெல்லாம் கவனமாப் படிக்கலே. என்னிக்காவது ஒரு நாள் ஒரு விளம்பரம் அவன் கண்ணிலே பட்டிருக்கும். அவன் அதைப் படிச்சுட்டு அப்பறம் மறந்து போயிட்டான். வீடு வாசலை விட்டுட்டு வெளி யுலகத்திலே காலங்கழிக்கறதுன்னா எவ்வளவு அசௌகரியங்கள் இருக்கும்! அதையெல்லாம் அசௌகரியமாகவே கருதலே அவன். அதிலேதான் அவன் சுதந்திர உணர்வை அனபவிச்சான், மத்தவங்க அவனைப் பத்தி என்ன நினைச்சுக்கிட்டிருந்தாலும் அவன் தன்னை ஒரு சின்னக் குடும்பத்தோட செல்லப்பிள்ளையா நினைச்சுக்கலே.
"ஆனால் திடீர்னு ஒரு நாள் விளம்பரங்கள் நின்னு போன போது அவன் மனசுகூட சஞ்சலப்பட்டது.
விளம்பரங்கள் நின்னு போனதுகூட ஒரு விசித்திரமான விதத்தில்தான். அவை கொஞ்சங் கொஞ்சமாக ஊக்கங் குறைஞ்சு நின்னு போகலே, திடீர்ன ஒரு நாள் ஒரு விபத்தை அறிவிச்சுட்டு விளம்பரம் நின்னு போச்சு; "சோபன், இனி உன்னாலே உன் அம்மாவைப் பார்க்க முடியாது. அவள் இன்னும் உன் பெயரைச் சொல்லிப் புலம்பிக் கொண்டுதானிருக்கிறாள்..." இதுதான் கடைசி விளம்பரம்.
"இதுக்குள்ளே ரெண்டு வருஷம் ஆயிட்டது. திடீர்னு ஒருநாள் சோபன் தன் ஊருக்குப் போனான். அவன் நடந்து கொண்ட மாதிரியிலேருந்து நி அவனோட சுபாவத்தை ஓரளவு புரிஞ்சுக்கலாம். அவன் தான் வர்ற விஷயத்தை முன்கூட்டித் தெரிவிக்கலே. அவன் ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த வனில்லே.பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவன்னு சொன்னாலும் போதாது. பழையகாலத்து ஜமீந்தார் பரம் பரையைச் சேர்ந்தவன் அவன். அந்தக் குடும்பத்துப் பெருமையும் சொத்தும் ரொம்பத் தேய்ஞ்சு போயிருந்தாலும் இன்னும் நிறையவே மிஞ்சியிருந்தது. அது எல்லாத்துக்கும் ஒரே வாரிசு சோபன்தான்.
"இந்த ரெண்டு வருஷ காலத்திலே சோபன் எவ்வளவோ அசௌகரியங்களுக்கு, கஷ்டங்களுக்கு உள்ளாகியிருந்தாலும் அவற்றை அவன் பொருட்படுத்தலே. ஆனால் அவற்றாலே அவன் மேலே பாதிப்பு ஏற்பட்டிருந்தது, வெளித்தோற்றத்திலே ரொம்ப மாறிப் போயிருந்தான் அவன். இருந்தாலும் ஜமீன் சிப்பந்திகள் தன்னை அடையாளம் கண்டு கொள்ள மாட்டார்கள் என்று அவன் நினைக்கவேயில்லை.
அவன் தன் ஊர் போய்ச் சேர்ந்ததும் நேரே தன் மாளிகைக்குள் நுழையப் போனான்.
நாயப் - அதாவது ஜமீனின் நீண்டகால மானேஜர் - அவனை இடைமறித்துக் கேட்டார், "யாரைப் பார்க்கணும்?"
சோபன் சிரித்தவாறே சொன்னான், " வீட்டுக்குள்ள போகணும்.."
நாயப் அவனைச் சற்றுநேரம் உற்றுப் பார்த்துவிட்டுப் புன்சிரிப்புடன் சொன்னார், "ஓ, உள்ளே நுழைய ஏன் இவ்வளவு அவசரம்? கொஞ்சநேரம் வெளியறையிலே இளைப்பாறிட்டுப் போங்களேன்!"
சோபன் ஆச்சரியத்துடன் கேட்டான், "நாயப், உங்களுக் கென்ன வந்தது?"
"எனக்கொண்ணும் ஆகலியே"
"அம்மா சௌக்கியமா இருக்காங்களா?" சோபனின் குரலில் அக்கறை தொனித்தது.
நாயப் முன்போலவே விசித்திரப் புன்னகையுடன், "நல்லாத் தானிருக்காங்க.. வாங்க என்னோடே!"
சோபன், "உள்ளேயே போகலாமே!" என்றான்.
நாயப் சற்றுக் கடுமையான குரலில், "அதெல்லாம் முடியாது! என்னோட வாங்க!" என்றார்.
சோபன் ஒன்றும் புரியாமல் நாயபுடன் வெளியறைக்கு வந்தான். இந்த ரெண்டு வருஷத்திலே அங்கே சில மாறுதல்கள் ஏற்பட்டிருந்தன. அவர்களோட பழைய குமாஸ்தாவைக் காணோம். ரெண்டு புதிய குமாஸ்தாக்கள் கணக்கு எழுதிக் கிட்டிருந்தாங்க. பழைய பொக்கிஷதார் கிழவரே இன்னும் இருந்ததைப் பார்த்துக் கொஞ்சம் தெம்பு வந்தது சோபனுக்கு.
நாயப் அவனை ஒரு நாற்காலியிலே உட்காரச் சொல்லி விட்டுப் பொக்கிஷதார்கிட்டே "இவருக்கு உள்ளே போகணுமாம்!" என்றார்.
நாயபோட குரல் ஒரு மாதிரியாக இருந்தது. பொக்கிஷதார் தன் மூக்குக் கண்ணாடியை விதலாலே மூக்குமேலே தூக்கிவிட்டுக்கொண்டு அவனை உற்றுப் பார்த்துவிட்டு, "இன்னிக்குத்தான் வந்தாராக்கும்!" என்று சொன்னார்.
"ஆமா, இப்பத்தான்!"
சோபன் பொறுமையிழந்துபோய், "நீங்க என்ன சொல்ல விரும்பறீங்க? தெளிவாச் சொல்லுங்களேன்! அம்மாவுக்கு என்னவாவது ஆயிடுச்சா? அப்பா எப்படி இருக்காங்க?"
அங்கிருந்த எல்லாரின் பார்வையும் அவன் மேலே நிலைத் திருந்தது, எல்லாரும் கொஞ்சநேரம் பேசாமலிருந்தாங்க. அப்பறம் நாயப் சொன்னார், "அவங்க நல்லாத்தான் இருக்காங்க, அனா நீங்க அவங்களைப் பார்க்க முடியாது!"
சோபனுக்குக் கோபம் வந்துவிட்டது. "ஏன் பார்க்க முடியாது? உங்களுக்குப் பைத்தியம் பிடிச்சுடுத்தா? நான் உள்ளே போகிறேன்!"
சோபன் எழுந்தான். உடனே நாயபும் எழுந்திருந்து வாசல்பக்கம் போய் அமைதியாகச் சொன்னார், "இதோ பாருங்க, அனாவசியமாத் தகராறு பண்ணாதீங்க. அதனாலே பிரயோசன மில்லே."
அப்போதுதான் சோபனுக்கு ஒரு பயங்கர உண்மை புரிஞ்சது. அவன் ஆச்சரியமும் பயமுமாகக் கேட்டான், "உங்களுக்கு என்னைத் தெரியல்லியா?"
எல்லாரும் மௌனம்.
"நான்தான் சோபன்..நான் சோபன்தான்னு உங்களுக்குத் தெரியலியா?"
நாயப் இப்போது, "நீங்க கொஞ்சம் இருங்க. இதோ வரேன்" என்று சொல்லிவிட்டுப் பக்கத்து அறைக்குப் போனார். அங்கே ஒரு மேஜை டிராயரைத் திறந்து எதையோ எடுத்துக் கொண்டு வந்து அவனிடம் கொடுத்தார். சோபனோட பழைய போட்டோ தான். அது, சாதாரண போட்டோ. கொஞ்சம் பழுப்பேறி மங்கிப் போயிருந்தது.
"இந்தப் பையனைத் தெரியுமா?" என்று கேட்டார்.
சோபன் ஆச்சரியத்துடன் சொன்னான், "இது என் போட்டோதான்..! நீங்களே ஒப்பிட்டுப் பாருங்களேன்! சே, இதைப் பொறுக்க முடியல்லியே!"
அவன் தலைமுடியைக் கையால் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டான்.
நாயப் அவன்கிடடே உட்கார்ந்து கொண்டு சொன்னார், "பாருங்க, நான் சொல்றதுக்கு வரத்தப்படாதீங்க. உங்களுக்கும் இந்த போட்டோவுக்கும் கொஞ்சம் ஒத்துமை இருக்கு, வாஸ்தவந் தான். ஆனா, இதுக்கு முன்னாலே வந்த ரெண்டு பேருக்கும் இந்த மாதிரி போட்டோவோட ஒத்துமை இருந்தது. அவங்க உடம்பிலேயும் மச்சம் இருந்தது. இப்படி வர்றவங்களோட தகராறு செய்யக்கூடாதுன்னு எங்களுக்கு உத்தரவு. அதனாலே நாங்க உங்களை ஒண்ணும் செய்யமாட்டோம். நீங்க இப்பவே இங்கே யிருந்து போயிடுங்க!"
சோபன் திகைத்துப் போய் அங்கிருந்த மற்றவர்களைப் பார்த்தான். அவர்களுடைய பார்வையில் அவனிடம் நம்பிக்கை யின்மை தெரிந்தது.
அவன் கெஞ்சும் குரல்லே சொன்னான், "நீங்க என்னை நம்பமாட்டேங்கறீங்க. என்னை ஒரு தடவை என் அப்பா அம்மாவைப் பார்க்கவிடுங்க.."
சோர்வோடு கையை அசைத்தார் நாயப், "அப்படீன்னாக் கேட்டுக்கங்க. ஏழுநாள் முன்னாலே சோபன் செத்துப் போயிட்டதா எங்களுக்குத் தகவல் கிடைச்சிருக்கு.."
சோபனால் அந்த நிலையிலும் சிரிக்காமலிருக்க முடியல்லே. "எப்படிச் செத்துப் போனான்?" என்று அவன் கேட்டான்.
அவன் குரல்லே ஒலித்த கேலியைப் பொருட்படுத்தாமல் நாயப் பதில் சொன்னார், "ஒரு சாலை விபத்திலே கார் ஏறிச் செத்துப் போயிட்டானாம். விபத்து நடந்த இடத்திலே அவனை யாரும் அடையாளம் காணல்லே. ஆனா அங்கே அந்த சமயத்திலே இருந்த சில பேர் பத்திரிகையிலே எங்க விளம்பரத்தைப் பார்த்து எங்களுக்குத் தகவல் தெரிவிச்சாங்க. ஆஸ்பத்திரியிலேயும் நாங்க விசாரிச்சுத் தெரிஞ்சுகிட்டோம். டாக்டரோட வர்ணனை சோபனோட அங்க அடையாளத்தோடு ஒத்திருக்கு.."
சோபன் இப்போ என்ன செஞ்சிருப்பான்னு சொல்ல முடியாது. ஆனா அந்த சமயத்திலே அவன் தன்னோட அப்பா வீட்டுக்குள்ளேயிருந்து வெளியே வர்றதைப் பார்த்தான். அவன் இலக்கியம் படிச்சவன்தான். இருந்தாலும் ஒரு மனிதனைப் புயலால் முறிந்த ஒரு மரத்தோடு ஒப்பிட முடியும்னு அவனுக்கு அவரைப் பார்க்கறதுக்கு முன்னாலே தோணினதில்லே. அவருக்கு ஏற்பட்டிருந்த சோகத்தோட பாதிப்பு அவரோட நடையில கூடத் தெரிஞ்சுது.
மத்தவங்க ஏதாவது புரிஞ்சுக்கறதுக்குள்ளே சோபன் அறைக்கு வெளியே ஓடினான். மத்தவங்க அவனுக்குப் பின்னாலே ஓடிவந்தாங்க. அதுக்குள்ளே அவன் தன் அப்பாகிட்டே போய்ச் சேர்ந்துட்டான்.
"அப்பா!"
கிழவர் திடுக்கிட்டு நின்றார். அவரது முகத்தில் காணப்பட்ட வேதனைத் திகைப்பு அவனோட நெஞ்சைக் குத்தியது.
"அப்பா, என்னை அடையாளந் தெரியுதா?"
கிழவர் தடுமாற்றத்தோடு இன்னொரு அடிவைத்து விட்டுப் பிறகு மறுபடி நின்றார். அவரோட கிழடு தட்டின முகத்தைத் தீவிர உணர்ச்சி வேகம் மேலும் கெடுத்துவிட்டது.
இதுக்குள்ளே நாயப், குமாஸ்தா எல்லாரும் அங்கே வந்துட்டாங்க.
கிழவனார் நடுங்கற கையைத் தூக்கி, நடுங்கற குரல்லே "யாரு?" ன்னு கேட்டார்.
நாயப் சோபனோட தோள்மேலே கையை அழுத்தமா வச்சிக்கிட்டு, 'ஒருத்தருமில்லே..அந்த தடவை மாதிரி இப்போ மறுபடியும்.. இதோட மூணு தடவை ஆயிடுச்சு" என்றார்.
ஒரு குமாஸ்தா சொன்னான், "நாங்க வரவிடல்லே.. இவன் திமிறிக்கிட்டு ஓடி வந்துட்டான்.."
கிழவர் அவனை இடைமறித்து, "ஒண்ணும் சொல்ல வேணாம், போகவிடு..!"ன்னு சொன்னார். பிறகு சோபனைப் பரிதாபமாகப் பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினார்.
திகைச்சுப்போய் நின்னுக்கிட்டிருந்தான் சோபன். நாயப் அவன்கிட்டே ஏதோ சொன்னார். அவன் அதைக் காதிலே போட்டுக்கலே. அவன் எப்போ வெளிப்பக்கத்து அறைக்கு வந்தான்னு அவனுக்குத் தெரியாது.
கொஞ்ச நேரங்கழிச்சு அவனோட திகைப்பு ஒரு வழியாக் குறைஞ்சது.. வீட்டுக்குள்ளேயிருந்து ஒரு வேலைக்காரன் வந்து நாயப்கிட்டே என்னவோ சொன்னான். நாயப் சோபன்கிட்டே ஏதோ சொன்னார். முதல்லே அவனக்கு ஒண்ணம் புரியல்லே. அப்பறம் புரிஞ்சது.. நாயப் கையிலே ஒர கட்டு கரன்சி நோட்டு. அவர் குரல்லே கெஞ்சல். சோபனிடம் ஏதோ உதவி கேக்கறார்..
"நீங்க ஒரு உதவி பண்ணணும்.. ராணியம்மா சாகக் கிடக் கறாங்க, பிள்ளை செத்துப்போன செய்தி தெரியாது அவருக்கு. எப்படியும் பிள்ளையைப் பார்க்கலாம் என்கிற நம்பிக்கையிலே உசிரை வச்சிக்கிட்டு இருக்காங்க. நீங்க அவங்களோட காணாமல் போன பிள்ளை மாதிரி அவங்களுக்கு முன்னாலே போய் நில்லுங்க. இப்போ இருக்கிற நிலையிலே அவங்களுக்கு நிசம், போலி எதுவும் கண்டுபிடிக்க முடியாது. நிசமாகவே உங்களுக்கும் காணாமல் போன பிள்ளைக்கும் நிறைய ஒத்துமை இருக்கு. சாகப்போறவங்களுக்கு இந்த ஆறுதலையாவது கொடுக்கும்படி ராஜாபகதூர் உங்களைக் கேட்டுக்கறார். இதனாலே உங்களுக்க ஒரு நஷ்டமுமில்லே.." இதைச் சொல்லிட்ட நாயப் அவன் கையிலே நோட்டுக் கட்டைத் திணிச்சார்.
சோமேஷ் மௌனமானான், சிறிதுநேரம் வரை வெளியே மழை பெய்யும் அரவம் தவிர வேறு ஒலி இல்லை.
நான் கடைசியில் சொன்னேன், "சோமேஷ், உன் காதுக்குப் பக்கத்திலே ஒரு மச்சம் இருக்கே!"
சோமேஷ் சிரித்துக் கொண்டு சொன்னான், "அதனால்தான் கதை கட்டறது சுலபமாயிருந்தது."
ஆனால் ஏனோ தெரியவில்லை.. அந்தக் குளிர்காலத்தின் மேகம் கவிந்த, இயற்கைக்கு மாறாக இருட்டிப் போய்விட்ட பிற்பகல் நேரத்தில் அவனுடைய சிரிப்புப் பேச்சை நம்பத் தோன்றவில்லை எனக்கு...
(க்வசித் கக்கனோ, 1962)
6. சரிவு
அவளுடைய மார்பிலிருந்து அதைப் பலவந்தமாகப் பிடுங்கி எடுத்துக் கொண்டுபோக வேண்டியிருந்தது பர்சாதிக்கு. அதைக் கொண்டு போய் ஆற்றில் எறிய வேண்டுமே! இந்த மாதிரி இறந்து போனவற்றைப் புதைக்கக் கூடாது, தண்ணீரில் எறிந்துவிட வேண்டும்.
வீட்டுக்குள் இருக்கும்வரை பர்சாதி அழவில்லை. மன்சனியா பார்த்து விடுவாளோ என்ற பயத்தில், கண்ணோரத்தில் நீர் சேரும்போது முகத்தைத் திருப்பிக் கண்ணீரைத் தடைத்துக் கொண்டான். இவ்வளவு நேரத்தில் ஒரு தடவைகூட மன்சனியாவின் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை. அவனுடைய கண்களைச் சந்தித்தால் அவளுக்க வெட்கமாயிருக்கும். இந்த மாதிரி சமயங்களில் யாரையும் நேருக்கு நேர் பார்க்க முடியுமா? ஏற்கெனவே சோகத்தாலும் வெட்கத்தாலும் செத்துக் கொண்டிருக் கிறாள் மன்சனியா. அவளுடைய துக்கச் சுமையை அதிக மாக்கலாமா..? பர்சாதி வீட்டுக்கு வெளியே வந்த பிறகு அழுதான்.
மன்சனியாவுக்குக் குழந்தை பிறக்காது என்றுதான் இதுவரை எல்லாரும் நினைத்திருந்தார்கள். எவ்வளவு மருந்து, மாயம், மந்திரம் தந்திரம், தாயத்து, பிரார்த்தனை செய்தாகிவிட்டது! சாகும் தருவாயில் வாயில் தண்ணீர் ஊற்ற ஒர பிள்ளை வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தானிருக்காது..? கடைசியில் கடவுள் கண் திறந்த பார்த்து விட்டார் என்று தெரிந்த பிறகு அவன் பொறுமையின்றி நாட்களை எண்ணிக் கொண்டிருந்தான். மன்சனியாவுக்காக என்ன செய்வது என்று தெரியவில்லை அவனுக்கு. கேள்விகளால் துளைத்தெடுத்தான் அவளை - என்ன சாப்பிடப் பிடிக்கும்? பிள்ளையா, பெண்ணா? குழந்தை யார் மாதிரி இருக்கும்? வயித்துக்குள்ளே அசையுதா? மண் திங்கணும் போல் இருக்கா? இன்னும் எவ்வளவோ சிந்தனைகள்.. சாமார் ஸியுடன் குசுகுசுப் பேச்சுக்கள், தெருவிலுள்ளவர்கள் அவன் செய்யும் ஆர்ப்பாட்டத்தைக் கண்டு கேலியாகப் பேசிக் கொண்டார்கள்.
...அதன் பிறகு புதனோடு புதன் பதினாலு நாள், வியாழன், வெள்ளி, சனி -- இந்தப் பதினேழு நாட்கள் அவன் சுவர்க்கம் தன் கைக்கு வந்துவிட்ட மாதிரி மகிழ்ச்சியாயிருந்தான். பதினேழு நாட்களுக்குப்பின் கடவுள் தன் சொத்தை தன்னிடமே அழைத்துக் கொண்டுவிட்டார். மனிதனால் என்ன செய்யமுடியும்? எவ்வளவு பேரின் குழந்தைகள் எவ்வளவு விதமாகச் சாகின்றன...! வெல்லம் கொதிக்கிற அண்டாவிலே விழுந்து குழந்தை செத்ததாகக் கேள்விப் பட்டிருக்கிறான், கொதிக்கிற பாலுக்குள்ளே குழந்தை விழுந்து சாகறதைப் பார்த்திருக்கிறான்... ஆனால் இந்த மாதிரிச் சாவு..! ஐயோ, ஒரு சின்ன இரத்தப் பிண்டம்...! நீலம் பாரிச்சுப் போயிட்டது. மூச்சுவிடத் திணறி, மூச்சுவிட அது பண்ணின முயற்சியிலே அதன் இரு கண்களும் பெரிதாகி உடம்பைவிட்டு வெடித்து வந்துவிடும்போல... ஐயோ, என்ன பரிதாபம்!
சப்பிக் கொண்டிருந்திருக்கும்.. பயம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வதற்குமுன், ஆபத்து என்ன என்று புரிந்து கொள்ளுமுன், தாயின் நெஞ்சு திடீரென்று கீழே சரிந்து வந்தது. கீழே இருட்டு, அந்த இருட்டில் கடைசி ஓலங்கூட வெளிப்பட இயலவில்லை...
வெகுநேரம் கழித்துத்தான் விஷயம் தெரிந்தது மன்சனியா வுக்கு. எவ்வளவு நேரமாகியிருந்ததோ யார் கண்டார்கள்...! அந்த இடத்தில் ஏன் இவ்வளவு குளிர்ச்சி? சில சமயம் அப்படி ஆகி விடுகிறது. தூக்கக் கலக்கத்தில் கம்பளியை நன்றாக மேலே இழுத்துப் போர்த்திக் கொண்டபோதுகூட அவளுக்கு இன்னொரு ஜீவனைப் பற்றிய ஞாபகம் வரவில்லை. அவள் இயற்கையாகவே தூக்கத்துக்கு அடிமை... இருந்தாலும் அந்த இடத்திலே ஏன் இவ்வளவு சில்லுன்னு இருக்கு..! காளி கோவில் மணி அடிக்கிறது, விடிவதற்கு அதிக நேரமில்லை. அவள் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தாள்... துணி நனைந்தால்கூடக் கம்பளிக்குக் கீழே இவ்வளவு குளிர்ச்சியாயிருக்காதே..! இது ஏதோ ஒரு மாதிரியா.. அவளது நெஞ்சு நடுங்கியது. விளக்கை ஏற்ற நான்கு தீக்குச்சிகள் தேவைப்பட்டன. விளக்குத் திரியைத் தூண்டிவிட்டுப் படுக்கைப் பக்கம் பார்த்தவுடன் மனதிலிருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் அணைந்து போய்விட்டது. அவள் போட்ட கூச்சலில் பர்சாதி விழித்துக்கொண்டு எழுந்தான்.
உயிர் நீங்கிவிட்ட சடலத்திலே மறுபடி சூடு எப்படி வரும்! ஒன்றும் பலிக்கவில்லை, அந்தப் பதினேழு நாள் வயதான மாமிசப் பிண்டத்தை நெஞ்சோடு சேர்த்துப் பிசையப் பயப்பட வில்லை மன்சனியா. அவளது நெஞ்சு கண்ணீரிலேயே மிதந்தது.
மன்சனியாவின் கிறட்டு நாய் பர்சாதியோடு கொஞ்ச தூரம் போய்விட்டுத் திரும்பி வந்து அவளருகில் உட்கார்ந்தது. அவளது நாய் நல்ல கறுப்பு. அதனால் அதன் பெயர் காரியா. அது அவளுடைய நீர் ததும்பும் கண்களையும், விரிந்து கிடந்த தலைமுடியையும் பார்த்துக் கொண்டிருந்தது. அது வெகு காலமாக இந்தக் குடும்பத்துடன் இருப்பதால் குடும்பத்தில் ஒருவன் போல் அதற்கு எல்லாம் புரியும்.
"த்விராகமனு"க்குப் புக்ககம் வரும்போது காரியாவைப் பிறந்தகத்திலிருந்து கூட்டி வந்தாம் மன்சனியா. (திருமணத்துக்குப் பின் மணப்பெண் இரண்டாம் முறையாகப் பிறந்தகத்திலிருந்து புக்ககம் வரும் நிகழ்ச்சிக்கு "த்விராகமன்" என்று பெயர்). உண்மையில் அவள் கூட்டி வரவில்லை, அதுவாகவே வந்து விட்டது! அது என்ன இன்றைய நேற்றைய நிகழ்ச்சியா! அவளது நான்காம் வயதில் அவளுக்குக் கலியாணம். அதற்குப் பதினைந்து வருடங்களுக்குப் பிறகு த்விராகமன். பர்சாதி அதற்காகப் பணம் சேர்த்து வைத்துக் கொண்டு மாமனாருக்குப் பல தடவை செய்தியனுப்பி விட்டான். மாமனார் அவனை லட்சியம் செய்ய வில்லை, தாமதம் செய்து கொண்டே இருந்தார். ஊர்க்காரர்கள், பலவிதமாகப் பேசிக் கொண்டார்கள். அப்போது மன்சானியா அவளுடைய கிராமத்தில் தாசில்தார் வீட்டில் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளும் ஆயாவாக வேலை பார்த்து வந்தாள்.
"அப்ன்காரன் பொண்ணு மூலம் சம்பாதிச்சுச் சாப்பிட்டுக் கிட்டிருக்கான். பொண்ணுக்கு வருமானம் அவளோட சம்பளம் மட்டும் இல்லே" என்றெல்லாம் ஜனங்கள் பேசிக்கொண்டார்கள். இதையெல்லாம் கேட்டு இரத்தம் கொதித்தது பர்சாதிக்கு. இளவயதின் சூடு, சேர்த்த வைத்திருந்த பணத்தின் சூடு, அவன் எண்ணெய் தடவப்பட்ட தடியை எடுத்துக்கொண்டு மாமனா ரிடம் போனான். அவனோடு அடிதடி, சண்டை போட்டுத் தன் உரிமையான பெண்சாதியைக் கூட்டிக்கொண்ட வந்தான். கிராமத்து எல்லையில் ஆமணக்கு வயலுக்கருகில் அவர்களுடைய மாட்டுவண்டி வந்து கொண்டிருந்தபோதுதான் கறுப்பு நாய் வண்டிக்குப் பின்னால் வந்து கொண்டிருப்பதை அவன் கவனித்தான்.
"இது யாரோட நாய்?" இதுதான் மன்சனியாவோடு பர்சாதியின் முதல் பேச்சு.
"என்னதுதான்," பயந்துகொண்டே சொன்னாள் மன்சனியா.
"ஒன்னுதா?"
மன்சனியா பருமன்தான். ஆனால் அவளுக்குக் கணவனிடம் பயம். கறாரான ஆள் அவன். அவளுடைய அப்பனோடு சண்டை போட்டுவிட்டு அவளைக் கூட்டிப் போகிறான். ஆகையால் கொஞ்சம் தயங்கிவிட்டுக் கேட்கிறாள், "இதை வண்டியிலே ஏத்திக்கட்டுமா?"
"ஒன்னோட இருக்குமா?"
"இருக்கும்"
வண்டி போய்க்கொண்டிருக்கும்போதே அவள் குனிந்து நாயைத் தூக்கிக் கொள்ள முயற்சிப்பதைப் பார்த்துப் பர்சாதி, "என்ன செய்யறே நீ! நீ அவ்வளவு குனிய முடியுமா..இன்னும் கொஞ்சம் முன்பக்கமா நகர்ந்து உக்காந்துக்க!"
புடைவையைச் சரிப்படுத்திக்கொண்டு மன்சனியா நாயை வண்டிக்குள் ஏற்றிக்கொண்டாள். அதன்மூலம் தான் பருமனா யிருந்தாலும் வேலைக்கு லாயக்கில்லாதவளல்ல என்பதை அவனுக்குப் புலப்படுத்தினாள். யாராவது அவளுடைய பருமனைப் பற்றிக் கேலி செய்தால் அவள் குறுகிப்போய் புடைவைத் துணியால் உடம்பை மூடிக்கொள்ள முயற்சி செய்வாள். அவளுடைய இந்த வழக்கத்தை முதல்நாளே கவனித் திருந்தான் பர்சாதி.
"எவ்வளவு கனமான சுமையைத் தூக்கிக்கிட்டு நடக்க முடியும் ஒன்னாலே"
"ஒரு மணு சுமப்பேன் நிச்சயமா!" என்று சொல்லி மன்சனியா ஒரு மணு கனமான கூடையைத் தூக்கிக் கொண்டு நின்றாள். ஆனால் அவள் கஷ்டப்படுவது தெளிவாகத் தெரிந்தது. அதுமுதல் பர்சாதி ஜாக்கிரதையாகி விட்டான். "ஹர்தாச் சந்தை நம்ம கிராமத்திலேருந்து ஆறு மைல் தூரம். அங்கே நாம காய்கறி வாங்கிட்டுப் பட்டணத்துக்குக் கொண்டுபோய் விப்போம்" என்று அவன் மன்சானியாவிடம் சொன்னான்.
இதுதான் பர்சாதியுடன் மன்சானியாவின் முதல் உரை யாடல்...அவளுடைய நாயைப் பற்றி, அவளுடைய பருமனான உடம்பைப் பற்றிய உரையாடல். அவன் என்னதான் சந்தையைப் பற்றி, காய்கறிகளைப் பற்றிப் பேசினாலும் தன் பேச்சின் மூலம் எதைக் குறிப்பிடுகிறான் என்று மன்சானியாவுக்குப் புரிந்தது.
இதோடு விஷயம் முடியவில்லை. அவர்கள் வண்டியில் சற்றுதூரம் போனபிறகு தாசில்தாரின் சிப்பாய்கள் இருவரைச் சந்தித்தார்கள். அவர்கள் பர்சாதிக்காகக் காத்திருந்தார்கள். அவர் களுடைய எஜமான் பர்சாதியை உதைக்கும்படி அவர்களுக்கு உத்தரவிட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் அவனை அதிகம் துன்புறுத்தவில்லை. தங்கள் எஜமானைப் பற்றி கெடுதலாகப் பேசியதற்காக அவனைத் திட்டிவிட்டுக் கடைசியில் அவனைக் கேலி செய்தார்கள், "நீ ரெண்டு கறுப்பு நாய்களைக் கூட்டிக்கிட்டுப் போறே. எங்க கிராமமே இருட்டாயிடுச்சு.. ஆனாப் பாரு, அந்த தடிக்குட்டி ஒல்லி குட்டியைவிட நெறையாச் சாப்பிடுமாக்கும்!" இவ்வாறு சொல்லிவிட்ட இருவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
இதெல்லாம் நடந்தது பத்து வருடங்களுக்கு மன்னால். அதுமுதல் நாய் இங்கேயே இருக்கிறது. அதுமுதல் அந்தக் கிராமத்து ஜனங்களுக்கு மன்சனியாவின் நினைவு வரும் போதெல்லாம் கூடவே அந்த நாயின் நினைவும் வரும். மன்சனியா கிணற்றடிக்கோ, ஹர்தாச் சந்தைக்கோ, வேறொருவர் வீட்டுக்கோ எங்கே போனாலும் அவள் பின்னாலேயே நாயும் வந்துவிடும். சிறு பையன்கள் நோஞ்சல் காரியாவையும் கொழுத்த மன்சனியா வையும் சேர்த்துப் பேசிக் கேலி செய்வார்கள். சிறுவர்கள் ஏன்தான் இவ்வளவு ஈவிரக்கமற்றவர்களாக இருக்கிறார்களோ தெரியவில்லை.
மன்சனியா காயகறிக் கூடையைச் சுமந்து கொண்டு வியர்க்க விறுவிறுக்கத் தெருவில் வந்தால் சிறுவர்கள் கோலி விளையாடுவதை நிறுத்திக்கொண்ட ஒருவருக்கொருவர் கண்களால் ஜாடை செய்து கொள்வார்கள். ஒருவன் ராகம் போட்டு "மன்சனியா" என்று கத்துவான். இன்னொருவன் அதே ராகத்தில் "தத்தக்கா பித்தக்கா" என்பான். காரியா வாலை மடக்கிக் கொண்டுவிடும். மன்சனியா அருகில் வந்ததும் அந்த சிறுவர்களில் மிகவும் போக்கிரிகளான இருவர் அவளுக்கு இருபுறமும் நின்று கொள்வார்கள்; அவளுடைய நடையைக் கேலி செய்தவாறு நடந்து கொண்டே "தத்தக்கா பித்தக்கா.. தத்தக்கா பித்தக்கா.." என்று கத்துவார்கள்.
அவமானமாயிருக்கும் மன்சனியாவுக்கு. வாயடி அடிக்க அவளுக்கும் தெரியும். வேறு ஏதாவது காரணத்துக்காக அவர்கள் அவளைக் கேலி செய்தால் அவளும் பதிலடி கொடுக்காமலிருக்க மாட்டாள். அவள் கத்தித் திட்டத் தொடங்கினால் சிறுவர்கள் ஓட வேண்டியதுதான். ஆனால் அவர்கள் அவளுடைய பொதுக்கை உடம்பையல்லவா கேலி செய்கிறார்கள்! அவள் அசட்டுச் சிரிப்புணசிரிப்பாள். அவளது இரு கைகளும் கூடையைப் பிடித்துக் கொண்டிருப்பதால் மேல் துணியால் உடம்பை நன்றாகப் போர்த்திக் கொள்ளவும் வழியில்லை.
சிறுவர்களின் கேலிப்பேச்சிலிருந் விடுதலை பெற்ற பிறகு காரியா கொஞ்சதூரம் போய் வாலை நிமிர்த்திக் கொள்ளும். பிறக அவர்களிருக்கும் பக்கம் திரும்பி இரண்டு தடவை "வாள், வாள்!" என்று குரைக்கும். எண்ணி இரண்டே தடவைதான். பிறகு தனக்கு மிகவும் பரிச்சயமான மன்சனியாவின் வாசனையை மோப்பம் பிடித்தக் கொண்டு வழி நடக்கத் தொடங்கும்.
மன்சனியாவின் இந்தக் கூச்சம் கடந்த சில மாதங்களாகச் சிறிது குறைந்திருந்தது. புதிதாக ஏதோ ஒன்று நிகழப் போகும் தருவாயில் உலகமே புதிதாகத் தோன்றும், பெரும் சுமையும் லேசாகத் தெரியும்; பொருத்தமில்லாத பொருளும் பொருத்தமாக ஆகிவிடும், மனமும் உரம் பெறும். தன் உடம்பின் அழகின்மை யிலும் ஓர் அர்த்தத்தைக் கண்டாள் அவள்..
ஆனால் இதுவும் சிறிது காலத்துக்குத்தான்! அவளுடைய பதினேழு நாள் ராஜத்துவம் முடிந்து போய்விட்டது. அவள் தன் எந்த உடலுறுப்பைக் குறித்து வெகுகாலமாகக் கூச்சப்பட்டுக் கொண்டிருந்தாளோ, எந்தச் சுமை காரணமாக அவள் மற்றவர் களுக்கு மன்னால் கூனிக் குறுகிக் கொண்டிருந்தாளோ, அந்த உறுப்பே இவ்வளவு காலத்துக்குப் பிறகு அவளுக்குப் பெருங்கொடுமை இழைத்து விட்டது!
சத்துரு..! சத்துரு!
மன்சனியா காலகளைப் பரப்பிக் கொண்டு வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருக்கிறாள். கிழட்டு நாய் அவளுடைய காலை நக்கிக் கொண்டிருக்கிறது. அதன் கண்ணோரத்தில் இருப்பது நீர்த்துளியா பீளையா என்று தெரியவில்லை. மன்சனியா அறியாமலேயே அவளது கை காரியாவின் நெஞ்சை, முதுகைத் தடவத் தொடங்குகிறது. அவளுடைய விரல்ளின் இடைவெளி களில் சொரசொரப்பான முதுகு ரோமம். மார்பின் ரோமம் இதைவிட மிருது. துருத்திக் கொண்டிருக்கும் எலும்புகளில் கைபடுகிறது. அவள் நாயின் வற்றிக் கிடந்த மடியை விரல்களால் தடவிக்கொண்டே அதை நன்றாகக் கவனித்தாள். மடிக்காம்புகள் மச்சங்கள்போல் சின்னஞ் சிறிதாக இருக்கின்றன. நன்றாக உற்றுப் பார்க்காவிட்டால் கறுப்பு ரோமத்துக்குள் அவை இருப்பதே கண்ணுக்குத் தெரியாது. அதன் காதிலுள்ள உண்ணிகளை விடச் சிறியவை அவை. நாய் கிறடாகிவிட்டதால் கடந்த ஓராண்டாக அது குட்டிபோடுவது நின்று போய்விட்டது.
காரியா ஒரு தடவை மன்சனியாவின் முகத்தைப் பார்க்கிறது, இன்னொரு தடவை தலையைச் சாய்த்து அவளுடைய விரல்களைப் பார்க்கிறது. அவளைப் புரிந்து கொள்ள முயல்கிறது. அவளுடைய முகத் தோற்றத்தைப் பார்த்தால் அவள் தன்னைச் செல்லங் கொஞ்சுவதாகவும் தெரியவில்லை. அவள் மடிக்காம்புகளைத் தடவும்போது அதற்குக் குறுகுறுப்பு ஏற்படுகிறது.
துக்கம் ஏற்படுவது இருக்கட்டும்; இந்த மாதிரி வயிற்றுக் குழந்தை இறந்துபோவதில் உள்ள அவமானத்தை வார்த்தைகளால் விளக்க இயலாது. பொதுக் கிணற்றங்கரையில் எல்லாரும் அவளைப் பற்றித்தான் பேசுகிறார்கள். என்னென்னவோ பேசுகிறார்கள். வீட்டை விட்டு வெளியே வரத் துணிவு வரவில்லை அவளுக்கு. அப்படியாவது நிம்மதி உண்டா! தெருவாசிகள் அவளுக்கு ஆறுதல் சொல்ல வருகிறார்கள். ஆறுதலாவது மண்ணாவது.. எல்லாம் புரிகிறது அவளுக்கு. யாராவது அவளுடன் பேசவந்தால் அவள் போர்வையை நன்றாகப் போர்த்திக்கொண்டு பாயில் படுத்துக்கிடப்பாள். வந்தவள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டே போகட்டும், அவள் பதில் பேசமாட்டாள். பர்சாதி வீட்டிலிருந்தால் அவன் அக்கம் பக்கத்தார் மன்சனியாவைத் தொந்தரவு செய்யாமல் பார்த்துக் கொள்வான். மன்சனியாவைத் தேற்றவந்த ஒரு கிழவி அவளுடைய ஆழ்ந்து தூங்கும் வழக்கத்தைக் குறிப்பிட்ட போது பர்சாதி கிழவியை அதட்டி பேசாதிருக்கச் சொன்னான்.
காரியா எப்போதும் மன்சனியாவின் பாய்க்கருகில் உட்கார்ந்திருக்கும். பரிச்சயமானவர்கள் அங்கு வந்தால்கூட அது இரண்டுமுறை குரைத்துத் தன் எரிச்சலை வெளிப்படுத்தும்.
மன்சனியா பேசிய ஒரு பேச்சிலிருந்து அவளது மனநிலையை சரியாக ஊகித்தறிந்து கொண்டான் பர்சாதி. அவள் தரையைப் பார்த்தவாறு, மிகவும் தயக்கத்துடன், பொதுக்கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டுவரும்படி அவனிடம் சொன்னாள்.
"குடி தண்ணியா?"
அவளிடமிருந்து பதிலில்லை.
குளிக்கத் தண்ணியா?" அவளுடைய கண்களில் நீர் வந்து விட்டது. எந்தப் பெண்ணாவது தன் கணவனைப் பொதுக்கிணற்றி லிருந்து குளிப்பதற்குத் தண்ணீர் கொண்டு வரச் சொல்வாளா? ஏற்கெனவே அவள் பருமன். குளிக்காமலிருக்க முடியாது அவளால். இப்போது உடம்பில் கெட்டுப்போன பாலின் நாற்றம் வேறு. அவளுக்கே அருவருப்பாயிருக்கிறது. அதனால்தான் அவள் வெட்கத்தைவிட்டு அவனைக் குளிப்பதற்குத் தண்ணீர் கொண்டு வரச் சொன்னாள். மற்ற பெண்கள் கூடியிருக்கும் கிணற்றடிக்குப் போய்த் தண்ணீர் எடுத்து வருவது இன்னும் வெட்கக்கேடு.
அவள் மண்பானையைப் பர்சாதியிடம் கொண்டுவந்து கொடுத்தாள். அவன் அதை எடுத்துக்கொண்டு தண்ணீரெடுக்கப் போனான். ஓர் ஆண்பிள்ளை பொதுக்கிணற்றிலிருந்து பானையில் தண்ணீர் எடுத்து வருவதைப் பார்த்துத் தெருவாசிகள் என்ன சொல்வார்களோ!
மன்சானியாவின் நினைவை எப்போதும் வேறு விஷயங்களில் ஈடுபடுத்தி வைக்க முயற்சி செய்யவேண்டும் என்பது பர்சாதிக்கு இயற்கையாகவே புரிந்திருந்தது. தோட்டம் நிறையக் காய்கறிச் செடிகள், மன்சனியா தன் கையால் விதைத்து வளர்த்தவை. அவற்றைக் கவனித்துக் கொண்டாலும் அவளுக்குச் சற்று ஆறுதலா யிருக்கும். ஆனால் அதை எங்கே செய்கிறாள்! இரவும் பகலும் வர்ந்தாவில் உட்கார்ந்துகொண்டு என்னதான் சிந்திப்பாளோ, யாருக்குத் தெரியும்! அவன் சந்தைக்குக் காய்கறிகள் கொண்டு போவதற்காக அதிகாலையில் எழுந்திருந்து அவரைப் பந்தலி லிருந்து காய்களைப் பறிப்பது வழக்கம். ஆனால் இந்த மூன்று நாட்களாக அவரைக்காய் பறிக்கக் கூட மறந்துவிட்டாள் அவள்.
நேரங்கிடைக்கும் போதெல்லாம் அவன் அவளுடன் பேசி அவளது கவனத்தைத் திருப்ப முநற்சி செய்தான். ஆனால் பேச்சைத் தொடங்கிச் சிறிது நேரத்திலேயே பேச விஷயம் இல்லாமற் போய்விடுகிறது அவனுக்கு. போய்விட்ட ஜீவனைப் பற்றிப் பேசத் தோன்றுகிறது. ஆனால் அதைப் பற்றிப் பேசக் கூடாதே! அவன் வேறு ஏதாவதைப் பற்றிப் பேச முற்பட்டாலும் அவனறியாமல் பேச்சு தடைப்படுகிறது.
காய்கறிகளின் விலைவாசியைப் பற்றிப் பேச்சைத் தொடங்குவதுதான் அவர்களுடைய நெடுங்கால வழக்கம், பர்சாதி அவரைக்காய் விலையைப் பற்றிப் பேசத் தொடங்குவான், "இப்போ அவரைக் காய்க்கு நல்ல விலை. ஆனா ஒரு மாசங் கழிச்சுக் காயெல்லாம் நாய்க்காது மாதிரி முத்திப் போயிடும். அப்பறம் யா வாங்குவாங்க அதை? சாத்புதியா அவரையிலே தான் நல்ல காசு. நல்லாக் காய்க்கும். ஒவ்வொரு கொத்திலேயும் ஏழு அவரைக்காய் இருக்கும். நம்ம தோட்டத்து அவரைக்கொடி தசராவுக்கு முன்னாலேயே காய்க்கத் தொடங்கிடுச்சு. நான் உனக்கு கக்ரியா ஹாட் தசராத் திருவிழாவிலேருந்து தயிர்வடை வாங்கிக்கிட்டு வந்தேனே ஞாபகமிருக்கா..?"
பேசிக்கொண்டே போனவன் சட்டென் மௌனமாகி விடுகிறான். இந்தப் பேச்சை எடுத்திருக்கக் கூடாது. அப்போது மன்சனியா பிள்ளைத் தாய்ச்சி. அவள் தயிர்வடை சாப்பிட ஆசைப்பட்டாள்.
"பருவமில்லாத காலத்திலே விளையற காய்கறியிலேதான் நிறைய லாபம். அவரைக்கொடி போன வருசத்துக் கொடிங் கறதாலதான் இந்த வருசம் இவ்வளவு சீக்கிரம் காய்க்க ஆரம்பிச் சுட்டது. போன வருசம் அதுலே காய்ப்பு நின்னதும் நீதான் அதைப் பிடுங்கியெறியணும்னு சொன்னே. என் பேச்சைக் கேட்டுத்தான் சித்திரை மாசத்திலேருந்து அதுக்குத் தண்ணி ஊத்த ஆரம்பிச்சே. நான் சொன்னேனா இல்லையா?"
பேசிக் கொண்டிருக்கும்போது மன்சனியாவின் முகம் என்னவோ மாதிரி ஆவதைக் கண்டு அவன் பேச்சை நிறுத்தினான்.
"சொரக் கொடியோட வீரியத்தைப் பார்திதியா? கூரை பூராப் படந்திருக்கு. தண்டு கட்டைவிரலை விடப் பருமனா யிருக்கு. நீ தினம் அதோட வேரிலே வடிச்ச கஞ்சிய ஊத்திறியே, அதனால்தான் அதுக்கு இந்த செழிப்பு. ஆனா தண்டு இவ்வளவு தடித்தடியா வளர்ந்தா நல்லாக் காய்க்குமா? தண்டை வெட்டி விக்கறதுதான் லாபம் பாரேன், பிஞ்சு வைக்குது, வெம்பிக் கீழே விழுந்துடுது.."
சீ, என்ன அசட்டுத்தனமாகப் ேபுசிவிட்டான் அவன்! அவளுடைய முகம் சட்டென்று இருண்டு போய்விட்டதே!
மேலும் பேசத் தோன்றவில்லை பர்சாதிக்கு. அவன் எழுந்து விட்டான். இவ்வளவு ஜாக்கிரதையாக எவ்வளவு நேரந்தான் பேசமுடியும்?
துணி தைக்க உட்கார்ந்தால் அவள் கவனம் சற்றுத் திரும்பலாம். ஆகையால் பர்சாதி காய்கறி விற்றுவிட்டுத் திரும்பும் போது அவளுக்காகச் கொஞ்சம் சட்டைத்துணி வாங்கி வந்தான்.
துணியைப் பார்த்துவிட்டு மன்சனியா, "இந்தத் துணி யெல்லாம் நனைச்சப்பறம் ரொம்பச் சுருங்கிப் போயிடுமே" என்றாள். "அவ்வளவு இறுக்கமா ஏன் சட்டை தச்சுக்கறே? கொஞ்சம் தொளதொளன்னு தச்சுக்கோயேன்."
அவன் யோசித்துப் பேசவில்லை. இருந்தாலும் மன்சனியா பார்வையைக் கீழே தாழ்த்திக் கொண்டாள். அவளுடன் நிறையப் பேசிக்கொண்டிருக்க வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டு வந்திருந்தான் அவன். ஆனால் இப்போது மனைவியின் கூச்சத்தைப் பார்த்து அவனது திட்டம் தேய்ந்து போய்விட்டது.
அவன் முயற்சி செய்வதில் குறை வைக்கவில்லை. மறு நாள் ஒரு நாய்க்குட்டியைக் கொண்டுவந்தான். ரொம்பச் சின்னக்குட்டி இப்போதுதான் கண் திறந்திருக்கிறது.
"இதை எதுக்குக் கொண்டு வந்திருக்கே?"
"காரியா கெழடாயிடுச்சு, எப்போ செத்துப் போகுமோ தெரியாது, இப்போலேருந்தே ஒரு புது நாய் வளக்கறது நல்லது.. வழியிலே குளிர்லே கெடந்து கத்திக்கிட்டிருந்தது, தூக்கிக்கிட்டு வந்தேன்.
அன்று மன்சனியா வேலை செய்ய வெளியே கிளம்பத் தயார் செய்து கொண்டிருந்தாள். எவ்வளவ நாள்தான் வீட்டுக்குள் அடைந்து கிடப்பது! அவர்களது நிலையில் உள்ளவர்கள் சும்மா வீட்டில் உட்கார்ந்திருந்தால் நடக்குமா? இதற்கிடையில் கணவன் ஒரு நாய்க்குட்டியை கொண்டு வந்து விட்டான்!
சங்கடந்தான்! இவ்வளவு நாள் ஒவ்வொரு வருஷமும் காரியா நிறையக் குட்டிகள் போட்டுக் கொண்டிருந்த காலத்தில் நாய்க்குட்டி வளர்க்கத் தோன்றவில்லை அவனுக்க. எவ்வளவோ குட்டிகளை நரி தின்றுவிட்டது, எவ்வளவோ குட்டிகளை அக்கம் பக்கத்துப் பையன்கள் எடுத்துக்கொண்டு போனார்கள். என்ன தான் சாப்பிட்டு மிஞ்சியதைக் கொடத்தாலும் நாய் வளர்ப்பதிலும் ஒரு செலவு இருக்கத்தானே செய்கிறது! சாப்பிட்டு மிஞ்சியதை மட்டும் கொடுத்தால் நாய்க்குட்டி நன்றாக வளருமா? அது எப்போது பார்த்தாலும் ஒரு வீட்டு எச்சில் இலையிலிருந்து இன்னொரு வீட்டு எச்சிலிலைக்கு ஓடிக் கொண்டேயிருக்கும்.
ஆனால் கணவனே கொண்டு வந்திருக்கும்போது இதை வைத்து வளர்க்கத்தான் வேண்டும்.
மன்சனியா கூடையைக் கீழே வைத்துவிட்டு நாய்க் குட்டியைக் கையில் வாங்கிக் கொண்டாள். அவளுக்கு வீட்டை விட்டு வெளியே போகக் கூச்சமாயிருந்தது. இப்போது நாய்க்குட்டி வந்ததில் அவளுக்கொரு லாபம். வீட்டுக்கு வெளியே போவதை இன்னும் ஒரு வேளை ஒத்திப்போட சாக்குக் கிடைத்தது அவளுக்கு.
ரொம்பச் சின்னக்குட்டி புஸ்புஸ் என்று சப்தம் செய்து கொண்டு மூக்கை நீட்டி மோப்பம் பிடிக்கிறது. அவளுடைய ஆடைக்குள் முகத்தைப் புதைத்துக் கொள்கிறது. செக்கச் சிவந்த நாக்கு நுனியால் அவளுடைய உள்ளங்கை, விரல்கள், கையை நக்கிப் பார்க்கிறது. அவளுடைய உடலின் மணம் அதற்குப் பிடித் திருக்கிறது. தாய்ப்பாலின் மணம் அதற்குப் பரிச்சயமானதுதான். அது இழந்துவிட்டிருந்த அந்த மணம் இப்போது அதற்கு மறுபடியும் கிடைத்துவிட்டது. இந்த மணத்தை மோப்பம் பிடித்துத்தான் தன்னால் பாலின் ஊற்றைக் கண்டுபிடிக்க முடியும் என்பத அதற்கு இயற்கையாகவே புரிந்திருந்தது.
"ஐயோ அப்பா! கொஞ்சநேரங்கூட சும்மா விட மாட்டேங்கறே..! சும்மா உக்காரு இங்க!" அவள் நாய்க்குட்டியை மடியிலிருந்து இறக்கித் தன் பக்கத்தில் உட்கார வைத்தாள்.
காரியாவின் தொண்டையிலிருந்து "கர்ர்ர்.." என்ற உறுமல் வெளிப்பட்டது. புதிய விருந்தாளியின் நடவடிக்கைகள் அதற்குப் பிடிக்கவில்லை. விஷயம் எவ்வளவு தூரம் போகிறது என்பதைக் கவனித்துக் கொண்டிருக்கிறது அது. அது ஒருமுறை நாய்க் குட்டியை நெருங்கி அதை முகர்ந்து பார்த்தது. முகர்ந்ததில் அதற்கு என்ன புரிந்ததோ! அது சோம்பல் முறித்தவாறு வராந்தா விலிருந்து கீழிறங்கி வாசலில் உட்கார்ந்துகொண்டு தூங்கி வழியத் தொடங்கியது. நாய்க்குட்டியிடம் அதற்குச் சிறிதும் அக்கறை ஏற்படவில்லை.
நாய்க்குட்டியின் மிருதுவான ரோமத்தை மன்சனியாவின் கைகள் அளைந்தன. அப்படி அளைவதில் பட்டைத் தடவுவது போன்ற சுகம் ஏற்பட்டது. அப்படி அளையும்போது அவளுடம்பில் ஒருவகைச் சிலிர்ப்பு ஏற்படுகிறது. அந்தச் சிலிர்ப்புக் கூட இதமாகத்தானிருக்கிறது. ஒரு மிருதுவான உடலின் கதகதப்பைத் தன் விரல் நுனிகளில் உணர்ந்து சற்றுத் தன்னை மறந்துவிடுகிறாள் அவள்.
தினம் அவளுடைய பாலைப் பீய்ச்சிப் பீய்ச்சி வெளியே கொட்ட வேண்டியிருந்தது. அவள் ஒரு தகர டப்பாவின் மூடியில் பாலைப் பீய்ச்சி வைத்து அதை நாய்க்குட்டிக்கு முன்னால் வைக்கிறாள். அது சர்சர் என்று உறிஞ்சி அதைக் குடிக்கிறது. அந்த சர்சர் ஒலிகூட இனிமையாக இருக்கிறது. அவள் கண்கொட்டாமல் நாய்க்குட்டியைப் பார்க்கிறாள்.
வாசலில் காரியாவின் அலட்சியம் மறைந்துவிட்டது. அது காதுகளை விறைத்துக்கொண்டு அந்த ஒலியைக் கேட்டு, வராந்தாவுக்கு ஓடிவந்து டப்பா மூடிக்கு அருகில் நின்றது.
"நீ ஏன் இங்கே வந்தே! போ வெளியே!" மன்சனியா அதட்டினாள்.
மறுபடி உறுமல் காரியாவிடமிருந்து.
"நீ சாப்பிடற சாமானா இது? சும்மா கோவிச்சுக்கிட்டா போல ஆச்சா? ஒரு சின்னக் கொழந்தையோட என்ன கோபதாபம்? வெக்கமாயில்லே? ஓடிப்போ!"
"கர்ர்ர்.." அதாவது இந்த ஏற்பாடு காரியாவுக்குப் பிடிக்க வில்லை. ஆனால் எசமானியின் உத்திரவையும் மீற முடியாதே..!
மன்சனியா வீட்டு வேலையை முடித்துக்கொண்டு, கூடையைத் தலையில் வைத்துக்கொண்டு வெளியே வந்தாள். வழக்கம்போல் காரியாவும் சோம்பல் முறித்துக்கொண்டு எழுந்து வந்து நின்றது.
"நீ எதுக்கு எழுந்திருந்தே? இன்னிக்கு நீ என்கூட வர வேண்டாம்! இங்கேயே இரு..! சொன்னாக் கேக்கறதில்லே! போ, போ, உள்ளே!"
அவள் காரியாவை உள்ளே தள்ளிவிட்டு படலை சாத்திக் கொண்டு போய்விட்டாள். பாவமாகக் குரைத்து ஊரைக் கூட்டியது காரியா.
அவள் எதற்காக வீட்டுக்கு வெளியே வரக் கூச்சப் பட்டாளோ அதுவே நடந்துவிட்டது. கேலி செய்ய விஷயம் கிடைத்துவிட்டால் சிறுவர்களுக்கு உண்மையில் தயை தாட்சணியம் இருப்பதில்லை. இன்றும் மன்சனியா வருவதைக் கண்டு அவர்களுடைய கோலி விளையாட்டு நின்று போய் விட்டது.. பொதுக்கைக் காய்கறிக்காரி இன்னிக்கு ஏன் தனியா வந்திருக்கா? அந்த நோஞ்சான் நாய் ஏன் வரல்லே..?
இன்று அவர்கள் அவளைக் கேலி செய்து பாட்டுப்பாடி அவளைப்போல் நடந்து காட்டவில்லை, அவர்கள் தங்களுக்குள் பூதனை ராட்சசியின் கதையைச் சொல்லிக் கொண்டார்கள்.. அவள் காதில் விழும்படி. அவள் எப்படியோ அவர்களிடமிருந்து தப்பியோடினாள்.
இதன்பின் அவள் காய்கறி விற்கச்சென்ற இடங்களி லெல்லாம் வீட்டுப் பெண்கள் அவள் வீட்டில் நடந்த விபத்து பற்றித் துருவித் துருவிக் கேட்டார்கள். போலீஸ் கூட அவளை சந்தேகிக்கவில்லை. இவர்கள் அவள்மேல் சந்தேகப்படுகிறார்கள் என்று தோன்றியது இவர்களுடைய கேள்விகளிலிருந்து. அவள் அதிருஷ்டம் அப்படி! இல்லாவிட்டால் குழந்தைகளைப் பெற்ற வர்கள் இப்படியெல்லாம் அவளைக் கேள்வி கேட்பார்களா..?
இன்னும் கொஞ்சநாட்கள் அவள் வீட்டுக்கு வீடு போய்க் காய்கறி விற்கவேண்டாம் என்று பர்சாதி அவளிடம் சொல்லி யிருந்தான். கடைத்தெருவில் உட்கார்ந்துகொண்டு காய்கறி விற்கச் சொன்னான். அவன் சொன்னது சரிதான். அவள்தான் அவனைப் புரிந்து கொள்ளவில்லை. வீட்டுக்கு வீடு போய் விற்பதென்றால் அவளுக்குச் சிரமம் என்பதற்காகத்தான் அவன் அப்படிச் சொல்கிறான் என்று அவள் நினைத்துவிட்டாள்..
இதன்பின் அவள் வீடு வீடாகப் போகாமல் கடைத்தைருவில் உட்கார்ந்து காய்கறி விற்கத் தொடங்கினாள்.
அவளும் பர்சாதியும் ஒன்றாகத் திரும்பினார்கள். அவர்கள் வீட்டுப் படலைத் திறந்தபோது காரியா வழக்கம்போல் வாலை ஆட்டிக்கொண்டு அவர்களை வரவேற்க வரவில்லை. வீட்டுக்குள் எந்த வித அரவமுமில்லை. என்ன விஷயம்? விளக்கேற்றிப் பார்த்தார்கள் -- காரியா கால்களைப் பரத்திக்கொண்டு படுத்திருக்க, நாய்க்குட்டி அதன் உலர்ந்த மடிக் காம்புகளைச் சூப்பிக் கொண்டிருந்தது. நடுநடுவே ஒரு காம்பை விட்டு இன்னொரு காம்பை வாயால் கவ்விச் சப்பியது நாய்க்குட்டி. மன்சனியா அதனருகில் போய் அதைக் கையில் எடுத்துக் கொண்டதும் காரியா உடலைச் சிலிர்த்துக் கொண்டு எழுந்து நின்றது. "நீ சொன்னதுக்காக ரொம்ப நேரம் இதைப் பார்த்துக்கிட்டு இருந்தாச்சு, இப்போ ஒன் பொறுப்பை நீ ஏத்துக்க.. ஒரே பக்கமாப் படுத்துக்கிட்டு இருந்ததிலே உடம்பெல்லாம் மரத்துப் போச்சு!" என்று சொல்வதுபோல.. பிறகு காரியா மண்ணை முகர்ந்துகொண்டே வெளியே போய்விட்டது.
"இந்தக் குட்டிக்கு ஒரு பேர் வைக்கணும்.. இதைப் "பச்சா" (குழந்தை)ன்னு கூப்பிடலாமா?" மன்சனியா சொன்னாள்.
"பச்சா நல்ல பேருதான்."
"பச்சா! ஏ பச்சா! திருதிருன்னு முழிக்கிறதைப் பாரு! வெரலை நக்காதே! முட்டாள்! அதையா சப்பறது! பசிக்குதா? ஆமா, பசிக்கத்தானே செய்யும்! ரொம்ப நேரமாச்சே! பால் கடிக்கற கொழந்தைகளுக்கு மணிக்கு மணி பசிக்கும்.. வா வா!"
"குட்டி 'குயின் குயின்'னு கத்தறதே, பசிச்சா அப்படித்தான் நாய்க்குட்டி கத்தும்."
"பசிக்கறபோது மட்டுமில்லே, வேறே சமயத்திலும் அப்படிக் கத்தும்.." குறும்பாகச் சிரித்தாள் மன்சனியா. அவள் அந்தக் குறும்புச் சிரிப்பு சிரிக்காவிட்டால் அவன் அவளது குறிப்பைப் புரிந்து கொண்டிருக்கமாட்டான்.
ஐந்து நாட்களுக்குப்பிறகு இன்றுதான் முதல் தடவையாகச் சிரிக்கிறாள் மன்சனியா.
"அதெல்லாம் ஒனக்குத்தான் தெரியும். சின்ன வயசிலேருந்தே நாய் வளர்த்தவளாச்சே!"
மறுநாள் முழுவதும் காரியா சோம்பலாகப் படுத்திருக்க, பச்சா அதனுடைய மடியைச் சப்பிக் கொண்டிருந்தது. மன்சனியா கூடையை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பிய போது காரியா அவளோடு வரவில்லை. அவள் அதை இருக்கச் சொல்லவில்லை. அது தானாகவே தங்கி விட்டது.
அவள் கடைத்தெருவிலிருந்து திரும்பியபோது காரியா முன்பிருந்த நிலையிலேயே படுத்துக் கிடந்தது, நாய்க்குட்டி அதன் மடியைச் சப்பிக் கொண்டிருந்தது. ஆனால் இப்போது மடிக்காம்புகள் மச்சம் மாதிரி சிறிதாக இருக்கவில்லை, சற்றுப் பெருத்திருந்தன. மடியும் சிறிது உப்பியிருந்தது. அதில் சிறிது ஊதா நிறம் படிந்திருந்தது. ஏதாவது சிராய்ப்பு ஏற்பட்டிருக்கிறதோ? பச்சா சும்மா சப்புவதோடு நிற்பதில்லையே, பிறாண்டிக் கடித்து இம்சை செய்கிறதே..!
மன்சனியா காரியாவின் மடியைத் தொட்டுப் பார்த்தாள். இல்லை, சிராய்ப்பு இல்லை. மடியிலிருந்த ஊதா நரம்புகள் புடைத்துக் கொண்டிருந்தன. தோலில் ஒரு வழவழப்பு. மன்சனியா தன்னைச் சோதித்துப் பார்ப்பது காரியாவுக்குப் பிடிக்கவில்லை.. 'ஆ'ன்னு பார்க்கறதுக்கு இதிலே என்ன இருக்கு? இதெல்லாம் முன்னால பார்த்ததே இல்லியா..?
மன்சனியா டப்பா மூடியைக் கையிலெடுத்துக் கொண்டு வராந்தாவிலிருந்து, "பச்சா, பச்சா! துத் துத்து.. வா இங்கே!" என்று அழைத்தாள்.
அவள் எதற்குக் கூப்பிடுகிறாள் என்பது பச்சாவுக்குத் தெரியும். அது எழுந்து அவளிடம் வந்தது. அவளுடைய மேல் துணியைப் பிறாண்டியது. அவள்மேல் ஏறப் பார்த்தது.
"இரு, இரு! பொறுக்கல்லியாக்கும்..! காரியாகிட்டே போ! புது அம்மாவைப் பிடிச்சிருக்கியே, போ, அவளப் போய்ச் சப்பு..! என்ன ஏன் மோந்து பாக்கறே."
இது இனிமே என்ன பிரயோசனம்..! செத்துப் போய்விட்ட ஜீவனின் நினைவு வருகிறது அவளுக்கு. அதை மறக்க முடியுமா?
முற்றத்தில் படுத்திருக்கும் காரியா தலையை நிமிர்த்தி அவளைக் கவனிக்கிறது. இப்போது அதன் கண்ணில் பீளை இல்லை. அது மன்சனியாவின் பேச்சை, அங்க அசைவுகளைக் கவனமாகப் பார்க்கிறது. அவள் டப்பா மூடியைக் கையிலெடுத்துக் கொள்ளும்போது அதன் காதுகள் விறைத்துக் கொள்கின்றன. பச்சாவிடமிருந்து விடுதலை கிடைத்ததும் அது வெளியே போய் ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்திருக்கவேண்டும். அப்படிச் செய்யாமல் அது வாலைச் சுருட்டிக்கொண்டு பச்சா திரும்பி வருவதற்காகக் காத்திருக்கிறது..
பச்சா, டப்பா மூடியிலிருந்த பால் முழுவதையும் நக்கிய பிறகும் ஏன் இன்னும் 'குயின், குயின்' என்று கத்திக்கொண்டு நிற்கிறது? ஏன் அங்கே கிடக்கும் பிரிமணையை முகர்ந்து பார்க்கிறது?
"ஆச்சா இல்லியா?"
மன்சனியாவின் இந்தக் குரல் கொஞ்சல் அல்ல, இதில் ஆபத்து இருக்கிறதென்பது காரியாவுக்குத் தெரியும். காரியா வராந்தாவில் சட்டென்று ஏறிப் பச்சாவை வாயில் கவ்விக் கொண்டு கீழே வருகிறது.. வா, ஒன்னிடத்துக்கு வா! வந்து ஒன்னிஷ்டப்படி செய்..!
காரியா தன் பழைய இடத்துக்குப் பச்சாவைக் கொண்டு வந்து அதன் கழுத்தை இதமாக நக்கிக் கொடுக்கிறது. பிறகு கால் களைப் பரப்பிக் கொண்டு படுத்துக் கொள்கிறது.. இனி என்ன செய்யவேண்டுமென்று பச்சாவுக்கு யாரும் சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை.
மன்சனியா மூங்கில் தூணில் சாய்ந்தவாறு ஆச்சரியத்துடன் இதைப் பார்க்கிறாள்.. கிழட்டுக் காரியாவுக்கு இன்னும் ஆசை தீரவில்லை போலும்..!
ஈ, பச்சாவைத் தொந்திரவு செய்கிறது. காரியா தன் உடலை அசைக்காமல் தலையை மாத்திரம் ஆட்டியாட்டி ஈயை விரட்டப் பார்க்கிறது.. உடலை அசைத்தால் மடியைச் சூப்பும் பச்சாவுக்கு இடைஞ்சல், தவிரக் காரியாவின் சொந்த சுகத்துக்கும் இடையூறு..
கிழட்டு நாயின் மடி உப்பியிருப்பதைப் பர்சாதி கவனித் திருப்பானோ? அதை அவனுக்குக் காட்ட அவளுக்கு ஆசைதான், இருந்தாலும் கூச்சம்.
பர்சாதியும் இதைக் கவனித்திருக்கிறான். ஆனால் இதைப்போய் மன்சனியாவிடம் எப்படிச் சொல்வது..?
அன்றிரவு மன்சனியாவுக்கு அடிக்கடி உறக்கம் கலைந்தது. இரவு முழுவதும் அக்கம் பக்கத்தில் நரி இருப்பதை மோப்பம் பிடித்துக் குரைத்துக் கொண்டிருந்தது காரியா. காலையில் எழுந்தபோது காரியாவையும் பச்சாவையும் முற்றத்தில் காண வில்லை. எங்கே போயிருக்கும்? சாத்புதியா அவரைப் பந்தலுக்குக் கீழே பெட்டி மாதிரி ஒரு மர வீடு உண்டு. ஒரு காலத்தில் மன்சனியா வாத்து வளர்த்தாள். அப்போது வாத்துகளுக்காக இந்த மர வீட்டைச் செய்திருந்தாள். இப்போது அந்த மர வீட்டுக்குள் பச்சாவைப் பக்கத்தில் போட்டுக்கொண்டு படுத் திருந்தது காரியா. பெட்டியின் ஒரு புறத்தில் வாத்து நுழைய ஒரு சிறிய ஓட்டை உண்டு. அதன் மற்ற பக்கங்கள் மூடியிருக்கும். சின்ன ஓட்டை. காரியா கூட சிரமப்பட்டுத்தான் அதற்குள் நுழையமுடியும்.
மன்சனியா அருகே சென்று குனிந்து பார்த்தாள். உள்ளே இருட்டாயிருந்ததால் ஒன்றும் சரியாகத் தெரியவில்லை.
'கர்ர்ர்.. இஙகே என்ன வேலை ஒனக்கு?"
"போக்கிரி! சும்மா இரு, காரியா!" மன்சனியா அதட்டினாள்.
அவள் அவரைப் பந்தலிலிருந்து காய் பறித்துக் கொண் டிருந்தாள். அந்த அரவம் கேட்டுக் காரியா குலைக்கத் தொடங்கியது.
"அது ஏன் இப்படிக் குலைக்குது?" பர்சாதி கேட்டான்.
"நான் காய் பறிக்கறது அதுக்குப் பிடிக்கல்லே"
"அவரைப் பந்தல் அதோட ராஜ்யம் போலேருக்கு!"
"ஆமா, அதுதான்!"
"புதுக் கொழந்தை கெடைச்சிருக்காக்கும் அதுக்கு?"
"ஆமா, ஏழு ஜன்மத்துக் கொழந்தை!"
கணவன் மேலும் பேச்சைத் தொடர வாய்ப்பளிக்காமல் அவள் பானையை எடுத்துக் கொண்டு பொதுக் கிணற்றடிக்குப் போய்விட்டாள்.
பர்சாதிக்கும் நிம்மதி ஏற்பட்டது. அவர்களது உரையாடல் அவர்களறியாமலேயே ஒரு சங்கடமான விஷயத்தை நெருங்கி விட்டிருந்தது.
இன்று அவர்கள் காய்கறி வாங்க ஹர்தாச் சந்தைக்குப் போகவேண்டும். முன்னதாவே புறப்படவேண்டும். ஆகையால் பர்சாதி அடுப்பு மூட்ட உட்கார்ந்தான். அவன் சுள்ளிகளை ஒடிக்கும் அரவங்கேட்டுக் குரைத்தது காரியா.
"அடேயப்பா! ஒரு குச்சியைக் கூட ஒடிக்கக் கூடாதாம்!"
அப்படித்தான் நடந்துகொண்டது காரியா. காகம் பந்தலின் மேல் உட்கார்ந்தால் குரைத்தது. பர்சாதி கொல்லையில் நடமாடினால் குரைத்தது. வீட்டுக்கூரையின் மேல் பருந்து உட்கார்ந்தால் குரைத்தது. வாசலில் பூனையைக் கண்டால் குரைத்தது. எல்லாரையும் எதிரிகளாகக் கருதியது. எவராலும் ஆபத்து நேரலாம். பத்திரமாகக் குட்டியைப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆபத்து ஏற்படும் போலிருந்தால் குரைத்து எதிரியைப் பயமுறுத்த வேண்டும். நாள் முழுதும் கண்ணையும், காதையும் திறந்து வைத்திருக்கவேண்டும். யாரையும் நம்பக்கூடாது, எதிரி தாக்க வருவதற்குள் எதிரியைத் தாக்க வேண்டும். எதிரிக்குச் சற்று அவகாசம் கொடுத்துவிட்டால் பிறகு தன்னால் சமாளிக்க முடியாது..
சாக்கடைக்கருகில் ஒரு கீரியைப் பார்த்து வாத்துக் கூட்டி லிருந்து வெளியே ஓடிவந்தது காரியா. அடுப்பருகில் இருந்தவாறே பர்சாதி அதை நன்றாகக் கவனித்தான்.. அதன் கண்கள் சிவந்திருந்தன. புதிதாகக் குட்டிபோட்ட நாயின் அறிகுறிகள் அதன் உடலில் .. பச்சாவும் அதைப் பின் தொடர்ந்து வாத்துக் கூண்டிலிருந்து வெளியே வந்தது. கீரி பயந்து போய் ஓடிவிட்டது. அதன்பிறகும் காரியாவின் குரைப்பும் ஆர்ப்பாட்டமும் நிற்க வில்லை.. அதன் மடி கனத்துக் கீழே தரையைத் தொடுமளவுக்குத் தொங்கியது. அது நடந்துபோகும் போதும் பச்சா அதன் மடியைச் சப்புவதை விடவில்லை..
இதென்ன..! நிசமாத்தான்..! இது எப்படி..?
நாயும் குட்டியும் மறுபடி வாத்துக் கூண்டுக்குள் நுழைந்துவிட்டன.. பர்சாதிக்கு ஒரே திகைப்பு.. மிருகங்களில் இந்த மாதிரி நடக்கும் என்று இதுவரை அவனுக்குத் தெரியாது. மன்சனியா இதைக் கவனித்தாளா? அவளுக்குச் சொல்லலாமா? அக்கம் பக்கத்தாரைக் கூப்பிட்டு இந்த வேடிக்கையை அவர் களுக்குக் காட்டவேண்டும் போலிருந்தது அவனுக்கு. ஆனால் அப்படிச் செய்ய வழியில்லை. அவனுக்குப் பேச வாயில்லை..
ஹர்தாச் சந்தைக்குப் போகும் வழியில் மன்சனியா நாய்களிரண்டையும் பற்றிப் பேசினாள். அவள் காரியாவைச் சாப்பாட்டுக்குக் கூப்பிட்டபோது அது வரவில்லையாம். குட்டி யையும் வரவிடவில்லையாம். குட்டிக்காகக் கவலைப்பட்டாள் அவள்.
"சாப்பிடாம இருக்க முடியுமா?" என்றான் பர்சாதி. இதை விடத் தெளிவாகப் பேசமுடியவில்லை அவனால். மன்சனியா புரிந்து கொண்டால்தானே!
அவர்கள் வீடு திரும்ப மாலையாகி விட்டது. சின்னக்குட்டி
இவ்வளவு நேரமாகப் பட்டினியாயிருக்கிறதே என்று மன்சனியா வுக்குக் கவலை. அவள் டப்பா மூடியை எடுத்துக் கொண்டு வாத்துக் கூண்டுப் பக்கம் போனாள்.. "பச்சா! பச்சா! வா, வா! குர் குர் குர்.."
"ஆமா, அது வரப் போகுதாக்கும்!" என்றான் பர்சாதி. குட்டி உண்மையிலேயே வரவில்லை.
காரியா கூண்டின் ஓட்டை வழியே தலையை நீட்டிக் குரைத்தது. கடிக்க வருவதுபோல் பல்லைக் காட்டியது.
"நீ ஏன் கூப்பிட்டுக்கிட்டே இருக்கே? சும்மா இரு!" பர்சாதி சொன்னான்.
மன்சனியா கையை நீட்டியதும் உறுமிக் கொண்டு வெளியே வந்தது காரியா. இது அவர்களுக்குப் பழக்கமான காரியா அல்ல, முற்றிலும் புதிய பிராணி. மன்சனியா விஷயத்தைச் சரியாகப் புரிந்து கொள்வதற்குள் அது மேல் விழுந்து அவளைப் பிறாண்டிக் கடித்துக் கிழிக்க முற்பட்டது. மன்சனியா சுரைக்கொடியின் மேலே போய் விழுந்தாள். அவளுடைய துணி நார் நாராகக் கிழிந்து போய்விட்டது. அவளுடைய கையிலிருந்து இரத்தம் பெருகியது. பர்சாதி கத்திக்கொண்டே தடியை எடுத்து வந்தான்.
ஆனால் மன்சனியாவின் கவனம் இவற்றிலெல்லாம் இல்லை. காரியா மறுபடியும் வாத்துக் கூண்டுக்குள் நுழையும் வரையில் அவளுடைய பார்வை அதன் மடியிலிருந்து விலகவில்லை. அதன் மடியில் பால் சுரந்திருக்கிறது..! அது அவள் மேல் பாய்ந்தபோது அதன் வெதுவெதுப்பான, ஈரமான மடியின் பாரம் அவளுடைய கைமேல் விழுந்தது- ஈர மடி! பால் கொட்டிக் கொண்டிருந்தது காரியாவின் மடியிலிருந்து..! அவளுடைய கையில் காரியாவின் மடிபட்ட இடத்தில் பாலின் ஈரம்..
தனக்கு மட்டும் விதிக்கப்பட்ட சாபக் கேட்டின் சுமை பாறாங்கல்லாக அழுத்தியது மன்சனியாவின் இதயத்தை..
(பத்ர லேகார் பாபா, 1959)
7. எல்லைக்கோட்டின் எல்லை
எல்லாரும் தோல்வியுற்றுத் திரும்பிவிட்டார்கள்.
கடைசியில் சதிநாத் தாமே இரண்டாம் மாடிக்கு ஏறி வந்து கடுமையான குரலில் சொன்னார், "சவி! அநாகரீகத்துக்கும் ஒரு எல்லை இருக்கு, எல்லை இருக்கணும்! ஆனா விருந்தாளிகள் கூடியிருக்கிற இந்தக் கல்யாண வீட்டிலே நீ செஞ்ச அநாகரீகத் துக்கு எல்லையில்லே! இவ்வளவு உறவுக்காரங்களுக்கு முன்னாலே என் கௌரவத்தை மண்ணாக்கினே, நீயும் கேலிக்கு ஆளாகிக் கிட்டே! இப்பவாவது தயவ செஞ்சு வா!"
வீட்டுக்கு இரண்டாம் மாடி கட்ட அனுமதி கிடைக்க வில்லை. இருந்தாலும் இரண்டாம் மாடியில் சவிக்காகச் சீமை ஓடு வேய்ந்த ஓர் அறை கட்டப்பட்டிருந்தது. அறைக்குள் அப்போது விளக்கு எரியவில்லை. கீழே பந்தலில் எரிந்து கொண்டிருந்த எண்ணற்ற விளக்குகளின் வெளிச்சம் மட்டும் ஓரளவு அந்த அறை வாசலில் பிரதிபலித்தது.
ஒருக்களித்திருந்த அறைக்கதவில் கைவைத்து நின்று கொண் டிருந்தாள் சவி. அந்தக் கைவிரல்களும் அவளது கன்னத்தின் ஒரு பக்கமும்தான் கண்ணிற்குத் தெரிந்தன. இதன் மூலம் அவர்களுடைய முகபாவத்தைப் புரிந்துகொள்ள இயலவில்லை.
ஆகையால் அவள் முன்போலவே விறைப்பாக இருக்கிறாளா அல்லது இளகி வருகிறாளா என்பதும் புரியவில்லை.
சதிநாத் வந்து கூப்பிட்டபிறகும் அவள் பிடிவாதமா யிருந்தால் அவளும் அவளுடைய கணவன் மாதிரி பெத்தியந்தான் என்று நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்.
சவியிடம் மாறுதல் எதுவம் தெரியவில்லை. சவி ஒரு விசித்திரமான, வறண்ட குரலில் சொன்னாள், "அண்ணா, நீ எதுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டுக்கிட்டு ஏறிவந்தே? நான் தான் சொல்லிட்டேனே.."
"ஆமா தெரியும்.." கசப்பும் கோபமும் கலந்த குரலில் சொன்னார் சதிநாத். "வீட்டிலே இருக்கறவங்க எல்லாரும் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் உன்னை சமாதானப்படுத்த வந்தாங்க, நீ 'கீழே எறங்க மாட்டேன், சாப்பிட மாட்டேன்'னு சொல்லி எல்லாரையும் வெரட்டிட்டேன்னு தெரியும் எனக்கு. உன் அண்ணி வந்து கைகூப்பிக் கும்பிடும் நீ அசைஞ்சு குடுக்கலே.."
சவியின் முகத்தை இப்போதும் பார்க்க முடியவில்லை. அவள் அந்த அறையை விட்டுச் சற்று வெளியே வந்தால் அவளுடைய முகத்தைப் பார்க்கலாம். ஆனால் வெளியே வர வில்லையே அவள்! யாரோ அறை வாசலில் ஒரு கோடு போட்டு அதை அவள் தாண்டக்கூடாதென்று ஆணையிட் டிருந்தாற்போல் அவள் அறைக்குள்ளேயே நின்றிருந்தாள்.
ஆனால் கதவை ஒரேயடியாகச் சாத்திவிட்டுப் படுக்கையில் போய் விழவும் வழியில்லை அவளுக்கு. சாயங்காலத்திலிருந்து ஒருவர் மாற்றி ஒருவர் அவளை அழைக்க வந்து கொண்டே யிருக்கிறார்கள்.
"சவி! ஐநூறு பேர் வந்திருக்காங்க கீழே.. எவ்வளவு பேர் 'சவி எங்கே? சவி எங்கே'ன்னு கேட்டுக்கிட்டிருக்காங்க! வாயேன் ஒரு தடவை...! சவி! உன் அண்ணாவுக்க எவ்வளவு அழகான மாப்பிள்ளை கிடைச்சிருக்கான், வந்து பாரேன்...! அத்தை! கன்யாதானம் நடக்கற எடத்திலே நீ ஏதோ செய்யாமே வந்துட்டியாமே, அப்பா கோவிச்சுக்கறார், சீக்கிரம் வாயேன்...!"
ஆனால் சவி அசையவில்லை, அவளுடைய கோபம் குறைய வில்லை. "எனக்குத் தலை வலிக்குது" என்று சொல்லித் தட்டிக் கழிக்கிறாள் அவள்.
இவ்வளவு நாள் இந்தக் கல்யாணம் சம்பந்தப்பட்ட எல்லாக் காரியங்களையும் சவிதான் கவனித்து வந்திருக்கிறாள். அன்று பகலில் சமையலறை, உக்கிராணம், சாப்பாட்டுக் கூடம், பூஜையறை என்று சக்கரம் மாதிரி சுழன்றிருக்கிறாள் ... மாலை நேரத்தில் தற்செயலாக அந்த நிகழ்ச்சி நேர்ந்துவிட்டது. அதைப் பெரிதாக எடுத்துக்கொண்டு சவி கோபத்தில் தன் அறையில் போய்ப் படுத்துக்கொண்டுவிட்டாள் என்பதை யாரும் கவனிக்கவில்லை. கன்யாதானத்தின்போதுதான் அவளைத் தேடத் தொடங் கினார்கள்.
"சவி எங்கே.? எங்கே சவி?"
முடிச்சுப் போடறதுக்கு வேண்டிய மஞ்சள் சோழியைச் சவி எங்கே வச்சிருக்கா...? மணப்பெண்ணோட பட்டுப் புடவை எங்கே?"
இந்தப் பருளெல்லாம் பக்கத்திலேதானிருந்தது, கிடைச் சுட்டது. இருந்தாலும் அதையெல்லாம் எடுத்து வச்சிக்கிட்டுத் தேவைப்படறபோது கொடுக்க ஆளில்லாட்டி அசௌகரியந்தானே! மஞ்சள் சோழி, பட்டுப்புடவை மட்டுமில்லே, சடங்குக்குத் தேவையான ஒவ்வொரு சாமானும் சவியோட பொறுப்பிலே தானிருந்தது! கலியாணப் பொண்ணோட அம்மா எந்தப் பக்கந் தான் சமாளிப்பா? விருந்தாளிகளைக் கவனிக்க வேண்டாமா அவ?
இதெல்லாம் தெரிஞ்சும் ரொம்ப முக்கியமான நேரத்திலே ஒளிஞ்சுக்கிட்டாளே இந்த சவி! சீ.. சீ.! அதட்டப்பட்ட புருசனை சாதானப்படுத்தப் போயிருக்கா, வேறென்ன! அதுக்கு இதுதானா நேரம்? பைத்தியக்கார மனுசன், மறுபடி ஒண்ணு கெடக்க ஒண்ண செஞ்சுடுவான். தூக்க மருந்து கொடுத்து அவனைத் தூங்க வச்சுட்டுக் கீழே வர வேண்டியதுதானே! கல்யாணப் பொண்ணும் பிள்ளையும் மணையிலே ஒக்காந்தப்பறம் விருந்துச் சாப்பாட்டை மேலே எடுத்துக்கிட்டுப் போய்ப் புருசனை எழுப்பி அவனுக்கு ஊட்டிவிட்டுக் கொஞ்சட்டுமே! அப்படிச் செய்யாம இதென்ன ..! இந்த ஆகாத்தியத்தைப் பொறுத்துக்க முடியாது!
வீடு நிறைய ஜனங்க. அவங்களுக்கு முன்னாலே நீ கோவிச்சுக் கிட்டு ஆம்படையானோடே ஒன் ரூமிலே போய் உக்காந்துகிட்டு, 'அவரும் சாப்பிட மாட்டார், நானும் சாப்பிட மாட்டேன்'னு சொல்லிக்கிட்டிருக்கியே! சீ..சீ..! இவ்வளவு லட்சணமா மாப்பிள்ளை வந்திருக்கான், அண்ணாவோட பலநாள் ஆசை நிறைவேறியிருக்கு, கல்யாணச் சடங்கு ஒண்ணையும் வந்து பார்க்கலியே நீ! சாப்பிடறதிலே கூடப் பிடிவாதம் பிடிக்கிறியே! இந்த கல்யாணக் கொண்டாட்டம், பிரமாதமான சமையல், பலவகைக் கறி, இனிப்பு இது ஒண்ணையும் நீங்க ரெண்டுபேரும் தொடக்கூட மாட்டீங்களா? பட்டினி கிடப்பீங்களா? இதனாலே உன் மருமகளுக்குக் கெடுதல்ங்கறதைப் பார்க்க மாட்டியா? அண்ணா-அண்ணியைத் தலைகுனிய வப்பியா? நீசத்தனத்துக்கு ஒரு எல்லையில்லையா? அண்ணா, ஒன் அண்ணா, ஒன்னைவிட இருவது வயது பெரியவன். ஒனக்கு அப்பா மாதிரின்னுதான் சொல்லணும். அப்பா மாதிரிதான் ஒன்னை வளர்த்தான், கல்யாணம் பண்ணிக் கொடுத்தான். அதுக்கப்பறம் மாசம் முப்பது நாளும் வருசத்திலே பன்னெண்டு மாசமும் ஒன்னையும் ஒன் பைத்தியக்காரப் புருசனையும் வச்சுக் காப்பாத்தறான், ஒங்களுக்காகத் தனி அறை கட்டிக் கொடுத்திருக்கான்.. அந்த அண்ணா ஒம் புருசனை ஒரு அதட்டு அதட்டிட்டா, ஒரு தள்ளு தள்ளிட்டா அதுக்காக இப்படியா பண்ணுவே நீ? நன்றியே இல்லையா ஒன் ஒடம்புலே?
