ஃபேஸ்புக் கதைகள்
சிறுகதைகள்
Backஃபேஸ்புக் கதைகள்
ரவி நடராஜன்
Contents
ஃபேஸ்புக் கதைகள்
அறிமுகம்
ஆசிரியர் அறிமுகம்
1. உதைக்கும் உத்யோகம்
2. ஏமாற்றம்
3. துரோகம்
4. உயர் படிப்பு
5. சந்தோஷம்
6. வரலாறு தொடரும்
7. புரியாத மாற்றம்
8. அவ்வளவு ஸ்மார்ட் நான்
9. வன்முறை
10. உடல் நலம்
Free Tamil Ebooks – எங்களைப் பற்றி
உங்கள் படைப்புகளை வெளியிடலாமே
1
ஃபேஸ்புக் கதைகள்
ஃபேஸ்புக் கதைகள்
கதை உருவாக்கம்: ரவி நடராஜன்
மின்னஞ்சல்: ravinat@gmail.com
மேலட்டை உருவாக்கம்: ப்ரியமுடன் வசந்த்
மின்னஞ்சல்: vasanth1717@gmail.com
மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள்
மின்னஞ்சல் : sivamurugan.perumal@gmail.com
உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
2
அறிமுகம்
பத்தாண்டுகளுக்கு முன் (2004) உருவாக்கப்பட்ட ஃபேஸ்புக், (Facebook) இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த சமூக வலையமைப்பு மென்பொருள் தளமாக (Social Networking site) விளங்குகிறது. எந்த ஒரு புதிய தொழில்நுட்பத்திலும், நல்லவையும் தீயவையும் சேர்ந்தே வருகிறது. குறிப்பாக, இளைஞர்கள், அந்தரங்கம் (privacy) மற்றும் மென்பொருள் பாதுகாப்பு (software security) பற்றி அதிகம் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. இந்த விஷயத்தில், ஃபேஸ்புக்கின் மேலாண்மையும் சறுக்கி, சறுக்கியே, இன்றுவரை இயங்கி வருகிறது. இந்த மின் புத்தகத்தில் உள்ள கதைகள், கற்பனைக் கதைகளே. சமூக வலையமைப்பு மென்பொருள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் போது,. ஏற்படும் நல்ல மற்றும் தீய விளைவுகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் முயற்சியே, இந்த மின் புத்தகம். சில கதைகள் உங்களுக்கு அபத்தமாகப் படலாம் – இப்படி யோசிக்காமலா நுகர்வோர் இயங்குகிறார்கள் என்று கூடத் தோன்றலாம். உண்மை என்னவோ, விளைவுகளைப் பற்றி அதிகம் கவலைப்படாத இளைஞர்கள், இவ்வாறு இயங்குவதற்கு, பல உண்மை நிகழ்வுகள் உலகெங்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன. படிக்கும் வாசகர், ஏதாவது ஒரு தீய ஃபேஸ்புக் விஷயத்தைத் தவிர்த்தால், இம்முயற்சியில் அர்த்தமிருக்கும்.
3
ஆசிரியர் அறிமுகம்
தமிழில் தொழில்நுட்பம் (technology) மற்றும் விஞ்ஞானம் பற்றி எழுதுவதில் அதிகம் ஆர்வம் கொண்டவர், ரவி. தமிழில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப வார்த்தைகளை புதிதாக உருவாக்குவது இவருக்குப் பிடித்தமான விஷயம். ‘சொல்வனம்’ பத்திரிகையில், தொடர்ந்து 4 ஆண்டுகளாக, 40 –க்கும் மேற்பட்ட விஞ்ஞான/தொழில்நுட்ப கட்டுரைகளை எழுதி வருகிறார் (http://solvanam.com/?author=88). இதைத் தவிர, இணையத்தில், இளையராஜாவின் இசையப் பற்றி ஆராயும் இணையதளத்திலும் எழுதி வருகிறார் (http://geniusraja.blogspot.ca/). விஞ்ஞான புத்தக விமர்சனங்களும் சில இணையதளத்தில் எழுதுகிறார் (http://omnibus.sasariri.com/search/label/%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D )
மின்னஞ்சல்: ravinat@gmail.com
1
உதைக்கும் உத்யோகம்
அன்று என்னுடைய பாஸ் ஸ்டீவ், என்னை காய்ச்சு எடுத்துவிட்டார். நாற்பதாண்டு காலத்தில், இப்படி ஒரு நிகழ்வு நடக்கவே இல்லை. என் தவறை உணர சற்று நேரம் பிடித்தது. என்ன, ஏது என்று விவரமாக சொல்கிறேன். அதற்கு முன் சற்று பின்னணி…
கூமார் என்று அழைக்கப்படும் என்னுடைய பெயர் குமார் ராமசந்திரன். 1972 –ல் டொரொண்டோவில் (Toronto, Canada) காலடி வைத்ததை விட, இப்பொழுது எவ்வளவோ பரவாயில்லை. அப்பொழுது, என்னை ’கே’ என்றே சுறுக்கி அழைத்தவர்கள் கடந்த 40 ஆண்டுகளில் கூமாருக்கு வந்து விட்டார்கள் என்றால் பாருங்களேன்!
அண்டேரியோ ஏரி அருகே உள்ள டொரொண்டோ நான் வேலை செய்யும் ஊர். ராட்சச கனேடிய நகரமான டொரொண்டோவில் வசிப்பது என்பது நடுத்தர வர்கத்தினருக்கு சரிப்பட்டு வராது. என் மனைவி, மகன் மற்றும் மகள் எல்லோரும் மார்கம் (Markham, ON) என்ற புறநகர் நகரில் வசிக்கிறோம். கார், ரயில் மற்றும் பஸ்ஸில் அலுவலகப் பயணம் என்பது இங்கு சாதாரணம். 40 ஆண்டுகளாக இதைச் செய்வதால், மிகவும் சோர்வாக இருந்தாலும், வேறு வழியில்லை.
மகள், பல்கலைக்கழக பட்டப் படிப்பு முடித்து காப்பீடு நிறுவனம் (Insurance company) ஒன்றில் வேலை பார்க்கிறாள். தமிழை சுத்தமாக மறந்த மகன், காலேஜ் செல்கிறான். மனைவி மார்கம் பள்ளி ஒன்றில் ஆசிரியை. இந்திய நடுத்தர குடும்பத்துக்கே பரிச்சயமான வாரக் கடைசி அறுவை வேலைகள், எங்கள் குடும்பத்திலும் உண்டு – சில பல இந்தியக் கடைகளில் மளிகை சாமான்கள் வாங்குவது, பரதநாட்டியம், கர்நாடக சங்கீத வகுப்புகளுக்கு, மகளுக்காக காரை விரட்டிச் செல்வது, ஏதாவது இந்திய கலை நிகழ்ச்சிக்குப் போவது, கேமரா கோப்பி தமிழ்/இந்தி படங்களைப் பார்ப்பது, குமான் வகுப்புகள் என்று எதுவும் புதிதில்லை.
அட, என் வேலையைப் பற்றி சொல்லவே இல்லையே. நான் வேலை செய்யும் நிறுவனம் ஒரு சுரங்கத் தொழில் அமைப்பு. கனடாவில், மனிதர்களே அதிகம் போகாத இடங்களில் இந்தச் சுரங்கங்கள் உள்ளன. இந்த நிறுவனத்தின் கொள்முதல் அதிகாரி (Purchasing Manager) நான். பல்வேறு விதமான சுரங்கங்களுக்கு என்னென்ன தேவையோ, அதை நிறுவனத்திற்காக வாங்குவது என் வேலை. இதில் நிபுணன் என்று என் நிறுவனம் கருதியதால், 40 ஆண்டு காலமாக இங்கு வேலை.
என்னுடைய பாஸ், ஸ்டீவ் மிகவும் தங்கமானவர். என்னுடைய கொள்முதல் கணிப்பின் மேல் அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. பல சிக்கலான வாங்கல்களை தயாரிப்பாளர்களுடன் சாதுரியமாகப் பேசி தரமான எந்திரங்களை வாங்குவதற்கு, ஏராளமான தொழில் அறிவும் அனுபவமும் தேவை. அதுவும், இந்த சைனா தயாரிப்பாளர்கள் இருக்கிறார்களே, இவர்களுடன் விலை, தரம் பற்றி பேச்சு வார்த்தை நடத்துவது ஒரு தனி வித்தை.
பழைய முறைகளை பின்பற்றி வந்த என்னுடைய நிறுவனத்தில், மென்பொருள் தொகுப்புகளை புகுத்தி செயல்திறனை கூட்டியதால், எனக்கு பல பிரமோஷன்கல் கடந்த 20 ஆண்டுகளில் கிட்டியது. இதற்காக, கம்பெனி அளவில் பல கெளரவங்களும் கிடைத்தது. இதைப் பற்றி பெருமைக்காக சொல்லிக் கொள்ளவில்லை. என்னுடைய பிரச்னையின் பின்னணி உங்களுக்கு புரிய வேண்டும் என்றே இதை உங்களிடம் சொல்கிறேன்.
எனக்கு, வாரந்தோறும் வெள்ளி இரவு நண்பர்களுடன் நல்ல உணவகங்களுக்கு போவதற்கு மிகவும் பிடிக்கும். டொரொண்டோ நகரம், பலதரப்பட்ட உணவுகளுக்குப் பிரசித்தி பெற்றது. அத்துடன் எனக்கு ஜாஸ் இசையும் பிடிக்கும். சொல்ல மறந்துவிட்டேனே – நயக்ராவின் வைன் மற்றும் இந்திய பியர்களும் பிடிக்கும். உலகின் மிக அதிக மொழிகள் பேசப்படும் நகரங்களில் டொரொண்டோ நிச்சயம் இடம் பெறும். கிட்டத்தட்ட ஆயிரம் மொழிகள் என்று சொல்கிறார்கள். இத்தனை மொழியுடன் அத்தனை உணவு வகைகள் மற்றும் கலாச்சாரங்கள் இவ்வூரில் வலம் வருகிறது. மிகவும் நட்பான நகராக இருப்பதால், எல்லோரும் இங்கு பல வகை தொழில்களையும் தொடங்க வாய்ப்பு கொட்டிக் கிடக்கிறது. என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பக்கம் பக்கமாக இதைப்பற்றி எல்லாம் எழுதித் தள்ளியுள்ளேன்.
தயாரிப்பாளர்களுடன் உணவகங்களுக்குச் செல்வது என்பது இங்கு வியாபார வழக்கம். இப்படி நான் பல முறை சென்றுள்ளேன். 2013 மே மாதம் என்று நினைக்கிறேன். ஜிம் (Jim) என்ற ஒருவருடன் எனக்கு பரிச்சயம் ஏற்பட்டது. ஜிம் ஒரு பெரிய சுரங்க எந்திரத் தயாரிக்கும் நிறுவனத்தில் விற்பனைப் பிரிவில் வேலை செய்பவர். ஜிம்மின் ரசனையும் என்னுடையதும் மிகவும் ஒத்துப் போயின. ஜாஸ் இசை இருவருக்கும் பிடிக்கும்; இத்தாலிய உணவு, ஏன் இந்திய கல்யாணி பியர் கூட இருவருக்கும் பிடிக்கும்.
மாதத்தில் 3 வெள்ளிக் கிழமைகள் ஜிம்முடன் உணவு உண்ணச் செல்வேன். எனக்கு, ஜிம்மின் உணவகத் தேர்வு வியப்பளிக்கும். பல முறை எப்படி இருவரின் ரசனையும் ஒத்துப் போகிறது என்று வியந்திருக்கிறேன்.
சென்ற மாதம், என்னுடை பாஸ் ஸ்டீவ், பல சுரங்களில் சமீபத்தில் வாங்கிய Crusher என்ற எந்திரம் சரியாக வேலை செய்யாமல், சுரங்க உற்பத்தி சரிவது தெரிய வர, கடுப்பாகி விட்டார்.
“கூமார், எப்படி SM Equipment –ன் Crushers இப்படி கழுத்தறுக்கிறது?”
