போதி நிலா
சிறுகதைகள்
Backபோதி நிலா
மாதவராஜ்
Contents
1. போதி நிலா
2. ஒரு உலகம் ஒரு வீடு
3. உயிரோட்டம்
4. ஒரு மாவீரனின் கதை
5. இருட்டு வெளிச்சம்
6. வெயில்
7. ஞானப்பால்
8. கிடா நாற்றம்
9. இன்று வந்தவள்
10. இன்னும் கிளிகள்
11. பொய்யாய்... பழங்கதையாய்..
12. புகை நடுவினிலே
13. “ம்மா.... ம்மா”
14. இராஜ குமாரன்
15. மண்குடம்
Free Tamil Ebooks - எங்களைப் பற்றி
1
போதி நிலா
உலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்… வாருங்கள்.
மாதவராஜ்
மின்னஞ்சல்: jothi.mraj@gmail.com
வலைப்பக்கம்: http://mathavaraj.blogspot.in/
அட்டைப்படம் – ப்ரியமுடன் வசந்த் – vasanth1717@gmail.com
அட்டைப்பட மூலம் – http://pixabay.com/en/moon-golden-crescent-crescent-moon-16467/?oq=moon
மின்னூலாக்கம் – ப்ரியா – priyacst@gmail.com
1
போதி நிலா
ஊரிலிருந்து இன்று அப்பா வந்திருக்காவிட்டல் இரவுச் சாப்பாட்டிற்குப் பிறகு ஹாலில் உட்கார்ந்து டி.வி பார்த்துக்கொண்டு ஆஷ்ட்ரேயில் சாம்பல் தட்டியபடிதான் சிகரெட் குடித்திருப்பேன். கதவைச் சாத்திவிட்டு இரண்டாவது தளத்தின் வராந்தாவில் நின்ற அந்த சமயம் பார்த்து எதிர்த்த போர்ஷன் அறுவை மனுஷன் அந்த ராமானுஜம், “வாங்க…கீழே போகலாம்” என்று கூப்பிட்டுத் தொலைத்திருக்காவிட்டல் நிச்சயம் கீழேதான் போயிருப்பேன். மூன்றாவது தளத்துக்கும் மேலே இருந்த இந்த மொட்டை மாடிக்கு வந்திருக்க மாட்டேன். இப்படி ஒரு அபூர்வகணம் ஏற்பட்டும் இருக்காது. அதற்கப்புறம் எனது மொத்த வாழ்க்கையிலுமே நிகழ்ந்திருக்குமா என்பது கூட சந்தேகம்தான்.
டியூப்லைட் பிரகாசத்திலிருந்து வந்ததால் மொட்டை மாடி இருட்டாய் இருந்தது. தலைமுடியெல்லாம் பறக்க நதியின் பிரவாகமாய் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. விரிந்து கிடந்த தனிமையின் மூச்சாய் மெல்லிய இரைச்சல் காதோரங்களில் கேட்க, கண்ணை மூடிக்கொண்டு அப்படியே கரைந்து போகலாம் போலிருந்தது. அடியெடுத்து வைக்காமல் ஒரே இடத்தில் நின்றேன்.
“பழகிற வரைக்கும் எதுவும் இருட்டுதானப்பா”
தண்ணீருக்குள் மூழ்கிக் கிடக்கும்போது கரையிலிருந்து கத்துகிற குரல்கள் இப்படித்தான் கேட்கும். சுற்றியும் பார்த்தேன். யாரும் தெரியவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை உடைந்து சிதறிப் பொடிபொடியாகக் கிடந்த வெளிச்சங்களுக்கு ஊடே நகரம் பிரம்மாண்டமாய் உறைந்து போயிருந்தது. தீப்பெட்டி உரசலில் பற்றிய நெருப்பு சடசடத்து அடித்தது. சிகரெட் பற்றவைத்துக் கொண்டேன்.
அண்ணாந்து புகைவிட்டபோது வெளிறிய இருட்டு ஆகாயத்தில் அரைநிலா தனி ஒளித்துண்டாய் உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தது. இந்த நகரத்தின் மேலேயும் நிலா இருக்கிறது என்பது ஒரு ஆச்சரிய உணர்வையே எனக்குத் தந்தது. அதிசயம் போல பார்த்தேன். எல்லைகளற்ற பெருவெளியில் அசைவது தெரியாத நகர்தலோடு நிலா உயிர்ப்புடன் இருந்தது. இத்தனை நாளாய் இது எங்கே போயிற்று?
“நான் இங்கேதான் இருக்கிறேன். நீ எங்கே போனாயப்பா?”
கொஞ்ச நேரத்துக்கு முன் கேட்ட அதே குரல்தான்! நிலாதான் பேசியதா? இந்த விசித்திரத்தை என்னவென்று அறிவதற்குப் பதிலாக அடிபட்ட வலியில் கவனம் போனது. எல்.ஐ.சி ஏஜண்டாக வேலை தொடங்கி சென்னைக்கு வந்து பதினான்கு வருசங்கள் ஆகிறது ஏப்ரல் வந்தால். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதைத் தவிர வேறேதுவும் என்னிடம் இல்லாமலிருந்தது. காலில் சக்கரம் கொண்டு அலைந்தேன். கொடூரமான தேடல். பூவாசம் கொண்ட சந்திரா அறுபது பவுன் நகையோடு வந்தாள். சுதிர், கவீஷ் என உயிர் ஊற்றுக்கள் கிடைத்தன. டெவலப்மெண்ட் ஆபிஸர் பிரமோஷன் கிடைத்தது. இந்த ஃபிளாட்டில் ஒரு போர்ஷன் கிடைத்தது. பையன்களுக்கு டான்பாஸ்கோவில் இடம் கிடைத்தது. இன்றைக்கு டி.வி, வாஷிங்மெஷின், ஃப்ரிட்ஜ், ஹிரோஹோண்டா எல்லாம் நனவாகிவிட்டன. இன்னும் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன். அருமையான நிலாவைத்தான் பார்க்கவே முடியவில்லை. ஊரிலிருந்து முதன் முதலாய் புறப்பட்டு வந்த அன்றைக்கு டிரெய்னில் ஜன்னலோரத்தில் இரவு நெடுநேரம் கூடவே வந்து ஆறுதல் சொன்ன நிலாவைத்தான் கடைசியாகப் பார்த்த நினைவிருக்கிறது.
“நான் என்ன பாலிஸியா எடுக்கப் போறேன்..நீ எதற்கப்பா என்னை பார்க்கப் போகிறாய்?”
நேர்கொண்டு பார்க்க முடியாதபடிக்கு நிலவின் ஒளி கண்ணை கூசச் செய்தது. ஒரே மனித முகத்தை எத்தனை தடவை போய்ப் பார்த்திருக்கிறேன். புதுசாக வருகிற ஏஜண்டுகளிடம் நான் பட்ட கஷ்டத்தையெல்லாம் பெருமையோடு சொல்லிக்கொண்டு இருக்கிறேன். அவர்களும் அது மாதிரியே அலைந்து கொண்டிருக்கிறார்கள். கனவுகளிலும் கமிஷன் வரும். பத்து வருடங்களுக்கு முன்னால் ஒரு தடவை தேவி தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது எனக்குள் ஒடிய நினைப்பை நிலாவிடம் சொல்லத்தான் வேண்டும். புழுக்கத்தில் துவண்டு ஈரம் உறிஞ்சப்பட்டவர்களாய் அந்த மனிதர்கள் பெருங்கூட்டமாய் நடந்து கொண்டிருந்தார்கள். இவர்கள் ஆளுக்கொரு பாலிஸி என்னிடம் எடுத்துக்கொண்டால் எப்படி இருக்கும் என்றுதான் தோன்றியது.
கால்குலேட்டரில் பிரிமியத்தை, கமிஷனை, வீட்டுச்செலவை கணக்குப்பார்த்து கணக்குப்பார்த்து, எண்களின் உருவமாய் மாறிவிட்டது போல இந்த நேரத்தில் தெரிகிறது. மூளையை விரல் நுனிக்கு இறக்கி வைத்து விட்டது எவ்வளவு துரதிர்ஷ்டவசமானது. யாரோடு தொடர்பு வைத்தால் பிரயோஜனம் உண்டு என்று கணக்குப் பார்க்கச் சொல்லுகிறது வாழ்க்கை. மனித உறவுகள்கூட ஷேர்பிஸினஸ் போலாகிவிட்டது.
அதுதான் இன்பம் சித்தியை அதற்கப்புறம் போய் பார்க்கவேயில்லை. ஊரில் பக்கத்து வீட்டில் இருந்தாள். கல்யாணமாகி கிருஷ்ணாம்பேட்டையில் இருந்தாள். ஒரே ஒரு தடவை போய் பார்த்தேன் .சமையலறையோடு சேர்ந்து அந்த இன்னொரு சின்ன ரூமில் மூன்று குழந்தைகளோடு குடும்பம் கசகசவென்றிருந்தது. ஊரில் இருக்கும்போது அவளிடம் இருந்த பாசம் அப்படியே இருந்தது . பார்த்ததும், “ஏந்தங்கம்…”முகமெல்லாம் மலர்ந்து ஓடிவந்து கையை பிடித்துக் கொண்டாள். உடல் மட்டும் தேய்ந்திருந்தது. குழந்தைகள் நான் கொண்டு போயிருந்த பிஸ்கட் பாக்கெட்டையே பார்த்தபடி இருந்தன. இன்பம் சித்தி எங்கோ ஓடிப்போய் கலர் வாங்கி வந்தாள். “அம்மா.. எனக்கு..?” ஒருவன் அழுதான். பாதியைக் கஷ்டப்பட்டு குடித்துவிட்டு பாட்டிலை அவனிடம் கொடுத்தேன். மற்ற இரண்டு குழந்தைகளும் அவனிடம் பாய்ந்து சென்று சண்டை போட்டன. சித்தி அதை கவனிக்காத மாதிரி என்னிடம் பழக்கம் விட்டுக் கொண்டிருந்தாள். அதன்பிறகு நான் அந்தப் பக்கம் எட்டிக்கூட பார்த்ததில்லை. உண்மையில் இதுவரை மறந்தே போயிருந்தேன்.
கொஞ்சம் கொஞ்சமாய் மொட்டைமாடி துலங்க ஆரம்பித்திருந்தது. சுற்றுப்புறச் சுவர்கள் பிடிபட, இடம் விஸ்தாரமாக இருப்பதை உணர்ந்தேன். மெல்ல ஒரு பக்கம் நடந்து போய் கீழே பார்த்தேன். காற்றில் அசைந்தபடி இருந்த அசோகா மரங்களுக்கும், தென்னை மரங்களுக்கும் வெகு கீழே நியான் விளக்குகள் வெளிச்சத்தில் தெரு அமைதியாய் இருந்தது. இரண்டு பேர் சின்ன உருவங்களாக நடந்து போக ஸ்கூட்டர் ஒன்று புகை கக்கி அவர்களைக் கடந்து போனது.
என்றைக்கும் இல்லாத திருநாளாக இன்று ஒரு தனிமையும், ஏகாந்தமும் கிடைத்திருப்பதாக உண்ர்ந்தேன். பைத்தியத்தில் இருந்து தெளிந்துவிட்ட மாதிரி நிதானம் வந்திருந்தது. கிராமத்து வீட்டின் முற்றத்து இரவுகள் பாலொளி வீசி வந்தன. அப்பா கொண்டு வராத ஊரின் வாசத்தை நிலா தருவித்திருந்தது. பொங்கல் சமயங்களில் மந்திரந்தாத்தா போட்டுத் தந்த வடத்தில் என்னை உட்கார வைத்து இன்பம் சித்தி ஆட்டினாள். புதுக்குளத்தின் நடுவில் அடர்ந்திருந்த சம்புகளில் தொங்கிகொண்டிருந்த தூக்கணாங்குருவிக் கூடுகளை பறித்து வந்தேன். தொலைதூரத்துக்கு அப்பால் போய்விட்ட ஊர், நிலாவுக்கு இந்த நேரத்திலுங்கூட தெரிந்தபடிதானே இருக்கும். நிலா சிரித்தது எனக்குப் புரிந்தது.
நிலாவுக்கு என்னைத் தெரியும். அப்பாவைத் தெரியும். தாத்தாவை தெரியும். தாத்தாவின் அப்பா, தாத்தாவின் தாத்தா என வழிவழியாய் எல்லோரையும் தெரியும். சரி. சுதிரையும், கவீஷையும் தெரியுமா? நிலா எங்கே பார்த்திருக்கப் போகிறது. ஸ்கூல் விட்டால் வீடு. வீடு விட்டால் ஸ்கூல். வீட்டில் புஸ்த்தகம், நோட்டு. அப்புறம் டி.வி தான் உலகம். உலகம் வீட்டிற்குள்ளேயே சுருங்கிப் போயிருக்கிறது.
இரண்டு வருசத்துக்கு முன்பு ஒரு தடவை இங்கு அம்மா வந்தபோது ரொம்ப வருத்தப்பட்டு விட்டாள். “சாயங்காலமானா புள்ளைங்க தெருவுல வெளையாடும் கண்டிருக்கு…இங்கே தெருவே மூளியாட்டம்லா இருக்கு..” சந்திராவோடு அப்போது நானும் சேர்ந்து அம்மாவைப் பார்த்து சிரித்திருக்கிறேன்.
நிலாவைப்பார்த்தால் குழந்தைகளுக்கு இப்போது என்ன தோன்றும் என்று தெரியவில்லை. எனக்கு பாட்டியின் ஞாபகம்தான் வரும். வெற்றிலை வாசமும் கதகதப்புமாக பாட்டியின் அரவணைப்பை உணர முடியும். நிலாவில்கூட ஒரு பாட்டி உட்கார்ந்து வடை சுட்டுக்கொண்டு இருப்பதாய் கதை சொல்லியிருக்கிறாள். மகாபாரதம், ராமாயணம் எல்லாம் சொல்வாள். தாத்தா வெள்ளைக்காரர்களை எதிர்த்து ஊருக்குள் போராட்டம் பண்ணியதையும், பாளையங்கோட்டையிலிருந்து மலபார் போலீஸ் வந்து தேரிக்குள் வைத்து தாத்தாவை பிடித்துப் போனதையும் கதைகதையாய் சொல்வாள். வெள்ளிப்பூண் போட்ட தாத்தாவின் கைத்தடி இன்னமும் ஊரில் இருக்கிறது. இந்த குழந்தைகளுக்கு அதைப் பற்றியெல்லாம் தெரியாது.
அப்பாவையே ஊரிலிருந்து வந்தபோது அடையாளம் தெரியாததாய் விழிக்கிறார்கள். நகரத்தின் சாயல் படிந்திருக்கும் இந்த வீட்டில் தன் கனவெல்லாம் நனவாகிப் போனதாய் அப்பா நிம்மதியாய் உட்கார்ந்து டி.வி பார்த்துக்கொண்டு இருக்கிறார்தான். குழந்தைகள் அவரோடு ஒட்டிகொள்ளாமல் இருப்பதில் உள்ளுக்குள் வருத்தமிருக்கிறது. அடிக்கடி தூக்கிக் கொஞ்சி பார்க்கிறார். எப்போது இறக்கிவிடுவார் என்று குழந்தைகள் முகம் சுளிக்கிறார்கள். யாரோ ஒரு அன்னியர் வீட்டுக்குள் பிரவேசித்துவிட்ட மாதிரி சந்திராவிடமே ஒட்டிக்கொண்டு திரிகின்றன. அப்பாவை பார்க்க பாவம்போல் இருக்கிறது. “அடிக்கடி நானும் இங்க வர்றதிலயா..?” என்னைப் பார்த்து சமாதனமாகிக் கொள்கிறார்.
கடைசியாக ஊருக்குப் போனது ஐந்து வருசத்துக்கு முன்னால். ஒரு நாள் இருப்பதற்குள்ளேயே சந்திரா முணுமுணுத்துவிட்டாள். பாத்ரூம் இல்லையென்று வருத்தப்படாள். குழந்தை எப்போதும் அழுது கொண்டே இருந்தது. புழுதி படிந்த சுதிரின் கால்களைப் பார்த்து “என்ன…ஊரோ..எழவோ..” என்றாள்.
சிகரெட் சுட்டது. கீழே போட்டு அணைத்தேன். ஒரு விசாகம் அன்றைக்கு ஊருக்கு வெளியே மணலில் உட்கார்ந்து சாலமன்தான் சிகரெட் பிடிக்கக் கற்றுக்கொடுத்தான். அப்போது பௌர்ணமி ஒளி நிறைந்திருந்தது. தூரத்து ரோட்டில் திருச்செந்தூர் கோவிலுக்குப் போகிற வில்வண்டிகளின் மணிச்சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தன. நண்பர்களில் முதன்முதலாய் ஊரைவிட்டு வெளியேறியவன் சாலமன்தான். திருச்சியில் பேங்க் வேலை கிடைத்துப் போனான். உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கு அங்குள்ள நண்பர்களோடு போய்விட்டு ‘உயரே இருக்கும்போது எல்லாமும் அழகாக இருக்கிறது’ என்று கடிதம் எழுதியிருந்தான். எபனேசரைப் பற்றி அதில் கேட்டிருந்தான். காலேஜுக்குப் போகும்போது சாலமன் எபனேசரைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பான். ‘தேனினும் இனிய ஏசுவின் நாமம் திவ்ய மதுரமாமே’ பாடல் புல்புல்தாராவில் வாசிக்கும்போது அவன் காதல் வயப்பட்டிருப்பது கிறங்கிப்போகும் அவன் கண்களில் தெரியும். இப்போது சாலமன் எங்கேயிருப்பான்?
நிலாவைப் பார்த்தேன். பூமியின் மனசாட்சியாக அது நகர்ந்து கொண்டிருந்தது. வாழ்வின் மென்மையான பிரதேசங்களை கிளறிவிட்டுக் கொண்டு ஒளி வீசியது. அதையே பார்த்தபடி நின்றிருந்தேன். சந்திராவின் குரல் கீழே கேட்டது. நடந்தேன். படி இறங்குமுன் திரும்பவும் நிலாவை பார்த்தேன். “போய் வருகிறேன்”
ஹாலில் சுதிரும், கவிசும் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். ஒருவன் சன் டி.வி என்றான். இன்னொருவன் ஸ்டார் டி.வி என்றான். அப்பா சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்.
வருகிற பௌர்ணமியன்று மறக்காமல் எல்லோரையும் அழைத்துக்கொண்டு மொட்டைமாடியில் போய் காற்றாட இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன். கட்டிலில் போய்ப் படுத்துக்கொண்டு கைகள் இரண்டையும் தலைக்கு அரண் கொடுத்தவாறு மேலே வெறித்துக் கொண்டிருந்தேன்.
உள்ளே வந்த சந்திரா என்னை கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு “என்னங்க..எதையோ பறி கொடுத்தமாரி இருக்கீங்க..” என்றாள்.
OOO OOO OOO
(இந்த சிறுகதை எழுதி பனிரெண்டு வருடங்களுக்கு மேலிருக்கும். இளையதள நண்பர்களுக்காக வெளியிடுகிறேன். மீண்டும் சிறுகதை எழுத தூண்டப்பட்டிருக்கிறேன்.)
2
ஒரு உலகம் ஒரு வீடு
உடலை நெளித்துக் கொண்டு எழுந்தான் இவன். டி.வியை பார்த்துக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை பொழுது போக்கியவனுக்கு அலுப்பாயிருந்தது. இருவரும் வெளியே கிளம்பத் தயாரானார்கள். அந்த சின்ன வீட்டிற்குள் அதுவரை ஒன்றாகவே அடைந்து இருந்தார்கள்.
இதுதான் போட வேண்டும் என்ற யோசனை இல்லாமல் இவன் சட்டை போடப் போனான்.”என்னங்க இது….நான் போட்டிருக்கிற ஸ்கை ப்ளு சேலைக்கு மேட்ச்சா டிரஸ் பண்ணுங்களேன்”
“ம்.. ஏங்கிட்டே எங்க ஸ்கை ப்ளுல சட்டை இருக்கு?”
“ஸ்கை ப்ளுன்னா ஸ்கை ப்ளுதான் போடணுமா..இதப் போடுங்க”
போட்டுக்கொண்டான். பக்கத்தில் வந்து நின்று எதிரே கண்ணாடியில் இவள் தங்கள் இருவரையும் சேர்ந்தாற்போல் பார்த்துக் கொண்டாள். விலகி ஸ்டிக்கர் பொட்டு வைத்துக்கொண்டே “இந்த லூஸ் ஃபிட்டிங்னுல்லாம் போட்றாங்களே… அதமாரி நீங்க தைக்கக் கூடாதா?”
தனது ரசனை குறித்த விமர்சனமாகவும், உலகநடப்பு குறித்த அறிவுரையாகவும் அது பட்டது. “லூஸுங்கதான் அந்த ஃபிட்டிங் போடும்” சட்டென்று சொன்னான்.
“கோபமா?”
“இல்லய”
“பொய் சொல்றிங்க..கோபப்படுறிங்க..” பக்கத்தில் வந்து இவன் கண்களை உற்றுப்பார்த்தாள்.
இவள் கண்களை பார்க்க முடியவில்லை. “இப்பத்தான் கோபத்தை உண்டு பண்ற…பேசாம விடு. பொறப்படுவோம்.”
சன் டி.வியில் கதாநாயகன் ஒருத்தன் கதாநாயகி ஒருத்தியின் பின்னால் ஒடி ஆடிக்கொண்டிருப்பதில் கவனம் செலுத்தினான்.
கொஞ்ச நேரம் இவனையே உற்றுப்பார்த்து விட்டு “யப்பா.. என்னமா கோபம் வருது ” என்று இவன் மூக்கை அழுத்திப் பிடித்து விட்டாள். வலித்தது. இதற்கும் கோபப்பட்டால் அசிங்கம் என்று அந்த எரிச்சலிலும் உண்ரமுடிந்தது. அதொன்றும் சுகானுபவமாக இல்லை என்பதையாவது இவளுக்கு காண்பித்துவிட வேண்டும் என்று மூக்கை தடவிக்கொண்டே முகம் சுளித்தான்.
“ஐயாவுக்கு இதெல்லாம் பிடிக்காது பாருங்க..” என்று கண்சிமிட்டி சிரித்தாள். அதில் தொனித்த அர்த்தத்தில் அவமானப்பட்டாள்.
“ஆமா..அதுக்காக எப்பப்பாத்தாலும் ஒருத்தர ஒருத்தர் கட்டிப்புடிச்சிட்டே அலையறதா…வெக்கமாயில்ல..?”
“இன்னா பாருங்க…நிதானமேயில்லாம பேசுறிங்க..”
“வாய மூடு. நீ அப்படி பேசினா..நா இப்பிடித்தான் பேசுவேன்..”
“எதுக்கு இப்ப கோபப்படுறிங்க..என்ன வேணும்னாலும் நீங்க பேசலாம். நா மட்டும் பேசாம இருக்கணுமாக்கும்..”
“ச்சே! இந்த பொம்பளைங்களே இப்பிடித்தாம்பா. அறிவே கிடையாது. கொஞ்சநேரம் சும்மாயிருக்க மாட்டாங்க. எதையாவது வளவளன்னு பேசிட்டேயிருக்கணும்.” கையிலிருந்த சீப்பை தூக்கி எறிந்தான்.
மாலையும் கழுத்துமாய் சுவரில் மாட்டியிருந்த இவர்களது கல்யாண போட்டாவில் பட்டு தெறித்தது.
டி.வியில் இப்போது இன்னொரு கதாநாயகியின் காலை இன்னொரு கதாநாயகன் முத்தமிட்டபடி காதல் செய்து கொண்டிருந்தான்.
“யப்பா…! லூஸ் ஃபிட்டிங்லாம் போட்டா இன்னும் கொஞ்சம் நல்லாயிருப்பீங்களேன்னு ஒரு வார்த்த சொல்லிட்டேம்பா. அதுக்குப் போயி இவ்வளவு ஆர்ப்பாட்டமா. நீங்கள்ளாம் வெளியே போய் நாலுபேர்ட்ட எப்படி பழகுறீங்களோ…ஆபிஸ்ல வேலை பாக்குறிங்களோ..தெரியல்ல”
“அடச் சீ…வாய மூடு. எனக்கு எல்லாம் தெரியும். இந்த ஃபேண்ட் சட்டைல நா நல்லாயில்லேங்குறதத்தான் நீ அப்படிச் சொன்ன…”
“கடவுளே…கடவுளே! எல்லாத்தயும் தப்பு தப்பா அர்த்தம் பண்ணிக்குறதே ஒங்க வழக்கமாப் போச்சு. கல்யாணமான நாள்ள இருந்து இப்பிடித்தான். மொதமொதலா ஒங்க துணியெல்லாம் துவைச்சுப் போட்டுட்டு நீங்க வந்து பாப்பீங்கன்னு காத்துட்டே இருந்தேன். சந்தோஷமா பாராட்டுவீங்கன்னு நெனைச்சேன். ஆனா அன்னிக்கு என்ன சொன்னீங்க தெரிமா..இது என்ன கறை? நல்லா தொவைக்கக்கூடாதான்னு சொன்னீங்க… எப்பிடி இருந்துச்சு தெரிமா எனக்கு. ஒங்க கண்ணுக்கு எதுவும் நல்லதாவே தெரியாதா?”
இப்படி ஒன்று இவளுக்குள் வதைத்துக் கொண்டிருக்கும் என்பது இவன் அறியாதது. கிட்டத்தட்ட அழுகிற மாதிரி ஆகியிருந்தாள். இழுத்து, இவள் தலையை மார்போடு மூச்சுமுட்ட அணைத்து வைத்து, தலையை வருடிக்கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றி மறைந்தது. அதையும் மீறி திமிறிக்கொண்டு ஒன்று எழுந்தது. எதாவது பதிலுக்குச் சொல் என்றது. இவளைவிட உயரம் போ என்றது.
“ஆமா..போலித்தனமாயிருந்தாதான் ஒங்களுக்கு எல்லாம் பிடிக்கும். மனசுக்குப் பட்டதையும் தாண்டி பொய்யாப் பாராட்டினா உச்சி குளுந்திரும்.எப்பந்தா நீங்கள்ளாம் மாறப்போறீங்களோ…இன்னா பாரு சந்தோஷமோ…கோபமோ நா உண்மையாயிருக்கேன்.ஒன்ன சந்தோஷப்படுத்தணும்னு நா போலியா இருக்க முடியாது”
“அப்ப நா உண்மையா இல்லேங்கிறீங்களா..”
“ஆமா.மேட்ச் என்கிறது டிரெஸ்ல் இல்ல. மனசுல இருக்கு.ஒண்ணு போல டிரெஸ் போட்டுக்கிட்டு நாங்க எவ்வளவு மேட்சா இருக்கோம்கிறது போலித்தனம்தான்”
இவளை முறியடித்துவிட்ட திருப்தி வந்தது.தன்னையும் உயர்த்திக் கொண்டாயிற்று. எவ்வாளவு புத்திசாலித்தனமாக நான் இருக்கிறேன் என்று அந்த குறைந்த அவகாசத்தில் தன்னை மெச்சவும் செய்தான்.
“இப்போ மனசுல மட்டும் என்ன வாழுதாம். ரொம்ப மேட்சுதான். யப்பா…சாதாரணமா சொன்ன ஒரு வார்த்தைக்கு என்னெல்லாம் பேசுறீங்க?”
“நாம ஒருத்தருக்கொருத்தர் மேட்ச் இல்லல்ல…அப்ப போறீயா ஒங்கப்பன் வீட்டுக்கு “
“ஏங்க இப்படி நிதானமே இல்லாம பேசுறீங்க…பிரிஞ்சு இருக்கவா எல்லோரும் நமக்கு கல்யாணம் செஞ்சு வச்சாங்க…”
“நீதான் எல்லாத்துக்கும் காரணம். வாய மூடுன்னு அப்பவே சொன்னேன்ல..”
குளித்து டிரெஸ் பண்ணி புதுசாய் இருந்தவள் இப்போது முகம் வெளுத்து கலவரமடைந்து நாற்காலியில் உட்கார்ந்து இவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். இப்போது ஒரு கதாநாயகன் அந்த கதாநாயகி வரும் பாதையெல்லாம் பூவிரித்து பாடிக்கொண்டு இருந்தாள்.இவன் கீழே கிடந்த சீப்பை எடுத்து என்ன செய்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் திரும்ப திரும்ப கண்ணாடியில் தலை சீவிக்கொண்டான். அடுத்து என்ன செய்ய என்று தெரியவில்லை. வெறித்தனமாக பீறீட்டு வந்த கேவலுடன் இவள் அழ ஆரம்பித்தாள். “ஐயோ..ஐயோ..” என்று தலையில் அடித்துக் கொண்டாள். “என் வாயில சனியந்தான் உட்கார்திருக்கு…நா ஒரு வெக்கம் கெட்டவ…எத்தன தடவ சூடு பட்டாலும் சந்தோஷத்துல எதையாவது சொல்லி…” வார்த்தை அதற்கு மேல் வரவில்லை. சத்தம் போட்டு அழுதாள்.
“இன்னா பாரு…இப்ப எதுக்கு அழற….எதுக்கு அழற…”
இவள் அப்படியே படுக்கையில் போய் விழுந்து குலுங்கி அழுது கொண்டிருந்தாள். பக்கத்து வீட்டுக்கு எல்லாம் கேட்கும்படி சத்தம் இருந்தது.
“ஏய் அழாத. அழாதேன்னு சொல்றேன்ல. எல்லா வீட்டுக்கும் கேட்கப் போது” டி.வியை இன்னும் கொஞ்சம் சத்தமாக வைத்தான்.