இவ்வளவு பெரிய நன்றிகெட்ட செய்கையைச் செய்துவிட்ட சவியைப் பார்க்க அவளுடைய அறைக்கு முன்னால் கூட்டம் கூடிவிட்டது. தேர்த் திருவிழாக் கூட்டம்.
சிலர் சவியிடம் அனுதாபம் காட்டுகிறார்கள் - ஒளிவு மறைவாகத்தான்!
காரணம், விருந்தாளியாக வந்துவிட்டு விருந்துக்கு அழைத்த வருக்கு எதிராகப் பேசுவதென்றால் ஒளிவ மறைவாகத்தானே முடியும். "பாவம், சவி!" என்று குசுகுசுக்க முடியும்.. "தங்கை புருசன் பைத்தியம், பாவம், அதனால்தான் அவன் அந்த மாதிரி நடந்துகிட்டான். நீ கெட்டிக்காரன், விஷயம் தெரிஞ்சவன், ஒன் பொண்ணுக்குக் கலியாணம் நடந்துக்கிட்டிருக்கு. இந்த நல்ல நேரத்திலே ஒன் தங்கை புருசனை இப்படித் தள்ளிவிட்டியே! ஒன் தங்கை வேற வழியில்லாம ஒன்னை அண்டியிருக் காங்கறதினாலேதானே நீ இப்படி செஞ்சுட்டே! தங்கை பணக் காரியாயிருந்தா இந்த மாதிரி நடந்துக்கிட்டிருப்பியா?"
வேடிக்கை என்னவென்றால், மேலே நின்றுகொண்டு சவிக்கு அதரவாகக் குசுகுசுத்தவர்கள் கீழே இறங்கி வந்ததும் சவியைக் கண்டித்துப் பேசினார்கள்.
ஏன் பேச மாட்டார்கள்?
அவர்கள் என்ன கிறிஸ்துவா, சைதன்யரா? அவர்களுக்கு கோபம் வராதா? அவர்களுடைய சவி அனுதாபத்தை நன்றியோடு ஏற்றுக்கொண்டு கண்ணீர் விடவில்லையென்றால், "நீங்க ஒண்ணும் பேசாதீங்க, எனக்கு ஒண்ணும் பிடிக்கலை, நீங்க கீழே போயிடுங்க!" என்று முகத்திலறைந்தாற்போல பேசிவிட்டால் அவர்களுக்கு அவள் மேல் எரிச்சல் வராதா?
சைதன்யருக்கும் கிறிஸ்துவுக்கும் கூட எரிச்சலேற்பட்டுவிடும்!
இதெல்லாம் மாலையில் நடந்த நிகழ்ச்சி. இரவு வெகு நேரமாகிவிட்டது. விருந்தாளிகள் சாப்பிட்டுவிட்டுப் போய் விட்டார்கள். வீட்டிலுள்ளவர்கள் மட்டுந்தான் சாப்பிட வேண்டும். சதிநாத் தம் மாப்பிள்ளையின் அழகிலும் குணத்திலும் மயங்கிப் போய்விட்டார். தம் சாமர்த்தியத்தைப் பற்றி அபார பெருமை அவருக்கு. சட்டென்று ஏதோ நினைவு வந்தது அவருக்கு. "சதீஷ் சாப்பிட்டானா?" என்று கேட்டார்.
அன்று மாலையில் கல்யாணக் கூட்டத்துக்கு நடுவில் சதீஷ் ஒரு அழுக்குத் துணியில் லுச்சியையும், இனிப்புகளையும் குவித்து வைத்துக் கொண்டு சாப்பிட உட்கார்ந்ததைப் பார்த்து எரிச்ச லடைந்து அவர் சதீஷைக் கழுத்தைப் பிடித்து சபையிலிருந்து வெளியேற்றியது இப்போது நினைவு வந்தது.
தாம் செய்தது சரியில்லைதான் என்பதை உள்ளூர உணர்ந்தார் அவர். இருந்தாலும் அவரும் ஒரு மனிதர்தானே!
அப்போதுதான் மாப்பிள்ளை வீட்டார் வந்து சபையில் அமர்ந்திருந்தார்கள். கன்யாதானம் செய்ய வேண்டியிருந்ததால் அவர் உபவாசமிருந்தார்; அலுப்பும் கவலையும் அவரை சஞ்சலப் படுத்திக் கொண்டிருந்தன; இந்தச் சமயத்தில் சதீஷின் இந்த அசிங்கமான நடத்தையைப் பொறுத்துக் கொள்வது எளிதா?
அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
ஆனால் அவரால் விரட்டிவிடப்பட்டதை இவ்வளவு பெரிய அவமானமாக அந்தப் பைத்தியக்காரன் எடுத்துக் கொள்வான் என்றும் அவர் எதிர்பார்க்கவில்லை.. அவன் மறுபடியும் சமையல் காரர்களிடம் போய் உட்கார்ந்து கொள்வான் என்றுதான் அவர் நினைத்திருந்தார். சவி அங்கே இல்லாததைக் கவனித்த பிறகுதான் அவருக்கு ஓரளவு விஷயம் புரிந்தது. சவி இல்லாததால் அசௌகரியப்பட்டது அவர் மட்டுமல்ல. அவள் இல்லாததால் கல்யாண நிகழ்ச்சியில் ஏகப்பட்ட குழப்பம். எங்கே பார்த்தாலும் "சவி..! சவி எங்கே?" என்று கூப்பாடு.
அப்புறம் அவருடைய பெரிய மைத்துனிதான் அவரிடம் விஷயத்தைச் சொன்னாள், "எனக்கொண்ணும் தெரியாதுப்பா! நீ ஒன் தங்க புருசனை ஏதோ சொல்லிட்டியாம், கழுத்தைப் பிடிச்சு வெளிய தள்ளினியாம்.. அதனாலே ஒன் தங்கை கோவிச் சுக்கிட்டுப் புருசனோட தன் ரூமிலேபோய் ஒக்காந்துக் கிட்டிருக்கா. அப்பறம் கீழே எறங்கி வரவேயில்ல. ஒன் தங்கை புருசன் பட்சணம் பண்றவங்ககிட்டேயிருந்து ஒரு பொட்டலம் பட்சணம் வாங்கிட்டு வந்திருந்தாராம். அதெல்லாம் முத்தத்தில படியிலே இறைஞ்சி கிடக்கு. கோவத்திலே தூக்கியெறிஞ்சிட்டார் போலிருக்கு..! அவர்தான் பைத்தியம், ஒன் தங்கச்சி பைத்தியம் இல்லியே?"
இதைக் கேட்டபோது சதிநாத் அடைந்த கோபத்துக்கு அளவில்லை. ஆனால் அப்போது அவர் கன்யாதானம் செய்ய மனையில் உட்கார வேண்டியிருந்ததால் ஒன்றும் செய்ய முடிய வில்லை.
இப்போது அவர் சந்தோஷமாயிருந்தார். ஆகையால் "சதீஷ் சாப்பிட்டானா?" என்று கேட்கும் மனநிலை பிறந்திருந்தது.
மாலையிலிருந்து இதுவரை குறைந்தது ஐம்பதுபேர் சவியிடம் போய் அவளைக் கீழே இறங்கி வந்து மற்றவர்களுடன் உட்காரும் படி, கல்யாணத்தைப் பார்க்கும்படி, பந்தியில் உட்கார்ந்து சாப்பிடும்படி கேட்டுக்கொண்டுவிட்டார்கள். அவர்களுடைய கெஞ்சலுக்கு அவள் அசைந்து கொடுக்கவில்லை. கீழேயே இறங்கி வரவில்லை.
இந்தச் செய்தியைத் தம் மனைவி சொல்லக் கேட்டபிறகும் அவர் சுமுகமாக இருப்பார் என்று எதிர்பார்க்கலாமா?
அவர் வேகமாக எழுந்து சவியின் அறைக்குப் போனார். "நான் கைகூப்பிக் கேட்டுக்கறேன், எங்களோட சாப்பிடவா!" என்று அவளிடம் சொன்னார்.
சவியின் குரலில் சிறிது நடுக்கமா?
அல்லது அது சதிநாத்தின் பிரமைதானா?
பிரமையாகத்தானிருக்கும். ஏனென்றால் சவியின் குரல் தெளிவாகத்தானிருந்தது. "இப்படியெல்லாம் ஏன் சொல்றே அண்ணா? என்னாலே சாப்பிட முடியாது. ஒரே தலைவலி எனக்கு?
சதீஷ் பட்சணம் சாப்பிட உட்கார்ந்த காட்சி இப்போது சதிநாத்துக்கு நினைவு வந்தது. தாம் சதீஷைத் திட்டியதும் ஞாபகம் வந்தது.
பைத்தியமாயிருந்தாலும் அவன் சவியின் கணவனல்லவா!
அவர் இதமான குரலில், "ஒன்னாலே சாப்பிட முடி யாட்டியும் ஒரு தடவை வந்து ஒக்காரேன்..! நான் சதீஷோட சாப்பாட்டை மேலே அனுப்பச் சொல்கிறேன். அவனக்குச் சாப்பாடு போட்டுட்டுக் கீழே வா!" என்று சொன்னார்.
சவி அதே வறண்ட குரலில், "அவர் சாப்பிடமாட்டார், அண்ணா!" என்றாள்.
மறுபடி பொறுமையிழந்தார் சதிநாத். இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.
"நன்றி கெட்டவங்க இப்படித்தான் இருப்பாங்க..!" என்று திட்டிக்கொண்டே அவர் கீழே இறங்கி வந்தார்.
அதே சமயத்தில் மேலே ஏறிவந்தான் அமல். அவன் தான் சாப்பாடு பரிமாறும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்தான். ஒரு பெண்ணின் அசட்டப் பிடிவாதத்தால், கடைசிப் பந்தி தாமதப் படுகிறது. மணி பன்னிரண்டுக்கு மேலாகிவிட்டது.
அமல் இவர்களுடைய உறவினன் அல்ல. அந்தத் தெருவாசி, அவ்வளவுதான். அவன் இவ்வளவு பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை, அப்படியும் ஏற்றுக் கொண்டிருந்தான். அது அவன் சுபாவம். ஆனால் ராத்திரி இன்னும் நேரமானால் அவன் வீட்டில் திட்டமாட்டார்களா? அவன் மாடிப்படியில் சதிநாத்தோடு மோதிக்கொள்ள இருந்தான்.
சதிநாத் அவனைப் பார்த்துக் கேலியாகக் கேட்டார், "நீ ஒருத்தன் பாக்கி இருந்தியாக்கும்!" பிறகு கீழே இறங்கிப் போய் விட்டார்.
அமல் அதே தெருவில் வசிப்பவன். அவர்களோடு வெகு காலமாகப் பழகுபவன். ஆகையால் அவன் சவியைச் சமாதானம் செய்யப் போவதில் அவருக்கு வியப்பு ஏற்படவில்லை. ஆனால் அதனால் பலனேற்படுமென்றும் அவர் நம்பவில்லை.
அமலுக்கும் நம்பிக்கையில்லைதான். நடந்த நிகழ்ச்சி, பேசப் பட்ட பேச்சுக்கள் எல்லாமே அவனுக்குத் தெரியும்.
இருந்தாலும் அவனுக்குத் தன்னம்பிக்கை இருந்தது. மேலும் சவியை ஒருமுறை பார்க்க வேண்டுமென்ற ஆவல் - இவ்வளவு பிடிவாதம் செய்யும்போது சவி எப்படித் தோற்றமளிக்கிறாள் என்று பார்க்க விரும்பினான் அவன். சவி அப்போதுதான் அறைக்கதவை மூடிக் கொண்டிருந்தாள். இப்போதாவது கொஞ்சம் படுத்துக் கொள்ளலாம் என்று அவள் நினைத் திருக்கலாம்.
அமலைக் கண்டதும் அப்படியே நின்றாள். கதவு பாதி மூடியபடியே இருந்தது.
சட்டென்று ஒரு நெருப்புக் குச்சி கிழித்து அவளுடைய முகத்தைப் பார்க்கலாமா என்று தோன்றியது அமலுக்கு. ஆனால் அவன் நெருப்புக் குச்சி கிழிக்கவில்லை. "வௌக்கை ஏத்தேன்!" என்று சொன்னான்.
"என்னத்துக்கு?"
"அவசியமில்லேதான்.. இருந்தாலும் இருட்டிலே ஒன்னைப் பார்த்தா பூதம் மாதிரி, ஆவி மாதிரி இருக்கு அதனாலேதான்.."
சவி அவனை எதிர்த்துப் பேசவில்லை, சற்றும் சஞ்சலப் படவில்லை. சிறு வயது நினைவுகளுக்கு மதிப்பளித்து அவனுடைய வேடிக்கைப் பேச்சுக்குச் சிரிக்கவுமில்லை. அவள் அந்த நிழலிருட்டில் சித்திரம்போல் அசையாமல் நின்றாள்.
சவி பாதி மூடியிருந்த கதவின்மேல் சாய்ந்து கொண்டிருந்த தால் அமலால் அறைக்குள்ளே பார்க்க முடியவில்லை. "சதீஷ் பாபு தூங்கறாரா?" என்று கேட்டான். சவி காரணமின்றி மெல்லச் சிரிப்பதாக அவனுக்குத் தோன்றியது. "ஆமா" என்று அவள் சொன்னாள்.
"சதிநாத் அண்ணா அவரை 'ஏதோ' செஞ்சுட்டார்னு கேள்விப்படடேன்... என்ன இருந்தாலும் நீ அதுக்காக இவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்ணவேண்டாம்! ஒன் பிடிவாதத்தைப் பார்த்து எனக்கு வெக்கமாயிருக்கு..."
சவி சிரித்தே விட்டாள் இப்போது.
உண்மையிலேயே சவியைப் பார்த்தால் ஒரு பூதம் மாதிரி, ஒரு ஆவி மாதிரித் தானிருக்கிறது. அவளுடைய சிரிப்பு இயற்கையான மனிதச் சிரிப்பு அல்ல, ஆவியின் சிரிப்பு. "நான் வெக்கங்கெட்டுப் போனதுக்கு நீ ஏன் வெக்கப்படறே?"
இப்போது நெருப்புக் குச்சி கிழித்துச் சவியின் முகத்தைப் பார்க்கத்தான் வேண்டுமென்று தோன்றியது அமலுக்கு. வெட்கத்தைத் துறந்ததோடு கொடூரமான சவியின் முகம் எப்படியிருக்கும் என்று பார்க்க வேண்டும்!
ஆனால் இருட்டில் அவளது முகத்தைப் பார்க்க முடிய வில்லை. சவியின் அண்ணன் ஏமாந்துபோய் அவளை ஒர பைத்தியக்காரனுக்குக் கலியாணம் செய்து வைத்து விட்டார். இருந்தாலும் சவி ஒருநாளும் தன் அண்ணனைக் கறை கூறிய தில்லை. சவியின் மைத்துனர் அவளையும் அவள் கணவனையும் அவளுடைய அண்ணனிடம் விரட்டியனுப்பியதற்காக மைத்துன ரையும் திட்டியதில்லை அவள்.
சவி சதீஷின் பயங்கொள்ளித்தனத்துக்காக அவனை ஏச வில்லை. அவள் இதுகாறும் இயல்பாகவே தன் காரியங்களைச் செய்து வந்தாள். கமரிப் பெண்ணாயிருந்தபோது இந்தக் குடும்பத்தின் பொறுப்பை ஏற்று உழைத்தாற்போல் இப்போதும் உழைத்த வருகிறாள். இப்போது அவளுக்கு ஒரு அதிகப்படியான பொறுப்பு - தன் பைத்தியக்காரக் கணவனைக் கவனித்துக் கொள்வது.
இவ்வளவு பொறுப்பையும் ஒரு விளையாட்டுப்போல் அனாயாசமாகச் சுமந்து வந்திருக்கிறாள் சவி. அமலுக்குத் தெரியாதா? அவன்தான் இங்கு அடிக்கடி வருபவனாயிற்றே!
சதீஷை வெகுநேரம் காணாவிட்டால் சவி கவலைப் படுவாள்! அதுகூட வேடிக்கையாகத்தான். யாருடனாவது பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென்று எழுந்து, "ரொம்ப நேரமா என் பொக்கிஷத்தைப் பார்க்கவேயில்லையே1 திடீர்னு சன்னியாசம் வாங்கிக்கிட்டுப் போயிட்டாரான்னு பார்க்கறேன்" என்று சொல்லிவிட்டுப் போவாள்.. "மணி என்ன ஆச்சு? அடே, இவ்வளவு நேரமாச்சா? என் நாதர் தானே சமையலறைக்குப் போய்ப் பாத்திரத்தை உருட்டறாரான்னு போய்ப் பார்க்கறேன்" என்பாள்.. திடீர்னு மூஞ்சியை 'உர்'ருனு வச்சுக்கிட்டுப் போயிட்டார் என் பிராணநாதர்! நாம சந்தோஷமாப் பேசிக்கிட்டு இருக்கறது அவருக்குப் பிடிக்கலே.. நான் போய் அவரை சமாதானப்படுத்தறேன். இல்லாட்டி மகாகோபம் வந்துடும் அவருக்கு" என்று சொல்வாள்.
பைத்தியக்காரக் கணவனின் நடத்தையை யாராவது கேலி செய்தாலோ அல்லது குறை கூறினாலோ சவி கோபித்துக் கொண்டதில்லை. அவளும் அவர்களோடு சேர்ந்து கொண்டு, "சொல்லுங்க! நீங்களும் சொல்லுங்க! என் வேலை கொஞ்சம் குறையட்டும். மாப்பிள்ளையாச்சேன்னு மரியாதை கொடுக்காம ரெண்ட அடி கொடுத்தால் பிரயோசனமாயிருக்கும்" என்று சிரித்தவாறு சொன்னாள்.
ஆனால் இன்று அவர் உண்மையிலேயே அவமானப் படுத்தப்பட்டபோது அவள் முற்றிலும் மாறிப்போய் இவ்வளவு கோபித்துக் கொள்கிறாளே!
அப்படியானால் சதிநாத்தின் மனைவி சொல்வதுதான் உண்மையாயிருக்குமோ...! பொறாமையாத்தான் சவி ஒரு அற்ப விஷயத்தைப் பெரிதுபடுத்தி ஆர்ப்பாட்டம் செய்கிறாளோ? அண்ணா பெண்ணுக்கு நல்ல இடத்தில் கல்யாணமாகிவிட்டது, அழகான மாப்பிள்ளை கிடைத்தவிட்டான் என்று சவிக்கு வயிறு எரிகிறதோ?
சவியைப்பற்றி இப்படி நினைக்கக் கூடாதுதான். ஆனால் அவள் தானே தன் நடத்தையால் இப்படி மற்றவர்களை நினைக்கச் செய்கிறாள்! அவளது அசட்டுத்தனமான நடத்தை அப்படித்தானே நினைக்கச் செய்கிறது!
பொறாமைதான்..! இல்லாவிட்டால் என்றுதான் அவள் தன் கணவனிடம் இவ்வளவு பக்தியைக் காட்டியிருக்கிறாள்? அவளுடைய அண்ணியே எவ்வளவு தடவை, "புருஷன் பைத்தியமாயிருக்கிறானேன்னு கொஞ்சங்கூடக் கவலையில்லே சவிக்கு கல் நெஞ்சக்காரி!" என்று சொல்லி வியந்திருக்கிறாள்.
ஆகையால் சவியின் கல்நெஞ்சும் பொறாமையால்தான் பாளம் பாளமாக உடைந்து போயிருக்க வேண்டும்!
அமல் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவில்லை. "சவி என்ன இருந்தாலும் நீ ரொம்பக் கல் நெஞ்சுக்காரி!" என்று மட்டும் சொன்னான்.
"இன்னிக்குத்தான் தெரிஞ்சுதா?" சவி கேட்டாள், "ஏன் நீயும் வந்துட்டே? சாப்பிடக் கூப்பிடவா?"
அமல் வருத்தத்துடன் சவியை நன்றாகப் பார்க்க முயற் சித்தான். பிறகு சொன்னான், "இல்லே, ஒன்னைக் கூப்பிடற துணிச்சல் எனக்கு இல்லே. அண்ணாவைத் தண்டிக்கறதுக்காக சதீஷ் பாபுவைச் சாப்பிடவிடாமே நிறுத்தி வச்சிருக்கியேன்னு நினைச்சேன். சதீஷ் பாபு பாவம், அவரைப்போய் அடக்கி வைக்கிறே...'அமல் நீ எனக்குச் சாப்பாடு பரிமாறணும். இவங்க என்னை நல்லாக் கவனிச்சுக்க மாட்டாங்க!'ன்னு என்கிட்டே ரொம்ப ஆசையாச் சொல்லியிருந்தார்..."
சொல்லிவிட்டுச் சற்றுச் சிரித்துக்கொண்டான் அமல், காரணம், சதீஷ்பாபு அவனுடன் பேசும்போது 'இவங்க' என்று சொல்லவில்லை, 'இந்த ராஸ்கல்கள்' என்று குறிப்பிட்டான்.
இவ்வளவு நேரம் பட்டினி கிடந்ததால் சவியின் தொண்டை உலர்ந்துபோய் விட்தூ? அல்லது அவள் தன் அசட்டுத்தனத் துக்காக வருத்தப்படுகிறாளா..? அவளுடைய குரல் இனிமையா யிருக்குமே, என் இப்படி ஆகிவிட்டது!
அந்த வறண்ட குரலிலேயே சொன்னாள் சவி, "அவர்தான் நீ பரிமார்ற வரைக்கும் பொறுக்கலியே, தானே கொண்டுவந்து வச்சிக்கிட்டு..."
"அந்தப் பேச்செல்லாம் வேண்டாம். சவி...நீ சாப்பிட்டாலும் சரி, சாப்பிடாட்டாலும் சரி, ஆனா அவரை மட்டும் எழுப்பிவிடு. நான் அவருக்கு சாப்பாடுபோட்டு என் வார்த்தையைக் காப்பாத் திக்கறேன்."
சவி அமலுடன் தான் கழித்த சிறு பிராயத்தின் நினைவு களுக்கும் மரியாதை கொடுக்கவில்லை. "அவர் சாப்பிட மாட்டார்!" என்று உறுதியான குரலில் சொன்னாள்.
"சவி, நீ அளவுக்கு மிஞ்சி அநாகரீகமா நடந்துக்கறே- எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கணும்..! இன்னிக்குக் கோவிச்சுக்கிட்டு அவரைப் பட்டினி போடறே, நாளைக்குச் சாப்பாடு போடத்தானே வேணும்? அப்போ..?"
இந்த தடவை உரக்கவே சிரித்து விட்டாள் சவி. "அமல், அவர் நாளைக்கும் சாப்பிடமாட்டார், நாளன்னிக்கும் சாப்பிட மாட்டார். ஒருநாளும் சாப்பிட மாட்டார்!" என்றாள்.
சவி சாதாரணக் கோபத்தில் பேசிய இந்தப் பேச்சில் அமலுக்கு ஏனிந்த பயம்? சவியின் சிரிப்பைக் கேட்டு அவள் ஒரு பூதந்தான் என்று நினைத்து விட்டானோ?
அவன் "சவி" என்று வேதனையோடு கத்தினான். சவி பதில் சொல்ல வில்லை, அசையவும் இல்லை.
சவியின் இந்த நிலையைக் கண்டு அவன் தான் வெகு காலமாக மறந்துவிட்டிருந்த ஒரு பழையா அசட்டுத் தனத்தைச் செய்து விட்டான். அவன் அவளை நெருங்கி அவளுடைய கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு "சவி, விளக்கு ஏத்து!" என்று சொன்னான்.
சவி மெதுவாகத் தன்னை விடுவித்துக் கொண்டு "என்ன பண்ணப் போறே?" என்று கேட்டாள்.
"நான் அவரைப் பார்க்கணும்!"
"பார்க்கறதுக்கு ஒண்ணுமில்லே"
"நீதான் எப்போதும் சரின்னு நினைச்சுக்காதே சவி! கதவை விட்டு நகர்ந்துக்க! நான் பார்க்கறேன்."
ஆனால் சவி நகரவில்லை. "நெசமாகவே பார்க்கறதுக்கு ஒண்ணுமில்லே" என்று சொல்லிவிட்டாள்."
அமலும் ஓர் ஆவியாகிவிட்டானா? அவனைப் பார்த்தால் பூதம் மாதிரி இருக்கிறதே!
அவன் இவ்வளவு நேரமாகக் கீழே திரும்பி வராதது கண்டு மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று யோசிக்கவில்லையே அவன்! அவர்களிருவருடைய பழைய வரலாற்றை மற்றவர்கள் மறந்திருப்பார்களா?
கீழேயும் ஓர் உலகம் இருக்கிறது என்ற விஷயம் வெகு நேரங்கழித்துத்தான் நினைவு வந்தது அமலுக்கு. அவன் திரும்ப வேண்டும்.
"சவி, நீ என்ன கல்லா?"
"இருக்கலாம்"
"சவி, நான் கீழேபோய் அவங்ககிட்ட என்ன சொல்லுவேன்?"
"ஒண்ணும் சொல்ல வேண்டாம், அமல்! ஒன்னைக் கெஞ்சிக் கேட்டுக்கறேன்! கல்யாணப் பொண்ணும் பிள்ளையும் மண வறைக்குப் போயிருக்காங்க. அவங்களோட இந்த இரவை நாசமாக்கிடாதே!"
"சவி, ஒன்னாலே எப்படி இவ்வளவு கொடூரமா இருக்க முடியுது?"
"முடியத்தான் வேணும், அமல்! எல்லைக்கோட்டை நான் மறக்க முடியுமா? அவங்களோட இந்த மகிழ்ச்சிகரமான நேரத்தில நான் என்னோட.."
"ராத்திரி பூரா இப்படியே இருக்கப் போறியா?"
"இல்லே, படுத்துக்கப் போறேன். ரொம்பத் தூக்கம் வருது.. கீழே விழுந்துடுவேன் போலேயிருக்கு.."
சவி சற்றும் நாகரீகமின்றி அமலுக்கு முன்னாலேயே கதவைச் சாத்தி உட்புறம் தாழ்ப்பாள் போட்டக் கொண்டாள்.
ஆம், கதவை மூடிக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை சவியால். சதிநாத் கூறியது அவளுக்கு ஞாபகம் வந்தது. "எல்லாத் துக்கும் ஓர் அளவு உண்டு, இருக்கணும்!"
இன்னும் சில மணி நேரம் இந்தக் குளிர்ச்சியான இருட்டில் அமிழ்ந்திருக்க முடிந்தால் அவள் தான் இழந்து போன பலத்தை மீண்டும் பெற முடியும். மறுநாள் காலையில் எழுந்திருந்து கீழே போய் இயற்கையான குரலில் சொல்ல மடியும் - "நேத்திக்குக் கல்யாண அமர்க்களத்திலே ஒங்களைத் தொந்தரவ பண்ணலே, ஆனா இனியும் சொல்லாமே இருக்க முடியாது..! மேலே வந்து பாருங்க..! இனிமே என்னென்ன சடங்குகள் செய்யணுமோ அவையெல்லாம் நீங்கதானே செய்யணும்..!"
(காஞ்ச் பூத்தி ஹீரே, 1967)
8. மோசக்காரி
சநாதன், அவனுடைய பெண் சுதா. அப்பனுக்கு ஏற்ற பெண், பெண்ணுக்குத் தகுந்த அப்பன்!
அவர்களுடைய குடும்பத்தில் துக்க நிகழ்ச்சிகள் நேரும். அப்போதெல்லாம் சநாதன் இடிந்துபோய் விம்மி விம்மி அழுவான். துன்பச் சுமையால் தலை நிமிர முடியாது பெண் ணுக்கு. அவள் முந்தானையால் கண்களை மூடிக்கொண்டு பொருமிப் பொருமி அழுவாள். அருகிலிருந்து பார்ப்பவர்கள் உணர்ச்சிவசப் படுவார்கள், கண்ணீர் விடுவார்கள், பெருமூச்சு விடுவார்கள்.
சநாதனுக்கு உலகத்தில் சுதாவைத்தவிர வேறு நாதியில்லை. அவளுக்குக் கல்யாணமானதும் அவளைப் புக்ககத்துக்கு அனுப்பும்போது சநாதனின் மனம் என்ன பாடுபடும்!
கல்யாணத்துக்கு மறுநாள் பிள்ளை வீட்டுக்காரர்களும் வேறு சிலரும் சுதாவைப் புக்ககத்துக்கு அழைத்துச் செல்லத் தயாராகிய போது சநாதன் விம்மி விம்மி அழுதான். சுதா பொருமிப் பொருமி அழுது தீர்த்தாள்.
ஆனால் ஒரு மாதம் கழிவதற்குள்ளேயே சுதாவின் கணவனுக்கும் மற்ற புக்ககத்தாருக்கும் நன்றாகத் தெரிந்துவிட்டது. அப்பாவுக்கேற்ற பெண்தான் சுதா என்று. சநாதன் சரியான மோசக்காரன், சுதா பலே மோசக்காரி. மனிதர்களை ஏமாற்றும் தந்திரத்தில் இருவருமே கை தேர்ந்தவர்கள். ஒருவருக்கொருவர் இளைத்தவர் அல்ல. அப்பனுக்கேற்ற பெண்!
"பெண்ணுக்கேற்ற அப்பன்!" என்றது போலீஸ். இந்த மாதிரி மூன்று தடவை நடந்து விட்டது. இது மூன்றாவது நிகழ்ச்சி. முதல் தடவை தாரகேஸ்வரிலும், இரண்டாவது தடவை பசீர்ஹாட்டிலும் இதே மாதிரி மோசடி நிகழ்ந்திருக்கிறது. இரண்டுமாத இடைவெளிக்குள் இரண்டு மோசடிகள். இது மூன்றாவது. மூன்றிலும் ஒரே அப்பனும் ஒரே பெண்ணும் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. இதுதான் அவர்களுடைய தொழில்.
பாட்பாராவின் கடைத்தெருவுக்கருகில் ஒரு சந்தில் பூட்டப் பட்டிருந்த ஒரு சிறு அறையின் பூட்டை உடைத்துச் சோதனை செய்தது போலீஸ். ஆனால் அந்த அறைக்குள் ஒரு துரும்புகூட இல்லை. சநாதனும் சுதாவும் ஏதோ ஒரு மந்திரம் போட்டுக் காற்றோடு காற்றாக மறைந்துபோய்விட்டார்கள். அவர்கள் எப்போது ஓடிப்போனார்கள், எங்கு போனார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. ஒரு மாதத்துக்கு முன்னால் அப்பனும் பெண்ணும் விம்மி விம்மியழுவதைப் பார்த்து உணர்ச்சி வசப் பட்டுத் தாங்களும் அழுதுவிட்ட அக்கம் பக்கத்தாருக்கு அதைப் பற்றி நினைத்தாலே வெட்கமாயிருந்தது. 'இந்த உலகம் ஒரு அதிசயமான மிருகக் காட்சிசாலைதான், இதிலே என்னென்ன ஆச்சரியங்கள் நடக்குது! என்று வியந்தார்கள் அவர்கள்.
"மிருகக்காட்சி சாலையிலே இந்த மாதிரி அசிங்கமெல்லாம் நடக்காது, மனுஷங்களோட சமூகத்திலேதான் இப்படியெல்லாம் நடக்கும்" என்று சிலர் சொன்னார்கள்.
ஒருவர் சொன்னார், "நம்ம தெருவிலே நம்ம கண்ணுக்கு முன்னாலே இந்த மாதிரி ஒரு மோசடி நடந்துடுச்சுங்கறது வெட்ககரமான விசயம். ஒரு ஆம்பளையும் ஒரு பொண்ணும் எங்கேயிருந்தோ வந்து ஒரு சில நாளுக்குள்ளேயே நம்ம எல்லாரையும் முட்டாளாக்கிட்டு மாயமா மறைஞ்சு போயிட் டாங்களே! அவங்க மேலே யாருக்கும் சந்தேகம் வரலியே!"
ஆமாம், யாரும் அவர்கள் மீது சந்தேகப்படவில்லை. அப்பன், மகள் இருவருடைய இந்தப் பரிதாப அழுகைக்குப் பின்னால் ஒரு மோசடிச் சதி சிரித்துக் கொண்டிருக்கிறது என்பது அந்தத் தெருவாசிகளுக்கோ மாப்பிள்ளை வீட்டாருக்கோ தெரியவில்லை. எப்படித் தெரியும்? அந்த அழுகையை நினைத்தால் இப்போது கூட அது ஒரு பாசாங்கு என்று அவர்களால் எண்ணமுடிய வில்லை.
உண்மையில் அவர்கள் அப்பன் - மகள் தான் என்று போலீசுக்குத் தெரிய வந்தது. அவர்கள் ஒவ்வோரிடத்தில் ஒவ்வொரு புதிய பெயர் வைத்துக்கொண்டு சில நாட்கள் தங்குவார்கள். பிறகு பெண்ணுக்குக் கல்யாணமாகும். பெண் சில நாட்களுக்குப் பிறகு தகப்பனுடன் மாயமாய் மறைந்து விடுவாள்.
ஒரு மாதத்துக்குப்பின் ஒரு அந்தி வேளையில் மணமகனுக் குரிய குல்லாய் அணிந்துகொண்டு - ஓர் ஏழைத்தந்தையின் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டு போனவர் - தம் மனைவியைத் தேடிக்கொண்டு மாமனார் வீட்டுக்கு வருவார். தெருவாசிகள் வெட்கிப்போய், குற்ற உணர்வுடன் அவரைப் பார்த்துக்கொண்டு நிற்பார்கள். அந்தத் தெருவிலுள்ள சில இளைஞர்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டு சிரிப்பதுமுண்டு.
மனிதர் சற்று வயதானவர், நாற்பத்தைந்து வயதுக்குமேல் ஏறக்குறைய ஐம்பது வயது இருக்கும். நைஹாட்டியில் துணிக் கடை வைத்திருக்கிறார். மனைவியையிழந்தவர். குழந்தை குட்டி இல்லை. மறுமணம் செய்து கொள்ள விரும்பவில்லை அவர். ஆனால் சநாதனுடன் பழக்கமேற்பட்டு அவனுடைய வறுமை நிலையைப் பற்றிக் கேள்விப்பட்டபோது அவருக்கும் இந்த வயதில் குடும்ப வாழ்க்கையில் ஒரு துணைவியின் புன்சிரிப்பைப் பெறும் ஆவல் ஏற்பட்டு விட்டது. ஒருநாள் அவர் சநாதனின் அழைப்பையேற்று இந்த சந்தில் இந்த வீட்டுக்கு வந்து கொஞ்சம் பாயசமும் கொழுக்கட்டையும் சாப்பிட்டுவிட்டு ஒரு குமரிப் பெண்ணின் சுமையிலிருந்து சநாதனை விடுவிக்கத் தீர்மானித்து விட்டார். தன் சாதியைச் சேர்ந்த ஒர் அழகான, ஏழைப்பெண் இந்த மாதிரி, கல்யாணத்துக்கு வழியின்றி, இந்த இருட்டுச் சந்தில் முடங்கிக் கிடப்பதைப் பார்க்க அந்த மனிதருக்குப் பொறுக்க வில்லை. நைஹாட்டி கணேஷ் வஸ்திராலயாவின் முதலாளியான அவர் சநாதனுக்கு ரொக்கப் பணம் ஐநூறு ரூபாயும், கல்யாணத்தில் செய்யவேண்டிய தானப்பொருள்கள் வாங்கப் பணமும், பெண்ணுக்குப் பத்துப் பவுன் நகையும் கொடுத்து பெண்ணை கல்யாணம் செய்துகொடுக்க சநாதனைச் சம்மதிக்கச் செய்தார். கல்யாணத்துக்கு நாள் நிச்சயிக்கப்பட்டது. கல்யாணத் தன்று மணப்பெண்ணின் முக்காடு அணிந்த முகத்தைப் பார்த்துப் பூரித்துப் போனார் அவர். மறுநாள் காலையில் அவர் இதே வீட்டிலிருந்து விடைபெற்றுக்கொண்டு பெண்ணை அழைத்துப் போனார். பாவம், அவர்தான் போலீசுடன் வந்து அறைவாசலில் நிற்கிறார். கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்குப்பின் சநாதன் பெண்ணைப் புக்ககத்திலிருந்து தன் வீட்டுக்கு அழைத்து வந்திருக் கிறான். அதற்குப் பிறகு அவர்கள் எவ்வளவு நாள் இருந்தார்கள் என்று ஒருவராலும் நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை.
நைஹாட்டிக்காரர் சநாதனுக்குக் கடிதம் எழுதியும் பதில் வராமல் போகவே ஒருநாள் தாமே சநாதனின் வீட்டுக்கு வந்திருக்கிறார். வீடு பூட்டிக் கிடக்கிறது!
போலீசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்குமுன் இது மாதிரி இரண்டு தடவை நடந்து விட்டது. இது மூன்றாவது தடவை என்கிறது போலீஸ். அப்பன் பெண்ணின் உண்மைப் பெயர் போலீசுக்கும் தெரியாது.
தாரகேஸ்வரில் அவர்களிருவரும் பிராமண இனத்தவராக நடித்தார்கள். பசீர்ஹாட்டில் காயஸ்தர்களாகவும், பாட்பாராவில் வைத்திய சாதியினராகவும் நடித்திருக்கிறார்கள். தாரகேஸ்வரியில் அவர்களுடைய பெயர்கள் பிரசன்ன சக்ரவர்த்தி, சுநயனா. பசீர்ஹாட்டில் அவர்கள் சதானந்த கோஷ், மாதவி. இங்கே, பாட்பாராவில் அவர்கள் சநாதன் சென், சுதா என்ற பெயர் களோடு சிறிது காலம் வாழ்ந்து, அப்பனும் பெண்ணுமாக ஓர் அதிசய நாடகமாடிவிட்ட மாயமாய் மறைந்து போய்விட்டார்கள். கள்ளங் கபடற்ற மூன்று பேர்களை இவ்வாறு ஏமாற்றிவிட்டு அந்த மோசக்கார ஜோடி இப்போது எங்கு மறைந்து கொண்டிருக் கிறதோ!
அப்னுக்கேற்ற பெண், பெண்ணுக்குத் தகுந்த அப்பன்! இந்த மோசடியைப் பற்றி யோசித்துக்கொண்டே பாட்பாரா கிராமத்துச் சந்திலிருந்து திரும்பிப் போய்விட்டது போலீஸ். தெருவாசிகள் திகைத்துப்போய் நின்றார்கள். கணேஷ் வஸ்திராலயாவின் முதலாளி, சுதாவின் சாந்தமான, புன்சிரிப்பு தவழும் முகத்தை நினைத்துப் பார்த்து, "ஐயோ, இப்படியும் ஒரு மனுசன் இன்னொரு மனுசனை ஏமாத்துவானா!" என்று ஆச்சரியப்பட்டார்.
ஆனால் அதே சமயத்தில் பாட்பாராவாசிகளோ போலீசோ, கணேஷ் வஸ்திராலயா முதலாளியோ கற்பனையில்கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒரு நிகழ்ச்சி ராணா காட்டில் நிகழ்ந்து கொண்டிருந்தது. அங்கு ஒரு குடியிருப்புப் பகுதியில் ஒரு சிறிய வீட்டின் ஜன்னல் பக்கம் பார்த்துக் கொண்டிருந்த ஓர் இளைஞன் ஒரு மோசடி வலையில் விழத் தயாராகிக் கொண்டிருந்தான். அவன் பெயர் ரமேஷ். விஜய் பாபு என்பவரின் இளம் பெண் கரபியுடன் அவன் பேசிக் கொண்டிருந்தான்.
வீட்டுக்குள்ளிருக்கும் கரபி ஜன்னலருகில் நின்று கொண்டு மெல்லிய குரலில் வெளியே நிற்கும் ரமேஷைக் கேட்டாள், "நீங்க ஏன் இங்கே மறுபடி வரீங்க?"
உற்சாகம் பொங்கச் சிரித்தான் ரமேஷ். "ஒரு ஜோசியர் என் கையைப் பார்த்து என்ன சொல்லியிருக்கார் தெரியுமா..? எனக்கு வரப்போற மனைவியின் பெயர் 'க'விலே தொடங்குமாம்!"
கரபி சிரித்துவிட்டுச் சொன்னாள், "ஆனா நீங்க இப்படி தினம் ஜன்னல் பக்கம் வந்து நின்னா நாலு பேர் நாலு சொல்லு வாங்க. எனக்குக் கெட்டபேர் வரும். வேறே ஒண்ணும் லாபமில்லே!"
"என்னால வராம இருக்க முடியலியே, கரபி! நீ என்னை முதமுதல்ல பார்த்த அன்னிக்கே எனக்குத் தெரிஞ்சு போச்சு, உன்கிட்டேதான் எனக்கு அமைதியும் சுகமும் கிடைக்கும்னு!"
"இதெல்லாம் உங்க மாதிரி பெரிய மனுசங்களோட கிறுக்குத்தனம். இப்போ இங்கே வரப் பிடிக்குது உங்களுக்கு. இன்னுங் கொஞ்சநாள் கழிச்சு இந்தப் பக்கத்து நினைவே வராது ஒங்களுக்கு. வரப்பிடிக்காது இங்கே வரவும் மாட்டீங்க. பின்னே ஏன் அனாவசியமா.."
"நான் பெரிய மனுசனும் இல்லே, பெரிய மனுசங்களோட கிறுக்குத்தனமும் எனக்கில்லே. ஒன்னைப் பார்க்காம இருக்க முடியல்லேன்னுதான் ஓடியோடி வரேன் ஒன்கிட்டே."
"நீங்க பெரிய மனுசர் இல்லியா?"
"இல்லவேயில்லே!"
"நீங்க என்ன வேலை செய்யறீங்க?"
"நான் ஆர்ட்டிஸ்ட்."
"அப்படீன்னா?"
"நீ கல்கத்தாவுக்குப் போயிருக்கியா?"
"உம், அங்கே கொஞ்சநாள் இருந்திருக்கேன்."
"சினிமா பார்த்திருக்கியா?"
"ஒண்ணு ரெண்டு பார்த்திருக்கேன்."
"சினிமா தியேட்டர் சுவரிலே பெரிய பெரிய படம் போட்டிருக்குமே பார்த்திருக்கியா?"
"பார்த்திருக்கேன்."
"அந்த மாதிரிப் படம் வரையறது என் தொழில்."
"அதுக்கு காசு கொடுக்கறாங்களா?"
"ஆமா. அதுதான் என் வருமானம். கடவுள் கிருபையால் என் சம்பாத்தியம் அப்படியொண்ணும் கொறைச்சலில்லே.."
"மாசம் அம்பது ரூவா கிடைக்குமா?"
"கிடைக்கும்."
"சரியா எவ்வளவு கிடைக்கும்? சொல்லுங்க!"
"எவ்வளவு கிடைச்சா என்ன? ஒன்னை சந்தோஷமா வச்சுக்க முடியும் என்னாலே."
கரபி முகத்தை 'உம்'மென்று வைத்துக்கொண்டு சொன்னாள், "ஆமா,ஒரு பரம ஏழையோட பொண்ணை சந்தோசமா வச்சுக்க என்னவேணும் - வருசத்துக்கு ஒரு ஜோடி புடைவை, தினம் ஒருவேளைக்கு ரெண்டுபிடி சோறு. அவ்வளவுதானே!"
முகத்தைச் சுளித்தான் ரமேஷ். "ஏன் இப்படிச் சொல்றே? நான் வருசத்திலே ஒரு ஜோடி வேட்டிதான் வாங்கிக் கட்டிக்கறேனா? தினம் ஒரு வேளை ரெண்டு பிடி சோறுதான் சாப்பிடறேனா?"
"அப்படீன்னா ஒங்ககிட்டே பணமிருக்குன்னு சொல்லுங்க!" என்று சொல்லிச் சிரித்தாள் சுரபி.
"ஒன்னை அலங்காரம் பண்ணி வச்சுக்கும்படி, ஒனக்கு கஷ்டமில்லாமே ஒன்னை வச்சுக்கக்கூடிய அளவுக்கு என்கிட்டே காசு இருக்கு" என்று சொல்லிய ரமேஷ் பக்கத்திலிருந்த ஒரு பணக்கார மார்வாடியின் மாளிகையைச் சுற்றிக்காட்டி, "அந்த வீட்டுக்காரன் மாதிரி நான் பணக்காரனில்லே, நீயுமில்லே, அதனாலே.." என்றான்.
"கல்யாணச் செலவுக்குக் காசு எங்கேயிருந்து வரும்?"
ரமேஷ் சற்றுநேரம் பேசாமல் யோசித்துக் கொண்டிருந்தான். பிறகு "விஜய் பாபுகிட்டே கொஞ்சங்கூடப் பணம் இல்லையா?"
கரபியின் கண்களில் நீர் துளிர்த்தது. "இருந்தால் இப்படி.."
"எவ்வளவு பணம் தேவைப்படும்?"
"ஒரு கௌரவமான குடும்பத்துப் பெண்ணைக் கல்யாணம் செய்துவைக்கணும்னா ரொம்பக் குறைச்சலா செலவு செஞ்சாலும் ரெண்டாயிரம் ரூபாயாவது ஆகுமே!"
"ரெண்டாயிரமா?"
கரபியின் கண் மூலையில் சந்தேகமும் எரிச்சலும் தென்பட்டன, "என்ன யோசிக்கிறீங்க? இந்த ரெண்டாயிர ரூவா கூட ஒங்களாலே ஏற்பாடு செய்ய முடியாதா?"
"முடியும். ஆனா இவ்வளவு சீக்கிரமா ஏற்பாடு பண்ற துன்னா.. நூறு, இருநூறுன்னு பல எடத்திலே கடன் வாங்கறதைத் தவிர வேறே வழியில்லே" என்று வருத்தத்துடன் சொன்னான் ரமேஷ்.
"அப்படீன்னா அதையே செய்யுங்க.. கடன் வாங்கினாப் பின்னாலே திரும்பிக் கோடுத்துடலாம். நீங்க தாமதம் பண்ணினா..?" கரபியின் பேச்சு தடைபட்டது. அவளது கண்களில் நீர் பளபளத்தது.
"என்ன ஆச்சு?"
"நெசமாவே நீங்க என்னைக் காதலிக்கிறீங்களா?"
"ஆமா, கரபி"
"அப்போ சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்க! இல்லேன்னா நான் தற்கொலை செஞ்சுக்க வேண்டியதுதான்!"
"ஏன் இப்படிச் சொல்றே?" ரமேஷ் திகைத்துப் போய்க் கேட்டான்.
"வைத்தியவாடியிலே ஒரு கிழவனக்கு என்னை ரெண்டாந் தாரமாகக் கொடுக்க ஏற்பாடு செய்யறார் என் அப்பா. அந்தக் கிழவன் கல்யாணச் செலவுக்காக அப்பாவுக்க மூவாயிர ரூவா தர்றதாச் சொல்லியிருக்கான்.."
ரமேஷ் தான் சாய்ந்திருந்த சைக்கிளின் கைப்பிடியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். அவனுடைய முகத்திலும் கண்களிலும் ஒரு உறுதி வெளிப்பட்டது. அவன் கரபியைப் பார்த்துச் சொன்னான், "அந்தக் கல்யாணம் நடக்க விட மாட்டேன், கரபி! அந்தக் கிழவனோட பணத்தைத் தொட வேணாம்னு நீ ஒன் அப்பாகிட்டே சொல்லி வை! சைக்கிளின் மிதியை அழுத்தியவாறு அவன் உரக்கச் சொன்னான், "கரபி, எல்லாக் கல்யாணச் செலவும் என்னுது! நான் இன்னும் பத்து நாளிலே வந்து உன்னைக் கல்யாணம் பண்ணிக் கூட்டிக்கிட்டுப் போயிடறேன்!"
ராணாகாட் வீட்டில் கலியாணச் சடங்கு அடக்கமான முறையில் நடந்தேறியது. அந்தத் தெருவுக்கு வந்து வசித்த நாட்களிலேயே ஏழைத் தந்தையும் பெண்ணும் தங்கள் நடத்தை யால் தெருவாசிகளின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டனர். விஜய் பாபு அவர்களுக்கு எளியமுறையில் ஒரு விருந்து வைக்க விரும்பினார். ஆனால் அந்த அனாவசியச் செலவு வேண்டாமென்று தெருவாசிகளே தடுத்து விட்டார்கள். "உங்கள் நிலையில் உள்ளவர்கள் இந்தச் செலவெல்லாம் செய்யக்கூடாது!" என்று சொல்லிவிட்டார்கள் அவர்கள்.
விஜய்பாபு ஆயிரத்தைநூறு ரூபாய் செலவில் பெண்ணுக்கு நகைகள் செய்து போட்டார். மிகவும் எளிய முறையில் கல்யாணத்தை நடத்தினார். அவர் தன் வாழ்நாள் சேமிப்பு முழு வதையும் இந்தக் கலியாணத்துக்காகச் செலவு செய்து விட்டதாகத் தெருக்காரர்கள் நம்பினார்கள். அவர் இவ்வளவு நகைகள் போட்டிருக்க வேண்டாம், காரணம் பிள்ளைவீட்டிலிருந்து எந்தவிதக் கோரிக்கையுமில்லை. இருந்தாலும் கரபி அவருடைய ஒரே பெண். அவளுக்கு நல்ல முறையில் கல்யாணம் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசையிருக்காதா அவருக்கு! இதன் விளைவாக அவர் பக்கிரியாகி விட்டார், பாவம்! தன் பெண்மேல தான் எவ்வளவு பிரியம் அவருக்கு..!
கரபி ரமேஷ் கொடத்த பணத்தில் நகை வாங்கிப் போட்டுக் கொண்டு அவனுடைய மனைவியாகப் புக்ககம் சென்றாள். தாரகேஷ்வர், பசீர்ஹாட், பாட்பாரா ஆகிய இடங்களில் நிகழ்ந்தது போலவே இப்போதும் கரபி தந்தையிடமிருந்து விடைபெறும் போது ஓர் உருக்கமான காட்சி அரங்கேற்றப்பட்டது. விம்மி விம்மியழுதார் விஜய்பாபு, பொருமிப் பொருமியழுதாள் கரபி.
இவ்வாறு ராணாகாட்டின் ஒரு தெருவில் வசிப்பவர்களின் கண்களை நீரில் முழுக்காட்டிவிட்டு விடைபெற்ற கரபி அன்று மாலையில் கல்கத்தாவின் பாக் பஜார் பகுதியில் ஒரு குறுகிய சந்தில் ஒரு சிறு வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.
அதற்கு இரண்டு நாட்களுக்குப்பின் அந்த வீட்டில் இரவு முழுதும் பிரகாசமாக விளக்கு எரிந்தது. முதலிரவையொட்டி விருந்து. விழாவில் ஆர்ப்பாட்டமில்லை, ஆனால் மகிழ்ச்சிக்கும் சத்தத்துக்கும் பஞ்சமில்லை. இந்த உலகத்தில் ரமேஷுக்கு வேண்டியவர்களாயிருந்த ஒரு சிலர் இந்த விழாவில் பங்கேற்றனர். ரமேஷின் சித்தி தன் மூன்று பெண்களுடன் வந்திருந்தாள். ஒரு சித்தப்பா தன் பத்துக் குழந்தைகளுடன் வந்தார். ரமேஷின் இரு நண்பர்களின் தாய்களும் ஒரு நண்பனின் மனைவியும் வந்தார்கள். பெண்ணைப் பார்த்து எல்லாரும் மகிழ்ந்தார்கள். ஓர் இரவும் அதையடுத்த பகலும் அந்த அறை விருந்தினர்களின் மகிழ்ச்சி யொலிகளால் கலகலப்பாயிருந்தது.
அவர்கள் எல்லாரும் புறப்பட்டுச் சென்றபோது மாலை வெயில் ஜன்னல் வழியே அறைக்குள் நுழைந்தது. புதுமணப் பெண் ஓர் ஆழ்ந்த பெருமூச்சு விட்டாள். முக்காட்டை விலக்கிக் கொண்டு மை தீட்டிய தன் பெரிய விழிகளைச் சுழற்றி அறையின் நாற்புறமும் பார்த்தாள். ரமேஷோ அவளுடைய முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றான்.
"கரபி, நான் ஒன் படம் வரையப் போறேன். ரெண்டு நாளிலே வரைஞ்சு முடிச்சிடுவேன்.. அப்போ ஒனக்குத் தெரியும் என்னாலே என்ன செய்ய முடியும்னு.." ரமேஷ் சொன்னான்.
"நீங்க என்ன சொல்றீங்க, புரியலியே!"
"ஒன் ரெண்டு கண்ணையும் அப்படியே தத்ரூபமாச் சித்திரத்தில் தீட்டிடுவேன்!"
தீட்டி வையுங்க, நான் திரும்பி வந்து பார்க்கறேன்."
"எங்கே போகப் போறே?" ரமேஷ் வியப்புடன் கேட்டான்.
"அப்பாகிட்டே."
"போகலாம் .. ஆனா இன்னிக்கி நாளைக்கிப் போகப் போறதில்லியே?"
"போக ஆசையில்லேதான்.. ஆனா அப்பா வந்து கூப்பிட்டா போகாம இருக்கமுடியாது."
"ஒன் அப்பா வரப்போறதாச் சொல்லியிருக்காரா?"
"சொல்லலே.. ஆனா நாளைக் காலம்பரவே வந்தாலும் வந்துடுவார்" என்று சொல்லிவிட்டுச் சற்று நேரம் மௌனமா யிருந்தாள் கரபி. பிறகு திடீரென்று பொறுக்க முடியாத வேதனையால் துடிப்பவள்போல், "அப்பா ஞாபகம் வந்தால் ரொம்பக் கஷ்டமாயிருக்கு எனக்கு.. இன்னும் அழுதுக்கிட் டிருப்பார் அவர்!" என்றாள்.
ரமேஷ் அவளுக்கு ஆறுதல் கூறினான். " அது இயற்கைதான். நீ அவரோட ஒரே பொண்ணு. அவரோட வருத்தம் எனக்குப் புரியுது. ஆனா .. சரி, ஒன் அப்பா வரட்டும். நானே அவருக்கு சமாதானம் சொல்றேன்."
"என்ன சொல்லுவீங்க?"
"அவர் இன்னும் ஒரு மாசங்கழிச்சு ஒன்னைக் கூட்டிக்கிட்டுப் போகட்டும், இப்பவே வேணாம்னு.."
அப்பா சம்மதிக்க மாட்டார்.. நீங்களும் அவரோட ஆசையைத் தடுக்காதீங்க, அவருக்கு வேதனை கொடுக்காதீங்க!"
" ஆனா என்னோட கஷ்டம் அவருக்குப் புரியாதா?" ரமேஷ் வருத்தத்தோடு கேட்டான்.
"ஒங்களுக்கு என்ன கஷ்டம்?"
"நீ நாளைக்கு அவரோட போயிட்டா எனக்கு ரொம்பக் கஷ்டமாயிருக்குமே, கரபி!"
மை தீட்டிய தன் பெரிய கண்களால் ரமேஷை உற்றுப் பார்த்தாள் கரபி.
"அப்டி நீ போகத்தான் வேணும்னா நானும் ஒன்னோட வரேன். ரெண்டுநாள் அங்கேயிருந்துட்டு மறுபடி உன்னைக் கூட்டிக்கிட்டு வந்துடறேன்."
"ஒங்களுக்கு சுயமரியாதை இல்லியா? மாமனார் அழைக்காமே நீங்க அவர் வீட்டுக்குப் போகலாமா?"
"ஒன் அப்பா என்னை அழைக்க மாட்டாரா? ஏன்?"
"ஏனோ, தெரியாது" தயங்கித் தயங்கிச் சொன்னாள் கரபி.
"நீயாவது ஒன் அப்பாகிட்டே சொல்லலாமே!"
"என்ன சொல்றது?"
"அவர் என்னைத் தன் வீட்டுக்கு அழைக்கும்படி.."
"சீ, நான் என்ன வெட்கம், மானம் இல்லாதவளா? நான் எப்படி அப்பாகிட்டே இந்த மாதிரி கேப்பேன்? இது அவமானம் இல்லியா?"
ரமேஷ் பேசாமலிருந்தான்.
"ஏன் இவ்வளவு கோபமா இருக்கீங்க? ஏதாவது சந்தேகமா இருக்கா?" கரபி கேட்டாள்.
"சந்தேகமா..? நான் ஏன் சந்தேகப்படணும்?"
"எனக்கு ஒங்ககிட்டே ஆசையில்லேன்னு சந்தேகம்.."
"அந்த மாதிரி சந்தேகம் வர்றதுக்கு முன்னாலே, நான் செத்துப் போயிடுவேன்!"
கரபியின் கண்கள் துடித்தன. ஏதோ ஓர் இனம்புரியாத பயம் அவளுடைய நெஞ்சைத் தாக்கியது. அவள் நடுங்கும் குரலில் மெதுவாகச் சொன்னாள், "நீங்க ஏன் சாகணும்? நானே செத்துப்போறேன். அதுக்கப்பறம் நீங்க இன்னொரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு வருவீங்க. என்னைப் பத்தி அவகிட்டே சொல்லிச் சிரிப்பீங்க."
"வெளையாட்டுக்குக்கூட இந்தமாதிரி அச்சானியமாப் பேசாதே, கரபி!"
"அதிருஷ்டசாலியோட பெண்டாட்டி சாவாள்" என்று சொல்லிச் சிரித்தாள் கரபி.
"சீ, அசட்டுப் பேச்சு!" என்று சொல்லிக் கொண்டு ரமேஷ் அவளருகில் வந்து அவள் கையைப் பற்றிக் கொண்டான். "இந்த மாதிரிப் பொண்டாட்டி யாருக்கும் கிடைக்க மாட்டாள்!"
கரபி திடுக்கிட்டாள்.
"இந்த மாதிரி மனைவி செத்துப் போயிட்டா, அவளோட அதிருஷ்டங்கெட்ட புருசன் பிழைச்சிருந்து என்ன பிரயோசனம்!"
கரபி தன் கையை அவனிடமிருந்து விடுவித்துக்கொண்டு வேறுபக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். பிறகு எழுந்து போய்க் கட்டிலின் ஒரு மூலையில் உடம்பைக் குறுக்கிக்கொண்டு உட்கார்ந்தாள். அவளுக்கு ரமேஷின் முகத்தைப் பார்க்கவோ, ரமேஷுக்குத் தன் முகத்தைக் காட்டவோ விருப்பமில்லை என்று தோன்றியது.
இருட்டி விட்டது. கரபி திடீரென்று, "சாப்பிடப் போற தில்லையா, எனக்கும் சாப்பாடு போடப் போறதில்லையா?" என்று கேட்டாள்.
"ஏன் இப்படிக் கேக்கறே?"
"நீங்க என்னை சமைக்கவும் சொல்லலே, சாப்பாடும் வெளியிலிருந்து வரவழைக்கலியே!"
இதைக்கேட்டு ரமேஷுக்கு ஒரே மகிழ்ச்சி. "நீ சமைக்கறியா?" என்று கேட்டான்.
"ஆமா, இன்னிக்கு ஒரு ராத்திரிதானே! சமைச்சுப் போட்டுட்டுப் போறேனே!" கரபி சிரித்தாள்.
ரமேஷும் சிரித்துக்கொண்டு சொன்னான், "இந்த விஷயத்தைச் சொல்றதுக்குத்தான் இவ்வளவு நேரம் தவிச்சுக் கிட்டிருந்தேன்."
"எந்த விஷயம்?"
"இவ்வளவு காலமாத்தான் ஓட்டல் சாப்பாடு சாப்பிட்டுக் கிட்டிருந்தேன், இப்போ நீ வந்தப்பறமும் ஓட்டல் சாப்பாடு சாப்பிடக் கொஞ்சங்கூடப் பிடிக்கலே எனக்கு."
"என் கைச்சமையல் சாப்பிட அவ்வளவு ஆசையா ஒங்களுக்கு?"
"ஆமா."
கரபி ஏதோ நினைவில் ஆழ்ந்தவள்பொல் வேறு பக்கம் பார்த்தவாறு திடீரென்று சொன்னாள், "நீங்க இந்த மாதிரி ஆசைப்படாம இருந்திருந்தா நல்லாயிருந்திருக்கும்."
"அதெல்லாமில்லே. நான் வெகுகாலம் இந்தமாதிரி ஆசைப்பட்டுக்கிட்டுதான் இருப்பேன்."
இதன்பின் சிறிது நேரத்தில் அந்த பாக் பஜார் சந்து வீட்டுக்குள்ளிருந்து கரிப்புகை வெளியே மிதந்து வந்தது. ஒரு புதிய மணப்பெண்ணின் புதுக் குடித்தனம் தொடங்கும் மகிழ்ச்சி, பாத்திரங்களும் கரண்டிகளும் எழுப்பும் ஒலியில் வெளிப்பட்டது. புதுக் குடித்தனக்காரி தன் புதுப்புடவையின் தலைப்பை இடுப்பில் செருக்கி கொண்டு, கையில் மஞ்சள் அப்பிக் கொண்டிருந்ததால் புறங்கையால் நெற்றியில் விழுந்திருந்த முடிக்கற்றைகளை விலக்கியவாறு சமையல் செய்தாள்.
சமையல் முடிந்ததும் கரபி ரமேஷ் சாப்பிட உட்காரப் பலகையை போட்டாள்.
ரமேஷ் பலகையின் மேல் உட்கார்ந்து கொண்டு கரபியின் முகத்தைப் பார்த்தான். அவளிடம் ஏதோ சொல்லத் துடித்தான் போலும்.
"சாப்பிட ஒக்காந்துகிட்டு ஏன் இவ்வளவு கடுமையா இருக்கீங்க?"
"ஒண்ணு சொல்லவா?"
"சொல்லுங்க."
"தனியா சாப்பிடப் பிடிக்கலே."
"அப்படீன்னா?"
"நீயும் வந்து ஒக்காரு! நாம ரெண்ணு பேரும் ஒரே தட்டிலே சாப்பிடலாம்."
கரபி திடுக்கிட்டாள். ஒன்றும் சொல்லத் தெரியாமல் திகைத்துப் போய் நின்றாள்.
ரமேஷ் எழுந்து நின்றான்; சிரித்துக்கொண்டே அவளுடைய கையைப் பிடித்து அவளை வலுக்கட்டாயமாகத் தனக்கருகில் உட்கார்த்தி வைத்துக்கொண்டு சொன்னான், "இனிமேல் இந்த மாதிரி வாய்ப்பு கிடைக்கறது கஷ்டம். எனக்கு வேலைப்பளுவிலே நேரங்கிடைக்காது. ஒன்னோட ஒக்காந்துகிட்டு ஒரே தட்டிலே சாப்பிடற மகிழ்ச்சி வாழ்க்கையிலே இன்னும் எவ்வளவு தடவை கிடைக்குமோ, யார் கண்டாங்க?"
கரபியும் ரமேஷும் சேர்ந்து சாப்பிடத் தொடங்கினர். அவர்கள் சேர்ந்தாற்போல் ஒரு சுடு சோற்றுக் கட்டியை உதிர்த் தார்கள். வாழ்க்கையில் ஒரு புதிய விளையாட்டு விளையாடும் மனநிலை அவர்களுக்கு.
சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது கரபி அழுகை தொனிக்கும் குரலில் கேட்டாள், "ஒங்க வேலை ரொம்பக் கஷ்டமானதா?"
"ஆமா! வேலை யாருக்கும் தயவு தாட்சணியம் காட்டாது - நான் எவ்வளவோ நாள் காய்ச்சலோட வேலைக்குப் போயிருக்கேன்!"
"ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு ஒழைக்கணும்?"
வயித்துக்காகத்தான்."
"எவ்வளவு சம்பாதிப்பீங்க?"
"ஒர மாசம் அம்பது ரூவா கிடைக்கும், ஒரு மாசம் நூறு கிடைக்கும், இன்னொரு மாசம் ஒண்ணுமே கிடைக்காது."
"இப்போ நான் வேறே வந்து சேர்ந்திருக்கேன், அதனால நீங்க இன்னும் ஒழைச்சுப் பைத்தியமாயிடுவீங்க!"
"இல்லவேயில்லே, இனிமேல நான் சந்தோஷமா ஒழைப்பேன், இன்னும் கடுமையா ஒழைப்பேன்."
"நீங்க நிறையக் கடன் வேறே வாங்கியிருக்கீங்கீள!"
ரமேஷ் தன் கடன் சுமையை மிகவும் அற்பமாகக் கருதுபவன் போல் சிரித்தான். "ரெண்டு வருஷம் கொஞ்சம் கொஞ்சம் கூட வேலை செஞ்சு அதை அடைச்சுடுவேன். அதைப்பத்திக் கவலை யில்லே எனக்கு."
சட்டென்று தலையைக் குனிந்துகொண்டாள் கரபி. குனிந்த தலையைக் கையால் தாங்கிக்கொண்டு சற்று நேரம் பேசாமலிருந்தாள்.
"என்ன ஆச்சு, ஏன் சாப்பிடாம இருக்கே?" ரமேஷ் கேட்டான்.
கரபியிடமிருந்து பதிலில்லை.
அவன் அவளுடைய அசைவற்ற கையைப் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தான். சற்று நேரத்துக்குப்பின் எதையோ பார்த்து விட்டுத் திடுக்கிட்டு, "இதைன்ன கரபி?" என்று வேதனைக் குரலில் கத்தினான்.
கரபியின கண்களிலிருந்து ஒரு துளி நீர் அவனது கையின் மேல விழுந்திருந்தது.
கரபி எழுந்து கை கழுவிக் கொண்டாள். இடுப்பில் செருகி யிருந்த புடவைத் தலைப்பைப் பிரித்துக் கண்களைத் துடைத்துக் கொண்டு சொன்னாள், "கேளுங்க!"
"என்ன?"
"ஒங்களுக்குப் பிழைச்சிருக்க ஆசையா?"
"இது என்ன கேள்வி?"
"நீங்க பிழைச்சிருக்கணும்னா இப்பவே போலீசைக் கூப்பிட்டு என்னைப் பிடிச்சுக் குடுத்திடுங்க!"
ரமேஷ் திடுக்கிட்டான். "ஒன் பேச்சுக்கு என்ன அர்த்தம்?"
"நான் ஒங்களை ஏமாத்த வந்திருக்கேன். நான் ஒங்க சாதியில்லே, நான் குமரியில்லே, என் பேரும் கரபி இல்லே.. நான்.. நான் ஒர மோசக்கார அப்பனோட மொசக்காரப் பொண்ணு. நான் ஒங்களோட குடித்தனம் நடத்த வரல்லே, ஓடிப்போறதுக்காக வந்திருக்கேன்!"
கரபியின் நடத்தையைப் பார்த்தால் அவள் ஒரு நாடகப் பாத்திரமாக மாறி வேடிக்கையாக நடித்துக் காட்டுவதாகத் தோன்றியது; விளையாட்டுக்காக ரமேஷைப் பயமுறுத்துகிறாள் என்று தோன்றியது.
வெகுகாலத்துக்கு முன் ரமேஷ் பார்த்த ஒரு நாடகத்தில் இப்படித்தான் ஒரு ராட்சசி ராஜகுமாரியாக உருமாறி வந்து ஒரு ராஜாவை மயக்கிக் கல்யாணம் செய்து கொள்கிறாள். பிறகு திடீரென்று இதே மாதிரிதான் சற்றும் கூச்சமில்லாமல் தன்னைப் பற்றிய உண்மையை வெளிப்படுத்தி அந்த ராஜாவைப் பயமுறுத்து கிறாள். ரமேஷுக்கு அந்த நாடகத்தின் பெயரோ அந்த அதிர்ஷ்டங்கெட்ட அரசனின் பெயரோ நினைவு வரவில்லை.
கரபியின் பேச்சு நடிப்புதான் என்றாலும் ரமேஷுக்குச் சற்று பயம் ஏற்பட்டது. தனக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப் படுவதுபோல் தோன்றியது அவனுக்கு. அவன் அவளது முகத்தை உற்றுப் பார்த்தான். இந்த முகம் உண்மையிலேலே ஒரு மோசக் காரியின் முகமாக இருக்க முடியுமா?
"நீங்க போலீசைக் கூப்பிட்டு என்னைப் பிடிச்சுக் குடுக்க மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும், நீங்க அசடு, திராணி யில்லாதவர்!" என்று சொல்லிவிட்டுக் கரபி தன் நகைகளை ஒவ்வொன்றாகக் கழற்றித் தரையில் வைக்கத் தொடங்கினாள். "இந்தாங்க, ஒங்க ஆயிரத்தைநூறு ரூவாயாவது தப்பிச்சுது..! இப்போ என்னைப் போகவிடுங்க!"
"எங்கே போகப்போற!"
கரபியிடமிருந்து பதிலில்லை.
"ஒன் பயங்கர அப்பன்கிடடயே திரும்பிப் போகப்போறியா?" கடுமையான குரலில் கேட்டான் ரமேஷ்.
இப்போதும் கரபியிடமிருந்து பதிலில்லை.
"என் கேள்விக்குப் பதில் சொல்லு, கரபி!"
"நீங்க என்னைப் போகவிட விரும்பலேன்னு சொல்றீங்களா?" கரபி அழுதுகொண்டே கேட்டாள்.
சற்றுநேரம் பேசாமல் யோசனையிலாழ்ந்திருந்தான் ரமேஷ். பிறகு கண்களில் நீர் மல்கக் கரபியின் கைகளைப் பிடித்துக் கொண்டு சொன்னான், "ஒன்னைப் போகவிட எனக்கு இஷ்ட மில்லே."
"அப்படீன்னா நான் சொல்றதைக் கேளுங்க!"
"சொல்லு."
"நாம ரெண்டு பேரும் இங்கேயிருந்து ஓடிப் போயிடுவோம்."
"எங்கே?"
"நீங்க எங்கே கூட்டிக்கிட்டுப் போனாலும் சரி!"
ரமேஷ் அதற்குமேல் தாமதிக்கவில்லை. அன்றிரவே அந்தச் சிறிய வீடு காலியாகி விட்டது.
மோசக்காரன் ஏமாந்து போய்விட்டான் இந்தத் தடவை. மறுநாள் காலையில் ராணாகாட்டிலிருந்து அந்த பாக்பஜார் வீட்டுக்கு வந்த விஜய் பாபு வாசலில் பூட்டு தொங்குவதைக் கண்டான். கெட்டியான, ஈவிரக்கமற்ற பூட்டு. கதவிடுக்கு வழியே உள்ளே பார்த்தான். அறைக்குள் ஒன்றுமில்லை. ஒரு பயங்கர சூனியம்!
ஆனால் விஜய்பாபு திகைப்புடன் வெகுநேரம் நின்று கொண்டிருக்கவில்லை அங்கே. சிறிது நேரத்திற்குள் போலீஸ் வந்து அவனைப் பிடித்துக் கொண்டது.
உரக்க அழத் தொடங்கினான் விஜய் பாபு. "சீ, பொண்ணா யிருந்துக்கிட்டு அப்பாவையே ஏமாத்திட்டியே மோசக்காரி..!"
(கல்ப சங்கரஹ, 1/1970)
9. ஒரு காதல் கதை
பிரபாத் பாபு ஜன்னல் வழியே எட்டிப் பார்த்து, "எழுதிக்கிட் டிருக்கீங்களா? சரி எழுதுங்க. நான் ஒங்களைத் தொந்தரவு பண்ணலே" என்று சொன்னார்.
நான் காகிதத்தையும் பேனாவையும் தள்ளி வைத்துவிட்டு என் மதிப்புக்குரிய, வயதில் பெரிய நண்பனை வரவேற்றவாறு, "வாங்க, வாங்க..! உள்ளே வாங்க!" என்று அழைத்தேன்.
பிரபாத் பாபு சற்றுத் தயக்கத்துடன், "நீங்க ஏதோ எழுதிக் கிட்டிருந்தீங்களே..!" என்றார்.
"எல்லா எழுத்தும் எழுத்தாயிருமா? சம்மா ரெண்டு மூணு கடிதங்களுக்குப் பதில் எழுதிக்கிட்டிருந்தேன், அவ்வளவுதான்!" என்று அவரைச் சமாதானம் செய்தேன்.
அழைப்புப்பெற்ற பிரபாத் பாபு உள்ளே வந்தார். சோபாவில் அமர்ந்துகொண்டு தன் குடையைத் தனக்கு முன்னால் தரையில் வைத்தார். போகும்போது அதை மறந்துவிட்டுப் போய்விடாம லிருக்க இந்த ஏற்பாடு. அவரது பிரியத்துக்குரிய பொருள் கண் முன்னாலேயே இருக்க வேண்டுமாம்.
நானும் நாற்காலியை விட்டிறங்கி அவருக்கெதிரிலிருந்த தாழ்வான சோபாவில் உட்கார்ந்தேன்.
அவர் சிரித்தக்கொண்டு சொன்னார், "நெறைய லெட்ட ரெல்லாம் எழுதறீங்க போலிருக்கு. எனக்கும் ஒரு காலத்திலே நெறைய லெட்டர் எழுதற பழக்கம் இருந்தது. ராத்திரி கண் முழிச்சு நண்பர்களுக்கத் கடிதமெழுதுவேன். அந்த விஷயத்திலே என்னை "மேன் ஆஃப் லெட்டர்ஸ்"னு அழைக்கலாம்!"
நான் புன்சிரிப்புடன் அவர் தமக்களித்துக் கொண்ட பட்டத்தை ரசித்துவிட்டு, "டீ குடிக்கறீங்களா?" என்று கேட்டேன்.
'டீ' என்ற வார்த்தையைக் கேட்டும் அவரது முகம் மலர்ந்தது. "குடிக்கலாந்தான்.. ஆனா இந்த நடுப்பகல்லே டீ வேணும்னு சொன்னால் ஒங்க இல்லறத்துக்குத் தொந்தரவு ஆயிடுமோ என்னவோ ..! நான்தான் சம்சாரி இல்லே.. அதனாலே மத்தவங்களோட குடும்பத்திலே அமைதி என்னால் கலைஞ்சிடு மோன்னு பயமாயிருக்கு.."
நான் உள்ளே போய் இரண்டு கப் டீ கொடக்கச் சொல்லிவிட்டு வந்தேன்.
அவருக்குப் பெயர்தான் பிரபாத் (காலைநேரம்). ஆனால் அவர் வெளியே சுற்றும் நேரம், கதை பேசும் நேரம் இதெல்லாம் நடுப்பகலுக்கும் நள்ளிரவுந்தான். வயது எழுபத்து நான்கு அவருக்கு. உடல் தளர்ந்தாலும் மனதைத் தளரவிடவில்லை அவர். பஸ்ஸிலும் டிராமிலும் சிரமமில்லாமல் பிரயாணம் செய்கிறார். கலகலப்பான மனிதர். தமக்குப் பிடித்த இலக்கியக் கூட்டங்களுக்குப் போவார். பழைய நண்பர்களைச் சந்தித்துப் பேசுவார். புதிய நண்பர்களைச் சம்பாதித்துக் கொள்வதிலும் தங்கு தடையில்லை. அவருக்கு அடுத்த தலைமுறையிலும் அதற்கடுத்த தலைமுறையிலுங்கூட நண்பர்கள் உண்டு. ஆனால் அவருக்குப் பிள்ளையுமில்லை, பேரனுமில்லை. அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை.
பேச்சுவாக்கில் அவரிடம் சொன்னேன், "என்ன பிரபாத் பாபு! முந்தாநாள் ராத்திரி ஒங்களை வரச் சொல்லியிருந்தேன், நீங்க வரவேயில்லே! என்னோட ரெண்டு சிநேகிதங்க ஒங்களைச் சந்திக்கணும்னு வந்திருந்தாங்க. நாங்க ரொம்பநேரம் காத்துக் கிட்டிருந்தோம் ஒங்களுக்காக."
பிரபாத் பாபு வெட்கமடைந்து நாக்கைக் கடித்துக் கொண்டார். "அடேடே, மறந்தே போயிட்டேன், கல்யாண் பாபு..! முந்தாநாள் ராத்திரி நான் அலிப்பூர்லே என் சிநேகிதன் வீட்டிலே இருந்தென். அங்கே ஒரு ஆண்டுவிழா கொண் டாடினோம்.."
"ஒங்க சிநேகிதரோட பிறந்தநாள் விழாவா?"
"இல்லேயில்லே, அதெல்லாம் ஒண்ணுமில்லே. பிறந்த நாள் கிறந்த நாள் கொண்டாடற வழக்கம் என்னிக்குமே இல்லே என் நண்பனுக்கு. அவன் தனிப்பட்ட முறையிலே பூஜை கீஜை பண்ணியும் பார்த்ததில்லே. சமூகச் சடங்குகளிலே கலந்து கொண்டும் பார்த்ததில்லே நான். சந்தியா வந்தனம், ஜபம் தபம் ஒண்ணுமில்லே அவனுக்கு. நானே அவன்கிட்டே ஒரு தடவை சொல்லியிருக்கேன். சைலேன், பிசாசுக்குக்கூடச் சில சடங்குகள் உண்டு. நீ பிசாசைவிடப் பெரியவனா..?" இப்போ கொஞ்சநாளா அவன் ஒரு சடங்கை அக்கறையா செஞ்சுகிட்டு வரான். வருஷத்திலே ஒருநாள் அதுக்கு அவன் ஒருத்தனை மட்டும்தான் அழைப்பான் .."
"அது நீங்கள்தானாக்கும்?"
பிரபாத் பாபு புன்சிரிப்புடன் ஒப்புக்கொண்டார்.
இதற்குள் டீ வந்துவிட்டது. அவர் அதில் ஓர் உறிஞ்சு உறிஞ்சிவிட்டுச் சட்டைப்பையிலிருந்து சிகரெட் பெட்டியை எடுத்து ஒரு சிகரெட் பற்றவைத்துக் கொண்டார். அவர் உபயோகிப்பது மலிவான சிகரெட்டுதான்.
நான் சிகரெட் பிடிப்பதில்லையென்று தெரிந்தும் அவர் என்னிடம் ஒரு சிகரெட் நீட்டினார். நான் தலையாட்டுவதைப் பார்த்துச் சிரித்தவாறு, "நீங்க தேவலை. நான் எப்ப சிகரெட் பிடிக்க ஆரம்பிச்சேன்னு எனக்கே ஞாபகமில்லே. பால்குடி மறந்ததுமே சிகரெட் பிடிக்கத் தொடங்கிட்டேன்னு நினைக்கறேன்." என்றார்.
"ஏதோ ஒரு விழாவைப் பத்திச் சொல்லிக்கிட்டிருந்தீங்களே!"
"பொறுங்க, பொறுங்க! நான் கதை எழுதறதில்லேன்னாலும் எப்படி எழுதணும்னு எனக்குத் தெரியும்; கல்யாணம் பண்ணிக்க லேன்னாலும் மாப்பிள்ளை வீட்டாரோட ஆயிரம் கல்யாணத் துக்குப் போயிருக்கென். தொடக்கத்திலேயே கதையோட சஸ்பென்ஸைச் சொல்லிட நான் அவ்வளவு முட்டாள்னு நினைச்சுக்கிட்டிருக்கீங்களா? நான் முதல்லேயே சஸ்பென்ஸை வெளியிட்டா நீங்க அக்கறையாக் கதை கேப்பீங்களா..?
இது என் கதையில்லே, என் நண்பனோட கதை.. ஒங்ககிட்டே எதுவும் சொல்லப் பயமாயிருக்கு. ஒங்ககிட்டே ரகசியம் தங்காது. கேட்ட ரகசியத்தைப் பத்துப் பேருக்குச் சொல்லாட்டி ஒங்களுக்கு நிம்மதியிருக்காது.. ஆனால் இந்தக் கதையை நீங்க எழுதிப் பிரயோசனமில்லே. ஏன்னா இந்த மாதிரிக் கதை ஒருத்தருக்கும் பிடிக்காது. இது பழைய காலத்துக் கதை. பழைய காலம், பழைய சூழ்நிலை மட்டுமில்லே, பழைய மதிப்பீடுகள் சம்பந்தப்பட்ட கதை..
பழைய காலந்தான். ஆனால் எனக்கு அப்போ புதுசுதான். அப்போ நான் இளைஞன். எவ்வளவு காலம் முன்னாலே? சுமார் அரை நூற்றாண்டு! ஆனால் சில சமயம் நேத்து நடந்த மாதிரி இருக்கும். சில சமயம் ரொம்ப, ரொம்பப் பழைய காலம் மாதிரி தோணும்- வரலாற்றுப் பழமை, வரலாற்றுக்கும் முந்தைய பழங்காலம்.
அந்தக் காலத்திலே கல்கத்தாவிலேருந்து மேற்கு இந்தியாவிலே ஒரு பட்டணத்துக்கு மாற்றலாச்சு எனக்க. நான் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்கறவனில்லே. கல்கத்தாவிலே எனக்கு நிறைய சிநேகிதங்க. ஆபீஸ் நேரம்போக மத்த நேர மெல்லாம் அவங்களோடே பேசிப் பொழுது போக்குவேன். பகல் இரவு பாராமே கும்மாளம் போடுவோம். எங்க பொழுது போக்கிலே இலக்கியம், சங்கீதம், நாடகம் எல்லாத்துக்கும் இடமுண்டு .. ஆனால் நான் போகப்போற இடத்திலே ஆபிசைத் தவிர என்ன இருக்கும்? அதுவும் எப்படிப்பட்ட ஆபீஸ் வேலை தெரியுமோ? ராணுவத்தோட உடை, சாப்பாட்டுச் செலவுக்கானி கணக்கு வழக்குகளைப் பார்த்துக்கறது. இந்த மாதிரி வேலை எனக்குப் பிடிக்கவேயில்லே. ஆனால் ஆபீஸ் வேலையைச் செய்யத் தானே வேணும்! கணவனைப் பிடிக்காட்டியும் ஒரு பதிவிரதை அவனோட குடித்தனம் செய்யத்தானே வேணும்!
அந்தப் பட்டணத்திலே நான் ஒரு நடுத்தர உணவு விடுதியிலே போய்த் தங்கினேன். அங்கே எனக்கு நண்பர்களே கிடைக்க மாட்டங்கன்னு நான் பயந்தமாதிரி இல்லே. அங்கே என் அறையிலேயே ஒரு சின்ன கோஷ்டி சேர்ந்துடுச்சி. கதை பாட்டு, வேடிக்கைப் பேச்சு, சீட்டு விளையாட்டு எல்லாம் நடந்தது. வேறுவித ஆசைகள் உள்ளவங்களும் அதுக்கான ஏற்பாடுகள் செஞ்சுக்கிட்டாங்க. என்னோட சக ஊழியன் சைலேனும் இந்த கோஷ்டியிலே வந்து கலந்துக்கத் தொடங் கினான். நானும் சைலேனும் ஒரே பிரிவிலே வேலை பார்க்கறவங்க, ஆனால் அவன் என் மாதிரி இல்லே. நல்ல பையன். அக்கறையா வேலை செய்வான். ஆனால் எல்லாத்தையும்விட அவனோட அழகுதான் மத்தவங்கள முதல்லே ஈர்க்கும். என் மாதிரி கறுப்பா, அவலட்சணமா இருக்கமாட்டான் அவன். நான் நல்ல ஒசரம், ஏறக்குறைய ஆறடி, என்னைவிட ஒரு அங்குலம் ஒண்ணரை அங்குலம் குட்டையாயிருப்பான்.
அவன்கிட்டே எந்தவிதமான குறையும் இல்லே. நல்ல சிவப்பு, நீளமான மூக்கு, தலை நறையக் கருப்பு முடி, அழகான உடல்வாகு.. அவன் ஒண்ணும் விளயாட்டு வீரன் இல்லே. இருந்தாலும் அவனோட தோற்றத்திலே ஆண்மை இருந்தது. என்னிலிருந்து வேறுபட்ட ஒருத்தனை நான் நண்பனாகப் பெற்றது அதுதான் முதல்தடவை. என்னிடமில்லாத ஏதோ ஒரு கவர்ச்சி அவன்கிட்டே இருந்தது. அதே மாதிரி அவனும் தன்கிட்டே இல்லாத ஏதோ ஒரு கவர்ச்சியை என்னிடம் உணர்ந்திருக்கலாம். எங்கள் வேறுபாடே எங்களைப் பரஸ்பரம் கவர்ந்தது.
சைலேன் எங்க கோஷ்டியிலே வந் பேசாமே ஒக்காந் திருப்பான். சில சமயம் என் ஷெல்பிலிருந்து ஏதாவது புஸ்தகத்தை எடுத்துப் படிப்பான், சில சமயம் சும்மா எங்க கும்மாளத்தைப் பார்த்துக்கிட்டிருப்பான். மொதல்லே ரொம்பக் கூச்சப்படுவான். ஆனால் இப்போ அப்படியில்லே.. எல்லாரும் போனப்பறம் நேரமிருந்தா ஏதாவது சாதாரணமாப் பேசிக்கிட்டு இருப்போம் நாங்க ரெண்டு பேரும்.
ஒருநாள் நாங்க தனியா இருந்தபோது அவன் எங்கிட்டே சொன்னான், "ஒங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.."
"என்ன விஷயம் சொல்லு?"
அவனிடமிருந்து பதிலில்லை.
"ஏதோ விஷயம்னியே.. சொல்லேன்!"
"வேண்டாம் விடு!"
"ஏன் வேண்டாம்..? சரி, நீ என்ன சொல்ல வந்து சொல்ல முடியாம தவிக்கிறியோ, அதை நானே சொல்லிடறேன்" நான் அவனோட குரலைக் காப்பியடித்துச் சொன்னே, "பிரபாத், எனக்குக் காதல் ஏற்பட்டிருக்கு. காதல் பள்ளத்திலே அதல பாதாளத்திலே விழுந்துட்டேன். இப்போ நீதான் என்னைக் கரையேத்தணும்!"
"இதைத்தான் நான் சொல்ல வந்தேன்னு ஒனக்கு எப்படித் தெரிஞ்சுது?" சைலேன் கேட்டான்.
"புரிஞ்சுக்கிறதிலே என்ன கஷ்டம்? அன்னிக்கு ஒங்க வீட்டுக்கு வந்திருந்தபோதே நான் புரிஞ்சுக்கிட்டேன்."
சைலேன் பேசாமலிருந்தான்.
சைலேனின் அப்பா ஒரு அரசாங்க விடுதியில் குடியிருந்தார். பெரிய குடும்பம். சைலேனோட அப்பா, அம்மா, தம்பிகள், தங்கைகள்..
