குறள் விடு தூது
பொது அறிவு
Backகுறள் விடு தூது
ஆ.வேலு
Contents
குறள் விடு தூது
முன்னுரை
வணக்கம்
1. தெய்வச்சிறப்பு
2. வான் சிறப்பு
3. நீத்தார் பெருமை
4.அறத்தின் சிறப்பு
5. இல்வாழ்க்கை
6. வாழ்க்கைத் துணைநலம்
7. மக்கட்பேறு
8. அன்புடைமை
9. விருந்தோம்பல்
10. செய்நன்றி அறிதல்
11. நடுவு நிலைமை
12. அடக்கம் உடைமை
13. ஒழுக்கம் உடைமை
14. பிறன் இல் விழையாமை
15. இனியவை கூறல்
16. பொறை உடைமை
17. அழுக்காறாமை
18. வெஃகாமை
19. புறங்கூறாமை
20. பயனில சொல்லாமை
21. தீவினை அச்சம்
22. ஒப்புரவு அறிதல்
23. ஈகை
24. புகழ்
25. அருளுடைமை
26. புலால் மறுத்தல்
27. தவம்
28. கூடா ஒழுக்கம்
29. கள்ளாமை
30. வாய்மை
31. வெகுளாமை
32. இன்னா செய்யாமை
33. கொல்லாமை
34. நிலையாமை
35. துறவு
36. மெய் உணர்தல்
37. அவா அறுத்தல்
38. ஊழ்
39. இறைமாட்சி
40. கல்வி
41. கல்லாமை
42. கேள்வி
43. அறிவுடைமை
44. குற்றம் கடிதல்
45. பெரியாரைத் துணைக் கோடல்
46. சிற்றினம் சேராமை
47. தெரிந்து செயல்வகை
48. வலியறிதல்
49. காலமறிதல்
50. இடனறிதல்
51. தெரிந்து தெளிதல்
52. தெரிந்து வினையாடல்
53. சுற்றம் தழால்
54. பொச்சாவாமை
55. செங்கோன்மை
56. கொடுங்கோன்மை
57. வெருவந்த செய்யாமை
58. கண்ணோட்டம்
59. ஒற்றாடல்
60. ஊக்கம் உடைமை
61. மடியின்மை
62. ஆள்வினை உடைமை
63. இடுக்கண் அழியாமை
64. அமைச்சு
65. சொல்வன்மை
66. வினைத்தூய்மை
67. வினைத்திட்பம்
68. வினை செயல்வகை
69. தூது
70. மன்னரைச் சேர்ந்தொழுகல்
71. குறிப்பறிதல்
72. அவை அறிதல்
73. அவை அஞ்சல்
74. நாடு
75. அரண்
76. பொருள் செயல்வகை
77. படைமாட்சி
78. படைச்செருக்கு
79. நட்பியல்
80. நட்பு ஆராய்தல்
81. பழமை
82. தீநட்பு
83. கூடா நட்பு
84. பேதைமை
85. புல்லறிவாண்மை
86. இகல்
87. பகைமாட்சி
88. பகைத் திறம் தெரிதல்
89. உட்பகை
90. பெரியாரைப் பிழையாமை
91. பெண் வழிச்சேரல்
92. வரைவின் மகளிர்
93. கள்ளுண்ணாமை
94. சூது
95. மருந்து
96. குடிமை
98. பெருமை
99. சான்றாண்மை
100. பண்புடைமை
101. நன்றியில் செல்வம்
102. நாணுடைமை
103. குடிசெயல் வகை
104. உழவு
105. நல்குரவு
107. இரவச்சம்
108. கயமை
109. தகை அணங்குறுத்தல்
110. குறிப்பறிதல்
111. புணர்ச்சி மகிழ்தல்
112. நலம் புணைந்துரைத்தல்
113. காதல் சிறப்புரைத்தல்
114. நாணுத்துறவு உரைத்தல்
115. அலர் அறிவுறுத்தல்
116. பிரிவு ஆற்றாமை
117. படர் மெலிந்திரங்கல்
118. கண்விதுப்பழிதல்
119. பசப்புறு பருவரல்
120. தனிப்படர்மிகுதி
121. நினைந்தவர் புலம்பல்
122. கனவு நிலை உரைத்தல்
123. பொழுது கண்டு இரங்கல்
124. உறுப்பு நலனழிதல்
125. நெஞ்சொடு கிளத்தல்
126. நிறை அழிதல்
127. அவர்வையின் விதும்பல்
128. குறிப்பு அறிவுறுத்தல்
129. புணர்ச்சி விதும்பல்
130. நெஞ்சொடு புலத்தல்
131. புலவி
132. புலவி நுணுக்கம்
133. ஊடல் உவகை
ஆசிரியர் பற்றி
Free Tamil Ebooks - எங்களைப் பற்றி
குறள் விடு தூது
ஆ . வேலு என்ற வேற்கவிராயர்
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
Creative Commons Attribution-ShareAlike 4.0 International License
http://creativecommons.org/licenses/by-sa/4.0/deed.en_US
வெளியீடு : http://FreeTamilEbooks.com
முன்னுரை
உலகப் பொதுமறை என எல்லாராலும் போற்றப்படுவது திருக்குறள் நூல் . இதை எழுதியவர் திருவள்ளுவர் ஆவார் . இவரது காலம் கி . மு . முதலாம் நூற்றாண்டின் முற்பகுதியாகும் . முற்காலத்தில் வாழ்ந்த பெரும்புலவர்கள் பத்துப்பேர் , இந்நூலுக்கு நன்றாகவே உரை எழுதியுள்ளார்கள் . இருந்தும் , இக்காலத்தில் பல தமிழறிஞர்கள் திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார்கள் . அவர்களில் சிலர் , முந்தைய உரையை மறுத்தும் திரித்தும் எழுதியுள்ளார்கள் .
ஆனால் நான் , ஒன்றேமுக்கால் அடிகளில் உள்ள குறட்பாக்களுக்கு , இரண்டியில் வள்ளுவரின் கருத்துக்குச் சிறிதும் மாறுபடாமல் , சந்தப் பாடல்களாக எழுதியுள்ளேன் . இதனுடைய சந்தம் நாட்டுப் புறத்தாலாட்டுப் பாடல் இசையாகும் .
எடுத்துக்காட்டு
கண்ணேஎன் கண்மணியே கனகமணி பொற்சரமே
பொன்னே நவமணியே பொற்பாவாய் கண்ணுறங்கு
இவ்வாறு குறள்கூறும் கருத்துப்பழங்களை அள்ளிக்கொள்ளும் வகையில் மிக எளிமையாக எல்லாரும் புரிந்துகொள்ளும் விதத்தில் எழுதியுள்ளேன் .
திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களிலும் உள்ள குறட்பாக்களின் கருத்துப் பழங்களைத் திரட்டி , சாறாகப் பிழிந்து சர்க்கரையும் கூட்டித் தித்திக்கும் தமிழ் அமுதமாகப் படைத்துள்ளேன் .
“எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு“
இது வள்ளுவர் மொழியாகும் . தலையாய கற்புக் கரசியானவள் , ‘ மழையே பெய்’ என்று சொன்னால் அது பெய்யும் என்பதின் பொருள் , என்னவென்றால் மழைபெய்யும் என்பதல்ல ; கற்புடைமைக்கு மாபெரும் சக்தி உண்டு என வலியுறுத்தப் பட்டுள்ளது . கற்புடைமை உயரிய பண்பாகும் என்பதை நாம்புரிந்து கொள்ள வேண்டும் . ‘ ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைத் திருப்பிக் கொடு’ இதில் பொறுமை வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது . ‘ அடடே ! எப்பேர்ப்பட்ட மனிதர் – இறந்து போனாரே என்ற துக்கத்தில் ஊரே அழுதது ; கல்லும் உருகியது , புல்லும் கருகியது .’ இதில் இறந்த மனிதர் ரொம்ப நல்லவர் என்பது விளக்கப்பட்டது . கல் உருகும் என்பது பொருள் அல்ல . கல் உருகமாட்டாது .
காந்தியடிகள் உண்மையே கடவுள் என்றும் , வள்ளலார் அன்பே கடவுள் என்றும் , அண்ணாதுரை அறிவே கடவுள் என்றும் கூறியுள்ளார்கள் . கடவுளுக்குரிய எட்டுப் பண்புகளில் அவரவர் கண்ட ஒரு பண்பை மட்டும் தெரிவித்திருக்கிறார்கள் . எட்டுப் பண்புகளாவன ; அன்புடைமை , அறிவுடைமை , வாய்மை ; நடுவு நிலைமை ; ஆற்றலுடைமை , அருளுடைமை , உவமையின்மை , பற்றின்மை இப்பண்புகள் பற்றியே இறைவனை எண்குணத்தான் என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார் .
திருக்குறள் முதல் அதிகாரத்தில் இறைவாழ்த்துக் கூறவந்தவர் இறைவன் என்று மட்டுமே குறிப்பிடுகிறார் . உரை எழுதியவர்கள்தான் முதல் அதிகாரத்திற்கு கடவுள் வாழ்த்து என்று பெயர் வைத்திருக்கிறார்கள் . எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்கும் போது , திருவள்ளுவர் சமண முனிவர் என்பதும் , வள்ளுவர் குலத்தைச் சார்ந்தவர் என்பதும் விளங்குகிறது . எப்படியிருந்தாலும் திருக்குறளை நன்கு கற்று அதன்வழி எல்லாரும் நடக்கவேண்டும் ; அதுவே மனித வாழ்வுக்குச் சிறப்பாகும் . அதற்கு வழிகாட்டியாக இந்த ‘குறள் விடு தூது’ இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை .
அன்பன் . ஆ . வேலு என்ற வேற்கவிராயர்
அச்சுப்பதிப்பிற்கு அணுகவும் : sun_creations@ymail.com
வணக்கம்
தமிழ்த்தாய் வணக்கம்
தமிழ் மொழியாம் பஞ்சுதனை நன்னூல் ஆக்கி
தமிழ்க்கவிஞர் நெய்திட்ட புடவை கட்டி
கமழ்கேசி குண்டலத்தைக் காதுக் கீய்ந்து
காப்பியச்சிந் தாமணியைக் கழுத்துக் கீய்ந்து
இமிழம்மணி மேகலையை இடுப்புக் கீய்ந்து
இசைபாடும் மணிச்சிலம்பைக் காலுக் கீய்ந்து
|குலுங்கும்வளை யாபதியைக் கரத்திற் கீய்ந்து
கோலோச்சும் தமிழ்த்தாயை வணங்குதுமே !
தாயே தண்டமிழே தாழ்பணிந்து வணங்குகிறேன்
தூய குறள் நெறியை துள்ளியமாய் நான் பாட
நீயே என்நாவில் நின்று ஒலிகூட்டி
தூய படைப்பாகத் தோற்றுவிக்கச் செய்வாயே.
தமிழ்ச் சான்றோருக்கு வணக்கம்
வான்புகழும் வள்ளுவரே வண்டமிழின் இளங்கோவே
தேன்தமிழின் கவியரசே திருமூலா கம்பரையா
வான்மழைபோல் கவிபொழிந்த வள்ளலே ராமலிங்கா
நான்கண்ட கண்ணதாசா நல்லோரே என் வணக்கம்
தூது அனுப்புகை
வேற்கவிஞன் வேண்டுகிறேன் வேதம் எனும் குறளே
நாற்றிசையும் தூது நவில்
1. தெய்வச்சிறப்பு
தென்மதுரைத் தேன்மொழியே தேவர் தந்த குறளணங்கே
தேசமெங்கும் தூது சொல்லச் செய்தி சொல்வேன் கேட்பாய் நீ
அகரமுதல் எழுத்துபோல் ஆதிபரஞ் சோதியெனும்
பகவனவன் ‘சிவன்’ எனவே பாரறியத் தூது சொல்லு
கற்றவர்தான் என்றாலும் கடவுள் மணம் இல்லையெனில்
கற்றிருந்தும் கல்லாதார் , கண்ணில்லார் என்று சொல்லு
அசோகின் மலர் மீதமர்ந்த அருகனவன் சிவனே எனும்
அரும்பொருளை அழுத்தமுற அனைவருக்கும் அறிவுறுத்து
தனக்குநிகர் தானவனின் தாழ்பணிந்து தொழுவதுதான்
தக்கதொரு கல்விப்பயன் சகலருக்கும் எடுத்துச் சொல்லு
இறைவனென்று சொல்லுவதும் எண்குணத்தான் என்பதுவும்
அறவாழி அந்தணனும் ஆண்டவன்தான் என்று சொல்லு
பிறவியாம் பெருங்கடலைப் பிணையின்றி நீந்திடுவார்
இறைவனது மலர்பாதம் இறைஞ்சுவார் என்று சொல்லு .
* பகவன் - சிவன் , அருகன் , அத்தன் , கைலாச நிகண்டில் காண்க .
2. வான் சிறப்பு
தென்மதுரைத் தேன்மொழியே திருவள்ளுவரின் வாசகமே
தேசமெங்கும் தூது சொல்ல செய்தி ரொம்ப இருக்குதம்மா
மண்ணுயிர்கள் வாழ்வதெல்லாம் வான்வழங்கும் மழையமுதால்
மானுடர்க்கும் அம்மழையே வழிவகுக்கும் என்று சொல்லு
வானம் வறக்குமெனில் வையகமும் வறண்டுவிடும்
தானம் தருமமெல்லாம் தங்காது என்று சொல்லு .
உழுவார் உழமாட்டார் உண்ணும்பொருள் கிடைக்காது
தொழுவார் வரமாட்டார் தொழுகைக்கு என்று சொல்லு .
நெடுங்கடலும் வற்றிவிடும் நீர்நிலைகள் காய்த்துவிடும்
கடும்வெயிலால் பசும்புல்லும் கருகிவிடும் என்று சொல்லு .
வான்சிறப்பை வகைப்படுத்தி வழங்கியுள்ள திருக்குறளே
தேன்மொழியே நான்இன்னும் செப்பும் மொழி கேட்பாயே !
3. நீத்தார் பெருமை
துன்பந்தரும் ஆசையினைத் தொலைத்துவிட்ட பெரியோரை
இன்னல் ஒன்றும் செய்யாது என்ற செய்தி சொல்வாய் நீ .
துறந்தார் பெருமையினைச் சொல்ல நினைப்பதுவும்
இறந்தாரை எண்ணுவதும் இயலாது என்று சொல்லு .
இம்மை மறுமையெனும் ஈருலக வாழ்விலுமே
செம்மை நெறியாலே சிறப்படைவார் என்று சொல்லு
கண்காது மூக்குசெவி கால்முளைத்த உடம்பையுந்தான்
சொன்னபடி கேட்க வைப்பார் துறவியர்தாம் என்று சொல்லு .
அந்தணர்கள் என்றென்றும் அறஞ்செய்வார் எவ்வுயிர்க்கும்
தொந்தரவு செய்யாரே துறவியர்தாம் என்று சொல்லு .
சாந்தமெனும் குணமுடைய சான்றோர்கள் ஒருபோதும்
சீந்தாரே கோபமதைத் திருக்குறளே தூது சொல்லு
4.அறத்தின் சிறப்பு
நீதி நெறி தப்பாது நேர்வழியில் நடப்பவர்க்கு
மேதினியில் அதுஒன்றே விழுச்செல்வம் என்று சொல்லு .
அறத்தை மறந்துவிடில் ஆக்கமும் அகன்றுவிடும்
மறக்காமல் அறஞ்செய்வார் மாண்புறுவார் என்று சொல்லு
நல்லதையே எண்ணுகின்ற நன்மனதைப் பெற்றுவிட்டால்
எல்லா அறமுமதற் கீடில்லை என்று சொல்லு
இன்னாச்சொல் பேராசை இழுக்கான போறாமை
இல்லைஎனில் நல்லறமென் றியம்பிடுவாய் எல்லார்க்கும்
இயலும் விதத்திலெல்லாம் இடைவெளியே இல்லாமல்
முயன்று அறஞ்செய்தால் முத்திகிட்டும் என்று சொல்லு
அறச்செயலால் வருவதுதான் அளப்பரிய இன்பமதாம்
மறச்செயலால் பழிசேரும் மானிடர்க்கு என்று சொல்லு .
5. இல்வாழ்க்கை
துறவறந்தான் பூண்டார்க்கும் துய்க்கவழி இல்லார்க்கும்
இரந்தார்க்கும் துணையாவான் இல்வாழ்வான் என்று சொல்லு
தெய்வம் , விருந்துறவு , தெய்வத்திரு , தான் என்று
அய்வரையும் பேணுவது அவர் கடமை என்று சொல்லு
அன்பின்வழிநின்று அறவழியில் பொருள் ஈட்டி
இன்பமுடன் வாழ்வதுதான் இல்வாழ்க்கை என்று சொல்லு .
இல்வாழ்வின் விதிமுறைகள் என்னவென்று தானறிந்து
நல்லாற்றின் அதுவேயாம் நல்வாழ்வு என்று சொல்லு .
அறம்என்று சொல்லுவதே அன்புடைய இல்வாழ்க்கை
பிறர்பழிக்கு ஆளானால் பெருமையது குன்றிவிடும் .
வையகத்தில் என்றென்றும் வாழ்வாங்கு வாழ்பாவர்கள்
தெய்வமாய் வானவருள் சேர்ந்திருப்பார் என்று சொல்லு .
6. வாழ்க்கைத் துணைநலம்
குணமுள்ள குலமகளாய் கொண்டவரின் வரவறிந்து
குடும்பம் நடத்துபவள் கொழுநற்குத் துணையாவாள்
இல்லத்தின் அரசிக்கு இல்லையெனில் மாண்பெல்லாம்
இல்லாது போய்விடுமே இன்பமெல்லாம் இல்வாழ்வில்
இல்லாததில்லை இங்கு இல்லவள் மாண்பானால்
இல்லை எனைத்தொன்றும் இவள்மாண்பு இல்லை என்றால்
கொண்டவனைத் தவிரஒரு குடிமகனை நோக்காத
திண்மையுள்ள கற்புடையாள் சிறப்பதனைப் போய்ச்சொல்லு
கண்கண்ட தெய்வமென்று கணவனையே தொழுதெழுவாள்
விண்நின்று பெய்க என்றால் பெய்யு மென்று போய்ச்சொல்லு
மனைமாட்சி எதுவென்றால் மங்கலமாய் வாழ்வதுதான்
மனைவிளங்கப் பிள்ளைகளும் வரவேண்டும் என்று சொல்லு
தன்னையும் காத்திடுவாள் தன்தலைவன் பேணிடுவாள்
நன்மொழியே பேசுமவள் நல்லவள்தான் என்று சொல்லு
குறிப்பு : கணவன் தொழுதெழுவாள் , ” பெய் என்றால் மழை பெய்யும் ? எப்படி ? இயற்கைக்கு ஆணையிட யாராலும் முடியாது . ‘ மழையே பெய் ? என்றால் அது பெய்யாது . பெய்யும் என்று சொன்ன வள்ளுவரின் கருத்து என்ன ? மாண்புறு கற்புடையவளின் சொல்லுக்கு மாபெரும் சக்தி உண்டு என்பதே அவர் கூற்று . கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்தி குறுகத்தறித்த குறள் இது ஒரு கவிஞர் கூற்று . கடுகில் துளைபோட்டாலும் அதனுற் கடலைப் புகுத்த முடியாது . முடியாத செயலை முடியும் என்று சொன்ன கவிஞரின் கருத்து என்ன ? ஒரு சிறிய குறட்பாவில் அரிய பெரிய கருத்துக்களை - செய்திகளை அடக்கியுள்ளார் என்பதே ஆகும் . மனித சக்திக்கு அப்பாற்பட்ட செயலைக்கூட சான்றோர் செய்ய முடியும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் .
7. மக்கட்பேறு
பண்புடைய பிள்ளைகளே பெற்றோரின் பெருஞ்செல்வம்
அண்டாது பழிபாம் அவர் வாழ்வில் என்று சொல்லு
தன்மக்கள் மெய்தீண்டல் தன்னுடலுக் கின்பமதாம்
இன்னுமவர் சொற்கேட்டல் இன்பமாம் செவிகளுக்கே
உண்ணும் உணவினிலே ஊழல்கை ஓட்டுவித்து
தின்னு என்று சொன்னாலும் தெள்ளமுதாம் பெற்றோர்க்கு
தந்தை மகன்தனக்கு தக்ககல்வி தானளித்து
இந்த உலகரங்கில் ஏற்றமுறச் செய்வானே
என்னதவம் செய்தானோ இவன்தந்தை என்று சொல்ல
மகன்தானும் வேண்டுமென மற்றவர்க்கு தூது சொல்லு
சான்றோன் எனப்பிறர்கள் தன்மகனைப் பாராட்ட
பெற்றதாய் முன்பைவிடப் பேரின்பம் கொள்வாளே
மக்கள்தாம் பேசுகின்ற மழலைச்சொல் கேளாதார்
மகரயாழ் இனிதென்பார் மதியிலார் என்று சொல்லு
8. அன்புடைமை
துன்பத்தில் வாடிடுவார் துயரமதைக் கண்டவுடன்
கண்ணீரைச் சிந்திடுவார் கருணை உள்ளம் கொண்டவர்கள்
அன்புடையார் எவ்வுயிர்க்கும் அன்பேதான் நல்கிடுவார்
அன்பில்லார் உதவாதார் அவருக்கே என்று சொல்லு
பேருலகில் மானிடராய் பிறந்தபயன் என்னவென்றால்
மாறாத நல்லன்பை மற்றவர்க்கு ஈவதுதான்
அன்பென்னும் குணப் பண்பு ஆர்வமதை உண்டாக்கும்
எல்லாரும் நட்பாவார் இவ்வுலகில் என்று சொல்லு
அனைவரையும் நட்பாக்கும் அன்பேதான் மற்றுமந்த
பகைவரையும் நட்பாக்கும் பாசந்தான் என்று சொல்லு
அன்பில்லார் வாழ்வினிலே அரும்பாது இன்பமது
வன்பாற்கண் பட்டமரம் வளராது என்று சொல்லு
அன்பினால் இயங்குவது ஆருயிர்தான் மற்றவுயிர்
என்புதோல் போர்த்திட்ட இழிவான சடலமதாம்
9. விருந்தோம்பல்
இருவர் மனமுவந்து இல்வாழ்க்கை செய்வதெல்லாம்
விருந்து உபசரித்து வேளாண்மை செய்வதற்கே
விருந்துவந்து வீட்டிருக்க விட்டுவிட்டு உண்ணுவது
அருமையுள்ள அமுதெனினும் ஆகாது என்றுசொல்லு
விருந்து உபசரிப்பான் வீட்டுக்குள் நிறைந்திடுவாள்
திருமகள் என்றுசொல்லும் செல்விதான் என்று சொல்லு
விருந்தினரை உபசரித்து மீந்ததைத் தாணுன்பார்
விதைக்காமல் அவர்நிலத்தில் விளையுமென்று சொல்வாய் நீ
செல்விருந்து தானோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்தாம் வானோர்க்கு நற்குறளே தூது சொல்லு
மூச்சுக்கு அனிச்சமலர் முகம் கறுத்தால் விருந்தினர்கள்
போச்சு பலனில்லை போசனத்தால் என்று சொல்லு
குறிப்பு : வேளாண்மை செய்தல் - விளைவித்தல் . வாழ்க்கை என்னும் நிலத்தில் விருந்து என்னும் பயிர் வளர்த்து , புண்ணியம் என்ற கதிர் விளைதலாம் . விதைக்காமல் விளையும் என்பது விருந்தோம்பலை வலியுறுத்தவே அவ்வாறு சொல்லப்பட்டது . விதைக்காமல் நிலம் விளையாது என்பது உண்மை .
10. செய்நன்றி அறிதல்
எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாத உதவிக்கு
எந்தவுல களித்தாலும் ஈடில்லை என்று சொல்லு
செய்திட்ட உதவியுந்தான் சிறிதாக இருந்தாலும்
உய்விக்க ஆகுமென்றால் உலகைவிடப் பெரிதாகும்
தினையளவு உதவியுந்தான் செய்தவொரு காலமதில்
பனையளவு ஆகுமென்று பயனறிந்தார் பகர்ந்திடுவார்
தனக்குவந்த துன்பமதைத் தடுத்துமே காத்த வரை
மனதுக்குள் வைத்திருப்பார் மறுபிறப்பு வந்தாலும்
நலதொன்று செய்தார்க்கு நன்றிசொல்ல மறக்காதே
தீயதென்றால் மறந்துவிடு திருவாளா என்று சொல்லு
என்னன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி தனைக்கொன்ற திருவில்லா மானிடர்க்கு
குறிப்பு : உதவி இருவகைப்படும் , வாய்மொழியால் செய்வது ஒன்று . மற்றொன்று செயல்மூலம் செய்வதாகும் . வாய்ப்பேச்சு ஒன்றாலே பலருக்கு பலநேரங்களில் , பல விதத்தில் உதவி செய்யலாம் . மெலிந்தார்க்கும் நலிந்தார்க்கும் வாழ்வில் நலம் பெற பொருள் கொடுத்து உதவுவது பேருதவியாகும் . இந்த உதவியைத்தான் , வள்ளுவர் செய்நன்றி என்று குறிப்பிடுகிறார் .
11. நடுவு நிலைமை
வேண்டுவார் வேண்டாதார் வேற்றுமை பாராமல்
நாவை அசைப்பதுதான் நடுவுநிலை என்று சொல்லு
சமன்செய்து சீர்தூக்கும் தராசினது செயல்போல
திறம்பாது நேர்மையுடன் தீர்ப்பளித்தல் நன்றாகும்
செம்மைநெறி வழிநடந்து சேர்த்துவைத்த செல்வமெலாம்
சிதையாது பலனளிக்கும் தலைமுறைக்கும் என்று சொல்லு
நல்லவரா கெட்டவரா நடுவுநிலை உள்ளவரா
என்பதை அவர்மக்கள் எடுத்துரைப்பார் என்று சொல்லு
அறத்தாற்றின் வாழ்நாளில் வாடுகின்ற வேளையிலும்
சிறுமைதரும் எச்செயலும் செய்வதற்கு நினையாரே
வாணிகம் செய்திடுவார் வாங்குதல் விற்பதிலும்
பேணுதல் வேண்டுமன்றோ பிறர்நலமும் தன்னலம்போல்
12. அடக்கம் உடைமை
மேன்மை எனும் பணிவால் மேலுலகம் பாராட்டும்
கீழ்மை அடங்காமை கெடுத்துவிடும் என்று சொல்லு
அடக்கமெனும் நற்பண்பே அரிய பெருஞ் செல்வமென்று
எடுத்து இயம்பிடுவாய் இவ்வுலக மாந்தருக்கு
மாற்றம் ஒன்றும் இல்லாத மனஅடக்கம் கொண்டவரின்
ஏற்றம் மிகப்பெரிது இமயம்போல் என்று சொல்லு
ஆமை அடக்கும் வண்ணம் ஐம்புலனை அடக்கவல்லார்
அருமை பெருமையினை அனைவருக்கும் போய்ச் சொல்லு
நாவடக்கம் உள்ளவரை நாடாது துன்பமொன்றும்
நாவடக்கம் இல்லார்க்கு நாடிவரும் பழிதானே
தீப்பட்டு வெந்தபுண்ணை சீக்கிரமாய் ஆற்றிடலாம்
நாவினால் சுட்டபுண்ணை நலமாக்க முடியாது
குறிப்பு : செல்வந்தருக்கு பணிவு என்பதும் ஒரு செல்வமாகும் . செல்வந்தர் பணிவாக நடந்து கொள்வதால் , தான் பெற்ற செல்வத்தை சிதையாமல் காக்க முடியும் . அதனால் பணிவும் அவருக்கு ஒரு செல்வமாகும் என்று சொல்லப்பட்டது . ஆமைதன் உறுப்புகளையெல்லாம் தன் முதுகு ஓட்டுக்குள் அடக்கிக்கொள்வதால் அதற்கு தீங்கு நேராது .
13. ஒழுக்கம் உடைமை
ஒழுக்கம் ஒருவருக்கு உயர்வளிக்கும் என்பதனால்
ஒழுக்கத்தைப் பேணிடுவீர் உயிர் போல என்று சொல்லு .
ஒழுக்கம் அதுவொன்றே உயர்குடிப் பெருமை என்பாய்
இழுக்கம் இணையுமெனில் இழிந்த பிறப்பாகிவிடும் .
மந்திரத்தைப் பார்ப்பான் மறந்தாலும் கெடுதலில்லை
மகத்தான ஒழுக்கமதை மறந்துவிடக் கூடாது .
மந்திரத்தைப் படித்து மனப்பாடம் செந்திடலாம்
மாய்த்துவிட்ட ஒழுக்கமது மறுபடியும் வாராது
பொறாமைக் குணத்தாலே பொருளுக்கே வரும் நாசம்
ஒழுக்கக் குறைவாலே உயர்மதிப்பு ஓடிவிடும்
ஒழுக்கம் உடையார்க்கு ஒருபோதும் வாராது
இழுக்காண வாய்ப் பேச்சு என்றும் நீ போய்ச்சொல்லு
உலக மெனும் வீட்டினிலே ஒத்துவாழத் தெரியாதார்
பலகற்றும் பயனில்லை பதறாவார் என்று சொல்லு
குறிப்பு : மந்திரம் - அர்ச்சகர் சொல்லும் பூசைக்குரிய சுலோகம் தோத்திரப்பாடல்கள்
14. பிறன் இல் விழையாமை
பிறன்மனைவிதனை நாடும் பேதைமைக் குணம் என்றும்
அறநெறியில் வாழுகின்ற ஆன்றோர்க் கிலையென்பாய்
கடையார் எனும் கூட்டத்தில் கடைக்கடையர் யாரென்றால்
அடைவார் பிறன்மனையில் அவரேதான் என்று சொல்லு
நண்பன் மனைவியிடம் நாணயத்தை விற்றுவிட்டு
பெண்டுக்குப் போகிறவன் பிணம் என்று நீ சொல்லு
சொந்தமில்லா பிறர்மனையில் சொந்தம் கொண்டாடுவது
பந்தமாய்ப் பற்றிக் கொள்ளும் பழி பாவம் என்று சொல்லு
பகைபாவம் அச்சமொடு பழிநான்கும் சேர்ந்துவரும்
புகைபோலப் பிறர்மனையில் புகுவது தான் என்று சொல்லு
பிறர் மனையை நோக்காத பேராண்மை சான்றோக்கு
அறங்களில் பெரியதென்று அனைவருக்கும் போய்ச் சொல்லு
அறத்தை மறந்தாலும் அல்லவையே செய்தாலும்
பிறனில் விழையாதான் பிழைக்கலாம் என்று சொல்லு
15. இனியவை கூறல்
நற்குணச் சான்றோர்கள் நாவினில் எழும் சொற்கள்
கற்கண்டு போலாகும் கருணையும் நிறைந்திருக்கும்
கருணை உளம்கொண்டு களிகூர்ந்து ஈவதிலும்
அருமையாம் முகமலர்ந்து அன்பீனும் இன்சொற்கள்
இன்புறூஉம் இன்சொல்லால் இதமாக உரைப்போரை
துன்புறூஉம் செயலெதுவும் துன்புறுத்த மாட்டாது
பணிவுடைமை இன்சொல்லும் பழகிவரும் ஒருவருக்கு
அணிகலனாம் அஃதொன்றே அறைந்திடுவாய் குறள் மாதே
இன்சொல் பேசுவதால் இன்பமாம் என்றறிந்தும்
வன்சொல் பேசிடுவார் வாழ்வதுவும் பாழாகும்
இனிய சொல் தவிர்த்துவிட்டு இழிந்தசொல் பேசுவது
கனியை விட்டுவிட்டுக் காய்தின்யான் ஆவானே
தீயவினை தேய்ந்துவிடும் செல்வங்கள் கைகூடும்
நேயமாம் சொற்களினால் நீடுபுகழ் உண்டாமே
16. பொறை உடைமை
அகழ்வாரைத் தாங்குகின்ற அண்டத்தைப் போல்நாமும்
இகழ்வாரைப் பொறுப்பதுதான் எல்லார்கும் நலமாகும்
தெரிந்தோ தெரியாதோ தீமைசெய்த சீறியாரை
மன்னித்தல் மட்டுமின்றி மறப்பதுவும் நன்றாகும்
வறுமையிலும் மிகப்பெரிய வறுமையது என்னவென்றால்
விருந்து புறந்தள்ளல் வேறில்லை அதுவேயாம்
குடும்பம் நடத்தவல்ல குணமுள்ள மங்கையற்கு
வன்மை எதுவென்றால் மனத்திண்மை ஒன்றேயாம்
பொறுமை மனங்கொண்டு புகழ்புரிவார் இல்லமதில்
நிறையப் பொருள் சேரும் நீங்காது என்று சொல்லு
ஒறுத்தார் ஒருநாளும் உயர்வடைய மாட்டார்கள்
பொறுத்தாரை எல்லாரும் போற்றிப் புகழ்ந்திடுவார்
ஒறுத்தார்க்குக் கிட்டுவது ஒருநாளை இன்பந்தான்
பொறுத்தார்க்குச் சாகும்வரை புகழ்சேரும் என்று சொல்லு
ஆள்பலம் கொண்டவர்கள் அக்கிரமம் செய்தாலும்
தன்புத்திக் கூர்மையினால் தடுத்திடுவார் பொறையுடையார்
17. அழுக்காறாமை
பொறாமையெனும் பேய்க்குணத்தை புறந்தள்ளிவிட்டுவிட்டால்
அறவொழுக்கம் அதுவென்று அனைவருக்கும் போய்ச் சொல்லு
அறத்தால் வரும்பலன்கள் அத்தனையும் இழந்திடுவான்
அறனழிக்கும் பொறாமையினை அகம் வைப்பான் என்று சொல்லு
பொறாமை எனும் குணத்தைப் பொசுக்கிவிட்ட பெரியோர்கள்
பொல்லாத செயலெதையும் புத்தி கெட்டுச் செய்யாரே
இரக்கத்தால் பிறருக்கு ஈவானைத் தடுப்பானிஇல்
உள்ளார் உண்ணுவதும் உடுத்துவதும் அரிதாகும்
பொறாமையாம் பெரும்பாவி பொருளை அழிப்பதுடன்
வறுமையாம் துன்பமதை வைத்திடுவான் வீட்டினிலே
பொல்லாத பகைவனவன் பொறாமையெனும் தீய எண்ணம்
எல்லாப் பகைகளிலும் இவன்பகையே பெரிதாகும்
பெருக்காது போறாமை பெருமைபெறும் நல்வாழ்வை
பெருக்கமாய் வாழ்ந்திடுவார் பேருலகில் என்று சொல்லு
18. வெஃகாமை
அநியாயமாய் சென்று அடுத்தவன் பொருள் பறித்தால்
அவன்குடிகெட்டுவிடும் ஆகாது என்று சொல்லு
பழிபாவம் அஞ்சுகின்ற பண்புள்ளோர் தொடமாட்டார்
பிழைசெய்து பிறன் பொருளை பெறுவதற்கு என்றுசொல்லு
பேரின்பம் வேண்டுமென்பார் பேரறங்கள் செய்திடுவார்
சிற்றின்பம் காண்பவர்கள் செய்யாரே நல்லறந்தான்
பொருளுக்கு முட்டுப்பட்டுப் புலம்புகின்ற வேளையிலும்
புலனடக்கம் உள்ளவர்கள் போகாரே புன்செயலில்
அறிவென்னும் செல்வமதை அடைந்திருந்தும் பயனில்லை
வெறுக்கும் செயல் செய்து வெஃகுவார் பிறர்செல்வம்
பிறருடைய கைப்பொருளை பிடுங்கிவிட எண்ணாதார்
குறையாத செல்வமதைக் கொடுத்துவைத்த புண்ணியராம்
ஒழுக்கம் தவறாத உத்தவர்தம் வீட்டினிலே
முழுக்க நிறைந்திருக்கும் மொத்தமதாய் திருவெல்லாம்
19. புறங்கூறாமை
அறங்கள்பல செய்யாது அல்லவையே செய்தாலும்
புறங்கூறான் என்றபுகழ் போதுமென்று போய்ச்சொல்லு
திமிர்கொண்ட புத்தியினால் தீமைபல செய்தாலும்
கோள்சொல்லும் புத்தியது கூடாது என்று சொல்லு
புறங்கூறிக் கெட்டபெயர் போர்த்தியே வாழ்வதிலும்
திட்டுவாங்கி நோவாமல் செத்துவிடல் மேலாகும்
நேருக்கு நேர்நின்று நோகடித்துப் பேசிடலாம்
போகவிட்டுப் புறங்கூறல் பொல்லாப்பு என்று சொல்லு
பலனேதும் இல்லாமல் பண்பில் சொல் பேசுவதால்
நலம்ஒன்றும் சேராது நம்வாழ்வில் என்று சொல்லு
பிறர்குற்றம் ஒன்றைமட்டும் பெரிதாகப் பேசுபவன்
தன்குற்றம் என்பதையும் சரிசெய்ய வேண்டுமன்றோ
20. பயனில சொல்லாமை
பலபேர் பகைகொள்ள பயனில்சொல் பேசுபவன்
பலபேரின் நகைப்புக்கே பயன்படுவான் என்று சொல்லு
ஒன்றுக்கும் உதவாதான் ஒருபோதும் இவன் என்று
நன்றாக அறிந்திடலாம் நன்மையில்லா அவன் பேச்சால்
பயனில்லா வீண் பேச்சைப் பாராட்டிப் பேசுபவன்
பயனுள்ள மக்களிலே பதறாவான் என்று சொல்லு
நலம்பயக்கா வார்த்தைகளை நன்மக்கள் பேசிடினும்
பயனில்லா வாத்தையது பல்படவே கூடாது .
அரும்பயன் ஆய்ந்தறிந்த அறிவுடையோர் சொல்லாரே
பெரும்பயன் ஏதுமில்லாப் பிழைபட்ட வார்த்தைகளை
பெரியோரே பேசுங்கள் பயனிக்கும் சொற்களையே
பேசாது விட்டிடுங்கள் பயனில்லாச் சொற்களைத்தான்
21. தீவினை அச்சம்
தீயகுணம் உள்ளவர்கள் தீவினைக்கு அஞ்சாரே
தூயகுணம் உள்ளவர்கள் தொடமாட்டார் அச்செயலை
தீயதாம் செயல்களினால் தீமையே உண்டாகும்
ஆகையால் அதுசெய்ய அஞ்சுவது நன்றாகும்
அறிவுடைமை யாவையிலும் மேலான அறிவுடைமை
தீயவை செய்தவர்க்குத் திருப்பிச்செயல் ஆகாது
மறந்தும் ஒருவரது மனம்நோகும் செயல் செய்தால்
அறம்சூழ்ந்து கெடுத்துவிடும் அன்னவரை என்று சொல்லு
எந்தவொரு பகைவரினும் எதிர்த்து நின்று வென்றி
சொந்தவினைப் பகையதுதான் சுற்றுவந்து கேடு செய்யும்
வாழ்வில் மகிழ்ச்சிதன்னை வரவேற்கும் மாமனிதர்
திருவழிக்கும் செயலெதையும் செய்யாரே செப்பிடுவாய்
தான்வாழப் பிறர்வருந்த தான்செய்யும் தீச்செயல்கள்
தன்னுடைய நிழல்போல தன்னைவிட்டு அகலாது
22. ஒப்புரவு அறிதல்
கைமாறு வேண்டாது கார்மேகம் பொழிவதுபோல்
செய்வார் பிறர்க்குதவி செம்மனத்தார் என்று சொல்லு
எக்காலும் பாடுபட்டு இருப்பு வைக்கும் பொருளெல்லாம்
தக்கார்க் குதவிடுவார் சான்றோர்கள் என்று சொல்லு
உதவிக்கு உதவிசெய்து ஒன்றுபட்டு வாழ்பவர்கள்
உயிர்பெற்றார் மற்றவர்கள் ஊன்பெற்றார் என்று சொல்லு
ஊருணியில் நீர்நிறைந்தால் ஊர்மக்கள் வாழ்ந்திடுவார்
அறிவுடையார் செல்வமதும் அப்படித்தான் என்றுசொல்லு
பக்கமுள்ள தோட்டத்தில் பழுத்துநிற்கும் பழமரம்போல்
நல்லவர்கள் செல்வமதும் நாளும் பயன்படுமே
பிணிபோக்க மருந்துதரும் பெருமரம்போல் பசி மக்கள்
பிணிபோக்கும் பெருந்தகையான் பெருஞ்செல்வம் என்று சொல்லு
ஒப்புரவு தான்கருதி உதவியதால் செல்வமெல்லாம்
ஒழிந்தாலும் அவர்புகழ்தான் ஓங்கிநிற்கும் என்று சொல்லு
23. ஈகை
இல்லார்க்கு ஈவதுதான் ஈகையாம் மற்றுமிங்கு
இருப்பவர்க்கு ஈய்ந்திட்டால் எதிர்பார்ப்பு அதிலுண்டு
நன்மைபெறத் தன்வாழ்வில் நாணமதை விட்டுவிட்டு
தன்கையை முன்நீட்டி ‘ தா ‘ என்றால் இழிவாமே
இன்பமாம் மோட்சமது இல்லையென்று சொன்னாலும்
ஈதலே என்றென்றும் இன்பமாம் என்று சொல்லு
ஈகையெனும் நல்லகுணம் எல்லார்க்கும் வாராது
உயர்குடிப் பண்பாளர் ஒருவருக்கே அதுசாலும்
பசியால் வாடுபவர் பசிபோக்கச் செலவிடுதல்
அதுவேதான் காப்பாகும் அப்பொருட்கு அழிவில்லை
பிறருக்கு ஈயாமல் பெற்றபொருள் அத்தனையும்
தானேதான் அனுபவித்தல் தகாத செயல் என்று சொல்லு
மரணம் ஒரு கொடும்பாவி மனிதருக்கு அஃதைவிட
கொடுக்க இயலாமை கொடும்பாவி அவருக்கே
24. புகழ்
தருமம்பல செய்வதினால் தாரணியில் புகழ்கிடைக்கும்
வருமானம் அதுவேயாம் வாழ்கின்ற உயிர்களுக்கு
இல்லையென்று சொல்லாமல் ஈய்ந்திங்கு ஏழைகளை
புரப்பதால் பெறுவதுதான் புகழ்என்று போய்ச் சொல்லு
உயர்வான செல்வமெலாம் உலகத்தில் நிலையில்லை
புகழ்ஒன்று மட்டுந்தான் பொன்றாது என்று சொல்லு
பூவுலகில் என்றென்றும் புகழ்பெற்று வாழ்வாரை
வானுலகில் உள்ளவரும் வாழ்த்துவார் என்று சொல்லு
பிறந்தால் உலகினிலே பீடுநடை தான் வேண்டும்
இல்லையெனில் பிறந்ததினால் இல்லைபுகழ என்று சொல்லு
புகழ்ஒன்றும் இல்லாமல் பூமிதனில் வாழ்பவர்கள்
இகழ்வாரை நோவதினால் என்னபயன் நீகேளு
வாழ்வார் எனப்படுவார் வசையொழிய வாழ்வாரே
வசைச் சொல்லுக் காளானால் வாழ்விலார் என்று சொல்லு
25. அருளுடைமை
செல்வத்துள் மிகப்பெரிய செல்வமது அருட்செல்வம்
பொருட்செல்வம் எல்லார்க்கும் பொதுவாகும் என்றுசொல்லு
பக்திஇ வழிநின்று பரமனருள் பெற்றுவிட்டால்
துறவறத்தார் வாழ்வுக்குத் துணையாகும் என்று சொல்லு
இறைவனருள் துறவியர்க்கு இருக்கின்ற காரணத்தால்
இருளான துன்பங்கள் இருக்காது இவர்வாழ்வில்
அனைத்து உயிர்களையும் அவர் உயிர்போல் நேசிக்கும்
அன்பான துறவியரை அணுகாது தீத்துன்பம்
இவ்வுலக வாழ்வுக்கு இல்லைபொருள் என்று சொன்னால்
இருக்காது இன்பமொன்றும் இல்வாழ்வில் என்று சொல்லு
இறைவனருள் இல்லார்க்கு இல்லையிடம் மோட்சமதில்
இல்வாழ்வில் பொருளின்றி இன்பமில்லை என்பது போல
செலவான பெரும்பொருளைத் தேடலாம் மறுபடியும்
தேவனருள் தேய்ந்துவிடில் தேடுதற்கு அரிதாகும்
எளியவர்தாம் இவரென்று ஏகுவீர் சண்டைக்கு
வலியார்முன் உங்களது வல்லமையைக் காண்பீரே
26. புலால் மறுத்தல்
தன்னுடலை வளர்ப்பதற்கு தவறு செய்யாப் பிறவுயிரின்
மென்னுடலைக் கொன்றுதின்றால் மேவிடுமோ இறையருளும் ?
பொருள்தன்னைப் பேணி பெட்டகத்தில் வைப்பவர்தான்
பொருளாட்சி செய்பவராம் புவிமீதில் என்று சொல்லு
கருணையொன்றும் இல்லாமல் களைந்து புலால் உண்பார்க்கு
அருளாட்சி ஒருபோதும் அமையாது என்று சொல்லு
படையெடுத்துப் பிறர் தேசம் பல்லுயிரைக் கொன்றவர்க்கு
அடல்நெஞ்சம் அல்லாது அருள்நெஞ்சம் அவர்க்கேது ?
பிறவிலங்கின் ஊன்தன்னை பிரியமுடன் உண்பார்க்கு
அறநெறிகன் அவர்மனதில் அமையாது என்று சொல்லு
கொல்லாமை எனும் விரதம் கொண்டவரே உயிர்பெற்றார்
கொன்ற உடல் ஊன்தின்பார் கொடியநர குய்ப்பாரே
உண்ணுவார் உண்டாகில் ஊன்விற்பார் உளராவார்
உண்ணுவார் இலர்என்றால் ஊன்விற்பார் வரமாட்டார் .
கொல்லான் ஒரு உயிரைக் குணமுள்ள சான்றோரை
எல்லா உயிர்களுமே இருகையால் கும்பிடுமே
குறிப்பு : ஊன் உண்பார்க்கு எங்ஙனம் ஆளும் அருள் ? என்பது வள்ளுவரின் கேள்வியாகும் . அருள் கிட்டாது என்று பொதுவாகச் சொல்லலாம் . ஆனால் விதந்து சொன்னால் மனித நேயம் உள்ளவர்க்கு எந்த உணவு உண்டாலும் அருள்கிட்டும் எனலாம் . இருந்தாலும் புலால் உண்ணாதவனே மனிதருள் சிறந்தவன் என்று உறுதிபடக் கூறலாம் .
27. தவம்
எனைத்தானும் பிறவுயிர்க்கு இன்னல் செய்யாதிருப்பதுவும்
தனக்கு வந்த துன்பமதைத் தாங்குவதும் தவமாகும் .
தவமுடையார் யாரென்றால் சஞ்சலத்தை வென்றவர்கள்
அவரன்றி மற்றவர்கள் அதைநினைத்தல் அவமாகும்
துறவறம் பூண்டபெரும் துறவியர்க்குத் தொண்டு செய்ய
மறந்தாரோ மற்றவர்கள் மாதவத்தை என்பாயோ
தன்தொழிலை என்றென்றும் சரியாகச் செய்பவரே
தவஞ்செய்வார் என்றசெய்தி சகலருக்கும் போய்ச்சொல்லு
துன்பம்வந்து உள்மனதைச் சுட்டெரிக்கச் சுட்டெரிக்க
தங்கமயம் ஆகிவிடும் தவஞ்செய்வார் மனமதுவும்
ஏற்றதவ வலிமையினால் ஏமனையும் வென்றிடுவார்
ஆற்றல்மிகு தவயோகி அவர்பெருமை தான் கூறு
28. கூடா ஒழுக்கம்
மாண்புள்ள ஒழுக்கமதை மறைத்துவிட நினைப்பானேல்
அவனுடைய நடத்தையினை ஐம்புலனும் கேலி செய்யும்
நல்லொழுக்கம் இல்லாமல் நற்செயலும் இல்லாமல்
தோற்றத்தால் பகட்டிவிடில் செய்த குற்றம் மறையாது
தன்மனதில் திடமின்றித் தவவேடம் கொண்டவர்கள்
பசுத்தோல் புலிபோலப் பாவச்செயல் தான்செய்வார்
சாதுபோல் உடையணிந்து தகாத செயல் செய்பவர்கள்
வலைவிரித்துப் புள்பிடிக்கும் வனவேடன் ஒப்பாரே
நஞ்சுதனை உள்வைத்து நல்லவர்போல் நடிப்பவர்கள்
வஞ்சகர் தன்னைவிட வன்செயலர் என்று சொல்லு
நல்லவர்போல் தென்படுவார் நல்ல செயல் செய்யாரே
பொல்லாதவர் போல்வார் நல்லதே செய்திடுவார்
தலைமொட்டை வேண்டாமே தாடியதும் வேண்டாமே
நல்லோர் பழிக்காமல் நடப்பதுதான் தவமாகும்
29. கள்ளாமை
கள்ளத்தால் பிறன்பொருளைக் களவாடிச் சேர்ப்பவரை
எள்ளிநகை யாடுவரே இவரைப்பிறர் என்று சொல்லு
வெள்ளம் போல் துன்பங்கள் விளைந்தாலும் பிறர்
கொள்ளத்தான் நினைப்பதும் கொடியதாம் என்று சொல்லு
களவாடிப் பெரும்பொருளைக் கட்டித்தான் வைத்தாலும்
சொத்துவந்த வழிபார்த்துச் சொல்லாமல் போய்விடுமே
எப்பொழுது சோர்ந்திருப்பார் இவர்பொருளை எடுத்திடலாம்
என்றெண்ணும் இவர்மனதில் இருக்காது அருள் அன்பு
நேர்மையாம் வழிநடப்பார் நெஞ்சமதில் அருள் இருக்கும்
களவுசெய்வார் நெஞ்சமதில் கயமையே மிஞ்சிநிற்கும்
களவுசெய்வார் உடலமது கடுநரகில் தள்ளப்படும்
கள்ளமில்லார் உடலந்தான் கண்டுகொள்ளும் மோட்சத்தை
30. வாய்மை
வாய்மைஎனும் சொல்லுக்கு வரும்பொருளே உண்மையதாம்
தீமையொன்றும் இல்லாத தீஞ்சொற்கள் பேசுவதாம்
பொய்மையும் சிலசமயம் மெய்யாக மாறிடலாம்
உரைசாலும் நன்மையது உண்டாகும் என்று சொன்னால்
மனச்சாட்சி இல்லாமல் மன்றத்தில் பொய் சொன்னால்
தன்னெஞ்சே நெருப்பாகித் தன்னையே சுட்டுவிடும்
ஒருநாளும் பொய்சொல்லான் உயர்குணங்கள் உள்ளவனின்
பெருமை தன்னைமெச்சிப் பேசிடுவார் பெரியோர்கள்
தானங்கள் பலசெய்து தலைப்படுவார் தன்னிலுமே
ஒருநாளும் பொய்சொல்லான் உயர்ந்தவனாம் என்று சொல்லு
பொய்யாமை ஒன்றைமட்டும் பொருளாக வைத்திருப்பான்
இல்லமதில் செல்வங்கள் எல்லாமே சேர்ந்துவிடும்
தன்னுடல் சுத்தம் செய்யத் தண்ணீர் அவசியம் போல்
வன்மனதைச் சுத்தம் செய்ய வாய்மைமிக முக்கியமாம்
பொய்யாமை என்னும் அறம் போற்றுவார் வேறு அறம்
செய்யவே தேவையில்லை திருக்குறளே தூது சொல்லு
31. வெகுளாமை
சினம் என்னும் கோபமதை செல்லுமிடம் காட்டாது
குணம் என்னும் நற்பண்பை கொள்வதுதான் நலமாகும்
செல்லிடத்துக் காப்பவனே சினம்காப்பான் மற்றுமந்த
செல்லாத இடந்தனிலே செலுத்துவதும் தீதாகும்
பொங்கிவரும் பாலையொரு பொட்டுநீர் அடக்குதல் போல்
ஓங்கியெழும் கோபமதை ஒடுக்கிவிடல் நன்றாமே .
கோபமது ஆட்கொண்டால் கொடியபெரும் நோயாகும்
குணம் ஒன்றும் ஆகாது கொன்று விடும் என்று சொல்லு
சினமென்னும் காமாலை சேர்ந்தவரைக் கொன்றுவிடும்
இனமென்னும் சொந்தபந்தம் எல்லாமே கெட்டுவிடும்
சினம் கொண்ட மனித உடல் செத்தபிணம் போலாகும்
சினத்தைத் துறந்துவிட்டால் சேமமுடன் வாழ்வார்கள்
கல்லின்மேல் அறைந்திட்டால் கைக்குத்தான் நோவு வரும்
சினம்பட்ட நெஞ்சமதும் தேம்பியழும் என்று சொல்லு
32. இன்னா செய்யாமை
பெருஞ்செல்வம் கிட்டுமென்று பிறர் சொல்லக்கேட்டுமனம்
மாசற்றார் செய்யாரே மாந்தருக்குத் துன்பந்தான்
கோபம்கொண்டு ஒருமனிதர் கொடியதுன்பம் செய்தாலும்
தானும் அதைச்செய்யார் சான்றோர்கள் என்று சொல்லு
தீமைசெய்த ஒருவருக்கு தீமைசெய்ய நினைக்காமல்
நன்மைசெய்தால் அதுவேதான் நல்லதொரு தண்டனையாம்
ஒரு நாளும் மற்றவர்க்கு ஊறுசெய்ய எண்ணாதார்
தலையாய மாண்புதனை சாற்றிடுவாய் ஊரெல்லாம்
முற்பகலில் ஒருவருக்கு மூட்டிவிட்ட துன்பமது
பிற்பகலில் திரும்பிவந்து பின்புறமாய் நிற்குமன்றோ
சஞ்சலங்கள் கூடாது தன்வாழ்வில் என்று சொன்னால்
அடுத்தவர் வாழ்வினிலே அதைச் செய்யக்கூடாது
33. கொல்லாமை
தருமத்தில் மிகப்பெரிய தருமமது யாதென்றால்
கொல்லாமை ‘ மற்ற அறம் கூடிவரும் என்று சொல்லு
உயிர்வாழத் தேவையுள்ள உண்பொருளை எல்லார்க்கும்
பகிர்ந்து கொடுத்துண்ணும் பண்பு நல்ல பயனளிக்கும்
செய்யும் அறங்களிலே சிறந்த அறம் எதுவென்றால்
கொல்லாமை எனும்அறமே குவலயத்தில் மிகப் பெரிதாம்
தன்னுயிர்தான் முத்திபெறத் தவமிருப்பார் தன்னிலுமே
இன்னுயிரைக் கொல்லாதார் எல்லாரும் நல்லவரே
நன்னுயிரைக் காப்பாற்ற தயையின்றி பிறவுயீரை
துன்னுகின்ற பாவமதைத் தொலைத்திடவும் முடியாது
கொல்லாமை என்னும் அறம் கொள்கைகளில் மிகவுயர்வு
பொய்யாமை அறமதுவும் புகழ் சேர்க்கும் என்று சொல்லு
34. நிலையாமை
நாடகம் முடிந்தவுடன் நகர்ந்துவிடும் மக்களைப் போல்
தேடிய செவ்வமதும் சென்றுவிடும் என்று சொல்லு
நிலையில்லா செல்வமதை நிலைஎன்றும் ஊன்உடலம்
அழியாது என்பதுவும் அறிவுடைமை ஆகாது .
பொருளிருக்கும் நேரத்திலே புகழ்சேர்க்கும் நற்செயல்கள்
விரைந்து முடித்துவிடல் வேண்டுமென்று சொல்வாயே
இன்றுநாம் பார்க்கின்ற இம்மனிதர் நாளைக்கு
இருப்பாரா இவ்வுலகில் என்று சொல்ல முடியாது
எப்போது சாவுவரும் என்பதொன்றும் தெரியாது
தப்புத்தப்பா வரும் எண்ணம் சதகோடி என்று சொல்லு
சொல்லாமல் வரும்சாவு தூங்குவது போலாகும்
தொல்லையாம் இப்பிறப்பு தூங்கிப்பின் எழுவதன்றோ
35. துறவு
எந்தெந்த ஆசைகளை இல்லாமல் செய்தாரோ
அந்தந்த ஆசையினால் அவருக்குத் துன்பமில்லை
ஐம்புலனைக் கட்டிவைத்து ஆசைகளை விட்டுவிட்டு
சும்மா இருப்பதுதான் துறவுநிலை என்று சொல்லு
பற்றவரும் ஆசையினை பற்றாது செய்துவிட்டால்
பற்றாது துன்பம் வந்து பரதேசி என்பார்க்கு
மொத்தமதாய் ஆசைகளை மூட்டை கட்டி வைத்தவரே
அத்தனை ஞானிகளில் அவர்பெரியார் ஆவாரே
முற்றும் துறந்தவரே முனிவர்களில் தலையாவார்
மற்றவரோ மாயை எனும் வலைக்குள்ளே மயங்குவரே
பற்றை அகற்றிவிட்டால் பிறவாமை கைகூடும்
பிறவாமை பெற்றுவிட்டால் பிறவித்துன்பம் நீங்கிவிடும்
பற்றற்றான் என்பவனோ பகவன் எணஉணர்ந்து
பற்றுக அவனையே பற்றுவிட என்று சொல்லு
36. மெய் உணர்தல்
இருள்நீங்கி மேலுலக இன்பமதைப் பெற்றிடலாம்
மருள்நீங்கி மெஞ்ஞான மனங்கொண்டார் என்று சொல்லு
உண்மை எது இன்மை எது உணர்ந்து கொள்ளமாட்டாதார்
நன்மை பெறமாட்டார்கள் நாய்க்குணந்தான் மிஞ்சிவிடும்
சந்தேகம் தனைநீக்கி தவஒழுக்கம் மேற்கொண்டால்
எந்நாளும் மோட்சந்தான் இவர் வாழ்வில் என்று சொல்லு
உப்புத்தான் கரிப்பாகும் உண்ணும் உள்ளி உரைப்பாகும்
இப்பொருளுக்குள்ளகுணம் என்றுணர்தல் அறிவாகும்
கேழ்வரகில் நெய்இருக்கு கேளுங்கள் என்று சொன்னால்
இருக்காது இதுபொய்தான் என்றுணர்தல் அறிவாகும்
தெய்வந்தொழுவதினால் தேடலாம் பேரின்பம்
பொய்யில்லை உண்மை என்று போய்ச்சொல்லு எல்லார்க்கும்
தெய்வத்தின் திருவருளைச் சிறப்பாகப் பெற்றவர்கள்
பிறப்பென்னும் பெருநோயை பெயர்த்து அகற்றிடுவார்
37. அவா அறுத்தல்
நில உல்க ஆசையிலே நீந்தித் திளைத்தவர்கள்
பலகாலும் பிறப்பதற்குப் பயிர்விளைத்தார் என்று சொல்லு
வேண்டும் மறுபிறப்பு வேண்டாமே அப்பிறப்பு
எவ்வாறு வேண்டினரோ அவ்வாறே அதுகிடைக்கும்
விழுச்செல்வம் ஒருவருக்கு ‘ வேண்டாமை ‘ ஒன்றேதான்
ஒழுக்கம் அதனைவிட ஒன்றுமில்லை என்று சொல்லு
மனம்தூய்மை உள்ளவர்கள் மறந்திடுவார் ஆசையெல்லாம்
மற்றுமது சொர்க்கத்தின் வாசற்படி என்று சொல்லு
மண்ணாசை பொன்னாசை மற்று முள்ள ஆசை எல்லாம்
படுகுழியில் தள்ளிவிட்டார் பற்றற்றார் என்று சொல்லு
ஆசைப்பேய் பிடித்தவர்கள் அறஞ்செய்யமாட்டார்கள்
மோட்சமெனும் இன்பத்தை முகந்திடுவார் என்று சொல்லு
38. ஊழ்
நல்ல நேரம் வந்து விட்டால் நல்லதெல்லாம் கைகூடும்
அல்லாத நேரம் வந்தால் அத்தனையும் கெட்டுவிடும்
கெட்டநேரம் வந்துவிட்டால் கெடுத்துவிடும் புத்தியைத்தான்
நல்லநேரம் வந்துவிட்டால் நல்லறிவை வளர்த்துவிடும்
பணத்தைத் கோட்டைகட்டிப் பார்புகழ் வாழ்வதுவும்
ஒன்றுமில்லார் வாழ்வதுவும் ஊழ்வினையின் செயலாகும்
ஊழ் என்னும் பழவினைதான் ஓடிவந்து வாழ்வினிலே
ஊறுபல செய்துவிடும் ஒன்றும் செய்ய முடியாதே
செல்வமிகப் படைத்தவர்கள் செய்கின்ற செயல்களிலே
கெட்டதையும் நல்லதென்பார் நல்லதையும் கெட்டதென்பார்
ஒருகோடி செல்வங்கள் உன்வீட்டில் இருந்தாலும்
‘ அருகன்விதி ‘ இல்லை என்றால் அனுபவிக்க முடியாது
வாழ்வில் கசப்புவரும் வந்தபின் களிப்புவரும்
இரண்டையும் சமமாக ஏற்பதுதான் நலமாகும்
39. இறைமாட்சி
படைகுடியும் , நல்லமைச்சும் , பாதுகாப் , பரண் , நண்பர்
அளவிலாப் பொருளுடையான் அரசர்க்கும் அரசாவான்
அஞ்சாமை ஈகையுடன் அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாது ஆள்வோர்க்கு இருந்திடவும் வேண்டுமன்றோ
தூங்காமை கல்வியுடன் துணிவுடைமை இம்மூன்றும்
நீக்கமறப் பெற்றவரே நிலம் ஆள்வார் என்று சொல்லு
நாட்டின் நலன்கருதி நல்லாட்சி செய்பவரைப்
போற்றுவார் மக்களெல்லாம் புண்ணியரே வாழ்க வென்று
புதியபல சட்டங்கள் போடுவதால் பொருள்சேர்த்து
திட்டமிட்டு நற்பணிகள் செய்திடலாம் நல்லாட்சி
கோரிக்கை கொண்டுவரும் குடிமக்கள் காண்பதற்கு
கருணை முகம்காட்டி கனிவாகப் பேசிடனும்
குறையொன்றும் இல்லாமல் கோலோச்சும் மன்னவன் தான்
இறைவனாம் மக்களுக்கு இச்செய்தி போய்ச்சொல்லு
40. கல்வி
நல்ல நல்ல நூல்களெல்லாம் நன்றாகக் கற்று அதில்
சொன்னபடி நடப்பதுதான் சுகவாழ்வு என்று சொல்லு
எண்கணிதம் கற்பதுவும் எழுதுவதைக் கற்பதுவும்
கண்பெற்றார் பெற்றபயன் கண்டு சொல்லு வாழுவார்க்கு
கண்ணுடையார் என்பவர்கள் கற்றவரே முகத்திரண்டு
புண்ணுடையார் கல்லாதார் போய் உரைப்பாய் எல்லார்க்கும்
புத்திதரும் கல்வியொன்றே பொன்னகையாம் கற்றோர்க்கு
வேறுஎந்த அணிகலனும் வேண்டாமே என்று சொல்லு
தோண்டும் அளவுவரை சுரக்கும் நீர் மணற் கேணி
கற்கும் அளவினிலே கலைஞானம் மேலோங்கும்
யாதானும் ஊராமால் நல்லவர்கள் நட்பாமால்
சாகும்வரை கல்லாதான் சகவாழ்வு என்னாவாம் ?
பிழையேதும் இல்லாத பெருஞ்செல்வம் கல்வியதாம்
சேர்த்துள்ள மற்றபொருள் செல்வமில்லை என்று சொல்லு
41. கல்லாமை
படிப்பறிவு இல்லாதார் படித்தவர்முன் சொல்லாடல்
அரங்கின்றிப் பகடைக்காய் ஆடுவது போலாகும்
கல்லாத ஒருமனிதர் கற்றார்முன் தன்மடமை
காட்டாது நடந்து விடில் கல்லாதார் நல்லவரே
ஐயமறக் கல்லாதான் அறிவுடமை நன்றேனும்
அறிவுடையார் அவன் சொல்லை அப்படியே ஏற்பதில்லை
மாசறுநூல் கல்லாதார் மனிதரே என்றாலும்
பயனில்லாக் களர்நிலம்போல் பயனில்லார் என்று சொல்லு
நல்லறிவு இல்லாதான் நல்ல உடல் கட்டழகு
மண்பொம்மை போலாகும் மதிக்கபட மாட்டானே
நன்மக்கள் பெற்றுள்ள நல்குரவு தீமையில்லை
கல்லாதான் செல்மது கைவிலங்க மாட்டிவிடும்
கரடி புலி சிங்கமெல்லாம் காட்டில் வாழ் விலங்குகளாம்
கல்லாத மனிதரெல்லாம் வீட்டில் வாழ் விலங்காவார்
42. கேள்வி
செல்வங்கள் பலவற்றில் செவிவழியில் வரும் செல்வம்
செல்வத்துள் மிக உயர்ந்த செல்வமென்று போய்ச்சொல்லு
தீதில்லாப் பெரியோர்கள் சேர்க்கைமிக நன்றாகும்
மற்றுமவர் சொற்கேட்டல் இன்பமாம் செவிகளுக்கு
கல்லாதான் ஆனாலும் கற்றவரின் சொல் கேட்டால்
பொல்லாத காலமதில் பொன்றாத துணையாகும் .
ஆன்றோர் வழங்குகின்ற அறிவுரைகள் கேட்டாக்கால்
அறங்கூறும் வழிநடத்தி ஆருயிர்க்கு ஒளிகூட்டும்
கேட்கும் திறனிருந்தும் கேள்விவழி கல்லாதார்
செப்பும் செவியிரண்டும் செவிடாகும் என்று சொல்லு
ஒழுக்கம் மிகவுடையோர் உபதேசம் கேளாதார்
பணிவாகப் பேசுதற்கு பக்குவமும் வராது
செவிவழியே சுவையறியார் செத்தாரைப் போல்வாரே
வாய்வழியே ருசியறிவார் வாழ்வுமதும் வாழ்வாமோ
43. அறிவுடைமை
அழிவில்லா வாழ்வுக்கு அறிவுடைமை அரணாகும்
கோவேந்தர் கட்டியுள்ள கோட்டைச் சுவர் போல
தவறான பாதையிலே தன்மனதைச் செலுத்தாமல்
நல்வழியில் நடப்பதுதான் நல்லறிவாம் என்று சொல்லு
அறிவுடையோர் சொன்னாலும் அறியாதார் சொன்னாலும்
அப்பொருளின் உண்மையினை அறிந்து கொளல் நன்றாகும்
உயர்ந்தோர் சொலும்வழியில் ஒழுகுவது நன்றாகும்
இன்பதுன்பம் இரண்டையுமே ஏற்பதுதான் அறிவுடைமை
எந்தவொரு ஒழுக்கத்தில் இவ்வுலகம் வாழ்கிறதோ
அவ்வழியே போவதுதான் அறிவுடைமை என்று சொல்லு
இல்லாத செல்வமில்லை இவ்வுலகில் அறிவிருந்தால்
இருந்தாலும் செல்வங்கள் இலவாகும் அறிவிலிக்கு
வருமுன்னர் காக்கின்ற வழியறிந்தார் ஒருவருக்கு
வருந்துகின்ற நோய்எதுவும் வாராது என்று சொல்லு
44. குற்றம் கடிதல்
கடுங்கோபம் அகங்காரம் காமமாம் இழிகுணங்கன்
கடுகளவும் இல்லாதார் கடவுளுக்கு ஒப்பாவார்
தேசநலன் கருதாத செய்கருமம் செய்யாத
மறம் இல்லா மன்னனுக்கு மானம் போம் என்று சொல்லு
தினையளவு குற்றமதைச் செய்திடவும் அஞ்சிடுவார்
பனையளவாய் அதை எண்ணும் பழி நாணும் பெரியோர்கள்
வருமுன்னர் காவாதான் வாழ்க்கை நிலையாது
நெருப்பினில்பட்டதொரு நெற்கூழம் என்று சொல்லு
அரசன்தன் குற்றத்தை அகற்றிப்பின் மற்றொருவர்
கைப்பட்ட குற்றத்தைக் கண்டித்தல் முறையாகும்
தன்பெருமை தனைவியந்து தப்பட்டம் கூடாது
நன்மையில்லாதசெயல் நயப்பதுவும் கூடாது
தான்செய்யும் குற்றமொன்று தனக்கேதான் பகையாகும்
தன்மானம் வேண்டுபவர் தவறு செய்யக்கூடாது
45. பெரியாரைத் துணைக் கோடல்
அறிவுடைய பெரியோரின் அளப்பரிய நட்பதனை
தேடுவது நல்லதென்று தேசமெங்கும் போய்ச்சொல்லு
துன்பமது வருமுன்னர் துறத்தும் வழி கண்டவரின்
துணைகொண்டு செயலாற்றத் துணிவு கொள்ள வேண்டுமன்றோ
பெரியாரை மிகப்பேணிப் பெறுகின்ற அவர்துணைதான்
அருமையிலும் அருமையென்று அனைவர்க்கும் போய்ச்சொல்லு
தன்னுடைய கண்ணிரண்டும் தனக்குதவி ஆவது போல்
துப்பாய அறிஞர்களைத் துணைகொள்ளல் வேண்டுமன்றோ
என்றென்றும் புத்திமதி இடித்துரைப்பார் துணையானால்
நன்றாகும் அவர்செயல்தான் நானிலத்தில் என்று சொல்லு
இடித்துரைப்பார் இல்லாத ஏமாளி மன்னனவன்
கெடுப்பார் இலையெனினும் கெட்டுத்தான் போவானே
மூலதனம் இல்லாதான் முதலாளி ஆவதில்லை
அமைச்சரவை இல்லாதான் அரசாள முடியாது
46. சிற்றினம் சேராமை
அறிவுடைய பெரியோர்கள் அணுகுவரோ அற்பரிடம்
அற்பகுணம் உள்ளவரே அவரோடு நட்பாவார்
நீரளவே ஆகுமாம் நீராம்பல் ஒருவருக்கு
மனத்தளவே மேலோங்கும் மாண்பதுவும் என்றுசொல்லு
நிலத்தியல்பால் நிறம்மாறும் நீரினது குணம் போல்
இனத்தியல் போல் குணம் மாறும் இயல்பிதுவே என்று சொல்லு
இனந்தூய்மை உள்ளவர்கள் இப்புவியில் செய்வதெல்லாம்
நலமாக அமையுமென்று நாற்றிசையும் பறைசாற்று
நல்லமனம் கொண்டவர்கள் நல்லதையே செய்திடுவார்
இனநலமும் உண்டானால் இவர்பெறுவார் புகழாரம்
நல்லமனம் இருந்தாலும் நற்செயல்கள் இருந்தாலும்
இனநலம் ஒருவருக்கு ஏமாப்பு என்று சொல்லு
47. தெரிந்து செயல்வகை
செய்யப் புகும்செயலால் செலவைவிட வரவுமிகின்
செய்வதுதான் நல்லதென்று தேசமெங்கும் போய்ச்சொல்லு
தொழில்தெரிந்த வல்லுநரின் தொடர்பு கொண்டு செய்வார்க்கு
அரியசெயல் ஒன்றுமில்லை அவருக்கு வெற்றியுண்டு
ஆக்கம் தனைக்கருதி அறிவுடையோர் செய்யாரே
போட்ட முதல் இழக்கும் புன்மையாம் செயலெதையும்
தேவையாம் செயலெதையும் செய்யாமை தீமையதாம்
தேவையற்ற செயலெதையும் செய்வதுந்தான் தீமையதாம்
எண்ணித் துணிந்திடனும் எச்செயலும் செய்வதற்கு
துணிந்தபின் எண்ணுவது தோல்வியாம் என்று சொல்லு
நல்லதை செய்திடினும் நன்றாகக் கொள்ளாரே
பெறுவார் தகுதிக்குப் பிழையானால் என்று சொல்லு
நகைப்புக்கு இடமான , நன்மக்கள் விரும்பாத
செயல்களை அரசாள்வார் செய்யாமை நன்றாகும்
48. வலியறிதல்
போர்செய்யப் போகுங்கால் பிறர்பலமும் தன்பலமும்
படைபலமும் ஆராய்ந்து பார்த்திடுதல் நன்றாகும்
இதன்மூலம் இவ்வழியால் எதிரிபடை வென்றிடலாம்
என்றாய்ந்து செயல்பட்டால் இயலாத தொனறுமில்லை
தன்னைவிடப் பலசாலி தாரணியில் இல்லைஎன்று
ஆணவம் கொண்டுநின்றால் அழிந்திடுவான் என்று சொல்லு
மயில்தோகையானாலும் மட்டின்றி ஏற்றிவிட்டால்
இரும்பாக இருந்தாலும் இற்றுவிடும் வண்டியச்சு
அதுபோல அரசனுக்கு அதிகம்பேர் பகையானால்
அரிமாவைப்போன்றவனும் அழிந்திடுவான் என்று சொல்லு
தளிர் கொம்பில் ஏறியதைத் தாண்டியும் கால்வைத்தால்
மண்மீது தான்விழுந்நு மரித்திடுவார் என்று சொல்லு
வருமானம் தனையறிந்து வாழ்வதற்கு அறியாதான்
திருவெல்லாம் போகவிட்டு செயலிழந்து திகைத்திடுவான்
* அரிமா - சிங்கம்
49. காலமறிதல்
குறுங்காகம் பகல் வேளை கோட்டானை வென்றுவிடும்
இகல்வெல்லல் வேந்தனுக்கு எதிர்காலம் வேண்டுமன்றோ
காலம் தனையறிந்து கைப்பொருளும் தானறிந்து
வேலை தனைத்தொடர்ந்தால் வெற்றிகிட்டும் வேந்தனுக்கு
பேருலகம் முழுவதையும் பெற்றுவிடத் தான்முடியும்
வருங்காலம் தனையறிந்து வலிமையுடன் எதிர்நின்றால்
மனக்கலக்கம் இல்லாமல் வருங்காலம் காத்திருப்பார்
ஞாலத்தை பெற்றிடுவார் நற்குறனே போய்ச்சொல்லு
பெருவீரன் சாற்றேதான் பின்வாங்கி நிற்பானேல்
புலிபோலப் பாய்வற்கு போர்குணமே என்று சொல்லு
50. இடனறிதல்
போர்செய்யத் தக்கதொரு போர்க்களத்தை தேர்வு செய்து
போர்செய்யும் மன்னனவன் பெற்றிடுவான் வெற்றியினை
படைவீரர் வலியோடு பலமுள்ள அரணிருந்தால்
பகைவர்படை வென்றிடலாம் பாரான்வோர் என்று சொல்லு
நாடு பிடிக்க எண்ணும் நப்பாசை மன்னவனை
சாம்வான் இடமறிந்து தப்பாடில் வென்றிடலாம்
தண்ணீரில் முதலைக்கு தாளாத பலமுண்டு
வெளியேறில் பிறவிலங்கு வென்றுவிடும் முதலையினை
கடல்நீரில் ஓடாது கடைந்தெடுத்த நெடுந்தேரும்
கடல் ஓடும் நாவாயும் கடுநிலத்தில் ஓடாது
வேற்படைக்கு அஞ்சாத வேழத்தை வெறும் புனலின்
சேற்றுக்குள் ஆழ்ந்துவிடின் சிறுநரியும் வென்றுவிடும்
51. தெரிந்து தெளிதல்
பொறுப்புணர்ந்து நடப்பவரைப் பொருளாசை
தெரிந்து கொளல் வேண்டும் தேசமதை ஆள்வதற்கு
நடத்தை செயல்களிலே நற்குணம் தீக்குணமும்
எடைபோட்டு மிஞ்சியதை ஏற்பதுதான் முறையாகும்
பெருமைக்கும் மற்றுமந்த சிறுமைக்கும் அவரவரின்
செய்கருமம் சான்றாகும் தெரிந்து கொளல் நன்றாகும்
நாட்டுப்பற்று இல்லாதார் நன்மை தீமை தெரியாதார்
ஆட்சிமன்றக் குழுவிற்கு ஆகாதார் என்று சொல்லு
நன்றாக ஆராய்ந்து நல்லவரைத் தேர்வு செய்து
நாடாளச் சட்டமன்றம் நாட்டிடவும் வேண்டுமென்றோ
அருகதை அற்றவரை ஆளும் பொறுப்பில் வைத்தால்
அவராலே வருந்துன்பம் அனைவருக்கும் என்று சொல்லுல்
52. தெரிந்து வினையாடல்
தீமையொன்றும் சாராமல் திட்ட்மிட்டுப் பணிசெய்யும்
திறமையுள்ள மனிதரையே தேர்ன்ந்தெடுத்தல் நலமாகும்
வருவாய்தனைப் பெருக்கி வளம் பெருக்கி குளம்பெருக்கி
உறங்காது உழைக்க வல்ல ஒரிமனிதர் வரவேண்டும்
அன்பறிவு தெளிந்த உள்ளம் அத்தனையும் பெற்றவனே
அரசானத் தகுதியுள்ளான் அறிந்தவனைக் கொளல் வேண்டும்
இச்செயலை இவ்வழியால் இவன்செய்யத்தகுதியுள்ளான்
என்றாய்ந்து அச்செயலை அவனிடமே விடல் வேண்டும்
தேர்வு செய்து வந்தவரும் செய்வினையால் மாறிடலாம்
அம்மனிதர் பணிசெய்ய அனுமதிக்கக்கூடாது .
செய்வினையைச் சிறப்பாகச் செய்வரை விலக்கி விடில்
சேதந்தான் மன்னனுக்கு செல்வம் வந்து சேராது
அரசுப்பணி செய்வானை அன்றாடம் பார்வையிட்டு
தவறேதும் வாராமல் சரிசெய்தல் நன்றாகும் .
53. சுற்றம் தழால்
பொருள் இழந்தகாலத்தும் போகவிடார் பாசத்தை
சுற்றத்தார் எந்நாளும் சுற்றமாய்ச் சூழ்ந்து நிற்பார் .
அன்புடைய சுற்றத்தார் அமைந்திருப்பின் ஒருவர்க்கு
இல்லாத செல்வமில்லை இன்பமாம் வாழ்வினிலே .
மகழ்ந்துமிக உரையாடும் மாசுபடா சுற்றத்தார்
இல்லாதான் வாழ்வு நீர் இல்லாத குளம்போலாம் .
செல்வமிகப் பெற்றவர்கள் தேடும் பொருள் என்னவென்றால்
சுற்றத்தார் யாவரையும் சுற்றிக்கொளல் என்றுசொல்லு
காக்கையெல்லாம் கூடியுண்ணும் கட்டெறும் சேர்ந்துண்ணும்
ஆக்கம் விரும்புபவர் அப்படித்தான் செயல் வேண்டும்
அரசாங்கம் சார்ந்துள்ளார் அவரவரின் தகுதியினை
அறிந்து பொருள்கொடுத்தால் அவர்வாழ்வில் மகிழ்ந்திடுவார்
54. பொச்சாவாமை
கோபம்எனும் கொடும்பாவி கொண்டுவரும் தீதைவிட
சோம்பலெனும் பேய்செய்யும் பெருந்துன்பம் என்றுசொல்லு
பொச்சாப்பு எனும் சோர்வு புகழெல்லாம் அழித்துவிடும்
அன்றாடம் வறுமைவந்து அறிவுதனை அழிப்பதுபோல்
அச்சம் உள்ள அரசனுக்கு அரண் இருந்தும் பயனில்லை
பொச்சாப்புக்கொண்டவர்க்கு புகழ்இல்லை நன்மையில்லை .
துன்பமது வருமுன்னர் துறத்தும்வழி பேணாது
சோர்ந்து இருப்பாரேல் தொந்தரவு சுற்றிவரும் .
துன்பமது வருமுன்னர் துறத்தும்வழி பேணாது
சோர்ந்து இருப்பாரேல் தொந்தரவு சுற்றிவிடும்
சோர்வுதனை நீக்கிவிட்டு தொடர்ந்து முயன்டுவார்
அரியசெயல் செய்திடுவார் அவர்க்கில்லை தோல்வியது
இதிஎன்ன பெரியசெயல் என்றெண்ணி இறுமாந்து
சோர்ந்து இருந்துவிடில் தொடர்ந்து வரும் துன்பமெல்லாம்
நினைத்த ஒரு செயலெதையும் நிறைவேற்றிவிடமுடியும்
மனச்சோர்வு இல்லாத மானிடர்தான் என்றுசொல்லு
55. செங்கோன்மை
இவர்நமக்கு வேண்டுபவர் இவர்வேண்டார் என்றொருவர்
அகம் ஏதும் இல்லாத ஆளுமையே செங்கோன்மை
வான்வழங்கும் மழைநீரால் வாழுமிந்த வையமெல்லாம்
கோன்வழங்கும் ஆட்சியின் கீழ் குடிமக்கள் வாழ்ந்திடுவார்
அறங்கூறும் வேதங்களும் அந்தணரின் சாத்திரமும்
நீதியில்லா மன்னவனால் நிலைகுலைந்து போகுமன்றோ
குடிபடைகள் நலன்கருதிக் கோலோச்சும் மன்னவனின்
அடிதொழுது வாழ்ந்திடுவார் அவன்மக்கள் என்றுசொல்லு
வேற்படைதான் வேந்தனுக்கு வெற்றிதரும் என்பதல்ல
கோலோச்சும் நெறிமுறையும் கொண்டுவரும் வெற்றியினை
கொலைசெய்யும் கொடியவரைக் கோவேந்தர் தண்டித்தல்
களையென்னும் புல் , செடியைக் களைந்துவிடல் போலாகும் .
56. கொடுங்கோன்மை
கோவேந்தன் மக்களுக்கு கொடுந்துன்பம் செய்யானேல்
கொலை செய்வான் தன்னைவிடக் கொடியவனம் என்றுசொல்லு
வழிப்பறிக் கொள்ளையன்போல் வரிவாங்கும் மன்னவனை
கொடுங்கோலன் என்றுரைப்பார் குடிமக்கள் என்றுசொல்லு
வழக்குகளை ஆராய்ந்து மக்களது குறைபோக்கி
நல்லாட்சி செய்யாதான் நாடுகெடும் என்றுசொல்லு
நாட்டின் வளம்பெருக்கி நல்லாட்சி செய்யானேல்
செல்வாக்கு மங்கிவிடும் செல்வமதும் போய்விடுமே
அல்லற்பட்டு மக்களெல்லாம் அழுதிட்ட கண்ணீர்தான்
அரசனது செல்வத்தை அழித்துவிடும் என்று சொல்லு
மழையின்மை நல்லதல்ல மக்களுக்கு , மன்னனது
அளியின்மை நல்லதல்ல அல்லல்தான் என்றுசொல்லு
பால்வளம் குன்றிவிடும் பக்திநெறி வாழாது
காவலன் எனுமரசன் காவாது போவானேல்
57. வெருவந்த செய்யாமை
நன்றாக ஆராய்ந்து நல்லதொரு தீர்ப்பளித்தல்
எல்லாரும் மனமுவந்து ஏற்றிடுவார் என்றுசொல்லு
குற்றம்புரிந்தவனைக் கோபத்தால் தாக்கிவிட்டு
சற்றே மெதுவாகத் தண்டித்தல் நலமாகும்
வெருவந்த செய்தொழுரும் வெங்கோலன் ஆனாக்கால்
அருமந்த அவனாட்சி அழிந்துவிடும் என்றுசொல்லு
அரசன் கொடுங்கோலன் அய்யய்யோ என்றுசொன்னால்
ஆகாது மன்னனுக்கு அழவுவரும் என்றுசொல்லு
கடுஞ்சொல் கருணையில்லான் காவலன்தான் என்றுசொன்னால்
நெடுஞ்செல்வம் அவனை விட்டு நீங்கிவிடும் என்றுசொல்லு
பகைமன்னன் நிலையறிந்து படைபலத்தைக் கூட்டாதான்
நிலை என்றும் அச்சந்தான் நிம்மதியே இருக்காது
சுடுசொற்கள் பேசுவதும் சூதாட்டம் ஆடுவதும்
மார்தட்டும் மன்னவனின் வலிமைக்கு இழுக்காகும்
குறிப்பு : வெருவந்த – அச்சம் , பயம்
வெங்கோலன் - கொடுமை செய்யும் அரசன் , நீதி இல்லாதவன்
58. கண்ணோட்டம்
கண்ணோட்டம் என்கின்ற கருணையாம் ஈவிரக்கம்
உண்டானால் மக்களெல்லாம் உவகையுடன் வாழ்வார்கள்
மன்னனது கண்ணோட்டம் மாநிலத்தில் விழுமானால்
இன்புற்று வாழ்வார்கள் இல்லறத்தார் என்றுசொல்லு
‘ பண் ‘ என்னும் சந்தமதே பாடலுக்கு பெருமையதாம்
கண்ணோட்டம் ஒன்றேதான் கண்களுக்கு பெருமையதாம்
கண்களுக்கு அணிகலனாம் கண்ணோட்டம் எல்லார்க்கும்
கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகப்புண்ணாகும்
காரியத்தில் கண்வைத்து கண்ணோட்டம் செய்வானேல்
மாரிக்கு ஒப்பாவான் மன்னவனும் என்றுசொல்லு
தீமையே தன்க்கொருவன் செய்தாலும் பொறுத்தாற்றி
நன்மையே செய்வதுதான் நற்பண்பு என்றுசொல்லு
59. ஒற்றாடல்
ஒற்றாடல் செய்வதுவும் உலகவியல் அறிவதுவும்
பெற்றவனின் ஆட்சியிலே பிழையொன்றும் வாராது
நாட்டில் நடப்பதெல்லாம் நாள்தோறும் கேட்டறிந்து
வாட்டமுறும் மக்களுக்கு வாழ்வளிக்க வேண்டுமன்றோ
ஒற்றாடல் செய்யாது உண்மைநிலை அறியாதான்
கொற்றம் குறைபட்டுக் கெட்டுவிடும் என்றுசொல்லு
அரசாங்கப் பணிசெய்வார் , அல்லாதார் சுற்றத்தார்
அனைவரது செயல்களையும் ஆராய்தல் ஒற்றாகும்
ஒற்றன்எனக் காட்டாத உருமாற்றம் செய்துகொண்டு
உண்மைகண்டு சொல்பவனே ஒற்றனாம் என்றுசொல்லு
ஒருஒற்றன் கூறுவதை மறுஒன்றன் வழியாக
சரிசெய்து கொள்வதுதான் தலைவனுக்கு நன்றாகும்
ஒற்றன் ஒருவனுக்கு ஓர்சிறப்புச் செய்யுங்கால்
மற்றவர்க்குத் தெரியாமல் மறைத்துவிடம் நன்றாகும்
குறிப்பு : ஒற்றன் - உளவு சொல்வோன் . நாட்டில் நடப்பவற்றை நேரில் பார்த்து ரகசியமாய் அரசனுக்குத் தெரியப்படுத்துபவன்
60. ஊக்கம் உடைமை
ஊக்கந்தான் ஒருவருக்கு உடைமைகள் , ஊக்கமில்லார்
உடைமைகளை ஒன்றுக்கும் உதவாது என்றுசொல்லு
உள்ளத்தின் வலிமையதே உடைமைகளில் பெரிதாகும்
பொருடைமை இருப்பதுபோல் , இல்லாமல் சென்றுவிடும்
மனவலிமை உடையவர்கள் மனம்வருந்தார் பொருள்போனால்
மறுபடியும் போனபொருள் வரக்கூடும் அவர் உழைப்பால்
நீர்இருக்கும் உயரம்வரை நீண்டுவந்து பூமலரும்
எண்ணத்தின் உயரம்வரை எழுச்சிபெறும் வாழ்க்கைப்பூ
உலகையே விலைபேச உள்ளுவதும் தப்பில்லை
வந்தால் வரவாகும் வரவில்லை , கவலையில்லை
கூர்மையுள்ள கொம்பிரண்டைக் கொண்டுள்ள யானையுந்தான்
பாய்ந்துவரும் புலிகண்டு பயந்தோடும் என்றுசொல்லு
61. மடியின்மை
நல்லகுடிப் பண்புகளை நாசந்தான் செய்துவிடும்
பொல்லாத சோம்பலதைப் பொசுக்கிவிடல் நன்றாகும்
‘ மடி ‘ என்னும் பேய்மகனை மதியாலே விரட்டிவிட்டு
குடிப்பெருமை தானுயர்த்திக் கொளல் வேண்டும் என்றுசொல்லு
மடிதனையே விலைகொண்ட மடையனால் மாண்டகுடி
மிடிபெற்று மீளாது மாண்டிவிடும் என்றுசொல்லு
சோற்றுக்கே வழியில்லாச் சோம்பேறியாயிருந்தால்
பார்ப்போர் நகைத்திடுவார் பழிபோட்டுப் பேசிடுவார்
சோம்பல் வந்து குடிகொண்டால் சொந்தவீடும் இருக்காது
அடுத்தவீட்டு மனிதருக்கே அடிமையாம் என்று சொல்லு
முன்பொருநாற் மாயவனும் மூவுலகும் அளந்ததுபோல்
சோம்பலில்லா மன்னனுக்கு சொந்தமதாம் மூவுலகம்
* குறிப்பு : மடி - சோம்பல் , மிடி - மயக்கம் , மடமை
62. ஆள்வினை உடைமை
அரியசெயல் இதுவென்று அசந்துவிடல் ஆகாது
முயற்சிமேல் கொள்ளுவதால் முடியாததொன்றுமில்லை
செய்யும் தொழில் ஒன்றைச் செம்மைபெறச் செய்யாமல்
இடையிலே விட்டுவிட்டால் இவ்வுலகம் மதிக்காது
தாளாண்மை மேற்கொண்டு தன்கருமம் செய்வாரே
வேளாண்மை செயல்முடியும் விரும்பிவரும் மற்றவர்க்கு
வீரமில்லான் வாளாண்மை வீணாகும் அதுபோல
தாளாண்மை இல்லார்க்கு வேளாண்மை ஆகாது .
63. இடுக்கண் அழியாமை
துன்பம்வந்து நல்லவரை தொந்தரவு செய்யுங்கால்
புன்னகை செய்து அதைப் போக்கிவிடல் நன்றாகும் .
வெள்ளம்போல் துன்பங்கள் வீட்டுக்குள்பாய்ந்தாலும்
அறிவுடையார் அதைக்கண்டு அஞ்சாது எதிர்கொள்வார் .
துன்பமதைத் துன்பத்தால் துரத்தி அடிக்கவல்லார்
துன்பத்தால் ஒருபோதும் துன்பப்படமாட்டார்கள் .
அலைஅலையாத் துன்பங்கள் ஆர்ப்பரித்து வந்தாலும்
நிலைகொள்ள விடமாட்டர் நெஞ்சுறுதி கொண்டவர்கள் .
இன்பத்தை இன்பமதாய் எண்ணாத இயல்புடையார்
துன்பத்தால் ஒருபோதும் துன்பப்படமாட்டார்கள் .
இல்லாமை என்பதையும் இன்பமாய் ஏற்பாரை
துன்பம் வந்து துன்பஞ்செய்யத் துணியாது என்றுசொல்லு .
* இடுக்கண் - துன்பம்
64. அமைச்சு
செயல்திட்டம் செய்கருவி செய்காலம் தேவையெல்லாம்
ஆராய்ந்து சொல்பவனே அமைச்சனாம் என்று சொல்லு
வலிமையுடன் குடிகாத்தால் , வரலாறு , தான்றிதல்
அறச்செயல்கள் தானோம்பல் அமைச்சகத்தின் செயலாகும் .
செய்தக்க இதுவென்றும் செய்யும்வழி இதுவென்றும்
நயத்தக்க சொல்பவன்தான் நல்லமைச்சன் என்று சொல்லு
சாதுபோல் இருந்துகொண்டு சதிசெய்யும் ஒரு அமைச்சன்
எழுகோடி பகைவருக்கு இவன்ஒருவன் சமமாவான்
மதிநுட்புந்தன்னோடு விதிநுட்பம் கற்றறிந்து
செயல்நுட்பம் உள்ளவனே சிறந்தநல் மந்திரியாம்
அமைச்சனுக்கு உள்ளபண்பு அத்தனையும் இருந்தாலும்
திறமையொன்று இல்லையெனில் சிறப்பாகா செய்வினைதான்
* விதிநுட்பம் - சட்டநுணுக்கம் , தொழில் கலை
65. சொல்வன்மை
பேச்சாற்றல் ஒருவனுக்கு பெருஞ்செல்வம் அது கொண்டு
எல்லாச் செயல்களையும் எளிதாகச் செய்திடுவான்
ஆக்கமும் கேடுகளும் அவர்பேச்சால் வருவதினால்
நாக்கை அடக்குவதே நலமாகும் என்றுசொல்லு
எல்லாரும் ஏற்கும் வண்ணம் இதமாக உரைசெய்தால்
கல்நெஞ்சக்காரனையும் கரைத்திடலாம் என்றுசொல்லு
மறுத்து பதிலுரைக்க மற்றவர்க்கு இடமின்றி
பொருந்தும் படிக்கெதையும் புகன்றிடுதல் நன்றாகும்
சொல்வன்மை உடையவனை , சோர்வேதும் இல்லானை
வெல்லுவது முடியாது வேந்தனே என்றாலும்
சொன்படி கேட்டிடுவார் சொல்லாட்சி நன்றானால்
சுற்றிவளைத்திடுவார் சொல்லாற்றல் இல்லாதார்
66. வினைத்தூய்மை
அமைச்சர் துணையிருந்தால் ஆக்கமது கைகூடும்
நற்செயலால் அதையும்விட நன்மைபல உண்டாகும்
ஒதுக்கிவிடல் நன்றாகும் ஒருபயனும் விளையாத
கருமங்கள் என்றுணரும் காவலன்தான் என்று சொல்லு
நாட்டினது செல்வமெல்லாம் நாசமாய்ப் போகுமென்றால்
வேட்டுவைத்து அவ்வினையை விரட்டுவது நன்றாகும்
நடுக்கம் உறமாட்டார்கள் நல்ல உள்ளம் கொண்டவர்கள்
இடுக்கண்வரும் காலத்தும் இழிவந்த செய்யாரே
ஈன்றதாய் பசிபோக்க இல்லை பணம் என்றாலும்
ஈனம்வரும் செயலெதிலும் ஈடுபடல் ஆகாது
சஞ்சலத்தால் வந்தபொருள் தங்காது மன்னனுக்கு
வெஞ்சமரில் வீரமெல்லாம் விடைபெற்றுச் சொல்வதுபோல்
குறிப்பு : இடுக்கண் - துன்பம் , சஞ்சலத்தால் - மக்களைச் சஞ்சலத்திற்குள்ளாக்கி . விடைபெற்று - உயிரை விட்டுவிட்டுச் செல்லுதல் . அதாவது செத்து மடிதல் . ஈனம் - கேவலம் - இழிவு .
67. வினைத்திட்பம்
ஆள்பலமும் பொருள்பலமும் அனைத்துமே இருந்தாலும்
மனத்திட்பம் மிகவேண்டும் மன்னனுக்கு என்று சொல்லு
உதவாத ஒருசெயலை ஒதுக்கிப்பின் நற்செயலை
மறவாது செய்வதுதான் மந்திரிக்கு அழகாகும் .
சொல்லுவது மிகஎளிது சொன்னபடி செய்வதுதான்
எல்லார்க்கும் மிகஅரிது என்பதைநீ சொல்வாயே
எண்ணியவர் எண்ணம்போல் எய்திடுவார் நற்பலன்கள்
திண்ணிய உளம்கொண்டு செயல்படுவார் என்று சொல்லு .
உருவத்தைக் கண்டொருவர் உளம் அளக்கக்கூடாது
உருவத்தால் சிறியவரும் உள்ளத்தால் உயர்த்திருப்பார்
இன்பம் பயக்கும்வினை என்றாய்ந்து செய்கையிலே
துன்பம் மிகவரினும் துணிந்துசெயல் வேண்டுமென்றோ
68. வினை செயல்வகை
சிந்தித்து நன்றாகத் தேர்வுசெய்த ஒரு செயலை
வீண்காலம் போக்காமல் விரைந்து செயல் நன்றாகும்
துரிதமாய் முடிக்கும்வினை தூங்காது செயல்வேண்டும்
அவசரம் இல்லையெனில் அதைமெதுவாய்ச் செய்திடலாம்
செய்காலம் , பொருள் கருவி , செய்வினையும் இடமறிந்து
செய்திட்டால் எவ்வினையும் செய்வார்க்கு வெற்றிதரும்
யானைதனைக் கொண்டு யானையொன்றைப் பிடிப்பதுபோல்
திட்டம் ஒன்றை வைத்தே திட்டம் ஒன்று கண்டிடலாம் .
நன்பனுக்கு நன்மைசெய்து நட்பை வளர்ப்பது போல்
பகைவனுக்குப் பகையான பலபேரைக் கொளல் வேண்டும்
பகைமன்னன் வலிகண்டு பயங்கொள்வார் மக்கள் எனின்
பயம்போக்க அவனுக்குப் பணிந்திடுதல் தவறல்ல .
69. தூது
அன்புடைமை , குடிப்பிறப்பு , அரசனுக்கு விசுவாசம்
பண்புடைமை இம்மூன்றும் பண்பாகும் தூதுவர்க்கு
அன்பறிவு , சொல்வன்மை அம்மூன்று பண்புகளும்
அரசனது தூதுவர்க்கு அமைந்திருத்தல் நன்றாகும்
கோவேந்தன் ஒருவனுக்கு கொண்டுசென்ற செய்தி எல்லாம்
விரித்துரைக்க வல்லவனே வேந்தன் தூதுவனாம் .
அறிவாற்றல் உள்ளவனும் ஆள்எடுப்பாய் உள்ளவனும்
சொல்ஆற்றல் உள்ளவனும் தூது சொல்லத்தக்கவனாம்
தூய்மை மனங்கொண்டு துணிவுடைமை கைக்கொண்டு
வாய்மை தவறாமல் வழக்குரைப்பான் தூதுவனாம் .
70. மன்னரைச் சேர்ந்தொழுகல்
அகலாது அணுகாது அனல்காய்வார் அவர்போல
இகல்வேந்தர் பக்கத்தில் இருந்துவரல் நன்றாகும் .
மன்னவனின் சுகபோகம் மந்திரிக்கு ஆகாது
மந்திரங்கள் தந்திரங்கள் மறந்துவிடக் கூடாது
மன்னன் மகிழும்படி மந்திரியும் நடந்து கொண்டால்
இன்பம் இவர் வாழ்வில் எய்திடலாம் என்று சொல்லு
ஒருவரது காதுக்குள் உரைசெய்து நகைத்திட்டால்
பெரியவர்கள் பார்வைக்குப் பிழையாகத் தோன்றிடுமே
காவலன் குறிப்பறிந்து காலமும் தானறிந்து
நாவை அசைத்திடுதல் நலமாகும் மந்திரிக்கு
அரசன் இளைஞனென்றும் அவன்நமக்குச் சொந்தமென்றும்
அரசுப்பணி செய்வார் . அவமதிக்கக் கூடாது .
வருவாய் பெருக்குதற்கு வழிவகுத்து மன்னனுக்கு
கொடுப்பார் உடனிருந்தால் கோன் உயர்வான் என்றுசொல்லு
71. குறிப்பறிதல்
செய்வான் விரைந்து செயல் தேவையாம் குறிப்பறிந்து
வையத்து மாந்தரிலே மாணிக்கம் என்று சொல்லு
ஒருவனது உள்ளத்தின் உணர்வுகளை அப்படியே
தெரிந்து தெளிவானை தெய்வந்தான் என்று சொல்லு
குறிப்பால் குறிப்புணரும் கூர்மதி கொண்டவரை
இருப்பில் எதுகொடுத்தும் இணைத்திடுதல் நன்றாகும் .
குறிப்பில் குறிப்புணரா கூர்ங்கண்கள் பெற்றதனால்
வரும்பயன் ஒன்றுமில்லை வாழ்வினிலே என்றுசொல்லு
பளிங்கு படம்காட்டும் பண்பதனை முகங்காட்டும்
தெளிந்து கொளல்வேண்டும் திருவுடையார் யாரென்று
கண்களே காட்டிவிடும் பகைவரையும் நண்பரையும்
பார்த்துக் கணித்திடலாம் பார்வையிலே என்றுசொல்லு
நுட்பமாய் அளக்குங்கோல் நூதனமாய்ப் பலவுண்டு
கண்களைப்போல் அவையெல்லாம் கணக்குப் போடமுடியாது
72. அவை அறிதல்
மன்றத்தில் கூடியுள்ளோர் மனநிலையைத் தானறிந்து
சிந்தனைக்கு விருந்தாகச் செய்திடனும் சொற்பொழிவு
சொல்லின் நடைதெரிந்தோர் சொற்பொழிவு செய்திட்டால்
எல்லாரும் மெய்பிறந்து இன்பமுடன் கேட்டிடுவார்
தமிழறிஞர் கூட்டமெனில் தமிழ்முழக்கம் செய்திடலாம்
தெருமேடைப் பேச்சென்றால் சிரிப்புமூட்டி பேசிடனும்
அறிஞர்தம் அவைதனிலே ஆராய்ந்து பாராமல்
அவசரத்தில் பேசுவதால் அசிங்கப்பட நேரிடலாம்
கற்றறிந்தார் பேசுவதைக் கற்றறிந்தார் கேட்டிடுவார்
கற்றறிந்தார் பேசுவதும் கற்றறிந்த பேச்சானால்
புரிந்துகொள்வார் முன்னிலையில் புவி இயலைப் போதித்தால்
வளரும் பயிருக்கு வார்க்கும்நீர் போலாகும் .
பழகுதமிழ் அறியார்முன் பட்டிமன்றம் உரையாடல்
அங்கனத்தில் ஊற்றிவிட்ட ஆவின்பால் போலாகும் .
* அங்கணம் - சாக்கடை
73. அவை அஞ்சல்
பேச்சுக் கலைபயின்றார் பேசும் பொருள் தானறிந்தார்
அவையோர்முன் பேசுதற்கு அச்சப்படமாட்டார்கள் .
கற்றார் எனப்படுவார் கற்றதெல்லாம் மற்றவர்க்கு
தெற்றென விளங்கும்படி தேர்ந்து சொலல் நன்றாகும்
போர்க்களம் அஞ்சாமல் போவார் பலபேர்கள்
அவைக்களம் அஞ்சாதார் அரிதாகும் என்றுசொல்லு
தான்கற்ற நுண்பொருளைத் தக்கார்க்குப் பரிமாறி
அவர்பெற்ற கல்வியெல்லாம் இவர்பெறுதல் நன்றாகும் .
பேராண்மையில்லாதான் பெற்றகை வாள்போலும்
பேரவையில் அஞ்சி நிற்பான் பெற்றதொரு கல்வியுந்தான்
பலகல்வி கற்றறிந்தும் பயனில்லை பேரவையில்
தேர்ந்து உரையாற்றத் தெரியாதார் என்றுசொல்லு
74. நாடு
பெருமளவில் வேளாண்மை பெருமையுள்ள குடிமக்கள்
பெருஞ்செல்வம் பேரறிஞர் பெற்றது நல்நாடாகும்
உறுபசியும் செருபகையும் ஒழியாத பெரும்பிணியும்
சேராது இருப்பதுதான் சிறந்ததொரு நாடாகும்
பல்குழுவும் பாழ்படுத்தும் பலகட்சிக் குண்டர்களும்
உள்ளுக்குள் இருந்துகொண்டு ஊறு செய்தால் நாடுகெடும்
நீர்பெருகும் ஏரிகளும் நெடியபல மலைத்தொடரும்
நீர்அகழி பேரரணும் நிலையான அங்கங்களாம் .
விளைவின்பம் , பிணியின்மை , வேண்டுபொருள் , பெருமை புகழ்
அழகாகும் நாட்டிற்கு அவ்வைந்தும் என்று சொல்லு
நீர்வளமும் நிலவளமும் நேர்த்தியாய்க் காடுகளும்
மலைவளமும் இயற்கையில் மாண்டதுவும் நாடாகும் .
75. அரண்
கோட்டையும் கொத்தளமும் கோலோச்சும் மன்னுக்கு
அரணாகும் எந்நாளும் அஞ்சிடுவான் பகையரசன்
மணிநீர் அகழியுடன் வலுவான கோட்டையதும்
அணிநிழல் காடுமலை அரணாகும் என்று சொல்லு
அகலம் உயரமதாய் அசையாத உறுதியுடன்
அருமையாய் அமைந்தது அரணாகும் என்று சொல்லு
வாயில்மிகச் சிறிதாயும் உள்ளரங்கம் பெரிதாயும்
வெளித்தோற்றம் பயங்கரமாய் விளங்குவது அரணாகும்
எதிரிகளின் கண்களுக்கு எந்தவழி புகுவதற்கு
என்பதொன்றும் தெரியாமல் இருப்பதுவே அரணாகும்
வல்லரணும் , வாள்படையும் வகைதொகையாய் இருந்தாலும்
வல்லமையும் போர்த்திறனும் மல்லருக்கு வெற்றிதரும்
76. பொருள் செயல்வகை
பெருமையாம் பண்பேதும் பெற்றிருத்தல் தேவையில்லை
பொருள்மட்டும் பெற்றிருந்தால் பெருமை வந்து சேர்ந்துவிடும்
அறிவிலார் என்றாலும் அரியதனம் பெற்றிருந்தால்
அறிவுடையோர் எல்லாரும் அவரைப் புகழ்ந்திடுவார்
இல்லாரை எல்லாரும் ஏளனமாய்ப் பேசிடுவார்
செல்வமிக உள்ளவர்க்கு செய்திடுவார் சிறப்பெல்லாம்
அறவழியில் வந்தபொருள் அறஞ்செய்யத் தூண்டிவிடும்
அதனால் பெரும்புகழும் அளவிலா இன்பமுமாம்
அறிமுகமே இல்லாத ஆள்ஒருவர் என்றாலும்
விளக்கு எனும் பொருள்வந்தால் வெளிச்சமிட்டுக்காட்டிவிடும்
செத்தவர் திரவியமும் செருவென்ற பெரும்பொருளும்
மற்றும் மண் புதையல்களும் மன்னவர்க்காம் என்று சொல்லு
கூழ் என்னும் பெரும்பொருளைக் கொண்டவரே இப்புவியில்
அறப்பயிர் தான்விளைத்து அடைந்திடுவார் இன்பமதை
குறிப்பு : கூழ் = எல்லாச் செல்வங்களையும் குறிக்கும் பொதுப் பெயர் . இப்புவியில் எவ்வாறெல்லாம் பொருளைச் சேர்க்க வேண்டும் என்ற யுத்தி குறிப்பாக அரசனுக்கும் , பொதுவாக மற்றவர்க்கும் சொல்லப்பட்டுள்ளது .
77. படைமாட்சி
மல்லர் பெரும்படையும் மால்யானை புரவிகளும்
செருநரைக்கொல்படையும் செல்வமாம் வேந்தருக்கு
வெட்டுக்கு அஞ்சாது வெற்றிக்கே போர்செய்யும்
வீரர்களைப் பெற்றவனே வேல் வேந்தன் என்று சொல்லு
எலிக்கூட்டம் போலவெகு எதிரிப்படை வந்தாலும்
நாகம்போல் எழும்வீரன் நசுக்கிடுவான் என்று சொல்லுவது
ஏமனது உதவியுடன் எதிரிபடை வந்தாலும்
எதிர்த்துப் பகைவெல்லும் ஏமாப்பு படைக்கழகாம்
வழிவழியாய் வந்தமறம் மானமெனும் உயர்பண்பு
இவைஎல்லாம் வீரருக்கு ஏமமாம் என உரைப்பாய் .
போர்வியூகம் நன்கறிந்த போர்வீரர் தலைமையிலே
போர்செய்தல் வேந்தனுக்கு புத்தியாம் என்று சொல்லு
பெரிய படை , மனத்துணிவு , பசியில்லா நல்லுணவு
இவையெல்லாம் பெற்றபடை இகல் வெல்லும் என்று சொல்லு
குறிப்பு : முடிமன்னர் ஆண்டகாலத்தில் யானைப்படை , குதிரைப் படை , தேர்ப்படை , காலால் படை , ( வில் வீரர் , வேல் வீரர் , வாள் வீரர் ) என நால்வகைப் படைப்பிரிவு உண்டு . இவற்றில் எதுமுன்னால் செல்ல வேண்டும் , எது பின்னால் செல்ல வேண்டும் , எது பக்கவாட்டில் செல்ல வேண்டும் , பகைவர்படையை எதிர்கொள்ள வேண்டும் என வகுத்துச் சொல்வதுதான் போர்வியூகம் எனப்படும் .
78. படைச்செருக்கு
என்னோடு போர்செய்து எமனுலகம் சென்றவர்கள்
எண்ணில் அடங்காதார் எச்சரிக்கை எதிரிகளே
நரிபிடிக்க மாட்டானே நால்வாய் வேழமதை
கைவேல் தனைஒச்சி கதறடிக்கும் வீரனவன்
போராண்மை கொண்டொருவன் போர்க்களத்தில் நிர்க்குங்கால்
வெறுங்கையன் எதிரி என்றால் விட்டுவிடல் ஊராண்மை
கனன்றுவந்த களிற்றின்மேல் கைவேலைப் பாய்ச்சியவன்
தன் மார்பில் தைத்திருந்த வேல்பிடுங்கிக் கொக்கிரிப்பான்
வேல்பாய்ந்து வரும்போது விழித்தகண் மூடாமல்
வீரமுடன் கைப்பிடிப்பான் வேல்வீரன் என்று சொல்லு
உயிருக்குத் தான்அஞ்சான் ஒல்காப் புகழ் ஒன்றே
வீரக்கழல் அணிந்தான் விரும்புவான் என்று சொல்லு
போருக்கு அஞ்சாத போர்மறவர் ஒருநாளும்
பின்வாங்க மாட்டார்கள் பின்னடைவு கண்டாலும்
குறிப்பு : நால்வாய் தொங்கும் வாய் - கை , களிறு - ஆண் யாணை , போர் ஆண்மை - வீரம் , ஊராண்மை - இரக்கம் , ஒல்காப்புகழ் - நிலைத்த புகழ் , கனன்று - கோபங்கொண்டு
79. நட்பியல்
செயற்கரிய செயல்களிலே சிநேகந்தான் நனி பெரிது
செய்கருமம் யாவினுக்கும் சிறந்ததொரு காப்பாகும் .
பேரறிவன் நட்பானால் பிறைமதியம் போல்வளரும்
தீயவரின் நட்பானால் தேய்பிறைபோல் தேய்ந்துவிடும்
வாசிக்க வாசிக்க மதிவளரும் புத்தகத்தால்
நேசிக்க நேசிக்க நலம்பெருகும் நல்லவரால்
முகம்பார்த்து பழகுவதால் முழுநட்பு ஆகாது
உள்ளங்கள் ஒன்றித்து ஒழுகுவதே நட்பாகும்
ஆடையது அவிழுங்கால் அவசரமாய் பிடிப்பதுபோல்
உடனடித் தேவைக்கு உதவிடுதல் நட்பாகும் .
ஒல்லும் வகையெல்லாம் உதவிடுதல் நட்பாகும்
இல்லாமை இருந்தாலும் இணைபிரியார் என்று சொல்லு
தீயவழி செல்லுங்கால் திருத்துவதும் நண்பனுக்கு
தீயதாம் துன்பம்வரின் சேர்ந்து கொளல் நட்பாகும்
80. நட்பு ஆராய்தல்
ஆராய்ந்து செயல்வேண்டும் அகலாத நட்பதனை
அணைத்துவிடக் கூடாது அந்நட்பை நட்டவர்கள்
தேர்ந்தாய்ந்து கொள்ளாத தீநட்பு ஒருவருக்கு
சாகும்வரை துன்பத்தை தந்துவிடும் என்றுசொல்லு
குணங் , குடிமை , குற்றமில்லா குன்றாத பண்புடையார்
இனங்கொண்டு நட்பதனை இயற்றுவது நன்றாகும் .
நற்குடியில் பிறந்தவனும் நாணுவான் பழிபாவம்
எப்பொருளைக் கொடுந்தேனும் ஏற்றிடலாம் அவன் நட்பை
பிள்ளை தவறுகண்டு பெற்றவள் அடிப்பது போல்
அல்லவை செய்வானேல் அழ அடிப்பான் நண்பனுந்தான்
தாழ்வுவந்த காலத்தும் தன்நட்பை விடமாட்டார்
உற்றார் நட்டார்க்கு உதவுவதே அவர்தொழிலாம்
மாசற்றார் கேண்மையதை மருவியே கொளல் வேண்டும்
வேண்டாதார் நட்பதனை விட்டுவிடல் நன்றாகும்
81. பழமை
வாழையடி வாழையாய் வளர்ந்துவந்த நட்பானால்
பிழைகண்டார் என்றாலும் பிரியமனம் வாராது
உணவுக்கு ருசிசேர்க்கும் உப்பைப்போல் நட்புக்கு
உப்பாகும் பெருந்தன்மை உரைப்பாய் நீ உலகுக்கு
நன்றாக பழகிவரும் நண்பன் ஒரு தீங்குசெய்தால்
சகிப்பதே அல்லாமல் சஞ்சலந்தான் கொள்ளாரே
நட்பின் அடிப்படையில் நண்பனைக் கேளாமல்
எடுப்பானேல் ஒருபொருளை இவன் குற்றம் சொல்லானே
பெருந்தன்மை கொண்ட நண்பன் பேரிழப்பு வருமென்று
தெரியாமல் செய்வானேல் சினம் கொள்ளக்கூடாது .
விரிசலே இல்லாத விடாநட்புக் கொண்டவரை
வெளியுலகம் என்றென்றும் விரும்பிமிகப் பாராட்டும்
உள்ளத்தால் உயர்வுடையோர் உள்ளாரே ஒரு போதும்
நட்பை அழிக்கும் செயல் நட்டார்க்கு என்று சொல்லு
82. தீநட்பு
தேன்போலும் சொற்களையே செப்புவார் என்றாலும்
பண்பில்லார் என்றறிந்தால் பழகுவது கூடாது
தன்நலமே என்கின்ற தகவிலான் தீநட்பு
இருந்தென்ன போய்என்ன என்பதனைப் போய்ச்சொல்லு
தன்வாழ்வு ஒன்று மட்டும் தழைத்திடவே எண்ணுமவன்
கண்முன்னே திருடுகின்ற கள்வனாம் என்று சொல்லு
போர்க்களத்தில் இடக்குப் பண்ணும் புரவியைப்போன்றவரின்
நட்பை அகற்றிடுதல் நலமாகும் என்று சொல்லு
சிரித்துக் கழுத்தறுப்பான் செய்நன்றி தன்னைவிட
பகைவனின் தீமையது பன்மடங்கு நன்மையதாம்
சொல்லுக்கும் செயலுக்கும் சொந்தமில்லார் நட்பதனை
கனவிலும் நினையாமை கண்ணியமாம் என்று சொல்லு
83. கூடா நட்பு
நற்பண்பு உள்ளவர்போல் நடித்திடுவார் கேண்மையது
விலைமகளிர் மனம்போல் வேறுபடும் என்று சொல்லு
பொற்கொல்லன் பட்டடையாம் பொன்னை வளைப்பதற்கு
நட்பறியான் பட்டையாம் நண்பனை வளைப்பதற்கு
நல்லபல நூல்களெல்லாம் நன்றாகக் கற்றறிந்தார்
மனநலம் இல்லையென்றால் மாண்பில்லை என்று சொல்லு
மனநலம் ஏதுமில்லா மாசுடையார் நட்பதனை
குணமுடையார் கொள்வாரேல் குற்றம் வரும் என்று சொல்லு
குவித்தகைக் குள்ளேயும் கூர்ங்கத்தி வைத்திருப்பான்
வடிக்கின்ற கண்ணீரும் போலாகும் அவன் நட்பு
குறிப்பு : பட்டடை - இரும்பால் ஆன ஒரு கருவி , இது பொற்கொல்லன் பயன்படுத்துவது . தங்கம் , வெள்ளி போன்ற தனிமங்களை உருக்கிக் கட்டியாக்கி இந்தப் பட்டடையில் வைத்து அடித்து , கம்பியாக நீட்டி நகை செய்யப் பயன்படுத்துவது ஆகும் . ‘ கூடா நட்பு ‘ என்பது வஞ்சக நண்பனுக்கு ஒரு பட்டைக் கல் ஆகும் . இந்த பட்டடை கல்லைப் பயன்படுத்தி அப்பாவி நண்பனை , தட்டித் தட்டி அவனிடம் உள்ள பொருள்களையெல்லாம் கவர்ந்து கொள்வான் இந்த தீய நண்பன் .
84. பேதைமை
ஒரு மடங்கு பொருள்கொடுத்தால் இருமடங்கு கிடைக்குமென்று
இருந்தபொருள் அத்தனையும் இழந்துவிடல் பேதைமையாம்
பேதைமையுள் பேதைமையாம் பேராசை கொண்டொருவன்
கிட்டாத பொருளுக்குக் கொட்டாவி கொள்வதுதான்
பேதைமைச் செயல் செய்யும் பேதை ஒருவனும்தான்
எழுபிறவி துன்பமதை இப்பிறவி சுமந்திடுவான்
பேதைபெறும் செல்வமது பெற்றவனுக் காகாது
தீயவர்க்கு ஆகுமந்தத் திருவெல்லாம் என்று சொல்லு
பேதையார் கேண்மையது பெரிதினிது பிரிவின்கண்
ஏனென்றால் அவராலே இடர்ஒன்றும் வாராது
85. புல்லறிவாண்மை
இன்மையுள் இன்மையதாம் எல்லார்க்கும் அறிவின்மை
எந்தவொரு இன்மையதும் இதற்குநிகர் ஆகாது .
அறிவிலார் ஒன்றீதல் அவர் அறிந்து செய்வதில்லை
கொள்வார் தவப்பயன்தான் கொடுக்கும்படி செய்ததன்றோ
அறிவிலார் தனக்கேதான் தந்திடுவார் துன்பமெல்லாம்
பிறரொருவர் அவனுக்கு பீழை செய்யத்தேவையில்லை
அருமறை உபதேசம் அறிவிக்கும் வழிதவறிச்
செல்வானேன் தனக்குத்தான் தேடுவான் துன்பமெலாம்
நல்லதெல்லாம் கெட்டதென்றும் கெட்டதெல்லாம் நல்லதொன்றும்
புகலுவான் புத்தியில்லான் பேய் ஆவான் என்றுசொல்லு
* புல்லறிவு - அற்பபுத்தி
86. இகல்
இகல் என்னும் பேய்பிடித்தால் இணைந்திருக்க வீடாது
ஒன்றுபட்டு வாழ்வோர்க்கு ஊறுசெய்யும் என்றுசொல்லு
விரோதி எனநினைத்து வினையொருவன் செய்வானேல்
பதிலுக்கு பதிலாக பழிநினைக்கக் கூடாது
இகல் என்னும் துன்பமதை இல்லாமல் செய்திடுவார்
இல்வாழ்வில் என்றென்றும் இன்பமுடன் வாழ்ந்திடுவார்
பகைத்தீயை வளர்ப்பதினால் பலன்ஒன்றும் வாராது
அணைப்பார் அதனை என்றால் அடைந்திடுவார் ஆக்கமெலாம்
இகல் என்னும் பிணியின்றி இணக்கமுடன் நடப்பானேல்
எல்லாரும் நட்பாகி எய்துவார் இன்பமெல்லாம்
87. பகைமாட்சி
வலிமையுள்ளார் தம்மோடு வம்பு செய்தால் துன்பமதாம்
எளியோரின் பகையானால் இன்னல் ஒன்றும் நேராது
அன்புடைய சுற்றத்தார் ஆன்றதுணை இல்லாதார்
எந்ததொரு பகைதனையும் எதிர்கொள்ள முடியாது
கோபமிகக் கொண்டவனை குணமில்லா அறிவிலியை
எளிதாக வென்றிடுவார் எதிர்கொள்வார் என்றுசொல்லு
துன்மார்க்கன் பழிக்கஞ்சான் தூயசெயல் இல்லானை
பகைவெல்வார் பகைகொண்டார் பயன்பெறுவார் என்றுசொல்லு
தகாதஒரு எண்ணம்செயல் தன்னகத்தே கொண்டானை
பகைசெய்தும் அவனைமிகப்பண்படுத்தல் நன்றாகும்
88. பகைத் திறம் தெரிதல்
பகை என்னும் பண்பேதான் பாதகமே செய்வதினால்
விளையாட்டாய்க் கூட அதை விளைத்துவிடக் கூடாது
வில்வீரன் அம்பைவிட சொல்வீரன் பகைகொடிதாம்
நயமாகப் பேசியதை நட்பாக்கிக் கொளல் வேண்டும்
கேட்காமல் உதவுவதே கேண்மைக்கு அழகாகும்
சண்டையிட்டுக் களைத்தவர்க்கு சகஅரசன் துணைவரனும்
முளைக்கையிலே அகற்றிடனும் முள்மரத்தை வீட்டுக்குள்
விளையும் உட்புகையை வேரறுத்தல் நன்றாகும்
89. உட்பகை
நிழல் நீர் இவ்விரண்டும் இன்பமும் துன்பமுமாம்
உறவினர் என்பாரும் அவ்வாறே என்று சொல்லு
உறவினர் ஒருசமயம் உதவிடுவார் மற்றுமந்த
உறவினர் உள்ளிருந்தே உதைப்பாரும் உண்டாமே
வாட்படைக்கு அஞ்சாத வன்மைமிகப் பெற்றவரும்
உட்பகைக்கு அஞ்சுவதும் ஒடுக்குவதும் நன்றாகும்
அரசனது கட்டளைக்கு அடங்காதார் பெருகிவிடில்
அரசனது ஆட்சிக்கே அழிவு வரும் என்றுசொல்லு
குணமில்லார் தம்மோடு கூடியே வாழ்வதுதான்
கூண்டுக்குள் பாம்போடு குடியிருத்தல் போலாகும்
90. பெரியாரைப் பிழையாமை
செயற்கரிய செயலெல்லாம் செய்யவல்ல பெரியோரை
சேர்ந்து செயலாற்றல் சிறப்பாகும் என்று சொல்லு
விஞ்ஞான மேதைகளை விலக்கிவைத்தல் கூடாது
அரசாள்வார் யாருக்கும் அவர் சேவை அவசியமாம்
அறிவுடைய பெரியோரின் அறிவுரைகள் கேட்டிடனும்
படைவேண்டும் மன்னனுக்கு படையாகும் அவ்வுரைகள்
அனல்பட்டு வெந்தாலும் ஆற்றலாம் நலம் பெறலாம்
பெரியோரின் அனல் பட்டால் பெருங்கேடு உண்டாகும்
பெரியாரைப் பிழைத்தொழுகின் பேரரசன் என்றாலும்
நாட்டுக்கே கேடுவரும் நன்மையில்லை என்றுசொல்லு
குறிப்பு : பிழையாமை = பகைத்துக் கொள்ளாமை , பேணிக் கொள்ளுதல் , சான்றோர் சொற்கேட்டல்
91. பெண் வழிச்சேரல்
மனையாளின் சுகம் ஒன்றே மாதனமாம் என நினைப்பான்
வேறெந்த நற்செலும் விரும்பாதான் என்றுசொல்லு
மனையாளின் சொற்கேட்டு மாண்பு கெடும் செயல்செய்வான்
நல்லார்கண் செல்வதற்கு நாணுவான் என்று சொல்லு
பேணாது செல்வத்தை பெண்விழைவான் ஆனாக்கால்
பெருஞ்செல்வம் தாணிழந்து பேடிபோல் உழல்வானே
மனையாளுக் கஞ்சுகின்ற மனிதனவன் ஒருநாளும்
நற்செயல்கள் செய்யானே நல்லவர்க்கு உதவானே
பெண்ஏவல் செய்கின்ற பேதையின் ஆண்மையினும்
பெண்மை அவனைவிடப் பெருமையதாம் என்றுசொல்லு
நண்பருக்கு உதவாதார் நல்லவரின் துணையிழப்பார்
இல்லாளின் சொற்படியே இயங்கிடுவார் என்றுசொல்லு
குறிப்பு : பெண்வழிக் சேறல் - மனையாளின் விருப்படியே நடப்பவன் - தன் அறிவு கொண்டு செயல்படமாட்டாதவன்
92. வரைவின் மகளிர்
பணத்திற்கே காமுறுவர் பண்பில்லா விலை மகளிர்
இனிப்பான சொற்கள் எல்லாம் இழுக்காகும் என்றுசொல்லு
இன்பமாய் வாழ்வதற்கு எத்தனையோ தொழில் இருக்க
இழிவான தொழில்செய்யும் இவர்தொடர்பு வேண்டாமே
பொருட்பெண்டிர் தன்னோடு போகந்தான் கொள்ளுவது
இருட்டறையில் தெரியாத பிணந்தழுவல் போலாகும்
வேசையரின் இல்லமதை விரும்புதல் செய்யாரே
ஆய்ந்த அறிவுடையார் அதன்இழிவுக் கஞ்சுவரே
கள்ளோடும் சூதோடும் கணிகையர்கள் தம்மோடும்
சேர்ந்திருப்பார் தம்மை விட்டுத் திருமகள்தான் சென்றிடுவாள்
குறிப்பு : வரைவின் மகளிர் - பொது மகளிர் - விலை மாதர்
93. கள்ளுண்ணாமை
மானம் தனையிழப்பார் மதியையும் தானிழப்பார்
கள் காதல் கொண்டொழுகும் கடை மனிதர் என்றுசொல்லு
கள்ளைக் குடித்துவிட்டுக் கயமைத்தனம் செய்வாயேல்
காறியே உழிந்திடுவார் கண்டவர்கள் எல்லாரும்
அன்னை வெறுத்திடுவாள் அகமுடையாள் செப்பிடுவாள்
கள்ளென்னும் காரிகையைக் கைப்பிடித்தாய் ஆனாக்கால்
தூக்கத்தில் படுத்திருப்பார் துஞ்சினார் போன்றவரே
கள் என்னும் நஞ்சுண்டு கண்மூடிக் கிடப்பாரும்
கள்ளுண்டு தான்மயங்கிக் களிமண்ணில் கிடப்பானை
கண்டபின்பும் அக்கள்ளைக் கருதுவது என்னாங்கொல் ?
94. சூது
சூதாட்டம் என்பதொரு தூண்டில்முள் போலாகும்
உழுவை மீன்பிடிக்கவல்ல உன்னையே பிடிப்பதற்காம்
ஒருரூபாய் வரும் உடனே ஒருநூறு சென்றுவிடும்
ஒன்றுமில்லாக் கையோடு உன்வீடு வந்திடலாம்
சிறுமைபல செய்துன்னைச் சீரழிக்கும் சூதினைப்போல்
வறுமைதரும் செயலெதுவும் வாராது உன்வாழ்வில்
கவறாகும் தொழில்தனையே கைக்கொண்டார் தம்முடைய
பொருளெல்லாம் போகவிட்டுப் புத்தியையும் தானிழப்பார்
பொருள் கெடுக்கும் அருள்கெடுக்கும் பொய் சொல்லத் தூண்டிவிடும்
அல்லல் பலசெய்து ஆட்டுவிக்கும் என்றுசொல்லு
பொருள் இழந்து போனாலும் , போனாலும் மறுபடியும்
காதல் ஒழியாது கவறாடற் கன்னியின் மேல்
95. மருந்து
வாதமும் பித்தமதும் வதைசெய்யும் சிலேத்துமமும்
கூடினும் குறைந்திடினும் கொடுமையாம் உடலுக்கு
செறிமானம் ஆன்பின்பு செலுத்தினால் உண்டியினை
மருந்தொன்றும் வேண்டாவாம் மாந்தருக்கு என்றுசொல்லு
சீரான நல்லுணவு சீரணந்தான் ஆனபின்பு
அளவறிந்து உண்பாரேல் ஆயுளுந்தான் நீடிக்கும்
வந்துள்ள நோய்தன்னின் வகைதொகையைக் கண்டறிந்து
தேர்ந்த மருந்துகொண்டு செய்திடனும் வைத்தியத்தை
மாறுபாடு செய்யாத மரக்கறியாம் உணவுண்டால்
ஊறுபாடு வராது உடம்புக்கு என்றுசொல்லு
உற்றான் உடல்நிலையும் உற்றபிணி யின்னளவும்
கற்றான் மருத்துவனும் காலத்தால் செயல்நன்றாம்
96. குடிமை
நற்குடியில் பிறந்தார்க்கு நற்பண்பு இயல்பாகும்
பேசுவதும் செயல்பாடும் பெருமைபெறும் என்றுசொல்லு
ஒழுக்கம் தவறாதார் ஒருபோதும் பொய்சொல்லார்
நாணும் செயல்களுக்கு நாணுவார் குடிப்பிறந்தார்
கோடிமேல் கோடிபணம் கொட்டியே கொடுத்தாலும்
குற்றம் வரும் செயலெதையும் குடிப்பிறந்தார் செய்யாரே
நாவினால் சிறுகுற்றம் நன்மக்கள் செய்தாலும்
மலையளவாய்த் தோன்றுமது மற்றவரின் கண்களுக்கு
நிலத்தின் வளமையினை நெற்பயிரே காட்டிவிடும்
குலத்தின் பெருமையினை கூறும் சொல் காட்டிவிடும்
98. பெருமை
நல்லெண்ம் நற்செயல்கள் நல்விளக்காம் பெருமைக்கு
உள்ளமில்லார்க் கில்லையந்த ஒளிவிளக்கு என்றுசொல்லு
பிறப்பால் மனிதரிலே பேதமில்லை என்றாலும்
செய்தொழில் ஈனமென்றால் சிறப்பில்லை என்றுசொல்லு
பெருமை உடையவரே பிழைசாரா வழிநின்று
அருமை உடையசெயல் ஆற்றுவார் என்றுசொல்லு
பெருமைக் குணமுடையார் பேணுவார் பணிவுதனை
சிறுமைதான் தனைவியந்து சிலுசிலுப்பார் என்றுசொல்லு
பெருமை மறைத்துவிடும் பிறருடைய குற்றமதை
சிறுமைதான் தப்படித்து தண்டோரா போட்டிடுமாம்
குறிப்பு : ஈனம் - இழிவு , கீழ்மை , பண்பின்மை , கேவலம் , குற்றம்
99. சான்றாண்மை
நல்ல நல்ல காரியங்கள் நலம்பயக்கும் காரியங்கள்
சலிப்பின்றிச் செய்வதுதான் சான்றாண்மை என்றுசொல்லு
குணநலம் ஒன்றேதான் அணியாகும் சான்றோர்க்கு
உடல் அழகும் நகையழகும் உயர்வில்லை என்றுசொல்லு
அன்பு , நாண் , ஒப்புரவு , வாய்மையொடு கண்ணோட்டம்
ஐந்தும் அணிகலனாம் அறிவுடைய சான்றோர்க்கு
கொல்லாமை காப்பதுதான் குற்றமில்லா நோன்பாகும்
பிறர்தீமை நீக்குதல்தான் சான்றாண்மைக்கழகாகும்
தீதைத்தான் செய்தார்க்கு திருப்பியதைச் செய்யாமை
நன்மையே செய்வதுதான் நல்லவரின் மாண்பாகும்
இயற்கை எனும்ஊழி இடம்மாறிப் போனாலும்
சான்றோர் ஒருநாளும் , தடம்புரளார் என்று சொல்லு
100. பண்புடைமை
இதமாக யாரிடமும் இன்முகத்தால் பேசுவதே
பண்புடைமை ஆகுமென்று பறைசாற்றிச் சொல்வாயே
ஆன்ற குடிப்பிறப்பும் அன்புடைமை இவ்விரண்டும்
பண்புடைமை மாந்தர்க்கு பாரறியத் தூது சொல்லு
நன்னெறியின் வழிநின்று நன்றிபல செய்பவரின்
பண்புதனைத் தான்வியந்து பாராட்டும் இவ்வுலகு
அரம்போலும் கூர்மையுள்ள அறிவுடையார் என்றாலும்
மக்கட்பண் பில்லாதார் மரம் ஆவார் என்றுசொல்லு
நட்பின் வகையறிந்து நயம்இல செய்வார்க்கும்
நயம்பல செய்வதுதான் நற்பண்பு என்றுசொல்லு
பண்பில்லான் பெற்றசெல்வம் பயனின்றிப் பாழாகும்
தீங்கான பாத்திரத்தால் திரைந்துவிடும் பால்போல
101. நன்றியில் செல்வம்
சேர்த்த பெரும்பொருளைத் தின்னாமல் மற்றவர்க்கும்
உதவாதான் உணர்விருந்தும் உடல்செத்துப்போனவனே
ஈட்டியநல் செல்வத்தால் இசைபெருக வாழாதார்
பொறந்து நடமாடல் பூமிக்குப் பாரமதாம்
தருமம்பல செய்யாமல் தானுமதைத் துய்க்காமல்
வைத்திருப்பான் செல்வமது வறுமையாம் அவனுக்கே
வறியார்க்கொன் றீயாதான் மாதனந்தான் முதிர்கன்னி
மணவாழ்வு இல்லாமல் வயதடைந்தாள் போலாகும் .
இல்லார்க்கு ஈயாத இவன்செல்வம் ஊருணியில்
நச்சுநீர் நிறைந்ததுபோல் நன்மையில்லை என்றுசொல்லு
குறிப்பு : நன்றியில் செல்வம் - உதவப்படாத செல்வம்
102. நாணுடைமை
நற்குடி பெண்டிற்கு நாணமே காப்பாகும்
நல்லோரின் காப்பாகும் நாணுதல் பழிபாவம்
ஊன் , உடை கொள்ளுவதும் உயிர்ப்பெருக்கம் செய்வதுவும்
பொதுவாகும் நாணூடைமை புகழ்சேர்க்கும் மாந்தர்க்கு
அணியாகும் நாணுடைமை அஃதின்றேல் சான்றோர்க்கு
பிணியாகும் பெருமையில்லை பீடு நடைவாராது
நாணுடைமை இல்லைஎனில் நற்குடிக்குப் பங்கம் வரும்
‘ நலம் ‘ என்னும் நங்கையவள் நகைத்திடுவாள் என்றுசொல்லு
நடமாடும் மனிதருக்கு நாணுடைமை இல்லை எனில்
‘ நடம் ‘ ஆடும் பொம்மைக்கு நிகர் ஆவார் என்றுசொல்லு
103. குடிசெயல் வகை
தன்குடும்பம் முன்னேற சளைக்காது உழைத்திடுதல்
குடிசெயல் வகையாகும் குறளணங்கே தூது சொல்லு
ஆராய்ந்து ஒருதொழிலை ஆர்வமுடன் செய்வதில்தான்
கூடிவரும் செல்வத்தில் குடிஉயரும் என்றுசொல்லு
தன்குடியின் நலம்பேணி தாளாது பணிசெய்வார்
வேறொருவர் துணையின்றி வெற்றிகொள்வார் என்றுசொல்லு
குறையென்றும் வாராமல் குடியோம்பி பணிசெய்வான்
உடலோம்பல் தனைமறந்து உழைத்திடுவான் என்றுசொல்லு
குற்றம் இலாதவனாய் குடியோம்பல் செய்வானை
சொந்தம் எனச்சொல்லி துதிபாடும் ஊரெல்லாம்
துன்பமெனும் காற்றுவந்தால் தூரோடு சாய்த்துவிடும்
குடிஎன்னும் பெருமரத்தைத் தாங்குபவன் இல்லை என்றால்
104. உழவு
உழவன் விளைவிக்கும் உண்பொருளால் இவ்வுலகம்
உண்டென்றால் அத்தொழிலே உயர்வாகும் என்றுசொல்லு
தேருக்கு அச்சாணி தேனிரும்புத் துண்டாகும்
உலகமெனும் தேருக்கு உழவர்தான் அச்சாணி
புழுதிதான் பறக்கும்படி பொன்னேர் உழவுசெய்தால்
எருவின்றிப் பயிர்விளையும் இந்நிலத்தில் என்றுசொல்லு
உழுதுபண்படுத்தி உரமிடுதல் நன்றாகும்
அத்தோடு நீர்பாய்ச்சல் , அதன்காப்பும் தேவையதாம்
வேளாண்மை செய்தவனும் விளைநிலத்தைப் பாரானேல்
இல்லாளை ப் போலதுவும் இணங்காது போகுமன்றோ
இல்லையே நல்விளைச்சல் என்றெண்ணிச் சோர்வானை
வயல்என்னும் நங்கையவள் வாய்விட்டுச் சிரித்திடுவாள்
105. நல்குரவு
வறுமை என்னும் துன்பம்போல் வன்மையுள்ள மற்றொன்று
இவ்வுலக இல்வாழ்வில் இல்லையென்று நீ சொல்லு
இன்மையெனும் ஒருபாவி இம்மையிலும் வாழவிடான்
மறுமையிலும் இன்பமது வராது செய்திடுவான்
நற்குடியிற் பிறந்தார்க்கும் நல்குரவு வந்துவிட்டால்
சொல்லாத பேச்சுவரும் சோர்வு ஒன்றும் கூடவரும்
நற்பொருளை ஆராய்ந்து நல்லசெய்தி சொன்னாலும்
ஏழைசொல்லும் கருத்தெதுவும் ஏறாது அம்பலத்தில்
வரவொன்றும் இல்லாதார் வாழத் தெரியாதார்
கூழுக்கும் உப்புக்கும் கூற்றுவனாம் என்றுசொல்லு
* குறிப்பு : நல்குரவு - வறுமை , ஏழ்மை , கூற்றுவன் - எமன்
107. இரவச்சம்
ஈகைமனம் இல்லாதார் இகழ்ந்துரைப்பார் தன் வீட்டில்
இரவாமை கோடி இன்பம் இரப்பர்க்கு என்றுசொல்லு
இரந்துதான் இவ்வுடம்பை ஈடேற்ற வேண்டுமெனில்
உலகைப் படைத்தவனை ஓடோடச் சாடிடனும்
வறுமையுறும் காலத்து வருந்தி உடல் உழைக்காமல்
இரந்து உயிர்வாழ்தல் இழிவாகும் என்றுசொல்லு
பாடுபட்டுத் தேடியது பழம்கஞ்சி என்றாலும்
இரந்துண்ணும் இழிவைவிட இது இன்பம் ஆகுமன்றோ
நான்மறையின் வழிநின்று நாள்தோறும் உழைத்திட்டால்
வறுமையாம் துன்பத்தை வழியனுப்பி வைத்திடலாம்
108. கயமை
கயவர் எனப்படுவார் காண்பதற்கு மனிதர்களாம்
நடத்தை செயல்களிலே நாமவரைக் கண்டிடலாம்
கவலையொன்றும் இல்லாமல் காரியங்கள் ஆற்றுவதால்
கயவரும் ஒருவகையில் கனவானாம் என்றுசொல்லு
தேவர்களுக் கொப்பாவார் தீயசெயல் கயவர்களும்
ஏனென்றால் இருவருமேர் இஷ்டம் போல் மேய்ந்திடுவார்
அறைபறையைப் போலாவார் அக்கயவர் மற்றவர்மேல்
இல்லாத செய்திஎல்லாம் இட்டுக்கட்டிப் பறையடிப்பார்
மற்றவர்கள் உண்பதையும் மனமகிழ்ந்து வாழ்வதையும்
கண்டாலே வெதும்பிடுவார் கயவர்தான் என்றுசொல்லு
109. தகை அணங்குறுத்தல்
தேவதைதான் வந்ததுவோ தீம்மயில்தான் வந்ததுவோ
மாதுதான் வந்தாளோ மயங்குதே என்மனசு
நோக்கினாள் அவள் என்னை நோக்கியது என்நெஞ்சில்
வேல்கொண்டு குத்தினளோ ! வேறென்ன மாயமதோ !
எமன்என்னும் பெயரைத்தான் இத்தனைநாள் கேட்டிருந்தேன்
காண்கின்றேன் பெண்ணுருவில் கரையுதே என்மனசு
எமனுக்கு வடக்கயிறு இவளுக்கோ கண்அம்பு
என்னுயிரைக் கொல்லத்தான் இப்படியும் வந்தாளோ
அழகான படாமணிந்த ஆனைமுகம் பாராமல்
பட்டுத்துகில் அணிந்த பருமுலையைப் பார்ப்பதென்ன
உண்டால்தான் மகிழ்ச்சிதரும் ஒருகலயம் கள் ஆனால்
கண்டதுமே பெண்கலசம் காமத்தை உண்டுபண்ணும்
குறிப்பு : தகைஅணங்குறுத்தல் - அழகுமிளிரும் அணங்கு போன்ற மங்கையின் அச்சுறுத்தல் , களவியல் - திருமணம் ஆகுமுன் மற்றவர்கு தெரியாமல் பழகுதல்
110. குறிப்பறிதல்
இருநோக்காம் மங்கைக்கு நோய் செய்யும் ஒரு நோக்கு
மற்றொன்று அந்நோய்க்கு மருந்தாகும் என்றுசொல்லு
நோக்கினாள் , தலைகுணிந்தாள் நோக்கமது எங்களது
நேசமாம் பயிர்வளர நீர்வார்த்தல் போலாகும்
நான்நோக்கும் போதுஅவள் நிலம் நோக்கிக் குணிந்திடுவாள்
நோக்காத போது அவள் தான் நோக்கி நகைத்திடுவாள்
தெரியாத ஒருநபரைத் தெரிந்து கொள்ளப் பார்ப்பதுபோல்
காதல்கொண்டார் கண்களுந்தான் கலந்து உரைசெய்யுமன்றோ
கண்ணோடு கண்பேசிக் கருத்தறிவார் காதலர்தான்
வாய்ப்பேச்சு இவர்களுக்கு வாராது என்றுசொல்லு
111. புணர்ச்சி மகிழ்தல்
கண்டு கேட்டுண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
பெண்ணிடத்தில் உள்ளசுவைப் பெட்டகமாம் என்றுசொல்லு
நோய்போக்க மருந்துண்டு நூறு இவள்தன் நோய்க்கு
தானே மருந்தாவாள் தகையணங்கு என்றுசொல்லு
குறுகுங்கால் குளிர்கிறது , அகலுங்கால் சுடுகிறது
அணங்கிவளின் உடல்நெருப்பு அதிசயமாம் இவ்வுலகில்
பிணங்குவதும் , பிணங்கிப்பின் கூடுவதும் முயங்குவதும்
காமமது கொண்டவரின் களியாட்டம் என்றுசொல்லு
காமம் மிகுந்துவரக் காதலியை நெருங்குங்கால்
புதியதாம் அனுபவங்கள் பெறுகின்றேன் மடையன்நான்
குறிப்பு : சுவைப்பெட்டகம் = சுவைகள் உள்ள பெட்டி - கண்டு மகிழ்தல் , கேட்டு மகிழ்தல் , உண்டு மகிழ்தல் , உடல்தழுவி மகிழ்தல் , நுகர்ந்து மகிழ்தல் ஆகிய ஐந்து இன்பங்களையும் ஒருசேர அனுபவிக்கும் இடம் பெண்தான் .
112. நலம் புணைந்துரைத்தல்
தண்ணீரில் வாழ்கின்ற அனிச்சமே நீ வாழ்க !
என்னோடு வாழ்கிறவள் உன்னிலும் மெல்லியலாவாள்
செடி கொடியின் மலரேதான் சேயிழையாள் கண் மலர்கள்
எண்ணாதே என்மனமே இவள்கண்கள் மேன்மையதாம்
வேய்த்தோளும் வேல்விழியும் , வெண்மையுடன் , முத்துப்பல்
நகைமுகமும் கொண்டவளாம் நான் விரும்பும் நங்கையவள்
கண்டவுடன் குவளைமலர் , கவிழ்ந்தே நிலம் நோக்கம்
ஒண்டொடியாள் கண்களுக்கு ஒப்பில்லை என்றுணர்ந்து
முழுநிலவோ இல்லையிது முகந்தானோ ஒரு பெண்ணின்
வேற்றுமை தெரியாமல் விழித்ததே - குளத்துமீன்
அன்னத்தின் வெண்மயிரும் அணிச்சமாம் மென்மலரும்
நல்லியவாள் கால்களுக்கு நெருஞ்சி முள்போலாகும் .
குறிப்பு : அனிச்சப்பூ மிகமென்மையானது . நெருஞ்சிமுள் - ஒரு சிறு படர் செடியில் காய்க்கும் காய் , காய் முழுவதும் கூரிய முட்கள் இருக்கும் . நலம் புனைந்துரைத்தல் - பெண்ணின் இயல்புகளை மிகைப்படுத்திக் கூறுதல் .
113. காதல் சிறப்புரைத்தல்
பாலோடு தேன்கலந்தாற் போலாகும் தேன்மொழியாள்
வாய் ஊறும் உமிழ்நீரும் வாய் அமுதம் காதலர்க்கு .
உடலோடு உயிர் சேர்ந்து ஒருருவம் ஆவதுபோல்
என்நட்பும் அவள்நட்பும் இணைந்ததாம் ஓர் உருவம்
கண்மணியின் பாவாய்நீ கண்ணைவிட்டு விலகியிரு
காதலியை அங்குவைத்து காப்பாற்ற எண்ணுகிறேன் .
கண்ணைநான் மூடுவதால் காதலர்தான் பயப்படுவார்
என்றெண்ணி எப்போதும் இமைப்பத்தில்லை என் கண்ணை
கண்ணுக்குள் இருக்கும் என் காதலன் வருத்தமுறா
கண்ணிமைத்தல் இயல்பென்று கருதிடுவான் அறிவாளி .
உள்ளத்தின் நீங்காது உறைந்திருக்கும் காதலரை
இல்லைஎன்று சொல்லுவது எவன்கொலோ மற்றவர்கள் .
குறிப்பு : உமிழ்நீர் என்பது எச்சில் . இது காதலர்களுக்கு தேன் போன்றது என்று சொன்னது மிகப்படுத்திக் கூறப்பட்டதாகும் . எச்சில் எச்சில்தான் . கருவாடு தின்பவன் , கருவாடு மணக்கிறது என்கிறான் . கள் குடிப்பவனுக்கும் அப்படித்தான் . காமத்தில் மூழ்கி இருப்பவனுக்கும் அப்படித்தான் . இவர்களுக்கு நன்மை தீமை தெரியாது . நல்லது கெட்டதும் தெரியாது .
114. நாணுத்துறவு உரைத்தல்
காமமெனும் தீயினிலே கருகிவரும் காதலன்தான்
மடல் ஏறிச்சாவ தன்றி வழியில்லை என்றுசொல்லு
காமத்தால் நைந்துள்ள கட்டுடம்பும் என்னுயிரும்
நாணத்தை விட்டுவிட்டு நாடியதே மடலேறே
மானந்தான் பெரிதென்று வாழ்ந்துவந்த நான் இன்று
மானத்தை விட்டுவிட்டு மடல் ஏற ஆனேனே
நான் கொண்ட நல்லாண்மை நாணமாம் ஓடமது
காமமாம் கடல் நீரில் காற்றோடு செல்கிறதே
கடலலை போல் காமது கரைபுரண்டு வந்தாலும்
மடலேறாப் பெண்மைக்கு வாழ்த்துக்கள் என்றுசொல்லு
காதலெனும் துன்பத்தில் கசிந்துருகும் எனைப்பார்த்து
சிரிக்கின்றார் இத்துன்பம் தெரியாதார் என்றுசொல்லு
குறிப்பு : மடல் ஏறுதல் = மடல் என்பது பனை மட்டையால் குதிரை உருவத்தில் செய்யப்பட்ட பொம்மைக் குதிரை . காதலித்த பெண்ணை மணக்கத் தடை ஏற்பட்டபோது காதலன் அந்தப் பொம்மைக் குதிரையில் ஏறி காதலியின் வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்வதுதான் மடல் ஏறுதல் என்பது . காதலர் இருவர் பெயரையும் பெரிய அட்டையில் எழுதி , அதைக் கையில் உயர்த்திப்பிடித்துக் கொண்டு , ‘ காதல் வாழ்க ‘ என்று கூக்குரல் எழுப்புவது . அப்படி ஆர்ப்பாட்டம் செய்வதின்மூலம் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை . அக்காலத்தில் மடல்ஏறுதல் என்னும் பழக்கம் இருந்தது என்பதை அறியவும் .
115. அலர் அறிவுறுத்தல்
எனக்கும் காதலிக்கும் இறுக்கமாம் நட்பதனை
ஊரெல்லாம் தூற்றுவதால் உயிர் வாழ்ந்தோம் என்பாய் நீ
மலர் போன்ற கண்ணுடையாள் மச்சினி என் காதலியின்
அருமை தெரியாமல் அலர்செய்வார் இவ்வூரார்
தூற்றுவார் தூற்றுவதால் சுடர்விடுதே காமமது
சாடைசொல்வார் இல்லையெனில் தனித்தன்மை இழந்துவிடும்
கள்ளுண்ணும் போதெல்லாம் களிப்பாகும் அதுபோல
காமமெழும் போதெல்லாம் கள்வெறிதான் காதலர்க்கு
சந்திரனை வாய்பிளந்து சர்ப்பந்தான் விழுங்கிடுமோ
எங்களது காதலுந்தான் ஏசுவதால் மறைந்திடுமோ
குறிப்பு : அலர் - அம்பலப் படுத்துதல் - விளம்பரப்படுத்துதல் . ரகசியமான ஒன்றை மக்களாய் பரவலாகப் பேசப்படுவது . களவியல் - களவு ஒழுக்கத்தின் நிலைப்பாடு . பழந்தமிழ்ச்சமுதாயத்தில் இந்த ஒழுக்கநெறி பரவலாக்கப் பின் பற்றியதாகத் தெரிகிறது . தமிழர் திருமணத்தில் தாலி என்ற பழக்கம் வருமுன்பு களவு ஒழுக்கம் பின்பற்றப்பட்டுள்ளது .
116. பிரிவு ஆற்றாமை
கண்ணுக்குள் வாழ்கின்ற காதலனே சொல்லாதே
வருகிறேன் என்றஉரை வாங்கிவிடும் என்னுயிரை
காதலனின் கண்பார்க்கக் களிகூறும் என்னெஞ்சு
பிரிவுஎன்று சொன்னவுடன் பித்தானேன் என்றுசொல்லு
அஞ்சாதே என்னவளே அருகிருப்பேன் எந்நாளும்
என்றவரும் சொன்ன உரை என்னாச்சு தெரியலையே
புதியஊர் போய் வாழ்தல் பெருந்துன்பம் அதையும்விட
கணவரைப் பிரிந்திருத்தல் கொடுந்துன்பம் என்றுசொல்லு
தொட்டால்த்தான் சுடும்நெருப்பு தூரத்தில் அவரிருக்க
தொடாமல் நானிருக்க சுடுகிறதே காமத்தீ
117. படர் மெலிந்திரங்கல்
மூடித்தான் வைத்தாலும் முட்டுகின்ற என்துன்பம்
ஊற்றுநீர் போலஅது ஊரெல்லாம் பாய்கிறதே
துன்பமதைக் காதலர்க்கு சொல்லத்தான் நினைக்கின்றேன்
தடுக்குதே நாணம்வந்து தோழியே என்ன செய்வேன்
காமம்வந்து ஒருபக்கம் கொல்லுவேன் என்கிறது
வெட்கம்வந்து மறுபக்கம் வெல்லுவேன் என்கிறதே
காதலர் தரும்இன்பம் கடலைவிடப் பெரிதாகும்
அவர்பிரிவால் வருந்துன்பம் அஃதைவிடப் பெரிதாகும்
கொடியவர் கொடுமையிலும் கொடியதாய் இராப்பொழுது
நெடியதாய் விடியாமல் நீள்கிறதே என்தோழி
118. கண்விதுப்பழிதல்
காதலர்தான் பிரிந்துசெல்லக் கண்டிருக்க கண்களே எம்
காதலரை காட்டுஎனக் கண்ணீரை வடிப்பதென்ன ?
தனியாகச் சென்றவரைத் தடுக்காமல் விட்டு விட்டு
அவரையே எண்ணிஎண்ணி அழுவதினால் என்ன பயன்
பின்விளைவு தெரியாமல் பேசியே மகிழ்ந்த கண்கள்
செயல்பாட்டைத் தான்நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறதே
காமத்தில் தள்ளிஎன்னைக் கலங்க வைத்த என்கண்காள்
செய்தார்ககுச் செய்தபலன் தேவைதான் உங்களுக்கு
அழுதழுது உன்கண்ணீர் அற்றுத்தான்போனதுவே
இனிஎன்ன செய்வாய்நீ இருந்தழது என்ன பயன்
வாராத நேரமெல்லாம் வளராது கண்களுந்தான்
வந்தாலும் உறங்காது வரும்பிரிவு என்றஞ்சி
குறிப்பு : கண் விதுப்பழிதல் - கண்கலங்குதல் காதலனின் பிரிவுக்கு ஆற்றாத காதலி தன் கண் களைத்திட்டுகிறாள் . கண்களையே எதிரிபோல் எண்ணி வேறுபடுத்திப் பேசுகிறாள் . பித்துப் பிடித்தவள் போல் பிதற்றுகிறாள் .
119. பசப்புறு பருவரல்
முன்னாலே நான்செய்த மூடச் செயலாலே
பசலையாம் என்மேனி பரதவிக்கச் செய்கிறதே
பாராத கணவன்தான் பசலைவரக் காரணமே
நான்பெற்ற இப்பசலை நாணந்தான் கைத்திடுதே
காமமதும் பசலையதும் கைமாறு செய்துவிட்டு
அழகையும் நாணத்தையும் அவர் எடுத்துக் சென்றாரோ
விளக்கை அணைத்தவுடன் வெளிச்சம் போய் வரும் இருள்போல்
இணைந்தார் பிரிந்தவுடன் என் மேனி பசப்புறுதே
இவள்மேனி பசலைக்கு இவளேதான் பொறுப்பென்று
ஏசுவார் என்னைமட்டும் ஏன் ? அவரை விட்டுவிட்டு
120. தனிப்படர்மிகுதி
காதலிக்கப் பட்டவனும் காதலிக்கப் பட்டவளும்
காமக்கனிநுகரக் காண்கின்றேன் எனக்கிலையே
வாழ்வார்க்கு வரையாது வான் , மழையைக் கொடுப்பது போல்
காதலன் கொடுக்கும் இன்பம் காதலிக்கே என்று சொல்லு
விரும்புகிற நேரமெலாம் வீழ்வார் அமைந்துவிட்டால்
முகமலர்ந்து இன்பமதில் மூழ்குவாள் - குலமகளும்
ஒருதலையாம் காமமது ஒருநாளும் இனிக்காது
இருவர்பால் இருந்தால்தான் இன்பத்தைப் பெறமுடியும்
சொல்லாதே என்னெஞ்சே சோகமதைக் காதலர்க்கு
துன்பக் கடல்தனையே தூர்த்துவிடு வாழ்வாய் நீ !
121. நினைந்தவர் புலம்பல்
கள்ளைக் குடித்தால்தான் களிப்பு வரும் குடித்தவர்க்கு
உள்ளமதில் நினைத்தாலே ஊறிவரும் காம இன்பம்
எந்தவொரு வேளையிலும் இன்பந்தான் காமத்தால்
உடல்உறவு கொண்டால்தான் உண்டாகும் என்பதில்லை
தும்மல்வரும் போதெல்லாம் தும்மினேன் விழவில்லை
நினைந்தவரின் உள்ளமதில் என்நெஞ்சம் பதியலையோ
கணவனுடன் நான்சேர்ந்து கண்டசுகம் நினைவினிலே
துன்பமெனும் கடலலையில் சோர்ந்து நான் மிதக்கின்றேன்
வாழ்க நீ வெண்நிலவே வாராதே கண்முன்னால்
வாராதிருக்கின்றார் வன்மையுள்ள என்கணவர்
122. கனவு நிலை உரைத்தல்
காதலரின் தூதுசொல்லக் கண்ணில் கனாவினுக்கு
என்னவகை உணவளித்து எப்படி - நான் உபசரிப்பேன்
கண்ணே நீ உறங்கிடுவாய் கனாக் காண்பேன் காதலர்க்கு
தூதாக அதுசென்று சொல்லும் துன்பமெலாம்
நனவாகும் வேளையிலே நல்காதார் இன்பமதை
கனவினிலே கண்டுகண்டு களிப்பானேன் என்தோழி
துஞ்சுங்கால் என்னைவந்து தோள்தழுவும் காதலர்தான்
விழித்தவுடன் காணாமல் விரைந்து மறைந்திடுவார்
கனவினால் காண்கின்ற காதலரை ஒருபோதும்
வரவில்லை என்று சொல்லி வருத்தப்படமாட்டேன் நான்
123. பொழுது கண்டு இரங்கல்
மங்கையின் உயிருண்ணும் மாலையே வாராதே
வருவாயேல் வசைபொழிவேன் வாழ்த்துவேன் பகற்பொழுதை
மாலைப் பொழுதேநீ மங்கியிருள் பெற்றதென்ன
என்கண்வர் போல் உந்தன் இரக்கமில்லா குணந்தானே
அந்நாளில் எங்களுக்கு அஞ்சிநீ பனி உருத்தாய்
எங்கள் பிரிவு கண்டு எகத்தாளம் கொட்டுகிறாய்
காதலன் இல்லைஎன்று கண்டுகொண்ட மாலையுந்தான்
எதிரிபோல் என்னுயிரை எடுக்க நினைக்கிறதே
காலைப் பொழுதரும்பி பகல்வேளை மொட்டாகி
மாலைப் பொழுதினிலே மலராகும் காமந்தான்
மாயன் குழலோசை ‘ மாலைக்கு ‘ தூதாகி
கொள்ளியாம் நெருப்பாகி கொல்லுதே என்னுயிரை
காலைப் பொழுதென்னைக் காய்வதில்லை மாலை மட்டும்
பகையாகி வந்தென்னைப் பாடாய்ப் படுத்துவதேன் ?
குறிப்பு : பொழுது கண்டு இரங்கல் - மாலைப் பொழுது வந்தபோது அஞ்சுதல் . காதலர்கள் மாலை வேளையில்தான் காம வேட்கை கொண்டு புணர்ச்சிக்கு முயல்வார்கள் , காதல் இன்பத்தை நுகர்வார்கள் . காதலனைப் பிரிந்து தனியாக இருப்பவளுக்கு மாலைப்பொழுது வந்ததும் சேர்க்கைக்கு வழியின்றி துன்பப்படுகிறாள் . அப்பொழுதைப் திட்டுகிறாள் . பைத்தியம் கொண்டவள் போல் வாயில் வந்தபடி பேசுகிறாள் . பனி உகுத்தாய் - பனியாகிய கண்ணீரைச் சிந்தினாய் . எகத்தாளம் - கைகொட்டிச் சிரித்தல் . மாயன் - கண்ணபிரான் , பஞ்சபாண்டவர்களுக்காக தூது சென்றவன் , அவனுடைய இனிய குழல் ஓசை , இந்தச் சுடுநெருப்பாகிய மாலைப் பொழுதுக்குத் தூது சொல்லும் , படைக்கருவியாக வந்து என் உயிரை வதை செய்கிறதே என் செய்வேன் நான் என்று துன்புறுகிறாள் தலைவி .
124. உறுப்பு நலனழிதல்
நம்முடைய கண்களுக்கு நாணிநின்ற நறுமலர்கள்
நம்கண்கள் ஒளியிழந்நு நாணவைத்தார் காதலர்தான்
உடனுறைவார் இல்லாத உண்மையினை வெளிப்படுத்தி
உகுக்குதே என்கண்கள் ஊர் அறியக் கண்ணீரை
தெங்கங்காய் போலஅன்று திரண்டிருந்த என் மேனி
முருங்கையின் நெற்றுப்போல் முற்றும் மெலிகிறதே
கைகள் மெலிவடைந்து கைவளையல் கழன்றுவிழ
கண்டுநான் கலங்குவதைக் காதலர்க்குச் சொல்வாயே
என்மேல் சிறிதேனும் இரக்கமிலார் தூற்றுவதால்
நான்கொண்ட வாட்டமதை நன் நெஞ்சே தவிர்பாய் நீ
அணைத்த என் கைகளையும் அகற்றிய சிறு பொழுதே
அலர்வந்து நெற்றியிலே அடைந்தேன் நான்பசலை நிறம்
இறுக்கமாய் அணைத்தாலும் இடைவெளியில் கால் நுழைந்து
காதலியின் கருவிழியைக் கலைந்து நிறம் மாற்றியதே
125. நெஞ்சொடு கிளத்தல்
நெஞ்சே நீ நன்றாய்ந்து நேர்ந்துள்ள நோய்தீர்க்க
நல்லதோர் மருந்தெனக்கு நவில்வாய் நீ நான் வாழ
அவர்நினைவில் நானில்லை அவரை ஏன் நீ நினைத்து
அல்லல் ஏன் படுகின்றாய் அசடே என் மட நெஞ்சே
பிரிவு நோய் செய்தவர்க்கு பரிவு ஏன் காட்டுவது
நினைந்து வருந்தாதே நெஞ்சே நீ அகற்றிவிடு
செழுநெஞ்சே அவரிடந்தான் செல்ல நினைப்பாயேல்
உன்னோடு கண்களையும் உடன்கூட்டி செல்வாயே
கண்களை விட்டுவிட்டுக் காதலர்பால் செல்வாயேல்
கண்கள் எனைத்தின்னும் கவலையும் பெரிதாகும் .
நன்னெஞ்சே வேண்டுகிறேன் நாணத்தை விட்டுவிடு
நாணந்தான் வேண்டுமெனில் காமத்தை விட்டுவிடு
இவ்விரண்டும் சேர்ந்திருந்தால் என்னுயிரைக் கொன்றுவிடும்
நல்லா இருப்பாய் நீ நான்வாழ விட்டுவிடு
இன்னும் அவரை எண்ணி இருப்பதினால் பலனில்லை
என்னழகை வீணாக இழந்திடவும் தேவையில்லை
126. நிறை அழிதல்
மானம் எனும் கதவினுக்கு மாட்டிவைத்த பூட்டை இன்று
காமமெனும் கைச்சுத்தி கழற்றியதே என் தோழி
காமம் எனும் நோய்வந்து கண்ணுக்குள் புகுந்து கொண்டு
கண்ணுறங்க வீடாது கடிக்குதே இராவெல்லாம்
எப்படிநான் மறைத்தாலும் எழுகின்ற காமமது
தும்மல்போல் திடீரென்று தோன்றிடுதே என் செய்வேன்
என்கணவர் பேசுகின்ற இனிப்பான மாய்மாலம்
பெண்மை எனும் பண்புதனைப் பெயர்த்து எறிந்திடுதே
விலகிநான் சென்றாலும் வேண்டாமிக் காமமென்று
போகாதே என்றுசொல்லிப் புலம்பிடுதே என்னெஞ்சு
127. அவர்வையின் விதும்பல்
வீழ்வார் வருகையினை விழித்திருந்து பார்த்ததிலே
ஒளிவீசும் என்கண்கள் ஒளிமங்கிப் போயினவே
கைவிரலாம் கோடிட்டுப் கணக்கிட்டுப் பார்த்ததினால்
கைவிரல்தான் தேய்ந்ததன்றி கணவர் வந்து சேரலையே
இன்றவரைச் சிறிதுநாள் இறந்திருப்பாய் இலங்கிழையாய்
என்கின்றாய் இருந்தாலும் என் அணிகள் கழன்றிடுதே
என்னுள்ளம் அவரோடு எடுத்திட்டார் என்கணவர்
கையோடு கொண்டுவந்து காட்டுவரோ என்தோழி
காமத்தைத் தந்துவிட்டுக் கடல்தாண்டிச் சென்றவரை
மலைமீது ஏறிநின்று வரும்வழியை நோக்குகின்றேன்
காதலரின் வரும்நாளைக் கணக்கிட்டுப் பார்க்கையிலே
ஒருநாள் ஓராண்டாய் உயருதே என்செய்வேன்
குறிப்பு : வீழ்வார் - கணவர் . கோடிட்டு - கைவிரலால் சுவரில் கோடு போடுதல் . ஒரு கோடு ஒரு நாளைக் குறிக்கும் . ” கோடு போட்டுக் கணக்கு பார்த்தாள் ” என்று சொல்வதிலிருந்து படிப்பறிவு அறவே இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ளலாம் .
128. குறிப்பு அறிவுறுத்தல்
நீயே மறுத்தாலும் நின்துன்பம் உன்கண்கள்
உண்மையை உரைத்திடுமோர் உரைக்கல்லாம் நானறிவேன்
பேரழகுப் பெட்டகமாம் பெருத்ததோள் காதலியின்
பெண்மைக்குரிய பண்பு பெரிதாகும் என்று சொல்லு
மலராத மொட்டுக்குள் மறைந்துள்ள வாசம் போல்
சிரிக்காத இதழ்களிலே தெரியாமல் உண்டொன்று
கைநிறைய வளையல்களும் கள்ளமுள்ள உள்மனதும்
கொண்டுள்ள காதலியால் கொண்டதுயர் எனக்குண்டு
நீ எனக்குத் தந்ததுன்பம் நீங்கிடவும் வேண்டுமெனில்
நீயேதான் மருந்தாவாய் நேரிழையே நானறிவேன்
என்கணவர் பிரிதின்னும் ஏழுநாள் ஆகவில்லை
அதற்குள்ளலே என்மேனி அசிங்கமாய் பசந்ததுவே
பெண்னென்பாள் பெண்மையதைப் பேணும் வகை என்னென்றால்
கண்களினால் பேசியந்தக் காரியத்தைப் பெறுவாளாம் .
129. புணர்ச்சி விதும்பல்
நினைத்தாலே இன்பம்வரும் கண்டால் களிப்புமிகும்
கள்ளுக்கு இல்லையந்த காமத்திற்குள்ள பண்பு
தினையளவு என்றாலும் திறம்பாது இணைந்திடனும்
பனையளவாய்க் காமமது பயின்று வரும் வேளையிலே
என்காதல் பேணாது இருந்தாலும் காதலரைக்
காணாமல் இருப்பதற்குக் கண்கள் விரும்பலையே
கொண்டேன் விரதம்நான் கூடுதற்கு இல்லை என்று
பொல்லாத என்மனது போகுதே அதை மறந்து
காணாத வேளையிலே காண்கிறேன் அவர் குற்றம்
காண்கின்ற வேளையிலே காண்கிலேன் குற்றம் ஒன்றும்
கள்ளால் வருந்தீமை கண்டிருந்தும் குடிப்பவன்தான்
கள்ளுக்கடை கண்டால் கவ்வாமல் விடமாட்டான்
காமத்தால் வருந்தீமை கண்டிருந்தும் உன்மார்பில்
கள்ளுண்பார் போல்நானும் கலந்தின்பம் காண்பேனே
மலர்போல் மெல்லியதாம் மலர்ந்து வரும் காமமது
அதன் தன்மை தானறிந்து அணைத்திடுதல் அறிவுடைமை
130. நெஞ்சொடு புலத்தல்
அவரோடு அவர்நெஞ்சு அடக்கமுடன் இருக்கையிலே
என்நெஞ்சே நீமட்டும் என்னை விட்டு ஏகுவதேன்
அன்பில்லார் என அறிந்தும் அவரிடமே போவதுதான்
நியாயமா என்நெஞ்சே நான் அதற்கு சம்மதியேன்
வேண்டாத அவரிடமே விரும்பிநீ போவதுதான்
கேட்பதற்கு ஆளில்லை கிறுக்கியிவள் என நினைப்பா
பிரிவுக்கு முன் அஞ்சும் பிரிந்தபின் அது அஞ்சும்
எப்போதும் என்நெஞ்சு இன்னல்தான் செய்கிறதே
நெஞ்சில் நிறைந்ததுன்பம் நீக்குவார் வருவாரோ
நெஞ்சே நீயன்றி வேறுயார் துணை எனக்கு
மறந்துவிடு பிரிந்தவரை மடநெஞ்சே நாணமதை
முற்றும் இழந்தேனே மூதேவி உன்னாலே
131. புலவி
பிரிந்தவர் வந்தவுடன் பேசாதே நெஞ்சே நீ
அப்போது அவர்துன்பம் அறிந்துநாம் மகிழ்ந்திடுவோம்
உப்பின் குணமாகும் ஊடுதல் என்பதற்கும்
கல்ஒன்று மிகுந்தாலும் கைப்பாகும் என்றுசொல்லு
ஊடல் கொண்டுள்ளவளை ஊடல்நான் செய்வேனேல்
துன்பத்தில் உள்ளவளைத் துன்புறுத்தல் போலாகும்
ஊடிய காதலர்தான் உறுதுன்பம் நீக்கலையேல்
வாடிய மலர்க்கொடியின் வேறறுத்தல் போலாகும்
மலர்போன்ற கண்ணுடையாள் மனக்கவலை நீக்குதல் தான்
நற்பண்புக் கணவனுக்கு நலம்பயக்கும் என்றுசொல்லு
தண்ணீரும் தண்நிழலும் தாகத்தை நீக்குதல் போல்
புல்லிய கணவரொடு புணர்ச்சியதும் இனிதாகும்
132. புலவி நுணுக்கம்
பலபெண்கள் உன்மார்பைப் பார்த்திருப்பார் என்பதினால்
அணைத்திடேன் அம்மார்பை அன்புள்ள காதலரே
தோழியே எதற்காகத் தும்மினார் தெரிந்தேன் நான்
வாழ்கநீ நூற்றுக்கு வாழ்த்துவேன் என நினைந்து
இம்மைப் பிறப்பிலுன்னை இருப்பேன் பிரியாமல்
என்றவுடன் கண்ணீரை இறைத்திட்டாள் புரியவில்லை
இம்மைப் பிறப்பில் மட்டும் இங்கிருப்பேன் என்றீரே
எதிர்வரும் பிறப்பினிலே எங்கிருப்பீர் அழுகின்றேன்
நச்சென்று தும்மினேன் நல்வாழ்த்து என்றுசொல்லி
நினைத்தவள் யாரென்று நெடுமூச்சு விட்டெறிந்தாள்
அவளையே கண்ணுற்று அழகைநான் பருகுகிறேன்
என்னழகைச் சரிபார்க்க எவள் சொன்னாள் என்கின்றாள்
133. ஊடல் உவகை
ஒருகுறையும் வைக்காமல் ஓம்புவார் என்றாலும்
ஊடுவேன் ஓடிவந்து உன்கால்கள் தஞ்சமென்பார்
நிலத்தொடுநீர் சேர்ந்தாற்போல் நீடுலுகில் வாழ்ந்தாலும்
பிணங்குதல் கண்டிடலாம் பேரின்பம் என்று சொல்லு
புணர்ச்சி இறுக்கமது பொல்லாத என்பிணபக்கை
அடித்து நொறுக்கிவிடும் அதில்காணும் இன்பமது
தழுவப் பெறாதஅவர் தலைசிறந்த தலைவரென்றால்
தழுவாத வேளையிலும் தந்திடும் இன்பமென்பாள்
உணவு சீரணித்தால் உண்டு உடற்கின்பம்
ஊடல் எழுந்தாலும் உண்டாமே இன்பமது
ஊடுதல் செய்வதினால் உயர்காமம் பெறும்இன்பம்
கூடுதல் செய்வதினால் ஊடுதலும் பெறும்இன்பம்
தென்மதுரைத் தேன்மொழியே தேவர்தந்த குறளணங்கே
இன்னும்நல்ல செய்தியெல்லாம் எடுத்துரைப்பாய் மக்களுக்கு
* ஊடுதல் - பிணங்குதல் , இணங்குகது இருத்தல் , அடம்பிடித்தல்
ஆசிரியர் பற்றி
”செஞ்சொற் புலவன் சிந்தனைச் சிற்பி
கந்தப் பெருமான் கடவுள் பக்தன்
மெய்யே பேசும் விழுமிய நெஞ்சன்
பொய்யா மையறம் புரிந்து வாழ்வோன்
பழம்பதி சூரா ணம்மெனும் பேரூர்
விளம்பரம் தேடா வேற்கவி ராயர்”
பெயர் : ஆ.வேலு
ஊர் : சூராணம்
பிறப்பு : 18.08.1927
பொதுக்கல்வி : SSLC
தொழிற்கல்வி : இடைநிலை ஆசிரியர் பட்டயம்
பணி : இடைநிலை ஆசிரியர் பணி
பதவி : தலைமை ஆசிரியர்
பள்ளி : உலகமாதா நடுநிலைப்பள்ளி, சாக்கூர்
காளையார் கோவில் ஒன்றியம்.
பணி ஓய்வு : 18.08.1986
எழுதிய நூல் : ஒன்று மட்டும்
நூலின் பெயர் : தெய்வீக சிந்தனைகள் (தெய்வக் கொள்கையின் மேன்மை பற்றி விளக்கம்)
கருத்துகள்
கருத்துரையிடுக