“பக்கத்து வீட்டுக்கு தெரிஞ்சிருமேன்னுதான் இப்பக்கூட கவலை என்ன..” அழுகையோடு இரைந்தாள். கல்யாணமாகி மொதமொதல்ல ஃபிரண்டு வீட்டுக்கு போறோம்னு எவ்வளளோ ஆசையாயிருந்தேன். அந்த சந்தோஷம் எல்லாம் போச்சு…. எல்லாம் போச்சு” பூவை தலையிலிருந்து கழற்றி தூர எறிந்தாள். பவுடர் அழிந்து, தலை கலைந்து பரிதாபமாயிருந்தாள்.
“அப்படியேக் கிட. நா எங்கயாவது வெளியே போறேன். ஒரு லீவு நாள் கூட மனுஷன் வீட்ல நிம்மதியா…. ஒண்ணா இருக்க முடியல.”
“போங்க…. எஙக வேண்ணாலும் போங்க.”
போய்விடலாம். எங்கு போக. வீட்டில் அழுது கொண்டிருப்பாளே என்றிருந்தது. சங்கடப்படட்டும்… அப்போதுதான் தன் அருமை தெரியும் என்றும் இருந்தது.
த்லையைச் சீவிக் கொண்டான். எதற்கு இப்படி தலையைச் சீவுகிறோம்….தன் தவிப்பை இவள் பார்த்துவிட்டால்… என்று சீப்பை திரும்பவும் ஷெல்பில் வீசினான். கண்கள் சிவந்து நெற்றிச் சுருக்கங்களோடு தன்னை கண்ணாடியில் பார்த்தான். பவுடர் பூசி இவளுக்குத் தெரியாமல் புன்னகைத்துப் பார்த்தான். முகம் கடுமையாகவே இருந்தது. வீடு இருண்டு, சுருங்கிக் கொண்டே வருகிற மாதிரி தோற்றமளித்தது.
“ஏய்… வர்றியா…இல்லியா… அப்புறம் என்னைக்குமே… எங்கேயுமே கூட்டிட்டுப் போக மாட்டேன் பாத்துக்க…”
பதில் சொல்லாமல் அப்படியேக் கிடந்தாள். இவளிடமிருந்து முகத்தைத் திருப்பியபோது கால்கொலுசு கண்ணில் பட்டது. கல்யாணமான மூன்றாம் நாள் படுக்கையில் அது அறுந்து போன போது இவன் வருத்தப்பட்டதும், சரி பரவாயில்லை என்று இவன் அணைத்துக் கொண்டதும், அடுத்தநாள் இவன் வாங்கி வந்த இந்த புதுக்கொலுசைப் பார்த்து சந்தோஷப்பட்டதும், திமிர் கொண்டு இந்த இரண்டு அறைக்குள் நடந்து திரிந்ததும் ஞாபகத்திற்கு வந்தது. பரிவு தோன்றியது. முகத்துக்கு நேரே வலிய இறங்கிவிடக் கூடாது என்பதிலும் கவனமாயிருந்தான். டி.வி இவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. இரண்டு பேரும் வருவோம் என்று ஃபிரண்டு எதிர்பார்த்துக் கொண்டிருப்பாளே என்பது இவளை அலைக்கழித்தது. மெல்ல மெல்ல இவள் உடலின் அதிர்வுகள் அடங்கிப் போயின. துவண்டபடியே எழுந்தாள்.
“ஏங் கூட வர்றிங்களா… இல்லியா” யாரோ ஒருவனிடம் பேசுகிற மாதிரி கேட்டாள்.
“ம்… வந்து தொலைக்கிறேன்”
வீங்கிய முகத்தோடு முறைத்தாள். கோபத்தை ஜீரணிக்கிற மாதிரி பெருமூச்சு விட்டாள். முகம் கழுவி தலை சீவிக் கொண்டாள். ஹேண்ட்பேக்கை எடுத்துக் கொண்டு ஜடம்போல் வெளியே வந்து நின்றாள். டி.வியை அணைத்துவிட்டு கதவைப் பூட்டும் போது தரையில் கிடந்த பூவை கவனித்தான். உற்சாகத்தோடு நேற்றே வாங்கி பிரிஜ்ஜில் வைத்திருந்தது இவனுக்குத் தெரியும்.
ஒரு வார்த்தையும் பேசிக் கொள்ளாமல் இருவரும் நடந்தார்கள். டி.விகள் மனிதர்களை வீட்டிற்குள் தேக்கி வைத்திருந்தன. காலியான தெரு சுருங்கிப்போன இவளது கண்களுக்கு அந்த அஞ்சு மணி வெயிலும் கூசியது. பஜாரில் வேகவேகமாய் மனிதர்களும், கார், பஸ்களும் தென்பட்டன. அவரவர்களுக்கென்று உலகம் வைத்துக் கொண்டு இயங்கிக் கொண்டிருந்தனர். பூ வாங்கிக் கொடுக்கலாமா என்று நினைத்து வீறாப்பாய் இருந்து விட்டான் இவன்.
பஸ்ஸில் இவளுக்கு மகளிர் பகுதியில் இருக்கை இருந்தது. இவன் நின்று கொண்டிருந்தான். ஒருதடவை இவனைத் திரும்பிப் பார்த்தவள் பிறகு வெளியேப் பார்த்துக் கொண்டிருந்தாள். வரவர எல்லாம் மோசமாகிக் கொண்டிருப்பதாய் ஒருவர் புலம்பிக் கொண்டு இருந்தார். கண்டக்டர் சில்லறை கொடுக்காத ஒருவனிடம் எரிச்சல்பட்டுக் கொண்டிருந்தார். சிக்னலுக்கு பஸ் நின்றபோது ஒருவர் வாட்சைப் பார்த்து என்னவோ முணுமுணுத்துக் கொண்டார். அடுத்த நிறுத்தத்தில் பஸ் நின்றபோது இவனுக்கு ஜன்னலோரத்து இருக்கை கிடைத்தது. ச்சே… ஏன் கோபப்பட்டாய் என்று உறுத்த ஆரம்பித்தது. எதிரும் புதிருமாய் போய்க் கொண்டிருந்த வாகனங்களின் புகையும், புழுதியும் எங்கும் வியாபிக்க, இவனும் அதையே சுவாசிக்க வேண்டியிருந்தது. கைக்குட்டை எடுத்து மூக்கைப் பொத்திக் கொண்டான். தாண்டிப் போன பஸ்ஸின் பின்னால் விபத்துக்களைத் தடுக்க குறைந்த பட்சம் பத்து மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்று எழுதியிருந்தது.
அப்பாவிடம் பார்த்து எரிச்சலடைந்த குணம் இப்போது தன்னிடமும் வந்துவிட்டதே என்று நொந்து கொண்டான். அப்பாவையும், அம்மாவையும் சமாதானப்படுத்த ஊரில் தாத்தா, பாட்டி என்று இருந்தார்கள். இங்கு யார் இருக்கிறார்கள் அந்த டிவியைத் தவிர. பஸ்ஸையொட்டி வந்து கொண்டிருந்த பைக்கில் ஒருவனைச் சுற்றிப் பிடித்தவாறு ஒருத்தி உட்கார்ந்திருந்தாள். இந்த பஸ்ஸில்லாமல், தானும் இவளும் இந்த நேரத்தில் இப்படி போயிருக்க முடியுமா என்று நினைத்துக் கொண்டான். இவளும் இப்படி பிடித்திருக்க மாட்டாள், தனக்கும் இன்னும் எரிச்சல் ஒட்டிக் கொண்டுதான் இருக்கும் என்று தோன்றியது. யோசித்துக் கொண்டே இருந்தான். கிடைத்த அந்த தனிமையில்… போகப் போக… எப்போது இந்த பஸ் பிரயாணம் முடியும், தானும் இவளும் எப்போது ஒன்றாக இறங்குவோம் என்றிருந்தது. எப்படியும் இவளிடம் ஸாரி சொல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டான்.
பி.கு:
1: இந்தக் கதையை 1995ல் எழுதினேன். என்னுடைய போதிநிலா சிறுகதைத் தொகுப்பில் வந்திருக்கிறது.
2. இந்தப்பதிவில், இருக்கும் காயமுற்ற பெண் ஓவியம் புகழ்பெற்ற ஃபிரைடோ காலோ தன்னையே self portrait ஆக வரைந்தது.
3
உயிரோட்டம்
அதிகம் யாரோடும் பேசிக்கொள்ள மாட்டான். டாக்டர் சற்குணம், வேலை பார்க்கும் வங்கியில் பியூன் பெருமாள்சாமி, தனது எலிமெண்ட்டரி ஸ்கூல் வாத்தியார் ராமனாதன் என்று ஒரு சிலர் விதிவிலக்கு. தன்க்குள்ளேயே நிறைய பேசிக்கொள்வான். அதற்கென சங்கதிகள் இருந்தன. தெரிந்தவர்கள் யாராவது இறந்துவிட்டால் கண் கலங்குவான. மகாநதி படம் பார்த்து பாதியிலேயே தாங்க முடியாமல் வெளியே வந்துவிட்டான். எல்லாவற்றுக்கும் காரணம் தேடிக்கொண்டே இருப்பான. கொஞ்சம் இரக்கத்தோடும் நிறைய கேலியோடும் மற்றவர்கள் புறம் பேசுவது கேட்டாலும் கவலைப்பட்ட மாதிரி தெரியாது. ஒருதடவை டெல்லிக்கு டூர் போயிருந்தபோது போட் கிளப் எதிரே அந்த பெரிய சாலையில் ஒரு குதிரை நொண்டிக்கொண்டு போன காட்சியின் துயரமான சாயல் ஒரு வருசம் கழித்து வந்த அவனது கனவில் இருந்தது. இன்னமும் குழந்தை முகம் அப்படியே இருக்கிறதென்று என்பது பலரால் அவனைப் பற்றி ஆச்சரியமாய் சொல்லப்படக்கூடிய செய்திகளில் ஒன்று. இவன்தான் நமது அழகப்பன்.
இந்த மாசம் ஆறாம் தேதியிலிருந்து இவனுக்கு கேஷியராக பணியாற்றும் சந்தர்ப்பம் வந்தது. கரன்ஸி என்பது கரண்ட் மாதிரி….அதிஜாக்கிரதையாய் கையாள வேண்டும் என்பதை ஏற்கனவே தெரிந்து வைத்திருந்தான். கொஞ்சம் அசந்தாலும் ஷாக் அடித்துவிடும். உஷாராய்த்தான் இருந்தான்.
சதா நேரமும் மனிதர்கள் கவுண்டருக்கு வெளியே காத்திருந்தார்கள். பணம் வாங்குவதற்கோ அல்லது செலுத்துவதற்கோ. ‘அமிர்தா ஐ லவ் யூ’ எழுதப்பட்ட நோட்டும் இடையில் வரும். லேசாய் சிரித்துக்கொண்டு இதை எழுதியவனுக்குப் பிறகு எத்தனை கைகள் இது மாறியிருக்கும் என்றும் அந்த அமிர்தா எப்படி இருப்பாள் என்றும் நினைப்பதுண்டு. ஏன் அந்த அமிர்தா இந்த நோட்டை பாதுகாத்துக் கொள்ளவில்லை என்ற கேள்வியும் தொடர்ந்து வந்து தொக்கி நிற்கும். ஒரு நோட்டை எண்ணுகிற எத்தனையாவது நபராகத் தான் இருப்போம் என்று எண்ணி பிரமித்துப் போவான். ஒவ்வொரு நோட்டும் இடம் மாறும்போது அங்கு ஒருவர் ஏமாற்ற, இன்னொருவர் ஏமாற ஒரு வலி பதிவாகிறது என்று ஒரு கதையில் படித்தது ஞாபகத்தில் வர, இதில் தான் யார் என்பது கடும் குழப்பத்தைத் தந்தது. பழகும் இடங்களில் அறிமுகமில்லாதவர்கள் கூட அங்கங்கு வணக்கம் சார் என்பதும், பெட்ரோல் தீர்ந்த கடைசி தினங்களில், ஸ்கூட்டரை வீட்டில் நிறுத்தி, பஸ்ஸுக்குக் காத்திருக்கும் சமயங்களில் “ஸார்… வர்றிங்களா… பேங்க்ல டிராப் பண்றேன்”: என்று ஒன்றிரண்டு தடவை முகம் பார்த்தவர்கள் கூட வந்து கேட்பதும் நிகழலாயிற்று. தனக்குக் கொஞ்சங்கூட சொந்தம் இல்லாத பணம் தருவிக்கிற மாய மரியாதை கண்டு சிரித்துக் கொண்டான்.
வெளியே நிற்கும் மனிதர்களின் முகங்களும் விரல்களுமே தெரிகிற மாதிரி சுற்றிலும் தன்னை அடைத்து வைத்திருந்தது பாதுகாப்பிற்கு பதிலாக பயத்தையே தந்தது. போதாக்குறைக்கு தன் பொருட்டு துப்பாக்கியுடன் ஒரு காவலாளி வாசலில் நின்று வருவோர் போவோரையெல்லாம் உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தது நடுக்கத்தை உண்டு பண்ணியது. உள்ளங்கை அடிக்கடி குளிர்ந்து போனது.
இரண்டாம் நாளே ஷக் அடித்து விட்டது. ஒரு ஐம்பது ருபாயைக் கோட்டை விட்டுவிட்டான். எண்ணி வாங்குவதிலோ, கொடுப்பதிலோ தப்பு நடந்திருக்க வேண்டும். கண்டுபிடிக்க முடியவில்லை. தனது பையிலிருந்து கொடுக்க வேண்டியதாயிற்று. அதற்குப் பிறகு அவ்வப்போது பெருமாள்சாமி உள்ளே வருவது கூட பயம் தர ஆரம்பித்தது. அந்த சந்தேகத்திற்காக தன்னையே நொந்து கொண்டாலும் ‘ஜாக்கிரதை’, ‘ஜாக்கிரதை’ என ஒரு சத்தம் கடிகார முள்ளாய் மூளைக்குள் ஓடிக்கொண்டிருந்தது. ஒருதடவைக்கு இரண்டு தடவை நோட்டுக்களை எண்ண ஆரம்பித்தான். புதுநோட்டாய் இருந்தால் விடைப்பாய் இருக்கும். சடசடவென்று எண்ண முடிகிறது. பழைய நோட்டுக்கள் தங்கள் தீராத பயணத்தில் நைந்துபோய் ஒன்றொடொன்று ஒட்டிக்கொண்டு லேசில் வராது. நிதானமாய் பிதுக்கி பிதுக்கி எண்னினான். கஸ்டமர்களை இப்படி காக்க வைக்கிறானே என மேனேஜருக்கு வருத்தம் வந்தது.
நான்காம் நாள் இவனுக்கு அது நேர்ந்தது. முதலில் வலதுகை பெருவிரலிலும், நடுவிரலிலும் நமைச்சல் ஏற்பட்டது. சும்மா உட்கார்ந்து இருக்கும்போது தடவிக்கொள்ள வைத்தது. ஜீன்ஸ் பேண்ட்டில் தேய்த்துக் கொள்வதில் ஒரு சுகம் இருந்தது. அந்த நேரங்களில் ஒருமாதிடி இடதுபக்கம் கடித்துக்கொள்வதும் பழக்கமாகி, இந்த இயக்கம் ஒரு அணிச்சை செயலாகவே மாறிப்போனது. தொடர்ந்து சில நாட்களில் காந்தலெடுக்க ஆரம்பித்த போது தடவிக் கொள்ளவும், ஜீன்ஸ் பேண்ட்டில் தேய்த்துக் கொள்ளவும் முடியவில்லை. அந்த விரல்களின் ஓரங்களில் வெடிப்புகள் வந்திருந்தன. சாப்பிடும்போது எரிச்சல் தாங்க முடியவில்லை. முதன்முதலாய் அது குறித்து கவலைப்பட ஆரம்பித்தது அப்போதுதான். தனிமைகளில் தன் விரல்களைப் பார்த்து அருவருப்படைந்தான். பயமாகவும் இருந்தது. பேண்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டுக்கொண்டு நடமாடினான். பணம் எண்ணி வாங்கவும், கொடுக்கவும் சிரமமாயிருந்தது. அந்தச் சின்னப் புண்களின் ரணம் பண நோட்டுக்கள் எல்லாவற்றிலும் பட்டுக்கொண்டே இருந்தது. அன்றைக்கு சாயங்காலம் டாக்டரை பார்த்து விடுவது என்ற முடிவுக்கு வந்தான்.
டாக்டர் சற்குணத்தின் கிளினிக்கில் எப்போதும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். கஷ்டப்பட்டவர்களிடம் இரண்டு அல்லது மூன்று ருபாய் கூட வாங்கிக் கொள்வார். இலக்கியம் பேசுவதற்கென்று சில பேர் வருவார்கள். கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரியில் நடந்த ஊழல் பற்றி ஜூனியர் விகடனுக்கு தகவல் கொடுத்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டவர். அழகப்பனை பார்த்ததும் “வாங்க… வாங்க…” என முகம் மலர்ந்து வரவேற்றார். உற்சாகமாய் பார்த்தார். இவன் சந்தேகப்பட்டதையே ஊர்ஜிதம் செய்தார். பண நோட்டுக்களையே உட்கார்ந்து எண்ணிக்கொண்டிருப்பதுதான் காரணம் என்றார். இவனுடைய தோல் எந்த அசுத்தத்தையும் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு சென்ஸ்டிவ் ஆக இருப்பதாகவும், உள்ளங்கை குழந்தையின் மென்மையாக இருப்பதாகவும் சொன்னார். அதில் இவனுக்கு ஒரு மகிழ்ச்சி இருந்தது.
ஆயின்மெண்ட்டும், சில மாத்திரைகளும் எழுதிவிட்டு கேஷ் கவுண்டரில் இனி உட்கார வேண்டாம் என புத்திமதியையும் சேர்த்துத் தந்தார். எத்தனையோ வியாதிஸ்தர்களை கவனிக்கும் இவருக்கு இதுமாதிரி வரவில்லையே என்ற நினைப்பும் அந்த நேரத்தில் அழகப்பனுக்கு ஒருபுறம் ஓடத்தான் செய்தது. அதைப் புரிந்து கொண்டவரைப் போல “வேணும்னா கிளவுஸ் போட்டுட்டு கேஷ் பாருங்க..” என்று சிரித்தார். டாக்டரின் கிண்டலில் முகம் சுருங்கித்தான் வெளியே வந்தான்.
மேனேஜரிடம் கையில் காயம் பட்டிருக்கிறதென்று சொல்லி இரண்டு நாட்கள் பெர்மிஷன் வாங்கிக் கொண்டான். கேஷ் கவுண்டரை விட்டெ வெளியே உட்கார்ந்து மற்ற வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தான். பேனாவையும் அந்தப் பெருவிரலாலும், நடுவிரலாலும்தான் முக்கியமாய்ப் பிடித்து எழுத வேண்டியிருந்தது. வழக்கம் போல எழுத முடியவில்லை. எழுத்துக்களும், எண்களும் வித்தியாசமாய்த் வந்தன. கடுமையாகத் தொந்தரவு செய்யப்பட்டான். நேரே மேனேஜரிடம் போய் இரண்டு நாள் கேஷூவல் லீவு எழுதிக் கொடுத்துவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டான். வழியில் இந்த சதாசிவம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் தன்னிடம் இதுபற்றி என்று முணுமுணுத்துக் கொண்டான்.
டாக்டர் எழுதிக் கொடுத்த ஆயின்மெண்ட்டை அவ்வப்போது போட்டுக் கொண்டான். “ஏங்க…இப்படியெல்லாம் கஷ்டப்பட்டுத்தான் கேஷ் பாக்கணுமா” என்றாள் இவன் அருமை மனைவி. வலது தாடை புடைக்க பற்களைக் கடித்து அவளை முறைத்தான். உலகத்தில் எவ்வளவோ கேஷியர்கள் இருக்கும்போது தனக்கு மட்டும் இப்படி நேர்ந்து விட்டதே என்ற கோபமும் அதில் இருந்தது அவளுக்குத் தெரியாது. பிறகு அவள் இது சம்பந்தமாய் வாயைத் திறந்து பேசியதே இல்லை. அவ்வப்போது இரக்கம் சிந்துகிற பார்வையை மட்டும் வீசுவதோடு சரி. இந்த கேஷ் ஷெக்ஷன் தொடர்ந்து பார்த்த சதாசிவம் வேறு ஊருக்கு ட்ரான்ஸ்பர் ஆன போது உள்ளூர ஒரு சந்தோஷம் வந்தது. அதற்காக வெட்கப்படவும் செய்திருக்கிறான். இப்படியெல்லாம் ஆகும் என நினைத்துப் பார்க்கவில்லை.
இரண்டு நாட்களில் விரல்களில் அந்த இடம் காய்ந்து போயிருந்தது. மீண்டும் கேஷ் கவுண்டரில் உட்கார்ந்து விட்டான். பழைய நோட்டுக்கள் உள்ளே வரும்போதெல்லாம் கொண்டு வருபவரை மகா வெறுப்புடன் பார்த்தான். அவர்களோ ரொம்ப சோகமாய் விரக்தியின் எல்லையில் நின்று கொண்டிருப்பது மாதிரி இருந்தது. நோட்டுக்களை எண்ணும்போது இவனது விரல்களையே அவர்கள் பார்த்த மாதிரி இருந்தது. அவ்வபோது நமைச்சல் இருந்த மாதிரி இருந்தது. ஜாக்கிரதையாகி பாத்ரூம் போய் கைகழுவி வந்தான். ஆனாலும் நமைச்சல் இருப்பது மாதியே இருந்தது. இல்லை… இதெல்லாம் பிரமையெனவும் தேற்றிக் கொண்டான். மேலும் சந்தேகம் வலுப்பட்ட போது டாக்டர் எழுதிக் கொடுத்த ஆயின்மெண்ட்டை பாதுகாப்பிற்காக அன்றிரவு விரல்களில் போட்டுக் கொள்வான். மனைவியையும், குழந்தைகளையும் தொடாமல் கொஞ்சம் தள்ளி படுத்துக் கொள்வான். இவனது முகத்தில் சுருக்கங்கள் விழுந்த மாதிரி மனைவிக்குத் தெரிந்தது.
ஒரு மாதிரியான நாற்றம் நோட்டுக்களிலிருந்து வீசிக்கொண்டு இருந்தது. பலசமயம் மக்கிப் போய் முகத்தில் அடிக்கிற மாதிரியும் இருக்கும். விபூதி வாசம் வீசும். அடுத்த நோட்டிலேயே மீன்வாசம் அடிக்கும். குறிப்பாக ஐந்து ருபாய், பத்து ருபாய், இருபது ருபாய் நோட்டுக்களில் இந்த நாற்றம் அதிகமாய் இருந்தது. இரண்டு ருபாய்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். கொஞ்சம் அழுத்திப் பிடித்தாலே பிய்ந்து விடும் போல இருந்தன. இந்த நோட்டுக்களைக் கொண்டு வருபவர்களை எதாவது ஒரு காரணம் காட்டி எரிந்து விழுந்தான். ஐம்பது, நூறு, ஐநூறு என்றால் எளிதாக இருக்கும். ரொம்ப நேரமும் எண்ண வேண்டியிராது. யாராவது சில்லறை கேட்டு வந்தால் இந்த பாவப்பட்ட நோட்டுக்களை முதலில் வெளியே தள்ளி விடுவதில் முனைப்பு காட்டினான். சாப்பிடும்போது நன்றாக சோப்பு போட்டு கைகளைக் கழுவினான். ஒவ்வொரு நாளும் கணக்கை முடிக்கும் போது பணம் எதுவும் குறைந்திருக்கக் கூடாது என்ற பதற்றம் ஓடிக்கொண்டே இருந்தது.
அந்த மாசச் சம்பளத்தில் இருநூற்று ஐம்பது ருபாய் போல கூட கிடைத்தது. கேஷ் பார்த்ததற்கான அலவன்சு. சந்தோஷமாய்த்தான் இருந்தது. மாசக் கடைசியில் கொஞ்சம் பிக்கல் பிடுங்கல் இல்லாமல் இருக்கலாம். வீட்டில் அவள் என்ன கணக்கு வைத்திருக்கிறாளோ தெரியவில்லை. இதைப் பார்த்ததும் உற்சாகமாவாள் என நினைத்துக் கொண்டான். வீட்டில் நுழைந்ததும் எப்போதும் “அப்பா” என்று ஓடிவந்து காலைக் கட்டிக்கொள்கிற குழந்தை படுத்திருந்தது. “எதுவும் சாப்பிடல…ஒரே வாந்தி….” மனைவி பரிதவித்தாள். குழந்தையை அள்ளிக் கொண்டு அவசரமாய்ப் புறப்பட்டார்கள்.
டாக்டர் சற்குணம் பதற்றப்படாமல் குழந்தையை கவனித்தார். அவரைப் பார்த்ததும் குழந்தை சத்தம் போட்டு அழ ஆரம்பித்தான். “நல்ல பையன்ல…அழக்கூடாது…என்ன…ம்..அப்புறம் மிஸ்டர்..” இவனைப் பார்த்து சிரித்தார். “ஒண்ணுமில்ல…சாதாரண அலர்ஜிதான்…. அப்புறம் இந்தப் பக்கம் வரவேயில்ல…. எப்படியிருக்கீங்க. ஒங்க விரல்லாம் எப்படி இருக்கு?” பேசிக்கொண்டே போனார். ”சரியாப் போச்சு” என்றான். குழந்தையிடம் இருந்து திரும்பி இவனைப் பார்த்தார். திரும்பவும் குழந்தையை பரிசோதித்துக் கொண்டே “இப்போ கேஷ் ஷெக்ஷன் நீங்க பாக்கலையா?” என்றார். “பார்க்கிறேன்” என்றான். டாக்டர் “அப்படியா” என்று அவனைப் பார்த்தார். முகத்தில் நிலைத்த அவரது கண்களில் வித்தியாசம் ஏற்பட்டிருந்தது. பிறகு குழந்தையின் உடல்நலம் குறித்து அவர் சொன்னது எதையும் மனது வாங்கிக் கொள்ளவில்லை. எதோ ஒரு இருட்டு அவனைக் கவ்விக் கொண்டு இருந்தது. சகலமும் அணைந்து போனவனாய் காணப்பட்டான். வீட்டுக்கு வரும்போது குழந்தை அவன் தோளில் தூங்கிக் கொண்டு இருந்தான்.
இவனுக்குத் தூக்கம் வரவில்லை.வராண்டாவில் போய் உட்கார்ந்தான். பாராக்காரனின் விசில் சத்தம் இருட்டின் குரலாக கேட்டுக் கொண்டிருந்தது. மரங்கள் அசையாமல் புழுக்கமாயிருந்தது. திரும்ப உள்ளே வந்தான். படுத்துக் கொண்டான். ஏன் இதற்காகவெல்லாம் தவிக்க வேண்டும் என்றாலும் விடுபடமுடியாமல் இருந்தான். ஒரு நேரத்தில் தூக்கமும் வந்தது. இவனது விரல்கள் மெல்ல மெல்ல அழுகிப் போயின. பார்த்துக்கொண்டு இருக்கும் போதே ஒவ்வொன்றாய் கையிலிருந்து உதிர்ந்து கொண்டன. விழுந்தவை தரையில் பல்லியின் வால்களாய் துடித்தன. என்னமோ சத்தமாய்ச் சொல்லி எழுந்து உட்கார்ந்தான். மிரண்டு போயிருந்தான். படபடவென்று அடித்துக் கொண்டு இருந்தது.
“என்னங்க…” அவள் தூக்கக் கலக்கத்தோடு லேசாய் இவனை விழித்துப் பார்த்தாள். பால் குடித்த பழக்கத்தில் பையன் காற்றில் சப்புக் கொட்டிக் கொண்டு இருந்தான். இவன் எழுந்து போய் தண்ணீர் குடித்தான். படுக்கவே பயமாயிருந்தது. படுக்கச் சொல்லி அவள் இவன் மீது கைகளைப் போட்டுக் கொண்டாள். தட்டிக் கொடுத்தாள். அவளது விரல்களை தன்னுடைய விரல்களில் கோர்த்துக் கொண்டு நெஞ்சில் வைத்துக் கொண்டாள். கண்களை மூடிக்கொள்ளும் போது கொஞ்சம் நிம்மதியாயிருந்தது. விரல்கள் இப்ப்போது வெதுவெது என்றிருந்தன.
*
பி.கு:
1. இந்தக் கதை 1996ல் வெளியானது.
2. சென்னை சாகித்ய அகாடமியில் இந்தக் கதையை வாசித்தேன். எதிரே எழுத்தாளர் ஜெயகாந்தன், இந்திரா பர்ர்த்தசாரதி, சா.கந்தசாமி, பொன்னீலன் உட்பட பல எழுத்தாளர்கள் அமர்ந்திருந்தனர். வாசித்து முடிந்ததும், இந்திரா பார்த்தசாரதி கைகளைப் பிடித்துக் கொண்டு பாராட்டினார். கூடவே செம்மலரில் இப்படிப்பட்ட கதைகளையும் போடுகிறார்களா என்றார்.
*
4
ஒரு மாவீரனின் கதை
ஆறு வருசத்துக்கு முன்னால் ஒரு சின்ன வாய்த்தகராறில் அவனது சித்தப்பாவின் காலை விறகுக்கட்டையால் அடித்து ஒடித்து விட்டான். ஊருக்குள் சிம்ம சொப்பனமாக கர்ஜித்துக் கொண்டிருந்தவர் அவர். பண்டாரவிளை வைத்தியத்தில் குணமானாலும் இன்றும் லேசாக தெத்தி தெத்தித்தான் நடக்க முடிகிறது. அப்புறம் தேரியில் முந்திரி மரம் ஏலம் எடுக்கும் தகராறில் சண்டியன் குருசாமியை மந்தையில் வைத்து அரிவாளால் சின்னதாய் தோள்பட்டையில் வெட்டி விட்டான். இப்படித் தொடங்கிய அவனது பராக்கிரமங்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் நீண்டு போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டு ரெகார்டுகளில் பதிந்து பதிந்து ‘ரவுடிப்பய’ என்று பேரெடுத்தான்.
