மகிழ்ச்சிக்கும் வெற்றிக்குமான அடிதளம்


தத்துவம்

Back

மகிழ்ச்சிக்கும் வெற்றிக்குமான அடிதளம்
சே.அருணாசலம்


மகிழ்ச்சிக்கும் வெற்றிக்குமான அடிதளம்

சே.அருணாசலம்

 

 

 

உள்ளடக்கம்

அறிமுகம்

முன்னுரை

வாழ்த்துரை

freetamilebooks-குழு

1. 1.அற நெறிகள்

2. 2.சிறந்த வழிமுறைகள்

3. 3.செயல்களில் உண்மை

4. 4.வாய்மை

5. 5. நடுநிலை தவறாமை

6. 6. நல் விளைவுகள்

freetamilebooks-எங்களைப் பற்றி

உங்கள் படைப்புகளை வெளியிடலாமே

1


அறிமுகம்

Foundation Stones to Happiness and Success James Allen

மகிழ்ச்சிக்கும் வெற்றிக்குமான அடிதளம் ஜேம்ஸ் ஆலன்

(தமிழில் S.அருணாசலம் )

* * *

மின் அஞ்சல் முகவரி: arun2010g@gmail.com

freetamilebooks

மின்நூல் ஆக்கம்,மூலங்கள் பெற்றது

GNU Anwar

gnuanwar@gmail.com

2

மனிதன் ஒரு வீட்டை எவ்வாறு கட்டத்தொடங்குகிறான் ? கட்டி முடிக்கப்பட வேண்டிய வீட்டின் வரைப்படத்தை முதலில் கையில் கொள்கிறான் .

பின்பு எல்லா பகுதிகளையும் முழுமையாக , நுனுக்கமாக ஆராய்ந்து செயல் திட்டத்தை வடிவமைத்து கொள்கிறான் . அதன் பின்பு அத்திட்டத்திற்கு ஏற்ப அடிதளத்தில்் இருந்து தொடங்குகிறான் . அவன் தொடக்கத்தின் / ஆரம்பத்தின் / வரைபடத்தின் / செயல்திட்டத்தின் முக்கியத்துவத்தை விளங்கி கொள்ளாதவனாக இருந்தால் அந்த கட்டிடத்திற்காக மேற்கொள்ளப்பட்ட எல்லா உழைப்பும் வீனாகிவிடும் . ஒரு வேளை அந்த கட்டிடம் பாதியில் இடிந்து விழாமல் முழுமை அடைந்து இருந்தால் , எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்துடனேயே எந்தப் பயன்பாடுமின்றி விளங்கும் . இந்த விதி எல்லா முக்கிய செயல்களுக்கும் பொருந்தும்் . தெளிவான மனத்திட்டமும் அதைத் தொடங்கும் விதமும் இன்றியமையாதது .

இயற்கையின் படைப்பில் எந்த குறையையும் காணமுடியாது . எதுவும் அறைகுறையாக விட்டு விடபடவில்லை . அவள் குழப்பத்தை அறவே நீக்கியிருக்கிறான் , அல்லது குழப்பம் என்பது முற்றிலுமாக அவளிடமிருந்து நீங்கி விட்டது . இந்த இயற்கையின் செயல்பாடுகளை எவன் ஒருவன் தன் செயல்பாடுகளில் கருத்தில் கொள்ளவில்லையோ அவன் உடனுக்குடன் தன்னுடைய ஆற்றலை முழுமையை மகிழ்ச்சியை வெற்றியை இழக்கின்றான் .

3


வாழ்த்துரை


கவிஞர் சா . சாதிக்பாட்ஷா

கௌரவத் தலைவர் , குவைத் தமிழோசை கவிஞர் மன்றம் .

மேலாளர் , அல் அவ்தா தச்சுப்பட்டறை , குவைத் ,

கைப்பேசி :99536903

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் …)

பேரன்புமிக்க தமிழ்கூறும் வாசகர் வட்டத்திற்கு எனது அன்பான முகமன்னையும் வாழ்த்துக்களையும் முதற்கண் மகழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் . எனது உற்ற நன்பரும் உடன்பிறவா சகோதரருமாகிய திரு . சே . அருணாசலம் அவர்கள் எழுத்தின் மீது தீரா காதல் கொண்டவர் ஆவார் . மேலை நாட்டு பேரறிஞர்களின் பொருள் பொதிந்த படைப்புகளை தானும் படித்து இன்புற்று அதனை ” யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் ” என்னும் , திருமூலரின் வைர வரிக்கு ஏற்ப இனிய தமழில் மொழி பெயர்த்து நமக்கு வழங்குவதில் கெட்டிகாரராய் விளங்குகிறார் .

அவர் தம் முதல் படைப்பு ஜேம்ஸ் ஆலன் எழுதிய MAN : KING OF MIND,BODY AND CIRCUMSTANCE என்ற தன்னம்பிக்கை நூலை அழகுத் தமிழில் ” மனிதன் : மனம் , உடல் , சூழ்நிலையின் தலைவன் ” என்று அற்புதமான முறையில் மொழி பெயர்த்துள்ளார் . அந்நூலை நான் படித்த போது என் நெஞ்சில் அது ஒரு ஒப்பற்ற தன்னம்பிக்கை ஒளிக் கிற்றை ஒளிரச் செய்தது . இருபத்தைந்து ஆண்டு காலம் வளைகுடா நாடாம் குவைத்தில் , கடும் உழைப்பு , விடாமுயற்சி , மற்றும் தன்னம்பிக்கை இவையே ஒருவர் தம் வாழ்வின் உயர்வுக்கான வீரிய விதைகள் என்பதை உணர்ந்த நான் , அவற்றை மீண்டும் அசைப்போட்டு ஆழமாய் என்னில் நிலைக்கச் செய்ய அந்நூல் உதவியது .

அத்தகைய வளரும் எழுத்தாளராய் விளங்கும் என் அன்பு இளவல் அருணாசலம் அவர்கள் மீண்டும் இங்கிலாந்தை சேர்ந்த சிந்தனையாளர் ஜேம்ஸ் ஆலன் எழுதிய “ FOUNDATION STONES TO HAPPINESS AND SUCCESS ” என்ற நூலை ” மகிழ்ச்சிக்கும் வெற்றிக்குமான அடித்தளம் ” என்று இன்பத்தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார் . இதை நான் வாசிக்க நேர்ந்த போது இந்நூல் ஒரு அறிவுப்பெட்டகம் , நுண்ணறிவுக் களஞ்சியம் என்பதனை ஒரு கவிஞனாய் , எழுத்தாளனாய் , என்னால் ஆழமாய் அறியமுடிந்தது . நூலாசரியர் திரு . அருணாசலம் அவர்களின் இரண்டாம் படைப்பு இதுவாகும் . குவைத்தில் ஒரு நிறுவனத்தில் இறக்குமதி கொள்முதல் பிரிவில் அயராது உழைக்கும் இவர் கிடைக்கும் சொற்ப நேரத்தில் பகுதி நேர எழுத்து பணியை ஒரு தொண்டாய் ஆற்றி வருவது நிச்சயம் பாராட்டுகுரியதாகும் .

இந்நூல் என்னைப் போன்றே வாசிக்கும் வாசகராகிய உங்கள் அனைவருக்கும் பெரும் பயனைத் தரும் என்னும் உறுதியோடு அணிந்துரையை நிறைவு செய்கிறேன் . நூலாசிரியருக்கு என் இதயபூர்வமான நல்வாழ்த்துகள் .

நன்றி , வணக்கம்

கவிஞர் சா . சாதிக்பாட்ஷா

4


freetamilebooks-குழு

ஃப்ரீடமில்இபுக்ஸ்.காம் குழுவினர்:

அ. இரவிசங்கர் – புதுக்கோட்டை (மேலாண்மை, திட்ட ஒருங்கிணைப்பு)

அன்வர் – சென்னை (மக்கள் தொடர்பு, பயிலரங்கம் ஒருங்கிணைப்பு)

இராஜேஸ்வரி – ஆஸ்திரேலியா (மின்னூலாக்கம்)

கலீல் ஜாகீர் – விழுப்புரம் (ஆன்டிராய்டு செயலி உருவாக்கம்)

கிஷோர் – சிங்கப்பூர் (மென்பொருள் உருவாக்கம்)

சிவமுருகன் பெருமாள் – அமெரிக்கா (மின்னூலாக்கம்)

த.சீனிவாசன் – சென்னை (மின்னூல் வெளியீடு, பதிப்பகத்தார்)

நித்யா – சென்னை (மின்னூலாக்கம், தமிழில் கணினி நூல் எழுதுதல்)

பிரியா – மும்பை (மின்னூலாக்கம்)

ப்ரியமுடன் வசந்த் – அரேபியா (அட்டைப்படம் உருவாக்கம்)

மனோஜ் குமார் – கோவை (அட்டைப்படம் உருவாக்கம்)

மு. சிவலிங்கம் – தமிழ்நாடு (ஒருங்குறியாக்கம் செய்தல்)

லெனின் குருசாமி – காரைக்குடி (அட்டைப்படம் உருவாக்கம்)

ஜெகதீஸ்வரன் – சென்னை (அட்டைப்படம் உருவாக்கம்)

ஜெயேந்திரன் சுப்பிரமணியம் – பூனே (மின்னூலாக்கம்)

வல்லமை விருது

http://www.vallamai.com/?p=60287

1


1.அற நெறிகள்


அடிப்படை நியதிகளை , நெறிகளை கோட்பாடுகளை உணர்ந்து கொள்வதும் எவற்றை முதலில் தொடங்க வேண்டும் என்று புரிந்து கொள்வதும் , மிக முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும் . ஒரு செயலை நடுவிலிருந்து தொடங்குவதும் , கடைசியில் இருந்து தொடங்குவதும் அரைகுறையாக செயலாகவே முடியும் . நடுவர்களின் கொடி அசைவிற்கு முன்பே ஓட்டத்தை தொடங்கியவனுக்கு ஓட்டப்பந்தயத்தில் பரிசு வழங்கப்பட முடியாது . அவன் தன் கால்களை கோட்டிற்கு உள்பக்கமாக வைத்துக்கொண்டு கொடி அசைத்த கனமே தொடங்கி வெற்றி பெற வேண்டும் . மாணவனும் , மிக உயர்ந்து கணிதவியலிலோ இலக்கியத்திலோ தொடங்குவது இல்லை . எண்ணிலும் எழுத்திலும் தான் தொடங்குகிறான் . அதே போன்று வாழ்கையிலும் அடி மட்டத்திலிருந்து தொழில் தொடங்கியவர்களே பெரும் தொழில் அதிபர்களாக மாறி உள்ளனர் .