"ஆபீஸ் முடிஞ்சப்பறம் சிலநாள் என்னை அவன் வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போவான். அவனோட அம்மா என்னைப் பிள்ளை மாதிரி நடத்தினாங்க. தானே சமைச்சுச் சாப்பா போடுவாங்க. அவனோட தம்பி தங்கைகளுக்கும் என்கிட்டே ரொம்பப் பிரியம். அந்த ஊரிலே இன்னும் சில வங்காளிக் குடும்பங்கள் இருந்தன. அவங்க வீடுகளுக்கும் நான் போறதுண்டு. ஆனால் சைலேனோட வீட்டுக்குப் போகத்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
"அவங்க வீட்டிலேதான் நான் மாதுரியைப் பார்த்தேன். அவளோட அழகைப் பார்த்து நான் மொதல்லே அவளும் சைலேனோட தங்கைன்னுதான் நினைச்சேன். அவன் மாதிரியே அவளும் நல்ல சிவப்பு. பெண்ணாயிருக்கறதாலே சிவப்பு நிறம் எடுப்பாத் தெரிஞ்சுது. எனக்கு எப்போதும் நீள முகந்தான் பிடிக்கும். ஆனால் மாதுரிக்கு உருண்டை முகம். உருண்டை முகம் ஒரு மலர்ந்த தாமரைப்பூ போல ரொம்ப அழக்யிருக்குங் கறது எனக்கு அவளைப் பார்த்த பிறகுதான் புரிஞ்சுது. அடர்த்தியான, நீளமான கருங்கூந்தல் அவளுக்கு, பட்டுபோல இவ்வளவு அழகான கூந்தலை நான் பார்த்ததேயில்லை. அவள் சைலேனோட தங்கையுமில்லே, சித்தியின் பொண்ணுமில்லேங் கறதைப் பின்னால தெரிஞ்சுக்கிட்டேன். ஆனால் அவ சைலேனோட அம்மாவைப் பெரியம்மான்னு கூப்பிட்டா. மாதுரி பிராமண சாதி- முகர்ஜி. சைலேனோட வீடும் மாதுரி வீடும் ஒரே தெருவிலே சில கஜ தூரத்திலே இருந்தது. ரெண்டு குடும்பங்களுக்குமிடையே ரொம்ப நெருக்கம், நட்பு, பரஸ்பரப் போக்குவரத்து, பேச்சு வார்த்தை, சாப்பாடு எல்லாம் உண்டு. சைலேனோட அம்மா மாதுரி வீட்டுக் குழந்தைகளுக்குப் பெரியம்மா. மாதுரியோட அம்மா சைலேன் வீட்டுக் குழந்தைகளக்கு சித்தி..
"நீ எப்படிப் புரிஞ்சுக்கிட்டே?" சைலேன் கேட்டான்.
"நீங்க ஒருத்தரையொரத்தர் திருட்டுத்தனமாகப் பார்த்துக் கறதிலேருந்து .. ஒன் மேஜை மேலே மாதுரியோட புஸ்தகங்களைப் பார்த்து.. அவளோட பாட்டு நோட்டில ஒன் கையெழுத்தைப் பார்த்து.."
பிடிபட்ட சைலேன் சிரித்துவிட்டான். "இதுக்குள்ள இவ்வளவு கவனிச்சிட்டியா..? நீ துப்பறியும் இலாகாவிலே வேலைக்குப் போயிருக்கணும், பிரபு!"
சைலேன் சில சமயம் என்னைச் செல்லமாப் 'பிரபு'ன்னு கூப்பிடுவான். சில சமயம் 'குருதேவா'ன்னு அழைப்பான். நான் தான் அவனோட நண்பன், ஆசான் , வழிகாட்டி.
அவன் என்கிட்டே எல்லா விஷயத்தையும் சொன்னான். சொல்லத்தானே வந்திருந்தான் அவன்..! சிறு வயசிலிருந்தே அவங்களோட பரஸ்பர அன்பு, பின்பு அது காதலாக மலர்ந்த கதை, அவங்க ஒருவருக்கும் தெரியாமல் சந்திக்கறது எல்லாம் ஒளிவு மறைவு இல்லாமல் சொன்னான். அவங்க முதல்லே வீட்டுக்காரங்ககிட்டேயிருந்து மட்டுமில்லாமே, தங்கைகளிடமே தங்கள் காதலை மறைச்சுக்கிட்டாங்களாம். அப்பறம் நிலைமை மாறினது. ரெண்டு வீட்டுக்காரங்களும் அவங்களோட காதலைப் புரிஞ்சுக்கிட்டு அவங்களைச் சேர்த் வைக்கணும்னு ஆசைப் பட்டாங்க. மாதுரியைப் பெண் மாதிரி நடத்தின சைலேனோட அப்பா அம்மா அவளை மருமகளா ஏத்துக்கணும் சைலேனை மகன் மாதிரி நேசிச்ச மாதுரியோட அப்பா அம்மா அவனை மருமகனா ஏத்துக்கணும் - இதுதான் அவங்க ஆசை.
"இதிலே என்ன தடை?"ன்ன நான் சைலேனைக் கேட்டேன்.
"சாதி வித்தியாசந்தான்!"
"சாதி கிடக்கட்டும், விட்டுத் தள்ளு!" நான் சைலேன்கிட்டே சொன்னேன். "மாதுரியோடு அப்பா சம்மதிக்கல்லேன்னா, நீ 'சுபத்ரா ஹரணம்' பண்ணிப்பிடேன்! ஒங்க தேரை நான் ஓட்டத் தயார்! பாக்கி எல்லாத்தையும் விட்டுட்டு என்னைச் சரணடை!"
"அது நடக்காது!"
"ஏன்? மாதுரி பயப்படறாளா?"
"அவளுக்குப் பயம், தயக்கம் எல்லாந்தான். தவிர, அவளுக்குத் தன் அப்பா மேலே ரொம்பப் பாசம். அவரோட விருப்பத்துக்கு விரோதமா எதுவும் செய்யறதைப் பத்தி நினைக்கக் கூட மாட்டா."
"நீ கவலைப்படாதே! நான் போய் அந்த எஞ்சினியரை …
மாதுரி அப்பாவைப் - பார்த்துப் பேசறேன். அவரை சம்மதிக்க வைக்கறேன்."
"அடேயப்பா! நீ அவர்கிட்டே போனேன்னா அதுக்கப்பறம் அவங்க வீட்டுக்குள்ளே நாங்க நுழைய முடியாது. எங்க அப்பா மட்டும் இந்த அவமானத்தைப் பொறுத்துப்பாரா? மாதுரி வீட்டுக்காரங்களும் எங்க வீட்டுக்குள்ளே நுழைய முடியாது.. எங்க காதல் விஷயம் எல்லாருக்கும் தெரியும். ஆனால் யாரும் இதைப் பத்தி வாயைத் திறந்து பேசறதில்லே. வெகுகாலத்து நட்பு முறிஞ்சு போயிடுமேன்னு.."
"ஒன் அம்மா அப்பா என்ன நினைக்கறாங்க?"
"அவங்களுக்கும் இதிலே இஷ்டமில்லே. காதல் கலியாணம்னா அவங்களுக்கு ரொம்பப் பயம். நான் மாதுரியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாத் தனிக் குடித்தனம் வச்சுடுவேன், அப்பறம் அப்பா அம்மா தம்பி தங்கைகளைக் கவனிக்க மாட்டேன்னு அவங்க பயப்படறாங்க."
சைலேன் கோழை. நான் அவனுக்காகத் துணிச்சலான ஏதாவது செய்யவும் என்னை விடவில்லை அவன். அவனுக்கு இப்போது மாதுரியுடன் பேசிப் பழகக் கிடைக்கும் வாய்ப்பும் என் இடையீட்டால் கெட்டுப் போய்விடும் என்ற பயம் அவனுக்கு. இப்போது அவர்கள் தினமும் மாலை வேளையில் பார்த்துக் கொள்கிறார்கள், பேசிக் கொள்கிறார்கள், ரகசியமாக ஒருவரை யொருவர் கொஞ்சிக் கொள்கிறார்களே, அதுவும் நின்று போய் விடக் கூடாதே!
"சைலேன், அப்படீன்னா நீ இப்படியே இருந்துக்க! இதுக்கு மேலே எதுக்கும் ஆசைப்படாதே!" இதன்பின் இரண்டு வீடு களுக்கும் கல்யாணத் தரகர்கள் ஒளிவு மறைவாக வரத் தொடங் கினார்கள். மாதுரிக்கு வரன் பார்க்கப் பட்டது. சைலேனின் விருப்பத்துக்கு மாறாக அவனுக்கும் பெண் பார்த்தார்கள். நிறைய நகைகள், வரதட்சணையுடன் வைலேனுக்குப் பெண் கொடுக்கப் பலர் தயாராயிருந்தார்கள். ஆனால் சைலேன் இணங்கவில்லை. மாதுரியின் நிலையும் அதுவே. ஆகவே கல்யாணத் தரகர்கள் அலைந்ததுதான் மிச்சம். இரண்டு குடும்பங் களிலும் கல்யாணம் நடக்கவில்லை.
எனக்கு அப்போது சிம்லாவுக்க மாற்றலாகி விட்டது. நான் அங்கிருந்து புறப்பட்டபோது மாதுரி எனக்கு ஒரு சிவப்பு ரோஜாக் கொத்தைக் கொண்டு வந்து கொடுத்தாள். கூடவே இரண்டு கண்ணீர் முத்துக்கள்.
நான் அவளுடைய கரிய, பெரிய, ஈர விழிகளைப் பார்த்த வாறு, "மாது, ஏன் அழறே?" என்று கேட்டேன்.
"பிரபாத் அண்ணா, எங்களுக்கு ஒங்களைத் தவிர வேறே நண்பர் இல்லே, எங்களை மறந்துடாதீங்க!"
நான் என் நண்பனோட நலம் விரும்பி, அவ்வளவுதான். நான் எப்போதுமே ஒரு துணைவினைச் சொல்தான். என்னிக்குமே முக்கிய வினைச் சொல்லா ஆகலே, எனக்காக ஒண்ணும் செஞ்சுக்கலே. இருந்தாலும் வாழ்க்கையிலே எனக்குக் கிடைச்சது ஒண்ணும் குறைவு இல்லே. சைலேனைச் சொல்லி என்ன பிரயோசனம்! நானே கப்பியும் குருணையுமா சேத்துத்தானே என் பிச்சைப் பையை ரொப்பிக்கிட்டிருக்கேன்..!
அடே, ரொம்ப நேரமாச்சே! இதோ சுருக்கமாச் சொல்லி முடிச்சுடறேன். இல்லேன்னா, ஒங்க வீட்டுக்காரம்மா ஒங்களைத் திட்டுவாங்க, எனக்க அப்பப்ப ஒரு கப் டீ கிடைக்கறதும் நின்னு போயிடும்.. நான் சிம்லாபோய்க் கொஞ்ச நாளுக்கெல்லாம் சைலேன் பாட்னாவுக்க மாற்றலாகிப் போனான். எங்கள் விதியை இயக்குவது சர்க்கார். ஒவ்வொரு சமயம் நாங்க வெவ்வேறு ஊருக்கு மாற்றலாகி வெகுதூரத்திலே இருப்போம். சில சமயம் ஒரே ஊரிலே கொஞ்ச காலம் வேலை பார்ப்போம், தினம் சந்திப்போம், பேசுவோம். நாளாக ஆக எங்க தோற்றத்திலே மாற்றம் வந்தது, வயது ஏறிக்கிட்டே வந்தது. ஆனால் எங்க நட்பு மட்டும் மாறல்லே. நாங்க தொலைவிலே இருந்தபோதும் எங்க தொடர்பு விட்டுப் போகலே. நாங்க அடிக்கடி கடிதம் எழுதிக்குவோம், எப்போதாவது சந்திச்சுக்குவோம்..
மாதுரியின் அம்மா இறந்து போயிட்டாங்க. ரெண்டு தம்பிகளும் பெரியவங்களாயிட்டாங்க. அப்பா கிழவராயிட்டார். ஒரு காலத்திலே பெரிய கோபக்காரராயிருந்த அவர் இப்போ பொண்ணே கதின்ன ஆயிட்டார். அவருக்குத் தாய், மனைவி, பெண் எல்லாமே மாதுரிதான். சைலேனோட அப்பா அம்மாவும் இறந்து போயிட்டாங்க. அவனோட தம்பிகளுக்கு அவன்தான் அப்பா, அவன்தான் அம்மா. அவன் அவங்களுக்குக் கல்யாணம் பண்ணி வச்சான். அவங்க வெவ்வேறு ஊர்களிலே குடியும் குடித்தனமுமா இருக்காங்க. இருந்தாலும் பிரம்மச்சாரி அண்ணா சைலேன்தான் அவங்களுக்கு ஆசான், வழிகாட்டி எல்லாம்..
சைலேனோடேயும் மாதுரியோடேயும் என் கடிதப் போக்குவரத்து தொடர்ந்தது..
அப்பறம் நானும் சைலேனும் ஏறக்குறைய ஒரே சமயத்திலே ரிடையர் ஆனோம். சைலேனுக்கு ரெண்டு மூணு பதவி உயர்வு கிடைச்சுது, பதவி நீட்டிப்பும் கிடைச்சுது, எனக்கு ஒண்ணும் கிடைக்கலே. அதுக்குப் பதிலா நான் பலதடவை நாடு பூராச் சுத்தினேன். பொழுதுபோக்கு நாடகங்களிலே நடிச்சேன், கிழ வயசிலேயும் அரிதாரம் பூசிக்கிட்டு, டோப்பா வச்சுக்கிட்டுக் கதாநாயகன் வேஷம் போட்டேன். பாதி இலக்கிய, பாதி அரசியல் மேடைகளிலே பேசினேன். இப்போ பஜனைக் கூட்டங் களுக்குப் போறேன். நீங்க என் நடத்தையைப் பார்த்து மனசுக் குள்ளே சிரிச்சுக்கிறீங்க..
இப்போ டல்ஹௌசியிலே பென்ஷன் வாங்கப்போற இடத்திலே நானும் சைலேனும் சந்திச்சுக்கறோம். நாங்க ரெண்டு பேருமே இப்போ கல்கத்தாவாசிகள். அவன் தெற்குக் கல்கத்தாவிலே இருக்கான், நான் வடக்கே. நாங்க அடிக்கடி சந்திச்சுக்க முடியலே, கடிதமும் எழுதிக்கறதில்லே.. ஒரு தடவை சைலேன், "ஒன் கையெழுத்து வரவர ரொம்ப மோசமாயிருச்சு. படிக்கவே முடியல்லே"ன்னு எனக்கு எழுதினான். அதிலே கோவிச்சுக்கிட்டு நான் அவனுக்குக் கடிதம் எழுதறதை விட்டுட்டேன். இப்போ போனிலே பேசிக்கறோம். சைலேன் அலிப்பூர்லே ஒரு அழகான ரெண்டடுக்கு வீடு கட்டியிருக்கான். அவனோட தம்பியோட பிள்ளை, பெண்கள், பேரன், பேத்திகள் கூட இருக்காங்க.. எனக்கு வீடு கட்டிக்க அவசியமேற்படல்லே. முன்னோர்கள் விட்டுப்போன வீடு இருக்கு. எனக்கும் என் அண்ணாவுக்கும் பொது. ஆனால் அது பேருக்குத்தான். நான் மனத்தளவிலே நாடோடி, நான் வீட்டிலே தங்கற நேரம் குறைச்சல்தான்..
பன்னெண்டு வருஷத்துக்கு முன்னாலே ஒருநாள், நான் பென்ஷன் பணத்தை எண்ணிக்கிட்டிருந்தபோது யாரோ பின்னாலேருந்து என் கையைப் பிடிச்சுக்கிட்டு, "எல்லாம் துறந்தவனே! பணத்து மேலே மட்டும் ஆசை போகலியாக்கும்!" என்று சொன்னாங்க.
திரும்பிப் பார்த்தேன் - சைலேன்!
"கிழ வயசிலே பெண்ணாசையை விட்டுடலாம், பொன்னாசையை விட முடியாது.. பழம் வாங்கித் திங்கறதுக்கும் காசு வேணும்" என்று சிரிச்சுக்கிட்டே சொன்னேன்.
சைலேன் என்னை ஒரு டீக்கடைக்குக் கூட்டிக்கிட்டுப் போய், "ஒங்கிட்டே ஒரு விஷயம் பேசணும்" என்றான்.
ஒரு காலிமேஜைக்கு முன்னாலேபோய் உக்காந்தோம்.
நாங்க ரெண்டு பேருமே காலத்தோட தாக்குதலக்கு ஆளா யிருந்தோம். சைலேனோட தலைபூரா வழுக்கையாயிட்டுது, நான் முழுப் பல்செட் வச்சுக்கிட்டிருந்தேன்.
சைலேன் அதிகம் பேசவில்லை, தன் சட்டைப் பையிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்துக் கொடுத்து, என்னைப் படிக்கச் சொன்னான்.
முத்து முத்தாகக் கையெழுத்து, எனக்குப் பழக்கமானதுதான்.
"இது ஒனக்கு வந்த கடிதம் இல்லே..?"
"சரிதான் படி! எனக்கு வந்த லெட்டரை நீ ஒரு நாளும் படிச்சதில்லையோ?" என்று அதட்டினான் சைலேன்.
உறையிலேயிருந்து கடிதத்தை எடுத்தேன். நீளக் காகிதம். ஆனால் அதிலே எழுதியிருந்தது ரெண்டே வரிதான் - 'உன்னோடு ஒரு விஷயம் பேசணும். அவசியம் வா! இப்படிக்கு, உன் மாதுரி.'
நான் சிரிச்சுக்கிட்டே சொன்னேன், "நான் முன்னால சொன்னதை மாத்திக்கறேன். கிழ வயசிலேயும் பொண்ணாசை விடாது. இப்போ மாதுரி எங்கே இருக்கா?"
அப்பா இறந்த பிறகு மாதுரி லக்னோவிலேருந்து கல்கத்தா வந்துட்டாங்கறது தெரியும் எனக்கு. ஆனால் அவளோட விலாசம் தெரியாது.
"அவளோட தம்பிகள் இங்கே வேலை செய்யறாங்க. அவளும் டீச்சர் வேலை பார்த்தா. ஆனால் உடல்நிலை கெட்டுப் போனதாலே வெலையை விட்டுட்டா. அவளோட அப்பா நிறையப் பணம் வச்சுட்டுப் போகலே. பொண்ணு பேரிலே முப்பதாயிரம் ரூவா டிபாசிட் பண்ணியிருந்தார். பிள்ளைகளுக்கும் ஏதோ கொஞ்சம் கொடுத்தார்..."
இதெல்லாம் எனக்குத் தெரியாது. மாதுரியோட எனக்கு வெகுகாலமாகக் கடிதப் போக்குவரத்து இல்லே.
"மாதுரி ரொம்பயாளா நோய் வந்து கஷ்டப்படுறா. வா, ஒர தடவை பார்த்துட்டு வருவோம். என்ன விஷயம்னு கேக்கலாம்."
"நீ மட்டும் போயிட்டு வா. நான் வந்தா அவ ஒன்னோட மனம்விட்டுப் பேசமாட்டா."
"அதெல்லாமில்லே, நீயும் வரணம். வா, இப்பவே போகலாம்."
"இன்னொரு நாள் போயிக்கலாமே" என்று நான் தட்டிக் கழிக்கப் பார்த்தேன். ஆனால் அவன் விடலே.
நாங்க எங்க வீடுகளுக்குப் போன் பண்ணித் தகவல் சொல்லிவிட்டுப் பாரக்பூருக்குப் போனோம். டாக்சியில் போகலாம் என்றான் சைலேன். நான்தான் "பென்ஷன் பணத்தை இப்படி அனாவசியமாகச் செலவு செய்யக் கூடாது. பஸ்ஸிலேயே போகலாம்"ன்னு சொன்னேன்.
வழியில் காலேஜ் தெரு மார்க்கட்டிலே ஒரு பெரிய ரஜனிகாந்தாப் பூக்கொத்து வாங்கிக்கிட்டேன்.
"ஒனக்கு இன்னும் இந்த ஷோக்கெல்லாம் இருக்கே!" என்று என்னைக் கேலி பண்ணினான் சைலேன்.
பாரக்பூர் ஸ்டேஷன்கிட்டேதான் அவங்க வீடு. அவங்க மாடியிலே இருந்தாங்க. ஒரு பெண் எங்களை மேலே கூட்டிக் கிட்டுப் போனா.
ஒரு சின்னக் கட்டிலிலே படுத்துக்கிட்டிருந்தா மாதுரி. சுத்தமான படுக்கை விரிப்பு. அறையும் சுத்தமாயிருநதது.
ஆனால் மாதுரி என்ன இப்படி ஆயிட்டா! படுக்கையோடே படுக்கையா கிடந்தா அவ,. எழுந்து உக்காரக்கூட சக்தியில்லே.
அப்படியும் எங்களைப் பார்த்ததும் அவளுக்குப் பலம் வந்தது. எழுந்து உக்காந்தா.
என்னைப் பார்த்துச் சிரிச்சுக்கிட்டு, "நீயும் வருவேன்னு எனக்குத் தெரியும்" என்று சொன்னா.
அதுக்கப்புறம் அவ செஞ்ச காரியத்தைக் கேளுங்க! அவளோட ஒரு தம்பியின் மனைவியைக் கூப்பிட்டு, "லட்சுமி பீடத்துக்கிட்டே ஒரு குங்குமச்சிமிழ் இருக்கு, எடுத்துக்கிட்டு வா!" என்று சொன்னா.
குங்குமச் சிமிழ் வந்தது. மாதுரி அதை வாங்கி சைலேன் கிட்டே கொடுத்துச் சொன்னா, "இந்தக் குங்குமத்தை என் வகிட்டிலே இடு.. நான் குமரியாச் சாக விரும்பல்லே.."
முன்பு மாதுரிக்கு இருந்த-கருமேகம் மாதிரி அடர்த்தியான முடி இப்போ இல்லே. வயசானதாலே இல்லே, வியாதி யாலே முடியிலே பெரும்பகுதி உதிர்ந்து போயிருந்தது. மிச்சமிருந்த முடியில் நரையும் கண்டிருந்தது.
சைலேன் அவளுடைய வகிட்டிலே குங்குமம் இட்டான். அவளோட ரெண்டு தம்பிகளோட மனைவிகளும் அந்த சமயத்திலே சங்கு ஊத விரும்பினாங்க. மாதுரி ஜாடையாலே அவங்களைத் தடுத்துட்டா.
"மாது, நீ முடி நரைச்சப்பறந்தான் வகிட்டிலே குங்குமம் இட்டுக்கணும்னு இவ்வளவு நாள் காத்திருந்தியா?" நான் கேட்டேன்.
இதைக்கேட்டு மாதுரி முகத்திலே வளர்பிறைப் பிரதமைச் சந்திரன் மாதிரி ஒரு மெல்லிய புன்னகை. 'சரி, இப்போ நீ மந்திரம் சொல்லு!" என்றாள்.
நான் என்ன புரோகிதனா, மந்திரம் சொல்ல? தவிர, நானே அப்போ மந்திரத்தால் மயங்கினவன் மாதிரி இருந்தேன். இருந் தாலும் ஒரு மந்திரத்தைச் சொல்லி வச்சேன்-'யதிதம் ஹ்ருதயம் தவ, ததிதம் ஹ்ருதயம் மம' (உன்னிதயமே என்னிதயம்).
அவங்க மந்திரத்தைத் திருப்பிச் சொல்லலே, கவனமாக் கேட்டுக்கிட்டாங்க.
நான் எவ்வளவோ கல்யாணத்துக்கு மாப்பிள்ளை கோஷ்டியோட போயிருக்கேன் கல்யாண் பாபு. சுலபமாப்போக முடியாத, தொலைவான இடங்களுக்கெல்லாம் போயிருக்கேன் ஆனால் இந்த மாதிரி கல்யாணத்திலே மாப்பிள்ளைத் தோழனா இருந்ததில்லே, இந்த மாதிரி புரோகிதத் தொழிலும் செஞ்சதில்லே.
அன்னிக்கு நான் ரஜனிகாந்தாப் பூக்கொத்து எடுத்துக்கிட்டுப் போனது பொருத்தமா அமைஞ்சுடுத்து, அந்தக் கொத்தை மாதுரியோட படுக்கையோரத்திலே வச்சேன். கொஞ்ச நேரத்துக்கு அது முதலிரவுப் படுக்கை மாதிரி அலங்காரமாயிருந்தது..
அதுக்கப்புறம் மாதுரி ரொம்ப நாள் பிழைச்சிருக்கலே. அவளோட தம்பிகள் நல்லா செலவு செஞ்சு மருத்துவம் பார்த் தாங்க. சைலேனோட முயற்சியிலேயும் குறைவில்லை. அவளைக் கல்கத்தாவுக்குக் கூட்டிவந்து மருத்துவமனையிலே வச்சிருந் தான். அவளோட வயத்திலே கட்டி ஏற்பட்டிருந்தது. அவளுக்கு அறுவை சிகிச்சை நடந்துகொண்டிருந்தபோதே அவ இறந்து போயிட்டா.
நான் இன்னொரு கொத்து ரஜனிகாந்தா எடுத்துப் போய் அவளோட சடலத்து மேலே வச்சேன்.
சைலேன்தான் அவளுக்கு ஈமக் கடன்கள் செஞ்சான். ஐயாயிர ரூவா செலவு பண்ணி சடங்குகள் செஞ்சான், சாப்பாடு போட்டான், பஜனைக்கு ஏற்பாடு பண்ணினான். எங்களுக்கு ஒரே ஆச்சரியம். ஏன்னா இதுக்கு முன்னாலே அவனுக்கு இந்த மாதிரி சடங்குகளிலே நம்பிக்கை கிடையாது. மாதுரியோட விருப்பப்படி இதெல்லாம் செஞ்சான்னு புரிஞ்சுக்கிட்டேன்.
முன்பெல்லாம் அவன் மாதுரியோட கடிதங்களைச் சட்டைப்பையிலே வச்சுக்கிட்டு அலைவான். சாகறதுக்கு முன்னாலே மாதுரி அவன்கிட்டே இன்னொரு உறையைக் கொடுத்து அவ இறந்தபிறகு அதைத் திறந்து பார்க்கச் சொல்லி யிருந்தா. அவ சாகறவரையிலே அவன் அந்த உறையைப் பையிலே வச்சுக்கிட்டிருந்தான்.
மாதுரி இறந்தபிறகு அதைத் திறந்து பார்த்தா, உள்ளே சைலேன் பேரிலே முப்பதாயிர ரூவாய்க்கு செக்.
"இந்தப் பணம் எனக்கு எதுக்கு?" என்றான் செலேன்.
"எடுத்துக்க, எடுத்துக்க! கலியாணம் பண்ணிக்க வரதட்சணை வாங்கலியே நீ! இதுதான் ஒனக்கு வரதட்சணை!" நான் சொன்னேன்.
சைலேன் அந்தப் பணத்திலே ஒரு பகுதியை மாதுரியோட தம்பிகளுக்குக் கொடுத்தான். ஆஸ்பத்திரியிலே ஏழைப்பெண் களுக்கு மருத்துவம் செய்ய இலவசப் படுக்கை ஒண்ணு ஏற்படுத்தச் சொல்லி மிச்சப் பணத்தைக் கொடுத்தான்.
அதிலேருந்து ஒவ்வொரு வருஷமும் மாதுரியோட நினைவு நாளைக் கொண்டாடுகிறான் சைலேன். அதற்கு அழைப்பு என் ஒருத்தனுக்குத்தான். அவனோட அறையிலே மாதுரியோட போட்டோ ஒண்ணு இருக்கு.. அவளோட இளமைக்கால போட்டோ.
இளம் மாதுரியோட அந்த போட்டோவுக்க முன்னாலே நாங்க ரெண்டு கிழவங்களும் உக்காந்துகிட்டு டீ குடிப்போம், பேசிக் கிட்டிருப்போம்; சில சமயம் மௌனமா உக்காந்திருப்போம்.
சைலேன் ஒரு காதலைச் சாவிலேருந்து காப்பாத்திட்டான். நான் ஒரு நட்பைக் கிழத்தனத்திலேருந்து காப்பாத்திட்டேன்.."
பிரபாத் பாபு எழுந்து நின்று கொண்டார். அவருடைய குடை அவரது கண்முன்னே இருந்தும் அதை மறந்து விட்டார். இன்று நான் அதை எடுத்து அவரிடம் கொடுத்தேன். அவர் புன்சிரிப்புடன், "நன்றி!" என்று சொன்னார்.
('தேஷ்' பூஜா மலர், அக்டோபர், 1972)
10. மதிப்புக்குரிய, விடைத்தாள் திருத்துபவர் அவர்களுக்கு
ஐயா,
நீங்கள் இந்த விடைத்தாளைக் கடைசிவரை படிப்பீர்களா என்று எனக்குத் தெரியாது. ஏனென்றால் நான் விடைத்தாளில் ஒர கேள்விக்குக்கூடவிடையெழுதவில்லை. இந்தக் கடிதத்தை மட்டுமே எழுதியிருக்கிறேன். நீங்கள் ஒரு சில வரிகள் படித்ததுமே புருவத்தைச் சுளிப்பீர்கள், விடைத்தாளில் சைபர் போடுவீர்கள், பிறகு நான் அசட்டுத்தனமாகக் கடிதம் எழுதியதற்காகப் பல்கலைக் கழகத்துக்குப் புகார் செய்வீர்கள். நீங்கள் சைபர் போட்டாலும் புகார் செய்தாலும் எனக்குக் கவலையில்லை. நீங்கள் ஒருவேளை என் கடிதம் முழுவதையும் படித்தாலும் படிக்கலாம் என்ற நம்பிக்கையில் இதை எழுதுகிறேன்.
ஓரிரண்டு கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க முடியுந்தான். ஆனால் அதனால் கிடைக்கும் மார்க்குகளால் பாஸ் செய்வது கிடைக்கட்டும், இருபதைக்கூட எட்ட முடியாது. ஆகையால் நான் விடையளிக்க முயற்சி செய்யவில்லை. தவிர, இன்று சாயங் காலத்துக்குப் பிறகு நான் பாஸ், பெயில் இவற்றுக்கெல்லாம் அப்பால் போய்விடுவேன். கல்கத்தாவையடுத்து எவ்வளவோ ரயில்கள் போய் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றுள் ஒன்றின் சக்கரங்களுக்கடியில் என் கணக்கை முடித்துக் கொள்ளப் போகிறேன். ஓர் அடையாளம் தெரியாத இளைஞன் ரயிலில் அரைபட்டு மாண்டான் என்ற பத்திரிகைச் செய்தி நீங்கள் இந்தத் தாளைத் திருத்தும் சமயத்தில் பழைய செய்தியாகி உங்களுக்கு மறந்துகூடப் போயிருக்கும்.
இந்த இடத்தைப் படிக்கும்போது உங்கள் ஆசிரிய மனப்பாங்கு அதிர்ச்சியடையும். "சீ, சீ! பரீட்சையிலே தேறலேன்னு தற்கொலையா? இதைவிடக் கோழைத்தனத்தைக் கற்பனை பண்ண முடியுமா? வங்காளத்து இளைஞர்களிடம் இந்த மனோபலங்கூட இல்லேன்னா நாடு எப்படி உருப்படும்? சமூகத்துக்கு என்ன எதிர்காலம் இருக்கும்?" என்றெல்லாம் சொல்லிக் கொள்வீர்கள்.
என்னை நம்புங்கள் சார், எனக்கும் இதெல்லாம் தெரியும். நான் உயிர் வாழத்தான் விரும்பினேன் என்பதையும் நீங்கள் நம்ப வேண்டும். சாந்தால் பர்கனாவின் மலையாறுகளின் சீறிவரும் வெள்ளம் என் கை பட்டதும் ஒர பெரிய நிலப்பரப்பில் சிறைபட்டு நிற்கும்; பீகார் - மேற்கு வங்காள எல்லையிலுள்ள சிறந்த தொழிற்சாலைப் பகுதியை ஆயிரமாயிரம் விளக்குகளால் பிரகாசிக்க வைக்கும் நீர் மின்சாரத் திட்டத்தை இயக்கும் பொத்தானை என் கை அமுக்கும்; நான் கொதியுலையின் சிவந்த ஒளியில் எஃகை உருக்கி எதிர்கால பாரதத்தைச் சமைக்கப் போகிறேன் - இவ்வாறெல்லாம் கனவு கண்டு கொண்டிருந்தேன் நான்.. சார், நான் தற்கொலை செய்து கொள்ள விரும்பவே யில்லை!
எனக்கு நாற்புறமும் மாணவர்கள் விடைகளை மும்முரமாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பலர் என் போலவே கனவு காண்கிறார்கள். இன்னம் சில நாட்களுக்குப் பிறகு சிலரது பெயர்கள் தேறியவர்களின் பட்டியலிலிருந்த அடிக்கப் பட்டு அவர்களுடைய கனவுகளும் சுக்குநூறாகி விடும். சிலர் வாழ்க்கையில் வெற்றிபெற்று வருங்கால பாரதத்தின் நம்பிக்கை விளக்கைக் கைகளில பிடித்துக் கொள்ளலாம். அவர்கள் அதிருஷ்ட சாலிகள்; அவர்கள் முன்னேறிச் செல்லட்டும்! என் போன்ற எண்ணற்றவர்கள் இப்படியே மறைந்து விடுவார்கள், அல்லது நடைப்பிணங்களாக உயிர் வாழ்வார்கள். ஐந்தாண்டுத் திட்டத்தின் சாதனைப் பட்டியலில் இடம்பெற மாட்டார்கள் அவர்கள்.
நான் உங்களைப் பார்த்ததில்லே, ஒருபோதும் பார்க்கப் போவதுமில்லே. எனக்கு உங்களைத் தெரியாது. ஆனால் நீங்கள் ஒரு ஆசிரியர் என்பது மட்டும் தெரியும். நீங்கள் மாணவர்களுடன் நெருக்கமாக வாழ்கிறீர்கள்; அவர்களது வாழ்க்கையின் அலை உங்களையும் தொடுகிறது. நீங்கள் அவர்களை நேசிக்கவும் செய்யலாம். ஆகையால் நான் எழுதுவதை நீங்கள் படித்தாலும் சரி, படிக்காவிட்டாலும் சரி, நான் உங்களிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வேன்?
சார், நான் மேதினிபூர் மாவட்டத்துச் சின்னஞ்சிறு கிராமம் ஒன்றிலுள்ள ஓர் ஏழை விவசாயியின் மகன் என்பதை நான் கனவு காணும் சமயத்தில் மறந்து போயிருந்தேன். என் தந்தை ஒரு சாதாரணமான உழவர்தான் என்றாலும் இப்போது டில்லியில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் தலைவர்களில் எவரையும்விடத் தேச பக்தியில் குறைந்தவரல்ல. ஆயிரத்துத் தொள்ளாயிரத் நாற்பத்தி இரண்டாம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு நள்ளிரவில் ஒரு காட்டில் நான் பிறந்தேன். ஏனென்றால் அப்போது ராணுவம் எங்கள் கிராமத்தை எரித்து விட்டது. நெஞ்சில் துப்பாக்கியால் சுடப்பட்ட என் தந்தை சுதந்திரக் கொடியை கையில் ஏந்தியவாறே ஒரு வயலில் விழுந்து கிடந்தார்.
தமக்குப் பிள்ளை பிறந்தால் அவனுக்கு 'ஸ்வாதீன்குமார்' என்று பெயர் வைக்க வேண்டுமென்று விரும்பினார் என் தந்தை. தீப்பிழம்புகள் ஒளிர்ந்த அந்தப் பிரளய இரவில் சுதந்திரமான வானத்தின் கீழே என் தந்தையின் இரத்தத்தையே ஆசியாகக் கொண்டு பிறந்தேன் நான். அந்தக் காலத்தில் ராணுவத்தின் கெடுபிடி கடுமையாகி இருந்தாலும் நாட்டில் எவரும் மனத்தளவில் அடிமையாக இருக்கவில்லை.
இந்தக் கதையெல்லாம் போகட்டும் சார். நீங்கள் இதுவரை படித்துக்கொண்டு வந்திருந்தீர்களென்றால் இப்போது பொறுமை யிழக்கலாம். என் குடும்ப வரலாற்றைப் பற்றி உங்களுக்கு என்ன அக்கறை! தவிர எனக்கும் எழுத மூன்று மணியானதும் என்னிடத் திலிருந்து விடைத்தாள் பறித்துக் கொள்ளப்படும். ஆகையால் நான் சொல்ல விரும்புவதைச் சுருக்கமாகவே சொல்லி விடுகிறேன்.
நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆகையால் விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தியிருக்கலாம். பஞ்சம் வந்தால் என் போன்ற மற்ற விவசாயிகளைப்போல் பட்டினி கிடந்தோ, உண்ணத் தகாததை உண்டோ உயிரை விட்டிருக்கலாம். ஆனால் என் துரதிருஷ்டம், என் சித்தப்பா என்னைக் கிராமத்துப் பள்ளியில் சேர்த்து விட்டார். அப்புறம்- நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ, தெரியாது - எனக்கு உபகாரச் சம்பளமும் கிடைத்து விட்டது.
இந்த உபகாரச் சம்பளமே எனக்கு எமனாக வாய்த்தது- நான் கனவு காணத் தொடங்கினேன். என் தாய் என்னை நெஞ்சோடு தழுவிக் கொண்டு அழுது தீர்த்து விட்டாள். அப்பா வுக்காக அம்மா அழுது நான் பார்த்தது இதுதான் முதல் தடவை. பிறகு நான் கண்களில் நம்பிக்கையொளிர, என் சித்தப்பாவுடன் அங்கிருந்த எட்டு மைல் தூரத்திலிருந்த ஊரின் உயர்நிலைப் பள்ளியில் சேரப் போனேன்.
மாணவர் விடுதியில் தங்குவதற்கான பண வசதி எனக் கில்லை. மொத்த நெல் வியாபாரியான சாமந்தா என்பவரின் வீட்டில் எனக்கு இடம் கிடைத்தது. சாமந்தா எங்களுக்குத் தூரத்து உறவினர். ஆனால் ஓர் ஏழைக் குடும்பத்துடன் சொந்தம் கொண்டாட அவர்களுக்கு இஷ்டமில்லை. உண்மையில் அவருடன் எங்களது உறவு ஒரு ஜமீந்தாருக்கும் அவருடைய குடிமகனுக்குமிடையே, ஒரு லேவாதேவிக்காரனுக்கும் அவனிடம் கடன் வாங்குபவனுக்குமிடையே உள்ள உறவுதான். என் சித்தப்பாதான் சாமந்தாவின் காலைப் பிடித்துக் கெஞ்சி அவர் வீட்டில் நான் தங்க அனுமதி பெற்றார். நான் பள்ளியில் சேர்ந்தேன். இலவசப் படிப்புச் சலுகையும் பெற்றேன்.
சாமந்தா குடும்பம் செல்வமும் செழிப்புமாக இருந்தது. அவர்களிடம் இரண்டு லாரிகள் இருந்தன. மூன்று சரக்குக் கிடங்குகள் இருந்தன. ஆனால் வியாபாரம் செய்பவர்கள் ஒரு பைசா கூட வீண் செலவு செய்ய மாட்டார்கள். ஐநூறு ரூபாய் தானம் செய்தால் அதற்குப் பதிலாக இருபத்தையாயிர ரூபாய் லாபம் சம்பாதித்து விடுவார்கள். ஆகவே அவர்கள் என்னைத் தங்க அனுமதித்துவிட்டு அதற்குரிய விலையை என்னிடமிருந்து வசூலித்துக் கொண்டார்கள்.
என் கையெழுத்து மோசமில்லை என்பது உங்களுக்கு இந்த விடைத்தாளிலிருந்தே தெரிந்திருக்கும். தவிர, கணக்கிலும் கெட்டிக் காரன் நான் நூற்றுக்கு று மார்க் வாங்கிவிடுவேன். சாமந்தா இந்த வாய்ப்பை நழுவவிடவில்லை. அவர் முதலில் என்னைக் கடிதங்கள் எழுதச் செய்தார். பிறகு கணக்குகள் எழுதச் செய்தார்; கடைசியில் கணக்கு வழக்குகளைச் சரிபார்க்கும் வேலையையும் என்னிடம் ஒப்படைத்தார். தினம் சில மணிநேரம் இந்த வேலையைச் செய்ய வேண்டியிருந்தது. இரவு எட்டு மணிக்குப் பிறகுதான் எனக்குப் படிக்க நேரம் கிடைக்கும்.
அப்போதாவது சரியாகப் படிக்க முடிந்ததா?
நானும் சாமந்தாவின் குமாஸ்தா ஒருவரும் கடையையடுத்த ஒரு சிறிய அறையில் தங்கியிருந்தோம். குமாஸ்தாவுக்கு வயது நாற்பதைத் தாண்டிவிட்டது. வற்றிப்போன வௌவால் போலிருப்பார்; பெரிய பெரிய கண்கள் பளபளக்கும். நான் படிக்கத் தொடங்கியதும் அவர் ஹுக்காவைப் பற்றவைத்துக் கொண்டு பேச ஆரம்பித்து விடுவார்.
எனக்கு அப்போது வயது பன்னிரண்டுக்குமேல் இருக்குாது. புகையை இழுத்தவாறு, பளபளக்கும் கண்கள் மேலும் பளபளக்க, கரகரத்த நாராசக் குரலில் அவர் சொல்லிய கதைகளின் பொருளை நான் அப்போது புரிந்து கொள்ளவில்லை, பிறகுதான் புரிந்து கொண்டேன். எல்லாம் ஆபாசக் கதைகள் அவர் எவ்வளவு பெண்களை, எவ்வளவு விதமாகக் கெடுத்தார் என்று வர்ணிக்கும் கதைகள்.
அப்போது எனக்கு அந்தக் கதைகளின் நன்மை தீமை தெரியாது. ஆனால் எரிச்சல் வரும் எனக்கு.
"கொஞ்சம் சும்மா இருங்க! என்னைப் படிக்க விடுங்க!' "சரிதாம்பா, நிறுத்து! குடியானவன் பிள்ளை வித்தியாசாகர் ஆகப் போறியாக்கும்-! அதைவிட ஹுக்கா பிடிக்கக் கத்துக்கறது மேல். அதைக் கத்துக்க!" குமாஸ்தா கதை சொல்லிக் களைத்துப்போய்ப் படுத்துக் கொள்ளும் போது விளக்கும் அணைந்து போய்விடும். சாமந்தா கொடுக்கும் எண்ணெயில் விளக்கு இரவு ஒன்பதுக்குமேல் எரியாது. எனக்குக் கிடைத்த அற்ப உபகாரச் சம்பளத் தொகை முக்கியமான செலவுகளுக்குத்தான் சரியாயிருந்தது., எண்ணெய் வாங்கப் பணம் மிஞ்சவில்லை.
இந்த நிலையிலும் கஷ்டப்பட்டுப் படித்து ஒவ்வொரு வகுப்பிலும் முதல் அல்லது இரண்டாவது மாணவனாக எட்டாம் வகுப்புவரை வந்துவிட்டேன். அதன் பிறகு பாடப் புத்தகப் பிரச்சினை தோன்றியது. ஸ்கூல் ஃபைனல் தேர்வுக்கு எழுபது எண்பது ரூபாய் விலையுள்ள புத்தகங்கள் வாங்க வேண்டியிருந்தது. சித்தப்பா கொஞ்சம் நெல்லை விற்று என் சாப்பாட்டுச் செல வுக்குப் பணம் அனுப்பினார். சாமந்தா புத்தகம் வாங்கப் பத்து ரூபாய் கொடுத்தார். தலைமையாசிரியர் பள்ளிக்கூடத்துப் புத்தகங்கள் இரண்டு மூன்று கொடுத்தார். அப்படியும் தேவையான புத்தகங்களில் பாதிகூட வாங்க முடியவில்லை.
சாமந்தா கொடுத்த பத்து ரூபாய்க்காக இன்னும் அதிகமாகக் கணக்குகள் எழுத வேண்டியிருந்தது.
சார்! எனக்கு உபகாரச் சம்பளம் கிடைத்ததும் நான் ஒரு சாதாரண மாணவன் அல்ல என்று நினைத்துக் கொண்டேன். எனக்குத் திறமையிருக்கிறது. ஸ்வாதீன் குமாரரராகிய நான் என் திறமையின் பலத்தில் மதிப்புமிக்க சுதந்திர மனிதனாக உயருவேன் என்று நினைத்தேன். எந்த நாட்டுக்காக என் தந்தை தன் நெஞ்சின் இரத்தத்தைக் கொட்டினாரோ அந்த நாட்டில் நானும் எனக்குரிய இடத்தைக் கண்டுபிடிப்பேன் என்று மனப்பால் குடித்தேன். ஆனால் சரியாகப் படிக்க முடிய வில்லை என்னால். தேர்வும் சரியாக எழுதவில்லை. தேர்வு முடிவுகள் வெளிவந்த போது நான் மூன்றாம் பிரிவில் தேறியிருந்தேன்.
தலைமை ஆசிரியரிடமிருந்து தொடங்கி எல்லாரும் என்னைக் கடிந்து கொண்டார்கள். சாமந்தாவின் ஒரு பிள்ளை பி.ஏ. தேறவில்லை. அவன் எப்போதும் ஹல்தி ஆற்றங்கரையில் கையில் துப்பாக்கியுடன் சுற்றுகிறான், காதா கோஞ்ச்சா பறவையை வேட்டையாடுகிறான், "இவன் பாஸ் பண்ணினதே அதிருஷ்டந்தான்! எவ்வளவு கெட்டிக்காரப் பையங்களெல்லாம் ஸ்கூல் ஃபைனல்லே ஃபெயிலாயிடறாங்க!" என்றான் அவன்.
நான் இரண்டு நாட்கள் வீட்டுக்குள் அடைந்து கிடந்தேன். சாப்பிடவில்லை. இதற்குள் என் நெற்றியின் மேல் அம்மாவின் கண்ணீர் கொட்ட ஆரம்பித்து விட்டது.
"எழுந்திருப்பா, எழுந்திரு! நல்லாப்படி! நீ நிச்சயம் வாழ்க்கையிலே முன்னேறுவே! ஒன் மாதிரி எவ்வளவு பசங்க கஷ்டப்பட்டுப் படிச்சும் ஃபெயிலாயிட்டாங்கறதை யோசிச்சுப் பாரு!
சார், நான் என்னைத் தேற்றிக் கொண்டேன். கல்கத்தாவுக்கு வந்தேன். சாமந்தாவின் உறவினரான சர்க்கார் என்பவரின் குடும்பம் கலகத்தாவில் இருந்தது. அவர்கள் பரா பஜாரில் கடை வைத்துக்கொண்டு புகையிலை வியாபாரம் செய்து வந்தார்கள். சாமந்தா அவர்களுக்கு ஒரு கடிதமெழுதி என்னிடம் கொடுத்தார். சர்க்காரின் கடையில் எனக்கு இடங் கிடைத்தது.
இங்கும் எனக்கு வேலை செய்ய நேர்ந்தது. சர்க்காரின் கடையில் உதவிசெய்வது, தேவைப்பட்டால் வெளியேபோய் நிலுவை வசூல் செய்வது. இருந்தாலும் கல்கத்தா கல்கத்தாதான். விசாலமான வாழ்க்கை, எவ்வளவோ வாய்ப்புகள்! பெரிய பெரிய கல்லூரிகள், புகழ் பெற்ற ஆசிரியர்கள், அவர்களுடைய எல்லையற்ற அறிவின் ஒரு சிறு துளி கிடைத்தாலே என்னுள்ளே ஆயிரம் விளக்குகள் பிரகாசமாக எரியத் தொடங்கும். உலகத்தின் உயிர்த் துடிப்புடன் ஒரு தடவை என்னால் ஒன்றிவிட முடிந்தால் திறந்த வான வெளியில் தலையுயர்த்தி நிற்பேன் நான்! காய்ந்து கிடக்கும் புல்லின் மேல் முதல் மழையின் நீர்த் துளிகள் விழுந்ததும் புல் புத்துயிர் பெற்றுச் சிலிர்த்தெழுவது போல!
சித்தப்பா நெல் விற்றுக் கொடுத்த பணத்துடன் நான் ஒரு கல்லூரிக்குப் போனேன். நெல்லை விற்றதன் விளைவாக எங்கள் குடும்பம் பல நாட்கள் அரைப் பட்டினியோ, முழுப் பட்டினியோ கிடக்க வேண்டியிருக்கும் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் நான் நன்றாகப் படித்து நல்லமுறையில் பரீட்சையில் தேறிவிட்டால்..
பிரம்மாண்டமான கல்லூரிக் கட்டிடம். அதில் தேர்த் திருவிழாக் கூட்டம். அதில் எப்படியோ முண்டியடித்துக்கொண்டு அலுவலகத்துக்குள் நுழைந்து விட்டேன்.
"மூன்றாம் பிரிவில் பாஸா..? ஐ.எஸ்.ஸி.யில் இடம் வேணுமா..? ஊஹும், இடமில்லை!"
ஒன்று இரண்டு இல்லை, சார். ஆறு கல்லூரிகள் என்னைத் திருப்பியனுப்பிவிட்டன.
கடைசியில் ஒரு சாதாரணக் கல்லூரியில் இடம் கிடைத்தது. பிறகு ஏதாவது சம்பளச் சலுகை வேண்டி அந்தக் கல்லூரியின் உதவித் தலைவரை அணுகினேன்.
"சலுகையா?" வியப்புடன் கேட்டார் அவர். "மூணாம் பிரிவில் பாஸ் பண்ணினவனுக்குச் சலுகையா?"
"சார், நான் ஏழைப் பையன்.."
"வங்காளிப் பசங்க எல்லாருமே ஏழைங்கதான். அப்படிப் பார்த்தா எல்லாப் பையன்களுக்கும் சம்பளச் சலுகை தரணும்!"
"நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன், சார்!"
எரிச்சலடைந்தார் உதவித் தலைவர். "அப்படீன்னா எதுக்குக் காலேஜுக்குப் படிக்க வந்தே? கிராமத்திலே விவசாயம் பண்ணிக் கிட்டு இருந்திருக்கலாமே! மேல் படிப்பு ஒங்களுக்கெல்லாம் உபயோகப்படாது. போ போ..என்னைத் தொந்தரவு செய்யாதே!"
சலுகை கிடைக்கவில்லை, வீடு திரும்பும்போது, சாமந்தாவின் குமாஸ்தா என்னிடம் சொல்லியது நினைவு வந்தது- "குடியானவன் பிள்ளை வித்யாசாகர் ஆகப் போறியாக்கும்!"
சார், அப்போதே நான் கிராமத்துக்குத் திரும்பிப் போயிருக்க வேண்டும். அனல் கக்கும் வயல்வெளி, அதில் உழைப்பவனின் நெற்றி வியர்வை நிலத்தில் விழுகிறது- அதுதான் எனக்குரிய இடம். நான் அங்கே திரும்பிப் போயிருந்தால் பட்டினத்தின் அவமானச் சவுக்கடி என் உடம்பில பட்டிருக்காது. ஆனால் நான் நம்பிக்கையைக் கைவிடவில்லை, சார். இறுதிவரை முயன்று பார்க்க வேண்டும் என்ற பிடிவாதம் என்னைப் பிடித்துக் கொண்டது.
சர்க்காரின் புகையிலைக் கடையில் ஓர் ஓரத்தில் நான் தங்கியிருந்தேன். சாமந்தாவோடு நான் தங்கியிருந்ததற்கும் இதற்கும் எவ்வளவு வித்தியாசம்! அங்கே நான் தங்கியிருந்த அறை சிறிதுதான் என்றாலும் அறைக்கு வெளியே விசாலமான வெட்டவெளி இருந்தது, வெளிச்சம் இருந்தது, குளிக்க ஒர பெரிய குளம் இருந்தது. இதுவோ பராபஜார் சந்து, நடுப்பகலில் கடைகளிலெல்லாம் மின்சார விளக்குகள் எரிகின்றன. மூன்று முழமே அகலமான சந்தின் இருபுறமும் வானளாவிய பெரிய பெரிய வீடுகள். அவற்றின் சுவர்கள் ஈர்த்திருக்கின்றன. காற்று இல்லை, இரவு ஒரு மணிவரை ஆயிரக்கணக்கான ஜனங்கள் ஒருவரோடு ஒருவர் இடித்துக்கொண்டு நடமாடுகிறார்கள். வரிசை வரிசையாக அமைந்துள்ள கடைகளிலிருந்து புகையிலை, வெல்லம் இவற்றின் கலவையான தீவிர நெடி, காதைத் துளைக்கும் இரைச்சல்..
இவற்றுக்கு நடுவில் ஒரு மூலையில் தங்கியிருந்தேன். இரவில் எலிகள் நடமாடும். இரவும் பகலும் கரப்புகளின் தொந்தரவு. சர்க்கார் கல்லூரிச் சம்பளத்தைக் கொடுத்து, கைச் செலவுக்காக ஐந்து ரூபாய் கொடுப்பார். அதற்குப் பதிலாக நான் காலையிலும் மாலையிலும் வெளியே போய் நிலுவை வசூல் செய்ய வேண்டும். ஆகையால் எனக்கு ஒரு டியூசன் பிடித்துக் கொண்டு அதன்மூலம் கொஞ்சம் பணம் சம்பாதிக்கவும் வழி யில்லை. புத்தகமா? ஐ.எஸ்.ஸி.க்குத் தேவையான புத்தகங் களெல்லாம் வாங்க என்ன செலவாகும் என்பதே எனக்கு இன்னும் தெரியாது. உங்களுக்கும் தெரியாது என்று நினைக்கிறேன். நீங்கள் படித்த காலத்தில் ஐந்து ரூபாய்க்குக் கிடைத்த புத்தகத்தின் விலை இப்போது பன்னிரண்டு ரூபாய்க்குக் குறையாது. நடை பாதைப் பழைய புத்தகக் கடைகளிலிருந்து ஒரு சில புத்தகங்கள் வாங்கினேன். ஆனால் தேவையான புத்தகங்களில் பாதிகூட வாங்க முடியவில்லை.
படிப்பா? சர்க்காரின் வீடு பௌபஜாரில்இருந்தது. அங்கே தான் சாப்பிடப் போகவேண்டும். சாப்பிட்டு விட்டுத் திரும்பும் போது இரவு மணி பத்தாகி விடும். பிறகு ஒரு மின்சார விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் படிக்க உட்கார்ந் தால் களைப்பில் கண்கள் அறுந்து விழுவது போலிருக்கும், நோட்டுகளில் எழுதப்பட்ட குறிப்புகள் புரியாத கிறுக்கல்களாகத் தோன்றும். என்னையறியாமலேயே தூங்கிப் போய்விடுவேன். இரவு முழுதும் எலிகளும் கரப்புகளும் என் உடம்பின்மேல் ஏறித் திரிந்த கொண்டிருக்கும்.
கல்லூரியில் ஒரே கூட்டம். ஐந்து பேர் உட்காரக் கூடிய பெஞ்சியில் ஏழெட்டு பேர் நெருக்கியடித்துக் கொண்டு உட்கார வேண்டும். குறிப்பு எடுத்துக் கொள்ளும்போது நோட்டுகளை வைத்துக்கொள்ள வசதியில்லை. ஆராய்ச்சிக் கூடத்தின் நிலை இன்னும் வேடிக்கை. பதினைந்துபேர் பயிற்சி பெறக்கடிய இடத்தில் ஐம்பது பேர் பயிற்சிபெற வேண்டும்.
நாட்டின் எதிர்கால விஞ்ஞானிகளுக்கு கல்வி கற்பிக்கப்படும் அழகு இதுதான்!
சார், அப்படியும் நான் என் முயற்சியில் குறை வைக்க வில்லை. என் போன்ற சாதாரண மாணவர்கள் படிக்கத்தான் கல்லூரிக்கு வந்திருந்தார்கள். அவர்களால் ஏன் படிக்க முடிய வில்லை, அவர்கள் ஏன் பரீட்சையில் தேறுவதில்லை..?
ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன். அதை நினைத்தால் இந்த நிலையிலும் எனக்குச் சிரிப்பு வருகிறது.
கலலூரி நிறுவன நாள் விழா. அதில் கூட்டம், கொடியேற்றம், பேச்சு எல்லாம் விமரிசையாக நடந்தன. துணைத்தலைவர் மிகவும் நன்றாகப் பேசினார். பேசும்போது அவருக்கு கண்களில் கண்ணீர் வந்து விட்டது.
"நாங்கள் சேகரித்துள்ள புள்ளி விவரங்களின்படி, நம் மாணவர்களில் சுமார் பத்து சதவிகிதத்தினர்தான் எல்லாப் புத்தகங்களையும் வாங்க முடிகிறது, இருபது சதவிகிதத்தினர் சில புத்தகங்கள் மட்டும் வாங்குகிறார்கள், எஞ்சியவர்களால் ஒரு புத்தகங்கூட வாங்க முடிவதில்லை. இந்த நிலையில் நாங்கள் அவர்களுக்குக் கல்வியளிப்பது எப்படி? இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டால் நாடு எவ்வளவு முன்னேறும்..!"
தீர்வைத்தான் அவர் முன்னமே சொல்லியிருந்தாரே 'கல்லூரிப் படிப்பு ஏழை மாணவர்களுக்காக அல்ல!' என்று..
இரண்டு மணி நேரம் கடந்து விட்டதை அறிவிக்கும் மணி அடித்து விட்டது. இன்னும் அதிக நேரம் என்னால் எழுத இயலாது, நீங்கள் இதுவரை படித்திருந்தால் உங்கள் தாராள மனதுக்கு இன்னும் தொந்தரவு கொடுக்கக் கூடாது. ஆகையால் என் கதையை சுருக்கமாகவே சொல்லி முடித்து விடுகிறேன். என் தாய்க்கு எழுதப் படிக்கத் தெரியாது. அவர் சொல்லியபடி சித்தப்பாதான் எனக்குத் தாறுமாறான கையெழுத்தில் கடித மெழுதுவார்.
"நீ பெரியவனாகு அப்பா, பெரிய மனிதன் ஆகு! உன் அப்பாவின் பெயரைக் காப்பாத்து! சுதந்திர பாரதத்தின் தொண்டனாக நீ உழைக்க வேண்டும் என்பதை மறக்காதே!"
நான் மறக்கவில்லை, ஒருநாள் கூட மறக்கவில்லை. ஆனால் சுதந்திர பாரதம் எனக்கு உதவவில்லை, என் கல்விக்கு வசதி செய்யவில்லை. புகையிலைக்கடையில் வேலை செய்து, வகுப்பு என்ற பெயரில் அர்த்தமற்ற இரைச்சலுக்கு நடுவில் உட்கார்ந்து, வெக்கையும் வியர்வையும் இரைச்சலும் நிறைந்த பராபஜார் சந்தில் மஞ்சள் விளக்கு வெளிச்சத்தில் எல்லாம் மங்கலாகத் தெரிய.. மண்டைக்குள் நரம்புகள் வெடித்துவிடும் போலிருக்கும். அங்கிருந்து ஓடிப்போய்விடத் தோன்றும் எனக்கு. ஓர் ஆழமான ஏரியின் கறுப்புத் தண்ணீரில் குதிக்கத் தோன்றும். சம்பகப்பூ, நாங்குப் பூக்களின் மணத்தை முகர்ந்து, நெஞ்சை நிரப்பிக் கொள்ள மனது ஏங்கும். மழைக் காலத்துக் கார் மேகத்தை நோக்கிக் கையை நீட்டிப் பாடத் தோன்றும்.
"மழையே, ஓடி வா பாய்ந்து! நெல் கொடுக்கிறேன் அளந்து!"
ஆனால் கல்கத்தாவில் ஏரியின் கறுப்பான, குளிர்ந்த நீருக்கு எங்கே போவது? நாங்கு, கோங்கின் மணம் ஏது? எங்கள் வீட்டில் வயிறு நிறையச் சாப்பிட நெல்லும் இல்லை, எங்கள் வீட்டு மக்களின் பசித் தீயை நணைக்க ஒரு பொட்டு மழையும் இல்லை.
எங்கே ஓடிப் போவேன் நான்?
எப்படியும் நம்பிக்கையிழக்க மாட்டேன் நான்! நான் பிழைத்துக் கொள்வேன், பெரியவனாவேன்! நானில்லாவிட்டால் கொதியுலை எரியாது, நீர் மின்சாரம் பிறக்காது, அணு ஆராய்ச்சிப் பணிநிறைவு பெறாது. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பெட்ரோல், நீல எண்ணெய், மெழுகு இவையெல்லாம் உருப் பெறாது! சிற்பி மயனின் இரகசிய மந்திரத்தை நான் அவனிட மிருந்து பிடுங்கிக் கொள்ள வேண்டும்! நான் சுதந்திர பாரதத்தின் விஞ்ஞானி.
சார், எல்லாம் கனவு! வங்காளத்தின் கல்லூரிகளில் என் போன்ற எண்ணற்ற மாணவர்கள் இது மாதிரி கனவுகளுடன் நடமாடுகிறார்கள். ஒரு நாள் அவர்களது கனவு தகர்ந்து போய்விடும்..
நான் சரியாகப் படிக்க முடியவில்லை, சார்! எப்போது படிப்பேன், எப்படிப் புத்தகம் கிடைக்கும் எனக்கு? புத்தகங்களை யாரிடமாவது கேட்டு வாங்கி, மஞ்சள் விளக்கின் மங்கிய வெளிச்சத்தில் உட்கார்ந்தால் எழுத்துகள் கிறுக்கல்களாக, வரிசை வரிசையாக, நெளியும் புழுக்களாபக் கண்ணுக்குத் தெரிந்தன. பிறகு நரம்புகள் தளர்ச்சியடையும், உணர்வுகள் மயங்கும், புகையிலை, வெல்லக் கழிவு, எலி, கரப்பு, வெக்கை இவற்றின் கலவையான நெடியை முகர்ந்தவாறு நான் காலையில் விழிக்கும்போது என் தலைமேல் இருபது மணுச்சுமை ஒன்று அழுத்திக் கொண்டிருப்பது போலிருக்கும். அப்பறம் எட்டுமணி அடிப்பதற்குள் கடைக்கணக்க வழக்கு வேலை1
முதலாண்டுப் பரீட்சையில் யாரும் ஃபெயிலாவதில்லை. கல்லூரிச் சம்பளம் கொடுத்திருந்தவர்கள் எல்லாருமே பாஸ்! இரண்டாம் ஆண்டில் இறுதித் தேர்வுக்கு முந்தய நுழைவுத் தேர்வு வந்தது.
சார், இந்த இடத்தில் என் தவறு ஒன்றை ஒப்புக் கொள்கிறேன். நுழைவுத் தேர்வு நெருங்க நெங்க என் மனதில் எப்போதும் அணையாத நெருப்பு ஒன்று எரியத் தொடங்கி விட்டது. எனக்கு ஒரு சில புத்தகங்கள் மட்டும் கிடைத்துவிட்டால் நான் இறுதிப் பரீட்சையில் முதல் பிரிவில் இல்லாவிட்டாலும் இரண்டாம் பிரிவிலாவது பாஸ் செய்து விடுவேன், கணக்கில் சிறப்பு மதிப்பெண்ணும் பெற்று விடுவேன்!
சார், என் மேல் கோபித்துக்கொள்ளாதீர்கள். என் நிலையைப் புரிந்து கொள்ளுங்கள். எனக்கு வெறி பிடித்துவிட்டது.
அதன்பின்.. அதன்பின் நான் என் சக மாணவர்களின் புத்தகங்களைத் திருடத் தொடங்கினேன்!
நீங்கள் என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டாலும் நினைத்துக் கொள்ளுங்கள். நான் திருடனாகி விட்டேன் என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லையே! என் தந்தை நாடு சுதந் திரம் பெறுவதற்காகத் தம் இரத்தத்தைக் கொடுத்தார். அவருடைய மகனான நான் திருடனாகி விட்டேன்!
மாணவர்கள் என் பாடப் புத்தகங்களைத் திடுகிறார்கள், தேர்வில் காப்பியடிக்கிறார்கள். பிடிபட்டால் காட்டு மிராண்டித் தனமாக நடந்து கொண்டு தேர்வு அரங்கத்திலிருந்து வெளியேறுகிறார்கள்? இவையெல்லாம் தவறுகள்தான், மிகப் பெரிய தவறுகள்தான். யாரும் இவற்றை ஆதரிக்கவில்லை.. ஆனால் இவை ஏன் நிகழ்கின்றன? மாணவர்கள் ஏன் தவறான வழிகளில் செல்கிறார்கள்? இது எவ்வளவு முக்கியமான விஷயம் என்பதை யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா..?
திருடப்பட்ட புத்தகங்களைப் படித்து எப்படியோ நுழைவுத் தேர்வில் தேறிவிட்டேன், இனி இறுதித் தேர்வு.
அதற்குப் பணம் கட்டவேண்டும் .. நிறையப் பணம்.
சித்தப்பாவின் கடிதத்திலிருந்து கிராமத்தில் எங்கள் குடும்ப நிலை மிகவும் மோசமாயிருப்பதாகத் தெரிந்தது. அறுவடையாகிச் சிறிது காலமே ஆகியிருந்தும் நெல் பற்றாக்குறை; உண்டியலை உடைத்து அதிலிருந்த காசையும் செலவு செய்தாகி விட்டது. இனி எனக்குப் பணம் அனுப்புவதானால் மாட்டை விற்க வேண்டியதுதான்.
"மாட்டை விற்கவேண்டாம். நான் எப்படியோ சமாளித்துக் கொள்கிறேன்" என்று சித்தப்பாவுக்குக் கடிதம் எழுதிவிட்டேன். ஆனால் பணத்துக்கு என்ன செய்வது? மாணவர் உதவி நிதியிலிருந்து பதினைந்து ரூபாய் கிடைத்தது. பாக்கிப் பணம்?
சர்க்கார் என்னைக் கூப்பிட்டனுப்பினார். "தேர்வுக்கு வேண்டிய பணம் ஐம்பது ரூபாயை நான் தருகிறேன், கவலைப் படாதே! என்றார்.
எவ்வளவு இரக்கம் அவருக்கு!
பிறகு புரிந்தது, அது வெறும் இரக்கம் அல்ல என்று. அதற்குப் பின்னால் ஒரு பயங்கரக் கோரிக்கை இருந்தது. உலகத்தில் ஒவ்வோர் இரக்கச் செயலுக்கும் ஒரு பயங்கர விலை கொடுக்க வேண்டும். பணம் கிடைத்தது. அந்தக் கடனைத் தீர்க்க இரண்டு மாதங்கள் உழைக்க நேர்ந்தது.
நம்புவீர்களா, சார்? கணக்கு, இயற்பியல், வேதியியல், வங்காளி, ஆங்கிலம் படிக்க முடியவில்லை என்னால். ஐம்பது ரூபாய்க்காக நான் அயர்ந்து மயங்கும் கண்களுடன், தலைமேல் இருபது மணுச்சுமையுடன் இரவு கண் விழித்துக் கணக்கு வழக்குகள் தயார் செய்தேன். வருமான வரி அதிகாரிகளின் கண்ணில் மண் தூவுவதற்காகப் போலிக் கணக்குகள்!
இவ்வாறு என் ஒவ்வொரு நரம்பையும் ஒவ்வொரு துளி இரத்தத்தையும் செலவிட்டு நான் அந்த ஐம்பது ரூபாய்க் கடனைத் தீர்த்தேன்.
இதற்குப் பிறகு படிக்க முடியுமா? நான் மாமனிதன் அல்லவே!
அப்படியும் தேர்வு எழுத வந்து விட்டேன். இறுதிவரை நம்பிக்கையிழக்கவில்லை நான். கடைசி நேரத்தில் ஏதாவது அற்புதம் நிகழும் என்று நம்பினேன் நான். தேர்வில் காப்பியடிப் பதற்காகப் புத்தகங்களின் சில பக்கங்களைக் கிழித்துக் கொண்டு வந்திருந்தேன். ஆனால் நான் எதிர் பார்த்த அற்புதம் நிகழவில்லை. முதல் மூன்று நாள் தேர்வுகளில் அந்தக் கிழிந்த காகிதத் துண்டு களைச் சட்டைப் பையிலிருந்து வெளியே எடுக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை எனக்கு. சர்க்காரின் போலிக் கணக்குப் புத்த கங்கள் என் கண்முன் நடனமாடத் தொடங்கின. பக்கத்திலுள்ள மாணவர்களும் தேர்வு அரங்கிலிருந்த கண்காணிப்பாளர்களும் அந்த புத்தகங்களின் பக்கங்களாகத் தோற்றமளித்தார்கள்..
இந்த வங்காளிப் பரீட்சைதான் கடைசிப் பரீட்சை.
சார், எச்சரிக்கை மணி அடித்து விட்டது. இன்னும் ஐந்து நிமிடங்களில் விடைத்தாளைப் பிடுங்கிக் கொண்டு விடுவார்கள். நான் சொல்ல வேண்டியதைச் சொல்லி முடித்து விட்டேன். இன்று இருட்டியதுமே நான் ஏதாவதொரு ரயிலுக்கடியில் என் சுமை முழுவதையும் இறக்கி வைத்து விடுவேன்.
நான் பிழைத்திருந்து வாழ விரும்பினேன் சார்! ஸ்வாதீன் குமாரான நான் சுதந்திர பாரத நாட்டுக்காக வாழ விரும்பினேன். நான் ஏன் வாழ முடியவில்லை என்ற கேள்வியை என் போன்ற ஆயிரமாயிரம் மாணவர்களின் சார்பில் உங்கள் முன் வைத்து விட்டுப் போகிறேன். இதன் விடையை யோசித்துப் பாருங்கள்!
நான் கோழைபோல் தற்கொலை செய்து கொள்கிறேனா? இல்லை, சார்--இல்லவேயில்லை இது என் தோல்வியல்ல, என் எதிர்ப்பு! ஆயிரத்த் தொள்ளாயிரத்து நாற்பத்திரண்டாம் ஆண்டின் செப்டம்பரில் ஒரு பிரளய இரவில் என் தந்தை தன் நெஞ்சின் இரத்தத்தை இந்த நாட்டு மண்ணில் கொட்டினார். அதுபோல் என் இரத்தமும் நாட்டின் இலட்சக்கணக்கான மாணவ மாணவியரின் சார்பாக ஒரு புதிய வரலாற்றைத் தொடங்கி வைக்கும். அந்த வரலாறு எப்போது முழுமை பெறும் என்று எனக்குத் தெரியாது. உங்களுக்குத் தெரியுமா, சார்! உங்களால் சொல்ல முடியுமா?
வணக்கம்!
('எக்சிபிஷன்', 1968)
அனைத்திந்திய நூல் வரிசை
வங்கச் சிறுகதைகள்
தொகுப்பு : அருண்குமார் மகோபாத்யாய்
வங்கத்திலிருந்து தமிழாக்கம்: சு.கிருஷ்ணமூர்த்தி
நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா
ISBN 81-237-2140-4
முதற்பதிப்பு 1997 (சக 1919)
©: அந்தந்த ஆசிரியருக்கு
தமிழாக்கம் © நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா 21
Bengali Short Stories (Tamil)
ரூ.46.00
வெளியீடு: இயக்குநர்,நேஷனல் புக் டிரஸ்ட்,
இந்தியா ஏ-5, கிரீன் பார்க், புதுதில்லி 110016
பொருளடக்கம்
முன்னுரை | vii |
1. இறுதி வார்த்தை : தாராசங்கர் பந்த்யோபாத்தியாய் | 1 |
2. ஓட்டர் சாவித்திரி பாலா: பனஃபூல் | 12 |
3. சாரங்க் : அசிந்த்ய குமார் சென் குப்தா | 16 |
4. ராணி பசந்த்: அன்னதா சங்கர் ராய் | 31 |
5. காணாமற்போனவன்: பிரமேந்திர மித்ரா | 62 |
6. சரிவு : சதிநாத் பாதுரி | 84 |
7. எல்லைக்கோட்டின் எல்லை: ஆஷாபூர்ணாதேவி | 79 |
8. மோசக்காரி: சுபாத்கோஷ் | 90 |
9. ஒரு காதல் கதை: நரேந்திர நாத் மித்ரா | 104 |
10. மதிப்புக்குரிய விடைத்தாள் திருத்துபவர் அவர்களுக்கு; நாராயண் கங்கோபாத்தியாய் | 117 |
11. சிறிய சொல்: சந்தோஷ் குமார் கோஷ் | 130 |
12. மரம்: ஜோதிரிந்திர நந்தி | 143 |
13. உயிர்த் தாகம்: சமரேஷ் பாசு | 152 |
14. நண்பனுக்காக முன்னுரை: பிமல்கர் | 164 |
15. பாரதநாடு: ரமாபத சௌதுரி | 178 |
16. சீட்டுக்களாலான வீடுபோல : சையது முஸ்தபா சிராஜ் | 190 |
17. அந்தி மாலையின் இருமுகங்கள் : மதிநந்தி | 207 |
18. பஞ்சம்: சுநீல் கங்கோபாத்தியாய் | 218 |
19. பிழைத்திருப்பதற்காக: பிரபுல்ல ராய் | 232 |
20. என்னைப்பாருங்கள்: சீர்ஷேந்து முகோபாத்தியாய் | 244 |
21. பின்புலம்: தேபேஷ் ராய் | 258 |
கதாசிரியர் அறிமுகம் | 275 |
முன்னுரை
நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தார் இந்திய வாசகர்களுக்காக, இந்திய அரசியல் சட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்திய மொழிகளில் சிறுகதைத் தொகுப்புகள் வெளியிடவும் மற்ற இந்திய மொழிகளில் அவற்றின் மொழி பெயர்ப்புகளைப் பிரசுரிக்கவும் "ஆதான்-பிரதான்" என்ற பெயரில் ஒரு திட்டம் வகுத்தனர். அந்தத் திட்டத்திற்கேற்பத் தயாரிக்கப்பட்டது இந்தச் சிறுகதைத் தொகுப்பு. நமக்கு அறிமுகமான காலத்தைச் சேர்ந்த மனிதர்கள், சமூகம் இவற்றின் சித்திரம் இந்தத் தொகுப்பில் கிடைக்கும்.
வங்கச் சிறுகதைத் துறையில் முதற்பெருங் கலைஞர் ரவீந்திரநாத் தாகூர். அவரது கையில்தான் சிறுகதை உயிர் பெற்றது, வியக்கத்தக்க வளர்ச்சி பெற்றது. சிறுகதையின் பல்வேறு அம்சங்களிலும் அவரது கலைத்திறன் ஒளிர்கிறது. காதல், இயற்கை, சமூகப் பிரச்சினைகள், தத்துவம், காவியத்தன்மை, புனைவியல், வரலாறு, கேலி போன்ற பல துறைகளிலும் அவர் அனாயசமாக நடமாடினார். 1890 ஆம் ஆண்டு முதல் 1940 ஆம் ஆண்டுவரை ஓர் அரை நூற்றாண்டுக் காலம் அவர் சிறுகதைகள் எழுதினார்.
ரவீந்திரரின் காலத்தில் த்ரிலோக்யநாத் முகோபாத்தியாய், பிரபாத் குமார் முகோபாத்தியாய், சரத் சந்திர சட்டோபாத்தியாய், பிரமத சௌதுரி முதலியோர் வங்கச் சிறுகதைக்கு வளம் சேர்த்தனர்.
இந்தத் தொகுப்பில் நமக்குப் பரிச்சயமான காலத்தைச் சேர்ந்த சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளன. ரவீந்திரரும் சரத் சந்திரரும் நமக்கு அறிமுகமான காலத்தைச் சேர்ந்தவர்களல்லர். இவர்களுக்குப் பிற்பட்ட காலத்தில், கடந்த நாற்பதாண்டுகளில் சிறுகதைகள் வங்காளி மனப்போக்கின் பல்வேறு படிமங்கள் இடம் பெற்றுள்ளன. ஆகவேதான் இந்தத் தொகுப்பில் சரத் சந்திரருக்குப் பிற்பட்ட காலம் முதல் தற்காலம் வரையில் வெளிவந்துள்ள பல்வகைப் பட்ட சிறுகதைக் கருவூலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
வங்க இலக்கியத்தில் ரவீந்திரர்-சரத்சந்திரருக்கு அடுத்த காலம் 'கல்லோல் யுகம்'., இந்தக் காலத்தின் அளவு 1923 முதல் 1939 வரை. இந்தக் காலத்தில் உலகளாவிய பொருளாதார மந்தமும், இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கிளர்ச்சியும் இருந்த போதிலும் 'கல்லோல்', 'காலிகலம்' பத்திரிகைகளில் சிறுகதைகள் எழுதிய எழுத்தாளர்கள் மொத்தத்தில் அமைதியான சூழ்நிலையில் இலக்கியம் படைத்தனர். இந்தப் பருவத்தில் தோன்றியவர்கள் தாரா சங்கர் பந்த்யோபாத்தியாய், அசிந்த்ய குமார் சென் குப்தா, பிரமேந்திர மித்ரா, புத்ததேவ போஸ், மனீஷ் கட்டத்(ஜுவனாஸ்வ), பிரபோத் குமார் சன்யால், பவானி முகோபாத்தியாய் ஆகியோர். விபூதி பூஷண் முகோபாத்தியாய், மாணிக் பந்தயோபாத்தியாய், அன்னதா சங்கர்ராய், பனஃபூல், விபூதி பூஷண் பந்த்யோ பாத்தியாய, சரதிந்து பந்த்யோபாத்தியாய், ரவீந்திர நாத் மித்ரா, பரிமல் கோஸ்வாமி, சஜனிகாந்த தாஸ், பிரமாங்குர் ஆதர்த்தி, சரோஜ் குமார் ராய் சௌதுரி, பிரமதநாத் பிஷி, கஜேந்திர குமார் மித்ரா, ஆஷாபூர்ணாதேவி, மனோஜ் போஸ், பிமல் மித்ரா முதலியோர் 'பிசித்ரா', 'சனிபாரேர் சிட்டி பத்திரிகைகளில் எழுதினார்கள். இந்தக் காலத்தில்தான் ராஜசேகர் போசும் பரசுராம் என்ற புனைபெயரில் கேலியும் ஹாஸ்யமும் ததும்பும் சிறந்த சிறுகதைகள் எழுதினார்.
இரண்டாவது உலகப்போரின் தொடக்கத்திலிருந்து இந்தியா விடுதலை பெற்ற காலம் வரை- அதாவது 1939 முதல் 1947 வரை உள்ள காலத்தைக் 'கல்லோலுக்குப் பிற்பட்ட யுகம்' என்று கூறலாம். இந்தக் காலம் வங்காள நாட்டிலும் சமூகத்திலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்த காலம். பஞ்சம், விமானத் தாக்குதல், விலைக் கட்டுப்பாடுகள், உணவுப் பங்கீடு, ராணுவத்துக்காகக் கொள்முதல், கறுப்புச் சந்தை, சமூக வாழ்வில் சீரழிவு, பொருளாதாரச் சீர்குலைவு, ஒழுக்கம் பற்றிய மதிப்பீடுகளின் அழிவு, வகுப்புக் கலகங்கள்,நாட்டு விடுதலை, நாட்டுப் பிரிவினை, அகதிகளின் வெள்ளம் இவை போன்ற பெரும் மாற்றங்களும் விபரீதங்களும் இந்தக்காலகட்டத்தில்தான் நிகழ்ந்தன.
இந்தக் காலத்தில் எழுதத் தொடங்கியவர்கள் தங்களுக்கு இலக்கிய உணர்வு பிறந்தது முதலே குறிப்பிடப்பட்ட மாற்றங்கள் பற்றிய நேரடி அனுபவம் பெற்றிருந்தார்கள். இந்தக் காலத்தின் சமூகச் சூழ்நிலை அமைதியற்றதாகவும் குழப்பம் மிகுந்ததாகவும் இருந்தது. இந்தச் சூழ்நிலை அவர்களது பார்வையைக் கூர்மையாக்கியதோடு குழப்பவும் செய்தது. கல்லோல் காலத்து ரொமான்ட்டிக் சூழ்நிலை, நாடோடி மனப்பாங்கு, தறிகெட்ட காதல் வேகம் இவையெல்லாம் இந்தக் காலத்துச் சிறுகதைகளில் இல்லை. இந்தக் காலகட்டத்தில் நமது சமூகத்திலும் எண்ணற்ற மாறுதல்கள் விரைவாக நிகழ்ந்தன. சமூகத்திலும் தனி மனித வாழ்விலும் எண்ணற்ற சிதைவுகள், ஆக்கங்கள், பிரச்சினைகள், அசாதாரண விதிவிலக்குகள், இவையெல்லாம் இணைந்த புரட்சியின் தீவிர வேகம்--சிறுகதை எழுத்தாளனின் அறிவுப் பசியையும் உணர்வுத் திறனையும் கூர்மையாக்கின. நிலை பெற்றிருந்த சட்டங்களும் விதிகளும் தளர்ந்து போயின தறிகெட்ட உணர்வுகளும் இயற்கைக்கு மாறான போக்குகளும் தோன்றின பல நுண்மையான அதிருப்திகள் மனிதனைப் பீடித்தன ரசனை சீர்கெட்டதால் பல்வேறு புதிய அனுபவங்களை ருசிப்பதில் ஆர்வம் பிறந்தது புதிய உறுதிகள், புதிய நம்பிக்கைகள் வாழ்க்கைப் போராட் டத்துக்கு ஓர் அலாதியான உருவம் கொடுத்தன இவையெல்லாம் இரண்டாம் உலகப் போருக்குமுன் நினைக்கக்கூட முடியாதவை யாகும். போர் ஒரு பயங்கர பூகம்பம் போல நேர்ந்தது. அதன் விளைவாகக் கண்ணியத்தின் போர்வை, நீதி நியாயம் என்ற கவசம், குடும்ப கௌரவம், அன்பு-பரிவு, கீழ்ப்படிந்து நடக்கும் தன்மை, மத நம்பிக்கைகள், சடங்குகள் இவையெல்லாமே மண்ணோடு மண்ணாகிவிட்டன. இதற்கு நடுவில் ஒரு புதிய சமூகத்தைப் படைக்கும் கனவு பிறந்தது. கனவை நனவாக்குவதாக உறுதிமொழி ஒலித்தது.
சுபோத் கோஷ், சதிநாத் பாதுரி, சந்தோஷ்குமார் கோஷ், நாராயண் கங்கோபாத்தியாய், நரேந்திர நாத் மித்ரா, நபேந்து கோஷ், நனி பௌமிக், சுசீல் ஜானா, ஜோதிரிந்திர நந்தி ஆகியோரின் சிறுகதைகளில் இந்த மாறுதல்கள் பிரதி பலித்தன. ஜகதீஷ் குப்தா, மாணிக் பந்த்யோபாத்தியாய், அசிந்த்ய குமார் சென் குப்தா, பிரபோத் குமார் சன்யால், முதலிய கல்லோல் யுக எழுத்தாளர்களும், விபூதி பூஷண் பந்த்யோபாத்தியாய். தாராசங்கர் பந்த்யோபாத்தியாய், மனோஜ் போஸ், சரோஜ்குமார் ராய்சௌதிரி, ஆஷா பூர்ணா தேவி, பிரமதநாத் பிஷி, பரிமல் கோஸ்வாமி, பனஃபல், சுசீல்கோஷ், வாணிராய், சாருசந்திர சக்ரவர்த்தி முதலிய 'பிசித்ரா' 'சனிபாரேர் சிட்டி எழுத்தாளர்களும் மேலே கூறப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவர்கள்.
இந்தக் கால கட்டத்தைத் தொடர்ந்து வந்தது துண்டுபட்ட சுதந்திரம் கூடவே வந்தது அகதிகளின் வெள்ளம். இன்னும் பெரிய அளவில் சமூகத்தின் சமநிலைக்குக் கேடு. சுதந்திரத்தின் தோரண வாயிலில் ஒலித்த நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் எல்லாமிழந்த அகதிகளின் அழுகையொலி அமுக்கிவிட்டது. அப்போது இந்தக் குழப்பம் நிறைந்த, இரத்தத்தில் தோய்ந்த நாட்டில் சிறுகதை எழுத்தாளர்களின் இன்னொரு குழு தோன்றியது - சமரேஷ் பாசு, பிமல்கர், ரமாபத சௌதிரி, சையது முஸ்தபா அலி, ஹரிநாராயண் சட்டோபாத்தியாய், பிரபாத் தேவ் சர்க்கார், சாந்தி ரஞ்சன் பந்த்யோபாத்தியாய், ஸ்வராஜ் பந்த்யோபாத்தியாய், பிராணதோஷ் கட்டக், சுதீர் ரஞ்சன் முகோபாத்தியாய், சுசீல் ராய், ரஞ்சன், சசீந்திர நாத் பந்த்யோபாத்தியாய், சுலேகா சன்யால், கௌர் கிஷோர் கோஷ், ஆசுதோஷ் முகோபாத்தியாய், சத்தியப்பிரிய கோஷ், ஆசீஷ் பர்மன், அமியபூஷண் மஜும்தார், கமல்குமார் மஜும்தார், கௌரிசங்கர் பட்டாச்சார்யா, தீபக் சௌதுரி, மகாசுவேதாதேவி இன்னும் பலர்.
இந்தக் காலத்துக் கதாசிரியர்கள் இதற்கு முந்தைய காலத்து எழுத்தாளர்கள் போலவே செயல்பட்டனர். உண்மையில் இந்த இரு காலத்து எழுத்தாளர் குழுக்களை வெவ்வேறாகப் பிரித்துவிட இயலாது. நரேந்திரநாத் மித்வாடி, நாராயண் கங்கோபாத்தியாய், சந்தோஷ்குமார் கோஷ், நனி பௌமிக், சுசீல் ஜானா, சாந்திரஞ்சன் பந்த்யோபாத்யாய், ஸ்வராஜ் பந்தியோபாத்தியாய், பிராணதோஷ் கட்டக், ஆசுதோஷ் முகோபாத்தியாய் இவர்கள் எல்லாருமே 1916 ஆம் ஆண்டிலிருந்து 1922ஆம் ஆண்டுக்குள் பிறந்தவர்கள். இரண்டாம் உலகப்போர் தொடங்கிய சமயத்தில் - கல்கத்தாவும் வங்காளம் முழுதுமே ஒரேயடியாக மாறிக் கொண்டிருந்த குழப்பமான நேரத்தில் - இவர்கள் தங்கள் இளமைப் பருவத்தில் காலெடுத்து வைத்தனர். அன்று முதல் இன்று வரை இவர்கள் உறுதியோடு எழுதிக்கொண்டு வருகின்றனர். 1940க்கும் 70க்கும் இடைப்பட்ட முப்பதாண்டுக் காலத்தில் சமூக வாழ்க்கையிலும் தனிப்பட்ட மனித வாழ்விலும் நிகழ்ந்த பல்திறப்பட்ட மாற்றங்கள் இவர்களுடைய சிறுகதைகளில் பிரதிபலிப்பதைக் காணலாம்.
இந்த நூற்றாண்டின் பின்பாதியில் வங்கச் சிறுகதையின் இன்னொரு பருவம் தோன்றியுள்ளது. இந்தப் பருவத்தைச் சேர்ந்த இளம் கதாசிரியர்கள் 1930 முதல் 1940க்குள் பிறந்தவர்கள். இவர்கள் புதிய தலைமுறை எழுத்தாளர்கள் - சையது முஸ்தபா சிராஜ், மதி நந்தி, சுநீல் கங்கோபாத்தியாய், சியாமல் கங்கோபாத்தியாய், பரேன் கங்கோபாத்தியாய், சீர்ஷேந்து முகோபாத்தியாய், பிரபுல்ல ராய், திப்யேந்து பாலித், அதீன் பந்த்யோபாத்தியாய், தீபேந்திர நாத் பந்த்யோபாத்தியாய், தேபேஷ் ராய், சந்தீபன் சட்டோபாத்தியாய், கவிதா சின்ஹா, லோக்நாத் பட்டாச்சார்யா, சங்கர் ஆகியோர் இந்தப் பருவத்து எழுத்தாளராவர்.
இந்தப் பருவத்து எழுத்தாளர்கள் முற்றிலும் ஒரு புதிய வகையைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்குள்ளும் இவர்களுக்கு முந்தைய பருவத்து எழுத்தாளர்களுக்குமிடையே எவ்வித ஒற்றுமையுமில்லை. இவர்கள் தங்களுக்கு முற்பட்ட காலத்தில் நிகழ்ந்த எதையும் பார்க்கவில்லை, எந்தவிதமான பாரம்பரியத்திற்கும் நன்றி பாராட்டவில்லை; அதைப் பற்றிய நினைவுகூட இவர்களுக்கு இல்லை. இருட்டடிப்பு, பஞ்சம், வகுப்புக் கலவரம், இரத்தம் தோய்ந்த சுதந்திரம் இவையெல்லாம் நிகழ்ந்து சிறிது காலத்துக்குப் பின், அகதிக் குடியிருப்புகளின் ஓரங்களிலோ அல்லது அவற்றுக்கு வெளியிலோ இவர்கள் வாழ்ந்து வளர்ந்தார்கள். இவர்களுக்கு முற்பட்ட எழுத்தாளர்களுக்கு இவர்கள் முற்றிலும் அன்னியப் பட்டவர்களாகத் தோன்றினார்கள். இவ்விரு பிரிவினருக்குமிடையே எவ்விதப் பிணைப்புமில்லை. இளைய பருவத்தினர் வளரத் தொடங்குவதற்கு முன்னேயே கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் இதமான மாளிகை இடிந்து தூள் தூளாகிவிட்டது. மரியாதை, பக்தி போன்ற உணர்வுகள் வெறும் உபதேசங்களாகி விட்டன. ஆண்-பெண் உறவு மாறிப்போய்விட்டது. அதாவது அடிப்படை உந்துதல்கள் அப்படியே இருந்தாலும் அவற்றைச் சூழ்ந்திருந்த கற்பனைப் போர்வை இல்லை. தங்களுக்கு எதிரான கலகத்தில், வாழ்வதற்காக ஒன்றிணைந்தோ அல்லது ஒன்றிணைவது போல் பாசாங்கு செய்தோ அவர்கள் தங்களைத் தயார் செய்து கொள்கிறார்கள்; உண்மையில் அவர்கள் முன்னைவிடத் தனியர்கள், அமைதியற்றவர்கள், இயற்கைக்கு மாறான வழிகளிலோ நரம்புக் கிளர்ச்சியிலோ அமைதி காண முயல்பவர்கள் - இவ்வாறுதான் முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் இந்தத் தலைமுறை எழுத்தாளர்களைப் பார்க்கிறார்கள். இந்த இரு தலைமுறை எழுத்தாளர்கள், தனித்தனித் தீவுகளாவர்.
"கல்லோல்" யுக எழுத்தாளர்கள், இரண்டாம் உலகப்போர்க்கால எழுத்தாளர்கள், இளைய தலைமுறை எழுத்தாளர்கள் என்னும் இந்த மூன்று பிரிவுகளில் முதலிரண்டு பிரிவினருக்கிடையேயுள்ள வேற்றுமையைவிடப் பின்னிரண்டு பிரிவினருக் கிடையேயுள்ள வேற்றுமை பல மடங்கு அதிகம். கல்லோல் யுகத்துக்குப் பிற்பட்ட பருவத்தில் கல்லோல் யுகத்தின் ரொமான்ட்டிக் தன்மை இல்லாவிடினும் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், நீதி - நியாயம் போன்ற மரபு நெறிகளிடம் மரியாதையும் இருந்தது. இது இன்றைய எழுத்தாளர்களிடம் இல்லை. இந்த விஷயத்தில் இவர்களிடையே உள்ள பிளவு கடக்க முடியாதது.
இந்தப் பிளவு மனப்போக்கில் மட்டுமல்ல, மொழியிலும் கட்டமைப்பிலும் கூடத்தான்; வாழ்க்கையை நோக்கும் பார்வையில் மட்டுமல்ல, வாழ்க்கைச் சாதனங்களைப் புதுமையான முறையில் கையாள்வதிலும் இந்தப் பிளவு பிரதிபலிக்கிறது. வங்கச் சிறுகதை ரவீந்திரரின் படைப்பிலேயே கொடுமுடியை எட்டிவிடவில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது. வங்கச் சிறுகதை மேலும் மேலும் முன்னேறியுள்ளது, அதன் திருப்பு முனைகளைக் குறிக்கும் மணி பல தடவைகள் ஒலித்துள்ளது, அதில் சோதனை முயற்சிகள் குறையவில்லை, வாழ்க்கையைப் புதிய நோக்கில் பார்க்கும் ஆர்வம் ஒருபோதும் வற்றிவிடவில்லை.
சில குறிப்பிட்ட நிபந்தனைகளுக்குட்பட்டு, ஒரு குறிப்பிட்ட பக்க எல்லைக்குள், ஒரு குறிப்பிட்ட எண்ணுள்ள சிறுகதைகளைத் தேர்ந்தெடுக்கும்போது அத்தொகுப்பு எல்லாருக்கும் திருப்தியளிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் பல நிபந்தனைகளுக்கும் எல்லைகளுக்கும் உட்பட்டால் இது தவிர்க்க முடியாதது.
ரவீந்திரர்-சரத்சந்திரருக்குப் பிற்பட்ட மூன்று பருவங்களின் சிறுகதைகள் பல்திறப்பட்டவை, வளம் செறிந்தவை. அவற்றிலிருந்து செய்யப்படும் எந்தத் தொகுப்பும் திருப்தியளிக்காது. ஆகையால் வாசகரின் அனுதாபத்தையும் தாராள மனதையும் நம்புவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.
தற்கால வங்க இலக்கியத்தின் இரண்டு தலைசிறந்த எழுத்தாளர்கள் விபூதிபூஷண் பந்த்யோபாத்தியாயும் மாணிக் பந்த்யோபாத்தியாயும் ஆவர். ஓராண்டு முயற்சி செய்தும் பதிப்புரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாததால் முன்னவரின் 'ஆஹ்வான்' சிறுகதையையும் பின்னவரின் 'நமூனா' சிறுகதையையும் இறுதி நேரத்தில் இத்தொகுப்பிலிருந்து விலக்கிவிட நேர்ந்தது. நான் விரும்பாமலே நேர்ந்துவிட்ட இந்தக் குறைக்காக வாசகர்களின் மன்னிப்பைக் கோருகிறேன்.
அருண்குமார் முகோபாத்தியாய்
வங்கமொழி-இலக்கியத்துறை,
கல்கத்தா பல்கலைக் கழகம்.
------------
1. இறுதி வார்த்தை
தாரா சங்கர் பந்த்யோபாத்தியாய்.
பத்மா நதிக்கு மறுகரையில் வசிக்கும் சாஹுக்களின் குடும்பந்தான் இப்போது பரத்பூரின் ஜமீந்தார். இதற்குமுன் கிராமம் மியான் குடும்பத்தின் வசத்திலிருந்தது. அப்போது சாஹுக்கள் இந்த பக்கம் வந்து தொழில் தொடங்கினார்கள். மியான் குடும்பத்தினரிடையே பூசல் ஏற்பட்டபோது அவர்கள் சாஹுக்களிடம் கடன் வாங்கினார்கள். கடன் ஆயிரம் மடங்காக வளர்ந்தால் கடன்காரர்கள் என்ன செய்வார்கள? அத்துடன், நீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது கிராம மக்களின் தலைவன் சாஹுக்களுக்கு ஆதரவாக சாட்சியம் சொன்னான்.
அந்தப் பழைய கதை கிடக்கட்டும். இப்போது மக்கள் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு .. அந்தக் கதையும் கிடக்கட்டும். பழைய குப்பையைக் கிளறிப் பிரயோசனமில்லை. எல்லா விவரங்களையும் சொல்வதானால் பெரிய புராணமாகி விடும். இந்தக் காலத்து நடப்பைச் சொல்வதுதான் சரி. இப்போது சாஹுக்கள்தான் ஜமீந்தார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு ஆபீஸ், ஒவ்வொரு ஆபீசிலும் ஒரு நாயப் (மானேஜர்), தலைமை ஆபீசில் பெரிய நாயப். இதைத்தவிர, சாஹுக்கள் பத்மாவின் மறுகரையிலிருந்த தங்கள் ஊரிலிருந்து அடியாட்களைக் கொண்டு வந்து ஒவ்வொரு கிராமத்திலும் வைத்துப் பக்கா ஏற்பாடு செய்திருந்தார்கள். மேலும் சாஹுக்களின் உறவினர் பலர் ஜமீந்தாரியில் பல இடங்களில் கடைகள் வைத்து நன்றாகத் தொழில் செய்து வந்தார்கள். பலர் தொழிற்சாலைகளும் அமைத்திருந்தார்கள். கிராமத்த மக்கள் அவற்றிலும் உழைத்தார்கள். இந்தத் தொழிலாளிகளிலும் சிலர் பல்லைக் கடித்துக் கொண்டார்கள். சிலர் அழுதார்கள். பல்லைக் கடித்துக் கொண்டோ அழுதோ எப்படியோ காலம் கழிந்து கொண்டிருந்தது நல்லதும் கெட்டதுமாக, கிராம மக்கள் மரங்கள் மேல் உரிமை கொண்டாடி ஜமீந்தாரின் ஊழியர்களுடன் சச்சரவு செய்தார்கள். நில உரிமை விஷயமாகத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். ஜமீந்தாரின் அடியாட்களுடைய பராமரிப்புச் செலவைக் கொடுக்க மறுத்தார்கள். உப்பு, துணி, எண்ணெய் இவற்றின் விலையில் பேரம் பேசிக் கடைக்காரர்களுடன் வாக்குவாதம் செய்தார்கள். தொழிலாளர்கள் கூலிக்காக முதலாளிகளுடன் தகராறு செய்தார்கள் - இவ்வாறு சண்டை சச்சரவுகளோடு காலம் கழிந்து கொண்டிருந்தது. கண்கள் முற்றிலும் மூடப்பட்ட செக்குமாடுகள் கொம்புகளை ஆட்டிக் கொண்டு செக்கு இழுப்துபோல் எல்லாம் நடந்து கொண்டிருந்தது. செக்கு ஆடி எண்ணெய் வந்து கொண்டிருந்தது, அதை எடுத்துக் கொண்டான் வணிகன்; பிண்ணாக்குக் கிடைத்தது மாடுகளின் பங்குக்கு.
திடீரென்று பூகம்பம் நேர்ந்தாற்போல் எல்லாம் தலை கீழாகிவிட்து. பயங்கரமான மாற்றம்! சாஹுக்களுக்கும் ஹல்திபாரி ஜமீந்தார்களான சாயி குடும்பத்தினருக்குமிடையே நிலவிஷயமாகத் தகராறு ஏற்பட்டுவிட்டது. அவ்வளவுதான்; முன்னறிவிப்போ எச்சரிக்கையோ இல்லாமல் திடீரென்று ஒரு நாள் சாயிக்களின் அடியாட்கள் காடு, வயல்களைத் தாண்டிக் கொண்டு தடிகள் ஈட்டிகளுடன் பரத்பூருக்குப் பக்கத்துக் கிராமமான தர்மபூரின்மேல் படையெடுத்தார்கள். அவர்கள் அந்த ஊர் ஜமீன் ஆபீசுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை அடித்துப் போட்டு ஆபீசைக் கைப்பற்றிக் கொண்டார்கள். அதுமட்டுமல்ல, அவர்களுடைய நடவடிக்கைகளைப் பார்த்துப் பரத்பூருக்கும் கவலை ஏற்பட்டது. சாயிக்களின் ஆட்கள் தங்கள் தடிகளுக்கு எண்ணெய் தடவி மேலும் அடிதடிக்குத் தயார் செய்து கொண்டிருந்தார்கள். ஆகையால் அவர்கள் பரத்பூரிலும் நுழைந்து தாக்குவார்கள் என்பது குறித்து ஒருவருக்கும் சந்தேகமில்லை. எங்கும் களேபரமாகிவிட்டது. பரத்பூர் ஜமீன் ஆபீஸ்களிலும் போராட்ட ஆயத்தங்கள் தொடங்கின.
கிராமத்து மக்கள் திடுக்கிட்டார்கள். இரண்டு எருதுகள் சண்டை போட்டால் அவற்றின் காலடியிலுள்ள நாணலுக்குத் தான் சேதம் அதிகம். மக்களின் நிலை அந்த நாணலின் நிலையை ஒத்திருந்தது. அவர்களுக்குக் கவலை ஏற்பட்டது.
கிழவன் லால்மோகன் பாண்டேதான் விவசாயிகளின் தலைவன். குட்டையாக வெட்டப்பட்ட தலைமுடி; பற்கள் விழுந்துவிட்டன; மிகவும் மெதுவாகப் பேசுவான், இதமாகச் சிரிப்பான். கிழவன் குழம்பிப்போய்த் தலையைத் தடவிக் கொண்டான். பரத்பூர் குடிமக்கள் அங்கு வந்து அவனைச் சூழ்ந்து கொண்டு உட்கார்ந்தார்கள். கிழவன் மரியாதையோடு அவர்களைக் கும்பிட்டான்; தாயின் மடியில் தவழும் குழந்தை தன் அப்பா, சித்தப்பா, அக்கா, அண்ணனைப் பார்த்துச் சிரிக்குமே, அந்த மாதிரி சிரித்துக் கொண்டு அவர்களிடம் "வாங்க, பஞ்சாயத்தாரே" என்றான்.
எல்லாரும் உட்கார்ந்தனர். பிறகு "தலைவரே!" என்ற ஒரேயொரு வார்த்தையைச் சொன்னார்கள். அவர்கள் சொல்ல விரும்பியதையெல்லாம் அந்த ஒரு வார்த்தையிலேயே சொல்லிவிட்டார்கள். தலைவனுக்கும் எல்லாம் புரிந்துவிட்டது. கிழவன் இன்பத்திலும் சிரிப்பான், துன்பத்திலும் சிரிப்பான், சிந்திக்கும்போதும் சிரிப்பான். அவன் சிந்தித்துக்கொண்டே சிரிக்கத் தொடங்கினான்.
கௌர்பூரைச் சேர்ந்த ஒருவன், "சாஹுங்கதான் நம்ம நில உரிமையை ஒப்புத்துக்கலியே! நாம ஏன் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கக் கூடாது? சாஹுங்களும் ஜமீந்தார், சாயிங்களும் ஜமீந்தார். சாயிங்க நிலத்திலே நம்ம உரிமையை ஒத்துக் கிட்டாங்கன்னா, அவங்களுக்கு ஆதரவா சாட்சி சொல்லுங்க தலைவரே" என்று சொன்னான்.
கிழவன் தலையை ஆட்டிக் கொண்டு சொன்னான், "ஊஹூம், அது பாவம்!"
அப்படீன்னா நாமும் அடிதடிலே இறங்குவோம்"
"ஊஹூம்..."
"ஏன் பயமாயிருகஜ்கா?" ஓர் இளைஞன் ஏளனமாகக் கேட்டான். கிழவன் சிரித்தான், அந்தச் சிரிப்பில் இளைஞன் குறுகிப்போனான். "பயமில்லேப்பா, அது பாவம்" என்று சொன்னான் கிழவன்.
"அப்ப என்ன செய்யப் போறே? என்ன செஞ்சாப் பாவம் வராது? சொல்லு!"
கொஞ்சம் பொறுத்துக்க. என் மனசைக் கேட்டுக்கறேன், மனசு பகவானைக் கேக்கட்டும், அப்பத்தான் .. "
ரத்தன்லால் சொன்னான், "என்ன செய்யணுங்கறதை சீக்கிரம் நிச்சயம் பண்ணு, தலைவரே! நீ சொல்றபடி நான் செய்யறேன்"
கிழவன் சிரித்தான். ரத்தனிடம் அவனுக்கு ரொம்ப நம்பிக்கை. மிகவும் நல்ல பையன் அவன்; அீத மாதிரி துணிவும் அதிகம் அவனுக்கு.
***
"நாயப் பாபு, வணக்கங்க" என்று சொல்லிக்கொண்டே கிழவன் ஜமீன் ஆபீசுக்குள் நுழைந்தான்.
"யாரு? லால்மோகனா? வா வா" என்றான் நாயப்.
"ஆமா வந்தேன்.."
"சும்மா வந்தேன் - போனேன்னு சொல்லாதே! எல்லாரும் கச்ச கட்டிக்கிட்டு எறங்கிடுங்க கோதாவிலே! அந்த ராஸ்கல் சாயிக்களை அடிச்சு நொறுக்கிடணம்! ஒரேயடியா வெட்டிப் போடணும்!"
கிழவன் சிரித்தான், "என்ன சொல்றீங்க, நாயப் பாபு"
"ஏன்?"
"வெட்டிப்போட்டா ரத்தம் சிந்தாதா? ஜனங்க செத்துப் போக மாட்டாங்களா? அதெல்லாம் பாவமில்லையா?" கிழவனின் கண்களிலிருந்து நீர் பெருகத் தொடங்கியது.
கிழவனின் இந்த ஆ ஷாடபூதித்தனத்தைப் பார்த்து உடம்பெல்லாம் எரிந்தது நாயபுக்கு. ஆனால் கிழவன் கௌரவப் பட்டவன். ஆகையால் நாயப் தன் கோபத்தை அடக்கிக் கொண்டு நிதானமாகச் சொன்னான், "உம், புரியுது. அவங்க இரத்தம் சிந்துமேன்னு உன் கண்ணிலே தண்ணி வருது. எல்லாம் புரியுது எனக்கு!" என்று சொல்லிவிட்டுக் காகிதத்தில் சில வரிகள் எழுதினான். பிறகு தொடர்ந்து சொன்னான், "அவங்க நம்ம ஆளுங்களை அடிச்சு ரத்த விளாறா ஆக்கிட்டாங்களே, அது..."
கிழவனின் உதடுகள் துடித்தன. கண்ணீர் இருமடங்கு பெருகியது. "அடக் கடவுளே! அதைக் கேட்டதிலேருந்து அழுதுக் கிட்டே இருக்கேன் நாயப் பாபு... ஐயோ, ஐயோ! அவங்களுக்கு அடிபட்டதை நெனச்சுப் பார்த்தா அந்த அடியெல்லாம் என் மாரிலே விழுந்தமாதிரி இருக்குங்க...!"
நாயப் கிழவனை உற்றுப் பார்த்தான். கிழவன் வெறும் பாசாங்குக்காரனா அல்லது உண்மையிலேயே நல்ல மனிதன்தானா? செம்மறியாட்டின் கொம்போடு மோதிக்கொண்டால் வைரத்தின் கூர்மையும் மழுங்கிப் போகும். அதுபோல் நாயபின் கூரிய அறிவால் கிழவனின் மழுங்கிய அறிவைத் துளைக்க முடியவில்லை. நாயப் வெகுநேரம் கிழவனின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, "அப்படீன்னா என்ன செய்யணும்?" என்று கேட்டான்.
"அதுதான் உங்ககிட்டே சொல்றேன்..." கண்ணீருக்கிடையே சிரித்துக்கொண்டு சொன்னான் கிழவன்.
"என்ன சொல்றே?"
"நெலத்துலே எங்க உரிமையை நீங்க ஒப்புத்துக்கங்க, உங்க அடியாளுங்களைக் கூட்டிக்கிட்டுப் போயிடுங்க... நாங்க சாயிங்களை எதுத்து நிக்கறோம்..."
"எதுத்து நிப்பீங்களா...? அடிதடி, கிரிமினல் கேஸ்னா என்னன்னு தெரியுமா உங்களுக்கு? வயலை உழுது சாப்பிடறவங்க நீங்க. தடிபிடிக்கத் தெரியுமா உங்களுக்கு? ஈட்டி எறியத் தெரியுமா?"
கிழவன் சிரித்தான்.
"என்ன சிரிக்கிறே?"
"ஒங்க பேச்சைக் கேட்டுச் சிரிப்பு வருதுங்க... நாங்க தடியும் எடுக்க மாட்டோம், ஈட்டியும் எறிய மாட்டோம்."
"பின்ன எப்படி எதுப்பீங்க?"
"அவங்க தாக்க வந்தாங்கன்னா நாங்க அவங்களுக்கு முதுகைக் காட்டி "தடியிலே அடிங்க"ன்னு சொல்லுவோம், எங்க நெஞ்சைக் காட்டி "ஈட்டியாலே குத்துங்க"ன்னு சொல்லுவோம். எங்க ரத்தம் மண்ணிலே கொட்டும், மண்ணு செவக்கும், நாங்க செத்துப் போவோம். அப்போது அவங்களுக்குப் புத்தி வரும், அவங்க நெஞ்சு வலிக்கும், அவங்க கண்ணுலே தண்ணி வரும். அப்போ கடவுள் அவங்களுக்கு அறிவைக் குடுப்பார். அவங்க வெக்கப்பட்டுக்கிட்டுத் திரும்பிப் போயிடுவாங்க..."
ஹோஹோவென்று சிரித்தான் நாயப். "இதுதான் உன் அறிவா?"
கிழவன் ஓர் அதிசயப் பிறவி, அவன் சற்றும் நிலை குலையவில்லை. அவனுடைய பொக்கை வாயில் சிரிப்பு மலர்ந்தது. குழந்தையின் கள்ளங் கபடமற்ற சிரிப்பு. "இந்த வழி பலிக்கும், நிச்சயம் பலிக்கும்! என் மனசு கடவுளைக் கேட்டது. கடவுள்தான் இப்படிச் சொன்னார். ஒங்க மனசு கடவுளை ஒண்ணும் கேக்கறதில்லே. அது கேட்டா நீங்க நான் சொல்றதைப் புரிஞ்சுக்கிட்டிருப்பீங்க..."
***
தேவனுக்கேற்ற தேவி-பைத்தியக்காரக் கிழவனுக்கேற்ற பைத்தியக்காரப் பெண்டாட்டி!
எல்லாவற்றையும் கேட்டுக் கிழவிக்கும் கவலை ஏற்பட்டது. கிழவனைப்போலவே, நாயபுக்காகக் கவலை!
"இது ரொம்ப சாதாரண விசயமாச்சே? இது ஏன் நாயப் பாபுவுக்குப் புரியலே? ஏன் கிழவா?"
"அதுதானே, கிழவி!"
"இப்போ என்ன செய்யப் போறே?"
"நானா?" கிழவன் வெகுநேரம் யோசித்துவிட்டுச் சிரித்தான். "நான் தீர்மானம் செஞ்சுட்டேன்."
"என்ன?"
"நான் சாகப்போறேன்"
"சாகப்போறியா?"
"ஆமா, சாகப் போறேன். நான் செத்துப்போனா அவங்க வருத்தப்படுவாங்க. கடவுள் அவங்களுக்கு அறிவு கொடுப்பார். அப்போ நம்ம பேச்சு அவங்களுக்குப் புரியும்."
கிழவி சற்றுநேரம் யோசித்தாள். யோசித்துப் பார்த்ததில் மகிழ்ச்சி ஏற்பட்டது அவளுக்கு. அவள் சிரித்துவிட்டுப் பல தடவைகள் தலையை அசைத்துக்கொண்டே சொன்னாள், "ஆமா, நீ சொல்றது சரிதான்."
"சரிதானே?" என்று கேட்டு அவள் பக்கம் திரும்பிச் சிரித்தான் கிழவன்.
"ஆமா. நீ செத்துப்போ. செத்துப் போய் அவங்களுக்குப் புத்தி சொல்லு."
வெளியிலிருந்த ரத்தன்லால் கூப்பிட்டான், "தலைவரே!"
"வாப்பா, வா!" கிழவன் மலர்ந்த முகத்துடன் சொன்னான். ரத்தன்லால் சிரித்த முகத்துடன் உள்ளே வந்து, "தலைவரே, எல்லாரும் வந்து நின்னுக்கிட்டிருக்காங்க. நாங்க என்ன செய்யணும் சொல்லு" என்று சொன்னான், தீச்சுடர் போல் பிரகாசித்தான் அவன்.
கிழவன் வெளியே வந்து கைகூப்பி, "பஞ்சாயத்தாருக்கு வணக்கம்!" என்றான்.
இதற்குள் ஒரு விபத்து நேர்ந்துவிட்டது. சாஹுக்களின் ஆட்கள் வந்து அவர்களைச் சூழ்ந்து கொண்டார்கள். சாஹுக்களின் தலைமை நாயப் சாரு சீல், துணிந்த கட்டை. அவன் யாருக்கும் பயப்பட மாட்டான். பைத்தியக்காரக் கிழவனைப் பிடித்து அடைத்து வைக்கும்படி அவன் உள்ளூர் நாயபுக்கு உத்தரவிட்டான்-கிழவனை மட்டுமல்ல, அவனுடைய சீடர்கள் ரத்தன்லால் உள்பட எல்லாரையும்.
கிழவன் புன்சிரிப்புடன் ஜமீன் ஆட்களிடம் "சரி, வாங்க என்றான்; ரத்தன்லாலிடமும் மற்ற சீடர்களிடமும் சொன்னான், "வாங்க குழந்தைகளா!"
கிழவி சிரித்தவாறே முன்வந்து "நான்?" என்று கேட்டாள்.
"ஆமா நீயுந்தான்!" என்று சாஹு ஆட்கள் சொன்னார்கள்.
"கொஞ்சம் இருப்பா! கிழவனோட கோவணம், என்துணி, தண்ணி குடிக்கற லோட்டா எல்லாம் எடுத்துக்கிட்டு வந்துடறேன். அந்த லோட்டாவிலே தண்ணி குடிக்காட்டி என் தாகம் தீராது" என்று கிழவி சொன்னாள்.
கிழவன் புன்சிரிப்புடன் தலையசைத்தான்.
என்னதான் இருந்தாலும் பெண்பிள்ளைதானே! லோட்டாவிடம் உள்ள பாசத்தை விடமுடியவில்லை அவளால்.
***
சாஹுக்கள் கிழவனை அடைத்துவைத்தாலும் அவனை நன்றாகத்தான் கவனித்துக் கொண்டார்கள். அந்த விஷயத்தில் அவர்கள் ஒரு குறையும் வைக்கவில்லை. அடைத்து வைக்கப்பட்ட நிலையிலும் கிழவனின் மலர்ச்சி குறையவில்லை. அவன் கடவுளை அழைத்தான், நிறையச் சிந்தித்தான். தனக்குள்ளேயே கடவுளிடம் பேசினான், "கடவுளே என்ன செய்யணும்? நான் சாகவா? நான் செத்தா அவங்க வருத்தப்படுவாங்களா? நீ அவங்களுக்கு அறிவைக் கொடுப்பியா?"
கிழவி அடைபட்டிருந்த வீட்டிலேயே வளைய வந்தாள். அவள் கிழவனுக்காக சமையல் செய்தாள், அவனுடைய படுக்கையை- அதாவது கம்பளியை- உதறிவிட்டு விரித்தாள், லோட்டாவை பளபளவென்று தேய்த்து வைத்தாள். அவளுக்கு இந்த வாழ்க்கை பிடித்துப் போய்விட்டது. ஏனென்றால், இப்போதுதான் அவளுக்குக் கிழவனுடன் நெருங்கி வாழ வாய்ப்புக் கிடைத்திருந்தது. கிழவன் வெளியிலிருந்தபோது அவனுக்கு ஆயிரம் வேலை; அவளிடம் நாலு வார்த்தை குடும்பத்தைப் பற்றிப் பேச அவனுக்கு நேரமில்லை. அவன் பேசிக்கொண்டிருந்ததெல்லாம் பரத்பூரைப் பற்றிய பேச்சுத்தான், மக்களைப் பற்றிய பேச்சுத்தான். இன்றைக்கு இங்கே, நாளைக்கு இன்னோரிடம்; இவன் வருவான், அவன் வருவான், ஜனங்கள் எப்போதும் அவனைச் சூழ்ந்திருப்பார்கள். இங்கே வந்தபிறகு கிழவிக்கு அவனுடன் இருக்க முடிகிறது. பேச முடிகிறது.
ஆனால் சில நாட்களில் கிழவியின் பிரமை தெளிந்துவிட்டது. கிழவன் மாறவில்லை. இப்போது அவனைச் சுற்றிக் கூட்டம் இல்லை, இருந்தாலும் அவனுடைய மூளையில் சிந்தனைகளின் கூட்டம் குறையவில்லை. "கிழவன் மனசு கல்" என்று ஜனங்கள் சொல்வார்கள். அவர்களுடைய கருத்து சரிதான் என்று தோன்றியது கிழவிக்கு.
அவள் "கிழவா!" என்று கூப்பிட்டாள்.
கிழவன் அவள் பக்கம் திரும்பி "உம்" என்றான். ஆனால் அவனுடைய பார்வை அவள் மேல் இல்லை என்று அவளுக்குத் தோன்றியது. எங்கோ தொலைவில், அதோ அந்த மலையுச்சியில் இருந்த கோவிலின் கும்பத்தில் அவனுடைய பார்வை நிலைத்திருப்பது போல் தோன்றியது.
"என்ன யோசிச்சுக்கிட்டிருக்கே?"
"யோசனையா?" கிழவன் சிரித்தான்.
"சிரிக்காதே கிழவா! உன் சிரிப்பு எனக்குப் பிடிக்கலே."
"உம்..." அந்த 'உம்'முடன் வாயை மூடிக்கொண்டான் கிழவன்.
கிழவி பயத்தாலும் வியப்பாலும் மௌனியாகிவிட்டாள். அவள் தனக்குள் சொல்லிக்கொண்டாள், "கடவுளே, கிழவனைக் காப்பாத்து! இல்லேன்னா யாரு ஜனங்களுக்காக கவலைப்படுவாங்க?"
***
திடீரென்று ஒருநாள் கிழவன், "நான் சாகப் போகிறேன்" என்று சொன்னான்.
கிழவிக்கு நெஞ்சு வெடித்துவிடும் போலிருந்தது. ஆனால் அவளுடைய பயத்தை வெளிப்படுத்த வழியில்லை. அவள் பயத்தை வெளிப்படுத்தினால் கிழவன் சிரிப்பான், "சீ!" என்பான். அந்த அவமானத்திலே கிழவி செத்துப் போய்விடுவாள்.
"நீ ஏன் சாகணும்?" என்று மட்டும் கேட்டாள் அவள்.
"நான் சாகப்போகிறேன் .. நான் அடிதடி செய்யச் சொல்லி வெளியில் இருக்கிற ஜனங்களைத் தூண்டிவிட்டதா சாஹு பாபுமார் சொல்றாங்க. நம்ம ஆளுங்க பாபுக்களோட ஆளுங்களை அடிச்சுட்டாங்க, பாபுக்களுக்கு ரொம்ப நஷ்டம் பண்ணிட்டாங்க. இதெல்லாம் நான் சொல்லித்தான் நடந்ததுன்னு பாபுமார் சொல்றாங்க.."
"அதுக்குப் பதிலா அவங்களுந்தான் நம்ம ஆளுங்களை நல்லா அடிச்சிட்டாங்களே!" ரத்தன் சொன்னான்.
புன்சிரிப்புடன் தலையை அசைத்தான் கிழவன். "அது மட்டும் இல்லே ரத்தன், நம்ம ஆளுங்க அடிச்சது பாவம். நான் செத்துக் கடவுள்கிட்டே போய் "கடவுளே, மன்னிச்சுக்கோ! எங்க ஆளுங்களோட பாவத்தை மட்டுமில்லை, பாபுமாரோட ஆளுங்களோட பாவத்தையும் மன்னிச்சுக்கோ-! அப்படீன்னு சொல்லப் போறேன் .. அப்பறம்.."
"அப்புறம் என்ன?"
கிழவன் சிரித்தான்.
"அப்பறம் பாபுமாருக்குப் புரியும் நான் பாவியில்லேன்னு.."
***
கிழவன் சாகும் விரதம் தொடங்கிவிட்டான். அவன் சாப்பிடாமல் கொள்ளாமல் மௌனமாகப் படுத்துக் கிடந்தான்.
கிழவியின் பேச்செல்லாம் தீர்ந்து போய்விட்டாற் போலிருந்தது. அவள் பேசாமல் உட்கார்ந்து பார்த்துக் கொண் டிருந்தாள். ஐயோ, அவளோட கிழவன் காணாமல் போயிட்டான். அவள் பக்கம் திரும்பிப் பார்க்கக்கூட அவனுக்கு நேரமில்லை. அழுவது வெட்கக்கேடு; ஆகையால் அழக்கூட முடியவில்லை அவளால்.
அவர்கள் அடைபட்டிருந்த வீட்டுக்கு வெளியிலிருந்த மக்களின் கூப்பாடு கேட்டது, "கடவுளே, எங்க தலைவனைக் காப்பாத்து!
ரத்தன்லாலும் அவனுடைய தோழர்களும் சோர்ந்து போய் விட்டனர். கிழவியால் சும்மா இருக்க முடியவில்லை. கிழவனிடம் ஏதாவது சொல்லவும் துணிவில்லை அவளுக்கு. அவள் மனதுக்குள் கடவுளை வேண்டிக் கொண்டாள், "இவ்வளவு ஜனங்களுக்காக, எனக்காக, கிழவனைக் காப்பாத்து, கடவுளே!"
கிழவனின் மனதைவிடக் கடவுளின் மனது மிருதுவானது என்று கிழவிக்குத் தோன்றியது.
கடவுள் சிரிக்கிறார் என்று நினைத்தாள் கிழவி.
***
கிழவன் சாகவில்லை. சாவுக்கான அறிகுறிகள் எல்லாம் தோன்றின. சாஹுக்கள் மருத்துவர்களை அனுப்பினார்கள். அவர்கள் "எங்களால் முடியாது! மனுசன் சாப்பிடலேன்னா பொழைக்க மாட்டான், பொழைக்க முடியாது" என்று சொன்னார்கள். ஆனால் ஆச்சரியம், கிழவன் பிழைத்து விட்டான்! அதைவிட ஆச்சரியம், கிழவனின் கள்ளங்கபடமற்ற, குழந்தைத் தனமான புன்சிரிப்பு அவனுடைய முகத்திலிருந்து ஒருகணங்கூட மறையவில்லை. கொஞ்சங் கொஞ்சமாகக் கிழவனின் மரண அறிகுறிகள் மறைந்துவிட்டன. குழம்பியிருந்த கண்கள் தெளி வடைந்த அவற்றில் வெண்தாமரையிதழ்களின் ஒளி மலர்ந்தது; தாயின் மடியில் இருக்கும் குழந்தைநயின் முகம்போல் கிழவனின் முகம் பிரகாசமாயிற்று. கிழவன் சொன்னான், "நான் பொழைச் சிட்டேன். நான் பாவம் செய்யலேன்னு கடவுள் என் மனசுகிட்டே சொல்லிட்டார்"
கிழவியின் முகத்தில் புன்சிரிப்பு,
"நான் இப்போ சாகப் போறேன்!" என்றாள் அவள்.
"ஏன்?"
"எனக்கு ஒடம்பு ஒரு மாதிரியா இருக்கு, தவிர.."
"தவிர என்ன?"
கிழவி பதில் சொல்லவில்லை. சும்மா சிரித்து மழுப்பினாள்.
அவள் உண்மையிலேயே இறந்து போனாள். சாதாரணக் காய்ச்சல்தான். அந்தக் காய்ச்சலில் இறந்து போனாள் அவள். சாகும் தருணத்தில் அவள் கண்ணிமைக்காமல் கிழவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
மக்கள் சொல்வது சரிதான், கிழவனின் மனம் கல்.
இல்லை, ஜனங்கள் சொல்வது சரியில்லை, சரியில்லை -- காரணம், கிழவனின் கண்களில் கண்ணீர்!
ஆம், கிழவனின் கண்களில் கண்ணீர்!.
கிழவி "கிழவா!" என்று கூப்பிட்டாள்.
கண்களில் நீர் பளபளத்த நிலையிலும் கிழவனின் முகத்தில் புன்சிரிப்பு. "கிழவி, என்ன சொல்றே?" என்று அவன் கேட்டான்.
"சாவு ரொம்ப அழகாயிருக்கு, கிழவா! சாவு ரொம்ப அழகு!"
கிழவன் சிரிக்கத் தொடங்கினான். அவனது கண்ணீர் டப் டப்பென்று கிழவியின் நெற்றியின் மேல் விழுந்தது. அவன் அதைத் துடைக்கப் போனான்.
"ஊஹூம், அது இருக்கட்டும்" என்றாள் கிழவி.
(சனி பாரேர் சிட்டி. 1944)
2. ஓட்டர் சாவித்திரிபாலா
பனபூல்
அவனுக்கு ஒரு விசித்திரப் பெயர் -- ரிபுநாஷ். அவனுடைய அண்ணன் பெயர் தமோநாஷ். ஆனால் காலத்தின் கோலம், அவர்களில் எவராலும் எதையும் நாசம் செய்ய முடியவில்லை; அவர்களேதான் நாசமானார்கள். தமோஷ்நாஷ் என்றால் இருளை அழித்தவன் என்று பொருள். ஆனால் ஒரு சிறுதுளி அளவு ஒளி கூட அவனது வாழ்வில் நுழையவில்லை. அவன் "அ, ஆ" கூடக் கற்காமல் முழு முட்டாளாயிருந்தான். அவர்கள் பிராமணப் பையன்கள் என்பதால் அவர்களுக்கு சமஸ்கிருதப் பெயர்கள் இடப்பட்டிருந்தன. அவர்களுடைய தகப்பனார் மோகநாஷ் தர்க்கதீர்த்தா ஒர திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர். எல்லாரம் அவரைச் சுருக்கமாக "மோகன் பண்டிதர்" என்று அழைத்தார்கள். இந்தக் காலத்தில் சமூகத்தில் சமஸ்கிருதப் பண்டிதர்களுக்கு முன்போல் மதிப்பு இல்லை. அவர் பரம ஏழை. புரோகிதம் செய்து வாழ்க்கை நடத்தி வந்தார். அவர் இறந்தபோது தமோ நாஷுக்கு ஆறு வயது, ரிபுநாஷுக்கு வயது மூன்று.
குழந்தைகளின் தாய் சமையல் வேலை செய்து வயிறு வளர்த்தாள். பதினாறு வயதிலேயே தமோயாஷ் பழுத்த விட்டான். ஒர போக்கிரிக் கூட்டத்துக்குத் தலைவனாகி விட்டான். அவன் பெயர் "தம்னா" ஆகிவிட்டது. அவன் ரவுடித்தனம் செய்து ஏதோ கொஞ்சம் சம்பாதித்தான். சம்பாதித்ததில் ஒரு பகுதியைத் தாயிடம் கொடுத்துவிட்டு மிச்சத்தைக் கொண்டு குஷாலாகக் காலங்கழித்தான். ஆனால் இது நீண்டகாலம் தொடரவில்லை. ஓரிடத்தில் ரவுடித்தனம் செய்யப்போய் கத்திக் குத்துப்பட்டு இறந்துபோனான். ஒரு நாள் அவனது சவம் சிறிது நேரம் நடை பாதையில் கிடந்தது. பிறகு போலீசார் சவப்பரிசோதனைக்காக அதைச் சவக்கிடங்குக்கு எடுத்துச் சென்றார்கள். மருத்துவர்கள் அந்த உடலைத் தாறுமாறாகக் கிழித்தார்கள். பிறகு சவம் தோட்டிகளின் கைக்கு வந்தது. தமோஷின் அம்மா சவத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்யவில்லை. சவத்தை எடுத்து வந்து, ஆட்களைக் கூட்டிப்போய் அதை எரிக்க அவளிடம் பணமில்லை. அவளுக்கு ஏற்கெனவே நான்கு பக்கங்களிலும் கடன், இன்னும் கடன்சுமையை அதிகமாக்கிக்கொள்ள இஷ்டமில்லை அவளுக்கு. தோட்டிகள் சவத்தின் எலும்புகளை எடுத்துக் கழுவி, "உடற்கூறு" கற்கும் மாணவர்களுக்கு அவற்றை விற்றுக் கொஞ்சம் காசு சம்பாதித்தார்கள். இதோடு தமோநாஷின் வரலாறு முடிந்து விட்டது.
தமோநாஷின் தாய் சாவித்திரி அதிகம் அழக்கூட இல்லை. அவளுடைய முகத்தில், கண்களில் நெருப்பு உள்ளூரக் கனன்றது. அது வார்த்தைகளில் வெளிப்படாத, பார்வைக்குப் புலப்படாத, ஆனால் தீவிரமான ஜுவாலை. சாவித்திரி சமையல் வேலை செய்த வீட்டுக்காரர், தமோநாஷின் மரணத்துக்குப் பிறகு அவளுடைய சம்பளத்தை இரண்டு ரூபாய் உயர்த்துவதாகச் சொன்னார். சாவித்திரி அதற்கு இணங்கவில்லை. "தேவையில்லை" என்று சுருக்கமாக மறுத்து விட்டாள்.
ரிபுநாஷ் தெருக்களில் சுற்றித் திரிந்தான். வீட்டில் இட மில்லாதவர்கள், தெருவில் சுற்றியவாறே காலங்கழிப்பவர்கள், ஏதாவதொரு கிளர்ச்சி, சண்டை, மோட்டார் விபத்து ஏற்பட்டால் அதைப் பார்க்கக் கூட்டங் கூடுபவர்கள், இவர்களே ரிபுநாஷின் தோழர்கள். அவர்கள் அவனை "ரிபுன்" என்ற அழைத்தார்கள்.
ஆனால் ரிபுன் தம்னாவைப் போல் பலசாலி அல்ல, நோஞ்சான். அவன் மார்க்கெட் வட்டாரத்தில் சுற்றிக் கொண் டிருப்பான்; மூட்டை தூக்கி ஏதோ சம்பாதித்தான்; பீடி பிடிக்கக் கற்றுக்கொண்டான். தினம் ஒர கட்டு பீடி வாங்கக் காசை எடுத்துக்கொண்டு மிச்சத்தைத் தாயிடம் கொடுப்பான்.
அவனுக்குப் பதினாறு பதினேழு வயதாயிருந்தபோது ஒரு விபத்து நிகழ்ந்தது. ஒருநாள் அவன் ஒரு கூடை கோசு தூக்கிக் கொண்டு வந்து ஒரு மோட்டாரின் பின்புறப் பெட்டியில் அவற்றை அடுக்கி வைக்கும்போது அவனக்குத் தொண்டை கமறியது. அவன் இருமத் தொடங்கினான். மோட்டார்க்காரர் அவனுக்குரிய முக்கால் ரூபாய்க் கூலியைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். ரின் நடைபாதையில் உட்கார்ந்துகொண்டு இருமத் தொடங்கினான். திடீரென்று இருமலுடன் ஒரு கட்டி இரத்தம் வெளிவந்தது. ரிபன் அதைச் சிறிது நெரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டுப் பிறகு வீடு திரும்பினான். சாவித்திரி பக்கத்து மருத்துவரிடம் ரிபுனைக் கூட்டிச்சென்றாள். அவர் அவனைப் பரிசோதித்து விட்டு, "இவனுக்குக் காசநோய் வந்திருக்கு. எனக்கு நீ பீஸ் ஒண்ணும் தரவேண்டாம், ஆனா மருந்து வாங்கிக் குடுக்கணும். ஊசி மருந்து போடணும். முட்டை, வெண்ணெய், மீன், மாமிசம், பழம் இந்த மாதிரி புஷ்டியான சாப்பாடு குடுக்கணும் .." என்றார்.
சாவித்திரி பேசாமல் மருத்துவரின் முகத்தைப் பார்த்துக் கொண்டு நின்றாள். கண்ணுக்குப் புலப்படாமல் அவள் முகத்தில் கனன்று கொண்டிருந்த நெருப்பை அவர் உணர்ந்த கொண்டார் போலும். "ஒன்னாலே முடியலேன்னா பையனை ஆஸ்பத்திரி யிலே சேர்த்திடு. நான் ஒனக்கு ஒரு சீட்டு எழுதித் தரேன். நீ அதை எடுத்துக்கிட்டு ஆஸ்பத்திரிக்குப் போ" என்று அவர் சொன்னார்.
சாவித்திரி சீட்டை எடுத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக் கூட்டத்தில் ஒரு வாரம் முயன்று பார்த்தாள். ஒரு பலனுமில்லை. ஒரு நோயாளி அவளிடம், "இங்கேயும் பைசா இல்லாமே ஒண்ணும் நடக்காத. லஞ்சம் குடுக்கணும்" என்று சொன்னான்.
ரிபுன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படவில்லை, சாவித்திரியிடம் காசு ஏது? சிகிச்சையின்றியே காலங் கடத்தினான் ரிபுன். மறுபடியும் மூட்டை தூக்கவும் தொடங்கினான். ஒருநாள் அவ னுடைய கூட்டாளியொருவன் அவனிடம் சொன்னான், "எனக்கு ஒரு நல்ல யோசனை தோணுது. நீ எப்படியாவது அலிபூர் ஜெயில்ல ஆறுமாசம் இருந்தால் உன் வியாதி குணமாயிடும் .."
"ஜெயில்லே இருந்தா வியாதி குணமாயிடுமா? என்ன சொல்றே நீ?" கூட்டாளியின் பேச்சை நம்பவே முடியவில்லை ரிபுனால்.
கூட்டாளி சொன்னான்,"ஹரு ஜெயிலுக்குப்போய் வியாதி குணமாகித் திரும்பி வந்திருக்கான். அவனுக்கும் காசநோய்தான் வந்திருந்தது. அங்கே நல்ல ஆஸ்பத்திரி இருக்கு. எலவசமா சிகிச்சை செய்யறாங்க. நீ ஜெயிலுக்கப் போயிடு!"
சில நாட்களுக்குப் பிறகு ரிபுன் ஒரு டிராமில் பிக்பாக்கெட் செய்யப்போய்க் கையுங்களவுமாகப் பிடிபட்டான். அங்கிருந்த வர்கள் அவனை நன்றாக அடித்துவிட்டுப் போலீசில் ஒப்படைத் தார்கள்.
நீதிமன்றத்தில் நீதிபதி அவனிடம் சொன்னார், "நீ உன் கட்சியை எடுத்துச் சொல்ல ஒரு வக்கீல் வச்சுக்கலாம். வக்கீல் வைக்க உனக்கு வசதியில்லேன்னா சர்க்காரே உனக்கு ஒரு வக்கீல்.."
ரிபுன் கைகூப்பிக்கொண்டு சொன்னான், "வேண்டாம் சாமி, எனக்கு வக்கீல் வேண்டாம். என்மேல் சுமத்தப்பட்ட குத்தம் உண்மைதான். நான் திருடறதுக்காகத்தான் அந்தப் பிரயாணியோட சட்டைப்பையில் கையைவிட்டேன்."
"ஐம்பது ரூபாய் அபராதம், அதைச் செலுத்தாவிட்டால் ஒரு மாதம் ஜெயில்" என்று தீர்ப்பளித்தார் நீதிபதி. ரிபுன் கை கூப்பியவாறு வேண்டிக்கொண்டான், "ஐயா, என்னாலே அபராதம் செலுத்த முடியாது, ஆனா எனக்கு ஒரு மாச ஜெயில் தண்டனைக்குப் பதிலா ஆறு மாச தண்டனை கொடுங்க!
நீதிபதிக்கு ஆச்சரியமாகிவிட்டது. "ஏன் ஆறுமாச தண்டனை கேக்கிறே?" என்று அவர் வினவினார்.
"எனக்குக் காச நோய் வந்திருக்கு. அலிபூர் ஜெயில்லே காசத்துக்கு நல்ல சிகிச்சை செய்யறாங்களாம். ஆறுமாசத்திலே குணமாயிடுமாம். அதனாலதான்.."
ஆனால் நீதிபதி தன் தீர்ப்பை மாற்றவில்லை. ஜெயில் ஆஸ்பத்திரியில் ரிபுனின் நோய் குணமாகவில்லை. அவன் ஒரு மாதத்துக்குப் பிறகு இருமிக்கொண்டே சிறையிலிருந்து வெளியே வந்தான். அதற்குப்பின் ஒரு மாதந்தான் உயிருடனிருந்தான். அம்மாவின் காலடியிலேயே இரத்த வாந்தியெடுத்து உயிரை விட்டான், பாவம்!
திகைத்துப்போய் உட்கார்ந்திருந்தாள் சாவித்திரி. அவ ளுடைய கண்களிலிருந்து தீப்பொறிகள் பறந்தன.
ஆனால் ஒரு சொட்டுக் கண்ணீர்கூட விடவில்லை அவள்.
இதற்கு இரண்டு மாதங்களுக்குப்பின் தேர்தல் வந்தது. சாவித்திரிபாலாவும் ஒரு வாக்காளர். மதிப்புக்குரிய ஒரு பெரிய மனிதர் அவளிடம் ஓட்டுக் கேட்க வந்தார். சாவித்திரி அவரைச் சுட்டெரிப்பதுபோல் உற்றுப் பார்த்துக் கேட்டாள், "ஒங்களுக்கு ஓட்டுப் போடணுமா? நீங்க எனக்கு என்ன ஒபகாரம் செஞ்சிருக் கீங்க? என் புருசன் ஒரு பண்டிதர். நீங்க பதவியிலே இருந்தபோது அவர் ஒரு சாதாரணப் பிச்சைக்காரன் மாதிரி செத்துப் போனார். என்னால என் பெரிய புள்ளெயப் படிக்க வைக்க முடியலே. அவன் ரவுடியாத் திரிஞ்சு கடைசியில் கத்திக் குத்துப்பட்டு செத்துப் போனான். சின்னப் பையன் காசநோயிலே செத்தான். அவனுக்கு சிகிச்சை செய்ய முடியலே. எங்கே போனாலும் லஞ்சம் கேக்கறாங்க.. ஒங்களுக்கு எதுக்கு ஓட்டுப் போடணும்? நான் யாருக்கும் ஓட்டுப் போடமாட்டேன்..!"
வேட்பாளர் பேசத் தொடங்கினார், "இதோ பாருங்க ஜனநாயகத்திலே.."
ஆனால் சாவித்திரி அவரைப் பேச்சை முடிக்க விடவில்லை அவள் உரத்த குரலில், "வெளியே போங்க!" என்று கத்தினாள்.
விரைவாக வீட்டைவிட்டு வெளியேறினார் வேட்பாளர்.
படாரென்று கதவைச் சாத்தினாள் சாவித்திரி..
(தேஷ், 1971)
3. சாரங்க்
அசிந்த்ய குமார் சென் குப்தா
அம்மா நசீமை அடித்துவிட்டாள்.
அம்மா அடித்தால் அடிக்கட்டும், அவனும் ஏன் அடிக் கணும்? அடிக்க அவன் யார்?
நான் ஆடு மாடு வளக்கறேன், வளக்கலே, பயிர் செய்யறேன், செய்யலே, அதிலே அவனுக்கென்ன? நெலம் தரிசாக் கிடந்தா அவனுக்கென்ன? வீட்டுக் கூரையை மாத்தணுமா வேணாமாங் கறது எங்க கவலை. கூரையொழுகினா நாங்க - அம்மாவும் பிள்ளையும் நனைஞ்சிட்டுப் போறோம். யாரும் அவனை வந்த கொடை பிடிக்கக் கூப்பிடப்போறதில்லே.
கோல்பானு - அதாவது அம்மா - "இனிமே கஹ்ராலி எல்லாத்தையும் கவனிச்சுக்குவாரு" என்று சொன்னாள்.
"கஹ்ராலி யாரு?" என்று வெடித்தான் நசீம்.
"அவரு பசையான ஆளு. அஞ்சு ஏக்கர் நெலம் இருக்கு அவருக்கு. கணக்கு வழக்கு, கோர்ட் கேஸ் நெறைய இருக்கு"
"அதனால நமக்கு என்ன வந்தது?"
"அவரை அண்டியிருந்தா நம்ம நெலத்தை நல்லபடி கவனிச் சுக்கலாம், உண்ண உடுக்க கஷ்டப்பட வேண்டாம்.. வீட்டுக்கு ஓலைக் கூரைக்குப் பதிலாத் தகரக்கூரை போட்டுக்கலாம்."
"நமக்கு அதெல்லாம் வேணாம், இந்த ஓட்டைக் குடிசையே நமக்குத் தேவலை. நாம கீரை, கொடிகளைச் சாப்பிட்டுப் பொழைச்சுக்கலாம். நீ அவனை வெரட்டி விட்டுடு."
கஹ்ராலி நசீமை நன்றாக அடித்துவிட்டான். கோல்பானுவும் அவனுடன் சேர்ந்துகொண்டாள்.
அப்பன் மட்டும் உயிரோடிருந்தால் நசீமை இப்படி யாராவது அடிக்க முடியுமா? அவனுடைய அப்பன் வயலில் போய் வேலை செய்யும்படி அவனை ஒருபோதும் கஸ்டாயப்படுத்த மாட்டான். நசீம் வலையை எடுத்துக்கொண்டு குளங்குட்டைகளில் மீன்பிடிக்கப் போய்விடுவான். "கடைத்தெருவிலே ஒனக்கு ஒரு துணிக்கடை வச்சுத் தந்துடறேன்" என்ற சொல்வான் தகப்பன்.
"அதுக்குப் பதிலா எனக்கு ஒரு படகு வாங்கிக் குடுத்துடு. நெலத்தைவிடத் தண்ணிதான் எனக்கு ரொம்பப் பிடிக்கும்." என்பான் நசீம்.
ஆனால் அப்பனுக்குப் படகு வாங்க வசதியில்லை. படகை வாடகைக்கு எடுத்து ஓட்டிப் பணம் சம்பாதிக்கும் அளவுக்குப் பெரியவனாகவில்லை நசீம்.
நசீமின் வலை அறுந்துபோய் வெகுகாலமாகிவிட்டது. இருந் தாலும் அதன் பாசம் அவனை விடவில்லை. அவன் ஆற்றங் கரையில் மௌனமாக மணிக்கணக்கில் உட்கார்ந்திருப்பான். கண்ணீர் அவனுடைய கன்னங்களில் வழிந்தோடும்.
அம்மா கஹ்ராலியை நிக்காஹ் செய்துகொள்ளப் போவ தாகக் கேள்விப்பட்டான் அவன். அவர்களிருவரும் ஒரே அறையில் இருப்பார்கள். நசீமுக்கு இடம் எங்கே? வாசல் திண்ணை அல்லது புறக்கடைதான். அவனுடைய அம்மாவிடம் யாராவது "இவன் யாரு?" என்று கேட்டால், அவள் "என் முதல் புருஷனோட புள்ள" என்று சொல்வாள். யாராவது அவனை "உனக்கு யாரு சோறு போடறாங்க?" என்று கேட்டால் "கஹ்ராலி" என்று சொல்லவேண்டும் அவன். நசீமுக்கு நெஞ்சு பற்றியெரிந்தது.
அங்கிருந்து சுமார் ஒரு மைல் தூரத்தில் சணல் வயல்களுக்கு அருகில் நீராவிப் படகு வந்து நிற்கும். படகுத்துறை எதுவும் கட்டப்பட்டிருக்கவில்லை. கரையிலுள்ள வாதா மரத்தின் அடித் தண்டையொட்டி, ஆனால் அதனுடன் மோதிக்கொள்ளாமல், படகு நிற்கும். படகிலிருந்து கரையைச் சேர்க்கப் படிக்கட்டை இறக்குவார்கள். படிக்கட்டின் ஒரு மூலையிலிருந்து மறு மூலைக்கு ஒரு மூங்கில் தடியைப் பிடித்துக்கொண்டு இரண்டு படகு ஊழியர்கள். பிரயாணிகள் படிகள் வழியே ஏறி இறங்குவார்கள். டிக்கெட் குமாஸ்தா வாதா மரத்தடியில் ஒரு தகரப் பெட்டியில் டிக்கெட்டுகளை வைத்துக்கொண்டு விற்பான்; படகிலிரந்த இறங்குபவர்களிடமிருந்து டிக்கெட்டுகளை வாங்கிக் கொள்வான், டிக்கெட்டில்லாமல் பிரயாணம் செய்தவர்களோடு பேச்சு வார்த்தை நடத்திக் கொள்வான்; பிறகு படகுக்குள் வந்த கணக் கனிடம் டிக்கெட் வசூல் கணக்குக் கொடுப்பான். அவன் படகிலிருந்து இறங்கிப்போகும் வரையில் படிக்கட்டு கரையில் இறக்கப்பட்டிருக்கும். ஆனால் அவனுக்கு மூங்கில் கழியைப் பிடித்துக்கொள்ளத் தேவையில்லை. தாழ்வான நிலம் எப்போதும் நீரில் மூழ்கியிருக்கும்; அடிமரம் மட்டும் உறுதியாக வேரூன்றி யிருக்கும். படகிலிருந்து இறங்கும் பிரயாணிகள் தண்ணீரில் நடந்து கிராமத்துப் பாதைக்கு வந்து சேர்வார்கள். அவர்களிடம் மூட்டை முடிச்சுகள் இருந்தால் அவற்றை ஒரு தோணியில் வைத்துக் கையால் தள்ளிக்கொண்டே தண்ணீரைக் கடப்பார்கள். குழந்தை குட்டிகளைத் தோளில் வைத்துக் கொள்வார்கள். பெண்டாட்டி, உருவத்தில் சிறியவளாயிருந்தால் அவளை அப்படியே அலாக்காகத் தூக்கிக்கொண்டு தண்ணீரைக் கடப் பார்கள்...
"படியைத் தூக்கு!" மேல்தட்டிலிருந்து உத்தரவிடுகிறான் சாரங்க் -- படகின் தலைவன்.
படகுத்துறைக் குமாஸ்தா இன்னும் இறங்கவில்லையா?
இறங்கிவிட்டான், கோணல் மாணலாகக் கால்வைத்து இறங்கிவிட்டான். படிக்கட்டு படகின் மேலேறியது. தடிமனான சங்கிலியில் பிணைக்கப்பட்டிருந்த நங்கூரம் மடமடவென்று மேலே ஏறத் தொடங்கியது.
ஒரு ஆள் இந்த அவசரத்தில் இறங்க முடியவில்லை போலிருக்கிறது. யார் அவன்? பத்து -- பன்னிரெண்டு வயதுப் பையன். பிரயாணியா? யார் கண்டார்கள்? படகைப் பார்க்க அதில் ஏறியிருக்கிறான். அப்படியானால் அடுத்த துறையில் இறங்கிக்கட்டும். அங்கேயிருந்து சின்னத் தோணியிலே வீடு திரும்பிக்கலாம். அதற்குள் இருட்டிப் போயிடும். இருட்டிலே எப்படி வீட்டுக்குப் போய்ச் சேருவான்? பாவம், அவனோட அப்பா அம்மா எவ்வளவு கவலைப்படுவாங்க!
சிறிய படகு. மேல் தட்டில் மூன்றாம் வகுப்பு மட்டுந்தான். முன்பக்கம் புறாக்கூண்டு மாதிரி முதல் வகுப்பு அறைகள் இரண்டு. அவற்றுக்கு முன்னால் திறந்தவெளி மூலையில் சாரங்கின் சுக்கான். நசீம் நேரே அங்கே போய்ச் சேர்ந்தான்.
முதலில் யாரும் அவனைப் பொருட்படுத்தவில்லை. படகின் இயந்திரங்கள் இயங்குவதை வேடிக்கை பார்க்க யாரோ வந்திருக் கிறான் என்று நினைத்தார்கள். ஆனால் பையன் அங்கிருந்து நகரவில்லை.
காலில் செருப்பும் தலையில் படகுபோன்ற தொப்பியும் அணிந்துகொண்டு ஹுக்கா பிடித்தவாறு நின்று கொண்டிருந்த சாரங்க் திரும்பி அவனைக் கேட்டான். "என்ன வேணும்?"
"ஒங்களுக்கு ஒரு வேலைக்காரன் தேவைப்பட்டா என்னை வச்சுக்கலாம்."
"நீ எந்த ஊரு?" சற்றுநேரம் அவனைப் பார்த்துவிட்டுக் கேட்டான் சாரங்க்.
"இந்தப் பக்கந்தான் - கனக்தியா."
"அப்பா அம்மா இருக்காங்களா?"
"ஒருத்தரும் இல்லே."
சாரங்க் இன்னும் சிறிது நேரம் அவனைப் பார்த்துக் கொண்டே நின்றான். பிறகு "ஒன்னால வேலை செய்ய முடியுமா?" என்று கேட்டான்.
"என்னென்ன வேலைங்க?"
"சமையல் செஞ்சு பரிமாறுவது, படகைத் தொடச்சுப் பெருக்கிறது, துணி துவைக்கிறது, பாத்திரம் தேய்க்கிறது இதெல்லாந் தான். முடியுமா? அப்படீன்னா இருந்துக்க. எலவசமா வேலைக்கு ஆள் கிடைச்சா நல்லதுதானே!" என்று சொல்லிவிட்டு சாரங்க் சுக்கானை இயக்கிக் கொண்டிருந்த இயாத் அலியைத் திரும்பிப் பார்த்தான்.
"கொறஞ்சது ஹூக்காவிலே புகையிலை போட்டுக் குடுப்பான், தேவைப்பட்டாக் கைகால் பிடிச்சுவிடுவான்.."
"சம்பளம் ஒண்ணும் கிடையாதா?" இயாத் அலி கேட்டான்.
"சம்பளம் வேறயா?" என்று சீறினான் சாரங்க். "பாசியைக் கொண்டு கறி சமைக்கணுமா? அப்படி யொண்ணும் அவசியமில்லே எனக்கு! இருக்கறதுன்னா இருக் கட்டும், இல்லேன்னா கீழே எறக்கி விட்டுடுவேன் - ஏய் டிக்கெட் இருக்கா?"
"இல்லீங்க. எனக்குச் சம்பளம் வேணாம்!"
படகில் இடம் கிடைத்ததே பெரிய காரியம் நசீமக்கு. அப்பன் இல்லே, சித்தப்பன் இல்லே, முதலாளி இல்லே, யாரோ ஒரு வேத்து மனிதன்கிட்டே அடிவாங்கிக்கிடடு வாயை மூடிக் கிட்டு இருக்கறதைவிட எவ்வளவோ தேவலை இது. முற்றிலும் புதிய அனுபவம் கிடைக்கிறதே, அதுவே ஒரு சுகந்தான்.
நன்றாக வேலை செய்தால் ஒருநாள் படகிலேயே நிரந்தரமாக வேலை கிடைத்துவிடும். முதலில் படிக்கட்டை ஏற்றி இறக்கும் வேலை, பிறகு மேல் தட்டுப் பொறுப்பு, அதற்கப்பிறகு பட கோட்டும் வேலை, கடைசியில் சாரங்க்! இப்படி நடக்காதென்று யார் சொல்ல முடியும்? முதலில் சம்பளமில்லாத வேலைக்காரன், கடைசியில் படகுக்கே தலைவன்!
சாரங்க் அடர்த்தி குறைந்த தன் வெண்தாடியை உருவி விட்டுக்கொண்டான்.
ஆனால் முதல் நாளிரவே நசீமுக்கு நல்ல உதை கிடைத்தது சாரங்கிடம். அவன் கவனக்குறைவாக ஒரு கண்ணாடி ஜாடியை உடைத்துவிட்டான். பிறகு அவ்வளவுதான்! அவன் எதிர்பாராத விதமாக அவன் முகத்தில், தலையில், முதுகில் பளார் பளார் என்று அடிகள் விழுந்தவண்ணம் இருந்தன. ஹோவென்று அழுதுவிட்டான் நசீம். ஆனால் அவன் கைகால்களைக் கட்டி ஆற்றின் கறுப்புத் தண்ணீரில் அவனை எறிந்து விடுவான்.
நசீமுக்கு வருத்தத்தைவிட ஆச்சரியந்தான் அதிகம் ஏற்பட்டது. ஆனால் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இந்தப் படகு வாழ்க்கையில் இதுதான் வழக்கம். எல்லாரும் சாரங்கிடம் அடிவாங்கத்தான் வேண்டும். படிக்கட்டு இறக்கி ஏற்றுபவர்கள், மேல்தட்டைக் கழுவுபவர்கள், சமையல் பணியாளர், கயிறு இழுப்பவர்கள், விளக்குக் காட்டுபவர்கள் இவர்களுடைய வேலை யில் ஒரு சிறிய தவறு நேர்ந்தாலும் அவர்களுக்கு அடி உதைதான்.
படகின் கீழ்ப்பகுதியில் இயந்திரங்கள் இருக்கும். கரி போடுபவன், நெருப்பை வளர்ப்பவன், இயந்திரம் இயக்குபவன் இவர்களெல்லாரும் கீழேதான் இருப்பார்கள். எல்லாரையும் கண்காணிக்கும் பொறுப்பு சாரங்குக்கு. யாராவது தவற செய்து விட்டால், ஒரு இயந்திரத்துக்கு பதிலாக வேறொரு இயந்திரத்தை இயக்கிவிட்டால், ஒரு கழிக்குப் பதிலாக இன்னொரு கழியை இழுத்துவிட்டால் அவன் கதி அதோ கதிதான்! அடி உதை, மட்டமான வசவுகள், செருப்படி கூட விழும் அவனுக்கு. இவ்வளவும் போதாவிட்டால் வேலையே போய்விடும்.
காரணம், படகுக் கம்பெனிக்கு சாரங்கை மட்டுந்தான் தெரியும். மற்ற ஊழியர்களுடன் அதற்கு எவ்விதத் தொடர்பும் இல்லை. சாரங்க்தான் படகுக்கு மாஜிஸ்டிரேட் மாதிரி. எல்லாப் பொறுப்பும் அவனுடையதுதான். படகு செல்லும் வழியில் ஒரு தோணியுடன் மோதி அதை மூழ்கடித்துவிட்டால் அதற்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டியவன் சாரங்க்தான். மழை புயலில் அடி பட்டு அந்தப் படகே முழுகினாலும் பொறுப்பு சாரங்க்தான், கம்பெனி முதலாளிகளல்லர். படகு சம்பந்தமாக எழும் எல்லா வழக்குகளுக்கும் அவன்தான் பொறுப்பு. அதேபோல் படகு பெரும் புயலிலிருந்து தப்பிக் கரைக்குப் பத்திரமாக வந்து சேர்ந்து விட்டால் சாரங்குக்குப் பரிசு உண்டு. படகின் மற்ற பணி யாளர்கள் எவ்வளவுதான் கடினமாக உழைக்கட்டும், எவ்வளவு தான் சாமர்த்தியத்தைக் காட்டட்டும், அவர்களுக்கு இந்தப் பரிசின் ஒரு துளிகூடக் கிடைக்காது. எல்லா சன்மானங்களும் மெடல்களும் சாரங்கின் கழுத்தில்தான் விழும்.
"என்ன ஆச்சு?"
நீராவிப்படகு மணலில் சிக்கிக்கொண்டு விட்டது. மூடுபனி யில் மணல்மேடு புலப்படவில்லை. படகின் அடிப்பகுதி மணலில் நன்றாக மாட்டிக்கொண்ட விட்டது. அதை விரைவில் மணலி லிருந்து விடவிக்க முடியுமென்று தோன்றவில்லை. ஒரு தோணியைப் படகிலிருந்து இறக்க வேண்டும். ஒருவன் அந்தத் தோணியில் போய், தந்தி வசதியுள்ள படகுத்துறையில் செய்தி தெரிவிக்க வேண்டும். அத்தகைய படகுத்துறையெதுவும் அருகில் இல்லை. பெரும்பாலான துறைகள் மரத்தடிகள் அல்லது வயல் வெளிகள்தாம். இன்றைக்குக் குறைந்தது ஏழெட்டு மணிநேரம் படகு தாமதப்படும். வழியில் உள்ள துறைகளிலெல்லாம் பிரயாணி கள் இரவு முழுதும் படகுக்காகக் காத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்குத் தொலைவில் புகை தெரியும், படகின் ஊதல் ஒலி கேட்கும், ஆனால் படகு வராது.
குற்றம் யாருடையது?
மாலுமியின் குற்றம், இரண்டாவது, 'மேட்'டின் குற்றம். ஆனால் இவர்கள் கட்டுமஸ்தான உடல்வாகு கொண்டவர்கள். இவர்களை அடி்பது சுகமில்லை, அடிப்பவனுக்குத்தான் கை கால் புண்ணாகும். ஆனாலும் இவர்கள் தப்பமுடியாது. இவர் களுடைய சம்பளம் முழுவதும் பறிமுதலாகிவிடும். இவர்கள் தங்கள் சாப்பாட்டைக்கூடக் காசு கொடுத்து வாங்கிக்கொள்ள வேண்டும்.
சாரங்க் படகை நிரந்தரமாகக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டவன் மாதிரி. படகுக்கான தளவாடச் செலவுகள், கரிக்கான செலவு, ஊழியர்களின் சம்பளம் இவற்றையெல்லாம் கணக்கிட்டு ஒரு மொத்தத் தொகையைக் கம்பெனி சாரங்கிடம் கொடுத்துவிடும். அதைக்கொண்டு சம்பளப் பட்டுவாடாவும் மற்ற செலகளும் செய்துகொள்வான் சாரங்க். அவன் தன்னிஷ்டத்துக்கு சம்பளம் கொடுப்பான், அபராதம் விதிப்பான், சாப்பாட்டை நிறுத்துவான்; தன்னிஷ்டத்துக்கு ஆட்களை வேலையைவிட்டு நீக்குவான். அவனுக்கெதிராக எந்தப் புகாரும் எடுபடாது, அப்பீலும் இல்லை. படகின் உள்துறை நிர்வாகத்தைப் பற்றிக் கம்பெனிக்குக் கவலையில்லை. படகு, ஆட்களையும் சரக்குகளையும் ஏற்றிக்கொண்டு போகவேண்டும், கணிசமான தொகை லாபம் காட்டவேண்டும் என்பதில்தான் அதற்கு அக்கறை.
ஆகையால் படகு ஊழியர்களுக்கு சாரங்கின் வார்த்தைதான் வேதவாக்கு. அவர்கள் அவனுடைய அடிமைகள். அவன் வெறும் சாரங்க் அல்ல, பெரிய வைசிராய்.
"அழுது பிரயோசனமில்லேப்பா" பக்கத்திலிருந்த மக்பூல் சொன்னான். "இது மாதிரி இன்னும் எவ்வளவோ அடிவாங்க வேண்டியிருக்கும். அடிவாங்கி வாங்கித்தான் வேலை உயர்வு கிடைக்கும்."
மக்பூலும் முதலில் வேலைக்காரனாகத்தான் படகில் சேர்ந்தான். சமையல் வேலையல்ல; துணிச்சலவை, செருப்புத் தைக்கும் வேலை. மூன்றாண்டுகளுக்குப்பிறகு அவனுக்குப் படிக்கட்டு ஏற்றி இறக்கும் வேலை கிடைத்தது. பிறகு மேல் தட்டில் வேலை, அதன்பின் கயிறு இழுக்கும் வேலை. அடி வாங்காவிட்டால் படகில் பதவி உயர்வுக்கு வழியில்லை.
"சாரங்க் துரையோட நல்ல பார்வை படலேன்னா ஒண்ணும் பிரயோசனமில்லே. பத்துப் பன்னெண்டு வருசம் ஒழைச்ச பிறகு துரைக்குத் தயவு வந்தா சான்றிதழ் கொடுப்பாரு. பிறகு அந்த சான்றிதழை வச்சுக்கிட்டு சாரங்க் பரீட்சை எழுதலாம்" என்று சொன்னான் மூன்றாவது மேட் அப்சாருதீன், அந்தச் சான்றிதழ் இல்லேன்னா எல்லா ஒழைப்பும் வீண் .. அதனாலே சாரங்கோட காலிலே அழுத்தமா எண்ணெய் தடவிக்கிட்டு இருக்கணும். பரீச்சை மட்டும் பாஸ் பண்ணீட்டா அப்புறம் கட்டிப்பிடிக்க முடியாது. அப்புறம் நீதான் ஜமீந்தார், நீதான் பொக்கிஷதார், நீதான் எல்லாம்!"
"ஆனா இதிலே இன்னொரு விசயம் இருக்கு. 'சிட்டகாங்' ஆளுங்கன்னா சாரங்குக்கு ரொம்பப் பிரியம்" என்ற தாழ்ந்த குரலில் சொன்னான், பாய்லரில் வேலை செய்யும் விலாயத் அலி. "சாரங்கோட சொந்த ஊர் சிட்டகாங். 'சிட்டகாங்கைத்தவிர வேறே எங்கே நல்ல சாரங்க் கிடைப்பான்?' அப்படீன்னு சொல்லுவாரு. 'சாரங்க், மீன், வத்தல், தர்கா இந்த மூணும் சேர்ந்தது சிட்டகாங்' அப்படீன்ன ஒரு பழமொழியே இருக்கு. அதே மாதிரி இன்னொரு பழமொழி 'நெல், கொள்ளைக்காரன், வாய்க்கால் இந்த மூணும் சேர்ந்தது பரிசல்..!' சாரங்க் வேலை கொள்ளைக்காரன் வேலையில்லியே!"
"ஏண்டா பயலே, ஒன் ஊரு எது?" என்று எல்லாரும் கேட்பார்கள், "இந்தப் பக்கந்தான்" என்று சோகமாகப் பதிலளிப் பான் நசீம். அவன் கண்கள் நீரால் மல்கும். அவன் முன்னே நிற்பவர்கள் மங்கலாகத் தெரிவார்கள்.
மறுநாள் அப்துலுக்கு செமை அடி கிடைத்தது. அவன் தண்ணீரின் ஆழத்தை அளக்கும்போது இரும்புக் கம்பியைத் தண்ணீரில் போட்டுவிட்டான்.
சாரங்க் யாரையாவது அடித்தால் அடிபட்டவனை விலக்க யாரும் முன்வர மாட்டார்கள். அடிபடுவது எல்லாருக்கும் பழகிப்போன விஷயம், அன்றாட நிகழ்ச்சி. இருந்தாலும் அடி பட்டவன் அழத்தான் செய்வான்.
அப்துல் ஆற்றுநீரில் கண்களைத் துடைத்தவாறு விம்மினான், "குச்சியோட வெலையையும் அதுக்கான வட்டியையும் சம்பளத்தி லேருந்து எடுத்துக்கப் போறாரு, அதோடே இந்த அடி வேறே அடிக்கறாரு!"
அப்படியும் சாரங்கை எதிர்த்துப் பேச முடியாது. தனக்கு சாதகமாக இரண்டு வார்த்தை சொல்ல முடியாது. அடிக்கும்போது திமிற முடியாது.
இவர்களெல்லாருமே தன்னைப்போல் தந்தை - தாயில்லாத அனாதைகள் போலும் என்று நினைத்தான் நசீம்.
படகின் படிக்கட்டு வேலையிலிருந்து தொடங்கிப் பதவி உயர்வு வேண்டுபவர்கள்தாம் எல்லாரும். அவர்கள் எல்லாருக்கும் சாரங்கின் சான்றிதழ் தேவை. சாரங்க் அடிப்பதை அனுமதிக்கா விட்டால் அவன் ஏன் பேனாவைக் கையிலெடுத்து சான்றிதழ் எழுதித் தரவேண்டும்.
ஆகவேதான் அன்றொரு நாள் நசீம் மக்பூலுடன் வேடிக்கை யாகப் பேசிக்கொண்டவாறு தவறுதலாக ஒரு வாளியைத் தண்ணீரில் போட்டுவிட்டதற்காக நன்றாக உதைபட்டபோது அவனுக்கு வெட்கம் ஏற்படவில்லை. அவமான உணர்வு துளிக்கூடத் தோன்றவில்லை அவனுக்கு. மாறாக அவன் மனதில் மற்ற ஊழியர்களுடன் தோழமையணர்வு ஏற்பட்டது.
"ஒனக்கென்ன சம்பளம் கிம்பளம் கிடையாது. சும்மா அடி யோட சரி" என்று அழுதுகொண்டே சொன்னான் மக்பூல். "வாளியோட வெலைக்காக என் சம்பளம் பூராவையும் எடுத் தக்குவாரு, எனக்குச் சோத்துக்கு காசு வேணும்னா, தன் கிட்டேயிருந்து கடன் வாங்கிக்கன்னு சொல்வாரு. ரூபாய்க்கி ரெண்டணா வட்டி படகிலே ஒக்காந்துகிட்டே லேவாதேவி செய்யறாரு .. உம், நம்மளைக் கவனிக்க ஆளில்லே" என்று சொல்லி ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தான் மக்பூல் - கடவுளிடம் புகார் செய்வதுபோல்.
"நீ வேற படகுக்குப் போயிடக் கூடாதா?" நசீம் கேட்டான்.
"நீ எந்த உலகத்தில் இருக்க? ஒரு படகைவிட்ட வெலகினா வேறெந்தப் படகிலேயும் வேலை கெடைக்காது. சாரங்குகளுக் குள்ளே ரொம்ப ஒத்துமை உண்டு. அதனால்தான் வாயை மூடிக்கிட்டு அடியை வாங்கிக்கிட்டு வேலை நெலைக்கணுமேன்னு கிடக்கேன். ஒரு தடவை வேலை போயிருச்சின்னா வேறே வெனையே வேண்டாம். தண்ணியை விட்டுட்டுப் போய்க் கலப்பையைக் கட்டிக்கிட்டு அழவேண்டியதுதான்!"
"தவிர எந்தப் படகுக்குப் போவே நீ?" பக்கத்திலிருந்த இயாத் அலி கேட்டான். "எல்லாப் படகிலயும் இதே வழக்கந்தான்.
"ஓடிப்போயிட முடியாதா?" நசீமின் கேள்வி.
இதைக்கேட்டு எல்லாரும் சிரித்துவிட்டார்கள். படகின் படிக்கட்டில் தொடங்கி மேலும் மேலும் உயரும் முயற்சியில் தீவிரமாக இருப்பவர்களுக்கு இந்தக் கேள்வி அசட்டுத்தனமாகத் தானே தோன்றும்!
"ஓடிப்போறது அப்படியொண்ணும் சுலபமில்லேப்பா" சீரியஸாகப் பதிலளித்தான் இரண்டாவது மேட்.
"ஒம் பேரு விலாசம் எல்லாம் சாரங்க் துரையோட நோட்டுப் புஸ்தகத்தில் எழுதி வச்சிருக்கு. நீ ஓடிப்போனா ஒம்பேரிலே போலீசுக்குப் புகார் போகும்... நீ சாரங்கோட பையிலிருந்து பர்சைத் திருடிட்டதா, கடிகாரத்தைத் திருடிட்டதா ... கம்பெனி சாரங்கைத்தான் ஆதரிக்கும். கடைசியில் நீ படகிலேருந்து ஜெயிலுக்குப் போகவேண்டியதுதான்!"
அப்படியானால் இப்படியேதான் - அலப்பைத் தரும் அலை யோசையைக் கேட்டவாறு - காலங்கழிக்க வேண்டுமா அவன்? சம்பளமில்லை, பற்றிக்கொள்ள எதுவுமில்லை, இப்படியே இரவும் பகலும் அவன் மிதந்துகொண்டே போகவேண்டியதுதானா?
"தொரையைக் குஷிப்படுத்து எப்படியாவது! படிக்கட்டு வேலை கிடைக்குமா பாரு"
இன்னும் எப்படித்தான் துரையைக் குஷிப்படுத்துவது? அவன் தினம் சாரங்கின் கை கால் உடம்பை அமுக்கி விடுகிறான், சாரங்குக்கு உடலில் எண்ணெய் தடவி விடுகிறான், தலைவாரிச் சீவி விடுகிறான். கைகால் அயரும் வரை வேலை செய்கிறான். சமையலில் மாலுமியும் அவனுக்குக் கொஞ்சம் உதவி செய்வதால் தான் இன்னும் தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கிறான் அவன். அப்படியும் சம்பளம் இல்லை, சாரங்குக்குத் திருப்தியில்லை. மாறாக அவனுக்கு அபராதம் போடமுடியவில்லையே என்று வருத்தம் சாரங்குக்கு! அதற்காகத்தான் அவன் சில சமயம் நசீமை பட்டினி போட்டு வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் மிச்சப்படுத்துகிறான்.
படகில் அரிசி, உப்பு, வெங்காயம், மிளகாய் இவற்றைத் தருவது சாரங்கின் பொறுப்பு. மற்றவற்றை - எண்ணெய், மசாலா, மீன், காய்கறி - அவரவர் தங்கள் செலவில் போட்டுக் கொள்ள வேண்டும். மாதம் முடிந்தபின் அரிசி, உப்பு,வெங்காயம், மிளகாயின் விலை ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடித்துக் கொள்ளப்படும் - அதுவும் சாரங்கின் இஷ்டப்படிதான்.
"சாரங்கைக் குஷிப்படுத்தனுமின்னாத் திருட்டிலே இறங்கு!" யாரோ நசீமின் காதில் கிசுகிசுத்தான்.
சில சமயம் இந்தப் படகோடு சரக்குத் தோணியொன்றை இணைத்து விடுவார்கள். அந்தத் தோணி நிறைய அரிசி, உப்பு, மிளகாய் போன்ற சரக்குகள் இருக்கும். அத்துடன் சில ஆட்களும் இருப்பார்கள். அவர்களுக்கும் இந்தப் படகின் சாரங்குக்கு மிடையே ஏதாவது ஏற்பாடு இருக்கும்.. படகுக்கு வேண்டிய சரக்குகள் வாங்கிப் போடுவதிலும் கொஞ்சம் பணம் மிச்சப் படுத்துவான் சாரங்க்.
நசீமுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. படகில் வேலை செய்வதில் அவனுக்கு ஒரு பிரயோசனமும் இல்லை. படகு ஒருநாள்விட்டு ஒருநாள் ஒரே வழியில் பயணிக்கும். அந்தி நேரத்தில் வந்து சேர வேண்டிய இடத்துக்கு வந்து சேர ஒவ் வொரு சமயம் நள்ளிரவு ஆகிவிடும், ஒவ்வொரு சமயம் மறுநாள் பொழுது புலர்ந்துவிடும். இது ஒன்றுதான் இந்த பயண வாழ்க்கையில் நேரும் மாறுதல். மற்றபடி எல்லாமே அலுப்பைத் தரும் ஒரே மாதிரியான நிகழ்ச்சிகள்தான். - தண்ணீரின் சலசலப்பு, பயணிகளின் கூட்டம், நங்கூரம் இறங்கி ஏறும் கடகட ஒலி, படிக் கட்டு போடப்படும் போதும் கயிறு இழுக்கப்படும்போதும் எழும் கூக்குரல்கள்..
நசீமுக்கு ஒன்றும் பிடிக்கவில்லை. படகு சில நாட்களுக் கொருமுறை கனக்தியாவுக்குப் போய்வரும். ஆறு இவ்வளவு சிறியதாக இருக்கும், அதன் தண்ணீர் இவ்வளவு குறைவாக இருக்கும் என்று அவன் நினைத்ததே இல்லை. ஆறு ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குப் போகும், இப்படி வெகு தொலைவ போய்க் கடைசியில் கடலில் சேரும் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தான் அவன்.
இருட்டில் தனியாக உட்கார்ந்துகொண்டு தண்ணீரைப் பார்த்துக் கொண்டிருந்தான் நசீம். கறுப்புத் தண்ணீரில் மின் மினிகள் போல் பளபளப்பு.. இன்று நள்ளிரவும் படகு கனக்தியா வுக்கு வந்திருந்தது. நசீமுக்குத் தன் வீடு நினைவு வந்தது. ஊஹூம், அவனுக்கு வீடு வாசல் ஏது? அவனுடைய வீடு வாசலாயிருந்தது இப்போது பிசாசு இருக்குமிடம். பழைய நினைவுகள் வந்தன. அம்மாவின் முகம். "எனக்கு அம்மா இல்லை" என்று அவன் நினைத்துக் கொண்டான். அவனுடைய அம்மா எப்போதோ செத்துப் போய்விட்டாள். இந்தக் கறுப்பு நீரில் தெரியும் நிலவு அவனுடைய அம்மாவின் வெளிறிய முகத்தை நினைவூட்டுகிறது..
பெரிய திருட்டு எதுவும் செய்யமுடியாவிட்டாலும் சின்னஞ் சிறு பொருள்களைத் திருடலாமே அவன்..!
பக்கத்துக் கிராமத்திலிருந்து ஒருவன் இளநீர் விற்க வந்தான். நசீம் அவனிடமிருந்த சாரங்குக்காக இரண்டரையணாவுக்கு இரண் இளநீர் வாங்கினான். நசீம் படகில் ஏறியபிறகு படிக்கட்டு தூக்கப்பட்டது. நசீம் சாரங்கிடமிருந்து ஓரணா வாங்கிக் கரையிலிருந்த இளநீர்க்காரனிடம் எறிந்தான்.
"இன்னும் ஒண்ணரையணா?"
நசீம் வாயைக் கோணி அழகு காட்டினான். இளநீர்க் காரன் ஆற்றங்கரைச் சேற்றையள்ளி நசீம் மீது எரிந்தான். அதற்குள் படகு நகர்ந்துவிட்டது. சேற்றின் ஒரு துளிகூட நசீமின் மேல் படவில்லை. சாரங்கும் நசீமும் சிரித்தார்கள்.
இதே மாதிரி பான்ஸ் பாதாமீனும் கய்ராமீனும் விற்பனைக்கு வரும். அதிலும் கொஞ்சம் திருடுவார்கள். பால்காரன் பானையில் பால் எடுத்து வருவான். மூங்கில் உழக்கால் அளந்து தருவான். நசீம் கரைக்குப்போய் அதை வாங்கிக்கொண்டு படகிலேறுவான். படகிலிருந்து பணங்கொடுப்பதாகச் சொல்வான், கொடுக்காமல் ஏமாற்றிவிடுவான். வயலிலிருந்து பிஞ்சு வெள்ளரிக்காய் கூடை கூடையாக விற்பனைக்கு வரும். அதை மீனோடு சேர்த்துச் சமைக்கலாம், அல்லது தனியாகப் பச்சையாகவே தின்னலாம். "நான் சாரங்கோட வேலைக்காரன். ஒன் காசைக் கொடுத் துடுவேன்" என்று சொல்லி நசீம் வெள்ளரிக்காய் வாங்கிக் கொண்டு படகில் ஏறிவிடுவான். ஆனால் காசு கொடுக்க மாட்டான்.
இவ்வளவு காலத்துக்குப்பின் சாரங்க் அவனுக்கு ஒரு அரைக்கை சட்டை கொடுத்தான். லுங்கி எப்போது கொடுப்பானோ?
ஒருநாள் நசீம் சாரங்கிடம் ஓரணா கேட்டுவிட்டான்
இதுவரை யாரும் துணிந்து சாரங்கிடம் காசு கேட்டதில்லை. சாரங்க் புருவத்தை உயர்த்திக்கொண்டு கேட்டான், "என்ன காசா?"
அசட்டுத் துணிச்சலில் ஒரு பயங்கரத் தவறு செய்துவிட்ட உணர்வு ஏற்பட்டது நசீமுக்கு. அவன் பயத்துடன் விழித்தான்.
"எதுக்கு காசு?" "ஒரு மண்குடுவை டீ குடிக்க.."
உடனே ஒரு பலமான அறை விழுந்தது நசீமின் கன்னத்தில். அவன் நிலைகுலைந்து கீழே விழுந்தான்.
சாரங்க் கர்ஜித்தான், "என்ன அதிகப் பிரசங்கித்தனம்! எங்கிட்டே பீடிக்குக் காசு கேக்கறானே..! பீடி வாங்கணுமாம், பீடி ..! இன்னொரு நாள் கள்ளு போத்தல் வாங்கணும்பான்..! இந்த மாதிரி திமிரு பண்ணினா ஆத்துக்குள்ளே தூக்கி எறிஞ்சிருவேன், ஆமா!"
அழுகையினூடே அம்மாவின் நினைவு வந்தது நசீமுக்கு. அவன் இருட்டில் தண்ணீரைத் பார்த்தவாறு அம்மா செத்துப் போனபின் அவளுடைய முகம் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்ய முயற்சி செய்தான். இந்தக் கற்பனை அவனுக்குத் தெம்பளித்தது. அடியைத் தாங்கிக்கொள்ளத் திராணி ஏற்பட்டது. "அம்மா" என்று கூவியழக்கூட வழியில்லை அவனுக்கு. அந்த நிலையில் விழும் அடியையெல்லாம் வாங்கிக்கொள்ளத்தானே வேண்டும்!
ஆனாலும் இந்தக் கொடுமைக்குள்ளானவர்கள் சாரங்குக் கெதிராக ஒன்று சேர்வதில்லை. அவர்களுடைய புகாரெல்லாம் கடவுளிடந்தான். படகிலிருந்து விடுதலையும் கிடைக்காது அவர்களுக்கு. எப்போது படிக்கட்டு வேலை கிடைக்கும், எப்போது மேல்தட்டு வேலை, கயிறு இழுக்கும் வேலை, நங்கூரம் பாய்ச்சும் வேலை அல்லது இயந்திர வேலை கிடைக்குமென்று எல்லாரும் காத்திருந்தார்கள்.
சாரங்குக்கு வட்டி கொடுத்தோ, லஞ்சம் கொடுத்தோ, அவனுக்காகத் திருடியோ, அவனிடம் அடிவாங்கியோ அவனிடம் நல்ல பெயர் வாங்கிக்கொள்ள அவர்களெல்லாருக்கும் ஆசை.
சாரங்கின் ஆட்சித்திறமை அபாரந்தான்!
நசீம் அன்றிரவே ஒரு பிரயாணியின் செருப்புகளைத் திருடினான். ஆனால் சாரங்க் அவற்றைத் தண்ணீரில் எறிந்த விட்டான். "ஆகா, என்ன மூளை ஒனக்கு! நான் அந்தச் செருப்பைப் போட்டுக்கிட்டேன்னா போலீஸ் என்னைப் பிடிக்காதா?" என்று கேட்டான்.
மறுநாள் நசீம் ஒரு பிரயாணியின் தகரப் பெட்டியைத் திருடினான். ஆனால் அதிலிருந்தவை ஏதோ கோர்ட்டு வழக்கு சம்பந்தப்பட்ட காகிதங்கள், பத்திரங்கள், வரவு செலவுக் கணக்கு நோட்டுகள் இவைதாம். அந்தப் பெட்டியும் ஆற்றில் எறியப்பட்டது.
என்ன செய்தும் சாரங்கின் நன்மதிப்பைப் பெறமுடிய வில்லை அவனால். "உன்னால முடியும், முயற்சி செஞ்சுக் கிட்டேயிரு!" என்று சாரங்க் தன் பார்வையால் அவனுக்கு ஊக்கமூட்டுவதாகத் தோன்றியது. சாரங்க் நசீமின் அசட்டுத்தனத் துக்காக அவனைக் கோபித்துக் கொண்டாலும் அவனை இப்போதெல்லாம் அடிப்பதில்லை. இதுவே உற்சாகமளித்தது நசீமுக்கு.
படகில் வெளிச்சம் மங்கல்; மழை பெய்தால் பயணிகள் நனையாதிருக்கக் கித்தான் கூரையில்லை; ஆண்களும் பெண்களும் தனித்தனியாகத் தங்க அறைகள் இல்லை; ஆனால் தூக்கம் எல்லாருக்கும் வருகிறது. அந்தப் படகில் பிரயாணம் செய்பவர்கள் சீட்டாடியோ, பாட்டுப் பாடிக்கொண்டோ, அரட்டையடித்துக் கொண்டோ இரவைக் கழிக்கும் நடுத்தர மக்கள் அல்லர்; அவர்கள் விவசாயிகள், கூலி வேலை செய்பவர்கள். அவர்கள் பகலில் கடுமையாக உழைத்துவிட்டு இரவில் மரக்கட்டைபோல் தூங்கு வார்கள்.
அலங்கோலமாகக் கிடந்து தூங்கும்போது ஒரு பிரயாணியின் மடியிலிருந்த பணமுடிச்சு வெளியே வந்து தொங்கிக் கொண்டிருக்கும். நசீம் அதை லாவகமாக எடுத்து விடுவான். அதில் எவ்வளவு பணம் இருக்கிறதென்பதை எண்ணிப் பார்க்கலாம் என்று நினைப்பான். அடுத்த துறையில் இறங்கி ஓடிப் போய்விடலாம் என்று எண்ணுவான். ஆனால் இறுதியில் ஏதோ மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவன்போல் அதை எடுத்துப்போய் சாரங்கிடம் கொடுத்துவிடுவான். புலியின் வாயில் போய் விழும் மாடுபோல, சாரங்க் அவனை எப்போதும் அடிக்கிறான், உதைக் கிறான்; அவனோடு சிரித்த முகத்துடன் பேசுவதில்லை; அவனுக்குக் கிடைக்கவேண்டிய உரிமையெதுவும் அளிப்பதில்லை. அப்படியும் அவனுக்கு சாரங்கைத் திருப்திப்படுத்துவதில் அவ்வளவு ஆர்வம். சாரங்க் ஊழியர்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொள்ளத் தூண்டுகிறான், அவர்களுக்கெதிரான கோள்களைக் காது கொடுத்துக் கேட்கிறான்; அப்படியும் அவனை குஷிப்படுத்த ஊழியர்களிடையே எவ்வளவு போட்டி! சாரங்கின் அன்பைப் பெறுவதில் ஒருவரையொருவர் மிஞ்சிவிட முயற்சி!
"ஏழு ரூவா ஒம்பதரையணாதானா?" மக்பூல் சொன்னான். "இதை வச்சுக்கிட்ட என்ன செய்ய முடியும், கொறஞ்சது நாப்பத்தேழு ரூவாயாவது சேர்றவரையில பிரயோசனமில்லேன்ன நம்ம சாரங்க் துரை சொல்லுவாரு.."
துணிமணி திருடுவதைவிடப் பணங்காசு திருடுவது மேல். தங்கம், வெள்ளி, நகை திருட மடிந்தால் அதைவிட நல்லது. இந்தக் காலத்திலே அவற்றுக்குத்தான் மதிப்பு. அவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தக் காகிதப் பணம் வெறும் குப்பை!
இவ்வளவு நாட்களுக்குப் பிறகு நசீமுக்கு ஒரு லுங்கி கிடைத்தது. குடியானவப் பெண்களிடம் நகைகள் ஏது? அதிகமாகப் போனால் மூக்குத்தி, மோதிரம் .. கையில் கண்ணாடி வளையல், தங்கம் கிங்கம் இல்லை.
இல்லையில்லை, ஒருத்தியிடம் நகை நிறைய இருக்கிறது. ஒரு புதுமணப்பெண் புக்ககம் போய்க்கொண்டிருக்கிறாள். அவள் கழுத்தில் தங்க நெக்லஸ், கையில் கங்கணம், காலில் வெள்ளிக் காப்பு, கால் விரலில் மெட்டி. அரக்கு நிறப் புடைவையணிந்த அவள் முக்காடு போட்டுக்கொண்டு ஒரு பக்கம் தூங்குகிறாள். கலியாணத்துக்கு வந்திருந்தவர்கள் ஆளுக்கொரு பக்கம் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். யார் எங்கேயிருக்கிறார் என்று தெரிந்து கொள்ள வழியில்லை. இன்று படகில் ஒரே கூட்டம். இந்த கூட்டத்தில் சரியான தருணம் பார்த்துக் காத்திருந்தான் நசீம்.
அவன் மணப்பெண்ணின் மிருதுவான கழுத்தில் கை வைத்தான். அவனுடைய விரல்கள் நடுங்கவில்லை.
ஒரே இழுப்பில் நெக்லஸைப் பறித்துவிட்டான்.
"திருடன், திருடன்!"
நசீம் கூட்டத்தில் முண்டிக்கொண்டு கொஞ்சம் முன்னேறுவதற்குள் பிரயாணிகள் அவனைப் பிடித்து விட்டார்கள். எல்லாரும் அவனை அடிக்கத் துவங்கினர். சரியான அடி. அங்கு வந்து "என்ன விஷயம்?" என்று விசாரிப்பவன் ஒவ்வொருவனும் தன் பங்குக்கு நசீமை உதைத்தான். மணப்பெண் போட்ட கூச்சலில் அவன் நகையை அவளுடைய படுக்கையோரத்திலேயே போட்டுவிட்டான். அதனாலென்ன? பெண்பிள்ளையின் உடம்பில் கை வைத்திருக்கிறான்! அவளுடைய நகையைப் பறித் திருக்கிறான்! அடி, உதை! முறை போட்டுக்கொண்டு உதை!
"ஐயோ!" ஓலமிட்டு அழுதான் நசீம்.
நீண்ட அங்கியணிந்த சாரங்க் தலையில் படகுத் தொப்பியும் காலில் செருப்புமாக அங்கே வந்து "என்ன ஆச்சு? எம்புள்ளயை ஏன் அடிக்கிறீங்க?" என்று கேட்டான்.
புள்ளயா? எல்லாரும் திடுக்கிட்டனர். சாரங்கோட புள்ளயா?
"ஒங்க புள்ளெயா? வேலைக்காரன்னு நெனச்சோம்!" ஒருவன் சொன்னான்.
"வேலைக்காரனா? பொய்! அவன் என் சொந்தப் புள்ளெ! அம்மா இல்லே அவனுக்கு, அவனை அடிச்சது யாரு?"
"அவன் மணப்பெண்ணோட கழுத்து நகையைப் பறிச் சிருக்கான்.."
"பொய்! நிச்சயம் பொய்தான்! வாங்க, நானே போய்க் கேக்கறேன் அந்தப் பொண்ணை!"
சாரங்க் அந்தப் பெண்ணிடம் போய்க் கேட்டான், "ஒங்க நெக்லஸை யாராவது பறிச்சாங்களா?"
மணப்பெண் முகத்தை மூடிக்கொண்டு தாழ்ந்த குரலில் சொன்னாள், "இல்லே. தூக்கக் கலக்கத்திலே அது நழுவி கீழே விழுந்துடுச்சு.."
லதாபாரி படகுத்துறை நெருங்கிவிட்டது. மாப்பிள்ளை வீட்டார் அங்குதான் இறங்கவேண்டும். படகின் வேகம் குறைந்தது. நங்கூரம் கடகடவென்று கீழே இறங்கியது. துறையில் ஒரு மரத்தோடு கயிறு கட்டப்பட்டது.
"படியை இறக்கு! படியை இறக்கு..! நசீம் எங்கே? அவன் இன்னிக்குப் படிக்கட்டைப் பிடிச்சுக்கட்டும்!" சாரங்க் கத்தினான்.
படகு ஊழியர்களிடையே ஒரே பரபரப்பு. இவ்வளவு சீக்கிரமாக நசீமுக்கு முறையான வேலை கிடைத்துவிட்டதே! திருடி அகப்பட்டுக் கொண்டதில் அதிருஷ்டம் வந்தவிட்டது பயலுக்க! அகப்பட்டுக் கொள்ளாமல் திருடிக் கொண்டிருப் பவர்கள் இன்னும் திணறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இன்னும் படிக்கட்டிலிருந்து மேல் தட்டுக்குப் பதவி உயர்வு கிடைக்கவில்லை. இந்த நசீம் இன்றைக்குப் படிக்கட்டு, நாளைக்கு மேல்தட்டு, அதற்கு மறுநாள் சுக்கான் - அப்புறம் ஒரேயடியாக சாரங்காக - படகுத் தலைவனாக ஆகி விடுவான்!
"பிடிச்சுக்கங்க, பிடிச்சுக்கங்க..! அவன் சின்னப் பையன். அவனால ஒண்டியாத் தூக்க முடியுமா? எல்லாரும் கூடப் பிடியுங்க!" மேலேயிருந்து அழுத்தந் திருத்தமாக ஆணையிட்டான் சாரங்க்.
சுழல் விளக்கின் ஒளியில் நசீமின் கண்களில் நீர்த்துளிகள் பளபளத்தன.
மணப்பெண் லதாபாரியில் இறங்கப் போகிறாள். அவள் மெட்டி குலுங்க நடந்து வருகிறாள்.
படகின் வெளிச்சம் மரஞ்செடிகளுக்கு மேலே வெகு தொலைவு வரை பரவியிருக்கிறது. நசீம் படிக்கட்டோடு இணைந்த மூங்கிலைப் பிடித்துக் கொண்டிருக்கிறான்.
அவன் மணப்பெண்ணிடம் சொன்னான்,"மூங்கிலைப் பிடிச்சுக்குங்க! இல்லாட்டித் தடுமாறி விழுந்துடுவீங்க."
"வேண்டாம்" என்று சொல்லிவிட்டு மூங்கிலைப் பிடித்துக் கொள்ளாமலேயே முன்னேறினாள் மணப்பெண்.
பின்னாலிருந்து யாரோ நசீமை இடித்தான். திடுக்கிட்டுத் திரும்பினான் நசீம். அவனை நையப் புடைத்தவன்தான் அங்கே நின்று கொண்டிருந்தான். விளக்கொளியில் அவனை அடையாளம் கண்டு கொண்டான் நசீம். அவன் தான் கஹ்ராலி!
கோல்பானு - மணப்பெண்- வெளிச்சம்படாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தாள். போர்த்தியிருந்த போர்வையால் முகத்தை நன்றாக மூடிக்கொண்டிருந்தாள். படகுத் துறையில் வேற்று மனிதர்களின் நடமாட்டம் அதிகம்.
படிக்கட்டை ஒவ்வொரு படியாகத் தூக்கத் தொடங்கினான் நசீம். கரையையடுத்த, குழம்பிய தண்ணீரின் நிழலில் தாயின் வெளிறிய முகத்தைப் பார்த்தான் அவன்.
மேற்புரத்தில் நின்றுகொண்டு சாரங்க் அவனைத் தாராளமாகப் பாராட்டிக் கொண்டிருந்தான். சாரங்கின் வெள்ளை அங்கியும் வெண்தாடியும் காற்றில் அசைந்து கொண்டிருந்தன. சூரியன் மாதிரி பளபளத்தது சாரங்கின் முகம்...
(முதல் பிரசுரம், 1946)
4. ராணி பசந்த்
அன்னதா சங்கர் ராய்.
வெகுநாட்கள் காத்திருந்தபின் நீராவிப் படகு கிடைத்தது. சில இடங்களை மேற்பார்வையிடுவது பாக்கியிருந்தது. ஆண்டு முடிவதற்குள் இந்த வேலையை முடித்தாக வேண்டும். இருபுறமும் ஆற்றங்கரைக் காட்சிகள்; முன்னால் ராங்கா மாட்டிப் பிரதேசத்தின் மலைவரிசை; கர்ணபூலி ஆற்றில் பயணம் தொடங்கும்போது ரொமான்டிக் உணர்வு ஏற்பட்டது. காகிதமும் பேனாவும் கையோடு எடுத்து வந்திருந்தேன். வெகுநாட்களுக்குப் பிறகு கவிதை எழுதத் திட்டம். படகின் சாரங்க், மாலுமி, மற்ற ஊழியர்கள், என் வேலைக்காரன், சமையல்காரன் இவர்கள்தாம் என் சக பிரயாணிகள். அவர்கள் யாரும் என்னைத் தொந்தரவு செய்யக்கூடாதென்று அவர்களுக்கு கடுமையாக உத்தரவிட் டிருந்தேன். மேல்தட்டில் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு நங்கூரம் தூக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அவசர அவசரமாக ஓடிவந்தார் போலீஸ் இன்ஸ் பெக்டர். அவரது கையில் ஒரு கடிதம்.
என்ன விஷயம்? மறுபடி என்ன விபத்து நேர்ந்து விட்டது? இவர்கள் என்னை இங்கிருந்து நகர விடமாட்டார்களா என்ன?
கடிதத்தைப் பிரித்துப் பார்த்தேன். அப்படியொன்றுமில்லை. கல்கத்தாவிலிருந்து ஒரு பெரிய போலீஸ் அதிகாரி வந்திருக் கிறாராம். அவருக்கும் அவசரமாக ராவுஜான் போகவேண்டுமாம். நான் அவரை என்கூட அழைத்துப் போகலாமா? எனக்கு அசௌகரியம் இருக்கிறதா? போலீஸ் இலாகாப் படகு நாளைதான் வரும். என்னுடன் வரவில்லையென்றால் அந்தப் போலீஸ் அதிகாரி ஒருநாள் இங்கேயே காத்திருக்க வேண்டும்.
இந்த ஏற்பாட்டால் எனக்கு அசௌகரியம் ஏற்படத்தான் செய்யும். ஆனால் இதை எழுத்தில் தெரிவிக்க முடியுமா? நான் கவிதை எழுதி வாழ்ந்தேன்! மனதுக்குள் அந்த அதிகாரியைச் சபித்துக்கொண்டு, போலிச் சிரிப்பு சிரித்தவாற "ஆகா, இது என் நல்லதிருஷ்டமல்லவா?" என்று சொன்னேன். இன்ஸ்பெக்டர் குதிகாலோடு குதிகாலைச் சேர்த்து ஒரு அழுத்தமான சலாம் செய்துவிட்டுப் போனார்.
நான் நாற்காலியில் சாய்ந்தவாறே எண்ணத் தொடங்கினேன். "மறுத்திருந்தால் என்ன பெரிய பண்புக் குறைவு நேர்ந்திருக்கும்? அந்த அதிகாரி ஒருநாள் தாமதித்தால் வேலை கெட்டுப் போய் விடுமா..?"
வந்த அதிகாரி கான் பகதூரைப் பண்பில் யாரும் விஞ்ச முடியாது. எனக்கு நன்றி கூறப் பொருத்தமான வார்த்தைகள் அவருக்கு வங்காளியில் கிடைக்கவில்லை. ஆகையால் ஆங்கிலத் தையும் உருதுவையும் பயன்படுத்தினார். அவர் ஒரு பஞ்சாபி முஸ்லீம். என்னைவிட வயதில் மிகவும் பெரியவர். மீசை தாடி வைத்துக் கொள்ளாததால் சற்று வயது குறைந்தவராகத் தோற்ற மளித்தார். கலகலப்பான மனிதர். நான் ஒரு எழுத்தாளன் என்பதை இதற்குள் தெரிந்துகொண்டிருந்தார்.
"உங்களைச் சந்தித்துப் பேசணும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை. அந்த ஆசை இப்படித் தீரும்னு யாரு எதிர்பார்த்தாங்க? ஆனா ஒங்க தனிமையைக் கெடுக்க நான் விரும்பவேயில்லே. நான் ஒரு நாள் காத்திருக்கத்தான் நெனைச்சிருந்தேன். எஸ்.பி.தான் வலுக்கட்டாயமா அனுப்பிட்டார் ஒங்களோட படகுக்கு... செய்தி கேள்விப்பட்டிருப்பீங்களே?" என்றார் கான் பகதூர்.
நான் வியப்புடன் கேட்டேன், "என்ன செய்தி?"
"ரொம்ப மோசமான செய்தி," அவர் என் காதருகில் சொன்னார். "இல்லாட்டி நான் டிரங்க் கால்லே செய்தியைக் கேட்டதும் இப்படி கல்கத்தாவிலிருந்து ஓடி வந்திருப்பேனா..? சீ, வெட்கக்கேடு!"
விஷயம் என்ன என்று தெரிந்துகொள்ள எனக்கு மிகவும் ஆவல்தான். ஆனால் எப்படியும் கான் பகதூர் தாமாகவே விஷயத்தைச் சொல்லிவிடுவார் என்று தெரியுமாதலால் எனக்குப் பிறர் பற்றிய வம்பில் அக்கறையில்லாதது போல் பாசாங்கு செய்தேன். "நீங்க இலக்கியவாதிகள். அடிக்கடி 'சத்தியம், சிவம், சுந்தரம்'னு சொல்லுவீங்க. ஆனா சத்தியமாயிருக்கறது சிவமா, அதாவது மங்களமா இல்லே; சுந்தரமாயிருக்கறதும் சிவமில்லே-- இதுதான் நான் என் நாப்பத்தஞ்சு வருஷ அனுபவத்திலே அறிஞ்சுக்கிட்டது. நான் என்னிக்காவது ஒரு புஸ்தகம் எழுதி னேன்னா என்ன எழுதுவேன், தெரியுமா? 'அழகான பெண்கள் அநேகமாகக் கெட்டவங்களாயிருப்பாங்க, கெட்ட பெண்கள் பெரும்பாலும் அழகாயிருப்பாங்கன்னு எழுதுவேன்' என்று சொல்லிவிட்டு ஹாஹாவென்று சிரித்தார் கான்பகதூர்.
நானும் சிரித்துவிட்டேன்; இருந்தாலும் கூடவே "எங்க வங்காளத்திலே மட்டும் இப்படியில்லே" என்று சொன்னேன்.
கேலியாகப் பேசினார் கான்பகதூர், "உம், வங்காளத்திலே இல்லையாக்கும்! வங்காளத்திலே வேலை பார்த்துப் பார்த்துத் தலை நரைச்சுப் போச்சுங்க.. நான் இப்போ போயிக்கிட் டிருக்கேனே ராவுஜானுக்கு. அந்த ராவுஜான் வங்காளத்துக்கு வெளியில இருக்கா?"
உரையாடல் சுவாரசியமாகத் தொடர்ந்தது. நான் என் சமையற்காரனைக் கூப்பிட்டேன். அதற்குள் அவர் என்னை இடைமறித்து, "இல்லேயில்லே நீங்க என்னோட விருந்தாளி!" என்றார்.
நல்ல வேடிக்கை! பார்க்கப்போனால் படகே என்னுடையது, நான் எப்படி அவருடைய விருந்தாளி ஆவேன்? ஆனால் என் பேச்சு எடுபடவில்லை. அவரே மாலை நேரச் சிற்றுண்டிக்கு ஆர்டர் கொடுத்தார். இதற்குள் படகு துறையைவிட்டுக் கிளம்பி விட்டது.
நாங்களிருவரும் சாய்வு நாற்காலிகளைப் போட்டுக்கொண்டு மலைவரியைப் பார்த்தவாறு அருகருகே வசதியாக உட்கார்ந்தோம். கான் பகதூர் பேசத் தொடங்கினார்..
"அவன் சாதாரண ஆளில்லே. ஒரு சர்க்கிள் இன்ஸ்பெக்டர். ஒரு காலத்திலே நான் அவனோட சூபரின்டென்டாயிருந்தேன், அவனோட வெலையைப் பாராட்டியிருக்கேன். அவன் கிறுக்கு இல்லே, கவி இல்லே - நான் சொல்றதுக்கு மன்னிக்கணும் ஒழுங்கான நடத்தையுள்ளவன்னு நல்ல பேரும் இருந்தது அவனுக்கு. இப்படிப்பட்டவன் திடீர்னு வெலையைத் துறந்துட்டு, குழந்தை குட்டிகளை மறந்து - நல்லவேளை, அவனோட மனைவி உசிரோட இல்லே - காணாமப் போயிட்டான்-!"
"காணாமப் போயிட்டானா?" நான் திடுக்கிட்டேன்.
அந்த வெக்கக்கேட்டை ஏன் கேக்கறீங்க!" கான் பகதூர் பட்டுக் கைக்குட்டையால் தன் முகத்தைத் துடைத்துக் கொண்டு தொடர்ந்தார்.: "ஒரு கொலையைப் பத்தி விசாரிக்கப் போயிருந்தான். கொலை செய்யப்பட்டவன் ஒரு வங்காளி முஸ்லீம். அவன் ரங்கூன்லேருந்து ஒரு பர்மாக்காரியைக் கலியாணம் பண்ணி கூட்டிக்கிட்டு வந்திருந்தான். அவ ஒரு பிசாசுதான். ரொம்ப அழகாயிருப்பாளாம்; பர்மாவிலேயே அவ மாதிரி அழகி இல்லையாம்.. புருசனோட இங்கே வந்தவ அவனுக்கு ஏற்கெனவே கலியாணமாயிருக்குன்னு தெரிஞ்சதும் புருசனோட கழுத்திலே கத்தியாலே குத்திட்டா!"
"அப்படியா? நான் இதைப் பத்திக் கேள்விப்படலியே!"
"முதல்லே புலன்விசாரணைக்கு இன்ஸ்பெக்டர்தான் போனான். ஆனா பர்மாக்காரிக்கு வங்காளி தெரியாதுங்கறதுக்காக இந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டரும் போக வேண்டியதாச்சு. இந்த விசாரணைதான் அவனுக்குக் கேடா முடிஞ்சது.. ஒரு நாளாச்ச, ரெண்டு நாளாச்சு, புலன் விசாரணை முடியலே.. கடைசியிலே ஒரு நாள் குத்தவாளியையுங் காணோம், விசாரணைக்குப் போன அதிகாரியையுங் காணோம்! ஹா ஹா ஹா ..!"
இது சிரிப்புக்குரிய விஷயமல்ல. பெண்கள் கடத்தப்படுவதை அறவே வெறுப்பவன் நான். ஆகவே சற்றுக் கோபத்துடன் அவரைக் கேட்டேன், "பின்னே இவ்வளவு நாள் நீங்க என்ன பண்ணிக்கிட்டிருந்தீங்க? ஏன் அவனைக் கைது செய்யலே? இது போலீஸ் இலாகா மட்டும் சம்பந்தப்பட்ட விஷயமில்லே, இதிலே கோர்ட்டுக்கும் சம்பந்தமிருக்கே!" கான் பகதூர் சற்றுக் கடுமை யான குரலில் சொன்னார், "கோர்ட்டுக்கு இதிலே சம்பந்தம் இருக்காங்கறது சந்தேகந்தான். அந்த பர்மாக்காரி வயது வந்தவ, விதவை. ஆகையால் அவளை ஆசை காட்டிக் கடத்திக்கிட்டுப் போனதாக் குத்தஞ் சாட்ட முடியாது. குற்றச் சட்டத்திலே எந்தப் பிரிவின் கீழே அவனைக் கைது செய்வீங்க, சொல்லுங்க!"
என்னிடம் பதிலில்லை.
அவர் குறும்பாகச் சிரித்துக்கொண்டு தொடர்ந்தார். "அப்புறம்.. அவங்க கலியாணம் பண்ணிக்கிட்டிருந்தாங்கன்னா..? உம், அவ்வளவு எளிசான விஷயமில்லீங்க இது. அவனை வேலையைவிட்டு நீக்கலாம்... கல்கத்தாவிலே இதுக்கான ஏற்பாடு செய்வாங்க. ஆனா அதுக்கு மேலே அவனுக்குத் தண்டனை கொடுக்கணும்னா சட்டத்தை நல்லாப் படிச்சுப் பார்க்கணும்."
அவர் கூறியது உண்மைதான்.. பெரிய மீன் ஒன்று தூண்டிலில் அகப்பட்டுக் கொள்ளாமல் நழுவிப் போய்விட்டால் மீன் பிடிப்பவனுக்கு எப்படி இருக்கும்? அப்படியிருந்தது எனக்கு.
ஆனால் இதற்காக வருத்தப்படவில்லை கான் பகதூர். அவர் சொன்னார், "அவங்க சிட்டகாங் மலைப் பிரதேசத்திலே ஒளிஞ்சுகிட்டிருக்கறதாகக் கேள்வி. அங்கேயிருந்து நடந்தே பர்மா போவாங்க போலிருக்கு.. அதுக்கப்புறம் அவனுக்கு எவ்வளவு நாள் பர்மிய அழகியோட தயவு இருக்குமோ, யார் கண்டாங்க! அவ அவனைக் கொஞ்சநாள் குரங்காட்டம் ஆட்டிப்பிட்டுப் பிறகு கொன்னு போடுவாளோ, அல்லது உதைச்சு விரட்டப் போறாளோ..! நான் அழகான முகத்தைப் பார்த்தா, தூரத்தி லிருந்தே அதற்கு ஒரு சலாம் போட்டுட்டு நகர்ந்து போயிடுவேன்."
என்னிடம் அப்போது சட்டப் புத்தகம் எதுவுமில்லை. ஆகையால் ஒரு குற்றவாளி தப்பியோட உதவுபவனுக்குச் சட்டத்தில் தண்டனையேதும் உண்டா என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியவில்லை என்னால். ஆனால் உள்ளூரச் சங்கடப் பட்டேன். இதைக் கவனித்த கான் பகதூர் சொன்னார், "நான் போலீஸ்காரனாயிருக்கறதாலே போலீஸ்காரன் மேலே எனக்கு அனுதாபம், நான் முஸ்லீமாயிருக்கறதாலே இன்னொரு முஸ்லீம் மேலே எனக்குப் பரிவுன்னு நீங்க நினைக்கலாம். ஆனா அப்படி யில்லே. அவன் ஒரு ஆம்பளைங்கறதால அவன்மேலே அனுதாபப் படறேன்.. அந்தப் பொண்ணுதான் அவனைக் கடத்திக் கிட்டுப் போயிருக்கா!"
நான் இயற்கையிலேயே பெண்களிடம் அனுதாபங் கொண்டவன். ஆகவே அவரது கூற்றை மறுக்காமலிருக்க முடிய வில்லை என்னால். நான் சொன்னேன்," பெண்களிடம் சிறிதாவது மதிப்புள்ள எவனும் அவங்களைக் குத்தஞ் சொல்ல முடியாது. எப்போதும் குத்தம் ஆண்களோடதுதான்.. ஆனால் சில சமயங்களிலே ஆண் மேலயும் குத்தமில்லாமே, பெண் மேலயும் குத்தமில்லாமே இருக்கலாம். அப்போது சொல்ல வேண்டியது இயற்கையைத்தான், விதியைத்தான்."
"ஆமா, ஆமா, அது சரி! விதிதான் குத்தவாளி!" கான் பகதூர் மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டார். "இதே மாதிரி விதியின் விளையாட்டு ஒண்ணை நான் என் இளம்வயசிலே பார்த் திருக்கேன். என் சிநேகிதன் ஒருத்தன் வாழ்க்கையிலே.. அவன் இந்து. அடே, இதென்ன? இந்துவும் முஸ்லீமும் நண்பர்களா, என்று நீங்க நினைக்கலாம். ஆனா இப்போ இருக்கிற மோசமான சூழ்நிலை இருபது வருஷத்துக்கு முன்னாலே இல்லே. நாங்க முதல் உலக யுத்தம் முடிஞ்சப்புறம் மிலிட்டரியை விட்டு வந்து போலீஸ் வேலையிலே சேர்ந்தபோது இந்து முஸ்லீம் பாகுபாடு கிடையாது. அந்தக் காலம் திரம்பி வராதா..?"
அவருடைய குரலில் உண்மையான வருத்தம் தொனித்தது. அவர் நினைவுப் பாதையில் இருபதாண்டுகள் பின்னோக்கிப்போய் விட்டார். பிறகு ஏதோ நினைவுகளை அசைபோட்டவாறே சொன்னார், "ரொம்பப் பழைய காலக்கதை. நானே மறந்து போயிட்டேன். இப்போ திடீர்னு ஞாபகம் வருது நல்லா ஞாபகம் வருது.. கண்ணுக்கு முன்னால நடக்கற மாதிரி தெளிவாகத் தெரியுது.."
அவர் பக்கம் திரும்பிப் பார்த்தேன். அதே மனிதர்தானா, அல்லது வேறு யாராவதா..? ஓர் இளைஞன் நாற்காலியில் சாய்ந்தவாறு கனவு காண்கிறானா..?
காற்று நன்றாக வீசுகிறது, காற்றைத் தள்ளிக் கொண்டு முன்னேறுகிறது படகு. துணி கிழிபடுவது பொல படகின் இரு பக்கமும் தண்ணீர் கிழிபடுகிறது. பின்னால் தங்கிவிடுகின்றன அலைகள். அந்த அலைகளின்மேல் மேலுங் கீழுமாக ஊசலாடுகிறது பின்னால் வரும் தோணி. கான் பகதூர் கதை சொல்லத் தொடங்கினார்..
***
மேகர்பான் சிங் ராஜபுத்திர இனத்தைச் சேர்ந்தவன். என் முன்னோர்களும் ராஜபுத்திரர்கள்தான். ரத்த பாசம் என்று ஒன்று இருக்கிறது. எனக்கு மற்ற முஸ்லீம்களைவிட ராஜபுத்திரர் களிடம் அதிக ஈடுபாடு உண்டு. ஆனால் இந்து மதத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. மத விஷயத்தில் நான் ஒரு தீவிர முஸ்லீம். மதத்தைப் பொருத்தவரையில் இந்த முஸ்லீம் சாரங்க், மாலுமி, வேலைக்காரன், சமையற்காரன் எல்லாரும் என் சொந்த மக்கள், மேகர்பான் சிங் ஒரு சிநேகிதன் மட்டுமே.
ஆனால் அந்தக் காலத்தில் அவனைப் போன்ற நண்பன் எனக்கு இல்லை. நாங்களிருவரும் தினம் சந்திப்போம். மணிக் கணக்காகப் பேசுவோம், பகற்கனவு காணுவோம். எங்களிரு வருக்கும் விளையாட்டில் ஆர்வம் உண்டு. வேட்டையிலும் நாட்டம் உண்டு. அந்தக் காலத்தில் இப்போதிருப்பதுபோல சினிமா கிடையாது. நாங்கள் வேலை செய்த இடத்தில் எப்போ தாவது ஒரு தடவை ஒரு டூரிங் டாக்கீஸ் வந்து சில நாட்கள் திரைப்படக் காட்சிகள் நடத்தும். அந்த நாட்களில் நாங்கள் சேர்ந்தே சினிமாவுக்குப் போவோம். நாங்கள் மற்ற போலீஸ் அதிகாரிகளைப் போல் பாட்டுக் கேட்கத் தொழில் முறைப் பாடகிகளின் வீடுகளுக்குப் போவதில்லை. நாங்கள் இந்த விஷயத்தில் பழைய கட்டுப்பாடுகளை மதிப்பவர்கள்.
மேகர்பானுக்குத் திருமணப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. என் மனைவி பிறந்தகம் போயிருந்தாள். மேகர்பான் படித்த பெண்ணாகத் தேடிக் கொண்டிருந்தான். அந்தக் காலத்தில் பெண்கள் கல்வி கற்கும் வழக்கம் இல்லை.
நாங்கள் இருந்தது பஞ்சாபில் ஒரு கண்டோன்மென்ட் நகரம். அங்கே ஒரு பட்டாளத்துக் காண்டிராக்டர் இருந்தான். பெரிய லட்சாதிபதி.. நாங்கள் அங்கு போய்க் சேர்வதற்குச் சிறிது காலம் முன்புதான் அவன் இறந்து போயிருந்தான். அவனுடைய சொத்தை அவனுடைய இரண்டு மனைவிகளும் பகிர்ந்து கொண்டார்கள். இருவருக்கும் குழந்தைகள் இல்லை. மூத்தவள் எப்போதும் பூஜை புனஸ்காரங்களில் ஈடுபட்டிருந்தாள். இளையவளோ கேளிக்கை, விளையாட்டுகளில் பொழுது போக்கினாள். இருவரும் அவரவர் மாளிகைகளில் தனித்தனியே வாழ்ந்து வந்தனர். தனித்தனி வேலைக்காரர்கள், தனிவண்டிகள். அவர்களுடைய கணவனுக்கு "ராஜா" பட்டம் கிடைத்திருந்ததால் அவர்கள் "பெரிய ராணி", "சின்ன ராணி" என்றழைக்கப் பட்டார்கள்.
சின்ன ராணியின் பெயர் சூரஜ்பான். அவள் போன்ற அழகி உலகத்திலேயே இல்லை என்று நாங்கள் கேள்விப்பட்டோம். ஆனால் அவளது நடத்தை அவ்வளவு சரியில்லையாம். அவள் பர்தா வழக்கத்தைக் கடைப்பிடிக்கவில்லை. கிளப்புக்குப் போவாள், வெள்ளைத் துரைகளுடன் நடனமாடுவாள், ஊரிலுள்ள அதிகாரிகளை அழைத்து விருந்து வைப்பாள். அவள் ஒரு சேலையை இரண்டாம் முறை அணிந்து யாரும் பார்த்த தில்லை. அவளிடம் குறைந்தது ஐந்தாறு ஜோடி செருப்புகள் இருக்குமாம். அவள் பாலாடையை உடம்பில் தேய்த்துக்கொண்டு பால் தொட்டியில் குளிப்பாளாம். பின்னர் அந்தப் பால் ஊரில் விற்பனைக்கு வருமாம்.
யாராவது ஒருவனை - அவன் யாராயிருந்தாலும் சரி - அவளுக்குப் பிடித்துவிட்டால் அவனுடைய எல்லா ஆசை களையும் தீர்த்து விடுவாளாம். அவளுக்குப் பணம் தேவையில்லை, பரிசு தேவையில்லை; அவனை அவளுக்குப் பிடித்திருக்கவேண்டம் என்பதுதான் ஒரே நிபந்தனை. ஆனால் அவளுக்கு யாரையும் எளிதில் பிடித்து விடாது. நாங்கள் அந்த ஊருக்கு வந்து சில நாட்களுக்குப் பிறகு எனக்கு சூரஞ்பானிடமிருந்து அவள் நடத்தும் விருந்து ஒன்றுக்கு அழைப்பு வந்தது. அவளுடைய பூங்காவில் விருந்து. மேகர்பானைக் கேட்டால் அவன் தனக்கும் அழைப்பு வந்திருப்பதாகச் சொன்னான். ஆனால் அவன் போகப்போவ தில்லையாம். நான் வேடிக்கையாகச் சொன்னேன், "ஒருவகை மாம்பழம் இருக்கு, அதுக்குப்பேர் 'ராணி பசந்த்', அதாவது 'ராணிக்குப் பிடித்தது..' உனக்கு 'ராணி பசந்த்' ஆக இஷ்ட மில்லையாக்கும்!"
"நான் மாம்பழமில்லே. எனக்குத் தன்மானம் இருக்கு. பலகாலமா ஆண்பிள்ளைதான் தனக்குப் பிடித்த பெண்ணைத் தேர்ந்தெடுத்துக்கிட்டு வந்திருக்கான். தேர்ந்தெடுக்கற உரிமை ஆணுக்குத்தான். இங்கே விஷயம் நேர்மாறாயிருக்கு. சூரஜ்பான் என்னைத் தனக்குப் பிடிச்சிருக்கான்னு பார்க்கணுமா?" பேசும் போதே மேகர்பானின் இரத்தம் கொதித்தது.
"ஏன் சுயம்வர வழக்கம் இல்லியா? அதுவும் ராஜபுத்திரர் களிடம் உண்டே!"
"உண்டுதான். ஆனா, சுயம்வரத்திலே பெண்ணால் தேர்ந் தெடுக்கப்படாதவங்க சண்டைபோட்டு வலுக்கட்டாயமாக அவளைத் தூக்கிட்டுப் போற வழக்கமும் உண்டே..! தவிர, அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? குமரிப்பெண்ணோட சுயம்வரம் எங்கே, நடத்தை கெட்டவளோட காமவேட்டை எங்கே?"
இதற்குப் பிறகு நான் மேகர்பானைத் தொந்தரவு செய்ய வில்லை. நான் தனியாகவே விருந்துக்குப் போனேன். சூரஜ்பான் உண்மையிலேயே பிரமாத அழகிதான்! அவளை எப்படி வருணிப்பேன் நான்! நான் உங்க மாதிரி கவியில்லே. இருண்ட இரவில் வாணவேடிக்கை பார்க்கிறோம். வானத்தை ஒளிமய மாக்கிக் கொண்டு பல நிற நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறு கின்றன. இது வெறும் கந்தகம், வெடியுப்பு போன்ற பொருள்களின் விளையாட்டுதான் என்பதை நாம் கணநேரம் மறந்து மெய் மயங்கிப் போகிறோம். அது மாதிரிதான் இருந்தது. அந்தப் பூங்கா விருந்தில் சூரஜ்பானின் வருகை. அங்கிருந்தவர்கள் கிளர்ந்து சிலிர்த்துக் கொண்டார்கள். கண்ணாடி கிடைத்தால் அவர்கள் அதில் தங்கள் முகங்களைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். தங்களை ராணிக்குப் பிடிக்குமா என்று கவலைப்பட்டிருப்பார்கள்.
அதன்பிறகு அழைப்புக் கிடைத்தபோதெல்லாம் நான் அவளுடைய விருந்துகளுக்குப் போயிருக்கிறேன் - 'ராணி பசந்த்' ஆவதற்காக அல்ல, 'வாண வேடிக்கை' பார்ப்பதற்காக. ஆனால் மேகர்பான் ஒர பிரச்சினையாகி விட்டான். அவனக்கு விருந்து களில் கலந்து கொள்ள இஷ்டமில்லை. ஆனால் போகாமல் ஒதுங்கியிருக்கவும் முடியவில்லை. மாற்றல் வாங்கிக்கொண்டு வேறோரிடத்துக்கு ஓடிப்போகவும் முடியவில்லை. அவனுடைய அகம்பாவம் அவனை ஓடவிடவில்லை. சூரஜ்பானைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலோ அவனை ஒதுங்கியிருக்கவிடவில்லை. கடமையுணர்வு அவனை ஓடிப்போக அனுமதிக்கவில்லை. அவன் உள்ளூறத் துடித்துக் கொண்டிருப்பது எனக்குத் தெரிந்தது.
"நீ லீவு எடுத்துக்கிட்டு ஊருக்குப் போய்க் கலியாணம் பண்ணிக்கிட்டு வா!" என்று நான் அவனிடம் சொன்னேன். அவன் பேசாமல் கேட்டுக் கொண்டான்; பதில் சொல்லவில்லை.
ஒருநாள் சூரஜ்பான் என்னிடம் "மேகர்பான் சிங் உங்க சீநேகிதர்தானே? அவர் ஏன் என் பார்ட்டிக்கெல்லாம் வர்ற தில்லே? நீங்க அவரைக் கூட்டிக்கிட்டு வரக்கூடாதா?" என்று கேட்டாள்.
நான் அவளிடம் உண்மையை எப்படிச் சொல்வது "எப்போதும் உண்மையே பேசவேண்டும்" என்ற உபதேசம் பாடப் புத்தகத்துக்குத்தான் பொருந்தும். ஆகையால் எதையோ சொல்லி மழுப்பினேன்.
பிறகு மேகர்பானிடம் இந்த விஷயத்தைச் சொன்னேன். இதைக்கேட்டு அவன் சஞ்சலமடைந்தான். மகிழ்ச்சியடைவதா அல்லது கோபித்துக் கொள்வதா என்று புரியவில்லை அவனக்கு. அவன் என்னை விட்டுவிட்டுத் தனியே உலவப் போய்விட்டான்.
சூரஜ்பான் அளித்த அடுத்த விருந்துக்கு கேர்பானும் வந்திருந்தான். நான்தான் அவனை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். எனக்குக் கண்ணாடி கிடைத்திருந்தால் அதை மேகர்பானின் முகத்துக்கு நேரே நீட்டியிருப்பேன். ஆனால் கண்ணாடி எதற்கு! சூரஜ்பானின் கண்களேதான் கண்ணாடியாக இருந்தனவே? அவளுடைய அழகிய கருத்த கண்களில் அவன் தன் சிவந்துபோன முகம் பிரதிபலிக்கக் கண்டான்.
ஒன்றிரண்டு கணங்களில் எவ்வளவு பெரிய நிகழ்ச்சியொன்று நடந்துவிட்டது! அதை யாரும் கவனிக்கவில்லை - என்னைத் தவிர.
மேகர்பானைக் கேலி செய்து அவனுக்குக் கோபமூட்ட நினைத்தேன்! ஆனால் துணியவில்லை. அவனுடைய முகத் தோற்றத்தைப் பார்த்துப் பின்வாங்கினேன். அவன் இயந்திரம் போல் தன் கடமைகளைச் செய்தான், நல்ல முறையில் செய்தான். என்னுடன் எப்போதும்போல் பழகவும் செய்தான்; ஆனால் உள்ளூர மாறிக் கொண்டிருந்தான். நானும் வலியப்போய் அவனுடன் பேசுவதில்லை. அவன் ஏதாவது சொன்னால் கேட்டுக் கொள்வேன், அவ்வளவுதான். அவனுடைய உடல் முழுதும் ஒருத்திக்காக ஏங்கிக் கொண்டிருந்தது. அவனுடைய மனமுந்தான். ஆனால் அவன் இந்த உண்மையை ஒப்புக் கொள்ளவில்லை. அவன் பேசியது வேறு. "நான் அவளை வெறுக்கிறேன். அவ ஒழுக்கங் கெட்டவ. அவ ஒரு தேவடியாதானே! பணம் வாங்கிக்காத தேவடியா! எனக்குத் தேவைப்பட்டா நேரடியா ஒரு தேவடியாகிட்டே போவேன். நான் இஷ்டப்பட்டவகிட்டே போவேன். காசு கொடுத்து அவளை அனுபவிப்பேன். நான் ஏன் சூரஜ்பான்கிட்டே போகணும்? நான் அவகிட்டே போனா அவ இஷ்டந்தான் ஜெயிக்கும். அவ விலைகொடுத்து என்னை அனுபவிப்பா. நான் என்ன ராணி பசந்தா?
இந்த மாதிரி ஒவ்வொரு நாளும் என்னிடம் சொல்லிக் கொண்டிருப்பான் மேகர்பான். அவனுள்ளே ஒரு போர் நடந்த கொண்டிருந்தது. அவனுக்கு அமைதியில்லை. சுரஜ்பான் அவன் மனதைக் கவர்ந்தவிட்டாள் என்ற உண்மையை அவன் என்னிடம் ஒப்புக்கொள்ள விரும்பவில்லை. எனக்கு எல்லாம் புரிந்திருந்தது. ஆனால், நான் புரிந்திருப்பதாகக் காட்டிக் கொள்ளவில்லை.
"யாரும் உன்னை அவகிட்டே போகக் கட்டாயப்படுத்தலே.
நீ போகலேன்னா யாரும் ஒண்ணும் நினைச்சுக்கப் போறதில்லே. அவ எல்லாரையும் விருந்துக்கு அழைக்கற மாதிரி உன்னையும் அழைச்சிருக்கா. அவ தனக்கு யாரைப் பிடிச்சிருக்கு, யாரைப் பிடிக்கல்லேன்னு விளம்பரம் பண்றாளா? அதையெல்லாம் ஜாடை மாடையா உணர்த்திடுவா. அவ தனக்குப் பிடிச்ச ஆளை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வரச் சொல்லுவா. அங்கே அவளோட கார் வந்து அவனைக் கூட்டிக்கிட்டுப் போகும். யாரும் அதைக் கவனிக்க மாட்டாங்க. அப்புறம் அவனை இன்னொரு இடத்திலே இறக்கி விட்டுடுவா..." என்று நான் சொன்னேன்.
"மோசக்காரி! முண்டை! ராட்சசி! பிசாசு!" என்றெல்லாம் கெட்ட வார்த்தைகளால் திட்டுவான் அவன்.
"நீ ஏன் இப்படி அசிங்கமாத் திட்டறே அவளை? அவ உனக்கு என்ன கெடுதல் பண்ணினா? நீ ஏன் இவ்வளவு அநாகரீகமா நடந்துக்கறே?" என்று அவனைக் கடிந்து கொள்வேன்.
ஒரு நாள் மேகர்பான் என்னிடம் சொன்னான், "எல்லாம் ஜாடைமாடையா ஏற்பாடாயிடும்னு நீ சொன்னியே. என்ன ஜாடைமாடை? கடையிலே மட்டரகப் புத்தகம் விக்கறாங்களே, அந்தப் புத்தகத்திலே இந்த ஜாடைமாடையெல்லாம் எழுதி யிருக்கு."
"அதைப்பத்தி உனக்கென்ன? நீதான் அவகிட்டே போகப் போறதில்லையே..! இல்லே, போகப்போறியா?"
"நான் போவேனா அந்தத் தேவடியாகிட்டே! அது நடக்காது! என் பேரு மேகர்பான் சிங். நான் சௌஹான் வம்சத்து ராஜபுத்திரனாக்கும்! காலக்கோளாறு, போலீசிலே வேலை பார்க்க வேண்டியதாயிருக்கு. அதுக்காக நான் தாழ்ந்து போவேனா? நீ கூட என்னைப் புரிஞ்சுக்கலியே!"
நான் மௌனமாகக் கேட்டுக் கொண்டேன். அவன் நாளுக்கு நாள் பைத்தியமாகிக் கொண்டிருந்தான். அவனுக்கு உள்ளூற ஏற்பட்டிருந்த ஆசையைத் தீர்த்துக் கொள்வதானால் அவனது கௌரவமும் அழிந்துவிடும். ஆனால் அந்த ஒழுக்கங் கெட்டவளோ அவனைப் பலமாகத் தன்பக்கம் ஈர்க்கிறாள். அவள் விரும்பிய யாரும் அவளிடமிருந்து தப்பியதில்லை; அவள் அவனைக் காந்தம்போல் இழுத்துக் கொண்டுவிடுவாள்.
அவள் என்னை விரும்பவில்லை என்பது என் அதிருஷ்டந் தான். அவள் மேகர்பானுக்கு வசிய மருந்து போட்டு விட்டாள். அதற்கு முன் எனக்கு வசியக் கலையில் நம்பிக்கையில்லை. இப்போது கொஞ்சங் கொஞ்சமாக நம்பிக்கை வந்தது. மேகர்பான் என் விடுதிக்குப் பக்கத்து விடுதியில் வசித்தான். நான் அவனுடைய நடமாட்டங்களைக் கவனிக்கத் தொடங்கினேன்.
அவன் இரவு பத்துமணிக்கு வெளியே போவான். விடியு முன்னர் திரும்பி வருவான். அலங்கோலமாகத் தோற்றமளிப்பான் அவன். பைத்தியக்காரனின் பார்வை. தொடர்போ ஒழுங்கோ இல்லாமல் ஏதேதோ வேசுவான். அவன் பேச்சில் அசிங்கமான திட்டுக்களைத் தவிர வேறெதுவும் புரியாது. கூடைகூடையாய்க் கெட்ட வார்த்தைகள். நாளுக்குநாள் அவை பெருகுவதைக் கவனித்தேன்.
அவன் வீட்டாருக்குத் தகவல் அனுப்பிக் குடும்பத்துப் பெரியவர் யாரையாவது வரவழைக்கத் தொன்றியது எனக்கு. விவகாரம் இன்னும் முற்றிவிடவில்லை. மோசம் நிகழ்ந்து விட வில்லை இன்னும். நல்ல அழகான ஒரு பெண்ணாகப் பார்த்து அவனுக்கு கலியாணம் செய்து வைத்துவிட்டால் ஒரே நாளில் அவனுடைய அசட்டுப் பைத்தியம் தெளிந்துவிடும். அதன் பிறகு சியால்கோட்டிலிருந்து லாகூருக்கோ அமிருதசரசுக்கோ மாற்றலாகிப் போய்விட்டால் சூரஜ்பானின் நினைவு வாண வேடிக்கைபோல் அணைந்து போய்விடும்.
ஆனால் மேகர்பானின் குடும்பத்துக்குச் செய்தியனுப்பத் துணிவு ஏற்படவில்லை எனக்கு. அவன் கோபித்துக் கொள்வானே என்ற பயம். அவன் சாதாரணமாக நிதானமானவன்தான். ஆனால் கோபம் வந்துவிட்டால் கண்மண் தெரியாது அவனுக்கு.
இதன்பிறகு ஒரு நாள் சூரஜ்பான் அளித்த விருந்துக்கு நானும் போனேன், அவனும் போனான். அன்றே எல்லாம் ஜாடை மாடையாக ஏற்பாடாகி விட்டது.
சில நாட்களுக்குப் பிறகு ஒருநாள் நான் அணிவகுப்புக்குப் போக உடையணிந்து கொண்டிருந்தபோது மேகர்பான் அங்கே வந்தான். அவனது உடலுறுப்பு ஒவ்வொன்றிலும் மகிழ்ச்சிக் கிளர்ச்சி. ஆனால் அவன் அதை மறைத்துக் கொண்டு வருத்தக் குரலில் "நான் செத்துப் போயிட்டேன்!" என்றான்.
அவன் என்ன சொல்கிறான் என்று நான் புரிந்து கொண்டாலும் புரியாதவன்போல, "என்ன ஆச்சு?" என்று கேட்டேன்.
"நான் ராணிபசந்த் ஆயிட்டேன்" என்றான் சோகக் குரலில்.
"நீ செய்யறது சரியில்லே. அதுக்கு அடையாளம் நீ இப்போ அணி வகுப்புக்கு மட்டம் போடறதுதான். இப்படிப் பண்ணினா உனக்கு வேலை போயிடும்!" நான் சொன்னேன்.
அவன் பெருமூச்சு விட்டுக்கொண்டு சொன்னான், "எனக்கு வேற வழியிலே. விதி என்னை எங்கேயோ இழுத்துக்கிட்டுப் போகுது.. நீ என் சிநேகிதன், எனக்கு ஒரு யோசனை சொல்லுவியா?"
"என்ன யோசனை?" அவனுக்காக அனுதாபம் ஏற்பட்டது எனக்கு.
"நான் அனுபவிச்சதுக்கு விலை கொடுக்க ஆசைப்படுகிறேன்," ஒடுங்கும் குரலில் சொன்னான் அவன், "விலை கொடுக்கலேன்னா நான் அவளோட அடிமையாயிடுவேன். என் கௌரவம் போயிடும்."
நான் சற்றுச் சிந்தித்துவிட்டுச் சொன்னேன்," அவகிட்டே என்ன இல்லே? உன் பணம் அவளுக்கு எதுக்கு? நீ அம்பது ரூபாய் மதிப்புள்ள பரிசு கொடுத்தா, அவ உனக்கு ஐயாயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசு தருவா."
"நான் அவளுக்கு ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பரிசு தருவேன்!" அழுத்தந் திருத்தமாகப் பதிலளித்தான் மேகர்பான். "ஆனா அவ்வளவு பணம் எங்கே கிடைக்கும். சர்க்கார் கஜானா வைக் கொள்ளையடிக்கட்டுமா?"
கேட்டுத் திடுக்கிட்டேன் நான். உடனே அவன் வீட்டாருக்குக் கடிதம் எழுதினேன் மூடி மறைத்துக் குறிப்பாக விஷயத்தைத் தெரிவித்தேன். அவனை ஜாக்கிரதையாகக் கண்காணிக்கவும் செய்தேன். கிறுக்குத்தனமாக எங்காவது கொள்ளையடித்து விடுவானோ என்ற பயம் எனக்கு.
அவன் அணிவகுப்புக்குப் போவதைத் தவிர்ப்பதற்காக ஒரு சான்றிதழ் வாங்க டாக்டரிடம் போனான். அவனை ஆஸ்பத்திரி யில் சேர்த்துவிடும்படி நான் டாக்டரிடம் சொல்லி வைத்தேன். அவனை ஊருக்கு அழைத்துப் போக அவனுடைய அண்ணன் வந்தார். லீவு கிடைக்காமல் ஊருக்குப் போவது எப்படி? லீவுக்கு மனு செய்தான். லீவு அனுமதிக்கப்படும்வரை காத்திருக்க நேர்ந்தது.
இதற்கிடையில் ஒர விபரீதம் நிகழ்ந்துவிட்டது. ஒரு நாள் காலையில் மேகர்பானைக் காணவில்லை. விசாரித்துப் பார்த்ததில் சூரஜ்பானையும் காணோம் என்று தெரியவந்தது.
ஊரெங்கும் தூற்றுப் பேச்சு. சூரஜ்பானின் பக்தர்கள் வருத்தப்பட்டார்கள் மேகர்பானுக்காக - "பாவம், தற்காலிகமான வெறிக்கு ஆட்பட்டுத் தன் வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டானே மனுஷன்!" என்று ஒரு சிலர் வேடிக்கையாகப் பேசிக் கொண்டார்கள் - "ராஜகுமாரியும் பாதி ராஜ்யமும் கிடைச்சா நாங்களும் ஓடிப்போகத் தயார்..! சூரஜ்பானும் கெட்டிக் காரிதான்! அவளோட காதலன் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவன், நல்ல அழகனுங்கூட!"
எனக்குத் தாங்கமுடியாத வருத்தம். மேகர்பானின் அண்ணன் அழுதுகொண்டே ஊர் திரும்பிச் சென்றபோது அவருக்கு விடையளிக்க நானும் சிறிது தூரம் சென்றேன். "எல்லாம் அதிருஷ்டம்" என்றார் அவர். "ஆமா, எல்லாம் கிஸ்மத்துதான்" என்றேன் நான். நாம் இந்துவானாலும் சரி, முஸ்லீமானாலும் சரி, விதியை நம்புபவர்கள். விதி விதிப்பது நடந்தே தீரும்.
மாதங்கள் கழிந்தன. மேகர்பானைப் பற்றிச் செய்தி எதுவுமில்லை. சூரஜ்பானின் வீடு இருண்டு கிடந்தது. அவள் எங்கிருக்கிறாள் என்று அவளுடைய வேலைக்காரர்களுக்குத் தெரியவில்லை.
ஓராண்டுக்குப்பின் அஜ்மீரிலிருந்து அவனுடைய கடிதம் கிடைத்தது. "அஜ்மீருக்கு யாத்திரையாக வாயேன்!" என்று எழுதியிருந்தான். அவனுக்கு என் யோசனை தேவை என்று உணர்ந்தேன். லீவு எடுத்துக்கொண்டு அஜ்மீர் பொனேன். அவன் என்னைச் சந்தித்துத் தன் இருப்பிடத்துக்குக் கூட்டிக்கொண்டு போனான். அவர்களிருவரும் சந்தோஷமாகக் குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தார்கள்.சூரஜ்பான் குடும்பப்பெண் மாதிரி நடந்து கொண்டாள். என்னிடம் கூட ஓரளவு பர்தா முறையைக் கடைப்பிடித்தாள்.
அவர்கள் சியால்கோட்டிலிருந்து ஓடிவந்த பின் வெவ்வேறு ஊர்களுக்குப் போனார்களாம். அவர்கள் எங்கே போனாலும் அவர்கள் யார்? அவர்கள் புருஷன் பெண்சாதியா? என்ற கேள்வி அவர்களை எதிர் கொண்டது. சுரஜ்பான் "ஆமா" என்று சொல்லி விடுவாள்.ஆனால் மேகர்பான் வாயை மூடிக் கொண் டிருப்பான். அவளைத் தன் மனைவி என்று ஏற்றுக் கொள்ள அவனுக்குத் தயக்கம். அப்படிச் சொல்வது பொய் மட்டுமல்ல; அவனுக்குப் பிடிக்காத விஷயமுங்கூட. ஆனால் அவர்கள் தங்களைக் கண்வன்-மனைவி என்று சொல்லிக் கொள்ளா விட்டால் அவர்களுக்கு வீடு கிடைக்காது, வேலைக்காரன் கிடைக்க மாட்டான், சமூகத்தின் உதவியோ அங்கீகாரமோ கிடைக்காது. வேசிகளின் குடியிருப்பில் போய் வாழ வேண்டி யிருக்கும். இதற்கு இணங்குவாளா சூரஜ்பான்? தன்மானம் மிக்கவள் அவள். அவள் என்ன சாதாரண வேசியா!
ஆனால் அவர்கள் போகுமிடங்களிலெல்லாம் சி்றிது காலத் துக்குப் பிறகு அவர்களைப் பற்றிய உண்மை வெளியாகி விட்டது. அதன் பிறகு அங்குள்ள இளவட்டங்கள் சூரஜ்பானின் இளமையையும் அழகையும் பங்கு போட்டுக் கொள்ள முற்பட் டனர். மனைவியல்லாத ஒருத்தியின் அழகை ஒருவனே அனுப விப்பதை மற்றவர்கள் பொறுத்துக் கொள்வதில்லை. அவர்கள் காதலரிருவரையும் தொந்தரவு செய்யத் தொடங்கினர். போலீசிடம் உதவிக்குப் போய் பயன் இல்லை. போலீசார் கலியாணம் நடந்ததற்கான ருசு கேட்பார்கள் அல்லது பெரிய தொகையை லஞ்சமாகக் கேட்பார்கள். அழகைப் போட்டியின்றி அனுபவிக்க வேண்டுமென்றால் அதைக் கைப்பற்றினால் மட்டும் போதாது. அதன்மேல் சட்டப் பூர்வமான உரிமையும் இருக்க வேண்டும் என்று மேகர்பான் புரிந்து கொண்டான். சூரஜ்பான் தன் மனைவி என்பதற்கான சான்றைக் காட்ட வேண்டும்.
குழம்பித் தவித்தான் அவன். ராஜபுத்திரனான அவன் ஒரு வியாபாரியின் விதவையைக் கலியாணம் செய்து கொள்வதா? அதுவும் நடத்தை கெட்ட சூரஜ்பானை! அவனுக்கு இதயம் வெடித்துவிடும் போலிருந்தது. ஏற்கெனவே அவனுக்குத் தலைகுனிவு ஏற்பட்டுவிட்டது. இனி அவனது மானம் மண்ணோடு மண்ணாகி விடும். தப்பியோடவும் வழியில்லை என்று கண்டான் மேகர்பான். இனி வேலை கிடைக்காது. சொந்த ஊருக்குப் போய் விவசாயம் செய்வதானால் இரண்டு வேளையும் பெரியவர்களின் ஏச்சைக் கேட்டுக் கொள்ள வேண்டும். அவனை யார் கலியாணம் செய்து கொள்வார்கள்? கலியாணம் இல்லாவிட்டால் பெண் துணைக்கு என்ன செய்வது? இந்த வயதிலேயே அவன் சன்னியாசியாக வேண்டுமா?
அவன் எங்கும் ஓடாமலிருப்பதென்றால் ஒன்று, சூரஜ் பானைக் கலியாணம் செய்துகொள்ள வேண்டும், அல்லது அவளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இரண்டு வழிகளுமே பிடிக்கவில்லை மேகர்பானுக்கு. சூரஜ்பானுக்கு இந்த இரண்டுமே பிடித்திருந்ததாக அவனுக்குத் தோன்றியது.
பகிர்ந்துகொள்வதைவிடச் சாவது மேல். ஆகையால் கலியாணந்தான் ஒரேவழி. கலியாணப் பேச்செடுத்தாலே அவனது கண்களில் நீர் பெருகியது. இதயம் தவித்தது. அவனது குலப் பெருமைக்கு இழுக்கு, ஆண்மைக்கு அவமானம்..
இந்த மாதிரி ஒரு கட்டாய நிலை ஏற்படாவிட்டால் அவன் கலியாணம் செய்துகொண்டிருக்கமாட்டான். ஒரு வைசியப் பெண்ணை, அதுவும் நடத்தை கெட்டவளைக் கலியாணம்! பங்கு கேட்பவர்களின் தொல்லை தாங்கமுடியாமல், அவள்மேல் தன் உரிமையை நிலைநாட்டிக் கொள்வதற்காக, அவளைப் போட்டியின்றி அனுபவிப்பதற்காகக் கலியாணம் செய்துகொண்டு விட்டான் கடைசியில். கலியாணமானபின் சூரஜ்பான் பர்தா முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வற்புறுத்தினான். சூரஜ்பான் இதற்குத் தயாராயில்லை இருந்தாலும் கலியாண மானதில் அவளுக்குத் திருப்திதான். ஒரு உயர்ந்த குலத்தைச் சேர்ந்த ராஜபுத்திரனைத் திருமணம் செய்து கொள்வது அவளது சிறு பிராயக் கனவு. அந்தக் கனவு நனவாகியதற்காக அவள் சில தளைகளைப் பொறுத்துக்கொள்ள இணங்கினாள். மனைவியைப் பர்தாவுக்குள் வைத்தபின் சற்றுக் கவலை குறைந்தது மேகர் பானுக்கு. இப்போது அவன் வாழ வழி தேடவேண்டும். அதற்காகப் பஞ்சாபுக்கு வெளியே போகத் தீர்மானித்தான் அவன். அங் கெல்லாம் ஒளிவு மறைவாக வாழ வேண்டிய அவசியமில்லை. உண்மையான முறையில் அவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளலாம்.
அவன் எங்கெங்கோ சுற்றிவிட்டுக் கடைசியில் அஜ்மீர் வந்து சேர்ந்தான். தன் ராணுவ அனுபவத்தைக் காட்டி ரயில் வேயில் ஒரு வேலை தேடிக் கொண்டான். சம்பளம் அதிகமில்லை, இருந்தாலும் சொந்த சம்பாத்தியம்.
இப்போது ஒரு புதிய பிரச்சினை தலையெடுத்தது. இந்த வேலையில் அவன் மாதத்தில் இருபது நாட்கள் வெளியூர்களில் பிரயாணம் செய்ய வேண்டியிருந்தது. போகுமிடமெல்லாம் மனைவியைக் கூட்டிப்போக முடியாது. தனியாக விட்டுவிட்டுப் போகவும் மனமில்லை. இப்பேர்ப்பட்ட விலை மதிப்பற்ற மாணிக் கத்தை வீட்டில் வைத்துவிட்டு அவன் வெளியூரில் இரவுகளைக் கழித்தால் யாராவது வீட்டில் கன்னம் வைத்து விடுவானே! நகை, துணிமணி, பாத்திரம் பண்டம் திருடப்பட்டதாகப் போலீஸ் ரிகார்டில் எழுதப்படும். ஆனால் உண்மையில் திருடு போன பொருளை எழுதி வைக்க முடியாதே! அந்தப் பொருளுக்கு உரிமையுள்ளவன் வெளியூரில் சுற்றிக் கொண்டிருப்பான்.
மேகர்பான் என்ன செய்வான், பாவம்! அவன் வீட்டைக் கவனிப்பானா, வெளி வேலையைக் காப்பாற்றிக் கொள்வானா? சூரஜ்பானுக்கு இந்தப் பிரச்சினை எதுவுமில்லை. அவள் தன் கனவு நனவாகி விட்டதில் திருப்தியடைந்திருப்பதாகத் தோன்றியது. ஆனால் இந்த முடிவையா மேகர்பான் கனவு கண்டான்!
இந்த சமயத்தில்தான் அவன் என்னிடம் யோசனை கேட்க என்னை அஜ்மீருக்கு அழைத்தான்.
அவர்கள் திருமணம் செய்து கொண்ட செய்தி கேட்டு எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. நான் முஸ்லீம். இந்த மாதிரிக் கலியாணத்தில் எனக்கு அருவருப்பு இல்லை. மேகர்பான் கோபித்துக் கொள்வானோ என்று பயந்துதான் நான் முன்னமேயே அவனுக்குக் கலியாண யோசனையைச் சொல்லவில்லை. என் யோசனையைக் கேட்காமலேயே இந்தச் சரியான காரியத்தை அவன் செய்ததில் எனக்குத் திருப்திதான். ஆனால் இனியும் மனைவியைச் சந்தேகிப்பது! இது அசட்டுத் தனம். வாழ்நாள் முழுதும் குடும்பம் நடத்த வேண்டிய மனைவியிடம் இந்த மாதிரி சந்தேகப்படலாமா?
நான் அவனைக் கடிந்து கொண்டபோது அவன், "ஆனா அவ ரொம்ப அழகாச்சே! அவ அவலட்சணமாயிருந்தா சந்தேகப்பட மாட்டேன்.."
மனைவியின் அழகுக்குத்தான் அவன் பயப்படுகிறான் என்று புரிந்தது எனக்கு. இந்த பயம் எப்படித் தெளியும்? அவளுக்கு ஏழெட்டுக் குழந்தைகள் பிறந்தாலா? அல்லது தீராத நோய்வாய்ப் பட்டாலா? அல்லது அவளது இளமை கழிந்த பிறகா?
ஆனால் இவற்றுக்கெல்லாம் நிறைய நேரமிருந்தது. சூரஜ்பான் எங்கள் வயதுதான். அகாலத்தில் கிழமாகும் எண்ணம் அவளுக் கில்லை.
"மனைவி அவலட்சணமாயிருக்கணும்ன ஆசைப்படாதே! உன் ஆசை நிறைவேறினா அப்புறம் கஷ்டப்படப் போறவன் நீதான்!"
அமிலத்தைக் கொட்டி அவளை அவலட்சணமாக்கலாமா என்றுகூட நினைத்தான் அவன்! ஏதோ தற்செயலாக நிகழ்ந்த மாதிரி அமிலத்தைக் கொட்டி விடுவது! நான் திடுக்கிட்டேன். அவனைக் கடுமையாகக் கடிந்து கொண்டேன். "அப்படீன்னா அவளை விவாகரத்து பண்ணிடு, அல்லது அவளை விட்டுட்டுப் போயிடு!" என்றேன்.
அதற்கும் தயாரில்லை அவன். "நான் போலீஸ் வேலையிலே இருந்திருந்தா சம்பளமும் பென்ஷனுமா சில லட்சங்கள் சம்பாதிச்சிருப்பேன். செலவெல்லாம் போக ஒரு லட்ச ரூபாயாவது மிச்சப் படுத்தியிருப்பேன். பார்க்கப்போனா, அந்த ஒரு லட்ச ரூபாயை சீதனமாகக் கொடுத்துத்தான் இவளை கலியாணம் பண்ணிக்கிட்டிருக்கேன், இலவசமா இல்லே. நான் ஏன் விவாகரத்து பண்ணிக்கணும்? விட்டுட்டுப் போகணும்? விதி எங்களை ஒண்ணாப் பிணைச்சிருக்கு."
சட்டென்று எனக்கு ஒரு யோசனை தோன்றியது. "அது சரி, அவ உனக்கு ஒரு லட்ச ரூபாய் தந்தா நீ அவளை விட்டுடுவியா?" என்று கேட்டேன்.
அவன் திடுக்கிட்டான்; சற்ற நேரம் என்னைப் பார்த்து மலங்க மலங்க விழித்தான்; "கேலி செய்யறியா?" என்று கேட்டான்.
"இல்லே, சீரியஸாத்தான் சொல்றேன், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு இது ஒண்ணுதான்!" என்றேன்.
"நீ அவகிட்டே இதைச் சொன்னா, அவ உடனே ஒரு லட்ச ரூபாயை உன்கிட்டே விட்டெறிவா. நான் அவளோட அடிமை யாயிடுவேன் - ராணி பசந்த்!"
சூரஜ்பான் தனக்கு எசமானியாவதை அவன் விரும்ப வில்லை. தானே அவளுக்கு எசமானனாக இருக்க விரும்பினான்.
அத்துடன் அவள் அழகான யுவதியாக இருக்கக் கூடாது, அவலட்சண மனைவியாக இருக்க வேண்டும். அப்படியிருந்தால் அவன் கவலையில்லாமலிருக்கலாம். ஆனால் இவ்வாறு வெளிப் படையாக அவளிடம் சொல்ல முடியாதே!
நான் காஜா சாயபுவின் தர்காவில் பிரார்த்தனை செலுத்திவிட்டு அஜ்மீரிலிருந்து திரும்பினேன். அதற்குச் சில நாட்களுக்குப்பின் திடீரென்று ஒருநாள் சூரஜ்பானின் வீட்டில் விளக்குகள் பிரகாசமாக எரிவதைக் கண்டு வியப்பு ஏற்பட்டது. என்ன விஷயம்..? ராணி திரும்பி வந்து விட்டாள்..! கூட யாராவது வந்திருக்கிறார்களா..? இல்லை, வேறு யாரும் வரவில்லை..
***
கான் பகதூர் தொடர்ந்து கூறினார், "அதுக்கப்புறம் மேகர் பானோடு சந்திப்பு ஏற்படலே. கடிதப் போக்குவரத்தும் இல்லே. நான் பஞ்சாபிலேருந்து வங்காளத்துக்கு மாற்றலாயிட்டேன். இரகசியப் புலன் விசாரணை இலாகாவில் போட்டுவிட்டார்கள். அதிலேருந்து இங்கேயே இருக்கேன். கதை இத்தோட முடிஞ்சது."
"முடிஞ்சு போச்சா?" என் ஆவல் தீரவில்லை. "அப்புறம் என்ன ஆச்சு? சூரஜ்பான் என்ன ஆனா? மேகர்பான் என்ன ஆனார்?" நீராவிப் படகு நீரைக் கிழித்துக் கொண்டு விரைந்தது. நீர்த்துளிகள் எங்கள்மேல் விழுந்தன. சிற்றுண்டி அருந்தி வெகு நேரமாகிவிட்டது. நான் இரவுச் சாப்பாட்டுக்கு ஆர்டர் கொடுத்தேன். இப்போது கான்பகதூர் என் விருந்தினர். "சொல்லக் கஷ்டமாயிருக்குங்க.. மனிதர்களைப் புரிந்து கொள்வதிலேயே காலங் கழிஞ்சிடுச்சு. கிழவனாயிட்டேன். ஆனா அப்போ எனக்கு இவ்வளவு தெரியாது. அதனால்தான் திடுக்கிட்டுப் போயிட்டேன்."
"ஏன், ஏன்?" நான் ஆவலடங்காமல் கேட்டேன்.
"மேகர்பான் நிசமாகவே அவ மூஞ்சியிலே அமிலத்தைக் கொட்டப் பார்த்திருக்கான். ஒரு சில துளிகள் அவளோட கன்னத்திலோ, கழுத்திலோ விழுந்துவிட்டது. அதனாலே அவ இப்போ விருந்து வைக்கறதில்லே, வீட்டைவிட்டு வெளியே வரதில்லே. நல்லவேளை, அதிகக் கேடு ஏற்படலே, அவகிட்ட சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள் இருந்தது. அவ அதையெல்லாம் அப்படியே மேகர்பான்கிட்டே கொடுத்திட்டு ரயில்வே ஸ்டேஷனுக்கு ஓடி வந்தா. நேரே சியால்கோட் வந்து சேர்ந்துட்டா."
நான் அருவருப்பில் காதுகளைப் பொத்திக் கொண்டேன்.
இந்த அக்கிரமத்தைக் கேட்கப் பிடிக்கவில்லை எனக்கு.
மேகர்பானுக்கு நகைகளைப் பத்திரப்படுத்துவதில் கவனம், அவன் எப்படி அவள் பின்னால் ஓடுவான்? எது முக்கியம் - நகையா? அல்லது நாயகியா? நகைதான் அவனுக்கு முக்கியமாகத் தோன்றியிருக்கு.."
சூள்கொட்டினார் கான் பகதூர். அவருடைய அனுதாபம் அந்தப் பெண்ணிடந்தான் என்று தோன்றியது. காதுகளிலிருந்து கைகளைச் சற்று நகர்த்திக் கொண்டேன்.
ஆனால் என் எண்ணம் தவறு.
நன்றாக இருட்டிக் கொண்டு வந்தது. நாங்கள் போக வேண்டிய இடம் வந்து சேர வெகுநேரமாகும். இரவுச் சாப்பாட் டுக்கும் நேரமாகும். கதை முடிந்து போய் விட்டால் சாப்பாட்டு நேரம் வரையில் நாங்கள் என்ன செய்வது?
நான் கைகளைக் காதுகளிலிருந்து எடுத்துக் கொண்டேன்.
கான் பகதூர் சொன்னார்," நடந்த வரையிலே நல்லதுதான். சூரஜ்பான் நல்ல வேளையாகத் தப்பிச்சுட்டா. இது மாதிரி எத்தனையோ பார்த்து விட்டேன். மேகர்பான் அவளைக் கொன்னிருக்கலாமே! அழகிகள் மனம் சபலப் படறது இயற்கை தான். என்னிக்காவது ஒரு நாள் அவளுக்குச் சபலமேற்பட்டா அவன் அவளைக் கொன்று போட்டிருப்பான். அவ பொழைச்சு வந்தது பெரிய காரியம். அமிலம்பட்டு அவ அழகு கொஞ்சம் கெட்டுப் போச்சேன்னா, அது அவளோட பாவங்களுக்கான தண்டனைன்னு வச்சுக்கலாம்."
நான் பதில் சொல்லவில்லை. பாவ தத்துவத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. தவிர, ஒரு பாவிக்கு இன்னொரு பாவி தண்டனை கொடுப்பதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மேகர்பானும் பாவிதானே!
"யோசிச்சுப் பாருங்க!" கான் பகதூர் சொன்னார். "கடைசியிலே அந்தப் பொண்ணுக்கு என்ன பெரிய நஷ்டம் ஏற்படுது, சொல்லுங்க? நஷ்டப்பட்டவன் அவன்தான்! அவனோட நஷ்டத்துக்கு அந்த நகைகள் ஈடாகாது. வேலையிலே இருந்திருந்தா அவன் ஐ.ஜி. ஆகாட்டியும் டி.ஐ.ஜி. ஆகவாவது ஆயிருப்பான். விதி! விதிப்படிதான் எல்லாம் நடக்கும். அந்த ரயில்வே உத்தியோகமும் நிலைக்கலே அவனுக்க. லட்சரூபாய் நகை கிடைச்சதும் அவன் மூளை கெட்டுப் போச்சு. அந்த நகை களை சீதனமாக் கொடுத்து ஒரு கௌரவமான ராஜபுத்திரக் குடும்பத்திலே கலியாணம் பண்ணிக்கிட்டான். அவங்க அவனை இங்கிலீஷ்காரன்கிட்டே வேலை பார்க்க விடலே. அவங்க அவனை ஒரு சுதேச ராஜாவோட ராணுவத்திலே சேர்த்துட்
டாங்க. அந்த வேலையிலே பதவிப் பெருமையைத் தவிர வேற என்ன இருக்குங்க?"
நான் உம்மென்று உட்கார்ந்திருந்தேன். என்ன சொல்வ தென்று தெரியவில்லை எனக்கு.
"இப்போ இந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டரோட நிலை என்ன ஆச்சுன்னு பார்க்கணும். இவன் இன்னொரு ராணி பசந்த். இந்தப் பொண்ணு அபூர்வ அழகியாம். அழகாயிருந்தா நடத்தை கெட்டவளாயிருப்பாங்கறதிலே என்ன ஆச்சரியம்? எவ்வளவுக் கெவ்வளவு கெட்டவளாயிருப்பாளோ அவ்வளவுக்கவ்வளவு அழகியாயிருப்பா."
பெருமூச்சு விட்டார் கான் பகதூர்..
5. காணாமற்போனவன்
பிரமேந்திர மித்ரா
மிகவும் மோசமான நாள். குளிர்காலத்தில் மேகங்கள் கவிந் திருக்கும் நாளைப்போல் எரிச்சலூட்டும் நாள் வேறொன்றும் இருக்க முடியாது. மழையும் பெய்யவில்லை, மேகம் மூடிய வானமும் மங்கிய பூமியும் ஜீவனின்றிக் கிடந்தன. திடீரென்று சோமேஷ் அங்கு வந்திராவிட்டால் நான் எப்படித்தான் நண்பகல் நேரத்தைக் கழித்திருப்பேனோ தெரியாது.
ஆனால் அன்று சோமே ஷும் ஏனோ சுரத்தில்லாமல் இருந்தான். செய்திப் பத்திரிகையை ஓரிருமுறை புரட்டிப் பார்த்து விட்டு அவனிடம் அதை எறிந்துவிட்டுச் சொன்னேன், "ஒரு விஷயம் பார்த்தியா?"
"என்ன?"
"இன்னிப் பேப்பர்லே காணாமப் போனவங்களைப் பத்தி ஒரே சமயத்திலே ஏழு விளம்பரங்கள்!" இந்தச் செய்தியில் எவ்வித ஆர்வமும் காட்டவில்லை சோமேஷ். இயந்திரம்போல் சும்மா சிகரெட் புகையை ஊதிக் கொண்டிருந்தான். நிசப்தமான அறையில் புகை சுருள்சுருளாகக் கிளம்பி உயரே போய்க் கொண்டிருந்தது. மற்றபடி எல்லாம் சலனமற்றிருந்தது. வெளியி லிருந்த சோர்வு எங்கள் மனதிலும் தொற்றிக்கொண்டுவிட்டாற் போலிருந்தது.
இந்தச் சோர்வுமிக்க சூழ்நிலையைக் கலைத்து விடுவதற் காகவே நான் பேசத் தொடங்கினேன், இந்தக் 'காணாமற் போன' விளம்பரங்களைப் பார்த்தா எனக்குச் சிரிப்புத்தான் வருது. முக்கால்வாசி கேஸ் என்ன தெரியுமா..? பையன் ராத்திரி சினிமா பார்த்துட்டு ரொம்ப நேரங்கழிச்சு வீடு திரும்புவான். கொஞ்ச நாளா இந்த மாதிரி அடிக்கடி செய்வான். சில சமயம் சாப்பிட உட்காரும் போது அப்பா தன் மனைவியிடம் கேட்டிருப்பார்.
"ஒம்புள்ளெயெக் காணமே! எங்கே போயிருக்கான்?" மனைவி எரிந்து விழுவாள், "சும்மா அனத்தாதீங்க! இந்த மாதிரிப் புள்ளே போயிட்டாலே தேவலாம்!" அப்புறம் பெரிதாக அழுவாள் அவள்.
அப்பா பல்லைக் கடித்துக்கொண்டு பேசினாலும் உள்ளூரத் தன்னிடமுள்ள நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துவார். "அப்படிப் போய்த் தொலைஞ்சா நா பிழைச்சுப் போயிடுவேனே! பாரு, கொஞ்ச நேரத்திலே திரும்பி வந்துடுவான்! இந்த மாதிரி காசு வாங்காமே சாப்பாடு போடற ஓட்டல் வேற எங்கே கிடைக்கும்?"
அம்மா இப்போது அழுதுகொண்டே சொல்வாள், "இந்த நடுக்கற குளிர்லே, ராத்திரியிலே என்ன செய்யறானோ? என்ன பண்ணிடுவானோன்னு பயமாயிருக்கு"
"உம், என்ன பயம்?" அப்பா கேலிப் பேச்சாலேயே அவளுடைய பயத்தை உதறித் தள்ளப் பார்ப்பார். "நம் புள்ளெ ஒண்ணும் பண்ணிடல்லே. யாராவது ஒரு சிநேகிதன் வீட்டிலே மஜாவா இருப்பான். அசௌகரியம் ஏற்பட்டா உடனே வந்து சேர்ந்துடுவான்!"
அம்மாவின் அழுகை ஓயாது. "அவன் எவ்வளவு ரோசக் காரன்னு ஒங்களுக்குத் தெரியுமே!"
எரிச்சலுடன் எழுந்து போய்விடுவார் அப்பா. மாலையில் ஆபிசிலிருந்து திரும்பிவந்து, நிலைமை இன்னும் மோசமாகி விட்டதைப் பார்ப்பார். பையன் வீடு திரும்பவில்லை. அம்மாக்காரி படுத்த படுக்கையாகி விட்டிருப்பாள்.
"என்னை நிம்மதியா இருக்கவிட மாட்டியா! இதைவிட வனவாசம் மேல்!" என்று எரிந்து விழுந்துவிட்டு அப்பா நேரே செய்திப் பத்திரிகை ஆஃபிசுக்குப் போய்விடுவார்.
பத்திரிகை ஆஃபீஸ் என்பது ஒரு சிக்கலான விஷயம். அங்கே எந்த இடத்தில் என்ன இருக்கிறத என்று தெரிந்து கொள்வது மிகவும் கஷ்டம். அப்பா ஒன்றும் புரியாமல் சற்று நேரம் இங்குமங்கும் அலைந்துவிட்டுக் கடைசியில் ஓர் அறையில் நுழைந்து சாதுவாகத் தென்படும் ஒருவரைக் கேட்கத் துணிவு கொள்வார்..- "ஒங்க பேப்பர்லே.. அதாவது.. ஒர் செய்தி வெளியிடணும்.."
அந்த மனிதர் தலையை நிமிர்த்திக் கேலியாகப் பேசுவார் - "செய்தியா? ஏன் நாங்க போடற செய்தியெல்லாம் ஒங்களுக்குப் பிடிக்கல்லியா...? நாங்க இவ்வளவு நாளா ராம நாடகமா பிரசுரிச்சுக்கிட்டிருக்கோம்?"
பையனின் கெஞ்சல் தாங்காமல் அம்மா தான் திருட்டுத் தனமாகச் சேர்த்து வைத்திருக்கும் சிறுவாட்டுப் பணத்திலிருந்த கொஞ்சம் பணம் கொடுத்திருக்கிறாள் அவனுக்க. ஆகையால், பொய் பேசத் துணியாமல் கணவனின் குற்றச்சாட்டைப் பொறுத்துக் கொள்கிறாள்.
அப்பா சொல்லிக் கொண்டு போகிறார்,"இருட்டி இவ்வளவு நேரமாகியும் இன்னும் வர முடியல்லே பெரியவருக்கு! போன தடவைதான் பெரிய தயவு பண்ணிப் பரீட்சையிலே பெயிலானார். இந்தத் தடவையும் என்ன செய்யப்போறார்னு நல்லாப் புரியுது. என் காசெல்லாம் அவருக்கு ஓட்டாஞ் சல்லிதானே! அதனாலே நவாபு இஷ்டம்போல செலவு செய்கிறார்.. விரட்டிவிடப் போறேன். இந்தத் தடவை நிச்சயம் விரட்டி விட்டுடப் போறேன்!"
இந்த ஆர்ப்பாட்டத்தோடு விஷயம் முடிந்திருக்கும். ஆனால் அதே சமயத்தில் அங்கு வந்து சேர்ந்த விட்டான் அருமைப் பிள்ளை!
அப்பா இப்போது சும்மா இருக்க முடியாது. தன் கௌர வத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காவது அவர் ஏதாவது சொல்லத் தான் வேண்டும்.
ஆகவே அவர் கத்துகிறார், "இந்த மாதிரிப் புள்ளெ எனக்கு வேணாம்! நீ வெளியே போ!"
ரோசக்காரப் பிள்ளை அப்பாவின் இந்த ஆணையைக் கடைப்பிடிக்க முற்படுகிறான்.
எந்தப் பக்கம் சமாளிப்பது என்று தெரியாமல் தவிக்கும் அம்மா வேதனையோடு சொல்கிறாள், "சோறு திங்கற சமயத்திலே ஏன் இப்படியெல்லாம் சொல்றீங்க! அப்பறம் சொல்லக்கூடாதா?"
அப்பா தன் மனைவி மேல் எரிந்து விழுகிறார். "நீ செல்லங் கொடுத்தத்தான் இவன் இப்படிக் குட்டிச் சுவராப் போயிட்டான்!"
அம்மா புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொள்கிறாள், பையன் வெளியேறி விடுகிறான்.
மறுநாள் ஒரே களேபரம். அம்மா முதல் நாளிரவிலிருந்து ஒன்றும் சாப்பிடவில்லை. இன்றும் படுக்கையிலிருந்து எழுந்திருக்க மாட்டாள் போலிருக்கிறது. அப்பாவும் இரவு முழுதும் தூங்க வில்லை. ஆனால் இதை ஒப்புக்கொள்ளக் கூச்சமாயிருக்கிறது அவருக்கு.
***
செய்திப் பத்திரிகை ஆஃபீசில் அந்த மனிதரின் கேலிப் பேச்சைக் கேட்டுத் திகைத்துப் போய் இங்குமங்கும் பார்க்கிறார்.
பக்கத்தில் உட்கார்ந்திருந்த மனிதர் பார்ப்பதற்குச் சற்று முரடராகக் காணப்பட்டார். ஆனால் அவர்தான் அனுதாபத் துடன், "பாவம், இவர் ஏதோ கேக்கறார், நீ ஏன் இப்படிப் பேசேறே இவர்கிட்டே...? உக்காருங்க சார்!" என்று சொல்கிறார்.
அப்பா தயக்கத்தோடு ஒர நாற்காலியில் உட்கார்ந்த பின் அந்த மனிதர் கேட்கிறார், "என்ன செய்தி, சொல்லுங்க!"
"செய்தியொண்ணும் இல்லே.. ஒர விளம்பரம்.."
"விளம்பரமா? எந்த மாதிரி விளம்பரம்? எவ்வளவு இடம் வேணும். காப்பி கொண்டு வந்திருக்கீங்களா?"
"இல்லீங்க.. விளம்பரம் இல்லே...பாருங்க, என் பையன் வீட்டிலேருந்து ஓடிப்போயிட்டான்.."
அவர் பேசி முடிப்பதற்குள் அந்த மனிதர், "புரிஞஞசுது, காணாமற்போனகேஸ்தானே..? என்ன விளம்பரம் தரப்போறீங்க? அங்க அடையாள வர்ணனையா, இல்லே, திரும்ப வான்னு வேண்டுகோளா?" என்று கேட்கிறார்.
அப்பாவுக்கு இப்போதுதான் கொஞ்சம் தெளிவு ஏற்படுகிறது. "வேண்டுகோள்தான்.. அவனோட அம்மா அழுதுக்கிட்டே யிருக்கா.."
"புரியுது, புரியுது.. கோவிச்சுக்கிட்டுப் போயிட்டானாக்கும்?" அந்த மனிதர் அப்பாவிடம் ஒரு காகிதத்தைக் கொடுத்து விட்டுச் சொல்கிறார், "எழுதிக் கொடுங்க.."
"எழுதியா?"
அவருடைய குழப்பத்தைக் கண்டு பத்திரிகைக்காரருக்கு அனதாபமேற்படுகிறது. "சரி நாங்களே எழுதிக்கறோம். நீங்க பேரு, விலாசம் மட்டும் எழுதிக் கோடுங்க" என்று சொல்கிறார்.
பெயர் விலாசத்தை எழுதிக் கொடுத்துவிட்டுப் புறப்படும் போது அப்பா வேண்டிக் கொள்கிறார், "கொஞ்சம் நல்லா எழுதுங்க1 இவனோட அம்மா நேத்திலிருந்த ஒரு சொட்டுத் தண்ணி கூடக் குடிக்கலே.."
"அதெல்லாம் நீங்க சொல்லவே வேண்டாம். நாங்க எழுதின விளம்பரத்தைப் படிச்சுட்டு உங்க பையன் அழுது தீர்த்துடப் போறான்.. உங்களுக்குக் கவலையே வேணாம்!"
சற்று மனம் தேறி வீடு திரும்புகிறார் அப்பா.
ஆனால் விளம்பரம் வெளியாகுமுன்னரே வீடு திரும்பி விடுகிறான் பையன். வீட்டில் தங்கிவிட அல்ல, தனக்குத் தேவையான சில புத்தகங்களை எடுத்துக் கொண்டு போகத்தான்.
இப்போது அம்மாவுக்க வந்ததே கோபம்! "போறதுன்னாப் போயிக்கோயேன், குலத்தைக் கெடுக்க வந்த கோடாலிக் காம்பு!
ஒரு பிள்ளையும் அப்பாகிட்டே திட்டு வாங்கறதில்லே! நீதான் ஒரு மகாத்மாவாப் பொறந்துட்டே..! அவர் நேத்து ராத்திரி பூரா இமையை மூடல்லே, தெரியுமா உனக்கு? கவலைப்பட்டுக் கவலைப்பட்டு அவர் மூஞ்சி எப்படி ஆயிருக்குன்னு பார்த்துட்டு வா! கோவிச்சுக்கிட்டுப் போறாராம் பெரிய மனிசர்..!"
அப்பா வீட்டுக்குள் நுழைந்தவாறு மனைவியை அடக்கு கிறார், "ஏன் திட்டிகிட்டிருக்கே? விட்டுத் தள்ளு!"
இப்போது அம்மா பொரிந்து தள்ளுகிறாள்,"நீங்க சும்மா இருங்க! இவ்வளவு செல்லம் ஆகாது! ஏதோ நாலு திட்டுக் கேட்டது பொறுக்கலியாம், வீட்டைவிட்டுப் போயிடுவாராம்! என்ன திமிரு..!"
பெரும்பாலான "காணாமற்போன" விளம்பரங்களின் வரலாறு இதுதான்.." என்ற சொல்லி முடித்தேன் நான். இதற்குள் சோமேஷின் சிகரெட் தீர்ந்துவிட்டது. அவன் இவ்வளவு நேரம் என் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான் என்று தோன்றவில்லை, சற்றே அசையக்கூட இல்லை அவன்.
நான் எரிச்சலடைந்து, "உனக்கு என்ன ஆச்சு, சொல்லு! நான் பேசிக்கிட்டே இருக்கேன், நீ உம்முன்னு உக்காந்திருக்கியே!"
சோமேஷ் பதிலொன்றும் சொல்லாமல் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு தன் கெயிலிருந்த சிகரெட் துண்டை எறிந்தான். பிறகு, "இந்த மாதிரி விளம்பரங்களுக்குப் பின்னாலே பல உண்மையான சோக நிகழ்ச்சிகளும் இருக்கு, தெரியுமா?" என்று சொன்னான்.
"நான் இல்லேன்னு சொல்லலே. சில சமயம் ஓடிப் போனவன் திரும்பி வர்றதில்லே.."
சோமேஷ் சிரித்துக்கொண்டு சொன்னான், "நான் அதைச் சொல்லலே.. திரும்பி வந்ததே ஒரு சோக நிகழ்ச்சியா ஆன கதை ஒண்ணு எனக்குத் தெரியும்.."
"அப்படீன்னா..?"
"கேளு, சொல்றேன்.."
வெளியே மறுபடி மழை தொடங்கி விட்டது. ஜன்னலின் கண்ணாடிக் கதவு வழியே தெருவும் வீடுகளும் மங்கலாகத் தெரிகின்றன. நாங்களிருவரும் உலகத்திலிருந்தே விலகிப்போய் விட்ட மாதிரி ஓர் உணர்வு..
"ரொம்ப வருஷத்துக்கு முன்னால் ஒரு முக்கியமான செய்திப் பத்திரிகையிலே நாள் கணக்கிலே ஒரு விளம்பரம் வந்துக்கிட் டிருந்தத. அது வெறும் விளம்பரமில்லே, ஒரு முழு வரலாறு. அந்த விளம்பரங்களையெல்லாம் வரிசையாப் படிச்சுக்கிட்டு வந்தா ஒரு முழுக்கதை தெரியவரும். அச்சடிச்ச எழுத்திலே காது கொடுத்துக் கேட்டா உண்மையிலேயே வேதனையொலி கேக்கும்.
தொடக்கத்திலே அந்த விளம்பரத்திலே ஒரு தாய் தன் காணாமற் போன பிள்ளையைத் திரும்பி வரச் சொல்லிக் கெஞ்சறா. அதன் மொழியிலே தெளிவில்லே, வேகமில்லே, ஆன் அதுக்குள்ளே தொனித்த தேனையை அதைப் படிச்சவங்கதான் உணர முடியும். அதுக்கப்பறம் வந்த விளம்பரங்களிலே தாயோட அந்த சோக அழைப்பு கொஞ்சங் கொஞ்சமா மறைஞ்சு போச்சு. அப்பறம் வந்த விளம்பரங்களிலே தந்தையோட உணர்ச்சி கரமான -- ஆனால் கூடவே நிதானமான - வேண்டுகோள் "சோபன், திரும்பி வா! உன் அம்மா படுத்த படுக்கையாயிருக்கிறாள். உனக்குக் கொஞ்சமும் கடமையுணர்வு இல்லையா?"
"விளம்பரங்கள் இதன் பிறகும் தொடர்ந்தன. தந்தையின் சோகச் சுமையால் கனத்தாற் போன்ற, தொண்டையில் அடைத்துக் கொண்டாற் போன்ற விளம்பர வாசகங்கள்.. "சோபன், இப்போது, நீ திரும்பி வராவிட்டால் அம்மாவை உயிருடன் பார்க்க முடியாது! "இதிலும் சோபனின் மனம் இளகவில்லை போலும். விளம்பரங்கள் தொடர்ந்தன, ஆனால் தந்தையால் இன்னும் தாக்குப் பிடிக்க முடியாது போலிருந்தது. இப்போது வெளியான விளம்பரங்களில் உருக்கமான கெஞ்சல்.. நம்பிக்கையிழப்பு.. "சோபன், நாங்கள் எப்படி உயிர் வாழ்கிறோம் என்று உனக்குத் தெரியாது, உடனே வா! இனியும் எங்களைத் துன்புறுத்தாதே!"
"விளம்பரங்கள் ஓலங்களாக மாறிவிட்டன. சிறிது காலத் துக்குப்பின் அவற்றின் தன்மை முற்றிலும் மாறியது. ஒரு சாதாரண அறிவிப்பு: "இந்த வயதுள்ள இந்த மாதிரி தோற்றமுள்ள பையனை ஒரு வருடமாகக் காணவில்லை. கண்டுபிடிப்பவர்களுக்குப் பரிசு வழங்கப்படும்."
"பின் வந்த விளம்பரங்களில் பரிசுத்தொகை படிப்படியாக உயர்ந்தது: பதினாறு - பதினேழு வயதுப் பையன் - இரட்டை நாடி உடம்பு. அடையாளம் - வலது காதுக்கருகில் ஒரு பெரிய மச்சம். அவன் உயிரோடிருக்கிரானா இறந்துவிட்டானா என்பதைத் தெரிவித்தால் சன்மானம் அளிக்கப்படும்.."
சோமேஷ் சற்று நேரம் பேசாமலிருந்தான். மழைச்சாரல் பட்டு ஜன்னல் கண்ணாடிகள் முற்றிலும் மங்கலாகி விட்டன. அறைக்குள் குளிரத் தொடங்கி விட்டது. கம்பளியை எடுத்துக் கொண்டால் தேவலை என்று தோன்றியது.
"சரி, இதெல்லாம் விளம்பரம் சொல்ற கதை. நிஜமா என்ன நடந்தது?" என்று கேட்டேன்.
"சோபனை எனக்குத் தெரியும். அவன் ஏதோ ரொம்பக் கோவத்திலே வீட்டை விட்டு ஓடி வந்துட்டான்னு நினைக்காதே.
வீட்டைவிட்டு ஓடிப்போறதுங்கறது அவனுக்கு ரொம்ப சாதாரண விஷயம். ஏதாவதொரு சின்னக் காரணம் இருந்தாப் போதும். உலகத்திலே ஒரு சில பேர் இயற்கையாகவே விட்டேத்தியாக இருக்காங்க. அவங்க உண்மையிலேயே கல்நெஞ்சக்காரங்க இல்லே. அவங்க நெஞ்சிலே எண்ணெய் தடவினாப்பல இருக்கும். எதிலேயும் அவங்களுக்குப் பிடிப்பு, பாசம் இருக்காது. உனக்கு இதைக் கேக்க ஆச்சரியமாயிருக்கலாம் -- விளம்பரங்கள் வந்துக் கிட்டிருக்கறது அவனுக்குத் தெரிஞ்சாலும் அவன் அதையெல்லாம் கவனமாப் படிக்கலே. என்னிக்காவது ஒரு நாள் ஒரு விளம்பரம் அவன் கண்ணிலே பட்டிருக்கும். அவன் அதைப் படிச்சுட்டு அப்பறம் மறந்து போயிட்டான். வீடு வாசலை விட்டுட்டு வெளி யுலகத்திலே காலங்கழிக்கறதுன்னா எவ்வளவு அசௌகரியங்கள் இருக்கும்! அதையெல்லாம் அசௌகரியமாகவே கருதலே அவன். அதிலேதான் அவன் சுதந்திர உணர்வை அனபவிச்சான், மத்தவங்க அவனைப் பத்தி என்ன நினைச்சுக்கிட்டிருந்தாலும் அவன் தன்னை ஒரு சின்னக் குடும்பத்தோட செல்லப்பிள்ளையா நினைச்சுக்கலே.
"ஆனால் திடீர்னு ஒரு நாள் விளம்பரங்கள் நின்னு போன போது அவன் மனசுகூட சஞ்சலப்பட்டது.
விளம்பரங்கள் நின்னு போனதுகூட ஒரு விசித்திரமான விதத்தில்தான். அவை கொஞ்சங் கொஞ்சமாக ஊக்கங் குறைஞ்சு நின்னு போகலே, திடீர்ன ஒரு நாள் ஒரு விபத்தை அறிவிச்சுட்டு விளம்பரம் நின்னு போச்சு; "சோபன், இனி உன்னாலே உன் அம்மாவைப் பார்க்க முடியாது. அவள் இன்னும் உன் பெயரைச் சொல்லிப் புலம்பிக் கொண்டுதானிருக்கிறாள்..." இதுதான் கடைசி விளம்பரம்.
"இதுக்குள்ளே ரெண்டு வருஷம் ஆயிட்டது. திடீர்னு ஒருநாள் சோபன் தன் ஊருக்குப் போனான். அவன் நடந்து கொண்ட மாதிரியிலேருந்து நி அவனோட சுபாவத்தை ஓரளவு புரிஞ்சுக்கலாம். அவன் தான் வர்ற விஷயத்தை முன்கூட்டித் தெரிவிக்கலே. அவன் ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த வனில்லே.பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவன்னு சொன்னாலும் போதாது. பழையகாலத்து ஜமீந்தார் பரம் பரையைச் சேர்ந்தவன் அவன். அந்தக் குடும்பத்துப் பெருமையும் சொத்தும் ரொம்பத் தேய்ஞ்சு போயிருந்தாலும் இன்னும் நிறையவே மிஞ்சியிருந்தது. அது எல்லாத்துக்கும் ஒரே வாரிசு சோபன்தான்.
"இந்த ரெண்டு வருஷ காலத்திலே சோபன் எவ்வளவோ அசௌகரியங்களுக்கு, கஷ்டங்களுக்கு உள்ளாகியிருந்தாலும் அவற்றை அவன் பொருட்படுத்தலே. ஆனால் அவற்றாலே அவன் மேலே பாதிப்பு ஏற்பட்டிருந்தது, வெளித்தோற்றத்திலே ரொம்ப மாறிப் போயிருந்தான் அவன். இருந்தாலும் ஜமீன் சிப்பந்திகள் தன்னை அடையாளம் கண்டு கொள்ள மாட்டார்கள் என்று அவன் நினைக்கவேயில்லை.
அவன் தன் ஊர் போய்ச் சேர்ந்ததும் நேரே தன் மாளிகைக்குள் நுழையப் போனான்.
நாயப் - அதாவது ஜமீனின் நீண்டகால மானேஜர் - அவனை இடைமறித்துக் கேட்டார், "யாரைப் பார்க்கணும்?"
சோபன் சிரித்தவாறே சொன்னான், " வீட்டுக்குள்ள போகணும்.."
நாயப் அவனைச் சற்றுநேரம் உற்றுப் பார்த்துவிட்டுப் புன்சிரிப்புடன் சொன்னார், "ஓ, உள்ளே நுழைய ஏன் இவ்வளவு அவசரம்? கொஞ்சநேரம் வெளியறையிலே இளைப்பாறிட்டுப் போங்களேன்!"
சோபன் ஆச்சரியத்துடன் கேட்டான், "நாயப், உங்களுக் கென்ன வந்தது?"
"எனக்கொண்ணும் ஆகலியே"
"அம்மா சௌக்கியமா இருக்காங்களா?" சோபனின் குரலில் அக்கறை தொனித்தது.
நாயப் முன்போலவே விசித்திரப் புன்னகையுடன், "நல்லாத் தானிருக்காங்க.. வாங்க என்னோடே!"
சோபன், "உள்ளேயே போகலாமே!" என்றான்.
நாயப் சற்றுக் கடுமையான குரலில், "அதெல்லாம் முடியாது! என்னோட வாங்க!" என்றார்.
சோபன் ஒன்றும் புரியாமல் நாயபுடன் வெளியறைக்கு வந்தான். இந்த ரெண்டு வருஷத்திலே அங்கே சில மாறுதல்கள் ஏற்பட்டிருந்தன. அவர்களோட பழைய குமாஸ்தாவைக் காணோம். ரெண்டு புதிய குமாஸ்தாக்கள் கணக்கு எழுதிக் கிட்டிருந்தாங்க. பழைய பொக்கிஷதார் கிழவரே இன்னும் இருந்ததைப் பார்த்துக் கொஞ்சம் தெம்பு வந்தது சோபனுக்கு.
நாயப் அவனை ஒரு நாற்காலியிலே உட்காரச் சொல்லி விட்டுப் பொக்கிஷதார்கிட்டே "இவருக்கு உள்ளே போகணுமாம்!" என்றார்.
நாயபோட குரல் ஒரு மாதிரியாக இருந்தது. பொக்கிஷதார் தன் மூக்குக் கண்ணாடியை விதலாலே மூக்குமேலே தூக்கிவிட்டுக்கொண்டு அவனை உற்றுப் பார்த்துவிட்டு, "இன்னிக்குத்தான் வந்தாராக்கும்!" என்று சொன்னார்.
"ஆமா, இப்பத்தான்!"
சோபன் பொறுமையிழந்துபோய், "நீங்க என்ன சொல்ல விரும்பறீங்க? தெளிவாச் சொல்லுங்களேன்! அம்மாவுக்கு என்னவாவது ஆயிடுச்சா? அப்பா எப்படி இருக்காங்க?"
அங்கிருந்த எல்லாரின் பார்வையும் அவன் மேலே நிலைத் திருந்தது, எல்லாரும் கொஞ்சநேரம் பேசாமலிருந்தாங்க. அப்பறம் நாயப் சொன்னார், "அவங்க நல்லாத்தான் இருக்காங்க, அனா நீங்க அவங்களைப் பார்க்க முடியாது!"
சோபனுக்குக் கோபம் வந்துவிட்டது. "ஏன் பார்க்க முடியாது? உங்களுக்குப் பைத்தியம் பிடிச்சுடுத்தா? நான் உள்ளே போகிறேன்!"
சோபன் எழுந்தான். உடனே நாயபும் எழுந்திருந்து வாசல்பக்கம் போய் அமைதியாகச் சொன்னார், "இதோ பாருங்க, அனாவசியமாத் தகராறு பண்ணாதீங்க. அதனாலே பிரயோசன மில்லே."
அப்போதுதான் சோபனுக்கு ஒரு பயங்கர உண்மை புரிஞ்சது. அவன் ஆச்சரியமும் பயமுமாகக் கேட்டான், "உங்களுக்கு என்னைத் தெரியல்லியா?"
எல்லாரும் மௌனம்.
"நான்தான் சோபன்..நான் சோபன்தான்னு உங்களுக்குத் தெரியலியா?"
நாயப் இப்போது, "நீங்க கொஞ்சம் இருங்க. இதோ வரேன்" என்று சொல்லிவிட்டுப் பக்கத்து அறைக்குப் போனார். அங்கே ஒரு மேஜை டிராயரைத் திறந்து எதையோ எடுத்துக் கொண்டு வந்து அவனிடம் கொடுத்தார். சோபனோட பழைய போட்டோ தான். அது, சாதாரண போட்டோ. கொஞ்சம் பழுப்பேறி மங்கிப் போயிருந்தது.
"இந்தப் பையனைத் தெரியுமா?" என்று கேட்டார்.
சோபன் ஆச்சரியத்துடன் சொன்னான், "இது என் போட்டோதான்..! நீங்களே ஒப்பிட்டுப் பாருங்களேன்! சே, இதைப் பொறுக்க முடியல்லியே!"
அவன் தலைமுடியைக் கையால் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டான்.
நாயப் அவன்கிடடே உட்கார்ந்து கொண்டு சொன்னார், "பாருங்க, நான் சொல்றதுக்கு வரத்தப்படாதீங்க. உங்களுக்கும் இந்த போட்டோவுக்கும் கொஞ்சம் ஒத்துமை இருக்கு, வாஸ்தவந் தான். ஆனா, இதுக்கு முன்னாலே வந்த ரெண்டு பேருக்கும் இந்த மாதிரி போட்டோவோட ஒத்துமை இருந்தது. அவங்க உடம்பிலேயும் மச்சம் இருந்தது. இப்படி வர்றவங்களோட தகராறு செய்யக்கூடாதுன்னு எங்களுக்கு உத்தரவு. அதனாலே நாங்க உங்களை ஒண்ணும் செய்யமாட்டோம். நீங்க இப்பவே இங்கே யிருந்து போயிடுங்க!"
சோபன் திகைத்துப் போய் அங்கிருந்த மற்றவர்களைப் பார்த்தான். அவர்களுடைய பார்வையில் அவனிடம் நம்பிக்கை யின்மை தெரிந்தது.
அவன் கெஞ்சும் குரல்லே சொன்னான், "நீங்க என்னை நம்பமாட்டேங்கறீங்க. என்னை ஒரு தடவை என் அப்பா அம்மாவைப் பார்க்கவிடுங்க.."
சோர்வோடு கையை அசைத்தார் நாயப், "அப்படீன்னாக் கேட்டுக்கங்க. ஏழுநாள் முன்னாலே சோபன் செத்துப் போயிட்டதா எங்களுக்குத் தகவல் கிடைச்சிருக்கு.."
சோபனால் அந்த நிலையிலும் சிரிக்காமலிருக்க முடியல்லே. "எப்படிச் செத்துப் போனான்?" என்று அவன் கேட்டான்.
அவன் குரல்லே ஒலித்த கேலியைப் பொருட்படுத்தாமல் நாயப் பதில் சொன்னார், "ஒரு சாலை விபத்திலே கார் ஏறிச் செத்துப் போயிட்டானாம். விபத்து நடந்த இடத்திலே அவனை யாரும் அடையாளம் காணல்லே. ஆனா அங்கே அந்த சமயத்திலே இருந்த சில பேர் பத்திரிகையிலே எங்க விளம்பரத்தைப் பார்த்து எங்களுக்குத் தகவல் தெரிவிச்சாங்க. ஆஸ்பத்திரியிலேயும் நாங்க விசாரிச்சுத் தெரிஞ்சுகிட்டோம். டாக்டரோட வர்ணனை சோபனோட அங்க அடையாளத்தோடு ஒத்திருக்கு.."
சோபன் இப்போ என்ன செஞ்சிருப்பான்னு சொல்ல முடியாது. ஆனா அந்த சமயத்திலே அவன் தன்னோட அப்பா வீட்டுக்குள்ளேயிருந்து வெளியே வர்றதைப் பார்த்தான். அவன் இலக்கியம் படிச்சவன்தான். இருந்தாலும் ஒரு மனிதனைப் புயலால் முறிந்த ஒரு மரத்தோடு ஒப்பிட முடியும்னு அவனுக்கு அவரைப் பார்க்கறதுக்கு முன்னாலே தோணினதில்லே. அவருக்கு ஏற்பட்டிருந்த சோகத்தோட பாதிப்பு அவரோட நடையில கூடத் தெரிஞ்சுது.
மத்தவங்க ஏதாவது புரிஞ்சுக்கறதுக்குள்ளே சோபன் அறைக்கு வெளியே ஓடினான். மத்தவங்க அவனுக்குப் பின்னாலே ஓடிவந்தாங்க. அதுக்குள்ளே அவன் தன் அப்பாகிட்டே போய்ச் சேர்ந்துட்டான்.
"அப்பா!"
கிழவர் திடுக்கிட்டு நின்றார். அவரது முகத்தில் காணப்பட்ட வேதனைத் திகைப்பு அவனோட நெஞ்சைக் குத்தியது.
"அப்பா, என்னை அடையாளந் தெரியுதா?"
கிழவர் தடுமாற்றத்தோடு இன்னொரு அடிவைத்து விட்டுப் பிறகு மறுபடி நின்றார். அவரோட கிழடு தட்டின முகத்தைத் தீவிர உணர்ச்சி வேகம் மேலும் கெடுத்துவிட்டது.
இதுக்குள்ளே நாயப், குமாஸ்தா எல்லாரும் அங்கே வந்துட்டாங்க.
கிழவனார் நடுங்கற கையைத் தூக்கி, நடுங்கற குரல்லே "யாரு?" ன்னு கேட்டார்.
நாயப் சோபனோட தோள்மேலே கையை அழுத்தமா வச்சிக்கிட்டு, 'ஒருத்தருமில்லே..அந்த தடவை மாதிரி இப்போ மறுபடியும்.. இதோட மூணு தடவை ஆயிடுச்சு" என்றார்.
ஒரு குமாஸ்தா சொன்னான், "நாங்க வரவிடல்லே.. இவன் திமிறிக்கிட்டு ஓடி வந்துட்டான்.."
கிழவர் அவனை இடைமறித்து, "ஒண்ணும் சொல்ல வேணாம், போகவிடு..!"ன்னு சொன்னார். பிறகு சோபனைப் பரிதாபமாகப் பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினார்.
திகைச்சுப்போய் நின்னுக்கிட்டிருந்தான் சோபன். நாயப் அவன்கிட்டே ஏதோ சொன்னார். அவன் அதைக் காதிலே போட்டுக்கலே. அவன் எப்போ வெளிப்பக்கத்து அறைக்கு வந்தான்னு அவனுக்குத் தெரியாது.
கொஞ்ச நேரங்கழிச்சு அவனோட திகைப்பு ஒரு வழியாக் குறைஞ்சது.. வீட்டுக்குள்ளேயிருந்து ஒரு வேலைக்காரன் வந்து நாயப்கிட்டே என்னவோ சொன்னான். நாயப் சோபன்கிட்டே ஏதோ சொன்னார். முதல்லே அவனக்கு ஒண்ணம் புரியல்லே. அப்பறம் புரிஞ்சது.. நாயப் கையிலே ஒர கட்டு கரன்சி நோட்டு. அவர் குரல்லே கெஞ்சல். சோபனிடம் ஏதோ உதவி கேக்கறார்..
"நீங்க ஒரு உதவி பண்ணணும்.. ராணியம்மா சாகக் கிடக் கறாங்க, பிள்ளை செத்துப்போன செய்தி தெரியாது அவருக்கு. எப்படியும் பிள்ளையைப் பார்க்கலாம் என்கிற நம்பிக்கையிலே உசிரை வச்சிக்கிட்டு இருக்காங்க. நீங்க அவங்களோட காணாமல் போன பிள்ளை மாதிரி அவங்களுக்கு முன்னாலே போய் நில்லுங்க. இப்போ இருக்கிற நிலையிலே அவங்களுக்கு நிசம், போலி எதுவும் கண்டுபிடிக்க முடியாது. நிசமாகவே உங்களுக்கும் காணாமல் போன பிள்ளைக்கும் நிறைய ஒத்துமை இருக்கு. சாகப்போறவங்களுக்கு இந்த ஆறுதலையாவது கொடுக்கும்படி ராஜாபகதூர் உங்களைக் கேட்டுக்கறார். இதனாலே உங்களுக்க ஒரு நஷ்டமுமில்லே.." இதைச் சொல்லிட்ட நாயப் அவன் கையிலே நோட்டுக் கட்டைத் திணிச்சார்.
சோமேஷ் மௌனமானான், சிறிதுநேரம் வரை வெளியே மழை பெய்யும் அரவம் தவிர வேறு ஒலி இல்லை.
நான் கடைசியில் சொன்னேன், "சோமேஷ், உன் காதுக்குப் பக்கத்திலே ஒரு மச்சம் இருக்கே!"
சோமேஷ் சிரித்துக் கொண்டு சொன்னான், "அதனால்தான் கதை கட்டறது சுலபமாயிருந்தது."
ஆனால் ஏனோ தெரியவில்லை.. அந்தக் குளிர்காலத்தின் மேகம் கவிந்த, இயற்கைக்கு மாறாக இருட்டிப் போய்விட்ட பிற்பகல் நேரத்தில் அவனுடைய சிரிப்புப் பேச்சை நம்பத் தோன்றவில்லை எனக்கு...
(க்வசித் கக்கனோ, 1962)
6. சரிவு
சதிநாத் பாதுரி
அவளுடைய மார்பிலிருந்து அதைப் பலவந்தமாகப் பிடுங்கி எடுத்துக் கொண்டுபோக வேண்டியிருந்தது பர்சாதிக்கு. அதைக் கொண்டு போய் ஆற்றில் எறிய வேண்டுமே! இந்த மாதிரி இறந்து போனவற்றைப் புதைக்கக் கூடாது, தண்ணீரில் எறிந்துவிட வேண்டும்.
வீட்டுக்குள் இருக்கும்வரை பர்சாதி அழவில்லை. மன்சனியா பார்த்து விடுவாளோ என்ற பயத்தில், கண்ணோரத்தில் நீர் சேரும்போது முகத்தைத் திருப்பிக் கண்ணீரைத் தடைத்துக் கொண்டான். இவ்வளவு நேரத்தில் ஒரு தடவைகூட மன்சனியாவின் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை. அவனுடைய கண்களைச் சந்தித்தால் அவளுக்க வெட்கமாயிருக்கும். இந்த மாதிரி சமயங்களில் யாரையும் நேருக்கு நேர் பார்க்க முடியுமா? ஏற்கெனவே சோகத்தாலும் வெட்கத்தாலும் செத்துக் கொண்டிருக் கிறாள் மன்சனியா. அவளுடைய துக்கச் சுமையை அதிக மாக்கலாமா..? பர்சாதி வீட்டுக்கு வெளியே வந்த பிறகு அழுதான்.
மன்சனியாவுக்குக் குழந்தை பிறக்காது என்றுதான் இதுவரை எல்லாரும் நினைத்திருந்தார்கள். எவ்வளவு மருந்து, மாயம், மந்திரம் தந்திரம், தாயத்து, பிரார்த்தனை செய்தாகிவிட்டது! சாகும் தருவாயில் வாயில் தண்ணீர் ஊற்ற ஒர பிள்ளை வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தானிருக்காது..? கடைசியில் கடவுள் கண் திறந்த பார்த்து விட்டார் என்று தெரிந்த பிறகு அவன் பொறுமையின்றி நாட்களை எண்ணிக் கொண்டிருந்தான். மன்சனியாவுக்காக என்ன செய்வது என்று தெரியவில்லை அவனுக்கு. கேள்விகளால் துளைத்தெடுத்தான் அவளை - என்ன சாப்பிடப் பிடிக்கும்? பிள்ளையா, பெண்ணா? குழந்தை யார் மாதிரி இருக்கும்? வயித்துக்குள்ளே அசையுதா? மண் திங்கணும் போல் இருக்கா? இன்னும் எவ்வளவோ சிந்தனைகள்.. சாமார் ஸியுடன் குசுகுசுப் பேச்சுக்கள், தெருவிலுள்ளவர்கள் அவன் செய்யும் ஆர்ப்பாட்டத்தைக் கண்டு கேலியாகப் பேசிக் கொண்டார்கள்.
...அதன் பிறகு புதனோடு புதன் பதினாலு நாள், வியாழன், வெள்ளி, சனி -- இந்தப் பதினேழு நாட்கள் அவன் சுவர்க்கம் தன் கைக்கு வந்துவிட்ட மாதிரி மகிழ்ச்சியாயிருந்தான். பதினேழு நாட்களுக்குப்பின் கடவுள் தன் சொத்தை தன்னிடமே அழைத்துக் கொண்டுவிட்டார். மனிதனால் என்ன செய்யமுடியும்? எவ்வளவு பேரின் குழந்தைகள் எவ்வளவு விதமாகச் சாகின்றன...! வெல்லம் கொதிக்கிற அண்டாவிலே விழுந்து குழந்தை செத்ததாகக் கேள்விப் பட்டிருக்கிறான், கொதிக்கிற பாலுக்குள்ளே குழந்தை விழுந்து சாகறதைப் பார்த்திருக்கிறான்... ஆனால் இந்த மாதிரிச் சாவு..! ஐயோ, ஒரு சின்ன இரத்தப் பிண்டம்...! நீலம் பாரிச்சுப் போயிட்டது. மூச்சுவிடத் திணறி, மூச்சுவிட அது பண்ணின முயற்சியிலே அதன் இரு கண்களும் பெரிதாகி உடம்பைவிட்டு வெடித்து வந்துவிடும்போல... ஐயோ, என்ன பரிதாபம்!
சப்பிக் கொண்டிருந்திருக்கும்.. பயம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வதற்குமுன், ஆபத்து என்ன என்று புரிந்து கொள்ளுமுன், தாயின் நெஞ்சு திடீரென்று கீழே சரிந்து வந்தது. கீழே இருட்டு, அந்த இருட்டில் கடைசி ஓலங்கூட வெளிப்பட இயலவில்லை...
வெகுநேரம் கழித்துத்தான் விஷயம் தெரிந்தது மன்சனியா வுக்கு. எவ்வளவு நேரமாகியிருந்ததோ யார் கண்டார்கள்...! அந்த இடத்தில் ஏன் இவ்வளவு குளிர்ச்சி? சில சமயம் அப்படி ஆகி விடுகிறது. தூக்கக் கலக்கத்தில் கம்பளியை நன்றாக மேலே இழுத்துப் போர்த்திக் கொண்டபோதுகூட அவளுக்கு இன்னொரு ஜீவனைப் பற்றிய ஞாபகம் வரவில்லை. அவள் இயற்கையாகவே தூக்கத்துக்கு அடிமை... இருந்தாலும் அந்த இடத்திலே ஏன் இவ்வளவு சில்லுன்னு இருக்கு..! காளி கோவில் மணி அடிக்கிறது, விடிவதற்கு அதிக நேரமில்லை. அவள் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தாள்... துணி நனைந்தால்கூடக் கம்பளிக்குக் கீழே இவ்வளவு குளிர்ச்சியாயிருக்காதே..! இது ஏதோ ஒரு மாதிரியா.. அவளது நெஞ்சு நடுங்கியது. விளக்கை ஏற்ற நான்கு தீக்குச்சிகள் தேவைப்பட்டன. விளக்குத் திரியைத் தூண்டிவிட்டுப் படுக்கைப் பக்கம் பார்த்தவுடன் மனதிலிருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் அணைந்து போய்விட்டது. அவள் போட்ட கூச்சலில் பர்சாதி விழித்துக்கொண்டு எழுந்தான்.
உயிர் நீங்கிவிட்ட சடலத்திலே மறுபடி சூடு எப்படி வரும்! ஒன்றும் பலிக்கவில்லை, அந்தப் பதினேழு நாள் வயதான மாமிசப் பிண்டத்தை நெஞ்சோடு சேர்த்துப் பிசையப் பயப்பட வில்லை மன்சனியா. அவளது நெஞ்சு கண்ணீரிலேயே மிதந்தது.
மன்சனியாவின் கிறட்டு நாய் பர்சாதியோடு கொஞ்ச தூரம் போய்விட்டுத் திரும்பி வந்து அவளருகில் உட்கார்ந்தது. அவளது நாய் நல்ல கறுப்பு. அதனால் அதன் பெயர் காரியா. அது அவளுடைய நீர் ததும்பும் கண்களையும், விரிந்து கிடந்த தலைமுடியையும் பார்த்துக் கொண்டிருந்தது. அது வெகு காலமாக இந்தக் குடும்பத்துடன் இருப்பதால் குடும்பத்தில் ஒருவன் போல் அதற்கு எல்லாம் புரியும்.
"த்விராகமனு"க்குப் புக்ககம் வரும்போது காரியாவைப் பிறந்தகத்திலிருந்து கூட்டி வந்தாம் மன்சனியா. (திருமணத்துக்குப் பின் மணப்பெண் இரண்டாம் முறையாகப் பிறந்தகத்திலிருந்து புக்ககம் வரும் நிகழ்ச்சிக்கு "த்விராகமன்" என்று பெயர்). உண்மையில் அவள் கூட்டி வரவில்லை, அதுவாகவே வந்து விட்டது! அது என்ன இன்றைய நேற்றைய நிகழ்ச்சியா! அவளது நான்காம் வயதில் அவளுக்குக் கலியாணம். அதற்குப் பதினைந்து வருடங்களுக்குப் பிறகு த்விராகமன். பர்சாதி அதற்காகப் பணம் சேர்த்து வைத்துக் கொண்டு மாமனாருக்குப் பல தடவை செய்தியனுப்பி விட்டான். மாமனார் அவனை லட்சியம் செய்ய வில்லை, தாமதம் செய்து கொண்டே இருந்தார். ஊர்க்காரர்கள், பலவிதமாகப் பேசிக் கொண்டார்கள். அப்போது மன்சானியா அவளுடைய கிராமத்தில் தாசில்தார் வீட்டில் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளும் ஆயாவாக வேலை பார்த்து வந்தாள்.
"அப்ன்காரன் பொண்ணு மூலம் சம்பாதிச்சுச் சாப்பிட்டுக் கிட்டிருக்கான். பொண்ணுக்கு வருமானம் அவளோட சம்பளம் மட்டும் இல்லே" என்றெல்லாம் ஜனங்கள் பேசிக்கொண்டார்கள். இதையெல்லாம் கேட்டு இரத்தம் கொதித்தது பர்சாதிக்கு. இளவயதின் சூடு, சேர்த்த வைத்திருந்த பணத்தின் சூடு, அவன் எண்ணெய் தடவப்பட்ட தடியை எடுத்துக்கொண்டு மாமனா ரிடம் போனான். அவனோடு அடிதடி, சண்டை போட்டுத் தன் உரிமையான பெண்சாதியைக் கூட்டிக்கொண்ட வந்தான். கிராமத்து எல்லையில் ஆமணக்கு வயலுக்கருகில் அவர்களுடைய மாட்டுவண்டி வந்து கொண்டிருந்தபோதுதான் கறுப்பு நாய் வண்டிக்குப் பின்னால் வந்து கொண்டிருப்பதை அவன் கவனித்தான்.
"இது யாரோட நாய்?" இதுதான் மன்சனியாவோடு பர்சாதியின் முதல் பேச்சு.
"என்னதுதான்," பயந்துகொண்டே சொன்னாள் மன்சனியா.
"ஒன்னுதா?"
மன்சனியா பருமன்தான். ஆனால் அவளுக்குக் கணவனிடம் பயம். கறாரான ஆள் அவன். அவளுடைய அப்பனோடு சண்டை போட்டுவிட்டு அவளைக் கூட்டிப் போகிறான். ஆகையால் கொஞ்சம் தயங்கிவிட்டுக் கேட்கிறாள், "இதை வண்டியிலே ஏத்திக்கட்டுமா?"
"ஒன்னோட இருக்குமா?"
"இருக்கும்"
வண்டி போய்க்கொண்டிருக்கும்போதே அவள் குனிந்து நாயைத் தூக்கிக் கொள்ள முயற்சிப்பதைப் பார்த்துப் பர்சாதி, "என்ன செய்யறே நீ! நீ அவ்வளவு குனிய முடியுமா..இன்னும் கொஞ்சம் முன்பக்கமா நகர்ந்து உக்காந்துக்க!"
புடைவையைச் சரிப்படுத்திக்கொண்டு மன்சனியா நாயை வண்டிக்குள் ஏற்றிக்கொண்டாள். அதன்மூலம் தான் பருமனா யிருந்தாலும் வேலைக்கு லாயக்கில்லாதவளல்ல என்பதை அவனுக்குப் புலப்படுத்தினாள். யாராவது அவளுடைய பருமனைப் பற்றிக் கேலி செய்தால் அவள் குறுகிப்போய் புடைவைத் துணியால் உடம்பை மூடிக்கொள்ள முயற்சி செய்வாள். அவளுடைய இந்த வழக்கத்தை முதல்நாளே கவனித் திருந்தான் பர்சாதி.
"எவ்வளவு கனமான சுமையைத் தூக்கிக்கிட்டு நடக்க முடியும் ஒன்னாலே"
"ஒரு மணு சுமப்பேன் நிச்சயமா!" என்று சொல்லி மன்சனியா ஒரு மணு கனமான கூடையைத் தூக்கிக் கொண்டு நின்றாள். ஆனால் அவள் கஷ்டப்படுவது தெளிவாகத் தெரிந்தது. அதுமுதல் பர்சாதி ஜாக்கிரதையாகி விட்டான். "ஹர்தாச் சந்தை நம்ம கிராமத்திலேருந்து ஆறு மைல் தூரம். அங்கே நாம காய்கறி வாங்கிட்டுப் பட்டணத்துக்குக் கொண்டுபோய் விப்போம்" என்று அவன் மன்சானியாவிடம் சொன்னான்.
இதுதான் பர்சாதியுடன் மன்சானியாவின் முதல் உரை யாடல்...அவளுடைய நாயைப் பற்றி, அவளுடைய பருமனான உடம்பைப் பற்றிய உரையாடல். அவன் என்னதான் சந்தையைப் பற்றி, காய்கறிகளைப் பற்றிப் பேசினாலும் தன் பேச்சின் மூலம் எதைக் குறிப்பிடுகிறான் என்று மன்சானியாவுக்குப் புரிந்தது.
இதோடு விஷயம் முடியவில்லை. அவர்கள் வண்டியில் சற்றுதூரம் போனபிறகு தாசில்தாரின் சிப்பாய்கள் இருவரைச் சந்தித்தார்கள். அவர்கள் பர்சாதிக்காகக் காத்திருந்தார்கள். அவர் களுடைய எஜமான் பர்சாதியை உதைக்கும்படி அவர்களுக்கு உத்தரவிட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் அவனை அதிகம் துன்புறுத்தவில்லை. தங்கள் எஜமானைப் பற்றி கெடுதலாகப் பேசியதற்காக அவனைத் திட்டிவிட்டுக் கடைசியில் அவனைக் கேலி செய்தார்கள், "நீ ரெண்டு கறுப்பு நாய்களைக் கூட்டிக்கிட்டுப் போறே. எங்க கிராமமே இருட்டாயிடுச்சு.. ஆனாப் பாரு, அந்த தடிக்குட்டி ஒல்லி குட்டியைவிட நெறையாச் சாப்பிடுமாக்கும்!" இவ்வாறு சொல்லிவிட்ட இருவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
இதெல்லாம் நடந்தது பத்து வருடங்களுக்கு மன்னால். அதுமுதல் நாய் இங்கேயே இருக்கிறது. அதுமுதல் அந்தக் கிராமத்து ஜனங்களுக்கு மன்சனியாவின் நினைவு வரும் போதெல்லாம் கூடவே அந்த நாயின் நினைவும் வரும். மன்சனியா கிணற்றடிக்கோ, ஹர்தாச் சந்தைக்கோ, வேறொருவர் வீட்டுக்கோ எங்கே போனாலும் அவள் பின்னாலேயே நாயும் வந்துவிடும். சிறு பையன்கள் நோஞ்சல் காரியாவையும் கொழுத்த மன்சனியா வையும் சேர்த்துப் பேசிக் கேலி செய்வார்கள். சிறுவர்கள் ஏன்தான் இவ்வளவு ஈவிரக்கமற்றவர்களாக இருக்கிறார்களோ தெரியவில்லை.
மன்சனியா காயகறிக் கூடையைச் சுமந்து கொண்டு வியர்க்க விறுவிறுக்கத் தெருவில் வந்தால் சிறுவர்கள் கோலி விளையாடுவதை நிறுத்திக்கொண்ட ஒருவருக்கொருவர் கண்களால் ஜாடை செய்து கொள்வார்கள். ஒருவன் ராகம் போட்டு "மன்சனியா" என்று கத்துவான். இன்னொருவன் அதே ராகத்தில் "தத்தக்கா பித்தக்கா" என்பான். காரியா வாலை மடக்கிக் கொண்டுவிடும். மன்சனியா அருகில் வந்ததும் அந்த சிறுவர்களில் மிகவும் போக்கிரிகளான இருவர் அவளுக்கு இருபுறமும் நின்று கொள்வார்கள்; அவளுடைய நடையைக் கேலி செய்தவாறு நடந்து கொண்டே "தத்தக்கா பித்தக்கா.. தத்தக்கா பித்தக்கா.." என்று கத்துவார்கள்.
அவமானமாயிருக்கும் மன்சனியாவுக்கு. வாயடி அடிக்க அவளுக்கும் தெரியும். வேறு ஏதாவது காரணத்துக்காக அவர்கள் அவளைக் கேலி செய்தால் அவளும் பதிலடி கொடுக்காமலிருக்க மாட்டாள். அவள் கத்தித் திட்டத் தொடங்கினால் சிறுவர்கள் ஓட வேண்டியதுதான். ஆனால் அவர்கள் அவளுடைய பொதுக்கை உடம்பையல்லவா கேலி செய்கிறார்கள்! அவள் அசட்டுச் சிரிப்புணசிரிப்பாள். அவளது இரு கைகளும் கூடையைப் பிடித்துக் கொண்டிருப்பதால் மேல் துணியால் உடம்பை நன்றாகப் போர்த்திக் கொள்ளவும் வழியில்லை.
சிறுவர்களின் கேலிப்பேச்சிலிருந் விடுதலை பெற்ற பிறகு காரியா கொஞ்சதூரம் போய் வாலை நிமிர்த்திக் கொள்ளும். பிறக அவர்களிருக்கும் பக்கம் திரும்பி இரண்டு தடவை "வாள், வாள்!" என்று குரைக்கும். எண்ணி இரண்டே தடவைதான். பிறகு தனக்கு மிகவும் பரிச்சயமான மன்சனியாவின் வாசனையை மோப்பம் பிடித்தக் கொண்டு வழி நடக்கத் தொடங்கும்.
மன்சனியாவின் இந்தக் கூச்சம் கடந்த சில மாதங்களாகச் சிறிது குறைந்திருந்தது. புதிதாக ஏதோ ஒன்று நிகழப் போகும் தருவாயில் உலகமே புதிதாகத் தோன்றும், பெரும் சுமையும் லேசாகத் தெரியும்; பொருத்தமில்லாத பொருளும் பொருத்தமாக ஆகிவிடும், மனமும் உரம் பெறும். தன் உடம்பின் அழகின்மை யிலும் ஓர் அர்த்தத்தைக் கண்டாள் அவள்..
ஆனால் இதுவும் சிறிது காலத்துக்குத்தான்! அவளுடைய பதினேழு நாள் ராஜத்துவம் முடிந்து போய்விட்டது. அவள் தன் எந்த உடலுறுப்பைக் குறித்து வெகுகாலமாகக் கூச்சப்பட்டுக் கொண்டிருந்தாளோ, எந்தச் சுமை காரணமாக அவள் மற்றவர் களுக்கு மன்னால் கூனிக் குறுகிக் கொண்டிருந்தாளோ, அந்த உறுப்பே இவ்வளவு காலத்துக்குப் பிறகு அவளுக்குப் பெருங்கொடுமை இழைத்து விட்டது!
சத்துரு..! சத்துரு!
மன்சனியா காலகளைப் பரப்பிக் கொண்டு வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருக்கிறாள். கிழட்டு நாய் அவளுடைய காலை நக்கிக் கொண்டிருக்கிறது. அதன் கண்ணோரத்தில் இருப்பது நீர்த்துளியா பீளையா என்று தெரியவில்லை. மன்சனியா அறியாமலேயே அவளது கை காரியாவின் நெஞ்சை, முதுகைத் தடவத் தொடங்குகிறது. அவளுடைய விரல்ளின் இடைவெளி களில் சொரசொரப்பான முதுகு ரோமம். மார்பின் ரோமம் இதைவிட மிருது. துருத்திக் கொண்டிருக்கும் எலும்புகளில் கைபடுகிறது. அவள் நாயின் வற்றிக் கிடந்த மடியை விரல்களால் தடவிக்கொண்டே அதை நன்றாகக் கவனித்தாள். மடிக்காம்புகள் மச்சங்கள்போல் சின்னஞ் சிறிதாக இருக்கின்றன. நன்றாக உற்றுப் பார்க்காவிட்டால் கறுப்பு ரோமத்துக்குள் அவை இருப்பதே கண்ணுக்குத் தெரியாது. அதன் காதிலுள்ள உண்ணிகளை விடச் சிறியவை அவை. நாய் கிறடாகிவிட்டதால் கடந்த ஓராண்டாக அது குட்டிபோடுவது நின்று போய்விட்டது.
காரியா ஒரு தடவை மன்சனியாவின் முகத்தைப் பார்க்கிறது, இன்னொரு தடவை தலையைச் சாய்த்து அவளுடைய விரல்களைப் பார்க்கிறது. அவளைப் புரிந்து கொள்ள முயல்கிறது. அவளுடைய முகத் தோற்றத்தைப் பார்த்தால் அவள் தன்னைச் செல்லங் கொஞ்சுவதாகவும் தெரியவில்லை. அவள் மடிக்காம்புகளைத் தடவும்போது அதற்குக் குறுகுறுப்பு ஏற்படுகிறது.
துக்கம் ஏற்படுவது இருக்கட்டும்; இந்த மாதிரி வயிற்றுக் குழந்தை இறந்துபோவதில் உள்ள அவமானத்தை வார்த்தைகளால் விளக்க இயலாது. பொதுக் கிணற்றங்கரையில் எல்லாரும் அவளைப் பற்றித்தான் பேசுகிறார்கள். என்னென்னவோ பேசுகிறார்கள். வீட்டை விட்டு வெளியே வரத் துணிவு வரவில்லை அவளுக்கு. அப்படியாவது நிம்மதி உண்டா! தெருவாசிகள் அவளுக்கு ஆறுதல் சொல்ல வருகிறார்கள். ஆறுதலாவது மண்ணாவது.. எல்லாம் புரிகிறது அவளுக்கு. யாராவது அவளுடன் பேசவந்தால் அவள் போர்வையை நன்றாகப் போர்த்திக்கொண்டு பாயில் படுத்துக்கிடப்பாள். வந்தவள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டே போகட்டும், அவள் பதில் பேசமாட்டாள். பர்சாதி வீட்டிலிருந்தால் அவன் அக்கம் பக்கத்தார் மன்சனியாவைத் தொந்தரவு செய்யாமல் பார்த்துக் கொள்வான். மன்சனியாவைத் தேற்றவந்த ஒரு கிழவி அவளுடைய ஆழ்ந்து தூங்கும் வழக்கத்தைக் குறிப்பிட்ட போது பர்சாதி கிழவியை அதட்டி பேசாதிருக்கச் சொன்னான்.
காரியா எப்போதும் மன்சனியாவின் பாய்க்கருகில் உட்கார்ந்திருக்கும். பரிச்சயமானவர்கள் அங்கு வந்தால்கூட அது இரண்டுமுறை குரைத்துத் தன் எரிச்சலை வெளிப்படுத்தும்.
மன்சனியா பேசிய ஒரு பேச்சிலிருந்து அவளது மனநிலையை சரியாக ஊகித்தறிந்து கொண்டான் பர்சாதி. அவள் தரையைப் பார்த்தவாறு, மிகவும் தயக்கத்துடன், பொதுக்கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டுவரும்படி அவனிடம் சொன்னாள்.
"குடி தண்ணியா?"
அவளிடமிருந்து பதிலில்லை.
குளிக்கத் தண்ணியா?" அவளுடைய கண்களில் நீர் வந்து விட்டது. எந்தப் பெண்ணாவது தன் கணவனைப் பொதுக்கிணற்றி லிருந்து குளிப்பதற்குத் தண்ணீர் கொண்டு வரச் சொல்வாளா? ஏற்கெனவே அவள் பருமன். குளிக்காமலிருக்க முடியாது அவளால். இப்போது உடம்பில் கெட்டுப்போன பாலின் நாற்றம் வேறு. அவளுக்கே அருவருப்பாயிருக்கிறது. அதனால்தான் அவள் வெட்கத்தைவிட்டு அவனைக் குளிப்பதற்குத் தண்ணீர் கொண்டு வரச் சொன்னாள். மற்ற பெண்கள் கூடியிருக்கும் கிணற்றடிக்குப் போய்த் தண்ணீர் எடுத்து வருவது இன்னும் வெட்கக்கேடு.
அவள் மண்பானையைப் பர்சாதியிடம் கொண்டுவந்து கொடுத்தாள். அவன் அதை எடுத்துக்கொண்டு தண்ணீரெடுக்கப் போனான். ஓர் ஆண்பிள்ளை பொதுக்கிணற்றிலிருந்து பானையில் தண்ணீர் எடுத்து வருவதைப் பார்த்துத் தெருவாசிகள் என்ன சொல்வார்களோ!
மன்சானியாவின் நினைவை எப்போதும் வேறு விஷயங்களில் ஈடுபடுத்தி வைக்க முயற்சி செய்யவேண்டும் என்பது பர்சாதிக்கு இயற்கையாகவே புரிந்திருந்தது. தோட்டம் நிறையக் காய்கறிச் செடிகள், மன்சனியா தன் கையால் விதைத்து வளர்த்தவை. அவற்றைக் கவனித்துக் கொண்டாலும் அவளுக்குச் சற்று ஆறுதலா யிருக்கும். ஆனால் அதை எங்கே செய்கிறாள்! இரவும் பகலும் வர்ந்தாவில் உட்கார்ந்துகொண்டு என்னதான் சிந்திப்பாளோ, யாருக்குத் தெரியும்! அவன் சந்தைக்குக் காய்கறிகள் கொண்டு போவதற்காக அதிகாலையில் எழுந்திருந்து அவரைப் பந்தலி லிருந்து காய்களைப் பறிப்பது வழக்கம். ஆனால் இந்த மூன்று நாட்களாக அவரைக்காய் பறிக்கக் கூட மறந்துவிட்டாள் அவள்.
நேரங்கிடைக்கும் போதெல்லாம் அவன் அவளுடன் பேசி அவளது கவனத்தைத் திருப்ப முநற்சி செய்தான். ஆனால் பேச்சைத் தொடங்கிச் சிறிது நேரத்திலேயே பேச விஷயம் இல்லாமற் போய்விடுகிறது அவனுக்கு. போய்விட்ட ஜீவனைப் பற்றிப் பேசத் தோன்றுகிறது. ஆனால் அதைப் பற்றிப் பேசக் கூடாதே! அவன் வேறு ஏதாவதைப் பற்றிப் பேச முற்பட்டாலும் அவனறியாமல் பேச்சு தடைப்படுகிறது.
காய்கறிகளின் விலைவாசியைப் பற்றிப் பேச்சைத் தொடங்குவதுதான் அவர்களுடைய நெடுங்கால வழக்கம், பர்சாதி அவரைக்காய் விலையைப் பற்றிப் பேசத் தொடங்குவான், "இப்போ அவரைக் காய்க்கு நல்ல விலை. ஆனா ஒரு மாசங் கழிச்சுக் காயெல்லாம் நாய்க்காது மாதிரி முத்திப் போயிடும். அப்பறம் யா வாங்குவாங்க அதை? சாத்புதியா அவரையிலே தான் நல்ல காசு. நல்லாக் காய்க்கும். ஒவ்வொரு கொத்திலேயும் ஏழு அவரைக்காய் இருக்கும். நம்ம தோட்டத்து அவரைக்கொடி தசராவுக்கு முன்னாலேயே காய்க்கத் தொடங்கிடுச்சு. நான் உனக்கு கக்ரியா ஹாட் தசராத் திருவிழாவிலேருந்து தயிர்வடை வாங்கிக்கிட்டு வந்தேனே ஞாபகமிருக்கா..?"
பேசிக்கொண்டே போனவன் சட்டென் மௌனமாகி விடுகிறான். இந்தப் பேச்சை எடுத்திருக்கக் கூடாது. அப்போது மன்சனியா பிள்ளைத் தாய்ச்சி. அவள் தயிர்வடை சாப்பிட ஆசைப்பட்டாள்.
"பருவமில்லாத காலத்திலே விளையற காய்கறியிலேதான் நிறைய லாபம். அவரைக்கொடி போன வருசத்துக் கொடிங் கறதாலதான் இந்த வருசம் இவ்வளவு சீக்கிரம் காய்க்க ஆரம்பிச் சுட்டது. போன வருசம் அதுலே காய்ப்பு நின்னதும் நீதான் அதைப் பிடுங்கியெறியணும்னு சொன்னே. என் பேச்சைக் கேட்டுத்தான் சித்திரை மாசத்திலேருந்து அதுக்குத் தண்ணி ஊத்த ஆரம்பிச்சே. நான் சொன்னேனா இல்லையா?"
பேசிக் கொண்டிருக்கும்போது மன்சனியாவின் முகம் என்னவோ மாதிரி ஆவதைக் கண்டு அவன் பேச்சை நிறுத்தினான்.
"சொரக் கொடியோட வீரியத்தைப் பார்திதியா? கூரை பூராப் படந்திருக்கு. தண்டு கட்டைவிரலை விடப் பருமனா யிருக்கு. நீ தினம் அதோட வேரிலே வடிச்ச கஞ்சிய ஊத்திறியே, அதனால்தான் அதுக்கு இந்த செழிப்பு. ஆனா தண்டு இவ்வளவு தடித்தடியா வளர்ந்தா நல்லாக் காய்க்குமா? தண்டை வெட்டி விக்கறதுதான் லாபம் பாரேன், பிஞ்சு வைக்குது, வெம்பிக் கீழே விழுந்துடுது.."
சீ, என்ன அசட்டுத்தனமாகப் ேபுசிவிட்டான் அவன்! அவளுடைய முகம் சட்டென்று இருண்டு போய்விட்டதே!
மேலும் பேசத் தோன்றவில்லை பர்சாதிக்கு. அவன் எழுந்து விட்டான். இவ்வளவு ஜாக்கிரதையாக எவ்வளவு நேரந்தான் பேசமுடியும்?
துணி தைக்க உட்கார்ந்தால் அவள் கவனம் சற்றுத் திரும்பலாம். ஆகையால் பர்சாதி காய்கறி விற்றுவிட்டுத் திரும்பும் போது அவளுக்காகச் கொஞ்சம் சட்டைத்துணி வாங்கி வந்தான்.
துணியைப் பார்த்துவிட்டு மன்சனியா, "இந்தத் துணி யெல்லாம் நனைச்சப்பறம் ரொம்பச் சுருங்கிப் போயிடுமே" என்றாள். "அவ்வளவு இறுக்கமா ஏன் சட்டை தச்சுக்கறே? கொஞ்சம் தொளதொளன்னு தச்சுக்கோயேன்."
அவன் யோசித்துப் பேசவில்லை. இருந்தாலும் மன்சனியா பார்வையைக் கீழே தாழ்த்திக் கொண்டாள். அவளுடன் நிறையப் பேசிக்கொண்டிருக்க வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டு வந்திருந்தான் அவன். ஆனால் இப்போது மனைவியின் கூச்சத்தைப் பார்த்து அவனது திட்டம் தேய்ந்து போய்விட்டது.
அவன் முயற்சி செய்வதில் குறை வைக்கவில்லை. மறு நாள் ஒரு நாய்க்குட்டியைக் கொண்டுவந்தான். ரொம்பச் சின்னக்குட்டி இப்போதுதான் கண் திறந்திருக்கிறது.
"இதை எதுக்குக் கொண்டு வந்திருக்கே?"
"காரியா கெழடாயிடுச்சு, எப்போ செத்துப் போகுமோ தெரியாது, இப்போலேருந்தே ஒரு புது நாய் வளக்கறது நல்லது.. வழியிலே குளிர்லே கெடந்து கத்திக்கிட்டிருந்தது, தூக்கிக்கிட்டு வந்தேன்.
அன்று மன்சனியா வேலை செய்ய வெளியே கிளம்பத் தயார் செய்து கொண்டிருந்தாள். எவ்வளவ நாள்தான் வீட்டுக்குள் அடைந்து கிடப்பது! அவர்களது நிலையில் உள்ளவர்கள் சும்மா வீட்டில் உட்கார்ந்திருந்தால் நடக்குமா? இதற்கிடையில் கணவன் ஒரு நாய்க்குட்டியை கொண்டு வந்து விட்டான்!
சங்கடந்தான்! இவ்வளவு நாள் ஒவ்வொரு வருஷமும் காரியா நிறையக் குட்டிகள் போட்டுக் கொண்டிருந்த காலத்தில் நாய்க்குட்டி வளர்க்கத் தோன்றவில்லை அவனுக்க. எவ்வளவோ குட்டிகளை நரி தின்றுவிட்டது, எவ்வளவோ குட்டிகளை அக்கம் பக்கத்துப் பையன்கள் எடுத்துக்கொண்டு போனார்கள். என்ன தான் சாப்பிட்டு மிஞ்சியதைக் கொடத்தாலும் நாய் வளர்ப்பதிலும் ஒரு செலவு இருக்கத்தானே செய்கிறது! சாப்பிட்டு மிஞ்சியதை மட்டும் கொடுத்தால் நாய்க்குட்டி நன்றாக வளருமா? அது எப்போது பார்த்தாலும் ஒரு வீட்டு எச்சில் இலையிலிருந்து இன்னொரு வீட்டு எச்சிலிலைக்கு ஓடிக் கொண்டேயிருக்கும்.
ஆனால் கணவனே கொண்டு வந்திருக்கும்போது இதை வைத்து வளர்க்கத்தான் வேண்டும்.
மன்சனியா கூடையைக் கீழே வைத்துவிட்டு நாய்க் குட்டியைக் கையில் வாங்கிக் கொண்டாள். அவளுக்கு வீட்டை விட்டு வெளியே போகக் கூச்சமாயிருந்தது. இப்போது நாய்க்குட்டி வந்ததில் அவளுக்கொரு லாபம். வீட்டுக்கு வெளியே போவதை இன்னும் ஒரு வேளை ஒத்திப்போட சாக்குக் கிடைத்தது அவளுக்கு.
ரொம்பச் சின்னக்குட்டி புஸ்புஸ் என்று சப்தம் செய்து கொண்டு மூக்கை நீட்டி மோப்பம் பிடிக்கிறது. அவளுடைய ஆடைக்குள் முகத்தைப் புதைத்துக் கொள்கிறது. செக்கச் சிவந்த நாக்கு நுனியால் அவளுடைய உள்ளங்கை, விரல்கள், கையை நக்கிப் பார்க்கிறது. அவளுடைய உடலின் மணம் அதற்குப் பிடித் திருக்கிறது. தாய்ப்பாலின் மணம் அதற்குப் பரிச்சயமானதுதான். அது இழந்துவிட்டிருந்த அந்த மணம் இப்போது அதற்கு மறுபடியும் கிடைத்துவிட்டது. இந்த மணத்தை மோப்பம் பிடித்துத்தான் தன்னால் பாலின் ஊற்றைக் கண்டுபிடிக்க முடியும் என்பத அதற்கு இயற்கையாகவே புரிந்திருந்தது.
"ஐயோ அப்பா! கொஞ்சநேரங்கூட சும்மா விட மாட்டேங்கறே..! சும்மா உக்காரு இங்க!" அவள் நாய்க்குட்டியை மடியிலிருந்து இறக்கித் தன் பக்கத்தில் உட்கார வைத்தாள்.
காரியாவின் தொண்டையிலிருந்து "கர்ர்ர்.." என்ற உறுமல் வெளிப்பட்டது. புதிய விருந்தாளியின் நடவடிக்கைகள் அதற்குப் பிடிக்கவில்லை. விஷயம் எவ்வளவு தூரம் போகிறது என்பதைக் கவனித்துக் கொண்டிருக்கிறது அது. அது ஒருமுறை நாய்க் குட்டியை நெருங்கி அதை முகர்ந்து பார்த்தது. முகர்ந்ததில் அதற்கு என்ன புரிந்ததோ! அது சோம்பல் முறித்தவாறு வராந்தா விலிருந்து கீழிறங்கி வாசலில் உட்கார்ந்துகொண்டு தூங்கி வழியத் தொடங்கியது. நாய்க்குட்டியிடம் அதற்குச் சிறிதும் அக்கறை ஏற்படவில்லை.
நாய்க்குட்டியின் மிருதுவான ரோமத்தை மன்சனியாவின் கைகள் அளைந்தன. அப்படி அளைவதில் பட்டைத் தடவுவது போன்ற சுகம் ஏற்பட்டது. அப்படி அளையும்போது அவளுடம்பில் ஒருவகைச் சிலிர்ப்பு ஏற்படுகிறது. அந்தச் சிலிர்ப்புக் கூட இதமாகத்தானிருக்கிறது. ஒரு மிருதுவான உடலின் கதகதப்பைத் தன் விரல் நுனிகளில் உணர்ந்து சற்றுத் தன்னை மறந்துவிடுகிறாள் அவள்.
தினம் அவளுடைய பாலைப் பீய்ச்சிப் பீய்ச்சி வெளியே கொட்ட வேண்டியிருந்தது. அவள் ஒரு தகர டப்பாவின் மூடியில் பாலைப் பீய்ச்சி வைத்து அதை நாய்க்குட்டிக்கு முன்னால் வைக்கிறாள். அது சர்சர் என்று உறிஞ்சி அதைக் குடிக்கிறது. அந்த சர்சர் ஒலிகூட இனிமையாக இருக்கிறது. அவள் கண்கொட்டாமல் நாய்க்குட்டியைப் பார்க்கிறாள்.
வாசலில் காரியாவின் அலட்சியம் மறைந்துவிட்டது. அது காதுகளை விறைத்துக்கொண்டு அந்த ஒலியைக் கேட்டு, வராந்தாவுக்கு ஓடிவந்து டப்பா மூடிக்கு அருகில் நின்றது.
"நீ ஏன் இங்கே வந்தே! போ வெளியே!" மன்சனியா அதட்டினாள்.
மறுபடி உறுமல் காரியாவிடமிருந்து.
"நீ சாப்பிடற சாமானா இது? சும்மா கோவிச்சுக்கிட்டா போல ஆச்சா? ஒரு சின்னக் கொழந்தையோட என்ன கோபதாபம்? வெக்கமாயில்லே? ஓடிப்போ!"
"கர்ர்ர்.." அதாவது இந்த ஏற்பாடு காரியாவுக்குப் பிடிக்க வில்லை. ஆனால் எசமானியின் உத்திரவையும் மீற முடியாதே..!
மன்சனியா வீட்டு வேலையை முடித்துக்கொண்டு, கூடையைத் தலையில் வைத்துக்கொண்டு வெளியே வந்தாள். வழக்கம்போல் காரியாவும் சோம்பல் முறித்துக்கொண்டு எழுந்து வந்து நின்றது.
"நீ எதுக்கு எழுந்திருந்தே? இன்னிக்கு நீ என்கூட வர வேண்டாம்! இங்கேயே இரு..! சொன்னாக் கேக்கறதில்லே! போ, போ, உள்ளே!"
அவள் காரியாவை உள்ளே தள்ளிவிட்டு படலை சாத்திக் கொண்டு போய்விட்டாள். பாவமாகக் குரைத்து ஊரைக் கூட்டியது காரியா.
அவள் எதற்காக வீட்டுக்கு வெளியே வரக் கூச்சப் பட்டாளோ அதுவே நடந்துவிட்டது. கேலி செய்ய விஷயம் கிடைத்துவிட்டால் சிறுவர்களுக்கு உண்மையில் தயை தாட்சணியம் இருப்பதில்லை. இன்றும் மன்சனியா வருவதைக் கண்டு அவர்களுடைய கோலி விளையாட்டு நின்று போய் விட்டது.. பொதுக்கைக் காய்கறிக்காரி இன்னிக்கு ஏன் தனியா வந்திருக்கா? அந்த நோஞ்சான் நாய் ஏன் வரல்லே..?
இன்று அவர்கள் அவளைக் கேலி செய்து பாட்டுப்பாடி அவளைப்போல் நடந்து காட்டவில்லை, அவர்கள் தங்களுக்குள் பூதனை ராட்சசியின் கதையைச் சொல்லிக் கொண்டார்கள்.. அவள் காதில் விழும்படி. அவள் எப்படியோ அவர்களிடமிருந்து தப்பியோடினாள்.
இதன்பின் அவள் காய்கறி விற்கச்சென்ற இடங்களி லெல்லாம் வீட்டுப் பெண்கள் அவள் வீட்டில் நடந்த விபத்து பற்றித் துருவித் துருவிக் கேட்டார்கள். போலீஸ் கூட அவளை சந்தேகிக்கவில்லை. இவர்கள் அவள்மேல் சந்தேகப்படுகிறார்கள் என்று தோன்றியது இவர்களுடைய கேள்விகளிலிருந்து. அவள் அதிருஷ்டம் அப்படி! இல்லாவிட்டால் குழந்தைகளைப் பெற்ற வர்கள் இப்படியெல்லாம் அவளைக் கேள்வி கேட்பார்களா..?
இன்னும் கொஞ்சநாட்கள் அவள் வீட்டுக்கு வீடு போய்க் காய்கறி விற்கவேண்டாம் என்று பர்சாதி அவளிடம் சொல்லி யிருந்தான். கடைத்தெருவில் உட்கார்ந்துகொண்டு காய்கறி விற்கச் சொன்னான். அவன் சொன்னது சரிதான். அவள்தான் அவனைப் புரிந்து கொள்ளவில்லை. வீட்டுக்கு வீடு போய் விற்பதென்றால் அவளுக்குச் சிரமம் என்பதற்காகத்தான் அவன் அப்படிச் சொல்கிறான் என்று அவள் நினைத்துவிட்டாள்..
இதன்பின் அவள் வீடு வீடாகப் போகாமல் கடைத்தைருவில் உட்கார்ந்து காய்கறி விற்கத் தொடங்கினாள்.
அவளும் பர்சாதியும் ஒன்றாகத் திரும்பினார்கள். அவர்கள் வீட்டுப் படலைத் திறந்தபோது காரியா வழக்கம்போல் வாலை ஆட்டிக்கொண்டு அவர்களை வரவேற்க வரவில்லை. வீட்டுக்குள் எந்த வித அரவமுமில்லை. என்ன விஷயம்? விளக்கேற்றிப் பார்த்தார்கள் -- காரியா கால்களைப் பரத்திக்கொண்டு படுத்திருக்க, நாய்க்குட்டி அதன் உலர்ந்த மடிக் காம்புகளைச் சூப்பிக் கொண்டிருந்தது. நடுநடுவே ஒரு காம்பை விட்டு இன்னொரு காம்பை வாயால் கவ்விச் சப்பியது நாய்க்குட்டி. மன்சனியா அதனருகில் போய் அதைக் கையில் எடுத்துக் கொண்டதும் காரியா உடலைச் சிலிர்த்துக் கொண்டு எழுந்து நின்றது. "நீ சொன்னதுக்காக ரொம்ப நேரம் இதைப் பார்த்துக்கிட்டு இருந்தாச்சு, இப்போ ஒன் பொறுப்பை நீ ஏத்துக்க.. ஒரே பக்கமாப் படுத்துக்கிட்டு இருந்ததிலே உடம்பெல்லாம் மரத்துப் போச்சு!" என்று சொல்வதுபோல.. பிறகு காரியா மண்ணை முகர்ந்துகொண்டே வெளியே போய்விட்டது.
"இந்தக் குட்டிக்கு ஒரு பேர் வைக்கணும்.. இதைப் "பச்சா" (குழந்தை)ன்னு கூப்பிடலாமா?" மன்சனியா சொன்னாள்.
"பச்சா நல்ல பேருதான்."
"பச்சா! ஏ பச்சா! திருதிருன்னு முழிக்கிறதைப் பாரு! வெரலை நக்காதே! முட்டாள்! அதையா சப்பறது! பசிக்குதா? ஆமா, பசிக்கத்தானே செய்யும்! ரொம்ப நேரமாச்சே! பால் கடிக்கற கொழந்தைகளுக்கு மணிக்கு மணி பசிக்கும்.. வா வா!"
"குட்டி 'குயின் குயின்'னு கத்தறதே, பசிச்சா அப்படித்தான் நாய்க்குட்டி கத்தும்."
"பசிக்கறபோது மட்டுமில்லே, வேறே சமயத்திலும் அப்படிக் கத்தும்.." குறும்பாகச் சிரித்தாள் மன்சனியா. அவள் அந்தக் குறும்புச் சிரிப்பு சிரிக்காவிட்டால் அவன் அவளது குறிப்பைப் புரிந்து கொண்டிருக்கமாட்டான்.
ஐந்து நாட்களுக்குப்பிறகு இன்றுதான் முதல் தடவையாகச் சிரிக்கிறாள் மன்சனியா.
"அதெல்லாம் ஒனக்குத்தான் தெரியும். சின்ன வயசிலேருந்தே நாய் வளர்த்தவளாச்சே!"
மறுநாள் முழுவதும் காரியா சோம்பலாகப் படுத்திருக்க, பச்சா அதனுடைய மடியைச் சப்பிக் கொண்டிருந்தது. மன்சனியா கூடையை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பிய போது காரியா அவளோடு வரவில்லை. அவள் அதை இருக்கச் சொல்லவில்லை. அது தானாகவே தங்கி விட்டது.
அவள் கடைத்தெருவிலிருந்து திரும்பியபோது காரியா முன்பிருந்த நிலையிலேயே படுத்துக் கிடந்தது, நாய்க்குட்டி அதன் மடியைச் சப்பிக் கொண்டிருந்தது. ஆனால் இப்போது மடிக்காம்புகள் மச்சம் மாதிரி சிறிதாக இருக்கவில்லை, சற்றுப் பெருத்திருந்தன. மடியும் சிறிது உப்பியிருந்தது. அதில் சிறிது ஊதா நிறம் படிந்திருந்தது. ஏதாவது சிராய்ப்பு ஏற்பட்டிருக்கிறதோ? பச்சா சும்மா சப்புவதோடு நிற்பதில்லையே, பிறாண்டிக் கடித்து இம்சை செய்கிறதே..!
மன்சனியா காரியாவின் மடியைத் தொட்டுப் பார்த்தாள். இல்லை, சிராய்ப்பு இல்லை. மடியிலிருந்த ஊதா நரம்புகள் புடைத்துக் கொண்டிருந்தன. தோலில் ஒரு வழவழப்பு. மன்சனியா தன்னைச் சோதித்துப் பார்ப்பது காரியாவுக்குப் பிடிக்கவில்லை.. 'ஆ'ன்னு பார்க்கறதுக்கு இதிலே என்ன இருக்கு? இதெல்லாம் முன்னால பார்த்ததே இல்லியா..?
மன்சனியா டப்பா மூடியைக் கையிலெடுத்துக் கொண்டு வராந்தாவிலிருந்து, "பச்சா, பச்சா! துத் துத்து.. வா இங்கே!" என்று அழைத்தாள்.
அவள் எதற்குக் கூப்பிடுகிறாள் என்பது பச்சாவுக்குத் தெரியும். அது எழுந்து அவளிடம் வந்தது. அவளுடைய மேல் துணியைப் பிறாண்டியது. அவள்மேல் ஏறப் பார்த்தது.
"இரு, இரு! பொறுக்கல்லியாக்கும்..! காரியாகிட்டே போ! புது அம்மாவைப் பிடிச்சிருக்கியே, போ, அவளப் போய்ச் சப்பு..! என்ன ஏன் மோந்து பாக்கறே."
இது இனிமே என்ன பிரயோசனம்..! செத்துப் போய்விட்ட ஜீவனின் நினைவு வருகிறது அவளுக்கு. அதை மறக்க முடியுமா?
முற்றத்தில் படுத்திருக்கும் காரியா தலையை நிமிர்த்தி அவளைக் கவனிக்கிறது. இப்போது அதன் கண்ணில் பீளை இல்லை. அது மன்சனியாவின் பேச்சை, அங்க அசைவுகளைக் கவனமாகப் பார்க்கிறது. அவள் டப்பா மூடியைக் கையிலெடுத்துக் கொள்ளும்போது அதன் காதுகள் விறைத்துக் கொள்கின்றன. பச்சாவிடமிருந்து விடுதலை கிடைத்ததும் அது வெளியே போய் ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்திருக்கவேண்டும். அப்படிச் செய்யாமல் அது வாலைச் சுருட்டிக்கொண்டு பச்சா திரும்பி வருவதற்காகக் காத்திருக்கிறது..
பச்சா, டப்பா மூடியிலிருந்த பால் முழுவதையும் நக்கிய பிறகும் ஏன் இன்னும் 'குயின், குயின்' என்று கத்திக்கொண்டு நிற்கிறது? ஏன் அங்கே கிடக்கும் பிரிமணையை முகர்ந்து பார்க்கிறது?
"ஆச்சா இல்லியா?"
மன்சனியாவின் இந்தக் குரல் கொஞ்சல் அல்ல, இதில் ஆபத்து இருக்கிறதென்பது காரியாவுக்குத் தெரியும். காரியா வராந்தாவில் சட்டென்று ஏறிப் பச்சாவை வாயில் கவ்விக் கொண்டு கீழே வருகிறது.. வா, ஒன்னிடத்துக்கு வா! வந்து ஒன்னிஷ்டப்படி செய்..!
காரியா தன் பழைய இடத்துக்குப் பச்சாவைக் கொண்டு வந்து அதன் கழுத்தை இதமாக நக்கிக் கொடுக்கிறது. பிறகு கால் களைப் பரப்பிக் கொண்டு படுத்துக் கொள்கிறது.. இனி என்ன செய்யவேண்டுமென்று பச்சாவுக்கு யாரும் சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை.
மன்சனியா மூங்கில் தூணில் சாய்ந்தவாறு ஆச்சரியத்துடன் இதைப் பார்க்கிறாள்.. கிழட்டுக் காரியாவுக்கு இன்னும் ஆசை தீரவில்லை போலும்..!
ஈ, பச்சாவைத் தொந்திரவு செய்கிறது. காரியா தன் உடலை அசைக்காமல் தலையை மாத்திரம் ஆட்டியாட்டி ஈயை விரட்டப் பார்க்கிறது.. உடலை அசைத்தால் மடியைச் சூப்பும் பச்சாவுக்கு இடைஞ்சல், தவிரக் காரியாவின் சொந்த சுகத்துக்கும் இடையூறு..
கிழட்டு நாயின் மடி உப்பியிருப்பதைப் பர்சாதி கவனித் திருப்பானோ? அதை அவனுக்குக் காட்ட அவளுக்கு ஆசைதான், இருந்தாலும் கூச்சம்.
பர்சாதியும் இதைக் கவனித்திருக்கிறான். ஆனால் இதைப்போய் மன்சனியாவிடம் எப்படிச் சொல்வது..?
அன்றிரவு மன்சனியாவுக்கு அடிக்கடி உறக்கம் கலைந்தது. இரவு முழுவதும் அக்கம் பக்கத்தில் நரி இருப்பதை மோப்பம் பிடித்துக் குரைத்துக் கொண்டிருந்தது காரியா. காலையில் எழுந்தபோது காரியாவையும் பச்சாவையும் முற்றத்தில் காண வில்லை. எங்கே போயிருக்கும்? சாத்புதியா அவரைப் பந்தலுக்குக் கீழே பெட்டி மாதிரி ஒரு மர வீடு உண்டு. ஒரு காலத்தில் மன்சனியா வாத்து வளர்த்தாள். அப்போது வாத்துகளுக்காக இந்த மர வீட்டைச் செய்திருந்தாள். இப்போது அந்த மர வீட்டுக்குள் பச்சாவைப் பக்கத்தில் போட்டுக்கொண்டு படுத் திருந்தது காரியா. பெட்டியின் ஒரு புறத்தில் வாத்து நுழைய ஒரு சிறிய ஓட்டை உண்டு. அதன் மற்ற பக்கங்கள் மூடியிருக்கும். சின்ன ஓட்டை. காரியா கூட சிரமப்பட்டுத்தான் அதற்குள் நுழையமுடியும்.
மன்சனியா அருகே சென்று குனிந்து பார்த்தாள். உள்ளே இருட்டாயிருந்ததால் ஒன்றும் சரியாகத் தெரியவில்லை.
'கர்ர்ர்.. இஙகே என்ன வேலை ஒனக்கு?"
"போக்கிரி! சும்மா இரு, காரியா!" மன்சனியா அதட்டினாள்.
அவள் அவரைப் பந்தலிலிருந்து காய் பறித்துக் கொண் டிருந்தாள். அந்த அரவம் கேட்டுக் காரியா குலைக்கத் தொடங்கியது.
"அது ஏன் இப்படிக் குலைக்குது?" பர்சாதி கேட்டான்.
"நான் காய் பறிக்கறது அதுக்குப் பிடிக்கல்லே"
"அவரைப் பந்தல் அதோட ராஜ்யம் போலேருக்கு!"
"ஆமா, அதுதான்!"
"புதுக் கொழந்தை கெடைச்சிருக்காக்கும் அதுக்கு?"
"ஆமா, ஏழு ஜன்மத்துக் கொழந்தை!"
கணவன் மேலும் பேச்சைத் தொடர வாய்ப்பளிக்காமல் அவள் பானையை எடுத்துக் கொண்டு பொதுக் கிணற்றடிக்குப் போய்விட்டாள்.
பர்சாதிக்கும் நிம்மதி ஏற்பட்டது. அவர்களது உரையாடல் அவர்களறியாமலேயே ஒரு சங்கடமான விஷயத்தை நெருங்கி விட்டிருந்தது.
இன்று அவர்கள் காய்கறி வாங்க ஹர்தாச் சந்தைக்குப் போகவேண்டும். முன்னதாவே புறப்படவேண்டும். ஆகையால் பர்சாதி அடுப்பு மூட்ட உட்கார்ந்தான். அவன் சுள்ளிகளை ஒடிக்கும் அரவங்கேட்டுக் குரைத்தது காரியா.
"அடேயப்பா! ஒரு குச்சியைக் கூட ஒடிக்கக் கூடாதாம்!"
அப்படித்தான் நடந்துகொண்டது காரியா. காகம் பந்தலின் மேல் உட்கார்ந்தால் குரைத்தது. பர்சாதி கொல்லையில் நடமாடினால் குரைத்தது. வீட்டுக்கூரையின் மேல் பருந்து உட்கார்ந்தால் குரைத்தது. வாசலில் பூனையைக் கண்டால் குரைத்தது. எல்லாரையும் எதிரிகளாகக் கருதியது. எவராலும் ஆபத்து நேரலாம். பத்திரமாகக் குட்டியைப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆபத்து ஏற்படும் போலிருந்தால் குரைத்து எதிரியைப் பயமுறுத்த வேண்டும். நாள் முழுதும் கண்ணையும், காதையும் திறந்து வைத்திருக்கவேண்டும். யாரையும் நம்பக்கூடாது, எதிரி தாக்க வருவதற்குள் எதிரியைத் தாக்க வேண்டும். எதிரிக்குச் சற்று அவகாசம் கொடுத்துவிட்டால் பிறகு தன்னால் சமாளிக்க முடியாது..
சாக்கடைக்கருகில் ஒரு கீரியைப் பார்த்து வாத்துக் கூட்டி லிருந்து வெளியே ஓடிவந்தது காரியா. அடுப்பருகில் இருந்தவாறே பர்சாதி அதை நன்றாகக் கவனித்தான்.. அதன் கண்கள் சிவந்திருந்தன. புதிதாகக் குட்டிபோட்ட நாயின் அறிகுறிகள் அதன் உடலில் .. பச்சாவும் அதைப் பின் தொடர்ந்து வாத்துக் கூண்டிலிருந்து வெளியே வந்தது. கீரி பயந்து போய் ஓடிவிட்டது. அதன்பிறகும் காரியாவின் குரைப்பும் ஆர்ப்பாட்டமும் நிற்க வில்லை.. அதன் மடி கனத்துக் கீழே தரையைத் தொடுமளவுக்குத் தொங்கியது. அது நடந்துபோகும் போதும் பச்சா அதன் மடியைச் சப்புவதை விடவில்லை..
இதென்ன..! நிசமாத்தான்..! இது எப்படி..?
நாயும் குட்டியும் மறுபடி வாத்துக் கூண்டுக்குள் நுழைந்துவிட்டன.. பர்சாதிக்கு ஒரே திகைப்பு.. மிருகங்களில் இந்த மாதிரி நடக்கும் என்று இதுவரை அவனுக்குத் தெரியாது. மன்சனியா இதைக் கவனித்தாளா? அவளுக்குச் சொல்லலாமா? அக்கம் பக்கத்தாரைக் கூப்பிட்டு இந்த வேடிக்கையை அவர் களுக்குக் காட்டவேண்டும் போலிருந்தது அவனுக்கு. ஆனால் அப்படிச் செய்ய வழியில்லை. அவனுக்குப் பேச வாயில்லை..
ஹர்தாச் சந்தைக்குப் போகும் வழியில் மன்சனியா நாய்களிரண்டையும் பற்றிப் பேசினாள். அவள் காரியாவைச் சாப்பாட்டுக்குக் கூப்பிட்டபோது அது வரவில்லையாம். குட்டி யையும் வரவிடவில்லையாம். குட்டிக்காகக் கவலைப்பட்டாள் அவள்.
"சாப்பிடாம இருக்க முடியுமா?" என்றான் பர்சாதி. இதை விடத் தெளிவாகப் பேசமுடியவில்லை அவனால். மன்சனியா புரிந்து கொண்டால்தானே!
அவர்கள் வீடு திரும்ப மாலையாகி விட்டது. சின்னக்குட்டி
இவ்வளவு நேரமாகப் பட்டினியாயிருக்கிறதே என்று மன்சனியா வுக்குக் கவலை. அவள் டப்பா மூடியை எடுத்துக் கொண்டு வாத்துக் கூண்டுப் பக்கம் போனாள்.. "பச்சா! பச்சா! வா, வா! குர் குர் குர்.."
"ஆமா, அது வரப் போகுதாக்கும்!" என்றான் பர்சாதி. குட்டி உண்மையிலேயே வரவில்லை.
காரியா கூண்டின் ஓட்டை வழியே தலையை நீட்டிக் குரைத்தது. கடிக்க வருவதுபோல் பல்லைக் காட்டியது.
"நீ ஏன் கூப்பிட்டுக்கிட்டே இருக்கே? சும்மா இரு!" பர்சாதி சொன்னான்.
மன்சனியா கையை நீட்டியதும் உறுமிக் கொண்டு வெளியே வந்தது காரியா. இது அவர்களுக்குப் பழக்கமான காரியா அல்ல, முற்றிலும் புதிய பிராணி. மன்சனியா விஷயத்தைச் சரியாகப் புரிந்து கொள்வதற்குள் அது மேல் விழுந்து அவளைப் பிறாண்டிக் கடித்துக் கிழிக்க முற்பட்டது. மன்சனியா சுரைக்கொடியின் மேலே போய் விழுந்தாள். அவளுடைய துணி நார் நாராகக் கிழிந்து போய்விட்டது. அவளுடைய கையிலிருந்து இரத்தம் பெருகியது. பர்சாதி கத்திக்கொண்டே தடியை எடுத்து வந்தான்.
ஆனால் மன்சனியாவின் கவனம் இவற்றிலெல்லாம் இல்லை. காரியா மறுபடியும் வாத்துக் கூண்டுக்குள் நுழையும் வரையில் அவளுடைய பார்வை அதன் மடியிலிருந்து விலகவில்லை. அதன் மடியில் பால் சுரந்திருக்கிறது..! அது அவள் மேல் பாய்ந்தபோது அதன் வெதுவெதுப்பான, ஈரமான மடியின் பாரம் அவளுடைய கைமேல் விழுந்தது- ஈர மடி! பால் கொட்டிக் கொண்டிருந்தது காரியாவின் மடியிலிருந்து..! அவளுடைய கையில் காரியாவின் மடிபட்ட இடத்தில் பாலின் ஈரம்..
தனக்கு மட்டும் விதிக்கப்பட்ட சாபக் கேட்டின் சுமை பாறாங்கல்லாக அழுத்தியது மன்சனியாவின் இதயத்தை..
(பத்ர லேகார் பாபா, 1959)
7. எல்லைக்கோட்டின் எல்லை
ஆஷாபூர்ணா தேவி
எல்லாரும் தோல்வியுற்றுத் திரும்பிவிட்டார்கள்.
கடைசியில் சதிநாத் தாமே இரண்டாம் மாடிக்கு ஏறி வந்து கடுமையான குரலில் சொன்னார், "சவி! அநாகரீகத்துக்கும் ஒரு எல்லை இருக்கு, எல்லை இருக்கணும்! ஆனா விருந்தாளிகள் கூடியிருக்கிற இந்தக் கல்யாண வீட்டிலே நீ செஞ்ச அநாகரீகத் துக்கு எல்லையில்லே! இவ்வளவு உறவுக்காரங்களுக்கு முன்னாலே என் கௌரவத்தை மண்ணாக்கினே, நீயும் கேலிக்கு ஆளாகிக் கிட்டே! இப்பவாவது தயவ செஞ்சு வா!"
வீட்டுக்கு இரண்டாம் மாடி கட்ட அனுமதி கிடைக்க வில்லை. இருந்தாலும் இரண்டாம் மாடியில் சவிக்காகச் சீமை ஓடு வேய்ந்த ஓர் அறை கட்டப்பட்டிருந்தது. அறைக்குள் அப்போது விளக்கு எரியவில்லை. கீழே பந்தலில் எரிந்து கொண்டிருந்த எண்ணற்ற விளக்குகளின் வெளிச்சம் மட்டும் ஓரளவு அந்த அறை வாசலில் பிரதிபலித்தது.
ஒருக்களித்திருந்த அறைக்கதவில் கைவைத்து நின்று கொண் டிருந்தாள் சவி. அந்தக் கைவிரல்களும் அவளது கன்னத்தின் ஒரு பக்கமும்தான் கண்ணிற்குத் தெரிந்தன. இதன் மூலம் அவர்களுடைய முகபாவத்தைப் புரிந்துகொள்ள இயலவில்லை.
ஆகையால் அவள் முன்போலவே விறைப்பாக இருக்கிறாளா அல்லது இளகி வருகிறாளா என்பதும் புரியவில்லை.
சதிநாத் வந்து கூப்பிட்டபிறகும் அவள் பிடிவாதமா யிருந்தால் அவளும் அவளுடைய கணவன் மாதிரி பெத்தியந்தான் என்று நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்.
சவியிடம் மாறுதல் எதுவம் தெரியவில்லை. சவி ஒரு விசித்திரமான, வறண்ட குரலில் சொன்னாள், "அண்ணா, நீ எதுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டுக்கிட்டு ஏறிவந்தே? நான் தான் சொல்லிட்டேனே.."
"ஆமா தெரியும்.." கசப்பும் கோபமும் கலந்த குரலில் சொன்னார் சதிநாத். "வீட்டிலே இருக்கறவங்க எல்லாரும் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் உன்னை சமாதானப்படுத்த வந்தாங்க, நீ 'கீழே எறங்க மாட்டேன், சாப்பிட மாட்டேன்'னு சொல்லி எல்லாரையும் வெரட்டிட்டேன்னு தெரியும் எனக்கு. உன் அண்ணி வந்து கைகூப்பிக் கும்பிடும் நீ அசைஞ்சு குடுக்கலே.."
சவியின் முகத்தை இப்போதும் பார்க்க முடியவில்லை. அவள் அந்த அறையை விட்டுச் சற்று வெளியே வந்தால் அவளுடைய முகத்தைப் பார்க்கலாம். ஆனால் வெளியே வர வில்லையே அவள்! யாரோ அறை வாசலில் ஒரு கோடு போட்டு அதை அவள் தாண்டக்கூடாதென்று ஆணையிட் டிருந்தாற்போல் அவள் அறைக்குள்ளேயே நின்றிருந்தாள்.
ஆனால் கதவை ஒரேயடியாகச் சாத்திவிட்டுப் படுக்கையில் போய் விழவும் வழியில்லை அவளுக்கு. சாயங்காலத்திலிருந்து ஒருவர் மாற்றி ஒருவர் அவளை அழைக்க வந்து கொண்டே யிருக்கிறார்கள்.
"சவி! ஐநூறு பேர் வந்திருக்காங்க கீழே.. எவ்வளவு பேர் 'சவி எங்கே? சவி எங்கே'ன்னு கேட்டுக்கிட்டிருக்காங்க! வாயேன் ஒரு தடவை...! சவி! உன் அண்ணாவுக்க எவ்வளவு அழகான மாப்பிள்ளை கிடைச்சிருக்கான், வந்து பாரேன்...! அத்தை! கன்யாதானம் நடக்கற எடத்திலே நீ ஏதோ செய்யாமே வந்துட்டியாமே, அப்பா கோவிச்சுக்கறார், சீக்கிரம் வாயேன்...!"
ஆனால் சவி அசையவில்லை, அவளுடைய கோபம் குறைய வில்லை. "எனக்குத் தலை வலிக்குது" என்று சொல்லித் தட்டிக் கழிக்கிறாள் அவள்.
இவ்வளவு நாள் இந்தக் கல்யாணம் சம்பந்தப்பட்ட எல்லாக் காரியங்களையும் சவிதான் கவனித்து வந்திருக்கிறாள். அன்று பகலில் சமையலறை, உக்கிராணம், சாப்பாட்டுக் கூடம், பூஜையறை என்று சக்கரம் மாதிரி சுழன்றிருக்கிறாள் ... மாலை நேரத்தில் தற்செயலாக அந்த நிகழ்ச்சி நேர்ந்துவிட்டது. அதைப் பெரிதாக எடுத்துக்கொண்டு சவி கோபத்தில் தன் அறையில் போய்ப் படுத்துக்கொண்டுவிட்டாள் என்பதை யாரும் கவனிக்கவில்லை. கன்யாதானத்தின்போதுதான் அவளைத் தேடத் தொடங் கினார்கள்.
"சவி எங்கே.? எங்கே சவி?"
முடிச்சுப் போடறதுக்கு வேண்டிய மஞ்சள் சோழியைச் சவி எங்கே வச்சிருக்கா...? மணப்பெண்ணோட பட்டுப் புடவை எங்கே?"
இந்தப் பருளெல்லாம் பக்கத்திலேதானிருந்தது, கிடைச் சுட்டது. இருந்தாலும் அதையெல்லாம் எடுத்து வச்சிக்கிட்டுத் தேவைப்படறபோது கொடுக்க ஆளில்லாட்டி அசௌகரியந்தானே! மஞ்சள் சோழி, பட்டுப்புடவை மட்டுமில்லே, சடங்குக்குத் தேவையான ஒவ்வொரு சாமானும் சவியோட பொறுப்பிலே தானிருந்தது! கலியாணப் பொண்ணோட அம்மா எந்தப் பக்கந் தான் சமாளிப்பா? விருந்தாளிகளைக் கவனிக்க வேண்டாமா அவ?
இதெல்லாம் தெரிஞ்சும் ரொம்ப முக்கியமான நேரத்திலே ஒளிஞ்சுக்கிட்டாளே இந்த சவி! சீ.. சீ.! அதட்டப்பட்ட புருசனை சாதானப்படுத்தப் போயிருக்கா, வேறென்ன! அதுக்கு இதுதானா நேரம்? பைத்தியக்கார மனுசன், மறுபடி ஒண்ணு கெடக்க ஒண்ண செஞ்சுடுவான். தூக்க மருந்து கொடுத்து அவனைத் தூங்க வச்சுட்டுக் கீழே வர வேண்டியதுதானே! கல்யாணப் பொண்ணும் பிள்ளையும் மணையிலே ஒக்காந்தப்பறம் விருந்துச் சாப்பாட்டை மேலே எடுத்துக்கிட்டுப் போய்ப் புருசனை எழுப்பி அவனுக்கு ஊட்டிவிட்டுக் கொஞ்சட்டுமே! அப்படிச் செய்யாம இதென்ன ..! இந்த ஆகாத்தியத்தைப் பொறுத்துக்க முடியாது!
வீடு நிறைய ஜனங்க. அவங்களுக்கு முன்னாலே நீ கோவிச்சுக் கிட்டு ஆம்படையானோடே ஒன் ரூமிலே போய் உக்காந்துகிட்டு, 'அவரும் சாப்பிட மாட்டார், நானும் சாப்பிட மாட்டேன்'னு சொல்லிக்கிட்டிருக்கியே! சீ..சீ..! இவ்வளவு லட்சணமா மாப்பிள்ளை வந்திருக்கான், அண்ணாவோட பலநாள் ஆசை நிறைவேறியிருக்கு, கல்யாணச் சடங்கு ஒண்ணையும் வந்து பார்க்கலியே நீ! சாப்பிடறதிலே கூடப் பிடிவாதம் பிடிக்கிறியே! இந்த கல்யாணக் கொண்டாட்டம், பிரமாதமான சமையல், பலவகைக் கறி, இனிப்பு இது ஒண்ணையும் நீங்க ரெண்டுபேரும் தொடக்கூட மாட்டீங்களா? பட்டினி கிடப்பீங்களா? இதனாலே உன் மருமகளுக்குக் கெடுதல்ங்கறதைப் பார்க்க மாட்டியா? அண்ணா-அண்ணியைத் தலைகுனிய வப்பியா? நீசத்தனத்துக்கு ஒரு எல்லையில்லையா? அண்ணா, ஒன் அண்ணா, ஒன்னைவிட இருவது வயது பெரியவன். ஒனக்கு அப்பா மாதிரின்னுதான் சொல்லணும். அப்பா மாதிரிதான் ஒன்னை வளர்த்தான், கல்யாணம் பண்ணிக் கொடுத்தான். அதுக்கப்பறம் மாசம் முப்பது நாளும் வருசத்திலே பன்னெண்டு மாசமும் ஒன்னையும் ஒன் பைத்தியக்காரப் புருசனையும் வச்சுக் காப்பாத்தறான், ஒங்களுக்காகத் தனி அறை கட்டிக் கொடுத்திருக்கான்.. அந்த அண்ணா ஒம் புருசனை ஒரு அதட்டு அதட்டிட்டா, ஒரு தள்ளு தள்ளிட்டா அதுக்காக இப்படியா பண்ணுவே நீ? நன்றியே இல்லையா ஒன் ஒடம்புலே?
இவ்வளவு பெரிய நன்றிகெட்ட செய்கையைச் செய்துவிட்ட சவியைப் பார்க்க அவளுடைய அறைக்கு முன்னால் கூட்டம் கூடிவிட்டது. தேர்த் திருவிழாக் கூட்டம்.
சிலர் சவியிடம் அனுதாபம் காட்டுகிறார்கள் - ஒளிவு மறைவாகத்தான்!
காரணம், விருந்தாளியாக வந்துவிட்டு விருந்துக்கு அழைத்த வருக்கு எதிராகப் பேசுவதென்றால் ஒளிவ மறைவாகத்தானே முடியும். "பாவம், சவி!" என்று குசுகுசுக்க முடியும்.. "தங்கை புருசன் பைத்தியம், பாவம், அதனால்தான் அவன் அந்த மாதிரி நடந்துகிட்டான். நீ கெட்டிக்காரன், விஷயம் தெரிஞ்சவன், ஒன் பொண்ணுக்குக் கலியாணம் நடந்துக்கிட்டிருக்கு. இந்த நல்ல நேரத்திலே ஒன் தங்கை புருசனை இப்படித் தள்ளிவிட்டியே! ஒன் தங்கை வேற வழியில்லாம ஒன்னை அண்டியிருக் காங்கறதினாலேதானே நீ இப்படி செஞ்சுட்டே! தங்கை பணக் காரியாயிருந்தா இந்த மாதிரி நடந்துக்கிட்டிருப்பியா?"
வேடிக்கை என்னவென்றால், மேலே நின்றுகொண்டு சவிக்கு அதரவாகக் குசுகுசுத்தவர்கள் கீழே இறங்கி வந்ததும் சவியைக் கண்டித்துப் பேசினார்கள்.
ஏன் பேச மாட்டார்கள்?
அவர்கள் என்ன கிறிஸ்துவா, சைதன்யரா? அவர்களுக்கு கோபம் வராதா? அவர்களுடைய சவி அனுதாபத்தை நன்றியோடு ஏற்றுக்கொண்டு கண்ணீர் விடவில்லையென்றால், "நீங்க ஒண்ணும் பேசாதீங்க, எனக்கு ஒண்ணும் பிடிக்கலை, நீங்க கீழே போயிடுங்க!" என்று முகத்திலறைந்தாற்போல பேசிவிட்டால் அவர்களுக்கு அவள் மேல் எரிச்சல் வராதா?
சைதன்யருக்கும் கிறிஸ்துவுக்கும் கூட எரிச்சலேற்பட்டுவிடும்!
இதெல்லாம் மாலையில் நடந்த நிகழ்ச்சி. இரவு வெகு நேரமாகிவிட்டது. விருந்தாளிகள் சாப்பிட்டுவிட்டுப் போய் விட்டார்கள். வீட்டிலுள்ளவர்கள் மட்டுந்தான் சாப்பிட வேண்டும். சதிநாத் தம் மாப்பிள்ளையின் அழகிலும் குணத்திலும் மயங்கிப் போய்விட்டார். தம் சாமர்த்தியத்தைப் பற்றி அபார பெருமை அவருக்கு. சட்டென்று ஏதோ நினைவு வந்தது அவருக்கு. "சதீஷ் சாப்பிட்டானா?" என்று கேட்டார்.
அன்று மாலையில் கல்யாணக் கூட்டத்துக்கு நடுவில் சதீஷ் ஒரு அழுக்குத் துணியில் லுச்சியையும், இனிப்புகளையும் குவித்து வைத்துக் கொண்டு சாப்பிட உட்கார்ந்ததைப் பார்த்து எரிச்ச லடைந்து அவர் சதீஷைக் கழுத்தைப் பிடித்து சபையிலிருந்து வெளியேற்றியது இப்போது நினைவு வந்தது.
தாம் செய்தது சரியில்லைதான் என்பதை உள்ளூர உணர்ந்தார் அவர். இருந்தாலும் அவரும் ஒரு மனிதர்தானே!
அப்போதுதான் மாப்பிள்ளை வீட்டார் வந்து சபையில் அமர்ந்திருந்தார்கள். கன்யாதானம் செய்ய வேண்டியிருந்ததால் அவர் உபவாசமிருந்தார்; அலுப்பும் கவலையும் அவரை சஞ்சலப் படுத்திக் கொண்டிருந்தன; இந்தச் சமயத்தில் சதீஷின் இந்த அசிங்கமான நடத்தையைப் பொறுத்துக் கொள்வது எளிதா?
அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
ஆனால் அவரால் விரட்டிவிடப்பட்டதை இவ்வளவு பெரிய அவமானமாக அந்தப் பைத்தியக்காரன் எடுத்துக் கொள்வான் என்றும் அவர் எதிர்பார்க்கவில்லை.. அவன் மறுபடியும் சமையல் காரர்களிடம் போய் உட்கார்ந்து கொள்வான் என்றுதான் அவர் நினைத்திருந்தார். சவி அங்கே இல்லாததைக் கவனித்த பிறகுதான் அவருக்கு ஓரளவு விஷயம் புரிந்தது. சவி இல்லாததால் அசௌகரியப்பட்டது அவர் மட்டுமல்ல. அவள் இல்லாததால் கல்யாண நிகழ்ச்சியில் ஏகப்பட்ட குழப்பம். எங்கே பார்த்தாலும் "சவி..! சவி எங்கே?" என்று கூப்பாடு.
அப்புறம் அவருடைய பெரிய மைத்துனிதான் அவரிடம் விஷயத்தைச் சொன்னாள், "எனக்கொண்ணும் தெரியாதுப்பா! நீ ஒன் தங்க புருசனை ஏதோ சொல்லிட்டியாம், கழுத்தைப் பிடிச்சு வெளிய தள்ளினியாம்.. அதனாலே ஒன் தங்கை கோவிச் சுக்கிட்டுப் புருசனோட தன் ரூமிலேபோய் ஒக்காந்துக் கிட்டிருக்கா. அப்பறம் கீழே எறங்கி வரவேயில்ல. ஒன் தங்கை புருசன் பட்சணம் பண்றவங்ககிட்டேயிருந்து ஒரு பொட்டலம் பட்சணம் வாங்கிட்டு வந்திருந்தாராம். அதெல்லாம் முத்தத்தில படியிலே இறைஞ்சி கிடக்கு. கோவத்திலே தூக்கியெறிஞ்சிட்டார் போலிருக்கு..! அவர்தான் பைத்தியம், ஒன் தங்கச்சி பைத்தியம் இல்லியே?"
இதைக் கேட்டபோது சதிநாத் அடைந்த கோபத்துக்கு அளவில்லை. ஆனால் அப்போது அவர் கன்யாதானம் செய்ய மனையில் உட்கார வேண்டியிருந்ததால் ஒன்றும் செய்ய முடிய வில்லை.
இப்போது அவர் சந்தோஷமாயிருந்தார். ஆகையால் "சதீஷ் சாப்பிட்டானா?" என்று கேட்கும் மனநிலை பிறந்திருந்தது.
மாலையிலிருந்து இதுவரை குறைந்தது ஐம்பதுபேர் சவியிடம் போய் அவளைக் கீழே இறங்கி வந்து மற்றவர்களுடன் உட்காரும் படி, கல்யாணத்தைப் பார்க்கும்படி, பந்தியில் உட்கார்ந்து சாப்பிடும்படி கேட்டுக்கொண்டுவிட்டார்கள். அவர்களுடைய கெஞ்சலுக்கு அவள் அசைந்து கொடுக்கவில்லை. கீழேயே இறங்கி வரவில்லை.
இந்தச் செய்தியைத் தம் மனைவி சொல்லக் கேட்டபிறகும் அவர் சுமுகமாக இருப்பார் என்று எதிர்பார்க்கலாமா?
அவர் வேகமாக எழுந்து சவியின் அறைக்குப் போனார். "நான் கைகூப்பிக் கேட்டுக்கறேன், எங்களோட சாப்பிடவா!" என்று அவளிடம் சொன்னார்.
சவியின் குரலில் சிறிது நடுக்கமா?
அல்லது அது சதிநாத்தின் பிரமைதானா?
பிரமையாகத்தானிருக்கும். ஏனென்றால் சவியின் குரல் தெளிவாகத்தானிருந்தது. "இப்படியெல்லாம் ஏன் சொல்றே அண்ணா? என்னாலே சாப்பிட முடியாது. ஒரே தலைவலி எனக்கு?
சதீஷ் பட்சணம் சாப்பிட உட்கார்ந்த காட்சி இப்போது சதிநாத்துக்கு நினைவு வந்தது. தாம் சதீஷைத் திட்டியதும் ஞாபகம் வந்தது.
பைத்தியமாயிருந்தாலும் அவன் சவியின் கணவனல்லவா!
அவர் இதமான குரலில், "ஒன்னாலே சாப்பிட முடி யாட்டியும் ஒரு தடவை வந்து ஒக்காரேன்..! நான் சதீஷோட சாப்பாட்டை மேலே அனுப்பச் சொல்கிறேன். அவனக்குச் சாப்பாடு போட்டுட்டுக் கீழே வா!" என்று சொன்னார்.
சவி அதே வறண்ட குரலில், "அவர் சாப்பிடமாட்டார், அண்ணா!" என்றாள்.
மறுபடி பொறுமையிழந்தார் சதிநாத். இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.
"நன்றி கெட்டவங்க இப்படித்தான் இருப்பாங்க..!" என்று திட்டிக்கொண்டே அவர் கீழே இறங்கி வந்தார்.
அதே சமயத்தில் மேலே ஏறிவந்தான் அமல். அவன் தான் சாப்பாடு பரிமாறும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்தான். ஒரு பெண்ணின் அசட்டப் பிடிவாதத்தால், கடைசிப் பந்தி தாமதப் படுகிறது. மணி பன்னிரண்டுக்கு மேலாகிவிட்டது.
அமல் இவர்களுடைய உறவினன் அல்ல. அந்தத் தெருவாசி, அவ்வளவுதான். அவன் இவ்வளவு பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை, அப்படியும் ஏற்றுக் கொண்டிருந்தான். அது அவன் சுபாவம். ஆனால் ராத்திரி இன்னும் நேரமானால் அவன் வீட்டில் திட்டமாட்டார்களா? அவன் மாடிப்படியில் சதிநாத்தோடு மோதிக்கொள்ள இருந்தான்.
சதிநாத் அவனைப் பார்த்துக் கேலியாகக் கேட்டார், "நீ ஒருத்தன் பாக்கி இருந்தியாக்கும்!" பிறகு கீழே இறங்கிப் போய் விட்டார்.
அமல் அதே தெருவில் வசிப்பவன். அவர்களோடு வெகு காலமாகப் பழகுபவன். ஆகையால் அவன் சவியைச் சமாதானம் செய்யப் போவதில் அவருக்கு வியப்பு ஏற்படவில்லை. ஆனால் அதனால் பலனேற்படுமென்றும் அவர் நம்பவில்லை.
அமலுக்கும் நம்பிக்கையில்லைதான். நடந்த நிகழ்ச்சி, பேசப் பட்ட பேச்சுக்கள் எல்லாமே அவனுக்குத் தெரியும்.
இருந்தாலும் அவனுக்குத் தன்னம்பிக்கை இருந்தது. மேலும் சவியை ஒருமுறை பார்க்க வேண்டுமென்ற ஆவல் - இவ்வளவு பிடிவாதம் செய்யும்போது சவி எப்படித் தோற்றமளிக்கிறாள் என்று பார்க்க விரும்பினான் அவன். சவி அப்போதுதான் அறைக்கதவை மூடிக் கொண்டிருந்தாள். இப்போதாவது கொஞ்சம் படுத்துக் கொள்ளலாம் என்று அவள் நினைத் திருக்கலாம்.
அமலைக் கண்டதும் அப்படியே நின்றாள். கதவு பாதி மூடியபடியே இருந்தது.
சட்டென்று ஒரு நெருப்புக் குச்சி கிழித்து அவளுடைய முகத்தைப் பார்க்கலாமா என்று தோன்றியது அமலுக்கு. ஆனால் அவன் நெருப்புக் குச்சி கிழிக்கவில்லை. "வௌக்கை ஏத்தேன்!" என்று சொன்னான்.
"என்னத்துக்கு?"
"அவசியமில்லேதான்.. இருந்தாலும் இருட்டிலே ஒன்னைப் பார்த்தா பூதம் மாதிரி, ஆவி மாதிரி இருக்கு அதனாலேதான்.."
சவி அவனை எதிர்த்துப் பேசவில்லை, சற்றும் சஞ்சலப் படவில்லை. சிறு வயது நினைவுகளுக்கு மதிப்பளித்து அவனுடைய வேடிக்கைப் பேச்சுக்குச் சிரிக்கவுமில்லை. அவள் அந்த நிழலிருட்டில் சித்திரம்போல் அசையாமல் நின்றாள்.
சவி பாதி மூடியிருந்த கதவின்மேல் சாய்ந்து கொண்டிருந்த தால் அமலால் அறைக்குள்ளே பார்க்க முடியவில்லை. "சதீஷ் பாபு தூங்கறாரா?" என்று கேட்டான். சவி காரணமின்றி மெல்லச் சிரிப்பதாக அவனுக்குத் தோன்றியது. "ஆமா" என்று அவள் சொன்னாள்.
"சதிநாத் அண்ணா அவரை 'ஏதோ' செஞ்சுட்டார்னு கேள்விப்படடேன்... என்ன இருந்தாலும் நீ அதுக்காக இவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்ணவேண்டாம்! ஒன் பிடிவாதத்தைப் பார்த்து எனக்கு வெக்கமாயிருக்கு..."
சவி சிரித்தே விட்டாள் இப்போது.
உண்மையிலேயே சவியைப் பார்த்தால் ஒரு பூதம் மாதிரி, ஒரு ஆவி மாதிரித் தானிருக்கிறது. அவளுடைய சிரிப்பு இயற்கையான மனிதச் சிரிப்பு அல்ல, ஆவியின் சிரிப்பு. "நான் வெக்கங்கெட்டுப் போனதுக்கு நீ ஏன் வெக்கப்படறே?"
இப்போது நெருப்புக் குச்சி கிழித்துச் சவியின் முகத்தைப் பார்க்கத்தான் வேண்டுமென்று தோன்றியது அமலுக்கு. வெட்கத்தைத் துறந்ததோடு கொடூரமான சவியின் முகம் எப்படியிருக்கும் என்று பார்க்க வேண்டும்!
ஆனால் இருட்டில் அவளது முகத்தைப் பார்க்க முடிய வில்லை. சவியின் அண்ணன் ஏமாந்துபோய் அவளை ஒர பைத்தியக்காரனுக்குக் கலியாணம் செய்து வைத்து விட்டார். இருந்தாலும் சவி ஒருநாளும் தன் அண்ணனைக் கறை கூறிய தில்லை. சவியின் மைத்துனர் அவளையும் அவள் கணவனையும் அவளுடைய அண்ணனிடம் விரட்டியனுப்பியதற்காக மைத்துன ரையும் திட்டியதில்லை அவள்.
சவி சதீஷின் பயங்கொள்ளித்தனத்துக்காக அவனை ஏச வில்லை. அவள் இதுகாறும் இயல்பாகவே தன் காரியங்களைச் செய்து வந்தாள். கமரிப் பெண்ணாயிருந்தபோது இந்தக் குடும்பத்தின் பொறுப்பை ஏற்று உழைத்தாற்போல் இப்போதும் உழைத்த வருகிறாள். இப்போது அவளுக்கு ஒரு அதிகப்படியான பொறுப்பு - தன் பைத்தியக்காரக் கணவனைக் கவனித்துக் கொள்வது.
இவ்வளவு பொறுப்பையும் ஒரு விளையாட்டுப்போல் அனாயாசமாகச் சுமந்து வந்திருக்கிறாள் சவி. அமலுக்குத் தெரியாதா? அவன்தான் இங்கு அடிக்கடி வருபவனாயிற்றே!
சதீஷை வெகுநேரம் காணாவிட்டால் சவி கவலைப் படுவாள்! அதுகூட வேடிக்கையாகத்தான். யாருடனாவது பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென்று எழுந்து, "ரொம்ப நேரமா என் பொக்கிஷத்தைப் பார்க்கவேயில்லையே1 திடீர்னு சன்னியாசம் வாங்கிக்கிட்டுப் போயிட்டாரான்னு பார்க்கறேன்" என்று சொல்லிவிட்டுப் போவாள்.. "மணி என்ன ஆச்சு? அடே, இவ்வளவு நேரமாச்சா? என் நாதர் தானே சமையலறைக்குப் போய்ப் பாத்திரத்தை உருட்டறாரான்னு போய்ப் பார்க்கறேன்" என்பாள்.. திடீர்னு மூஞ்சியை 'உர்'ருனு வச்சுக்கிட்டுப் போயிட்டார் என் பிராணநாதர்! நாம சந்தோஷமாப் பேசிக்கிட்டு இருக்கறது அவருக்குப் பிடிக்கலே.. நான் போய் அவரை சமாதானப்படுத்தறேன். இல்லாட்டி மகாகோபம் வந்துடும் அவருக்கு" என்று சொல்வாள்.
பைத்தியக்காரக் கணவனின் நடத்தையை யாராவது கேலி செய்தாலோ அல்லது குறை கூறினாலோ சவி கோபித்துக் கொண்டதில்லை. அவளும் அவர்களோடு சேர்ந்து கொண்டு, "சொல்லுங்க! நீங்களும் சொல்லுங்க! என் வேலை கொஞ்சம் குறையட்டும். மாப்பிள்ளையாச்சேன்னு மரியாதை கொடுக்காம ரெண்ட அடி கொடுத்தால் பிரயோசனமாயிருக்கும்" என்று சிரித்தவாறு சொன்னாள்.
ஆனால் இன்று அவர் உண்மையிலேயே அவமானப் படுத்தப்பட்டபோது அவள் முற்றிலும் மாறிப்போய் இவ்வளவு கோபித்துக் கொள்கிறாளே!
அப்படியானால் சதிநாத்தின் மனைவி சொல்வதுதான் உண்மையாயிருக்குமோ...! பொறாமையாத்தான் சவி ஒரு அற்ப விஷயத்தைப் பெரிதுபடுத்தி ஆர்ப்பாட்டம் செய்கிறாளோ? அண்ணா பெண்ணுக்கு நல்ல இடத்தில் கல்யாணமாகிவிட்டது, அழகான மாப்பிள்ளை கிடைத்தவிட்டான் என்று சவிக்கு வயிறு எரிகிறதோ?
சவியைப்பற்றி இப்படி நினைக்கக் கூடாதுதான். ஆனால் அவள் தானே தன் நடத்தையால் இப்படி மற்றவர்களை நினைக்கச் செய்கிறாள்! அவளது அசட்டுத்தனமான நடத்தை அப்படித்தானே நினைக்கச் செய்கிறது!
பொறாமைதான்..! இல்லாவிட்டால் என்றுதான் அவள் தன் கணவனிடம் இவ்வளவு பக்தியைக் காட்டியிருக்கிறாள்? அவளுடைய அண்ணியே எவ்வளவு தடவை, "புருஷன் பைத்தியமாயிருக்கிறானேன்னு கொஞ்சங்கூடக் கவலையில்லே சவிக்கு கல் நெஞ்சக்காரி!" என்று சொல்லி வியந்திருக்கிறாள்.
ஆகையால் சவியின் கல்நெஞ்சும் பொறாமையால்தான் பாளம் பாளமாக உடைந்து போயிருக்க வேண்டும்!
அமல் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவில்லை. "சவி என்ன இருந்தாலும் நீ ரொம்பக் கல் நெஞ்சுக்காரி!" என்று மட்டும் சொன்னான்.
"இன்னிக்குத்தான் தெரிஞ்சுதா?" சவி கேட்டாள், "ஏன் நீயும் வந்துட்டே? சாப்பிடக் கூப்பிடவா?"
அமல் வருத்தத்துடன் சவியை நன்றாகப் பார்க்க முயற் சித்தான். பிறகு சொன்னான், "இல்லே, ஒன்னைக் கூப்பிடற துணிச்சல் எனக்கு இல்லே. அண்ணாவைத் தண்டிக்கறதுக்காக சதீஷ் பாபுவைச் சாப்பிடவிடாமே நிறுத்தி வச்சிருக்கியேன்னு நினைச்சேன். சதீஷ் பாபு பாவம், அவரைப்போய் அடக்கி வைக்கிறே...'அமல் நீ எனக்குச் சாப்பாடு பரிமாறணும். இவங்க என்னை நல்லாக் கவனிச்சுக்க மாட்டாங்க!'ன்னு என்கிட்டே ரொம்ப ஆசையாச் சொல்லியிருந்தார்..."
சொல்லிவிட்டுச் சற்றுச் சிரித்துக்கொண்டான் அமல், காரணம், சதீஷ்பாபு அவனுடன் பேசும்போது 'இவங்க' என்று சொல்லவில்லை, 'இந்த ராஸ்கல்கள்' என்று குறிப்பிட்டான்.
இவ்வளவு நேரம் பட்டினி கிடந்ததால் சவியின் தொண்டை உலர்ந்துபோய் விட்தூ? அல்லது அவள் தன் அசட்டுத்தனத் துக்காக வருத்தப்படுகிறாளா..? அவளுடைய குரல் இனிமையா யிருக்குமே, என் இப்படி ஆகிவிட்டது!
அந்த வறண்ட குரலிலேயே சொன்னாள் சவி, "அவர்தான் நீ பரிமார்ற வரைக்கும் பொறுக்கலியே, தானே கொண்டுவந்து வச்சிக்கிட்டு..."
"அந்தப் பேச்செல்லாம் வேண்டாம். சவி...நீ சாப்பிட்டாலும் சரி, சாப்பிடாட்டாலும் சரி, ஆனா அவரை மட்டும் எழுப்பிவிடு. நான் அவருக்கு சாப்பாடுபோட்டு என் வார்த்தையைக் காப்பாத் திக்கறேன்."
சவி அமலுடன் தான் கழித்த சிறு பிராயத்தின் நினைவு களுக்கும் மரியாதை கொடுக்கவில்லை. "அவர் சாப்பிட மாட்டார்!" என்று உறுதியான குரலில் சொன்னாள்.
"சவி, நீ அளவுக்கு மிஞ்சி அநாகரீகமா நடந்துக்கறே- எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கணும்..! இன்னிக்குக் கோவிச்சுக்கிட்டு அவரைப் பட்டினி போடறே, நாளைக்குச் சாப்பாடு போடத்தானே வேணும்? அப்போ..?"
இந்த தடவை உரக்கவே சிரித்து விட்டாள் சவி. "அமல், அவர் நாளைக்கும் சாப்பிடமாட்டார், நாளன்னிக்கும் சாப்பிட மாட்டார். ஒருநாளும் சாப்பிட மாட்டார்!" என்றாள்.
சவி சாதாரணக் கோபத்தில் பேசிய இந்தப் பேச்சில் அமலுக்கு ஏனிந்த பயம்? சவியின் சிரிப்பைக் கேட்டு அவள் ஒரு பூதந்தான் என்று நினைத்து விட்டானோ?
அவன் "சவி" என்று வேதனையோடு கத்தினான். சவி பதில் சொல்ல வில்லை, அசையவும் இல்லை.
சவியின் இந்த நிலையைக் கண்டு அவன் தான் வெகு காலமாக மறந்துவிட்டிருந்த ஒரு பழையா அசட்டுத் தனத்தைச் செய்து விட்டான். அவன் அவளை நெருங்கி அவளுடைய கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு "சவி, விளக்கு ஏத்து!" என்று சொன்னான்.
சவி மெதுவாகத் தன்னை விடுவித்துக் கொண்டு "என்ன பண்ணப் போறே?" என்று கேட்டாள்.
"நான் அவரைப் பார்க்கணும்!"
"பார்க்கறதுக்கு ஒண்ணுமில்லே"
"நீதான் எப்போதும் சரின்னு நினைச்சுக்காதே சவி! கதவை விட்டு நகர்ந்துக்க! நான் பார்க்கறேன்."
ஆனால் சவி நகரவில்லை. "நெசமாகவே பார்க்கறதுக்கு ஒண்ணுமில்லே" என்று சொல்லிவிட்டாள்."
அமலும் ஓர் ஆவியாகிவிட்டானா? அவனைப் பார்த்தால் பூதம் மாதிரி இருக்கிறதே!
அவன் இவ்வளவு நேரமாகக் கீழே திரும்பி வராதது கண்டு மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று யோசிக்கவில்லையே அவன்! அவர்களிருவருடைய பழைய வரலாற்றை மற்றவர்கள் மறந்திருப்பார்களா?
கீழேயும் ஓர் உலகம் இருக்கிறது என்ற விஷயம் வெகு நேரங்கழித்துத்தான் நினைவு வந்தது அமலுக்கு. அவன் திரும்ப வேண்டும்.
"சவி, நீ என்ன கல்லா?"
"இருக்கலாம்"
"சவி, நான் கீழேபோய் அவங்ககிட்ட என்ன சொல்லுவேன்?"
"ஒண்ணும் சொல்ல வேண்டாம், அமல்! ஒன்னைக் கெஞ்சிக் கேட்டுக்கறேன்! கல்யாணப் பொண்ணும் பிள்ளையும் மண வறைக்குப் போயிருக்காங்க. அவங்களோட இந்த இரவை நாசமாக்கிடாதே!"
"சவி, ஒன்னாலே எப்படி இவ்வளவு கொடூரமா இருக்க முடியுது?"
"முடியத்தான் வேணும், அமல்! எல்லைக்கோட்டை நான் மறக்க முடியுமா? அவங்களோட இந்த மகிழ்ச்சிகரமான நேரத்தில நான் என்னோட.."
"ராத்திரி பூரா இப்படியே இருக்கப் போறியா?"
"இல்லே, படுத்துக்கப் போறேன். ரொம்பத் தூக்கம் வருது.. கீழே விழுந்துடுவேன் போலேயிருக்கு.."
சவி சற்றும் நாகரீகமின்றி அமலுக்கு முன்னாலேயே கதவைச் சாத்தி உட்புறம் தாழ்ப்பாள் போட்டக் கொண்டாள்.
ஆம், கதவை மூடிக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை சவியால். சதிநாத் கூறியது அவளுக்கு ஞாபகம் வந்தது. "எல்லாத் துக்கும் ஓர் அளவு உண்டு, இருக்கணும்!"
இன்னும் சில மணி நேரம் இந்தக் குளிர்ச்சியான இருட்டில் அமிழ்ந்திருக்க முடிந்தால் அவள் தான் இழந்து போன பலத்தை மீண்டும் பெற முடியும். மறுநாள் காலையில் எழுந்திருந்து கீழே போய் இயற்கையான குரலில் சொல்ல மடியும் - "நேத்திக்குக் கல்யாண அமர்க்களத்திலே ஒங்களைத் தொந்தரவ பண்ணலே, ஆனா இனியும் சொல்லாமே இருக்க முடியாது..! மேலே வந்து பாருங்க..! இனிமே என்னென்ன சடங்குகள் செய்யணுமோ அவையெல்லாம் நீங்கதானே செய்யணும்..!"
(காஞ்ச் பூத்தி ஹீரே, 1967)
8. மோசக்காரி
சுபோத் கோஷ்
சநாதன், அவனுடைய பெண் சுதா. அப்பனுக்கு ஏற்ற பெண், பெண்ணுக்குத் தகுந்த அப்பன்!
அவர்களுடைய குடும்பத்தில் துக்க நிகழ்ச்சிகள் நேரும். அப்போதெல்லாம் சநாதன் இடிந்துபோய் விம்மி விம்மி அழுவான். துன்பச் சுமையால் தலை நிமிர முடியாது பெண் ணுக்கு. அவள் முந்தானையால் கண்களை மூடிக்கொண்டு பொருமிப் பொருமி அழுவாள். அருகிலிருந்து பார்ப்பவர்கள் உணர்ச்சிவசப் படுவார்கள், கண்ணீர் விடுவார்கள், பெருமூச்சு விடுவார்கள்.
சநாதனுக்கு உலகத்தில் சுதாவைத்தவிர வேறு நாதியில்லை. அவளுக்குக் கல்யாணமானதும் அவளைப் புக்ககத்துக்கு அனுப்பும்போது சநாதனின் மனம் என்ன பாடுபடும்!
கல்யாணத்துக்கு மறுநாள் பிள்ளை வீட்டுக்காரர்களும் வேறு சிலரும் சுதாவைப் புக்ககத்துக்கு அழைத்துச் செல்லத் தயாராகிய போது சநாதன் விம்மி விம்மி அழுதான். சுதா பொருமிப் பொருமி அழுது தீர்த்தாள்.
ஆனால் ஒரு மாதம் கழிவதற்குள்ளேயே சுதாவின் கணவனுக்கும் மற்ற புக்ககத்தாருக்கும் நன்றாகத் தெரிந்துவிட்டது. அப்பாவுக்கேற்ற பெண்தான் சுதா என்று. சநாதன் சரியான மோசக்காரன், சுதா பலே மோசக்காரி. மனிதர்களை ஏமாற்றும் தந்திரத்தில் இருவருமே கை தேர்ந்தவர்கள். ஒருவருக்கொருவர் இளைத்தவர் அல்ல. அப்பனுக்கேற்ற பெண்!
"பெண்ணுக்கேற்ற அப்பன்!" என்றது போலீஸ். இந்த மாதிரி மூன்று தடவை நடந்து விட்டது. இது மூன்றாவது நிகழ்ச்சி. முதல் தடவை தாரகேஸ்வரிலும், இரண்டாவது தடவை பசீர்ஹாட்டிலும் இதே மாதிரி மோசடி நிகழ்ந்திருக்கிறது. இரண்டுமாத இடைவெளிக்குள் இரண்டு மோசடிகள். இது மூன்றாவது. மூன்றிலும் ஒரே அப்பனும் ஒரே பெண்ணும் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. இதுதான் அவர்களுடைய தொழில்.
பாட்பாராவின் கடைத்தெருவுக்கருகில் ஒரு சந்தில் பூட்டப் பட்டிருந்த ஒரு சிறு அறையின் பூட்டை உடைத்துச் சோதனை செய்தது போலீஸ். ஆனால் அந்த அறைக்குள் ஒரு துரும்புகூட இல்லை. சநாதனும் சுதாவும் ஏதோ ஒரு மந்திரம் போட்டுக் காற்றோடு காற்றாக மறைந்துபோய்விட்டார்கள். அவர்கள் எப்போது ஓடிப்போனார்கள், எங்கு போனார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. ஒரு மாதத்துக்கு முன்னால் அப்பனும் பெண்ணும் விம்மி விம்மியழுவதைப் பார்த்து உணர்ச்சி வசப் பட்டுத் தாங்களும் அழுதுவிட்ட அக்கம் பக்கத்தாருக்கு அதைப் பற்றி நினைத்தாலே வெட்கமாயிருந்தது. 'இந்த உலகம் ஒரு அதிசயமான மிருகக் காட்சிசாலைதான், இதிலே என்னென்ன ஆச்சரியங்கள் நடக்குது! என்று வியந்தார்கள் அவர்கள்.
"மிருகக்காட்சி சாலையிலே இந்த மாதிரி அசிங்கமெல்லாம் நடக்காது, மனுஷங்களோட சமூகத்திலேதான் இப்படியெல்லாம் நடக்கும்" என்று சிலர் சொன்னார்கள்.
ஒருவர் சொன்னார், "நம்ம தெருவிலே நம்ம கண்ணுக்கு முன்னாலே இந்த மாதிரி ஒரு மோசடி நடந்துடுச்சுங்கறது வெட்ககரமான விசயம். ஒரு ஆம்பளையும் ஒரு பொண்ணும் எங்கேயிருந்தோ வந்து ஒரு சில நாளுக்குள்ளேயே நம்ம எல்லாரையும் முட்டாளாக்கிட்டு மாயமா மறைஞ்சு போயிட் டாங்களே! அவங்க மேலே யாருக்கும் சந்தேகம் வரலியே!"
ஆமாம், யாரும் அவர்கள் மீது சந்தேகப்படவில்லை. அப்பன், மகள் இருவருடைய இந்தப் பரிதாப அழுகைக்குப் பின்னால் ஒரு மோசடிச் சதி சிரித்துக் கொண்டிருக்கிறது என்பது அந்தத் தெருவாசிகளுக்கோ மாப்பிள்ளை வீட்டாருக்கோ தெரியவில்லை. எப்படித் தெரியும்? அந்த அழுகையை நினைத்தால் இப்போது கூட அது ஒரு பாசாங்கு என்று அவர்களால் எண்ணமுடிய வில்லை.
உண்மையில் அவர்கள் அப்பன் - மகள் தான் என்று போலீசுக்குத் தெரிய வந்தது. அவர்கள் ஒவ்வோரிடத்தில் ஒவ்வொரு புதிய பெயர் வைத்துக்கொண்டு சில நாட்கள் தங்குவார்கள். பிறகு பெண்ணுக்குக் கல்யாணமாகும். பெண் சில நாட்களுக்குப் பிறகு தகப்பனுடன் மாயமாய் மறைந்து விடுவாள்.
ஒரு மாதத்துக்குப்பின் ஒரு அந்தி வேளையில் மணமகனுக் குரிய குல்லாய் அணிந்துகொண்டு - ஓர் ஏழைத்தந்தையின் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டு போனவர் - தம் மனைவியைத் தேடிக்கொண்டு மாமனார் வீட்டுக்கு வருவார். தெருவாசிகள் வெட்கிப்போய், குற்ற உணர்வுடன் அவரைப் பார்த்துக்கொண்டு நிற்பார்கள். அந்தத் தெருவிலுள்ள சில இளைஞர்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டு சிரிப்பதுமுண்டு.
மனிதர் சற்று வயதானவர், நாற்பத்தைந்து வயதுக்குமேல் ஏறக்குறைய ஐம்பது வயது இருக்கும். நைஹாட்டியில் துணிக் கடை வைத்திருக்கிறார். மனைவியையிழந்தவர். குழந்தை குட்டி இல்லை. மறுமணம் செய்து கொள்ள விரும்பவில்லை அவர். ஆனால் சநாதனுடன் பழக்கமேற்பட்டு அவனுடைய வறுமை நிலையைப் பற்றிக் கேள்விப்பட்டபோது அவருக்கும் இந்த வயதில் குடும்ப வாழ்க்கையில் ஒரு துணைவியின் புன்சிரிப்பைப் பெறும் ஆவல் ஏற்பட்டு விட்டது. ஒருநாள் அவர் சநாதனின் அழைப்பையேற்று இந்த சந்தில் இந்த வீட்டுக்கு வந்து கொஞ்சம் பாயசமும் கொழுக்கட்டையும் சாப்பிட்டுவிட்டு ஒரு குமரிப் பெண்ணின் சுமையிலிருந்து சநாதனை விடுவிக்கத் தீர்மானித்து விட்டார். தன் சாதியைச் சேர்ந்த ஒர் அழகான, ஏழைப்பெண் இந்த மாதிரி, கல்யாணத்துக்கு வழியின்றி, இந்த இருட்டுச் சந்தில் முடங்கிக் கிடப்பதைப் பார்க்க அந்த மனிதருக்குப் பொறுக்க வில்லை. நைஹாட்டி கணேஷ் வஸ்திராலயாவின் முதலாளியான அவர் சநாதனுக்கு ரொக்கப் பணம் ஐநூறு ரூபாயும், கல்யாணத்தில் செய்யவேண்டிய தானப்பொருள்கள் வாங்கப் பணமும், பெண்ணுக்குப் பத்துப் பவுன் நகையும் கொடுத்து பெண்ணை கல்யாணம் செய்துகொடுக்க சநாதனைச் சம்மதிக்கச் செய்தார். கல்யாணத்துக்கு நாள் நிச்சயிக்கப்பட்டது. கல்யாணத் தன்று மணப்பெண்ணின் முக்காடு அணிந்த முகத்தைப் பார்த்துப் பூரித்துப் போனார் அவர். மறுநாள் காலையில் அவர் இதே வீட்டிலிருந்து விடைபெற்றுக்கொண்டு பெண்ணை அழைத்துப் போனார். பாவம், அவர்தான் போலீசுடன் வந்து அறைவாசலில் நிற்கிறார். கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்குப்பின் சநாதன் பெண்ணைப் புக்ககத்திலிருந்து தன் வீட்டுக்கு அழைத்து வந்திருக் கிறான். அதற்குப் பிறகு அவர்கள் எவ்வளவு நாள் இருந்தார்கள் என்று ஒருவராலும் நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை.
நைஹாட்டிக்காரர் சநாதனுக்குக் கடிதம் எழுதியும் பதில் வராமல் போகவே ஒருநாள் தாமே சநாதனின் வீட்டுக்கு வந்திருக்கிறார். வீடு பூட்டிக் கிடக்கிறது!
போலீசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்குமுன் இது மாதிரி இரண்டு தடவை நடந்து விட்டது. இது மூன்றாவது தடவை என்கிறது போலீஸ். அப்பன் பெண்ணின் உண்மைப் பெயர் போலீசுக்கும் தெரியாது.
தாரகேஸ்வரில் அவர்களிருவரும் பிராமண இனத்தவராக நடித்தார்கள். பசீர்ஹாட்டில் காயஸ்தர்களாகவும், பாட்பாராவில் வைத்திய சாதியினராகவும் நடித்திருக்கிறார்கள். தாரகேஸ்வரியில் அவர்களுடைய பெயர்கள் பிரசன்ன சக்ரவர்த்தி, சுநயனா. பசீர்ஹாட்டில் அவர்கள் சதானந்த கோஷ், மாதவி. இங்கே, பாட்பாராவில் அவர்கள் சநாதன் சென், சுதா என்ற பெயர் களோடு சிறிது காலம் வாழ்ந்து, அப்பனும் பெண்ணுமாக ஓர் அதிசய நாடகமாடிவிட்ட மாயமாய் மறைந்து போய்விட்டார்கள். கள்ளங் கபடற்ற மூன்று பேர்களை இவ்வாறு ஏமாற்றிவிட்டு அந்த மோசக்கார ஜோடி இப்போது எங்கு மறைந்து கொண்டிருக் கிறதோ!
அப்னுக்கேற்ற பெண், பெண்ணுக்குத் தகுந்த அப்பன்! இந்த மோசடியைப் பற்றி யோசித்துக்கொண்டே பாட்பாரா கிராமத்துச் சந்திலிருந்து திரும்பிப் போய்விட்டது போலீஸ். தெருவாசிகள் திகைத்துப்போய் நின்றார்கள். கணேஷ் வஸ்திராலயாவின் முதலாளி, சுதாவின் சாந்தமான, புன்சிரிப்பு தவழும் முகத்தை நினைத்துப் பார்த்து, "ஐயோ, இப்படியும் ஒரு மனுசன் இன்னொரு மனுசனை ஏமாத்துவானா!" என்று ஆச்சரியப்பட்டார்.
ஆனால் அதே சமயத்தில் பாட்பாராவாசிகளோ போலீசோ, கணேஷ் வஸ்திராலயா முதலாளியோ கற்பனையில்கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒரு நிகழ்ச்சி ராணா காட்டில் நிகழ்ந்து கொண்டிருந்தது. அங்கு ஒரு குடியிருப்புப் பகுதியில் ஒரு சிறிய வீட்டின் ஜன்னல் பக்கம் பார்த்துக் கொண்டிருந்த ஓர் இளைஞன் ஒரு மோசடி வலையில் விழத் தயாராகிக் கொண்டிருந்தான். அவன் பெயர் ரமேஷ். விஜய் பாபு என்பவரின் இளம் பெண் கரபியுடன் அவன் பேசிக் கொண்டிருந்தான்.
வீட்டுக்குள்ளிருக்கும் கரபி ஜன்னலருகில் நின்று கொண்டு மெல்லிய குரலில் வெளியே நிற்கும் ரமேஷைக் கேட்டாள், "நீங்க ஏன் இங்கே மறுபடி வரீங்க?"
உற்சாகம் பொங்கச் சிரித்தான் ரமேஷ். "ஒரு ஜோசியர் என் கையைப் பார்த்து என்ன சொல்லியிருக்கார் தெரியுமா..? எனக்கு வரப்போற மனைவியின் பெயர் 'க'விலே தொடங்குமாம்!"
கரபி சிரித்துவிட்டுச் சொன்னாள், "ஆனா நீங்க இப்படி தினம் ஜன்னல் பக்கம் வந்து நின்னா நாலு பேர் நாலு சொல்லு வாங்க. எனக்குக் கெட்டபேர் வரும். வேறே ஒண்ணும் லாபமில்லே!"
"என்னால வராம இருக்க முடியலியே, கரபி! நீ என்னை முதமுதல்ல பார்த்த அன்னிக்கே எனக்குத் தெரிஞ்சு போச்சு, உன்கிட்டேதான் எனக்கு அமைதியும் சுகமும் கிடைக்கும்னு!"
"இதெல்லாம் உங்க மாதிரி பெரிய மனுசங்களோட கிறுக்குத்தனம். இப்போ இங்கே வரப் பிடிக்குது உங்களுக்கு. இன்னுங் கொஞ்சநாள் கழிச்சு இந்தப் பக்கத்து நினைவே வராது ஒங்களுக்கு. வரப்பிடிக்காது இங்கே வரவும் மாட்டீங்க. பின்னே ஏன் அனாவசியமா.."
"நான் பெரிய மனுசனும் இல்லே, பெரிய மனுசங்களோட கிறுக்குத்தனமும் எனக்கில்லே. ஒன்னைப் பார்க்காம இருக்க முடியல்லேன்னுதான் ஓடியோடி வரேன் ஒன்கிட்டே."
"நீங்க பெரிய மனுசர் இல்லியா?"
"இல்லவேயில்லே!"
"நீங்க என்ன வேலை செய்யறீங்க?"
"நான் ஆர்ட்டிஸ்ட்."
"அப்படீன்னா?"
"நீ கல்கத்தாவுக்குப் போயிருக்கியா?"
"உம், அங்கே கொஞ்சநாள் இருந்திருக்கேன்."
"சினிமா பார்த்திருக்கியா?"
"ஒண்ணு ரெண்டு பார்த்திருக்கேன்."
"சினிமா தியேட்டர் சுவரிலே பெரிய பெரிய படம் போட்டிருக்குமே பார்த்திருக்கியா?"
"பார்த்திருக்கேன்."
"அந்த மாதிரிப் படம் வரையறது என் தொழில்."
"அதுக்கு காசு கொடுக்கறாங்களா?"
"ஆமா. அதுதான் என் வருமானம். கடவுள் கிருபையால் என் சம்பாத்தியம் அப்படியொண்ணும் கொறைச்சலில்லே.."
"மாசம் அம்பது ரூவா கிடைக்குமா?"
"கிடைக்கும்."
"சரியா எவ்வளவு கிடைக்கும்? சொல்லுங்க!"
"எவ்வளவு கிடைச்சா என்ன? ஒன்னை சந்தோஷமா வச்சுக்க முடியும் என்னாலே."
கரபி முகத்தை 'உம்'மென்று வைத்துக்கொண்டு சொன்னாள், "ஆமா,ஒரு பரம ஏழையோட பொண்ணை சந்தோசமா வச்சுக்க என்னவேணும் - வருசத்துக்கு ஒரு ஜோடி புடைவை, தினம் ஒருவேளைக்கு ரெண்டுபிடி சோறு. அவ்வளவுதானே!"
முகத்தைச் சுளித்தான் ரமேஷ். "ஏன் இப்படிச் சொல்றே? நான் வருசத்திலே ஒரு ஜோடி வேட்டிதான் வாங்கிக் கட்டிக்கறேனா? தினம் ஒரு வேளை ரெண்டு பிடி சோறுதான் சாப்பிடறேனா?"
"அப்படீன்னா ஒங்ககிட்டே பணமிருக்குன்னு சொல்லுங்க!" என்று சொல்லிச் சிரித்தாள் சுரபி.
"ஒன்னை அலங்காரம் பண்ணி வச்சுக்கும்படி, ஒனக்கு கஷ்டமில்லாமே ஒன்னை வச்சுக்கக்கூடிய அளவுக்கு என்கிட்டே காசு இருக்கு" என்று சொல்லிய ரமேஷ் பக்கத்திலிருந்த ஒரு பணக்கார மார்வாடியின் மாளிகையைச் சுற்றிக்காட்டி, "அந்த வீட்டுக்காரன் மாதிரி நான் பணக்காரனில்லே, நீயுமில்லே, அதனாலே.." என்றான்.
"கல்யாணச் செலவுக்குக் காசு எங்கேயிருந்து வரும்?"
ரமேஷ் சற்றுநேரம் பேசாமல் யோசித்துக் கொண்டிருந்தான். பிறகு "விஜய் பாபுகிட்டே கொஞ்சங்கூடப் பணம் இல்லையா?"
கரபியின் கண்களில் நீர் துளிர்த்தது. "இருந்தால் இப்படி.."
"எவ்வளவு பணம் தேவைப்படும்?"
"ஒரு கௌரவமான குடும்பத்துப் பெண்ணைக் கல்யாணம் செய்துவைக்கணும்னா ரொம்பக் குறைச்சலா செலவு செஞ்சாலும் ரெண்டாயிரம் ரூபாயாவது ஆகுமே!"
"ரெண்டாயிரமா?"
கரபியின் கண் மூலையில் சந்தேகமும் எரிச்சலும் தென்பட்டன, "என்ன யோசிக்கிறீங்க? இந்த ரெண்டாயிர ரூவா கூட ஒங்களாலே ஏற்பாடு செய்ய முடியாதா?"
"முடியும். ஆனா இவ்வளவு சீக்கிரமா ஏற்பாடு பண்ற துன்னா.. நூறு, இருநூறுன்னு பல எடத்திலே கடன் வாங்கறதைத் தவிர வேறே வழியில்லே" என்று வருத்தத்துடன் சொன்னான் ரமேஷ்.
"அப்படீன்னா அதையே செய்யுங்க.. கடன் வாங்கினாப் பின்னாலே திரும்பிக் கோடுத்துடலாம். நீங்க தாமதம் பண்ணினா..?" கரபியின் பேச்சு தடைபட்டது. அவளது கண்களில் நீர் பளபளத்தது.
"என்ன ஆச்சு?"
"நெசமாவே நீங்க என்னைக் காதலிக்கிறீங்களா?"
"ஆமா, கரபி"
"அப்போ சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்க! இல்லேன்னா நான் தற்கொலை செஞ்சுக்க வேண்டியதுதான்!"
"ஏன் இப்படிச் சொல்றே?" ரமேஷ் திகைத்துப் போய்க் கேட்டான்.
"வைத்தியவாடியிலே ஒரு கிழவனக்கு என்னை ரெண்டாந் தாரமாகக் கொடுக்க ஏற்பாடு செய்யறார் என் அப்பா. அந்தக் கிழவன் கல்யாணச் செலவுக்காக அப்பாவுக்க மூவாயிர ரூவா தர்றதாச் சொல்லியிருக்கான்.."
ரமேஷ் தான் சாய்ந்திருந்த சைக்கிளின் கைப்பிடியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். அவனுடைய முகத்திலும் கண்களிலும் ஒரு உறுதி வெளிப்பட்டது. அவன் கரபியைப் பார்த்துச் சொன்னான், "அந்தக் கல்யாணம் நடக்க விட மாட்டேன், கரபி! அந்தக் கிழவனோட பணத்தைத் தொட வேணாம்னு நீ ஒன் அப்பாகிட்டே சொல்லி வை! சைக்கிளின் மிதியை அழுத்தியவாறு அவன் உரக்கச் சொன்னான், "கரபி, எல்லாக் கல்யாணச் செலவும் என்னுது! நான் இன்னும் பத்து நாளிலே வந்து உன்னைக் கல்யாணம் பண்ணிக் கூட்டிக்கிட்டுப் போயிடறேன்!"
ராணாகாட் வீட்டில் கலியாணச் சடங்கு அடக்கமான முறையில் நடந்தேறியது. அந்தத் தெருவுக்கு வந்து வசித்த நாட்களிலேயே ஏழைத் தந்தையும் பெண்ணும் தங்கள் நடத்தை யால் தெருவாசிகளின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டனர். விஜய் பாபு அவர்களுக்கு எளியமுறையில் ஒரு விருந்து வைக்க விரும்பினார். ஆனால் அந்த அனாவசியச் செலவு வேண்டாமென்று தெருவாசிகளே தடுத்து விட்டார்கள். "உங்கள் நிலையில் உள்ளவர்கள் இந்தச் செலவெல்லாம் செய்யக்கூடாது!" என்று சொல்லிவிட்டார்கள் அவர்கள்.
விஜய்பாபு ஆயிரத்தைநூறு ரூபாய் செலவில் பெண்ணுக்கு நகைகள் செய்து போட்டார். மிகவும் எளிய முறையில் கல்யாணத்தை நடத்தினார். அவர் தன் வாழ்நாள் சேமிப்பு முழு வதையும் இந்தக் கலியாணத்துக்காகச் செலவு செய்து விட்டதாகத் தெருக்காரர்கள் நம்பினார்கள். அவர் இவ்வளவு நகைகள் போட்டிருக்க வேண்டாம், காரணம் பிள்ளைவீட்டிலிருந்து எந்தவிதக் கோரிக்கையுமில்லை. இருந்தாலும் கரபி அவருடைய ஒரே பெண். அவளுக்கு நல்ல முறையில் கல்யாணம் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசையிருக்காதா அவருக்கு! இதன் விளைவாக அவர் பக்கிரியாகி விட்டார், பாவம்! தன் பெண்மேல தான் எவ்வளவு பிரியம் அவருக்கு..!
கரபி ரமேஷ் கொடத்த பணத்தில் நகை வாங்கிப் போட்டுக் கொண்டு அவனுடைய மனைவியாகப் புக்ககம் சென்றாள். தாரகேஷ்வர், பசீர்ஹாட், பாட்பாரா ஆகிய இடங்களில் நிகழ்ந்தது போலவே இப்போதும் கரபி தந்தையிடமிருந்து விடைபெறும் போது ஓர் உருக்கமான காட்சி அரங்கேற்றப்பட்டது. விம்மி விம்மியழுதார் விஜய்பாபு, பொருமிப் பொருமியழுதாள் கரபி.
இவ்வாறு ராணாகாட்டின் ஒரு தெருவில் வசிப்பவர்களின் கண்களை நீரில் முழுக்காட்டிவிட்டு விடைபெற்ற கரபி அன்று மாலையில் கல்கத்தாவின் பாக் பஜார் பகுதியில் ஒரு குறுகிய சந்தில் ஒரு சிறு வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.
அதற்கு இரண்டு நாட்களுக்குப்பின் அந்த வீட்டில் இரவு முழுதும் பிரகாசமாக விளக்கு எரிந்தது. முதலிரவையொட்டி விருந்து. விழாவில் ஆர்ப்பாட்டமில்லை, ஆனால் மகிழ்ச்சிக்கும் சத்தத்துக்கும் பஞ்சமில்லை. இந்த உலகத்தில் ரமேஷுக்கு வேண்டியவர்களாயிருந்த ஒரு சிலர் இந்த விழாவில் பங்கேற்றனர். ரமேஷின் சித்தி தன் மூன்று பெண்களுடன் வந்திருந்தாள். ஒரு சித்தப்பா தன் பத்துக் குழந்தைகளுடன் வந்தார். ரமேஷின் இரு நண்பர்களின் தாய்களும் ஒரு நண்பனின் மனைவியும் வந்தார்கள். பெண்ணைப் பார்த்து எல்லாரும் மகிழ்ந்தார்கள். ஓர் இரவும் அதையடுத்த பகலும் அந்த அறை விருந்தினர்களின் மகிழ்ச்சி யொலிகளால் கலகலப்பாயிருந்தது.
அவர்கள் எல்லாரும் புறப்பட்டுச் சென்றபோது மாலை வெயில் ஜன்னல் வழியே அறைக்குள் நுழைந்தது. புதுமணப் பெண் ஓர் ஆழ்ந்த பெருமூச்சு விட்டாள். முக்காட்டை விலக்கிக் கொண்டு மை தீட்டிய தன் பெரிய விழிகளைச் சுழற்றி அறையின் நாற்புறமும் பார்த்தாள். ரமேஷோ அவளுடைய முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றான்.
"கரபி, நான் ஒன் படம் வரையப் போறேன். ரெண்டு நாளிலே வரைஞ்சு முடிச்சிடுவேன்.. அப்போ ஒனக்குத் தெரியும் என்னாலே என்ன செய்ய முடியும்னு.." ரமேஷ் சொன்னான்.
"நீங்க என்ன சொல்றீங்க, புரியலியே!"
"ஒன் ரெண்டு கண்ணையும் அப்படியே தத்ரூபமாச் சித்திரத்தில் தீட்டிடுவேன்!"
தீட்டி வையுங்க, நான் திரும்பி வந்து பார்க்கறேன்."
"எங்கே போகப் போறே?" ரமேஷ் வியப்புடன் கேட்டான்.
"அப்பாகிட்டே."
"போகலாம் .. ஆனா இன்னிக்கி நாளைக்கிப் போகப் போறதில்லியே?"
"போக ஆசையில்லேதான்.. ஆனா அப்பா வந்து கூப்பிட்டா போகாம இருக்கமுடியாது."
"ஒன் அப்பா வரப்போறதாச் சொல்லியிருக்காரா?"
"சொல்லலே.. ஆனா நாளைக் காலம்பரவே வந்தாலும் வந்துடுவார்" என்று சொல்லிவிட்டுச் சற்று நேரம் மௌனமா யிருந்தாள் கரபி. பிறகு திடீரென்று பொறுக்க முடியாத வேதனையால் துடிப்பவள்போல், "அப்பா ஞாபகம் வந்தால் ரொம்பக் கஷ்டமாயிருக்கு எனக்கு.. இன்னும் அழுதுக்கிட் டிருப்பார் அவர்!" என்றாள்.
ரமேஷ் அவளுக்கு ஆறுதல் கூறினான். " அது இயற்கைதான். நீ அவரோட ஒரே பொண்ணு. அவரோட வருத்தம் எனக்குப் புரியுது. ஆனா .. சரி, ஒன் அப்பா வரட்டும். நானே அவருக்கு சமாதானம் சொல்றேன்."
"என்ன சொல்லுவீங்க?"
"அவர் இன்னும் ஒரு மாசங்கழிச்சு ஒன்னைக் கூட்டிக்கிட்டுப் போகட்டும், இப்பவே வேணாம்னு.."
அப்பா சம்மதிக்க மாட்டார்.. நீங்களும் அவரோட ஆசையைத் தடுக்காதீங்க, அவருக்கு வேதனை கொடுக்காதீங்க!"
" ஆனா என்னோட கஷ்டம் அவருக்குப் புரியாதா?" ரமேஷ் வருத்தத்தோடு கேட்டான்.
"ஒங்களுக்கு என்ன கஷ்டம்?"
"நீ நாளைக்கு அவரோட போயிட்டா எனக்கு ரொம்பக் கஷ்டமாயிருக்குமே, கரபி!"
மை தீட்டிய தன் பெரிய கண்களால் ரமேஷை உற்றுப் பார்த்தாள் கரபி.
"அப்டி நீ போகத்தான் வேணும்னா நானும் ஒன்னோட வரேன். ரெண்டுநாள் அங்கேயிருந்துட்டு மறுபடி உன்னைக் கூட்டிக்கிட்டு வந்துடறேன்."
"ஒங்களுக்கு சுயமரியாதை இல்லியா? மாமனார் அழைக்காமே நீங்க அவர் வீட்டுக்குப் போகலாமா?"
"ஒன் அப்பா என்னை அழைக்க மாட்டாரா? ஏன்?"
"ஏனோ, தெரியாது" தயங்கித் தயங்கிச் சொன்னாள் கரபி.
"நீயாவது ஒன் அப்பாகிட்டே சொல்லலாமே!"
"என்ன சொல்றது?"
"அவர் என்னைத் தன் வீட்டுக்கு அழைக்கும்படி.."
"சீ, நான் என்ன வெட்கம், மானம் இல்லாதவளா? நான் எப்படி அப்பாகிட்டே இந்த மாதிரி கேப்பேன்? இது அவமானம் இல்லியா?"
ரமேஷ் பேசாமலிருந்தான்.
"ஏன் இவ்வளவு கோபமா இருக்கீங்க? ஏதாவது சந்தேகமா இருக்கா?" கரபி கேட்டாள்.
"சந்தேகமா..? நான் ஏன் சந்தேகப்படணும்?"
"எனக்கு ஒங்ககிட்டே ஆசையில்லேன்னு சந்தேகம்.."
"அந்த மாதிரி சந்தேகம் வர்றதுக்கு முன்னாலே, நான் செத்துப் போயிடுவேன்!"
கரபியின் கண்கள் துடித்தன. ஏதோ ஓர் இனம்புரியாத பயம் அவளுடைய நெஞ்சைத் தாக்கியது. அவள் நடுங்கும் குரலில் மெதுவாகச் சொன்னாள், "நீங்க ஏன் சாகணும்? நானே செத்துப்போறேன். அதுக்கப்பறம் நீங்க இன்னொரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு வருவீங்க. என்னைப் பத்தி அவகிட்டே சொல்லிச் சிரிப்பீங்க."
"வெளையாட்டுக்குக்கூட இந்தமாதிரி அச்சானியமாப் பேசாதே, கரபி!"
"அதிருஷ்டசாலியோட பெண்டாட்டி சாவாள்" என்று சொல்லிச் சிரித்தாள் கரபி.
"சீ, அசட்டுப் பேச்சு!" என்று சொல்லிக் கொண்டு ரமேஷ் அவளருகில் வந்து அவள் கையைப் பற்றிக் கொண்டான். "இந்த மாதிரிப் பொண்டாட்டி யாருக்கும் கிடைக்க மாட்டாள்!"
கரபி திடுக்கிட்டாள்.
"இந்த மாதிரி மனைவி செத்துப் போயிட்டா, அவளோட அதிருஷ்டங்கெட்ட புருசன் பிழைச்சிருந்து என்ன பிரயோசனம்!"
கரபி தன் கையை அவனிடமிருந்து விடுவித்துக்கொண்டு வேறுபக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். பிறகு எழுந்து போய்க் கட்டிலின் ஒரு மூலையில் உடம்பைக் குறுக்கிக்கொண்டு உட்கார்ந்தாள். அவளுக்கு ரமேஷின் முகத்தைப் பார்க்கவோ, ரமேஷுக்குத் தன் முகத்தைக் காட்டவோ விருப்பமில்லை என்று தோன்றியது.
இருட்டி விட்டது. கரபி திடீரென்று, "சாப்பிடப் போற தில்லையா, எனக்கும் சாப்பாடு போடப் போறதில்லையா?" என்று கேட்டாள்.
"ஏன் இப்படிக் கேக்கறே?"
"நீங்க என்னை சமைக்கவும் சொல்லலே, சாப்பாடும் வெளியிலிருந்து வரவழைக்கலியே!"
இதைக்கேட்டு ரமேஷுக்கு ஒரே மகிழ்ச்சி. "நீ சமைக்கறியா?" என்று கேட்டான்.
"ஆமா, இன்னிக்கு ஒரு ராத்திரிதானே! சமைச்சுப் போட்டுட்டுப் போறேனே!" கரபி சிரித்தாள்.
ரமேஷும் சிரித்துக்கொண்டு சொன்னான், "இந்த விஷயத்தைச் சொல்றதுக்குத்தான் இவ்வளவு நேரம் தவிச்சுக் கிட்டிருந்தேன்."
"எந்த விஷயம்?"
"இவ்வளவு காலமாத்தான் ஓட்டல் சாப்பாடு சாப்பிட்டுக் கிட்டிருந்தேன், இப்போ நீ வந்தப்பறமும் ஓட்டல் சாப்பாடு சாப்பிடக் கொஞ்சங்கூடப் பிடிக்கலே எனக்கு."
"என் கைச்சமையல் சாப்பிட அவ்வளவு ஆசையா ஒங்களுக்கு?"
"ஆமா."
கரபி ஏதோ நினைவில் ஆழ்ந்தவள்பொல் வேறு பக்கம் பார்த்தவாறு திடீரென்று சொன்னாள், "நீங்க இந்த மாதிரி ஆசைப்படாம இருந்திருந்தா நல்லாயிருந்திருக்கும்."
"அதெல்லாமில்லே. நான் வெகுகாலம் இந்தமாதிரி ஆசைப்பட்டுக்கிட்டுதான் இருப்பேன்."
இதன்பின் சிறிது நேரத்தில் அந்த பாக் பஜார் சந்து வீட்டுக்குள்ளிருந்து கரிப்புகை வெளியே மிதந்து வந்தது. ஒரு புதிய மணப்பெண்ணின் புதுக் குடித்தனம் தொடங்கும் மகிழ்ச்சி, பாத்திரங்களும் கரண்டிகளும் எழுப்பும் ஒலியில் வெளிப்பட்டது. புதுக் குடித்தனக்காரி தன் புதுப்புடவையின் தலைப்பை இடுப்பில் செருக்கி கொண்டு, கையில் மஞ்சள் அப்பிக் கொண்டிருந்ததால் புறங்கையால் நெற்றியில் விழுந்திருந்த முடிக்கற்றைகளை விலக்கியவாறு சமையல் செய்தாள்.
சமையல் முடிந்ததும் கரபி ரமேஷ் சாப்பிட உட்காரப் பலகையை போட்டாள்.
ரமேஷ் பலகையின் மேல் உட்கார்ந்து கொண்டு கரபியின் முகத்தைப் பார்த்தான். அவளிடம் ஏதோ சொல்லத் துடித்தான் போலும்.
"சாப்பிட ஒக்காந்துகிட்டு ஏன் இவ்வளவு கடுமையா இருக்கீங்க?"
"ஒண்ணு சொல்லவா?"
"சொல்லுங்க."
"தனியா சாப்பிடப் பிடிக்கலே."
"அப்படீன்னா?"
"நீயும் வந்து ஒக்காரு! நாம ரெண்ணு பேரும் ஒரே தட்டிலே சாப்பிடலாம்."
கரபி திடுக்கிட்டாள். ஒன்றும் சொல்லத் தெரியாமல் திகைத்துப் போய் நின்றாள்.
ரமேஷ் எழுந்து நின்றான்; சிரித்துக்கொண்டே அவளுடைய கையைப் பிடித்து அவளை வலுக்கட்டாயமாகத் தனக்கருகில் உட்கார்த்தி வைத்துக்கொண்டு சொன்னான், "இனிமேல் இந்த மாதிரி வாய்ப்பு கிடைக்கறது கஷ்டம். எனக்கு வேலைப்பளுவிலே நேரங்கிடைக்காது. ஒன்னோட ஒக்காந்துகிட்டு ஒரே தட்டிலே சாப்பிடற மகிழ்ச்சி வாழ்க்கையிலே இன்னும் எவ்வளவு தடவை கிடைக்குமோ, யார் கண்டாங்க?"
கரபியும் ரமேஷும் சேர்ந்து சாப்பிடத் தொடங்கினர். அவர்கள் சேர்ந்தாற்போல் ஒரு சுடு சோற்றுக் கட்டியை உதிர்த் தார்கள். வாழ்க்கையில் ஒரு புதிய விளையாட்டு விளையாடும் மனநிலை அவர்களுக்கு.
சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது கரபி அழுகை தொனிக்கும் குரலில் கேட்டாள், "ஒங்க வேலை ரொம்பக் கஷ்டமானதா?"
"ஆமா! வேலை யாருக்கும் தயவு தாட்சணியம் காட்டாது - நான் எவ்வளவோ நாள் காய்ச்சலோட வேலைக்குப் போயிருக்கேன்!"
"ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு ஒழைக்கணும்?"
வயித்துக்காகத்தான்."
"எவ்வளவு சம்பாதிப்பீங்க?"
"ஒர மாசம் அம்பது ரூவா கிடைக்கும், ஒரு மாசம் நூறு கிடைக்கும், இன்னொரு மாசம் ஒண்ணுமே கிடைக்காது."
"இப்போ நான் வேறே வந்து சேர்ந்திருக்கேன், அதனால நீங்க இன்னும் ஒழைச்சுப் பைத்தியமாயிடுவீங்க!"
"இல்லவேயில்லே, இனிமேல நான் சந்தோஷமா ஒழைப்பேன், இன்னும் கடுமையா ஒழைப்பேன்."
"நீங்க நிறையக் கடன் வேறே வாங்கியிருக்கீங்கீள!"
ரமேஷ் தன் கடன் சுமையை மிகவும் அற்பமாகக் கருதுபவன் போல் சிரித்தான். "ரெண்டு வருஷம் கொஞ்சம் கொஞ்சம் கூட வேலை செஞ்சு அதை அடைச்சுடுவேன். அதைப்பத்திக் கவலை யில்லே எனக்கு."
சட்டென்று தலையைக் குனிந்துகொண்டாள் கரபி. குனிந்த தலையைக் கையால் தாங்கிக்கொண்டு சற்று நேரம் பேசாமலிருந்தாள்.
"என்ன ஆச்சு, ஏன் சாப்பிடாம இருக்கே?" ரமேஷ் கேட்டான்.
கரபியிடமிருந்து பதிலில்லை.
அவன் அவளுடைய அசைவற்ற கையைப் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தான். சற்று நேரத்துக்குப்பின் எதையோ பார்த்து விட்டுத் திடுக்கிட்டு, "இதைன்ன கரபி?" என்று வேதனைக் குரலில் கத்தினான்.
கரபியின கண்களிலிருந்து ஒரு துளி நீர் அவனது கையின் மேல விழுந்திருந்தது.
கரபி எழுந்து கை கழுவிக் கொண்டாள். இடுப்பில் செருகி யிருந்த புடவைத் தலைப்பைப் பிரித்துக் கண்களைத் துடைத்துக் கொண்டு சொன்னாள், "கேளுங்க!"
"என்ன?"
"ஒங்களுக்குப் பிழைச்சிருக்க ஆசையா?"
"இது என்ன கேள்வி?"
"நீங்க பிழைச்சிருக்கணும்னா இப்பவே போலீசைக் கூப்பிட்டு என்னைப் பிடிச்சுக் குடுத்திடுங்க!"
ரமேஷ் திடுக்கிட்டான். "ஒன் பேச்சுக்கு என்ன அர்த்தம்?"
"நான் ஒங்களை ஏமாத்த வந்திருக்கேன். நான் ஒங்க சாதியில்லே, நான் குமரியில்லே, என் பேரும் கரபி இல்லே.. நான்.. நான் ஒர மோசக்கார அப்பனோட மொசக்காரப் பொண்ணு. நான் ஒங்களோட குடித்தனம் நடத்த வரல்லே, ஓடிப்போறதுக்காக வந்திருக்கேன்!"
கரபியின் நடத்தையைப் பார்த்தால் அவள் ஒரு நாடகப் பாத்திரமாக மாறி வேடிக்கையாக நடித்துக் காட்டுவதாகத் தோன்றியது; விளையாட்டுக்காக ரமேஷைப் பயமுறுத்துகிறாள் என்று தோன்றியது.
வெகுகாலத்துக்கு முன் ரமேஷ் பார்த்த ஒரு நாடகத்தில் இப்படித்தான் ஒரு ராட்சசி ராஜகுமாரியாக உருமாறி வந்து ஒரு ராஜாவை மயக்கிக் கல்யாணம் செய்து கொள்கிறாள். பிறகு திடீரென்று இதே மாதிரிதான் சற்றும் கூச்சமில்லாமல் தன்னைப் பற்றிய உண்மையை வெளிப்படுத்தி அந்த ராஜாவைப் பயமுறுத்து கிறாள். ரமேஷுக்கு அந்த நாடகத்தின் பெயரோ அந்த அதிர்ஷ்டங்கெட்ட அரசனின் பெயரோ நினைவு வரவில்லை.
கரபியின் பேச்சு நடிப்புதான் என்றாலும் ரமேஷுக்குச் சற்று பயம் ஏற்பட்டது. தனக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப் படுவதுபோல் தோன்றியது அவனுக்கு. அவன் அவளது முகத்தை உற்றுப் பார்த்தான். இந்த முகம் உண்மையிலேலே ஒரு மோசக் காரியின் முகமாக இருக்க முடியுமா?
"நீங்க போலீசைக் கூப்பிட்டு என்னைப் பிடிச்சுக் குடுக்க மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும், நீங்க அசடு, திராணி யில்லாதவர்!" என்று சொல்லிவிட்டுக் கரபி தன் நகைகளை ஒவ்வொன்றாகக் கழற்றித் தரையில் வைக்கத் தொடங்கினாள். "இந்தாங்க, ஒங்க ஆயிரத்தைநூறு ரூவாயாவது தப்பிச்சுது..! இப்போ என்னைப் போகவிடுங்க!"
"எங்கே போகப்போற!"
கரபியிடமிருந்து பதிலில்லை.
"ஒன் பயங்கர அப்பன்கிடடயே திரும்பிப் போகப்போறியா?" கடுமையான குரலில் கேட்டான் ரமேஷ்.
இப்போதும் கரபியிடமிருந்து பதிலில்லை.
"என் கேள்விக்குப் பதில் சொல்லு, கரபி!"
"நீங்க என்னைப் போகவிட விரும்பலேன்னு சொல்றீங்களா?" கரபி அழுதுகொண்டே கேட்டாள்.
சற்றுநேரம் பேசாமல் யோசனையிலாழ்ந்திருந்தான் ரமேஷ். பிறகு கண்களில் நீர் மல்கக் கரபியின் கைகளைப் பிடித்துக் கொண்டு சொன்னான், "ஒன்னைப் போகவிட எனக்கு இஷ்ட மில்லே."
"அப்படீன்னா நான் சொல்றதைக் கேளுங்க!"
"சொல்லு."
"நாம ரெண்டு பேரும் இங்கேயிருந்து ஓடிப் போயிடுவோம்."
"எங்கே?"
"நீங்க எங்கே கூட்டிக்கிட்டுப் போனாலும் சரி!"
ரமேஷ் அதற்குமேல் தாமதிக்கவில்லை. அன்றிரவே அந்தச் சிறிய வீடு காலியாகி விட்டது.
மோசக்காரன் ஏமாந்து போய்விட்டான் இந்தத் தடவை. மறுநாள் காலையில் ராணாகாட்டிலிருந்து அந்த பாக்பஜார் வீட்டுக்கு வந்த விஜய் பாபு வாசலில் பூட்டு தொங்குவதைக் கண்டான். கெட்டியான, ஈவிரக்கமற்ற பூட்டு. கதவிடுக்கு வழியே உள்ளே பார்த்தான். அறைக்குள் ஒன்றுமில்லை. ஒரு பயங்கர சூனியம்!
ஆனால் விஜய்பாபு திகைப்புடன் வெகுநேரம் நின்று கொண்டிருக்கவில்லை அங்கே. சிறிது நேரத்திற்குள் போலீஸ் வந்து அவனைப் பிடித்துக் கொண்டது.
உரக்க அழத் தொடங்கினான் விஜய் பாபு. "சீ, பொண்ணா யிருந்துக்கிட்டு அப்பாவையே ஏமாத்திட்டியே மோசக்காரி..!"
(கல்ப சங்கரஹ, 1/1970)
9. ஒரு காதல் கதை
நரேந்திரநாத் மித்ரா
பிரபாத் பாபு ஜன்னல் வழியே எட்டிப் பார்த்து, "எழுதிக்கிட் டிருக்கீங்களா? சரி எழுதுங்க. நான் ஒங்களைத் தொந்தரவு பண்ணலே" என்று சொன்னார்.
நான் காகிதத்தையும் பேனாவையும் தள்ளி வைத்துவிட்டு என் மதிப்புக்குரிய, வயதில் பெரிய நண்பனை வரவேற்றவாறு, "வாங்க, வாங்க..! உள்ளே வாங்க!" என்று அழைத்தேன்.
பிரபாத் பாபு சற்றுத் தயக்கத்துடன், "நீங்க ஏதோ எழுதிக் கிட்டிருந்தீங்களே..!" என்றார்.
"எல்லா எழுத்தும் எழுத்தாயிருமா? சம்மா ரெண்டு மூணு கடிதங்களுக்குப் பதில் எழுதிக்கிட்டிருந்தேன், அவ்வளவுதான்!" என்று அவரைச் சமாதானம் செய்தேன்.
அழைப்புப்பெற்ற பிரபாத் பாபு உள்ளே வந்தார். சோபாவில் அமர்ந்துகொண்டு தன் குடையைத் தனக்கு முன்னால் தரையில் வைத்தார். போகும்போது அதை மறந்துவிட்டுப் போய்விடாம லிருக்க இந்த ஏற்பாடு. அவரது பிரியத்துக்குரிய பொருள் கண் முன்னாலேயே இருக்க வேண்டுமாம்.
நானும் நாற்காலியை விட்டிறங்கி அவருக்கெதிரிலிருந்த தாழ்வான சோபாவில் உட்கார்ந்தேன்.
அவர் சிரித்தக்கொண்டு சொன்னார், "நெறைய லெட்ட ரெல்லாம் எழுதறீங்க போலிருக்கு. எனக்கும் ஒரு காலத்திலே நெறைய லெட்டர் எழுதற பழக்கம் இருந்தது. ராத்திரி கண் முழிச்சு நண்பர்களுக்கத் கடிதமெழுதுவேன். அந்த விஷயத்திலே என்னை "மேன் ஆஃப் லெட்டர்ஸ்"னு அழைக்கலாம்!"
நான் புன்சிரிப்புடன் அவர் தமக்களித்துக் கொண்ட பட்டத்தை ரசித்துவிட்டு, "டீ குடிக்கறீங்களா?" என்று கேட்டேன்.
'டீ' என்ற வார்த்தையைக் கேட்டும் அவரது முகம் மலர்ந்தது. "குடிக்கலாந்தான்.. ஆனா இந்த நடுப்பகல்லே டீ வேணும்னு சொன்னால் ஒங்க இல்லறத்துக்குத் தொந்தரவு ஆயிடுமோ என்னவோ ..! நான்தான் சம்சாரி இல்லே.. அதனாலே மத்தவங்களோட குடும்பத்திலே அமைதி என்னால் கலைஞ்சிடு மோன்னு பயமாயிருக்கு.."
நான் உள்ளே போய் இரண்டு கப் டீ கொடக்கச் சொல்லிவிட்டு வந்தேன்.
அவருக்குப் பெயர்தான் பிரபாத் (காலைநேரம்). ஆனால் அவர் வெளியே சுற்றும் நேரம், கதை பேசும் நேரம் இதெல்லாம் நடுப்பகலுக்கும் நள்ளிரவுந்தான். வயது எழுபத்து நான்கு அவருக்கு. உடல் தளர்ந்தாலும் மனதைத் தளரவிடவில்லை அவர். பஸ்ஸிலும் டிராமிலும் சிரமமில்லாமல் பிரயாணம் செய்கிறார். கலகலப்பான மனிதர். தமக்குப் பிடித்த இலக்கியக் கூட்டங்களுக்குப் போவார். பழைய நண்பர்களைச் சந்தித்துப் பேசுவார். புதிய நண்பர்களைச் சம்பாதித்துக் கொள்வதிலும் தங்கு தடையில்லை. அவருக்கு அடுத்த தலைமுறையிலும் அதற்கடுத்த தலைமுறையிலுங்கூட நண்பர்கள் உண்டு. ஆனால் அவருக்குப் பிள்ளையுமில்லை, பேரனுமில்லை. அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை.
பேச்சுவாக்கில் அவரிடம் சொன்னேன், "என்ன பிரபாத் பாபு! முந்தாநாள் ராத்திரி ஒங்களை வரச் சொல்லியிருந்தேன், நீங்க வரவேயில்லே! என்னோட ரெண்டு சிநேகிதங்க ஒங்களைச் சந்திக்கணும்னு வந்திருந்தாங்க. நாங்க ரொம்பநேரம் காத்துக் கிட்டிருந்தோம் ஒங்களுக்காக."
பிரபாத் பாபு வெட்கமடைந்து நாக்கைக் கடித்துக் கொண்டார். "அடேடே, மறந்தே போயிட்டேன், கல்யாண் பாபு..! முந்தாநாள் ராத்திரி நான் அலிப்பூர்லே என் சிநேகிதன் வீட்டிலே இருந்தென். அங்கே ஒரு ஆண்டுவிழா கொண் டாடினோம்.."
"ஒங்க சிநேகிதரோட பிறந்தநாள் விழாவா?"
"இல்லேயில்லே, அதெல்லாம் ஒண்ணுமில்லே. பிறந்த நாள் கிறந்த நாள் கொண்டாடற வழக்கம் என்னிக்குமே இல்லே என் நண்பனுக்கு. அவன் தனிப்பட்ட முறையிலே பூஜை கீஜை பண்ணியும் பார்த்ததில்லே. சமூகச் சடங்குகளிலே கலந்து கொண்டும் பார்த்ததில்லே நான். சந்தியா வந்தனம், ஜபம் தபம் ஒண்ணுமில்லே அவனுக்கு. நானே அவன்கிட்டே ஒரு தடவை சொல்லியிருக்கேன். சைலேன், பிசாசுக்குக்கூடச் சில சடங்குகள் உண்டு. நீ பிசாசைவிடப் பெரியவனா..?" இப்போ கொஞ்சநாளா அவன் ஒரு சடங்கை அக்கறையா செஞ்சுகிட்டு வரான். வருஷத்திலே ஒருநாள் அதுக்கு அவன் ஒருத்தனை மட்டும்தான் அழைப்பான் .."
"அது நீங்கள்தானாக்கும்?"
பிரபாத் பாபு புன்சிரிப்புடன் ஒப்புக்கொண்டார்.
இதற்குள் டீ வந்துவிட்டது. அவர் அதில் ஓர் உறிஞ்சு உறிஞ்சிவிட்டுச் சட்டைப்பையிலிருந்து சிகரெட் பெட்டியை எடுத்து ஒரு சிகரெட் பற்றவைத்துக் கொண்டார். அவர் உபயோகிப்பது மலிவான சிகரெட்டுதான்.
நான் சிகரெட் பிடிப்பதில்லையென்று தெரிந்தும் அவர் என்னிடம் ஒரு சிகரெட் நீட்டினார். நான் தலையாட்டுவதைப் பார்த்துச் சிரித்தவாறு, "நீங்க தேவலை. நான் எப்ப சிகரெட் பிடிக்க ஆரம்பிச்சேன்னு எனக்கே ஞாபகமில்லே. பால்குடி மறந்ததுமே சிகரெட் பிடிக்கத் தொடங்கிட்டேன்னு நினைக்கறேன்." என்றார்.
"ஏதோ ஒரு விழாவைப் பத்திச் சொல்லிக்கிட்டிருந்தீங்களே!"
"பொறுங்க, பொறுங்க! நான் கதை எழுதறதில்லேன்னாலும் எப்படி எழுதணும்னு எனக்குத் தெரியும்; கல்யாணம் பண்ணிக்க லேன்னாலும் மாப்பிள்ளை வீட்டாரோட ஆயிரம் கல்யாணத் துக்குப் போயிருக்கென். தொடக்கத்திலேயே கதையோட சஸ்பென்ஸைச் சொல்லிட நான் அவ்வளவு முட்டாள்னு நினைச்சுக்கிட்டிருக்கீங்களா? நான் முதல்லேயே சஸ்பென்ஸை வெளியிட்டா நீங்க அக்கறையாக் கதை கேப்பீங்களா..?
இது என் கதையில்லே, என் நண்பனோட கதை.. ஒங்ககிட்டே எதுவும் சொல்லப் பயமாயிருக்கு. ஒங்ககிட்டே ரகசியம் தங்காது. கேட்ட ரகசியத்தைப் பத்துப் பேருக்குச் சொல்லாட்டி ஒங்களுக்கு நிம்மதியிருக்காது.. ஆனால் இந்தக் கதையை நீங்க எழுதிப் பிரயோசனமில்லே. ஏன்னா இந்த மாதிரிக் கதை ஒருத்தருக்கும் பிடிக்காது. இது பழைய காலத்துக் கதை. பழைய காலம், பழைய சூழ்நிலை மட்டுமில்லே, பழைய மதிப்பீடுகள் சம்பந்தப்பட்ட கதை..
பழைய காலந்தான். ஆனால் எனக்கு அப்போ புதுசுதான். அப்போ நான் இளைஞன். எவ்வளவு காலம் முன்னாலே? சுமார் அரை நூற்றாண்டு! ஆனால் சில சமயம் நேத்து நடந்த மாதிரி இருக்கும். சில சமயம் ரொம்ப, ரொம்பப் பழைய காலம் மாதிரி தோணும்- வரலாற்றுப் பழமை, வரலாற்றுக்கும் முந்தைய பழங்காலம்.
அந்தக் காலத்திலே கல்கத்தாவிலேருந்து மேற்கு இந்தியாவிலே ஒரு பட்டணத்துக்கு மாற்றலாச்சு எனக்க. நான் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்கறவனில்லே. கல்கத்தாவிலே எனக்கு நிறைய சிநேகிதங்க. ஆபீஸ் நேரம்போக மத்த நேர மெல்லாம் அவங்களோடே பேசிப் பொழுது போக்குவேன். பகல் இரவு பாராமே கும்மாளம் போடுவோம். எங்க பொழுது போக்கிலே இலக்கியம், சங்கீதம், நாடகம் எல்லாத்துக்கும் இடமுண்டு .. ஆனால் நான் போகப்போற இடத்திலே ஆபிசைத் தவிர என்ன இருக்கும்? அதுவும் எப்படிப்பட்ட ஆபீஸ் வேலை தெரியுமோ? ராணுவத்தோட உடை, சாப்பாட்டுச் செலவுக்கானி கணக்கு வழக்குகளைப் பார்த்துக்கறது. இந்த மாதிரி வேலை எனக்குப் பிடிக்கவேயில்லே. ஆனால் ஆபீஸ் வேலையைச் செய்யத் தானே வேணும்! கணவனைப் பிடிக்காட்டியும் ஒரு பதிவிரதை அவனோட குடித்தனம் செய்யத்தானே வேணும்!
அந்தப் பட்டணத்திலே நான் ஒரு நடுத்தர உணவு விடுதியிலே போய்த் தங்கினேன். அங்கே எனக்கு நண்பர்களே கிடைக்க மாட்டங்கன்னு நான் பயந்தமாதிரி இல்லே. அங்கே என் அறையிலேயே ஒரு சின்ன கோஷ்டி சேர்ந்துடுச்சி. கதை பாட்டு, வேடிக்கைப் பேச்சு, சீட்டு விளையாட்டு எல்லாம் நடந்தது. வேறுவித ஆசைகள் உள்ளவங்களும் அதுக்கான ஏற்பாடுகள் செஞ்சுக்கிட்டாங்க. என்னோட சக ஊழியன் சைலேனும் இந்த கோஷ்டியிலே வந்து கலந்துக்கத் தொடங் கினான். நானும் சைலேனும் ஒரே பிரிவிலே வேலை பார்க்கறவங்க, ஆனால் அவன் என் மாதிரி இல்லே. நல்ல பையன். அக்கறையா வேலை செய்வான். ஆனால் எல்லாத்தையும்விட அவனோட அழகுதான் மத்தவங்கள முதல்லே ஈர்க்கும். என் மாதிரி கறுப்பா, அவலட்சணமா இருக்கமாட்டான் அவன். நான் நல்ல ஒசரம், ஏறக்குறைய ஆறடி, என்னைவிட ஒரு அங்குலம் ஒண்ணரை அங்குலம் குட்டையாயிருப்பான்.
அவன்கிட்டே எந்தவிதமான குறையும் இல்லே. நல்ல சிவப்பு, நீளமான மூக்கு, தலை நறையக் கருப்பு முடி, அழகான உடல்வாகு.. அவன் ஒண்ணும் விளயாட்டு வீரன் இல்லே. இருந்தாலும் அவனோட தோற்றத்திலே ஆண்மை இருந்தது. என்னிலிருந்து வேறுபட்ட ஒருத்தனை நான் நண்பனாகப் பெற்றது அதுதான் முதல்தடவை. என்னிடமில்லாத ஏதோ ஒரு கவர்ச்சி அவன்கிட்டே இருந்தது. அதே மாதிரி அவனும் தன்கிட்டே இல்லாத ஏதோ ஒரு கவர்ச்சியை என்னிடம் உணர்ந்திருக்கலாம். எங்கள் வேறுபாடே எங்களைப் பரஸ்பரம் கவர்ந்தது.
சைலேன் எங்க கோஷ்டியிலே வந் பேசாமே ஒக்காந் திருப்பான். சில சமயம் என் ஷெல்பிலிருந்து ஏதாவது புஸ்தகத்தை எடுத்துப் படிப்பான், சில சமயம் சும்மா எங்க கும்மாளத்தைப் பார்த்துக்கிட்டிருப்பான். மொதல்லே ரொம்பக் கூச்சப்படுவான். ஆனால் இப்போ அப்படியில்லே.. எல்லாரும் போனப்பறம் நேரமிருந்தா ஏதாவது சாதாரணமாப் பேசிக்கிட்டு இருப்போம் நாங்க ரெண்டு பேரும்.
ஒருநாள் நாங்க தனியா இருந்தபோது அவன் எங்கிட்டே சொன்னான், "ஒங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.."
"என்ன விஷயம் சொல்லு?"
அவனிடமிருந்து பதிலில்லை.
"ஏதோ விஷயம்னியே.. சொல்லேன்!"
"வேண்டாம் விடு!"
"ஏன் வேண்டாம்..? சரி, நீ என்ன சொல்ல வந்து சொல்ல முடியாம தவிக்கிறியோ, அதை நானே சொல்லிடறேன்" நான் அவனோட குரலைக் காப்பியடித்துச் சொன்னே, "பிரபாத், எனக்குக் காதல் ஏற்பட்டிருக்கு. காதல் பள்ளத்திலே அதல பாதாளத்திலே விழுந்துட்டேன். இப்போ நீதான் என்னைக் கரையேத்தணும்!"
"இதைத்தான் நான் சொல்ல வந்தேன்னு ஒனக்கு எப்படித் தெரிஞ்சுது?" சைலேன் கேட்டான்.
"புரிஞ்சுக்கிறதிலே என்ன கஷ்டம்? அன்னிக்கு ஒங்க வீட்டுக்கு வந்திருந்தபோதே நான் புரிஞ்சுக்கிட்டேன்."
சைலேன் பேசாமலிருந்தான்.
சைலேனின் அப்பா ஒரு அரசாங்க விடுதியில் குடியிருந்தார். பெரிய குடும்பம். சைலேனோட அப்பா, அம்மா, தம்பிகள், தங்கைகள்..
"ஆபீஸ் முடிஞ்சப்பறம் சிலநாள் என்னை அவன் வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போவான். அவனோட அம்மா என்னைப் பிள்ளை மாதிரி நடத்தினாங்க. தானே சமைச்சுச் சாப்பா போடுவாங்க. அவனோட தம்பி தங்கைகளுக்கும் என்கிட்டே ரொம்பப் பிரியம். அந்த ஊரிலே இன்னும் சில வங்காளிக் குடும்பங்கள் இருந்தன. அவங்க வீடுகளுக்கும் நான் போறதுண்டு. ஆனால் சைலேனோட வீட்டுக்குப் போகத்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
"அவங்க வீட்டிலேதான் நான் மாதுரியைப் பார்த்தேன். அவளோட அழகைப் பார்த்து நான் மொதல்லே அவளும் சைலேனோட தங்கைன்னுதான் நினைச்சேன். அவன் மாதிரியே அவளும் நல்ல சிவப்பு. பெண்ணாயிருக்கறதாலே சிவப்பு நிறம் எடுப்பாத் தெரிஞ்சுது. எனக்கு எப்போதும் நீள முகந்தான் பிடிக்கும். ஆனால் மாதுரிக்கு உருண்டை முகம். உருண்டை முகம் ஒரு மலர்ந்த தாமரைப்பூ போல ரொம்ப அழக்யிருக்குங் கறது எனக்கு அவளைப் பார்த்த பிறகுதான் புரிஞ்சுது. அடர்த்தியான, நீளமான கருங்கூந்தல் அவளுக்கு, பட்டுபோல இவ்வளவு அழகான கூந்தலை நான் பார்த்ததேயில்லை. அவள் சைலேனோட தங்கையுமில்லே, சித்தியின் பொண்ணுமில்லேங் கறதைப் பின்னால தெரிஞ்சுக்கிட்டேன். ஆனால் அவ சைலேனோட அம்மாவைப் பெரியம்மான்னு கூப்பிட்டா. மாதுரி பிராமண சாதி- முகர்ஜி. சைலேனோட வீடும் மாதுரி வீடும் ஒரே தெருவிலே சில கஜ தூரத்திலே இருந்தது. ரெண்டு குடும்பங்களுக்குமிடையே ரொம்ப நெருக்கம், நட்பு, பரஸ்பரப் போக்குவரத்து, பேச்சு வார்த்தை, சாப்பாடு எல்லாம் உண்டு. சைலேனோட அம்மா மாதுரி வீட்டுக் குழந்தைகளுக்குப் பெரியம்மா. மாதுரியோட அம்மா சைலேன் வீட்டுக் குழந்தைகளக்கு சித்தி..
"நீ எப்படிப் புரிஞ்சுக்கிட்டே?" சைலேன் கேட்டான்.
"நீங்க ஒருத்தரையொரத்தர் திருட்டுத்தனமாகப் பார்த்துக் கறதிலேருந்து .. ஒன் மேஜை மேலே மாதுரியோட புஸ்தகங்களைப் பார்த்து.. அவளோட பாட்டு நோட்டில ஒன் கையெழுத்தைப் பார்த்து.."
பிடிபட்ட சைலேன் சிரித்துவிட்டான். "இதுக்குள்ள இவ்வளவு கவனிச்சிட்டியா..? நீ துப்பறியும் இலாகாவிலே வேலைக்குப் போயிருக்கணும், பிரபு!"
சைலேன் சில சமயம் என்னைச் செல்லமாப் 'பிரபு'ன்னு கூப்பிடுவான். சில சமயம் 'குருதேவா'ன்னு அழைப்பான். நான் தான் அவனோட நண்பன், ஆசான் , வழிகாட்டி.
அவன் என்கிட்டே எல்லா விஷயத்தையும் சொன்னான். சொல்லத்தானே வந்திருந்தான் அவன்..! சிறு வயசிலிருந்தே அவங்களோட பரஸ்பர அன்பு, பின்பு அது காதலாக மலர்ந்த கதை, அவங்க ஒருவருக்கும் தெரியாமல் சந்திக்கறது எல்லாம் ஒளிவு மறைவு இல்லாமல் சொன்னான். அவங்க முதல்லே வீட்டுக்காரங்ககிட்டேயிருந்து மட்டுமில்லாமே, தங்கைகளிடமே தங்கள் காதலை மறைச்சுக்கிட்டாங்களாம். அப்பறம் நிலைமை மாறினது. ரெண்டு வீட்டுக்காரங்களும் அவங்களோட காதலைப் புரிஞ்சுக்கிட்டு அவங்களைச் சேர்த் வைக்கணும்னு ஆசைப் பட்டாங்க. மாதுரியைப் பெண் மாதிரி நடத்தின சைலேனோட அப்பா அம்மா அவளை மருமகளா ஏத்துக்கணும் சைலேனை மகன் மாதிரி நேசிச்ச மாதுரியோட அப்பா அம்மா அவனை மருமகனா ஏத்துக்கணும் - இதுதான் அவங்க ஆசை.
"இதிலே என்ன தடை?"ன்ன நான் சைலேனைக் கேட்டேன்.
"சாதி வித்தியாசந்தான்!"
"சாதி கிடக்கட்டும், விட்டுத் தள்ளு!" நான் சைலேன்கிட்டே சொன்னேன். "மாதுரியோடு அப்பா சம்மதிக்கல்லேன்னா, நீ 'சுபத்ரா ஹரணம்' பண்ணிப்பிடேன்! ஒங்க தேரை நான் ஓட்டத் தயார்! பாக்கி எல்லாத்தையும் விட்டுட்டு என்னைச் சரணடை!"
"அது நடக்காது!"
"ஏன்? மாதுரி பயப்படறாளா?"
"அவளுக்குப் பயம், தயக்கம் எல்லாந்தான். தவிர, அவளுக்குத் தன் அப்பா மேலே ரொம்பப் பாசம். அவரோட விருப்பத்துக்கு விரோதமா எதுவும் செய்யறதைப் பத்தி நினைக்கக் கூட மாட்டா."
"நீ கவலைப்படாதே! நான் போய் அந்த எஞ்சினியரை …
மாதுரி அப்பாவைப் - பார்த்துப் பேசறேன். அவரை சம்மதிக்க வைக்கறேன்."
"அடேயப்பா! நீ அவர்கிட்டே போனேன்னா அதுக்கப்பறம் அவங்க வீட்டுக்குள்ளே நாங்க நுழைய முடியாது. எங்க அப்பா மட்டும் இந்த அவமானத்தைப் பொறுத்துப்பாரா? மாதுரி வீட்டுக்காரங்களும் எங்க வீட்டுக்குள்ளே நுழைய முடியாது.. எங்க காதல் விஷயம் எல்லாருக்கும் தெரியும். ஆனால் யாரும் இதைப் பத்தி வாயைத் திறந்து பேசறதில்லே. வெகுகாலத்து நட்பு முறிஞ்சு போயிடுமேன்னு.."
"ஒன் அம்மா அப்பா என்ன நினைக்கறாங்க?"
"அவங்களுக்கும் இதிலே இஷ்டமில்லே. காதல் கலியாணம்னா அவங்களுக்கு ரொம்பப் பயம். நான் மாதுரியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாத் தனிக் குடித்தனம் வச்சுடுவேன், அப்பறம் அப்பா அம்மா தம்பி தங்கைகளைக் கவனிக்க மாட்டேன்னு அவங்க பயப்படறாங்க."
சைலேன் கோழை. நான் அவனுக்காகத் துணிச்சலான ஏதாவது செய்யவும் என்னை விடவில்லை அவன். அவனுக்கு இப்போது மாதுரியுடன் பேசிப் பழகக் கிடைக்கும் வாய்ப்பும் என் இடையீட்டால் கெட்டுப் போய்விடும் என்ற பயம் அவனுக்கு. இப்போது அவர்கள் தினமும் மாலை வேளையில் பார்த்துக் கொள்கிறார்கள், பேசிக் கொள்கிறார்கள், ரகசியமாக ஒருவரை யொருவர் கொஞ்சிக் கொள்கிறார்களே, அதுவும் நின்று போய் விடக் கூடாதே!
"சைலேன், அப்படீன்னா நீ இப்படியே இருந்துக்க! இதுக்கு மேலே எதுக்கும் ஆசைப்படாதே!" இதன்பின் இரண்டு வீடு களுக்கும் கல்யாணத் தரகர்கள் ஒளிவு மறைவாக வரத் தொடங் கினார்கள். மாதுரிக்கு வரன் பார்க்கப் பட்டது. சைலேனின் விருப்பத்துக்கு மாறாக அவனுக்கும் பெண் பார்த்தார்கள். நிறைய நகைகள், வரதட்சணையுடன் வைலேனுக்குப் பெண் கொடுக்கப் பலர் தயாராயிருந்தார்கள். ஆனால் சைலேன் இணங்கவில்லை. மாதுரியின் நிலையும் அதுவே. ஆகவே கல்யாணத் தரகர்கள் அலைந்ததுதான் மிச்சம். இரண்டு குடும்பங் களிலும் கல்யாணம் நடக்கவில்லை.
எனக்கு அப்போது சிம்லாவுக்க மாற்றலாகி விட்டது. நான் அங்கிருந்து புறப்பட்டபோது மாதுரி எனக்கு ஒரு சிவப்பு ரோஜாக் கொத்தைக் கொண்டு வந்து கொடுத்தாள். கூடவே இரண்டு கண்ணீர் முத்துக்கள்.
நான் அவளுடைய கரிய, பெரிய, ஈர விழிகளைப் பார்த்த வாறு, "மாது, ஏன் அழறே?" என்று கேட்டேன்.
"பிரபாத் அண்ணா, எங்களுக்கு ஒங்களைத் தவிர வேறே நண்பர் இல்லே, எங்களை மறந்துடாதீங்க!"
நான் என் நண்பனோட நலம் விரும்பி, அவ்வளவுதான். நான் எப்போதுமே ஒரு துணைவினைச் சொல்தான். என்னிக்குமே முக்கிய வினைச் சொல்லா ஆகலே, எனக்காக ஒண்ணும் செஞ்சுக்கலே. இருந்தாலும் வாழ்க்கையிலே எனக்குக் கிடைச்சது ஒண்ணும் குறைவு இல்லே. சைலேனைச் சொல்லி என்ன பிரயோசனம்! நானே கப்பியும் குருணையுமா சேத்துத்தானே என் பிச்சைப் பையை ரொப்பிக்கிட்டிருக்கேன்..!
அடே, ரொம்ப நேரமாச்சே! இதோ சுருக்கமாச் சொல்லி முடிச்சுடறேன். இல்லேன்னா, ஒங்க வீட்டுக்காரம்மா ஒங்களைத் திட்டுவாங்க, எனக்க அப்பப்ப ஒரு கப் டீ கிடைக்கறதும் நின்னு போயிடும்.. நான் சிம்லாபோய்க் கொஞ்ச நாளுக்கெல்லாம் சைலேன் பாட்னாவுக்க மாற்றலாகிப் போனான். எங்கள் விதியை இயக்குவது சர்க்கார். ஒவ்வொரு சமயம் நாங்க வெவ்வேறு ஊருக்கு மாற்றலாகி வெகுதூரத்திலே இருப்போம். சில சமயம் ஒரே ஊரிலே கொஞ்ச காலம் வேலை பார்ப்போம், தினம் சந்திப்போம், பேசுவோம். நாளாக ஆக எங்க தோற்றத்திலே மாற்றம் வந்தது, வயது ஏறிக்கிட்டே வந்தது. ஆனால் எங்க நட்பு மட்டும் மாறல்லே. நாங்க தொலைவிலே இருந்தபோதும் எங்க தொடர்பு விட்டுப் போகலே. நாங்க அடிக்கடி கடிதம் எழுதிக்குவோம், எப்போதாவது சந்திச்சுக்குவோம்..
மாதுரியின் அம்மா இறந்து போயிட்டாங்க. ரெண்டு தம்பிகளும் பெரியவங்களாயிட்டாங்க. அப்பா கிழவராயிட்டார். ஒரு காலத்திலே பெரிய கோபக்காரராயிருந்த அவர் இப்போ பொண்ணே கதின்ன ஆயிட்டார். அவருக்குத் தாய், மனைவி, பெண் எல்லாமே மாதுரிதான். சைலேனோட அப்பா அம்மாவும் இறந்து போயிட்டாங்க. அவனோட தம்பிகளுக்கு அவன்தான் அப்பா, அவன்தான் அம்மா. அவன் அவங்களுக்குக் கல்யாணம் பண்ணி வச்சான். அவங்க வெவ்வேறு ஊர்களிலே குடியும் குடித்தனமுமா இருக்காங்க. இருந்தாலும் பிரம்மச்சாரி அண்ணா சைலேன்தான் அவங்களுக்கு ஆசான், வழிகாட்டி எல்லாம்..
சைலேனோடேயும் மாதுரியோடேயும் என் கடிதப் போக்குவரத்து தொடர்ந்தது..
அப்பறம் நானும் சைலேனும் ஏறக்குறைய ஒரே சமயத்திலே ரிடையர் ஆனோம். சைலேனுக்கு ரெண்டு மூணு பதவி உயர்வு கிடைச்சுது, பதவி நீட்டிப்பும் கிடைச்சுது, எனக்கு ஒண்ணும் கிடைக்கலே. அதுக்குப் பதிலா நான் பலதடவை நாடு பூராச் சுத்தினேன். பொழுதுபோக்கு நாடகங்களிலே நடிச்சேன், கிழ வயசிலேயும் அரிதாரம் பூசிக்கிட்டு, டோப்பா வச்சுக்கிட்டுக் கதாநாயகன் வேஷம் போட்டேன். பாதி இலக்கிய, பாதி அரசியல் மேடைகளிலே பேசினேன். இப்போ பஜனைக் கூட்டங் களுக்குப் போறேன். நீங்க என் நடத்தையைப் பார்த்து மனசுக் குள்ளே சிரிச்சுக்கிறீங்க..
இப்போ டல்ஹௌசியிலே பென்ஷன் வாங்கப்போற இடத்திலே நானும் சைலேனும் சந்திச்சுக்கறோம். நாங்க ரெண்டு பேருமே இப்போ கல்கத்தாவாசிகள். அவன் தெற்குக் கல்கத்தாவிலே இருக்கான், நான் வடக்கே. நாங்க அடிக்கடி சந்திச்சுக்க முடியலே, கடிதமும் எழுதிக்கறதில்லே.. ஒரு தடவை சைலேன், "ஒன் கையெழுத்து வரவர ரொம்ப மோசமாயிருச்சு. படிக்கவே முடியல்லே"ன்னு எனக்கு எழுதினான். அதிலே கோவிச்சுக்கிட்டு நான் அவனுக்குக் கடிதம் எழுதறதை விட்டுட்டேன். இப்போ போனிலே பேசிக்கறோம். சைலேன் அலிப்பூர்லே ஒரு அழகான ரெண்டடுக்கு வீடு கட்டியிருக்கான். அவனோட தம்பியோட பிள்ளை, பெண்கள், பேரன், பேத்திகள் கூட இருக்காங்க.. எனக்கு வீடு கட்டிக்க அவசியமேற்படல்லே. முன்னோர்கள் விட்டுப்போன வீடு இருக்கு. எனக்கும் என் அண்ணாவுக்கும் பொது. ஆனால் அது பேருக்குத்தான். நான் மனத்தளவிலே நாடோடி, நான் வீட்டிலே தங்கற நேரம் குறைச்சல்தான்..
பன்னெண்டு வருஷத்துக்கு முன்னாலே ஒருநாள், நான் பென்ஷன் பணத்தை எண்ணிக்கிட்டிருந்தபோது யாரோ பின்னாலேருந்து என் கையைப் பிடிச்சுக்கிட்டு, "எல்லாம் துறந்தவனே! பணத்து மேலே மட்டும் ஆசை போகலியாக்கும்!" என்று சொன்னாங்க.
திரும்பிப் பார்த்தேன் - சைலேன்!
"கிழ வயசிலே பெண்ணாசையை விட்டுடலாம், பொன்னாசையை விட முடியாது.. பழம் வாங்கித் திங்கறதுக்கும் காசு வேணும்" என்று சிரிச்சுக்கிட்டே சொன்னேன்.
சைலேன் என்னை ஒரு டீக்கடைக்குக் கூட்டிக்கிட்டுப் போய், "ஒங்கிட்டே ஒரு விஷயம் பேசணும்" என்றான்.
ஒரு காலிமேஜைக்கு முன்னாலேபோய் உக்காந்தோம்.
நாங்க ரெண்டு பேருமே காலத்தோட தாக்குதலக்கு ஆளா யிருந்தோம். சைலேனோட தலைபூரா வழுக்கையாயிட்டுது, நான் முழுப் பல்செட் வச்சுக்கிட்டிருந்தேன்.
சைலேன் அதிகம் பேசவில்லை, தன் சட்டைப் பையிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்துக் கொடுத்து, என்னைப் படிக்கச் சொன்னான்.
முத்து முத்தாகக் கையெழுத்து, எனக்குப் பழக்கமானதுதான்.
"இது ஒனக்கு வந்த கடிதம் இல்லே..?"
"சரிதான் படி! எனக்கு வந்த லெட்டரை நீ ஒரு நாளும் படிச்சதில்லையோ?" என்று அதட்டினான் சைலேன்.
உறையிலேயிருந்து கடிதத்தை எடுத்தேன். நீளக் காகிதம். ஆனால் அதிலே எழுதியிருந்தது ரெண்டே வரிதான் - 'உன்னோடு ஒரு விஷயம் பேசணும். அவசியம் வா! இப்படிக்கு, உன் மாதுரி.'
நான் சிரிச்சுக்கிட்டே சொன்னேன், "நான் முன்னால சொன்னதை மாத்திக்கறேன். கிழ வயசிலேயும் பொண்ணாசை விடாது. இப்போ மாதுரி எங்கே இருக்கா?"
அப்பா இறந்த பிறகு மாதுரி லக்னோவிலேருந்து கல்கத்தா வந்துட்டாங்கறது தெரியும் எனக்கு. ஆனால் அவளோட விலாசம் தெரியாது.
"அவளோட தம்பிகள் இங்கே வேலை செய்யறாங்க. அவளும் டீச்சர் வேலை பார்த்தா. ஆனால் உடல்நிலை கெட்டுப் போனதாலே வெலையை விட்டுட்டா. அவளோட அப்பா நிறையப் பணம் வச்சுட்டுப் போகலே. பொண்ணு பேரிலே முப்பதாயிரம் ரூவா டிபாசிட் பண்ணியிருந்தார். பிள்ளைகளுக்கும் ஏதோ கொஞ்சம் கொடுத்தார்..."
இதெல்லாம் எனக்குத் தெரியாது. மாதுரியோட எனக்கு வெகுகாலமாகக் கடிதப் போக்குவரத்து இல்லே.
"மாதுரி ரொம்பயாளா நோய் வந்து கஷ்டப்படுறா. வா, ஒர தடவை பார்த்துட்டு வருவோம். என்ன விஷயம்னு கேக்கலாம்."
"நீ மட்டும் போயிட்டு வா. நான் வந்தா அவ ஒன்னோட மனம்விட்டுப் பேசமாட்டா."
"அதெல்லாமில்லே, நீயும் வரணம். வா, இப்பவே போகலாம்."
"இன்னொரு நாள் போயிக்கலாமே" என்று நான் தட்டிக் கழிக்கப் பார்த்தேன். ஆனால் அவன் விடலே.
நாங்க எங்க வீடுகளுக்குப் போன் பண்ணித் தகவல் சொல்லிவிட்டுப் பாரக்பூருக்குப் போனோம். டாக்சியில் போகலாம் என்றான் சைலேன். நான்தான் "பென்ஷன் பணத்தை இப்படி அனாவசியமாகச் செலவு செய்யக் கூடாது. பஸ்ஸிலேயே போகலாம்"ன்னு சொன்னேன்.
வழியில் காலேஜ் தெரு மார்க்கட்டிலே ஒரு பெரிய ரஜனிகாந்தாப் பூக்கொத்து வாங்கிக்கிட்டேன்.
"ஒனக்கு இன்னும் இந்த ஷோக்கெல்லாம் இருக்கே!" என்று என்னைக் கேலி பண்ணினான் சைலேன்.
பாரக்பூர் ஸ்டேஷன்கிட்டேதான் அவங்க வீடு. அவங்க மாடியிலே இருந்தாங்க. ஒரு பெண் எங்களை மேலே கூட்டிக் கிட்டுப் போனா.
ஒரு சின்னக் கட்டிலிலே படுத்துக்கிட்டிருந்தா மாதுரி. சுத்தமான படுக்கை விரிப்பு. அறையும் சுத்தமாயிருநதது.
ஆனால் மாதுரி என்ன இப்படி ஆயிட்டா! படுக்கையோடே படுக்கையா கிடந்தா அவ,. எழுந்து உக்காரக்கூட சக்தியில்லே.
அப்படியும் எங்களைப் பார்த்ததும் அவளுக்குப் பலம் வந்தது. எழுந்து உக்காந்தா.
என்னைப் பார்த்துச் சிரிச்சுக்கிட்டு, "நீயும் வருவேன்னு எனக்குத் தெரியும்" என்று சொன்னா.
அதுக்கப்புறம் அவ செஞ்ச காரியத்தைக் கேளுங்க! அவளோட ஒரு தம்பியின் மனைவியைக் கூப்பிட்டு, "லட்சுமி பீடத்துக்கிட்டே ஒரு குங்குமச்சிமிழ் இருக்கு, எடுத்துக்கிட்டு வா!" என்று சொன்னா.
குங்குமச் சிமிழ் வந்தது. மாதுரி அதை வாங்கி சைலேன் கிட்டே கொடுத்துச் சொன்னா, "இந்தக் குங்குமத்தை என் வகிட்டிலே இடு.. நான் குமரியாச் சாக விரும்பல்லே.."
முன்பு மாதுரிக்கு இருந்த-கருமேகம் மாதிரி அடர்த்தியான முடி இப்போ இல்லே. வயசானதாலே இல்லே, வியாதி யாலே முடியிலே பெரும்பகுதி உதிர்ந்து போயிருந்தது. மிச்சமிருந்த முடியில் நரையும் கண்டிருந்தது.
சைலேன் அவளுடைய வகிட்டிலே குங்குமம் இட்டான். அவளோட ரெண்டு தம்பிகளோட மனைவிகளும் அந்த சமயத்திலே சங்கு ஊத விரும்பினாங்க. மாதுரி ஜாடையாலே அவங்களைத் தடுத்துட்டா.
"மாது, நீ முடி நரைச்சப்பறந்தான் வகிட்டிலே குங்குமம் இட்டுக்கணும்னு இவ்வளவு நாள் காத்திருந்தியா?" நான் கேட்டேன்.
இதைக்கேட்டு மாதுரி முகத்திலே வளர்பிறைப் பிரதமைச் சந்திரன் மாதிரி ஒரு மெல்லிய புன்னகை. 'சரி, இப்போ நீ மந்திரம் சொல்லு!" என்றாள்.
நான் என்ன புரோகிதனா, மந்திரம் சொல்ல? தவிர, நானே அப்போ மந்திரத்தால் மயங்கினவன் மாதிரி இருந்தேன். இருந் தாலும் ஒரு மந்திரத்தைச் சொல்லி வச்சேன்-'யதிதம் ஹ்ருதயம் தவ, ததிதம் ஹ்ருதயம் மம' (உன்னிதயமே என்னிதயம்).
அவங்க மந்திரத்தைத் திருப்பிச் சொல்லலே, கவனமாக் கேட்டுக்கிட்டாங்க.
நான் எவ்வளவோ கல்யாணத்துக்கு மாப்பிள்ளை கோஷ்டியோட போயிருக்கேன் கல்யாண் பாபு. சுலபமாப்போக முடியாத, தொலைவான இடங்களுக்கெல்லாம் போயிருக்கேன் ஆனால் இந்த மாதிரி கல்யாணத்திலே மாப்பிள்ளைத் தோழனா இருந்ததில்லே, இந்த மாதிரி புரோகிதத் தொழிலும் செஞ்சதில்லே.
அன்னிக்கு நான் ரஜனிகாந்தாப் பூக்கொத்து எடுத்துக்கிட்டுப் போனது பொருத்தமா அமைஞ்சுடுத்து, அந்தக் கொத்தை மாதுரியோட படுக்கையோரத்திலே வச்சேன். கொஞ்ச நேரத்துக்கு அது முதலிரவுப் படுக்கை மாதிரி அலங்காரமாயிருந்தது..
அதுக்கப்புறம் மாதுரி ரொம்ப நாள் பிழைச்சிருக்கலே. அவளோட தம்பிகள் நல்லா செலவு செஞ்சு மருத்துவம் பார்த் தாங்க. சைலேனோட முயற்சியிலேயும் குறைவில்லை. அவளைக் கல்கத்தாவுக்குக் கூட்டிவந்து மருத்துவமனையிலே வச்சிருந் தான். அவளோட வயத்திலே கட்டி ஏற்பட்டிருந்தது. அவளுக்கு அறுவை சிகிச்சை நடந்துகொண்டிருந்தபோதே அவ இறந்து போயிட்டா.
நான் இன்னொரு கொத்து ரஜனிகாந்தா எடுத்துப் போய் அவளோட சடலத்து மேலே வச்சேன்.
சைலேன்தான் அவளுக்கு ஈமக் கடன்கள் செஞ்சான். ஐயாயிர ரூவா செலவு பண்ணி சடங்குகள் செஞ்சான், சாப்பாடு போட்டான், பஜனைக்கு ஏற்பாடு பண்ணினான். எங்களுக்கு ஒரே ஆச்சரியம். ஏன்னா இதுக்கு முன்னாலே அவனுக்கு இந்த மாதிரி சடங்குகளிலே நம்பிக்கை கிடையாது. மாதுரியோட விருப்பப்படி இதெல்லாம் செஞ்சான்னு புரிஞ்சுக்கிட்டேன்.
முன்பெல்லாம் அவன் மாதுரியோட கடிதங்களைச் சட்டைப்பையிலே வச்சுக்கிட்டு அலைவான். சாகறதுக்கு முன்னாலே மாதுரி அவன்கிட்டே இன்னொரு உறையைக் கொடுத்து அவ இறந்தபிறகு அதைத் திறந்து பார்க்கச் சொல்லி யிருந்தா. அவ சாகறவரையிலே அவன் அந்த உறையைப் பையிலே வச்சுக்கிட்டிருந்தான்.
மாதுரி இறந்தபிறகு அதைத் திறந்து பார்த்தா, உள்ளே சைலேன் பேரிலே முப்பதாயிர ரூவாய்க்கு செக்.
"இந்தப் பணம் எனக்கு எதுக்கு?" என்றான் செலேன்.
"எடுத்துக்க, எடுத்துக்க! கலியாணம் பண்ணிக்க வரதட்சணை வாங்கலியே நீ! இதுதான் ஒனக்கு வரதட்சணை!" நான் சொன்னேன்.
சைலேன் அந்தப் பணத்திலே ஒரு பகுதியை மாதுரியோட தம்பிகளுக்குக் கொடுத்தான். ஆஸ்பத்திரியிலே ஏழைப்பெண் களுக்கு மருத்துவம் செய்ய இலவசப் படுக்கை ஒண்ணு ஏற்படுத்தச் சொல்லி மிச்சப் பணத்தைக் கொடுத்தான்.
அதிலேருந்து ஒவ்வொரு வருஷமும் மாதுரியோட நினைவு நாளைக் கொண்டாடுகிறான் சைலேன். அதற்கு அழைப்பு என் ஒருத்தனுக்குத்தான். அவனோட அறையிலே மாதுரியோட போட்டோ ஒண்ணு இருக்கு.. அவளோட இளமைக்கால போட்டோ.
இளம் மாதுரியோட அந்த போட்டோவுக்க முன்னாலே நாங்க ரெண்டு கிழவங்களும் உக்காந்துகிட்டு டீ குடிப்போம், பேசிக் கிட்டிருப்போம்; சில சமயம் மௌனமா உக்காந்திருப்போம்.
சைலேன் ஒரு காதலைச் சாவிலேருந்து காப்பாத்திட்டான். நான் ஒரு நட்பைக் கிழத்தனத்திலேருந்து காப்பாத்திட்டேன்.."
பிரபாத் பாபு எழுந்து நின்று கொண்டார். அவருடைய குடை அவரது கண்முன்னே இருந்தும் அதை மறந்து விட்டார். இன்று நான் அதை எடுத்து அவரிடம் கொடுத்தேன். அவர் புன்சிரிப்புடன், "நன்றி!" என்று சொன்னார்.
('தேஷ்' பூஜா மலர், அக்டோபர், 1972)
10. மதிப்புக்குரிய, விடைத்தாள் திருத்துபவர் அவர்களுக்கு
நாராயண் கங்கோபாத்தியாய்
ஐயா,
நீங்கள் இந்த விடைத்தாளைக் கடைசிவரை படிப்பீர்களா என்று எனக்குத் தெரியாது. ஏனென்றால் நான் விடைத்தாளில் ஒர கேள்விக்குக்கூடவிடையெழுதவில்லை. இந்தக் கடிதத்தை மட்டுமே எழுதியிருக்கிறேன். நீங்கள் ஒரு சில வரிகள் படித்ததுமே புருவத்தைச் சுளிப்பீர்கள், விடைத்தாளில் சைபர் போடுவீர்கள், பிறகு நான் அசட்டுத்தனமாகக் கடிதம் எழுதியதற்காகப் பல்கலைக் கழகத்துக்குப் புகார் செய்வீர்கள். நீங்கள் சைபர் போட்டாலும் புகார் செய்தாலும் எனக்குக் கவலையில்லை. நீங்கள் ஒருவேளை என் கடிதம் முழுவதையும் படித்தாலும் படிக்கலாம் என்ற நம்பிக்கையில் இதை எழுதுகிறேன்.
ஓரிரண்டு கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க முடியுந்தான். ஆனால் அதனால் கிடைக்கும் மார்க்குகளால் பாஸ் செய்வது கிடைக்கட்டும், இருபதைக்கூட எட்ட முடியாது. ஆகையால் நான் விடையளிக்க முயற்சி செய்யவில்லை. தவிர, இன்று சாயங் காலத்துக்குப் பிறகு நான் பாஸ், பெயில் இவற்றுக்கெல்லாம் அப்பால் போய்விடுவேன். கல்கத்தாவையடுத்து எவ்வளவோ ரயில்கள் போய் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றுள் ஒன்றின் சக்கரங்களுக்கடியில் என் கணக்கை முடித்துக் கொள்ளப் போகிறேன். ஓர் அடையாளம் தெரியாத இளைஞன் ரயிலில் அரைபட்டு மாண்டான் என்ற பத்திரிகைச் செய்தி நீங்கள் இந்தத் தாளைத் திருத்தும் சமயத்தில் பழைய செய்தியாகி உங்களுக்கு மறந்துகூடப் போயிருக்கும்.
இந்த இடத்தைப் படிக்கும்போது உங்கள் ஆசிரிய மனப்பாங்கு அதிர்ச்சியடையும். "சீ, சீ! பரீட்சையிலே தேறலேன்னு தற்கொலையா? இதைவிடக் கோழைத்தனத்தைக் கற்பனை பண்ண முடியுமா? வங்காளத்து இளைஞர்களிடம் இந்த மனோபலங்கூட இல்லேன்னா நாடு எப்படி உருப்படும்? சமூகத்துக்கு என்ன எதிர்காலம் இருக்கும்?" என்றெல்லாம் சொல்லிக் கொள்வீர்கள்.
என்னை நம்புங்கள் சார், எனக்கும் இதெல்லாம் தெரியும். நான் உயிர் வாழத்தான் விரும்பினேன் என்பதையும் நீங்கள் நம்ப வேண்டும். சாந்தால் பர்கனாவின் மலையாறுகளின் சீறிவரும் வெள்ளம் என் கை பட்டதும் ஒர பெரிய நிலப்பரப்பில் சிறைபட்டு நிற்கும்; பீகார் - மேற்கு வங்காள எல்லையிலுள்ள சிறந்த தொழிற்சாலைப் பகுதியை ஆயிரமாயிரம் விளக்குகளால் பிரகாசிக்க வைக்கும் நீர் மின்சாரத் திட்டத்தை இயக்கும் பொத்தானை என் கை அமுக்கும்; நான் கொதியுலையின் சிவந்த ஒளியில் எஃகை உருக்கி எதிர்கால பாரதத்தைச் சமைக்கப் போகிறேன் - இவ்வாறெல்லாம் கனவு கண்டு கொண்டிருந்தேன் நான்.. சார், நான் தற்கொலை செய்து கொள்ள விரும்பவே யில்லை!
எனக்கு நாற்புறமும் மாணவர்கள் விடைகளை மும்முரமாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பலர் என் போலவே கனவு காண்கிறார்கள். இன்னம் சில நாட்களுக்குப் பிறகு சிலரது பெயர்கள் தேறியவர்களின் பட்டியலிலிருந்த அடிக்கப் பட்டு அவர்களுடைய கனவுகளும் சுக்குநூறாகி விடும். சிலர் வாழ்க்கையில் வெற்றிபெற்று வருங்கால பாரதத்தின் நம்பிக்கை விளக்கைக் கைகளில பிடித்துக் கொள்ளலாம். அவர்கள் அதிருஷ்ட சாலிகள்; அவர்கள் முன்னேறிச் செல்லட்டும்! என் போன்ற எண்ணற்றவர்கள் இப்படியே மறைந்து விடுவார்கள், அல்லது நடைப்பிணங்களாக உயிர் வாழ்வார்கள். ஐந்தாண்டுத் திட்டத்தின் சாதனைப் பட்டியலில் இடம்பெற மாட்டார்கள் அவர்கள்.
நான் உங்களைப் பார்த்ததில்லே, ஒருபோதும் பார்க்கப் போவதுமில்லே. எனக்கு உங்களைத் தெரியாது. ஆனால் நீங்கள் ஒரு ஆசிரியர் என்பது மட்டும் தெரியும். நீங்கள் மாணவர்களுடன் நெருக்கமாக வாழ்கிறீர்கள்; அவர்களது வாழ்க்கையின் அலை உங்களையும் தொடுகிறது. நீங்கள் அவர்களை நேசிக்கவும் செய்யலாம். ஆகையால் நான் எழுதுவதை நீங்கள் படித்தாலும் சரி, படிக்காவிட்டாலும் சரி, நான் உங்களிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வேன்?
சார், நான் மேதினிபூர் மாவட்டத்துச் சின்னஞ்சிறு கிராமம் ஒன்றிலுள்ள ஓர் ஏழை விவசாயியின் மகன் என்பதை நான் கனவு காணும் சமயத்தில் மறந்து போயிருந்தேன். என் தந்தை ஒரு சாதாரணமான உழவர்தான் என்றாலும் இப்போது டில்லியில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் தலைவர்களில் எவரையும்விடத் தேச பக்தியில் குறைந்தவரல்ல. ஆயிரத்துத் தொள்ளாயிரத் நாற்பத்தி இரண்டாம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு நள்ளிரவில் ஒரு காட்டில் நான் பிறந்தேன். ஏனென்றால் அப்போது ராணுவம் எங்கள் கிராமத்தை எரித்து விட்டது. நெஞ்சில் துப்பாக்கியால் சுடப்பட்ட என் தந்தை சுதந்திரக் கொடியை கையில் ஏந்தியவாறே ஒரு வயலில் விழுந்து கிடந்தார்.
தமக்குப் பிள்ளை பிறந்தால் அவனுக்கு 'ஸ்வாதீன்குமார்' என்று பெயர் வைக்க வேண்டுமென்று விரும்பினார் என் தந்தை. தீப்பிழம்புகள் ஒளிர்ந்த அந்தப் பிரளய இரவில் சுதந்திரமான வானத்தின் கீழே என் தந்தையின் இரத்தத்தையே ஆசியாகக் கொண்டு பிறந்தேன் நான். அந்தக் காலத்தில் ராணுவத்தின் கெடுபிடி கடுமையாகி இருந்தாலும் நாட்டில் எவரும் மனத்தளவில் அடிமையாக இருக்கவில்லை.
இந்தக் கதையெல்லாம் போகட்டும் சார். நீங்கள் இதுவரை படித்துக்கொண்டு வந்திருந்தீர்களென்றால் இப்போது பொறுமை யிழக்கலாம். என் குடும்ப வரலாற்றைப் பற்றி உங்களுக்கு என்ன அக்கறை! தவிர எனக்கும் எழுத மூன்று மணியானதும் என்னிடத் திலிருந்து விடைத்தாள் பறித்துக் கொள்ளப்படும். ஆகையால் நான் சொல்ல விரும்புவதைச் சுருக்கமாகவே சொல்லி விடுகிறேன்.
நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆகையால் விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தியிருக்கலாம். பஞ்சம் வந்தால் என் போன்ற மற்ற விவசாயிகளைப்போல் பட்டினி கிடந்தோ, உண்ணத் தகாததை உண்டோ உயிரை விட்டிருக்கலாம். ஆனால் என் துரதிருஷ்டம், என் சித்தப்பா என்னைக் கிராமத்துப் பள்ளியில் சேர்த்து விட்டார். அப்புறம்- நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ, தெரியாது - எனக்கு உபகாரச் சம்பளமும் கிடைத்து விட்டது.
இந்த உபகாரச் சம்பளமே எனக்கு எமனாக வாய்த்தது- நான் கனவு காணத் தொடங்கினேன். என் தாய் என்னை நெஞ்சோடு தழுவிக் கொண்டு அழுது தீர்த்து விட்டாள். அப்பா வுக்காக அம்மா அழுது நான் பார்த்தது இதுதான் முதல் தடவை. பிறகு நான் கண்களில் நம்பிக்கையொளிர, என் சித்தப்பாவுடன் அங்கிருந்த எட்டு மைல் தூரத்திலிருந்த ஊரின் உயர்நிலைப் பள்ளியில் சேரப் போனேன்.
மாணவர் விடுதியில் தங்குவதற்கான பண வசதி எனக் கில்லை. மொத்த நெல் வியாபாரியான சாமந்தா என்பவரின் வீட்டில் எனக்கு இடம் கிடைத்தது. சாமந்தா எங்களுக்குத் தூரத்து உறவினர். ஆனால் ஓர் ஏழைக் குடும்பத்துடன் சொந்தம் கொண்டாட அவர்களுக்கு இஷ்டமில்லை. உண்மையில் அவருடன் எங்களது உறவு ஒரு ஜமீந்தாருக்கும் அவருடைய குடிமகனுக்குமிடையே, ஒரு லேவாதேவிக்காரனுக்கும் அவனிடம் கடன் வாங்குபவனுக்குமிடையே உள்ள உறவுதான். என் சித்தப்பாதான் சாமந்தாவின் காலைப் பிடித்துக் கெஞ்சி அவர் வீட்டில் நான் தங்க அனுமதி பெற்றார். நான் பள்ளியில் சேர்ந்தேன். இலவசப் படிப்புச் சலுகையும் பெற்றேன்.
சாமந்தா குடும்பம் செல்வமும் செழிப்புமாக இருந்தது. அவர்களிடம் இரண்டு லாரிகள் இருந்தன. மூன்று சரக்குக் கிடங்குகள் இருந்தன. ஆனால் வியாபாரம் செய்பவர்கள் ஒரு பைசா கூட வீண் செலவு செய்ய மாட்டார்கள். ஐநூறு ரூபாய் தானம் செய்தால் அதற்குப் பதிலாக இருபத்தையாயிர ரூபாய் லாபம் சம்பாதித்து விடுவார்கள். ஆகவே அவர்கள் என்னைத் தங்க அனுமதித்துவிட்டு அதற்குரிய விலையை என்னிடமிருந்து வசூலித்துக் கொண்டார்கள்.
என் கையெழுத்து மோசமில்லை என்பது உங்களுக்கு இந்த விடைத்தாளிலிருந்தே தெரிந்திருக்கும். தவிர, கணக்கிலும் கெட்டிக் காரன் நான் நூற்றுக்கு று மார்க் வாங்கிவிடுவேன். சாமந்தா இந்த வாய்ப்பை நழுவவிடவில்லை. அவர் முதலில் என்னைக் கடிதங்கள் எழுதச் செய்தார். பிறகு கணக்குகள் எழுதச் செய்தார்; கடைசியில் கணக்கு வழக்குகளைச் சரிபார்க்கும் வேலையையும் என்னிடம் ஒப்படைத்தார். தினம் சில மணிநேரம் இந்த வேலையைச் செய்ய வேண்டியிருந்தது. இரவு எட்டு மணிக்குப் பிறகுதான் எனக்குப் படிக்க நேரம் கிடைக்கும்.
அப்போதாவது சரியாகப் படிக்க முடிந்ததா?
நானும் சாமந்தாவின் குமாஸ்தா ஒருவரும் கடையையடுத்த ஒரு சிறிய அறையில் தங்கியிருந்தோம். குமாஸ்தாவுக்கு வயது நாற்பதைத் தாண்டிவிட்டது. வற்றிப்போன வௌவால் போலிருப்பார்; பெரிய பெரிய கண்கள் பளபளக்கும். நான் படிக்கத் தொடங்கியதும் அவர் ஹுக்காவைப் பற்றவைத்துக் கொண்டு பேச ஆரம்பித்து விடுவார்.
எனக்கு அப்போது வயது பன்னிரண்டுக்குமேல் இருக்குாது. புகையை இழுத்தவாறு, பளபளக்கும் கண்கள் மேலும் பளபளக்க, கரகரத்த நாராசக் குரலில் அவர் சொல்லிய கதைகளின் பொருளை நான் அப்போது புரிந்து கொள்ளவில்லை, பிறகுதான் புரிந்து கொண்டேன். எல்லாம் ஆபாசக் கதைகள் அவர் எவ்வளவு பெண்களை, எவ்வளவு விதமாகக் கெடுத்தார் என்று வர்ணிக்கும் கதைகள்.
அப்போது எனக்கு அந்தக் கதைகளின் நன்மை தீமை தெரியாது. ஆனால் எரிச்சல் வரும் எனக்கு.
"கொஞ்சம் சும்மா இருங்க! என்னைப் படிக்க விடுங்க!' "சரிதாம்பா, நிறுத்து! குடியானவன் பிள்ளை வித்தியாசாகர் ஆகப் போறியாக்கும்-! அதைவிட ஹுக்கா பிடிக்கக் கத்துக்கறது மேல். அதைக் கத்துக்க!" குமாஸ்தா கதை சொல்லிக் களைத்துப்போய்ப் படுத்துக் கொள்ளும் போது விளக்கும் அணைந்து போய்விடும். சாமந்தா கொடுக்கும் எண்ணெயில் விளக்கு இரவு ஒன்பதுக்குமேல் எரியாது. எனக்குக் கிடைத்த அற்ப உபகாரச் சம்பளத் தொகை முக்கியமான செலவுகளுக்குத்தான் சரியாயிருந்தது., எண்ணெய் வாங்கப் பணம் மிஞ்சவில்லை.
இந்த நிலையிலும் கஷ்டப்பட்டுப் படித்து ஒவ்வொரு வகுப்பிலும் முதல் அல்லது இரண்டாவது மாணவனாக எட்டாம் வகுப்புவரை வந்துவிட்டேன். அதன் பிறகு பாடப் புத்தகப் பிரச்சினை தோன்றியது. ஸ்கூல் ஃபைனல் தேர்வுக்கு எழுபது எண்பது ரூபாய் விலையுள்ள புத்தகங்கள் வாங்க வேண்டியிருந்தது. சித்தப்பா கொஞ்சம் நெல்லை விற்று என் சாப்பாட்டுச் செல வுக்குப் பணம் அனுப்பினார். சாமந்தா புத்தகம் வாங்கப் பத்து ரூபாய் கொடுத்தார். தலைமையாசிரியர் பள்ளிக்கூடத்துப் புத்தகங்கள் இரண்டு மூன்று கொடுத்தார். அப்படியும் தேவையான புத்தகங்களில் பாதிகூட வாங்க முடியவில்லை.
சாமந்தா கொடுத்த பத்து ரூபாய்க்காக இன்னும் அதிகமாகக் கணக்குகள் எழுத வேண்டியிருந்தது.
சார்! எனக்கு உபகாரச் சம்பளம் கிடைத்ததும் நான் ஒரு சாதாரண மாணவன் அல்ல என்று நினைத்துக் கொண்டேன். எனக்குத் திறமையிருக்கிறது. ஸ்வாதீன் குமாரரராகிய நான் என் திறமையின் பலத்தில் மதிப்புமிக்க சுதந்திர மனிதனாக உயருவேன் என்று நினைத்தேன். எந்த நாட்டுக்காக என் தந்தை தன் நெஞ்சின் இரத்தத்தைக் கொட்டினாரோ அந்த நாட்டில் நானும் எனக்குரிய இடத்தைக் கண்டுபிடிப்பேன் என்று மனப்பால் குடித்தேன். ஆனால் சரியாகப் படிக்க முடிய வில்லை என்னால். தேர்வும் சரியாக எழுதவில்லை. தேர்வு முடிவுகள் வெளிவந்த போது நான் மூன்றாம் பிரிவில் தேறியிருந்தேன்.
தலைமை ஆசிரியரிடமிருந்து தொடங்கி எல்லாரும் என்னைக் கடிந்து கொண்டார்கள். சாமந்தாவின் ஒரு பிள்ளை பி.ஏ. தேறவில்லை. அவன் எப்போதும் ஹல்தி ஆற்றங்கரையில் கையில் துப்பாக்கியுடன் சுற்றுகிறான், காதா கோஞ்ச்சா பறவையை வேட்டையாடுகிறான், "இவன் பாஸ் பண்ணினதே அதிருஷ்டந்தான்! எவ்வளவு கெட்டிக்காரப் பையங்களெல்லாம் ஸ்கூல் ஃபைனல்லே ஃபெயிலாயிடறாங்க!" என்றான் அவன்.
நான் இரண்டு நாட்கள் வீட்டுக்குள் அடைந்து கிடந்தேன். சாப்பிடவில்லை. இதற்குள் என் நெற்றியின் மேல் அம்மாவின் கண்ணீர் கொட்ட ஆரம்பித்து விட்டது.
"எழுந்திருப்பா, எழுந்திரு! நல்லாப்படி! நீ நிச்சயம் வாழ்க்கையிலே முன்னேறுவே! ஒன் மாதிரி எவ்வளவு பசங்க கஷ்டப்பட்டுப் படிச்சும் ஃபெயிலாயிட்டாங்கறதை யோசிச்சுப் பாரு!
சார், நான் என்னைத் தேற்றிக் கொண்டேன். கல்கத்தாவுக்கு வந்தேன். சாமந்தாவின் உறவினரான சர்க்கார் என்பவரின் குடும்பம் கலகத்தாவில் இருந்தது. அவர்கள் பரா பஜாரில் கடை வைத்துக்கொண்டு புகையிலை வியாபாரம் செய்து வந்தார்கள். சாமந்தா அவர்களுக்கு ஒரு கடிதமெழுதி என்னிடம் கொடுத்தார். சர்க்காரின் கடையில் எனக்கு இடங் கிடைத்தது.
இங்கும் எனக்கு வேலை செய்ய நேர்ந்தது. சர்க்காரின் கடையில் உதவிசெய்வது, தேவைப்பட்டால் வெளியேபோய் நிலுவை வசூல் செய்வது. இருந்தாலும் கல்கத்தா கல்கத்தாதான். விசாலமான வாழ்க்கை, எவ்வளவோ வாய்ப்புகள்! பெரிய பெரிய கல்லூரிகள், புகழ் பெற்ற ஆசிரியர்கள், அவர்களுடைய எல்லையற்ற அறிவின் ஒரு சிறு துளி கிடைத்தாலே என்னுள்ளே ஆயிரம் விளக்குகள் பிரகாசமாக எரியத் தொடங்கும். உலகத்தின் உயிர்த் துடிப்புடன் ஒரு தடவை என்னால் ஒன்றிவிட முடிந்தால் திறந்த வான வெளியில் தலையுயர்த்தி நிற்பேன் நான்! காய்ந்து கிடக்கும் புல்லின் மேல் முதல் மழையின் நீர்த் துளிகள் விழுந்ததும் புல் புத்துயிர் பெற்றுச் சிலிர்த்தெழுவது போல!
சித்தப்பா நெல் விற்றுக் கொடுத்த பணத்துடன் நான் ஒரு கல்லூரிக்குப் போனேன். நெல்லை விற்றதன் விளைவாக எங்கள் குடும்பம் பல நாட்கள் அரைப் பட்டினியோ, முழுப் பட்டினியோ கிடக்க வேண்டியிருக்கும் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் நான் நன்றாகப் படித்து நல்லமுறையில் பரீட்சையில் தேறிவிட்டால்..
பிரம்மாண்டமான கல்லூரிக் கட்டிடம். அதில் தேர்த் திருவிழாக் கூட்டம். அதில் எப்படியோ முண்டியடித்துக்கொண்டு அலுவலகத்துக்குள் நுழைந்து விட்டேன்.
"மூன்றாம் பிரிவில் பாஸா..? ஐ.எஸ்.ஸி.யில் இடம் வேணுமா..? ஊஹும், இடமில்லை!"
ஒன்று இரண்டு இல்லை, சார். ஆறு கல்லூரிகள் என்னைத் திருப்பியனுப்பிவிட்டன.
கடைசியில் ஒரு சாதாரணக் கல்லூரியில் இடம் கிடைத்தது. பிறகு ஏதாவது சம்பளச் சலுகை வேண்டி அந்தக் கல்லூரியின் உதவித் தலைவரை அணுகினேன்.
"சலுகையா?" வியப்புடன் கேட்டார் அவர். "மூணாம் பிரிவில் பாஸ் பண்ணினவனுக்குச் சலுகையா?"
"சார், நான் ஏழைப் பையன்.."
"வங்காளிப் பசங்க எல்லாருமே ஏழைங்கதான். அப்படிப் பார்த்தா எல்லாப் பையன்களுக்கும் சம்பளச் சலுகை தரணும்!"
"நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன், சார்!"
எரிச்சலடைந்தார் உதவித் தலைவர். "அப்படீன்னா எதுக்குக் காலேஜுக்குப் படிக்க வந்தே? கிராமத்திலே விவசாயம் பண்ணிக் கிட்டு இருந்திருக்கலாமே! மேல் படிப்பு ஒங்களுக்கெல்லாம் உபயோகப்படாது. போ போ..என்னைத் தொந்தரவு செய்யாதே!"
சலுகை கிடைக்கவில்லை, வீடு திரும்பும்போது, சாமந்தாவின் குமாஸ்தா என்னிடம் சொல்லியது நினைவு வந்தது- "குடியானவன் பிள்ளை வித்யாசாகர் ஆகப் போறியாக்கும்!"
சார், அப்போதே நான் கிராமத்துக்குத் திரும்பிப் போயிருக்க வேண்டும். அனல் கக்கும் வயல்வெளி, அதில் உழைப்பவனின் நெற்றி வியர்வை நிலத்தில் விழுகிறது- அதுதான் எனக்குரிய இடம். நான் அங்கே திரும்பிப் போயிருந்தால் பட்டினத்தின் அவமானச் சவுக்கடி என் உடம்பில பட்டிருக்காது. ஆனால் நான் நம்பிக்கையைக் கைவிடவில்லை, சார். இறுதிவரை முயன்று பார்க்க வேண்டும் என்ற பிடிவாதம் என்னைப் பிடித்துக் கொண்டது.
சர்க்காரின் புகையிலைக் கடையில் ஓர் ஓரத்தில் நான் தங்கியிருந்தேன். சாமந்தாவோடு நான் தங்கியிருந்ததற்கும் இதற்கும் எவ்வளவு வித்தியாசம்! அங்கே நான் தங்கியிருந்த அறை சிறிதுதான் என்றாலும் அறைக்கு வெளியே விசாலமான வெட்டவெளி இருந்தது, வெளிச்சம் இருந்தது, குளிக்க ஒர பெரிய குளம் இருந்தது. இதுவோ பராபஜார் சந்து, நடுப்பகலில் கடைகளிலெல்லாம் மின்சார விளக்குகள் எரிகின்றன. மூன்று முழமே அகலமான சந்தின் இருபுறமும் வானளாவிய பெரிய பெரிய வீடுகள். அவற்றின் சுவர்கள் ஈர்த்திருக்கின்றன. காற்று இல்லை, இரவு ஒரு மணிவரை ஆயிரக்கணக்கான ஜனங்கள் ஒருவரோடு ஒருவர் இடித்துக்கொண்டு நடமாடுகிறார்கள். வரிசை வரிசையாக அமைந்துள்ள கடைகளிலிருந்து புகையிலை, வெல்லம் இவற்றின் கலவையான தீவிர நெடி, காதைத் துளைக்கும் இரைச்சல்..
இவற்றுக்கு நடுவில் ஒரு மூலையில் தங்கியிருந்தேன். இரவில் எலிகள் நடமாடும். இரவும் பகலும் கரப்புகளின் தொந்தரவு. சர்க்கார் கல்லூரிச் சம்பளத்தைக் கொடுத்து, கைச் செலவுக்காக ஐந்து ரூபாய் கொடுப்பார். அதற்குப் பதிலாக நான் காலையிலும் மாலையிலும் வெளியே போய் நிலுவை வசூல் செய்ய வேண்டும். ஆகையால் எனக்கு ஒரு டியூசன் பிடித்துக் கொண்டு அதன்மூலம் கொஞ்சம் பணம் சம்பாதிக்கவும் வழி யில்லை. புத்தகமா? ஐ.எஸ்.ஸி.க்குத் தேவையான புத்தகங் களெல்லாம் வாங்க என்ன செலவாகும் என்பதே எனக்கு இன்னும் தெரியாது. உங்களுக்கும் தெரியாது என்று நினைக்கிறேன். நீங்கள் படித்த காலத்தில் ஐந்து ரூபாய்க்குக் கிடைத்த புத்தகத்தின் விலை இப்போது பன்னிரண்டு ரூபாய்க்குக் குறையாது. நடை பாதைப் பழைய புத்தகக் கடைகளிலிருந்து ஒரு சில புத்தகங்கள் வாங்கினேன். ஆனால் தேவையான புத்தகங்களில் பாதிகூட வாங்க முடியவில்லை.
படிப்பா? சர்க்காரின் வீடு பௌபஜாரில்இருந்தது. அங்கே தான் சாப்பிடப் போகவேண்டும். சாப்பிட்டு விட்டுத் திரும்பும் போது இரவு மணி பத்தாகி விடும். பிறகு ஒரு மின்சார விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் படிக்க உட்கார்ந் தால் களைப்பில் கண்கள் அறுந்து விழுவது போலிருக்கும், நோட்டுகளில் எழுதப்பட்ட குறிப்புகள் புரியாத கிறுக்கல்களாகத் தோன்றும். என்னையறியாமலேயே தூங்கிப் போய்விடுவேன். இரவு முழுதும் எலிகளும் கரப்புகளும் என் உடம்பின்மேல் ஏறித் திரிந்த கொண்டிருக்கும்.
கல்லூரியில் ஒரே கூட்டம். ஐந்து பேர் உட்காரக் கூடிய பெஞ்சியில் ஏழெட்டு பேர் நெருக்கியடித்துக் கொண்டு உட்கார வேண்டும். குறிப்பு எடுத்துக் கொள்ளும்போது நோட்டுகளை வைத்துக்கொள்ள வசதியில்லை. ஆராய்ச்சிக் கூடத்தின் நிலை இன்னும் வேடிக்கை. பதினைந்துபேர் பயிற்சி பெறக்கடிய இடத்தில் ஐம்பது பேர் பயிற்சிபெற வேண்டும்.
நாட்டின் எதிர்கால விஞ்ஞானிகளுக்கு கல்வி கற்பிக்கப்படும் அழகு இதுதான்!
சார், அப்படியும் நான் என் முயற்சியில் குறை வைக்க வில்லை. என் போன்ற சாதாரண மாணவர்கள் படிக்கத்தான் கல்லூரிக்கு வந்திருந்தார்கள். அவர்களால் ஏன் படிக்க முடிய வில்லை, அவர்கள் ஏன் பரீட்சையில் தேறுவதில்லை..?
ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன். அதை நினைத்தால் இந்த நிலையிலும் எனக்குச் சிரிப்பு வருகிறது.
கலலூரி நிறுவன நாள் விழா. அதில் கூட்டம், கொடியேற்றம், பேச்சு எல்லாம் விமரிசையாக நடந்தன. துணைத்தலைவர் மிகவும் நன்றாகப் பேசினார். பேசும்போது அவருக்கு கண்களில் கண்ணீர் வந்து விட்டது.
"நாங்கள் சேகரித்துள்ள புள்ளி விவரங்களின்படி, நம் மாணவர்களில் சுமார் பத்து சதவிகிதத்தினர்தான் எல்லாப் புத்தகங்களையும் வாங்க முடிகிறது, இருபது சதவிகிதத்தினர் சில புத்தகங்கள் மட்டும் வாங்குகிறார்கள், எஞ்சியவர்களால் ஒரு புத்தகங்கூட வாங்க முடிவதில்லை. இந்த நிலையில் நாங்கள் அவர்களுக்குக் கல்வியளிப்பது எப்படி? இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டால் நாடு எவ்வளவு முன்னேறும்..!"
தீர்வைத்தான் அவர் முன்னமே சொல்லியிருந்தாரே 'கல்லூரிப் படிப்பு ஏழை மாணவர்களுக்காக அல்ல!' என்று..
இரண்டு மணி நேரம் கடந்து விட்டதை அறிவிக்கும் மணி அடித்து விட்டது. இன்னும் அதிக நேரம் என்னால் எழுத இயலாது, நீங்கள் இதுவரை படித்திருந்தால் உங்கள் தாராள மனதுக்கு இன்னும் தொந்தரவு கொடுக்கக் கூடாது. ஆகையால் என் கதையை சுருக்கமாகவே சொல்லி முடித்து விடுகிறேன். என் தாய்க்கு எழுதப் படிக்கத் தெரியாது. அவர் சொல்லியபடி சித்தப்பாதான் எனக்குத் தாறுமாறான கையெழுத்தில் கடித மெழுதுவார்.
"நீ பெரியவனாகு அப்பா, பெரிய மனிதன் ஆகு! உன் அப்பாவின் பெயரைக் காப்பாத்து! சுதந்திர பாரதத்தின் தொண்டனாக நீ உழைக்க வேண்டும் என்பதை மறக்காதே!"
நான் மறக்கவில்லை, ஒருநாள் கூட மறக்கவில்லை. ஆனால் சுதந்திர பாரதம் எனக்கு உதவவில்லை, என் கல்விக்கு வசதி செய்யவில்லை. புகையிலைக்கடையில் வேலை செய்து, வகுப்பு என்ற பெயரில் அர்த்தமற்ற இரைச்சலுக்கு நடுவில் உட்கார்ந்து, வெக்கையும் வியர்வையும் இரைச்சலும் நிறைந்த பராபஜார் சந்தில் மஞ்சள் விளக்கு வெளிச்சத்தில் எல்லாம் மங்கலாகத் தெரிய.. மண்டைக்குள் நரம்புகள் வெடித்துவிடும் போலிருக்கும். அங்கிருந்து ஓடிப்போய்விடத் தோன்றும் எனக்கு. ஓர் ஆழமான ஏரியின் கறுப்புத் தண்ணீரில் குதிக்கத் தோன்றும். சம்பகப்பூ, நாங்குப் பூக்களின் மணத்தை முகர்ந்து, நெஞ்சை நிரப்பிக் கொள்ள மனது ஏங்கும். மழைக் காலத்துக் கார் மேகத்தை நோக்கிக் கையை நீட்டிப் பாடத் தோன்றும்.
"மழையே, ஓடி வா பாய்ந்து! நெல் கொடுக்கிறேன் அளந்து!"
ஆனால் கல்கத்தாவில் ஏரியின் கறுப்பான, குளிர்ந்த நீருக்கு எங்கே போவது? நாங்கு, கோங்கின் மணம் ஏது? எங்கள் வீட்டில் வயிறு நிறையச் சாப்பிட நெல்லும் இல்லை, எங்கள் வீட்டு மக்களின் பசித் தீயை நணைக்க ஒரு பொட்டு மழையும் இல்லை.
எங்கே ஓடிப் போவேன் நான்?
எப்படியும் நம்பிக்கையிழக்க மாட்டேன் நான்! நான் பிழைத்துக் கொள்வேன், பெரியவனாவேன்! நானில்லாவிட்டால் கொதியுலை எரியாது, நீர் மின்சாரம் பிறக்காது, அணு ஆராய்ச்சிப் பணிநிறைவு பெறாது. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பெட்ரோல், நீல எண்ணெய், மெழுகு இவையெல்லாம் உருப் பெறாது! சிற்பி மயனின் இரகசிய மந்திரத்தை நான் அவனிட மிருந்து பிடுங்கிக் கொள்ள வேண்டும்! நான் சுதந்திர பாரதத்தின் விஞ்ஞானி.
சார், எல்லாம் கனவு! வங்காளத்தின் கல்லூரிகளில் என் போன்ற எண்ணற்ற மாணவர்கள் இது மாதிரி கனவுகளுடன் நடமாடுகிறார்கள். ஒரு நாள் அவர்களது கனவு தகர்ந்து போய்விடும்..
நான் சரியாகப் படிக்க முடியவில்லை, சார்! எப்போது படிப்பேன், எப்படிப் புத்தகம் கிடைக்கும் எனக்கு? புத்தகங்களை யாரிடமாவது கேட்டு வாங்கி, மஞ்சள் விளக்கின் மங்கிய வெளிச்சத்தில் உட்கார்ந்தால் எழுத்துகள் கிறுக்கல்களாக, வரிசை வரிசையாக, நெளியும் புழுக்களாபக் கண்ணுக்குத் தெரிந்தன. பிறகு நரம்புகள் தளர்ச்சியடையும், உணர்வுகள் மயங்கும், புகையிலை, வெல்லக் கழிவு, எலி, கரப்பு, வெக்கை இவற்றின் கலவையான நெடியை முகர்ந்தவாறு நான் காலையில் விழிக்கும்போது என் தலைமேல் இருபது மணுச்சுமை ஒன்று அழுத்திக் கொண்டிருப்பது போலிருக்கும். அப்பறம் எட்டுமணி அடிப்பதற்குள் கடைக்கணக்க வழக்கு வேலை1
முதலாண்டுப் பரீட்சையில் யாரும் ஃபெயிலாவதில்லை. கல்லூரிச் சம்பளம் கொடுத்திருந்தவர்கள் எல்லாருமே பாஸ்! இரண்டாம் ஆண்டில் இறுதித் தேர்வுக்கு முந்தய நுழைவுத் தேர்வு வந்தது.
சார், இந்த இடத்தில் என் தவறு ஒன்றை ஒப்புக் கொள்கிறேன். நுழைவுத் தேர்வு நெருங்க நெங்க என் மனதில் எப்போதும் அணையாத நெருப்பு ஒன்று எரியத் தொடங்கி விட்டது. எனக்கு ஒரு சில புத்தகங்கள் மட்டும் கிடைத்துவிட்டால் நான் இறுதிப் பரீட்சையில் முதல் பிரிவில் இல்லாவிட்டாலும் இரண்டாம் பிரிவிலாவது பாஸ் செய்து விடுவேன், கணக்கில் சிறப்பு மதிப்பெண்ணும் பெற்று விடுவேன்!
சார், என் மேல் கோபித்துக்கொள்ளாதீர்கள். என் நிலையைப் புரிந்து கொள்ளுங்கள். எனக்கு வெறி பிடித்துவிட்டது.
அதன்பின்.. அதன்பின் நான் என் சக மாணவர்களின் புத்தகங்களைத் திருடத் தொடங்கினேன்!
நீங்கள் என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டாலும் நினைத்துக் கொள்ளுங்கள். நான் திருடனாகி விட்டேன் என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லையே! என் தந்தை நாடு சுதந் திரம் பெறுவதற்காகத் தம் இரத்தத்தைக் கொடுத்தார். அவருடைய மகனான நான் திருடனாகி விட்டேன்!
மாணவர்கள் என் பாடப் புத்தகங்களைத் திடுகிறார்கள், தேர்வில் காப்பியடிக்கிறார்கள். பிடிபட்டால் காட்டு மிராண்டித் தனமாக நடந்து கொண்டு தேர்வு அரங்கத்திலிருந்து வெளியேறுகிறார்கள்? இவையெல்லாம் தவறுகள்தான், மிகப் பெரிய தவறுகள்தான். யாரும் இவற்றை ஆதரிக்கவில்லை.. ஆனால் இவை ஏன் நிகழ்கின்றன? மாணவர்கள் ஏன் தவறான வழிகளில் செல்கிறார்கள்? இது எவ்வளவு முக்கியமான விஷயம் என்பதை யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா..?
திருடப்பட்ட புத்தகங்களைப் படித்து எப்படியோ நுழைவுத் தேர்வில் தேறிவிட்டேன், இனி இறுதித் தேர்வு.
அதற்குப் பணம் கட்டவேண்டும் .. நிறையப் பணம்.
சித்தப்பாவின் கடிதத்திலிருந்து கிராமத்தில் எங்கள் குடும்ப நிலை மிகவும் மோசமாயிருப்பதாகத் தெரிந்தது. அறுவடையாகிச் சிறிது காலமே ஆகியிருந்தும் நெல் பற்றாக்குறை; உண்டியலை உடைத்து அதிலிருந்த காசையும் செலவு செய்தாகி விட்டது. இனி எனக்குப் பணம் அனுப்புவதானால் மாட்டை விற்க வேண்டியதுதான்.
"மாட்டை விற்கவேண்டாம். நான் எப்படியோ சமாளித்துக் கொள்கிறேன்" என்று சித்தப்பாவுக்குக் கடிதம் எழுதிவிட்டேன். ஆனால் பணத்துக்கு என்ன செய்வது? மாணவர் உதவி நிதியிலிருந்து பதினைந்து ரூபாய் கிடைத்தது. பாக்கிப் பணம்?
சர்க்கார் என்னைக் கூப்பிட்டனுப்பினார். "தேர்வுக்கு வேண்டிய பணம் ஐம்பது ரூபாயை நான் தருகிறேன், கவலைப் படாதே! என்றார்.
எவ்வளவு இரக்கம் அவருக்கு!
பிறகு புரிந்தது, அது வெறும் இரக்கம் அல்ல என்று. அதற்குப் பின்னால் ஒரு பயங்கரக் கோரிக்கை இருந்தது. உலகத்தில் ஒவ்வோர் இரக்கச் செயலுக்கும் ஒரு பயங்கர விலை கொடுக்க வேண்டும். பணம் கிடைத்தது. அந்தக் கடனைத் தீர்க்க இரண்டு மாதங்கள் உழைக்க நேர்ந்தது.
நம்புவீர்களா, சார்? கணக்கு, இயற்பியல், வேதியியல், வங்காளி, ஆங்கிலம் படிக்க முடியவில்லை என்னால். ஐம்பது ரூபாய்க்காக நான் அயர்ந்து மயங்கும் கண்களுடன், தலைமேல் இருபது மணுச்சுமையுடன் இரவு கண் விழித்துக் கணக்கு வழக்குகள் தயார் செய்தேன். வருமான வரி அதிகாரிகளின் கண்ணில் மண் தூவுவதற்காகப் போலிக் கணக்குகள்!
இவ்வாறு என் ஒவ்வொரு நரம்பையும் ஒவ்வொரு துளி இரத்தத்தையும் செலவிட்டு நான் அந்த ஐம்பது ரூபாய்க் கடனைத் தீர்த்தேன்.
இதற்குப் பிறகு படிக்க முடியுமா? நான் மாமனிதன் அல்லவே!
அப்படியும் தேர்வு எழுத வந்து விட்டேன். இறுதிவரை நம்பிக்கையிழக்கவில்லை நான். கடைசி நேரத்தில் ஏதாவது அற்புதம் நிகழும் என்று நம்பினேன் நான். தேர்வில் காப்பியடிப் பதற்காகப் புத்தகங்களின் சில பக்கங்களைக் கிழித்துக் கொண்டு வந்திருந்தேன். ஆனால் நான் எதிர் பார்த்த அற்புதம் நிகழவில்லை. முதல் மூன்று நாள் தேர்வுகளில் அந்தக் கிழிந்த காகிதத் துண்டு களைச் சட்டைப் பையிலிருந்து வெளியே எடுக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை எனக்கு. சர்க்காரின் போலிக் கணக்குப் புத்த கங்கள் என் கண்முன் நடனமாடத் தொடங்கின. பக்கத்திலுள்ள மாணவர்களும் தேர்வு அரங்கிலிருந்த கண்காணிப்பாளர்களும் அந்த புத்தகங்களின் பக்கங்களாகத் தோற்றமளித்தார்கள்..
இந்த வங்காளிப் பரீட்சைதான் கடைசிப் பரீட்சை.
சார், எச்சரிக்கை மணி அடித்து விட்டது. இன்னும் ஐந்து நிமிடங்களில் விடைத்தாளைப் பிடுங்கிக் கொண்டு விடுவார்கள். நான் சொல்ல வேண்டியதைச் சொல்லி முடித்து விட்டேன். இன்று இருட்டியதுமே நான் ஏதாவதொரு ரயிலுக்கடியில் என் சுமை முழுவதையும் இறக்கி வைத்து விடுவேன்.
நான் பிழைத்திருந்து வாழ விரும்பினேன் சார்! ஸ்வாதீன் குமாரான நான் சுதந்திர பாரத நாட்டுக்காக வாழ விரும்பினேன். நான் ஏன் வாழ முடியவில்லை என்ற கேள்வியை என் போன்ற ஆயிரமாயிரம் மாணவர்களின் சார்பில் உங்கள் முன் வைத்து விட்டுப் போகிறேன். இதன் விடையை யோசித்துப் பாருங்கள்!
நான் கோழைபோல் தற்கொலை செய்து கொள்கிறேனா? இல்லை, சார்--இல்லவேயில்லை இது என் தோல்வியல்ல, என் எதிர்ப்பு! ஆயிரத்த் தொள்ளாயிரத்து நாற்பத்திரண்டாம் ஆண்டின் செப்டம்பரில் ஒரு பிரளய இரவில் என் தந்தை தன் நெஞ்சின் இரத்தத்தை இந்த நாட்டு மண்ணில் கொட்டினார். அதுபோல் என் இரத்தமும் நாட்டின் இலட்சக்கணக்கான மாணவ மாணவியரின் சார்பாக ஒரு புதிய வரலாற்றைத் தொடங்கி வைக்கும். அந்த வரலாறு எப்போது முழுமை பெறும் என்று எனக்குத் தெரியாது. உங்களுக்குத் தெரியுமா, சார்! உங்களால் சொல்ல முடியுமா?
வணக்கம்!
('எக்சிபிஷன்', 1968)
கருத்துகள்
கருத்துரையிடுக