“ஸ்டீவ், சரியாக பரிசோதித்துதானே வாங்கினோம்”
“இல்லை கூமார், எங்கோ தப்பு நடந்து விட்டது. அதுவும் நிறைய எந்திரங்கள் வேறு வாங்கி விட்டோம். திருப்பித் தர வழியுண்டா? இந்த கம்பெனியின் பராமரிப்பு சேவை சரியில்லை என்று சுரங்கங்கள் அலறுகின்றன”
“ம்ம்ம்ம்…”
“இத்தனை ஆண்டுகளில் இப்படி நடக்க வில்லை. ஏன் எப்படி வாங்கினீர்கள்? நிறுவனத்தின் நம்பிக்கை ஆடிப் போயுள்ளது. ஏதாவது வழி செய்யுங்கள்!”
தலையை தொங்கப் போட்டுக் கொண்டு என் அலுவலகத்தில் வந்து யோசித்தும், எதுவும் சரியாக விளங்கவில்லை. ரயிலில் ஏறி, வீடு செல்லுகையில், மெதுவாக எனக்குப் புரிய ஆரம்பித்தது.
SM Equipment –ல் ஜிம் விற்பனையாளன். என் ஃபேஸ்புக் நண்பன். அவனுக்கு என்னுடைய அத்தனை உணவு, இசை மற்றும் மது பிரியங்களும் தெரிய அருமையான ஒரு சாதனம் ஃபேஸ்புக். என்னுடைய பிரியங்களைப் படித்து, பல வாரங்கள் என்னைக் கவர்ந்து, கடைசியில், Crusher எந்திரம் வாங்க நேர்கையில் என்னால் அவனுடைய விண்ணப்பத்தை மறுக்க இயலவில்லை.
அட, யாரை ஃபேஸ்புக்கில் நண்பராக்கிக் கொள்ள வேண்டும் என்று சற்று சிந்தித்திருக்க வேண்டாம்? எப்படித்தான் என்னுடைய 40 ஆண்டு அப்பழுக்கற்ற சேவையை, இனி சரி செய்யப் போகிறேனோ? இனி, வியாபார சம்மந்தப்பட்ட யாரையும் ஃபேஸ்புக்கில் நண்பராக்கக் கூடாது.
2
ஏமாற்றம்
சஞ்சய் கார்திகேயன் வசிப்பது, கூவம் நதிக்கரையிலே, அதாவது சிங்கார சென்னையிலே. ஞாயமாகப் பார்த்தால், அது ஹட்ஸன் நதிக் கரையில், அதாவது நியூயார்க்கில் இருக்க வேண்டும். எதை திட்டுவது என்று தெரியவில்லை. அந்த பாழாய்ப் போன ஸாம்சுங் கைபேசி ஃபோனையா, அல்லது டென்னிஸ் விளையாட்டையா, அல்லது கருணையே இல்லாத பாடி ஷாப் மென்பொருள் நிறுவனத்தையா? எது எப்படியோ, டெரா புலியாக (டெராடேட்டா என்ற மென்பொருளில் புலி சார் நான்) இருக்க வேண்டிய நான் வெறும் பலியாக கூவம் நதிக்கரையிலே…
அமெரிக்காவில் சேஞ்ஜெய் – இந்த ஆங்கிலத்தில் உடனே ‘அ’ என்ற சத்தத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இந்திய பெயர்களை ஏன்தான் இப்படி சொதப்புகிறார்களோ தெரியவில்லை. சென்னையில் பொறியியல் கல்லூரி ஒன்றில் CSபடித்துவிட்டு, ஆள் அனுப்பி சம்பாதிக்கும் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் 2011 கடைசியில் சேர்ந்தேன். எனக்கு சினிமா தவிர டென்னிஸ் ரொம்ப பிடிக்கும். அதுவும் ராஜர் ஃபெடரர் ரொம்ப பிடிக்கும். சில சமயம் எப்படியாவது ஸ்விஸ் நாட்டுக்கு சென்று ராஜர்ருடன் சில நாட்கள் தங்கி டென்னிஸ்ஸாக பேசுவதைப் போல கனவுகூட கண்டிருக்கிறேன். சென்னை நிறுவனத்தில் சேர்ந்த 6 மாதம் ஒரே டெராடேட்டாதான். நேரம் கிடைத்த பொழுது டென்னிஸ், கொஞ்சம் சினிமா.
அப்படித்தான் 2011 கடைசியில் ஒரு நாள் அமெரிக்க பொருளாதாரத்தைக் காப்பாற்ற என்னை நியூயார்க்கிற்கு அனுப்பினார்கள். சும்மா மென்ஹாட்டனில் 172 வது மாடியில் மாபெரும் ஃப்ளாட் ஒன்றில் தங்க வைக்க வேண்டாமா, என்னைப் போன்ற டெரா புலியை? அப்படி ஒன்றும் நடக்கவில்லை. சில பல நெடுஞ்சாலைகளைக் கடந்து போர்ட் ஜெர்விஸ் என்ற ஊரில் ஒரு சிறிய அபார்ட்மென்டில் சில நாட்கள் தங்கினேன். விசாரித்த்தில், இது பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள ஒரு ஊர். என்னைப் போல இன்னும் இரண்டு பாவப்பட்ட ஜென்மங்கள் அமெரிக்க கனவுடன் அங்கு தங்கியிருந்தார்கள். ரமேஷ் மற்றும் வினய்.
என்னுடைய க்ளயண்ட் ஒரு பழமையான நியூயார்க் காப்புறுதி நிறுவனம். நம்ப மாட்டீர்கள் – சற்று சூட் அணிந்த மாமா கம்பெனி. அவர்களுடைய ஜோக் புரிவதற்குள் பைத்தியமே பிடித்துவிடும். எதையுமே நேராக சொல்லித் தொலைக்க மாட்டார்களா? சில நாட்களுக்குப் பின் நியூஜெர்ஸியில் உள்ள எமெர்ஸன் என்ற ஊருக்கு வினய்யும் நானும் மாறினோம். ரயிலில் நியூயார்கிற்கு வாரம் ஐந்து நாள் பயணம். வாரக் கடைசியில் இந்திய கடைகள், சாப்பாடு, விடியோ. இந்த அமெரிக்காவில் டென்னிஸ் எப்போதாவதுதான் டிவியில் வருகிறது. இணையம் மூலம் பார்ப்பது முடியுமென்றாலும், ஆஸ்திரேலிய ஓப்பன், மற்றும் ஃபெரென்சு ஓப்பன் பார்ப்பது இந்த ஊர் நேரத்தோடு ஒத்தே வருவதில்லை. யுட்யூப்பில் என்ன திரில் இருக்கிறது? – நடக்கும் போது பார்க்கிற திரில்லே தனி.
என் டெரா சாமர்த்தியம் காப்புறுதிகாரர்களுக்கு பிடித்த்து. ‘க்ரேட் ஜாப் சேஞ்ஜெய்’ என்று சின்ன விஷயத்துக்கெல்லாம் பாராட்டினார்கள். ஓரளவிற்கு அங்கு பழக தொடங்கினேன். புதிதாக அமெரிக்கா வந்த நோஞ்சான் தமிழர்களுக்கே உரித்தான தொப்பை சற்று தெரியவும் தொடங்கியது. ஒரே ஃபிட்னெஸ் என்று அலட்டிக் கொள்ளும் வினய்யும் கொஞ்சம் கிண்டலடித்தான். காப்புறுதிகார்ர்கள் ஜோக்கும் மெல்லப் புரியத் தொடங்கியது.
நான் ஒரு ஃபேஸ்புக் அபிமானி. சென்னை நண்பர்களுடன் தொடர்பு கொள்ள மற்றும் என் கல்லூரியில் படித்து அமெரிக்காவில் வேலை செய்யும் நண்பர்களுடன் தொடர்பு எல்லாம் ஒரே ஜாலிதான். என் கல்லூரி நண்பர்களுக்கு நான் ராஜர்ரின் விசிறி என்று தெரியும். ஃபேஸ்புக்கில், ஏதாவது டென்னிஸ் விஷயமிருந்தால் தவறாமல் எனக்கு அனுப்பி வைத்துவிடும் நல்லவர்கள்.
2011 -ல் அந்த ஸாம்சுங் கைபேசியை நியூயார்க்கில் வாங்கினேன். அதில் ஃபேஸ்புக் செய்திகளை நேரடியாக அனுப்பலாம். ரயிலில் பயணம் செய்யும் போது ரொம்ப செளகரியம்.
சொல்ல மறந்து விட்டேனே – காப்புறுதி நிறுவனத்தில் HR ல் சூசன் என்ற சுட்டியான அமெரிக்க பெண் ஆரம்பத்தில் ரொம்ப உதவினாள். அவளை என் ஃபேஸ்புக் தோழியாக்கிக் கொண்டேன். மற்றபடி அந்த நிறுவனத்தில் என் கறார் பாஸ் ஜோ அல்லது வேறு யாரிடமும் அலுவலகத்திற்கு வெளியில் எந்த வித தொடர்பும் கிடையாது. கிராதகி சூசன்!
இன்னும் நன்றாக நினைவிருக்கிறது – செப்டம்பர் 14 ஆம் தேதி. அன்று யு. எஸ். ஓப்பனின் இறுதிப் போட்டி. உலகப் புகழ் பெற்ற ஃப்ளஷிங் மெடோஸில் ராஜர்ரும் நடாலும் மோத தயாரானார்கள். நடால் ஒழிக என்று சொல்லவே அந்த போட்டிக்கு டிக்கெட் வாங்கினேன். அலுவலகத்தில் ஒரே காய்ச்சல் என்று பொய் சொல்லிவிட்டு, மழையையும் பொறுப்படுத்தாமல் டென்னிஸ் பார்க்கச் சென்றேன். புறப்படும் போது (மதியம் 2 மணி) சாம்சுங்கிலிருந்து என் வரலாற்றுப் பயணத்தை ஃபேஸ்புக்கில் அறிவித்தேன்.
இரண்டாவது செட்டிற்கு பிறகு ராஜர் திரும்ப வென்றுவிடுவார் என்று எனக்குப் பட்டது. என் கைபேசியில் என் நண்பர்களுக்கு நிலவரம் ஃபேஸ்புக் மூலம் அனுப்பினேன். மூன்றாவது செட்டில் அந்த நடால் வென்று தொலைத்து விட்டான். மீண்டும் இன்னொரு செய்தி அனுப்பினேன். கடைசி செட்டில் நடால் வென்று கோப்பையை வென்றவுடன் எனக்கு ஒரே கடுப்பு. அடுத்தடுத்து செய்திகள் அனுப்பித் தள்ளினேன்.
செப்டம்பர் 17, 2011. என்னுடைய பாஸ், ஜோ என்னை அவரது அலுவலகத்திற்கு அழைத்தார். என்னுடைய திறமைகளை புகழ்ந்தார். மேலும் எப்படி நான் அவரது நிறுவனத்திற்கு உதவினேன் என்று சுற்றி வளைத்தார். பிறகு, பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார். என்னுடைய சேவைகள் காப்புரிமை நிறுவனத்திற்கு இனிமேல் தேவையில்லையாம். சுறுங்க சொல்லப் போனால், வேலையிலிருந்து நீக்கப் பட்டேன். அந்த கிராதகி சூசன், சிரித்த வண்ணம், ’உங்களது சென்னை நிறுவனம் உங்களோடு தொட்ர்பு கொள்ளும்’ என்று அறிவித்தாள்.
சென்னை ஆள் அனுப்பி நிறுவனம், காள் காள் என்று கத்தினார்கள். எப்படி பொய் சொல்லிவிட்டு டென்னிஸ் மேட்சுக்கு போகலாம்? தில்லு முல்லு படத்தில் வரும் ரஜினி போல மீசையை எடுத்து என்னால் காலம் தள்ள முடியாது. பாழாய் போன ஃபேஸ்புக்கெல்லாம் ரஜினி/தேங்காய் காலத்தில் இல்லையே. இப்படி சூசன் குழி பறிப்பாள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
செல்போனில் ஃபேஸ்புக் என்று ஆசை காட்டினால், கொஞ்சம் கைநூலை ஒழுங்காக படிக்கவும். அத்துடன், யாரை நண்பராக/நண்பியாக வைத்துக் கொள்வது என்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும்.
இப்படிக்கு
அடுத்த ஆள் அனுப்பி நிறுவனத்திற்காக காத்திருக்கும்,
சஞ்சய் கார்திகேயன்.
3
துரோகம்
துரோகிதன் = துரோகி + சினேகிதன்
இந்த புதிய வார்த்தையை உங்களுக்கு விளக்க என்னுடைய கதை ஒன்றே போதும். ரஞ்சனி கிரிதரன் – என் பெறோர்கள் வைத்த பெயர். பிறந்து வளர்ந்தது எல்லாம் சிங்காரச் சென்னையில் தான். ஓரளவிற்கு படிப்பு வரும். என் பெறோர்கள் அதிகம் இசை, நாட்டியம் என்று இளமையில் படுத்தவில்லை. சுதந்திரமாக என்னை வளர விட்டனர்.
நான் கல்லூரியில் என்ன படித்தேன் என்பது முக்கியமில்லை. கல்லூரி முடித்து, ஐ.ஐ.எம். பெங்களூரில் படித்து, சென்னையில் ஒரு மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் வேலை. மாதம் 2 லட்சம் சம்பளம். வழக்கமான பெண்கள் போல அல்லாமல், என்னுடைய சொந்த ஃப்ளாட்டில் வசிக்கிறேன். அப்பா அம்மாவுடன், ஒவ்வொரு நாளும், செல்பேசியில் பேசுவேன். வாரக் கடைசியில், அவர்களை அவசியம் சந்திப்பேன். என்னுடைய தங்கை வினயாவுடன் அரட்டை அடிக்கவும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவள் அடிக்கடி என்னுடைய ஃப்ளாட்டுக்கு வருவாள்.
சென்னையிலேயே பிறந்து வளர்ந்ததால், என்னுடைய சமூகச் சூழல் மிகப் பெரியது. ஏதாவது பார்ட்டி, கல்யாணம், சில சப்பை கொண்டாட்டங்கள் என்று பலவற்றிற்கும் போகப் பிடிக்கும். பல விழாக்களை தவிர்க்கும் திறமை எனக்கு இல்லை என்றும் சொல்லலாம். தவறாமல் ஃபேஸ்புக்கில் நான் எங்கு போகிறேன், மற்றும் என்னுடைய செல்பேசி ஃபோட்டோக்களை மேலேற்றி விடுவேன். அத்துடன், ஒவ்வொரு ஃபோட்டோவையும் யார் இருக்கிறார்கள் என்று டேக் (tag) செய்து விடுவது வழக்கம். ஒரு நாளைக்கு மட்டும் எனக்கு குறைந்தது 50 ‘லைக்’ –கள் (likes) என்பது சாதாரணம்.
எனக்கு பாய்ஃபெரண்ட்ஸ் அதிகம் கிடையாது. என்னுடைய ஆபீஸ் வேலை, அப்பா, அம்மா வினயா மற்றும் ஏராளமான தோழிகளுடனே நேரம் போதவில்லை. அப்பா அம்மாவும், கல்யாணம் என்று இதுவரை பேச்சு எடுக்கவில்லை. சொல்லப்போனால், பொறாமை கொள்ள வேண்டிய வாழ்க்கை.
என்னுடன் அந்த சனி இரவு, தூங்க வந்த வினயா, ஏதோ புதிதாகக் கண்டுபிடித்து விட்டாள்.
”ரஞ்சனி, புதுசாக ஏதோ நடக்குது போல தெரியுதே?”
”என்ன புதுசு வினயா? ஒன்னும் இல்லையே. எல்லாம் வழக்கம் போலத்தானே நடக்குது”
”யாரும்மா அருண்? ஃபேஸ்புக்குல புதிய ஃப்ரெண்ட்?”
“சபாஷ், சென்னையில் ஷெர்லாக் ஹோம்ஸ் என் அன்புத் தங்கைதான்!”
“மழுப்பாத, விஷயத்தை கக்கு!”
“நீ நினைப்பது போல ஒன்னும் இல்லை. பத்தோட ஒன்னு, புதிய நண்பன், அவ்வளவுதான்”
“டீடெய்ல்ஸ் வேணுமே. சுறுக்கற விஷயமா இது?”
“ரெஸ்டாரெண்டில் ஒரு நாள் சர்வ சாதாரணமாய், அருண் என்னருகில் வந்து – நீங்க எதிராஜ் கல்லூரிதானே? நானும் 2010 –ல் லயோலாவிலிருந்து பாஸ் செய்தேன்”
“என்னை உங்களுக்கு எப்படித் தெரியும்?”
“காயத்ரி என்னுடைய உறவுப் பெண். உங்களுடன் படித்தவள். நிறைய சொல்லியிருக்கிறாள். உங்களை டிஸ்டர்ப் பண்ண விரும்பவில்லை. ஃபேஸ்புக்கில் ஒரு நட்பு வேண்டுகோளை நீங்கள் எதிர்பார்க்கலாம்” என்று விலகினான்.
“அப்படியே அதை மறந்து விட்டேன். சென்ற வாரம் அருணிடமிருந்து அந்த வேண்டுகோள் வந்தது. காயத்ரி சென்னையில் இல்லை. இப்பொழுது சிங்கப்பூரில் இருக்கிறாள். அவள், நல்ல ஜாலியான ஃப்ரெண்ட். சரி என்று ஒப்புக் கொண்டேன். அவ்வளவுதான்”.
வினயாவுடன், அந்த உரையாடல், அத்துடன், நின்று போனது. ஆனால், அருணை நான் சந்திக்க ஆரம்பித்தேன். அவன் ஒரு ஆட்டோ பாட்ர்ஸ் கம்பெனியில் வேலை பார்க்கிறானாம். அவனுடைய துறை அக்கவுண்டிங். அவனுடைய கம்பெனியின் பெயர் சரியாக நினைவில்லை. நல்ல ஜென்டில்மேன். அவனுடைய பெற்றோர் திருசெந்தூரில் இருக்கிறார்களாம். மிகவும் கஷ்டப்படும் குடும்பம் போலத் தெரிந்தது. ஆனால், அதற்காக அனுதாபம் எதையும் எதிர்பார்க்காத அருண்.
பெரிய பன்னாட்டு நிறுவனத்தில், ஃபைனான்ஸ் துறையில், முன்னேற வேண்டும் என்பது அருணின் லட்சியம். எங்களுடைய கம்பெனி பற்றி அவ்வப்பொழுது விசாரிப்பான். அவன், நான் வளர்ந்த பேட்டை, என் சிறு வயது நண்பர்கள் என்று எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருந்தான். ஏன், காயத்ரியின் நெருங்கிய தோழியான வசந்தியைப் பற்றியும் சொன்னான்.
சென்ற சனிக்கிழமை மீண்டும் வினயா வந்திருந்தாள்.
“ரஞ்சனி, என்ன ஏதோ பறி கொடுத்த மாதிரி இருக்க?”
“எப்படி கண்டுபிடிக்கற?”
“சென்னையில் ஷெர்லாக் ஹோம்ஸ்”
“ஒரு வாரமாக அருணிடமிருந்து எந்த தகவலும் இல்லை”
“அதுக்கென்ன, அவன் ஒரு சாதாரண ஃபெரண்டுன்னுதானே சொன்னாய்!”
“அதில்ல வினயா, போன வாரம் அவனை சந்தித்த பொழுது, ரொம்ப பதட்டமாக இருந்தான். ஏதோ திருசெந்தூரில் ஃப்ளாட் வாங்க வங்கியில முழுசா கடன் கிடைக்கலையாம். ஒரு 2 லட்சம் குறையுதுன்னு சொன்னான்”
“அப்புறம்?”
“நல்ல ஃப்ரெண்டுதானே, உதவலாம்னு, பணம் கொடுதேன்”
“செக்குதானே”
“இல்லை”
“லூசாடி நீ? இத்தனை பணத்தை, செக்காக கொடுத்தால், ஏதாவது டிரேஸ் செய்ய முயற்சிக்கலாம்”
“அதைவிட மோசம். நான் காயத்ரியிடம் ஃபோனில் விசாரித்தேன். அவளுக்கு எந்த அருணையும் தெரியாதாம்”
“ரஞ்சனி, சொஞ்சம் பொறுமையா யோசிப்போம். முதலில் உன் ஃபேஸ்புக் ஃபோட்டோக்களைப் பார்ப்போம்”
“சரி”
“காய்த்ரியின் ஃபோட்டோ ஒரு முறை மட்டுமே உன்னால் டேக் செய்யப்பட்டுள்ளது. சரி, காயத்ரியின் வாலைப் (wall) பாக்கலாம். அதோ, அருண் சொன்ன வசந்தியும் காயத்ரியின் முகநூல் சுவரில் எழுதியிருக்கிறாள்.”
“சொஞ்சம் விளங்குகிறது. ஆனால், அவனுக்கு எப்படி நான் வளர்ந்த குரோம்பேட்டை பற்றித் தெரியும்?”
“சரி, உன்னுடைய ப்ரொஃபைலைப் (profile) பார்க்கலாம். அதோ, நீ படித்த குரோம்பேட்டை பள்ளிக்கூடம், எதிராஜ் கல்லூரி – உன் ஜாதகமே இருக்கிறதே”
“அருண் ஒரு மோசடி துரோகி. அவனை நினைத்தாலே பத்திக் கொண்டு வருது. இப்படி, ஏமாற்றப்படுவது கொடுமை. அவனை இந்த சென்னையில் எங்க தேடறது? அவனை அன்ஃபெரண்டு செய்யலாம். ஆனால், போனது போனதுதான்”.
இப்பொழுது புரிந்திருக்கும் துரோகிதன் என்றால் என்னவென்று.
4
உயர் படிப்பு
கால் செண்டர் வேலையில் மாட்டிக் கொண்டவர் வாழ்க்கை சற்று வினோதமானது. எங்களது இரவு நேர அலுவலக வாழ்க்கையில் உள்ள அழுத்தங்கள் பலருக்குப் புரிவதில்லை. இரவில் வேலைக்குப் போகிறார்கள், என்று மட்டுமே தெரியும். ஏன் ஊர் உறங்கும் நேரத்தில் வேலை பார்க்கிறோம் என்பது மிகச் சிலருக்கே தெரியும். மற்றவர்களுக்கு, நாங்கள் சம்பாதிக்கும் பணம் பற்றி மட்டுமே தெரியும்.
சோகமாக ஷெனாய் வாத்திய பின்னணியுடன் ஏன் சென்னையில் பரத் சாமிநாதனாகிய நான், கால் செண்டரில் வேலை செய்கிறேன் என்று உங்களை வதைக்கப் போவதில்லை. ஒரு வரியில், குடும்பப் பொருளாதாரம் என்று முடித்துக் கொள்கிறேன். கடந்த 5 ஆண்டுகளாக அமெரிக்க காப்பீடு கால் செண்டரில் வேலை செய்து வருகிறேன்.
நான் படிப்பில் சுமார். கிரிகெட் பிடிக்கும். கல்லூரி வாழ்க்கை மிகவும் ஜாலியாக நண்பர்களுடன் கழிந்தது. சினிமா பார்ப்பதும் ரொம்பப் பிடிக்கும். இதைத் தவிர எனக்கு சில பொழுதுபோக்கு விருப்பக்கலைகள் (hobbies) மிகவும் பிடிக்கும். உதாரணத்திற்கு, கல்லூரியிலிருந்து சினிமா சரித்திரம் (cinema history) எனக்கு மிகவும் பிடிக்கும். ஆண்டு வாரியாக, தமிழ், இந்தி, ஆங்கிலப் படங்களைப் பட்டியலிடப் பிடிக்கும். இந்த பொழுது போக்கு மிகவும் எளிதாகத் தோன்றினாலும், சில ஆண்டுகள் சரியாக வகைபடுத்தல் மிகவும் கடினமாக இருக்கும். அத்துடன், நடித்த நடிகர்கள் பெயர் சற்று தெளிவாக கிடைக்காது. அதுவும், 1950 முதல் 1970 வரை வந்த திரைப்ப்படங்களின் விவரங்கள் எல்லா மொழிகளிலுமே சற்று மங்கலான சமாச்சாரம்.
இதுபோலவே நான் கிரிகெட் மாட்சுகள் பற்றிய புள்ளி விவரங்களையும் சேகரிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்தேன். இன்னும் காட்டுகிறேன். நான் கல்லூரியில் படிக்கும் பொழுது, என் பள்ளித் தோழர்கள் பலரும், கல்லூரியிலும் தொடர்ந்தோம். இதனால், என்னுடைய நண்பர் கூட்டம் மிகப் பெரியது.
கல்லூரியில் எப்படியாவது அடித்து பிடித்து, பாஸாகி விட்டேன். எனக்கு ஆங்கிலம் நன்றாக பேச வரும். இதனால், பல நேர்முக தேர்வுகளில் மிக எளிதாக என்னால் பளிச்சிட முடிந்தது. கடைசியில் அமெரிக்க காப்பீடு நிறுவனம், மற்ற கம்பெனிகளைவிட அதிக சம்பளம் தந்ததால், வேலையில் சேர்ந்தேன்.
ஒரு 2.500 பேர் வேலை பார்க்கும் கால் செண்டர் அது. வசீகரமான இளைஞர் மயம் என்றால் மிகையாகாது. என்னுடைய ஷிஃப்ட் மாலை 6 மணி முதல், காலை 5 மணி வரை. சென்னையில் மாலை 5 மணிக்கு, எந்த திசையிலும் போக்குவரத்து நெரிசல்தான். சிலபல குறுக்கு வழிகள் மூலம், 1 மணி நேரம் என் வீட்டிலிருந்து பயணித்தால், அலுவலகத்தை அடையலாம்.
எங்களது கால் செண்டரில், எத்தனை கேஸ்களை ஒரு ஷிஃப்டில் முடிக்கிறோம் என்பதே எங்கள் தலையெழுத்தை முடிவு செய்யும் விஷயம். ஒருவருக்கு, ஷிஃப்டில், எவ்வளவு சிக்கலான கேஸ்கள் வந்தாலும் சாதுரியமாக பேசி முடித்து, இத்தனை கேஸ்களை முடிக்க வேண்டியது எங்களது கடமை என்கிறது எங்களது மேலாண்மை!
இரவு ஷிஃப்டில் இரண்டு 1 மணி நேர இடைவெளிகள் உண்டு. இது, நாங்கள் எதிர்பார்க்கும் ப்ரேக். நண்பர்கள், ஃபேஸ்புக் மற்றும் அரட்டை/உணவு என்று ஜாலியாக செலவிடும் நேரம். ஃபேஸ்புக்கில் என்ன நடக்கிறது என்று மட்டுமே பார்க்க நேரம் கிடைக்கும். மற்றபடி, ஃபேஸ்புக் பகலில்தான். கல்லூரி முடிந்ததும் நண்பர்கள் அனைவரும், ஒரு முடிவு செய்தோம். அதாவது, அனைவரும் தொடர்பில் இருப்போம் என்று மின்குழு (electronic group) ஒன்று தொடங்கினோம். இது, இன்று ஒரு ஃபேஸ்புக் குழுவாக உருவாகியுள்ளது.
காலையில் வீடு திரும்பியதும், சற்று சாப்பிட்டு, இளைப்பாறி, கொஞ்சம் ஹிந்து படித்து, உறங்கப் போவது, என் வழக்கம். சென்னையின் பகல் நெரிசல், சத்தம், என்னை, 2 மணிக்கு மேல் தூங்க விடாது. இதற்குள் எனக்கு ஒரு 200 செய்திகளாவது ஃபேஸ்புக்கில் வந்து குவிந்து விடும். என்னுடைய மூன்று காதலிகள் – சினிமா, கிரிகெட் மற்றும் நண்பர்கள் என்று ஃபேஸ்புக் என்னை இழுக்கும். இத்தனை செய்திகளையும் படித்து, பதிலளித்து, ஒரு குட்டித் தூக்கம் போட்டு எழ, 4 மணியாகிவிடும். குளித்து, சின்னதாக ஏதாவது சாப்பிட்டு கிளம்புவதற்குள் 5 மணியாகிவிடும்.
எவ்வளவு பிஸியாக இருக்கிறேன் என்று உங்களுக்கே புரிந்திருக்கும். ஆனால், என்னுடைய போபால் (Bhopal) மாமா ஒருவர் இருக்கிறார்,. அவருக்கு ஏனோ புரிவதே இல்லை. ஒவ்வொரு முறை சென்னை வரும் பொழுதும், இந்த உறையாடல் தவறாமல் இடம்பெறும்.
“என்ன பரத், எம்.பி.ஏ. எந்த அளவில் உள்ளது?”
“படிச்சுட்டுத்தான் இருக்கேன்”
“இன்னும் எத்தனை நாள்தான் இந்த எம்.பி.ஏ. –வை ஓட்டப் போகிறாய்? எப்ப முடிப்பதாக உத்தேசம்”
”சீக்கிரமே முடிச்சுடுவேன்”
”போன வருஷமும் இதையேதான் சொன்னாய். இந்த ராத்திரி வேலையை விட்டுவிடு. எம்.பி.ஏ. முடித்து, எல்லோரையும் போல ஒழுங்காக ஒரு பகல் வேலையில் உருப்படப் பார்”
இந்த எம்.பி.ஏ. கிணறு தாண்ட எத்தனை காலமாகும் என்று எனக்குத் தெரியாது. எல்லோரும் சொல்லவே அஞ்சல் வழி பாடமாக எடுத்துக் கொண்டு விட்டேன். உண்மையில், எனக்கு பகலில் நேரமே இருப்பதில்லை. வாரக் கடைசியில், ஏதாவது நண்பர்களுடன் சந்திப்பு என்று வந்துவிடுகிறது. ஓரளவிற்கு, இந்த கால் செண்டர் வேலையும் பழகிவிட்டது. நாம் செய்வது சரியா தவறா என்று தெரியவிலை.
சென்ற சனிக்கிழமை, என்னுடன் கல்லூரியில் படித்த மனோகர் ஆச்த்ரேலியாவிலிருந்து வந்திருந்தான். அவன் படித்து, அங்கு சென்று ஒரு பலகலைக்கழகத்தில் ஆராய்ச்சி பணியில் இருக்கிறான். விடுமுறைக்காக சென்னை.
”பரத், வேலை எல்லாம் எப்படி போகிறது?”
“மனோ, வழக்கமான கால் செண்டர் வேலை. நேரமே கிடைக்க மாட்டேங்குது”
“எம்.பி.ஏ. ஏதோ படிப்பதாக க்ரூப்பில் சொல்லியிருந்தாயே?”
“அதென்னமோ உண்மைதான். ஆனால், 5 வருஷமா அதிகமா ஒன்னும் பெரிசா முடிக்கலை”
“ஏன்?”
என்னுடைய வழக்கமான நேர நெருக்கீடு பல்லவியை பாடினேன்.
“தப்பா நென்னச்சுக்காத பரத். நீ ரொம்ப கிரிகெட், சினிமா மற்றும் க்ரூப் விஷயத்துக்கு முக்கியத்துவம் தருகிறாய். ஒரு நாளைக்கு 5 மணி நேரம் ஃபேஸ்புக்கில் – எப்படி எம்.பி.ஏ. வுக்கு நேரம் கிடைக்கும்? பிடித்துதானே இந்த படிப்பை எடுத்துக் கொண்டாய்? முடிப்பதற்கு ஏதாவது வழியை கண்டுபிடி. அதுவே உனக்கு நல்லது.”
மனோகர் சொல்வது உண்மை என்று தோன்றினாலும், எப்படி இந்த 5 மணி நேரத்தை குறைப்பது என்று இன்னும் விளங்காமல் தவிக்கிறேன்.
5
சந்தோஷம்
லவேன்யா என்று அழைக்கப்படும் ஃப்ளோரிடா பெண் நான். டாம்பா என்ற நகரத்தில் என் பெறோருடன் வசித்து வருகிறேன். சற்று தொலைவில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஸ்டெட்ஸன் பல்கலைக்கழகத்தில் இளநிலை பிஸ்னஸ் படித்து வருகிறேன்.
அப்பா காப்புரிமை நிறுவனம் ஒன்றில் டாம்பாவில் பணியாற்றி வருகிறார். அம்மா உள்ளூர் கம்பெனி ஒன்றில் அகவுண்ட்ஸ். டாம்பா சிறிய/பெரிய ஊர் – சொல்வதற்கே குழப்பமானது. மயாமி போல பெரிய ஊர் இல்லை. அதிகம் டூரிஸ்ட் இல்லையென்றாலும், குளிர்காலத்தில் கனேடியர்கள் தொல்லை அதிகம். அவர்கள் ஊரில் அப்படி குளிருமாமே – இங்கே ஓடி வந்து விடுவார்கள். இங்குள்ள புஷ் கார்டன்ஸில் அலை மோதும்.
ஏறக்குறைய சென்னை போன்ற க்ளைமேட். ஜனவரி மாதம் சற்று குளிரும். 3 மணி நேரம் பயனித்தால், கேப் கனாவ்ரல். அமெரிக்க விண்வெளி கலங்கள் இங்கிருந்துதான் மேலே செல்கின்றன. நான் ஸ்பேஸ் ஷட்டில் உயர போவதை இரு முறை அருகே (அதாவது 10 கி.மீ. தொலைவு) நில அதிர்வோடு ரசித்திருக்கிறேன். இங்கு முதலைக் (capital) கொண்டு வருகிறேன் என்று ஒவ்வொரு கவர்னராக வாக்குறுதி அள்ளி வீசுகிறார்கள். ஃப்ளோரிடா மக்களுக்கு இங்கு இருக்கிற முதலைகளை எங்காவது கொண்டு சென்றால் தேவலாம் என்று தோன்றும்!
அப்பாவுக்கு நான் பெரிய வால் ஸ்ட்ரீட் பண சுறா போல வர வேண்டும் என்று ஆசை. அம்மாவுக்கு அவ்வளவு கனவெல்லாம் கிடையாது. ஏதாவது ஃப்ளோரிடா கம்பெனியில் (ஆரஞ்சு விற்பனையும் ஓகே) நல்ல மார்கெடிங் வேலை பார்த்தால் சரி. அப்பாவுக்குச் செல்லம் நான்.
ஃபேஸ்புக் அபிமானி நான். அப்பா ஃபேஸ்புக் பக்கமே போக மாட்டார். அம்மா ஈமெயிலுடன் சரி. இந்த நவீன காலத்தில் எப்படி இவர்களால் இப்படி இருக்க முடிகிறதோ? அப்பாவுக்கு மயாமி, அட்லாண்டா, ராலீ என்று பல ஊர்களிலும் சென்னையிலிருந்து பல நண்பர்களைத் தெரியும். வாரக் கடைசியில், ஏதாவது ஒரு நண்பராவது 1 மணி நேர தொலைப்பேசி அரட்டை உத்தரவாதம்.
மற்றபடி அப்பாவுக்கு பெரிய ஆசைகள் கிடையாது. மற்ற இந்தியர்கள் போல, இதோ இந்தியா திரும்ப போக வேண்டும் என்று குதிக்க மாட்டார். பெண் குழந்தைகள் அமெரிக்காவில் கெட்டுப் போய்விடுவார்கள் என்ற பழமை சிந்தனை எல்லாம் கிடையாது. இன்னொரு முக்கியமான விஷயம். “லாவண்யா, பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம் கத்துக் கொண்டு ஆகவேண்டும்” என்று ஒரு நாளும் சொன்னதில்லை. ஏன் இப்படி இந்திய பெற்றோர்கள் படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. என்னுடைய கஸின் கனடாவில் இருக்கான். என்னமா ஸ்கீ பண்றான் – விடியோ அனுப்பியிருந்தான். அவனைப் பார்த்து நான் பாரா க்ளைடிங் செய்யறேன்.
சரி, முக்கியமான கதைக்கு வரேன். ஏன் அம்மா பற்றி அதிகம் சொல்லவில்லை என்று நீங்கள் கேட்கலாம். அப்பாவைப் பற்றியது இந்த கதை.
———-000000000—————–
அப்பாவின் பிறந்த நாள் டிசம்பர் 15. அந்த நாள் 2010 -ல் வாரத்தின் நடு செண்டரில் வந்து கழுத்தறுத்தது. அதுவும் அன்று அப்பாவுக்கு 50 வது பிறந்த நாள். அப்பாவிடம் கறாராகச் சொல்லி விட்டேன். டிசம்பர் 18 அன்று எந்த ப்ரோக்ராமும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று.
“லாவ், என்ன கேக் பண்ண போறயா? இந்த அரைக் கிழத்துக்கு என்ன கேக்?”
“டாட், பொறுத்திருந்து பாருங்கள்”
டிசம்பர் 18…
‘டாட், ரெடியா? நான் கார் ஓட்டுகிறேன்”
“எங்க கூட்டிக்கிட்டு போகப் போற?”
“எல்லாம் ஒரு சர்ப்ரைஸ்” என்று காரை ஹயாத்துக்கு விரட்டினேன்.
ஒரு சிறிய பாங்க்வெட் ஹால் புக் செய்திருந்தேன். உள்ளே நுழைந்த்தும் அப்பாவால் நம்பவே முடியவில்லை. அவரது நண்பர்கள் ராலீ சந்துரு, சேகர். மயாமி ராமன், மணி, கோவிந்தன், அட்லாண்டா புரு, கமல், தயானந்த் என்று குடும்பத்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் களை கட்டியது. பல நண்பர்களை நேரில் மிக நாட்களுக்குப் பிறகு சந்தித்த்தில் அப்படி சந்தோஷம் அப்பாவுக்கு. ஒரே காட்ச் அப் தான் போங்கள்.
ஞாயிறு முழுவதும் ஹயாத்தில் பொழுது நல்லபடியாக போயிற்று. மாலை அட்லாண்டா, ராலீ நண்பர்களை ஏர்போர்டில் வழி அனுப்பி வீட்டுக்கு திரும்பி வந்து சொண்டிருந்தோம்.
“ஏப்படி ஏற்பாடு செய்தாய் லாவ்?”
“எல்லாம் ஃபேஸ்புக்தான். நீங்கள் இருவரும் அதை உபயோகப் படுத்துவதில்லை. போன வருஷம் வந்த போது ராமன் அவரது ஈமெயில் முகவரியை என்னிடம் கொடுத்தார். அவரை ஃபேஸ்புக்கில் நண்பராக்கிக் கொண்டு, மற்றவர்களையும் ஒவ்வொருவராக சேர்த்துக் கொண்டேன்”
“நேற்றைக்கே வந்து விட்டார்களா?”
“ஆமாம் டாட். எல்லாம் ஃபேஸ்புக் மூலம் ஏற்பாடுகளை உன் நண்பர்களே செய்து விட்டார்கள். வெறும் ஹயாத் ஏற்பாடு மட்டுமே என்னுடைய பங்கு”
“என்னால் இதை விட சிறந்த பிறந்த நாள் பரிசை எதிர்பார்க்க முடியாது”.
6
வரலாறு தொடரும்
வீஜே – சியாடிலில் இப்பெல்லாம் தூக்கமில்லாமல் தவிக்கிறேன் (sleepless in Seattle). ஏதாவது உடம்பு பிரசனையா? இல்லை. மனக் கோளாறா? அதுவும் இல்லை. சரியாக வேலை கிடைப்பது இல்லை. அதுவும் நல்ல படிப்பு மற்றும் ஓரளவு அனுபவம் உள்ள எனக்கு.
விஜய் பாண்டியன் – அமெரிக்கர்கள் வீஜே ஆக்கிவிட்டார்கள். பிறந்து வளர்ந்த்தெல்லாம் சியாடிலில்தான். வாஷிங்டன் மாநிலத்துடன் எனக்கு அப்படி ஒரு பற்று. கலிபோர்னியா சென்றால் வேலை சீக்கிரமே கிடைத்திருக்கலாம். இங்கு பச்சை பசேலென சில மைகளில் நெருக்கமான காடுகள். அதை ஒட்டிய பசிபிக் கடல். எனக்கு நீண்ட தூரம் சைக்கிள் ஓட்டுவதற்கு ரொம்ப பிடிக்கும். இதெற்கெல்லாம் ரொம்ப செளகரியமான மாநிலம் வாஷிங்டன். உதாரணத்திற்கு, ஒலிம்பிக் தேசிய பார்க் அடர்த்தியான காடு. கோடையில் காம்ப் போவதற்கு அருமையான இடம்.
வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பப்ளிக் ரிலேஷன்ஸில் பட்டம் பெற்றேன். கூடவே அரசியல் சட்டம் வேறு படித்தேன். எனக்கு கூட பிறந்தவர்கள் யாரும் கிடையாது. அப்பா போயிங்கில் வேலை பார்க்கிறார். அம்மா சியாடிலில் பள்ளி ஆசிரியை. மத்திய வசதி பெற்ற குடும்பம். பெல்வியூ என்ற புறநகர் பகுதியில் வசித்து வருகிறோம். வேலைக்கு சென்றுதான் ஆக வேண்டும்.
அப்பா எனக்கு பூரண சுதந்திரம் கொடுப்பார். எனக்கு சற்று அரசியல் மற்றும் வியாபாரம் மீது தீவிரமான கருத்துக்கள் உண்டு. நான், வாஷிங்டன் பல்கலைக்கழக மாணவ அரசியல் அமைப்பில் பல பதவிகள் வகித்துள்ளேன். அருமையாக எழுத வரும். பல கட்டுரைகள் அமெரிக்க/வாஷிங்டன் முன்னேற்றத்தைப் பற்றி எழுதியுள்ளேன். அமெரிக்காவில் ஏழ்மை இல்லை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் கீழ்தர குடும்பங்கள் அங்கு படும் கஷ்டங்களை நன்றாக உணர்ந்தவன். பல நன்கொடை அமைப்புகளுக்கு உதவுவதுடன் நிறைய நிதி திரட்டுதல் நடத்த உதவியும் செய்துள்ளேன். அலட்டிக்க விரும்பவில்லை – சொல்லப் போனால் ரொம்ப பொறுப்புள்ள அமெரிக்கப் பிரஜை.
என்னுடைய பல நடவடிக்கைகளையும் ஃபேஸ்புக்கில் அடிக்கடி போஸ்ட் செய்வேன். பல நண்பர்கள் வெகுவாக (லைக்கிருக்கிறார்கள்!) பாராட்டியிருக்கிறார்கள். பல புதிய நண்பர்கள் என்னுடைய பக்கத்தைப் பார்த்து விசிறியாகவும் உள்ளார்கள்.
2009 வாக்கில் இங்குள்ள போயிங் தன்னுடைய தலைமையகத்தை சியாட்டிலிலிருந்து சிகாகோவிற்கு மாற்றுவதாக அறிவித்த்து. என்னைப் போன்றோருக்கு அது தப்பாக பட்டது. கொதித்து எழுந்தோம். மீடியாவில் கூட பார்த்திருப்பீர்கள் – என்னுடைய நண்பர்களுடன் ஊர்வலம் நட்த்திய ஃபோடோ எல்லாம் வந்தது. என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் கூட பெருமையாக சேர்த்துள்ளேன். எங்கப்பா போயிங்ல வேலை செய்தாலும் என்னுடைய எதிர்ப்பைத் தடுக்கவில்லை. அவ்வளவு சுதந்திரம் எனக்கு. ஆனால் இந்த போயிங் கம்பெனி இருக்கே – ரொம்ப விவரமான முதலாதித்துவப் பெருச்சாளிகள். எப்படியோ வாஷிங்டனோட போக்கு சரியில்லை என்று சிகாகோவுக்கு மாறிட்டாங்க. எனக்கு வந்த ஆத்திரத்திற்கு, இல்லினாய்ஸ் போய் பிரசாரம் செய்யலாம் என்று நினைத்தேன்.
என்னுடைய இந்த பொறுப்பான நடவடிக்கைகளை பல முற்போக்கு அரசியல்வாதிகள் பாராடியிருக்கிறார்கள். செனட்டர் மரியா காண்ட்வெல் (Maria Cantwell) பல்கலைக்கழகம் வந்தபோது என் பணிகளை பாராட்டி பேசியது பத்திரிக்கைகளில் வந்த்து. அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் கூட என் ஃபேஸ்புக் பக்கத்தில் உள்ளது.
———-000000000—————–
போன மாதம் இந்த தேதிக்கு நான் ரொம்ப சந்தோஷமானவன். இப்பத்தான் ரொம்ப சோகமாகிவிட்டேன். ஒரு பெரிய நியூயார்க் விளம்பர நிறுவனத்திற்கு வேலைக்காக விண்ணப்பித்தேன். மாய்ந்து மாய்ந்து, இணையத்தில் அவர்களைப் பற்றி ஆராய்ச்சி எல்லாம் செய்தேன். செந்தில் என்ற ஒரு நண்பன் நியூயார்க்கில் அதே கம்பெனியில் வேலை செய்து வந்தான். அவனும் இது நல்ல வேலை என்று என்னை மேலும் ஊக்குவித்தான்.
இண்டர்வியூ மிக நன்றாகப் போனது. அந்த மேனேஜர், ஜெரமி என்று நினைக்கிறேன். மிக நட்பாக பேசினார்(ன்). ஜெரமிக்கு என்னை பிடித்துவிட்டது. சம்பள விஷயம் கூட பேசி முடித்துவிட்டோம். என்னுடைய சமூக சேவைகள், முற்போக்கு சிந்தனைகள் மிகவும் பிடித்துவிட்டது அவர்களுக்கு. சில சம்பிரதாய படிகள் தாண்டி வேலை உனக்குதான் என்ற தோரணையில் பேசினார்கள்.
2 வாரம் ஆகியும் அவர்களிடமிருந்து மூச். எனக்கு காத்திருந்து பைத்தியமே பிடித்துவிடும் போல ஆகிவிட்டது. சும்மா 6 மணி நேரம் விமானத்தில் பறந்தால் இதோ நியூயார்க். ஒரு நடை (பற) போய் பார்த்துவிடலாமா என்றுகூடத் தோன்றியது. பாழாய் போன ஜெரமி, ஒரு விசிடிங் கார்டு கூடத் தரவில்லை.
செந்தில்லை அழைத்தேன்.
“செந்தில், 2 வாரமாகியும் ஒரு கடிதம், ஈமெயில் எதுவுமில்லையே”.
“சாயங்காலமாக வீட்டில் கூப்பிடு. HR ல விசாரித்துவிட்டு சொல்றேன்”.
செந்தில் வீடு திரும்பும்போது எனக்கு மதியம் 3:30 மணி தான். கூப்பிட்டேன்.
“சொதப்பீட்டயே விஜய். ரெஃபரென்ஸ் செக்ல இடிக்குதாம்”
“சரியாத்தானே போச்சு இண்டர்வியூ. இதோ வேலை என்றானே ஜெரமி”
“அதில்லப்பா. உன்னுடைய ஃபேஸ்புக் ல என்ன போடனும்னு விவஸ்தையே கிடையாதா?”
”அப்படி என்ன செஞ்சுட்டேன்? என்னுடைய சமூக நம்பிக்கைகள்தானே அதில இருக்கு”
“நீயும் உன் சமூக நம்பிக்கைகளும்! சரி, அந்த மரியாவுடன் என்ன ஃபோடோ? அவ டெமாக்ரெட். உன்னுடைய பார்வைகள் இட்துசாரியாக இருக்க இது வாய்ப்பளிக்கிறது”
“எனக்கு ஒன்னும் தப்பா படல”
“விஜய், நீ ஒன்னும் ஆஞ்சலீனாவோட போஸ் குடுக்கல. சரி, அதென்ன போயிங் எதிர்ப்பு ஃபோடோக்கள்?”
”சரி, என்ன செய்ய போகிறார்கள்”
“உனக்கு இந்த வேலை கிடைக்காது. சாக்கு போக்கு சொல்லி லெட்டர் அனுப்பி விடுவார்கள்”
“நமது சட்டம் இடம் குடுக்காது. நான் விட மாட்டேன்”
“அதெல்லாம் நீ வேலையில் இருந்தால் ஹராஸ்மெண்ட் என்று வழக்கு தொடரலாம். இப்ப பூசி மொழுகி விடுவார்கள். உன் கேஸ் வீக் விஜய். பேசாம உன் ஃபேஸ்புக் பக்கங்களை அழிக்கும் வழியை கண்டுபிடி. குறைந்தபட்சம் அடுத்த வேலையாவது கிடைக்கும். பை.”
7
புரியாத மாற்றம்
நல்ல வேளை அஷாந்தி என்ற அமெரிக்கப் பாடகி வந்ததால் என் தோழிகளுக்கு என் பெயர் ஷாந்தி என்று சொல்ல வந்தது. இல்லாவிட்டால் எப்படி மாறியிருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே சங்கடமாக இருக்கிறது.
சிகாகோவில் வசிக்கும் எனக்கு 15 வயது. எனக்கு 12 வயதில் ப்ரியா மற்றும் 9 வயதில் அனிதா என்று இரு தங்கைகள். எனக்கு பல் டாக்டர் ஆக வேண்டும் என்று ஆசை. எனக்கு மிஷிகன் ஸ்டீரீட் மிகவும் பிடிக்கும். தட தடவென்று மேலே போகும் ரயில் அவ்வப்பொழுது சத்தப்படுத்தினாலும், அப்படியே மிஷிகன் ஏரியைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றும். வெய்யில் காலத்தில் ப்ரியா அனிதாவுடன் எனக்குத் தண்ணிர் விளையாட்டுக்கள் ரொம்ப பிடிக்கும்.
ஒரு முறை சிகாகோ டிரிப்யூனில் என்னைப் பற்றி ஒரு உயர்நிலைப் பள்ளி பேச்சுப் போட்டியில் வென்றவுடன் பெரிதாக ஃபோட்டோவுடன் போட்டார்கள். சிகாகோவில் ஒரு வங்கியில் வேலை செய்யும் அப்பாவுக்கு ரொம்ப பெருமை. அவர் ரொம்ப பொறுமையான மனிதர். அவர் உலகம் அவரது வங்கி. ரொம்ப உழைப்பார். எப்பொழுதும் 8 மணிக்குதான் வேலையிலிருந்து திரும்புவார். உட்ரிட்ஜ் என்ற புறநகர் பகுதியில் நாங்கள் வசித்து வருகிறோம். பல நாட்கள் அப்பா வார கடைசியிலும் வேலைக்குச் சென்று விடுவார். அதிகம் எங்களுக்கு பாடம் சொல்லித் தருவதில்லை.
குளிர் காலங்களில் சிகாகோ ரொம்ப விறைத்து காற்றடித்து கஷ்டப்படுத்தும். அப்பொழுது அப்பா திரும்பி வருவதற்குள் ப்ரியா மற்றும் அனிதா தூங்கி விடுவார்கள். எனக்கு, ஏதாவது அஸைன்மெண்ட் இருந்து கொண்டே இருக்கும். அப்பாவும் அம்மாவும் அதிகம் பேசி கொண்டு பார்த்த்தில்லை. ஆனால் அதிகம் சண்டையும் போட்டுக் கொள்ள மாட்டார்கள்.
வீட்டில் அதிகம் ஆங்கிலம்தான் பேசுவோம். ஏனென்றால் அம்மா அமெரிக்க பெண். அப்பா ஆனை கல்லூரியில் சந்தித்ததாகச் சொல்லியுள்ளார். ஆன் (என் அம்மா) வேலைக்குப் போகவில்லை. எங்களை அன்புடன் கவனித்துக் கொள்வார். எங்கள் மூவரையும் ஸ்கூலில் விட்டுச் செல்வது, மீண்டும் மாலை வீட்டுக்கு திருப்பி அழைத்து வருவது எல்லாம் அம்மாவின் தின அலுவல்கள். ரொம்ப ஸ்டிக்ரிக்ட் அம்மா. ஆனால் இதுவரை ஆனிடமிருந்து அடி வாங்கியதில்லை. அமெரிக்கா அம்மா இருந்தால் இது ஒரு செளகரியம். என்னுடைய இந்திய தோழிகள் அம்மாவிடமிருந்து அடி வாங்கியதைப் பற்றி நிறைய கதை சொல்லிக் கேட்டுள்ளேன்.
வாரக் கடைசியில் குமான் வகுப்பு, ஹாக்கி, மற்றும் பல இடங்களுக்கு அம்மாதான் காரில் ஓட்டி அழைத்துச் செல்வார். அடுத்த வருடம் கார் லைசன்ஸ் டெஸ்ட் கொடுக்க வேண்டும்.
———-000000000—————–
அன்று ஆன் ஏனோ பள்ளிக்கு மாலை வரவில்லை. எப்படியோ தோழிகளுடன் அவர்கள் காரில் அனிதா, ப்ரியாவை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினேன். வீட்டில் ஆன் இல்லை. அம்மாவின் காரும் இல்லை. அப்பாவுக்கு ஃபோன் போட்டேன்.
“டாடி, ஆன் எங்காவது போவதாக உங்களிடம் சொன்னாரா? காலையில் எங்களை ட்ராப் செய்யும் போது ஒன்றுமே சொல்லவில்லை”.
“தெரியாதே ஷாந்தி”
“டாடி சீக்கிரம் வீட்டுக்கு திரும்பி வாங்க. நான் அனிதா, ப்ரியாவை சமாளிக்கிறேன். அதற்குள் ஆன் திரும்பிவிட்டால் ஃபோன் செய்கிறேன்”
மாலை ஆறு மணிக்கே வந்த அப்பா எங்கெல்லாமோ ஃபோன் செய்து பலருடன் பேசினார். நடந்து கொண்டே யோசித்தார். அனிதா, ப்ரியாவிடம் ஆறுதல் சொன்னார். எனக்கு எதுவுமே புரியவில்லை. ஆன் எங்கே?
நான் என் ஹோம்வர்க் செய்யுமுன் ஃபேஸ்புக் தளம் சென்று சில சின்ன ஸ்கூல் விஷயங்களை தோழிகளுடன் பகிர்ந்து கொண்டேன். பிறகு இரவு சாப்பிடும் போது அப்பாவிடம் பேச்சு கொடுத்தேன்.
“டாட், ஆனுக்கும் உங்களுக்கும் ஏதாவது சண்டையா? ஆனின் அம்மா டெட்ராய்டில் இருக்கிறாரே, அங்கே சென்று விட்டாரா?”
“நோ.. டெட்ராய்ட் ஃபோன் போட்டேன். ஆன் அங்கு போகவில்லை”
“ஆனின் தோழி ஆண்டிரியா மில்வாக்கியில் இருப்பாரே, அங்கு சென்றிருப்பாரோ?”
“அங்கும் கேட்டு விட்டேன். ஆன் அங்கு போகவில்லை”.
”டாட், இது க்ரேஸியாக படலாம். அம்மாவுடன் உங்களுக்கு ஃபேஸ்புக்கில் தொடர்பு உண்டா?”
“ஆனுடன் எனக்கு எதுக்கு ஃபேஸ்புக் தொடர்பு? அது பள்ளி தோழர்/ழி களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளத்தான் என்று நினைத்தேன்”
“டாட், ஆனுடன் நான் சும்மா ஃபேஸ்புக் தொடர்பு ஒரு தோழியாக வைத்துக் கொண்டு இருக்கேன். ஆனால், ஃபேஸ்புக் மூலம் தொடர்பு கொள்ள எனக்கு என்ன அவசியம்?”
சரி எதற்கும் ஆனின் ஃபேஸ்புக் பக்கத்தை பார்க்கலாம் என்று நானும் அப்பாவும் முடிவு செய்தோம்.
ஆன் அவருடைய உயர்நிலைப்பள்ளி நண்பன் ஜாக்குடன் கடந்த 8 மாதங்களாக ஃபேஸ்புக் தொடர்பு வைத்துள்ளார். வாழ்க்கை மிகவும் போரடிக்கிறது என்று அங்கலாய்த்திருக்கிறார். ஜாக் அவருடைய இரண்டாவது திருமணத்திலிருந்து விவாகரத்து பெற்றதை சொல்லியிருந்தார்.
அம்மா ஜாக்குடன் திடீரென்று ஓடி போய்விட்டார்.
8
அவ்வளவு ஸ்மார்ட் நான்
முராளி.
இப்படித்தான் என் பள்ளி நண்பர்கள் என்னை அழைப்பது வழக்கம்.
ஆரகன் மாகாணத்தில் உள்ள பீவர்ட்டன் நகர அமெரிக்கர்கள் முரளியை இந்த அளவில் விட்டு வைத்த்தற்கு நன்றி சொல்லத்தான் வேண்டும். அவ்வப்பொழுது என்னை அவர்கள் ரகசியமாக ‘Nerd’ என்று கமெண்ட் அடிப்பது எனக்குத் தெரியும். என் புத்திசாலித்தனத்தைப் பார்த்து அவர்கள் பொறாமை அடைவதில் எனக்கு பெருமை.
எனக்கு PS3 மற்றும் X-Box அத்துப்படி. சமீபத்தில் என் தந்தை MacBook Air வாங்கிக் கொடுத்தார். விளையாட மட்டுமே ஒரு ராட்ச்ச டீவி வேறு. என்னுடைய பெட்ரூமில் ஒரு டெக் உலகமே உள்ளது!
சொல்லவே மறந்து விடேனே – எனக்கு 16 வயது. என் அப்பா இங்கு ஒரு ஹைடெக் கம்பெனியில் பிரஸிடென்ட். நான் ஸ்டான்போர்டில் படிக்க வேண்டுமாம். லேரி பேஜைப் போல பிரகாசிக்கணுமாம். ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஏதாவது ஒரு புதிய காட்ஜெட் உண்டு.
என் அம்மா ஆரகன் மாநில அரசாங்கத்தில் வேலை செய்கிறார். அவருடைய ஆஸ்தான இணைய ஆசிரியன் நான் என்றால் பாருங்களேன். அம்மாவுக்கு சென்ற மாதம்தான் டிவிட்டர் சொல்லிக் கொடுத்தேன். இப்பத்தான் என் அம்மா ஒரு வருடமாக ஃபேஸ்புக் உபயோகிக்கவே பழகியுள்ளார். இன்னும் இண்டியாவைப் பற்றியே பேசி மகிழும் ஜாதி! பல வருடங்கள் பீவர்டனில் வசித்துள்ளதால், ஏராளமான இந்திய குடும்பங்களை என் அப்பா அம்மாவுக்குத் தெரியும்.
நேற்று அப்படித்தான், என் பிறந்த நாளுக்கு வந்த அப்பாவின் நண்பர்கள் அறுத்துத் தள்ளிவிட்டார்கள். என்ன செய்வது, எனக்கு அப்பா வாங்கிக் கொடுத்த ஐபேட் பிடித்தது. அதனால், இந்த கூட்டத்தை சகித்துக் கொள்ள வேண்டியுள்ளது.
”என்ன முரளி, இண்டெர்நெட்டில் என்ன புதுசு? நான் வெறும் ஈமெயில் பார்டிப்பா”.
“முரளி, மை ஸ்மார்ட் யங் மேன். என்ன ஸ்டார்போர்டில் பையோ நானோ டெக்னாலஜி படிக்கப் போறயாமே!”
“எங்க வீட்டில் உள்ள பல Mac களை இணைக்க வேண்டும். சம்மரில் ஃப்ரீயா இருந்தா செங்சு குடுக்கறயா முரளி”
இப்படிப்பட்ட அறுவைகள்.
நல்ல வேளை, கேக் சம்பிரதாயங்களுக்கு பிறகு என்னுடயை நண்பர்களுடன் நேற்றைய பொழுது பல multi-player விடியோ விளையாட்டுக்களோடு நன்றாகவே இருந்தது. ஒன்று சொல்ல வில்லையே – டாடி, நேற்று சற்று கட்டுபாடுகளைத் தளர்த்தி. பிறந்தநாள் கொண்டாட்டங்களில் மது அனுமதித்தார். அது சரியா தப்பா என்று இப்ப சொல்லத் தெரியவில்லை.
இரவு பத்து மணிக்கு அப்பா ஏதோ ஒரு நண்பருடன் ரொம்ப நேரம் பேசிவிட்டு, அம்மாவுடன் போர்ட்லேண்டுக்கு போவதாகச் சொன்னார்.
“முரளி, என்னுடைய பழைய நண்பர் வீட்டில் ஒரு நெருக்கடி. நானும் மம்மியும் அங்கு சென்று காலை வந்து விடுவோம். அலார்மை ஆர்ம் செய்துவிட்டு படுத்துக் கொள். ”Enjoy the rest of the evening” என்று சொல்லி புறப்பட்டார்கள்.
———-000000000—————–
எப்படி சிகரெட்டே பிடிக்காத ஸ்டீவ் போலீசில் சேர்ந்தார்?
சிவப்பாக ஆறரை அடி உயரமான அவர், “டூட், நேற்றிரவு என்ன ஆகியது? ஏன் அலார்மை ஆர்ம் செய்யவில்லை?”
”சொஞ்சம் டிரிங்ஸ் சாப்பிட்டுவிட்டு படுக்கும் போது மறந்து விட்ட்து”.
“இது ஒரு ரிச் சபர்ப். அதிகம் திருட்டே கிடையாது. எப்படி நடந்த்து என்று எங்களுக்கே வியப்பாக இருக்கிறது”.
“முராளி, நீங்கள் அதிகம் காட்ஜெட்களை விரும்புபவர் என்று உங்கப்பா சொன்னார். உங்களது அனைத்து காட்ஜெட்டும் களவாடப்பட்டுள்ளது. அத்துடன், சொஞ்சம் நகைகள், பாண்ட்ஸ், க்ரெடிட் கார்ட்ஸ்”.
“ம்”
“நீங்கள் தனியாக இருக்கப் போவதை யாருக்காவது சொன்னீர்களா?”
“ஓ கடவுளே.. ஃபேஸ்புக்கில் என் நண்பன் நிரஞ்சனுக்கு ஒரு செய்தி 12 மணி வாக்கில் அனுப்பினேன். அவன் எப்பொழுதும் ஆன்லைனாக இருப்பான்”.
“ஈஸி முராளி. அதை உங்களது ஃபேஸ்புக் சுவற்றில் எழுதினீர்களா?”
“அப்படித்தான் நினைக்கிறேன். சற்று நிதானம் வேறு குறைவாக இருந்த்து”.
“சரி, உங்களது முகவரி எப்படி திருடனுக்கு தெரிய வாய்ப்பு இருக்கும்? உதைக்கிறதே”.
“ஸ்டீவ், என் ஃபேஸ்புக்கில் முகவரி எல்லாம் கிடையாது”
“நேற்று உங்கள் பிறந்த நாள் பார்டி என்று அப்பா சொன்னார். நண்பர்களை எப்படி இன்வைட் செய்தீர்கள்”
என்ன செய்து தொலைத்து விட்டேன்!
“ஸ்டீவ், நேற்று இன்னொரு பெரிய தவறு செய்து விட்டேன். எங்கள் வீட்டுக்கு வர வழியை ஃபேஸ்புக்கில் நண்பர்களுக்காக கூகிள் மேப்பிலிருந்து என்னுடைய சுவற்றில் பேஸ்ட் செய்தேன். என்ன நினைத்தேன் என்று எனக்கே புரியவில்லை”.
“முராளி, சமீபத்தில் சரியாக தெரியாத யாரையாவது ஃபேஸ்புக்கில் நண்பராக்கிக் கொண்டீர்களா?”
“ஜொனாதன் என்று ஒருவனை சரியாக நினைவில்லை. என்னுடன் 6 வது வகுப்பில் படித்தவனோ என்று சந்தேகத்துடன் நண்பனாக ஒப்புக் கொண்டேன்”.
“முராளி, உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தைக் காட்டுகிறீர்களா”
ஸ்டாண்போர்டில் படித்து லேரி பேஜ் போல வர வேண்டிய ரொம்ப ஸ்மார்ட் பையன் நான்.
9
வன்முறை
யாராவது, போயும் போயும் மருத்துவமனையிலிருந்து தன் கதையைச் சொல்வார்களா? உடம்பெல்லாம் வலி உயிர் போகிறது. அதுவும் இந்த எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில் அவ்வப்பொழுது என்னுடைய வார்டில் ஏஸி நின்று போய், புழுக்கத்தில், வலி பன்மடங்காவது போலத் தோன்றுகிறது. எப்படி இந்த மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தேன்? அந்தக் கதையைச் சொல்லுமுன், சற்று பின்னணி உங்களுக்குத் தேவை என்று நினைக்கிறேன்.
புது தில்லியில் பிறந்து வளர்ந்தவன். லஜ்பத் நகரில்தான் (Lajpat Nagar) படித்தேன். பிறகு, கல்லூரியும் டில்லியில்தான் – தயால் சிங் (Dayal Singh College) கல்லூரி. பெரிதாக ஒன்றும் படித்துக் கிழிக்கவில்லை. கழுதை கெட்டால் காமர்ஸ் பட்டம்தான் என்று வைத்துக் கொள்ளுங்களேன். படித்து, இங்கும் அங்கும், சில சின்ன வேலைகளுக்குப் பின், கடந்த 5 ஆண்டுகளாக நேரு ப்ளேஸில் (Nehru Place) வேலை. பக்கத்திலேயே சிராக் என்க்ளேவில் (Chirag Enclave) ஒரு வாடகை வீடுதான் என்னுடைய தற்போதைய சாதனை. என்னுடைய பெற்றோர், தில்லியில் தான் இருக்கிறார்கள். விகாஸ்புரி, (Vikaspuri) என்னவோ இன்னொரு ஊர் போலத் தோன்றியதால், நான் வாடகைக்கு வீட்டை ஆபிஸுக்குப் பக்கத்திலேயே எடுத்துக் கொண்டேன். பள்ளி படிக்கும் போது, எங்கள் வீடு என்னவோ, லஜ்பத் நகரில்தான் இருந்தது, பிறகுதான், அப்பா விகாஸ்புரியில் வேறு வீட்டை வாங்க, அங்கு மாறினோம். அப்பாவுக்கு, இதனால் சற்று கோபம் தான். பணத்தின் அருமை தெரியாதவன் என்று திட்டி இன்னும் ஓயவில்லை.
என்னுடன் லஜ்பத் நகரில் படித்த ஒரு 10 நண்பர்கள் தயால் சிங்கிலும் தொடர்ந்தார்கள். இன்னும் செல்பேசி, எஸ்.எம்.எஸ், மற்றும் ஃபேஸ்புக்கில் எங்களது ஹிங்க்ளீஷ் அரட்டை தொடர்கிறது, வாரக் கடைசியில், சினிமா, அது, இதுவென்று ஜாலியான பொழுதுபோக்கும் தொடர்கிறது.
ஆஸ்பத்திரிக்கு வந்த அப்பா, அதிர்ந்து விட்டார்,
“யார்டா இப்படி காட்டு மிராண்டித்தனமாக அடிச்சு போட்டது? சரியாக இன்னும் எத்தனை நாளாகுமோ?”
அம்மாவும் அப்பாவோடு சேர்ந்து கொண்டார்.
“ஒழுங்காக விகாஸ்புரியில் எங்களோட இருந்திருந்தா இப்படியெல்லாம் ஆகியிருக்குமா?”
அம்மாவின் கவலை புரிந்தாலும், என்னுடைய நிலை, விகாஸ்புரியிலும் இப்படியே ஆகியிருக்கும் என்றே தோன்றுகிறது. எங்காவது, கன்யாகுமரியில் இருந்திருந்தால், நான் தப்பித்து இருக்கலாம். இனிமேல், ஃபேஸ்புக்கில் 500 கி.மீ. –க்குள் யாரையும் நண்பர்களாக்கக் கூடாது.
என்னுடைய தென்னிந்திய நண்பன் குமார், ஒரு விஷயம் சொன்ன பிறகு, என்னுடைய மனதிலும், இப்படி ஒரு யோசனை ஓடத் தொடங்கியது. வழக்கமாக, வாரக் கடைசியில், என்னுடைய நண்பர்கள் என் வீட்டிற்கு வருவார்கள், அல்லது, நான் அவர்களது வீட்டிற்கு செல்வேன். ஏதாவது சப்பை விஷயத்துக்காக ஒரு பார்டி ஏற்பாடு செய்து, பிறகு ஊரை சுற்றுவதே வேலை. இதற்காக, மோஹித், குமார், ஷேகர், உமீத், இன்னும் சிலர், வாரம் முழுவதும் ஃபேஸ்புக் அரட்டையில், ஏதாவது ஒன்றில் வந்து முடியும்.
போன வாரம் என்னவோ அப்படி நடக்கவில்லை. யாரும் யார் வீட்டிற்கும் செல்லவில்லை. மோஹித் லுதியானா சென்று விட்டான். ஷேகர், தன்னுடைய குடும்ப ஃபார்ம் ஹவுஸுக்கு சென்றான். குமார், உடம்பு சரியில்லையாம் (அவனுடைய ஃபேஸ்புக் ஸ்டேடஸிலிருந்து தெரிந்து கொண்டேன்_). உமீத்தை விடுங்கள். அவன் சில வாரங்கள் வர மாட்டான்.
இப்பொழுது தோன்றுகிறது. ஒழுங்காக விகாஸ்புரி சென்றிருக்கலாம். அம்மா வீட்டிற்கே வருவதில்லை என்று செல்பேசியில் புலம்பியும் நான் செல்லவில்லை. அந்த சனி இரவு, சாவித்ரி காம்ப்லெக்ஸ் –க்குச் சென்றேன். அங்கேயே, சொஞ்ச நேரம் உலாத்திவிட்டு, ஒரு குப்பை இந்தி சினிமா பார்த்துவிட்டு, இரவு 11:30 மணிக்கு, வீட்டை நோக்கி நடையை கட்டினேன்.
சொல்ல மறந்து விட்டேனே. மொஹிந்தர், என்னுடன் பள்ளியில் படித்தான். குமாருக்குக் கூடத் தெரியும். குமார் அவனை எப்பொழுதும் ’மெண்டல்’ என்று கிண்டல் செய்ய ரொம்பவும் சோகமாகி விடுவான். நான், அவனிடம் அத்தனை விமர்சிக்காததால், என்னுடன் பழக முயற்சிப்பான். அவன் தயால் சிங்கில், தாவரவியல் படித்தான். ஃபேஸ்புக்கில் ஒரு 6 மாதங்கள் முன்பு நட்பு அழைப்பு அவனிடமிருந்து வந்ததால், ஒப்புக் கொண்டேன். அவன், இப்பொழுது, அவனுடைய குடும்ப கடையில் வேலை செய்வதாகக் கேள்விப் பட்டேன். குமார், என்னுடன் மொஹிந்தர் ஃபேஸ்புக்கில் நண்பனாகி இருப்பதைப் பார்த்து, “எதுக்கு உனக்கு மெண்டல் தொடர்பு? தேவைதானா?” என்று செய்தி அனுப்பி கடுப்பேற்றிப் பார்த்தான். நான் விட்டு விட்டேன்.
சாவித்ரீயிலிருந்து அன்றிரவு வெளியே வந்து வீட்டுக்கு நடக்கையில், மொஹிந்தரை சந்தித்தேன். அவன் என்னைப் பார்த்து ஹலோ கூட சொல்லவில்லை. ஏதோ குழாய் போன்ற ஒரு ஆயுதத்தை என் முதுகில் ஓங்கி அடித்தான். நிலை குலைந்து எழுந்திருப்பதற்கு முன், என் தலையில், காலில் என்று பல இடங்களிலும் அடி விழ, நான் நினைவிழந்தேன்.
மொஹிந்தருக்கு, சீக்கியர்கள், புது தில்லியில், கடந்த முப்பதாண்டுகளாக சரியாக நடத்தப்படுவதில்லை என்ற கருத்து உண்டு. 1984 புது தில்லி ரகளையில் சீக்கியர்கள் தவறாக தாக்கப்பட்டதாக நினைப்பவர்கள் ஃபேஸ்புக்கில் உருவாக்கிய குழுக்களில் எல்லாம் அவன் ஒரு உறுப்பினர். சின்ன சின்ன சீக்கிய தாக்குதல் கதைகள், அவன் தன்னுடைய முகநூல் சுவற்றில் பகிர்ந்து கொள்ள, எனக்கு அந்த செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. முதலில், சிலவற்றை நான் படித்தாலும், நாளடைவில், அது ஒரு பிரச்சாரம் போலத் தோன்றியது. ஃபேஸ்புக் மூலம் மொஹிந்தருக்கு நான் இந்த வகை பிரச்சாரத்தால் திசைமாறிவிட வேண்டாம் என்று செய்தி அனுப்பினேன். அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை. கடந்த சில மாதங்களாக, இது போன்ற பிரச்சாரங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வந்தது, எனக்கு எரிச்சலாக இருந்தது. மொஹிந்தரை Unfriend செய்தேன்.
மருத்துவமனைக்கு வந்த குமார், “போலீஸ் மொஹிந்தரை பிடித்து விசாரித்தார்களாம். நான் சொன்னேன் இல்லையா? மெண்டலுடன் தொடர்பு வேண்டாமென்று”
“விஷயத்தைச் சொல்லு. எதற்காக என்னை அப்படி அடித்தானாம்?”
“ஃபேஸ்புக்கில் நீ அவனை Unfriend செய்தாயாம். அவனுக்கு பொறுக்கவில்லையாம். உன்னை தண்டித்தே தீர வேண்டுமாம். நீ வாங்கிய அடி உனக்கு சரியானதாம். சீக்கியர்களின் நிலையை புரிந்து கொள்ள முடியாதவர்கள் தண்டிக்கப் பட வேண்டுமாம்”
இப்பொழுது புரிந்திருக்கலாம் – ஃபேஸ்புக்கில் இனிமேல் என்னுடைய நண்பர்கள் குறைந்தபட்சம், தில்லியிலிருந்து 500 கி.மீ. தள்ளியிருந்தாலே, ஒப்புக் கொள்வேன். எத்தனை கடுப்பாக இருந்தாலும், ரயிலேறி வந்து Unfriend செய்ததற்காக, குறைந்தபட்சம் உதைக்க மாட்டார்கள்!
10
உடல் நலம்
கனடாவின் மிக அழகிய மாநிலம் பிரிடிஷ் கொலம்பியா. எங்கள் ஊரில், கார்களில், Beautiful British Columbia என்று போட்டிருக்கும். சும்மா ஒரு அலட்டலுக்காக போடப்படவில்லை. உண்மையிலேயே, அவ்வளவு அழகு. ஒரு புறம், பசிபிக் மகாசமுத்திரம். மறுபுறம், பணிதாங்கிய, மிக உயர மலைகள். தொட்ட இடத்திலெல்லாம், நதிகள், ஏரிகள். நீங்கள் பார்க்கும் ஹாலிவுட் திரைப்படங்களில் அழகான காட்சிகள் இங்கேயே படமாக்கப்பட்டு வந்தன. எங்கள் டாலரின் மதிப்பு ஏறியவுடன், அமெரிக்கர்கள் இங்கு படம் பிடிக்க வருவதை குறைத்துக் கொண்டுவிட்டார்கள். நல்ல வேளை, 2010 -ஆம் ஆண்டு, குளிர்கால ஒலிம்பிக்ஸ், (Winter Olympics) எங்கள் ஊரில் நடந்து, உலகிற்கு இந்த பகுதியின் அழகை அறிய ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், குளிர்காலத்தில், உறைந்து, எங்கும் பனிமயமாய் இருப்பதால், உண்மையான அழகைப் பார்க்க கோடை காலம் வரை பொறுத்திருக்க வேண்டும்.
பர்னபி (Burnaby, BC) என்ற வான்கூவர் (Vancouver, BC) புறநகர், நகரில் வாழும் என்னுடைய பெயர் ஆனந்த் வரதராஜன். வான்கூவரிலுள்ள ஒரு வங்கியில் எனக்கு வேலை. 20 ஆண்டுகளாக, கனடாவில் வாழும் எனக்கு, ஆர்த்தி மற்றும் வருண் என்று இரு குழந்தைகள். ஆர்த்திக்கு 22 வயதாகிறது. இக்கதை ஓரளவிற்கு என்னைப் பற்றி இருந்தாலும், பெரும்பாலும் ஆர்த்தியைப் பற்றியது.
அவள் கனடாவில் பள்ளிப்படிப்பு முடித்து, பி.சி. பல்கலைக்கழகத்தில், இசையில் பட்டம் பெற்றவள். அவளிடமிருந்து, மேற்கத்திய இசையை கொஞ்சம் நானும் கற்றுக் கொண்டது உண்மை. ஆர்த்திக்கு பியானோ வாசிக்க நன்றாக வரும். அவள் ஷோபின் (Chopin) வாசித்தால், கேட்டுக் கொண்டே இருக்கலாம். கனேடிய பியானோ இசை பரீட்சைகள் எல்லாவற்றிலும், பள்ளி படிக்கும் போதே தேறி விட்டாள். பல இசைப் போட்டிகளிலும் பரிசு பெற்றாள்.
எனக்கு இளையராஜாவின் இசை, மிகவும் பிடிக்கும். என்னுடைய ஃபேஸ்புக் நண்பர்கள், பெரும்பாலும் ராஜா இசைப் பிரியர்கள். ராஜாவின் ராக ஜாலங்கள். பின்னணி இசை என்று எப்பொழுதும் ஏதாவது அலசல். எனக்கு பிடித்த பொழுது போக்கு ராஜாவின் இசையப் பற்றி தெரிந்து கொள்வது, மற்றும் ரசிப்பது.
ராஜாவின் ரசிகர்கள், பல்வேறு துறையில் இருப்பவர்கள். டாக்டர்கள், மென்பொருள் வல்லுனர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், பள்ளி ஆசிரியர்கள், நிதியியல் வல்லுனர்கள், என்று பலதரப்பட்டனர் உண்டு. என்னுடைய பின்னணியும் மற்றவர்களின் பின்னணியும் வேறுபட்டாலும், ராஜாவின் இசை ஒரு பாலமாக உள்ளது. ஒரு முறை, விடுமுறைக்கு துபாய் சென்றிருந்த பொழுது, அங்கு ஒரு எண்ணெய் நிறுவனத்தின் பொறியாளர், மற்றும் ராஜா ரசிகர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. இவரை ஃபேஸ்புக் மூலமே எனக்குத் தெரியும். சொன்னால் நம்ப மாட்டீர்கள். ஒரு 6 மணி நேரம் ராஜ சங்கீதம் மட்டுமே பேசினோம்.
அதே போல, நான் ஒரு முறை இன்னொரு ராஜா ரசிகரை, ஜெனீவாவில் சந்தித்தேன். இவர், அந்த ஊரில் ஒரு சிறிய வியாபாரம் நடத்துகிறார். மாலை 8 மணிக்கு மேல், என்னுடன் ராஜா இசை பற்றி, பேச வந்தார் இந்த ஃபேஸ்புக் நண்பர். இரவு 12 மணி நேரம் வரை, பல இசை விஷயங்களை பேசியது இன்னும் நினைவிலிருக்கிறது.
ஆர்த்தி, கல்லூரி முடிந்து தன் தோழிகளுடன் 2012 நவம்பர் மாதத்தில், கேம்லூப்ஸ் (Camloops, BC) என்ற அழகான ஒரு ஊருக்கு விடுமுறைக்காகச் சென்றிருந்தாள். பி.சி. –யில் பார்த்து ரசிக்க பல நூறு அழகான இடங்கள் உள்ளன. கோடை விடுமுறைகளில், மற்றும் சில விடுமுறை நாட்களில், பல ஊர்களுக்கு குடும்பத்தாருடன் செல்வது, இங்கு பழக்கம்.
அந்த அசம்பாவிதம் அந்த 2012 நவம்பர் மாதத்தில் நடந்தது. ஆர்த்தி சென்ற கார் ஒரு விபத்துக்குள்ளானது. நல்ல வேளை, யாருக்கும் பெரிய அடி ஒன்றும் இல்லை. ஆனால், அந்த விபத்தின் தாக்கம் இன்றுவரை, அந்த காரில் சென்ற எல்லா பெண்களுக்கும் ஏதோ ஒரு வகையில் இருக்கத்தான் செய்கிறது,
ஆரம்பத்தில், ஆர்த்திக்கு, இது ஒரு பெரிய ஷாக்காக இருந்தாலும், போகப் போக அந்த விபத்தின், மற்ற விளைவுகள் மெதுவாகத் தலை தூக்கத் தொடங்கியது. சொல்லவே இல்லையே. ஓட்டி சென்ற பொழுது, குறுக்கே வந்த ஒரு வேனை தவிர்க்கப் போய், கட்டுபாடிழந்த கார், சாலையின் பக்கமாக இரு முறை உருண்டு நின்றதாம்.
ஆஸ்பத்திரியில், முதல் சிகிச்சை அளித்து விட்டு, ஃபிஸியோ (Physiotherapist) ஒருவரைப் பார்க்கச் சொல்லி விட்டார்கள். சில மாதங்கள் மஸாஜ் செய்து விட்டார்கள். ஓரளவு பயன் இருந்தாலும், அது தாற்காலிகப் பயனையே அளித்தது. ஸ்கேன் எடுத்து பார்த்ததில், ஆர்த்தியின் இரு பின் முதுகுத் தகடுகள் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. டாக்டர்கள் ஃபிஸியோ சிகிச்சை நடத்துங்கள், சரியாகிவிடும் என்று சொல்லி வந்தார்கள்.
அப்படி ஒன்றும் நடக்கவில்லை. 21 வயது பெண் அதிக நடமாட்டம் இல்லாமல் தவிப்பது தந்தையான எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. ஏதாவது நிரந்தர தீர்வு கிடைக்காதா என்று ஏங்கி வெறுத்து விட்டேன். என்னுடைய வேலை மற்றும் ஃபேஸ்புக் இசை அலசல்கள் தொடர்ந்தன.
2013 மே மாதம் 21 -ஆம் தேதி. என்ன தோன்றியதோ தெரியவில்லை. ஏன் ராஜாவின் ஃபேஸ்புக் டாக்டர் ரசிகர்களிடம், ஆர்த்தியின் பிரச்னையைப் பற்றிக் கேட்கக் கூடாது? முதலில், என்ன நினைத்துக் கொள்வார்களோ என்று தயங்கினாலும், கடைசியில் மூன்று டாக்டர் ரசிகர்களுக்கு ஃபேஸ்புக் மூலம் பிரச்னையை விளக்கி, ஏதாவது வழி சொல்ல முடியுமா என்று கேட்டிருந்தேன்.
டாக்டர் தனஞ்சயன், ஆமதாபாதில் வசிக்கும் ஒரு ராஜா ரசிகர். இவர், விவரமாக பதில் எழுதினார். இளம் நோயாளிகளுக்கு சற்று மாறுபட்ட ஃபிஸியோ முறைகளில் ஆமதாபாதில் வெற்றி பெற்றுள்ள ஒரு சிகிச்சை அமைப்பைப் பற்றி எழுதியிருந்தார். ஆனால், இந்த அமைப்பில் பெரிய காத்திருக்கும் பட்டியல் என்ற சிக்கல் இருப்பதாகவும் எழுதியிருந்தார்.
ஜுலை 2013: நீண்ட பயணத்திற்குப் பிறகு, ஒரு வழியாக ஆமதாபாத் அடைந்தோம். டாக்டர் தனஞ்சயன், விமான நிலையம் வந்திருந்தார். உள்ளூரில் பலரிடம் பேசி, எப்படியோ ஆர்த்திக்கு ஜுலை சிகிச்சை தொடக்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
செப்டம்பர் 2013: மூன்று மாத சிகிச்சையில், ஆர்த்தியால், சுயமாக எல்லா வேலைகளையும் செய்ய முடிகிறது. இன்னும் சில நாட்கள் ஃபிஸியோ உடற்பயிற்சிகள் செய்து வந்தால், மீண்டும், 4 மணி நேரம் பியானோ வாசித்தாலும் வியப்பில்லை என்று டாக்டர்கள் சொன்னார்கள்.
இதில் ஃபேஸ்புக்கா, இளையராஜாவின் இசையா, யாரின் பங்கு பெரிது என்று சொல்லத் தெரியவில்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக