வல்லிக்கண்ணன் கதைகள் II
சிறுகதைகள்
Back வல்லிக்கண்ணன் கதைகள்
சிறுகதை தொகுப்பு - பாகம் 2
ஆசிரியர் : வல்லிக்கண்ணன்
-
Source:
வல்லிக்கண்ணன் கதைகள்
வல்லிக்கண்ணன்
ராஜராஜன் பதிப்பகம்
19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர் சென்னை - 600 017.
Rs. 100.00
Vallikkannan Kadhaigal
By VALLIKKANNAN
First Edition 2000
Published by
Rajarajan Pathippagam
19, Kannadhasan Salai T. Nagar, Chennai - 600 017.
Typeset at Skill Computers Chennai -600 018
Printed at Sakthi Printers Chennai - 21.
-------
- பொருளடக்கம்
22. உடைந்த கண்ணாடி | 32. சுயம்பு |
23. வேலைக்காரி | 33. பெருமை |
24. பொன்கொன்றை பூக்கும்போது. | 34. திட்டம் தவறிப்போச்சு |
25. அக்கரைப் பச்சை | 35. முளையும் - விளைவும் |
26. துரும்புக்கு ஒரு துரும்பு | 36. காதல் அதிர்ச்சி |
27. கம்பீரஜன்னி | 37. ஆற்றங்கரை மோகினி |
28. சிவத்தப்புள்ளை | 38. அதிர்ச்சி |
29. மனம் தேற மருந்து | 39. மனநிலை |
30. ஜாலி அண்ணாச்சி | 40. குடியிருப்பில் ஒரு வீடு |
31. சின்னவன் | 41. பேரிழப்பு |
22. உடைந்த கண்ணாடி
"காந்தி!"
குளுகுளு என்று பசுமை கவிந்திருந்த மாந்தோப்பில், மாமரங்களுக்கிடையே வளைந்து நெளிந்து அழுத்தமாகப் பதிந்து கிடந்த ஒற்றையடித் தடத்தில் அவசரமற்று நடந்து கொண்டிருந்த யுவதியைக் குலுக்கியது அந்த அழைப்பு.
தனது நினைப்பும் தானுமாய் மெது நடை நடந்த அவள் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். முன்னாலும் பின்னாலும் சுற்றுப்புறத்திலும் அவளது மருண்ட பார்வை புரண்டு சுழன்றது.
விடிவின் வெளிச்சம் இருள் அணையை உடைத்துக் கொண்டு வேகமாகப் பாய்ந்து பரவும் வேளை. புத்துணர்வும் புதிய எழிலும் இளமையும் குளிர்ச்சியும் எங்கும் வியாபித்து நின்ற உதய காலம். இரவு போய்விட்ட மகிழ்ச்சியினாலோ, ஒளி எங்கும் பரவி வருவதை உணர்ந்த அதிசயத்தினாலோ, பறவைக் கூட்டங்கள் ஒரேயடியாகக் கூச்சலிட்டு ஆரவாரித்தன. எங்கோ மறைந்திருந்த குயில் ஓங்கிக் கூவி, தனது உவகையை அறிவித்துக் கொண்டிருந்தது.
காந்திமதி வழக்கம்போல், விடிந்தும் விடியா வெள்ளிய இளம் பொழுதில் ஆற்றை நோக்கி வந்தாள். இனிமேல் தான் ஒருவர் இருவராக, பெண்கள் வருவார்கள். மழையோ, பனியோ, குளிரோ, கோடையோ - கவலையேயில்லாமல் தினசரி தவறாது அதிகாலையில் ஆற்றில் நீராடுவதை வாழ்க்கை நியதியாக வகுத்துக் கொண்டிருந்த இரண்டு மூன்று ஆண்கள், பெரியவர்கள், இயந்திர ரீதியில் தங்கள் தொழிலை முடித்துக் கொண்டு திரும்பி விட்டார்கள். காலை ஏழு மணிக்குமேல்தான் ஆற்றங்கரையில் ஜனநடமாட்டம் அதிகரிக்கும்.
அந்த ஊர்க்காரர்கள் ஆற்றில் நீராடுவதற்கு அவசரப்பட வேண்டிய அவசியமே இல்லைதான். ஆற்றங்கரையை ஒட்டி அமையும் பாக்கியம் பெற்ற ஒரு சில ஊர்களில் அதுவும் ஒன்று. அழகான இடமும் கூட. நதியை ஒட்டிய கரை புல் தரிசாக அகன்று செழிப்பான மாந்தோப்புக்களாக மாறி, ஊரின் கடைசித் தெருவோடு கலக்கும். அங்கேயே கடைத்தெருவும், வீட்டு வரிசைகளும் ஆரம்பமாகி விடுகின்றன. அந்த ஊர்க்காரர்களுக்கு ஆற்றங் கரையே பொழுதுபோக்கும் இடமாகும். ஊர் இளைஞர்களுக்கும் சிறு பையன்களுக்கும் ஆற்றின் மணல் பரப்பே விளையாட்டு மைதானம்; இதெல்லாம் சாயங்கால நேரத்தில்.
வைகறையின் போது ஆற்றங்கரை அமைதியின் கொலு மண்டபமாகத்தான் திகழும். அந்த நேரம்தான் காந்திமதி போன்ற யுவதிகளுக்கு அமைதியாய் நீராடிவிட்டு, குடத்தில் தண்ணிர் எடுத்துக்கொண்டு, வேகமாய் வீடு திரும்புவதற்கு ஏற்ற நேரம். அவள் தனியாகவோ, அல்லது அடுத்த வீட்டுப் பெண்ணு டனோ வந்து போவாள்.
இன்று தனியாக வந்தவள், கூப்பிடும் குரல் கேட்டு, தோழி லசுஷ்மிதான் வருகிறாளோ என்று தயங்கினாள். ஒரு கணம்தான். அந்த அழைப்பு தன் தோழியின் குரலில் தொனிக்கவில்லை; எனினும் நினைவுப்புலனில் ரீங்காரம் செய்த ஒரு பழகிய குரலாகவும் ஒலித்ததே என்ற திகைப்புடன், அவள் முன்னே அடி பெயர்த்து நகர்ந்தாள்.
“என்ன காந்தி, பயந்துட்டியா, ஹெஹஹ” தெறித்த சிரிப்பும், மகிழ்வால் முழுதலர்ந்த முகமுமாய் வந்து நின்ற இளைஞனைப் பார்த்ததும், அவள் முகம் அந்நேரத்திய இயற்கைபோல் எழில் பெற்றது. கீழ்த்திசை வானத்தில் பூத்துக் கிடந்த இளஞ்சிவப்பு அவள் கன்னங்களிலும் படர்ந்தது. அடிவான விளிம்பிலே ரேகையிட்ட சுடரொளி அவளது விழிகளிலும் பிரகாசித்தது. "அத்தான்!" என்ற ஒற்றைச் சொல்தான் உதிர்ந்தது அவளிடமிருந்து. உணர்ச்சிக் குழப்பம் அவளை ஊமையாக்கி விட்டது.
”நீ இந்நேரத்துக்கு இங்கு வருவாய் என்று எனக்குத் தெரியும். அதனால்தான் ஐந்து மணிக்கே எழுந்து இங்கே வந்தேன்." சந்திரனின் உள்ளத்தில் ஆனந்தம் ஊற்றெடுத்துக் குபுகுபுத்தது. அது அவன் பேச்சிலே தெறித்தது; முகத்தின் மலர்ச்சியில் புரண்டது; கண் வீச்சில் மின்னி மிதந்தது.
“சுகம்தானா? எப்ப வந்தீர்கள்?” சம்பிரதாய விசாரணை மென்குரலாக உருவெடுத்தது. அவள் பேச்சும் நின்ற நிலையும், உயர்வதும் தாழ்வதுமாக ஊசலிட்ட பார்வையும் அவனுக்கு மகிழ்வளிக்கத் தவறவில்லை.
"நேற்று ராத்திரிதான் வந்தேன். நான் வருவதற்கு நேரமாகி விட்டதால், மாமா அத்தை எல்லோரையும் பார்க்க வரவில்லை. பிறகு வீட்டுக்கு வருகிறேன்” என்று அவன் அறிவித்தான்.
பண்பும் சமூகப் பழக்க வழக்கங்களும் அவளை உந்தித் தள்ள, “ஊம்! அவசியம் வாங்க. இப்ப நேரமாயிட்டுது. நான் குளிச்சு முழுகி, குடம் விளக்கி, தண்ணீர் எடுத்துக்கிட்டுப் போகணும்” என்று கூறியவாறே வேக நடை நடந்தாள். ஆயினும் அவள் மனம் அவன் பக்கமே சஞ்சரித்தது. அதை அடிக்கடி அவள் திரும்பிப் பார்த்தவாறு நடந்த செயலே உணர்த்தியது.
"காந்தி என்னமாய் - எவ்வளவு அழகாக வளர்ந்து விட்டாள்" என்று வியந்தவனாய் சந்திரனும் ஆறு நோக்கி நடந்தான். "வளராமல் எப்படி இருக்க முடியும்? பருவமல்லவா? இப்போது அவளுக்குப் பதினேழு வயசு இருக்குமே?" என்று மனம் பெரியதனம் பண்ணியது.
காந்திமதியும் அவன் அழகையும், தன் உள்ளத்தை ஈர்க்கும் உடல் வளர்ச்சியையும் பற்றித்தான் எண்ணியிருக்க வேண்டும். அவனோடு நடந்து, அர்த்தம் உள்ளனவும் அர்த்தமற்றனவு மாய், அவசியத்தோடும் அவசியம் இல்லாமலும் பலப் பல பேசி, பதில் பெற்றுக் காதினிக்க, மனம் இனிக்க, மகிழ்வுற வேண்டும் என்ற ஆசை அவளுக்கு மட்டும் இல்லாமலா போயிற்று? நிறையவே இருந்தது. ஆனால் அவ்விதம் செயல் புரியத் துணிந்தாலோ - பார்க்கிறவர்கள் என்னதான் நினைக்க மாட்டார்கள்? ஊர்க்காரர்கள் எவ்வளவோ பேசுவார்களே? அதற்கெல்லாம் இடம் கொடுக்கலாமா? அஞ்ச வேண்டுவன வற்றை அஞ்சுவதுதானே அறிவுடைமை?
அவள் பண்பு அதை அவளுக்கு உணர்த்தியது. அவனு டைய அறிவு அதையே அவனுக்கு எடுத்துக் கூறியது. ஆகவே, அவள்பாட்டுக்கு அவள் வேலையைச் செய்தாள். அவன் தனது அலுவல்களைக் கவனித்தான். ஆனாலும் மனசுக்கு விலங்கு பூட்ட முடியுமா? கண்ணோட்டத்துக்குக் கடுங்காவல் தண்டனை விதிப்பதும் சாத்தியமில்லையே!
சின்ன வயதில் - மூன்று நான்கு வருஷங்களுக்கு முன்புகூட காந்தி இப்படியா இருந்தாள்? வாய் கொடுத்து வாயடி வாங்குவதில் களிப்பு காணும் சுபாவம் உடையவளாக இருந்தாளே? ஒரு சமயம். அதன் நினைவு இனித்தது அவன் உள்ளத்தில், அது தந்த மணத்தை ருசித்தவனாய், அவள் அதை எப்படி ரசிக்கிறாள் என்று அறியும் ஆவல் கொண்டவனாய், சந்திரன் அவள் பக்கம் பார்வையை எறிந்தான்.
காந்திமதி குடத்தைப் பளபள வென்று மின்னும்படி தேய்த்துக் கழுவி மணல் மீது வைத்து விட்டு, நீரில் இறங்கியிருந்தாள். அப்போது அதிர்ஷ்டவசமாக ஆற்றில் வேறு எவருமே இல்லை. அதனால் சந்திரனின் விளையாட்டுக் குணம் தலையெடுத்தது. அவளோடு குறும்பு செய்தும் கேலி பேசியும் மகிழ்வதற்குரிய உரிமையை அவர்களுடைய உறவுமுறை கொடுத்திருந்தது. சந்திரன் மெதுவாகக் குடத்தை ஆற்றில் மிதக்க விட்டான்.
காந்தி நீந்திச் சென்று குடத்தை எடுத்து வந்தாள். அவன்மீது அவளுக்குக் கோபம் வந்தது. ஆனால் அதில் மகிழ்ச்சி அவளுக்கு இல்லாமலுமில்லை. “போங்க அத்தான்! ஆற்றில் வைத்து இப்படியா விளையாடுவது! யாராவது பார்த்தால்?" என்று சிணுங்கினாள்.
"உன்னோடு தாராளமாய்ப் பேசலாம் என்றுதானே நான் ஆற்றங்கரைக்கு வந்தேன்! நீ என்னடான்னா ரொம்பவும் வெட்கப்படுகிறாயே!” என்றான் அவன்.
"இப்பவும் நாம் சிறுபிள்ளைகளா!” என்று அவள் முனகினாள்.
"விளையாட்டுப் பிள்ளைகள்” என்று கூறிச் சந்திரன் அவள்மீது நீரை வாரி இறைத்தான்.
"ஐயோ, சும்மா இருங்களேன். ஆட்கள் வருகிற நேரமாச்சு” என்று அழும் குரலில் முணுமுணுத்தான் அவள்.
"தண்ணிருக்குள்ளே ஒடிப்பிடித்து விளையாடலாமா என்று கேட்க வந்தேன். முந்தி நீயும் உன் தோழிகளும் கண்ணாமூச்சி ஆடினிர்களே, அப்போ நீ...”
அவள் தன் குழப்பத்தை மறைப்பதற்காக நீரில் மூழ்கி எழுந்தாள். சிரித்துக் கொண்டே கரை ஏறினாள். அவள் அதை எப்படி மறக்க முடியும்? அதைப் பற்றி அவள் பேசத் தயார் தான். ஆனால், கரையில் சிலபேர்கள் வந்து கொண்டிருந்தார்களே!
அவர்களைக் கண்டதுமே சந்திரன் மெதுவாக அங்கிருந்து நகர்ந்து விட்டான். இல்லாவிடில், "இப்பவும் அதுபோல் நேர்ந்து உன் முகம் எப்படி மாறும் என்பதைப் பார்க்க வேணும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது, காந்தி!" எனச் சொல்லியிருப்பான்.
மூன்று வருஷங்களுக்கு முன்பு நடந்த அவ்வேடிக்கை நித்தியப் பசுமையோடு அவன் நினைவில் நின்றது. அப் பொழுது காந்திமதிக்குப் பதினான்கு வயசு ஆரம்பித்திருந்தது. அவளும் அவளை ஒத்த வயசுப் பெண்களும் வீட்டு முற்றத்தில் "ஒடிப் பிடித்து" விளையாடிக் கொண்டிருந்தார்கள். மாலை நேரம். பெரியவர்கள் தலைகாட்டாத இடம். சந்திரனும் அவன் நண்பனும் எங்கோ திரிந்துவிட்டு வந்தார்கள். காந்திமதியின் கண்கள் துணியால் இறுக்கிக் கட்டப்பட்டிருந்தன. அவள் இரு கைகளையும் முன் நீட்டி, காற்றில் துழாவி யாராவது பிடியில் சிக்குவார்களா என்று தேடித் திரிந்து கொண்டிருந்தாள். தோழிகள் ஆளுக்கொரு இடத்தில் பதுங்கி நின்று குரல்கொடுத்தும் முன்னே வந்து அவள் கைவீச்சுக்கு எட்டாத தூரத்தில் நின்று குதித்துக் கேலி பேசி ஏய்ப்பு காட்டியும் களிப்புற்று ஆட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அங்கே கலகலப்புக்கும் கூச்சலுக்கும் குறைவில்லை.
"ஏ, சந்திரா காந்தி யாரையோ தேடுகிறாளே! உன்னைத் தானோ என்னமோ!" என்று நண்பன் கேலி பண்ணினான்.
சந்திரனின் இயல்பான குறும்புத்தனம் வாலாட்டவே, "சத்தம் போடாதே, நான் ஒரு வேடிக்கை பண்ணுகிறேன்” என்று சொல்லிவிட்டு முன்னால் நகர்ந்தான். "பேசாதீங்க, ஒன்றும் சொல்ல வேண்டாம்" என்று வாயை விரல்களால் பொத்தி ஜாடை காட்டித் தோழிகளை எச்சரித்து விட்டு, காந்தி யின் முன்னால் போய் நின்றான்.
அவனைக் கண்டதும் மற்றப் பெண்கள் ஒதுங்கிக் கொண்டார்கள். என்ன நடக்கிறது, பார்க்கலாமே என்ற துடிப்பு அவர்களுக்கும் இருந்தது.
சந்திரன் அப்படியும் இப்படியும் நகர்ந்து சிறிது "பாய்ச்சல் காட்டி" விட்டு நின்றான். முன் நீண்டு, அகப்படப் பிடிக்க வேண்டும் என்ற தவிப்போடு துழாவிய வளைக்கரங்கள் இரண்டும் அவனை நெருங்கின. "இதோ பிடித்தாச்சு!" என்று உற்சாகத்தோடு கூவியவாறே காந்தி அவன் கையைப் பற்றினாள்.
"ஒகோய்!" “காந்தி மாப்பிள்ளையைப் பிடித்து விட்டாள் டோய்!” "காந்தி அது யாருடீ" - இப்படிக் கூச்சலிட்டும், கனைத் தும் கத்தியும் தோழிகள் ஆரவாரித்தனர். “சரி, புடிச்சாச்சு! அப்புற மென்ன காந்தி” என்று கேட்டுக் கொண்டே அவள் கண்கட்டை அவிழ்த்து விட்டான் சந்திரன்.
காந்திமதியின் எலுமிச்சம்பழ நிற முகம் தக்காளிப் பழமாய்ச் சிவப்பேறி மினு மினுத்தது. அவள் கண்கள் பனித்தன. "போங்கம்மா, விளையாட்டிலே இப்படித்தான் பண்றதாக்கும்?" என்று சீற்றம் காட்டினாள் அவள்.
"நாங்க என்னடீ செய்தோம்? நீ எங்களில் யாரையும் பிடிக்காமல், உன் அத்தானை ஆசையோடு கைப்பிடித்துக் கொண்டால் அதுக்கு நாங்க என்ன பண்ணுவோம்?” என்று ஒரு வாயாடி கத்தினாள்.
"அதுதானே? விளையாட வந்து விட்டு இப்போ கோபிக்கிறதிலே அர்த்தமே கிடையாது!” என்றான் சந்திரன்.
""நீ பெரிய அண்ணாவி, தீர்ப்பு கூற வந்துட்டே, உன் கிட்டே யாரும் கேட்கலே, போ!” என்று அவள் எரிந்து விழுந்தாள். "பெண்கள் விளையாடுகிற இடத்திலே வெட்க மில்லாமே குறுக்கே வந்து விழுந்துவிட்டு."
"அதுக்கு இப்போ என்னம்மா செய்யனும்கிறே? என் கண்ணைக் கட்டி விடணும்னு சொல்றியா? கட்டி விடு. நீ என்னைப் பிடிச்சதுமாதிரி, நானும் பதிலுக்கு உன்னைப் பிடித்து..."
தோழிகள் "டோடோய்!” என்று கூச்சலிட்டுக் கைகொட்டிப் பலத்த ஆரவாரம் செய்தார்கள். காந்திமதி ஒடிப் போய் ஒளிந்து கொண்டாள். அதன்பிறகு அவள் அவன் முன் இரண்டு நாட்கள் தென்படவில்லை. இருந்தாலும், அவளுக்கு அவன்மீது கோபமில்லை என்பதை அவள் வாயினாலேயே அவன் பின்னர் அறிந்து கொண்டான்.
தனது ஆசை அத்தான் என்ன குறும்பு பண்ணினாலும், அவளுக்குக் கோபமும் வேதனையும் கண்ணிரும் பொங்கி எழும்படி குறும்புகள் செய்தாலும், காந்திமதி அன்போடு சகித்துக் கொள்ளுவாள். அது சந்திரனுக்கு நன்றாகத் தெரியும்.
காந்திமதி பன்னிரண்டு வயசுச் சிறுமியாக இருந்தபோது வீட்டுத் தோட்டத்திலிருந்த மாமரத்தின் தாழ்ந்த கிளையில் ஒற்றைக் கயிற்றை நீளமாகக் கட்டி ஊஞ்சல் அமைத்திருந்தாள். அதில் அமர்ந்தும், நின்றும் வேகமாக ஆடுவதில் அவளுக்கும் அவள் சிநேகிதிகளுக்கும் ஆர்வம் அதிகம் உண்டு. வீட்டு வேலைகளைச் செய்து முடித்த பிறகு, எந்நேரத்திலும் அவர்கள் தோட்டத்தில் தான் காணப்படுவார்கள். ஒரு நாள் தோழிகளின் வருகையை எதிர்நோக்கியபடி, காந்தி தனியாக ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்தாள். தற்செயலாக அங்கு வந்து சேர்ந்தான் சந்திரன். அவளையறியாமல் பின்புறம் சென்று, அவளைத் தள்ளினான். ஊஞ்சல் தணிந்து வரும்போது, அவள் முதுகில் கைவைத்து வேகமாக முன்தள்ளி விட்டான்.
ஊஞ்சலில் வேகம் அதிகரித்தது. காந்தியின் பயமும் வளர்ந்தது. திரும்பிப் பார்ப்பதற்குத் துணிவில்லை அவளுக்கு. கயிற்றைக் கைகளால் இறுகப் பற்றிக்கொண்டு, "யாரது? யாரு இப்படித் தள்ளுவது? மெதுவாகத் தள்ளுடி. நான் கீழே விழுந்து விடுவேன்” என்று கத்தினாள். சந்திரனோ மெளனமாகச் சிரித்துக் கொண்டே மேலும் பலமாகத் தள்ளினான். "ஐயோ!. பயமாக இருக்குதே. ஏ, குரங்கே! யாரு இப்படி ஆட்டுறது? அப்புறம் நான் நல்லா ஏசுவேன். ஏ சவத்து மூதி, ஆட்டாமல் தள்ளி நில்லுடி!” என்று கூச்சலிட்டாள்.
"அப்படியே செய்யறேண்டி! இதுதான் கடைசித் தடவைடீ!” என்று கூறி, வேகமாகத் தாழ்ந்து வந்த ஊஞ்சலைப் பிடித்து, அதிகமான பலத்தோடு முன்னுக்குத் தள்ளி விட்டான். "ஐயோ, அம்மா, அம்மா”" என்று அலறிய காந்தியின் குரலில் பயம் வீறிட்டது. அவள் கைப்பிடி தளர்ந்தது. அவளே குப்புற விழுந்தாள் தரைமீது.
அப்பொழுது தான் தனது செயலின் கொடுமை அவனுக்கு உறைத்தது. பயமும் குழப்பமும் நெஞ்சை அழுத்த, அவன் அவளருகே ஓடினான். "காந்தி, காந்தி!" என்று தவியாய்த் தவித்து உருகினான். அவள் நெற்றியில் பலத்த காயம் என்றே தோன்றியது. அதிலிருந்து ரத்தம் பெருகி, புருவத்தை நனைத்துச் சொட்டியது. சந்திரன் பயந்து நடுங்கி விட்டான். “காந்தி! தெரியாமல் இப்படிச் செய்து விட்டேன். உன்னைக் கீழே தள்ளனுமின்னு வேகமாகப் பிடிச்சுத் தள்ள வில்லை. விளையாட்டுக்குத்தான் தள்ளினேன்” என்று பரிதாபமாக, திரும்பத் திரும்பச் சொன்னான்.
காந்திமதி வாய் திறந்து பேசவில்லை. அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. தாவணியால் நெற்றிக் காயத்தை அழுத்தியபடி, மெதுவாக எழுந்தாள். அவள் கண்கள் நீரைக் கொட்டிக் கொண்டிருந்தன. அடிபட்ட வேதனையும், மனத்தின் வேதனை யும் அவளுக்கு மிகுதியாக இருந்தன என்பதை அவன் உணர முடிந்தது. "என்னை மன்னிச்சுடு, காந்திமதி நான் வேணுமின்னு செய்யலே" என்று துயரத்தோடு மொழிந்தான் அவன்.
"தள்ளாதே தள்ளாதேன்னு கெஞ்சினதைக் கூடக் கேட்காமல் பிடிச்சுத் தள்ளிப்போட்டு, இப்ப மன்னிப்பாம்! மன்னிப்பு என்ன வேண்டிக்கிடக்கு மன்னிப்பு?" என்று கொதிப்போடு கூறிவிட்டு அவள் திரும்பிப் பாராமலே அங்கிருந்து நடந்தாள்.
அவள் அப்பா அம்மாவிடம் சொல்லி விடுவாள்; தனக்குச் சரியானபடி ஏச்சு கிடைக்கும் என்று நிச்சயமாகப்பட்டது அவனுக்கு. அதனால் அவன் நேரே வீட்டுக்குப் போகாமல் ஆற்றங்கரைப் பக்கம் சென்று பொழுதை ஒட்டினான். அவன் மனக் குறுகுறுப்பு தணியவில்லை. இருட்டும் வேளையில் அவன் வீடு வந்தான். "ஏ சந்திரா, இங்கே வா. காந்தி முகத்தை நீயே பாரு" என்று குரல் கொடுத்தாள் அவன் அம்மா.
அவன் குற்றம் செய்த நெஞ்சுச் சுமை அழுத்த, என்னவோ ஏதோ என்ற கலவரம் தள்ள, மெதுவாகச் சென்றான். காந்தி நடந்துள்ள, அனைத்தையும் சொல்லியிருப்பாள், இப்பொழுது உரிய "மண்டகப்படி" கிடைக்கும் என்றும் மனம் அரித்தது.
காந்திமதியின் நெற்றி புடைத்திருந்தது. முகமே வீங்கிவிட்டது போல் தோன்றியது. சந்திரன் பயந்துகொண்டே வந்ததைக் கவனித்த அவள் உதடுகளில் சிறு சிரிப்பு ஊர்ந்தது. அவள் அவனைப் பார்த்த பார்வையிலும் ஏதோ அர்த்தம் மறைந்து கிடந்தது. அவன் உள்ளத்தில் பயம் நிறைந்திருந்த போதிலும், அவளுக்காக அனுதாபமும் கவலையும் கொள்வதற்கும் இடம் இருந்தது.
"ஊஞ்சல் என்ன ஊஞ்சல் வாழுது! அப்படியே ஆட நினைச்சாலும் வீட்டுக்குள்ளே சங்கிலிகளையும் ஊஞ்சல் பலகையையும் மாட்டி, ஏறியிருந்து ஆடுறது. மரத்திலே கயிற்றைக் கட்டிக்கொண்டு ஆடுவானேன்? கயிறு அறுந்து கீழே விழுவானேன்? நல்ல காலம், இலேசாகப் போயிட்டுது….” சந்திரனின் அத்தை தன் மகளைக் கண்டிக்கும் தோரணையில் பேசினாள்.
அவள் பேச்சுக்கு விளக்கம் கொடுப்பது போல் அவனுடைய தாய் விஷயத்தை எடுத்துச் சொன்னாள். கயிற்றில் உட்கார்ந்து வேகமாக ஊஞ்சல் ஆடியபோது, கயிறு அறுந்து அவள் தானாகக் கீழே விழுந்துவிட்டதாகக் காந்திமதி அம்மாவிடம் சொல்லியிருக்கிறாள். இதைப் புரிந்து கொண்டதும் அவன் அதிக மகிழ்வு கொண்டான். காந்தி பேரில் அவனுக்கு இருந்த பிரியமும் அதிகரித்தது. அவன் நன்றியோடு அவளைப் பார்த்தான். அவள் கண்களில் குறும்புத்தனம் சுடரிட்டது. அவளிடம் கேலியாக ஏதாவது சொல்லவேண்டும் என்று அவன் மனம் துடித்தது. ஆனால், அப்படி ஏதாவது சொல்லப் போனால் அவள் கோபம்கொண்டு உண்மையை அறிவித்து விட்டால்? அந்தப் பயம் அவன் வாய்க்குத் தடை போட்டது. சில அனுதாப வார்த்தைகளைத் தான் சொல்ல முடிந்தது அவனால்,
இவ்வாறு சின்னஞ் சிறு வயசிலிருந்தே காந்திமதிக்குத் தன்னிடம் அதிக ஆசை உண்டு என்பதை எடுத்துக் காட்டும் இனிய நினைவுகளை அசை போட்டவாறே நீராடி விட்டுச் சந்திரன் மெதுவாக வீடு நோக்கிக் கிளம்பினான். காந்தி போய் எவ்வளவோ நேரமாகியிருந்தது.
ஆற்றோரத்து அழகிய ஊரிலிருந்து படிப்பதற்கென்று பக்கத்து நகரம் ஒன்றில் குடியேறிய குடும்பங்களில் சந்திரன் குடும்பமும் ஒன்று. அவன் தந்தை இறந்த பின்னரும் தாய் பிள்ளைகளைப் படிக்கவைக்க வேண்டும் என்பதற்காக நகரிலேயே வசித்து வந்தாள். சந்திரனின் அண்ணன் சேதுராமன் காலேஜ் படிப்பை முடித்துவிட்டு, ஏதோ ஒரு உத்தியோகத் துக்குரிய படிப்பு படித்துக் கொண்டிருந்தான். சந்திரன் பத்தாவது பாஸ் செய்த பிறகு, "வேலை தேடுகிறேன்" என்று ஊரைச் சுற்றி வந்தான். கிராமத்திலிருந்த வீட்டையும் நிலத்தையும் அவர்கள் மாமா மேற்பார்த்து வந்தார்.
ஆண்டுதோறும் விடுமுறைக் காலத்தில் பார்வதி அம்மாள், மகன் சந்திரனோடு கிராமத்துக்கு வந்து தங்கியிருப்பாள். சேதுராமன் நண்பர்களோடு வெளியூர்களுக்குச் சுற்றப் போய் விடுவான். அல்லது நகரத்திலேயே தங்கி விடுவான். ஆற்றங் கரை அருகே இருந்தாலும், அழகான ஊராக இருந்தாலும், "பட்டிக்காட்டு ஊர் அவனுக்குப் பிடிப்பதில்லை. "அவன் ஒரு மாதிரி. முசுடு. சிடுசிடுத்த அண்ணாவி” என்பதுதான் மாமாவின் கருத்து.
மாமா சிதம்பரம் பிள்ளைக்குச் சின்ன மருமகன் மீதுதான் பிரியம் அதிகம். "சின்ன மாப்பிள்ளைப் பிள்ளே!" என்று அன்போடும் முக மலர்ச்சியோடும் அழைத்து ஏதாவது பேச்சுக் கொடுப்பார். "தமது அருமை மகள் காந்திமதியைச் சந்திரனுக்குக் "கட்டிக் கொடுத்து", அவனையும் ஊரோடு இருக்கும்படி செய்துவிடலாம். நிலத்தைப் பார்த்துக் கொள்ளுவதோடு, கர்ணம் வேலைக்குப் படித்துக் கணக்குப் பிள்ளையாக உத்தியோகம் பெற்று விட்டால், காந்திமதியின் குடும்ப வாழ்க்கை உல்லாசமானதாக விளங்கும். இவ்விதம் அவர் திட்டம் வகுத்திருந்தார். அது அவர் மனைவிக்கும் பிடித்திருந்தது. காந்திமதிக்குக் கசந்தா கிடக்கும்?
காந்திமதி "பெரிய மனுவழி" ஆனவுடன், சிதம்பரம் பிள்ளை பார்வதி அம்மாளிடம் தமது கருத்தை அறிவித்தார். அவளுக்கும் திருப்திதான். "உங்கள் வார்த்தைக்கு நான் என்றைக்காவது மறுவார்த்தை பேசியது உண்டா, அண்ணாச்சி? நீங்க வந்து எல்லாருக்கும் நல்லதை எண்ணித்தானே காரியம் செய்வீங்க? சந்திரனுக்குக் காந்தி என்றாலே உசிரு. காந்திக்கும் சின்ன அத்தான் மேலே ஆசைதான்" என்று அவள் சொன்னாள். பெரியவனுக்குக் காந்திமதியிடம் வெறுப்புமில்லை, விருப்பு மில்லை என்று அவள் அறிந்திருந்தாள்.
காந்திமதி அவ்வப்போது அத்தை வீட்டில் தங்கிப் போக வருவதுண்டு. அவள் தோற்றமும் அழுக்குப் பாவாடையும், பழந்துணியைக் கிழித்துத் தலைப் பின்னலை முடிந்து வைத்திருப்பதும் சேதுராமனுக்குப் பிடிக்காது. “மூஞ்சியைப் பாரு பனங்காய் மாதிரி. சுத்தப்பட்டிக்காடு!" என்று குத்தலாகச் சொல்லுவான். அவளுடைய வாயரட்டையும் அவனுக்கு மகிழ்வு தந்ததில்லை. ஆனால் சந்திரனோ வேண்டுமென்றே அவள் வாயைக் கிளறி, வம்புக்கிழுத்து வசவு வாங்கிக் கட்டிக் கொள்வதில் உற்சாகம் காட்டுவான். "காந்திக்கும் சந்திரனுக்கும் தான் ரொம்பவும் பொருத்தம். அம்மான் பிள்ளை அத்தை பிள்ளை என்பது சரியாகத்தான் இருக்கிறது. இரண்டுபேரும் எப்பப் பார்த்தாலும் இசலிக் கொண்டே இருக்கிறார்களே! அப்படிக் கலகலப்பாக இருப்பதும் நல்லாத்தானிருக்கு" என்று பெரியவர்கள் பெருமைப்படுவது வழக்கம்.
இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைத்து விடலாந் தான். ஆனால், பெரியவன் இருக்கிறபோது சின்னவனுக்கு எப்படி முதலில் கல்யாணம் பண்ண முடியும்?
மாமா பெண் தேடிப் பெரியவனுக்குக் கல்யாணத்தை முடித்துவிடலாமென முயன்ற போது, சேதுராமன்தான் குறுக்கிட்டான். "எனக்குக் கல்யாணத்துக்கு இப்போ என்ன அவசரம்? உத்தியோகம் கிடைக்கட்டும். அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்பொழுது கல்யாணத்தைப் பண்ணிக்கொண்டு யார் கஷ்டப்படுவது?" என்று உறுதியாகக் கூறினான் அவன். அவனுடைய மனசை யாரும் மாற்ற முடியவில்லை.
"வருசமாக ஆக வயசும் ஆகிக் கொண்டே போகிறதே. நம்ம காந்தியை எவ்வளவு காலம் வீட்டோடு கன்னியாகவே வைத்துக் கொண்டிருக்க முடியும்?” என்று காந்திமதியின் அம்மா முணுமுணுக்கத் தொடங்கினாள்.
"இந்தத் தடவை பார்வதி வரட்டும். ரெண்டுலே ஒண்ணு நிச்சயமாக முடிவு பண்ணிப் போடுவோம். சேதுராமனும் இம்முறை இங்கே வருவதாகச் சொல்லியிருக்கிறான். இரண்டு பேர் கல்யாணத்தையும் சேர்த்தே முடித்துவிடலாம்” என்றார் சிதம்பரம் பிள்ளை.
“என்ன மாமா, செளக்கிய மெல்லாம் எப்படி?" என விசாரித்தபடி வந்து சேர்ந்தான் சந்திரன். "நான் நேற்று இரவே வந்து விட்டேன். அம்மாவும் அண்ணனும் இன்று வருவார்கள்" என்று தெரிவித்தான்.
"கல்யாண விஷயமாகச் சேது என்னவாவது சொன்னானா? அவன் எண்ணம்தான் என்ன? உனக்குத் தெரிந்திருக்குமே?” என்று மாமா அவனிடம் விசாரித்தார்.
”அண்ணாச்சி இதுபோன்ற விஷயங்களை என்னிடம் சொல்வது கிடையாது. அவர்கள் அபிப்பிராயம் என்னவோ, எனக்கென்ன தெரியும்!” என்று கூறிச் சிரித்தான் சந்திரன், "காந்திக்காக நான் ஒரு பிரஸன்ட் வாங்கி வந்திருக்கிறேன். அருமையான கண்ணாடி, கையகலம் கண்ணாடியை வைத்துக் கொண்டு - அதிலும் ரசம் போய் மங்கிவிட்டதே - அவள் சிரமப்படுவதை நான் ஒரு சமயம் பார்த்திருக்கிறேன். அதனாலே நல்ல கண்ணாடியாக ஒன்று வாங்கி வந்தேன்"? என்று சொல்லி, முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை அவரிடம் கொடுத்தான்.
காந்திமதியின் மகிழ்ச்சியை அவளது வளைகளின் கலகலப்பு எடுத்தியம்பியது.
“இன்றைக்கு மாப்பிள்ளைக்கு மத்தியானச் சாப்பாடு நம்ம வீட்டிலே” என்று சொன்னார் சிதம்பரம் பிள்ளை.
“சரி. அப்புறம் வாறேன்!” என்று கூறி எழுந்த சந்திரனின் கண்கள் வீட்டின் உட்பக்கம் துழாவின. அவை ஏமாறவில்லை.
காந்திமதி அவன் பார்வையில் படும் இடத்தில் நின்றாள், ஒரு கையில் கண்ணாடியை வைத்துக்கொண்டு. அதை அவள் தன் முகத்துக்கு நேராக எதிரே பிடித்திருக்கவில்லை. ஒரு கன்னத்தின் பக்கம் வைத்திருந்தாள். அதில் அவள் முகத்தின் ஒரு கோணம் நிழலிட்டது. குறுகுறுக்கும் விழி ஒன்றும், குறும்புச் சிரிப்பு தீட்டும் இதழ்களின் ஒரு பகுதியும் மின்னின. அவள் கண்கள் சிரித்தன; இதழ்கள் சிரித்தன; முகம் முழுதுமே சிரிப்பால் மலர்ந்து எழிலுற்று விளங்கியது.
கண்ணாடியின் வழவழப்பு சிறந்ததா? அதனுடன் போட்டியிடும் கன்னத்தின் மினுமினுப்பு சிறந்ததா? இப்படிப் பரீட்சை நடத்துகிறாளோ என்னவோ!" என்று சிரித்தது அவன் உள்ளம். அதனால் அவன் முகமும் சிரித்தது. மகிழ்வு குலுங்கும் உள்ளமும் உருவமும் பெற்றவனாய் வெளியே போனான் சந்திரன்.
காலம் மனித உள்ளங்களோடும் உணர்வுகளோடும் விளை யாடத் தவிக்கிறது; விபரீத வேடிக்கைகளை விதைத்து மனித வாழ்க்கையையே தாறுமாறாக்கி விடுகிறது என்பதைச் சந்திரன் அந்த வேளையில் அறிந்திருக்கவில்லை தான். ஆனால், சீக்கிரம் அவன் உணர்ந்து கொள்வதற்குக் காலமே துணைபுரிந்தது.
சந்தோஷமாக வெளியே சென்ற சந்திரன் மகிழ்வே உருவானவன் போன்று அங்கே திரும்பி வருவதற்குள் மூன்று மணி நேரம் தான் ஓடியிருந்தது. ஆயினும் அது அவனுக்கு அதிர்ச்சியைச் சிருஷ்டித்து விட்டிருந்தது.
சந்திரன் திரும்ப வந்தபோது, அவ்வீட்டிலே ஏதோ சோக நிழல் கவிந்துகிடப்பதுபோல் உணர்ந்தான். சிதம்பரம் பிள்ளையின் முகத்தில் வாட்டம் மட்டும் படிந்திருக்க வில்லை. கவலையும் சிந்தனையும் முகாமிட்டிருப்பதையும் அவன் காண முடிந்தது. உள்ளே அடி எடுத்து வைத்த "சின்ன மாப்பிள்ளைப் பிள்ளை"யைக் கண்டதும் வழக்கமாக ஏற்படும் மலர்ச்சி அவர் முகத்தில் படரவில்லை. மாறாக, ஒரு வேதனை படர்ந்ததாகத் தோன்றியது. அவர் கண்கள் அவன் முகத்தில் பதிந்தன. எனினும் அவனைப் பாராத பார்வையே அவ்விழிகளில் படலம்போல் படிந்து நின்றதாகத் தெரிந்தது.
“என்ன மாமா?” என்றான் அவன். பெருமூச்செறிந்தார் பிள்ளை.
அவன் அக்கறையோடு கேட்கலானான். ”ஏன் மாமா ஒருமாதிரி இருக்கிறீர்கள்? திடீரென்று உடம்புக்கு ஏதாவது.”
சிதம்பரம் பிள்ளை பரிவோடு, பாசத்தோடு, வேதனையோடு அவனை உற்று நோக்கினார். "சந்திரா!” என்றார், எதை முதலில் ஆரம்பிப்பது, சொல்ல வேண்டியதை எப்படிச் சொல்லுவது என்று புரியாதவராய், மனக் குழப்பத்தோடும் உணர்ச்சிகளின் குழப்பதலோடும் அவர் அவனைப் பார்த்தார்.
“என்ன மாமா?” என்று பதறினான் அவன். "நீ வீட்டிலேயிருந்து தானே வாறே?” என்று அத்தை குரல் கொடுத்தபடியே முன் அறைக்கு வந்தாள்.
“இல்லையே. நான் வீட்டுக்கே போகவில்லை. எங்கெங்கோ சுற்றிவிட்டு வருகிறேன்” என்று திகைப்போடு பேசினான் சந்திரன்.
"உன் அண்ணன் இங்கே வந்திருந்தான்" என்று இழுத்தாள்
"ஓ" என்றான் அவன். "சந்திரா, உட்காரப்பா!" என்றார் மாமா, "உன்னிடம் இதை எப்படிச் சொல்வது என்றே புரியல்லே. ஆனாலும் சொல்லித்தான் ஆகணும்."" தயக்கம் அவர் பேச்சுக்குத் தடை போட்டது.
சந்திரனின் உள்ளத்திலே இனம் புரியாத ஒரு கலக்கம் புகுந்தது. "சும்மா சொல்லுங்க, மாமா! ஏதாக இருந்தால் என்ன?" என்றான்.
"சேதுராமன் கல்யாணம் செய்துகொள்ளத் தயாராக இருக்கிறான்.”
அட பைத்தியக்கார மனுஷா இதுக்கா இவ்வளவு பீடிகை!
என்னமோன்னு நான் பயந்து விட்டேனே!" என்று கூறவேண்டும் போலிருந்தது அவனுக்கு.
மாமா தொடர்ந்து பேசினார்: “கல்யாணம் செய்து கொள்வது என்றால், காந்திமதியைத் தான் கல்யாணம் செய்து கொள்வேன். அவளை எனக்குத் தர இஷ்டமில்லை-யென்றால், இந்த வருஷமும் எனக்குக் கல்யாணம் கிடையாது; இன்னும் அஞ்சாறு வருஷத்துக்கும் நடக்காது. சந்திரனுக்கும் இப்போ நடக்க முடியாது; அவன் தண்டச் சோறு தின்றுவிட்டு ஊரைச் சுற்றி வருகிறான்; அவன் எப்படிக் குடும்பம் நடத்த முடியும்?" என்று சொன்னான். அவன் பிடிவாத குணம்தான் உனக்குத் தெரியுமே! காந்தி மீது உனக்குத்தான் பிரியம் கிடையாதே என்று சொன்னேன். "யார் அப்படிச் சொன்னது? அவ சின்னப் பிள்ளையாக இருந்தபோது - பம்பை பரட்டையாகத் திரிந்தபோது, அவளை நான் அலட்சியமாகப் பார்த்திருப்பேன். போன வருஷம் காந்தியைத் தற்செயலாக நான் பார்க்க நேர்ந்தது. குத்துவிளக்கு மாதிரி இருக்கிறாள் என்று தோன்றியது. அவள் என் மாமா மகள் என்பதில் எனக்கு மகிழ்ச்சியும் பெருமையும் ஏற்பட்டன. அவளைக் கல்யாணம் செய்துகொள்ள எனக்கு உரிமை இல்லையா என்ன? இப்படி எவ்வளவோ சொன்னான்".
“சரி. நீங்கள் என்ன சொன்னீர்கள்?" என்று சந்திரன் கேட்டான்.
"நான் என்னத்தைச் சொல்றது?" எனத் தயங்கினார் பெரியவர்.
"அண்ணனுக்கு முடிவாக என்ன சொன்னிர்கள்?" மாமா வின் தீர்மானத்தை அறியத் தவித்தான் அவன்.
“அவன் அப்படிப் பிடிவாதமாகப் பேசுகிற போது நான் என்ன செய்வது, சந்திரா? காந்தியை எவ்வளவு வருஷங்கள் கன்னியாகவே வைத்துக் காப்பாற்ற முடியும்?...."
"ஆமாம். அண்ணாச்சிக்கு நல்ல உத்தியோகம் கிடைத்து விட்டது. நகரத்தில் சுகமாக வசிக்க முடியும். உங்கள் மகள் செளக்கியமாக வாழட்டும்" என்று கூறிவிட்டுத் திரும்பி நடக்கலானான் சந்திரன்.
“சந்திரா சந்திரா. எங்கே போகிறே?" என்று கத்தினார் மாமா.
"இனி அது என் கவலை. எனது வாழ்க்கை என்றுமே என்னுடைய பிரச்னை" என்று கூறியபடியே நகர்ந்தான் அவன்.
"சாப்பிடாமல் போகிறாயே, சந்திரா! உனக்காக விசேஷ மாகச் சாப்பாடு தயாரித்து." என்று அத்தை பேச்செடுத்தாள்.
“என் பசி எல்லாம் போயே போய் விட்டது" என்று கூறிய சந்திரன் வாசல் நடையை அடைந்தான். அவன் வீட்டினுள் திரும்பிப் பார்க்கவும் விரும்பினானில்லை. ஆயினும் அவன் செவிகளைத் தாக்கத் தவற வில்லை ஒரு ஒசை.
கைதவறிக் கீழே விழுந்து உடைந்த கண்ணாடி எழுப்பிய "சிலீர் ஓசை அது.
நெடிய பெருமூச்சு ஒன்றை உந்தியபடி தெருவில் இறங்கி வேகமாக நடந்தான் சந்திரன். அப்பொழுது வெய்யில் நன்றாகக் காய்ந்து கொண்டிருந்தது. எனினும் எங்கும் இருண்டு கிடந்ததாகவே தோன்றியது அவனுக்கு.
------------
23.. வேலைக்காரி
”நல்ல ஆளா ஒருத்தி இருந்தால் சொல்லுங்க அண்ணாச்சி. சமையலுக்கும் வீட்டு வேலைக்கும் ஒரு ஆளு வேணும்" என்றார் சிவராமன், எதிரே வந்த சூரியன் பிள்ளையிடம்.
"ஏன், பஞ்சவர்ணத்தம்மா என்ன ஆனாள்?" என்று கேட்டார் பிள்ளை.
”அவள் தன் சுயவர்ணத்தை காட்டிப் போட்டாள்!" என்று சொல்லி, சிவராமன் பொருள் பொதிந்த சிரிப்பை உதிர்த்தார்.
"என்ன விஷயமய்யா? இப்ப அவ உங்க வீட்டிலே இல்லையா?” அறிந்துகொள்ள வேண்டும் என்ற அவா சூரியன் பிள்ளையைத் தூண்டியது.
ஆனால், பசி பசி என்று படுத்திய குழந்தைகளுக்காக இட்டிலி வாங்கி வர வேகமாகக் கிளம்பியிருந்த சிவராமனுக்கு நின்று பேச நேரமில்லை. "ராத்திரி வரை இருந்தாள். அப்புறம் ஆள் அவுட்! சொல்லாமலே கம்பி நீட்டி விட்டாள். அது ரொம்ப ரசமான விஷயம். அப்புறம் சொல்றேனே" என்று, பிள்ளையின் ஆவலைக் கிளறிவிட்டு விட்டு அவசரமாய் நடந்தார்.
- நம்ம சிவராமன் சார் வீட்டுக்கு வந்து போகிற வேலைக்காரி ஒவ்வொருத்தியும் ஒவ்வொரு டைப் தான் ஒருத்தியாவது ரொம்ப நாள் நிலைத்திருந்ததில்லை. இந்த பஞ்சவர்ணத்தம்மாள் நீடிச்சு வேலை பார்ப்பாள்னு தோணிச்சு. அவளும் போயிட்டாளா? ஊம்ம்….
சூரியன் பிள்ளைதான் பஞ்சவர்ணத்தம்மாளை வீட்டில் வேலைக்குச் சேர்த்து விட்டவர். "வாழ்க்கையில் ரொம்பவும் கஷ்டப்பட்டவள். வசதியான இடம் கிடைத்தால் பிழைப்புக்கு வழி பண்ணிவிடுங்க" என்று, அவருக்கு வேண்டியவரும் அந்த அம்மாளுக்குச் சொந்தக்காரருமான ஒருவர், அடிக்கடி தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தார். அந்தச் சந்தர்ப்பத்தில் சிவராமனும் "வீட்டு வேலைக்கு ஒரு ஆள் கிடைத்தால் சொல்லுங்களேன்" என்று பிள்ளையிடம் கேட்டுக் கொண்டார்.
சிவராமன் சாரையும் அவர் குடும்பத்தையும் நன்கு அறிந்தவர் பிள்ளை. மரியாதைக்காக அவரை இவர் "சார் போட்டுப் பேசுவதும் குறிப்பிடுவதும் உண்டே தவிர, சிவராமன் "ஸார்" (உபாத்தியாயர்) வேலை எதுவும் பார்க்கவில்லை. ஏதோ ஒரு ஆபீசில் நல்ல உத்தியோகத்தில் இருந்தார். குழந்தைகள் சின்னஞ் சிறுசுகள். வீட்டு அம்மாளுக்கு வேலைக்காரி இல்லாமல் தீராது. இயல்பாகவே "வீக்" அடிக்கடி ஏதேனும் வியாதி வந்து உறவு கொண்டாடிக் கொண்டே இருக்கும். அதனாலே, சமையல் வேலை, இதர வீட்டு வேலைகளை எல்லாம் செய்வதற்கு ஒருத்தி அத்தியாவசியத் தேவை என்ற நிலைமை எப்போதும் உண்டு.
இந்த வேலைக்காரி பிரச்னை சிவராமனுக்கு என்றும் "ஓயாத தொல்லை"யாகவே இருந்து வந்தது. அப்பாடா, வேலைக்காரி ஒருத்தி கிடைத்து விட்டாள். இனிமேல் கவலை இல்லை!" என்று அவர் நினைப்பார். அப்படி நினைத்த நாலைந்து நாட்களுக் குள்ளேயோ, ஒரு வாரத்திலேயோ, மீண்டும் "ஆள் தேடும் படலம்" ஆரம்பிக்க வேண்டிய அவசியம் அவருக்கு ஏற்பட்டு விடும். சில சமயம் ஒரு மாதம் வரை நீடித்திருக்கக்கூடும், கவலை இல்லாத காலம். திடீரென்று ஒரு நாள் வேலைக்காரிக்கு "சீட்டுக் கிழிக்க வேண்டிய நெருக்கடி நிலை தலை தூக்கியிருக்கும்.
சூரியன் பிள்ளை பஞ்சவர்ணத்தம்மாளை அழைத்து வந்து அந்த வீட்டில் விடுவதற்கு முந்தி, பாக்கியம் என்றொருத்தி அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் ஒருத்தி தான் இரண்டு மாத காலம் வேலை செய்தவள்.
- இந்தப் பஞ்சவர்ணம் வேலையிலே சேர்ந்து ரெண்டு மாசம் ஆகியிருக்குமா…. ஊம். இருக்காதுன்னுதான் தோணுது. ஆனா ஒரு மாசத்துக்கு மேலே ஆயிட்டுதுன்னு நினைக்கிறேன்.
பஞ்சவர்ணத்தம்மாள் இந்த வீட்டில் ஒட்டிக்கொள்வாள் என்றுதான் சூரியன் பிள்ளை நினைத்திருந்தார். சாப்பாட்டுக்கே இல்லாது, சிரமப்பட்டுக் கொண்டிருந்தவள். இங்கே வீட்டோடு சாப்பிட்டுக் கொண்டு, இருக்கிற வேலைகளைச் செய்தவாறு செளகரியமாக இருக்கலாம். வேலைகளும் அதிகமாகவோ கடுமையாகவோ இரா. மாதக் கடைசியில் சம்பளம் என்று முப்பது ரூபாய் கிடைக்கும். பஞ்ச நிலையிலிருந்த பஞ்சவர்ணத் தம்மாளுக்கு இது சுகவாசமாக அல்லவா தோன்றும் என்று அவர் எண்ணினார்.
ஆனால் அவள் என்னவோ தன் சுயவர்ணத்தைக் காட்டி விட்டாளாமே?
- அந்த வீட்டின் ராசியோ, அல்லது வந்து சேரும் வேலைக் காரிகளின் ராசிதானோ, ஒருத்தி கூட நிலைத்திருப்பதில்லையே! வீட்டு அம்மாளுக்கு வேலைக்காரியைப் பிடிக்காமல் போய் விடும். இல்லாவிட்டால், வேலைக்காரிக்கு அந்த இடம் ஒத்து வராமல் போய்விடும்! எப்படியானாலும், சிவராமன் சாருக்குத் தான் வேறு ஆள் தேட வேண்டிய பொறுப்பு ஏற்படுகிறது. இது பெரிய தலைவலி தான்.
ஒவ்வொரு வேலைக்காரியைப் பற்றியும் சிவராமன் சூரியன் பிள்ளையிடம் சொல்லத் தவறியதில்லை. தனது மனக்குறையை யாரிடமாவது சொல்லித் தீர்த்தால் ஏதோ ஆறுதல் ஏற்படுமே! "சும்மா தெரிந்தவர்" என்ற நிலையிலிருந்து, "சிநேகிதர்" என்ற தகுதிக்கு உயர்ந்திருந்த சூரியன் பிள்ளையிடம் சொல்லாமல் அவர் வேறு யாரிடம் கூறுவார்?
ஆகவே, எல்லா வேலைக்காரிகளைப் பற்றியும் அவருக்குத் தெரிந்துதானிருந்தது.
இரண்டு மாத காலம் வேலை பார்த்து "ஒரு ரெக்கார்டு" ஏற்படுத்தி விட்ட பாக்கியம் நன்றாகத்தான் நடந்து வந்தாள். அவ் வீட்டிலேயே அதிக நாள் நீடித்து விட்ட தெம்பிலோ என்னவோ, வரவர அவள் அதிக உரிமைகள் எடுத்துக்கொள்ளலானாள். தான் இருந்த இடத்தில் உட்கார்ந்தபடியே, "குழந்தைகளை"அதை எடு; இதைச் செய். தண்ணி கொண்டு வா. உருளைக் கிழங்குத் தோலை உரி" என்ற தன்மையில் சில்லறை அலுவல் களைக் கவனிக்கும்படி ஏவலானாள். குழந்தைகள் செய்ய மறுத்தால், கூப்பாடு போட்டுக் கண்டித்தாள். வசைமாரி பொழிந் தாள். குளிப்பதற்கு, வீட்டு அம்மா தனக்கெனத் தனியாக வைத்திருந்த சோப்பை எடுத்து உபயோகிக்கத் துணிந்தாள். பிறகு, கொடியில் கிடந்த நல்ல சேலையை, அம்மாளிடம் கேட் காமல் தானாகவே எடுத்துக் கட்டிக் கொண்டாள். அம்மா கண் டிக்கவும், அதை அவிழ்த்து அப்படியே போட்டு விட்டாள். அல சிப் பிழிந்து உலர்த்தவில்லை என்று அம்மாளுக்குக் கோபம். அவள் சத்தம் போட்டாள். அந்த ஆத்திரத்தை பாக்கியம் குழந்தைகள் மீது திரும்பினாள். அன்று சமையலை சுவையில் லாதவாறு கெடுத்து வைத்தாள். அடிக்கடி முணமுணத்தாள்.
"இனிமேல் நீ சரிப்பட்டு வரமாட்டே!" என்று அம்மா, கணக்குப் பார்த்து ரூபாபைக் கொடுத்து, அவளை அனுப்பி விட்டாள்.
பாக்கியத்துக்கும் முன்னாடி ஒருத்தி வேலை பார்த்தாள். வயது சற்று அதிகமானவள். “பெரியம்மா" என்றே எல்லோரும் அவளை அழைத்தனர். அவள் நன்றாக வேலை செய்வாள் என்றுதான் தோன்றியது. ஆனால், வேலை செய்கிற நேரங் களை விட அதிகமான ஒய்வு வேளைகளை அந்தப் பெரியம்மா விரும்பினாள் என்பது மூன்று நான்கு நாட்களிலேயே புரிந்து விட்டது. காலையில் நேரம் கழித்துத் தான் எழுந்திருப்பாள். மத்தியானச் சாப்பாட்டுக்குப் பிறகு, உண்ட களைப் பால் கண்ணயர்கிற வளை, “பெரியம்மா காப்பி போடலியா?* "நேரமாச்சு பெரியம்மா" என்று "தார்க்குச்சி போட்டுத் தான் எழுப்ப வேண்டும். மேலும், ஒவ்வொரு வேலைக்கும் அதைச் செய், இதைச் செய், என்று தூண்டிக் கொண்டே இருக்க வேண்டும்
.
நான் எப்படி இருக்க வேண்டியவ! என் மகன் மட்டும் சரியாக இருந்தால், நான் இப்படி புழுக்கை வேலை செய்துக் கிட்டு சங்கடப் படனுமா? அவன் ஊரிலே இல்லாத விதமா அதிசயப் பெண்டாட்டி வந்து சேர்ந்து விட்டாள்னு நெனச்சு, அவளை தோள் மேலே தூக்கி வச்சுக்கிட்டுக் கூத்தாடுதானே! அப்புறம் அந்தத் தேவடியா என்னை மதிப்பாளா? எனக்கு அங்கே இருப்புக் கொள்ளலே. எங்காவது வேலை செய்து காலம் கழிக்கலாமின்னு கிளம்பிட்டேன்" என்று ஒருநாள் அவள் தன் வரலாற்றைப் புலம்பினாள்.
பெரியம்மாளுக்கு “உழைக்கும் உற்சாகம் குறைந்து கொண்டே வந்தது. தலைவலி, மேல் வலி, நெஞ்சு வலி என்று என்னென்னவோ சொன்னாள். வந்த ஏழாவது நாளே, நான் மகனைப் பார்த்துப் பேசிவிட்டு வாறேன்" என்று பத்து ரூபாய் வாங்கிக் கொண்டு போனாள். போனவள் அப்புறம் வரவேயில்லை.
அவள் இருந்த இடத்துக்கு பாக்கியம் வந்து சேர்ந்தாள். பெரியம்மாதான் விலாசம் சொல்லி அனுப்பி வைத்திருந்தாள். அந்த மட்டுக்கு அவள் பரவாயில்லே!
ஒரு சமயம் அகிலாண்டம் என்றொருத்தி சிவராமன் சார் வீட்டில் வேலை பார்த்தாள். வாயாடி, யாராவது ஒரு பேச்சு சொன்னால், அவள் பதிலுக்கு ஒன்பது பேசுவாள். வேலை களைக் குறைவின்றிச் செய்தாள். ஆனால், வந்த ஐந்தாம் நாளே அவளுக்கு அலுத்து விட்டது. "இதென்ன் வீடு அக்கம் பக்கத்திலே வீடுகளே இல்லாமல்! பேச்சுத் துணைக்கு இங்கே யாருமே இல்லியே. வேலை செய்து முடிச்சப்புறம் கொட்டு கொட்டுனு முழிச்சுக்கிட்டிருக்க வேண்டியிருக்கு. இல்லைன்னு சொன்னா, சுருண்டு முடங்கிப் படுத்துக் கிடக்கணும். ஒருத்தி எவ்வளவு நேரம் தான் தூங்குவா? பேசக் கொள்ள அண்டை அசலிலே ஆளுக இருந்தால் அல்லவா கெதியா இருக்கும்? இப்ப அட்டுப் புடிச்ச மாதிரி இருக்கு. இப்படி ஒரு மாசம் இருந்தால் எனக்குப் பைத்தியமே புடிச்சிடும்!" என்று சொல்லி விட்டுப் போய் சேர்ந்தாள்.
சிவகாமி என்று ஒரு வேலைக்காரி இருந்தாள். சரியான சாப்பாட்டுராமி. முதலில் தனக்கு திருப்தியாய் பார்த்துக் கொள்ளுவாள். அப்புறம் தான் குழந்தைகளுக்கும், வீட்டு ஐயாவுக்கும் அம்மாவுக்கும். காப்பி தனக்கென்று "ஸ்பெஷலா, ஸ்ட்ராங்கா தயார் பண்ணிக் கொள்வாள். அதுவும் அடிக்கடி வேண்டும். தோசை சாப்பிடும் போது ஒவ்வொரு தோசைக்கும் நிறையவே எண்ணெய் ஊற்றிக் கொள்வாள். நெய்யும் எடுத்துக் கொள்வாள். ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா போன்றவற்றை சும்மாவே கரண்டியால் அள்ளி வாயில் போட்டுச் சுவைத்து மகிழ்வாள். நெய்யையும் சீனியையும் கலந்து தின்பதில் அவளுக்கு விசேஷப் பிரியம் இருந்தது.
அவள் வந்து சேர்ந்து பத்து நாட்கள் கூட ஆகவில்லை. வழக்கம் இல்லாத வழக்கமாக, அவ்வீட்டில் சாமான்கள் ஏகத்தாறாகக் காலியாகி விட்டன. நெய்யும் எண்ணெயும், சீனியும் பிறவும் அதிகம் வாங்க நேரிட்டது. இவளை வைத்துக் கொண்டு வேலை வாங்கினால், நம்ம வருமானத்துக்குள்ளே குடும்பம் நடத்த முடியாது; கடனுக்கு மேல் கடன் தான் வாங்க வேண்டியதாகும் என்று சிவராமன் உணர்ந்தார். சிவகாமி வெளியேற நேர்ந்தது.
சிவகாமிக்கு நேர்முரணான ஒருத்தி ஒரு சமயம் அவ்வீட்டில் வேலை பார்த்தாள். பேரு ராசம்மாளோ என்னவோ. அவள் தன் வயிற்றுக்குச் சரியாகச் சாப்பிடமாட்டாள். தனக்கு உரியதை எடுத்து மூடிவைத்து விடுவாள். அப்படியே மறந்தாலும் மறந்து போவாள். "ராசம், சாப்பிட்டையா?" "சாப்பிடலியா ராசம்மா? "நேரமாச்சு, சாப்பிடு. வேண்டியதைச் சாப்பிடு! இப்படி அவளை அடிக்கடி தாங்கி உபசரித்தாலும், அவளுக்கா மனம் இருந்தால்தான் சாப்பிடுவாள்: வெற்றிலை புகையிலை மட்டும் அடிக்கொரு தடவை வாயில் திணிக்கப்படும். "அதனால் தான் பசி மந்திச்சுப் போகுது சாப்பாடு வேண்டிருக்கலே" என்று சிவராமன் குறிப்பிடுவார்.
அவள் சுத்தமாகவும் இருக்க மாட்டாள். மூக்கைச் சிந்தி, சுவர் மீது விரலைத் துடைப்பாள். கால் கைகளை நன்றாகக் கழுவ மாட்டாள். தினசரி குளிக்க வேண்டியிருக்குதே" என்று ரொம்பவும் சங்கடப்படுவாள்.
அவளுடைய "அசுத்த மோகம்" வீட்டம்மாளுக்குப் பிடிக்கவில்லை. "சீக்கிரமே போ அம்மா!" என்று வழி அனுப்பி வைத்தாள்.
ராசம்மாளுக்குப் பிறகு வந்த சுந்தரம் சுத்த மோகியும் சிங்காரப் பிரியையுமாக இருந்த காரணத்தினால் வெளியேற்றப் பட்டாள். அவளுக்கு முப்பது - முப்பத்தைந்து வயது இருக்கும். ஒல்லியாய், கரிக்கட்டையாய், கன்னம் ஒட்டிப் போய்த்தான் இருந்தாள். அவள் மனசில் "நாம ரொம்ப அழகு" என்ற எண்ணம் இருந்திருக்கும். அடிக்கடி கண்ணாடி முன்நின்று அழகு பார்த்துக் கொள்வது அவளது பொழுது போக்குகளில் ஒன்று. அதே மாதிரி, தினசரி மூன்று நான்கு தடவைகள் முகம் கழுவி, பவுடரை தாராளமாகப் பூசி, பொட்டிட்டு, தலையைச் சீவிக் கொள்வதிலும் சிரத்தை காட்டுவாள். காலையில் அடுப்புச் சோலி முடிந்ததும் இப்படிச் சிங்காரித்துக் கொண்டு மார்க்கெட்டுக்குப் போவாள். மத்தியானச் சமையல் ஆனதும், முகம் கழுவிப் பவுடர் தடவிக் கொள்வாள். அதே மாதிரிச் சாயங்காலமும், காலையிலும் மாலையிலும் குளிப்பாள். வாசனை சோப்பு இல்லாமல் குளிக்க மாட்டாள்.
சிவராமனின் புத்தக அலமாரியை, மேஜையை எல்லாம் கண்ணோட்டம் விட்டாள் சுந்தரம். "என்ன புத்தகம் இதெல்லாம்! மர்மக் கதை, துப்பறியும் நாவல், அது மாதிரி எதுவுமே இல்லையே? சினிமாப் பத்திரிகை ஒன்றுகூட வாங்குவதில்லையா? அழகழகாப் படங்கள் போட்ட பத்திரிகைகள் எத்தனையோ வருதே - நீங்க எதுவுமே வாங்குறதில்லையா?" என்று விசாரித்தாள்.
”இந்த மேனாமினுக்கி நம்ம வீட்டுக்கு வேண்டாம்” என்று சிவராமனும் அவர் மனைவியும் ஏகமனதாகத் தீர்மானித்து, அத்தீர்மானத்தை உடனடியாகச் செயலுக்குக் கொண்டு வந்தார்கள்.
பெரியவர்கள், தெரியாதவர்கள் தான் இப்படி ஏறுமாறாக வந்து வாய்க்கிறார்க்ள்! நம் ஊரிலிருந்து, சொந்தக்காரங்க வீட்டிலிருந்து, ஏழைச் சிறு பெண் ஒருத்தியை அழைத்து வந்தால், திருப்திகரமாக நடந்து கொள்ளக் கூடும் என்று சிவராமன் எண்ணினார். அவ்வாறே, ஒரு பெண்ணைக் கூட்டி வந்தார். பதின்மூன்று வயது இருக்கும் அவளுக்கு. சகல வீட்டு வேலைகளையும் செய்து அனுபவப்பட்டவள்தான். குழந்தை களிடம் பிரியமாக இருந்தாள். குழந்தைகளும் "அக்கா, அக்கா” என்று அவளிடம் ஆசையோடு பழகின.
அவள் அவ்வீட்டுப் பெண் மாதிரியே. தானும் நடத்தப் படுவாள் என்று எதிர்பார்த்ததாகத் தோன்றியது. குழந்தை களுக்குப் புதுசாகச் சட்டைகள் தைக்கும்போது, தனக்கும் பாவாடை, தாவணி சட்டைகள் வாங்கவேண்டும் என்று அவள் ஆசைப்பட்டாள். எனக்கு ஒண்ணும் இல்லையா மாமா என்று கேட்கவும் செய்தாள். அடிக்கடி சினிமாவுக்குப் போக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாள். குழந்தைகளுக்காக வாங்கப்பட்டுள்ள பவுடர், கண் மை, வாசனைச் சாந்து, ஹேராயில், ரிப்பன் முதலியவற்றை அவள் தாராளமாக எடுத்து உபயோகித்தாள். வறுமைச் சுழலில் வாழ்ந்தவள் ஆதலால், இங்கு வளங்களைக் கண்டதும் "காய்ந்த மாடு கம்பிலே விழுந்தது போல, பேராசையோடு அனைத்தையும் அனுபவிக் கத் துடித்தாள். நெய்யை வெறும் வாயில் தின்றாள். சீனியை வாய் நிறைய அள்ளிப் போட்டுக் கொண்டாள். சிறு குழந்தை களுக்காக வாங்கி வைத்திருக்கும் தின்பண்டங்களையும் பிஸ்கட் தினுசுகளையும், தெரிந்தும் தெரியாமலும் அமுக்குவதோடு நிற்பதில்லை. குழந்தைகள் தின்னும்போது, "ஏய் - ஏய் அக்காளுக்கு இல்லையா?" " அக்காளுக்குக் கொடேன்" என்று எத்திப் பிடுங்கி மொக்குவதிலும் கருத்தாக இருந்தாள்.
அந்தப் பெண்ணின் போக்குகளும் இயல்புகளும் வீட்டு அம்மாளுக்குக் கட்டோடு பிடிக்கவில்லை. ஆகவே ஒரு நாள் அவள் வந்தது போல் சொந்த ஊருக்கே போய்ச்சேர வேண்டியதாயிற்று.
அவர்களுக்கெல்லாம் பிறகுதான் பஞ்ச வர்ணத்தம்மாளுக்கு அவ்வீட்டில் வேலை கிடைத்தது. அவளும் தனது சுயவர்ணத் தைக் காட்டி விட்டாள் என்றால், அப்படி என்ன தான் செய்திருப்பாள்?
சூரியன் பிள்ளையின் ஆர்வம் குறுகுறுத்துக் கொண் டிருந்தது. சிவராமன் சாருக்கு எப்போது வசதிப்படும்; எந்த நேரத்தில் எந்த இடத்தில் அவரை சந்தித்தால், சாவகாசமாகப் பேச முடியும் என்பதெல்லாம் அவருக்கு அத்துப்படி! அவ்விதமே அவரைக் கண்டு உரையாடப் பிள்ளை தவற வில்லை.
பூசி மெழுகாமல் சிவராமனும் விஷயத்தை உள்ளபடி சொல்லித் தீர்த்தார்.
பஞ்சவர்ணத்தம்மாளுக்கு, அதிகமாய் போனால், முப்பத் தஞ்சு வயசு இருக்கலாம். வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும் என்ற ஆசை அவளுள் கனன்று கொண்டிருந்தது. ஆனால் வாழ்க்கை அவளை வஞ்சித்து விட்டது. கல்யாணமாகி யும் என்ன காரணத்தினாலோ கணவன் அவளை விலக்கி வைத்து விட்டான். சாப்பாட்டுக்கே திண்டாடுகிற குடும்ப நிலைமை. எப்படி எப்படியோ காலம் தள்ளவேண்டியிருந்தது. கஷ்ட ஜீவனம்தான். பெரியப்பா மகனான அண்ணாச்சி ஒருவர் அவள் மீது இரக்கப்பட்டு, தம்மாலான உதவிகள் செய்து வந்தார். அவர்தான் சூரியன் பிள்ளையிடமும் உதவி கோரி, அவளுக்கு வழிகாட்டும்படி கேட்டுக் கொண்டார்.
சிவராமன் வீட்டுக்கு வந்த பிறகு அவளுக்கு மூன்று வேளையும் வயிறாறச் சாப்பாடு கிடைத்தது. சாயங்காலம் காப்பி, சில வேளைகளில் ஏதேனும் சிற்றுண்டியும் கிடைத்தது. அதனால் அவளுள் ஒரு தெம்பும், உடலில் ஒரு தெளிவும் சேர்ந்தன. வயிற்றுப் பசிக்கு நிச்சயமான தீர்வு கிட்டியவுடன், அவளிடம் உறங்கிக் கிடந்த இதர பசிகள் விழித்துக் கிளர்வுற்றன போலும்.
தனது புறத் தோற்றத்தில் அவ்வளவாக அக்கறை காட்டாதிருந்த பஞ்சவர்ணத்தம்மாள் இப்போது சிரத்தை கொள்ளலானாள். நன்றாகச் சீவி முடித்து, முகத்துக்குப் பவுடர் பூசிக் கொள்வதில் ஆர்வம் காட்டியதோடு, தன்னை ஆண்கள் பார்க்க வேண்டும் என்ற விருப்பமும் கொண்டாள். அதனால் வேலை இல்லாமலே தெருவில் அங்குமிங்கும் போனாள். வாசல் படியில் நின்று தன்னையே காட்சிப் படுத்தினாள். போகிற வருகிற ஆண்களைப் பார்ப்பதில் ஒரு சந்தோஷம் கண்டாள்.
பார்ப்பதோடு மட்டும் திருப்தி கண்டு விடாத மனம் ஆண்களோடு பேசிக்களிக்கத் தூண்டியது. சமையல்காரியான அவள் யாரோடு பேச முடியும்? பால்காரன், காய்கறி விற்பவன், ஐஸ் வாலா, ரோடோரத்தில் தள்ளு வண்டியில் குளிர் பானங்கள் விற்கிறவன் - இப்படிப்பட்டவர்களிடம் அவளுக்கு ஒரு ஈடுபாடு ஏற்பட்டது. அவர்களிடம் வியாபாரம் பண்ணுவது போல், சிரித்துச் சிரித்துப் பேசி அவர்களையும் பேச்சுக்கிழுத் தாள். இவர்களில் ஒன்றிரண்டு பேர் எடுப்பான உடல் தோற்றமும், உரையாடிக் களிக்கும் மனமும் திறமையும் பெற்றிருந்தார்கள்.
ஒரு நாள் இரவு பஞ்சவர்ணத்தம்மாள் சினிமாவுக்குப் போய் விட்டாள் இரவுக் காட்சிக்கு. அவள் திரும்பி வந்ததும், சிவராமன் கோபித்துக் கொண்டார். "இரவு 10 மணிக் காட்சிக்குத்தானா போக வேண்டும்? மாட்னிக்குப் பேர்கிறது தானே? இல்லாவிட்டால், கேட்டுக் கொண்டு 6.30 மணிக்காட்சிக்குப் போறது!" என்று உபதேசித்தார்.
அது அவளுக்குப் பிடிக்க வில்லை. "வேலைகளை முடித்து விட்டுத் தானே போகணும்? சாயங்காலக் காப்பி போட்னும், ராத்திரிச் சாப்பாடு தயாரிக்கணும். இரவுக் காட்சி தான் செளகரியம். வேலைக்கு இடைஞ்சலாக இராது" என்றாள்.
பிறகு, வாரம் தோறும் அவள் அவ்வாறே செய்யலானாள், அவள் ஒரு மாறுதலாக சினிமா பார்க்கத் தான் போகிறாள் என்றே சிவராமன் எண்ணினார். அது தவறு என்பது அவருக்கு விரைவிலேயே புரிந்து விட்டது.
"உங்க வீட்டு வேலைக்காரியை தியேட்டரிலே பார்த்தேன், ஸார். கூல் ட்ரிங்க்ஸ் விற்பானே ஒருத்தன் - தள்ளு வண்டியிலே வச்சு - சிவப்பா, கட்டுகுட்டுணு, சிலிர்த்து நிற்கும் கிராப்பும் சிரிச்ச முகமுமா - அவனுக்கும் அவளுக்கும் சிநேகம் போலிருக்கு! அந்த அம்மா தன்னை மறந்து அவன் கூடப் பேசிச் சிரிச்சுக்கிட்டு நிக்கறதை நான் பார்த்தேன்" என்று அவரது ஆபீசைச் சேர்ந்த ஒருவன் ஒரு நாள் அவரிடம் சொன்னான். அவருக்குத் "திக் கென்றது".
அன்றே அவர் பஞ்சவர்ணத்தம்மாளிடம் கண்டிப்பாகச் சொல்லி வைத்தார். இனிமேல் அவள் சினிமா இரவுக் காட்சிக்குப் போகக் கூடாது; அப்படிப் போய் விட்டு வந்தால் கட்டாயமாகத் கதவைத் திறக்கவே மாட்டேன் என்று.
முந்திய நாள் இரவு பஞ்சவர்ணத்தம்மாள் வீட்டில் இல்லை. “மனசே சரியில்லை. சினிமாவுக்குப் போறேன் என்று சொல்லி விட்டுப் போனாள்" என்று மனைவி தெரிவித்தாள். உடனே அவரும் தியேட்டர் பக்கம் போனார். தியேட்டருக்கப் போக வேண்டிய தேவையே ஏற்படவில்லை. பஸ் ஸ்டாப்பில் வந்து நின்ற ஒரு பஸ்ஸில் அவளும் கூல்ட்ரிங்க்ஸ் விற்பவனும் ஏறுவதும், உள்ளே போய் ஒரே ஸ்பீட்டில் இருவரும் உட்காருவதும் அவர் பார்வையில் பட்டது. இரண்டு பேரும் சந்தோஷமாகக் காட்சி அளித்தார்கள். இருவரும் சேர்ந்து பேசி, திட்டமிட்டுத் தான் கிளம்பி-யிருக்கிறார்கள் என்பது விளங்கி விட்டது.
"அப்புறம் என்ன! நமக்கு ஒரு வேலைக்காரி வேண்டும். நல்ல ஆளா உங்களுக்குத் தெரிந்த நபர் யாராவது இருந்தால் சொல்லுங்க” என்றார் சிவராமன்.
(தீபம், 1978)
-------------
24. பொன்கொன்றை பூக்கும்போது
அதோ, என் எதிரே, அந்த மரம் மீண்டும் பூத்துக் குலுங்குகிறது. முகமெல்லாம் சிரிப்பேயாகி, சிரிப்பினால் முழு உருவமும் தனியொரு எழிலேயாகி நிற்கும் அழகுப் பெண் போல, அது முழுவதும் சிரிக்கும் மலர்களாகவே விளங்குகிறது. சரம் சரமாகத் தொங்கும் மஞ்சள் பூக்கள். பெயருக்குக்கூட மரத்தில் ஒரு இலையைக் காணோம். அதற்கு ஏன் இத்தனை உள்ளக் கிளர்ச்சி? ஏதுக்கு இத்தனை சிலிர்ப்பு? மங்கையின் உள்ளத்தில் கிளுகிளுக்கும் பருவகாலக் கனவுகள் அவள் முகத்திலும் அங்கங்களிலும் - அவள் மேனி முழுவதிலுமே பூத்துப் பொங்கி வனப்பாய்த் திகழ்வதுபோல், அதற்கும் ஏதேனும் கனவுகள், கிளர்வுகள் உள்ளுற இருந்து, புறத்தில் பொன்னிற மலர்களாய் மொய்த்துக் கிடக்கின்றனவோ?
நான் இந்த ஊருக்கு வந்த புதிதில், முதன் முதலாக இவ்வித எழிற்கோலத்தில் அம்மரத்தைப் பார்த்தபோது, அது என்ன மரம் என்று அறிந்திருந்தேனில்லை. கண்ணைக் கருத்தைக் கவரும் மோகனத் தோற்றமாய் நின்ற அதை அறிமுகம் செய்து கொள்ளும் அவாவோடு ஒரு பெரியவரிடம் விசாரித்தபோது, “பொன் கொன்னை" என்றார் அவர். "சரக்கொன்றை என்றும் சொல்லுவார்கள்."
"கொங்கைகளும் கொன்றைகளும் பூச் சொரியும் காலம்" - என்று நந்திக் கலம்பகத்தில் வருவது, இந்த இனத்து மரமாகத் தான் இருக்க வேண்டும்" என்று நான் எண்ணிக்-கொண்டேன்.
இந்த மரம் குறிப்பிட்ட ஒரு காலத்தில் தான் "பொன் சொரிவது” எனப் பூக்களைக் கொத்துக் கொத்தாய், சரம் சரமாய், தொங்க விட்டுக்கொண்டிருக்கும்; இதர காலங்களில் லைகளோடு வெறும் மரமாய் நிற்கும் என்பதையும் நான் புரிந்துகொண்டேன்.
இந்த மரம் என் உள்ளத்தில் ஒரு நிலையான இடம் பெற்றுவிட்டதற்கு இதனுடைய இந்தத் தனித் தன்மை மட்டுமே காரணம அல்ல.
நாகரிக நகரங்களிலும், பேரூர்களிலும், சில சிற்றுார்களிலும் சிறிது சிறிது காலம் தங்கி, அலுப்புற்று, அமைதியற்று. சும்மா சுற்றிக் கொண்டிருந்த எனக்கு இந்த ஊர் மிகுதியும் பிடித்து விட்டது. இது "பட்டிக்காடு மில்லை; "பட்டணக்கரை"யும் இல்லை. அமைதியாய்நாளோட்ட ஆசைப்படுகிறவர்களுக்கு ஏற்ற அழகான ஊர். இங்கேயே தங்கிவிடலாமே என்றது என் மனம்.
வசதியான ஒருவீடும் கிடைத்தது. "சிறுகுடில்" என்றுதான் அதைச் சொல்ல வேண்டும். பலவித மரங்களும் குளுமை தந்து கொண்டிருந்த சூழ்நிலையில் அது ஒரு ஆசிரமம் போல் இனிமையும் இதமும் தருவதாய் அமைந்துள்ளது. அதை ஒட்டி ஒரு பங்களா". அதைச் சுற்றிலும் பெரிய தோட்டம். அங்குதான் இந்தப் பொன்கொன்றை மரம் நிற்கிறது.
சிறு வீடும் சூழ்நிலையும் எனக்குப் பிடித்து விட்டதால் அதையே என் இருப்பிடமாகக் கொண்டேன் நான்.
பக்கத்துப் பெரிய வீடு எப்போதும் பூட்டியே கிடந்தது. அந்த வீட்டில் ஆட்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எனக்கு ஒன்றுபோல் தான். ஆகவே அதைப் பற்றி அறிந்துகொள்ள நான் அக்கறை காட்டவில்லை.
பொதுவாக யாரைக் குறித்தும் தெரிந்து கொள்ள நான் சிரத்தை கொள்வது இல்லை. என்னையும் எனது புத்தகங்களையும் எனது விந்தைக் குணங்களையும் விசித்திரப் போக்குகளையும் தனிமையாக விட்டு விட்டு மற்றவர்கள் அவரவர் அலுவல்களைக் கவனித்துக் கொண்டிருந்தால் நல்லது என்று எண்ணி ஒதுங்கி வாழும் பிராணி நான்.
அநேகமாக யாரும் என் வழிக்கு வருவதில்லை. சதா புத்தகங்களைக் ”கட்டி மாரடித்துக்கொண்டு", எதிலும் கலந்து கொள்ளாமலும் எவரிடமும் பேசிப் பழகாமலும் எப்படியோ நாளோட்டுகிற ஒரு நபரிடத்தில் மற்றவர்கள் என்ன சுவாரசியத்தைக் கண்டுவிட முடியும்? முதலில், யாரோ என்னவோ என்று அறியும் அவாவுடன் திரிவார்கள். அறிய வேண்டியவற்றை அறிந்துகொண்டதும், தத்தம் இஷ்டம் போல் அபிப்பிராயங்களை உருவாக்கிக்கொண்டு விலகிப் போவார்கள்.
இந்த ஊரிலும் அப்படித்தான் நடந்தது. இதன் மூலமும் எனக் குப் பிடித்தமான அமைதியான சுற்றுச் சார்பு படிந்துவிட்டது.
இப்படி மனசுக்குப் பிடித்தமான முறையில் நாட்கள் ஒடிக் கொண்டிருந்தபோதுதான் "திடீர் விபத்து" மாதிரி நிகழ்ச்சிகள் குறுக்கிட்டன.
பக்கத்து பங்களாக்காரர்கள் வந்துவிட்டார்கள். ஆட்கள் வருவதும் போவதுமாய்ச் சதா ஒரே பரபரப்பு. கூச்சல், குதிப்பு, சிரிப்பாணி எப்போது எழும் என்று சொல்லமுடியாத நிலை.
ஒரு நாள் மத்தியானம் பன்னிரண்டு மணி இருக்கும். தோட்டத்தில் பாட்டுக் குரல் கேட்டது.
"ஐயா சிறுபெண், ஏழை என்பால்,
இரக்கம் வராதா - தெய்வம்
தின்னச் சோறு தராதா?”
என்று பழங்கால சினிமாப் பாடல் ஒன்றை இனிமையாக இசைத்தது ஒரு குரல்.
அது என்னை வெளியே இழுத்தது.
பெரிய பெண் ஒருத்தி பாடிக்கொண்டிருந்தாள். சிறுமி ஒருத்தி உரிய முறையில் ஆடிக்கொண்டிருந்தாள்.
எனக்குச் சிரிப்பு வந்தது.
தற்செயலாக அக்காள் என்னைக் கவனித்து விட்டாள். "ஏட்டி, போதும் நிறுத்து, அந்த வீட்டுக்காரர் பார்க்கிறார்" என்று எச்சரித்தாள்.
“பார்த்தால் பார்க்கட்டுமே!" என்று அலட்சியமாகக் கூறித் திரும்பிய சின்னப் பெண் என்னைக் கூர்மையாகக் கவனித்தாள். “ஏன் சிரிக்கிறீங்க?" என்று கேட்டாள்.
"சிரிப்பு வந்தது. சிரித்தேன்."
அவள் வெடுக்கென்று கேட்டாள்: “ஏன் சிரிப்பு வருதுன்னு கேட்டேன்?"
“சிரிக்கக் கூடாதா?" என்றேன்.
“இல்லை. கேலியாச் சிரிக்கும்படி என் ஆட்டத்திலே என்ன கண்டீங்கன்னு கேட்கேன்!”
அவள் இடுப்பில் கைகளை ஊன்றிக்கொண்டு தலை நிமிர்ந்து நின்று, கண்டிப்பான விசாரணையில் ஈடுபட்டது ரசிக்க வேண்டி யது காட்சியாக இருந்தது.
“அதில்லே."
"அதில்லேன்னா பின்னே எது இருக்கு?"
அவள் கேள்வி எனக்கு மேலும் சிரிப்பைத் தூண்டியது.
அவள் மூஞ்சியை உர்ரென்றாக்கிக்கொண்டு, "இப்ப என்ன சிரிப்பு வாழுது? முதல் சிரிப்புக்கே காரணம் சொல்லியாகலே இன்னும்!” என்றாள்.
"ஏ வாயாடி, இங்கே வா" என்றாள் அக்கா, வீட்டுப் பக்கம் நகர்ந்தவளாய்.
"நீ போ அக்கா. சரி, நீங்க சொல்லுங்க. ஏன் சிரிப்பு வந்தது?" என்று தங்கச்சி விசாரணையைத் தொடர்ந்தாள்.
"பாட்டும் பொருளும் ஒத்து வரலே! அதாவது, நீ ஏழை, உனக்குத் தெய்வம் சோறு தரணும்னுதானே ஆடுறே? ஏழை என்ற சொல்லின் எடுத்துக்காட்டு நீதான் என்றால், உலகத்தில் உன் போன்ற ஏழைகள் நிறைய நிறைய இருக்கலாமே என்று தோன்றியது..."
நான் ஒரு சிறு பெண்ணிடம் ’புத்தகத்தனமாய்’ பேசுகின்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. என் பேச்சு நின்று விட்டது.
"வவ்வவ்வே" என்று கீழ் உதட்டை மடித்து, பல்லால் கடித்து, "வலிப்பு காட்டினாள் அவள்.
"ஏட்டி என்ன கொழுப்பு? இங்கே வா!" என்று அதட்டிய அக்காள். என் பக்கம் பகைமைப் பார்வை எறிந்துவிட்டு வீடு விடென்று நடந்தாள்.
அந்த வீட்டில் இதுபோல் இன்னும் எத்தனை குரங்குகள் வந்திருக்கின்றனவோ தெரியவில்லை!" என்று நான் எண்ணிக் கொண்டேன்.
அப்படி அதிகமாக ஒன்றுமில்லை என்று பின்னர் தெரிந்தது. அந்தச் சிறு பெண், அவள் அக்காள், அம்மா, தாத்தா ஒருவர், ஒரு வேலைக்காரி. அப்பா டவுனில் இருக்கிறார். இவர்கள் வருஷத்துக்கு ஒரு முறை இங்கு வந்து, இரண்டு மூன்று மாதங்கள் தங்கிவிட்டுப் போவார்கள். அப்பா எப்பவாவது வந்தாலும் வருவார்; வராமலும் இருப்பார். தாத்தாதான் அடிக்கடி இந்த ஊருக்கு வந்து போவார். இதெல்லாம் அந்தப் பெண் மூலம் பிறகு எனக்குக் கிடைத்த விவரங்கள்.
அவளுக்குப் பன்னிரண்டு அல்லது பதின்மூன்று வயசிருக் கும். இந்த வயசுப் பெண்கள் எந்த ஊரில் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் சரி, ரொம்பவும் ’இன்ட்டரஸ்டிங்’ கான விஷயங்கள்! இந்த பருவத்தில் பெண் பெரியமனுஷியும் இல்லை; சின்னப்பிள்ளையும் இல்லை. என்றாலும் பெரிய மனுவழிக்கு உரிய தோரணைகளும் எண்ணங்களும் ஆசைகளும் அவளிடம் தோன்றி விடுகின்றன. அதே சமயம், சிறுபிள்ளைத் தனமும் அறியாச் சுபாவமும் அவள் செயலில் வெளிப்படு கின்றன. தெரியாத்தனத்தோடும், அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற துடிப்போடும் நடந்து கொள்கிற அவளிடம் நாம் பெரியவள், நமக்கு எல்லாம் தெரியும்" என்கிற ஒரு பெரியதனம் படிந்து, அவள் பேச்சில் சதா ஒலி செய்து கொண்டிருக்கும்.
இந்தப் பெண்ணும் அப்படித்தான் விளங்கினாள். அவள் இஷ்டத்துக்கு என் அறைக்குள் வந்தாள். சாமான்களைத் துழாவினாள். புத்தகங்களை உலைத்து, தாறுமாறாகப் போட்டாள். பெரிய தொல்லையாகவும், தொந்தரவாகவும் மாறிவிட்டாள் சில நாட்களிலே, அவள் மீது எனக்கு எரிச்சலும், சிறு வெறுப்பும் ஏற்பட்டது என்றாலும் அவளது புத்திசாலித் தனமான பேச்சும், குறும்புத்தனமும், விளையாட்டு சுபாவமும் எனக்கு பிடித்தனவாகி விட்டன.
ஒரு சமயம். "உன் பேர் என்ன?" என்று அவளிடம் கேட்டேன்.
"இன்னும் உங்களுக்குத் தெரியாது? ஐயே!" என்றாள். "என்பேரு நெடுக முழங்குதே!" என்று பெருமையோடு சொன்னாள். "இந்தத் தெருக் குரங்குக வாய்வலிக்க ஒரு பாட்டுப் பாடுதே, அது என்னைப் பத்திதான்"
“என் காதில் விழவில்லையே!"
"நீங்க என்ன செவிடா?”
"இல்லை. நான் படிக்கிறபோது, வேறு எதையும் கவனிப்ப தில்லை" என்றேன்.
"நீங்க ஏன் படித்துக்கொண்டே இருக்கீங்க?" என்று உடனே கேட்டாள் அவள். எத்தனையோ பேர் கேட்டுவிட்ட வழக்கமான கேள்வி.
"சும்மாதான்" என்று சொல்லிவைத்தேன்.
"சுமந்துக்கிட்டே படிக்கப்படாது? ... சும்மாதானாம்!”
"ஹூம்! மக்கிப்போன ஹாஸ்யம்!” என்றேன்.
"உங்க மூஞ்சி!” என்று கத்தினாள் அவள்.
"அது எப்படியும் இருக்கட்டும். உன் பேரு என்ன, அதைச் சொல்லலியே?"
"தெருப் பிள்ளைகள் கூப்பாடு போடுதே -
பிஸ்கட் பிஸ்கட்!
என்ன பிஸ்கட்?
ஜம் பிஸ்கட்!
என்ன ஜம்?
ராஜம்னு,
அது என்னைப் பத்திதான்."
"ஒகோ!. உன் பேரு ராஜம்கிறதை நேரடியாகவே சொல்லியிருக்கலாம்!”
"என் அக்கா பேரு என்ன தெரியுமா? த்ரீஸைட் பியூட்டி!" என்று அவளாகச் சொல்ல தொடங்கியதும் நான் வியப்புற்றேன்.
“என்னது? என்ன பேரு?"
“உங்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது. அதை நான் என்னைக்கோ புரிஞ்சுக்கிட்டேன். எங்க அக்கா பேரு திரிபுர சுந்தரி. அவள் படித்த பள்ளிக்கூடத்திலே சில வால்கள் இருந்தாங்க. எந்தப் பெயரையும் இஷ்டம்போல் ஆங்கிலப் படுத்தி, கேலியாச் சொல்லுவாங்க. அக்கா த்ரீ ஸைட் பியூட்டியாக மாறிவிட்டா. அப்படி இருக்க விரும்பாத அக்கா தன் பெயரை சுந்தரின்னு சுருக்கிக் கொண்டாள்…. "
வெளியே தோட்டத்திலிருந்து அக்காளின் குரல் வெடித்தது: “ஏ தடிக்குரங்கு! இங்கே வா. உன் மண்டையைக் குழைச்சு மாவிளக்கு ஏத்துறேன்."
தங்கச்சி தன் குறையை உணரவில்லை. பதிலுக்குக் கத்தினாள்: "நான் ஆயிரம் வாட்டி சொல்லியாச்சு - ஒட்டுக் கேட்காதே, ஒட்டுக் கேட்காதேன்னு. எனக்கென்ன! நீ அடுத்த சென்மத்திலே பல்லியாத்தான் பொறக்கப் போறே!"
நான் சிரிக்காமல் எப்படி இருக்க முடியும்? இதனாலும் அக்காளின் கோபம் அதிகரித்துத் தான் இருக்கும்.
அவளுக்குக் கோபம் ஏற்பட்டு வளர எத்தனையோ காரணங்கள் சேர்ந்திருந்தன.
ஒரு சமயம், ராஜம் "அக்கா படிக்கிறதுக்கு புத்தகம் வேணுமாம். ஏதாவது புக் கொடுங்களேன்" என்று கேட்டாள்.
"இங்கே இருக்கிற புத்தகம் எதுவும் உன் அக்காளுக்குப் பிடிக்காது. உன் அக்காளுக்குப் பிடிக்கும்படியான கதைகள், புத்தகங்களை நான் படிப்பதுமில்லை; வாங்குவதுமில்லை" என்றேன்.
"அவளுக்கு எது பிடிக்கும், பிடிக்காது என்று உங்களுக்கு எப்படித் தெரியுமாம்?"
“இந்த நாட்டு வாசகப் பெருமக்களில் ஒரு நபர் தானே உன் அக்காளும்! இந்நாட்டில் உள்ள வாசமணிகளும் ரசிகப் பெருமக் களும் எந்தவிதமான பத்திரிகைகள் புத்தகங்கள் எழுத்துக்களை ஆசையோடு படிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாதா, என்ன?”
"சரியான போர்! ஒரு சின்னப்பெண்ணிடம் எப்படிப் பேசனும்னுகூடத் தெரியாத மண்டு!" என்று "சர்டிபிகேட்" கொடுத்தாள் அவள்.
இந்த விஷயத்தை அவள் அக்காளும் அறிந்துதானிருந்தாள். ஒரு சந்தர்ப்பத்தில் ராஜம் அங்குமிங்கும் தீவிரமாகத் தேடினாள். "என்ன தேடுகிறாய்?" என்று கேட்கவும், "தின்கிற துக்கு ஏதாவது பிஸ்கட், மிட்டாய், சாக்லேட்னு வாங்கி வைக்கப்படாது?" என்றாள்.
"உனக்குப் பிடிக்கக்கூடியதாக எதுவும் இந்த அறையில் இருக்காது. நான் வாங்கி வைத்திருக்கிற மிட்டாய் உனக்குப் பிடிக்கவும் பிடிக்காது!"
"அது உங்களுக்கு எப்படித் தெரியும்? அது என்ன மிட்டாய்?" என்று ஆர்வத்தோடு கேட்டாள் அவள்.
“பாரியின் ஜிஞ்சர் கேப்ஸ். சரியான இஞ்சி மிட்டாய்!”
"இஞ்சியா? அதை நீங்களே துன்னுங்க!" என்று எரிச்சலுடன் கூறி, வாயைச் சுளித்துப் பழிப்புக் காட்டினாள் அச்சிறுமி.
"வலிச்ச மோறையும் சுழிச்சுப்போம்!" என்று நான் கேலியாகச் சொல்லவும், “போனாப் போகட்டும். உங்க மோறை நல்லாயிருந்தால் சரிதான்!" என்று எரிந்து விழுந்துவிட்டு வெளியே ஒடினாள்.
சில தினங்களுக்குப் பிறகு, அவள் நாளைக்கு நாங்க ஊருக்குப் போகப்போறோம்" என்று அறிவித்தபோது, "கெட்ட கழிசடையின் நல்ல நீக்கம்!" என்று சொல்லத் துடித்தது என் நா.
அதை நான் சொல்லியிருந்தால், "good riddance of bad rubbish என ஆங்கிலத்தில் எண்ணியதை எப்படியோ தமிழில் சொன்னதாகத்தான் அமையும். அவள் "உங்களுக்கு சரியாக, புரியும்படியாகப் பேசவே தெரியலே. இதை நூறுவாட்டி நான் சொல்லியாச்சு!" என்று தான் பதில் கூறுவாள். என் மெளனத்துக்கு அது மட்டும் காரணமல்ல. உயிர்த்துடிப்பு மிகுந்த - துள்ளலும் குறுகுறுப்பும் நிறைந்த - கவிதை போன்ற அச்சிறுமியைக் "கெட்ட கழிசடை" என்று குறிப்பிடுவதற்கு என் மனசுக்கே இஷ்டமில்லை.
அவள் போவதற்கு முன்பு என்னிடம் சொல்லிக் கொண்டாள். "இனி எப்போ பார்க்க முடியுமோ?" என்றேன்.
“ஒரு வருஷம் கழிச்சுத்தான்" என்று ராஜம் சொன்னபோது, அவள் அக்கா என்னவோ முணுமுணுத்தாள்.
"ஆமாம். அடுத்த வருஷம் பொன்கொன்றை பூத்துக் குலுங்குமே, அப்போதான். ஒவ்வொரு வருஷமும் இந்த மரம் பூத்து ஜில் என்று இருக்கிற சமயத்திலேதான் நாங்க வருவோம். அது ஓய்ந்து போகிறபோது, நாங்கள் போய்விடுவோம்" என்று தங்கச்சி உரக்கப் பேசினாள். அக்காள் அதற்கு அடி எடுத்து"க் கொடுத்தாள் போலும்!
மறு வருஷம், கொன்றை சொரிந்து சிரித்த போதும் அவர்கள் வந்தார்கள். அதற்கு அடுத்த வருஷமும் வந்தார்கள்.
இரண்டாவது வருஷம் ராஜம் பழைய சிறு பெண்ணாகத் தான் இருந்தாள். துடுக்குத்தனமாகப் பேசினாள்.
"நீங்க ஏன் கல்யாணம் செய்துகொள்ளாமலே இருக்கீங்க?" என்று திடீரென்று கேட்டாள் ஒருநாள்.
"அதைப் பற்றி நீ ஏன் கவலைப்படனும்?" என்றேன்.
“எங்க அக்கா கவலைப்படுகிற மாதிரித் தெரிஞ்சுது, அதுதான்" என்று சிரிப்புடன் சொன்னாள் அவள்.
“அவள் தான் ஏன் கவலைப்படனும்?”
“அவளுக்கு இன்னும் கல்யாணம் ஆகலே யில்லா! அதனாலேதான்" என்று கூறி, குறும்புச் சிரிப்பு சிந்தினாள்.
அவள் தாத்தா சிலசமயங்களில் என்னிடம் பேசியது உண்டு. சும்மா பொதுவாக அதையும் இதையும் பற்றி ஏதாவது சொல்லுவார். அந்த வருஷம் அவர் எனக்குச் சில போதனைகள் புரிய முன்வந்தார்.
"நீங்கள் சும்மா புத்தகங்களைப் படித்துக் கொண்டிருப்பது வீண்வேலை. புத்தகங்களைவிட வாழ்க்கையும், மனிதர்களும் சுவாரஸ்யமான விஷயங்கள்" என்று ஒருநாள் அவர் சொன்னார்.
"சரிதான்" என்றேன்.
“வாழ்க்கையிலிருந்து தப்பி ஓடுகிற - ஒட விரும்புகிற - போக்குத்தான் வெறுமனே புத்தகங்களைப் படித்துக்கொண்டிருப்பது என்ற எனக்குப் படுகிறது. வாழ்க்கையின் பொறுப்பு களையும் சுமைகளையும் சோதனைகளையும் ஏற்று, சகித்து, போராடி, அனுபவித்து, அவற்றின் இன்ப துன்பங்களை இயல் பாக ரசிக்க மனமோ, பக்குவமோ இல்லாத - அல்லது சோம் பலோ, பயமோ கொண்ட – பலவீனர்களின் பற்றுக்கோல்தான் இப்படிப் புத்தகங்களை மட்டுமே படித்துக்கொண்டிருப்பது. இதுவும் ஒருவகை எஸ்கேப்பிசம்தான்" என்று அழுத்தமாகச் சொன்னார் பெரியவர்.
"இருக்கட்டுமே! இது எனக்குப் பிடித்திருக்கிறது. அப்படி ஆராயப்போனால், ஆத்ம உயர்வுக்கு என்றும், ஞானத்தைத் தேடி என்றும் தனி இடங்களையும் வனங்களையும் மலைகளையும் தேடிச்சென்ற பழங்கால முனிவர்களும், தவம் மேற்கொண்ட ஞானிகளும்கூட எஸ்கேபிஸ்ட்கள்தான். நானாவது ஜனங்கள் மத்தியிலேயே வசிக்கிறேனே" என்றேன்.
அடுத்த வருஷம்தான் அவர் கேட்டார், "நீங்கள் கல்யாணம் செய்துகொண்டால் என்ன?" என்று/
“எனக்குப் பிடிக்காத காரியங்களில் நான் அக்கறை காட்டுவதில்லை. எனக்குப் பிடிக்காத விஷயங்களில் கல்யாணமும் ஒன்று….”
"ஒரு பெண் உங்களை விரும்புகிறாள். அவளைச் சேர்ந்த வர்களும் மறுக்கவில்லை. வசதியாக வாழ்க்கை நடத்துவதற்கும் வழிகள் செய்ய முடியும். இந்த நிலையில் நீங்கள் என்ன சொல்வீர்கள்?" என்று கேட்டு, அவர் என் முகத்தையே பார்த்தார்.
"எனக்குப் பிடிக்காத விஷயங்களைப் பற்றி நான் எண்ணுவதுமில்லை; பேச விரும்புவது மில்லை.”
அவர் பெருமூச்செறிந்தார்.
"மனிதர்கள் புத்தகங்களைவிட சுவாரஸ்யமானவர்கள் என்று மறுபடியும் சொல்கிறேன். அதிலும், பெண்கள் மிகமிக இன்டரஸ்டிங் ஆனவர்கள். அவர்களை - பலரையோ ஒருத்தி யையோ - படித்து அறிந்து ரசித்து மகிழ்வதற்கு சான்ஸ் கிடைப்பது அபூர்வமானது. அப்படிக் கிடைக்கிறபோதே படித்து ரசிக்க முற்படாமல் போனால், அது பெரும் நஷ்டம் தான்" என்றார்.
"நன்றி!” என்று கூறி அவருக்கு ஒரு கும்பிடு போட்டேன்.
அதன் பிறகு அவர் என்னிடம் உரையாடுவதில் ஆர்வம் காட்டவில்லை.
அந்த வருஷம், ராஜம் வளர்ந்திருந்தாள். உள்ளத்திலும் உணர்வுகளிலும் மாறுதல்கள் பெற்றிருந்தாள். நாணம், கூச்சம், சங்கோஜம் எல்லாம் அவளை வந்தடைந்திருந்தன. அவள் முன்புபோல் அறைக்குள் அடிக்கடி வரவில்லை. ஆனால், "ஆயிரம் தடவைகள்" அப்படியும் இப்படியும் அலைந்து தன்னை எக்ஸிபிஷன் ஆக்கிக் கொள்வதில் அவள் ஆர்வம் அதிகம் உடையவளாக இருந்தாள்.
“பழைய ராஜமாக இனி இவள் விளங்க முடியாது. அது நஷ்டம்தான்!” என்று என்மனம் வருத்தப்பட்டது.
அக்காள் சுந்தரியும் மாறித்தானிருந்தாள். அவள் கண்களில் சோகமும் மாறித் தானிருந்தாள். அவள் கண்களில் சோகமும் ஏக்கமும் குடிகொண்டிருந்தன. வாழ்க்கை ஒவ்வொருவரையும் என்னென்ன சோதனைகளுக்கெல்லாம் தான் ஆளாக்குகிறது!
நாலாம் வருஷம் பொன் கொன்றைகள் வழக்கம்போல் பூத்துக் குலுங்கின. ஆனால் பக்கத்து வீட்டில் யாருமே வரவில்லை. எவரும் வரமாட்டார்கள் என்று உணரவைக்கும் சேதிகள் முன்னதாகவே கிடைத்திருந்தன.
பதினாறு வயசு ராஜம் திடீரென்று செத்துப் போனாள். மரணம் விவஸ்தையின்றி உயிர்க்கேளாடு விளையாடுவது ஏன், எதற்காக நடை பெறுகிறது என்று யாருக்குப் புரிகிறது? சிறு பெண் செத்துப்போய்விட்டாள். என்னைப் பொறுத்தவரையில், எனக்குப் பிடித்திருந்த விளையாட்டுப்பெண் ராஜம் மறைந்து போய் இரண்டு வருஷங்களாகியிருந்தன. எனக்கு இது ஒரு நஷ்டமாகத் தோன்றவில்லை.
என் இதயத்தை உறுத்தியது இன்னொரு செய்தி - சுந்தரி பித்தி மாதிரி நடந்துகொள்கிறாள். தன்னினைவற்றுக் கிடக்கிறாள் சில சமயம், உணர்வுபெற்று எழுந்ததும், காரணமற்றுச் சிரிக்கிறாள், "பொன்கொன்றை பூக்கும் பூக்கும்" என்கிறாள். "பூத்ததுதான் வாடிப் போச்சே" என்கிறாள். "நரம்புநோய்" என்கிறார் ஒரு டாக்டர். "ஹிஸ்டீரியா" என்கிறார்கள். வாழ்வின் வெறுமையும் ஏக்கமும் சேர்ந்து, ஆசைகளும் கனவுகளும் தோல்வியுற்று விட்டதும், அவள் உணர்வுகளையும் உள்ளத் தையும் வெகுவாக பாதித்துள்ளன என்றும் சிலர் சொல்கிறார்கள்.
இருக்கலாம். எல்லாம் சரியாகவே இருக்கலாம்.
அவள் தாத்தா சொன்னாரே, அதுவும் சரிதான். அவளை மனசில் நினைத்துக் கொண்டுதான் அவர் சொன்னார்:
அவள் புத்தகத்தைவிட - கவிதை நூலைவிட சவாரஸ்ய மானவள். அவளை உணர்ந்து புரிந்து கொள்வதற்கு உரிய வாய்ப்பு வருகிறபோது ஏற்றுக்கொண்டால் நல்லது. அதற்கு உரிய "மூட்" இல்லை, நேரமில்லை என்று அதை ஒதுக்கி விடுவதனாலும், அவசரத்தினாலோ வேறு எதனாலோ அலட்சியப்படுத்துவதனாலும் நஷ்டமே ஏற்படும். உமக்கு மட்டுமல்ல. நுண்ணிய உணர்வுகளைத் தன்னுள்கொண்ட கவிதை நூலுக்கும்தான்… !.
என் உள்ளத்தில் சிறு வேதனை ஏற்படுகிறது. அந்தப் புத்தகம்" எனக்குப் புரிய வைத்திருக்கக் கூடிய எத்தனையோ உண்மைகளை, அனுபவங்களை, நான் புறக்கணித்து விட்டேன். பாவம், அந்த "உணர்வுப் புத்தகம்!"தன் வாழ்க்கை யையே பாழாய், பயனற்றதாய், ஆக்கிக்கொண்டிருக்கிறது!
இதோ, இவ்வருஷமும் பொன்கொன்றை பூத்துக் குலுங்கு கிறது. ஆண்டுதோறும் அது பூத்துக்கொண்டேதான் இருக்கும்.
இதைப் பார்க்கும்போதெல்லாம், அனுதாபத்துக்கு உரிய அந்தப் பெண்ணின் சோக சித்திரமும் என் உள்ளத்தில் மலர்கிறது.
(தீபம்", 1968)
-----------
25. அக்கரைப் பச்சை
கடற்கரைக் கோயிலை ஒட்டிய வெளிப்புறத்தில், சிறிய கைப்பிடிச் சுவர் மீது அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார் புன்னைவனம். பிரகாரத்தில் போய் வந்து கொண்டிருந்த ஆட்கள் நல்ல வேடிக்கைப் பொருள்களாக விளங்கிய போதிலும், கிழக்கே விரிந்து கிடந்த கடலும் வானமும், கரையை ஒட்டியிருந்த மணல் மேடும் ஒரு சில மரங்களும் தந்த காட்சி இனிமையே அவருக்கு மிகுதியும் பிடித்திருந்தது.
இவை எல்லாம் அவருக்கு மன அமைதியைத் தந்தன என்று சொல்வதற்கில்லை. அந்த அமைதியும், அதனால் பிறந்த ஆனந்தமும் அவரை விட்டு விலகிப் போய் எவ்வளவோ காலம் ஆகிவிட்டது. உலகத்தின் அதிசயங்களையும் அழகுகளையும் கண்டு களிப்புதற்காக ஊர் சுற்ற வேண்டும்; நம்முடைய காலம் பூராவும் நமக்கே சொந்தமாக அமைதல் வேண்டும் என்ற பிடிவாதத்தோடுதான் அவர் வாழ்க்கைப் பாதையில் அடி எடுத்து வைத்தார். அந்த உறுதியும் ஊக்கமும் உற்சாகமும் அவரிடம் இப்போது இல்லை. "ஏதோ பழக்க தோஷத்தினால்தான்" அவர் இப்போதெல்லாம் இயங்கி வருகிறார்.
"ஒழுங்கு முறை தவறாத அன்றாட நியதிகள். ஓட்டல் சாப்பாடு. லாட்ஜில் வாசம். பொழுது போக்குவதற்குப் படிப்பு. ஊர் சுற்றல் - என்னவோ இயந்திர ரீதியில் நடந்து கொண் டிருக்கிறது நம் வாழ்க்கை!" என்று அவர் உள்ளம் அடிக்கடி அலுத்துக் கொள்வதும் ஒரு வழக்கமாகிவிட்டது.
இருபது இருபத்தைந்து வருஷங்களுக்கு முன்பு, புன்னை வனம் இப்படியா இருந்தார்? எவ்வளவு தன்னம்பிக்கை, உற்சாகம்! எத்தகைய உணர்ச்சிகளின், கொள்கைப் பற்றின், லட்சிய ஆவேசத்தின் உயிர் உருவமாகத் திகழ்ந்தார் அவர் அந்த நாட்களிலே! அவரைக் கண்டு பேச வந்தவர்கள் அவரிடமிருந்து நம்பிக்கை ஒளியும் உற்சாகப் பெருக்கும் பெற்றுச் சென்றார்கள். அவரை "முன் மாதிரி" யாகக் கொண்டு தங்கள் வாழ்க்கையையும் மாற்றி அமைப்போம் என்று கூட ஒரு சிலர் துணிந்ததும் உண்டு.
ஆனால் கால வேகத்திலே, வாழ்க்கை நதியின் சுழிப்பில் இழுபட்டு, அவர்கள் பலரும் எங்கெங்கோ எப்படி எப்படியோ ஆழ்ந்துவிட்டார்கள். புன்னைவனம் மட்டும் கம்பீரமாக, மிடுக்காக, மகிழ்ச்சியோடு எதிர் நீச்சல் போடுவதில் ஈடுபட்டிருந்தார்.
"என்ன பிரயோசனம்? கால வேகத்தோடு, வாழ்க்கை நதி இழுத்த இழப்பில் போகிறவர்களும் முடிவில் செத்துத்தான் போகிறார்கள், எதிர்நீச்சல் போடுகிறவர்களுக்கும் அதே முடிவுதான். இவர்கள் உடலின் பலமும் உள்ளத்தில் உறுதியும் இருக்கிற வரை எதிர் நீச்சலடிக்கலாம். கை ஓய்ந்ததும் கால வேகத்தினால் அடிபட்டுப் போக வேண்டியவர்கள் தான்" என்று ஒரு அனுபவஸ்தர் சொன்னார்.
இளமைத் துடிப்பில் புன்னைவனம் அவரைப் பார்த்து அலட்சியமாகச் சிரிக்கவில்லையா என்ன? தன்னம்பிக்கையும் மனோபலமும் இல்லாதவர் என்று பரிகசிக்கவும் செய்தார்.
ஆமாம். அது ஒரு காலம்! அப்போது அவருக்கு இருபத் தைந்து அல்லது இருபத்தாறு வயதுதான்.
இப்போது? ஐம்பது வயதைக் கடந்துவிட்ட புன்னை வனத்துக்கு வாழ்க்கையே வறண்டதாய் அர்த்தமற்றதாய், "நேற்றுப் போல் இன்று - இன்று போல நாளை" என்று ஒரே கதியில் சுழலும் தன்மைய தாய் சாரமற்றுத் தோன்றியது. "உலகத்து அற்புத இலக்கியங்களை எல்லாம் படித்து இன்புற வேண்டும்; நாட்டில் கவனிப்பற்றுக் கிடக்கும் கலைச் செல்வங்கள் அனைத்தையும் ரசித்து மகிழ வேண்டும்; இயற்கை இனிமைகளைக் கண்டு ஆனந்திக்க சதா ஊர் விட்டு ஊர் போய்கொண்டே இருக்க வேண்டும். இதற்கெல்லாம் மனைவி ஒரு விலங்கு ஆகவும், வளரக்கூடிய குடும்பம் ஒரு தடையாகவும் இருக்கும்" என்று கருதித் தனிமை வாழ்வைத் தேர்ந்து கொண்ட அவருக்கு அந்த வாழ்வே சுமையாய், பயனற்றதாய், பசுமை இல்லாததாய் தோன்றலாயிற்று.
இப்பொழுதும் அவர் புத்தகங்கள் படிக்கத்தான் செய்தார். புதிய புதிய புத்தகங்கள் எத்தனையோ. முன்பு பல முறை படித்த நூல்களை மீண்டும் படித்தார். புதுப்பது இடங்களுக்குப் போனார். பத்து இருபது வருஷங்களுக்கு முன்பும் - அதற்கு முந்தித் தனது சின்னஞ் சிறு பிராயத்திலும் - அறிமுகம் செய்து கொண்டிருந்த இடங்களுக்கும் போனார். அங்கு அவர் காண நேர்ந்த மாறுதல்கள், வளர்ச்சி அல்லது சிதைவுகள், பலவும் அவருக்கு விதம் விதமான உளக் கிளர்ச்சி ஏற்படுத்தின.
அதே போல, அவருக்கு அறிமுகமாகியிருந்த மனிதர்கள் வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த மாறுதல்களும் அவர் உள்ளத்தில் சலனம் உண்டாக்கின. "வாழ்க்கை நதி வேகமாகத்தான் ஒடுகிறது" என்று எண்ணுகிறபோதே, தான் அன்று போல் இன்றும் - குறிப்பிடத் தகுந்த மாறுதல் எதுவும் அற்று, கால வெள்ளத்தாலும் அசைக்க முடியாத கரும்பாறை போல் நிற்பதாக ஒரு நினைப்பும் அவருள் சுழியிடும். பந்த பாசங்களற்று, பிடிப்பற்று, பற்றுதல் எதுவுமற்று, தன்னைப் பற்றிக் கொண்டு வாழ்வுச் சுழல்களில் ஈடுபடுத்த எவருமற்று, ஒற்றைத் தனிநபராய் நாளோட்டும் தன்னுடைய நிலைமையும் புன்னைவனத்தின் மனசை உறுத்தும்.
öஇப்படி வாழ்வதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது" என்று பெருமையோடு கருதிவந்த அவர் உள்ளத்திலே, நாளடைவில் இப்படி வாழ்வதும் ஒரு வாழ்க்கைதானா?" என்றொரு சஞ்சல நினைவு அலை மோதுவதை அவராலேயே தடுக்க முடியவில்லை.
கடற்கரைக் கோயில் அருகே அமர்ந்திருந்த புன்னை வனத்தின் கண்கள், விரிந்து கிடந்த நீர்ப்பாலை மீது படர்ந்து விழுந்த சூரியஒளி செய்து கொண்டிருந்த மினு மினுப்பு வேலை நயங்களை வியந்தன. வெள்ளித் தகடுகள் போலவும், அசைந்து அசைந்து நெளியும் வெள்ளிய பறவைகள் போலும், நீர்ப்பரப்பு சிற்றலைகளைச் சித்தரித்துக் கொண்டிருந்தது. அதன் அசைவு களினால் சிதறும் ஒளிக்கற்றைகள் இனிய காட்சிகளாகி அவர் ரசனைக்கு விருந்து அளித்தன. ஆனாலும், வறண்ட மணற் பாலையின் வெறுமையும் தனிமையும்தான் அவர் உள்ளத்தில் நிலைபெற்றிருந்தது.
"அங்கேயே என்ன பார்க்கிறே? வேடிக்கை ஏதாவது இருக்குதா?" என்று அவர் அருகில் ஒலித்த ஒரு குரல் அவரை உலுக்கித் திருப்பியது.
ஒரு சிறுமி, ஐந்து அல்லது ஆறு வயது இருக்கும். அவரை அதிசயமாக நோக்கியவாறு அவர் பக்கத்தில் நின்றாள். அவள் தனியாகத்தான் காணப்பட்டாள். அவர் தன் கேள்விக்குப் பதில் எதுவும் சொல்லாமல், தன்னையே பார்த்துக் கொண்டிருப் பதைக் கண்டு பொறுமை இழந்து, "ஊங்?" என்றாள்.
"ஒண்ணும் இல்லியே!" என்றார் அவர்.
"பின்னே அப்பவே புடிச்சு அங்கேயே பார்த்துக்கிட்டு இருக்கியே? நான் வந்து எவ்வளோ நேரமா நிக்கிறேன். உனக்குத் தெரியாதே" என்று, கூச்சமோ தயக்கமோ அச்சமோ, இல்லாமல் பேசினாள் அவள்.
அவருக்கு அவள் பேச்சும் துணிச்சலும் சுவையான விஷயங்களாகப்பட்டன. லேசாகச் சிரித்தார். “பொழுது போகலே. துணைக்கு யாரும் இல்லே. அதுதான் உட்கார்ந் திருக்கேன்" என்றார்.
"உனக்கு அப்பா அம்மா இல்லே? யாருமே இல்லையோ?” என்று கேட்டாள் சிறுமி.
"ஊகுங். ஒருத்தரும் இல்லை" என்று கூறித்தலையை ஆட்டினார் அவர்.
அவள் கலகலவெனச் சிரித்தாள்.
இப்ப ஏன் சிரிக்கிறே?" என்று அவர் விசாரிக்கவும், அவள் தந்த பதில் அவருக்கும் சிரிப்பு எழுப்பியது.
"உன் தலையை மொட்டை அடிச்சிட்டால், அப்போ நீ தலையை ஆட்டினால், எப்படி இருக்கும்னு நெனைப்பு வந்தது. அதுதான்!” என்று அவள் சொன்னாள். "எனக்கு மொட்டை போடணுமின்னு சொன்னாங்க. அதுதான் நான் ஒடியாந் துட்டேன். எனக்கு எதுக்கு மொட்டை? "மொட்டை மொட்டை மொளக்கு ஸார் - கம்பளி மொட்டை டேக்கு ஸார்" ஒனு புள்ளைகள் எல்லாம் கேலி பண்ணுறதுக்கா? அப்புறம் நான் தலைபின்னி பூ வைக்க முடியுமா?" என்று பொரிந்து கொட்டினாள்.
அவள் வேடிக்கையான குழந்தை என்று தோன்றியது அவருக்கு. உன் பேர் என்ன?" என்று கேட்டார்.
"கேலி பண்றதுக்கா?" என்று வெடுக்கெனச் சொல் உதிர்த்தாள் சிறுமி.
நான் ஏன் கேலி பண்ணப் போறேன்!”
"தெரியும் தெரியும். எல்லாப் புள்ளைகளும்தான் கேலி பண்ணுதே. வள்ளி அம்மே தெய்வானே, உம்புருசன் வைவானேன்? கச்சேரிக்குப் போவானேன் - கையைக் கட்டி நிப்பானேன்னு நீட்டி நீட்டி ராகம் போடும். அது மாதிரி நீயும்….”
"உன் பேரு வள்ளியா?”
அவள் ஒரு விரலால் ஒரு கண்ணை மூடிக்கொண்டு, தலையைச் சாய்த்தபடி, வெட்கப் பார்வை பார்த்தது ரசமான காட்சியாக இருந்தது.
"ஏட்டி, இங்கே வந்தா நிக்கிறே? உன்னை எங்கே எல்லாம் தேடுவது? அந்த மாமா கிட்டே என்ன வம்பு பண்ணுறே?” என்று சத்தமிட்டுப் பேசிய வாறே பிரகாரத்தில் வந்தார் ஒரு பெரியவர்.
"எங்க அப்பா. புடிச்சிட்டுப் போக வாறா. எனக்கு மொட்டை போட வேண்டான்னு நீ சொல்லுவியா?" என்று புன்னைவனத்தோடு ஒண்டி நின்றாள் வள்ளி.
“பெரிய வாயாடி ஸார் அது. கொஞ்சம் இடம் கொடுத்தால் போதும். தொந்தரவு பண்ணி, பிய்ச்சுப் பிடுங்கி எடுத்துவிடும். சரியான குட்டிப்பிசாசு. இங்கே வாடி" என்று கூச்சலிட்டவாறே வந்தவர், புன்னைவனத்தைக் கண்டதும் வியப்பினால் வாயபிளந்து நின்றார். "புன்னைவனம். புன்னைவனம் தானே நீங்க?" என்று ஆச்சர்யத்தோடு கேட்டார்.
அவரை இனம் தெரியாதவராய்த் திகைத்தபடி நோக்கினார் புன்னைவனம்.
"ஏஹே, பேரைப் பாரு பேரை புன்னைமரம்." என்று கெக்கலி கொட்டினாள் வள்ளி.
"ஏட்டி இந்தா வாறேன்!" என்று சொல்லி, சிறுமியின் தலையில் ஓங்கி ஒரு குட்டு வைப்பதற்காகப் பாய்ந்தார் வந்தவர்.
ஆனால் புன்னைவனம் சிரித்துக்கொண்டே அவளைப் பாதுகாப்பாய் அனைத்து, “சின்னப்புள்ளே தானே! விட்டுவிடுங்கள்" என்றார்.
"என்னைத் தெரியலியா இன்னும்" என்று விசாரித்தார் வள்ளியின் தந்தை.
"தெரியலியே" என்று தன் அறியாமையை ஒப்புக் கொண்டார் மற்றவர்.
"தெரியிறது சிரமம்தான். பார்த்து எத்தனையோ வருசம் ஆச்சுல்லே? இருபது வருசம் இருக்கும். நான் குடும்பக்கவலை, பிய்க்கல் பிடுங்கல்னு அடிபட்டு ஆளே மாறிப்போனேன். அடையாளம் தெரியாது தான். ஆனால், நீங்கள் அப்படியோ தான் இருக்கிறீங்க. கொஞ்சம்கூட மாறலே. தலையிலே ஒரு நரை கூடத்தோணலியே! என் தலையில் ஃபிஃடி.ஃபிப்டி ஆயிட்டுது!" என்று சொல்லி, அவரே அதை ரசித்து அனுபவித்து, வாய்விட்டுக் கடகடவென நகைத்தார்.
அந்தச்சிரிப்பு, அந்தப்பேச்சு முறை - முன்பு அடிக்கடி கேட்டுப்பழகிய ஞாபகம் இருந்தது. ஆனால் அவர்யார் என்று விளங்காத திகைப்புத்தான் இன்னும். கன்னங்கள் ஒட்டி, தலைநரைத்து, கிழடுதட்டி, வதக்கல் புடலங்காயை நினைவுக்கு இழுக்கும் இந்த உருவம்.
”அருணாசலத்தை அடியோடு மறந்தாச்சுன்னு சொல்லுங்க! அதுவும் சரிதான். வாழ்க்கைச் சுழிப்பில் திசை திருப்பப்பட்டு, காலவேகத்தால் அடித்துக் கொண்டு போகப்பட்டு அலைக் கழிந்த ஒட்டைக் கப்பல்தானே இது!"
அந்தக்காலத்தில் புன்னைவனத்துடன் நெருங்கிப் பழகி உரையாடிய பழைய நபர் என்பதை அவர் பேச்சுப் பாணி யிலேயே எடுத்துரைத்தார் வள்ளியின் அப்பா.
புன்னைவனம் இயல்பாகப் பொங்கிய உவகைப் பெருக் கோடு எழுந்து, அருணாசலத்தின் கைகளைப் பற்றியவாறே உணர்ச்சியோடு பேசினார்: “மன்னிக்கணும். என்ன மறதி! சேச்சே என் மறதிக்காக நான் ரொம்பவும் வெட்கப்படுறேன். அருணாசலம்! நீங்க சொல்வது சரிதான். ஆளே அடையாளம் தெரியாமல் மாறித்தான் போனிங்க. செளக்கியம் எல்லாம் எப்படி?"
"என்கதை கிடக்கு. எல்லோருக்கும் உள்ள மாதிரித்தான். சராசரிப்பிழைப்பு. நீங்க இப்போ என்ன செய்கிறீங்க, எப்படி வாழ்க்கை நடக்குது?"
"எல்லாம் வழக்கம் போல்!" என்று கூறி முறுவலித்தார் புன்னைவனம்.
"குடும்பம் குழந்தை குட்டி?
“எதுவுமே கிடையாது. நான் பழைய புன்னைவனம் தான்!"
“இந்த வகையிலும் நீங்கள் மாறவில்லை என்று சொல்லுங் கள். பேஷ்பேஷ்! நான் தான் பலவீனமான ஒரு சந்தர்ப்பத்தில், உணர்ச்சிகளின் உந்துதலுக்கு வசப்பட்டு, மனசின் ஒரு தூண்டுதலுக்கு அடிமையாகி. கல்யாணம் செய்துவிட்டு, அப்புறம் அடிக்கடி ஏண்டா இந்த வில்லங்கத்தில் மாட்டிக் கொண்டோம் என்று வருத்தப்படுவதை வழக்கமாக்கிக் கொண்டேன்" என அலுப்புடன் பேசினார் அருணாசலம்.
"உங்களுக்கு எத்தனை குழந்தைகள்."
"அதில் எல்லாம் குறைச்சல் இல்லை. ஆறேழு இருக்கு. இதுதான் கடைசிப் பதிப்பு" என்று அறிவித்தார் அவர்.
அவரைப்பார்த்து முகத்தைக் கோணலாக்கி "லவ்வவ்வே!" என்றாள் வள்ளி.
புன்னைவனத்தினால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
இதற்குள் ஒரு படையெடுப்பு வந்து சேர்ந்தது அங்கே. அநேக பையன்கள் பெண்கள் அவர்களின் தாய், அவள் தங்கை - இப்படி ஒரு கூட்டமாக வந்தவர்களில் மூத்தவள், ”நல்லாத் தான் இருக்கு உங்ககாரியம். புள்ளையைத் தேடப் போறேன்னு வந்துபோட்டு, இங்கே நின்னு வம்பளக்கிறேளாக்கும்? எல்லாம் புள்ளைகளுக்கும் மொட்டை அடித்தாச்சு. அந்தக் குரங்குதான் ஒடி வந்திட்டுதே" என்று முழங்கினாள்.
"இவள் தான் என் கிருகதேவதை. அது அவள் தங்கச்சி. இதுகள்ளாம் என் புத்திரபாக்கியங்கள்" என்று அறிமுகப்படுத் தின அருணாசலம், புன்னைவனத்தைப் பற்றி அவர்களுக்கு ஒரளவு சொன்னார். பிறகு வள்ளியைப் பார்த்து, "ஏட்டி, உனக்கு மொட்டை அடிக்க வேண்டாமோ?" என்று கேட்டார்.
அவள் பரிதாபமாகப் புன்னைவனத்தைப் பார்வையினால் கெஞ்சினாள். அவர் முகம் சிரிப்பால் மலர்ந்தது. அவளுக்குப் பூவைத்து. தலைமுடிச்சு, பள்ளிக்கூடம் போகணும்னு ஆசை யிருக்கு. அதைக்கெடுப்பானேன்? மற்றப் பிள்ளைகள் எல்லாம் மொட்டை - மொட்டையின்னு கேலி பண்ணுமேன்னு வருத்தப் படுறா" என்றார்.
சரி, போகட்டும். இன்னொரு சமயம் பார்த்துக்கலாம். புன்னைவனம், இன்று நீங்க நம்ம அதிதி எங்களோடு வாருங்க" என்றார் அருணாசலம்.
இந்த மாமா நல்ல மாமா" என்று ராகம் போட்ட வள்ளி அவர் கையைப் பிடித்து ஆட்டியபடி "உம். வாங்க இப்ப நாங்கள்ளாம் உங்களுக்குத் துணைக்கு வந்தாச்சு. இனிமே நீங்க ஒத்தை இல்லே" என்றாள்.
புன்னைவனத்தின் உள்ளம் கிளுகிளுத்தது.
"சிவகாமி, ஸாருக்கு என்ன வயசு இருக்கும்னு உனக்குத் தோணுது?" என்று அருணாசலம் அவர் மனைவியிடம் கேட்டார்.
"எனக்கு என்ன தெரியும்" என்றாள் அந்த அம்மாள்.
"சும்மா உனக்குத் தோணுவதைச் சொல்லேன்" என்று அவர் சொல்லவும், "முப்பத்தாறு, முப்பத்தேழு இருக்கும்" என்று அவள் தயக்கத்துடன் கூறினாள்.
மீண்டும் தமது கடகடச் சிரிப்பை உருட்டிவிட்டார் அருணாசலம். இவருக்கு ஐம்பதுக்கு மேல் ஆகுது. அப்போ இருந்தது மாதிரித்தான் இப்பவும் இருக்கிறார். நான்தான் கிழவன் ஆகிப்போனேன். பார்க்கப் போனால், இவரைவிட நான்கு வயசு குறைவு தான் எனக்கு!" என்றார்.
அவள் அவர்மீது ஏவிய பார்வையில் அன்பு மிதந்தது. அவரது முதுமையையோ இதர குறைகளையோ அவள் பெரிதுபடுத்துவதாகத் தோன்றவில்லை. இதைப் புன்னைவனம் கவனிக்கத் தவறவில்லை.
இப்படி எத்தனையோ அக்குடும்பத்துடன் அவர் பொழுது போக்க நேரிட்ட சில மணி நேரத்தில், இல்லறத்தில் நிலவும் பல இனிமைகளை அவர் உணரமுடிந்தது. அவர்களுக்குள் மனக்கசப்பும், பிணக்கும், வாக்குவாதமும் ஏற்படக் கூடும். என்றாலும் அவற்றை எல்லாம் மீறிய ஒரு பிணைப்பு, ஒட்டுறவு, பரஸ்பரத் துணை நெருக்கம் அவர் உள்ளத்தில் சிறு சிறு அலைகம் எழுப்பின.
"ஒற்றைக் காட்டு ஒரியாக” வாழ்ந்து பழகிவிட்ட போதிலும் புன்னைவனம் குடும்ப வாழ்வில் திகழும் சிறுசிறு இனிமைகளை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கண்டு, தன் வாழ்வின் வறட்சியை எண்ணி, ஒருவித ஏக்கம் வளர்ப்பது சென்ற சில வருடங் களாகவே அவருடைய புதுப் பழக்கம் ஆயிருந்தது. இப்பொழுதும் அந்தக் குறுகுறுப்பு இருந்தது அவர் உள்ளத்தில்.
ஒரு சந்தர்ப்பத்தில், சிவகாமி நான் என்ன தங்கமும் வைரமுமா கொண்டு வந்தேன்?" என்றாள். அதற்கு அருணாசலம், "எனக்கு நீயே மணியான வைரமாகக் கிடைத்திருக்கிறே. அதே போதும்" என்று சொன்னார். மகிழ்ச்சியும் நாணமும் முகத்திலே தவழ, அவள் தலைகுனிந்தபோது, அந்த முகம் இன்ப ஒவியமாகத் திகழ்ந்தது. அதையே பெருமையுடன் நோக்கியிருந்த கணவனின் முகத்திலும் மலர்ச்சி படிந்தது.
இக் குடும்பச் சித்திரம் புன்னைவனத்தின் கவனத்தைக் கவராது போகுமா?
“எத்தனை வயசுப் பெண்ணாக இருந்தாலும், நாணம் பெண்மைக்கு விசேஷமான அழகு சேர்த்து விடுகிறது!" என்று அவர் உள்ளம் ரசித்தது. நண்பரின் பெருமையையும் அவரால் புரிந்துகொள்ள முடிந்தது.
இந்த விதமான குடும்ப இனிமைகளை - ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் இல்லறத்தின் சிறு சிறு மகிழ்வுச் சிதறல்களை, நயங்களை - எல்லாம் அனுவித்து ரசிக்க வாய்ப்பு இல்லாதபடி, தன்னுடைய வாழ்க்கையைத் தானே வறளடித்துக் கொண்டதை எண்ணித் தன் மீதே அவர் அனுதாபம் கொள்வது உண்டு. இப்பொழுது குழந்தைகளின் கலகலப்பும், வேடிக்கைப் பேச்சும், தம்பதிகளின் போக்கும் அவருக்கு அதே உணர்வுக் கிளர்ச்சிகளைத் தந்தன.
அருணாசலம் புன்னைவனத்திடம் தனிமையில் பேசிக் கொண்டிருந்தபோது, தனது வாழ்க்கைச் சுமைகளையும் தொல்லைகளையும் பற்றிப் புலம்பித் தீர்த்தார். "எங்கே போக முடியுது, எங்கே வர முடியுது என்கிறீங்க? இந்த நேர்த்திக் கடனை நிறைவேற்ற இவ்வூர் கோயிலுக்குக் வருவதற்கு எவ்வளவு சிரமப்பட்டடேன் தெரியுமா? ரொம்ப வருஷம் ஆயிட்டுது, இனியும் தள்ளிப் போடப்படாதுன்னு கடன் வாங்கிக் கொண்டு வந்தேன். வெளியூரு, புது இடம், கோயில் என்பதனாலே எல்லோரும் சந்தோஷமாகவும் கலகலப்பாகவும் இருக்கிறாங்க. ஊரிலே, வீட்டிலே, தினசரி, ஒரே சோக நாடகம்தான். எத்தனையோ பிரச்னைகள், குழப்பங்கள், கவலைகள் மனுசனுக்கு அமைதி என்பதே இல்லை. சரியான தூக்கம் கூடக்கிடையாது. சண்டை, எரிந்து விழுவது இதுகளுக் குக் குறைவே இராது. அடிக்கடி உங்களைத்தான் நான் நினைத்துக் கொள்வேன். என்னை மாதிரி வாழ்க்கைச் சுழலில் சிக்கிக்கொண்டு திணறுகிற மகாராஜன், சொக்கையா இவர்களும் உங்களை நினைத்து பொறாமைப் படுவாங்க. எனக்குக்கூட உங்கமேலே பொறாமை தான். உங்களுக்கு என்ன! கவலையில்லாத வாழ்வு, நினைத்தால் நினைத்த இடம் போவது, மனசுக்குப் பிடித்த ஊரில் முகாம், எவ்விதமான சுமையோ, கால் விலங்கோ, பொறுப்போ கிடையாது, உங்க மாதிரி நானும் தனி வாழ்வு வாழாமல் இப்படி அகப்பட்டுக்கிட்டு முழிக்கிறோமே என்று நான் ஏங்காத காலமே கிடையாது."
அருணாசலம் பேசப்பேச, தன்னுடைய மனநிலையை, இழப்பை, ஏக்கத்தை அவரிடம் வாய்விட்டுப் பேசாமல் இருப்பதே நல்லது என்று புன்னைவனம் கருதினார்.
"நீங்க ஒரு ஆங்கிலக்கவிதை சொல்வீர்களே. தனியாக நிற்கும் ஒரு மலையின் உயர்ந்த முடி. அதன் கீழே, மலையின் மத்திய பாகத்தில், வெயில் அடிக்கும்; மழைபெய்யும்; காற்று தவழும்; சூறை சாடும். என்றாலும் அந்தச் சிகரம் அவற்றால் பாதிக்கப்படாது, அவற்றைப் பார்த்தபடி, மகாரகசியத்தின் கம்பீரமான ஒரு சின்னம் போல நிமிர்ந்து நிற்கும். இப்படி அந்த மனிதர் வாழ்ந்தார் என்று. அதுபோல் தான் வாழ்க்கையின் மாறுதல்கள் மோதல்கள் சாடுதல்களுக்கு மத்தியில், அவற்றால் பாதிக்கப்படாது, அவற்றை எல்லாம் பொறுமையோடு பார்த்தவாறே நீங்கள் உங்கள் காலத்தைக் கழிக்கிறீர்கள். உங்கள் நினைவு வரும்போதெல்லாம், இந்தக் கவிக்கருத்தைச் சொல்லி, உங்களை ஒரு மாடர்ன் ரிஷி என்று நான் நண்பர்களிடம் சொல்வது வழக்கம்."
அருணாசலம் பேசப்பேச, புன்னைவனத்தின் உள்ளத்தில் ஒரு நெகிழ்ச்சி ஏற்பட்டது. அவர் கண்களில் நீர் கசிந்தது. ”நீங்க ஒண்ணு! அளவுக்கு அதிகமாக என்னைப் புகழ்கிறீர்கள்!” என்று மட்டுமே அவரால் சொல்லமுடிந்தது.
(தீபம், 1967)
------------------
26. துரும்புக்கு ஒரு துரும்பு
சின்னக் கடைத் தெருவில் எல்லோருக்கும் பொதுவான ஒரு ஏவலாளாக இயங்கிக் கொண்டிருந்தான் ரங்கன்.
எந்நேரமும் அவனுக்கு வேலை இருக்கும். ஏலே ரங்கா, இந்த மூட்டையை பஸ்நிலையத்திலே கொண்டுபோய் போடு என்று உத்திரவிடுவார் ஒரு கடைக்காரர்.
"அடே பயலே, எங்கடா தொலைஞ்சுபோயிருந்தே? எத்தினி நேரம் உன்னைத் தேடுறது? தள்ளுவண்டியை இழுத்திட்டுப் போயி, ரயில்வே ஸ்டேஷனிலே கிடக்கிற ஒரு பார்சலை எடுத்துக்கிட்டு வா" என ஏவுவார் இன்னொரு கடைமுதாளி.
ஒவ்வொரு கடைக்காரருக்கும் எடுபிடி வேலை செய்து வெளியே அலைவதற்கு ரங்கன் தேவைப்பட்டான். அவ்வப் போது "காப்பிக்கு, இட்டிலி பலகாரத்துக்கு" என்று சில்லறை ஏதாவது கொடுப்பார்கள்,
நிறையச் சாமான்கள் வாங்க வருகிறவர்கள் பெட்டி அல்லது கூடையை சுமந்துவருவதற்கு அவன் துணையை நாடுவார்கள், "என்னடா வேணும்?" என்று கேட்பார்கள், அவன் புடதியைச் சொறிவான். மலைத்தொடரின் உச்சிப் பகுதிபோல் தெத்துக் குத்தலாகத் தென்படுகிற பல்வரிசையைக் காட்டுவான். "பாத்துக் குடுங்க முதலாளி" என்பான். கறாராகக் கூலி பேசத் தெரியாது அவனுக்கு.
"சரிசரி. தூக்கிக்கிட்டு வா" என்று மிடுக்காகச் சொல்லி, பெருமிதமாக முன்னேநடப்பார் சாமான் வாங்கியவர்.
உரிய இடம் சேர்ந்து, சுமையை இறக்கியதும் ரங்கனுக்கு நாலனாவோ, எட்டனாவோ பார்த்துக் கொடுப்பார்" அவனால் முதலாளி" என அழைக்கப்பட்டவர்.
அவன் முழங்கையை சொறிவான். நகராமல் நிற்பான்,
"என்னடா? ஏன் நிக்கிறே?" என்று எரிந்து விழுவார் மற்றவர்.
"என்ன முதலாளி, வயித்திலே அடிக்கீங்க? எவ்வளவு பளு! எத்தனை தூரம் சுமந்து வந்தேன்? கூலியை குறைச்சுத் தாறீங்களே? பார்த்துக் குடுங்க முதலாளி" என்று கெஞ்சலாகக் குறைகூறுவான் ரங்கன்.
"சீ போடா சவமே! நான் தந்திருப்பதே அதிகம். உனக் கெல்லாம் எவ்வளவு கொடுத்தாலும் திருப்தியே ஏற்படாது. போ போ. இன்னொரு சமயம் பார்த்துக்-கிடலாம்" என்று விரட்டுவார் அவர்.
இப்படித் தான் ஒவ்வொரு இடத்திலும் நடக்கும். சிலர் "அயோக்கியா! பேராசை பிடித்த நாயே!” என்றெல்லாம் சொல்லெறிவார்கள், ரங்கனின் போக்கினால் சூடு ஏறப்பெற்று.
ரங்கன் அப்பாவி. அடிபடாதபோதும் வலிய நாயைக்கண்டு தன் வாலைப் பின்கால்களுக்கிடையில் ஒடுக்கிக்கொண்டு நெளிந்து குழைந்து அஞ்சி மிரண்டு பார்த்துக்கொண்டே மெது மெதுவாக நகரும் எளிய நாய் மாதிரி, அவன் கெஞ்சல் பார்வையை "முதலாளி" பக்கம் பதித்தபடி மெதுவாக நகர்வான். எதுவும் பெயராது என்று புரிந்தவுடன் வேகமாகப் போவான்.
என்றாலும், அடுத்த முறையும் அவர்கள் “எலே ரங்கா வாறியாடா? ஒரு சுமைகொண்டு போகணும்" என்று கூப்பிடத்தான் செய்வார்கள். அவனும் "சரி முதலாளி” என்று போகத் தான் செய்வான். அவன் கெஞ்சுவதும், அவர்கள் சீற்றம் கொள்வதும் வழக்கம்போல் நடைபெறத்தான் செய்யும்.
அவன் தோற்றமே அவன் ஏமாற்றப்படத் தகுந்தவன் - எளிதில் ஏமாறுவதற்குச் சித்தமாக இருப்பவன் - என்ற எண்ணத்தை மற்றவர்கள் மனசில் எழுப்பக்கூடியதாக இருந்தது. சில கடைக்காரர்கள் அப்பிராணிப் பய" என்று இளக்காரமாகக் குறிப்பிடுவார்கள்:
அதற்காக யாரும் அவனிடம் அனுதாபம் காட்டுவதில்லை. கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாக்குவார்கள் பலர். அதில் அவர்களுக்கு ஒரு சந்தோஷம்,
சின்னப்பிள்ளைகள் கூட அவனைப் பரிகசிப்பது வழக்கம், "ஏ ரங்கா - குரங்கா" என்று கூப்பிடுவார்கள். “கோணக் கழுத்துக் குரங்கா கூனல்முதுகுக் குரங்கா" என்றெல்லாம் கத்துவார்கள்.
சிலர் பின்னாலிருந்து சிறுசிறு கற்களை அவன்மீது விட்டெறிவார்கள். அவன் கோபமாகத் திரும்பிப் பார்ப்பான், “டேய் டப்ஸாக் கண்ணுக் குரங்கா ஒடிவந்து பிடிடா பார்ப்போம்" என்று கத்துவார்கள்.
"சிறுக்கி புள்ளெகளா! தேவ்டியா புள்ளெகளா! நீங்க வாந்திபேதியிலே போக!" என்று ஏசிக்கொண்டு அவனும் ஒரு கல்லை எடுத்து வீசி எறிவான்.
அது எவர்மீதும் படாது. அவர்கள் கைகொட்டிக் கெக்கலிப்பார்கள். "டோடோய்! சுமை தூக்குற கழுதை! பாரவண்டிக் கழுதை! கோவேறு கழுதை!" என்று கோரஸ் பாடுவார்கள்.
ரங்கனுக்கு ஆத்திரமும் கோபமும் பொங்கிவரும். ஆனாலும், அவனால் எதுவும் செய்ய இயலாது. பொட்டைக் கோபத் தோடு, வாயில் வந்தபடி ஏசுவான். அவ்வளவுதான் அவனால் செய்யக் கூடும்.
விறகுக்கடை ஒன்றில் அவன் ஏவல்புரிவது உண்டு. வாடிக்கைக்காரர்கள் அரை எடை விறகு அல்லது "ஒரு எடை விறகு" வாங்குகிறபோது, கை வண்டியில் கட்டைகளை அடுக்கி தள்ளிக்கொண்டுபோய் அவரவர் வீட்டில் சேர்க்கவேண்டும். கடைக்காரர், தூரத்துக்குத் தக்கபடி, இரண்டு ரூபாய், மூன்று ரூபாய் என்று கணக்குப்பண்ணி விறகுக் கிரயத்தோடு வாங்கிக் கொள்வார். வண்டியில் விறகை அடுக்கி, தள்ளிச்சென்று உரிய வீட்டில் இறக்கிப்போடும் ரங்கனுக்கு எட்டணா - அதிகம் போனால், ஒரு ரூபாய் கொடுப்பார்.
இதற்கும் ரங்கன் இணங்கிப் பணிபுரியத்தான் செய்தான். உரிமையோடு கேட்டு வாங்கக் கூடிய துணிச்சல் அவனிடம் கிடையாது.
வாடிக்கைக்காரர் சிலர், இரக்கப்பட்டு, அவனுக்கு நாலணா, எட்டணா கொடுப்பது உண்டு. இந்தா டீ வாங்கிக் குடி போ!" என்று தாராளம் காட்டுவார்கள். இதனால் ரங்கன் இதரர்களிடம் காசு எதிர்ப்பார்ப்பான். சிலரிடம் வாய் திறந்து கேட்கவும் செய்வான்.
அவர்கள் முறைப்பார்கள். வள்ளெனப் பாய்வார்கள். அது தான் கடையிலேயே குடுத்தாச்சே, அவர்தான் உனக்குப் பணம் தருவாரே! நாங்க ஏன் தனியாக் காசு தரணும்? பேராசைதான் உனக்கு" என்பார்கள்.
"எத்தினி கஷ்டப்பட்டு வண்டியைத் தள்ளிக்கிட்டு வாறேன்! வெயிலு என்னமாக் கொளுத்துது! ஒரு எட்டனா குடுத்தா என்னவாம்? நாம படுற கஷ்டம் கடைக்காரருக்கு எங்கே தெரியுது? விறகுவிலையை அவருகூட்டிக்கிட்டே போறாரு. நம்ம கூலியை மட்டும் அதிகப்படுத்த மாட்டேங்கிறாரு ரெண்டு வருசத்துக்குமுந்தி என்ன தந்தாரோ, அதையே தான் இன்னிக்கும் தாறாரு…..”
இவ்விதம் ரங்கனின் மனம் முண முணக்கும். அதை ஒலி பரப்ப அவனுடைய நாக்கு புரளாது.
"இது முதலாளி காதிலே விழுந்தா, உள்ளதும் போச்சு நொள்ளைக்கண்ணான்கிற கதை ஆகிப்போகும்" என்று அவன் தனக்குத் தானே சொல்லிக் கொள்வான்.
அடிமையாக உழைத்த அவன் அடிமைத்தனத்தோடேயே நடந்து கொண்டான். தலை நிமிர்ந்து நிற்கக்கூடிய - எதிர்க்கக் கூடிய - தெம்பும் திராணியும் அவனிடம் இல்லாதவை என்றே மனசில்படும் அவனைப் பார்க்கிறவர்களுக்கு.
பலவிதமான அவமானங்களுக்கும். பழிப்பு பரிகாசங் களுக்கும் ஆளாகிவந்த அந்த "அப்பிராணிப் பயல்" கூட அவமதிக்கவும் அதட்டவும் எரிந்து விழவும் ஏசவும் ஒரு ஜீவன் இருந்தது. வாழ்க்கை விசித்திரங்களில் இதுவும் ஒன்றுதான்.
வெயிலில் சூடு அதிகரித்துக்கொண்டிருந்த நேரம்.
"ஒரு எடை விறகை அடுக்கி, தள்ளுவண்டியை சிரமத்தோடு உருட்டி வந்த ரங்கனின் உடல் சூட்டினால் பாதிக்கப்பட்டது போல, உள்ளமும் சூடேறிக்கொண்டிருந்தது.
"இரண்டு மைல் வண்டியை தள்ளிச்செல்லணும். அதனாலே எனக்கு எக்ஸ்ட்ராவாக ஒரு ரூபா தரணும்" என்று கேட்டான் ரங்கன்.
”நியாயமான கூலி மூணு ரூபா தானே? நான் ஏன் அதிகமாத் தரனும்? தரமுடியாது" என்று உறுதியாக மறுத்தார் வாடிக்கை யாளர்.
அவன் முரண்டு பிடிக்கவும், அவர் ஏசினார். அவன் முணமுணத்தபடி வண்டியைத் தள்ளிச் சென்றான்.
ரங்கன் சிறிது தூரம் சென்றுவிட்டான். அவனைத் தேடி வந்த ஒருத்தி வேகம் வேகமாக நடந்து வண்டி அருகே சேர்ந்தாள்.
"என்னா, கஞ்சி வேண்டாமா? நான் வாறதுக்குள்ளாறே நீரு வண்டியை தள்ளிக்கிட்டுக் கிளம்பிட்டீரே?" என்று கேட்டாள். சிரித்தாள்.
ரங்கன் முறைத்தான், "ஏ மூளை கெட்ட முண்டம் மனுசன் எத்தினி நேரம் காத்திருப்பான்? நீ எங்கே ஒழிஞ்சு போயிருந்தே சவத்துமூளி! காலா காலத்திலே கஞ்சி கொண்டு வரணும்கிற அறிவு வேணாம்? நீ சோத்தைத் திங்கியா? இல்லே, வேறே எதையும் திங்கியா?" சூடாக வார்த்தைகளைக் கொட்டினான்.
இது சகஜம் என்பதுபோல் தலையை ஒருவெட்டு வெட்டி னாள் அந்தப்பெண். முகத்தைச் சுளித்தாள். "இப்ப கஞ்சி குடிக்கப் போறியா இல்லியா?" என்றாள்.
"வழிச்சு நக்குற நாயே! இதையும் நீயே கொட்டிக்கிடலாம்னு பாக்கியா?" என்று உறுமினான் ரங்கன். "அந்த மரத்தடி நிழலுக்குப் போடி, முண்டம். வண்டியை நிறுத்திட்டு வாறேன்" என்றான்.
அவள் அலட்சிய பாவத்தோடு மரநிழலை நோக்கி நடந்தாள்.
அவன் மனைவி அவள்.
(வஞ்சிநாடு" 1983)
--------
27. கம்பீரஜன்னி
எண்ணங்களிலேயே வாழ்ந்து கொண்டிருந்தான் அவன்.
அவனைத் தெரிந்து வைத்திருத்தவர் பலரும், "கைலாசம் தானே! ஒரு மாதிரி டைப். முற்றிலும் லூஸ் என்று சொல்ல முடியாது. புத்திசாலித்தனமாகக் காரியங்கள் செய்கிறான் என்றும் சேர்த்துக் கொள்ள முடியாது. அசடு, அப்பாவி என்று தோன்றும் அவனைப் பார்த்தால். அவன் செய்து விடுகிற சில செயல்களைக் கவனிக்கையில், அயோக்கியன் - வீணன் என்றே அவனை மதிப்பிடத் தோன்றும்!" என்று சொல்லுவார்கள்.
கைலாசம் மற்ற எல்லோரையும் போல நடந்து கொள்வ தில்லை. “உலகத்தோடு ஒட்ட ஒழுகக் கற்றுக் கொள்ளவில்லை. தன் எண்ணங்களையே பெரிதாக மதித்து எப்படி எப்படியோ நடந்து வந்தான் அவன்.
எண்ணங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. எண்ணங் களும் வாழ்வின் ஒரு அம்சம் தான். ஆனால், எண்ணங்கள் தான் வாழ்க்கை என்று கருதினான் கைலாசம். அதனால், எண்ணங்களிலேயே வாழ முயன்றான் அவன்.
கைலாசம் ஒல்லியான நபர். ஐந்தடி உயரம்தான் இருப்பான். நடமாடும் எலும்புக்கூடு என்று அவன் தன்னைப் பற்றி எண்ணியதிலலை. வீமன், ஹெர்குலிஸ் என்றெல்லாம் கதைகளில் வருகிறார்களே அவர்களின் இந்த நூற்றாண்டு வாரிசு அவனே தான் என்பது அவன் எண்ணம்.
வீதி வழியே போகிறான் கைலாசம். மிடுக்காக, ஏறுபோல. அந்தக் காலத்து ராமனும் அவனும் இவனும் இப்படித்தான் நடந்திருப்பார்கள். இருந்தவளை, போனவளை, வந்தவளை, அவளை இவளை எல்லாம் வளை இழந்து விழித்துக் கொண்டு தவிக்கும்படி செய்த புண்ணியவான்கள்! இவனையும் அப்படித்தானே எல்லோரும் - பெண்கள் தான். மற்றவர்கள் பார்த்தால் என்ன; பாரா தொழிந்தால் அவனுக்கு என்ன? - கண்ணினால் விழுங்குகிறார்கள்.
கைலாசத்தின் கண்களில் தனி ஒளி சுடரிடுகிறது. முகத்தில் ஒரு பிரகாசம் ஜொலிக்கிறது. அவன் அழகில் மயங்கி, அவனை ஆசையோடு பார்க்கும் பெண்களைப் புன்முறுவலோடு கவனிக்கிறான்.
அழகியர் அனைவரினும் அற்புத அழகி என்று வியந்து போற்றப்பட வேண்டிய சுந்தரி ஒருத்தி எதிரே வருகிறாள்.
அவளுக்குத் தனது வீரபராக்கிரமத்தைக் காட்ட வேண்டும் என்ற ஆண்மை நினைப்பு அவனைத் தூண்டுகிறது. அவன் அங்கும் இங்கும் பார்க்கிறான். பெரிய பஸ் ஒன்று உறுமிக் கொண்டு போகிறது. அவனுக்கு வெகு சமீபமாக, ரஸ்தாவில் தான்.
ஏதோ எண்ணத்தில் திரிகிற அவன் ஒழுங்காக, ஒரமாய், நடைபாதையில் போகமுடியுமா? நடு ரோட்டில் ஜாம்ஜாமென்று அடிபெயர்த்துச் செல்லாமல் இருக்கிறானே, அது பெரிய விஷயம் இல்லையா? அது அந்த பஸ்ஸுக்கு எங்கே தெரிகிறது! கேவலம், பஸ் மிஸ்டர் கைலாசத்தின் அருகாக ஒடுகிறது.
முன்காலத்து ஆணழகன் அருகே, காளை அல்லது மதம் கொண்ட யானை, அல்லது சிங்கம் என்று எதுவோ ஒன்று வரும். அவனும், கடைக் கண் எறியும் காதல் பெண் கொஞ்சம் மகிழ்ந்து போகட்டுமே என்று, அதைச் சிறிது விசாரித்து அனுப்புவான்.
இப்போது உள்ளதைக் கொண்டு தானே ஊராள வேண்டும் கைலாசம்? அவன் தயங்குவானா என்ன? சிறு பொருளை எடுக்க நீட்டுவது போல் கையை அலட்சியமாக அனுப்புகிறான். வசதியான ஒரு இடத்தில் லபக்கென ஒரு பிடி. கம்பீரமாக நின்று அவன் பஸ்ஸை பற்றிக் கொள்கிறான்.
பஸ் முன்னே போக முடியாமல் திணறுகிறது. உறுமுகிறது. கனைக்கிறது. கர்ஜிக்கிறது. ஊகும். அசைய முடியவில்லை.
அது எப்படி முடியும்? அபிநவ பீமன் கைலாசம் விளை யாட்டாகப் பிடித்து நிறுத்துகிறபோது?
வீதி வழிப் போவோருக்கு நல்ல வேடிக்கை. சக்கரங்கள் சுழல்கின்றன. ரோடு பள்ளமாகிறது. ட்ரைவர் என்னென் னவோ பண்ணுகிறார். பஸ் நகரவில்லை.
ஹஹ் ஹஹ்ஹா! - கைலாசத்தின் பெரும் சிரிப்பு. வெள்ளி நாணயங்களைக் குலுக்கி விசிறி அடிப்பது போல.
எல்லோரும் அவனை அதிசயமாய்ப் பார்க்கிறார்கள். அவனுக்குப் பெருமை,
அந்தப் பெண் - அழகியர் திலகம்? கைலாசத்தின் கண்கள் தேடுகின்றன.
அவளுடைய அஞ்சன விழிகள் அவனையே மொய்த்து நிற்கின்றன. அந்தப் பார்வைதான் அவனுக்குச் சரியான பரிசு. ஆகவே, "ஐயோ பாவம் வழியே போ!" என்று அந்த பஸ்ஸை விட்டு விடுகிறான் கைலாசம்.
கைலாசத்தின் மூளை அதிசயமானது தான். அங்கு ஒரு எண்ணம், நீரில் குமிழிடும் சிறு வட்டம் போல், கனைக்கும். அதைத் தொடரும் மற்றொரு முறை முகிழ்த்திடும் நுரை மொக்குகள் போல் எண்ணத்திவலைகள் கூடும். நெரிக்கும். மலரென விரியும். சிரிக்கும்.
அன்றாட வாழ்வின் வெறுமையும் வறட்சியும் மாயமாய் மறைய, புதியதோர் வாழக்கை பசுமையாய், இனிமையாய், குளுமையாய், எழிலாய் அவனுள் உயிர்க்கும்.
இப்படி மலரும் எண்ணங்களில் வாழ்ந்தான் அவன். எண்ணங்களையே வாழ்க்கையாக மதித்தவன் கைலாசம்.
அவனை மற்றவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அது அவன் தவறா? அதற்காக அவன் தன் இஷ்டம் போல் வாழ்வதை விட்டு விடுவானோ? எண்ணங்களே அவனுடைய உலகம்.
கைலாசம் நடையாழ்வானை நம்பி வாழ வேண்டியவன். எவ்வளவு தூரம் போக வேண்டுமாயினும் நடந்துதான் போவான். டாக்சிக்கும் ஆட்டோவுக்கும் கொட்டி அழ அவனிடம் பணம் ஏது? பஸ்ஸுக்குக் காசுதர மனம் இராது. அந்தக் காசுக்குக் காப்பி குடிக்கலாமே! ஆகவே, அவன் நடக்கிறான்.
அவனுடைய எண்ணங்கள் முடங்கியா கிடக்கும்? அவையும் துள்ளுகின்றன.
டாக்…. டாக் …. டாக் குளம்பொலி சிதற, கம்பீரமாகப் போகிறது குதிரை. மிக நேர்த்தியானது. கறுப்பு வெல்வட் போல் மினுமினுக்கும் உடல். மின்னித் துள்ளும் பிடரி மயிர். நெற்றியில் மட்டும், ஜோரான பொட்டுப் போல், வெள்ளை படிந்திருக்கிறது. அழகுக்கு அழகு சேர்க்கும் சிறப்பு அது. மிடுக்கான குதிரை மீது எடுப்பாக சவாரி செய்கிறவன் -
தெருவே பிரமிக்கிறது. யாரது? தெரியாது? மிஸ்டர் கைலாசம். திருவாளர் கைலாசம்…. நம்ம கைலாசம்!
என்னதான் சொல்லும் - காரு கீரு எல்லாம் குதிரை பக்கத் திலே நிற்க முடியாது. குதிரைதான் ஜோர். ராஜரீகம். கம்பீரத் துக்கு எடுப்பு. கைலாசம் கடகடவெனச் சிரிப்பை உருள விடுகிறான். தங்க நாணயங்களைக் குலுக்கிச் சிதறுவது போல.
கைலாசம் சங்கோசப் பேர்வழி. அதிகாரிகளிடம், பெரிய மனிதர்களிடம், உருட்டல் மிரட்டல்காரர்களிடம் பேசவே பயப்படுவான். அதற்கு ஈடு செய்வது போல் அவன் எண்ணங்கள் சித்து விளையாடல் புரியும்.
"ஏயா, ரோட்டிலே போறவரே ரோடு என்ன உம்ம வீட்டுத் திண்ணையா? பேவ்மெண்டிலே ஏறி நட!" உத்திரவிட உரிமை பெற்றோரின் அதிகாரக் குரல் கனத்து ஒலிக்கிறது.
கைலாசம் பதறி அடித்து நடைபாதைக்குத் தாவுகிறான். அவன் எண்ணம் கொதித்துக் கூத்திடுகிறது. "சரிதாம் போய்யா! உம்ம ஊரு தடை பாதைகள் இருக்கிற லெட்சணத்துக்கு, அதுலே நடக்காதது தான் பெரிய குறையாப் போச்சுதாக்கும்! நீரு இறங்கி வந்து, தெருத் தெருவா நடந்து பார்த்தால் தானே உமக்குத் தெரியும்"
அப்படியும் இப்படியும் புரளும் கைலாசப் பார்வை தூரத்தில் வரும் ஒரு நபரை இனம் கண்டு கொள்கிறது. கடன்காரன்! இவனுக்கப் பத்து ரூபாய் கடன் கொடுத்தவன்.
- பிரமாதக் காசு! தா, தா, எப்ப தருவே என்று நச்சரித்துக் கொண்டு. கையிலே பணம் இருந்தால் திருப்பிக் கொடுத்து விட மாட்டேனா என்ன? மனுசனுக்கு இது தெரிய வேணாம்?
கைலாசம் பக்கத்துச் சந்தில் பாய்கிறான். கிளை வழிகள் பல அவனுக்கு அத்துபடி! ஆள் மாயமாய் மறைந்து விடுவானே. அவன் எண்ணங்கள் பறக்கின்றன.
"இந்தா ஸார் பத்து ரூபாய்! உங்களுக்குப் பணம் அதிகமாகத் தேவைப் பட்டாலும் கேளுங்க. தாறேன். ஐயாவாள் கிட்டே இப்போ பணம் நிறையவே இருக்குது"
ஏகப்பட்ட மணியார்டர் பாரம் வாங்குகிறான். தெரிந்தவர், உறவினர், என்றோ உதவி கோரியவர் என்று பலப் பலருக்கும் இஷ்டம் போல் பணம் அனுப்புகிறான் கைலாசம்.
"எல்லாரும் பிரமிக்கணும். எதிர்பாராது பணம் கிடைத்து, ஆச்சர்யப்படுவார்கள். பிறகு சந்தோஷப்படுவார்கள்"
ஆகா, எண்ணங்கள் எவ்வளவு இனியன எத்தனை சக்தி வாய்ந்தவை!
தடியன் ஒருவன் இடித்துக் கொண்டு போகிறான். "ஏய், என்ன கணாக் கண்டுக்கினு நடக்கிறியா? நேரே பார்த்துப் போ!" என்று உபதேசம் வேறு புரிகிறான்.
ஒகோ, இவ்வளவுக்கு இருக்குதா உனக்கு? கைலாசம் லேசாகத் தள்ளுகிறான். டமால்! தடியன் சாம்பல் பூசணிக்காய் மாதிரி விழுந்து சிதறுகிறான்.
"பேஷோ பேஷ்!" கைலாசத்தின் மனம் கெக்கொலி கொட்டிச் சிரிக்கிறது.
அவனுக்கு "இன்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்" அதனுடைய கோளாறுதான் விபரீதமான சித்தப் போக்கு. இப்படிச் சொன்னார்கள் சிலபேர்.
பையனுக்கு "கம்பீர ஜன்னி"; அதுதான் மன உதறலும் எண்ண உதைப்பும் அவனைப்பாடாய்படுத்துகின்றன என்று ஒருவர் சொன்னார்.
அவனோ தன் எண்ணங்களும் தானுமாகி, அந்த லயிப்பில் இன்ப சுகம் கண்டு வந்தான். எண்ணங்களால் அவன் விளை யாடினான். வஞ்சம் தீர்த்தான். காதல் புரிந்தான். வெற்றிகள் மேல் வெற்றி பெற்றான்.
அவன் பிறந்த ஊரில் அவனுடைய மாமா ஒருவர் இருந்தார். அவன் அம்மாவும் இருந்தாள். சிறிது நிலமும் இருந்தது. அப்போது அறுவடைக் காலம். பணம் புரளக்கூடிய சமயம். தனக்கு ஐம்பது ரூபாய் அனுப்பும்படி கைலாசம் அம்மாவுக்கு எழுதினான். பதில் மாமாவிடமிருந்து வந்தது. அவர் போதனைகள் வழங்கியிருந்தார். சம்பாதித்து அம்மாவுக்குப் பணம் அனுப்ப வேண்டிய வயதில் உள்ள பிள்ளை அம்மாவிடமிருந்து பணம் கேட்பது வெட்கத்துக்கும் வேதனைக்கும் உரியதாகும் என்று குறிப்பிட்டிருந்தார்.
கைலாசத்துக்கு மாமா மீது ஒரே கோபம். அவரே சாப்பிட்டு ஏப்பமிடப் பார்க்கிறார்" என்று நினைத்தான். அவர் மட்டும் இப்போ எதிரே இருந்தால், மண்டையிலே ஓங்கி ஒரு அறை கொடுப்பேன். ஐயோ அம்மா என்று அலறிக்கிட்டு விழனும் அவரு என்று எண்ணினான்.
- இப்ப எனக்கு வறட்சி நிலை. படுவறட்சி. பணம் கேட்டால் போதனை பண்ணுகிறாரு பெரியவரு. கடவுளுக்கு உரியதைக் கடவுளுக்குக் கொடு; சீசருக்கு உரியதை சீசருக்குக் கொடு. சாத்தானுக்கு உரியதை சாத்தானுக்கே கொடு எனக்கு உரியதை எனக்குத் தருவதில் உனக்கென்ன தடை?
அவன் எண்ணங்கள் சூடேறி வெடித்தன.
இரண்டு நாட்களுக்குப் பிறகு ஊரிலிருந்து கடிதம் வந்தது. மாமா ஏணியிலிருந்து கீழே விழுந்து விட்டார்; மண்டையில் பலத்த அடி கட்டுப் போட்டிருக்கிறது என்ற செய்தியை அறிந்ததும் அவன் உள்ளம் கும்மாளியிட்டது.
"ஐயாப்பிள்ளை எண்ணினார். டகார்னு அங்கே பலித்து விட்டது. எண்ணங்கள் சிலசமயம் அப்படி அப்படியே நிறைவேறி விடும். எண்ணுகிறவர் உள்ளத் திண்மை உடையவர் என்றால் எல்லா எண்ணங்களும் சித்தியாகிவிடும்" என்று அவன் சொல்லிக் கொண்டான்.
அவனுடைய எண்ணங்கள் - எல்லாம் இல்லாவிடினும், ஒரு சிலவேனும் - எண்ணியவாறே எய்தும் என்ற நம்பிக்கை அவனுக்கு உண்டு.
வழக்கமாக அவன் பார்வையில் படுகிற, பார்வைப் பரிமாற்றம் அளிக்கிற, பெண்களைப் பற்றி கைலாசம் எண்ணு வான். நிறையவே எண்ணி மகிழ்வான்.
"குண்டு மல்லி"யைப் பார்த்து ரொம்ப நாளாச்சே? “கொய் யாப்பழம்" இப்போதெல்லாம் தென்படவே காணோமே? "டொமட்டோ பிராண்டை இந்த வாரம் சந்திக்கவே இல்லையே? - இந்த ரீதியில் தான்.
ஆச்சர்யம்! அவனால் எண்ணப்படுகிற முட்டகோஸ் மூஞ்சி" அல்லது "குடமிளகாய் மூக்கு" அல்லது "அரிசி அப்பளாம்" அல்லது எவளோ, அவளே சில நிமிஷ நேரத்தில் அவன் எதிரே வந்து கொண்டிருப்பாள். ஸ்டைல் பண்ணிக் கொண்டு குறுகுறு பார்வை வீசியபடி. "எண்ணினேன். எதிரே வருகிறாய். வாழ்க!" என்று அவன் மனம் வாழ்த்தும்.
எந்தப் பெண்ணும் அவனைக் கண்டு மயங்கி விடுவாள்; அவன் ஆசையோடு எண்ண வேண்டியதுதான், அவள் வசப்பட்டு விடுவாள். இது கைலாசத்தின் "பெட் ஐடியா"!
"அவனுக்கு கற்பனை அதிகம்" என்றார்கள் அவன் நண்பர்கள். இது ஒரு மாதிரிப் பித்து"
அவன் வசித்த வீட்டுக்கு எதிர் வீட்டில் ஒரு பெண் இருந்தாள். "மிஸ் யுனிவர்ஸ்" "மிஸ் இந்தியா" என்றெல்லாம் அவளை வியந்துவிட முடியாது. "மிஸ் அந்த வட்டாரம்" இத்தெருவின் இணையற்ற பியூட்டி" என்று கூடச் சொல்ல இயலாது. இருந்தாலும் அவள் வசீகர பொம்மையாக விளங்கினாள் கைலாசத்தின் கண்களுக்கு. அவளுடைய அடக்கம் ஒடுக்கம் வகையரா அவனுக்கு மிகுதியும் பிடித்திருந்தன.
இவளை அவன் அடிக்கடி பார்ப்பது உண்டு. அவளும் பார்ப்பது வழக்கம்தான். அதீதப் பார்வையில் பொருள் பொதிந்த தனிமொழி நீச்சலடிக்கிறது என்று கைலாசம் கருதினான். என்ன மொழி, தெரியாதா! காதல் மொழியேதான்.
அவளிடம் பேசுவதற்கு அவனுக்கு வெட்கம், கூச்சம், தயக்கம் எல்லாம் தான். அவன் தான் சங்கோஜி ஆயிற்றே! ஆகவே, தன் காதலைக் கொட்டி அவளுக்கு ஒரு கடிதம் எழுதினான். தொடர்ந்து இரண்டு கடிதங்கள் அனுப்பினான். அவளிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை.
அதற்காக அவன் எண்ணங்கள் வளராமல் ஒடுங்கியா கிடக்கும்? கைலாசம் அவளோடு கைகோத்து கடற்கரை மணலில் பிற்பகல் மூன்று மணிக்கு உலா போனான். இரவில் சினிமாவுக்குச் சென்று மகிழ்ந்தான். திருவான்மியூர், திருவொற்றி பூர் கடலோரத்தின் தனிமை இடங்கள் பலவும் அவ்விரு வரையும் அடிக்கடி காணும் பேறு பெற்றன. ஒரு ஒட்டலில் இரண்டு பேரும் தங்கினார்கள். இன்பமாவது இன்பம்! ஆகா ஆகாகா!
இவை எல்லாம் நடந்து முடிந்த நிகழ்ச்சிகள் தான், அவன் எண்ணத்தில். எண்ணம் ஜிகினா வேலை செய்தது. அவனுக்கே பொறுக்கவில்லை. நண்பர்கள் பலரிடமும் இவற்றை சுவையாக அளந்து தள்ளினான் கைலாசம்.
இவ்விஷயம் அந்தப் பெண்ணின் தந்தை காதையும் எட்டி விட்டது.
அவர் முரடர். அந்த வட்டாரத்தின் ரெளடி. அவர் மகளை மிரட்டினார். உண்மை புலனாயிற்று. அந்தப் பெண் ரொம்ப சாது. அவள் பேரில் தவறே இல்லை. தந்தை நேரே கைலாசத் தைத் தேடி வந்தார். அவன் கழுத்தைப் பிடித்து உலுக்கி, கன்னத்தில் இரண்டு அறை கொடுத்தார். "அயோக்கியப் பதரே! உனக்கு ஏண்டா இந்தப் புத்தி? அறியாப் பெண் ஒருத்தி பேரை அநியாயமாகக் கெடுத்துக் கொண்டு திரிகிறாயே. இதிலே உனக்கு என்னடா லாபம்? அவள் வாழ்க்கையே கெட்டுப் போகு மேடா. இதுவா ஒரு விளையாட்டு? இனிமலோவது ஒழுங்காக நடந்து கொள்!" என்று முதுகில் இரண்டு குத்து விட்டார்.
"ஐயோ சாமி, செத்தேன்" என்று அலறி விழுந்தான் கைலாசம்.
"அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டான்! இனிமேல் பையன் தங்கக் கம்பி ஆகிவிடுவான், பாருங்கள்!" என்று உறுமி விட்டுப் போனார் முரட்டுப் பேர்வழி.
அந்த வேளைக்கு அப்பாவி கைலாசம் எண்ணங்களை வளர்க்கவில்லை. அந்த ஆசையும் எழவில்லை. சுடுகாட்டையும் தீயையும் நெடிது கிடத்தப்பட்ட தன் உடலையும் எண்ணி மகிழும் அளவுக்கு அவன் மனம் பக்குவம் அடைந்திருக்க வில்லையே! அவனுக்கு வாழ்க்கை தானே எண்ணங்கள் - எண்ணம் பூராவும் வாழ்க்கையைப் பற்றியது தானே?
”இப்படி அதிர்ச்சி வைத்தியம் செய்யக்கூடிய ஆசாமி யாராவது ஆரம்பத்திலேயே அவன் வாழ்வில் குறுக்கிட்டிருக்க வேண்டும். பையனின் "கம்பீர ஜன்னி" முற்றி வளர்ந்திருக்காது!" என்று ஒருவர் சொன்னார்.
தங்க நாணயங்களைக் குலுக்கி வீசுவது போல் கலகலக்கும் தனது "ட்ரேட் மார்க்" சிரிப்பைக் கொட்டவில்லை கைலாசம். பாவம்! அவன் ஆஸ்பத்திரியை நோக்கிப் போய் கொண்டிருந்தான்.
(தீபம்" - ஆண்டுமலர், 1966)
-------
28. சிவத்தப்புள்ளை
சிவத்தப் புள்ளையூர் –
அந்த ஊர்க்கு முன்பு இருந்த பெயர் மறைந்து போகும் படியாக, அந்த ஊர்காரர்களே மறந்து விடும்படி, இந்தப் பெயர் நிலைபெற்று அநேக வருடங்கள் ஆகிவிட்டன.
அந்த ஊருக்கு இப்படி ஒரு பெயர் ஏற்படுவதற்குக் காரணமாக இருந்த ரஞ்சிதம் கதை முடிந்தும் சில வருடங்கள் ஓடி விட்டன.
சில விசித்திரமான பெயர்கள் எத்தனை காலமானாலும் மாறுவதில்லை. "பிள்ளையைப் போட்டுப் பலாப்பழம் எடுத்தவள் ஓடை" என்ற பெயர் ஒரு சிற்றோடைக்கு நிலைத்து, கால காலமாக வழங்கி வருவது போல. என்றைக்கோ, எவளோ ஒருத்தி, ஓடும் நீரில் மிதந்து வந்த பலாப்பழத்தை எடுக்கும் ஆசையோடு, கைப்பிள்ளையைக் கரைமீது கிடத்தி விட்டு பழத்தைத்துரத்தி ஒட, - அவள் அதை எடுத்துத் திரும்பி வருவதற்குள் பிள்ளை உருண்டு ஒடையில் விழுந்து நீரோடு செல்ல - அவள் பழத்தைக் கரையில் வைத்து விட்டு பிள்ளையைப் பிடிக்க ஒட - பழமும் புரண்டு புரண்டு நீரில் அடிபட்டுச் செல்ல - முடிவில் பிள்ளையும் போய் பழமும் போய், அவளது செயலின் அழியாத நினைவாய் அந்த ஒடை ஒரு பெயரை தாங்கிக்கொண்டு நெளிகிறது இன்றும்.
அதைப் போன்றது தான் ரஞ்சிதத்தின் கதையும்.
ரஞ்சிதமும் ராணியும் சுற்று வட்டாரத்தில் பிரசித்தி பெற்ற ஆட்டக்காரிகளாக இருந்தார்கள். அது ஒரு காலம். கரகம் ஆடுவது, சும்மா குதித்துச் சுற்றிச் சுழன்றாடுவது என்று ஒரு தொழிலை மேற்கொண்டிருந்தார்கள். கோயில்களில் கொடை, திருவிழா என வந்தால், இவர்களுக்கு விசேஷமான கவனிப்பும் வருமானமும் கிட்டும்.
சுப்பய்யா என்று ஒருவன். அவன்தான் அவர்களுக்குப் பாதுகாப்பாளன். நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்கிறவன். விழா விசேஷங்களுக்க அவர்களை இட்டுச் சென்று. நிகழ்ச்சிகளை பொறுப்பாக நடத்திவைத்து, பணம் பெற்று, அவர்களுக்கு ஒரு தொகை கொடுத்துவிட்டு, மீதியை தன்பங்காக வைத்துக் கொள்கிறவன். கான்ட்ராக்டர், மானேஜர், இயக்குனர் என்று சமயத்துக்குத் தக்கபடி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வான்.
ரஞ்சிதம் ஒரு ஊரிலும், ராணி பக்கத்து கிராமத்திலும் வசித்தார்கள். ரஞ்சிதம் நல்ல சிவப்பு. ராணி கறுப்பு. ஆகவே, அவர்களைப் பற்றிப் பேசியவர்கள் "சிவத்தப்புள்ளை" "அந்தக் கறுத்தப்புள்ளை" என்று குறிப்பிடுவது இயல்பாக இருந்தது. ராணி - ராணி என்ற அடிக்கடி சொல்லும் சுப்பய்யாவுக்குக்கூட, ரஞ்சிதம் என்று கூறுவது சிரமமாக இருந்ததோ, அல்லது சிவத்தப் புள்ளை என்று குறிப்பிடுவது மனசுக்குப் பிடித்திருந்ததோ, தெரியவில்லை - சிவத்தப் புள்ளை என்று சொல்லு திர்ப்பதில் ஒரு சந்தோஷம் கிடைத்ததாகவே தோன்றியது.
"ஒரு நிகழ்ச்சி ஏற்பாடாகியிருக்கு. ராணியை பார்த்துப் பேசிவிட்டு, இப்ப சிவத்தப் புள்ளை ஊருக்குப் போறேன் அவளிடம் தகவல் சொல்ல. சுப்பய்யா இவ்வாறு கூறுவது வழக்கம். அவ்வூர் சிவத்தப்பிள்ளையூர் என்று பெயர் பெறுவதற்கு பிள்ளையார் சுழி போட்டவன் சுப்பய்யா தான் என்று உறுதியாகச் சொல்லலாம்.
பிறகு, ரஞ்சிதத்தின் ஆட்டத்தைப் பார்த்து மயங்கியவர்கள், அவளைப் பார்த்துக் கிறங்கியவர்கள், அவளுடைய பெயரைக் கேட்டுச் சொக்கியவர்கள் எல்லோரும் "அந்த சிவத்தப் புள்ளை" என்றும், "சிவத்தப்புள்ளையூர்" என்றும் பேசுவதில் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
ரஞ்சிதம் சிவப்பாக இருந்தாள். சிரித்துச்சிரித்துப் பேசினாள். ஒய்யாரமாக நடந்தாள், ஒயிலாக நின்றாள்; நெளிந்தாள். கறுவண்டுக் கண்களால் கவ்வுவதுபோல் பார்த்தாள், எனவே பார்த்த அனைவர் உள்ளத்திலும் இடம் பெற்றாள்.
சுற்று வட்டாரத்துக் கோயில்களில் கொடை, விசேஷ விழா என்று எது வந்தாலும், சுப்பய்யாவுக்கு அழைப்பு வரும்; யாரை ஏற்பாடு பண்ணினாலும் பண்னாவிட்டாலும். அந்த சிவத்தப் புள்ளையை கண்டிப்பாக் கூட்டிட்டு வந்திரனும் என்று வலியுறுத்தப்படும்.
அப்படிக் கோருகிறவர்கள் ஆசையை நிறைவேற்றி வந்த சுப்பய்யா, "அது சாத்தியம் இல்லீங்க, அது இப்ப நம்பகை யிலே இல்லை" என்று சொல்லக்கூடிய காலமும் வந்தது.
"அது இப்பல்லாம் இதுமாதிரி ஆட்டத்துக்கு வாறதில்லே. ஸ்பெஷல் டிராமாவிலே நடிக்கப் போகுது. பெரிய நடிகைன்னு நினைப்பு அதுக்கு" என்று சுப்பய்யா குறைபட்டுக் கொள்வதும் சகஜமாயிற்று.
ஸ்பெஷல் நாடகமேடையின் ஜோதியாக மாறிவிட்ட ரஞ்சிதம் மேலும் கீர்த்தியும் கவனிப்பும் பெற்றாள். அவளது ஊரின் பெயரும் பரவியது.
"அந்த சிவத்தப்புள்ளை நடிக்குதோ இல்லையோ - அதுகிட்டே நடிப்புத்திறமை இருக்கோ இல்லியோ - அது சும்மா மேடையிலே வந்து நின்னு, கண்களை ஒரு சுழட்டுச் சுழட்டி, ஜோரா ஒரு சிரிப்பு சிரிச்சாலே போதும். நாடகம் பார்க்க வந்த வங்க அப்படியே சொக்கிப் போவாங்க சொக்கி" இவ்விதமான பாராட்டுரைகள் தாராளமாகவே கிடைத்தன அவளுக்கு.
இந்தச் சந்தர்ப்பத்தில் ராஜப்பா என்கிற ஷோக்சுந்தரம் ரஞ்சிதத்தின் துணைவனாய், பாதுகாப்பாளனாய் இருந்து வந்தான். தெருக்கூத்து ஆட்டக் காரியாக இருந்த சிவத்தப் புள்ளையை நாடகமேடை இளவரசி மிஸ் ரஞ்சிதமாக உயர்த்தியவனே அவன்தான்.
நாடகக்கலையை உய்விக்க வேண்டும் என்கிற தாகத்தை விட, நாடங்களில் நடிக்க வருகிற சுந்தரிகளையும் சிங்காரி ஒய்யாரிகளையும் அனுபவித்து ஜாலி பண்ண வேண்டும் எனும் மோகமே ராஜப்பாவை இயக்குவித்தது. அவனிடம் பணவசதி இருந்தது. ஊக்குவிக்கும் நண்பர்களும் சேர்ந்தார்கள். அவன் நாடகக் கான்ட்ராக்டர் ஆகி "ஸ்பெஷல் டிராமா" க்கள் நடத்தி வந்தான். வெவ்வேறு ஊர்களில்.
அப்படிச் சுற்றி வந்தபோது தான் ரஞ்சிதம் அவன் பார்வையில பட்டாள். "இப்படி தெருத் தெருவாக ஆடி அலைக்கழிவதை விட, ஜம்னு நாடகமேடையில் நடிக்கலாமே. அதனால் பெயரும் புகழும் வரும். பணமும் அதிகம் கிடைக்கும். சுகமாக வாழவும் முடியும்" என்று ராஜப்பா ஆசைப்பேச்சுகள் பேசினான்.
ரஞ்சிதம் அவனாலும் அவன் பேச்சுக்களாலும், மேடைக் கவர்ச்சியினாலும் வசீகரிக்கப்பட்டாள்.
"ஸ்பெஷல் டிராமாக்களிலே ஜொலிக்குதே ஒரு சிவத்தப் புள்ளை, அதுக்கு இந்த ஊருதான்" என்று ஊருக்கு விளம்பர மும் தேடித்தந்தாள்.
காலம் ஒடிக்கொண்டிருந்தது.
திடீரென்று நாடகமேடை ஜோதி ஸ்பெஷல் டிராமா உலகிலிருந்து அஸ்தமித்து விட்டது.
அந்தச் சிவத்தப்புள்ளை சினிமாவிலே நடிக்கப் போயிருக்கு தாம்" என்று பேச்சு எழுந்தது.
"அடி சக்கைன்னானாம்!" என ஆரவாரித்தார்கள் அந்த வட்டாரத்தினர்.
"சவம் கெட்டுக்குட்டிச் சுவராகப் போகுது. பின்னே அங்கே போயி உருப்படவா போகுது அது?" என்று கரித்துக் கொட்டினான் ராஜப்பா.
"கிளி தன் கையைவிட்டுப் பறந்து போயிட்டுதே என்கிற வயித்தெரிச்சலில் இவன் இப்படிப் புலம்புதான்" என்று அவனை விமரிசித்தார்கள் மற்றவர்கள்.
சினிமா உலகத்தைச் சேர்ந்த நபர்; "புதுமுகம்" களை தேடி வந்திருக்கிறேன் என்று சொல்லி ஒரு ஆசாமி அந்தப் பக்கம் வந்தான். தடயுடல் லாட்ஜ் ஒன்றில் தங்கினான். யார்யாரையோ பார்த்தான். சிவத்தப்புள்ளை ரஞ்சிதம் பற்றி யாரோ அவன் காதில் கிசுகிசுத்தார்கள். அவளை பேட்டிகான ஏற்பாடு செய்தார்கள்.
அவள் வந்தாள். பார்த்தாள். சிரித்தாள்.
மிஸ்டர் சினிமாவாலா கிறக்கமுற்றார். அப்புறம் என்ன? அவரும் அவளும் முதல் வகுப்பு வண்டியில் பிரயாண மானார்கள், சினிமாபுரியை நோக்கி.
புதிய படங்கள் வேகம் வேகமாக வந்தன.
ரஞ்சிதம் எதிலாவது வருகிறாளா என்று அந்த வட்டாரத்தினர் முழித்துப் பார்த்தார்கள்.
ஒரு படம் வந்தது.
அதில் கும்பல் காட்சியில் கூடிநின்று கும்மி அடித்து குதியாட்டம் போட்ட ஒருத்தியை கவனித்த ஒருவர், "இது நம்ம ஊர் சிவத்தப்புள்ளை இல்லையா?" என்றார்.
கூட இருந்தவர்களும் உற்று நோக்கினார்கள். "ஆமா. அவளே தான். ரஞ்சிதம் தான்" என்று சாட்சி கூறினார்கள்.
செய்தி வேகமாகப் பரவியது. சினிமாவில் நடிக்கும் சிவத்தப்புள்ளையை தரிசிப்பதற்காக தினசரி கூட்டம் திரண்டது.
"சினிமாவிலே நடிக்கப் போயிருக்குதே சிவத்தப்புள்ளை அதுக்கு இந்த ஊருதான்" என்று பேசுவதில் பெருமை கொண்டார்கள் அவ் வட்டாரத்தினர்.
"ஹூம் என்ன பிரமாதமா நடிச்சுக் கிழிச்சிட்டா கும்பலோடு கும்பலாவந்து போற எக்ஸ்ட்ராவா தானே சான்சு கிடைச் சிருக்கு!" என்று ராஜப்பா குறைகூறினான்.
"கும்மியாட்டம், கூத்துக்குதிப்பெல்லாம் சினிமாவிலே பண்ணுதே ரஞ்சிதம், அதுக்கு டிரெயினிங் குடுத்ததே நாமதான். ஆரம்ப காலத்திலே, நம்ம கையிலே இருந்துதே ஒரு சிவத்தப்புள்ளை அதே தான் இது" என்று சுப்பய்யா சொல்லிச் சொல்லி மகிழ்ந்து போனான்.
அந்த ஒரு படத்துக்குப் பிறகு, ரஞ்சிதத்தின் நிழல் வேறு எந்தப் படத்திலும் காட்சி தரவுமில்லை. அவள் என்ன ஆனாளோ, சிவத்தப்புள்ளையூர் வாசிகளுக்கு அதுவும் தெரியாது.
"என்ன தெரியாதா இங்கேயிருந்து அதை கூட்டிக்கிட்டுப் போனானே அவனோட ஆசை நாயகி ஆகியிருப்பா. அவ அலுத்துப்போனதும் அவன் அவளை கைவிட்டிடுவான். பிறகு யார் யார் தயவிலோ வாழவேண்டியிருக்கும். ஒளியைக்கண்டு மயங்கித் தாவுற விட்டில் கதைதான். சிவத்தப்புள்ளை - ஹoம்ப், பாவம், அவ்வளவு தான், என்று அனுதாபம் உதிர்த்தான் ராஜப்பா.
("வஞ்சிநாடு 1980)
--------
29. மனம் தேற மருந்து
கைலாசம் படுத்த படுக்கையாகக் கிடந்தான்.
அவனைப் பார்த்துப் போவதற்காகப் பலபேர் வந்தார்கள்.
அவன் இளம் கவிஞன். கலைஞன், இலக்கிய ரசிகன். சதா புத்தகங்களைப் படித்து, ரசித்து, அவற்றின் நயங்களில் ஆழ்ந்து கிடப்பவன். இப்படி அவனைப் பலரும் அறிந்து வைத்திருந்தார்கள்.
ஆகவே, அவன் நண்பர்கள், தெரிந்தவர்கள், அவனைப் பற்றிக் கேட்டிருந்தவர்கள் என்று பல ரகத்தினரும் வந்தார்கள், அவன் என்னென்ன மருந்துகள் சாப்பிடுகிறான், எந்த வைத்தியரிடம் சிகிச்சை பெறுகிறான் என்பன போன்ற விஷயங்கள் குறித்தும் அனுதாபத்தோடு கேள்விகள் கேட்டார்கள். ஆதரவாகச் சில சில வார்த்தைகள் சொன்னார்கள், போனார்கள்.
உரிமை பெற்ற சிலர் ”நீ அதிகம் படிக்கக் கூடாது. கொஞ்ச காலத்துக்கு எழுத்தை மறந்துவிடு. உடம்பைக் கவனித்துக் கொள். ஒய்வு நிரம்பத்தேவை. சுவர் இருந்தால்தானே சித்திரம் எழுத முடியும்? "உடம்பார் அழியின் உயிரார் அழிவார்" என்று திருமூலர் சொல்லவில்லையா? கடன் வாங்கியாவது உடலைத்தேற்றிக் கொள்ள வேண்டியது அவசியம் அப்பனே!" என்ற தன்மையில் அன்புரை உபதேசித்தார்கள். சிலர் பழங்கள் வாங்கி வந்தார்கள். ஒருவர் ஆர்லிக்ஸ் வாங்கி வந்து அன்பளிப்பாக உதவினார். ஒரு நண்பர் தேன்புட்டி கொண்டு தந்தார். "தேன் உடம்புக்கு நல்லது. தினசரி தேன் சாப்பிடு. அப்புறம் பார். எலுமிச்சை ரசத்தைத் தேனுடன் கலந்து சாப்பிட்டால் ரொம்ப ரொம்ப நல்லது" என்று இலவச சிகிச்சை உபதேசமும் அருளினார்.
போதனைகளும் நல்லுரைகளும் கைலாசத்துக்கு அலுப் பையோ, மனக் கசப்பையோ தரவில்லை. மாறாக, ஒருவிதப் பெருமை உணர்வையே அவை அவனுள் வளர்த்தன.
பெரும்பாலரது கவனிப்பையும் பெற வேண்டும் என்ற ஏக்கம் அவன் உள்ளத்தில் உறைந்து கிடந்தது. இப்போது அனைவரும் தேடி வந்து, அன்புடன் விசாரித்து, நல்ல வார்த்தை கள் சொல்வதற்கு, நோய் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திவிட்டது. "ஆகவே நோயும், வேண்டுவதே மானிடர்க்கு!" என்றுகூட அவன் மனம் பாடிக் களித்தது.
இவ்வளவு திருப்தியினூடும் கைலாசத்துக்கு உள்ளூர ஒரு வருத்தம். "எல்லாரும் வந்து பார்க்கிறாங்க. இந்த விநாயகம் பயல் வரவே இல்லை பாரேன்” என்று.
விநாயகம் பயல் என்று அவன் மனம் எரிச்சலுடன் குறிப்பிட்ட திருவாளர் விநாயகம் இளம் வயசு நபரே ஆயினும் விநாயகம் பிள்ளை என்றே அந்த வட்டாரத்தில் அறிமுகம் ஆகியிருந்தார். அவர் கவலை இல்லாத மனிதர். அவரது உள்ளத்தில் கவலைப் பயிர் வளர்ந்ததோ என்னவோ, அதை அவர் வெளியே காட்டிக் கொண்டதில்லை. களிதுலங்கும் நகையும் கலகலவென்ற பேச்சுமாகத் திரியும் அவர் இருக்கிற இடத்தில் சிரிப்பும் தமாஷ"oம் நிலவும். அவர் கவிதைகள் எழுதுவதில் அக்கறை காட்டிய தில்லை. எனினும் கவி உள்ளம் படைத்தவர். வாழ்க்கையையே கவிதையாகச் சுவைத்து வாழக் கற்றுக் கொண்ட ரசிகர். அவர் கைலாசத்தின் நண்பர். அவன் எழுத்து முயற்சிகளைப் படித்து உற்சாகமாக அவ்வப்போது ஏதேனும் சொல்லி மகிழ்விப்பார்.
கைலாசம் சீக்காயிருக்கிறான் என்று கேள்விப்பட்டும் அவனைப் பார்க்க வரவில்லை அவர். அது அவனுக்குப் பெரும் மனக்குறையாகவே இருந்தது.
ஒருநாள் சாயங்காலம் தனியாக, சோர்ந்து போய் கிடந்தான் கைலாசம். அன்று அவனைப் பார்க்க யாரும் வரவில்லை. அநேகமாக எல்லோரும் ஒரு தடவை வந்து பார்த்து விசாரித்துப் போய் விட்டதனால், அவனைக் கண்டு போக வந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. என்றாலும், இடைக்கிடை யாராவது தலையைக் காட்டி விட்டுப் போவது வழக்கம். அன்று பூராவுமே யாரும் வரவில்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் அலுவல்கள், கவலைகள், அலைச்சல்கள் எவ்வளவோ இருக்கும்தானே!
கைலாசம் தொய்ந்த மனசின் இருண்ட நினைப்புகளோடு ஒடுங்கிக் கிடந்தான்.
அப்போது வந்து சேர்ந்தார் விநாயகம் பிள்ளை. சிரிக்கும் கதிரொளி சட்டென அவ் அறையினுள் பாய்ந்தது போலிருந்தது அவர் வருகை.
கைலாசத்தின் கண்கள் அவர் கைகள் பக்கம் பாய்ந்தன. இது சமீப காலப் பழக்கமாகப் படிந்திருந்தது அவனிடம். வருகிற வர்கள் அவனுக்காக ஏதாவது வாங்கி வருவது வழக்கமாக இருந்ததால், அறைக்குள் புகுவோர் கையில் என்ன எடுத்து வருகிறார்கள் என்று அறியும் ஆவல் அவனுள் கிளர்ந்தது. நாளடைவில், தன்னைப் பார்க்க வருகிறவர்கள் பழமோ, பிஸ்கட்டோ அன்றி வேறு எதுவுமோ வாங்கி வரவேண்டும் என்று எண்ணவும், கொண்டு வரமாட்டார்களா என்று எதிர் பார்க்கவும் தொடங்கியது அவன் மனம்.
விநாயகம் பிள்ளை வெறும் கையராய்தான் வந்திருந்தார். "ஒண்ணுமே வாங்கி வராம வந்திருக்கான் பாரு! சீக்குக்காரனை பார்க்க வாறவன் ஏதாவது வாங்கி வரவேணாம்?" என்று அவன் மனம் முணுமுணுத்தது.
அவர் அவனைத் தலையோடு காலாகப் பார்த்தார். அருகில் மேஜை மீது, சன்னல் விளிம்பில், மற்றும் ஸ்டூல் மீது இருந்த புட்டிகளையும் பொட்டலங்களையும் ஒரு பார்வையில் விழுங்கினார். அறை முழுவதையும் கண்களால் தடவினார். அவன் அருகில் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்தார்.
வழக்கமான கேள்விகள் பிறக்கும்; ஆதரவும் அனுதாபமும் பொதிந்த பேச்சுகள் ஒலிக்கும் என்று எதிர்பார்த்த கைலாசம் ஏமாற்றமே அனுபவித்தான்.
விநாயகம், பொதுவாக எல்லோரும் நோயாளிகளிடம் விசாரிப்பதுபோல, "எப்படி இருக்கிறே? என்ன செய்யுது? ரொம்பக் கஷ்டப்பட்டுப் போனியா? இப்ப தேவலையா?” என்ற ரீதியில் கேள்விகளை அவனிடம் கேட்கவேயில்லை. “ரொம்ப மெலிஞ்சு போயிட்டியே உடம்பைக் கவனிச்சுக்கோ" என்பது போன்ற உபசார மொழிகளும் பேசவில்லை.
அவர் சகஜமாகப் பேசுவது போலவே இப்போதும் பேசினார். "வாற வழியிலே ஒரு குதிரையைப் பார்த்தேன். அதல்லவா குதிரை மினுமினுன்னு, கறுப்பு நிறத்திலே, நெற்றியிலே வெள்ளை படிந்து, டாக் டாக்குனு நடைபோட்டு வந்தது. எவ்வளவு ஜோரா இருந்தது தெரியுமா? ஏ, நீ ஆயிரத்தைச் சொல்லு. மோட்டாரு, பைக்கு, ஸ்கூட்டரு பற்றி பெருமையாப் பேசு. வேண்டாம்கலே, ஆனா குதிரை மேலே சவாரி போற அழகுக்கு அதெல்லாம் ஈடாகாது. என்ன மிடுக்கு, என்ன கம்பீரம், என்ன நடை! நீ அதை கண்ணாலே பார்த்திருக்கணும். எப்பவுமே எனக்கு ஒர் ஆசை. அருமையான குதிரை வாங்கி, தினம் அது மேலே ஏறி உல்லாசமா ஊரைச் சுத்தி வரணும். கொடுத்து வைக்கலே. எதுக்கும் கொடுத்து வச்சிருக்கணும் டேய்!”
கைலாசம் பெருமூச்செறிந்தான்.
சும்மா புரண்டு படுத்தான். அதை அவர் கவனித்ததாகவே காட்டிக் கொள்ளவில்லலை. உற்சாகமாக வார்த்தைகளைக் கொட்டினார்.
"உனக்கு விஷயம் தெரியுமா? மேல ரத வீதியிலே புது ஒட்டல் ஒண்ணு வந்திருக்கு. அங்கே பாசந்தி பிரமாதம். அடையும் அவியலும் அபாரம். இந்த இரண்டையும் ருசிக்கற துக்குன்னே ரொம்பப் பேரு அங்கே வாறாங்க. காபியும் ஃபஸ்ட் க்ளாஸா கொடுக்கிறான். நீ அங்கே போயி அவசியம் இதுகளை டேஸ்ட் பண்ணணும். அப்புறம் அநத பாசந்தி, அடை அவியல், காபிக்கு ஒரு கவிதையே பாடிப் போடுவே!"
இதைச் சொல்லி விட்டு அட்டகாசமாகச் சிரித்தார் விநாயகம் பிள்ளை. கைலாசம் அவர் முகத்தையே பார்த்தபடி கிடந்தான்.
"எழுந்திருச்சி உட்காரப்பா. என்ன சும்மா படுத்துக்கிட்டு! வேணுமின்னா ரெண்டு தலானியை அண்டை கொடுத்துக்கோ. அல்லது ஈசிசேரிலே சாய்ந்து இரேன். உம். உன்னாலே வர முடியாது போலிருக்கு, நாங்க அஞ்சாறு பேரு அருவிக்குப் போக பிளான் பண்ணியிருக்கோம். போன வருசம் நீ வந்தியா? ஞாபகம் இல்லே. போன மாசம்கூட நான் போயிருந்தேன். அடா அடா, அருவியிலே குளிக்கிற சுகம் இருக்குதே."
அந்த வேளையிலேயே அவர், கொட்டுகிற அருவியில் குளித்துக் கொண்டிருப்பது போல் சொக்கிய ஒரு சுகானுப வத்தை முகத்தில் தேக்கினார். "த்சொத்சொ!" என்றார்.
தினசரி அருவியிலே குளிக்கணும். ஒற்றையடிப் பாதை வழியே மலைப்பகுதிகள், காடுகள் ஊடே எல்லாம் சுற்றித் திரியணும். அருமையா பொழுது போகும். கவலை என்கிறதே தலை காட்டாது. சீக்கு கீக்கு எதுவும் கிட்டத்திலே அண்டாது. நான் அப்படி வாழ்க்கையை கழிக்கலாம்னு எண்ணியிருக் கிறேன். நீயும் வாறதா இருந்தால் வரலாம். வசந்த காலம் வந்திட்டுது. எங்கும் ஜம்னு புது அழகும் புது மணமும் புதுப்புது வர்ணங்களும் நிறைஞ்சு கிடக்கு.
"கல்யாண முருங்கை பளிர்னு பூத்துக் குலுங்குது, நீயும் கவனிச்சதுதானே? முதன் முதல்லே வசந்தத்தின் வருகைக்கு கட்டியம் கூறுவதுபோல இந்த முருங்க மரங்கள்தான் பூத்துக் குலுங்குது. செக்கச் செவேல்னு. நீ கூடச் சொன்னியே - வேட்டையாடி ஒரு பிராணியைக் கொன்ற புலியின் ரத்தம் தோய்ந்த நகங்கள் மாதிரி செக்கச் சிவந்த பூக்களை பூத்து நிற்கிற மரங்கள்னு ஒரு பாடலில் இருக்குதுன்னு. அது எனக்கு அடிக்கடி ஞாபகம் வரும். நீயும் அந்தப் பூங்கொத்துகளை பார்க்க ஆசைப்படுவேன்னு நினைக்கிறேன்."
கைலாசம் சுவர் பக்கமாக முகத்தைத் திருப்பிக் கொண்டான். அவன் கண்களில் நீர் சுரந்தது. அவன் உள்ளம் கனப்பது போல் ஓர் உணர்வு.
விநாயகம் தன் பாட்டுக்குப் பேசிக் கொண்டே போனார். “பெரிய அதிசயங்கள் நம்மைச் சுற்றிலும் நடைபெற்றுக் கொண்டே இருக்கு. மனுசங்க தான் நேரம் காலம் எல்லாம் அறிய கடியாரம், காலண்டர், பஞ்சாங்கம் என்று தயார் பண்ணி வச்சிருக்காங்க. காரியங்கள் ஒழுங்கா நடைபெறணும்கிறதுக்காக புரோகிராம், டைம் டேபிள், கால அட்டவணை இப்படி என்னென்னவோ சொல்லித் திட்டமிடுறாங்க. ஆனா இயற்கை கடியாரம் இல்லாம, டைம் டேபிள், புரோகிராம் எதுவுமே இல்லாம வேலை செய்யுது. ரொம்ப கரெக்டா, கால நியதி தவறாமல் காரியங்கள் நடைபெறுது. பூக்கள் அந்தந்த வேளைக்கு, அந்த அந்தக் காலத்துக்கு உரிய முறைப்படி பூத்துக் குலுங்குது, காய்கள் கனிகள் உண்டாகுது….
”இந்த அரசமரத்தைப் பாரேன். ஒரு சந்தர்ப்பத்திலே மொட்டையாய் மூளியா மாறி நிற்குது. பிறகு, அதுக்கே ஏதோ சிலிர்ப்பு ஏற்பட்டது மாதிரி, உள்ளுற உணர்ச்சிப் பரவசம் பெற்றது போல, இலை மொக்குகளை வெளிப்படுத்துது. தாமிரத் தகடுகள் போல, செம்மையான கண்ணாடித் துண்டுகள் போல, துளிர்கள் மரம் பூராவும் பரந்து காணப்படுது. மறு நாள் அவை எல்லாம் நிறம் மாறி மயக்குது. அப்புறம் இளம் பசுமையாய், பிறகு குளுகுளு கிளிப்பச்சை நிறமாய் இலைகள் மிளிருது. பார்க்க எவ்வளவு இனிமையாக இருக்கு! இதை எல்லாம் நீயும் கவனிச்சிருப்பேன்னு நினைக்கிறேன்….."
கைலாச் வாய் திறந்து ஒரு வார்த்தைகூடச் சொல்ல வில்லை.
”இரவின் அமைதியான நேரத்தில், அரும்புகள் ஒளியும் மணமும் பெற்று இதழ்களாக விரியும் ஓசையைக்கேட்க முடிகிறது என்று ஒரு கவிஞன் எழுதியிருக்கிறான். பூச்செடி அருகில் அமர்ந்து, அப்படி நுட்பமான ஒலியை நானும் கேட்க முடியுமா என்று கவனிக்கணும்கிற ஆசை எனக்கு உண்டு. அதுமாதிரி எண்ணம் உனக்கு எப்பவாவது வந்தது உண்டா கைலாசம்?" என்று கேட்டுவிட்டு, சன்னல் வழியாக வெளியே பார்த்தார் விநாயகம்.
அவன் திரும்பி அவரை நோக்கினான். அவன் விழிகள் ஏதோ அறியத் தவிப்பன போல அவர் முகத்தில் மொய்த்தன. பிறகு இமைகளை இழுத்து மூடிக்கொண்டான்.
விநாயகம் எதையோ எண்ணிக் கொண்டவராய்ச் சிரித்தார். "வழியிலே இரண்டு பெண்களைப் பார்த்தேன். நாகரிகங்கள். ரொம்ப ஸ்டைல். நவயுக ஸ்டைல்கள் தலைமுடியை எப்படியோ சிங்காரித்துக் கொள்வதிலும், இடுப்புச் சேலையை ரொம்பவும் இறக்கிக் கட்டிக் கொள்வதிலும்தான் விளம்பர மாகுது. இந்த அக்காளுகளும் அதே தினுசுதான். அவள்களை பார்க்கையில் எனக்கு வேறொரு பெண்ணின் நினைப்பு வந்தது. நேற்று பஸ் நிலையத்தில் பார்த்தேன். எளிய தோற்றம். அதுவே தனி அழகாகத் தோணிச்சு. சில பெண்களைப் பார்க்கையிலே மனசில் ஏதேதோ எண்ணங்கள் தலை தூக்கும். ஆனா சில பெண்களைப் பார்க்கையில் தவறான எண்ணம் எழாது. இந்தப் பெண்ணும் அப்படித்தான் இருந்தாள். புனிதம், தூய்மை, அமைதியான அழகு. அதுபோன்ற பெண் ஒருத்தியைப் பார்த்து தான் ரவிவர்மா லட்சுமி சரஸ்வதி திருஉருவங்களை ஒவியமாக்கி யிருப்பான் என்ற நினைப்பு எனக்கு எழுந்தது"….
விநாயகம் பெண்கள் பற்றித் தொடர்ந்து பேசினார். சுவையாகவும், கிண்டலாகவும பலப்பல சொன்னார். அப்புறம் குழந்தைகள் பற்றி, அவற்றின் இயல்புகள், சிரிப்பு, அழகு அம்சங்கள், விளையாட்டுப் போக்குகள் பற்றி எல்லாம் பேசினார். இயற்கை வளங்கள் பற்றி திரும்பவும் சொன்னார். மனித உழைப்பினால் மலர்ந்த நலன்கள், சிறப்புகள் பற்றியும் ஈடுபாட்டுடன் பேசினார்.
"வாழ்க்கையில் எவ்வளவோ அற்புதங்கள்! வாழ்க்கையே அற்புதமானதுதான். அவற்றை நம்மவங்க உணர்வதில்லை. உணர விரும்புவதுமில்லை. நாகரிக வசதிகள், வேலைச் சுமைகள், பொறுப்புகள், கவலைகள் என்று மனிதர்கள் தங்களுக்குத் தாங்களே ஏகப்பட்ட விலங்குகளை மாட்டிக் கொண்டு குமைகிறார்கள். அவையும் தேவைதான். அதற்காகத் தன்னைச் சுற்றியுள்ள இனிமைகளைக் கவனிக்கப்படாது, ரசித்து மகிழக் கூடாது என்கிற கண்டிப்பு, கட்டுப்பாடு எதுவும் இல்லையே! நாகரிக விளக்கொளியில் அறைக்குள் ளேயே தங்களை முடக்கிக் கொள்ளும் பட்டணவாசிகள், வெளியே அற்புத ஒளிப்பிரவாகமாய் நிறைந்து கிடக்கும் நிலாவைக் கண்டுகளிக்க மறந்து போகிறார்கள், ரசிக்கத் தவறிவிடுகிறார்கள் என்று யாரோ ஒரு கவிஞர் சொல்லியிருப்பதாக நீதானேடே சொன்னே? பின்னே என்ன!" என்றார்.
"சரி, நான் வாறேன். ரொம்ப நேரம் பேசிக்கிட்டே இருந்திட் டேன்" என்று சொல்லி எழுந்தார். வந்தது போலவே வேகமாய்ப் போய் மறைந்தார்.
அவர் போனதும் அந்த அறையில் நிலவி நின்று ஒரு பிரகாசம், மங்கிவிட்டது போல் கைலாசத்துக்குத் தோன்றியது.
அவர் தன் சீக்கைப் பற்றி எதுவுமே கேட்கவில்லை என்பதோ, "ஓய்வு எடுத்துக் கொள்! உடம்பை நல்லா கவனி" என்ற ரீதியில் இதமான வார்த்தைகள் கூறவில்லை என்பதோ, இப்போது அவன் உள்ளத்தில் உறுத்தவில்லை. விநாயகம் பிள்ளை இன்னும் கொஞ்ச நேரம் அங்கிருந்து மேலும் பல விஷயங்கள் பற்றிப் பேசாமல் போய்விட்டாரே என்று தான் அவனுக்குத் தோன்றியது.
அவர் சொன்னவை இன்னும் காதக்குள் ரீங்காரம் செய்வது போலிருந்தது அவனுக்கு. அவரோடு சேர்ந்து அந்த ஓட்டலுக் கும், அருவிக் கரைக்கும், பஸ் நிலையத்துக்கும் போக வேண்டும். அவர் சுட்டிய இனிமைகளை எல்லாம் - மற்றும் அவை போன்ற நயங்கள் பலவற்றையும் - ரசித்து மகிழத் தவறிவிட்டோமே என்ற வருத்தம் ஏற்பட்டது அவன் உள்ளத்தில்.
அவன் மெதுவாக எழுந்து உட்கார்ந்தான். அப்போது இரவு நெருங்கிக் கொண்டிருந்தது. அவன் பார்வை சன்னல் வழியாக வெளியே புரண்டது.
எலெக்ட்ரிக் விளக்குகள் ஒளிச்சிதறி மின்னின. விதம் விதமாக, பல வர்ணங்களில், பல வடிவங்களில்.
ஒரு திசையில், நெடுந்தொலை வரை பார்வை செல்வதற்கு இடம் இருந்தது. அங்கே இருட்டும் ஒளிக்கோலங்களும் இணைந்த தோற்றம் மிகக் கவர்ச்சி நிறைந்ததாக விளங்கியது.
”இப்படிப்பட்ட இனிமைகள் பலவும் என்னால் ரசிக்கப் படாமலே இயங்குகின்றன. நான் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடப்பது பேதமை, என்று அவன் மனம் சொன்னது. இனியும் இப்படியே சோர்ந்து கிடப்பது சரியல்ல என்ற எண்ணம் அவனுள் எழுந்தது. அப்போதே அவனிடம் ஒரு புது சக்தி பிறந்து விட்டது.
(அமுதசுரபி, 1993)
-----
30. ஜாலி அண்ணாச்சி
பரமசிவத்துக்கு ஜாலி அண்ணாச்சி என்ற பெயர் பொருத்த மாகத்தான் இருந்தது. அடிக்கடி தமாஷ் பண்ணிக் கொண்டிருக் கும் சுபாவம் அவரிடம் அமைந்திருந்தது.
அது சிறு பிராயத்திலிருந்தே வளர்ந்து வந்த குணம். சிறு குறும்புகள் புரிந்து, தன்னோடு இருப்பவர்களை சிரிக்கச் செய்ய வேண்டும் எனும் ஆசையினால் தான் அவர் அநேக காரியங்களை செய்து வந்தார்.
பரமசிவத்தின் சில்லறை விளையாட்டுகள் பிறருக்குத் தொந்தரவும் வேதனையும் கொடுத்து விடுவதும் உண்டு. ஆனாலும் அதற்காக அவர் மனவருத்தம் கொள்வதுமில்லை; தனது போக்கை மாற்றிக்கொள்ள எண்ணியதுமில்லை.
பரமசிவம் சின்னப்பயலாக இருந்தபோது, சில பெரியவர்கள் காசு கொடுத்து மூக்குப்பொடி வாங்கி வரும்படி அவரை ஏவுவது வழக்கம். சில சமயம், பரமசிவம் மூக்குப் பொடியோடு மிளகாய்ப் பொடியையும் கலந்து கொண்டு வந்து கொடுத்து விடுவார். தனது செயலின் விளைவை பார்க்க வேண்டும் என்று அவர் காத்திருப்பதில்லை. அப்படி நின்றால் அவருடைய முதுகுத் தோல் பியந்து போகக்கூடிய விபத்து ஏற்பட்டாலும் ஏற்படலாமே!
வாலிப வயதில், பெரிய கூட்டங்களுக்குப் பரமசிவம் போவது உண்டு. பொழுது போக்கத்தான். போகிறபோது, தண்ணிர்ப் பாம்பைப் பிடித்து, பத்திரமாக மறைத்து எடுத்துக் கொண்டு போவார். கூட்டம் நடைபெறுகிற போது அந்தப் பாம்பை வெளியே விட்டுவிடுவார். அவரும் நண்பர்களும் "பாம்பு பாம்பு" என்று கூச்சல் கிளப்புவார்கள். அந்த இடத்தில் பயமும் குழப்பமும் தலை தூக்கி விடும். மற்றவர்களின் பரபரப்பையும் பீதியையும் கண்டு பரமசிவமும் நண்பர்களும் களிப்படைவார்கள். தெருக்களில் காணப்படும் தபால் பெட்டிகளில் அவர் விளையாட்டாக தண்ணிர்ப்பாம்பை போட்டிருக்கிறார். உரிய நேரத்தில் தபால்களை எடுத்துப்போக வருகிறவர் பெட்டிக்குள் கையை விடும் போது, பாம்பு என்ன செய்யும், அந்த ஆள் எப்படி அலறி அடிப்பார் என்று ரசமாக விரிவுரை செய்து மகிழந்து போவார் பரமசிவம்.
வீதியில் போகிறபோதே, "ஐயா, உம்மைத் தானே! யோவ்!" என்று பரமசிவம் உரக்கக் கூவுவார். முன்னே, தூரத்தில் வேகமாகப்போய்க் கொண்டிருப்பவர்கள் திரும்பித் திரும்பிப் பார்ப்பார்கள். சிலர் நின்று கவனிப்பார்கள். பரமசிவம், தனக்கு எதுவுமே சம்பந்தம் இல்லாதது போல், சாதுவாகத் தன் வழியே நடப்பார்.
இவ்விதமான சிறு குறும்புகளை எல்லாம் பார்த்து ரசிக்கவும், வியந்து பாராட்டவும் அவருகில் யாரேனும் ஆட்கள் இருந்தால் தான் பரமசிவம் செய்வார். மற்றவர்கள் பாராட்டி விட்டால் அவருக்கு ஏகப்பட்ட குஷி, மேலும் விஷமங்கள் செய்வதில் உற்சாகம் காட்டுவார்.
ஒரு தடவை ஒரு வீட்டுக்கு தந்தி வந்தது. அவ்வீட்டின் தலைவர் எங்கோ போயிருந்தார். தந்தி என்றாலே வீண் கலவரமும் பீதியும் கொள்கிற இயல்பு மக்களிடம் இருக்கத் தானே செய்கிறது? தந்தி விஷயத்தைப் படித்து அறியத் தவித்தார்கள் அவ்வீட்டுப் பெண்கள். வழியோடு போன பரமசிவத்திடம் காட்டினார்கள். அவர் முகத்தை ஒரு மாதிரியாக வைத்துக்கொண்டு, "அம்மாவுக்கு ஆபத்து. உடனே புறப்பட்டு வரவும் என்று செய்தி வந்திருக்குது" என்றார். அவ்வளவுதான். அந்த வீட்டில் ஒப்பாரியும் ஒலமும் பொங்கி எழுந்தன. பரமசிவம் அங்கே ஏன் நிற்கிறார்? திரும்பிப் பாராமல் வேகநடை நடந்து வேறொரு தெருவில் புகுந்து மறைந்தார்.
வீட்டுத் தலைவர் வந்து, அழுகையையும் ஒப்பாரியையும் கண்டு, விஷயம் புரியாமல் திகைத்து, தந்தியைப்படித்து விட்டு, அட மடச்சாம்பிராணிகளா! அம்மா புறப்பட்டு வருகிறாள், ஸ்டேஷனுக்கு வந்து சந்திக்கவும்னு தந்தி வந்திருக்கு இதுக்குப் போயி, ஒ ராமான்னு அழுது புலம்புவானேன்?" என்று கண்டித்தார்.
"அந்தத் தடிமாடன் பின்னே அப்படிச் சொன்னானே?" என்றாள் ஒருத்தி. "அவன் பாடை குலைய! அவனுக்கு இங்கிலீசு தெரியாதோ என்னமோ" என்றாள் வேறொருத்தி. "தெரியாதுன்னு சொல்லாமல், இப்படி ஏன் புளுகணும்?"அவன் நாசமாப் போக" என்று பலவிதமாக ஏசிப்பேசினார்கள் பெண்கள்.
பரமசிவம் பத்தாவது படித்துப் பாஸ் பண்ணியவர்; அவருக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியும் என்பதை அவர்கள் எப்படி அறிவார்கள்? அவர்கள் இவ்வாறெல்லாம் ஏசித்துப்பு கிறார்கள் என்பது பரமசிவத்துக்கு தெரிய வழி உண்டோ? அதுவும் கிடையாது.
அப்படி மற்றவர்கள் ஏசுவது பற்றித் தெரிய வந்தாலும், அவர் கவலைப்படமாட்டார். "ஆயிரம் திட்டுக்கு ஒரு ஆனைப் பலம். பிறரது ஏச்சுகள் அதிகரிக்க அதிகரிக்க ஐயாப்பிள்ளைக் கும் பலம் அதிகமாகும்" என்று சொல்லிச் சிரிப்பார்.
"என்ன ஐயா, பலரையும் இப்படி ஏமாற்றுவது நியாயம் தானா? உமக்கே நல்லாயிருக்குதா இந்தச் சேட்டையெல்லாம்?” என்று யாராவது கேட்டால், பரமசிவம் இவ்வாறு பதில் சொல்வார் –
நானா அவர்களை ஏமாறுங்கன்னு கெஞ்சுகிறேன்? அவங்க தான் நாங்க ஏமாறத் தயாராக இருக்கிறோம், எங்களை ஏமாத்துங்கன்னு காத்திருக்காங்க. ரொம்பப் பேருக சுபாவம் இதுவாக இருக்கு. அவங்க அவங்களுடைய இயல்புப் படி ஏமாறுகிறாங்க. நான் என் சுபாவத்தின் படி காரியங்களை செய்கிறேன். அவ்வளவுதான்!”
பரமசிவத்துக்க அப்போது கல்யாணம் ஆகியிருக்கவில்லை. அந்தச்சமயம் கல்யாணம் செய்து கொள்ளும் எண்ணமும் அவருக்கு இருந்ததில்லை. ஆயினும், அவரும் அவருடைய நண்பர்கள் சிலரும் சேர்ந்து, தமாஷாக "திருமண அழைப்பு இதழ்" ஒன்றை முறைப்படி தயாரித்து, அச்சிட்டு, சிநேகிதர் உறவினர், தெரிந்தவர் அனைவருக்கும் அனுப்பி வைத்தார்கள்.
அந்த அழைப்பில் குறிப்பிட்டிருந்த நாளில் தந்திகளும் வாழ்த்துக் கடிதங்களும் நிறைய வந்து சேர்ந்தன. சிலபேர் வெளியூர்களிலிருந்து புறப்பட்டு கல்யாணத்துக்கு வந்து விட்டார்கள். சிலர் பரிசுகள் வாங்கி வந்திருந்தனர். அவர்கள் உண்மையை அறிந்ததும் அடைந்த ஏமாற்றத்தைக் கண்டு வம்பர்கள் ஆனந்த ஆரவாரம் செய்தார்கள்.
எதுவும் கேலிக்கும் கிண்டலுக்கும் அப்பாற்பட்ட விஷய மல்ல; ஜாலி பண்ணி மகிழ்ச்சி அடைவதற்காக எவரையும் ஏமாற்றலாம் என்பது பரமசிவத்தின் வாழ்க்கைத் தத்துவமாக அமைந்திருந்தது.
"பரவசிவம் பிள்ளை காட்டிலே மழை பெய்யுது இப்போ! இதே நிலைமை என்றும் இருந்து விடாது. இப்ப அவர் சிரிக்கிறார். மற்றவர்களுக்கும் சிரிப்பதற்கு சமயம் வரத்தான் செய்யும்" என்று அவரை அறிந்தவர்கள் சொல்வத உண்டு.
அவ்விதமான ஒரு சந்தர்ப்பமும் வரத்தான் செய்தது.
பரமசிவம் திருமணம் விஷயத்தில் நிகழ்த்திய கேலிக்கூத்து முடிந்த சிலவருடங்களுக்கப் பிறகு, அவர் நிஜமாகவே கல்யாணம் செய்து கொண்டார். சாந்தா எனப் பெயருடைய மங்கை நல்லாள் அவருடைய மனைவியாக வந்து சேர்ந்தாள். அவள் எடுத்ததுக்கெல்லாம் எரிந்து விழுகிற குணம் பெற்றிருந் தாள். ஓயாது தொண தொணப்பதும், அடிக்கடி அழுது புலம்புவதும் அவளது சிறப்புப் பண்புகளாக அமைந்திருந்தன. பரமசிவத்தின் சிரிப்பு வெடிகளும் பரிகாச குண்டுகளும் அந்த அம்மணியிடம் எடுபடவில்லை.
ஒரு நாள் பரமசிவம் வீட்டில் இல்லாத போது இளம் பெண் ஒருத்தி வந்தாள். நாகரீகத்தில் முற்றியவளாகத் தோன்றினாள். அவர் இல்லையா, எங்கே போயிருக்கிறார், எப்போ வருவார் என்று தூண்டித் துருவிக் கேட்டாள். அவ்வீட்டில் தாராளமாகப் பழகியவள் போல் அங்கும் இங்கும் திரிந்தாள். அதையும் இதையும் எடுத்துப் பார்த்துப் பொழுது போக்கினாள், "சே, இன்னும் வரக்காணோமே?" என்று அலுத்துக் கொண்டாள்.
”நீங்க யாரு?" என்று சாந்தா விசாரிக்கவும், அவரை எனக்கு ரொம்ப நாளாத் தெரியும். என் பேரு சுந்தரம். இதே ஊரு தான்" என்று அறிவித்தாள் அந்தச் சிங்காரி.
அவளது நடை, உடை, பாவனைகளும், பேச்சும் செயல் களும் சாந்தாவுக்கு எரிச்சல் ஊட்டின; சந்தேகம் அளித்தன. அவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. ஆனாலும், புதிதாக வந்தவளிடம் ஏசிப்பேசவும் எரிந்து விழவும் அவளுக்கு மனம் வரவில்லை. அவர் வரட்டும் என்று கருவிக் கொண்டிருந்தாள்.
பரமசிவம் வெகுநேரம் ஆகியும் வரவில்லை. மேனாமினுக்கி சுந்தரம், "எனக்கு வேறு வேலை இருக்கு. அவசரமாக ஒரு இடத்துக்குப் போக வேண்டியிருக்கு. அவர் வந்ததும், சுந்தரம் வந்து ரொம்ப நேரம் காத்திருந்தாள்னு சொல்லு. நான் வாரேன்" என்று கூறிவிட்டு, ஸ்டைல் நடை நடந்து போனாள்.
”பீடை, பாடை, தரித்திரம்! எவ்வளவு திமிரு ரொம்ப காலத்து சிநேகமாம்! வீட்டுக்கு வந்து, உரிமையா நடந்து, என்னிடம் பெருமை கொழித்து விட்டுப் போறாளே? இப்படி ஒருத்தி சிநேகிதின்னு இருக்கிற போது இவரு ஏன் என்னை கல்யாணம் செய்து கொள்ளணுமாம்?" என்று குமுறிக் கொதித்தாள் சாந்தா.
பரமசிவம் வீட்டில் அடி எடுத்து வைத்த உடனேயே சாந்தா சீறிப் பாய்ந்தாள். "உங்க அருமை ஆசை நாயகி வீடு தேடியே வந்து விட்டாளே? அவளை வரவேற்க நீங்க வீட்டோடு இருந்திருக்க வேண்டாமோ? அவள் ரொம்ப நேரம் காத்திருந்தாளே. பாவம், ஏமாற்றத்தோடு போனாள். அவள் குலுக்கும் மினுக்கும் தளுக்கும் - ஐயே, சகிக்கலே, எவளோ நாடகக்காரி போலிருக்கு. சுந்தரமாம் சுந்தரம் - துடைப்பக் கட்டை அந்தச் சனியனோடு கொஞ்சிக் கிட்டு இருக்க வேண்டியது தானே? என்னை ஏன் கல்யாணம் பண்ணி, குடித்தனம் நடத்தத் துணியனும்?.
அவள் லேசில் அடங்குவதாக இல்லை.
பரமசிவம் விழித்தார். மெதுவாக விஷயத்தை கிரகித்துக் கொண்ட போதிலும், யார் வந்திருக்கக் கூடும் என்று புரிந்து கொள்ள இயலவில்லை அவரால்.
"எனக்கு அப்படி யாரையும் தெரியாதே. ஏமாத்துக்காரி எவளாவது நைசாக வந்து நாகடமாடி, திருடிக்கிட்டுப் போக வந்திருப்பாள்" என்று அவர் விளக்க முனைந்தார்.
சாந்தா அழுது கொண்டே சீறினாள்.
"என்னை ஏமாத்த வேண்டாம். அவ தான் சொன்னாளே, ரொம்ப நாள் சிநேகம்னு. அந்த மூதேவி கூடவே நீங்க ஜாலியாக இருங்க. நான் எங்க அம்மா வீட்டுக்குப் போறேன்" என்று முணுமுணுத்தபடி, அவள் சீலை துணிமணிகளை எடுத்து பெட்டியில் வைக்கலானாள்.
"இதேதடா பெரிய இழவாப் பேச்சு!" என்று புலம்பிய படி பரமசிவம் திண்ணையில் அமர்ந்தார். "எனக்கு எவளும் சிநேகமும் இல்லை, மண்ணுமில்லை. எவள் இப்படி துணிந்து வந்து ரகளை பண்ணியிருப்பாள்?" என்று யோசித்து மூளை யைக் குழப்பிக் கொண்டிருந்தார்.
சிறிது நேரம் சென்றிருக்கும். அவருடைய நண்பர்கள் பட்டாளம் அவரை தேடி வந்தது. "என்னய்யா இது அதிசயமாயிருக்குதே! ஜாலி அண்ணாச்சி உம்மணா மூஞ்சியா உட்கார்ந்திருக்காகளே? என்ன விசயம்?" என்று நீட்டி முழக்கினார்கள்.
"போங்கய்யா! மனுசன் படுற வேதனையை புரிந்து கொள்ள முடியாமல் இதென்ன கேலியும் கூச்சலும்?" என்று சிடுசிடுத்தார் அவர்.
"என்ன அண்ணாச்சி திடீர்னு புதுப்பாடம்?" என்று கிண்டல் பண்ணினார் ஒருவர்.
”சுந்தரம் செய்த வேலை சரியான அதிர்ச்சி மருந்தாக அமைஞ்சிருக்குன்னு தெரியுது” என்று இன்னொருவர் சொன்னார்.
பரமசிவம் திடுக்கிட்டார் "சுந்தரமா? அப்படி ஒருத்தி எனக்குத் தெரியாமல் என் வீட்டுக்கு வந்து." என்று உணர்ச்சி வேகத்தோடு பேசத் தொடங்கி, தொடர முடியாது திணறினார்.
“உங்க பிரண்டு உங்க வீட்டுக்கு வருகிற உரிமை திடீர்னு இல்லாமல் போய் விடுமா? நீ என்னை தேடிஎன் வீட்டுக்கு வரக் கூடாதுன்னு நீங்க உங்க பிரண்டை எச்சரித்து வைத்தீங்களா? என்று நண்பர் கேட்டார்.
நிலைமை மிகவும் விபரீதமாக முற்றுகிறதே என்று குழம்பிய பரமசிவம் தலையைச் சொறிந்தார். அவர் மனைவி. பத்திரகாளி போல் முன்னே பாய்ந்தாள்.
"இப்ப ஏன் வாயடைச்சுப் போச்சு? வாயிலே ஈர மண்ணையா திணிச்சு வச்சிருக்கு? என்கிட்டே மட்டும் வாயடி அடிச்சீகளே" என்று வெடித்தாள்.
"சத்தியமாக எனக்கு சுந்தரம் என்று யாரையும் தெரியாது" என்று அவர் அழமாட்டாக் குறையாக முணுமுணுத்தார்.
"கள்ளச்சத்தியம் பண்ணாதீங்க அண்ணாச்சி" என்று ஒரு நண்பர் முன் வந்தார். "என்னை உங்களுக்குத் தெரியாது? நான் சுந்தரம் இல்லையா?" என்றார்.
"சுந்தரம் என்கிற பெண் எவளையுமே எனக்குத் தெரியாதுன்னு சொன்னேன். இதிலே ஏதோ சூது இருக்குது."
"இன்னும் தமாஷ் பண்ணி நெருக்கடியை வளர்க்க வேண் டாம். உண்மையை சொல்லிப் போடுவோம்" என்று ஒருவர் தீர்மானம் கொண்டு வந்தார். மற்றவர்கள் அதை அங்கீகரித் தார்கள். விஷயத்தை அம்பலப்படுத்தினார்கள்.
பரமசிவம் எல்லோரையும் கிண்டல் செய்து ஜாலி பண்ணிய படி இருக்கிறாரே, அவரையே ஒருசமயம் நாம் "கோட்டா பண்ணினால்" என்ன என்று அவர்கள் நினைத்தார்களாம். அதனால், நண்பர் சுந்தரம் பெண் வேஷம் போட்டுக் கொண்டு பரமசிவத்தின் வீட்டுக்கு வந்து விளையாட்டு காட்டினார். அவர் அமெச்சூர் நாடகங்களில் பெண் வேடம் தாங்கிச் சிறப்பாக நடிக்கும் பழக்கம் உடையவர். திறமையாக நடந்து சாந்தாவை ஏமாற்றி விட்டார். அதன் பலனை பரமசிவம் அனுபவிக்க நேர்ந்தது.
இதைக் கேட்ட பரமசிவம் ”அடபாவிப் பயல்களா குடியை கெடுத்தீர்களே! இதெல்லாமா தமாசு?" என்று கோபித்துக் கொண்டார்.
"நீங்க உங்க மனம் போன போக்கிலே எல்லோரையும் கேலியும் கிண்டலும் பண்ணுறிகளே; மத்தவங்க உணர்ச்சிகளை மதிக்கவா செய்றிங்க? அவங்க எவ்வளவு வேதனைப்படு வாங்க, எப்படி பாதிக்கப்படுவாங்க என்பதை யோசிக்காமலே தானே நீங்க ரகளை செய்கிறீங்க? அதே பாடத்தை உங்க சிநேகிதர்கள் உங்களிடமே காட்டி விட்டாங்க" என்று சாந்தா சொன்னாள்.
நண்பர்கள் அட்டகாசமாய் சிரிததார்கள். பரமசிவமும் சேர்ந்து சிரித்தார்.
"சிரியுங்க, சிரியுங்க! ஒக்கச் சிரித்தால் வெக்கமில்லே என் பாங்க" என்று கூறிச் சிரித்தவாறே வீட்டுக்குள் போனாள் சாந்தா.
("தேவி, 1980)
-----------
31. சின்னவன்
புத்தகங்கள் அடங்கிய பையை எடுத்துக் கொண்டு, கடியாரத்தைப் பார்த்தான் முருகன். மணி ஒன்பது அடிக்க ஐந்து நிமிடங்கள் இருந்தன.
”சரியான நேரம்தான். இப்பவே புறப்பட்டு மெது மெதுவாக நடந்தால் ஒன்பதரைக்கு ஸ்கூல் போய் சேர்ந்திரலாம். பையன்களோடு பேசி விளையாட நேரம் இருக்கும் முதல் மணி அடிக்க ஐந்து நிமிஷத்துக்கு முன்னாலே வகுப்புக்குப் போகலாம்" என்று எண்ணவும் அவனுக்க உற்சாகம் ஏற்பட்டது.
"அம்மா, நான் ஸ்கூலுக்குப் போறேன்" என்று உரக்கச் சொல்லியபடி வாசல் நடையை அணுகினான் முருகன். அந்த சமயம் திடுதிடுவென்று வந்தார் அண்ணாச்சி ஒட்டமும் இல்லாத, சாதாரண நடையுமில்லாத வேகத்தில் வந்த அவர் படபடப்புடன் காணப்பட்டார்.
"எலே, பசுமாடு அத்துக்கிட்டு ஓடிட்டுதுடா. போ. போயி தேடிப் பத்திக்கிட்டு வா. வடக்கே குளத்துப் பக்கம் தான் போகும். ஒடு ஒடு. சீக்கிரமாப் போ" என்று பெரியவர் உத்திரவிட்டார்.
முருகனுக்கு எரிச்சல் ஏற்பட்டது, "சனியன் பிடிச்ச எழவு. இந்தப் பசுவோட இது ஒரு தொல்லை" என்று அவன் மனம் முணமுணத்தது. "பள்ளிக்கூடத்துக்கு நேரமாச்சு. நான் போகணும் அண்ணாச்சி" என்ற தீனக்குரலில் சொன்னான்.
"பள்ளிக்கூடம் பத்து மணிக்கு தாலே! இன்னும் மணி ஒன்பது கூட ஆகலே. அதுக்குள்ளே என்ன அவசரம். போயி பசுவை பத்திக்கிட்டு வா. கடைச் சங்கரனையும் வரச் சொல்லுதேன்" என்று திடமாக அறிவித்தார் அண்ணாச்சி.
மேற்கொண்டு அவன் எதுவும் மறுப்பு பேசமுடியாது. வாய் திறந்தால் போதும். நீ படிச்சுக் கிழிச்சது போதும்லே, மாட்டை, பார்த்துக்கிட்டு வந்து கூடமாட வேலை பழகு!" என்று பெரியவர் கண்டிப்பாகச் சொல்லிவிடுவார்.
முருகனுக்கு அழுகை வந்தது. தயங்கி நின்றான்.
"போலே சீக்கிரம். பசு குளத்துக்குப் போறதுக்க முன்னாலே மறிச்சிரலாம். இல்லேன்னா அது கல்வெட்டாங் குழியைப் பார்த்து ஒடத் தொடங்கிரும்" என்று அண்ணாச்சி அவசரப் படுத்தினார்.
வேறு வழியின்றி, முருகன் புத்தகப் பையை பட்டாசாலைச் சுவர் மூலையில் வைத்து விட்டுக் கிளம்பினான்.
"மாடு தும்போடு தான் போகுது. சங்கரனும் நீயும் அதை மடக்கி, தும்பைப் புடிச்சி இட்டாந்தரலாம்" என்று யோசனை கூறினார் அண்ணாச்சி.
முருகன் வடக்குத் திசையில் ஒடலானான். பின்னாலேயே சங்கரனும் வந்து விட்டான். இரண்டு பேருக்கும் ஏறக்குறைய ஒரே வயதுதான். இவன் ஆறாம் வகுப்பு படிக்கிறான். படிக்க வாய்ப்பும் வசதியும் இல்லாததால் அவன் மளிகைக் கடையில் "எடுபிடி ஆள்" ஆக வேலை பார்க்கிறான்.
சங்கரன் வேகமாக ஓடிவந்து முருகனுடன் சேர்ந்து கொண்டான். "இந்த மாட்டோட இது பெரிய தொல்லையாப் போச்சு. அடிக்கடி தும்பை அத்துக்கிட்டு ஓடிஓடிப் போயிருது. நம்ம பாடுதான் திண்டாட்டமா இருக்கு லொங்கு லொங்குன்னு ஓடி, அங்கயும் இங்கயும் அலைஞ்சு, அதை கண்டுபிடிச்ச வீட்டுக்கு இட்டார வேண்டியிருக்கு" என்று அவன் சொன்னான்.
இரண்டு பேரும் ஓட்டத்தைக் குறைந்து "பரும்நடையாக" நடந்து கொண்டிருந்தார்கள்.
"அண்ணாச்சிக்கு வேண்டாத வேலை. வீட்டிலே மாடுகட்டிப் பால் கறக்கணுமின்னு. மத்தவங்களுக்கு அதனாலே வெட்டி வேலையும் அதிக உழைப்பும் தான். அம்மா தான் எல்லா வேலைகளையும் செய்யவேண்டியிருக்கு. தண்ணி காட்டுறது, தீனிவைக்கிறது, சாணி அள்ளிப்போடுறது, காலை யிலும் சாயங்காலமும் பால் கறக்கிறதுன்னு எத்தனையோ அலுவல்கள். அப்படியும் இது நிறையப் பாலா தருது? வேளைக்கு, அரைப்படி பால் கறந்தால் அதிர்ஷ்டம்னுதான் சொல்லணும். கள்ள மூதி பாலை இறக்காம எக்கிக்கிடும், அப்புறமா கண்ணுக் குட்டிக்கு கொடுக்கும்" என்றான் முருகன்.
பெரியவர் அவனுடைய அண்ணாச்சி. அவரைப் பற்றி அவன் குறைகூறலாம். ஆனால் தனக்கு அவர் முதலாளி: அவரைக் குறைவாகப் பேசக்கூடாது என்பதை சங்கரன் அறிந்திருந்தான். அவன் மவுனமாகவே உடன் வந்தான்.
முருகன்தான் புலம்பிக் கொண்டே வந்தான்: "இந்த மாடு திமிரு பிடிச்சது. வீட்டிலே அதுக்கு என்ன குறை இருக்கு? புண்ணாக்கு, தவிடு, கொழு கொழுன்னு கழுநித் தண்ணி எல்லாம் நிறையவே அதுக்கு கிடைக்குது. இரண்டு மூணு நாளைக்கு ஒருக்க அம்மா நல்ல பருத்திக் கொட்டையை அரைச்சு தண்ணியிலே கலந்து கொடுக்கிறா. திங்கிற கொழுப்பு, இதாலே சும்மா நிற்க முடியலே. ஒடி ஒடிப் போயிருது நாமதான் வேகு வேகுன்னு அலைஞ்சு திரிஞ்சு லோல் பட வேண்டி யிருக்கு…."
இதற்குள்ளாக இருவரும் வடக்குக் குளத்தை நெருங்கி விட்டார்கள். அது மானா மாரிக்குளம். மழை பெய்தால் தான் அதில் தண்ணிர் கிடக்கும். பெரும்பாலான நாட்களில் வறண்டுதான் காணப்படும். கருவேல மரங்கள் அதிகம் வளர்ந்து நிற்கும்.
முருகனுக்கு நண்பர்களோடு அந்தக் குளத்துக்கு வருவதில் தனி உற்சாகம் உண்டு. கருவேல மரங்களில் பிசின் வடிந்து மினுமினுவென்று மிளிரும். அதை சேகரித்து, புட்டிகளில் போட்டு நிரூற்றி, அருமையான கோந்து தயாரிப்பதில் அவனுக்கும் மற்றப் பையன்களுக்கும் தனி மகிழ்ச்சி. கிழிந்த நோட்டு, புத்தகம், மற்றும் கவர்களை ஒட்டக்கூடிய முதல் தரமான பசை அது என்பதை அவர்கள் அறிந்து வைத்திருந்தார்கள்.
மழைகாலத்தில், குளத்தில் நீர் பெருகிக் கிடக்கிற நாட்களில், சகலரகமான பையன்களும் அங்குதான் கூடிக் குட்டைப்புழுதி பண்ணுவார்கள். குளத்தின் நடுவில் அகலமான கிணறு ஒன்று இருந்தது. அதற்கு உயரமான சுவர்கள் கட்டப்பட்டிருந்தன. ஒரு மூலையில் துலாக்கல் ஒன்று உயர்ந்து நின்றது. மழைநாட்களில் கிணற்றிலும் தண்ணீர் பெருகிக் கிடக்கும்.
பையன்கள் சுவர் மீதும், துலாக்கல் மீதும் ஏறிநின்று தண்ணிரில் குதித்து விளையாடுவார்கள். ஒரே ஜாலிதான். ஒருவன் நீண்ட குரலில் பாட்டு மாதிரிக் கத்துவான்.
"சென்னை, பாம்பே, கல்கட்டா, செவிட்டிலே ரெண்டு கொடுக்கட்டா" என்று தொபுக்கடீர் என்று குதித்து நீச்சலடிப்பான்.
இன்னொரு பையன்,
“மெட்ராஸ், பாம்பே, கல்கட்டா மேலே விழுந்து கடிக்கட்டா"
என்று கூவியபடி டமாலெனத் தண்ணிரில் குதிப்பான்.
எல்லோரையும் மிஞ்சி விடுவான் ஒரு பெரிய பையன். நாடக மேடையில் கள்ளபார்ட்காரன் ஆடிப்பாடி அட்டகாசம் செய்கிற போது பாடும் பாட்டை அவன் உரத்த குரலில் கத்துவான்.
"கோட்டைக் கொத்தளம் மீதிலேறிக் கூசாமல் குதிப்பேன் - பலபா குதிப்பேன்…
காவலர் கண்டு புடிக்க வந்தால் கத்தியால் குத்திடுவேன்! - ஐசாகத்தியால் குத்திடுவேன்!
ஒரு நீச்சில் கப்பலை பிடிப்பேன் கல்கத்தா துறைமுகம் பார்ப்பேன்"
அவன் நீச்சலிலும் சூரப்புலிதான். நீரில் பல சாகசங்கள் செய்து காட்டுவான்.
தூர நின்று அதை எல்லாம் வேடிக்கை பார்ப்பதில் முருகனுக்கும் அவனைப் போன்ற சிறுவர்களுக்கும் ரொம்பப் பிடிக்கும். பொழுது போவதே தெரியாமல் நின்று ரசிப்பார்கள்.
ஆனால், அதெல்லாம் லீவு நாட்களில்! இன்று பள்ளிக்கூடம் உண்டு. கட்டாயம் போக வேண்டுமே! குளத்தில் "கருவக் கோந்" தையும் மற்ற வேடிக்கைகளையும் பார்ப்பதற்கு நேரம் ஏது? மனமும் இல்லை.
முருகனின் பார்வை நெடுகிலும் மேய்ந்தது, பசுவைத் தேடி. "அதோ அங்கே நிற்குது" என்று கத்தினான் சங்கரன். முருகனும் கண்டு கொண்டான்.
இருவரும் எச்சரிக்கையாகத் தான் அதை நெருங்க முயன்றார்கள். ஆனால் அது அவர்களை விட அதிக எச்சரிக்கை உணர்வோடு நின்றது. தன்னைப் பிடிக்கத் தான் பையன்கள் வருகிறார்கள் என்று அது புரிந்துகொண்டது. உடனே எடுத்தது ஒட்டம். ரஸ்தாவில் ஏறி கிழக்கு நோக்கி ஓடியது.
அவுத்து விட்டதாம் கழுதை எடுத்து விட்டதாம் ஒட்டம்கிற மாதிரியில்லா ஓடுது!" என்று வேடிக்கையாகச் சொன்னான் சங்கர்.
முருகன் அதை ரசிக்கும் நிலையில் இல்லை. சவம் கல்வெட்டாங்குழிக்குத் தான் போகும் என்று முனகினான்.
அது அரைமைல் தூரத்துக்கும் அப்பால் இருந்தது, வெம்பரப்பும் வெட்ட வெளியும்தான். புல் நீளம் நீளமாக வளர்ந்து நிற்கும். அங்கங்கே பெரிய பெரிய கற்குழிகள் காணப்படும். எப்பவோ வெடிவைத்துத் தோண்டி, பாறாங் கற்களை பெயர்த்து எடுத்திருந்தார்கள். அதன் மிச்சங்களாக அக்குழிகள் விளங்கின. "கல்வெட்டாங்குழிகள்" என்று பிரசித்தி பெற்றிருந்த அவற்றில் எப்பவும் தண்ணிர் கிடக்கும். எப்பவாவது யாராவது அதில் விழுந்து தற்கொலை செய்து கொள்வதும் நடக்கும். அவற்றின் மீது பயப்படுத்தும் கதைகள் கட்டப்பட்டு உலவின. அதனால் சிறுவர்கள் அங்கே போக அஞ்சுவார்கள்.
ஆனாலும் முருகனும் நண்பர்களும் சில சமயம் துணிந்து அந்தப் பக்கம் வருவது உண்டு. உபயோக மற்றுப் போன சைக்கிள் சக்கரம், ரப்பர் வளையம் போன்றவற்றை கம்பியால் அடித்து உருட்டிக் கொண்டு விளையாட்டாக வருவார்கள். ஜாலியாக இருக்கும்.
ஆயினும், ஒடிய பசுவைத் தேடிக்கொண்டு அங்கே வருவது முருகனுக்குப் பிடிக்காத காரியம் தான். என்ன செய்வது? அவ்வப்போது, மனசுக்குப் பிடிக்காத காரியத்தையும் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறதே!
இப்பவும் அதே தான் நடந்தது.
வேகமாக ஓடிய மாடு அங்கே ஒரு இடத்தில் ஒய்வாகப் படுத்திருந்தது.
முருகனும் சங்கரனும் ஒவ்வொரு பக்கமாக அதை நெருங்கினார்கள். பசு மிரண்டு எழுந்திருக்கவில்லை. ஒட்டம் அதுக்கே அலுத்துப்போச்சோ என்னவோ!
சங்கரன் அதன் தும்பைப் பற்றினான். முருகன் அதை லேசாகத் தட்டித் கொடுத்தான்.
பசு சாதுவாக எழுந்து நின்றது. அவர்களோடு செல்ல இசைந்தது. நடந்தது.
"இது நல்ல பசுதான். ஆனா சில சமயம்தான் இதுக்கு ஏதோ வெறி வந்திருது. ஒட்டப் பிசாசு இதைப் பிடிச்சிருக்குமோ என்னவோ. பிய்ச்சுக்கிட்டு ஓட ஆரம்பிச்சிருது!" என்று முருகன் சொன்னான்.
சங்கரன் ரசித்துச் சிரித்தான்.
"அய்யா இதை வாய்க்காலிலே குளிப்பாட்டி வருவாகளே! அப்பல்லாம் எவ்வளவு அமெரிக்கையாக நடந்து வரும். ஒட்டப் பேய் பிடிக்கிற போதுதான் நம்மைப் பாடாய்ப் படுத்து" என்றான்.
வாரம் ஒரு தடவை அண்ணாச்சி பசுவை குளிப்பாட்ட வாயக்காலுக்கு இட்டுச் செல்வார். முருகன் கன்றுக்குட்டியைப் பிடித்து இழுத்துச் செல்வான். சிலசமயம் அதுவே அவனை இழுத்துக் கொண்டு ஒடும. அழகான கன்றுக்குட்டி.
சாதுவான பிராணிதான். குளிப்பாட்டி முடித்துக் கரை யேறியதும், அதை பிடித்துக் கொண்டுவர வேண்டும் என்கிற அவசியமில்லை. கன்றுக்குட்டியை முன்னாலேயே நடக்க விட்டு வந்தால், பசு தானாகவே பின்தொடரும், அண்ணாச்சி அப்படித்தான் செய்வார்.
பசு வீடு வந்து சேர்ந்தது. அண்ணாச்சி ஆவலாக அதைப் பிடித்து, தொழுவத்துக்கு இட்டுச் சென்றார்.
முருகன் கடியாரத்தைப் பார்த்தான். மணி 9.45. என்னதான் லேகமாக ஒடினாலும், பள்ளிக்கூடம் சேரும் போது முதல் பீரியட் ஆரம்பமாகியிருக்கும்.
முதல் பீரியட் கணக்கு. வாத்தியார் வயித்திலிங்கம். கண்டிப் பானவர். ஐந்து நிமிடம் வேட்டாகப் போனாலும், பீரியட் பூராவும் வெளியிலே நிற்கச் செய்வார் அல்லது பெஞ்சு மேலே ஏறி நிற்கும்படி செய்வார். அவர் முகசவரம் செய்து கொண்டு வந்திருந்தால், அநியாயத்துக்கு கோபிப்பார். "நிமிட்டாம் பழம்" என்று சொல்லி, அழுத்தமாகச் கிள்ளுவார். நாள் முழுதும் அந்த இடத்தில் எரிச்சல் இருக்கும். இன்னிக்கு அவர் சவரம் செய்து கொள்ளாத நாளாக இருக்கணும், சாமி கடவுளே!
முருகன் உள்ளம் குமைந்தது. "வயித்திலிங்கம் வாத்தியார் சாகாரா, எங்கள் வயித்தெரிச்சல் தீராதா?" என்று பையன்கள் பாடுவார்கள். அவன் மனமும் இப்போது அதை எதிரொலிபோல் முனகியது.
சின்னப் பையனாக இருப்பது ரொம்பமோசமான விஷயம் என்று எண்ணினான் முருகன். வீட்டிலே பெரியவர்கள் திட்டு கிறார்கள். பள்ளிக்கூடத்தில் வாத்தியார்கள் தண்டிக்கிறார்கள். எழுதுவதற்கும் படிப்பதற்கும் ஏகப்பட்ட பாடங்கள் சுமத்து கிறார்கள். வேலைக்குப் போனால் முதலாளிகள் என்று பெரிய வர்கள் சிறுவர்களை கொடுமைப்படுத்துகிறார்கள். கடவுளே, ஒரு வீட்டில் சின்னவனாக இருப்பதே பெரிய தண்டனைதான். சின்னவர்கள் விரைவிலேயே பெரியவர்களாவதற்கு வழி பிறந்தால் தான் விமோசனம் உண்டு.
முருகன் கண்களில் நீர் பொங்கி வழிந்தது. அழுகையை அடக்க விரும்பாமலும், வாத்தியார் நினைவில் பயந்தபடியும் அவன் வேகமாக ஓடலானான்.
(மகரந்தம், 1998)
----------------
32. சுயம்பு
காதுகளை உறுத்தும் பேரோசை சுயம்புவின் கவனத்தை ஈர்த்தது. அவன் பார்வை தானாகவே வெளியே பாய்ந்தது.
ரோடில் பயங்கர வேகத்தில் ஒடியது ஒரு மோட்டார் பைக். உல்லாசியான இளைஞன் ஒருவன். அவன் பின்னால் அவனை ஒட்டியவாறு ஒரு இளம் பெண். அவள் சிரித்துச் சிரித்து ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள்.
சுயம்புவின் கண்களில் ஒரு மிரட்சி. அவன் முகத்தில் ஒரு கலவரம். அவன் உள்ளத்தில் ஒரு பரபரப்பு. "அய்யோ!" என்று சிறு கூவல் எழுப்பியது அவன் வாய்.
காரணம்? வேகமாகப் பறந்து கொண்டிருந்த உல்லாசிகளை அவன் கண்கள் பார்த்த சமயத்திலேயே, அந்த நிஜக் காட்சியை அழித்தபடி வேறொரு தோற்றம் அவனுக்கு புலனாயிற்று. இதுவும் நிஜமாகவே நேரில் காண்பது போல்தான் அவனுக்குப் பளிச்சிட்டது.
எமன் வாகனம் போல நின்றது லாரி. அதனால் மோதப்பட்ட மோட்டார் பைக் விழுந்து கிடந்தது. மண்டையில் அடிபட்டு ரத்தம் சிந்திக் கிடக்கிறான் அந்த இளைஞன். அவனுடைய தோழியும் அருகிலேயே விழுந்து கிடக்கிறாள். சிறு கும் பல் கூடியிருந்தது.
வேக வாகனத்தின் "படபட" ஒசை காதில் விழுந்து கொண் டிருக்க, சுயம்பு அவசரமாக வீட்டுக்கு வெளியே வந்து பார்த் தான். உல்லாச ஜோடி ஒய்யாரமாக போய் கொண்டிருந்தது.
நெடுமூச்சுயிர்த்தான் சுயம்பு. "நல்ல வேளை!" என்றொரு எண்ணம் அசைந்து கொடுத்தது அவன் உள்ளத்தில். ஆனால், "அய்யோ!" என்று அவன் வாய்விட்டு அலற நேர்ந்தது உடனேயே…..
ரோடின் திருப்பத்தில் வேகமாக வந்த லாரி, மோட்டார் பைக் உல்லாசிகளை மோதித் தள்ளி, சக்கரத்தால் இளைஞனைக் காயப்படுத்தி, ரத்தம் ஒட வைத்தது. அந்த பெண் தூக்கி ஏறியப் பட்டிருந்தாள். கூச்சல்…. கும்பல்…. குழப்பம்.
ஒரு கணத்திற்கு முன்பு சுயம்பு மட்டும் தெளிவாகத் தன்னுள் கண்டறிந்த கோர விபத்து உண்மை நிகழ்ச்சியாகி பயங்கரமாகக் காட்சி அளித்துக் கொண்டிருந்தது, பலரும் பார்க்கும்படியாக.
சுயம்புவின் உள்ளில் ஒரு அதிர்ச்சி. இதுதான் அவனுக்கு முதல் அனுபவம் என்றில்லை. தனக்கு இப்படி ஒரு அதீத சக்தி இருக்கிறது என்பதை அவன் புரிந்து கொள்வதற்குள் இரண்டு மூன்று அனுபவங்கள் அவன் கண்முன்னே நடந்துவிட்டன.
சர்யம்பு தெருவழியே போய் கொண்டிருந்தான். காலை ஒன்பது - ஒன்பதரை மணி இருக்கலாம். ஒளிமயமாக சிரித்தது உலகம். பரபரப்பாக இயங்கினர் மனிதர்கள். உலகமே இனியதாக தோன்றியது அவனுக்கு. கல கல வென்று ஒரு சிரிப்பொலி அவன் கவனத்தை கவர்ந்தது. அங்குமிங்கும் பார்த்தான். ஒரு வீட்டு மாடி பால்கனியில் ஒரு சிறுமி நின்று கொண்டிருந்தாள். அவள் தான் சிரித்தாள். அவளுக்கு ஐந்து அல்லது ஆறு வயசிருக்கும். பளிடும் நவீன ஆடையில் ஒரு அழகுப் பூ மாதிரி மிளிர்ந்தாள் அவள். அவளுக்கு வேடிக்கை காட்டியபடி பெரிய பெண் ஒருத்தி ஒளிந்தும், மறைந்தும் இயங்கிக் கொண்டிருந்தாள்.
அந்த காட்சி சுயம்புவை பரவசப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அவன் பரபரப்பு அடைந்தான். அவன் உள்ளத்தில் ஒரு பதைப்பு. பால்கனியில் நின்ற சிறுமி தலைகுப்புற விழுந்து கிடக்கிறாள் கீழே தரை மீது. அவள் மண்டையில் அடிபட்டு ரத்தம் செவே லெனப் பளிச்சிடுகிறது. அந்நேரத்திய அந்த முகம்….
திடுக்கிட்ட சுயம்பு தலையை உலுக்கிக் கொண்டு பார்த்தான். பால்கனி பால்கனியாகவே இருந்தது. நீலநிற கவுன் அணிந்து, சந்தோஷத்தின் குறள் உருவமாய் காட்சி தந்த சிறுமியும் அப்படியே தான் இருந்தாள்.
நல்ல வேளை!" என்றது சுயம்பு மனம். அவன் சில அடிகள் கூட நகர வில்லை. "ஐயோ, அம்மா. பிள்ளை பிள்ளை" என்று அலறல்கள் வெடித்தன. அவன் திரும்பிப் பார்த்தான்.
சிறுமி கீழே ரோடில் விழுந்திருந்தது, வீட்டு வாசலின் முன்பு, பால்கனியின் மரத்தடுப்புகள் பெயர்ந்து விழுந்து கிடந்தன. குழந்தையின் தலையில் பலமான அடி. மேலே இருந்த பெரிய வர்கள் கீழிறங்கி வருவதற்கு முன்னதாகவே அக்கம்பக்கத்தினர் கூடி விட்டனர். ரத்தம் குழந்தையின் ஆடையை நனைத்துப் பளிச்சிட்டது….
"அய்யோ பாவம்" என்றது சுயம்பு மனசு. இப்படி நடக்கும்னு எனக்கு ஏனோ தோணியிருக்கு என்று எண்ணினான் அவன். உள்ளுணர்வின் திடுக்கிடலாக இருக்கலாம் என்றும் நினைத்தான். அப்படியே நடந்துவிட்டது என்று கூறியது அவன் மனம். கவிதைத் துணுக்காய் சிலிர்த்துச் சிரித்த சிறு பெண் கோரச் சித்திரமாய் ஒரு கணத்தில் மாற நேரிட்டது அவனுள் ஒரு வேதனையை உண்டாக்கியது. அது தான் அவனுக்கப் பெரும் உறுத்தலாக இருந்தது. வேறு எதுவும் எண்ண வில்லை அவன்.
திரும்பவும் இந்த உள்ளுணர்வு அவனை திடுக்கிட வைத்தது வேறொரு நாளில்
தெரிந்தவர் ஒருவர் வீட்டின் முன்னறை. நண்பன் ஒருவனுடன் வந்திருந்தான் சுயம்பு. பலர் இருந்தனர், நாற்காலிகளில். சந்தோஷமாக உரையாடிக் கொண்டிருந்தனர். சுயம்பு, சும்மா அங்கும் இங்கும் பார்த்தபடி இருந்தான். உயரே மின் விசிறி வேகமாக சுற்றிக் கொண்டிருந்தது.
அவன், அதை கவனித்தவாற இருந்தான். திடீரென அவனுள் ஒரு பரபரப்பு, அந்த விசிறி அறுந்து கீழே விழுந்துவிட்டது. அதற்கு கீழே இருந்தவர் தலை மீது விழுந்தது, அவர் சரிந்து விழுகிறார். மண்டையில் அடிபட்ட அவர் செத்துப் போகிறார். "அய்யோ" என்றது சுயம்புவின் வாய். தலையை உலுக்கிக் கொண்டு அவன் பார்த்தான். அப்படி எதுவும் நடந்திருக்க வில்லை.
மற்றவர்கள் அவனை ஒரு மாதிரி பார்த்தனர். "என்ன, உனக்கு உடம்புக்கு குணமில்லையா?" என்று நண்பன் கேட்டான். "திடீர்னு அய்யோன்னுகத்தினியே?" என்றான். சுயம்பு திகைத்தான். என்ன சொல்வது? எப்படி விளக்குவது? "ஒண்ணுமில்லே! என்று அசடன் போல் முனகினான்.
அவனும், நண்பனும் புறப்படத் தயாராயினர். அப்போது தான் அது நிகழ்ந்தது. மேலே சுழன்று கொண்டிருந்த மின் விசிறி திடுமென அறுந்து விழ, அது கீழே இருந்தவரின் தலையைத் தாக்க, அவர் சரிந்து கீழே விழுந்தார். சரியான அடி. ஆள் குளோஸ்!
சுயம்பு அதிர்ந்து போனான். அவன் உள்ளத்தில் பெரும் உறுத்தல். இவரை நான் காப்பாற்றியிருக்க முடியுமோ? நாற்காலியை தள்ளிப்போட்டு உட்காரும்படி எச்சரித்திருக் கலாமோ? அவன் மனமே அவனை குடைந்தது. ஆனால், என்ன காரணம் சொல்லி அவரை எச்சரித்திருக்க? இப்படி எனக்கு தோணிச்சு என்றால் மற்றவர்கள் நம்பியிருப்பார்களா? பைத்தியம் என்று பரிகசித்திருப்பார்கள் என்றும் அவன் எண்ணிக் கொண்டான்.
எனினும், இந்த அனுபவத்தின் நினைப்பு அவனுள் வேதனைக் குளவியாய் குடைந்து கொண்டுதான் இருந்தது.
இதுவும் இதுபோன்ற இதர அனுபவங்களும் அவனை சதா எண்ணி உளைய வைத்தன. தனக்கு, சாதாரணமாக மற்றவர் களுக்கு இல்லாத, ஒரு அதிசய சக்தி இருப்பதாக அவனுக்கு பட்டது. அது, அவனுக்கு கிளர்ச்சி ஊட்டியது. அதேசமயம் அச்சம் தருவதாகவும் இருந்தது. அதுபற்றி நண்பர்களிடம் பேசவும் தயங்கினான் அவன். மற்றவர்கள் நம்பமாட்டார்கள், கேலி பண்ணுவார்கள் என்ற பயம் அவனுக்கு. நல்ல மருத்துவரை பார்; உளயியல் நிபுணரை கலந்து ஆலோசி என்றெல்லாம் கலவரப்படுத்துவார்கள் எனும் எண்ணமும் உண்டாயிற்று.
”சரி. இருப்பது இருந்துவிட்டுப் போகட்டும். இதனால் எனக்கு ஒன்றும் தொல்லை இல்லையே," என்று சுயம்பு தன் மனசை தேற்றிக் கொண்டான்.
அவன் படித்தவற்றில் தற்செயலாக அவன் பார்வையில் பட்ட சில ஆங்கிலக் கட்டுரைகள் அவனுக்கு சிறிது தெளிவு தந்தன. மனிதரின் உள்ளுணர்வு பற்றியும், உள்ளுணர்வின் அபூர்வ சக்தி குறித்தும், பார்வைப் புலனுக்கு மேற்பட்ட அதிகப்படி கண்டுரைக்கக் கூடிய தனி ஆற்றல் பற்றியும் அவை பேசின. சிலரது விந்தை அனுபவங்கள் குறித்தும் அவை விவரித்தன.
இருக்கலாம்; எனக்கு ஏன் இது திடீரென வந்து சேர்ந்தது என்று சுயம்பு குழம்பித் தவித்தான். பிறகு, இது வந்தது போல் திடீரென மங்கி மறைந்துவிடவும் கூடும் என்று தன்னைத்தானே தேற்றிக் கொண்டான்.
அவனுக்கு புரியாத ஒரு விஷயமாக வியப்பளித்தது இன்னொரு உண்மை. இப்படி "அதீதப் புலன் உணர்வு பிடித்துக் காட்டுகிற அனுபவம் எல்லாம் சோக நிகழ்ச்சிகளாக, கோர விபத்துக்களாகவோ இருக்கின்றனவே! மங்களகரமான சந்தோஷங்கள் நிறைந்த காட்சிகள் என் உள்ளுணர்வில் முன்கூட்டியே பளிட மாட்டாவோ?" என்று சந்தேக அலைகள் அவனுள் எழுவது உண்டு. அதற்காக அவன் மன வேதனை கொள்ளவில்லை.
இந்நிலையில் சுயம்புவுக்கு ஒரு காட்சி புலனாயிற்று. ஆனந்தமயமான சூழலில் அமைந்த மகிழ்ச்சிகர நிகழ்ச்சியாகவே தோன்றியது அது.
அவன் நண்பனுக்குத் திருமணம். கல்யாண மண்டபக் காட்சிகள் வர்ணமயமாக குளுகுளுத்தன. எங்கும் சந்தோஷம். இனிமைகள். முகூர்த்த நேரம் நெருங்குகிறது. ஒரே பரபரப்பு.
இவை எல்லாம் சுயம்புவுக்கு மகிழ்ச்சி தருவதாகவே அமைந்தன. சட்டென நிலைமை மாறியது. ஒருவர் வந்து மணமகனிடம் ரகசியமாக ஏதோ சொல்கிறார். அவன் முகம் வெளிறுகிறது. செய்தி மெதுவாகப் பரவ, உண்மை வெளிப்படு கிறது. மணமகளை காணவில்லை. யாரிடமும் சொல்லாமல் எங்கோ போய்விட்டாள். தன் மனசுக்குப் பிடித்த காதலனுடன் ஒடிப்போயிருக்க வேண்டும்.
இக்காட்சி சுயம்புவை உலுக்கியது. உண்மையாகவே அவன் நண்பனுக்கு திருமணம் நிகழ இருந்தது. இப்போது தன்னுடைய கடமை என்ன? நண்பனுக்கு கடைசி நேர ஏமாற்றமும், அதிர்ச்சியும் ஏற்படாமல் தடுத்துவிடலாம். ஆனால், தான் சொல்வதை மணமகனும், மற்றவர்களும் நம்புவார்களா? எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வார்களா? அல்லது, எச்சரிக்க முற்பட்ட அவனையே பழித்து, பரிகசித்து, குறை கூறி, அவமதிப்பார்களா? அவன் குழம்பினான்.
உண்மையில், பிந்தியதைத்தான் அவர்கள் செய்வார்கள்; அதுதான் மனித இயல்பு என அறிவுறுத்தியது அவன் உள்ளம். நடப்பது நடந்தே தீரும் என்று எண்ணினான் சுயம்பு.
அவனது அதீத உணர்வில் புலனானது நிஜ நிகழ்ச்சியாக நடந்து முடிந்தது. சுயம்பு அதற்காக மகிழ்ச்சி அடையவில்லை.
(தினமலர்"97)
------
33. பெருமை
ஒருவனுக்கு அதிர்ஷ்டம் இந்தால் அவன் கரியைத் தொட்டாலும் அது மஞ்சள் ஆகிவிடும் என்று சொல்வார்கள். பணம், பொருள் விஷயத்தில் மட்டுமின்றி புகழும் பெருமையும் வந்து சேருவதில் கூட அதிர்ஷ்டம் துணைபுரியக்கூடும் என்பதற்கு புன்னைக்காடு மகிழ்வண்ணம் பிள்ளையின் அனுபவம் சுவாரஸ்யமான உதாரணமாக விளங்குகிறது.
வானைத் தொடுவது போல் நெடிது உயர்ந்து, முடிந்த வரையில் எவ்வளவு நிலப்பரப்பை வளைத்து பிடித்துக் கொள்ள இயலுமோ அவ்வளவுக்கு நீண்டு நெளிந்து கிடக்கும் மலைத் தொடரின் அடிவாரத்தை ஒட்டி அமைந்துள்ள சிற்றுார்களில் ஒன்று புன்னைக் காடு.
மலை அடிவாரத்தின் அருகாமையில் உள்ள ஊர்களுக்கு இயல்பாக ஏற்படக்கூடிய வசதிகளும் வசதிக்குறைவுகளும் புன்னைக்காடு ஊருக்கும் உண்டு.
இரவு நேரங்களில் மலையிலிருந்து கொடிய மிருகங்கள் ஊருக்குள் புகுந்து, தங்களால் ஆன நஷ்டங்களை விளைவித்துச் செல்லும். கோழிகளைத் திருடித்தின்னும் பிராணிகளும் ஆட்டுக்குட்டிகளைத் தூக்கிச் சென்றும் பெரிய ஆடுகளை அடித்துக்கொன்றும் சேதம் விளைவிக்கும் "கடுவா" போன்ற கொடிய மிருகங்களும் அந்த ஊரில் அடிக்கடி வந்து போகும். பெரிய மலைப்பாம்பு அபூர்வ அதிதியாக வருகை புரிந்து விட்டுப் போவதாகவும் ஊர்க்காரர்கள் சொல்வது உண்டு. காட்டுப் பன்றிகள் அவ்வப்போது வந்து, பயிர் களைப்பாழ் பண்ணி, பண்படுத்தியநிலத்தை நாசம் செய்து விட்டுப் போகும். கரடிகளும் எப்போதாவது மலை மீதிருந்து கீழேயிறங்கி ஊருக்குள் புகுந்து, தமது வருகையைப் பதிவு செய்து விட்டுத் திரும்பிச் செல்லும்.
அதனால், "காட்டு மிருகங்களிடம் பயம், என்பதும் அந்த ஊருக்குப் பொதுவான ஒரு குணமாகி விட்டது. இருட்டுக் காலங்களில் இந்த பயம் அதிகமாக இருக்கும். "பட்டப்பகல் போல"நிலா பளிரென அடிக்கிற இரவு நேரங்கிளல் கூட அவ்வூர் வாசிகள் எட்டு மணிக்கு மேலே கதவுகளை திறந்து போட் டிருப்பதில்லை. வெளியே படுத்துறங்க அஞ்சுவார்கள். அவனை கரடி அடித்து விட்டது; இவனை கடுவா கொன்று போட்டது; புலி ஊருக்குள் வந்து அந்த வீட்டுக்குள் நுழைந்து விட்டது என்பன போன்ற பேச்சுக்கள் புன்னைக்காடு ஊரைப்பொறுத்த வரையில் சர்வசாதாரண விஷயங்களாகவே ஒலித்தன.
எனவே, ஊர்க்காரர்கள் வெளியே நடமாடுகிறபோது அரிவாள், வேல்கம்பு, ஈட்டி தடி என்று எதையாவது தூக்கிக் கொண்டே திரிவார்கள். வசதியும் செல்வாக்கும் பெற்றிருந்த சிலர் துப்பாக்கிக்கும் ரிவால்வருக்கும் லைசென்ஸ் வாங்கி அவற்றை வைத்திருந்தார்கள்.
இவர்களில் சிலர் எப்பவாவது வேட்டைக்குப் போகிறோம் என்று கோஷ்டி சேர்த்துக் கொண்டு மலைப் பகுதிகளில் சுற்றி திரிவதும் உண்டு; திரும்பி வரும்போது மலை அணில், முயல், மிளா என்று எதையாவது சுட்டுக் கொன்று பெருமையாகச் சுமந்து வருவார்களே தவிர கரடியை பிடித்தார், புலியை சுட்டு கொன்றார், காட்டுப் பன்றியை தீர்த்துக்கட்டினார் என்ற பெருமையை எவரும் பெற்றதில்லை. பெறமுடிந்ததில்லை.
"ஒரு கடுவா நின்னுது பாருங்க. குறிவச்சேனா? அது எப்படியோ பாய்ந்து ஓடிப் போயிட்டுது!" "ஈத்தம் பழத்தை தின்றுக் கிட்டிருந்த கரடி எங்க கண்ணிலே பட்டது. வசமா அடிக்கிறதுக்கு கொஞ்ளும் பக்கத்திலே போவோம்னு நகர்ந்தோம். அதுக்கு சத்தம் கேட்டிருக்கு. விருட்னு பாய்ஞ்சு கண் சிமிட்டுறது க்குள்ளாறே மறைஞ்சிட்டுது, எப்படிப் போச்சு எங்கே மறைஞ்சுதுன்னே தெரியலே போங்க.
இன்னோரன்ன கதைகள் மலைமேல்போய் திரும்பியவர் களால் சுவையாக ஒலி பரப்பப்படுவது வழக்கமே தவிர, புலியை - கரடியை அல்லது கொடிய பெரிய வனவிலங்கு எதையாவது ஒன்றைக் குறி வைத்துச் சுட்டுக்கொன்று, வெற்றிகரமாக வேட்டையாடக் கூடியவர் என்ற பெருமை புன்னைக்காடுப் பிரமுகர் எவருக்கும் கிடைத்ததில்லை.
அதாவது "போனசித்திரை" வரையில். அதற்குப் பிறகு தான் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
புன்னைக்காடுப் பெரிய வீட்டுப் பிரமுகர்களில் - மச்சுக் கட்டி ஒடுபோட்டு வசதியாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த கல் வீட்டுக்காரர்களில் - ஒருவர் மகிழ்வண்ணம் பிள்ளை. அவர் வீட்டில் அவருடைய அப்பா காலத்துத் துப்பாக்கியும் நவீன ரிவால்வரும் இருந்தன. அவர் வேட்டைக்குப் போய் வருவதும் உண்டு.
"அதிர்ஷ்டம் இருந்தால் பணம் கூரையைப் பிய்த்துக் கொண்டு வந்து கூட விழும் என்று சிலர் சொல்வர். அதேபோல" அவருக்கு கீர்த்திப்பிரதாபம் வந்து சேர வேண்டும் என்கிற அதிர்ஷ்டம் இருந்ததுபோலும். அதனால் அவர் வேட்டை என்று குழு சேர்த்துக் கொண்டு போகாமல் வீட்டோடு இருந்தபோது கூட, வேட்டை அவரைத் தேடிவந்து அருள் புரிந்து விட்டது!
அப்போது இரவு ஏழு அல்லது ஏழரை தான் இருக்கும் ஆனாலும் இருட்டு "கருங்கும்மென்று கவிந்து ராத்திரி ரொம்ப நேரம் ஆகியிருக்கும் என்பது போன்ற ஒரு மயக்கத்தை கொடுத்துக்கொண்டிருந்தது. வானத்தில் ஒரு வெள்ளி கூடத் தென்படவில்லை அன்று பூராவும் மப்பும் மந்தாரமுமாக இருந்து, அந்திவேளையில் மேக மூடாக்கு கனத்து, கவிந்து வந்து இருட்டுக்கு மேலும் அழுத்தம் கொடுத்தது. குளிர்ந்த வாடைக் காற்று நிலவியது. மழை இல்லை. மழை. வரலாமோ என்ற எண்ணத்தை உண்டாக்கும் சூழ்நிலை.
மகிழ்வண்ணம்பிள்ளை தற்செயலாக வெளியே வந்தார். எப்போது இரவில் அவர் வெளியே தலைகாட்டினாலும், கையில் ரிவால்வர் எடுத்து கொள்வது தான் வழக்கம். அன்றும் அது இருந்தது.
என்றுமே புன்னைக்காடு ஏழு மணிக்குள் ஓய்ந்து அடங்கி விடும். தெருக்களில் நடமாட்டம் இராது என்பது மட்டுமல்ல, அந்த ஊரில் வீடுகளில் ஆட்கள் வசிக்கிறார்களா இல்லையா என்று சந்தேகப்படும் அளவுக்கு ஊரே அமைதிப் போர்வையை மூடிக் கொண்டு உறங்கித் தோன்றும்.
அதிலும், தொடர்ந்து எலெக்ட்ரிக் விளக்குகள் எரியாது கெடுத்து விட்ட நாட்களில் மூன்றாவது நாளான அன்று, ஊரில் எங்குமே ஒரு பொட்டு வெளிச்சம் கூட இல்லை.
வாசல் "கேட்" நன்றாகச் சாத்தி கொண்டி போடப்பட்டிருக் கிறதா என்று பார்க்கும் நோக்கத்தோடு மகிழ்வண்ணம்பிள்ளை திண்ணையை விட்டுக் கீழே இறங்கக் கால் எடுத்து வைத்தார். அவரிடம் அப்போது "டார்ச்" இல்லை.
தெருவாசல் கேட்டை ஒட்டிய குத்துச் செடிகளின் அருகே ஏதோ ஒரு பிராணி அசைவதை அவர் கண்கள் புரிந்து கொண்டன "யாரது?" என்று கத்தினார் பிள்ளை. திருட்டுப்பயல் எவனோ தான் என்ற எண்ணமே அவருக்கு முதலில் ஏற்பட்டது. “யாருடா அவன்?" என்று மீண்டும் உரக்கக் கூவினார்.
பதில் இல்லை. ஆனால் ஒரு செடியிலிருந்து மறுசெடிக்கு அது நகர்ந்ததனால் உண்டான சலசலப்பு கேட்டது. ஏதோ பிராணி நடப்பது போலவும் பட்டது. நாயா, பன்றியா அல்லது வேறு எதுவுமா என்று அவருக்குப் புரியவில்லை.
அவருள் எழுந்த ஒரு அச்சம் "எதாக இருந்தாலும் இருக்கட்டுமே சுட்டுவைப்போமே" என்று உந்துதல் கொடுத்தது. தன்னைகாத்துக் கொள்ளும் ஒரு உதைப்பும் சேர்ந்தது. அவர் தயங்கவில்லை சுட்டுவிட்டார்.
அடிபட்ட பிராணி வேதனையோடு உறுமியது. அந்த உறுமல் கோரமாய் ஒலித்தது. ரத்தத்தை உறைய வைக்கும் பயங்கரக் கூச்சலில் மரண வேதனையும் கலந்திருந்தது.
மகிழ்வண்ணம் பிள்ளை வீட்டினுள்ளிலிருந்து அரிக்கன் லாந்தரை எடுத்துக் கொண்டு இரண்டு பேர் வந்தனர். அண்டை அயல் வீட்டுக்காரர்கள் சிலரும் தடிகள் வேல்க்கம்புகள், வெட்டரிவாள்களோடும் வெளிச்சங்களோடும் வந்து சேர்ந்தார்கள்.
குண்டடி பட்டு, ரத்தத்தில் விழுந்து, செத்துக்கிடந்த தடிப்புலி ஒன்றை எல்லோரும் கண்டார்கள்.
"ஏ கடுவா! கடுவா செத்துப் போச்சு" "மகிழ்வண்ணம் அண்ணாச்சி புலியைச் சுட்டுக் கொன்னு போட்டாங்க!”
"ஒரே சூடு. புலி அவுட் சரியானகுறி."
குறி லேசாகத் தப்பியிருந்தால், அண்ணாச்சி கதி என்னாகி யிருக்கும்? எவ்வளவு பெரிய கடுவா! இதுவந்து மேலே பாய்ஞ்சாலே ஆளு குளோஸ் ஆக வேண்டியது தான். அண்ணாச்சி ரொம்ப தைரியசாலி. தன்னந்தனியா: பெரிய புலியை குறிவச்சுச் சுட்டுவிட்டாகளே!....
இவ்வாறு இன்னும் பலவிதமாகவும் பேச்சுகள் ஆரவாரமாக எழுந்தன. புலியை பத்திரப்படுத்திவிட்டு: நாளை காலையில் பார்க்கலாம் என்று எல்லோரும் போனார்கள்
கதவுகளை நன்றாக சார்த்தி, அடிப்பூட்டு: மேல்பூட்டு: "அடி தண்டா" எல்லாம் போட்டும், உள்ளுற சிறு பயம் அரிக்கவே "லைட்டுகளை அணைக்க வேண்டாம். விடியவிடிய எரியட்டும்" என்று சொன்னார் பிள்ளை. பிறகு தனிமையில் மனைவி மீனாட்சியிடம் அவர் இயல்பாகத் தெரிவித்தார்
"எனக்கு அது புலியின்னே தெரியாது. கறுப்பா என்னமோ அசைஞ்சது. அவ்வளவுதான் தெரியும். அது நாயா, ஆடா, பன்றியாயின்னு கூட புரியலே. எதுவாகவும் இருக்கட்டும்னு தான் சுட்டுவச்சேன். அது இவ்வளவு பெரிய புலியுன்னு தெரிஞ்சிருந்தா நான் தைரியமா நின்னுசுட்டிருப் பேனா என்கிற சந்தேகம் எனக்கு இப்பகூட இருக்கு!"
உலகத்தை அவரைவிட அதிகம் நன்றாக புரிந்து வைத்திருந்த அந்த தர்ம பத்தினி "வாயைமுடிக்கிட்டு இருங்க. இப்படி இனிமே யார்கிட்டேயும் உளறிவைக்காதீங்க. வேணுமினா, புலி எப்படி உறுமிச்சு பாய வந்தது ஒரே குண்டுலே எப்படிச் செத்து விழுந்துதுன்னு அளந்து விடுங்க, கூச்சமோ தயக்கமோ வேண்டாம்", என்று உபதேசம் புரிந்தாள்
அவள் தந்த தைர்ய இன்ஜெக்ஷ ன் பிள்ளைவாள் உள்ளத்திலும் சரியானபடி வேலை செய்யத் தவறவில்லை!
அம்மையாரின் நோக்கு சரியான நோக்கு தான்!
மறுநாள் நன்றாக விடிவதற்கு முன்னரே, ஊர்நெடுக மகிழ்வண்ணம் பிள்ளை கடுவாயை சுட்டுக் கொன்றவிஷயம் காது - கண்ணு - மூக்கு - கால் - கை எல்லாம் இணைக்கப்பட்டு விரைவில் பரவியது. கடுவாயைப் பார்க்க ஊர்க்கார்கள் - பெரியவர்கள் சின்னவர்கள், ஆண்கள் பெண்கள் - வந்த வண்ணமாக இருந்தார்கள்.
முற்றத்தின் நடுவிலே எடுப்பாக அந்தப் புலி கிடத்தப் பட்டிருந்தது. கூட்டமிட்டுப் பார்த்தவர்கள் ஆளுக்கு ஒன்று சொல்லி புலியை வியந்தார்கள். பக்கத்திலே நின்று பார்த்தது போல, மகிழ்வண்ணம்பிள்ளை எப்படிக் குறிபார்த்தார் - கடுவா என்னமாய் முறைத்து உறுமியது - அவர் எவ்வாறு சுட்டார் - அது எப்படி அலறிக் கொண்டு விழுந்து செத்தது என்று ஒரு சிலர் விளக்கிக் கூறித் தங்கள் “வாய் வண்ணம் காட்டிக் கொண்டிருந்தார்கள்.
அவர் என்ன சொன்னாலும் ஊர் நம்பத் தயாராக இருந்தது. அவர் மேலும் மேலும் சொல்ல மாட்டாரா என்று எதிர் பார்த்தது.
ஏனெனில், அவர் அந்த ஊரில் முதல் முதலாகப் புலியை சுட்டுக் கொன்ற வேட்டை வீரர், குறிதவறாமல் சுடக்கூடிய தீரர் என்பதை புன்னைக்காடு கண்டு கொண்டது.
("வஞ்சிநாடு” - 1974)
----------------
34. திட்டம் தவறிப்போச்சு
பேரும் குண இயல்புகளும் அதிசயமாக ஒத்துப் போகிற அபூர்வப் பிறவிகளில் பரிபூரண ஆனந்தம் என்பவரும் ஒருவராவார்.
வளர்ந்து பெரியவன் ஆனதும் நம்ம பிள்ளையாண்டான் இப்படி இப்படி நடந்து கொள்வான் என்பதை முன் கூட்டியே தீர்க்க தரிசனம்" ஆக உணர்ந்து, பையனுக்கு அந்தப் பெயரை குடும்பத்தின் பெரியவர்கள் இட்டார்களா? அல்லது, நமக்கு இந்தப் பெயர் இருப்பதால் நாம் பூர்ணமாக எதையும் செய்ய வேண்டும், எதிலும் பரிபூரணம் காண்பதே நமது வாழ்க்கை தர்மமாக இருக்க வேண்டும் என்று பையனே தீர்மானித்து அப்படி ஒரு கொள்கையை கைக்கொண்டு வளர்ந்தானா? இது தீர்மானிக்க முடியாத ஒரு விஷயம்.
எப்படியோ, சின்ன வயசிலிருந்தே, "செய்வன திருந்தச் செய்" என்பது மட்டுமல்ல; எதையும் முழுமையாக, “பெர்பெக்ட் ஆகச் செய்ய வேண்டும் என்பதில் கருத்தாக இருந்தான் அவன்.
பரிபூரணானந்தன் என்று இலக்கணப்படி எழுதுவது சிரமமாக இருக்கிறது என்று அவன் பரிபூரண ஆனந்தன் என்றே எழுதியும் சொல்லியும் வந்தான்.
அவரவர் பெயரை சுருக்கி வைத்துக் கொள்வது ஒரு நாகரிகமாக - ஸ்டைலாக - பாஷன் ஆகக் கருதப்பட்டு வந்த காலத்திலும் சூழ்நிலையிலும் வசித்துக் கொண்டிருந்த போதிலும், அவன் பி. ஆனந்தன் என்றோ, பி.ஏ. தன் எனவோ தனது பெயரை சுருக்கிக் கொள்ள ஆசைப்பட்டானில்லை.
ஆனாலும், மற்றவர்கள் அவனை அவரவர் இஷ்டம் போலவும் சவுகரியம் போலவும் பெயர் சொல்லி கூப்பிடு வார்கள். "பரி" என்று அழைத்தார்கள் பலர். "பூரணம்" என்கிறார்கள் சிலர். "ஆனந்த்" என்றும் "ஆனந்தன்" என்றும் கூப்பிடுவார்கள் அநேகர். ஒருவன் மட்டும் "பரிபூரண ஆனந்தன்" என்று வாய்நிறைய உச்சரிப்பது வழக்கம். அவனையே தன் அருமை நண்பனாக மதித்தான் ஆனந்தன். படிக்கிற காலத்திலேயே அவன் அனைத்துக் காரியங்களையும் ஒழுங்காகவும் சரியாகவும் செய்து முடிப்பதில் அதிக அக்கறை காடடினான்.
இந்தப் பழக்கம் பிற்காலத்திலும் நிலைபெற்று வளர்ந்தது. "எடுத்த காரியம் எதுவானாலும் அதை பெர்பெக்ட் ஆகச் செய்து முடிக்கணும். இது என் பிரின்சிபிள்" என்று அவன் அடிக்கடி சொல்வது வழக்கம். சொல்கிறபடி செய்வது அவனுடைய பழக்கம்.
வேலை பார்க்கிற இடத்தில், பலரும் கடியாரத்தைப் பார்த்த படி இருப்பார்கள். ஐந்து மணி ஆகி விட்டதா என்று அடிக்கடி உற்று நோக்குவார்கள். ஐந்து ஆவதற்கு ஐந்து நிமிடங்கள் இருக்கிறபோதே, செய்த அலுவல்களை அப்படி அப்படியே போட்டு விட்டு, "அவசரம் ஒண்ணும் இல்லே. நாளைக்கு செய்யலாம் என்று மேசையின் இழுப்பறைக்குள் தள்ளிப் பூட்டி விட்டு, கிளம்புவதற்கு ரெடி ஆகிவிடுவார்கள். டாண் என்று ஐந்து மணிக்கெல்லாம் மிடுக்காக வெளியே நடப்பார்கள்.
ஆனால், பரிபூரண ஆனந்தன் அப்படி எல்லாம் நடந்து கொள்ள மாட்டான். அன்றைய அலுவலைப் பூரணமாக முடித்த பின்னரே புறப்படுவான். ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் தாமதமானாலும் பரவாயில்லே; எடுத்த வேலையை பெர்பெக்ட் ஆகச் செய்த முடிக்க வேணும் என்பான். மற்றவர்களும் அவ்விதம் செய்ய வேண்டும் என்று அவன் எதிர்பார்த்தான். ஆனால், மற்றவர்கள் அப்படிச் செய்ய முன்வரவில்லை. அவனை அப்பாவி, "பைத்தியாரன்" (பைத்தியக்காரன்) என்றும் கருதினார்கள்.
"இப்ப இப்படித்தான் இருப்பாரு. கல்யாணம் ஆகி விட்டால் இவரும் வழிக்கு வந்துவிடுவாரு. இவருடைய சுத்தம் - ஒழுங்கு - பூரணம் - பெர்பெக்ட்தனம் எல்லாம் வீட்டுக்கு வந்து சேருகிற அம்மாளிடம் பலிக்குமா என்ன? பெண்கள் பெரும்பாலும் அவரவர் இஷ்டம் போல் மெத்தனமா, சோம்பேறித்தனமாக, டெர்பெக்ட்தன்மை எல்லாம் பார்க்காமல் தான் காரியங்கள் பண்றாங்க, பரிபூரண ஆனந்தனுக்கு ஒருபரிபூரண ஆனந்தியா வரப் போறா! பார்ப்போமே!" என்று நண்பர்கள் கிண்டல் செய்வதும் சகஜமாகி விட்டது.
அது அவனை யோசிக்க வைத்தது. கவனிக்கும் படி செய்தது. பெண்களின் போக்குகளை, இயல்புகளை, செயல் திறன்களை, பேச்சுகளை ஸ்டடி பண்ணும் படி தூண்டியது. இறுதியாக ஒரு முடிவுக்கு வரும் படி பண்ணியது.
"நமக்கு ஒத்து வரக்கூடிய பெண் கிடைக்க மாட்டாள். நம்மை அவள் வழிக்கு இழுத்துவிடக் கூடியவளாக பெண் இருப்பாள். நம்முடைய பிரின்சிபிள், கொள்கை, சுபாவம் எல்லாம் எவளோ ஒருத்தியினால் மிதிபட்டு, நம்மிடமிருந்து அகற்றப்பட்டு. சேச்சே, அது சரிப்படாது. ஆகவே நமக்கு நமது பூரண ஆனந்த வாழ்க்கைத் துணை அவசியம் இல்லை. துணைவி இல்லாமலே நம்முடைய வாழ்க்கை பெர்பெக்ட் ஆக இயங்கும்.
அவனுடைய சிந்தனை காட்டிய வழி இது. அதன் படியே நடந்தான் அவன். அதற்காக அவன் வருத்தப்பட நேர்ந்தது.
அதிகாலையில் நாலரை மணிக்கு எழுந்தான். ஒன்றரை அல்லது இரண்டு மைல் தூரம் உலா போனான். குளிர்ந்த நீரில் குளித்தான். ஒரு அம்மாள் பதிவாகச் சில பேருக்கு சமைத்துப் போட்டு வாழ்க்கை நடத்திய தனிச் சாப்பாட்டு விடுதியில் நேரம் தவறாது சாப்பிட்டான். வேலைகளை ஒழுங்காகக் கவனித்தான். ஒய்வு நேரங்களில் பத்திரிகைகள், புத்தகங்கள் படித்தான். சில நாட்களில் நண்பர்களோடு சுற்றுலா போய் வந்தான். சினிமா பார்த்தான். சந்தோஷமாக இருந்தான்.
காலம் ஓடியது. பரிபூரண ஆனந்தர் பெரியவனாகி, வேலையிலிருந்து ஓய்வு பெற்று, நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்தார். தனி உணவு விடுதி நடத்திய அம்மாள் இறந்துவிட்ட பிறகு, ஆனந்தர் தனிப்பட்ட “மெஸ்"களில் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். அவருடைய உணவுப் பழக்கம் வசதியாக அமைந்துவிட்டது.
காலையில் காப்பியும் பிஸ்கட் தினுசுகளும். காப்பியை அவரே தயாரித்துக் கொண்டார். மதிய உணவு ஒரு ஒட்டலில். கும்பல் சாடுவதற்கு முன்னரே போய் சாப்பிட்டு வந்து விடுவார். மாலையில் காப்பி மட்டும். இரவில் பால், ரொட்டி, பழங்கள், ஆகவே, ஆரோக்கியமாகவே இருந்தார் அவர்.
இருந்தாலும், மரணம் பற்றிய நினைப்பு ஆனந்தரின் உள்ளத்தில் நிலைத்து நின்றது. தனது மரணத்துக்கும் முன்னேற் பாடுகள் செய்து வைக்க வேண்டும் என்று அவர் எண்ணினார்.
தான் இறந்ததற்குப் பிறகு உனது உடல் முழுமையாக, அப்படியே அடக்கம் செய்யப் படவேண்டும் என அவர் ஆசைப்பட்டார். ஆகவே, தனது சடலத்தை எரியூட்டாது, சமாதியில் பத்திரமாக வைக்க வேண்டும் என்று தீர்மானித்தார். அதற்கான ஏற்பாடுகளும் செய்தார்.
தனது வீட்டின் பின்புறத் தோட்டத்தில், நல்லமுறையில் சமாதிக் குழிதோண்டி, சிமிண்டுனால் பூசி வைத்தார். உயிரோடு இருக்கிற போதே தனக்கான சமாதிக் குழியையும், சுற்றுப்புற கட்டுமான வேலைகளையும் சீராகவும் அமைத்து, தானே கண்டு மகிழ முடிந்ததில் ஆனந்தருக்கு ஒரு பூரண திருப்தி ஏற்பட்டது. இதர செலவுகளுக்குத் தேவைப்படக் கூடிய பணத்தையும் ஒரு பேங்கில் போட்டு வைத்தார் அவர். இறுதிச் சடங்குகள் எப்படி எப்படி நடத்தப்பட வேண்டும் என்று திட்டமிட்டு, விளக்கமா கவும் எழுதிவைத்ததார். முக்கியமானவர்களிடம் இவை பற்றிச் சொல்லி, தக்க ஏற்பாடும் செய்தார். தன்னுடைய வாழ்க்கையில் முழுமையான திருப்தியோடு நாட்களைக் கழிக்கலானார் ஆனந்தர்.
வாழ்க்கை விளையாட்டுப் புத்தி உடையது. அல்லது, வாழ்க்கையை இயக்குகிற சக்தி விளையாட்டுத்தனம் கொண்டது என்று சொல்லலாம். அது பலபேரோடு குரூரமாக - ஒரு வக்கிரத் தன்மையோடு - விளையாடி விடுகிறது. பரிபூரண ஆனந்தர் விஷயத்திலும் அப்படித்தான் அது நடந்து கொண்டது.
அறுபத்து நான்காவது பிறந்த நாள் அன்று. ஆனந்தர் மகிழ்ச்சியோடு காலை உலா போய்க் கொண்டிருந்தார். நடைமேடை மீது தான் போனார்.
ஆனாலும், வேகமாக வந்த லாரி ஒன்று தடம் தவறித் தாறுமாறாக ஓடி, பிளாட்பாரத்தின் மீது ஏறி, ஆனந்தரை தாக்கியது. அவரைக் கீழே தள்ளி நசுக்கி, ஒரு மரத்தின் மீது மோதிவிட்டு நின்றது.
உரியமுறைப்படி காரியங்கள் எல்லாம் நடைபெற்றன. ஆனந்தரின் உடல் சிதைந்து சீர்குலைந்து போயிருந்தது. இவர் தான் பரிபூரண ஆனந்தர் என்று அடையாளம் கூடக் காண இயலாத விதத்தில் அவரது முகம் துவையலாகியிருந்தது பாவம்!
(அரும்பு - 1989)
----------------
35. முளையும் – விளைவும்
"விளையும் பயர் முளையிலே தெரியும்" என்று சொல்லப்படுகிறது. பயிர்களைப் பொறுத்த வரையில் இது உண்மையாக இருக்கலாம். மனித வாழ்க்கையில் இந்த விதி பொய்த்துப் போகும்.
போகும் என்ன போகும் முழுக்க முழுக்கப் பொய்த்தே விட்டது. பொய்யாகிக் கொண்டே இருக்கிறது! சிந்தித்துச் சினந்து சீறியது ஞானப்பிரகாசம் அவர்களின் அறிவு.
அவருடைய அறிவுக்கு, அவர் பெருமைப்பட்டுக் கொள்ளும் அவரது உள் ஒளிக்கு, பலத்த அடிபட்டிருந்தது, நிமிர்ந்து நிற்க வலு இல்லாமல் செய்கிற சரியான வர்ம அடி" அதுதான் அவருடைய சிந்தனைக்கும் சினத்துக்கும் காரணமாகும்.
அவருக்கு எப்போதும் தனது உள்ஒளி மீதும், அறிவின் திறமைமேலும் அசைக்க முடியாத நம்பிக்கை, அதனால் எழும் ஒரு கர்வம்.
"யார் எப்படிப் பட்டடவன் என்பதை அவன் முகத்தைப் பார்த்தே சொல்லிப் போடுவேன். ஒருவன் குணத்தை கொஞ்சநாள் ஆராய்ந்துவிட்டால், அவன் வருங்காலத்திலே என்ன ஆவான், எப்படி இருப்பான் என்று திட்டமாய் சொல்வேன். நான் சொன்னால் சொன்னபடி நடக்கும். நூத்துக்கு நூறு கரெக்டாக அமையும்" என்று தன்னகங்காரத்தோடு பேசுவதில் அவருக்கு ரொம்ப திருப்தி.
அவருடன் பேசிக்கொண்டிருப்பவர்கள் யாராக இருந்தாலும் சரி. "உம்ம குணவிசஷம் இப்படி, நீர் இப்படி இப்படி நடந்து கொண்டிருப்பீர். இனி இந்த மாதிரி நடப்பீர்" என்று ஓங்கி அறைவது ஞானப்பிரகாசப் பொழுது போக்குகளில் ஒன்று.
அவர் முகராசியும், அவர் பேசுகிற தோரணையும், அட்டகாசமாய் சிரிக்கிற தொனியும் அவருடைய பெரிய மனித தோற்றமும், ஆக எல்லாமும் கூடி, எதிரே கேட்டிருப்பவர்களை தலையாட்டி பொம்மைகளாகவும், பல் இளிச்சான் சாமிகளா கவும், மறுத்துரைக்கத் தெம்பு இல்லாத ஊமைக் கோட்டான் களாகவும் ஆக்கிவிடும்.
இந்த விதமான வெற்றிகள் பல பெற்று அவருடைய தன்னம்பிக்கையும் தற்பெருமையும் கொழுப்பேறி வளர்ந் திருந்தன.
அவருடைய நண்பர் கனகசபை பள்ளி ஆசிரியர். அவர் மாலை வேளைகளில் வீட்டில் வைத்து அநேக பிள்ளைகளுக்கு "பிரைவேட்டாகப் பாடம் கற்பிப்பது உண்டு. அப்போதும் சுமார் இருபது பிள்ளைகள் சேர்ந்து; அவர் வீடே ஒரு தனிப் பள்ளிக்கூடம் மாதிரித் தோன்றும்.
ஞானப்பிரகாசம் மாலை உலா போய்விட்டுத் திரும்புகிற வழியில், பொழுதுபோக்காக அந்த இடத்தில் கணிசமான நேரத்தைக் கழிப்பது வழக்கம். நண்பர் பாடம் சொல்லிக் கொடுப்பதை கவனிப்பார். படிக்கிற பிள்ளைகளை கவனிப்பார். ஆசிரியரோடு பேசிக்கொண்டு இருப்பார்.
"வருவதை முன்கூட்டியே உரைப்பது பற்றி ஒரு நாள் பேச்சுத் திரும்பியது. அதில் எல்லாம் நம்பிக்கை இல்லாதவராய் பேசினார் கனகசபை, அப்போது ஞானப்பிரகாசத்துக்கு சூடு பிடித்துவிட்டது, ஆவேசம் வந்தவர்போல் கத்தினார் –
"ஒய், நான் இன்னைக்கிச் சொல்லுதேன். இங்கே இருக்கிற பிள்ளைகள் இன்னும் பத்து வருஷங்களுக்குப் பிறகு எப்படி இருப்பாங்க, என்ன ஆவாங்கன்னு நான் சொல்லுதேன். சோசியம் இல்லே, இவங்க குணங்கள், போக்குகளை ஒரளவுக்கு நான் ஸ்டடி பண்ணியிருக்கேன். அதை வச்சும் அவங்க முகத் தைப் பார்த்தும் சொல்லுதேன். வேணுமின்னா. வரிசையாய் பெயர்களை எழுதி நான்சொல்வதையும் எழுதி வச்சுக்கிடு வோம். அப்புறம் பத்து வருஷம் - ஏன், ஒரு வியாழவட்டம், பன்னிரண்டு வருஷமே போகட்டுமே - அதுக்குப் பிறகு, நாம அதை ஒப்பிட்டுப் பார்ப்போம். நான் சொன்னது சொன்னபடி நடக்குதா இல்லையான்னு பார்த்துப் போடுவோமே! என்றார்,
"அதெல்லாம் எதுக்குங்ஙேண். சும்மா பேச்சை விடுங்க. ஏதோ பொழுது போக்காப் பேசுறோம்." என்று நண்பர் இழுத்தார்.
ஞானப்பிரகாசத்துக்கு ஆங்காரம் வந்துவிட்டது. இந்த ஞஞ்ஞமிஞ்ஞ விவகாரமே வேண்டாம். இது ஒரு சவால்" என்று சொல்லி, தாளும்பேனாவும் எடுத்து, ஒவ்வொரு பிள்ளையின் பெயரையும், அப்பா பெயர், வயசு முதலிய விவரங்களையும் கேட்டு எழுதினார். ஒவ்வொருவருக்கும் அடையாளமாகச் சில குறிப்புகளையும் இணைத்துக் கொண்டார்.
அங்கே பதினாறு பிள்ளைகள் இருந்தார்கள் ஆண்களும் பெண்களுமாக, பத்துவயசு முதல் பதினைந்து வயசு வரை உள்ளவர்கள். அவர்களை நன்கு கவனித்து, விவரங்களைக் கேட்டறிந்து, பிற்காலத்தில் அவர்கள் என்ன ஆவார்கள், என்ன நிலைமையில் இருப்பார்கள் என்று தீர்க்கதரிசனமாகக் கூறி, அப்படியே எழுதியும் வைத்துக்கொண்டார் அவர்.
அப்புறம் இது விஷயமாக அவர்கள் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
விரைவிலேயே ஞானப்பிரகாசம் அந்த ஊரை விட்டுப் பிரிந்து போக நேர்ந்தது. வாழ்க்கைப் பாதையில் எங்கெங்கோ அலைந்து திரிய நேரிட்டது. அவ்வூரிலிருந்து செய்திகள் எட்ட முடியாத தொலைவிலே அவர் பல வருடங்கள் தங்க வேண்டியதாயிற்று. முதலில், அபூர்வமாக எப்போதாவது கனகசபையிடமிருந்து கடிதம் வந்து கொண்டிருந்தது. போகப் போக அவரும் எழுதுவதை நிறத்திவிட்டார்.
"அங்கே ஒரு தடவை போய் வரணும்" என்று ஞானப்பிர காசம் வருடம்தோறும் நினைப்பது உண்டு. ஆனாலும் வாழ்க்கை நிலைமைகளும், சந்தர்ப்பங்களும் பிறவும் அவருக்கு உதவி புரியாததனால், அந்த யாத்திரை சுலபத்தில் சித்திக்காத ஒரு லட்சியம் போலவே அமைந்து கிடந்தது.
அவர் அந்த ஊரையும், அவ்வூர் பிள்ளைகளையும் மறந்து விடவில்லை. "எல்லாரும் நல்ல படியாகத் தான் இருப்பார்கள். நான் சொன்ன மாதிரி வாழ்க்கை அவர்களுக்கு அமைந்திருக்கும்" என்று அவர் எண்ணிக் கொள்வார். "போகணும், பத்து வருடங்களுக்கு மேலேயே ஆச்சுதே, எல்லோரும் எப்படி இருக்காங்க என்பதை அறிவதற்காகவாவது ஒரு தடவை அந்தப் பக்கம் போய் வரத்தான் வேண்டும்" என்று நெஞ்சோடு புலம்பிக் கொள்வார்.
ஒருநாள், வாழ்க்கை உண்மை ஒரு அதிர்ச்சி மாதிரி அவரை எதிர்கொண்டது.
அவர் வசித்த பெருநகரத்தின் முக்கிய ரஸ்தா வழியாக அவர் நடந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த இளைஞன் அவரைப் பார்த்தான். நின்றான். முகம் மகிழ்ச்சியுற, “வணக்கம் ஐயா" என்று கும்பிட்டான், "என்னைத் தெரியுதா ஐயா?" என்று கேட்டான்.
அவர் அவனை கவனித்தார். அவனைப் பார்த்திருந்ததாக அவருக்கு நினைவு இல்லை. "தெரியலியே. யாரு?" என்றார்.
”மறந்திருப்பீங்க. பத்து பதினொரு வருஷத்துக்கு முந்திப் பார்த்தது. அப்ப நான் சின்னப் பையனாக இருந்தேன். ஆனால் உங்களை இனம் கண்டு கொள்றது சிரமமாக இல்லை. நீங்க அப்படியே தான் இருக்கீங்க" என்றான் அவன்.
"இவன் யாரு இவன்? ரொம்பத் தெரிஞ்சவன் மாதிரிப் பேசுதானே" எனற தயக்கத்தோடு நின்ற பெரியவருக்கு தெளிவு ஏற்படுத்தும் விதத்தில் அவன் சொன்னான்.
"கனகசபை வாத்தியார் வீட்டிலே நான் பாடம் படிக்கையிலே நீங்க அடிக்கடி வருவீங்க. என் பேர் நடராஜன்…."
"ஒகோ, அப்படியா ரொம்ப சந்தோஷம். வாத்தியார் எப்படி இருக்கார்? நீ இங்கே என்ன பண்ணுறே? எப்போ வந்தே?" என்று உற்சாகத்தைக் கொட்டலானார் அவர்.
"நீங்க அப்புறம் அந்தப் பக்கம் வரவே இல்லையே, ஐயா. எங்க ஊரையும் எங்களையும் அடியோடு மறந்துட்டீக போலிருக்கு!"
"மறக்கவாவது ஒண்ணாவது! நேரமே கிடைக்கலே தம்பி. போகணும், கண்டிப்பா ஒரு தடவை போக வேண்டியது தான். அந்த ஊரும் ஆட்களும் இருக்கிற நிலையை பார்க்கப் போகணும்கிற தவிப்பு எனக்கு எப்பவும் இருக்கு நேரம்தான் கிடைக்கலே" என்று பெரியவர் அங்கலாய்த்தார்.
"நீங்க சொன்ன ஒரு வியாழவட்டம் சீக்கிரமே ஆகிவிடும். அப்போ போய் பாருங்க!" என்று சொன்ன நடராஜன் ஒரு மாதிரிச் சிரித்தான்.
"என்னடே, என்ன விஷயம்?" என்றார் அவர்.
"அதை எல்லாம் நீங்களே கண்டறிவதே நல்லது" என்று அவன் சொன்னான்.
"ஆமா, நீ என்ன செய்வதாகச் சொன்னே?"
இங்கே ஒரு கம்பெனியிலே குமாஸ்தா வேலை பாக்கிறேன்”
“எது வரை படிச்சே?”
"எஸ்.எஸ்.எல்.சி. பாஸ் செய்தேன். மேலே படிக்க வசதி இல்லே, வேலை தேடி அலைஞ்சேன்."
*குமாஸ்தா வேலைக்காக இவ்வளவு தூரம் வரணுமா? என்று கேட்டார் அவர்.
"இப்போ இந்த வேலை கிடைப்பதே பாக்கியம்னு தோணுதே. குமாஸ்தா வேலைக்காக டில்லி, பம்பாய், கல்கத்தான்னு போறாங்களே! எனக்கு இங்கேயே கிடைத்தது நல்வாய்ப்புதான்!" என்றான் இளைஞன். "உங்களை சந்தித்ததில் ரொம்ப மகிழ்ச்சி. நான் போய் வாறேன்" என்று வணங்கிவிட்டு நகர்ந்தான்.
”நல்ல பையன்" எனப் பாராட்டியது அவர் மனம்.
அவர் தனது இருப்பிடம் சேர்ந்ததும், முதல் காரியமாக புத்தகப்பெட்டியைத் திறந்து ஒரு பழைய டயரியினுள் பத்திர மாக வைத்திருந்த காகிதத்தை எடுத்து, அவசரம் அவசரமாக ஆராய்ந்தார்.
"உம். வி. நடராஜன் ஆமா சரிதான் இவன் தான. கெட்டிக்காரப் பையன், வகுப்பில் முதல். எல்லாப் படங்களிலும் நல்ல மார்க். ஆங்கிலத்திலும் தமிழிலும் எப்பவும் முதல் மார்க்குதான். அப்போது வயசு 12. சரி குறிப்பு என்ன? கல்லூரியில் படித்து பட்டம் பெற்று, நல்ல உத்தியோகம் அடைவான். ஊங்? அப்படியா சங்கதி!"
ஞானப்பிரகாசம் தலையைச் சொறிந்தார். அடடா, அவன் எங்கே தங்கியிருக்கான்னு கேட்காமப் போனோமே! அவன் கிட்டே மேலும் பல தகவல்களை விசாரித்து அறிந்திருக்கலாமே!" என்றொரு வருத்தம் அவர் உள்ளத்தில் குத்தியது.
சந்தர்ப்பம் அவருக்குச் சிறிது உதவியது. சில தினங்களுக்குப் பிறகு நடராஜனை அவர் மறுபடியும் சந்திக்க நேரிட்டது. ஒரு பஸ் ஸ்டாப்பில்.
"உனக்குக் கல்யாணம் ஆகி விட்டதா?" என்று விசாரித்தார்.
"கல்யாணம் செய்து கொள்வதைப்பற்றி நான்யோசிக்கவே இல்லை. குடும்ப நிலைமை, பொருளாதார நிலை, மற்றும் பல நிலைமைகளை கவனித்தபோது, என் நிலைமையில் உள்ளவன் தனியாக இருந்துவிடுவதே நல்லது என்று தோன்றுகிறது." நம்பிக்கை வறட்சி அவன் குரலில் ஒலித்தது.
"பெரிய ஸினிக் ஆக இருக்கான் பையன். பாவம், வாழ்க்கை இவனை ரொம்பவும் சோதிக்குதுபோல் தெரியுது” என்று அவர் மனம் பேசியது.
“ஸார்வாளுக்கு நல்லா ஞாபகம் இருக்கும். கனகசபை வாத்தியார் கிட்டே ட்யூஷன் படிச்சுக்கிட்டிருந்தவங்களிலே சிவகாமின்னு ஒரு புள்ளே இருந்தது. அழகா, சிவப்பா. அதோட பத்தாவது வயசிலே நீங்க பார்த்தீங்க. பிறகு ரொம்ப அற்புதமா வளர்ந்து நின்னுது. நீங்க கூடச் சொல்லியிருந்தீங்க இந்தப் புள்ளை முகத்திலே லட்சுமிகளை கொஞசி விளையாடுது. இது ராஜரீகமா வாழப்போகுது. பெரிய இடத்திலே மருமகளாகப் போய், ராணி மாதிரி இருக்கும் இன்னிங்க. அந்தப் புள்ளைக்கு கல்யாணமாக ரொம்பக் கஷ்டப்பட்டுது, அழகை யாரு பார்த்தாங்க? நகை பல ஆயிரம், ரொக்கமாச் சில ஆயிரம் வேணுமின்னு எல்லா இடத்திலும் கேட்டாங்க. பதினேழாவது வயசிலே கல்யாணமாச்சு. அவ்வளவா வசதி இல்லாத குடும்பம். மாமியார் ரொம்பக் கஷ்டப்படுத்தினா, புருசன் அதுக்கு மேலே, சந்தேகப் பேர்வழி. அழகான பொண்ணு, எவன் எவன் மேலேயோ ஆசைப்பட்டு கண்டபடி அலைவான்னு அவனுக்கு நெணைப்பு. அவன் கரடி மாதிரி இருப்பான். அதனாலே அவளை அடிஅடியின்னு அடிப்பான். அவ குழந்தை உண்டாகியிருந்த சமயம் அவன் எட்டி உதைச்சு, பேயறை அறைய, அவள் இசை கேடாக விழுந்து படுத்த படுக்கையாகி செத்தே போனாள். அவள் அழகாக இருந்து லட்சுமிபோலே விளங்கி, நல்லவளாக வாழமுயன்று என்னத்தைக் கண்டாள்? வாழ்க்கை எப்படி எப்படியோ இருக்குது. நம்ம சமூக நிலைமைகள் மகா மோசம்."
அவனுக்கு அன்று மனப்புழுக்கம் போலும். பெரியவர் அன்பாகவும் அனுதாபமாகவும் பேசத் தொடங்கவும் அவன் சொல்மழை கொட்டித் தீர்த்தான். ஒரு பஸ் வந்ததும் ஏறிக்கொண்டு பறந்தான்.
ஞானப்பிரகாசம் பெருமூச்செறிந்தார். "இரண்டாவது தோல்வி" என்று பழைய குறிப்பில் பதிந்து கொண்டார். "பத்துக்கு ரெண்டு அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும். அதுக்காக எல்லாமே பொய்த்துப் போகும்னு எப்படிச் சொல்ல முடியும்?" என்று அவர் மனம் வாதிட்டது. இதை நிச்சயம் செய்து கொள்வதற்காகவாவது அந்த ஊருக்குப் போயாக வேண்டும் என்று அவர் விரும்பினார்.
அந்த விருப்பம் செயலாக முடிவதற்கு அவருக்கு ஒரு வருடம் தேவைப்பட்டது. "பரவால்லே. நாம் சொன்னதுபோல, ஒரு வியாழ வட்டம் கழித்துத் தான் இங்கே வர முடிஞ்சிருக்கு இதை சரி பார்த்துக் கொள்ள ஏற்ற தருணம் தான்" என்று அவர் எண்ணிக் கொண்டார்.
அவ்வூரில் பிரமாத மாறுதல்கள் எவையும் புகுந்துவிட வில்லை. தெருக்களில் மின்சார விளக்குகளும், குடிநீர் குழாய்களும் புதிதாகச் சேர்ந்திருந்தன. மற்றப்படி குட்டிச் சுவர்கள், இடிந்து கொண்டிருக்கும் சிறு வீடுகள், பழுது பார்க்கப்படாத பெரிய வீடுகள். கட்டை மண்ணை வேலிகளாகக் கொண்ட வெறும் தோட்டங்கள் எல்லாம் "பழைய கறுப்பனே கறுப்பன் என்ற நிலையில் தான் காட்சி தந்தன. மனிதர்களில் சிலர் செத்துப் போயிருந்தார்கள். சிலர் பிழைப்புத் தேடி வெளியூர் போய் விட்டார்கள். வறுமையும் முதுமையும் நோயும் ஊரோடு இருந்தவர்களின் உடலையும் உள்ளத்தையும் வெகுவாக பாதித்திருந்தன. முன்பு சின்னப்பிள்ளைகளாகத் திரிந்தவர்கள் இப்போது பெரியவர்கள் ஆகியிருந்தார்கள். ஆனாலும் அடுத்த தலைமுறைக் குழந்தைகள் நிறையவே தெருக்களில் தென்பட்டன.
ஒடிய காலம் கனகசபையின் உடலில் பாதிப்புகளைப் பதித்திருந்தது. வயது முதிர்வும், சில பகுதிகளில் அதிகமான அநாவசியமான - சதையும், தலையில் வழுக்கையும் தோன்றி யிருந்தன. வாழ்க்கையின் சுமைகள் அவரை வெகுவாக அழுத்திக் கொண்டிருந்ததால், அவரே உற்சாகமற்று, வயசுக்கு மீறிய கிழத்தனம் பெற்று, சோர்வுடன் தோற்றம் அளித்தார். எனினும், “வராது வந்த நண்பரை மனநிறைவோடும் முகமலர்ச்சியோடும் வரவேற்று உபசரித்தார்.
அவர்கள் ஓயாது பேசிக் கொண்டேயிருந்தார்கள். எல்லாரை யும், எல்லா விஷயங்களையும் பற்றித்தான்.
நடராஜனை சந்தித்தது பற்றி ஞானப்பிரகாசம் சொன்னார்.
“ஆமாம். கெட்டிக்காரப் பையன். அவனுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கும் என்றுதான் நானும் நினைத்திருந்தேன். படிப்பில் ஆர்வம் உள்ள, திறமையும் அறிவுக் கூர்மையும் உள்ள பையனுக்கு மேற்கொண்டு படிக்க வசதி இல்லை, அவன் கிளார்க் வேலைக்குப்போக வேண்டிய தாச்சு, நம்ம சமூக நிலைமை அப்படித் தானிருக்கு, அவனைப்போல எத்தனை யோ பேர். இவனாவது ஏதோ பிரைவேட் கம்பெனியில் குமாஸ்தாவாகப் போயிருக்கான். அங்கே சுயமுயற்சிகளுக்கும் தன்முனைப்புக்கும் ஏதாவது வழிவகை தென்படலாம். எனக்குத் தெரிந்த ஒரு பிரைட் ஸ்டுடன்ட். நல்ல அறிவாளி. ரொம்பவும் முன்னுக்கு வந்திருக்க வேண்டியவன். ஆனால் வாய்ப்புகள் இல்லை. சப்ரிஜிஸ்ட்ரார் ஆபீசிலே கிளார்க் ஆகும் வாய்ப்புதான் அவனுக்குக் கிடைத்தது. ஈயடிச்சான் காப்பி என்பாகளே, அது மாதிரி, இயந்திர ரீதியாகப் பார்த்து எழுதிக்கிட்டே இருக்கிற வேலை. அவன் மூளையும் ஆற்றலும் துருப்பிடிச்சு, எதுக்கும் உதவாமல் போயிருக்கும். நாம் எவ்வளவோ ஆசைப்படு கிறோம். இளம் தலைமுறையினரிடம் எவ்வளவோ எதிர்பார்க் கிறோம். நம்பிக்கையோடு இப்படி எல்லாம் நடக்கும் என்று உறுதியாகச் சொல்கிறோம். ஆனால் அவை நடப்பது இல்லை. ஏறுமாறாக நடந்து விடுது. அதுக்கெல்லாம் காரணம், தனிப்பட்ட அந்த இளைஞர்களின் போக்குகளோ பண்புகளோ அல்ல. குடும்பங்களின் பொருளாதார நிலை, சமூகநிலை, நாட்டு நிலை முதலியனதான் முக்கிய காரணங்கள்."
நாம் அதிகம் பேசிவிட்டோம் என உணர்ந்தவர் போல், கனகசபை சடக்கென்று பேசை நிறுத்தினார். மெளனத்தில் ஆழ்ந்து விட்டார்.
அவர் பேச்சில் உண்மை இருப்பதை ஞானப்பிரகாசம் உணர்ந்தார். அப்படித்தானே ஆச்சு! அவர் எண்ணி, எதிர் பார்த்து, உறுதியாக அறிவித்தது என்ன? பன்னிரண்டு வருட காலத்தில் நிகழ்ந்திருப்பதுதான் என்ன? இத்தகைய விளைவுகளை அவர் எதிர்ப்பார்க்கவே இல்லையே நடராஜனை யும், சிவகாமியையும் வாழ்க்கை வஞ்சித்திருந்தது போலவே, அவர் பட்டியலில் குறித்து வைத்திருந்த இதரர்களில் பலபேரையும் வஞ்சித்து விட்டது. ஒரு சிலர் வேறு விதத்தில் முன்னேறியிருந்தார்கள்! அதையும் அவர் முன்கூட்டியே கணிக்க முடிந்தது இல்லை தான்.
"உள்ளதைத் தின்னு போட்டு ஊரைச் சுத்திக்கிட்டு இருப்பான்" என்று அவரால் மதிப்பிடப்பட்ட பெரிய வீட்டுப் பையன் ஒருவன், பணபலத்தால் என்ஜினிங் காலேஜில் இடம் பெற்று, வருடங்களைக் கழித்து, பட்டமும் பெற்று விட்டான்: ஆனால் வேலை கிடைக்கவில்லை. சுமாராகக் கல்வி கற்று, வீட்டில் இருந்தபடி விவசாயத்தை கவனிக்கிறேன் என்று சோம்பல் வாழ்வு வாழ்வான் என்று குறிப்பிடப்பட்ட, மத்தியதர வர்க்கத்துப் பையன் ஒருவன், எட்டாவது வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு அவனுக்கு வேண்டிய ஒருவரோடு பிசினஸில் ஈடுபட்டு, இருவரும் சேர்ந்து சுரண்டி, சொந்தமாக பிசினஸ் ஆரம்பித்து, லாபகரமாக முன்னேறி கொண்டிருந்தான். சுமாராக இருப்பான், சுத்த மண்டு என்று கருதப்பட்ட ஒருவன் குடித்து, சூதாடுவதிலும் சிறு திருட்டுகளில் வெற்றி காண்பதிலும் பிரசித்தி பெற்றுவிட்டான். குடியும் குடித்தனமுமாய் இருப்பாள் என்று அவரால் நிச்சயிக்கப்பட்ட ஒரு பெண் கல்யாணமாகி, கிடைத்த வாழ்வில் திருப்தி அடையாமல், ஸ்டைல் மாஸ்டர் ஒருவனோடு ஒடிப்போய் விட்டாள். ஒரு பெண்ணுக்குக் கல்யாணம் ஆகவே இல்லை. அவள் மெலிந்து இளமை இன்பங்களை நுகர முடியாமல் போன ஏக்கத்தினால் ஹிஸ்டீரியா நோயில் சிக்கி அவதிப்பட, அவளுக்குப் "பேய் பிடித்திருக்கிறது; பைத்தியம் கண்டிருக்கிறது" என்று கடுமையான சிகிச்சைகள் நடைபெற்று வந்தன.
"போதும்! போதும்" என்று அலறியது ஞானப்பிரகாச உள்ளம். அப்பொழுதுதான் அவருடைய சிந்தனை சீறியது. "விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது சரியாக இருக்கலாம். ஆனால், மனித வாழ்க்கையில் இது பொய்த்துத் தான் போகும்!" என்று. மனிதருக்கு வாழ்வு நல்ல வாழ்க்கையாக அமைவதற்கான பெரும் மாற்றங்கள் ஏற்படாத வரையில் இது இப்படித்தான் முடியும் என்றும் அது முனகிக் கொண்டது.
("சாந்தி"-1970)
----
36. காதல் அதிர்ச்சி
டாக்சி வாடகைக்கு வருமா? ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்த சந்திரன், அருகில் ஒலித்த குரலைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினான்.
அவனது பதட்டத்தைப் பார்த்தோ - அல்லது மனத்தில் தோன்றிய ஏதேனும் ஒரு எண்ணத்தினாலோ - முகத்தில் சிரிப்பின் ரேகை நெளிய அவனையே கவனித்தபடி நின்ற இளம் பெண்ணை அவன் ஒரு தடவைதான் நோக்கினான். "ஊம்" என்று சொல்லிக் கதவைத் திறந்து விட்டு, மீட்டரை இயங்கும் படிச் செய்த பிறகு, தனது இடத்தில் அமர்ந்து, தயாரானான்.
அதற்குள் அவளும் காரில் ஏறி அமர்ந்தாள், கதவைச் சாத்தினாள். “கொஞ்சம் பலமாக அடித்துச் சாத்தணும்" என்று டிரைவர் கூறியதைக் கேட்டு, அவ்வாறே செய்தாள்; போக வேண்டிய இடத்தைக் குறிப்பிட்டுச் சொன்னாள். அதன் பிறகு அவள் பேசவில்லை.
அவனும் பேசவில்லை. ஆனால் அவன் மனம் அவளைப் பற்றி எண்ணத்தான் செய்தது. தனக்க முன்னால் உள்ள சிறு கண்ணாடியில் அவள் உருவம் படிவதை அவன் கண்கள் கவனித்துக் கொண்டு தானிருந்தன. அவளிடம் தனியான ஒரு தன்மை இருப்பதாக அவன் உள்ளம் உணர்ந்தது.
அவளுக்கு இருபதுக்கு மேல் முப்பதுக்குள் எந்த வயசும் இருக்கலாம். ஒல்லியாகத்தான் தோன்றினாள். கன்னம் ஒட்டி, தோள் எலும்புகள் துருத்திக் கொண்டு…..
”நாகரிக யுகத்திலே பெரும் பாலான பெண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். உருளைக் கிழங்கு போண்டா மாதிரியும், ஆப்பிள் பழம் போலவும், பருமனாய் சதைப் பிடிப்பும் மினுமினுப்புமாகச் சில பேர்தான் காணப்படுகிறார்கள். பாஷனும் பகட்டான டிரஸ்"oம், ஸ்டைலான சிங்காரிப்பும்தான் அநேக பெண்களுக்கு வனப்பும் வசீகரமும் தருகின்றன. இப்படி அவன் மனம் எண்ண அலை நெளிய விட்டது. இயந்திரத்தை இயக்கும் ஒரு கருவிபோல் இருந்தாலும் சந்திரன் உணர்வற்ற மிஷின் அல்ல.
அவள் கண்களை உறுத்தும்படியாக மேக்கப் செய்து கொண்டிருக்கவில்லை. பளிச்சென வர்ண ஒளிகளை வீசும் ஆடைகளைத் தேர்ந்து அணிந்திருக்கவுமில்லை. இருந்தாலும், அவளிடம் என்னவோ ஒரு கவர்ச்சி இருந்தது. அவளை ஒரு மலர் என்று சொல்லலாமென்றால், "நெஞ்சில் கனல் எழுப்பும் மலர்" என்று உவமிக்க முடியாது. இனிமையும் குளுமையும் அமைதியும் புகட்டுகிற பூக்களோடும் அவளை ஒப்பிட இயலாது. இனம் புரிந்து கொள்ள முடியாத வருத்தத்தை - சோகத்தை - உள்ளத்தில் அரும்பச் செய்கிற தனிரக மலர் மாதிரத் தான் அந்தப் பெண்ணும் இருந்தாள்.
சந்திரன் கார் ஒட்டும் தொழிலை மேற்கொண்டிருந்தாலும், கவிதைகளை ரசிக்கக் கற்றவன். அவன் உள்ளம் வரண்டது அல்ல.
அந்தப் பெண்ணின் கண்கள் அப்படியும் இப்படியும் பரண்டு கொண்டுதான் இருந்தன. குறுகுறுப்பும் இளமைத் துடிப்பும் இயல்பாகவே குடிகொண்டிருந்த அகன்ற கரிய விழிகளில் ஆழம்காண முடியாத நீர்நிலையின் அமைதியும், காரணம் தெரிந்து கொள்ள முடியாத வேதனையும் கலந்து கிடப்பதாக அவனுக்குத் தோன்றியது.
சந்திரன் நேர்மையானவன். கடமையில் கருத்து உடைய வன். ஒழுங்கு தவறாதவன். தான் உண்டு. தன் தொழில் உண்டு என வாழ்கிறவன். தொழில் சம்பந்தமாக அவன் தினந்தோறும் எத்தனையோ ரக மனிதர்களோடு பழகவேண்டியிருந்தது. காரினுள் அவன் முதுக்குப் பின்னே, ரகசியம் என்ற நினைப்பில் நிகழும் எத்தனை எத்தனையோ உணர்ச்சி நாடகங்களுக்கெல் லாம் அவன் சிலை போன்ற சாட்சியாக இருந்து வருகிறான். அவன் பின்புறத்தில் பேசப்படும் பலவிதமான பேச்சுக்களும் அவன் காதுகளில் விழாமல் இருக்குமா என்ன? உலக வாழ்க்கையில் ஈடு பட்டிருப்பினும் அதனுடன் ஒட்டியும் ஒட்டாமலும் தாமரை இலைத் தண்ணிர் போல் காலம் கழிக்க வேண்டும் என்கிற லட்சியத்தின் உயிர் உருவமாக விளங்கியவன் அவன்.
ஆயினும், அந்தப் பெண்ணைக் கண்டதிலிருந்து அவன் மனம் அமைதியை இழந்து விட்டது. அவன் உள்ளத்தில் ஏதோ ஒரு சஞ்சலம்.
"டிரைவர்"
அழைத்தாள்.
"என்ன?" என்று கேட்டு அவன் தலையைத் திருப்பினான்.
“கொஞ்சம் நிறுத்துங்க. இந்த இடத்திலேயே இறங்கிக் கொள்கிறேன்" என்று அவள் அறிவித்தாள்.
அவள் இஷ்டம்! அவள் முச்சாந்தியில் இறங்கினால் என்ன? ரஸ்தாவின் ஒரத்தில் நிற்க ஆசைப்பட்டால் அவனுக்கு என்ன?
கார் நின்றதும், மீட்டரைப் பார்த்துப் பணத்தைக் கொடுத்து விட்டு, அவள் கீழே இறங்கினாள்.
அவளை ஒருதரம் நன்றாகப் பார்த்து விட்டு, கதவைச் சாத்திக் கொண்டு, வண்டியைச் செலுத்தினான் சந்திரன்.
அவள் கண்களும் அவனை அளந்தன. இயல்பாக நோக்கும் சாதாரணப் பார்வைதான் அது.
நாள்தோறும் யார் யாரையோ எங்கெங்கோ இட்டுச் சென்று இறக்கி விட்டு விட்டு, வேகமாக நகரைச் சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு டாக்சியை ஒட்டுகிற டிரைவர் என்றோ ஒருநாள் சிறிது நேரம் பிரயாணம் செய்த எவளோ ஒருத்தியை நினைவில் நிறுத்தி வைத்திருக்க இயலாதுதான்.
ஆனாலும், விதிவிலக்கு நிகழ்ச்சிகளும் இருக்க முடியும் தானே?
அந்தவித அசாதாரண நிலையை அடைந்திருந்தாள் அந்த யுவதி. சந்திரன் உள்ளத்தில் அவள் நிலையான இடம் பெற்று, நினைவில் அடிக்கடி அலைகள் எழுப்பி வந்தாள். அவளைத் தேடிக்கொண்டே இருந்தன அவன் கண்கள்.
சினிமா தியேட்டர்கள் முன்னாலும், பெரிய ரஸ்தாக்களின் கூடல்களிலும், நாகரிக ஒட்டல்களின் அருகிலும், அவளைப் போல் எவளாவது தென்படுவாள். "அவள் தானோ?" என்று அவன் ஆவலோடு பார்வை எறிந்தால், கிட்டுவது ஏமாற்றம் தான்.
அவள் அவன் பார்வையில் படவேயில்லை. மறுபடி அவன் காரை நாடி அவள் வரவுமில்லை. ஊரில் எத்தனையோ டாக்சி கள் ஒவ்வொருவருக்கும் எத்தனை எத்தனையோ அலுவல்கள்!
விபத்து மாதிரி தற்செயலாக ஏற்பட்டாலன்றி - அல்லது திட்டமிட்டு, குறித்த நேரத்தில் குறிப்பிட்ட இடம் ஒன்றில் சந்தித்தாலன்றி - ஒருவரை ஒருவர் எங்கே அடிக்கடி காண முடிகிறது?
எனினும், அபூர்வமாக எதிர்பாராவிதத்தில் சில சந்திப்புகள் நிகழ்வதற்குச் சந்தர்ப்பம் துணை புரியத்தானே செய்கிறது?
ஒருநாள் பகல் ஒரு மணிக்கு, சந்திரன் காரை ஒரு ஒட்டல் முன் நிறுத்தி விட்டுக் கீழே இறங்கினான்.
"சாப்பாட்டு நேரமோ?" என்ற கேள்வி பின்னாலிருந்து வந்தது. இனிய மென்குரல்.
அவன் திரும்பிப் பார்க்கவும், அவள் நின்றாள், ஒளியில் குளிக்கும் வண்ண மலராக. அவளினும் பகட்டான ஆடைகள் அணிந்திருந்த இன்னொரு பெண்ணும் உடன் நின்றாள்.
"ஆமா. என்ன வேணும்?" என்று அவன், அவள் வனப்பை ரசிக்கும் பார்வையோடு, பேசினான்.
தன்னை அவன் மறக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்டதனால் எழுந்த மகிழ்ச்சி முகத்திலே மலர்ச்சி சேர்க்க, "டாக்சி வேணும். வருமா என்று கேட்க நினைத்தோம்" என்றாள்.
"டி.பன் பண்ணலாம்னு இறங்கினேன்" என்று அவன் பேச்சை இழுக்கவும்,
"பரவால்லே. அவசரம் ஒண்ணுமில்லே. காத்து நிற் கிறோம். நீங்கள் சாப்பிட்டு விட்டு வாருங்கள்" என்று அவள் கூறினாள்.
"இதோ அஞ்சு நிமிஷத்தில் வந்துவிடுகிறேன். காருக்குள் இருங்கள்" என்று சொல்லி விட்டு அவன் ஒட்டலுக்குள் போனான்.
சந்திரன் அவசரப்பட்டாலும், ஒரு வடையும் காப்பியும் என்று "ஸ்லிம்ப்ளா டிபனை முடித்துக் கொண்டாலும், நாகரிகப் பெரும் ஒட்டலில் ஏற்படக்கூடிய காலதாமதமும் காலநஷ்டமும் அவனுக்கும் ஏற்படத்தான் செய்தன. "அஞ்சு நிமிஷத்தில்" வருவதாகச் சொன்னவன் தனது காரை அடைவதற்குக் கால்மணி நேரம் தேவைப்பட்டது.
அதுவரை அவளும் அவளது தோழியும் வெளியேதான் காத்து நின்றார்கள். ரஸ்தாவைப் பார்த்தபடி, போகிறவர் வருகிறவர்களைப் பார்த்தபடி, வழியோடு போவோருக்கு விழிவிருந்து ஆகும்படி!
"அடாடா, வெளியேதான் நின்றீர்களா? வண்டிக்குள் உட்கார்ந்திருக்கக்கூடாது?" என்று அவன் பரிவுடன் பேசினான்.
"அதனாலென்ன" என்றாள் அவள்.
"எங்கே போகணும்?" என்று கேட்ட சந்திரன், தனது இடத்தில் அமர்ந்தபடி, பின் ஸிட்டில் வசதியாக உட்கார்ந்து கொண்ட பெண்களைப் பார்த்தான்.
அவள்தான் பதில் சொன்னாள். "படம் பார்க்கப் போகலா மின்னு கிளம்பினோம்" என்று. ஒரு தியேட்டர் பெயரையும் சொன்னாள்.
சந்திரன் தனது தொழிலே கவனமாக இருந்தபோதிலும், இரண்டு பெண்களின் பேச்சையும் கிரகிக்கத் தவறவில்லை. அவர்கள் சினிமா பற்றி, சில நட்சத்திரங்களைப்-பற்றி, ஏதேதோ நாடகங்கள் பற்றி எல்லாம் பேசிக்கொண்டிருந்தார்கள். அவன் உள்ளத்தில் நினைவாய் நீந்திக்கொண்டிருந்த பெண்ணின் பெயர் இந்திரா என்றும், அவள் தோழி ராதா என்றும் பரஸ்பரம் குறிப் பிட்டுப் பேசிக் கொண்டதிலிருந்து அவனுக்குத் தெளிவாயிற்று.
இவ்வளவு அறிமுகத்தோடு இரண்டாவது சந்திப்பு முடிந்தது. அவர்கள் குறிப்பிட்ட தியேட்டர் முன்பு இருவரையும் இறக்கி விட்ட பிறகு, சந்திரன் டாக்சி வேறு சவாரியைத் தேடி ஓடியது.
பளிச்சென ஒளிவீசி மறையும் திடீர் வெளிச்சம்போல் ஒரு சமயம் அவள் அவன் பார்வையில் பட நேரிட்டது.
கடைவீதி ஒன்றின் வழியே அவனுடைய டாக்சி ஓடிக்கொண்டிருந்தது, யாரையோ ஏற்றியபடிதான்.
இரவு பரப்பிய இருட்டு வலையைக் குத்திக் கிழிக்கும் ஒளிக்கற்றைகளை வாரி வீசும் விளக்குகள் எங்கெங்கும் பிரகாசித்துக் கொண்டிருந்தன.
கடைகளின் நடுவே ஒரு சிறு "டீ ஷாப்” குறுகிய இடத்தை யும், அங்கு இருந்தவர்களையும் பளிரென எடுத்துக் காட்டும் படி பேரொளி சிந்தியவாறு தொங்கியது மிகவும் பிரகாசமான ஒற்றை விளக்கு. அதன் கீழே ஒளி வெள்ளத்தில் உவகை காணும் மோகினி போல ஒரு பெண். நீலப் பாவாடையும் தீ நிறத் தாவணியும், கூந்தலில் வெண்பூக்களுமாய் நின்றாள். ஒரு கையில் டீ கிளாஸ்.
சந்திரன் பார்வை அவள் மீது படிந்தது. புரண்டது. மறுபடியும் அச் சிங்காரச் சிலைமீது ஒடி நிலைத்தது.
அவளேதான்…. இந்திரா.
கடை முகப்பில், பேரொளியின் கீழ், தெருவைப் பார்த்தபடி நின்ற பகட்டுக்காரியின் கண்களும் அவனைக் கவனித்தன. மோகனமான முறுவல் பூத்தது அவள் ஒளி முகத்தில்.
அந்தச் சூழ்நிலையில், அங்கு பரவிய ஒளிப் பிரவாகத்தில், அவள் மிகவும் எடுப்பாக விளங்கினாலும், அந்த இடத்தில் காணப்படவேண்டிய எழில் உருவம் அல்ல அது - இனிய பெண் ஒருத்திக்கு ஏற்ற இடமில்லை அது - என்றே சந்திரன் கருதினான்.
ஒடும் காரில் இருந்து ஒரே பார்வையில அவளைப் படம் பிடித்து மகிழ வாய்ப்பு கிட்டிய போதிலும் அவன் உள்ளத்தில் மகிழ்ச்சி நிறையவில்லை. சஞ்சலம்தான் குடி புகுந்தது.
- இவள் யாரோ? இவள் ஏன் இவ்விதம் கடைத் தெருவில், சாதாரண டீக்கடையில், மத்தியில் நின்றபடி டீ குடிக்க வேண்டும்? தனது கவர்ச்சித் தன்மையில் தானே பெருமைப் பட்டவளாய், தனது அழகை விளம்பரம் செய்வதுபோல. ஜவுளிக் கடை பொம்மை மாதிரி.
- முதல் தடவைதான் அவள் சோகமயமான மலர்போல் தோற்றம் காட்டினாள். மறுமுறை அப்படி இல்லை. பகட்டான ஆடை அணிந்திருந்தாலும் பண்பு நிறைந்தவள் போல் தான் தோன்றினாள். ஆனால், இப்பொழுதோ?. பாவாடை தாவணி அவளுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது. வயசைக் குறைவாகவும் காட்டுகிறது. இன்று டீக்கடையில் அவளோடு வேறு பெண் எவளும் வந்திருக்கதாகத் தெரியவில்லை….
யார் எனத் தெரியாத ஒரு பெண்ணைப்பற்றிச் சந்திரன் அதிகம் அதிகமாக சிந்தித்துக் கொண்டு தான் இருந்தான்.
அவளைப் பற்றிய அவனது எண்ணமே வலிமை மிக்க மந்திரமாகி அவளை அவன் முன்னால் இழுத்து வரும் சக்தி பெற்று விட்டதோ என்னவோ!
இந்திரா அவன் பார்வையில் அடிக்கடி தென்படலானாள். எங்கெங்கோ. அவன் எதிர்பாராத இடங்களில் எல்லாம். தனியாகவோ, வயது அதிகமான ஒரு அம்மாளோடு அல்லது இரண்டு மூன்று பெண்களுடனோ, பஸ் நிற்குமிடத்தில், பார்க்கில், ஒட்டலில், சினிமாத் தியேட்டரில். முன்பு அவளை எங்கெங்கு காண முடியும் என்று அவன் எண்ணினானோ, எங்கெங்கு எல்லாம் அவளைத் தேடினானோ. அங்கெல்லாம் இப்போது அவள் தென்படுவது சகஜமாயிற்று. ஆனால் “வேளை கெட்ட வேளைகளில் அவள் காட்சி தந்தாள்.
ஒர் இரவில், "மனசு சரியாக இல்லை" என்ற காரணத்துக்காக - எல்லோரும் ரொம்ப அருமையான படம் என்று பாராட்டிப் பேசி, அவன் அவசியம் பார்க்க வேண்டும் என்று சிபாரிசு செய்ததனாலும் - சந்திரன் ஒரு படத்துக்குப் போயிருந்தான், ஒன்பதரை மணிக் காட்சிக்கு. அப்போதுதான் அவனுக்கு நேரம் கிடைத்தது.
அந்தப் படத்தைப் பார்க்க, அதே காட்சிக்கு, ஜோடிகள் பலர் வந்தார்கள். தனித்தனியாகவும், இரண்டு மூன்று பேராகவும், பெண்கள் அதிகமாகவே வந்தார்கள்.
பெண்கள் மாட்டினி அல்லது மாலைக் காட்சிக்கு வந்து போனால் என்ன? இரவுக் காட்சிக்கு வருவானேன்? படம் முடிந்து, இரவு ஒரு மணி ஒன்றரை மணிக்கு வீட்டுக்கு நடந்து போவது அசெளகரியமாகவும் பயமாகவும் இருக்குமே!" என்று சந்திரன் எண்ணினான்.
அதே வேளையில், அவனுக்கு முன்னே, அவன் பார்வையை உறுத்தும் விதத்தில், ரயில் வண்டித் தொடர் மாதிரி ஒருவர் பின் ஒருவராய் ஐந்து பெண்கள் வந்தார்கள். கண்ணுக்கு விருந்தாகும் வண்ண வண்ண ஆடைகளுடன், பகட்டும் பளபளப்புமாக, ஒவ்வொருத்தியும் ஒவ்வொரு ரகம், கதம்பத்தின் தனித்தனி மலர் வகை மாதிரி. அவ்வரிசையில் கடைசியாக அவள் வந்தாள். இந்திராதான் வந்தாள்.
”அட, இவள்கூட இந்தக் காட்சிக்குத்தானா வருகிறாள்?" என்று அதிசயித்தவாறு அவளை நோக்கிய சந்திரனின் கண்களை அவளுடைய மை பூசிய கருவிழிகள் தொட்டன. அவள் சிரித்தாள். அவனோடு பேச விரும்புகிறவள்போல - பேசி விடுவாள் போல - பார்த்தபடியே நடந்தாள். "கூட வருகிற பெண்கள் இல்லாவிட்டால் அவள் நின்று பேசுவாள்" என்றே அவனுக்குப் பட்டது.
இன்னொரு நாள், நகரின் ஒரு ஒதுக்குப் புறத்தில், ஜன நெருக்கம் மிகுந்த ஒட்டல் ஒன்றில் காப்பி சாப்பிட்டு விட்டு சந்திரன் வெளியே வந்துகொண்டிருந்த போது, அவள் எதிரே வந்தாள். வயதும் கனமும் அதிகமான அம்மாள் ஒருத்தியுடன். இப்போது இந்திரா, கவர்ச்சி மிகுந்த நைலான் ஸாரி கட்டியிருந் தாள. அவனைக் கண்டதும் இயல்பாகவே அவள் முகம் மலர்ச்சி காட்டியது. உதடுகள் முறுவலில் நெளிந்தன. கண்களில் ஒளி சுடரிட்டது.
அவளோடு பேச வேண்டும் என்ற நினைப்பு அவனுள் ஆசையாய் கனல, அவன் "என்ன, செளக்கியமா?" என்று கேட்டு வைத்தான்.
அவள் "ஊம்" என இழைய விட்ட குரலில் தேன் சொட்டியது.
அதற்கு மேல் பேச முடியவில்லை. அவள் பின்னால் வந்த பெரிய அம்மாள் அவளை முன்னே தள்ள, அவளைச் சுற்றிலும் மற்றவர் நெருக்க, நின்று பேசுவதற்கு, பெரிய ஒட்டலின் சிறிய வாசல் சரியான இடம் ஆகுமா என்ன?
அன்று முதல் அவளது இழையும் குரலும் சுடரொளிப் பார்வையும் அவன் உள்ளத்தில் நீங்காத நினைவுகள் ஆகிவிட்டன. இந்திரா யார்? அவள் வீடு எங்கே? அவளைப் பார்த்தால் உல்லாசமாக வாழ்கிறவள் மாதிரியும் தெரிகிறது. தவிர்க்க முடியாத ஏதோ கவலையால் - வேதனையால் - வாடுகிறவள் போலவும் தோன்றுகிறது. இந்தவிதமாக வீண் எண்ணங்களை அவன் மனம் வளர்த்து வந்தது.
இந்திரா என்கிற பெண்ணின் மீது - அவனுக்குச் சிறிதே அறிமுகம் ஆகியிருந்த, நன்கு பழக்கம் ஆகியிராத எவளோ ஒருத்தி மீது - சந்திரனுக்குக் கோபமும் கசப்பும் உண்டாவதற்கு ஒரு சந்தர்ப்பம் உதவியது.
அப்பொழுது சாயங்காலம் நாலரை மணி இருக்கலாம். சந்திரன் சிலரை ஒரு இடத்தில் கொண்டு சேர்த்து விட்டு, வெறும் வண்டியை ஒட்டிச் சென்றான். ஒரு வீட்டிலிருந்து சிலர் வெளியே வந்துகொண்டிருந்தார்கள். இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும். அவர்கள் கலகலவெனச் சிரித்துப் பேசியவாறு தெருவில் இறங்கும்போதுதான் அவன் பார்வை அவர்களைக் கவ்வியது. அவர்களில் ஒருத்தி இந்திரா. அவளது சிரிப்பும் முகமலர்ச்சியும்!
சந்திரன் இதயத்தில் ஏதோ சுருக்கெனத் தைத்தது. ஆழமாகச் சதைக்குள் கூரிய முள் ஏறிவிட்டது போல. "இந்தக் காலத்தில் யாரையும் நம்ப முடியாது. நாகரிகத்தின் பேரால் என்னென் னவோ நடக்குது. பெரிய ஸிட்டியில் கேட்கவே வேண்டிய தில்லை" என்று அவன் மனம் பேசியது. இவளும் இப்படிப் பட்டவள்தானா? சாதுக் குழந்தை மாதிரி தோன்றினாளே!.... அவன் மனம் ஏசுவதில் இன்பம் கண்டது. வேதனை குடைந்து கொண்டே இருந்தது. வெகு நேரம் வரை. இரவில்கூட. தூக்கம் வரவே மறுத்தது.
அவள் நல்லவளாக இருப்பாள் என்று நான் நினைத்தேன். ஏமாற்றுக்காரி. அவள் அப்படி நினைக்க வேண்டும் என்று நடந்து கொண்டாளா? நடித்தாளா? இல்லையே. பின்னே, அவள் ஏமாற்றினாள் என்று எப்படிச் சொல்லலாம்?. யாரோடு அவள் எப்படிப் பழகினால் எனக்கு என்ன? ஏன் இந்த மனக் கஷ்டம்?
குழம்பி அலைமோதிய அவன் உள்ளத்திலே இந்த எண்ணம் எழவும், அவனுக்கு உண்மை உறுத்தியது. இந்திரா மீது அவனுக்கு விசேஷமான ஆசை. காதல்? ஆமாம். அதேதான். அதனால்தான் அவளைப் பற்றியே அவன் அதிகம் எண்ணி வந்தான். அந்நினைவுகள் அவனுக்கு இனிமையாயின.
அதனாலேயே அவன் அவளை அடிக்கடி காணவேண்டும் எனத் தவித்தான். காண நேர்ந்தபோது மகிழ்ச்சியும், காண முடியாதிருந்த காலங்களில் ஏக்கமும் வருத்தமும் அனுபவித் தான். அவளோடுபேசிப் பழகி, இன்பமாகப் பொழுது போக்க வேண்டும் என்றும், அவளை மணந்து கொண்டு எதிர் காலத்தை ஆனந்த மயமானதாக மாற்ற வேண்டும் என்றும் ஆசை வளர்ந்து, கனவுகள் கண்டு, கோட்டை கட்டுகிற அளவுக்க அவனுடைய காதல் முற்றிவிட வில்லை என்பது உண்மைதான். இப்பொழுதுதான் துளிர் விட்டுச் சிறு கொடி வீசி ஆடிக் கொண்டிருந்தது. நன்கு பற்றிப் படர்ந்து பசுமையாய்த் தழைத்து, அற்புதமான மலர்கள் பூத்துக் குலுங்கி, பலன் தருவதற்குக் காலம் துணை புரிய வேண்டும். அதற்குள் சந்தேகப் பூச்சி குருத்தை அரிக்கத் தொடங்கி விட்டது.
இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்த அருமையான சந்திப்பு நிகழ்ந்தது.
டாக்சி ஸ்டாண்டில் வண்டி காத்து நிற்கையில் அவள் வந்து சேர்ந்தாள். அவன் வண்டி மட்டுமே நின்றது. மணி என்ன, பன்னிரண்டு அல்லது பன்னிரண்டரை இருக்கலாம். நல்ல வெயில். வழக்கம்போல், "டாக்சி, வாடகைக்கு வருமா?" என்று கேட்டபடிதான் அவள் வந்தாள். வாடிவதங்கிய புஷ்பம்போல. அலைந்த களைப்பும் இயல்பான சோர்வும் முகத்தில் குடியிருக்க, அவளே சோகசித்திரமாகத்தான் காட்சி தந்தாள் இப்போது. அவளைக் கண்டதும், "ஓ, நீங்கள்தானா?" என்று கேட்டு, புன்னகை புரிந்தாள்.
”என்ன செளக்கியமெல்லாம் எப்படி?" என்று அவன் கேட்டான்.
அவள் காரில் ஏறி உட்கார்ந்தாள். “செளக்கியத்துக்கு என்ன?" என்று இழுத்தாள்.
”இந்த வெயிலில் இப்படீ எங்கே?" என்றான் அவன்.
கார் கிளம்பியது.
"நாங்கள் ஒரு நாடகம் போடப் போறோம். நானும் இன்னும் சில பேரும். அதுக்கு டிக்கட் விற்றுவிட்டு வரலாம்னு புறப் பட்டேன். அவள் நாடகம் பற்றியும், ஒத்திகைகள் பற்றியும் பேசினாள். "அன்றைக்கு - முந்தா நாளோ - நீங்கள் காரில் போய்க்கொண்டிருந்தபோது கவனித்திருப்பீர்களே? ஒரு வீட்டு முன்னே நாங்கள் நின்று பேசிக்கொண்டிருந்தோமே. அங்கே தான் தினம் நாடக ஒத்திகை நடக்கிறது….
"ஒகோ" என்றது அவன் மனம். மேக மறைப்பு விலகி மீண்டும் ஒளி பிரகாசிப்பது போலிருந்தது. சந்தேகம் மறைந்து ஓடியது.
ஒட்டல் ஒன்று நெருங்குவது பார்வையில் பட்டது.
அவன் தயங்கி, சிந்தித்து, துணிச்சல் பெற்று, "இந்திரா!" என்று அழைத்தான்.
"ஒ!" என்றவள், "என் பேர் கூடத் தெரிந்து விட்டதா உங்களுக்கு?" என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்.
"நீயும் உன் சிநேகிதியும் சினிமாவுக்கு இந்த வண்டியில் போனிர்களே, அன்று பேச்சோடு பேச்சாக...
" சரிதான்!” என்று சொன்னாள் அவள்.
"இந்திரா, காபி சாப்பிடலாமே?" என்று அவன் கூறவும், அவள் தலையை ஆட்டிக்கொண்டே இப்ப எதுக்குக் காப்பி? என மறுத்தாள்.
"காபி வேண்டாமென்றால், கூல் ட்ரிங் ஏதாவது சாப்பிடு. நீ மிகவும் அலுத்துப் போயிருக்கிறாய்."
அவள் பிகு செய்யவில்லை. அவன் அதிகம் வற்புறுத்தி உபசரிக்க வேண்டும் என்று ஆசைப்படவுமில்லை. அவளுக்கும் ஏதேனும் பருக வேண்டியது அவசியம் என்றே பட்டது.
இருவரும் ஒட்டலுக்குள் போய் காப்பி சாப்பிட்டு விட்டு வந்து காரில் ஏறிக்கொண்டதும், தங்களுக்குள் நட்பு நெருங்கி வந்துள்ளது போன்ற உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. அவள் முகத்திலும் ஒரு தெளிவு பிறந்திருந்தது.
அவரவர் நினைவாகவே இருந்தவர்களின் மெளனத்தை அவள் பேச்சுதான் கலைத்தது. நீங்கள் ஒரு டிக்கட் வாங்கிக் கொள்கிறீர்களா?" என்று இந்திரா கேட்டாள்.
"ஊம்ம்" என்றான் அவன்.
"ஐந்து ரூபாய் டிக்கட் தரட்டுமா? அவள் அவசரம் அவ னுக்கு சிரிப்பு தந்தது. "ஊம் என்றால், உடனேதானா? இன்னும் இரண்டு நாள் போகட்டும், பார்க்கலாம்" என்றான்.
"உங்களை எங்கே பார்ப்பது? இப்படி ரோடில் பார்த்தால் தானே உண்டு?”
அவன் உறுதியாக அறிவித்தான்: ""இப்போ என்னிடம் பணம் இல்லை. இன்று என்ன கிழமை? செவ்வாயா? சரி. வெள்ளிக்கிழமை நிச்சயமாக வாங்கிக் கொள்கிறேன். இன்று பார்த்த டாக்சி ஸ்டாண்டில், இதே நேரத்துக்கே, என்னைப் பார்க்கலாம். அல்லது, சாயங்காலம் வேண்டுமானாலும் வரலாம்."
அவளும் சரி என இசைந்தாள்.
ஒரு இடம் வந்ததும், "நான் இங்கேயே இறங்கி விடுகிறேன். கொஞ்சம் நிறுத்துங்கள்" என்று சொல்லி, நிறுத்தி, இறங்கிக் கொண்டாள்.
"வீடு வரை வேண்டாமா?" என்று விசாரித்தான் சந்திரன். அவள் வீட்டைத் தெரிந்து கொள்ளலாமே என்ற ஆசை யுடன்தான்.
இங்கே ஒரு ஃபிரண்டைச் சந்திக்கணும்" என்று கூறிய இந்திரா, "வெள்ளிக்கிழமை ஞாபகம் இருக்கட்டும். அவசியம் டிக்கட் வாங்கிக் கொள்ளணும்" என்றாள்.
அவள் தலையை ஆட்டி ஆட்டிப் பேசியது மிகவும் வசீகரமாக இருந்தது. அவளது கரிய விழிகளின் சுழற்சி - செவ்விய இதழ்களின் சுழிப்பு - ஆஹ், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாமே!
ஆனால், கடமையும் கால உணர்வும் இருவரையும் பிரித்தன.
அதுமுதல் “வெள்ளிக்கிழமை சந்திரன் நினைவில் சிவப்பு எழுத்து நாளாய்ப் பளிச்சிடலாயிற்று. அன்று இந்திராவைச் சந்திக்கலாம். அவளை ஓட்டலுக்கு அழைத்துப் போக வேண்டும். முடிந்தால் சினிமாவுக்கும் போகலாம்!
அவன் மனம் ஆசைச் சிறகு விரித்து, கற்பனை வெளியிலே சுகமாக மிதந்தது. இந்திராவோடு எப்படி எப்படிப் பேச வேண்டும், எவ்வாறெல்லாம் பழகலாம் என்று எண்ணுவதி லேயே பொழுது இனிமையாக ஓடியது.
இன்று இன்ன கிழமை, வெள்ளிக்கிழமைக்கு இன்னும் இத்தனை நாள் - ஒவ்வொரு நாளும் இப்படி அநேக தடவைகள் அவன் கணக்கிட்டு வந்தான்.
வியாழனும் பிறந்தது. வளர்ந்து ஒடிக்கொண்டிருந்தது.
வியாழக்கிழமை மாலை ஆறுமணி.
இரண்டு பேர் சந்திரனின் டாக்சியில் ஏறினார்கள். உல்லாச புருஷர்கள். அவர்களது உடையும், நடையும், வாசனையும், பேச்சும் இதை விளம்பரப்படுத்திக்கொண்டிருந்தன.
"நேற்று அந்தப் பொண்ணு வீட்டுக்குப் போயிருந்தேன். உங்களைப் பற்றி விசாரிச்சுது. எங்கே அவரு வரவே காணோமின்னு கேட்டுது" என்று ஒருவன் - ஒல்லியான ஆசாமி - சொன்னான்.
பருமனும் பணமெருகும் படாடோபமும் மிகுதியாகப் பெற்றிருந்தவன், மகிழ்ச்சி பல்லில் படர, அப்படியா? இந்து இப்போ எப்படியிருக்குது?" என்றான்.
அதுக்கு என்ன? லட்டு இல்லே!"
"ஊங் ஊம்ங்" என்று கனைத்தான் தடியன்.
"அது நாடகங்களிலே எல்லாம் நடிக்குது. இந்த மாதக் கடைசியில் கூட ஏதோ டிராமா இருக்குதாம். நீங்க அவசியம் பார்க்கணும்னு ஆசைப்படுது."
நல்ல புள்ளெதான்!” என்று தடித்த உதடுகளை நாக்கினால் தடவிக் கொண்டான் பெரியவன்.
ஒல்லி நபர் "இப்படி இப்படிப் போ" என்று வழி கூறிக் கொண்டும், சுவையாகப் பேசியும் பசையுள்ள நண்பனை உற்சாகப்படுத்தி வந்தான்.
ஒரு இடத்தைக் கடந்தபோது, "இந்திரா இரண்டு தடவை களும் இங்கேதான் இறங்கிக் கொண்டாள்" என்று நினைவு படுத்தியது சந்திரன் மனம்.
அருகே உள்ள சிறு தெருவில் சென்று, பக்கத்துச் சந்தில் புகுந்தது டாக்சி.
"நிறுத்து, நிறுத்து! இந்த வீடு தான்."
"சடக்கென வண்டியை நிறுத்தினான் சந்திரன்.
இரண்டு பேரும் கீழே இறங்கினார்கள். ஒல்லி நபர் மீட்ட ரைப் பார்த்து, பணத்தைக் கொடுத்து விட்டுத் திரும்பினான்.
"வாங்க, வாங்க!"
உற்சாகம் குமிழியிட மென்குரல் அழைப்பு சந்திரனைச் சுண்டி இழுத்தது. அவள்! இந்திரா!
அவளும் அவனைக் கவனித்து விட்டாள். ஆயினும் அவனைப் பாராதவள்போல், தன்னை நெருங்கிக் கொண்டிருந்த பணக்கார உல்லாசியை மகிழ்ச்சி பொங்க வரவேற்பதில் ஆர்வம் காட்டினாள்.
அந்தத் தடி ஆசாமி அவள் இடுப்பில் கை சேர்த்து இழுத்தவாறு "இந்து, செளக்கியமா இருக்கியா?" என்று பல்லெல்லாம் தெரிய விசாரித்தான்.
இந்திரா வந்தவனின் முகத்தையே பார்த்தபடி, மோகன முறுவல் பூத்தாள். "ஊம்" என்று குரலை இழைய விட்டாள்.
இழையும் குரல் சந்திரனின் உள்ளத்தில் இடர் செய்தது.
தடாரென அடித்துக் கொண்டது டாக்சியின் கதவு. கோபமாக உறுமி, ஆங்காரமாய்க் கனைத்தவாறு, வேகமாய்க் சிளம்பி ஒடியது வண்டி.
சந்திரன் மூஞ்சியில், இதயத்தில், ஆசையில், கனவுகளில், யாரோ பேயறை அறைந்து விட்டது போல - எதுவோ இடிந்து அவன் மீது விழுவதுபோல் - அவன் நின்ற இடம் சரிந்து அவனோடு அதல பாதாளம் நோக்கி இறங்குவதுபோல. எப்படி எப்படியோ வந்தது அவனுக்கு. அவனது இனிய நினைவுகள், காதல் கனவுகள், ஆசைக் கோட்டைகள், ஒளி நிறைந்த எதிர்காலம் பற்றிய எண்ணங்கள் எல்லாம் நிலை குலைந்து தள்ளாடி விழுந்து, அவனுடைய டாக்சிக் சக்கரங்களில் அடியிலே சிக்கிச் சிதைந்து கொண்டிருந்தன.
("சுதேசமித்திரன்"-1965)
---------------
37. ஆற்றங்கரை மோகினி
”குகுகூங்" - ஏதோ ஒரு பறவையின் இன்னொலிபோல் சிதறியது சிறு சிரிப்பு.
அந்தச் சூழ்நிலையில் அப்படி ஒரு சிரிப்பை மகாதேவன் எதிர்பார்க்கவில்லை. ஆகவே, திடுக்கிட்டுத் திரும்பி நோக்கினான். அவனுக்குப் பின்னால் சற்று தள்ளி, ஒரு மரத்தடியில் ஒரு பெண் நின்றதைக் கண்டு அவன் திகைப்பே கொண்டான்.
தனது எண்ணம் உடனடியாக இவ்வாறு பலித்திட முடியுமா? அல்லது, கனவின் உருவெளித் தோற்றம்தானா அது? அவன் விழித்துக்கொண்டே கனவு காண்கிறானோ? அன்றி. சித்தம் சிருஷ்டித்து விளையாடுகிற பிரமைதானா?
கண்களை விரலால் கசக்கி விட்டு, அவன் வெறித்து நோக்கி னான். அவன் கண்டது வெறும் பிரமையோ, பகற்கனவோ அல்ல என்ற உறுதி அவனுக்கு ஏற்பட்டது.
அவள் அங்கேயே நின்று கொண்டிருந்தாள், உயிர் பெற்ற சிலைபோல. "நிலவு செய்யும் முகமும், காண்போர் நினை வழிக்கும் விழி"களும் பெற்ற இந்த அழகி இங்கே திடுமென எப்படித்தான் வந்தாளோ என்ற எண்ணம் அவனுக்கு உண்டாயிற்று.
எழில் கொலுவிருக்கும் அருமையான இடம். குளுமை நிறைந்த சூழல். இந்த அற்புதமான இடத்தில் கண்ணுக்கு விருந்து நிறைய உண்டு. ஆனாலும், ஒரு குறை. அழகுப் பாவை ஒருத்தி அருகே இல்லையே. அது பெரிய குறைதானே? களி துலங்க நகைத்து, குழறு மொழி பேசி, பொழுதைப் பொன்னாக்கத் துணை புரியும் அழகி ஒருத்தி உடன் இருந்துவிட்டால், இனிமை அதிகரிக்கும்மே என்று அவன் எண்ணினான்.
எண்ணம் பிறந்து இரண்டொரு நிமிஷங்கள் கூடப் பறந்திரா. அவன் எண்ணத்தின் விளைவே போலும் அவன் பின்னே சிரிப்பொலி சிந்தி நின்றாளே பெண் ஒருத்தி!
இந்தக் காலத்திலும் அதிசயங்கள் நிகழத்தான் செய்கின்றன! மகாதேவன்-மனம் தந்த குறிப்பு இது.
பிற்பகல் நேரம். மணி என்ன, ஒன்றரை அல்லது இரண்டு இருக்கும். வெயில் கடுமையாகக் காய்ந்தது. ஆனால், அதன் உக்கிரம் அந்த இடத்தில் எடுபடவில்லை. பார்வைக்கும் உள்ளத்துக்கும் இதம் தரும் குளுமையான பிரதேசம் அது. காவிரி ஆற்றின் நடுவில் அமைந்திருந்தது.
"ஆகா, இனிமை, அழகு அழகு!" என்று சொக்கிச் சுவைத்தது அவனது ரசிக உள்ளம்.
ஒடும் நீரின் விம்மல்களும் அசைவுகளும் வெயிலில் தனிப் பளபளப்பு காட்டி நடனமிடுவதாகத் தோன்றியது. தூரத்தில் மேலேறி நெளியும் புகைச் சுருள்கள்போலும், அருவங்களின் ஆனந்தக் குதிப்பே போலும், ஆடிக்கொண்டிருக்கும் கானல் தோற்றங்கள். அவன் இருந்த இடத்தில் ஊர்ந்த குளுமையான காற்றின் அசைவுக்கு ஏற்ப மரங்களின் இலைக் கூட்டங்கள் சித்திரித்த நிழற்கோலம்…
இவ்வாறு எத்தனையோ இனிமைகளைக் கண்டு வியந்து கொண்டிருநத மகாதேவன் உள்ளத்தில் இயல்பாக அந்த ஆசை அரும்பியது. "இனிமைக்கு இனிமை சேர்க்க, பக்கத்தில் ஒரு பெண் இருக்கலாம்!" என்று.
அந்த எண்ணம் உண்மையாகவே நிறைவேறி விட்டதே!
அந்திமந்தாரைபோல் பளிரெனத் திகழும் பர்ப்பிள் நிறப் புடவை. வான் நீல வர்ணரவிக்கை. அவள் உடல் வனப்பை எடுத்துக் காட்டும் பொருத்தமான உடைதான். அழகு முகம். அதில், உணர்வின் ஊற்றுக்களாய் குறு குறுத்தன எழில்நிறைந்த கண்கள். சிரிப்பில் நெளியும் சிங்கார உதடுகள்….
அந்தப் பெண்ணின் அழகு வடிவத்தை வியந்து ரசித்துக் கொண்டிருந்தான் அவன்.
அவள் மெது மெதுவாக அசைந்து நகர்ந்து வந்தாள். அவனைப் பார்த்து, “ரொம்பவும் தெரிந்தவள்போல்" சிரித்ததாக அவனுக்குப் பட்டது.
“ரொம்ப நேரமாக இங்கேயே இருக்கிறீர்களா?" என்று திடீரெனக் கேட்டாள் அவள்.
அதிசயமான பெண்தான் இவள் என்றுதான் நினைக்க முடிந்தது அவனால். “ஊம். நான் வந்து ஒரு மணிநேரத்துக்கும் அதிகமாகுது" என்றான்.
“என்னாலே சீக்கிரமா வரமுடியலே. அம்மாடி! இப்பவாவது வர முடிந்ததே!" என்றவள், எதையோ எண்ணி பயப்படு கிறவள்போல் உடலைச் சிலிர்த்துக்கொண்டு, மிரள மிரள விழித்தாள். உடனேயே அர்த்தம் இல்லாமல், அவசியம் இல் லாமல் சிரித்தாள். அவள் சிரிப்பின் கலீரொலி இன்னிசையாய், கவிதைத் துள்ளலாய்ப் பரவசப்படுத்தியது அவனை.
அவள் விடுவிடென்று நடந்தாள். அங்கு ஒரு புறத்தில் படிக்கட்டு நீளமாக வரிசை வரிசையாக அமைந்திருந்தது. அதில் அவள் குதித்துக் குதித்து இறங்கினாள். தண்ணிரில் அடி எடுத்து வைத்ததும் "ஐயோடீ!” என்று கத்தினாள்.
அவன் பயந்து விட்டான். கால் சறுக்கி அவள் விழுந்திருப் பாளோ என்று பதறி ஓடினான்.
அவள் ஜம்மென நின்று கொண்டுதானிருந்தாள். சிரித்தாள். "தண்ணிர் ஜில்னு இருக்குது. ஐஸ் மாதிரி. அது தான்" என்று சொன்னாள்.
"இதுக்குத்தானா?. வெறும் விளையாட்டுப் பிள்ளை" என்று மகாதேவன் நினைத்துக்கொண்டான்.
அவள் கைகளால் தண்ணிரை வாரி வாரிச் சிதறினாள். சிரித்தாள்.
"இவளுக்கு இருபத்துநாலு இருபத்தைந்து வயசு இருக்கும். என்றாலும் இவள் சின்னப் பெண் போல்தான் நடந்து கொள்கிறாள்" என்று அவன் மனம் விமர்சனம் பேசியது.
அவள் நதியையும், சுற்றிலுமுள்ள இனிய காட்சிகளையும் வியப்பினால் விரிந்த கண்களால் பருகி நின்றாள். நீரில் படகு வருவதையும் கண்டாள்.
"ஐ சக்கா படகிலே போனால் ஜோராக இருக்குமே!" என்று உவகையோடு கத்தினாள். “படகிலே போவோமா? நானும் கூடவாறேன். நான் பயப்படம்ாட்டேன். ஆமா. பயப்பட மாட்டேன்" என்று அவனிடம் சொன்னாள்.
அவள் சொல்லையும் செயலையும் சிறு பிள்ளைத் தனம் என்பதா? புதுமைப் பெண்ணின் கள்ளமில்லாச் சுபாவம் எனக் கொள்வதா? அவன் மனசின் சிறு சலனம் இது. தெளிவு பிறக்க வழி தான் இல்லை. இருப்பினும், அனுபவத்தின் புதுமை அவனுக்கும் உற்சாகம் தந்து மகிழ்வித்தது.
இருவரும் படகுத் துறை நோக்கிச் சென்றார்கள். போகிறபோதே அவள் சொன்னாள்: "நம்மை யாரும் அறிமுகம் செய்து வைக்கவில்லை. அறிமுகப்படுத்த யாரும் இல்லவு மில்லை. அதனால், நம்மை நாமே அறிமுகம் செய்து கொள்ளலாமே!"
"ஆல் ரைட்" என்பது தான் அவன் பதில்.
அவளே முந்திக்கொண்டாள். "என்னை ராஜம் என்று அழைப்பார்கள். என் பெயர் ராஜம்மா. அடியே ராஜி, ஏ ராஜாத்தி என்றும் வீட்டில் கூப்பிடுவார்கள்.” இதைச் சொல்லிவிட்டும் அவள் சிரித்தாள்.
இதற்குள் மகாதேவன் புரிந்துகொண்டான். அவள் சிரிப்பில் அர்த்தம் உண்டு என எதிர்பார்க்கக் கூடாது. சிரிப்பதற்கு அவசியம் அல்லது காரணம் எதுவும் இருக்க வேண்டும் என்று அவள் கருதுவது மில்லை. சிரிப்பு அவளுடைய சுபாவங்களில் ஒன்று. அது அவளோடு பிறந்து வளரும் ஒரு வியாதிமாதிரி. இருந்தாலும் என்ன? அவள் சிரிப்பது அழகாக இருந்தது. அவள் சிரிப்பில் உயிரும் உணர்வும் கலந்து இசையாய் பொங்கின. ஓசை நயம் பெற்ற கவிதை போல் ஒலித்த அதைக் கேட்கக் கேட்க இன்னும் கொஞ்சம் கேட்கமாட்டோமா என்ற ஆசையே எழும்.
அவன் தன்னை அறிமுகப் படுத்த வேண்டாமா? "என் பெயர் மகாதேவன். ஊர் சுற்றி அழகான இடங்களைத் தரிசித்து, மகிழ்ச்சி பெற முயலுகிறேன். இது ரொம்ப அழகான இடம் என்று கேள்விப்பட்டு இங்கே வந்தேன்.”
குமிழியிட்டுக் கொப்புளிக்கும் நீரூற்றுப் போல் சிரிப்பு அவள் வாயிலிருந்து பொங்கிப் புரண்டது. “மலை மகாதேவனைத் தேடி வராது; மகாதேவன் தான் மலையைத் தேடிப்போக வேண்டும் என்பார்கள். அழகான இந்த இடம் மகாதேவனைத் தேடி வராது என்பதனால், இந்த மகாதேவன் அழகான இந்த இடத்தைத் தேடி வந்து விட்டார்!"
இதைச் சொல்லிவிட்டு அவள் கைகொட்டி, கலகலவெனச் சிரித்தாள்.
இவள் என்ன இப்படி நடந்து கொள்கிறாள் என்று குறிப்பதுபோல் அவன் அவளை நோக்கினான். விஷ நோக்கு எதுவுமற்ற விஷமக்காரச் சிறுமிபோல்தான் அவள் காணப் பட்டாள். “இதுவும் ஒரு கேரக்டர்" என்று அவன் மதிப் பிட்டான்.
பொதுவாக, பெண்களால் சும்மா வாயை மூடிக்கொண்டு இருக்க முடியாது. ஓயாது சளசளவென்று எதையாவது பேசிக்கொண்டே இருப்பார்கள். பேச வேண்டுமே என்பதற்காக சதா உளறிக் கொட்டுவார்கள். இந்த ராஜத்தின் போக்கும் அப்படிப்பட்டது தான் - இவ்விதமாகவும் எண்ணினான் அவன்.
இரண்டுபேரும் படகில் ஏறினார்கள். பெரிய வட்ட வடிவ மூங்கில் கூடை மாதிரி இருந்தது அந்தப் படகு வயதிலும் உழைப்பிலும் முதிர்ச்சிபெற்ற, வாழ்வினாலும் வறுமையினா லும் கசப்பு வளர்த்து, பேசாத இயந்திரம்போல் ஆகிவிட்ட ஒரு மனிதன்தான் படகோட்டி. அந்தப்படகில் அவ்வேளையில் மகாதேவனும் ராஜம்மாளும்தான் பிரயாணிகள். அவனே இருவருக்கும் உரிய கட்டணத்தைக் கொடுத்தான்.
நீலம் படிந்து, கண்ணாடி மாதிரித் தெளிவாகவுமிருந்த, குளிர்ந்த நீரோட்டத்தைக் கிழித்துக்கொண்டு, இக்கரையிலிருந்து அக்கரை நோக்கிச் சென்றது படகு. வெயிலின் "சூடு தெரியவில்லை. நீரின் குளுமைதான் பட்டது. அவள் தண்ணிரில் கையிட்டு அளைந்து விளையாடினாள். “என்னம்மா ஜில்னு இருக்குது!" என்று சொல்லி, தன் சொல்லின் உண்மையை உணர்த்த விரும்புகிறவள்போல, கையினால் தண்ணிரை அள்ளி அவன் முகத்தில் விசிறி அடித்தாள். தொடர்ந்து சிரிப்பைச் சிந்தினாள்.
அவனுக்குக் கோபம் வந்தது. ஆனாலும் அந்த அழகியிடம் எப்படி எரிந்து விழுவது? யாரோ ஆன ஒரு குறும்புக்காரியிடம் கோபித்து ஏசிப் பேச அவனுக்க மனம் எழவுமில்லை.
சுத்த பைத்தியமாக இருக்கிறியே! இது என்ன விளை யாட்டு?" என்று அவன் சொன்னான். வறண்ட குரலில் தான் சொன்னான்.
ஆயினும், அவள் முகம் கறுத்தது. அவள் முகத்தை "உம்மென்று" வைத்துக் கொண்டாள். "நான் ஒண்ணும் பைத்தியம் இல்லை. ஆமா. பைத்தியமாம்! இவரு கண்டாரு!. வவ்வவ்வே" என்று முனகி பழிப்புக் காட்டினாள்.
அவனுக்கு சிரிப்பு தான் வந்தது. ஆனால், அவள் சிரிப்பு திடீரென்று போன இடம் தெரியாமல் மறைந்து போய் விட்டது. அவள் பேசவுமில்லை.
கரை வந்ததும், அவள் முதலில் குதித்து வேகமாக நடக்கலானாள். “சரியான சின்னப் பிள்ளைதான். செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்ட சிறுபிள்ளை" என்று அவன் எண்ணினான். போனால் போகிறாள்! அவளாக வந்தாள், அவளே போகிறாள். அந்நியளான அவளை அழைக்க அவனுக்கு உரிமை என்ன இருக்கிறது? அவன் அவள் பக்கம் பாராமலே, ஆற்றைப் பார்த்துக் கொண்டு வெறுமனே நின்றான்.
படகு திரும்பிக் கொண்டிருந்தது. பிரயாணிகள் அதிகம் சேரவேண்டும் என்று படகோட்டி காத்திருப்பதில்லை. ஒரு ஆள் ஏறினாலும், ஒரு கரையிலிருந்து மறுகரைக்குப் போவதும், அங்கே இருந்து இங்கே வருவதுமான கடமையை அலுப்புச் சலிப்பு இல்லாமல் செய்யும் இயந்திரமாகி யிருந்தான் அவன்.
அவன் படகு வலித்துச் செல்வதை கவனித்தபடி நின்றான் மகாதேவன்.
திடுதிடுவென ஓடிவந்தாள் ராஜம்மா. “இட்டாசு கைகொட்டி ஓசைப்படுத்தி அவன் கவனத்தை இழுத்தாள். “ஏஹே. பயந்து போனிங்களா?. பயந்தே போனார், டோடோய்!” என்று கூவிக் கூத்தடித்தாள்.
அவள் குதிப்பையும் கும்மாளியையும் காணக்காண அவனுக்கு சிரிப்பு சிரிப்பாய் வந்தது.
அவன் சிரிப்போடு அவள் சிரிப்பும் கலந்து கலீரிட்டது.
"என்ன இங்கேயே நின்னுட்டீங்க? உங்களுக்குப் பசிக்கலே? எனக்குப் பசிக்குதே!" என்றாள் அவள். "நான் எல்லாரையும் விட்டுப் போட்டு ஓடி வந்துட்டேன். அவங்க எல்லாம் நல்லாச் சாப்பிட்டு விட்டு, தூங்கிக்கொண்டிருந்தாங்க. நானும் கண்ணை மூடிக்கிட்டு படுத்திருந்தேனா? ராஜாத்தி தூங்குறான்னு நம்பிவிட்டாங்க. நான் நைஸா எழுந்து வந்து விட்டேன். முழிச்சு, காப்பி சாப்பிடற நேரத்திலே எல்லோரும் என்னைத் தேடுவாங்க, காணோமே. ராஜி எங்கே போயிட்டா? ஏ ராஜம், ஏ ராஜாத்தி என்று கூப்பாடு போட்டுக் குழம்பித் திண்டாடுவாங்க" என்றும் ரசித்து அனுபவித்து, நடிப்பு நயத்தோடு, அவள் விவரித்தாள்.
“யாரு, எங்கே இருக்கிறாங்க?" என்று அவன் கேட்டான். அவள் போதிய அறிவு வளர்ச்சியும் பொறுப்பு உணர்வும் பெற்றிராத சிறுமியாகவே இன்னமும் காட்சி தந்தாள் அவனுக்கு.
“அங்கே இருக்கிறாங்க. அப்பா, அம்மா, மாமா எல்லாரும்" என்று அவள் கைவீசி மறுகரையின் பக்கம் காட்டினாள். அந்தக் கைவீச்சின் எல்லை எவ்வளவோ? அதில் எங்கே இருக் கிறார்களோ அவளைச் சேர்ந்தவர்கள்?
“எனக்குப் பசிக்குதே, அப்புறம் நான் அழுவேன்" என்று பாவத்தோடு பேசினாள் அவள்.
"நல்ல தமாஷ்தான்!" என்று எண்ணினான் அவன். ஒற்றையடித் தடத்தில் நடந்து, ரஸ்தாவை அடைந்து, சிறிது தூரம் சென்றார்கள்.
அங்கு ஒரு சிற்றுார் இருந்தது. காப்பி ஓட்டல் என்ற பெயரில் அங்கே “குடிசைத் தொழில்" நடைபெறுவதும் தெரிந்தது. காப்பி என்ற பெயர் பெற்றிருந்த திரவ பதார்த்தமும் கிடைத்தது. ரவா கேசரியும் வடையும் வாய்க்கு ருசியாக இல்லாவிடினும் வயிற்றுப் பசியைத் தணிக்க உதவின.
இனி என்ன செய்யலாம்? மகாதேவன் உள்ளத்தில் தலையெடுத்திருந்த சிறு உதைப்பு நேரம் ஆகஆக வலுப்பெற்று வளர்ந்தது.
"நாம ரயிலில் பிராயணம் போகலாமா?" என்று அவள் ஆவலோடு விசாரித்தாள்.
அவள் கண்ணுக்கு விருந்தாகும் அழகி தான். விளையாட்டுக் குணம் பெற்றவள். சிறிது நேரம் பேசிப் பொழுது போக்கும் சிநேகிதிபோல் வந்தவள் தொண தொணக்கும் தொல்லையாய் தொந்தரவாய் மாறிக்கொண்டிருந்தாள். இவள் யாரோ? இவளை உதறி எறிவதுதான் எப்படி? அவன் மனம் வலை பின்னிக்கொண்டேயிருந்தது.
"மறுபடியும் ஆற்றின் கரைக்கே போவோம். மாலை நேரம் அருமையாக இருக்கும்" என்று கூறி அவன் நடந்தான்.
மறுப்புரை கூறாது அவளும் பின் தொடர்ந்தாள். அவள் எதையாவது சொல்லிக்கொண்டு சிரித்து விளையாடியும் பொழுது போக்கினாள். அவன் மீது அவளுக்கு எவ்விதமான பற்றுதலோ, திடீர் பாசமோ ஏற்பட்டு விடவில்லை. அவனுக்கும் அவள்பேரில் அன்போ ஆசையோ பிறந்து விடவும் இல்லை. அவனுக்கு அவள் ஒரு புதிராகவும் புதுமையாகவும் தான் தோன்றினாள்.
"என்னால் புரிந்து கொள்ள முடியாத ஏதோ ஒன்று இருக்கிறது. இவளுள் மறைந்திருக்கும் எதையோ பற்றியது தான். இவள் நல்ல பெண்தான். சுபாவமாகப் பழகுவது போல்தான் தெரிகிறது. இருந்தாலும், இவள் பார்வையில், பேச்சில், செயல்களில் கரந்துறையும் எதுவோ ஒன்று இவளிடம் என்னவோ கோளாறு அல்லது குறைபாடு இருப்பதாகச் சொல்லாமல் சொல்லுகிறது. அதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லையே" என்று அவன் மனம் வேதனைப்பட்டது.
"அம்மாடி, கால் ரொம்ப வலிக்குதே!" என்று மணலில் தொப்பென விழுந்தாள் அவள். தானாகவே சிரிப்பு வெடித்தது அவளிடமிருந்து.
“அதென்ன சிரிப்போ! பேய்ச் சிரிப்பு!" என்று அலுத்துக் கொண்டது அவன் மனம்.
உடன் ஒரு எண்ணமும் அலை யிட்டது: இவள் பேயாக இருப்பாளோ? மோகினிப் பேயாக? அழகான பெண் வடிவத்தில் பேய் நீர் நிலைகள் பக்கத்தில் நடமாடும், ஆண்களைப் பிடித்துக்கொள்ளும், கூடவே இருந்து கொன்றுவிடும் என்று சொல்வார்களே. அதுமாதிரி ஏதாவது.
இந்த எண்ணமே முட்டாள் தனமாகவும் பைத்தியக்காரத் தனமாகவும் தோன்றியது அவன் அறிவுக்கு.
"பேசாமல் உட்கார்ந்திருக்கிறீர்களே? கதை ஏதாவது சொல்லுங்களேன்" என்று தூண்டினாள் அவள்.
"கதையா? எனக்குக் கதை சொல்லத் தெரியாதே" என்று கூறினான் அவன்.
"அப்போ நான் சொல்லட்டுமா?" என்று எழுந்து உட்கார்ந்தாள் அவள்.
“உம்" என்று தலையசைத்தான் மகாதேவன்.
“ஒரு ஊரில் ஒரு ராஜா மகள் இருந்தாள்" என்று கதை சொல்லலானாள் அவள். “அவள் அழகுன்னா அழகு சொல்ல முடியாத அழகு. பூரணச் சந்திரன்மாதிரி இருந்த அவளுக்கு சூரியன்மாதிரி மாப்பிள்ளை வரவேண்டும் என்று ராஜாவும் ராணியும் ஆசைப்பட்டாங்க. பல தேசத்து ராஜகுமாரர்களின் படங்களையும் வரவழைத்து மகளிடம் காட்டினார்கள். அந்த ராஜகுமாரிக்கு எந்த இளவரசனையுமே பிடிக்கவில்லை. இவன் மூஞ்சி பனங்காய் மாதிரி இருக்குது, அவன் மூக்கு கொழுக்கட்டை போலிருக்கு, இவன் புறா முட்டைக் கண்ணன் என்று ஒவ்வொருவனையும் பழித்துப் பேசினாள். அதனாலே எல்லா தேசத்து ராஜாக்களுக்கும் இந்த ராஜா பேரிலே கோபம் ஏற்பட்டது. பகை உண்டாச்சு. அவனை ஒழிக்கணுமின்னு திட்டம் போட்டாங்க. இந்த ராஜா என்ன செய்வாரு பாவம். அவருக்கும் மகள் மேலே வெறுப்பு உண்டாயிட்டுது. எவன் கிட்டேயாவது மகளை ஒப்புவித்துவிட வேண்டியதுதான்னு முடிவு செய்து, ஒரு மாப்பிள்ளையைத் தேடிப்பிடிச்சாரு. அவன் ஒரு குட்டி தேசத்து நெட்டை ராஜா. மகள் எவ்வளவு அழுதும் பிரயோசனப்படலே. அந்த ராஜாவுக்குக் கல்யாணம் செய்து கொடுத்து; அவனோடு மகளை அனுப்பினாரு. மாப்பிள்ளை ராஜா புது மனைவி பக்கத்திலே ஆசையாக வந்தான். என் நிலாவே, பெளர்ணமியே என்றான். அட அமாவாசையே ஆசையைப் பாரு ஆசையை என்று இளவரசி சிரித்தாள். அவன் அவளைப் பிடிக்க வந்தும் ராஜா மகள் என்ன செய்தாள்? ஏய், தூரப் போ என்று கத்தி, அவன் கழுத்தைப் புடிச்சு அமுக்க ஆரம்பித்தாள். இப்படித்தான் அமுக்கினாள்…."
ராஜம்மா, மகாதேவன் எதிர் பாராத சமயத்தில் அவன் கழுத்தைப் பிடித்து, "ஏய், என்னைத் தொடவா வாறே? ஒடிப்போ.உம்…, போ…. போய்விடு" என்று கோரமாகக் கத்திக் கொண்டு, அமுக்க முயன்றாள்.
ஒரு கணம் அவன் திணிறப் போனான்; எனினும், திமிறிக் கொண்டு, அவள் கைகளில் வேகமாக, பலமாக, அறைமேல் அறை கொடுத்தான். அவள் வேதனை தாங்காது கைகளைக் கீழே தொங்க விட்டாள்.
அவள் முகம் பயங்கரமாகக் காட்சி தந்தது. அவள் கண்கள் வெறி சுடரிட உறுத்து நோக்கின. அவள் அவ்வேளயிைல் பேய் பிடித்தவள்மாதிரி, காளி வேஷக்காரிபோல, தோற்றம் பெற்றிருந்தாள்.
அந்தக் கணத்தில் மகாதேவனுக்குப் புதிர் விடுபட்டு உண்மை புலனாயிற்று. இவள் பைத்தியக் கோளாறு உடைய வள். வெறித்தனம் தான் இவளுள் பதுங்கியிருந்து இவளை விசித்திரமாகவும், விநோதமாகவும், பேதையாகவும் நடந்து கொள்ளும்படிச் செய்திருக்கிறது. இப்போது அதனுடைய முழு வேகமும் வேலை செய்கிறது.
இதைப் புரிநது கொண்டதும், இந்தச் சனியனிடமிருந்து நழுவித் தப்புவிக்க வேண்டுமே, அதற்கு வழி ஏதேனும் தென்படுகிறதா என்று கவனிக்கலானான்.
அவள் மீண்டும் அவனை நெருங்கி, அவன் கையைப்பற்றி வெடுக்கென்று கடித்துவிட்டு, பலத்த குரலெடுத்துச் சிரித்தாள். "மாட்டிக்கொண்டாயா? என்னை ஏமாற்றவா பார்த்தே?" என்று கத்தினாள். அவன் வேதனையும் ஆத்திரமும் உந்த, ஓங்கி ஒரு அறை கொடுத்தான் அவன் கன்னத்தில்.
"ஐயோ அப்பா, என்னை கொல்றானே" என்று கதறி வாறே, தலையில் கை வைத்து கொண்டு அவள் கீழே உட்கார்ந்து விட்டாள்.
“டேய், யார்ரா அவன்?. பிடி, விடாதே!" என்று கூச்ச லிட்டபடி மூன்று பேர் ஓடி வந்தார்கள். படகிலிருந்து அப்பொழுதுதான் அவர்கள் இறங்கியிருந்தார்கள். ராஜம் கதறி ஓலமிடாவிட்டால்கூட, அவ்விருவரும் இருந்த இடத்துக்குத் தான் அவர்கள் வந்திருப்பார்கள். அந்தப் பெண்ணைத் தேடிக்கொண்டு வந்த நபர்கள்தான் அவர்கள்.
வந்தவர்கள் நிதானம் அடைந்தார்கள். "என்ன நடந்தது? அவள் ஏன் அப்படி அலறினாள்?" என்று ஒருவர் கேட்டார்.
"இயல்பாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். திடீரென்று வெறி பிடித்தவள்போல் நடந்து கொண்டாள். என் கையைக் கடித்து, கழுத்தை நெரித்தாள். அவள் பிடியை விலக்குவதற்காக நான் ஓங்கி அறைந்தேன். அதனால்தான் அப்படிக் கத்தினாள்" என்று அவன் சொன்னான். “கடவுளே, என் பேச்சை இவர்கள் நம்பவேண்டுமே” என்று அவன் உள்ளம் பிரார்த்தனை பண்ணியது.
அவர்கள் நம்பினார்கள். அந்தப் பெண்ணின் கோளாறு அவர்களுக்குத் தெரியும். “அது சரி. நல்லா இருக்கிற பெண்ணுக்கு திடீர் திடீர்னு மூளைக் குழப்பம் ஏற்பட்டு விடுது. இப்படி விபரீதமாக நடந்து கொள்கிறாள்" என்று ஒருவர் சொன்னார்.
“இங்கே ஆற்றின் அக்கரையில், கிழக்கே சிறிது தூரத்தில், குணசேகரம் என்றொரு இடம் இருக்கிறது. அங்கே உள்ள கோயில் பிரசித்தமானது. சக்தியுள்ள தெய்வம். பைத்தியக் கோளாறு, பேய்க்குற்றம் முதலியவை அந்த இடத்தில் குணமாகி விடும் என்பது மக்களின் நம்பிக்கை. அங்கேதான் நாங்கள் வந்து தங்கியிருக்கிறோம். நான் முக்கிய விஷயமாக திருச்சி போயிருந்தேன். இவரும் ஒரு இடத்துக்குப் போயிருந்தார். மற்றவங்க கொஞ்சம் கவனக் குறைவாக இருந்துவிட்டாங்க. இவள் யாருக்கும் தெரியாமல் ஓடி வந்திருக்கிறாள். நாங்கள் திரும்பி வந்ததும், இவளைக் காணோம் என்று கேள்விப் பட்டதும், எங்கே போனாளோ என்ன ஆனாளோ என்று பதறியடித்து, தேடித் திரியத் தொடங்கினோம். இங்கே வந்து படகுக்காரனிடம் விசாரித்தோம். ஒரு பெண்ணும், ஒரு ஆணும் அக்கரைக்குப் போனாங்க; அந்தப் பொண்ணு சதா சிரிச்சுக் கிட்டே இருந்தது என்று சொன்னான். எங்களுக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது. கூட இருந்த ஆளு எப்படி என்று கேட்டபோது நல்ல மனிசனாகத்தான் தோணிச்சு, தப்புத் தவறா நடந்து கொள்கிற ஆசாமியாத் தோணலே என்றான். எங்களுக்கிருந்த பயம் நீங்கிவிட்டது" என்று இன்னொருவர் பேசினார்.
அவர் பெண்ணின் தந்தையாக இருக்கும் என்று மகாதேவன் கருதினான். இயந்திரம் மாதிரித் தனது தொழிலில் ஈடு பட்டிருக்கும் படகுக்காரனிடமும் மனிதரை எடை போடும் குணம் சேர்ந்திருக்கிறது என உணர்ந்து அவன் வியப்புற்றான். அவன் உள்ளம் அந்த மனிதனுக்கு நன்றி கூறியது. நடந்தது முழுவதையும் அவன் அவர்களுக்கு அறிவித்தான்.
ராஜம்மாளின் தந்தை அவனுக்கு வந்தனம் தெரிவித்தார். "நீங்கள் நல்ல பாதுகாப்பாக இருந்திருக்கிறீர்கள். நீங்கள் இல்லை என்றால், அவள் எங்காவது போய், யாரிடமாவது சிக்கி, கஷ்டப்பட நேரிட்டிருக்கும். அல்லது, ஆற்றில் குதித்து சுழி, சுழல் எதிலாவது சிக்கி உயிரை விட்டிருப்பாள்" என்றார்.
"நீங்களும் எங்களோடு வாருங்களேன். குணசேகரம் கோயிலைத் தரிசிக்கலாம்" என்று ஒருவர் அழைத்தார். "குணசேகரம் வாழ்க. புதுமையான அனுபவம் சித்திக்க வகை செய்த அதை நான் பார்க்கத்தான் வேண்டும். ஆனால், தனியாகச் சென்று காணவேண்டும்" என்று மகாதேவன் நினைத்தான். "இல்லே, இல்லே. நான் திருச்சிக்கு அவசியம் போயாக வேண்டும். முக்கிய அலுவல்கள் இருக்கு" என்று சொன்னான்.
ராஜத்தின் அப்பா அவள் கையைப் பற்றி, ஆதரவாக அவளைத் தூக்கி நிறுத்தினார். "ஒண்ணுமில்லேம்மா. நாம் கோயிலுக்குப் போவோம். அங்கே உன்னைக் காணாமல் எல்லாரும் தவித்துக்கொண்டிருக்கிறாங்க” என்று சொல்லி, அவனிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டார்.
இப்போது, சாதுவான நல்ல பெண்ணாய் தலைகுனிந்துது மெதுநடை நடந்து சென்றாள் ராஜம். அந்திவேளைப் பொன்னொளியில் அவள் மின்னும் தங்கச்சிலை போல் தோன்றினாள்.
"அப்பனே, உன் கண்களே உன்னை ஏமாற்றிவிடும். வெளித்தோற்றத்தைக் கண்டு மயக்க முறச் செய்யும்!" என்று பெரிய வேதாந்திபோல் சிந்தித்து, தலையை ஆட்டிக் கொண்டு தன் வழியே போனான் மகாதேவன்.
("சுதேசமித்திரன்", 17-4-66)
--------------
38. அதிர்ச்சி
இரவின் அமைதியைக் கொன்றது அந்தக் கூக்குரல். யாரோ கொலை செய்யப்படுவதால் எழுகிற அலறல் போல ஒலித்தது அது. மனிதக்குரல் போல் அல்லாது பயங்காரமாக வீரிடும் ஏதோ ஒரு மிருகத்தின் கதறல் போல அது தொனித்தது. அச்சம் கொண்டு அடித் தொண்டையிலிருந்து கதறியதான அந்த ஒலம் கேட்போருக்கு அச்சம் தந்தது.
அந்தத் தனிவீட்டின் மாடியில் இருட்டினூடே, எழுந்த அந்த நீண்ட கூச்சல், கீழே வீட்டினுள் படுத்துத் தூங்கியவர்களை உலுப்பியது. என்னவோ ஏதோ எனப்பயப்பட வைத்தது.
விழித்தவர்களில் ஒருவர் தட்டுத்தடுமாறி மின் விளக்கின் ஸ்விச்சைக் கண்டுபிடித்து அழுத்தவும், பளிச்சென ஒளி பரவியது. வீட்டில் வெளிச்சம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சிறிது தைரியம் கொடுத்தது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து, என்னது? ஏது? என்ன சத்தம்? யாரு இப்படி பயங்கரமாய்க் கத்தியது? என்று கேள்விகளைப் பரிமாறிக் கொண்டார்கள்.
"மாடியிலே தான் கேட்டுது. மாமா தானே அங்கே படுத்திருக்காங்க?" என்று ஒரு பெண்குரல் குறிப்பிட்டது.
"ஆமா மாமாவுக்கு என்ன நேர்ந்திருக்கும்?" என்று சந்தேகப்பட்டார் ஒருவர்.
டார்ச் எடுத்துக் கொண்டு மாடிக்குப் போனார். அவர் பின்னாலேயே சிலர் போனார்கள்.
முன்சென்றவர் ஸ்விச்சைப் போடவும், வெடித்துச் சிதறியது வெளிச்சம். ஒளியில் குளித்துக் காட்சி தந்த மனிதர் மீது குவிந்தது அனைவர் பார்வையும்.
அவர் "குறுகுறு என்று உட்கார்ந்திருந்தார். அவர் உடல் இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தது. அடிபட்ட மிருகத்தின் மிரண்ட பார்வை போல பீதி நிறைந்த கண்களால் அவர் அங்கு வந்தவர்களைப் பார்த்தார்.
"என்ன மாமா, நீங்கதான் அப்படி சத்தம் போட்டீங்களா? "என்ன அண்ணாச்சி, என்ன நடந்தது?"
"பூனை கீனை மேலே விழந்ததனாலே பதறி அடிச்சுக் கூப்பாடு போட்டீகளா?”
ஒவ்வொருவர் ஒவ்வொன்று கேட்டனர். அவர்கள் பார்வைகள் அறை நெடுகிலும் துழாவின. ஒன்றுமில்லை. வித்தியாசமாக, விபரீதமாக, எதுவுமே தென்படவில்லை.
மாமா என்று குறிப்பிடப்பட்ட அந்த நபர் பேச்சற்றுப் போனவர் போல, மிரள மிரளப் பார்த்தவாறு உட்கார்நதிருந்தார்.
பலரும், என்னவென்று அறிந்து கொள்ளும் தவிப்பில் ஏதேதோ கேட்க, என்ன சொல்வது என்று விளங்காதவராய் அவர் இருந்தார்.
"ஏதாவது சொப்பனம் கண்டீகளா, மாமா?
"ஊம்ம்" என்ற ஆமோதித்தார் அவர்.
மற்றவர்களின் அறியும் அவா தூண்டப் படவும், “என்ன கனா அண்ணாச்சி?..." "கழுத்தைப் புடிச்சு நெரிக்கிற மாதிரி இருந்துதா மாமா?.” “என்னமா சத்தம் போட்டீங்க! பக்கத்து வீட்டுக்கெல்லாம் கூட கேட்டிருக்கும். அப்படி கத்தும்படி சொப்பனத்திலே என்ன வந்தது மாமா?" என்று பலப்பல கேள்விகள் பிறந்தன.
அவர்களுடைய தொணதொணப்பிலிருந்து தப்புவதற்காக அவர் ஏதாவது. சொல்லியே தீரவேண்டியிருந்தது. "நான் எங்கோ போய்க்கிட்டிருக்கேன். திடீர்னு நாலஞ்சு பேரு வந்து என்னை புடிச்சுக் கிட்டு, அப்படியும் இப்படியும் இழுக்கிறாங்க. இவனைக் கயித்தைக் கட்டி மரத்திலே தொங்கவிடுவோம்கிறான் ஒருத்தன். நீண்ட கத்தியாலே சதக்குனு என் வயித்திலே குத்துறான் இன்னொருத்தன். ஒரு தடியன் என் குரல்வளையைப் பிடிச்சு அழுத்தி. சே, ரொம்ப மோசமான கனவு" - திக்கித்திணறிச் சொன்னார் அவர். இன்னும் பயத்தின் பிடியிலேயே அவர் இருப்பதாகத் தோன்றியது.
"உத்திரத்துக்கு அடியிலே படுத்திருக்கீங்க. அதுதான். உத்திரத்துக்கு நேர்கீழே படுத்துக்கிடந்தால் இப்படித்தான் கண்ட கண்ட சொப்பனம் எல்லாம் வரும்" என்று உறுதியாய்ச் சொன்னார் ஒருவர்.
"வடக்கே தலைவச்சுப் படுத்திருந்தீகளா, மாமா? அப்ப தான் சரியான தூக்கமும் இருக்காது; மோசமான சொப்பனங்களும், தோணும்" என்று அறிவித்தாள் ஓர் அம்மாள்.
மணியைப் பார்த்தார் ஒருவர்.
சரியாகப் பன்னிரெண்டு.
நடுச்சாம நேரம். பேய்கள் உலாவரும் வேளை.
"ஆ அதுதான்" என்று மர்மமாகச் சொல் உதிர்த்தார் ஒரு பெரியவர். இந்த மச்சிலேயே ஒரு பொம்பிளை ஒரு சமயம் தூக்குப் போட்டுச் செத்துப் போனா. அவ ஆவி இங்க தான் சுத்திக் கிட்டுத்திரியுது. அது தான் இவரைத் தொந்தரவு செய்திருக்கும்" என்றார்.
"அப்படித்தான் இருக்கும்" என்று மற்றவர்கள் ஒத்து ஊதினார்கள்.
"இன்னும் நேரம் நிறையக் கிடக்குது. தூக்கத்தைக் கெடுத்து இருப்பானேன்? எல்லாரும் கீழே போய்ப் படுப்போம்" என ஒருவர் நல்ல யோசனை சொன்னார்.
மாமா என்று பலரால் அழைக்கப்பட்ட நபருக்கும் அந்த யோசனை கூறப்பட்டது. அவரும் அதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டியிருந்தது.
அனைவரும் கீழே போனார்கள். வசதியாய்ப் படுத்தார்கள். பயங்கரமாகக் கத்தி அனைவரையும் பதறி எழச் செய்த நபரும், உத்திரத்தின் கீழே வராத ஒரு இடத்தில், கிழக்கும் மேற்குமாய், கிழக்கே தலைவைத்துப் படுத்தார்.
தூக்கம் உரிய வேளையில் ஒவ்வொருவரோடும் உறவு கொண்டது. பயந்து அலறியவரும் தன்னை அறியாமலே தூக்கத்தில் ஆழ்ந்து விட்டதாகத் தோன்றியது.
அவருக்கு நாற்பது வயதுக்குள் இருக்கும். ஆரோக்கியமான வராகத் தான் தென்பட்டார். மனஉளைச்சல் மனிதனைப் படுத்திக் கொண்டிருந்ததோ என்னவோ!
சுவர்க்கடிகாரம் இரண்டு மணி என அடித்துச் சொன்னது.
அந்த அறையில் எல்லாரும் நிம்மதியாய்த் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
மீண்டும் அந்த பயங்கர அலறல் வெடித்தது. நெஞ்சின் மீது எதுவோ உட்கார்ந்து கொண்டு, கழுத்தைப் பிடித்து பலமாக அமுக்குவதால் மூச்சுத் திணறி, வேதனையால் சிரமப்பட்டு, ஓங்கிக் குரல் எடுத்துக் கத்த முயன்று, அப்படிக் கதற முடியாமல் திணறித் தவிக்கிற முறையில் அந்தக் குரல் ஒலித்தது.
தூங்கிக் கொண்டிருந்த அனைவரையும் உலுக்கி எழச் செய்தது அது.
யாரோ வேகமாக ஸ்விச்சைப் போட்டார்கள. பாய்ந்து சிந்திய வெளிச்சத்தில், அந்த அப்பாவி மனிதன் நெளிந்து புரண்டு தவிப்பது தெரிந்தது. அவர் முகம் விகாரமாகத் தோன்றியது.
"மாமா மாமா" என்று பதறித் தெறித்தன குரல்கள். "எழுந்திருங்க, முழிச்சிருங்கி என்று துரிதப்படுத்தினார் ஒருவர்.
அந்த ஆசாமி திகைப்புடன் விழித்து எழுந்தார். திருதிருவென விழித்தபடி உட்கார்ந்தார். கால்களை மடக்கி, முழங்கால் மீது முகம் பதித்து, மற்றவர்கள் முகங்களைப் பார்க்க நாணப்படு கிறவர் போல் இருந்தார்.
"திரும்பவும் என்ன மாமா இது?" என்று ஒரு பெண் கேட்டாள்.
"உங்களுக்கு என்ன பண்ணுது? ஏன் இப்படி பதறிப் பதறிக் கத்துறிங்க? என்று ஒருவர் விசாரித்தார்.
"உச்சிப்பட வேளையிலே எங்கேயோ பயந்திருக்கான். அது தான்" என்று ஒரு பெரியவர் சொன்னார்.
பயந்து அலறியவர் எதுவும் சொல்லவில்லை. என்ன சொல்வது என்று புரியாத மவுனநிலையில், "பிடித்து வைத்த பிள்ளையார்" மாதிரி அசையாது உட்கார்ந்திருந்தார்.
ஒவ்வொருவராக அலுத்துச் சலித்து தரையில் சாய்ந்தார்கள். "இன்னும் விடிய நேரம் கிடக்கு தூங்குங்க" என்றார்கள். "விளக்கு எரியட்டும். அணைக்க வேண்டாம்" என்றது ஒரு குரல்.
மாமாவும் உட்கார்ந்து அலுத்துப் போய் படுக்கையில் சரிந்தார். கண்களை விழித்தபடி கிடந்தார். எவ்வளவு நேரம் அப்படி இருக்க முடியும்? கண்கள் தாமாக மூடின. மெது மெதுவாக தூக்கமும் வந்தது.
சுவர்கடிகாரம் மூன்று ஒலிகளை உதறியது. அப்புறம் ஒற்றை ஒலியைச் சிந்தியது. பிறகு நான்கு ஒலிகளைக் கொட்டியது. டிக் - டிக் ஒசை ஓயாது ஒலித்துக் கொண்டிருந்தது.
மீண்டும் அந்தக் கோரமான ஒலி அந்த ஆளின் அடித் தொண்டையிலிருந்து வெளிப்பட்டு, தெளிவு படுத்த முடியாத நீண்ட குரலாகச் சிதறியது. பயம் அதன் அடிநாதமாக இருந்தது.
எல்லாரும் அலறிப்புடைத்து எழுந்தார்கள்.
எல்லா விளக்குகளையும் எரிய விட்டார்கள்.
“என்ன மாமா இது?. உங்க மனசிலே இருக்கிறதைத் தான் சொல்லுங்களேன். யாராவது பயமுறுத்தினாங்களா மாமா?. எங்காவது எதைக் கண்டாவது பயந்தீங்களா?... அய்யோ, இன்னிக்கு என்ன தான் நடந்தது? ஏன் இப்படி பதறிப் பதறி அலறுறிங்க?.
அவர்கள் தெரிந்து கொள்ள விரும்பினார்கள்.
மாமா தனது அமைதியையும் கெடுத்துக் கொண்டு, வீட்டில் உள்ள அனைவரது அமைதியையும் சீர்குலைத்து, என்ன ஏது என்று எதுவும் சொல்லாமல் முரண்டு பிடிப்பதனால் என்ன பிரயோசனம்? அந்தி சந்தியிலே பயந்திருந்தால், பேய் நிசாசு குத்தம் என்று சொன்னால், தகுந்த மந்திரவாதியைப் பார்த்து உரிய நடவடிக்கை எடுக்கணும். உள்ளுக்குள்ளே ஏதாவது கொணக்கிக்கிட்டு இருந்தது. என்றால், டாக்டரைப் பார்த்து நோய்க்கு சிகிச்சை பண்ணணும்….
வீடு கலாமுலாமாயிற்று. ஆள் ஆளுக்கு ஆலோசனைகளை உதறினார்கள்.
"ஒண்ணும் சொல்லாமல் இருந்தால் என்ன தான் அர்த்தம்? பகலிலே என்ன நடந்தது? ராத்திரியிலே இப்படி பதறிப்பதறி அலறும்படியா ஏதோ நடந்துதான் இருக்கணும். சொல்லுங்க, வாய் திறந்து சொல்லுங்க. மனசிலே புதைச்சு வச்சு கஷ்டப் பட்டு, மத்தவங்களையும் கஷ்டப்படுத்தி, இதெல்லாம் எதுக்கு?...”
பேச உரிமை உடையவர்கள் பேசி, தூண்டித் துருவி, துளைத்தெடுத்தார்கள். மனசில் இருப்பதைச் சொல்லி விடுவது நல்லது என்று அவரை உணர வைத்தார்கள்.
திகைத்துப் போய் உட்கார்ந்திருந்த அவர் சிறிது சிறிதாகத் தனது அனுபவத்தைச் சொன்னார். அவருக்கு அதிர்ச்சி ஏற்படுத்திய அனுபவம் அது. விபரீதமான பயங்கர அனுபவம் தான்:
அன்று பிற்பகல் ஒன்றரை மணி இருக்கும், வேலை செய்யும் இடத்திலிருந்து அவர் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
ஆள் நடமாட்டம் அதிகமில்லாத பாதை. அங்கு ஒதுங்கிய ஒர் இடத்தில் தனித்து நின்றது "பொதுக்கழிப்பிடம் - "பப்ளிக் கன்வீனியன்ஸ்". அவர் அதனுள் புகுந்தார். அந்தச் சமயம் வேக்மாக ஒருவன் உள்ளிருந்து வெளியே ஓடி வந்தான். வாசலில் அடி எடுத்து வைத்திருந்த அவரை இடித்துத் தள்ளி விடுவது போல் முரட்டுத்தன வேகத்தோடு அவன் வெளிப் பட்டான். "மாடு மாதிரி கண்ணு தெரியலே, எதிரே ஆளு வர்றதைப் பார்க்க வேண்டாமா?" என்று அவர் குறைபட்டுக் கொண்டார். ஆனால் அந்தத் தடியன் எதையும் கவனிக்க வில்லை. எதிலிருந்தோ தப்பி ஓடுவது போல, ஒரு பதற்றத்துடன், தாவிப் பாய்ந்து ஓடினான்.
அவர் மறு எட்டு எடுத்து வைப்பதற்குள் இன்னொருவன் வெளிப்பட்டான். அவன் வயிற்றிலிருந்து ரத்தம் பொங்கி வடிந்தது தான் அவர் பார்வையை முதலில் தாக்கியது. அங்கே ஒரு கத்தி செருகப்பட்டிருந்தது. ரத்தம் மேலும் மேலும் குபுகுபுன்னு வந்து கொண்டிருந்தது. அவன் மூச்சு இழுத்து மூச்ச் விடுபவன் போல் வாயைப் பிளந்து பிளந்து மூடினான். எதுவும் சத்தமிடவில்லை. முதலில் ஓடிய தடியன் தான் அவனைக் குத்தியிருக்க வேண்டும். கத்தியால் குத்தி விட்டு அவன் தப்பி ஓடியிருக்கிறான் என்று மாமாவுக்குப் புரிந்தது.
பட்டப்பகலில், ஒரு தெருவில், பப்ளிக் கன்வீனியன்"சுக் கான ஓர் இடத்தில் ஒரு கொலை முயற்சி பளிடும் ரத்தமும் வயிற்றில் செருகிய கத்தியும் இந்த உண்மையை அவர் மூளையில் அறைந்தன. அவர் பதறினார். உள்ளே போகாமல், இயல்பாக எழுந்த தற்காப்பு உணர்வு உந்த வேகமாகத் திரும்பி ஒடலானார். ஒடுவது தவறு; நாம் தான் குற்றம் செய்து விட்டு ஒடுகிறோம் என்று பார்க்கிற யாராவது எண்ண நேரிடும் என உள்ளுணர்வு புலப்படுத்தியது. அதனால் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தினார். திரும்பித் திரும்பிப் பார்த்த படி வீட்டை நோக்கி வேகமாக நடந்தார். நல்ல வேளை. ரோடில் யாரும் இல்லை. குத்துப்பட்டவன் கொஞ்ச தூரம் நடந்து, தள்ளாடி விழுந்தது தெரிந்தது. அப்புறம் அவர் திரும்பிப் பாராமலே நடந்தார். கடவுளே! யாரும் வராமல் இருக்கணும்; போலீஸ் வராமல் இருக்கட்டும் என்று ம்னசில் பிரார்த்தித்துக் கொண்டே வேகம் வேகமாக நடந்தார். அவர் தவறு செய்யவில்லைதான். இருந்தாலும் போலீஸ் சந்தேகப்படும். விசாரணை, ஸ்டேஷன் என்று இழுத்துப் போகும். வீண்பொல்லாப்பு எதுக்கு? மனசுக்குள் பயம் திக்திக்கென்று அடித்தது. அடித்துக் கொண்டேயிருந்தது. கத்திக்குத்தும், பொங்கி வழியும் ரத்தமும், ஒசையின்றி வாயை வாயைப் பிளந்த அந்த ஆளின் முகத்தோற்றமும் அவர் கண்ணுக்குள்ளேயே நின்றன. மனசில் ஆழப்பதிந்து விட்டன. அந்த பயங்கரம் அடிக்கடி பூச்சாண்டி காட்டியது. அத்துடன் போலீஸ் வந்து தன்னைப் பிடித்து மிரட்டக்கூடும் என்று பயம் வேறு. அதனாலே இதை யாரிடமும் அவர் சொல்லவில்லை; சொல்ல விரும்ப வில்லை. அதுவே மனசைக் குடைந்து கொண்டிருந்தது. தூக்கத்தில் பயங்கரக் கனவாய் வந்து அவரை அலறச் செய்தது…
அவர் சொல்லச் சொல்ல மற்றவர்கள் கிலிபிடித்தவர்களாய் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந் தார்கள். என்ன சொல்வது என்றே அவர்களுக்கு விளங்க வில்லை.
("அமுதசுரபி" - 1994)
------------
39. மனநிலை
அவன் - பெருமாள். சாதாரண மனிதன்.
அவ்வேளையில் அசாதாரணமான சூழ்நிலையில் தனித்து விடப்பட்டிருந்தான்.
அதனாலேயே அவன் உள்ளம், இனம்புரிந்து கொள்ள முடியாத உணர்வுகளினால் கனமேறிக் கொண்டிருந்தது. ஒருவித பயம், குழப்பம், அழுத்தும் சோகம், ஏதோ ஒரு வேதனை கவிந்து, கணத்துக்குக் கணம் பாரமாகி வந்தன.
அவன் பார்வை ஒரு மிரட்சியுடன், மேலும் கீழும்; அங்கும் இங்கும், ஏறி இறங்கிப் புரண்டு அலைபாய்ந்தது. அவன் கண்களில் பட்டனவெல்லாம் அவனை அச்சுறுத்தின.
மலைகள். எல்லாப் பக்கங்களிலும் மலைப்பகுதிகள். விரிந்து பரந்து கிடந்தன. ஓங்கி நிமிர்ந்து நின்றன. முண்டும் முடிச்சுமாய் முகடுகள் தொங்குவனபோல் தென்பட்டன. ஒருபுறம் விண்ணைத் தொடமுயலும் உயர் சுவர் வளைந்து நெளிந்து சென்றது, பாதை சற்றுத் தள்ளி சரிவாக இறங்கிக் கிடந்தது மலை. அதை ஒட்டிப் பெரும் பள்ளம். நெடுகிலும் உயர் மரங்கள். பச்சை செறிந்த மரத்தலைகள். வகை வகைப் பூக்கள். காடாய் அடர்ந்து வளர்ந்த செடிகள், கொடிகள்.
அவை பெருமாளுக்குப் பயம் தந்தன. தனிமையே அவனை அச்சுறுத்தியது. ஆழ்ந்த அமைதி - சத்தங்களற்ற இயற்கைச் சூழ்நிலை - அவனைக் கலவரப்படுத்தியது.
கண்கள், வறண்ட கற்பாறைகளின் அடர் வளர்த்தியை, விதம் விதமான அடுக்குகளை, அவற்றின் நீள அகல உயரங் களைப் பிடித்துத் தந்தன. செடிகள், கொடிகள், மரங்கள் எல்லாம் அவனை வளைத்துப் பிடித்துச் சிக்கலில் மாட்டி வைக்கத் தயாராக நிற்பனபோல் அவனுக்குத் தோன்றின.
பெருமாள் நடந்து கொண்டிருந்தான். மலையடிவாரச் சிற்றுாரிலிருந்து புறப்பட்டு, நடந்து, நடந்து ஏறி ஏறி, மலைப் பகுதிகளுடே வெகுதூரம் வந்திருந்தான். இன்னும் ஏறிப் போயாக வேண்டும் அவன். தனித்து விடப்பட்ட உணர்வு அவனைத் தொல்லைப்படுத்தியது.
பெரும் சுவர்கள் மாதிரி ஓங்கி நிமிர்ந்து நின்ற மலைப் பகுதிகள், எங்கெங்கும் காட்சி தந்த மலை முகடுகள், மலையின் மிக உயர் தூரத்து முடிகள் - மொத்தத்தில் கற்பாறைகளின் பூதாகாரத் தோற்றங்கள் - அவனை மிகப் பாதித்தன. தான் தனியனாய் இங்கு வந்து அகப்பட்டிருக்க வேண்டாம், அவன் ஏற்றுக்கொண்ட பணியை வேறு ஒருவனிடம் கொடுத்திருக் கலாம் என்று அவனுள் எண்ணம் ஓடியது.
ஊர்க்காரர்கள் - முக்கியமாக பெண்கள் - அவனிடம் அந்த வேலையை ஒப்படைத்தபோது அவன் துணிச்சலோடுதான் கிளம்பினான். நீண்டு, நெடிது உயர்ந்து, பசுமையாய் வளர்ந்து காணப்பட்ட மலைத்தொடர்மீது, மலையின் மீது மலையென ஓங்கி நின்ற மலைப் பகுதிகள் இரண்டு மூன்றைக் கடந்து மேலே போக வேண்டும். அங்கே கோயில் கொண்டிருந்த "மலை நம்பி"க்கு பூசனை செய்ய அநேகர் போயிருக்கிறார்கள். அவர்கள் முக்கியமான - இல்லாமல் தீராது என்ற தன்மை உடைய - இரண்டு பூசைப் பொருள்களை எடுத்துச் செல்ல மறந்து விட்டார்கள்.
விடுபட்டுப் போன பொருள்களை மலைமீதுள்ள ஊர்வாசி களிடம் கொண்டு கொடுக்கும்படி கீழே இருந்தவர்கள் பெரு மாளைக் கேட்டுக் கொண்டார்கள். வேண்டுவது போலவும், கெஞ்சுவது போலவும் கோரினார்கள். "உனக்குப் புண்ணி யம்ப்பா. பூசைக்குரியது. இது இல்லாமல், சாமி குத்தம் ஏற்பட்டு விடப்படாது" என்று பெண்கள் பேசினார்கள். நம்பிக்கையான ஆளுவேறு யாருமில்லை. நீதான் போய் இதுகளைக் கொண்டு அவங்ககிட்டே கொடு. நீ இந்தப் பாதையிலேதான் முன்னாலே கூடப்போய் வந்திருக்கியே. நீ ஆம்பிளைதானே! ஒத்தையிலே போக முடியாதா என்ன உன்னாலே?" என்று அவனுக்கு உந்துதல் அளித்தார்கள்.
அவனும் பூசைப் பொருள்களுடன் கிளம்பிவிட்டான். அவை ஒரு சுமையும் இல்லை. ஒரு துணிப் பையில் கனமற்றே இருந்தன.
பெருமாள் நடந்தான். தனிமையும் தானுமாய் - மலைப் பகுதிகளினூடே சென்ற ஏற்ற இறக்க ஒற்றையடித் தடத்தின் வழியாக. நடக்க நடக்க வழி வளர்ந்து கொண்டே இருந்தது.
கற்சுவரென, பெரும் மதிலென, வளர்ந்து காணப்பட்ட மலையின் தொடர்பகுதிதான் அவனுக்குத் துணை வந்தது. அதன் தோற்றம் அவனுக்கு அலுப்பு ஏற்படுத்தியது. அதனுடைய உயரமும், பரப்பும், சர்வ வியாபகமும் அவனை என்னவோ செய்வது போலிருந்தது. மலையின் நெடுகிலும், பள்ளத்தாக்குகளிலும், சரிவுகளிலும், தூரத்து உயர் முடிகளிலும் மெளனமாய் நின்ற மரங்களின் அடர்த்தியும், காட்டின் செறிவும், மிகமிக உயரே விரிந்து கிடந்த வானமும் அவனைச் சின்னவனாய், அல்பமாய், உணரச் செய்தன. இவற்றின் அருகே, இவற்றின் நடுவே, நாம் மிகச் சிறு உருவம்; நாம் ஒன்றுமேயில்லை என்றொரு நினைப்பு அவனுள் ஊர்ந்தது.
நடக்க நடக்க, உயர்ந்து செல்லும் தனிப் பாதையில் மேலே ஏற ஏற, இந்தச் சிறுமை உணர்வு. வலுப்பெற்றது. அது ஏன் - என்னது என உணர முடியா ஒருவிதக் குழப்பத்தை - அர்த்தம் புரிந்து கொள்ள முடியாத ஒரு பீதியை - அவனுக்குள் பரவச் செய்தது.
அது பகல் நேரம் தான். வெயில் ஒளிமயமாய்ப் படிந்து கிடந்தது. சூழ்நிலை - மலைப்பகுதிகள் மரங்கள், உயர்வானம் - எல்லாம் பளிரெனப் பிரகாசித்தன. அவை அவனுடைய வெறுமையை, மனிதனின் சிறுமையை, தனக்கு எடுத்துக் காட்டுவதாகவே பெருமாளுக்குத் தோன்றியது. அவனுள் ஒரு வேதனை - அமைதியற்ற தன்மை - அழுத்தியது. திக்குத் தெரியாத பெரும் வெளியில் துணையற்று விடப்பட்ட சிறு பிள்ளை என அவன் தன்னை உணர்ந்தான். தனக்கு ஆதரவாக யாரும் இல்லாத நிலையில், ராட்சதத்தனமான சுற்றுப்புறத்தில், செயலற்ற தன்மையில் தனித்து விடப்பட்ட ஒரு பரிதாப நிலையில் அவன் இருப்பதாக அவன் மனம் கருதியது.
அந்த நிலை அவனது சோகத்தை அதிகப்படுத்தியது. ஓங்கி ஓங்கி வீசி எழும் அலைகள் புரளும் கடல் ஓரத்தில் முன்பொரு சமயம் அவன் அப்படித்தான் உணர்ந்தான். பாலை என விரிந்து கிடந்த ஒரு மணற்பெருவெளியில் ஒரு சந்தர்ப்பத்தில் இத்தகைய உணர்வு அவனை இப்படித் தாக்கியதுண்டு. இப்போது இந்த நீண்ட நெடிதுயர்ந்த - தனிமையின் ஆழ்ந்த அகன்ற உயர் சூழலில் பெருமாள் பெரிதும் பாதிக்கப் பட்டான்.
எதுவும் செய்யத் திராணியற்ற சிறுபிள்ளையாய்த் திகைத்து விட்ட பெருமாள், இப்போது அழுதான். பொங்கிப் பொங்கி அழுகை எழ, அப்பாவியென அழுது கொண்டே அவன் நடந்தான்.
இத் தருணத்தில், தனக்குத் தெரிந்த மனிதர் யாரையாவது காண வேண்டும் என்றொரு விசித்திர எண்ணமும் அவன் உள்ளத்தில் நெளிந்தது.
சில சமயம் அதிசயமாக மனிதரின் ஆசை - கனவு அல்லது தீவிர எண்ணம் - நிறைவேறி விடுவதும் உண்டு. பெருமாளுக் கும் அப்படி ஒரு பேறு வாய்க்க வேண்டும் என்றிருந்தது.
பெருமாளின் ஊர்க்காரனான கைலாசம் எதிரே வந்து கொண்டிருந்தான். உயரே இருந்து இறங்கி வரும் ஏதோ உருவமாய்த் தோன்றி, பிறகு அது ஓர் ஆள் எனத் தெரிந்து, அது அட, நம்ம கைலாசம்!” என்று பெருமாளுக்குப் புரிவதற்கு, சிறிது நேரம் தேவைப்படத்தான் செய்தது.
அப்பவும் பெருமாளின் அழுகை தொடர்ந்து கொண்டு தானிருந்தது.
கைலாசம் நெருங்கி வந்ததும் வியப்புடன் பெருமாளைப் பார்த்தான். அவனிடம் ஏதோ சரியில்லை என்பது புரிந்தது அவனுக்கு. "என்ன பெருமாள்? என்ன விஷயம்?" என்று கேட்டான்.
பெருமாள் மலையையும் சரிவுகளையும், பக்கத்துப் பள்ளத் தாக்கையும் பார்த்தபடி நின்றானே தவிர, தன் உணர்ச்சிகளை வாய்விட்டுச் சொல்லும் திராணியைப் பெற்றானில்லை.
“என்னடே, இங்கே எப்படி வந்தே? ஏன் அழுகிறே?" என்று பரிவுடன் விசாரித்தான் கைலாசம்.
"ஒண்ணுமில்லே!" என்று முணுமுணுத்தான் பெருமாள்.
கைலாசம் சிரித்தான். அவன் சந்தோஷமாக இருந்தான். "நாங்க பூசை செய்யவேணும்னு நேற்றே புறப்பட்டு வந்தோமா? மேல் மலையை, நம்பி கோயிலை, அந்தி நேரத்திலே அடைந்து விட்டோம். ராத்திரி அங்கே உள்ள செங்கத்தேறி கட்டடத்திலே தங்கினோம். ஏ பெருமாள்! மலைமீது ராத்திரி வேளையில் தங்கியிருப்பது எவ்வளவு அற்புதமான அனுபவம் தெரியுமா? ஆகா, குளிர், பனிப்படலம். அருமையான நிலா ஒளி. எங்கும் அமைதி. ஆனாலும் உண்மையான அமைதி கிடையாது. வித விதமான பூச்சிகள், வண்டுகள் ஓயாமல் இரைச்சலிட்டுக் கொண்டே இருக்கின்றன. ரகம் ரகமான ஒலிகளின் கலவை. திடீர்னு இராப் பறவை ஒன்று அலறுது. ஏதோ ஒரு மிருகம் கத்துது. தூரத்திலே ஓடுகிற ஆற்றுத் தண்ணிர், மேட்டிலிருந்து பள்ளத்தில் விழுகிற ஒசை. அது ஒடுகிற மெல்லொலி பின்னணி இசைபோல ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.
“பெருமாள்! நீ கவனிச்சியா? எங்கும் வளர்ந்து நிற்கிற மரங்கள். செறிவுாகத் தென்படுகிற பசுமைப் பரப்பு. செடி கொடிகள், மலையின் பகுதிகள். தூரத்து மலைமுடிகள். இந்த வானம். இதெல்லாம் எவ்வளவோ ஆனந்தத்தை உண்டாக் குது. மனம் விசாலமாகி, இயற்கையோடு சேர்ந்து, உயரே உயரே பறக்கத் தொடங்குது. இந்த மண்ணும், மலையும், மரமும், வானமும் நம்மோடு சொந்தம் கொண்டாடுகிற மாதிரித் தோனலையா? நாமும் இவற்றுடன் உயர்ந்து நிற்கிற மாதிரி - இந்த மலையெலாம் நான்; மரங்களும் விண்ணும் நான்; எல்லாமே நான் என்று பெருமைப்பட வைக்கிற ஒர் உணர்வு நம்முள் சிலிர்த்தெழுகிறது. இந்த மலையை, மண்ணை, அருவியை, விண்ணை, மனித சமுதாயத்தை அப்படியே தழுவிக் கொள்ள வேண்டும் என்றோர் எழுச்சி ஏற்படுகிறதே. நீ ஏன் வருத்தமா இருக்கிறே, பெருமாள்? ரொம்ப நேரமா நீ அழுகிற மாதிரித் தெரியுதே? ஏன் அழறே?"
பெருமாள் பெருமூச்செறிந்தான்.
“பூசை செய்ய வந்தவங்க முக்கியமான பூசைச் சாமான் இரண்டை எடுத்திட்டு வர, மறந்து போனாங்க. என்னை அனுப்பியிருக்காங்க, கீழே போயி அதுகளைக் கொண்டு வர..." என்றான் கைலாசம்.
"இதோ இருக்கு. கீழே உள்ளவங்க தான் என்கிட்டே கொடுத்து அனுப்பினாங்க" என்று பெருமாள் பையை நீட்டினான்.
"நல்லதாப் போச்சு. வா, கோயிலுக்குப் போவோம்" என்று அவனை அழைத்தபடி திரும்பி நடந்தான் கைலாசம்.
போகிறபோதே அவன் மலையின் கம்பீரத்தை, அதன் வனப்பை வியந்து பேசினான். "மலை மட்டுமல்ல; கடலும், வானின் விரிவும், இயற்கையின் எடுப்பான, மிடுக்கான, வனப்பான சக்திகள் பலவும் இன்னும் கிளர்ச்சி ஏற்படுத்தும். மனிதன் இவற்றோடு இணைந்தவன், இவற்றால் ஆனவன், இவற்றை ரசித்துப் பயன்படுத்தி அனுபவிக்கக் கற்றவன் என்ற பெருமித உணர்வு எனக்குள் உண்டாகும். உனக்கு எப்படியோ?” என்று பெருமாள் முகத்தைப் பார்த்தான்.
"நான் சாதாரண ஆளப்பா. நீ கவிஞன். கவிதை எழுதாவிட்டாலும், கவிஞனாக வாழ்கிறவன்" என்று பெருமாள் சொன்னான்.
காசுகளை குலுக்கிக் போட்டது போல், கலகலவென்ச் சிரித்தான் கைலாசம்.
("அமுதசுரபி” 1995)
-----------
40. குடியிருப்பில் ஒரு வீடு
நாகரிக நகரங்களில் தவிர்க்க முடியாத வளர்ச்சியாகத் தலையெடுக்கிற எல்லா “எக்ஸ்டென்ஷன்"களையும் போல் தான் அந்தக் குடியிருப்பும் அமைந்திருந்தது.
அமைதியான சூழ்நிலை, பரபரப்பு இல்லாத அருமையான தெருக்கள், "மொட்டைமொழுக்கென்று அழகோ கவர்ச்சியோ இல்லாது கட்டப்பெற்றுள்ள சதுர வடிவக் கட்டிடங்கள் முதலியவற்றை நாகரிக விதிகளின்படி கொண்டிருந்த அந்தப் பகுதிக்கு ஆரம்பத்தில் "நியூ காலனி" என்று தான் பெயர் சூட்டியிருந்தார்கள்.
காலவேகத்தில், பெயர்களுக்கும் தமிழ் வடிவம் கொடுக்க வேண்டியது அவசியம் என்று முளைத்த ஒரு உணர்வைப் பின்பற்றி - அந்த வட்டாரத்துக்கும் "புதுக்குடியிருப்பு" என்று பெயரிட்டு, பளபளக்கும் தகடுகளில் வார்னிஷ் பெயிண்டில் அழியாத முறையில் எழுதி, அநேக இடங்களில் பதித்து விட்டார்கள்.
இத்தகைய "மூளை அதிர்வு”களுக்கு யார் காரணம் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாவிட்டாலும், அவர்களுடைய திடீர் நடவடிக்கைகளின் பிரத்தியட்சப் பிரமாணங்களாகத் திகழும் பெயர்பலகைகள் பல இடங்களிலும் பளிச்சிடுவதை எளிதில் காணலாம்.
"புதுக்குடியிருப்பு" என்ற அந்த "நியூ காலனி"யில் மூன்று தெருக்களும் முப்பத்தைந்து வீடுகளும் தான் இருந்தன. முதல் தெரு, இரண்டாம் தெரு, நடுத்தெரு என அழைக்கப்பட்ட வீதிகளில், நடுத்தெரு திடீரென்று முக்கிய கவனிப்புக்கு இலக்காகும் தகுதியைப் பெற்றது.
பெரிய நகரங்களில் வீடு கட்டுவதற்கு என்று, தகுதி பெற்றோருக்கு அளிக்கப்படுகிற சலுகைகளையும் பண உதவிகளையும் பிற வசதிகளையும் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் சொந்த உபயோகத்துக்கு என்று வீடு கட்டியவர்களும், அப்படி கட்டிய வீட்டை "நல்ல வாடகை கிடைக்கும்" என்று வேறு யாருக்காவது குடக்கூலிக்கு விட்டு விடுகிறவர்களும் இந்தக் குடியிருப்பிலும் இருந்தார்கள்.
நடுத்தெருவில், வசதி நிறைந்த ஒரு வீடு, ஒருவரின் சொந்த் உபயோகத்துக்காகக் கட்டப்பட்டு, அவரால் சிறிது காலம் அனுபவிக்கப்பெற்று, சில மாதங்களாகப் பூட்டியே கிடந்தது. வீட்டுக்காரர் உத்தியோக மாறுதலில் வேறொரு பெரிய நகருக்குப் போய்விட்டதாக "விஷயம் தெரிந்தவர்கள்" பேசிக் கொண்டார்கள்.
ஒருநாள் - விடிவதற்கு முன்னரே –
"மூன்று மணியிருக்கும்" "ஒன்றரை மணி "இல்லை. நாலு மணிதான்" என்று பல்வேறு அபிப்பிராயங்கள் எழுந்து பரவுவதற்கு உதவிய ஒரு நேரத்தில் –
புதுக்குடியிருப்பு நடுத்தெருவுக்கு ஒரு கார் வந்தது. அந்த வீட்டின் முன் நின்றது. பிறகு போய் விட்டது.
காரில் வந்து இறங்கியவர்கள் யார், எத்தனை பேர். எப்படிப்பட்டவர்கள் என்று எவருக்கும் தெரியாது. ஆனால், அந்த வீட்டுக்கு யாரோ குடி வந்துவிட்டார்கள் என்கிற விஷயம் அவ்வட்டாரத்தின் மூன்று தெருக்களிலும் உள்ள எல்லா வீட்டினருக்கும் தெரிந்து விட்டது.
அந்த வீட்டைக் கட்டியவர் தூக்கத்தின் பக்தரோ, அல்லது லட்சியக் கனவுகள் ஆசைக்கனவுகள் பல வளர்க்கும் உள்ளம் பெற்றிருந்தாரோ - ஏனோ, தெரியவில்லை - தான் கட்டிய வீட்டுக்கு "ஸ்வப்னா" என்று பெயரிட்டிருந்தார். அந்தப் பெயர் பலரும் பலவிதமாகப் பேசுவதற்கு இடமளித்துக் கொண் டிருந்தது. யாருமே இல்லாது அடைப்பட்டுக் கிடந்த காலத்தில் "சொப்பனம் தூக்க நிலையில் இருப்பது நியாயம் தானே!" என்ற தன்மையில் அக்கம் பக்கத்தார் பேசுவது வழக்கம்.
இப்போதும் இஷடம்போல் பேசுவதற்கு "ஸ்வப்னா" துணை புரிந்தது.
அந்த வீட்டின் முன் கதவு திறக்கப்படாமலே கிடந்தது. சன்னல்களில் குளுமையான மென் வர்ணத் திரைகள் தொங்கின. அடைபட்டுக் கிடந்த வீடு, உயிர்ப்பும் உணர்வும் பெற்றிருப்பதற்கான தடயங்கள் தெரிந்தனவே தவிர, கலகலப்போ இயக்க வேகமோ பெற்றுவிட்டதாகக் காட்சி தரவில்லை.
ஆகவே, "சொப்பனம் இன்னம் தூக்கக் கிறக்கம் தெளியாமல் தான் இருக்கிறது" என்று மற்றவர்கள் பேசினார்கள்.
அவரவர் கவலைகளும் சோலிகளும் அளவுக்கு அதிகமாகப் பெருகிக் கிடக்கின்ற இந்நாட்களில் எல்லோரும் அந்த ஒரு வீட்டைப்பற்றியே சதா கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியாதுதானே? புதுக்குடியிருப்பு வாசிகளுக்கும் எத்த னையோ அலுவல்கள்! எவ்வளவோ கவலைகள்! அதனால் அவர்களுக்கு "ஸ்வப்னா விஷயம் எப்பவாவது பேசிப்பொழுது போக்குவதற்கு உதவக்கூடிய பல விஷயங்களில் ஒரு அல்ப விஷயமாகத்தான் இருந்தது.
ஆனால் "ஸ்வப்னா" என்கிற வீட்டுக்கு எதிர் வீட்டில் வசித்த ஒரு ஆசாமிக்கு அதுவே குழப்பங்களையும் வீண் எண்ணங் களையும் விசித்திர சந்தேகங்களையும் வளர்க்கும் ஒரு விவகார மாகப்பட்டது. கிருஷ்ணன் என்ற பெயர் உடைய அந்த நபர் சந்தேகப் பிராணியாய், அளவுக்கு அதிகமான கற்பனாவாதி யாய், அறியும் அவா (க்யுரியாஸிட்டி) அதிகம் பெற்றவராய் இருந்தார். கதாசிரியராக மாறி நாவல்கள் எழுத ஆரம்பித்திருந்தார் என்றால், அவர் பிரமாதமான வெற்றிகளைமட்டுமல்லாது, அபாரமான சோதனைகளையும் மகத்தான சாதனைகளையும் செய்து முடித்து, ரசிகப்பெருமக்களாலும் விமர்சனப் புலிகளா லும் அமோகமாகப் பாராட்டப்படும் பேறு பெற்றிருப்பார். ஏனோ அவர் எழுத்துத் துறையில் புகவில்லை. அவரது கற்பனையும், சந்தேகமும், அறியும் ஆர்வமும், இன்ன பிற ஆற்றல்களும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களின், அந்தக் குடியிருப்பு ஆசாமிகளின் வாழ்க்கைப் போக்குகளை துருவி ஆராய்ந்து அலசிப் பிழிவதிலேயே அவரை நாட்டம் மிகக் கொள்ளும்படி தூண்டின.
கிருஷ்ணன், உழைக்க வேண்டிய அவசியம் அதிகம் இல்லாத, ஒய்வு மிக நிறையவே இருந்த, வசதியான உத்தியோகம் ஒன்று பெற்றிருந்தார். அவர் மனைவி அவருக்கு ஏற்ற ஜோடியாகத்தான் இருந்தாள். அவர்களுக்கு பிள்ளைகுட்டி என்ற பிடுங்கல் எதுவும் இல்லை. ஆகையால் அண்டை அயல் எதிர் வீடுகளை ஆராயவும், பிறர் அக்கப்போர்கள் குறித்து வம்பளக்கவும் அவர்களுக்கு நேரம் நிறையவே இருந்தது.
“எதிர்வீட்டில் ஏதோ மர்மம் இருக்கிறது!" என்ற எண்ணம் கிருஷ்ணன் உள்ளத்தில் விழுந்துவிட்டது.
"ஆமாம். சந்தேகத்துக்கு உரிய ஆட்கள் யாரோ தான் குடிவந்திருக்கிறாங்க" என்றால் பூரீமதி சாந்தா கிருஷ்ணன்.
"கள்ள நோட்டு அச்சடிப்பவர்களாக இருக்கலாம்" என்பதில் ஆரம்பித்து, கள்ளச் சாராயம் காய்ச்சுகிறவர்கள், கள்ளக் காதலில் ஈடுபட்டவர்கள் என்பது ஈறாக, சந்தேகப் பூச்சி எதுஎதன் மீது ஊர்ந்து நெளிய முடியுமோ அதை எல்லாம் தொட்டுவிட்டது
அவர்கள் ஊகம்.
"சரி. இதை திட்டமாக ஆராயாமல் விட்டுவிடக் கூடாது" என்று தீர்மானம் செய்தார் கிருஷ்ணன்.
இதைக் கண்டுபிடிக்காமல் எதிர்த்த வீட்டிலே இருந்தால் நாம் சரியான இளிச்சவாய் சுப்பர்கள் என்றுதான் அர்த்தம்" என்று அழுத்தம் கொடுத்தாள் அம்மாள்,
இப்படியாகத்தானே அவர்களுடைய ஆற்றலுக்கும் ஈடுபாட்டுக்கும் பண்பாட்டுக்கும் ஏற்ற முக்கியமான வேலை அதுவாகவே வந்து அவ்விருவரிடமும் சிக்கிக்கொண்டு விட்டது.
கிருஷ்ணன் வெளியே போய்விட்டு வந்த உடனேயே, "என்ன, ஸ்வப்னா கதவு திறக்கப்பட்டதா? யாராவது எட்டிப் பார்த்தாங்களா? உள்ளே யாராவது போனாங்களா? என்று விசாரித்து விட்டுத்தான் இதர அலுவல்களில் இறங்குவார்.
வீட்டு அம்மாள் அவரைவிட ஒரு படி மேலே போய் அனுமானங்களையும் யூகங்களையும் உலுப்பித் தள்ளுவாள். "அந்த வீட்டிலே ஆண்பிள்ளைகளே இல்லை. இரண்டு பெண்கள்தான் இருக்கிறாங்கன்னு தோணுது" என்றாள் ஒரு தடவை. “மூணுபேரு இருப்பாங்க போலிருக்கு" என்றாள் இன்னொரு நாள். “அழகான பெண் ஒருத்தி இருக்கிறா. வெள்ளை வெளேர்னு இருக்கிறா. ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள். டக்குனு கதவை. சாத்திவிட்டாள்" என்று தெரிவித் தாள் ஒரு சமயம். ஒரு வேலைக்காரி இருப்பாள் போலிருக்கு. அந்த அழகான சிறு வயசுக்காரியோட அம்மாளோ, அக்காளோ தெரியலே, ஒருத்தியும் கூட இருக்கிறாள்" என்றாள். "பிக்சர் மாதிரி இருக்கிற பொண்ணு ஒண்ணா இரண்டா என்று எனக்கே சந்தேகம் வந்திட்டுது" என்று அவளே ஒரு சமயம் குழம்பினாள்.
"யாரும் வெளியே போவதாகவே தெரியலே. இவங்களைத் தேடி எவரும் வருவதாகவும் தோணவில்லை" என்று கிருஷ்ண னும் அவர் மன்ைவியும் சங்கடப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதற்கே போலும் நிகழலாயின சில
சம்பவங்கள்.
ஒரு நாள் முன்னிரவில், "கப்பல் மாதிரி" பெரிதான ஒரு கார் மினுமினுவென்று வந்து நின்றது அந்த வீட்டின் முன்னே. அதிலிருந்து இறங்கி அவ்வீட்டுக்குள் போனவர் சரியான நீர்யானை மாதிரி இருந்தார். "காண்டாமிருகம் என்று சொன் னாலும் சரியாக இருக்கும்! இது சாந்தா கிருஷ்ணன் அபிப் பிராயம். தடியாய், தொந்தியும் தொப்பையுமாய், வஞ்சனை யின்றித் தின்று கொழுத்த சதைக்குன்றாய் விளங்கிய அந்தப் பெரிய உருவத்தை விலை உயர்ந்த துணிகளும், வைரமும் தங்கமும் அழகுபடுத்த முயன்றன.
அவர் வந்ததும் "ஸ்வப்னா மிகுந்த ஒளி பெற்றது. எல்லா விளக்குகளும் எரியலாயின. சிரிப்பும் பேச்சும் கலகலத்தன. ஒரு பெண் பாடுகிற குரல் கூட எழுந்தது.
"ஸ்வப்னா ஏதோ சொப்பனபுரி மாதிரி ஆகிவிட்டதே!" என்றுதான் கிருஷ்ணனால் கூற முடிந்தது.
வந்திருந்த பெரிய நபர் எப்போது போனார் என்பதை கிருஷ்ணனும் சாந்தாவும் தெரிந்துகொள்ள இயலாது போயிற்று. அவர்கள் படுக்கச் சென்றபோது மணி பத்தரை. அவ்வேளை யிலும் பெரிய கார் எதிர் வீட்டின் முன்னால் நின்றது. பிறகு, பன்னிரண்டு மணி இருக்கலாம், கிருஷ்ணன் விழித்துக் கொண்டார். ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார். அங்கே கார் எதுவும் இல்லை.
”அடடா, தடியன் போயிட்டான் போலிருக்குதே!" என்று அவர் வருத்தத்தோடு முனகிக்கொண்டார். திரும்பி தனது அறைக்குப் போகலாம் என்று கால் எடுத்தவர் அசையாமல் நின்றுவிட்டார். காரணம் –
அந்த வீட்டின் முன்னால் ஒரு கார் வந்து நின்றது. இது வேறு கார். சிறியது. அதன் வருகைக்காகக் காத்திருந்தவர்போல், யாரோ "ஸ்வப்னா"வின் கதவை திறந்தார்கள். இரண்டு பேர் வெளியே வந்தார்கள்.
கிருஷ்ணன் நன்றாகக் கவனித்தார்,
இரண்டு பெண்கள். ஒருத்தி அதிக வயசு உடையவள் என்றும், மற்றவள் இளம் பெண் என்றும் புரிந்து கொள்ள முடிந்தது. சின்னவள் முகம் தெரியவில்லை. நேர்த்தியான மென் துகில் அணிந்திருந்தாள். அதைத் தலைக்கு மேல் இழுத்து முக்காடாகப் போட்டிருந்தாள். நிலவு நன்றாகத்தான் இருந்தது. அந்த நிலவொளியில் அவள் அழகு மிகுந்த உருவமாகத்தான் தோன்றினாள். சாந்தா குறிப்பிட்ட அழகி இவளாகத்தான் இருக்கும் என்று அவர் மனம் பேசியது.
இரண்டு பெண்களையும் ஏற்றிக்கொண்டு கார் நகர்ந்த பிறகுதான் அவர் படுக்கப்போனார். இந்த நேரத்தில் இவர்கள் எங்கே போகிறார்கள்? ஏன் போகிறார்கள்? ஒன்பது பத்து மணிக்குக் கிளம்பினாலும் சினிமாவுக்குப் போவார்கள் என்று நினைக்கலாம். இந்த வேளை கெட்ட வேளையில், கார் வந்து இவர்களை இட்டுச் செல்கிறது. இதற்கு என்ன அர்த்தம்?" என்று அவர் மனம் குறுகுறுத்தது.
இருட்டில் எவ்வளவோ விஷயங்கள் நடக்கின்றன. இரவு தூங்குவதற்காக ஏற்பட்டது என்பது பொதுவான எண்ணம். ஆனால் நாகரிகப் பெரு நகரங்கள் முழுமையாகத் தூக்கத்தில் ஆழ்ந்து விடுவதில்லை. இரவு வேளைகளில். பாதி நகரம் துயிலில் சிக்கிக் கிடக்கிறபோது, இன்னொரு பாதி விழிப்புடன் என்னென்னவோ செய்து உற்சாகம் பெறுகிறது!" என்று அவர் எண்ணம் வளர்த்தார்.
அவருடைய சந்தேகங்களை விட தூக்கம் வலியதாகி, அவரை ஆட்கொண்டது.
காலையில் கிருஷ்ணன் விழித்து எழுந்த உடனேயே, சாந்தா புதியதோர் விஷயத்தை அறிந்து கொண்ட உற்சாகத்தோடு, பெருமையோடு, பரபரப்போடு, பேசத் தொடங்கினாள். "உங்களுக்குத் தெரியாதே! நாலரை மணிக்கு எதிர்த்த வீட்டுக்கு இன்னொரு பெண் வந்திருக்கிறா. சின்ன வயசுதான். அழகாகத் தான் இருக்கிறா. அவளுக்குத் துணையாக வேறொருத்தியும் வந்திருக்கிறா. இரண்டு பேரும் காரில் வந்து இறங்கினாங்க!" எனறாள்.
"சின்னக்காரு, இல்லையா? சிறுவயசுப் பெண் நீல நிற ஸில்க் புடவை கட்டியிருந்தாள். என்ன?" என்று அவர் கேட்கவும், அவள் திகைப்படைந்தாள்.
"நீங்களும் பார்த்தீர்களா? எப்போ?" என்று, ஏமாற்றம் தொனிக்கும் குரலில், விசாரித்தாள் சாந்தா.
அவங்க வந்ததை நான் பார்க்கவில்லை. சின்னக் காரு வந்து அந்த ரெண்டு பேரையும் அழைத்துக் கொண்டு போனதைப் பார்த்தேன். அந்த வீட்டில் உள்ளவங்கதான். எங்கோ போய், இராப்பொழுதைக் கழித்துவிட்டு, நாலரை மணிக்கு வீடு திரும்பியிருக்கிறாங்க. அவங்க புறப்பட்டுப் போனபோது இரவு மணி பன்னிரண்டரை" என்று அவர் விளக்கம் தந்தார்.
பீடைகள்!" என்று கசப்போடு சொன்னாள் சாந்தா. அவள் குரலும் பார்வையும் தெரிவித்த பேசாத பேச்சுக்களில் எவ்வளவோ அர்த்தங்கள் பொதிந்துகிடந்தன.
"புதுக்குடியிருப்பு" வழக்கம் போல் அமைதியாகவே இருந்தது. "ஸ்வப்னா" சதா அடைத்த கதவுடன் தான் காட்சி அளித்தது. சில இரவுகளில் அங்கு உயிர்ப்பும் உணர்வும் உற்சாக நாட்டியம் புரிவதும் சகஜமாகி விட்டது.
கிருஷ்ணனும் சாந்தாவும் இன்னும் அவர்களைப் பற்றிய விவரம் எதுவும் தெரிந்துகொள்ள முடியவில்லையே! என்று தான் வருத்தப்பட்டார்கள்.
அழகான யுவதியை அந்தி ஒளியில், நன்கு பூத்த எழில்மிகு மந்தாரைபோல், ஒரு நாள் கண்டார் கிருஷ்ணன். அவளோடு, அவளைப் போலவே, இன்னொரு இளம் பெண்ணும் இருக் கிறாள் என்பதை, இருவரையும் சேர்ந்தாற்போல் பார்த்ததன் மூலம், உறுதிப் படுத்திக் கொண்டாள் சாந்தா.
"கப்பல் மாதிரிப் பெரிய காரில் எப்பவாவது வந்து போகிற விகாரப் பெரிய மனிதர். அந்தப் பெண்களுக்கு எப்படி உறவோ? அவர்களின் போஷகர் அவர்தான் என்பதில் இருவருக்கும் எவ்விதமான சந்தேகமும் இல்லை.
அவரைப் பற்றி நல்ல எண்ணம் கொள்ள முடியவில்லை கிருஷ்ணனால், பணம் மிகுந்தவர்களில் அநேகர் செய்வது போல, அவரும் தனது இன்ப சுகத்துக்காக இரண்டு பெண் களைத் தனி வீட்டில் வைத்து, தாராளமாகச் செலவு செய்து வருகிறார் என்றுதான் அவர் முடிவு கட்டினார்.
இந்த எண்ணத்தை தன் மனைவியிடம் சொல்ல அவர் தயங்கவுமில்லை. அவளும் "ஆமாம், அப்படித்தான் இருக்கும். பாவம், நல்ல பெண்கள், அழகான பெண்கள், ஏனோ இப்படிக் கெட்டுப்போகிறார்கள். இதை எல்லாம் விதி என்றுதான் சொல்லணும். வேறு என்ன சொல்வது?" என்று ஆறுதல் கூறிக் கொண்டாள்.
பல வாரங்களாக மன உளைச்சல் தந்து கொண்டிருந்த ஒரு பிரச்னைக்கு. சாத்தியமான - சாதகமான விடை ஒன்றைக் கண்டு பிடித்தாயிற்று என்ற திருப்தி அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது. அதிலிருந்து அவர்கள் எதிர் வீட்டுக்குப் பெரிய கார் என்றைக்கு வருகிறது. எப்போது போகிறது என்று கவனிப்பதில் அக்கறை காட்டுவதை குறைத்துக் கொண்டார்கள்.
இருந்த போதிலும், கிருஷ்ணனுக்கு இன்னுமொரு பெரிய சந்தேகமும், தெளிவுபெற முடியாத குழப்பமும் அப்படியே இருந்தன. பெரிய காரில், பண எருமை வந்து இரவில் பதினோரு மணி வரை தங்கிவிட்டுப் போகிறது. அதே இரவில், பன்னிரண்டு மணிக்கு மேல் கார் வந்து அழகுப் பெண்ணை அழைத்துப் போகிறதே! எங்கே கூட்டிச் செல்கிறது? ஏன்? ஒவ்வொரு தடவையும் வெவ்வேறு கார் வருவதாகக் கண்டுபிடித்தார்
கிருஷ்ணன்.
”ஆகவே, இதில் ஒரு பெரிய மர்மம் இருக்கிறது!" என்று அவர் அறிவு கூறியது.
கூடிய விரைவிலேயே இந்த மர்மமும் விடுபட்டுப் போயிற்று. காலமும் நிகழ்ந்த சில சம்பவங்களும் தான் தெளிவு ஏற்படுத்தின. கிருஷ்ணன் முயன்று எதுவும் துப்புக் கண்டு பிடித்து விடவில்லை.
ஒரு நாள் பெரிய “போலீஸ் வேன்" வந்து, "ஸ்பல்னா" முன் நின்றது. சட்டப் பாதுகாவலர்கள் வீட்டினுள்ளே போனார்கள். இரண்டு இளம் பெண்களையும் ஒரு முதியவளையும் அழைத்து வந்து, வண்டியில் ஏற்றினார்கள்.
கிருஷ்ணனுக்கு அறிமுகமானவர் ஒருவர் வேனில் இருந்தார். அவரிடம் பேச்சு கொடுத்ததில் உண்மைகள் தெரிய வந்தன.
தடி ஆசாமி இதைத் தொழிலாக வளர்த்து, பணம் பண்ணி வாழ்க்கை நடத்துகிறான். சினிமாவில் நடிக்கும் ஆசையினாலும், கணவனோடு நிகழும் சண்டை அல்லது குடும்பத் தகராறு போன்ற பலவிதக் காரணங்களினாலும், வீட்டை விட்டு வெளியேறி, நாகரிகப் பெருநகருக்கு எத்தனையோ இளம் பெண்கள் வருகிறார்கள். அவர்களை ஏமாற்றி, ஆசைகாட்டி, அழைத்து வருவதற்கு அநேக திறமைசாலிகளை அப்பணக் காரன் நியமித்து வைத்திருக்கிறான். இப்படிச் சிக்கும் பெண்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கிறான். பெரிய நட்சத்திரம் ஆக்குவேன் என்று ஆசைகாட்டி, தனது ஆசை களைத் தணித்துக் கொள்வதோடு, விதம் விதமான பெண்களை அனுபவித்து இன்பம் பெறத் தவிக்கும் பணக்காரர்களுக்கும், பெரிய மனிதர்களுக்கும் இவர்களை அனுப்பி வைக்கிறான்.
வசதியோடு, பணத்தோடு, வாழ முடிகிறதே என்பதனால் பல பெண்கள் அவன் சொல்படி நடக்க ஆரம்பித்து விடுகிறார்கள் இந்த விதமான பெண்கள் எல்லோரையும் ஒரே இடத்தில் வைத்திருப்பதில்லை இவன். வெவ்வேறு வீடுகளில் இரண்டு பேர், மூன்று பேர் என்று வைத்து, போஷித்து, பிஸினஸ் பண்ணி, பணம் சேர்த்து விட்டான். இவனால் ஏமாற்றப்பட்ட இரண்டு பெண்கள் இந்தப் பிழைப்பு நடத்த மனம் இல்லாமல் ரிப்போர்ட் செய்திருக்கிறார்கள். பணக்கார வீட்டு இளைஞன் ஒருவனும் இவன்மீது குற்றம் சாட்டி யிருக்கிறான். அதனால், இவன் வசமாகச் சிக்கிக் கொண்டான். இவன் ஆதரவில் தொழில் நடத்திய பெண்களையும் ரவுண்டப் பண்ணி வருகிறோம் என்று அவர் அறிவித்தார்.
கிருஷ்ணன் அவருக்கு வந்தனம் கூறினார். "நாகரிக நகரங்களில் என்னென்னவோ நடைபெறுகின்றன என்று நான் நினைத்தது சரிதான்" என்று தன்னைத்தானே பாராட்டிக் கொண்டார்.
அவர் மூலம் விவரம் தெரிந்துகொண்ட சாந்தா "பாவம், அறியாப் பெண்ணுக என்ன செய்யும்? காண்டாமிருகம் மாதிரி இருந்துகொண்டு, இப்படி எல்லாம் பண்ணுகிற-வங்களை சுட்டுக் கொல்லணும். ஆமாம்" என்று சீற்றத்தோடு சொன்னாள்.
புதுக்குடியிருப்பின் மூன்று தெருக்களிலும் உள்ள மற்ற முப்பத்து நான்கு வீடுகளிலும் இந்த விஷயம் தான் பேசப் பட்டது. புதுக் குடியிருப்பு திடீர் கவனிப்புக்கும் பரபரப்புக்கும் இலக்காகும்படி உதவிய "ஸ்வப்னா" மீண்டும் அடைபட்ட கதவுடனும் பெரிய பூட்டோடும் காட்சி தரலாயிற்று.
("சிவாஜி 1965)
-----------------
41 பேரிழப்பு
”இந்த வருஷம் எப்படியும் ஊருக்குப் போய்விட வேண்டியது தான்" இப்படி பூவுலிங்கத்தின் மனம் தீர்மானம் நிறைவேற்றியது.
இவ்வாறு அது தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டது இதுதான் முதல் தடவையோ அல்லது மூன்றாவது தடவையோ அல்ல. முப்பதாயிரத்து ஓராவது தடவையாகவே இருக்கலாம்!
பூவுலிங்கம் பட்டணத்துக்கு வந்து முப்பது வருஷங்கள் ஓடிவிட்டன. அவர் வந்த நாளிலிருந்து "ஊருக்கு ஒரு தரமாவது போயிட்டு வரணும்" என்கிற ஆசையும் அவரது உள்ளத்தில் இடம் பெற்றுவிட்டது. அப்படி முப்பது வருஷ காலமாக அது வளர்ந்து வருகிறது.
வெறும் நினைப்பு, சாதாரண எண்ணம் என்ற நிலை மாறி, ஆசை ஏக்கமாகவும் தவிப்பாகவும், தணித்தாகப்பட வேண்டியதாகவும் பேருருவம் பெற்றுவிட்டது. இன்னும் அது வளர்ந்து வந்தது.
"திருநாளைப்போவார்" என்று சிறப்புப் பெயர் பெற்றிருந்த நந்தனாருக்காவது நாளைக்குப் போகலாம்…. தில்லைக்கு நாளை போய்விடலாம்" என்று ஒரு வாயிதா கூறப்பட்டு வந்தது. அவரும் அதில் நிச்சய நம்பிக்கை வைத்திருந்தார்.
பூவுலிங்கத்துக்கு அந்த விதமான நம்பிக்கைக்கே இடம் இருந்ததில்லை. அவரும் முப்பது வருஷ காலமாக, செயல் படுத்தப்படாத - செயல்படுவதற்கு வாய்ப்பு நிச்சயம் கிட்டும் என்ற நம்பிக்கைகூடப் பெறமுடியாத - அந்த எண்ணத்தை ஏக்கமாக வளர்த்து வந்தார். "இந்த வருஷம் எப்படியாவது ஊருக்குப்போய்விட வேண்டியதுதான். முப்பது வருஷத்துக்கு முந்திப் பார்த்தது. கோயிலும், பிள்ளையார் நந்தவனமும், தெப்பக்குளமும், அரசமரமும், ஆறும் அப்படியே கண்ணுக்குள் நிற்கின்றன. அவற்றை எல்லாம் திரும்பப் பார்க்க வேண்டும். அப்போது சின்னப்பயல்களாகத் திரிந்தவர்கள் இன்று எப்படி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளவேணும்!” இந்த விதமாக அவர் எண்ணாத நாள் கிடையாது.
பூவுலிங்கம் வெறும் பூவு ஆக, “எலேய் பூவு" "அடேய் பூவுப்பயலே!" என்று அதட்டுவோர் குரலுக்கு அஞ்சி ஒடுங்கிப் பணிவுடன் அருகே வரும் சின்னப் பயலாகத் திரிந்து கொண்டிருந்த காலத்திலேயே, ஒரு பெரிய மனிதர் பெரிய மனசு பண்ணி அவனை பட்டணத்துக்கு அழைத்துவந்து விட்டார். அவர் வீட்டில் எடுபிடி வேலைகள் செய்துகொண்டு, போட்டதைத் தின்று, பிள்ளைகளை எடுத்து வைத்து, "ஏய்!” என்று கூப்பிடும் குரலுக்கெல்லாம் "என்ன ஐயா!" எனக் கேட்டு பணிவிடை செய்து, இரவு பகலாக வீட்டில் நாய் மாதிரி காத்துக் கிடப்பதற்காகத் தான் ஊரின் பெரிய வீட்டுப் பெரிய ஐயா அந்தப் பயலைத் தம்முடன் அழைத்து வந்தார்.
பூவுப்பயலின் அப்பன்காரனும் ஆத்தாக்காரியும் "எசமான், இந்தப் பயல் இங்கே இருந்தால் வீணாக் கெட்டுச் சீரழிஞ்சு போவான். அவனை உங்களோடு கூட்டிக்கிட்டுப்போயி ஆளாக்கி விடுங்க!” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டதனாலே தான், சிறுகுளம் முதலாளி மகன் கைலாசம் பிள்ளை அவனை பட்டணத்துக்கு அழைத்து வந்தார். அப்போது அவனுக்குப் பத்து வயது.
சிறுகுளம் என்பது "சுத்தப் பட்டிக்காடு". பள்ளிக் கூடம் என்ற பேருக்கு திண்ணையில் ஒரு அண்ணாவி சில பிள்ளைகளுக்குப் பாடம் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார். அச்சிலரில் ஒருவன் ஆக விளங்கும் பேறு பூவுப் பயலுக்குக் கிடைத்த தில்லை.
அவன் தந்தை பலவேசம் பெரிய வீட்டில் வண்டிக்காரனாக வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்தான். “பயல் படிச்சு கலெக்டர் வேலைக்கா போகப் போறான்! இங்கே கிடந்து வயலில் உழைக்கணும், அல்லது ஆடு மாடு மேய்க்கப் போறான். அவனுக்கு என்னத்துக்கு படிப்பு?" என்று ஒரே அடியாக முடிவு செய்தது தான் "தந்தை மகனுக்கு ஆற்றிய உதவி ஆகும்!
பையன் ஆடு மேய்க்கப் போறேன் என்று ஊர் சுற்றுவது, வயல் காடுகளில் திரிவது, மரங்களின் மீது ஏறுவது, கிட்டிப்புள் விளையாடுவது போன்ற அலுவல்களை உற்சாகமாகச் செய்து வந்தான். அங்கேயே இருந்திருந்தால் அவன் உருப்படாமல் போவான் என்று அப்பன் கருதினான்.
”பட்டணத்துக்கு வந்து மட்டும் நான் என்ன உருப்பட்டு விட்டேன்? உருப்படக் கூடியவன் எங்கே இருந்தாலும் உருப்பட்டு விடுவான். உருப்படாமல் போற கழுதை எந்தச் சீமைக்குப் போனாலும் உருப்படாது தான்!" என்று பிற்காலத் தில் பூவுலிங்கம் அநேக தடவைகள் எண்ணியது உண்டு. இந்த அறிவு அவனுக்கு ஆதி நாட்களில் இவ்வாறு வேலை செய்தது இல்லை!
அந்தக் காலத்தில் அவன் அந்த "தரித்திரம் பிடித்த பட்டிக்காட்டை விட்டு வெளியேற வசதி கிட்டியதை பெரிய அதிர்ஷ்டம் என்றே கருதினான். "ஓட்டை உடைசல் நத்தம் புறம்போக்குப் பட்டிக்காடு" என மதிக்கப்பட்ட ஊரை விட்டு நாகரிகத்தின் சிகரமாகத் திகழ்ந்த பட்டணத்துக்கே போக முடிவது கிடைத்ததற்கு அரிய பாக்கியம் எதான் அவனை அறிந்திருந்த பலரும் எண்ணினார்கள்.
"சுரத்" இல்லாத சூழலிலிருந்து பரபரப்பு மிகுந்த பெரு நகரத்துக்குச் செல்வது அந்தப் பையனுக்கு அதிகமான உற்சாகத்தையே தந்தது. பட்டணத்துக்கு வந்து சேர்ந்ததும், சில தினங்கள் வரை அவனுக்கு ஆனந்தம் குறையாமல் தானிருந்தது. புதிய சூழ்நிலை, புதிய முகங்கள், புதிய அலுவல்கள் - எல்லாம் மகிழ்ச்சி அளித்தன.
ஆனால், நாளாக ஆக அந்த வாழ்க்கை முறையும் பூவுலிங்கத்துக்கு அலுப்பு தருவதாகவே தோன்றியது. இப்படி வீட்டுக்குள்ளேயே அடைப்பட்டுக் கிடந்து, ஓயாது வேலை செய்துகொண்டிருப்பதற்கு பட்டணத்தில் இருப்பானேன்? பட்டிக்காட்டிலாவது இஷ்டம் போல் சுற்றித்திரிய முடிந்தது. நம் ஊருப் பக்கத்தில் டவுணில் பலசரக்குக் கடைகளில் சில பையன்கள் வேலை செய்கிறார்கள். காலை ஏழு மணி முதல் இரவு பத்து மணிமுடிய கடையிலேயே அடைபட்டுக் கிடக்கிற அவர்கள் டவுண் பூராவையும் சுற்றிப் பார்த்தது கூடக் கடையாது. நான் பட்டணத்தில் பெரிய வீட்டில் வேலைக்கு இருக்கிறேன் என்று பேர்தான் பெரிசு. வெளியே போய் பட்டணத்தைப் பார்க்கக் கூட நேரமும் இல்லை; வசதியும் இல்லை. இங்கே இப்படி வந்து ஜெயில் வாழ்க்கை அனுபவிப்பதைவிட, நம்ம பக்கத்து டவுணில் பலசரக்குக் கடையில் வேலைக்குச் சேர்ந்திருக்கலாம்" என்று அவன் மனக்கசப்புடன் எண்ணலானான்.
பிறகு நாளடைவில் அவன் சுற்றித் திரிந்து வேடிக்கை பார்ப்பதற்கு நேரம் தேடிக்கொண்டான். உண்பதற்கு உறங்கு வதற்கும் இடவசதி இருந்தால், வேலை எதுவும் செய்யாமல் சும்மா சுற்றி வேடிக்கை பார்த்துப் பொழுது போக்குவதற்கு மிகவும் வசதியான இடம் இந்தப் பட்டணம் என்று அவனுக்குத் தோன்றியது.
பட்டணத்துக்கு வந்துவிட்ட பையனை அவன் தாயோ தகப்பனோ ஊருக்குக் கூப்பிடவே இல்லை. ஒரு பிள்ளைக்குச் சோறு போட்டு, துணிமணிகள் எடுத்துக் கொடுத்து வளர்க்க வேண்டிய பொறுப்பு இல்லாமல் தொலைந்ததே என்றுதான் அவர்கள் சந்தோஷப்பட்டார்கள். பொருளாதார நிலைமை உணர்வுகளையும் உறவுகளையும்விட வலிமை மிக்கதுதான்!
ஆரம்ப காலத்தில் "ஊருக்குப் போகணும்" எனும் வெறும் நினைப்பு தீபாவளி சமயத்திலும் பொங்கல் திருநாளின் போதும் தான் பூவுலிங்கத்துக்கு தீவிரமாக வேலை செய்தது. "இப்போதெல்லாம் ஊரில் இருக்கணும். எவ்வளவு ஜோராக இருக்கும் தெரியுமா!" என்று அவன் தன் நெஞ்சோடு புலம்பிக்கொள்வது வழக்கம்.
கைலாசம் பிளளையோ, அவரது குடும்பத்தினரோ அடிக்கடி சொந்த ஊருக்குப் போகும் சுபாவம் பெற்றிருக்கவில்லை. அபூர்வமாக எப்போதாவது, நாலைந்து வருஷங்களுக்கு ஒரு தடவை, போய்வருவது வழக்கம். பிள்ளை அவர்கள் மாத்திரம் ஊர் பக்கம் போகிறபோது, "நீ இங்கேயே இவர்களோடு இரு. உன்னை ஊரிலே யாரு தேடுறாங்க?" என்று பூவுலிங்கத்தைத் தட்டிக் கழித்துவிடுவார். குடும்பத்தினர் அனைவரும் புறப்படும் சமயத்தில், "ஏண்டா, நீயும் இவங்களோடு ஊருக்குப் போய் விட்டால் நான் என்னடா செய்வேன்? நீ ஊருக்குப் போயி என்ன பண்ணப்போறே? சும்மா இங்கேயே இரு!" என்று உத்திரவு போடுவார்.
எப்படியோ தடங்கல்கள் ஏற்பட்டுக்கொண்டேயிருந்தன அவனுக்கு பூவுலிங்கத்தின் தந்தை பலவேசம், மகன் பட்டணத்துக்குப் போன மறு வருஷமே மண்டையைப் போட்டுவிட்டான். அவன் காரியம் எல்லாம் நடந்து முடிந்த பிறகுதான் பட்டணத்தில் இருந்தவர்களுக்கு விஷயம் தெரிந்தது. பூவுப்பயலுக்கு அண்ணன்களும் தம்பிகளும் நிறைய இருந்ததால், அப்பனின் இறுதி யாத்திரைக்கு வழி அனுப்பி வைக்க அவன் வந்தே ஆகவேண்டும் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை.
இரண்டொரு வருஷங்களில் தாயும் சிவபதம் சேர்ந்தாள். இந்த மகனின் துணை அப்பொழுதும் எதிர்பார்க்கப்படவில்லை.
“நான் ஊரைவிட்டு வந்து நாலைந்து வருஷங்கள் ஆச்சுது. அங்கே போகணுமின்னு ஆசையாக இருக்கு. ஒருதடவை போயிட்டு வாறேனே!" என்று அவன் பிள்ளைவாளிடம் கெஞ்சினான்.
"நீ என்னடா சுத்தப் பைத்தியக்காரனா இருக்கிறே? இது ஊரு இல்லாமல் காடா? அந்தப் பாடாவதிப்பய ஊரிலே உனக்கு என்ன வச்சிருக்குது? இங்கே கிடைக்கிற சாப்பாட்டை சாப்பிட் டுக்கொண்டு பேசாமல் கிடப்பியா? ஊரு ஊருன்னு தொண தொணக்கிறியே!" என்று கைலாசம் பிள்ளை உபதேசித்தார்.
அவன் வருகையை அவனுடைய அண்ணன்மாரும் விரும்பவில்லை. “பூவு எசமான் கண்காணிப்பில் இருக்கிற படியே இருக்கட்டும். இங்கே இப்போது ரொம்பவும் கஷ்ட தசை. அவன் நல்லபடியாக வாழ கடவுள் வழிகாட்டிவிட்டதற்கு நாங்கள் சந்தோஷப்படுகிறோம்" என்று பெரிய அண்ணன் எழுதி அறிவித்து விட்டான்.
ஆகவே, பூவுலிங்கம் தனது எண்ணத்தைத் தன் உள்ளத்தி லேயே வைத்து, தானாகவே புழுங்கிக் குமைய வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது.
அவன் கையில் பணம் சேர வழி ஏது? பிள்ளை வீட்டிலேயே அவன் வளர்ப்புப் பிள்ளை மாதிரி வாழ்ந்தான். சம்பளம் என்று எதுவும் அவன் கையில் தரப்படவில்லை. எனினும், அவன் குறை கூறுவதற்கு வழி இல்லாமல் அவனது தேவைகள் எல்லாம் சரிவர பூர்த்தி செய்யப்பட்டு வந்தன.
இந்த விதமாகப் பத்து வருஷங்கள் ஓடிவிட்டன. திடீரென்று கைலாசம் பிள்ளை செத்துப்போனார். அவரும் மனிதப்பிறவி தானே!
கைலாசம் பிள்ளையின் மனைவியும் மகளும் பட்டணத்திலேயே தங்கிவிட முடிவு செய்தார்கள். "பூவு, நீ வேண்டுமானால் ஊருக்குப்போ. செலவுக்குக் கொஞ்சம் பணம் தாறேன்" என்று பெரிய அம்மாள் சொன்னாள்.
ஒரே அடியாக ஊருக்குப் போய் என்ன செய்வது என்பது பெரும் பிரச்னையாக அவனை மிரட்டியதால், அந்த வாய்ப்பை அவன் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
பூவுலிங்கம் வாழ்க்கையிலும் மேடு பள்ளங்கள், திருப்பங்கள், வளர்ச்சிகள், தேக்கங்கள் எல்லாம் ஏற்பட்டன. அவன் வேறொருவர் வீட்டில் வேலையில் சேர்ந்தது. அந்த இடம் பிடிக்காமல் வெளியேறியது, கடை கடையாக வேலைக்கு அமர்ந்து காலம் கழிக்க முயன்றது எல்லாம் அவனு டைய வாழ்க்கைப் பாதையில் குறுக்கிட்ட மேடு பள்ளங்கள் தான். "திருப்பம்" என்று, அவனது இருபத்தைந்தாவது வயசில் நிகழ்ந்த திருமணத்தைச் சொல்லலாம்.
சிறு அளவில் வியாபாரம் செய்து வந்த ஒரு பெரியவர் தனது மகளை அவனுக்குக் கல்யாணம் செய்து கொடுத்தார். அதுமுதல் பூவுலிங்கம் தனி அந்தஸ்தையும் பெரிய மனிதத் தன்மையை யும் அடைய வசதிகிட்டியது. குடும்பத் தலைவர், கடை முதலாளி என்ற தகுதிகள் தாமாகவே வந்து சேர்ந்தன.
குடும்பமும் பொறுப்புகளும் பெருகப் பெருக, பூவுலிங்கத் தின் தனிப்பட்ட ஆசை - சொந்த ஊரை ஒரு தடவையாவது பார்த்துவிட்டு வரவேண்டும் என்ற நினைப்பு - அடிவானம் மாதிரி எட்ட எட்டப் போய்க் கொண்டே இருந்தது.
மனைவி வீடு "தெற்கத்திச் சீமையில் எங்காவது இருந்திருந் தாலாவது அடிக்கடி அங்கே போக வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கும். அதற்கும் இடம் இல்லாமல் போய்விட்டது.
மனித மனம் விசித்திரமானதுதான். கிடைக்கவில்லை - சமீபத்தில் கிடைக்கவும் கிடைக்காது - என்ற நிலையில் உள்ள விஷயங்களை வைத்துக்கொண்டே அது சதா தறி அடிக்கிறது. எண்ணப் பின்னல்களையும் கனவு நெசவுகளையும் செய்து, அமைதியைக் கெடுக்கிறது.
பெரிய மனிதனாகிவிட்ட பூவுலிங்கத்துக்கு, தனது சிறு பிராயச் சூழ்நிலை - அந்தக் காலத்தில் வறண்டதாய், அலுப்புத் தருவதாய் தோன்றிக்கொண்டிருந்ததுதான் - கனவின் இனிமைகளும் கற்பனைப் பசுமைகளும் நினைவின் மினு மினுப்பும் கலந்த அற்புத உலகமாக நிழலிட்டது. சிறு பிள்ளைகளோடு விளையாடிக் களித்த இடங்கள் பலவும் திடீர் நினைவுகளாய் குமிழ் தெறிக்கும் அடிக்கடி.
தென்னந்தோப்புகள், பெரிய வீட்டின் வாசலில் இருபுறமும் ஓங்கி வளர்ந்து நின்ற மரமல்லிகை விருட்சங்கள் பூத்துக் கொட்டும் மணம் நிறைந்த பூக்கள், மதகுப் பாலம், அங்கு கொட்டுகிற சிறு அருவி நீர் - இப்படி எத்தனை எத்தனையோ சிறுசிறு இனிமைகள் நெஞ்சில் தைக்கும் நினைவுகளாய் தலையெடுத்தன.
பூவுலிங்கத்தின் கண்முன்னே எவ்வளவோ மாறுதல்களும் அழிவுகளும் வளர்ச்சிகளும் நிகழ்ந்துகொண்டிருந்தன.
வெள்ளைக்காரன் காலத்துப் பட்டணத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையும் புது வருஷப் பிறப்பும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டன. டிசம்பர் ஜனவரி மாதங்களில் இந்நகரம் புதுப் பொலிவும் தனி மிடுக்கும், களி வெறியும் குதூகலமும் கும்மாளியும் பெற்று விளங்கியதை அவர் பார்த்தார்.
யுத்த காலத்தில் நகரமே காலியாகி விட்டது போல், ரொம்பப்பேர் இங்கிருந்து ஓடிப்போனதையும், பட்டணம் இருள் பிரதேசமாய், பயம் மிகுந்த இடமாய், பட்டாளத்துக் காரர்கள் நடை போடும் சூழலாய் மாறியதையும் அவர் கண்டார்.
விடுதலைப் போராட்ட நிகழ்ச்சிகளையும், சுதந்திரம் பெற்ற பிறகு தோன்றிய மாறுதல்களையும் அவர் கவனித்தார்.
ஒவ்வொரு முக்கிய நிகழ்ச்சியும் பளிச்சென்றோ, மறைமுக மாகவோ தனது பாதிப்புகளை இந்நகர்மீது அழுத்திச் சென்றதை அவர் உணர்ந்தார்.
காலம் நிகழ்த்திய மாற்றங்கள்தான் எத்தனை எத்தனை .
முக்கிய ரஸ்தாக்களில் ங்ணங்ண ஒலி எழுப்பியவாறே ஓடிக்கொண்டிருந்த டிராம் வண்டிகள் இல்லாதொழிந்தன. பஸ்கள், மோட்டார்கள், சைக்கிள்களின் போக்குவரத்து அதிகரித் துக்கொண்டே போயின. யுத்த காலத்தில் ஜன நெருக்கடி குறைந்திருந்த நிலை மாறி, ஜனப் பெருக்கமும் நெருக்கடியும் அளவில் அதிகரித்து வந்தது.
அழகான சூழ்நிலைகள் பல சிதைவுற்றன. பெரிது பெரிதாக வளர்ந்து நின்ற மரங்கள் பல வெட்டப்பட்டு, குளுமையோடு இருந்த இடங்கள் வெறிச்சோடி விளங்கின. கட்டிடங்கள் புதுசு புதுசாக எழுந்தன. நாகரிக மோஸ்தரில் கட்டிட உருவங்களும் அமைப்புகளும் மாறி விசித்திரக் காட்சிகளாக மொட்டை மொழுக்கென்று கண்களை உறுத்தலாயின.
எப்படியோ, பல வகைகளிலும் பட்டணத்தின் வெளித் தோற்றம் பெரும் மாற்றங்களைப் பெற்றுக் கொண்டிருந்தது. எங்கெங்கு நோக்கினும் ஏகப்பட்ட கடைகள். பிரகாசம் மிகுந்த வெளிச்சம். ஜனக்கூட்டம். பளபளப்பு, பகட்டு, வர்ணக் கலவைகள் ...
இவற்றை எல்லாம் காணக் காண, பூவுலிங்கத்தின் மனம் சிறுகுளம் என்கிற ஊரைப்பற்றியே எண்ணியது. அந்த ஊரும், வேகமாக இல்லாது போயினும், சிறிது சிறிதாகவேணும் மாறுதல்களை ஏற்று, வளர்ந்திருக்கும். காலத்தின் கைவண்ணம் அச்சிற்றுாருக்கும் அதிகச் சோபை சேர்த்திருக்கும் என்று அவர் நினைத்தார்.
ஊர்கள் தோறும் மின்சார விளக்குகள் பரவியதையும், ரேடியோ புகுந்துவிட்டதையும், பஸ் போக்குவரத்து மூலைக்கு மூலை ஏற்பட்டிருப்பதையும் பத்திரிகைச் செய்திகளாகவும், பிரயாணம் போய் வருவோரின் பேச்சுகள் மூலமும் கேட்டறிந்த
போதெல்லாம், "நம்ம ஊருக்கும் இவை எல்லாம் வந்திருக்கும். நம் ஊர் இப்போது பிரமாதமாக இருக்கும்" என்று எண்ணா திருக்க இயலவில்லை அவரால்.
அவர் வருஷம் தோறும் எவ்வளவோ செலவுகள் செய்தார். குடும்பம் என்றால் செலவுகளும் வளர்ந்து பெருகி எல்லை காண முடியாமல் தானே இருக்கும்? அதிலும் அவர் மனைவி ஓயாத சீக்காளியாக வேறு வந்து வாய்த்தாள். அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளும் செலவு இனங்களைப் பெருக்கக்கூடிய சாதனங் களாகவே அமைந்தன. இதனால் எல்லாம் பூவுலிங்கத்தின் தனிப்பட்ட ஆசை தீராத தவிப்பாகவே வளர்ந்து வந்தது.
தூர தொலைவில் உள்ள ஊர்களில் வசிப்பவர்கள பலர் திருப்பதிக்குப் போக வேண்டும், காசிக்கு யாத்திரை போக வேணும் என்று தீர்மானித்துவிட்டு, பிறகு "நேர்த்திக் கடனை" தீர்ப்பதற்குப் போகமுடியாமல் வருஷா வருஷம் எண்ணியும் பேசியும் காலத்தை ஏலத்தில் விட்டு ஏங்கியிருப்பது போல, பூவுலிங்கமும் “சொந்த ஊருக்குப் போய் சும்மா ஒரு தரம் பார்த்துவிட்டு வரலாம்" என்கிற ஏக்கத்தை வளர்த்துப் பொழுது போக்கி வந்தார்.
இப்படியே விட்டுவைத்தால், முப்பது வருஷங்கள் ஓடி மறைந்த போலவே, பாக்கியுள்ள காலமும் பறந்துவிடும்; தனது அந்தரங்க ஆசையை நிறை வேற்றிக்கொள்ளாமலே செத்துப் போக நேரிடலாம் என்ற அச்சமும் அவருக்கு உண்டாயிற்று. சிறுகுளம் என்ற ஊர் மனமோகன சொர்க்கபுரியாய் மங்கி நின்று அவரை "வா வா" என ஆசை காட்டி அழைத்தது. அதுவே பித்தாய், பேயாய் பிடித்து ஆட்டியது.
இனியும் தள்ளிப்போட்டு வந்தால் மன நிம்மதி குலைந்து, பைத்தியமே பிடித்துவிடும் என்று அவருக்குப்பட்டது. அந்த நிலை ஏற்படாமல் இருப்பதற்காக, "சட்டியைத் தூக்கிக் குட்டியில் போட்டு, குட்டியைத் தூக்கி சட்டியில் போட்டு", ஏதேதோ வித்தைகள் செய்து, பொருளாதாரத்தை சரிப்படுத்திக் கொண்டு, ஒரு நாள் பிரயாணத்தை மேற்கொண்டார்.
பிரயாணம் முழுவதிலும் அவருக்கு இருந்த பரபரப்பும் உணர்வுக் கிளர்ச்சியும் அளவிட முடியாதவை. நாகரிக நகரத்தின் மகத்தான காட்சிகளும், நகரவாசிகளின் கவலையில்லாத தோற்றமும் பகட்டும் அவருக்கு அவருடைய சிற்றூரையும் அங்குள்ள மக்களையும் கிட்டத்தட்ட அதே ரகங்களும் தரங்களும் கொண்ட நிலைகளில் சித்திரம் தீட்டத் தூண்டுகோல்களாய் விளங்கின.
ஒடும் ரயில் அறிமுகம் செய்து காட்டிய நிலையங்களும், பாதை ஒர ஊர்களின் பெருமையும், புதிய கட்டிடங்களின், தொழிற்கூடங்களின் தன்மையும் அவரின் ஊர் பற்றிய கற்பனை நிலைக்கு உரமிட்டன.
பட்டணத்திலிருந்து நானூற்றுமுப்பது மைல்கள் கடந்துதான் அவருடைய ஊர் இருந்தது. முந்நூறு மைல்கள்வரை காடும் செடியும், பசுமையும் பயிருமாக வளத்தின் பொலிவோடு காட்சி தந்த சூழ்நிலை பிறகு வறண்ட பிரதேசமாய் பார்வையில் படலாயிற்று. மழை இல்லவே இல்லை; அதனால் வறட்சி படுமோசமாக இருந்தது. ஆங்காங்கு வந்து சேர்ந்த மக்களும், கண்ணில் தென்பட்டவர்களும், உவகை எழுப்பும் உருவ மினுக்கு உடையவர்களாக இல்லை.
நானூறாவது மைலில் உள்ள முக்கிய ஜங்ஷனில் ரயிலை விட்டு இறங்கிய பூவுலிங்கம் பட்டணத்தின் மிகச் சிறு அளவேயான ஒரு குட்டிப் பகுதியைப் பார்ப்பது போலவே உணர்ந்தார். கும்பலும், வேலையில்லாமல் சுற்றி அலைவோரும். பஸ்களும், போக்குவரத்து நெரிசலும் இந்த விதமான பிரமையைத் தந்தன அவருக்கு.
பஸ் நிற்கும் இடத்திலும், பஸ்களிலும் கட்டத்துக்குக் குறைவு இல்லைதான். எப்படியோ பஸ் பிடித்து, முப்பது மைல் பிரயாணம் செய்து, நகரமும் இல்லாத பட்டிக்காடும் அல்லாத இரண்டும் கெட்டான் ஊர் ஒன்றில் இறங்கி மூன்று மணி நேரம் காத்துக்கிடந்து, வேறொரு பஸ் வந்த பிறகு ஏறி, சிறுகுளம் என்கிற "லட்சியக் கனவு" ஊரை எட்டிப்பிடித்தார் பூவுலிங்கம்.
பிரயாணம் செய்யச் செய்ய வறட்சியும், வறுமையின் சின்னங்களும், மனித உருவங்களின் விகாரத் தோற்றங்களும், பணக் கஷ்டத்தின் கோரப் பிரதி பலிப்புகளும் பளிச்செனப் பட்டன.இருப்பினும், தனது எண்ணத்திலும் கனவிலும் நிலையாய் கண்டு மகிழ்ந்த சிறுகுளம் இனிமை மிகுந்த குளுகுளு ஊராகவே இருக்கும் என்றுதான் பூவுலிங்கத்தின் மனம் நினைத்தது.
பஸ்ஸை விட்டுக் கீழே இறங்கியதுமே, அவர் மனச் சித்திரத்தில் பெரும் வெடிப்பு ஏற்பட்டுவிட்டது. அவர் தெருத் தெருவாக நடக்கத் தொடங்கியதும், அவருடைய உள்ளத்திலே நித்திய செளந்தர்யத்தோடு நிலை பெற்றிருந்த இளம் பருவச் சூழ்நிலை பற்றிய ரம்மியமான சித்திரம் தகர்ந்து, உருக் குலைந்து விழுந்து, சிதறிச் சின்னா பின்னமாகிப் பாழ்பட்டு மக்கியது.
பூவுலிங்கத்தின் உள்ளத்தில் சிரஞ்சீவித் தன்மையோடு இனிமையாய், எழிலாய் பசுமையாய், வளமாய், அருமையாய், ஆனந்த உறைவிடமாய் கொலுவிருந்த சிறுகுளத்துக்கும், கண் முன்னே காட்சி அளித்த ஊருக்கும் எவ்வளவுக்கு எவ்வளவு வித்தியாசம்!
தெருக்கள் குறுகி, புழுதிமயமாய், அழுக்கும் அசிங்கமுமாய் கண்களை உறுத்தின. ஒவ்வொரு தெருவிலும் அநேக வீடுகள் இடிந்து விழுந்து, குட்டிச் சுவரும் கட்டை மண்ணுமாய் காட்சி தந்தன. வீடு என்ற பெயரோடு தலைதூக்கி நின்ற பல குடிசைகள் "இப்பவோ பின்னையோ இன்னும் சித்தெ நேரத்திலோ" விழுந்துவிடுவோம் என்று எச்சரிக்கை கொடுத்தவாறு உயிரைப் பிடித்துக்கொண்டு நின்றன. அநேக வீடுகளில், ஆட்கள் பிழைப்புக்கு வழிகாண நகரங்களைத் தேடிச் சென்றுவிட்டதால், பூட்டுகள் தொங்கின; கறையான் தன் வேலையை வெகு தீவிரமாகச் செய்து கொண்டிருந்தது.
ஊர் ஒரத்தில் முன்பு பூவரச மரங்களும் நந்தவனமுமாக அழகுடன் காட்சி தந்த தனித் தெரு இப்போது அடர்த்தியான குட்டை முட்செடி இன நீர்க் கருவேல்" புதர் புதராக மண்டிக் கிடக்கும் பாழ்பட்ட பகுதியாக விளங்கியது. கோயில்கள்கூட வசீகரம் குன்றியே காணப்பட்டன. ஊரின் எல்லையில் திடுமென ஓசை எழச் சிறு அருவிகள் விழும் மதகுகளோடு இருந்த பாலம் இப்போது பலமான சுவரமைப்புகளோடு, இறுக மூடிய பலகைகளோடு, புதுமைத் தோற்றம் பெற்றிருந்தது. மொத்தத்தில் ஊரே பலரகமான பொருள்களும் தாறுமாறாகக் குவிந்து கிடக்கும் குப்பைமேடு மாதிரித் தோற்றம் காட்டியது.
அங்கு வசித்த ஆட்களில் அவருக்குத் தெரிந்த - அவரை இனம் கண்டுகொள்ளக் கூடிய - நபர் யாருமே இல்லை. பலரும் ஏதோ சாயைகள் போலும், அருவங்கள் போலும், எலும்பு உருவங்கள் போலும் நடமாடிக் கொண்டிருந்தார்கள். உணர்ச்சித் துடிப்பு, உயிரோட்டம், உவகைத் துள்ளல், திருப்தி முதலியன பெற்ற மனிதர்களாகக் காணப்படவில்லை அவர்கள். வாழ்க்கை எனும் கொடிய இயந்திரம் கசக்கிப் பிழிந்து விட்ட சக்கைகளாய், சாரமற்ற முறையில் நாட்களைக் கழித்துக்கொண் டிருக்கும் நிழல்களாய் திரிந்தார்கள். வாழ்க்கையே கோரமான தண்டனை ஆகிவிட, மரணம் எனும் விடுதலையை அடைவதற்காகக் காத்திருக்கும் குற்றவாளிகள் போல், மண்ணைப் பார்த்தபடி தலை குனிந்து நடந்த உருவங்களையே அவர் கண்டார்.
இரவு வந்ததும், மின்சார விளக்குகள் எரித்தன. வெறுமையை, வறுமையை, பாழ்பட்ட சூழலை வெளிச்சமிட்டுக் காட்டுவதற்கே அவை உதவின. ஏழரை மணிக்கே ஊர் அடங்கிவிட்டது. எட்டரை மணிக்கெல்லாம் விளக்குகள் அணைக்கப்பட்டு, ஊரே சுடுகாட்டு அமைதி பெற்ற இடமாக இருளில் மூழ்கி விட்டது.
பூவுலிங்கம் பட்டணத்தை, அதன் பரபரப்பை, வெளிச்சத்தை, மினுமினுப்பை, பகட்டை, படாடோபத்தை எல்லாம் எண்ணினார். இந்த வேளையில் நாகரிகப் பெருநகரம் எப்படிக் கோலாகலமாக இருக்கும் என்று நினைத்துப் பெருமூச்சு எறிந்தார்.
பட்டணத்தின் போலித்தனமான வாழ்க்கை அவருக்குப் பிடித்திருக்கவில்லை. அதேபோல், இருண்ட கிராமத்தின் சமாதிநிலை வாழ்வும் அவருக்கு உகந்திருக்கவில்லை.
பட்டணத்தில் - நாகரிக நகரங்களில் - ஆத்மா இல்லாத வாழ்க்கைதான் கூத்தடிக்கிறது. ஆத்மா மறக்கப்படுகிறது, அமுக்கி அழுத்தப்பெறுகிறது, சித்திரவதை செய்யப்பட்டு வருகிறது என்பது பூவுலிங்கத்தின் அனுபவம்.
அவருடைய நினைவிலும் கனவிலும் மோகனமாகக் கொலுவிருந்த சிறுகுளம் கிராமம் மனிதனுக்கு மாண்பு தரும் ஆத்மாவை கெளரவிப்பதாக - ஆத்ம ஒளி பெற்றதாக - விளங்கும் என எண்ணியிருந்தார். அங்கு ஆத்மா வறண்ட வெறுமையைக் கண்டதும் அவர் நெஞ்சில் வேதனை ஏற்பட்டது. அவருடைய ஏமாற்றம் கொடியதாய், ஈடு செய்ய முடியாததாய், அவரை வருத்தியது. ஏதோ பேரிழப்பை ஏற்க நேர்ந்தது போல் அவர் சோகம் அடைந்தார்.
இந்த ஊர் இப்படி மாறியிருக்கும் என்று தெரிய வழி இருந்திருக்குமானால் நான் இங்கு வந்திருக்கவே மாட்டேன். இந்த ஊருக்கு வந்ததனால், இதன் உண்மை நிலையை அறிய நேர்ந்த துக்கம் வேறு. என் மனசில் பதிந்திருந்த பசுமைச் சித்திரம் சிதைந்து விட்ட நஷ்டம் வேறு!" என்று அவர் எண்ணினார்.
சிறுகுளத்தின் நிகழ்கால நிலையை நேரில் பார்க்காமல் இருந்தாலாவாது, மனம் பழைய அடிப்படையை வைத்து இனிய வேலைப்பாடுகள் செய்துகொண்டிருக்கும் அல்லவா? தனது கனவை, கற்பனையை தானே கொன்றுவிட்டதாக அவர் வருத்தப்படலானார்.
சிதைந்து சின்னாபின்னமாகிவிட்ட சிறு பிராய நினைவுகளின் இடிபாடுகள் மத்தியில் அழுகுணிச் சித்தராய் வெகுநேரம் நிற்கவும் திரியவும் அவர் உள்ளம் இடம் தரவில்லை. ஆகவே பூவுலிங்கம் உடனடியாக திரும்பும் பயணத்தைத் தொடங்கி விட்டார். இப்போது அவர் உள்ளத்தில் உவகை இல்லை, உணர்ச்சித் துடிப்பும் தவிப்பும் இல்லை, ஆசைப் படபடப்பு இல்லை, அவசரப் பரபரப்பும் இல்லை. தனக்கு மிகவும் நெருங்கிய ஒருவரை அல்லது ஒன்றை, பறிகொடுத்துவிட்டு, ஆற்ற முடியாத துயரத்தோடு திரும்புகிற ஒரு மனிதனின் வேதனைச் சுமைதான் அவர் உள்ளத்தில் கனத்தது. . . . . .
(”எழுத்தாளன்”, 1965)
---------------
கருத்துகள்
கருத்துரையிடுக