ஆன்மீகத்திலும் ஞானத்திலும் சிகரத்தை அடைந்தவர்கள் யார் என்று கவனித்தால் அவர்கள் தங்களை சேவைக்கு உட்படுத்தி கொண்டு எளிய பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபத்திக்கொண்டு மனித குலத்திற்கு ஏற்படும் அனுபவங்களை பார்த்து பின்வாங்காமல் கற்று கொள்ள வேண்டிய பாடங்களை கவனித்து கற்று கொண்டவர்கள் தாம் .

எனவே , இன்பமான மகிழ்ச்சியான , நிம்மதியான , வெற்றிகரமான இனிய வாழ்விற்கு அடிபடையானது – சரியான நெறிகளே , நியதிகளே , கோட்பாடுகளே . சரியான நெறிகள் இல்லாமல் தொடங்குவது தவறான பாதைக்கு , பழக்கங்களுக்கு இட்டு சென்று குழப்பமான நிம்மதியற்ற வாழ்வில் முடியும் . விஞ்ஞானத்தின் , வணிகத்தின் கோடிகோடி வகையிலான செயல்பாட்டிற்கு , ஆராய்ச்சிகளுக்கு , கணிப்புகளுக்கு பயன்படுவது பத்து எண்களே . அறிவுக் கருவூலமான ஆங்கிலத்தின் இலட்சக்கணக்கான புத்தகங்களுக்கு இருபத்தி ஆறு எழுத்துக்களே அடிப்படை . மிகவும் பெரிய விண்வெளி ஆய்வாளனும் , பத்து எண்களை புறந்தள்ள முடியாது . அறிவுக் கடலாக விளங்குபவனும் அவன் அறிந்த மொழியின் எழுத்துக்களை கொண்டே நூல்களை படைக்க முடியும் . இவ்வாறு அடிப்படைகள் என்பது எல்லா துறைகளிலும் சிலவே , எளிதானவைகளே .

எனினும் அவை இன்றி பேரறிவும் பெருஞ்சாதனையும் இல்லை . வாழ்கையின் , உண்மையான வாழ்வின் , அடிப்படை நெறிகளும் எளிய சில நெறிகளே . அவற்றை முழுமையாக கற்று உணர்ந்து தம் வாழ்வில் ஒன்றறக் கலந்து வாழ்வது , குழப்பங்கள் அற்ற தெளிவான மனதை – பாதுகாப்பான – பலம் வாய்ந்த அடித்தளத்தில் அசைக்க முடியாத குண நலன்களை உருவாக்கி வளர்க்க – நிலையான நிரந்தரமான வெற்றிக்கு அழைத்து செல்லும் அந்த அடிப்படை நெறிகளை முழுமையாக பற்றி வாழ்வின் எல்லா அம்சங்களிலும் சிக்கலான சூழ்நிலைகளிலும் கை விடாது இருப்பவன் வாழ்க்கையை புரிந்தவனாகிறான் .

வாழ்வின் அடிப்படை அறநெறிகள் சீரிய ஒழுக்கமே . அவற்றை பட்டியலிடுவது எளிதானது , அவை வெறும் வார்த்தைகளாக எல்லோரது உதடுகளாலும் உச்சரிக்கப்படுகிறது . ஆனால் தங்கு தடையற்ற செயல்களாக எவ்வித சமரசத்திற்கும் இடமளிக்காமல் சிலராலலேயே கடைபிடிக்கப்படுகிறது . இந்த சிறிய உரையில் ஐந்து அடிப்படை அறநெறிகளை குறித்து விளக்கப்படுகறது . இவ்வைந்து நெறிகளே வாழ்வின் ஆணிவேராகும் . அன்றாட வாழ்வின் எல்லா நிலைகளிலும் நெருங்கிவர கூடியவைகள் ஆகும் . காரணம் அவை ஒரு கலைஞனையோ வணிகர்களையோ குடும்ப தலைவர்களையோ சாதாரண குடிமகனையோ எல்லோராலும் எப்போதும் தொட்டு விடக்கூடிய தூரத்திலேயே இருக்கின்றன , அவற்றை விட்டு எறிந்து வாழ்வதற்கு பெரும் விலை கொடுக்க வேண்டியதாய் இருக்கும் . அவற்றை இறுகப்பற்றி பயன்படுத்த விழைபவன் வாழ்வின் பல வித இன்னல்களையும் தோல்விகளையும் கடந்துவிடுகிறான் , என்றும் வற்றாது சுரக்கும் , வலிமையான இனிமையான எண்ணங்களின் ஜீவ ஊற்றில் பருகி வெற்றி பெறுகிறான் . அந்த ஐந்து நெறிகளில் முதன்மையானது :

கடமை : மிக மிக உச்சரிக்கப்படுகிற வார்த்தை , ஆனால் அதன் உட்பொருளை உணர்ந்து செயலாற்றுபவனுக்கு அரிய பொக்கிஷங்களை வழங்க அது காத்து இருக்கின்றது . கடமை என்பதன் அடிப்படை தன்னுடைய வேலையில் எவ்வளவு ஈடுபட வேண்டுமோ அவ்வளவு ஈடுபடுவதும் அடுத்தவர்களது வேலையில் தேவையின்றி ஈடுபடுவதை தவிர்ப்பதும் ஆகும் . மற்றவர்களது வேலையில் குற்றங்குறைகளை கண்டுபிடித்து திருத்திக்கொண்டே இருப்பவன் தன்னுடைய வேலையை நிறைவேற்ற முடியாமல் இருந்து விடுகிறான் . கடமை என்றால் கைக்கு எட்டிய பணியில் சிதறாத முழு கவனத்தை செலுத்துவதாகும் . குவிந்த மன நிலையில் செயல்படுவது ஆகும் . திறமையாக , துல்லியமாக , முழுமையாக தேவையானதை செய்வதாகும் . ஒவ்வொரு மனிதனது கடமையும் மற்ற மனிதனது கடமையில் இருந்து வேறுபடுகின்றன . ஒருவன் தன் கடமையை முழுமையாக அறிந்தவனாக இருக்க வேண்டும் , மற்றவனது கடமையை அறியும் முன் , மற்றவன் தன் கடமையை குறித்து அறிந்ததை விட தான் தன் கடமையை அதிகம் அறிந்தவனாக இருக்க வேண்டும் . ஒவ்வொருவரது கடமையும் வேறுபடுகின்றன . அவற்றின் அடிப்படை ஒன்று தான் . கடமையின் கட்டளைகளை நிறை வேற்ற காத்திருப்பவர்கள் யார் ?

நேர்மை : நேர்மைதான் அடுத்த அறநெறியாகும் . நேர்மை என்றால் அடுத்தவனை ஏமாற்றாமல் இருப்பது ஆகும் . அல்லது அவனுக்கு வழங்கிய ஒன்றின் ஈடானதை விட அதிகமாக விலை பேசாமலிருப்பதாகும் . வார்த்தையாலோ , பார்வையாலோ , செய்கையாலோ அடுத்தவர்களை ஏமாற்றாமல் இருப்பதாகும் . பொய்யை கைவிடுவதாகும் . சூழ்ச்சிகளை , தந்திரங்களை அறவே நீக்குவதாகும் . வாய்மையை பின்பற்றுவதாகும் . சொல் ஒன்று செயல் வேறொன்று என்று இல்லாமல் இருப்பதாகும் . வீண் புகழ்ச்சிகளை , அலங்கார வார்த்தைகளை தவிர்ப்பதாகும் . ஒருவனது நேர்மை மற்றவர்களுக்கு அவன் மேல் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது . அந்த நம்பிக்கை அவனது தொழில் சிறக்க , மகிழ்ச்சியான வெற்றியை அறுவடை செய்ய உதவுகின்றது . நேர்மையின் உச்சத்தை எட்டியவர்கள் யார் ?

விரயமின்மை / வீணடிக்காதிருக்கும் தன்மையே மூன்றாவது அறநெறியாகும் . தன்னுடைய பொருளாதாரத்தில் விரயமின்மையை கடைபிடிப்பது என்பது இந்த நெறியின் ஒரு சிறு பகுதியே . எனினும் அது உண்மையான வளம் நிறைந்த வாழ்விற்கு அழைத்து செல்லும் ஒரு நுழைவாயில் ஆகும் . இதன் முழு பொருள் உடலின் , மனதின் ஆற்றலை , சக்தியை உள்துடிப்பை வீணடிக்காது இருப்பதாகும் .

கொண்டாட்டங்களில் திளைத்த வண்ணம் இருப்பதையும் , அளவுக்கு மீறி புலனின்ப செயல்களில் ஈடுபடுவதையும் நீக்கி உடலின் , மனதின் ஆற்றலை , சக்தியை சேகரிப்பதாகும் . இவ்விரயமின்மையை கடைபிடிப்பவன் வலிமை , மனஉறுதி , விழிப்புணர்வு சாதிக்கும் ஆற்றல் பெற்றவனாகிறான் . இந்த அறநெறியானது தன்னை முழுதும் கற்று உணர்ந்தவர்களுக்கு மாபெரும் சக்தியை பரிசளிக்க காத்து இருக்கின்றனது . வீணடிக்காத்திருக்கும் தன்மையை கற்று உணர்ந்தவர்கள் யார் ?

