சொல்லாத சேதிகள்
கவிதைகள்
Backசொல்லாத சேதிகள்
பத்து பெண் கவிஞர்களின் இருபத்துநான்கு கவிதைகள்.
-------------------------------------------------------------------
சொல்லாத சேதிகள்
அ. சங்கரி
சி.சிவரமணி சன்மார்க்கா
ரங்கா
மசூறா. ஏ. மஜீட்
ஔவை மைத்ரேயி பிரேமி
ரேணுகா நவரட்ணம்
ஊர்வசி.
பெண்கள் ஆய்வு வட்டம்
́யாழ்ப்பாணம்.
------------------------------------------------------------------------
பெண்கள் ஆய்வு வட்ட வெளியீடு-2
Sollaatha Sethikal (Messages - Unspoken) A Collection of Twenty four poems by Ten Women Poets published by Women' Study Circle, 51, Sankiliyan Road, Nallur, Jaffna, Sri Lanka, 1986.
விலை 8/-
புனித வளன் கத்தோலிக்க அச்சகம்
360, பிரதான வீதி,
யாழ்ப்பாணம்.
---------------------------------------------------------
முன்னுரை
சொல்லாத சேதிகள் என்னும் இச்சிறு கவிதைத் தொகுதி எமது இரண்டாவது வெளியீடாகும். சென்ற வருடம் பெண்நிலைவாதம் பொருத்தமானதே என்ற மொழிபெயர்ப்புப் பிரசுரம் ஒன்றினை வெளியிட்டிருந்தோம். அப் பிரசுரத்தின் விரைவான விற்பனையானது எமது சமூகத்தில் தற்போது பெண் விடுதலை, பெண்நிலைவாதம் தொடர்பான அக்கறையும் ஆர்வமும் வளர்ந்து வருவதையும் இவை தொடர்பான நூல்களுக்குத் தேவை உருவாகி இருப்பதையும் உணர்த்திற்று.
இந்நூலில் பத்துப் பெண்கள் எழுதியுள்ள இருபத்து நான்கு கவிதைகள் அடங்கியுள்ளன. இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண் கவிஞர்களின் முதலாவது கவிதைத் தொகுதியாக இது அமைகிறது. பெண் என்ற நிலையிலிருந்து அவர்களின் உணர்வுகளையும் கருத்துக்களையும் வெளிக்காட்டும் ஒரு தொகுதியாகவே இதனை வெளியிட முயன்றுள்ளோம். எமது கவனத்திற்கு உட்படாமல் பல கவிதைகள் விடுபட்டுப் போயிருக்கலாம். இவ்வகையில் இது ஒரு முழுமையான தொகுதி அன்று; ஆனால் முன்மாதிரியாக அமையத்தக்கது என எண்ணுகிறோம்.
இக்கவிதைகளை வெளியிட அனுமதி அளித்த கவிஞர்களுக்கும் அச்சிட்ட புனித வளன் கத்தோலிக்க அச்சகத்தினருக்கும் எமது நன்றிகள்.
பெண்கள் ஆய்வு வட்டம்
51, சங்கிலியன் வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.
--------------------------------------------------
அறிமுகம்
இன்று பெண்கள் மத்தியில் தமது சமூக இருப்பு, பங்கு, பணி குறித்தும் தமது ஆற்றல்கள் ஆர்வங்கள் குறித்தும் புதியதோர் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. சமூகத்தில் தமது அந்தஸ்து, சமூகம் தம்மை நோக்கும் முறைமை, பெண் என்ற உடலியல் அம்சம் ஒன்றினால் தமது வாழ்க்கை விதி நிர்ணயிக்கப்படுவது ஆகியவை பற்றிப் பெண்கள் விமர்சிக்கத் தலைப்பட்டுள்ளனர்.
பொதுவாக மனிதனுக்குள்ள சமூக ஒடுக்குமுறைக்குப் பெண்கள் உள்ளாவதுடன் மேலதிகமாக ஆணாதிக்கம் என்னும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாகின்றனர்.இந்த ஆணாதிக்கமும், தந்தை வழிச் சமூக அமைப்பின் விழுமியங்களும் எமது கலை, கலாசாரம், ஆய்வுத்துறைகள் ஆகிய சகலவற்றிலும் வேர்விட்டுப் பரவியுள்ளன. இவையே பெண்ணைப் பாலியற் பண்டமாகவும், சந்ததி உற்பத்திச் சாதனமாகவும் மலிவான உழைப்புச் சக்தியாகவும் சமூகம் கருதுவ்தற்கு அடிப்படையாகவும் அமைகின்றன. உன்னதமான மனித குலத்தின் அரைப்பகுதியினராகிய தம்மை மனிதம் அற்ப வெறும் இயந்திரங்களாகவும், கருவிகளாகவும் கருதும் நிலை மாற வேணும் என்பதும் இன்றைய பெண்நிலைவாதப் போராட்டங்களின் முக்கிய கோரிக்கையாகும்.
இந்நிலையில் பெண்கள் தமது உணர்வுகளையும் எண்ணங்களையும் கருத்துக்களையும் ஆற்றல்களையும் இயல்பாக வெளியிடுவதற்கும் தமது திறன்களை வளர்த்தெடுப்பதற்கும் தமது ஆக்கங்களைத் தனிப்படப் பிரித்து நோக்குவது அவசியம் என உணரத் தலைப்பட்டுள்ளனர். பெண்களிடையே பெண் என்ற இந்த நிலைப்பாடு தோன்றியுள்ள இக்காலகட்டத்தில் நாம் பெண்களுக்கான ஒரு கலை இலக்கிய நெறியை உருவாக்குவது முக்கிய தேவையாகும். இப் பெண்ணிலைவாத நோக்கு நிலை பெண்விடுதலைப் போராட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாகும்.
தமிழ் இலக்கியத்தில் பெண் எழுத்தாளர்கள் பற்றிப் பேசுவோர் சங்ககால ஔவையாரிலிருந்து சமீபகால அம்பை வரை உதாரணங்கள் காட்டுவது வழக்கம். எனினும் எமது இலக்கியத்தில் பெண்ணிலை நோக்குடன் இலக்கியங்கள் தோன்றியது மிகக்குறைவாகும். சமகால எழுத்தாளர்களிடையே அம்பை, ராஜம் கிருஷ்ணன், ஜோதிர்லதாகிரிஜா என்போர் பெண்களது சமூக கலாசார ஒடுக்குமுறை பற்றிய உணர்வினைத் தமது சிறுகதைகளிலும் நாவல்களிலும் வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் அவர்களது படைப்புகளை இத்தகைய தளத்திலிருந்து எமது இலக்கியத்திறனாய்வாளர்கள் நோக்குவதில்லை. இந்நிலை மாற வேண்டும். பெண்களது இலக்கிய நெறியும் இலக்கிய விமர்சன நெறியும் உருவாக வேண்டும்.
இச்சிறு தொகுதி பத்துப் பெண்கவிஞர்களின் இருபத்துநான்கு கவிதைகளை உள்ளடக்கியது. இக் கவிஞர்கள் பாடசாலை மாணவியர் உட்படப் பல தரத்தினர். இவற்றில் சிலகவிதைகள் ஏற்கனவே பிரசுரமானவை. ஏனையவை முதற்தரம் இங்கேயேபிரசுரமாகின்றன. பெண்களது படைப்புக்களை ஒரு சேரத் தொகுத்துப் பார்க்கும் போதுதான் அவற்றின் பண்புகளும் இயல்புகளும் தெரியவரும்; அவை மேலும் அடைய வேண்டிய வளர்ச்சி பற்றியும் ஆக்க முறைகள் பற்றியும் ஆலோசிக்கவும் உணரவும் வழி பிறக்கும். அத்துடன் வளரும் பெண்கவிஞருக்கு உந்தலும் ஏற்படும்.
இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்கவிஞர்களின் சகல கவிதைகளும் இத்தொகுதியில் அடங்கவில்லை. பார்வைக்கு எட்டியவற்றுள் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கவிதைகளின் தொகுதியே இது. இவற்றைவிடச் சிறந்த கவிதைகளை யாராவது எழுதி வைத்திருக்கலாம். இத்தொகுதி அவர்களுக்கு உந்துதல் அளிப்பதுடன் இலக்கியத்தில் பெண்நிலை நோக்கு உருவாவதற்கும் உதவும் என எதிர்பார்க்கலாம்.
மௌ.சித்திரலேகா
4-3-1986
--------------------------------------------------------
அவர்கள் பார்வையில்
எனக்கு-
முகம் இல்லை
இதயம் இல்லை
ஆத்மாவும் இல்லை
அவர்களின் பார்வையில்-
இரண்டு மார்புகள்
நீண்ட கூந்தல்
சிறிய இடை
பருத்த தொடை
இவைகளே உள்ளன
சமையல் செய்தல்
படுக்கையை விரித்தல்
குழந்தை பெறுதல்
பணிந்து நடத்தல்
இவையே எனது கடமைக்ள் ஆகும்
-கற்பு பற்றியும்
மழை பெய்யெனப் பெய்வது பற்றியும்
கதைக்கும்
அவர்கள்
எப்போதும் எனது உடலையே
நோக்குவர்
கணவன் தொடக்கம்
கடக்காரன் வரைக்கும்
இதுவே வழக்கம்.
-அ.சங்கரி
-----------------------------------------------------------
இன்று நான் பெரிய பெண்
நான்
கல்லாய் மாறிய பூ
பாறையாய் இறுகிய காற்று
பனியாய் உறைந்த நீர்
பூவைப் போலவும்
காற்றைப் போலவும்
நீரைப் போலவும்
குதித்துத் திரிந்து
சுற்றிய பருவத்தில்
காலை உதைத்து
வீரிட்டு அழவும்
கல கல என்று
கை தட்டிச் சிரிக்கவும்
கோபம் வந்தால்
கொப்பியைக் கிழிக்கவும்
முடிந்ந கால்ம்.
மரத்தில் ஏறவும்
மாங்காய் பிடுங்கவும்
பக்கத்து வீட்டுப்
பிள்ளைகளுடனே
கிட்டி அடிக்கவும்
ஒளித்துப் பிடிக்கவும்
ஒன்றும் பேசிலர் எவரும்.
இன்று
நான் பெரிய பெண்.
உரத்துச் சிரித்தல் கூடாது.
விரித்த புகையிலை
அடக்கம்; பொறுமை;
நாணம்
பெண்மையின் அணிகலம்.
கதைத்தல்; சிரித்தல்;
பார்த்தல்; நடத்தல்;
உடுத்தல்
எல்லாம் இன்னபடி என்றெழுதி.....
நான்
கல்லாய்
பாறையாய்
பனியாய்
பெண்ணாய்.....
-அ. சங்கரி.
----------------------------------------------------------
விடுதலை வேண்டினும்
எனது-
ஓராயிரம் சிறகுகளை
விரிக்கவும்
விண்ணிற் பறக்கவும்
ஏங்கினேன்.
வானின்
நட்சத்திரங்களையும்
சூரியனையும்
தொட்டுப் பார்க்க
அவாவிற்று என் ஆன்மா.
பூமியின் பரப்புக்கு
அப்பால்
அண்ட வெளியில்
ஸ்பேஸ் ஒடிசியின் விண்கலம் போல
எல்லையின்றிச் சுழலவும்
எண்ணினேன்.
வானிற் பறக்கும்
புள் எல்லாம் நானாக
மாறாவும் எண்ணினேன்.
ஆனால்--
காலிற் பிணைத்த
இரும்புக் குண்டுகள்
அம்மியும் பானையும்
தாலியும் வேலியும்
என்னை--
நிலத்திலும்
நிலத்தின் கீழே
பாதாள இருட்டிலும்
அழுத்தும்.
அ. சங்கரி
-------------------------------------------------------
இடைவெளி
உனது கையினைப் பற்றி
இறுக்கிக் குலுக்கியும்
நெற்றியில் ஒரு சிறு
முத்தம் இட்டும்
எனது அன்பினை
உணர்த்தவே விரும்பினேன்.
நண்பனே
இராக்குயில் கூவும்
சோளகக் காற்றின் உறுமல் கேட்கும்
நடுநிசிப் போதிலும்
கூர் உணர்திறனும்
விழித்த கண்ணுமாய் கடமையாற்றுவாய்.
என்றும்
மனித வாழ்க்கை பற்றியும்
எமது அரசியற்சூழல் பற்றியும்
உயிர்ப்பாய் இயங்கும்
உன்னை நோக்கி
வியப்பும் உறுவேன்
அவ் வியப்பும்
நீண்ட கால நெருக்கமும்
என்னிற் காதலை விளைக்கும்.
அக்காதலை
முத்தமிட்டும்
நெற்றியை வருடியும்
உன்னிரு கைகளை
இறுகப் பற்றியும்
உணர்த்த விரும்பினேன்.
எனது காதல்
சுதந்திரமானது
எந்தச் சிறு நிர்ப்பந்தமும்
அற்றது;
எனது நெஞ்சில் பெருகும்
நேசத்தின் ஒரு பரிமாணம்.
எனினும் நண்பனே
ஒரு பெண்ணிடம்
சொல்வது போலவும் உணர்த்துவது போலவும்
உன்னை அணுக அஞ்சினேன்.
பறவைகள் போலவும்
பூக்கள் போலவும்
இயல்பாய்
மனிதர்
இருக்கும் நாளில்
நானும் உனது அருகில் நெருங்குவேன்.
பெண்ணை
என்றும் பேதையாகவும்
ஆணை
வீரபுருஷ நாயகனாகவும்
நோக்கும் வரைக்கும்
எனது நேசமும்
பேதை ஒருத்தியின் நேசமாகவே
உனக்கும் தெரியும்.
அதை நான் விரும்பினேன்
எனது ந்ண்பனே
இந்த இடைவெளி
எமக்குள் இருப்பின்
எனது கதலை
உணரவே மாட்டாய்.
என்ன செய்வது?
நான்
விடுதலை அடைந்தவள்
உன்னால் அந்த உச்சிக்கு
வரமுடியாதே!
-அ. சங்கரி
-----------------------------------------------------
இருப்பும் இறப்பும்
உன்னை முன்னர்
ஒருபோதும் அறியேன்
மூவாயிரம் மாணவருள் ஒருவனாய்
நீ மிக மிகச் சாதாரணமாய்
இருந்திருப்பாய்.
நாடகம் என்றோ
ஸ்ரைக் என்றோ
மாணவர் அவை வேலைகள் என்றோ
எதிலுமே அக்கறை அற்றவனாக
வந்து போயிருக்கலாம்.
எதோ ஒருநாளில்
உன்னை நான்
எதிர்ப்பட்டிருத்தலும் கூடும்
வளர்ந்து பரந்த
வாகையின் நிழலில்
நூலக வாயிற் படிகளில்
அன்றேல்
பல்கலைக்கழக முகப்பு வாயிலில்
பின்புறமாகப் பலாலி வீதியில்
எங்கேனும்
கண்டும் இருக்கலாம்.
எனினும்
அப்போது உன்னை அறியேன்
இன்று
உனது அவலச் சாவை
உணர்த்திய நோட்டீஸ்
நூலகச் சுவரிலும்
விஞ்ஞானபீட வாயில் முன்னும்
கண்டு கனத்தது நெஞ்சு.
இளைஞனே
இன்று முழுவதும்
உனது முகமும்
இன்றுதான் அறிந்த
உனது பெயரும்
மனதை அரித்தன
மெதுவாய்.
உனது பெயரினை
உனது ஊரினை
உனது இருப்பினை
அறிவித்தது அந்த
மரண நோட்டீஸ்.
வாழ்ந்ததை உணர்த்திய
மரணம்!
நான்
துயர் மிகக் கொண்டேன்.
-அ. சங்கரி
------------------------------------------------
முனைப்பு
பேய்களால் சிதைக்கப்படும்
பிரேதத்தைப் போன்று
சிதைக்கப்பட்டேன்
ஆத்மாவின் உணர்ச்சிகள் எல்லாம்
இரத்தம் தீண்டிய கரங்களால்
அசுத்தப்படுத்தப்பட்டன.
என்னை
மேகத்திற்குள்ளும்
மண்ணிற்குள்ளும்
மறைக்க எண்ணிய வேளையில்
வெளிச்சம் போட்டுப் பார்த்தனர்.
அவர்களின்
குரோதம் நிறைந்த பார்வையும்
வஞ்சகம் நிறைந்த சிரிப்பும்
என்னைச் சுட்டெரித்தன.
எனது
ஆசைகள் இலட்சியங்கள்
சிதைக்கப்பட்டன.
அவர்களின் மனம்
மகிழ்ச்சி கொண்டது.
அவர்களின் பேரின்பம்
என் கண்ணீரில்தான்
இருக்கமுடியும்.
ஆனால் என் கண்களுக்கு
நான் அடிமையில்லையே
அவர்களின் முன்
கண்ணீரக் கொட்ட
என் வேதனை கண்டு
ரசித்தனர் அவர்கள்
என்றைக்குமாய் என்தலை
குனிந்து போனதாய்க்
கனவு கண்டனர்.
ஆனால்
நான் வாழ்ந்தேன்
வாழ்நாளெல்லாம் நானாக
இருள் நிறைந்த
பயங்கரங்களின் ஊடாக
நான் வாழ்ந்தேன்
இன்னும் வாழ்கிறேன்.
--சி. சிவரமணி.
---------------------------------------------------
எமது விடுதலை
நாங்கள் எதைப் பெறுவோம்
தோழர்களே
நாங்கள் எதைப் பெறுவோம்?
இன்பமும் இளமையும்
இழந்து நின்றோம்
ஏக்கமும் ஏழ்மையும்
சுமந்து வந்தோம்
நாங்கள் எதைப் பெறுவோம்?
விடுதலை என்றீர்
சுதந்திரம் என்றீர்
எம் இனம் என்றீர்
எம் மண் என்றீர்
தேசங்கள் பலதிலும்
விடுதலை வந்தது இன்று
சுதந்திரம் கிடைத்தது
எனினும்
தேசங்கள் பலதிலும் மனிதர்கள்
இன்னும்
பிச்சைப் பாத்திரங்களை
வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.
நாமும் பெறுவோமா
தோழர்களே
பிச்சைப் பாத்திரத்தோடு
நாளை ஒரு விடுதலை?
நாம் எல்லாம் இழந்தோம்
எனினும்
வேண்டவே வேண்டாம்
எங்களில் சிலரது விடுதலை
மட்டும்;
விலங்கொடு கூடிய
விடுதலை மட்டும்
வேண்டவே வேண்டாம்!
தோழர்களே
விலங்குகளுக்கெல்லாம்
விலங்கொன்றைச் செய்தபின்
நாங்கள் பெறுவோம்
விடுதலை ஒன்றை.
--சி. சிவரமணி
------------------------------------------------------
வையகத்தை வெற்றி கொள்ள
என் இனிய தோழிகளே
இன்னுமா தலைவார
கண்ணாடி தேடுகிறீர்?
சேலைகளைச் சரிப்படுத்தியே
வேளைகள் வீணாகின்றன.
வேண்டாம் தோழிகளே
வேண்டாம்.
காதலும் கானமும்
எங்கள் தங்கையர் பெறுவதற்காய்
எங்கள் கண்மையையும்
இதழ்பூச்சையும்
சிறிதுகாலம் தள்ளிவைப்போம்.
எங்கள் இளம் தோள்களில்
கடமையின் சுமையினை
ஏற்றிக் கொள்வோம்.
ஆடையின் மடிப்புகள்
அழகாக இல்லை என்பதற்காக
கண்ணீர் விட்ட நாட்களை
மறப்போம்.
வெட்கம் கெட்ட
அந்த நாட்களை
மறந்தே விடுவோம்.
எங்கள் தோழிகள் பலரும்
உலகில் இன்று
கண்மையையும் இதழ்பூச்சையும்
மறது போயினர்.
ஆனால்
தமது மணிக்கரத்தைப்
பிணைத்த விலங்கை
அறுத்தனர்.
வாருங்கள் தோழிகளே
நாங்களும் வழிசெய்வோம்.
மண்ணால் கோலமிட்டு
அழித்தது போதும்.
எங்கள் செந்நீரில் கோலமிட்டு
வாழ்க்கைக் கோலத்தை
மாற்றி வரைவோம்
வாருங்கள் தோழிகளே.
சரிகைச் சேலைக்கும்
கண்ணிறைந்த காதலர்க்கும்
காத்திருந்த காலங்கள்!
அந்த வெட்கம் கெட்ட
காலத்தின் சுவடுகளை
அழித்து விடுவோம்.
புதிய வாழ்வின்
சுதந்திர கீதத்தை
இசைத்துக் களிப்போம்
வாருங்கள் தோழிகளே.
--சி. சிவரமணி
-------------------------------------------------
ஒரு தாயின் புலம்பல்
தெருப்புழுதியில் உன் உடம்பு
முதுகெல்லாம் இரத்த வெள்ளம்
நீதானா என்று குனிந்து பார்த்தேன்
ஓம் ராசா, நீயே தான்
"ஏன் ஆச்சி அழுகின்றாய்"
என்று கூடிநிற்கும் சனம்கேட்க
"பெடியனைத் தெரியுமா உனக்கு?"
என்று மிரட்டுகிறான் காக்கிச் சட்டை.
அவன் கையில் துவக்கு வெயிலில் மின்னுகிறது
"தெரியாது" என்று தலையசத்தேன்
நான் பெற்ற முதல் முத்தை
நெஞ்சம் பதறுதையா.
குருஷேத்திரத்தில் கர்ணன்வீழ
"ஐயோ மகனே" என்று குந்தி
ஓடிச்சென்று அணைத்தாளே
ஐயோ ராசா நான் பாவி
இப்போ வந்து பிறந்து விட்டேன்
என் பிள்ளை என்று சொல்ல
முடியாத பாவியானேன்.
எனக்கு மட்டும் பலமிருந்தால்
இரவிரவாய் உன்னை எடுத்துச் சென்று
செம்மணியில் எரித்திருப்பேன்.
முந்தநாள் சாமம் உனக்குப்
பழஞ்சோறு போட்ட கை
இந்தக் கடனையும்
துணிவோடு செய்திருக்கும்.
இராவணன் கொடுமை தாங்காது
காடாறுமாதம் போனவன் நீ.
நமது தலைவர்கள் போல
ஏதாவது சாட்டுச் சொல்லி
அங்கேயே இருந்திருக்கலாகாதோ?
திரும்பி வந்து ஏழுநாளில்
உன்னைச் சுட்டார்களோ கொடும்பாவிகள்.
ஏன் ராசா திரும்பி வந்தாய்?
உன்னை மகனென்று நான் வீட்டே
கொண்டு போனால் உன்தம்பிமாரை
விட்டு வைப்பாரோ கொடியவர்கள்?
வேட்டையாடித் தீர்த்துவிட்டுக்
கொட்டிலையும் எரிப்பார்கள்
மாட்டையும் லொறியில் ஏத்தி
பலாலி போய்ச் சேர்வார்கள்.
யாரென்று கேட்க யாரிருக்கிறார்
மகனே நான் ஏழையெல்லோ!
பெரிய இடத்துப் பிள்ளையெல்லாம்
மேல்நாடோடி டாக்டராக
நீயேன் ராசா எல்லாத்தையும்
உன் தோள்மேல் ஏற்றாய்?
உன்னை நம்பி வாழ்ந்த எம்மை
என்னென்று மறந்து போனாய்?
என் ஒருத்தி கூலியிலே
உங்களை நான் வளர்த்தெடுத்தேன்
நீங்கள் வளர்ந்து மரமாகி
எனக்கு நிழல் தரும் வேளை
என் கனவெல்லாம் தெருப்புழுதியில்
அப்படியே அழிஞ்சுபோச்சு.
என் கடைசிக் காலம்வரை
என் கைதான் எனக்குதவி.
மெய்யே ராசா, நான் போய்வாறன்
மிச்சத்தை வீட்டில் அழ்
என் வயித்தெரிச்சல் ஒருநாள்
இப்பாவிகளை எரிக்குமெல்லோ.
தனிநாடு கேட்டு மேடையேறி
கனக்கக் கதைத்தவர்கள்
அயல் நாட்டில் விருந்துண்டு
பாதுகாப்பாய் இருக்கையிலே
ஊருக்காய் மடிந்தபிள்ளை
தெருப்புழுதியில் கிடக்கின்றான்.
அவனை அங்கு விட்டுச்செல்ல
என் நெஞ்சம் விம்முதையா.
என்பிள்ளை என்று சொல்ல
முடியாத பாவியானேன்.
--சன்மார்க்கா
---------------------------------------
விழிப்பு
சமையல் செய்யும் இயந்திரமாக
ஆண்டுகள் பல தூங்கிக் கிடந்தாய்
உன்சிறு வீடே உனதுலகானது
உப்பும் புளியுமே பிரச்சனையானது
உனது வாழ்நாள் இவ்வாறாக
உழுத்துப் போனது
உன்னைச் சுரண்டி வாழ்ந்தது உலகம்
உன்னை நினத்து அழுதவர் கொஞ்சம்.
அனால்--
தாயே! நீ இன்று விழித்துக் கொண்டாய்
தெருவில் இறங்கி ஊர்வலம் வந்தாய்
அன்னையருடன் அணி
திரண்டு விட்டாய்
அகப்பை பிடித்த கைகளில் பதாகை;
போதும் கொடுமைகள் என்ற முடிவு
பிள்ளைகள் பற்றி நெஞ்சில் ஏக்கம்
கண்களில் சோகம்
நடையில் வேகம்
இறுதியில் வெற்றி உனக்கே தாயே!
உலகில் பாதி பெண்கள் ஆனதால்
உங்கள் பலத்தை உணர்ந்து விட்டீர்கள்
நித்திரை செய்த காலம் முடிந்து
நீதியக் கேட்கும் காலம் வந்தது.
வீட்டுக்கு வீடு அன்னையர் வந்தனர்
உன்பலம் உணர்ந்து
நீ நிமிர்ந்த வேளை
தாயே எமக்கு விடிவு வந்தது.
--சன்மார்க்கா
-----------------------------------------------------------
தெளிவு பெற்ற மதியினாய்
இறப்பவர் பலபேர் இளைஞர்கள் ஆனதால்
இளம் பெண்கள் பலர் விதவைகள் ஆனார்.
வீட்டுக்கு வீடிளம் விதவைகள் எத்த்னை?
தந்தையை இழந்த பிள்ளைகள் எத்தனை?
நாட்டில் நிலமைகள் இப்படித் தொடர்ந்தால்
இங்கிவர் படுந்துயர் எப்ப்டித் தீர்வது?
இவர்களின் வாழ்வு இத்தோடு முடிந்ததா?
பயனுள்ள வாழ்வு வாழ முடியாதா?
காலம் முழுவதும் கைமைக் கோலமா?
குடும்பச் சுமையெனக் குமைந்தவர் வாழ்வதா?
மறுமணம் ஒன்றுதான் வாழ்வென்று இல்லை.
உழைத்துண்டு வாழும் சுதந்திரம்ம் வேண்டும்
திரௌபதி மானம் காத்திடக் கண்ணன்
பாரதக் கதையிலே பக்க்மாய் வந்தான்
தேடுதல் வேட்டையில் அகப்பட்ட மான்கள்
துயரினைத் துடைக்க எவரிங்கு வந்தார்?
விம்மி அழுதிடும் பிஞ்சு மனங்களை
வாழ்வு கொடுத்துத் தேற்றலும் வீரமே!
உலகினில் பாதி பெண்களானாலும்
சுதந்திரம் என்பது பெண்களுக்கில்லையே!
தாலியும் வேலியும் இடையினில் வந்தது.
"நாணும் அச்சமும் நாய்கட்கு" உகந்தது
எத்தனை காலம் பழமையில் அழிவது
நவயுகம் காண நங்கையீர் வாரீர்.
--சன்மார்க்கா
---------------------------------------------------------------
உண்மையிலும் உண்மையாக
விரிந்து கிடந்த
கூந்தலை முடிந்து
கலைந்து போன ஆடைகளை
அணிவதற்காய் நானும்
மெதுவாக எழுந்த போது
'இவள் அவனோட விரும்பித்தான்....'
வார்த்தைகள் என்னை
அறுத்து வதைத்தன
திரும்பிப் பார்த்தேன்
அம்மா, அக்கா, அண்ணா அனைவருமே
என்னைப் பிழையாக....
"தான் செத்திருக்கலாம்
இல்லாட்டி
அவனைச் சாக்காட்டியிருக்கலாம்
இரண்டு மில்லாமல் எங்கட மானத்தை...."?
தொடர்ந்தன பொறிகள்.
ஆனால்....நான் சிரித்தேன்
"இராணுவக் கற்பழிப்புக்காய் கலங்கிடலாகாது" என
மேடையேறி முழங்கிய அண்ணன்
புத்தகங்களில் ஊதிய அக்கா
இன்று.... எனது ஊரவன்
அதே நிலையில்....
எனக்குப் புரியவில்லை
அந்நியன் ஆத்திரத்தில்
அடக்கு முறையின் வடிவில் நடந்து கொண்டான்
ஆனால்... இவனோ...
காமனாய்... கயவனாய்...
இவனை என்ன செய்யலாம்?
கற்புக்காய் கண்ணீர் வடிக்க
நான் ஒன்றும் கண்ணகியல்ல
மானத்தை நினைத்து நிற்க,
நான் ஒன்றும்
இழக்கவில்லை.
தற்கொலையில் உயிரைமாய்க்க
நான் ஒன்றும் கோழையில்லை
இராணுவத்தை விட்டுத் தள்ளினோம்.
ஆனால்... நமது இனத்தவனை வெறிபிடித்தவனை
திருமணமாகி இரு குழந்தையும் பெற்றவனை
என்னைப்போல் இன்னும்
எத்தனை பேர்?
இவனைப்போல் இன்னும்
எத்தனை பேர்?
இவர்களுக்கு என்ன செய்யலாம்?
குழம்பினேன்
நான் குழறவில்லை
குடும்ப கௌரவத்திற்காக
என்னைக் கொல்லலாம்
ஆனால் நானாக...
அது நடக்காது.
எனது பாதங்கள் தொடரும் பயணத்தில்
முடிந்தால்.... துணிவிருந்தால்
உண்மையிலும் உண்மையாக
எவராவது வாழ வரலாம்.
--ரங்கா
--------------------------------------------------
ஒரு தோழியின் குரல்
தோழி
எழுந்து வா
இனும் என்னடி இருட்டினில் வேலை?
மீண்டும் மீண்டும்
அடுப்படி தஞ்சமாய்
அடிமை வாழ்வே தலையெழுத்தாக
எத்தனை நாள்தான் இந்த வாழ்வு?
மானாக மருளாதே
அன்னம் போல் அசையாதே
வீறு கொண்டு எழு
எமது உரிமைகளை வென்றெடுப்போம்
அன்று
தலையைக் குனிவது அழகென்று சொல்லி
உலகையே பார்க்காது உன்னைத் தடுத்தனர்
உலகையே பார்க்காமல்
எத்தனை நாள்தான் இந்த வாழ்வு?
இன்றும் அப்படியா?
உன்னைச் சுற்றிக் கிடுகுவேலிகள்
இனியும் இருப்பதை அனுமதிக்காதே
இன்னும் என்னடி இருட்டினில் வேலை?
தலையை நிமிர்த்து
எழுந்து வா;
உலகைப் பார்!
--உ. ஔவை
--------------------------------------------------
உணர்வுகள்
ஆம்.
அன்று நான் உன்னை ஒருமுறை
நோக்கினேன்
ஒரே முறை நோக்கினேன்
நீல விழியின் அழகுதான் காரணமோ?
இல்லை, இல்லை
ராஜநடை போட்டு-நீ
வாசலில் நின்றபோது
மனம் சிலிர்க்கும்
நோக்கினேன்....
என்றும் போல் அதே பார்வை.
அதே கணத்தில்
பார்வைகள் ஆயிரம் சங்கமித்தன
மனதின் உணர்வை அடக்கி
நோக்கினேன்
வாயில் அரும்பிய சொற்கள் உதிர
விடை பெற்றுச் செல்வாய் நீ
ஆம்- அதிலுமோர் அழகு தான்
வட்டப் புல் வெளியில்
வானத்தை நோக்கி
கைகளை ஆட்டி
கால்களை உதைத்து
நிற்கும் அழகில்
உன்னில் தெறிக்கும்
ஆயிரம் பார்வையில்
அர்த்தமுள்ள-
அர்த்தமாயுள்ள பார்வை ஒன்றே
உன்னைத் துளைக்கும்
இப்படி இப்படி எத்தனையோ
ஆனாலும்-
சமூகத்தில் நடக்கும் அசிங்கங்களைப்போல்
ந்ங்கள் உறவுகள்
ஆகிவிட வேண்டாம்
கண்கள் நோக்கும்
கால்கள் அசையும்
ஆனாலும் நான்
வருதல் கூடாது
--உ. ஔவை
----------------------------------------------------------
மீளாத பொழுதுகள்
அமைதியான காலைப் பொழுது
காலைச் செம்மை கண்களைக் கவரும்
காகம் கரைதலும் இனிமையாய் ஒலிக்கும்
நீண்டு பரந்த தோட்ட வெளிகளில்
தென்றல் தவழ்ந்து மேனியைத் தழுவும்
எங்கும் அமைதி! எதிலும் இனிமை!
நேற்று வரையும்
அமைதியான காலைப்பொழுது.
பொழுது புலராக் கருமை வேளையில்
தட தடத்துறுமின வண்டிகள்
அவலக் குரல்கள்: "ஐயோ! அம்மா!"
தோட்டவெளிகள் அதிர்ந்து நடுங்கின
அங்கு மிங்கும் காக்கி உடைகளாய்...
ஆட்கள் வெருண்டனர்
அள்ளி ஏற்றிய இளைஞர்கள்
மூச்சுத் திணறினர்.
தாய்மையின் அழுகையும்
தங்கையின் விம்மலும்
பொழுது புலர்தலில்
அவலமாய்க் கேட்டன.
காகம் கரைவதும் நெருடலாய் ஒலித்தது.
மெல்லிய ஒலிகளும் பயத்தையே தூண்டின
எங்கும் அச்சம்; எதிலும் அமைதி.
தென்றல் சிலிர்ப்பில் உணர்வே இல்லை
காலைச் செம்மையை ரசிப்பதை மறந்தோம்.....
நேற்று வரையும்
அமைதியான காலைப்பொழுது.
--செல்வி
------------------------------------------------
கோடை
அந்திவானம்
செம்மையை விழுங்கும்
அலைகள் பெரிதாய்
கரையைத் தழுவும்
குளத்தோரத்துப் புற்களின்
கருகிய நுனி
நடக்கையில்- காலைநெருடும்
மேற்கே விரிந்த
வயல்கள் வெறுமையாய்
வானத்தைப் பார்த்து
மௌனித் திருக்கும்
வெம்மை கலந்த
மென்காற்று
மேனியை வருடும்.
புதிதாய் பரவிய
சலையின் செம்மண்
கண்களை உறுத்தும்
காய் நிறைந்த மாவில்
குயிலொன்று
இடையிடை குரலெழுப்பும்.
வீதியில் கிடந்த கல்லை
கால் தட்டிச் செல்ல
அதன் கூரிய நுனி
குருதியின் சுவையறியும்
ஒதுங்கிப் போன கல்
ஏளனமாய் இனிக்கும்
இதயத்தில் நினைவுகள் விரிந்து
சர்ரென்று வலியெடுக்கும்
வாடைக்காற்றின் சிலிர்ப்பும்
வரப்போரத்தில் நெடிதுயர்ந்த
கூழாமரத்தின் பசுமையும்
நிறைந்த குளத்தின் மதகினூடு
திமிறிப் பாயும் நீரினழகுமாய்
ஒதுங்கிப்போன இனிய பொழுதுகள்
ஊமையாய் மனதுள் அழுத்தும்.
--செல்வி
---------------------------------------
நீறு பூத்த தணல்
மீட்டப்படாத மனவீணியில்
அமுங்கிக் கிடந்த
முகாரி ராகத்தை
ஏன் மீட்டி விட்டீர்?
தரையில் சிந்தாமல்
தேங்கிக் கிடந்த
கண்ணீர் மழையை
ஏன் சிந்தச் செய்தீர்?
நீறுபூத்த தணலென
எரியாமலிருந்த
எண்ணெய்த்தீயை
ஏன் ஊதி விட்டீர்?
கவிதைகள் பல படைத்து
காவியத்தில் நானொரு
ஓவியமாய்த் திகழ
பாதை காட்டினீரோ?
பலே பலே
எனது கண்களின்
வடிப்பில்
என்னுள்ளத்தின்
தவிப்பில்
உங்களுக்குத்தான்
எவ்வளவு இன்பம்?
--மசூறா ஏ. மஜீட்
--------------------------------------------------------
ப்ரிய சினேகா
பாதை திறப்பதாய்
கூறியிரா விட்டால்
திறக்கப்படும் பாதையில்
நான்
நடக்க நினைத்திருப்பேன்
யாரோ திறந்த பாதையில்
என்னை
நடை பழக்க நினைக்கிறார்கள்
என்னல் தான்
ஆமாம் பாட முடியவில்லை
இழுத்துப் போனால்
நானென்ன செய்வது?
நீ திறந்த பாதையை
நான் கண்டிருந்தாலாவது
அவர்களுக்குக் காட்டியிருப்பேன்.
என்
கால்களைக் கட்டி விட்டாய்
அவிழ்த்து விட்டாலாவது
கால் போன போக்கில்
நடந்தாலும் திரிந்திருப்பேன்.
பாதையில் அழைத்துச்செல்
அன்றேல்
கால்களையேனும்
அவிழ்த்துவிடேன்.
--மசூறா ஏ. மஜீட்
------------------------------------------------------
அன்றும் இன்றும்
இதயத்தில் இருந்து மேலெழுந்து
எதுவோ தொண்டயில் சிக்கிட
உன் முன்னிலையில் அன்று
நான் வாயடத்துப் போனேன்
எனது மௌனத்தை உனக்குப் பதிலாக்கி
தொடர்ந்தது காலம்.
உன்னோடு உலாவந்த நாட்களில்
கைதொட உறையும்
உணர்வுகளின் சிலிர்ப்பில்
"என்ன.. பேசேன்.."
என்று நீ கேட்டும்
"ஊம்.."; என்பது மட்டுமே
எனது பதிலாகி நிற்க,
உள்ளும் புறமும்
எல்லை கடந்த ஏகாந்தப் பெருவெளியும்
ஓசைகளடங்கி உறைந்துபோக.
அத்தனைக்குமாக நீயே
திரும்மத் திருமப் பேசுவாய்.
முகமெங்கும் மகிழ்ச்சிப் பூக்களாய்
எச்சில் குமிழ்களுடன்
பேச்சும் வெடித்துச் சிதறும்
அரசியல், சினிமா, திருவிழா.... என
கூட வந்த
அடுத்தவனின் விமர்சனங்கள்
அத்தனைக்கும் நடுவே
எனது மௌனங்களத்தனையும்
உனதாக்கி
நீ உன்வழி தொடர்ந்தாய்.
அன்று,
நேருக்கு நேராய்த்தான்
நீ கேட்டபொழுது
எனது சம்மதமாக
என்னுடன் இழைந்த மௌனம்
இன்று,
வலியெடுக்கும் இதய சோகத்தின்
சீழ்அகற்றி சுகமளிக்க மறுக்கிறது.
காரணமற்ற நிராகரிப்புடன்
நீ எங்கோ வெகுதொலைவில்
மகிழ்ச்சிப் பிரவகிப்பில்.
அன்றைய எனது மௌனமும்
இன்றைய உனது மௌனமும்
உனக்கே சாதகமானதில்
என்றென்றைக்கும்
வசந்தங்கள் உனக்கும்
சோகங்கள் எனக்குமாய்
ஆக்கிற்று உலகம்.
நானோ,
கனல் வாய்பிழந்து
புழுதி பறக்கின்ற
மைதானவெளி முழுதும்
தீ மிதித்து நடக்கின்றேன்
மௌனமோ
இடையே சுகமாய்த்துயிலும்.
--பிரேமி
------------------------------------------------
அந்த நாளை எண்ணி
பிரியமானவனே, உன்னை ஏன் எனக்குப்
பிடித்திருக்கிறது?
அறிவுக்காகவா? அழகுக்காகவா?
ஒழுக்கத்துக்காகவா? அன்றி, ஒப்பற்ற
குணத்துக்காகவா?
கேள்விகள் சாலைகள் போல்
வளைந்து நெளிந்து
அடிவானம் பூமியை முத்தமிடும் புள்ளியில்
சிக்கிடும் என் இதயம்.
இதய இழையங்களில் நீக்கமற நீ
உன் நினைவில் தவிக்கும் நான்.
அறிவு பூர்வமாக பிளட்டோனிக் லவ்
உணர்ச்சிகள் தாரகைகளாக தொலைதூரத்தில்.
சமாந்தர வாழ்வுகள் சாசுவதம் என்றுணர்ந்தும்
உன் அன்புக் கடலில் முக்குளிக்கும் நான்
எதிர்காலத்தை எண்ணி
சந்தப் பொருளாக மாறும் நாளை எதிர்நோக்கி
மூர்ச்சை அடைகிறேன்.
--ரேணுகா நவரட்ணம்
--------------------------------------------------------------------
பெண் இனமே...
உன் உறங்கும் காலம்
முடிவுறும் வேளை
இதோ--
மிக அருகில்...
'அடுக்களை அரசி'
'கற்புத் தெய்வம்'
மெல்லியலாள் etc etc
எல்லாம் வெறுங் கனவுப்
பொன் விலங்குகள்,
சுயநலக்காரர் உன்மேற் சூட்டிய
மாய முட்கிரீடங்கள்.
உன் பொறுப்பைத் தட்டிக்கழிக்க
'மெல்லியல்லாள்' என
உன்மேற் போர்த்தபட்ட
போர்வையக் காட்டி
அதனுள் ஒளியாதே.
கனவுகள் வேஷங்களைக் கலைத்து
விரைவில் விழித்தெழு!
நிஜத்தை எதிர்கொள்!
நின் பங்களிப்பைச் செய்.
--மைத்த்ரேயி
---------------------------------------------------------------------------
எங்கள் கிராமத்தில் ஒவ்வொரு பெண்ணும்
வா! வா! என்றன
தென்னங் கீறுகள் காற்றில்
பரவி வருகிற மஞ்சள் ஒளியில்
பொன்னாய் நிமிரும் பூக்கள்.
யன்னல் கம்பியில் கைகள்
கன்னங்கள் குளிர்ந்தாலும்
நெஞ்சு கீறி,
அனலாய் வெடிக்கிற
மூச்சில் வெளிப்புறம்
மங்கலாய்த் தெரியும்.
பார்வையில்
தோற்கிற போதும்
ஓயாமல் தாவும் அணில்கள்
அவள் நிற்கிறாள்
யன்னலுடன் கூடவே
தன்னையும் பிணைத்துக் கொண்டு
உள்ளே,
அழுகிற அவனது குழந்தைக்காக
சுரக்கிற மார்புடன்
அதையே நியதியாய்
நினைத்தாள் போல
மஞ்சள் ஒளிகறுக்கும்
மெல்ல வரும் இரவு
கூடு திரும்பும் ஒரு பறவையாய்
கூடவே அவனும்
உடமையாய்க் காத்து
துணையாதலில்,
இன்னும்,
சுகம் தேடலில்
இறுமாந்து போன வெறும் மனிதனாய்...
வெளியே எல்லாம் அழகாய்
மிகவும் விரைவாய்
முகில்கள் திரளல்,
இடியாய் மழையாய்க்
குமுறல், சிதறல்,
வெடித்தல், மரம் தளிர்த்தல்
இலை உதிரல் சிலவேளை
வெறிபிடித்தாடுதல் என,
எதற்கும் அவளில்
சலனமேயில்லை.
வீட்டு மூலையில் கவ்விய இருளில்
கம்பி யன்னலினூடே
ஒவ்வொரு மாலையும் ஒளிபெறுகிற
தெரு விளக்கை
வெறுமனே வியந்தபடிதான்.
--ஊர்வசி
---------------------------------------------------
வேலி
நட்சத்திரப் பூக்களை
எண்ணமுடியாமல்
மேலே கவிழ்ந்தபடி கூரை
ஒட்டடைகள் படிந்து
கறுப்பாய்ப் போனது
கம்பி போட்ட சாளரம் கூட
உயரமாய்,
ஆனாலும் திறந்தபடி
அதனூடே காற்று;
எப்பொழுதும்
மிகவும் இரகசியமாய்
உன்னிடம் என்னை
அழைக்கிற காற்று
என்னைச் சூழவும் சுவர்கள்தான்
நச்...நச் என்று
ஓயாமல் கத்திக் கொண்டிருக்கிற
பல்லிகள் ஊர்கிற சுவர்கள்
அவையும்
ஒட்டடைகள் படிந்து
எப்போதோ கறுத்துப் போனவை.
உனக்காக நான்
தனிமையிலே தோய்ந்தவளாய்
இங்கே காத்திருக்கிறேன்
பழைய பஞ்சாங்கங்களில்
புதிதாக
நம்பிக்கை தருவதாய்
ஒரு சொல்லைத் தேடிப்பார்ர்த்தபடி.
எப்பொழுதுதான் என்னால்
நீ வசிக்கின்ற அந்த
திறந்த வெளிக்கு வரமுடியும்?
உன் இருப்பிடம்
இங்கிருந்து வெகு தொலைவோ?
இரண்டு சிட்டுக்குருவிகளை
இங்கே அனுப்பேன்!
அல்லது
இரண்டு வண்ணத்துப் பூச்சிகளையாவது..
--ஊர்வசி
---------------------------------------------
இன்னும் வராத சேதி 1
புதிதாகப் பெயர்ந்த சோளகத்தில்
தெற்கிருந்து பூவாசம்
உன் வீட்டுப் பக்கம்தான்
எங்கேனும்
கோடை மழைக்குக் காட்டுமல்லி
பூத்திருக்கும்.
இங்கே,
முற்றத்து மல்லிகைக்குத்
தேன்சிட்டும் வந்தாச்சு
'விர்-' என்று பின்னால்
அலைகின்ற சோடியுடன்.....
வெள்ளையும் மஞ்சளுமாய்
வண்ணத்திப் பூச்சிகளும், படையாக
செவ்வரளி வரிசைகளில்
காற்றில் மிதந்தபடி.
வீட்டுக்குப் பின் தோப்பில்
மரங்கள் சலசலக்க
குருவிகளின் வம்பளப்பு
தினமும்தான் புதுசாக.
ஆனாலும்,
நீ சொன்ன சேதியை
இன்னும் ஒன்றுமே தரவில்லை
காற்றுங் கூட.
--ஊர்வசி
-------------------------------------------------------
இன்னும் வராத சேதி 2
வெட்ட வெளி கூடச்
சிறைதான் இங்கே.
கிடுகு வேலியும்
ஒரு பெரும் மதில்தான்.
காற்றுக்கும் காவலுண்டு
ஆனாலும்,
கூரைக்கு மேலாக
அள்காட்டி கிரீச்சிட்டுப்
பறக்கும் நள்ளிரவுப் பொழுதுகளில்
நான் மட்டும்
விழித்திருப்பேன்.
சோளகம் நுழைவதற்காய்
சாளரத்தைத் திறந்து வைப்பேன்.
அப்போது,
வரிசையாய் மின்னுகிற
மூன்று வெள்ளிகளும்
என் சாளரத்தைக் கடக்கு முன்பு
மெல்ல, அதை அனுப்பு.
--ஊர்வசி
கருத்துகள்
கருத்துரையிடுக