யாராவது தாக்கிவிடக் கூடும் என்று சதாநேரமும் சில வெட்டிப் பயல்களோடு திரியப் போய் அவர்கள் அன்போடு “அண்ணே” என்றனர். அந்தக் கட்சியின் சார்பாக எம்.எல்.ஏவை வரவேற்க அடித்த போஸ்டரில் அச்சடித்திருந்த அம்பத்தாறு பேரில் இவன் பேர் மாவீரன் சுடலைமுத்து என்று இருந்தது. ஊருக்குள் அதைப் பார்த்து முதலில் சிரிக்கத்தான் செய்தார்கள். கொஞ்சநாளில் நடந்த ஊர்த் திருவிழாவுக்கு ‘மாவீரன் சுடலைமுத்து மோர்ப் பந்தல்’ என்று கொட்டகை போட்டு, தனது இருபத்தொன்பது வயதிலேயே மாவீரனாய் பேரெடுக்க ஆரம்பித்தான்.
எட்டு வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. இன்று ஒன்றிரண்டு பெரியவர்களைத் தவிர ஊருக்குள் யாரும் சுடலை முத்து என்று அவனை கூப்பிடுவது இல்லை. கூப்பிடவும் முடியாது என்று வைத்துக் கொள்ளுங்களேன். மாவீரன் சுடலைமுத்துதான். அடர்ந்து முறுக்கிய மீசையும், செவ்வரி ஒடிய கண்களும், மடிப்புக் கலையாத வெள்ளைச் சட்டையும், வேட்டியும் என ஆளே ஒரு தினுசாகி விட்டிருந்தான். ஊரில் எந்த விசேஷம் என்றாலும் அவனுக்கு பிரத்யேக மரியாதையும், அழைப்பும்.
இதுதான் சுடலைமுத்து, மாவீரனான வரலாறு.
சரி விஷயத்துக்கு வருவோம். சம்பவத்தன்று மாவீரன் காலையில் எழுந்ததும் லுங்கியோடு தோட்டத்துப் பக்கம் சென்றிருக்கிறான். நேற்றிரவு அடித்த ஓ.சி.ஆரும், அது அடங்க நடு இரவில் களக், களக்கென குடித்த செம்புத் தண்ணீரும் முட்டிக்கொண்டு வந்திருக்கிறது. என்றுமில்லாமல் அந்த நேரம் பார்த்து அங்கு முருங்கை இலை பறிக்க சக்திக்கனியக்காவும், கோமதியும் நின்றிருந்திருக்கிறார்கள். ஒதுக்குப்புறமாய் கொஞ்சம் தள்ளிப் போவோம் என்று படலையை விலக்கி, பக்கத்தில் இருந்து முடுக்குப் பக்கம் சென்றிருக்கிறான். அங்கேதான் விதி தனது விளையாட்டை ஆரம்பித்தது. நமது பெட்டிக்கடை அருணாச்சலத்தின் கோழி தனது குஞ்சுகளோடு மேய்ந்து கொண்டிருக்கிறது. தரையை தாய்க்கோழி கால்களால் கீறிக் கீறி விட, குஞ்சுகள் அந்த இடத்தில் பாய்ந்து பாய்ந்து கொத்திக் கொண்டிருந்தன.
மாவீரன் வாகாக லுங்கியை உயர்த்தி மடித்துக் கட்டி, லேசாய் செருமிக் கொண்டு கம்பீரமாய் உட்கார்ந்திருக்கிறான். அவ்வளவுதான். அந்த தாய்க்கோழி என்ன நினைத்ததோ தெரியவில்லை. இறக்கைகள் எல்லாம் சிலிர்த்து ஆவேசமாய் அவன் மீது பாய்ந்திருக்கிறது. எதிர்பாராத மாவீரன் “ஏ..அம்மா” என்று கத்தி நிலை தடுமாறி சரிந்திருக்கிறான். விலகிப்போன கோழி திரும்பவும் ஆக்ரோஷமாய் அவன் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது. மாவீரன் எழுந்து, அவிழ்ந்த லுங்கியை ஒரு கையில் பிடித்தபடி படலையத் தாண்டியிருக்கிறான். லுங்கி படலையில் சிக்கிக் கொண்டது. வேறு வழியில்லாமல் லுங்கியை அங்கேயே விட்டுவிட்டு ஒடியிருக்கிறான். கொக் கொக்கென குரலோடு கோழியும் விடாமல் துரத்தியிருக்கிறது.
இசக்கியம்மன் கோவில் அருகே தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள், அவன் வந்த கோலத்தைக் கண்டு என்னமோ எதோ என்று அலறி மிரண்டு, பின்னால் துரத்தி வந்த கோழியைப் பார்த்ததும் பெருங்கூச்சலாய் சிரிக்க ஆரம்பித்தார்கள். மாவீரன் ‘ச்சீ..’ என்று அவர்களைப் பார்த்து வெறுப்பை உமிழ்ந்து தன் உயிருக்காக ஓடிக்கொண்டிருந்தான். வாய்க்காங்கரைமுத்து வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்திருந்த சொர்ணத்தாயம்மாள் “சின்ன வயசில் இப்படி மணியாட்டிக்கொண்டு இவன் ஒடிப் பார்த்தது” என்று பொக்கை வாய் திறந்து சிரித்தார்கள்.
தன் வீட்டுச் சந்து வந்ததும் திரும்பிப் பார்த்தான். கோழியை காணோம். அவமானம் மொத்தமாய் பிடுங்கித் தின்றது. பக்கத்தில் கொடியில் காயப்போட்டிருந்த யாருடைய சேலையையோ இழுத்துப் போர்த்திக் கொண்டு வீடு போய்ச் சேர்ந்தான். முதலில் பதறி, பிறகு சிரித்த அவளது மனைவியை ஓங்கி கன்னத்தில் அறைந்து ஒரு ஒரமாய்ப் போய் உட்கார்ந்து கொண்டான். அதற்குள் தெரு, மந்தை, வயல்வெளி எல்லாம் தாண்டி தேரிக்காட்டிற்குள் விறகு பொறுக்கிக் கொண்டிருந்த பெண்கள் வரை யாவரும் சிரித்துக் கிடந்தனர்.
மாவீரன் வெளியே தலை காட்டவில்லை. எங்கு பார்த்தாலும் சிரிப்புச் சத்தம் கேட்ட மாதிரியே இருந்தது. அவனது பரிவாரங்களும் தங்கள் அண்ணனைப் போய்ப் பார்த்து துக்கம் விசாரிக்கத் தயங்கினார்கள். தப்பித் தவறி அவனைப் பார்த்ததும் சிரிப்பு வந்து விட்டால் என்ன செய்ய என்று யோசித்தார்கள். ரொம்ப கஷ்டப்பட்டு முகத்தில் சோகத்தை வரவழைத்துக் கொண்டு கொஞ்ச நேரம் அவனருகில் உட்கார்ந்திருந்து வந்தார்கள். மாவீரன் குன்னிப் போய் தலை கவிழ்ந்து உட்கார்ந்திருந்தான். நிமிரவேயில்லை. பள்ளிக்கூடமும் கிண்டல்களும் கேலிகளுமாய்க் கிடந்தது. மாவீரனின் குழந்தைகளுக்கு வெட்கமாய் இருந்தது. தங்கள் தாயிடம் முணுமுணுத்துத் தள்ளினர்.
சில நாட்கள் கழித்து ஒருநாள் சுடலைமுத்து மந்தைக்கு போய் ஒரு டீ குடித்து விட்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. அதைப் பற்றி யாரும் பேசாவிட்டாலும், எல்லோரும் அதையேதான் சிந்தித்துக் கொண்டிருப்பதாய்ப் பட்டது. சிரித்துக் கொண்டிருந்ததாகவும் தெரிந்தது. அவனது எதிரிகளும் அவனை பரிதாபம் கொண்டு பார்த்தனர். பொது நிகழ்வுகளில் முகம் காட்டாமல் வீடு, தோட்டம் என்று அடைந்து கிடந்தான். யாராவது மாவீரன் என்று அழைத்தால் இப்பொதெல்லாம் கொலைவெறி வந்து அடக்கிக் கொண்டான்.
எதுவும் அறியாத அந்தக் கோழியோ, மாவீரனை வெறும் சுடலைமுத்துவாக்கிய் கதையை எழுதுவது போல தரையில் அதுபாட்டுக்கு கிளறிக்கொண்டிருக்கிறது.
5
இருட்டு வெளிச்சம்
எட்டு வயசு இருக்கும் போது இவளுக்கு கடுமையான காய்ச்சல் வந்திருக்கிறது. திரும்பி இருக்கச் சொல்லி ஊசி போடுவதற்குள் டாக்டர் பெரும்பாடு பட்டிருக்கிறார். கூச்சத்தில் நெளிந்து புரண்டு அடம் பிடித்திருக்கிறாள். அழுது ஊரைக் கூட்டியிருக்கிறாள். கையில் போடுவதற்கு என்றால் பேசாமல் இருந்திருக்கிறாள். அத்தூண்டு பெண்ணாய் இருக்கும் போது இவள் அப்படி வெட்கப்பட்டாள் என்று சித்தி ரொம்ப முன்னாலேயே சொல்லி இருக்கிறாள். இந்த நேரத்தில் இவளுக்கு அது ஞாபகம் வந்தது. காய்ந்து போன உதட்டில் புன்னகை போல ஒன்று தோன்றியது. அருவருப்பும் வெறியும் அதில் கலந்திருந்தது.
ஐஸ் பெட்டிக்குள் கைவிடுகிற போதெல்லாம் உணர்கிற சிலிர்ப்பாய் இவனுக்கு முதலில் இருந்தது. அப்படியே விறைத்து கட்டையாகிப் போனான். முறுக்கிக் கொண்டு வந்தது. சேமியா ஐஸ் கொடுத்து விட்டு குரல் வந்த திக்கில் காசு எதிர்பார்த்து கைநீட்டி காற்றில் துழாவும் போது நாலணா அளவில் ஓட்டாஞ்சில்லைக் கொடுத்துவிட்டு இவனை சின்னப்பையன்கள் ஏமாற்றியிருக்கிறார்கள். பஞ்சாயத்து ஆபிஸ் திண்ணையில் அசந்து படுத்தவன் கால்ச்சட்டைக்குள் தவளையைப் பிடித்துவிட்டு இவன் அலறிக் குதிப்பதைப் பார்த்து சிரித்திருக்கிறார்கள். விளையாட்டுப் பொருளாகவே இருந்திருக்கிறான். விளையாட முடியும் எனத் தோன்றியதே இல்லை. அதுதான் தனக்கு நேர்வது குறித்து இன்னமும் நம்பிக்கையில்லாமல் இருந்தது. நெஞ்சுக் கூட்டுக்குள் கனமாய் அடைத்துக் கொள்ள விம்மி விம்மி போனான்.
வைத்துக் கொடுத்த கருவாட்டுக் குழம்போடு சாப்பிட்டுவிட்டு ஏப்பத்துடன் இருந்த அவன் தனியறையில் தொட்டபோது நாலு வருசத்துக்கு முன்னால் இவளும் இவனைப் போலத்தான் தவித்துப் போயிருந்தாள். தன்னை அடக்குவதற்கு சிரமப்பட்டு மூச்சுத் திணறினாள். வெடவெடத்து மயக்கமாய் வந்தது. முகத்தில் இருந்த அம்மைத் தழும்புகள், தூக்கலாய் நின்ற பற்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போயின. மறுநாள் காலையில் உதட்டில் ஒட்டியிருந்த மீசைமுடியொன்றைக் கண்டு சந்தோஷமாய் பாடவெல்லாம் செய்தாள். எல்லாம் ஒரு வாரத்துக்குத்தான். யாரோ ஒருத்தியோடு அந்த அவன் பம்பாய்க்குப் போயே விட்டான். கல்யாணத்துக்கு வராதவர்கள் கூட வந்து பார்த்துவிட்டுப் போனார்கள். கொஞ்சநாள் சித்தியிடம் போய் செம்மறிக்குளத்தில் இருந்தாள். பிறகு தங்கச்சியையும் அழைத்துக் கொண்டு இந்த ஊருக்கே வந்துவிட்டாள். கண்ணாடியில் முகம் பார்ப்பதேயில்லை. இவளது பற்களே இவளைப் பார்த்து சிரிக்கும்.
வலித்திருக்க வேண்டும். முனகிக்கொண்டான். காதில் பற்களை பதியவைத்த மூர்க்கம் பயம் தந்தது. விலகவும் மனம் கூடவில்லை. அபூர்வமான லயிப்பில் கரைந்து கொண்டிருந்தான். தைரியம் கூடி எதையும் இழந்துவிட சித்தமாக்கும் போதை தலைக்கேறி நின்றது. அம்மா சொன்ன கதையில் தங்கக் கோடாலி தரப் போகும் தேவதையாய் இவள் தெரிய ஆரம்பித்தாள். ஊருக்குள் அம்மா தேடிக்கொண்டு இருப்பாளே என்ற நினைப்பு வந்து நிலைக்காமல் போனது. மைனாக்களின் சத்தம் கத்தரிக்காய் பறித்து எடைபோட போட்டிருந்த இந்த சின்னத் தட்டியடைப்புக்குள் இவர்களை அண்ட முடியாமல் சுற்றிச் சுற்றி வந்த மாதிரி இருந்தது.
எங்கேயோ நிலைகுத்தியிருந்த இவனது கண்களை இவளால் பார்க்கவே முடியவில்லை. ஊரின் மற்ற கண்களை இவள் பாடம் பண்ணியிருந்தாள். இயல்பாய் இருக்கும்போதே மாயத் தனிமைக்குள் இழுத்துச் செல்கிற அலைவரிசை ஒன்றை அனுப்புவார்கள். அப்படித்தான் என்று இவள் திரும்பி ஊடுருவிப் பார்ப்பதை எதிர்கொள்ளும் திராணி அந்தப் பார்வையாளர்களுக்கு இல்லாமல் இருந்தது. “குலைகுலையாய் முந்திரிக்கா…. நரியே நரியே சுத்தி வா’ சிரிப்பும் கும்மாளமுமாய் வெளியே குமரிப்பெண்கள் விளையாடிய சிவராத்திரியில் பெரியவீட்டுக்காரரின் மூத்தப்பையன் அவர்கள் வீட்டு அடுப்பங்கரையில் கண்ணும் மூச்சும் நெருப்பாகியிருக்க இவள் அருகில் வந்து நின்றான். திமிர் பொங்க, வா என்பதாய் இவள் பார்க்கவும் அவன் கண்களை கைகளால் மூடிக்கொண்டான். நெருப்பாய்ச் சுட்ட அவன் கைகளைப் பிடித்து உலுக்கியபடி “கண்ணைத்திற… கண்ணைத்திற” என்றாள். அவனால் முடியவேயில்லை. இவளை விலக்கி அங்கிருந்து பயந்து அகன்றான். பிறகு அவனால் இவளைப் பகலில் கூட பார்க்க முடியவில்லை. இரண்டு மாதத்தில் அவனுக்கும் கல்யாணமாகிவிட, பால்வடியும் முகத்தோடும், பளீரென்ற பல்வரிசையோடும் இருந்த புதுப்பெண்ணை அவன் அவ்வப்போது நமுட்டுச் சிரிப்போடு பார்க்க, அவள் வெட்கப்பட இவளால் தாங்க முடியவில்லை. யாரும் அருகில் இல்லாத போது புதுப்பெண்ணின் கன்னத்தை ரத்தம் கட்டிப்போக கிள்ளி வைத்துவிட்டு வீட்டுக்கு ஓடிவிட்டாள். அதற்குப் பிறகு அங்கு வேலைக்குப் போகவில்லை. பெரிய வீட்டுக்காரம்மாள் வந்து “பைத்தியமே… பிசாசே” என்றாள். “அதான் தாலி கட்டுன ஒரு வாரத்துல புருஷன் ஒடிப் போய் விட்டான்” ஆத்திரம் பொங்க கத்தினாள்.
சினிமாப் பாட்டுக்கள் ஏற்படுத்தியிருந்த சந்தேகங்களும், அரசல் புரசலாக பலர் பேசக் கேட்டு விளங்காமல் இருந்த உலகமும் இப்போது இவனுக்கு பிடிபட ஆரம்பித்தது. தாயின் கர்ப்பக்கிரக இருட்டு விலகிக்கொண்டு வந்தது. பனிபோல மூடி உறைந்துபோன கண்களைப் பார்த்து பிறந்த போதே செத்துத் தொலைஞ்சிருக்கக் கூடாதா என்று இவன் அம்மா அழுதிருக்கிறாள். ஏராளமான சலனங்களோடு இவன் கண்கள் அசைவற்று நிற்கும். “மழைன்னா என்னம்மா”, “வானத்துல பெரிய பம்புசெட்டு இருக்குப்பா..”, “வானம்னா என்னம்மா’, ‘நம்ம வீட்டுக் கூரை மாரி பெருசா மேல இருக்கு. நமக்கு எட்டாது”. ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் சொல்ல வேண்டியதிருக்கும். இவன் பெரியவன் ஆக, ஆக அம்மாவின் குரலில் கவலை படிந்து கொண்டே வந்தது. குரல்களே பாதைகளாகிப் போன உலகில் அப்புறம் ஒரு கைவளையோசை மட்டும் பூவாய்ப் பூத்தது. சிறகுகள் முளைக்காத குஞ்சுகளின் துடிப்பும், கதறலும் இவனது கண்களுக்குள் பொறி விட்டுக்கொண்டிருந்தது. இடிமுழக்கமென கேட்ட மேளத்தில் அந்தப் பூவும் உதிர்ந்து போக முகமெல்லாம் இருள் சூழ்ந்து போனான். “எனக்கு கல்யாணமே ஆகாதா..” என்று அம்மாவிடம் விக்கி விக்கி அழுதான்.
வண்ணத்துப் பூச்சிகளும், புட்டான்களும் வயல் முழுவதும் பயிர்களுக்கு மேலே வெட்டி வெட்டி பறந்தபடி இருந்தன. கொக்குகள் கிழக்கு நோக்கி சவுக்கை மரங்களைக் கடந்து போய்க் கொண்டு இருந்தன. வாய்க்காலுக்கு அப்பால் ஒரு கழுதையின் குரல் திடுமென முளைத்து மெல்ல மெல்ல தேய்ந்தது. எல்லாவற்றிலும் அடங்கி நிறைந்திருந்த பேரமைதியை தகர்க்கும் முயற்சியில் இவர்கள் உக்கிரமாயிருந்தனர்.
இவள் ஆந்தையைப் போல உருமாறியிருந்தாள். அந்த தையல்காரனோடு வீட்டில் பிடிபட்டுக் கொண்ட இரவில்தான் இவள் முகம் இப்படி விகாரமாகிப் போனது. அதற்கென ஊரில் காத்திருந்தவர்கள் போல கூடினார்கள். விடுபடாத இணைநாய்களை ரசிக்கிற அந்தரங்க வெறியின் மீது உட்கார்ந்து விசாரணை நடத்தினார்கள். எல்லோரும் கட்டிக் காப்பாற்றிய ஊரின் பேருக்கு களங்கம் வந்து விட்டதாய் அங்கலாய்த்துக் கொண்டார்கள். ஆள் ஆளுக்கு குளவியாய் கொட்டித் தீர்த்ததில் இவளுக்குள் விஷம் ஏறி சுரணையைத் தின்றது. செம்மறிக்குளத்திலிருந்து வந்த சித்தி காறித் துப்பினாள். விளக்குமாத்தை எடுத்து மூஞ்சி முகரை என்று கூட பார்க்காமல் அடித்தாள். சின்ன அசைவுகூட இல்லாமல் எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு சித்தியை வெறித்துப் பார்த்தாள். “இதுக்கு நாண்டுக்கிட்டு நின்னுச் சாகலாம். இந்தக் கண்றாவியெல்லாம் பார்க்கக் கூடாதுன்னுதான் அக்காவும், அத்தானும் சீக்கிரமே போய்ச் சேந்துட்டாவ போலுக்கு” இவளது தங்கச்சியை இழுத்துக் கொண்டு சித்தி அன்று போனவள்தான். பிறகு சாயங்காலம் இவள் பூ வாங்கினால் கூட ஊர் நமுட்டுச் சிரிப்போடு பார்த்தது. இப்போது அவர்கள் எல்லோருமே காணாமல் போயிருந்தார்கள்.
வேகத்தோடு இவன் அறிந்து கொண்டிருந்தான். உடல் முழுவதும் வெளிச்சம் பார்த்தது. வெளிகளைத் தாண்டி பிரபஞ்சத்தைத் தழுவியபடி, சந்திரனுக்கு அப்பால் சூரியனை நோக்கிய பயணத்தில் ஆயிரத்தெட்டு ஒளிக்குதிரைகளில் சவாரி செய்து போனான். காற்றைத் தேடி தேடி சுவாசித்தான்.
தண்டவாளத்தில் அதிரும் ரெயில் வண்டியின் துடிப்பு இவளுக்கு உறைத்தது. அப்படி புரிவதில் ஒரு சுகமும் இருந்தது. தூக்குச்சட்டி கஞ்சியோடும், ஒத்த வயசுப் பெண்களோடும் முள் அடித்து விறகு கொண்டு வர காட்டுக்குப் போகும் போதெல்லாம் அந்த தண்டவாளம் வந்து இடைமறிக்கும். தண்டவாளங்களுக்கு இடையில் நின்று அதன் முடிவற்ற முடிவை வெறித்துப் பார்க்கும் போது அம்மா, அப்பா ஞாபகத்தில் வருவார்கள். நீண்டு கிடக்கும் அதன் திசையில் இழந்துபோன காலம் பெருமூச்சு விடும். “அம்மா, அப்பா இருந்தென்ன… பொம்பளைக்கு சாசுவதமா” சித்தியின் குரல் கேட்கும். பிசாசு மாதிரி விறகு அடிப்பாள். தெறித்து வந்த முட்கள் உடம்பில் குத்தும். பிடுங்கி எறிவாள். எட்டிப் பார்க்கும் ரத்தத்தை உறிஞ்சுவாள். வெயிலையும் பாராமல் இன்னும் வேகமாய்… வேகமாய் விறகு அடிப்பாள்.
அனற்காற்று வீசியது. எங்கும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. தறிகெட்டுப் பறந்தார்கள். தீப்பிழம்புகளை நெருங்கிக்கொண்டு இருந்தனர். சட்டென இவனுக்கு எல்லாம் இருண்டது. இவள் இவனைத் தள்ளி விலகினாள். அதல பாதாளத்திற்கும் கீழே.. கீழே போய்க்கொண்டு இருந்தான். “ஏலேக் குருடா.. யாரோ வர்ற மாரி இருக்கு… எந்திச்சு ஓடு…” இவள் அங்கங்கு கிடந்த துணிகளை அள்ளி மேலேப் போட்டுக் கொண்டாள். தட்டிக்குள்ளிருந்து மூச்சு வாங்க எட்டிப் பார்த்தாள். சத்தம் எதுவும் கேட்கவில்லை. இன்னும் கொஞ்சம் தைரியமாகி வெளியே வந்து நின்றாள். போவதற்குமுன் உள்ளே இவனை திரும்பிப் பார்த்தவள் நிலைகுலைந்து போனாள்.
கால்ச்சட்டை ஒரு மூலையில் கிடக்க இவன் தவழ்ந்து தவ்ழ்ந்து கைகளை வேறெங்கோ அளைந்து தேடி கொண்டிருந்தான். உடல் இழைக்கிற திணறலோடு பயத்தில் இவன் அரற்றியது மரணத்தின் சாயல் கொண்டதாயிருந்தது. வெடித்து அழுதவனை ஓடிப்போய் இறுக்கி அணைத்துக் கொண்டாள். “கண்ணா… கண்ணா” என்று புலம்பி இவன் தலையைக் கோதி விட்டாள். சூடான மார்பில் இவன் கண்ணீர் வழிய குளிர்ந்து போனாள். வெளியே வண்ணத்துப்பூச்சிகள் அவை பாட்டுக்கு பறந்து கொண்டிருந்தன. எங்கும் அமைதி.
பி.கு: 1999ல் விசையில் வெளியானது. நான் எழுதிய கடைசி சிறுகதை.
*
6
வெயில்
ஓட்டமும் நடையுமாய் மெயின் ரோட்டுக்கு வந்து பெட்டிக்கடையில் போய் நின்று “திருச்செந்தூர் பஸ் போய்ட்டா” கேட்டேன்.
“இப்பத்தா அஞ்சு நிமிசத்துக்கு முன்னால போச்சு”
“அடுத்த பஸ் இனும எப்ப”
“முக்கா மண்ணேரத்துக்கும் மேல ஆவுமே தம்பி”
என் ஏமாற்றம் பெட்டிக்கடைக்காரரை பாதித்திருக்க வேண்டும். பாவமாய்ப் பார்த்தார்.ஒரு மணி நேரத்துக்கு முன்னால் இதே இடத்தில் வந்து இறங்கும் போது அவரிடம்தான் ஊருக்குள் பூவலிங்கம் வீட்டை விசாரித்தேன். கூடவே திருச்செந்தூருக்கு அடுத்த பஸ் எப்போது வரும் என்று கேட்டும் வைத்திருந்தேன். இந்த சின்ன நெருக்கத்தில் அவரிடமிருந்து இரக்கம்.
வெயில் இரக்கமே இல்லாமலிருந்தது. கண்களை எப்போதும் போல் போல் விரித்துப் பார்க்க முடியாதபடிக்கு உக்கிரம். காலையில் ஷேவ் செய்தது காந்தலெடுத்தது. காய்ந்து போன உதடுகளை ஈரப்படுத்திய நாக்கில் கரிப்பு. தலைமுடிக்குள்ளிருந்து வேர்வை வழிந்து புருவத்தில் நிதானித்தது. மூக்கு நுனியில் வந்து சொட்ட நின்றது. காதோரம், பிடரி பூராவும் கசகசவென்றிருந்தது. தொப்பலாய் சட்டை. எரிச்சலூட்டும் பிசுபிசுப்பு. கைக்குட்டையால் அழுந்த துடைத்தேன். காலையில் வீட்டிலிருந்து புறப்படும்போது சுத்தமாய் மடித்து வைத்திருந்த கைக்குட்டை கசங்கி ஈரமாய். வேர்வை நின்றபாடில்லை.
இன்னும் நாற்பத்தைந்து நிமிடங்கள். சொல்ல முடியாது. ஒரு மணி நேரம் கூட ஆகலாம். நாம் தாமதமாகும் போது பஸ்கள் சரியான நேரத்துக்கு வந்துவிடுகின்றன. நாம் சரியான நேரத்துக்கு வரும்போது பஸ்கள் தாமதமாகின்றன. பூவலிங்கம் வீட்டிலிருந்திருந்தால் இன்னேரம் பஸ்ஸை பிடித்திருக்கலாம். வீட்டில் விசாரித்து சொஸைட்டிக்கு முன்னால் வேப்ப மரத்தடியில் நாலைந்து பேரோடு உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தவரை கண்டுபிடிப்பதற்குள் லேட்டாகிவிட்டது. சரி… பஸ்தான் போனது, பணமாவது வசூலானதா என்றால் அதுவுமில்லை. லோலோவென்று அலைந்ததுதான் மிச்சம்.
நிழலுக்கு என்று இடம் இல்லை. ரெண்டு பெட்டிக்கடை. புகை மண்டிய டீக்கடை. வரிசையாய் வேப்பமரம். காகரஸ் மரங்கள். அவைகளில் சுடுகுஞ்சு கூட இல்லை. கிழேச் சின்னச்சின்னதாய் பேருக்கு நிழல்கள். இப்போது பார்க்கும் வேலையும் இது போலத்தான். சிட்பண்டில் தரும் நானூறு ருபாயில் அப்பா, அம்மா, தம்பி, நான். இப்படி வெளியூருக்கு போனால் பஸ் காசோடு பேட்டா ஐந்து ருபாய். இன்று இந்த சொற்பக் காசைத் தரும்போது முதலாளி எரிச்சலடைவார். வசூலாயிருந்தால் கொஞ்சம் சிரிப்பு முகத்தில் இருக்கும்.
டீக்கடையில் ‘யமுனை ஆற்றிலே… ஈரக்காற்றிலே… கண்ணன் இல்லையோ பாட’ பாட்டு. சோமுவின் வீட்டு மொட்டை மாடியில் ஒரு சாயங்காலம் மிதந்து வந்த இதே பாட்டு எவ்வளவு அமைதியையும், சாந்தத்தையும் தந்தது. தாயின் உள்ளங்கையிலிருந்து குழந்தைக்கு கிடைக்கும் அனுபவம் அது. இசையின் இனிமையையும் வெயில் உறிஞ்சி விடுகிறது.
விசுக்கென்று ஒரு சின்ன சத்தத்தில் மாருதி கார். சரியாக பார்ப்பதற்குள் தூரம் போய் விட்டது. கண்ணாடி ஏற்றிவிட்ட மாதிரி இருந்தது. ஏ.சி செய்யப்பட்டிருக்க வேண்டும். வெயிலையே உறிஞ்சி விடுகிற சக்தி. உள்ளே இருப்பவர்களுக்கு வெளியுலகம் சாயங்காலமாய் இருக்கும். ரோட்டின் குறுக்கே அலைஅலையாய் மிதக்கிற தோற்ரம். வெயில் காட்டும் ஜாலம். எங்காவது போய் அப்படியே தண்ணீருக்குள் விழுந்து கிடக்க வேண்டும் போலிருக்கிறது.
யோசித்துப் பார்க்கும் போது சவுகரியங்களும், சொகுசுத்தனங்களும் கற்பனைகளில் மட்டுமே இருந்திருக்கின்றன. ஒவ்வொரு பருவமும் கஷ்டங்களில் கழிந்தாலும் ஒன்றுக்கொன்று மோசமாகிக்கொண்டே வருகிறது. சின்ன வயசில் பட்டன் அறுந்த கால்ச்சட்டை போட்டுக்கொண்டு ஊர்க்காடெல்லாம் சைக்கிள் டயரை ஒட்டிக்கொண்டு திரிந்த காலங்கள் என்னவோ சுகமாய்த்தான் இருக்கின்றன. நாளுக்கு நாள் வெயில் ஏறிக்கொண்டே இருக்கிறது. இரவுகளில் கூட வெயிலின் நாற்றமடிக்க ஆரம்பிக்கிறது. ரோட்டில் உருகிய தாரின் வெக்கை முகத்தலடிக்கிறது.
ரோட்டின் மறுபக்கம் நீண்டு பரந்த வயல்வெளி. அறுப்பு முடிந்து வெறும் நிலம் பாத்தி பாத்தியாய். மூனு பேர் காய்ந்து போன வரப்புகளில் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். போன மழைக்காலத்தில் பூவலிங்கம் கடன் வாங்கியிருந்தார். இப்போது நான் என்ன செய்ய என்று இந்த நிலம் போல விழிக்கிறார். பணம் தரவில்லையென்றால் மரியாதையில்லாமல் பேசிவிட்டு வா என்று சொல்லியிருந்தார் முதலாளி. எப்படிப் பேச. பூவலிங்கத்திற்கு அப்பா வயசு இருக்கும்.
“யப்பா… என்ன எழவு வெயில் இது” வெறும் மார்பில் துண்டு துடைத்தபடி மூனுபேரில் ஒருவர் ரோட்டுக்கு ஏறி வந்தார்.
“சர்பத் போடுங்கண்ணே” பனை ஓலை விசிறியால் காற்று ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்த கடைக்காரர் உற்சாகமானார். வெயில் வியாபாரம்.
“நல்லா வெயிலடிக்கட்டும் அப்பத்தான் இந்த வருசம் விதைப்புக்கு மழை வரும்”
வீடு இப்படித்தான் என்னையும் நம்புகிறது. அழுகையாய் வந்தது. மங்கிய நிலாவொளியில் ஒரு பெரிய கல்லின் மீது கைவைத்தபடி மோன நிலையில் அமர்ந்திருக்கிற ஏசுவின் படமும், கொஞ்சம் தள்ளி ‘வருத்தப்பட்டு பாரஞ் சுமக்கிறவர்களே… என்னிடம் வந்து இளைப்பாறுங்கள்’ என்னும் வாசகத்தோடு இருக்கும் வீட்டின் முன்னறையும் ஞாபகத்துக்கு வந்தன.
டீக்கடை முன்னால் இருந்த பெஞ்சில் உட்கார்ந்து உட்கார்ந்து, அந்த பழைய பெஞ்ச் வழுவழு என்றாகியிருந்தது. வெயிலில் பளபளத்தது. வாட்சைப் பார்த்தேன். பத்து நிமிஷங்கள்தான் ஆகியிருந்தது.
கடகடவென அந்தப் பிரதேசமே அதிரும்படி லாரி ஒன்று ரோட்டில் போனது. பின்னால் குவிந்திருந்த மணலில் கைகால்களை பரத்திப் போட்டு வானம் பார்க்க ஒரு மனிதன் தூங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. இந்த வெயிலிலா! எங்கிருந்து வருகிறான்..! கண்ணிலிருந்து லாரி மறைந்த பிறகும் அந்த திசையையே பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த மனிதனுக்கு எது வெயில்?
பி.கு: 1992ல் நான் எழுதிய சிறுகதை இது.
***
7
ஞானப்பால்
“ஏஞ்செல்லம்! நல்ல புள்லைல்ல… கொஞ்சம் கீழ எறங்கிக்கம்மா. அம்மா துணி தொவச்சிட்டு வந்து ஒன்னயத் தூக்கி வச்சுக்கிறேன்… என்ன? த… அழக்கூடாது. ஏங்கண்ணுல… அய்! இன்னா பாரு குதிர! அய் இன்னா பாரு காரு! அய்ய்யா ஒடுது பாரு! டுர்..ர்…ர்.. ஆங் அப்பிடித்தான். டுர்..ர்..ர்.. சமத்துப் புள்ளமா நீ! கார ஒட்டிட்டு இரு… அம்மா வர்றேன். யப்பா! தலைக்கு மேல ஒரு அம்பாரம் வேலக் கெடக்கு. துணி தொவைக்கனும். சமைக்கனும். இன்னிக்கு வெள்ளிக்கிழம… வீடு மெழுவனும். சவம் இந்தக் கோழி எங்க போச்சுன்னுத் தெரியல்ல… எங்கயாவது போய் முட்ட உட்டுத் தொலைஞ்சிருது. ….
ஆரம்பிச்சிட்டானா… விட்டுட்டு நாலு எட்டு கூட வைக்கல. ஏம்மா… ஏம்மா அழற? அம்மா எங்ஙனயும் போலம்மா. இங்ஙதான் இருக்கேன். அதான… வாயப் பெளந்துட்டு கையக் கைய நீட்டிருவியே. அ..ச்சீ! அ..ச்சீ. சிரிச்சிருவான். இந்த சிரிப்புக்கு மட்டும் கொறச்சல் இல்ல. ஏ….ராசா! எம்மவந்தானா நீ! சிரிக்கும்போது எவ்ளோ அழகா இருக்கே! அட எம் புள்ளா! ஒங்க தாத்தாவ அப்பிடியே உரிச்சு வச்சிருக்கியே! ம்… அவிய மட்டும் இன்னேரம் இருந்தா நீ இப்பிடியா கீழ கெடப்ப. தலைல தூக்கி வச்சு ஆடிருக்க மாட்டாவ்ளா…?
ஒங்கம்மாவ எப்பிடியெல்லாம் கண்ணுக்கு கண்ணா வளத்தாவ தெரிமா. யம்மாங்குறதத்தவிர வேற வார்த்தையால ஒருநாளாவது கூப்பிட்டிருக்காவ்ளா. ஒரு வேலையுஞ் செய்ய உட மாட்டாவ. ம்… எல்லாத்துக்குஞ் சேத்துத்தான் இப்ப படுறேன். என்ன செய்ய..? கல்யாணன்கட்டி வச்ச கையோட கடன் முடிஞ்சுதுன்னு நிம்மதியா கண்ண மூடிட்டாவ. அவியத்தான் தெய்வமா இருந்து நம்மளயெல்ல்லாங் காப்பாத்தனும். சரிம்மா… நீ இது இருந்து வெளையாடு என்ன..? அம்மா இங்ஙதான் துணி தொவைக்கப் போறேன். அய்யோ ராமா! அழறானே! சொன்ன பேச்சு கேக்க மாட்டியே. இதுலதாம்மா அப்பிடியே ஒங்கப்பங் குணம். ம்ஹூம். இது சரிப்பிடாது. ஒண்ண தூங்க வச்சாத்தான் நா நிம்மதியா வேல பாக்க முடியும். அம்மா ஒன்ன தொட்டில்ல போட்டு ஆட்டுவேனாம். நீ நல்லா தூங்கிருவியாம்.
புள்ளைக்கு நெஞ்சு நெறையா சளியிருக்கு. கர்புர்னு எறைக்கு. டாக்டர் எழுதிக்கொடுத்த மாத்திர மருந்த வாங்கித் தாங்கன்னு சீட்ட அவிய கைல குடுத்து மூனுநா ஆவுது. இன்னிக்கு நாளைக்குன்னு சொல்லிக்கிட்டு இருக்காவ. என்னமோ வெட்டி முறிர மாதிரிதான் வயலுக்கு வயலுக்குன்னு போறாவ. இத்தூண்டு காய்கறிக்கடைய வச்சிக்கிட்டு, ரெங்கண்ணன் சம்பாதிக்குறதக் கூட பம்புசெட், வயக்காடுன்னு வச்சிக்கிட்டு இவியலால சம்பாதிக்க முடில. பம்புசெட்டு கடைசில சொசைட்டி லோனுக்குக் கூட காணாமத்தான் போகப்போது. என்னக் காலக்கெரகமோத் தெரில.நெல்லுப் போட்டாலும் நட்டந்தான். வாழ போட்டாலும் நட்டந்தான்.
மனுசனுக்கு எதிலயும் ஒரு கூறு வேணும்லா? என்னம்மா! தொட்டில்லக் கெடந்துட்டு அம்மா கையையே அண்ணாந்து பாக்குற? கைக்கு ஆறு ஆறுன்னு பன்னென்டு வளையல் ஒங்க தாத்தா எனக்குக் கல்யாணத்தோடச் செஞ்சு போட்டாவ தெரிமா? இப்ப ஒன்னு கூட இல்ல, எல்லாத்தய்யும் பம்புசெட்டு தண்ணில உரத்துக்குக் கரைச்சாச்சு. இதுக்கு என்னயப் படிக்க வச்சிருந்தா எதாவது ஒரு வேலப் பாத்துருப்பேன். சமஞ்ச பொண்ணு வாசலத் தாண்டக் கூடாதுன்னு பொத்தி பொத்தி வச்சாவ. இப்ப இருந்ததெல்லாம் வாசலத் தாண்டி போய்ட்டே இருக்கு. கல்யாணமாகி இந்த அஞ்சு வருசத்துல ஒரு புடவ… ஒரு பாத்திரம்னு அவிய கையால வாங்கித் தந்துருக்காவ்லா? சரி, என்னமோ இந்த பூவையும் பொட்டையுமாவது தந்திருக்காவ்ளேன்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியதான்.
ஒங்கப்பா இதயெல்லாங் கேட்ட… இதென்ன சதா பொலம்பிக்கிட்டு…. கொஞ்சநேரம் வாய மூடு… நீ பொலம்பி பொலம்பியே வீடு இப்பிடி ஆய்ட்டும்பாவ. இந்த வாயி எங்க நிக்குது? மனசுலக் கெட்க்குறத இப்பிடியாவது கொட்டித் தீக்கணும் போல இருக்கே? அவியளுக்கு இது எங்கத் தெரியப் போது. கைல கெடச்சதத் தூக்கி எறிவாவ. பாவம் எல்லாக் கோவமும் வீட்டுக்குள்ளத்தான்.
யம்மா… வாயிலிருந்து கை எடும்மா…கை சூப்பக் கூடாது. ஏமாத்தவும் தெரியாது. ஏமாத்தறவனையும் தெரியாது. அவிய அப்பா இந்த வீட்டுல நா காலடி எடுத்து வச்சுப்ப சொன்னாவ. யம்மா! இவஞ்சரியான வெள்ளரிக்காய்ப் பேயன்! பேக்லாண்டு…. ஒரு எழவும் தெரியாதுன்னு. இத்தனைக்கும் ஒரு கெட்ட பழக்கமும் கெடையாது. ஒரு குடிப்பழக்கம் உண்டா? ஒரு பீடி, சிகரெட்தான் உண்டா? இந்த உலகத்தப் பத்தித் தெரியாமப் போனது மட்டுந்தா தப்பு. எப்படியோ அந்தக் கொழந்தக்கிட்ட நானும் கெடந்து ஒன்னப் பெத்துட்டேன். வேற என்னத்தப் பெருசா செஞ்சிட்டோம். எங்கப்பா பேர நானுங் காப்பாத்துல. அவிய அப்பா பேர அவியளுங் காப்பாத்துல. இருந்த பேர எல்லாம் எழந்துட்டு இப்பிடி தெருவும் திண்ணையுமா நிக்கிறதுதான் மிச்சம்..! இனும என்ன? ஒன்னப் படிக்க வைக்கணும்…. வளக்கணும்…. ஆளாக்கணும்…. கண்ணா! அப்ப நீயாவது எங்கள கண்கலங்காம வச்சுக் காப்பாத்துவியா… எங்களுக்கு ஒரு நல்ல பேரெடுத்துக் குடுப்பியாம்மா…?”
(1990ல் எழுதிய சிறுகதை இது)
*
8
கிடா நாற்றம்
இன்னும் இன்னும் என பார்க்கச் சொன்னது. மரத்தின் நுனியில் குருவி உட்கார…. காற்றின் அசைவில் இலை சடசடக்க…. குருவி உதிர… காற்று ஓயும் வரை குருவி அதையொட்டி அந்தரத்தில் பறந்துவிட்டு திரும்பவும் உட்கார…. மீண்டும் காற்று அடிக்க…. விளையாட்டு. சுவாரஸ்யமான ரகசிய விளையாட்டு.
—————–
பப்பாளி மரத்துக்கு அடியில் பாத்திரம் துலக்குகிற இடத்தில் செவலைக்கோழி நின்று தரையைக் கீறிக் கீறி கொத்திக்கொண்டு இருந்தது. புனிதம் பின்கட்டு வாசலில் உட்கார்ந்து அதையே பார்த்துக் கொண்டிருந்தாள். நினைவு அதில் இல்லை.
சுந்தரியக்கா பொன்பாண்டியைப் பற்றி சொல்லி விட்டுப் போனதிலிருந்து அங்கேயே உட்கார்ந்திருக்கிறாள். தொண்டை வறண்டு உடம்பில் சக்தியே இல்லாமல் உணர்ந்தாள்.அந்த நேரத்துக்கு என்று பின்வளவில் இருந்து காற்றும் நின்று போயிருந்தது. அழுகை வந்தது. கண்பார்வை நீத்திரையிட, சாணி மெழுகிய களிமண் தரையில் கிடந்த வேர்க்கடலைத் தோடுகள் புழுக்களாய் நெளிந்தன.
நம்பாமல் இருக்க முடியவில்லை. நேற்று குழாயடியில் அமிர்தமும், செல்வியும் ஜாடை மாடையாக பேசியது தன்னைத்தான் என்பது இப்போது தெரிந்தது. சுந்தரியக்கா சொன்னது உண்மையெனத்தான் தோன்றியது. திருஷ்டிப் பொட்டு வச்சதிலிருந்து இந்த மார்கழிக்கு கோலங்கள் போடச் சொல்லிக் கொடுத்தது வரை அந்த அக்காவோடு இவளுக்குப் பழக்கம். சுந்தரியக்காவுக்கும் தெரிந்துவிட்டது என்பதே அவமானமாயிருந்தது. இன்னும் யாருக்கெல்லாம் தெரிந்திருக்கும் என்பதை நினைத்த மாத்திரத்தில் அழுகை பொங்கியது.
இப்படியா ஒருத்தன் தம்பட்டமடிப்பான். சுடலைமாடன் கோவில் முன்னால் வில்லடிக்கக் கட்டியிருக்கிற சோம்பேறி மடத்தில் கூட்டாளிகளோடு பொன்பாண்டி எல்லாவற்றையும் ஜாலியாக அரட்டை அடித்திருக்கிறான். தனிமையில் இவள் நினைத்து நினைத்து சந்தோஷப்பட்டது பூராவும் ஊரின் புழுதியாயிருந்தது. இஷ்டத்துக்கும் சொல்லியிருக்கிறான். இவளுக்கு எங்கெல்லாம் மச்சம் இருக்கிறது என்றுகூட அவனுக்குத் தெரியுமாம். ச்சே என்றிருந்தது.
அன்றைக்கு சக்திக்கனியின் சடங்கு வீட்டின் அந்தக் கூட்டத்தில் எவ்வளவு பாவம்போல் முகத்தை வைத்துக் கொண்டு இவளையே பார்த்திருந்தான். அன்றுதான் அவனே தனது என்று இவள் வரித்துக் கொண்டது. ஸ்கூலுக்குப் போன காலங்களில் பஜாரில் அந்த பெரிய மளிகைக் கடையில் கல்லாவில் எத்தனையோ தடவை அவனைப் பார்த்ததுண்டு. அப்போதெல்லாம் எதுவும் தோன்றவில்லை. ஆனால் அன்று பார்க்கும்போது படபடவென அடித்துக் கொண்டது. தொடர்ந்து அவன் கண்களைப் பார்க்க முடியவில்லை. ஒப்புக்கு அங்குமிங்கும் பார்த்துக் கொண்டும், கூட வந்தவர்களோடு வாயை அர்த்தமில்லாமல் அசைத்துக்கொண்டும் இருந்து திரும்பவும் அவன் திசையைப் பார்ப்பாள். இவளையே அவன் பார்த்துக் கொண்டு இருப்பான். கூச்சமும், சந்தோஷமும் சட்டென கொப்பளிக்கும். பார்வையை மாற்றுவாள். இன்னும் இன்னும் என பார்க்கச் சொன்னது. மரத்தின் நுனியில் குருவி உட்கார…. காற்றின் அசைவில் இலை சடசடக்க…. குருவி உதிர… காற்று ஓயும் வரை குருவி அதையொட்டி அந்தரத்தில் பறந்துவிட்டு திரும்பவும் உட்கார…. மீண்டும் காற்று அடிக்க…. விளையாட்டு. சுவாரஸ்யமான ரகசிய விளையாட்டு. வீட்டுக்குப் போகலாம் என்று அம்மா கூப்பிட்டபோது அந்த இரவு அப்படியே நீடிக்காதா என அவனை ஏக்கத்தோடு பார்த்துச் சென்றாள். அன்று இரவு தூக்கம் வரவில்லை. யாருடைய தொந்தரவும் இல்லாமல் நிசப்தத்தில் அவன் வந்து நின்றான். யார் வந்து கலைக்க முடியும்.
—————–
இவள் பழகுகிற இடங்களிலெல்லாம் எங்காவது ஒரு மூலையில் அவன் வந்து நின்றான். எல்லாம் அதிசயமாயிருக்கும். உள்ளங்காலில் பூவின் ஸ்பரிசம் தருகிற குறுகுறுப்பும் கால்களில் நடுக்கமுமாய் காலம் கரைந்தது.
—————–
கண்ணெல்லாம் பொங்கிப் போக அடுத்தநாள் எழுந்திரிந்தவள் பின்வளவுக்குச் சென்ற போது உரக்குழிக்குப் பக்கத்தில் மஞ்சநத்தியில் இவள் அதுவரை பார்த்திராத அழகும், நிறமுமாக ஒரு சின்னப் பறவை வந்து உட்கார்ந்திருந்தது. அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் புதுசுபுதுசாய் மலர்ந்தது. இவள் பழகுகிற இடங்களிலெல்லாம் எங்காவது ஒரு மூலையில் அவன் வந்து நின்றான். எல்லாம் அதிசயமாயிருக்கும். உள்ளங்காலில் பூவின் ஸ்பரிசம் தருகிற குறுகுறுப்பும் கால்களில் நடுக்கமுமாய் காலம் கரைந்தது. அவளுடைய எல்லா நேரத்தையும் அவனே எடுத்துக் கொண்டான்.
சுந்தரியக்கா வந்துவிட்டுப் போன இந்த மதியம் வரைக்கும் இவளுக்கு நாலு திசைகளிலிருந்தும் காற்று வீசிக்கொண்டுதான் இருந்தது. ராத்திரியில் மாடக்குழியில் ஏற்றிவைக்கிற சுடர்போல ஆகிப்போயிருந்தாள். சிலோனில் சுசீலாவின் குரல் இவளுக்குள் ஆழ ஆழத்துக்குமாய் மிதந்து போக கண்கள் சொருகிப் போகும். அப்படிக் கிடந்த ஒருவேளையில் “புனிதா சாப்பிட்டாளா” என்று வாசலில் கால் அலம்பிக்கொண்டு அம்மாவிடம் அப்பா கேட்டார். விடுபட்டு தன்னிலை வந்து, இவ்வளவு நாள் இவர்கள் எங்கிருந்தார்கள் என்கிற மாதிரி மலங்க மலங்க விழித்தாள். எல்லோரையும் விட்டுவிட்டு தான் வெகுதூரம் போயிருந்ததாய் உணர்ந்தாள்.சடை பின்னி விடும்போது திரும்பி அம்மாவின் முகத்தை உற்றுப் பார்த்தாள். :அட… மூதி. தலைய திருப்புளா” என்று அம்மா இவள் தோளைப் பிடித்துத் தள்ளினாள். எல்லாம் இப்போது காரணமில்லாத அசைவுகள். சந்தோஷமோ, வருத்தமோ அந்தச் சலனங்கள் பொய்யாய்ப் போவதும் சோகம்தான். எத்தனை கணங்களை ஒரேயடியாய் இழக்கச் செய்துவிட்டான். அதன் வலி இவளுக்குத்தான் தெரியும்.
தெருமுனையில் பெட்டிக்கடையில் நின்று பொன்பாண்டி சிகரெட் குடித்தது இவளுக்குப் பிடிக்கவில்லைதான். கோயில் கொடைக்கு அடுத்தநாள் ஊர் பூராவும் பனம் பிரித்துப் போட்ட நாடகத்தில் எவளோ ஒருத்தியின் கையை பிடித்துக் கொண்டு ‘தன்னந்தனி காட்டுக்குள்ள..’ பாட்டுக்கு டான்ஸ் ஆடியதும் பிடிக்கவில்லைதான். கோபப்பட்டிருக்கிறாள். முகம் திருப்பியதில்லை. இனிமேல் அப்படிச் செய்யமாட்டேன் என்று தருவைக்காட்டில் வைத்து சொன்னதும் சமாதானமாகிப் போனாள். ஆனால் இது? இவளே அந்த ராஜாவுக்காக கிடந்து தவிப்பதாயும், அந்த மகராசன் இல்லையென்றால் தான் இல்லையென்று இவளே புலம்பியதாயும்…. இவளுக்கு முகம்தான் சரியில்லை… மத்தபடி… என்று ஆரம்பித்து என்னவெல்லாம் சொல்லியிருக்கிறான். கணேசமூர்த்தி என்கிறவன் கேட்டு சுந்தரியக்கா புருஷனிடம் சௌந்தரபாண்டி அண்ணாச்சியிடம் சொல்ல, சுந்தரியக்கா கைவேலை எல்லாம் போட்டுவிட்டு, மெனக்கெட்டு அம்மா இல்லாத நேரமாய் வந்து சொல்லிப் போய்விட்டாள்.
—————–
இவளை உரசிப்போன கிடாவிடமிருந்து அசிங்கமான குமட்டிகொண்டு நாற்றம் வந்தது. ஆட்களின் நடமாட்டம் பார்த்து மந்திரந்தாத்தாவின் பந்தல் கட்டுக்குப் பின்னால் பூதாகரமாய் நிற்கிற பூவரச மரம் ஒட்டி சாயங்காலம் சந்திக்க ஆரம்பித்த நாட்களில் ஒருநாள் பொன்பாண்டியும் அதுபோல் இருந்ததாக இப்போது தெரிகிறது.
—————–
ஆச்சி வீட்டுக்குப் போயிருந்த அம்மா வந்தாள். “என்னடி புல்லறுக்கப் போலியா?” என்றாள். தலைவலிக்கிறதென்றாள். “பெட்டியில் தைலம் இருக்கு. எடுத்துத் தேச்சுக்க” அவசர அவசரமாய் வீடு பெருக்கிவிட்டு நார்ப் பெட்டியையும், பண்ணருவாளையும் எடுத்து அம்மா புல்லறுக்க கிளம்பினாள். தருவைக்காட்டில் இன்னேரம் பொன்பாண்டி இவளுக்காக காத்திருப்பான். இவள் வராமல் போனது தவிக்க வைக்கும். துணிதுவைக்கிற கல்லில் போய் உட்கார்ந்து கொண்டாள். “என்ன… நீ புல்லறுக்கப் போலியா” என்னும் பாவனையில் ஆடுகள் ஏக்கத்துடன் இவளைப் பார்த்தன.
இவளை உரசிப்போன கிடாவிடமிருந்து அசிங்கமான நாற்றம் குமட்டிகொண்டு வந்தது. ஆட்களின் நடமாட்டம் பார்த்து மந்திரந்தாத்தாவின் பந்தல் கட்டுக்குப் பின்னால் பூதாகரமாய் நிற்கிற பூவரச மரம் ஒட்டி சாயங்காலம் சந்திக்க ஆரம்பித்த நாட்களில் ஒருநாள் பொன்பாண்டியும் அதுபோல் இருந்ததாக இப்போது தெரிகிறது. பொன்பாண்டியை அப்படியொரு கோலத்தில் முதன்முதலாய் அப்போதுதான் பார்த்தாள். இவள் தனக்குத் தெரியும் சமையல் பற்றி பெருமையுடன் சொல்லிக் கொண்டிருந்தபோது அவன் அங்குமிங்கும் பார்த்து சகஜமிழந்து தவித்திருந்தான். பேச்சை நிறுத்தி அவன் முகத்தைப் பார்த்தபோது அதிர்ச்சியாய் இருந்தது. அவன் கண்களில் சகிக்க முடியாத கபடம் குடியேறியிருந்தது. திருட்டுத்தனம். முகத்தில் அருளே இல்லை. இவளுக்கு பயமாய் இருந்தது. அவன் கைகள் நடுங்குவது பார்த்து இவளுக்கு நடுங்க ஆரம்பித்தது. எழுந்திருக்கப் போனாள். பிடித்துக் கொண்டான். “என்னது இதெல்லாம்…” என்று விலக முயற்சித்து முடியவில்லை. வலிக்கிற அளவுக்குப் பிடித்திருந்தான். சட்டென்று முகத்தைப் பொத்திக் கொண்டாள். மூடிய கண்களுக்குள் அந்தக் கபடக் கண்களே, முத்தம் பெறும் வரை நிலைத்திருந்தது. அங்கிருந்து ஒடி வந்த பிறகு இன்றுவரை அந்த முத்தமே நிலைத்திருந்தது. இப்போது திரும்பவும் கபடக் கண்கள். அந்த முகம் நிச்சயம் சுந்தரியக்கா சொன்னது மாதிரி சொல்லித்தான் இருக்கும். எல்லாம் பறிகொடுத்ததாய் அந்தி இறங்க ஆரம்பித்திருந்தது. புனிதம் அங்கேயே உட்கார்ந்திருந்தாள்.
“என்ன இன்னும் வெளக்கு வைக்கலையா.. என்ன ஆச்சு இவளுக்கு…?” புல்லுக்கட்டோடு அம்மா வீட்டுக்குள் நுழைந்தாள். புல்லையெடுத்து ஆட்டுக்குப் போட்டாள். “தைலம் தேச்சியா..” என்றாள். “இல்லை” சொல்லி இவள் வீட்டுக்குள் நுழைந்தாள். “ஏண்டி இப்படி பேயடிச்ச மாதிரி இருக்க…” அம்மா சத்தம் போட்டாள்.
வாசலில் சக்திக்கனி “அக்கா” என்றாள். போனாள். புல்லறுக்கப் போகும்போது பொன்பாண்டியைப் பார்த்தாளாம். வரும்போதும் அதே பனைத்திரட்டில் நின்றிருந்தானாம். அவளிடம் “புனிதம் வரலையா” என்று கேட்டானாம். தெரியாது என்று சக்திக்கனி சொல்லியிருக்கிறாள். சக்திக்கனிக்கு புனிதத்தோடு கூட போவதிலும், வருவதிலும் இரண்டு பேரின் பழக்கம் மட்டுமே தெரியும். புனிதம் “சும்மாத்தான் வரல்ல…” என்று ஏதோ சொல்லி வைத்தாள். அம்மா பின்பக்கம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டு சக்திக்கனி இவள் அருகில் வந்து சின்னக்குரலில் “யக்கா… செல்வி ஒன்னப்பத்தி தப்பால்லாம் பேசுறா… அந்த பொன்பாண்டியண்ணன்…” சொல்ல வந்தவளை “அப்புறமா வா” என அம்மா வரவும் அனுப்பி வைத்தாள். அவள் போகவும் சந்து திரும்பி பொன்பாண்டி சைக்கிளில் தெருவுக்குள் வருவது தெரிந்தது. அவன் இவளைப் பார்க்க, கதவை படாரென்று அறைந்து சாத்தினாள். வெளியே சைக்கிள் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. திறக்கச் சொல்லி கெஞ்சுவது போலிருந்தது. “அம்மா..! தைலம் தேச்சு விடம்மா” என்று அம்மாவின் மடியில் படுத்துக் கொண்டாள்.
பிறகு ஒருநாள் மூடப்பட்ட கோவிலுக்கு எதிரில் அதே சோம்பேறிகள் மடத்தில் உட்கார்ந்து பொன்பாண்டி வேதாந்தம் பேசியபடி இருந்தானாம். பொம்பளைகளையே நம்பக் கூடாதாம். யாரையும் காதலிக்கக் கூடாதாம். ஏமாத்திருவாங்களாம். “யக்கா… இனும தாடி வளத்தாலும் வளப்பான்” என்றாள் சக்திக்கனி. இரண்டு பேரும் சிரித்தார்கள். காற்று மெல்ல அங்கு வீச ஆரம்பித்தது.
(1993ல் எழுதிய ‘புறம் தள்ளி…’ என்னும் சிறுகதைதான் இது)
*
9
இன்று வந்தவள்
சாவடியின் அந்தப் பெரிய ஆல மரத்துக்கடியில் தலையை மண்ணில் கிடத்தி ஆழ்ந்த லயிப்பில் இருந்த கருப்பு சட்டென்று நிமிர்ந்து ஊருக்கு வந்து சேரும் சரளைக்கல் சாலையை கூர்மையாய் பார்த்தது. காதுகள் விறைத்துக் கொள்ள, அருகில் இருந்த நடமாட்டங்கள், சத்தங்கள் எல்லாம் தாண்டி புளியமரங்களாய் தெரியும் தூரத்து வளைவில் தனது புலன்களை செலுத்தி தயாரானது. கண்களில் மையமிட்டிருந்த மொத்த ஆவலும் ஒரு சிறு இரைப்போடு உடல் முழுவதும் பரவ வாலில் இதயம் கிடந்து துடித்தது. வேட்டியும் துண்டுமான உருவம் புளிய மரங்களடியில் வந்து கொண்டிருந்தது. உவ்வென்று திமிறிய கருப்பன், கால்கள் புழுதி கிளப்ப சிட்டாக பறந்து போனது. அந்த திடீர்ப் பாய்ச்சலில் லேசாக பதறிய நவ்வாப்பழப் பாட்டி “அதானப் பாத்தேன்…. மாசாணம் வந்துட்டாம் போலுக்கு” என்று முணுமுணுத்தாள்.
நெருங்க நெருங்க வேகம் கூடியது. கட்டுப்படுத்த முடியாமல் முட்டித்தள்ளுகிற மாதிரி சென்று மாசாணத்தின் காலை உரசியபடி கடந்து , மின்னலாய் திரும்பி அவன் காலை நக்கியது. நீர் இறைக்கிற துலாவின் சப்தங்களோடு முகர்ந்தது. கால்கள் எழுப்பி அவனது கைகளை நக்கியது. “ம்..ம்..கருப்பா” என அடிக்கிற பாவனை செய்தான் மாசாணம். அந்தச் செல்லத்தில் கண்கூசி தலை சாய்த்து சுற்றி சுற்றி வந்தது. அந்தப் பெண் அழுக்கு மூட்டையோடு மாசாணத்தின் அருகில் இருந்து ஒதுங்கி நின்றாள். “ஏலக் கருப்பா…இது யார் தெரியுமா” அவளைக் கைகாட்டினான். கருப்பன் ஒருதடவை அவளைப் பார்த்துவிட்டு அவன் கால்களுக்குள் அலைபாய்ந்தது. அவன் நடக்க ஆரம்பித்ததும் கருப்பன் முன்னுக்கு ஓடியது. நின்று திரும்பிப் பார்த்து மேலும் இரண்டடி பாய்ந்தவாறு மிகுந்த உற்சாகத்தோடு ஊருக்குள் அழைத்துக் கொண்டு வந்தது.
சாவடியில் எல்லோரும் அதிசயமாய் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அவனைப் போலவே அந்தப் பெண்ணும் பரட்டைத்தலையும், அழுக்காகவும் இருந்தாள். கொஞ்சம் உயரம். தாடை, தோள் எலும்புகள் எல்லாம் துருத்திக் கொண்டு, வதங்கி ஒடிசலாய் இருந்தவளுக்கு சம்பந்தமில்லாமல் மார்புகள் இருந்தன. கண்களில் பூழை. பெட்டிக்கடையில் அவன் சர்பத் வாங்கிக் கொடுக்கும் போது தரையில் சிதறிக்கிடந்த பிளாஸ்டிக் டம்ளர்களை பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரே மூச்சில் சர்பத் குடித்து வாயைத் துடைத்துக் கொண்டாள். கருப்பன் அங்குமிங்குமாய் சுற்றி சுற்றி சந்தோஷம் கொண்டாடிக் கொண்டு இருந்தது.
“ஏலே மாசாணம் யார்ல இவ” பூவலிங்கம்தான் லேசான கனைப்போடு கேட்டான். மற்றவர்கள் பதிலுக்கு காத்திருந்தார்கள். அவள் அவனைப் பார்த்தாள். மாசாணம் கீழே உட்கார்ந்து தோளில் கிடந்த மூட்டையை பிரிக்க, கருப்பன் தொணதொணவென்றிருந்தது. “இருல…” “ம்..பாத்தியா” “தர்றேன்ல” குரல்கள் கொடுத்தபடி சுருட்டி வைக்கப்பட்ட ஒரு பிளாஸ்டிக் பையை அவிழ்த்தான். “ம்…இந்தா குரங்கணியம்மன் கோயில் கறிச்சோறு” கீழே வைக்க, எதோ சண்டைக்கு போற மாதிரி தாவி அவுக் அவுக்கென்று சாப்பிட ஆரம்பித்தது. ஆலமரத்திலிருந்து இரண்டு காகங்கள் கரைந்தபடி டீக்கடைக் கூரையில் வந்து உட்கார்ந்து நோட்டம் பார்த்தன. “ஏலே..மாசாணம் நாங்கேட்டிட்டுருக்கேன்ல.. யார்ல இவ?’ கொஞ்சம் கடுமையாய் பூவலிங்கம் அதட்டினான். மாசாணம் அவனைத் திரும்பி பார்த்தான். உணர்ச்சியற்ற அந்தப்பார்வையும், முகமும் மிரட்டியிருக்க வேண்டும். தினமும் வாசலில் வந்து நின்று “யம்மோவ்…நா மாசாணம் வந்திருக்கேன்” என்று குரல் கொடுத்தவன் இவன் இல்லையோ என்றிருந்தது. ஐந்து வரைக்கும் தன்னோடு படித்த பழக்கத்தையும் தாண்டிய பயம் இப்போது பூவலிங்கத்திற்கும் லேசாய் தொத்திக்கொண்டிருந்தது. மறைத்துக்கொண்டு “ஒக்கால ஓலி. பதில் சொல்லாமப் பாக்குறாம் பாரு” என்று முறைத்தான். ‘உடப்பா, மாசாணத்துக்கும் குடும்பம் பன்னணும்னு ஆச வந்துருக்கு. எத்தன நாள்தான் சாமியாராவே இருப்பான்’ என்று டிரக்கர் டிரைவர் அம்புரோஸ் கிண்டலோடு சமாதானப்படுத்தினார். எல்லோரும் சொல்ல நினைத்ததை மாசாணத்துக்கு தெரிவித்துவிட்டதாய் தன்னையும் சமாதானப்படுத்திக்கொண்டார். எலும்புத் துண்டோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்த கருப்பனை மாசாணம் பார்த்தவாறு சிரித்துக் கொண்டான். “வாடா, கருப்பா நம்ம வீட்டுக்கு போவோம்” என்று சொல்லியபடி நடக்க ஆரம்பித்தான்.
தெரு நாய்கள் வாள் வாளென்று குரைத்தும், கொஞ்சம் தூரம் பின்னால் வந்தும் அடங்கின. கருப்பன் அவைகளை உவ்வென்று ஊன் தெரிய உறுமி முறைத்தது. இடையிடையே வாலாட்டிக்கொண்டு மாசாணத்தின் கால்களை உராய்ந்து கொண்டது. அதற்கு பெருமை அடங்கவில்லை. இசக்கியம்மன் கோயில் பக்கத்தில் அந்த பெரிய வேப்பமரத்துக்கடியில் பேன் பார்த்துக்கொண்டும், பழக்கம் விட்டுக்கொண்டும் இருந்த பெண்மக்கள் சட்டென்று அமைதியானார்கள். பிறகு குசுகுசுவென்று பேசினார்கள். மைனாக்களின் சத்தங்கள் மட்டும் விடாமல் மரத்தில் கேட்டுக்கொண்டிருந்தன. ஒலைத்தட்டிகளுக்குப் பின்னால் யாரெல்லாமோ ரகசியமாய் சிரித்த மாதிரி இருந்தது. மாசாணம் தாடியை நீவிக்கொண்டு ஓரக்கண்ணால் கூட வந்தவளைப் பார்த்தாள். அவள் கருப்பனையே பார்த்தபடி நடந்து வந்து கொண்டிருந்தாள். மைனாக்கள் தின்று உதிர்த்த வேப்பங்கொட்டை ஒன்று அவள் பரட்டைத்தலையில் சிக்கிக்கொண்டது. அதைத் தட்டி விட கையை நீட்டினான். சிரித்துக்கொண்டே அவன் கையை அவள் தட்டி விட்டாள். மேலத்தெரு வளைவில் சைக்கிளில் வந்த மைக்செட்டுக்காரன் கெதலைமுத்து அடக்கமாட்டாமல் “இதப் பாருடா” என்று கத்தினான். திரும்பவும் மாசாணம் கைநீட்டி வேப்பங்கொட்டையை தட்டிவிடப் போனான். அதைப் பார்த்த கருப்பன் அவளை உவ்வென்று முறைத்தது. “அடச் சீ..” என்று அவள் அதட்டினாள். மாசாணமும் “ஏல..சும்மாயிருல” என்று கையை ஒங்கி செல்லமாக அடிக்கப் போனான். பெரிய வளவுக்காரர் கிணற்றடியில் தேங்கியிருந்த தண்ணீரை பின்னங்கால்கள் கட்டப்பட்ட கழுதைகள் இரண்டு நக்கிக் கொண்டிருந்தன. ஊர்க்கோடியை நெருங்கிவிட்டிருந்தார்கள்.
தேரிக்காடு செல்லும் பாதையில் அவனது குடிசை தனியே இருந்தது. முன்னால் ஒரு பெரிய பூவரச மரம் அடர்ந்து நின்றிருந்தது. தரையோடு வளைந்து பிறகு உயர்ந்து அலையும் அதன் கிளைகளில், பள்ளிக்கூடம் இல்லாத நாட்களில் சிறுவர்கள் ஏறி விளையாடுவார்கள். பொந்துகளாய் வெடித்துப் போயிருக்கும் செதில் கிளம்பிய அந்த வயதான மரத்தின் தாழ்ந்த கிளைகளில் உட்கார்ந்து இலையை சுருட்டி “பீப்பீ…பீப்பீ..” என்று ஊதிக்கொண்டிருப்பார்கள். மஞ்சள் மஞ்சளாய் குலுங்கிக் கிடக்கும் பூக்களைப் பறித்து தண்ணீரில் பிய்த்துப் போட்டு, உடம்பெல்லாம் அந்த மஞ்சள் தண்ணீரைச் சிந்திக்கொண்டு வேப்பிலை ஏந்தி சாமியாடி குறி சொல்வார்கள். மாசாணம் அந்தக் குடிசையின் தாவாரத்தில் இருக்கும் கயிற்றுக்கட்டில்லில் உட்கார்ந்திருந்தாலோ, படுத்திருந்தாலோ அந்தப் பக்கமே அண்ட மாட்டார்கள். கால்களில் சதங்கை கட்டிக்கொண்டு, திரிதிரியாய் சடை தொங்க, உடம்பெல்லாம் விபூதி பூசிக்கொண்டு, பெண்கள் உடுக்கிற சட்டை பாவாடை மாதிரி, ஒரு ஜிகினா உடுப்போடு வந்து ஆங்காரக் குரலில் “நா ஆறுமுகமங்கலம் சாமி சுடலமாடன் வந்திருக்கேன்” என்று வீட்டு வாசலில் கையில் திருவோடோடு வந்து நிற்கும் அவனைப் பார்த்து வீறிட்டு அலறிய குழந்தைகள் நிறைய அந்த ஊரில் உண்டு.
மாசாணம் அவனது மூட்டைகளை போய் திண்ணையில் வைத்தான். அந்தப் பெண் விறுவிறுவென்று போய் பையா அல்லது மூட்டையா என்று அறியமுடியாத அவளது சுமையையும் வைத்துவிட்டு, உட்கார்ந்து கைகளை உயர்த்தி நெட்டி முறித்துக் கொண்டாள். சுவரில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள். கருப்பன் அங்குமிங்கும் மூச்சுத் தெறிக்க ஓடி அந்தக் கட்டிலில் கிடந்த பழைய துணிகளில் படுத்து விளையாட ஆரம்பித்தது. மாசாணம் துரத்தினான். கதவைத் திறந்து உள்ளே சென்றான். விளக்குமாற்றை எடுத்து பெருக்க ஆரம்பித்தான். புகை புகையாய் உள்ளே இருந்து தூசி வாசல் வழியே பெருகியது. குடங்களை எடுத்துக்கொண்டு பெரிய வளவுக்காரர் கிணற்றடிக்குச் சென்றான். அவள் அப்படியே தனது சுமையை தலைக்கு வைத்து தூங்கிப் போனாள். மாசாணத்துக்கு நிறைய வேலைகள் இருந்தன. தேரிக்காட்டில் இருந்து முள் அடித்து விறகுச்சுமையோடு சென்றுகொண்டிருந்த செல்லக்காள், “இதென்ன ஒருநாளும் இல்லாத திருநாளா” என்று படலையை விலக்கி மாசாணத்தைப் பார்த்தாள். அவன் வேர்க்க விறுவிறுக்க தரையை கழுவி விட்டுக் கொண்டிருந்தான்.
“யாருல இவ”
“பாத்தா எப்படித் தெரியுது?”
“ரொம்ப வௌக்கமாத் தெரியுது. எந்த ஊரு இவளுக்கு?”
“தெரியாது. குரங்கணியம்மங் கோயில்லப் பாத்தேன். ரெண்டு நா கூடவே இருந்தா. வர்றியான்னேன். வந்துட்டா”
“எதுக்கு கூட்டிட்டு வந்திருக்கே..”
“அடப் போக்கா…. மத்தியானம் சாப்பாட்டுக்கு எதாவது கிடைக்குமா”
“ஆமா… இவிய பவுசுக்கு கலியாணச் சாப்பாடு வேற போட வேண்டியதுதான்” சொல்லிக்கொண்டே படலையை மூடி விட்டுச் செல்ல ஆரம்பித்தாள் செல்லக்காள். “சாகுற வரைக்கும் இவனுக்கு ஒரு கலியாணம் பண்ணிரனும்னு சித்திரவள்ளியக்கா எவ்வளவோ அழுது பாத்தாங்க. தெருத் தெருவா ஊர் ஊரா அலைஞ்சவனுக்கு அப்பல்லாம் புத்தி வரல்ல. இன்னிக்கு எவளவோ ஒருத்தியைக் கூட்டி வந்து நிக்கான். பெத்த தாய அந்தப் பாடு படுத்திட்டு பேசுற பேச்சப் பாரு. இப்ப எந்தச் சாமி வந்து இவன் மேல வந்து நின்னு ஆடுதுன்னு தெரில்ல….” காற்றில் கரைந்து போன அவள் குரலின் திசையில் கழுத்தைத் திருப்பி காதை உயர்த்தி உட்கார்ந்து கொண்டிருந்தது நாய். ‘இதற்கு உன் பதில் என்ன’ என்பதாய் மாசாணத்தைத் திரும்பி பார்த்தது. அவன் அவ்வப்போது தூங்கிக் கொண்டிருந்தவளைப் பார்த்தபடி அந்த இடத்தை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தான்.
“உள்ளே வந்து கட்டிலில் படுத்துக்க…. திண்ணையைக் கழுவணும்” என்று அவளை மாசாணம் எழுப்பினான். எரிச்சலும், சோம்பலுமாய் தள்ளாடி அவள் உள்ளே சென்றாள். புருவத்தை உயர்த்தியபடி கருப்பனும் வீட்டிற்குள் நுழைந்து அந்த நார்க்கட்டிலுக்கு கீழே சுதந்திரமாக படுத்துக் கொண்டது. ச்சீ… நாயே என்று மாசாணம் அதை விரட்டினான். அதிர்ச்சியோடு வாலை சுருட்டிக்கொண்டு அவனருகே அருகே வந்தது. கையில் கம்பை எடுத்து விரட்டினான். வீட்டிற்கு வெளியே சென்று வான் நோக்கி தலையைத் தூக்கி ஊளையிட்டது கருப்பன்.
*
10
இன்னும் கிளிகள்
ஒருநாள் தெருக்குழந்தைகளின் கூச்சலோடும், ஆரவாரத்தோடும் வந்த கவர்ன்மெண்ட் ஜீப் வாலகுருவின் கனவு, பஞ்சவர்ணத்தின் உலகம், குழந்தைகளின் விளையாட்டு என எல்லாவற்றையும் அபகரித்துக்கொண்டது.
டாவாலியோடு சொஸைட்டிக்காரர்கள் திடுதிப்பென இறங்கியது கண்டு குருத்துவும், பஞ்சவர்ணமும் அதிர்ந்து போனார்கள். செய்தி கேள்விப்பட்டு ரைஸ்மில்லில் இருந்து வாலகுரு பதறி வந்தான். சொஸைட்டி செக்ரட்டரி ஏற்கனவே பார்க்கும்போது அவனிடம், “தம்பி! அப்பா வாங்குன கடன் கொஞ்சங்கூட கட்டாம ஏகப்பட்ட பாக்கியாய்ட்டு. எப்படியாவது கட்டிரு”
என்று சொல்லியிருந்தார். “சரி… சரி” என்று தலையாட்டி மறந்திருந்தான். மறக்கவில்லையென்றாலும் அடைத்திருக்க முடியாது. ஆனால் கொடூரமாய் இப்படி வந்து நிற்கும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை.
பானைச் சட்டிகளைத் தூக்கப் போனார்கள். “அய்யா… அய்யா…” என்று கெஞ்சினான். யார் யாரெல்லாமோ வீட்டு முன்னால் கூட ஆரம்பித்தார்கள். “நாங்க என்ன செய்ய முடியும்…. மேல இருந்து அதிகாரிங்க வந்திருக்காங்க “ செக்ரட்டரி சொன்னார். அவர் கைகாட்டிய அதிகாரி காலில் போய் வாலகுரு விழுந்தான். நெஞ்சில் ஓங்கி அடித்து அழுத குருத்து “இத வச்சிட்டு எங்கள விட்டுருங்களய்யா…” என வாலகுருவைத் தூக்கினாள். டாவாலி காணச் சகிக்காமல் கண்ணெல்லாம் நீர் முட்ட முகத்தைத் திருப்பிக் கொண்டார். குழந்தைகள் அலறிய வீடு தெருவையே அரற்றியது. அந்த அதிகாரி குருத்துவின் கைகளைத் தடுத்து “மொதல்ல அத கழுத்துலப் போடுங்கம்மா… கழுத்துலப் போடுங்கம்மா..” என தொண்டை அடைக்கச் சொல்லிக் கொண்டிருந்தார். குருத்து வெறி பிடித்தவள் போல நின்று “போங்க… இத எடுத்துட்டுப் போங்க…” என கத்தினாள். அவர்கள் வாலகுருவைத் தூக்கி நிறுத்தி பத்துநாள் அவகாசம் தருவதாகவும், அதற்குள் வந்து கடனை அடைக்குமாறும் சொல்லிச் சென்றார்கள். தெருக்குழந்தைகள் திக்பிரமையில் நிற்க, ஜீப் வெறுமனே உறுமிப்போனது.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தேற்றிவிட்டுப் போனார்கள். சுவரில் பல்லிகளைப் போல ஓட்டியிருந்த குழந்தைகளை இழுத்து மடியில் போட்டு குருத்து அழுதுகொண்டிருந்தாள். வாலகுரு எங்கேயோ வெறித்துப் பார்த்திருந்தான். அரிசி பாதி வெந்தும். வேகாமலும் அடங்கியிருக்க, அடுப்பு வெறும் புகையை கசிந்து கொண்டிருந்தது. பஞ்சவர்ணம் எழுந்து திரடு நோக்கிப் போனாள்.
கூலிவிளை தாண்டி திரடு கொஞ்சம் பனைகளும், ஒரு மாமரமும், அங்கங்கு உடைமரங்களுமாய் இருந்தது. மாமரத்தடியில் உட்கார்ந்து கொண்டாள். வெளிறிய முகத்தோடு எல்லாவற்றையும் உற்றுப்பார்த்தாள். அதன் வடக்கு மூலையில் அடையாளங்கள் உதிர்ந்து போய் தனியாயிருந்தது அந்த மொட்டைப்பனை. உறைந்துபோன அதன் மௌனத்தில் இரவுகளும், பகல்களும் உருக்கத்தோடு வந்து போயின. மௌர்ணமியின் இளம் ஓளியில் ஊர், காடு யாவும் அழகின் மயக்கத்தில் மிதக்க, அந்தப் பனை மட்டும் ஒற்றைக் கோடாய் தரையிலிருந்து விறைத்து நிற்கும். பிறகு அதன் வாழ்க்கையிலும் ஒரு அர்த்தம் வந்தது. “ஆச்சி… ஆச்சி… அந்த மொட்டைப்பனைல முனி இருக்காமே… அப்படியா” என்று பேரன்மார்கள் ஒருநாள் அவளிடம் கேட்டார்கள். “யார் சொன்னா… ஒங்கள மாரி ரெண்டு கிளிப்பிள்ளைங்கதான் இருக்கு..” என்று அவர்களைக் கட்டிப்பிடித்து பஞ்சவர்ணம் உச்சி முகர்ந்தாள். மொட்டைப்பனையின் உச்சியில் ஒரு பொந்தில் இரண்டு கிளிகள் தளிர்விட்டது போல முளைத்திருந்தன. அந்தச் சின்னப்பறவைகளின் “க்கீ…க்கீ..”சத்தங்கள் கீற்றுக்களாய் அந்தப் பிரதேசத்தையே கிழித்து ஓடின. மொட்டைப்பனையின் மௌனங்கள் உடைந்து சிதறின. இப்போது கிளிகள் எங்கோ போயிருக்க வேண்டும். மொட்டைப்பனை அவைகளின் வருகைக்காக காத்திருந்தது.
தினமும் மதியத்திற்கு மேல் கருப்பட்டிக்காப்பி குடித்து பஞ்சவர்ணம் இந்தக் கால்வலியிலும் திரடுபக்கம் ஒருநடை வந்து போய்விடுவாள். விழுந்துகிடக்கும் சுள்ளிகளையும், கொஞ்சம் பனை ஓலைகளையும் ஒரு சுமை சேர்த்து போவாள். கவட்டுக்கம்பு கட்டி உடம்பழங்களை உலுக்கி ஆடுகளுக்கு கொண்டு போய் போடுவாள். எப்போதாவது பேரன்மார்களும் கூட வருவார்கள். அங்கேயும் இங்கேயுமாய் ஆடவும் சாடவுமாய் இருப்பார்கள். போட்டி போட்டுக்கொண்டு மாங்காய் எறிவார்கள். ஒருதடவை அவர்கள் கவனமும், கல்லும் கிளிகள் பக்கம் திரும்ப அவை கலவரமடைந்து திரடு முழுக்க மேலே பறந்து… பறந்து… அவஸ்தையில் வீறீட்டன. கொஞ்ச நேரத்துக்கு முன்னால் வீடே அலங்கோலமாகிப் போனதைப் போன்ற அவலம் நிறைந்ததாய்த்தான் அதுவும் இருந்தது. “பாவம்ப்பா…கிளிகள் விட்டுருங்க…” என்று பேரன்மார்களை அடக்கினாள்.
பஞ்சவர்ணத்தின் வாழ்க்கையில் இந்த பனைத்திரடு சாயங்கால உலகமாயிருந்தது. முப்பத்திரண்டு வருசங்களுக்கு முந்தி சொர்ணவேலுவின் பின்னால் குனிஞ்ச தலையோடு இந்த ஊருக்கு வந்த புதிதில் ஒரு சாயங்கால நேரத்தில்தான் முதல் தடவையாய் திரட்டிற்கு அழைத்து வந்தான். அவள் கையை அழுத்திப் பிடித்து “இது நம்ம இடம்” என்றான். அந்தக் கையை விடாமலேயே திரடு முழுக்கச் சுற்றி வந்தாள். அப்போது அந்த மொட்டைப்பனை தன் பச்சை ஓலைகளை விரித்து காற்றை வருடி விளையாடிக் கொண்டிருந்தது. அதிலிருந்து அந்தப்பனை அவளுக்குப் பழக்கம். சகல காலங்களிலும் அந்தப் பனை தன்னோடு கூடவே வந்த தோழியாய் அவளுக்குப் பிரமை உண்டு.
சொர்ணவேலு இறந்தபோது, வாழ்ந்த காலம் பூராவும் அவளோடு சண்டை போட்டு…. போட்டே அவர் விட்டுப்போன சோகம் அவர் காலடி கேட்காத வீடு முழுவதும் அடர்ந்திருந்தது. முடிந்தவரையில் வாலகுருவும், குருத்துவும் பஞ்சவர்ணத்தின் மனம் நோகாமல் பார்த்துக்கொள்வது என்றிருந்தார்கள். சாப்பாடு, காப்பி எதுவானாலும் அவளுக்குத்தான் முதலில் கொடுக்கப்படும். அதையும் அவளிடம் ஒருவார்த்தை கேட்டே செய்தார்கள். அதெல்லாம் அவளை தூரத்தில் கொண்டுபோய் நிறுத்தின மாதிரியே தெரிந்தது. திரட்டில் போய் உட்கார்ந்து மொட்டைப்பனையிடமிருந்தும், கிளிகளிடமிருந்தும் உறவின் புதிர்களை கற்றுக் கொண்டாள். பிறகு குழந்தைகளின் காலடி ஓசைகளில் பழைய தடங்கள் அமிழ்ந்து போக ஆரம்பித்தன. வெள்ளைப் புடவைகள் மெல்ல மெல்ல பழுப்பு நிறமடைந்து போயின. காலத்தையே கலைத்தையேப் போட்ட மாதிரி இருக்கிறது இப்போது. மாமரம் என்ன செய்வதென்றறியாமல் நின்றது போலிருந்தது. அதன் கண்ணீராய் நிழல் சிந்திக்கிடந்தது.
வாலகுரு அவளைத் தேடி வந்தான். பேரன்மார்களும் கூடவே வந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் “யப்பா… இந்தத் திரட்டை வித்துருவோம்ப்பா….” சொல்லிக்கொண்டே பெருங்குரலெடுத்து அழுதாள். குழந்தைகளும் அழுதபடி ஆச்சியை வீட்டுக்கு அழைத்தன. கிளிகள் இன்னும் வரக்காணோம். மொட்டைப்பனை உயிரற்று இருந்தது. திரடுவிட்டு வரும்போது பஞ்சவர்ணத்தின் கால்கள் இருந்த கொஞ்சநஞ்ச வலுவுமிழந்து போயிருந்தன.
வாலகுருவுக்கு நினைவிலிருக்கிறது. “அம்மா! அந்த பனைத்திரட்டை வித்துருவமா..” செலவுக்கு அறவே பணம் இல்லாத போது கேட்டிருக்கிறான். “வேண்டாம்பா..இருந்துட்டுப் போவட்டுமே. இதுலயா நாம வாழ்ந்துரப் போறோம்?” என்று பஞ்சவர்ணம் சொல்லியிருக்கிறாள். மாவு அரைக்கவும், நெல்லு குத்தவுமாக அல்லர் பக்கத்திலேயே நின்றுகொண்டிருக்கும் ரைஸ்மில் டிரைவர் வாலகுரு தன் கனவுகளை யாருக்கும் தெரியாமல் வைத்துக் கொண்டான். அதே ரைஸ்மில்லில் வாட்டு போட்டு அரிசி வியாபாரம் செய்ய நினைத்த சந்தோஷம் கூட இனி இருக்காது. இதே வேலையில் கிடைக்கும் குருணை அரிசியிலும், எதோ கொஞ்சம் பணத்திலும்தான் வாழ்க்கையை தள்ளியாக வேண்டும். திரடு இல்லாமல் அம்மா எப்படி வீட்டிலேயே இருப்பாள் என்பதை யோசிக்க முடியவில்லை. இதே பாதைகளில் அம்மா எத்தனை தடவை வந்து போயிருப்பாள்.
பனைமரங்கள் எல்லாக் காலங்களிலும் பஞ்சவர்ணத்திற்கு வேலைகள் வைத்திருந்தன. பைனி காலத்தில் காத்தவராயன் ‘அம்மோய்’ எனக் குரல் கொடுத்து விடியும் முன்னரே தலைக்கயிற்றோடும், சுண்ணாம்புக் குடுவையோடும் பைனி இறக்கிவர தெருவில் நட்ந்து போவான். இவள் பின்பக்கம் போய் அந்த டாங்கி அடுப்பைத் தயார் செய்வாள். உள்ளே இருக்கும் சாம்பலை அள்ளி முந்தின நாள் பொறுக்கி வந்த சுள்ளிகளைப் பக்கத்தில் வைத்துக் கொள்வாள். பொறுமையாய்த் தீ போட்டு காய்ச்சுவாள். கொதித்து, வற்றி, செம்பாகாகி, குமிழ் குமிழ்களாக வெடித்து கருப்பட்டி வாசம் ஊர் பூராவும் பரவும். பஞ்சவர்ணம் அனுபவித்தபடியே சிரட்டைகளில் ஊற்றுவாள். வாரத்துக்கு நாலு கொட்டான் கருப்பட்டி சேர்த்து விடுவாள். கடையில் போட்டு வரும் பணத்தில் காத்தவராயனுக்குக் கொடுத்தது போக கொஞ்சம் மிஞ்சும். நுங்கு சீசனில் காத்தவராயன் குலை குலையாய் வெட்டி மந்தைக்கடையில் போய் விற்பான். இளம் நுங்குகளாய்ப் பார்த்து குழந்தைகளுக்கு கொடுப்பான். தொடர்ந்து வரும் பனம்பழங்கள் காலம். சுட்டு, தோலுரித்து, கொட்டைகள் பிரித்து குழந்தைகளுக்குக் கொடுப்பாள். சப்பிக்கொண்டே இருப்பார்கள். வாய், கை எல்லாம் பிசுபிசுவென ஆனாலும் அந்த மனமும், இனிப்பும் அன்றெல்லாம் கூடவே இருக்கும்.
அத்தோடு முடியாது. பள்ளந்தோண்டி, கொட்டைகளைக் கொட்டி, மிதித்து, பாத்தி கட்டி, தினமும் தண்ணீர் ஊற்றுவாள். கிழங்கு பிடுங்கும் காலத்தை கணக்குப் பார்ப்பாள். இதெல்லாம் தந்ததுதானே இதுவும் என்று மொட்டைபனையைப் பார்க்கும்போது நினைத்துக் கொள்வாள். நல்ல நாளில் சாமி கும்பிட்டு, காத்தவராயனைக் கூப்பிட்டு தோண்டி தரச் சொல்வாள். கொட்டைகளை வெட்டி தவணு கொடுப்பாள். கிழங்கு உரித்து, மஞ்சள் பூசி அவிப்பாள். குழந்தைகள் அடுப்பு பக்கத்தில் வந்து காத்திருக்கும். வீடு நெருங்கும்போது இனி பைனிக்கும், பழத்திற்கும், கிழங்குக்கும் இந்தக் குழந்தைகள் யார் வீட்டு வாசத்தையாவது பிடித்துக்கொண்டுதானே தெருவில் அலைவார்கள் என பெருமூச்சு விட்டாள். வீட்டு முன்னால் ஜீப் வந்துபோன தடம் இன்னும் அப்படியே இருந்து மிரட்டிக்கொண்டு இருந்தது.
அந்த வெள்ளிக்கிழமை ஏரலுக்குப் போய் பத்திரம் முடித்தார்கள். கொழும்புக்காரர் வாங்கியிருந்தார். ரொம்ப குறைந்த விலைக்குத்தான் போனது. சொஸைட்டி லோன் போக மூவாயிரம் போல்தான் மிஞ்சியது. சில்லறைக் கடன்களை அடைக்கத்தான் உதவும். பத்திரத்தில் கையெழுத்திடும்போது பஞ்சவர்ணத்தின் கைகள் நடுங்குவதை வாலகுரு கவனித்தான். நல்லபடியாக முடித்த சந்தோஷத்தில் கொழும்புக்காரர் ஒரு கிலோ நம்மூர் மிட்டாய் வாங்கித் தந்தார். வீட்டில் குழந்தைகள் ஆசையுடன் சாப்பிட்டன. எல்லோருக்குள்ளும் ஒரு மௌனம் வந்து அடைந்திருந்தது.
அதற்கு அப்புறம் பஞ்சவர்ணம் திரடுபக்கம் போகவேயில்லை. யார் யாரெல்லாமோ அங்கு வந்தார்கள். பகலில் மாமரத்தடியில் சீட்டு விளையாடினார்கள். பைனி காலத்தில் காத்தவராயன் சுண்ணாம்புக்குடுவையைக் கொண்டு செல்வதில்லை. பனை ஓலையில் பட்டை போட்டுக் குடிக்காமல் பிளாஸ்டிக் சொக்குகளில் காசு கொடுத்து குடித்தார்கள். திரடு முழுக்க புளிப்பு ஏப்பங்கள் சூழ்ந்திருந்தன. மொட்டைப்பனை கேள்விகளை சுமந்தபடி கூனிப் போனது. கிளிகள் அதை புல்லாங்குழலாக்கி அந்தியில் சோகம் பாடின. வாலகுருவின் கண்களுக்குக் கீழே கனவுகள் கருவளையங்களாகிக் கிடந்தன.
அந்தக் கார்த்திகையும் ஊர் முழுவதும் இரவில் விளக்குப் புள்ளிகளை இட்டிருந்தது. சைக்கிள்கடை ராசய்யா வந்து சொன்னான். மொட்டைப்பனையை அன்று வெட்டி விட்டார்களாம். சிவன் கோவில் முன்னால் அதனை சொக்கப்பனையாக கொளுத்தப் போகிறார்களாம். பேரன்மார்கள் சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு அதைப் பார்க்க ஓடினார்கள். பஞ்சவர்ணம் கேட்டுக்கொண்டு படுத்தேக் கிடந்தாள். அன்றைக்கு இரவில் சொர்ணவேலுவின் ஞாபகங்களாய் வந்தன. நெடுநேரம் க்ழித்து வந்த பேரன்மார்கள் சொக்கப்பனை உயரமாய் எரிந்ததையும், கூட்டத்திற்குள் போட்டிப் போட்டுக்கொண்டு சாம்பலை எடுத்து வந்ததையும் வீரக்கதைகளாய் குருத்துவிடம் சொன்னார்கள்.
காலையில் எழுந்ததும் பஞ்சவர்ணம் அந்தச் சாம்பலை போய்ப் பார்த்தாள். உள்ளங்கையில் எடுத்து வைத்துக் கொண்டாள். எதோ முணுமுணுத்தாள். வெளியே கிளிகளின் சத்தம் கேட்டது. வாசல் வந்து அண்ணாந்து பார்த்தாள். கிளிகள் தெரியவில்லை. சத்தங்கள் மட்டும் வந்துகொண்டே இருந்தன. பக்கத்தில் எதோ ஒரு மரத்திற்கு வந்திருக்க வேண்டும்.
(1994ல் எழுதிய கதை)
*
11
பொய்யாய்... பழங்கதையாய்..
திரும்பத் திரும்ப லெட்டர் போட்ட பிறகு இந்த வருஷம் ராஜவேலு அம்மன் கொடைக்கு வந்திருக்கிறான். பலகாரம், பழங்கள் என்று வீட்டில் அங்கங்கு. சந்திரா நாளைக்கு ஐந்து தடவையாவது முகம் கழுவி அண்ணன் அவளுக்கு வாங்கி வந்த கோகுல் சாண்டல் பவுடரைப் போட்டு கண்ணாடியில் சிரித்துக் கொள்கிறாள். வாய்க்காங்கரைமுத்து அவ்வப்போது அடுப்பங்கரைப் பக்கம் போய் “ராஜவேலு சாப்பிட்டானா”, “ராஜவேலு எத்தன நாள் இருப்பான்” என விசாரித்துக் கொள்கிறார். இருமிக்கொண்டே அச்சு முறுக்கு சுட்டுக்கொண்டிருந்த சொர்ணத்திற்கு தொண்ட அடைக்க, கண்ணில் நீராய்ப் பெருக்கெடுக்கிறது. இரண்டு நாளில் திரும்பவும் மகன்காரன் மெட்ராஸ் போகப் போகிறான்.
ராஜவேலு இந்த நாலைஞ்சு நாட்களில் வாய்க்காலின் குளிர்ந்த நீரில் மல்லாக்க கண்கள் கூச வானம் பார்த்து மிதந்தான். பெரியப்பா வீட்டுக்குப் போய் ஆச்சியிடம் ஊர்க்கதைகள் கேட்டான். காற்றில் மிதந்துவரும் பனங்கருப்பட்டி வாசனையில் ஊரையே உள்வாங்கினான். ராத்திரி டியூப்லைட் வரிசையாய்க் கட்டி வெளிச்சம் பரவிய தெருக்களில் நடந்து அழகக்காள் வீட்டுத் திண்ணையில் ஜெகஜோதியாய் உட்கார்ந்திருந்த சின்னத்தங்கத்தை நெஞ்சு படபடக்கப் பார்த்தான். தங்கப்பாண்டியோடும், குமாரோடும் பட்டாணிக்காரர் வயலுக்குப் போய் பம்ப்செட் பக்கத்தில் அரைநெல்லி, பப்பாளி, நார்த்தங்காய், மரங்களுக்கு அடியில் குளிர்ந்த நிழலில் உட்கார்ந்து வில்ஸ் குடித்தான். அவர்கள்தான் நிறையப் பேசினார்கள். இவன் பெரும்பாலும் அமைதியாகவே இருந்தான். இவனுக்குள் என்னதான் இருக்கிறது என்பதை அறிய முடியாமல் தாங்கள் இவனைவிட சிறியவர்களாகி விட்டதைப் போல உணர்ந்தார்கள்.
இரண்டு வருஷத்துக்கு முன்னால் ஊரில் சுற்றித் திரிந்த ராஜவேலு இவன் இல்லை. குழந்தைத்தனமான முகம். குறுகுறுவென்றிருப்பான். சேட்டைகள் தாங்க முடியாது. டீச்சர் சத்தம் போடும்போது லேசாய் பயப்பட்டு… மெதுவாய் முகம் மலர்ந்து… அப்பாவியாய் விழிப்பான். கண்கள் சிரிக்கும். டீச்சருக்கும் சிரிப்பு வந்துவிடும். சின்னத்தங்கத்தின் முடியை நேரம் கிடைக்கும் போதெல்லாம் பின்னாலிருந்து இழுப்பான். ஒருநாள் வலி தாங்காமல் அழ, ஹெட்மாஸ்டர் இவன் காலுக்கு கீழே பிரம்பால் வீசித்தள்ளிவிட்டார். ஒரு பொட்டு கண்ணீர்க்கூட வரவில்லை. அடுத்தநாள் சின்னத்தங்கத்தை பார்க்கும் போது “அழுவணி” என்றான். எல்லாமே விளையாட்டுத்தான் இவனுக்கு. சொர்ணம் ‘வாழ்க்க முழுசும் எம்புள்ள இப்படியே கவல இல்லாம இருக்கணும்’ என்று மனசுக்குள் நினைப்பாள். வாய்க்காங்கரைமுத்து பெருமூச்சு விடுவார்.
மம்பட்டி சுமந்து பட்டாணிக்காரர் தோட்டத்து வாழைக்கு தண்ணீர் பாய்ச்சும் ராத்திரிகளில் பீடிப்புகை ஊதி ராஜவேலுவைப் பற்றி கனவுகள் நிறைய கண்டிருந்தார் அவர். லோடு ஏற்றிய மாட்டு வண்டியில் உட்கார்ந்து கரடுமுரடான பாதைகளில் இவனை நினைத்து கண்கள் மின்ன வாழ்க்கையைச் சுமந்திருக்கிறார். ராஜவேலு சிரிக்கும் போதெல்லாம் அவருக்குள் மாடுகளின் மணிச்சத்தங்கள்தான் நிறையும். ஊரின் எல்லார் வீட்டுக்குள்ளும் அவன் பாட்டுக்கு போய் வருவான். போன வருசம் இறந்துபோன வேலாச்சிக்கு இவன் கையைப் பிடித்துக்கொண்டு “ராசா..” என குரல் தழைய கூப்பிடுவதில் சந்தோஷமுண்டு. எல்லாம் பொய்யாய்ப் போனது. ப்ளஸ் டூ பரிட்சையில் இங்கிலீஷில் பெயிலானான்.
மணிச்சத்தங்கள் தீராத சோகத்தோடு ஒலித்தன அன்று இரவு. ராஜவேலு பக்டோன் அடித்து, வாயில் நுரையோடு… ஒன்றுக்குப் போய்…. வெளியேயும் போய்… சந்தியம்மன் கோயில் திண்ணையில் கிடந்தான். அந்தப்பக்கம் வந்த தாயம்மக்காள் பார்த்து “ஏ… பாவி! இப்படி பண்ணிட்டியே..” என ஈரக்குலை நடுங்க, தொண்டை கிழிய குரல் எழுப்பின போது ஊர் அதிர்ந்தது. அந்த இரவை இப்போது நினைத்தாலும் சொர்ணம் நடுங்கிப் போவாள்.
மூன்று நாளாய் மூக்கு, வாய், மூத்திரம் போக என்று உடம்பு பூரா டியூபைச் சொருகி ஹைகிரவுண்டு ஆஸ்பத்திரியில் வைத்திருந்தார்கள். சாப்பிடாமல் கொள்ளாமல் பக்கத்தில் சொர்ணம் பைத்தியம் போல உட்கார்ந்திருந்தாள். இவன் கண்விழித்துப் பார்க்கிற சமயத்தில் “கண்ணா! தைரியமா இரும்மா… தைரியமா இரும்மா…” என்று தன்னை தைரியப்படுத்திக் கொண்டாள். கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரியின் குமட்டும் மருந்து நெடி, அழுக்கு மக்கிய படுக்கைகள், அசுத்தங்கள், அங்குமிங்கும் ஓடுகிற பெருச்சாளிகள் எல்லாவற்றையும் அந்த பெரும் சோகத்தால்தான் தாங்க முடிந்தது. மாடுகளையும், வண்டியையும் விற்றுத்தான் இவன் உயிர் மீட்கப்பட்டது. மாடுகளைத் தொடர்ந்து கட்டியதால் வளவுப்பக்கம் பூவரச மரத்தில் சாசுவதமாகிப்போன கயிற்றுத்தடங்கள் மட்டுமே மிச்சம்.
ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு வந்தவனுக்கு, வாசலைத் தாண்டி கால் வைக்கவே ஒருமாதிரியிருந்தது. சகலமும் கூசியது. ஏன் சாகாமல் பிழைத்தோம் என்றிருந்தது. சாமி கும்பிட்டு ஏதோ முணுமுணுத்தபடி அம்மா இவன் நெற்றியில் இட்ட விபூதியில் உயிர் கரைந்த பாசமிருந்தது. திரும்பவும் இவன் பிள்ளையாய் நடமாடுவதில் சொர்ணத்திற்கு பெரும் நிம்மதி. வற்றிப்போன வாய்க்காலின் கோடை வெறுமை இவனிடமிருந்தது. கரையோரத்து மாமரங்கள் உயிரற்றச் சலனங்களாக இலைகளை உதிர்த்துக்கொண்டிருந்தன.
தங்கப்பாண்டியும், குமாருமே கொஞ்சம் ஆறுதல். தினமும் சாயங்காலம் வீட்டுக்கு வருவார்கள். காலேஜ் சம்பந்தமாய் அவர்கள் பேசும்போது சுருக்கென்றிருக்கும். ஒருநாள் ‘நைட்ஷோ’ போவமா என்றார்கள். வாய்க்காங்கரைமுத்துவும் ஒன்றும் சொல்லவில்லை. கனவுகள் நீர்த்த மௌனம் அவருக்கும் மகனுக்கும் இடையில் உருவாகியிருந்தது. தியேட்டரில் தங்கப்பாண்டி, “இங்கிலீஷ் எழுதி பாஸ் பண்ணு” என்றான். தலையாட்டினான். நிலா வெளிச்சத்தில், பனைமரங்களின் சலசலப்புக்கு நடுவே தார் ரோட்டில் சைக்கிளில் வரும்போது அமைதியாய் இருந்தான். ஊர் நெருங்கும் சமயத்தில் “சின்னத்தங்கம் எப்படியிருக்கா” என்றான். “காலேஜ்க்குப் போறா..” என்றார்கள்.
அடுத்தநாள் அவர்களிடம் சொல்லாமல் கொள்ளாமல் மெட்ராஸ் புறப்பட்டு விட்டான். சாயங்காலம் நண்பர்கள் அவன் வீட்டுக்குப் போனபோது வாய்க்காங்கரைமுத்து “தாம்பரத்துல ஒரு கடைக்குப் போயிட்டான்… பொறுப்பு வரட்டும்” என்றார்.
முழுசாய் இரண்டு வருஷம் கழித்து இப்போதுதான் வந்திருக்கிறான். மீசை அடர்த்தியாகி, கொஞ்சம் தடித்து, கடினமானவனாய் தெரிந்தான். கூடவே இருந்தாலும் எதிலும் ஒட்டாமல் அப்படி ராஜவேலு இருந்தது குமாருக்கு பிடிக்கவில்லை. எத்தனை அம்மங்கொடைகள் இவனோடு ஜாலியாய் கழிந்திருக்கிறது என குமார் நினைத்துக்கொண்டான். சாமி மஞ்சள் குளித்ததிலிருந்து ஆத்துக்குப் போய், திரும்பி வந்து ஊருக்குள் வீடுவீடாய் சாமியாடிகளோடு போனது…. பேப்பர்க்காரர் வீட்டுக்கு முன்னால் பச்சா விளையாடியது… குசுகுசுவென பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் கொலுசுச்சத்தங்களோடு குமரிகள் தாண்டிப்போன பிறகும் கம்மென்ற நிறையும் பூவாசம்…. ஒதுங்கிப் போய் எங்கே இருட்டுக்குள்ளிருந்து சிகரெட் பிடித்தாலும் கேட்டுக்கொண்டேயிருக்கிற வில்லடிச்சத்தம்…. துக்கமில்லாமல் விடிய விடிய கிடப்பதற்கு எவ்வளவோ அப்போது இருந்தது.
கடைசிக்கு முந்தின நாள் கும்ப விளையாட்டின் போது ராஜவேலுவுக்கு சின்னத்தங்கத்தை கூட்டத்தில் நிறையப் பார்க்க முடிந்தது. பட்டுச்சேலை கட்டி பெரியவளாய்த் தெரிந்தாள். பார்த்துக்கொண்டே இருந்தான். அவளும் இவனைச் சிலநேரம் பார்த்தாள். விடியாத மார்கழிக் காலைகளில் பஜனைக்கோயிலில் ஈரம் சொட்டும் கூந்தலோடு வந்து நின்று “ஹரஹர நமப் பார்வதிப் பதயே…” இழுத்து குளிருக்கு அழகு சேர்த்த சிறுமி ஞாபகத்துக்கு வந்தாள்.
சட்டென்று வீட்டுக்குப் புறப்பட்டான். “என்னடா” என்ற குமாருக்கு “இதோ வர்றேன்” என்று சொல்லி நகர்ந்தான். வீட்டுக்குள் நுழைந்த போது தெருவில் சந்திரா மற்றச் சிறுமிகளோடு நொண்டி விளையாடிக் கொண்டிருந்தாள். இவனைப் பார்த்ததும் “என்ன அண்ணா வந்துட்ட. கும்பம் நல்லாயில்லயா?” என்றாள்.
“இல்ல… தூக்கம் வந்துட்டு” வீட்டுக்குள் போய் படுத்துக் கொண்டான். சொர்ணம் எழுந்து வந்து “எய்யா.. பழம் எதாவது சப்டுறியாம்மா” என்றாள். “வேணாம்மா.” சுவர்ப்பக்கம் திரும்பிக் கொண்டான். நாளைக்கு இன்னேரம் பஸ் திருச்சியை நெருங்கியிருக்கும் என்று நினைத்துக் கொண்டான். தூக்கம் வரவில்லை.
அடுத்த நாள் பஸ் ஏறும்போது சொர்ணம் அழுதாள். சந்திரா பாவமாய் நின்றிருந்தாள். வாய்க்காங்கரைமுத்து அவனருகில் போய் “சொகத்துக்கு கடிதம் போடுப்பா..” என்றார். ராஜவேலு அமைதியாய் தலையாட்டினான். ஒரு தடவையாவது இவன் சிரிக்க, அதைப் பார்க்க வேண்டும் போலிருந்தது.
ராஜவேலு அவரைப் பார்த்ததும் சிரித்தான்.
“வா… வா… ராஜவேலு, ஒரு வாரமா நீயில்லாம ஒரே கஷ்டமாப் போச்சு…”
சிரித்தான்.
“ஊர்ல அப்பா… அம்மா எல்லோரும் நல்ல சொகந்தான?”
“ஆமா”
“மழ கிழ உண்டா..”
“ம்..”
“சாப்ட்டியா. இல்லேல்ல. வீட்ல போய்க் குளிச்சிட்டு சாப்பிட்டுட்டு வா… நாலு மூட சிமெண்ட்ட நம்ம டிரை சைக்கிள்ள வச்சு ஒரு பார்ட்டிக்கு கொண்டு போக வேண்டியிருக்கு..”
சரியாய் ஒருமணி நேரத்தில், கார் பஸ் இரைச்சல்களுக்கு நடுவே, அங்குமிங்கும் ஆளுக்கொரு குறிக்கோளோடு ஒடிக்கொண்டிருந்த மனுஷங்களுக்கு மத்தியில் ராஜவேலு வேகமாய் டிரை சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்தான். பார்வை எதிரே கவனமாயிருக்க, சட்டையெல்லாம் வேர்வையில் தொப்பென்று நனைந்து போயிருந்தது.
இனி, படுக்கும்போதுதான் இவனுக்கு ஊர், அம்மா, அப்பா, வாய்க்கால், குமார், சின்னத்தங்கம் எல்லோரும் ஞாபகத்துக்கு வரமுடியும். அதற்குள் உடல் அசதியால் தூக்கமும் வந்துவிடும்.
(1991ல் எழுதிய கதை இது. குமுதத்தில் வந்தது.)
12
புகை நடுவினிலே
“ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே…” சுடலை நீட்டி முழக்க ஆரம்பித்து விட்டான். தண்ணி போட்டு விட்டானென்றால் இதுதான் அவனுக்கு விநாயகர் ஸ்தோத்திரம். இன்னும் ஒரு மணிநேரத்துக்கு கச்சேரி தொடரும். சும்மா சொல்லக்கூடாது. ஆச்சரியமான குரல்வளம்தான். கேட்க உண்மையிலேயே நல்லாயிருக்கும். சுருதி பிசகாமல் ஏற்றி இறக்கி பாடுவான். நேரில் பார்க்கும் போதுதான் சிரிப்பு வரும். முகம் படு தீவீரமாய் இருக்கும். முதுகு வளையாமல் சம்மணமிட்டு உட்கார்ந்திருப்பான். ஒரு கைதேர்ந்த பாகவதரைப் போல தலையாட்டவும், தொடை தட்டவும் செய்வான்.
புத்தகம் படித்துக்கொண்டிருந்த பார்த்திபனுக்கு இதை ரசித்துக் கேட்க முடிகிறதுதான். இந்த பாட்டுக்களுக்குப் பிறகு நடக்கிற சமாச்சாரங்கள்தான் பிடிக்காது. கட்டாயம் இன்னும் கொஞ்ச நேரத்தில் அவன் பொண்டாட்டி வள்ளியோடு சண்டை போடத்தான் செய்வான் சுடலை. பாவம்… அந்த வள்ளியை அவன் அடிக்கும்போது பார்க்க சகிக்காது. முடியைப் பிடித்து இழுத்து வைத்துக்கொண்டு முதுகில் ஓங்கி ஓங்கி குத்துவான். பற்களை நறநறவென கடித்துக்கொண்டு பிசாசாய் நிற்பான். போன தடவையெல்லாம் பார்த்திபன் கோபம் தாளாமல் செருப்பைக் கழற்றிக்கொண்டு “ச்சீ… செருக்கியுள்ள…”என்று அடிக்கப் போய் விட்டான். சக்திக்கனி அக்காவும், சொர்ணமும் இவனைப் பிடித்துக்கொண்டு “எய்யா… நீ உள்ள போய்யா… போயிருய்யா..” என்று கதற ஆரம்பித்து விட்டனர். இவனுக்கு அடங்கவில்லை. திமிறினான். கடைசியில் இவன் அப்பாவும், பெரியப்பாவும் வந்து சத்தம் போட்ட பிறகுதான் அமைதியானான். “போய்… அத மொதல்ல நிறுத்துங்க…” என்று மூச்சிரைத்தான். ஞானதுரை “ஏல.. சொடல..” என்று அதட்டுப் போட்டார். சுடலை நின்றான். வள்ளி கொஞ்சமும் எதிர்ப்புக் காட்டாமல் சேலையைச் சுருட்டிக்கொண்டு திண்ணையில் போய் உட்கார்ந்தாள். சுடலையையே பார்த்தாள். அவன் வேகமாய் அங்கிருந்து நடந்து தெருவில் இறங்கி மறைந்தான். குடிசைக்குள் வள்ளியும், அவளது மூன்று குழந்தைகளும் அழும் சத்தம் இரவில் ரொம்ப நேரம் கேட்டுக்கொண்டு இருந்தது. வெளி தெரியாத இருட்டில் புதைந்து கிடக்கும் சோகத்தையெல்லாம் கொட்டித் தீர்க்கிற பாடலாக ஒலித்தது.
“நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே” என்று சுடலை இறுமாப்புடன் நிறுத்தி மீண்டும் தொடர்ந்தான். ஒரே சிரிப்பும் கைதட்டலுமாய் கேட்டது. அங்கங்கு வாசல் கதவுகளைத் திறந்து வைத்துக்கொண்டு அம்மாக்களும், குமரிகளும் உட்கார்ந்திருந்தார்கள். சுடலை முன்னால் ஒரு சிறுவர் பட்டாளமே கூடியிருந்தது. ஒவ்வொரு பாட்டு முடிந்ததும் ஆளுக்கொன்றாய் தங்கள் விருப்பங்களைத் தெரிவிப்பார்கள். “சுடலை…! ராக்கம்மா கையத் தட்டு…”, “சுடலை… சுடலை…. ராஜா கைய வச்சா…” என நச்சரிப்பாய் இருக்கும். சுடலை அவைகளில் எதையும் பாடமாட்டான். தன் விருப்பம் போலத்தான் பாடுவான். அதைத்தான் கேட்க வேண்டும். வள்ளி இந்த சமயங்களில் தன்னை மறந்து சுடலையை ரசிப்பாள்.
காலையில் பஞ்சாயத்து போர்டு பக்கத்தில் ஒரு காக்கி கால்ச்சட்டை போட்டுக்கொண்டு குப்பைக் கூட்டும் போது இந்த சுடலைதான் நேற்றிரவு அப்படியிருந்தானா என்று பார்த்திபனுக்கு இருக்கும். இவனைக் கண்டதும் “ஐயா….. கும்புடுறேங்க..” என்று சொல்கிற பவ்யமும், பயமும் இருக்கிறதே…. இவனுடைய பள்ளி மாணவர்கள் கூட அப்படி ஒருநாளும் சொன்னதில்லை. தீபாவளி பொங்கல் வந்துவிட்டால். இவன் பள்ளிக்கூடம் விட்டு வெளியே வருகிற வரை ஜோடியாய் காத்திருப்பார்கள். இவனைப் பார்த்துக் கும்பிட்டு “கேளு… புள்ள…” என்று மஞ்சள் பற்கள் தெரிய சுடலை வள்ளியை இடித்துச் சிரிப்பான். அவள் கேட்கும் முன்னால் பார்த்திபன் ஒரு பத்து ரூபாயைக் கொடுத்துவிட்டு நகருவான். “தெக்க இருந்து அழகா… லட்சுமி அடுத்த தைக்குள் வருவாங்க பாருங்க ஒங்களுக்கு..” என வாழ்த்துவார்கள். அந்தப் பெருமையில்தான் இவன் அம்மா சொர்ணம் இவர்களை குடிவைப்பதாய் சொன்னபோது பார்த்திபன் மறுக்காமல் இருந்துவிட்டாள். அது எவ்வளவு பெரிய தப்பு என்பது இப்போது படுகிறது.
கிழக்குப் பக்கம் அந்தக் குடிசை இடிஞ்சுபோய் ரொம்ப நாள் சும்மாத்தான் கிடந்தது. இடிந்தது தவுந்தது பூசிக்கொண்டு பராமரிக்காவது செய்யட்டுமே என்றுதான் சொர்ணம் அவர்களை அங்கு குடியமர்த்தினாள். இப்போது இரவுகளில் இவர்கள் சண்டையை சமாதானம் செய்து வைப்பதும் அக்கம் பக்கத்திலுள்ளவர்களுக்கு வேலையாய்ப் போனது. அதுகூட ஒரு பாசாங்குதான். எல்லோருக்கும் பார்க்கவும், ரசிக்கவும், சிரிக்கவும், அசைபோடவும் நிறைய நிறைய இருந்தன.
நிஜமாகவே வருத்தப்பட்டவன் பார்த்திபன்தான். கோபம் வந்தால் அதென்ன உடனே கையை நீட்டுவது என்று கொதித்துப்போவான். சாம்பல் நிரப்பிய மிட்டாய்ப்பெட்டியும், அகப்பைக்கனை வெளியே தெரியும் வாளியோடும் வள்ளி வீடுகளின் பின்பக்கம் கதவுகளை தட்டுகிற காலைகளில் இரவின் அழுகை காய்ந்து ஒரு நிரந்தர சோகமாய் முகத்தில் பாவியிருக்கும். தெருப்புழுதியில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்க, வீட்டுத் தாழ்வாரத்துத் தூணில் சாய்ந்தபடி எங்கேயோ பார்த்தபடி வள்ளி உட்கார்ந்து கொண்டிருப்பதை இவன் பள்ளிக்கூடத்திற்குப் போகிற சமயங்களில் பார்த்திருக்கிறான். ஒருநாள் மத்தியானம் பட்டாணித்தாத்தா வீட்டில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கும்போது இரண்டாவது மகன் காலைப் பிடித்தபடி இருக்க, “அம்மா, பகட வந்திருக்கேன்” குரல் கொடுத்தபடி சாப்பாட்டுக்கு வாசலில் நின்ற கோலம் ரொம்ப பரிதாபமாய் இருந்தது. அப்போதுகூட “ஏலே… ஒங்கப்பன் சுடலையும் இருபத்தைஞ்சு வருசத்துக்கு முன்னால இப்படித்தான் வந்து நிப்பான். இருளாயி காலை விடவே மாட்டான்” என்று பட்டாணித்தாத்தா சொல்லிக்கொண்டு இருந்தார். லேசாய் சிரித்து மகன்காரன் தலையைக் கோதிவிட்டபடி வள்ளி குனிந்து நின்றபோது பார்த்திபனுக்கு சுடலையின் மீதுதான் கோபம் வந்தது. அன்றைக்கு ராத்திரி தூங்கிக்கொண்டிருந்த சுடலையை வள்ளி முத்தமிட்டதும், விழித்துக்கொண்டவனுக்கு ஒருநாளும் இல்லாத திருநாளாய் இருந்ததுவும் பார்த்திபனுக்கு எப்படித் தெரியும். “என்னளாக் கிறுக்காப் பிடிச்சுட்டு ஒனக்கு..” என்ற சுடலையை கட்டிப்பிடித்துக்கொண்டு முத்தமாய் கொடுத்துக்கொண்டே இருந்தாள். அந்த இரவும்கூட வள்ளி அழுதுகொண்டுதன் இருந்தாள் என்பது யாருக்குத் தெரியும்.
பாட்டு நின்று குழந்தைகள் அழும் சத்தம் கேட்க ஆரம்பித்தது. பார்த்திபன் நினைத்த மாதிரி சண்டைதான். அதற்கெல்லாம் பெரிய காரணங்கள் என்று எதுவும் சுடலைக்குத் தேவையாயிருப்பதில்லை. அவன் கோபப்படும்போது வள்ளி சிரித்துக்கொண்டே எதாவது சொல்வாள். அவனுக்கு இன்னமும் கோபம் அதிகமாகும். சட்டென கைநீட்டுவான். “யார்ட்டயாவது கெஞ்சி கூத்தாடி தண்ணி வாங்கி அடிச்சிட்டு வந்து இங்க வந்து ஓட்ட அதிகாரம் பண்ணத்தான் நீ லாயக்கு” என்பாள். அவ்வளவுதான். அந்த இடமே அல்லோலப்படும். உட்கார்ந்திருந்த சிறுவர்கள் ஓவென்று இரைந்துகொண்டே தள்ளி நிற்பார்கள். சுட்லை தன் வீரபராக்கிரமங்களை காண்பிக்க ஆரம்பிப்பான்.
இன்றைக்கு இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று பார்த்திபன் எழுந்து, வீட்டிலிருந்து வெளியே போனான். “ஏல சொடல! இப்ப சும்மா இருக்கப் போறியா… இல்லையா?” என்று அதட்டினான். சுடலை இவனை ஒருதரம் உற்றுப் பார்த்தான். திரும்பவும் வள்ளியை அடிக்க ஓடினான்.
“ஏய்யா… பார்த்திபா! நீ அங்க போகாத… குடிகாரப்பய ஒண்ணு கெடக்க ஒண்ணு பேசினாலும் நமக்குத்தான் அசிங்கம்..” பார்த்திபனின் அம்மா வாசலில் நின்று இவனைக் கூப்பிட்டார்கள்.
பார்த்திபன் வேகமாக இரண்டு எட்டு வைத்து சுட்லையை இழுத்துப் போட்டான். தரையில் போய் மல்லாக்க விழுந்தான் அவன். எல்லோரும் சிரித்தார்கள். விழுந்த வேகத்தில் எழுந்து நின்று இவனை நோக்கி மூச்சிறைக்க வந்து முறைத்தான்.
“அவ…. எம் பொண்டாட்டி…”
”அதுக்கு இப்பிடித்தான் போட்டு அடிப்பியா…”
“அவ எம் பொண்டாட்டி…”
“பார்த்திபா…! இங்க வந்துருய்யா. இந்த நேரம் பாத்து அவியளும் வீட்டுல இல்லைய. ஏ…முருகேசு வீட்டு அப்பா! கொஞ்சம் இங்க வாங்களேன்..”
”யம்மோவ்! இப்ப நீங்க சும்மா இருக்கப் போறீங்களா இல்லியா. ஏல… என்ன மொறைக்கிற…. பேசாம போய் உக்காரு. தூக்கிப் போட்டு மிதிச்சிப்புடுவேன்..பாத்துக்க”
“நீ போயி ஒன் வேலையப் பாரு வாத்தியாரே..” அழுத்தமாய்ச் சொன்னான் சுடலை.
பார்த்திபனுக்கு முகத்தில் அடித்த மாதிரி இருந்தது. ”அட நாயே..!” என்று அவன் கையைப் பிடித்து தரதரவென தெருவுக்கு இழுத்துக்கொண்டு வந்தான்.
திமிறிய சுடலை ஓடிப்போய் கல்லை எடுத்து பார்த்திபனை எதிர்த்து நின்றான். “பக்கத்துல வந்தா பாத்துக்க…”
கூடியிருந்த அத்தனை பேரும் அரண்டு போனார்கள்.பார்த்திபனும் ஆடித்தான் போனான். அதற்குள் யார்யாரெல்லாமோ வந்தார்கள். சுடலை எல்லோரையும் தாறுமாறாகப் பேசினான். அடங்காமல் நின்றான். பெட்டிக்கடை செல்லச்சாமி ஓடிப்போய் சுடலையைப் பிடித்து சாத்த ஆரம்பித்தான். கொஞ்சம் பேர் பார்த்திபனை இழுத்துச் சென்றார்கள். சுடலை கெட்ட வார்த்தைகளால் எல்லோரையும் ஏசிக்கொண்டே ஓட ஆரம்பித்தான். கீழே விழுந்தான். வெறியோடு மண்ணைப் போட்டு குத்தினான். வள்ளி தன் மூன்று குழந்தைகளையும் இறுகக் கட்டிக்கொண்டு அழுது கொண்டிருப்பதை அந்த வேகமான கணத்திலும் பார்த்திபன் கவனித்தான்.
“நா அப்பவே சொன்னேன் அங்க போகாதேன்னு. கேட்டியா?”
“அடச்சீ சும்மாயிருங்க. நாளைக்கு அவன அங்க குடிவைக்கக் கூடாது. சொல்லிட்டேன்..”
“சரிப்பா… சொல்லிர்றேன்..”
சத்தங்கள் எல்லாம் கொஞ்ச நேரத்தில் அடங்கிப் போயின. பார்த்திபனுக்கு அன்று தூக்கம் வரவில்லை. எல்லோர் முன்னாலும் சுடலை எடுத்தெறிந்து பேசிவிட்டானே என்றிருந்தது. ஊரில் இருக்கும் பெரியவர்கள் கூட இவன் வார்த்தைக்கு மதிப்பளிப்பார்கள். “வணக்கம் தம்பி..” என பார்த்ததும் மரியாதை செய்வார்கள். விடிந்ததும் முதல் வேலையாய் காலி பண்ணச் சொல்லிவிட்டாலும், வள்ளியை நினைக்க வேண்டியிருந்தது. மூன்று குழந்தைகளை வைத்துக்கொண்டு அவள் தவிக்க வேண்டுமே என்றிருந்தது. பேசாமல் சுடலை இல்லாமல் அவள் வாழ்க்கை நடத்தலாம் என்றெல்லாம் எண்ணியபடி பார்த்திபன் ஒருவழியாய் தூங்கிப் போனான்.
காலையில் அவனை சுடலைதான் எழுப்பினான். “ஐயா… ஐயா…. வாத்தியார் ஐயா…” வெளியே குரல் கேட்டுக்கொண்டே இருந்தது.
“ஏல… சொடல… போ வெளியே…. நீல்லாம் ஒரு மனுஷனா?” சொர்ணம் சத்தம் போட்டுக்கொண்டு இருந்தாள். பார்த்திபன் எழுந்து வெளியே சென்றான்.
“ஐயா…! கும்புடுறேனுங்க! அம்மா இப்பவே வீட்ட காலி பண்ணச் சொல்றாங்க… நாங்க எங்கய்யா போவம்? அம்மாக் கிட்ட நீங்கதாச் சொல்லணும்”
“இல்ல சொடல. காலி பண்ணிரு.”
“ஐயா ஐயா நீங்க அப்பிடிச் சொல்லக்கூடாது ஐயா..”
“இன்னா பாரு சொடல. வரவர நீ மோசமாப் பேசுற. குடிச்சுட்டு வந்து ஒம்பொண்டாட்டியப் போட்டு கண்டபடி அடிக்கிற. கேட்டா எதுத்துப் பேசுற. நேத்து என்னையே கல்லத் தூக்கி எறிய வந்தே..”
“ஐயோ சாமி. அப்பிடிச் சொல்ல மாட்டேன்யா. நீங்க தெய்வம் மாரி. ஒங்களயா…. ஒங்களயாய்யா…. “ கைகளால் தலையை மடார் மடாரென அடித்துக் கொண்டான். “இனும சத்தியமா… எம்புள்ளைங்க சத்தியமா குடிக்கவே மாட்டேன்யா..”
“இதெல்லாம் இங்க வேணாம். காலி பண்ணிரு. இல்லேன்னா நானே வந்து சட்டிச் சாமானையெல்லாம் தூக்கியெறிஞ்சிருவேன்”
“ஐயா… ஐயா… ஒங்க வாயால அப்பிடிச் சொல்லாதீங்க. நீங்க நல்லாயிருக்கணும். தெரியாமச் செஞ்சுட்டேன். இந்த ஒரு தடவையும்…”
“அடச்சீ! சும்மாக் கெட…” வள்ளி வேகமாய் வந்தாள். “வா. வீட்டுக்குப் போவம்” சுடலையை அழைத்தாள்.
“நீ சும்மாயிரு. ஐயா… என்னய வேண்ணா அடிச்சுக் கொன்னு போட்டுருங்க. அதுகளை வீட்டை விட்டு வெரட்டாதீங்கய்யா”
“இன்னா பாரு. இப்ப வீட்டுக்கு வரப்போறியா இல்லையா? “ வள்ளி சுடலையை அதட்டினாள். பார்த்திபனைத் திரும்பிக்கூட பார்க்கவில்லை. பார்த்திபனுக்கு அவமானமாய் இருந்தது.
“இல்ல வள்ளி. ஐயாக்கிட்டச் சொல்லி எப்படியும்…” என்றவனை “வெளக்குமாரு பிஞ்சிப் போகும் பிஞ்சி!” என்று பிடித்துத் தள்ளினாள். அதே அழுத்தமான முகத்தோடு பார்த்திபனை நோக்கி “ஐயா… நாளைக்கு காலி பண்ணிர்றோம்” சொல்லிவிட்டு, சுடலையின் கையைப் பிடித்து இழுத்துச் சென்றாள். பார்த்திபன் அதிர்ந்து போய் நின்றிருந்தான்.
“இந்தப் பொட்டச்சிக்கு எவ்வளவு திமிர்னு பாத்தியா! வீடு வீடா பொறுக்கித் தின்னாலும் திமிரப் பாத்தியா..! இவ கொடுக்கிற எடத்துலத்தான் அந்த கிறுக்கன் அந்த ஆட்டம் போடுறான்!” சொர்ணம் என்னவெல்லாமோ ஆற்றாமையில் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தாள்.
நடந்து கொண்டிருந்த வள்ளிக்கு கொஞ்சம் நிம்மதியானது போலிருந்தது. கனன்று எரிந்த தீயில் லேசாய் நிதானம் ஏற்பட்டிருந்தது. வாத்தியார் ஐயா பாவம் என்று நினைத்துக் கொண்டாலும், சுடலை குடி போதையில் அவர்கள் யாருக்கும் அடங்காமல் நின்ற நிலையை திரும்பத் திரும்ப நினைத்துப் பார்க்க ஆசையாயிருந்தது. எதிரே ஓடிவந்த இரண்டாவது மகனை வாரியெடுத்து “ஏம் புள்ளா..” என்று உச்சி முகர்ந்து முத்தம் கொடுத்தாள்.
பார்த்திபன் அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான். ஒன்றும் புரியவில்லை.
(1993ல் எழுதிய சிறுகதை இது)
*
13
“ம்மா.... ம்மா”
“லே சம்முவம்! இந்த மாடு நிக்கிற நெல ஒண்ணுஞ் சரியில்லய. இன்னிக்கே ஈனிரும் போலுக்கே”
வயற்காட்டிலிருந்து கொண்டு வந்திருந்த பனங்காய்களை சீவல் சீவல்களாய் வெட்டிப் போட்டுக்கொண்டிருந்த சண்முகம் நிமிர்ந்தார். கையில் வெள்ளிப்பூண் போட்ட தடியோடு வேல்த்துரை நின்றிருந்தார். பக்கத்தில் வாழைப்பழத்தோலோடு ஒரு சிறுவன். செருப்பு போட்டிருந்தான்.
“ஆமய்யா…. நானும் அப்பவே கவனிச்சிட்டேன். ராவுக்குள்ள அனேமா ஈனிரும். ஆமா இது யாரு? நம்ம பேரனுங்களா! ராசா.. என்னய ஞாவம் இருக்கா?”
“அவன் தலையை ஒரு பக்கம் கோணி கூச்சத்தோடு நெளிந்து சிரித்தான். முருங்கை மர உச்சியிலிருந்து கிறிச்சிட்டுக் கொண்டிருந்த பஞ்சிட்டாங் குருவியின் குரல் அவன் கவனத்தை ஈர்க்க, மரத்தில் தேட ஆரம்பித்தான்.
“மெட்ராஸ்லயிருந்து சுசிலாம்மாவும், மாப்பிள்ள அய்யாவும் வந்திருக்காங்களாய்யா?”
“ஆமா. மத்தியானம் பன்னெண்ட்ர மணி வண்டிக்கு வந்தாங்க..”
“த்ழாழ்ழா… ழழம்பூ… ச்ழாப் ழாழ்லா?”
“சாப்லாம். நாளைக்கு கடம்பூ சாப்லாம். ஏண்டா… சுரேஷ் இப்படி வாழப்பழம் முழுசயும் வாயில வச்சிட்டுக் கஷ்டப்படுற”
“ராசா…! அந்தத் தோல இங்கத் தந்துருங்க. காமுக்கு கொடுக்கலாம்”
“சுரேஷ் சண்முகத்திடம் கொடுக்காமல் தானே தூர நின்று வாழைப்பழத்தோலை காமுவை நோக்கி எறிந்தான். சாணியும், மூத்திரமுமாய்க் கிடந்த தரையில் போய் அது விழுந்தது. புஸ்ஸென்று மூச்சு விட்டுக்கொண்டு தலையை அந்த இடத்தை நோக்கிக் கொண்டு சென்று, கருப்பில் பளபளத்த முக்குப்பகுதி சிணுங்க, பார்த்தது. லாவகமாய் நாக்கால் ஒரு சுழற்று சுழற்றி வாழைப்பழத்தோலை எடுத்துக் கொண்டது.
“தாத்தா! நா பக்கத்துல போனா மாடு முட்டுமா…”
“ஆமா முட்டும். வெயில்ல நிக்காத வீட்டுக்குப் போ”
“இல்ல ராசா! தாத்தா சும்மாச் சொல்றாங்க. இப்படி ஏங்கிட்ட வாங்க. காமு யாரையும் முட்ட மாட்டா”
சுரேஷ் ஆசைப்பட்டான். நடுக்கம் இருந்தது. வீட்டுப்பக்கம் ஓடிவிட்டான்.
“இந்த தடவை மாடு கொறஞ்சது அஞ்சு லிட்டராது தரும்னு நெனைக்கேன். எப்டி சம்முவம்”
“தரும்யா”
“இன்னிக்கு வெள்ளிக்கிழம்மல்லா? சிவங்கோயிலுக்கு கம்பர் வருவார். ஏழு மணிக்குப் போலப் போயி பாத்து பால் கறக்க வரணும்னு சொல்லிப்புடு. மாசம் இருபதுன்னேப் பேசு. கையோட வைக்கோக்கட்டுத் தெருவுக்கும் போயி காயாமொழியாக் கிட்ட மாடு ஈன்ர மாரி இருக்குன்னுச் சொல்லிரு. அப்புறம் அவ தேட்டர் கீட்டர்னு படம் பாக்கப் போயிருவா. அவதான் இந்த விஷயத்துல கைகாரி. கைராசிக்காரியுங்கூட…”
“சரிய்யா. காமுக்குத் தவுடு புண்ணாக்குல்லாம் வாங்கணும். பருத்திக் கொட்டையுந் தீந்துட்டு”
“பூமணிக்கிட்ட சொல்லிர்றேன். துட்டுத் தருவா. மூக்கங்கடைலப் போயி வாங்கிரு. வழப்பழமும் வாங்கிக் குடு. பால் நெறையாக் கறக்கும். சம்முவம்! அப்படியே நாளைக்கு கொத்தனாரக் கூட்டிட்டு வரணும் பாத்துக்க. தெக்குக் கரைல சொவரு கீறல் விட்டாப்பல இருக்கு. அத இடிச்சிட்டுப் புதுசா கட்டச் சொல்லணும். வீட்லயும் இடிஞ்சது தவுந்தப் பூசணும். அம்மங்கொட. அடுத்த வெள்ளி கோயில்ல பாட்டுல்லா…. நாளை நாளன்னிக்குள்ள மவனும் மருமவளும் கோயம்புத்தூர்லயிருந்து வந்துருவாங்க”
சண்முகத்தின் அடுத்த சரியாவுக்குக் கூட காத்திராமல், டக்டக்கென தடி அதிர நடந்தார். அவருக்கு சர்க்கரை வியாதி. டாக்டர் தினந்தோறும் நடக்கச் சொல்லியிருக்கிறார்.
ஒரு பெரிய வேப்ப மரம். சின்னதாய் பெரிதாய் முருங்கைகள். மஞ்சனத்தி, வாடாச்சி, கொய்யா என வளவு விசாலமாய் கிடக்கிறது. அங்கங்கே தரையில் குப்பைமேனி கீரைச்செடிகள். கக்கூஸ் பக்கத்தில் தக்காளிச் செடிகள் தானே வளர்ந்து நிற்கின்றன. எல்லாவற்றுக்கும் நடுவே தோரணையாய் நின்றிருந்த வைக்கோல் படப்பு. சண்முகம் மாட்டுத்தாவணியையே பார்த்துக்கொண்டு இருக்கிறார். எப்போதோ போட்ட பனைஓலைக் கூரை. சுருங்கி துவண்டிருந்தது. எதோ ஒரு மரியாதைக்குத்தான் இன்னமும் இருந்தது. நட்டுக்கால்களுக்கு கரையான் மண்ணால் சட்டை போட்டிருந்தது. கீழே சுண்ணாம்பால் பூசிய தளம் பிய்ந்து பிளந்து போயிருக்க சாணியும், மூத்திரமும் தேங்கி சொறி சிரங்குகளாய் காட்சியளித்தது. சண்முகம் தினமும் கழுவி விட்டுத்தான் பார்க்கிறார். பள்ளங்கள் இருப்பதால் அவர் மெனக்கெட்டும் புண்ணியமில்லை. சிமெண்ட்டாலான சமதளம் போட்டால் எல்லாம் சரியாகும்.
வெட்டிய பனஞ்சீவல்களை கொண்டுபோய் காமுவிடம் நீட்டி, மறுகையால் அவள் முதுகைத் தடவிக் கொடுத்தார். சீவல்கள் அலட்சியப்படுத்தப்பட்டன. அந்த இதமானத் தடவலையும் புறக்கணித்து பெரிய வயிறோடு அங்குமிங்குமாய் தத்தளித்தது. இவர் காமுவையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தார். ச்சே! எப்படி இருப்பா..?
முன்னங்கால்களை மடக்கி, பின்னங்காலை வசதியாக ஒரு பக்கம் நீட்டி, உடம்பு ஒருக்களித்திருக்க, கம்பீரமாய் உட்கார்ந்திருப்பாள். சாந்தமாய் கண்னை மூடிக்கொண்டு மெய்மறந்து அசைபோட்டுக்கொண்டிருப்பாள். அந்த வால் மட்டும் மெதுவாக…. அவள் முதுகில் புரண்டு சின்னக் குழந்தையாட்டம் கொஞ்சிக் கொண்டிருக்கும். அந்த அழகான அமைதி இப்போது இல்லை.
ஈக்களும், கொசுக்களுமாய் காமுவை முற்றுகையிடும்போது ஒரு போர்வாள் போல அவள் வால் நிமிர்ந்து சுழன்று விரட்டும். கழுத்துப்பக்கம் தாக்கப்பட்டால் தலையை இரைந்துகொண்டு திருப்பி அச்சுறுத்தி விரட்டும். சிலசமயம் அந்தந்த பிரதேசங்களில் மட்டும் தோல்பகுதி வெட்டியிழுத்து ஈக்களையும், கொசுக்களையும் உலுப்பிவிடும். அந்த அக்கறையும் இப்போது இல்லை.
சமையல்கட்டுக்கு வெளியே இருக்கிற திண்டில் உட்கார்ந்து சாப்பிடும்போது காமுவின் நினைவாகவே இருந்தார். இந்த வீட்டுக்கு கன்னுக்குட்டியாய் அவள் வந்ததிலிருந்து இவருக்குத் தெரியும். கட்டியிருக்கிற கயிற்றை இழுத்து அவிழ்த்துக்கொண்டு அவள் அம்மாவிடம் போய் சுத்தமாய் பாலைக்குடித்து விடுகிற அழகு தெரியும். அப்போதெல்லாம் பூமணியம்மாள் காட்டுக் கத்தல் போட்டிருக்கிறாள். சமயத்தில் வேல்த்துரை கம்பெடுத்து அடித்து விடவும் செய்வார். காமு அதற்கெல்லாம் அசந்துவிட மாட்டாள். பாசத்திற்கு முன்னே கயிறெல்லாம் எம்மாத்திரம்?
வளவுப்பக்கம் போய் கைகழுவும்போது பார்த்தார். காமு கொதித்துப் பொங்குகிற பாலைப்போல நிலைகொள்ளாமல் இருந்தாள். புஸ்… புஸ்ஸென்று இரைந்தாள். மரத்திலிருந்து வேகமாய் பறக்க ஆரம்பிக்கும் ஒரு பறவையின் சிறகைப் போல அவள் காதுகள் இரண்டும் படபடவென்று அடித்துக் கொண்டன. சண்முகம் பார்த்துக்கொண்டிருக்கும் போதே காமுவின் இந்த அவஸ்தைகள் அதிகரிக்க அரற்ற ஆரம்பித்தாள். இதயத்தை அரிக்கும்படியாக “ம்மா…ம்மா..” என்று கூக்குரல் போட்டாள். சண்முகம் காயமொழியாளைக் கூப்பிட ஓடினார்.
திமுதிமுவென கூடி விட்டார்கள்.
சாயங்காலக் காற்றில் இலைகள் மெலிசாய் அசைந்து கொண்டிருந்தன. சுவரின் மேல் வரிசையாய் நட்டிருந்த கண்ணாடிச்சில்லுகள் எல்லாம் சூரிய வெளிச்சத்தை விழுங்கிக்கொண்டு கார்த்திகை தீபங்களாய் ஜொலித்தன. இரண்டு அணில்களின் கீச்… கீச்கள் தொடர்ந்து எங்கிருந்தோ மாறி மாறி கேட்டுக்கொண்டேயிருந்தன. கீழே தெரிந்த கூட்டத்தைப் பார்த்து என்னமோ எதோ என்று பதறியபடி வேப்பமரத்தில் கட்டியிருந்த கூட்டைச் சுற்றி காக்கைகள்.
“ம்மா…. ம்மா..” அடிவயிற்று முனகல் காமுவிடமிருந்து. அவள் பின்பக்கத்தில் காயாமொழியாள். கூட இரண்டு பேர்.
வேல்த்துரை கொஞ்சம் தள்ளி ஈஸிச்சேர் போட்டு சாய்ந்திருந்தார். வெத்திலையை குதப்பிக் கொண்டிருந்தார். அவர் மகள் சுசிலா தன் கைக்குழந்தை அழுவதையும் பொருட்படுத்தாமல் அக்கம்பக்கத்து முனியம்மா, இசக்கிகளுக்கு ஃபிரிஜ்ஜையும், டி.வியையும், கேஸ் ஸ்டவ்வையும் பிரஸ்தாபித்துக் கொண்டிருந்தாள். கூடவே அவ்வப்போது “யப்பா… என்னா புழுக்கம்..” என்று கஷ்டப்பட்டுக் கொண்டாள். எல்லோரும் போனபிறகு தன் மகளுக்கு திருஷ்டி சுற்றிப் போடவேண்டும் என்று பூமணியம்மாள் நினைத்துக் கொண்டாள். சுரேஷ் அதிசயமாய் காயாமொழியாளையும், காமுவையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தான். அவனை அந்த இடத்தை விட்டுக் கிளப்புவதற்கு வேல்த்துரை பலவித முயற்சிகள் செய்து பார்த்தார். அவன் அசைவதாக இல்லை.
மெல்ல மெல்ல பனி உருண்டையாய் வர…. முன்னங்கால்கள் இரண்டும் சேர்ந்து கை கூப்பியபடி…. காற்று வெளியில் அந்த சின்னஞ்சிறு ஜீவன் எட்டிப் பார்க்கிறது. காமுவின் இரத்தமும், சதையும்!
காயாமொழியாள் அந்த முன்னங்கால்களைப் பற்றி ரொம்ப ஜாக்கிரதையாய் வெளியேக் கொண்டு வந்தாள். அந்தக் கணத்தில்….
“ம்மா… ம்மா..”
காமு கதறினாள். ஒவ்வொரு அணுவிலும், இரத்த நாளத்திலும் போராட்டம். அலறல் அந்த இடத்தையே உலுக்கியது. சண்முகம் முகத்தைப் பொத்திக் கொண்டார். இல்லாத கடவுளையெல்லாம் வேண்டிக்கொண்டார். இத்தனைக் கஷ்டங்களும், துடிதுடிப்பும் சட்டென முடிந்து காமு அமைதிப்பட வேண்டும் போலிருந்தது.
இதோ முடிந்துவிட்டது. காமு ஆர்ப்பரித்து எழுந்து கொண்டாள். சந்தோஷத்தோடு நிம்மதியாய் வானம் பார்த்து கூவினாள். “ம்மா…ம்மா..”
சாய்ந்து உட்கார்ந்திருந்த வேல்த்துரை நிமிர்ந்தார். சாம்பல் போட்டு வைத்திருந்த துப்பட்டியில் வெற்றிலை துப்பினார். தாமரைச்சிங்கம் சுருட்டைப் பற்ற வைத்துக் கொண்டார். சுரேஷுக்கு அந்த வாடையே பிடிக்காது. தாத்தாவே அருவருப்பாய் படுவார். மற்ற சமயம் என்றால் அந்த இடத்தை விட்டு ஓடியிருப்பான். இப்போது மூக்கை பொத்திக்கொண்டு கொஞ்சம் தள்ளிப்போய் மட்டும் நின்று கொண்டான்.
கன்னுக்குட்டியை துடைத்து சுத்தப்படுத்திக் கொண்டிருந்த காயாமொழியாள் “அய்யய்யோ..” என்றாள்.
“என்னக் காயாமொழியா…?”
“அண்ணாச்சி! கன்னுக்குட்டி செத்தே பொறந்துருக்கு..”
“அடக்கருமமே!”
சில நிமிடங்கள் பெரிய மௌனம். காயாமொழியாள் கையைக் கழுவினாள்.
“அம்மங்கொடையும் அதுவுமா பாலுக்குத் தட்டே இருக்காதுன்னுல்லா நெனைச்சேன். கன்னுக்குட்டி இலலேன்னா எழவுமாடு பாலே தராதே..” என்றாள் பூமணியம்மாள்.
“அப்பா ஏங்குழந்தைக்கு நாளைக்கு சம்முவம் பஜார்ப்பக்கம் போனான்னா இன்னொரு ஃபாரெக்ஸ் வாங்கிட்டு வரச் சொல்லியிருங்கப்பா..”
“ச்சே! செனையோட இருக்கும்போதே இந்த மாட்ட வித்துருக்கணும். நல்ல வெலைக்குப் போயிருக்கும்..உம்..”
“தாத்தா கடம்பூ கெடைக்காதா”
“கெடைக்குண்டா. சும்மாயிரேன். லே.. சம்முவம்! ஆறுமுவத்தக் கூப்பிட்டு இந்தக் கன்னுக்குட்டித் தோலையெடுத்து வைக்கோல்ல பொம்மக் கன்னுக்குட்டி செய்யச் சொல்லணும். அப்பதான் அதப் பக்கத்துல நிக்கவச்சு கொஞ்ச நஞ்சமாவது பாலைக் கறக்கலாம்…”
“எங் கைராசியில இதுதா மொதத்தடவ. இதுவரைக்கும் நடந்ததேக் கெடையாது”
சண்முகம் காமுவையே பார்த்துக்கொண்டிருந்தார்.
தன்மேல் பல நூறு கொசுக்களும், ஈக்களும் மொய்த்திருக்க, உயிர்க்கொடி அறுந்து பின்புறம் மண்ணெல்லாம் ஒட்டித் தரையோடு தொங்கிக் கொண்டிருக்க… உலகையே மறந்து… தன் குழந்தை இறந்து போனதுகூடத் தெரியாமல், மிகுந்த வாஞ்சையோடு ‘அதை’ நாக்கால் வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தாள் காமு.
“ம்மா…ம்மா..”
(1987ல் எழுதிய சிறுகதை)
*
14
இராஜ குமாரன்
சஃபையர் தியேட்டர் இன்று இல்லை. கேஸ் ஸ்டவ் இல்லாத மத்திய தர வர்க்கம் இப்போது இல்லை. கம்ப்யூட்டரை எதிர்த்து தொழிற்சங்கங்கள் போராடிய காலங்களை இப்போது நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. காலங்கள் எவ்வளவு மாறி இருக்கின்றன. 1988ல் நான் எழுதிய கதை இது. திரும்ப படித்துப் பார்க்கிறேன்…..
இவன் அப்பா சிவச்சாமி அப்போதுதான் சாப்பிட்டு முடித்து படுத்திருந்தார். விழித்திருந்தாலும் கேட்க முடியாது. பயம் இல்லை. அவமானம். அதற்கு மவுண்ட் ரோட்டில் அம்மணமாய் நடந்துவிடலாம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இதே பாடுதான். வெந்து போவான்.
படிக்கிற காலங்களில் ஞாயிற்றுக்கிழமைகளுக்காக ஏங்கி ஏங்கிப் போயிருக்கிறான். ஜன்னல் வழியே சூரியன் முகத்தில் அடிக்கிற வெக்கையையும் சுகமாக எண்ணி பத்துமணி வரை படுக்கையை விட்டு எழாமல் கிடப்பான். அன்றைய வானம், பூ, காற்று எல்லாமே சினேகமாய் தென்படுவார்கள். ஷாம்பூ போட்டு குளித்து பத்மநாபன் அங்கிள் வீட்டுக்குப் போய் அவரோடு செஸ் விளையாடுவான். அவர் மகள் சாருவின் ரகசிய பார்வையில், சிரிப்பில் கோடி கோடியாய் கனவு கண்டான். சாயங்காலங்களில் சரக்கொன்றை மரங்களின் கீழே தெருமுனையில் உள்ள திண்டில் ராகவன், சர்மா, வெங்கடாசலம் ஆகியோரோடு உட்கார்ந்து கடைசி பஸ் போகிற வ்ரைக்கும் பேசியிருக்கிறான். ம்…. இப்போது எல்லா நாட்களுமே ஞாயிற்றுக்கிழமைகள்தான்.
சுரேஷ் இன்னுங் கொஞ்ச நேரத்தில் “ஹாய்” என்று அமர்க்களமாய் வருவான். “ஆண்ட்டி! சௌக்கியமாயிருக்கீங்களா” என்பான். “அங்கிள் என்ன செய்றாரு. துங்குறாரா? எந்திச்சுப் போய் கம்ப்யூட்டர எதுத்து ஸ்டிரைக் பண்ணச் சொல்லுங்க. போஸ்டல்ல வயசானவங்களல்லாம் வீட்டுக்கு அனுப்புறாங்களாம்..” என்று சிரிப்பான். “ஏய்.. லம்பாடி! பொறப்புடு” இவனை அவசரப்படுத்துவான். அவனுக்கென்ன. அவனது மாமா ஒரு எம்.பி. படிச்சு முடிக்கவும் அவரோட ரெகமண்டேஷனில் ஒரு பெரிய கம்பெனியில் மார்க்கெட்டிங் அசிஸ்டெண்ட் வேலை. ஐயாயிரத்துக்கிட்ட சம்பளம். இவனது ஞாயிற்றுக்கிழமைச் சங்கடங்கள் பெரிதாய் தெரிந்திருக்காது.
பஸ்ஸில், ஆட்டோவில் என்று பயணிப்பார்கள். சினிமா போவார்கள். வேர்க்கடலைகள் வாங்கி கொறித்துக்கொண்டு அலைகளுக்கு எதிரே உட்கார்ந்திருப்பார்கள். முடிந்துபோன கல்லூரி வாழ்க்கை, இலக்கியம், செக்ஸ் எல்லாம் பேசுவார்கள். முழுக்க முழுக்க செலவும் சுரேஷ்தான் செய்வான். இவனைச் செலவு செய்ய விடமாட்டன். இருந்தாலும் ஒரு பத்து ருபாயாவது இவனுக்குத் தன் பையில் வைத்திருக்கத் தோன்றும்.
அம்மாவிடம் கேட்க முடியாது. மதியம் சாப்பிடும்போதுதான் அப்பாவிடம் “வீட்டுச் செலவுக்கு பணம் இல்ல. மண்ணெண்னெய் எல்லாம் தீந்து போச்சு” என்று சொல்லிக்கொண்டு இருந்தாள்.
இப்போது அம்மா மாவாட்டிக்கொண்டு இருந்தாள். ஊரில், நாட்டில் எல்லார் வீட்டிலும் கிரைண்டர் வாங்கிவிட்டார்கள். நமக்கு வாங்க வேண்டும் என்று நினைப்பாளா என்று தெரியவில்லை. திருச்சியில் எஞ்சீனியரிங் படிக்கும் தம்பியும், பக்கத்து வீட்டில் டி.வி பார்க்கப் போயிருக்கிற தங்கையும் வைத்திருக்கிற செலவை எண்ணி ‘இருக்குறத வச்சு திருப்திப் படணும்’ என்பாள். மிக்ஸி வாங்குகிற வசதியிருந்தால் அந்த வேலியை உடைத்துக்கொள்வாள். இதுதான் பிராக்டிக்கலாய் இருப்பதற்கான அர்த்தம் போலும். ஹம்பக். போன தையில் சாருவுக்குப் பக்கத்தில் அந்த டாக்டர் உட்கார, ‘தனம் தான்யம் பகும் பூத்ர’ என மந்திரம் உச்சரிக்கப்பட்ட அந்த கணத்தில் இவனது ஒவ்வொரு அணுவும் அதிர்ந்து போனது. பிருதிவிராஜனாய் ஆகியிருக்கலாம். குதிரை இல்லை. இரவின் அமைதியில் தலையணையில் முகம் புதைத்து அழுதான். அந்த ரகசிய பார்வையோடு சாரு இன்னும் இளமையோடு இவன் நினைவில் வந்து போய்க்கொண்டுதான் இருக்கிறாள். பிராக்டிக்கலாய் இருக்க வேண்டும் என்பதற்காக அந்த நினைவுகளை யாருக்கும் தெரியாமல் ஒரு இடத்தில் தீவைத்து கொளுத்தி எரித்து விடவா முடியும்?
சமையலறைக்குப் போய் தண்ணீர் குடித்தான். அம்மா இவனை நிமிர்ந்து பார்த்து வேலையில் மூழ்கினாள். சவரம் செய்யாத இவனது முகத்தையும், கலைந்துபோன முடியையும், ஏக்கத்தில் கிடந்த கணகளையும் தொடர்ந்து பார்க்க முடியவில்லை. மாவாட்டுவதை விட்டுவிட்டு எங்கோ வெறித்துப் பார்த்தாள்.
“ஈரேழு உலகத்தயும் எம்புள்ள கட்டியாளப் போது” என்று பக்கத்து வீட்டு ஈஸ்வரி அவள் குழந்தையை கொஞ்சுவது போல இவளும் ஒரு காலத்தில் கொஞ்சியிருந்தாள். ஏழு கடலைத் தாண்டி…. எரிமலைக்குள்ளே புகுந்து…. அங்கு இருக்கும் பூதத்தைக் கொன்று…. தங்க ரோஜா பறிக்கிற இராஜகுமாரன் கதையெல்லாம் சொல்லியிருந்தாள். இவன் பிறந்த சமயம் வீடுசுற்றி ரோஜா, கனகாம்பரம், லில்லி என்று பூஞ்செடிகளாய் வளர்த்திருந்தாள்.
மணி இரண்டு அடித்தது. சுரேஷ் இதோ வந்து விடுவான். அடங்கமாட்டாமல் கையாலாகாத்தனம் இவனுக்குள் புரண்டது. எரிச்சல் எரிச்சலாய் வந்தது. சுவரில் முட்டிக்கொள்ள வேண்டும் போலிருந்தது. ‘ச்சே!’
மேஜையில் ஹிண்டுவும், காம்படிஸன் சக்ஸஸும். பல்லாயிரம் கோடி விவகார பங்குபத்திர ஊழல் கொட்டை எழுத்துக்களில். இதையெல்லாம் போட்டால் கூட ஐந்து ருபாய் தேறும். அப்பா முறைப்பதை சகிக்க முடியாது. நாலு வருஷம் முன்னால் வரைக்கும் “ எம்பையன் தியாகு… பி.காம் ஃபைனல் இயர்” என்று தெரிந்தவர்களிடமும், சொந்தக்காரர்களிடமும் சொல்லிக்கொண்டு இருந்த அப்பா இப்போதெல்லாம் யாரிடமும் இவனை அறிமுகப்படுத்துவது இல்லை. இவனும் வீட்டுக்கு யாராவது வந்துவிட்டால் வெளியே போய்விடுவான். அப்படியே வீட்டில் இருந்தால், எப்போது விருந்தாட்கள் போக மாட்டார்கள் என்றிருக்கும். தப்பாமல் ‘பையன் என்ன செய்றான்’ என்று கேட்கப்படும். கூனிக்குறுகிப் போவான்.
இந்த அவஸ்தைதான் சர்மாவை பக்டோன் அடிக்கச் செய்திருக்க வேண்டும். ராகவனை பி.எஸ்.ஸி முடித்திருந்தாலும் விறகுக்கடைக்கு கணக்கு எழுத அனுப்பியிருக்க வேண்டும். வெங்கு மட்டும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஒரு தனியார் கம்பெனியில் காலை ஒன்பது மணிக்கு டிபன் காரியரோடு சென்று இரவு பத்து மணிக்குத் திரும்ப வைத்திருக்க வேண்டும். சரக்கொன்றை மரங்கள் எல்லா சோகத்தையும் தாங்கிக்கொண்டு அவை பாட்டுக்கு நின்று கொண்டிருக்கின்றன.
இவனும் இப்போது யாரிடமும் பழகுவதில்லை. அதற்கும் திராணியும், தெம்பும் வேண்டும் போலிருக்கிறது. சாருவின் ஞாபகங்கள் சுகமாய் இருக்கும். ஜன்னல் வழியே சரக்கொன்றை மரங்களைப் பார்த்து அப்படியே உட்கார்ந்திருப்பான். சுற்றியிருக்கும் நிகழ்வுகள் அந்த நினைவுகளின் நிழல்களில் கூட அடைய விடாது. விரட்டும். சுரேஷ்தான் ஆறுதல். நான்கு வருட சூழல் மாறிப் போயிருந்தாலும், இவனைப் பார்க்க ஞாயிற்றுக்கிழமை தோறும் வந்துவிடுவான். இவனிடம் மட்டும் அப்படியொரு ஈடுபாடு படிக்கிற காலத்திலிருந்தே.
சுரேஷ் வழக்கம் போல துறுதுறுவென்று வந்தான். திக்கென்று இருந்தது.
“தியாகு சீக்கிரம் கெளம்பு. சஃபையர்ல ஹெவன்லி பாடிஸ் ஓடுதாம். ஆபிஸ்ல ஆவுன்னு பேசிக்கிறாங்க. மூணு மணிக்கு ஷோ!” என்றான்.
“வரலை. தலை வலிக்கு….” என்றான் இவன்.
“வீட்டுக்குள்ளயே இருந்தா தலையும் வலிக்கும்….. காச்சலும் வரும்…. ஜன்னியும் வரும்… அட, வாடான்னா..” சுரேஷ் சத்தம் போட்டான். இவனால் அதற்கு மேல் அவனிடம் பேச முடியாது. புறப்பட ஆயுத்தமானான்.
“ஆண்ட்டி, வெயில்ல வந்தது நாக்கு ஒலந்து போச்சு. கொஞ்சம் தண்ணி தாங்க”
தண்ணீர் கொடுக்கும்போது இவனது அம்மா சுரேஷைப் பார்த்தாள். சுத்தமாய் சவரம் செய்த முகம். அழகாய் ஷாம்பூ போட்டு சீவிய முடி. அயர்ன் பண்ணி நேர்த்தியாய் சட்டை. பேண்ட். முகம் சிரித்துக்கொண்டே இருந்தது.
“அம்மா! வரட்டுமா…” ஒருமூலையில் கட்டைவிரல் வார் அறுந்துபோன, எப்போதோ வாங்கிய செருப்பை மாட்டிக்கொண்டு கிளம்பிய இவனை, “தியாகு… கொஞ்சம் இங்க வாப்பா” என அம்மா கூப்பிட்டாள். போனான். சமையலறையில் எதோ ஒரு டப்பாவில் இருந்து அஞ்சு ருபாயும், கொஞ்சம் சில்லறைகளையும் கொடுத்தாள்.
“என்னம்மா இது”
“வ…ச்….சு….க்….க….ப்…பா”
அம்மா தழுதழுத்தாள். ஏறிட்டுப் பார்த்தான். கண்ணீர் பொங்கி இருந்தது. அங்கேயே நின்றால் இவனுக்கும் அழுகை வந்துவிடும் போல் இருந்தது.
“இல்லம்மா… வேண்டாம்” வேகமாய் அங்கிருந்து அகன்றான்.
15
மண்குடம்
இப்போல்லாம் அனேகமா நா கவுந்தே கெடக்கேன். செம்பகம் என்ன அப்படித்தான் வச்சிருக்கா. அவ மேல கொஞ்சங்கூட கோபமில்ல. அவதான் என்ன செய்வா?. பாவம் அவ படுற கஷ்டத்தப் பாக்காம கண்ண மூடிட்டு கெடக்குறதும் ஒரு வகைல வசதிதான். மனச எப்படி மூடிக்கிட. மனசாட்சிய எப்படி மறைக்க. எனக்குள்ள ஒரே வெப்பக்காத்து. ஒலகஞ்சுருங்கி இருண்டு போய்க் கெடக்கு. புழுங்கிப் போனேன். இந்த வீட்ல குடிக்கத் தண்ணியில்ல… குளிக்கத் தண்ணியில்ல… பத்துப்பாத்திரம் தேய்க்கத் தண்னியில்ல… சோறு பொங்க, ஆத்திர அவசரத்துக்கு கால அலம்ப…. எதுக்குமே தண்ணியில்ல. ரொம்ப ஒதவாக்கரையாய்ட்டேன். கைகால்லாம் சூம்பிப் போயி வயிறு மட்டும் வீங்கித் தெரிற பலவீனமான பையனப் போல இருக்கேன். வீட்டுக்குள்ள அடைஞ்சு போய்க் கெடக்கேன்.
முன்னாலெல்லாம் எப்பிடி இருப்பேன். எப்பவும் நெரம்பி வழிஞ்சு குளிச்சு வந்த கன்னிப் பொண்ணுமாரி இருப்பேன். நெறமாசக் கர்ப்பிணியாட்டம் தாய்மையோட விழிப்பேன். அதுலயும் செம்பகத்தோட இடுப்புல உக்காந்துட்டா போதும்…. சின்னக் கொழந்தையாட்டம் மழலப் பேசிட்டு உற்சாகமா சிரிப்பேன்.
நா உக்கார்ற் அவ இடுப்புத்தான் எனக்கு இந்த ஒலகத்துலயே புடிச்ச இடம். எனக்குன்னே செஞ்சாப்பல உள்வாங்கி வளைஞ்சு இருக்கும். பூக்கள்ளாஞ் சேந்து என்னயத் தூக்கிட்டு போறாப்பல இருக்கும். அவ அப்பிடியே ஆசையா ஏங்கழுத்த எடது கையால கட்டி அணைச்சுக்கிடுவா. அக்குள் பக்கத்துல வர்ற வேர்வை வாசனைல சொக்கி கெறங்கிப் போவேன். அப்பப்ப அவளோட மாரை ஒரசிப்பாத்து ‘க்ளுக்’னு சிரிப்பேன். செலநேரம் குலுங்கிச் சிரிச்சு அவ சேலைல தண்ணிய வாரியெறச்சு விளையாடுவேன். அவ கோபமேப்பட மாட்டா. அண்ணாந்து அவ மொகத்தையப் பாப்பேன். அவ கண்ண… மூக்க…. ஒதட்ட…. கழுத்த எல்லாம் எத்தன தடவப் பாத்தாலும் அலுக்காது.
செம்பகம் ரொம்ப லச்சணமாயிருப்பா. நல்லவ. இப்பத்தா சிரிக்க மாட்டேங்குறா. முன்னாலெல்லாம் எப்பப்பாத்தாலும் சிரிப்பா. அவ புருஷன் சொக்கனும் அப்பிடித்தான். இங்கதா உள்ளூர்ல எதோ ஒரு ஸ்கூல்ல வாட்ச்மேனா இருக்கான். அவங்க ரெண்டு பேர் மட்டுந்தா அந்தக் குடிசைல.
என்னயப் போலவே இந்தக் குடிசைல இன்னும் ரெண்டு பேரு இருக்காங்க. ஒருத்தி பித்தள. இன்னொருத்தி எவர்சில்வர். அவங்களல்லாம் செம்பகம் வீட்ட விட்டு வெளியே கூட்டிட்டுப் போக மாட்டா. என்னய மட்டுந்தா.
குடிசைய விட்டு வெளியே வர்ற அந்தக் காலை நேரத்துக்காக ராத்திரியெல்லாம் காத்துக்கிட்டேயிருப்பேன். சேவல் கூவினவுடன சந்தோஷம் புடுங்கிட்டுப் போகும். காக்காச்சத்தம், பசுமாட்டு ‘ம்மா…’ தொடந்து கன்னுக்குட்டியோட உயிர் சுண்டி இழுக்கும் பாசமான ‘ம்மா…ம்மா’, சைக்கிளின் கிங்கிணிங், தெருவுல மனுஷங்க புழங்குற சத்தம் எல்லாம் கேக்க கேக்க என்னோட துடிப்பு அதிகமாகும். செம்பகம் முழிச்சிருவா. சொக்கன் களைச்சுப் போனமாரி படுத்திருப்பான். இவ மொகத்த அலம்பி, பல்லத் தேச்சிட்டு என்னயப் புழக்கடைல வச்சு நல்லா அழுக்குத் தேச்சு குளிப்பாட்டுவா. பெறகு குழந்தையமாரி இடுப்புல தூக்கி வச்சுட்டு வாசக்கதவச் சாத்திட்டு வீதிக்கு வருவா.
வெளியே வந்ததும் அண்ணாந்திருக்கும் எம்மொகத்துல படுறது ஆகாயந்தான். இருட்டு அப்பத்தான் மறஞ்சு வானம் சாம்பல் நெறத்துல இருக்கும். கெளக்குப் பக்கம் அடிவானத்துல யாரோ அடுப்பப் பத்த வச்சிட்டிருக்கிறமாரி வெளிச்சமும், பொகையுமா இருக்கும். அங்கயும் இங்கயுமா பறவைங்க உல்லாசமாப் பறக்கும். குளுந்த காத்து ஒடம்புக்குள்ள புகுந்துக்கிடும். மனசெல்லாம் நெறஞ்சிருக்கும்.
கொழாயடியில ஒரே சத்தந்தான். சளசளன்னு பேச்சு. செம்பகம் அப்பிடி கன்னாபின்னான்னுல்லாம் பேச மாட்டா. யார்ட்டயும் சண்டைக்குப் போக மாட்டா. அந்தக் குழாய் மடுவாட்டம் இருக்கும். நானும் கன்னுக்குட்டி மாரி வயித்த நெரப்பிக்குவேன். பித்தளைக்கும், எவர்சில்வருக்கும் கூட நா சொமந்துதான் தண்ணி குடுப்பேன். ம்…. அதுல்லாம் ஒரு காலம்.
கோடைக்காலம் ஆரம்பிச்சுது. குடிசைக்கு வெளியே நிக்கிற வேப்ப மரத்து இலைங்க அசைற சத்தம் எப்பவாவது மட்டும் லேசா கேக்கும். குடிசையோட ஓட்டைங்கள்ளாம் பளீர்னு ஜொலிக்கும். காத்தெல்லாம் தீ நாத்தம். என்னைக்கூட சுடுது. எனக்குக் கீழே மெத்த மாரி போட்டிருக்குற ஈரமண் மத்தியானம் ஆய்ட்டாக் காஞ்சிருது. சுத்தி சுத்தி போகுற எறும்புகளையும் காணோம். நாய்க சத்தம் ராத்திரி மட்டுந்தா கேக்குது. மனுஷங்க நடமாட்டமே கொறைஞ்சு போச்சு.
யாருக்கு என்ன ஆச்சுன்னு தெரியல. தெனமும் வர்ற நல்ல தண்ணி கொழாய்ல ஒருநா விட்டு ஒருநா தான்னு வர ஆரம்பிச்சுது. தண்ணி வர்ற அன்னிக்கு மட்டும் நா, பித்தள, எவர்சில்வர் மூனுபேரும் நல்ல தண்ணியோட இருப்போம். தண்ணி வராத அடுத்த நா மட்டும் கெணத்து தண்ணியோட இருப்பேன். அவங்க ரெண்டு பேரும் நல்ல தண்ணியோடயிருப்பாங்க. செம்பகம் தண்ணியப் பாத்து பாத்துச் செலவு பண்ணுவா. குடிக்க, சோறு பொங்க மட்டுந்தா நல்ல தண்ணி. மத்ததுக்கெல்லாம் கெணத்து தண்ணிதான். சொக்கங்கூட காலைல துண்ட தோள்ளப் போட்டுக்கிட்டு, பயோரியாப் பல்பொடியோட பிள்ளையார் கோவில் கெணத்துக்குத்தான் குளிக்கப் போறான்.
செம்பகம் இஞ்சீனிரு வீட்டு கெணத்த்துக்கு என்னய இப்ப அடிக்கடி அழச்சிட்டுப் போறா. அங்கயும் ஒரே மனுஷங்கதான். இந்த வருஷம் மழ வருமான்னு பொலம்புறாங்க. அவங்க கண்ணுல்லாம் சோகம் பாஞ்சு கெடக்கும். மூச்செல்லாம் பரபரன்னு இழுத்தாப்பல இருக்கும். ஒவ்வொரு வாளிக்கும் கெணத்த எட்டிப் பாத்து தண்ணி கீழேயேப் போய்ட்டிருக்குன்னு மருகுறாங்க. செம்பகம் மாங்கு மாங்குன்னு தண்ணியெறச்சு எனக்குத் தருவா. இந்த மனுஷங்க தண்ணிக்காக இப்படி ஆலாப் பறக்குறத என்னாலப் பொறுக்க முடில. மனசுக்குள்ள ஊமையா அழுதேன்.
ஒரு மாசம்…. ஒண்ணரை மாசந்தா இந்த நெலம. அப்புறம் வாரத்துக்கே ரெண்டு நா மட்டுந்தா தண்ணி வந்துச்சு. மொத நா மூணு பேரும் நல்ல தண்ணியோட. ரெண்டாவது நா பித்தளயும், எவர்சில்வரும் நல்ல தண்ணியோட. மூணாவது நா பித்தள மட்டுந்தா நல்ல தண்ணியோட. சோறு போங்க மட்டுந்தா நல்ல தண்ணி. குளிக்க ஆத்துத் தண்ணின்னு ஏற்பாடாச்சு.
அந்த சமயத்துல ஒரு வறண்ட போன நாள்ள என்னய செம்பகம் ஆத்துக்கு தூக்கிட்டுப் போனா. அந்த நாள என்னால மறக்கவே முடியாது. நா அதுவரைக்கும் அத மாரி பரந்து விரிஞ்சுக் கெடந்த பெரிய எடத்தப் பாத்ததே இல்ல. செம்பகத்தோட கஷ்டங்கள்ள நா சோர்ந்து போய் இருந்தாலும், அந்த நேரத்துக்கு சந்தோஷமாத்தான் இருந்துச்சு. தண்னி ஓடல்ல. பாலைவங்கணக்குல இருக்கு. அங்கயும் மனுஷங்க கூட்டந்தான். ஆத்துல அங்கங்க பள்ளங்களத் தோண்டி தண்ணி ஊற ஊற எடுத்தாங்க. எங்கேயிருந்துல்லாமோ எறும்பு போல சாரி சாரியா பொம்பளைங்க வர்றாங்க. மாட்டு வண்டிங்க தண்ணி எடுக்க வர்றாங்க. பாக்கவே க்ஷ்டமாயிருக்கு. இந்த அழகான உலகத்துல வாழுறது இத்தனைக் கஷ்டமா.
செம்பகம் வரவர ரொம்ப இளைச்சுப் போய்ட்டா. அவ இடுப்புல உக்கார்றதே பாவமாயிருக்கு. கடவுளே! எனக்கு ரெண்டு றெக்கயக் குடுத்துப் பறக்குற சக்தியையும் குடுக்க மாட்டியான்னு வேண்டிக்குறேன். சொக்கனும், செம்பகமும் தண்ணிக் கஷ்டம் பத்தியேப் பேசுறாங்க.
ஊர்ல கெணத்துலல்லாம் தண்ணி வத்திப் போச்சாம். சாயங்காலம் வந்தவுடன் பக்கத்து வீட்டுல சக்கிள் எரவல் வாங்கி, பித்தளையையும், எவர்சில்வரையும் கயித்துலக் கட்டி, சைக்கிள்ள ரெண்டு பக்கமும் தொங்கப் போட்டு சொக்கன் எங்கயோ தண்ணியெடுக்கப் போறான். ஊரே தவிச்சுப் போயிருக்கு. இப்ப ஆத்துல காலயில, மத்தியானம், சாயங்காலம்னு எப்பவும் கூட்டந்தானாம். ஒரு மாட்டு வண்டி ஆத்துத்தண்ணி ஏழு ருபாயாம். மாட்டு வண்டிச் சத்தம் ஊர் பூராவும் கேக்கு. “அய்யோ, எம்மார்லயும் தண்ணி வத்திட்டேப் போகுதே…. இந்தப் புள்ளைங்க இப்படி அழுறாங்களேன்னு ஆறும் உருகுது. இந்த மனுஷங்க இல்லாமே நாம இருந்து என்னத்துக்கு என்று அழும்.
கோடப்போயி மழக்காலம் ஆரம்பிச்சுட்டுன்னுச் சொன்னாங்க. அதுக்கான அறிகுறியே காணோம். இன்னும் வெப்பந்தான். குத்தாலத்துல தண்ணி கொட்டுது, சீசன் ஆரம்பிச்சிட்டுன்னுச் சொன்னாங்க. அங்க மழ இங்க மழன்னுல்லாம் சொன்னாங்க. இங்கயோ நல்லக் காத்தக்கூட காணம். திடீர்னு ஒருநா மழ வர்ற மாரி வானம் இருண்டு போச்சு. குளுந்த காத்தடிச்சுது. ஈரவாசம். எனக்கு சந்தோஷம் தாங்க முடியல. சத்தம் போடாம மெல்ல ஆடினேன். ஆனா வானம் மூசிலத் துப்பிட்டு போறாப்பல ரெண்டு சின்னத் தூறல மட்டுந்தா போட்டுச்சு. மேகமெல்லாம் போய்ட்டு.
இது நடந்து அஞ்சாறு நாள்ள வாரத்துக்கு ரெண்டு நா வந்த தண்ணியும் நின்னு போச்சு. லாரில்ல தெருத்தெருவா வந்து முனிசிபல்காரங்க தண்ணி குடுக்கறாங்கன்னு பக்கத்து வீட்டு சந்திரா செம்பகத்துட்ட அவசரமா வந்து சொன்னா. செம்பகம் என்னய…. பித்தள…அப்புறம் எவர்சில்வர்னு எல்லாத்தயும் தூக்கிட்டுத் தெருவுக்கு ஓடினா. அங்க அதுக்குள்ள என்னயப் போல நெறையா பேரு வரிசயா ஒக்காந்துருந்தாங்க. செம்பகம் எங்களயும் உக்கார வச்சிட்டு பக்கத்துல நின்னுக்கிட்டா. எனக்குப் பின்னாலயும் வரிச நீண்டு போச்சு. ஆம்பிளைங்க, பொம்பிளைங்கன்னு வரிசயா காத்துக்கிட்டு இருந்தாங்க. அவங்கள்ளாம் பிச்சைக்காரங்க மாரியும், நாங்கள்ளாம் திருவோடுங்கமாரியும் தான் எனக்குத் தோணிச்சு.
சத்தம். ஒரே அறிபறி. இப்ப வந்துரும்னு சொல்றாங்க. செம்பகம் அலங்க மலங்க விழிக்கிறா. வீட்டுல அடுப்பு பத்த வைக்கல. உக்காந்து பாக்கா…. நின்னு பாக்கா. ‘ஐயோ… ஏந்தாயி..’ன்னு சத்தம் போடுறேன். சூரியன் எம்மூஞ்சிலயா அடிக்குது. கீழயும் சூடு. புழுதி வேற. அழுக்காயி, காஞ்ச கருவாடாய்ப் போனேன். உயிரக் கையிலப் புடிச்சிட்டுருந்தேன்.
மூனுமணி நேரம் கழிச்சு லாரி வந்துச்சு. அவ்ளதான். மக்கள்ளாம் லாரிய மொய்ச்சாங்க. ஒவ்வொருத்தரா த்ண்ணியப் பிடிச்சுட்டுப் போக போக செம்பகம் எங்களயும் முன்னால நகத்திட்டுப் போறா. ஒரே இரைச்சல். அம்மா! லாரி பக்கத்துல வந்துட்டோம். செம்பகத்துக்கு மூஞ்செல்லாம் சந்தோஷம். அந்த லாரி எங்களுக்கு உயிர் கொடுத்துச்சு. செம்பகம் வயித்துலப் பால வார்த்தது மாரி இருந்திருக்கணும். ‘நாளைக்கு’ன்னு அவ முணுமுணுத்தா.
இந்த லாரித் தண்ணியும் அஞ்சுநா தான் கெடைச்சுது. ஊரே தீப்பிடிச்ச மாரி இருக்கு. மரங்களுக்கு எலும்புருக்கி நோய் வந்த மாரி இருக்கு. செம்பகத்தோட தோல் வறண்டு போச்சு. நா கொமைஞ்சுட்டேன். என்னயக் கவுத்திப் போட்டுட்டு செம்பகம் அழுதுட்டு இருக்கா. சொக்கன் யாரையெல்லாமோ ஏசுறான்.
இதோ… நா மொடமா கெடக்கேன். செம்பகம் அவசரமா உள்ள வர்றா. வேதனையா என்னயப் பாக்குறா. பொலம்புறா. கண்ணுல்லாம் வீங்கியிருக்கு. என்னயத் துக்கிட்டு தெரு ரோடுல்லாங் கடந்து முனிசிபல் ஆபிச நோக்கிப் போறா. இன்னிக்கு இங்க தண்ணி கொடுக்கப் போறாங்கன்னு நானும் போறேன். அங்கயும் மனுஷங்க…. மனுஷங்க… மனுஷங்கதான். அப்புறம் என்னயப் போல நெறைய. பித்தள இல்ல… எவர்சில்வர் இல்ல… நாங்க, நாங்க மட்டுந்தான்.
முனிசிபல் ஆபிசுக்கு முன்னாலப் போயி ஒவ்வொரு பொம்பளையா எங்களக் கீழே போட்டு ஒடைக்கிறாங்க. செம்பகம் என்னயும் தூக்கிட்டுப் போறா. எதோ கோஷங்க போடுறாங்க.
எனக்குப் புரிஞ்சு போச்சு. சந்தோஷமாயிருக்கு. ஒன்னுக்கும் ஒதவாமப் போயிருவேனோன்னு பயந்திருந்தேன். போருக்குப் போற வீரன் மாரி… பெருமையோடப் போறேன். சிலிர்க்குது…. இதோ….
‘யே! ராசா’ன்னு கூவிட்டே என்னயத் தூக்கி செம்பகம் கீழே போடுறா….
அம்மா…! வலி தாங்க முடியல. சுக்கல் சுக்கலா இதோ என்னோட உயிர் போகுது. செம்பகத்தோட பேசணும் போல இருக்கு. அவளைப் பாத்து கத்துறேன்…
ஏ…. தாயீ! எனக்கு அடுத்தப் பெறப்புன்னு ஒன்னு இருந்தா நா ஒன் வயித்துல பெறக்கணும்…. ஒம்மார்ல பாலக் குடிக்கணும்…. ஒன்னோட இடுப்புல உக்காரணும். நீ என்னய வளக்கணும். இந்த மனுஷங்களுக்கு அப்பமும் நா என்னால ஆனதச் செய்யணும்…. ஆறு ஏங்கிட்ட நெறையச் சொல்லியிருக்கு.
கருத்துகள்
கருத்துரையிடுக