வீணடிக்காதிருக்கும் தன்மையை தொடர்வது தாராளமாகும் . தாராளம் என்பது வீண் விரயத்திற்கு எதிரானது அல்ல , வீண் விரயத்தை தவிர்ப்பவனால் மட்டுமே தாராளமாக இருப்பதற்கு முடியும் . வீணடிக்கும் தன்மை கொண்டவன் பணரீதியாகவோ , உடல் ரீதியாகவோ , மனரீதியாகவோ , தன்னுடைய சொந்த நலத்தில் எல்லாவற்றையும் தொலைத்து விடுகிறான் . அவனிடம் மற்றவர்களுக்கு வழங்குவதற்கு எதுவுமில்லை . செல்வத்தை , பணத்தை வாரி வழங்குவது தாராளத்தின் சிறு பகுதியே , நல்லெண்ணங்களை , நற்செயல்களை , அன்பை இரக்கத்தை தாராளமாக வழங்குவது , நிந்திப்பவர்களையும் அரவனைக்கும் தன்மை கொண்டிருப்பது போன்றவை மற்ற பகுதிகள் ஆகும் . இந்த தாராள மனமானது தனியே தவிப்பதை தகர்க்கின்றது , நம்பிக்கைக்குரிய தோழர்களை , உயிர்நண்பர்களை வரவழைத்து தருகின்றது .

தன்னடக்கம் அல்லது சுயகட்டுப்பாடே இந்த முக்கிய ஐந்து அற நெறிகளில் இறுதியானதாகும் . ஆனால் மிக முக்கியமானதாகும் . இதை மறந்து வாழ்வதே பெருந்துக்கங்களுக்கு , எண்ணிலடங்கா தோல்விகளுக்கு , பல நூறு வகையான மன உறுத்தல்களுக்கு , உடல் சோர்விற்கு , கடன் சுமைகளுக்கு ஆளாக்குவதற்கு காரணமாகும் . சிறிய விஷயத்திற்க்காக தன் நிலை தடுமாறி வாடிக்கையாளருடன் கோபம் கொள்ளும் வியாபாரியை கவனியுங்கள் , அதே மனபாங்கினை தொடர்ந்து கடைபிடித்திருப்பவர்களை தோல்வி நெருங்குவதையும் காண்பீர்கள் . இந்த சுயக்கட்டுப்பாட்டின் ஆரம்ப நிலையை மட்டுமே எல்லா மனிதர்களும் கடைபிடித்தால் கூட , கோபமும் சினமும் அதன் கூடவே வரும் எல்லாவற்றையும் விழுங்கும் நெருப்பும் அனைந்து போகும் . இந்த சுயகட்டுப்பாட்டில் பொறுமை , தூய்மை , அகங்காரமற்ற மென்மை , அன்பு , அசையாத உறுதி முதலியவை முக்கிய கூறுகளாகும் . இந்த தன்னடக்கத்தை சுயகட்டுப்பாட்டை மனிதர்கள் மெதுவாக முழுமையாக கைக்கொள்ளும் வரை அவர்களது வெற்றி உறுதி செய்யப்படவில்லை . அவர்கள் பண்படுத்தப்பட்ட உயர்ந்த மனிதர்களாக விளங்குவதற்கு வாய்ப்பை பெற்றிருக்கவில்லை . தன்னை அடக்கும் ஆற்றல் பெற்றிருப்பவன் யார் ? அவன் எங்கிருந்தாலும் அவன் ஒரு சிறந்த வழிக்காட்டியே .

இந்த ஐந்து அறநெறிகளும் கொண்டு ஓழுக வேண்டிய ஐந்து நடைமுறைகளாகும் . சாதனைக்கு அழைத்து செல்லும் ஐந்து வழிகளாகும் . அறிவின் , ஞானத்தின் ஐந்து ஊற்றுகளாகும் .

முயற்சி திருவினையாக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும் .———————–616

எனவே இந்த ஐந்து அறநெறிகளை உதட்டில் கொள்ளாமல் உள்ளத்தில் கொண்டு முயல வேண்டும் . அந்நெறிகளை முழுமையாக அறியவும் , வேறு எவற்றாலும் வழங்கப்பட முடியாத விலைமதிக்க முடியாத பரிசினை விழைபவன் , அந்நெறிகளை செயல்படுத்த வேண்டும் .

2


2.சிறந்த வழிமுறைகள்


இந்த ஐந்து அறநெறிகளும் உள்ளத்தில் பதிந்து செயல் வடிவம் பெறும் பொழுது சிறந்த வழிமுறைகள் தோன்றும், அறநெறிகள் நன்மை விளைவிக்கும் செயல்களாக உருமாற்றம் செய்யும். இம்முழு பிரபஞ்சமும் இயற்கை விதிகளை மீறாமல் செயல்படுகின்றது. அது போல சிறந்த வாழ்க்கை சிறந்த வழிமுறைகளை மீறாமல் இருக்கும். அவை இந்த முழு பிரபஞ்சமும் ஒரு ஒற்றை இயந்திரம் /ஒற்றை வடிவம் என்பதைப்போல எங்கு கவனித்தாலும் அதன் பாகங்கள் சீராக ஒத்திசைவாக செயல்படுகின்றன. இந்த சீரான ஒத்திசைவான தன்மை இல்லை என்றால் அதை பிரபஞ்சம் என்கிற பெயரில் அழைக்க முடியாது அதற்கு வேறு பெயரை இட வேண்டும். அது போலவே மனித வாழ்க்கையிலும் ஒரு உண்மையான வாழ்க்கைக்கும் பொய்யான வாழ்க்கைக்கும் ஒரு குறிக்கோளுடைய வலிமையான வாழ்க்கைக்கும் குறிக்கோளற்ற பலவீனமான வாழ்க்கைக்கும் உள்ள முக்கிய வேறுபாடு சிறந்த வழிமுறைகளே ஆகும்.

பொய்யான வாழ்க்கை என்பது முன்பின் தொடர்பில்லாத அலங்கோலமான எண்ணங்களை, உணர்ச்சிகளை, செயல்களை கொண்டிருப்பதாகும். உண்மையான வாழ்க்கை என்பது வாழ்க்கையின் அனைத்து பாகங்களையும் ஒன்றி இசைந்து செல்வதாகும். இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்பது பழுதுபட்ட ஓடாத இயந்திரத்திற்கும் நல்ல முறையில் ஓடுகின்ற இயந்திரத்திற்கும் உள்ள வேறுபாடு போன்றதே ஆகும். நல்ல முறையில் ஓடுகின்ற இயந்திரம் என்பது பயன் தருகின்றது என்பது மட்டும் அல்ல அது கண்களை கவர்வதாகவும், வியந்து இரசிக்கக்கூடியதாகவும் இருக்கும். ஆனால் அதன் பாகங்கள் பழுதடையும் பொழுது, மீண்டும் பழுது பார்த்து சரி செய்ய தகுதியை இழக்கும்போது, அது அதன் பயனையளிக்க முடியாதபேது அது குப்பையில் தூக்கி வீசப்படுகின்றது. அது போலவே வாழ்வின் எல்லா பாகங்களும் ஒன்றிணைந்து செயல்படும் பொழுது பயனும் வலிமையும் தருவது மட்டுமின்றி ஈடு இணையற்ற அழகுடன் விளங்குகிறது. ஆனால் குழப்பமான வாழ்வோ எந்த பயனுமின்றி பரிதாபப்படகூடிய துயரத்துடன் காட்சி அளிக்கிறது.

வாழ்வு சிறக்க வேண்டுமானால் சிறந்த வழிமுறைகளை இறுகப் பற்றி தொடர வேண்டும். வாழ்வின் ஒவ்வொரு மெல்லிய விஷயங்களையும் கூட அவை ஊடுருவிய வண்ணம் இருக்க வேண்டும். பூமி எவ்வாறு இயற்கை விதிகளுக்கு உட்பட்டு சுழல்கின்றதோ வாழ்வும் அவ்வாறு சிறந்த வழிமுறைகளுக்குள் உட்பட்டு நடைபெற வேண்டும். ஒரு புத்திசாலிக்கும் முட்டாளுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் புத்திசாலி சிறிய விஷயங்களின் முக்கியத்தை உணர்ந்து கவனத்தில் கொள்வான். முட்டாளோ சிறிய விஷயங்களின் முக்கியத்தை உணராமல் கவனத்தில் கொள்ளமல் அக்கறையின்றி வாழ்வான். பொருள்கள் அவற்றுக்குரிய இடத்தில் இருக்க வேண்டுடம். பராமரிக்கப்பட வேண்டும். கடமைகளை சிறியதிலிருந்து மிக முக்கியமானதுவரை காலம் கடத்தாமல் உரிய நேரத்திற்குள் உரிய இடத்தில் செய்து முடிக்கப்பட வேண்டும். சிறந்த வழிமுறைகளை பின்பற்றாமல் இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தும். மகிழ்ச்சியின்மையின் மறுபெயர் தான் குழப்பம்.

ஒரு சிறந்த நிர்வாகி ஒரு ஒழுங்குமுறையின் வழியாகவே வெற்றியை அடையமுடியும் என்பதை உணர்ந்திருப்பான். எங்கே ஒழுங்கு முறை இல்லையோ அங்கே தோல்வி குடி கொண்டு விடும் என்பதையும் உணர்ந்திருப்பான்.

ஒரு விவேகமான மனிதன் ஒழுங்கு முறையுடன் கூடிய வாழ்வே மகிழ்ச்சிக்கு வழி. ஒழுங்கற்ற வாழ்வு துக்கத்திற்கே வழி என்பதை உணர்ந்திருப்பான். முட்டாள் என்பவன் யார்? கவனமின்றி சிந்திப்பவன், கட்டுப்பாடின்றி வாழ்பவன், அக்கறையின்றி செயல்படுபவன், புத்திசாலி என்பவன் யார்? கவனமாக சிந்திப்பவன். நிதானமாக செயல்படுபவன் உறுதியாக வாழ்பவன்.

உண்மையான சிறந்த வழிமுறைகள் என்பது வாழ்வுக்கு தேவையான புற பொருட்களை, கருவிகளை, உபகரணங்களை புற வாழ்வு உறவுகள் ஆகியவற்றை சீரிய முறையில் வைத்து பயன்படுத்திக் கொள்வததோடு முடிந்து விடுவதல்ல.அது அதன் ஆரம்பமே. இந்த சிறந்த வழிமுறைகள் நம்முடைய மனதின் அசைவின், செயல்பாட்டின் ஒவ்வொரு அசைவிலும் ஊடுருவியவாறு எண்ணங்களை சிந்தனைகளை ஒழுங்குப்படுத்துவதில் உணர்வுகளை கட்டுப்படுத்துவதில் நற்செயல்களை தேர்ந்தெடுப்பதில் சொற்களின் வலிமை உணர்ந்து அளவறிந்து பயன்படுத்துவதில் (ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லின் கண் சோர்வு—–642) என எல்லாவற்றிலும் பின்பற்றுவதாகும்.

சிறந்த வழிமுறைகளை பின்பற்றி வெற்றிகரமான இனிய வாழ்வை அடைய, ஒருவன் அன்றாட வாழ்வின் சிறு சிறு நடவடிக்கைகளை பழக்கங்களை மறந்து அல்ல, அவற்றை மறக்காமல் சிறந்த வழிமுறைகளை அந்த சிறுசிறு நடவடிக்கைகளில் பழக்கங்களில் புகுத்தியவாறு செயல்படுத்துவதில் தொடங்குவதாகும். எனவே தினமும் எப்பொழுது தூக்கம் களைந்து விழித்து எழுகிறோம், எப்பொழுது தூங்கச் செல்கிறோம் எவ்வளவு நேரம் உறக்கம் கொள்கிறோம் என்பவை எல்லாம் முக்கியமானதாகும். தினந்தோறும் உணவு உட்கொள்ளும் நேரங்கள், அவற்றிக்கு இடையே ஆன கால நேரம், உணவை போற்றி உட்கொள்ளும் விதம் என்பவை எல்லாம் உணவு செரிப்பதற்கு அல்லது செரிமானம் ஆகாமல் உளளிருப்பதில் பங்கு வகிக்கும். செரிமானம் ஆகிய உணவு இலகுவான தன்மையில் இருக்க உதவும், செரிமானம் ஆகாத உணவு எளிதில் எரிச்சல் படவைக்கும். காரணம் உணவு உட்கொள்ளும் விதமும் நேரமும் முறையும் உடல் அளவிலும் மனரீதியிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

தொழிலுக்கு நேரத்தை ஒதுக்குவது விளையாட்டிற்கு நேரத்தை ஒதுக்குவது இரண்டிற்கும் வேறுபாட்டை உணர்ந்து குழம்பி கொள்ளாமல் இருப்பது, தொழலில் திட்டமிட்டு செயல்படுவது, தனிமையை நாடி ஆழ்ந்த எண்ணங்களில் மூழ்கி எழுந்து புத்துணர்வுடன் செயல்படுவது, உணவை உண்பது, உணவை தவிர்ப்பது என இவை எல்லாமே அன்றாட வாழ்வில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கின்றன. இவற்றை உணர்ந்து செயல்படுபவன் குறைந்த அளவு பாதிப்பில் மிகுந்த பயனை, மகிழ்ச்சியை, வசீகரத்தன்மையை பெறுகிறான்.

இவ்வாறு உணர்ந்து செயல்படுவது என்பது ஆரம்பமே. இவ்வழி முறைகள் எல்லாம் முழு வாழ்வின் தன்மையை அடி ஆழம் வரை தழுவ வேண்டும். இவ்வழிமுறைகளின் வழிகாட்டுதல் பேச்சிலும், செயலிலும், எண்ணங்களிலும் ஆசைகளிலும் எற்படும் பொழுது, அறியாமையிலிருந்து ஞானம் பிறக்கின்றது. பலவீனத்திலிருந்து வலிமை பிறக்கின்றது, இவ்வாறு மனிதன் மனதை பண்படுத்தி இனிதாக செயல்படும் பொழுது உயர்ந்த ஞானத்தை, ஆற்றலை, மகிழ்ச்சியை பெறுகிறான்.

எனினும் இந்த இறுதி கட்டத்தை அடைய ஒருவன் ஆரம்பத்திலிருந்தே தொடங்க வேண்டும். வாழ்வின் ஒவ்வொரு சிறு சிறு செயல்களையும் கூட கருத்தில் கொண்டு அவற்றை முறைப்படுத்தி செய்ய வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு படியாக கடந்து இறுதி நிலையை அடைய வேண்டும். அந்த படிகளும் அவற்றை கடப்பதற்கு அவன்் மேற்கொண்ட முயற்சியை பாராட்டும் விதமாக மிகழ்ச்சியையும் சக்தியையும் பரிசளிக்கும்.

வழிமுறைகள் என்பது சுலபமாக திறமையாக ஆற்றலுடன் ஒன்றை முடிப்பதாகும். ஒழுக்கம் என்பது மனதிற்கு இடப்பட்ட ஒரு வழி முறையாகும். அந்த மன ஒழுக்கம் என்பது நிதானத்தை, ஆற்றலை மகிழ்ச்சியை வழங்கும். கடமையை சரியாக செய்வது வழிமுறையாகும். வாழ்வை சரியாக வாழ்வது வழிமுறையாகும். கடமையை ஆற்றும் தன்மையும் வாழ்வை வாழும் விதமும் வெவ்வேறானவையல்ல, அவை ஒரே வாழ்க்கையின் மன இயல்பின் இருவேறு கோனங்களே.

எனவே கடமையில் கவனம் பேச்சில் தெளிவு எண்ணத்தில் நேர்மை என்பதற்கும் கடமையில் கவனமின்மை, பேச்சில் குழப்பம் எண்ணங்களில் பொய்மை என்பதற்கும் உள்ள பேறுபாடே வெற்றிக்கும் தோல்விக்கும் இசைக்கும் இரைச்சலுக்கும் மகிழ்ச்சிக்கும் துக்கத்திற்க்குமான வேறுபாடாகும்.

சிறந்த வழிமுறைகளை கடமையில் நடத்தையில் எண்ணங்களில் ஒரே வார்த்தையில் கூற வேண்டுமானால் முழு வாழ்விலும் கொள்வது என்பதே உடல் நலத்திற்கு மன அமைதிக்கு வாழ்வின் வெற்றிக்கு இடப்படும் உறுதியான பாதுகாப்பான அடித்தளமாகும்.

3


3.செயல்களில் உண்மை


அறநெறிகளையும் வழிமுறைகளையும் தொடர்வது பொய் கலப்பில்லாத உண்மையான செயல்களும் நடத்தையும் ஆகும். அறநெறிகளின் சாரத்தை விளங்கி கொள்ள விரும்புபவன் சிறந்த வழிமுறைகளை செயல் படுத்த விரும்புபவன் தன் வாழ்வில் ஒழுக்கத்தை வித்தாகக் கொள்வான்.

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்

என்றும் இடும்பை தரும். (138).

ஒருவனின் ஒழுக்கமான செயல்களும் பண்புகளும், நடத்தையும் தனித்தன்மை வாய்ந்தவை. அதி முக்கியமானவை. காரணம் அவை தம் இயல்பிற்கு ஏற்ப அவற்றை ஒத்த செயல்களும், பண்புகளும் நடத்தையும் பிறப்பதற்கு வழி வகைசெய்யும். ஒரு செயல் மற்றொரு செயலை உருவாக்கும் தன்மை கொண்டது என்ற செயலின் ஆற்றலையும் சக்தியையும் உணர்ந்தவனிடம் ஒரு புதிய பார்வையும் ஒரு தெளிவும் பிறக்கின்றது. அவன் இந்த நுண் உணர்வை பெற பெற அவன் முன்னேற்றப்பாதையில் மிக வேகமாக செல்கிறான், செல்ல வேண்டிய பாதையையும் தீர்மானித்து கொள்கிறான். அவன் நாளும் பொழுதும் வீண் பரபரப்பின்றி அமைதியாக செல்கின்றன. தன்னை சுற்றியுள்ள புறச்சூழ்நிலைகளாலும் செயல்களாளும் பாதிப்படையாமல் கலக்கமின்றி நேர்வழியில் செல்கிறான். இவ்வாறு இருப்பது என்பது எவர் எக்கேடு கெட்டாலும் கவலைப்படாமல் இருப்பதல்ல, எவருடைய கருத்துக்களாலும், அறியாமையாலும், கட்டுப்படாத உணர்ச்சிகளாலும் பாதிப்படையாமல் இருப்பதாகும்.

உண்மையை சத்தியத்தை கருத்தில் கொண்டு செய்யப்படும் செயல்கள் எப்போதும் நன்மையையும் மகிழ்ச்சியையும் விளைவிப்பதாகவே இருக்கும். நற்செயல்கள் செய்வதில் ஆழ வேரூன்றியவன் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளில் அவற்றை கருத்தில் கொள்ளாமல் செயல்படும்படி அறிவுறுத்தப்பட்டாலும் அவற்றை அவன் செவி மடுக்கமாட்டான்.

இடுக்கட் படினும் இளிவந்த செய்யார்

நடுக்கற்ற காட்சி யவர்.————654

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி

இன்பம் பயக்கும் வினை—————–669

போலியான செயல்களுக்கும் உண்மையான செயல்களுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை எவர் அறிய முனைந்தாலும் அவற்றை எளிதில் அறிந்து கொள்ளலாம். அறிந்து கொண்டு போலியை தவிர்த்து உண்மையை கடைபிடிக்கலாம். பொருள்களை அதன் தன்மை, வடிவம், நிறம், என பலவாறாக பிரித்து வேண்டியதை தேர்ந்தெடுத்து தேவையற்றதை ஒதுக்கிவிடுவது போல் செயல்களையும் அந்த செயல் செய்வதன் நோக்கம், செயல்படுத்தப்படும் தன்மை, இயல்பு அவை விளைவிக்கக்கூடிய நன்மை, தீமை ஆகியவற்றை உணர்ந்து தீய செயல்களை விலக்கி நற்செயல்களை புரியலாம்.

தீயவற்றை விலக்குவது என்பது எப்போதும் நன்மையை ஏற்று கொள்வதற்கு முதல் படியாகும். வளர்ச்சிக்கு உரிய வழியாகும். ஆரம்ப பள்ளியில் படிக்கும் குழந்தை தன் பாடத்தை தவறாக செய்து செய்து அது சுட்டிக்காட்டப்பட்டவுடன் அதை கைவிட்டு சரியாக செய்வது போல தவறு என்றால் என்ன அதை ஏன் தவிர்க்க வேண்டும் என்பது அறியாதவன் எந்த காரணத்தால் சரியானவற்றை பின்பற்றப் போகிறான். தீமையான அல்லது பொய்யான செயல்கள் சுயநலத்தின் ஊற்றிலேயே பிறக்கின்றன மற்றவர்களது நலத்தை கருத்தில் கொள்ளாமல் கட்டுப்படாத மனத்தின் பேராசையில் பிறக்கின்றன. அச்செயல்கள் வெளிச்சத்திற்கு வந்தால் தலைகுனிவு ஏற்படும் என்பதால் மறைக்க முயல்படும். நன்மையான அல்லது உண்மையான செயல்கள் பிறர் நலத்தை எண்ணியே பிறக்கின்றன. தெளிந்த காரணங்களோடு அநநெறிகளின் துனைக்கொண்ட இனிய எண்ணங்களோடு அவை புறப்படுகின்றன.அவை வெளிச்சத்திற்கு வந்தால் அவை அதை செயதவனுக்கு ஒரு போதும் தலைகுனிவை ஏற்படுத்துவது இல்லை.

நற்செயல்களை முனைபவன் சுயநலத்தின் வாயிலாக தோன்றுகின்ற ஆசைகளை எண்ணங்களை ஈடேற்றாமல் ஒதுக்கிவிடுவான். அவை பார்ப்பதற்கு சிறிய விஷயமாக இருந்தாலும் அவற்றின் இயல்பு சஞ்சலத்தையும், மனக்குழப்பத்தையும், துன்பத்தையும் துக்கத்தையும் தருவதே.

தன்நலத்தையும் பொய்மையையும் துறக்க துறக்க உண்மையின் சத்தியத்தின் பொது நலம் ஆகியவற்றின் அறிவை பெறுவான். கோபத்pல் பொறாமையில் வெறுப்பில் பேசுவதோ செயல்படுவதோ கூடாது என்று உணர்ந்து அவற்றை தவிர்ப்பான். அவைகளை அவன் மனதிலிருந்து நீக்கிய பிறகே செயல்்பட வேண்டும் என்பதை உணருவான். சூழ்ச்சி தந்திரம் ஏமாற்று சுயலாபத்தையோ சுயநன்மையையோ உள் ஒன்று வைத்து புறமொன்று பேசுவது என இவைகளை கடிய விஷத்தை அருந்துவதை தவிர்ப்பது போல தவிர்ப்பான். காரணம் அவற்றை மேற்கொள்பவன், விரைவாகவோ அல்லது காலம் கடந்தோ என்றேனும் ஒரு நாள் அவை வெளிச்சத்திற்கு வந்து அவமானத்தை வழங்கியே தீரும். ஒருவன் ஒரு செயலை தீய எண்ணத்துடன் மூடி மறைத்து செய்ய தூண்டப்படுவானேயானால், அவ்வாறு அவன் செய்வதை எவர் ஏனும் பார்த்து விடுவார்களோ என அஞ்சினால் தன் மனசாட்சி படி நடந்து தன்னை தற்காத்து கொள்ள முடியாது என்று நினைத்தால் ஒரு சிறு நொடி தாமதமும் இன்றி அந்த செயல் ஒரு தவறான செயல் அதனை அறவே தவிர்க்க வேண்டும் என்று உணர்ந்து கொள்ள வேண்டும்.

தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன்னெஞ்சே தன்னை சுடும்.———————–293

செய்யும் செயலில் நேர்மையும் மனதார ஈடுபடுதல் என்னும் இந்த கொள்கையை கடைபிடித்தால் அது அவனை நற்செயல்களை கவனமாக செய்வதற்கு மற்றவர்களது சூழ்ச்சி, ஏமாற்றுகளில் சிக்கிச்கொள்ளாமல் இருப்பதற்கு வழி செய்யும். உடன்படிக்கைகளில் கை எழுத்து இடுவதற்கு முன், ஒப்பந்தங்களை ஏற்று கொள்வதற்கு முன், பிறர் வேண்டுகோளுக்கிணங்கி உறுதி மொழியை வாக்குறுதியை வழங்குவதற்கு முன் பொதுவாக தன்னை பிறரோடு ஈடுபடுத்தி கொள்வதற்கு முன், அதிலும் குறிப்பாக அவர்கள் அறிமுகம் இல்லாதவர்களாக இருந்தால், செய்ய வேண்டிய செயலின் முழு விவரங்களையும் அறிந்து, அதில் தன் பங்கினை ஆற்ற முடியும் என்று நம்பினால் மட்டுமே அவன் அதில் ஈடுபடுவான். நற்செயல் புரிபவனுக்கு கவனமில்லாமல் செயல்படுவது என்பது ஒரு தண்டனைக்குரிய குற்றமாகும்.

நல்ல நோக்கத்தோடு அனால் கவனமின்றி செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான செயல்கள் பல தீங்கான பின் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. நல்ல நோக்கங்கள் நரகத்திற்கு வழியை ஏற்படுத்துகின்றன என்று கூட சொல்லாம். எவனது செயல்களில் உண்மையும் நேர்மையும் இருக்கின்றதோ அவன் கவனமுடன் செயல்படுகிறான். எனவே ‘பாம்பை போல் விழிப்புடன் ஆனால் புறாக்களை போல ஆபத்து விளைவிக்காமல் இருங்கள்’ .

கவனமின்றி செயல்படுதல் என்பது ஒரு குறிப்பிட்ட வகையான செயல்களுக்கு மட்டும் அல்ல எல்லா வகையான செயல்களுக்கும் பொருந்தும். தொடர்ந்து கவனமுடன் செயல்படுவது ஒருவனுக்கு செயலின் முழு தன்மையையும் விளங்க வைக்கும். நற்செயல்கள் புரிவதற்கு சக்தி கடைக்கும். கவனமுடன் செயல்படுபவனை முட்டாள்தனம் நெருங்காது அவனை விவேகம் அரவனைத்து கொள்ளும்.

ஒரு உண்மையான செயலுக்கு ஒரு நல்ல நோக்கமோ ஒரு நல்ல உள்மனத்தூண்டுதலோ மட்டுமே போதுமானது ஆகாது. அது எல்லா அம்சங்களையும் கருத்தில் கொண்டு மலர வேண்டும். தன் அளவில் மகிழ்ச்சியாக இருக்க விரும்புபவன் பிறருக்கு நன்மை செய்யும் ஆற்றலோடு இருக்க விரும்புபவன் எப்போதும் தன்னை உண்மையான செயல்களிலேயே ஈடுபத்தி கொள்ள வேண்டும். கவனமின்றி செயலில் ஈடுபட்டு விரும்பதகாத விளைவுகள் ஏற்பட்டவுடன் ‘நான் முடிந்தவரை நல்ல நோக்கத்துடனே செயல்பட்டேன்’ என்று விளக்கம் சொல்வது சாக்கு போக்கு கூறி தப்பித்து கொள்வதாகவே கருதப்படும். அவனுடைய அந்த கசப்பான அனுபவம் எதிர்காலத்தில் கவனமாக செயல்பட உதவ வேண்டும்.

ஒரு உண்மையான மனத்திலிருந்தே உண்மையாக செயல்கள் பிறக்கும். உண்மையான செயலுக்கும் போலியான செயல்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை உணர தொடங்கியவன் தன் மனதை சரிபடுத்துகிறான் நெறிபடுத்துகிறான் இவ்வாறு அது பண்பட்டு ஆற்றலோடு செயல்பட வழி வகை செய்கிறான். அகக்கண் கொண்டு வாழ்வில் சரியானவைகளை பிரித்து பார்க்கும் சக்தி , அவ்வாறு அகக்கண்ணின் துனையோடு உணர முடியும் என்கிற நம்பிக்கை, அறிவு ஆகியவற்றை ஒருவன் வலிமையான அடித்தளமாகக் கொண்டு தன் குண இயல்புகளையும் பண்புகளையும் தோல்வி பயம் அச்சம் போன்றவைகளால் அசைக்கமுடியாதவாறு உயர்த்தி கொள்ளலாம்.

4


4.வாய்மை


உண்மையை செயல் படுத்தினால் மட்டுமே அறிய முடியும். உள்ளத் தூய்மை உடையவர்களுக்கே உண்மை வெளிப்படும்.வாய்மை என்பது உள்ளத்தூய்மைக்கு முதல் படியாகும். உண்மையின் பேரழகும் எளிமையும் என்னவென்றால் உண்மை அல்லாதவற்றை செய்யாமல் கைவிடுதலும் உண்மையை தழுவி செயல்படுவதுமே ஆகும். உண்மையாக பேசுவது என்பது உண்மையாக வாழ்வதற்கு வேண்டிய தொடக்கமாகும். பொய்மை, எல்லா வகையான ஏமாற்றும் சொற்கள், புறம் கூறுதல், வஞ்சகம் நிறைந்த சொற்கள் – போன்றவற்றை சிறிய அளவு ஆன்ம ஒளி மனதை வந்து அடையவேண்டும் என்றாலும் இவை எல்லாம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும. பொய் சொல்பவனும் புறங்கூறுபவனும் இருட்டில் முழ்கி கிடைக்கின்றான். நன்மைக்கும் தீமைக்கும் வேறுப்பாட்டை உணரமுடியாத அளவிற்கு கடுமையான இருட்டு அவனை சூழ்ந்துள்ளது. பொய்யும் புறஞ்சொல்லும் தேவை தான், அவற்றை தொடர்ந்து மேற்கொள்வதே தன்னையும் பிறரையும் காப்பதற்கான வழி என்று எண்ணுகிறான்.

உயர்ந்த அறநெறிகளை கற்க விரும்புபவன் இது போன்ற தன் சுய மாயையிலிருந்து தன்னை தற்காத்து கொள்ளட்டும். ஏமாற்று வார்த்தைகளை பேசுவது, பிறர் மீது வீண் பழி சுமத்துவது, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவது, பொறாமை காழ்ப்புணர்ச்சியை உள்ளே வைத்து பேசுவது ஆகியவற்றை ஒருவன் செய்கிறான் என்றால் உயர்ந்த அற நெறிகளை அவன் கற்க தொடங்கவில்லை என்று அர்த்தம். அவன் தத்துவங்களை, அற்புதங்களை, சூட்சமங்களை அதிசயங்களை கற்பவனாக இருக்கலாம், கண்ணுக்கு புலப்படாத உயிர்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்வது, தூக்கத்திலேயே எவரும் அறியாமல் பயணம் செய்வது, ஆர்வத்தை தூண்டும் விஷயங்களை கற்பது, ஆன்மீக கொள்கை கோட்பாடுகளை புத்தக படிப்பைப் போல ஏட்டளவில் கற்கலாம்.ஆனால் அவன் புறங்கூறுபவனாகவோ ஏமாற்று சொற்கள் கூறுபவனாகவோ இருந்தால் உயாந்்த அறநெறிகள் அவனை வந்து அடையாது. உயர்ந்த அறநெறிகள் என்றால் நிமிர்ந்த நேர் கொண்ட வாழ்க்கை, நேர்மை, களங்கமின்மை, உள்ளத்தூய்மை, அன்பு, சாந்தம், நம்பிக்கை, பணிவு, பொறுமை, இரக்கம், தயவு, தன்னலம் துறப்பது, மகிழ்ச்சி, நல் எண்ணம், நேசம் போன்றவைகள் ஆகும். இவற்றை கற்க விரும்புபவன் தனதாக்கி கொள்ள விரும்புபவன் அவற்றை செயலாக்க வேண்டும், வேறு வழி கிடையாது.

பொய்யும் வஞ்சகமும் ஆன்மீக அறியாமையின் தாழ்ந்த நிலையாகும். அவற்றை மேற்கொள்பவனுக்கு ஆண்மீக ஒளி என்பது கிடைக்காது, அவை சுயநலமும் வெறுப்பும் ஈன்றெடுத்த குட்டிகளாகும்.

புறங்கூறுவது என்பது பொய்யுக்கு உறவு தான் என்றாலும், அது பொய்யை விட நுட்பமாக செயல்படுகிறது. வழக்கமாக ஒரு நியாயமான கோபத்துடன் தொடர்பு ஏற்படுத்தி கொள்கிறது. உண்மையை போன்ற தோற்றத்தை தருகின்றது. ஒரு பொய்யை துனிந்து கூற முற்படாதவர்கள் இந்த புறஞ்சொற்களை உண்மை என்று நம்பி திரும்ப செல்கிறார்கள். புறங்கூறுவதற்கு இரண்டு பக்கங்கள் உண்டு.முதலாவது ஒவ்வொருவருக்கும் மீண்டும் மீண்டும் உரைப்பதாகும், மற்றொன்று காது கொடுத்து கேட்டு செயல்படுவதாகும். செவி மடுத்து கேட்பவன் இல்லை என்றால் புறங்கூறுபவன் சக்தியை இழந்துவிடுகிறான். தீய வார்த்தைகள் தீயதை கேட்கும் செவிகளுக்குள் நுழையாமல் வெற்றிபெற முடியாது. எனவே புறங்கூறுபவனுக்கு செவி சாய்ப்பவன், அதனை நம்புபவன் எவருக்கு எதிராக புறங்கூற படுகிறதோ எவருடைய மதிப்பும் மரியாதையும் துடைத்து எறியபடுகிறதோ அவருக்கு எதிரானவன் ஆக தன்னை தயார்படுத்தி கொள்கிறான். அவனது நிலை என்பது புறங்கூறுபவனது நிலை, அவ்வார்த்தைகளை மீண்டும் மீண்டும் பரப்புகின்றவனது நிலை போன்றதே. புறங்கூறுபவன் முன் இருந்து செயல்படுபவன். அதைக் கேட்பவன் பின் இருந்த செயல்படுபவன். இருவரும் இந்த தீங்கில் சமபங்கு பெறுகிறார்கள்.

புறங்கூறல் என்பது பொதுவாக காணப்படும் குற்றமாகும், ஆனால் அது ஒரு கொடிய குற்றமாகும். அது அறியாமையில் பிறந்து கண் மூடி இருட்டில் நடக்கின்றது. அது பொதுவாக தவறாக புரிந்து கொள்வதிலிருந்து தொடங்குகிறது.ஒருவன் தாழ்வாக நடத்தப்பட்டுள்ளதாக உணர்கிறான், கோபமும் வெறுப்பும் கொண்டு தன் நண்பர்களிடம் ஆறாத துயராகக் கொட்டித் தீர்க்கிறான். காயம்பட்டதாக கருதுகின்ற காரணத்தால் தனக்கு இழைக்கப்பட்டதாக கருதும் அநீதி செயலை மிகைப்படுத்தி கூறுகிறான். அதைக் கேட்பவனும் மற்றவனது நிலைமையை புரிந்து கொள்ள சந்தர்பத்தை வழங்காமல் அந்த கோபமான வார்த்தைகளை முழுதாக ஏற்று அந்த செய்தியை பலருக்கும் பரப்புகிறான். அவ்வாறு, செய்யும் போது அந்த செய்தி தன்னாலேயே கண், காது மூக்கை என பெற்று கொள்ளும் .ஒரு பொய்யான செய்தி வேகமாக பரவுகிறது.

புறங்கூறுவது என்பது ஒரு சிறிய விஷயமாக கருதப்படுவது தான் துன்பத்தையும் மனவுறுத்தலையும் ஏற்படுத்துவதற்கு காரணமாகும். ஒன்றை தவறு என்று தெரிந்தால் அதை செய்ய மறுப்பவர்கள் கூட இந்த வலையில் தங்களை அறியாமல் விழுந்து விடுகிறார்கள். அன்று வரை மதிப்பு கொண்டிருந்த ஒருவருக்கு எதிராக தங்களை மாற்றுவதற்கு பிறருக்கு அனுமுதி வழங்குகிறார்கள். அவதூறு பரப்புவதன் நோக்கம் இது தான். உண்மையை விரும்பும் , வாய்மையை பின்பற்றுபவனிடம் இந்த அவதூறு அதன் பாதிப்பை ஏற்படுத்த முடியாது. அவதூறு செய்திகளை கேட்டு நம்புவதில் அதை பரப்புவதில் ஆர்வம் கொண்டவன், தன்னை பற்றிய ஒரு அவதூறு செய்தியை கேட்க நேர்ந்தால் மனம் கொதிப்படைவான். தூக்கத்தை இழந்து மன நிம்மதியை இழந்து தவிப்பான், தன் துன்பத்திற்கு தன்னைப்பற்றி அவதூறை பரப்பும் மற்றவன் தான் காரணம் என்று நினைக்கிறான். மற்றவர்களை பற்றிய அவJhறில் ஆர்வம் கொண்டு உடனே நம்பி அதை பரப்பும் தன்னுடைய மனம் தான் அந்த துன்பத்திற்கு காரணம் என்கிற உண்மையை அவன் அறியவில்லை. உள்ளத் தூய்மையும் வாய்மையும் நிறைந்த ஒருவன் அவதூறு வார்த்தைகளின் தோற்றத்தை கூட தன்னுள் அனுமதிக்காதவன் தன்னை பற்றிய அவதூறு செய்திகளினால் எந்த விதமான பாதிப்பிற்கோ மனகலக்கத்திற்கோ ஆளாக மாட்டான். அவன் ஒருமை நிலையை எவரும் கைவைத்து சிதறடிக்க முடியாது. உள்ளத்தில் கலக்கத்தை ஏற்படுத்த முடியாது, தன்னை பற்றிய அவதூறு செய்திகளை நம்பியவர்கள் மனதில் சில காலத்திற்கு மதிப்பை இழந்து உள்ளான் என்பது உண்மை தான் என்றாலும் பிறரது தீய செயல்கள் ஒருவனை கறைபடுத்த முடியாது, அவனது தீய செயல்களே அவனது களங்கத்திற்கு காரணம். தவறாக எடுத்துரைக்கப்படுவது தவறாக புரிந்து கொள்ளப்படுவது போன்றவற்றால் உள்ள தூய்மை உடையவன் மனச்சஞ்சலத்திற்கோ பழிவாங்கும் உணர்ச்சிக்கோ ஆளாக மாட்டான். அவன் தூக்கத்தை கெடுக்க முடியாது. மன நிம்மதியை பறிக்க முடியாது.

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு

தானஞ்செய் வாரின் தலை – 295

வாய்மை என்பது உள்ளத்தூய்மை, நிம்மதியான, முறையான வாழ்வுக்கு தொடக்கமாகும். வாழ்வில் களங்கமின்றி வாழ விரும்புபவன், உலகின் வேதனைகளை துன்பங்களை குறைக்க விரும்புபவன் பொய்யையும் புறங்கூறுவதையும் எண்ணத்தாலும் வார்த்தையாலும் அறவே கைவிடட்டும் .பாதி உண்மை என்பது, பொய் புறங்கூறுதலையும் விட மிக ஆபத்தானது. அவன் மிக எச்சரிக்கையாய் இருக்கட்டும். அவதூறு செய்திகளை கேட்பதிலிருந்து விலகி அதில் பங்கு பெறாமல் இருக்கட்டும். அவதூறு பரப்புவனிடமும் அவன் இரக்கம் கொள்ளட்டும் காரணம் தன்னுடைய நிம்மதியை பறிக்க போகிற துன்ப குழியில் தள்ளப்போகிற ஒரு சங்கிலியை பிடித்து கொண்டுள்ளான். பொய் கூறுபவனுக்கு உண்மையின் இன்பம் புரியது, புறங்கூறுபவனுக்கு நிம்மதியின் வாசல் திறக்காது.

ஒருவன் கூறும் வார்த்தைகளால் அவனது ஆன்மீக நிலை அறிவிக்கப்படுகிறது. அவனுடைய உண்மையான வார்த்தைகளாலே அவன் எடைப் போடப்படுகிறான். கிறிஸ்துவின் வார்த்தை ‘உங்கள் வார்த்தைகளால் நீங்கள் விடுவிக்கப்படுகிறீர்கள். உங்கள் வார்த்தைகளால் கண்டனம் செய்யப்படுகிறீர்கள்’.

5


5. நடுநிலை தவறாமை


நடு நிலைமையோடு இருப்பது மன நிம்மதியோடு இருப்பதாகும் . நடு நிலைமை தவறுபவன் மன நிம்மதியை தவற விடுவான் .

விவேகமும் ஞானமும் நிறைந்தவன் சமநிலையில் வாழ்கிறான் . மனதிற்குள் ஒரு அபிப்ராயத்தை காழ்புணர்ச்சியை பதிவு செய்து வைத்து கொள்ளாமல் நிதானமான மனத்தோடு எல்லாவற்றையும் சந்திக்கின்றான் . உணர்ச்சி வேகத்தை விலக்கி ஒரு தலை சார்பாக வாழாமல் தன் மன நிம்மதியை இழக்காமல் உலகோடு அமைதியாக வாழ்கிறான் . எவர் பக்கமும் சாயாமல் தன்னையும் தற்காத்து கொள்ளாமல் எல்லோருக்கும் தன் மனதில் இரக்கத்தை வழங்குகிறான் .

ஒரு தலைபட்சமாக வாழ்பவன் தன்னுடைய கருத்து தான் சரி என்று உறுதியாக இருக்கிறான் . தன் கருத்திற்கு முரண்படும் கருத்து தவறான கருத்து அந்த கருத்தில் எந்தவித நியாயமோ நன்மையோ இருப்பதாக அவனால் நினைக்க முடியாது . எப்பொழுதும் தற்காத்து கொள்ளுதல் எதிர்த்தாக்குதல் என்ற வண்ணம் வாழ்கிறான் . அமைதி , நடுநிலைமை போன்றவற்றின் அறிவை அவன் பெறவில்லை .

நடுவு நிலைமை கொண்டவன் தன் எண்ண ஓட்டங்களை உற்று கவனித்து வாழ்கிறான் . வெறியோ காழ்ப்புணர்ச்சியோ அவைகளின் சுவடை கண்டால் கூட அடுத்த கனமே அவற்றை துடைத்து எறிகிறான் . இவ்வாறு செய்து பிறர் மிது தன் இரக்கத்தை வளர்த்து கொள்கிறான் அவர்களது சூழ்நிலையை , குறிப்பிட்ட மன நிலையை புரிந்து கொள்கிறான் . அவர்களை கண்டிப்பதிலும் நிந்திப்பதிலும் உள்ள பயனற்ற தன்மையை விளங்கி கொள்கிறான் . இவ்வாறு அவனது இதயத்தில் ஒரு பரந்த நல்லெண்ணம் உருவாகின்றனது . அது ஒரு எல்லைக்கு உட்பட்டது அல்ல , துன்பத்தில் உழலும் எல்லா உயிர்களுக்கும் அங்கே இடமிருக்கும் .

ஒருவன் வெறியோ காழ்புணர்ச்சியோ கொள்ளும்போது ஆன்மீக பார்வையை இழக்கின்றான் . அவன் கண்களுக்கு அவனிடத்தில் எந்த குறையையும் காணமுடியாது . மற்றவர்கள் மீது குறையை தவிர வேறு எதையும் காண முடியாது . தன்னுள் குழப்பம் கொண்டு மற்றவனை புரிந்து கொள்ள முடியாத காரணத்தால் அவர்களை கண்டிப்பதே சரி என்று எண்ணுகிறான் . இவ்வாறு மாற்று கருத்து உடையவர்கள் மேல் அவனது இதயத்தில் ஒரு இருண்ட எண்ணம் வளர்கிறது .

பதிலுக்கு அவர்களும் அவனை கண்டிக்கிறார்கள் , மற்றவர்களிடமிருந்து பிரிந்து தானே உருவாக்கிய ஒரு குறுகிய கூட்டுக்குள் தன்னை அடைத்து கொள்கிறான் .

நடு நிலைமை உடையவனது நாட்கள் இனிமையாக , நிம்மதியாக கழிகின்றன . பல வித நன்மையும் வளமும் வளர்கின்றன . ஆன்ம ஞானம் வழிகாட்ட – பகை , துக்கம் , துன்பம் ஆகியவற்றிற்கு இட்டு செல்லும் வழியை விலக்கி அன்பு , நிம்மதி , மகிழ்ச்சிக்கு இட்டு செல்லும் வழியில் செல்கிறான் . வாழ்வின் நிகழ்ச்சிகள் அவனை சஞ்சலப்படுத்துவது இல்லை , மனிதகுலம் பொதுவாக வருந்தும் விஷயங்களுக்கும் அவன் வருந்துவது இல்லை . அவை இயற்கையின் விதிகள் என்று ஏற்கிறான் . வெற்றியால் துள்ளி குதிப்பதும் இல்லை தோல்வியால் துவண்டு விடுவதும் இல்லை . சுயநல ஆசைகளுக்கு இடம் கொடுக்காமல் வருத்தத்திற்கு ஆளாகாமல் இருக்கின்றான் . வீன் எதிர்ப்புகளை ஏற்படுத்திகொள்ளாமல் ஏமாற்றத்திற்கு ஆளாகாமல் இருக்கிறான் . வாழ்வில் நிகழும் அனைத்திற்கும் உரிய இடம் வழங்குகிறான் .

போற்றுதலுக்குரிய தெய்வீகமான இந்த நடுவு நிலைமை எவ்வாறு அடையப்படுகிறது ? தன் தாழ்வு நிலைகளை கடந்து வருவதில் , தன் உள்ளத்தை தூய்மை படுத்தி கொள்வதில் . உள்ளத்தை தூய்மை படுத்தும் போது சீர்தூக்கி பார்க்கும் தன்மை ஏற்படுகிறது .

சமன் செய்து சீர்தூக்குங் கோல் போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க்கு அணி – 118.

இந்த சீர்தூக்கி பார்க்கும் தன்மை நடுவுநிலைமையை ஏற்படுத்துகிறது . நடுவு நிலைமை நிம்மதியை வழங்குகிறது . உள்ளத்தில் களங்கம் கொண்டவன் கலக்கமுற்றவன் உணர்ச்சி அலையில் கொந்தளிக்கிறான் . உள்ளத்தில் களங்கமற்றவன் அமைதியான துறைமுகத்தில் இளைபாறுகிறான் . முட்டாள் தனக்கு ஒரு கருத்து இருக்கிறது என்கிறான் . புத்திசாலி தன் வேலையை பார்த்தவாறு செல்கிறான் .

6


6. நல் விளைவுகள்


வாழ்வின் பெரும்பாலான விஷயங்களை நாம் விரும்பி தேர்ந்தெடுக்கவில்லை- தேர்ந்தெடுக்கவில்லை என்பதால் அவை நம்மை வந்து அடைவதற்கு நம்முள் எந்த காரணமும் இல்லை- அவை தம்பாட்டிற்்கு வந்துள்ளன, என்று கொள்கின்றனர் .சிலரை அதிர்ஷ்டக்காரன் என்றும் வேறு சிலரை துரதரிஷ்டகாரன் என்றும் அழைக்கின்றனர். பெற்றுக் கொள்வதற்கு உரிமையும் தகுதியும் இல்லாமல் ஒன்றை பெற்று கொண்டுள்ளதாக கருதப்படுகின்றனர். வாழ்வை ஆழமாக ஆராய்ந்து நோக்கினால் காரணமின்றி எதுவும் நடைபெறுவதில்லை என்று விளங்கி கொள்ளலாம். எங்கே ஒரு வினை ஏற்படுகிறதோ அங்கே ஒரு விளைவு ஏற்படும். ஒரு காரணம் இருந்தால் அதற்கேற்ற காரியம் நடைபெறும். இது இவ்வாறு இருக்க, நம்மை பாதிக்கும் ஒவ்வொன்றுக்கும் நம்முள் தகுந்த காரணம் இருக்க வேண்டும். ஒரு வார்த்தையில் கூற வேண்டும் என்றால் தற்செயலாக நடக்கும் செயல்களுக்கு கூட நம் எண்ணங்களும் செயல்களும் காரணம் ஆகும். மேலோட்டமாக பார்த்தால் இது ஏற்று கொள்ளும்படியோ புரிந்தகொள்ளும்படியோ இல்லை. சடப்பொருள்களின் மேல் செயல்படும் அடிப்படை விதிகளும் இயற்பியல் விதிகளும் கூடத்தான் மேலோட்டமாக பார்த்தால் புரிந்து கொள்ளும்படி இல்லை.

ஒரு அணுவிற்கும் மற்றொரு அணுவிற்கும் உள்ள தொடர்பை உறுதி செய்ய முறையான ஆராய்ச்சியும் சோதனைகளும் தேவைப்படுகின்றன. அது போலவே நடைபெறும் செயல்களுக்கும் எண்ணங்களுக்கும் இடையில் ஒரு தவிர்க்க முடியாத தொடர்பை உணர்ந்து கொள்வது ஆகும். இந்த தொடர்பை குறித்த ஞானத்தை பெற்றவன் நற்செயல்களையே புரிகிறான்.

எதை விதைத்தோமா அதையே அறுவடை செய்கிறோம். நம்மை வந்து அடைந்தவைகளை நாம் தேர்ந்தெடுக்கவில்லை என்றாலும் நாம் நம்முள்ளே விதைத்த காரணங்களினால் அவை வந்து அடைந்துள்ளன. குடி போதையில் தள்ளாடுபவன் அந்த தள்ளாட்டத்தை தடுமாற்றத்தை தேர்ந்து எடுக்கவில்லை. அவன் குடித்த காரணத்தின் விளைவாக அவன் தள்ளாடுகிறான், தடுமாறுகிறான். இந்த விஷயத்தில் இந்த தொடர்பு தெளிவாக தெரிகின்றது. மற்ற விஷயங்களில் அந்த தொடர்பு தெளிவாகத் தெரிவது இல்லை. ஆனால் அந்த தொடர்பு உண்மை தான். நம்முடைய துக்கத்திற்கும், மகிழச்சிக்கும் காரணம் நம்முள்ளேயே இருக்கின்றன.

உள்மன எண்ணங்களை சீரமைத்து கொண்டால் வெளி உலக நிகழ்ச்சிகள் துன்பத்தை தர முடியாது.உள்ளத்தை தூய்மை ஆக வைத்து கொள்ள மற்றவை யாவும் நன்றாகவே தொடரும்.

உங்கள் உள்ளேயே உங்கள் விடியலை விடுதலையை தேட வேண்டும்.

ஒவ்வொருவரும் தன் சிறைச்சாலையை தானே அமைத்து கொள்கிறான்.

தன் மாளிகையையும் தானே அமைத்து கொள்கிறான்.

வாழும் உயிர்கள் அனைத்தும் அளவிட முடியாத சக்தியை பெற்றுள்ளன.

அவை செயல்பட மகிழ்ச்சியோ துக்கமோ ஏற்படுகின்றது.

நம் வாழ்வு நல்லதோ கெட்டதோ, அடிமைத் தனத்தில் சிக்கி உழல்கின்றதோ அல்லது சுதந்திர பறவையாய் சுற்றி திரிகின்றதோ அதற்கு காரணம் எண்ணங்களே. எண்ணங்களிலிருந்து செயல்கள் புறப்படுகின்றன. செயல்களிலிருந்து விளைவுகள் ஏற்படுகின்றன. ஒரு திருடனைப் போல,நல்ல விளைவுகளை நாம் திருடி அனுபவிக்க முடியாது, ஆனால் அந்த விளைவை ஏற்படுத்தும் காரணங்களை செயல்களை நம்முள் தொடங்கலாம்.

பணம் வேண்டும், மகிழ்ச்சி வேண்டும், தெளிவான அறிவு வேண்டும் என்று பெரும் முயற்சி செய்கிறார்கள். ஆனால் பெறமுடியாமல் தவிக்கிறார்கள். ஆனால் இவற்றுக்காக முயற்சி செய்யாதவர்களை அவை தேடி வருவதையும் காண்கிறார்கள். இதற்கு காரணம் தங்கள் ஆசைகளும் முயற்சிகளும் நிறைவேற முடியாத அளவிற்கு பல தடைகளை விதைத்துள்ளார்கள்.

எண்ணங்களும் செயல்களும், காரணங்களும் (அல்லது காரணமின்மையும்) விளைவுகளும் வாழ்வில் நெசவு ஆடையை போல நெய்யப்பட்டுள்ளன. அறநெறிகளை, மனதில் பதித்து, சிறந்த வழிமுறைகளை பின்பற்றி நற்செயல்கள் புரிபவன் நல்ல விளைவுகளை எதிர்பார்த்து காத்திருக்க தேவையில்லை, அவை அவனைத் தேடி வரும். தான் செய்த செயலின் பலனை அவன் அறுவடை செய்வான்.

வினை விதை்தவன் வினை அனுப்பான். தினை விதைத்தவன் தினை அறுப்பான், ஒன்றை விதைத்து மற்றொன்றை அறுவடை செய்ய முடியாது.

இது எளிய பழமொழி தான் என்றாலும் மக்கள் இதை தாமதமாகத்தான் புரிந்து கொள்கிறார்கள். தீர்க்கதரிசி ஒருவர் “இருட்டின் குழந்தைகள் வெளிச்சத்தின் குழந்தைகளை விட பகல் பொழுதில் நன்றாக செயல்படுவார்கள்” என்று கூறியுள்ளனர். விதைக்காமல், நடாமல் விடப்பட்ட இடத்திற்கு யார் அறுவடைக்கு வருவார்கள்? புதரை விதைத்து கோதுமையை அறுவடை செய்ய யார் எதிர்ப்பார்பார்கள், அது முடியாத போது, கண்ணீர் விட்டு குறைப்பட்டு கொள்வார்களா? ஆனால் மக்கள் இதைத்தான் தங்கள் எண்ணங்களாலும், செயல்களாலும் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

தீயதை விதைத்து நல்லதை எதிர்பார்க்கிறார்கள். அந்த கசப்பான அறுவடை காலம் வரும்போது நம்பிக்கை இழந்து தவிக்கிறார்கள். அவர்கள் அனுபவிக்கும் துன்பத்திற்கு மற்றவர்களது செயல்களை குற்றம் சொல்கிறார்கள். தங்களது எண்ணங்களிலும் செயல்களிலும் அவற்றிற்கான காரணம் மறைந்து இருப்பதற்கு வாய்ப்பு இருக்குமோ என்று கூட ஆராய மறுக்கிறார்கள். வாழ்வின் அடிப்படை விதிகளை தேடிக் கொண்டிருக்கும் வெளிச்சத்தின் குழந்தைகள் – தங்களை பக்குவப்படுத்தி கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வதற்கு விதையும் அறுவடையும் வேறாகாது என்ற விதியை உணர்ந்து, தங்கள் எண்ணங்கள், சொற்கள், செயல்கள் என்னும் காரணங்களுக்கு ஏற்ப விளைவுகள் அமையும் என்று பயிற்சி செய்ய வேண்டும். தோட்டக்காரர்கள் அது ஏன் அவ்வாறு என்று கேள்வி கேட்பதில்லை அதன் உண்மையை உணர்ந்து நட்டு பயன் பெறுகிறார்கள்.

தங்கள் உள் உணர்வாய் அறிந்த ஞானத்தால் தோட்டக்காரர்கள் தங்கள் தோட்டங்களை பராமரிப்பது போல மக்கள் தங்கள் மனம் என்னும் தோட்டத்தை பராமரிக்கட்டும், அவர்கள் விதைக்கும் விதையை குறித்து எந்த விதமான சந்தேகமும் அவர்களுக்கு இருக்கக்கூடாது. பின்பு நம்பிக்கையுடன் செயல் ஆற்றினால் அவர்களது அறுவடை எல்லோருக்குமான மகிழ்ச்சியுடன் பூத்து குலுங்கும். பொருள் சார்ந்த உலகத்தில் செயல்படும் விதிகள் தான் எண்ணம் சார்ந்த உலகிலும் செயல்படுFpன்றன.

சிறந்த அறநெறிகள் என்னும் காரணத்தை பின்பற்றினால் தீய விளைவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை, சிறந்த வழிமுறைகளை பின் பற்றினால் நம் வாழ்க்கை என்னும் ஆடையில் சிக்கல் ஏற்படுத்தும் எந்த நூலும் நுழைய முடியாது. உள்ள உறுதி என்னும் கட்டிடத்தில் எந்த உறுதியற்ற கல்லும் இடம் பிடித்து ஆபத்தை ஏற்படுத்த முடியாது, நற்செயல்களை செய்தால் நல் விளைவுகள் பின் தொடரும். எப்படி தினையை விதைத்து சோளத்தை அறுவடை செய்ய முடியாதோ அது போல நன்மையை விதைத்தால் தீமையை அறுவடை செய்வதற்கு வாய்ப்பு ஏற்படுமோ என்று அஞ்சத்தேவை இல்லை.

இந்த நெறிகளின் அடிப்படையில் வாழ்வை ஒருவன் அமைத்து கொண்டால் அவன் ஒரு உயர்ந்த உள்ளுணர்வையும் சமநிலையையும் அடைவான். நிரந்தரமான மகிழ்ச்சியில் வாழ்வான், அவனது முயற்சிகள் தகுந்த காலத்தில் கனிந்து பயனைத்தரும்.அவன் வாழ்வால் பல வித நன்மைகள் மலரும். அவன் கோடீஸ்வரனாக ஆகாமல் இருக்கலாம் – அவனுக்கு உண்மையில் அது போன்ற ஆசைகள் எதுவும் இருக்காது. வாழ்வில் நிம்மதி என்னும் பரிசை பெறுவான் .அவன் கட்டளை கேட்டு வெற்றி அவனைத் தேடி வர காத்திருக்கும்.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை III